Home Blog Page 49

கொரோனா தடுப்பூசி அரசியல்: செல்வந்த நாடுகளின் பதுக்கலும் வறிய நாடுகளின் பரிதாபநிலையும்

0

ரூபன் சிவராஜா

கொரோனா பெருந்தொற்றுப்பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்கான தனிநபர்-சமூக முடக்கங்கள் தொடர்கின்ற அதேவேளை, பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை மக்களுக்குச் செலுத்தத் தொடங்கிவிட்டன. கடந்த 2020 டிசம்பரிலிருந்து தடுப்பூசி செலுத்துகின்ற செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. உலகளாவிய மானிடப் பேரவலத்தை ஏற்படுத்திய இந்தத் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியிலும் அரசியல் செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது இதிலுள்ள கசப்பான யதார்த்தம். மனிதாபிமான மற்றும் மருத்துவ அடிப்படைகளுடன் நீதியான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய – நாடுகளுக்கிடையிலான தடுப்பூசி பங்கீட்டில் – பொருளாதார பலம்மிக்க நாடுகள் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன.

முந்திக்கொண்ட செல்வந்த நாடுகள்

அதாவது அமெரிக்கா, கனடா, பிரத்தானியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் தமது ஒட்டுமொத்த மக்களுக்கும் ‘பல தடவைகள்’ செலுத்துவதற்குத் தேவையான தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளன. உலகெங்கிலும் உற்பத்தி செய்யப்பட்டுள்ள, மற்றும் உற்பத்தியில் உள்ள மொத்தத் தடுப்பூசிகளில் அரைவாசிக்கும் மேல் ஏலவே கொள்வனவு செய்துள்ளதோடு மேலதிக கொள்வனவு ஒப்பந்தங்களையும் இந்நாடுகள் செய்துள்ளன. இந்தச் செல்வந்த நாடுகள் உலகின் மொத்த மக்கட்தொகையின் 15 வீதம் மட்டுமே. இன்னும் விரிவாகச் சொல்வதானால் உதாரணமாகக் கனடாவை எடுத்துக்கொண்டால், நாட்டின் முழு மக்களுக்கும் 6 தடவைகள் வரை போடுவதற்குப் போதுமான தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் பிரித்தானியா நான்கு தடவைகளும், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் 2 தடவைகளுக்குரிய கொள்வனவுகளையும் செய்துள்ளன. கொள்வனவு என்பது ஏலவே கொள்வனவு செய்யப்பட்டதும் மேலதிக கொள்வனவுக்கான ஒப்பந்தங்களையும் குறிக்கின்றது.

2021 நடுப்பகுதிக்குள் ஒரு நபருக்கு இரண்டு டோசஸ் (Vaccine doses) போடப்பட்டு நாட்டினை இயல்புநிலைக்குக் கொண்டுவருதல் என்ற இலக்கோடு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசித் திட்டத்தினை கையாளுகின்றன. ஆனால் வறிய மற்றும் நடுத்தர வருமானமுள்ள நாடுகள் இயல்புநிலைக்குத் திரும்புவதற்கு 2024 வரை காத்திருக்க வேண்டிவரும் எனக் கணிப்பிடப்படுகிறது. அதன் பொருள் அந்நாடுகளுக்கு தேவையான தடுப்பூசிகள் முழுமையாகப் போய்ச்சேர்வதற்கு இன்னும் 2 ஆண்டுகள் வரை எடுக்கும். குறைந்தது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அம்மக்கள் தொற்றுக்களுடன் வாழவேண்டும் என்பதாகும். நவம்பர் 2020 நிலவரப்படி, Pfizer-BioNTech மற்றும் Modernas ஆகிய தடுப்பூசிகளின் 2021ம் ஆண்டின் மொத்த உற்பத்தியின் 80 வீதமானவை செல்வந்த நாடுகளுக்கு விற்கப்பட்டுவிட்டன என்பதை செல்வந்த நாடுகளின் துரித கொள்வனவிற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

மனித மேலாண்மையின் விளைவும் உலகமயமாக்கலும்

உலகளாவிய இந்த பெருந்தொற்று நெருக்கடிக்கான முக்கிய காரணிகளில் ஒன்று உலகமயமாக்கல். இயற்கைக்கு எதிரான மனித மேலாண்மை. தொழில்நுட்பம், பெரும் உற்பத்திகள், பெருநகர அபிவிருத்திகள், போக்குவரத்துகள், வணிகம் என்ற உலகமயமாக்கலின் இன்னபிற கூறுகளை அடுக்கலாம். செல்வந்த நாடுகள் தமது பொருளாதார, படைத்துறை மூலம் தமக்குச் சாதகமான அரசியல் பலத்தையும் அதிகாரத்தையும் கட்டியெழுப்பி வைத்துள்ளன. இந்த அதிகார மற்றும் செல்வாக்குச் செலுத்தல் போக்கின் விளைவுகள் பல. சமகாலத்தில் வெவ்வேறு பிராந்தியங்களில் இடம்பெற்றுவரும் போர்கள் இந்த அதிகாரப் போக்கினது விளைவு.

தடுப்பூசி விடயத்திலேனும் சமத்துவ உணர்வுடன் ஓரளவேனும் பாகுபாடற்ற நீதியான பங்கீடு நடைபெறுமென்ற எதிர்பார்ப்பு சிலமட்டங்களில் இருந்தது. மனிதாபிமான அடிப்படையிலான வேணவா இது என்பது ஒருபுறமிருக்க, உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் நீதியான தடுப்பூசிப் பங்கீடு அவசியமானதும்கூட என்பது அத்தகு எதிர்பார்ப்பிற்குரிய அடிப்படை. உலகமயமாக்கல் என்பது சாதாரண கண்களுக்குப் புலப்படாத பல்வேறு அடுக்குகளிலான வலைப்பின்னல்களைக் கொண்டுள்ள அமைப்பு முறைமையும் இயங்கு நிலையுமாகும்.

உலகின் பெரும்பாலான நாடுகள் ஏதோவொரு வகையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புகளைக் கொண்டுள்ளன. ஒன்றில் ஒன்று தங்கியுள்ளன. பொருட்களின் ஏற்றுமதி-இறக்குமதி, நாடுகடந்த பயணங்கள், உற்பத்தி-நுகர்வு என நாடுகளுக்கிடையிலான பொருளாதார மற்றும் மனித உறவுகளும் தொடர்பாடல்களும் பல அடுக்குகளிலாலான வலைப்பின்னல்களைக் கொண்டுள்ளன. இந்நிலையில் உலகின் செல்வந்த நாடுகள் மட்டும் தடுப்பூசிகளைப் போட்டு விடுவதால் தொற்றுப் பரம்பல் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடாது. உலக நாடுகள் அனைத்தும் வழமைக்குத் திரும்புவது என்பதே தொற்றுப்பரம்பலைக் கட்டுக்குள் கொண்டுவருவதென்பதன் உள்ளார்ந்த பொருள். அதுவே தொற்றுப்பரம்பலைக் கட்டுப்படுத்துவதில் வினைத்தாக்கம் மிக்க செயற்பாடு. அப்படி நிகழத் தவறினால் நாடுகடந்த பயணங்கள் மீண்டும் மீண்டும் புதியபுதிய தொற்றுஅலைகளைத் தோற்றுவித்துக்கொண்டே இருக்கும். இந்தப் பெருந்தொற்றுக்கூட இன்னமும் உலகின் அதிகார சக்திகளுக்கு எதனையும் கற்றுக்கொடுக்கவில்லை என்பதையே ‘தடுப்பூசி அரசியல்’ அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது.

தடுப்பூசி: வறிய நாடுகளுக்கு எட்டாக்கனி?

இந்தப் பாகுபாடான பங்கீடு அதிர்ச்சியளிக்கிறது என்று கூறிய உலக சுகாதார அமைப்பின் பொதுச்செயலர் Teros Adhanom Ghebreyesus, இந்தப்போக்கு பெருந்தொற்றினை அநாவசியமாக நீடிப்பதற்கு வழிகோலும் எனவும் எச்சரித்துள்ளார். ‘ஒரு பெருந்தீயை அணைப்பதற்கான முயற்சியில் தீப்பிழம்புகளின் சில பகுதிகளின் மேல் மட்டும் தண்ணீர் தெளிப்பதற்கு நிகரானது’ என இன்றைய தடுப்பூசிப் பங்கீட்டில் கைக்கொள்ளப்படும் அணுகுமுறையை அவர் சித்தரித்து, உலகளாவிய நீதியான பங்கீட்டினை வலியுறுத்தியுள்ளார்.

இந்த நீதியற்ற அணுகுமுறையைச் சரிசெய்வதற்கும் வறிய மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளுக்கு தடுப்பூசி பகிரப்படுவதையும் அந்த நாடுகளின் மக்களுக்கு அவை சென்றடைவதைத் துரிதப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் Covax – (COVID-19 Vaccines Global Access) என்றொரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO), மற்றும் தடுப்பூசி – நோய்த்தடுப்பு மருத்துவத்திற்கான உலகக் கூட்டமைப்பு (Global alliance for vaccines and immunization, Gavi) அகியன இந்த அமைப்பினை 2020இல் உருவாக்கியுள்ளன. Gavi அமைப்பின் நோக்கம் பரந்த அளவிலும் விரைவாகவும் தேவை அதிகமுள்ள மூன்றாம் உலக நாடுகளுக்கு தடுப்பூசிகள் சென்றடைவதற்கான ஒருங்கிணைப்புகளை மேற்கொள்வதாகும். இந்த அமைப்பு பல்வேறு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது.

உலகநாடுகளின் கொரோனா தடுப்பூசிவகைகள்

கொரோனாவுக்கு எதிரான உலக நாடுகளின் தடுப்பூசிகள் என்று பார்க்கும் போது V451 எனும் பெயரிலான தடுப்பூசி அவுஸ்ரேலியத் தயாரிப்பாக சந்தைக்கு வந்துள்ளது. இது அவுஸ்ரேலிய Queensland ஆய்வுப் பல்கலைக்கழகமும் (University of Queensland) CSL மருந்து நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்ற தடுப்பூசி. பிரித்தானிய – சுவீடன் பல்தேசிய மருந்தக மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனமான AstraZeneca அதே பெயரில் கொரோனா தடுப்பூசியினைத் தயாரித்துள்ளது. இந்தியாவின் Serum Institute உலகின் முதலாவது பெரிய தடுப்பூ தயாரிப்பு நிறுவனம். இது மேற்சொன்ன பிரித்தானிய-சுவீடன் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா எதிர்ப்புத் தடுப்பூசித் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. Moderna, Pfzer, Novavax மற்றும் Inovia ஆகியன ஆகியன அமெரிக்க பல்தேசிய நிறுவனத் தயாரிப்புகள். Curevacs தடுப்பூசி ஜேர்மன் தயாரிப்பு. Sinopharm சீனத் தயாரிப்பாகும்.

Covax கூட்டமைப்பு: நீதியான பங்கீடு அவசியம்

மேற்சொன்ன Covaxகூட்டமைப்பு 2021 இறுதிக்குள் 1,3 பில்லியன் தடுப்பூசிகளை வறிய-நடுத்தர வருமான நாடுகளுக்குச் சேர்ப்பிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. ஆனால் அதற்குரிய நிதிவளம் மற்றும் ஒப்பந்தங்களை உறுதிப்படுத்துவதில் அவ்வமைப்பு சவால்களை எதிர்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலக சுகாதார அமைப்பு  Microsoft நிறுவனர் Bill Gatesஇன் நிதி ஆதரவுடைய இரண்டு இலாபநோக்கற்ற நிறுவனங்களுடன் இணைந்து முதற்கட்டமாக 92 வறிய நாடுகளுக்கான ஒரு பில்லியன் தடுப்பூசிகளை வழங்குவதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளது. இன்னும் ஒரு பில்லியன் தடுப்பூசிகளை நில நடுத்தர வருமான நாடுகளுக்குப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Gavi-இன் பொறுப்புக்கு உட்பட்ட பணி கொள்வனவு ஒப்பந்தங்களை முன்னெடுப்பது. நாடுகளுக்குரிய பங்கீடுகளை ஒருங்கிணைப்பது. அவற்றைத் தாண்டி, நாடுகளுக்கு அனுப்புவது உட்பட்ட விநியோகச் செயற்பாட்டினை அந்த அமைப்பு கையெடுக்கவில்லை. அதன் குறுகியகால இலக்கு என்பது விலைகுறைந்த மற்றும் அதீத குளிரூட்டியில் வைத்து ஏற்றுமதி செய்யவும் பராமரிக்கவும் தேவையில்லாத தடுப்பூசிவகைகளை கொள்வனவு செய்வதாகும். அதேவேளை அந்த முனைப்புக்கூட சவால்கள் நிறைந்தது. பரிசோதனைகளில் சிக்கல், பக்கவிளைவுகள் பற்றி வெளிவரும் தகவல்கள், பாவனைக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதில் கேள்விக்குறி போன்ற பல சவால்கள் உள்ளன.

நியாயமற்ற பங்கீடு தொடருமானால்…

தடுப்பூசிப் பகிர்வில் நியாயமற்ற போக்குத் தொடருமானால் மூன்றாம் உலக நாடுகள், தொற்றுத்தடுப்பு நடவடிக்கைகளை நீண்டகாலத்திற்குக் கடைப்பிடிக்க வேண்டிவரும். இது அந்தந்த நாடுகளின் உள்நாட்டுப் பொருளாதாரத்தை மட்டுமல்ல உலகளாவிய பொருளாதாரத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியன. மூன்றாம் உலக நாடுகளுக்கான தடுப்பூசித் திட்டம் தாமதமாகுமெனில், வைரஸ் இன்னும் பலவடிவங்களில் உருமாறிப் பரவுவதற்கான ஆபத்து அதிகரிக்கும். உருமாறிய வைரஸ்கள் ஏலவே கொரோனாத் தொற்று ஏற்பட்டுக் குணமடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்றவும்கூடும். அதேவேளை தடுப்பூசி விளைவுத்தாக்கம் குறைந்துபோகவும், தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்குத் தொற்றவும் வாய்ப்புண்டு.

வறிய-மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளில் தொற்று நீடிக்குமெனில் அது கட்டுக்குள் கொண்டு வந்த நாடுகளில் மீண்டும் தொற்றுப்பரம்பலை ஏற்படுத்துகின்ற ஆபத்துகளுக்கும் இட்டுச்செல்லலாம். எனவே இதிலுள்ள செய்தி என்னவெனில் செல்வந்த நாடுகள் வறிய நாடுகளுக்குரிய தடுப்பூசிகளை வழங்குவதென்பது செல்வந்த நாடுகளின் பொருளாதார நலனுக்கும் சாதகமானது.

உலக ரீதியில் 178 நாடுகள் COVAXஉடன் இணைந்துள்ளன. அமெரிக்காவும் ரஸ்யாவும் இணையவில்லை. கனடா, பிரான்ஸ் மற்றும் நோர்வே போன்ற நாடுகள் மேலதிக தடுப்பூசிகளை வறிய நாடுகளுக்குப் பகிர்வதற்கு முன்வந்துள்ளன. தடுப்பூசியைப் பொறுத்தவரை சீனா மூன்றாவது பெரிய உற்பத்தித்திறன் கொண்ட நாடு. தனது தயாரிப்பான Sinopharmஇனை வளர்முக நாடுகளுக்கு விநியோகிப்பதில் அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்நாடுகள் குறைந்தபட்சம் இவ்வாறு அறிவித்துள்ளன. இந்நாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய செல்வந்த நாடுகளும் தொடருமானால் மூன்றாம் உலக நாடுகள், 2024 வரை காத்திருக்கவேண்டியதைத் தவிர்க்கலாம் என்ற கருத்து நிலவுகின்றது.

இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் தயாரிப்பு நாடு. ஆனால் கடந்த மார்ச், ஏப்ரலிலிருந்து அங்கு தொற்றுப்பரம்பல் மிகத்தீவிரமடைந்து வந்துள்ளது. இந்நிலையில் தமது உள்நாட்டு நெருக்கடியைக் கையாள்வதற்கு இந்தியா தடுப்பூசி ஏற்றுமதியை இடைநிறுத்தியுள்ளது. இதனால் Covax மேலும் சவால்களை எதிர்கொள்கின்றது. தாமதமாதலும் பற்றாக்குறையும் மேலும் அதிகரித்துள்ளது.

வறிய நாடுகளின் பொருளாதார, சமூகச் சிதைவு

வறிய நாடுகளின் சமூக முடக்கம் நீடிப்பதென்பது அவற்றின் பொருளாதாரத்தை மட்டுமல்லாது கல்வி மற்றும் சமூக ரீதியான பெரும் பாதிப்புகளுக்கு இட்டுச்செல்லும். உதாரணமாக உகண்டாவில் 1.3 மில்லியன் சிறுவர்கள் கடந்த ஒருவடருடமாகப் பாடசாலைக்குச் செல்லவில்லை. இச்சூழல் சிறுவயதுத் திருமணங்கள், பதின்மவயதுப் பெண்கள் கர்ப்பம் தருக்கும் நிலை, வீடுகளில் வன்முறை அதிகரிப்பு எனப் பல்வேறு சமூக ரீதியான சிதைவுகளுக்கு இட்டுச்செல்கின்றன. பாகிஸ்தான், மலாவி மற்றும் பல நாடுகளிலும் இதனையொத்த சமூக ரீதியிலான சிதைவுகள் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. நேபால் நாட்டில் இளம்பெண்கள் மத்தியில் தற்கொலை 40 வீதத்தினால் அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகின்றது.

