Home Blog Page 43

ஒரு விண்ணப்பம்

0

வணக்கம் நண்பர்களே..

முழுக்க முழுக்க தனிப்பட்ட காரணங்களால் இதழ் பதிவேற்றம் காண மிக மிக தாமதமாகிவிட்டது. படைப்புகளை அனுப்பி பொறுமையோடு காத்திருந்த படைப்பாளுமைகளுக்கு எமது நன்றி.

இணைய இதழ் என்பது காலத்தின் கட்டாயமாக என்பதைக் காட்டிலும் வரப்பிரசாதமாக என்று எடுத்துக்கொள்வதே சரியானது. நின்று போன எத்தனையோ சிற்றிதழ்கள் தன்னை தக்க வைத்திருக்கும் அல்லவா?

சோர்வு மிக்க இந்த ஆண்டில், படைப்பூக்கம் மிக்கவர்களாய் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். இந்த காலத்தில் மிக முக்கியமான பணியை ஆற்றிவருகிறார்கள். அவ்வகையில் மணி எம்.கே. மணி, மயிலன் ஜி சின்னப்பன், சுஷில்குமார் இம்மூவரையும் சொல்ல வேண்டும், மூவரின் கதைகளும் நம் இதழில். ஏற்கனவே சொன்னது போல படைப்பூக்கத்திற்கான காலம் என்று மெய்பிக்கும் வகையில் கவிஞர்கள் பச்சோந்தி மற்றும் பாலைவன லாந்தர் ஆகிய இருவரும் தங்கள் படைப்புகளை வேறு ஒரு வடிவத்திலும் கொணர்ந்துள்ளார்கள். இருவரின் பங்களிப்பும் பாராட்டப்பட வேண்டியதே.

அதுதவிரவும் தனக்கேயான ரமேஷ் ரக்சன் பாணி கதையும், முற்றிலுமே எதிர்பாராத இளங்கோ முத்தய்யாவின் கதையும், ரெ.விஜயலெட்சுமியின் சிறுகதையும், முதல்கதையாக ஜெய சுதனும் பங்களித்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு இதழிலும் நரேன் மொழிபெயர்த்து வரும் மொத்த சிறுகதைகளையும் கவனித்து வந்தால் கதைகளின் தொடர்ச்சிக்காக அவர் செய்து வரும் அற்பனிப்பும் உழைப்பும் தெரியவரும்.

எப்போதும் போல் மீரா மீனாட்சியின் கவிதை, எப்போதும் போலற்ற வேல்கண்ணனின் கவிதை என, நா.பெரியசாமி, கார்குழலி, ஆனந்தகுமார், நந்தாகுமாரன் ஆகியோரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

பெகாஸஸ் பற்றிப் பேசப்படும் காலத்தில் ஸ்நோடெனின் நூல் குறித்த கட்டுரையும் ரூபன் சிவராஜாவின் family man குறித்த கட்டுரையும் கொரோனா குறித்த கட்டுரையும், கணபதி சுப்ரமணியத்தின் புதிய நூலான ‘ஓவியம் காலம், வெளி, இசை & ஓவியம்’ குறித்த வேத நாயக்கின் கட்டுரை.

எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் நேர்காணல், கவிஞர் மொழிபெயர்ப்பாளர் மதுமிதா அவர்கள் செய்து கொடுத்துள்ளார்.

தொடராக வந்து கொண்டிருக்கும் ரூபன் சிவராஜாவின் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கு தொடருடன், சிவகுமார் முத்தய்யாவின் டெல்டா ஊதாரி புதிய தொடராக இந்த மாதத்திலிருந்து… நான் முக்கியமாக சொல்ல வந்தது இதுதான்.

இந்த மாதத்திலிருந்து… இந்த இதழிலிருந்து இருமாத இதழாக வெளிவரும். இருண்ட காலத்திலிருந்து வெளிச்சம் நோக்கி பயணிக்கையில் எத்தனையோ விதத்தில் இடர்கள் குறுக்கே நிற்கையில் தொடர்ந்து செயல்படுவது மட்டுமே ஒரே இலக்கு. அதனால் இருமாத இதழாக இனி யாவரும் இதழ் வெளிவரும்.

மற்றபடி யாவரும் புதிய முகங்களுக்கும், பரீட்சார்த்தங்களுக்குமே அதிகம் முன்னுரிமை கொடுக்கும் என்பது உங்களனைவருக்கும் தெரிந்ததே. ஒவ்வொரு இதழிலும் கடந்த இதழைக் காட்டிலும் மேம்பட்டதாக இருத்தல் வேண்டும் என்கிற குறைந்தபட்ச விருப்பத்தோடு தான் நகர்ந்து வருகிறோம்.

உங்கள் கருத்துகளை பகிர்வது மட்டுமே எங்களை உற்சாகமாக நகர்த்தும்.. அதுவே எங்களது விண்ணப்பம்

மாறா அன்புடன்

ஜீவ கரிகாலன்

மீரா மீனாட்சி கவிதை

0

திரிபுணர்வு

உயிர்ப்பித்துகொண்டே இருக்கிறது இத்தெரு

கிராம சந்தைகளின் கூச்சல்கள் போலல்லாமல்
இலக்கணத்தில் அடைந்துவிட்டதுபோன்ற குரல்கள்
சிலநேரங்களில் உணர்ச்சியற்ற உச்சஸ்தாயியாகவோ
ஆண்பெண் புணர்தலின் சிறு முனகலாகவோ
அல்லது ஒன்றிணைந்ததாகவோ இருக்கலாம்

காகங்கள் பேசிக்கொள்ளும் மதியச்சூட்டில்
தெருவில் அலைந்து அழுது அவள் புலம்புவது
குடியிருப்பின் காவலாளர்களுக்குத் தெரிவதில்லை

விற்பனைக்காரிக் கதறுகிறாள்
எதை விற்கிறாள் என்று எவரும் கவனிக்கவில்லை
அமைதியாக நகரும் வணிக வாகனங்களின் இடையே
கண் மயங்கிக்கிடக்கிறது தெரு
எந்த ஒரு விநியோகமும்
அவளை ஒருபோதும் தொந்தரவு செய்ததில்லை

தெருவின் தொல்லியல் ஞாபகங்களென அலையும் நாய்கள்
பனிசறுக்கலில் காலுடைந்த கூர்க்காவின்
கிழிந்தத் தோள்பையை முகர்கின்றன

நாவல் இலைகளினூடே கசிந்திறங்கும் நட்சத்திரங்கள்
இரவின் மங்கிய சோடியம் விளக்கொளியில்
படிக்கட்டுகளில் சரிய

திரிபுணர்வுகளில் உறங்கதொடங்குபவளின்
நடுக்கத்தில் உயிர்த்திருந்தது அத்தெரு

மீரா மீனாட்சி

பச்சோந்தி குறுங்கதைகள்

0

1. ரத்தத் தீவு

கடவுளைத் திருடி வயிற்றை நிரப்பும் ஒருவன் பாலத்துக்கடியில் ராமர் சிலைகளை அடுக்கிக் கொண்டிருந்தான். அச்சிலைகளில் ஒன்றில் வனத்தில் சீதை தொலைந்த துக்கத்தில் ராமன் அழுது கொண்டிருந்தான். கோணியில் இறுக்கிக் கட்டி இருசக்கர வாகனத்தில் கடத்திச் செல்லும்போது எல்லா திசைகளையும் திரும்பித் திரும்பிப் பார்த்தான். தொலைதூரத்தில் சைரன் ஒலிக்கப் புதருக்குள் வண்டி மறைந்தது. 

பனை மரங்களுக்கிடையே சஞ்சீவினி மலையோடு சிக்கிக்கொண்ட வால் ஹரே ராம ஹரே ராம என்று அலறியது. கோணிக்குள் இருந்த ராமனின் செவிகளில் விழவில்லை. சீதா சீதா என்று ஒலித்த குரல் கோணிக்கு வெளியேயும் கேட்கவில்லை.

திருட்டு போன இடத்திற்கு விரைந்துவந்த காவலாளிகள் பறக்கும் விமானம் மூலம் துரிதமாகத் திருடனைத் தேடினர். கண்ணிமைக்கும் நேரத்தில் வெங்காயத் தாமரைக்குள் ஓடி ஒளிந்துகொண்டான். தண்ணீரில் இறங்கிய காவலாளிகள் தண்டை ஒடித்துப் பார்த்தனர். ஒடிக்க ஒடிக்கத் தண்டு விட்டு தண்டு பாய்ந்தான்.

மிச்ச மீதியின்றி அனைத்துத் தண்டுகளும் உடைந்துவிட்டன. பனையின் உச்சியில் ஓலைகள் கிடுகிடுத்தன. கிறுக்குப் பிடித்த காவலாளிகள் பனையை வேரோடு சாய்த்தனர்.

அவிழ்க்கப்பட்ட கோணியில் இருந்து கடவுளைக் கீழே கொட்டியபோது, “என் நகைகளை எடுத்துக்கொண்டு என்னை மட்டும் உயிரோடு விட்டுவிங்கள்” என்று காலைப் பிடித்துக் கெஞ்சினான் ராமன். 

ஆ… இது ஐம்பொன் சிலை இல்லை; பித்தளை. 

ஏமாற்றமடைந்த காவலாளிகள் சிலைகளைக் கரைப்புதரில் வீசிச்சென்றனர். விட்டால் போதுமென்றிருந்த ராமன் தென்னிலங்கையை நோக்கி ஓடினான். 

கட்டப்பட்ட கைகள் குதத்தில் தொங்கின.

பின்மண்டையைக் குறிவைத்தான் புத்தன். கடலில் மிதந்தது ரத்தத் தீவு.

*  

2. மாறுவேடம்

 கழுத்து நரம்பைக் கோணூசியில் உருவி பாசுபதஅஸ்திரத்தை வளைத்துக்கட்டிய அர்ஜுனன் வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க பசுவின் சாணத்தைக் கோமியத்தில் கரைத்துக் குளிக்கிறான். மண்டையில் குட்டுவைத்த மருத்துவச்சி கோவிட் தடுப்பூசியைப் புஜபலத்தில் குத்தியிறக்குகிறாள். வில்லோடு வந்த வேட்டுவச் சிவன் வேடுவப் பறிகுழியில் பதுங்கி நடுக்கத்துடன் ஒற்றைக் கண்ணால் எட்டி எட்டிப் பார்க்கிறான். அர்ஜுனனின் இருமலால் சிவனின் உடலைக் கவ்வியது காய்ச்சல். வனாந்திரத்தில் எந்தப் பூவும் மணக்கவில்லை. நாநுனிக்கு எந்தச் சுவையுமில்லை என்று பார்வதியிடம் துணுக்குற்றான். துப்பட்டாவை முகக் கவசமாக்கி வயர்கூடையைத் தூக்கிக்கொண்டு மாமிசம் வாங்கச் சென்றாள்.

நீண்ட வரிசையில் தனக்கான வட்டத்தில் நிற்பதை செல்ஃபி எடுத்துத் தன் கணவனுக்கு அனுப்புகிறாள். வலுத்துக் காயும் வெய்யிலில் தலைசுற்றியது. முழு துப்பட்டாவையும் உருவி கண்கள் மட்டும் தெரிய இறுக்கிக் கட்டினாள். அவள் கண்கள் விண்மீனைப்போல் மின்னின. தன் செல்போன் கேமராவில் தன்னை அழகுபடுத்தி முன் நிற்கும் இளைஞனை நோக்கினாள். பின் நிற்கும் வயோதிகனின் செல்போனில்`பார்வதி என்னைப் பாரடி’ ரிங்டோன் ஒலிக்கிறது. அதிர்ச்சியுற்றவள் தன் சுடிதாரை ஒழுங்கு செய்வதுபோல் பாவனை செய்தாள்.

மாறுவேடத்தில் வந்த சிவன் கண்களால் வளையத்தில் இருந்து பார்வதியை இழுக்கப் பார்த்தான். முகக்கவசத்தை மூக்குக்கும் மேல் போடச்சொல்லி சைகை செய்தாள். அவன்மேலே இழுக்கும்போது வாயின் மேற்பகுதிக்குச் சென்றது. உதட்டின் கரும்பள்ளங்களில் பார்வதியைப் பதுக்கினான். தனிமையில் சந்திப்போமா என்றாள். எனக்குக் காய்ச்சல். கொரோனா முடிந்து பார்ப்போமே என்றான். அவள் இப்போது கண்களையும் சேர்த்து மூடிக்கொண்டாள். துப்பட்டாவை அவிழ்த்து முடிந்த கணத்தில் அவளை அடையாளம் கண்டுகொண்டான்.

அப்போது தெருவில் ஒருவன் கிருமிநாசினி தெளித்துக்கொண்டு வந்தான். அப்புகைமூட்டத்தோடு தொலைந்து போனான் சிவன். கொரோனா தடுப்பு உடைகளோடு மட்கும் குப்பைத்தொட்டியின் முனையில் தொங்கிக் கொண்டிருந்தது பாசுபத அஸ்திரம்.

*    

3. மாமிச மஸ்தகம்

 உடல் தசைகளை முறுக்கேற்ற நான்கு தலைகளுடன் அன்ன வாகனத்தில் விரைந்தான் பிரம்மன். சிக்னலின் சாலையோரத்தில் ஒவ்வொரு வாகனத்தையும் இடைமறித்த காவலர்கள் முகக் கவசமற்றவர்களுக்கு அபராதம் விதித்துக் கொண்டிருந்தனர். பதற்றமடைந்த பிரம்மன் அன்னத்தின் சிறகுகளை ஒடித்து முகத்தில் கட்டிக்கொண்டான்.

‘நீங்கள் சொன்ன இடத்திற்கு வந்துவிட்டேன். இதற்குப் பிறகு எப்படி வருவது”. “எங்கள் பணியாள் வந்து உங்களை அழைத்துவருவார்” என்றாள். சிவப்புநிறத் தொப்பி அணிந்த பையன் “வாங்க சார்” என்றான். படிக்கட்டுகள் வழியாகப் பின்தொடர்ந்த பிரம்மன் சுவர்களில் ஒட்டியிருந்த மசாஜ் விளம்பரச் சுவரொட்டிகளைக் கண்டதும் குதூகலமடைந்தான். பணத்தைக் கட்டிவிட்டு அறைக்குள் சென்றவன் மலைமுகட்டில் ஏறிக்குதித்து விளையாடுவதுபோல் பருத்த முலைகளைப் பற்றியேறி விளையாடிக் கொண்டிருந்தான். மிளகு போன்ற மார்க்காம்புகளின் சுவையில் மயங்கிக் கடித்து விழுங்கிவிட்டான். 

‘அடப்பாதகா! என் காம்புகளைக் கொடு… இல்லையேல் உன்னைத் தொட விடமாட்டேன்” என்றாள். “போகும் போதுகொடுத்துவிட்டுப் போகிறேன்” என்றான். “உன்னை இப்படியே விட்டால் என்னையே விழுங்கி விடுவாய். முதலில் என் காம்புகளைக்கொடு” என்றாள். “சரி நீயே எடுத்துக்கொள்” என்றபடி முடிக்கற்றைகளை முகர்ந்தான். இரைப்பையில் கைகளை விட்டுத் துழாவிக் கொண்டிருக்கையில், நறுமணத்தில் ஒவ்வொரு கற்றையாய்க் கடிக்கத் தொடங்கியிருந்தான். ஆவேசமடைந்தவள் பிரம்மனின் ஒரு தலையைப் பிய்த்துவிட்டாள். இனி உனக்கு எந்த வாடிக்கையாளனும் வரமாட்டான் என்று சாபமிட்டான். மேலும், “அது கபாலமாய் மாறி உன் கையைவிட்டு அகலாது இருக்கும். இனி உன் ஆயுள் முழுக்கப் பிச்சை எடுத்துதான் வயிற்றை நிரப்புவாய்” என்றான். ச்சீ போ என்று லிங்கத்தின் மீது எட்டி உதைத்தாள். இடுப்புக்குக் கீழே கைகளைப் பொத்தியபடி அலறி ஓடினான் பிரம்மன். கழற்றிய நகைகளை எடுக்கும் போதுதான் மார்க்காம்புகளையும் கழற்றி வைத்தது அவளுக்கு ஞாபகத்தில் வந்தது. 

பிரம்மனிடம் மன்னிப்பு கோரினாள். பிரம்மனின் மார்புகளில் இருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. காமத்தால் கிள்ளி எறியப்பட்ட தலையை நினைத்து மூன்று தலைகளும் மாட்டுவால் சூப்பை அருந்திக் கொண்டிருந்தன.

*

4. எரியும் நகரம்

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மூச்சுவிடச் சிரமப்படுகிறான் ராமன். சிவப்பேறிய கண்களுடன் உயிருக்குப் போராடும் தன் கணவனைக் காப்பாற்ற சிலிண்டரைத் தேடிச் சென்று விட்டாள் சீதை. மருத்துவமனை எங்கும் தேற்றுவாரற்ற கேவல்கள் காதை அடைக்கின்றன. பெருக்கெடுக்கும் கண்ணீர் கங்கையில் கலக்க, கழுகுகளின் சிறகுகளோ வானத்தை மறைத்திருந்தன. பீதியில் உறைந்த நகரம் அங்கும் இங்குமாய் அலைக்கழிகிறது.

 
சிலிண்டரின்றி ஏமாற்றத்துடன் திரும்பிய சீதை ராமனிருந்த படுக்கையில் வேறு நபர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றாள். இங்கிருந்தவர் எங்கே என்று வினவினாள். மூத்திரப்பையைக் கையேந்தியபடி தப்பிச் சென்றுவிட்டார். எந்தப் பக்கமாகச் சென்றார். படிமேல் ஏறிச் சென்றதாக அங்கிருந்த செவிலியர் சொன்னார். எவ்வளவோ தடுத்துப் பார்த்தோம். எல்லாத் திசையிலும் வளைத்துப் பிடிக்க முயற்சி செய்தும் சுவருக்குள் புகுந்து தப்பிவிட்டார். சுவருக்குள் நுழைந்து பிடிக்க முயன்ற எங்கள் சீனியர் மருத்துவருக்கு மண்டை உடைந்தது தான் மிச்சம். யாரும்மா அந்த அதிசய மனிதர். அட நீங்க வேற… வேலைக்குப் போகாமல் தினமும் குடித்துவிட்டு என்னை அடிக்கிற மனுசன் அவர். ஒன்னுக்கும் உதவாத ஆளு அவர். சரி சரி அதெல்லாம் பேசுற நேரமா இது. படியேறி எங்கு சென்றார். வானத்தில் குதித்துவிட்டார். என்ன சொல்றீங்க. அவர் பறவையா என்ன? சும்மா விளையாடாமல் உண்மையைச் சொல்லுங்கள். அதே படுக்கைக்குத் துணையிருக்கும் பெண்ணொருத்தி வலி தாங்க முடியவில்லை. மூச்சுவிட முடியவில்லை என்று முனகியபடியே போனார். மேலும் சும்மா வெட்டியாகப் பேசி நேரத்தை வீணாக்காமல் மேகங்களில் தேடு என்றாள். குழப்பத்துடன் படியேறிச் சென்றாள் சீதை. விரல் தொடும் சுவரை உற்றுப் பார்த்தபடியே மொட்டை மாடிக்குச் சென்றாள். மேகமற்ற வானம் செந்நிறம் பாரித்திருந்தது. உச்சிக்கிளையின் நடுவே கழுத்து மாட்டிக்கொண்டது. பின் கிளையொடிந்து டைல்ஸ் தரையில் தலைகீழாய் விழுந்தான். தரையில் மோதிய ஒலியில் நகரம் அதிர்ந்தது. சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வரவில்லை. தன் தோளில் தூக்கிச் சென்றாள். சுடுகாட்டில் பிணத்தை எரிக்கக் கேட்ட பணம் சீதையை விழிபிதுங்கச் செய்தது.  பின் கங்கைக் கரையோரம் மணலைத் தோண்டி புதைத்துவிட்டு வீடு சென்றாள்.


மறுநாள் காலையில் பறக்கும் விமானம் கங்கையைச் சுற்றியலைவதைத் தொலைக்காட்சியில் பார்த்தாள் சீதை. கரையொதுங்கிய பிணங்களைக் கண்டு வாயைப் பொத்தி அழுதாள். மல்லாக்கக் கிடந்த உடலை மிருகம் குதறிக்கொண்டிருந்தது. படித்துறையில் மிதந்த ராமனின் கண்களைக் காகம் கொத்திக் கொண்டிருந்த வேளையில் கழுகொன்று அயோத்தியை நோக்கிப் பறந்தது. கனம் தாங்காது விழுந்த கழுகும் ராமனும் சரயு நதியில் நீராட இடைவிடாது எரிகிறது இரவும் பகலும். 

5.எலும்புக் குவளை

மாட்டு வத்தல் வாங்க கட்டை பையை எடுத்துக்கொண்டு சந்தைக்குச் சென்றான் தர்மன். பேருந்தில் செல்லும் போது கறி மணக்கும் கட்டப்பையை அருவருப்பாகப் பார்த்து மூக்கைப் பொத்தும் சக பயணிகளில் சிலர் சந்தையில் கூடுதல் எலும்புகளைக் கேட்டு வாங்கிச் செல்பவர்கள். அதிலும் முருகப்பத் தேவர் சந்தைக்கு உள்ளே வராமல் கிலோ கணக்கில் கறியும் வத்தலும் வாங்கிச் செல்பவர். அடையாளம் கண்டுகொள்வார்கள் என்பதால் வெள்ளைத்துண்டால் முக்காடு போட்டு முகத்தையும் மூடிக்கொள்வார். ஒருமுறை தெருவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான் தர்மன். எல்லைக்கு அப்பால் பறந்த பந்து முக்காட்டு மண்டையைப் பதம் பார்த்துவிட்டது. அய்யோ என்று துண்டைக் கழற்றும் போதுதான் தெரிந்தது அது முருகப்பத் தேவர். பந்தை எடுக்கப்போன தர்மனை, அவர் பையில் இருந்து வந்த வத்தல் வாசம் அள்ளிச் சென்றது. மோப்பம் பிடித்ததைக் கண்டுகொண்டவர் விடுக்கென்று பையைத் தூக்கிக்கொண்டு திரும்பிக்கூடப் பார்க்காமல் விருட்டென்று சென்றுவிட்டார்.

அன்று சந்தையே தெரியாத அளவுக்குக் கூட்டம் நிரம்பி வழிந்தது. கொரோனா இரண்டாவது அலை உயிர்களைக் காவு வாங்குவது தெரியாமல் ஒருவரோடு ஒருவர் உரசிக்கொண்டிருந்தனர். ஒருவன் மாஸ்க்கை வாய்க்கு மேல் தூக்கியபடி எச்சிலைத் துப்பினான். துண்டால் முகத்தை மூடியிருந்தவன் மூக்கைச் சிந்தி சந்தை மீது எறிந்தான். கறி வாங்காமல் வீடு திரும்ப நினைத்தான் தர்மன். வத்தலற்ற உணவு தொண்டையில் இறங்காது என்பதால் கூட்டம் காலியாகும் வரை இருந்து வாங்கி விட்டுத்தான் வந்தான்.

எலும்புக் குவளையில் கொதித்துக் கொண்டிருந்தது கன்று. முதல் மிடறு உதட்டை எரிக்க, மின்விசிறியில் ஆறவைத்தான். மிதமான சூட்டில் அருந்தி, சலங்கை குலுங்க வாலை அசைத்துச் செல்லும் திரௌபதியை இறுக்கிக் கட்டியணைத்தான். அவள் உடலெங்கும் வத்தல் வாசம். கொம்புகளைப் பிடித்துக் காளையை அடக்குவது போல் தர்மனைத் தள்ளினாள். தள்ளிய உடலை பத்துவிரல்களால் இழுத்துக் கவ்வினாள். இருவரும் வாய் முத்தத்தில் ஒருவரை ஒருவர் விழுங்கிக் கொண்டிருந்தனர். தர்மனும் திரௌபதியும் நான்கு பேருக்குத் துரோகம் இழைத்ததாய்த் தெருவெங்கும் ஒரே புலம்பல்.

***

பச்சோந்தி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் பச்சோந்தியின் இயற்பெயர் ராச.கணேசன். கணையாழி, வம்சி, ஆனந்த விகடனில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். தற்பொழுது நீலம் இதழில் உதவி ஆசிரியராகப் பணி புரிகிறார். வேர்முளைத்த உலக்கை, கூடுகளில் தொங்கும் அங்காடி, அம்பட்டன் கலயம், பீஃப் கவிதைகள் ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள்.

மின்னஞ்சல் – poetpacho@gmail.com


டெல்டா ஊதாரி (புதிய தொடர்)

0

ஆட்டங்களின் மூன்றாம் சாமம்

சிவகுமார் முத்தய்யா

ஞ்சை மாவட்டம்  1991 வரை மேற்கே  வல்லம்  தொடங்கி விரிகுடா கடலின்  தென்கிழக்கு  கழிமுகத்துவாரமான கோடியக்கரை வரையிலான பெரிய மாவட்டமாக இருந்தது. அப்போது மேலத்தஞ்சை என்றும் கீழ்தஞ்சை என்றும் அழைக்கப்பட்டது. நீடாமங்கலத்தில் இருந்து கிழக்கு பகுதிகளான நீடாமங்கலம், குடவாசல், மன்னார்குடி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை வேதாரண்யம்,  கோடியக்கரை வரை  அவ்வாறு அழைத்தனர். 91-ல் தான் இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன.  கிழத்தஞ்சை பகுதிகளை பொறுத்தவரை தை, மாசி, பங்குனி இந்த மூன்று மாதங்களும் அறுவடை காலங்கள். சித்திரை தொடங்கிவிட்டால் கோவில் திருவிழாக்களும் தொடங்கிவிடும். கடந்த ஆண்டும், இந்த வருடமும் கொரோனாவினால் தடை நீடிக்கிறது. இந்த நேரத்தில் கடந்த காலங்களின் திருவிழா கொண்டாட்டங்களையும், நாட்டுப்புற கலைஞர்களின் நினைவுகளையும் அசைபோடுகிறது மனசு. 

கோடைக்காலத்தின்  பகல்நேர வெயிலைக் கண்டு அஞ்சி உள்ளடங்கிக் கிடக்கும் கிராமத்து ஜனங்கள் மாலைப்பொழுதில் சட்டென்று உற்சாகம் அடையத் தொடங்கி விடுவார்கள். வயலில் வேலை பார்த்தவர்களுக்கு, பங்குனியும், சித்திரையும் ஓய்வு. இந்த காலத்தில்தான் குடும்ப விழாக்களைக் கொண்டாடுவது, கோவிலுக்குத் திருவிழா நடத்துவது என ஒரே சந்தோஷம் பெருகும். கொண்டாட்டத்தின் முகவரியாக கிராமங்கள் இருந்தன. இது தமிழ்நாட்டிலுள்ள எல்லா கிராமங்களுக்கும் பொதுவான அம்சம்தான். இதில் ஒவ்வொரு மாவட்டம் அல்லது வட்டாரம் என்று தனித்த அம்சங்கள் இருந்தன. ஏன் இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.  இப்படி மதுரை மாவட்டத்தில் கொண்டாடப்படும் முனியாண்டி சாமி திருவிழாவும், தஞ்சாவூர் மாவட்டத்தில் கொண்டாடப்படும் பூக்கார மாரியம்மன் கோவிலில் திருவிழாவும் வேறு வேறு அம்சங்களுடன் வாழ்க்கையும் விவசாயத்தையும் சார்ந்து மிக நெருக்கத்தில் வைத்துக் கொள்ளும் ஒரு முனைப்பின் விளையாட்டு.

கிராமங்களில் திருவிழாவின் போது நடத்தப்படும்  நிகழ்ச்சிகள்  கலைகளின் வளர்ச்சிக்கும் அதே நேரத்தில்   மக்களின் உள்ளார்ந்த ரசனையை ஊக்குவிக்கும் பொருட்டு நிகழ்த்தப்படும். அல்லது பொழுதுபோக்கை மேம்படுத்தும் விதமாகவும் அமைகிறது.  

கிராம்புறங்களில் இன்றும் நாட்டுப்புறக் கலைகளுக்கும், பாடல்களுக்கும் எப்போதும் குறையாத மவுசு உண்டு. மக்களோடு வாழ்வியலில் வலி நிரம்பும் பாடல்கள் எப்போதும் கூடியிருப்பவை. சமூகத்தில், பல்வேறு பணிகளில் ஈடுபடும் ஒவ்வொரு அங்கத்தினரும் தங்களுக்கு எனத் தனிப்பாடல்களை உருவாக்கிக் கொண்டனர். வயலில் வேலை செய்வோர் தெம்மாங்கு பாடல்கள், நடவு செய்யும் பெண்களுக்கு என்று தனித்த மெட்டுகளில் பாடல்கள், பெண்ணை மையம் கொண்டு கும்மிப்பாடல்கள் கிராமத்தில் நிகழ்வுகளின் போது இன்றும் கூட பருவம் எய்திய இளம்பெண்களை முன்வைத்து ‘வயதுக்கு வருதல்’ என்று சொல்லப்படும் சடங்கின் போது பாடப்படுகிறது. பருவம் எய்திய பெண் ஆண்களிடம் எச்சரிக்கையுடன் சமூகத்தில் எவ்வாறு நடந்து தன் பிறந்த குடியைக் காத்து தன்மானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் அர்த்தத்தில் இந்தப் பாடல்கள் அமைந்திருக்கும். ஆனால் நடவுப்பாடல்கள் உழைப்பின் ஊடாக பாடப்படுவது. அப்போது பாடல் பாடுவது மூலம் வேலை அலுப்பைப் போக்கிக் கொள்ளவும், தனது குமுறல்களை வெளிப்படுத்தும் நோக்கிலும் தங்களே மெட்டுக்கட்டி, தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைப் போட்டு கிராமத்து கவிதாயினிகள் உலவிய காலம் அது. சிலர் புதுமெட்டுக்களை கூட உருவாக்கியிருக்கிறார்கள். அது பதிவு செய்யப்படவில்லை.

