Home Blog Page 46

மீரா மீனாட்சி கவிதை

0

அத்திப் பழங்களைக்
கைக்கொள்வதென்பது
திசைகளற்ற சிறுமிக்கானது

பழுத்தவையின் பொடிவிதைகளைக்
கிரகங்களின் கருக்களெனப் பத்திரப்படுத்துகிறாள்

முளைக்கத்தெரியாதவற்றின் பிதற்றல்களைத்
தின்னும் சாம்பல் நிற வண்ணத்திப் புள்ளுகள்
இனப்பெருக்கம் மறந்திருந்ததின் இன்மையை
சூரியன் வீழ்ந்து இறைத்த குளத்தின் படிகளில்
நேற்று குளித்தவனின் உயிரின் மணமென்கிறாள்

பொன்னிற பாக்கு வியாபாரி ஏன்
வெற்றிலைக்கொடிக்காக அலைகிறான்

காற்று சிக்கிய பாய்கள் அலுப்பை விரித்தன
வீரியம் கொண்ட எண்ணங்களை
வாசித்தவர்களின் பேறுகாலம்
ஒரே லக்கினத்தில் ஆனது விசித்திரமென்று
வியக்க யாருமற்றிருந்தது

பேச்சு உடைந்த அப்பொழுதில்
பூமி தன்சிறகுகளைக் குடைந்து நீவியது …
கனல் கக்கும் பெருமூச்சுகளில் உலர்ந்த
வெற்றிலைக்கொடி வேர்கள்
ஜன்னல் வழியாக வெறுமைக்குள் வெளியேறுகின்றன

பூமியின் முதல் உயிர் காற்றிலும்
கடலிலும் வானிலும் வனத்திலுமாகப்
பெருகிக்கொண்டிருந்ததை நேரமிருப்பதால்
மட்டுமே வேடிக்கைப்பார்க்கிறோம்

தோல்வியடைந்து கால் தளர்ந்திருக்கும் சூரியன்
வாகை மரக்கிளைகளில் தலைகீழாகத் தொங்குகிறது

வௌவ்வால்களுக்கு இதைவிட சரியான பரிசை
எவராலும் கொடுக்க இயலாதென்ற
பெருங்களிப்பில் நகரம் மிதக்கிறது …

மீரா மீனாட்சி, மும்பை (கவிஞர், ஓவியர், பத்திரிக்கையாளர்)

மணம்

0

காலத்துகள்

உடலெங்கும் மலம், சிறுநீரின் மணம். படுக்கையில் அமர்ந்திருந்தவர் எழுந்திருந்த போது தடுமாறியவர், வலது கையை முன்னே நீட்டியபடி இரண்டடி எடுத்து வைத்தார். இப்போது நாற்றமெடுக்கவில்லை. அறையெங்கும் மலங்கழித்தது இன்று காலையில் தானே. திரும்பிப் படுக்கையில் அமர்ந்தவர் கண்களை இடுக்கிக் கொண்டு அலைபேசியை பார்த்தார். நேரம் பதினாறு இருபத்தியைந்து. காலை மாலை பன்னிரண்டு. பன்னிரெண்டாகப் பிரிப்பார்கள், பதினாறில் மீதி நான்கு, இப்போது மணி நான்கு இருபத்தியைந்து. உள்ளங்காலில் பிசுபிசுப்பாக மலம். காலை நகர்த்தினார். இல்லை, அப்போதே அறையை சுத்தம் செய்து விட்டார்கள். மகன்தான் குளிப்பாட்டியும் விட்டான். அவன் சிறுவனாக இருக்கையில் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் வசிக்கும் போது இவர் குளித்து விட்டு உடை உடுத்தும் போது அவனை வெளியே அனுப்பி விடுவார். அவனையும் ஏழெட்டு வயதில் தனியாக குளிக்கச் செய்தார்கள். அவனுக்கு இப்போது அறுபத்தியோரு வயது, இல்லை அறுபத்தியிரண்டா? இன்று முழு நிர்வாணமாக என்னைப் பார்த்திருக்கிறான்.

மீண்டும் படுக்கையிலிருந்து எழுந்தவர் அறையின் கழிப்பறைக்குச் சென்று பேஸ்ட்டை எடுத்தார்.

‘என்னப்பா பண்ற’

குரல் கேட்டு திரும்பினார். என் முகம் என் எதிரே, இருபது முப்பது வருடத்திற்கு முந்தையது.

‘ஏன் சாயங்காலம் பல் தேய்க்கறப்பா?’

‘சாயங்காலமா’ யார் இவன்.

‘மணி நாலே முக்கால்’

என் மகன்.

‘காத்தாலன்னு நினைச்சுட்டேன்டா’

‘பார்த்து வா, விழுந்துடாத’

‘ஒக்காரு, படுத்துக்கறையா’

தலையசைத்தார்.

‘இப்ப எப்படியிருக்கு’

மீண்டும் தலையசைப்பு.

‘பக்கத்துலையே வாட்டர் பாட்டில் வெச்சிருக்கு, ரூம் கதவு தொறந்திருக்கட்டும், ஏதாவது வேணும்னா கூப்பிடு’ என்று கூறிவிட்டுச் சென்றான். அவன் நடையிலும் கொஞ்சம் தடுமாற்றம். அறுபத்தியைந்து வயதாகிவிட்டது, இல்லை அறுபத்தியிரண்டு தான். எனக்கு இருபத்தெட்டு வயதிருக்கும் போது பிறந்தான்… என் வயதென்ன… நயன்டீன் தர்ட்டி ஒன் தானே? நான் அல்லது முப்பத்தி இரண்டா? எழுபது ப்ளஸ் இருபது, தொண்ணூறு. அதில் இருபத்தெட்டு கழித்தால்… அறுபதுகள் கண்டிப்பாக ஆரம்பித்திருக்கும் அவனுக்கு.

இடுப்பு வலியெடுக்க திரும்பி அமர்ந்தார். அறையெங்கும் பினாயில் மணம். அதனூடே, அழுகிய பழத்தின், இல்லை.. கெட்டித்தட்டிப் போன மலத்தின் வாசம். ஏப்பம் காரமாக எழுந்தடங்கியது, நெஞ்சில் எரிச்சல். ஆசிட் ரிப்லக்ஸ் வேறு வந்து விட்டதா. மூன்று நாட்களுக்கு முன் எப்போதும் போல் காலை நாலரை மணிக்கு எழுந்தவர் தடுக்கி விழுந்ததில் ஆரம்பித்தது. பேரனும் மகனும் தூக்கிப் படுக்க வைத்தார்கள். வலி தாளவில்லை.

‘இப்ப டாக்டர் கிட்ட எங்க கூட்டிட்டுப் போறது’

‘மொதல்ல கிளினிக் தொறந்துருக்கான்னு பாக்கணும்’

டெலி மெடிகேஷன். விடியோ கால் செய்யச் சொன்ன மருத்துவரிடம் இடுப்பை காட்ட, அவர் மருந்துகள் பரிந்துரைத்தார்.

‘இந்தா தாத்தா’ என்று படுக்கையில் மருந்தை வைத்து விட்டு அவசரமாக வெளியே சென்றான் பேரன். முகம், கைகால் கழுவிக்கொள்ள வேண்டும். ஒரு வருடமாக வீட்டிலிருந்து தான் வேலை செய்கிறான், வாரமொருமுறை மட்டும் வெளியே சென்று பொருட்கள் வாங்கி வருவான். இரண்டு வாரங்களுக்கு முன்தான் அவன் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தாலும், அதற்குப் பிறகும் தொற்று ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள். கைக்குழந்தை வேறு அவனுக்கு, என்னால் அனாவசியமாக வெளியே செல்லும்படியாகி விட்டது. மகனும், மருமகளும் மார்ச் மாதத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டபோது நானும் சென்றிருக்கலாம், அப்போது தயங்கியது தவறோ?

மலங்கழிக்கும் உணர்வேற்பட்டு கழிவறைக்குச் சென்றார். மூன்று நான்கு முக்கல்களில் கொஞ்சம் சிறுநீர் மட்டும். ஆனால் ஆசன வாயிலில் மலம் தொக்கிக் கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. இடது கையை வைத்து தடவிப் பார்த்தார். சதையா, மலமா?. மூக்கருகே விரல்களை கொண்டு வந்தும் என்ன மணம் என்று உறுதியாக கூற முடியவில்லை.

‘என்னப்பா பண்ற, ட்வென்டி மினிட்ஸுக்கு மேல உள்ள இருக்க’

இது மகனின் குரல் தான். எழுந்தார். கழுவிக்கொள்ள வேண்டுமா? குனிய முடியாது, கையை மட்டும் சுத்தப்படுத்திக் கொண்டார்.

‘கொஞ்ச நாளைக்கு இப்படித்தான்பா இருக்கும், மெடிசன் சைட் எபெக்ட்’

வலிக்கு மருந்து சாப்பிட ஆரம்பித்த பின் மலச்சிக்கல். முதல் நாள் பொறுத்துக் கொண்டவர், நேற்று மகனிடம் கூறினார்.

‘டாக்டர் கிட்ட கேட்டேன், லாக்சேடிவ் எடுத்துக்கச் சொல்லியிருக்கார்’

மீண்டும் பேரன் தான் கடைக்குச் சென்றான்.

மலமிளக்கியை நேற்றிரவு எடுத்துக் கொண்ட பின்பும் சரியாகவில்லை. இன்று காலை ‘நல்லெண்ணெய வயத்துல தடவி பார்க்கலாம்’ என்றாள் மருமகள்.

‘நானே தடவிக்கறேன்டா’

‘ஒன்னால ஒனக்கே முடியாதுபா’

மருமகள், பேரன், அவன் மனைவி, அவள் கையில் இரண்டு வயது குழந்தை எல்லோரும் இவர் அறையில்.

‘வேணாம்டா, மத்தியானம் வரைக்கும் பார்க்கலாம்’

‘நீங்க போங்க’

‘..’

‘சட்டைய தூக்குப்பா’

‘கொஞ்ச நேரம் சேர்ல ஒக்காந்திரு’

அவன் தடவிச் சென்ற பத்து நிமிடங்களுக்குள் அடிவயிற்றில் கலக்க ஆரம்பித்து இவர் நாற்காலியிலிருந்து எழுவதற்குள் கழிந்து விட்டார். கழிவறையை அடைவதற்குள் பெர்முடாவின் கால்வழியாக வழிந்த இரண்டு நாட்களின் மலம் தரையெங்கும் திட்டுத்திட்டாக.

உடைகளைக் களைய ஆரம்பிக்கும் போது,

‘என்ன தாத்தா ஹால் வரைக்கும் நாத்தம்’

‘…’

‘அப்பா இங்க வாங்க’

பேரன் பிடித்துக் கொள்ள மகன்தான் நடுங்கும் கைகளுடன் தண்ணீர் ஊற்றி உடலை கழுவினான்.

‘மொதல்ல தாத்தாவை ஹால்ல ஒக்கார வைச்சுட்டு ரூமை க்ளீன் பண்ணலாம்’

‘திருப்பி கழிஞ்சுடார்னா, ஹால் …’

‘வேற எங்க ஒக்காற வைக்கறது’

மாற்று பெர்முடாவைப் போட குனிந்த போது இடுப்பு வலித்தது.

‘போட்டு விடணுமா’

‘வேணாம்’

‘நாலு இட்லி, சட்னி வெச்சிருக்கேன், காரமில்லாம அரைச்சிருக்கேன்’

இவள் யார்?.

‘இப்பத் தானே சாப்ட்டேன்’

‘அது மத்தியானம், இப்ப நைட் ஆயிடுச்சு’

‘மணி என்ன’

‘ஏழரை.’

‘..’

‘வேறேதாவது வேணும்னா கூப்பிடுங்க’

‘…’

இது என் மருமகள், பெயர் என்ன?. மகனுக்கு திருமணம் முடிந்தவுடனேயே ஒரே வீட்டில் வசித்தாலும் கொஞ்சம் விலகியே இருப்பது என்ற முடிவுக்கு இயல்பாகவே இவரும் மனைவியும் வந்தார்கள். இத்தனை ஆண்டுகளில் மருமகளுடன் பெரிதாக எந்த  சண்டையும் ஏற்பட்டதில்லை, எந்தக் கட்டாயப்படுத்தலும் இல்லை.  பேரனின் படிப்பு, திருமணம் குறித்து மகனும், மருமகளும் முடிவு செய்ததை ஏற்றுக்கொண்டார்கள். மூன்று குடும்பங்கள் வசிப்பதற்கு ஏற்ற இந்த ப்ளாட்டை வாங்கும் போது இவரும் பணம் தந்தார்.

‘லோன் போட்டிருக்கேன் தாத்தா’

‘அது இருக்கட்டும் டா, என்னால முடிஞ்சது’

‘நீங்க பணம் குடுக்கலைனா வெச்சுக்க மாட்டோமா என்ன, அவ்வளவு கேவலமாவா எங்களை நினைக்கறீங்க’ என்று கேட்ட மருமகள் தான் என்றாலும் தன் கணவனையும், மகனையும்  இப்படிப் படுத்துவது  அவளுக்கு எரிச்சலூட்டக் கூடும்.

தக்காளிச் சட்னியின் நிறம் சிகப்பா மஞ்சளா? ஜீரணமாகாமல் மலத்தில் சிலநேரம் ஒட்டியிருக்கும் கருவேப்பிலை போல் சட்னியிலும் சில இலைகள். காலருகே மஞ்சள், பழுப்பு நிற தீற்றல்கள். இட்லியை வாயருகே கொண்டு வந்தபோது நாற்றம் குமட்டியது. மெதுவாக மென்று உண்டு முடித்தவர் அறையிலிருந்த தொலைக்காட்சியை இயக்கினார்.

‘மத்த கிழடுங்க மாதிரி நாமளும் நொய்யு நொய்யுனு மத்தவங்களைப் படுத்தக் கூடாது, அட்வைஸ் பண்றேன்னு அவங்க விஷயத்துல மூக்க நுழைக்கறது, எதையும் செய்யக் கூடாது’

‘உங்க சேவிங்க்ஸ் இருக்கு, அதுபோதும் நமக்கு. அதுக்கும் மேல தேவைப்பட்டா பார்த்துக்கலாம்’

மகனுக்கு செலவு வைக்காமல் போய் சேர்ந்து விட்டாள். இன்று அவள் இருந்திருந்தால் அவளே குளிப்பாட்டித் துடைத்து விட்டிருப்பாள். வயதடைந்த பின் அவளைத் தவிர யாரும் என் நிர்வாணத்தைப் பார்த்ததில்லை, இன்று இருவர். தோல் சுருக்கங்கள், சுருங்கிய குறி, விரைகளின் வெளுத்த முடிகள், பிருஷ்டத்தின் மீது படிந்துள்ள கருப்புத் திட்டுக்கள் அவர்களுக்குக் குமட்டலைத் தந்திருக்கும்.

தொலைகாட்சியை அணைத்தவர் அலைபேசியை எடுத்து மனைவியின் புகைப்படத்தைப் பார்த்தார். அவள் நினைவு நாள் இரண்டு மாதத்தில், அதுவரை தாக்குப் பிடிப்பேனா? இந்த ஒன்றரை வருஷமா எந்த சிறு உடல்நலக் குறைவும் ஏற்படக் கூடாது என்று மிகவும் ஜாக்கிரதையாக இருந்தும் இப்போது இந்தப் பிரச்சனை. இதற்காக டாக்டரிடம் செல்ல நேரிட்டு, க்ளினிக்கில் தங்கவேண்டி வந்துவிட்டால் இந்த சூழலில் யார் கவனித்துக் கொள்வார்கள். அப்படியில்லாவிட்டாலும் மருத்துவரை நேரில் சென்று பார்ப்பதே இப்போது அபாயகரமான விஷயம் அல்லவா,    தொற்றேற்பட்டு விட்டால்? இறப்பதற்குள் இவர்களனைவரையும் படுத்தி எடுத்து விடுவேனோ. தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கலாம்.  மனைவி உடனிருந்திருந்தால் கொரோனா காலத்தை இன்னும் தைரியமாக எதிர்கொண்டிருப்பேன், எந்த தடுப்பூசி சிறந்தது என்று ஆராய்ச்சி செய்து  கொண்டிருக்காமல், கிடைப்பதை செலுத்திக்  கொண்டிருப்பேன். ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் தாம்பத்தியம், அவள் இறந்த பின்பு நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டுமென்று ஒருமுறை கூட தோன்றவில்லை.  

‘ஒம்போது மணிக்கு பால் தரட்டுமா… இல்ல…’ மருமகள் கேட்க,

‘வேண்டாம்’ என்றார். பால் கழியச் செய்யும்.

அலைபேசியில் நேரத்தை பார்த்தார். இருபது இருபத்தியேழு… எட்டு இருபத்தியேழு.

‘மாத்திரைலாம் சாப்ட்டியா’

‘ம்’

‘லாக்சேடிவ் இனி வேணாம்னு சொல்லிட்டார் டாக்டர். வலி மாத்திரை கூட நாளையோட ஓவர்’ மகன் கையில் புடைத்த பை.

‘..’

‘டாக்டர் தான் சொன்னார். வயசானவங்களுக்கு தனியா டயப்பர் இருக்கு, அதை போட்டுக்கலாம்னு’ என்று அந்தப் பையை நீட்டியபடி கூறினான்.

‘..’

‘நைட் ஒனக்கு திருப்பி கழிஞ்சுதுன்னா கஷ்டம் இல்லையா’

‘..’

‘ரேஷஸ்லாம் எதுவும் வராதாம்’

‘..’

‘போட்டுக்கறியா. இன்னிக்கு ஒரு நைட் மட்டும், அப்பறம் பாத்துக்கலாம்’

கையை நீட்டினார்.

‘பிரிச்சு வெச்சிருக்கேன், நீ கட்லாம் பண்ண வேணாம்’

முதிய ஆணும்,பெண்ணும் சிரிக்கும் படம். டயப்பர் போட்டுக் கொண்டு இவ்வளவு உற்சாகமாக இருக்க முடியுமா என்ன? ஒரு டயப்பரை எடுத்து முகர்ந்தார். மலத்தின் மணம். படுக்கையின் மீது வைத்துவிட்டு மீண்டுமெடுத்து முகத்தின் அருகே கொண்டு சென்றார். இல்லை, வேறேதோ மெல்லிய வாசம். டயப்பர் நாற்றமெடுக்கக்  கூடாது என்று ஏதாவது ரசாயனத்தைச் சேர்த்திருக்கக் கூடும். டயப்பருக்குள் இரு விரல்களை விட்டு விரித்துப் பார்த்தார், இடுப்பிற்குப் பொருந்தும்.

கதவை மூடி விட்டு பெர்முடாவை அவிழ்த்து, டயப்பரை அணிய குனிந்தபோது இடுப்பில் வலிக்க, நிமிர்ந்தவருக்கு மூச்சு வாங்கியது. மீண்டும் குனிய முயன்றார், வலி. மகனை அழைக்கலாமா? அசிங்கம். படுக்கையில் அமர்ந்து இரு கால்களையும் நீட்டி டயப்பருக்குள் நுழைக்க முயன்று சரிந்தவர், மெதுவாக எழுந்து டயப்பரை கையிலெடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘கதவ சாத்தாதீங்க’ என்றபடி உள்ளே வந்தவள் தரையிலிருந்த பெர்முடாவையும், அவர் கையிலிருந்த டயப்பரையும் பார்த்துவிட்டு விலகி கதவை மூடினாள். இது  மருமகளா, பேரனின் மனைவியா? டி-ஷர்ட்டை குறியை மறைக்குமாறு இழுத்துவிட்டுக் கொண்டார். டயப்பர் போட முடியாவிட்டாலும் பரவாயில்லை, வேறு யாரும் வருவதற்குள் பெர்முடாவை அணிந்து கொள்ள வேண்டும்.

