Home Blog Page 45

அன்றொரு மழை நாள்

4

ரெ. விஜயலெட்சுமி

ழைக்கால மாலைநேரத்திற்கென எங்கள் குடும்பத்திற்கு ஒரு பிரத்தியேகக் களை கூடிவிடும். அம்மா தயாரித்துக் கொடுத்த தேநீர் கோப்பைகளைக் கைகளில் ஏந்தியபடி நடுவில் இருக்கும் திண்பண்டத் தட்டைச் சுற்றி ‘கொல கொலயா முந்திரிக்கா’ விளையாடுவதைப் போல நாங்கள் அமர்ந்துகொள்ள, கதை சொல்லும் படலம் ஆரம்பமாகும். அவை இட்டுக்கட்டிச் சொல்லப்படும் கதைகள் அல்ல, தினந்தோறும் பட்டுத் தெரிந்துகொள்ளும் அனுபவக் கதைகள். அப்பா தான் வேலை செய்யும் இடத்தில் நடந்த சம்பவங்களையும், அம்மா அக்கம்பக்கத்து மனிதர்களையும், தங்கை தன் வீரப்பிரதாபங்களையும் பற்றிக் கூற நானும் பள்ளிக்கூட சாகசங்களைப் பற்றி அள்ளி வீசுவேன். எப்படியோ… என்ன மாயமோ எல்லோரின் கதைகளும் எங்கள் எல்லோருக்கும் பிடித்து போய்விடும். ஒருவேளை பிடிக்கும்படியான விஷயங்களை மட்டும்தான் பகிர்ந்து கொண்டோமோ என்னவோ தெரியவில்லை.

*

அன்றொரு மழை நாள்

நான்குகோப்பை தேநீரும் நடுத்தட்டில் வாழைப்பூ வடையுமாக மழையைப் பார்த்தபடி வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தோம். அத்தை மகள் கனகாம்பாளும் நானும் விவரம் தெரிந்த நாள்முதல் ஒன்றாகச் சுற்றித் திரிபவர்கள். அவளுக்கும் எனக்கும் இன்றைய மதியபொழுதில் நடந்த புத்தக கிரிக்கெட் விளையாட்டில் மாபெரும் கலகம் மூள இனி இந்த ஜென்மத்தில் பேசப்போவதில்லை என்று அவள் எச்சில் தொட்டு சத்தியம் செய்துவிட்டுப் போய் இருந்தாள்.

இப்படியான சத்தியங்கள், அவளுக்கு கொடுக்கப் போகும் தெற்குத்தோப்பு திருட்டுப் புளியங்காய் மூலமாகவோ அல்லது பள்ளிக்கூட வாசல் பாட்டியின் ஊற வைத்த நெல்லிக்காய் மூலமாகவோ அதிகபட்சம் ஒரு வாரத்தில் சரிசெய்யப்பட்டு விடும். அந்த ஒருவார காலம் என்பதுதான் மிகவும் அவஸ்தையானது. அதுவரை யாரோடு சேர்ந்து பள்ளிக்கு செல்வது, யாரோடு டிபன் பாக்ஸ் மாற்றிக்கொள்வது, யாரோடு கூட்டு சேர்ந்து மாங்காய் திருடுவது என்பதெல்லாம் பெரும் கேள்விகளாய் முன் நின்று கொண்டிருந்ததால் அம்மாவையும் அப்பாவையும் கவனிக்கத் தவறி இருந்தேன்.

தங்கை வாழைப்பூ வடையைக் கறுக்முறுக் என்று கடித்த சத்தத்தில் சட்டென நினைவு அறுந்தபோதுதான் என்னைப் போலவே பேரமைதி ஒன்றும் அமர்ந்திருப்பது மூளைக்கு உறைத்தது. இது போலொரு அமைதியை இதுவரை வீட்டிற்குள் அனுபவித்ததே இல்லை. அதுவும் மழை நாட்களில்.

மூண்டுவிட்ட போரை நிறுத்துவதை விட சற்றே கடினமானது மாண்டு கிடக்கும் பேச்சுகளை உயிர்ப்பிப்பது. அதனால் செய்வதறியாது சற்றுநேரம் விழித்துக் கொண்டிருந்தேன். தங்கையின் கறுக்முறுக் சத்தம் திட்டம் வகுத்துக் கொடுத்தது. வாழைப்பூ வடை ஒன்றை எடுத்து அப்பாவின் கைகளில் வைத்து உதவிக்கு அழைத்தேன். சட்டென உடைந்து அழுதபடி என்னைத் தூக்கி மடியில் இருத்திக்கொண்டார். எப்போதேனும் அம்மா கண்கசக்கிப் பார்த்திருக்கிறேன். நான் பார்க்க, முதன்முறையாக கண் கலங்கும் அப்பா. அழக்கூடாது என்று சொல்லிக் கொடுத்திருந்த அப்பாவின் கண்ணீரைப் பார்த்தவுடன் எனக்குக் கட்டுப்படுத்த முடியாமல் அழுகை வந்தது. நான் என்ன செய்தாலும் அதை அப்படியே பின்பற்றும் தங்கை அழ ஆரம்பித்தாள். இப்பொழுது அடுத்தபடியாக அம்மா அழப்போகிறாள் என எதிர்பார்த்து அவள் முகத்தை பார்க்க, அதற்கான எந்த ரேகையும் புலப்படவில்லை. மாறாக ஒரு மெல்லிய நிதானம் அவள் முகத்தில் கோடிழுத்திருந்தது. அன்றுதான் நான் புது அம்மாவைப் பார்த்தேன்.

“என்ன மாமா… சின்னப்புள்ள மாட்டுக்க…  கண்ணத் தொடைங்க… இப்ப என்னாயிப் போச்சுனு கலங்குறீஹ”

அம்மா அப்பாவை அன்பொழுக மிரட்டியபடியே அவர் கைகளில் ஒரு வாழைப்பூ வடையைப் பிட்டு வைத்தாள். கண்களில் இருந்து வழியும் கண்ணீரோடு சேர்த்து வடையையும் விழுங்கினார் அப்பா.

அப்பா மடியில் அமர்ந்தபடியே உறங்கிப் போயிருந்த நான், கனகாம்பாளிடம் இனி ஒருபோதும் சண்டை போடுவதில்லை என்று சத்தியம் செய்தபோது கண்விழித்தேன்.

நாங்கள் எப்போதும் படுத்துக்கிடக்கும் கோரைப்பாயில் என்மீது கால்போட்டு என் விரலைச் சப்பிக்கொண்டே உறங்கிக் கொண்டிருக்கும் தங்கையின் வாயிலிருந்து விரலை உருவி எடுத்தேன். அப்போதும் அம்மாவும் அப்பாவும் அதே இடத்தில் அமைதியாக ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். கண்களை முழுமையாகத் திறந்தால் உறக்கம் போய்விடும் என்கிற பயத்தில் பாதிக்கண்களை மூடியபடியே நடந்து சென்று அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டேன்.

“அப்புறம் என்னங்க… அத வச்சு முடிச்சுப்புடலாம்”

“இல்லத்தா… அது நம்ம பாப்பா கல்யாணத்துக்குன்னு”

“மூக்கு சிந்தவே பழகாத புள்ளைக்கு முடிச்சு போடுறத பத்தி இப்ப என்னா பேச்சு? அதெல்லாம் காலம் கெடக்கு. ஆத்தா மீனாட்சி பாத்துக்குவா. நீங்க ஆக வேண்டியத பாருங்க”

“சரித்தா” எனும்போது நான் மீண்டும் உறங்கி போனேன்.

மறுநாளிலிருந்து எங்கள் குடும்பத்திற்கு அழகான புதுப்பணி ஒன்று தொடங்கியது. விடுமுறை நாட்களில் மொத்த குடும்பமும் அப்பா வண்டியில் ஏறிக்கொள்ள அம்மாவும் அப்பாவும் வீடுகட்ட இடம்தேட ஆரம்பித்தனர். ஒருநாளும் அப்பா எங்களை விட்டு தனித்துச் சென்றதில்லை. எங்களால் வரமுடியாமல் போகும் நாட்களில்.

“புள்ளைஹ ஆளப்போற வீடு. அதுஹ இல்லாம என்னத்த போய் பாத்துக்கிட்டு” என்று மறுத்துவிடுவார்.

*

அன்றொரு மழை நாள்

அவசரமாக வீட்டுக்குள் நுழைந்த அப்பா,

“ஆத்தா… புள்ளைங்கள கூப்ட்டுக்கிட்டு ஒடனே கெளம்புத்தா… ஒரு நல்ல மனை தொகஞ்சு வந்திருக்கு”

“மழ கொட்டுதே மாமா”

“வாழப்போற எடத்த பாக்க மழய விட நல்ல சகுனம் என்னத்தா இருக்கு?”

என்றவுடன் மறுவார்த்தையின்றி எங்களைக் கிளப்பினாள். மழையைக் குடும்பத்தோடு வேடிக்கை பார்த்தே பழகிய நாங்கள், அன்றுதான் முதன்முறையாக மழையில் நனைந்தோம்.

வண்டியில் முன்னே நான் ஏறிக்கொள்ள பின்னே அம்மாவும், அம்மா மடியில் தங்கையுமாக எங்கள் முதல் மழைப்பயணம் தொடங்கியது. மழை நிற்பதற்கும் அப்பாவின் வண்டி ஓரிடத்தில் நிற்பதற்கும் சரியாக இருந்தது.

எந்தெந்த இடத்தில் என்னென்ன கட்டிக்கொள்ளலாம் என அம்மாவும் அப்பாவும் ஏதேதோ பேசிக் கொண்டனர். புதர் மண்டிக்கிடந்த அந்த மேட்டுக்காட்டைப் பற்றி எனக்கொன்றும் புரிபடவில்லை. எனக்கும் தங்கைக்கும் மழைக்காற்றின் குளிரில் கைகளைப் பற்றிக்கொண்டு நிற்பதென்பதே போதுமானதாக இருந்தது.

“இங்கனக்குள்ளயே முத்தத்த கட்டிவுட்ருவோம்த்தா. இன்னிக்கு மாட்டுக்க என்னிக்குமே இங்கன நின்டு நனைஞ்சுக்கிறலாம். என்னடா மாரிக்கண்ணு சந்தோஷமா?” என்று கேட்க படுவேகமாகத் தலையாட்டி வைத்தேன்.

*

அன்றொரு மழை நாள்

வீடு என்பது வெறும் செங்கற்களாலும் சுண்ணாம்பாலும் கட்டி முடிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு வீட்டிலும் ஆயிரம், ஏன் லட்சம் கதைகள் கூட புதைந்து கிடக்கலாம். புதைந்து போன கதைகளைப் புதையலாக்கி அவற்றை காவல் காக்கும் பூதங்களாகிப் போகின்றன வீடுகள். நாங்கள் அன்று பார்த்த அந்த மண்மேடு நிலமாகி பின் பள்ளமாகி இறுதியில் காவல் காக்கும் பூதமாக நாளொரு சுவரும் பொழுதொரு செங்கலுமாக‌ வளர ஆரம்பித்தது. எங்கள் வீட்டிற்கு தினமும் ஒரழகு எங்கிருந்தேனும் வந்து சேர்ந்து கொள்ளும்.

வீடு வளர வளர அம்மாவும் அப்பாவும் தேய்ந்து கொண்டே சென்றனர். தினமும் பள்ளிக்கூடம் விட்டவுடன் நானும் தங்கையும் புதுவீடு கட்டுமிடத்திற்குச் சென்று விடுவோம். எங்களால் முடிந்த வேலைகளைச் செய்துவிட்டு உறங்க மட்டுமே பழைய வீட்டிற்கு வருவோம். புதுவீட்டிலிருந்து பழைய வீட்டிற்கு நடந்துவரும் வழியில் வீட்டைப் பற்றி அப்பா நிறைய கதைகளைச் சொல்லுவார். இரவில் உறங்கச் செல்லும் முன் சொல்லப்படும் கதைகளும், அதன் பிறகான கனவுகளும் கூட புதுவீட்டைப் பற்றியதாகவே இருந்தன.

பள்ளி விடுமுறைக்கு பெரியப்பா வீட்டிற்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிய அன்று புதுவீட்டுத் தெருமுனைக்குள் நான் காலடி எடுத்து வைத்ததும் தெருமுனை டீக்கடை அருகே தரையில் குத்த வைத்து டீ குடித்துக் கொண்டிருந்த அப்பா வேகமாக ஓடிவந்து என்னைத் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு நடந்தபடி,

“மாரிக்கண்ணு அப்பாவ தேடி வந்தீங்களா?” என்று ஏக சந்தோஷத்துடன் கேட்டார். உண்மையில் எனக்கு அன்று அப்பாவைப் பார்க்க வேண்டும் என்பதைவிட புதுவீட்டைப் பார்ப்பதற்கான ஆவல்தான் மிதமிஞ்சி நின்றிருந்தது. என்னிடமிருந்து பதில் வராததைப் புரிந்துகொண்ட அப்பா, மகிழ்ச்சி ஒரு துளியும் குறையாமல் ஓடாத குறையாக புதுவீட்டிற்குச் சென்றார். தரையிலிருந்து என் உயரத்திற்கு சுவர்கள் எழுப்பப்பட்டு வீடு பிரம்மாண்டமாக தெரிந்தது. ஆனால் அப்பா தோளில் இருந்ததால் பறவையைப் போல வீட்டை பார்த்துக் கொண்டிருந்தேன்.

“இங்கனக்குள்ள நீயும் தங்கச்சியும் வெளாடலாம்.‌ இங்கன படிக்கலாம். இங்கன ஒறங்கலாம். இது மாரிக்கண்ணு வளந்து பெரியவனானப்பறம். இது தங்கச்சி வளந்தப்புறம்”

ஒரே ஒரு அறையில் வாழ்ந்து வந்த எங்களுக்கு மூன்று அறைகளும் ஒரு முத்தமும் கொண்ட இடம், வெறும் வீடாக இல்லாமல் அரண்மனையாகத் தெரிந்தது.

“அப்பா, மழ வாரப்ப எங்கனக்குள்ள ஒக்காந்து டீ குடிக்க போறோம்?”

“அப்டிக் கேளுடா எந்தாமரக்கொளமே” என்று சட்டென என்னைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் பின்னால் சென்று காட்டினார். அங்கே ஒரு தனிக்குடில் தெரிந்தது. மந்தைக்கு நடுவே ஊர் பஞ்சாயத்து நடத்தும் திண்ணைப்போல கட்டி அதன்மீது பனையோலை வேய்ந்து வைத்திருந்தார் அப்பா.

“அதுதேன் மாரிக்கண்ணு நம்ம சொர்க்கம்”

“நீ கேட்டாத்தேன் காட்டணும்னு ஒங்கப்பாரு சொல்லிக்கிட்டே கெடந்தாரு. நல்லவேள குடி வருமுன்ன கேட்டுபுட்ட” என்றாள் அம்மா சிரித்தபடி.

*

அன்றொரு மழை நாள்

வீடுகட்ட ஆரம்பித்து ஒரு வருடம் ஓடிப்போயிருந்தது. இன்னும் வேலைகள் பாக்கி இருந்தாலும் குடியேறிய பிறகு அதை முடித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டு அன்று நாங்கள் அந்த வீட்டில் குடியேறினோம். மழையோடு மழையாகக் குடியேறிய கையோடு நாங்கள் முதன்முதலில் அமர்ந்தது அந்தக் குடிலில் தான். அப்பா முதன்முதலாகக் கண்கலங்கிய நாள் அன்றுதான் என்பதை அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டேன். மிகச்சரியாக அன்றைய தேதிக்கு நாங்கள் குடிவந்த காரணமும் புரிந்தது. வைராக்கியத்தின் மறுபெயராகத் தெரிந்தனர் இருவரும்.

அன்றைய தினத்தைப் போல அப்பா குலுங்கிக் குலுங்கிச் சிரித்ததை என் வாழ்நாளில் பார்த்ததேயில்லை. அதைப் பார்க்கப் பார்க்க எனக்கும் சிரிப்பு பொத்துக்கொண்டு வர, தங்கையும் கெக்கலி போட்டு சிரிக்க ஆரம்பித்தாள். அம்மா அப்பொழுது முகம் முழுதும் பூரிப்போடு காலண்டரில் இருக்கும் ஒரு சாமியின் புன்முறுவலை நினைவுபடுத்தியபடியே இருந்தாள். வெளியே கொட்டிக் கொண்டிருந்த மழையில் குடிலுக்குள் இருந்தபடியே நாங்கள் நனைந்து கொண்டிருந்தோம்.

*

அன்றொரு மழை நாள்

என் அப்பா வீட்டிற்கும் என் அம்மா வீட்டிற்கும் ஏதோ பிரச்சனை. பெரியவர்களின் சம்மதம் இல்லாமல் என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் திருமணம் நடந்தேறி இருக்கிறது. எங்களுக்கு மட்டும் அம்மா வழி தாத்தா பாட்டி இல்லாததன் காரணம் அன்றுதான் விளங்கியது. இரு வீட்டாரும் ஏதோ நல்ல காரியத்தில் சந்திக்கும்போது சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். அதனால் அம்மா வீட்டிலிருந்து வந்த யாரோ சில நபர்கள் அப்பாவையும் அம்மாவையும் திட்டிக் கொண்டிருந்தனர். என்னையும் தங்கையையும் மழைக்குடிலில் உட்கார வைத்து கைநிறைய தின்பண்டங்களைக் கொடுத்திருந்தார் அப்பா. தின்பண்டங்களைத் தின்றபடியே உறங்கிப் போயிருந்த என்னையும் தங்கையையும் அன்றிரவே மழையோடு மழையாகத் தூக்கிக்கொண்டு எங்கள் வீட்டைவிட்டு, ஊரைவிட்டு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அப்பாவும் அம்மாவும் கிளம்பினார்கள். கிளப்பப்பட்டார்கள்.

எங்களுக்காக மழை அன்று ஒருபாடு அழுது தீர்த்தது.

*

அன்றொரு மழை நாள்

வீட்டை விட்டும் ஊரைவிட்டும் விரட்டப்பட்டு பலநாட்கள் ஓடிப்போயிருந்தன. ஏதோ ஓர் ஊரில் யாரோ ஒருவரின் வீட்டின் ஓர் அறையில் நாங்கள் நால்வரும் இன்னும் உயிரோடு இருந்தோம். கை விரல்களையும் கால் விரல்களையும் எண்ணித் தீர்த்த பிறகும் தீராமல் நாட்களின் எண்ணிக்கை நீண்டுகொண்டே இருந்தது. அதன் பிறகு வழக்கமான ஏதோ ஒரு சலிப்பான தினத்தில் தனிக்குடிசைக்கு மாறினோம். பல நாட்களாக மழையும் பெய்யவில்லை, எங்களிடம் சந்தோஷ வாசமும் வீசவில்லை. அம்மா, அப்பா இருவரும் தினக்கூலிகளாகச் சென்று வந்தனர். பகல் முழுவதும் நானும் தங்கையும் குடிசை வாசலில் வெயில் குடித்தபடி அமர்ந்திருப்போம்.

அந்த ஊர் ஒரு புழுதிக்காடு. எந்நேரமும் வெக்கைக்காற்று புழுதியை வாரி இறைத்தபடியே இருக்கும். அந்த ஊர் முன்ன பின்ன மழையைப் பார்த்திருக்குமோ என்றுகூட சந்தேகம் தோன்றியது. இரவில் கடுங்குளிராக இருக்கும். பகலுக்கும் இரவுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாத ஒர் ஊர் அது, ஒன்றே ஒன்றைத் தவிர. அது மழை. மழைக்காக நான் ஆழமாக ஏங்கிப் போயிருந்தேன்.

அப்படியான ஒருநாளில் அப்பாவும் அம்மாவும் கிளம்பிய பிறகு நானும் தங்கையும் வாசலில் அமர்ந்து வெயிலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது வெக்கையும் புழுக்கமும் மெல்லத் தணிவது போல இருந்தது. திடீரென ஏதோ ஒரு மாற்றம் நிகழ்வது போலிருக்க, வெயிலின் பிரகாசம் மெலிதாக மங்க, எங்கிருந்தோ காற்று ஈரப்பதத்தை கர்ப்பம் தாங்கி வர, நீலத்தின் மீது கருமை படரத் தொடங்கியது. வைத்த கண்ணை எடுக்காமல் அந்தக் கருப்பினுள் ஊறிக் கொண்டிருந்தபோது மெல்ல தரையிலிருந்து மேல்நோக்கிப் பறப்பது போலிருக்க, ஒன்றும் புரியாமல் கீழே குனிந்தபோது அப்பாவின் தோள்களில் அமர்ந்திருந்தேன்.

“மாரிக்கண்ணு, அப்பாவுக்கு வெளியூர்ல வேல கெடச்சுருச்சு”

என் நெற்றியில் மழையின் முதல் துளி பட்டென விழுந்தது. வலியோடு சிரித்தேன்.

*

அன்றொரு மழை நாள்

வெளியூர் என்கிற பெயரில் நாங்கள் குடிபெயர்ந்திருந்த ஊர் அவ்வபோது சொந்த ஊரை நினைவூட்டும். மீண்டும் பழைய நிலை நோக்கி எங்களைத் திருப்ப முயன்று கொண்டிருந்தது காலம். தனிவீடு, தனி சோறு என்று ஒரு அறைக்குள் வாழ்ந்து தொலைத்த வசந்த காலத்தை மீட்டெடுக்கப் போராடிக் கொண்டிருந்தோம். மழையில் ஊறிப்போன கால்களில் ஈ மொய்க்க அப்பா கொண்டுவரப் போகும் இரவு உணவுக்காய் நாங்கள் காத்திருந்தபோது மழை மீண்டும் பெய்யத் தொடங்கியது.

“மழ சத்த நின்னு பேஞ்சாத்தேன் என்ன?”

என அம்மா சடைத்துக் கொண்டாள். “அப்டிச் சொல்லாதம்மா” என்று சொல்ல வாயெடுத்த என்னை தங்கை அடக்கினாள். வீடு முழுவதும் ஒழுகி உட்கார இடமின்றி ஒடுங்கிய நிலையிலும் என்னால் ஏனோ மழையைச் சபிக்க முடிவதில்லை. மழை உக்கிரமாக ஊற்றத் தொடங்கி இருந்தது. மழைச்சத்தம் மனதிற்குள் இறங்க இறங்க சகலமும் மறைந்து போனது.

“அத்த” என்கிற அந்த ஒற்றைக் குரலில் தூக்கிவாரிப் போட்டு எழுந்தேன். அம்மாவும் தங்கையும் எந்தச் சலனமும் இல்லாமல் இருந்தனர். அந்தக் குரல் அவர்களுக்குக் கேட்கவில்லையா? இல்லை கேட்டிருக்கும். அழுத்தமான நிதானமான குரல் கனகாம்பாளுக்கு. எப்படிக் கேட்காமல் இருக்கும். அவள்தான். அவள் குரல்தான்.

“ஒனக்கு எதாச்சும் சத்தம் கேட்டுச்சா?”

“இடிச்சத்தந்தேன் ஊருக்கே கேக்குதேண்ணே”

தங்கைக்குமா கேட்கவில்லை. கனவிலும் நினைவிலும் அடிக்கடி கேட்டுப் பதிந்து போன குரல் கனகாம்பாளின் குரல். தெள்ளத்தெளிவாக மீண்டும் கேட்டது. அம்மா எழுந்து போய் கதவைத் திறக்க அப்பா அருகே கனகாம்பாளின் அம்மா நின்றிருந்தாள்.

சொந்த ஊரில் இருந்து துரத்தப்பட்டு அகதிகளாக மூச்சுவிட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தை அனைவருக்கும் சட்டென ஒரு நொடியில் முடித்து வைத்தது சிகப்பி அத்தையின் வருகை. மகிழ்ச்சியில் திக்குமுக்காடிக் கொண்டிருந்தது குடும்பம். என்னைத் தவிர. என்னை எனக்குக் கண்டெடுத்துக் காட்டியிருந்த கனகாம்பாளின் திருமண சேதியோடு வந்து சேர்ந்த அத்தையின் இருப்பு மழை வரப்போவதற்கு முந்தைய அவியலை எனக்குள் கசப்பாய் ஊற்றிக் கொண்டிருந்தது.

*

அன்றொரு மழை நாள்

அம்மாவும் தங்கையும் எதிர்பாரா விபத்தில் எங்களை விட்டு பிரிந்த பிறகு நானும் அப்பாவும் அனாதைகளாக விடப்பட்ட பின்னர் அப்பாவிடம் பேச்சு வெகுவாக குறைந்து போயிருந்தது. இயக்கம் கூட அவசியப்பட்டால் மட்டுமே என்று வைத்துக் கொண்டுவிட்டார். இந்த நகர வாழ்க்கையின் எந்த இழையும் அவருக்குள் பின்னிக் கொள்ளவேயில்லை. இன்னும் தீராத வாழ்க்கையை எந்தவிதக் கேள்விகளுமின்றி அவர் கடந்து கொண்டிருந்தார்.

அப்படியான கடத்தலின் ஒருபொழுதில், வழக்கம்போல திரை விலக்காத ஜன்னல் அருகே இருக்கும் அவரது கட்டிலில் சாய்ந்தபடி வானம் பார்ப்பதுபோல வெற்றுச் சுவரைப் பார்த்தபடி இருந்தார் அப்பா. அலுவலக வேலையாக அவசரமாக வெளியூர் கிளம்பியபடியே

“அப்பா… மணிக்கடையில மூனு வேள சாப்பாட்டுக்கும் மூனு நாளைக்கு காசு குடுத்திட்டேன்”

“ம்”

“நேரத்துக்கு சாப்ட்ருங்க”

“ம்”

“சாலாக்கா 6 மணிக்கு பால் கொண்டு வரும். வாங்கி காபி போட்டுக்கிருங்க”

“ம்”

“மாத்திரை மருந்தெல்லாம் இருக்கா?”