இந்தப் பாடல்கள் எல்லாமே செவிவழியாகக் கேட்கப்பட்டு, ஒருவர் மூலம் மற்றொருவருக்கு பரவியது என்றே சொல்லலாம். ஒவ்வொரு கிராமத்திலும், பாடல் பாடுவதற்கு என்று சில பாடகர்களும், அதேபோல இரவு நேரங்களில் கதை சொல்லுவதற்கு என்று சில கதைச்சொல்லிகளும் இருந்தார்கள். இந்த மரபின் நீட்சியாகவே நாட்டுப்புற இசை என்கிற ‘வடிவம்’ உருவானது. அதேபோல பாடப்படும் பாடலுக்கு பின்னணியாக  மண் பானைகள் மற்றும் பறையிசை கொண்டு தாளம் போட்டு  பாடும் வழக்கமும் உருவானது. பறையடித்துக் கொண்டே பாடுவது. தவில் மற்றும் ஏனைய வாத்திய கருவிகள், நாதஸ்வரம் போன்ற குழலிசைக் கருவிகள் உருவாக்கும் ஓசையை கொண்டும் பாடல்கள் பாடப்பட்டன. இவையெல்லாம் வாய்மொழிப் பாடலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது என்கிறார்கள் இசை ஆய்வாளர்கள்.

இவை ஒருபுறம் இருக்க, தமிழ் சினிமாவின் தாக்கத்தினால், நாட்டுப்புற  கலைகள் மீது மக்களுக்கு ஈர்ப்பு குறைந்து போனது. இந்நிலையில் தஞ்சாவூர் பகுதியில் நாதஸ்வரம் மற்றும் மேளம் வாசிப்பில் புதுபாணி உருவாக்கப்பட்டது. அது தஞ்சாவூர் ‘நைய்யாண்டி’ மேளம் என்றும், அதில் கலவையாக கரகாட்டம், மயிலாட்டம், காவடி ஆட்டம், குறவன் குறத்தியாட்டம் என்ற ‘வகைபாட்டில்’ நாட்டுப்புற நிகழ்வு ஒழுங்குப்படுத்தப்பட்டு கிராமக் கோவிலில் திருவிழாக்களில் நிகழ்த்தப்படுகிறது.  இது 1960 காலகட்டங்களுக்குப் முன்பு திருவிழாவில் மேடையேறி வந்த புராண இதிகாச நாடகங்களுக்கு மாற்றாகவும், மக்களுக்கு ஏற்பட்ட அலுப்பின் காரணமாகவும், இந்த நாட்டுப்புறக்கலை வடிவத்துக்கு ஆதரவு கூடியது. “தஞ்சாவூர் குறத்தி ஆடினா தண்டையார்பேட்டை கிளுகிளுக்கும்” என்ற சொலவடை கூட உண்டு. அந்தளவுக்கு, குறவன் குறத்தியாட்டத்தையும், நையாண்டி மேளத்தையும் இன்றும் கூட ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர் போன்ற பகுதிகளில் பெயர்பெற்ற  நாட்டுப்புறக் கோஷ்டியினர் இருந்தார்கள்.  கோடைக்கால இரவுகளில் நான் சிறுவனாக இருந்த இருந்தபோது 10 மைல்களுக்கு  மற்றும் அப்பாலிருக்கும் சுற்றுவட்டார கிராமத்திலிருந்து  நையாண்டி மேளம் குறவன் குறத்தி ஆடிப்பாடும் எசப்பாட்டும் கேட்டுக்கொண்டே இருக்கும். கிட்டத்தட்ட இத்தனை மைல் தூரத்தில் இருந்து கேட்கும்போதே உற்சாகம் பீறிட்டுக் கொள்ள எழுந்து உட்கார்ந்து கொள்வேன்.

திருவாரூர் சுற்று வாட்டார கிராமங்களில் அமைந்துள்ள அங்காளம்மன், பெரிய நாயகி, ஐய்யனார், மதுரை வீரன், நொண்டிவீரன், பாவடைராயன், மாரியம்மன், பெத்தரண்ணா சுவாமி, காளியம்மன் கோவில்களில் உள்ள நிகழ்வுகளுக்கு நாட்டுப்புறக் கச்சேரிகள் அவசியம் இருக்கும். இதனைத் தவிரவும் சிலவருடங்கள் வள்ளித்திருமணம் நாடகம் நடக்கும். ‘மேயாத மான்’ என்று ஒரே பல்லவியை பாடிப்பாடி தூங்க வைத்துக் கொண்டிருப்பார்கள். அல்லது அரிச்சந்திரா மயான காண்டம் போடுவார்கள். அரிச்சந்திரா புராணத்தின் இறுதிக்கட்ட நிகழ்வான மயானத்துக்குச் செல்லும் காட்சியைத் துவங்கி, அரிச்சந்திரன் வெட்டியான் வேடம் தரித்து ‘நான் ஆதியிலும் பறையன் இல்லை. சாதியிலும் பறையன் இல்லை; என நான்கே மூக்கால் கட்டையில் பாடுவதை வயதான பெரியவர்கள் மூக்கு சிந்தியபடி பாடிக்கொண்டு இருப்பார்கள்.  பெத்தராண சுவாமி பெரியநாயகி அம்மன் கோவில்களில் போடப்படும் நாடகங்கள் லவகுசா அல்லது துரியோதனன் கூத்துக்கள் ஆகும். இதில் அதிகம் பாடல்களிலே பல விஷயங்களை விவரிப்பார்கள். வசனம் மிகக் குறைவு. அதிலும் இதில் நடிப்பவர்களில் பெண்களே கிடையாது. நாடகத்துக்கு இடையிடையே வந்து ஆடிப்பாடிச் செல்லும் ‘பபூன்’ மட்டும் கொஞ்சம் சிரிக்க வைக்கும் நோக்கில் ‘ஹாஸ்யம்’ பண்ணுவார். அதுவும் சமயத்தில் சொதப்பலாகவே இருக்கும். இந்நிலையில் இந்த நாடகங்களுக்கு, இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு உருவானது. இந்நிலையில் தான் இளைஞர்கள் இரவு நேரங்களில் வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு அங்கங்கே சுவற்றில் ஒட்டப்படும் போஸ்டர் விளம்பரங்களை பார்த்து ஆட்டம் பார்க்க கிளம்பத் தொடங்கினார்கள்.

நான் ஆட்டம் பார்க்கப்போன அனுபவமே சுவாரசியமானது. நான் வசித்து வந்த கிராமத்திலிருந்து தெற்கே 16 கி.மீ தொலைவில் இருந்த கூத்தாநல்லூரில் ஆட்டம் நடப்பதாக எங்களது கிராமத்து இளைஞர்கள் முதல்நாளே இதுகுறித்துப் பேசிக் கொண்டார்கள். அப்போது நான் பதினோறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஐந்து வாடகை சைக்கிள் எடுத்து அதில் வண்டிக்கு இருவராக அதுவும் வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் கிளம்புவதாக திட்டம் உருவானது. அதன்படி இரவு 9 மணிக்குள் பத்துபேரும் சாப்பிட்டு விட்டு, பிள்ளையார் கோவில் திடலுக்கு வந்துவிட வேண்டும். வந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு இரவு வாடகையான 2 ரூபாயை முன்பணமாக கொடுத்தால்தான் சைக்கிள் தருவார்கள். அதன்படி கிளம்பினோம். ஐந்து சைக்கிளில் மன்னார்குடி சாலையைப் பிடித்து ஆட்டம் நடக்கும் மதுரைவீரன் கோவில் முகப்புக்கு போய் சேர்ந்தபோது இரவு பதினோரு மணி. அப்போது வரிசையாக கட்டப்பட்டிருந்த கூம்புவடிவ ஒலிபெருக்கியில் மேளம் வாசிக்கப்படும் ஓசை மட்டும் கேட்டது. கலர்கலரான பல்புகள் எரிய வீரன் கோவில் பின்னே இருந்த வயலைச் சுத்தப்படுத்தி  பார்வையாளர்கள் அமர  மைதானம் போல் ஆக்கியிருந்தார்கள்.

நாட்டுப்புறக் குழுவினர் சுற்றிவந்து ஆடும் வகையில் வட்டமாகக் கயிறு கட்டியிருந்தார்கள். அதில் வேறு நபர்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை.  தடுப்புவேலி வேறு அமைக்கப்பட்டிருந்தது.   நான்கு புறங்களிலும் பார்வையாளர்கள் அமரும் வகையில் மணல் கொட்டி ஒழுங்குப்படுத்தப்பட்டு இருந்தது. கொஞ்சம் தூரத்திலிருந்து மூன்று பெண்கள் கூந்தலோடு  ‘மயில்கொண்டை’ வைத்துக்கொண்டு, ஜிகினாக்கள் மின்னும்  குள்ளப்பாவாடை அணிந்து கால்களில் சலங்கையைக் கட்டிக்கொண்டு  நடந்து வந்தார்கள். அப்போது விசில் சத்தம் விண்ணைப் பிளந்தது. நாங்கள் சைக்கிளை தூரத்தில் நிறுத்திவைத்துக் கொண்டே பார்த்தோம். விழாக்குழுவினர் எங்களை அந்தப் பகுதியில் சைக்கிளை நிறுத்த வேண்டாம் என்று விரட்டினார்கள்.  எங்களில் மூத்தவனாக இருந்த வெங்கடேசன் சைக்கிள் அனைத்தும், வாடகைக்கு எடுத்தது, அதுவும் வீட்டுக்குத் தெரியாமல் எடுத்தது. இப்போதே வீட்டில் தேடத்தொடங்கியிருப்பார்கள். ஆகவே சைக்கிள் திருட்டு போய்விட்டால் தொலைந்தோம் என்று கிலியை ஏற்படுத்தினான்.

இதற்கு என்ன செய்வது என யோசித்தபோது ஐந்து சைக்கிளையும், ஒருவர் பார்த்துக்கொள்ள வேண்டும், அரைமணி நேரத்துக்கு ஒருவர் மாற்றி ஒருவர் பார்த்துக்கொள்ள மற்றவர் ஆட்டம் பார்க்க முடிவானது. கரகத்தை தலையில் வைத்துக்கொண்டு, மூன்று ஆட்டக்காரிகளும் ஆடிக்கொண்டிருந்தார்கள். இது கிட்டத்தட்ட இரவு 1 மணிக்கு மேல் நடந்தது. தவில் வித்துவான்கள் 6 பேரும் மாற்றி மாற்றி அடித்து அவர்களைச் சோர்வடையச் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.

இதற்கு இடையே மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடி ஆட்டம் நடந்தது. பபூன் மட்டும் அவர்களிடையே வந்து ஆடி ஆட்டகாரிகளை சில்மிஷம் செய்து பாட்டு பாடினார். அவனுக்கு பதில் ஆட்டம் போட்டு அந்த ஆட்டக்காரிகளும் உதைத்து, திட்டி ருசி கூட்டினார்கள். அவ்வப்போது பபூன் நாகராசன்,  குறவன் மாணிக்கவேலையும், குறத்தி கனகாவைப் பற்றி வர்ணனை செய்துக் கொண்டிருந்தார். கட்டழகி! மெட்டழகி! அரேபிய குதிரை என குரல் கொடுத்து அழைத்தார். இடைவேளை விடப்பட்டது. அதுவரைக்கும் ஏழுபேர் மாற்றி மாற்றி சைக்கிளுக்கு காவல் இருந்தனர். அதன்பிறகு என்முறை வந்தது. இருபது நிமிடத்துக்கு பிறகு ஆறடி உயரத்தில் கம்பீரமாக குறவனும்-குறத்தியும், ஒருவருக்கு ஒருவர் இளைத்தவர்கள் இல்லை என ஆட்டக்களத்துக்கு வந்தபோது விசிலும் இளைஞர்களின் கூக்குரலும் அதிர்ந்தன. கிராம நிகழ்ச்சிப் பொறுப்பாளர் ஒலிவாங்கி முன்பாக வந்துநின்று இங்கே நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியை வேடிக்கைப் பார்க்க வந்திருக்கும். உங்களுக்கு பணிவான விண்ணப்பத்தை வைக்கிறேன். தயவுசெய்து எவரும் குறத்திக்கு பணம் குத்திவிட ஆசைப்பட வேண்டாம். அப்படி மீறினால் எங்கள் கிராம நிர்வாகத்துக்கு பதில்சொல்ல வேண்டிவரும் என எச்சரிக்கை விடுத்தார். இதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் ஆங்காங்கே நின்றபடி குரல்கொடுத்துக் கொண்டும் விசிலடித்துக் கொண்டுமிருந்தார்கள். சபைக்கு வணக்கம் செய்து குறவனும் குறத்தியும் ஆடத்தொடங்கிய போது மூன்றாம் ஜாமம் தொடங்கியிருந்தது. என்னுடைய அரைமணி நேர சைக்கிள்  காவல் முடிந்து ஆட்டத்தைக் காண வேண்டும் என்ற   ஆவலில் அருகில் போய் நின்றேன். கூடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டத்தில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் சமஅளவில் இருந்தார்கள். ஒருவர் முகத்தில் கூட தூக்கக்களை தெரியவில்லை. குறவனும்-குறத்தியும் எதிர்பாட்டு பாடி எதிராட்டம் ஆடுவது, மேளக்காரர்கள் அடித்த மேள இசையும், அவ்வளவு நேர்த்தியும் சுவையுமாக இருந்தது. குறத்தி கனகா எம்பி குதிக்கும்போது மேலேறிய ஆடையைப் பார்த்து வயதானவர்கள் வாய் பிளந்தார்கள். அவர்கள் ஆடிய ஆட்டத்தில் பூமியே குலுங்கியது போலிருந்தது. அவர்கள் காலிலிருந்த சலங்கையில் இருந்து முத்துக்கள் தெறித்தன. குறவன் – ‘கணீர்’ குரலில், சினிமா பாடல்களை சேர்த்தும், பிரித்தும் பாடினார். இப்படியாக காலை 5 மணியோடு, வாழைக்காய் வெட்டுவது, தேங்காய் உடைப்பது, தீக்குள் பாய்வது என சாகசங்களோடு நிறைவுற்றது. நாங்கள் ஐந்து சைக்கிளில் ஊருக்குள் நுழைந்தபோது ஊரே திரண்டு நின்றிருந்தது. அதன் பிறகு வீட்டில் ‘நல்ல’ கவனிப்பு.

இந்த குறவன் -– குறத்தியாட்டம் என்பதே நரிக்குறவர் இன மக்களின் ‘பேச்சை’ மையப்படுத்தி அவர்கள்போலப் பேசி சாமியோவ்.. சாமி்.. என்று குரல் எழுப்பி, பாட்டு பாடும்போது அது அழகாகவும், பார்க்க வேடிக்கையாகவும் அமைந்து விடுகிறது என்கிறார் நாட்டுப்புற இசையை இருபது வருடங்களுக்கு மேலாக நடத்தி,  பல கோஷ்டிகளோடு ஒருங்கிணைந்து நிகழ்ச்சி நடத்தி வரும் தவில் வித்துவான் அ. குமரேசன், தஞ்சாவூர் நகரத்தில் குறவன் – குறத்தி ஆட்டத்துக்கு என்று ஒருபகுதியே அப்போது இருந்ததாக சொல்கிறார்கள். அங்கு எப்போதும் தவில் பயிற்சி நடக்கும். கிளாரிநெட் ஊதி இரவு பகலாக பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார்கள். அதேபோல குறத்தியாக ஆடி ஓய்வு பெற்றவர்கள்  இதனைக் கற்றுக்கொண்டு ஆட விரும்பும் ஆண், பெண்களுக்கு பயிற்சியும் கொடுத்தார்கள்.

இது என்னவோ, பொழுதுபோக்கு ஆட்டம், கேலிக்கூத்து என்று நினைத்து விடாது இருக்க, இதிலும் சில நுட்பங்களையும், ஆட்ட முறைகளையும் கையாண்டார்கள் என்கிறார் எழுத்தாளர் சி.எம். முத்து. எந்தக் கலையாக இருந்தாலும் ‘சரி’ அது தனக்கு உரிய ஒரு வடிவத்தை தகவமைத்துக் கொள்ளும்போது, அது தனக்கான உள்ளடக்கத்தையும் இயல்பாகவே பெற்றுக்கொள்ளும் என்பது இதற்கு பொருந்தும்.

இந்த ஆட்டத்துக்கு மக்கள் மத்தியில்  நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றது. இந்தக் கலையை கற்றுக்கொள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் இடையே ஈர்ப்பு ஏற்பட்டது. அதன்படி தஞ்சாவூர் வட்டாரத்தைக் கடந்து மதுரை மாவட்டத்திலும் அது சுற்றியுள்ள பகுதிகளிலும், நாட்டுப்புறக் கோஷ்டியினர் உருவானார்கள். திருவாரூர் மாவட்டம் எட்டியலூர் என்ற பகுதியில் இருந்த ‘மானங்கணி’ என்ற நாட்டுப்புற கலைஞர். மிக திறமையான ஆட்டக்காரர். இவருடைய இயற்பெயர் கணேசன். ஆனால் மிக மூர்க்கமான ஒரு ஒழுங்கில் அசுரவேகத்தில் வானுக்கும், பூமிக்குமாக எம்பிக் குதித்து, இவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்துவிட்டு, மக்கள் ‘மானங்கணி’ என்று அழைத்தார்கள். அதனை தனது பட்டமாகவே இவர் வாரித்துக் கொண்டார். இந்த ஆட்டத்தை தனக்கே உரித்தான பாணியில் ஆடும் வித்தகர்கள் நிறைய பேர் உருவானார்கள். தஞ்சாவூர் சித்ரா, ஒரத்தநாடு செடிபவுனு, புதுக்கோட்டை மாலதி, பொய்யூர் கஸ்தூரி, திருச்சி ரமா, அதுபோல வேளுக்குடி ரமேஷ், சீதனங்கட்டளை கண்ணப்பன், தஞ்சாவூர் ஜெயகுமார், மன்னார்குடி காமராஜ், வலங்கைமான் தனபால் என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இப்போது இவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. காரணம் எல்லா நாடடு்ப்புற மண்ணின் கலைகளுக்கு சவாலாக சினிமா இருப்பதால் இந்த ஆட்டத்தை வெகுஜன மக்களை கவரவும், குறிப்பாக இளைஞர்களை ஈர்க்கவும், ஆபாசம் இதனுள்ளே புகுத்தப்பட்டது. தகாத வார்த்தைகளில் வர்ணிப்பது. இரட்டை அர்த்தப் பாலியல் பேச்சுகள் என அந்தக் கலையை வேறு ஒரு தளத்துக்கு இட்டுச் சென்று இருக்கிறது. ஆபாசமாக ஆடவும், பேசவும் தயங்கும் ஆட்டக்காரர்கள், தற்போது இந்தக் கலையை தவிர்த்து இருக்கிறார்கள். சாதாரண மக்களின் ரசனைக்கு ‘தீனி’ போடுவதாக இரட்டை வசனங்கள் திணிக்கப்படுகின்றன என்று நாட்டுப்புற ஆய்வாளர்கள் வருத்தமடைகிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மேடையை ஆக்கிரமித்து இருந்த புராண இதிகாச அம்சங்களைக் கலைத்து, கலகக்குரலாக வெளிவந்த நாட்டுப்புறக்கலை மெல்ல சிதைந்து கொண்டிருக்கிறது. மூன்றாம் ஜாமங்களில் சலங்கை அதிர ஆடி இளைஞர்களின் இரவுகளை களி கொள்ளச் செய்த குறத்திகளின் நடனம். காற்றின் அலைவரிசைகளில் உதிர்ந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

(தொடரும்)
***

சிவகுமார் முத்தய்யா, நெற்களஞ்சியமான கீழத்தஞ்சை திருவாரூர்- தண்டலைச் சேர்ந்தவர். விவசாயம் சார்ந்த மக்களின் வாழ்வியலை நுட்பமாக எழுதி வருகிறார். மருத நிலம் குறித்த கதையாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கதை, கவிதை, கட்டுரை என இது வரை ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல் – muthaiyasivakumar@gmail.com

ஓவியம்– 2 (கலை, வெளி, இசை & ஓவியம்)நூல் அறிமுகம்

0

வேதநாயக்

கலையென்பதே ஒரு அகத்தேவைதான் என்று நாம் உணரும்பொழுது அதன் உண்மை உபயோகம் புலப்படும்.

  • – கணபதி சுப்பிரமணியம்

ஓவியம் தேடல்கள், புரிதல்கள் முதல் தொகுதிக்கு பிறகு வெளியாகியிருக்கும் இரண்டாம் தொகுதி அதே பெயருடன் காலம், வெளி, இசை, ஓவியம் என்ற துணை தலைப்பு அணிந்து வந்திருக்கிறது. கணபதி சுப்பிரமணியம் தனது முதல் பாகத்தில் வெளிப்படுத்தாத பல விஷயங்களை இப்புத்தகத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்.

பொதுவாக ஓவியம் குறித்து எழுதப்படும் பல பெரும்பான்மையான நூல்கள் ஓவியர்களைப் பற்றியோ, ஓவிய பாணிகளைப் பற்றியோ, ஓவியங்கள் தீட்டப்பட்ட காலங்களைப் பற்றியதான தரவுகளின் அடிப்படையிலேயே அமைந்திருப்பது தெரிந்தது தான். ஆனால் இவரது நூல் ஓவியம் பற்றிய அசாதாரண விஷயங்களை மிகத்தெளிவாக எளிய சிறுசிறு வார்த்தைகளாகப் பேசுகிறது என்பதே இந்நூலின் ஆகப்பெரும் பலமான ஒன்று. இயல்பிலேயே ஓவியராக இருக்கும் ஒருவர் ஓவியங்களைப் பற்றி தான் எழுதுவதை விரும்பாத பலர் இருப்பது தெரிந்ததே. கணபதி சுப்பிரமணியம் அந்த வரிசையில் இல்லை என்பது சந்தோஷம் அளிக்கக் கூடியது.

காண்பியல் திறனின் மூலம் அது குறித்த பார்வையின் அனுபவத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தும் கூரிய நோக்கையும், ஓவியம் குறித்த தேடலையும் ஆழ்ந்த பார்வையையும் புத்தகத்தில் அடக்குவதென்பது கட்புலன் நோக்கில் சாத்தியமற்ற ஒன்று. ஓவியமானது அதை அணுகும் முறையில் ஒவ்வொருவருக்குமான மன அமைப்பைச் சார்ந்தே அது குறித்த புரிதலையும் விவரிப்பது சிலருக்கு கடினமாகவும், வெகு அரிதாகச் சிலருக்கு இலகுவாகவும் இருக்கும். மிகவும் எளிமையாக தான் உணர்ந்தவற்றை தெளிவுபடக் கூறுகிறார் கணபதி சுப்பிரமணியம்.

புரிதல், அனுபவம், பயணம்,சிந்தனை என்று நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது இந்நூல். புரிதல் எனும் முதற்பகுதியில் சுட்டப்பட வேண்டியதாக இருப்பது ஒவியத்தின் கட்டமைப்பு குறித்த பகுதி. இதில் சொல்லப்படுகின்ற இப்பத்தி நல்ல உதாரணம் – ”ஒரு வடிவமைப்பு சார்ந்த அணுகுமுறையில் (Design Approach) காணும் பொழுது கட்டமைப்பு என்பது எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை நாம் காணலாம். மிக அதிக ஒளித்திண்மை கொண்ட நிறம் வெள்ளை நிறமாகவே தோன்றும், அதுபோல ஒளித்திண்மை முற்றிலும் அற்ற நிலை கருப்பு நிறமாகத் தோன்றும். இவற்றிற்கு இடையே எண்ணிலடங்காத அளவுகளில் இந்தத் திண்மை உண்டக்கப்படலாம்.

ஒரு ஓவியத்தில் இதுபோல எண்ணற்ற வகையில் ஒளித்திண்மை உபயோகிக்கப்படும் நிலையில் ஒருவித வழுக்கும் (Slippery) தன்மையினை இந்த தனிமத்தில் ஏற்படுத்தி விடும். ஒரு சறுக்கு மரம் எவ்வாறு தொடர்ந்து மேலிருந்து கீழ்வரை சீராக இறங்குகிறதோ அதுபோலவே ஓவியமும் நமக்கு எந்தவித பிடிப்புமின்றி தோன்றும். அதற்கு மாறாக கருமையில் இருந்து வெண்மை என்னும் இரண்டு திண்மைகளுக்கு இடையில் குறிப்பிட்ட ஐந்து திண்மைகளை மட்டுமே நாம் ஓவியத்தில் உபயோகித்தோமேயானால், அது ஒரு படிக்கட்டினைப் போல ஸ்திரமான வேறுபாடுகளைக் கொண்டு படிப்படியாக தீர்க்கமாக நம்மை அந்த வண்ணத் தொகுப்பினிற்குள் பயணிக்கச் செய்யும். நாம் கண்களை ஆங்காங்கே நிறுத்தி அந்த வேறுபாடுகளை தெளிவாக அனுபவிக்கச் செய்து வலுவானதொரு கட்டமைப்பினை ஓவியத்திற்கு அளித்து விடுகிறது.

இசைக்கும் ஓவியத்துக்குமான நெருங்கிய தொடர்பு பற்றி குறிப்பிடப்படும் பகுதி வண்ணங்களைத் தொகுக்கையில் (மேலும் மேலும் பரப்பில் ஏற்றப்படும் நிறங்கள்) நிகழும் செயலும் இசைக்கோர்வைக்குமான ஒத்திசைவை கொண்டிருத்தலைப் பற்றி பேசுகிறது.

முக்கியத் தகவலாக சீ (Chi) என்னும் ஒரு உருவத்தின் வடிவங்களைக் காட்டிலும் அதன் உயிர்ப்பும் இயக்கமும் தன் ஓவியத்தில் நாம் கொண்டுவர வேண்டிய அம்சம் என்கின்ற செய்தியைச் சார்ந்து சீனர்களின் ‘காங்க்பி’ (Gongbi) மற்றும் ‘சீயி’ (Xieyi) குறித்த வண்ணங்கள்சார் புரிதலுணர்வினுக்கானது.

கலைப் படைப்புகளுக்கும் பார்வையாளனுக்குமான இடைவெளியை இட்டு நிரப்புவது எப்போதும் நேர்கோட்டில் நிகழ்வதில்லை. வெவ்வேறு தருணங்களில் அனுபவங்கள் சார்ந்தும், அறிந்ததின் வாயிலாகவும், உள்வாங்கும் தன்மை கொண்டும் பார்வையாளனுக்கு ஒரு கலைப் படைப்பு ஓரோர் சமயத்திலான புரிதலுணர்வு கிளைக்க வைக்கும். படைப்புக்கும் நுகர்வோனுக்குமான ஒத்திசைவு குறித்த கூரிய பார்வைகளை நன்கு அளிக்கிறது.

An Eagle(Xu Beihong)

ஷு பியாங் (Xu Beihong) என்பவரது ஷுவன் காகிதத்தில் சூமி மையினால் வரையப்பட்ட An Eagle எனும் ஓவியத்தைக் குறித்து சொல்லுகையில் அப்படம் வால்சக்கர விமான விஞ்ஞானியின் திறமையில் சற்றும் குறைந்ததல்ல ஷு பியாங்கின் நுண் உணர்வு என்று விரியும் அத்தியாயத்தை முக்கியமாகக் கருத இடமுள்ளது.

ரூப அரூபத் தன்மையிலுள்ள ஓவியங்களும் அவற்றுக்கு இடையேயான வேறுபாடுகளையும் ஒவ்வொன்றுக்குமான ஒத்திசைவு தன்மை குறித்தும் விளக்கமாகப் பேசுகிறது. மெய்சார் ஓவியங்களைப் படைக்கும் வழிகளில் அவை சார்ந்த உளக்காட்சி, உடற்கூறியல் போன்ற கருத்துருவங்களை அறிந்து உள்வாங்கிப் பயின்று தேர்ச்சி பெறுவதின் முக்கியத்துவத்தையும் நூல் அளிக்கிறது.

அத்தியாயங்களுக்குள் நுழைவதற்கு முன்பு சிலருடைய ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவரிகளில் சிலர்: Istvan Jermeczky, Gaganendranath Tagore, Lyonel Feininger, Frederick Hammersley, Henry Matissee, Sesshu Toyo, Wassily Kandinsky, Jaskson Pollock, Renoir, André Lanskoy, Gerard van Honthorst, Jacopo Pontormo, Claude Monet, Piccasso, Dalí, Joseph Kosuth, Roman Opałka, Wassily Wassilyevich Kandinsky, Ernest Edmonds, Benoit B. Mandelbrot, Egon Schiele, Kazuaki Tanahashi, Lyonel Charles Feininger, Osamu Tezuka (manga), Rafal Steinbeck, Manolo Gamboa Naon. அவ்வத்தியாயங்களின் பொருத்தப்பாட்டின் அவசியம் கருதியும் அப்படம் ஏன் பயன்படுத்தப்பட்டது என்பதை அவ்வத்தியாயம் முடிவடைகையில் அந்தந்தக் கட்டுரைகளின் சாரத்தைச் சுட்டுவதைப் போல் அமைத்திருக்கிறார்.

ஓவியர்களுக்கும், ஓவியப் பித்தர்களுக்கும், கலை குறித்த நோக்கு கொண்டவர்களுக்கும், ரசனையின்பாற்பட்ட வாசகர்களுக்குமான புத்தகமாக இருக்கும் இந்நூல் வண்ணத்தாளில் சேகரிப்பு பதிப்பாக (Collecter’s Edition) வெளிவந்திருந்தால் அருமையாக இருந்திருக்கும் என்பது வாசகனின் எண்ணமும் கூட.