‘என்னப்பா போட முடியலையா’

‘குனிஞ்சா வலிக்குது’

‘எழுந்து நில்லு, நான் போட்டு விடறேன்’

‘வேணாம்டா’

‘பரவாயில்ல’

மகன் வயதுக்கு அவனால் மட்டும் எளிதாக குனிய முடியுமா, பேரனால் முடியும், அவனை ஏன் அழைக்கவில்லை. அல்லது அவனிடம் கேட்டு மறுத்திருப்பானோ?.

எழுந்து நின்றவர் முன் மகன் குனிய, அவன் தோளைப் பற்றிக் கொண்டு ஒவ்வொரு காலாக தூக்க டயப்பரை நுழைத்தான்.

‘போதும்’ என்றவர் தொடை வரை அதை இழுத்துக் கொண்டார்.

‘பெர்முடா…’

ஒரு கையால் டி-ஷர்ட்டையும், மறுகையால் டயப்பரையும் பிடித்துக் கொண்டே ‘நானே பாத்துக்கறேன், நீ போ’ என்றார்.

மகன் வெளியே சென்ற பின் டி-ஷர்ட்டை மேலேற்றி டயப்பரை இடுப்பு வரை இழுத்து அணிந்து கொண்டவர் அறைக்குள் நடந்து பார்த்தார்.

இருபத்தியொன்று நாற்பது… ஒன்பது நாற்பது. சிறுநீர் கழிக்க வேண்டும். இப்போதே டயப்பரில் போய் விட்டால் நள்ளிரவிற்குள் நிரம்பி விடும். டயப்பரை கழற்றி, கழிப்பறைக்குப் போய் வந்தபின் அணிந்து  கொள்ளலாமா, ஆனால் இன்னொருவர் உதவியில்லாமல் முடியாது. பேரன் உறங்கியிருக்க மாட்டான், அவனிடம் கேட்கலாம். வேண்டாம், இன்னும் சிறிது நேரம் பொறுத்துக் கொண்டால் உறக்கம் வந்து விடும்.

முழிப்பு தட்டியவுடன் அலைபேசியில் நேரத்தைப் பார்த்தார். ஒன்று பதிமூன்று. மெதுவாக எழுந்தமர்ந்தார். டயப்பர் கனமாக இருந்தது. சிறுநீரின் வாசம். மலங்கழிக்கும் உந்துதல் உண்டான கணமே டயப்பரின் பின்பகுதியின் நிரம்ப ஆரம்பித்தது. மலத்தின் மீது அமர்ந்திருப்பதை போன்ற உணர்வெழ எழுந்து நின்றார். டயப்பரிலிருந்து வழியுமோ. இல்லை, அப்படி நேராமல் இருக்கும்படி தான் வடிவமைத்திருப்பார்கள். டயப்பரை மாற்றிவிட வேண்டும், ஆனால் யார் உதவிக்கு உள்ளார்கள். கழிவறை வரை நடந்து திரும்பினார். தொடைகளுக்கிடையில் பிசுபிசுப்பது வியர்வையாகத் தான் இருக்கும்.

அருவருப்பாக இருந்தது. வெளியே வழியாவிட்டாலும் கழிவுகளின்  வாசத்தை டயப்பரால் மறைக்க முடியவில்லை, நாற்றம் அறையை நிரப்பிக் கொண்டிருக்கிறது. இப்படியொரு வாழ்வை வாழ்வதற்கு இறந்து விடலாம். இப்போது மரணித்தால் பத்துபேர் கூட வரமாட்டார்கள். இந்த சிறு பிரச்சனை தவிர உடல் நன்றாகத்தான்  உள்ளது. இப்போது இலகுவாகவே மலம் கழித்திருக்கிறேன், உடல் சரியாகிக் கொண்டிருக்கிறது என்றுதானே அதற்கு அர்த்தம். நாளை சரியாகி விடும். ஒன்று நாற்பத்தி ஆறு. இன்னும் நான்கு மணிநேரத்தில் எழுந்து விடுவார்கள், கழற்றி விடலாம். மீண்டும் படுத்தார்.

பின்னந் தொடையில் கசிகிறதோ. மணி இரண்டு ஏழு. காலை டயப்பரை கழற்றும் போது நாற்றம் குமட்டி எடுக்கப்போவதை மகன் எப்படிப் பொறுத்துக் கொள்வான். அறைக்குள் முழுவதுமாக நிரம்பிக் கொண்டிருக்கும் மலத்தின் மணத்தில் மூச்சு முட்டி இறந்து விட்டால் கூட நல்லது தான். கழிவுகளில் புரண்டு கிடப்பதை விட அது மேல்.  இல்லை, இன்று மட்டும் தான் இந்தப் பிரச்சனை, நாளை சரியாகி விடும், அப்படியில்லாவிட்டாலும் கூட, இரவு பத்து மணியளவில் டயப்பரை அணிந்து கொண்டால் சரியாக இருக்கும். மீண்டும் கழிந்தார். இந்த முறை படுத்துக்கொண்டே. இப்போதே பழக ஆரம்பித்து விட்டது. அடுத்த சிலமணி நேரத்திற்கு மட்டும் இந்த நாற்றத்தைச் சகித்துக் கொண்டால் போதும். வெந்நீர் போட்டு நன்றாகக் குளித்தால் மணம் நீங்கி விடும். தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா என்று  டாக்டரிடம் நாளை கேட்கச் சொல்ல வேண்டும்.

***

காலத்துகள் சொல்வனம், பதாகை இணைய இதழ்களில் எழுதி வரும் இவரது முதல் நூல் “இயர் ஜீரோ” நாவல் யாவரும் வெளியீடாக வெளிவந்துள்ளது. ஆசிரியர் தொடர்புக்கு – ajay.78.r@gmail.com

கர்ணன் பேசும் அரசியல்

0

பாரதிராஜா

முதலில் இலக்கியங்கள் எந்தப் பாதையில் செல்கின்றனவோ அதே பாதையை அடுத்துத் திரைத்துறை பின்பற்றும். அழகியல் என்ற பெயரில் தஞ்சாவூரின் வாழ்க்கையையும் சென்னையின் வாழ்க்கையையும் மட்டும் பேசிய இலக்கியங்கள் பின்னர்தான் பாண்டிய நாட்டின் – கரிசல் பூமியின் பக்கமெல்லாம் வந்தன. உயர்-ஆதிக்க வர்க்கத்தின் வாழ்க்கையை மட்டும் பேசிய இலக்கியங்கள் அடுத்து நடுத்தர-போலி ஆதிக்க வர்க்கத்தின் வாழ்க்கையைப் பேசின. பின்னர்தான் அடித்தட்டு-ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் வந்தன. அதற்குப் பின்னால் உயர்-ஆதிக்க வர்க்கத்தின், நடுத்தர-போலி ஆதிக்க வர்க்கத்தின் படைப்பாளிகளும் இருந்தார்கள். அந்த வாழ்க்கையைப் பட்டு உணர்ந்த அடித்தட்டு-ஒடுக்கப்பட்ட பின்னணியில் இருந்து வெளிவந்த படைப்பாளிகளும் இருந்தனர்.

“என் வலியை உணர்ந்து அதை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லும் வெளியார்களை மதிக்கிறோம். ஆனால் என் வலியை நானே சொல்வதைப் போல வருமா?” என்று புறப்பட்ட படைப்பாளிகள்தாம் இத்தகைய படைப்புகளின் வேகத்தைக் கூட்டினார்கள்.

அதைத்தான் திரைப்படங்களும் செய்தன. பாரதிராஜாவும் அவரைத் தொடர்ந்து வந்த படைப்பாளிகளும் தஞ்சாவூரையும் சென்னையையும் தவிர்த்தும் ஒரு தமிழகம் இருக்கிறது என்பதை உரக்கச் சொல்லி நினைவூட்டினார்கள். அதில் இடைநிலை மக்களின் உண்மையான வாழ்க்கையோடு சேர்ந்து போலிப்பெருமைகளும் வெற்றுப் பெருமிதங்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டன. அதற்கு அடுத்த கட்டந்தான் ‘அசுரன்’களும் ‘கர்ணன்’களும்.

மேலே சொன்ன எல்லா கதைகளிலுமே பலவிதமான சொல்முறைகள் இருக்கின்றன. ஒன்று, தம் வாழ்க்கையை உள்ளபடியே சொல்வது. இன்னொன்று, பிறருக்கு உறுத்துகிற விதத்திலும் தம்மைச் சேர்ந்தவர்களுக்கு நெஞ்சு புடைக்கும் விதத்திலும் தம் வாழ்வின் பெருமையைப் பேசுகிற விதத்தில் சொல்வது. அடுத்தது, தம் வாழ்க்கைக்குள் இருக்கும் பிரச்சனைகளையும் சிக்கல்களையும் சொல்வது. அடித்தட்டு-ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் கதைகளும் இந்த மூன்று சொல்முறைகளையும் பயன்படுத்தவே செய்கின்றன. ‘நாம் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை என்று சொல்கிற கதைகளும் இருக்கின்றன. ‘நாங்கள் படும் பாட்டைப் பாருங்கள், எங்கள் மீது கருணை காட்டி எங்களையும் வாழ விடுங்களேன் என்று மனச்சான்றுள்ள மற்றவர்களிடம் கோருகிற-கெஞ்சுகிற கதைகளும் இருக்கின்றன. ‘உங்களிடம் பேசிப் பார்த்துவிட்டோம். இனி இது சரிப்பட்டு வராது போல என்று கலகம் செய்யும் கதைகளும் இருக்கின்றன. அசுரனும் கர்ணனும் அந்த வகை.

எத்தனையோ அரசியல்-சமூகக் கட்டுரைகளும் ஆய்வுரைகளும் ஏற்படுத்த முடியாத தாக்கத்தை இதுபோன்ற படங்களும் புனைவெழுத்துகளும் ஏற்படுத்த முடியும். அதற்குக் காரணம், கட்டுரைகளிலும் ஆய்வுரைகளிலும் நம் அறிவுக்கு மட்டுமே வேலை இருக்கும். வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கும் ஒருவராக இருந்தேதான் அவற்றைப் படிப்போம். ஒரு கதையில்-படத்தில் அதைப் படிக்கும்போதோ பார்க்கும்போதோ நமக்குத் தெரியாமலே அந்தப் பாத்திரங்களில் நம்மை வைத்துப் பார்ப்போம். அதுதான் அவர்களாக மாறி நம்மைச் சிந்திக்க வைப்பது. இந்தியாவில் சாதி ஒழிவதற்கு ஒரே வழி, அதன் வலியை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு எல்லோருக்கும் அதை உணரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதைத்தான் இதுபோன்ற படங்கள் செய்கின்றன. இந்தப் போக்கு தொடரும்போது, இதுபோன்ற படங்களைப் பார்க்கும் பொதுச்சமூகம் ஒடுக்கப்பட்டவர்களின் வலியைப் புரிந்துகொள்ளத்தானே செய்யும்!

கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடலை பிரபாகரனின் படத்தை வைத்துப் பாடிய காணொளிகள் நடமாடிக் கொண்டிருந்தன. அது பாடலை மட்டுமே வைத்து முடிவு செய்யப்பட்டது என்றுதான் எண்ணிக்கொண்டு இருந்தேன். படத்தைப் பார்த்த பின்பு இது அப்படியே ஈழத்தின் கதையை-பிரபாகரனின் கதையைச் சொல்வது போலவும் இருக்கிறதே என்றும் தோன்றுகிறது. ஆதிக்கம் குனியக் குனியக் குட்டும். அதை எதிர்க்க யாரோ ஒரு தனிமனிதன் நிமிர்ந்து நிற்கும் போதுதான் அவனோடு சேர்ந்து அந்தச் சமூகமே எழுந்து போரிடும். அப்படி நிமிர்ந்து நிற்பவனால் அவனுக்கும் அந்த எதிர்ப்பை விரும்பாத அவனது சமூகத்துக்கும் அளவில்லாத இழப்புகள் வரும். அப்போது எல்லோரையும் போலத் தானும் குனிந்தே கிடந்திருந்திருக்கலாமோ என்ற குழப்பம் வரலாம். அந்த இழப்புகளை எல்லாம்விடத் தம் குனிவுக்கு முடிவு கட்டுவதே முக்கியக் குறிக்கோளாகக் கருதும் அவனுக்கு அவ்விழப்புகள் பெரிதாகப் படாது. இனம், நிலம், காலம் எல்லாம் கடந்த நியதிதானே இது.

பொடியங்குளம் என்ற பெயர் கொடியங்குளத்தை நினைவுபடுத்துகிறது. அதற்குத்தான் அந்தப் பெயரை வைத்திருக்கிறார். இது போன்றதொரு சம்பவம் கொடியங்குளத்தில் நிகழ்ந்தபோது, முதன்முறையாக முதலமைச்சர் ஆகியிருந்த ஜெயலலிதாவின் ஆட்சி அதன் பேயாட்டத்தின் உச்சத்தை அடைந்திருந்தது. சிறுபான்மையினர், அரசு ஊழியர்கள், பிராமணரல்லாத உயர் சாதியினர் என்று திமுகவுக்கென்று ஓர் ஆதரவுக் கூட்டம் இருப்பது போலத் தனக்கென்றும் ஒரு கூட்டம் வேண்டுமென்று கருதியவர், சில போலி ஆதிக்க சாதிகளின் மனதை வெல்வதற்காக எதையும் செய்யத் தயாராக இருந்தார். தோழியும் தோழியின் குடும்பமும் வேறு உடனிருந்து அவரை ஆட்டுவித்துக் கொண்டிருந்தார்கள். அதன் விளைவுதான் கொடியங்குளத்துக்குள் புகுந்து நடத்திய காவல்துறையின் வெறியாட்டம். அதை அவர் வாழும் காலத்தில் எவரும் துணிந்து சொல்லியிருக்க முடியாது. அவர் மறைந்த பின்பும் அதைச் சொல்லத் துணியாத இந்த மனநிலை அச்சத்தின் காரணமானது என்று மட்டும் சொல்லவும் முடியவில்லை.

கொடியங்குளம் சம்பவம் நடந்தபோது அந்த மக்களுக்காகப் போராட எவருமே இல்லை. அன்று துணிந்து முன் நின்றவரைத்தான் அவர்கள் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குத் தம் தலைவனாக ஏற்றுக்கொண்டார்கள். அவர் கடைசிவரை அவர்களுக்காக நேர்மையோடு நின்றாரா அல்லது தன் குறுகிய சுயநல ஆதாயங்களுக்காக அந்த ஜெயலலிதாவிடமே சென்று மண்டியிட்டாரா என்பதையும் இந்த நேரத்தில் அம்மக்கள் விவாதிக்க வேண்டும்.

இந்தியாவைவிடத் தமிழகம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. குறிப்பாகச் சாதிப் பாகுபாடுகளைக் களைந்தெறிவதில் பெரும் முன்னேற்றம் கண்டிருக்கிறது. சாதி நம் மனதைவிட்டுப் போக இன்னும் நீண்ட காலம் ஆகும் எனினும் சாதியின் அடிப்படையில் மனிதர்களை இழிவாக நடத்துவது மற்ற மாநிலங்களைவிட இங்கே வேகமாகக் குறைந்துதான் வருகிறது. மாற்றம் நடந்துகொண்டிருக்கும் அல்லது நடக்கத் தொடங்கியிருக்கும் காலம் இது. அதுவும் படத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. சாதிப் பாகுபாடு இல்லாமல் சேர்ந்து கபடி விளையாடுவது என்பதே ஒரு சிறிய மாற்றந்தான். இதைச் சென்ற தலைமுறைத் தமிழகம் ஏற்றுக்கொண்டிருக்குமா? முன்னேறவே வழியில்லாமல் அடக்கி வைத்திருக்கும் போது வரும் கோபத்தைவிட முன்னேறப் போவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கும் போது வரும் கோபம் கூடுதலாகத்தானே இருக்கும். அதைத்தான் இந்தப் படம் பேசுகிறது. “பேருந்து நிறுத்தம் இருந்தால்தானே வெளியே போவாய்-முன்னுக்கு வருவாய்?, “மாடசாமி மகன் எப்படிக் கர்ணன் என்று பெயர் வைக்கலாம்?”, “எங்களையே எதிர்க்கிறாயா?” போன்றவைதாம் போலி ஆதிக்க சாதி வெறியர்களின் பிரச்சனைகள். இதிலிருந்தே கடந்த 25 ஆண்டுகளில் நீண்ட தூரம் வந்துவிட்டோம் என்பதையும் மறுப்பதற்கில்லை. அம்மக்களுக்குள்ளேயே தாம் ஒடுக்கப்பட்டவர்களே அல்ல என்று சொல்கிறவர்களும் நிறையக் கூடியிருக்கிறார்கள். அது உண்மையாகவே வரலாற்றின் அடிப்படையிலான உரிமை கோரலா அல்லது போலியான திசை திருப்பலா அல்லது கொடியங்குளம் சம்பவம் நடந்தபோது இருந்த நிலைமை கடந்த 25 ஆண்டுகளில் பெரிதளவில் மாறியிருக்கிறதா என்பதையும் இந்தப் படம் கேள்வி கேட்க வைக்கிறது. கொடியங்குளத்திலும் திருநெல்வேலியிலும் பரமக்குடியிலும் நடத்தியது போன்ற ஒரு தாக்குதலை வேறு எந்தப் பிற்படுத்தப்பட்ட-மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் மீதும் எந்த அரசும் நடத்தியிருக்கிறதா? நடத்த முடியுமா? இதற்கான விடையை வைத்து இதற்கு முந்தைய பெரிய கேள்விகளுக்கு விடை காண முடியுமா?

அவர்களுக்குள்ளும் முந்தைய தலைமுறையினர் ‘இதெல்லாம் எதுக்கு வேண்டாத வேலை!’ என்று அமைதியாகப் போவதை விரும்புபவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு கர்ணன் நிமிர்ந்து நிற்கும் போதுதான் அவனைப் போன்ற இளைஞர்கள் அவனோடு சேர்ந்து நிமிர்கிறார்கள். அதுதான் பெரியவர்களையும் பெண்களையும் கூட நம்பிக்கை கொண்டு நிமிரச் செய்கிறது.

படம் முழுக்கவும் யானை, குதிரை, கழுதை, பன்றிகள், நாய்கள், பூனை என்று பலவிதமான விலங்குகள் வருகின்றன. அவை ஒவ்வொன்றும் ஏதோவொரு குறியீடாகவும் இருக்கின்றன. முதற் காட்சியில் ஒரு சிறுமி நடுச்சாலையில் உதவ நாதியின்றி இறந்து போகிறாள். அதன் பின்பு அவள் படம் முழுக்கவும் அம்மக்களின் தெய்வம் போல வந்து மறையும் காட்சிகள் புல்லரிக்க வைக்கின்றன. தம்வீட்டுக் கோழிக் குஞ்சைத் தூக்கிச் செல்லும் பருந்தைப் போய் கடவுள் என்று வணங்கிக்கொண்டு அதனிடம் போய்க் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்களே என்று நொந்துகொள்ளும் காட்சியும் ஒரு குறியீடுதான்.