2020 பின் கோடை காலத்திலிருந்து தடுப்பூசி கொள்வனவு தொடர்பான செய்திகள் வெளிவரத்தொடங்கியதிலிருந்தே செல்வந்த-வறிய நாடுகளுக்கிடையிலான பாரிய இடைவெளி அவதானிக்கப்பட்டது. அப்போதிலிருந்து இன்றுவரை அந்த இடைவெளி அதிகரித்தே வந்துள்ளது. கணிசமான பெருந்தொகைத் தடுப்பூசிகள் தொடர்ந்தும், குறிப்பாக 2021 இறுதிவரை செல்வந்த நாடுகளுக்கே செல்லும் என்கிறார்; ‘உலக சுகாதார புத்தாக்க மையம் – Global Health Innovation Center’ எனும் அமெரிக்காவின் Duke பல்கலைக் கழக ஆய்வு மையத்தைச் சேர்ந்த Andrea Taylor

இடைவெளிகளும் பற்றாக்குறைகளும்

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து உலகின் பெரும்பான்மையான பிராந்தியங்களுக்கு தடுப்பூசிகள் கிட்டியுள்ளன. ஆனால் பங்கீட்டு அளவு (கிடைக்கப்பெற்ற எண்ணிக்கை), வளம், மருத்துவ வசதி, தடுப்பூசிகளை உரிய முறையில் பேணுவதற்கான வசதிகள், தொழில்நுட்பம் சார்ந்த பாரிய இடைவெளிகளும் பற்றாக்குறைகளும் நிலவுகின்றன. இந்த வறிய மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளின் மக்கள் உலகின் மொத்த மக்கட்தொகையில் கிட்டத்தட்ட 75 வீதமானவர்கள். ஆனால் இதுவரை அவர்களுக்கு உறுதிசெய்யப்பட்ட தடுப்பூசியின் அளவு 25 வீதத்திற்கும் குறைந்ததே. செல்வந்த நாடுகள் 2020இன் நடுப்பகுதியிலேயே முந்திக்கொண்டு தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைச் செய்யத்தொடங்கிவிட்டன.

இங்கு மற்றுமொரு விடயம் கவனத்திற்குரியது. தடுப்பூசிக்கான முதலீடுகளை செல்வந்த நாடுகளே செய்தன. அதாவது கொரோனா என்ற இந்தப் புதிய வகை வைரசிற்கான தடுப்பூசிகள் தொடர்பான மருத்துவ ஆய்வுகள், உயிரியல் தொழில்நுட்ப ஆய்வுககள், பரிசோதனைகள், உற்பத்திகளுக்கான முதலீடுகளை செல்வந்த நாடுகளே செய்தன. இந்தத் துரித முதலீடுகள் தான் இன்று வினைத்தாக்கம் மிக்க பல்வேறு தடுப்பூசிவகைகளைக் குறுகிய காலத்திற்குள் கண்டடைய வழிவகுத்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அதேவேளை பெரும் நிதிமுதலீடு என்பது முன்கூட்டிய கொள்வனவு ஒப்பந்தம், முன்னுரிமையை இந்நாடுகளுக்கு வழங்கியுள்ளன.

தடுப்பூசிக்கான பெருந்தொகை முதலீடுகள்

தடுப்பூசி தயாரிப்புக்கான மருத்துவ ஆய்வு, பரிசோதனை மற்றும் உற்பத்திக்காக பல பில்லியன் டொலர் நிதியினை அமெரிக்கா முதலீடு செய்துள்ளது. ஐந்து வரையான தடுப்பூசிகள் அமெரிக்க முதலீட்டில் கண்டடையப்பட்டுள்ளன. இந்த நிதி முதலீட்டுக்குப் பிரதிபலனாக நிபந்தனைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது. அதாவது தான் முதலீடு செய்த தடுப்பூசித் தயாரிப்புகளுக்கான முன்னுரிமை தனக்குத் தரப்படவேண்டும் என்பதாகும்.  உலக நாடுகளுக்கிடையிலான இதுவரை தடுப்பூசிப் பங்கீட்டின் ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக அமெரிக்கா இதுவரை எவ்வித அக்கறையினையும் காட்டவில்லை. Covaxஇற்கு உதவவும் முன்வரவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் டிரம்ப் தடுப்பூசி கையாளலிலும் ஒரு கடும்தேசியவாதப் போக்கிற்குத் தூபமிட்டுச் சென்றுள்ளார் எனப்படுகின்றது.

செல்வந்த நாடுகளின் இலக்கு

அமெரிக்கா உட்பட்ட பல மேற்கு நாடுகள் 2021 கோடைக்கு முன்னர் தமது நாட்டு மக்களுக்கு தடுப்பூசிகளைச் செலுத்தி முடித்து சமூக முடக்கத்திலிருந்து இயல்புக்குத் திரும்புவதை இலக்காகக் கொண்டுள்ளன. ஆனால் அதன் பொருள் அதற்குப் பின்னர் இந்நாடுகள் மேலதிகமாக வைத்திருக்கும் தடுப்பூசிகள் மூன்றாம் உலக நாடுகளுக்குக் சென்றுசேரும் என்பதல்ல. தாம் கொள்வனவு செய்த அல்லது கொள்வனவு ஒப்பந்தம் செய்த தடுப்பூசிகள் வைரசின் அடுத்தடுத்த கட்டங்களுக்காகச் சேமித்து வைப்பதிலேயே செல்வந்த நாடுகள் முனைப்புக் காட்டக்கூடும். அத்தோடு, வைரசின் அடுத்தடுத்த உருமாற்றங்களைக் கருத்திற்கொண்டு புதிய தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்குரிய மருத்துவ ஆய்வுகளுக்கும் தடுப்பூசி உற்பத்திகளில் கவனம் செலுத்தவும் வாய்ப்புகள் உள்ளன.

மருத்துவக் கட்டமைப்புகள் உயர் தரத்தில் உள்ள செல்வந்த நாடுகளே பல்வேறு புறக்காரணிகளினால் தடுப்பூசித் திட்டத்தில் பல்வேறு தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் மருத்துவக் கட்டமைப்பு பலவீனமாகவும் பற்றாக்குறைகளையும் கொண்டுள்ள நாடுகளில் தடுப்பூசிகள் கிடைத்தாலும் அந்நாடுகளின் உள்ளகச் சூழல்கள் உரிய முறையில் மக்களுக்குச் சென்றடைவதில் சிக்கல்கள் உள்ளன. நோர்வே போன்ற நாடுகளிற்கூட இன்றும் தடுப்பூசி தொடர்பான பிரதேசங்களுக்கான பங்கீடு, முன்னுரிமை அதாவது எந்தப் பிரதேசங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது போன்ற விவாதங்கள் ஊடகங்களில் இடம்பெற்றுவருகின்றன.

தவிர மேற்குநாடுகள் பலவற்றில் Astrazeneca தடுப்பூசியின் பக்கவிளைவுகள் தொடர்பாக எழுந்த அச்சங்கள், அவற்றின் தடுப்பூசித்திட்டத்தில் தாமதத்தை ஏற்படுத்தியிருந்தன. Astrazeneca தடுப்பூசி இரத்தக்கசிவு உட்பட்ட சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இறந்துமுள்ளனர். இந்தப் பின்னணியில் ஐரோப்பிய நாடுகள் பல Astrazeneca தடுப்பூசியை இடைநிறுத்தியிருந்தன. அதன் பக்கவிளைவுகள் மிகச் சிறிய அளவிலானவை என்று மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தியதை அடுத்து பல நாடுகள் மீண்டும் அதனைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளன. நோர்வே, டென்மார்க் போன்றன அதனை முற்றுமுழுதாக நிறுத்தியுள்ளன. Astrazenecaவின் பக்கவிளைவுகள் தொடர்பாக வெளிவந்த செய்திகளும் முன்னெடுக்கப்பட்ட விவாதங்களும் அதன் மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் பொதுவாக இழக்கச் செய்துள்ளன.

புதிய சவால்கள் பற்றிய அச்சம்

2021 இறுதியில் அல்லது, குறுகிய காலத்திற்குள் புதிய சவால்கள் உருவாகலாம் என்ற அச்சமும் உலகளவில் நிலவுகின்றது. தடுப்பூசிகளின் எதிர்ப்புசக்தியின் தொழிற்பாட்டுக்காலம் எவ்வளவு என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. நீண்ட கால எதிர்ப்புசக்தியை ஏற்படுத்துவதற்கு இரண்டுக்கு மேற்பட்ட தடவைகள் தடுப்பூசியை ஒரு நபருக்குச் செலுத்த வேண்டி வருமா என்பதும் அறியப்படவில்லை.  வழமையான இன்புளுவன்சா காய்ச்சலுக்கு (Seasonal influenza) எதிரான தடுப்பூசி போல வருடாவருடம் கொரோனா எதிர்ப்புத் தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்ற கருத்துகளும் நிலவுகின்றன. மேற்படி சூழல் ஏற்படுமாயின் செல்வந்த நாடுகள் இன்னும் பன்மடங்கு தடுப்பூசிகளைத் தம்வசப்படுத்திக் கொள்வதிலேயே முனைப்புக் காட்டப்போகின்றன. வறிய நாடுகளின் நிலை இன்னும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்லப்படும்.

உற்பத்திக்குரிய மருத்துவ அறிவியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப வளங்களும் மனித வளங்களும் அமெரிக்கா உட்பட்ட மேற்கிடம் அதிகம் உள்ளன. ஆபிரிக்க, தென்.அமெரிக்க, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இத்தகைய மருத்துவ அறிவியல் வளங்கள் பெரும்பற்றாக்குறையாக உள்ளன. இந்தப் பிராந்தியங்களுடன் ஒரு உற்பத்தி இணைப்பு மையங்கள் உருவாக்கப்படவேண்டுமென ‘உலக சுகாதார புத்தாக்க மையத்தின்’ ஆய்வு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு அதிக காலம் எடுக்கும். அது குறுகிய எதிரகாலத்தில் சாத்தியமில்லை. இந்த விடயத்தினை இந்தியாவும் தென் ஆபிரிக்காவும் உலக சுகாதார அமைப்பின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளன என்றும் கூறப்படுகின்றது.

தடுப்பூசிகளின் நியாயமான பங்கீடு அவசியம்

செல்வந்த நாடுகள் ஒருவகைப் பதுக்கலை மேற்கொள்கின்றன. அந்தப் போக்கினைத் தவிர்த்து வறிய மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளுடன் தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பு, சர்வதேச மன்னிப்புச் சபை போன்றக அழுத்தமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. ‘எயிட்ஸ் பெருந்தொற்றின் போது, செல்வந்தர்கள் மருத்துவச் சிகிச்சை பெற்றதையும் அதேவேளை வளம் குறைந்த நாடுகளில் மில்லியன் கணக்கான மக்கள் இறக்க நேரிட்டதைக் கண்டிருக்கின்றோம். அதே தவறு மீண்டும் நிகழ்வதை நாம் அனுமதிக்கக்கூடாது’ என்று எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொடர்பான ஐ.நா திட்டத்தின் (UNAIDS) நிர்வாக இயக்குனர் Winnie Byanyima தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மருந்துதயாரிப்பு நிறுவனங்களுடன் பெரிய இருதரப்பு ஒப்பந்தங்களை நேரடியாகச் செய்ததைத் தவிர்க்குமாறும், அனைத்து நாடுகளுக்குமான நீதியான பங்கீட்டினை உறுதிப்படுத்துவதற்கான உலகளாவிய செயல்முன்னெடுப்புகளுக்கு ஆதரவு வழங்குமாறு செல்வந்த நாடுகளை சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. அத்தோடு மருந்துப்பொருட்களைத் தயாரிக்கும் பெருநிறுவனங்கள் தமது காப்புரிமைக்கு அல்லாது மனிதஉயிர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளது.

காப்புரிமையில் விதிவிலக்குக் கோரல்

புதிய மருந்துப்பொருட்கள் உட்பட்ட தடுப்பூசிகள் தயாரிக்கும் போது தயாரிப்பு நிறுவனங்கள் அதற்குரிய காப்புரிமையைத் (தனியுரிமை) தமதாக்கிக்கொள்கின்றன. அதன் அர்த்தம் குறிப்பிட்ட அந்த நிறுவனம் மட்டுமே, குறிப்பிட்ட காலத்திற்கு குறித்த அந்தப் பொருளை உற்பத்தி செய்கின்ற சட்ட ரீதியான உத்தரவாதத்தைப் பெறுகின்றது என்பதாகும். மட்டுமல்லாமல் அதற்குரிய விலையையும் நிர்ணயிக்கும் உரிமையைப் பெறுகின்றது, செய்முறை தொடர்பான தகவல்களையும் அந்நிறுவனம் இரகசியமாகப் பேணுவது காப்புரிமை சார்ந்த நடைமுறை.  கொரோனா தடுப்பூசி உலகளாவிய மக்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு, காப்புரிமை தொடர்பான விதிமுறைகளில் விதிவிலக்குகளைத் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் செய்ய முன்வர வேண்டும். அதன் மூலம் ஏனைய நாடுகள் தமக்கான தடுப்பூசியைத் தயாரிப்பதற்குரிய தகவல்களைப் பெறுவதற்கு ஆவண செய்ய வேண்டும் என்பதே மன்னிப்புச் சபையின் கோரிக்கைக்கான அடிப்படை.

அத்தகைய காப்புரிமை விதிவிலக்கினை உலக சுகாதார அமைப்பின் ஊடானதொரு தீர்மானத்தின் மூலம் நடைமுறைக்குக் கொண்டுவரமுடியும். ஆனால் செல்வந்த நாடுகள் பல இதுவரை அத்தகைய தீர்மானத்தை எதிர்த்து வந்துள்ளன. தடுப்பூசி ஆய்வு, தயாரிப்பு, பரிசோதனை, பாவனைக்கான ஒப்புதல் பொறிமுறைகள் பெரும் நிதியைக் கோருகின்ற செயல். தகவல்களை நாடுகளுடன் பரிமாறுவது தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்திவிடும் என்பது எதிர்ப்பிற்கான காரணமாக முன்வைக்கப்படுகின்றது.

உலகளாவிய தலைமைத்துவமின்மை

கென்யா, மியான்மார், நைஜீரியா, பாகிஸ்தான், உக்ரைன் உட்பட்ட 67 நாடுகளில் மொத்தமாக ஒன்றரை மில்லியன் மக்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பதான தரவுகள் வெளிவந்திருந்தது. ஆனால் தற்போதைய தடுப்பூசி அணுகுமுறை இதேகதியில் தொடருமானால் இந்நாடுகளின் பத்து வீதமான மக்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கிடைக்கும் எனப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கணிப்பீட்டின்படி உலகளாவிய ‘கூட்டு எதிர்ப்புசக்தியை (Community immunity)’ அடைவதற்கு எழுபது வீதமான உலக மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.

தடுப்பூசித் திட்டத்தினை நியாயமான முறையில் முன்னெடுப்பதற்குரிய உலகளாவிய தலைமைத்துவம் தற்போதைய சூழலில் இல்லை என்பதே யதார்த்தம். வலியவன் வாழ்வான் என்ற அணுகுமுறையைத்தான் பெரும்பாலான சக்திமிக்க நாடுகள் கடைபிடிக்கின்றன. இந்த நிலைமைகளைச் சீர்செய்வதற்கான நம்பிக்கை மிக்க அமைப்புகளாக உலக சுகாதார அமைப்பும், அது உருவாக்கிய Covax ஒருங்கிணைப்புத் திட்டமும் மட்டுமே கண்ணுக்குத் தெரிகின்றன. அத்தோடு சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற உலகளாவிய அழுத்தக்குழுக்களும் நீதியான தடுப்பூசிப் பங்கீடடின் அவசியத்தினை வலியுறுத்தி வருகின்றன.

***

ரூபன் சிவராஜா

தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது. தொடர்புக்கு – svrooban@gmail.com

உயிர்சத்துக்களுக்கான கடல்வழிச்சாலை

0

நாராயணி சுப்ரமணியன்

தகவல்கள் அடைக்கப்பட்ட கண்ணாடிப் போத்தல்கள் கரையொதுங்குவதும், அதையொட்டிய தேடலில் தொடங்கும் பயணம் காதலில் முடிவதாகவும் பல புனைவுகள் எழுதப்பட்டிருக்கின்றன. எங்கிருந்தோ வீசியெறியப்பட்ட கண்ணாடி பாட்டிலை கரைசேர்ப்பதில் கடல் அலைகளுக்கு மட்டுமல்ல, கடல் நீரோட்டங்களுக்கும் (Ocean currents) பெரும் பங்கு உண்டு. “உள்நாட்டுக் கடல் எல்லைகளில் பிடிக்கப்படுகிற மீன்களில் 90 விழுக்காடு வேறு ஒரு நாட்டிலிருந்து இங்கு வலசை வந்தவை தான்” என்று சமீபத்திய ஒரு ஆய்வில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த மீன்களின் பயணத்திற்கு நீரோட்டங்களும் துணைபுரிகின்றன. 

