Home Blog Page 44

நூறாவது நாள்

0

ரமேஷ் ரக்‌சன்

ழையின் பாரம் தாங்காமல் தலை தொங்கிக் கிடந்த மருதாணி மரத்தின் புகைப்படம் ஐந்தரை மணி வாக்கில் அவளிடமிருந்து வந்ததும் எதிர் வீட்டுக்காரர்கள் ஊருக்குச் செல்வதாக சொன்னது நினைவிற்கு வந்தது. மருதாணியின் பூக்களும் கொத்துக்கொத்தாக தொங்கிய காய்களும் அவளுடைய நடு முதுகின் எலும்பு மொட்டுகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது. தசைப்பிடிப்பற்ற அந்த நிர்வாணப் புகைப்படத்தை அவளின் அந்தக் காதலை, பேசித் தீர்த்த இரவை ஞாபகமூட்டியதென பதிலாகச் சொல்லுவதற்குள், மொத்த உள்ளங்கையையும் மறைத்தபடி விரலிடுக்கில் வெற்றிலைக் காம்பை இறுக்கிப் பிடித்த புகைப்படத்தை அனுப்பினாள். வெற்றிலை நுனி அவள் மணிக்கட்டில் தனித்துத் தெரியும் பச்சை நரம்பை உரசிக் கொண்டிருந்ததை வட்டமிட்டு சுட்டிக் காட்டி “seducing” என்று பதில் அனுப்பினேன்.

மருதாணி மரத்திற்குப் பக்கத்திலேயே நின்றிருந்த ஓரிதழ் சிகப்பு செம்பருத்தியிலிருந்து பறித்த பூவொன்றை வெற்றிலையின் மேல் வைத்து கடைசியென அந்தப் நிழற்படத்தை அனுப்பியிருந்தாள்.

எங்களின் நூறு நாள் காதலில், மாலை வேளையில், சந்திக்கும் பொழுதெல்லாம் ஜங்ஷனை ஒட்டியிருக்கும் மேம்பாலத்திற்கு அடியில் அங்குமிங்கும் உலாவிக் கொண்டு மயிலிறகு விற்பவர்களைப் பார்த்து “உண்மைலையே இவனுக மயில் உதிர்க்குற இறக மட்டுமா எடுத்துட்டு வந்து விக்குறானுக? விஷம் வச்சி கொல்லக்கூட தயங்க மாட்டானுக  பொறுக்கிங்க… அப்படியே சுட்டுத் தள்ளணும் ராஸ்கல்ஸ்” அடுத்தபடியாக, பூ விற்பவர்களைக் கண்டால் “பூ செடியில இருக்கற வரைக்கும்தான் அழகு” என்பாள். அந்தக் கரிசனம் ரசிக்கும்படியாக இருக்கும். அதில் வெளிப்படும் கள்ளச் சிரிப்பிற்காகவே பைக்கை நிறுத்திவிட்டு நடத்திக் கூட்டிச் செல்வேன் அவளைப் பொருத்த வரைக்கும் நெரிசல் காரணம். எனக்கோ அந்தக் கள்ளச் சிரிப்பு.

பூவைப் பறித்த பாவக்கணக்கைக் கேட்டு அவள் மனநிலையை சிதைக்க மனமில்லாமல் “வரவா” என்று கேட்டு வைத்தேன்.

தொன்னூற்றி ஒன்பதாவது நாளை “நூறாவது நாள்” என்றெண்ணி பரிசளித்த டார்ட் போர்ட்-ஐ மாட்டித்தரச் சொல்லி முதல் மாடியில் இருக்கும் ஒற்றை அறைக்கு ஒன்பதரை மணியிலிருந்து பத்து மணிக்குள் வரச் சொல்லியிருந்தாள். வரும்பொழுது டார்ட் போர்டை சரியான முறையில் அளந்து மாட்டுவதற்கு மூன்று மீட்டர் நீளம் உள்ள டேப்- கூடவே சுவற்றில் இறங்கும் அளவிற்கு வலுவான ஒரு ஆணியும் வாங்கி வரச் சொல்லியிருந்தாள்.

போன் துண்டிக்கப்பட்டதும் இது “நமது பன்னிரெண்டாவது ரகசிய சந்திப்பு” என்ற ஆங்கிலத் தகவலோடு மூடிய உள்ளங்கையைப் புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்தாள். உள்ளங்கைக்குள் பொருந்திப் போகும் பரிசுப்பொருள் என்னவாக இருக்குமென்ற யூகம், இன்னும் மூன்று மணி நேரத்திற்கு எப்படித் தாங்கும்? அவளின் பிடிவாதத்தை நன்கறிவேன். ஆன்லைன் தளங்கள் ஒன்றுவிடாமல் தேடி தோற்றுவிட்டதாக என்னை நானே ஒத்துக்கொள்ளும் பொழுது ஏழரை மணி ஆகியிருந்தது. மீதமிருக்கும் ஒன்றரை மணி நேரத்தை என்ன செய்வதெனத் தெரியாமல், அவள் அனுப்பிய புகைப்படங்களைத் தனியாகச் சேகரித்து வைக்கும் ஃபோல்டர்-க்கு சென்று முதலில் அனுப்பிய மூன்று புகைப்படங்களையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். அவளின் ரேகைகள், விரல்களில் குறுக்கே ஓடும் கோடுகள், வெற்றிலை நரம்புகள், செம்பருத்தியின் மஞ்சள்நிற மகரந்த மொட்டுகள், இவையெல்லாமே அவளின் உடல்போல பாவனை கொண்டிருந்தன. அவள் செய்கைகள் ஒன்று கூடி சரம் பிடித்து என் மூளையை சுத்துப் போட்டன. உடலும் மனமும் உள்ளிருந்து சுரக்கும் சுனையை, சுழல் ஆக்கின. நான் தணலில் தூக்கிப்போட்ட காகிதம் போல பற்றியெறியத் தொடங்கினேன்.  

காற்றாடும் பனியனும், அதே போலொரு ஷார்ட்ஸ்-ம் அணிந்திருந்தாள்.  பிளாஸ்டிக் பாய் மேலே இரண்டு போர்வைகள் விரிக்கப்பட்டிருந்தது. குளிருக்குப் போர்த்திக் கொள்ள மீதமிருந்த இன்னொரு போர்வையை மடித்து தலைப்பகுதியில் வைத்திருந்தாள். அந்த தற்காலிக மெத்தைக்கும் அவளுக்கும் தொடர்பில்லாத உடல் மொழியில் சம்மணமிட்டு, மடியில் தலையணை வைத்து பாய்க்கு வெளியே அமர்ந்திருந்தாள். தலையணையில் முழங்கையை அழுந்த ஊன்றி புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தாள். வழியெங்கும் உடல் நனைக்காத சாரல். வாசலில் நான் வந்து நிற்பது தெரிந்தும் தலை தூக்காமல் வாசித்துக் கொண்டிருந்தாள். அவள் மடியில் விழும் என் நிழல் கொண்டு அவள் கவனத்தை என் பக்கம் திருப்ப முயற்சித்துக்கொண்டே நின்றேன். அடுத்த பக்கத்தை புரட்டிப் பார்த்ததில், இடப்பக்க ஆரம்பத்திலேயே அத்தியாயம் முடிவது தெரிந்ததும், நிழல் அசைத்து விளையாடாமல் அவள் தரிசனத்திற்காக காத்து நின்றேன்.

குமிழ்கள் காற்றில் உடையும்போது உணரும் ஈரத்தன்மையை விழிகள் கண்டிருந்தது. அதன் சூடு ஆவியாகி மேகம் கருக்கொண்டிருந்தது. அதன் ரகசிய உடைவுகளை என் முகம் பாரக்காமேலே இவ்வளவு நேரத்திற்குள் உணர்ந்திருப்பாள். தெரியும். உடல் காட்டிக் கொடுக்கும் வாசனை, அவள் வாசிப்பை குலைக்கும். அந்த நொடிக்காக என் திமிரின் எல்லா திறவுகளையும், அடவாகக் திரட்டி நின்றேன். அத்தியாயத்தின் கடைசி பக்கத்தை திருப்பாமலே மூடி வைத்தாள்.

“ஒன்பதரை மணியில இருந்து பத்து மணிக்குள்ள வா அப்டினு சொன்னா, ஒன்பதரை மணிக்கே வரணும்னு அவசியமில்ல பத்து மணிக்கும் வரலாம். இன்னும் ரெண்டு பத்தி இருக்கு. அத வாசிக்க விடாம பண்ணிட்டான்.” உதட்டைக் குவித்து காற்றில் சத்தமாக முத்தமிட்டேன்.

தூக்கிவிடச் சொல்லி என்னை நோக்கி கை நீட்டினாள். கண் போகும் பாகம் அறிந்து வெடுக்கென உள்ளிழுத்துக் கொண்டாள். காமம் தீண்டாத அவள் உடல் சுரக்கும் வெட்கம் என் அடிநாவில் நிரம்பி, உடையும் தருவாயில் இருந்தது. தொண்டைக்குழி எலும்பு ஏறி இறங்குவதைக் கண்டதும், இமை தாழ்ந்து. உதடு உலர்ந்து காட்டிக் கொடுத்தது. கதவைத் தாழிட வேண்டாம் என்றாள். அவள் பின்னந்தலை ஸ்விட்ச்சில் பட்டு, எரிந்து கொண்டிருந்த ட்யூப் லைட் அணைந்தது. என் விலா எலும்பில் அவளின் பெருவிரலால் அழுத்தம் கொடுத்தாள் கூச்சத்தில் அவள் மீது செலுத்தியிருந்த எடை விடுபடவும் உந்தித் தள்ளிவிட்டு, விளக்கை எரியவிட்டாள். இருளில் மழை நின்றாடுவதை அதன் ஓசையை வைத்துப் புரிந்து கொள்ள முடிந்தது. கைப்பிடிச் சுவற்றிலிருந்த கற்றாழைச் செடியின் முட்கள் தாங்கி நின்ற மழைப் பொட்டுகள் நொடிப்பொழுதிற்கு காணாமல் போகும் அவளின் கருவிழியற்ற கண்களாகி விளக்கின் வெளிச்சத்தில் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தன. உடலின் வாசனை நிறம் மாறிக் கொண்டிருந்தது. தேக வாசனையும், அடி நாவில் சுரக்கும் எச்சில் வாசனையும் அக்குள் வாசனையும் வேறு வேறான அர்த்தமாகியது.

அவள் சாசனங்கள் என்னவாக இருக்கிறதோ அப்படியே நடந்து கொள்ளத் தொடங்கினேன். ஆனால் அதற்கு சொற்கள் அவசியமற்று இருந்தது. பூமியும் நாங்களும் வியர்த்திருந்தோம். அவள் வியர்வை பூப்பதை விரும்பினாள். காதோரம் வழிந்தோடிய பிசுபிசுப்பைத் துடைக்க விடாமல் தடுத்தாள். சன்னல் கம்பியோரம் உரசி நின்ற மூங்கில் கிளை பார்த்ததும் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்ட லஜ்ஜை அவள் முகத்தில் வெளிப்பட்டது. அவளின் அந்த துண்டிப்பு எனக்கும் கடத்தப்பட்டது. என் குதிகால் தரையில் அழுத்தம் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

சன்னல் மேலிருந்த மூங்கில் குடுவையிலிருந்து எழுது பொருட்களோடு கிடந்த கத்தரியை எடுத்துக் கொடுத்து “லெமன் க்ராஸ்” இரண்டு இலைகளைக் கத்தரித்து வரச் சொல்லி அனுப்பினாள். குடை வேண்டாத உடல் சூடு. தகிப்பின் மோனநிலை. நனைந்தபடி விரலில் கீறல் விழாமல் ஒவ்வொன்றாக ஐந்து இலைகளை வெட்டி, அவள் பரிமாற வைத்திருக்கும் பாத்திரத்தில் வைத்தேன்.

அட்டைப் பெட்டியிலிருந்து டார்ட் போர்டை வெளியே எடுத்து, பின்னட்டைக் குறிப்புகளைச் சொல்லி, சுவரின் கிழக்குப் பகுதியில் ஆணி அடிக்கச் சொன்னாள். டார்ட் போர்டோடு வந்த மூன்று ஸ்டீல் டிப்-ல் ஒன்றை எடுத்து கீறல் விழாதவாறு என் முதுகில் முதலில் எழுத ஆரம்பித்தவள் பிறகு வரையத் தொடங்கினாள். நான் உயரம் அளக்கும் பாவனையிலேயே நின்றிருந்தேன். மழை ஈரமும் அவள் உஷ்ணம் கடத்திய வியர்வை பிசுபிசுப்பும், அவள் சிந்தனையிலிருந்து வெளியேறி என் முதுகில் கோடுகளாகப் பார்க்க முடிவதாகச் சொன்னாள். நான் கூச்சம் பொறுத்துக் கொண்டேன். அவள் கண்மூடும் வேளையில் அழுத்தம் கூடியதை என் உடலசைவுகள் காட்டிக் கொடுக்கவும், கண் திறந்ததாகச் சொன்னாள்.

எங்கள் ரகசியங்களும், வேட்கையும் இமையின் உள்த்தசையில் படிந்திருந்தது. ஒவ்வொருமுறை இமை வெட்டும்போதும், அவை எங்கள் கண்களை வந்தடைந்தன. ஒரே நேரத்தில் கண்கள் பார்த்துக் கொள்வதைத் தவிர்த்தோம். அது நேரம் கடத்துவதற்கான உத்தியாகப்பட்டது. என் விரல் இடுக்குகளில் அகப்பட்ட கூந்தல் கற்றைகள் சாவிகளாகி, எல்லா கண்களையும் பூட்டின. நாங்கள் முந்திக் கொண்டோம்.

மழையின் இரைச்சல் கதவைத் தாழிட அனுமதிக்கவில்லை. எங்களின் கொண்டாட்ட மனநிலைக்கும், மழையின் கொண்டாட்ட மனநிலைக்கும் ஒரு லட்சம் வித்தியாசங்கள் இருந்தன. எங்கள் சஞ்சலமும், மழையின் நிதானமும் எட்டாத தூரத்தில் இருந்தது

கணப்பொழுதில் அவள் உடல் திருப்பி சுவற்றைப் பார்த்து நிற்க வைத்து திமிற விடாமல் தோள்களை அழுத்திப் பிடித்தேன். கூந்தல் ஒதுக்கி பின்னங்கழுத்து வியர்வைத்துளியை மேனி தொடாமல் நுனி நாக்கில் ருசி பார்க்க நெருங்கும்போது மின்னல் ஒளிர்ந்து அறை இருளுக்குள் புகுந்தது. உன் மூச்சுக்காற்றின் சூட்டில் அவை ஆவியாகிவிடும் என்றாள். அறைக்குள் நுழைந்ததிலிருந்து அப்போதுதான் வாய்விட்டு சிரித்துக் கொண்டோம்.

விரிப்பில் உடல் கிடத்தும் முன் என் ஈர உடை களைந்துவிட்டு டவலைக் கட்டிக் கொண்டேன். சங்குப் பூவின் நிறமொத்த பூ வேலைப்பாடுகள் நிறைந்த கண்ணாடி பாட்டிலிலிருந்து சுருட்டி வைத்திருந்த கருப்பு ரிப்பன் எடுத்து என் கண் நோக்கி வந்தாள். கை தாங்கி நின்ற தலையை விடுவித்து விட்டத்தைப் பார்த்துப் படுத்தேன். நான் தலை தூக்கிக் கொடுக்க, என் இடை மேல் இருபக்கம் கால் போட்டு அமர்ந்து கண் கட்டினாள்.

இந்த உறவை எங்கிருந்து தொடங்கினோம் என்று கண்டறியமுடியாமல் இருவரும் தோற்றுப் போனதாக ஒத்துக் கொண்ட, பதிவு செய்யப்பட்ட உரையாடல் மூளைக்குள் கேட்கத் தொடங்கியது. இருவரும் ஒருவரையொருவர் அனுமதிக்க எடுத்துக்கொண்ட கால அளவு வித்தியாசப்படுவதாகப் பொய் சொல்லிக் கொண்டோம். பிறகு ஒரே நேரத்தில் நிகழ்ந்துவிட்டதாக நம்பவைத்துக் கொண்டோம். மெழுகுவர்த்தியை பற்ற வைத்தது நாசியை வந்தடைந்தது.

தொடையில் படர்ந்து கிடக்கும் நரம்புகளிலிருந்து அதன் நிறம் பிரித்து, காது மடலின் பின் பக்கத்தில் கழுத்திற்கு மேலே இருவரின் பெயரின் முதல் எழுத்தை பச்சை குத்துவதாக முடிவெடுத்துக் கொண்ட அந்த இரவை ஞாபகப்படுத்தி, இப்போதும் அதே மனநிலையில் இருக்கிறாயா என்று என்னிடம் உறுதிப்படுத்திக் கொண்டாள். ரிப்பன் இருட்டைத் தாண்டி, மெழுகின் வெளிச்சம் தெரிந்தது.

மூடி வைத்திருந்த உள்ளங்கைக்குள் இருந்தது எதுவென்றேன். – அது, நீ உடலதிர்ந்து பின் சிரித்து அடங்குவதற்கு எடுத்துக் கொள்ளும் நிமிடங்களுக்குப் பிறகு ஒவ்வொன்றாய் தெரியத் தொடங்கும் என்றாள்.

அவளை கவிழ்ந்து படுக்கச் சொல்லி முட்டியை மடித்து இரு கால்கள் இணைத்து பாதப் பள்ளங்களில் நிறைத்து விளையாட முதன்முறை அனுமதித்த அன்று, தரையில் கால் வைக்க முடியாமல் அவஸ்தைப்பட்டதை சொல்லிச் சொல்லி நரம்பின் நிறங்களைத் திரித்துக் கொண்டிருந்தாள். கடிபடாத ஆப்பிளும் அதைச் சீண்டத் தயாராக மேலிருந்து கீழிறங்குவது போன்று இருக்கும் பாம்பு தலையும் உள்ள புகைப்படமே அவளது லேப்டாப் வால்பேப்பர். உருகும் மெழுகைக் கொண்டு, திறந்திருந்த என் மார்புக் கண்களை மூடினாள். அடி வயிற்றில் தெறித்த சொட்டுகளை ஒப்பிட்டு எது நீ; எது நான் கண்டுபிடி என்றாள். உறைந்திருந்த மெழுகுப் பொருக்குகளை நகக்கண் கொண்டு அவள் உடல் திறந்தாள். என் மார்பின் கருவறை அவளால் திறக்கப்படும்போது அவளைக் கேட்காமலே கண் கட்டவிழ்த்தேன். அவளது வலது உள்ளங்கை மூடியிருந்தது. இடது உள்ளங்கையில் “லெமன் க்ராஸ்” இலைகளை வைத்திருந்தாள். அதை தேநீர் அருந்துவதற்கு வெட்டி வரச் சொல்லவில்லை என்பது புரிந்தது. அது அவள் தேகத்தில் நிகழ்த்தப்போகும் கூச்சங்களை யோசித்தேன்.

அறுவடைக்கால வயலின் நிறம் அவளது உடல். மெழுகின் வெளிச்சத்தில் கடல்மேல் கிடத்திய அந்திச் சூரியன்போல மேனி மின்னியது. மூட்டு அழுந்தாமல் இருக்க அதற்கு தலையணை கொடுத்துவிட்டு, இரு கைகளையும் ஊன்றி 360 டிகிரியில் நான் வலம் வர ஏதுவாக நின்றவள், பொத்தி வைத்திருந்த கைக்குள்ளிருந்து பொதிந்து வைத்திருந்த தாயக்கட்டையை விரிப்பில் உருட்டி விட்டாள். “கழுத்து” என்று ஆங்கிலத்தில் விழுந்தது. மூடியிருந்த கைக்குள் மிச்சம் என்ன இருக்கும் என்பதை யூகித்து அமைதி காத்தேன். முன் பக்கம் ஒதுக்கிப் போட்டிருந்த கூந்தலை இன்னும் கொஞ்சம் ஒதுக்கிப் பிடித்து, “அதுல ஒன்ன எடுத்து முனை பக்கத்த கைல பிடிச்சி என் கழுத்துல இருந்து டிராவல் பண்ணு” என்றாள். கண்களால் காண முடியாத கூர் பற்கள் அவள் தேகம் கீறி முன்னேறுவதை விரல்களில் உணர முடிந்தது. எனக்கு பார்வை அவசியமற்றுப் போனது. அதன் கூர் தன்மையை சோதித்துப் பாக்க அவகாசம் கேளாத கட்டளை. இரத்தம் கன்றிப் போகும் கோடுகள் அவள் முதுகை அலங்கரித்தன. கண் திறவாமலே கண்டுகொண்டிருந்தேன். விசும்பலுக்கான ஒத்திகை தரையெங்கும் பரல்களாக ஓடிக் கொண்டிருந்தது. நனைய விரும்பினேன். ஆனால் மழை நின்றால் என்ன? என்றிருந்தது. நிறுத்தச் சொன்னாள். கண் திறக்காமல் நிறுத்தினேன்.

எட்டிச் சென்றுவிட்ட தாயக்கட்டையை எடுத்து மறுபடி உருட்டினாள். “தொடை” விழுந்தது. முதுகைத் தரையில் கிடத்திய வேகத்தில் மேலெழும்பினாள். அவள் உடல் எருக்கம் பூக்களின் நிறமாகித் திரும்பியது. உடலின் ஆறு பாகங்கள் தாங்கிய அந்த தாயக்கட்டையின் விளையாட்டு ஒழுங்கைக் குலைத்தாள். கோடுகளின் போக்கை வலி தாங்கும் உடல் தீர்மானித்தது. அடிப்பக்கம் துவாரங்கள் நிறைந்த வாளியில் பெயிண்ட் நிரப்பி, கயிறு கட்டி அந்தரத்தில் அலையவிடும் போது அது தீட்டிப்போகும் தீற்றல்கள் போல ‘லெமன் க்ராஸ்’ சென்ற இடமெல்லாம் இரத்தம் கன்றி நின்றது. தடித்த அந்தக் கோடுகளைத் தடவித் தடவி ப்ரைலியாக்கி சொற்கள் இல்லாத மொழி ஒன்றை உருவாக்கினோம். இனி எப்போதும் மீட்டுருவாக்கம் செய்ய விரும்பாத அந்த மொழியை, அவள் அலைபேசியில் புகைப்படம் எடுக்கச் சொன்னாள். எடுத்ததை பார்க்காதே என்றாள். நான் ஒளிந்துகொள்ள இடமற்று என் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டேன்.

சிவந்து தேங்கி நின்ற கண்களை அவள் மூடவும் இரு பக்கமும் கண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது. என் கழுத்து நரம்பில் இலையின் வீரியத்தை சோதித்துப் பார்த்தேன். அவள் கையிலிருந்து இன்னொரு தாயக்கட்டையை உருட்டி விட்டாள். ”முத்தம்” விழுந்தது. உடலெங்கும் படர்ந்து கிடக்கும் நான் வரைந்த அவளின் தாபக் கோடுகளில் எச்சல் படர முத்தமிட்டேன். உடலின் வெப்பமும், வலியின் உப்பும் அவள் முனகலுக்கு வேறொரு அர்த்தம் கற்பித்தது என் காமத்தின் கண்ணீருக்கு ஆயுள் பெருகிக் கொண்டே போனது. அங்கிருந்து எனது கண்ணீரின் சொட்டுகளால் முத்தமிடத் தொடங்கினேன். அதற்காகவே காத்திருந்தவள் போல புன்னகைத்தாள். அவள் சிரிப்பின் ரகசியச் சாவி என்னிடமிருக்கும் கர்வத்தில் தொலைந்து இன்னும் இன்னும் அவள் மேனியில், ஒவ்வொரு நெல் மணிகளாக விழத் தொடங்கியது. கன்னக் கதுப்பில் தேங்கி சொட்டுச் சொட்டாக விழும்படி பார்த்துக்கொண்டேன். என் கண்ணீரே கர்வமானது. எனக்கு அவளின் கண்களைப் பார்க்கத் தோன்றியது. அழைத்தேன். கண் திறக்காமலே மீதமிருந்த மூன்றாவது தாயக்கட்டையை உருட்டினாள். “Women on top” விழுந்தது. 

கதவை ஓங்கி அறையும் வல்லமை கொண்ட காற்றின் சிறு துண்டு, நாங்கள் இடம் மாறும்பொழுது அறைக்குள் உலவி வெளியேறியது. முதுகின் முள் எலும்புகளை மூடிப் போன தசையைத் தடவிக் கொடுத்தேன். முன்னும் பின்னும், குறுக்கும் மறுக்குமாக ஓடும் கோடுகளில் பெயரின் முதல் எழுத்தைக் கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். எனை விழுங்கியபடி அவள் உடலை பின்னோக்கி மலர்த்தி மின்னல் கீற்றுகளின் நெளிவுகள் நிமிர்த்தி முலைக்காம்புகளில் முனைந்தாள். கையூன்றி நின்ற என் தொடையிலிருந்து நரம்புகளின் நிறங்களைப் பிரித்தெடுத்து காது மடலின் பின் பக்கத்தில் நகம் வருடினாள். “உன் கூட செக்ஸ் வச்சிக்றது ஒரு பொண்ணு கூட செக்ஸ் வச்சிக்ற மாதிரி இருக்குனு முன்ன ஒரு தடவ சொன்னியே” வேகமாக என் வாயைப் பொத்தினாள். அவள் கண்களின் கருவிழிகளில் பூ விழுந்தது. அவள் மூச்சுக்காற்றின் வெப்பம் பூவை எரிக்க, மதகு உடையும்வரை உலகின் கடைசி முத்தத்தை பருகிக் கொண்டிருந்தாள்.

இறங்கிப் படுத்து, “இவ்வளவு சப்மிஸிவா எல்லாம் இருக்காதடா எனக்கு என்ன நெனச்சி பயமா இருக்கு.” என்றாள்.

நான் உலகின் முதல் முத்தத்தை இட்டேன்.

***

ரமேஷ் ரக்‌சன்– ஆசிரியரின் பிற படைப்புகள்:
16”, “ரகசியம் இருப்பதாய்”, “பெர்ஃப்யூம்” – சிறுகதைத் தொகுப்புகள்- “நாக்குட்டி” நாவல்
rameshrackson@gmail.com

சர்வதேச அரசியலால் சீரழியும் பவளத்திட்டு

0

நாராயணி சுப்ரமணியன்

பெருந்தடுப்பு பவளத்திட்டு (Great Barrier Reef) என்கிற கடல்சார் வாழிடம், ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய உயிர்க்கட்டுமானம் (Largest living structure on earth). விண்வெளியிலிருந்து பார்த்தால்கூட இது தெரியும் என்று சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 2300 கிலோமீட்டர் தூரம் நீளக்கூடிய இந்த வாழிடம், 2900 சிறு பவளத்திட்டுக்களின் தொகுப்பு. மனித இனத்தின் பொதுச்சொத்து என்றுகூட இதைச் சொல்லலாம். இதன் முக்கியத்துவத்தை அங்கீகரித்து 1981-ல் யுனெஸ்கோ நிறுவனம் இதை உலக புராதன சின்னமாக அறிவித்தது (World Heritage Site).