தன்சாதிப் பெருமை ஒருபுறம் என்றால், எந்த சாதிப் பெருமையை நோண்டிவிட்டால் நமக்குக் கூட்டம் சேர்க்க வசதியாக இருக்கும் என்று கணக்குப் போட்டுப் படங்களை முடிவு செய்யும் நடிகர் இல்லை போலத் தெரிகிறது தனுஷ். எது நல்ல கதையோ அதைச் செய்வதைப் பெருமையாகக் கருதுகிறார் போலத் தெரிகிறது. இது நல்ல போக்கு. போலி ஆதிக்க சாதி அடையாளங்களுக்குள் இருக்கும்-பிற படங்களில் போலி ஆதிக்க சாதி வேடங்களில் வரும் பல நடிகர்களை இப்படியொரு படத்தில் ஒடுக்கப்பட்ட வேடங்களில் நடிக்க வைத்திருப்பதே ஒரு சிறிய புரட்சிதான். அசுரன் படத்தில் கருணாஸ் மகனைக் கொண்டு வந்து நடிக்க வைத்தது போல. குறைந்த பட்சம் அவர்கள் மனதிலும் அவர்களைச் சார்ந்தவர்களின் மனதிலும் ஒரு மாற்ற விதை விழுந்திருக்குமே.

சாலை, வீடுகள், தெருக்கள், பயன்படுத்தப்படும் பொருட்கள், உடைகள்-குறிப்பாக தனுஷ் கட்டும் கைலி-என்று எல்லாமே தொண்ணூறுகளை அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன. பெரும்பாலும் வட்டார வழக்கில் எல்லோருமே நன்றாகப் பேசியிருக்கிறார்கள். வெற்றிமாறன் படங்களில் வருகிற மாதிரியோ ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யில் வருகிற மாதிரியோ பிசிறில்லாமல் இருக்கிறது என்று சொல்ல முடியாது. சிலரிடம் சில சொற்களில் அவர்களின் இயல்பான மொழி வெளிப்பட்டு விடுகிறது. அது போல, ‘உட்றாதீங்க எப்போ என்றொரு பாடல் இருக்கிறது. ‘உட்றாதீங்க என்பது அந்த மண்ணின் மொழியல்ல. ‘விட்றாதீங்க’ என்பதே அங்கு பேசப்படும் மொழி. ‘புடி’ கிடையாது. ‘பிடி’தான். சிலர் அப்படியே அந்த ஊர்க்கார்களைப் போல் இருக்கிறார்கள். சிலர் சிறிது பொருந்தாதது போல இருக்கிறார்கள். காவல்துறை அதிகாரியாக வரும் வில்லன் வயதான தனியார் பேருந்து உரிமையாளரை ‘வாயா போயா’ என்று பேசுவது கூட இயல்பாக இல்லை. காவல்துறை எந்த முதலாளியையும் இப்படி மரியாதையில்லாமல் பேசாது. படம் சொல்லும் கதையைப் பார்க்கும் போது இவையெல்லாம் பொருட்படுத்தாமல் விடத்தக்க சிறிய கோளாறுகளே. ‘பரியேறும் பெருமாள்’ எடுத்த மாரி செல்வராஜ் ‘கர்ணனில்’ காட்டியிருருப்பது காட்டுப் பாய்ச்சல். இதுபோன்ற சிறிய பிசிறுகளை நீக்கும்போது இன்னும் பலமடங்கு முன்னேற்றம் காட்டலாமே.

காவல் துறை அடக்குமுறை என்பது ஒடுக்கப்பட்ட மக்களை மட்டும் பதம் பார்ப்பதில்லை. அது உண்மையிலேயே அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களுக்கும் அதிகாரத்துக்கு அருகில் இருப்பவர்களுக்கும் மட்டுமே எடுபிடி வேலை செய்கிறது. மற்றபடி பெரும்பான்மை மக்களைத் துன்புறுத்தி இன்பம் காண்பதாகவே இருக்கிறது. அதே தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடும் சாத்தான்குளம் காவல்நிலையக் கொலையுமே இதற்குப் பதில். இந்தப் படத்தை ஒடுக்கப்பட்டவர்களின் – இன்னும் பச்சையாகச் சொல்வதானால் நாதியற்றவர்களின்-கையறு நிலையைச் சொல்லும் படமாகவும் எடுத்துக்கொள்ளலாம். காவல் துறையின் மிதமிஞ்சிய அதிகாரத்தைக் கேள்வி கேட்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். இது எல்லோருக்குமான பிரச்சனை. உண்மையிலேயே வளர்ந்த நாடுகளில் காவல்துறைக்கு இதுபோன்ற கட்டற்ற அதிகாரம் கிடையாது. இது எவ்வளவு விரைவாகச் சரிசெய்யப்படுகிறதோ அவ்வளவு நல்லது. தமிழகத்தில் அமைந்திருக்கும் புதிய அரசின் தொடக்கச் செயல்பாடுகள் நம்பிக்கையளிக்கும் விதத்தில் இருக்கின்றன. இந்தப் படத்தை முன்வைத்து, தமிழக அரசு காவல்துறைச் சீர்திருத்தத்தைத் தீவிரமாக முன்னெடுக்கலாம். அப்படிச் செய்தால் வழக்கம் போல இது மொத்த இந்தியாவுக்கும் முன்னோடியாக நாம் செய்த இன்னொரு சாதனையாக இருக்கும். வரலாறு நமக்கு நன்றி சொல்லும்.

***

பாரதிராஜா தூத்துடி மாவட்டம் பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர். இப்போது பணி நிமித்தம் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். அரசியல் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் தொடர்ச்சியாக பங்களித்து வருகிறார்.

கலை எனும் பெண்டுலம்

1

ஜீவ கரிகாலன்

*
லகின் பெரும்பாலானோர் யாருமே எதிர்பாராத வெகுசிலர் எதிர்பார்த்துக் காத்திருந்த கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் உக்கிரம் இந்தியாவில் பெருந்தீவிரத்தை ஆரம்பிக்கும் முன்னர் அல்லது அதற்கு உபகாரம் செய்யும் தேர்தல் திருவிழா, கும்பமேளா, ஐ.பி.எல் எல்லாம் தொடங்கும் முன்னர், பெருந்தொற்றைத் தாண்டியிராவிட்டால் நாம் காண்கின்ற கடைசி ஓவியக் காட்சி இது என்று பரனோயா மனம் கெக்கலித்தது.

அது காலஞ்சென்ற மூத்த ஓவியர் ஆர். மூக்கையாவின் retrospective. தக்ஷிணசித்ராவின் வஜிரா காட்சிக்கூடத்தில் அவரது ஓவியங்களும் சிற்பங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கோவிட் இரண்டாம் அலையின் கோரத்தாண்டவம் குறித்த அச்சம் எழுந்த காலம் என்பதால், கோலாகலமாகத் தொடங்க வேண்டிய அந்தக் காட்சி அதிகாரப்பூர்வ விழாவோடு தொடங்காமல் எளிமையாகவே பார்வையாளர்களுக்காக திறந்துவிடப்பட்டது.

இவ்வகையிலான காட்சிகளில், தமது படைப்புகளை ஆவணப்படுத்தும் சிரத்தை எடுத்துக் கொள்ளாத கலைஞர்களும் உண்டு என்பதால், எல்லா படைப்பாளிகளுக்கும் அவ்விதம் முழுமையான ஒரு கலைவரிசையை அல்லது காலவரிசையில் அல்லது வெளிப்படாத, முற்றுப்பெறாத படைப்புகளைக் காட்சிப்படுத்த முடிவதில்லை. அவ்வகையில் தக்ஷிணசித்ராவின் இந்தக் காட்சிக்கான பொறுப்பாளர்கள் பெரும் சிரத்தையோடு ஒருங்கிணைத்துள்ளார்கள்.

அதுவும் டி.ஆர்.பி. மூக்கையா மறைந்து பனிரெண்டு வருடங்கள் ஆகின்றன (1934-2009), மெட்ராஸ் கலை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான மூக்கையாவின் படைப்புகள், பொதுப் பார்வையாளனாக அவரது அடைப்பெயரான “Bull mookkiah”வாகத் தான் தெரியும். மெரினா புரட்சியின் போது எண்ணற்ற பதாகைகளிலும், மீம் போஸ்டர்களிலும் அவரது சிற்பங்கள் பகிரப்பட்டிருந்தன. சிலர் அதை அகழ்வில் கண்டெடுத்த சிற்பம் என்றெல்லாமும் சொல்லியிருந்த ஞாபகம். கலையின் eternity அது, காலத்தின் இடம், வலம் என இருமருங்கிலும் கூடப்பயணிக்கும் எனப் புரிந்துகொண்ட கணம் அது. இந்தக் கண்காட்சி குறித்த தகவல் வரவும் உற்சாகமெழ அதுவே காரணம். நானும் இளங்கோவும், ஷங்கருமாகச் சென்று வந்தோம்.

Retrospective வெவ்வேறு காலத்தில் அவர் படைத்திருந்த வெவ்வேறு தொகுப்புகளில் இருந்து முக்கியமானவற்றைத் தொகுக்க வேண்டுமென்றால் பெரும் பொருட்செலவும் உழைப்பும் தேவை. கோவிட் முதலாம் அலையிலேயே தக்ஷிணசித்ரா போன்ற இடங்களுக்குச் செல்ல முடியாமலும், பின்னர் பயந்தும் எனக் கூட்டம் குறைந்திருக்கும். அந்த அற்புதமான கைவினைச் சந்தை பெருமளவு மூடப்பட்டிருந்தது. இத்தகைய காலத்திலும் இந்தக் காட்சிக்காக தமது சொந்த collection-ல் வைத்திருந்த மூக்கையாவின் படைப்புகளைத் தந்துதவிய கலைஞர்கள் ராமா சுரேஷ் மற்றும் பெருமதிப்பிற்குரிய ஆர்.எம். பழனியப்பன் ஆகியோர் மற்றும் ஓவியர் மூக்கையாவின் குடும்பத்தார்கள்.

அவரது டெரகோட்டா சிற்பத் தொகுதிகளில் முக்கியமானவை, உலோகத்திலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் இந்தக் காட்சியில் என்னைப் பிரமிப்பூட்டியது சிற்பங்களைக் காட்டிலும் அவரது ஓவியங்கள் தான். அதுவும் எதார்த்தங்கள் குறித்த குழப்பங்கள் மிகுந்த இக்காலத்தில் இவரது ஓவியங்கள் ஏற்படுத்திய அலாதியான உணர்வை, சலனத்தை ஒரு அரூபத்தை அல்லது அக்ஷரத்தை எப்படி மொழியால் விவரிப்பது?

பார்க்கச் சாதாரணமான இயல்பு வாழ்க்கையில் மலைக்காட்டில் நடந்து செல்லும் மக்களை வரைந்திருக்கின்ற கித்தானை சற்று உற்றுநோக்கும் வரை அது சாதாரண ஒரு வாழ்வியல் சித்திரம் மட்டுமே. ஆனால் ஓவியனின் perspective-ஐ பார்வையாளனுக்கு கடத்தும் சித்திரத்தின் பிரம்மாண்டம் வேறு. பாமரர்கள் கொண்டாடிய சுதந்திர தினம், சிலுவையைச் சுமக்கும் விவசாயி, ஏறு தழுவும் விழா என அவரது ஓவியங்கள்.

குறிப்பாக அந்தச் சேவல்…

கலைக்காக பால்வெளி விட்டு பால்வெளி பாயும் மனதிற்கு எதிர்புறம் இருக்கின்ற கூரையற்ற உலகைக் காணும் தூரம் வரை மட்டுமே புழங்கும் கலை மனதும் நிகரானது அல்லது ஒப்பற்றது தான். அடுத்து வரவிருக்கும் ஊரடங்கைக் கண்டு அஞ்சியிருக்கும் புத்திக்கு என்னை, எங்கிருந்து எஞ்சியிருக்கிறாய் நீ என்று காலத்தைக் காட்டிய சிறப்பான அனுபவம் அது. கலைக்கு மட்டுமே அந்த tunnel கிடைத்திருக்கிறது, இடவலமாக, வலயிடமாக காலத்தில் அது எங்கிருந்தும் பயணிக்க முடிகிறது. கோவிட்-19 புலப்படாத ஒரு அரூப இருள் தானே, தொற்று முடிந்த காலத்தில் இருக்கும் நிம்மதியின் வெளிப்பாட்டை மூக்கையாவின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை ஏக்கமாக பார்க்கவே முடிகிறது.

படைப்பு என்னவாக இருந்தாலும் உள்வாங்கும் மனம் விவரணப்படுத்துவதை நிதர்சனமெனக் கொள்ளவேண்டும். ஓவியர் இளையராஜாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்துகிறோம்; நிழற்படத்தைப் போன்ற பிம்பங்களை உருவாக்கும் அச்சு இயந்திரமாக அரசியலற்றப் பார்வையாளன் ஒரு ஓவியனைக் கொண்டாடினாலும் அதில் ஒரு மாறா உண்மை இருக்கிறது. ஒரு பொதுச்சமூகத்தின் ஏக்கங்களை படைப்பவனுக்கும், உடைப்பவனுக்குமான வித்தியாசம் தெளிவாக இருக்கிறது.

மஹாத்மா காந்தியை என்.ஜீ.ஓக்கள் merchandise-க்கு முகவராக்கும் அதே நேரம், காந்தியைக் கொண்டாட வேண்டியவர்களும், தெரிந்து கொள்ள வேண்டியவர்களும் கூட, mock assassination செய்யும் கோட்ஷே வம்சத்திற்கு குருதிக்கொடை அளிப்பவர்களாய் இருக்கும்போது வித்தியாசங்களற்றே போய்விடுகிறது. நம்பமறுக்கும் யதார்த்தங்கள் இவை.

கண்காட்சிக்கு போவதற்கும் சில நாட்களுக்கு முன்னர், அலீயன்ஸ் ஃப்ரான்ஸிஸ் ஆஃப் மெட்ராஸ் கட்டிடத்தில் உள்ள அரங்கில் “Ithanente Peru” (This is my name) எனும் பால் சக்காரியாவின் குறுநாவலை அடிப்படையாகக் கொண்டு ப்ரஸன்னா ராமசாமி அவர்கள் இயக்கியிருந்த நாடகத்தைக் காணச் சென்றிருந்தேன். நாடக அரங்குகள் குறித்த அனுபவம் மிகக்குறைவு என்ற போதிலும் ரசனை என்கிற நம்பிக்கை மட்டுமே என்னை அனுமதித்தது. அரங்கு குறித்த இலக்கணங்கள் ஏதும் தெரியாத எனக்கு அது ஒரு காண்பியல் கலை வடிவமாகப் புரிந்து கொள்வதற்கான சாத்தியத்தைக் கொடுத்தது. நவீன எல்.ஈ.டி தொழில்நுட்பங்கள் அரங்கை ஒரு முப்பரிமாணக் கித்தானாகவும், நகர்கின்ற பாத்திரங்கள் (உயிரூட்டப்பட்ட கித்தானாகவும்). மொழி மட்டும் வேறு ஒன்றாக (தமிழ் (அ) ஆங்கிலம் தவிர்த்த வேற்று மொழி நாடகமாய்) இருந்திருந்தால் முழுமையான ஓவியக் கண்காட்சியைப் பார்த்த உணர்வோடு தான் வீட்டுக்குத் திரும்பியிருப்பேன்.

ஆனால் சீட் பெல்ட் போல் பின்னணி இசையின் ஊடுருவல் என்னைக் குறுக்காக கட்டிவைத்தது செல்லோ என்று தான் நினைவு. பார்வையாளனைக் கட்டிப்போடுவதற்கு, ஒரு தேர்ந்த கலைஞனின் செல்லோ தந்திகளை பலம் வாய்ந்த பிணைக்கும் சங்கிலிகள் இவ்வுலகில் உருவாக்கப்படவில்லை என்பதை பர்மாபஜார் ஹெட்போன்களில் சிம்பொனி ஆர்கஸ்ட்ரா கேட்கும் இந்த சிறுபிள்ளையின் தீர்க்கமான நம்பிக்கை. அரங்கு எத்தனை தூரம் Visually rich என்று ஒரு கண் நம்பியிருக்க, மற்றொரு கண் ஒரு ஆழமிக்க கதையை, இன்னும் விரித்துருவாக்கப்பட்ட திரைக்கதையை மினிமலிஸ்டிக்காக காட்சிப்படுத்தப்பட்ட அரங்கு என்று நம்பியது அந்தச் சிறைக்கம்பியின் நிழல். உள்வாங்கிய அறிவுக்கு இந்த பாகுபாடு இல்லை, காந்தியைக் கொன்றவனின் நியாயத்தை ஒரு தரப்பில் பேசுவதாகத் தொடங்கும் இந்த நாடகம் பல அடுக்குகளை வரலாற்றிலிருந்தும் தற்காலத்திலிருந்தும் ஊடுபாவாக இழைத்துப் பேசுகிறது.

தரப்பினைப் பேசுவது, அதாவது சத்தமாகப் பேசுவது உண்மையாகிவிடும் என்கிற உலகில் கலை வழியே அதன் மறுஎல்லையைத் தொட்டுவிடுகிறது, இங்கே தரப்பைப் பேசுவது அம்பலப்படுத்துவது ஆகிறது. பதறிப்போன உயர்தட்டு அரங்குப் பார்வையாளர்கள், கதை முன்வைக்கின்ற உண்மையின் உக்கிரத்தைப் பொறுக்க இயலாமல் அரங்கை விட்டு வெளியேறுவதையும் நாடகத்தின் அங்கமாக நான் உள்வாங்குகையில், கற்க வேண்டிய தொடுவானம் புலனாகும் ஒரு சிறு நிம்மதி.

இதில் என்ன ரிச் அல்லது மினிமல்? அரங்கின் இயல்பு என்பதே அப்படித்தானோ எல்லாவற்றையும் கையாள்வது எனப் புரிந்துகொள்ளும்போது கலையின் வெளிப்பாடு என்பது எது?

ஒரு படைப்பு சிந்தனையில் தோன்றும்போதே? அல்லது
அது வெளிப்பட்டுக் கொண்டிருக்கையில் ? (WIP) அல்லது
அது முழுமையாக வெளிப்படும்/அரங்கேறும் வேளையில்? அல்லது
அது நுகரப்படுகையில்? அல்லது அது வாசகனின் / பார்வையாளனின் / ரசிகனின் எண்ணத்தில் விழும் பிம்பமாக / திரையாக / ரசனையாக
இவை எல்லாமாகவும் இருக்க முடிகிறது என்று வைத்துக் கொள்ளலாமா?

ஆனால் மேற்சொன்ன எல்லாவற்றிலும் அலகாக (unit) இருப்பது காலம் தான் எனில், மூக்கையாவின் சிற்பத்தை அகழ்வில் எடுக்கப்பட்ட டெரகோட்டா என்று சொல்லொ, ஒரு போராட்டத்தில் பரப்புரைக்காக வைக்கப்பட்டிருந்த நிழற்படம் முற்றிலுமே பிழையானது அல்ல எனவும் தோன்றியது. மண் தந்த அப்பிணைப்பின் வழி மூக்கையாவின் milleu-ற்கு ஏறு தழுவுதல் எனும் தொடர்ச்சி, மெரினா புரட்சியில் ஜல்லிக்கட்டோடு எந்த சம்பந்தமுமில்லாத ஒருவன் ஏந்திக் கொண்டிருக்கும் பிழையான படத்திற்கும் அதே தொடர்ச்சி தான் இருக்கும் என நம்புவதற்கு, வெவ்வேறு காலத்திய கோட்சேக்களையும் அவர்களைப் போற்றும் தலைவர்களை நினைக்கையில் பொருந்துகிறது.

