2. ரகசியங்களைச் சூடும் ஊரில் கதவுகள் மூடிக்கொள்ளும்போது அந்தர வெளியில் மிதக்கத்தொடங்குகின்றன அந்தரங்கங்கள்
3. ஒரே சமயத்தில் சுண்டப்படும் இரண்டு நாணயங்களும் ரகசியம் கருதி அந்தரத்திலேயே நிற்க விழப்போவது பூ பூவா,பூ தலையா, தலை தலையா,தலை பூவா ஒருபோதும் அறிய முடியவில்லை ரகசியத்தை
4. நான் இல்லாத போது வீட்டுக்கு வரும் போது வெளியில் பூத்திருக்கும் ரோஜாக்களிடம் சொல்லுங்கள் வருகையின் ரகசியத்தை ரோஜாக்கள் கசிய விடுவது வாசத்தைத்தானே.
5. திரி எரிந்து முடிந்து வெடிக்கும் தருணம் அறியாதது போலவே ரகசியம் வெளிப்படும் நேரமும் ரகசியமானதுதான்.
6. பாதையின் எல்லா சந்திப்புகளும் விலகி ஒரே நேர்க் கோட்டில் உள்ளது போல புதிர்த்தன்மையுடன் நகர்வதுதான் பாதையின் பேருண்மை.
7. வெளிச்சமிலா குகைகளில் நேராகப் பறக்கும் வௌவால்களைப் போல்தான் காற்றிலாடுகின்றன சொற்களுக்கான ரகசியங்கள்
2. கனவு முளைக்கும் மரம் ——————————— கனவின் இருகரங்களில் இருந்து பிதுங்கி வெளியேறிய வேர்முட்டொன்றிலிருந்து வெளியேறும் ஒரேபுழு தன் அபரிமித வளர்ச்சியில் கிளைகளாய் பிரிந்து பெருவிருட்சமென நீள்கிறது,
மனமோ பால்யத்தில் விதையோடு விழுங்கிய பழமொன்றைக் கரதலம் கொள்கிறது.
நனவின் காலமிகுதலில் என்றோ தவறிய வேம்பின் முத்தொன்று அப்பா மரமென பிணக்குழி மேடு
மர கந்தம் அறிந்தவனின் அமர உளிகளில் மகரந்தத்தை தூவிச்செல்கின்றன பெருங்காமக்காட்டின் சிறுமலர்கள்
சூலிலைச் சூலகத்துள் புகுந்த காலவேரென கிளைத்துக்கொண்டேயிருக்கின்றன தாப நதியின் கால்கள்.
3 .பறந்து செல்ல முடியாதவர்கள்
கணப்பொழுதும் பிரிவதில்லை அந்த பதின்மூன்று இணை காதல் பறவைகள் தராளாமாகப் பறந்து விளையாடுவதற்கான கூண்டுதான் அது
எல்லோருக்கும் போலவே எல்லோரையும் போலவே உணவும் நீரும் வேளா வேளை வந்து போகும் பகலிரவாக.
கூண்டுக் கதவு திறந்து மூடி வெளியே சென்றுவரும் நானும் ஒரு பறவையே
வழியனுப்பும் பறவைகளுக்கு கையசைப்பை மட்டும் பதிலாக்குகிறேன்
பெருந்தொற்றுகால ஊரடங்கில் இந்த நகரத்தின் எல்லா வாயில்களும் அடைபடக் கூடுமென்ற நல்லெண்ணத்தில் நான் மட்டுமே வெளியேற நேரிடுகிறபோது
பறவைகள் குறித்த கவலை கொண்ட நீங்கள் வீடு வர நேர்ந்தால் யாருமற்ற வீட்டின் பறவைகளின் ஒலிகள் பலவித அழுகுரலாகத்தான் இருக்க முடியும்
தங்கள் அழுகையை நிறுத்த வேண்டுமெனில் யாராவது அந்த கூண்டின் கதவுகளை மட்டும் சற்றுத் திறந்து விடுங்கள்
வெண்ணிற குல்லா, சாம்பல் நிற தாடி, முண்டா பனியன், லுங்கியை முட்டிக்கு மேல் தூக்கிக்கட்டி ஒருகையில் டார்ச் லைட்டை அடித்துப் பார்த்துக்கொண்டே குனிந்து நடக்கும் அவரின் தோரணையைப் பார்க்க பயமாக இருக்கிறது.
இந்த இருட்டில் விழும் டார்ச் லைட்டின் ஒளி மனதில் அமானுஷ்ய உணர்வை எழுப்புகிறது. பகலில் வானில் எழும் வானவில்லைப்போல இந்த டார்ச் லைட்டின் ஒளியும் இருட்டில் தனித்து மிளிருகிறது. ஆனால் இரவின் மௌனத் திரையைக் கிழிக்கும் தவளைகளின் சத்தமும் தெரு நாய்களின் சத்தமும் பயத்தை இரட்டிப்பாக்குகிறது. இருட்டின் அடர்த்திக்குள்ளும் பனிப்பொழிவின் குளுமைக்குள்ளும் சிக்காமல் மெதுவாக நடப்பதைப் பார்க்கையில் ஏதோ அசம்பாவிதத்தை நிகழ்த்தப் போகிறாரா? என்று தோன்றுகிறது. மென்பனி என்னை நடுங்கச் செய்கிறது. ஆனால் அவர் முட்டிக்கு மேலே லுங்கியைக் கட்டிக்கொண்டு எந்த நடுக்கமும் இல்லாமல் பவ்யமாய் தவழ்ந்துக் கொண்டிருக்கிறார். இதற்கு முன் அவரை இங்கே பார்த்ததில்லை ஆனால் எங்கோ பார்த்த மாதிரியான ஒரு எண்ணமும் உள்ளுக்குள் எழுகிறது.
“யார் அவர்?”
எதற்கு இந்த இரவில் இங்கே வந்திருக்கிறார். திருட்டுத்தனமான பார்வையும் யார்கண்ணிலும் சிக்கிவிடக்கூடாது என்கின்ற தொனியிலும் இருக்கிறது அவருடைய நடை.
“யாருங்க நீங்க?”
“இந்த நேரத்தில் இங்க என்ன வேலை உங்களுக்கு?” என்று கேட்கத் தோன்றியது. ஆனால் உள்ளுக்குள் ஒருவித பயமும் பதட்டமும் இந்தக் குளிரோடு சேர்த்து என்னை அழுத்தியதில் பாக்கெட்டில் இருந்த ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து இழுத்தேன். குளிருக்கு இதமாக இருந்தது. மெல்ல இழுத்து புகையை என்னுள் பயணிக்க விட்டதில், என் பதட்டமும் பயமும் கொஞ்சம் கொஞ்சமாக புகையாக வெளிவந்தது.
என்ன பண்ணிடுவான் அவன் என்னை?
எப்படியும் அந்த ஆளுக்கு அம்பது வயசுக்கு மேல இருக்கும், அந்த கிழவனால என்ன பண்ணிட முடியும்.? அப்படியே ஏதாவது பண்ணாலும் சத்தம் போட்டுக் கத்தினா எல்லாரும் வந்துடுவாங்க இதுதான் நம்ப தெருவாச்சே! எதற்கும் கையில் ஒரு கட்டைய எடுத்துக்கலாம் என்று யோசித்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கேட்டை வந்தடைந்தேன்.
பனி படர்ந்த வீதியில் சோடியம் விளக்கின் ஒளி குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது. சுற்றிலும் பார்த்ததில் எத்திசையிலும் அந்த பாய் அங்கேயில்லை.
ஒருவேளை நான் வருவதை அந்த ஆள் பார்த்து பயந்து ஓடிவிட்டானா? இருந்தாலும் இருக்கும் என்கின்ற எண்ணத்தின் மிதப்பில் இன்னுமொரு சிகிரெட்டை பற்றவைத்து இழுக்கத் தூண்டியது.
உடலை உறையவைக்கும் குளிரில் இதமாக ஒலித்தது “மியாவ்” என்ற ஒரு பூனையின் சத்தம். அதன் கண்கள் மட்டும் தூரத்தில் மின்னிக் கொண்டிருந்தது. சத்தம் கேட்ட அடுத்த கணம் என் காலுக்குப் பின்புறத்தில் இருந்து சீறிப்பாய்ந்த நாய்கள் ஒரு எல்லைக்குள் நின்று குலைக்கத் தொடங்கின. சிறிது நேரம் குலைத்து ஓய்ந்த நாய்கள் காரின் அடியில் வாலைச் சுருட்டிக் கொண்டு படுத்துவிட்டன.
1
ஞாயிறுகள் மட்டும் எப்போதும் 11 மணிக்குதான் விடிகிறது. பல நாட்கள் காலை உணவை விடுத்து நேரடியாக மதியவுணவை சாப்பிடுவது இந்த ஞாயிற்றுக்கிழமைகளில் தான். பிரியாணியைச் சாப்பிட்டால் தான் இந்த ஞாயித்துகிழமைக்கான மரியாதையே! அதிலும் “ஜலால் பாய்” கடையில் கிடைக்கும் பிரியாணி சாப்பிட்டால் அந்த நாள் புனிதமடைந்துவிடும். 11 மணியில் இருந்து 1 மணி வரையில் தான் அங்கு கிடைக்கும். வாரத்தில் எல்லா நாட்களிலும் கூட்டம் அலைமோதும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையின் மதியம் கூட்டம் ஜெகஜோதியாகவே இருக்கும். அந்தநேரம் அப்பகுதியில் டிராஃபிக்கும் அதிகமாக இருக்கும். உள்ளே புகுந்து ஒரு பொட்டலத்தை வாங்கி வந்துவிட்டால் சாதனைதான். பிரியாணியின் வாசனையை நினைக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறி வயிறு தவம் கிடக்கிறது.
கரீமைப் பிடித்தால் ஜலால் கடையில் சுலபமாக பிரியாணிப் பொட்டலத்தை வாங்கிடலாம். அவனுடைய மாமா அந்த கடையில் தான் வேலை செய்கிறார். முதலில் அவனைப் பார்க்க வேண்டும்.
கரீமின் வீடு என் வீடு இருக்கும் தெருவிற்கு பக்கத்துத் தெருவில் இருக்கிறது. அத்தெருவில் பாதிக்குமேல் இஸ்லாமியர்கள் தான் வசிக்கிறார்கள். தெருவின் துவக்கமே ஆடு மாடுகளை வெட்டித் தொங்கவிட்டிருப்பார்கள். ஒருபக்கம் ஆட்டின் தோலும் மாட்டின் தோலும் உப்பில் ஊறியிருக்கும் அவற்றை வண்டியில் ஏற்றிக் கொண்டிருப்பார்கள். இருபதிற்கும் மேற்பட்ட பிரியாணிக் கடைகள் அருகருகே இருந்தும் கூட்டம் குறையாமல் இருக்கும். கவிச்சி வாசனையும் பிரியாணி மசாலா வாசனையும் கலந்த வாசம் நம்மை இழுக்கும். மறுபக்கம் முகம் சுளிக்கவும் செய்யும். ஐயோ ஆடுகள் எல்லாம் பாவம் இப்படி வெட்டித் தொங்க விட்டு இருக்காங்களேனு மனம் பதைப்பதைக்க கடந்தால் தொடர் பிரியாணிக் கடைகளின் வாசனை அந்த எண்ணத்தை மடைதிருப்பும்.
“கொன்னா பாவம் தின்னா போச்சுனு” சின்ன வயசுல என் தாத்தா சொல்லி கவிச்சியாக் கொடுத்து வளத்தாருனு என் அம்மா அடிக்கடி சொல்லும்.
ஞாயித்துக்கிழமை பிரியாணி சாப்பிட என்ன என்னலாம் செய்ய வேண்டியதா இருக்கு என்று யோசித்துக் கொண்டே கரீம் வீட்டை நெருங்கியாச்சி. அதே சாம்பல் நிறத் தாடியும். வெள்ளை குல்லாவும் அணிந்திருந்த பாய் என் கண்ணில் பட்டார். பகலின் வெளிச்சத்தில் அவரின் முகம் தெளிவாகத் தெரிந்தது விரிந்த கண்ணும் அடர்ந்த தாடியுமாய் பார்க்க பயமாக இருந்தது. பாய்ங்க எல்லாம் மோசம். எல்லா விஜயகாந்த் படத்திலயும் அவங்க தான் வெடிகுண்டு வச்சி கொல பண்ணுவாங்க. ஆடுமாடு எல்லாம் அவங்க தான் வெட்டறாங்க. அதிலும் அந்த தாடி, குல்லா, கைலியோட இருக்கறவங்கள பாத்தாவே பயமா இருக்கும். இந்த பாயும் அப்படிதானா ஐயோ இந்த தெருவில் கரீமை தவிர யாரும் எனக்கு தெரியாது. பயம் உடல் முழுக்கப் பரவியது. ஆனால் கரீமும் அவங்க ஆளுதான் என்று எண்ணி பதட்டம் அதிகமானது. அவரின் கண்கள் என்னையே பார்த்திருந்தது என்னை நோக்கி நடந்து வந்தார். எனக்குள் பயம் இன்னும் அதிகமானது. கரீமை பார்க்காமலே அங்கிருந்து வந்துவிட்டேன்.
2
ஒரு பிரியாணிக்காக உயிரை விட்டிருப்பேன் இன்று. இருந்தும் பிரியாணியை சாப்பிடாமல் இல்லை. சேகர் அண்ணன் கடையில் வாங்கிய பிரியாணியில் இன்றைய ஞாயித்துக்கிழமை போச்சு. என்னதான் சொல்லு பாயிங்க செய்யற பிரியாணியே தனி டேஸ்ட்டுதான். அந்த பாய் ஏன் என்னை அப்படி முறைத்தார். ஒருவேளை நேத்து நைட்டு நான் கட்டை எடுத்துக் கொண்டு வந்ததை பார்த்திருப்பாரோ? அவர் எதுக்கு இங்க வந்தார். பாம் எதும் வச்சி இருப்பாரா!
நிமிடத்திற்கு நிமிடம் என்னுடைய கற்பனையால் என் பதட்டமும் அதிகமாகின.
3
சிகரெட்டின் புகை பனியில் கலக்காமல் தனித்து அலைந்து கொண்டிருந்தது. மணி 9 ஆகிறது. இன்னமும் எந்த பாமும் வெடிக்கல. அப்படின்னா அந்த பாய் வச்ச பாம் வேலை செய்யல. இல்ல பனியில் ஈரமாகி வெடிக்காம போய்ட்டிருக்கும். இன்னைக்கு நைட்டு கட்டாயம் வந்து என்ன ஆச்சுனு பாப்பாரு அந்தாளு என்று மனம் அதீதமாய் யோசித்துக் கொண்டிருந்த நேரம். டார்ச் லைட்டை அடித்துக் கொண்டு “லட்சுமி” “லட்சுமி” என்று சொல்லிக் கொண்டே வந்தார்.
நான் நினைச்சது சரியாகிடிச்சு. இன்னைக்கு ஒரு கை பாத்துடணும். அந்த ஆள் முதலில் என்ன பண்றானு பாத்துட்டு கையும் களவுமா பிடிச்சிடுவோம் என்று நினைத்துக் கொண்டு ஜன்னலின் வழியே பார்த்தேன்.
4
ஒரு கையில் டார்ச் லைட்டை அடித்துக் கொண்டு “லட்சுமி” “லட்சுமி” என்று சொல்லித் தலையை குனிந்து பார்த்துக் கொண்டிருந்தார் ஒவ்வொரு இடத்திலும்.
தைரியத்தை வரவழைக்க சிகரெட்டை பற்றவைத்து நாலு இழு இழுத்துவிட்டு கையில் ஒரு தடியுடன் கம்பிகளினால் ஆன கேட்டின் உள்பக்கம் நின்று.
“யாருங்க நீங்க.. இந்த நேரத்தில் இங்க என்ன பண்றீங்க?”
என்று கம்பீரமாக குரல் எழுப்பினேன். குரல் வலுவாக இருந்தாலும் உள்ளுக்குள் பயம் முழுவதுமாக ஒட்டிக் கொண்டிருந்தது. பதில் சொல்வதற்காக கேட்டை நோக்கி வந்ததைப் பார்க்க பயமும் பதட்டமும் அதிகரித்தது.
“கேக்கறேன் இல்ல.. பதில் சொல்லுங்க”
என்று குரலை உயர்த்தினேன்.
“அது ஒன்னுமில்ல தம்பி” என்று இழுத்தார்…
நான் மீண்டும் குரலை உயர்த்தினேன்…
தம்பி… நான் ஒரு பூனை வளக்கறேன். அது நைட் ஆனா வெளிய வந்துடுது. எங்கனா நாய்கிட்ட மாட்டி செத்துடுமோனு பயம். அதான்.. என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கருப்பு பூனை அவரின் காலை வந்து தழுவிக் கொண்டது. லட்சுமி என்று சொல்லி தலையை வருடி பூனையைக் கையில் தூக்கிகொண்டு “நேத்து கரீம் வீட்டுகிட்ட உங்கள பாக்கும் போதே சொல்ல வந்தேன் தம்பி. நீங்க ஏதோ அவசரமா போய்ட்டீங்க” என்று சொல்லி மெலிதாகச் சிரித்து நடந்தார். பூனையின் கண்கள் மட்டும் இருட்டில் மின்னிக் கொண்டிருந்தது.
எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் அவர்களுக்கு சிறப்பிதழ் ஒன்றை உருவாக்க வேண்டுமென எனக்குள் எழுந்த விருப்பம் ஒரு வாசகனுடையது. நான் லக்ஷ்மி சரவணக்குமாரின் சிறுகதைகளை வாசிக்கத்தொடங்கிய நாட்களில் வியப்பு மேலிட்டது. அவருடைய கதையுலகின் பின்னணிகள் ஒவ்வொன்றும் தனித்தனியானவை. தீவிரமான இலக்கிய வாசகன் ஒருவன் தவறவிடக்கூடாத எழுத்தாளர்களில் லஷ்மி சரவணக்குமாரும் ஒருவர் என துணிபுகொண்டேன். எழுத்தாளனுக்கும் அவனது மொழிக்குமிடையே நிகழும் இணக்கம் குறித்தும் அவன் மொழியை ஒரு சவாலாகக் கொண்டு தனது புனைவுலகை கட்டியமைக்கும் விதம் குறித்தும் லக்ஷ்மி சரவணக்குமாரின் படைப்புக்களில் காணும் தெளிவு குறித்தும் ஆச்சரியப்பட்டேன். இரண்டாயிரங்களின் தொடக்கத்தில் தமிழ்ச் சிறுகதைப் பரப்புக்குள் பிரவேசம் கொண்ட படைப்பாளிகளுள் லக்ஷ்மி சரவணக்குமார் தனித்துவம் மிக்கவர். அதன்பொருட்டு அவருடைய எழுத்தியக்கச் செயற்பாட்டின் மீது உரையாடலையும் கவனத்தையும் நிகழ்த்துவது அவசியமாகிறது. வாசக மரபு சுருங்கிய இந்தச் தமிழ்ச் சூழலில் எழுத்தாளர் ஒருவரின் படைப்புலகம் சார்ந்து சிறிய அவதானிப்பையும் உரையாடலையும் நிகழ்த்துவது முக்கியமெனப்படுகிறது. அந்த வகையில் யாவரும் இணையத்தளத்தின் வாயிலாக எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் சிறப்பிதழ் வெளியாகிறது. இந்த இதழில் பங்களிப்புச் செய்த சக எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் நன்றி.
எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் எனது முன்னோடிகளில் ஒருவர். அவருடைய சிறுகதைகள் என்னை வெகுவாக ஆட்கொண்டன. இரண்டாயிரங்களுக்கு பின்னரான தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் தவிர்க்கமுடியாத எழுத்துக்களுக்கு உரித்தானவர். இன்றைக்கு வாசிப்புக்குள் நுழையும் இளைய தலைமுறையினரால் அதிகமாக வாசிக்கப்படும் இளம் எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார். இவரின் சிறுகதைகளைக் கடந்து நாவல்கள் பெருமளவில் வாசிக்கப்படுகின்றன. முதல் நாவலான “உப்புநாய்கள்” நாவல் இவருக்கு பெரிய வாசகத்தளத்தை ஏற்படுத்தியது எனலாம். “கானகன்” நாவல் இளம் படைப்பாளிகளுக்கான யுவபுரஸ்கார் விருதினைப் பெற்றது. அந்த விருதினை மெரினா போராட்டத்திற்கு ஆதரவாக திருப்பியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலக்கியம், எழுத்துச் செயற்பாடு போன்றவற்றில் தீவிரத்தன்மை கொண்டவர் நீங்கள். இன்றைக்கு நீங்கள் எழுத வந்து பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. இதுவரையிலுமான இந்தப் பயணத்தை ஒரு படைப்பாளியாக எவ்வாறு உணர்கிறீர்கள் என்று கூற முடியுமா?
இலக்கியம் ஒரு அடையாளத்தைத் தந்திருப்பதாக மட்டும் சுருக்கிச் சொல்லிவிட முடியாது. துயரங்களுக்குப் பழகிக் கொள்வதற்கும் அதனூடே வாழ்வை நம்பிக்கையோடு எதிர்கொள்வதற்குமான ஒரு மனநிலையை வாசிப்பும் எழுத்தும் உருவாக்கியிருக்கிறது. மகிழ்ச்சி என்பது ஒரு தற்காலிகமான விருந்தினர் என்பதைத் தாண்டி இதுவரையிலான என் வாழ்வில் அதற்குப் பெரியதொரு பங்களிப்பில்லை. சில உயிர்கள் சபிக்கப்பட்டவை. துயரங்களிலும் அவமானங்களிலும் ஏமாற்றங்களிலும் உழன்று தன்னை ஏதாவதொரு வழியில் மேன்மைப்படுத்திக் கொள்ள போராடுவதைக் காலம் முழுக்கச் செய்து தோற்கும் அந்த உயிர்களில் ஒருவனாக மட்டுமே இப்போது நான் எனக்குத் தெரிகிறேன். யோசித்துப் பார்த்தால் நானென்பது துயரங்களின் மலைக்குவியல். இந்த வேதனைகளின் வடுக்களுக்கு ஆறுதலாயிருப்பது இலக்கியம். இன்னொரு வகையில் சொல்வதானால் எழுத்தின் நிழலில் தான் ஆறுதலாக இளைப்பாற முடிந்திருக்கிறது. தனிப்பட்ட வாழ்வு ஒருபோதும் என்னை கசப்புகளிலிருந்து விடுவிக்காது என்றாலும் இன்னும் சில காலங்களுக்கு இந்த வாழ்வைப் பற்றிக்கொள்ள எனக்கு இலக்கியம் போதுமானது. எந்தவொன்றும் முழுமையானதல்ல, எந்தவொன்றும் நம்பிக்கைக்குரியதல்ல, எந்த உயிரும் நிரந்தரமானதல்ல என்றானால் உயிர் வாழ்கிற காலத்தில் கலையின் மீதான பற்று ஒன்றே மேன்மையானதென்கிற புரிதலைத்தான் அனுபவம் கற்றுக் கொடுத்திருக்கிறது.
உங்களுடைய நாவல்களில் “கானகன்” முக்கியமான பிரதி. ஆனால் அது உங்கள் புனைவு உலகின் பொதுவான அடையாளங்களிலிருந்து விலகியிருந்ததென நம்புகிறேன். ஒரு படைப்பாளனுக்குரிய சவாலாக அதனை முயற்சித்துப் பார்த்தீர்களா?
ஒரு எழுத்தாளன் எல்லா வகைமைகளிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவேண்டுமென்பது என் அபிமானம். மேலும் இந்த எழுத்தாளரின் கதைகள் இப்படித்தானிருக்கும் என்ற ஒற்றைப் புள்ளியில் சுருக்கிக் கொள்கிறவனாக என்னாலிருக்க முடியாது. எனக்கு மிக நன்றாய்த் தெரிந்த ஒன்றை எழுதுவதை விட தெரியாத ஒன்றை எழுதுவதற்கு மெனக்கெடும் போதுதான் என் கற்பனையுலகு விரிவு கொள்கிறது. புனைவெழுத்தாளன் தன் கற்பனையின் எல்லைகளை சிறிதாக்கிக் கொள்வது ஆரோக்கியமானதல்ல. புனைவெழுத்தின் மீதான மயக்கத்திற்குக் காரணம் எல்லையற்ற கற்பனை தரும் இன்பம் தான். ஒவ்வொரு மனிதனின் கற்பனையிலும் ஒரு காடுள்ளது, ஒரு கடலுள்ளது, மலைகளும் தோட்டங்களும் பிரத்யேகமாக அவர்களின் அனுபவ அறிவிலிருந்தும் காட்சி ஊடகங்களின் வழியாகவும் சேர்மானமாகியுள்ளன. புத்தகங்களின் வழியாய் அவர்கள் அந்தக் காட்டை, அந்த மலையை, அந்தக் கடலைத்தான் தேடுகிறார்கள். அவர்கள் கற்பனையிலில்லாத ஒரு உலகைப் படைப்பதே கானகனை எழுதும்போது என் முன்னாலிருந்த சவால். மனிதர்களின் வழியாய்க் காட்டையும், காட்டின் வழியாய் மனிதர்களையும் ஊடுருவிச் செல்லும் ஒரு அனுபவத்தின் வெளிப்பாடே அந்த நாவல். கானகன் எழுதுவதற்காக மேற்கொண்ட பயணங்கள், சந்தித்த மனிதர்கள் நாவலின் உருவாக்கத்தில் மட்டுமல்லாமல் எனது தனிப்பட்ட வாழ்வைப் புரிந்து கொள்ளவும் உதவியாய் இருந்திருக்கிறார்கள். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவைகளை எளிமையாய் வைத்துக்கொள்ள வேண்டுமென்கிற புரிதலுக்கு நான் வருவதற்கு ஒரு பழங்குடி மனிதரின் அனுபவம் துணையாய் இருந்திருக்கிறது. நான் இன்னொருவரின் வாழ்விலிருந்து தெரிந்து கொண்டதை என் கதைகளில் வெளிப்படுத்துகிறேன். ஒருவகையில் வாழ்க்கைக் குறித்த அபிப்பிராயங்களையும், அறங்களையும், நாவல்களிலும், கதைகளிலும் ஏதோவொரு இடத்தில் குறிப்பிடுவது வாசகனுக்காக மட்டுமல்ல, எனக்காகவும் தான்.
உங்களுடைய படைப்புலகின் பின்னணிக்கு பொதுத்தன்மை கிடையாது. உங்கள் சிறுகதைகள் பல பின்னணிகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஒரு எழுத்தாளன் ஒரே பின்னணியை மட்டுமே எழுதுவது என்பது பலவீனமானதா என்ன! அ.மாதவனின் கடைத்தெருக் கதைகளோ, வேலராம மூர்த்தியின் சிறுகதைகளோ அப்படி பலவீனமானதாகவோ சுருக்கிக் கொண்டதாகவோ இல்லையே, இவர்களின் ஒவ்வொரு கதையும் வாசகனுக்கு விரிவை ஏற்படுத்துகிறதல்லவா?
ஒவ்வொரு எழுத்தாளனும் ஒவ்வொரு விதமாக இந்த உலகை அணுகுகிறார்கள். நான் ஒரே இடத்தில் நிலைத்திருப்பதை விரும்பாதவன் என்பதால் நிறைய புதிய மனிதர்களை சந்திக்கக் கூடியவனாகவும், புதிய அனுபவங்களுக்கு ஆட்படுகிறவனாகவும் இருக்கிறேன். ஒருவகையில் இது என் தேர்வு. இதனாலேயேதான் என் கதைகளும் வெவ்வேறு நிலங்களின் பின்னணியில் நிகழ்கின்றவையாய் இருக்கின்றன. ஒரே பின்னணியில் கதைகள் எழுதுவதை பலவீனமானதில்லை, என் இயல்பிற்கு அப்பாற்பட்டது என்று குறிப்பிடவே விரும்புகிறேன். நீங்கள் குறிப்பிட்டதுபோல் ஆ. மாதவன் ஒரு சின்னஞ்சிறிய உலகத்தைச் சுற்றியே எழுதியிருந்தாலும் அந்த உலகத்திற்குள் இருந்த மனிதர்களை வேறு எவரும் நெருங்கிச் சென்று பார்க்க முடியாத நுட்பத்தோடு அணுகியிருந்தார். ஒரே கடைத்தெருவின் வெவ்வேறு முகங்களைக் காட்சிப்படுத்தக்கூடிய வல்லமை அவருக்குண்டு. ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமானதா என்றால் நிச்சயமாக இல்லை. மேலும் வேல ராமமூர்த்தியின் கதைகள் ஒரே பின்னணியில் எழுதப்பட்டதாக நான் கருதவில்லை. ஒரே நிலத்தை மீண்டும் மீண்டும் எழுதினாலும் அவரது கதைகளின் உலகு வெவ்வேறான எல்லைகளுக்குள்பயணிப்பதாகவே இருக்கிறது. அவரால் அன்னமயில் மாதிரியான ஒரு கதையையும் எழுதமுடியும், கோட்டைக்கிணறு மாதிரியான கதையையும் எழுத முடியும். அவரது அனேக கதைகளும் நாடகீயமானதொரு முடிவை நோக்கி நகர்வதால் அந்தக் கதைகள் ஒரே தன்மை கொண்டதாய் நமக்குத் தோன்றலாம், ஆனால் அது உண்மையல்ல.
சமகால சிறுகதைகளில் யதார்த்தவாத எழுத்துக்களே நிரம்பி வழிகின்றன. தமிழில் மாய யதார்த்தவாதச் சிறுகதைகள் அளவில் குறைவெனத் தோன்றுகிறது. அதன் காரணமாக எதனைக் கருதுகிறீர்கள்?
ஊடகங்கள் குறைவாயிருந்தபோது உரையாடுவதற்கான அவகாசமும் தேடல்களும் நிறைய இருந்தன. ஊடகங்கள் அதிகரித்தபின் இரைச்சல்கள் அதிகரித்து கோட்பாட்டு ரீதியிலான ஆரோக்கியமான உரையாடல்கள் அருகிப்போனதை இதற்கொரு காரணமாய்க் குறிப்பிடத் தோன்றுகிறது. புதியவகைக் கதைகள் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் முயற்சித்துப் பார்க்கப்பட்டதற்கு தமிழின் கோட்பாட்டாளர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் மிக முக்கியமான பங்குண்டு. சிற்றிதழ்கள் ஒரு இயக்கமாக செயல்பட்டதை இவ்விடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். ’நடை’ ‘கசடதபற’ ‘அஃக்’, ‘ழ’ ‘எழுத்து’ கல்குதிரை, நிறப்பிரிகை, அட்சரம், புது எழுத்து என ஏராளமான சிற்றிதழ்களை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். புனைவெழுத்தாளர்கள் இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்கள். தமிழின் மிகச்சிறந்த புனைவெழுத்தாளர்கள் சிற்றிதழ்களின் வழியாகவே வளர்ந்து வந்தவர்களாய் இருக்கிறார்கள். முக்கியமாய் புதுவகைக் கதைகளைத் திறம்பட எழுதியவர்களைச் சொல்லலாம். இந்தச் சிற்றிதழ்கள் நடத்துவதற்காக அதை நடத்தியவர்கள் இழந்தவை அதிகம், ஆனால் தன் மொழிக்கு தன்னாலான ஏதோவொன்றைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென்கிற பிடிவாதம் மட்டுமே அவர்களை இயங்கச் செய்தது. அந்தப் பிடிவாதங்களும் கலையின் மீதான நம்பிக்கைகளும் இந்தத் தலைமுறையினரிடம் சரியத் துவங்கியிருப்பதாக நினைக்கிறேன். நாம் கேளிக்கையைச் சுற்றி எல்லாக் கலைகளையும் நகர்த்திக் கொண்டிருக்கிறோம். கலையை அந்தந்த நேரத்திற்கான களிப்பாய் மாற்றிவிட்டதாலேயே எந்தவொன்றையும் ஆழ்ந்து கற்பதற்கான பொறுமையற்றவர்களாக மாறிவிட்டிருக்கிறோம். அதற்காக யதார்த்தவாதக் கதைகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. தமிழில் அந்தவகைக் கதைகளிலும் அசாத்தியமான சாதனைகளைச் செய்தவர்கள் அனேகமுண்டு. இன்றைக்கு எழுதுப்படுகிற கதைகளில் நிதானம் இல்லை என்பதுதான் பெருங்குறையாகத் தோன்றுகிறது.
கே: நீங்கள் கூறும் “நிதானம்” எனும் சொல்லை எந்தப் பொருளில் விளங்கிக்கொள்ள வேண்டும்?
ப: சமீபமாய் எழுதப்படும் கதைகளில் அனேகம் தட்டையான நிகழ்வுகளின் கலவையாக மட்டுமே வெளிப்படுகின்றன. கதை நிகழும் நிலத்தையோ அந்நிலத்தின் மனிதர்களையோ ஆழ்ந்து சென்று பார்க்கும் நுட்பம் இருப்பதில்லை. ஒரு கதை எழுதுவதற்கான உந்துதல் கிடைத்ததும் எழுதத் துவங்கிவிடும் இவர்கள் அந்தக் கதையின் நுட்பத்திற்காக மெனக்கெடுவதில்லை. வண்ணநிலவனும், திலீப் குமாரும், ஆ. மாதவனும் தங்கள் கதையாடலில் இருந்த அடர்த்தியின் காரணமாகவே திரும்பத் திரும்ப வாசிக்கப்படுகிறார்கள். வண்ணநிலவனின் பலாப்பழம் ஐந்து பக்கங்களுக்குள் அடங்கிவிடக்கூடிய கதைதான், சம்பவமென்று பார்த்தாலும் புதிரானதோ மர்மமானதோ இல்லை. அந்தக் கதையின் நுட்பமும் மேன்மையும் சம்பவம் நடக்கும் சூழலினாலும் அதில் வரும் கதாபாத்திரம் எத்தனை பூஞ்சையானவன் என்பதை வெளிப்படுத்துவதினாலும்தான் உருவாகிறது. சம்பவங்களைச் சுவாரஸ்யமாகச் சொல்லும் வணிக எழுத்துகளில் கூட சிலசமயம் இதுபோன்ற அசாத்தியமான தருணங்கள் உருவாவதுண்டு. உதாரணத்திற்கு சுஜாதாவின் நகரம் சிறுகதை. ஒரு கதைக்கான மெனக்கெடுதலென்பது சம்பவத்தை சுவாரஸ்யமாகச் சொல்வதற்கும் அப்பால் கதை நிகழும் சின்னஞ்சிறு உலகை உயிர்ப்போடு உருவாக்குவதற்காக இருக்க வேண்டும்.
கே: கதையின் உள்ளீட்டை நேரடியாக வாசகனுக்கு அளிக்கும் வகையிலான எழுத்துக்களைத் தான் நீங்கள் தட்டையான நிகழ்வுகளின் கலவையாக வெளிப்படுகின்றன என்று விமர்சிக்கிறீர்கள் என்பது எனது புரிதல். இது சரிதானா?
ப: இல்லை. எந்த உள்ளீடுகளுமற்ற சம்பவக் கோர்வைகளாய் இருக்கின்றன என்று குறிப்பிட விரும்புகிறேன். சம்பவங்களைத் தொகுத்துக் கொடுப்பதுதான் புனைவெழுத்தாளனின் வேலையென்றால் பத்திரிக்கைகளில் துண்டுச் செய்திகளுக்கும் புனைவிற்கும் என்ன வேறுபாடு? எந்தவொரு சம்பவத்தையும் தனது வாழ்வனுபவத்தின் வழியாகவும் வாசிப்பனுவத்தின் வழியாகவும் ஒரு எழுத்தாளன் உள்வாங்கிக் கொள்ள வேண்டியது அவசியம். பார்ப்பது, படிப்பது, கேள்விப்படுவதெல்லாமே எழுதுவதற்கான கச்சாப் பொருட்கள் மட்டுமே. நான் பார்த்த சம்பவத்தை எழுதுகிற போது நான் பார்த்தது போலவே எழுதியிருந்தால் அது எனக்கான தோல்வி.
ஒரு புனைவெழுத்தாளனின் எழுத்து ஊக்கம் அவனது வாழ்வு அனுபவங்களால் மட்டுமே நிகழ்கிறதா?
நிச்சயமாக இல்லை. வாழ்வனுபவம் ஒரு தூண்டுதல் மட்டுமே. எல்லாக் கலைப் படைப்புகளும் அதைப் படைக்கிறவனின் கற்பனையின் வழியாகவே முழுமையடைகின்றன. அனுபவங்கள் வாழ்வின் மீதும், சமூகத்தின் மீதும் கேள்விகளை எழுப்பும்போது அந்தக் கேள்விகளை படைப்பாற்றலாக உருமாற்ற வாசிப்பும் கற்பனையும் அவசியமாகிறது. எப்படி நல்ல வாசிப்பு மட்டுமே ஒருவனை எழுத்துக் கலைஞனாய் மாற்றிவிடாதோ அதுபோலத்தான் அனுபவங்களும். கடலில் நீந்த வேண்டுமென்கிற லட்சியம் கொண்டவனுக்கு நீண்ட கால நீச்சல் அனுபவத்தோடு கடலைக் குறித்த அறிவும் முக்கியமில்லையா? மொழியும் கடல்தான்.
நீங்கள் எழுத்துலகிற்குள் வந்த காலகட்டம் ஆரோக்கியமானதல்லவா. நிறைய உதிரிச் சிறுபத்திரிக்கைகள், இலக்கிய உரையாடல்கள் என ஒரு கலைத்தீவிரம் சூழ்ந்திருந்திருக்கும். எழுத்தாளர் கோணங்கியுடனான பயணமே உங்களின் பொக்கிஷமென சொல்லியிருந்தீர்கள். அந்தக் காலத்தை உங்கள் நினைவில் எவ்வாறு எழுதியுள்ளீர்கள்?
ஆம் அந்தக் காலகட்டம் மிக ஆரோக்கியமானது. 2001-ம் ஆண்டு வாக்கில் சிறுபத்திரிக்கைகளுடனான அறிமுகம் கிடைத்தது. அதன்பிறகு தனிப்பட்ட வாழ்வில் எதிர்கொண்ட ஏராளமான குரூரங்களையும் வலிகளையும் கடந்து 2006-ம் ஆண்டு வாக்கில்தான் சிற்றிதழ் சார்ந்தவர்களோடு இயங்க முடிந்தது. மதுரையில் அந்தக் காலகட்டத்தில் ஏராளமான இலக்கிய நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தன. கவிஞர் ஹாமிம் முஸ்தஃபாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த புதியகாற்று சிற்றிதழின் சார்பில் மதுரையில் சிறப்பான கூட்டங்களும் விவாத அரங்குகளும் ஒருங்கிணைக்கப்பட்டன. இன்னொருபுறம் யதார்த்தா ராஜன் உலகத் திரைப்படங்களைத் தொடர்ந்து திரையிட்டுக் கொண்டிருந்தார். பொத்தாம் பொதுவாக இல்லாமல் ஒவ்வொருத் திரையிடலுக்குப் பின்னாலும் ஒரு காரணமிருக்கும். ஒரு உதாரணத்திற்குச் சொல்வதென்றால் மெக்பத் எழுதப்பட்டு 150 வருடங்களானதை ஒட்டி அதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட சிறந்தத் திரைப்படங்களை திரையிட்டதைச் சொல்லலாம். திரைப்படங்களை எப்படிப் பார்க்க வேண்டும்? என்ன மாதிரி திரைப்படங்கள் எடுக்கப்பட வேண்டும் என்ற புரிதலை உருவாக்கியதில் ராஜன் ஸாருக்கு மிக முக்கியமான பங்குண்டு.