கடல் உயிரினங்களின் வலசைப்பாதையை நிர்ணயிப்பதில் கடல் நீரோட்டங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. அதிகமாக நீந்தாத பவள உயிரிகள், கடற்குதிரைகளின் உலகளாவியப் பரவலுக்குக் கடல் நீரோட்டங்களே காரணம். ஃபைண்டிங் நீமோ திரைப்படத்தில், “இங்கிருந்து நீ நகரத்தை நோக்கி செல்லவேண்டுமானால் கிழக்கு ஆஸ்திரேலிய நீரோட்டத்தை (East Australian Current) முதலில் கண்டுபிடித்து அதில் பயணிக்க வேண்டும்” என்று ஒரு வசனம் வரும். கடலாமைகள் தங்கள் வலசையின் போது இந்த நீரோட்டத்தை ஒரு நெடுஞ்சாலை போல பாவித்துப் பயணிப்பதையும் அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

கடலின் அடுக்குகள்

கடலின் மேற்பரப்பு, அடியாழம், இரண்டுக்கும் நடுவிலான இடைப்பகுதி என்று செங்குத்தாகக் கடலை மூன்றாகப் பிரிக்கலாம். மேற்பரப்பு தொடர்ந்து காற்று, சூரிய ஒளி ஆகியவற்றோடு ஒரு உரையாடலை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது. காற்றால் ஏற்படும் சலனம், சூரிய ஒளியால் ஏற்படும் வெப்ப மாற்றம், ஆவியாதல், உப்புத்தன்மை மாற்றம் ஆகியவை மேற்பரப்பைத் தொடர்ந்து அலைகழிக்கின்றன. மேற்பரப்பின் ஆக்சிஜன் அளவு, வெப்பம், உப்புத்தன்மை ஆகியவை மாறிக்கொண்டேயிருக்கும். கடலின் மேற்பரப்பிலிருந்து கிட்டத்தட்ட 100 மீட்டர் ஆழம் வரை இந்தப் பகுதி நீடிக்கும். வெளியிலிருந்து வரும் வெப்பத்தை எல்லாம் இந்தப் பகுதிதான் முதலில் உள்வாங்குகிறது. குறிப்பாக, நாம் வெளியிடும் கரிம உமிழ்வுகளையும் பசுங்குடில் வாயுக்களின் வெப்பத்தையும் இதுதான் உள்வாங்குகிறது.

ஆழத்தைப் பொறுத்தவரை, வெளியிலிருந்து வரும் மாற்றங்கள் குறைவு. இங்கு பொதுவாக உயிர்ச்சத்துக்கள் அதிகம், வெப்பநிலை குறைவு.

இரண்டிற்கும் நடுவில் உள்ள இடைப்பகுதியில் திடீரென்று வெப்பநிலை இறங்கும். இது Thermocline என்று அழைக்கப்படுகிறது. ஒரு இடத்தில் திடீரென்று அடர்த்தியும் மாறுபடும். இது pycnocline என்று அழைக்கப்படுகிறது.

ஆழத்தில் இருக்கும் வெப்பம் குறைந்த, உயிர்ச்சத்து நிறைந்த நீர் மேற்பரப்புக்கு வரவேண்டும். மேற்பரப்பில் உள்வாங்கப்பட்ட வெப்பம் ஆழத்துக்குக் கடத்தப்பட வேண்டும். இது நிகழாவிட்டால், உயிர்கள் கடலில் வாழ முடியாது.

கடல்வழிச்சாலை

மேற்பரப்பில் இருக்கிற நீர் காற்றால் உந்தித் தள்ளப்பட்டு, நீரோட்டமாக மாறுகிறது. அது மேற்பரப்பு நீரோட்டத்தை (Surface current) என்று அழைக்கப்படுகிறது.

ஆழத்திலிருந்து கிளம்புகிற நீரோட்டத்தின் (Deep current) தொடக்கம் சற்றே வித்தியாசமானது. பூமத்திய ரேகையை (நில நடுக்கோடு Equator) ஒட்டிய பகுதிகளில் வெப்பம் அதிகம் என்பது நாம் அறிந்தது தான்.

அதைப்போலவே துருவப்பகுதிகளின் கடல்நீர் குளிர்ச்சியானது. புவியின் மத்தியப் பகுதிகளிலிருந்து வெப்பத்துடன் துருவப்பகுதிகளை நோக்கிப் பயணிக்கும் நீர் அங்கு போனதும் குளிர்ந்து விடுகிறது. குளிர்நீருக்கு அடர்த்தி அதிகம் என்பதால் அது ஆழத்துக்குப் பயணிக்கிறது. இந்தப் பயணம் ஆழத்திலிருக்கும் நீரை உந்தித்தள்ளி நீரோட்டமாக மாற்றுகிறது. ஆழ நீரோட்டம் என்பது வெப்பநிலை, உப்புத்தன்மை, அடர்த்தி ஆகியவை மாறுவதால் ஏற்படுகிறது.

ஒவ்வொரு இடத்திலும் கடற்படுகையின் அமைப்பு, நிலப்பரப்பு, ஓதங்களின் தன்மை, பருவகால மாறுபாடுகள் எல்லாமே இந்த இருவகை நீரோட்டங்களின் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த இரு நீரோட்டங்களும் இணையும்போது உலகளாவிய கன்வேயர் பெல்ட் (Global Conveyor Belt) ஒன்று உருவாகிறது. உலகக் கடல்கள் எல்லாவற்றுக்குள்ளாகவும் ஊர்ந்து செல்லும் பிரம்மாண்டமான நீர்வழிச்சலையாக நாம் இதைக் கற்பனை செய்துகொள்ளலாம். விமான நிலையங்களில் நாம் பார்க்கும் கன்வேயர் பெல்ட்டைப் போலவே வெப்பத்தையும் உயிர்ச்சத்துக்களையும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இது கொண்டு செல்கிறது. மேற்பரப்பிலிருந்து வெப்பநீரை ஆழத்துக்குக் கொண்டு செல்வது, ஆழத்திலிருக்கும் உயிர்ச்சத்துக்களை மேற்பரப்புக்குக் கொண்டுவருவது என்று கடலின் செங்குத்து அடுக்குகளிலும் இது ஆதிக்கம் செலுத்துகிறது.

நிலையான கடல்

சூழலியலைப் பொறுத்தவரை, “நிலையான”, “சீரான” போன்ற சொற்கள் மகிழ்ச்சியளிக்கக் கூடியவை. ஆனால் செப்டம்பர் 2020-ல் உலகின் பெருங்கடல்கள் நிலையானவையாக மாறிக்கொண்டிருக்கின்றன என்று ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியானபோது அறிவுலகம் கவலையில் ஆழ்ந்தது.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக கடலின் நிலையற்ற தன்மை குறைந்து, கடல் அடுக்குகள் ஆறு மடங்கு நிலையானவையாக மாறியிருக்கின்றன. கடலின் அடுக்குகளுக்கிடையில் நீர்பரிமாற்றம் குறைந்திருக்கிறது. குறிப்பாக பரப்புக்கும் ஆழத்துக்கும் நடுவில் இருக்கும் pycnocline பகுதி திடமானதாக மாறி, மேலிருந்து கீழும் கீழிருந்து மேலாகவும் நீர் பயணிப்பதைத் தடுக்க ஆரம்பித்திருக்கிறது. புவி வெப்பமடைதலுக்குக் காரணமான பசுங்குடில் வாயுக்கள் அதிகரித்திருப்பதால், மேற்பரப்பில் அதிகமான வெப்பம் வந்து சேர்கிறது. அது மேற்பரப்பிலேயே தங்கிவிடுகிறது. கீழிருந்து உயிர்ச்சத்துக்கள் மேலே வர முடியாததால், மேற்பரப்பில் விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில்லை.

“இது மிகவும் கவலையளிக்கிற. மோசமான செய்தி” என்கிறார் இந்த ஆய்வை நடத்திய மைக்கேல் மான். காலப்போக்கில் கூடுதலான கரிம உமிழ்வுகள் வரும்போது, கடலால் அவற்றை உள்வாங்க முடியாமலேயே போகலாம். அப்போது எல்லா உமிழ்வுகளும் வளிமண்டலத்திலேயே தங்கி புவியின் வெப்பநிலையை இன்னும் அதிகரிக்கும்.

ஊர்ந்து செல்லும் அட்லாண்டிக் நீரோட்டம்

அட்லாண்டிக் நீரோட்டங்களில் முக்கியமானதாகக் கருதப்படுவது Atlantic Meridional Overturning Circulation (AMOC) என்கிற நீரோட்டம். அட்லாண்டிக் கடலில் மட்டுமல்லாமல், உலகின் பல கடற்பகுதிகளின் வெப்பத்தையும் உயிர்ச்சத்துக்களின் விகிதத்தையும் நிர்ணயிப்பது இந்த ஒரு நீரோட்டம்தான். இன்னும் சொல்லப்போனால் இந்தியப் பெருங்கடலின் நீரோட்டத்துக்கும் இதற்கும்கூட நெருங்கிய தொடர்பு உண்டு. பிப்ரவரி 2021-ல் வெளியான ஒரு ஆய்வு ஒரு கவலையான செய்தியை முன்வைத்தது. கடந்த 1600 வருடங்களின் தரவுகளோடு ஒப்பிடும்போது இந்த நீரோட்டத்தின் வேகம் குறைந்துவிட்டது என்று ஆய்வில் உறுதி செய்திருக்கிறார்கள்.

இதைப் படிக்கும்போது பலருக்கு  Day after tomorrow திரைப்படம் நினைவுக்கு வரலாம். இந்த AMOC நீரோட்டம் திடீரென்று வேகம் இழந்து, ஒரு கட்டத்தில் முற்றிலும் நின்றுவிடுவதாகவும், அதனால் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பேரிடர்கள் ஏற்படுவதாகவும் காட்டியிருப்பார்கள்.  விண்ணிலிருந்து விழும் ஹெலிகாப்டர்களையும் நியூயார்க் நகரம் நீரால் விழுங்கப்படுவதையும் மிகப்பெரிய புயல்களின் சீற்றத்தையும் திரைப்படம் பார்த்தவர்களால் எளிதில் மறந்துவிட முடியாது.

திரைப்படத்தில் காட்டியதன் அடிப்படை அறிவியல் சரிதான் என்றபோதும், அது ஏற்படுத்தப்போகும் தாக்கங்களைப் பற்றி அறிவியலாளர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. திடீரென்று AMOC ப்ரேக் போட்டதுபோல் நின்றுவிடாது, ஆனால் அது தொடர்ந்து வேகம் இழந்துவருகிறது. 1950-களோடு ஒப்பிடும்போதே வேகம் 15% குறைந்துவிட்டது என்பது விஞ்ஞானிகளின் கருத்து. 2100-க்குள் வேகம் 45% வரை குறையலாம் என்றும், 2300-க்குள் அந்த நீரோட்டமே அழிந்து ஓட்டம் நின்றுவிடலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகுவதால் இந்த வேகமிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதன் விளைவுகள் ஆங்காங்கே ஏற்கனவே தெரிய ஆரம்பித்துவிட்டன. இந்த நீரோட்டம் வலுவிழப்பதால் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை மாறியிருக்கிறது. அதனால் அட்லாண்டிக் தீவுகளில் கோடைக்காலங்களில் சராசரி வெப்பநிலை அதிகரித்திருக்கிறது.

பருவகாலத்துக்கேற்ப இனப்பெருக்கம் செய்யும் பறவைகளான பஃபின்கள் (puffins) தாமதமாக முட்டையிடுகின்றன. காலம் தப்பி வெளிவரும் குஞ்சுகள் எடை குறைந்து காணப்படுகின்றன. அவற்றுக்கு உணவும் சரிவரக் கிடைப்பதில்லை. இது ஒரு உதாரணம்தான். இன்னும் எத்தனையோ சூழல் சமநிலைகள் தடுமாறத் தொடங்கியிருக்கின்றன.

நீர்வழிச்சாலையை நம்பியிருக்கும் கடல் உயிரிகள்

ஒருபுறம் அட்லாண்டிக் நீரோட்டங்கள் வேகமிழந்து வருகின்றன என்றால், இன்னொரு புறம் வெப்பமண்டல நீரோட்டங்களின் வேகம் கூடியிருக்கிறது. இது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பது தெரியவில்லை. ஒரு சிறுமாற்றம் நிகழ்ந்தாலே உலகளாவிய கன்வேயர் பெல்ட் நிலைதடுமாறிவிடும். ஏற்கனவே சொன்னதுபோல் பல்வேறு இயற்கைக் கூறுகளால் உந்தப்படுகிற பிரம்மாண்டமான சுழற்சி இது. எந்தச் சிறுமாற்றம் இதைப் புரட்டிப்போடும் என்பது இன்னும் அறிவியலுக்கு எட்டாததாகவே இருக்கிறது.

தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும் நாம் இந்த சுழற்சியின் நுணுக்கங்களை இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பதே உண்மை. 1992-ல் மேற்கு பசிபிக் கடலில் ஒரு மிகப்பெரிய சரக்குக் கப்பல் கவிழ்ந்தது. கப்பலில் குளியல் தொட்டியில் அழகுக்காக மிதக்கவிடப்படுகிற ரப்பராலான 28,800 மஞ்சள் வாத்துகள் இருந்தன. நீரோட்டங்களால் அவை அங்குமிங்கும் பயணிக்கத் தொடங்கின. அவற்றைக் கண்காணிப்பதன் மூலம் விஞ்ஞானிகள் உலகளாவிய கன்வேயர் பெல்ட்டைப் புரிந்துகொள்ள முயற்சி செய்து வருகிறார்கள்!

2021-ல் வெளிவந்த ஒரு ஆய்வில் கடலின் மேற்பரப்புக்கும் ஆழத்துக்கும் இடைப்பட்ட பகுதி சூழலியல் ரீதியாக மிகவும் முக்கியமானது என்பதை உறுதிசெய்தது. ஒரு கடற்பகுதியில் மட்டுமே ஆராய்ந்ததில் இந்த இடைப்பட்ட பகுதியில் 112 வகையான மீன் லார்வாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன! முட்டையிலிருந்து வெளிவரும் மீன்குஞ்சுகளுக்கு உணவும் பாதுகாப்பும் கிடைப்பது இந்த இடத்தில்தான் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதிலிருந்து நீரோட்டங்களுக்குள் நுழைகிற வளர்ந்த மீன் குஞ்சுகள் தாங்கள் இருக்கப்போகிற நிரந்தர வாழிடத்தைச் சென்று சேர்கின்றன.

உலகளாவிய கன்வேயர் பெல்ட் என்பது பல சிறு நீர்வழிச்சாலைகளை இணைக்கிற உயிர்ச்சத்துக்களின் பெரும்பாதை எனலாம். கடலோரப் பகுதிகளின் பருவநிலை, மீன்பிடித்தலுக்கு உகந்த இடங்கள், எல் நினோ நிகழ்வுகள், வெப்ப சமநிலை என்று பல்வேறு கூறுகளில் இதன் தாக்கம் உண்டு. சிற்றூரில் இருக்கிற மக்கள் நடந்து மெயின்ரோட்டுக்கு வருவதைப் போல இந்த கடல்வழிச்சாலைக்கு வந்தால்தான் வலசை உயிரிகள் தங்கள் பயணத்தைத் தொடங்க முடியும். திமிங்கலங்களின் வாழ்வில் இந்தப் பாதைகளின் முக்கியத்துவம் அளப்பரியது. வலசை மீன்களின் இனப்பெருக்கத்தையும் உணவுக்கான கூடுகைகளையும் இந்தப் பாதைகளே தீர்மானிக்கின்றன.

நீரோட்டங்கள் சரியாக இருந்தால் என்ன நன்மை என்பதைவிட, இவை தடுமாறினால் என்னவாகும் என்பது நமக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை. அது ஒரு பெரிய சவால்.

பயணியரின் பைகளை ஒழுங்காக எடுத்து வந்துகொண்டிருந்த கன்வேயர் பெல்ட் ஒன்று திடீரென்று வேகமெடுத்தாலோ காலவரையின்றி நின்றுவிட்டாலோ என்னவாகும் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். மீன்களாலும் திமிங்கலங்களாலும் மேலாளரிடம் போய் நுகர்வோர் உரிமை பற்றி உரக்கப்பேசி சண்டையிட முடியுமா?!

*

தரவுகள்

Ramesh N et al, The small world of global marine fisheries: The cross-boundary consequences of larval dispersal, Science, 2019.

Guancheng et al, Increasing ocean stratification over the past half century, Nature Climate Change, 2020.

Ceaser et al, Current Atlantic Meridional Overturning Circulation weakest in Last millenium, Nature Geoscience, 2021.

Whitney et al, Surface slick are pelagic nurseries for diverse ocean fauna, Scientific Report, 2021.

***

நாராயணி சுப்ரமணியன்:கடல்வாழ் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.”நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” என்ற உயிரியல் நூலை எழுதியுள்ளார். தமிழில் கடல்சார், அறிவியல் பொருண்மைகளைக் கவிதைகளில் எழுதி வருபவர். விகடன் தடம், வாசகசாலை, அரூ இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. Email: nans.mythila@gmail.com

கனவுக் காய்ச்சல் – ரே பிராட்பரி

0

தமிழில் – நரேன்

வர்கள் அவனைப் புதிதாகச் சலவை செய்யப்பட்ட சுத்தமான உறைகளுக்கிடையில் கிடத்தியிருந்தார்கள். மங்கலான இளஞ்சிவப்பு விளக்கின் அடியில், மேசையின் மீது அப்போதுதான் பிழிந்து ஊற்றப்பட்ட கெட்டியான ஆரஞ்சு சாறு எப்போதும் போல் தயாராக வைக்கப்பட்டிருந்தது. சார்லஸ் அழைத்தால் போதும் அவனுடைய அப்பாவோ அல்லது அம்மாவோ, அவனது உடல்நிலை தற்போது எவ்வளவு மோசமாகிவிட்டதென்பதை அறிந்து கொள்வதற்காக, உடனடியாக தலையை நீட்டி அறைக்குள் நுழைத்து எட்டிப் பார்ப்பார்கள். அவ்வறையில் ஓசை பரவும் விதம் நன்றாகவே இருந்தது; காலை நேரங்களில் டாய்லெட் தன் பீங்கான் தொண்டையில் தண்ணீர் கொப்புளிப்பதைக் கேட்க முடியும், கூரையை மழை தட்டுவதையும் ரகசிய சுவர்களினூடாக திருட்டு எலிகள் ஓடுவதையும் கீழே கானரிப் பறவை அதன் கூண்டில் பாடிக்கொண்டிருப்பதையும் கூட கேட்க முடியும். மிகவும் விழிப்புடன் இருக்கும் பட்சத்தில் நோய் ஒன்றும் அவ்வளவு மோசமானதாக இருப்பதில்லை.