சிந்தனைத் தொடர்ச்சியில், காலங்காலமாக ஒரு கோட்சேவும் ஒரு கலைஞனும் வாழ்ந்துகொண்டே தான் இருக்கிறார்கள்.

***

ஜீவ கரிகாலன் யாவரும் பதிப்பாசிரியர், கண்ணம்மா, டிரங்கு பெட்டி கதைகள் ஆசிரியர்

ஜனனம்

8

சூ.ம. ஜெயசீலன்

வீட்டுக்குச் செல்ல விடுதி கண்காணிப்பாளர் அனுமதி கொடுத்ததன் ஆச்சர்யம் ஜெகனுக்கு விலகவே இல்லை. மாணவர்கள் குளிர் காய்ச்சலில் நடுங்கும்போதும், “தூங்கினாலும் பரவாயில்லை, படிப்பறையில் தூங்கு” என்பார். சத்தமாகப் பேசினால், “பனிரெண்டாம் வகுப்பு வந்துட்டா பெரிய ஆளுன்ற நெனப்பா? பிச்சுப்புடுவேன் பிச்சு” என்பார். இலை உதிர்ந்த இடங்கள் தளிர்ப்பதுபோல, இன்று அவருக்குள்ளும் நல்லெண்ணம் துளிர்த்திருக்கிறது.

அனுமதி கிடைத்த முப்பதாவது நிமிடத்தில் பேருந்தில் இருந்தான் ஜெகன். வழக்கமாக வாங்கும் ரிப்போர்ட்டர், ஜுனியர் விகடன் எதுவும் கையில் இல்லை. கூட்டம் கூடியது. மனதுக்குள் தனிமை அதிகரித்தது. பொம்மையோடு இடித்துக்கொண்டே சென்ற குழந்தை, ‘நீங்க அடுத்த இருக்கையில் ஆண்களோடு சேர்ந்து உட்காருங்களேன்’ மனு போட்ட இளம் பெண், வியர்க்க விறுவிறுக்க கொய்யாப் பழ கூடையுடன் அருகில் வந்தமர்ந்த வயதானவள், எதனாலும் ஜெகனின் தவம் கலையவில்லை.

கையில் ஸ்கேன் ரிப்போர்ட்டுடன் படியேறிய கர்ப்பிணியை உற்றுப் பார்த்தான். ‘ஏழெட்டு மாதம் இருக்கும்’ என நினைத்தவன், வயிற்றில் குழந்தை இறந்திருப்பது போலவும், சுருண்டிருப்பது போலவும் கற்பனை செய்தான். சில விநாடிகள்தான். தன் எண்ணக் கசப்பை விழுங்கி பார்வையை இடம் மாற்றினான். பிறகும் பேருந்து நிலையத்துக்குள் இரண்டு கர்ப்பிணிகளைப் பார்த்தான். வயிற்றில் குழந்தைகள் இறந்திருப்பது போலவே தோன்றியதால் கண்களை மூடி சாய்ந்தான்.

“ராசா! அக்கா வயித்துல உள்ள குழந்தை இறந்துருச்சுயா! வீட்டோட முதல் பேரக்குழந்தை வயித்தவிட்டு வெளியிலேயே வரலயேப்பா. எட்டு மாசத்துலேயே விட்டுட்டுப் போயிடுச்சே ராசா” காலையில் தொலைபேசியில் அம்மா சொல்லி அழுததை மனசு மீண்டும் மீண்டும் அழுதது.

அக்கா கருவுற்றதில் இருந்தே ஜெகன் பெரிய மனிதர் போலதான் நடந்துகொண்டான். அக்கா வீட்டில் ‘கலைஞர் தொலைக்காட்சிப் பெட்டி’ மட்டும் இருந்ததால், தன் வீட்டு விசிடி பிளேயரை அக்காவுக்குக் கொடுத்தான். தன் உண்டியலை உடைத்து தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், பஞ்சதந்திர கதைகள், நன்னெறி கதைகள் என குறுந்தகடுகள் வாங்கிக் கொடுத்தான். “வேலை செய்துகொண்டு இதை கேளுக்கா. புள்ளையும் சேர்ந்து கேட்கும்” என்றான். வீட்டில் எப்போதும் கதைகள் ஒளிபரப்பாவதைக் கண்ட மச்சான், “வீடே தமிழ் புலவரின் அரசவைபோல இருக்கிறது. அக்பரும் கிருஷ்ணதேவராயரும் திரும்ப வந்துடப் போறாங்க” என கேலி செய்தார்.

தன் மருமகப் பிள்ளைக்காக இவ்வளவும் செய்த ஜெகன், ‘வயிற்றில் குழந்தை இறந்துவிட்டது’ என கேட்ட நொடியில் தலைசுற்றி அமர்ந்துவிட்டான். அதனால்தான், “வீட்டுக்குப் போய் பார்த்துவிட்டு வா” என கண்காணிப்பாளர் அனுப்பிவிட்டார்.

இரண்டரை மணிநேரம் பயணித்து தேவகோட்டையில் இறங்கி ஆட்டோ தேடினான். மே முதல் தேதி என்பதால் ஆட்டோக்கள் பெரும்பாலும் ஸ்டாண்டுக்குப் போய்விட்டன. உழைப்பாளர் தின பாடல்கள் ஆங்காங்கே கேட்டன. ஆட்டோ வருகிறதா என இரண்டு பக்கமும் பார்த்து இல்லை என முடிவு செய்யும் முன்பாகவே கால்கள் நடக்கத் தொடங்கின.

மகன் மருத்துவமனை வாசலில் நுழையும்போதே பார்த்துவிட்ட அம்மா ஓடிவந்து கட்டிக்கொண்டு அழுதார். “முதல் பேரக்குழந்தையை கொஞ்ச முடியாமல் போச்சே… கேசட்டெல்லாம் வாங்கிக் கொடுத்து மருமகப் பிள்ளையை வளர்த்தியே ராசா… சொல்லாமக் கொள்ளாம அந்தக் கடவுள் எடுத்துக்குச்சே…” எதிர்பார்ப்பும் இழப்பும் வார்த்தைகளில் வடிவிழந்து விழ தோள் நனைந்தது.

அப்பா அழுது ஜெகன் பார்த்ததே இல்லை. இப்போது, அவர் கைகளைப் பிசைவதைக் கண்டு கண்கள் கசங்குவதை அறிந்தான். அறையின் வாசலில் நின்று அக்காவைப் பார்த்தான். இருவரும் நேருக்கு நேராகப் பார்த்தார்கள். வாய் வார்த்தை ஏதும் இல்லை. ஆனாலும் பேசினார்கள்.

பார்வையின் அர்த்தங்கள் பார்க்கப்படுகிறவர்களுக்கு மட்டுமே ஓரளவு புரியும்., அந்தப் பார்வை இயலாமையைச் சுட்டுகிறதா, பரிதாபம் காட்டுகிறதா, பாசம் கூட்டுகிறதா, நம்பிக்கை ஊட்டுகிறதா, அடுத்தவர் தோல்வியைக் கொண்டாடுகிறதா எனப் புரியும்.

“மாமியார் வீட்டுல தான் ஜெகன் அக்கா இருந்துச்சு. இராத்திரி சாப்பிட்டுட்டு, என்னிடம் போன்ல கொஞ்ச நேரம் பேசிட்டு நல்லாதான்யா தூங்கப் போச்சு. இராத்திரில எப்படியோ தண்ணிக் குடம் லேசா ஒடஞ்சி தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமா வெளியேறிருக்கு. காலையில எனக்குப் போன் பண்ணி அழுகுது. மாமனாரும் மாமியாரும் எங்கேன்னு கேட்டா, ‘அவங்க காலையில சீக்கிரமாவே வயலுக்குப் போய்ட்டாங்கன்னு சொல்லுது.’

“யாராவது வயலுக்குப் போய் சொல்லிருக்கலாமேம்மா”

“ஓப்படியா போய் சொல்லிருக்கு. ஆனாலும் வேலையெல்லாம் முடிச்சுட்டு மதியத்துக்கு மேலதான் வந்திருக்காங்க. காரு எடுக்காம, பஸ்லேயே கூட்டிடுட்டு வந்தாங்க. நான் காலையிலேருந்தே ஆஸ்பத்திரிலதான் இருந்தேன். டாக்டர் உடனே ஸ்கேன் எடுக்கச் சொன்னாரு. ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமா நீரு போய்க்கிட்டே இருந்தது. அடுத்த நாள் காலையில ஆறு மணி இருக்கும், ‘அம்மா, குழந்தை முண்டாம இருக்கும்மா’ன்னு அக்கா சொன்னுச்சு. டாக்டர் பார்த்துட்டு எந்த அசைவும் இல்லன்னு சொல்லிட்டாரு. எனக்கு உசிரே போச்சு.  அதுதான் உடனே உனக்கு போன் பண்ணினேன். குழந்தைய தொலச்சிட்டோமேடா…”

சொல்லி அழுத அம்மா, மருத்துவரைப் பார்த்ததும் விரைந்து போனார். “சார்… மதியம் தாண்டிடுச்சு… ரொம்ப நேரமாகிடுச்சு சார்… ஆப்பரேசனாவது பண்ணுங்களேன் சார்… பயமா இருக்கு… ஆப்பரேசனாச்சும் பண்ணுங்களேன்… தாயை மட்டுமாவது காப்பாத்திடுங்களேன்..” கெஞ்சினார்.

“அம்மா, சுகப்பிரசவமாவே குழந்தைய எடுத்துடுவோம். தாய்க்கு ஒன்னும் ஆகாம குழந்தைய பிறக்க வச்சிடுவோம். நீங்க கவலைப்படாதீங்கமா. தம்பி, அம்மாவ அந்தப்பக்கமா கூட்டிட்டு போங்க” சொல்லிச் சென்றார். பின்னாலேயே போனார் அம்மா.

வரவேற்பு பகுதியில் ஜெகன் அமர்ந்தான். கவலை, பயம், மகிழ்ச்சி, பதட்டம் எல்லாவற்றையும் சுமந்த பல கர்ப்பிணி பெண்கள் அமர்ந்திருந்தார்கள். அம்மா, மாமியார், மதினி, மற்றும் கணவர்களால் அழைத்துவரப்பட்டவர்களும், யாருடைய துணையுமின்றி தனியாக வந்தவர்களும் அங்கே இருந்தார்கள்.

“கவலப்படாதப்பா. எப்படியாவது குழந்தைய கத்திப்படாம எடுத்திடணும்னு தெய்வத்துக்கிட்ட வேண்டிக்க”

ஆறுதல் தந்த திசையைப் பார்த்தான் ஜெகன். பதில் ஏதும் எதிர்பார்க்காத அந்தப் பெரிய மனுசி, “என் மகளுக்கும் இப்படித்தான்யா நடந்தது.” சொல்லி நிறுத்தினார்.  “அந்தக் கொடுமை யாருக்கும் வரக்கூடாது. வயித்துல அஞ்சு மாச கரு. முந்துன மாசம் பரிசோனைக்குப் போகும்போதுகூட ‘குழந்தை ஆரோக்கியமா இருக்கு’ன்னு டாக்டர் சொல்லிருக்காரு. திடீர்னு ஒருநாள் குழந்தையோட அசைவே இல்லை. மகளுக்குத் தெரிஞ்சுடுச்சு ஏதோ ஆச்சுன்னு. மருமகன்ட சொல்லிருக்கா. அந்த மனுசன் காதுலயே வாங்கிக்கல. மறுநாளும் சொல்லியிருக்கா. அப்பவும் அவரு கண்டுக்கல. கடைசியா மகளே தனியா மருத்துவமனைக்குப் போயிட்டா. ‘குழந்தை இறந்து ரெண்டு நாளாச்சு. ஏற்கெனவே புள்ள பெத்தவதானம்மா நீ. இதுகூட தெரியலையா. ஒடனே அட்மிட் ஆகு’ ன்னு சொல்லிருக்காங்க.

‘வீட்டில மூத்த மகன் இருக்கான். ஒன்னரை வயசுதான் ஆகுது. ராத்திரி தேடுவான். நாளைக்குக் காலையில் வந்து அட்மிட் ஆகிக்கிறேன்’ன்னு சொல்லிருக்கா புத்திகெட்டவ. மருத்துவர்கள் என்ன சொல்லியும் கேட்கல. சாயங்காலம் மருமகனும் ஒன்னும் கேட்டுக்கல.

மறுநாள் மருத்துவமனையில் வயித்த சுத்தப்படுத்த அவளுக்கு இனிமா கொடுத்திருக்காங்க. ரூமுக்கும் டாய்லெட்டுக்குமா நடந்து நடந்து பெலமிழந்து, ஒரு கட்டத்துல செவுத்த புடிச்சுக்கிட்டே வந்து மயங்கி விழுந்துருக்கா. மும்பையில தனியா இருந்ததால யாருமே துணைக்கு இல்லை. மக தனியா தவிச்சிருக்கா” மூக்கை உறிஞ்சிக்கொண்டு தொடர்ந்து பேசினார்.

“பிறகுதான் எனக்கு தெரியவந்தது. மகளுக்கு ரெண்டாவதா கரு தங்கியதிலிருந்தே, ‘கருவக் கலைச்சிடு… கலைச்சிடு’னு அன்றாடம் மருமகன் தொல்ல பண்ணிருக்காருன்னு. வார்த்தை முழுசும் நஞ்சு. தினந்தோறும் தகப்பனே தன்னைக் கொல்லச் சொல்லறானேன்னு அந்தப் பிஞ்சு கவலப்பட்டுச்சோ, இல்லை… தகப்பனாச்சும் சந்தோசமா இருக்கட்டுமேன்னு நெனச்சுச்சோ… அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும், தானாகவே மடிஞ்சிருச்சு. புள்ளைய கண்டம் துண்டமா வெட்டி எடுத்துப் போட்ட பிறகுகூட, பொண்டாட்டிய கூட்டிட்டுப் போக மருமகன் வரலயாம்.”  கண்ணீரு வறண்டு முகத்தில் வெறுமை படர்ந்தது.

“சீக்கிரம், யாராவது மெடிக்கலுக்குப் போய் ‘சுகபிரசவ கிட்’ வாங்கிட்டு வாங்க” அக்காவின் அறையிலிருந்து வெளிவந்த செவிலியர் படபடவென்று ஒரே மூச்சில் சொன்னதும் ஜெகன்தான் முதலில் ஓடினான்.

மருத்துவமனை முகப்பில் இருந்த கடையில், குழந்தைப் படுக்கை, பராமரிப்புத் துண்டு, குழந்தை நாப்கின், குழந்தையைத் துடைக்கும் துணி, குழந்தை உடை உள்ளிட்ட சுகபிரசவ கிட்டை வாங்கிக்கொண்டு விரைந்தான்.

அரைமணி நேரம் கடந்திருக்கும். அறையிலிருந்து வெளியே வந்த மருத்துவர், “அறுவை சிகிச்சை இல்லாமலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு உயிர் இருக்கிறது” என்றார். அழுத விழிகள் கையெடுத்துக் கும்பிட்டன. தாயின் வயிற்றைக் கிழிக்காமல் குழந்தையை எடுத்த மருத்துவருக்கு நன்றியுரைத்தன. மருத்துவர் சொன்னார், “ஆனால், குழந்தைக்கு 10 விழுக்காடு மட்டுமே உயிர் இருக்கிறது. நான்கைந்து நாட்கள் மட்டுமே குழந்தை உயிருடன் இருக்கும்.”

குழந்தை இறந்துவிட்டதோ என அழுதவர்கள், வயிற்றைக் கிழிக்காமல் எடுத்துவிடுங்கள் என கெஞ்சியவர்கள், தாயை மட்டுமாவது காப்பாற்றுங்கள் என கதறியவர்களிடம் உயிரோடு ஐந்து நாட்கள் வாழ்ந்தான் அம்மழலை.

***

சூ.ம. ஜெயசீலன் பிலிப்பைன்ஸில் வசிக்கிறார். ‘உஷ்… குழந்தைங்க பேசுறாங்க’, ‘திருநங்கைகள் வாழ்வியல் – இறையியல்’, ‘ஈழ யுத்தத்தின் சாட்சிகள்’ உள்ளிட்ட 18 நூல்களின் ஆசிரியர். இவரின் மொழிபெயர்ப்பில் அண்மையில், ‘என் பெயர் நுஜுத், வயது 10, விவாகரத்து ஆகிவிட்டது’ நூல் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்ட் வெர்ஷன்

5

லட்சுமிஹர்

முதல் கதை

டிக்கடி அடிக்கும் டெலிபோன் ரிங்கை இந்தமுறை கண்டுபிடிக்க வேண்டுமென ஆவேசமாக ஓடத் தொடங்கினேன்…

இருள் சிதறிக் கிடக்கும் அறைகளில் இருந்து வரும் சத்தத்தை மட்டும் வைத்துத் தேடுவது அவ்வளவு எளிதில் அமையுமா என்ன?

இது பல முயற்சிகளில் ஒன்று என்ற கணக்கில் மட்டுமே சேர்ந்துவிடும்.

அடிக்கும் ரிங்டோனின் ஓசை கேட்டு ஓடும் நான், மோதிக் கீழே விழுவதும் இயல்பே. ஆனால் என் வேகம் மட்டும் ஒவ்வொரு முறையும் குறைந்ததாகத் தெரியவில்லை. இந்தமுறை எங்கும் விழாமல் முன்பு சென்றதை விடவும் முன்னேறிவிட்டேன். மேலும் சத்தமாகக் கத்திக்கொண்டு ஓடிய எனக்கு இருள் ஒரு பொருட்டாகத் தெரிய ஆரம்பித்ததே அந்த ரிங்டோன் சத்தம் அமைதியான பின்புதான்.

என் பார்வை வெளியில் தெரியும் இருளை எனதாக்கிக் கொண்டுள்ளேன். பார்வையற்ற என்னை நித்தம் சுமந்தலைகிறது இந்த இருள்…

சப்தம் தன் பரப்பளவை குறைக்கக் குறைக்க அதை நெருங்கும் முனைப்பில் இருந்த எனக்கு ஒரு கட்டத்தில் கத்தியும் சப்தம் வெளியே கேட்கவில்லை என்பதைப் புரியத் தொடங்கினேன். இருளை அணைத்துக் கொள்ளப் பழகியிருந்தவனாகிய நான் இன்று குரல் எழுப்ப நாலைந்துமுறை முயற்சி செய்து தோற்றுவிட்டேன்.

கைகளால் குரல்வளையை நெரிக்கத் தொடங்கினேன் கையில் புழுக்கள் தென்பட்டன. அதை எடுக்க முற்பட்டபோது, அது எங்கு செல்கின்றன என்பதை உணர முடியவில்லை. அவை எங்கு சென்றிருக்கும் என்பது பற்றியதான ஆராய்ச்சிகளை விடுத்து கையைத் தரையில் ஊன்றி இளமைப்பருவ நினைப்பில் தவழத் தொடங்கினேன். ஒரே நிழல்!

மனதில், இனி அந்த ரிங்டோன் வந்தால் அதைத் தேடக்கூடாது என நினைத்துக் கொள்ளும் முன், கீழே வந்து விழுந்தேன்.