இன்னொருபுறம் அப்போது த மு எ க ச-வில் நான் தொடர்ந்து இயங்கி வந்ததால் தொடர்ந்து வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் உரையாடுவதற்குமான ஒரு வெளி கிடைத்துக் கொண்டிருந்தது. த மு எ க ச வின் சார்பில் நடத்தப்பட்ட நாட்டார் வழக்காற்றியல் பயிற்சி முகாமும் நாவல் எழுதும் பயிற்சி முகாமும் நிறையக் கற்றுக்கொள்ள உதவியாய் இருந்தன. எல்லாவற்றிலும் முக்கியமாய் சிற்றிதழ்களில் வெளியான கதைகள் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. ஜே.பி. சாணக்யாவின் ஆண்களின் படித்துறை வெளியானபோது நிகழ்ந்த உரையாடலை இப்போதும் என்னால் மறக்க முடியாது. சிற்றிதழ்களில் ஒரு நல்ல கதையை எழுதிவிடுவது எளிமையான காரியமாய் இருந்திருக்கவில்லை. கதைகளின் மீதான விவாதங்கள் வயதைக் கடந்த நட்புகளை உருவாக்கியது. 2005-ம் ஆண்டு வாக்கில் ஊரிலிருந்து வெளியேறி அலையத் துவங்கியபோது க.சீ. சிவகுமார், கோணங்கி என ஏராளமானவர்களின் வழியாய் என் உலகம் விரியத் துவங்கியது. ஏன் எதற்கென்றில்லாமல் தமிழ்நாட்டின் எல்லா மூலைகளுக்கும் அலைந்து திரிந்திருக்கிறேன். என் கதைகள் இந்த அலைச்சல்களின் வழியாகவும் நான் சந்தித்த நண்பர்களோடு உரையாடியதன் வழியாகவுமே உருவாகின. புதுக்கோட்டை, விருதாச்சலம், ஓசூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், பாண்டிச்சேரி, கடலூர், பொள்ளாச்சி, திருநெல்வேலி, தேனி என எந்தப் பக்கமாகச் சென்றாலும் அந்தக் காலகட்டத்தில் பழக்கமான நண்பர்களின் வீட்டுக்கதவுகள் எனக்காக எப்போதும் திறந்திருக்குமென்கிற நிறைவும் மகிழ்வும் எனக்குண்டு. அந்த நண்பர்கள் என் வறுமையையும் துயரையும் பார்த்தவர்கள், அதனால்தான் போராடி மேலேறி வந்த நாட்களில் எனக்காக மகிழ்ச்சியடைந்தார்கள். எழுத்தாளனின் வாழ்வு எழுதுவதோடும், வாசிப்பதோடும் மட்டுமே முடிந்துபோவதாய் எனக்குத் தோன்றவில்லை. சக எழுத்துக்காரனோடு இணக்கத்தோடும் பிணக்குகளோடும் அவன் கொண்டிருக்கும் உறவுகளும் சேரும்போதுதான் அவன் முழுமையடைகிறான்.
வாழ்வின் கொந்தளிப்பும் அலைக்கழிப்பும் எழுதுவதால் தணியுமென சிலர் சொல்வதுண்டு. இல்லையேல் புனைவின் வழியாக இன்னும் கொந்தளிக்கிறதா? உங்களுடைய அனுபவம் என்ன?
இயல்பிலேயே நாம் அதீதத்தை விரும்புகிறவர்கள். அதனாலேயே நமது எழுத்தாளர்கள் கொந்தளிப்புகளில் இருந்து தம்மைத் துண்டித்துக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். ”இலக்கியத்தின் விளைவு வாழ்வை முழுமையாகப் புரிந்துகொள்வதும், அதனை முழுமையாக வாழ்வதும்தான்” என்கிறார் ராபர்ட் ஃப்ராஸ்ட். இந்தியா மாதிரியான அரசியல் குழப்பங்களும் நெருக்கடிகளும் மிகுந்த தேசத்திலிருந்து எழுதும் ஒருவன் ஒருபோதும் கொந்தளிப்புகளில் இருந்து துண்டித்துக் கொள்ளவியலாது என்பதுதான் யதார்த்தம். எழுத்து வாழ்வை பண்படுத்துவதாக இருக்கிறது. ஆனால் கொந்தளிப்புகளும் அலைக்கழிப்பும் தணிவதாகத் தோன்றவில்லை. டான் குவிக்ஸாட்டில் வரும் நாயகனைப்போல் வாழ்வை அவலமானதொரு நாடகமாக எதிர்கொள்ள கொள்ள முடியுமானால் கொந்தளிப்புகளை எளிதாகக் கடந்துவிடலாம் தான். நமது சூழலில் அப்படியிருக்க சாத்தியமில்லை என்றுதான் தோன்றுகிறது.
உப்பு நாய்கள் நாவலிலிருந்து ரூஹ் வரையிலும் எழுதப்பட்ட உலகங்கள் வேறுவேறானவை. குறிப்பாக கொமோரா நாவலின் உலகம் – பாத்திரங்களின் உளவியல் ஆகியவை இலக்கிய வெளியில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அது நிகழாமல் போவதற்கான காரணம் தான் என்ன?
கதை சொல்லியை ஒருபோதும் நம்பாதே, கதையை நம்பு என்கிறார் லாரன்ஸ். தமிழ்ச் சூழல் இதற்கு விதிவிலக்கு. ஒரு எழுத்தாளனை அவனது அரசியல் காரணங்களை முன்னிறுத்தி விமர்சனங்களுக்குள்ளாக்கலாம், ஆனால் அவனது தனிப்பட்ட வாழ்வை முன்னிறுத்தித் தொடர்ந்து புறக்கணிப்பது அறமற்றது. கொமோராவை முன்னிட்டு எழுப்பப்பட்ட விமர்சனங்கள், அவதூறுகள் எல்லாம் என்னை சோர்வாக்கியது நிஜம். அவதூறுகளை எழுதியவர்களின் நோக்கமும் என்னைச் சோர்வடையச் செய்வதுதான் என்பதைப் புரிந்துகொண்ட தருணத்தில் சோர்வுகளிலிருந்து துண்டித்துக் கொண்டேன். நம்மை வெறுப்பவர்களின் விருப்பங்களுக்காக நாமொரு நாவலையோ கதையையோ எழுதிவிட முடியுமா என்ன? ஒரு எழுத்தாளன் வாசிக்கப்படாமலேயே போவது எத்தனை துயரமோ அதைவிட துயரமானது தவறாகப் புரிந்துகொள்ளப்படுவது. கொமோரா தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதில் வருத்தமுண்டு. குதிரை ரேஸில் எந்தக் குதிரை வெல்ல வேண்டும், எந்தக் குதிரை தோற்க வேண்டுமென்பதை வைத்து சூதாட்டம் நடைபெறுவது போலத்தான் இலக்கிய அங்கீகாரங்களும் விமர்சனங்களும் சூதாட்டமாய் மாறிக் கொண்டிருக்கிறது. ”விமர்சனங்களின் நோக்கம் ஒரு படைப்பு எதுவாக இருக்கிறது என்பதையும் அது எவ்வாறு அதுவாகவே இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுவதேயன்றி அது என்ன சொல்லவருகிறதென்று விளக்குவதாக இருக்கக் கூடாது.” என்கிறார் சூசன் சொண்டாக், துரதிர்ஷ்டவசமாக தமிழ் சூழலில் விமர்சகர்கள் ஒரு படைப்பு என்ன சொல்ல வருகிறதென்பதை விளக்குவதிலேயே அதிகம் அக்கறை கொண்டவர்களாய் இருக்கிறார்கள்.
எனக்கு எதிரான வசைகளும் வெறுப்புகளுமே ஒருவகையில் என்னைத் தொடர்ந்து எழுதச் செய்துகொண்டிருக்கிறது. மெரினா எழுச்சியின் போது அறிவுசார் சமூகத்தின் ஒரு பகுதியினர் அதனை ஆதரித்தபோதும் இன்னொரு பகுதியினர் அதனை முற்றிலுமாக எதிர்த்தனர். மெரினா எழுச்சிக்கு ஆதரவாக என் விருதைத் திருப்பியளித்ததால் எரிச்சலுற்ற ஒரு நபர் வெறுப்பில் உப்புநாய்கள் நாவலுக்கு எழுதிய அவதூறுகள் இன்றும் பிரசித்தமானது. அந்தக் குழு விமர்சனம் எழுதியதோடு நிறுத்தாமல் அந்த நாவலின் பி.டி.எஃப் ஃபைலை ஏராளமான டெலக்ராம் குழுக்களில் உலவவிட்டனர். உப்புநாய்கள் என்றில்லை, கானகன், கொமோரா, ரூஹ் எல்லா நாவல்களுக்கும் இதேதான் நிகழ்கிறது. வாசு முருகவேலின் நூலுக்கு எழுதிய முன்னுரை நண்பர்களை பகைவர்களாக்கியது. அவர்கள்தான் கொமோராவிற்கான அவதூறுகளை முன்னின்று பரப்பியவர்கள். உண்மையில் அவர்கள் எழுதிய விமர்சனங்களையெல்லாம் வாசித்து முதலில் வருத்தம் கொண்டாலும் பிற்பாடு இத்தனை பூஞ்சையான மனிதர்களுக்கு எதிராக நாம் எழுத என்ன இருக்கிறதென பரிதாபமாகத்தானிருந்தது.
உங்கள் பிரதிகளை முன்வைத்து வசைகளும் அவதூறுகளும் நிரம்பியிருக்கின்றன. குறிப்பாக உங்களுடைய எழுதும் கலையின் மீது வீசப்பட்ட அவதூறுகளை ஞாபகப்படுத்துகிறேன். உலக சினிமாக்களில் வரும் காட்சிகளை நீங்கள் பிரதி செய்வதாக கூறப்பட்டதல்லவா, இவற்றைத் தான் நீங்கள் விமர்சனமென கருதுகிறீர்களா?
உண்மையில் இந்தக் கேள்வியை எதிர்கொள்வதே இப்போதெல்லாம் சலிப்பாகிவிட்டது. இந்தத் தலைமுறை வாசகர்கள் மற்றும் ஒருசில எழுத்தாளர்கள் காட்சி ஊடகங்களின் வழியாகவே எல்லாவற்றையும் அணுகக் கூடியவர்களாய் மாறிப் போயிருக்கிறார்கள். வீட்டில் அப்பன் ஆத்தா செத்துப்போனால் கூட இந்தப் படத்தில் இந்த மாதிரி ஒருத்தர் சாவாரே அதுபோல் என் அப்பா செத்துவிட்டார் என்று சொல்லக் கூடிய மனநிலைக்கு அனேகர் வந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. வாழ்வையே காட்சி ஊடகங்களின் வழியாய்ப் பார்க்கப் பழகிவிட்டவர்கள் இலக்கியத்தை மட்டும் எப்படி அணுகுவார்கள்? துவக்க காலத்தில் என் சிறுகதைகளில் பயன்படுத்தின இறுக்கமான கதைமொழியிலிருந்து நாவல் எழுதத் துவங்கின காலகட்டத்தில் என் புனைவுகளை விடுவித்துக் கொண்டேன். இது திட்டமிட்டுச் செய்த ஒன்றுதான். இன்னொரு வகையில் திரைக்கதைகளிலும் தொடர்ந்து வேலை செய்வதால் காட்சி மொழியிலிருக்கும் சில நுட்பங்களை புனைவுகளில் முயன்று பார்க்கிறேன். நீலப்படம் நாவல் கிட்டத்தட்ட ஒரு திரைக்கதையாசிரியன் எழுதிய நாவல் தான். திரைப்பட உலகின் பின்னணியில் ஒரு நாவலை எழுத வேண்டுமென நினைத்தபோது அந்த வகையான கதைமொழி கை கொடுத்தது. காட்சி மொழிக்கு நெருக்கமான இந்தக் கதைமொழி ஒருவேளை இவர்களைத் தொந்தரவு செய்வதாக இருக்கலாம் என்றாலும் இந்தப் புகார்களை வைக்கிறவர்கள் யாரென யோசிக்க வேண்டியதாய் உள்ளது. இரண்டு கைவிரல்களுக்குள் எண்ணிவிடுகிற நபர்களாகத்தான் இந்தக் குற்றச்சாட்டை வைக்கிறவர்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து எனது நூல்கள் வெளியாகும் போது உடனுக்குடன் இந்தக் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள் என்பதைக் கவனிக்கையில் அவர்களது நோக்கத்தின் மீது சந்தேகம் கொள்ள வேண்டியிருக்கிறது. இதுபோன்ற சில்லறைத்தனமான வேலைகளை எழுத வந்த காலத்தில் நானும் செய்தவன் என்கிற வகையில் ஒரு கட்டத்திற்கு மேல் பொருட்படுத்தமால் விலகிப்போகத் துவங்கிவிட்டேன்.
மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் தமிழ் புனைவுலகை செம்மைப்படுத்தியது என்கிற வாதமுண்டு. அதில் இரைச்சல் மிகுந்த கவர்ச்சிவாதமுமிருக்கிறது. நமது மொழியில் எழுதிய மேன்மைக்குரிய எழுத்தாளர்களைக் கூட வாசிப்பில் கண்டடையாமல் ஒரு மொழிபெயர்ப்பு சிறுகதையை வாசித்துவிட்டு என்னே சிறுகதை என வியப்பவர்கள் இங்கே அதிகம், இது பற்றி உங்களுடைய கருத்து என்ன?
நீங்கள் சொல்லும் இந்தக் குற்றச்சாட்டு இலக்கியத்தை மேலோட்டமாய் அணுகும் ஒருசிலரால் வைக்கப்படுவதாகவே பார்க்கிறேன். எந்தவொரு மொழியின் இலக்கியங்களுக்கும் நிகராக தமிழில் செழுமையான புனைவுகள் எழுதப்பட்டுள்ளன. கோட்பாட்டு ரீதியிலான உரையாடலை உருவாக்கியதிலும், வெவ்வேறு விதமான கதைகளை எழுதுவதற்கான சாத்தியங்களை அமைத்துக் கொடுத்ததிலும் நிச்சயமாக மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கு பங்குண்டு. ஆனால் புனைவிலக்கியத்தின் மிகப்பெரிய சாதனைகள் எல்லாம் தன்னியல்பாக இந்த நிலத்தின் கதைகளை எழுதியதால் உருவானவை. மதினிமார் கதையை எழுதுவதற்கு கோணங்கிக்கு எந்த உலகச் சிறுகதையும் வழி அமைத்துக் கொடுக்கவில்லை. வண்ணநிலவனின் எஸ்தரும், பாம்பும் பிடாரனும் சிறுகதைகள் நமது கதை சொல்லல் மரபிலிருந்து உருவானவை தானே. பல்லாயிரம் வருடக் கதை மரபு கொண்டவர்கள் நாம். தொன்மங்களை தலைமுறை தலைமுறையாக கதைகளாகச் சொல்லிக் கொண்டிருக்கும் நமக்கு மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் கற்றுக் கொடுத்ததெல்லாம் சில புதிய உத்திகளை மட்டுந்தான். தமிழில் வெளியிடப்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் மிகச் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் அவற்றால் மட்டுந்தான் புனைவிலக்கியம் வளர்ச்சி கண்டதென்னும் கருத்துக்களை ஏற்க முடியாது.
அது குற்றச்சாட்டு இல்லை. ஆனால் மொழிபெயர்ப்பு இலக்கியங்களை வியந்து வியர்வை சிந்துகிற மனோபாவம், ஏன் நமது முன்னோடி எழுத்தாளுமைகளின் இலக்கியங்களை அணுகுவதற்கு தயாரில்லை என்பதே எனது கேள்வி?
நல்ல கலைஞன் தன் மொழியின் மகத்தான சாதனைகளை வாசிக்கவும் கொண்டாடவும் செய்யத் தவறுவதில்லை. அசோகமித்திரன் தஞ்சை ப்ரகாஷைக் குறித்து எழுதியிருக்கும் ஒரு கட்டுரையில் அவரை தமிழ் இலக்கியத்தின் யோகி எனக் குறிப்பிடுகிறார். ஏனென்றால் ப்ரகாஷ் எழுதுவதில் மட்டும் அக்கறை காட்டியிருந்தால் அவர் எவ்வளவோ எழுதிக் குவித்திருக்கலாம். ஆனால் அவர் தன் மொழியின் சிறந்த எழுத்தாளர்கள் ஒவ்வொருவரையும் கொண்டாடுவதையே பிரதான வேலையாகச் செய்திருக்கிறார். கா.ந.சு-விற்கு இல்லாத ஆளுமையா? அவர் படைப்புச் செயல்பாட்டில் ஈடுபட்டதற்கு இணையாய் அவர் காலத்தின் சிறந்த தமிழ் எழுத்தாளர்களை வெவ்வேறு மொழிகளுக்கு எடுத்துச் செல்வதில் மிகுந்த அக்கறை காட்டியிருக்கிறார். தன் முன்னோடிகளை ஆழ்ந்து வாசித்துக் கற்கும்போதுதான் ஒருவனுக்கு நல்ல எழுத்து வசப்படுகிறது. அவர்களது படைப்புகளை நாம் ஏற்கலாம் அல்லது மறுக்கலாம், ஆனால் வாசிக்காமல் தவிர்ப்பது அயோக்கியத்தனம்.
திரைப்படங்களில் வசனம், திரைக்கதை போன்றவற்றில் பங்களிப்புச் செய்கிறீர்கள். ஒரு தீவிரமான எழுத்தாளராக திரைத்துறையில் நிறைய சவால்களையும் சோர்வுகளையும் எதிர்நோக்க வேண்டியிருக்குமே?
ஒரு எழுத்தாளனுக்கு எல்லா மட்டத்திலுமே சவால் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் எழுத்தாளனாய் வாழ்வதை விடவும் சிரமமானதில்லை திரைப்படத்துறையில் ஒரு எழுத்தாளனாய் இருப்பது. திரையுலகின் சூழல் நிறையவே மாறியிருக்கிறது. எழுத்தாளர்களுக்கான முக்கியத்துவத்தை உணரத் துவங்கியிருக்கிறார்கள். ஆனால் திரைக்கதை எழுதக் கற்றுக் கொள்வதற்கும் திரைமொழிக்குப் பழகுவதற்கும் ஒரு எழுத்தாளன் கொஞ்சம் மெனக்கெடுதல் அவசியம். புனைவுகள் எழுதுவதை விடவும் இறுக்கமானதொரு மொழி திரைக்கதைக்கு அவசியம். புனைவுகளில் அதிகமும் உரையாடலை எழுதுகிற ஒருவருக்கு எல்லாவற்றையும் காட்சியாக யோசிப்பதில் சிரமங்கள் வருவது இயல்பு. அதிலிருந்து விடுவித்துக் கொண்டு காட்சி மொழிக்குப் பழக திரைப்படங்களைப் பார்ப்பதும் அவற்றைப் புரிந்து கொள்வதும் முக்கியமாகிறது. நான் உதவி இயக்குநராகவும் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியிருப்பதால் ஒரு திரைப்படம் உருவாவதற்கான தொழில்நுட்ப ரீதியிலான எல்லா விவரங்களையும் அறிந்தவனாயிருக்கிறேன். காட்சியைப் புரிந்துகொள்ள, அவற்றை சுவாரஸ்யமாக எழுத இந்த அனுபவம் பேருதவியாய் இருக்கிறது.
ஜூனியர் விகடன் இதழில் நீங்கள் எழுதி வருகிற “ரெண்டாம் ஆட்டம்” தொடருக்கான வரவேற்பு எப்படியிருக்கிறது?
நான் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஏராளமான புதிய வாசகர்கள் இந்தத் தொடரின் வழியாய்க் கிடைத்திருக்கிறார்கள். 800 வார்த்தைகளுக்குள் ஒரு பகுதியை எழுதிவிட வேண்டுமென்கிற கட்டுப்பாடு வரும்போது சொற்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள முடிந்தது. குறைவான சொற்களில் ஒரு காட்சியைச் சொல்லக் கூடிய இந்தப் பயிற்சி எனக்கு முக்கியமானதொன்று.
இதைவிடவும் முக்கியமாக ஒன்றைச் சொல்ல வேண்டுமானால் நான் மதிக்கும் மிக முக்கியமான இரண்டு திரைப்பட இயக்குநர்கள் இதனைத் திரைப்படமாக்குவதற்காகக் கேட்டிருக்கிறார்கள். எதையும் பேசி உறுதிப்படுத்தவில்லை. ஆனால் விரைவில் ரெண்டாம் ஆட்டத்தின் திரைவடிவத்தை எதிர்பார்க்கலாம்.