“ம்”

“மறந்துறாம போட்டுக்கங்க”

“ம்”

“என்னப்பா, ஒடம்புக்கு ஏதாச்சும் பண்ணுதா?”

“ம்ஹூம்”

நிதானமாக நடந்து அப்பா அருகில் சென்று அவர் கைகளைப் பிடித்து கண்ணை நேருக்கு நேராகப் பார்த்தேன்.

“என்னப்பா வேணும்?”

“மாரிக்கண்ணு… உங்கம்மாவும் தங்கச்சியும் என்னைய வீட்டுக்கு வான்னு கூப்டாஹப்பா. நம்ம வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போறியா?”

அம்மாவிடம் மட்டுமே எதையும் கேட்டுப் பழகிய அப்பா, முதன்முறையாக என்னிடம் கேட்கும் விஷயம். அவரிடம் எந்த பதிலும் சொல்லாமல் எனது கைபேசியை அணைத்தபடி நான் சரியெனத் தலையாட்டும் போது வானம் தன் முதல் கண்ணீர்த் துளியை வழிய விட்டது.

*

அன்றொரு மழை நாள்

மந்தைக்கு நடுவே நடக்கும் ஊர் பஞ்சாயத்தின் திண்ணை போல கட்டி அதன் மேலே பனையோலை வேய்ந்து அப்பா செய்து வைத்த குடிலின் நடுவே நானும் மழையும் தனித்து விடப்பட்டிருக்கிறோம். வாழப் பணித்த வாழ்க்கையை வாழ்ந்து தீர்ப்பதை தவிர வேறெதையும் யாராலும் எப்போதும் செய்துவிட முடிவதில்லை.

அம்மா, அப்பாவின் கைகளில் வாழைப்பூ வடையை வைத்து, “என்ன மாமா… சின்னப்புள்ள மாட்டுக்க? கண்ணத் தொடைங்க. இப்ப என்னாயிப் போச்சுனு கலங்குறீஹ”

கண்களைத் துடைத்த அப்பா சிரித்தபடி, “புள்ளைஹ ஆளப்போற வீடு”

அம்மா சற்று தயக்கத்துடன், “மழ கொட்டுதே மாமா”

அப்பா மலர்ந்த முகத்துடன், “வாழப் போற எடத்த பாக்க மழய விட நல்ல சகுனம் என்னத்தா இருக்கு?”

“ஆமாப்பா… மழைய விட நல்ல சகுனம் என்னப்பா இருக்கு?”

எனக்கான கடைசி மிடறு தேநீரை மழையோடு சேர்த்துப் பருகி அதை ஆழமாக ரசிக்க கண்களைமூடிச் சிரித்தபோது மழையோடு மழையாக மாறி, குடிலின் நடுவே அமர்ந்திருந்த அப்பா அம்மா தங்கையோடு கண்திறந்து அடுத்த‌ மிடறை விழுங்கினேன்.

***

திரைத்துறையில் பணியாற்றி வரும் இவர். தனது காணொளி வலைப்பூ வாயிலாக இலக்கிய அறிமுகங்கள் செய்து வருகிறார்.

மொழுக்காவியம்

0

ஜெயசுதன்

முதல்கதை

சொலவடைத் தாத்தா மொழுக்கர் தனது இடதுகை மொழியில் ஒரு செல்லத்தட்டு தட்டி, உள்ளங்கையைத் திருப்பி “இந்தப் படத்தைப் பார்த்தாயா…?” என்று தன் பேரனிடம் காட்டினார். அந்தக் காலத்துத் திறன்பேசித் திரை போல உள்ளங்கை ஒளிர, அதில் ஒரு படம் தெரிந்தது.

ஆவலாய் எட்டிப்பார்த்த பேரன், ஒன்றும் புரியாமல் தாத்தாவின் முகத்தை ஏறிட்டான். வழுக்கைத் தாத்தா காதுகள் துடிக்கக் கண்களால் சிரித்தார். அவரது கண்களுக்குக் கீழ், முகம் ஏதுமற்று மொழுக்கென்று இருந்தது. பேரனும், அவரைப் போலவே மொழுக்காய் இருந்தான். இருவரும், தங்கள் எண்ண அலைவரிசையைப் பயன்படுத்தியே பேசிக்கொண்டு இருந்தார்கள்.

“இது என்ன படம் தாத்தா…?”

“இதான் உன் கொள்ளுத்தாத்தா… அதாவது என்னோட அப்பா… நம்ம எதிர்தேசியவாதக் குடிவகையில் ஒரு விதிவிலக்கா இருந்தவர்…”
மொழுக்கப் பேரன் புருவத்தை உயர்த்தி அப்படத்தை நன்றாக உற்று நோக்கினான். குட்டிக்கரணம் போடக் குனிந்த வாக்கில், முட்டிக்காலுடன் தலை தரையில் ஒட்டியிருக்க, பிருட்டமானது, முச்சந்திக் கொடிமரத்திற்கு முட்டுக்கொடுத்த நிலையில் ஒரு உருவம் தென்பட்டது.
“கொள்ளுத்தாத்தா ஏன் இப்படி இருக்கார் தாத்தா…?”

“அவரு ‘பாதப்பரிசக்கேசக்குப்புறாசன’ வெற்றி முத்திரையில் இருக்கார் பேராண்டி…”

“அப்படீன்னா…?”

பெருமூச்செறிந்தவரின் கண்கள் ஒளிர, நூற்றாண்டிற்கும் மேலான அந்த வரலாற்றை மிகுந்த உற்சாகத்தோடு கூறலானார்.

ந்தக் காலத்தில், வாழைப்பழத்தைக் கொண்டு போனவ வாசப்படியில, வாயைக் கொண்டு போனவ நடுவூட்டுலங்கிற கணக்கா, மாப்பணிகாரப் பேரரசில் மகிடித்தேச்சா மொழுக்கர்களும், அவுங்க ஆளுகையின் கீழ், வெங்கம்பயலுக்கு ஒரு மாடு, அதைப் பிடிச்சுக்கட்ட ரெண்டு ஆளுங்கிற கணக்கா, தெற்கே ரெட்டைமண்டல மொழுக்கர்களும் ஆட்சி பண்ணிக்கிட்டு இருந்தாங்களாம்.

அவுங்க ஆட்சியில எதிர்தேசியவாதிகளின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் நாட்டில் அதிகமாகிக்கிட்டே இருந்துச்சாம். இதைத் தடுக்க, எதெடுத்தாலும் ஒன்னுங்கிற கொள்கைக்கு மதிப்புக்கூட்டி, அகழியிலே விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம் ஆயிடக்கூடாதுன்னு, வந்தேறியே வெளியேறு சட்டத்தை அறிமுகப்படுத்துச்சாம் மாப்பணிகார அரசு.

பெரும்பாலான சிற்றரசுகளுக்கு இந்த சட்டத்துல உடன்பாடு இல்லையாம். இருந்தாலும், கடைந்தெடுத்த மோரிலும் குடைந்தெடுப்பாள் வெண்ணெய்ங்கிற கணக்கா, அதை ஏத்துக்காத சிற்றரசுகளிலும் இந்தச் சட்டத்தை அமுல்படுத்த ஆயத்தமாச்சாம் அகண்ட அதிகாரம் கொண்ட அரசு. அதை ஏத்துக்காம, பாதிக்கப்பட்டவுங்கள்லாம், அதெப்படி? ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டலாம்…? ன்னு போராட்டத்துல குதிச்சுட்டாங்களாம்.

அந்த நேரத்துல, எப்பவுமே கோடானுகோடி ஆண்டுகள் எடுத்து நிதானமா நடக்குற மனிதப் பரிணாம வளர்ச்சி, பொல்லாத காலம் சொல்லாம வர்ற கணக்கா, மொழுக்க மாற்றமா திடுதிப்புன்னு வந்துருச்சாம். இதென்னடா கொடுமை? முண்டச்சிக்கு வர்றதெல்லாம் மொரட்டு எழவாவுல இருக்குன்னு மெரண்டு போன அரசு, எரியுறதப் புடுங்குனா கொதிக்கிறது தானா அடங்கும்ன்னு, பொது முடக்கத்தைச் சட்டுன்னு அமுல்படுத்திருச்சாம்.

அறிவிக்கப்படாத அந்த நெருக்கடியில, மசகு தூர்ந்த அரசு எந்திரத்தை அவசரகதியில முடுக்கி விட, அது, நாயிக்கு பீயீ கடன்பட்டது கணக்கா, விதியேன்னு வேலை செஞ்சுதாம். ‘கட்டாய முகமூடி; கபசுரக் கசாயம் குடி, வீட்டுத்தனிமையா? வாசலுக்குத் தகரம் அடி; கூட்டுத்தனிமையா? வீதிக்குத் தகரம் அடி, மேட்டிமைத் தனிமைக்கு தனியார் முகாம்; மொரட்டுத் தனிமைக்கு அரசு முகாம், பறந்துபடுத்துறவன உச்சமாக் கவனி; இருந்து படுத்துறவன துச்சமாக் கவனி, வக்கில்லாதவன பசியில போடு; வடிச்சுப் போட்டவன செவுள்ள போடு, இடைவெளி பேணிச் சந்தை; இணையத் திண்ணைச் சண்டை, உள்ளவன் சாவுக்கு உன்னதச் சேவை; தண்டச்சாவுக்குத் தன்னார்வலர் சேவை’ன்னு அதகளப்படுத்திருச்சாம்.

அதுவரை இருந்த உலக நியதிகளுக்கெல்லாம் அர்த்தமில்லாமப் போச்சாம். இல்லாத சாமானியன் தரித்திரப் பிச்சைக்காரனாவும், உள்ளூரு செல்வந்தன் உலகப் பணக்காரனாவும் ஆனார்களாம்.

‘புறமயிரை உடுக்கையால் இழந்தது போல, மூக்கையும் வாயையும் முகமூடியால் இழந்துருவோமே’ ன்னு தொலைநோக்கா சிந்திச்சு, ‘இனிமே, இன்பதுன்ப நுகர்வுகள்லாம் ஒலியும்-ஒளியுமாத்தான் இருக்கப் போகுது, இப்போதிலிருந்தே மக்களை அதுக்குத் தயார் பண்ணனும்னு முடிவுக்கு வந்த அரசு, பசுமைப் புரட்சி மற்றும் வெண்மைப் புரட்சிக்கு அடுத்தபடியா வடைப் புரட்சியை அறிமுகம் செஞ்சதாம்.

அதன்படி, முடக்கத்துல இருக்க எல்லாரையும் ஒலியும்-ஒளியும் வெளையாடச் சொன்னுச்சாம். ஏற்றவன் குண்டிய எட்டின முட்டும் தாங்கலான்றவுங்க மகிழ்ச்சியா வெளையாட, உளறுவாயனுக்கு ஊமையனே மேலுன்றவுங்க மொழுக்குலையாமை இயக்கத்தை அறிவிச்சுப் போராட ஆரம்பிச்சுட்டாங்களாம்.

நண்டு கொழுத்தா பொந்து தங்காத சங்கத்தாரெல்லாம், விதியை மீறி வெளியே போகவும், முச்சந்தியில வச்சு முட்டியைப் பேத்தாங்களாம் காக்கி மொழுக்கருங்க. ஒட்டுமொத்த நாடும் போர்க்கோலம் பூண்டு நின்னுச்சாம்.

புலம்பெயர்ந்தோரின் இருப்பிட மாற்ற இயலாமை நாளுக்குநாள் தீவிரமாச்சாம். நாடுபெயர்ச்சி நடக்காமப் போகவும், திணைப்பெயர்ச்சி, மண்டலப்பெயர்ச்சி, குழுப்பெயர்ச்சி, குடிப்பெயர்ச்சின்னு ஆளாளுக்குக் கெளம்பிட்டாங்களாம். போறபோக்குல, தண்டவாளத்துல தலையக்குடுத்து தொடரிக் கவிழ்ப்பெல்லாம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்களாம்.

எதிர்வினையாற்றிய அரசு, தண்ட யாத்திரைத் தடுப்பைக் கையிலெடுத்து, அகப்பட்டவங்களை எல்லாம் அள்ளிப்போட்டு அள்ளையிலே மிதிச்சுச்சாம்.

வடைப் புரட்சியை வலுப்படுத்தி, எதிர்கால உணவுக் கலாச்சாரத்திற்கு வித்திடும் வகையில, ‘கண்-காது வழியாகத்தான் இனி உண்கை இருக்கும்; எனவே, வேளாண்மைக்காக எதையும் வீணடிக்கக் கூடாது’ ன்னு, மண்ணுமுண்டி முன்னேற்றச் சட்டத்தை முன் மொழிஞ்சதாம் அரசு. குண்டி கொள்ளாம கோவணம் கட்டின மண்ணுமுண்டிகள்லாம் இதுக்கு ஆதரவா இருக்க, மண்டை கொள்ளாம உருமாக் கட்டின மொரண்டு புடிச்சவுங்கள்லாம், கலப்பை வண்டி ஓட்டிக் கலவரம் பண்ணினாங்களாம். ஆணி-அணைத் தடுப்பை உடைக்க, ஆணிபுடுங்கிப் போராட்டமெல்லாம் நடந்துச்சாம். சுடுகளியை நாய் புரட்டுனாப்புல அரசு இதைக் கையாளவும், அடுக்குகிற அருமை, உடைக்கிற நாய்க்குத் தெரியுமான்னு மருகி மருகி, மண்ணுமுண்டி மொழுக்கர் குலமே, காலப்போக்குல இருந்த இடம் தெரியாம வழக்கொழிஞ்சு போச்சாம்.

இதுக்கெல்லாம் உச்சமா, மப்புச் சத்தியாக்கிரகம் நடந்துச்சாம். தீவிர மப்பு மொழுக்கரான உங்க கொள்ளுத்தாத்தா கெத்தா அதுல பங்கெடுத்துக்கிட்டாராம். மனநிறைவு இல்லாதவங்க எதிரா நின்னப்ப, மப்பு மொழுக்கர்கள் மட்டுந்தான் அரசுக்கு ஆதரவா இருந்தாங்களாம். அந்த உன்னதமான உணர்வை, பால் பேதமில்லாம, பள்ளிப் பருவத்துல இருந்தே அவுங்களுக்கு ஊத்தி வளர்த்து இருந்துச்சாம் அரசு.

திடீர்ன்னு மப்பு தட்டுப்பாடாகவும், அரசு வரும்படி அதல பாதாளத்துக்குப் போயிருச்சாம். மப்பு வாடையில்லாத அந்த ஒரு மண்டலத்துல, ஏரிமேல கோவிச்சுக்கிட்டு குண்டி கழுவாமப் போனது கணக்கா, பல மப்பு மொழுக்கர்கள் மப்பு சேவையைப் புறக்கணிச்சுட்டாங்களாம். மிஞ்சினவுங்க, சுதேசி மப்புக்காய்ச்சியும், இசிவு களியாட்டம் போட முடியாமலும், மழலை வெட்கும் மப்புக்குழறுபடை சொல்லாட முடியாமலும், பல தியாகங்களைச் செஞ்சாங்களாம்.

இதெற்கெல்லாம் நன்றிக்கடனா, ஆளுக்கு முன்னே, பொதுமுடக்கத் தளர்வு மப்பு மொழுக்கர்களுக்குக் கிடைச்சதாம். இருந்தாலும், நீதிமன்றம் அவ்வளவு எளிதா அவுங்களை மப்புச் சேவை பண்ணவிடலையாம். ஒரு நாள்ல, ஒரு எடத்துல 500 பேருக்குதான் மப்பு யாத்திரை அனுமதின்னு சொல்லி, நாளுக்கு ஒரு வண்ணம்னு வானவில் சீட்டுமுறையைக் கொண்டு வந்துருச்சாம்.

‘ஆறடி இடைவெளி வட்டம், மாட்டுச்சினைக் கிட்டி, கட்டுப்படுத்தக் காவலர், கண்காணிக்க அதிகாரி, ஒழுங்குபடுத்த ஒலிப்பெருக்கி’ எனப் பலகாத தூரம் நீண்டிருந்ததாம் அந்த மப்பு யாத்திரை.

வண்ணச்சீட்டு இலட்சினை, குடை வாள், உருமா முகமூடி சகிதம் உற்சாகமா ஆரம்பிச்ச அந்த அணிவகுப்பு, மதுரைக்குத் திருடப் போறவன் மானாமதுரையிலேயே பம்மல் போட்டது கணக்கா, முட்டி உயரத் தடைக் கிட்டியில் சிக்கிக்கிச்சாம். ஒரு கையில குடையும், மறுகையில அவுந்து விழுற வேட்டியையும் புடிச்சுக்கிட்டே, தடைக்கட்டையைத் தாண்டி, சரியா வட்டத்துல கால்வச்சு, பாண்டி ஆட்டம் வெளையாடிக்கிட்டே போனதாம்.

கடைசியில, ‘பழி பாவம் எல்லாம் எங்களுக்கு மட்டுமே’ன்னு கிருமிநாசினி கழுவிச் சத்தியம் பண்ணிட்டுத்தான் மப்புச்சேவையை நிறைவு செய்ய முடிஞ்சதாம்.

இசிவு விற்பன்னர்களுக்கு, நாற்காலியில குந்திக்கிட்டே பாண்டி வெளையாட, விசேடச் சலுகையெல்லாம் கிடைச்சதாம். முன்னிரவே பலர், அக்கிட்டியில் சோதனைத் தாவல் பண்ணி பழகி இருந்தாங்களாம். அதுபோக, குடை, செருப்பு, கல் எல்லாம் வச்சு, வட்டத்தை முன் பதிவெல்லாம் பண்ணியிருந்தாங்களாம்.
அகில ஒலகத்துலேயே, சமூக இடைவெளியைச் சரிவரக் கடைபிடிச்சது இவுங்க மட்டும்தானாம். இருந்தும், இரண்டாம் உலகப்போரில், இன அழிப்புக்கு ஆளானவுங்க கூட இவுங்க அளவுக்குக் கொடுமையை அனுபவிச்சதில்லையாம்.

இப்புடி வெற்றிகரமா மப்புச்சேவை செஞ்ச மப்பு மொழுக்கர்கள் களிப்பு மிகுதியில, மப்புக்கோவில் முன் நெடுஞ்சாண்கிடையா விழுந்து கும்பிட்டு, வீடுபோற வரைக்கும், விதவிதமான முத்திரைகள் போட்டு வெற்றியைக் கொண்டாடிக்கிட்டே போனாங்களாம். அப்படி, உங்க கொள்ளுத்தாத்தா, கொடிக்கம்பந்தோறும் கெலிப்புல போட்டதுதான் இந்தப் ‘பாதப்பரிசக்கேசக்குப்புறாசன’ வெற்றி முத்திரை.

***

இங்ஙனம், தாத்தா மொழுக்கர் பேரனுக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, அவரின் உள்ளங்கை உதறல் எடுக்க, நடுவிரலில், “கதை பேசியது போதும் உணவருந்த வாருங்கள்…” என்று ஒரு குறுஞ்செய்தி ஒளிர்ந்தோடியது.

அவசர அழைப்பிற்கிணங்கி, அடுக்களை நோக்கி அவர்கள் விரைய, அங்கே, அவ்வேளை உணவைத் தயாரிக்கும் பொருட்டு, அரசு பரிந்துரை செய்த ஐயோ நிறுவன அரிசியை, முப்பரிமாணத்தில் அச்சடித்துக் கொண்டிருந்தாள் பாட்டி மொழுக்கி.

***

ஜெயசுதன்


ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு – பகுதி 11

0
சட்டவாக்க அரங்கம்: பரிந்துரைகள், தீர்மானங்கள், அமுலாக்கம்!

ரூபன் சிவராஜா

இதற்கு முந்தைய பதிவுகளை வாசிக்க இங்கே அழுத்தவும்

பரிந்துரைகள் தெரிவும் மதிப்பீடும்

க்கள் அரங்கின் நிகழ்த்துகைகளுக்கான முக்கிய பகுதி, பங்கேற்பாளர்கள் நாளாந்தங்களைப் பாதிக்கின்ற மோசமான ஒடுக்குமுறைகள் எவை என்பதைத் திட்டவட்டமாக எடுத்துச் சொல்ல வேண்டும். மட்டுமல்லாது சட்டத் திருத்தங்களினால் ஒடுக்குமுறைச் சூழலில் நடைமுறை மாற்றம் நிகழக்கூடிய வாய்ப்புகள் எந்தளவில் உள்ளன என்பது பற்றியும் அழுத்தமாக விளக்க வேண்டும். அரங்கக் குழுக்களிலுள்ள பிரதிநிதிகள், குழுக்களில் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் மற்றும் தர்க்கவாதங்களை ஆலோசகர்களுக்கான பொதுக்கூட்டத்திற்கு எடுத்துச் செல்வர். அங்கு அனைத்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படும். பல சந்தர்ப்பங்களில் பரிந்துரைகளின் உள்ளடக்கம் தொடர்பான இறுதி முடிவுக்கு முன்னர், பல்வேறு வகைப்பட்ட ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டியிருக்கும். அரங்கக் குழுவிலுள்ள சட்ட வல்லுனர்கள் சட்டச் சொல்லாடல்களையுடைய மொழியில் பரிந்துரைகளை திருத்தி எழுதிய பின், சட்டமன்ற அமர்வில் அவை Boal-இனால் முன்வைக்கப்படும்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

இந்த வகையில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்ட முதலாவது தீர்மானம் முதியவர்களின் அரங்கக் குழுவிலிருந்து வந்த பிரச்சனைக்கான தீர்வுவாகும். அது சுய அனுபவத்திலிருந்து முன்வைக்கப்பட்ட ஒரு துயர்மிகு சம்பவம். அரசங்க வைத்தியசாலையில் முதியவர் ஒருவரின் உடல்நலப் பிரச்சினைகள் தொடர்பான அறிதலற்ற காரணத்தால் ஒரு இளம் வைத்தியரால் முதியவருக்குத் தவறான சிகிச்சை வழங்கப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையில் ஆலோசனைக் குழுவினருடன் ஆழமாக இதுபற்றி விவாதித்து, காத்திரமான திட்டம் முன்வைக்கப்பட்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அச்சட்ட அமுலாக்கம் மூலம், அனைத்து அரசாங்க மருத்துவமனைகளிலும் வைத்தியர்கள் மற்றும் மருத்துவத்தாதிகள் மத்தியில் முதியோர் வைத்திய நிபுணர்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டது. தவிர குறிப்பிட்ட படுக்கைகள் வயோதிப நோயார்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்க வேண்டுமென்பதோடு, வயோதிபர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும்போது உறவினர்கள் அல்லது நண்பர்களை உடன் அழைத்துச் செல்வதற்குரிய வழிவகையை ஒவ்வொரு மருத்துவமனைகளும் கொண்டிருக்க வேண்டுமென்பதும் வலியுறுத்தப்பட்டது.

குற்றவியல் வழக்குகளில் சாட்சி சொல்பவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் சட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சார்ந்த சட்டம், சமபால் உறவாளர்கள் மீதான பாரபட்சத்திற்கு எதிரான விதிமுறைகள் உட்பட்ட இன்னபிற 13 தீர்மானங்கள் சட்டவாக்க அரங்கச் செயற்பாடுகளின் ஊடாக, Boal அங்கம் வகித்த நான்காண்டு (1993-1996) காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டன. இவ்வகை அரங்கச் செயற்பாடுகள் மூலம்; நாட்டின் அதிகார மற்றும் நிர்வாக மையத்தில் அடித்தட்டு-விளிம்புநிலை-ஒடுக்கப்படும்-பாரபட்சமாக நடத்தப்படும் மக்கள் எனப் பரந்துபட்ட அளவில் மக்கள் நேரடியாகப் பங்கேற்கின்ற செயல்வெளி உருவாக்கப்பட்டது என்பது முக்கியமானது.

சட்டமன்றத்தில் வாக்காளர்களின் தாக்கம்

சட்டமன்ற அமர்வுகளில் நடைபெறும் செயற்பாடுகளில் வாக்காளர்கள் தாக்கம் செலுத்துவதை Boal முக்கியமாகக் கருதினார். சட்டமன்றத்தின் கிரமமான அமர்வுகளுக்கு முன்னர், மக்கள் கூடும் பொது இடங்களில் ‘The Chamber if the Square’ என அழைக்கப்பட்ட நிகழ்வுகளை ஒழுங்குசெய்தார். முன்மொழியப்பட்ட ஆலோசனைகள்; மீதான விதாதமும் மதிப்பீடும் இத்தகைய நிகழ்வுகளில் முன்னெடுக்கப்பட்டன. ஒரு நாடக ஆற்றுகை வடிவத்தில் சட்டமன்ற அமர்வுகளில் நடைபெறும் செயற்பாடுகளை ஒத்த முறையில், கிட்டத்தட்ட சட்டமன்றத்திற்கு வெளியில், அதே யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது. குறித்த விவகாரம் தொடர்பாக மக்கள் உரையாற்றவும் தமது நிலைப்பாடுகளை, வாதங்களை முன்வைக்கவும், அதற்கு எதிரான வாதங்களை மற்றவர்கள் முன்வைக்கவும் விவாதிக்கவுமான சூழல் இதன்மூலம் ஏற்படுத்தப்பட்டது. முடிவில் குறித்த விவகாரம் வாக்கெடுப்பிற்கு விடப்படும்.  இந்நிகழ்வு எவ்வளவு தூரம் நாடக வடிவத்திற்குரிய உத்திகள், தன்மைகளோடு நடாத்தப்படுகின்றதோ அவ்வளவு தூரம் மக்கள் கூடுதல் ஈடுபாடும் காத்திரமான கருத்துகளும் வெளிவந்ததை அவதானித்தார். இந்தச் செயல்முறையின் ஆழமும் காத்திரத்தன்மையும் பின்வரும் விதிமுறைகளால் உறுதிப்படுத்தப்பட்டன:

-கருத்துகள், முன்மொழிவுகள் முன்கூட்டியே எழுத்துமூலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும். எளிமையாகவும் அதேவேளை தெளிவான முறையில் சொற்செழுமையுடன் எழுதப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் தெளிவான பதில்களை எதிர்பார்க்க முடியும்.