அது சாத்தியப்படாது என்பதால்கூட இருக்கலாம். இனி பூனையின் வாசம் பிடித்தே, வந்த இடத்திற்குச் செல்ல வேண்டும். அப்பூனை பலநாள் எங்களைச் சுற்றி வந்துகொண்டிருந்தது. அது தூங்கும் இடம் போல. தூங்கிக்கொண்டும் சுற்றிக்கொண்டும் மட்டுமே இருந்த பூனை, அதன் மேனியின் வாசம் இத்தனை அறைகளிலும் நிரம்பி அடிக்க இதில் வந்து தூங்கியது என்பதை எப்படி உணர முடியும்…

இப்போது பேச முயன்று தோற்றுப் போனேன்… பூனையின் வாசம் சுத்தமாகத் தெரியவில்லை… இத்தனை அறைகளைக் கட்டிவிட்டு இருள்தான் குடிகொண்டுள்ளது.

“இவ்வளவு வேகமாக ஃபோனை எடுத்துவிட்டாயா?” என்றது இருள்.

“போகும் முன் நின்றுவிட்டது”

எதில் இருக்கிறது என்று இன்னும் தெரிந்துகொள்ள முடியவில்லை எனப் பதில் அளித்தபோதுதான் தோன்றியது:

“நீயும் என்னுடன்தான் ஓடி வந்தாய். என்னுடன்தான் தேடினாய்; கண்டிப்பாக ரிங் சத்தம் வரும் இடத்திலும் நீதான் இருக்கக்கூடும்.”  

என்னோடு பேசிக்கொண்டிருந்த இருளைக் கேட்க முற்பட்டபோது பூனையின் வாசம் திடீரென அதிகமாக அடிக்க ஆரம்பித்தது. அது என்னை அதனுள் இழுத்து அதிலிருந்து விடுவித்துக்கொள்ள என்னை மன்றாடச் செய்திட வேண்டும் என்ற திட்டமிடலில் ஒரே நெடி.!

“உன்னால அந்த வாசத்தை நுகர முடியவில்லையா?” என இருளிடம் கேட்க…

“இல்லை என்னால் பேச மட்டுமே முடியும்” என சலித்துக் கொண்டது.

“ஏன் பேச மட்டும்?” என்ற கேள்விக்கு இருள் தனது நாக்கை பத்திரப்படுத்திக் கொண்டது.

வாசனை வந்த திசையை நோக்கிச் செல்ல முயன்றால் அது ஒரு திசையில் இல்லாமல் இருள் எங்கும் பரவி இருப்பது போல்தான் வீசுகிறது.

உன்னால் என்னைப் பார்க்க முடிகிறதா என்று கேட்கையில், இருளுக்கான வடிவத்தை எங்ஙனம் கண்டுபிடிப்பது என பதிலுக்கு சலித்துக்கொண்டேன் இருளை.

ஆமாம் இருளை, புழு என்றாக்கிய எனக்கு எல்லாம் கேலிதான். நெளிவதால் அப்படிச் சொல்லிவிட்டேன், இது ஊர்கின்ற மற்றவையாகக்கூட இருக்கலாம் இருளைப் போல…

பூனையின் துர்நாற்றம் மூக்கில் ஏற, மூக்கை மூடினேன். மீண்டும் திடீரென ஒலி கேட்கத் தொடங்கியது. அது அந்தப் பூனை செத்துக்கிடந்த அலுமினிய மேடையின் பட்டைய ஒலி. அதை யாரோ ஓங்கி அடிப்பது போல் அதன் திசை நோக்கி ஓடத் தொடங்கினேன். வேகம் அதிகமாக, சத்தமாகக் கத்திக்கொண்டே ஓடினேன்…

இருள் எதுவும் பேசாமல் என்னுடைய வேகத்துக்கு இணையாக ஓடி வந்து கொண்டிருந்தது. அதை நெருங்க நெருங்க எப்போதும் போல அமைதியாகிக்கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் நின்றுவிட்டது. ஏமாந்துவிட்டதாகப் புலம்பிக் கொண்டேன். தானும் ஏமாந்து விட்டதாகப் புலம்பியது இருள்.

“நடிக்காதே”

“உண்மையைத்தான் சொல்கிறேன்.”

அதை ஏற்காத நான் எதிர்த்து வாதம் செய்யத் தயாரானேன். என்ன சொன்னாலும், தான் அப்படி இல்லை என்பதிலேயே குறியாக இருந்தது இருள். ஒரு கட்டத்தில் நானாகவே நிறுத்திக் கொண்டேன்.

கொஞ்சநேர அமைதிக்குப் பிறகு:

ஏன் அந்தப் பூனை சுற்றி வந்தது? என்று யோசித்துக் கொண்டிருக்கையில்தான், ஒருநாள் எப்போதும் இல்லாமல் தூங்கும் இடத்தில் குதித்தது ஞாபகம் வர, அப்போது கேட்டதுதான் இந்த அலுமினிய தகடு சத்தம். அது ஏதோ ஒன்றை அதன் வாயில் போட்டு பிய்த்துக் கொண்டிருக்கலாம் என யூகிக்கப்பட்டிருந்தது.

ஏனென்றால் அதன் கண்கள் இருளில் அப்படியே மேலும் கீழுமாய் அசைவின்மையை வெறுத்தன. அது எப்போதும் நாங்கள் இருக்கும் திசையை நோக்கித்தான் படுத்திருப்பதாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். இறப்பதற்கு முன்புதான் எதிர்திசையைப் பார்த்து திரும்பிக்கொண்டது. துர்நாற்றத்தில்தான் அது செத்துவிட்டது என யோசித்த நாங்கள், அருகில் செல்லவில்லை. வாசனையைக் கொண்டு தரம் பிரிக்கும் எண்ணம் போய் மனிதப் பிணத்தின் செயல் அறிந்து வாசனையைப் பிரித்தறிந்து வகைமைக்குள் கொண்டு பூட்டிவிடுவதாக, ஒருநாள் நானும் பூனையும் பேசிக்கொண்டிருந்தோம்.

பாவம்! இனிமையான மரணம்!

“இன்னும் கோவமாத்தான் இருக்கிறாயா?” இருள்.

அமைதியாக இருந்த என்னிடம் ஒரே மாதிரியான கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருந்தது. கோபப்படாமல் சமாளித்து பலமுறை ஜெயித்தும்விட்டேன்.

கடைசியாகத் தன்னுடைய உருவத்தைப் பற்றிக் கூறுவதாகச் சொன்னதும்…

பீதியுற்றேன்! 

ஒருவித நுகரும் தன்மையும் கேட்கும் திராணியும் சற்று விலகி நின்று கேலி செய்வதாக உணர்ந்தேன்! அத்தனையும் பிழை என்ற எண்ணமும்!

“உனக்கு மட்டும் காட்டுகிறேன்.”

“கோபம் மாறிப் போனதை என்னுடைய முகத்தில் இருந்து பார்த்தாயா?” என்றேன்.

எனக்கு அதைவிட அதனுடைய உருவத்தைத் தெரிந்து கொள்வதிலேயே ஆர்வமாக இருந்தது. (அதன் உருவம் என்னை எப்படி எடுத்துக்கொண்டது! எதை என்னுள் இருந்து பிரித்தது! மனிதன்தானா நான் இப்போது! வாசனை, துர்நாற்றம் வகை மாறிப்போகுமோ! எப்படி!)

“ஆனால் ஒரு கண்டிஷன்.”

என்னவென்று கேட்ட என்னிடம்:

“இப்போது நான் என் நிறத்தை மட்டும்தான் கூறுவேன்.”

சரியெனத் தலையாட்டிய என்னிடம், அது என் அருகில் ஒரு டப்பா இருப்பதாகவும் அதனுள் இருப்பதே என்னுடைய நிறம், என்றது. அதை, நான் தேட முற்பட்டபோது டப்பாவில் பட்டு அது சிதறிப் போய்விட்டது.

நகர்ந்து அதன் அருகில் சென்ற நான் அது கருப்பு நிறம் என்று உணர்ந்தேன். சிதறிக்கிடந்த அந்தப் பிசுபிசுப்பான பெய்ண்டில் மேலும் கீழுமாகப் புரளத் தொடங்கினேன்…

என்னைப் பார்த்துச் சிரித்தது.

“உன்னுடைய வாசம் எனக்குப் பிடித்திருக்கிறது”

“என்னுடைய நிறம் மட்டுமே அது. வாசம் இல்லை.”

இன்னொரு பக்கமாக உடம்பைத் திருப்பி அருகில் இன்னும் சில டப்பாக்கள் இருப்பதைத் தொட்டுத் தெரிந்துகொண்டு அதையும் தட்டிவிட்டேன். ஆனால் டப்பா விழுந்ததாகத் தெரியவில்லை.

“வாசம் இல்லாமல் எப்படி இருக்க முடியும்?”

பதிலேதும் இல்லை.

“அந்தப் பூனையின் வாசமும், ஃபோன் ரிங்டோனும் உன்னுடையது இல்லையா?”

“இல்லை” என்ற பதில் அதனிடமிருந்து கோபமாக வந்ததை உணர்ந்து கொண்டேன்.

அதன் பிறகு அது என்னுடன் பேசியதாக ஞாபகம் இல்லை. நான் மெதுவாக நடந்துகொண்டு இருக்கிறேன். எல்லாம் ஒன்றாக அறியும் வளைவுகளும், படிக்கட்டுகளும் எங்ஙனம் உள்ளது என்பதை எப்படிக் கூற முடியும், வாசத்தின் நீட்சி தொடுதலில் முடிகிறது. நடுவே பாதையாகிப் போகிறது அந்த ஒலி. ஒவ்வொருமுறை முயன்றபோதும் தோற்றுப் போயிருக்கிறேன்.

பதிலேதும் இல்லை. 

நான் இருளிடம் கடிந்து பேசியது நினைவில் இல்லை. இருந்தால்கூட மன்னிப்புக் கேட்கலாம். இல்லை, எங்கும் பேரமைதியின் பாசாங்கு. நான் மட்டும் கத்துவதும் நடப்பதுவுமாக பிதற்றிக்கொண்டு அலைகிறேன். இருந்தும் ஒரு கேள்வி என்னுடன் ஒட்டிக்கொள்ள புது வெளிப்பாடு.! என்னவென்றால், என்னுடைய வாசத்தைப் பலமுறை நுகர நினைத்துத் தோற்றுப் போனதுதான் உண்மை. இறுதிவரை அது பிடிபடவே இல்லை.

அமைதியின் ஊடாக உள் புகுந்து அறிய எண்ணினேன். இறுதியில் கேட்கவும் இல்லையோ? என்ற அச்சம் தொற்றிக்கொண்டது. அதனால் அடிக்கடிச் சத்தம் போட்டுக்கொள்கிறேன். சிலநேரம் கம்மியாக, சிலநேரம் அதைவிடக் கம்மியாக. ஆனால் கத்துவது என்பது நான் எடுத்த முடிவுதான். என்னுடன் இருந்த சிலரையும் தொலைத்துவிட்டேன். அதற்கு என்ன? அடுத்தமுறை அவர்களை சந்தித்தால் உருவமாக உள்ளீர்களா? இல்லை, நிறமாக உள்ளீர்களா? என்று கேட்க வேண்டும் போல் உள்ளது.

பிரித்தறியும் பித்தின் இறுதியும் நானே!

இதுவரை அவர்கள் பேசியதாகத் தெரியவில்லை. மறுபடி அடிக்கும் அந்த ரிங்டோனுக்காகக் காத்திருப்பது என முடிவுசெய்து நடப்பதை நிறுத்திக்கொண்டு உட்கார்ந்தேன். கொட்டிவிட்ட பெயிண்ட்டில் அமர்ந்துவிட்டேன். இவ்வளவு தூரம் வரும் அளவுக்கு டப்பாவில் நிறைய இருந்திருக்கிறது, யூகம்!

கொட்டிய வாசனையில் மேலும் உருண்டு புரள்கிறேன். சரி, இருள் சொன்னது சரிதான், உண்மைதான் எனத் தெரிந்துகொண்ட பின்…

“இருக்கிறாயா?” என்றேன்.

இருக்கிறேன் என்ற இருளின் பதில் அதன் அகண்ட வாயின் உதறல்!

புணர்ந்த நாக்கின் எச்சில் என் முகத்தில் பத்திரப்படுத்தியதை அடிக்கடி மீட்டுக்கொள்கிறது. அதன் குரலின் சத்தம் என்னுள் நெருங்கி ஊடுருவப் பூனையின் துர்நாற்றம் அடிப்பதை உணர்ந்தேன். அது, பூனைக்கும் எனக்கும் நடந்த மனிதப் பிணத்தின் வகைப்பாட்டின் பேச்சை மறுபடி மூளைக்குள் தட்டிவிட்டது…

சட்டென, “உனக்கு அந்த அலுமினியத் தகடு இருக்கும் இடம் தெரியுமா?” என்றேன். 

“இல்லை”

“பொய் சொல்லாதே. உனக்குத் தெரியும்.”

“இல்லை” என அது சத்தமாகக் கத்திச் சொல்ல, நான் மேலும் காதை அதன் அருகில் கொண்டுபோனேன்.

அதைத்தான் கேட்கிறேன். மேலும் சொல். மீண்டும் இல்லை என்கிறாய் எனக் கேட்ட எனக்குப் பூனையின் துர்நாற்றம் மேலும் அடித்தது. அதற்குள் நான் வந்ததை மறந்துவிட்டேன். அந்தப் பூனை ஒருநாள் என் மூக்கைச் சாப்பிட்டுவிட்டது. அதிலிருந்து என் மூக்கு எதற்கும் பயன்படாமல் போய்விட்டது. இப்போதுகூட பூனையின் துர்நாற்றம் என்பது என்னுடைய யூகம்தான். ஆனால் பூனை இருப்பது நிஜம்.

இருள் எனக்கு உருவம் இருக்கிறது என்று கூறியதால், நான் வாசமென துர்நாற்றமெனக் கூறி உளறிக்கொண்டிருந்தேன். கடைசியில், என்னைப் போல, என் நண்பனைப் போல, அதற்கும் பார்வை கிடையாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவே இவ்வளவு பெரிய வார்த்தை யுத்தம். இருந்தும் என் நண்பனின் ஓவியம் ஆகச் சிறந்தது…

எல்லாக் கதவுகளும் பூட்டப்பட்டுள்ளன…  

போனமுறை ரிங்டோன் கேட்டு ஓடும்பொழுது தலையில் முட்டி கீழே விழுந்துவிட்டேன்… வலி தெரியவில்லை.

எப்போதும் இல்லாமல் புது மாதிரியான ஒலி வடிவம் அது.

ஆனால் கதவைத் திறந்து இழுக்க முயன்றபோதுதான் என்னுடைய கை அதில் மாட்டிக்கொண்டது. ரத்தம் வழிந்ததா எனத் தெரியவில்லை. மறுபடியும் ஒடத் தொடங்கியிருந்தேன்…

வடிவ ஒலியாகிய அதை, ஏன் பின்தொடர வேண்டும்? என்ற கேள்வி.

என் பாதை அதுவாக இருக்கையில், எப்படி அதில் கேள்வி எழுப்புவது?

அதே ரிங்டோன் கண்டிப்பாக மறுபடியும் அடிக்கும். அடுத்தமுறை அதை விடக்கூடாது என்று தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தேன்.

பலமுறை அந்தக் கதவைக் கண்டுபிடிக்க நடந்துசென்று கால் வலித்ததுதான் மிச்சம்.

மேலும் நாங்கள் இருந்த இடத்தின் அடையாளமாய் அந்தப் பூனையுடன், பல்லியின் ஒலியும் சேர்ந்து கொண்டது. இரண்டும் மாற்றி மாற்றி விவாதம் பண்ணிக்கொண்டிருக்கும். அதை வேடிக்கையாகக் கேட்க ஆரம்பித்து பலமுறை சுற்றி வந்துள்ளேன். ஒருகையில் தடவிப் பார்த்தேன். இது, அந்தச் சுவர் மாதிரி இல்லை. ஆனால் இரண்டும் தன் விவாதத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஒருவேளை இப்போது அந்த பல்லியின் ஒலி கேட்டால் அந்த இடத்தைக் கன்டுபிடிக்கலாம்… ஏனென்றால், பூனை இல்லாத சமயங்களிலும் அது சத்தமிடுவது அதனுடைய இயல்பு போலும். இதைப் பூனை தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். இல்லை எனக்கு அப்படித் தோன்றியிருக்கலாம்.

ஏன் பழைய இடத்திற்குச் செல்ல விரும்புகிறேன்… அதில் குஷனோடு ஒரு பழைய சேர் இருக்கிறது. ஏனோ இப்போது அது இல்லாமல் வேறெங்கோ உட்கார்ந்திருக்கிறேன். ஏதோ குத்துவது போல் இருக்கிறது. ஏன் என்று தெரியவில்லை.. அதனாலேயே அந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் எனப் பலமுறை யோசித்துக்கொண்டே இருக்கிறேன்…

அருகில் வாசனையால் சிதறிக்கிடந்த பெயிண்டில் இரண்டு, மூன்றுமுறை மறுபடியும் உருண்டு புரண்டால் நன்றாக இருக்கும்.

அதற்குள் மறுபடியும் ரிங்டோன் தன்னை வெளிப்படுத்த, ஓடத் தொடங்கினேன். இந்தமுறை அதன் அருகில் வந்துவிட்டதாகக் கேட்டது. ஏனோ எப்போதும் நெருங்க நெருங்க, அமைதியாக மாறுவது இப்போது இல்லை. பலமுறை முயன்று தோற்றது இந்தமுறை வேகத்தைப் பலமடங்கு கூட்டியிருந்தது. திடீரென சுவரில் மோதிக் கீழே விழுந்தேன்.

அது என்னுடைய கை மாட்டிய கதவுள்ள சுவரா எனத் தேடினேன். அப்படி எதையும் உணரவில்லை. மறுபடியும் ஏமாந்துவிட்ட சோகம். பல்லியின் விவாதம் சத்தமாக மாறியிருந்ததை அறிந்த நான் அதுமட்டுமே ஒரேவழி எனப் புரிந்துகொண்டேன். ஒருவேளை, அது வண்ணங்களாகக்கூட இருக்கலாம். இதற்கும் முன்பே, பேசும் வண்ணங்களை  என்  நண்பன் வரைந்திருந்தான்.

உட்கார்ந்திருந்த எனக்கு அதற்கு மேல் ஓடமுடியாது என்ற முடிவில்தான் இங்கு வந்தேன். திடீரென பல்லியின் சத்தம் கேட்டு எழுந்திருக்க முயன்ற என்னால் ஓட முடியவில்லை, என்னுடைய இடுப்புப் பகுதிக்கு மேல் தனியாக வந்துவிட்டதாகப் பலதடவை உறுதிப்படுத்திவிட்டுதான் சொல்கிறேன்.

விழுந்த இடத்தில் வாயை வைத்துப் பார்த்தேன். அது என்னுடைய கால் மூட்டு. நான் இப்போது வெறும் எலும்பாக மட்டும்தான் இருக்கிறேன் என்று தெரிந்தது. அதனால்தான், அந்தக் குஷனை விரும்பி உள்ளேன்.

அழுகையில் சத்தம் அதிகமாகக் கேட்கும்படி கத்தினேன். என்னால் இப்போது ஓட முடியவில்லை.