உங்களை எப்படி முதன்மைபடுத்துவீர்கள்? நாவலாசிரியராகவா? சிறுகதை ஆசிரியராகவா?
எண்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். இப்போதும் சிறுகதை எழுதுவதுதான் எனக்கு சவாலானதாக இருக்கிறது. ஆனால் புனைவுகளோடு தொடர்ந்து பயணிக்கும் அனுபவத்தில் என்னை ஒரு நாவலாசிரியனாகவே நான் முதன்மைப்படுத்துகிறேன். சிறுகதைகளுக்கான எல்லைகளிலிருந்து துண்டித்துக் கொண்டு புனைவின் அசாத்தியமான பெருவெளியில் கதை சொல்லும்போது தனிப்பட்ட வாழ்வின் எல்லாத் துயர்களிலிருந்தும் தற்காலிகமாக என்னை விடுவித்துக் கொண்டு எனக்கானதொரு உலகில் என்னால் வாழமுடிகிறது. அந்த உலகம் எனக்கான உலகம், என்னால் உருவாக்கப்படும் உலகம். அங்கு என் கீழ்மைகள் குறித்து புகார்கள் சொல்ல ஒருவருமில்லை. இதனாலேயே நாவல் எழுதுகிற நாட்களில் சடாரென உடலிலும் முகத்திலும் முதுமை வந்துவிடுகிறது. ஒரு முழு வாழ்வை வாழ்ந்து பார்த்துவிட்ட அனுபவத்திலிருந்து துண்டித்துக் கொண்டு அதே வேகத்தில் இன்னொரு நாவலுக்குள் நுழைந்துவிடும் போது நான் புதிய மனிதனாக உணர்கிறேன். இந்த விளையாட்டின் சுவாரஸ்யத்திற்காகவேதான் தொடர்ந்து நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
***
அகரமுதல்வன் . இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு குறுநாவல் தொகுப்பு, ஒரு தொகுப்பு நூல் ஆகியன வெளிவந்துள்ளன.
புத்தகக் கடைகளில் முதல் வரிசையிலும், சொந்தச் சேகரிப்புகளில் எளிதில் கண்ணில் படாத வண்ணம் பின்வரிசையிலும் வைக்கப்படும் புத்தகங்களின் வரிசையில் இடம்பெறுபவை லஷ்மி சரவணக்குமாரின் படைப்புகள். அவருக்கு அருகிலே ஜி. நாகராஜனும், சாரு நிவேதாவும் இடம்பெறலாம். ஒளி குறைவான அந்தப் பின்வரிசையில் அவர்கள் தங்களுக்குள் செய்து கொள்ளும் சர்ச்சைகளில் முன்வரிசையிலிருக்கும் புத்தங்கங்கள் சற்றே தளர்ச்சியுற்று விழத் துவங்கலாம்.
அவருடைய சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான `போர்க்குதிரையை` வாசித்தேன். சில வருடங்களுக்குப் பிறகு வாசித்த அவருடைய சிறுகதைகளை, அகப்பரப்பு சிதைவுற்ற சமூகத்தின் ஓயாது அசையும் பிம்பச் சித்திரங்கள் எனலாம்.
தி.ஜானகிராமனுக்கும், லஷ்மி சரவணக்குமாரின் கதை உலகிலே பேசப்படும் காமத்திற்கு அடிப்படையான வேறுபாடு ஒன்றை முதலிலேயே புரிந்து கொள்வது நல்லது. தி.ஜா-வின் படைப்புகள் அழகியல் தளத்திலே நின்று காமத்தை அணுகத் தலைப்பட்டால் (பாலியல் விழைவின் இயல்பை அறிதலோடு சேர்த்து), லஷ்மியின் படைப்புகளிலே வெளிப்படும் காமம் சார்ந்த அத்தனைச் சித்திரங்களும் நுகர்வியப் பண்புகளைக் கொண்டவை. கடந்த நாற்பது ஆண்டுகளில் எல்லா உணர்வுகளும், இயல்புகளும் பண்ட நிலையை அடைந்து விட்டன. பண்டங்களை நுகர்வதில் இருக்கும் ஆற்றல் / ஆற்றலின்மையோடு மனித உடல்கள் எழுவதும் / வீழ்வதுமாக வினையாற்றுவதை லஷ்மியின் கதைகளில் வாசிக்கலாம்.
ஒரு கிகோலோவைப் பற்றின கதையான `ரகசியத்தின் அரூப நிழல்களை` ஓர் உதாரணமாகக் கொள்ளலாம். இக்கதையில் வரும் வினோத் காமத்தின் சுவிஷேசத்தை உலகிற்க்கு அறிவிக்கும் அப்போஸ்தலராக இருக்கிறான்.
இதன் பொருள், காமம் ஒரு தனி உடலின் தனிப்பட்ட அனுபவமாக இல்லாமல், ஓர் அப்போஸ்தலரின் உபதேசங்களாக, காமத்தின் விவிலியத்தில் இடம்பெறும் பேரேக்கத்தைக் காண்கிறோம். இங்கே தவிர்க்க முடியாமல் ஓஷோ நினைவுக்கு வருகிறார்.
நுகர்வே இயல்பாகிவிட்ட உலகில், காம நுகர்வும் எல்லையற்றுப் போய் நாம் காமத்திற்கும், போர்னோகிராஃபிக்கும் அடிமைகள் ஆனவர்களைப் பார்க்கிறோம். திறன்பேசி வைத்திருக்கும் எவரொருவரும் போர்னோகிராஃபியை நுகர்வதிலிருந்து தப்பித்திருப்பார் என நம்புவது சந்தேகமே. ஆனால் நுகர்வியத்தின் விளைவுகளில் ஒன்றான சலிப்பு காமத்தோடு சேர்கிறது. இங்கே இயல்பான ஒரு செயல் சலிப்பை உண்டாக்கி விடுகிறது. BDSM/MASOCHISM/SADISM எனக் காமத்தோடு வலியைக் கலந்து அடையக்கூடிய அடுத்தகட்டம் இந்தச் சலிப்பை சற்றேனும் விலக்குகிறது.
ஆங்கில தினசரி ஒன்றின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் அர்ச்சனா, வதைபடுதலின் வழியாய் உடலைக் கொண்டாடும் புதிய உலகை கிகோலோவான வினோத்திற்கு அறிமுகப்படுத்துகிறாள்.
Abandonment எனும் இருத்தலியல் பதத்திற்குப் பொருள், வெளியிலிருந்து ஒரு மனிதனை பண்படுத்தும் ஏதொரு மூலகமும் இல்லையென்பதே. தன்னை நெறிப்படுத்தும் மதமோ, இயற்கையோ, தத்துவமோ இல்லாது போனபின் ஒரு மனிதன் கைவிடப்பட்டவனாக உணர்கிறான். நுகர்விய வெள்ளமும் அவனைத் தள்ள, மூச்சு விடுவதற்கே சிரமப்படுபவனாக, தனது அகப்பரப்பையும் ஆக்கிரமித்திருக்கும் பிம்பங்களின் ஆயிரமாயிரம் கைகளில் சிக்குண்ட அவன், இம்மானுவேல் காண்ட் குறிப்பிடும் `வெளியிலிருந்து புகட்டப்படும் அற மதிப்பீடுகளை’ (heteronomous conception of values) நிராகரிக்கும் நிலையை அடைகிறான்.
இந்த அகப்பட்டுவிட்ட நிலையிலிருந்து லஷ்மியின் பாத்திரங்கள் தங்களது நிலையை கொண்டாட்டமாகப் பாவிக்கவும், தங்களது நுகர்விலே ஓர் ஆத்மீகத் தன்மையை உருவாக்கிக் கொண்டு, தங்களது இருப்பை அர்த்தபூர்வமாக மாற்ற முயல்வதின் விளைவாகவே, `ஏண்டாஉறவுமுறைகளைப்புடிச்சுதொங்கிட்டுஇருக்கீங்க, எல்லாமேஉடல்தானே` என மாலதி சொல்கிறாள். அவள் தன்னை ஒரு இன்செஸ்ட் என அறிமுகம் செய்து கொள்கிறாள். காமத்தில் பிரத்தியேக அடையாளங்கள் அட்டவணை இடப்படிருக்கின்றன. பண்டங்களைப் போல காமத்தின் அடையாளங்களும் தேர்வுக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. மற்றொரு கதையான `ஆதாமின் துரோகத்தில்` இருபால் ஈர்ப்புள்ள மதனைப் பார்க்கிறோம். அனைத்து அடையாளங்களுக்குள்ளும் மதிப்பீடுகள், கூச்ச உணர்வு இன்றி இயங்கும் சுதந்திரத்தை `ரகசியத்தின்அரூபநிழல்கள்` விவாதிக்கின்றன. இக்கதை வழமையான காமம் சார்ந்த அறக்கட்டுப்பாட்டிற்கும், தனிமனித சுயாட்சிக்கும் இடையிலான விவாதத்திற்கு அதிக இடமளிக்கிறது. மரபின் consequentialist பார்வையில் நின்று கட்டுப்படுத்தப்பட்ட விழைவிற்கும், அதற்கு எதிராக காமம் என்பது முற்றிலும் தனிமனித சுயாட்சிக்கு உட்பட்டது என்பதற்கும், இடையே லஷ்மி சரவணக்குமாரின் பெரும்பாலான கதைகள் `உறவுகளில் சுயாட்சி`-யையே (Autonomy in relationships) பேசுகின்றன. கூடவே தாமஸ்நாஜெல் குறிப்பிடும், `bad sex is generally better than none at all’, என்பதையும் விவாதிக்க வேண்டியிருக்கிறது.
மேற்சொன்ன கதை, போர்க்குதிரை, ஆதாமின்துரோகம் ஆகியவை நகரங்களில் நிகழ்பவை. இவற்றிற்கு நேரெதிராக `கம்பமதயானை`க் கதையில் ஜோதி, யானையின் தந்தங்களில் அமர்ந்து பெண் தெய்வச் சாயலை எட்டுகிறாள். ஆனால் கம்பமத யானையில், காமம் பிரதானமான பிரச்சனையாக இல்லை என்பதால், இக்கதையை நகரச் சித்திரங்களுக்கு நேரெதினாது என்று சொல்லவிட முடியாது. கம்பமத யானையில், காமம் நுகரப்படுவதில்லை, மாறாக, பிள்ளைப் பேற்றிற்கான வழியாகத்தான் பார்க்கப்படுகிறது. பெண், வெல்ல முடியாத தெய்வீக அமைப்பைப் பெற்றவள் என்கிற மரபார்ந்த ஓரிடத்தில் நின்று இக்கதை பேசுகிறது. பாலியல் வக்கிரம் என்பது இயந்திரமய உலகத்தின் பின்னான விளைவாகப் பார்க்கிறோம். வக்கிர உணர்வே நகரமயத்தின், பிம்பமயத்தின் பின்விளைவுகளாகவும் நாம் விளங்கிக் கொள்கிறோம்.
இத்தொகுப்பில் விவசாயமும், கிராமப்புற மக்களின் உடல் உழைப்பின் மீதான் பரிவும் பேசப்படுகின்றன. தனிமனித வாழ்வின் அடிப்படைக் கட்டமைப்பு அவனுடைய அறமார்ந்த உறவுகள், மதிப்பீடுகள் எனக் கொண்டால், கிராமத்தின் அடைப்படைக் கட்டமைப்பு உழவு. `ஆலமரத்துயில்` இந்தச் சிதைவைப் பேசும் மற்றொரு கதை. பல நூற்றாண்டுகள் முட்டி மோதும் ஒரே நூற்றாண்டில் நாம் வாழ்கிறோம் என்பதற்கு இக்கதை மற்றுமொரு சாட்சி. முழுக்க இயந்திரமயமாகும், தொழில் உற்பத்தி சார்ந்த ஒரு சமூகமாக மாறுதல் (எட்டுவழிச் சாலை, விவசாயச் சட்டத் திருத்ததிற்கு எதிர்ப்பு) என முற்றிலுமாக முதலாம் உலகப் பிரச்சனைகளுக்கே வெளியே இயங்கும் ஒரு சமூகத்தில் நாம் இறுகப் பிணைந்திருக்கிறோம். அறிவியல் மயமாதல், இயந்திர மயமாதல், தொழில்நுட்ப மயமாதல் என உருமாறி நிற்கும் உலகின் காதுகளில், இயற்கை, உழவு, கிராமச் சிதைவு என நாம் பழைய நூற்றாண்டு ஒன்றின் பிரச்சனையை வலுவாக ஒலிக்கிறோம். நமது சமூக அமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு மட்டுமல்ல, நமது சமூகத்தின் மிகச்சிறந்த இலட்சிய அடையாளமாக உழவே வைக்கப்பட்டிருக்கிறது. `காணி நிலம் வேண்டுமென்றே` ஒரு நவீனக் கவிஞன் பாடுகிறான். உலகோ, சொகுசுக் கப்பல் பயணத்தைக் கனவு காண்கிறது அல்லது சொந்தமாக ஒரு yacht-ற்க்கு ஆசைப்படுகிறது. இந்த முரண்பாடு உண்டாக்கும் உறுத்தலால் லஷ்மி சரவணக்குமார் இந்த எல்லைக்கும் பயணமாகிறார்.
அவருடைய கதைகளில் உருவாகும் வெளிப்படையான இவ்விரண்டு வேறுபாடுகளை நாம் இக்காலத்தின் குரலாகக் கேட்கிறோம். இதன் தொடர்ச்சியாகவே, ஒரு நாட்டார் கதையைப் போன்றிருக்கும் `தடியன்சேகர்` கதையை அவரால் எழுத முடிகிறது.
ஆனால் லஷ்மி சரவணக்குமாரின் கதையாடல் பழையதாக மாறியிருக்கிறது. ஆசிரியரின் இடையீடாகச் சொல்லப்படும் அவதானிப்புகள் ஒவ்வொன்றும் மிகப் பழையவை மட்டுமல்ல, அலுப்பூட்டுபவையும் கூட.
லஷ்மி சரவணக்குமார் நிச்சயம் இவற்றைத் தவிர்க்க வேண்டும். ருட்யார்ட் கிப்ளிங்கின் Just So Stories புத்தகத்தை ஒருமுறை வாசிப்பதைப் பரிந்துரைக்கிறேன்.
`திருடனின்குறிப்பேடு` நாவலில் ழான் ஜெனே சொல்கிறார், `there is a close relationship between flowers and convicts. The fragility and delicacy of the former are of the same nature as the brutal insentitivity of the latter`. லஷ்மி சரவணக் குமாரின் துணிச்சல் மிக்க, சமூகத் தணிக்கைக்கும், சுயத்தணிக்கைக்கும் உள்ளாகாத கதைகள் ழான் ஜெனேவின் மலர்களைப் போலவும், குற்றவாளிகளைப் போலவும் வெளிப்பட வேண்டுமென்று விரும்புகிறேன். ஜெனேவின் படைப்புகளுக்கும், லஷ்மி சரவணக்குமாரின் படைப்புகளுக்கும் இடையே பாரிய வேறுபாடாக நான் காண்பது, கவித்துவத்தின் நிழலிற்கும், தத்துவார்த்த வெளிச்சத்திற்குள்ளும் நுழைந்துவிடும் ஜெனேவைப் போலன்றி, தமிழ் பாப்புலர் எழுத்தாளர்களின் அரதப் பழையதான அவதானிப்புகள் எனும் தொந்தரவூட்டும் தெறிப்புகளின் பால் அதிகமாக பின்னவரின் கதையாடல் சாய்ந்து விடுவதே. உலகம் ஒன்றே ஆயினும் அதை விவரிப்பதில்தான் வேறுபாட்டின் அழகியல் உருவாகிறது. காமத்தின் சுவிஷேத்தை விவசாயி ஒருவரின் மனுவின் மொழியில் எழுத முனையக் கூடாதென்று எச்சரிக்கவும் விரும்புகிறேன்.
***
பாலசுப்ரமணியன் பொன்ராஜ் – தமிழின் நம்பிக்கை தரும் இளம் படைப்பாளிகளில் பாலசுப்ரமணியன் பொன்ராஜும் ஒருவர். ‘கனவு மிருகம்’, ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ ஆகிய இரு தொகுப்புகளும் அவரது எதிர்கால எழுத்துகளின் மீதான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துபவை. விரிவான வாசிப்பு, தத்துவப் பார்வை, சமூகப் பார்வை, விநோதப் புனைவில் ஈடுபாடு, அறிவியல் ஆர்வம், இசை என்று பல துறைகளின் விளைச்சலாக அவரது கதைகளைக் கூறலாம். (நன்றி தி இந்து) தொடர்புக்கு – tweet2bala@gmail.com
லக்ஷ்மி சரவணக்குமாருடனான நட்பை எழுதுவதென்பது இலக்கியத்தைத் தவிர வேறு எதையும் பொருட்படுத்தாது, மொழியை வசமாக்கும் அக்கலையின் மீதான பிரம்மிப்பில் உழன்ற நாட்களைப் பற்றிய ஒரு இனிய நினைவு கூறலே. லக்ஷ்மி உடனான அறிமுகத்திற்கு நண்பன் கலைவாணனே காரணம். அப்போது தாம்பரம் சாய்ராம் சித்த மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன். எஸ். ராமகிருஷ்ணன் விகடனில் கதாவிலாசம் எழுதியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த எழுத்தாளர்களைத் தேடி நானும் கலைவாணனும் வாசித்த காலகட்டம். அவன் ஆதம்பாக்கம் நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்து வருவான். நான் வாசிப்பின் பித்தேறி தாம்பரம் நூலகத்தைப் பயன்படுத்த வேண்டி கல்லூரி விடுதியிலிருந்து வெளியேறினேன். கலைவாணனுக்கு திடீரென சினிமா வெறி தொற்றிக் கொண்டது. அவன் மாலைக் கல்லூரி முடிந்த பின் சவுத் இண்டியன் ஃபிலிம் சேம்பரில் தினமும் ஒரு திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தான். தன் சக பார்வையாளரான சாரு நிவேதிதாவுடன் ஏற்பட்ட பழக்கம் வேறு அவனைத் தீவிரமாய் சினிமாவில் உழலச் செய்தது.
அன்றைய நாட்களில் மதுரையில் நிகழ்ந்த ஒரு குறும்படப் பயிற்சி பட்டறையில் சந்தித்த சரவணக்குமார் என்ற நபரைப் பற்றி கலை பிரமிப்பாய் பேசியிருந்தான். அவரிடமிருந்து எஸ். ராமகிருஷ்ணனின் ‘நடந்துசெல்லும்நீரூற்று’ சிறுகதைத் தொகுதியை வாங்கி வந்திருந்தான். அதை நானும் வாசித்த பின் உரிமையாளருக்கு கூரியர் செய்திருந்தேன். கூரியர் உறையிலிருந்த எனது அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சரவணக்குமார் புத்தகம் கிடைத்த தகவலைச் சொன்னார். அந்த சரவணக்குமார் ஒரு வேலை விசயமாய் சென்னைக்கு வந்தபோது கலைவாணன் மூலம் தாம்பரத்திலிருந்த எங்கள் அறைக்கு வந்தார்.