ஓவியம் தேடல்கள், புரிதல்கள் – 2 (காலம், வெளி, இசை, ஓவியம்)
ஆசிரியர் – கணபதி சுப்பிரமணியம்

வேதநாயக் – தேவதா… உன் கோப்பை வழிகிறது..! நூலாசிரியர். மின்னஞ்சல்: editorialmagazines@gmail.com

பேச்சொலிகள் – ஆக்டேவியா இ. பட்லர்

1

Speech Sounds – Octavia E. Butler

தமிழில் – நரேன்

Ocatavia E. Butler (1947 – 2006)

அறிபுனைவு கதைகளுக்காக மிகவும் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர். அமெரிக்க எழுத்துலகின் பல்வேறு விருதுகளை வென்று குவித்தவர். அறிபுனைவுதான் இலக்கிய வகைமைகளில் மிகவும் கட்டற்ற சுதந்திரத்தை தனக்குக் கொடுப்பதாகச் சொல்லி அவ்வகையான கதைகளையே தொடர்ந்து எழுதினார். ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் என்பதாலும் ஏழ்மையான பின்னணியில் தன் இளமைக் காலத்தைக் கழித்ததாலும் இவரது கதைகளில் மிக ஆழத்தில் மெல்லிய இழையாக அமெரிக்க இனவாதமும், பெண் அடக்குமுறைகளும், குடும்ப வன்முறைகளும் வெளிப்படும். அறிபுனைவு தரும் கிளர்ச்சியையும் மீறி இவரது கதைகள் பல ஆண்டுகளாக வாசகர்களால் வாசிக்கப்படுவதற்கு இதுவொரு முக்கிய காரணம். இதே காரணங்களால் இவரின் கதைகள் அறிபுனைவுவகைச் சட்டகத்தினுள் அடங்குவதில்லை என்ற கருத்தும் வைக்கப்படுகிறது. அறிபுனைவுகள் “உணர்ச்சி அல்லது உள்ளுணர்வுகளை விடவும் பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்க வேண்டும்” என்பது அமெரிக்க அறிபுனைவு ஆய்வேடுகளில் முன்வைக்கப்படும் முக்கியமான புள்ளி. ஆனால் “என்னுடைய எல்லா கதைகளிலும் நான் இருக்கிறேன். ஆண்வயப் பார்வையிலிருந்து முற்றும் விலகி என் கதைகளில் உள்ளார்ந்த பெண்களின் உணர்வுகளும் அவர்களை உந்தும் அந்த நிச்சயமற்ற ஏதோ ஒன்றும் இருக்கும்” என்று அறிவிக்கிறார் ஆக்டேவியா. அதனால் தன் கதைகளை அறிபுனைவு என்று வகைப்படுத்தாவிடிலும் தனக்கு அதில் ஒப்புதலே என்கிறார். இவரின் சிறுகதைகள் மற்றும் நாவல்களின் மீது அறிபுனைவுகளில் பெண்ணியத்தையும் இனவாதத்தையும் அடிப்படையாகக் கொண்ட பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

‘பேச்சொலிகள்’ என்ற இச்சிறுகதை 1984-ல் சிறந்த அறிபுனைவுகளுக்கென வழங்கப்படும் ‘ஹ்யூகோ’ விருதை வென்றது. ஐசக் அஸிமோவ் தேர்ந்தெடுத்த சிறந்த அறிபுனைவுச் சிறுகதைகளில் இதுவும் ஒன்று. “அறிவியல் புனைவுகளுக்கு அற்புதங்களையோ அல்லது பேரழிவுகளையோ உருவாக்கிக் காட்ட வேண்டிய கட்டாயமில்லை. அது சாத்தியமான சூழ்நிலைகளையே ஆராய்கிறது. அறிபுனைவுகளின் அடிப்படை, அசாத்தியமான சூழ்நிலைகளில் மக்களின் எதிர்வினையையும் வாழ்வையும் ஆய்விற்குட்படுத்துவதாக இருக்க வேண்டும்” என்கிறார் அஸிமோவ். இக்கதையில் ஆசிரியர், அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு சமுதாயத்தைப் பெரிய விவரிப்புகள் ஏதுமின்றி உருவாக்குகிறார், அவ்வழிவிற்குத் தனித்துவமான காரணிகளை முன்வைக்கிறார். மொழியும் பேச்சும் – அதன் போதாமையும், ஒரு சமூகத்தை முற்றாக அழிக்கவும் அல்லது ஒரு ஒற்றைப் புள்ளியிலிருந்து மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சாத்தியத்தையும் கொண்டிருக்கிறது. சொல்லும் மௌனமும் இவ்விரண்டையும் வெளிப்படுத்தும் சரியான தருணத்தைத் தேறும் அறிவும், உலகமும் அதில் உறவுகளும் இன்னும் உய்வித்திருப்பதற்கான காரணிகள்!

*

பேச்சொலிகள்

வாஷிங்டன் பெருஞ்சாலை நிறுத்தத்தில் பேருந்தினுள் ஏதோ சலசலப்பு உண்டானது. தன்னுடைய பயணத்தின் பிற்பாடோ அல்லது உடனடியாகவோ கூட ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என்பதை ரைய் எதிர்பார்த்திருந்தாள். தனிமையும் நம்பிக்கையின்மையும் அவளை வீட்டிலிருந்து துரத்தும் வரை இப்பயணத்தை ஒத்தி வைத்திருந்தாள். தன்னுடைய சொந்தங்களில் சிலர் – சகோதரனும் அவனது இரண்டு மகன்களும் இருபது மைல் தொலைவில் பாஸடேனாவில் இன்னமும் உயிருடன் இருக்கக்கூடும் என்று நம்பினாள். அதிர்ஷ்டம் அவளுக்குத் துணை இருக்குமானால் இந்த ஒருவழிப் பயணம் ஒரே நாளில் முடிந்துவிடும். விர்ஜினியா சாலையில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளிவந்த போது எதிர்பாரா விதமாக அவ்வழியே பேருந்து வந்து நின்றதும் ஒருதுளி அதிர்ஷ்டம் அவள் வசம் இருப்பது போலத்தான் தோன்றியது. ஆனால் இந்தச் சலசலப்பு தொடங்கியதும் அதுவும் இல்லாமல் போனது.

இரு இளைஞர்கள் தங்களுக்குள் ஏதோ கருத்து உடன்படாமையாலோ அல்லது… அனேகமாக ஒருவரையொருவர் தவறாகப் புரிந்து கொண்டதாலோ பூசலிட்டுக் கொண்டிருந்தனர். பேருந்தின் இடைவழியில் நின்று ஒருவரை ஒருவர் பார்த்து வெறித்து உறுமலிட்டு கையசைவுகளால் மிரட்டிக்கொண்டு இருந்தனர். சாலைக்குழியில் பேருந்து சடாரென இறங்கி ஏற அவர்கள் கைகளைப் பக்கவாட்டில் நீட்டிச் சமநிலை கொண்டு தடுமாற்றமான ஒருநிலையில் தங்களை நிறுத்திக் கொண்டனர். ஓட்டுநர் வேண்டுமென்றே அவர்களை நிலைகுலையச் செய்ய முயற்சி மேற்கொண்டது போல் தெரிந்தது. இருப்பினும், அவர்களது கை அசைவுகள் எதிராளியைத் தொடவில்லை, சற்று முன்னதாகவே நின்றுவிடுகின்றன – தொலைந்துவிட்ட வசைச் சொற்களுக்குப் பதிலாக தற்போது போலியான காற்றில் வீசப்படும் குத்துகளும், அச்சுறுத்தும் வெற்று விரல் விளையாட்டுகளும்.

மற்ற பயணிகள் இந்த இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர், பின்னர் தங்களுக்குள் பார்வைகளைப் பரிமாறி கவலை தொனிக்கும் சத்தங்களை எழுப்பினர். இரண்டு குழந்தைகள் சிணுங்கினர். சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களிடமிருந்து சற்றுதள்ளி பேருந்தின் பின்கதவிற்கு எதிரில் அமர்ந்திருந்தாள் ரைய். அவ்விருவரையும் அவள் மிகக்கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். எவருடைய கையாவது நழுவி அடுத்தவரின் மேல் பட்டுவிட்டாலோ, யாரோ ஒருவரின் நரம்பின் மீது அடி விழுந்தாலோ, எவராவது தன்னுடைய மட்டுப்பட்ட, மிஞ்சியிருக்கும் உரையாடும் திறனின் எல்லையை அடைந்து விட்டாலோ, உடனடியாகச் சண்டை தொடங்கிவிடும் என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள். இதைப்போன்ற சம்பவங்கள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.

அப்படியொன்று நடந்துவிட்டது, பேருந்து ஒரு பெரிய குழியில் இறங்கி குலுங்க, ஏளனப் பார்வையால் பழித்துக் கொண்டிருந்த மெலிந்த உயரமானவொருவன் குள்ளமான தனது எதிராளியின் மீது தடுமாறி விழுந்தான்.

நொடிப்பொழுதில், அந்த குள்ள மனிதன் தனது இடது கை முட்டியால் ஏளன இளிப்பைச் சிதறடித்தான். இறுக மூடிய இடது கையைத் தவிர தன்னிடம் வேறு ஆயுதம் இல்லை, வேறெதுவும் தனக்குத் தேவையுமில்லை என்பதைப்போல அப்பெரிய எதிரியைச் சம்மட்டியென ஓங்கி அடித்தான். மிக வேகமாகத் தாக்கினான். உயரமான மனிதன் மீண்டும் தன் சமநிலையை மீட்டி எழுவதற்கோ அல்லது ஒருமுறை கூட திருப்பித் தாக்குவதற்கோ இயலாத அளவிற்கு அந்த அடி அவ்வளவு பலமாக விழுந்தது.

மக்கள் பயத்தில் அலறினார்கள், கூச்சலிட்டார்கள். அருகிலிருந்தவர்கள் அவர்களுக்கு வழிவிட்டு அங்கிருந்து கலைந்து நகர்ந்தார்கள். மேலும் மூன்று இளைஞர்கள் உற்சாகத்தில் உறுமினார்கள், ஆரவாரமாகக் கைகளை அசைத்தார்கள். பிறகு, திடீரென எப்படியோ அந்த மூவரில் இருவருக்குள் அப்பேருந்தினுள் இரண்டாவது கைகலப்பு உருவானது – அனேகமாக ஒருவன் தெரியாத்தனமாக அடுத்தவனைப் பலமாக இடித்திருக்கலாம் அல்லது வெறுமனே தொட்டு விட்டவனாகக் கூட இருக்கலாம்.

இந்த இரண்டாவது சண்டை ஏற்கனவே பதறிப்போன பயணிகளை இருக்கையிலிருந்து சிதறடித்தது. ஒரு பெண், பஸ் டிரைவரின் தோள்களைக் குலுக்கி சண்டையை நோக்கி கைகளைக் காட்டியபடி உறுமலொலி எழுப்பினாள்.

டிரைவர் வெற்றுப் பற்களைக் காட்டி அவளை நோக்கி பதிலுக்கு உறுமினான். பயந்து போன அப்பெண் அவனிடமிருந்து விலகி பின்னால் சென்றாள்.

இந்தக் கலவரத்தைக் கையாள பேருந்து ஓட்டுநர்கள் பின்பற்றும் வழிமுறைகளை ரைய் ஏற்கனவே அறிந்தவளென்பதால் தனக்கு முன்னால் இருந்த இருக்கையின் கம்பியை இறுகப்பற்றி உடலோடு அணைத்துக் கொண்டாள். ஓட்டுநர் ஓங்கி பிரேக்குகளை அழுத்தியபோது அவள் அதற்குத் தயாராக இருந்தாள், ஆனால் சண்டைக்காரர்கள் சுதாரிக்கவில்லை. அவர்கள் கத்தி அலறிக் கொண்டிருந்த பயணிகளை நோக்கி இருக்கைகளின் மீது பாய்ந்து விழுந்தனர். அது மேலும் குழப்பங்களை உண்டு பண்ணியது, குறைந்தபட்சம் மேலுமொரு சண்டை அங்கே தொடங்கிவிட்டது.

பேருந்து முழுமையான நிறுத்தத்திற்கு வந்த அடுத்த கணம், ரைய் வேகமாக ஓடி பின்கதவை ஓங்கித் தள்ளினாள். இரண்டாவது முறை தள்ளியதில் கதவு திறந்து கொண்டது. ஒரு கையில் கைப்பையைப் பிடித்தபடி வெளியே குதித்தாள். மற்ற பயணிகளும் அவளைப் பின்தொடர்ந்தனர், ஒரு சிலர் பேருந்திலேயே தங்கிவிட்டனர். இப்போதெல்லாம் பேருந்து முறையாக வருவதில்லை, மிக அரிதாகத்தான் வரும். என்ன நடந்தாலும் பரவாயில்லையென மக்கள் வாய்ப்பு கிடைத்தவுடன் பேருந்தில் ஏறிக்கொள்கின்றனர். இன்றோ நாளையோ மற்றொரு பேருந்து வராமலே போகலாம். இந்நாட்களில் மக்கள் நடந்தே பயணப்படத் தொடங்கி விட்டனர். வழியில் பேருந்தைப் பார்த்தால் அதைச் சூழ்ந்து மடக்கி நிறுத்திவிடுவர். ரைய் மேற்கொள்ளும் லாஸ் ஏஞ்சலீஸிலிருந்து பாஸடேனா பயணத்தைப் போல் நகரங்களுக்கிடையில் பயணிப்பதாக இருந்தால் மக்கள் ஆங்காங்கே முகாமிடுவதற்குத் தங்களைத் தயாராக வைத்திருப்பார்கள். அல்லது தாங்கள் கொள்ளையடிக்கப்படும், கொல்லப்படும் ஆபத்தைப் பொருட்படுத்தாது உள்ளூர் மக்களிடம் அவர்கள் வீடுகளில் தஞ்சம் அடைவார்கள்.

பேருந்து நகரவில்லை, ஆனால் ரைய் அங்கிருந்து விலகி தூர வந்துவிட்டாள். சண்டை முடியும்வரை காத்திருந்துவிட்டு பின்பு மீண்டும் அதில் ஏறிக்கொள்வது தான் அவள் எண்ணம். ஆனால் அங்கே துப்பாக்கிச்சூடு ஏதும் நடக்குமெனில் பதுங்கிக்கொள்ள மரத்தின் மறைவு வேண்டும். அதனால் அவள் சாலையின் விளிம்பில் ஒதுங்கியிருந்தபோது உருச்சிதைந்த ஒரு நீலநிற ஃபோர்டு கார் எதிர் திசையிலிருந்து யூ-டர்ன் போட்டு பேருந்தின் முன்னால் வந்து நின்றது. இந்நாட்களில் கார்கள் மிகமிக அரிதானவை – தீவிரப் பற்றாக்குறையாகிப் போன எரிபொருட்களையும் கார்களை பழுதின்றி உருவாக்கும் திறனுடையவர்களையும் போல மிக அரிதானவை. இன்று ஓடிக்கொண்டிருக்கும் கார்கள் பெரும்பாலும் போக்குவரத்திற்குப் பயன்படுவதைவிடக் கேடயங்களாக, ஆயுதங்களாகத்தான் பயன்படுகின்றன. அதனால் ஃபோர்டு காரின் டிரைவர் ரைய்யை நோக்கித் தலையசைத்தபோது அவள் முன்னெச்சரிக்கையுடன் மேலும் விலகிச் சென்றாள். டிரைவர் வெளியே வந்தான் – பெருத்த சரீரமுடைய மனிதன், சீரான தாடியும் செழிப்பான கறுத்த தலைமுடியும் கொண்ட இளைஞன். அவன் ஒரு நீண்ட மேலங்கியை அணிந்திருந்தான், அவன் விழிகளில் நிறைந்திருந்த எச்சரிக்கையுணர்வு ரைய்யை ஒத்திருந்தது. அவள் பல அடிகள் அவனிடமிருந்து தள்ளி நின்றிருந்தாள், அவன் என்ன செய்யப் போகிறான் என்பதைக் காணக் காத்திருந்தாள். உள்ளே நடந்து கொண்டிருக்கும் சண்டையினால் குலுங்கும் பேருந்தைச் சற்றுநேரம் நோக்கினான், பிறகு கீழிறங்கி நின்று கொண்டிருக்கும் பயணிகளின் சிறுகுழுவைப் பார்த்தான். இறுதியாக மீண்டுமொரு முறை ரைய்யை நோக்கி தன் பார்வையைத் திருப்பினான்.

அவன் பார்வைக்குப் பதிலளிப்பதைப் போல அவளும் பார்த்தாள், தன் மேலாடையினுள் மறைத்து வைத்திருக்கும். 45 வகை தானியங்கி துப்பாக்கி தந்த தைரியம் அது. அவள் அவன் கைகளைக் கவனித்தாள்.

அவன் தன்னுடைய இடது கையால் பேருந்தைச் சுட்டினான். இருண்டிருந்த ஜன்னல்கள் உள்ளே என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க முடியாமல் அவனைத் தடுத்தது.

அவனது இந்த நேரடியான கேள்வியை விடவும் இடது கையை உபயோகித்ததுதான் அவளுக்கு அதிக ஆர்வமூட்டுவதாக இருந்தது. இடதுகை பழக்கமுடையவர்கள் பலவீனம் ஏதுமற்றவர்களாகவும் அதீத சமநிலையுடையவர்களாகவும் அடுத்தவர்களைப் புரிந்துகொள்ளக் கூடியவர்களாகவும் கோபத்தால், குழப்பத்தால், விரக்தியால் உந்தப்படாதவர்களாகவும் இருப்பார்கள்.

அவளும் அவனது கையசைவைப் போலவே தன் இடது கையை பேருந்தை நோக்கி நீட்டி, பிறகு தனது இரண்டு கை முஷ்டிகளையும் மடக்கி காற்றில் சண்டையிடும் சைகையைக் காட்டினாள்.

அம்மனிதன் லாஸ் ஏஞ்சலீஸ் காவல் துறையின் சீருடையும் அதனுடன் பொருந்திய லத்தியும் துப்பாக்கியும் வெளித் தெரியும்படி தன் மேலங்கியைக் கழற்றினான்.

அவனிடமிருந்து மேலும் ஒரு அடி பின்னகர்ந்தாள் ரைய். லாஸ் ஏஞ்சலீஸ் காவல்துறை என ஒன்று இப்போது இல்லவே இல்லை. எந்தவொரு பெரிய அமைப்பும், அது அரசுத்துறையோ அல்லது தனியாரோ, எதுவும் இப்போது இல்லை. அக்கம்பக்கத்தினர் இணைந்து செயல்படுத்தும் ரோந்து பணிகள் உண்டு. சிலர் சொந்தமாக ஆயுதம் வைத்திருப்பதுண்டு, அவ்வளவுதான்.

அவன் தன் மேலங்கியின் பாக்கெட்டிலிருந்து எதையோ வெளியே எடுத்தான். பிறகு அந்த மேலங்கியை காருக்குள் எறிந்தான். திரும்பவும் ரைய்யை நோக்கி, அவளைப் பேருந்தின் பின்பக்கத்திற்கு வரும்படி கைகளை அசைத்தான். ஏதோவொரு பிளாஸ்டிக் பொருளை கையில் வைத்திருந்தான். அவன் பேருந்தின் பின்பக்கம் சென்று அவளை அங்கே வந்து நிற்கும்படி அழைத்தான். அதுவரை அவன் என்ன செய்கிறான் என்பது அவளுக்குப் புரியவில்லை. ஒரு ஆர்வத்தில்தான் அவன் சொன்னதை அவள் பின்பற்றினாள். போலீஸோ இல்லையோ, அந்த முட்டாள்தனமான சண்டையை நிறுத்த அவன் ஏதேனும் செய்யக்கூடும்.

பேருந்தைச் சுற்றி நடந்து முன்னால் ஓட்டுநரின் கதவு திறந்திருந்த சாலை பக்கமாகச் சென்றான். அங்கே அவன் பேருந்திற்குள் எதையோ வீசி எறிந்ததாக அவளுக்குத் தோன்றியது. இருண்டிருந்த கண்ணாடி ஜன்னல்கள் வழியாக உள்ளே கூர்ந்து பார்க்க அவள் முயன்றபோது உள்ளிருந்த பயணிகள் மூச்சுத் திணறி கண்களில் நீர் வழியப் பின்கதவு வழியாகத் தடுமாறி வெளியேறிக் கொண்டிருந்தனர். புகை!

கீழே விழப்போன ஒரு மூதாட்டியை ரைய் பிடித்துக் கொண்டாள். இடித்துத் தள்ளப்பட்டு மிதிபடும் ஆபத்திலிருந்து இரண்டு குழந்தைகளைக் காப்பாற்றித் தூக்கினாள். அந்தத் தாடி மனிதன் முன்கதவின் வழியாகப் பயணிகள் வெளியேறுவதற்கு உதவிக் கொண்டிருந்ததை அவள் பார்த்தாள். சண்டைக்காரர்களில் ஒருவன் தூக்கித் தள்ளிய ஒரு முதியவரை அவள் தாங்கிக் கொண்டாள். அம்முதியவரின் எடை தாளாமல் அவள் தடுமாறியதால், பாய்ந்து வெளியே குதித்த கடைசி இளைஞனுக்கு வழிவிட்டு விலக முடியவில்லை. அவன் புகையினால் உண்டான விம்மலை இன்னும் அடக்க மாட்டாமல், கண்களிலும் மூக்கிலும் இரத்தம் வடிய, அடுத்தவர்கள் மேல் கண்மூடித்தனமாக விழுந்து அவர்களைப் பற்றிக்கொண்டான்.

தாடி மனிதன் முன்கதவு வழியாக டிரைவர் வெளியேறுவதற்கு உதவினான். ஆனால் அவ்வுதவியை டிரைவர் பெரிதாகப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஒரு கணம், மீண்டும் அங்கே இன்னொரு சண்டை தொடங்கும் என்று ரைய் எண்ணினாள். அத்தாடிக்காரன் சில அடிகள் பின்னால் எடுத்து வைத்து டிரைவரின் மிரட்டும் உடற்மொழியைக் கவனித்தான், சொற்களின்றி வெளிப்படும் கோபத்தில் டிரைவர் கத்துவதைப் பார்த்தான்.

தாடிக்காரன் அசையாது நின்றான். வெளிப்படையான அவ்வெறுக்கத்தக்க டிரைவரின் உடல் அசைவுகளுக்கு தன் மறுமொழியை மறுக்கும் விதமாகச் சிறு ஒலியைக்கூட அவன் உண்டாக்கவில்லை… குறைந்த ‘பாதிப்பிற்குள்ளான’ மக்கள் இப்படித்தான் செய்வார்கள் – உடல் ரீதியாகத் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவரை பின்வாங்கி நிற்பர், தங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாதவர்களை எகிறிக் குதித்துக் கத்தும்படி விட்டுவிடுவர். உரையாடும் திறன் பலவீனப்பட்டுப் போனவர்களைப் போல உடல் பலத்தைக் காட்டுவது அவசியமற்ற ஒன்று என்று உணர்ந்திருக்கிறார்கள். மேன்மையானவர்களின் அணுகுமுறை அதுதான், அதை இந்த பஸ் டிரைவரைப் போன்றவர்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அத்தகைய “மேன்மை” பெரும்பாலும் தாக்குதல்களாலும், சிலநேரங்களில் மரணத்தினாலும் கூட தண்டிக்கப்படுகிறது. ரைய்யை கூட அப்படியான ஆபத்துகள் நெருங்கியிருக்கின்றன. அதனால் அவள் ஆயுதங்களின்றி வெளியே போவதில்லை. அதுவும் தற்போது உடல்மொழி மட்டுமே பொதுமொழியாக இருக்கக்கூடிய சாத்தியம் பெற்ற இவ்வுலகில் கையில் ஆயுதம் வைத்திருப்பது ஒன்றே போதுமானது. மிக அரிதாகத்தான் அவள் தனது துப்பாக்கியை எடுக்க வேண்டியிருக்கும், அதன் இருப்பைக் காட்டும் அவசியம் கூட எப்போதாவது தான் வரும்.

தாடிக்காரனின் ரிவால்வர் எந்நேரமும் பார்வையில் பட்டபடி இருந்தது. பஸ் டிரைவருக்கு அதுவே போதுமானதாக இருந்தது. டிரைவர் வெறுப்பில் காறித் துப்பினான், கணநேரம் தாடி மனிதனை வெறித்துப் பார்த்தான், பிறகு புகை நிரம்பிய தன் பேருந்தினுள் மீண்டும் தாவி ஏறினான். பஸ்ஸினுள்ளே சென்றுவிட வேண்டுமென்ற எண்ணத்தில் எட்டிப் பார்த்தான், ஆனால் புகை இன்னமும் பலமாக இருந்தது. அத்தனை ஜன்னல்களில் ஓட்டுநர் பக்கமிருக்கும் சின்னஞ்சிறிய ஜன்னல் மட்டும்தான் உண்மையில் திறந்திருந்தது. முன்கதவைத் திறந்து வைக்க முடியும், ஆனால் பின்கதவை யாராவது பிடித்துக்கொள்ளா விட்டால் மீண்டும் சாத்திக் கொள்ளும். ஏ.சி எல்லாம் வேலை செய்வதை நிறுத்தி வெகுகாலம் ஆகிவிட்டது. பேருந்தில் புகை முற்றிலுமாக விலக சிலநேரம் பிடிக்கும். அது டிரைவரின் சொத்து, அதுதான் அவன் பிழைப்பிற்கு ஆதாரம். பழைய பத்திரிக்கைகளில் வெளிவந்திருந்த சில பொருட்களின் புகைப்படங்களை வெட்டி இருபக்கமும் ஒட்டியிருந்தான், காசுக்குப் பதிலாக அப்பொருட்களைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வான். தான் சேகரித்த பொருட்களைக் கொண்டு அவன் குடும்பத்திற்கு உணவளிப்பான் அல்லது அவற்றை விற்றுவிடுவான். இப்பேருந்து ஓடவில்லையென்றால் அவனுக்கு உணவில்லை. அதே நேரத்தில் தேவையற்ற முட்டாள்தனமான சண்டைகளால் பேருந்தின் உட்பக்கம் பிளந்து உடைந்து சேதமடைந்தாலும் அவனுக்கு ஒழுங்கான உணவு கிடைக்கப் போவதில்லை. என்ன செய்வது என்று அவனுக்கு விளங்கவில்லை. இன்னும் கொஞ்ச நேரத்திற்கு தன் பேருந்தை இயக்க முடியாது என்பது மட்டும் அவனுக்குத் தெரிந்தது. தாடிக்காரனை நோக்கி தன் முஷ்டியை மடக்கிக் கத்தினான். அவன் கத்தலில் சில சொற்கள் இருந்ததைப் போலத் தெரிந்தது, ஆனால் ரைய்யால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அது அவனுடைய பிரச்சினையா அல்லது தன்னுடையதா என்று அவளுக்குத் தெரியவில்லை. கடந்த மூன்று வருடங்களில் கோர்வையான மனிதப் பேச்சுகளை மிகக் குறைவாகத்தான் கேட்டிருக்கிறாள், அவளால் அதை இனி கேட்டறிந்து கொள்ள முடியுமா என்பதும் அவளுக்கு உறுதியாகத் தெரியவில்லை, அவளது பாதிப்பின் அளவைப் பற்றியும் அவளுக்கு உறுதியில்லை.

தாடிக்காரன் சலிப்புற்றான். அவன் தன் காரைப் பார்த்தான், பிறகு ரைய்யை அழைத்தான். அவன் கிளம்புவதற்குத் தயாராக இருந்தான். ஆனால் அதற்கு முன்னர் அவனுக்கு அவளிடமிருந்து எதுவோ தேவையாயிருந்தது. இல்லை… இல்லை, அவளும் தன்னுடன் கிளம்ப வேண்டுமென்று விரும்பினான். அவனுடன் காருக்குள் ஏறுவது ஆபத்தானது, அவன் காவல் சீருடையில்தான் இருக்கிறான் என்றாலும், சட்டம் ஒழுங்கு என்றெதுவும் இப்போது இல்லை – இப்போது சொற்கள் கூட துணைக்கு இல்லை.

அவளது எதிர்மறையான பதிலை உலகப் பொதுவான தலையசைப்பினால் உணர்த்தினாள். இருப்பினும் அவன் தொடர்ந்து கையசைத்து அவளை அழைத்தான்.

திருப்பி கைகளால் அவனை விரட்டினாள். குறைந்த பாதிப்புடையவர்கள் பொதுவாக வெளியில் செய்யத் துணியாத ஒரு காரியத்தை அவன் செய்துவிட்டான் – மற்றவர்களின் ஆபத்தான கவனத்தை ஈர்ப்பது. அங்கிருந்த மற்ற பயணிகள் இவளை நோக்கிப் பார்வையைத் திருப்பினர்.

சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரில் ஒருவன் அடுத்தவனின் தோளைத் தட்டினான். பிறகு தாடிக்காரனில் தொடங்கி ரைய் வரை தன் விரல்களால் சுட்டிக் காட்டியபடி நகர்த்தி இறுதியாக வலது கையின் முதலிரண்டு விரல்களை உயரத் தூக்கினான், சாரணர் படையின் சல்யூட் போல. மிக விரைவான அசைவாக அது இருந்தாலும் கூட தூரத்திலிருந்தே அதன் அர்த்தம் தெளிவாகத் தெரிந்தது. அவள் அந்த தாடிக்காரனின் கூட்டாளி என்று அறிவித்து விட்டான். அடுத்து என்ன?

விரல்கள் சுட்டிய அம்மனிதன் அவளை நோக்கி நகர்ந்து வரத்தொடங்கினான்.

அவன் என்ன உத்தேசித்தான் என்பது அவளுக்குத் தெரியாது. ஆனால் அவள் அசையாமல் அப்படியே நின்றாள். அவன் அவளைவிட அரை அடி உயரமாக இருந்தான், பத்து வயது இளையவனாக இருக்கக்கூடும். அவனிடமிருந்து ஓடித் தப்பித்துக் கொள்ள முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. தேவைப்பட்டால் அவளுக்கு உதவ யாரேனும் வருவார்கள் என்றும் அவள் எதிர்பார்க்கவில்லை. அவளைச் சுற்றியிருந்த அத்தனை பேருமே அவளுக்கு அந்நியர்கள் தான்.

ஒரேயொருமுறை அவள் சைகை காட்டினாள் – மிகத்தெளிவாக அவனை நிற்கச் சொல்லும் குறிப்பு அது. மீண்டுமொருமுறை அந்தச் சைகையைக் காட்டும் எண்ணம் அவளுக்கில்லை. நல்லவேளையாக, அம்மனிதன் கீழ்படிந்தான். அருவருக்கத்தக்க வகையில் அவன் தன் உடலசைத்துக் காட்டினான், சுற்றியிருந்த பல ஆண்கள் சிரித்தனர். வாய்மொழி தொலைந்து போனதில் விதவிதமான ஆபாச உடலசைவுகள் புதிதாக உருவாகியிருந்தன. அந்த மனிதன் மிக எளிமையாக தாடிக்காரனுடன் இவள் உறவு கொண்டிருக்கிறாள் என்றும் இங்குள்ள மற்ற ஆண்களையும் அவள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் – அது தன்னில் இருந்தே தொடங்க வேண்டும் என்றும் உணர்த்தி விட்டான்.

மிகவும் சோர்வுற்று அவனை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அவளை வன்புணர முயன்றாலும் இந்த மக்கள் இதைப் போலவே இப்படியே கூடி நின்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவள் அவனைத் துப்பாக்கியால் சுட்டாலும் கூட இப்படியே நின்று கொண்டிருப்பார்கள். அவன் அந்த எல்லைக்குச் சென்றுவிடுவானா?

அவன் செல்லவில்லை. அவன் தொடர்ச்சியாகக் காட்டிய ஆபாச அசைவுகள் அவனை அவளிடம் நெருங்க உதவவில்லை என்று தெரிந்ததும் அவமானத்துடன் திரும்பி நடந்து விலகிவிட்டான்.