என்ன செய்ய, இப்போதுதான் ரிங்டோன் சத்தமாக அடிக்கத் தொடங்கியது, அது குறைவதாகத் தெரியவில்லை. விளைவாக, மூட்டில் பலமுறை மோதிவிட்டு அமைதியானேன்.

இப்போதுதான் புரிய வருகிறது.! அந்தப் பூனை எப்படிச் செத்திருக்கும் என்று.

எப்போதும் அது வெளியே போய்வருகிற கதவில் என்னுடைய கை மாட்டிக்கொண்டதால், கதவைத் திறக்க அதனால் முடியவில்லை. என்னவென்று புரியாத பூனை அதனை எடுக்க முயன்று அதைக் கடிக்க முற்பட்டபோது, அதிலிருந்த எலும்பு தொண்டையில் சிக்கிச் செத்துப்போய் இருக்கிறது.

எப்போதும் என் கையில் வைத்திருக்கும் தடியின் ஞாபகம் வந்தது. கையில் வைத்திருக்கும் தடியைத் தேட எண்ணினேன், அது கதவோடு மாட்டியிருந்த கையுடன்தான் இருக்க வேண்டும்.

அதன் ஓசையே ரிங்டோனாகக் கேட்டதோ என்ற கேள்வி எழுந்தது. வழியறிய பயன்படுத்தும் தடியின் ஓசை இப்போது கேட்டது:

டக், டக், ரிங்டோனாக. 

இறுதியில் இருளுடன் பேசும் முடிவுக்கு வந்தேன்.

“என்னுடனே இருந்துகொண்டு என்னையே நீ இப்படி அலையவிட்டதுல உனக்கு என்ன சந்தோஷம் (ரிங்டோன் ஓசையை போன்றே இருந்த இருளின் சிரிப்பு எதிர்வினையாக) உன்னோட சிரிப்ப என்னால கேட்க முடியாது (மீண்டும் நிசப்தம்) டக்குனு சிரிப்ப நிப்பாட்டி மாட்டிக்காத அசிங்கமா இருக்கு. இப்பயும், நீ என்கூடதான் எப்பயும் இருப்பேனு தெரியும்”

“கண்டுபுடிச்சிட்டியே, நான் நீ வெவ்வேறாக இல்ல, அது தெரியுமா?” என டக்கென பதில் வந்தது இருளிடமிருந்து.

“தெரியும் ஆனா உனக்கும் எனக்கும் உண்டான உடல் ஒன்னு இல்ல. நான் கையில எப்பயும் வச்சிருக்கும் ஸ்டிக் கதவுல மாட்டிகிட்டப்பயும் நீ என்னோடதான் இருந்த, அப்போ அது புரியல. அது புரிஞ்சதுக்குப் அப்பறம் தான் பேசலாம்னு கூப்பிட்டேன். நீ என்னுடைய வெளியாத்தான் இருக்க, அதுதான் இன்னும் எனக்கு புரியல”

“நீ மறுபடியும் உளறத் தொடங்கிட்ட”

“இல்ல… சரி விடு.. முன்னாடி நான் உன்கிட்ட நடந்ததுக்கு சாரி கேட்கலாம்னு நெனைக்கறேன். உன்ன கோவப்படுத்திட்டேனோன்னு தோனுது. அத மறந்துட்டியா? சாரி, நான் அதை பண்ணிருக்கக்கூடாது” 

 என்ன பண்ணேன்?! இருக்கட்டும்: மறந்துட்டேன்.

“நீ பேசமாட்டேன்னுதான் நெனச்சேன்” என்றது இருள்.

“அப்படி இருக்க முடியாது. என்னோட கூடவே இருக்குற, உன்கிட்ட எப்படி பேசாம இருக்க முடியும்?  உன்கிட்ட ஒன்னு சொல்லணும், என்னால ஓட முடியல.”

“அதனால் தான் ஒரே இடத்துல இருந்து ஒரே நெடி வருதா…”

“நான் எப்படி இருக்கேனு தெரிஞ்சுகிட்டேன், அதுதான் இப்படி என்னப் பேச வைக்குதோ! அந்த சத்தத்தை மறுபடி முழுங்கிட்டேன்”

“மறுபடி ஆரம்பிக்காத.”

“உண்மையாவே அத நான் கண்டுபுடிக்கல.”

“அப்பறம் எப்படி.”

“எலும்பா இருக்கேன். என்னால அத உணர முடுஞ்சது… அது எனக்கு ஒரு புரிதல கொடுத்தது எப்பயும் போல”

“எனக்கு தெரியாதே. அப்படினா… நீ மனுஷன் இல்லையா?”

“இத சொன்னா எப்படி நீ ஏத்துப்பேனு தெரில. ஆனா இதுதான் உண்ம… இப்பயும் மனுஷன்தான்… ஆனா எலும்பா…”

“எலும்புல மூளை இருக்குமா.?”

“இருக்காது, ஆனா இருந்துச்சி”

“சரி. இருந்தப்போ உனக்கு என்ன ஞாபகம் இருக்கு…”

“எனக்கு வரிசையா சொல்ல முடியுமான்னு தெரியல, மூக்க வச்சு நல்லா உறிஞ்சேன். கொஞ்சம் நிறையத்தான் இருந்துச்சு, அப்போ ஒரு சத்தம். கதவுல மாட்டியிருந்த என்னோட White cane கீழ விழுந்துருச்சின்னு நெனைக்கிறேன். ஆமா விழுந்துருச்சிதான், மூக்குல இழுத்ததும் ஒரு கோணலான நெளிப்பு! அது ஒருவிதமான புது ஃப்ளேவர் weed, என் ஃபிரண்டு வந்து கொடுத்ததா ஞாபகம்…”

மியாவ் மியாவ்…

***

லட்சுமிஹர்

“மொழியின் நிழல்” – விமர்சனம்

0

சம்பு

எளிமையை தனது அருங்குணங்களிலொன்றாகப் பாதுகாத்து வரும் ந.பெரியசாமி, தன் கவிதைகளின் சொற்களிலும் அந்த எளிமையைச் சற்றும் குலையாது படர விடுபவர்.

இது அவரது முதல் கட்டுரைத் தொகுப்பு.

தம் வாசிப்பறிவின் எல்லைக்குட்பட்ட- ஒர் எளிய வாசகனின் படைப்பூக்கம் தரும் விமர்சனங்களாக- வாசிப்பின் போதத்தில் எக்கணமும் பகிர்ந்துகொள்ளும் அன்பு கெழுமிய இன்சொற்களாக- இந்த இலக்கியமெனும்  பெருந்தடத்தில் நடந்து செல்பவர்களிடமெல்லாம்  தன் வாசிப்பு அனுபவத்தைச் சொல்லிப்பார்ப்பதாக அமைந்திருக்கும் இந்த  ”மொழியின் நிழல்” கட்டுரைத்  தொகுப்பு, பல்வேறு புத்தகங்களைப்பற்றிப்  பேசுவதாகக் காட்டிக் கொண்டாலும்கூட அதன் ஊடுபாவாக ந.பெரியசாமியின் இலக்கியத்தைத் தேடும் தனிப்பட்ட பயண வாழ்வையும் உள்ளடக்கியே இருக்கிறது.

இந்த ஒசூர் மலைப்பிரதேசத்திலிருந்து தமிழகமெங்கும் சுற்றியலைந்து  அவர் தேடிக் கண்டடைந்த- தம்முள் சில பாய்ச்சல்களை உண்டாக்கிய –தன் மனதிற்கு மிக நெருக்கமாகப்பட்ட புத்தகங்களைப் பற்றியே இந்த “மொழியின் நிழல்” தொகுப்பின் கட்டுரைகளில்  அவர் நம்முடன் உரையாடுகிறார்.

நிராகரிப்பின், ஓர் சிறு கடுஞ்சொல்லைக்கூட ந.பெரியசாமியின் எழுத்துகளில் நாம் காணமுடியாது. கத்தி,கபடாவெல்லாம் மிகவும் அதிகப்படிதான், ஓர் குண்டூசியே போதும் அது மிகப்பெரிய ஆயுதம். அதுவே மனிதச் சமநிலையைக் குலைத்து விடுமென நம்பக்கூடியவர் அவர்.

அவருடைய  அந்தச் சுபாவத்தினால்தான், இந்த “மொழியின் நிழல்” பிரதியின் பெரும்பாலான கட்டுரைகள்  – (சில கவிஞர்களின் முதல் கவிதைத்தொகுப்பு குறித்ததாகவும்,அந்தத் தொகுப்புகளின் கவிஞர்கள் மேலும் நம்பிக்கையோடு இலக்கியத் தளத்தில் காலூன்றிச் செயல்பட ஓர் உந்துதலாகவும் இருப்பதையும் சேர்த்து)

வாஞ்சையான சொற்களால் சக படைப்பாளிகளை வரவேற்பதாக  இயல்பாகவே அமைந்திருக்கிறது.

நமது எழுத்தின் செயல்பாட்டு எல்லைகள்- இலக்கியம் என்ற தளத்தை அரசியல் பூர்வமாகவும், ,தீப்பிடித்து எரியும் சொற்களை நட்டநடு வீதியில் வீசுவதாகவும், பன்முகப்பட்ட ரசனைக்குரியதாகவும், கொண்டாட்ட மனநிலையிலேயே அணுகுவதற்குரியதாகவும்,மென்னொளிர் கிரணங்களே எப்போதும் படர்கிற அன்பின் முத்தங்களைச் சுமந்திருப்பதாகவுமான- வேறுவேறு கிரமங்களில் நாளது தேதியில் தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதில், எந்த ஒரு படைப்பின் மீதும் பிரியத்தின் ரேகைகளை அழுந்தப்பதியச் செய்யும் சுபாவம் இயல்பிலேயே கைக்கொண்ட ந.பெரியசாமி, சுமார் 40 புத்தகங்கள் மற்றும் நாடகங்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் பற்றிய தமது மனப்பதிவுகளை தம் வாழ்வினூடான அனுபவங்களுடன் கோர்த்தும்,ஒப்புநோக்கியும்,வியப்பின் புள்ளிகளில் கூச்சமின்றி தம்மை வெளிப்படுத்தியுமே இந்நூல்களை உள்வாங்கியிருப்பதை அவரது அவதானிப்பு நமக்குணர்த்துகிறது.

பேரறிவின் மிதப்பு இலக்கியத்தின்புறம் அண்டிக்கிடக்கும் தீராப் பெருநோய்.அதற்கு ஒருபோதும் முதுகெலும்பு கிடையாது.அது எதையும் சமதளத்திலோ அல்லது நிமிர்ந்தோ பார்க்கின்ற திராணியற்றது.அது ஆகாயத்தின் மேலிருந்து கீழ்நோக்கும் வல்லூறுப் பார்வையினை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாகும்.அவ்வளவு உயரமெல்லாம் எளிய மானுட வாழ்வுக்கு ஒருபோதும் ஏற்றதல்ல என்பதை தீர்க்கமாக உணர்ந்திருக்கிறார் ந.பெரியசாமி. அதனால்தான்,இந்த ‘மொழியின் நிழல்’ நூலில் தரையில் கால்பாவி நடக்கும் எளிய நடையில் அன்பின் ஆற்றொழுக்கு குறையாமல் சிறு முட்களை வலியின்றிக் களைந்தெறியும்  விமர்சனத்தின் நுண்கூறுகளை ந.பெரியசாமியிடம் நாம் காணமுடிகிறது.

எழுதப்பட்டுவிட்ட ஒரு புத்தகத்தை அதன்போக்கில் சென்று தாம் சிடுக்கென கருதுகிற ஒன்றை மெல்லக் களைகிற தொனியில் சொல்லிச்செல்கிற நுட்பம்

ந.பெரியசாமியிடம் இயல்பாகவே உண்டு.

தவிர, ந.பெரியசாமி இக் கட்டுரைத் தொகுப்பிற்கென தம் தேர்விலெடுத்துக்கொண்ட புத்தகங்களின் வரிசை உண்மையில் எந்த வரையறைக்குள்ளும் கூறுகளுக்குள்ளும் அடங்காதது.ஒரு பொதுமையான பண்பினை இந்த நூல்களின் விமர்சனத் தேர்வுக்கு நாம் வழங்கிவிட முடியாது.

வாசகனாக ஒருவரை எந்தெந்த நூல்கள் வாசிப்பின் ஈர்ப்பினுள் பிடித்து நிறுத்துமென்பதை எவருமறிந்திலர்.அதுபோலவே, ந.பெரியசாமியின் இந்த நூல்களின் தேர்வு நம்மை வியப்புக்கு உள்ளாக்குகிறது.

லிபிஆரண்யா,வெய்யில்,இளங்கோகிருஷ்ணன்,

இசை,வேல்கண்ணன்,ச.துரை என கவிதைகளின்புறமாக அது விரிந்து செல்கிறது.பால் சக்காரியா,கோணங்கி,தமிழவன் என முற்றிலும் வேறொரு திசையிலும் பயணிக்கிறது.

ஒரு பல் மருத்துவரான தன் மகனுக்கு, -இந்தியச் சாதியப் படிநிலையின் கழுவித் தீராத அழுக்குகள் அதிகாரத்தின் உச்சியிலிருந்து நுனிவரை எல்லாப்புறத்திலும் காய்ப்புத்தட்டி கிடக்கின்ற அவலத்தினையும், அதைக் களைய அம்பேத்கரின் நூல்கள் எப்படிப்பட்ட முன்னுவமையில்லாத ஒரு பெருந்திறப்பு என்பதையும் -ஓர் தந்தையெழுதிய ‘மகனுக்கு மடல்’ நூலும்,

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தம் வாழ்வின் கொடூர தருணங்கள் வெளியில் எவருக்கும் தெரியாமலே களத்திலேயே சிதறுண்டுபோன எண்ணற்ற போராளிகளின் (கிழிந்து நைந்துபோன டைரிக் குறிப்புகளைக்கொண்டு நண்பர் வசந்தசந்திரனுக்காக, ந.பெரியசாமியால் இந்நூல் தட்டச்சு செய்யப்பட்டதாகும்)  வாழ்வுக்குக் கட்டியம் கூறும் வகையில் தொகுக்கப்பட்ட ‘ஜி.ராமச்சந்திரனின் சுயசரிதை’ நூலுக்குமான விமர்சனம்,ந.பெரியசாமியின் இலக்கிய ஆர்வத்திற்கும் சேர்த்தே சான்றுரைக்கின்றன.

ந.பெரியசாமியின் வாசிப்புத்தளம் என்பது இலக்கியத்தின் புறமாகக் கால்பாவ நினைக்கும் எளிய வாசகனுக்கு நிச்சயம் வியப்பளிக்கும் ஒன்றாகும்.

அந்த வியப்பு ”மொழியின் நிழல்” கட்டுரைத் தொகுப்பெங்கும் நீக்கமற நிறைந்து விரவிக் கிடக்கிறது.

சம்பு

”மொழியின் நிழல்”-கட்டுரைத் தொகுப்பு

வெளியீடு:
தேநீர் பதிப்பகம்,
24/1, மசூதி பின் தெரு,
சந்தைக் கோடியூர்,
ஜோலார்பேட்டை-635851.
#விலை: ரூபாய் 180
தொடர்புக்கு: +91 9080909600  

ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு – பகுதி 10

0

சட்டவாக்க அரங்கு ஜனநாயகத்தின் புதிய பரிமாணம்

ரூபன் சிவராஜா

இதற்கு முந்தைய பதிவுகளை வாசிக்க இங்கே அழுத்தவும்

ஜனநாயக அமைப்பு முறையில் ஒவ்வொரு முறையும் தேர்தல் நடைபெறும் போது மக்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி தமக்கான பிரதிநிதிகளையும் ஆட்சியையும் தெரிவுசெய்கின்றனர். ஆனால் தேர்தலின் பின்னான மக்களின் நேரடியான வகிபாகம் என்பது பெரும்பாலும் வெறும் பார்வையாளர்கள் என்பதாகிவிடுகிறது. இதுவே பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் இயல்பு அல்லது இயங்குநிலை. ஒப்பீட்டளவில் கட்சிகளினதும் ஆட்சியாளர்களினதும் வாக்குறுதிகள் குறுகிய காலத்திற்குள் மறக்கப்பட்டவையாகவும் ஆகிப்போவதுண்டு. ஆனால் Augusto Boal இன் அரங்கக் கலை முன்னெடுப்பு ஜனநாயகத்திற்கு இன்னுமொரு பரிமாணத்தைக் கொடுத்தது. அதனை Boal, ‘Transitive Democracy – நிலைமாறு ஜனநாயகம்’ என்கிறார். சட்டவாக்க அரங்கு மூலம் அதனை அவர் சாத்தியப்படுத்தினார். பார்வையாளர்களைப் பங்கேற்பாளர்களாக்கும் அரங்கச் செயற்பாடுதான் இதுவும். ஆனால் நேரடிப் பங்கேற்பு.

இதன் நடைமுறைச் சாத்தியம் பற்றிய கேள்விகள் எழுவது இயல்பு. ஆனால் இதன் சாத்தியப்பாட்டினை விளக்குவதற்கு Boalஇன் தேர்தல் அரசியல் பங்கேற்பினையும் அதற்கான பின்னணியையும் விபரிப்பது அவசியமாகின்றது. இந்தச் செயற்பாட்டின் ஊடாக பல தீர்மான முன்மொழிவுகள் பிரேசிலின் இரண்டாவது பெரிய மாநிலமான Rio de Janeiro சட்டமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அவற்றில் 13 முன்மொழிவுகள் பெரும்பான்மையைப் பெற்று நிறைவேற்றப்பட்டன.

வாக்காளர்கள் சட்ட உருவாக்கிகளாக மாறுதல்

முன்மொழிவுகள் வாக்காளர்களிடமிருந்து நேரடியாக வரவேண்டுமென்பதை உறுதிசெய்கின்ற பொறிமுறை இதற்குள் உண்டு. தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பங்களிப்பு என்பது முன்மொழியப்பட்ட எழுத்துமூல ஆலோசனைகளைச் சட்டமன்றத்திற்கு எழுத்துச்சென்று முன்வைப்பதாகும். தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினராக Boal அதனைச் செய்தார்.

Boal இன் வாழ்வுச் சூழல்தான் அவர் உருவாக்கி வளர்த்தெடுத்த அரங்க வடிவங்களுக்கான வடிகாலாக அமைந்தது என்பதை ஏலவே பார்த்திருந்தோம். 1979இல் பிரேசிலில் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது. இருந்தபோதும் தொடர்ந்தும் பிரான்சில் வசித்துவந்தார். அங்கு ஒடுக்கப்பட்டோருக்கான அரங்க மையம் ஒன்றினை நடாத்தியும் வந்தார். Sorbonne பல்கலைக் கழகத்தில் கற்பித்தல் பணியையும் மேற்கொண்டு வந்தார். ஒருமுறை அந்தப் பல்கலைக் கழகத்தில்  இடம்பெற்ற ஒரு கருத்தமர்வில் பங்கேற்பதற்காகச் சென்ற Rio மாநில துணை ஆளுனர், Boal அவர்களை பிரேசிலுக்குத் திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தார். கல்வி நிறுவனங்களுடன் இணைந்ததாக ஒரு மக்கள் மைய கலாச்சார நிறுவனத்தினை உருவாக்கி வளர்த்தெடுப்பதற்குரிய சாதகமான நிலைமைகள் பற்றி அவரிடம் கூறப்பட்டது. அக்கலாச்சார நிறுவனம் பாரிசில் அவர் நடாத்திவந்த அரங்க மையமும் Paulo Freireவின் ஊடாட்ட கற்றல்-கற்பித்தல் முறைமையின் அம்சங்களையும் இணைத்ததாக அமைய வேண்டுமென்பது துணை ஆளுனரின் பரிந்துரையாக இருந்தது. இந்த வேண்டுகோளும் வாய்ப்பும் Boalஇற்குத் தூண்டுதலாக அமைந்தது. 15 ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பின் 1986இல், நிரந்தரமாகத் அவர் தாயகம் திரும்பினார்.