மீசை அரும்பியிராமல் நோஞ்சான் உடம்புடன் அசாத்திய தன்னம்பிக்கையுடன் திகழ்ந்த சரவணனைப் பார்க்க ஆச்சரியமாய் இருந்தது. எனக்கு படைப்புகள் அளிக்கும் நிகர்வாழ்க்கையே அப்போது முக்கியமாய் தெரிந்தது. வைரமுத்துவை கல்லூரி முதலாமாண்டு வாசித்து உணர்ச்சிப் பெருக்கில் திரிந்து அப்படியே நாஞ்சில் நாடனின் ‘என்பிலதனைவெயில்காயும்’ நாவலை வாசித்ததன் மூலம் எது நல்ல இலக்கியம் என்பதை உள்ளுணர்வில் அறிந்திருந்தேன். ஆனால் அதை எப்படி வரையறுப்பது என்றோ ஒரு படைப்பை விமர்சிக்கத் தேவையான கலைச்சொற்களோ எதையும் நான் அறிந்திருக்கவில்லை. ஆகவே எந்தப் படைப்பையும் நிராகரித்ததில்லை. ஆனால் சரவணக்குமார் ஒரு படைப்பை நிராகரிப்பதும் அதற்கான காரணங்களைச் சொல்வதும் எனக்குப் புதியதாய் தெரிந்தன. மூன்று வருடங்கள் இலக்கியம் வாசித்திருந்தாலும் எந்த தீவிர வாசகனையும் அதற்குமுன் நான் சந்தித்திருக்கவில்லை. எங்களுக்கு ஆதர்சமான எஸ். ராமகிருஷ்ணனை சந்திக்க கலைவாணன் பலமுறை அழைத்திருந்தும் நான் மறுத்துவிட்டேன். அப்போது எழுத்தாளர்களை அதிமானுடர்கள் என்றே கருதியிருந்தேன். அவர்கள் எப்படி ஆழ்மனதை எழுத்தாக்குகிறார்கள் என்பதும் நம் மனதின் எல்லா சில்லறைத்தனங்களையும் அறிந்திருக்கிறார்கள் என்பதும் என்னை மிரட்சியடையச் செய்திருந்தது. கோணங்கியைப் பற்றிய கட்டுரையை விகடனில் வாசித்த கலை நாம் வாழ நினைக்கும் வாழ்வை ஏற்கனவே ஒருவர் வாழ்ந்து வருவதாய் சொல்லியிருந்தான். சரவணா கோணங்கியை தனிப்பட்ட விதத்தில் அறிந்திருந்தார். மேலும் சரவணாவிற்கு சில எழுத்தாளர்களுடனிருந்த நட்பும் அவர்களுடன் நிகழ்த்திய உரையாடல்களையும் கேட்கையில் சிற்றிதழ் உலகமெனும் ரகசியக் குழுவுக்குள் என்னையும் ஒருவனாய் உணரத் தொடங்கினேன். அந்நாட்களில் சரவணக்குமார் இரா. சரண் என்ற பெயரில் சில கட்டுரைகளை நாளிதழ்களுக்கு எழுதியிருந்தார். எங்களைச் சந்தித்த சில மாதங்களில் புதிய காற்றில் ‘எஸ். திருநாவுக்கரசிற்குஇருபத்தைந்துவயதானபோது….’ சிறுகதையும் புதுவிசையில் ‘உமாசித்தியும்சாம்பல்நிறசர்ப்பக்குட்டிகளும்’ சிறுகதையும் லக்ஷ்மிசரவணக்குமார் என்ற பெயரில் பிரசுரமாகின. எஸ். ராமகிருஷ்ணனின் உலகிற்கு நெருக்கமாயிருந்த ‘உமாசித்தியும்சாம்பல்நிறசர்ப்பக்குட்டிகளும்’ சிறுகதை எனக்குப் பிடித்திருந்தது. இருபத்தோரு வயதில் மொழி இவ்வளவு தூரம் வசப்படும் என்பதே எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. நான் அதுவரை கவிதை எனும் பெயரில் “எந்தநட்சத்திரங்களிலிருந்துகடன்வாங்கிவந்தாய்உன்கண்சிமிட்டும்அழகை” எனக் காதலாய் கசிந்துருகிக் கொண்டிருந்தேன்.
சில மாதங்களுக்குப் பிறகு கல்கியில் வேலைக்குச் சேர்வதற்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காய் எங்கள் அறைக்கு வந்திருந்தார். அப்போதுதான் ஜெயமோகனின் ‘கன்னியாகுமரி’ நாவலை வாசிக்கத் தந்தார். அதன் பிறகு எந்த உடல் உறுப்புக் குறைபாடுடைய பிச்சைக்காரரைக் கண்டாலும் என்னைத் தெறித்து ஓடவைத்த ‘ஏழாம்உலகம்’. பிறகு தமிழ் ஈழ விவகாரங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை பேசிக் கொண்டிருந்த லக்ஷ்மியுடன் நான் முரண்பட்டு தீவிரமாய் விவாதித்த பின் ஷோபாசக்தியின் ‘ம்’ தந்தார். இப்படியாக என் வாசிப்பு வேகத்திற்கு ஏற்ப லக்ஷ்மியின் மூலம் புத்தகங்கள் கிடைத்தன. அதற்கு முக்கிய காரணம் மதுரை திருமங்கலம் கிளை நூலகத்தின் நவீன இலக்கிய புத்தகங்கள் லக்ஷ்மி வசமே இருந்தன. அந்த நூலகருக்கு கள் வாங்கித் தந்து பாதி நூல்களை தன் வீட்டிற்கு இடம் மாற்றியிருந்தார். மேலும் புதுஎழுத்து, கல்குதிரை, மணல்வீடு என சிற்றிதழ்களும் லக்ஷ்மி மூலம் வாசிக்கக் கிடைத்தன.
பள்ளிப் படிப்பை முறையாய் முடித்திராமல் சிறையில் இருக்கும் தந்தையின் மீதான வெறுப்பைச் சுமந்து இலக்கிய வாசிப்பு தந்த ஆணவத்தோடு அலைந்து திரிந்த லக்ஷ்மி ஒருவகையில் கனவு பிம்பம்தான். லக்ஷ்மியிடமிருந்த முதிராத் தன்மைகளும் தன் இருப்பை இலக்கியத்தில் நிலைநிறுத்த அவருக்கிருந்த வேட்கையும் ரசிப்புக்குரியவையே. தன்னைச் சூழ்ந்திருப்பவர்களை எதையாவது சொல்லி அதிர்ச்சியடைய வைப்பது லக்ஷ்மியின் குணநலன்களில் ஒன்று. நான் முதல்முறை சந்தித்த போதே தன் தற்கொலை முயற்சியைப் பற்றிச் சொன்னார். எங்கள் அறைக்கு வந்திருந்த ஜூனியர் பையன்கள் எங்கள் சீனியர் ஒருவரைப் பற்றி பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவர் சற்று அழகான பையன்களாய் பார்த்து தம்பி என அன்பைப் பொழிவார். பின் சிலநாட்களில் அவர்களின் அலைபேசிக்கு நள்ளிரவில் “உன் முத்தத்திற்காய் நான் காத்திருக்கிறேன்” எனக் குறுஞ்செய்தி அனுப்புவார். அதுபோல் அவர் காதல்கணைகள் தொடுத்த ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களைச் சொல்லிச் சிரிக்க, லக்ஷ்மி பொறுமையாய் அனைத்தையும் கேட்டுவிட்டு பொங்கியெழுந்தார். எங்கள் அனைவரையும் அந்த சீனியரின் அன்பைப் புரிந்துகொள்ளவியலா மனநோயாளிகள் என அவர் அழைக்க ஜூனியர் பையன்கள் அடைந்த திகைப்பு இன்றும் சிரிப்பை வரவழைக்கிறது.
நான் கல்லூரி நான்காமாண்டு படித்த காலகட்டங்களில் லஷ்மியின் ஊர்க்காரரான கவின் திருமங்கலத்திலிருந்து வேலை நிமித்தமாய் சென்னையில் தங்கியிருந்த அறைக்கு இடம்பெயர்ந்தார். திருமங்கலத்திலிருந்த கவினின் வீட்டில் தான் லக்ஷ்மி சரவணக்குமாரின் அம்மா வீட்டுவேலை செய்து வந்தார்கள். சென்னைக்கு வந்ததும் லக்ஷ்மி சினிமாவில் உதவி இயக்குனராய் சேர்வதற்கான முயற்சியில் இருந்தார். அவ்வப்போது எங்கள் அறைக்கு வந்து செல்வார். பிறகு கல்கியிலிருந்தும் விலகியிருந்தார். கவினின் வீட்டில் சிலமாதங்கள் தங்கியிருந்தவர் கவினுக்குத் திருமணமான பின் எங்கள் அறைக்கு நிரந்தரமாய் இடம்பெயர்ந்தார். என் வாழ்க்கையில் அது மிகமுக்கியமான நிகழ்வு. ஏனெனில் நூலகத்தில் இருநூறு ரூபாய்க்கு மேற்பட்ட நூல்கள் அனைத்தும் மேற்கோள் பிரிவில் மட்டுமே இருக்கும். யோசித்துப் பாருங்கள் ஜெயமோகனின் முக்கிய நாவல்கள் எதையும் நாம் வீட்டிற்கு எடுத்துச் செல்ல இயலாது. அதோடு யூமாவாசுகியின் ‘ரத்த உறவை’ அவர்கள் மருத்துவப்பிரிவில் வைத்திருந்தார்கள். லக்ஷ்மி சொன்ன பிறகுதான் அது புனைவு நூல் எனத் தெரிந்து கொண்டேன். நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததைப் போல திருமங்கல நூலகத்தின் நவீன இலக்கிய நூல்களின் உரிமையாளரான லக்ஷ்மியிடமிருந்து நான் விருப்பப்பட்ட நூல்களை என்னால் வாசிக்க முடிந்தது. ஒவ்வொரு முறை லக்ஷ்மி ஊருக்குச் செல்லும் போதும் விஷ்ணுபுரத்தை எடுத்துவரச் சொல்வேன். “யோவ் அது மண்ட தண்டிக்கு இருக்கும்யா… அதைப் பையில வச்சா பெறகு எடம் பத்தாதுயா” என்பார். நான் விடாமல் தொடர்ச்சியாய் நச்சரித்து விஷ்ணுபுரத்தை வரவழைத்தேன். அப்புத்தகத்தை வாசித்த போது தான் என் கல்லூரி நண்பன் சுனில் கிருஷ்ணன் என் கையிலிருந்த ‘விஷ்ணுபுரம்’ எனத் தலைப்பிட்ட நூலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். அதற்கு முந்தைய மாதத்தில் பகத்சிங் பற்றிய நூலொன்றை என் கையில் வைத்திருப்பதைப் பார்த்து என்னைத் தீவிரவாதி எனக் கிண்டல் செய்திருந்தான். நான் சுனிலிடம் ஜெயமோகனைப் பற்றியும் விஷ்ணுபுரத்தைப் பற்றியும் சொன்னேன். ஆக, சுனில் கிருஷ்ணன் ஜெயமோகனின் பெயரை அறிய நேர்ந்ததில் லக்ஷ்மிக்கும் கணிசமான பங்கு உள்ளது. இன்று அனைத்தையும் யோசித்துப் பார்கையில் வாழ்க்கை விநோதமானதாகவும் வேடிக்கையாகவும் தெரிகிறது. விஷ்ணுபுரத்தை வாசிப்பதற்கு முன்பு எங்கள் பேராசிரியர்களை வம்பிழுப்பதற்காய் வெள்ளிக்கிழமை கருப்புச் சட்டை அணிந்து கல்லூரிக்கு வரும் கலைவாணன் இன்று தியான வகுப்புகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறான்.
லக்ஷ்மியின் ஆரம்ப காலப் புனைவுகளில் ஜி. நாகராஜனின் பாதிப்பு மிகுதியாய் இருக்கும். ஒருவேளை ஜி. நாகராஜன் அவ்வுலகை எழுதியிராதிருந்தால் லக்ஷ்மியே அவ்வுலகில் பயணித்த முதல் தமிழ் எழுத்தாளனாய் இருந்திருப்பார். ‘இருள், மூத்திரம், கடவுளின்பட்டுக்கௌபீகத்துணி’ கதையை எழுதுவதற்கு முன்பே பாண்டிச்சேரி அல்லயன்ஸ் பிரான்சிஸில் அக்கதையை அவர் வாயால் சொல்லக் கேட்டிருக்கிறேன். அக்கதை மணல்வீட்டில் பிரசுரமான பின்பு பொதியவெற்பன் அக்கதையை புதுமைபித்தனின் ‘கடவுளும்கந்தசாமிப்பிள்ளையும்’ கதையுடன் ஒப்பிட்டு மணல்வீடு ஆசிரியர் ஹரிகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதியிருந்தார். லக்ஷ்மியின் அலைபேசியில் தொடர்பு கொண்டு அக்கதையைச் சிலாகித்த சாருநிவேதிதா பின்னர் லக்ஷ்மியை தன் இலக்கிய வாரிசாய் அறிவித்தார். புதுஎழுத்தில் வெளியாகியிருந்த லக்ஷ்மியின் ‘14.06.2008 அன்றுஇறந்துபோனவனைப்பற்றியகுறிப்புகள்ஏதுமில்லை’ கதையைப் பற்றி என்னிடம் பேசிய கோணங்கி “அவங்கிட்டபெரிய void இருக்குடாஅந்தசப்வேஇருட்டுக்குள்ளமுயங்குறதுவெறும்உடல்கள்மட்டுமில்லஅவனோடvoid-ஐநிரப்புறமுயற்சிதான்” என்றார்.
அன்றைய நாட்களில் லக்ஷ்மி பெருங்களத்தூரிலிருந்த தாயுமானவன்என்பவரிடம் உதவி இயக்குனராய் சேர்ந்திருந்தார். அவர் புற்றுநோயில் இறப்பதற்கு முன் தன் முதல் திரைப்படத்தை இயக்கிவிடும் முயற்சியில் இருந்தவர். ஆனால் அது நிகழவில்லை.
எங்களுக்கு திரைப்பட விழாக்களில் அறிமுகமாயிருந்த மணி என்ற நண்பருடன் லக்ஷ்மி அவ்வப்போது சில வேலைகளுக்குச் சென்று வந்தார். மணிக்கு ஹாலிவுட் சென்று மனோஜ் நைட் சியாமளானிடம் உதவி இயக்குனராய் சேரவேண்டுமென்ற உயர்ந்த இலட்சியம் இருந்தது. அதுவரை சென்னையில் நிறைய சில்லறை வேலைகளைச் செய்து வந்தார். அதில் முக்கியமான ஒன்று Act பாப்கார்ன் மார்க்கெட்டிற்கு வரும் முன்பு அதை பிரபலப்படுத்திய வேலை. ஷாப்பிங் மாலுக்கு வெளியேயும் திருமண மண்டப வாசல்களிலும் அதை வாடிக்கையாளர்களுக்கு உண்ணக் கொடுத்து சிறிய இலவச பாக்கெட்டுகளைத் தருவது. ஒரு நாளைக்கு நூற்றம்பைதோ இருநூறோ சம்பளம் கிடைக்கும். பலநாட்களில் லக்ஷ்மி கொண்டுவரும் மீதமான பாப்கார்ன் பாக்கெட்டுகளை வைத்து வயிறு நிரப்பியிருக்கிறோம். மணி மனோஜ் நைட் சியாமளானைக் கவர வேண்டி நூலகங்களுக்குச் சென்று விநோதமான நூல்களை வாசித்து விசித்திரமான கருதுகோள்களை உருவாக்கியிருந்தார். அவற்றிலொன்று “போரும்பஞ்சங்களும்மக்கள்தொகைப்பெருக்கத்தைக்கட்டுப்படுத்தவேண்டிஇயற்கையேகண்டறிந்தவழிமுறை. ஆகவேஈழப்போர்நிகழும்இக்காலகட்டத்தில்அதற்கெதிராய்போராடுவதுஇயற்கைக்குஎதிரானசெயல்.” நான் பொங்கிய கோபத்தை கட்டுப்படுத்தியவனாய் “ஏன் மணி உங்க வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்கும் சண்டை. பக்கத்து வீட்டுக்காரன் உங்க அப்பாவ அருவாளால வெட்ட வரான் அப்ப நீங்க அவனத் தடுப்பீங்களா இல்ல மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துற இயற்கையோட வழிமுறைன்னு அமைதியா இருப்பீங்களா” என்றேன். நான் தடுப்பேன் என்று சொன்னவர் இறுதிவரை ஈழப்போருக்கு எதிராய் போராடுவது இயற்கைக்கு எதிரான செயலன்றே வாதாடினார். அப்படிப்பட்ட மணியுடன் லக்ஷ்மி ஒன்றாய் வேலைக்கு சென்று வந்தது இந்நூற்றாண்டின் அதிசயங்களில் ஒன்று.
லக்ஷ்மிக்கு தன்னைச் சுற்றியும் ஒரு புனைவை உருவாக்கும் இயல்புள்ளதோ எனத் தோன்றும். ஒவ்வொரு முறையும் வெளியூர்களுக்குப் பேருந்தில் பயணம் செய்துவருகையில் ஏதேனும் ஒரு பயணக்கதை தயாராய் இருக்கும். அவர் அருகில் எப்படியும் ஒரு பெண் அமர்ந்து விடுவாள். மெய்தீண்டல் கதைகள் மெய்யா என்ற ஆராய்ச்சியெல்லாம் எதற்கென நாங்கள் சுவாரசியமாய் கேட்டுக் கொண்டிருப்போம். ஆனால் என் பயணங்களில் யாரேனும் தொப்பையைத் தள்ளிக்கொண்டு என்மீது தூங்கிவிழும் போது மட்டும் அக்கதைகள் நினைவுக்கு வந்து எரிச்சலைக் கிளப்பும். அந்நாட்களில் நாங்கள் தஞ்சைப் பிரகாஷைப் பற்றி தீவிரமாய் விவாதித்துக் கொண்டிருந்தோம். தஞ்சைப் பிரகாஷின் ‘கடைசிக்கட்டிமாம்பழம்’ நாங்கள் அதிசயித்த கதைகளில் ஒன்று. லக்ஷ்மியின் புனைவுலகிலும் பேச்சிலும் தஞ்சைப் பிராகாஷின் பாதிப்பு நிறைய உண்டு. தஞ்சைப் பிராகாஷின் ‘மீனின்சிறகுகள்’ நாவலில் வரும் கதாப்பாத்திரமான ரங்கமணியைத் தான் நான் அவருக்கு பட்டப்பெயராய் சூட்டியிருந்தேன்.
ஒவ்வொரு புனைவை வாசித்த பிறகும் அதுகுறித்து நாங்கள் தீவிரமாய் விவாதித்துக் கொண்டிருப்போம். அப்போது எங்கள் வாசிப்பு வேகம் இன்று நினைக்கையில் மலைப்பூட்டுகிறது. உயிர்மையில் வெளியாகியிருந்த ஜெயமோகனின் குறுநாவல்கள் முழுத்தொகுப்பை விஜய் மகேந்திரனிடமிருந்து வாங்கி வந்த லக்ஷ்மி மூன்றாம் நாள் அதை அவருக்குத் திருப்பித் தந்தார். அதற்குள் வாசித்துவிட்டீர்களா என அவர் அதிசயப்பட்டதற்கு என் அறை நண்பனும் அதை வாசித்துவிட்டான் என்ற பதிலின் மூலம் அவரை மேலும் ஆச்சரியப்படுத்தியிருந்தார். கோணங்கியின் ‘மதினிமார்கள்கதை’த் தொகுப்பையும் ‘கொல்லனின்ஆறுபெண்மக்கள்’ தொகுப்பையும் லக்ஷ்மி மூலமே நான் வாசித்திருந்தேன். அக்கதைகளிலிருக்கும் ஒரு சாசுவதத் தன்மை, மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் அம்மொழியின் ஈர்ப்பு. “மேட்டுப்பட்டிநந்தவனத்தில்பூக்கிறஒவ்வொருபூவும்அமராவதியைப்போல்அழகானது” என்று அவர் எழுதும் போதும் “ஓலைவேய்ந்தநிரைசலுக்குள்ஈஸ்வரிஅக்காதினமும்குளிக்கும்சாயந்திரத்தில்ஊர்முழுதும்மறையாதமஞ்சள்வெயில்” என்ற வரிகள் குறித்தும் எவ்வளவு அதிசயித்திருக்கிறோம். ஒருவேளை ஈஸ்வரி அக்காள் மாலை ஒளியை மஞ்சளாய் தன் உடலில் பூசியிருப்பாளோ?