அந்த தாடிக்காரன் இன்னமும் காத்துக் கொண்டிருந்தான். அவன் அவனுடைய துப்பாக்கி அதன் உறை என அத்தனையையும் கழற்றி வைத்துவிட்டிருந்தான். தன் வெற்றுக் கைகளால் அவளை அவன் மீண்டும் அழைத்தான். நிச்சயம் அவனுடைய துப்பாக்கி காரில் அவன் கைக்கு எட்டும் தொலைவில்தான் இருக்கும். ஆனால் அதை இவன் இப்போது கழற்றி வைத்திருப்பது அவன் மீது லேசான ஒரு ஈர்ப்பை உண்டாக்கியது. ஒருவேளை அவன் நல்லவனாக இருக்கக்கூடும். அவன் தனியனாக இருக்கலாம். இவளும் மூன்று வருடங்கள் தனிமையில் தான் வாழ்கிறாள். அந்த நோய் அவளிடமிருந்த அத்தனையையும் பறித்துவிட்டிருந்தது, அவளுடைய குழந்தைகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கொன்றது, அவளுடைய கணவனைக் கொன்றது, அவள் தங்கையை, அவள் பெற்றோர்களை…

அந்த நோய், அது உண்மையிலேயே ஒரு நோய் தான் என்று வைத்துக்கொண்டால், உயிருடன் இருப்பவர்களைக் கூட தனித்தனியே பிரித்துவைத்து விட்டது, எதன் மீதும் பழி போடுவதற்குக் கூட மக்களுக்கு போதுமான நேரம் இருக்கவில்லை… புதிய வைரஸ், புதிய மாசு பொருள், கதிர்வீச்சு, தெய்வச் சாபம், ரஷ்யா! (மற்ற நாடுகளுடன் ரஷ்யாவும் சத்தமின்றி வீழ்ந்துகொண்டு தான் இருந்தது) இந்த நோய் மக்களைத் தாக்கும் விதம் மிகக் கூர்மையான ஒரு வெட்டு போல இருந்தது, அதன் விளைவுகளில் உடன் வெட்டியிழுக்கும் பக்கவாதம் போன்றவையும். ஆனால் அது மிகவும் ஒரு குறிப்பிட்ட விதத்தில் இருந்தது.

பொதுவாக எல்லோருக்கும் மொழிதான் தொலைந்து போனது, அல்லது வெகுவாக பாதிப்பிற்குள்ளானது. அது திரும்பப் பெறமுடியாமலே போனது. அவ்வப்போது வேறு சில பாதிப்புகளும் இருந்தன, பக்கவாதம், புத்தி பேதலித்தல், மரணம்…

இரண்டு இளைஞர்களின் சீட்டியொலியையும் கைதட்டலையும், தாடிக்காரனிடம் அவர்கள் உயர்த்திக் காட்டிய கட்டை விரல்களையும் பொருட்படுத்தாது அவனை நோக்கி நடந்தாள். அவன் இவ்விருவருக்கும் பதில் புன்னகை அளித்திருந்தாலோ அல்லது அவர்களின் இருப்பை ஏதேனும் ஒருவிதத்தில் அங்கீகரித்திருந்தாலோ அவள் நிச்சயமாகத் தன் மனதை மாற்றிக் கொண்டிருப்பாள். ஒரு அந்நியனின் காரில் ஏறுவதால் உண்டாகக்கூடிய பின்விளைவுகளை அவளே ஒருமுறை எண்ணிப் பார்த்திருந்தால் கூட அவள் தன் மனதை மாற்றிக் கொண்டிருப்பாள். ஆனால், அதற்குப் பதிலாக தன் வீட்டின் எதிரில் குடியிருந்த ஒருவனைப் பற்றி எண்ணிப் பார்த்தாள். அவனை நோய் தாக்கியதிலிருந்து எப்போதாவது தான் குளித்தான். அவன் எங்கிருக்கிறானோ அங்கேயே மூத்திரம் பெய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டான். இருப்பினும், அவனுடன் இரண்டு பெண்கள் தங்கியிருந்தனர் – அவனுடைய இரண்டு பெரிய தோட்டங்களை ஆளுக்கொருவர் பராமரித்தனர். அவன் அளித்த பாதுகாப்பிற்கு ஈடாக அவனுடனேயே இருந்து விட்டனர். தனது மூன்றாவது துணையாக ரைய் இருக்க வேண்டும் என்பதையும் அவன் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தான்.

அவள் காரில் ஏறியதும் தாடிக்காரன் கதவை அடைத்தான். அவன் சுற்றி நடந்து டிரைவர் கதவிற்கு வருவதை ரைய் கவனித்தாள் – அவனது பாதுகாப்பைக் கருதியே அவனைச் சுற்றி கூர்ந்து நோக்கினாள். துப்பாக்கியை இருக்கையின் மீதே வைத்துவிட்டு காரைச் சுற்றி வந்தான். இரண்டு இளைஞர்களும் பஸ் டிரைவரும் சில அடிகள் நெருங்கி வந்து ஒன்று கூடினர். தாடிக்காரன் காரில் ஏறுவது வரை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை தான். ஆனால் அவன் காரில் ஏறியதும் ஒருவன் ஒரு கல்லை அவர்கள் மீது விட்டெறிந்தான். இதைச் சாக்காக வைத்து, கார் கிளம்பிச் செல்கையில் மற்றவர்களும் வீசியெறிந்த கற்கள் இவர்களைக் காயப்படுத்தாது காரில் பட்டுத் தெறித்து விழுந்தன.

பேருந்து அவர்களுக்குப் பின்னால் சற்று தொலைவில் பின்தங்கி விட்டிருந்தபோது, அவள் தன் நெற்றியின் வியர்வையைத் துடைத்தாள், ஓய்வு தேவையாயிருந்தது அவளுக்கு. பாஸடேனாவிற்குச் செல்லும் தூரத்தில் பாதிக்கு மேல் அப்பேருந்து அழைத்துச் சென்றிருக்கும். அங்கிருந்து அவள் வெறும் பத்து மைல்கள் தான் நடக்க வேண்டியிருந்திருக்கும். இப்போது அவள் எவ்வளவு தூரம் நடக்க வேண்டியிருக்குமோ என்று யோசித்தாள் – நீண்ட தூரம் நடக்க வேண்டியிருப்பது மட்டும்தான் அவளுடைய ஒரே பிரச்சினையாக இருக்குமா என்றும் சந்தேகப்பட்டாள்.

பேருந்து வழக்கமாக இடது பக்கம் திரும்ப வேண்டிய இடத்தில் அவன் காரை நிறுத்தி அவளைப் பார்த்து எந்தப் பக்கம் என்பதை அவள் தான் தீர்மானிக்க வேண்டுமென்று குறிப்புணர்த்தினான். அவள் இடதுபுறம் திரும்ப வேண்டுமென்று சொன்னதும் அவன் அதன்படியே செய்த பிறகுதான் அவள் சற்று தணிந்தாள். அவள் சொன்ன திசையில் அவன் செல்ல தலைப்படுகிறான் என்றால், அவள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறாள்.

தீயில் கருகிய கைவிடப்பட்ட கட்டிடங்களையும், வெற்றிடங்களையும், சேதமடைந்த உடைத்துக் கொள்ளையடிக்கப்பட்ட கார்களையும் அவர்கள் கடந்து செல்கையில், தன் தலைக்கு மேலாகச் சுற்றிக் கழற்றி ஒரு தங்கச் சங்கிலியை அவளிடம் கொடுத்தான் தாடிக்காரன். அந்தச் சங்கிலியில் பதக்கமாக மென்மையான கண்ணாடி போன்ற ஒரு கறுப்பு கல் கோர்க்கப்பட்டிருந்தது. ஓப்ஸிடியன் . அவன் பெயர் ‘ராக்’ என்றோ ‘பீட்டர்’ என்றோ ‘பிளாக்’ என்றோ கூட இருக்கலாம், ஆனால் அவனை ‘ஓப்ஸிடியன்’ என்றுதான் நினைக்க வேண்டும் என்று முடிவுசெய்தாள். (அவன் பெயர் ஓப்ஸிடியன்தான் என்று அவளே முடிவுசெய்து விட்டாள்) எதற்கும் உபயோகமற்ற அவளின் ஞாபகசக்தி கூட சிலசமயம் ஒப்ஸிடியன் போன்ற பெயர்களைத் தக்கவைத்துக் கொள்கிறது.

அவளும் தன்னுடைய பெயரைக் குறிக்கும் ஒரு சின்னத்தைக் கொடுத்தாள் – பெரிய தங்கக் கோதுமைக் கதிரின் வடிவிலான ஒரு பிணைப்பூசி. இந்த நோயும் மௌனமும் தொடங்குவதற்கு வெகு காலம் முன்னரே அவள் அதை வாங்கியிருந்தாள். “ரைய் ” என்ற பெயரின் அர்த்த அடையாளமாக இது அமைந்திருக்கிறதென எண்ணி இதை இப்போதெல்லாம் அணிந்து கொள்கிறாள். இவளை இதற்கு முன் அறிந்திராத ஓப்ஸிடியன் போன்றவர்கள் அனேகமாக அவள் பெயர் ‘கோதுமை’ என்றே எண்ணிக் கொள்வார்கள். அதைப் பற்றி ஒரு கவலையுமில்லை. அவளின் பெயர் உச்சரிக்கப்படுவதை மீண்டும் அவள் கேட்கப் போவதேயில்லை.

அந்தக் குத்தூசியை மீண்டும் அவளிடமே திருப்பிக் கொடுத்தான் ஓப்ஸிடியன். அதை வாங்குவதற்கு நீட்டிய அவளின் கையைப் பிடித்து அதன் தடித்த மேல் தோலை தன்னுடைய கட்டை விரலால் தேய்த்தான்.

‘ஃபர்ஸ்ட் ஸ்ட்ரீட்டில்’ வண்டியை நிறுத்தி எந்தத் திசையில் போவதென்று மீண்டும் கேட்டான். பின்னர் அவள் சுட்டிக் காட்டியபடி வலதுபுறம் திரும்பி ஒரு இசை மையத்தினருகே வண்டியை நிறுத்தினான். மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு காகிதத்தை டாஷ்-போர்டிலிருந்து எடுத்துப் பிரித்தான். அது ஒரு வரைபடம் என்பதை ரைய் விளங்கிக் கொண்டா.ள் ஆனால் அதன்மீது எழுதியிருந்த எதுவும் அவளுக்குப் பொருள்படவில்லை. அவ்வரைபடத்தை அவன் முழுதாக விரித்து, அவள் கையை மீண்டும் பற்றி சுட்டுவிரலைப் பிடித்து ஒரு குறிப்பிட்ட இடத்தின் மீது வைத்தான். அவன் அவளைத் தொட்டான், தன்னை தொட்டான், பிறகு தரையைச் சுட்டிக் காட்டினான். “நாம் இங்கு இருக்கிறோம்.” அவள் எங்கு போகவேண்டும் என்று தெரிந்துகொள்ள அவன் விழைகிறான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். அவனிடம் சொல்ல வேண்டுமென்று தான் அவளுக்கும் விருப்பம், ஆனால் அவள் சோகமாகத் தன் தலையை ஆட்டினாள். படிக்கும், எழுதும் திறனை அவள் முற்றாக இழந்துவிட்டாள். நோயினால் அவளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் மிக மோசமானதும் அவளுக்கு வலி மிகுந்ததும் அதுதான். லாஸ் ஏஞ்சலீஸ் பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடம் எடுத்தவள் அவள். நேரம் கிடைக்கும்போது எழுதவும் செய்தாள். தான் எழுதியதையே அவளால் தற்போது வாசிக்க முடியவில்லை. அவள் வீடு முழுதும் புத்தகங்களால் நிறைந்து இருந்தன, அவற்றைப் படிக்கவும் இயலவில்லை. தீயிட்டுக் கொளுத்தவும் முடியவில்லை. அவள் முன்னர் படித்தது எதையும் நினைவில் பெருமளவில் மீட்டெடுக்க முடியாத அளவில் தான் அவளது ஞாபகத்திறன் இருந்தது.

வரைபடத்தை வெறித்துப் பார்த்தாள், எதையோ கணக்கிட முயன்றாள். அவள் பாஸடேனாவில் தான் பிறந்தாள், கடந்த பதினைந்து வருடங்களாக லாஸ் ஏஞ்சலீஸில் வாழ்ந்து வந்தாள். சமூக மையக் கட்டிடத்தின் அருகே குடியிருந்தாள். அவளுக்குத் தோராயமாக இவ்விரண்டு நகரங்களின் இடநிலை தெரியும், அதன் தெருக்களும் வழிகளும் தெரியும், சேதமுற்று அனாதரவாக இருக்கும் கார்கள் மறித்துக்கொண்டிருக்கும் என்பதால் நெடுஞ்சாலையைத் தவிர்க்க வேண்டும் என்பதும் தெரியும். வார்த்தையைப் புரிந்துகொள்ள முடியவில்லையென்றாலும் பாஸடேனா எங்கிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

தயக்கத்துடன், வரைபடத்தின் வலது மேல்மூலையில் இருக்கும் வெளிறிய ஆரஞ்சு நிற நிலத்துண்டின் மீது கை வைத்தாள். சரியாகத்தான் இருக்கும். பாஸடேனா.

ஓப்ஸிடியன் அவள் கையைப் பற்றித் தூக்கி அதனடியில் சுட்டிய இடத்தைப் பார்த்தான், பிறகு வரைபடத்தை மடித்து வைத்தான். அவனால் படிக்க முடிகிறது என்பதை மிகத் தாமதமாகத்தான் அவள் புரிந்து கொண்டாள். அவனால் எழுதவும் கூடுமோ என்னவோ. சட்டென, அவன்மீது அவளுக்கு வெறுப்பு உண்டானது – மிக ஆழமான கசப்பூறும் ஒரு வெறுப்பு. திருடன்-போலீஸ் விளையாடிக் கொண்டிருக்கும் பெருத்த மனிதனான இவனுக்கு மொழியறிவு என்னவென்று பொருள்படும். ஆனால் இப்போது அவன்தான் கல்வியறிவு உடையவன், அவளில்லை. இனி ஒருபோதும் அவளுக்கு அது இல்லை. அதீத வெறுப்பினாலும் விரக்தியானாலும் உள்ளார்ந்த பொறாமையினாலும் அவளின் அடிவயிறு புரட்டிக் கொண்டு வருவது போல உணர்ந்தாள். அவள் கை தொடும் தூரத்தில்தான் தோட்டாக்கள் நிரம்பிய துப்பாக்கியும் இருந்தது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள், அவனைத் துளைத்து அவனுள் ஓடும் குருதியை விழியாலேயே தொட்டுவிடும் அளவிற்கு வெறித்துப் பார்த்தாள். அவளின் ஆத்திரம் அலையைப் போலப் பொங்கிப் பொங்கி ஆர்பரித்தது. அவள் எதுவும் செய்யவில்லை.

பரிச்சயமான தயக்கத்துடன் ஓப்ஸிடியன் எட்டி அவள் கைகளைப் பிடித்தான். அவள் அவனைப் பார்த்தாள். அவள் முகம் ஏற்கனவே போதுமான அளவிற்கு அவளைக் காட்டிக்கொடுத்து விட்டது. மிஞ்சியிருக்கும் இம்மனிதச் சமூகத்தில் அவளின் இம்முக பாவனையை, அந்த பொறாமையை விளங்கிக் கொள்ளாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அவள் தளர்ந்து கண்களை மூடி நீளமாக ஒரு பெருமூச்சு விட்டாள். கடந்த காலங்களின் மீதான ஏக்கத்தில் உழன்றிருக்கிறாள், நிகழ்காலத்தின் மேல் வெறுப்பையும், நீளும் நம்பிக்கையின்மையையும், நோக்கமற்ற இவ்வாழ்வையும் உணர்ந்திருக்கிறாள். ஆனால், அடுத்தவனைக் கொல்லும் இவ்வலுமிகு வேட்கையை அவள் ஒருபோதும் அனுபவித்ததில்லை. அவள் கிட்டத்தட்டத் தன்னையே கொல்லும் நிலைக்குச் சென்றுவிட்டதால் தான் வீட்டைவிட்டு இறுதியாக வெளியேறினாள். உயிரோடு இருப்பதற்கான காரணம் எதுவும் அவளிடம் இல்லை. ஒருவேளை அதனால்தான் அவள் ஓப்ஸிடியனின் காரில் ஏறியிருக்கலாம். இதற்குமுன் இப்படி ஒரு செயலை அவள் செய்ததில்லை.

அவன் விரல்களால் அவளின் உதட்டைத் தொட்டு அசைத்துப் பேசுவதைப் போன்ற பாவனையைச் செய்தான். அவளால் பேச முடியுமா?

அவள் தலையசைத்தாள், அவனுள் லேசான பொறாமை வந்து போவதைக் கவனித்தாள். வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளக் கூடாதவற்றை அவர்கள் இருவருமே இப்போது காட்டிவிட்டார்கள், ஆனாலும் வன்முறை எதுவும் அங்கே நிகழவில்லை. அவன் தன்னுடைய வாயையும் நெற்றியையும் தட்டி தலையை ஆட்டினான். அவனால் பேசவோ அல்லது பேச்சுமொழியைப் புரிந்து கொள்ளவோ முடியவில்லை. இந்த நோய் அவர்களின் மீதொரு வன்மையான விளையாட்டை ஆடியிருக்கிறது. ஒவ்வொருவரிடமும் மதிப்புமிக்கது எதுவோ அதைப் பறித்துச் சென்றுவிட்டது என்று அவள் சந்தேகப்பட்டாள்.

அவனது சட்டைக் கையைப் பிடித்து இழுத்தாள். தன்னிடம் மிஞ்சி இருப்பதை வைத்துக்கொண்டு ஏன் அவன் லாஸ் ஏஞ்சலீஸ் காவல்துறையை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்க முடிவெடுத்தான் என்று ஆச்சரியப்பட்டாள். மற்றபடி அவன் போதுமானளவு புத்தியுள்ளவனாகத்தான் இருந்தான். ஏன் அவன் வீட்டில் சோளம் வளர்த்து, முயல்களுடனும் குழந்தைகளுடனும் வாழவில்லை? ஆனால் இதை எப்படி கேட்பதென்று அவளுக்குத் தெரியவில்லை. அப்போது அவன் அவள் தொடையின் மீது தன் கைகளை வைத்தான். அவள் பதிலளிக்க வேண்டிய மற்றொரு கேள்வி வந்துவிட்டது.

இல்லையெனும்படி அவள் தலையை ஆட்டினாள். நோய், கர்ப்பம், கையறு நிலை, தனிமைத் துயர்… வேண்டாம்!

அவள் தொடையை அவன் மென்மையாகத் தடவிக் கொடுத்தான், வெளிப்படையாகத் தெரியும் ஒரு அவநம்பிக்கைப் புன்னகையை விடுத்தான்.

கடந்த மூன்று வருடங்களில் அவளை யாரும் தொட்டது இல்லை. யாரும் தன்னைத் தொடுவதும் அவள் விரும்பவில்லை. ஒரு தந்தை தன்னுடனே தங்கியிருக்கச் சம்மதித்து, வளர்ப்பதற்கும் தயாராகவே இருந்தாலும் கூட ஒரு குழந்தையைக் கொண்டுவரும் வாய்ப்பை உருவாக்குவதற்கு ஏற்ற உலகமா இது தற்போது? மிகவும் மோசமானது. அவள் கண்களுக்கு ஓப்ஸிடியன் எவ்வளவு கவர்ச்சிகரமானவனாகத் தெரிந்தான் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியாது – சுத்தமாக இருந்தான், இளமையானவன், அனேகமாக அவளை விட வயது குறைந்தவனாக இருக்கலாம். தனக்கு என்ன வேண்டுமென்பதைக் கேட்டுப் பெறுபவனாக இருந்தான், பறிப்பவனாக இல்லை. ஆனால் அது எதுவும் இப்போது முக்கியமில்லை. வாழ்நாள் முழுதும் தொடரும் பின்விளைவுகளுக்கு முன்னால் இந்த சிலநொடி சுகத்தின் மதிப்புதான் என்ன?

அவளை தன்னருகே அவன் பற்றியிழுத்தான், அவளும் ஒரு கணம் அந்நெருக்கத்தை மகிழ்ந்து அனுபவித்தாள். அவனிலிருந்து நல்ல வாசம் வந்தது – ஆண் வாசம், ஆனால் நல்ல வகையைச் சேர்ந்தது. அவள் தயக்கத்துடன் விலகினாள்.

அவன் சலிப்பாக காரின் வைப்புப் பெட்டியைத் திறந்தான். என்ன எடுக்கப் போகிறான் என்பதை அறியாமல் அவள் உறைந்து போனாள். ஆனால் அவன் அதிலிருந்து ஒரு சின்ன பெட்டியைத்தான் எடுத்தான். அதன்மீது எழுதியிருந்தது எதுவும் அவளுக்கு விளங்கவில்லை. அவன் உறையைப் பிரித்து பெட்டியைத் திறந்து உள்ளிருந்து ஒரு ஆணுறையை வெளியே எடுக்கும்வரை அவளுக்கு எதுவும் புரியவில்லை. அவன் அவளைப் பார்த்தான், அவள் ஆச்சரியத்தில் முதலில் பார்வையை விலக்கிக் கொண்டாள். பிறகு வெட்கிச் சிரித்தாள். கடைசியாக அவள் சிரித்தது எப்போது என்று அவள் நினைவில் இல்லை.

அவன் அசட்டுச் சிரிப்புடன் பின்னிருக்கையை நோக்கி சைகை காட்டினான். அவள் சத்தம் போட்டுச் சிரித்தாள். அவள் தன்னுடைய பதின்பருவத்தில் கூட பின் இருக்கைச் சமாச்சாரங்களை விரும்பியதில்லை. ஆனால் காலியான தெருக்களையும் சிதிலமுற்ற கட்டிடங்களையும் ஒருமுறை அவள் சுற்றிப் பார்த்தாள், பின் காரிலிருந்து வெளியே வந்து பின்னிருக்கைக்குள் நுழைந்தாள். ஆணுறையைப் போட்டுவிட அவளை அனுமதித்தான், அவளின் ஆர்வத்தைக் கண்டு அவன் ஆச்சரியமடைந்தான்.

சிறிது நேரம் கழித்து அவனுடைய மேலங்கியை போர்த்திக்கொண்டு அவர்களிருவரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர், ஆடைகளை அணிந்து மீண்டும் கிட்டத்தட்ட அந்நியர்களாக மாறிவிடும் விருப்பம் தற்போதைக்கு இல்லை அவர்களிடத்தில். குழந்தையைத் தாலாட்டும் அசைவுகளைக் காட்டி முகத்தில் கேள்விக்குறியோடு அவளைப் பார்த்தான்.

எச்சில் விழுங்கினாள், தலையை லேசாக அசைத்தாள். ஆனால் தன் குழந்தைகள் இறந்துவிட்டன என்பதை அவனிடம் எப்படிச் சொல்வது என்று அவளுக்குத் தெரியவில்லை.

அவன் அவள் கைகளை எடுத்து தன் ஆட்காட்டி விரலால் சிலுவையை வரைந்து மீண்டும் குழந்தையைத் தாலாட்டும் சைகையைக் காட்டினான்.

அவள் தன் தலையை ஆட்டி மூன்று விரல்களை உயர்த்திக் காட்டி, புரண்டு வரும் நினைவுகளை அடைக்க வேண்டி தன் தலையைத் திருப்பிக் கொண்டாள். தற்போது வளர்ந்து வரும் குழந்தைகள் பரிதாபத்திற்குரியவர்கள் என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள். உயரமான கட்டிடங்களெல்லாம் எப்படி இருந்தன அல்லது அவை எப்படி உருவாகின என்பதைப் பற்றியெல்லாம் எந்த நினைவுகளுமின்றி அவர்கள் நகரங்களின் குறுகிய பள்ளத்தாக்குகளில் ஓடித்திரிவர். இன்றைய குழந்தைகள் விறகுகளையும் புத்தகங்களையும் எரிபொருளென, இரண்டும் ஒன்றெனக் கருதித்தான் சேகரிக்கிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் துரத்திக்கொண்டு, சிம்பன்ஸிக்களைப் போலக் கூப்பாடு போட்டு தெருக்களெங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிர்காலமில்லை. இப்போது இருப்பதைப் போலத்தான் அவர்கள் எப்போதும் இருக்கப் போகிறார்கள்.

அவள் தோளின் மீது கையை வைத்தான், அவள் சட்டெனத் திரும்பி அவனைப் பார்த்து அந்தச் சிறிய பெட்டியைத் தட்டுத் தடுமாறித் தேடினாள், பிறகு அவனை மீண்டும் தன்னுடன் காதல் செய்யும்படி வற்புறுத்தினாள். அவனால் அவளுக்கு புலனின்பத்தையும் தற்காலிக மறதியையும் கொடுக்க முடிகிறது. இதுவரை வேறெதுவும் அவளுக்கு இவற்றைத் தந்ததில்லை. இதுவரை அவள் எதைத் தவிர்ப்பதற்காக வீட்டைவிட்டு வெளியேறினாளோ, அதை நோக்கித்தான் ஒவ்வொரு நாளும் அவளை இழுத்துக் கொண்டிருந்தது: தன் வாயினுள் துப்பாக்கியை வைத்து அதன் விசையை அழுத்துவது.

தன்னுடன் தன் வீட்டிற்கு வந்து அவளுடனேயே தங்கிவிடும்படி ஓப்ஸிடியனிடம் கேட்டாள்.

அவன் அதைப் புரிந்து கொண்டதும் ஆச்சரியமடைந்தவனாகவும் உவகைக் கொண்டவன் போலவும் தோன்றினான். ஆனால் அவன் உடனடியாக பதில் சொல்லவில்லை. கடைசியில் அவள் பயந்ததைப் போலவே அவன் தலையை ஆட்டினான். திருடன்-போலீஸ் விளையாடுவதும் பெண்களை இப்படி அழைத்து அனுபவித்து பின் விலக்குவதுமே அவனுக்குப் போதுமான மகிழ்வைத் தருவதாக இருக்கிறது போலும்.

அவன் மீது எவ்விதமான கோபமும் எழாமல் அவள் அமைதியாக ஏமாற்றத்துடன் தன் ஆடையை உடுத்திக் கொண்டாள். ஒருவேளை அவனுக்கு ஏற்கனவே மனைவியும் வீடும் இருக்கலாம். அதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்த நோயின் தாக்கம் பெண்களை விடவும் ஆண்களின் மீதுதான் அதிகமாக இருந்தது – நிறைய ஆண்களைக் கொன்றுவிட்டது. மீதமிருக்கும் ஆண்கள் தீவிர பாதிப்பிற்குள்ளாகியிருந்தனர். ஓப்ஸிடியன் போன்ற ஆண்கள் மிகவும் அரிதுதான். பெண்கள் தங்களுக்குக் கிடைத்தவர்களை ஏற்றுக்கொண்டனர் அல்லது தனியாகவே வாழ்ந்தனர். அவர்கள் ஓப்ஸிடியனைக் கண்டார்களெனில் அவனைத் தனதாக்கிக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இளமையான, அதிக அழகுள்ள யாரோ ஒருத்தி தான் அவனைச் சொந்தமாக்கிக் கொண்டிருப்பாள் என்று ரைய் சந்தேகப்பட்டாள்.

அவள் தன்னுடைய துப்பாக்கியை ஆடையோடு இணைத்துக் கட்டும்போது அவன் அவளைத் தொட்டு மிகச்சிக்கலான அசைவுகளால் இத்துப்பாக்கியில் தோட்டாக்கள் உண்டா எனக் கேட்டான்.

அவள் பற்களைக் காட்டிச் சிரித்து ஆமாமெனத் தலையாட்டினாள்.

அவன் அவள் தோள்களைத் தட்டிக் கொடுத்தான்.

இம்முறை வேறுவிதமான அசைவுகளைக் காட்டி அவனைத் தன்னுடன் தன் வீட்டிற்கு வர முடியுமாவென மீண்டும் கேட்டாள். முதல்முறை கேட்டபோது அவன் தயக்கம் காட்டினான். உறுதியாக நின்று லேசாக வற்புறுத்தினால் ஒருவேளை அவனை ஏற்றுக்கொள்ளச் செய்துவிடலாம்.

அவன் பதிலளிக்காமல் வெளியே வந்து முன் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டான்.

அவளும் தன்னுடைய முன் இருக்கையில் அவனைப் பார்த்தபடி அமர்ந்தாள். இப்போது அவன் தன்னுடைய சீருடையைப் பிடித்திழுத்து அவளைப் பார்த்தான். தன்னிடம் அவன் எதுவோ கேட்கிறான் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் அது என்னவென்று அவளுக்குத் தெரியவில்லை.

அவன் தன்னுடைய போலீஸ் முத்திரையைக் கழற்றி ஒரு விரலால் அதைத் தொட்டு பின் தன்னுடைய இதயத்தின் மீது கைவைத்தான். சரிதான்!

அந்த முத்திரையை அவனிடமிருந்து வாங்கி தன்னுடைய கோதுமைக் கதிரை அதனுடன் பிணைத்தாள். இப்படியே போலீஸ்-திருடன் விளையாடுவது தான் அவனுடைய ஒரே பைத்தியக்காரத்தனமென்றால் அவன் அதைச் செய்யட்டும். அவள் தடுக்கப் போவதில்லை. அவள் அவனை, அவன் சீருடையையும் மற்றெல்லாவற்றையும் சேர்த்தே தான் தனக்கென எடுத்துக் கொள்வாள். ஒரு கட்டத்தில் தன்னைப்போல அவன் சந்திக்கும் வேறு யாரிடமோ அவனை அவள் தொலைக்க நேரிடும் என்பதும் அவள் மனதில் தோன்றியது. ஆனால் அதுவரையில் அவன் அவளுக்குச் சொந்தமானவன்.

அவன் வரைபடத்தை மீண்டும் எடுத்து விரித்து, தோராயமாக வடகிழக்கு மூலையில் பாஸடேனாவை நோக்கி கை வைத்து, பிறகு அவளைப் பார்த்தான். அவள் தோள்களைக் குலுக்கினாள். அவனுடைய தோள்களைத் தொட்டு பின் தன்னையும் தொட்டு தன் ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் ஒன்றாக இறுக்கிச் சேர்த்து உயரத் தூக்கி காட்டினாள். இணைப்பை உறுதிபடுத்திக் கொண்டாள்.