நாடு திரும்பிய பின்னர் கல்வி அமைச்சகத்தைச் சேர்ந்த 35 கலாச்சாரப் பணியாளர்களை உள்ளடக்கிய குழுவொன்றுடன் அரங்கப்பணிகள் தொடங்கப்பட்டன. நாடு தழுவிய ரீதியில் மக்கள் அரங்கு, கருத்தமர்வுகள் உட்பட்ட வெவ்வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. இந்தச் செயற்பாடுகள் ஒடுக்கப்பட்டோருக்கான பிரேசில் அரங்கச் செயற்பாட்டு மையம் (CTO, centro de teatro do oprimido) உருவாக வழிகோலியது.

அவ்வாறாக அரங்கச் செயற்பாடுகள் முன்னேற்றப பாதையில் பயணித்துக் கொண்டிருக்கையில், நாட்டில் அரசியல் அதிகார மாற்றம் நிகழ்கிறது. அதன் விளைவாக புதிய ஆட்சியாளர்கள் அரங்கச் செயற்பாடுகளுக்கான ஆதரவினை விலக்கிக் கொள்கின்றனர். ஊவுழுவினைத் தொடர்ந்து இயங்கவைக்கின்ற CTOஇன் முயற்சி வெற்றியளிக்கவில்லை. வள, நிதிப் பற்றாக்குறை காரணமாக அது முடக்கப்படுகின்றது.

அரங்கம் – தேர்தல் அரசியல் – சட்டமன்றம்

1992இல் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர், கொள்கை ரீதியாகத் தமக்கு நெருக்கமான தொழிற்கட்சியை நாடி, தேர்தல் பரப்புரைகளுக்கு நாடகம், மக்கள் அரங்குகள் ஊடாக உதவமுடியுமெனக் கூறுகின்றனர். அக்கட்சி இவர்களின் வேண்டுகோளுக்குச் சம்மதம் தெரிவித்த அதேவேளை, அரங்கச் செயற்பாட்டுக் குழுவின் ஒரு உறுப்பினர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டால், கட்சிக்கு அது மேலும் பலமாக அமையுமென்ற தமது விருப்பத்தினையும் முன்வைக்கின்றனர். தகுதியும் பொருத்தமுமுடைய வேட்பாளராக Boal முன்மொழியப்படுகிறார். அவருக்கு நேரடி அரசியலில் ஈடுபடுவதில் விருப்பில்லை. அழுத்தம் காரணமாகவும் அதிலுள்ள வாய்ப்புகள் மீதான நம்பிக்கை காரணமாகவும் வேட்பாளராகப் போட்டியிடுவதற்குச் சம்மதிக்கின்றார். 22 கட்சிகளைச் சேர்ந்த 1200 வேட்பாளர்கள் 42 இடங்களுக்காகப் போட்டியிடும் தேர்தல் அது. இந்நிலையில் வெற்றிவாய்ப்பு கேள்விக்குறி என்பது அவரின் எண்ணம். தவிர நிதிவலிமையுடைய வேட்பாளர்கள் பிரேசிலின் முதன்மை ஊடகங்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். அவர்களோடு போட்டியிடுவதிலுள்ள சவால்களும் அவரது தயக்கத்திற்குரிய காரணி.

அரங்கக் குழுவானது Rioவில் மக்கள்கூடும் பொது இடங்களில், திறந்தவெளிகளில் உரையாடல் அரங்குகளை ஏற்பாடு செய்தனர். மக்கள் இயல்பாகக் கூடும் இடங்களில் திடீரெனத் தோன்றி, அரங்க வடிவங்களினூடாக மக்கள் மத்தியில் பரப்புரைகளைச் செய்தனர்.

சம்பா (பிரேசிலிய நடன இசை), உருவக அரங்கம், நையாண்டி நாடக ஆற்றுகைகள் உட்பட்ட பல்வேறு சாத்தியமான ஆற்றுகை வடிவங்களைக் கையாண்டு தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டனர். இவர்களின் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடிக்கத் தொடங்கின. எதிர்பார்த்தைதைவிட அதிகமான மக்கள் ஒன்றுகூட இவ்வகை அரங்கச் செயற்பாடுகள் கவனயீர்ப்பினைப் பெற்றன. ஏனைய பேச்சாளர்களின் வீச்சான உரைகளை விடவும் இந்தவகைத் தேர்தல் பரப்புரை அரங்குகள் மாறுபட்டதாகவும் கவனத்தை ஈர்ப்பதாகவும் இருந்தன  நாழிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகள் இந்தவகை அரங்குகளைப் பற்றி எழுதுவதற்கும் ஒளிபரப்புவதற்கும் ஆர்வம் காட்டின. இதன் வடிவங்கள் காட்சிபூர்வ பிரதிபலிப்பு நிறைந்ததாக இருந்தமையே ஊடகங்களின் ஆர்வத்திற்குக் காரணமாயின.

விருப்பமில்லாமல் வேட்பாளராகப் போட்டியிடச் சம்மதித்த Boal, ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலகுவதென்ற முடிவில் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. இருந்தபோதும் வெற்றிவாய்ப்புப் பற்றிய நம்பிக்கையும் வெற்றியின் மூலம் அடையக்கூடிய சமூக நன்மைகள் பற்றிய எதிர்பார்ப்பும் விலகல் முடிவினைக் கைவிடச் செய்தது.  ஜனநாயகத் தேர்தல் மூலம் பெறப்படும் அங்கீகாரமும்  நிர்வாக அதிகாரமும் காத்திரமான சமூக அரசியல் மாற்றங்களுக்கு பயன்படும் என்ற கருத்தியலின் அடிப்படையில் தேர்தல் வெற்றியில் நம்பிக்கை கொண்டார்.

Rioவின் சட்ட மன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்படுபவர்கள், 20 தனிப்பட்ட ஆலோசகர்களை நியமிக்க முடியும். இப்படியான சாதகமான சூழலில் அரங்க செயற்பாட்டுக் குழுவினருக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்வதோடு, அரங்க செயற்பாட்டு மையத்தினை முடக்க வேண்டிய தேவையும் அற்றுப் போகின்றது. மக்கள் அரங்கின் முடிவில் எட்டப்படும் பல தீர்வுகள், பரிந்துரைகளை அரசியல் அதிகாரத்தின் மூலம் நேரடிச் சமூக மாற்றமாக உருமாற்றலாம் எனும் எண்ணமும் தேர்தலில் களமிறங்குவதற்குரிய உந்துதலை வழங்கியது.

விளிம்புநிலை மனிதர்களின் நலனும் பாதுகாப்பும்

ஒரு அரங்க செயற்பாட்டுக்குழு சட்டமன்றத்திற்குச் செல்வது வரவாற்றில் முன்னெப்பொழுதும் நிகழ்ந்திருக்கின்றதா என்று தெரியவில்லை. பிரேசிலில் நடந்தது. தேர்தலுக்கான பரப்புரை, தேர்தலில் வேட்பாளராக நின்று வென்றமை என்பவற்றைத் தொடர்ந்து பல்வேறு செயற்குழுக்கள் அமைக்கப்பட்டன. சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களையும், ஒடுக்கப்படுகின்றவர்களையும் உள்ளடக்கிய வெவ்வேறு அரங்க செயற்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டன. மாற்றுத் திறனாளிகள், பல்நிற பல்கலைக்கழக மாணவர்கள், ஆதரவற்ற சிறுவர்கள், முதியோர், உளநல மையங்களின் நோயாளர்கள்-மருத்துவப் பணியாளர்கள், சமபால் உறவாளர்கள், வேலையற்ற பண்ணைத் தொழிலாளர்கள் எனப் பல்வேறு தரப்பு மக்களை உள்ளடக்கிய செயற்பாட்டுக் குழுக்கள் அமையப்பெற்றன.

இக்குழுக்களுக்கெனத் தனித்தனியாக நெறியாளர் மற்றும் பயிற்றுவிப்பாளர் நியமிக்கப்பட்டு அரங்கப்பயிற்சிகள் உட்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. நெறியாளர் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் Boal இன் ஆலோசகர்களிலிருந்து நியமிக்கப்பட்டனர். குழுக்கள் ஒன்றையொன்று சந்தித்து, ஒன்றுக்கொன்று நிகழ்த்திக் காட்டல், ஒருவரோடொருவர் ஊடாடுதல் போன்ற செயற்பாடுகள் பல மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டன.

***

ரூபன் சிவராஜா நார்வேயில் வசிக்கிறார். கவிதைகள் மற்றும் அரசியல் கட்டுரைகள் தொடர்ந்து எழுதிவருகிறார். அண்மையில் இவரது முதல் நூல் “அதிகார நலனும் அரசியல் நகர்வும்” நூல் வெளிவந்து கவனம் பெற்றது. ஆசிரியர் தொடர்புக்கு – svrooban@gmail.com

கமுக்கமான சாம்பல் நிறம்

0

செல்வசங்கரன்

சாம்பல் நிறப் பிரியர் அவர்
சாம்பல் நிறம் பிடிக்குமென எல்லாரிடமும் சொல்வார்
சாம்பல் நிறச் சட்டை சாம்பல் நிற வண்டி சாம்பல் நிற கைக்கடிகாரத்தில்
அடித்து தூள் பறத்துவார்
அவ்வப்பொழுது சாம்பல் நிறத்தை கூகுளில் சர்ச் செய்வார்
இரவுச் சாப்பாட்டிற்கு ஒரு கிண்ணம் சாம்பல் போதும் என
ஆச்சர்யம் தருவார்
எதைத் தொட்டாலும் சாம்பல் நிறத்தைத் தொடுவதாகவே உள்ளது
என்பார்
கடைசியில் கூட பாருங்கள் எல்லாம் சாம்பல் தானெனச் சிரிப்பார்
சாம்பல் நிறம் பிடிக்குமென யாராவது கூறிவிட்டால் போதும்
கட்டிக் கண்ணீர் சொரிவார்
யாரோ ஒருவரைக் கட்டிப் பிடித்துக் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார்
அவரிடம் மெதுவாக
சாம்பல் நிறத்தைப் போல கமுக்கமாக இருங்களேன்
அதன் பிரத்யேக குணமே கமுக்கம் தானே என்றிருக்கிறார்
அந்த யாரோ ஒருவர்
அவர்கள் பற்றிய பேச்சு இத்தோடு முடிந்தது
இவ்வளவு நேரம் சாம்பல் நிறத்திடம் ஒரு அலட்டல் இல்லை
யாரையோ சொல்வது போல பராக்கு பார்த்தது
தன் கமுக்கக் குணம் கண்டறியப்பட்ட அடுத்த நிமிடம் கோபத்தில்
அதற்கு மூக்கு சிவந்துவிட்டது
தன் கமுக்கத்தின் மீதே ஓராயிரம் சந்தேகக் கண்களை எடுத்து வீச
கமுக்கமல்லவா கமுக்கமாக இருந்து கொண்டது
ஓராயிரம் கண்கள் ஏதாவது சொல்லிச் சமாளித்துக் கொள்வோம்
என்றபடியே ஒவ்வொன்றாக தரையிறங்கின

செல்வசங்கரன்

பலஸ்தீனம் மீது தொடரும் ஒடுக்குமுறையும் நிலப்பறிப்பும் குடியேற்றங்களும்

0

ரூபன் சிவராஜா

மே 10-ஆம் நாளிலிருந்து தொடர்ச்சியாக பலஸ்தீனத்தின் காஸா மீது தனது இராணுவ இயந்திரத்தினை ஏவி தாக்குதல்களை நடாத்தியிருக்கிறது இஸ்ரேல். பெருமெடுப்பில் வான், தரை வழித்தாக்குதல்களில், மொத்தம் 240 பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 60 வரையானவர்கள் சிறுவர்கள். காஸாவில் அமைந்திருந்த ஊடகக் கட்டிடத்தை இலக்குவைத்து வான்வெளித் தாக்குதல் நடாத்தி அதனை இஸ்ரேல் படைகள் தரைமட்டமாக்கியுள்ளன. அல்-ஜசீரா, AP உட்பட்ட உலக ஊடகங்களின் அலுவலகங்கள் அக்கட்டிடத்தில்தான் அமைந்திருந்தது. கட்டிட உரிமையாளருக்கு முற்கூட்டியே தகவல் கொடுக்கப்பட்டு, ஒரு மணித்தியால அவகாசம் கொடுக்கப்பட்டு, 12 மாடிகளைக் கொண்ட அந்த ஊடகமையம் தகர்க்கப்பட்டுள்ளது. சாட்சிகளை முன்கூட்டியே அப்புறப்படுத்துகின்ற திட்டமிட்ட செயல் இது. 11 நாட்களின் பின் எகிப்தின் மத்தியஸ்தத்துடன், அமெரிக்காவின் திரைமறைவுப் பேச்சுகள் மூலம் இஸ்ரேல் – ஹமாஸ் தரப்புகளுக்கிடையில் போர்நிறுத்தம் எட்டப்பட்டுள்ளது.

உலக ஊடகங்கள் கொடுக்கும் பிம்பம்

இஸ்ரேல்-பலஸ்தீன முரண்பாடு தொடர்பாக பெரும்பான்மையான உலக ஊடகங்கள் கொடுக்கின்ற பிம்பம் பெருமளவில் ஒருதலைப்பட்சமானது. ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தொடுக்கின்ற ஏவுகணைத் தாக்குதலுக்கான பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் இராணுவத்தாக்குதல்களை மேற்கொள்கின்றது என்பதாகவே அதிகமும் செய்திகளில் சித்தரிக்கப்படுகின்றது. மேற்கின் ஊடகச் செய்திகள் இஸ்ரேல்-பலஸ்தீனப் பிரச்சினையை அதன் வரலாற்றுப் பின்னணி, சமகால நிலைமைகள் மற்றும் பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்துவது குறைவு. பெரும்பான்மை ஊடகங்களில் ஒரு வகையான இஸ்ரேல் ஆதரவுப் போக்கினை அவதானிக்க முடியும். மட்டுமல்லாது பலஸ்தீனத் தரப்பு, குறிப்பாக ஹமாஸின் தாக்குதல்கள் பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்படுவதையும் காணலாம். இடதுசாரி ஊடகங்களிலும்,  செய்திகளைத் தாண்டிய அரசியல் ஆய்வுக்கட்டுரைகளிலும் பத்திகளிலும் ஓரளவு நியாயமான பார்வையைக் காணமுடியும்.

பலஸ்தீன மக்களின் பிரச்சினை என்பது, வன்முறையாகவோ, கலவரமாகவோ, பயங்கரவாதமாகவோ, பதட்டநிலை என்றோ, இருதரப்பு மோதல் என்றோ சித்தரிக்கக்கூடிய பிரச்சினை அல்ல. அதன் பரிமாணம் வேறானது. வரலாற்று நீட்சியுடையது. எழுபது ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைக்காகப் போராடி வருகின்ற மக்கள் அவர்கள். அவர்களுடைய விடுதலைப் போராட்டம் என்பது யூத இனவெறிக்கும், இஸ்ரேல் அரச பயங்கரவாதத்திற்கும் எதிரான போராட்டம். நில அபகரிப்பிற்கு எதிரான, அரசியல் ஒடுக்குமுறைக்கு எதிரான அந்த வரலாறு, ஆயுத விடுதலைப் போராட்டத்தாலும் சமாதானப் பேச்சுவார்த்தைகளாலுமான நிகழ்வுகளை உள்ளடக்கியது. பலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளில் மிக மோசமானது நில அபகரிப்பு. இஸ்ரேல் அரசின் திட்டமிட்ட யூதக்குடியேற்றங்கள் மூலமாக பலஸ்தீன மக்களின் மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பூர்வீகப் பிரதேசங்கள் விழுங்கப்பட்டுள்ளன.

மீண்டும் மீண்டும் காஸா மீது இஸ்ரேல் இராணுவ இயந்திரம்

கடந்த 2006-லிருந்து சில ஆண்டுகால இடைவெளிகளுக்குள் தொடர்ச்சியாக தற்போதையதைப் போன்ற மோசமான தாக்குதல்களைக் காஸா மீது இஸ்ரேல் நடாத்தியுள்ளது. 2006-இல் லெபனானின் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான பாரிய போர், 2009-2010, 2012, 2014 என காஸா மீதான இதற்கு முந்தைய இஸ்ரேலின் படையெடுப்புகள் அமைந்தன.

காஸா மீதான தாக்குதல்களுக்குக் காரணம், இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் ஏவுகணைத் தாக்குதல்கள் என்பதாகவே ஊடகங்களில் சித்தரிக்கப்படுகின்றது. ஆனால் உண்மை நிலவரம் வேறானது.

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் அமைந்துள்ள அல்-அக்ஷா மசூதி பலஸ்தீன முஸ்லீம் மக்கள் புனிதமாகக் கருதும் ஸ்தலம். அது இஸ்லாமியர்களின் 3-வது புனித ஸ்தலம் எனப்படுகின்றது. அதனை ஆக்கிரமித்து அழித்து அதில் யூத ஸ்தலத்தை நிறுவும் முனைப்பு இஸ்ரேலுக்கு உண்டு. கடந்த ஏப்ரல் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்புகால இறுதி நாட்களில் அம்மசூதிக்குள் இஸ்ரேல் காவல்துறையினரும் இராணுவமும் நுழைந்ததில் அங்கு கலவரம் ஏற்பட்டது. பலஸ்தீன மக்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு மற்றும் காவல்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் பல நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். இந்தக் கலவரத்திற்கான தொடக்கப்புள்ளி, யூத கடும்போக்காளர்கள் திட்டமிட்ட ஒரு பேரணியும் இஸ்ரேல் காவல்துறை அல்-அக்ஷா மசூதியை முற்றுகையிட்டுத் தாக்கியுள்ளமையுமாகும். ‘ஜெருசலேம் தினம்’ என்ற பெயருடன் அந்நிகழ்வு திட்டமிடப்பட்டிருந்தது. 1967-இல் நடைபெற்ற ‘ஆறுநாள்’ (05.06.1967 – 10.06.1967) போரில் இஸ்ரேல் படைகள் கிழக்கு ஜெருசலேமினைக் பைக்பற்றியதை நினைவுகூர்வது இந்நிகழ்வின் நோக்கம்.

1967 – ஆறுநாள் போர் ஏற்படுத்திய பாரிய மாற்றம்

1967-ல் இந்த ஆறுநாள் போர், இஸ்ரேலுக்கும் அரபுநாடுகளுக்கும் (எகிப்த், ஜோர்டான், சிரியா); இடையில் நடைபெற்றது. குறுகிய போரெனினும் இன்றுவரை நீடிக்கின்ற அரசியல் விளைவுகளைக் கொண்டிருக்கின்றது இப்போர். இதன் போது கைப்பற்றப்பட்ட மேற்குக்கரை, கோலான் குன்றுகளின் பிரதேசங்கள் (Golan Heights) மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகியன இன்றுவரை இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. அதிலும் கிழக்கு ஜெருசலேம் பலவந்தமாக இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் பலவந்த இணைப்பினை ஆங்கிலத்தில் Annexation என்பார்கள். இந்தப்போரின் விளைவுகள் பிராந்தியத்தின் அரசியல் சூழலை பல வழிகளில் மாற்றியமைத்தது. சர்வதேச ரீதியாக இஸ்ரேல் தனது வகிபாகத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டது. அரபு உலகம் பலவீனப்படுத்தப்பட்டது.