-இந்த நிகழ்வுகளில் சட்ட நிபுணத்துவம் மிக்க செயற்பாட்டாளர்கள் கலந்துகொள்வது அவசியம். முன்வைக்கப்படும் கருத்துகள், முன்மொழிவுகளைச் ‘சட்டமன்ற’ மொழிக்கு மாற்றுவது அவர்களின் பொறுப்பு.

-இத்தகைய நிகழ்வுகளில் Boal நேரடியாகப் பங்குபற்றாதவிடத்து, நிகழ்வு பற்றிய தகவல்கள் – குறிப்பாக அங்கு முன்வைக்கப்பட்ட பார்வைகள், வாதங்கள், வாக்கெடுப்பு தொடர்பான விரிவான அறிக்கை அவரது பிரதிநிதிகளால் அவருக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

Boal முகம்கொடுத்த எதிர்ப்புகளும் அவதூறுகளும்

ஒரு அரசியல்வாதியாக  அவர் தொடர் எதிர்ப்புகளையும் அவதூறுகளையும் சந்திக்க நேர்ந்தது. ஊடகங்கள், அவரது அரசியல் எதிரிகளிடமிருந்து இத்தகைய நெருக்கடிகள் வந்தன. இதனால் காவல்துறை விசாரணைகளுக்கும் வழக்குகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது.

நோர்வேஜிய கல்லூரி ஒன்றின் விரிவுரையாளரும் எழுத்தாளருமான Arne Engelstad இந்நிலை பற்றித் தனது ‘‘Theatre of the Oppressed – Methods and techniques’’ நூலில் பகிர்ந்த சம்பவம் ஒன்றினை நினைவுகூர்வது பொருத்தமானது. Arne Engelstad இலக்கியம்¸ நாடகம்¸ அரங்கவியல்¸ திரைப்படம்¸ மற்றும் ஏனைய கலைப்பாடங்களுக்கான கற்பித்தல் நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். 90-களின் இறுதியிலும் 2000-இன் ஆரம்பத்திலும் ஐரோப்பிய மற்றும் ஸ்ன்டிநேவிய நாடுகளில் Augusto Boal உடன்  இணைந்து பல அரங்கவியல் பயிற்சிப்பட்டறைகளில் செயற்பட்டவர். 2004-இல் Boal-இன் அரங்கவியல் பற்றிய தனது கலாநிதிக் கல்விக்கான ஆய்வினையும் சமர்ப்பித்தவர். 1996-இல் ஒருமுறை, கருத்தமர்வு ஒன்றிற்காக நோர்வேயின் கிறிஸ்தியான்சண்ட் நகரில் ASSITEJ (The International Association of Theatre for Children and Young People) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்தியான்சண்ட்-இல் நாடக விழாவில் கலந்து கொள்வதற்காக அவரை அழைப்பதற்குத் தான் முயற்சி எடுத்தபோது எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி விபரித்துள்ளார்.

நாடக விழாவையொட்டிய ஒரு வாரகாலப் பயிற்சிப் பட்டறைக்காக அழைப்பதற்கான முயற்சி அது. பிரேசிலிலிருந்து அவருக்கான வெளிநாட்டுப் பயண அனுமதி பெறுவது முதலில் சாத்தியமற்றதாகத் தோன்றியதென்று கூறுகிறார் Engelstad . பாடசாலை மண்டபம் ஒன்றினை நாடகச் செயற்பாட்டிற்காகச் சட்டவிரோதமாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் Rio-வை விட்டு வெளியேறக்கூடாது என அப்போது காவல்துறை கட்டளை பிறப்பித்திருந்தது. உண்மையில் குறிப்பிட்ட அந்தப் பாடசாலை மண்டபத்தை Boal ஒருபோதும் பயன்படுத்தவில்லை. அது பொய்க் குற்றச்சாட்டு. நாடக விழா ஏற்பாட்டாளர்களின் பல கடித மற்றும் தொலைபேசி உரையாடல்களுக்குப் பின்னர் பிரேசிலிலிருந்து வெளிநாட்டுப் பயண அனுமதி வழங்கப்பட்டது. இருந்த போதும் அவரின் நோர்வே விஜயத்தின் போதான அனைத்து பத்திரிகைச் செய்திகள், ஊடக நேர்காணல்கள் தொலைநகல் மூலம் பிரேசில் அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்க வேண்டிய நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

நெருக்கடிகளுக்கு மத்தியில் இயக்கம்

இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசியலில் தொடர்ந்து ஈடுபடவே விரும்பினார். அடுத்த தேர்தலில் போட்டியிட்ட போதும் அவர் வெற்றிபெறவில்லை. இருப்பினும் இந்த அரங்கச் செயற்பாட்டு உத்திகள், சட்டவாக்கப் பொறிமுறைகள் தொடர்பான அறிவைப் பரப்புவதில் அவர் தொடர்ந்து இயங்கினார். சட்டவாக்க அரங்கத்தினை பிரேசிலைத் தாண்டி, பல்வேறு நாடுகளிலும் தனது வெளிநாட்டுப் பயணங்களின் போது அறிமுகப்படுத்தினார். பாரிஸ், முஞ்சென், வியன்னா, ரொறொன்ரோ, Wijchen, Bradford, Manchester போன்ற உலக நகரங்களில் சட்டவாக்க அரங்கினை அறிமுகம் செய்து அரங்கப் பட்டறைகளை நடாத்தினார்.

மந்தமான பொருளைச் செயலாற்றலுள்ள பொருளாக மாற்றுவதே ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கின் முதன்மைக் கொள்கை. அரங்க அர்த்தத்தில் பார்வையாளர்களைப் பங்கேற்பாளர்களாக-ஆற்றுகையாளர்களாக மாற்றுதல். அரசியல் அர்த்தத்தில் வாக்காளர்களை சட்ட உருவாக்கிகள் ஆக்குவது. சட்டவாக்க அரங்கம் ஒரு முழுமையான அரங்கச் செயற்பாடாக, நம்பிக்கையை வளர்த்தெடுக்கும் கருவியாகவும் – மாற்றம் நோக்கிய கூட்டுச் சிந்தனையைத் தூண்டுகின்ற அரங்கப்படைப்பு எனும் நிலையிலிருந்து, சட்டவாக்கம் எனும் கூட்டு அடைவினைக் குறிக்கின்றது.

***

ரூபன் சிவராஜா, நார்வேயில் வசிக்கிறார். கவிதைகள் மற்றும் அரசியல் கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வருகிறார். அண்மையில் இவரது முதல் நூல் “அதிகார நலனும் அரசியல் நகர்வும்” நூல் வெளிவந்து கவனம் பெற்றுள்ளது. ஆசிரியர் தொடர்புக்கு – svrooban@gmail.com

ஆனந்த் குமார் கவிதைகள்

0

தட்டான் பாடல்

குழல் விளக்கின் மேல்
தட்டான் வாசிக்கிறது
வெம்மையின் பாடலை.
‘இரவேயில்லை இரவேயில்லை’யென
உறிஞ்சுகிறது
ஒளியின் பாதையை

ஒருமுனை அருந்தி முடிய
வெளிவருகிறது
வெள்ளை பல்லியொன்று

தட்டான் சப்தம் மாற்றி
சுவர் மாற்றியது
புதிய குழல் புதிய பாடல்

அந்தப் பக்கம்
சாமி படத்திற்குள்
நுழைந்த பல்லி
இந்தப் பக்கம்
கடிகாரத்திற்குள்ளிருந்து
எப்படி வந்ததென
தட்டானுக்கு தெரியவேயில்லை.

*

மாபெரும் ருசி

இன்றும் எழுப்பியது
எப்போதும்
என்னை உண்ணும்
அதே பசி

என்னை விட
பெரிய ஒன்றை
விழுங்கும் கனவு

பருகப்பருக
மரத்தின் வாயிடை
ஒழுகியோடும் காற்று

எவ்வளவு உண்டும்
தூரிகை நாவினில்
எச்சிலூறும் வண்ணம்

வாய்மீற எறும்பொன்று
அரவணைத்தேந்தி நிற்கும்
ஒற்றை அரிசி

நிறைந்துவிடாமல்
பசியாற்றும்
மாபெரும் முலை

***


ஆனந்த் குமார் தொடர்புக்கு : ananskumar@gmail.com

கொரோனா தோற்றம்: இயற்கையானதா? மனித உருவாக்கமா? – விவாதங்களும் சர்ச்சைகளும்

0

ரூபன் சிவராஜா

இதுவரை ஒரு சதிக்கோட்பாடாகவும் சர்ச்சையாகவும் திசை திருப்பலாகவும் மறுதலிக்கப்பட்டுவந்த கருத்தியல் மீண்டும் சர்வதேச விவகாரமாகியுள்ளது. இதற்கான முதன்மைக் காரணி அமெரிக்க ஜனாதிபதி புலனாய்வுத்துறையிடம் கோரியுள்ள விசாரணை அறிக்கை. ஆனால் அதனைவிடப் பல்வேறு துணைக்காரணிகளும் உள்ளன.

கொரோனா பெருந்தொற்று உலகமெங்கும் பரவத்தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை உலகம் முழுவதுமாக 3,4 மில்லியன் வரையான மக்கள் அந்தக் கொடும் கிருமிக்குப் பலியாகியுள்ளனர் என்கின்றன உத்தியயோகபூர்வமான பதிவுகள். பதிவுக்கு உட்படாத (Unrecorded) இறப்புகளும் பாரிய எண்ணிக்கையில் உள்ளன. கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் தோன்றியது என்பது உறுதிப்படுத்தப்பட்ட விடயம். ஆனால் அது எப்படித் தோன்றியது என்பது குறித்து விஞ்ஞானபூர்வமாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அதன் தோற்றம் பற்றிய இரண்டு கருதுகோள்கள் ஆரம்பத்தில் நிலவிவந்தன. ஒன்று வுகான் நகரிலுள்ள இறச்சிச் சந்தையிலிருந்து (Wet Market) பரவியது என்பது. மற்றையது செயற்கையாக உருவாக்கப்பட்டது அல்லது மனிதத் தவறினால் உருவானது என்பதாகும்.

ஆயினும் இரண்டாவது கருதுகோள் பல மட்டங்களில் நிராகரிக்கப்பட்டு வந்தது. தொற்றுப்பரம்பலின் தோற்றம் பற்றிய உண்மையைத் திசை திருப்புகின்ற சதிக்கோட்பாடு என்பதான கருத்து மேலோங்கிய நிலையில் ‘மனித உருவாக்கமென்ற’ அக்கருதுகோள் புறமொதுக்கப்பட்டிருந்தது. ஊடகங்களும் அந்தக் கோணத்திலான கருத்துகளைத் தவிர்த்து வந்தன. நோர்வே ஊடகச் சம்பவம் ஒன்றினை உதாரணமாக இங்கு குறிப்பிடலாம்: 2020-ல் ஒருமுறை நோர்வேயின் தேசிய தொலைக்காட்சியின் இணையத் தளத்தில் கொரோனா வைரஸ் மனித உருவாக்கம் என்று நம்பிய ஒரு ஆய்வாளரின் பேட்டி வெளியிடப்பட்டது. அதற்கு எதிரான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதை அடுத்து, அதனைச் சமப்படுத்த இயற்கையான வைரஸ் என்ற கருத்துடைய வேறொரு ஆய்வாளரின் பேட்டி மூலம் முன்னவரின் கருத்துகள் கேள்விக்கு உட்படுத்தப்பட்டன.

ஊடகங்களும் வைரஸ் தோற்றம் பற்றிய கருதுகோள்களும்

Facebook போன்ற உட்பட்ட சமூக ஊடகத்தளங்களும் அவ்வாறான கருத்துடைய பதிவுகள், பகிர்வுகள், கட்டுரைகளை நீக்கி வந்தன. அவற்றை நீக்குவதற்குரிய செயற்கை நுண்ணறிவுப் பொறிமுறை (Artificial intelligence) மற்றும் Algorithm படிமுறைகள் மூலம் தணிக்கை, நீக்க விதிகளை Facebook நடைமுறைப்படுத்துகின்றது. Algorithm என்பது கணினித் தொழில்நுட்ப செயல்முறையில் நிறைவேற்ற வேண்டியவற்றின் வரிசைப்படுத்தல் முறை, கையாளுகையாகும்.

கொரோனா வைரஸ் மனித உருவாக்கமா, இயற்கையான தொற்றா என்ற சர்ச்சைகள் பெருந்தொற்றுத் தொடங்கிய காலத்திலிருந்தே நிலவிவந்தன. இருப்பினும் அண்மைய நாட்களில், குறிப்பாக மே மாத நடுப்பகுதியிலிருந்து இவ்விவகாரம் அதிக கவனக்குவிப்பினைப் பெற்றுள்ளது. அதாவது மனிதத்தவறு தொற்றுக்கான தோற்றமாக இருக்கக்கூடும் என்பதாகும். அந்தக் கருதுகோளின் அடிப்படையில் ஆய்வு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.

இங்கு இன்னுமொரு விவகாரம் பற்றிக் குறிப்பிட வேண்டும். அது Facebook கொண்டுள்ள அதிகாரம் தொடர்பானது. ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் என்பது மனித உருவாக்கம் என்பதைச் சதிக்கோட்பாடாக முன்னிறுத்திப் புறமொதுக்கிய (நீக்கிய) Facebook தற்பொழுது அத்தகைய பதிவுகளை அனுமதிக்கிறது. இந்த அனுமதிப்பிற்கான முதன்மையான காரணி, அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி புலனாய்வுத்துறைக்கு விடுத்த கட்டளையாகும். கொரொனா வைரசின் தோற்றம் தொடர்பான அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜோ பைடன் அமெரிக்க புலனாய்வுத்துறையிடம் கோரியுள்ளார். இதனையடுத்து கொரோனா வைரசின் தோற்றம் மனித உருவாக்கம் என்ற கோணத்திலான பதிவுகள், பகிர்வுகளை Facebook அனுமதிக்கிறது. அது ஒருபுறம் இருக்க, உண்மை எது பொய் எது, சதிக்கோட்பாடு எது என்பவை துரிதமாக மாறிவிடக்கூடிய தகவல் யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். தகவல்களைத் தீர்மானிக்கின்ற அதிகாரத்தினை Facebook தன்னிச்சையாகக் கொண்டுள்ளது என்பது முன்னரும் பலவிடயங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கருத்தியல் அதிகாரம்

முன்னரே சில ஆய்வாளர்கள் மனிதத்தவறு வைரஸ் தோற்றத்திற்கான ஒரு காரணியாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை முன்வைத்துள்ளனர். எனவே இப்பொழுது ஆய்வாளர்கள், விஞ்ஞானிகளின் வலியுறுத்தல்களால் இக்கருத்துகளை Facebook அனுமதிக்கின்றது என்ற முடிவுக்கு வரமுடியாது. மாறாக அமெரிக்க ஜனாதிபதி அந்தக் கோணத்திலும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளமையே தணிக்கைவிதி மாற்றத்திற்குரிய மூலகாரணி. இதில் இரண்டு விடயங்கள் கவனத்திற்குரியன. ஒன்று அமெரிக்காவின் அரசியல் நோக்கம். மற்றையது Facebookன் குவிமையப்பட்ட கருத்தியல் அதிகாரம். எத்தகைய மோசமான கருத்தியல் அதிகாரத்தை அது கொண்டுள்ளது என்பதை இந்த விவகாரம் காட்டுகின்றது.

மக்கள் எதை விவாதிப்பது, எதைத் தவிர்ப்பது, எதை அறிந்து கொள்வது, எதனை அறியாமல் இருப்பது போன்றவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை இந்நச் சமூக ஊடகம் தம்வசப்படுத்தியுள்ளது என்பது சமகாலத் தகவல்யுகத்தின் யதார்த்தமாகியுள்ளது. சமூக ஊடகங்கள் அறிவியல், அறவியல் அடிப்படைகளில் வழிநடத்தப்படுவதிலும் பார்க்க அதிகாரத்தினாலேயே அதிகம் வழிநடத்துகின்றன என்பதுதான் இங்குள்ள சவாலும் ஆபத்துமாகும்.

‘உண்மை ஊரைச் சுற்றி வருவதற்குள் பொய் உலகைச் சுற்றி வந்துவிடும்’ என்பது நாமறிந்த முதுமொழி. இன்றைய உலகில், அதுவும் நெடிப்பொழுதுக்குள் தகவல்கள் பரவக்கூடிய தொழில்நுட்ப வசதிகளால் – எல்லோர் விரல்நுனிகளிலும் சமூக ஊடக வாய்ப்பு இருப்பதால் – தவறான தகவல் பலம்பல், பொய்யான பரப்புரை என்பன இன்றுள்ள மிகப்பெரிய சிக்கல் என்பது வெளிப்படை. ஆனால் தன்னிச்சையாகவும் ஏகத்துவ அதிகாரத்துடனும் Facebook போன்ற நிறுவனங்கள் தகவல்களைக் கட்டுப்படுத்துவதும் தீர்மானிப்பதும் அதற்கான தீர்வாகிவிடாது.

தோற்றம் பற்றிய கருதுகோள்கள்

கொரோனா வைரஸ் முதன்முதலில் எப்படி உருவாகியது என்பது தொடர்பான துல்லியமான தகவல் இதுவரை விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. வெளவாலில் இருந்து வேறொரு மிருகத்திற்குத் தொற்றி, மிருகத்திலிருந்து பின் மனிதனுக்குத் தொற்றியது என்பதே இதுவரையான கணிப்பீடு. அதாவது ‘இயற்கையாகத்’ தொற்றியது என்பதாகும். இயற்கையாகத் தொற்றியது என்பதே அடிப்படையில் தவறான கூற்று. இயற்கைக்கு எதிரான உலகளாவிய மனித மேலாண்மைச் செயற்பாடுகளின் விளைவே பெருந்தொற்றுக்கள். இப்படியிருக்க ‘இயற்கையாக’ அல்லாமல், மனித உருவாக்கம் அல்லது மனிதத்தவறு மூலமாகப் பரவியிருக்கலாம் என்ற சந்தேகங்கள் தான் சமகால விவாதங்களின் மையம். சீனாவின் வுகான் நகரில்தான் அந்நாட்டின் முதன்மை வைரஸ் ஆய்வகம் (Wuhan institute of virology) அமைந்துள்ளது. அங்கு தற்செயலாக நடந்த விபத்து ஒன்றிலிருந்து கொரோனா பரவியிருக்கலாம் என வலுவாகச் சந்தேகிக்கப்படுகின்றது.

SARS-CoV-2 என்பது தற்போதைய கொரோனா பெருந்தொற்று நுண்கிருமியின் மருத்துவ அடையாளப் பெயர். வுகான் வைரஸ் ஆய்வகம் SARS-CoV-2 இற்கு நெருக்கமான வைரசுகளைக் கையாண்டு வந்துள்ளமை அறியப்பட்ட ஒன்றாகக் கூறப்படுகின்றது. அந்த வகையில் ஆய்வுக்காக வைரஸ் வகைமைகள் ‘இயற்கையிலிருந்து’ சேகரிக்கப்பட்டபோது, அல்லது வைரஸ் பரிசோதனை நடைபெற்ற பொழுதில் ஏற்பட்ட விபத்தில் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனப்படுகின்றது. ஆய்வக விபத்துத் தொடர்பான கருதுகோள் வலுப்பெற்றதற்குரிய இன்னுமொரு முக்கிய காரணம், வுகான் ஆய்வகத்தைச் சேர்ந்த மூன்று ஆய்வாளர்கள் நவம்பர் 2019-ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலாகும். இரகசிய ஆவணங்களிலிருந்து இத்தகவல் கசிந்திருந்துள்ளதாக செய்திகள் வெளிவந்திருந்தன. ஆனால் சீனா அதனை முற்றிலும் மறுத்திருந்தது.

அறிவியல் எதிர் அரசியல்

முன்னர் இதைவிட இன்னும் தீவிரமாக இக்கருதுகோள் பேசப்பட்டது. அதாவது சீனா திட்டமிட்டு கொரோனா வைரசினை உருவாக்கிப் பரப்பியுள்ளது என்பதாகப் பரப்பப்பட்டது. ‘சீன வைரஸ்’ என்று விளித்து அதற்குத் தூபமிட்டவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப். இது அமெரிக்க-சீன அதிகார நலன் சார் போட்டி சார்ந்த விவகாரமாக விமர்சிக்கப்பட்டது. வைரசின் தோற்றம் தொடர்பான விவகாரத்தை அமெரிக்கா தொடக்கத்திலிருந்து அரசியலாக்கி வந்திருக்கின்றது என்பது பொதுவான கருத்து. சீனாவைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துகின்ற முனைப்பு அமெரிக்காவிற்கு உள்ளதென்பதை மறுப்பதற்கில்லை. அதேவேளை இந்தக் கருதுகோள் தொடர்பான விவாதங்களின் தீவிரத்தன்மையையும் மறுப்பதற்கில்லை. குறிப்பாக முந்நாள் ஜனாதிபதி ரொனால்ட் டிரம்ப் அத்தகைய அணுகுமுறையினையே அப்பட்டமாக வெளிப்படுத்தியிருந்தார். இந்த அரசியற்படுத்தல் விஞ்ஞானபூர்வமான விடைதேடுதலை ஊனப்படுத்திவிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்தும் வந்துள்ளது. விஞ்ஞானத்தையும் அரசியலையும் வேறுபடுத்திப் பார்க்கின்ற பக்குவத்துடன் நடந்துகொள்ளுமாறு நாடுகளை உலக சுகாதார அமைப்பின் நெருக்கடி முகாமைத்துவத் தலைவர் Michal Ryan கோரியுமிருந்தார். அரசியல் ரீதியாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் சர்ச்சை உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானபூர்வமான செயற்பாடுகளைச் சவாலானாதாக்குகின்றது எனவும் அவர் மேலும் சுட்டியிருந்தார்.

‘மனித உருவாக்க’ கருதுகோள் வலுப்பெற்ற பின்னணிகள்

இதுவரை ஒரு சதிக்கோட்பாடாகவும் சர்ச்சையாகவும் திசைதிருப்பலாகவும்; மறுதலிக்கப்பட்டுவந்த கருத்தியல் மீண்டும் சர்வதேச விவகாரமாகியுள்தற்கான முதன்மைக் காரணி அமெரிக்க ஜனாதிபதி புலனாய்வுத்துறையிடம் கோரியுள்ள விசாரணை அறிக்கை. ஆனால் அதனைவிடப் பல்வேறு துணைக்காரணிகளும் உள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி அறிக்கை கோரிய சமகாலத்தில், 18 விஞ்ஞானிகள் கூட்டாக ஒரு கோரிக்கையை வெளியிட்டிருந்தனர். வுகான் ஆய்வக விபத்திலிருந்து முதலில் கொரோனா தொற்றியிருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர ஆய்வுகள் நடாத்தப்படவேண்டுமென்ற அவர்களின் பரிந்துரை அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘Science Magazine – அறிவியல் இதழில் மே நடுப்பகுதியில் வெளிவந்தது.

Sceience இதழில் வெளிவந்த விஞ்ஞானிகளின் கூட்டு வேண்டுகோள், அமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கை மீது ஒருவித அறிவியல் வெளிச்சம் பாய்ச்சுவதற்கு உதவியுள்ளது. இயற்கையான தொற்று என்ற கருதுகோளுக்கு நிகராக ஆய்வக விபத்தின் சாத்தியக்கூறுகள் தொடர்பான ஆய்வு, விசாரணைகளும் நடாத்தப்படவேண்டும் என்கிறது அவர்களின் பரிந்துரை. கொரோனா வைரஸ் எப்படித் தோன்றியது என்பதை உலகிற்கு அறிவிப்பதானது, எதிர்காலத்தில் தொற்று அபாயங்களைக் கையாள்வதற்கும் உலகளாவிய உத்திகளைக் கண்டடைவதற்கும், சுகாதாரக் கூட்டுப் பாதுகாப்புப் பொறிமுறைகளை மேம்படுத்தவும் அவசியமானது எனவும் அந்தக்கூட்டுக் கோரிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ‘போதுமான தகவல்கள் கண்டடையப்படும் வரை இருவகையான கருதுகோள்களும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்’ எனவும் விஞ்ஞானிகள் குழு வலியுறுத்தியுள்ளது. வெளிப்படைத் தன்மை, தரவுபூர்வ அடிப்படைகள், பரந்துபட்ட நிபுணத்துவ உள்ளீடு, சுயாதீன மேற்பார்வை ஆகியவற்றை உள்ளடக்கிய நேர்த்தியான ஆய்வு வலியுறுததப்பட்டுவருகின்றது. அத்தோடு அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, நோர்வே, டென்மார்க், இஸ்ரேல், ஜப்பான் உட்பட்ட 14 நாடுகள் ஆய்வக விபத்தின் சாத்தியக்கூறுகளை மையப்படுத்திய விசாரணைகளை வலியுறுத்தி, உலக சுகாதார அமைப்பிற்குக் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

‘DRASTIC Team – துப்பறியும் தன்னார்வக் குழு’

இந்தக் கருதுகோள் தொடர்பான விவாதங்கள் மற்றும் அது சார்ந்த ஆய்வு விசாரணைகளுக்கான அழுத்தத்திற்கு ‘DRASTIC Team’ என்ற ஒரு சுயாதீனக்குழுவும் முக்கிய காரணம். DRASTIC Team (Decentralized radical autonomous search team investigating Covid-19) எனும் இந்தக் குழு ஆய்வக விபத்துச் சாத்தியக்கூறுகள் குறித்த கவனத்தைப் பெறவைத்துள்ளது. இது 2020-இல் Twitter சமூக ஊடகத்தளத்தில் உருவாக்கப்பட்ட ஒரு ‘துப்பறியும் தன்னார்வக் குழு’ எனத் தம்மை அழைத்துக்கொள்கிறது. தங்களது உண்மையான பெயர்களில் பங்கேற்கும் ஒரு சில விஞ்ஞானிகளைத் தவிர இதிலுள்ள பெரும்பாலானவர்கள் இரகசியக் குறியீட்டுப் பெயர்களுடளேயே இயங்கிவருகின்றனர். கொரோனா வைரசின் தோற்றத்தை ஆராயும் பணியை இக்குழு நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. இக்குழுவினால் முன்வைக்கப்படும் தகவல்களும் வாதங்களும், சில வைரலோஜிஸ்டுகள், நுண்ணுயிரியலாளர்கள் மற்றும் அறிவியல் நிபுணர்புகளால் ஆராயப்பட்டன.