அவ்விரண்டு விரல்களையும் பற்றிக்கொண்டு தலையசைத்தான். அவனும் உறுதியேற்றுக் கொண்டான்.

அவனிடமிருந்து வரைபடத்தைப் பிடுங்கி எறிந்தாள். அவள் தென்மேற்கு திசையைச் சுட்டிக்காட்டினாள் – மீண்டும் வீட்டுக்கு. அவள் இனி பாஸடேனா செல்ல வேண்டியதில்லை. அவள் சகோதரனும் அவனின் இரண்டு மகன்களும் – வலது கை பழக்கமுடைய மூன்று ஆண்கள் – அங்கேயே பத்திரமாக இருக்கலாம். பயப்படுமளவிற்குத் தான் தனிமையில்தான் உழல்கிறோமா என்றெல்லாம் அவள் சிந்தித்து அதைப் புரிந்துகொள்கிற தேவை இனியில்லை. இப்போது அவள் தனியானவள் அல்ல.

ஓப்ஸிடியன் வண்டியைத் திருப்பினான், அவள் அவன் மீது சாய்ந்தாள், வாழ்வில் மீண்டும் ஒருவரின் அருகாமை கொடுக்கும் உணர்வுகள் என்னவென்று அறியும் ஆவலுடன். அவள் இதுவரை என்னவெல்லாம் தேடிச் சேகரித்தாளோ, எதையெல்லாம் பாதுகாத்து வைத்திருக்கிறாளோ, எவற்றையெல்லாம் பயிரிட்டு வளர்த்திருக்கிறாளோ அவையே அவர்களிருவருக்கும் போதுமானது. நான்கு அறைகள் கொண்ட அவளது வீட்டில் நிச்சயமாக அவர்களுக்குப் போதுமான இடம் இருக்கும். அவனுடைய பொருட்களைக் கூட இங்கே கொண்டுவந்து விடலாம். அனைத்திற்கும் மேலாக, தெருவில் எதிர் வீட்டில் இருக்கும் அந்த மிருகம் இனி விலகி நிற்பான், அவனைக் கொன்றுவிடும் நிலைக்கு அவளை இனி தள்ள மாட்டான்.

ஓப்ஸிடியன் தன்னருகே அவளை இழுத்து அணைத்துக் கொண்டான், தோள் மீது அவள் தலை சாய்த்த நேரம் அவன் சடாரென பிரேக் போட்டான். அவள் தன் இருக்கையிலிருந்து கிட்டத்தட்ட வீசியெறியப்பட்டாள். கண்களின் ஓரப்பார்வையில் யாரோ தெருவைக் கடக்கையில் கார் முன்னே வந்து நின்றதைப் பார்த்தாள். சாலையில் ஒரே ஒரு கார் தான் இப்போது ஓடுகிறது, அதற்கு முன்னால் வந்துதானா ஒருவர் பாய வேண்டும்?

ரைய் நிமிர்ந்து எழுந்தபோது ஓடிக்கொண்டிருப்பது ஒரு பெண் என்பதைக் கண்டாள். பழைய வீடு ஒன்றிலிருந்து தப்பித்து பலகைகளால் அடைத்துச் சாத்தப்பட்டிருக்கும் ஒரு கடையை நோக்கி ஓடினாள். அவள் சத்தமின்றி ஓடிக்கொண்டிருந்தாள், ஆனால் அவளை பின்னால் துரத்தி வந்த மனிதன் ஏதோ சிதைந்த சொற்களால் கூச்சலிட்டான். அவன் கையில் எதுவோ இருந்தது. துப்பாக்கி இல்லை. கத்தியாக இருக்கலாம்.

அந்தப் பெண் கடையின் கதவைத் திறக்க முயன்றாள், அது பூட்டியிருந்ததைக் கண்டதும், மூர்க்கமாகச் சுற்றிமுற்றித் தேடி கடைசியில் கடையின் முன் ஜன்னலின் உடைந்த கண்ணாடித் துண்டு ஒன்றை எடுத்துக்கொண்டாள். அதைக் கையில் கொண்டு தன்னைத் துரத்தி வந்தவனை நோக்கித் திரும்பினாள். அந்தக் கண்ணாடித் துண்டால் வேறு யாரையும் காயப்படுத்துவதை விடவும் தன் கையைத்தான் அவள் வெட்டிக்கொள்ளப் போகிறாள் என்று நினைத்தாள் ரைய்.

ஓப்ஸிடியன் சத்தம் போட்டபடி காரிலிருந்து எகிறிக் குதித்தான். இப்போதுதான் முதல் முறையாக ரைய் அவனுடைய குரலைக் கேட்கிறாள் – ஆழமான, ஆனால் அதிகம் பயன்படுத்தாததால் கரகரத்துப் போன குரல். பேச்சிழந்த மனிதர்கள் செய்வதைப் போல அவன் ஒரே சத்தத்தையே மீண்டும் மீண்டும் எழுப்பினான், “டா, டா, டா!”

அந்த இருவரையும் நோக்கி ஓப்ஸிடியன் ஓடியபோது ரைய் காரைவிட்டு இறங்கினாள். அவன் தன்னுடைய துப்பாக்கியைக் கையில் வைத்திருந்தான். பயத்தில் அவளும் தன் துப்பாக்கியை வெளியே எடுத்துச் சுடுவதற்கு தயார்படுத்தினாள். இந்த நிகழ்வு எத்தனை பேரின் கவனத்தை ஈர்த்துவிட்டது என்று அறிந்துகொள்ள அவள் சுற்றித் திரும்பிப் பார்த்தாள். அந்த மனிதன் ஓப்சிடியனை ஒரு கணம் நோக்கிவிட்டு உடனே அந்தப் பெண் மீது பாய்ந்து தாக்கினான். அந்தப் பெண் அவன் முகத்தை கண்ணாடியால் குத்தித் தள்ளினாள். ஆனால் ஓப்ஸிடியன் அவனைச் சுடுவதற்குள்ளாகவே அவன் அவள் கைகளைத் தடுத்துப் பிடித்து அவளை இரண்டு முறை கத்தியால் குத்திவிட்டான்.

அம்மனிதன் அடிவயிற்றைப் பிடித்தபடி மடங்கி கீழே கவிழ்ந்தான். ஓப்ஸிடியன் உரக்கக் கத்தினான், இங்கு வந்து அந்தப் பெண்ணிற்கு உதவும்படி ரைய்யை நோக்கி சைகை காட்டினான்.

தன்னுடைய பையில் பஞ்சுக் கட்டுகளும் கிருமி நாசினிகளும் இருப்பது அவள் நினைவிற்கு வந்தது, அப்பெண்ணின் பக்கமாகச் சென்று நின்றாள். ஆனால் அப்பெண்ணிற்கு உதவி தேவையாயிருக்கவில்லை. கூர்மையான பற்களுடைய நீண்ட கத்தியால் குத்தப்பட்டிருந்தாள்.

அப்பெண் இறந்துவிட்டாள் என்பதை அவனுக்குத் தெரிவிப்பதற்காக அவள் ஓப்ஸிடியனை தொட்டாள். இறந்துவிட்டனைப் போலக் காணப்பட்ட, அடிபட்டு அசைவற்று கிடந்த மனிதனைப் பரிசோதிப்பதற்காக ஓப்ஸிடியன் குனிந்திருந்தான். ஆனால் ரைய் தொட்டதும் அவளைப் பார்ப்பதற்கு ஓப்ஸிடியன் திரும்பியபோது அவன் கண்கள் திறந்தன. கிழிபட்ட முகத்துடன் இருந்த அவன், அப்போதுதான் உறையில் வைக்கப்பட்டிருந்த ஓப்ஸிடியனின் துப்பாக்கியை எடுத்து அவனைச் சுட்டான். ஓப்ஸிடியன் நெற்றியில் குண்டு பாய்ந்து அவன் குலைந்து விழுந்தான்.

அவ்வளவு சாதாரணமாக அது நடந்துவிட்டது, அவ்வளவு வேகமாக. ஒருகணம் கழித்து, அவன் துப்பாக்கியை அவளை நோக்கித் திருப்ப, ரைய் அடிபட்ட அம்மனிதனைச் சுட்டாள்.

இப்போது ரைய் தனியாக இருந்தாள் – மூன்று பிணங்களுடன்.

உலர்ந்த கண்களுடன், நெரித்த முகத்துடன், ஏன் அத்தனையும் இப்படிச் சட்டென மாறிவிட்டது என்பதைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் ஓப்ஸிடியன் அருகில் மண்டியிட்டாள். ஓப்ஸிடியன் போய்விட்டான். மற்ற எல்லோரையும் போலவே அவனும் இறந்து அவளை நீங்கிச் சென்றுவிட்டான்.

அந்த ஆணும் பெண்ணும் வெளியேறி ஓடிவந்த வீட்டிலிருந்து இரண்டு சிறுவர்கள் வெளியே வந்தனர் – ஒரு சிறுவனும் சிறுமியும், மூன்று வயதிருக்கலாம். அவர்கள் கைகளைக் கோர்த்தபடி சாலையைக் கடந்து ரைய்யை நோக்கி வந்தனர். அவர்கள் அவளை வெறித்துப் பார்த்தனர், பிறகு அவளை உரசிக் கடந்து இறந்த பெண்ணின் அருகே சென்றனர். அந்தச் சிறுமி இறந்தவளின் கைகளைப் பிடித்து ஆட்டினாள், அவளை எழுப்ப முயல்பவள் போல.

ரைய்யால் இதைத் தாள முடியவில்லை. கோபத்திலும் துக்கத்திலும் அவள் வயிறு ஏதோ செய்தது. அச்சிறுவர் அழத் தொடங்கினால் தான் வாந்தி எடுத்துவிடக் கூடும் என்று தோன்றியது அவளுக்கு.

அந்த இரண்டு குழந்தைகளுக்கும் இப்போது வேறு யாரும் இல்லை. சுற்றியலைந்து உணவைத் தேடிச் சேகரிக்கும் வயதை அடைந்து விட்டவர்கள். இதற்கு மேல் இனி அவளுக்கு புதிய துன்பங்கள் எதுவும் வேண்டாம். முடியற்ற சிம்பன்ஸிக்களாக பின்னாளில் வளர்ந்து நிற்கப்போகும் பெயர் அறியாத ஒருவரின் குழந்தைகள் அவளுக்குத் தேவையில்லை.

அவள் மீண்டும் காரை நோக்கிச் சென்றாள். குறைந்தபட்சம் அவளால் தன் வீட்டிற்கு வண்டியோட்டிப் போகமுடியும். கார் ஓட்டுவது எப்படி என்பது அவள் ஞாபகத்தில் இன்னமும் இருந்தது.

காரை நெருங்கும் முன்னர், ஓப்ஸிடியானை அடக்கம் செய்யவேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் உதித்ததும் வாந்தியெடுத்து விட்டாள்.

தனக்கென ஒரு துணையைக் கண்டுபிடித்து சடுதியில் அவனைத் தொலைத்தும் விட்டாள். அவளுக்கென இருந்த ஆதரவையும் பாதுகாப்பையும் பறித்துக்கொண்டு திடீரென விவரிக்க முடியாத வலிதரும் தாக்குதலுக்கு ஆளாகிவிட்டதைப் போலிருந்தது. அவளது மூளை தெளிவாக இல்லை. அவளால் சிந்திக்க முடியவில்லை.

ஒருவழியாக அவள் அவனருகில் போகும்படி தன்னைத் திரட்டிச் செலுத்தினாள், அவனைப் பார்த்தாள். தன்னையறியாமலேயே மண்டியிட்டு அவன் பக்கத்தில் அமர்ந்தாள். அவன் முகத்தையும் தாடியையும் தடவிக் கொடுத்தாள். குழந்தைகளில் ஒன்று இறந்து கிடந்த பெண்ணைப் பார்த்து ஏதோ சத்தமெழுப்பியதும் அவர்களைத் திரும்பிப் பார்த்தாள். அந்தப் பெண் அனேகமாக அவர்களுடைய அம்மாவாக இருக்கக்கூடும். அக்குழந்தைகளும் அவளைத் திரும்பிப் பார்த்தனர். அவர்கள் பயந்திருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அவர்களுடைய பயம்தான் அவளின் ஆழத்தை இறுதியாகச் சென்று தொட்டிருக்கலாம்.

இவர்களை இப்படியே விட்டுவிட்டு வண்டியோட்டிச் சென்று விடுவதாகத்தான் இருந்தாள். அவ்விரு சிறார்களையும் கிட்டத்தட்ட இறக்கும்படி அப்படியே விட்டுச் சென்றுவிடத் துணிந்தாள். ஆனால் அங்கே ஏற்கனவே போதுமான அளவு இறப்புகள் நிகழ்ந்து விட்டன. குழந்தைகளைத் தன்னுடனே வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். வேறு எந்த முடிவு எடுத்தாலும் அது அவளை நிம்மதியாக வாழ விடாது. மூன்று உடல்களையும் அடக்கம் செய்வதற்கு இடத்தை தேடிச் சுற்றிப் பார்த்தாள். அல்லது இரண்டிற்காவது. கொலை செய்தவன் இவர்களின் அப்பாவாக இருப்பானோ என்று சந்தேகப்பட்டாள். ‘மௌனம்’ பரவுவதற்கு முன்னால் போலீஸ் எப்போதுமே சொல்வது ஒன்றுண்டு, அவர்களுக்கு வரும் ஆபத்தான அழைப்புகள் எல்லாம் குடும்ப வன்முறை காரணமாகத்தான் இருக்கும் என்று. ஓப்ஸிடியானுக்கும் இது தெரிந்திருக்க வேண்டும் – இதைத் தெரிந்து வைத்திருந்தால் அவன் இம்முறை காரிலேயே இருந்திருப்பான் என்று அர்த்தமில்லை. அந்த அறிவு அவளையும் கூட தடுத்து சும்மா இருந்திருக்க விட்டிருக்காது. ஒரு பெண் கொலை செய்யப்படுவதை அவளால் பார்த்துக்கொண்டு ஒன்றும் செய்யாமல் இருக்க முடியாது.

அவள் ஓப்ஸிடியானை காரை நோக்கி இழுத்துச் சென்றாள். குழி தோண்டுவதற்கு அவளிடம் எதுவுமில்லை, தோண்டும்போது அவளைப் பாதுகாப்பதற்கும் யாரும் இல்லை. உடல்களை அவளுடனே எடுத்துச் சென்று வீட்டில் கணவருக்கும் அவளின் குழந்தைகளுக்கும் பக்கத்தில் இவர்களை அடக்கம் செய்வதுதான் நல்லது. அப்படியாவது ஓப்ஸிடியன் அவளுடன் அவள் வீடு வரைக்கும் வருவான்.

காரினுள்ளே அவனைக் கீழே கிடத்தியதும் அந்தப் பெண்ணை இழுத்து வருவதற்காகத் திரும்பிப் போனாள். அந்தச் சிறுமி, மெலிந்து அழுக்கடைந்து ஆர்ந்தமைதி கொண்டிருந்த அவள் தன்னையறியாமலே எதிர்பாராத ஒரு பரிசை ரைய்க்கு கொடுத்தாள். அந்தப் பெண்ணின் உடலை கைகளைப் பற்றி ரைய் இழுத்தபோது, சிறுமி சத்தம் போட்டுக் கத்தினாள், “வேண்டாம்!”

ரைய் அப்பெண்ணுடலைக் கீழே போட்டு அச்சிறுமியை உற்றுப் பார்த்தாள்.

“வேண்டாம்!” சிறுமி மீண்டும் சொன்னாள். அவள் பெண் சடலத்தின் அருகே வந்து நின்றாள். “இங்கிருந்து போ!” அவள் ரைய்யிடம் சொன்னாள்.

“பேசாதே,” அந்தச் சிறுவன் சிறுமியிடம் சொன்னான். பேச்சொலிகள் தெளிவற்றோ குழப்பமூட்டக் கூடியதாகவோ இல்லை. இருவரும் பேசினார்கள். அதை ரைய்யும் புரிந்து கொண்டாள். அந்தச் சிறுவன் இறந்துபோன கொலைகாரனைப் பார்த்து அவனிடமிருந்து விலகி நின்றுகொண்டான். அவன் சிறுமியின் கைகளைப் பற்றிக்கொண்டான். “அமைதியா இரு,” அவன் கிசுகிசுத்தான்.

சரளமான பேச்சு! கீழே கிடந்த பெண்ணாலும் பேசமுடியும் என்பதால் தான் அவள் இப்போது இறந்து கிடக்கிறாளா? குழந்தைகளுக்கும் பேசக் கற்றுக் கொடுத்ததும் காரணமாக இருக்குமா? கணவனின் நுரைத்துக் கிளம்பிய கோபத்தினால் அவள் கொல்லப்பட்டாளா? அல்லது பொறாமையால் மூண்ட யாரோ ஒரு அந்நியனின் ஆத்திரமா? இந்தக் குழந்தைகள்… ‘மெளனத்திற்கு’ பிறகு பிறந்த குழந்தைகளாக இருக்கக் கூடும். அப்படியென்றால் இந்த நோயின் ஓட்டம் முடிவிற்கு வந்துவிட்டதா? அல்லது இக்குழந்தைகள் அந்நோய் எதிர்ப்பு மிக்கவர்களா? நிச்சயமாக அவர்களும் நோயினால் பாதிப்படையவும் ‘மெளனமாகிப்’ போவதற்கும் போதிய காலம் இருந்திருக்கும். ரைய்யின் மனம் சற்று வேகமாக முன்னேறித் தாவியது. மூன்று வயதோ அல்லது அதற்கும் குறைவான குழந்தைகள் பாதுகாப்பானவர்களாகவும் பேசக் கற்றுக்கொள்ளக் கூடியவர்களாகவும் இருக்கிறார்களோ? அவர்களுக்கு தற்போது தேவையானதெல்லாம் ஆசிரியர்கள் தானோ? ஆசிரியர்களும் பாதுகாவலர்களும்.

இறந்து கிடந்த கொலைகாரனைக் கணநேரம் நோக்கினாள். அவன் யாராக இருந்தாலும், இச்செயலைச் செய்ய அவனை உந்தித் தள்ளிய உணர்ச்சிகளை அவளாலும் புரிந்துகொள்ள முடியும் என்பது கொஞ்சம் அவமானமாகத்தான் இருந்தது. கோபம், விரக்தி, நம்பிக்கையின்மை, அறிவை மறைக்கும் பொறாமை… இவனைப் போல இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் – தங்களால் ஒருபோதும் அடைய முடியாத ஒன்றை முற்றிலுமாக அழிக்கத் துணிபவர்கள்?

ஓப்ஸிடியன் ஒரு பாதுகாவலனாக இருந்தான், என்ன காரணத்திற்காக அவன் அந்தப் பாத்திரத்தைத் தேர்வு செய்துகொண்டான் என்று யாருக்குத் தெரியும்? ஒருவேளை வழக்கற்றுப் போன சீருடையை அணிந்துகொண்டு யாருமில்லாத தெருக்களில் ரோந்து போவதுதான் தன் வாயில் தானே துப்பாக்கி வைத்துச் சுடுவதிலிருந்து தப்பிக்க தேர்ந்துகொண்டதோ என்னவோ? இப்போது பாதுகாக்கப்பட வேண்டிய பெருமதிப்பு மிக்க ஒன்று இருக்கிறது, ஆனால் அவன் போய்விட்டான்.

அவள் ஒரு ஆசிரியராகப் பணிபுரிந்தவள். நல்ல ஆசிரியரும் கூட. தன்னை மட்டும் தான் அவள் பாதுகாத்துக் கொண்டாள் எனினும் அவள் ஒரு சிறந்த காவலாளிதான். வாழ்வதற்கு அவளிடம் எந்த காரணமும் இல்லாத போதும் அவள் தன் உயிரைக் காத்துக்கொண்டாள். இந்நோய் விட்டுவைக்குமானால் இச்சிறுவர்களின் உயிரையும் அவளால் காக்க முடியும்.

இறந்த பெண்ணின் சடலத்தை எப்படியோ மேலே தூக்கி காரின் பின்னிருக்கையில் போட்டாள். சிறுவர்கள் அழத்தொடங்கினர், ஆனால் அவள் சேதமடைந்திருந்த நடைபாதையில் மண்டியிட்டு அமர்ந்து மெல்ல குசுகுசுக்கும் குரலில் பேசத் தொடங்கினாள், நீண்ட காலமாகப் பயன்படுத்தாத தன் குரலின் கடுமை இவர்களை அச்சுறுத்தும் என்ற கவலையில்.

“பயப்படாதீங்க,” அவர்களிடம் சொன்னாள். “உங்களையும் என்னோட கூட்டிப்போகப் போறேன். வாங்க.” அவர்களிருவரையும் தன் இரு கரங்களில் தூக்கிக் கொண்டாள். மிகவும் எடையற்றவர்களாக இருந்தனர். அவர்கள் உண்ண போதுமான அளவு உணவு இருந்ததா?

சிறுவன் தன் கையால் அவளின் வாயை மூடினான், ஆனால் அவள் தன் முகத்தை விலக்கிக் கொண்டாள். “நான் பேசலாம், பரவாயில்லை” அவர்களிடத்தில் சொன்னாள்.

“நம்மைச் சுற்றி வேறு யாரும் இல்லைன்னா பேசலாம், பிரச்சினையில்லை, பயப்படாதீங்க.” அவள் காரின் முன் இருக்கையில் அச்சிறுவனை அமர வைத்தாள், அவன் அவள் கேட்டுக்கொள்ளாமலேயே இருக்கையில் நகர்ந்து சிறுமிக்கான இடத்தை ஒதுக்கித் தந்தான். அவர்கள் காருக்குள் ஏறியதும் ரைய் அவர்களிருவரையும் பார்க்கும் பொருட்டு ஜன்னல் பக்கமாகச் சாய்ந்தாள், அவர்களிடம் பயம் சற்று குறைந்திருப்பதைப் பார்த்தாள், குறைந்தபட்ச பயம் அளவிற்கே அவர்களுக்கு இப்போது ஆர்வம் மேலிட இவளைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

“என் பெயர் வலேரி ரைய்,” வார்த்தைகள் ஒவ்வொன்றையும் சுவைத்து அனுபவித்துச் சொன்னாள். “நீங்க என்னிடம் பேசுவதற்கு பயப்பட வேண்டியதில்லை, நான் ஒன்றும் செய்யமாட்டேன்.!


நரேன்
ராணிப்பேட்டையைச் சேர்ந்த இவர் தற்போது கோவையில் வசித்து வருகிறார். இவர் மொழிபெயர்த்த சமகால புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறுகதைகள் தொகுப்பு “இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்” நல்ல கவனம் பெற்றது. மின்னஞ்சல் : Narendiran.m@gmail.com

முன்னை இட்ட தீ…

0

இளங்கோவன் முத்தையா

மெல்லிய குளிர் காற்று உடலைத் தழுவியது. கைகளை இறுகக்கட்டி, கால்களை மடித்து சுருண்டுகொள்ளத் தோன்றினாலும் உடலை அசைக்க முடியவில்லை. எங்கோ தூரத்திலிருந்து மெலிதான பாட்டு சத்தமும், இஞ்சின் சத்தமும் கேட்டது. காட்சி தெளிவானபோது ஓடிக்கொண்டிருக்கும் காரிலிருந்தேன். பின்மதிய நேரம்போல பொன்னிற எதிர்வெயில் காரின் முகப்புக் கண்ணாடி வழியாக நேரடியாக முகத்தில் அறைந்து கண்களைக் கூசச்செய்தது. ஆனாலும் ஒருவகையான காலக் குழப்பமிருந்தது. கார் மிகப்பெரியதாக ஒரு அறை அளவுக்கு இருந்தது. விரல்களை நீட்டி மடக்க முயற்சித்தேன்… அவை அசைவற்றிருந்தன.

காரை ஓட்டிக்கொண்டிருந்தது பாபு. அவனைப் பார்த்ததும் லேசான அதிர்ச்சியும் எரிச்சலுமடைந்தேன். ஆனால் என்னைப் பார்த்துச் சிரித்தான் அவன். எங்கு இருக்கிறோம் என்று சுற்றும் முற்றும் பார்த்தேன். வலதுபுற மலையில் மகேந்திரகிரி இஸ்ரோ சின்னச்சின்ன, அடுக்கடுக்கான கட்டிடங்களாக தெரிந்தது. “பெங்களூர் போகும் வழியில் ஹொசூரில் எங்கே மகேந்திரகிரி வந்தது?” என்று யோசிப்பதற்குள் “இது திருவனந்தபுரம் நோக்கிய பயணமல்லவா?” என்றும் தோன்றியது.

“ஒவ்வொரு முறை நாகர்கோவிலுக்கு வரும்போதும் எவ்வளவுதான் தூங்கினாலும் சரியாகக் காவல் கிணறு தாண்டும் இடத்தில் முழிப்பு வந்துவிடுகிறது?” என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டேன். “கன்யாகுமரி டிஸ்ட்ரிக்குக்குள்ள நுழைஞ்சவுடனே க்ளைமேட்டே மாறுதுல்ல?” என்றான் பாபு. ஆரல்வாய்மொழி நோக்கி வண்டி போய்க்கொண்டிருக்க, இடதுபுறம் தொடுவானம் வரை விண்ட்-மில் காற்றாடிகள் சுழன்று கொண்டிருந்தன. வலது பக்கத்தில் விருதுநகருக்கும் சாத்தூருக்குமிடையில் இருக்கும் ராம்கோ சிமெண்ட்ஸ் கட்டிடம் பல நூறு விளக்குகளோடு ஒளிர்ந்து கொண்டிருந்தது. “பகலில் எதற்கு இவ்வளவு லைட்?” என்று எரிச்சலாகி பாவுவைத் திரும்பிப் பார்த்தேன். ஏதோ சொல்ல வாயெடுத்தவன் பிறகு ஒன்றும் சொல்லாமல் சிரித்தான்.

நான் திரும்பி சாலையைப் பார்த்தபோது கார் நாகர்கோவில் நகருக்குள் சென்றுகொண்டிருந்தது. எனக்குக் கொஞ்சமும் பழக்கமில்லாத புது ஊரைப் போலத் தோற்றம் காட்டிக்கொண்டிருந்தது நாகர்கோயில். மணிமேடைக்கு இடதுபுறம் கட்டிடங்களுக்குப் பதிலாக ஒரு பெரிய குளமொன்று கண்ணுக்கெட்டிய தூரம்வரை நீர்ததும்பி நின்றது. அதைத் தாண்டியவுடன் வேப்பமூடு ஜங்ஷன் வராமல் நேராக கே.பி ரோட்டிலிருக்கும் சப்-ஜெயில் வந்துவிட்டது. நான் முன்பு வேலை பார்த்த அலுவலகத்தை அதற்கருகே காணவில்லை. அதே இடத்தில் வேறு ஏதோ ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. அதற்குப் பக்கத்தில் வீடு முழுக்க பிள்ளையார் சிலையாக வைத்திருந்த, பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நான் ஒரே ஒருதடவை சந்தித்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் அவரது வீட்டு வாசலில் பைஜாமா ஜிப்பா அணிந்து என்னைப் பார்த்து சிரித்தபடியே கை காட்டினார். ஏனோ அவரைக் கவனிக்காதது போல நான் என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். இடது பக்கம் ராமவர்மபுரத்து வீடுகளின் காம்பவுண்ட் சுவர்களில் மழை செம்மண்ணை அப்பியிருந்தது.

“திருவனந்தபுரத்துக்கு இன்னைக்கு நைட்டுக்குள்ள போயிரலாமா?” என்ற பாபுவின் கேள்விக்கு “ஒன்ரை, ரெண்டு மணி நேரத்துக்குள்ள போயிரலாம்” என்றபடி என் கையிலிருந்த வாட்ச்சைப் பார்த்தேன். அங்கே அது இல்லை. விடுமுறை நாட்களில் வீட்டிலிருக்கும்போது அணியும் டீ ஷர்ட்டும், ட்ராக் சூட்டும் அணிந்திருந்தேன். பாபு வெள்ளை நிற முழுக்கை சட்டை, சாம்பல் நிற பேண்ட், கால்களில் பாலீஷ் செய்யப்பட்ட கறுப்பு நிற ஷூக்கள் எனப் பளிச்சென்று இருந்தான். சொல்லப்போனால் அது எனது பிரத்யேகமான உடைத்தேர்வு. பாபுவின் கைகளிலிருந்த வெள்ளிக்காப்பு கூட நான் அணிந்திருப்பது போலவே இருந்தது. இப்போது காரை ஓட்டிக்கொண்டிருப்பதும் பாபு அல்ல நான்தான் என்று ஒரு கணம் நினைத்தேன்… இல்லை பாபுதான். ஆனால் எனது உடைகளில் பாபு. அதெப்படி என்று யோசித்தேன். ஆனால், அதைக் கேட்பதற்குப் பதிலாக “இன்னைக்கே அவுங்களைப் பார்க்கப்போறோமா?” என்றேன். யாரை, எதற்கு என்று எனக்கே ஒன்றும் புரியவில்லை.

“நாளைக்கு… நீதான் பேசி முடிச்சுக் கொடுக்கணும்” என்றான் பாபு. எதை என்றும் தெரியவில்லை.

“சொல்லியிருந்தா நல்ல ட்ரெஸ் போட்டுட்டு வந்திருப்பேன்ல” என்றேன். “இருப்பதிலேயே மட்டமான உடைகளை நான் அணிந்திருக்கும் நேரம் பார்த்து, என்னை ஏதோ ஒரு முக்கியமான இடத்திற்கு பாபு அழைத்துப் போகிறானோ?” என்று திடீரென ஒரு சந்தேகம் எழுந்தது. அவன் அப்படிச் செய்யக்கூடியவன் தான். இதோ, வழக்கமாக நான் அணிவது போன்ற தேர்ந்த உடைகளையல்லவா அவன் இப்போது அணிந்திருக்கிறான்…

கூரைகளில் பழமையான கேரள ஓடுகள் பதிப்பிக்கப்பட்டு, வெறும் காலை வைக்கும்போது சில்லென்றிருந்த கற்கள் பாவப்பட்ட தரையும், திரும்பிய பக்கமெல்லாம் ஆளுயர யானை பொம்மைகளும், பாரம்பரிய கேரள பாணி பெரிய குத்துவிளக்குகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஹோட்டல் லாபியில் நானும் பாபுவும் வெளிநாட்டு ஆட்கள் இருவரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தோம். நான் நினைத்த மாதிரியே பாபுவின் உடைத்தேர்வு அந்தமாதிரியான உயர்தர இடத்துக்கு பொருந்திப் போயிருந்தது. நானோ என்னிடமிருந்ததிலேயே பாடாவதியான சிவப்பு, மஞ்சள் பட்டை அடுத்தடுத்து வரும் டீஷர்ட்டும், சாயம்போன கறுப்பு நிற ட்ராக் சூட்டும் அணிந்திருந்தேன்.