தவிர பலஸ்தீன எதிர்ப்பிற்கான இன்னுமோர் சமகாலக் காரணியும் உள்ளது. அது யூதக்குடியேற்றவாசிகளுக்கும் பலஸ்தீனக் குடும்பங்களுக்குமிடையிலான நிலம்/வீடு தொடர்பான வழக்கு ஆகும். கிழக்கு ஜெருசலேமில் உள்ள Sheik Jarrah எனும் பகுதியில் நான்கு பலஸ்தீனக் குடும்பங்களை அவர்களின் சொந்த வீடுகளிலிருந்து வெளியேற்றும் முனைப்பில் யூதக்குடியேற்றவாசிகள் இறங்கியுள்ளனர். இஸ்ரேல் உருவாக்கப்படுவதற்கு (1947) முன்பிருந்தே அந்த வீடுகள் தமக்குச் சொந்ததாக இருந்ததாக யூதக்குடியேற்றவாசிகள் வழக்குத் தொடுத்து கீழ் நீதிமன்றம் ஒன்றில் வென்றுமுள்ளனர். ஆனால் இந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. பலஸ்தீனர்களின் எதிர்ப்புகள் காரணமாக உச்சநீதிமன்ற வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் 60 ஆண்டுகளுக்கு மேலாக அந்த நிலத்தில் பலஸ்தீனக்குடும்பங்கள் வாழ்ந்துள்ளன. ஜோர்டான் ஆட்சிக்காலத்தில் (1948 – 1967) அதனிடமிருந்து காணிகளைப் பலஸ்தீனக் குடும்பங்கள் கொள்வனவு செய்துள்ளன எனப்படுகின்றது.

தமது நிலங்களை ஆக்கிரமித்து திட்டமிட்ட யூதக்குடியேற்றங்களை நிறுவியதை யூதர்கள் கொண்டாடுவதென்பது பலஸ்தீன மக்களை ஆத்திரமூட்டக் கூடியது. பலஸ்தீன எதிர்ப்பிற்கு அடிப்படையானது இஸ்ரேலின் தொடர்ச்சியான நில அபகரிப்பும், யூதக்குடியேற்றங்களும்.

பலஸ்தீனர்களை ஆத்திரமூட்டும் ஒடுக்குமுறைகள்

இந்தப் பின்னணிகளில் கிழக்கு ஜெருசலேம் மக்களுக்கும் அவர்களின் போராட்டங்களுக்கும் ஆதரவாகவும், அப்பகுதிகளிலிருந்து இஸ்ரேலிய இராணுவத்தையும் காவல்துறையையும் வெளியேறக் கோரியே ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்தத் தொடங்கினர். 2014-ற்குப் பின்னர் இஸ்ரேல் மீது முதற்தடவையாக ஏவுகணைத் தாக்குதல்களைக் ஹமாஸ் நடாத்தியிருக்கின்றது. இதற்கு முந்தைய கட்டங்களிலும் இதே பற்றர்னிலேயே காஸா மீதான தரை மற்றும் வான்படைத் தாக்குதல்களை நடாத்தி வந்திருக்கின்றது இஸ்ரேல். அதாவது ஹமாஸ் இஸ்ரேல் பகுதிகளுக்கு ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்த, அதற்குப் பதிலடியாகத் தம்மைத் ‘தற்பாதுகாக்கும் உரிமையின்’ பெயரில் ‘பயங்கரவாதிகளை’ அழிக்கும் தாக்குதல் என்பதாகத் தனது போரை இஸ்ரேல் ஒவ்வொரு முறையும் நியாயப்படுத்தி வந்துள்ளது. ஆனால் காஸா மீது பெருமெடுப்பிலான படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஹமாசை எப்படித் தூண்டவேண்டுமென்ற கைங்கரியத்தினை இஸ்ரேல் நன்கு அறிந்து வைத்திருக்கின்றது.

இஸ்ரேலிடம் Irone Dome எனப்படும் வலுவான ஏவுகணை எதிர்ப்புத் தொழில்நுட்பம் (Anti missile system) உள்ளது. ஹமாஸினால் ஏவப்படும் ஏவுகணைகளை வான்வெளியில் வைத்தே தடுத்து அழிக்கும் தொழில்நுட்பம் அது. ஆயினும் அதனையும் தாண்டிச் சில இடங்களில் ஹமாஸின் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததில் இம்முறை 12 வரையான இஸ்ரேலியப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவை ஈரான்  ஹமாஸிற்கு வழங்கிய ஏவுகணைகள் என்று கூறப்படுகின்றது.

இஸ்ரேலுக்கு நிபந்தனையற்று ஆதரவளிக்கும் அமெரிக்கா

சர்வதேச அரசியலை, குறிப்பாக அமெரிக்கா தலைமையிலான உலக அரசியலை, அதன் கயமைகளைக் கருத்திலெடுக்காமல் மேம்போக்காகப் பேச முடியாது. அமெரிக்காவின் ஆட்சி மாற்றங்கள் சர்வதேச நிலைமைகளைப் பொறுத்தவரை மாற்றங்களைக் கொண்டு வந்ததில்லை. ஒபாமா பதவிக்கு வந்த போதும், இந்தியத் தமிழ்ப் பின்னணியைக் கொண்ட கமலா ஹரிஸ் துணை ஜனாதிபதியாக வந்தபோதும் அதனைக் கொண்டாடுகின்ற ‘தமிழ் உளவியல்’ சில ஊடக மட்டத்திலும் சமூக மட்டத்திலும்; அவதானிக்கப்பட்டிருந்தது. அது அரசியல் புரிதல் அற்ற ஒருவகை உணர்ச்சிவசப்பட்ட வெளிப்பாடு. எவர் ஆட்சிக்கு வந்தாலும் வெளியுறவுக் கொள்கை என்று ஒன்று உள்ளது. அதுவும் பனிப்போருக்குப் பிற்பட்ட கால வெளியுறவு அரசியல் என்பது நீதியின் அடிப்படையிலான கொள்கைகளின் பாற்பட்டதல்ல. அது முற்றிலும் பொருளாதார (மற்றும் அரசியல், இராணுவ) நலன்களை அடிப்படையாகக் கொண்டது.

இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையை நிறுத்தக் கோருவது தொடர்பான தீர்மானத்தினை ஐ.நா பாதுகாப்பு அவையில் கொண்டுவருவதற்கு சில நாடுகள் எடுத்த முயற்சியினை ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டிருந்தது. இஸ்ரேல் மீது ஒரு இராஜதந்திர அழுத்தத்தினைக் கொண்டுவருவதற்குக்கூட அமெரிக்கா பின் நிற்கின்றது. 1972-ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை 43 தடவைகள் இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா பாதுகாப்பு அவையின் தீர்மானங்களைத் தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடுத்துள்ளது. தற்போதும் அதனைச் செய்துள்ளதோடு அமெரிக்கா, ஜேர்மன் போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டுமுள்ளன. அதாவது ஹமாஸ் அமைப்பின் எறிகணைத் தாக்குதல்களுக்கு எதிராகத் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு இருக்கின்றதென்பது இந்நாடுகளின் நிலைப்பாடு.

ஐ.நா என்பதுகூட அமெரிக்க நலன்களைத் தாண்டி உலக அரசியலில் வினைத்தாக்கத்தினை ஏற்படுத்தியதில்லை என்பது நெடுங்காலமாக பலமுறை மெய்ப்பிக்கப்பட்ட நிதர்சனம். இஸ்ரேலைப் பொறுத்தமட்டிலும் ஐ.நாவினால் எவ்விதத் தாக்கத்தையும் செலுத்த முடியாது. ஐ.நாவின் கண்டனங்கள் வெறும் சடங்குபூர்வமாக நிகழ்வுகளே.

அமெரிக்காவின் இராணுவ பொருளாதார உதவி

அமெரிக்கா பாரிய அளவில் இராணுவ, பொருளாதார உதவிகளை இஸ்ரேலுக்கு பல தசாப்தங்களாக வழங்கி வருகின்றது. இராணுவ பொருளாதார உதவி என்பதற்கு அப்பால் நிபந்தனையற்ற முறையில் அரசியல், இராஜதந்திர ஆதரவினை அது இஸ்ரேலுக்கு வழங்கிவருகிறது. மறுவளமாகச் சொல்லப்போனால் ஆக்கிரமிப்பு சக்தியும் போர்க்குற்றவாளியுமான இஸ்ரேலின் அனைத்துவகையான ஆக்கிரமிப்புப் போர்கள், (பலஸ்தீன) நிலப்பறிப்பு, திட்டமிட்ட பாரிய யூதக்குடியேற்றங்கள் உட்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு வலுவான முண்டுகொடுப்பினைச் செய்துவருவது அமெரிக்கா மட்டுமே. அமெரிக்க – இஸ்ரேல் உறவு நெருக்கமும் தனியாகப் பேசப்பட வேண்டியது.

அமெரிக்காவில் பெரும் நிறுவன மயப்படுத்தப்பட்ட யூத ‘லொபி’ இயக்கங்கள் தொழிற்படுகின்றன. அவை மத, அரசியல், பொருளாதாரம் எனப் பல தளங்களில் நீண்டகாலமாக இயங்கி வருவன. அங்குள்ள கிறிஸ்தவ மதபீடங்களுடனும் நெருக்கமான தொடர்புகளை யூத லொபி இயக்கங்கள் கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

அமெரிக்கா ஆண்டுதோறும் வழங்கிவரும் பல பில்லியன் நிதி உட்பட்ட இராணுவ உதவிகள் குறித்த கேள்விகள் அமெரிக்காவில் எழுப்பப்படுவதில்லை. மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் உலக நாடுகளின் அரசாங்கங்களுக்கான அமெரிக்க உதவிகளைக் கேள்வியெழுப்பும், விமர்சிக்கும் தாராளவாதிகள், ஜனநாயகவாதிகள்கூட இஸ்ரேலுக்கான உதவிகளைக் கேள்வியெழுப்புவதில்லை.

மத்திய கிழக்கில் அமெரிக்க நலன்களுக்கு இஸ்ரேல் உறுதுணை

அமெரிக்கா போன்று உலகில் வேறெந்த நாடும் இஸ்ரேலுக்கு இராஜதந்திர ஆதரவினை வழங்குவதில்லை. இந்த ஆதரவு என்பதற்கான முக்கிய அடிப்படைகளில் ஒன்று மத்தியகிழக்கில் அமெரிக்காவின் நலன்கள் சார்ந்தது. 1967-இன் பின்னர்தான் (ஆறுநாள் போரின் பின்னர்) அமெரிக்கா தீவிரமாக இஸ்ரேலை ஆதரிக்கத் தொடங்கியது. பெருவாரியாக உதவத் தொடங்கியது. அதாவது சுற்றவுள்ள அரபு நாடுகள் அனைத்தினதும் இராணுவ பலத்தினை விட இஸ்ரேல் இராணுவம் வலிமையானது என நிரூபித்த பின்னர். மேலதிக பிரதேசங்களை ஆக்கிரமித்துத் தன்னையொரு மேலாதிக்க சக்தியாக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரே அமெரிக்க உதவி பன்மடங்காக அதிகரித்தது.

இஸ்ரேலைச் சுற்றியுள்ள அரபு நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரானவை. இந்நிலையில் அவற்றுக்கிடையிலான முரண்நிலைளை அமெரிக்கா தனது நலன்களுக்குச் சாதகமாகக் கையாள்வதற்குரிய நாடாக மத்தியகிழக்குப் பிராந்தியத்தில் இஸ்ரேல் உள்ளது. லெபனான், பலஸ்தீன தேசியவாத எழுச்சியைத் தடுப்பது, சோவியத்தின் நட்புநாடான சிரியாவைக் கையாள்வது, அணுவாயுத நாடான ஈரானைக் கையாள்வது என்ற அமெரிக்க நலன்களும் உள்ளன. தவிர பிராந்தியத்தில் மிகச்சிறந்த வான்படையினை இஸ்ரேல் கொண்டிருக்கின்றது. இஸ்ரேல் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் போர்களில் அமெரிக்க ஆயுதத் தளவாடங்களுக்கான பரிசோதனைக்களமாகவும் பார்க்கப்படுகின்றது. அது சோவியத் தயாரிப்பு ஆயுதங்களுக்கு எதிரான பரிசோதனைக்களம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல்-பலஸ்தீன முரண்பாடு: நீண்ட வரலாறு

இஸ்ரேல்-பலஸ்தீன முரண்பாட்டுக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கின்றது. அது யூதர்கள் ஐரோப்பாவிலிருந்து பலஸ்தீன நிலங்களில் குடியேறி படிப்படியாக அந்நிலங்களைத் தம்வசப்படுத்தி 1947-இல் இஸ்ரேல் என்ற தேசத்தை நிறுவியதற்கு முன்பிருந்து தொடங்குகின்றது அந்த வரலாறு. இஸ்ரேல் தேசம் உருவாக்கப்படுவதற்கு முன்னரான மத்தியகிழக்கு மற்றும் யூதர்களின் குடியேற்றமும் அபகரிப்பும் தொடர்பான வரவாற்றினைத் தனிக்கட்டுரையில் பார்ப்பது பொருத்தம்.

1947-இல் ஐ.நா-வின் தீர்மானத்தின்படி யூதர்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் புனிதமாகக் கருதும் ஜெருசலேம் சர்வதேச கண்காணிப்பிற்கு உட்பட்டதாகப் பேணப்படவேண்டுமென்ற தீர்மானம் எட்டப்பட்டது. ஆனால் 1948 ஐ.நா தீர்மானத்தை மீறி மேற்கு ஜெருசலேமினை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. கிழக்கு ஜெருசலேமினை ஜோர்தான் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால் 1967-ஆறுநாள் போரில் இஸ்ரேல் கிழக்கு ஜெருசலேமினைக் கைப்பற்றியது. இன்றுவரை அதனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு யூதக்குடியேற்றங்களைப் பெருமளவில் நிறுவியதோடு அதனைப் பலவந்தமாக சர்வதேச சட்டங்களை மீறி இஸ்ரேலுடன் இணைத்துக்கொண்டது. அதனைத் தலைநகரமாக்கும் முனைப்புடன் திட்டமிட்ட தீவிர நடிவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

ஐரோப்பாவில் யூத எதிர்ப்புவாதம்

ஐரோப்பாவில் யூத எதிர்ப்புவாதம் (Anti semitism) வளர்ச்சி கண்ட புறநிலையில் மறுவளமாக அவர்கள் மத்தியில் சியோனிசம் (Zionism) புதிய வடிவங்களில் எழுச்சி பெற்றது.. யூதர்கள் இனரீதியாக எல்லா மட்டங்களிலும் ஒடுக்கப்பட்டமை, அவர்களை இன அழிப்புச் செய்யும் நோக்கில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டமை, படுகொலை செய்யப்பட்டமை, புறக்கணிக்கப்பட்டமையைக் குறிக்கிறது Anti semitism எனும் யூத எதிர்ப்புவாதம். சியோனிசம் என்பது தமக்காக ‘இறைவனால் வாக்களிக்கப்பட்ட தொன்ம நாடான’ இஸ்ரேலை அடைவதற்கான விருப்பினையும் நம்பிக்கையினையும் குறிக்கிறது.

இந்நிலையில் பழைய பலஸ்தீனத்தில் பிரித்தானிய கொலனித்துவ ஆட்சி நிலவிய காலத்திலேயே பலஸ்தீன, அரபு மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும் தொடங்கி விட்டன. 1920 முதல் 1948 வரை பலஸ்தீனம் பிரித்தானியாவின் கீழ் இருந்தது. அதற்கு முன்னர் கிட்டத்தட்ட 600 ஆண்டுகள் ஒட்டமான் பேரரசின் (துருக்கியப் பேரரசு) கீழ் ஆளப்பட்டது. ஐரோப்பாவிலிருந்து இடம்பெயர்ந்த யூதர்கள் பழைய பலஸ்தீனத்தின் நிலங்களை அபகரித்தும் கொள்வனவு செய்தும் அங்கு குடியேறினர். இன்னொரு வகையில் சொல்வதானால் பிரித்தானிய கொலனித்துவத்திலேயே பலஸ்தீனம் யூதக் கொலனித்துவமாக மாறத் தொடங்கியது. அரபு நில உரிமையாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசித்தவர்களின் நிலங்களும் பெருமளவில் கொள்வனவு செய்யப்பட்டன என்பது வரலாறு. பிரித்தானிய கொலனித்துவம், இஸ்ரேல் தேசம் உருவாக்கப்படுவதற்கு முன்னரான நிலைமைகள், அரபு-யூத முரண்படுகள், பிரித்தானிய வகிபாகம், சியோனிச நகர்வுகள் என்பன தனியான கட்டுரையில் நோக்கப்பட வேண்டியவை.

பலஸ்தீனத்தின் இன்றைய நெருக்கடிகளுக்கான மூலம்

பலஸ்தீனத்தின் இன்றைய நெருக்கடிகளுக்கு பிரித்தானிய ஆட்சியாளர்களும் முக்கிய மூலகாரணி. அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகளின் விளைவுகளில் இதுவும் ஒன்று. இலங்கைத்தீவில் தமிழர்களின் அரசியல் உரிமை இழப்பிற்கான மூலமாகவும் பிரித்தானிய ஆட்சியாளர்கள் இருந்தனர் என்பது இங்கு கவனம் கொள்ளத்தக்கது.

இஸ்ரேலின் ‘தற்காப்பு உரிமை’ பற்றிக் ‘குரல் எழுப்பும்’ அரசுகள், பலஸ்தீனர்களின் வாழ்வுரிமை பற்றிக் குரல் எழுப்புவதில்லை. ஒரு படை வலுச்சமநிலை இல்லாத இருதரப்புகளுக்கிடையிலான முரண்பாடு இது. அரசுக்கும் அரசில்லாத தரப்பிற்கும் இடையிலான மோதல்கள். தரை, வான், கடல், பெரும் நவீன தொழில்நுட்ப படைக்கட்டுமானங்களைக் கொண்ட அரசுக்கும் போராளி அமைப்பிற்கும் இடையிலான பிணக்குகளாக உலகம் இஸ்ரேல் – பலஸ்தீனப் பிரச்சினையை அணுகுவதில்லை. பாரிய ஆக்கிரமிப்பு சக்திக்கும், பல தசாப்தங்களாக ஒடுக்கப்படும் மக்களுக்கும் இடையிலான முரண்பாட்டினை ஒரே தட்டில் வைத்து இருதரப்பு மோதல், வன்முறைகள் என்று அணுகவோ கணிக்கவோ முடியாது.

***

ரூபன் சிவராஜா நார்வேயில் வசிக்கிறார். கவிதைகள் மற்றும் அரசியல் கட்டுரைகள் தொடர்ந்து எழுதிவருகிறார். அண்மையில் இவரது முதல் நூல் “அதிகார நலனும் அரசியல் நகர்வும்” நூல் வெளிவந்து கவனம் பெற்றது. ஆசிரியர் தொடர்புக்கு – svrooban@gmail.com