சார்லஸிற்கு பதிமூன்று வயது. அது செப்டம்பரில் பாதி கழிந்துவிட்ட காலம், இலைகள் உதிர்ந்து பூமி பற்றியெரியத் தொடங்கியிருந்தது. அந்தக் கொடூரமான ஒன்று அவனைத் தாக்கி பிடித்துக் கொள்ளும் முன் அவன் மூன்று நாட்களாகப் படுக்கையில்தான் கிடந்தான்.

அவன் கைகள் மாற்றமடையத் தொடங்கியது. அவனது வலது கை. அவன் அதைப் பார்த்தான். அது கொதித்து வியர்த்து படுக்கை விரிப்பின் மீது தனியாகக் கிடந்தது. அது படபடத்தது, லேசாக அசைந்தது. பிறகு வண்ணம் மாறியபடி அது அப்படியே அங்கேயே கிடந்தது.

*

அன்று மதியம் டாக்டர் மீண்டும் வந்தார். அவனது மெல்லிய மார்பின் மீது ஒரு சிறு டிரம்ஸ் வாசிப்பதைப் போலத் தட்டினார். “எப்படி இருக்கே?” புன்னகைத்தபடி டாக்டர் கேட்டார். “எனக்கே தெரியும், நீ சொல்ல வேண்டாம்: ‘எனக்கு சளி சரியாயிடுச்சு டாக்டர், ஆனாலும் என் உடல் ரொம்ப மோசமாகிக்கொண்டே போவதாக உணர்கிறேன்’ அதானே… ஹா ஹா..!” அடிக்கடி அவர் சொல்லும் அதே ஜோக்கை திரும்பச் சொல்லி அவரே சிரித்துக்கொண்டார்.

சார்லஸ் அப்படியே படுத்துக் கிடந்தான். அவனைப் பொறுத்தவரையில் இந்தக் கொடுமையான அரதப்பழசான கேலிப்பேச்சு இப்போது நிஜமாகிக் கொண்டிருக்கிறது. அவனது மனதில் அந்தக் கிண்டல் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுவிட்டது. அவனது மனம் அதைச்சென்று தொட்டு பின்பு பயத்தில் வெளிறிப் பின்வாங்கிக் கொண்டது. தன்னுடைய ஜோக்குகளால் தான் எவ்வளவு இரக்கமற்றவனாக இருக்கிறோம் என்பது டாக்டருக்குத் தெரியவில்லை! நிறமிழந்து உடல் நீட்டிப் படுத்திருந்த சார்லஸ், “டாக்டர்” என்று கிசுகிசுத்தான். “என்னுடைய கை இனி எனக்குச் சொந்தமில்லை. இன்று காலை அது வேறொன்றாக மாறிடுச்சு. அதை நீங்க எனக்காக மறுபடியும் பழையபடி மாத்தணும் டாக்டர்!”

டாக்டர் அவருடைய பற்களைக் காட்டிச் சிரித்து அவன் கையை தட்டிக் கொடுத்தார். “பார்க்கும்போது எனக்கு அது நன்றாக இருப்பது போலத்தான் தெரியுது கண்ணா. உனக்குக் காய்ச்சலினால் ஒரு குட்டிக்கனவு வந்திருக்கிறது அவ்வளவுதான்.”

“ஐயோ டாக்டர், அது இப்போ மாறிடுச்சு டாக்டர்…” கட்டுக்கு அடங்காத தன் வெளுத்த கையை பரிதாபமாகத் தூக்கிப் பிடித்தபடி அழுதான் சார்லஸ்.

டாக்டர் கண்ணடித்தார். “அதுக்காக நான் உனக்கு ஒரு பிங்க் மாத்திரை கொடுக்கிறேன்.” சார்லஸின் நாக்கின் மீது ஒரு மாத்திரையைப் போட்டார். “விழுங்கு!” 

“இது என்னுடைய கையை மறுபடியும் என்னுடையதாக மாற்றிடுமா?”

“ஆமா, ஆமா.”

செப்டம்பரின் நீலவானத்தின் அடியில் அரவமற்ற சாலையில் டாக்டர் தன் காரை ஓட்டிச் சென்றபோது வீடு அமைதியில் ஆழ்ந்திருந்தது. கீழே எங்கோ தூரத்தில் சமையலறை எனும் ஒரு உலகத்தில் கடிகாரம் துடித்துக் கொண்டிருந்தது. சார்லஸ் தனது கையை பார்த்தபடியே படுத்திருந்தான்.

அது பழையபடி மாறவில்லை. இன்னமும் அது வேறொன்றாகத்தான் இருந்தது.

வெளியே காற்று வீசிக்கொண்டிருந்தது. குளிர்ந்த ஜன்னலின் மீது இலைகள் மோதி விழுந்தன.

நான்கு மணிக்கு அவனது மற்றொரு கையும் மாற்றமடைந்தது. அது தனித்துக் கிட்டத்தட்ட பரபரக்கத் தொடங்கியது போல் தோன்றியது. ஒவ்வொரு செல்லாகத் துடித்து விலகியது. வெப்பமான இதயத்தைப் போல அடித்துக்கொண்டது. விரல் நகங்கள் நீலமாகவும் பின்பு செந்நிறமாகவும் மாறியது. இந்த மாற்றங்கள் நிகழ சுமார் ஒரு மணிநேரம் ஆனது. முடிந்ததும், பார்ப்பதற்கு எந்தவொரு சாதாரண கையையும் போலவே இருந்தது. ஆனால் அது சாதாரணமானது அல்ல. அது இனி அவனுடையது இல்லை. நம்பவியலாத திகிலில் படுத்துக் கிடந்தான், பின்பு முற்றாகச் சோர்வுற்று அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்து போனான்.

ஆறு மணிக்கு அவனுடைய அம்மா சூப் கொண்டு வந்தார். அவன் அதைத் தொடவில்லை. கண்களை மூடியபடியே “எனக்கு கைகள் இல்லை” என்றான்.

“உன் கைகள் நன்றாகவே உள்ளன சார்லஸ்,” என்றார் அம்மா.

“இல்லை,” அவன் ஓங்கியழுதான். “என்னுடைய கைகள் போச்சு. ஏதோ மரக்கட்டைகள் இருப்பதைப் போலத்தான் நான் உணர்கிறேன். ஐயோ, அம்மா… அம்மா என்னைப் பிடித்துக் கொள், பிடித்துக் கொள். எனக்குப் பயமாக இருக்கு!”

அவளே அவனுக்கு உணவூட்ட வேண்டியிருந்தது.

“அம்மா, டாக்டரை மீண்டும் கூப்பிடுங்கள், ப்ளீஸ். என் உடல்நிலை ரொம்ப மோசமாகிவிட்டது,” என்று சொன்னான்.

“டாக்டர் இரவு எட்டு மணிக்கு இங்கே இருப்பார்,” என்று சொல்லிவிட்டு அம்மா வெளியே சென்றார்.

*

ஏழு ஆகியிருந்தபோது, வீட்டை இரவு கருமையாக நெருங்கிச் சூழ்ந்து மூடியிருந்தபோது சார்லஸ் தன் படுக்கையில் எழுந்து அமர்ந்து தன் ஒரு காலில் முடிந்து பிறகு அடுத்த காலிலும் அது நிகழ்ந்து கொண்டிருப்பதை உணர்ந்தான். “அம்மா! இங்கே சீக்கிரம் வா!” அவன் உரக்கக் கத்தினான்.

ஆனால் அம்மா அங்கு வருவதற்குள் அது நிகழ்ந்து முடிந்துவிட்டிருந்தது.

அம்மா திரும்பக் கீழே சென்றபோது அவனுடைய கால்கள் துடிதுடித்து வெப்பமேறி செஞ்சிவப்பாகியது.  நடுநடுங்கும் இம்மாற்றத்தினால் அறையே வெம்மையில் நிறைவதை எதிர்த்து எதுவும் செய்யாமல் சும்மா படுத்து கிடந்தான்.

“நான் உள்ளே வரலாமா?” டாக்டர் வாசற்கதவில் நின்று புன்னகைத்தார். “டாக்டர்!” கத்தினான் சார்லஸ். “சீக்கிரம், என்னுடைய போர்வைகளை விலக்கிப் பாருங்கள்!”

டாக்டர் பொறுமையுடன் போர்வைகளைத் தூக்கினார். “ஆ… அதோ பார்… நன்றாக ஆரோக்கியமாகத்தான் இருக்கிறாய். கொஞ்சம் வியர்க்கிறதுதான். லேசான ஜூரம். உன்னை அங்கேயிங்கே நகர வேண்டாம் என்று சொல்லியிருந்தேனே, சுட்டிப்பையா.” ஈரம் தோய்ந்த அவனின் இளஞ்சிவப்பு கன்னத்தைக் கிள்ளினார். “அந்த மாத்திரை வேலை செய்ததா? உன்னுடைய கை மீண்டும் பழைய நிலைமைக்கு மாறியதா?”

“இல்லை… இல்லை… இப்போது என்னுடைய இன்னொரு கையும் இரண்டு கால்களும் கூட…”

“சரி… சரி… இப்போது உனக்கு நான் இன்னும் மூன்று மாத்திரைகள் கொடுக்கப் போகிறேன். ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொன்று. சரியா, என் குட்டி சிவப்பு பேரிக்காயே?” டாக்டர் சிரித்தார்.

“அது என்னை சரி பண்ணிடுமா? ப்ளீஸ்…ப்ளீஸ்… எனக்கு என்ன ஆச்சுனு சொல்லுங்க.”

“மிதமான செங்காய்ச்சல்தான், லேசாகச் சளி பிடித்திருப்பதால் கொஞ்சம் சிக்கலாகியிருக்கு.”

“எனக்குள்ளேயே வாழ்ந்து மேலும் மேலும் நிறைய கிருமிகளை உருவாக்கும் வகையான கிருமியா இது?”

“ஆமாம்.”

“இது சிவப்பு காய்ச்சல்தான்னு உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா? நீங்க எந்த டெஸ்டும் எடுக்கலையே?”

அசட்டையான அதிகாரத்துடன் அச்சிறுவனின் நாடித்துடிப்பைப் பரிசோதித்தபடி சொன்னார் டாக்டர், “கண்களால் பார்த்தே அது எவ்விதமான காய்ச்சல் என்று சொல்லும் திறமை எனக்கு உண்டு என்று நம்புகிறேன்.”

டாக்டர் தன் கறுப்பு மருந்து பெட்டியை விரைவாக அடுக்கி மூடுவது வரை எதுவும் பேசாமல் படுத்து கிடந்தான் சார்லஸ். பிறகு அந்த அமைதியான அறையில், அச்சிறுவனின் குரல் மிகவும் மென்மையாக வலுவிழந்த ஒலியாக எழுந்தது, ஏதோ நினைவூட்டப்பட்டவனைப் போல அவனின் கண்கள் ஒளிர்ந்தன. “நான் ஒருமுறை ஒரு புத்தகம் படித்தேன். கல்லாக மாறி உறைந்து நிற்கும் மரங்களைப் பற்றி. மரங்கள் எப்படி தரையில் விழுந்து அழுகி, பிறகு கனிமங்கள் எல்லாம் மீண்டும் ஒன்று சேர்ந்து தங்களைத் தாங்களே கட்டி எழுப்பி நிற்கின்றன என்பதைப் பற்றி. அவை பார்ப்பதற்கு மரங்களைப் போலவே இருக்கும். ஆனால் மரங்கள் அல்ல, பாறைகள்.”

“சரி, அதற்கென்ன?” என்று கேட்டார் டாக்டர்.

“நான் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்,” சிறிது நேரங்கழித்து சொன்னான் சார்லஸ். “கிருமிகள் எப்போதாவது பெரிதாக ஆகுமா? அதாவது என்னுடைய பயாலஜி வகுப்புகளில் ஒரு செல் உயிரிகள், அமீபாக்கள் அதுபோன்ற மற்ற சிலதுகள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால் கொத்தாக, ரொம்ப பெரியதாக ஆகும்வரை ஒன்றாகக் கூடியிருந்து பிறகு எப்படி ஒரு உடம்பை உருவாக்கின என்று சொல்லிக் கொடுத்தார்கள். அதன் பிறகு மேலும் மேலும் செல்கள் ஒன்றிணைந்து மிகவும் பெரிதாகி இறுதியாக ஒரு மீனாக உருவெடுத்திருக்கலாம். அதையும் மீறிக் கட்டக்கடைசியாக இதோ நாம் இருக்கிறோம். ஒன்றாக இணைந்து ஒருவருக்கொருவர் உதவுவதாக முடிவெடுத்துக் கொண்ட செல்களின் தொகுப்புதானே நாம் எல்லோருமே. இது சரிதானே?” காய்ச்சல் கண்ட உதடுகளை அவன் நனைத்துக்கொண்டான்.

“என்ன பேச்சு இதெல்லாம்?” டாக்டர் அவனை நோக்கி வளைந்து குனிந்தார்.

“நான் இதை உங்ககிட்ட சொல்லணும் டாக்டர். ஓ… நான் சொல்லியே ஆகணும்!” அவன் அழுதான். “சும்மா கற்பனை செய்து பாருங்கள்… ப்ளீஸ் கற்பனை செய்யுங்கள். அந்த காலத்தைப் போல நிறைய நுண்ணுயிரிகள் ஒரு பெரிய தொகுப்பை உருவாக்குவதற்காக ஒன்றிணைந்து பிறகு அவை மேலும் மேலும் இதைப்போல நிறைய உருவாக்கத் தொடங்கினால் என்ன ஆகும்?”

அவனது வெள்ளைக் கரங்கள் தற்போது அவன் நெஞ்சின் மீதிருந்து மெல்ல அவன் கழுத்தை நோக்கி ஊர்ந்தது.

“பிறகு அவை ஒரு மனிதனை மொத்தமாக எடுத்துக்கொள்ள முடிவெடுத்தன!” சார்லஸ் அழுதான்.

“ஒரு மனிதனை எடுத்துக்கொள்வதா?”

“ஆமாம், ஒரு மனிதனாகவே மாறிவிடுவது. நான், என்னுடைய கைகள், என் கால்கள்! ஒரு நோய்க்கு ஒருவனைக் கொன்று பிறகு அவனாகவே வாழ எப்படியோ தெரிந்து கொண்டுவிட்டது என்றால் என்ன செய்வது?”

அவன் அலறினான்.

அவனது கைகள் அவன் கழுத்தின் மீது இறுகியிருந்தது.

டாக்டர் கூச்சலிட்டபடி அவனை நெருங்கிச் சென்றார்.

*

ஒன்பது மணிக்கு அவனின் அம்மாவும் அப்பாவும் டாக்டரை வழியனுப்ப அவரது கார் வரை உடன் சென்று, அவருடைய பையை அவரிடம் கையளித்தனர். அவர்கள் அவ்விரவின் குளிர்ந்த காற்றில் நின்று சில நிமிடங்கள் பேசினார்கள். “அவனது கைகளும் கால்களும் எப்போதும் கட்டப்பட்டிருக்கிறதா என்பதை மட்டும் கொஞ்சம் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்,” என்று சொன்னார் டாக்டர். “அவன் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான்.”

“அவனுக்கு எல்லாம் சரியாகிடுமா டாக்டர்?” அம்மா டாக்டரின் கையை ஒரு கணம் பிடித்துக்கொண்டார்.

டாக்டர் அவரது தோளைத் தட்டிக்கொடுத்தார். “நான் முப்பது ஆண்டுகளாக உங்கள் குடும்ப டாக்டராக இருக்கிறேன் இல்லையா? இது காய்ச்சல்தான். மற்ற எல்லா விஷயங்களையும் அவன் கற்பனை செய்து கொள்கிறான்.”

“ஆனால் அவன் கழுத்தில் இருக்கும் காயங்கள், அவன் கழுத்தை அவனே நெருக்கி மூச்சுத் திணறடித்துக் கொண்டானே…”

“நீங்கள் அவனைக் கட்டியே வைத்திருங்கள்; அவன் நாளை காலை சரியாகிவிடுவான்.”

இருண்ட செப்டெம்பர் சாலையில் அவரின் கார் கிளம்பிச் சென்றது.

*

அதிகாலை மூன்று மணியளவில் தனது இருண்ட அறையில் சார்லஸ் இன்னமும் விழித்துக் கொண்டிருந்தான். அவனது கழுத்தின் அடியிலும் முதுகின் பின்புறத்திலும் படுக்கை ஈரத்தில் தோய்ந்திருந்தது. அவன் உடல் கடுமையான வெப்பம் கொண்டிருந்தது. இப்போது அவனுக்கு கைகளும் இல்லை கால்களும் இல்லை. அவனது உடலும் மாறத் தொடங்கியிருந்தது. அவன் படுக்கையில் அசையவேயில்லை ஆனால் பரந்த வெற்றுக் கூரையைக் கூரிய கவனத்துடன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் அவன் சத்தம் போட்டு எல்லா பொருட்களையும் வீசியெறிந்தபடி இருந்தான், ஆனால் இப்போது அவன் குரல் கரகரத்துப் போனது, அவனும் சோர்வடைந்துவிட்டான். அவன் அம்மா இதுவரை மூன்று முறை எழுந்து வந்து அவன் புருவத்தின் மேல் ஈரத்துண்டை அழுத்தி அவனை ஆற்றுப்படுத்தினார். இப்போது அவன் அமைதியாக இருந்தான், அவன் கைகள் கால்களோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிறது.