ஜூன் மாதத்தில் இதே யுனெஸ்கோ அங்கீகாரம் தொடர்பான ஒரு சர்ச்சையில் இந்த பவளத்திட்டு வைரலாகியிருக்கிறது. விஷயம் இதுதான் – “காலநிலை மாற்றம், கடல்நீர் மாசுபாடு போன்ற பல்வேறு காரணங்களால் பெருந்தடுப்பு பவளத்திட்டு கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஆகவே இந்த புராதன சின்னம் ஆபத்துப் பட்டியலில் விரைவில் சேர்க்கப்படும்” என்று யுனெஸ்கோ அறிவித்தது. ஜூலை 16-ம் தேதி நடக்கப்போகிற கூட்டத்தில் இந்த முடிவு அதிகாரபூர்வமாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு இது பெரிய அவமானமாகிவிட்டது. “இந்த முடிவுக்கு எதிராக நாங்கள் களம் இறங்குவோம், இந்த முடிவை ஏற்க முடியாது” என்று அறிவித்தார் ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் அமைச்சர் சூஸன் லெவி.

“இந்த அறிவிப்பு அதிர்ச்சி தருகிறது” என்றார் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிஸன். யுனெஸ்கோவின் முடிவுக்கு எதிராக நட்பு நாடுகளின் ஆதரவைத் தேடி ஆஸ்திரேலியா பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

கடல்சார் சூழலியலாளர்களோ, நடப்பதைக் கவலையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இந்த செய்தியைப் படித்தவுடன் “இன்னும் ஆபத்துப் பட்டியலில் இதை சேர்க்கலையா, முன்பே சேர்த்திருக்கணுமே” என்றுதான் எனக்குத் தோன்றியது. கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் அனைவருக்குமே பெருந்தடுப்புப் பவளத்திட்டை நேரில் ஒருமுறையாவது பார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். அது ஒரு வாழ்நாள் கனவு. முதுகலை படிக்கும்போது “நாம காசு சேர்த்து ஆஸ்திரேலியா போறதுக்குள்ள பவளத்திட்டு அழிஞ்சு போயிடும்” என்று நாங்கள் ஏக்கத்துடன் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.

சூழலியலும் அரசியலும் இணையும் இந்தப் விவகாரத்தின் அடுக்குகள் சுவாரஸ்யமானவையாக இருக்கின்றன.

காலநிலை மாற்றம்

யுனெஸ்கோ தரப்பு, “காலநிலை மாற்றத்தால் மிக அதிகமாக இந்தப் பவளத்திட்டு பாதிக்கப்பட்டிருக்கிறது. வேறு எந்தப் புராதன பவளத்திட்டிலும் ஐந்து ஆண்டுகளில் மூன்று நிறமிழப்பு நிகழ்வுகள் (Bleaching events) நடக்கவில்லை. 2016, 2017, 2020 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் இந்தப் பெருந்தடுப்பு பவளத்திட்டில் உள்ள பல பவள உயிரிகள் நிறமிழந்துள்ளன. அதிலும் 2020 நிகழ்வுக்கு முன்னதாக கடல்மட்ட வெப்பநிலை நூற்றாண்டின் அதிகபட்ச வெப்பநிலையாக உயர்ந்திருந்தது. அதாவது, கிட்டத்தட்ட கொதிக்கும் கடல். ஆகவே காலநிலை பாதிப்பை கண்டிப்பாகப் பேசவேண்டும்” என்கிறது.

“காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய பிரச்சனை, ஆஸ்திரேலியாவின் தனிப்பட்ட சறுக்கல் அல்ல. உலகின் மொத்த உமிழ்வைக் குறைக்கும் பொறுப்பை ஆஸ்திரேலியா தனிப்பட்டு சுமக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா என்ன?” என்று கேள்வி எழுப்புகிறார் அமைச்சர் சூஸன் லெவி.

காலநிலை மாற்றம் தொடர்பான வல்லுநர் குழுக்களிடம் இருந்து இதற்கான பதில் வந்திருக்கிறது. காலநிலை மாற்றத்தைத் தனியாக ஆஸ்திரேலியா கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று யாருமே சொல்லவில்லை என்றும், அதேநேரம் ஆஸ்திரேலியாவுக்கான பொறுப்பையும் அது சரியாக செய்யவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஒவ்வொரு நாட்டுக்கும் கரிம உமிழ்வுகள் தொடர்பான ஒரு இலக்கு உண்டு. அதன்படி பார்த்தால் ஆஸ்திரேலியா ஃபெயில்தான். உலக அளவில் மிக அதிகமான தனிநபர் உமிழ்வுகள் கொண்ட நாடாக ஆஸ்திரேலியா இருக்கிறது. ஆகவே தன்னுடைய பொறுப்பை உணர்ந்து ஆஸ்திரேலியா செயல்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

காலநிலை மாற்றம் என்பது உலகின் எல்லா வாழிடங்களுக்குமே பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. யுனெஸ்கோவின் புராதன சின்னங்கள் பட்டியலிலேயே மொத்தம் 29 பவளத்திட்டுக்கள் உண்டு. காலநிலை மாற்றம் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 29 பவளத்திட்டுக்களுமே அழிந்துவிடும் என்பது அறிவியலாளர்களின் கணிப்பு.

“எல்லா பவளத்திட்டுக்களுமே பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு என்றால், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் பவளத்திட்டுக்களின் அடையாளச் சின்னமாக எங்கள் நாட்டு பவளத்திட்டுதான் கிடைத்ததா” என்று ஆஸ்திரேலியா காட்டமாகக் கேள்வி எழுப்புகிறது.

“ஏன், அப்படி இருந்தால்தான் என்ன தவறு?” என்பது சூழலியலாளர்களின் வாதம். ஒரு நாட்டில் உள்ள இயற்கை வாழிடம் உலக அளவில் அங்கீகரிக்கப்படும்போது, அதில் ஒரு பொறுப்பும் கூடவே வருகிறது. அந்த வாழிடம் மனித இனத்துக்கான பொது சொத்து என்பதாகவும், அதைக் காப்பது அந்த நாட்டு அரசின் கடமை என்பதும் எழுதப்படாத ஒரு அறம்.

அங்கீகாரத்துக்குப் பெருமை கொள்ளும் அரசுகள், பொறுப்பையும் கவனமாக செயல்படுத்தவேண்டும். காலநிலை மாற்றத்தால் மிக மோசமாக இந்த பவளத்திட்டு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதால், பவளத்திட்டுக்களின் அழிவுக்கான அடையாளச்சின்னமாகவும் அதை முன்னிறுத்துவதில் தவறு இல்லை.

அழிந்துவரும் பவளத்திட்டு

“காலநிலை மட்டுமே காரணமில்லை. கடல்நீரின் சில கூறுகளைக் காப்பாற்ற வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய அரசுக்கு ஒரு இலக்கு இருக்கிறது. அதுவும் பின்பற்றப்படவில்லை” என்பது யுனெஸ்கோவின் குற்றச்சாட்டு. மோசமாக நிலப்பரப்பை மேலாண்மை செய்ததால், அதிலிருக்கிற வண்டல் மண்ணும் வேதிப்பொருட்களும் அடித்து செல்லப்பட்டு பவளத்திட்டு இருக்கும் கடற்பகுதி வரை வந்துவிட்டதாகவும், அதனால் பவளத்திட்டுக்கள் பாதிக்கப்படுவதாகவும் யுனெஸ்கோ கூறியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல சூழலியலாளர்கள் இதை ஒப்புக்கொள்கின்றனர். இந்த பவளத்திட்டைப் பாதுகாப்பதற்காக இதுவரை 3 பில்லியன் டாலர்கள் செலவழிக்கப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து சொல்லிவருகிறது. ஆனால் பொதுவான நில மேலாண்மையில் அரசு தவறிவிட்டதை அவர்கள் வருத்தத்துடன் சுட்டிக்காட்டுகின்றனர். சர்வதேச அரசியலில் தன் பெயர் களங்கப்படாமல் இருக்க ஆஸ்திரேலியா செய்யும் முயற்சியில் ஒரு சிறு அளவாவது நிஜமாகவே சுற்றுச்சூழலைப் பாதுகாப்பில் செய்யப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

“இந்த பவளத்திட்டு ஒரு மனிதனாக இருந்தால், இந்நேரம் ஆக்ஸிஜன் வைத்துதான் அவன் உயிரைப் பராமரிக்கவேண்டியிருக்கும். இந்த பவளத்திட்டு கிட்டத்தட்ட அழியும் தருவாயில் இருக்கிறது” என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே விஞ்ஞானிகள் அறிவித்துவிட்டனர். இந்த இடத்தின் சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று 2019-ம் ஆண்டின் ஆஸ்திரேலிய அரசு அறிக்கையில் அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதை வெளியில் உள்ள சர்வதேசக் குழுக்கள் சொல்லக்கூடாது என்று ஆஸ்திரேலியா குரல் எழுப்புகிறது.

சுற்றுலாக்களின் அரசியல்

சர்வதேச தலைகுனிவைத் தாண்டி ஆஸ்திரேலியாவின் இந்த எதிர்ப்புக்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த பவளத்திட்டைக் காண்பதற்காக உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலிருந்து வந்து குவியும் பயணிகளிடமிருந்து கிடைக்கும் சுற்றுலா வருவாய் குறையும் என்று ஆஸ்திரேலிய அரசு அஞ்சுகிறது.

இந்த அச்சம் சூழலியல்சார் அரசியலின் முக்கியப் புள்ளி. அரசுகளுக்கு சூழல்சார் வளங்களிலிருந்து வரும் வருமானமும் பெருமையும் வேண்டும், ஆனால் அதன் பொறுப்பு தேவையில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவில் புலி, சிங்கம், சிவிங்கிப் புலி போன்ற பெரும்பூனைகள் குறித்து வடமாநிலங்களில் உள்ள அரசுகளுக்குப் பெரிய அளவில் ஒரு பெருமிதம் உண்டு. “இரண்டு பெரும்பூனைகள் உள்ள ஒரே மாநிலம்” என்றெல்லாம் அறிவியல் கருத்துரைகளிலும் சூழல் விவாதங்களிலும் அவர்கள் பெருமையோடு குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். அதிலிருந்து வரும் சுற்றுலா வருவாயும் அவர்களை மிகவும் ஈர்க்கிறது. சுற்றுச்சூழல் வளங்களைப் பெருமையோடும் வருமானத்தோடும் மட்டுமே தொடர்புபடுத்தும்போது அங்கு ஒரு தேவையற்ற அரசியல் வந்துவிடுகிறது. அந்தச் சூழலில், அந்த விலங்கின் எண்ணிக்கை, பாதுகாப்புத் திட்டங்கள் பற்றிய எந்தத் தரவுகளுமே வெளிப்படையானவையாக இருப்பதில்லை. இதிலிருந்து ஒரு நேர்க்கோட்டை இழுத்து பெருந்தடுப்புப் பவளத்திட்டின் சூழலை அணுகினால் ஆஸ்திரேலியாவின் அச்சம் புரியும்.

உண்மையில் ஆஸ்திரேலியாவின் அச்சம் அடிப்படையற்றது. “ஆபத்தில் இருக்கிற சின்னங்கள்” பட்டியலில் ஏற்கனவே பல வாழிடங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. எந்த வாழிடத்திலும் இந்தப் பட்டியல் மாற்றத்தால் சுற்றுலா பெரிதாக பாதிக்கப்படவில்லை. தவிர, பட்டியலில் இருக்கிறதோ இல்லையோ, இந்த பவளத்திட்டு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பது ஊரறிந்த ரகசியம். ஆகவே பட்டியலில் சேர்க்கப்படுகிற ஒற்றை நிகழ்வு எதையும் மாற்றிவிடாது.

“என்னமோ இதை ஒரு சிவப்புப் பட்டியல் போல பாவிக்கிறீர்கள். ஆபத்தில் இருக்கிற வாழிடம் என்றால், அந்த இடத்தைக் காப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பது பொருள். அந்த இடத்தைப் பாதுகாப்பதற்கான முதல் படி இது. சுற்றுலாவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்” என்று எதிர்வினை விடுத்திருக்கிறார் யுனெஸ்கோவின் மெச்டில்ட் பாஸ்லர். அதை ஆஸ்திரேலிய அரசு எப்படி உள்வாங்கப் போகிறது என்பது தெரியவில்லை.

பொது குற்றச்சாட்டுகள்

புராதன சின்னங்களை அங்கீகரிக்கும் குழுவின் தலைவராக இப்போது சீனா இருக்கிறது. இந்த முடிவில் சீனாவின் ஆதிக்கம் இருக்கலாம் என்பதை ஆஸ்திரேலியா சுட்டிக்காட்டுகிறது. இது உண்மையா இல்லையா என்பது போகப் போகத்தான் தெரியும்.

யுனெஸ்கோவின் தலைமையகம் அப்பழுக்கற்ற முடிவுகளை மட்டுமே எடுக்கிறது என்றும் சொல்லிவிட முடியாது. ஆனாலும் இந்த விவகாரத்தில் அவர்களின் முடிவு சரியானதுதான்.

இதில் பெரிய அவலம் என்னவென்றால், கடந்த ஐந்து ஆண்டுகளாகவே இந்தப் பட்டியலில் சேராமல் இருப்பதற்காக ஆஸ்திரேலியா எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது. “ப்ளீஸ் ப்ளீஸ் ரெட் மார்க் போட்டுடாதீங்க, நாங்க சரி பண்ணிடுறோம்” என்பது போன்ற சத்தியங்களுடன் தொடர்ந்து கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது. இது ஆபத்தான போக்கு. அந்த வாழிடத்தைப் பாதுகாக்கும் எந்த முயற்சியையும் எடுக்காமல் சர்வதேச அரங்கில் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதில் மட்டும் ஆஸ்திரேலியா கவனமாக இருக்கிறது.

உலகின் பல முக்கிய கடல்சார் விஞ்ஞானிகள் இந்த முடிவு சரிதான் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். இதுபோன்ற அரசியல் இழுபறிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நசுங்கிவிடுகிறது. தேசிய அவமானம் என்றெல்லாம் யோசிக்காமல், இந்தப் பவளத்திட்டைப் பாதுகாப்பதற்கான முதல் படியை வெளிப்படைத்தன்மையுடன் ஆஸ்திரேலியா எடுத்துவைக்க வேண்டும். யுனெஸ்கோவும் தன் முடிவிலிருந்து பின்வாங்காமல் ஜூலை 16-ம் தேதி இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். “மனித இனத்தின் பொது மரபு” என்று குறிப்பிடப்படும் ஒரு இடம், வெற்று அரசியல் காரணங்களால் சீரழிந்தது என்று வரலாறு சொல்லிவிடக்கூடாது.

*

தரவுகள்

UNESCO World Heritage Committee, 44th Session Online meeting, June 21, 2021.
Report from ARC Center of Excellence for Coral Reef Studies, Australia, April 2020.
Great Barrier Reef Outlook Report 2019.

***


நாராயணி சுப்ரமணியன். கடல்வாழ் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.”நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” என்ற உயிரியல் நூலை எழுதியுள்ளார். தமிழில் கடல்சார், அறிவியல் பொருண்மைகளைக் கவிதைகளில் எழுதி வருபவர். விகடன் தடம், வாசகசாலை, அரூ இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. Email: nans.mythila@gmail.com

ஏவாளின் ஆதாம்

0

மயிலன் ஜி சின்னப்பன்

சிம்சன் சிக்னலில் வினாடிகள் ஒவ்வொன்றாக மின்திரையில் குறைந்துகொண்டிருந்த போது மீண்டும் தயக்கம் மேலெழுந்தது. மறுத்துவிடலாமா? வேறு வேலை இருக்கிறது – அவசரமாக க்ரோம்பேட் வரை செல்ல வேண்டும் – அப்படியேதாவது? சால்ஜாப்பெல்லாம் எதற்கு; நேரடியாக சொல்லிவிட்டால்தான் என்ன? இப்படியான சந்திப்பில் எனக்கு விருப்பமில்லை – எத்தனை மிடுக்காக இருக்கும்? – என் தன்மானத்தையும் கொஞ்சம் தட்டிக் கொடுக்கும். அவளிடம் இப்படியெல்லாம் பேசத்தான் எப்போதும் விரும்பியிருக்கிறேன்.

யோசித்துக்கொண்டுதான் இருந்தேனேயொழிய, எப்போது பச்சை விழுந்தது, எப்போது அடுத்த சிக்னலுக்கு வந்தேன் என்று தெரியவில்லை.

மனமொத்த பிரிவுதானே அது? வசைகளுக்குப் பின், விளக்கங்களுக்குப் பின், தேற்றலுக்குப் பின் கலைய முடியாத முரண்களின் மீது காலமெடுத்து நிகழ்ந்த புரிதல்தானே அது… அப்பிரிவுக்கும் அவளது திருமணத்திற்கும் இடையே இருந்த ஐந்தரை மாதங்களில் இருவரும் யாதொரு சமரசத்திற்கும் முயலவில்லையே… ‘அவளுக்கு விரைவில் மணம் முடிந்துவிட்டால் தேவலாம்’ என்றுதான் யோசித்திருக்கிறேன். மணநாளன்று அதிகாலை ‘அத்தனைக்கும் நன்றி’ என குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்; கூர்மையான பாணமெனினும் அது வலிக்கவில்லை. உனக்கையாக உணரச்செய்யும் அபூர்வமான காயமொன்றைப் போல இன்று காய்ந்து வடுவாகியும்விட்டது. ஒன்றரை வருடங்களுக்கு பிறகு இப்போதெதற்கு அதைக் கீறிப் பார்க்கிறாள்?

வண்டியைப் பார்க்கிங்கில் விடும்போதே தூரத்தில் அவளைப் பார்த்துவிட்டேன். தொலைவிலிருந்து என்னை நோக்கி கையசைத்தபடி வந்துகொண்டிருந்தாள். நடையில் வழக்கமான துள்ளலில்லை. ஒன்றரை ஆண்டுகள் அயல்தேசத்தில் இருந்ததற்கான அடையாளம் எதுவுமில்லை; முன்பு நான் வாங்கிக்கொடுத்திருந்த வெள்ளை நிற குர்த்தியைத் தேடியெடுத்து அணிந்துகொண்டு வந்திருக்கிறாள்; என்ன முயல்கிறாள்?

அருகில் வரவர அதுவரையிலான என் இயல்புத்தன்மையை இழந்து கொண்டிருந்தேன். அன்றைய பொழுது நெடுக்க என்னால் நாடகத்தனமாக மட்டுமே நடந்துகொள்ள முடியும் என்று தோன்றியது.

“ஹை” உற்சாகமின்றி கையை நீட்டினாள். குற்றவுணர்ச்சியை வலிந்து பாவிப்பதாகப் பட்டது. அவளது உள்ளங்கை சில்லென்றிருந்தது. என் கையின் சொரசொரப்பை எனக்கே உணர்த்தும் தொடுகை. நடக்க ஆரம்பித்தோம்.

“எப்ப வந்த இண்டியாக்கு?”

“மூனு நாளாச்சு…”

“என்ன… திடீர்ன்னு…” நான் எதையும் குறிப்பிட்டு கேட்கவில்லை. நடந்து கொண்டிருந்தவள் என் முகத்தைத் திரும்பிப் பார்த்தாள்.

“ஏன்… சும்மாதான்…”

சகஜமாகக் காட்டிக்கொள்ள அவளைப் பார்த்தேதான் பேசினேன். கொஞ்சம் பூசினாற்போல ஆகியிருந்தாள்; குர்த்தி இறுக்கமாகியிருப்பதாகப் பட்டது; உட்கச்சின் தடம் அழுத்தமான இரு பிறைகளாகத் தெரிந்தது. கேசத்தைச் சுருளாக்க முயன்று சரியாக பராமரிக்காமல் விட்டிருப்பாள் போலும்; தலையையொட்டி அலைகளாகவும் எஞ்சியவை சிலிர்த்துக்கொண்டும் நின்றன. தொங்கல் இல்லாத காதணி. அடர்த்தியான இமைச்சாந்து. இதழ்களின் ஈரப்பதத்தை மட்டும் உயர்த்திக்காட்டும் மெல்லிய சாயம். இப்படியேதான் ஒன்றரை ஆண்டுகளும் இருந்தாளா? அல்லது இவை இந்நாளுக்காக நினைவிலிருந்து வலிந்து மீட்டிருக்கும் ஒப்பனையா?

“அப்டியே இருக்க…” சொல்லிவிட்டேன்.

“நீயுந்தான்…” மிதமாகப் புன்னகைத்தாள். மிகச் சன்னமாக மறுத்து தலையசைத்தேன். “முன்னவிட இப்ப யங்கா தெரியுற…” முந்தைய கருத்தைத் திருத்துவதைப் போல சொன்னாள். சிரித்துக் கொண்டேன்.

ஹிந்தி திரைப்படமொன்றிற்கு டிக்கெட் வாங்கியிருந்தாள். அவளுக்கு மொழி தெரியும். முன்பும் இப்படித்தான் போய் அமருவது வழக்கம். பரிசோதகனைக் கடந்து இருக்கையைத் தேடிப்பிடித்து உட்கார்ந்த போது, அச்சூழலின் அமைதி உறுத்தலாக இருந்தது. சீக்கிரம் கூட்டம் கூடிவிடவேண்டும் என்றிருந்தது.

“எத்தன நாள் இருப்ப… லீவா எதுவும்?” சாதாரணச் சந்திப்பைத் தாண்டிய எதையும் எதிர்நோக்கவில்லையெனினும் அவள் தரப்பு பொருளை அறியும் குறுகுறுப்பு.

“ஏன்… என்ன வெரட்டிவிடணுமா சீக்கிரம்?”

“ச்ச ச்ச…” அவளால் சகஜமாக பேசமுடிவதே என்னை நிலைகொள்ள விடாமல் செய்தது.

“ஊருக்கு போகலயா? வந்துட்டு ஏன் மூனு நாளா மெட்ராஸ்லயே இருக்க?”

பதிலெதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள். அவளுக்கு உவப்பில்லாத எதையேனும் பேசினால் முன்னரும் இப்படித்தான் இருந்திருக்கிறாள். அழுத்தமான கடந்தகாலத் தருணங்கள் கலவையாகவும் தெளிவில்லாமலும் நினைவில் குறுக்கிட்டன. முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

அவளது திருமண வாழ்க்கையைப் பற்றி நானே விசாரிக்கவேண்டுமென காத்திருக்கிறாளா? அப்படியான பேச்சுக்குள் நுழைவதுதான் அந்தக் கணத்தில் என் கண்ணியத்தையும் உயர்த்திப் பிடிக்கும் – துளியும் பிடிக்காத அந்தக் கேள்வியைக் கேட்டேன்.

“ஹஸ்பண்ட் எப்டி இருக்காரு… வந்திருக்காரா?”

முகத்தை கால்வட்டத்திற்கு திருப்பி கண்களை மட்டும் முழுமையாக எனை நோக்கி உருட்டி, மேலுதட்டால் மட்டும் சிரித்தாள். அங்கிருந்த ஊமையொளியில் பரிகசிப்புடன் பார்க்கும் கண்கள் தனித்து மின்னின. இந்தக் கேள்விக்கு அவள் கொடுக்கும் இடைவெளியின் கனத்தை நான் எப்படி உள்வாங்குகிறேன் என மிக அந்தரங்கமாக அவள் ரசிப்பதைப் போலிருந்தது.

“இல்ல… நா மட்டுந்தான் வந்திருக்கேன்” சொல்லிவிட்டு இமைக்காமல் அப்படியே இருந்தாள். மேற்கொண்டு அந்தக் கேள்வியை நீட்டிக்க வேண்டாம் என்று நிறுத்திக் கொண்டேன். பத்து வினாடிகளாவது இருக்கும்; முழுமையாக என்னை அளந்து முடிந்துவிட்டதைப் போல சற்று நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

கல்லூரி வயதையொத்த சிலர் எங்களுக்கு இருமருங்கிலும் அமர்ந்ததும் சற்று ஆசுவாசமாக இருந்தது. குறைந்தபட்சம் அவளுடன் பேசமாமலிருக்கவேனும் அது சற்று ஏதுசெய்யுமெனப் பட்டது. திரையில் ஒளி வந்ததும், புகைவிளக்குகள் அணைக்கப்பட்டன. இடைவேளை வரை நான் என்னென்னவோ யோசித்துக்கொண்டே இருக்கப்போகிறேன்; வெளிப்படையாக அவளும் எதையும் பேசுவதாகத் தெரியவில்லை; எதற்காக இந்த வதை?

திரைப்படம் தன்போக்கில் எங்கேயோ நிகழ்ந்து கொண்டிருந்தது. நான் அந்த இடத்திலிருந்தே பூரணமாக அந்நியப்பட்டிருந்தேன். அதுவரையில் இருவராலும் தீண்டாமல் விடப்பட்ட இடையிலிருக்கும் கையிருக்கையின் மீது அவள் சற்று சாய்ந்து அமருவதை உணர்ந்தபோதுதான் நிலைக்கு வந்தேன். வாசனைப் பூச்சின் கலப்படமில்லாத வியர்வை நெடியில் தகியாய் தகிக்கும் நினைவுகள். எதிர்பாராத கணமொன்றில் மெல்ல என் புஜத்தைப் பற்றிக்கொண்டு கன்னத்தை என் தோள்மீது வைத்துக்கொண்டாள். ஒரு வினாடி உடல் முழுமையாக உதறி அடங்கியது. அசெளகரியத்தின் சலனம் அவளுக்கும் புரிந்துவிட்டதோ என்னவோ, பிடியைக் கொஞ்சமாக தளர்த்தினாள். மிக அந்தரங்கமான கூசல் அது. கையை விலக்கிவிட வேண்டும் என்று மட்டும் தோன்றவேயில்லை. அழுத்தமற்றப் பிடி அளித்த பேராறுதல் அனிச்சையாக இசையச் செய்தது. அதிர்வு தணிந்த பொழுதில் அவளது உச்சந்தலையில் என் கன்னத்தை ஒற்றியெடுத்தேன். பிடியை மீண்டும் இறுக்கிக் கொண்டாள்.

இடைவேளையிலும் ஒரு வார்த்தை பேசவில்லை; சாய்ந்திருந்தவள் எழவே இல்லை. உறங்கியிருக்கவுமில்லை. எத்தனை எளிதாக என்னை மீண்டும் கனிய வைக்கிறாள்? ஒன்றரை ஆண்டுகள் எத்தனை தூரம் அவளிடமிருந்து விலகியிருந்தேன்? இணையத்திலோ, நண்பர்கள் வட்டத்திலோ எப்படியுமே அவளைப் பற்றி எதுவுமே என்னை அண்டவிட்டதில்லை. வலிந்த கட்டுப்பாடு என்றில்லை. பழக்கப்படுத்திக் கொண்ட விலகல். இன்று இப்படி அவளைப் பற்றிக்கொண்டு அமர்ந்திருப்பதும் எனக்கு சாத்தியம்தானா?

“ஆர் யூ ஓகே… என்னாச்சு? ஏன் திடீர்னு?” கழுத்தை நிமிர்த்தாமல் கேட்டேன்.

“திடீர்னுனா? புரியல…”

“வந்து என்னை பாக்கணும்ன்னு…”

“உனக்கு எதுவும் இதுல கஷ்டமா இருக்கா?”

இப்படி மட்டும்தான் பதில் சொல்ல வேண்டுமென்று உத்தேசித்துவிட்டாள் போலிருந்தது. நான் தெரிந்துகொள்ள நினைப்பது அவளுக்கு புரியாமலில்லை. ஆனால் என் தரப்பிலிருந்து அதுகுறித்து எந்த விசாரணையையும் அனுமதிக்கப் போவதில்லை என்பதிலும் தெளிவாக இருக்கிறாள்.