எங்கள் வாசிப்பினூடாக பிரேம்–ரமேஷை தமிழின் ஆகச்சிறந்த கதை சொல்லிகளாய் நாங்கள் கண்டடைந்தோம். அவர்களின் மிகு புனைவுகளின் தொகுப்பான ‘மகாமுனி’ தமிழில் ஈடு இணையற்றது. அவர்களின் ‘கனவில்பெய்தமழையைப்பற்றியஇசைக்குறிப்புகளுக்கு’ நிகராய் ஒரு கதையை எழுதிவிட்டால் இத்தலைமுறை எழுத்தாளனும் இனிவரும் தலைமுறை எழுத்தாளனும் காலரைத் தூக்கிவிட்டு ஒய்யாரமாய் சவப்பெட்டிக்குள் படுத்து நிம்மதியாய் கண்மூடலாம்.
நான் 2009 மே இறுதியில் என் ஆறு வருட கல்லூரி வாழ்வு முடிந்தபின் புதுக்கோட்டைக்கு கிளம்பினேன். லக்ஷ்மி வேறு அறைக்கு இடம்பெயர்ந்தார். அப்போது ‘நீலநதி’ மட்டும் வெளியாகியிருந்தது. 2010-ற்குப் பிறகான காலகட்டத்தில் ஏற்பட்ட மிகை இணையப் பயன்பாடு கணிசமான இளைஞர்களை உலக சினிமா பார்க்கச் செய்திருந்தது. அவர்களில் பலர் இலக்கியத்திலும் வாசகர்களாய் மாறியிருந்தனர். 2011 புத்தகக் கண்காட்சியில் ‘உப்புநாய்கள்’ வெளியானது. நான் லக்ஷ்மியிடம் “அந்நாவல்சுவாரசியமானநிகழ்வுகளின்தொகுப்பாய்உள்ளதென்றும்நாவலுக்கானஅகஉலகுஇன்னும்கைகூடவில்லை” என்றும் கூறினேன். லக்ஷ்மி அதைக் கேட்கும் மனநிலையில் இல்லை. புதிதாய் வாசிக்கத் தொடங்கியுள்ள தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் அதை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பது குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு ஏமாற்றமாய் இருந்தது. ஏழு வருடங்கள் கடந்தபின் என்னை அழைத்தவர் “யோவ்உனக்குஎன்கதையோடலிங்க்அனுப்பிருக்கேன்யாபடிச்சிட்டுஎப்படிஇருக்குன்னுசொல்லு” என்றார். “நிறையபேர்வாசிச்சுட்டுநல்லாஇருக்குங்குறாங்கஆனாஒன்னும்புரியலங்குறாங்க” என வருத்தப்பட்டார். நான் அக்கதையை வாசித்து அதிலிருக்கும் சிக்கல்களைச் சொன்னேன். பொறுமையாய் கேட்டுக் கொண்டார். லக்ஷ்மியின் எழுத்து இலக்கியத்திலிருந்து திரைமொழியை நோக்கி நகர்ந்துள்ளது. ஒருவேளை தன் வாசகர்களுக்கும் அவருக்குமான ஒரு புரிந்துணர்வாய் அது இருக்கலாம். ஆனால் நான் அறிந்த சரவணன் – லக்ஷ்மி சரவணக்குமார் எனும் புனைப்பெயரில் இதுவரை பிரசுரமாகியிருப்பவற்றை விட மேம்பட்ட எழுத்தாளனே. என் சிறுகதை தொகுப்பு வெளியீட்டு விழாவிற்கு நண்பர்கள் யாரையும் நான் அழைத்திருக்கவில்லை. லக்ஷ்மி இரண்டு நாட்கள் முன்பாக என்னை தொடர்புகொண்டு விழாவிற்கு வருகிறேனா எனக் கேட்டார். “வரேன்நீங்கவரீகளா?” என்றேன். “யோவ்நான்வராமஎப்படி” என்றார். ஆமாம் லக்ஷ்மி சரவணக்குமார் வராம எப்படி சரிதானே என நினைத்துக் கொண்டேன்.
ஒருமுறை சுனிலிடம் 2000-க்குப் பிறகு எழுதவந்த எழுத்தாளர்கள் கோணங்கியின் ‘மதினிமார்கள் கதை’யைப் போன்றோ ஜெயமோகனின் ‘படுகை’யைப் போன்றோ எஸ்.ராமகிருஷ்ணனின் ‘தாவரங்களின் உரையாடலை’ப் போன்றோ மொத்த சூழலையும் திரும்பிப் பார்க்கச் செய்த கதைகள் எதையும் எழுதவில்லையென்றேன். அதற்கு அவன் லக்ஷ்மி சரவணக்குமாரின் ‘மயான காண்டம்’ கதையைக் குறிப்பிட்டு எந்த எழுத்தாளனுக்கும் சளைத்த கதையல்ல என்றான். அவன் சொன்ன பிறகு தான் அக்கதையை வாசித்தேன். நல்ல கதை. நான் லக்ஷ்மியிடம் எதிர்பார்த்தது நல்ல கதையை மட்டுமல்ல. என்னைப் பொறுத்தவரையில் ஜெயமோகனின் ‘டார்த்தினியம்’ இன்னொரு எழுத்தாளனால் எழுதிவிடக் கூடியது தான். ஆனால் ‘திசைகளின் நடுவே’ சிறுகதையோ ‘மடமோ’ அப்படியல்ல. கி.ராவின் ‘நிலைநிறுத்தலோ’, கோணங்கியின் ‘கருப்பு ரயிலோ’ இன்னொரு எழுத்தாளனால் எழுதுவதற்கு சாத்தியமில்லை. அவை அந்த எழுத்தாளர்களின் பிரத்யேகமான மன உலகால் கட்டமைக்கப்பட்ட தனித்துவமானக் கதைகள். நான் லக்ஷ்மியிடம் எதிர்பார்ப்பது அதைத்தான். “இன்னொரு எழுத்தாளனால எழுதிர முடியாத கதைகள எழுதுயா சரவணா”.
***
சித்ரன், இவரது முதல் நூல் “கனாத்திரமுறைத்த காதைகள்” நல்ல கவனம் பெற்ற நூல். முதல் சிறுகதைத் தொகுப்பிற்கான ‘க.சீ.சிவகுமார் நினைவு விருதை’ வென்றது. அவரது மின்னஞ்சல் முகவரி – vinocitran@gmail.com
ஹீப்ருக்களின் பைபிளான ஆதியாகமத்தில், ‘சோதாம்’ மற்றும் ‘கொமோரா’ என்ற இரு நகரங்களும் அவற்றில் வாழ்ந்தவர்கள் செய்த பாவங்களின் பொருட்டு நெருப்பாலும் கந்தக மழையாலும் அழிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இவ்விரண்டு நகரங்களும் நவீன யுகத்தில் ஒருபால் விழைவு கொண்டவர்களுக்கான, அதிலும் குறிப்பாக இரு ஆண்களுக்கிடையான காதலின் குறியீடாக வழங்கப்படுகிறன. இவ்விரு நகரங்களில் ஒன்றான கொமோராவின் பேரால் தலைப்பிடப்பட்டிருக்கும் லக்ஷ்மி சரவணகுமாரின் இந்த நாவல் தன் கதையை தலைப்பிலிருந்தே சொல்லத் தொடங்குகிறது.
மதுரைக்கு அருகே சொராக்காப்பட்டியில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் அம்மண்ணின் கிடாவெட்டு திருவிழாவுடன் தொடங்குகிறது இந்நாவல். பலரும் பல்வேறு காரணங்களுக்காக காணிக்கையாக கிடா வெட்ட, அங்கே தன் தந்தையைக் கொல்ல நேர்ச்சை கொண்டு ஆடு வெட்டுகிறான் கதிர். அதிலிருந்து துவங்கி, கதிருடைய பின்னணி, அவனின் தந்தையான அழகர்சாமியின் பால்யம் என்று ஈரிழையாகப் பயணித்து இவ்விருவரும் சந்திக்கும் புள்ளியில் வளர்ந்து அழகர்சாமியினுடைய கொலையில் முடிகிறது நாவல்.
தந்தை மகன் இடையே நிலவும் உறவு நிலை இந்திய வறுமைப் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது பெரும்பாலும் மிகவும் இறுக்கமான ஒன்றாகவே இருக்கிறது. இங்கே ஒரு குடும்பத்தின் அதிகாரம் குடும்பத் தலைவன் என்ற வகையில் தந்தையிடமே குவிக்கப்படுகிறது. கட்டற்ற அதிகாரம் எங்கும் எதேச்சதிகாரத்துக்கு இட்டுச் செல்வதே வழமை. குடும்ப அமைப்புகளும் அதற்கு விதிவிலக்கல்ல. அதுவே இங்கும் நடைபெறுகிறது. இந்த அதிகாரத்தை குடும்பத்தின் பெண்கள் ஏற்றுக்கொள்ள பழக்கப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களின் கட்டுப்படுத்தப்பட்ட குறுகிய வெளியுலகத் தொடர்பும் பொருளாதாரச் சார்பும் புனிதமேற்றப்பட்ட தாய்மையும் இப்படிக் குவிக்கப்பட்ட அதிகாரத்தை அவர்கள் கேள்விக்குட்படுத்துவதிலிருந்து அவர்களைத் தடுத்து நிறுத்துகின்றன. ஆனால், இதே இடத்தில் இன்னொரு ஆடவன் மகன் என்ற பெயரில் தலையெடுக்கும்போது இருவருக்குமான அதிகாரப் போட்டி துளிர்விடத் தொடங்குகிறது. அது கைகொள்ளப்படும் வீரியமே இருவருக்குமான உறவுநிலையைத் தீர்மானிப்பதாக இருக்கிறது.
தந்தையைக் கொல்லும் வேட்கை வெளிப்படும் பல்வேறு பிரதிகள் உலக இலக்கியங்களிலும் சினிமா போன்ற கலை வடிவங்களிலும் தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வருகின்றன. (சமீபத்தில் மலையாளத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான ‘ஜோஜி’ திரைப்படமும் அப்படியான பின்புலம் கொண்ட கதையே. அதுவுமே ஷேக்ஸ்பியரின் மேக்பத்தினை ஆதர்சமாகக் கொண்ட படைப்பாக இருக்கிறது). பொதுவாகத் தந்தையைக் கொல்லும் விழைவென்பது தாயிடத்தில் கொண்ட பேரன்பின் காரணமாய்த் தோன்றிய ‘ஈடிபஸ் காம்ப்ளெக்ஸி’ன் நீட்சியாகவே நிறைய இடங்களில் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால், எல்லாவிடங்களிலும் அது அப்படி இருப்பதில்லை. இந்த நாவலைப் பொறுத்தமட்டில் அது தாயின் மீதான பற்றின் பொருட்டெழுந்த தந்தையின் மீதான வெறுப்பு என்று குறுகிப் புரிந்துகொள்வதில் சிக்கல் இருக்கிறது.
சிக்மண்ட் பிராய்டின் உளவியல் பகுப்பாய்வினை சற்று உதவிக்கு அழைத்துக்கொண்டால், அவர் மனித மனத்தை இயக்கும் விசயங்களாக மூன்று சக்திகளைக் குறிப்பிடுகின்றார். Super Ego, Ego, Id. இதில் தினந்தோறும் சந்திக்கும் சாதாரண மனிதர்களுக்கு – ஒரு நவநாகரிக சமூகத்தில் எது இயல்பென்று கருதப்படுமோ அவற்றைத் தவறாமல் பின்பற்றும் மனிதர்கள் – முதலிரண்டு சக்திகள் மேலோங்கியிருப்பதாக அவதானிக்கிறார். அதே நேரத்தில் மூன்றாம் சக்தியான ‘இட்’டின் ஆதிக்கம் அதிகமாகும் ஒருவனுக்கு அவனுடைய பழிவாங்கும் உணர்ச்சி மேலோங்கி சுயகட்டுப்பாட்டை மீறுகிறான் (கா.சு-நூல்). மேலும் இதை ஒரு மனநோயாகவே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை மனித மனதின் ‘இட்’டில் பதிவாகியிருக்கும் கொடூர நினைவுகளை உளப் பகுப்பாய்வின் வழியே சிகிச்சை செய்து அழிக்க முடியுமானால் அவனை அதன் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து பழிவாங்கும் உணர்விலிருந்து முற்றிலுமாக வெளியேற்றிவிடலாம் என்பது பிராய்டின் துணிபு. இந்தப் பின்னணியில் இந்நாவலில் வரும் கதிரிடத்தில் தன் தந்தையின் மீதிருக்கும் வன்மத்தை அணுகினால், கதிர் தன்னுடைய அதுவரையிலான வாழ்விலடைந்த அத்தனை இழிநிலைகளுக்கும் தன்மீது உமிழப்பட்ட எல்லா கசப்புகளுக்கும் ஊற்று முகமாக தன்னுடைய தந்தையே இருந்திருக்கிறார் என்று உணருமிடத்தில் அவரின் மீதான வெறுப்பு வன்மமாகத் திரிகிறது. நாவல் முழுவதும் அவ்வெறுப்புக்கான சகல நியாயங்களும் திரும்பத் திரும்ப கூறப்பட்டிருக்கிறன. அவற்றுள் ‘சாத்தனின்மனவெளிக்குறிப்புகள்’ பகுதி முக்கியமான ஒன்று.
மேலும், இந்நாவல் நெடுகிலும் முக்கியமான முரண் ஒன்று இழையோடுகிறது. அதுவுவே நாவலின் பெரும் பலமாகவும் பலவீனமாகவும் செயல்படுகிறது. ஒரு மனிதனின் இயல்பினை, அவன் நல்லவன் கெட்டவன் என்று பிரித்தறியப்படும் குணா விலாசங்களை வரையறுப்பதில் அவனுடைய பால்யத்துக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அழகர்சாமி, கதிர் – இவ்விருவருமே வஞ்சிக்கப்பட்ட பால்யத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். கடல் கடந்து பிழைக்கச் சென்ற கம்போடிய தேசத்தில் நிகழ்ந்த உள்நாட்டு போரில் பெற்றவர்களையும் உற்றவர்களையும் இழந்து அடிமைப்பணி செய்து வளர்ந்த பால்யம் அழகர்சாமியுடையது. ஏழ்மையும் இயலாமையும் பழிச்சொல்லும் விரட்ட பெற்றோர் உற்றோர் இருந்தும் ஆதரவற்றோர் விடுதியில் சிதைக்கப்பட்ட பால்யம் கதிருடையது. முன்னதாக இவ்வாறான பாதிப்புக்குள்ளான அழகர்சாமியே கதிரின் அலைகழிக்கப்பட்ட துயர் நிரம்பிய பால்யத்துக்குக் காரணமாய் இருப்பதே இதில் செயல்படும் முக்கிய முரண். நாவல் கதிரின் பார்வையிலிருந்தே பெரும்பாலும் இயங்குகிறது. தந்தையின் மீதான அவனுடைய கோபத்துக்கும் வன்மத்துக்கும் கொலைவெறிக்குமான நியாயங்கள் ஒருபக்கம் சொல்லப்பட்டிருந்தாலும் மற்றொரு இழையாக ஓடும் அழகர்சாமியின் கதையையும் வாசிக்கும் ஒருவருக்கு அவரிடத்தே சிறுபரிவு ஏற்படுவதைத் தவிர்க்கவியலவில்லை. எல்லாவற்றையும் கறுப்பு வெள்ளை என்று கட்டம் கட்டிச் சுட்டிவிட முடியாதுதான். இப்படி இரு தரப்பையும் வாசகனிடத்தே முன்வைக்கும் போது இயல்பாக வாசகனுக்கு கதிரின் நியாங்களைப் புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுவே வாசகனைப் பிரதியிலிருந்து சற்று வெளியே நிறுத்துவதற்கும் காரணமாகிவிடுகிறது.
நாவல் முழுவதும் இரக்கமற்ற வன்மம், ஆற்றுப்படுத்தவியலாத கோபம், பொறுத்துக் கொள்ளவியலாத இழிவு எனக்கொண்ட மனிதர்கள் திரும்பத் திரும்ப காட்சிப்படுத்தப்பட்டாலும் அன்பின் வழியது உயிர் நிலையில் உலவுபவர்களும் இருக்கிறார்கள். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலொரு தேசத்தில் நடக்கும் அரச பயங்கரவாதத்தின் காரணமாய் நடைபெறும் உள்நாட்டுப் போரின் விழைவாக நடக்கும் வன்முறைகளுக்கு துளியும் சம்பந்தமில்லாது குற்ற உணர்ச்சி கொண்டு கலங்கும் ராவுத்தரும் ஆதரவற்ற குழந்தைகளிடத்தே பேரன்பு காட்டும் ரோஸி ஆன்ட்டியும் சக்தி, சத்யா, சுதா, மலர் என்று அன்பைப் பொழிபவர்களும் நாவல் முழுவதும் வந்துகொண்டுதானிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருக்கின்றார்கள்.
நாவலில் கதிர் பயணிக்கும் இடங்களும் சந்திக்கும் மனிதர்களும் இயல்பாகவும் நம்பகத்தன்மையுடனும் வந்த அளவுக்கு அதற்கு இணையான முக்கியத்துவம் கொண்ட அழகர்சாமியினுடைய பகுதி அப்படிப் பொருந்தி வரவில்லை. கம்போடிய மண்ணில் நடக்கும் உள்நாட்டுக் கலவரம், அதனால் பாதிக்கப்படும் மக்கள், அவர்கள் மேல் செலுத்தப்படும் கட்டற்ற வன்முறை என எல்லாம் பதிவாகியிருந்தாலும் அந்தப் பகுதியோடு முழுவதுமாய் ஒன்ற இயலவில்லை. அந்த நிலமும் பின்னணியும் அவர்களின் வாழ்க்கைப் போக்கும் சரிவரப் பதிவாகவில்லை. அவை பெரும்பாலான இடங்களில் வெறும் தகவல்களாகவும் செய்திகளாகவும் மட்டுமே கடத்தப்படுவதான உணர்வு எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
இந்த நாவலின் சிறப்பான பகுதியென்று கதிர்-முருகன்-சக்தி ஆகியோரின் பாத்திர வார்ப்புகளையும் அவர்களிடைய நிலவும் அன்பையும் புரிதலையுமே சொல்வேன். கதிரை நேசிக்கும் முருகனால் அதற்கு இணையாக சக்தியைக் காதலிக்க முடிகிறது. கதிரின் மீதான முருகனின் விழைவை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் சக்தி அதை எங்கோ ஓரிடத்தில் புரிந்துகொள்கிறாள். இப்படியான உறவுச் சிக்கலை எந்தவிதத்திலும் புனிதப்படுத்தாமல் அவற்றின் இயல்புத் தன்மையோடு காட்சிப்படுத்தியிருப்பது நன்றாக வந்திருக்கிறது. இந்நாவலின் உச்ச தருணங்களில் ஒன்றாக கதிர், முருகன், சக்தி என மூவரும் முருகனின் வீட்டிலமர்ந்து உணவருந்தும் காட்சியையும் எல்லா உண்மையும் வெளிப்பட்ட பின்னரும் மருத்துவமனையில் நோயுற்று இருக்கும் கதிரின் அம்மாவுக்காக சக்தி வந்து நிற்கும் காட்சியையும் சொல்வேன்.
பல்வேறு இடங்களில் இரத்தமும் சதையுமாக வெளிப்பட்டுள்ள உரையாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. அதிலும் சுதாவுடன் கதிரின் உறவும் அவளின் விலகலும் வெளிப்படும் இடமும் அப்போது நிகழும் உரையாடலும் தமிழ் நாவல் உலகுக்குப் புதிது. அதேபோல கதிரின் மீது சக்திக்கு வரும் கனிவுக்கும் அன்புக்கும் காரணம் இன்னதென்று நாவலில் எந்த இடத்திலும் கூறப்படுவதில்லை. உண்மையில் அவள் அவனை வெறுத்துத் தூக்கி எறிவதற்கான எல்லா நியாயங்களும் நாவலில் உண்டு. அதையும் மீறி அவளிடத்தே வெளிப்படும் அன்பையும் கருணையையும் வாசகனால் புரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில் ஆன்ட்ரூ சாமியார் தத்துவார்த்த பார்வையின் வழியே கதிரைப் புரிந்துகொள்ள முயலும் இடம் வெறும் பாவனையாக மட்டுமே எஞ்சிவிடுகிறது. அதைவிட நாவலின் வழியே கதிரை ஒரு வாசகன் இன்னும் நெருக்கமாக கண்டடைந்து கொள்வான்.