தவிர ஆய்வக விபத்துகளின் சாத்தியக்கூறுகள் குறித்து விஞ்ஞானப் பூர்வமாக விவாதிக்கப்பட்ட கட்டுரைகள் முதலில் கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் சில அறிவியல் இதழ்களில் வெளிவந்துள்ளன. ஆனால் 18 விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு, மே 13 ‘Science’ இதழில் வெளிவந்த கட்டுரையின் பின்னரே, ஆய்வக விபத்துக் கருதுகோள் பரந்த கவனத்தினைப் பெற்றிருக்கின்றது.

WHO அறிக்கைகளின் போதாமைகள்

இதுவரை அறியப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வுகான் ஆய்வகத்திலிருந்து வைரஸ் தோன்றிப் பரவியதற்கான தகவல், ஆதாரங்கள் குறைவு எனப்படுகின்றது. இருந்தும் பல விடயங்கள் விஞ்ஞான ஆய்வறிவிற்கு அப்பாற்பட்டதாக, அறியப்படாதவைகளாக உள்ளன. 2020 நவம்பர் சீன-WHO கூட்டு முதற்கட்ட தகவல், தரவுகளை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் எவ்விதமான திட்டவட்டமான கண்டடைவுகளும் வெளிவரவில்லை. 313 பக்கங்களைக் கொண்ட அவ்வறிக்கையில் ஆய்வக விபத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து வெறும் நான்கு பக்கங்களில் மட்டுமே பிரஸ்தாபிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆய்வக விபத்துக் கருதுகோளை ஆய்வுசெய்வதற்கு போதுமான தகவல், தலவுகள் இல்லை எனவும், அதற்கு மேலும் கூடுதலான தரவுகள் அவசியப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலாளர் Tedros Adhanom Ghebreyesus தெரிவித்திருந்தார்.

2021 மார்ச் 30-ஆம் திகதி கொரோனா தொற்றின் தோற்றம் தொடர்பான பிறிதொரு அறிக்கையினையும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருந்தது. சுகாதார அமைப்பின் குழுவொன்று வுகான் ஆய்வகத்திற்கு விஜயம் செய்து சில விசாரணைகளை மேற்கொண்டு அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் ஆய்வக விபத்து குறித்த கருதுகோள் அவ்வறிக்கையிலும் போதிய முக்கியத்தும் பெற்றிருக்கவில்லை. அதேவேளை விசாரணைக்குழு சீனாவிடமிருந்து தமது விசாரணை ஆய்வுகளுக்குரிய முழுமையான தகவல்களைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளமையையும் உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. இதுவும் தொடர்ச்சியாகப் பல மட்டங்களிலும் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுத்தான். அதாவது சீன வெளிப்படைத்தன்மையுடன் கொரோனா தோற்றம், தொற்றுப் பரம்பல் பற்றிய தகவல்களை வழங்க மறுக்கின்றது என்பது. இன்னொரு முறையில் சொல்வதானால் தகவல்களை மறைக்கின்றது என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

விசாரணைகளும் சீனாவின் ஒத்துழையாமையும்

2002-இல், SARS சார்ஸ் தொற்று ஏற்பட்டபோதும் உரிய தகவல்களை வழங்க மறுத்ததாகச் சீனா மீது உலக சுகாதார அமைப்பின் அன்றைய தலைவர் Gro Harlem Brundtland குற்றம் சாட்டியிருந்தார். (Brundtland ஒரு நோர்வேஜியர். நோர்வே அரசியலில் 20 ஆண்டுகளுக்கு மேலாகச் செல்வாக்குச் செலுத்திய முக்கிய தலைவர். நோர்வேயின் முதலாவது பெண் தலைமை அமைச்சர். 1981 முதல் 1996 வரை மூன்று முறை தலைமை அமைச்சராகப் பதவிவகித்தவர். தொழிற்கட்சியின் தலைவராகவும் பொறுப்பில் இருந்தவர்.) SARS அனுபவத்தின் பின்னணியில் உலக சுகாதார அமைப்பு உலககளாவிய பெருந்தொற்றுக்களைக் கையாள்வது தொடர்பாக முற்றிலும் புதிய விதிகளை வகுத்திருந்தது.

உண்மையில் வுகான் ஆய்வகத்தில் விபத்து நடந்திருந்தால் அதனை வெளிப்படைத் தன்மையுடன் சீனா ஒப்புக்கொள்வது, மறைப்பதைவிட மேலானது. அது உலகின் மிகப்பெரும் பொருளாதார சக்தியான சீனாவிற்கும் நன்மையானது என்ற கருத்துகளையும் அவதானிக்க முடிகிறது. சீனா இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரித்துள்ளது. அரசியல் நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள், சர்ச்சைகள் என கூறிவருகின்றது.

ஆய்வக விபத்துச் சாத்தியக்கூறுகளின் அடிப்படையிலான விசாரணை, ஆய்வுகளுக்கு சீனாவின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. அந்த ஒத்துழைப்பு என்பது போதிய தகவல், தரவுகளை வழங்குதலைக் குறிக்கின்றது. ஆய்வக குறிப்பேடுகளிலிருந்து, வைரஸ் ஆய்வுத்திட்டங்கள், அவற்றின் பெறுபேறுகள் உட்பட்ட பல்வேறு விஞ்ஞானபூர்வமான தகவல்கள், தரவுகளை ஒளிவுமறைவின்றி சீனா முன்வைக்க வேண்டும். ஆனால் அதற்குத் தயாராக இருக்குமா என்பது கேள்விக்குறி. இதுபோன்ற விடயங்களில் சீனா வெளிப்படைத் தன்மையுடன் இயங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் புதிதல்ல.

கற்றுக்கொள்ளக் கூடிய பாடமும் மாற்றங்களின் அவசியமும்

இனி முன்னெடுக்கப்படவுள்ள ஆய்வுகள் இயற்கையான தொற்று, ஆய்வக விபத்து என்ற ஏதோவொரு முடிவை வழங்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எந்த முடிவையும் தராமற்கூட போகலாம். இந்த இரு கருதுகோள்களும் தொடர்ந்தும் சர்ச்சைக்குரியதாகக்கூட தொடரக்கூடும். கொரோனா தொற்றின் மூலகாரணி இயற்கையானதோ இல்லையோ என்பது ஒருபுறமிருக்க இயற்கைக்கு எதிரான மனித மேலாண்மையின்; விளைவுகள், தீவிர வேகத்தைக் கொண்டுள்ள தொழில்மயமாக்கல், உற்பத்தி முறைமைகள் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. அத்தோடு பெருந்தொற்று வைரசுகளைச் சேகரிப்பது மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்துவதில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்புப் பொறிமுறைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்துகளும் சமகால விவாதங்களில் முன்வைக்கப்படுகின்றன.

***

ரூபன் சிவராஜா

நார்வேயில் வசிக்கிறார். கவிதைகள் மற்றும் அரசியல் கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வருகிறார். அண்மையில் இவரது முதல் நூல் “அதிகார நலனும் அரசியல் நகர்வும்” நூல் வெளிவந்து கவனம் பெற்றுள்ளது. ஆசிரியர் தொடர்புக்கு – svrooban@gmail.com

‘பிடி’ தளர்ந்தும் தளராமலும்

0

உலகைச் சூழ்ந்த கோவிட் பிடியின் இருண்மையிலிருந்து சில நாட்களாய் வேறு ஒரு சம்பவத்தை உலகமே கவனித்தது. அதுவும் சீனா தான், 16 யானைகள் தான் வாழும் சூழலில் (வனப்பகுதி) இருந்து இடம்பெயர ஆரம்பித்து சுமார் 15 மாதங்களாகப் பயணித்து வருகிறது. வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நாம், நம்மைச் சுற்றியிருக்கும் பட்சிகளையே புதிதாகப் பார்ப்பது போல உலகம் முழுக்க இந்த யானைக் கூட்டத்தை ரசித்து வருகிறது…

செய்திகளைக் கடந்த உணர்வு…

இந்த இதழில் எல்லா முகப்புப் படங்களோடும் யானையின் படத்தை பகிர்கிறோம். நம் கவனத்தை திசை திருப்பும் நாளொரு பிரச்சனைகளுக்கு மத்தியில் அது தன் வனம் திரும்பும் என்று நம்பிக்கொண்டிருக்கிற உலகோடு நாமும்….

எலிகளின் அவஸ்தை

1

சித்துராஜ் பொன்ராஜ்

தேவராஜின் கனவில் சமீபக் காலமாக எலிகளே வருகின்றன. எலிகள் என்றால் அறிவியல் சோதனைக் கூடத்துப் பிராணிகளாகவோ வீட்டில் செல்லப் பிராணிகளாகவோ இருக்கக்கூடிய வெள்ளை நிற உடலும், நரம்புகள் அத்தனையும் தெரிய தலையின் இரண்டு பக்கமும் விரித்து வைத்த சின்னக் கைவிசிறிகளைப் போன்ற காதுகளும், இரண்டு ரத்தினத் துகள்களைப்போல் சிவப்புக் கண்களையும் உடைய வெளிச்சம் மிகுந்த வெள்ளெலிகள் அல்ல. தேவராஜின் கனவில் வருபவை கூர்மையான மூக்கும், இரவு நேரங்களில் வெறிச்சோடிக் கிடக்கும் நகரத்துக் கட்டடங்களுக்கும் குப்பைத் தோம்புகளுக்கும் ஓரமாய்ப் பரவிக் கிடக்கும் இரவைப் போன்ற நீலச்சாம்பல் நிறமும், தடித்துப் பெருத்த இடுப்புகளும், சகதியிலும் சாக்கடையிலும் தோய்ந்து தரையில் எந்நேரமும் நெளிந்து கொண்டே இருக்கும் நீண்ட வால்களையும் கொண்ட தெருப்பெருச்சாளிகள். கனவின் ஏதோ ஒரு மூலையிலிருந்து விழும் மஞ்சள் வெளிச்சம் பட்டுத் தெறிக்கும் தீட்சண்யமான கண்களோடு பெருச்சாளிகள் சாக்கடைகளிலிருந்தும் தண்ணீர் மின்சாரம் ரயில்கள் போகப் போடப்பட்டிருக்கும் நிலவறைச் சுரங்கங்களிலிருந்தும் தலைமுறை தலைமுறையாக ஏகோபித்த ஏதோ ஒரு பெருங்கனவைக் கண்டுகொண்டிருக்கும் கட்டிடக் கட்டுமானச் சாரங்களின் கண்ணுக்குத் தெரியாத இடுக்குகளிலிருந்தும் பொங்கிப் பெருகும் கறுப்புப் பெருநதியாய், சாரை சாரையாய்ப் பெருச்சாளிகள் தேவராஜைக் கடந்து போகின்றன. அவற்றின் கண்களில் தெரியும் மனுஷத்தனமான அறிதலும், சிறு கேலியும், எங்கோ ஓரித்திற்கு அவசரமாய்ப் போவதைப்போல் கடந்துபோகும் லட்சோப லட்சம் பெருச்சாளிகளின் சுயத்தை அழித்த கட்டுக்கோப்பும், பேரமைதியும் மெல்ல மெல்ல தேவராஜின் முதுகுத்தண்டுக்குள் பயத்தை ஏற்றுகின்றன. தேவராஜ் தன்னைக் கடந்துபோகும் பெருச்சாளிகளில் தன்னையும், தன்னில் அந்த பெருச்சாளிகளிலும் காண ஆரம்பிக்கிறான். மெல்லிய பூப்போன்ற பெருச்சாளி பாதங்கள் அவன் உடம்பெங்கும் பெருநதியின் தண்ணீராய்ப் பட்டுக் கடக்கின்றன. நகரத்தின் கட்டடங்களை, எரியும் தெருவிளக்குகளை, சாலையோரக் கடைகளின் பிரம்மாண்ட கண்ணாடி முகப்புகளை, குப்பைத் தொட்டிகளை, சாலைகளை எல்லாம் கரைத்துக் கொண்டுபோகும் அந்த மகா கம்பீரமான நதியின் கருஞ்சாம்பல் சோம்பல் முறிப்பில் அவனும் கரைந்து கொண்டு போவதற்கு ஒரு கணத்திற்கு முன்னால் தேவராஜின் கனவு கலைகிறது. அவன் தூக்கத்தைவிட்டு எழுகிறான். உடம்பு வியர்வையில் நனைந்திருக்கிறது. அவனுக்கு அருகில் மெல்லிய நைட்டியில் தடித்த இடுப்போடு அவன் மனைவி ஒருக்களித்துப் படுத்திருக்கிறாள்.

இது இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்தது

தேவராஜ் மிகத் தாமதமாக, தனது முப்பத்தெட்டாவது வயதில் திருமணம் செய்து கொண்டபோது அவன் காதோரமாய் நரைக்க ஆரம்பித்திருந்தது. தலைமயிரின் முன்புறமாய் நெற்றியின் இரண்டு பக்கமும் ஆட்டுக்கொம்பின் வடிவத்தில் சொட்டை விழ ஆரம்பித்திருந்தது. தேவராஜ் ஒவ்வொரு நாளும் பேக்டரிக்குப் புறப்படுவதற்கு முன்னால் மிகக்கவனமாகத் தலையின் முன்புறத்திலிருந்த தலைமயிரை நெற்றிக்குமேல் சீவிவிட்டுக் கொள்வான். ஆனால் வெட்ட வெட்ட வளரும் காதோரத்து நரை மயிரையும், கொஞ்சமாய்த் தளர்ந்து சிறுமுலைகளாய்த் தொங்கத் தொடங்கியிருந்த மார்பையும், எத்தனைதான் விலையுயர்ந்த பேண்ட்டை வாங்கி மாட்டிக் கொண்டாலும் மார்பின் அதே அகலத்துக்கு விரிந்து இடுப்புவாருக்கு இரண்டு பக்கமும் தளும்பி நிற்கும் வயிற்றையும், பெரிய பிருஷ்டத்தையும், எல்லா நேரமும் உடம்பு முழுக்க எண்ணெய் தேய்த்து விட்டது போன்ற கறுப்புநிறக் குள்ள உருவத்தையும் என்ன செய்து சமாளிப்பது என்று தேவராஜுக்குத் தெரியவில்லை. பள்ளிக்கூடத்திலும், பல்கலைக் கழகத்திலும் அவனுடன் படித்த பெண்களில் பெரும்பாலானாவர்களுக்குச் சமீபத்தில் திருமணம் முடிந்திருந்தது. அவர்களில் பலர் முதல் குழந்தையைச் சமீபத்தில் பெற்றிருந்தார்கள். அல்லது முதல் குழந்தையைப் பெறும் நிலையிலிருந்தார்கள். பழைய பள்ளிக்கூட நண்பனின் தந்திரம் மிகுந்த பேச்சுக்குச் செவி சாய்ப்பதைவிட சமீபத்தில் திருமணமான பெண்களுக்கும் சமீபத்தில் முதல் குழந்தைகளைப் பெற்றுக் கொண்ட பெண்களுக்கும் வேறு கேளிக்கைகள் இருந்தன. தேவராஜ் நினைப்பது எல்லாம் குழந்தைகளுக்கு பன்னிரண்டு பதின்மூன்று வயது வந்த பின்னால்தான் சாத்தியமாகும் என்று பேக்டரி தோழர்கள் கண்சிமிட்டிப் பேசினார்கள். முப்பத்தெட்டும் பன்னிரண்டும் ஐம்பது. தேவராஜுக்கு நம்பிக்கை வரவில்லை. கடைகளில் விற்கும் ஆடைகளில் அவனுக்குப் பாந்தமாய் இருக்கக் கூடிய ஆடைகளின் பட்டியலும் குறுகிக்கொண்டே வந்தது. பிறஇனப் பெண்களுக்கும் தான் கவர்ச்சியானவனாகத் தோன்ற வேண்டும் என்பதற்காகத் தேவராஜ் தன் மீசையையும், கைகளிலிருந்த ரோமத்தையும் மழித்துக் கொண்டான். தேவராஜுக்குத் தீவின் மேற்குப் பகுதியிலிருந்த பன்னாட்டுத் தொழிற்சாலை ஒன்றில் தயாரிப்புக்குத் தேவையான கச்சாப் பொருள்களின் வரத்தும், தளவாடங்களின் சங்கிலியும் அறுந்துவிடாமல் பார்த்துக் கொள்ளும் பகுதியின் மேற்பார்வையாளர் வேலை. நல்ல சம்பளம். ஆனால் தொண்ணூற்றேழு சதவிகிதம் அங்கே வேலை பார்த்தவர்கள் யாவரும் ஆண்கள். தேவராஜ் தொழிற்சாலைச் சீருடைச் சட்டையின் கையை இழுத்துவிட்டுக் கொள்ளும்போது மழிக்கப்பட்ட அவனது கையின் மேல்புறத்தின் எப்போதும் ஒருவகையான எரிச்சலும் குறுகுறுப்பும் இருந்து கொண்டே இருந்தது.

ஆண்கள் மட்டுமே நிறைந்திருந்த தொழிற்சாலை என்றாலும் தேவராஜுக்குப் பெண்களின் சகவாசம் கிடைக்காமல் இல்லை. அலுவலகத் தோழர்களின் அறிமுகத்தால் தேவராஜுக்கு வார இறுதிகளில் ஆர்ச்சர்ட் டவர்ஸில் வேலை பார்த்துவந்த வாடகைப் பெண்களின் பரிச்சயம் கிடைத்தது. மதுபான விடுதிகளும், மசாஜ் நிலையங்களும் நிறைந்த கட்டடம். அங்குள்ள பெண்கள் உயரமும் குட்டையுமாய் மாம்பழத் தோல்கள் எடுக்கக் கூடிய பல்வேறு நிறங்களில் – ஜொலிக்கும் பொன்னிறத்திலிருந்து பழுப்பேறிய மட்ட மஞ்சள் நிறம்வரை – இருந்தார்கள். பிலிப்பைன்ஸ்காரியின் ஸ்பானிய உச்சரிப்புக் கலந்த அமெரிக்க ஆங்கிலத்திலிருந்து, ஆங்கிலத்தில் தென்சீனக் கூவல்களோடு தட்டுத் தடுமாறி பேசப்படும் சில வார்த்தைகளும் மசாஜ் நிலையத்தின் அரையிருட்டில் முஷ்டியை முறுக்கித் திருப்பி முன்னும் பின்னும் ஆட்டிக்காட்டும் சைகைவரை அங்கு மொழிகளாய்ப் புழங்கி வந்தன. காமம் என்பது பெரும் வியாபாரம். தரைத்தளத்திலிருந்து அந்தக் கட்டடத்தின் முதல் நான்கு மாடிகள் பல விற்பனைப் பொருட்களும், பல மொழிகளும் புழங்கும் சந்தையாக இருந்தன. தந்திரசாலிகளான வியாபாரிகள் விபச்சாரத்துக்கு எதிரான சட்டங்களில் மாட்டாமலிருக்க மதுபானங்களோடும் உடல் கனத்தைப் போக்கும் சிகிச்சைகளோடும் பொட்டலங்களாகக் கட்டி விலையேற்றி விற்றுவந்தார்கள். வாழ்க்கையின் தொடக்கம் முதற்கொண்டே பெற்றோர்களின் விருப்பத்தின் பேரில் ஆண்கள் பள்ளியில் மட்டுமே படித்தும், அதன்பின் அரசாங்கத்தின் ஆண்கள் மட்டுமே அதிகமாகக் காணக் கிடைக்கும் ராணுவ முகாம்களில் இரண்டு வருடம் தேசிய சேவை முடித்தும், பின்பு தளவாட மேலாண்மை என்ற படிப்புத் தந்த சாபத்தால் மிகக்குறைந்த பெண்களே கற்கும் தளவாட மேலாண்மை கற்று ஆண்களிடையே வேலை பார்த்த தேவராஜ் பல வண்ணங்கள் நிறைந்த இந்த வியாபாரச் சமுத்திரத்தில் தலையில் முத்துச்சரங்கள் கோர்த்த விலையுயர்ந்த பட்டுத் தலைப்பாகை கட்டி, உடம்பில் கை வைக்காத உயர்ரக வெல்வெட் சட்டை மாட்டி, வெள்ளை நிற கோடுகள் போட்ட தொளதொளப்பான கால்சட்டையும் கூரான முனையுடைய காலணிகளை மாட்டிச் சிந்துபாத் என்ற பெயருடைய பெரும் வியாபாரியாக முரட்டுப் பாய்மரக் கப்பல் ஒன்றில் பயணம் போனான். அவன் முன்னால் முத்துக்களும், வைரங்களும், கோமேதகங்களும், மாணிக்கங்களும், செம்பவளங்களும் குவித்து வைத்திருக்கும் பெயரிடப்படாத பல்வேறு தீவுகள் திறந்து கிடந்தன. யாருமே கால் வைக்காத வெள்ளை வெளேரென்ற நீண்ட கடற்கரைகளில் பொற்காசுக் குவியல்கள் வசீகரமாய்ச் சிரித்தன.

ஆனால் பெரும் லாபம் தேடிப் பாய்மரக் கப்பலில் பயணம்போன சிந்துபாத் என்ற அந்த பெரும் வியாபாரியின் கண்களில் பேரழகு வாய்ந்த தீவுகளும், விலை மதிக்கமுடியாத பொக்கிஷங்களும் மட்டும் தென்படவில்லை. அவன் உடலைக் கூர்மையான நகங்களால் கிழித்து, வளைந்த அலகினால் குதறித் தின்னக்கூடிய ராட்சச பருந்துகளும், அவனையும் அவனது முரட்டுக் கப்பலையும் வாய் பிளந்து விழுங்கிவிடக் கூடிய தீப்போல் எரியும் பிரம்மாண்டமான பச்சை நிற உடலையுடைய கடல்நாகங்களும் இருந்தன. தேவராஜுக்கு அறிமுகமான வாடகைப் பெண்கள் எத்தனை இக்கட்டில் இருந்தாலும் வாடகை நேரம் முடிவதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்னால் கவனமாகக் கடிகாரத்தைப் பார்த்துத் தேவராஜை சீக்கிரம் முடித்துக்கொள்ள அறிவுறுத்துவார்கள். தங்களோடு வர தேவராஜ் சம்மதிப்பதற்கு முன்னால் அவன் தோள்களையும் மார்பையும் கைகளால் தேய்த்து அவன்மீது சாய்ந்து கொள்ளும் அந்தப் பெண்களின் புன்னகை வாடகை நேரம் குறைய குறைய பிரகாசம் மங்கி இறுக்கமான முகலட்சணமாய் சுருங்கும். ஒருமுறை தூக்கத்தின்போது பாதி மூடி இருந்த கண்களைத் திறந்தபோது அவன் வயிற்றின்மேல் அமர்ந்து குழறிய குரலில் காதல் பேச்சுக்கள் பேசிக் கொண்டிருந்த பெண் மிகுந்த அலுப்பும் சோர்வும் நிறைந்த முகத்தோடு கையிலிருந்த கைத்தொலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தான்.

மயிர் மழித்த கையின்மீது சட்டை உரசும்போது ஏற்படும் எரிச்சலும் குறுகுறுப்பும் அவன் உடம்பு முழுக்க அப்போது ஏற்பட்டது. வாடகைக்காக அல்லாமல் நிரந்தரமாய்த் தனக்கே சொந்தமான பெண்ணுக்காக அப்போது மீண்டும் தேவராஜ் ஏங்க ஆரம்பித்தான்.

இரவின் கேளிக்கைகள் முடிந்து ஆர்ச்சர்ட் டவர்ஸின் ஓரமாய்த் தொத்திக் கொண்டிருந்த டீக்கடை ஒன்றில் அமர்ந்திருந்த நேரத்தில் அவனுடைய தொழிற்சாலை தோழர்கள் நீ ஏன் ஒரு நல்ல இந்தியப் பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று கேட்டார்கள். மதுவும் காமமும் கண்களில் பொங்க அவர்களிடையே அமர்ந்திருந்த தேவராஜ் தான் கொண்டாட்டமானவன் என்றும் எதிலும் கட்டுப்பாடுகளை விதிக்கும் இந்தியப் பெண்கள் அவனுக்கு ஒத்துவர மாட்டார்கள் என்றும் சொன்னான். தேவராஜின் வார்த்தைகளில் இதுவரைக்கும் எந்த இந்தியப் பெண்ணையும் அவனால் கவர முடியாதது பீரின் மெல்லிய கசப்பாய் ஒட்டியிருந்தது. அதே சமயம் கைக்குக் கிடைக்கும் ஏதேனும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் அவளும் அவனைப் போலவே கறுப்பும் குட்டையுமாக இருந்து தொழிற்சாலை நண்பர்களுக்கு அவளை அறிமுகப்படுத்தும்போது அவமானப்பட வேண்டுமே என்ற அச்சம் நள்ளிரவுக்குப் பிந்திய இரவில் ஜெகஜோதியாய் எரிந்து கொண்டிருந்த டீக்கடை விளக்குகளின் அடியில் குவிந்திருக்கும் நிழல்களாக அவன் முகத்தில் ஏறிக்கொண்டது.