அவனது உடலின் சுற்றுச் சுவர்கள் மாற்றமடைவதைப் போல அவன் உணர்ந்தான். உறுப்புகள் நகர்ந்தன, இளஞ்சிவப்பு சாராயத்தின் கொள்கலன் பற்றியெரிவதைப் போல அவனது நுரையீரலில் தீ பற்றிக் கொண்டது. ஒரு கணப்பறையின் நடுங்கும் பிழம்பைப் போல அவ்வறை ஒளிர்ந்தது.

அவனுக்கு இப்போது உடல் இல்லை. அத்தனையும் போய் விட்டது. உடல் அவனுக்குக் கீழேதான் இருந்தது, ஆனால் அது ஒற்றை துடிப்பெனப் பற்றியெரியும் ஒரு மந்தமான போதையினால் நிறைந்திருந்தது. ஏதோ கில்லட்டின் கருவி அவன் தலையைச் சரியாக வெட்டிக் கழித்துவிட்டதைப் போல அந்தத் தலை தலையணை மீது பளபளத்துக் கிடந்தது. ஆனால் உடலோ, கீழே, இன்னமும் உயிருடன், வேறு யாரோ ஒருவருக்கு உரியவொன்றாக இருந்தது. இந்த நோய் அவன் உடலை முழுவதுமாக தின்றுவிட்டது. அப்படி உண்டதின் மூலமாகவே கொந்தளிக்கும் அதன் நகல் ஒன்றின் மூலமாகத் தன்னை பிறப்பித்துக் கொண்டது.

அவன் கைகளில் இருந்த சிறு மயிர்களும் விரல் நகங்களும், வடுக்களும், கால் விரல் நகங்களும், அவனது வலது இடுப்பின் ஒரு சிறிய மச்சமும் கூட மிகச்சரியாகப் புதிதாக மீண்டும் வனையப்பட்டிருந்தன.

நான் இறந்துவிட்டேன் என்று அவன் நினைத்தான். நான் கொல்லப்பட்டு விட்டேன், ஆனாலும் நான் வாழ்கிறேன். என் உடல் இறந்துவிட்டது, அதில் முழுவதும் இப்போது இருப்பது இந்த நோய்தான். யாருக்கும் அது தெரியப்போவதும் இல்லை. நான் எல்லா இடங்களையும் சுற்றி வருவேன் ஆனால் அது நானாக இருக்காது, வேறு ஏதோ ஒன்றாகத்தான் இருக்கும். அது முழுக்க முழுக்க கேடு செய்யும் ஒன்றாக இருக்கும், அத்தனையும் தீங்கிழைப்பவை, மிகப்பெரியது, பெரும் பாவங்கள் செய்யக்கூடியது, அதைப் பற்றிச் சிந்திப்பதற்கோ அதைப் புரிந்து கொள்வதற்கோ கூட மிகக்கடினமான ஒன்று. அது காலணிகள் வாங்கும் தண்ணீர் குடிக்கும் ஒருநாள் திருமணம் கூடச் செய்துகொண்டு இதுவரை இவ்வுலகில் இழைக்கப்பட்டதை விடவும் பெரும் பாவங்களைச் செய்யும்.

ஒரு சூடான மதுவைப் போல வெப்பம் இப்போது அவன் கழுத்தைத் தனதாக்கிக் கொண்டு அவன் கன்னங்களுக்குள் நுழைந்தது. அவன் உதடுகள் எரிந்தன, அவன் கண் இமைகள் இலைகளைப் போல தீ பற்றிக்கொண்டன. அவன் நாசி மெலிதாக, மிக மெலிதாக நீலத்தழலென சுவாசத்தை வெளியேற்றியது.

எல்லாம் முடிந்தது என்று அவன் நினைத்தான். இது என்னுடைய தலையையும் மூளையையும் எடுத்துக்கொண்டு இரண்டு கண்களையும் எல்லா பற்களையும் என் மூளையில் இருக்கும் அத்தனை குறிப்புகளையும், ஒவ்வொரு தலைமுடியையும் என் காதுகளின் சுருக்கங்களையும் தனதாகப் பொருத்திக் கொள்ளும். அதன் பிறகு என்னுடையதென்று எனக்கு எதுவும் மிச்சமிருக்காது.

கொதிக்கும் பாதரசத்தால் தன் மூளை நிரப்பப்படுவதை அவன் உணர்ந்தான். இடது கண் விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டிருப்பதைப் போல அவனுக்குத் தோன்றியது, பிறகு ஒரு நத்தையைப் போல தன்னைத்தானே பின்னிழுத்துக்கொண்டு அங்கிருந்து அகன்றது. அவன் இடது கண் குருடாகிவிட்டது. அது இனி அவனுக்குச் சொந்தமில்லை. அது எதிரியின் எல்லைக்கு உட்பட்டதாகிப் போனது. அவனுடைய நாக்கு போய்விட்டது, வெட்டித் தள்ளப்பட்டுவிட்டது. இடது கன்னம் மரத்துப்போய் பின்பு தொலைந்தேவிட்டது. இடது காது கேட்பதை நிறுத்திக்கொண்டது. அது இப்போது வேறு யாருக்கோ உரியது. மரக்கட்டைகளைக் கல்லாக உருமாற்றும் அந்த தனிமங்களாலான ஒன்று, ஆரோக்கியமான விலங்கு செல்களை மாற்றிடும் அந்த நோயெனும் ஏதோவொன்று… அது, அந்த ஒன்று, இப்போது புதிதாகப் பிறந்து கொண்டிருந்தது.

அவன் கத்த முயன்றான். அவனால் அந்த அறையில் சத்தம்போட்டு கூர்மையாக உரக்கக் கத்த முடியும்தான், ஆனால் அப்போதுதான் அவனது மூளை வழிந்து வெளியேறிக் கொண்டிருந்தது. வலது கண்ணும் வலது காதும் துண்டிக்கப்பட்டது, அவன் முழுதாக செவிடும் குருடுமாக ஆனான். அனைத்திலும் தீ பற்றிக்கொண்டது, அனைத்தும் நடுங்கியது, அனைத்தும் பீதியடைந்தது, அனைத்தும் மரணித்தது.

அவன் அம்மா கதவைத் தாண்டி அவனை நெருங்கி வருவதற்குள் அத்தனையும் சப்தமடங்கிப் போனது.

*

ஒரு தெளிவான நற்காலையது. வீசிய பலமான காற்றே டாக்டரை வீட்டின் முன் நடைபாதையில் உந்திச் செல்ல உதவியது. மேலே ஜன்னலில் நன்றாக ஆடையணிந்து அச்சிறுவன் நின்றுகொண்டிருந்தான். டாக்டர் கைகளை அசைத்துப் பேசியபோது அவன் பதிலுக்கு கைகளை அசைக்கவில்லை. “என்ன இது? அடக்கடவுளே… இவ்வளவு சீக்கிரம் எழுந்தாச்சா?”

டாக்டர் கிட்டத்தட்ட ஓட்டமாக படிகளேறி மேலே சென்றார். பலமாக மூச்சு வாங்கியபடி படுக்கையறைக்குள் நுழைந்தார்.

“படுக்கையை விட்டு வெளியே எழுந்து என்ன செய்கிறாய்?” அவர் சிறுவனை விசாரித்தார். அவனுடைய மெல்லிய மார்பின் மீது தட்டினார், உடற்சூட்டையும் நாடித்துடிப்பையும் கவனித்தார். “ஆஹா… என்ன ஆச்சரியம். குணமாகிவிட்டது. கடவுளால் குணமாகிவிட்டது!”

“இனி என் வாழ்க்கையில் நான் ஒருபோதும் நோய்வாய்ப்பட மாட்டேன்” என்று அறிவித்தான் அச்சிறுவன். பரந்த ஜன்னலுக்கு அருகே வெளியே பார்த்தவாறு அமைதியாக நின்றிருந்தான், “இனி ஒருபோதும் இல்லை.”

“நானும் அதைத்தான் விரும்புகிறேன். நீ நலமாக இருக்கிறாய், சார்லஸ்.”

“டாக்டர்?”

“என்ன, சார்லஸ்?”

“நான் இப்போது பள்ளிக்கூடம் போகலாமா?” சார்லஸ் கேட்டான்.

“நாளைக்குப் போனால் போதுமே. நீ பள்ளிக்குப் போக மிகவும் ஆர்வமாக இருப்பதைப் போலத் தெரிகிறதே.”

“ஆமாம். எனக்குப் பள்ளிக்கூடம் பிடிக்கும். அத்தனை குழந்தைகளையும் பிடிக்கும். எனக்கு அவர்களோடு விளையாட வேண்டும், தொட்டுப் பிடித்து மல்யுத்தம் செய்ய வேண்டும், அவர்கள் மீது உமிழ்ந்து விளையாட வேண்டும். பெண்களின் சடையைப் பிடித்து விளையாடவும், ஆசிரியர்களின் கைகளைக் குலுக்கவும், பொருட்கள் வைப்பறையில் இருக்கும் அத்தனை பொருட்களின் மீதும் என் கைகளைத் தேய்க்கவும், பிறகு பெரியவனாக வளர்ந்து பயணங்கள் செய்து உலகிலுள்ள அத்தனை மக்களுடனும் கைகளைக் கோர்த்துக் குலுக்கவும் திருமணம் செய்துகொண்டு நிறையக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவும், நூலகங்களுக்குச் சென்று எல்லா புத்தகங்களையும் தொட்டெடுத்து… – எல்லாம்.. இது எல்லாமும் நான் செய்ய வேண்டுமென விரும்புகிறேன்,” செப்டம்பரின் காலைப்பொழுதை வெறித்துப் பார்த்தபடி சொன்னான் அச்சிறுவன். “என்னை என்ன பெயர் சொல்லி அழைத்தீர்கள்?”

“என்ன?” டாக்டர் குழப்பமுற்றார். “நான் உன்னை சார்லஸ் என்ற பெயரைத் தவிர வேறு எதைச் சொல்லியும் அழைக்கவில்லை.”

“பெயரே இல்லாமல் இருப்பதற்கு இது பரவாயில்லை என்று நினைக்கிறேன்.” சிறுவன் தோள்களைக் குலுக்கினான்.

“நீ திரும்பவும் பள்ளிக்குச் செல்ல ஆர்வமாயிருக்கிறாய் என்பதை அறிய எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.” டாக்டர் சொன்னார்.

“நான் அதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.” சிறுவன் புன்னகைத்தான். “உங்கள் உதவிக்கு நன்றி டாக்டர். கைகளைக் குலுக்கிக் கொள்ளலாமா?”

“மகிழ்ச்சியாக…”

அவர்கள் தீர்க்கமாக கைகளைக் குலுக்கிக் கொண்டார்கள், திறந்திருந்த ஜன்னல் வழியாகத் தெளிவான காற்று வீசியது. கிட்டத்தட்ட ஒரு நிமிட நேரம் அவர்கள் கைகளைக் குலுக்கிக் கொண்டார்கள், சிறுவன் அம்முதியவரை தலைதூக்கிப் பார்த்து நன்றி சொன்னான்.

பிறகு, சிரித்தபடியே சிறுவன் டாக்டரை வேகமாகக் கீழே அழைத்துச் சென்று வெளியே காரின் அருகே நிறுத்தினான். அம்மாவும் அப்பாவும் அவரை மகிழ்வுடன் வழியனுப்பி வைக்கப் பின்தொடர்ந்தார்கள்.

“முறுக்கேற்றிய வயலின் நரம்பைப் போல இருக்கிறான்!” டாக்டர் சொன்னார். “நம்பவே முடியவில்லை!”

“பலமாகவும்…” அப்பா சொன்னர். “நேற்றிரவு அவனே கட்டுகளை அவிழ்த்து வெளியே வந்துவிட்டான், சரிதானே சார்லஸ்?”

“நானா?” சிறுவன் கேட்டான்.

“நீதான்! ஆனால், எப்படி?”

“ஓ..!” சிறுவன் சொன்னான், “அது வெகு காலத்திற்கு முன்னால் நடந்தது.”

“வெகு காலத்திற்கு முன்னாலாம்….”

அவர்கள் அனைவரும் சிரித்தனர். அவர்கள் சிரித்துக்கொண்டிருந்த போது அமைதியாக இருந்த அச்சிறுவன் தன் வெற்றுக் கால்களை நடைபாதையோரம் நகர்த்தி அங்கே குறுகுறுவென ஓடிக்கொண்டிருந்த சிவப்பு எறும்புகள் மீது லேசாகத் தொட்டுத் தடவினான். அவன் பெற்றோர்கள் அம்முதிய மனிதருடன் பேசிக்கொண்டிருந்த போது, அவன் கண்கள் ஒளிர, இரகசியமாக, எறும்புகள் தயங்கி நடுங்கி பின் சிமெண்ட் தரையின் மீது அசையாமல் கிடப்பதைப் பார்த்தான். அவை இப்போது குளிர்ந்து போயிருக்கும் என்பதை உணர்ந்தான்.

“குட் பை”

டாக்டர் கைகளை அசைத்தபடி கார் ஒட்டிச் சென்றார்.

தன் பெற்றோருக்கு முன்னால் நடந்து சென்றான் அச்சிறுவன். நடந்து செல்கையில் நகரத்தை நோக்கித் திரும்பிப் பார்த்து தன் கீழ்மூச்சில் “பள்ளிக் காலங்கள்” என்று முணுமுணுத்தான்.

“அவன் மீண்டும் முழுவதுமாக குணமாகிவிட்டான்… நல்லது,” என்றார் அப்பா.

“அவன் பேசுவதைக் கவனித்தீர்களா? அவன் மீண்டும் பள்ளிக்குப் போவதற்கு ஆவலாகக் காத்திருக்கிறான்!”

சிறுவன் சத்தமின்றி திரும்பினான். அவன் தன் பெற்றோரை ஒவ்வொருவராக நொறுக்கிப் பிழியுமளவு கட்டியணைத்தான். அவர்கள் இருவரையும் பலமுறை முத்தமிட்டான்.

பின்னர் ஒரு வார்த்தை கூட பேசாமல் வாசற்படியேறி வீட்டிற்குள் சென்றான்.

பெற்றோர்கள் நுழைவதற்கு முன்னர், வரவேற்பறையில் இருந்த பறவைக் கூண்டை அவசரமாகத் திறந்து தன் கைகளை நெளித்து நுழைத்து மஞ்சள் கானரி பறவையைச் செல்லமாக ஒரேயொருமுறை தடவிக் கொடுத்தான்.

பின்னர் கூண்டின் கதவை அடைத்துவிட்டு, பின்னால் அடியெடுத்து நின்று காத்திருக்கத் தொடங்கினான்.

***

ரே பிராட்பரிRay Bradbury  (1920-2012) : இருபதாம் நூற்றாண்டின் மிகப் பிரபலமான அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அறிபுனைவு கதைகளின் வித்தகர் என்று பெருமளவில் புகழப்பட்டாலும் தான் எழுதி மிகப் பிரபலமான Fahrenheit 451 என்ற ஒரு நாவல் மட்டும்தான் அறிபுனைவு வகைமையில் சேரும் மற்ற அனைத்தும் அதிபுனைவு மற்றும் மர்மக் கதைகள்தான் என்று கூறுகிறார். ஆனால் அறிவியலின் அடித்தளத்தில் இவர் கட்டியெழுப்பும் விறுவிறுப்பான மர்மக் கதைகளில் கூட கவித்துவ நடையழகையும் கற்பனையின் உச்சங்களையும் தொட்டவர். இவரின் பல சிறுகதைகள் பால்யகால நினைவுகளை மீட்டெடுப்பவை. கூடவே அச்சிறுவயதில் வாழ்வின் புலப்படா மர்மங்களையும் ஒரே நாளில் திடீரென அப்பால்யமே தொலைந்து போகும் விசித்திரத்தையும் மீண்டும் மீண்டும் தன் அதிபுனைவு கதைகளில் ஆராய முற்பட்டிருக்கிறார்.

1948-ல் எழுதப்பட்ட கனவுக் காய்ச்சல் எனும் இச்சிறுகதையை ஒரு கிருமி ஒரு மனிதனை முழுமையாகத் தனதாக்கிக் கொள்ளும் அறிபுனைவு சாயலில் ‘பால்யம்’ எனும் உடலை உரித்து அவிழ்த்து மனிதனாக வெளியேறும் ஒருவனின் கதையாகவும் கொள்ள முடியும். இளமைக்குள் நுழையும் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் கிருமியை ஒத்த ஒரு நாசக்கார செயலில் ஈடுபடும் சாத்தியம் உள்ள மர்மத்தை இக்கதை விறுவிறுப்புடன் திறக்கிறது. உலகில் தனித்தவனாக வெளியேறாத வரை ஒருவனின் பச்சையம் பாதுகாக்கப்படுகிறது. அது உலர்ந்து தனக்கென வாழ்வை நிர்மாணிக்க முற்படும் எவரும் மற்றவனைத் தொற்றி மேலேறிப் பரவும் கிருமி தானே.