கணுக்காலருகே பேண்ட் லேசாக நூல் பிரிந்து கிழிந்து போயிருந்தது. சாதாரணமாக நான் வீட்டுக்குள் போடும் செருப்பு என் காலில் கிடந்தது. நன்றாக உற்றுப் பார்த்தேன். அது என் மனைவி வீட்டுக்குள் போட்டுக்கொள்ளும் செருப்பு. அவசரத்தில் மாற்றிப் போட்டுக்கொண்டு வந்துவிட்டேனா? இந்த மாதிரி இடத்தில் இப்படிப் பஞ்சப் பரதேசி மாதிரி உடையில் நின்று கொண்டிருக்கிறோமே என்று துணுக்குற்றேன். ஆனால் என்னிடம் பேசிய அந்த வெளிநாட்டுக்காரர் ரொம்பவே மரியாதை கொடுத்துப் பேசினார். ஆனால் எனக்குத் தெரியாத வேறு ஏதோ மொழியில் பேசினார். நானும் அவரது மொழியிலேயே பேசிக்கொண்டிருந்தேன்.

“இல்ல நைட் ஹோட்டல்ல ரூமெடுத்து தங்கிட்டு நாளைக்கு அவுங்களைப் பார்ப்போம். நாளைக்குதான அப்பாயின்மெண்ட்” என்று விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான் பாபு. மீண்டும் ஓடும் காரிலிருந்தேன். கார் மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. இடதுபுறம் சுத்தமான தண்ணீரோடும் ஒரு சின்ன, அழகான ஆறு. அதற்கு குறுக்கே புதிதாகக் கட்டப்பட்ட பாலம் ஒன்று நேரே மேலேறிச் சென்று வலது பக்கமாக வளைந்தது முடிவற்று போய்க்கொண்டிருந்தது. பாபுவோடு பயணிப்பது எனக்கு எரிச்சலாக இருந்தது. ஓடும் காரிலிருந்து குதித்து இறங்கிவிடலாம் என்று நினைத்து கதவுகளைத் திறக்க முயன்றேன். இப்போதும் என் கைகளை அசைக்க முடிவில்லை.
அப்போதுதான்… அந்தப் பாலம் ஆரம்பிக்கும் இடத்திற்கு நூறடிக்கும் முன்பாக, ஒரு சின்னக் கடையை ஒட்டி நடந்து வந்துகொண்டிருந்த அவனை நான் பார்த்தேன். முதலில் அது என் மனப்பிரமை என்றுதான் நினைத்தேன். ஆனால் என் கண்ணுக்கு முன்னால் அந்தச் சிற்றாற்றை ஒட்டி, தலையைத் தொங்கப்போட்டபடி மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தான் அவன். கிட்டத்தட்ட எனது கல்லூரிக்கால பழைய ஃபேஷனில் இருந்த ப்ரவுன் நிற கட்டம் போட்ட லூஸான சட்டையை அணிந்திருந்தான். அந்த சட்டை என்னுடையதுதான். கல்லூரியில் படித்த காலத்தில் நான் போட்டிருந்த சட்டை அது. வயிறு உள்ளடங்கி, கழுத்தெலும்புகள் வெளித்தெரிந்து, அங்கொன்றும், இங்கொன்றுமாய் முடி முளைத்த தாடியுடன், அலைந்து, திரிந்த என் இருபது வயதுகளில் நாங்கள் எல்லோரும் எப்படி இருந்தோமோ அப்படி இருந்தான் அவன். மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த காரிலிருந்து எதிரில் நடந்து வந்து கொண்டிருந்தவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். பயத்தில் என் உடல் மெல்ல உதற ஆரம்பித்தது.

“என்ன பைத்தியக்காரத்தனம் இது?” கார் அவனைக் கடக்கும் வரை காத்திருந்தேன். மிக அருகில் அவனது முகம் தெரிந்தது. தனக்குள் பேசுபவன் போல, ஏதோ முனகிக்கொண்டே போனான். அவன் என்னைக் கடந்த நொடிப்பொழுதில் எங்களிருவரது கண்களும் சந்தித்து மீண்டன. அவன் காரைக் கடந்த பிறகு தலையைத் திரும்பி அவனையே பார்த்தபடி “பழைய ஆர்கே” என்று பாபுவிடம் சொன்னேன்.

“பழைய ஆர்கேன்னா?”

“பழைய ஆர்கே, அதாவது காலேஜ் படிச்ச காலத்துல இருந்த ஆர்கே மாதிரியே இப்ப ஒருத்தன் போனான் பார்த்தியா? எங்கிட்ட இருந்த மாதிரியே மாதிரி கட்டம் போட்ட சட்டை போட்டுக்கிட்டு, ஆனா அது ஆர்கேதான், நம்ம காலேஜ் டைம்ல இருந்த ஆர்கே” என்று எனக்கே புரியாத, குழப்பமான ஒரு பதிலைச் சொன்னேன். பாபுவின் முகத்தில் உணர்ச்சிகளே இல்லை. லேசாகப் பயந்தது போலிருந்த அவனது முகத்தைப் பார்த்து நான் எதற்கு அப்படிச் சிரித்தேன் என்று எனக்கே புரியவில்லை. ஆனால் லூசுத்தனமாகச் சிரித்தேன். அதற்குள் கார் சிறிது தூரம் நகர்ந்திருந்தது. பாபு காரை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு, இறங்கி நின்று எங்களைக் கடந்து போனவனையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் எனது இருக்கைக்கு இடதுபுறம் இருந்த கண்ணாடி வழியாகப் பின்னால் பார்த்தேன். ஆற்றுக்கு நடுவே மரக்கட்டைகளால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சின்னப் பாலம் ஒன்றின் மீது ஏறி அந்த ஆள்… இல்லை… அந்த இளைஞன், இல்லை… அப்படி நடக்க வாய்ப்பே இல்லையென்றாலும் சர்வ நிச்சயமாக அவன் ஆர்கேயேதான், ஆனால் இன்றைய ஆர்கே அல்ல, எங்களது கல்லூரிக்கால ஆர்கே… சாவகாசமாக நடந்து ஆற்றைக் கடந்து கொண்டிருந்தான். சரியாக நடுப்பாலத்தில் சட்டென்று நின்றவன் எங்களைப் பார்த்து “வா” என்பதைப் போலச் சைகை செய்தான்… ஆம் உறுதியாக அப்படித்தான் செய்தான், பிறகு திரும்பவும் பாலத்தில் நடந்து ஆற்றைக் கடந்தான். என் உடம்பு முழுக்கப் புல்லரித்துப் போயிருந்தது.

நான் பாபுவைப் பார்த்தேன். அவன் நெற்றியில் முத்து முத்தாக வியர்த்திருந்தது. வேகமாகக் காருக்குள்ளே வந்து அமர்ந்தவன் “அது ஆர்கே வா இருக்க வாய்ப்பே இல்லை” என்றான்.

“ஏன் இல்ல?” என்றேன்.

“உனக்குத் தெரியாதா?”” என்று சொல்லிவிட்டு என் கண்களையே உற்றுப்பார்த்தான் பாபு. எனக்கு அவன் சொன்னதன் அர்த்தம் புரியாமலில்லை. ஆனால் எங்கள் கண்முன்னால், பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்த தோற்றத்தில் ஆர்கே இப்போதுதானே கடந்து போனான்? அதை எப்படி மறுப்பது? தலை வலிப்பது போல இருந்தது. மீண்டும் “சரி, நானும்தான் அவனைப் பார்த்தேன். அது ஆர்கேன்னா அவனுக்கு போன் பண்ணு” என்றான் பாபு. இப்போது அவனது குரலில் ஒருவிதப் பதற்றத்தை உணர்ந்தேன். அந்தப் பதற்றம் என்னிடமிருந்தே அவனுக்குத் தொற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

எனது மொபைல் போனை எடுத்து ஆர்கே என்று தேடினேன். அப்படி எந்தப் பெயரும் இல்லை. ராதாகிருஷ்ணன் என்று தேடினேன். அந்தப் பெயரிலும் எதுவுமில்லை. எனது போனே பழைய காலத்து பட்டன் போனாக இருந்தது. நான் அதிர்ச்சியில் செய்வதறியாது பாபுவின் பக்கம் திரும்பிப் பார்த்தேன். இப்போதைய புது மாடல் ஸ்மார்ட் போன் ஒன்று அவன் சட்டைப் பாக்கெட்டில் இருந்தது. பாபு வண்டிக்குள் வேகமாக வந்தமர்ந்து கதவைப் படாரென அறைந்து சாத்தினான்.

வண்டியை ஸ்டார்ட் செய்தவுடன் கண்ணாடியை இறக்கி விட்டு “இது எந்த ஊர்?” என்று யாரிடமோ விசாரித்தான் பாபு. “சுசீந்திரம்” என்று அந்த நபர் சொன்னது என் காதில் விழுந்தது. நான் “சுசீந்திரம்தான் எங்க சொந்த ஊரு பாபு” என்றேன்.

“தெரியும்” என்றபடி ஸ்டியரிங் வீலில் கைகளால் அடித்தான் பாபு.
நான் கீழே குனிந்து கிழிந்திருந்த என் ட்ராக் சூட்டை பார்த்தேன். ஆனால் இப்போது போன வாரம் புதிதாக எடுத்த கருநீல பேண்ட் அணிந்திருந்தேன். கால்களில் கறுப்பு நிற ஷூ பளபளவென மின்னியது. இளநீலவண்ண முழுக்கை சட்டை அணிந்து கைகளில் பட்டன் மாட்டியிருந்தேன். நேரம் பார்த்தேன். ஸ்வரோவ்ஸ்கி கற்கள் பதிக்கப்பட்ட கறுப்பு நிற ஸ்வாட்ச் வாட்ச்சில் நேரம் மூன்று மணியைக் காட்டியது.

“வா, அவன் யாருன்னு பார்த்திருவோம்” என்று பாபுவிடம் சொன்னேன்.

“பாபுவுடன் அங்கே போவது வேணிக்குப் பிடிக்காது” என்று யாரோ என் தலைக்குள் சத்தமாகத் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். இரு கைகளாலும் காதுகளை இறுக மூடிக்கொண்டேன். “வீட்டுக்குப் போ” என்றொரு குரல் மீண்டும் கேட்டது. அது ஆர்கேவின் குரல் என்பதைப் புரிந்து கொண்ட நொடியில் இனி இதைத் தவிர்க்க முடியாது என்பதை என் ஆழ்மனம் உணர்ந்து கொண்டது.

“ஊருக்குள்ள போ பாபு” என்றேன். என் குரலில் ஒருவித கட்டளைத் தொனி ஏறியிருந்தது.

பாபு என் முகத்தை உற்று நோக்கிவிட்டு “எதுக்கு?” என்றான்.

“இப்ப போனான்ல ஆர்கே… அவன் வரச்சொன்னான்” என்று அழுத்தமாகச் சொன்னேன்.

“இம்பாஸிபில், லூஸா நீ?” என்றான் பாபு. அவன் பயந்துவிட்டான் என்று நானாக நினைத்துக்கொண்டேன். அப்போது அவனது முகபாவனை அப்படித்தான் இருந்தது. உண்மையில் நானே பயந்துதான் போயிருந்தேன். மீண்டும் எதனாலோ எனக்குச் சிரிப்பு வந்தது.

“இம்பாஸிபில்னா அப்புறம் எதுக்கு அவனுக்கு போன் பண்ணச் சொன்ன, போ… நான் அவனப் பார்க்கணும்” என்றேன். வண்டி கொஞ்ச தூரம் முன்னால் ஓடி, பின் வலதுபுறம் திருப்பி சுசீந்திரத்துக்குள் நுழைந்தது.

“இப்ப என்ன செய்யப்போற?” என்றான் பாபு.

“தெரியல… பார்ப்போம்” என்றேன்.

சுசீந்திரம் கோயில் வாசலில் நான் இறங்கி நின்று கொண்டேன். வாசலுக்கு அருகில் ஒரு யானை சாவகாசமாக அதற்கு முன்னால் குவித்து கிடந்த பச்சைப் புற்களை தன் பெருத்த உடலை அசைத்தசைத்து வாயில் அதக்கிக் கொண்டிருந்தது. பாபு காரை யானைக் கொட்டடி மாதிரி இருந்த ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு சாவியைக் கைகளில் சுழற்றியபடி நடந்து வந்தான். அவன் நடையில் சோர்வு இருந்தது. யானைக்கு அருகில் செக்யூரிட்டி யூனிஃபார்மில் நின்றுகொண்டிருந்த ஆறுமுகம் என்னைப்பார்த்ததும் வேகமாக ஓடிவந்து ஒரு சல்யூட் அடித்து “பார்த்தே ரொம்ப நாளாச்சே சார், வாறதேயில்லியோ, சோமாருக்கீயலா?” என்று சிரித்தான். “ம்ம்” என்று தலையாட்டிவிட்டு “சௌந்தரிய கெட்டிக் கொடுத்தாச்சா ஆறுமுகம்?” என்று கேட்டேன். “ஆச்சு சார், அன்னா வர்றாள்ல” என்றான்.

பச்சைநிற ஜாக்கெட்டும், சந்தன நிற கேரள சேலையும் அணிந்து ஆறுமுகத்தின் தங்கை சௌந்தரி நடந்து வந்துகொண்டிருந்தாள். நெற்றியில் சந்தனம் துலக்கமாக இருந்தது. என்னைக் கவனிக்காமலேயே கடந்து சென்றாள். “இரிங்க சார்” என்று என்னிடம் சொல்லிவிட்டு “ஏட்டி” என்றழைத்தபடி ஆறுமுகம் சௌந்தரியின் பின்னாலேயே போனபோது நான் பாபுவின் பக்கம் திரும்பி “போலாம்” என்றேன். சௌந்தரி ஆறுமுகத்தின் மனைவியல்லவா? என்னும் எண்ணம் ஆறுமுகம் என்னைக் கடந்து சென்ற நொடி நினைவுக்கு வந்துவுடன் திரும்பிப் பார்த்தேன். ஆறுமுகத்தையோ சௌந்தரியையோ காணவில்லை.

கோயிலைச் சுற்றியிருந்த அக்ரஹாரத்தில் நானும் பாபுவும் மெதுவாக நடந்து கொண்டிருந்தோம். பாபு நீண்ட நேரமாக ஏதோ யோசித்துக் கொண்டே வந்தான். நான் வழியிலிருந்த தஷிணாமூர்த்தி அண்ணனின் பெட்டிக்கடை வாசலில் நின்றேன். அவருக்குத் திருமணமான புதிதில் எப்படி இருந்தாரோ, அப்படி இருந்தார் அவர்.

“என்னலே இங்க?” என்றார்.

“இங்க ஆர்கே சாரி… ராதாகிருஷ்ணனின் வீடு எங்கயிருக்கு?” என்று விசாரித்தேன். தஷிணாமூர்த்தி அண்ணன் என்னை உற்றுப்பார்த்துச் சிரிக்க முயன்றார். ஆனால் என்னிடமிருந்து எந்த எதிர்வினையுமில்லாததால், என் முகத்தைக் குழப்பமாகப் பார்த்துக் கொண்டே அக்ரஹாரத்திலிருந்து பிரிந்து வயல்களுக்கு ஊடாகச் செல்லும் ஒற்றையடிப் பாதையைக் கை காட்டினார். நாங்கள் அந்தப் பாதை ஆரம்பிக்கும் இடத்திற்குப் போய் நின்றோம். ஆர்கே எங்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே அந்தப் பாதையில் எங்களுக்கு முன்பாகச் சென்று ஒரு வளைவில் மறைவதை நான் பார்த்தேன். பாபு அதைக் கவனிக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். அந்தப் பாதை நேரே சென்று வளைவருகே முடியும் இடத்திற்குச் சற்று தூரத்தில் பழையகால ஓவியங்களில் வரையப்படுவது போலவே, வாசலின் இரு புறமும் திண்ணை வைத்த இரண்டடுக்கு ஓட்டு வீடொன்று, அதனைச் சுற்றிலுமிருந்த மரங்களின் நிழலில் தனியாக இருந்தது. நான் அந்த வீட்டை எங்கள் சின்ன வயதில் ஆச்சியின் ஊரான சின்னமனூருக்குப் போகும்போது பார்த்திருக்கிறேன். அந்த வீட்டிலிருந்து, சற்றே பெரிய இரண்டு பாதைகள் இடவலமாகப் பிரிந்து சென்றன. நானும் பாபுவும் மெல்ல அந்த மண் சாலையில் நடந்து சென்றோம்.

அந்த வீட்டு வாசலின் வலதுபுறமிருந்த திண்ணையில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். எனக்கு நன்றாக அறிமுகமான முகம், கிட்டத்தட்ட என் தந்தையில் சாயல். அவரது வாயில் பற்களே இல்லாமல் பொக்கையாக இருந்தார். எங்களிடம் “என்ன?” என்பது போல பார்வையாலேவே விசாரித்தார். “ஆளைத் தெரியலையா?” என்று பாபு சத்தமாகக் கேட்டான். அவர் என் முகத்தையே கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்தார் அவர். பின்பு பதிலேதும் சொல்லாமல் தலையில் அடித்துக்கொண்டு, கைகளை வான்னோக்கி உயர்த்தி வணங்கிய பின் தன் கைகளைத் தலைக்கு அண்டக்கொடுத்து திண்ணையில் படுத்துக் கொண்டார். மெலிதாக எதையோ அவர் ஏதோ முனகுவது மட்டும் எனக்குக் கேட்டது.

நானும் பாபுவும் இன்னொரு திண்ணையில் அமர்ந்திருந்தோம். எங்களுக்குள் எந்தப் பேச்சும் இல்லாமல் அமைதி நிலவியது. எங்கிருந்தோ கறுப்பு நிறத்திலிருந்த நாய் ஒன்று என் காலருகே வந்து முகர்ந்து பார்த்தது, பின்பு வாலாட்டியபடியே என் கால்களை நக்கப் பார்த்தது. நான் அதன் பெயரை நினைவுகூர முயன்றேன். வேணி எத்தனையோ முறை அதன் பெயரைச் சொல்லியிருக்கிறாள். ஆனால் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. நான் அதைப் பார்த்து “ஏய், சும்மாயிரு” என்றேன். பாபுவுன் காலருகே அது போனவுடன் அவன் கால்களை உதறி “சீ போ” என்றான். அது “ர்ர்ர்ர்” என்று உறுமி, பற்களைக் காட்டி அவனை முறைத்தது.

“அது ஒன்னும் செய்யாதுடா, பயப்படாத” என்றேன் நான்.

கால்களை மடித்துக்கொண்ட பாபு “ப்ளீஸ் இங்கேயிருந்து கெளம்புவோம்” என்றான். நான் கைகளால் “கொஞ்சம் பொறு” என்பதாகப் பாவனை செய்தேன்.

சற்று நேரத்தில் நாங்கள் வந்த வழியிலேயே அக்ரஹாரத்திலிருந்து ஒரு இளம் வயது பெண் ஒருத்தி, கையில் பனையோலையால் பின்னப்பட்ட ஒரு சின்னக் கூடையை வைத்துக்கொண்டு நடந்து வந்தாள். நான் அவளது முகத்தை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. பாபு என் பக்கம் திரும்பி “மலையாளி” என்று சொல்லிவிட்டு கண்ணடித்துச் சிரித்தான். தலைக்குக் குளித்து ஈரம் சொட்ட, நுனியில் மட்டும் சின்னமுடி போட்டிருந்த கருமையான, மிக நீளமான தலைமுடி அவளுக்கு. நெற்றியில் செஞ்சந்தனமும், குங்குமமும் இருந்தது, காதுக்கருகில் இணுக்கினாற்போல நாலைந்து வெண்ணிறப் பூக்கள் மட்டும். வாசலிலிருந்த முதியவரைப் பார்த்தபடியே எங்களிடம் ஒன்றும் பேசாமல் வீட்டுக்குள் போனாள். எங்களைக் கடந்து போகும்போது, பாபு அவன் நெஞ்சின் அடியாழம் வரை மூச்சை இழுத்தான். “த்தா… என்னா வாசம்டா இது? கிறுக்குப் பிடிக்க வைக்கற மாதிரி” என்றான். எனக்கு அவனைப் பார்க்க எரிச்சலாக இருந்தது. அதே நேரம் என்னாலும்கூட ஒருவிதமான வாசனையை உணர முடிந்தது. எரிந்தடங்கிய தீபத்தின் கரிந்த திரியின் நுனியில் கிளர்ந்தெழும் ஒருவித வாசனை.

என் பக்கம் திரும்பி, “இது யாருன்னு தெரியும்ல?” என்றான்.

“வேணி” என்று எரிச்சலுடன் சொன்னேன். பிறகு அதே எரிச்சலோடு “ஆர்கேயோட தங்கை” என்றேன்.

திண்ணையிலிருந்து குதித்திறங்கிய பாபு என்னருகே வந்து “அப்ப நீ யாரு?” என்றான். அவனது கைகள் மிக லேசாக நடுங்கிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.

நான் பதிலேதும் பேசவில்லை. உண்மையில் நான் பயங்கரக் குழப்பத்திலிருந்தேன்.

சில நிமிடங்கள் கழித்து வேணி வெளியே வந்தாள். அவளது கையில் ஒரு இலையில் சந்தனப் பிரசாதம் இருந்தது. என்னருகே வந்து “இந்தா பிரசாதம்” என்று சொல்லி என் நெற்றியில் சந்தனத்தை வைத்தாள். சந்தனம் சூட்டில் இளகிய மெழுகைப் பூசியது போல என் நெற்றியைச் சுட்டது. பாபு எங்களிடமிருந்து விலகி சற்றுத்தள்ளி இருந்த ஒரு மரத்தடியில் போய் நின்று கொண்டான். அவ்வளவு நேரத்தில் அப்போதுதான் அந்த மரத்தைக் கவனித்தேன். அதன் ஒரு பாதி முழுக்க கருநீலப் பூக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது, இன்னொரு பாதி தீயில் வெந்ததுபோல கரிந்து, காய்ந்து போயிருந்தது. அவன் போனபிறகு தனிந்த குரலில் பாபுவைச் சுட்டிக்காட்டி “இவனா வந்தானா, நீ கூட்டீட்டு வந்தியா?” என்றாள் வேணி. அப்போது அவளது கண்கள் நெருப்புத்துண்டுகள் போல மினுங்குவதைப் பார்த்தேன். பாபுவைத் திரும்பிப் பார்த்தேன். எங்களிருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். அதிலொரு நக்கல் இருந்தது.

“நடிக்காத” என்று அடித்தொண்டையிலிருந்து சீறும் குரலில் நான் வேணியிடம் சொன்னேன், கிட்டத்தட்ட உறுமினேன்.

ஆனால் அதைப் பொருட்படுத்தாதது போல “ஏன் இங்க வர்றதே இல்ல?” என்றாள் வேணி. அதைச் சொல்லும்போது அவள் கண்கள் குளிர்ந்து கண்ணீர் தளும்பியிருந்தது. அந்த முதியவர் தலையைத் தூக்கிப் பார்த்து ஏதோ சொல்ல வாயெடுத்து, முடியாமல் தொடர்ச்சியாக இருமினார். “சும்மா இருங்க அப்பா” என்றாள் வேணி. அவர் முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் நாங்க ரெண்டுபேரும் ஆர்கேவ அந்த மரப்பாலத்துக்கிட்ட பார்த்தோம்” என்றேன். வேணி சட்டென்று என்னிடமிருந்து ஓரடி விலகி நின்றாள். பிறகு பதில் பேசாமல் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு “சுத்தி சுத்தி வரலாம். ஆனா வீட்டுக்குள்ள வர மனசில்ல, இல்லையா?” என்றாள். நான் அமைதியாக இருந்தேன். “இன்னும் எத்தனை நாள் இந்த விளையாட்டு?” என்றாள்.

நான் இன்னொரு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். அதிலொரு வெறுப்பு இருந்ததை என்னால் உணர முடிந்தது.

“அது வேணி இல்ல, கெளம்பலாம் வாடா” என்ற பாபுவின் குரல் எங்கோ வெகு தூரத்திலிருந்து கேட்டது. பிறகு என் கைகளைப் பிடித்து கிட்டத்தட்ட தரதரவென இழுத்தபடி அங்கிருந்து வெளியேற ஆரம்பித்தான். அவன் என் அருகில் வந்ததையே நான் கவனித்திருக்கவில்லை. நான் பாபுவோடு சேர்ந்து கிட்டத்தட்ட ஓடினேன். ஆனால் ஒற்றை அடியெடுத்து வைக்கும் அளவுக்குக் கூட என் கால்களில் வலு இல்லை. மிக மெதுவாக, மிகமிக மெதுவாக சிரமப்பட்டு நடந்தேன். ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும் அந்த நிலத்திலிருந்து என் கால்களைப் பிய்த்து எடுப்பது போல இருந்தது.

வேணியிடம் விடைபெறாமலேயே அங்கிருந்து கிளம்பியது சற்று தூரம் கடந்தபின்தான் எனக்கு உறைத்தது. எங்கள் முதுகுக்குப் பின்னாலிருந்து “ஒரே ஒருதடவை மட்டும் நான் முகத்தைப் பார்க்கணும், ஒருதடவை மட்டும்… நான் உங்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்கிற வேணியின் சத்தம் ஈனஸ்வரத்தில் என் காதுகளுக்கருகில் கேட்டதும் நான் சட்டென்று நின்றுவிட்டேன்.

என் கைகளை இறுக்கிப் பிடித்தபடியே வேகமாக நடந்து கொண்டிருந்த பாபு “திரும்பிப் பார்க்காம நடந்து வா, சீக்கிரம்” என்றான். அவன் அப்படிச் சொன்னவுடன் நான் என்னைப் பிடித்திருந்த அவனது கைகளை உதறி, சத்தமாகச் சிரித்தபடி, நின்று நிதானமாகத் திரும்பிப் பார்த்தேன். வேணி என்னையே பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். “பாபு… வா, திரும்பிப் போய் அவகிட்ட சொல்லிட்டு வந்திருவோம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் எதற்கோ சிரித்தேன். “டேய் லூசு, அவதான் ஏற்கனவே செத்துப் போயிட்டாள்ல…” என்றான். நான் அதிர்ச்சியாகித் திரும்பிப் பார்த்தேன்.

வீட்டு வாசலில் யாருமே இல்லை. ஆனால், கிளை முழுக்கப் பூக்களாகப் பூத்திருந்த இன்னொரு மரத்தில் சாய்ந்தபடி நின்று ஆர்கே என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பாபுவிடம் அவனைச் சுட்டிக்காட்டி “அந்தா ஆர்கே நிக்கறாம் பாரு” என்றேன்.

பாதி எரிந்திருந்த அந்த மரம், இப்போது முழுதாக வானளவுக்குச் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்தது. பிறகு அந்த வீடும் கொழுந்துவிட்டு எரிந்தது. கரிந்துபோன உடலிலிருந்து எழும் அழுகல் வாடை என் மூக்கைத் துளைத்தது. நான் பாபுவைத் திரும்பிப் பார்த்தேன். அவன் வேகமாக கைக்குட்டையைத் தேடி எடுத்து அவனது மூக்கை மூடிக்கொண்டான். திடீரென என் நாக்கிலேறிய கசப்புச் சுவை, பின்பு வாய் முழுக்க, உடல் முழுக்க, அந்த இடம் முழுக்க அடர்ந்து படர்ந்து எல்லாவற்றையும் விழுங்க ஆரம்பித்தது. என் உடல் முழுக்கத் தீயின் நாவுகள் தீண்டியது போலச் சுட்டது.

*

“காஃபி போட்டுட்டேன்… எழுந்திரிங்க” என்ற சந்திராவின் குரல் கேட்டு உடலை உலுப்பியபடி எழுந்தேன். ஏசி ஓடிக்கொண்டிருந்த அறையில் என் உடல் முழுக்க நனையுமளவுக்கு வியர்த்திருந்தது. படபடப்பு குறைந்து நிதானம் வந்தபின்னும் மனம் முழுக்க கசப்பின் காய்ச்சல் இருந்தது. என் சுவாசத்திலும் கசப்பாக உள்ளே போனது. நானிருந்த அறை முழுவதிலும் அந்தக் கசப்பை உணர்ந்தேன். எழுந்து போய் முகம் கழுவிவிட்டு வந்து, தரையில் கால்நீட்டி, கட்டிலில் சாய்ந்தமர்ந்து காஃபியை ஒவ்வொரு மடக்காகக் குடித்தேன். நான் கண்ட காட்சிகள் எனக்கு உணர்த்துவது என்ன என்கிற கேள்வியோடு, அவற்றை அப்படியே மனதுக்குள் மீளுருவாக்கம் செய்து, அதை நிஜ வாழ்வோடு ஒப்பிட்டுக் கொண்டிருந்தேன். இந்தக் கோணத்தில் எப்படி இத்தனை நாட்கள் யோசிக்காமலிருந்தேன் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். நீண்ட யோசனையின் முடிவிலும் மீண்டும் கசப்பே எஞ்சியிருந்தது.

பாபுவுடன் பேச்சு வார்த்தை குறைந்து போய் சில வருடங்களாகி விட்டது. கடைசியாக எங்களுடைய அப்பா இறந்து போனதற்கு அழைத்து துக்கம் விசாரித்தான். அதுவும் ஒருவாரம் கழித்து… “என்ன பெருசு போயிருச்சு போல” என்கிற அவனது வழக்கமான நக்கல் பேச்சை நான் ரசிக்கவில்லை என்பதைப் பேசி முடிக்கும் வரை அவன் உணரவேயில்லை. அப்பாவின் மரணத்திற்குச் சில மாதங்களுக்கு பிறகு வேணி அகாலமாக தன் வாழ்வை முடித்துக் கொண்டிருந்தாள்.

அவளது மரணம் அறிவிக்கப்படும்வரை வெறிபிடித்தது போல மருத்துவமனையிலேயே கிடந்தாலும், யார் யாரோ வற்புறுத்தியும், முழுதாக இரண்டு நாள் கழித்து அவள் மூச்சு நின்று போகும்வரை முழுக்க கரிந்து போய்விட்டது என்று சொல்லப்பட்ட அவள் முகத்தை நான் போய்ப் பார்க்கவேயில்லை.