நாவலில் வரும் சில நாடகத் தருணமிக்க காட்சிகள் நாவலை அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்குப் பதிலாக அதை ஒருபடி நிலை கீழே இழுப்பவையாக உள்ளன. குறிப்பாக பேய்ச்சியின் பின்னால் பித்துகொண்டு அலையும் இடம், சத்யாவுடனான காதல் தருணங்கள், ஆரம்பத்தில் வரும் சிறுமி கற்பகத்தின் முதிர்ச்சியான உரையாடல்கள் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். ஆண்களுக்கிடையேயான உறவும் காதலும் காட்சிப்படுத்தப்பட்ட இடங்களில் இயைந்து வந்த அணுக்கம் ஆண்-பெண் காதல் தருணங்களில் கூடி வரவில்லை.
இதில் வரும் விஜியும், மலரும் அதிலும் குறிப்பாக விஜியின் தந்தையாக வரும் முதியவரும் முக்கியமான பாத்திர வார்ப்புகள். அம்முதியவருக்கு நேரும் முடிவு அதுவரையான நாவலின் ஒட்டுமொத்த பார்வையையும் மறுபரிசீலனை செய்யும் விதமாய் அமைந்திருக்க வேண்டியது. ஆனால் அவ்விடம் அதீதமாய் புனிதப்படுத்தப்பட்டு உணர்வுப்பூர்வமாகக் கடத்தாமல் போகிறது. ஆனால், அதுவரை சேர்த்து வைத்துக்கொண்ட தன் மொத்த ஆத்திரத்தையும் தீர்த்துக்கொள்ளும் வாய்ப்பு அமையுமிடங்களில், கதிரின் தடுமாற்றமும் தத்தளிப்பும் வெளிப்பட்டுள்ள இடங்கள் நன்றாக வந்திருக்கின்றன. அவன், தானே தன் தந்தையின் நீட்சியாக இருப்பதை உணருமிடம் முக்கியமான திறப்பு. ஆனால், அதுவரையிலான தன் வாழ்வின் அத்தனை கசங்கல்களையும் நீவிச் சரிசெய்து கொள்ளும் வாய்ப்பு சக்தி, தனம், முருகன் வழியே வரும்போது அதைச் செய்யாமல் தந்தையைக் கொல்வதொன்றே அதற்கான சரியான வழியென்று கதிர் பிடிவாதம் கொள்ளுமிடம் கதிரைப் புரிந்துகொள்வதை மேலும் சிக்கலாக்குகிறது. அதுவே கதிர் அழகர்சாமியைக் கொல்லுமிடத்தில் வாசகனிடத்தில் ஏற்படுத்தியிருக்க வேண்டிய பெரும் சலனத்தை ஏற்படுத்தத் தவறுகிறது.
கியாஸ் தியரியில் சொல்லப்படுவதைப் போல ஒரு பட்டாம் பூச்சியின் சிறகசைப்புக்கு பனிப்பாறைகள் உருகிச் சரிவதைப் போல உலகின் ஏதோ ஒரு மூலையில் நடைபெறும் வன்முறையின் பிழம்புகளுக்கு அதற்குத் துளியும் சம்பந்தமில்லாத பாவங்களின் ஈர்ப்பு நிலத்தில் சிறு பூச்செடிகள் கருகுகின்றன.
***
கார்த்திக் பாலசுப்ரமணியம், சொந்த ஊர் ராஜபாளையம். பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ‘டொரினா’, க.சீ.சிவகுமார் நினைவு முதல் சிறுகதைத் தொகுப்புகளுக்கான விருதை வென்றது. ‘நட்சத்திரவாசிகள்’ நாவல் வாசகசாலை விருதை வென்றது.
சிங்கப்பூர் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்த சிறுகதை பயிலரங்கு நிகழ்விற்கு வந்திருந்த நாஞ்சில் நாடன் அவர்கள் சில சிறுகதைகளை வாசிப்பதற்கு தேர்ந்தெடுத்து கொடுத்திருந்தார். அவற்றுள் லஷ்மி சரவணகுமாரின் ‘இருள் மூத்திரம் மற்றும் கடவுளின் பட்டுக் கௌபீகத்துணி’ சிறுகதையும் ஒன்று. அக்கதை நண்பர்களுக்கிடையே மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியிருந்தது. அந்தக் கதைக்கு ஆதரவும் எதிர்ப்புமாக தொடர்ந்த விவாதம் தெளிவாக உணர்த்தியது ஒன்றைத்தான். உடல் குறித்த புரிதல், ஆண் பெண் இருபாலருக்குமே போதுமானதாயிருக்கவில்லை. கதைகள் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாதென்கிற மரபுகளை மீறமுடியாதவர்களாகவே பெரும்பான்மையான வாசகர்கள் இருந்துவருவதை கண்கூடாகத் தெரிந்துகொண்டேன். கலையில் நோக்கம் விடுதலையைப் பேசுதல் என்றால் அங்கு உடலின் விடுதலையும் பேசப்படத்தானே வேண்டும்? உடல் என்பது மூடி மறைக்கவேண்டிய ஒரு பண்டமாகவே சொல்லி கொடுக்கப்பட்டால் அதன் மீது தொடர்ந்து நாம் புணிதங்களை மட்டுமே கட்டமைக்கிறவர்களாகிவிடுகிறோம். இந்த வெற்றுப் புணிதங்கள் ஆபத்தானவை, பெண்ணுடல் தன் விருப்பத்திற்கேற்றபடி இயங்குகிறபோது அவற்றின்மீது வெறுப்பையும் வன்முறையையும் பிரயோகிப்பது இந்த புணிதங்கள்தான்.
முன்பு பாலியல் சார்ந்த புத்தகங்களையும் நீலப்படங்களையும் பார்ப்பதற்கு தயக்கங்களும் கூச்சங்களுமிருந்ததால் அதனைத் திருட்டுத்தனமாகச் செய்து கொண்டிருந்தோம். இன்றைய தலைமுறையினருக்கு அந்தத் தயக்கங்கள் விலகியுள்ளதால் வெளிப்படையாக பார்க்கத் துவங்கியிருக்கிறர்கள். பாலியல் படங்களைப் பார்ப்பதன் வழியாக மட்டுமே உடல்களைக் குறித்த நம் அறிவு வளர்ந்துவிடாது. ஒரு புள்ளிவிவரத்தில் திருமணத்திற்கு முன் உறவு வைத்துக்கொள்ளும் பத்து பெண்களில் ஆறு பெண்கள் கருத்தரிக்கிறார்கள், குடும்ப உறுப்பினர்களால் பத்தில் ஐந்து சிறுவர், சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியானால் எங்கே தவறுகள் நிகழ்கின்றனவென யோசித்தால் உடல் தூய்மையையும், மனப் பிறழ்வு சார்ந்த அழகியலை குறித்தப் புரிதலும் நம்மிடம் இல்லை என்பதால்தான். எழுத்தாளர் சாரு நிவேதிதா இந்தப் பிறழ்வுகளைக் குறித்து தொடர்ந்து தனது படைப்புகளிலு ம் உரைகளிலும் வெளிப்படுத்தியபடியே இருக்கிறார். ஆனால் அந்தப் படைப்புகள் பொது சமூகத்தின் உரையாடலுக்குள் வரமால் போய்விடுகின்றன. ஜி.நாகராஜன், தஞ்சை பிரகாஷ் ஜே.பி.சாணக்கியா இவர்களைத் தொடர்ந்து உடல் குறித்தும் உடலரசியல் குறித்தும் வசீகர மொழியால் எழுதி வருபவர் லஷ்மி சரவணகுமார். அவரது கதைகளைத் தேடி படித்த போது மிரண்டதுண்டு, அழுததுண்டு, ச்சை என்று புத்தகத்தை தூக்கி வீசியதுண்டு. அத்தனை கதை மாந்தர்களையும் நாம் கடந்து சென்றிருக்கிறோம் என்று உணரும்போது குற்றவுணர்வு மேலோங்கியது உண்டு.
பொதுவில் உரையாட முடியாத காமம் சார்ந்த பிறழ்வுகள் என்று சொல்வதைவிட உரையாட கூடாது என்று நாம் ஒதுக்கிவைத்த இச்சைகளை உளவியல் ரீதியாக தன் சிறுகதைகளில் பதிவு செய்கிறார். ஆண் என்பதால் இவ்வளவு துணிச்சலாக எழுதுகிறாரோ என சில சமயங்களில் தோன்றும். அது குறித்தும் அவரிடம் கேட்டிருக்கிறேன் அதற்கு அவர் உண்மையை சொல்ல ஆண் பெண் என்ற அடையாளம் தேவையில்லை நீங்கள் எழுத அல்லது சொல்ல விரும்பும் கருத்து குறித்த புரிதலும் பிரச்சனைகளை சமாளிக்க கொஞ்சம் துணிச்சலும் வேண்டுமென்றார்.
அவரது முக்கியமான சிறுகதைகளில் வள்ளிதிருமணமும் ஒன்று. நாடககொட்டகைக்கு பின்னால் நடந்தேறும் காதல், அதில் அவசரமாக சேர்ந்திடும் கலவி, ஓரின கலவி பற்றி இக்கதை பேசுகிறது. இக்கதையில் வரும் மாந்தர்கள் காமத்திற்கான ஒழுக்கத்தை தங்களுக்கு தெரிந்த வகையில் வகுத்து வைத்திருக்கிறார்கள். காமத்தை அவர்கள் எங்கும் கட்டுபடுத்தவில்லை அதை விரசமாக்கவில்லை. உடலுக்கு அப்பால் நாம் தேடும் ஒன்றை அது திறந்து காட்டுகிறது. அதேபோல் நீலத்திரை என்னும் சிறுகதை நாம் வகுத்துவைத்திருக்கும் எல்லா ஒழுக்க கோட்டிற்கும் அப்பால் நிற்கக் கூடியதொன்று. நண்பர்களோடு அவ்வப்போது நீலப்படம் பார்க்கும் வழக்கம் கொண்ட மகேஷ் ஒருநாள் அதுபோன்றதொரு படத்தில் தன் அம்மா நடித்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். போதாக்குறைக்கு அவனது அம்மாவின் அழகை வர்ணித்தப்படியே அவனது நண்பன், அவன் அங்கேயே சுயமைதுனம் செய்துக்கொள்கிறான். மகேஷோடு சேர்ந்து கதையை வாசிக்கிற நம்மையும் பிறழ்விற்கு நகர்த்தக்கூடிய இடமிது. அம்மாவின் உடல், நிர்வாணம், காமம், முனகல் என்று பார்த்தவன் அவள் முகம் பார்த்து இயல்பாக இருக்கவியலாமல் தவிக்கிறான். நம் சமூகத்தில் பருவம் வந்த பிள்ளைகளுக்கு, பெற்றோர்களுக்கான தனியறை கொண்ட வீடு நம்மில் பலருக்கு வாய்க்கவில்லை. எத்தனையோ பெற்றோர்களை நிர்வாணமாக பார்த்த பிள்ளைகள் அதன் பிறகு பெற்றோர்களை எப்படி எதிர் கொள்வது என்கிற தயக்கத்தோடு எங்கோ ஒரு இடத்தில் தஞ்சம் புகுந்துக்கொள்கிறார்கள். அதில் பல பிள்ளைகளின் வாழ்கை திசைமாறி உள்ளது. ஆனால் இக்கதையில் இளமையின் உக்ரத்தை தாய்மையின் அன்பு வென்றுவிடுகிறது.
ஒழுக்க நெறிகள் தேசத்திற்கு தேசம் மாறுகிறதோவெனக் கவனித்தால் இல்லை என்றுதான் நமக்கு பல உலக இலக்கிய கதைகள் உணர்த்துகிறது. ஸ்பெயினிலிருந்து வரும் மரியா தன் உடலை இங்கு எப்படி மூலதனமாக மாற்றுகிறாள் என்பதுதான் செப்டம்பர் மாதத்தின் ஸ்பானியத் தோழியும் விசுவாசமிக்க நல் மேய்ப்பார்களும் கதை. பெரும்பான்மையான ஆண்களுக்கு இயல்பிலேயே வெள்ளைகார பெண்களை தொட்டு பார்பதிலும், அவர்களை நிர்வாணமாக பார்பதிலுமே அலாதியான கிளர்ச்சியிருக்கும். அதுமாதிரியான ஆண்கள் இக்கதையில் நிறையவே உலாவுவார்கள். வெகு நாட்களுக்கு முன் ஒரு கட்டுரை எழுதுவதற்காக இங்கு சிங்கையில் சிவப்பு பகுதிகளுக்கு சென்று வரும் சிலரிடம் பேசியபோது திடுக்கிடும்ப்டியான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்கள். எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வின் எச்சரிக்கையை முன்னிட்டு அங்கிருக்கும் பெண்களை முத்தமிட கூடாது, மார்பகங்களை கசக்க கூடது, முப்பது நிமிடத்திற்கு மேல் அனுமதி இல்லை, அவர் அறையின் உள்ளே சென்ற மூன்றாவது நிமிடமோ அல்லது பத்தாவது நிமிடமோ உச்சத்தை தொட்டு விட்டால் அறையைவிட்டு வெளியேறிவிட வேண்டும் இப்படி ஏராளமானக் கட்டுப்பாடுகள். காமத்தின் எந்தவொரு இயல்பான அம்சங்க்ளுமில்லாத அதுபோன்ற இடங்களுக்குச் செல்கிறவர்கள் காமத்தை கடப்பதற்குப் பதிலாக வன்மத்திற்குப் பழகுகிறவர்களாய் மாறிவிடுகிறார்கள். இதுபோன்றவர்கள் காலபோக்கில் பெண்ணுடலில் மீது உடல்ரீதியிலான வன்முறைக்குப் பழக்கப்படுகிறவர்களாக மாறூவதற்கான சாத்தியங்களும் உருவாகிறது.
சாகசங்களை விரும்ப கூடியவன் மனிதன். அதிலும் பேரானந்தத்தை அடைவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்து பார்க்ககூடியவன். ரகசியத்தின் அரூப நிழல்கள் சிறுகதையில் வினோத் தன்னை இப்படித்தான் அறிமுகம் செய்துக்கொண்டு, நமக்கு நான்கு வித பெண்களை அறிமுகம் செய்கிறான்.
Hi I am foot fetish slave. Looking for a mistress who wants me to be her slave dog. This relation is full of submission and domination with privacy and 100% safety.
My services are Foot worship Foot licking Toe nails eating Femdom And etc….. you can make me your slave dog. You can use me In anyway u want. Pinky.
அந்த நான்கு பைத்தியகாரிகளும் அளவில்லா காதல், வன்மம், வசியம், காமம், சாகசம். இவை அனைத்தும் நிறைத்த உடலின் வாயிலாக ஆன்மாவை தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள். காதலையும் காமத்தையும் பிரித்துபார்க்காமல் ஒருத்தனை நேசிப்பவள் சுனிதா, நமக்கு பழக்கமானவள், நாம் அன்றாடம் புரணி பேசும் பெண்களில் ஒருத்தி. ஆதலால் நாம் இயல்பாய் கடந்துவிடுவோம் அர்ச்சனா நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துபவள், வதைபடுதலின் வழியாய் உடலைக் கொண்டாடும் சாகச மனுஷி. அவள் சேடிஸ்டா என்ற சந்தேகம் நமக்கு தோன்றும் போதே வினோத்தும் அந்த கேள்வியை அவளிடம் முன் வைப்பான் அதற்கு அவள் ஆம் சேடிஸ்ட்தான்… சேடிஸம் அருவருப்பு இல்ல. ஒரு ஆர்ட் என்பாள். இந்த உலகில் நடக்கும் அபத்தங்களையும் வன்முறைகளையும் தன் நிர்வாணத்தினால் ஒருத்தியாள் கலைத்தெரிந்துவிட முடியுமா? கலவியில் அவள் நடத்திக்காட்டும் வதை எல்லாவற்றையும் சரி செய்துவிடுமா என்று யோசிக்கையில் நம் ஆழ்மனதில் ஒளிந்து கிடக்கும் வன்மங்கள் ஆம் என்றே தலையசைக்கிறது.
மானசி இந்த உலகத்திற்கு எந்த உண்மையையும் திறந்து காட்ட விரும்பாதவள். நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாத இச்சையை சுமந்துக்கொண்டு திரிபவள். கூடலின் உச்சத்தில் அவள் அண்ணா என்று அழைக்கையில் வினோத் அதிர்ந்து ஒதுங்கி படுத்துவிடுவான். சு.வேணுகோபாலின் ‘உள்ளிருந்து உடற்றும் பசி’ சிறுகதை, பயிலரங்கில் நாஞ்சில் நாடன் வாசிக்க கொடுத்த கதைகளில் ஒன்று. நான்கு தங்கைகளின் நல்வாழ்விற்காகவே தன் வாழ்கையை இழக்கும் அண்ணனின் கதை. ஒவ்வொரு தங்கையாக திருமணமாகி செல்கையில் அடுத்த தங்கை குடும்ப பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். மூன்றாம் தங்கை திருமணத்திற்கு பிறகு ஒரு இரவில் தங்கையின் மீது அண்ணணின் கைகள் காமத்துடன் படர்கிறது, தங்கை பதற்றத்துடன் அழுகையில் அவன் அக்காள்கள் உன்னிடம் எதுவும் சொல்லி செல்லவில்லையா என்று கூறி வெளியேறிவிடுவான். காமத்தை மனதில் கொண்டுதானே நாம் உறவுகளை கட்டமைத்தோம். மானஸி தன் அண்ணன் மீதான காதலை காமத்தை யாரிடமாவது தொலைத்துவிட மாட்டோமா என்று ஏங்குகிறாள். தன்னை நெருங்கி வரும் ஒவ்வொருவரும் ஏன் இந்த இடத்தில் தப்பித்து ஓடுகிறார்கள்? நான் ஏன் என் அண்ணன் மீது காமம் கொள்ள கூடது? அவளது கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இருந்தாலும் சொல்லமாட்டோம். அந்த வாழ்கையை ஒழுக்கத்தின் வாசலில் கட்டிவைத்துவிட்டுதான் நாம் நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளோம். மாமாவை கட்டிக்கொள்ளும் போது ஏன் சித்தப்பாவை கட்டிக்கொள்ள கூடாது? இங்கு எது சரி? எது தவறு? எது காமம்? எது வன்மம்? எது அவலம்? எது மீட்சி? எது உடல்? எது ஆன்மா? என்ற புரிதல் இல்லாமல்தான் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.
இவை அனைத்தையும் கடந்து நிற்பவள்தான் காளி, காலங்களை கடந்த உடல், எந்த நிலத்தையும் சேராதவள், அபூர்வமான பெண்களின் அபூர்வமென லஷ்மி அவளை வர்ணித்திருப்பார். அவளின் நூறு கைகளால் வினோத்தை அணைத்து கொள்கிறாள். இந்த நான்குவிதமான பெண்களும் ஒருத்திக்குள் அடங்கியவள். பெண்கள் உடலையும் மனதையும் ஒருசேர பூட்டிவிடுகிறார்கள்.