***

நரேன் : ராணிப்பேட்டையைச் சேர்ந்த இவர் தற்போது கோவையில் வசித்து வருகிறார். இவர் மொழிபெயர்த்த சமகால புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறுகதைகள் தொகுப்பு “ இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்” நல்ல கவனம் பெற்றது..
ஆசிரியர் தொடர்புக்கு : Narendiran.m@gmail.com

லஷ்மி சரவணக்குமார் சிறப்பிதழ் – விரைவில்

0

எழுத்தாளர் அகரமுதல்வன் பொறுப்பாசிரியராகக் கொண்டுவரும் இச்சிறப்பிதழ்.. எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமாரின் படைப்புகள் குறித்த கட்டுரைகள், விமர்சனங்கள், ஆய்வுப்பதிவுகளோடு நேர்காணல், வெளிவராத படைப்பு என பதிவேற்றப்படும்.

இரண்டாயிரங்களுக்கு பின்னரான தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் தவிர்க்கமுடியாத எழுத்துக்களுக்கு உரித்தானவர். இன்றைக்கு வாசிப்புக்குள் நுழையும் இளைய தலைமுறையினரால் அதிகமாக வாசிக்கப்படும் இளம் எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார். இவரின் சிறுகதைகளைக் கடந்து நாவல்கள் பெருமளவில் வாசிக்கப்படுகின்றன. முதல் நாவலான “உப்புநாய்கள்” நாவல் இவருக்கு பெரிய வாசகத்தளத்தை ஏற்படுத்தியது எனலாம். “கானகன்” நாவல் இளம் படைப்பாளிகளுக்கான  யுவபுரஸ்கார் விருதினைப் பெற்றது.

விரைவில்..

பச்சோந்தியின் பக்கம்

0

குறுங்கதை

பானி

த்திரி வெயில் நெருப்பாய் எரியும் நகரத்தில், வறண்ட நாக்குடன் அலைகிறான் அப்துல் சலாம். நகரமே பூட்டிக் கிடக்கிறது. எங்கும் ஒரு துளி ஈரமில்லை. உயிர்போகும் தாகத்தோடு கடற்கரைக்குச் சென்றான். அங்கே கடலும் பூட்டப்பட்டிருந்தது. சுடும் பாறையாய்த் தகிக்கும் உடல். வெப்பக் காற்றாய் நடனமிடும் உடை. பசியில் தாகத்தில் எரிகுழம்பாய் கண்ணீர் வெடிக்க, மீண்டும் பூட்டிய நகரத்திற்குத் திரும்பினான். வீடுகளின் துளைவழி தாகம் தாகம் என்கிற கதறல். தொற்று அபாயத்தில் துளைகளும் அடைக்கப்படுகின்றன. ஐம்பது பேர் கொண்ட மரண ஊர்வலத்தில் தாகம் தாகம் என்றான். பறையோசையில் நகரம் அதிர ஆடிச்செல்லும் கூட்டத்தில் ஒரே ஒரு தும்மலோசை கேட்க, பாடையை அங்கேயே போட்டுவிட்டுத் தெறித்து ஓடினார்கள். ஏதொன்றும் அறியாத சலாம் காளி கோயிலுக்குள் ஓடி ஒளிந்தான். அங்கே நீர் சொட்டும் சத்தம். தேடிச் சென்று மிடறு மிடறாய்ப் பருகினான். சுடும் உடலில் இருந்து ஆவி பறந்தது. வானில் பறந்த ஆவி கண்டு காந்தி ராமன் பதறி ஓடிவந்தான். நீ யார் உன் பெயர் என்ன, உன் அப்பா பெயர் என்ன என்று விசாரித்தான். என் பெயர் அப்துல் சலாம், அப்பா பெயர் ரஹீம். “எங்களின் வாழ்வை அழிக்க அரேபியாவில் இருந்து வந்தவனே” என்ற வார்த்தைகள் சலாமின் கைகளைத் திருகி முதுகில் குத்தின. நிலையிழந்து வீழ்ந்த சலாமின் வயிற்றிலும் நெஞ்சிலும் ஓங்கி ஓங்கி உதைத்தான் காந்தி ராமன். மீண்டும் மீண்டும் அடித்ததில் கிழிந்து தொங்கியது சலாமின் உடை. அவன் கடைவாயில் இருந்து ரத்தம் சொட்டும் சத்தம். மிடறு மிடறாய்க் குடித்தான் காந்தி ராமன். பின் காளியின் நிழலில் இளைப்பாறிய காந்தி ராமனின் வாயின் மீது ஒற்றைக் காலை வானில் செருகிய மிருகம் சிறுநீர் பெய்து சென்றது. 

***

கவிதை

மண்டையோட்டின் முகக் கவசங்கள்

1

எந்த நூற்றாண்டில் பற்றவைத்த நெருப்பு இன்னும் எரிக்கிறது சேரியை. ஊருக்குள் இருந்தபடியே ஊதாங்குழலால் அணைந்த நெருப்பை ஊதிக்கொண்டிருப்பது யார். பசியுற்ற கண்ணனுக்கு மாட்டின் முட்டி எலும்பின் குழம்பைச் சற்று முன்புதான் தட்டிக் கொடுத்தேன். எரிந்தபடியே இடைவிடாது பாடும் புல்லாங்குழலையாவது காப்பாற்றுங்கள். இது விருந்தாளியின் தலைமுறைக்குக் கைம்மாறு அல்லவா.

மண்புழுவைக் குத்தும் கடப்பாரை, நத்தையின் முதுகில் தீப்பந்தம், பட்டாம் பூச்சிச் சிறகுகளில் உருட்டுக்கட்டை, பஞ்சாரத்தின் ஓட்டையில் பெட்ரோல் குண்டு. தப்பித்து ஓடும் சுருங்கிய தோலை சம்மட்டியால் அடிக்கும் வாலிபன் உடைந்த கட்டிலின் கால்களைப் பொறுக்கிப் பத்திரப்படுத்துகிறான். நெளிந்த பீரோவுக்குள் இருந்த மினுமினுப்பை அள்ளி ஓடுகிறார்கள். அங்கொருவன் தலை துண்டிக்கப்பட்ட உடைந்த கூண்டுச் சிலைக்குக் காவிச் சாயம் அடிக்கிறான்.

2

முகக் கவசம் அணிந்த ஓர் ஆணும் பெண்ணும் நடுநிசியில் ஓடுகின்றனர். இருவரையும் துரத்தும் கத்திகள் நந்தனம் சிலையைக் கண்டதும் தரையைத் தொழுதன. ஊரடங்கின் இரவு மயான அமைதியில். நாய் கவ்விய நடைமேடை தவறி விழுந்தது. அண்ணா சாலையில் இருந்து பாரிமுனை நோக்கி உருண்டோடும் இரண்டு பனங்கொட்டைத் தலைகள். சமூக இடைவெளியுடன் உறங்கிய குடும்பம் பெண் குழந்தையைத் தேடியலைகிறது.   

3

மண்டையோட்டை முகக் கவசமாக்கியவனைக் கோயம்பேட்டில் கண்டேன். ஓட்டின் தலைப்பகுதியில் வெட்டுத் தழும்பு. தண்டவாளத்தின் அடியில் கிடைத்ததாம். ஒன்றை எடுக்கும் கணத்தில் ஊற்றாய் மண்டையோடுகள் பெருகப் பெருக, மிரண்டு ஓடிவந்துவிட்டானாம். ஓர் தாய் தண்டவாளத்தில் குப்புறக்கிடந்த அரும்பு மீசையின் பாதத்தைக் கன்னத்தில் அழுத்தி அழுகிறாள். சிதறிய ரத்தத்துளிகளில் எண்ணற்ற ரயில்கள் தடதடத்தன.

4

எரியும் தந்தையின் சிதை மீது பாய்கிறாள் மகள். தொற்றில் இறந்த தந்தைக்கு எழுபது வயது. மகளோ என் தந்தைக்கு ஏழு வயதுதான். சில நேரங்களில் என் வானத்தில் தூக்கிப் போடும் பொம்மை. என் நுரையீரலில் இருந்து ஊதிப் பெருகும் பலூன். பிரசவிக்காத என் குழந்தை. எப்போதும் சுமக்கும் எடையற்ற சுமை. இப்படி இன்னும் நிறையச் சொல்லலாம் என் தந்தையை. அவர் என் தந்தை அல்ல என் குழந்தை; இன்னும் பிரசவிக்கா குழந்தை என்று கதறியபடியே தன் குழந்தையின் சிதையில் விழுந்து எரிகிறாள். மண்டை ஓடுகளில் மலரும் தாமரை மலர்கள், தொழுவத்தில் கிருமி நாசினி தெளித்துக் கொண்டிருக்கின்றன. சிதையின் சுடரை இரவல் பெற்று தேசமே விளக்கேற்ற, பிரபஞ்சமெங்கும் ஒலிக்கின்றன கைதட்டும் ஓசைகள்.  

***

கவிஞர் பச்சோந்தி, இயற்பெயர் ராசு கணேசன். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர். கணையாழி, விகடன் உள்ளிட்ட இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். தற்பொழுது நீலம் இதழில் துணை ஆசிரியராகப் பணி புரிகிறார். இவரது கவிதைத் தொகுப்புகள் வேர்பிடித்த உலக்கை, அம்பட்டன் கலயம், பீஃப் கவிதைகள் ஆகியன..
ஆசிரியர் தொடர்புக்கு: poetpacho@gmail.com

கன்னிச்சாமி

0

கா. சிவா

றையத் தொடங்கிய மாலைச் சூரியன் சுமங்கலியின் நெற்றிப் பொட்டுபோல சிவப்பாக, கண்கள் கூசாமல் பார்க்கும் வண்ணம் தண்மையுடன் இருந்தது. கோவில் வீட்டிற்கு ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். வந்த ஒவ்வொருவருக்கும், இன்று முதல்முறையாக சாமியாடப்போகும் சின்னையாவிற்கு தடங்களேதுமில்லாமல் சாமி வரவேண்டுமே என்ற லேசான பதட்டம் இருந்தது.  ஆடிமாத பூசைக்கான ஏற்பாடுகள் தொடங்கி ஒருமாதமாகிறது. அதன் முத்தாய்ப்பான உச்சம் இன்றைக்குதான்.

வைராத்தாள் மற்றும் நல்லாத்தாளுடன் இருக்கும் அகோர வீரபத்திரருக்கும் தனித்திருக்கும் கருப்பசாமிக்கும் ஆண்டுதோறும் ஆடிமாசம் கொடை பூசை. இதில் பங்கு கொள்பவர்கள் பல்வேறு ஊர்களில் வசிக்கும் ஒரே இனத்தைச் சேர்ந்த பங்காளிகள். இந்தச் சாமியைக் கும்பிடுபவர்களின் மாமன் மச்சான்களுக்கு வேறு சாமிகள். வேறு பூசைகள். அவர்கள் இந்தப் பூசையில் கலந்துகொள்ளக் கூடாது என்று கட்டுப்பாடு எதுவுமில்லை. ஆனால் புள்ளியோ காழாஞ்சியோ அவர்களுக்கில்லை. எனவே அருகிலுள்ளவர்கள் ஒருசிலர் மட்டும் வருவார்கள்.

கோயில் வீடு என்றால் வீடுதான். நடுவே முற்றம் வைத்து இரண்டு பக்கமும் தாழ்வாரமும், வடக்கு பக்க தாழ்வாரத்தை ஒட்டியபடி நீண்ட அறையுமாக கட்டப்பட்ட நாட்டு ஓடு வேயப்பட்ட வீடு. தாழ்வாரத்தில் கருப்புவின் இருப்பு. உள் அறை வீரபத்திரரின் புழக்கத்திற்கு. முற்றத்தை ஒட்டி கிழக்கில் வாரம் இறக்கியிருந்தது. அங்குதான் சமையல்.  சாமிகளுக்கு சிலைகளோ படங்களோ கிடையாது. வீரபத்திரருக்கு இரண்டு கையளவிற்கு அகலமான ஒரு ஆள் உயரத்தில் கருப்பாக தோற்றமளிக்கும் அரிவாள். அதில் பாதியளவிற்கு இருப்பது கருப்பசாமி. விபூதிப் பட்டையடிக்கப்பட்டு சந்தனம் வைத்து அதன் நடுவில் குங்குமத்துடன் துலக்கமாக இருக்கும் சாமிகளுக்கு பூசைநாளில் மட்டும் வேட்டியும் துண்டும் அணிவித்து மாலைகளிட்டு அலங்கரிக்கப்படும். அந்த அலங்கார வேலைகளெல்லாம் இந்தக் கோவில் வீட்டின் அருகிலேயே வசிக்கும் ராமய்யா கவனித்துச் செய்வார். கோவில் வீட்டின் வரவுசெலவு மற்றும் பூசைக்கான ஏற்பாடுகள் முழுவதையும் அவர்தான் நிர்வகித்தார். இதனால் இவரின் சொல்லுக்கு பெரும் மதிப்பு இருந்தது.

இந்நிகழ்வில் வீரபத்திரருக்கு சாமியாடியாக இருக்கும் சுப்பையா பெரியசாமி எனவும் கருப்பசாமிக்கு ஆடும் சின்னய்யா சின்னச்சாமி எனவும் அழைக்கப்படுவர். சுப்பையா பல ஆண்டுகளாக ஆடி வருகிறார். சின்னய்யா இந்த வருடம்தான் முதல்முறையாக ஆடப்போகிறார். சென்றமுறை சின்னச் சாமியாடியாக இருந்த கந்தய்யா போனவருடம் காய்ச்சல் வந்த மறுநாள் நல்லசாவு என்று எல்லோரும் சொல்லும் வண்ணம் இறந்தார். எனவே, பனங்குடி காமாட்சியம்மன் கோவிலில் சாமியழைத்துப் பார்த்து சின்னய்யாவை சின்னச் சாமியாடியாக தேர்ந்தெடுத்தார்கள்.  சுருட்டை முடியும் அலைபாயும் விழிகளுடனும் இருக்கும் முப்பது வயதான சின்னய்யா எப்படி சாமியாடப் போகிறான் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. பெரும்பாலானவர்கள் இந்தப் பூசைக்கு வருவதன் முக்கிய காரணம் சின்னச் சாமியாடி கூறும் அருள்வாக்கு.

பெரியசாமி குறி சொல்வதில்லை. அவரிடம் விபூதி வாங்கிக் கொள்வதோடு சரி. பெரியவர் இம்மாதிரி விவகாரங்களில் தலையிடக் கூடாது என இருப்பார் போலிருக்கிறது. உயரதிகாரி கூற வேண்டியதை அவரின் நேர்முக உதவியாளர் மூலமாக கூறுவதுபோல வீரபத்திரரின் சொல் கருப்பசாமி வழியாக அருள்வாக்காக வெளிப்படுகிறது என்று நம்பிக்கை.

*                      

பூசைக்கு வருபவர்கள் எல்லோருமே முதலில் சின்னய்யாவைத்தான் நோக்குகிறார்கள். அவர்கள் பார்வையில் தெரிவது எதிர்பார்ப்பா அவநம்பிக்கையா என்பதை பகுத்தறிய முடியவில்லை. ஆனால் வெளியே சொல்லவோ விவாதிக்கவோ முடியாத ஒன்றிற்கான மெல்லிய பதட்டம் இருந்தது. அதே பதட்டம் பல மடங்கு அவனுக்கும் இருக்கிறது.

ஒரு மாதத்திற்கு முன் இதுபோல இத்தனை பேரின் எதிர்பார்ப்புக்கு ஆட்படுவோமென்று எண்ணக்கூட முடியாதவாறு சின்னய்யா வேலைசெய்து கொண்டிருந்தான். திருப்பூர் நகரின் ஒதுக்குப்புறத்தில், சுற்றி இருந்த பத்து பனியன் மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்களை நம்பியிருந்த ஒரு நடுத்தர உணவகம் அது, ஆஸ்பெடாஸ் கூரையுடன் கரிபடிந்த குழல் விளக்குகளுடன் எல்லாச் சுவர்களும் சாம்பல் படிந்திருக்கும். டீ மேடையும் தோசைக்கல்லும் கோவிலின் துவார பாலகர்கள்போல வாசலின் இருபக்கமும் இருக்கும். இட்லி, பரோட்டா, சாப்பாடு, பிரியாணி, துரித உணவு என வாடிக்கையாளர் கேட்டு, இல்லையென்று திரும்பிவிடாதவாறு எல்லாவித உணவுகளும் சராசரி தரத்தில் அங்கு கிடைக்கும். ஊரில் சின்னய்யாவின் பக்கத்து வீட்டில் இருப்பவரின் மகன்தான் உரிமையாளர். மேற்பார்வைக்கு நம்பிக்கையான ஆள் வேண்டும் என்பதற்காக இவனை வைத்திருந்தார்கள். இவனுக்கு எல்லா வேலைகளும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். எந்த வேலைக்கான ஆள் வரவில்லை என்றாலும் சமாளிக்க முடிகிற அளவிற்கு.

மதிய வேலை முடித்து நான்கு மணிக்கு சாப்பிட்ட பிறகு கடையின் அருகிலேயே இருந்த அறையில் கண்மூடிப் படுத்திருந்தான். சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறி அனல் காற்றை பரப்பிக் கொண்டிருந்தது.  அருகில் மூன்று பேர் படுத்திருந்தார்கள். வெளிவந்தபோது யாராலும் சீண்டப்படாத ஒரு படம், தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் படம் என்ற பெயரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. நாயகனைப் போற்றிப் பாடப்பட்ட பாடலில் உறுமியைக் கொண்டு அழுத்தி இழுத்திருந்தார்கள். அந்த இழுப்புக்கு இயைந்ததுபோல இவன் கால்கள் அசைந்து கொண்டிருந்தன. அந்த இரைச்சலிலும் இருவர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவனுக்காக மட்டும் படம் ஓடிக்கொண்டிருந்தது. இவன் அலைபேசி ஒலித்தது. ஊரிலிருந்து அம்மா பேசினார். “தம்பி, நல்லாருக்கியா… சாப்பிட்டாயா” என்ற விசாரிப்புகளுக்கு பதில் சொன்னவுடன் “வர்ற செவ்வாக்கெழமன்னைக்கு ஊரு வாப்பா” என்றார்.