கழுத்தில் தாலி இருந்ததா? இருந்திருந்தால் நிச்சயம் அது என்னை முதல் கணத்திலேயே உலுக்கியிருக்கும். மணமுறிவு எதுவும் ஆகிவிட்டதா? இருட்டில் பார்க்கவும் முடியவில்லை.

“கெளம்பலாமா?” புதிய புழுக்கம் பொறுக்க முடியாமல் கேட்டேன்

“படம் முடிஞ்சே போகலாமே… இன்னும் ஒன் ஆர் தானே…” இறைஞ்சலேதான் அது.

இருக்கையில் சாய்ந்து கொண்டேன். திரையரங்கிலிருந்து வெளியே சென்றதும் இது முற்றுப்பெறப் போகிறதா அல்லது இதுவொரு புதிய துவக்கத்திற்கான ஆரம்பப்புள்ளியா..? அவளுடனான என் நீண்ட எதிர்காலத்தைக் கணக்கிட்டுப் பார்த்தேன். எங்கேயோ விட்டு மறந்துபோன கதையின் தொடர்பற்ற தொடர்ச்சி. ஆத்மார்த்தமான ஒன்றாகத்தான் தெரிந்தது. மறுப்பதற்கு யாதொரு கசப்பும் என்னுடைய தரப்பில் எஞ்சியிருக்கவில்லை. கடந்த காலத்து முரண்கள் எதையும் கருத்திலெடுக்க மனம் வரவில்லை.

கன்னத்தைத் தேய்த்துத் திருப்பி இதழ்களை என் தோளில் அவள் பதித்திருப்பதை உணர்ந்தேன். அசையாமல் இருந்தாள். அவளுக்கு என்னால் மறுப்பு சொல்லிவிட முடியாது என்பதை அத்தனை துல்லியமாக கணித்திருக்கிறாளா? அத்தனை எளிதில் யூகிக்கக்கூடியவனாகவா இருக்கிறேன்?

கூட்டம் கலையும்வரை எப்போதும்போல இருக்கையிலேயே இருந்துவிட்டு இறுதியாக எழுந்தோம்.

“லன்ச்க்கு கூட்டிட்டு போறியா?” கையிலிருந்த பையைத் துழாவிக்கொண்டே கேட்டாள். அவள் என்னிடம் உரிமை எடுத்துக்கொள்வது ஒரே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் சலிப்பாகவும் இருந்தது. நீளும் அந்தச் சந்திப்பின் சுகந்தம் ஒருபக்கம் என்றால், மறுப்பு சொல்ல வேண்டும் என்ற மனக்கேவலுடன் மறுபக்கம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தேன்.

வெளிச்சத்திற்கு வந்ததும், கழுத்தில் இருந்த மிக மெல்லிய, ஆனால் ஆடை விளிம்பைத் தாண்டி உள்ளே செல்லும் நீண்ட சங்கிலியைப் பார்த்தேன். நிகழ்காலத்தின் திணிப்பு முகத்தில் அறைந்தது. நிலைதவறுவதை மறைப்பதற்கு நான் சிரமப்படுவது அப்பட்டமாகத் தெரிந்திருக்க வேண்டும்.

“ஆட்டோல போவோமா? நா வந்து அப்றம் பைக்க எடுத்துக்குறேன்…”

“இல்ல ஏன்… பைக்லயே போவோம்…” என் தயக்கத்தைப் பொருட்படுத்தி அது அவசியமில்லை என குறிப்பிடும் அழுத்தம் அந்தப் பதிலில் இருந்தது.

கைப்பாவை ஆகிவிட்டதைப்போல ஏனோ ஒரு தன்னுணர்வு. சுயத்தை நொந்துகொள்வது எப்போதும் எனக்கு சுலபமாகத்தான் இருந்திருக்கிறது. அப்போதே விடைபெற்றுக் கொள்ளலாமென்று பட்டது. அர்த்தமற்ற கனத்தைச் சேர்த்துக்கொள்ள வேண்டாமென்ற தெளிவுதான்.

“நான் கெளம்பவா? ஏதோ எனக்கு கம்ஃபர்ட்டபிளா இல்ல… மோரோவர் கொஞ்சம் வேலையும் இருக்கு…” தயங்காமல் சொல்லிவிட்டேன்.

கையைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தாள். கண்கள் குறிப்பற்று என் மாரில் பதிந்திருந்தன. கீழுதட்டை மடக்கியபடி எதுவும் பதில் சொல்லாமல் நின்றிருந்தாள்.

“என்ன யோசிக்கிற?” என்னால் அவள் அப்படி நிற்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.

“நத்திங்… நீ கெளம்பு… நானும் கெளம்புறேன்…” கன்னங்களை இழுத்து புன்னகைத்தாள்.

“எப்டி வந்த?”

“ஆட்டோல… ஏன்?”

“ஹ்ம்… கேட்டேன்…” அவளது முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கத்தான் போராடி தோற்றுக் கொண்டிருந்தேன்.

“எனக்கு தெரியுது நா உன்ன டிஸ்டர்ப் பண்றேன்னு… தேவயில்லாம… பட்…” இதழோரத் தசைகள் விம்மின. “சாரி” தலையைத் திருப்பிக் கொண்டாள், “ரொம்ப செல்ஃபிஷா பண்றேன்ல… உன்னப் பத்தி எதுமே யோசிக்காம… எப்பவுமே அப்டிதான் இருந்திருக்கேன் போல…”

“ஹே… ப்ளீஸ்… அப்படில்லாம் இல்ல” நான்தான் அநாவசியமாக சிலுப்பிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. எதார்த்தத்தை ஏற்காமல் எதையோ நிரூபிக்கத் துடிக்கும் அசட்டுத்தனத்தைத்தான் செய்து கொண்டிருக்கிறேன் – இது புரிந்தும் வெளிப்படையாக அவளைத் தேற்றுவதை ஏதோ தடுத்தது. ரணமளிக்கும் நுன்னுணர்வுகளை ருசிக்கத் துடிக்கும் பசி.

“ஐயம் ஜஸ்ட் வர்ஸனிங் யுஅர் டே…” என் மறுப்பை அவள் கண்டுகொள்ளவில்லை. “ஸ்டில்… லன்ச்க்கு மட்டும் போலாமா… ப்ளீஸ்… ஆட்டோலயே போலாம்…” அவ்வளவுதான்; ஒட்டுமொத்தமாக என்னைத் தன் கட்டுக்குள் கொண்டுவந்து விட்டாள். என்னிடம் அவளுக்கு மட்டுமே சாத்தியமானதை அவள் செய்துமுடித்து விட்டாள்.

முகத்தில் சுற்றிக்கொள்ள துணி எதுவும் வைத்திருக்கவில்லை. எப்போதையும் மிதமான வேகத்தில் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன். முதுகில் சாய்ந்துகொண்டு வந்தவள் காதருகில் வந்து கேட்டாள், “உன்கிட்ட ஒரு லன்ச்க்கு போறதுக்கு நான் அழுதெல்லாம் கேக்கணுமா?” தலைக்கவசத்தோடு பெரிதாக இடவலமாக தலையசைத்தேன். அணைப்பின் நெருக்கத்தைக் கூட்டினாள். சுற்றத்தின் பிரக்ஞையின்றி நடந்துகொள்பவளில்லை. அவளது உறுதியற்ற நிலை என்னை மேலும் மேலும் அசெளகரியப்படுத்தியது. சேரவேண்டிய இடம் சீக்கிரம் வந்து தொலைந்துவிட்டால் தேவலாம் என்றிருந்தது.

இடத்தை அடைந்து வண்டியை நிறுத்த முனைந்தபோது, “ரிட்டன் ஆட்டோல ஏத்திவிட்ரு… பரவால்ல…” என்றாள்.

“ஏன்… நானே டிராப் பண்றேன்…”

“இல்ல பரவால்ல… அப்ப ஆட்டோல போயிக்கிறேன்…” வண்டியை நிறுத்தியும் இறங்காமல் சொன்னாள் “இப்போ இன்னும் கொஞ்சதூரம் பைக்ல போயிட்டு வரலாமா?”

இத்தனை குழந்தைத்தனமாகவெல்லாம் முன்பு எதையுமே அவள் விண்ணப்பித்ததில்லை. எப்போதும் என்னைவிடவும் மனமுதிர்ச்சியுடையவளாகத்தான் நடந்து கொண்டிருக்கிறாள். மிக பலவீனமாக ஏன் இப்படி காட்டிக்கொள்கிறாள் என்றிருந்தது.

“எறங்கி வா… சாப்ட போலாம்… ரிட்டன் நா வர்றேன்”

எத்தனையோ முறை முன்பு இருவருமாக வந்துபோன உணவகம்தான். இடைப்பட்ட நாளில் நான் அங்கு செல்லவேயில்லை. இப்போது அங்குதான் போகவேண்டுமென ஏன் தோன்றியதென்பதும் புரியவில்லை.

வாஷ்ரூமில் அத்துமீறிய நினைவுகள்; கை அலம்பிக் கொண்டிருந்தவளைக் கண்ணாடியில் பார்த்தேன். குறும்பாக ‘என்ன’ என்பதைப் போல புருவத்தை உயர்த்தினாள். “ஒன்னும் இல்ல… வா” புன்னகைத்தேன்.

மறைவாக இருக்கும் கடைசி மேசையில் அமர்ந்தோம்.

“என்ன என்னையெல்லாம் மீட் பண்ணனும்ன்னு தோனிருக்கு…” உணவுப் பட்டியலை மேய்ந்து கொண்டே கேட்டேன்.

“உன்ன மன்னிக்கனும்ன்னு தோனுச்சு அதான்…”

நிமிர்ந்து பார்த்தேன். சிரிப்புடன் கலந்த அதே பழைய குறுகுறுக்கும் கண்கள்.

“ஆமா… பாவிதான நான்…”

“அச்சோ… ச்சான்ஸ் கெடச்சா ஒடனே பெர்ஃபார்ம் பண்ண ஆரம்பிப்பியே… ப்ளீஸ் கீப் திங்ஸ் லைட்டர்…”

“ரொம்ப ஹெவியா தெரியறேனா?”

“ஆமா…”

“இல்ல… அப்படிதான் ஆயிட்டேன் போல…”

சட்டென அவளது முகம் சுருங்குவது தெரிந்தது. எனக்கு தேவைப்படுவதும் அதுவாகத்தான் இருக்கும். வாட்டம் மாறாமல் அப்படியே இருந்தது. முடிவில், “சாரி…” கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தாள். அடர்த்தியாகக் குவிந்திருக்கும் மெளனத்தின் இதம் – அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். முழுமையாக மூன்று நிமிடங்கள்.

“ச்சில்… அதெல்லாம் விடு… ஊர்ல எல்லாம் எப்டி இருக்காங்க…” என்னை நானே தேற்றிக்கொள்வதைப் போல காட்டிக்கொள்ளும் போது அவளது கண்கள் மேலும் சிறுத்தது. அவள் எதுவுமே பேசவில்லை. ஓர் உடைவைத் தவிர்க்கிறாளாயிருக்கும்.

“நானும் பாவ மன்னிப்பு கொடுத்துட்டேன்… கண்ண தெற..”

மெல்லச் சிரித்துவிட்டாலும் கண்களில் திரண்டிருந்த நீர் தன்போக்கில் இறங்க ஆரம்பித்தது. கைக்குட்டையை நீட்டினேன். துடைத்துவிட்டு முகர்ந்துப் பார்த்தாள்.

“சிகரெட் குடிக்க ஆரம்பிச்சிருக்கியா..?”

“ச்ச… இல்ல… தேவதாஸ் சீன்லாம் இல்ல…”

“பொய்யி… கெர்ச்சீஃப்ல நாத்தம் அடிக்குது…”

“ஜீன்ஸ் ரூம்மேட்டோடது… பாக்கெட்ல நேத்து எதுவும் வெச்சிருந்திருப்பான்…”

“ச்சய்… சரியான குப்பமூட்ட… திருந்தவேமாட்ட நீ…” தலையில் கை வைத்துக்கொண்டு சிரித்தவள், மெல்ல அருகில் வந்து, “ஜட்டியாவது உன்னோடதா?” கேட்டுவிட்டு வாயைப் பொத்திக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள். அவளால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. இப்படியெல்லாம் முன்பு அவளால் மிகச் சாதாரணமாக கேட்டுவிட முடியும். ஏன் இத்தனை செயற்கையாக நடந்துகொள்கிறாள் என்றிருந்தது.

இறைச்சித்து ண்டுகளை முழுமையாக உண்ணத் தெரியாது அவளுக்கு. மேலாக சிவந்து மொறுமொறுப்பாக இருக்கும் பகுதியை மட்டும் கடித்துவிட்டு எஞ்சியதை என்னிடம் கொடுத்துவிடுவாள். அத்தனை துண்டுகளுக்கும் அதுதான் விதி.

ஆர்டரின் போது, “லாலிப்பாப் ஒன்னு…” என்ற இடத்தில் நிறுத்தி, அவளைப் பார்த்தேன். அவள் அதை கவனித்ததாகத் தெரியவில்லை.

“நீ ஊருக்கு போனியா?” ஆர்டர் எடுத்துக்கொண்டவர் நகர்ந்ததும் கேட்டாள்.

“நாலு மாசத்துக்கு முந்தி போனேன்…”

“அம்மா நல்லாருக்காங்களா? என்ன பத்தி எதும் விசாரிப்பாங்களா?”

“ஹ்ம்ம்… பேசுனியா? எப்டி இருக்கா? கொழந்த இருக்கா? இப்டி எதாச்சும் கேப்பாங்க…”

தலையாட்டிக் கொண்டாள். இந்த இடத்தில் என் அடுத்த கேள்வியைக் கேட்டுவிடுவதற்கான வெளி கிடைத்துவிட்டதாகப் பட்டது.

“கொழந்த இன்னும்… ப்ளான் பண்ணலயா..?”

அன்று காலையிலிருந்து தொக்கி நிற்கும் என் அத்தனை கேள்விகளுக்குமான முழுமையான விடை அவள் சொல்லப்போகும் பதிலில் இருக்கிறது என்பதால் அவளை கடக்கவிடக் கூடாது என்பதில் திட்டவட்டமாக இருந்தேன்.

“யா… பண்ணனும்”

எனக்கு போதவில்லை.

“ஏன் போஸ்ட்போன் பண்ற… ஆல்ரெடி 29 ஆயிருச்சுல்ல…”

“அதனால..? கெழவி ஆயிட்டேனா?”

“ஹே ப்ளீஸ்… அப்டியா சொல்றேன்… அப்பறம் செகண்ட் ச்சைல்டுக்கு மூனு நாலு வருஷம் ஸ்பேஸ் வேணும்.., அப்போ 35 ஆயிடும்..,”

‘உனக்கு இப்போது என்ன தெரியவேண்டும்?’ என்று கேட்பதைப் போல மூச்சை அழுத்தமாக வெளியேற்றி சிரித்தாள். மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் முன்பு நாங்கள் பேசிக்கொண்டது சட்டென எனக்கு நினைவில் வந்துபோனது. அந்நாட்களில் இருவருக்குமே அது விருப்பமாக இருந்தது. கண்களைத் தாழ்த்திக் கொண்டேன்.

“மூனாவது கொழந்தையப்ப நாப்பது வயசு ஆயிடும்ன்னு கவலப்படுறியா..?” சொல்லிவிட்டு கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள். எனக்கு தூக்கிவாரிப் போட அடிவயிற்றில் சில்லென்றிருந்தது. காலையிலிருந்து நடப்பவையனைத்தும் என் கட்டுப்பாட்டை மீறியவையாகத் தோன்றின. அவள் சொல்லியதிலிருக்கும் புதிர் மறுபக்கம் குறுகுறுப்பாக இருந்தது. மிக அபத்தமாக உடனிணைந்து சிரிக்க முயன்றேன். நானும் அவளும் மூன்று குழந்தைகளும் சேர்ந்திருக்கும் சுவரோவியத்தை வீட்டின் முகப்பில் வைத்து யோசித்தேன்.

“மூனுதானா இப்பவும்?” பதிலின் முழுமை எனக்கு உடனடியாக அவசியப்பட்டது.

“நீ வேற.., வீ ஆர் ட்ரையிங் தான்.., பாப்போம்… ஹோப்ஃபுலி சூனர்…” அலைப்பேசி திரையைப் பார்த்துக்கொண்டே மிகச் சாதாரணமாக இதைச் சொன்னாள்.

சட்டென என் எண்ணச் சங்கிலி கொத்தாக அறுந்து சிதறியதைப் போலிருந்தது. காட்சிகள் அனைத்துமே கசந்தன. சுயத்தின் மீது அருவருப்பு மூண்டது. கழுத்துப்பட்டியை ஒட்டிய வியர்வையைத் துடைத்துக் கொண்டேன். மேற்கொண்டு என்னால் எதுவுமே பேசமுடியாது என்ற புள்ளிக்கு வந்துவிட்டேன். மிக மோசமாக வீழ்த்தப்பட்டிருப்பதை உடற்சூடு சொல்லியது. பதற்றமானவனாகக் காட்டிக்கொள்ளாமல் ஒரு மிடறு தண்ணீரை எடுத்துக் கொண்டேன்.

அலைபேசியை வைத்துவிட்டு மேசையில் கையூன்றி தீர்க்கமாக சொன்னாள், “லீவ் மை மரைட்டல் லைஃப்… இருக்குற கொஞ்ச நேரம் வேற எதாச்சும் பேசலாம்…”

எதற்காக இந்த ‘கொஞ்ச நேரம்’? ‘என்னுடைய திருமண வாழ்க்கையைப் பற்றி பேசிக்கொண்டிருக்க வேண்டாம்’ என்று அவள் சொல்லியதில் எந்தச் சோகமும் இருக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டு கவனித்திருந்தேன். நிறைவான ஒரு வாழ்வில் தன்னைப் பொருத்திக் கொண்டிருப்பவள் எனக்கு ‘கொஞ்ச நேர’ பிச்சை அளிக்க வந்திருக்கிறாளா? அல்லது தன்னிடமிருக்கும் மிச்சக் காயங்களுக்கு களிம்பு பூசிக்கொண்டிருக்கிறாளா? இறுதியில் என்னிடம் ஒரு ‘சாரி’ சொல்லிவிட்டு கைக்குலுக்கிவிட்டு கிளம்பப் போகிறாள். எஞ்சியிருக்கும் குற்றவுணர்ச்சிகளைக் கழுவிக்கொள்ள என்னுடைய ‘கொஞ்ச நேரம்’ மட்டும் அவளுக்கு போதுமாக இருக்கிறது.

கேட்டிருந்தவை மேசையில் வைக்கப்பட்டிருந்தன. இயல்பை இழக்காதவனாகத் தெரியவேண்டும் என்பது மட்டும்தான் அந்தக் கணத்தில் தோன்றியது. அத்தனை நேரமும் வலியை நினைவுக்கூர்ந்து உடல்மொழியில் வெளிப்படுத்திக் கொண்டிருந்ததை யோசிக்க வெறுப்பாக இருந்தது. எப்போதோ விடைபெற்றவள் விடைபெற்றவளாகவேத்தான் வந்திருக்கிறாள். நானும் எப்போதோ வேறொரு வாழ்க்கைக்கு முழுமையாக என்னை ஒப்புக்கொடுத்து விட்டேன். காலை அவளுடைய அழைப்பு வந்ததிலிருந்து இல்லாத சலனங்களை வருவித்துக்கொண்டு என்னன்னமோ செய்துகொண்டிருக்கிறேன்.

பழைய சினேகிதர்கள், விபத்தில் இறந்துவிட்ட நண்பனின் மனைவி, தன் அண்ணனுடைய குழந்தையின் அதீத புத்திஜீவித்தனம் என பேச அவளுக்கு எத்தனையோ இருந்தன. நல்ல பசியில் இருப்பவளைப் போல வேகவேகமாக சாப்பிட்டாள். அவள் கடித்துவைத்த இறைச்சித்துண்டுகளை கசடுகளுக்கான தட்டில் பார்க்கும்போது என்மீதே எனக்கு பரிதாபமாக இருந்தது.

வெளியே வரும்போதும் கையைப் பற்றிக்கொண்டுதான் வந்தாள். என் கையை நான் மிகுந்த சிரமத்துடன் தூக்கிக்கொண்டு வருவதைப் போலிருந்தது.

“எங்க டிராப் பண்ணனும்..?”

“கொஞ்ச நேரம் ராண்டமா எங்கயாச்சும் ஓட்டு… அப்றமா சொல்றேன்… டிராப் பண்ணலாம்…” அதே கடினமான புன்னகையை எங்கிருந்தோ மீண்டும் கொண்டு வந்திருந்தாள்.

“இல்ல… க்ரோம்பேட்ல ஒரு ஃப்ரெண்ட பாக்க போகணும்… அப்டியே உன்ன டிராப் பண்ணிட்டு கெளம்புறேன்…”

“கொஞ்ச நேரம்தான… ப்ளீஸ்…” ப்ளீஸ் என்பது அதிகாரம். நிச்சயம் மறுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.

“இல்ல லேட் ஆயிடும் ரொம்ப…”

“பையனதான பாக்க போற… இல்ல யாரும் பொண்ணா?” கேலி செய்வதைப் போலத்தான் கேட்டாள் எனினும், ‘இவளுக்கு என்ன உரிமை இருக்கிறது; இதையெல்லாம் கேட்பதற்கு?’ – கோபம் அடைத்தது எனக்கு.

“பையன்தான்… எங்க டிராப் பண்ணட்டும்…” சொல்லிய உடனேயே இத்தனை கடுமையாக பேசியிருக்க வேண்டாம் என்றிருந்தது. பொய்யாகக் கூட ஒரு பெண்ணைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்ல வராததே எரிச்சலாக இருந்தது. இன்னும் அவளுக்கு அஞ்சுபவனாக இருப்பதா அது? அல்லது அதற்குள் வேறொருத்தியைத் தேடிப்பிடித்துவிட்டதாக அவள் நினைத்துவிடுவதை இழுக்காக நினைக்கிறேனா? எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரத்தில் அவளிடமிருந்து விடைபெற வேண்டும்.

“இல்ல… நீ கெளம்பு… நா பாத்துக்கிறேன்…”

“ஏன்… வா பரவால்ல… டிராப் பண்ணிட்டே போறேன்…”

“பரவால்லன்னுலாம் வேணாம்… நீ போ…” சொல்லிவிட்டு சாலையில் ஆட்டோ வருகிறதா என்பதைப் போல பார்த்தாள்.

வண்டியை ஸ்டார்ட் செய்து அவளருகில் நிறுத்தி, “உட்காரு” என்றேன். பார்த்துக்கொண்டே நின்றிருந்தவள், முகத்தில் அத்தனை வெறுமையுடன் ஏறிக்கொண்டாள்.

பயணம் நெடுக்க பேச்சு எதுவுமில்லை. பிடிமானத்தைத் தாண்டி ஸ்பரிசத்தில் அர்த்தம் இருக்கவில்லை. அந்தச் சந்திப்பை அப்படி முடித்திருக்க வேண்டாம் என்றுதான் தோன்றியது. அவளொரு திருமணப் பந்தத்தில் இருக்கிறாள்; நான் இன்னும் அப்படியொன்றில் நுழையவில்லை. இதனால் மட்டும் அவளையொரு குற்றவாளியைப் போல நான் நடத்தியிருக்க வேண்டாம் என்றிருந்தது. ஒருவேளை எனக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்திருந்தால், இந்த வேறுபாடு இல்லாமல் இருந்திருந்தால், என் நாடக பாவனைகள் எதுவுமே அவசியப்பட்டிருக்காது. அவளை விடவும் இந்தச் சந்திப்பை நான் அதிகம் விரும்புவனாகக் கூட இருந்திருப்பேன்.

அவள் சொன்ன அடுக்குமாடி குடியிருப்பில் அவளை இறக்கிவிட்டேன்.

“யாரு வீடு இது?”

“மீரா ஞாபகம் இருக்கா?”

“யா… தொரப்பாக்கத்துல ஒன்ஸ் மீட் பண்ணோமே… நெனப்பிருக்கு… ட்டாலா…”

“அதெல்லாம் இருக்கும்…” இன்னும் அவள் மாறவே இல்லை என்பதை அந்தச் சுழிப்பு காட்டியது. நானும் சிரித்து விட்டேன்.

“ஊத்தாத… ஒரு கொழந்த இருக்கு அவளுக்கு…”

“ச்ச…”

“நீங்க கெளம்புங்க… ஒங்க ஃபிரண்ட பாக்க…” அது பொய் என்பது தனக்கு தெரியும் என்பதைக் காட்டும் நெளிவு. பதில் சொல்லாமல் அவள் கண்களிலிருந்த மந்தகாசத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“மேல வரியா?” அப்படி நான் பார்த்துக் கொண்டிருப்பதை உடைப்பதற்காக கேட்டதைப் போலத்தான் இருந்தது.

“இல்ல வேணாம்… ஆடா இருக்கும்…”

“அவங்க யாரும் வீட்ல இல்ல… கீ எனக்காக வெச்சுட்டு போயிருக்கா… ஒங்க ஃபிரண்ட லேட்டா பாக்க போலாம்ன்னா… கம்… ஹாவ் சம் டைம்…”

வீடு சாம்பல் நிறத்தை அடிப்படையாகக் கொண்டு கலாப்பூர்வமாக வடிவமைக்கப்படிருந்தது. அங்குலம் அங்குலமாக சிற்ப நுணுக்கத்துடனான வேலைப்பாடு. அத்தனை சுத்தம் எனக்கு ஒட்டவேயில்லையெனினும், பொருளீட்டலின் அர்த்தப்பூர்வமான நோக்கமாக அப்படியொரு வீட்டினை எடுத்துக் கொள்ளலாம். புகைப்படத்திலிருந்த மீராவின் கணவனுடைய முன்நெற்றி வழுக்கையை அதனோடு சமன்செய்து கொண்டேன்.

“குடிக்க எதும் வேணுமா… ஜூஸ்… கோக்… தண்ணி…?”

“ஐஸ் வாட்டர்…”

உணவு மேசைக்கு பின்னாலிருந்த அறையிலிருந்து, “பியர்லாம் வெச்சிருக்காங்க… வேணுமா?” என்றாள்.

“சாப்ட்டதே ஃபுல்லா இருக்கு… தண்ணி மட்டும்” என நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒரு பியர் கேனை உடைத்து குடித்தபடி எனக்கு தண்ணீர் கொண்டுவந்து வைத்தாள்.

“அதான் தொப்பையா? எப்ப ஆரம்பிச்ச இதெல்லாம்…”

“ஆங்… லவ் ஃபெயிலியர்ல குடிக்க ஆரம்பிச்சுட்டேன்…” உதட்டைக் கோணலாக வைத்துக்கொண்டு சொன்னாள். “தொப்பையா தெரியுது..?” வயிறை எக்கிப் பார்த்துக்கொண்டாள். “இதான் செகண்ட் டைம்… ரொட்டீன்லாம் இல்ல… இன்னிக்கு ஏதோ பாத்ததும் தோனுச்சு… அதான்…”

“என்ன பாத்ததுமா?” இவ்வளவு கடந்தும் சுயக்கட்டுப்பாடின்றி அவளிடம் என் முக்கியத்துவத்தைக் கூச்சமேயில்லாமல் பிரகடனப்படுத்திக் கொண்டிருப்பது உறைக்காமலில்லை. அவளுடைய இருப்பில் அபத்தக் குவியலாக ஆகிவிடுறேன்.