இதற்கும் அவனுடைய நண்பர்களே உதவியாக வந்தார்கள். உயர்ரக உணவகங்களில் நீட்டப்படும் பளபளப்பான உணவுப்பட்டியல்களைப் போல் இணையத்தில் பளபளப்பான புகைப்படங்களோடு திருமண வயதில் பெண்களின் திருமணப் பட்டியல். இரவில் தன் படுக்கையில் சாய்ந்து கொண்டு தேவராஜன் சுட்டுவிரலால் கைத்தொலைபேசித் திரையை வலது பக்கமாகவும் இடது பக்கமாகவும் நகர்த்தி இந்தப் பெண் வேண்டாம் என்றும் இந்தப் பெண் வேண்டும் என்றும் தெரிவித்தபடி படுத்திருப்பான். பட்டியலில் இருந்தவர்கள் எல்லோரும் தென்சீனக் கடல் பரப்பிலிருந்த நாடுகளிலிருந்து வந்த பெண்கள். பெரும்பாலும் தேவராஜின் வயதை ஒப்பிடும்போது பதினெட்டு முதல் இருபது வயதுவரை இளையவர்களாக இருந்தார்கள். பட்டியலிலிருந்து எட்டுப் பெண்களைத் தேர்ந்தெடுத்ததில் மூன்று பெண்கள் இணையச் சந்திப்புக்குச் சம்மதித்தார்கள். ஒருத்தி படிந்து வருவதைப்போல் தோன்றினாள். தேவராஜுக்கு அந்தப் பெண்களிடம் கேட்க நிறைய கேள்விகள் இருந்தன. பெண்கள் அனைவரும் தேவராஜிடம் சம்பளம் எவ்வளவு என்றும், சொந்தமாக வீடு இருக்கிறதா என்றும் உனக்குச் சிங்கப்பூர்க் குடியுரிமை இருக்கிறதா என்றும் மூன்று கேள்விகளைத்தான் கேட்டார்கள். விருப்பமான பெண்களைத் தேர்ந்தெடுத்த பிறகும் தேவராஜ் ஒவ்வொரு இரவும் கைத்தொலைபேசித் திரையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பெண்களின் புகைப்படங்களில் கண்களை ஓட்டியபடி சாய்ந்திருந்தான். விரல் அசைத்து அசைத்து இந்தப் பெண் வேண்டும், இந்தப் பெண் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல எப்போதோ எங்கோ இழந்து போன அவனுடைய ஆண்மையும் அதிகாரமும் அவனுக்குத் திரும்பக் கிடைத்து விட்டதாகவே அவனுக்குத் தோன்றியது.

கடைசியாக வியட்நாம் போய் இறங்கியபோது, அவர் தேர்ந்தெடுத்திருந்த பெண் பொன்னிறத்தில் சுடர்போல் இருந்தாள். அவனைவிட சற்று குள்ளம். செதுக்கி வைத்ததுபோல் அங்க அமைப்பும் முகலட்சணமும் அவளுக்கு இருந்தன. குளிர்காலத்தில் மெல்ல அசையும் மரக்கிளையில் காற்றில் சிறகுகள் எழும்ப அமர்ந்திருக்கும் சின்னஞ்சிறு குருவி ஒன்றின் நடுக்கம் அவளிடம் எப்போதும் இருந்து கொண்டிருந்தது. பழைய சைகோன் நகரத்தின் புறநகர்ப்பகுதியில் இருந்த அவளது கான்கிரீட் வீட்டிற்கு ஒரு அதிகாலையில் தேவராஜை அழைத்துக் கொண்டு போனபோது வீட்டிற்கு வெளியே போடப்பட்டிருந்த மரபெஞ்சில் அமர்ந்திருந்த சாம்பல் நிறக் கண்களையுடைய அவள் அப்பன் தனக்கு முன்னாலிருந்த குவார்ட்டர் பாட்டல் நாட்டுச் சாராயத்தைக் கிளாஸில் ஊற்றிக் குடித்துக் கொண்டிருந்தான். அவன் தேவராஜைக் கண்டுகொள்ளவில்லை. சாயம்போன சட்டையையும் இடுப்பில் லுங்கியையும் கட்டியிருந்த சுருட்டைமுடி தடிச்சி ஒரு நிமிடம் வரவேற்பறைக்குள் வந்து சோபாவில் அமர்ந்திருந்த தேவராஜை முறைத்துவிட்டுப் போனாள். வெளியே வெகுநேரமாய் இற்றுவிழக் காத்திருக்கும் மோட்டார் சைக்கிளைப் பழையத் துணியால் துடைத்துக் கொண்டிருந்த அவள் அண்ணன் மேலெல்லாம் எண்ணெய்க் கறை படிந்த டி-சட்டையோடு வீட்டுக்குள் வந்து தடிச்சியிடம் பணம் கேட்டு அதை அவள் தராததால் அவளைக் கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டுப் போனான். இத்தனைக்கு நடுவிலும் அவனுக்கு தேத்தண்ணீர் பரிமாறிய அந்தப் பெண்ணின் அமைதியான குணம் தேவராஜுக்குப் பிடித்திருந்தது. அவர்கள் இருவருடைய திருமண வரவேற்புக்கு வரும் தொழிற்சாலை நண்பர்கள் அவளுடைய பொன்னிறத்தையும் செதுக்கி வைத்தது போன்ற லட்சணங்களையும் வாய் பிளந்து பார்ப்பதைத் தேவராஜ் கற்பனை செய்து கொண்டான். இதற்கெல்லாம் மேலாக அவன் உருவத்தைத் தாண்டியும் அவன் தனது மணிபர்ஸை எடுத்து நோட்டுக்களை எண்ணும்போதெல்லாம் அவள் கண்ணில் தெரியும் பிரகாசமும் ஆச்சரியம் கலந்த மரியாதையும் தேவராஜுக்கு மிக உவப்பானதாக இருந்தது. மேலும் அதிகம் ஆங்கிலம் பேசாத அந்தப் பெண் தேவராஜ் சொல்லியபடியெல்லாம் எதிர்ப்பேச்சுப் பேசாமல் இருந்தாள். இதுவும் தேவராஜுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

அவள் பெயரை அவள் பலவிதமான இசைக் கோர்வைகளோடு உச்சரித்தாள். அதை அப்படியே உச்சரிப்பது தேவராஜுக்குச் சிரமமாக இருந்தது. அவன் அவளை நொங் என்று அழைத்தான்.

ஐப்பசி மாதம் இருபத்திரண்டாம் தேதி

வீரமாகாளியம்மன் கோவில் சந்நிதியில் திருமணம் நடந்தது. தங்கள் ஒரே மகன் வேற்று நாட்டுக்காரிச்சியைத் திருமணம் செய்து கொள்வதில் ஆழமான வருத்தம் இருந்தாலும் எப்படியாவது அவனுக்குக் கல்யாணமாகிறதே என்று தேவராஜின் பெற்றோர்கள் அரைமனதாக அவன் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்திருந்தார்கள். அவர்களைச் சமாதானப்படுத்தவே தேவராஜ் கோவில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தான். ஜிப்பா முதற்கொண்டு இந்திய ஆடைகளையும் அலங்காரங்களையும் அணிந்துகொள்ள நல்ல வாய்ப்பு என்று எண்ணிய தேவராஜின் அலுவலக நண்பர்கள் பெருவாரியாகத் திருமணத்தில் கலந்து கொண்டு இத்தனை அழகான பெண்டாட்டியைச் சம்பாதித்துக் கொண்ட அவன் சாமர்த்தியத்தை வாயாரப் பாராட்டினார்கள். சொற்பமான எண்ணிக்கையில் வந்திருந்த தேவராஜின் உறவினர்கள், தேவராஜின் நண்பர்கள் செய்த ஆரவாரத்தை மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். தேவராஜுக்குப் பெருமை பிடிபடவில்லை. கோவில் சந்நிதியில் நடந்த திருமணச் சடங்கை அவன் தனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகவே பார்த்தான். இனிமேல் தன் வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ தப்பே செய்வதில்லை என்று தனக்கு முன்னாலிருந்த தெய்வத்திடம் சத்தியம் செய்து கொடுத்தான். இதில் அவன் பிரதானமாய்க் குறிப்பிட்டது ஆர்ச்சர்ட் டவர்ஸுக்குப் போவதையும், இணையத்தில் பெண்களின் புகைப்படங்களைப் பார்ப்பதையும்.

அன்று இரவு இருபத்து மூன்று வயதான நொங் அவளுடைய ஆடைகளைக் களைந்து அவனுக்கு முன்னால் நிர்வாணமாக நின்றபோது அந்த உதடுகளும், தங்க நிறச் செவ்வந்தி மலர்கள் இரண்டை கவிழ்த்து வைத்துபோன்ற சிறிய முலைகளும், வழவழப்பான பீங்கான் தட்டைப்போன்ற வயிறும், இடுப்பும், தனது ஒற்றைக் கைப்பிடிக்குள் அடங்குவதாக இருந்த பிருஷ்டமும் இப்போது தனக்கே சொந்தம் என்று இறுமாப்புடன் நின்றான். திருமணத்துக்குச் சில நாட்களுக்குப் பிறகு இதையே தன் நண்பர்களிடம் சொல்லிச் சொல்லி வியந்தான்.

ஐப்பசி மாதம் இருபத்திரண்டாம் தேதிக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை

தேவராஜின் அப்பாவும் அம்மாவும் பதினான்கு வருடமாய்த் தொழிற்சாலையில் வேலை செய்து தேவராஜ் சேர்த்து வைத்திருந்த பணத்துடன் சேர்த்துத் தங்கள் சேமிப்பிலிருந்து காசையும் போட்டு அவர்கள் குடியிருந்த அரசாங்க அடுக்குமாடி வீட்டுக்குப் பக்கத்திலேயே அவனுக்கும் நொங்குக்கும் அதேபோல் ஒரு வீட்டை வாங்கித் தந்திருந்தார்கள். திருமணத்திற்குப் பிறகு மகனையும் மருமகளையும் பார்க்க வந்தவர்கள் கையோடு பிள்ளையார் படம் ஒன்றைக் கொண்டு வந்திருந்தார்கள்.

“பொண்ணு நம்மாளா இல்லாம இருக்கலாம். அதுக்காக வீட்டுல சாமிப்படம் இல்லாம இருக்கலாமா? விநாயகர் நமக்கு எல்லாமே அவரைக் கும்பிட்டா எல்லாச் சாமியையும் கும்பிட்ட மாதிரி. உன் வீட்டுக்காரிகிட்ட விளக்கேத்துறப்ப சுத்தபத்தமா இருக்கச் சொல்லு”

நொங்குக்குக் கோழிக்குழம்பு வைக்கச் சொல்லித் தரப்போன அம்மா தோற்றுக் கொண்டிருந்தாள். பிள்ளையார் படத்தை வீட்டின் ஸ்டோர் ரூமில் சாமான் வைப்பதற்காக மாட்டப்பட்டிருந்த அடுக்குகளில் ஒன்றின் நடுநாயகமாகச் சாய்த்து வைத்தார்கள். முதலில் நாள்தோறும் அம்மாவும் அப்பாவும் கொண்டு வந்த காமாட்சி விளக்கை ஏற்றிச் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த தேவராஜன் பிறகு விளக்கு ஏற்றுவதற்கு உள்ள சிரமங்களை உத்தேசித்து அலுவலகத்துக்குப் போகும் முன்னால் வெறுமே கையெடுத்துக் கும்பிட ஆரம்பித்தான். பிறகு இதுவும் எப்போதாவது ஒருநாள், கும்பிட வேண்டும் என்று நினைவுக்கு வரும்போது என்றானது. அப்படி ஒருநாள் பிள்ளையாரைக் கையெடுத்துக் கும்பிடும்போது தேவராஜன் பிள்ளையாரையே பார்த்துக் கொண்டிருந்தான். ரோஸ் கலரில் சிரித்த முகத்தோடு கையில் மோதகத்தை வைத்தபடி நல்ல வாட்டசாட்டமான பிள்ளையார். ஆனால் அவரைவிட அவருக்கு முன்னாலிருந்த பெருச்சாளிதான் தேவராஜின் கவனத்தை ஈர்த்தது. கருநீல நிறமாக இருந்த அந்தப் பெருச்சாளிப் பிள்ளையாரின் முன்னால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்சணங்களிலிருந்து ஒன்றை எடுத்துக் கைகளில் வைத்துக் கொண்டு பிள்ளையாரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அதன் கண்கள் தந்திரத்தாலும் ஒருவகை கேலியிலும் மின்னிக் கொண்டிருந்தன.

தனக்கு முன்னாலிருக்கும் கடவுள் மகா வல்லமை பொருந்தியவராக இருந்தாலும் அவரிடமிருந்துதான் தனக்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் வருகின்றன என்றாலும்கூட அவரைத் தந்திரமாய் ஏமாற்றிவிடக்கூடிய ஆற்றல் தன்னிடம் உண்டு என்ற திமிர் பெருச்சாளியின் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது.

மிகவும் கவனமாக இல்லையென்றால் பக்கத்தில் அண்டவிடும் சாமானிய பெருச்சாளியும் பிள்ளையாரைப் போன்ற சக்திவாய்ந்த கடவுளையே கவிழ்த்துவிடும் என்று தேவராஜன் தனக்குள் எண்ணிக் கொண்டான்.

மேற்கூறிய சம்பவங்கள் நடந்து வெறும் நான்கு மாதங்களே கடந்த நிலையில்.

தேவராஜும் நொங்கும் தினம் தினம் சண்டை போடுகிறார்கள். நொங் இந்த மூன்று மாதங்களில் தொலைக்காட்சி பார்த்தும், தேவராஜன் தொழிற்சாலைக்குப் போயிருக்கும் நேரங்களில் விடாமல் இணையத்தில் கொரியத் திரைப்படங்களையும் நாடகங்களையும் போட்டுப் பார்த்து திரையின் அடியில் வரும் ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்கூட்டி வாசித்தும், கடைக்கும் சந்தைக்கும் போகும் நேரத்தில் கடைக்காரர்களிடமும் பொருள் வாங்க வந்த மற்ற பெண்களோடு பேசியும் ஓரளவுக்கு ஆங்கிலம் பேசக் கற்றுக் கொண்டிருக்கிறாள். அதனால் அவள் எடுத்துவைக்கும் வாதங்கள் முன்போல் உணர்ச்சி வேகத்திலும் கண்ணீரிலும் கரைபவையாக இல்லாமல் நல்ல தர்க்கப்பூர்வமானதாக அமைந்துவிடுகின்றன. அழகான இளம்பெண் என்பதால் அவர்கள் வீட்டைச் சுற்றியிருக்கும் கடைக்கார அங்கிள்களும், கோப்பிக்கடைப் பையன்களும், வங்கிகளுக்கு வெளியே நின்றபடி வாடிக்கையாளர்களை அழைக்கும் காப்புறுதி முகவர் இளையர்களும் நொங்குக்கு மிக அனுகூலமாக இருக்கிறார்கள். அவளுடன் சிரித்துப் பேசுகிறார்கள். அவள் கடைவீதிக்குப் போகும்போது அவளுக்குத் தேவையான பலவிதமான உதவிகளைச் செய்கிறார்கள். இருபத்து மூன்றே வயதான நொங்குக்கு அந்நிய நாட்டில் கிடைக்கும் இத்தகைய அன்பான உபசாரங்கள் மிகுந்த நம்பிக்கையை அளிக்கின்றன. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே அவள் இப்போது ஒவ்வொரு நாளும் அவளுக்கு வரும் பல குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிக்கிறாள். தேவராஜ் வீட்டில் இல்லாத நேரத்தில் சில விசேஷமான நண்பர்களோடு தொலைபேசியில் உரையாடவும் செய்கிறாள். இன்று நடந்த சண்டையில் தொழிற்சாலையிலிருந்து வீட்டிற்குத் தாமதமாகத் திரும்பிய தேவராஜ் நொங்கின் கைத்தொலைபேசியை அவள் கைகளிலிருந்து பிடுங்கிச் சுவரில் விட்டெறிந்து அதைச் சுக்குநூறாக உடைக்கிறான். நொங் இசைநயம் நிறைந்த வார்த்தைகளில் தேவராஜை எதிர்த்துப் பேசத் தேவராஜ் அவள் தொடர்ந்தும் திமிராய் இருந்தால் தேவராஜின் மனைவி என்ற வகையில் சிங்கப்பூரில் தங்குவதற்காக அவளுக்குத் தரப்பட்டிருக்கும் அனுமதியை ரத்துச் செய்து அவளை மீண்டும் வியட்நாமுக்கு அனுப்பப் போவதாகச் சொல்லித் தனக்கிருக்கும் ஒரே பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்துகிறான்.

இதற்கிடையில் பெருந்தொற்றுக் காலம் தேவராஜுக்கு மிக உதவியாக வந்து சேர்கிறது. வீடடங்குக் கட்டுப்பாடுகளை மீறி அவள் அநாவசியமாக வெளியே போனால் போலீஸ்காரர்கள் அவளைப் பிடித்து ஊருக்கு அனுப்பிவிடுவார்கள் என்று தேவராஜ் நொங்கைப் பயமுறுத்தி வைத்திருக்கிறான். அவனும் வீட்டிலிருந்தே வேலை செய்வதால் இந்த ஏற்பாடும் அவனுக்கு சவுகரியமாகவே இருக்கிறது. நொங்கோடு வெளியே போகும் நேரங்களில் முகத்தின் பெரும்பகுதியை நன்றாக மறைக்கும்படி தேவராஜ் அவளை வற்புறுத்துகிறான். அவள் அப்படி அணிந்து கொள்வது தேவராஜுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிட்டது போன்ற பிரமை அவனுக்கு ஏற்படுகிறது. ஆனால் முகக்கவசத்தின் மீது தேவராஜை உறுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் நொங்கின் கண்களோ தூரத்து வெளிச்சம் பட்டுத் தெறிக்கும் பெருச்சாளியின் தந்திரம் மிகுந்த கண்களாகச் சுடர் விடுகின்றன.

நிகழ்காலம்

தேவராஜின் கனவுகளில் தொடர்ந்து எலிகளே வந்து கொண்டிருக்கின்றன. எலிகள் என்றால் வெள்ளெலிகள் அல்ல, பெருச்சாளிகள். தேவராஜ் நொங்கை மிகக் கவனமாகக் கண்காணித்து வருகிறான். வீட்டிற்குத் தண்ணீர் கொண்டுவரும் குழாய்களிலும், வீட்டின் கூரைக்கும் சுவர்களுக்கும் பின்னாலிருக்கும் கட்டிடத்தின் சாரங்களிலும், அவன் நின்று கொண்டிருக்கும் தரைக்கு அடியிலும் பல லட்சம் பெருச்சாளிகள் மெத்தென்ற சிறிய பாதங்கள் உரசச் சாரை சாரையாக ஓடிக் கொண்டிருப்பது அவன் காதுகளில் கேட்கிறது. ஆனால் அந்தப் பெருச்சாளிகள் ஒன்றோடொன்று பேசிக் கொள்வதில்லை. அப்படி ஓடிக் கொண்டிருக்கும் பெருச்சாளிகள் ஒருநாள் அவற்றின் மறைவிடங்களிலிருந்து கறுப்பு மகாநதியாய்ப் பீறிட்டு எழுந்து தன்னையும் தன்னைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு போகப்போகும் நாளுக்காகத் தேவராஜ் காத்திருந்தான்.

அந்த மாபெரிய நதியின் வருகையின் முன்னறிவிப்பாக இதில் யார் எலி என்ற கேள்வி அவனைப் பிய்த்துத் தின்றது.

***

சித்துராஜ் பொன்ராஜ், இவர் சிங்கப்பூரில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பு பணிகளுடன், படைப்புகள் (கதை, கவிதை, நாவல்), விமர்சனங்கள், இலக்கிய உரைகள் என பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறார். தமிழ், ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன.

மாங்கனிகள்

0

மணி எம்.கே. மணி

தாசன் அப்போது தொடர்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தான்.

அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிற நடிகை, இயக்குனர் காட்சியை விவரிப்பதற்குள் கோபப்பட்டு விடுவார். அவரே அந்தத் தொடருக்கு பணம் போடுகிற முதலாளி என்பதால், பல இடங்களிலும் ரவுடித்தனம் பண்ணி, பலரையும் பயத்திலேயே வைத்துக் கொண்டிருக்கிற அவருடைய அந்தப் பருப்பு வேகவில்லை. இயக்குனர் பெரிய டிங்கிரி டிங்கா என்பது தெரிந்துதான் அந்த நடிகை அவரை ஆட்டுவித்தார் என்று தோன்றுகிறது. தொடரில் நடிக்கிற நடிகர் நடிகையில் இருந்து பாத்திரம் துலக்க வருகிற பெண்கள் வரை வாய்ப்பு கொடுக்கிறேன் என்கிற லைனில், யாரையும் மிரட்டி அவர் கமிஷன் வாங்கி வந்தார் என்கிற உண்மை அந்த நடிகையின் உத்வேகமாக இருக்கலாம். இயக்குனருடைய முகத்தை, கண்களை நேருக்கு நேராகப் பார்த்து, நான்கு பேருக்குக் கேட்டு விடாமல் அமுத்தலாகக் அவர் முதலில் துவங்குவதே இப்படி தான்.  “ஒத்தா, என்னடா இது சீனு? சும்மா ஓல் ஒத்துனு சுத்திகிட்டிருக்கியா?”

வழக்கமாக வீட்டில் உட்கார்ந்து எழுதி, வருகிற மேனேஜரிடம் காகிதக் கொத்துகளைக் கொடுத்து அனுப்புகிற தாசனை ஒருநாள் படப்பிடிப்புக்கு அழைத்த இயக்குனர், நீங்களே அவங்களுக்குப் படிச்சுக் காட்டிடுங்களேன் என்று வேண்டிக் கொண்டார். தாசன் படித்துக் காட்ட வேண்டி, நடிகையை நோக்கி செல்ல, என்ன நடக்கிறது என்பதை ஒளிந்திருந்தும் பார்த்தார். தாசன் படிக்கும் போது, உன்னிப்பாக அதை கவனித்ததுடன், மரியாதையுடன் ஏற்றுக் கொள்கிற நடிகையை எவ்வளவு நறநறத்தாலும் தான் என்ன? அவன் படித்த இதே பேப்பரை நான் படித்துக் காட்டினால் எனக்கு எதுக்கு ஒத்தா, ங்கொம்மா? என்று கேட்டுவிட முடியுமா? கடைசியாக அந்த எழவு தாசன் தலையில் தான் விடிந்தது. அந்த நடிகைக்கு வேலை இருக்கிற நாளெல்லாம் காலங்காத்தால ரைட்டரையும் கூட்டிட்டு வந்து விடு என்பதாயிற்று.

தாசன் அதிகாலையில் எழுந்து குளித்து, அயர்ன் பண்ணி உடுத்துக் கொண்டு  தன்னை தயார் செய்து ரோடு முனைக்கு வந்து டீக்கடையில் நின்று கொள்வான். கார் வரும். டிரைவரும், அவனும் டீ குடிப்பார்கள். ரைட்டர் சிகரெட் பிடிக்க டிரைவர் காத்திருப்பார். பல கதைகள் பேசுகிற டிரைவர் தான் சினிமாவில் கொட்டை போட்ட கதைகளை சொல்லுவார். ஒருநாள் ஒரு பெரிய படத்தில் வந்த முக்கியமான சீனை எப்படி அதன் டைரக்டருக்கு சொல்லிக் கொடுத்தேன் எனபதை கூட விவரித்தது உண்டு. தாசன் ஏறின வண்டியில் இன்னும் பலரை பிக்-அப் செய்வது வழக்கம். சீரியலில் வந்து தலைகாட்டி, சினிமாவில் பிரபலமாகி நன்றாக வளர்ந்து, திடீர் என்று ஒருநாள் தற்கொலை செய்து கொண்டு இறந்து போன இளம் காமெடி நடிகை எல்லாம் இப்படி தாசனோடு வண்டியில் வந்திருக்கிறார்கள். அப்படி தான் ஒருநாள் வண்டி எக்மோருக்குப் போயிற்று. நல்ல நிழல் சாலையில், பெரிய மதில் சுவருக்குள் பழமை வாசனையுடன் நின்றிருந்த வீட்டிலிருந்து இறங்கி வந்த ஜெயவனிதா வண்டியில் ஏறினார். நடக்கிற தொடரில் வில்லியாக நடிக்கிறவர். அடுத்த பிக்கப் பானு ஸ்ரீ. அவரும் வில்லி தான். உப வில்லி.

தாசன் காரின் முன்சீட்டில் இருந்தான். டிரைவருக்குப் பக்கத்தில் இருந்து இருவரையும் மிக நன்றாக பார்ப்பதற்குள் அவர்கள் அவனுக்கு வணக்கம் சொன்னார்கள். அவன் பதிலுக்கு சும்மா எதையோ முனகின மாதிரி இருந்தது.

பெண்கள் தங்களுக்குள் பேச ஆரம்பித்தார்கள்.

கொஞ்ச நேரத்தில் டிரைவரும் அதில் உற்சாகமாக கலந்து கொண்டார்.