யோசித்து, யோசித்து ’வேறுவழியே இல்லை’ என்று தீர்மானமாகத் தோன்றிய பிறகு பாபுவை அழைத்தேன். அழைப்பு நின்று போவதற்கு முன் கடைசி நொடியில் இணைப்பு கிடைத்தது.
எப்படி ஆரம்பித்து என்ன கேட்பது என்று எனக்கும் ஒரு நொடி புரியவில்லை. பிறகு மெதுவாக “வேணி” என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் உதிர்த்தேன்.

பாபு கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான். பிறகு தொண்டையைச் செருமிக்கொண்டு, மெதுவாக “இப்படி ஒருநாள் வரும்னு எனக்குத் தெரியும், நானே ரொம்ப நாளா உங்கிட்ட எப்படியாவது இதப் பேசிடணும்னு நினைச்சேன், உண்மையச் சொல்லணும்னா ஒரு வகைல உங்கிட்ட மன்னிப்பு கேட்றணும்னு கூட… ஆனா ஒன்னு, இந்த தடவையாவது… நான் என்ன சொல்ல வர்றேங்கறதையாவது… நீ கோபப்படாம கொஞ்சம் பொறுமையா கேட்கணும் ஆர்கே” என்று ஆரம்பித்தான்.


இளங்கோவன் முத்தையா, மதுரையைச் சேர்ந்தவர். சரவணன் சந்திரன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாசிரியராக அறிமுகமானவர். தொடர்ந்து கவனிக்கத்தகுந்த நல்ல கதைகளை எழுதி வருகிறார்.

ஒரு ஸ்டிக்கி நோட்டின் கதை

0

ஜீவகரிகாலன்

தொடர்ந்து அதிகாரத்திற்கு எதிரான கட்டுரைகளையும் விளிம்புநிலை வாழ்வியலைப் பற்றிய புனைவுகளையும் படைத்துவரும் நவீன கவிஞரான ஷண்முக சுந்தரம், சர்வீஸுக்காகச் சென்றுவந்த மெக்கிண்டோஷ் ஓபரேடிங் ஸிஸ்டம் கொடுக்கும் வசதியில் தான் தம்மால் படைப்புகளை எளிதில் கொணர முடிகிறது என்று எண்ணியபடி எழுத ஆரம்பித்த, தாம் திருடிய மரண வாக்குமூலத்தைப் பற்றிய கதை இது:

‘பப்ளிஷரிடம் பச்சை நிறக் காகிதத்தில் லே-அவுட்டில் அச்சிட்டு வெளியிட முடியுமா என்று கோரிக்கை வைக்க வேண்டும்..’ என மஞ்சள் நிற டிஜிட்டல் ஒட்டும் காகிதத்தை கோப்பின் முகப்பில் வைத்துக் கொண்டார்.

தாயம்…

பிறப்பிற்கோ இறப்பிற்கோ இருக்கும் நிச்சயத்தன்மை போல உறவுக்கு ஏன் இருப்பதில்லை. ஏதோ ஒரு தாயத்தில் உள்ளே நுழையும் நொடியே பிரிவுக்கான நிகழ்தகவும் உருவாகிறது என்று தெரியாமல் தான் விளையாட்டைத் தொடர்கிறோம், அவர்களும் அவ்வாறே தொடங்கினார்கள்.

அவரும் அவ்வாறே எழுதத் தொடங்கினார்..

விளையாடிக் கொண்டிருக்கும் பகடைக்காய் தனது நிகழ்தகவு குறித்த அறிவைப் பெற்றிருந்தாலும், நிகழ்தகவு தான் ஆட்டத்தை தீர்மானிக்கிறது என்பதை பகடை ஒருபோதும் உணர முடியாது என்கிற எண்ணம்

பின்னர் ஒருநாள்..

அது ஆறு ஆண்டுகளுக்கு பின்னர், அவர்கள் பச்சை நிற காகிதங்களில் கையெழுத்து போட்டு முடித்ததும் எல்லாம் முடிந்ததாக அறிவித்தார்கள். அது அப்போதுதான் முடிந்ததா என்றபடி ஒருவரும், அப்படியெல்லாம் முடிந்துவிடுமா என்றபடி ஒருவரும் யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

மீடியேஷன் என்ற பெயரில் நடக்கும் கவுன்சிலிங் சந்திப்புகளில் முன்வைக்கப்பட்ட வெவ்வேறு கணிதச் சூத்திரங்களுக்கும் பிரிவு எனும் விடை ஒன்றைத் தீர்மானித்துவிட்டு, தேற்றங்களையும் சமன்பாடுகளையும் மணிக்கணக்காகச் சொல்லிப் பார்த்தார்கள்.

அபத்தங்களின் கூடாரம் அதிகாரத்தின் உடுப்புடன் இருப்பதால், இங்கே அன்பு எறும்பு போன்றது தான். காகிதங்களால் மாற்றக்கூடிய யாவற்றிற்கும் தான் மதிப்பு என்கிற காலத்தில் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உறவு என்பதும் பிரிவு என்பதும் அதிகபட்சமாகக் காலத்தை இழக்கிறது. குறைந்த பட்சமாக மற்ற அனைத்துமே…

அந்த நீண்ட படிக்கட்டுகளில் அவர்கள் ஒன்றாக இறங்குவதற்குள் ஏதாவது மாறிவிடாதா என்கிற உணர்வு இருவருக்கும் ஒருசேர வந்து சென்றது இருவருக்குமே ஆச்சரியமாக இருந்தது. அது படிக்கட்டுகளின் சாபம், புணரும்போது முத்தமிடும் கால்களின் குளிர்ச்சிக்கு நேரெதிர் உஷ்ணத்தை தன் வாழ்நாள் முழுவதும் பாரமெனச் சுமக்கும் அந்தப் பழைய கட்டிடத்தின் ஓலம் தந்த உணர்வு. வெறுப்புக் கங்குகளோடு தங்கள் பாதைகளை வகுத்துக்கொள்ளும் எந்த மானுடரின் பாரங்களையும் தாங்குவதற்கு பிடிக்காத படிக்கட்டுகள்… அவர்கள் இறங்குகையில் அவர்களிடம் இப்படி மன்றாடிக் கேட்கும், ‘இன்னும் ஒருமுறை யோசித்துப் பார்’ என்று. ஆண்டாண்டு காலமாக படிக்கட்டுகளின் ஓலம் இருபாலரின் செவிகளில் புகுந்தாலும் அவர்கள் இயர்-பட்ஸ் போலே அதை எறிந்துவிடுவதை தொடர்ந்து கொண்டிருக்கவே செய்தார்கள். ஆகவே, இனிவரும் காலங்களில் கால்களின் கங்குகளைக் கொண்ட ஜோடிகளை சாபமிட வேண்டுமென அன்று முதன்முறையாக அந்தச் சீக்குப் பிடித்த செம்மண் நிறக் கட்டிடத்தின் மேற்கு வாயில் படிக்கட்டுகள், இப்படி அவர்களை நோக்கிச் சாபமிடத் தொடங்கியது.

“அந்த இருவரில் குறைவாய் நேசித்த ஒருவர் தற்கொலை செய்தும் அதிகமாய் நேசித்த மற்றொருவர் கொலைப்பழி மனத்தோடு நூறாண்டுகள் வாழிய”

சாபம் சர்ப்பமென படிக்கட்டுகளில் இருந்து தமது கடைசி அடிகளை எடுக்க முனையும் பாதங்களைச் சுற்றிக்கொண்டது.

பாதம் படிக்கட்டுகளைச் சாபமிட்டது.

முதிர்ந்த கன்னியின் பல்செட்டென ஒரேடியாகவும், பொலபொலவென விழாமலும் இந்த படிக்கட்டுகள் நாசமாகப் போகட்டும் என்று…

அப்பொழுது தன் கோட்டைக்கு காரில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த அமைச்சர் ஒருவருக்கு சொல்லியிருந்த வாஸ்து நிபுணரின் எச்சரிக்கை ஃப்ளாஷ் நியூஸ் போலவே ஸ்க்ரோல் ஆனது.

“நிங்கட கேஸ் விசாரணைக்கு வரும் நீதிமன்றத்தின் மேற்கு வாசல் படிக்கட்டுகள் தப்பான ஸ்தானத்துல இருக்குன்ஞு அத இடிச்சு மாற்றிக் கட்டலைன்னா, தீர்ப்பின் உக்கிரம் உங்கள் ஆயுசுக்கும் களி திங்க வச்சுடும்னு பகவதி அம்மே மேல ஆணையிட்டு பறைஞ்ஞு”

ஓட்டை மலையாளம் பற்றி எதுவுமே தெரியாத அமைச்சரின் கரிய விழிகள் அந்தப் படிகளை கவனித்தது.

*

ற்கொலை செய்வதற்கு முன்பு எதையாவது செய்ய வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது. என்ன செய்யலாம்? ஒரு சிறிய நிறைவை அளிக்கும் பூரணமான கணம் ஒன்றை அப்படியே நிறுத்தச் செய்யும் செயலாக ஒரு தற்கொலை இருந்தால் அது ஆறுதலையும் விட மேம்பட்ட ஒன்றாகத்தானே இருக்கும். அறம் போலே ஆறுதல் என்பது ஒரு சூட்சுமமான பொருள் கொண்டது, வாழ்க்கை பிறப்பு மூப்பு இறப்பை விட அறம், பாவம், ஆறுதல், போன்றவை புரிந்துகொள்ள முற்படுகையில் ஏமாற்றுவது.
ஒரு காகித்தில் தற்கொலை பற்றிய குறிப்புகளை அவ்விருவரில் ஒருவர் எழுத ஆரம்பித்தார்.

  1. தற்கொலை உதிக்கும் கணம் ஏன் எப்போதும் தாமதமாகவே இருக்கிறது?
  2. மனமானது, தற்கொலைக்கு முன்னர் செய்யத் தூண்டும் சாகசம் என்ன?
  3. அதிசயம் ஒன்றின் மீது ஏன் எப்போதும் பேராசை இருக்கிறது?
  4. உமது ப்ரியமான கடவுளின் தாயை ஏன் வசைபாடத் தோன்றுகிறது?
  5. ஏன் இப்படியெல்லாம் பசிக்கிறது?
  6. அழும்போதும் ஏன் சிரிப்பு வருகிறது?
  7. தற்கொலையில் ஒரு சோதனை முயற்சி எனும் வாய்ப்பு இருக்குமா என ஏன் தோன்றுகிறது?
  8. மொத்தம் எத்தனை பேர் தற்கொலைக்கான சோதனை முயற்சியிலேயே செத்து விட்டார்கள்?
  9. நம் இறப்புக்கு அஞ்சலி செலுத்துபவர்களைப் பார்க்கையில் பெருமிதம் வருமா? ஆத்திரம் வருமா?
  10. அதற்குப் பின்னரும் பார்க்க முடியும் தானே?
  11. இப்படி யோசித்துக் கொண்டிருப்பவர்கள் செத்துப் போயிருக்கிறார்களா?
  12. கூகிளில் தற்கொலைக்கு முன்னர் என்ன செய்ய என்று தேடினால் முதலில் வருவது விளம்பரமா அல்லது அறிவுரையா?
  13. மனநல ஆலோசகர்கள் தான் போதிய அளவு தூக்கமாத்திரைகள் கிடைப்பதற்கு வரமளிப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோமா?
  14. உடல் தானம் செய்யப்பட்டால் உறுப்புகளைப் பெற்றவனும் தற்கொலை செய்வானா?
  15. இந்த நேரத்தில் தற்கொலை செய்தால் பேயாக தான் அலைவோமா?
  16. ஏன் இத்தனை யோசித்த பின்னரும் வாழ்வதற்கு ஒரு காரணம் கிடைக்கவில்லை?
  17. அருகில் ஒரு நல்ல தேநீரோ, காபியோ, வைனோ இருந்தால் செய்தியை எழுதும் நிருபர்களுக்கு ஒரு வசதியாக இருக்குமல்லவா?
  18. சாகும் முன் கொஞ்சம் தூங்கி எழுந்து யோசிக்கலாமா?
  19. ஒருவேளை நாளை விபத்தில் இறக்கப்போகும் விதியை மாற்றி, தற்கொலை செய்வது புத்திசாலித்தனமா? பெருமையா? அல்லது இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியின் லாபமா?
  20. ஒருவேளை உண்மையிலேயே மரணித்துவிட்டால்?
  21. நேற்று என் கையில், கடவுள் உங்களைக் கைவிட மாட்டார் என்று நோட்டீஸ் கொடுத்த பிரச்சாரகனைக் கொன்றுவிட்டால் மரண தண்டனை கொடுப்பார்களா?
  22. இந்தக் குறிப்புகளை முதலில் முழுவதுமாக யார்தான் படிப்பார்கள்?
  23. இந்தக் குறிப்புகளை முழுவதுமாக யார்தான் படிப்பார்கள்?
  24. அவர்கள் படிப்பதால் எழுதுவதன் பிரயோஜனம் என்ன?
  25. ஒருவேளை அவர்கள் மன்னிப்புக் கேட்டால் அல்லது திருந்திவிட்டால், என் பெயர் சொல்வார்களா?
  26. தூரத்தில் குரைக்கின்ற நாய்கள் பிறர் தற்கொலை மனத்தை புரிந்து கொண்டதாலா?
  27. அது வாழ்வை விட நித்தியமானது தானே?

தற்கொலைக் குறிப்புகளில் இருந்த ஒற்றுப் பிழைகளைத் திருத்தி, மெய்ப்பு பணி பார்த்து இறுதி வரைவை திருத்திக் கொண்டிருந்த சமயம் அவருக்கு அழைப்பு மணி…

“….”

தாளின் கடைசி வரிகளாக அவர் அதை எழுதி முடிக்கையில் அது களவாடப்படப் போவதை அறிந்திருந்தது.

களவுக்காட்சி

“சார்.. கோல்டன் ஹவர்ஸ் சார்.. ட்ராஃபிக்க க்ளியர் பண்ணிக் கொடுங்க”
“இருப்பா, அதான் தகவல் கொடுத்துருக்கேன்… விஷயம் தெரியும்ல அவுங்கள கைது பண்ணிட்டாங்க, ராவோட ராவா அவுங்கள சிறைக்கு கூட்டிப் போறாங்க”

“தெரியும் சார்.. உள்ள சூஸைட் அட்டெம்ப்ட்.. கொஞ்சம் க்ளியர் பண்ணி சர்வீஸ் ரோட்ல விட்டிங்கன்னா போதும்”

“சரி எதற்கும் ஒருமுறை தெறந்துகாட்டு, போட்டோ எடுத்து வச்சுக்கறேன்… யோவ்.. வா அப்படியே மேல ஏறி ஒரு நோட்டம் வுடு”

தன் கைகளுக்குள் இறுக்கிப் பிடித்து வைத்திருந்த காகிதத்தை அவர் கீழே போட்டார்.


ஜீவ கரிகாலன் – டிரங்கு பெட்டிக் கதைகள், கண்ணம்மா இரு சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர். மின்னஞ்சல்: jeev.karikalan@gmail.com

எட்வர்ட் ஸ்னோடனின் ‘நிரந்தர ஆவணம்’ (‘Permanent Record’ by Edward Snowden) – நூலுரையாடல்

1

பாரதிராஜா

ட்வர்ட் ஸ்னோடன் செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருந்த காலம் உங்களுக்கு நினைவிருக்கலாம். அவர் என்ன செய்தார் என்பதும் நினைவிருக்கிறதா? அவர் செய்த வேலை பற்றி ஊடகங்கள் ஒரு பார்வையையும் அமெரிக்க அரசு ஒரு பார்வையையும் நமக்குக் கொடுத்தார்கள். அவர் என்ன செய்தார் – அம்மாம்பெரிய வேலைகளைச் செய்யும் இடத்துக்கு எப்படிச் சென்றார் – அதற்கு முன்பும் பின்பும் என்னவெல்லாம் நடந்தன என்று அனைத்தையும் விளக்கி அவரே எழுதிய நூல்தான் ‘நிரந்தர ஆவணம்’ (Permanent Record). அவர் இந்த நூல் வெளியிடுவதற்கு முன்பே பெரும் ஆதரவாளர் கூட்டத்தைப் பெற்றிருந்தார். நூல் வெளிவந்த பின்பு அவர்களின் எண்ணிக்கை மேலும் கூடியது. “என்ன இருந்தாலும் நம் பரம்பரை எதிரி நாடான ரஷ்யாவில் போய் தஞ்சம் புகுந்திருக்கிறானே! அப்படியானால் அவர்களின் கைக்கூலிதானே இவன்!” என்று சொன்னவர்கள் கூடப் பலர் நூல் வெளிவந்த பின்பு அவரின் விளக்கங்களைப் படித்துவிட்டு மனதை மாற்றிக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆக, இரண்டு வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. ஒன்று, செய்ய நினைத்த வேலையைச் செய்ய வேண்டியிருக்கிறது. இன்னொன்று, அதை ஏன் செய்தேன் என்ற விளக்கத்தையும் தெளிவாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதன் பின்புதான் முழுமையான ஆதரவு கிடைக்கிறது.

இந்த நூலுக்கு இப்படியொரு பெயரை ஏன் வைத்தார்? சென்ற தலைமுறை வரை, பொது வாழ்க்கையில் இருப்பவர்களும் சரி, நம்மைப் போன்ற எளிய மனிதர்களானாலும் சரி, நாம் செய்யும் எவ்வளவு பெரிய குற்றத்தையும் அப்படியே மறைத்துவிட்டு எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் புதியதோர் இடத்தில் போய் புதிய வாழ்க்கை ஒன்றைத் தொடங்க முடியும். இருக்கிற இடத்திலேயே அதற்கான எந்தத் தடயமும் இல்லாமல் அழித்துவிட்டுக்கூட புதிய மனிதனாக வாழ முடியும். குற்றங்களை விடுங்கள். குற்றமென்று கூற முடியாத எத்தனையோ தவறுகளை எல்லோரும் செய்யத்தான் செய்கிறோம். அவமானங்களைச் சந்திக்கத்தான் செய்கிறோம். அவற்றை அப்படி அப்படியே மறந்துவிட்டு வாழ்வின் அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்லத்தான் செய்கிறோம். தொழில்நுட்பப் புரட்சிக்குப் பிந்தைய இந்த உலகத்தில், மிகவும் குறிப்பாக சமூக ஊடகங்களின் வரவுக்குப் பின் அதற்கான சாத்தியமே இல்லாமல் போய்விட்டது. நம் ஒவ்வொரு நகர்வையும் நமக்குத் தெரிந்தவர்களோ தெரியாதவர்களோ நமக்குத் தெரியாமலே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம் ஒவ்வொரு நகர்வும் எங்கோ ஓரிடத்தில் பதிந்து வைக்கப்படுகிறது. அதை நாம் அழித்துவிட்டால், அத்தோடு அது அழிந்துவிட்டது என்று எண்ணிக்கொள்கிறோம். அப்படியே எதுவுமே முழுமையாக அழிக்கப்படுவதில்லை. நம் கண் பார்வையில் இருந்து மட்டும் அது அழைக்கப்பட்டிருக்கிறது. அது வேறு எங்கோ ஓரிடத்தில் ‘நிரந்தர’ ஆவணமாகத் தூங்கிக் கொண்டிருக்கும். அவற்றை எப்போது வேண்டுமானாலும் தட்டியெழுப்பி வெளிக்கொண்டுவர முடியும். அமெரிக்க அரசாங்கமும் உளவு அமைப்புகளும் இப்படிச் சேகரித்துச் சேமித்து வைக்கும் வேலையை அம்பலப்படுத்தியது தான் ஸ்னோடன் செய்த வேலை.

உங்களுக்கு எதிரானவர்கள் இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி உங்களை ஏதேனும் செய்ய விரும்பினால் அதுவும் சாத்தியம். அதுவே நீங்கள் அரசாங்கத்துக்கு எதிரானவர் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி அரசாங்கம் உங்களை என்னவெல்லாம் செய்ய முடியும்? ஏன் அரசாங்கத்தைப் பற்றிப் பேசுகிறோம் என்றால், அரசாங்கங்கள்தாம் இத்தகைய ஆவணங்களின் பெரும் பயனாளர். மக்களுக்கு எதிரான அரசாங்கங்கள் இவற்றைப் பெரிதளவில் பயன்படுத்தி தமக்கு எதிராகக் குரல் எழுப்புகிறவர்களின் குரல்வளையை நெரிப்பர். மக்களால், மக்களுக்காக, மக்களாலேயே நடத்தப்படும் அரசாங்கங்களும் மக்களின் பாதுகாப்புக்காக என்று சொல்லி இந்த ஆவணங்களைப் பயன்படுத்தும். அது மக்களின் பாதுகாப்புக்காக மட்டும் பயன்படுமா என்கிற இடத்தில்தான் சிக்கல் வருகிறது. முக்கியமாக, எதிர்க்கட்சிகளே இல்லாமல் செய்வதுதான் எங்கள் பாணி அரசியல் என்று வாழும் சுயமோகித் தலைவர்களும் அவர்களின் அடிமைகளும் இவற்றைப் பயன்படுத்தி மக்களாட்சி அமைப்பைப் பெரும் கேலிக்கூத்தாக மாற்றிவிட முடியும்.

அமெரிக்க மக்களாட்சி இருநூறாண்டுப் பழமை கொண்டது. உலகின் தலைசிறந்த மக்களாட்சி தம்முடையதுதான் என்றும் தாம்தான் உண்மையான வல்லரசு என்றும் தம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் மற்ற பல மக்களாட்சிகளை விடப் பலமடங்கு முதிர்ச்சியுற்றது. அப்படியிருந்துமே ஸ்னோடன் பயந்தார். அவர் பயந்தது போலவே அடுத்து வந்த அதிபர் அமெரிக்க அரசியல் அதற்கு முன்பு பார்த்திராத மாதிரியான பல கோமாளித்தனங்களைச் செய்து காட்டினார். புலனாய்வுத் துறைத் தலைவரை அழைத்து, “நீ எனக்கு விசுவாசத்துடன் இருப்பாயா?” என்று கேட்டார். “நான் நேர்மையோடு இருப்பேன்” என்று பதில் அளித்ததால், அவரை அவமானப்படுத்திப் பொறுப்பை விட்டு நீக்கினார். இதே ஆள், தனக்கு வேண்டாதவர்கள் பற்றிய ரகசியத் தகவல்களையெல்லாம் கொடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்திருக்க மாட்டார் என்று எப்படிச் சொல்ல முடியும்?

வெளியுலகைப் பொறுத்தமட்டில் ஸ்னோடன் ஒரு டெல் (Dell) நிறுவன ஊழியர். உண்மையில், அவர் அமெரிக்க உளவு நிறுவனங்களின் கணிப்பொறி அமைப்புகளை நிர்வகிக்கும் பணியில் இருந்தவர். உளவுத் துறையில் ஒருவர். அவரைப் போன்ற மற்றவர்களைப் போல கொடுத்த வேலையைச் செய்தோமா வீட்டுக்கு வந்தோமா என்று இராமல், ஓரிடத்தில் சில சந்தேகங்கள் கொள்கிறார், தனக்குக் கிடைத்த வசதிகளைப் பயன்படுத்தி உளவு நிறுவனங்கள் என்னென்ன தகவல்கள் எல்லாம் சேகரிக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்கிறார், அப்போது ‘நம்மைக் காக்கும் அமைப்பு என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிற நம் அரசாங்கம் நமக்குத் தெரியாமலே – நம் அனுமதி இல்லாமலே நம்மைப் பற்றிய இவ்வளவு தகவல்களைச் சேகரித்து வைக்கிறதா!’ என்ற அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்.

நம்மைப் போன்றவர்களுக்கு நம் தனிப்பட்ட தகவல் சேகரிக்கப்படுவதோ எங்கோ ஓரிடத்தில் சேமித்து வைக்கப்படுவதோ ஒரு பெரிய பிரச்சனையே இல்லை. அதன் பொருள் நாம் வாழ்க்கையைத் திறந்த புத்தகமாக வைத்துக் கொள்கிறவர்கள் என்றில்லை. தனிப்பட்ட தகவல்கள் தவறான கைகளில் சிக்கினால் ஏற்படும் தாக்கங்கள் பற்றியும் அவற்றின் நீள அகலங்கள் பற்றியும் முழுமையாகத் தெரியாதவர்கள் – அவற்றை அனுபவித்திராதவர்கள். அவ்வளவுதான். தனியுரிமை (privacy) பற்றிய மிதமிஞ்சிய உணர்வு கொண்ட சமூகத்தில் பிறந்து வளர்ந்தவர் என்ற முறையில் அவரால் அதைச் செரித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் அதை வெளியிட வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்.

அப்படி வெளியிட்டதன் மூலம் அவர் என்ன சாதித்தார்? தன் குடும்பத்தையும் உற்றார் உறவினர்களையும் கூட வாழ்வில் திரும்பக் காணவே முடியாது என்கிற நிலைக்கு வந்து நின்றார். கரணம் தப்பியிருந்தால் கண்டிப்பாக மரணம் நிகழ்ந்திருக்கும். சர்வ வல்லமை படைத்த அமெரிக்காவின் உளவு ரகசியங்களையே வெளியிடும் அளவுக்குப் போகிற துணிச்சல் சாதாரணப்பட்டதில்லை. வாழ்நாள் சிறை, நாடு கடத்தல், தற்கொலை அல்லது கொலை – இவற்றுள் ஒன்றுதான் நிச்சயமான முடிவு என்று தெரிந்தும் இப்படியொரு வேலையைச் செய்யத் துணிந்தது எதனால்? ஏதோவொன்று அவருக்கு அந்த அளவுக்கு மனதை உறுத்தியிருக்க வேண்டும். வேறு ஏதோ தன்னல நோக்கம் இருந்திருக்கலாம் என்று சொல்வோரும் உண்டு. நூலைப் படித்து முடிக்கும் போது இரண்டில் ஒரு தெளிவான முடிவு உங்களுக்குக் கிடைக்கும்.

2013-இல் அவர் இதை வெளியிட்ட போது, அவருக்கு வயது 29. கணிப்பொறிகளையும் தொழில்நுட்பத்தையும் சராசரி மனிதர்களைவிடக் கூடுதலாக அறிந்திருப்பவர்களுக்கு இந்தப் புதிய உலகம் வழங்கும் வாய்ப்புகளுக்கு அளவே இல்லை. அப்படியான ஒருவர் தான் ஸ்னோடன். திறமைமிக்க இளைஞர். தாய்-தந்தை, மூதாதையர் உட்பட குடும்பத்தில் பலர் அமெரிக்க இராணுவத்திலும் பாதுகாப்பு நிறுவனங்களிலும் பணிபுரிந்திருக்கிறார்கள். உடம்பெல்லாம் நாட்டுப்பற்று கொப்பளிக்கும் சூழலில் பிறந்து வளர்ந்தவர். இவரே இராணுவத்தில் சேர்ந்து, தன் ஆற்றலுக்கு மீறிய சுமையைச் சுமக்க நேர்ந்ததால் கால்களை முறித்துக்கொண்டு விடுபடுபட்டவர். “அதனால் என்னிடம் வந்து இந்த நாட்டுப்பற்று பற்றிப் பாடம் நடத்தும் வேலையை வைத்துக் கொள்ளாதீர்கள்” என்கிறார். அப்படியானவர் இப்போது அமெரிக்காவின் பரம எதிரியான ரஷ்யாவில் தஞ்சம் புகுந்து தன் வாழ்வின் எஞ்சிய நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறார். அதில்தான் சிக்கலே இருக்கிறது. அதனாலேயே இன்னும் அவர்மீது ஒரு சந்தேகக்கண் இருக்கிறது. அதற்கான விளக்கத்தை நூலில் கொடுத்திருக்கிறார்.

உலகத்துக்கு ஓர் உண்மையைச் சொல்ல நூல் எழுதியவர், நூலின் முதற்பாதியில் ஏன் தன் சொந்த வாழ்க்கையைப் பற்றியும் தன் தொழில்நுட்பத் திறமைகள் பற்றியும் அவ்வளவு பேசியிருக்கிறார் என்று தோன்றவே இல்லை. அவர் சொல்லியிருக்கும் எல்லாமே நூலின் குறிக்கோளுக்கு வலுசேர்க்கின்றன. அவற்றையெல்லாம் சொல்லும் போதுதான் வாசிப்பவருக்கு இவரால் எப்படி இது முடிந்தது என்பதும், எதனால் இப்படியொரு வேலையில் இறங்கினார் என்பதும் நன்றாகப் புரியும்.

அவர் சொன்னது இதுதான்: “அமெரிக்கர்கள் மட்டுமல்ல, இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் அமெரிக்க அரசாங்கத்தால் கண்காணிக்கப்படுகிறான். நீங்கள் ஒரு முறையேனும் உங்கள் வாழ்க்கையில் ஒரு கணிப்பொறியையோ தொலைபேசியையோ தொட்டிருக்கிறீர்கள் என்றால், நீங்கள் பேசும் ஒவ்வோர் அழைப்பும் அனுப்பும் ஒவ்வொரு குறுந்தகவலும் மின்னஞ்சலும் கண்காணிக்கப்படுகிறது. இப்படி ஒன்று நடக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.”

நூல் முழுக்கவும் திரைப்படம் பார்க்கும் உணர்வு கொடுக்கும் பல காட்சிகள். தனக்கு எந்தப் பிரச்சனையும் வந்துவிடாமல் முதலில் எப்படி அமெரிக்காவை விட்டு ஹாங்காங் தப்பி ஓடினார், ஊடகங்களை எப்படி லாவகமாகப் பயன்படுத்தினார், எக்குவடோர் நோக்கிப் பயணப்பட்டவர் எப்படி ரஷ்யாவில் போய் இறங்கினார், ரஷ்ய விமான நிலையத்தில் ரஷ்ய உளவுத்துறையினர் எப்படி இவருக்கு உதவுவது போல் கரம்நீட்டி இவரைப் பயன்படுத்திக் கொள்ள முயன்றார்கள் என்பவற்றையெல்லாம் விளக்கியிருக்கிறார். தான் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்கிறார். ரஷ்யாவிலேயே நிரந்தரமாகத் தங்கிக்கொள்ளும் உரிமையைப் பெற்றுவிட்டார். அப்படியிருக்கையில் அவர் ரஷ்ய உளவுத்துறைக்கு ஒத்துழைக்காமல் அங்கு வாழ முடியுமா என்று தெரியவில்லை. தாய்நாட்டைப் பற்றி இவ்வளவு தகவல்கள் வைத்திருக்கும் ஒருவரை எதிரி நாடு எப்படி நடத்தும் என்கிற கேள்வி ஒருபுறம் என்றால், தாய்நாட்டையே அம்பலப்படுத்தத் தயங்காதவன் தமக்கு எவ்வளவு பெரிய ஆபத்து என்று கருதுவார்கள் என்கிற கேள்வியும் வருகிறது.