“உம்மூஞ்சி…”

பழக்கமேயில்லாமல் குடிக்கிறாள் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

“ஃபிரண்ட பாக்க போறானாம்… பொய் சொல்ல மட்டும் வரவே வராது தொரைக்கு எப்பவும்… பால்வாடி பையன் லீவ் லெட்டர் கதையாட்டம்…” சோஃபாவில் காலை நீட்டி படுத்துக்கொண்டாள். குர்த்தி சற்று மேலே ஏற, ஜெக்கிங்ஸின் பிடிப்பில் தொடைகளிரண்டும் அத்தனை சீராகத் தெரிந்தன. அவற்றின் திரட்சியில் பணிந்த என் கண்களைக் கவனிக்காமல் இருந்திருக்க மாட்டாள். உடனே முகத்தில் அறைந்தாற்போல சரிசெய்யாமல் மெல்ல நிமிர்ந்து எழுந்து உட்கார்ந்துவிட்டாள்.

“இன்னமும் ஏன் அதே கம்பெனில இருக்க? ஸ்விட்ச் ஆப்ஷன் எதுவும் இல்லையா என்ன?” நிச்சயம் நான் பார்த்ததை அவள் கவனித்திருக்கிறாள்.

“ஆப்ஷன்லாம் இருக்குதான்… இதுல ஆன்சைட் வர்ற மாதிரி இருக்கு… அதுக்குதான் பாத்துட்டு இருக்கேன்…” ஏதோ யோசனையில் ஒப்பேற்றுவதைப் போல சொன்னேன்.

“வாட்ட சர்ப்ரைஸ்… சார் சிங்கார சென்னைய விட்டு எங்கயும் போகமாட்டேன்னு பேசிட்டிருந்தாரு முன்னாடி…” – ஏன் இத்தனைப் போலியாக இந்தப் பேச்சை நீட்டிக்கிறாள்…

“முன்னாடி இருந்த மாதிரியா எல்லாம் இப்ப இருக்கு…”

உற்சாகமாகப் பேசிக்கொண்டு வந்தவளுக்கு சுருக்கென்றிருந்ததோ என்னவோ… தொடர்ந்து பேச வரவில்லை.

“என்னை எதாச்சும் சொல்லிக் குத்திட்டே இருக்கணுமா உனக்கு..?” இத்தனை நேரடியாகக் கேட்பாளென நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இலைமறைவாகப் பேசும் வலியின் இதத்தை அவள் பொத்தென போட்டு நொறுக்கிவிட்டதைப் போலிருந்தது. “ஆல்ரெடி சொன்னதுதான்… ப்ளீஸ் எதையும் ஹெவியா ஆக்கிக்க வேணாம். இந்த நாள பின்னாடி யோசிச்சு பாத்து சந்தோஷப்பட்டுக்க முடியணும்… ரெண்டு பேருக்கும்… அவ்வளோதான் எனக்கு…”

அவள் எதையோ விரும்பிக் கொள்ளட்டும்; என்னை வரச்சொல்லி எனக்கும் ஏன் ஏதோ வேலியைப் பின்னுகிறாள். ஒன்றிரண்டு முற்களையாவது தைத்தால்தான், பதிலுக்கு தைக்கப்பட்டால் தான் எனக்கான நிறைவு கிடைக்கும் என்றிருந்தேன். மிக மெல்லிய அந்த சாடிஸ எண்ணத்தை நீர்த்துப்போகச் செய்துவிட்டாள். அத்தருணத்திற்கு சாத்தியமான சுவாரஸ்யம் ஒரே நொடியில் சூனியமாக்கப்பட்டு விட்டதாகத் தெரிந்தது.

எஞ்சியிருந்த பியரை என்னிடம் நீட்டினாள். குடித்துவிட்டு வைத்தேன்.

“இன்னோன்னு வேணுமா?”

“ஹ்ம்ம்… குடு…”

நான் குடிக்க ஆரம்பித்தபோது அறைக்குள் சென்று ஆடையை மாற்றிக்கொண்டு வந்தாள். முடியை அள்ளி முடிந்துகொண்டு முகத்தில் நீரோடு வந்து உட்கார்ந்தாள். துண்டை வைத்து அழுத்தமாக ஒற்றியெடுத்தபோது கன்னமேட்டின் சிவந்தப் பருப்புள்ளிகள் இன்னும் துலக்கமாயின. சாயம் கலைந்த பழுப்பான இதழ்கள். நீர் பட்டதால் மட்டும் தெரியும் மேலுதட்டு விளிம்பின் பூனை மயிர்கள். அந்த முகம் எனக்கு ரொம்பவே நெருக்கமாகி விட்டதைப்போல தெரிந்தது. அடர்நீல தொளதொளப்பான மேலாடையின் கழுத்துப்பகுதி மிக அகலமாக தோள்கள் வரை சென்று வளைந்து, நெஞ்செலும்பில் இருக்கும் மச்சம் வரை காட்டியது.

“அம்மா அலையன்ஸ் பாக்க ஆரம்பிச்சிருப்பாங்களே? ச்செல்ல புள்ளைக்கு?” சம்மணமிட்டுக் கொண்டு கேட்டாள்.

“ஏன்… நாங்க பாத்துக்க மாட்டோமா?”

“பார்ரா… நெஜமாவா?”

“ஏன் நீ வேற… ரெண்டுது பாத்தாங்க… ஜாதகம் அது இதுன்னு… செட்டாகல..” எங்கள் இருவரின் ஜாதகத்தையும் முன்னர் அவளே எடுத்துச் சென்று பொருத்தம் பார்த்துவிட்டு அத்தனை குதூகலத்துடன் பேசிய இரவு நினைவுக்கு வந்தது.

“அதெல்லாம் ஆகும் ஆகும்… சீக்கிரம் யாருக்காச்சும் அந்த அதிர்ஷ்டம் கெடைக்கும்…” கண்களில் அத்தனைக் காதலுடன் அதைச் சொன்னாள். அருகிலிருந்த சிறிய தலையணையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள். அப்படி அமர்ந்தபோது, மார்ப்பிளவு மிக நேரடியாக கண்ணில் பட்டது. அவள் சரிசெய்து கொண்டு அமர முயலவில்லை. நான்தான் தடுமாற ஆரம்பித்தேன்.

“அதிர்ஷ்டம் ஒன்னுதான் கேடு…” சமாளிப்பதைப் போல ஏதோ சொன்னேன்.

“உனக்கு ஒன்ன பத்தி நெறைய ஈகோ… நெறைய ப்ரைடெல்லாம் உண்டு… எனக்கு தெரியும்… ச்சும்மா எனக்காக சொல்லாத…”

“நான் என்ன பத்தி எதேதோ நெனச்சிப்பேன்தான்… மத்தவங்களுக்கு அது அக்ஸ்ப்டபிளா இருக்கணும்ல…”

“ச்சீ… நீ பர்ஃபெக்ட்ன்னுல்லாம் நா சொல்லல… யா அஃப்கோர்ஸ் யூ ஹாவ் ஃப்ளாஸ்… பட் அதெல்லாம் கூட ரசிக்கற மாதிரிதான் இருக்கும்… மோஸ்ட்லி…”

“என்ன பெட்டரா ஃபீல் பண்ண வைக்கணும்ன்னுல்லாம் எதும் சொல்லாத… எனக்கே தெரியும்ல… எனக்கு ஆட்டிடியூட் ப்ராப்ளம் உண்டு… பாப்போம்…”

பெருமூச்சு விட்டுக்கொண்டு நிமிர்ந்தாள். “சாமி… ஓவர் கன்ஃபெஷன் எல்லாம் வேணாம்…” சொல்லியவள் நன்கு நிமிர்ந்து கழுத்தில் ஊதிக்கொண்டாள். தொண்டைக்குழியில் வியர்த்திருந்தது. “எனக்கு தெரியும்… யூ ஆர் நாட் த சேம் பெர்சன் ஆஃப்டர் த ப்ரேக்கப்… நீயே பாசிட்டிவா நெறைய மாறியிருப்ப…” சற்று பின்னே வளைந்து கையைப் பின்னுக்கு கொண்டு போய் சிரமப்பட்டு ஏதோ செய்தாள். உள்ளாடையைத் தளர்த்தும் செய்கை எனப் புரிவதில் சிரமமிருக்கவில்லை. அதை உறுதி செய்வதைப் போல கருஞ்சிவப்பு நிற பட்டி தோளோரத்தில் இளகியது கண்ணில் பட்டது. “அதான் சொல்றேன்… உனக்கு இப்போ ஒரு ரிலேஷன்ஷிப்ப ஹாண்டில் பண்றதுல ஒரு முதிர்ச்சி இருக்கும்… ஒரு பொண்ணுக்கு அதுதான் அதிர்ஷ்டம்…” தலையணையை மீண்டும் மடியில் வைத்துக் கொண்டாள். கழுத்து வரிகளில் ஈரம் பளபளத்தது. முன்பைவிட மேலாடையின் வளைவு மேலும் குறுகியது.

நிச்சயம் திண்டாட்டத்தில் இருந்தேன். அவளுக்கு அது புரியாமலா இருக்கும்? கையிலிருந்த பியரை பாதிக்கு மேல் குடிக்கவில்லை. அவளது ஒவ்வொரு அசைவிலும் என் சலனப்பெருக்குடன் நான் தவிக்க ஆரம்பித்தேன். ‘டோண்ட் பிஹேவ் லைக் ய பிட்ச்’ என கத்தவேண்டும் போலிருந்தது… அவ்வளவு சுத்தக்காரனா நானும்…

“அண்ட் ஐ என்வி ஹர்… ஐ மீன் உனக்கு வரப் போறவள சொல்றேன்…” சொல்லிவிட்டு நிமிர்ந்து கொண்டாள்.

“அதென்ன என்வி… இப்போ புதுசா..?”

“புதுசெல்லாம் இல்ல… எப்பயும் இருக்குறதுதான்… உனக்கும் தெரியும் அது…” கண்களை மூடிக்கொண்டாள். “உனக்கு அப்டில்லாம் எதும் இருக்கான்னு தெரியல… இருக்காது மோஸ்ட்லி…” மெலிதாகச் சிரித்தாள்.

அமைதியாகவே இருந்தேன். அவள் சொல்லிக் கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ளக் கூட என்னால் வளைய முடியவில்லை.

கண்களைத் திறந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தவள், எழுந்து இருக்கையின் கைப்பிடியில் கையூன்றி என் நெற்றியில் முத்தமிட்டு அமர்ந்து கொண்டாள்.

மெல்ல என்னைத் தயார்படுத்திக்கொண்டு அவளை ஏறிட்டேன். உதடுகளை மடக்கிக்கொண்டு மேல்மூச்சுகளுடன் தரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். மேலாடையின் மெல்லியத்தன்மை அனுமதிக்கும் எல்லை வரை பார்த்துக் கொண்டிருக்கும்போது நிமிர்ந்துவிட்டாள். அனிச்சையாக உள்ளாடைப் பட்டியை உள்ளே தள்ளி சரிசெய்து விட்டு, மெல்லக் கேசத்தை முன்னே இழுத்துவிட்டுக் கொண்டாள்.

“ரெஸ்ட்ரூம் எங்க இருக்கு?” சமாளிப்பதைப் போல கேட்டேன். கை காட்டினாள்.

ரத்தவோட்டத்தின் இளஞ்சூட்டை மிகத் துல்லியமாக உணர்ந்து கொண்டிருந்தேன். தன் ‘கொஞ்ச நேர’ பிச்சையை நீட்டித்து எனக்கு எதுவும் சலுகை அளிக்கிறாளா? பொங்கியெழும் என் நகர்வை எது பிடித்து நிறுத்திக் கொண்டிருக்கிறதெனத் தெரியவில்லை. பேருணர்ச்சியின் கொதிநிலையில் அவள் கண்களைச் சந்திக்கவே முடியவில்லை. அவள் என்னை எப்படி பார்த்துக் கொண்டிருக்கிறாள்? எதற்கு காத்துக் கொண்டிருக்கிறாள்? ஒருவேளை நான் அடுத்த நிலைக்கு இதை எடுக்க முனையும்போது சட்டென அவள் உதறிவிட்டால்? அந்தக் கட்டத்தில் என்னை நிறுத்தி சிறுமைப்படுத்த நினைக்கிறாளா?

மனக்கண்ணில் அவளை இன்னொரு முறை இந்த அலைவுகள் எதுவுமின்றி அணுஅணுவாகப் பார்த்தேன். கால்கள் அனிச்சையாக நடுக்கமெடுக்க ஆரம்பித்தன. குவிந்த எண்ணங்களை உச்சத்தை எட்டும் புள்ளிக்கு கொண்டுச் சேர்த்துவிட்டு, வியர்த்து அடங்கினேன். நீண்ட பெருமூச்சுகள். ஆசுவாச மூச்சுகள். எல்லாமே தெளிந்துவிட்டதைப் போலிருந்தது. உடனடியாக அங்கிருந்து புறப்பட வேண்டுமென இருந்தது. காரணம் எதுவும் விளக்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மேற்கொண்டு என்னை அவள் ஆட்டுவிக்க எதுவும் மிச்சமில்லை.

முகத்தில் நீரையள்ளி அழுத்தித் துடைத்துக் கொண்டேன். கண்ணாடியில் தெரிந்த மிருகத்தின் கர்வம் எனக்கு பிடித்திருந்தது. அப்படியே கிளம்பிவிட வேண்டும். கதவைத் சடாரென திறந்து வெளியே வந்தபோது, கழிவறை வாசலிலேயே அவள் நின்றிருந்தாள்.

அத்தனை கூர்மையாகக் கலங்கியிருந்தன கண்கள். சத்தியமாக ஒரு வினாடி தடுமாறித்தான் நிலைக்கு வந்தேன். நேருக்கு நேராக அவளைப் பார்க்கவே முடியவில்லை.

எதுவுமே பேசாமல் அப்படியே நின்றேன்…

நீண்ட மெளன இடைவெளிக்கு பின், “சரி நீ கெளம்பு…” என்று புறங்கையால் மூக்கைத் துடைத்துக் கொண்டாள்.

***


மயிலன் ஜி சின்னப்பன்

வேல்கண்ணன் கவிதை

0

தொற்றுச் சிதறல்கள்
(மறைக்கப்பட்ட மரணங்களுடன் இரண்டாம் அலை)

சுவாசித்த இறுதி மூச்சில் பல்லாயிரம் நுண்ணுயிர்கள்

*
விலகி நின்றாலும் தனித்து இருந்தாலும்
விடுவதாகயில்லை
மரணம்

*
‘மூச்சுப் புடுச்சு உள்நீச்சலடி கண்ணு’ கிணற்றடியில் அப்பா
‘மூச்ச நல்லா இழுய்யா’ சாம்பிராணி புகையிட்ட அம்மா
அடுத்தடுத்து இறந்து போனார்கள்
சுவாசப் பற்றாக்குறையினால்

*
தகனத்திற்கு இன்னும் சில நிமிடங்களே இருக்கிறது
அதற்கு முன்
அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்
எந்தையும் தாயும்

*
“எவ்வளவு காத்து அடிச்சாலும் வெயர்த்து கொட்டும், காத்தைக் குடிப்பவன்” பிள்ளை பருவம் குறித்து பெயரிடுவார் அம்மா

ஒருபிடி மூச்சுக்கு வக்கற்றவனானேன்.

*
‘மாமனோட மனசு மல்லியப்பூ போல…’
யாருடைய அலைபேசியோ ஒலித்தது.
சட்டென்று திரும்பிப் பார்த்தவளின் கண்களில்
சுவாசப் பற்றாக்குறையினால்
இறந்த மாமன் தெரிந்தான்


வேல் கண்ணன்

இசைக்காத இசை குறிப்பு, பாம்புகள் மேயும் கனவு நிலம் தொகுப்புகளின் ஆசிரியர். திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் தற்போது பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார். மின்னஞ்சல் முகவரி: velkannanr@gmail.com

முருகக்கா

0

சுஷில் குமார்

தியம் ஒரு மணிக்கு அந்த கட்டிடத்திற்குள் சென்றவன் இரவு 9 மணியாகியும் வெளியேற முடியாமல் அதன் கண்ணாடிப் பிரதிபலிப்பிற்குள் வந்து போய்க்கொண்டிருக்கும் உருவங்களைப் பார்த்து சலித்துப் போயிருந்தேன். முழுக்கை சட்டையும் ஷூவும் சாக்ஸும் புதிதாகக் கட்டிப் பழகியிருந்த டையும் மொத்தமாகச் சேர்ந்து என்னை இறுக்கிக் கொண்டிருந்தன. அவசரத்தில் சாப்பிடாமல் வேறு வந்துவிட்டேன், அந்த பன்னாட்டு நிறுவனத்தின் பதினைந்தாவது அடுக்கிலிருந்த ஒரு சர்வதேச உணவகத்தில் இருந்த பெரும்பாலான பதார்த்தங்களை நான் அப்போது தான் முதல் முறையாகப் பார்த்தேன். அடுத்த சுற்று நேர்முகத் தேர்விற்கு வயிறு இடைஞ்சலாக இருந்துவிடக் கூடாதென வெறும் முட்டை பப்ஸும் எலுமிச்சை ஜூஸும் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு அடுத்த இரண்டு சுற்றுகளையும் வெற்றிகரமாக முடித்து விட்டேன்.

உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் அயல் நாட்டுக்காரனோடு அவன் மொழியில் பேசி அவனுக்குத் தேவையான சேவையைச் செய்வதற்கு என் நாட்டைச் சார்ந்த ஒருவனே என்னைப் போட்டு என்ன பாடுபடுத்தி விட்டான். என்னவெல்லாம் கேள்வி கேட்கிறான்? அடுத்து ஓர் அயல் நாட்டுக்காரனோடு தொலைபேசியில் உரையாட வேண்டும். அவனது மொழியை அவன் நாட்டு உச்சரிப்பில் சரியாகப் பேசுகிறேனா எனப் பரிசோதிக்கும் சுற்று. அதை சரியாகச் செய்துவிடலாமென நம்பிக்கையாகத்தான் இருந்தேன். மரத்தாலும் கண்ணாடியாலுமான அந்தச் சிறிய குளிர்பதன அறையில் நானும் ஒரு தொலைபேசியும் மட்டும் இருந்து ஒருவரை ஒருவர் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

சற்று நேரத்தில் அழைப்பு வந்தது. அந்த அழைப்பு வருவதற்குள் என்னவெல்லாமோ மனதில் வந்துசென்று விட்டது. பத்தாம் வகுப்பு விடுமுறையில் பம்பாய் அத்தை வீட்டிற்கு விடுமுறைக்குச் சென்று ஒரு மாதம் தங்கியிருந்தேன். ஒருநாள் அத்தைப் பெண்ணின் பிறந்தநாள் விருந்திற்கு மொத்த நகரத்தின் பெரிய பெரிய குடும்பங்களும் வந்திருந்தன. அவர்கள் பேசிக்கொண்ட இரண்டு மூன்று மொழிகளில் எதுவும் எனக்குத் தெரியாததால் ஓர் ஓரத்தில் உட்கார்ந்து நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த மொத்தக் கூட்டத்திலும் என் நெற்றியில் மட்டும்தான் திருநீறு இருந்தது. என் கையில் மட்டும்தான் ஒரு சிவப்புக்கயிறு கட்டப்பட்டிருந்தது. தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமமொன்றில் பிறந்து கூரை ஓடுகளின் வழியே வந்த சூரிய ஒளியில் அறிவியல் படித்து பத்தாம் வகுப்பு வரை வந்ததே பெரிய சாதனை. இதில் ஆங்கிலமெல்லாம் பேசுவது வாழ்நாளில் நடக்கிற காரியமேயில்லை. அங்கே சின்னஞ்சிறு குழந்தைகளெல்லாம் இந்தியும், ஆங்கிலமும் இன்னும் என்னென்ன மொழிகளும் தெரிந்து வைத்திருந்தார்கள்.

ஒரு கட்டத்தில் நான்கைந்து சிறுமிகள் என்னைச் சூழ்ந்துகொண்டு ஏதோ விளையாட்டுப் பொருளைப் பார்ப்பதைப் போல நின்றார்கள். அவர்கள் என்னிடம் என்னென்னவோ கேட்டார்கள். அதில், பல கேள்விகள் எனக்குப் புரிந்தன, பதிலும் தெரிந்திருந்தது, ஆனால், வாயைத் திறக்கக்கூட முடியாமல் அங்குமிங்கும் பார்த்து நின்றேன்.
சரியாக என் அத்தைப் பெண் என்னருகே வரும்நேரத்தில் ஒரு சிறுமி என்னிடம் கேட்டாள், “வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்? ஒய் ஆர் யு நாட் டாக்கிங் எனிதிங்?”

நான் சிரிக்க முயன்று முடியாமல், தலையை இல்லையென ஆட்டி, “யெஸ்…நோ…நோ..” என்றேன். என் அத்தைப் பெண் என்னருகே வந்து நின்று என் கையைக் கிள்ளினாள்.

அந்த சிறுமி தொடர்ந்து, “வாட்? வாட் டு யு திங்க் யு ஆர்?” என்று கேட்டாள். எனக்கு அவள் கேட்டது சுத்தமாகப் புரியவில்லை. ஒவ்வொரு வார்த்தையாக மனதில் ஓட்டிப் பார்த்து புரிந்துகொள்ள முயற்சிப்பதற்குள் சுற்றி நின்ற அத்தனை சிறுமிகளும் எனைப் பார்த்து வாயைப் பொத்திக்கொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டனர். எனக்கு வெப்ராளம் பொத்துக் கொண்டு வந்தது. எரிச்சலும், கோபமும் சேர்ந்து ஒன்றும் செய்ய முடியாமல் கண்கலங்கி நின்றபோது என் அத்தைப்பெண்ணும் அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தாள். அங்கிருந்து ஓடிவிட காலெடுத்து வைத்தவனைப் பிடித்த அவள், “டேய், ஒன்னுமில்லடா. நீ ஒன்ன யாருன்னு நெனச்சிட்ருக்கன்னு கேக்குறா, அவ்ளோதான்.” என்றாள்.

நான் கலங்கிய குரலில், “சரவணன்.. ஐ.. சரவணன்..” என்று சொல்லிவிட்டு வீட்டின் பின்புறம் சென்றுவிட்டேன். அப்படியே கழிப்பறைக்குச் சென்று கதவை அடைத்துக்கொண்டு இருந்த நிமிடங்கள் என்றென்றும் மறக்க முடியாதவை. அவமானம், இயலாமை, ஏதாவது செய்து அந்த அவமானத்தை மாற்றிவிட வேண்டும் என்கிற கர்வம். அன்று ஆரம்பித்த ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கான பிரயத்தனம் என் இளநிலை பட்டப்படிப்பு வரை தொடர்ந்தது. ஓரளவிற்கு என்றில்லாமல் நன்றாகவே ஆங்கிலம் பேச, எழுதக் கற்றுக்கொண்டேன். பிறகு சிலமாதங்கள் வேலைக்கான நேர்காணல் நிமித்தமாக அந்த மொழியை இங்கிலாந்துக்காரன் மாதிரியும் அமெரிக்காக்காரன் மாதிரியும் பேசவும் பயிற்சியெடுத்து தேறினேன்.

ஆனால், அன்று அந்த சிறிய அறையில் அந்த தொலைபேசி அடித்த போது எனக்காகக் காத்திருந்த குரல் என் சுயமரியாதையை சுக்குநூறாக நொறுக்கித் தூக்கியெறிந்து விட்டது. முதல் முப்பது நொடிகளுக்கு அவர் கேட்ட எதுவும் என் காதில் விழாமல், ‘பார்டன் மீ, பார்டன் மீ’ என்று சொன்னேன். பிறகு, ஒருவாறாக அந்த உச்சரிப்பு தெளிவாகி வர, என்னைப் பற்றிய அறிமுகம், என் பலம், பலவீனம், அந்த நிறுவனத்தைப் பற்றிய எனது தகவல் சேகரிப்பு, மற்றும் சில விசயங்களை என்னால் முடிந்த அளவு வேகமாக அமெரிக்க பாணியில் சொல்லி முடித்தேன். அடுத்து அவர் கேட்ட கேள்விக்கு நான் விரிவாக பதில் சொல்லிக்கொண்டிருந்தபோது ஒரு குறிப்பிட்ட தருணத்தில், “ஸ்டாப், ஸ்டாப்..” என்றார்.

எதற்கு நிறுத்தச் சொல்கிறார் என்று நான் குழம்பி விடை ஏதும் கண்டுபிடிப்பதற்குள், “சர்வன், குட் யு ப்ளீஸ் ரிப்பீட் வாட் யு செட் ஜஸ்ட் நவ்?” என்று கேட்டார்.

நான் சொன்ன முந்தைய வாக்கியத்தை அப்படியே திரும்பவும் சொன்னேன். சட்டெனச் சிரித்தவர், அடுத்து கிட்டத்தட்ட ஒரு பத்து முறையாவது என்னை அந்த வாக்கியத்தைச் சொல்ல வைத்தார். அதற்கு முன் ஏறி இறங்கிய அத்தனை நிறுவன நிர்வாகிகளின் ஏளனச் சிரிப்புகளும் ஒட்டுமொத்தமாக என்முன் பேருருக்கொண்டு எழுந்து நின்று என்னைப் பார்த்து கைகொட்டிச் சிரித்ததைப் போல இருந்தது.
கடைசியில் என்னவென்று புரியாமல் ஏன் என்னைத் திரும்பத் திரும்ப அந்த வாக்கியத்தைச் சொல்ல வைத்தார் என அவரிடமே கேட்டு விட்டேன். அதற்கு அவர் தொலைபேசியை வைத்துவிட்டு பக்கத்து அறைக்கு வருமாறு என்னை அழைத்தார்.

வியர்த்துப் போய் பக்கத்து அறைக்குள் அனுமதி வாங்கி நான் நுழைந்த போது என்னை பாடாய்ப்படுத்திய அந்த அமெரிக்கக் குரல் அங்கு ஒரு நாற்காலியில் ஒரு வட இந்தியராக உட்கார்ந்து சுற்றிக்கொண்டிருந்தது.
“சர்வன், வாங்க, ஒட்கார்ங்க.” என்றார் அந்த நிர்வாகி.

“தேன்க் யு.” என்றவாறு பதட்டத்தோடு உட்கார்ந்தேன்.

“லுக், நாம் விசயட்ட உங்க கித்த சொல்லறான்.” என்றார்.

என்ன சொல்லப் போகிறார் என்கிற பதட்டம், பசி, வியர்வை எல்லாம் சேர்ந்து அன்று இரவே இரயிலேறிவிட வேண்டும் என்று தோன்றியது.
“இப்ப, நாம் டமில்ல பேசறான். நீங்க புரியுது? இல்ல, இர்ரிடேட் ஆகுது?” என்று என்னைப் பார்த்து புன்னகைத்தார். பிறகு ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.

ஓர் அமெரிக்கனிடம் பேசுகிறபோது அச்சு அசலாக அமெரிக்கனைப் போலவே பேசவேண்டும். ஒரு வார்த்தை தவறாக உச்சரித்தாலே போதும், அந்த நிறுவனத்தின் வியாபாரத்தில் சில நூறு டாலர்கள் காணாமல் போய்விடும். அதுவுமில்லாமல், இந்தியாவில் உட்கார்ந்து கொண்டு அமெரிக்காவின் ஏதோ ஒரு நகரத்தில் இருப்பதாகச் சொல்லி வியாபாரம் செய்ய வேண்டும். இதில் சிறிது பிசகானாலும் நிறுவனத்திற்கு பெரும் சிக்கலாகி விடும். இதற்காகவே வேலையில் எடுத்த பிறகும் கூட சிலருக்கு தொடர்ந்து உச்சரிப்புப் பயிற்சி வழங்கப்படும். ஆனால், அந்த நிலைக்கு தகுதி பெறுவதற்கே ஆறு சுற்று நேர்காணல்கள்.