‘ஏம்மா என்னாச்சு”

“நம்ம கோயில் வீட்ல சின்னச் சாமியாடியா இருந்த கந்தய்யா காலமாயிட்டாருப்பா”

“அப்படியா. அதுக்கு எப்பவும் போல நீயே போயிட்டு வர வேண்டியது தானே”

“அதெல்லாம் போயிட்டு வந்தாச்சு. உன்னக் கூப்பிடறது அதுக்கில்ல… வேற புது சாமியாடி வேணுமில்ல”

“அதுக்கு” புரியாமல் கேட்டான்.

“நம்ப காமாச்சியம்மன் கோயில்ல சாமியழச்சு புது சாமியாடிய கண்டுபிடிக்கணும்”

“அதுக்கு நான் ஏம்மா வரணும்”

“சாமியாடிகளோட வாரிசுகள்ல இருந்துதானே புது ஆள கண்டு பிடிக்கணும். உங்க தாத்தா சாமியாடியா இருந்தது ஒனக்குத் தெரியாதா” என்று கேட்டபோது குரலில் லேசான அலுப்பு தெரிந்தது.

“இப்ப என்னம்மா பண்ணனுங்கிற”

“ரெண்டு நாளைக்கி கவுச்சி சாப்பிடாத. திங்கக் கெழம கெளம்பி ஊருக்கு வந்து சேரு” என்றார். அம்மாவின் வார்த்தையை மறுக்கும் வழக்கம் இவனுக்கில்லை.

*

பனங்குடியில் காலை ஆறு மணிக்கு பேருந்திலிருந்து இறங்கி அம்மாவுடன் சேர்ந்து காமாட்சியம்மன் கோவிலை நோக்கி நடந்தான்.  பதினைந்தடி சாலையின் இருபுறமும் சவுக்குக் கட்டைகளை ஊன்றி, தென்னை ஓலையால் வேயப்பட்ட கொட்டகைகள் இருந்தன.  பொம்மைகளும் போட்டோக்களும் குங்குமம் மஞ்சள் போன்ற பூசை பொருட்களும் விற்கும் கடைகள். பொருட்கள் எல்லாம் கடைக்கு முன்புறம் வெள்ளை உரச்சாக்குகளால் மூடப்பட்டிருந்தன. கடைகளை எப்போதும் பத்து மணிக்குமேல்தான் திறப்பார்கள்.

சாலையின் முடிவில் மணற்பரப்பான பெரிய மைதானம் இருந்தது. அதன் வடக்கில், பாவாடை கட்டி அமர்ந்திருக்கும் பெண் குழந்தைபோல பாந்தமாக கோவில் தனியாக நின்று கொண்டிருந்தது. திறந்தவெளியின் தெற்கில் குளத்தின் சுற்றுச்சுவர் தரைக்குமேல் நான்கடி உயரத்திற்கு தெரிந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் நடமாடிக் கொண்டிருந்தனர். கோவிலிலிருந்து எழுந்த மணியோசை லேசாக கேட்டது.

குளத்தை நோக்கிச் சென்றார்கள். சிறுசிறு பூச்சிக்கூடுகளை இறுக்கமாக பிணைத்தது போன்று காட்சியளித்த செம்பாறைகளை அடுக்கி சுவரும் படியும் அமைத்திருந்தார்கள். சுவர்களில் ஆங்காங்கே பாசிகள் படர்ந்து காய்ந்து கருப்பாக காணப்பட்டது. குளத்தினுள் பத்துப் படிகளுக்குக் கீழ் இளம்பச்சை நிறத்தில் நீர் தளும்பிக் கொண்டிருந்தது. கரும்பச்சை வண்ணத்தில் அல்லி இலைகள் படர்ந்திருந்தன. செவ்வல்லியும் வெண் அல்லியும் ஒன்றிரண்டு மலர்ந்திருந்தன.

சட்டையை அவிழ்த்து அம்மாவிடம் கொடுத்தபின் வேட்டியை நன்றாக இறுக்கிக் கொண்டு, குளத்தினுள் இறங்கினான். நீரின் தண்மையால் உடல் ஒருமுறை தானாக உலுக்கிக்கொண்டது. மூன்று முறை முழுதாக முழுகியவுடன் சிறிது நேரம் நின்றுவிட்டு மேலேறி வந்தான். அம்மா கொடுத்த துண்டை வாங்கி, தலையை துவட்டியபின், இடுப்பில் வேட்டியின் மேல் கட்டிக் கொண்டு கோவிலை நோக்கி மணலில் கால் புதைய நடந்தார்கள்.

எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருந்தது. இருபது பேருக்குமேல் உள்ளே இருந்தனர். சாமியழைத்துப் பார்ப்பதற்கென ஏற்கனவே நான்குபேர் வந்திருந்தார்கள். இன்னும் ஒருவர் வரவேண்டியிருந்தது. சின்னய்யா அம்மாவுடன் அர்த்த மண்டபத்தைக் கடந்து சன்னதி அருகில் சென்றான். முழு அலங்காரத்துடன் அருள் புன்னகை புரிந்து கொண்டிருந்தாள் காமாட்சி.  கைகளைக் கூப்பி வணங்கியபோது மனதில் வேண்டுதல் எதுவும் எழவில்லை. எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் இப்படித்தான். என்னென்னவோ வேண்டிக்கொள்ள வேண்டுமென நினைத்து கோவிலுக்குச் செல்வான். சுடராட்டின் போது அதன் ஒளியில் தெரியும் அழகில் லயித்துப் பார்த்திருப்பான். வெளியில் வந்தவுடன்தான் நினைவுக்கு வரும் வேண்டிக்கொள்ளவில்லை என்பது. இப்போதும் தனக்கு சாமி வரக்கூடாது என வேண்டிக் கொள்ளவே எண்ணியிருந்தான். ஆனால் கைதொழும்போது எதுவும் தோன்றவில்லை. “என் அன்னை, அவளுக்குத் தெரியாதா என் வேண்டுதல் என்னவென்று” என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டான்.

சாமியழைத்துப் பார்ப்பதற்காக வந்திருந்தவர்களுடன் சென்று நின்றான். இருபது வயது மதிக்கத்தக்க ஒருவன் விரைந்து வந்து இவனருகில் நின்றான். மற்ற நான்கு பேரில் இவன் வயதையொட்டிய இருவரும் ஒருவர் நாற்பது வயது மதிக்கத்தக்கவராகவும், இன்னொருவர் இன்னும் அதிக வயதானவராகவும் இருந்தார். எல்லோர் முகமும் தெரிந்த முகங்களாகவே இருந்தன. ஆனால் என்ன உறவு என்பதை மனதில் பதிந்திருக்கவில்லை.  அவர்களில் யாருக்கு சாமி வருமென்று அறிந்துகொள்ள இவனுக்கே ஆர்வமாக இருந்தது. சாமி வந்தால் எப்படி ஒவ்வொருவரும் ஆடுவார்கள் என கற்பனை செய்து பார்த்தான். இவன் முகத்தில் தோன்றிய முறுவலைப் பார்த்ததும் முறைத்த அம்மா, சும்மாயிரு என்னும் பாவனையில் உதட்டில் கைவைத்து அதட்டினார்.

அறுவரையும் சன்னதிக்கு முன் நிற்க வைத்து சம்பங்கியும் மரிக்கொழுந்தும் இணைந்து தொடுக்கப்பட்ட சிறிய மாலைகளை அணிவித்தார்கள். அம்மனுக்கு அருகில் தூபக்காலில் இருந்த தணலில் சாம்பிராணி பொடியைத் தூவ புகையுடன் மெல்லிய வாசணை எங்கும் பரவியது. சுற்றிலும் தூண்களில் சிற்பமாக நிலைத்திருந்தவர்களின் முகங்களிலும் அடுத்த சாமியாடி யாரென்பதை அறியும் ஆவல் தொனித்தது.

பூசாரி மணியை அடித்தபடி அம்மனுக்கு முன் சுடரைக் காட்டினார். ஆகா என்னவொரு மோனச் சிரிப்பு. அன்னை அமர்ந்திருந்த கோலம் இவன் மனதிலிருந்த பதட்டத்தைத் தணித்து அமைதியை ஏற்படுத்தியது.  உடுக்கையுடன் வந்த பூசாரி அதைச் சுழற்றி அடித்தபடி கருப்பனை அழைக்க ஆரம்பித்தார்.

எங்கள் குலம் காப்பவனே
விரைந்து வா கருப்பா!

உன்னை எண்ணி அழைக்கிறோம்
விரைந்து வா கருப்பா!

உன்னை நம்பி வாழ்கிறோம்
விரைந்து வா கருப்பா!

ஒப்பில்லா மாமணியே
விரைந்து வா கருப்பா!

உன்னையன்றி யாருமில்லை
விரைந்து வா கருப்பா!

சின்னய்யா அருகிலுள்ளவர்களைப் பார்த்தான். அனைவரும் சிலைகள் போல நிலைத்து நின்றார்கள். இவன் கால்கள் அந்த மணியோசையையும் உடுக்கையொலியையும் கேட்டு லேசாகத் துடிக்கத் தொடங்கியது. இந்த ஓசையைக் கேட்டும் உடலை அசையாமல் வைத்திருக்க பெரும் மனக்கட்டுப்பாடு வேண்டும் என்று எண்ணியபடி ஆடிவிடக் கூடாது என்று உடலை இறுக்கிக் கொண்டான்.

கண்ணீருடன் வேண்டுகிறோம்
விரைந்து வா கருப்பா!

எங்கள் கண்ணின் ஒளியே
விரைந்து வா கருப்பா!

கறியும் சோறும் படைத்திடுவோம்
விரைந்து வா கருப்பா!

எங்கள் குறை தீர்க்கவே
விரைந்து வா கருப்பா!

பூசாரியின் சொற்களை காதில் வாங்கக் கூடாது. உடுக்கையொலி உள்ளே நுழையக்கூடாது என இவன் எத்தனை முயன்றபோதும் அவை குழம்பில் கரைந்து பரவும் உப்பைப்போல மெல்ல உடலுக்குள் புகுந்து பரவ ஆரம்பித்தது. இவன் உடல் இவன் கட்டுப்பாட்டை மெல்ல மெல்ல இழக்க ஆரம்பித்தது. நுழையாமல் காத்துக் கொள்ளவேண்டும் என எண்ணி கூர்ந்து கவனித்ததுதான் இதற்கு காரணம் என்று இன்னொரு குரல் உள்ளிருந்து சீண்டியது.

உன்னையே நம்பி வந்தோம்
விரைந்து வா கருப்பா!

எங்கள் குல சாமியே
விரைந்து வா கருப்பா!

உன்னைத்தவிர கதியில்லை
விரைந்து வா கருப்பா!

மன்றாட்டு கேட்கலையா
விரைந்து வா கருப்பா!

உடலை இறுக்க முயன்று, மேலும் இறுக்கியதால் ஒரு எல்லையில் முடியாமல் கட்டுப்பாடு அறுந்து, இழுத்து கட்டப்பட்ட மூங்கில் விடுபட்டதென சட்டென்று ஒருகணத்தில் உடல் துடித்து குதித்தது. துள்ளித் துள்ளி ஆட ஆரம்பித்தான்.  நினைத்து வந்ததென்ன… நடப்பதென்ன என்று உள்ளிருந்து தன்னையே ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டான். மற்றவர்கள் எல்லாம் எதுவும் செய்யாமல் சும்மா இருந்தார்கள். இவனோ ஆடக்கூடாது என எண்ணியே சரியாக அதில் மாட்டிக் கொண்டான்.

*

அந்த உடுக்கையொலியும் பூசாரியின் குரலும் ஏற்படுத்திய ஒருவித தூண்டுதலில் அன்று ஆடிவிட்டான். ஆனால் சாமி வந்துவிட்டதாக நினைத்து இவனையே சாமியாடி என முடிவு செய்துவிட்டார்கள். அந்த நேரத்தில் தனக்கு சாமி வரவில்லை என்று இவனால் கூறமுடியவில்லை. ஆனால், இன்று எல்லோருக்கும் அருள்வாக்கு சொல்ல வேண்டுமே.

எல்லோருமே இவன் உறவினர்கள்தான் என்றாலும் அவர்களின் குடும்பப் பிண்ணனி எதுவும் இவனுக்குத் தெரியாது. எல்லா நல்லது கெட்டதுக்கும் அம்மாதான் செல்வார். எப்படிச் சமாளிப்பது என்று புரியாமல் தலை கிறுகிறுத்தது. இதில், வருபவர்கள் அத்தனை பேரும் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்திருக்கும் தந்தூரிக் கோழியை உற்றுப் பார்ப்பது போலவே இவனைப் பார்ப்பதாக இவனுக்குத் தோன்றியது.

அப்போது ஐந்து வயது பெண் குழந்தை அவள் அண்ணனை கையைப் பிடித்து இழுத்து வந்தது. அறைக்குள் எட்டிப் பார்த்தது. தாழ்வாரத்தில் இருந்த கருப்பருக்கான அலங்காரத்தைப் பார்த்தது. புரியாமல் திகைத்தது. “என்னம்மா பாக்குற” என்று சின்னய்யா கேட்டான்.

“சாமி கும்பிட வந்தோம். சாமியக் காணாமே” என்று மழலையில் சொன்னது.

“உள்ள இருக்கிறது தான் சாமி”

“இல்ல… அங்க அருவாதான் இருக்கு”

“இங்க அருவாவத்தான் சாமியாக் கும்பிடுவோம்”

“ஏன் அப்படி. எங்க வீட்ல போட்டோல வேற சாமியில்ல இருக்கு”

“அதெல்லாம் பெரியசாமிங்க. இது நம்ம சாமி”

“இதுக்கு ஏன் படம் வரையாம அருவாள வச்சிருக்காங்க” என்று அந்தப் பையன் கேட்டான்.

இந்தக் கேள்வி ஒரு கணம் இவனுக்குத் திகைப்பை ஏற்படுத்தியது. இதுவரை இதை யோசித்ததும் இல்லை. யாரிடமும் கேட்டதும் இல்லை. என்னவாயிருக்கும் என்று யோசித்து “அது வந்து… சாமி ஒன்னுதான். ஆனா சாமியாடிங்க மாறிகிட்டே இருக்காங்கள்ல. படம் வரைஞ்சுட்டா உள்ள இருக்குற சாமியும் ஆடற சாமியும் வேற வேறயா இருந்தா கொழப்பம் வந்திரும்ல. அதனாலதான் இப்படியே வச்சிருக்காங்க” என்று சொல்லிவிட்டு மனதிற்குள் தன்னையே மெச்சிக்கொண்டான். சற்று தூரத்தில் அமர்ந்திருந்த பெரிய சாமியாடியைக் காட்டி “அவர்தான் உள்ள இருக்கிற சாமி” என்றான்.

“அப்ப இந்தச் சாமி” என அந்தப் பெண் கருப்பரைக் காட்டிக் கேட்டாள்.

நான்தான் சாமி என்று எப்படிக் கூறமுடியும் என சின்னய்யா திகைத்தான். அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றும் விதமாக அவளின் அண்ணன்

“இவர்தான்… இந்தச் சாமி. அம்மா சொன்னாங்க” என்று கூறினான்.

“யாருப்பா உங்க அம்மா” எனக் கேட்டான். அவன் கை காட்டிய திசையில் இளநீல வண்ணத்தில் புடவை கட்டிய பெண் அமர்ந்து இவனை முறைத்துப் பார்ப்பதாகத் தோன்றியது. குறைவான வெளிச்சத்தால் முகம் சரிவரத் தெரியவில்லை. அவளா… அவளாகயிருக்குமா இவன் மனம் ஒருகணம் அதிர்ந்தது.

“தம்பி உங்க அம்மா பேரு என்ன”

“மீனாட்சி” என்று அவன் கூறினான்.

*

அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல் கோவில்வீட்டு பூசைக்கு வந்த இடத்தில் சாமியாடியாக சின்னய்யாவைப் பார்த்ததும் மீனாட்சிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

சின்னய்யா இவள் ஊர்காரன்தான். ஒன்றாகவே வளர்ந்தார்கள். ஊரில் எல்லா பிள்ளைகளும் எந்தவித விகல்பமும் இல்லாமல் பழகுவதுதான் வழக்கம். ஏன், எதற்காக என்று கூறமுடியாத ஒரு கணத்தில் சின்னய்யா மீது மீனாட்சிக்கு ஒரு தனிப்பட்ட நேசம் தோன்றியது.

அது ஏனென்று பிறகு பலமுறை யோசித்துப் பார்த்திருக்கிறாள். அன்றொரு நாள், கொத்துக் கொத்தாக சாம்பல் வண்ணக் கூடுகளாய் பழத்தைச் சுமந்திருந்த புளிய மரத்தினடியில் இளையவர்கள் பலர் கூடி பொருளற்ற அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். எல்லோர் கையிலும் புளியம்பழம் இருந்தது. ஓட்டை தட்டிவிட்டு அதை வாயில் வைத்து சப்பினார்கள். புளிப்பும் இனிப்புமான சுவையில் லயித்து ஸ்ஸ்ஸ்… என்று நாக்கை உச்சுக் கொட்டும் சப்தம் அவ்வப்போது எழுந்தது. பேச்சுவாக்கில் திரும்பிய மீனாட்சியின் விழிகள் சின்னய்யாவின் விழிகளை யதேச்சையாக சந்தித்தன. அக்கணத்தில், இல்லையில்லை… மில்லி கணத்தில்… அதில் தெரிந்த இவளுக்கேயான பிரத்யேக ஒரு பித்தேறிய மன்றாட்டை, அர்ப்பணிப்பை இவள் மனம் திகைப்புடன் உணர்ந்து, சிலிர்த்தபடி ஏற்றுக் கொண்டது என்று தோன்றியது.