இம்புட்டு வேலையையும் தன் காதலிக்குத் தெரியாமலே செய்து முடிக்கிறார். உளவு நிறுவனங்களில் பணிபுரியும் எல்லோருக்கும் இருக்கும் கட்டாயந்தான் அது. ஆனால் அவற்றின் ரகசியங்களை உலகத்துக்கே அம்பலப்படுத்த முடிவு செய்த ஒருவர், அவற்றைத் தன் காதலியிடம் பகிர்ந்துகொள்ளவில்லை என்பது பெரிய விஷயந்தான். திடீரென்று ஒருநாள் புத்தர் தன் குடும்பத்தை விட்டுக் கிளம்பியதைப் போல இவரும் காதலிக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுக் கிளம்பிவிடுகிறார்.

குறிப்பிட்ட மனிதர்களைக் குறிவைத்துச் செய்யப்படும் கண்காணிப்புகள் காலங்காலமாக இருக்கின்றன. ஒருத்தர் விடாமல் எல்லோரையும் கண்காணிக்கும் வேலை, 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதல்களுக்குப் பின்னரே தொடங்கியது. அமெரிக்க உளவுத்துறை வரலாற்றில் நிகழ்ந்த இந்தப் பெரும் மாற்றம் எப்படி நடந்தது என்பதைத் தன் கண்முன்னால் கண்டதாக விளக்குகிறார். அந்தப் பாதகச் செயலுக்குத் தான் தொழில்நுட்ப ரீதியாகத் துணை போனவன் என்று வருந்துகிறார். அப்படியான ரகசியங்கள் ஏதேனும் கிடைக்கும் என்று எதிர்பார்த்துப் போனால் நூலில் அப்படி எதுவும் இல்லை. ஆனால் அதையெல்லாம் விடப் பயங்கரமான விழிப்புணர்வு ஒன்று கிடைக்கும்.

ரஷ்யாவில் போய் இறங்கியதைப் பற்றியும் பின்னர் தன் காதலியும் ரஷ்யா வந்து சேர்ந்தது பற்றியும் எழுதியிருக்கிறார். ஆனால் அங்கே இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று சொல்லவில்லை. அதற்கடுத்து எழுதிய நூலில் அதுபற்றிச் சொல்லியிருக்கிறார். ‘செய்தித்துறையின் சுதந்திரம் அறக்கட்டளை’ (Freedom of the Press Foundation) எனும் அமைப்பின் இயக்குனர் வாரியத்தில் ஒருவராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து தனியுரிமை பற்றிய குடிமக்களுக்கான விழிப்புணர்வு உரைகள் ஆற்றிக்கொண்டிருக்கிறார்.

கூடுதல் பாதுகாப்பு நல்லதுதான். ஆனால் உலகெங்கும் இப்போது நடந்து வரும் மாற்றம், நாட்டுப்பற்று என்ற பெயரிலும் நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரிலும் நமக்கே தெரியாமல் நம் உள்ளாடையை உருவிவிடும் வேலை. நம் வளங்களையும் அவற்றைவிட விலைமதிப்பு மிக்க நம்மைப் பற்றிய தகவல்களையும் திருடுபவர்கள், நாட்டுப்பற்றையும் நாட்டின் பாதுகாப்பையும் சொல்லி என்ன செய்தாலும் நாம் ஏற்றுக்கொள்வோம் என்ற புது நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்கள். இதில் நாம் எதுவும் இழக்கவில்லை; யாரோ சிலர்தான் பாதிக்கப்படுகிறார்கள்; அதையும் வேடிக்கை பார்த்து ரசிக்கலாம் என்கிற புத்தி இருப்பவர்களுக்கு இதெல்லாம் புரியவே புரியாது. நம் குருட்டுத்தனம் நமக்குத்தான் பெருங்கேடு. உண்மையிலேயே நாட்டின் பாதுகாப்புக்காக எல்லோரும் சில வசதியின்மைகளை அனுபவிக்கத்தான் வேண்டும். அதே வேளையில், நாட்டின் பாதுகாப்பைக் காரணம் காட்டிச் செய்யப்படும் ஒவ்வொரு வேலையையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டும்; கேள்வி கேட்க வேண்டும் என்ற கருத்தைத்தான் ஸ்னோடன் நம்மிடம் விதைக்கிறார். அந்தப் போர்வைக்குள் தான் ஆகப்பெரும் மோசடிகள் நடக்கின்றன. கேள்வி கேட்பார் இன்றி. இதையெல்லாம் படித்துவிட்டு அமெரிக்காவில் தான் இப்படியெல்லாம் நடக்கிறது, நம்நாட்டில் அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை என்று நம்புபவர்கள் முக்கியமான உண்மையைத் தவறவிடுகிறவர்கள். அமெரிக்கர் ஒருத்தருக்குத்தான் அதைக்கண்டு கோபம் வந்திருக்கிறது; தன் அரசாங்கத்தையே எதிர்த்துப் போரிடும் அளவுக்கு தைரியமும் ஆற்றலும் இருந்திருக்கிறது. இதை நம்நாட்டில் செய்ய முடியுமா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தத்துவார்த்தமான தளத்தில் நின்று பேசினால், மனிதன் மாறுபவன். நேற்று செய்ததை நாளை மறந்துவிட்டு வேறொன்றாய் மாறுவது எல்லோர் வாழ்விலும் நடப்பது. இன்று ஆதரிப்பதை நாளை எதிர்க்கலாம். மாற்றமும் வளர்ச்சியின் ஒரு பகுதியே. அப்படி மாறிவிட்டவனை மாறவிடாமல் நினைவுபடுத்தித் தண்டிக்கும் வல்லமையை இந்த அமைப்புகள் உருவாக்கி வருகின்றன. மாறினாலும், பழைய கொள்கைகளுக்காகவும் கருத்துகளுக்காகவும் அவனைக் குற்றவுணர்வுக்குள்ளாக்குவதில் இன்பம் கொள்ளும் அமைப்புகள் இவை. இதுவும் அடிப்படை உரிமைக்கு எதிரான ஒன்றுதானே!

ஸ்னோடன் அம்பலப்படுத்தியிருப்பது அமெரிக்க அரசாங்கம் செய்யும் கண்காணிப்புகள் பற்றி மட்டுமே. இதே வேலையைத் தனியார் நிறுவனங்களும் செய்துகொண்டிருக்கின்றன. “அரசாங்கம் செய்வதுகூடப் பரவாயில்லை. அவர்கள் மக்கள் நலனுக்காகவோ பாதுகாப்புக்காகவோ செய்கிறார்கள். தனியார் நிறுவனங்கள் நம்மைப் பற்றிய தகவல்களை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்வார்களோ!” என்றொரு சாரார் பதறுகிறார்கள். “தனியார் நிறுவனங்கள் கூடப் பரவாயில்லை. நம்மால் அவர்களுக்கு லாபமில்லை என்று தெரிந்துவிட்டால் நம்மைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அரசாங்கங்கள்தாம் பெரும் அச்சுறுத்தல். அரசியல் முதிர்ச்சியற்ற நாடுகளில் இந்தத் தகவல்கள் எதிர் கருத்து கொண்டவர்களையெல்லாம் சித்திரவதை செய்யப் பயன்பட்டுவிடும்” என்று இன்னொரு சாரார் அஞ்சுகிறார்கள். இது ஏற்கனவே பல நாடுகளில் நடப்பதையும் நாம் பார்க்கத்தானே செய்கிறோம்! இதன் உச்சகட்ட பயங்கரம் என்பது அரசாங்கங்களும் தனியார் நிறுவனங்களும் வைத்துக்கொள்ளும் திருட்டுக் கூட்டணி. பொது ஊடகங்களைப் போலவே சில சமூக ஊடக நிறுவனங்களும் ஆளுங்கட்சிகளிடமும் தலைவர்களிடமும் பணம் வாங்கிக்கொண்டு ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாக ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அடுத்த கட்டத்துக்குப் போய் அவர்கள் இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்துப் பாருங்கள். தூக்கம் வராது. எனவே, ஸ்னோடனின் நோக்கம் முழுமையாக நிறைவேற வேண்டும் என்றால், தனியார் நிறுவனம் ஒன்றில் அவர்கள் நம் தகவல்களையெல்லாம் வைத்துக்கொண்டு செய்யும் தகிடுதத்தங்களை அருகில் இருந்து பார்க்கும் இன்னொருவர் இது போல வெளியே வந்து அவற்றையெல்லாம் அம்பலப்படுத்த வேண்டும். நமக்கொன்றும் தெரியாததில்லை. ஆனால் தேவையான அளவு அதன் தீவிரத்தை உணர்ந்திருக்கிறோமா என்பது சந்தகமே.

இப்படியொரு பெரும் அம்பலப்படுத்தலைச் செய்ததன் மூலம் அவர் என்ன சாதித்தார் என்ற கேள்விக்கே மீண்டும் வருவோம். அமெரிக்க உளவுத் துறையின் செயல்முறைகளில் ஒரு சிறு மாற்றத்தையேனும் செய்தார்களா? ஆம். செய்தார்கள். நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் கொத்தாகப் பொது மக்களின் தொலைபேசி உரையாடல்களைச் சேகரிக்கக் கூடாது என்ற சட்ட மாற்றம் கொண்டுவரப்பட்டது. தம்மைப் பற்றிய தகவல்கள் அரசாங்கத்தாலும் அமேசான், பேஸ்புக், கூகுள் போன்ற தனியார் நிறுவனங்களாலும் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படலாம் என்ற விழிப்புணர்வு அமெரிக்க மக்களிடையே பெருமளவில் ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் – நீங்கள் எங்கே போகிறீர்கள், யாரைச் சந்திக்கிறீர்கள், என்னென்ன செய்கிறீர்கள் என்ற எல்லாத் தகவல்களும் ஏதோவோர் இடத்தில் பதிந்து வைக்கப்பட்டிருக்கிறது. அவை வெளிவருமா வராதா என்பது பல்வேறு காரணிகளைப் பொறுத்தது.

அமெரிக்க அரசையும் உளவு நிறுவனங்களையும் பொறுத்தமட்டில் அவர் ஒரு துரோகி, அதுவும் எதிரியிடம் தஞ்சம் புகுந்திருக்கும் துரோகி, நாட்டின் பாதுகாப்பையே சீரழிக்கும் வேலைகளைச் செய்தவர். அவர்களைப் பொறுத்தமட்டில் அவர் செய்தது திருட்டு. அவரோ அதற்கு வேறொரு விளக்கம் கொடுக்கிறார். “எது அமெரிக்கா? அமெரிக்க அரசும் உளவு நிறுவனங்களுமா அல்லது அமெரிக்க மக்கள்தாம் அமெரிக்காவா? யாருக்கு நான் உண்மையோடு இருக்க வேண்டும்?” என்கிறார். தான் மக்களுக்காகத்தான் அரசும் உளவும் என்று நம்புகிறவன் என்றும், அவர்களுக்கே உண்மையாக இருப்பேன் என்றும், அம்மக்களுக்குத் தம்மைப் பற்றிய தகவல்கள் எப்படியெல்லாம் சேகரிக்கப்படுகின்றன – சேமிக்கப்படுகின்றன – பயன்படுத்தப்படுகின்றன என்பது தெரிந்தே தீர வேண்டும் என்றும் வாதிடுகிறார். அதற்கும் மேலாக, இத்தகைய கண்காணிப்புகள் அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது என்றும் நிறுவ முயன்றிருக்கிறார். இந்த வாதத்தை ஏற்றுக்கொள்பவர்கள், அவரை தன் நலனை விடப் பிறர் நலனையும் தான் நம்பிய குறிக்கோள்களையும் பெரிதாக நினைத்த வீரன் என்றும் நாயகன் என்றும் கொண்டாடுகிறார்கள். ஏற்றுக்கொள்ளாதவர்கள், துரோகி என்கிறார்கள். அவர் செய்தது துரோகந்தான்; ஆனால் அதைவிடப் பெரிய குறிக்கோள் ஒன்றுக்காக அதைச் செய்ததால் அவரை மன்னிக்கலாம் என்றும் ஒரு சிலர் சொல்கிறார்கள்.

பின் குறிப்பு: இந்த நூலைப் படித்து முடித்த நிமிடத்திலிருந்து பேஸ்புக் கணக்கை அழித்துவிட வேண்டும் என்று எண்ணி அதையும் வெற்றிகரமாகச் செய்துவிட்டேன். ஸ்னோடன் சொல்வது போல, அது என் கண் பார்வையிலிருந்து மட்டுந்தான் நீக்கப்பட்டிருக்கிறது; முழுமையாக அழிக்கப்பட்டுவிடவில்லை என்பதையும் அறிவேன்.

***

பாரதிராஜா, தூத்துடி மாவட்டம் பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர் இப்போது பணி நிமித்தம் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். அரசியல் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகிறார். மின்னஞ்சல்: bharathee@gmail.com

யாஹையூம் – யாகையூம்

0

பாலைவன லாந்தர்

யாஆஆஆஆஆஆஆ
யாஹக் யாஹக் யாஹக்
யாஹக் யாஹக் யாஹக்
யாஹக் யாஹக் யாஹக்
யாஹக்கூ யாஹக்கூ யாஹக்கூஊஊஊ
யாஹய்யூம் யாகைய்யூம்
யாஹையூம் யாகையூம் யாஹையூம் யாகையூம்”

இரண்டு கைகளால் தனது இரண்டு மார்பிலும் மாற்றி மாற்றி அறைந்து அறைந்து ஒருத்தி கூக்குரலிட்டு வானத்தை நோக்கி கைகளை உயர்த்தி இறக்குகிறாள். எனக்கு எதிர்புறமாக அமைந்திருந்த வராண்டாவின் வலது மூலையிலிருந்து இரண்டாவதாகப் படுத்திருந்த பெண் தற்போது குத்திட்டமர்ந்து அலறத் தொடங்கியிருக்கிறாள். அவளுடைய குரல் மற்ற யாரையும் தொந்தரவு செய்யவில்லை, ஏனெனில்… இந்த இடம் அப்படியானது. யாருமே அவளது குரலைக் கேட்கவில்லை. சிலர் மருந்துகளின் உதவியுடனும் சிலர் மாயைகளின் உதவியுடனும் தங்களை மறந்துக் கிடக்கின்றனர். இவளைப் போல இன்னும் சிலரும் ஆங்காங்கே பிதற்றிக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். எனினும், இவள் கட்டுக்கடங்காத ஆக்ரோஷத்தில் இருக்கிறாள். என் வாழ்வில் நேரிடையாக நான் கண்ட உச்சபட்ச வலியிது.

கண்கள் மட்டும் தெரியும் பர்தாவினால் மறைக்கப்பட்ட உருவமது. எந்தச் சலனமுமில்லாத விழிகளின் வழி ஒரு பெண்ணை எப்படிப் புரிந்துகொள்வது. சில சமயங்களில் என்னை மட்டுமே வெறித்துப் பார்ப்பதாகத் தோன்றும். அவளுடைய நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அவளின் மீதான ஈடுபாட்டை வளர்த்தெடுக்கிறது. முழுதாக ஏழு இரவுகள் கடந்துவிட்டன, ஒவ்வோர் இரவும் இதே வசனங்களுடன் இதே உச்சஸ்தாயிலில் தொடங்குகிறாள். அவளுடைய நடு இரவுகளை மூன்றாகப் பிரித்து வைத்திருக்கிறாள். முதலில் கோபத்தை இறக்கி வைக்கும் காளியின் தோரணையில் ஆணிலிருந்து மருகும் பெண்ணின் குரலில் ஓங்கிக் கூப்பாடிட்டுப் பேசுகின்றாள், பிறகு மலைக்காட்டுக் குரங்குகள் தனது மரித்தக் குட்டியை இறக்கிவிடாமல் பிதற்றுமே அந்த ஈனக்குரலில்,

“ஐயோ எந்தன் கைசேதமே

ஐயோ எந்தன் கைசேதமே

ஏ மக்கச் சீமானுவளா எம்புள்ளய கொண்டாந்து தாங்களே பாலு கொடுக்கணும்லோ… பசிச்சுக் கத்துறது ஒம்ம செவுட்டுக் காதுகளுக்கு கேக்கலியோ… பச்சமண்ணு எம்புள்ள அழுவியழுவி இன்னுஞ் செவந்துப் போவுதுவே தொண்டக்குழிக் காஞ்சு மசங்கிப் போயிடும்மோய்… ஈவு இரக்கமில்லையா… அல்லாவோட தண்டனைக்கு ஆளாவாதீயோ எம்புள்ளக் கதறுதே…. யாராச்சும் தூக்கித் தாங்களேன்ன் எண்ட ரஹ்மானே ஈரக்குலக் கருகுதே… கீவயிறு கனத்துக்கெடக்கு. மேலுக்கு நோவுப்புடிக்க பாலுக்கட்டிப் போச்சே… நா என்னத்துக்கு இன்னும் ஹயாத்தோடக் கெடக்கேன். மௌத்துல மலக்க இறக்கித் தாவேன் நாயனே”

முதன்முதலாக இந்தக் குரலைக் கேட்கும் போது மின்சாரத்தைத் தொட்டது போல உடல் வெட்டிக்கொண்டேன். பதின்ம வயதையொட்டிய தோற்றத்தில் இருந்தவளின் எதிர்மறைச் செயல்பாடுகளை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மரப்பாச்சிக்கு போர்வைப் போர்த்தியதுபோல் ஒடிந்துவிழும் வளைவுகள். அவளுடைய குரலுக்கும் உருவத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

இது இராமேஸ்வரத்திலிருந்து முப்பது கிலோமீட்டருக்குள் இருக்கும் ஒரு கடற்கரையோர தர்கா (இஸ்லாமிய மக்களில் நல்லடியாருக்கான அடக்க ஸ்தலம்) இங்கே சில அற்புதங்கள் நிகழ்கின்றதெனவும் பில்லி சூனியம் ஏவல் போன்ற சித்துவேலைகளைத் தீர்த்துவைக்கும் வைத்தியம் நடப்பதாகவும் நம்பிக்கைக் கொண்ட மக்கள் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து இங்கேயே நாட்கணக்கில் தங்கியிருந்து ஓரளவு தெளிவானதாக நம்பியவுடன் திரும்பிச் செல்கின்றனர். ஏர்வாடி, நாகூர், கோவளம் போன்று இங்கேயும் எல்லாவிதமான மதத்தினரும் வருவதனால் கிட்டத்தட்ட இந்த இடமே கொஞ்சம் பரபரப்பாகத்தானிருக்கும். ஆண்களுக்கு ஒருபுறமும் எதிர்த்தாற்போல் பெண்களுக்கும் மண்டபம் போன்ற நீண்ட தரைத்தளம் இருக்கும் நான்கடி உயரத்தில் அமைந்த வராண்டாவில் கான்கிரீட் தூண்கள் எழுப்பி மேற்கூரையை உயர்த்தி இருப்பார்கள். ஒவ்வொரு தூணின் அருகிலும் மனநிலைப் பிறழ்ந்தவர்களை சங்கிலியால் பிணைத்திருப்பதைக் காணலாம். சிலர் சாதாரணமாகவே இருப்பார்கள். இங்கே யார் பிறழ்ந்தவர், யார் தெளிவானவரென்பது சமயங்களில் குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.

எனக்கென உறவுகள் யாரும் இல்லை. எங்கே, எப்போது, எப்படிப் பிறந்தேனென்று தெரியாமல் வளர்ந்துவிட்டதால் எல்லோரிடத்திலும் யாரையாவது தேடுவது ஓர் அலாதியானப் பழக்கமாகிவிட்டது. என் வயது எத்தனையென எனக்குத் தெரியாது. நானாக ஓர் இலக்கத்தை உடலின் மீது போர்த்திக் கொண்டேன். இடது காலில் ஆறுவிரல்களோடு பிறந்ததால் மட்டுமே என்னைப் பெற்றவள் விட்டுச்சென்றதாகப் பொய்யாக நம்பிக்கொண்டேன். வருடத்தின் ஆறு மாதங்கள் பணம் சேர்க்க ஓடிக்கொண்டிருப்பேன். ஓரளவு போதுமான தொகை சேர்ந்தவுடன் வடக்கிலிருந்து தொடங்கி பயணப்பட்ட பகுதியில் இப்போது தென்னாட்டில் இருக்கிறேன். ஒவ்வொரு தளத்திற்கேற்றாற் போல் பெயர்களைப் புனைந்து கொள்வேன். இப்போது எனது பெயர் அஹமது. அசோக்கிற்கும் அஹமதிற்கும் எந்த வித்தியாசமுமில்லை. ‘பசியும் பிணியும் சூழாத வாழ்வைக் கேள் மனிதா…’ என் கோட்பாடிதுவே.

இந்த தர்காவின் நுழைவாயில் அருகே தேநீர்க்கடை வைத்திருக்கும் முத்துவாப்பாவுடன் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பேன். முத்துவாப்பா பழுத்தக் கதைசொல்லி. ஐம்பது சதவீத சொந்தக் கற்பனைகளை நிஜங்களுடன் பிசைந்து கதை சொல்லுவார். மலபார்கட்டு புகைந்து மணக்கும் உதட்டின் ஓரமாக பீடியைப் பற்றவைத்து அது பாதி எரியும்வரை தாடியைச் சொறிந்துக் கொண்டே புருவம் சுருக்கி தனக்குள் ஒத்திகை செய்துகொள்வார்.

அதில் எதைச் சொல்ல வேண்டும், எதைச் சேர்க்க வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என எல்லாமே அடங்கிவிடும். செருமலோடு “தம்பி அஹமது நீ நம்பமாட்டே” என்றே தொடங்குவார். நான் நம்பியாக வேண்டிய கட்டாயத்தை உணர்த்தும் ஒப்பந்தம் அது. அடிக்கடி கைலியை உதறி மீண்டும் மடித்து அடிவயிறு வரைச் சுருட்டி கட்டிக்கொள்வார்.

முத்துவாப்பாவிடம், அந்தப் பெண் மீது எனக்கான ஈடுபாட்டைக் கூறியபோது சிலநொடிகள் உற்றுப் பார்த்துவிட்டு “சீக்கிரமே இந்த இடத்தை விட்டு சென்றுவிடு தம்பி” என்று சொன்னார்.

வாரணாசி, காசி, அஜ்மீர், ஹாஜி அலி அப்பா தர்கா போன்ற வடமாநிலங்களைச் சுற்றித் திரிந்திருக்கும் போதே தென்மாவட்டங்கள் என்பது தோண்டத் தோண்ட அதிசயங்களைத் தரும் அற்புத ஊற்றென வழித்தோழர்கள் பேசிக்கொண்டார்கள். அப்போது எனக்குத் தோன்றிய ஆர்வம் இன்றளவும் நீடிக்கிறது.

இப்பெண் இன்னுமோர் அதிசயம். அவளது விசும்பல் இப்போது தனது வீரியத்தைக் குறைத்துக் கொண்டது. சற்று நேரத்தில் விடிந்துவிடும். இதுதான் அவளின் முக்கியத் தருணம். தனது இரண்டு கைகளையும் சோம்பல் முறிப்பது போல மேலே இழுத்துச் செல்கிறாள் இரண்டு கைகளையும் உள்ளங்கையோடுப் பிணைத்து பின்மண்டை வழியாக முதுகுவரை இறக்கி சர்ப்ப நடனமாடும் பெண் போல வளைந்து நெளிந்து முழங்கால்களைக் குத்திட்டு அழத் தொடங்குகின்றாள். சட்டெனச் சாலையோர சர்க்கஸ் சிறுமியைப் போன்று அந்தக் கை வளையத்திற்குள் தனது முழுவுடலை நுழைத்து மறுவழியாக வெளியேறி விடுவாள்.

இவளுடைய இரவுகளின் இந்த மூன்று வாக்குமூலங்களையும் அதன் தீர்ப்புகளையும் யாரிடம் முறையிட்டுப் பெற்றுத் தருவது, இவளுக்கு எப்படியாவது உதவி செய்தாக வேண்டுமென எனக்கேன் தோன்றுகிறது.

முதலில் ஒருமுறையேனும் அந்த முகத்தைப் பார்த்தாக வேண்டும். எப்படி இருப்பாள்.? உடைந்த பீங்கான் குடுவையை தார்ச்சாலையில் உராய்க்கும் போது ஒரு சப்தம் வருமே அதைப்போன்றக் குரலுக்குரிய முகம் எப்படி இருக்கும்.?

“ஹாராம் ஹராம் ஹராம்

ஹராமிகளா

நரகத்துக்குப் போவியோ நாசமாப் போறவுகளா

அன்னிக்கு மழவுட்டப்பாடில்ல கேட்டியளா

பொட்டலாப்போன இடியும் மின்னலும் வயித்துக்குள்ளாவ எங்கதிய வெட்டிப்போட்டிச்சு

கொடலோடக் கொடலா எம்புள்ள என்னியப் பாத்துச்சு

சீனியப்பா

சீனியப்பா

செய்யும் பூரானும் புடுங்கித் திங்க

மண்ணோடு மண்ணாக பொதச்சுப் போட்டாக

பொட்டலாப் போவானுக

பொட்டலாப் போவானுக”

அடுத்த இரவு வரை அசந்து தூங்கிவிடுவாள். அவளுக்கு எதுவும் தெரியாது, மூத்திர வாடையோடு கந்தத்துணிபோலவே கிடப்பாள். அவளின் தேவைகளைக் கவனித்துக்கொள்ள அவளைவிட முதிர்ந்தக் கிழவியொருத்தி எப்போதாவது தடிக்கம்பை ஊன்றியபடி வந்துச் செல்வாள்.

நாட்கள் நகர்ந்ததேயன்றி அவளுடைய இரவுகள் அமைதியடைந்ததாகத் தோன்றவில்லை.

தர்காவிலிருந்து சில அடிகள் நடந்தால் போதும் தெளிந்த நீரோடை போன்ற கடற்கரையில் கால் நனைக்கலாம். அலைகள் இல்லாத கடலோரத்தில் கடலுக்குள் மிதக்கும் பாசிகளை, மீன்களை, சிப்பிகளைத் தெளிவாகப் பார்ப்பது மனதிற்கு இனம்புரியாத அமைதியைத் தரும். தமிழகத்தின் மிக முக்கியக் கடற்கரை இது. உலகிலிருந்து பிடுங்கி வேறொரு தீவினுள் கிடப்பது போல கடல் பார்த்துக் கிடப்பேன்.

அன்று கடலோரத்தில் கிடக்கும் தடித்த மரத்தின் வேர் எனது பாதங்களை உரசியது. அதை உற்றுப்பார்க்கும் போது ஆறு விரல்களாகத் தெரிந்தன. மண்டைக்குள் ஏதேதோ சிந்தனைகள் ஓடின. சில நொடிகள் உறைந்து பின் உடைந்து, அந்தக் கிழவியிடம் ஓடி வந்தேன். அவளைப் பிடித்து உலுக்கி அப்பெண் குறித்த தகவல்களைச் சொல் என வற்புறுத்தினேன்.

“அத்தா… அந்தப்புள்ள மலேயா சீமபுள்ள… எங்கூட்டுக்காரரரு பாக்கக்கூடாத எடத்துல பாத்துப்போட்டு கம்மாயப்பட்டு இதக்காப்பாத்துணும்மொன்னு கூட்டாளியக்கூட போயி தப்பிக்க வச்சுட்டாவோ… அங்கனவுள்ள ஆரோ சேதி சொல்லி சுத்திப்போட்டு கையத்துண்டாக்கி முச்சந்தில வீசிட்டாவோ… அப்பயும் இதக் காட்டிக் கொடுக்காம கப்பக்காடி ஏறியெறங்கி ரெண்டு பொறைக்கு முந்தித்தான் உசுர கையில புடிச்சுக்கிட்டு வந்து சேர்ந்தாவோ”

“ரெண்டு பொறைன்னா ரெண்டு மாசமா பாட்டி?”

“ஆமாத்தா… ரெண்டு மாசந்தேன் ஆவுது, போன தேப்பொறையில் அவுக மௌத்தாகிட்டாவோ (விசும்புகிறாள்) இது யத்தீமாகிடுச்சு. கல்பு கெட்டு ஒய்யாம கத்திக்கிட்டே கெடந்திச்சு. ஹசரத்த வச்சு ஓதிப்பாத்தோம். யாருக்கும் ஒன்னும் வெளங்கல. எம்புள்ளைகளால இத ஏத்துக்க ஏலல.  ஊட்டவுட்டு தொறத்தி போச்சுவோ எனக்கு மனசு தாங்கலத்தா… ஹ்ம்ம்… நாம பேசுறது இவளுக்கு வெளங்காது… இவ பாஷயும் யாருக்குந் தெரியாது. எங்கன பொறந்து எப்படி வளந்திச்சோ… இங்கன வந்து நாய் படாத பாடுபடுது. நாந்தேன் ஆயிசான்னு பேரு வச்சி கூட்டியாந்து சேத்தேன். சீனிய பாத்தேன். சரிச்செய்யணும். அல்லாவோட கிருபைய அளவூடு செய்ய முடியுமா… அதுக்கு ஆயிசான்னா என்னா அனிதான்னா என்னா?”

“பாட்டி என்ன சொல்றீங்க இவளுக்கு… இவங்களுக்கு தமிழ் தெரியாதா…!”

நாக்கு ஒட்டிக்கொண்டு வார்த்தை வெளிவரவில்லை.

பாட்டி பேசிக்கொண்டிருக்கும் போதே என்னுடைய கண்கள் இருட்டி நாக்குச் சுழற்றி தொண்டைக்குளும் ஏதோ சுழல, என்னை நானே பாறாங்கல்லைப் போல் சுமந்து இன்ச் இன்ச்சாக நகர்ந்து போய் அவளுடைய கால்களை வலுக்கட்டாயமாக இழுத்து சங்கிலியை நகர்த்தி, சாராயைக் கழற்றினேன்.

இரண்டு கால்களிலும் ஆறு ஆறு விரல்கள்.

***

பாலைவன லாந்தர். தற்பொழுது கத்தாரில் வசிக்கிறார். உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள், லாடம், ஓநாய் என்று மூன்று கவிதைத்தொகுப்புகள் வந்துள்ளன. சுயாதின குறும்படங்கள் இயக்குவது, தமிழ் மன்ற அமைப்பில் பணியாற்றுவது என செயல்பட்டு வருகிறார். மின்னஞ்சல் – palaivanam999@gmail.com