“அஸோசியேய்ஷ்ன்…” என்றார். “கம் ஆன், ரிப்பீட்..”

நானும் அதையே சொன்னேன். மேலும் சிலமுறை அதே வார்த்தையை உச்சரிக்க வைத்தார்.

“அசோசியேசன் இல்ல சர்வன், அஸோசியேய்ஷ்ன்.. ட்ரை… ட்ரை..”

“அசோசியேஷன்..”

சிறிது இடைவெளி விட்டு, என்னைப் பற்றியும் என் பின்புலத்தைப் பற்றியும் சில கேள்விகளைக் கேட்டார். ஒரு காகிதத்தில் ஏதோ குறித்துக்கொண்டார்.

சரியாக இரவு பத்து மணிக்கு ஓர் இளம்பெண் வெளியே வந்து தேர்வு செய்யப்பட்டால் அழைப்பதாகச் சொல்லி என்னைக் கிளம்பலாம் என்றார். எத்தனை இடங்களிலெல்லாமோ இதே பதிலைக் கேட்டிருந்ததால் எனக்கு முடிவு தெளிவாகிவிட்டது.

அடுத்த மாதம் பிறந்தால் சென்னைக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிடும். கன்னியாகுமரியில் இரவும் பகலுமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அறை பிடித்துக் கொடுத்து கிடைக்கும் வருமானத்தில் எனக்கு மட்டும் சில ஆயிரங்களை அனுப்பி வைக்கும் அப்பாவை இன்னும் எத்தனை நாட்களுக்குக் கஷ்டப்படுத்த முடியும், வயது வேறு ஏறிக்கொண்டே இருந்தது, படித்த படிப்பிற்கு வேலைக்கு ஏறவில்லை என்கிற கவலையோடு உடன் படித்தவர்கள் சிலர் அமெரிக்காவிலும், துபாயிலும் நல்ல வசதியாக இருப்பது வேறு அம்மாவை சங்கடப்படுத்தியது. இரக்கமற்ற அந்த நீலநிற சென்னை பேருந்துகளில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு கசங்கிப்போய் இன்னும் எத்தனை நிறுவனங்களுக்கு ஏறி இறங்குவது? ஒருமுறை கிட்டத்தட்ட சாலையைத் உரசிக்கொண்டு போய் கீழே விழுந்திருக்க வேண்டியது. எதற்கு இந்தப்பாடு? பேசாமல் மனதைத் தேற்றிக்கொண்டு ஊருக்குக் கிளம்பி விடலாம், ஏதாவது கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்க்கலாம் என்று முடிவு செய்தவாறு ஒரு பேருந்தில் ஏறினேன்.
நடத்துனரிடம் சீட்டு வாங்கி விட்டு அவரது இருக்கைக்கு முன்னால் காலியாக இருந்த இருக்கையில் உட்கார்ந்தேன். சன்னலருகே முகத்தை வைத்து சிறிது காற்று வாங்கி, பின் என் பையிலிருந்த சிவப்புநிறத் தொப்பியை எடுத்து தலையில் வைத்து கண் மறையும் அளவிற்கு இழுத்துவிட்டு இருக்கையின் பின்கம்பியில் தலையை சாய்த்தேன். பல நிறுத்தங்களில் பலர் ஏறி இறங்கினர். என் மனது முழுதும் வெற்றிடமானதைப் போல இருந்தது. பின், சில பாடல்கள் வந்து போயின.

“அட, நீங்கதானா இன்னிக்கி? எப்படி இருக்கீங்க சங்கர் அண்ணே?” என்றொரு கரகரப்பான குரல் வளையோசையோடு கேட்க, “வாம்மா மகராசி, என்ன, ரொம்ப நாளா ஒன்ன பாக்கவே முடியல்லயே?” என்றார் நடத்துனர்.

“நா என்னண்ணே புதுசா சொல்லப் போறேன்? அதே பொழப்புதான். கொஞ்ச நாள் டேசன்ல, அப்புறம் கொஞ்சம் ஒடம்பு சரில்லாம ஆயிடுச்சு. ஒரே இழுப்பா இருக்கு. இப்ப ரெண்டு மூனு நாளாதான் வெளியவே வாறேன்.”

“அப்டியா? என்னத்தச் சொல்ல? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சின. அதுசரி, இப்ப எங்க, மெரினாக்கு தான? போலீஸ் தொந்தரவு இருக்குமே அங்க?”

பேச்சு நாட்டு நடப்பு, குடும்பம், கடவுள் என்று போய் கடைசியில் வண்டியில் நாங்கள் மூவரும் ஓட்டுனரும் மட்டுமிருந்தபோது கொஞ்சலாக மாறியது. இரட்டை அர்த்த வார்த்தைகளில் அவர் நடத்துனரைச் சீண்ட, அவர் செல்லமாகக் கோவிபித்துக் கொண்டார். அப்போது நான் தற்செயலாக நீட்டி முறித்து விட்டபோது, அந்தக்கை நீண்டு வந்து என் தொப்பியை எடுத்தது.

சட்டென எழுந்தமர்ந்த நான் எரிச்சலில், “ஹலோ, எதுக்கு இப்ப தொப்பிய எடுத்தீங்க?” என்று கேட்டேன். அப்போது தான் அவரது முகத்தைப் பார்த்தேன். புருவமற்ற மையிடப்பட்ட நீண்ட விழிகள், ஒடுங்கிய மூக்கு, குழி விழுந்த ஒரு பக்கத்துக் கன்னம், என் உயரம், என் எடையில் அப்படியொரு அழகான உருவம். முகத்திலும் கையிலும் சிறுசிறு தழும்புகள் இருந்தன. நிஜ முடியோடு ஒன்றிரண்டு திருப்பங்களைச் சேர்த்து நீண்ட பின்னல் போட்டு, தலை நிறைய மல்லிகைப்பூ சூடியிருந்தார்.

“அட கோவப்படாத தம்பி. ஒங்க அக்கா எடுத்தா கோவப்படுவியா நீ?”
என்னால் பதில் சொல்ல முடியவில்லை. எரிச்சலில் முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.

அவர் மீண்டும் என் தோளைத் தொட்டு, “தம்பி, எந்த ஊரு? அக்காட்ட பேசாம மூஞ்சியத் திருப்புறியே.” என்றார்.

நான் இலேசாகத் திரும்பி, “அதெல்லாம் ஒங்களுக்கு எதுக்கு? என் தொப்பியத் தாங்க மொதல்ல.” என்று கையை நீட்டினேன்.

சட்டென என் கையைப் பிடித்து திருப்பி உள்ளங்கையைப் பார்த்து,
“இரு, இரு, அக்கா ஒனக்கு நல்லது சொல்லுறேன், என்ன?” என்றார்.

ஏனோ, என்னால் என் கையை வெடுக்கென இழுக்க முடியவில்லை.

“தம்பிக்கு கடல் கண்ட ஊரு. காணாத கஷ்டமெல்லாம் கண்டாச்சு, என்ன? ஒத்தைக்கு ஒரு மவனில்ல, கூட ஒன்னு உண்டு. தெரவியம் தேடி வந்து பல மண்டலம் ஆச்சு. வாய்க்கு வந்தாலும் சனியன் ஒன்னுக்கும் ஒதவல்ல. கைக்காசு ஒன்னுமில்ல. கவுரவம் மட்டும் ஏகத்துக்கு உண்டும். அக்கா சொல்லுறத சந்தேகத்தோடு பாக்குது உள்ள உள்ள நரி மனசு. தொட்டா சிணுங்கியா இருந்திருக்க வேண்டியவன். வாடாமல்லியா இங்க வந்து நிக்கிற. இப்ப, திரும்பிப் போற தெசையால்ல தெரியிது.” என்று முடித்து நீண்ட மூச்சு விட்டவாறு என்னைப் பார்த்து புன்னகைத்தார்.

எனக்கு உடல் நடுங்கியேவிட்டது. அவரது முகத்தையும் அவர் தலையில் வைத்திருந்த என் தொப்பியையும் ஒருமுறை பார்த்துவிட்டு தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டேன். என் கட்டுப்பாட்டை மீறிக்கொண்டு அழுகை வந்தது.

அவர் வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து என் கையைப் பிடித்துக் கொண்டார். நான் கண்களை இறுக்கமாக மூடி முகத்தை வெளியே திருப்பிக் கொண்டு இருக்க, என் கையில் தாலாட்டு பாடுவதைப் போல ஏதோ பாடி தட்டிக்கொண்டே இருந்தார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு நான் மெல்லத் திரும்பி அவரது முகத்தைப் பார்த்தேன்.

“தம்பி, ஒன்னுமில்ல தம்பி. எல்லாம் சரி ஆயிரும், நீ வேண்ணா பாரேன். அக்கா சொன்ன சொல் அப்பிடியே பலிக்கும் தெரியுமா? ஆமா, ஒம் பேரென்ன தம்பி?”

மெல்லத் தயக்கம் விலக, “சரவணன்.” என்றேன்.

“அட, எஞ்சாமி பேரா ஒனக்கு? அப்புறமென்ன தம்பி, எல்லாமே யோகம் தான்… சரி ஆகும்… சரி ஆகும்…”

சிறிது நேரம் மெளனமாக ஏதோ தனக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். பின், என் கை விரல்களைப் பிடித்து சொடுக்கெடுத்து விட்டார்.

திடீரென, “எனக்கும் அதே சாமி பேருதான் தம்பி… முருகன்னு… அம்மா ஆசையா வச்ச பேரு…” என்றார்.

“பசங்கல்லாம் என்னவோ சொல்வாங்களே? ம்ம்… ஆங்… அடிச்சிக்கோ, ஹை ஃபை அடிச்சிக்கோ..” என்று தன் உள்ளங்கையை நீட்டினார். நான் புன்னகைத்து அவர் கையில் அடித்தேன். பிறகு, பயணம் முடியும் வரை தன் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். என்னென்னவோ கதைகள், என்னென்னவோ கஷ்டங்கள், எவ்வளவோ மனிதர்கள்.

மெரினாவை நெருங்கியபோது சட்டென எழுந்து, “தம்பி, இந்த தொப்பிய அக்கா வச்சிக்கவா?” என்று ஆசையாகக் கேட்டார்.

நான் ஒரு நொடி யோசித்து, சரியெனத் தலையாட்டினேன்.
“டேங்க்ஸ் தம்பி… சரி, ஒன் பர்ஸ எடு, சீக்கிரம்…”

நான் தயங்கித் தயங்கி என் பர்ஸை எடுத்து அவரிடம் நீட்டினேன். அதை வாங்கித் திறந்து பார்த்தவர் அதிலிருந்து ஓர் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்தார். அந்த நாணயத்தை தன் முகத்தின் அருகே வைத்து கண்களை மூடி ஏதோ மந்திரத்தைக் கூறிவிட்டு, என்னிடம் நீட்டினார். “இத பத்திரமா வச்சுக்கோ… அக்காவ மறக்காத தம்பி… நல்லா இரு..” என்று சொல்லிவிட்டு பேருந்திலிருந்து இறங்கினார்.

*

பத்து வருடங்களில் நான் சென்ற உயரங்கள், அடைந்த புகழ், வசதி எல்லாமே சில சமயங்களில் ஒரு பெரும் கனவாகத்தான் தோன்றும். அதிருஷ்டமா, கடும் உழைப்பா என்றெல்லாம் நான் ஒருபோதும் உட்கார்ந்து ஆராய்ந்ததில்லை. ஆனால், எப்போது சிறிது கீழிறங்கினாலும் அக்காவின் முகமும் அவர் சொன்ன சொற்களும் எனக்குள் வந்து நின்று என்னை ஆற்றுப்படுத்தும்.

வேலை தேடும் இளைஞர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் என் சொந்த நிறுவனத்தின் ஐந்தாவது கிளையைத் துவக்கி வைப்பதற்காக இன்று வேலூருக்கு வந்தேன். எல்லாம் நல்லபடியாக அமைந்தது. திரும்பிப் புறப்பட்டபோது நிறுவனத்தின் எதிரே என் மனைவியை காரில் உட்கார வைத்து விட்டு தண்ணீர் வாங்குவதற்காக சிறிது முன்னால் இருந்த கடையை நோக்கி நடந்தேன். அலைபேசியில் வந்த ஏதோ செய்தியைப் பார்த்தவாறு நடந்து கொண்டிருந்தேன்.

“ஏய், இங்கப் பாருடி. இந்த சாரு போட்ருக்க சட்ட செமையா இருக்கு பாரேன்.” என்றவாறு என் முன்னே வந்து கையைத் தட்டி நின்றனர் இருவர்.

அவர்களைக் கண்டுகொள்ளாமல் என் பர்ஸை எடுத்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து பக்கவாட்டில் நீட்டியவாறு விலகினேன்.

“தம்பி, எங்களுக்கு ஒன்னும் ஒங்க பத்து ரூபா வேணாம். ஒரு ஒர்ருவா காயின் குடுங்க. எங்க ஆசிர்வாதம், நல்லா இருப்பீங்க.” என்று சொல்லிவிட்டுச் சிரித்தனர்.

நான் பர்ஸிலிருந்து ஒரு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அவர்களிடம் நீட்டினேன். அப்போதுதான் அவர்கள் இருவரின் முகங்களையும் பார்த்தேன். என்னுடல் ஒரு நொடி நடுங்கி விட்டது.

“அட பர்ஸுக்குள்ள வைங்க தம்பி. நானே தொட்டு எடுக்குறேன்.” என்றார் அவர்களில் பெரியவர்.

நான் இலேசாகப் புன்னகைத்தவாறு, ஒரு கணம் யோசித்து நின்றேன். அவர்களுக்குள் ஏதோ இரகசியமாகப் பேசிக்கொண்டார்கள்.

“என்ன சாரு ரொம்ப யோசிக்கிறாரு?” என்றார் இளையவர்.
நான் அந்தப் பெரியவரைப் பார்த்து மீண்டும் புன்னகைத்து என் பர்ஸை அவர்முன் நீட்டினேன்.

அந்த நேரத்தில் யாரிடமிருந்தோ அழைப்பு வர அலைபேசியைப் பார்க்க எடுத்தபோது என் பர்ஸிற்குள் விரலை விட்டு அந்த நாணயத்தை எடுக்க வந்தவர் அப்படியே பர்ஸைப் பிடுங்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார். அதற்குள் அந்த இளையவர் காணாமல் போயிருந்தார்.
நான் செயலற்று நின்று, “அக்..அக்கா..” என்று அழைத்தேன். அக்காவோடு என் அதிருஷ்ட நாணயமும் மறைந்து போயிற்று.

***


சுஷில் குமார். 40-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ள நிலையில், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு மூங்கில் யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளி வந்திருக்கிறது. இதுதவிர அவ்வப்போது மொழிபெயர்ப்புகளையும் செய்துவருகிறார். தன்னறம் வழியாக இவரது மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் நூல் “தெருக்களே பள்ளிக்கூடம்”..

ஆசிரியர் தொடர்புக்கு : sushilkumarbharathi2020@gmail.com

கார்குழலி கவிதைகள்

0

பெருந்தொற்று காலம்

ஓயாமல் இயங்கிக் கொண்டிருந்த
நகரம் விக்கித்து நிற்கிறது.

வேலையில்லாமல் உலாத்தும் நாய்கள்
வெறிச்சோடிய வீதிகளில்
கருத்த நிழல்களைக் காணாத போதும்
மருண்டு ஓடி
கதவடைத்த கட்டிடங்களின்
வாசலில் ஒதுங்குகின்றன.

தீப்பெட்டி வீடுகளில்
அடைந்து கிடக்கும்
குடும்பங்களின் பெருமூச்சை
மீண்டும் மீண்டும் உள்வாங்கி
உலைக்களமாகக் கொதிக்கின்றன
அறைகளின் சுவர்கள்.

மூடப்பட்ட தேநீர் கடையின்
வாயிலை நோக்கி நகரும் கால்களை
திசை திருப்பி
கைத்துப்பாக்கியை நினைவூட்டும்
வெப்பமானியை ஏந்தியபடி
அடுக்கக வளாகத்துள் நுழைகிறாள்
மாநகராட்சி ஊழியை

நகரத்தின் இதயம் தீனமாகவாவது
துடித்துக்கொண்டு இருப்பதைச்
சாட்சியம் கூறுகின்றன
உச்சி மாடியில் படபடக்கும் துணிகள்

துருவேறிய ஜன்னல் கம்பிகளின் வழியே
கண்களைச் சுழற்றி
வீதியுலா போகும் சிறுமி
பட்டாம்பூச்சிகளிடம் கதை பேசுகிறாள்

கனச்சதுர பெட்டிகளை
முதுகில் தாங்கிய
ஆரஞ்சு பச்சை வண்ண மனிதப் புள்ளிகள்
சக்கரக் கால்களோடு
சாலைகளில் உருளுகின்றன

சாம்பல் போர்வை படர்ந்த
மருத்துவமனை வளாகத்தில்
நடைபயிலும் குழந்தை
பொக்கைவாய்ச் சிரிப்போடு
தாயின் கண்ணீரைத் துடைக்கிறது.

பசுமை அடர்ந்த கிளையில்
தத்தியபடி கூவுகிறது குயிலொன்று

வேம்பு அரும்புகள்
வெண் நட்சத்திரமாக
வெடித்துப் பூக்கின்றன.

*

தாயம் விழுமா

சுழற்றிப் போடுகையில்
சிலீரென்று தரையில் மோதி
உருண்டோடும் சோழியில்
இருக்கிறது எதிர்காலம்.

வாதையின் பீதி
முறுக்கிப் பிழிகையில்
மூச்சு முட்டும்
காலத்தின் சுவாசம்

மெல்லப் பரவும்
கரிய மேகத்தின்
நிழல் படரா
மூலையொன்றைத் தேடி
ஓடும் கால்கள்

நெஞ்சை அடைக்கும்
இரும்புக் குண்டு
உடல் முழுதும் உருள்கையில்
முகத்தில் படரும்
அச்சத்தின் ரேகை

அடிவயிற்றின்
சுருக்கவிழா முடிச்சின் வலியில்
ஊற்றாகப் பெருகி
வழியும் கண்ணீர்

ஓசையின்றி வாய்வழியே
வெடித்துச் சிதறும்
அவலத்தின் பெரும் ஓலம்

பேரலை வீசும்
விதியின் கடலில்
சிக்கிப் பதறும்
நெஞ்சமெனும் துரும்பு

எப்படியும்
வாழ்க்கை விட்டெறியும்
சோழியில் விழக்கூடிய
தாயத்தில்தானே
ஒளிந்திருக்கிறது
வெளிச்சத்தின் நம்பிக்கை

***

கார்குழலி, சென்னையில் வசித்து வருகிறார். இணையவழிக் கற்றல் துறையில் பணிபுரிந்து வருகிறார். கவிதைகள் எழுதுவதுடன் தொடர்ந்து குழந்தைகளுக்கான நூல்கள், மொழிபெயர்ப்பு என இயங்கி வருகிறார். அத்துடன் தமது துறை சார்ந்த கட்டுரைகளோடு வெவ்வேறு கட்டுரைகளை பல்வேறு இதழில் எழுதி வருகிறார்.

புதைமணல் மேல் நடனமாடும் வித்தைகள்

0

நந்தாகுமாரன்

முதல் வித்தை: அபத்தம் எனும் அமரத்துவம்

நாய்களின் பிணங்களில் இருந்து
வெளியேறிய உள்ளுறுப்புகளால்
அலங்கரிக்கப்பட்ட நெடுஞ்சாலையில்
பூமிக்கு வடக்கே
அவன் பயணம் செல்கிறான்
சாலையின் இப்பக்கத்திற்கும் அப்பக்கத்திற்கும்
நடுவில் இருக்கும் பகுப்பில்
பூத்துக் குலுங்கும்
செவ்வரளிப் பூக்களின் சிவப்பும் அவனுக்குக்
குருதியின் நல்வண்ணத்தையே நினைவுபடுத்துகிறது
அவன் வளர்த்த நாயின் முகம்
இப்போது அவன் மனதிற்கு வருகிறது
முந்தைய ஒரு பயணத்தில்
அவனுடன் வந்து
இந்தச் சாலையோர ஏதோ ஒரு
காற்றாலையின் ஒரு கைமுனை எலும்பின்
கூர்மையைத் தன் வாயில் கவ்வ முனைந்து
கவ்விய பின்னும் விழுங்க நினைந்து
உடல் சிதைந்து குடல் குடைந்து
செத்த அவன் நாயின் பெயரை
புதைமனப்பிணம் எனப் பிறகு மாற்றித்
தன் கனவுகளிலும் சுமந்து செல்கிறான்
எதிலும் அபத்தம்
எங்கும் அமரத்துவம்
என்று காண்கிறான் 

இரண்டாம் வித்தை: புகையிலை நறுமணம்

புகையிலைப் பனி மூட்டத்தினூடே
அவன் நடக்கிறான்
அவன் நாசி அவனை வழி கடத்துகிறது
விண்வெளியெங்கும் மண்வெளி
பூமி மீண்டும் பெருமையாக வெடித்துவிட்டதா
என அவன் சிந்திக்கும் பொழுதில்
ஆலகாலத்தின் ஆதிகாலத்தில் இருந்து
ஒரு சொட்டு
ஆலகாலத்தின் அதீதத்தின் அகாலத்தில் இருந்து
ஒரு சொட்டு
ரெண்டும் வெட்டிக் கொண்டு கலந்து
பிறந்து வருகிறது புதியதொரு பிண்டம்
வார்த்தைகள் தாம் காண்பிக்க விரும்பும் திசைகளை
அவைகளின் அர்த்தங்கள் தாமே மீண்டும் வழிமறிக்கின்றன
அப்படியான ஒரு பயணத்தில்
தான் காண வந்த
உலகிலேயே மிகப் பெரிய
ரஃப்லெஷ்ஷியா பூக்களைக்
காணாமல் தவறவிடுகிறான் மீண்டும்
நினைவுக்கென்ன கோபமோ
கனவுக்கென்ன சாபமோ
முட்டாளும் ஞானியும்
ஏன் மௌனத்தின் பாதையை
இறுதியாகத் தேர்கிறார்கள் என்பது
அவனுக்கு இப்போது புரிகிறது
பொல்லாமை துலங்கும் தானே
எனத் தனக்குத் தானே கேட்டுக் கொண்டு
முன்னகற்கிறான் மேலும் ஒரு புகை தூரம்.

மூன்றாம் வித்தை: தோல்வியின் வெற்றி

எப்போதும் அவனுக்கு அமைவது
அவனே தான்
தன் பூடகம் தனக்கே புரியாத போதும்
அடுத்தவருக்குப் புரியும் என அவன் நம்புகிறான்
தனக்குத் தானே தீ வைத்துக் கொள்பவன்
தற்கொலைக்கு முயல்பவன் அல்ல
தன் காயங்களை ஆற்ற முடியாதவன்
இன்னும் அதிகம் சிரிப்பைக் கோரும்
அவன் மனிதாபிமானம்
நாவை மட்டும் நீட்டி
நகைச்சுவையிலும் சிறந்த புகைச்சுவையின்
அகலம் தீண்டுகிறது
பாலைவன எச்சில்
இப்போது அவன் கண்களில் ஊர்கிறது
கோலம் புனைந்ததோ
காலம் கனிந்ததோ
4.82803 கிலோமீட்டர் தொலைவில்
இருக்கும் ஞானத்தைத் தவறவிடுகின்றான்
அவன் அனுபவக் கட்டிட மலைகளின்
பின்னே மலர்ந்து
பாரெங்கும் ஒளி பரப்புகிறது
தோல்வியின் சூரியன் 


நான்காம் வித்தை: வார்த்தைகளின் சரசங்கள்

வார்த்தைகளின் சரசங்களின் மீது
இவ்வளவு அர்த்த முட்களா
அர்த்தத்திற்கும் அறிவில்லை
வார்த்தைக்கும் செறிவில்லை
அவ்வளவு தானா அவன் கடவுள்
மறு ஜென்மம் இருக்கும் என்று
நம்புவர்கள் மட்டும்
என் மீது உங்களுக்கு உள்ள காதலை
ஒத்திப் போடவும்
என்கிறான் அவன்
எனினும் எவ்வளவு முட்கள்
எனினும் அதன் மீதும் எவ்வளவு பனி மொட்டுக்கள்
எனினும் இவற்றைத் தாண்டியும் ஒரு பன்னீர் ரோஜா
எனினும் ஏனோ ஏன் என்று கேட்கத் தோன்றுகிறது
உடையாததும் உடைபடுவதும் மலர்வதும் உலர்வதும்
ஒரே சொல் ஒரே இதழ்
ஆனால் வேறு அர்த்தம்
ஒளியின் ஞானப் போக்கு
தன் இருப்பின் பயணத்தை
அகாலம் அடிவருடிய ஆயுள் வருடங்களாகத்
தன் உணர் கொம்புகளில்
தெளிந்த கனவுகளாகச்
சேகரித்துக் கொள்கிறது 


ஐந்தாம் வித்தை: என் பெரிய வாழ்வினைத் தடம் பார்த்துத் தான் தடவியிருக்கின்றாய்

மனிதர்களின் ஒற்றையடிப் பாதையின் தடங்களில்
எறும்புகள் பயணிக்கும் அந்தப் பெரிய வாழ்வின்
துர்விதிக்கு
இந்த மலையேற்றதின் மணிமுடியிலிருந்து காணக் கிடைக்கும்
உன் அந்தச் சால மிகுத்துப் பெய்யும் பார்வையின் நற்கதி தான்
நம் பரஸ்பர வெற்றி
கீழிருந்து பார்த்தால் மனிதர்களுக்கே
இந்தச் சிறிய தடம் மட்டும் தான் தெரியும்
அதையும் தடவிச் செல்லும
உன் பார்வை மிக நுட்பமாக இருக்க
நீ படும் பாடு
எனக்கும் புரியும்
என்பது தான் பிரச்சனை அவர்களுக்கு
அது சரி
ஞானத்தைக் கூடவா
உன் பகடி
விட்டு வைக்காது
இந்த உலகம்
இருளும் போது
நமக்கு மட்டும் ஏன்
விழிப்பு வருகிறது
நமக்கும் வேறு வேலை இல்லை
அப்படி என்ன தான் ஒரு வேலை வைரஸ்
இதை விடச் சிறந்தது
பிறந்து வந்துவிடப் போகிறது
இனி மேல்

***

நந்தாகுமாரன் – ஆசிரியர் தொடர்புக்கு :nundhaa@gmail.com

ஜெயந்தி சங்கர் : நேர்காணல்

0

உரையாடல் : மதுமிதா

எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் மதுமிதா (மின்னஞ்சலில்) ஓர் உரையாடல்

-2019

மதுமிதா: வணக்கம் ஜெயந்தி சங்கர், ஆங்கிலத்தில் நீங்கள் எழுதிய சிறுகதைகள் அண்மையில் நூலாக்கம் பெற்றது குறித்து அறிந்தேன். வாழ்த்துக்கள்.

ஜெயந்தி சங்கர்: நன்றி மதுமிதா. Dangling Gandhi என்ற நூல் 2019ல்பிரசுரம் கண்டிருக்கிறது. 2011ல் எழுதி உள்ளூர் Ceriph இதழில் பிரசுரமான ஒரு கதை தவிர மற்ற 11 கதைகளுமே 2015முதல் நான்காண்டுகளில் எழுதப்பட்டவை.