தாசன் அவர்களுடைய தொடர்பு எல்லைக்குள் நுழைய முடியவில்லை. அவனால் பல உரையாடல்களிலும் கலந்து கொள்ள முடியாது. ஆனால் அவர்கள் பேசுவதை பலமுறையும் கவனிக்கவே செய்தான். வனிதா தொடர்ந்து சில வருடங்களாக மூட்டு வலி சிகிச்சையில் இருக்கிறார். வேண்டாத கோவிலில்லை. கும்பிடாத சாமியில்லை. நேற்று இரவு தான் திருப்பதியில் இருந்து திரும்பி வந்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு வாரம் அங்கேயே இருந்ததில் குறைந்தது பத்து முறை சாமி தரிசனம் பார்த்தாராம். கோவிலுக்கும் அவர் வீட்டுக்கும் இருபது கிலோ மீட்டர் தூரம் தான். காரை எடுத்து மிதித்தால் ஒருமணி நேரத்தில் அங்கே சென்று விடலாம். ஒவ்வொரு நாளும் திவ்யமாக பொழுது போயிற்று என்பதற்கு, பானு கோவில் ஊரில் இருப்பதற்கு கொடுத்து வெச்சிருக்கணுமே என்று பெருமூச்சு விட்டாள்.

வனிதா தனது கைப்பைக்குள் இருந்து, ஒரு லட்டை உடைத்து ஒரு துண்டை டிரைவருக்குக் கொடுத்தாள். தாசனுக்குக் கொடுத்தாள். அப்புறம் அவளும் பானுவும் லட்டை சாப்பிட ஆரம்பிக்கும் வரை அவர்களையே தான் தாசன் பார்த்துக் கொண்டிருந்து, அப்புறம் திரும்பி லட்டைக் கொறித்தான். இப்போது லட்டு ருசி பற்றி டிரைவர் பேச துவங்குவார் என்று பட்டது. அலுப்புடன் அவரை கவனிக்க, பெரும் தொண்டை கனைப்புடன் அதைத்தான் பேசினார். அநேகமாக அவர் என்ன பேசுவார் என்பது கூட தெரிந்தது தான். அவர்கள் அதை மும்முரமாகப் பின்தொடர்ந்தார்கள்.

தூக்கம் போடலாமா என்று தாசன் நினைப்பதில் தவறு இல்லை. கலை அலுவலக நேரத்தின் போக்குவரத்து நெரிசல் இருந்தது. படப்பிடிப்பு நடக்கப் போகிற பீச் ஹவுசை சென்று சேர எப்படியும் ஒன்றரை மணிநேரமாவது ஆகும். எனினும் அவன் அவர்கள் இருவரின் குரலை தன்னை அறியாமல் கவனித்துக் கொண்ட வருவதை அறிந்தான். அவர்கள் இருவருமே குமரிப் பெண்கள் போல கொஞ்சிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் எந்த மோசடியும் இல்லை. இட்டுக்கட்டல் இல்லை. இரண்டு பேரையும் சேர்த்து வைத்துக் கணக்கு போட்டால் கூட, இருபது வயதுக்கு வேண்டிய பொது அறிவு தான் மொத்தமேயிருந்தது.

அதெப்படி இப்படிக் குழந்தைகளாக இருக்க முடியும்?

வனிதா திருப்பதியில்  இருக்கக் கூடிய தன்னுடைய மாந்தோப்பைப் பற்றி சொல்லும்போது மிகவும் கர்வமாக இருப்பது மாதிரியும், பானு அதைப் பற்றி பேச விரும்பவில்லை போலவும் பட்டது. “நானும் பசங்களுமா அங்க தான் வெளையாடிக்கிட்டு இருப்போம்” என்று பேச்சு துவங்கிய போது தாசன் எதையோ எதிர்பார்த்தது உண்மை. அப்படி எல்லாமில்லை, அவ்வப்போது அந்த தோட்டத்தின் முதலாளி கம்பை எடுத்துக் கொண்டு துரத்தி வந்ததையும், நினைத்துக் கொண்ட போதெல்லாம் மாங்காயைச் சாப்பிட முடியாததையும் ஏக்கமாக சொன்னாள். சினிமாவில் புக்காகி, முதல் அட்வான்ஸ் வாங்கியதும் அப்பாவிடம் சொல்லி நான் அந்தத் தோப்பை வாங்க வைத்தேன் என்பதில் குரல் கொஞ்சம் முதிர்ச்சி கொண்டு விட்டது. சில சவால்கள் வந்தவாறு இருந்தன. நல்ல வேளையாக மாங்காய் ருசி பற்றி பேச்சு மாறி, வனிதா மறுபடியும் குழந்தையாக குரல் கொண்டு விட்டாள். எதாவது ஒருநாள், ஒருவேளை மதிய உணவில் கூட நம்ம வீட்டு மாங்கா ஊறுகாய் இல்லாமல் நான் சாப்பிட்டது கிடையாது. தென்னிந்தியா முழுக்க படப்பிடிப்புகளுக்காக சுற்றியிருக்கிறேன், விதவிதமான உணவுகளை எல்லாம் ருசி பார்த்திருக்கிறேன். ஒருமுறை ஹிந்தி சினிமாவின் பிதாமகர் ஒருவர் விருந்தளித்திருக்கிறார். எந்த சந்தர்ப்பத்திலும் நான் என் கைவசம் ஊறுகாய் வைத்துக் கொண்டு அதை மற்றவருக்கும் கொடுத்து சாப்பிட்டேன் என்றார். கொஞ்ச காலம் முன்னால் தலைச்சுற்றல் வந்து மருத்துவரிடம் போனால் பிளட் பிரஷர் என்றார்கள். ஊறுகாய் சாப்பிடக் கூடாது, ஆனால் நான் அவரிடம் முடியாது என்று சொல்லி விட்டேன், நாலு மாத்திரையை வேண்டுமானால் அதிகமாக முழுங்கி வைக்கிறேன். இதை சாப்பிடாதே என்று மட்டும் சொல்லி விடாதீர்கள். நோ என்றால் நோ, அவ்வளவு தான். இதோ கையோடு வைத்திருக்கிறேன், உனக்குத் தெரியாதா?

தாசன் பாட்டில் காட்டப்படுவதை அறிந்தான்.

மாங்கனிகளின் ருசியும் அப்படியே.

பல பிரபலங்களுக்கு அது கொடுக்கப்பட்டிருக்கிறது. அவைகளின் ருசி விதந்தோதப்பட்டிருக்கிறது. இப்போது தாசன் எச்சரிக்கையடைந்தான். வனிதாவின் ஆற்றொழுக்கான பேச்சு தடைபட்டு சட்டென அது கொஞ்சம் அமுக்கி வாசித்தலுக்குப் போயிற்று. இப்போது மொழியும் கூட தமிழ் அல்ல, தெலுங்கு. முடிந்த வரையில் முயன்று தாசன் அதை அடைந்து சந்தோசம் கொண்டான். ஒரே நேரத்தில் நமது கடவுளின் மூன்று படங்களில் தொடர்ந்து நடித்தேன். அவைகள் முடிகிற வாக்கில் ஒரு கூடை நிறைய பழங்களுடன் அவருடைய வீட்டுக்கு போனேன். அவருக்கும் எனக்கும் எல்லோருக்கும் மகிழ்ச்சி. காப்பி எல்லாம் சாப்பிட்டு விட்டு அம்மாவோடு கிளம்பும் போது கடவுள் என்னை தனியாக கூப்பிட்டார். ரகசியமாக இந்தப் பழமெல்லாம் சரி. எனக்கு வேண்டிய மாங்கனிகளை எப்போது தருவாய்?

இருவரும் கிளுகிளுத்து சிரித்துக் கொண்டபோது தாசன் மிகச் சரியாகப் பார்த்தான்.

இரண்டு வயதுப் பெண்கள் வந்து விட்டுப் போனது போல பிரமை வந்தது.

வனிதா அப்போது ரிலீசாகிற எல்லா படங்களிலும் இருப்பாள். ஒரு சிறிய கதாபாத்திரம். அவள் எப்போது நடனமாடுவாள் என்று அனைவருமே அந்த விருந்துக்குக் காத்திருப்பார்கள். பாடலை எழுதியது எந்தக் கவிஞராக இருக்கட்டும். மாங்கனிகள் என்கிற வரி அதில் இல்லாமல் இருக்காது. அப்போது அவள் குனிவாள். திரை முழுக்க அவைகள் நிறையும். அவற்றைக் காட்டிய பிறகு, பார்வையாளர்களிடம் போதுமா என்கிற ஒரு கேள்வி அந்தக் கறுத்து விரிந்த கண்களில் வந்துவிட்டுப் போகும். ஒவ்வொரு முறையும் தாசன் அவைகளை நினைவில் ஏந்தியபடி வீட்டுக்குத் திரும்பி தன்னுடைய அறையின் விளக்கை அணைத்திருக்கிறான். வெறுமை பரவி, செய்ய ஒன்றுமில்லாமல் இருந்து, புரண்டு அரைத்தூக்கத்தில் காமத்தை எழுப்பிக் கொள்ளும்போது எந்தப் பெண்ணின் உடலைத் தேர்வு செய்திருந்தாலும், இறுதியில் அது வனிதாவுடன் தான் விடிந்து முடியும். ஐயோ, அது எப்பேர்ப்பட்ட கனவுகளின் பிரம்மாண்ட ஊர்வலம்? ஒரு மனிதன்  தன்னை மனிதனாக சொல்லிக் கொள்ள முடியாத அளவில் பாதாளம் சென்று திரும்பி வந்த அனுபவங்கள் அல்லவா அவை? பானு ஒரு ஜாங்கோ மாடல் படத்தில் அறிமுகமானவள். மல்லாக்க படுத்த நிலையில் அவளும் கூட மாம்பழங்களைப் பற்றி பாடியிருக்கிறாள். அவைகள் நமது முகத்தை நோக்கி வரும்போது திரைகள் போதாது. தாசன் அதைப்பற்றி நண்பர்களிடம் வர்ணிக்கையில் பானு ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் அதை 70 mm-இல் எடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறான். அவள் சினிமா விட்டு காணாமல் போன எவ்வளவோ காலத்துக்கு அப்புறமும் கற்பனைகளின் நடுவே வருகிற அவளுடைய புருஷனை மறுத்துவிட்டு தாசன் தன்னுடைய காரியத்தை பார்த்திருக்கிறான்.

எவ்வளவு இரவுகள், பகல்கள்?

படப்பிடிப்பு நடக்கிற இடத்தில் ஒன்றிரண்டு ஏசி போட்ட அறைகள் உண்டு. பிரதான நடிகைக்கு காட்சியை விளக்கிச் சொல்லிவிட்டு வேறு ஒருநாள் படப்பிடிப்புக்காக தாசன் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தான். தொடர்கள் மீது அவனுக்கு இளக்காரம் மட்டுமே இருந்தது. அது போன நூற்றாண்டில் இருக்கிறது என்பான். காசுக்காக நான் இதில் ஈடுபடும்போது என்னை நான் ஒரு பிக்பாக்கெட் ஆசாமியாகத்தான் நினைத்துக் கொள்கிறேன் என்பான். என்றாலும் அதை எழுதுகிற நேரத்தில் மனதிற்கு உவப்பான கேலி கிண்டல்களை ரகசிய அஸ்திரங்களாக எடுத்துக் கொண்டு எழுதும் பழக்கத்தில் வந்து சேர்ந்து இருந்ததால் விழுந்து, விழுந்து சிரித்துக் கொண்டு தன்னை மறந்து தனது தொழிலில் நடைபோடுவது வழக்கம். பிற்பகலை நெருங்கும் போது ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் தோளில் விழுந்து அவரைப் பற்றிக்கொண்டு வனிதா நடந்து வந்தார். முகம் வலியால் வெட்டி இழுத்துக் கொண்டிருந்தது. பின்னாலே வந்த பானுவில் முகத்திலும் கலவரம். மூட்டுவலி கிளம்பி உயர்ந்து கொண்டேயிருக்கிறது. பையன் வெளியேறும்போது தாசனும் எழுந்தான்.

“நீங்க இருங்க எழுத்தாளரே!”

பானு வனிதாவின் புடவையை தொடை வரைக்கும் வழித்துப் போட்டு கால் முட்டுக்களில் வெகுநேரம் களிம்பைப் பூசியவாறு இருந்தாள். ஒன்றிரண்டு மாத்திரைகளைப் போட்டுக் கொண்ட வனிதா, சிறிதும் உணர்வற்ற நிலையுடன் மல்லாந்து கால்களை உயர்த்திக் கொண்டபோது அவள் உள்ளே அணிந்திருந்த உள்ளாடை தெரிந்தது. பானு அப்புறம் நிதானமாக கவனித்து அதை சரிசெய்து விட்டாள். இருவருமே தாறுமாறாக வாய்விட்டு கடவுளை வேண்டிக் கொண்டிருந்தார்கள். அல்லது சலித்துக் கொண்டிருந்தார்கள்.

தாசன் பார்ப்பதை வனிதா கவனித்தார் போல.

“எழுத்தாளரே!”

“சொல்லுங்க மாம்!”

“சாமி கும்புடுவீங்ககளா?”

“ம்!”

“எனக்கும் சேத்து வேண்டுங்க. வலி தாங்க முடியல!”

இன்று அதெல்லாம் முடிந்து குறைந்தது பதினைந்து வருடங்களாகிறது. ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன்னர் வனிதா இறந்து விட்டாள். ஒரு நீர்க்குமிழி உடைந்தது போல தான், பெரிய சலனங்களில்லை. ஒருமுறை மதர் தெரசாக்களுடன் இவர்களைப் போன்றவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வனிதாவின் நினைவு நாளில் தாசன் ஒரு முகப்புத்தக பதிவு போட்டான். அப்புறம்  இன்றைய நாளில், அவன் தன்னுடைய வெப்-சீரிஸ் கதையை சொல்லிக் கொண்டு வருகையில், கேட்டுக் கொண்டிருந்த சென்ஸ் உள்ள ஒரு தயாரிப்பளர் நில்லுங்க என்றார். ஒரு டிரென்ட் நடிகையின் அம்மா நடிகை பற்றியது அது. ஒரு காலத்தில் கவர்ச்சிக் கன்னி. வழக்கமாகக் குடித்துக் கொண்டிருந்த சுடுகாட்டு சாராயம் கிடைக்காமல் படப்பிடிப்பில் இருக்கிற மகளைத் தேடிப்போகிறாள். உடம்பு முடியாமலாகி கூச்சலிட்டுக் கொண்டு செட்டில் தன்னையறியாமல் மூத்திரம் பெய்கிறாள், அவளை இழுத்துக் கொண்டு செல்லுகிறார்கள் என்று காட்சி. இதை யாரை மனதில் வைத்துக் கொண்டு எழுதி இருக்கிறீர்கள் என்று பதட்டப்பட்டுக் கேட்கிறார் அவர்.

நிலைக் கண்ணாடியில் அவள் தன்னுடைய தொங்கிப்போன முலைகளைப் பார்க்கிற காட்சியும் படத்தில் உண்டு.

தாசன் வனிதாவையும், பானுவையும் மனதில் வைத்துக்கொண்டு எழுதி இருக்கலாம் என்று நாம் நினைப்பது இயற்கை. இல்லை. இன்னும் அப்படி எவ்வளவோ நடிகைகளின் வாழ்க்கை உண்டு. அவரிடம் பொதுவில் இருக்கிற சில நடிகைகளைப் பற்றி சொல்லிவிட்டு, தனக்குள் பெருகி வருகிற சிறுகதையை நோட்டமிட்டான்.

கூடிய விரைவில் அவன் அதை எழுதக் கூடும்.

***                       

மணி எம்.கே. மணி திரைத்துறையில் பணியாற்றி வரும் இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், நான்கு கட்டுரைத்தொகுப்புகள் மற்றும் ஒரு நாவல் வெளியாகியுள்ளன. – தொடர்புக்கு – mkmani1964@gmail.com

நட்சத்திரங்களை இழக்கும் கடல்

0

நாராயணி சுப்ரமணியன்

குளிர்ப் பிரதேசக் கடற்பகுதிகளில் மட்டுமே காணப்படுகிற கெல்ப் காடுகளைப் பற்றி, வெப்ப மண்டலத்தவர்களான நமக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கெல்ப் பாசிகள் அதிகம் வளரும் இடங்கள் கெல்ப் காடுகள் (Kelp forests)எனவும், குறைந்த அடர்த்தியில் பாசிகள் இருக்கும் இடங்கள் கெல்ப் படுகைகள் (Kelp beds) எனவும் அழைக்கப்படுகின்றன. இவை கடலுக்கடியில் இருக்கும் மழைக்காடுகள். காடு என்பது இங்கே உருவகம் அல்ல. நிஜமாகவே கடலுக்கடியில் ஒரு பிரம்மாண்ட மரகதக் காடு இருப்பதான தோற்றத்தைத் தரக்கூடியவை கெல்ப் காடுகள்.

பழுப்பு பாசி வகையைச் கெல்ப் பாசிகள்ஆறு முதல் பதினான்கு டிகிரி செல்சியஸ் வரை உள்ள குளிர் வெப்பநிலையில் செழித்து வளரக்கூடியவை. இவற்றின் வளர்ச்சி விகிதம் அதிவேகமானது. ஒரு கெல்ப் பாசியின் சராசரி உயரம் 200 அடி… அதிகபட்சமாக இவை 250 அடி வரை கூட வளரக்கூடிய இயல்புடையவை. சில கடற்பகுதிகளில், கடலின் தரையிலிருந்து கிளம்பி, மேற்பரப்பு வரை இவை நீள்கின்றன. சில சமயங்களில் சூரிய ஒளியைக் கூட விழுங்கிவிடக்கூடிய இந்த அடர்க்காடுகளில், கடல்நாய், ஊதா கடற்பரட்டை, சூரியகாந்தி கடல் நட்சத்திரம், செம்மறித்தலை மீன், கல்மீன் என நமக்கு அதிகம் பரிச்சயமில்லாத பல உயிரிகள் வசிக்கின்றன.

சூரியகாந்தி நட்சத்திரங்களின் பேரழிவு

சூரியகாந்தி நட்சத்திர மீன் (Sunflower star அல்லது sunstar) என்பது, இந்தக் கெல்ப் காடுகளில் பார்க்கிற இடத்திலெல்லாம் காணக்கிடைக்கும் உயிரியாக ஒரு காலத்தில் இருந்தது. ஒரு சைக்கிள் சக்கரத்தைப் போன்ற சுற்றளவு கொண்ட இந்தக் கடல் நட்சத்திரத்துக்கு சராசரியாக 16 முதல் 24 கைகள் வரை இருக்கும். கெல்ப் காடுகளில் டைவிங் செய்பவர்களைப் பொறுத்தவரை, சூரியகாந்தி நட்சத்திரங்களைப் பார்ப்பது என்பது, காட்டுக்குள் செல்பவர்கள் குரங்குகளைப் பார்ப்பதுபோன்ற சாதாரண நிகழ்வு.

2013ம் ஆண்டு எல்லாவற்றையும் மாற்றியமைத்தது. வடகிழக்கு பசிபிக் கடலில், ப்ளாப் (Blob) என்று அழைக்கப்பட்ட ஒரு கடல் வெப்பமாதல் நிகழ்வு ஏற்பட்டது. கடல்நீரின் சராசரி வெப்பநிலை இரண்டு முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது. மூன்று ஆண்டுகள், அதாவது கிட்டத்தட்ட 2015ம் ஆண்டின் இறுதி வரை இது தொடர்ந்தது.

இந்த காலகட்டத்தில், அதிக வெப்பநிலை காரணமாக வைரஸ் ஒன்று சூரியகாந்தி நட்சத்திரங்களைத் தாக்கியது. சூரியகாந்தி நட்சத்திரங்கள் சுருங்கின, கைகளை இழந்தன, அப்படியே கரைந்து காணாமல் போயின! Sea star wasting disease என்று இதற்குப் பெயரிடப்பட்டது. சூரியகாந்தி நட்சத்திரங்களைப் பொறுத்தவரை இது ஒரு கடுமையான கொள்ளை நோய் எனலாம். இந்த நோயால் கெல்ப் காடுகளில் வசித்த 5.75 பில்லியன் சூரிய நட்சத்திரங்கள் அழிந்தன என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். கொள்ளை நோய் முடிவுற்றபோது 90.6% நட்சத்திரங்கள் இறந்திருந்தன, வெறும் 9.4% கடல் நட்சத்திரங்கள் மட்டுமே மீதமிருந்தன.

காலநிலை மாற்றத்தின் விளைவுகள்

கடல் நட்சத்திரங்களை வைரஸ்கள் தாக்குவது இது முதல் முறையல்ல. 72 வருடங்களுக்கு முன்னால் டெஸ்மோவரைஸ் தாக்குதல் ஏற்பட்டது. 1978ல் சூரியகாந்தி நட்சத்திரங்கள் வைரஸால் தாக்கப்பட்டன. கடல்நீரின் வெப்பத்தை அதிகரிக்கும் எல் நினோ நிகழ்வுகளின் போது (1980, 1997) வைரஸ் தாக்குதல் ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக இந்தத் தாக்குதல்களின்போதெல்லாம், இலையுதிர்காலத்தோடு தொற்று குறைந்துவிடும். நீரின் வெப்பநிலை குறையும்போது வைரஸ் வீரியம் இழந்துவிடும். ஆனால், 2013ல் ஏற்பட்ட ப்ளாப் நிகழ்வால், நீரின் வெப்பநிலை குறையாமலேயே இருந்திருக்கிறது. வைரஸ்கள் முழு வீரியத்தோடு சூரியகாந்தி நட்சத்திரங்களை அழித்துவிட்டன.

சூழல்சார் மாறுபாடுகள்

கெல்ப் காடுகளைப் பொறுத்தவரை, சூரியகாந்தி நட்சத்திரங்களே ஊதா கடற்பரட்டைகளுக்கு (Purple sea urchins) எதிராக இயங்கும் வேட்டையாடிகள். கடல் நாய்கள் (Sea otters) கடற்பரட்டைகளை உண்கின்றன என்றாலும், அவை அளவில் பெரிய கடற்பரட்டைகளை மட்டுமே தேடித் தேடி உண்ணும் இயல்புடையவை. சூரியகாந்தி நட்சத்திரங்களின் வேட்டை, சிறிய கடற்பரட்டைகளைக் கட்டுக்குள் வைத்திருந்தது. வைரஸ் தொற்றால் சூரியகாந்தி நட்சத்திரங்கள் இறந்தபின்பு, கடற்பரட்டைகளின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்தது. சூரியகாந்திகளைத் தாக்கிய கொள்ளை நோயின் முடிவில், கடற்பரட்டைகளின் எண்ணிக்கை 166%, அதாவது கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்திருந்து.

கெல்ப் காடுகளில் வசிக்கும் கடற்பரட்டைகள், கெல்ப் பாசிகளை விரும்பி உண்ணும் இயல்புடையவை. கடற்பரட்டைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட பெருவெடிப்பால், கெல்ப் காடுகள் வேகமாக அழிந்தன, சூரியகாந்திகள் இறந்தபிறகு, கெல்ப் காடுகளின் அழிவு விகிதம் 30 சதவிகிதம் அதிகரித்தது.

கடற்பரட்டைப் பாலைவனங்கள்

வேட்டையாடி விலங்குகள் எதுவுமற்ற நிலையில், கடற்பரட்டைகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது கடினம். இவை மிகவும் கடினமான சூழலையும் தாங்கக்கூடிய விலங்குகள். இரை கிடைக்காமல் இவை தொடர்ந்து பசியில் வாடும்போது, இவற்றின் தாடை மற்றும் பற்களில் உள்ள கால்சைட் சத்து அதிகரித்து, தாடைகள் கூடுதல் வலுப்பெறுகின்றன என்கிறது ஒரு ஆய்வு (). ஆக, பட்டினியால் இவற்றின் வலு அதிகரிக்கவே செய்யும். தவிர, பசியில் இருக்கும் கடற்பரட்டைகள், நடத்தையிலும் கடும் மூர்க்கத்தை வெளிப்படுத்துகின்றன. வலுவேறிய பற்களால் பவளப்பாசிகளையும் நத்தை ஓடுகளையும் கூட சுரண்டி உண்ணத் தொடங்குகின்றன. உண்டு வேகமாக வளர்கின்றன.கெல்ப் பாசிகளைத் தேடித் தேடி அழித்தொழிக்கின்றன. கடற்பரட்டைகள் ஒரு கெல்ப் காட்டை ஆக்கிரமித்து அதை வேரோடு அழிப்பதை Time lapse காணொலியில் பார்த்தால் அவற்றின் வீரியம் நமக்குப் புலப்படும்.

கெல்ப் காடுகள் அழியத் தொடங்கிய சில நாட்களிலேயே, கடற்பரட்டைகள் மட்டுமே நிரம்பிய பாலைவனமாக (Urchin barren) அந்த இடம் மாறிவிடுகிறது. உயிர்ச்சத்துக்கள் மிகவும் குறைவான இடம் இது. இங்கு உயிரிகளால் வசிக்க முடியாது. இதை வாழிடம் என்றுகூட சரியாக சொல்லிவிடமுடியாது என்பதே நிதர்சனம். கடற்பரட்டைப் பாலைவனங்கள் எதையும் தாங்கும் திறன் கொண்டவை. ஒரு கெல்ப் காடு கடற்பரட்டைப் பாலைவனமாக மாறிவிட்டால், திரும்ப அந்த இடத்தில் பாசிகள் முளைப்பது கடினம். ஜப்பானின் ஹொக்கெய்டோ பகுதியில் 80 ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஒரு கடற்பரட்டைப் பாலைவனம், எந்த மாற்றமுமின்றி இப்போதும் அப்படியே இருக்கிறது!