இந்த பூமியில் வாழும் அத்தனை ஜீவராசிகளுக்கும் காதல் ஒன்றுதான் மையம். இதில் யார் யார் மீது காதல் கொள்ளவேண்டும் என்ற அளவெல்லாம் இல்லாமல் காதல் வயப்படும் இரண்டு ஆணின் கதை ஆதாமின் துரோகம். மதன், அனில். இருவரையும் தன் பால் ஈர்ப்பாளர்கள் என்ற ஒற்றை வார்த்தையில் கடந்துவிடுகிறோம். அவர்களுக்குள் இருக்கும் உளவியலை இந்தக் கதையில் ஆழமாக சொல்லியிருப்பார். அனிலின் உடலில் பெண்ணின் நளினம் ஆண்மைக்குள் இருக்கும் பெண்மை எவ்வளவு அழகானது. அந்த பெண்மைதான் வேறொரு ஆண்மீது காதலை வளர்க்கிறது. ஒருகட்டத்தில் மதன் காரணமின்றி அனிலை வெறுத்து ஒதுக்குகிறான். இக்கட்டான சூழல் ஒன்றில் அனிலை கைவிட்டும் செல்கிறான். அவர்களுக்குள் நிகழும் காமம் உடலை எரித்து அடையாளங்களை கடந்து பிறக்கவேண்டிய ஆன்மா பிறக்காமலே செத்துவிடுகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் காமம் குறித்து ‘அனைத்துச் செயல்பாடுகளும் அதில் தீவிரமாக ஈடுபடுவதன் வழியாகவே பயிலப்படுகின்றன. காமம் அப்படியல்ல. ஏனென்றால் அதனுடன் அகங்காரமும் கலந்தே உள்ளது. காமத்தில் அதிகமாக ஈடுபடுபவன் காமத்தை சற்றும் அறிய முடியாதவனாக ஆவான். காமம் அகங்காரத்துடன் கலந்து அவனை மூடி அதைப் பார்க்க முடியாதபடி ஆக்கிவிடும். அவன் காமம் உருவாக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளால் நிரந்தரமாக அலைக்கழிக்கப்படுவான்’ என்று ஓரிடத்தில் எழுதியிருப்பார்.
லஷ்மியின் கதைகளில் பேசப்படும் உடல் அரசியில் மீண்டும் மீண்டும் ஒன்றை நிகழ்த்திகாட்டுகிறது. காமத்தில் ஆண் பெண் இருபாலரும் இன்றுவரை பெருவாரியாக ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள் அவள் காமத்தை கொடுப்பவள் இவன் பெற்றுகொள்பவன் அவ்வளவுதான். ஆனால் காமத்தை கண்டடையும் போது காமத்திற்கு ஆண் பெண் என்ற அடையாளங்கள் இல்லை, உறவு என்ற ஒழுக்கம் இல்லை, எல்லாவற்றையும் கடந்த பூர்வகுடிகளின் வாழ்கை புலப்படும்.
***
ரமா சுரேஷ் – சிங்கப்பூரில் வசிக்கும் இவர். மாயா வாசகர் வட்டம் எனும் அமைப்பை உருவாக்கி இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு “உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81” வெளியாகி உள்ளது.
பிறழ்வுத்தன்மை, சமுதாயக் கூறுகளின் கட்டுடைப்புகள் போன்றவை நல்ல இலக்கியத்திற்கான கருப்பொருட்களாக அமையலாம். ஏன் அவை ஓர் இடைப்பட்ட காலத்திற்கான செவ்வியல்களைக் கூட வழங்கலாம். ஆனால் அவற்றால் காவியங்களைச் சிருஷ்டிக்க இயலாது. வேதங்களில் பீறிட்ட இறை; இயற்கை நம்பிக்கைகள் இன்று கவிதைகளாக நம்மிடம் வந்து சேர்ந்திருக்கின்றன. ராமாயணத்திலும் சிறந்த கவித்துவ தருணங்கள் நேசத்தினாலும், குற்றங்களால் கழிவிரக்கம் கொள்ளும் மனங்களாலும் விளைந்தவை. கடவுளுக்கு நிகரானவர்கள் என்று வர்ணிக்கப்பட்ட கிரேக்க இதிகாச வீரர்களில் ஏன் ஹெக்டர் அக்கிலிஸை விட மகத்தானவன்? ஏனெனில் தலைசிறந்த மானுடப் பண்புகளால் ஆன அவனது தோள்களே இலியட்டை காலநதிக்குள் மூழ்கவிடாமல் சுமந்துசெல்கின்றன. பெண்களும், நிலமும் ஆண்களின் அதிகார வெறிக்கு நடுவே மதிப்பற்று அல்லாடிக் கொண்டிருக்கையில் உயரிய அறமும், அன்பும் எக்காலத்திற்குமானது என்பதை நிறுவும் சாட்சியாக ஹெக்டர் அங்கு இருக்கிறான். அவனது வீரம் அக்கிலிஸினதைப் போல் அசட்டுத்தனமானது அல்ல. எதிரிகளான கிரேக்கர்களின் தரப்பிலும் மரணங்கள் நிகழக்கூடாது என்பதற்காக போரைத் தவிர்க்க முயலும் உயர்ந்த மானுடனாக அவன் திகழ்கிறான். போரை வரவழைத்தான் என தன் உடன்பிறந்த உதிரத்தின் மீதே அவன் சினம் கொள்கிறான். வேறு வழியின்றி தன் மக்களின் உயிரைக் காக்க போருக்குத் தலைபடும் கணத்தில் “நான் இறந்து, அதனால் நீ விம்முவாய் எனில் நீ அழுவது என் செவிகளை எட்டும் முன் இந்தப் பூமி சில்லுகளாய்ப் பிளந்து என்னை மூடட்டும்” என தன் மனைவியிடம் கூறிவிட்டு யுத்தகளத்திற்குச் செல்கிறான். இலியட்டின் மகுடமான தருணங்கள் ஹெக்டரின் நேர்மறை குணங்களால் நிகழ்ந்தவை என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை. போலவே லஷ்மி சரவணகுமாரின் எழுத்துப் பயணத்திலும் பிழற்வு நிலையை உதறி, நேர்மறையான மனதோடும், உயரிய சிருஷ்டி குணத்தோடும் அவர் எழுதிய கதைகளே அவரை வெகுசன எழுத்தாளர் என்ற இடத்திலிருந்து நகர்த்தி வைக்கிறது. லக்ஷ்மி சரவணகுமாரைத் தொற்றிய துரதிஷ்டமாக அவர் எழுத வந்த காலத்தைச் சொல்லலாம்.
அக்காலத்தை ‘முகநூல் முற்போக்கு எழுத்து, மரபுகள் மீதான மட்டையடிப்பு, செவ்வியல் புறக்கணிப்பு, அதிர்ச்சி மதிப்பீடுகளின் பொற்காலம்’ என்பது போன்ற குறிச்சொற்களுக்குள் அடைக்கலாம். அக்காலத்திற்குரிய பண்பு தவிர்க்கயியலாமல் அவரது நாவல்களில் எதிரொலித்தது, சிலமுறை அது அவரது படைப்பூக்கத்தையும் தாண்டி இரைந்தது என்பது லக்ஷ்மி சரவணகுமார் மீது பலரும் வைக்கும் எதிர்விமர்சனம். நான் அந்த இடத்திற்குள் செல்ல விரும்பவில்லை. அவர் சமகாலத்தின் தவிர்க்க முடியாத எழுத்தாளர் என்பதையும் தாண்டி அவர் ஒரு கலைஞர் என்ற கருத்தில் உடன்பட எனக்கு அவரது ‘ஒரு துண்டு வானம்’ ஒன்றே போதுமானது.
லஷ்மி சரவணகுமாரின் பெயர்போன ‘பரிசுத்தவெறுப்பு‘ என்ற பதமும், தன்மையும் இக்கதையில் துளியளவும் இல்லை. தேர்ந்தெடுத்துக் கொண்ட களத்திலேயே இக்கதை ஒரு காலமற்றத் தன்மையை பெற்றுவிட்டது. இன்னும் இருபது, முப்பது ஆண்டுகள் கழித்து வாசித்தாலும், வெவ்வேறு மொழிகளில் மொழிப்பெயர்த்தாலும் இக்கதை மங்காமல் ஒளிவீசிக் கொண்டிருக்கும் என நம்புகிறேன். ஒரு துண்டு வானம் – ஒரு பந்தயக் குதிரைக்கும், அதில் அமர்ந்து பல வெற்றிகளைப் பெற்ற அதன் குதிரை ஓட்டிக்கும் இடையேயான நட்பையும், உணர்வுப் பரிமாற்றங்களையும் விவரிக்கும் கதை. ஆனால் அக்கதை அந்த ஒரே இழையில் நீளவில்லை. ஒரு பந்தயக் குதிரையின் இறுதியோட்டத்திலும், அதில் வெற்றிபெற வேண்டிய எழுச்சி நிலையோடும் தொடங்கும் கதை பந்தயத்தில் நிகழும் விபத்தினால் தடம் மாறுகிறது. அவ்விபத்து குதிரை; குதிரையோட்டி இருவரையும் பந்தயக் களத்திலிருந்து நிரந்தரமாக விரட்டிவிட வழி செய்வதோடு, அவர்கள் அதுநாள் வரை அணிந்திருந்த மேன்மைகளையெல்லாம் பறித்துக் கொள்கிறது. இந்த வீழ்ச்சியிலிருந்து தோல்வியும், ஆத்திரமும் பிறப்பதற்கு மாறாக குதிரையோட்டியிடம் பிரிவுத்துயர் வளர்கிறது. முடங்கிக் கிடக்கும் நிலையிலும் தன் வாழ்விலிருந்து தொலைந்துபோன அந்தக் குதிரையை நேசிக்கிறான். நீரில் கரிய நிழலாய் தெரியும் மற்றொரு குதிரையின் பிம்பத்தை தான் ஏறிப்பறந்த தன் குதிரையின் ஆன்மாவாகக் கற்பனை செய்து கலங்குகிறான். அவனையும் வீழ்த்திவிட்டு, ஒரு மரியாதையற்ற வாழ்வு முறைக்குள் நுழைந்துவிட்ட அந்தக் குதிரையை இறுதியாக அவன் ஒரு சர்க்கஸ் கூடாரத்தில் வைத்து பார்க்கிறான். மக்கள் திரளின் ஓயாத இரைச்சலுக்கு நடுவே அவனது குரலைக் கேட்டு திரும்பும் அக்குதிரை முதலில் துள்ளிவிட்டு பிறகு என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறும் கணம் மயிர்கூச்செரிதலோடு இன்னொரு வசப்படாத உணர்வையும் நமக்கு கடத்தி விடுகிறது. அங்கிருந்து அக்கதை இன்னும் ஒருபடி மேலே செல்கிறது. தனக்கு உணவிடும் புது உரிமையாளனின் அதட்டலையும், கட்டளையையும் ஏற்று அக்குதிரை அவனை ஒரே ஒருமுறை மட்டும் திரும்பிப் பார்த்துவிட்டு அகன்றுவிடுகிறது. அந்தப் பிரிவு ஒரு மகத்தான துயரமாக நம்மை ஆட்கொள்கிறது. அந்தக் குதிரையோட்டியைப் போலவே நாமும் உணர்வுகள் பிறழ்வுற்று புன்னகைக்கிறோம். அக்குதிரையின் இறுதி நடை இந்தக் கதையினது மட்டுமல்லாது லஷ்மி சரவணகுமாரின் எழுத்து வாழ்விலும் மிக உன்னதமான தருணம்.
லஷ்மி சரவணகுமார் அவர் காலத்திற்கு நிறையவே எழுதிவிட்டார். அவர் எழுத்துகள் மீது எதிர் விமர்சனங்கள் இருந்தாலும் அவரது ஆரம்பகால எழுத்துகள் கூட இன்றும் வாசிக்கப்படுகிறது என்பதை நோக்கத் தவறுகிறோம். வெகுசனத்திற்காக அமைத்துக் கொண்ட எழுத்து வாழ்வேயாயினும் அவரது கலைப்பூர்வமான மனமும், கவிதைகள் மீதான ஈடுபாடும் அவரை வெகுசன எழுத்திற்கு அப்பால் கொண்டுபோய் நிறுத்தவே முயல்கின்றன. அதைத் துறக்கத்தான் அவர் தற்போது அவசரகால தொடர்-கதைகள் எழுதும் முடிவிற்கு வந்துவிட்டாரோ எனத் தயக்கத்துடன் சொல்லத் தோன்றுகிறது.
***
வேல்முருகன் இளங்கோ – திருவாரூர் மாவட்டம் வடுவூரைச் சேர்ந்தவர். அண்மையில் வெளிவந்த இவரது நாவல் ‘மன்னார் பொழுதுகள்’ பரவகான கவனத்தைப் பெற்றது.
Abstract: Every journey takes a man to a destination. Every spiritual journey takes a soul from darkness to light, from the unknown to known and from ignorance to wisdom. It is the journey that happens within the self called inward journey. Throughout the phases the theme of such journey or the quest of a soul has been pivotal in literature. In this paper, in descriptive analytical methodology the researcher attempts to identify the manner in which the quest motif is portrayed in the novel, Rooh written by the author, Lakshmi Saravanakumar. This paper also tries to draw a line in comparison with two other novels, The Alchemist and Siddartha in the portrayal of the same motif.
Keywords: ignorance, journey, quest, self, wisdom
Introduction
‘Who is man?’ and ‘What is meant to be human?’ are the questions to which great philosophers and anthropologists still seek answers. The search for human identity has been the subject of great literature, art, philosophy and anthropology throughout the ages. It has been central to every religious tradition. It forms the foundation of all great mythologies as well.
The quest-for-self motif in myth and literature symbolizes the absolute necessity of radical, defiant, creative change in the individual’s life – in the life of any culture. Especially in literature, the object of a quest requires great exertion on the part of the hero, who must overcome many obstacles, typically including much travel. The object of a quest may also have supernatural properties, often leading the protagonist into other worlds and dimensions. The moral of a quest tale often centers on the changed character of the hero.
Along with the ancient quest tale, Homer’s Odyssey, many such stories set out their primary characters to “seek their fortunes”. The most famous – perhaps in all of western literature – centers on the Holy Grail in Arthurian Legend. Despite their perils and chances of error the protagonists succeed their quests to find out their destination, the spiritual transformation rather than the objects. Writers often motivate characters to pursue these objects by meanings of a prophecy that decrees it, rather than have them discover that it could assist them, for reasons that are given.
Along the same lines, the novel The Alchemist written by Paulo Coelo is about various journeys explained through situations about the quest for fulfillment of destiny of the protagonist, Santiago. This is the story about this shepherd boy who yearns to travel in search of worldly treasures extravagant as any ever found. Likewise the novel, Siddhartha by Hermann Hesse deals with the spiritual journey of self-discovery of a man named Siddhartha. It tells the tale of one man’s journey to find that all-elusive idea of enlightenment. The seeker, Siddhartha, is placed in the time of The Buddha and actually meets him, hearing his teachings first hand. Surprisingly, Siddhartha chooses not to become a disciple of The Buddha, but instead attempts to attain the Ultimate Goal on his own. Siddhartha finds what he seeks and then returns to civilian life, living among ordinary people as an “enlightened one.” The contemporary Indian writer, Lakshmi Saravanakumar’s novel Rooh depicts a story of a man in search of treasure and ultimately he finds the true wisdom. This paper analyses in depth the quest motif and the philosophical and spiritual values it speaks of in comparison with that of Coelho and Hesse.
An Overview
Lakshmi Saravanakumar’s Rooh is an epic of love that chronicles a metamorphosis of a man named Jothy. It is a tale of love where charisma changes a vagrant into a saint and thus the layer of platonic love is unwaveringly constructed, deconstructed and reconstructed throughout the story.
The love is constructed in the story as Jothy’s fellow companions inflict constant mockery and disdain at his variant feelings of his gender. Having been despised and deserted by the entire world he seeks vengeance but only to realize that it is all in vain. His weak and feeble body and his powerlessness at a certain point make him believe in a miracle. There comes the character, an angelic Rabia, as a vessel of love pouring to heal not only his physical wounds but also his mental sores and spiritual flaws.
The love is deconstructed when this pure fraternal or maternal love takes a turn in Jothy into a dark passion, an incestuous desire, namely an Oedipal Complex towards Rabia and Devi, his sister consequently. To punish the beast in him, the beauty, Rabia deprives him of her nearness and bid an infinite distance from her being. The same occurs when she learns that he plays a role in her husband’s death.
It is reconstructed when the ardent love for the woman and her renunciation destroy him and he becomes devastated. Abandoning all, he starts wandering in the wilderness and he forgets the world around him and finally becomes a sage. His individuality merged with all-pervading reality or God. Nature, the winds and the waves obey him and he could subdue the diseases. Reconstructing her divine love, on her realization that she has nothing to lose but something to find, Rabia comes in search of him and finds him. She is struck with the stark reality that he no longer belongs to her; he now belongs to the whole world. For him the absolute bliss or treasure is achieved.
Comparison
Similar to the plot in the novel, changing in form, R.K.Narayan’s The Guide also describes the redemption and transformation of the protagonist, Raju, from a tour guide to a spiritual guide and then one of the greatest holy men of India.
The Alchemist by Paulo Coelho talks about the quest for treasure of life or the Personal Legend. Akin to the protagonist, Santiago in The Alchemist, Jothy embarks a journey he already envisioned, to find out a treasure. Coelho and Saravanakumar emphasize the fact that miracles only happen if you believe in miracles. Ultimately, in his journey he loses what he has but finds out what he really is, his true self, the Personal Legend.
In the novel, Siddhartha, with a spiritual desire that cannot be quenched by the things of the world, or even his traditional religion, Siddhartha, again echoing the life of The Buddha, leaves his security behind to become an ascetic religious seeker – a shramana. To quote from the novel,
“Within himself Siddhartha had begun to nourish discontent. He had begun to feel that the love of his father and the love of his mother and even the love of his friend Govinda would not forever after delight him, soothe him, satisfy and suffice him. He had begun to surmise that his venerable father and his other teachers, that these wise Brahmins had already conveyed the majority and the best part of their wisdom, that they had already poured out their plenty into his waiting vessel, and the vessel was not full, the mind was not satisfied, the soul was not calm, the heart was not stilled.” (p.14)
Siddhartha seemingly has everything he could want – wealth, beauty, and power – but finds himself discontent with the best life has to offer.
Thematic Concepts
The tool that Saravanakumar took to describe the thematic concept is Islamic mysticism called Sufism. As a philosophical approach it emphasizes the journey of self-knowledge, a journey which enables the individual to discover his stable reality and ultimately the reality of religion. The true self or the “I” in Islam is equated with the Divine. That’s why Islam prophesies ‘whoever cognizes the true self has cognized God’.
Rumi, a Sufi mystic asserts that for reunification with its origin that human soul needs to develop a strong relationship with God and human beings. To love the Creator one needs first to learn how to love His creations. While Rabia is the manifestation of loving His creations, Jothy is the testimony of the Sufi principle that says ‘the closest place to gain access to the absolute knowledge is within one’s own self’. Jothy has become the light, the light of the world.
In western philosophy, Socrates sums up all his philosophical commandments into ‘Know Yourself’. Know yourself through experiences. In her travelogue of spiritual speaking, Eat Pray Love, Elizabeth Gilbert states “We search for happiness everywhere, but we are like Tolstoy’s fabled beggar who spent his life sitting on a pot of gold, under him the whole time. Your treasure–your perfection–is within you already. But to claim it, you must leave the buy commotion of the mind and abandon the desires of the ego and enter into the silence of the heart.”
Techniques
About the narrative techniques of the book, alternative chapters of dual timelines capture the attentiveness of the readers. Setting the scene with myth and mystery with centuries of difference in two different plots, Rooh is the story of magical realism. With highly poetic yet simple sentences, Saravanakumar has painted a realistic view of the contemporary Indian society adding magical elements to it.
The repetitive imagery of the cosmic symbols such as river, sea, stars and rain empowers the storyline. At his highest, the imagery of fish turned into a growling cheetah with ferocity dying with the deception of mirage is the perfect depiction of foreshadowing what was about to happen to the protagonist at the end. The embedded metaphor of a seafarer also adds flavor to the underlying theme, understanding life as a voyage of challenges.
Conclusion
Thus, Lakshmi Saravanakumar has portrayed Rooh as a testimony of love, a call for mankind to love and to be loved. It is also an awakening for human souls for the spiritual enlightenment to find the true self of the individuals, to become one with nature and to merge as Oneness with God. In its deeper philosophical stance with full of spiritual insights Rooh itself is a treasure for everyman to read in his lifetime and with no question, it is an immense portrayal of the quest of a soul by its author, Lakshmi Saravanakumar.
***
Riophilla Alfred – Lecturer, Department of English Language Teaching, University of Jaffna, Sri Lanka email – riophilla12@gmail.com