மதுமிதா: நல்லது, தமிழில் சிறுகதை, குறுநாவல், நாவல் என்று பல வடிவங்களிலும் இருபது வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறீர்கள். ஆங்கில சிறுகதைகளை எழுதும் விருப்பம் எப்போது எப்படி உங்களுக்குள் எழுந்தது?

ஜெயந்தி சங்கர்: சுமார் இருபத்தாண்டுகள் தமிழில் எழுதிய பின்னர் 2015 முதல் ஆங்கிலத்தில் புனைவுகள் எழுதத் தொடங்கியிருக்கிறேன். 1995ல் எழுதத் தொடங்கியபோதே ஈராண்டுகளுக்கு இரு மொழிகளிலுமே எழுதினேன். எனினும், ஒரு கட்டத்தில் ஏதேனும் ஒன்றில் கவனம் செலுத்தலாமே என்றெண்ணியதன் பயனாய் தமிழைத் தேர்ந்தெடுத்தேன்.

அசோகமித்ரன் உள்ளிட்ட மதிப்பிற்குரிய சில மூத்த தமிழ் எழுத்தாளர்கள் சீக்கிரமே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வந்து இறுதிவரை தமிழிலேயே எழுதி வந்தனர் என்பது நமக்கெல்லாம் தெரியும், இல்லையா?

எந்தத் திட்டமும் இல்லாமலே எனக்கு அப்படியே தலைகீழாக நடந்துள்ளது.

சீக்கிரமே ஆங்கிலத்துக்கு வந்துவிடுவேன் என்றே எண்ணியிருந்தேன். ஆனால், நான் நினைத்ததைவிட தமிழ் என்னை நீண்டகாலம் தக்கவைத்துக் கொண்டது. தாமதமாகவேனும் ஆங்கிலத்திற்கு வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

மதுமிதா: ஆங்கில சிறுகதைகளுக்கான வாசகர்கள் உங்களுக்கு முற்றிலும் புதிதானவர்களாகவேதான் இருப்பார்கள். ஏதேனும் முக்கிய விமர்சனங்களை முன் வைத்த வாசகர் யாரும் இருக்கிறார்களா?

ஜெயந்தி சங்கர்: நூல் பிரசுரமாகும் முன்னரே என்னுடைய ஆங்கிலச் சிறுகதைகளை பத்து பேர் வாசித்திருந்தனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாசித்தனர். பெரும்பாலும் இவர்களுக்கு எந்த வழிகாட்டுதலும் தேவையிருக்கவில்லை.

கரு, உத்தி, வடிவம் ஆகிய அனைத்திலும் மிகவும் புதுமையான கதைகளாக இதுவரை தாங்கள் வாசித்ததிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வாசிப்பு அனுபவத்தைத் தந்ததாகவே கூறினார்கள்.

மதுமிதா: ஆங்கிலத்தில் நாவல் எழுதும் எண்ணம் உள்ளதா?

ஜெயந்தி சங்கர்: தற்போது ஆங்கிலத்தில் முழுநீள நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன். புனைவில் அதிகமும் பேசப்படாத புராதனமானதொரு விஷயத்தைத் தொடும் இந்தநாவல் சமகாலக் கதையையும் பேசும். 2018லேயே எழுதி முடித்திருக்க வேண்டியது.ஆனால், பல்வேறு காரணங்களால் தாமதமானது. எப்படியும் 2019 இறுதியில் எழுதி முடிப்பேன். 2020ல் நூலாகலாம் என்றும் எதிர்பார்க்கிறேன்.

மதுமிதா: இத்தனை வருடங்களாக தமிழில் இயங்கி வரும் நீங்கள் ஆங்கிலத்தில் படைப்புகளை அளித்திருந்தால் வாசகர்களிடையே இன்னும் ’ரீச்’ அதிகமாக இருந்திருக்கும் என்று நினைத்திருக்கிறீர்களா?

ஜெயந்தி சங்கர்: அவ்வாறு நினைத்ததே இல்லை. தமிழில் எழுதியதும், தொடர்ந்து தமிழில் இயங்கி வந்ததும் என்றென்றைக்குமே எனக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடியன. இன்னும் சொல்லப்போனால் தமிழில்தானே எனக்கான உறுதியான அடித்தளம் அமைந்தது?

முதல் ஆங்கில சிறுகதைத் தொகுதி இப்போது அழுத்தமாக வரக்காரணமே அந்த அடித்தளம் எனக்களித்த நம்பிக்கையும் அனுபவமும்தான்.

கதை சொல்லல், வடிவ சோதனைகள், உத்திகள் எல்லாம் எனக்கு ஏற்கெனவே பரிச்சயம். மொழிதான் வேறு. காட்சிகளாகவும் ஒலிகளாகவுமே யோசிக்கிறவள் நான். அரிதாகவே சொற்களால் யோசிப்பேன். அப்போது அதிகமும் ஆங்கிலத்தில் யோசிப்பது வழக்கமாகப் படிந்துள்ளது. தமிழில் புனைகையில் கவனமாக தமிழில் யோசிக்க என் மூளையைப் பழக்கிய நினைவுகளும் வருகின்றன.

தற்காலத்தில் எந்த மொழியிலுமே வாசகப் பரப்பை விரிவாக்குவது ஒன்றும் அத்தனை எளிதல்ல. ’ரீச் அதிகமாக ’ செய்வதற்கு பலரும் பெருமுயற்சி எடுப்பதையெல்லாம் ஊடகங்களில் தொடர்ந்து பார்க்கிறேன். ஆங்கிலத்தில் எழுதினால் அது நடக்கும் என்று நினைப்பதெல்லாம் வெற்று மாயை. அவ்வாறு பலரும் குறிப்பிடுவார்கள். நான் வெறுமன கேட்டுக் கொள்வேன். புரிந்து கொள்பவர்களாக இருந்தால்மட்டுமே விளக்குவதற்கு முயல்வேன்.

வேறுபட்ட, பரந்துபட்ட வாசகர்கள் வேண்டுமானால் வாய்க்கலாம். எனினும், அதிகமானோர் வாசிப்பார்கள் என்பதெல்லாம் கிடையாது என்பது எனக்கு பத்தாண்டுக்கு முன்னரே நன்கு தெரியும். 

ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கியது முற்றிலும் விருப்பம் சார்ந்தது. அதுபோன்ற நோக்கங்கள் சார்ந்ததல்ல.

மதுமிதா: தமிழ்ச் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து தொகுப்பாகக் கொண்டுவரும் எண்ணம் எப்போது, எப்படி எழுந்தது?

ஜெயந்தி சங்கர்:  Unwinding (and other contemporary Tamil short stories) நூலைச் சொல்கிறீர்கள், இல்லையா? அதுவும் அண்மையில் பிரசுரமான நூல்தான்.

10 நாடுகளிலிருந்து 43 தமிழ்ச் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றன. ஏழெட்டு கதைகளை நான் மொழிபெயர்த்திருந்தாலும், அவ்வந்த படைப்பாளிகளின் பல்வேறு மொழிபெயர்ப்பாளர்களும் பங்களித்துள்ளனர்.

மூத்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களது ஆக்கத்தில் தொடங்கி அண்மையில் எழுதத் தொடங்கியுள்ள இளம் எழுத்தாளர்களின் ஆக்கங்கள் வரை இதில் இடம்பெற்றுள்ளன.

வழக்கமாக எப்போதுமே மொழியாக்கம் மூலம் ஆங்கிலத்துக்குச் செல்லும் எழுத்தாளர்கள் தவிரவும் அற்புதமாக எழுதுபவர்கள் தமிழில் உண்டு. பல்வேறு வகையான இடைவெளிகளை நிரப்பும் வகையில் அமைந்துள்ளது இந்நூல். முன்பு வந்த இது போன்ற ஆங்கில மொழியாக்கத் தொகுப்பு நூலிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் இது.

2011 ஆம் ஆண்டிலேயே ஒரு திட்ட அளவில் மனத்துக்குள் உருப்பெற்ற இத்தொகுப்புதான் இது என்றபோதிலும் பதிப்பாளர் முடிவாகாமல் நேரத்தையும் உழைப்பையும் போடாதீர்கள் என்று ஓரிரு நண்பர்கள் கொடுத்த அறிவுரையின் பேரில் அப்படியே தூக்கிவைத்தேன்.

மீண்டும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் கையில் எடுத்தபோதும் பதிப்பாளர் முடிவாகவில்லை. ஆனால், தொகுப்புப்பணியில் இறங்கினேன். அப்போது பிற மொழிபெயர்ப்பாளர்களின் பங்களிப்பையும் ஏற்றுக் கொள்ளுமாறு இன்னொரு நண்பர் சொன்னதை ஏற்றேன். மாலனின் ஒருங்கிணைப்பால் ஆறேழு நாடுகளிலிருந்து ஆக்கங்கள் கையில் இருந்தது போக, 10 நாடுகளாக மாற்றம் கண்டது. பதிப்பாளர் தேடியதும், போராடியதும் இறுதியில் அமைந்து நூல் வெளியானது நெடியகதை.

மதுமிதா: இது சிரமமான பணி என்கையில் இதனை எப்படி செயல்படுத்தினீர்கள்?

ஜெயந்தி சங்கர்:  50 பேருடன் மின்னஞ்சலில் தொடர்ந்து ஆக்கங்களை தேர்வு செய்ய விவாதம், தேர்வு செய்யப்பெற்ற ஆக்கத்தை நானே மொழிபெயர்ப்பது. படைப்பாளியோடு அதுசார்ந்து விவாதித்து இறுதிப்படுத்துவது. பிற மொழிபெயர்ப்பாளர் செய்ததென்றால், மூலப் பிரதியோடு ஒப்பிட்டு செப்பனிடுவது, பின்னர் ஒட்டுமொத்தமாக எடிட் செய்வது, பிரிண்ட் எடுத்து இன்னொரு முறை எடிட் செய்வது என்று நேரத்தையும் உழைப்பையும் முழுவதும் உறிஞ்சிவிடக்கூடிய பணி இது.

எனினும், செய்து முடித்தபோது ஒருவித திருப்தி ஏற்படவே செய்தது. எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களின் பங்களிப்பில்லாமல் இது சாத்தியமே இல்லை. அவர்கள் அனைவருக்கும் என்றைக்குமே நன்றிக் கடன் பட்டவள் நான். மிகுந்த ஒத்துழைப்பை நல்கியுள்ளனர்.  

மதுமிதா: உங்கள் ஆங்கில சிறுகதைகளை நீங்களே தமிழில் மொழிபெயர்த்திருக்கிறீங்க. இந்த அனுபவம் எப்படி இருந்தது?

ஜெயந்தி சங்கர்: இது வித்தியாசமான அனுபவம்தான். மிகவும் பிடித்திருந்தது. என்னுடைய சொந்த ஆக்கங்கள் எனும்போது அதிக சுதந்திரமும்கூட இருந்தது. பிறருடையதை மொழியாக்கம் செய்யும்போது இருக்கும் பொறுப்பு சார்ந்த இறுக்கம் எனக்கு இதில் இருக்கவில்லை.

மற்ற படைப்பாளிகளின் படைப்புகளை மொழியாக்கம் செய்வதைக் காட்டிலும் இதில் சிரமம் குறைவுதான். ஏனெனில், இங்கே மறு உறுதி செய்ய, விவாதத்தில் ஈடுபட என்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டியிருக்கவில்லை. மற்றபடி எந்த நூலையும் போலவே இதுவும் நேரத்தையும் உழைப்பையும் எடுத்தது.

ஆங்கிலத்தில் சிறுகதைகளை எழுதியவுடனேயே வாசித்த ஓரிரு நண்பர்கள் ஏன் இவற்றை தமிழில் எழுதவில்லை என்று கேட்டார்கள். இனி ஆங்கிலத்தில் எழுதுவதென்று முடிவெடுத்திருக்கிறேன் என்று கூறினேன். அப்படிப் பேசுகையில் இந்தச் சிறுகதைகள் தமிழிலும் வரலாமே என்று கருத்துரைத்தார்கள்.

மொழியாக்கம் செய்து மாதிரி அனுப்பினார் நண்பர். அந்த மொழியாக்கம் சிறக்கவில்லை என்று பட்டது ஆகவே, நானே மொழிபெயர்த்தேன். சிறப்பாகவே வந்திருக்கிறது மொழியாக்கம். இனி, இந்த மொழியாக்க நூலையும் பிரசுரம் செய்ய பதிப்பாளர் பரிசீலனையில் வைத்திருக்கிறார். அடுத்தகட்டத் தகவலுக்காக நானும் காத்திருக்கிறேன்.

பிரசுரத்துக்கு முன்னரே மொழியாக்க நூலை சில வாசகர்கள் வாசித்தனர். ஆங்கில நூல் வாசகர்களிலிருந்து இவர்கள் முற்றிலும் மாறுபட்டனர். இது நான் சற்றும் எதிர்பாராதது. குறைந்தது இரண்டு முறை வாசிக்காமல் புரியாது என்றவர்,  இரண்டாவது முறை வாசிக்க வேண்டியிருந்தது என்று கூறியவர், அதற்கு முன்னர் என்னோடு கலந்தாலோசிக்க விரும்பியவரும், கடினமாக இருந்ததாகச் சொன்னவரும், உள்ளே போகவே முடியவில்லை என்று கூறியவரும் தமிழாக்கத்தை வாசித்தவர்களில் உள்ளனர். தமிழ் வாசகவெளிக்கு முற்றிலும் வேறாக உணர்ந்ததாக அனைவருமே கூறினர்.

மதுமிதா: மொழியாக்கம் செய்யும்போது நேரடித் தமிழிலேயே இவற்றை அளித்திருக்கலாம் எனும் எண்ணம் ஏதும் எழுந்ததா?

ஜெயந்தி சங்கர்இல்லை.ஏனெனில்,இனிமேல் ஆங்கிலத்தில் எழுதுவது என்று பிரியப்பட்டு நீண்ட காலமாக நினைத்துக் கொண்டிருந்ததை செயல்படுத்திய நிலையில் எழுதப்பட்ட கதைகள். அவ்வாறு தோன்ற வழியே இல்லை.

மதுமிதா: உங்கள் படைப்பை வேறொருவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்களே. உங்கள் படைப்பை நீங்களே ஏன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவில்லை?

ஜெயந்தி சங்கர்: நான்தான் செய்வதாக இருந்தது. எனினும், அப்போது வேறு முக்கிய பெரிய வேலைகளில் மாட்டிக் கொண்டிருந்தேன். அதனால், இரண்டு பேரும் மிக விரும்பிச் செய்தார்கள். அப்படியாக, தமிழில் முன்னர் நான் எழுதிய புனைகதைகளில் பல ஆங்கில மொழியாக்கத்தில் 2 நூல்களாக பிரசுரமாகின.

மதுமிதா: உங்கள் தமிழ் படைப்புகளை ஆங்கிலத்தில் நீங்கள் மொழிபெயர்க்காமல், ஆங்கிலத்தில் புதிதாக எழுதி அதைத் தமிழாக்கம் செய்ததற்கு முக்கியக் காரணம் ஏதும் உள்ளதா?

ஜெயந்தி சங்கர்: ஆங்கிலத்தில் எழுதி, அதை மொழியாக்கம் செய்யவில்லை. இனி ஆங்கிலத்தில் எழுதுவது என்று முடிவெடுத்த பின்னர் அந்தக் கதைகளை எழுதினேன். தமிழில் மொழியாக்கம் குறித்து அப்போது யோசிக்ககூட இல்லை. சில மாதங்களுக்கு முன்னர்தான் நண்பர்களின் ஆலோசனையின்பேரில் மொழியாக்கமும் முடிந்துள்ளது.

மதுமிதா: வெவ்வேறு இலக்கிய விழாக்களில் பங்கேற்கறீங்க. வெளிநாடுகளில் பங்கேற்ற கருத்தரங்க அனுபவங்களைப் பற்றியும் சொல்லுங்களேன்

ஜெயந்தி சங்கர்: நிறைய அனுபவங்களுண்டு என்றபோதிலும் ஒன்றை மட்டும் சொல்கிறேன்.

2018 டிசம்பரின் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்த APWT (Asia Pacific Writers and Translators 2018) என்ற இரண்டு நாள் கருத்தரங்குக்கு அழைத்திருந்தார்கள். அமெரிக்கா, ஹாங்காங், ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா, இந்தோனீசியா, சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள்.  விதவிதமான பின்னணி, விதவிதமான எழுத்துலகங்கள் என்று அது முற்றிலும் வேறு அனுபவம்.

நான் பங்கேற்றது இரண்டு panelகளில். அதொருபுறமிருக்க, அங்கே நடந்த இன்னொரு கருத்தரங்கில் ஒரு முனைவர் பட்ட மாணவி, இருபத்தைந்து வயதிருக்கும், பெண்ணிய நோக்கில் ஆய்வு செய்து கொண்டிருந்தவற்றைத் தொகுத்தளித்தார். மதுக்கூடம், கேளிக்கைக்கூடம் உள்ளிட்ட பொழுதுபோக்குத் துறையில் பணியாற்றும் பெண்கள் படும் அவலங்கள் பலவற்றைப் புட்டுப்புட்டு வைத்தார். அவரது ஆய்வு முடிகையில் அவற்றை ஒரு நாவலாக எழுதப்போவதாகவும் அதில் வரக்கூடிய சிலவற்றையும்கூட எங்களோடு பகிர்ந்துகொண்டார். அவர் சொன்ன விதம் எனக்கெல்லாம் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், அவை அனைத்துமே கசக்கும் உண்மைகள்.

இறுதியில் தான் ஒரு முன்னாள் strip dancer என்றும் அந்தத் துறையிலிருந்து மீண்டு வெளியேறி கல்விக்குள் புகுந்தேன் என்றும் சொன்னார். பதினெட்டு வயதிலிருந்து அந்த வேலை செய்து வந்திருக்கிறார்.  அவர் தன் கடந்த காலத்தை சொல்வதற்குக் கொஞ்சங்கூட கூச்சப்படவில்லை, மிக இயல்பாகப் பேசினார். அவருடன் எந்த வேற்றுமையும் பாராட்டாமல் எல்லோரும் பழகினர். என்னிடமும் நட்பு பாராட்டி மின்னஞ்சல் கேட்டு வாங்கிக் கொண்டார்.

நடுத்தர வயதைக் கடந்த இன்னொரு பெண்மணி எழுதி முடித்துள்ள தனது நாவலைப் பற்றி இன்னொரு கருத்தரங்கில் பகிர்ந்துகொண்டார். ஜப்பானியர்கள் ஆஸ்திரேலியாவில் செய்த போர் அராஜகங்களின்போது, இளமையில் அவரது குடும்பம் சிதறி பல திக்குகளில் பிரிந்து போனதையும் தத்தெடுத்து தன்னை வளர்த்த குடும்பத்தில் எவ்வாறு ஒன்றிப்போனார் என்பதையும் அவர் தனது குடும்பத்தினரை, குறிப்பாக ராணுவத்தில் பணியாற்றிய தன் தந்தையைத் தேடியதையுமே நாவலாக்கியுள்ளார். யாரையுமே அவரால் கண்டுபிடிக்க முடியாமல் போனதாம்.

நாவலாசிரியர்களோடு பேசலாம், ஆனால் நாவல்களே உயிரோடு என் முன்னால் அமர்ந்து உரையாடிய அந்த சம்பவங்கள் என் மனத்தை உலுக்கின.

மதுமிதா: ’நாவல்களே உயிரோடு என் முன்னால் அமர்ந்து உரையாடிய அந்த சம்பவங்கள்’ என்ன அழகான வார்த்தைப் பிரயோகம்! இன்னொரு முக்கியமான சம்பவத்தைப் பற்றி சொல்லுங்களேன்.

ஜெயந்தி சங்கர்: பீகாரில் கிஷன்கஞ் என்ற ஊரில் 2016ல் Seemanchal International Literary festival நடந்தது. அதற்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன். பல்வேறு நாடுகளிலிருந்து எழுத்தாளர்கள் பங்கேற்ற இரண்டு நாள் கருத்தரங்கம் அது. இரண்டு panelகளில் பங்கேற்றேன். அதனையடுத்து இரண்டு நாட்களுக்கு எங்களையெல்லாம் டார்ஜிலிங் அழைத்துப் போனார்கள்.

பெண்ணியம் சார்ந்த கருத்தரங்க மேடையில் நாங்கள் பேசியபோது அங்கே பார்வையாளர்களில் இருந்த 14, 15 வயது சிறுமிகள்/மாணவிகள் கேட்ட கேள்விகள் நான் சற்றும் எதிர்பாராதவை. ”17, 19 வயதாகும் முன்னரே வீட்டில் திருமணம் பேசுகிறார்களே, அதை நான் எப்படி எதிர்கொள்வது?”, “மிக நன்றாகப் படித்து மாநில அளவில் ரேங் எடுத்தாலும் 17 வயதிலேயே திருமணம் முடித்து விடத் துடிக்கும் பெற்றோருடன் எங்களால் போராட முடியவில்லை,” “என்னுடைய பேற்றோருக்கு என்னுடைய வாதம் புரிகிறது. ஆனால், சமூகத்துக்கு ஏன் அவர்கள் இவ்வளவு பயப்படுகிறார்கள் என்றுதான் தெரிவதில்லை.”

தெளிவாக, மிக அறிவுக்கூர்மையோடு அந்த சிறுமிகள் பேசும்போது அவர்களது சொற்களில் இருந்த சோகமும் கோபமும் அறிவுத்தெரிப்பும் என்னை பிரமிக்க வைத்தன. ஒருவித இயலாமைதோய்ந்த குரலில், “பெண்ணியம் பேசும் நீங்கள் எங்களுக்கு வழிகாட்டுங்களேன்,” என்றதும் எனக்கு பளேரென்று அறை வாங்கியது போன்ற உணர்வு.

கருத்தரங்கம் முடித்த இரண்டாம் நாள் இறுதியில் எம் எல் ஏ, எம் பி, மந்திரி என்று யார் யாரோ அடங்கிய அந்த ஊர் முக்கியப் பிரமுகர்கள் குழு ஒன்று எங்களையெல்லாம் சந்தித்து உரையாடியது. எனக்கு இந்தி தெரிந்ததால், பங்கேற்பதில் எனக்கு பிரச்சினை இருக்கவில்லை.

அப்போது அவர்கள் எங்களிடம் பேசிய பல்வேறு விஷயங்களில் முக்கியமானது சுற்றுப்புற கிராமங்களில் விளையும் காய், கனிகள் பற்றியது. அந்த விவசாயிகள் முன்பெல்லாம் எப்படி தண்ணீருக்குத் தனியான கவனங்கள் எடுத்ததில்லை, தற்காலத்தில் எடுக்க வேண்டியுள்ளது, அவர்கள் சந்திக்கும் பிற சிரமங்கள் என்று பலவற்றையும் பகிர்ந்துகொண்டார்கள். “விவசாயிகளுக்கு அவர்கள் பயிரிடுவதெல்லாம் ஆர்கானிக் என்று கூடத் தெரிவதில்லை, மேடம். நிறுவனங்கள் இன்னும் இவர்களை மொட்டையடிக்க ஆரம்பிக்கவில்லை,” என்றபோது ஆர்கானிக் என்ற பெயரில் நகரங்களில் உலாவும் வணிக அசுரன் இன்னமும் கால் பதிக்காத உள்ளடங்கிய பகுதிகள் பல இருப்பதை அறிந்து ஆச்சரியமேற்பட்டது.

மதுமிதா: புனைவுகளை ருசிக்கிறீங்க. அதில் ஆழ்ந்து பயணிக்க விரும்பறீங்க. உங்களுக்குள் புனைவு என்ன மாயத்தை செய்கின்றது? அதன் ஜாலங்களை எப்படியெல்லாம் ரசிக்கிறீங்க? புனைவு என்பதற்கு எப்படி என்ன விளக்கம் சொல்லுவீங்க?

ஜெயந்தி சங்கர்: இன்றிரவு கண்ட கனவின் தொடர்ச்சியாக நாளை இரவு காண்பதை நம்மில் பலர் அனுபவித்திருப்போம். அதே போல புனைவுவெளியில் தொடர்ச்சியை, தொடர்பறுதலையும், பிறழ்வுகளையும், விநோதங்களையும் கண்டபடியே நான் உருவாக்கும் புனைவுவெளியில் உலாவியபடி இருப்பது எப்போதுமே நடப்பதுதான். அதிலிருந்து திரண்டு மேலெழுந்து ஆக்கங்களாக உருவாவது மிக அரிதாகவே நடக்கிறது. என்னுடைய புனைவுவெளி எனக்கான தனி உலகம்.

என்னுடைய புனைவுவெளியை நன்கு புரிந்துவைத்துள்ள எனக்கு இன்னொரு நாவலாசிரியரின் ஆக்கத்தின் மூலமாக அவரது புனைவு வெளிக்குள் புகுந்து பார்க்க முடிகிறது. அந்த நாவலையும் அதனைக்கடந்தும்கூட. அவர் தன்னுடைய உலகை எவ்வாறு படைத்திருக்கிறாரா என்றறிய முடிகிறது. அவரது அடுத்த ஆக்கம் வரும்போது அவர் அவரது புனைவுலகை எவ்வாறெல்லாம் சிதைத்தோ அலங்கரித்தோ உருமாற்றியுள்ளார் என்று என்னால் அறிய முடிகிறது.

ஒற்றை வாழ்க்கை போதாமல் பல்லாயிரம் வாழ்க்கைகளை வாழத் துடிக்கும் மனித மனம் ஓயாமல் செய்வதுதான் இதெல்லாமே.

மதுமிதா: ஆங்கில சிறுகதை எழுத்தாளர்களில் உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள், அவர்களுடைய படைப்புகள் பற்றி சொல்லுங்களேன்?

ஜெயந்தி சங்கர்: நிறையபேரை வாசிக்கிறேன். சென்னையில் வளர்ந்த எழுத்தாளர் Manu Joseph எழுதிய Miss LailaArmed and Dangerous, Serious men, The Illicit Happiness of Other People ஆகிய மூன்று நாவல்களையும் வாசித்திருக்கிறேன்.

The Illicit Happiness of Other People சென்னையில் நடக்கிறது. மனப்பிறழ்வு கொண்ட ஒரு காட்டூன் ஓவியக்கலைஞன் தற்கொலை செய்துகொண்டது ஏன் எவ்வாறு என்று ஆராயும் கதையினூடாக அவனது குடும்பத்தினர், நண்பர்களின்  மனவெளிகளும் நெய்யப்படுகின்றன. முதல் பக்கம் முதல் இறுதிவரை அவனது தற்கொலைக்கான காரணத்தைச் சொல்லிவிடாமலே நூல்பிடித்தாற்போல நம்மையும் இழுத்துச் சொல்வதை வாசிப்பது ஓர் அனுபவம். சென்னையையும் சென்னை நடுத்தர வர்க்க வாழ்க்கையையும் அழகாக எளிமையாகக் காட்டியிருப்பார்.

Miss LailaArmed and Dangerous மும்பையில் ஒரு கட்டடம் இடிந்து விழுவதையும் இன்னொரு தீவிரவாதத் தாக்குதல் திட்டத்தை இணைத்து, பல்வேறு திருப்பங்களோடு விறுவிறுவென்று நகரும் புதுவகை கதைசொல்லல்.

சட்டென்று நினைவில் வருகிற மற்றவர்கள் Amit Chaudhuri, Ruth Prawer Jhabvala, Yan Ge, Meena Kandasamy. இவர்களுடைய புனைவுகள், கதைசொல்லலில் அவர்கள் நடத்தும் பரிட்சார்த்தங்கள் பலவும் என்னை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.