சிறு வெளிச்சம்

சூரியகாந்தி நட்சத்திரங்களை இழந்து தவித்துக்கொண்டிருந்த  கெல்ப் காடுகளுக்கு சிறு வெளிச்சம் அளிப்பவையாக இருக்கின்றன சில சமீபத்திய ஆய்வுகள். 2020ல் சூரியகாந்திக் கடல் நட்சத்திரங்கள் மிக வேகமாக அழிந்துவரக்கூடிய உயிரினங்கள் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிறகு இதற்குத் தீர்வு காண்பதற்கான ஆராய்ச்சிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டது. அறிவியலாளர்களின் கவனம் இந்த உயிரிகள்மேல் விழுந்தது.

2021ன் தொடக்கத்தில், அமெரிக்காவின் சான் ஜுவான் தீவு ஆய்வகத்தைச் சேர்ந்த சில விஞ்ஞானிகள்,  இந்த நட்சத்திரங்களை ஆய்வகத்திலேயே இனப்பெருக்கம் செய்யவைத்து வெற்றி கண்டிருக்கிறார்கள். புதிதாகப் பிறந்துள்ள இந்தக் கடல் நட்சத்திரங்கள், வெப்பம் அதிகமான நீரிலும் நன்கு வாழக்கூடியவை என்பது கூடுதல் மகிழ்ச்சி. அதிவேகமாக அழிந்துவரும் விலங்குகள், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு மீண்டும் இயற்கை வாழிடங்களில் விடப்படுவது வழக்கம். இயற்கை சூழலுக்கு சென்றபின்பு வழக்கமான இனப்பெருக்க சுழற்சியின்மூலம் எண்ணிக்கை பழைய நிலைக்குத் திரும்ப வாய்ப்பு இருக்கிறது. ஆய்வின் முதற்கட்ட முடிவுகள், எதிர்காலத்தில் கடல் நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் இவ்வாறு அதிகரிக்கக்கூடும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

முகட்டுக்கல்லாக விளங்கும் உயிரிகள்

சூழலியலில், முகட்டுக்கல் உயிரிகள் (Keystone species) என்ற ஒரு கருத்தாக்கம் உண்டு. ஒரு கட்டிட வளைவில் இருந்து முகட்டுக்கல்லை நீக்கிவிட்டால் எப்படி அந்த வளைவே நிலைகுலையுமோ, முகட்டுக்கல் உயிரிகள் அழிந்துவிட்டால் அந்த சூழலே தடுமாறி சீர்குலையும். 1969ல் ராபர்ட் பெய்ன் என்கிற அறிவியலாளர், கடல் நட்சத்திரங்களை முன்வைத்தே இந்தக் கருத்தாக்கத்தை உருவாக்கினார். பொதுவாக முக்கிய விலங்குகள் என்று நாம் கருதும் பல பெருவிலங்குகளோடு ஒப்பிடும்போது, கடல் நட்சத்திரங்கள் சாதாரணமானவையாகத் தெரியலாம். ஆனால், கெல்ப் காடுகள் மட்டுமல்லாமல் பல வாழிடங்களில் அவைதான் அடிப்படை உயிரிகள். அவை அழிக்கப்பட்டால் சீட்டுக் கட்டு கோபுரத்தைப் போல சூழலே நிலைகுலைந்துவிடும். கடல் நட்சத்திரங்கள் அழிந்ததால் மட்டிக்கிளிஞ்சல்கள் அதிகரித்து, மற்ற விலங்குகள் அடியோடு அழிந்த பல நிகழ்வுகள் உண்டு.

வடகிழக்குப் பசிபிக் கடலில் சூரியகாந்தி நட்சத்திரங்களுக்கு இப்போது ஏற்பட்டிருப்பது குறுகிய இடத்துக்குள் ஒரு அழிவு மட்டுமே (Local extinction). இதுபோன்ற நிகழ்வுகள் அடுத்தடுத்த கடற்பகுதிகளிலும் ஏற்பட்டால் கடலில் எத்தனை பகுதிகள் பாலைவனங்களாக மாறும் என்று தெரியவில்லை. உலகளாவிய கடல்நட்சத்திர அழிவு கடல்சூழலை எப்படிவேண்டுமானாலும் பாதிக்கலாம்.

கடல்நீரின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பதால் பவளப்பாறைகளுக்கும் கடல் பாலூட்டிகளுக்கும் வைரஸ் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன என்று பல ஆய்வுகள் சுட்டுகின்றன. பசிபிக் பெருங்கடலின் ப்ளாப் வெப்ப நிகழ்வு அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ந்து வரத் துவங்கியிருக்கிறது. காலநிலை மாற்றத்தால் நம் கண்ணுக்கும் அறிவுக்கும் புலனாகாத வகையில் பாதிக்கப்படுகிறது கடல் சூழல்.

பொதுவாக, வணிக ரீதியாக எதாவது ஒரு மதிப்பு இருக்கும் விலங்குகளின்மீதே அதிகமான வெளிச்சம் இருக்கும். சூரியகாந்திக் கடல் நட்சத்திரங்களை ஆய்வகத்தில் வளர்க்கலாம் என்ற யோசனை வந்தபோது, அதன் வளர்ச்சிநிலைகள் பற்றிய எந்த ஆய்வுமே முன்னோடியாக இருக்கவில்லை. “வணிக மதிப்பில்லாத உயிரிகள் என்பதால் இதன்மீது எந்த முந்தைய ஆய்வும் நிகழ்த்தப்படவில்லை” என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். அறிவியல் ஆய்வுகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் நாம் காட்டும் பாரபட்சத்துக்கும் ஒரு சான்றாக நிற்கிறது இந்த நிகழ்வு.

கடல் நட்சத்திரங்கள் இல்லாமல் கடலே இருண்டுபோகும் என்றெல்லாம் எழுதலாம்தான். ஆனால் தூரத்தில் இருக்கிற கடல் இருட்டானால் நாம் கவலைப்படுவோமா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது.

தரவுகள்

  1. Levitan DR, 1991, Skeletal changes in the test and jaws of the sea urchin Diadema antillarum in response to food limitation, Marine Biology.
  2. Konar B et al, 2019, Wasting disease and static enviromental variables drive sea star assemblages in the Northern Gulf of Alaska, Journal of Experimental Marine Biology and Ecology.
  3. Gravem, SA et al, 2021, Pycnopodia helianthoides (amended version of 2020 assessment). The IUCN Red List of Threatened Species 2021.

***

நாராயணி சுப்ரமணியன், கடல்வாழ் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.”நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” என்ற உயிரியல் நூலை எழுதியுள்ளார். தமிழில் கடல்சார், அறிவியல் பொருண்மைகளைக் கவிதைகளில் எழுதி வருபவர். விகடன் தடம், வாசகசாலை, அரூ இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. Email: nans.mythila@gmail.com

வாழ்வினிலே இரண்டு நாள்

0

குமாரநந்தன்

ன் வாழ்க்கையில் இருந்து கழிந்துபோன நாட்களில் ஏதாவது ஒரு நாளை மட்டும் மீண்டும் அதேபோல நிகழ்த்திப் பார்க்க வேண்டும் என சத்தியமூர்த்தி பல நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தார்.

அந்த நாள் எது என்பதையும் அவர் சமீபத்தில் தீர்மானித்து விட்டார். அது சுகன்யாவை முதன்முதலில் சந்தித்த அந்த நாள்தான்.

சத்தியமூர்த்திக்கு இப்போது அறுபது வயதாகிறது. ஆனால் நம்ப முடியாது. ஐம்பது வயதுதான் மதிக்க முடியும். உடலை இன்னும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். நரைத்த தலைக்கு கொஞ்ச காலம் சாயமடித்துக் கொண்டிருந்தார். அப்புறம் அது அவருக்கே வெட்கமாய் இருப்பதாக விட்டுவிட்டார். 

அவர்களின் ஒரே மகன் ரகு ஆட்டோ மொபைல் எஞ்சினீயரிங் முடித்துவிட்டு ஜெர்மனியில் உள்ள புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வேலையில் இருக்கிறான். படிப்பு முடிந்த கையோடு அங்கே போய்விட்டான். அங்கேயே ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டான். வீட்டுக்கு இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என இரண்டு ஆண்டுகளாய் சொல்லிக் கொண்டிருக்கிறான். இன்னும் வரவில்லை. வாரம் ஒருமுறை வீடியோ காலில் பேசுவான்.

இப்போது பார்க்கும் போது அவனை தங்கள் மகன் தான் என்பதை அவரால் நம்பவே முடியவில்லை. உடல் நிறம் நல்ல வெளுப்பாகிவிட்டது. நடை உடை பாவனைகள் பேச்சு சிரிப்பு எல்லாமே முற்றிலும் மாறிவிட்டது.  ஜெர்மனிலேயே பிறந்து வளர்ந்தவன் மாதிரி பேசுகிறான். அவன் இனி இங்கே வரமாட்டான். ஒவ்வொரு முறை போன் செய்யும்போதும் இவர்களை அங்கே வந்துவிடும்படி ஒருமுறை சொல்லிவிட்டு போனை வைப்பதை கடமையாகக் கொண்டிருக்கிறான்.

இவர்களுக்கும் மகனுடனேயே போய் இருக்க ஆசைதான். ஆனால் ஏதோ ஒன்று அவர்களைத் தடுத்தது. அது பிறந்த மண் மேல் இருக்கும் பிடிப்பா முற்றிலும் புதிய இடம் புதிய நாடு என்ற தயக்கமா அல்லது விமானத்தில் செல்ல பயமா எதுவென்று தெரியவில்லை.

சுகன்யாவுக்கும் அவருடைய வயதே தான். இருவரும் சென்னை கல்லூரியில் ஒன்றாய் படித்தவர்கள். படிக்கும்போதே காதல், பின் திருமணம்.

அப்போது எடுத்த புகைப்படங்கள் எல்லாம் இன்னும் இருக்கின்றன. சுகன்யாவும் அவரும் மட்டுமல்ல அவர் அப்பா, அம்மா, சுகன்யாவின் அப்பா, அம்மா எல்லோரும் அவ்வளவு அழகாய் இருந்தார்கள். திருமணத்தின் போது சுகன்யாவின் அம்மா அழகியாகவெல்லாம் தெரியவில்லை. இப்போது போட்டோவில் பார்க்கும் போது அவர் அழகாகத் தெரிகிறார். அவர் மட்டுமல்ல அந்த போட்டோக்களில் உள்ள எல்லாமே அழகாக இருக்கின்றன.

கடந்து போன அந்த நாட்கள் தான் எவ்வளவு அழகானவை என்ற நினைவே அவரை பித்தம் கொள்ளச் செய்து கொண்டிருக்கிறது. இன்னொரு முறை அந்த நாட்களைத் திரும்பக் காண வேண்டும் என்ற ஆசை அவரை நோய் போல பீடித்திருப்பதில் ஆச்சரியமில்லை.

ஒருவேளை உருப்படியான வேலை என்று ஏதாவது இருந்திருந்தால் அவர் இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருந்திருக்க மாட்டாரோ என்னவோ? அரசு அதிகாரியாக இல்லாமல் இருந்திருந்தால் இன்று அவர் ஓடி ஆடி ஏதாவது வேலை செய்துகொண்டு இருந்திருப்பார். அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றவுடனே, என்னவோ உலகின் எல்லா விஷயங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டதைப் போல, மரணத்தை நோக்கிக் காத்திருப்பதைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லை என்ற எண்ணம் வந்து உட்கார்ந்து கொள்கிறது. அது தவறு என்று தெரிந்தாலும் அதைத் தவிர வேறு ஒன்றும் மனதுக்குள் இருப்பதில்லை.

காலையில் எழுந்ததும் ஒரு வாக்கிங். வந்து கொஞ்சம் யோகா. பிறகு பேப்பர் பார்ப்பது. காலை டிபன் அப்புறம் கொஞ்ச நேரம் டிவியில் செய்தி கேட்பது, படம் பார்ப்பது. அப்படியே சின்ன தூக்கம். மதியச் சாப்பாடு தூக்கம் இரவு சாப்பாடு தூக்கம் என்று ஒரு மனிதன் ஒரு வாரம் இருந்தாலே பைத்தியம் பிடித்துவிடுமே? வாழ்க்கை பூராவும் இருக்க வேண்டும் என்றால்? சத்திய மூர்த்திக்கு அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

அவர் மனம் முழுவதும் இளமைக்காலம்தான் நிறைந்திருந்தது. அதைத் தவிர வேறு எதுவும் இல்லை. பையனுக்கு பத்து வயதானபோது என்ன நடந்தது? தெரியாது. ஒருமுறை அவனுக்கு கடுமையான விஷ ஜுரம் வந்து மருத்துவமனையில் ஒருவாரம் இருந்து பிழைத்து வந்தானே தெரியுமா? என்ன பையனுக்கு பத்து வயதில் அப்படி ஒரு ஜுரம் வந்ததா? எனக்கு அப்படி எதுவும் ஞாபகத்தில் இல்லையே? என்பதுதான் அவர் பதில்.

அதே நேரம் காலேஜ்ல இங்கிலீஷ் கிளாஸ் எடுத்தாங்களே அவங்கள ஞாபகம் இருக்கா என்று கேட்டால், ரேணுகா மிஸ் நல்லா ஞாபகம் இருக்கே. அவங்க குரல் இன்னும் காதுக்குள்ள கேக்குது. இதோ இப்ப அவர் பாடம் எடுக்கற மாதிரி மனசுல அப்படியே ஓடுது. ஒரு தடவை பொங்கல் பண்டிகைக்கு முன்னால கிளாஸ்ல நம்ம கூட எல்லாம் ஜாலியா பேசிகிட்டிருந்தாங்க தெரியுமா? அன்னைக்கி அவங்க பாசி கலர் மாதிரி ஒரு பச்சையில சேல கட்டியிருந்தாங்க. ஜிமிக்கி கூட அன்னைக்கி புதுசா போட்டிருந்தாங்க என ஆரம்பித்துவிடுவார்.

இருவருக்கும் எந்த வேலையும் இல்லை. பாத்திரம் தேய்க்க, துணி துவைக்க எல்லாம் மெஷின். சமையல் ஒன்றும் பிரமாதமாக இருக்காது. சுகன்யா அதை அரைமணி நேரத்தில் முடித்துவிடுவார். பின் நாளெல்லாம் உட்கார்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பது. நாட்கள் இப்படியே தொடர்ந்தால், கடைசியில் சுகன்யாவின் முகத்தைப் பார்க்கவே வெறுப்பு வந்துவிடுமோ என அவருக்கு பயமாய் இருந்தது.

காலையில் எழும்போதே ஒரு சோம்பல், பின் ஒரு வெறுமை, பின் ஒரு சலிப்பு. இதிலிருந்து எப்படி மீள்வது என யோசித்தபோதுதான் அவருக்கு பழைய நாளை நிகழ்த்திப் பார்க்கும் யோசனை தோன்றியது.

கல்லூரி நாள் ஒன்றை மீண்டும் நிகழ்த்துவது என்பது முடியாத காரியம். கல்லூரி நாள் என்று நினைத்துக் கொண்டு வீட்டிலேயே வேண்டுமானால் இருக்கலாம். கல்லூரிக்குப் போக முடியாது. சுகன்யாவிடம் காதலைத் தெரிவித்தபின், பீச்சுக்குப் போன எண்ணற்ற நாட்களில் ஒன்றை திரும்ப நிகழ்த்தினால் அதில் பழையபடி மணிக்கணக்காய் பேசிக் கொண்டிருக்க முடியுமா என்று தெரியவில்லை. மேலும் கடல் காற்று இப்போதெல்லாம் அவருக்கு ஒத்துக் கொள்வதில்லை. மூக்கை அடைத்துக் கொள்கிறது.

தியேட்டருக்குப் போகலாம் என்றால் இன்றுள்ள தியேட்டர்கள் அன்றைய தியேட்டர்களைப் போல இல்லை. மேலும் இப்போது வரும் படங்களைப் போய்ப் பார்த்தால் அது பழைய நாளை நிகழ்த்திப் பார்ப்பதைப் போலவே இருக்காது என பல நாட்களாக எதை எதையோ யோசிப்பதும் நிராகரிப்பதுமாய் இருந்தார்.

இறுதியில் வெறுமனே உட்லண்ட்ஸ் ஓட்டலுக்காவது போகலாம் என யோசித்தார். அப்போதுதான் அவருக்கு நினைவுக்கு வந்தது. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது, ஒருநாள் யாருக்கோ பிறந்ததாள் அதற்காக அந்த நண்பன் ஓட்டலில் கொடுத்த சின்ன விருந்தொன்றில் கலந்து கொள்ளும்போதுதான், முதன் முதலில் சுகன்யாவிடம் தன் காதலை தெரிவித்திருந்தார்.  

அந்த நாளை நினைக்க நினைக்க அவருக்குள் உற்சாகம் கொப்பளித்தது. அந்த நாளைத்தான் திரும்ப நிகழ்த்த வேண்டும் என்று அப்போதே முடிவு செய்துவிட்டார்.

அதை சுகன்யாவிடம் சொன்னபோது, ‘சும்மா இருக்க முடியாததுக்கு என்னவோ சொல்றீங்க பாவம்’ என்பதைப் போல பார்த்துவிட்டு, சமைக்கும் வேலையில் மூழ்கிவிட்டார்.

சுந்தரமூர்த்தி அதன்பின், ஒரு புதிய மனிதரைப் போல ஆகிவிட்டார்.  தினமும் உற்சாகமாக எழுகிறார். நண்பர்களுடன் பேசுகிறார். வெளியே போகிறார் வருகிறார். பரபரப்பாக இருக்கிறார். அவருடன் படித்தவர்களில் ரங்கராஜ் புரசைவாக்கத்திலும் மோகன் திருவான்மியூரிலும் இருக்கிறார்கள். அவர்களும் அந்த விருந்தில் கலந்து கொண்டவர்கள்தான். மற்றவர்கள் எல்லாம் யார் யார் அவர்கள் எங்கே எங்கே இருக்கிறார்கள் என ஒருவரிடமிருந்து ஒருவர் மூலமாக தகவல் வாங்கியாகிவிட்டது. இதில் தனபால், மந்திர மூர்த்தி இரண்டு பேரும் எங்கே இருக்கிறார்கள்? இருக்கிறார்களா? இல்லையா? என கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை. மற்றவர்கள் எல்லாம் டெல்லியில் இருந்து கன்னியாகுமரி வரை இந்தியா முழுவதும் பரவியிருந்தார்கள். டெல்லியில் இருக்கும் பிரபாகரனும் அந்த நிகழ்வின் போது உடன் இருந்தவன். அவனை இதற்காக வரச் சொன்னால் வருவானா என்று மலைப்பாய் இருந்தது. அவன் வருவது இருக்கட்டும், இங்கே திருநெல்வேலியில் இருக்கும் குணசீலனிடம் என்ன சொல்லி வரச்சொல்வது என்றும் தெரியவில்லை. பிறந்தநாள் பார்ட்டி கொடுத்த சுந்தரம் வேறு இறந்துவிட்டான்.

மோகன், தங்களோடு படித்த சந்திர பிரகாஷ், ஆனந்தன் இருவரையும் கூட அழைக்கலாம் என்றான். அப்படி இருவர் தன்னோடு படித்ததாய் சத்தியமூர்த்திக்கு நினைவே இல்லை.

சரி போகட்டும் அவர்கள் இரண்டு பேரும் குறிப்பிட்ட அந்த நாளில் நடந்த பார்ட்டிக்கு வந்தார்களா என சந்தேகமாய் கேட்டபோது, அப்படி ஒரு விருந்து நடந்ததே தனக்கு நினைவில் இல்லை என மோகன் சொல்லிவிட்டார்.

சத்தியமூர்த்தி யோசித்துப் பார்த்தார். பத்துபேர் போனது மட்டும் நினைவில் இருக்கிறது. அவர்கள் யார் யார் என்று யோசித்தபோது, இந்த மோகன், ரங்கராஜ், பிரபாகரன், மந்திரமூர்த்தி, தனபால், ஹேமாவதியைத் தவிர மற்ற இருவரையும் கடைசி வரை நினைவுக்கு வரவே இல்லை. சரி இருக்கட்டும் அந்த சந்திர பிரகாஷ், ஆனந்தன் இருவரையும் கூட அன்றைய பார்ட்டிக்கு வந்தவர்களாகவே வைத்துக் கொள்வோம், அவர்களையும் அழைத்துக் கொள்வோம் என முடிவுக்கு வந்தார் சத்தியமூர்த்தி.

சுந்தரம் இறந்துவிட்டதால் அந்த சந்திப்பை பிறந்தநாள் பார்ட்டி என்று சொல்ல முடியாது. நீண்ட காலத்துக்குப் பின் பள்ளித் தோழர்கள் சந்திக்கும் நிகழ்வு என்பதாக அது அமைந்துவிடக் கூடாது என்பதில் சத்தியமூர்த்தி உறுதியுடன் இருந்தார்.  சந்திப்புக்கு எந்தப் பெயரும் அடையாளமும் இல்லாவிட்டால் என்ன? அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே என்று விட்டுவிட்டார்.

பார்ட்டியில் கலந்து கொண்ட இன்னொரு பெண் ஹேமாவதி சேலத்தில் இருந்தாள். அவளும் இதற்கென மெனக்கெட்டு பஸ் பிடித்து வருவாளா? மாட்டாளா? தெரியவில்லை.  இதையெல்லாம் யோசிக்கும் போது, பேசாமல் இந்த திட்டத்தைக் கைவிட்டுவிடலாம் போல இருந்தது சத்திய மூர்த்திக்கு. ஆனால் அந்த நிகழ்வை மட்டும் எவ்வளவு அறைகுறையாகவேனும் நிகழ்த்தி முடித்துவிட்டால், காலத்தை கொஞ்சமாவது அசைத்துப் பார்த்துவிட்டதாக தனக்கு ஒரு திருப்தி கிடைக்கும். அதற்கு இணையாக எதுவும் இருக்க முடியாது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.

சுகன்யா இதை சாக்காக வைத்து தன்னோடு படித்த பரிமளம், மேனகா இருவரையும் கூட கூப்பிடுவோம் அவர்கள் இங்கே சென்னையில் தான் இருக்கிறார்கள் என்றார்.

குழுவில் இரண்டு பெண்கள் அதிகமாகிவிட்டால், அது அன்று நடந்த பார்ட்டியை நினைவு படுத்துவது மாதிரி இருக்காதே வேறு ஏதோ பார்ட்டி மாதிரிதானே இருக்கும் என்றார் சத்தியமூர்த்தி

“இப்ப மட்டும் என்ன அன்னைக்கி நடந்த மாதிரியேவா நடக்கப் போவுது எப்படி இருந்தாலும் இது வேற அது வேற தான். நீங்களும் நானுமே கூட அவங்க இல்ல வேற தான் என்றவர், அன்னைக்கி யார் யார் கலந்துகிட்டாங்கன்றதே உங்களுக்கு ஞாபகம் இல்ல அப்படீங்கும் போது, இந்த ரெண்டு பேரும் அதுல கலந்துகிட்டவங்கதான்னு நினைச்சிக்கோங்களேன்” என்றொரு யோசனையையும் முன்வைத்தார்.

அதற்கு மேல் அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை “சரி நடக்கட்டும், அவங்ககிட்டயும் சொல்லிடு” என்றுவிட்டார்.

வீட்டில் ஒரு கல்யாணக்களை வந்துவிட்ட மாதிரி இருந்தது. நாட்கள் பிரகாசமாயும் உற்சாகமளிப்பதாயும் இருந்தன. ஏதோ ஒரு அர்த்தமுள்ள காரியத்தைச் செய்ய இருப்பதாக மனதுக்குள் எப்போதும் சந்தோஷமும் புதுமையும் குமிழிட்டுக் கொண்டிருந்தன.

சுகன்யா முதலில் இதில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலும், போகப்போக அவருக்கும் ஆர்வம் வளர ஆரம்பித்துவிட்டது. சத்தியமூர்த்தி கிட்டத்தட்ட தனக்கு இன்னும் கல்யாணம் ஆகாத மாதிரியும் வரும் நாளில் தான் சுகன்யாவிடம் தன் காதலை தெரிவிக்க இருப்பதும் மாதிரியான மனநிலைக்கு சென்றுவிட்டார். மனைவியைப் அவர் பார்த்த பார்வையில் பழைய காதல் வழிந்தது. அவராலும் கணவனை மிகுந்த வெட்கம் இல்லாமல் பார்க்க முடியவில்லை.

வெள்ளியன்று இரவு வழக்கம் போல போன் செய்த ரகு, இருவரிடமும் தெரிந்த குதூகலத்தைப் பார்த்து அதிர்ந்து போய்விட்டான்.

“அம்மா என்னம்மா இப்படி வெக்கப்படறீங்க. அப்பா நீங்க இவ்ளோ ஜாலியா இருக்கீங்க… எனக்கு ஒன்னுமே புரியலையே” என்றான். அவர்களின் உற்சாகம் அவனிடமும் தொற்றிக் கொண்டது.

“ரகு நான் உங்க அம்மாவ லவ் பண்ற விஷயத்தை சொல்லி பிரப்போஸ் பண்ணப்போறேன்” என்று புதிர் போட்டார் அப்பா.

அவன் உண்மையிலேயே ஒன்றும் புரியாமல் விழித்தான். சத்தியமூர்த்தி தயங்கித் தயங்கி தன்னுடைய திட்டத்தைச் சொல்லவும் அவனுக்கு ஆச்சரியத்தில் விழிகள் விரிந்தன. “அப்பா எப்படிப்பா உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் தோனுது. நீங்க உண்மையிலேயே கிரேட் பா” என்றான்.

“அந்த பார்ட்டில கலந்துக்க நானும் வரட்டா எனக்கு ரொம்ப ஆசையாய் இருக்குப்பா” என்றான்.