மதுமிதா: சிறுகதை எழுதுவது எப்படி என்று பயிலரங்கம் நடத்திருக்கீங்க? அந்த அனுபவத்தை சொல்லுங்க? அதை தனி புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறீர்களா?

ஜெயந்தி சங்கர்: சில மணிநேரம் நீளும், அரைநாள், ஒருநாள், இரண்டு நாள் சிறுகதை எழுதும் பயிலரங்கங்கள் என்னிடம் கேட்கும் அமைப்பின் சார்பில் நடத்தியிருக்கிறேன். அதேபோல ஓராண்டுக்கு மாதந்தோறும் ஒருதடவை சந்தித்து, மற்ற நேரங்களில் மின்னஞ்சல்களில் கலந்துரையாடி நடத்திய பயிலரங்கும் நடத்தியிருக்கிறேன்.

என்னதான் வழிகாட்டினாலும் கூட எந்த அற்புதமும் நிகழ்ந்துவிடுவதில்லை என்பதுதான் நான் புரிந்துகொண்டது. அவரவர் தொடர்ந்து எழுதிப் பழகுவதில் கிடைக்கும் வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கும். என்னைப்போன்ற பலரும்கூட அப்படி முன்னேறியவர்கள். எனக்கு ஒருவருமே வழிகாட்டியதில்லை. அவற்றையெல்லாம் புத்தகமாக வெளியிடும் எண்ணம் என்னிடம் கண்டிப்பாக இல்லை.

மதுமிதா: புகைப்படங்கள் ஏன் எடுக்கறதில்லை? அது நினைவுகூரச் சிறந்த சாதனமா இருக்குமே? வெளிநாட்டுப் பயண அனுபவங்களை நூலாகத் தொகுக்கும் எண்ணம் உள்ளதா?

ஜெயந்தி சங்கர்: இல்லை. அப்படித்தொகுக்கும் எண்ணங்கள் என்னில் இல்லை. ஆங்கில மொழியினூடாக புனைவுகளின் சாத்தியங்களைக் கண்டறியவே என்னிடம் ஆர்வமும் நேரமும் உண்டு. அதே நேரத்தில் வாய்ப்பேற்படும்போது, கேட்கப்படும்போது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுதான் வருகிறேன். எனினும், நானே ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் புகைப்படங்கள்கூடப் போடுவதில்லை. இயல்பாகவே நான் அப்படிதான் இருக்கிறேன்.  பயணத்தில்போது அனைத்துப் புலன்களும் சூழலோடு ஒன்றி, ஒருவித பரவசத்தில் ஆழ்ந்துவிடுவதை உணர்ந்திருக்கிறேன். புகைப்படங்கள் எடுப்பதில் கவனம் சிதறும்போது அந்தப் பரவசம் குன்றும் எனத் தோன்றும் எனக்கு. அனுபவம் பற்றி கேள்வியாகக் கேட்கப்படுகையில், யோசித்து அவ்வனுபவங்களை நினைவடுக்குகளிலிருந்து மீட்டெடுத்துதான் பதில் சொல்கிறேன். அது பெரிய சிக்கலாக இருந்ததில்லை. புகைப்படங்கள் எடுக்காமலே கடந்த பயணங்களும் நிகழ்வுகளும் என் வாழ்க்கையில் அதிகம். இன்னும் சொல்லப்போனால், கூட்டங்களில், நிகழ்வுகளில், பயணம் செல்கையில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இப்போதுதான் மெதுவாகக் கற்றுக் கொண்டு வருகிறேன். ஆனாலும், உடன் இருப்பவர்கள் எடுத்தாலோ, எடுத்துக்கொள்ளும்படி ஊக்குவித்தாலோ சட்டென்று அந்த சிந்தனை வருகிறதே தவிர தானே எனக்குள் அச்சிந்தனை வராது நழுவும் சந்தர்ப்பங்களே அதிகமிருக்கின்றன.

மதுமிதா: பலநாடுகளுக்கும் போயிருக்கிறீங்க, சீனப் படைப்புகளைப் பற்றிய விழிப்புணர்வை அளித்த உங்களுக்கு சீனாவுக்குப் போக வேண்டும் என்னும் எண்ணம் உள்ளதா?

ஜெயந்தி சங்கர்: சீனாவுக்குச் செல்ல நெடுங்காலமாகவே என்னில் ஆர்வமுண்டு. ஓரளவுக்கு சுற்றிப் பார்க்கவே ஒருமாதகாலமாவது வேண்டியிருக்கும். உணவு உள்ளிட்ட சில சில்லறைக் காரணங்கள் என்னைக் கொஞ்சம் பயமுறுத்துகின்றன என்றபோதிலும் எனது விருப்பவிழைவுப் பட்டியலில் அது உண்டு.

சீனப் பெருஞ்சுவர் நான் காணவிரும்பும் முக்கிய சுற்றுலாத்தலங்களுள் ஒன்று. பல்லாண்டுகளுக்கு முன்னர் அதுசார்ந்த கட்டுரை ஒன்றை வரைகையில் சில சீனர்கள், சில சிங்கப்பூரர்களோடு ஆய்வு நோக்கில் உரையாடினேன். ஒவ்வொருவரும் அதனைக் கண்ட விதமும், அதுகுறித்து உணர்ந்தவிதமும் மிகவும் சுவாரசியமாக இருந்தது. இங்கிருந்து சீனா சென்று வந்த சிங்கப்பூரரான ஒரு சீன இளம் பெண், “அசர வைக்கும் அழகு, மனிதனின் ஆற்றலுக்கு ஓர் ஆச்சரிய சாட்சி,” என்றெல்லாம் பரவசப்பட்டாள்.

”கடந்த காலச் சீன மூளையின் முட்டாள்த்தனம். ஆக்கிரமிப்பைத் தடுக்கவென்று ஏற்படுத்தப்பட்ட மனித, பிற வளங்களின் விரையம். ஆக்கிரமிப்பை அவ்வளவு எளிதில் தடுத்து விடவா முடியும்?” என்றெல்லாம் பெய்ஜிங்கிலிருந்து வந்து இங்கே பணியாற்றிய ஓர் இளைஞர் பொரிந்துதள்ளினார். அப்போதிலிருந்தே பெருஞ்சுவர் அனுபவம் வேண்டுமென்ற ஆசை இருந்தபடியேதான் இருக்கிறது.

கன்ஃப்யூஷியஸ் பிறந்த இடமான ’லு’வுக்கு சென்று சுற்றிப் பார்க்கவும் ஆர்வமுண்டு. எத்தனை நவீனமடைந்தபோதிலும் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் வகுத்தளித்த அறநெறிகளின் அடிப்படையிலேயே சிந்திக்கும் வெவ்வேறு நாட்டு சீனர்களை தொடர்ந்து அவதானித்து வருகிறேன். பெண்ணுக்கு அச்சமூகத்தில் தொடர்ந்து நடந்த அத்தனை ஒடுக்குமுறைகளுக்கும் கீழ்மைக்கும் அறிந்தோ அறியாமலோ அதே கன்ஃப்யூஷியஸ்தான் அடித்தளம் அமைத்துக் கொடுத்தார் என்பதை கடந்தும்கூட அவர் தவிர்க்கமுடியாத ஒரு சிந்தனாவாதி, ஓர் அறிஞர்.

மதுமிதா: ஓவியமும் சிற்பக் கலையும் உங்கள் விருப்பமாக இருக்கின்றன. அதையொட்டிய பயண அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்

ஜெயந்தி சங்கர்: ஓவியம், குறிப்பாக சிற்பங்களை ஓவியங்களாக்குவது மனத்துக்கு மிகுந்த ஆனந்தத்தை அளிக்கிறது. சிறுவயது முதலே சிற்பங்களை எவ்வளவு தூரம் கூர்ந்து கவனித்து வந்திருக்கிறேன் என்பதை இப்போது ஓவியங்களாய் தீட்டுகையில் புரிந்துகொள்கிறேன்.

சென்னையில் சீரிய முறையில் இயங்கி வரும் THT குழுவினருடன் மரபுச் சுற்றுலாக்களில் பங்கேற்று வருகிறேன். அங்குள்ள அறிஞர்களின் உரைகளிலிருந்து தொன்மைகள், சிற்பக்கலை, கட்டடக்கலை போன்றவை குறித்து நிறையவே தெரிந்துகொள்கிறேன்.

அந்தக்குழுவைச் சேர்ந்த சிவசங்கர் பாபு அவர்கள் முதன்முதலில் 2017ஆம் ஆண்டு இறுதியில் மகாபலிபுரம் பகீரதன் தவம் சிற்பத்தை வண்ணத்தில் உருவாக்கும் திட்டத்தை சொன்னார். அத்துடன் திருச்சி ராக்ஃபோர்ட்டில் இருக்கும் கங்காதரர் சுவர்சிற்பம் குறித்தும் சொன்னார். இரண்டையுமே பெரிதாக செய்யலாம் என்று அவர் கூறியபோது நான் பென்சிலில் சுயமாய் ஓவியம் பயிலத் தொடங்கி ஓராண்டு கூட ஆகியிருக்கவில்லை. இருந்தபோதிலும் குழந்தையின் ஆர்வத்தோடு முயல்வேன் என்று சொல்லியிருந்தேன்.

வாட்டர்கலரில் அதிகமும் ஈடுபாடும் விருப்பமும் எனக்குள் இருந்ததை உணர்ந்திருந்த காரணத்தால், வாட்டர்கலரிலேயே செய்ய முடிவெடுத்து அதற்கான பெரிய காகிதம் வாங்கிக் கொண்டு வந்தேன்.

டிசம்பர் மாதம் முழுவதும் இந்த இரண்டையும் செய்து முடித்தேன். இரண்டையும் சிற்பத்திலிருந்து அதிகமாக மாற்றிவிடாமல் வண்ணமய சிற்பங்களாக உருவாக்கியிருந்தது எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது.

அதனைத் தொடந்து நடராஜா, ஹொய்ஸ்லா ‘தர்பண சுந்தரி’, பெரிய கணபதி, அர்த்தநாரிஸ்வரர், பார்வதிசமேத சிவன், மத்தியபிரதேச (டியோகர்) சிற்பங்களான வராஹா, விஷ்ணு போன்ற பல்வேறு சிற்பங்களை சிற்பங்களாகவே இரட்டை வண்ணங்கள், பல வண்ணங்கள் என்று விதவிதமாக முயன்றபடி இருக்கிறேன். கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. 

மதுமிதா: 200 க்கும் மேற்பட்ட ஓவியங்களை வைத்து நடத்திய ஓவியக் கண்காட்சியில் நீங்கள் இன்னும் புதிதாக கற்றுக்கொண்ட விஷயம் என்ன?

ஜெயந்தி சங்கர்: கண்காட்சிக்கான முன்னேற்பாடுகள் மிக ஆயாசமளிப்பவை, ஓவியம் தீட்டுவதில் கிடைக்கும் பேரானந்தத்தை மறக்கடிக்கக்கூடியவை என்று புரிந்துகொண்டேன்.

நூல்கள் வெளியீட்டு விழாக்களில் என்றைக்குமே எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்துவருவதைப் போலவே இதிலும் எனக்கு ஏற்பட்டது.

எனினும், நூல் வெளியீடும் கண்காட்சியும் தவிர்க்கமுடியாமல் போனால் அவற்றுக்குத் தயாராவதில் எனக்குப் பிரச்சனையில்லை; எனினும், ஏனோ அவற்றுக்கான ஏற்பாடுகள் எனக்கு ஒருபோதும் உவகையளிப்பதில்லை.

மதுமிதா: எழுத்துப் பயணமும் ஓவியப் பயணமும் ஒன்றுகொன்று அதனதன் வளர்ச்சியில் மட்டுமல்ல உங்கள் எண்ணவோட்டங்களில் நிகழும் மாற்றங்களுக்கு உறுதுணையாக உள்ளனவா?

ஜெயந்தி சங்கர்: எண்ணவோட்டங்களில் பல மாற்றங்களை வாசிப்பும் படைப்பாக்கமும் தொடர்ந்து கொடுத்து வருகின்றன. ஓவியப்பயணத்தின் ஆரம்ப நிலையில் இருக்கும் எனக்கு அது தரும் தியானத்தின்போதானது போன்ற மனக்குவிப்பும் அது கொடுக்கும் பேரானந்த அனுபவமும்தான் அரிய வரமாகின்றன.

மதுமிதா: முதல் புத்தக வெளியீடுக்கும் இப்போது ஊசலாடும் காந்தி புத்தகம் முடித்த பிறகான மனநிலையிலும் என்ன மாற்றங்களை உணர்கிறீர்கள்? எழுத்தின் முதிர்ச்சியை, வெவ்வேறு கோணங்களில் எழுதுவதை எப்படி உணர்கிறீர்கள்?

ஜெயந்தி சங்கர்: முதல் ஈராண்டுகளுக்கு 2004-06 காலத்தில் அச்சில் நூல்களைக் காண்கையில் குழந்தைத் தனமான பரவசம் ஏற்பட்டதுண்டு.

இப்போதெல்லாம் படைப்பாக்கம் ஒன்றில் மட்டுமே எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. மற்றபடி நூல் வெளியீடுகளில் பெரிய பிடிப்பில்லை. எனினும், நூல்களை வாசகர்கள் வரை கொண்டு செல்லத் தவறிய ஆண்டுகளை இன்றைக்கும் நினைத்துக் கொள்கிறேன். ஆங்கில நூல்களுக்காவது ஏதேனும் செய்ய முனைய வேண்டும் என எண்ணுகிறேன்.

மதுமிதா: தலைப்பாக ’ஊசலாடும் காந்தி’ என்று பெயரை எப்படி தேர்ந்தெடுத்தீங்க? உலகம் முழுவதுமான காந்தி குறித்த படைப்புகளில் இந்தத் தலைப்பு தனித்துவமாக உள்ளதே?

ஜெயந்தி சங்கர்: ’ஊசலாடும் காந்தி’ தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையின் தலைப்பு அது. அதில் காந்தி ஒருசிறு படிமமாக மட்டுமே வருகிறார். அதை நூலின் தலைப்பாக எடுத்ததற்குக் காரணம் காந்தியமும் அகிம்சையும் இன்றைய உலகில் பல்வேறு குழப்பங்களுக்கும் திரிப்புகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வருவதோடு பல முக்கிய விவாதங்களுக்கு வழிவிடுகின்றன. அத்துடன் இந்நூலின் பாதிக் கதைகள் காந்தியின் காலகட்டத்தில் நடந்த சம்பவங்களாக, அப்போது வாழ்ந்த சாதரணர்களைக் காட்டக்கூடியன. எனினும், அவர்கள் வாழ்க்கையில் காந்தி வருவதில்லை.

மதுமிதா: படைப்புகளையும் படைப்பாளர்களையும் படைப்பு வேறு படைப்பாளி வேறு என்று தனித்தனியாகத்தான் பார்க்க வேண்டுமா?

ஜெயந்தி சங்கர்: என் வரையில், ஒரு வாசகியாக ஒருவரது படைப்பு முக்கியத்துவம் பெறும் அளவுக்கு எனக்குள் அந்தப் படைப்பாளி முக்கியத்துவம் பெறுவதில்லை. படைப்பாளியின் மீது அடிப்படை மதிப்பும் மரியாதையும் எப்போதுமே இருக்கும். எனினும், படைப்பின் மேன்மை படைப்பாளியின் மீது எனக்கிருக்கும் மதிப்பையும் மரியாதையையும் கூட்டவோ குறைக்கவோ செய்வதில்லை. அது வேறு அவர் வேறுதான் எனக்கு எப்போதுமே.

மதுமிதா: உங்கள் நட்புலகம் இலக்கியம் சார்ந்தும் உள்ளதா?

ஜெயந்தி சங்கர்: இலக்கியம் சார்ந்த நட்பு வட்டம் விரிந்தபடியேதான் இருக்கிறது. தற்போது ஆங்கிலத்தில் வாசிக்கும் தமிழரல்லாதோர் கொண்ட பல்லின, உலகெங்கிலுமான, எண்ணற்ற நண்பர்கள். இவை பெரும்பாலும் மின்னஞ்சல், வாட்ஸாப் நட்புகள்.

மதுமிதா: உரையாடல்கள் புதிய அனுபவங்களை அளிக்கின்றனவா? அல்லது பிரச்சினைகளை வளர்க்கின்றனவா?

ஜெயந்தி சங்கர்: உரையாடல்கள் கண்டிப்பாக சிந்தனைத் தளத்தை ஆரோக்கிய நிலையில் வைத்திருக்க உதவும் என்றே நம்புகிறேன். யாருடன் உரையாடல் என்பது முக்கியமாகிறது. அகங்காரங்கள் குறிக்கிடாத விவாதங்கள் அமைவதே ஒரு வரம்தான். அவை மறக்கமுடியாத தருணங்களாய் மனத்தில் என்றைக்கும் நிற்பதுண்டு

என் வரையில், அதிக மேதமை இருக்குமிடத்தில் அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் வாய்மூடிக் கேட்கவும் செயற்கையாக மேதமை வரவழைத்துக் கொள்ளுமிடத்தில் சக்தி விரையமாக்க வேண்டாமென்று வாய்மூடி கவனிக்கவும் செய்கிறேன்.

மதுமிதா: நேர்காணல்கள் என்ன விதமான தரிசனங்களை அளிக்கின்றன? தமிழ் ஆங்கிலம் இரண்டிலுமேதான் கேட்கிறேன். காணொளி நேர்காணல்களையும் இதில் சேர்க்கிறேன். 

ஜெயந்தி சங்கர்: நான் அறிந்தவரை பிரதி, ஒலி, ஒளி என்று எந்தமாதிரியான நேர்காணலுமே படைப்பாளி பிரதி வழியாகப் பேசியதைத் தவிர்த்து படைப்பியக்கம் சார்ந்து பேச, படைப்பனுபவம் போன்ற மற்றவற்றை சொல்லக் கூடிய வாய்ப்பாகவே பார்க்கிறேன். நூல் வெளியீட்டை ஓட்டியோ அல்லாமலோ அமையலாம். எளிமையாகச் சொல்வதென்றால் படைப்பை அறிந்த, அறியவிரும்பும் வாசகன் படைப்பாளியையும் கொஞ்சம் அறிந்துகொள்ளலாம்.

மதுமிதா: இலக்கிய அரசியல் அல்லது இலக்கிய சிக்கல்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

ஜெயந்தி சங்கர்: சிலவேளைகளில் அரசியல்களில் சிக்காமல் இருக்க முடியாமல் போகிறது. அதொன்றும் இயல்புக்குப் புறம்பானதல்ல. எனினும், முடிந்தவரை தவிர்க்கவே விரும்புவேன். இலக்கிய அரசியல் என்றில்லை, நட்பில், குடும்பத்தில், உறவுகளில் என்று எங்கேயுமேதான். அதற்கு முக்கியக் காரணம் அதில் என் நேரமும் சக்தியும் விரையமாகும் என்பது. அதைக் கடந்தும் அரசியல் என்னைத் தேடி வருவதுண்டு. இப்போதெல்லாம் சட்டென்று உணர்ந்து பட்டென்று கைநீட்டி சினேகமாய் அதற்கு விடையும் கொடுத்து விடப் பழகி வருகிறேன்.

ஆனால், விமர்சனங்களில் எடுத்துக் கொள்ளவேண்டியதை எடுத்துக் கொள்ள என்றும் தவறவே மாட்டேன். அது என் மேம்பாட்டுக்கு இன்றியமையாதது என்று நன்கறிவேன். அதே நேரத்தில், அழிவுபூர்வமான அநியாய விமர்சனங்கள் ஏற்படுத்தும் தற்காலிக வருத்ததை, சினத்தை ஆக்கபூர்வமாகத் திருப்புவதே என் இயல்பு. இவை இரண்டையும் பின்பற்றுவதை நீண்டகாலமாகவே செய்து வருகிறேன்.

மதுமிதா: இலக்கிய உலகில்  குழு அரசியல், இலக்கிய அரசியல் என்று இருப்பதாக சொல்லப்படுவது உண்மைதானா… இதனால் நேரடியாக ஏதேனும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறீங்களா? முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள் ஜெ.

ஜெயந்தி சங்கர்: கண்டிப்பாக இலக்கிய உலகிலும் குழுமனப்பான்மை குழு அரசியல் போன்றவை இருக்கின்றது. இலக்கிய உலகில் உள்ளவர்களும் மனிதர்கள்தானே, ஆகவே இதை இயல்பாகவே பார்க்கிறேன். எனினும், இந்தக் குழு அரசியல் எல்லை கடந்து அழிவை நோக்கித் திருப்பிவிடப் படுகையில் மிகுந்த வருத்தமேற்படும். அதுபோன்ற சமயங்களில், மனக்குவிப்பை, நேரத்தை, ஆற்றலையும் வீணாக்க நேரலாம் என்று தோன்றும். ஆகவே, என் வரையில், குழுமனப்பான்மையிலிருந்தும் குழு அரசியலிலிருந்தும் விலகியே இருக்க விரும்புகிறேன்.

விளக்கிச் சொல்வது, விளக்கி எழுதுவது எனக்கு ஆயாசத்தை ஏற்படுத்தும். முன்முடிவுகளோடு இயங்குவோரிடம் என்ன சொல்லி என்ன பயன் என்ன விளக்கி என்ன பயன் என்ற இயலாமையும் என்னில் ஏற்படுவதுண்டு. முன்முடிவுகளோடு பேசுவோரிடமும் எழுதுவோரிடமும் எனக்கு ஒருவித ஒவ்வாமை இருந்தபடியே இருக்கும். அதுவும் அந்த முன்முடிவுகள் ஒரு தனிநபர் அல்லது குழுவின் கெட்டிப்பட்டு கடினப்பட்ட கருதுபொருளாக இருப்பதையும் நன்றாகவே உணரமுடியும். இதையெல்லாம் தெரிந்துகொள்ளவே எனக்குப் பல்லாண்டுகளாகின.

அதைக் கடந்தும் குழு அரசியல், இலக்கிய அரசியலில் என் தலை உருள்வதுண்டு. என் கவனத்துக்கு வந்தவை ஒரு பங்கு என்றால், என் கவனத்துக்கு வராமல் காலம் கடந்து, என் காதை எட்டுபவை பன்மடங்கு. சூடடங்கி ஒருவித புனைவுகலந்த வடிவமாககூட அது பலவேளைகளில் இருக்கும். இதுபோன்றவற்றின் பட்டியல் மிக நீளம்.

இன்னொரு படைப்பாளியைத் தூக்கிவிட அவருடன் அவருக்கிணையாக பயிலரங்கு நடத்தவென்று என்னை அழைப்பதும் போன இடத்தில் விதவிதமாக அவமதிப்பதும், எனது ஆக்கங்களைக் குறித்துப் பேச ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்லி அழைத்துவிட்டு கூடியிருந்து சில விஷயங்களை செயல்படுத்தி உள்ளூர குரூரமாக சிரித்து மகிழ்வதும் என்று நிறையவே பார்த்தாச்சு.

ஒன்றை மட்டும் சற்றே விரிவாகப் பகிர்கிறேன். என்னை முதன்மை கதாபாத்திரமாக வைத்து எள்ளி நகையாடி, எழுதப்பெற்ற ஒரு நாடகம் கோலாலம்பூரில் அரங்கேற்றப்பட்ட விஷயம் என் காதை எட்டுகையில் ஓராண்டு ஆகியிருந்தது. இது நடந்து பத்தாண்டுகள் இருக்கலாம்.

கையெல்லாம் தோசைமாவு வழிய பேனா பிடிக்கிறவள், நூலகமே கதியெனக் கிடக்கிறவள், வைரத்தோடு மினுக்கும் காதுடையவள், அந்தணகுலத்தில் பிறந்தவள், விடாமல் எழுத்துலகில் இயங்கிவருபவள் என்றெல்லாம் உருவாக்கப்பெற்றிருந்த அந்த கதாபாத்திரத்தை நானுமே ரசித்திருப்பேன்.  வாய்ப்புதான் நழுவிப்போனது. அரங்கில் பலர் அடையாளம் கண்டுணர்ந்து நிறுத்தச் சொன்னார்களாம். அந்நிகழ்வுக்கு சென்று வந்து இரண்டு உள்ளூர் பெரியவர்கள் கமுக்கமாக இருந்ததும் புரிந்தது. ஒருவேளை என்காதை எட்டியிருக்கும் என்று அவர்கள் கருதியிருக்கலாம்.

என்னை அடிப்படையாகக் கொண்டு அவர் உருவாக்கிய கதாபாத்திரத்தைச் சுற்றி ஒரு நாடகம். இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று பலநேரம் நான் அடக்கமுடியாமல் சிரித்ததுண்டு. எத்தனை கதாபாத்திரங்களை உருவாக்கியிருப்பேன், நானே கதாபாத்திரமானது இந்த ஒரே முறைதான். ஆகவே வரலாற்றுப் புகழ்மிக்க சம்பவம் அது.

நாடக ஆசிரியராக நான் மதிக்கும், எனினும் ஒருபோதும் சந்தித்தே இராத, புகழ் பெற்ற, தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அவருக்கு உள்ளூரில் அந்த நாடகத்தை அரங்கேற்றுவதில் என்ன பிரச்சினை என்று இதுநாள் வரை எனக்குப் புரியவில்லை. இத்தனைக்கும் மிகப்பெரிய சர்ச்சைக்குரிய கருவில் அவர் உருவாக்கிய சில நாடகங்கள் உள்ளூரில் அரசாங்கத்தாலேயே தடை செய்யப்பட்டன. அதெற்கெல்லாம் அசராத ஆசாமி. மூலையில் இருந்துகொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு பிள்ளைப்பூச்சி நான் என்றுகூடவா அவருக்குத் தெரியவில்லை, பாவம். என்னோடு பேசிப் பழகியிருந்தால் ஒருவேளை தெரிந்திருக்கும். செவிவழிச் செய்திகள், உள்ளுரின் மூத்த எழுத்தாளர் மாதந்தோறும் கோப்பிக்கடைக்குக் கொண்டுபோகும் செய்திகள் வாயிலாக மட்டுமே என்னை அறிந்து வைத்திருந்தார்போல. படைப்பாளியை மனத்திலிருந்து விலக்கி விட்டு படைப்பைப் பார்க்கப் பழகவேண்டும் வாசகர்கள் என்று போகுமிடமெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். எனினும், பிடிவாதமாக படைப்பாளியை வைத்தே புரிந்துகொள்கிறார்கள், விமர்சிக்கிறார்கள். அதையெல்லாம்கூட ஏற்றுக் கொள்ளலாம் போல. இதுபோன்ற திருதிராஷ்டர்களை என்ன செய்வது? திருதிராஷ்டிரர்கள் மலிந்துபோன காலமாக மாறிவருகிறது.

மதுமிதா: உங்களது அடுத்த இலக்கிய, ஓவிய படைப்பு, பயணம் என்று ஏதேனும் இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறீர்களா?

ஜெயந்தி சங்கர்: 1995 முதல் தொடர்ந்து இலக்கியம், கலைகளில் பயணப்பட்டதைப் போலவே இனியும் எந்த நிர்ணயமோ திட்டமோ எதிர்பார்ப்போ இல்லாமலே இயங்குவேன் என்றே படுகிறது. எழுதுமொழி ஆங்கிலம் என்றும் பழகுகோல் தூரிகை என மனம் விரும்பி இயல்பாய் ஏற்றுள்ள நிலையில் இரண்டிலுமே எனது கற்றலுக்கான அகண்ட வெளி மிகுந்த உற்சாகமளிக்கிறது. அதுவே எனக்குள் ஒருவித சுவாரசியத்தை கொண்டு வருகிறது.