“டேய் என்னவோ நிஜமா வரப்போறவனாட்டம் நீ ரொம்ப பண்ணாத.” என்றார் கிண்டலாக.

“இல்லப்பா நீங்க அம்மா கிட்ட எப்படி பிரப்போஸ் பண்ணீங்கன்னு பாக்க ஆசையா இருக்கு.”

“அடிச்சிருவேன் நீ வந்து உக்காந்துகிட்டிருந்தா உங்க அம்மா எப்படி ரியாக்ட் பண்ணுவா? அப்புறம் இந்த டிராமாவும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம்னு வீட்லயே உக்காந்துக்குவா” என்று சிரித்தார்.

ரகு மனம் விட்டுச் சிரித்தான். “சரிப்பா பெஸ்ட் ஆப் லக் நல்லா பண்ணுங்க” என்றுவிட்டு, அம்மாவிடம், “அம்மா அப்பா பிரப்போஸ் பண்ணும் போது, நீங்க அதெல்லாம் கிடையாதுன்னு கலாட்டா பண்ணிடுங்க இன்னும் வேடிக்கையா இருக்கும்” என்றுவிட்டு சிரித்தான். அம்மா வெட்கம் தாங்காமல் உள்ளே ஓடிவிட்டார்.

டெல்லியில் இருக்கும் பிரபாகரன் தான் இப்போது வரமுடியாது என்று சொல்லிவிட்டான். எஞ்சுவது நான், சுகன்யா, மோகன், ஆனந்தன், ரங்கராஜ், சந்திர பிரகாஷ், ஹேமாவதி அப்புறம் சுகன்யாவின் தோழிகள் இரண்டு பேர், ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் இருக்கப் போகிறோம். இந்த நான்கு பெண்கள் என்பதுதான் சத்திய மூர்த்திக்கு நெருடலாக இருந்தது.

அன்று நடந்தது ஒரு ஆண்களின் பார்ட்டி. அதில் துணிவும் சாகசமும் போன்றதொரு மனநிலை இருந்தது. ஒருவேளை அன்றே பெண்கள் அதிகம் இருந்திருந்தால் அந்த மனநிலை இருந்திருக்குமா தெரியவில்லை. சத்தம் போட்டுச் சிரித்திருக்க மாட்டோம். உற்சாகமாகக் கத்தி இருக்க மாட்டோம். எல்லாவற்றிலும் ஒரு தயக்கமும், நாசுக்கும் சேர்ந்து ஒரு சுவையில்லாத அல்லது வேறொரு சுவையுள்ள விருந்தாய் இருந்திருக்கும்.

இப்போது வயதாகிவிட்டதால் அன்று போல யாரும் சத்தமாய் பேசப் போவதில்லை. யாருக்காவது காது கேட்காமல் இருந்தால் வேண்டுமானால் சத்தமாக பேசலாம். ஆனால் அது அன்றைய சத்தமான பேச்சைப் போல இல்லாமல் வேறுமாதிரி இருக்கும்.

சுகன்யா திடீரென்று “ஏங்க இதெல்லாம் பண்ணணுமா வெளிய போகணும்னு தோனினா பேசாம நாம மட்டும் போயிட்டு வரலாமே” என்றார்.

சத்தியமூர்த்தியும் யோசித்தார்.  இந்த திட்டத்தை கைவிட்டுவிடலாம் என்று நினைக்கும் போதே ஒரு சோர்வு வந்து சூழ்வதைக் கவனித்தார். அது முன்பு வழக்கமாய் இருந்த சோர்வை விட வலிமையாய் இருந்தது.

“இதுல இவ்வளவு சங்கடப்பட என்ன இருக்கு. ஒருநாள் நாம நம்மோட பழைய நண்பர்களோட வெளிய போய் சாப்பிடப் போறோம் அவ்வளவுதானே?”

“நீங்க என்னமோ பிரப்போஸ் அது இதுன்னுகிட்டிருக்கீங்களே?”

“அது சும்மா வேடிக்கை தானே? இனிமேதானா நான் உங்கிட்ட பிரப்போஸ் பண்ணப் போறேன்?” என்று கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.

“என்னமோ போங்க” என்றுவிட்டு சுகன்யா அப்பால் போய்விட்டார்.

இப்போது தேதி குறிக்க வேண்டும். அதற்கு எல்லோரையும் கலந்தாலோசிக்க வேண்டும். பிறகு ஓட்டலில் டைம் புக் செய்ய வேண்டும். ஓட்டல் பற்றி நினைக்கும் போதுதான் அவருக்கு இன்னொரு குழப்பம் வந்தது. அவர்கள் கல்லூரியில் படிக்கும் போது, அடிக்கடி நிறைய ஓட்டல்களுக்குப் போயிருக்கிறார்கள். அதில் குறிப்பிட்ட இந்த நிகழ்வு நடந்தது ராயப்பேட்டை உட்லேண்ட்ஸ் ஓட்டல் என்பது அவர் நினைவு. ஆனால் மயிலாப்பூர் கற்பகம் மெஸ்சுக்கும் அடிக்கடி போயிருப்பதால், இது கற்பகம் மெஸ்சில் நடந்ததா, உட்லேண்ஸ்சில் நடந்ததா என குழம்பிவிட்டது. திருமணத்திற்குப் பிறகு இருவருமே அங்கு போயிருக்கிறார்கள்தான் அன்று நடந்ததை திரும்பவும் நினைத்துப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள்தான் ஆனால் இப்போது நினைக்கும்போது என்னவோ குழப்பம் வருகிறது.

அவர் நிதானமாக உட்கார்ந்து இரண்டு ஓட்டல்களின் அமைப்பையும் உணவுக்கூடத்தின் அமைப்பையும் மனதுக்குள் கொண்டு வந்து, நடந்த சம்பவத்தை ஓட்டிப் பார்த்தார். இரண்டு இடத்திலுமே அந்த சம்பவம் நடந்ததைப் போலவே மனக் காட்சிகள் தெளிவாக வந்தன. என்ன செய்வதென்று தெரியவில்லை எல்லாவற்றையும் சமரசம் செய்து கொண்டதைப் போல அவர் இதையும் சமரசம் செய்து கொள்ளலாமா என யோசித்தார்.

நண்பர்களிடம் கேட்கலாம் என்று ரங்கராஜைக் கேட்டால், அவர் இத்தோடு ரெஸிடென்சி ஹோட்டல் மற்றும் அம்பாள் மெஸ் ஆகியவற்றையும் சேர்த்து சொல்லி ஒரேயடியாய் குழப்பினார். ‘இவங்கிட்ட கேட்டதுக்கு சும்மா இருந்திருக்கலாம்’ என சத்தியமூர்த்தி நொந்து போனார்.

எதற்கும் நேரிலேயே போய் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என முதலில் உட்லேண்ட்ஸ்க்குப் போனார். நல்லவேளையாக அங்கே போனபின் அவருக்கு எந்தக் குழப்பமும் இல்லாமல் எல்லாம் துலக்கமாகிவிட்டது. தான் காதலைச் சொன்னது உட்லேண்ட்ஸ்சில்தான் என்பது உறுதியாகிவிட்டது.

ஓட்டல் நிர்வாகியைப் பார்த்து, விஷயத்தைச் சுருக்கமாகச் சொன்னார். (பிரப்போஸ் பற்றி சொல்லவில்லை) நாங்கள் பழைய நண்பர்கள் கல்லூரியில் படிக்கும் போது இங்குதான் சந்திப்போம். இப்போது அந்த நாட்களை நினைவு கூறும் வகையில் இங்கே மீண்டும் ஒரு சந்திப்பை நிகழ்த்த திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.

அவர் முகம் உடனே மலர்ந்துவிட்டது. “ரொம்ப சந்தோஷம் சார். டேட் சொல்லுங்க தனி ஹால் எதுவும் ஏற்பாடு பண்ணணுமா? விருந்துக்கு என்ன டிஷ் செய்யலாம். எவ்வளவு பேர் வருவீங்க?” என கேள்விகளை அடுக்க ஆரம்பித்தார்.

“அதெல்லாம் வேண்டாம். குறிப்பிட்ட இரண்டு டேபிளை மட்டும் ஒதுக்கி வைத்திருந்தால் போதும், நண்பர்களோடு கலந்து பேசிவிட்டு, தேதியை போன் செய்து சொல்லிவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு உணவுக் கூடத்தைப் பார்க்க விரும்பினார்.

அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை. அந்த உணவுக் கூடம் அப்படியே இருந்தது. எந்த மாற்றமும் இல்லை. அந்த மேஜைகள், நாற்காலிகள் அந்த சிவப்பு தரைவிரிப்பு. அந்த பெரணிச் செடி இருக்கும் அழகுத் தொட்டிகள் எல்லாம் அப்படியப்படியே இருந்தன. பரிமாறுபவர்கள் கூட அன்றைய நாளில் இருந்தவர்களை நினைவூட்டுபவர்களைப் போலவே இருந்தனர்.  அவருக்கு அப்போதே அந்த நாளுக்குப் போய்விட்டதைப் போல இருந்தது.

திரும்பி வந்தவுடனே, எல்லோரிடமும் பேசி வரும் ஞாயிறு இல்லாமல் அடுத்த ஞாயிறு என, நாள் முடிவு செய்யப்பட்டது.  

இன்னும் ஒருவாரம் தான் நினைக்க நினைக்க ஒரே படபடப்பாய் இருந்தது. அன்று சுகன்யாவிடம் தன் காதலைச் சொன்னபோது கூட இவ்வளவு நாள் யோசித்திருப்போமா? இப்படியெல்லாம் திட்டமிட்டிருப்போமா? என்று யோசித்துப் பார்த்தார். நிச்சயம் அன்று இப்படியெல்லாம் இருந்திருக்க மாட்டோம் என்று நினைத்துக் கொண்டார்.

ஹோட்டலுக்கு போன் செய்து, ஞாயிற்றுக் கிழமை மாலை நான்கு மணிக்கு என இரண்டு டேபிள்களை புக் செய்துவிட்டார்.  வேறு டேபிள்களை ஒதுக்கிவிடக் கூடாது என்றும், இடதுபுறம் நடுவில் அடுத்தடுத்து இருக்கும் இரண்டு டேபிள்கள் தான் தனக்கு வேண்டும் என உறுதியாக சொல்லிவிட்டார்.

நாட்கள் கிடுகிடுவென ஓடிவிட்டன. சனிக்கிழமையன்று காலை மோகனுக்கும், ரங்கராஜுகும் நினைவூட்டினார். பிறகுதான் காதலைச் சொல்லப் போகிறவளுடன் சேர்ந்தே ஓட்டலுக்குப் போவதாவது என நினைத்தார்.

அன்று அப்படித்தான் நடந்தது என்றாலும், சுகன்யா என்ன அப்போது ஒரே வீட்டில் என்னுடனா இருந்தாள். இல்லையே? இன்று இருவரும் வழக்கம்போல எதையாவது பேசிக்கொண்டே ஒரு வாடகைக் காரில் போய், ஓட்டலுக்குள் உட்கார்ந்து நான் உன்னைக் காதலிக்கிறேன் என்றால் எவ்வளவு அபத்தமாய் இருக்கும்?

சுகன்யாவிடம் இதைப் பற்றிச் சொல்லி, “இன்னைக்கி ஒருநாள் வேற எங்கியாவது தங்கிகிட்டு அங்கிருந்து நேரா ஓட்டலுக்கு வந்துடேன்” என்றார்.  “நான் ஏன் எங்கியோ போய் ராத்தங்கிட்டு வரணும். நீங்க வேணா எங்கியாவது போயிட்டு வாங்க” என்றார்.

அவர் திரும்ப மோகனுக்கு போன் செய்து, “இன்னைக்கே உன் வீட்டுக்கு வர்றேன். அங்கிருந்து காலையில ஓட்டலுக்குப் போயிடலாம்” என்றார்.

“சரி நீ நாளைக்கு மதியத்துக்கு மேல கிளம்பி, டாக்ஸி பிடிச்சி நேரா ஓட்டலுக்கு வந்துடு” என்றுவிட்டு, பேக்கில் ஒரு செட் உடையை எடுத்துக் கொண்டு அப்போதே மோகன் வீட்டுக்கு கிளம்பினார்.

“ஆமாம் பிள்ளையில்லாத வீட்ல….” சுகன்யா என்னவோ சொல்ல ஆரம்பித்தார்.

சத்தியமூர்த்தி காதில் விழாதவராய் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

மோகன் வீட்டில் யாரும் இல்லை. “என்னடா எல்லாம் எங்க போயிட்டாங்க?” என்றார் ஆச்சரியமாய். “நீ இங்க வர்றப்ப அவங்களும் இருந்தா நல்லா இருக்குமா? அதான் என் ஒய்பையும் பையனையும் பக்கத்தில் இருக்கிற அவங்க அம்மா வீட்டுக்கு போகச் சொல்லி அனுப்பிட்டேன்” என சிரித்தார் மோகன்.

“இன்னும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்றார் தொடர்ந்து.

“என்ன அது?”

ஆனந்தன், ரங்கராஜ், சந்திர பிரகாஷையும் கிளம்பிவரச் சொல்லிட்டேன்.”

“அவங்க எதுக்கு?”

“அவங்களும் இருந்தாத்தானே நல்லா இருக்கும்” என்று விஷமமாய் சிரித்தார்.

அதன் அர்த்தம் பிறகு அவர்கள் வரும்போதுதான் விளங்கியது. ஆனந்தன் ஒரு புல் பாட்டிலோடு உள்ளே வந்தார்.

“டேய் இதென்னடா கத எங்கெங்கயோ போகுது” என்றார் சத்தியமூர்த்தி.

“பிரண்ட்ஸ் மீட்டிங்னா இதெல்லாம் இல்லாம?” என ஆச்சரியமாய் பார்த்தார் ஆனந்தன்.

இரவு இரண்டாவது ரவுண்டுக்கெல்லாம் சத்தியமூர்த்தி எல்லாத் தயக்கங்களையும் உடைத்து எறிந்துவிட்டார்.

அவர் நடவடிக்கைகள் எல்லாம் கல்லூரி மாணவனுடையதைப் போலவே இருந்தன. “நான் சுகன்யாவுக்கு போன் பண்ணப் போறேன்” என்றார்.  

“இப்ப அவங்களுக்கு எதுக்கு? இதெல்லாம் தெரிஞ்சா அவங்க டென்சன் ஆயிடுவாங்க” என மற்றவர்கள் பதறினார்கள்.

“ஒன்னும் ஆக மாட்டா” என போனை எடுத்து சுகன்யாவுக்கு டயல் செய்தார். சுகன்யா தூக்கக் கலக்கத்தில் எழுந்து “என்ன ஆச்சி இந்நேரத்துக்கு போன் பன்றீங்க மாத்திரை எடுத்துப் போக மறந்துட்டீங்களா? நெஞ்சி வலிக்கிதா?” என்றார்.

“என்னடி வாயி ஒனக்கு” என்று சத்தம் போட்டார். போதையெல்லாம் சட்டென தெளிந்தது போல இருந்தது. எதற்காக இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதையே ஒரு கணம் மறந்தவராய் “ஐ லவ் யூ” என்றார்.

“நாளைக்கி சாயந்திரம் தானே இப்ப என்ன?” என்றுவிட்டு எரிச்சலோடு போனை வைத்துவிட்டார் சுகன்யா.

மறுநாள் காலை ஹேமா போன் செய்து, “சென்ட்ரல் வந்துட்டேன். பக்கத்தில எங்க சொந்தக்காரங்க வீடு இருக்கு அங்க போய் ரிலாக்ஸ் பண்ணிகிட்டு சரியா நாலு மணிக்கு உட்லேண்ட்ஸ் வந்தர்றேன்” என்றார்.

“சும்மா உன்ன அங்கிருந்து வரும்படி பண்ணிட்டேன் சாரி” என்றார் சத்தியமூர்த்தி குற்ற உணர்வுடன்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. இங்க எங்க சித்தி வீட்டுக்கு வர்றதா ரொம்ப நாளா ஒரு பிளான் இருந்தது. அதோட இதையும் சேத்துகிட்டேன் அவ்வளவு தான்” என்று பதில் வந்தது. இவள் குரல் மட்டும் எப்படி இன்னும் இவ்வளவு குளிர்ச்சியாய் இருக்கிறது என அவருக்கு ஒரே ஆச்சரியமாய் இருந்தது.

மோகன் வீட்டில் இருந்து எல்லோரும் கிளம்பும்போது, சத்தியமூர்த்தி தன் கல்லூரி நாட்களுக்கே போய்விட்டார். இருபது வயது இளைஞனாகத் தன்னை உணர்வதில் அவருக்கு எந்தத் தடையும் இல்லை. வாழ்க்கையை அர்த்தமற்ற ஒன்றாக இப்போது அவரால் நினைக்க முடியவில்லை.

டிராபிக் ஏதும் இல்லாததால், திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே அவர்கள் ஓட்டலுக்குப் போய்விட்டனர். வழியில் சுகன்யாவுக்கு போன் செய்தார்.

மூன்றரை மணிக்கு அவர்கள் ஓட்டல் வளாகத்திற்குள் நுழைந்திருந்தனர். சந்திப்புக்கு இன்னும் அரைமணி நேரம் இருந்ததால், அங்கே இருக்கும் புல்வெளியில் மரநிழலில் உட்கார்ந்திருக்க முடிவு செய்தனர்.

அங்கே போனபோது, ஏற்கனவே உட்கார்ந்திருந்த பெண்கள் மூவரும் இவர்களைச் சிரித்துக் கொண்டே வரவேற்றனர். சுகன்யா சேலை கட்டியிருந்தார் என்றாலும் என்றும் இல்லாத வனப்புடன் இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பின், கல்லூரியில் பார்த்ததைப் போல காதோரத்தில் ரோஜா சூடியிருந்தார். ஆனால், அன்று போல் ஜடை இல்லாமல், கொண்டை போட்டிருந்தார்.

மற்ற இரண்டு பெண்களும் கூட நேர்த்தியாய் உடை அணிந்திருந்தனர். மேனகா நோயினாலும் வயோதிகத்தினாலும் பீடிக்கப்பட்டதைப் போல இருந்தார். பரிமளம் கல்லூரிப் பெண்ணைப் போல சுடிதாரில் வந்திருந்தார்.

கொஞ்ச நேரம் கழித்து அவர்கள் அனைவரும் உணவறைக்குள் நுழைந்தனர். அந்தக் கதவுக்கு வெளியே இருக்கும் நிகழ்காலத்தில் இருந்து, கடந்தகாலத்துக்குள் நுழைந்துவிட்டதைப் போல உணர்ந்தார் சத்தியமூர்த்தி. மெய் சிலிர்த்து, கண்ணீர் மல்குவதைப் போல இருந்தது.

மேலாளர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரோஜா மலர் ஒன்றைக் கொடுத்து வரவேற்றார்.

அவர்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த டேபிளில் உட்கார்ந்தனர்.  சத்திய மூர்த்தி அன்று எந்த இடத்தில் உட்கார்ந்தாரோ அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டார். சுகன்யாவும் பழைய நாள் ஞாபகத்திற்கு முற்றிலும் திரும்பிய நிலையில், அன்று அமர்ந்த இருக்கையிலேயே சரியாக உட்கார்ந்து கொண்டார். அன்று அவருக்கு சத்தியமூர்த்தி தன் காதலை சொல்லப் போகிறார் என்று தெரியாது. ஆனால் இன்று தெரியும் என்பதால் நெஞ்சு படபடப்பாக உணர்ந்தார்.

ஹேமா இன்னும் வரவில்லையே என சத்திய மூர்த்தி நினைப்பதற்கும், ஹேமா வேகமாய் உள்ளே நுழைவதற்கும் சரியாய் இருந்தது.

எல்லோரும் அவளைத் திரும்பிப் பார்த்தனர். அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய்விட்டனர். கல்லூரி மாணவியாக இருபது வயது இளம் பெண்ணாக அப்படியே வந்திருந்தாள் ஹேமா.

அதிசயத்தில் வாயடைத்துப் போனவர்கள் அதிலிருந்து மீளாமல் அப்படியே உட்கார்ந்திருக்க, அவள் அவர்களின் டேபிளுக்கு வந்து, எல்லோரையும் பார்த்து புன்னகைத்து “ஸாரி… வழியில கொஞ்சம் டிராபிக்” என்றுவிட்டு காலியாக இருந்த இருக்கையில் உட்கார்ந்தாள்.

எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. நிகழ்ச்சி ஹேமாவினுடையதாகிவிட்டது. உண்மையாகவே அவர்கள் எல்லோரும் சரியாக முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் தங்களுடைய கல்லூரி நாள் ஒன்றுக்குப் போய்விட்டனர்.

சத்தியமூர்த்தி ஒரு துடிப்புள்ள இளைஞராகவே மாறிவிட்டிருந்தார். அவர் கவனம் முழுவதும் இப்போது ஹேமாவின் மீது இருந்தது. அன்று நடந்த நிகழ்வில் அவர் ஹேமாவை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. இப்போது அவருக்கு எல்லாம் நினைவுக்கு வந்துவிட்டது. ஹேமா, சுகன்யா இருவரும் நெருங்கிய தோழிகள். எங்கே போனாலும் ஒன்றாகவே போவார்கள். இருவருக்குமே சத்தியமூர்த்தியின் மேல் காதல் இருந்தது. அவரும் அதை உணர்ந்தே இருந்தார். ஏனோ அவருக்கு ஹேமாவின் மீது ஈடுபாடு உண்டாகவில்லை.

பழைய சூழல் வந்ததும் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு நிகழ்வுகள் வெளியேறி வந்தன. அதை மறந்திருந்த மற்றவர்களுக்கும் அந்த நினைவுகள் மேலெழுந்தன. யாரும் எதுவும் சொல்லாமலேயே பல நினைவுகள் அடுத்தடுத்து மனதுக்குள் பளிச்சிடத் துவங்கின.

ஹேமா அவர்கள் சொல்வதற்கெல்லாம் சிரித்துக் கொண்டு மட்டுமே இருந்தாள். கொஞ்சநேரம் கழித்து “இதுல கலந்துக்க வேண்டியவங்க எங்க அம்மாதான். வரணுன்னுதான் ரொம்ப ஆசையா இருந்தாங்க. ஆனா மூட்டு வலியால வரமுடியல. இருந்தாலும் அவர் இதுல கண்டிப்பா கலந்துக்கணும்னு நினைச்சார். எங்கிட்ட சொல்லி நீ போய்ட்டுவான்னார்.”

“உன்னோட பிரண்ட்ஸ்ங்க சந்திப்புங்ககிற நிகழ்ச்சியில நான் எப்படிம்மா?”ன்னு யோசிச்சேன். அம்மாதான் “அதெல்லாம் ஒன்னுமில்ல நீ என்ன மாதிரியேதானே இருக்கே. நீ அங்க இருக்கறதும் சரியாத்தான் இருக்கும்”னார். முதல்ல எனக்கு தயக்கமா இருந்துச்சு. அப்புறம் அம்மாவோட ஆசைக்காக “சரி நான் போறேன் அவங்ககிட்ட சொல்லிடுங்கன்னேன்.” அம்மா “இப்ப ஒன்னும் சொல்ல வேண்டாம். பார்ட்டியப்போ நீ போய் நின்னா இன்னும் த்ரில்லிங்கா இருக்கும்” னாங்க எனக்கும் உங்க முன்னாடி ஹேமாவா வந்தா எப்படி இருக்கும்னு ஒரு எதிர்பார்ப்பு உண்டாகிடுச்சு” தயங்கித் தயங்கி எல்லாவற்றையும் சொன்னாள் அவள்.

“அம்மாவுக்கு ரொம்ப லேட்டாதான் மேரேஜ் ஆச்சி இல்லையா?” என்றார் மோகன்.

அவள் “ஆமாம் அம்மாவுக்கு கல்யாணம் ஆகும்போது முப்பத்தஞ்சி வயசு. அதுக்கப்புறம் நாலு வருஷம் கழிச்சிதான் நான் பொறந்தேன்.”

சத்தியமூர்த்தி உற்சாகமாக பழைய நினைவுகளை பேசிக் கொண்டே சாப்பிட்டார். சுகன்யாவும் தங்கள் காதல் நாள் நினைவுகளை வெட்கத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார்.

சத்தியமூர்த்தி தன்னை ஒரு இருபது வயது கல்லூரி படிக்கும் இளைஞனாக உணர்ந்தாலும், சுகன்யாவை அப்படி நினைக்க முடியவில்லை. அவருடைய இன்றைய தோற்றம் தான் மனதுக்குள் வருகிறதே தவிர, பழைய இளம் சுகன்யாவை மனதுக்குள் கொண்டுவர படாதபாடு படவேண்டியிருந்தது. இதனால் அவர் சற்று நேரமாக அவர் பக்கம் திரும்பிப் பார்ப்பதை நிறுத்தியிருந்தார்.

ஹேமா முதலில் சாப்பிட்டு முடித்து கை கழுவிக் கொண்டாள். ஒவ்வொருவராய் சாப்பிட்டு முடித்தனர். சத்தியமூர்த்தியும் போய் கைகழுவிக் கொண்டு வந்தார்.

டேபிளில் வைத்திருந்த ரோஜாவை எடுத்தார்.

“ஐ லவ் யூ” எனச் சொல்லி, ஹேமாவிடம் அதை நீட்டினார். 

சுகன்யாவைத் தவிர எல்லோரும் வாய்விட்டு சத்தமாக சிரித்தனர்.

***

குமாரநந்தன் இவரது சொந்த ஊர் சேலம். இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் – நகரப் பாடகன், பூமியெங்கும் பூரணியின் நிழல் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளது. ஆசிரியர் தொடர்புக்கு – kumaarananthan@gmail.com