மதுமிதா: உங்கள் பயணம் மன நிறைவுடன் தொடரட்டும், வாழ்த்துகள்.

ஜெயந்தி சங்கர்: மிக்க நன்றி, வணக்கம்.

ஜெயந்தி சங்கர் : 2015 முதலே ஆங்கிலத்தில் புனைவுகள் எழுதிவரும் ஜெயந்தி சங்கர் 1995 முதல் இலக்கியவுலகில் தொடர்ந்து இயங்கி வருபவர். தற்போது ஆங்கிலத்தில் தனது முதல் நாவலை எழுதி முடித்து நூலாக்கத்திற்காகக் காத்திருக்கும் இவர் தனது ஆங்கிலச்சிறுகதைகளை  தானே இந்நூலில் மொழியாக்கம் செய்துள்ளார்.  இவை Dangling Gandhi என்ற இவரது ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையின் தமிழ் வடிவம்.  Dangling Gandhi என்ற இவரது ஆங்கில நூல் இரண்டு முக்கிய அனைத்துலக விருதுகளையும் இந்தியாவில் சில விருதுகளையும் வென்றுள்ளது. இவரது ஆக்கங்கள் வேற்றுமொழியில், குறிப்பாக ஆங்கிலம், ரஷ்யம், இந்தி, ஃப்ரெஞ்சில் மொழிபெயர்ப்பு கண்டு வருகின்றன. தமிழ் நூல்களுக்கு ஆனந்தவிகடன் நம்பிக்கை விருது உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் முக்கிய விருதுகளும் வாங்கியுள்ள இவரது ஒவ்வொரு நூலுமே ஏதோவொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. அண்மைக்காலமாக ஓவிய முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

மதுமிதா:
மதுமிதா ராஜபாளையத்தில் வசிக்கும் எழுத்தாளர், கவிஞர். சுதந்திரப் போராட்ட தியாகி, காந்தி அரங்கசாமிராஜா அவர்களின் பேத்தி. கவிதைகள், மொழிபெயர்ப்பு, தொகை நூல்கள் என இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. மஹாகவி காளிதாசனின் “மேகதூதம்”, “சுபாஷிதம் (சமஸ்கிருத நுண்மொழிகள்)”, “பெத்தி பொட்ல சுப்பராமய்யா” சமஸ்கிருதத்திலிருந்து, தெலுங்கிலிருந்து மொழிபெயர்த்துள்ள குறிப்பிடத்தக்க . 25-க்கும் அதிக நூல்களை உருவாக்கியுள்ளார். 12-க்கும் அதிக விருதுகளை வென்றிருக்கிறார்.

‘The family man 2’ திரைத்தொடர்: திரிப்புகளின் அபத்தம்

0

ரூபன் சிவராஜா

‘The family man 2’ இணையத் திரைப்படத்தொடர் (web series) தொடர்பாக நிறையவே சமூக ஊடகங்களில் பேசப்படுகின்றன. அதன் முன்னோட்டம் வெளிவந்தபோதே விமர்சனங்கள் எழத்தொடங்கி விட்டன. ஒன்பது பகுதிகளைக் கொண்டுள்ளது இத்தொடர். இதன் முதல் பாகத்தில் அதாவது Season–1-ல் இஸ்லாமியப் பயங்கரவாதத்தை முறியடிப்பதாய் கதை நகர்வு அமைக்கப்பட்டிருந்தது. Season–2-ல் ஈழத்தின் ஆயுதப் போராட்டம், மோசமான பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ‘இந்தியத் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான அந்தப் பயங்கரவாதத்தினை எந்த விலை கொடுத்தும் அழிக்க வேண்டுமென்று’ இந்திய உளவுப்படை களமிறங்குவதே கதையின் மையம்.

இதுவொரு வரலாற்றுப் புரிதலற்ற அபத்தமான திரைத்தொடர். அதற்காக இது புரிதல் இல்லாதவர்களின் அப்பாவித்தனம் என்பதல்ல. இதுவொரு திட்டமிட்ட சித்தரிப்பு. இந்திய உளவுத்துறையின் நோக்குநிலையில், ‘இந்தியத் தேசிய பாதுகாப்பு’, பிராந்திய அதிகாரத்தை முன்னிறுத்திய திட்டமிட்ட அணுகுமுறை. புனைவு என்ற போர்வையில் யதார்த்தக் களங்களையும் பாத்திரங்களையும் எடுத்தாள்வதனூடு தமக்குச் சாதகமான திரிப்புகளைச் செய்துள்ளனர்.

ஈழப்போராட்ட ஆளுமைகள் பற்றிய சித்தரிப்பு மிக மோசமான முறையில் பிம்பச் சிதைப்புச் செய்யப்பட்டுள்ளது. இங்கு பிம்பம் எனும்போது, தமிழ் மக்களின் ஒரு பகுதியினர் மத்தியில் நிலவுகின்ற உணர்ச்சிவசப்பட்ட புனிதப்படுத்தல் பிம்பங்களை நான் குறிப்பிடவில்லை. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சரிகளுடனும் தவறுகளுடனும் வரலாற்று வகிபாகத்துடனும் அவர்களுக்கென ஒரு விம்பம் உள்ளது. அவர்கள் பற்றிய பொதுவான மதிப்பீடுகள் உள்ளன. அந்த விப்பத்தையும் மதிப்பீடுகளையும் இந்தத் திரைத்தொடர் முழுமையாகச் சிதைத்துள்ளது. அந்த விம்பச்சிதைப்பு என்பது ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு காலகட்டத்தின் கடந்தகால அரசியலை இழிவுபடுத்துவதோடு எதிர்கால அரசியலை மந்தமாக்கும் முனைப்பினைக் கொண்டதாகும்.

இதனை வெறுமனே விடுதலைப் புலிகள் இயக்கம் சார்ந்த இழிவுபடுத்தல் என்பதாக மட்டும் கருத முடியாது. அதன் ஊடாக ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அடிப்படைகளையும் மலினப்படுத்துதாகும். ஈழத்தமிழ் மக்களை மட்டுமல்ல தமிழகத்தையும் தமிழக மக்களையும் கீழ்மையாகச் சித்தரிக்கின்ற காட்சிகள் பல உள்ளன.

இவர்கள் எடுத்துக் கொண்ட களம், பின்-முள்ளிவாய்க்கால் காலம். புலிகள் அமைப்பின் தலைவர் உட்பட்ட சில முக்கியஸ்தர்கள் இறுதிப்போரில் தப்பிச்சென்று ஒரு Exile அரசாங்கத்தை நடாத்துவதாகச் சொல்லப்படுகின்றது. அதில் ஒரு குழு உலக நாடுகளின் அரசியல் அங்கீகாரத்திற்காகச் செயற்படுவதாகவும், முதல்நிலைத் தலைமை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் கூட்டுச் சேர்ந்து, இந்தியாவுக்கு எதிராகச் செயற்படுவதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் உண்மைத் தன்மை பற்றிய கேள்விகளை விபரிக்கத் தேவையில்லை.

பின்-முள்ளிவாய்க்கால் என்பது விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றிலும் இல்லாத சூழல். இறுதிப்போரின் பின்னர் அவர்களின் தலைமையைச் சேர்ந்த இராணுவ மற்றும் அரசியல் துறையின் எந்தவொரு ஆளுமைகளும் இல்லை என்பதே யதார்த்தம். இந்த நிலையில் இராணுவ மற்றும் அரசியல் அரங்கில் இல்லாத ஒரு இயக்கத்தை இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக முன்னிறுத்துவது முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்ட வெளிப்பாடு. மட்டுமல்லாது இந்தச் சித்தரிப்பு திட்டமிட்டதொரு புரொஜெக்ட். இல்லாத புலிகள் இயக்கம், இலங்கைக்கு வெளியில் ‘எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுகின்றது’ என்ற  வரலாற்றிற்கும் சமகாலத்திற்கும் உண்மைக்கும் புறம்பான சித்தரிப்பு என்பது அபத்தம்மிக்க கற்பனை. இந்திய அரச அதிகாரத்திற்கு மட்டுமல்ல. சிறிலங்கா பேரினவாத அரச நலன்களுக்கும் சேவகம் செய்கின்ற விளைவை இது கொண்டிருக்கின்றது. ஈழத்தில் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் அரசியல், சமூக, பண்பாட்டு ரீதியில் பௌத்த சிங்களப் பேரினவாதம் ஒடுக்குவதற்கு புலிகள் இன்னும் இருக்கின்றனர், இயங்குகின்றனர் என்ற கட்டுக்கதை சாதகமானது. தமிழகத்தை இந்திய மத்திய அரசு ஒடுக்குவதற்கு புலிகளுக்குத் தமிழகம் தளம் கொடுக்கின்றது என்ற கட்டுக்கதை சாதகமானது. அந்த அடிப்படையில் இது இந்திய – இலங்கை அதிகார நலன்களுக்கும் ஒடுக்குமுறைக்கும் சாதகமான சித்தரிப்புகளாகும்.

இவற்றைக் கற்பனையாக, புனைவாக முன்னிறுத்துகின்றோம் என அவர்கள் கூறலாம். அப்படித்தான் படத்தின் தொடக்கத்தில் ஒரு பொறுப்புத்துறப்பு அறிவித்தல் செய்திருக்கின்றார்கள். ஆனால் அந்தப் புனைவு இலங்கை அரசு – ஈழப் போராட்டம் – இந்திய அரசு என்ற யதார்த்தங்களை எடுத்துக் கொண்டுள்ளது. கதையின் களம் இத்தகைய யதார்த்தத் தளங்களில் நகரும் போது, அது வரலாற்றுத் திரிப்பின்றி, யதார்த்தத்திற்கு நேர்மையாக இருந்திருக்க வேண்டும். அந்த நேர்மையை எதிர்பார்ப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பது ஒருபுறமிருக்க கருத்தியல் தளத்தில் இத்தொடர் பற்றிய விவாதங்கள் அவசியமானவை. இறுதிப்போர் நடைபெற்றதாகக் காட்டப்படும் காட்சிகளில் பொதுமக்கள் கொல்லப்பட்ட எந்தத் காட்சிகளோ, தடயங்களோ காண்பிக்கப்படவில்லை. இந்தப் படைப்பாளர்களின் நேர்மையின்மை, மனிதநேயமின்மைமையை, அதிகாரத்திற்கு சாமரம் வீசும் மனநிலையைப் புரிந்துகொள்வதற்கு இதுவே போதுமான சான்று.

*

இந்தியாவின் வெளியுறவு அரசியலில், குறிப்பாக இலங்கை-இந்திய உறவு சார்ந்த முடிவுகளில் ஒரு மாநில அரசாக தமிழக அரச நிர்வாகத்தின் செல்வாக்கு பலவீனமானதாகவே இந்தத் தொடர் சித்தரிக்கின்றது. தமிழகக் காவல்துறையும் அதன் புலனாய்வுப் பிரிவும் மத்திய புலனாய்வுத்துறைக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பினை வழங்குகின்ற காட்சிகள் அதனைச் சொல்கின்றன.

2009-ற்குப் பின்னரான ஈழத்தமிழ் அரசியலை மந்தமாக்கியதில் முதன்மைக் காரணி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடிருக்கின்றார் என்ற பொய்யுரைப்பு. இந்தத் திட்டமிட்டதும் அரசியல் பிறழ்வுக்கு உட்பட்டதுமான பொய்யுரைப்பு ஒரு தொகுதி மக்களை அதனை நம்பவைத்திருந்தது. தற்போது அந்த நம்பிக்கைகள் தளர்ந்துவருகின்றன என்றபோதும் ஆரம்பத்தில் அவர் வீரச்சாவினை மறைத்தவர்கள் மனம் திறந்து இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை. அதேபோல தமிழகத்திலிருந்து படையெடுத்து ஈழம் அமைப்போம் என்ற சீமான் போன்ற தமிழ் இனவாத அரசியலை முன்னெடுப்பவர்களினது வாய்ச்சவடால்களும் தமிழகச் சூழலில் ஈழத்தமிழர் உரிமை அரசியலைப் பின்தள்ளிக் கொண்டிருக்கும் அம்சங்களாகும். மேற்சொன்ன இந்தக் காரணிகளின் சில பிரதிபலிப்பினை அல்லது விளைவுகளை இந்தத் திரைத்தொடரில் அவதானிக்க முடிகிறது. பின்-முள்ளிவாய்க்கால் சூழலில் தலைமைப்பீடத்தைச் சேர்ந்தவர்கள் தப்பி ஐரோப்பாவிற்கும் தமிழகத்திற்கும் செல்வதாகச் சித்தரிப்பது அதன் பிரதிபலிப்பே. பின்-முள்ளிவாய்க்கால் சூழலில் தமிழகத்தைத் தளமாகக் கொண்டு தாக்குதல் திட்டமிடுவதான சித்தரிப்பும் அத்தகையதே.

தமிழகம் போன்ற மாநிலங்கள் மத்திய அரசை நோக்கித் தமது உரிமைகளைக் கோரிவருகின்றன. அதற்கு ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் உட்பட்ட இன, மொழி, கல்வி, நிர்வாக உரிமைக் கோரிக்கைகள் என மத்திய அரசை நோக்கிய உரிமை கோரல்களை வலியுறுத்தி வருகின்றது.

இந்தியா என்பது ஒரு இந்துத்துவ, பிராமணீய மேலாதிக்க அரச கட்டமைப்பினைக் கொண்டிருக்கின்ற தேசம். மதரீதியான திணிப்புகளை தமிழ்நாடு உட்பட்ட மாநிலங்களில் மேற்கொண்டு வருகின்றது. திராவிடச் சமூகநீதிப் போராட்டங்களும், எதிர்ப்பரசியல் பண்பாட்டின் வரலாறும் அதற்குச் சான்றாக இருந்து வந்துள்ளது. தமிழகம் மாநில உரிமைகளை வலியுறுத்துகின்ற மாநிலமாக இருந்து வந்திருக்கின்றது. மத்தியில் கொங்கிரஸ், பாரதிய ஜனதா என மாறிமாறிக் கூட்டணிகளை அமைத்துக் கொண்டாலும் ஒப்பீட்டளவில் கலைஞரும் ஜெயலலிதாவும் தமிழகத்தின் உரிமை வலியுறுத்தலைத் தக்கவைத்து வந்துள்ளனர். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னரான தலைமைத்துவ இடைவெளியில் அதிமுக ஆட்சியில் பாரதிய ஜனதா செல்வாக்குச் செலுத்தியதெனினும், ஸ்ராலின் முதல்வராகப் பதவியேற்றதையடுத்து அவரது ஆட்சி நிர்வாகம் செயற்திறனுடனும் தமிழக உரிமைகளை வலியுறுத்தும் வகையிலும் செயற்படத் தொடங்கியுள்ளது. விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து தமிழகக் கிராம மக்கள் (காவல்நிலையத் தாக்குதல்) இந்திய புலனாய்வு அதிகாரிகளைத் தாக்குவதாக அமைக்கப்பட்ட காட்சி, தமிழக மக்களை இந்திய அரசுக்கு எதிரானவர்களாக, வன்முறையாளர்களாகக் காண்பிக்கும் நோக்கம் கொண்டது.

கிளைடர் விமானத்தினைப் புலிகள் தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் வைத்து உருவாக்குவதாகவும் அதில் முழுவதும் வெடிகுண்டு நிரப்பி, சென்னையில் இலங்கை-இந்தியத் தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு உயர்மட்டச் சந்திப்பின் போது விமானம் மூலம் தற்கொலைத் தாக்குதல் நடாத்தத் திட்டமிடுவதாகவும் சொல்லப்படுகின்றது. வரலாற்று ஆதாரத்தினைத் தேடினால் புலிகள் ஆப்பிரிக்க நாடுகளிலிரந்து விமான உதிரிப்பாகங்களைக் கொண்டுசேர்த்து விமானங்களை உருவாக்கினர். விமானத்தின் மூலம் தாக்குதலுக்கு அவர்கள் தெரிவுசெய்த இலக்கு, சிறிலங்கா இராணுவத்தின் இராணுவ பொருளாதாரத் தளங்களாகும் (கட்டுநாயக்கா இராணுவ வான்படைத் தளம், 2007).

ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்ட யுகம் முடிவடைந்துவிட்ட பின்னும் அது இயங்குகின்றது என்பதும் – அதுவும் ஐ.எஸ் உடன் இணைந்து செயற்படுகின்றது என்பதும் – தமிழகத்தைத் தளமாகக் கொண்டு – இந்தியத் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்பதும் மோசமான மிக மோசமான, நேர்மையற்ற சித்தரிப்புகள். எந்தவித குறைந்தபட்ச ஆதாரமும் இல்லாதவை.

*

குடும்ப உறவுச் சிக்கல், குழந்தை வளர்ப்பு, உளவுத்துறை உறுப்பினர்களின் நாட்டுக்கான தியாகம் என்பனவற்றையும் சமாந்தரமாக இந்தத் தொடர் எடுத்துக்கொண்டுள்ளது. பரந்த பார்வையாளர்களை உணர்வு ரீதியாக இணைப்பதற்கு அது அவர்களுக்குக் கைகொடுத்துள்ளது. கணவன், தகப்பன் என்ற குடும்ப உறவுக்கான பொறுப்புகளுக்கும் அரசாங்க புலனாய்வு முகவர் என்ற பொறுப்புகளுக்குமிடையிலான அல்லாடுகின்ற உழல்கின்ற பாத்திரமாக மனோஜ் பாஜ்பாய் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. கணவன்-மனைவி உறவுச் சிக்கல், பாலுறவு, பிள்ளைகளின் பாடசாலை, வீட்டுச்சூழல், பதின்ம வயது மகளைக் காதலிப்பதாக நடித்து கடத்தப்படுகின்ற காட்சிகள், அவை ஏற்படுத்தும் பதட்டம் என்பன இந்தத் தொடர் உணர்வு ரீதியாக பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய அம்சங்களில் கவனம் செலுத்தியுள்ளது.

இத்தனை நெருக்கடிகளுக்குமிடையில் குடும்பத்தைப் பாதுகாக்கின்ற ஒரு பொறுப்பு மிக்க குடும்பத்தலைவனாக அவருடைய பாத்திரம் சித்தரிக்கப்படுகின்றது. தேசத்திற்காகத் தியாக மனநிலையுடனும் அதேவேளை குடும்பத்திற்கான அதீத பொறுப்புணர்வுடனும் இந்த பாத்திரம் கட்டமைக்கப்பட்டுள்ளது தவிர வட இந்திய மனநிலை என்ற ஒன்றும் உள்ளது. அது திராவிட (தமிழக) எதிர்ப்பு, இஸ்லாமிய எதிர்ப்புணர்வு கொண்ட இந்துத்துவ மனநிலை. இவற்றோடு இந்தப்படத்தில் முதன்மைப்படுத்தப்படும் ‘தேசபக்தி’ என்பதுவும் வட இந்திய மனநிலைக்கு உந்துதல் கொடுக்கக்கூடிய அம்சங்கள்.

*

பெண் போராளி தொடர்பான சித்தரிப்பு என்பது யதார்த்தத்திற்கு மிகவும் மாறானதாகக் காண்பிக்கப்படுகின்றது. தனது இலக்கினை அடைவதற்கும் நெருக்கடிகளிலிருந்து வெளிவருவதற்கும் பெண் போராளி கையாளும் ஒரே தெரிவு, நெருக்கடி கொடுக்கின்ற அதிகாரத்திலுள்ளவரோடு படுக்கைக்கு இணங்குவதாகப் பல காட்சிகளில் காண்பிக்கப்படுகின்றது. அவளை அந்த நெருக்கடிக்கு உள்ளாக்குபவர்கள் அனைவரும் தமிழகத் தமிழ் ஆண் பாத்திரங்கள். பேருந்தில் பாலியல் சுரண்டல், வேலை செய்யுமிடத்தில் முதலாளி, வெடிமருந்து கடத்திச் செல்லும்போது சோதனைச் சாவடி அதிகாரி எனவாக தமிழகத்தின் ஆண்கள், பெண்களைப் படுக்கைக்கு அழைப்பவர்களான சித்தரிப்பு தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளது. ஒரு சோதனைச் சாவடியைத் தாண்டிச் செல்வதற்குக்கூட அதிகாரியுடன் தானாகச் சென்று அவனின் பாலியல் இச்சைக்கு இணங்கிவிட்டு வருவதாகக் காண்பிப்பதை எந்த வகையில் சேர்ப்பது. சோதனைச் சாவடியைத் தாண்டுவதற்கு அதிகாரிகளுக்கு ஒரு தொகையைக் கையூட்டாக கொடுத்துவிட்டால் போதுமானது.

‘எல்லோரையும் கொல்லுவேன், அழிப்பேன்’ என்று குரூரமாகச் சூளுரைக்கின்றாள். சத்தியப் பிரமாணம் எடுக்கின்ற காட்சியில் ‘கழுத்தறுப்பேன். உயிர் குடிப்பேன்’ என்பதாக கொலை வெறியை வெளிப்படுத்துவதாக காண்பிக்கப்படுகின்றது. புலிகள் உட்பட்ட விடுதலை இயக்கங்களின் சத்தியப் பிரமாணங்கள் விடுதலைச் செயற்பாட்டிற்கான அர்ப்பணிப்பினை முன்னிறுத்துபவையேயன்றி கொலைவெறியை வெளிப்படுத்துவதாக அதன் உள்ளடக்கமும் மொழிநடையும் இருப்பதில்லை.

*

நேர்மையான படைப்பு என்பது குறைந்தபட்சமாவது வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு உருவாக்கப்பட வேண்டும். ஒரு போராட்டத்தின் அக-புறக் காரணிகளை பாரபட்சமின்றி முன்வைக்க வேண்டும். ஈழப்போராட்டத் தவறுகள், புலிகள் குறித்த நேர்மையான விமர்சனங்களை முன்வைத்திருந்தால் சிக்கலில்லை. ஆனால் விசமத்தனங்களையும் வரவாற்றுத் திரிப்புகளையும், பிம்பச் சிதைப்புகளையும், சமகால உண்மைகளுக்கு மாறான சம்பவங்களையுமே இத்தொடர் ஈழப்போராட்டம் தொடர்பாகவும் அதன் அரசியல் தொடர்பாகவும் சித்தரித்திருக்கின்றது.

இன்னொரு புறம் இத்தகைய சித்தரிப்புகள் பற்றி ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்தியத் தேசியத்தை முன்னிறுத்துகின்ற திரைப்படங்களின் பொதுவான போக்கும் கதைக் கட்டமைப்புகளும் இப்படியாகவே இருந்துவருகின்றன. இஸ்லாமியப் பயங்கரவாதம் என்பதை இவ்வாறான போக்கிலேயே தமிழ்த் திரைப்படங்கள் உட்பட இந்தியத் திரைப்படங்கள் சித்தரித்து வந்துள்ளன.

இந்தத் திரைத்தொடர், இலங்கை மீதான சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக இலங்கையைச் சாந்தப்படுத்துகின்ற, வழிக்குக் கொண்டு வருகின்ற இந்தியாவின் முனைப்பு, இலங்கையுடன் உறவை வலுப்படுத்துகின்ற நலன், இந்தியத் தேசியப் பாதுகாப்பிற்கு எதிரானதாக ஈழப்போராட்டத்தைச் சித்தரித்தல் என்ற தளங்களில் நகர்கின்றது. இத்தகைய அதிகார நலன்களைப் பிரதிபலிப்பதற்கு ‘இஸ்லாமியப் பயங்கரவாதமும்’, ‘ஈழப் பயங்கரவாதமும்’ கருவிகளாக்கப்படுகின்றமை வியப்பிற்குரியதல்ல.

உலகின் எந்தவொரு விடுதலைப் போராட்ட இயக்கங்களையும் ஒற்றைப் பரிமாணத்தில் அணுகமுடியாது. அது பலஸ்தீனமோ, ஈழமோ, குர்தீஸ் போராட்டமோ, தென் சூடானோ, எரித்திரியாவோ, தென்-சூடானோ, கிழக்குத் தீமோரோ, கொலம்பியாவோ, ஆச்சே விடுதலைப் போராட்டமோ எதுவாகவும் இருக்கலாம். அவற்றை அவற்றுக்குரிய அரசியல், வரலாற்று, பின்னணிகளுடனும் அவை தோற்றம் பெற்றதற்கான அக-புறக் காரணிகளின் அடிப்படைகளிலும்தான் அணுகப்பட வேண்டியவை. கருப்பு வெள்ளையாக பயங்கரவாதம் என்ற அதிகாரம் வரையறுக்கின்ற ஒற்றைத் தன்மைக்குள் நின்று அணுகுவது அபத்தம் நிறைந்தது. அதுவும் அப்படி அணுகுகின்ற படைப்புகள் இழிவான படைப்புகளே.

விமர்சனப் பூர்வமாக இத்தகைய படைப்புகளின் இழிவரசியல் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும். காத்திரமான எதிர்வினைகள், விவாதங்களை முன்வைப்பதன் மூலம் அவற்றுக்கான நிராகரிப்பினை உண்டு பண்ணலாம். அதன் அரசியலுக்கு எதிரான கருத்தியலை வலுப்படுத்தலாம். கருத்தியல் ரீதியாக இவற்றை எதிர்கொள்வது, எதிர்வினையாற்றுவது, அவற்றின் இழிவரசியலைக் கேள்விக்குட்படுத்துவதனூடாக உரிமை அரசியல், விடுதலை அரசியலுக்கு ஆதரவான கருத்தியல் தளத்தினை விரிவுபடுத்த முடியும்.

***

ரூபன் சிவராஜா. நார்வேயில் வசிக்கிறார். கவிதைகள் மற்றும் அரசியல் கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வருகிறார். அண்மையில் இவரது முதல் நூல் “அதிகார நலனும் அரசியல் நகர்வும்” நூல் வெளிவந்து கவனம் பெற்றுள்ளது. ஆசிரியர் தொடர்புக்கு – svrooban@gmail.com

ந.பெரியசாமி கவிதைகள்

0

1

குளிர் கட்டியை
நீரில் கலக்க
சில்லிடலில் உடல் மகிழ்ந்தது.

புணர்ச்சிக்கு பின்னான
குதுகுலத்தை தந்ததாக
கூறினான் நண்பன்
குளிர்கட்டி தளும்பிய
மது அருந்திய அனுபவத்தை

அவ்வளவு ஏக்கமாகிப் போனதெனக்கு.

எப்பொழுதும்
தயராகவே இருக்கின்றன
குளிர் கட்டிகள்

இது குறித்தெல்லாம்
எவ்வித புரிதலுமற்று
தன் விளையாட்டில் இருந்தாள்
பனிக்கட்டியை வரைந்த சிறுமி


*

2

காற்றுக்கு
எல்லாமும் தெரியும்
பேசத் தெரியாது
தன் ஓசையால்
எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாத
சமிக்ஞைகளைக் காட்டும்

பிரியத்துக்குரியவளின்
முகவரியை தொலைத்தவன்
காற்றிடம் மன்றாடிய
கதையை இதுவரை
கேட்டதில்லை

இனி
நான் கதையாவேன்

***

நா. பெரியசாமி, வசிப்பது ஓசூரில். தோட்டாக்கள் பாயும் வெளி, மதுவாகினி, மொழியின் நிழல், குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு na.periyasamy@gmail.com