பிறகு ஒருநாள் மதியம் கண்மாய்க் கரையில் சின்னய்யாவுடன் பேசிக் கொண்டிருந்தபோது “என்மேல் ஏன் அவ்வளவு பிரியம்’ எனக் கேட்டாள். இவள் முகத்தை அழுத்தமாக நோக்கிவிட்டு “எல்லாவற்றையும் வார்த்தையாக சொல்லிவிட முடியுமாயென்ன” என்று புதிர்போல கூறிவிட்டு கால்களை நீட்டிக்கொண்டு வாகை மரத்தில் சாய்ந்தபடி தனக்குள் ஆழ்ந்தான். அந்த பிரியம் தோன்றிய ஆரம்ப கணத்திற்கே சென்று அந்த உணர்வை அனுபவிப்பதுபோல ஒரு பரவசம் அவன் முகத்தில் தோன்றியது. காற்றடித்ததால் மரத்தின் நிழல் லேசாக நகர, சூரிய ஒளி அவன் முகத்தில் பட அந்தப் பிரகாசம் கண்ணை கூச வைத்தது. ஒருகணம் இவள் உடலெங்கும் மின்னதிர்வு பட்டதுபோல ஓர் இன்ப அதிர்வு ஓடிப் பரவியது. இப்படி ஒரு இன்பத்தை ஒரு மனிதனுக்கு தன்னால் கொடுக்க முடிந்ததென்றால் வாழ்வில் இதைவிட அடைவதற்கு வேறெதுவும் இல்லையென்று இவளுக்குத் தோன்றி விழிகளில் நீர் கோர்த்தது.

ஒரே பெண்ணென்பதால் இவளுக்காக அப்பா தினமும் எதாவது வாங்கிக் கொண்டு வருவார்.

“செல்லம் மீனு, ஓடி வாங்க. அப்பா ஒங்களுக்காக என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்னு பாருங்க” என அழைப்பார்.

அது பெரும்பாலும் அவருக்குப் பிடித்ததாக இருக்கும். அவர் சிறுவயதில் தின்ன ஆசைப்பட்டு, கிடைக்காததால் அதைத் தின்பதை இப்போதும் விரும்பக் கூடிய மனநிலையில் இருப்பார். அப்போதே அவருக்கு அது கிடைத்திருந்தால் அதன்மீது இப்போது இவ்வளவு ஆசை இருக்காது என மீனாட்சிக்குத் தோன்றும்.

வெங்காய போண்டா, தேன் மிட்டாய், கமர்கட்டு, இனிப்பு முறுக்கு, பொட்டுக்கடலை மிட்டாய், அச்சு முறுக்கு போன்றவைதான் அப்பாவுக்கு பிடித்தவை. இவற்றில், இவளுக்கு பெரிதாக விருப்பம் ஏற்படவில்லை. சாக்லேட், மிக்சர், பிஸ்கட் போன்றவற்றிலுள்ள வெவ்வேறு மாதிரிகள் மேல்தான் இவளுக்கு பெரும் மோகம். இவை அதிகமாகக் கிடைக்காதனால் கூட இருக்கலாம். இவற்றை தன் பிள்ளைகளுக்கு வாங்கித் தரக்கூடும் என்ற ஓர் எண்ணம் இவளுக்குள் எழுந்தது.

பிடிக்காத பண்டமென்றாலும் அப்பா அவ்வளவு ஆசையோடு கொண்டுவந்து தரும்போது எப்படி மறுப்பது. அதனை மறுத்து தனக்குப் பிடித்தது இதுவென்று எப்படிக் கூறமுடியும். ஆவலுடன் பெறுவது போன்ற பாவனையுடன் வாங்கிக் கொண்டு உள்ளே வந்துவிடுவாள். பிரித்து ஒன்றோ இரண்டோ எடுத்துக் கொள்வாள். இவள் தின்கிறாளா இல்லையா என்பதை அப்பா கவனிப்பதில்லை. பிரிக்கப்பட்டு மீந்திருப்பதை மறுநாள் இவள் அம்மாவும் அப்பாவும் எடுத்துக் கொள்வார்கள்.

ஒருநாள் மாலை, இவள் ஊருக்கு தெற்கேயுள்ள புளியம்பட்டியில் ஒரு மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும், ரொம்ப நல்ல பையன் என்றும் மலர்ந்த முகத்துடன் வந்த அப்பா சொன்னார். அப்பா அம்மாவிற்கு மீனாட்சி ஒரே பெண். அவர்கள் வாழ்கை முழுவதுமே இவளைச் சார்ந்துதான் இருக்கிறது. இவள் மனம் வருந்துவதை அவர்களால் தாங்க முடியாது. தன் மனதில் சின்னய்யா இருப்பதை சொல்லிவிட இவள் மனம் துடித்தது. அப்பாவின் விழிகள் இவளையே நோக்கிக் கொண்டிருந்தன.  அதில், அவர் கூறியதைக் கேட்டு மகளின் மலரப்போகும் முகத்தை எதிர்பார்க்கும் ஆவல் அப்பட்டமாய் துருத்திக் கொண்டு தெரிந்தது. அருகிலிருந்த அம்மா அப்பாவின் முகத்தை இதுவரை கண்டிராத தனிப்  பிரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். ஒருகணம் அம்மாவிற்கு அவரது அப்பாவின் நினைவு மனதில் எழுந்திருக்கக் கூடும். இப்போது, சின்னய்யா பற்றிச் சொன்னால் காணச் சகிக்காத இறுக்கத்துடன் மாறும் அவர் முகம்  ஒருகணம் இவள் மனதிற்குள் தோன்றி மறைந்தது. இத்தனை ஆண்டுகள் பாசத்துடன் வளர்த்தவர்களின் முகத்தில் வேதனையைப் பார்க்க வேண்டுமாயென இவள் மனம் மருகியது. ஒன்றை ஏற்கக் கூடாது என மனம் உறுதியாக முடிவு செய்துவிட்டால் மறுத்துவிடலாம். ஆனால், லேசாகவேனும் தயக்கமோ குழப்பமோ வந்துவிட்டால் மறுப்பதற்கான வாய்ப்பு குறைந்து, அதை ஏற்பதற்கான நியாயங்களை மனமே ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கத் தொடங்கிவிடுகிறது. நினைவு தெரிந்த நாளிலிருந்து அவர்கள் பாசமாக இருந்த கணங்கள் மட்டும் துணுக்குக் காட்சிகளாக மனதில் ஓடியது. இதன்பின் இதிலிருந்து மீட்பு இல்லையென்று தோன்றிய ஒருகணத்தில் முடிவெடுத்தாள். எப்போதும் சின்னய்யாவைப் பற்றி வீட்டில் பேசுவதில்லை என. சின்னய்யா இவள் மேல் உயிரை வைத்திருப்பவர்தான். ஆனால் இவர்கள் இவளுக்கு உயிர் கொடுத்தவர்களாயிற்றே.  அப்பா விரும்பிய வண்ணம் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் கணவரின் ஊருக்குச் சென்றுவிட்டதால், அதன் பிறகு சின்னய்யாவை பார்க்கவே இல்லை. மீனாட்சியின் திருமணம் முடிந்த மூன்று ஆண்டுகளில் அவள் அப்பா இறந்துவிட்டார்.

கணவனாக வந்தவர் அவளை நன்றாகவே வைத்துக் கொண்டார். அவருக்கு மனைவியாக தன் கடமைகளை செய்தாள். சின்னய்யாவின் நினைவு எப்போதாவது தோன்றி இவள் மனதில் சற்று பாரத்தைக் கூட்டும். பிள்ளைகள் பிறந்த பின்பு அது குறைந்து ஒருவித ஏக்கத்தை மட்டும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

மீனாட்சியின் கணவர் சென்னையில் இயந்திரங்களுக்கு உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் சிறிய நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அதிகமாக வேலை செய்து ஊதியம் குறைவாகப் பெறுவதாக அவருக்கு தோன்றியது. “இப்போது பெறுகிற சம்பளத்தை வைத்து பிள்ளைகளை ஆளாக்குவது பெரும் சிரமமாக இருக்கும், எனவே வெளிநாட்டிற்குச் சென்று வரலாம்” எனக் கூற ஆரம்பித்தார்.

“இந்த ஆசையை அவர் மனசுல ஏஜெண்டுகதான் ஏத்தியிருப்பானுங்க. வெளிநாட்டுக்கு போற எல்லோருமா சம்பாதிச்சுக் கொட்றாங்க. அங்க போய் கட்டிய பணத்தையுமே எழந்துட்டு வர்றவங்கதான் அதிகம்” என்று மீனாட்சியின் அம்மா கூறுகிறார்.

“உங்கம்மா கிட்ட பணம் கேக்கறதாலதான் அப்படிச் சொல்றாங்க. பணத்த சும்மா ஒன்னும் கொடுக்க வேண்டாம். கடனாக் கொடுக்கச் சொல்லு. வட்டியோட திருப்பிக் கொடுத்தர்றேன்” என இவள் கணவர் குதிக்கிறார். எந்த முடிவை எடுப்பதென்று திகைத்துக் கொண்டிருந்தபோது தான் கோவில் வீட்டு பூசை பற்றிய தகவல் கிடைத்தது. அப்பா இறந்த பிறகு அம்மா பூசைக்கு செல்வதில்லை.

“ஏன் நாமே கொழம்பிக்கிட்டு இருக்கணும். சாமிக்கிட்ட கேட்டாயென்ன” என அம்மா கேட்டார்.

“சாமிக்கிட்ட கேக்கறதுன்னா… பூக்கட்டிப் போட்டு பாக்கலான்றியாமா”

“அதில்லடி. கோயில் வீட்டு பூசையில அருள் வாக்கு கேக்கலாம்ல”

“முன்னாடி எப்பவாச்சும் கேட்டுறுக்கியா. அது நடந்துருக்கா” என்று மீனாட்சி கேட்டாள்.

“ஏண்டி ஒன் கல்யாணமே சாமி சொன்னபடிதானே நடந்துச்சு”

“எப்படிமா… நீ சொன்னதே இல்லையே” ஆச்சர்யமாகக் கேட்டாள்.

“ஒன் அப்பாதான் போயி கேட்டுட்டு வந்தாரு. நம்ம வீட்டுக்கு தெக்கு தெசையில இருக்கிறவரை கல்யாணம் பண்ணாத்தான் ஒன் வாழ்க்கை சந்தோசமாயிருக்கும்னு சாமி சொன்னுச்சாம். அதுக்காகத்தான் இந்த மாப்பிளையப் பாத்தாரு. இதுவரைக்கும் பெருசா தொந்தரவில்லாம நல்லாத்தானே வச்சிருக்காரு” என்று முடித்தபோது “சின்னய்யா வீடும் நம்ம வீட்டுக்கு தெற்கில்தானே உள்ளது” என்று மீனாட்சியின் மனதில் எண்ணம் ஓடியது.

கோவில் வீட்டுக்கு வருவதற்கு இவளுக்கு பெரியதாக ஆர்வமில்லை. அம்மா தொடர்ந்து கூறிக் கொண்டேயிருந்ததால் பிள்ளைகளுடன் இங்கு வந்தாள். வந்தபின்தான் தெரிகிறது சாமியாடியே அந்த சின்னய்யாதான் என்று. முதல் முறையாக ஆடுவதாகவேறு கூறுகிறார்கள். பழையவற்றை மனதில் வைத்துக் கொண்டு தவறாக எதையாவது கூறிவிடுவாரோ என்று அவளுக்குப் பயம் ஏற்பட்டது. சாமி வாக்கென்று ஒன்று சொல்லப்பட்ட பிறகு அதைச் செய்யாமல் தவிர்க்க முடியாதே. தவிர்த்துவிட்டு பின் தவிக்க நேர்ந்தால், சாமி சொன்னதைக் கேட்காததாலதான் இப்படி ஆகிவிட்டது எனக் கூற ஆரம்பித்து விடுவார்கள். அப்படி யாரும் கூறாவிட்டாலும் மனம் பதைப்பதை தடுக்கவா முடியும். என்ன நடக்கப் போகிறதோ என்ற பதட்டம் அவளை தொற்றிக் கொண்டது.

*

அது மீனாட்சியேதான் என்று தெரிந்தவுடன் சின்னய்யாவின் உடலில் மெல்லிய நடுக்கம் ஏற்பட்டது.  மீனாட்சியை இந்த மாதிரியான சூழ்நிலையில் சந்திக்க நேருமென இவன் எதிர்பார்க்கவே இல்லை. அவளை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் எப்போதேனும் ஏற்படும்போது எவ்வாறெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்பதை பலநூறுமுறை மனதில் ஓட்டிப் பார்த்திருக்கிறான். ஓடிச்சென்று கரங்களைப் பிடித்துக் கொள்வதாக. அவள் ஓடிவந்து இவனை இறுக்க அணைத்துக் கொள்வதாக. நிராதவராக அவள் நிற்கும்போது திடீரெனத் தோன்றி உதவுவதாக. இன்னும் இன்னும் இதுபோல. ஆனால் இப்போது அது எதுவுமே நடக்கவில்லை. என்ன செய்வது, எதைப் பேசுவது என்பதெல்லாம் புரியாதவாறு, வெறுமையான மனதுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சாமியாடியாக அமர்ந்திருக்கும்போது போய் பேசலாமா. பேசினால் பழைய சின்னய்யாவாகப் பேசவேண்டுமா அல்லது சாமியாடியாகவா… அவள் முகத்தில் தெரியும் அந்த அதிர்ச்சி இவனைப் பார்த்ததற்காகவா அல்லது சாமியாடியாக இவன் இருப்பதற்காகவா. அநேகம் பேர் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த இடத்தில் பேசுவதென்ன, பார்க்கக்கூட இவனுக்கு தயக்கமாக இருந்தது.

ஆனால், அன்று ஊருணிக்கரையில் எந்தத் தயக்கமுமின்றி தன்னையே மறந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். மண்குடத்தில் நீரை மொண்டபின் ஒருகையால் தூக்கிக்கொண்டு மறுகையால் சிறிது நீர் அள்ளி குடத்தின் அடியை கழுவியபடி நளினமாக முன்னும் பின்னும் அசைத்தபடி ஒசித்த இடுப்பில் வைத்தாள். வலது காலை லேசாகத் தூக்கி பாதத்தோடு இறுகியிருத்த வெள்ளிக் கொலுசை தளர்த்தினாள். அப்போது நீரில் தெரிந்த அவள் பிம்பத்தைக் கண்டு ஒரு பெருமிதமும் இறுமாப்பும் முகத்தில் படர, முன் நெற்றியில் விழுந்திருந்த சிறுகற்றைக் குழல்களை இடது கையால் செவியையொட்டி சொருகினாள். சுற்றிலும் வேகமாக விழி சுழற்றி ஒருமுறை பார்த்தபின் துள்ளலாக அடிவைத்து வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். இவன் கரையில் நின்றிருந்த பருத்த ஆலமரத்தின் பின்னால் அவள் பார்வையில் படாமல் மறைந்து நின்றான். யாரும் பார்க்கவில்லை என்று அவள் எண்ணியபோது அவளிடம் தோன்றிய விடுதலை உணர்வையும், உடலெங்கும் பரவிய மெல்லிய சிலிர்ப்பையும் அருகிலென துல்லியமாகப் பார்த்தான். பெண்ணின் அழகென்பது முகத்திலோ நிறத்திலோ அல்ல, யாரும் தன்னை கண்காணிக்கவில்லை என்று தோன்றும்போது அவளின்  மனதாழத்திலிருந்து கட்டுகளை அறுத்துக்கொண்டு வெளிப்படும்  அந்தச் சிறுமியின் குறும்பும் துள்ளலும்தான் என்று இவனுக்குத்  தோன்றியது. அந்தக் கணம் உணர்ந்தான் அவள்தான் அவளேதான் தன் தேவதை என.

தன்மேல் பிரியம் ஏன் ஏற்பட்டதென மீனாட்சி பின்பொருமுறை இவனை கேட்டாள். எப்போது எண்ணினாலும் பரவசம் ஏற்படுத்தும் அந்நிகழ்வை  அவளிடம் கூறவில்லை. அதைக் கூறிவிட்டால் அவ்வப்போது அவளில் எழும் சிறுமியை அவள் பிரக்ஞைபூர்வமாக தடுத்துவிடக் கூடும் என்ற பயத்தினால்தான்.

அவளுக்கு வேறொவருடன் திருமணம் செய்ய முடிவு செய்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டபோது இவனுக்குள் எழுந்தது அவள் வாழ்வைப் பற்றிய கவலை தான். இவன் விருப்பமெல்லாம் அவள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதுதான். இன்னொருத்தர் மூலமாக அது கிடைத்தால் இவனுக்கும் மகிழ்ச்சிதான். மாப்பிள்ளையைப் பற்றி நல்லவிதமாகவே சொன்னார்கள். அவள் எந்த நிலைமையில் ஒத்துக் கொண்டாளோ, அவள் எடுத்த முடிவிற்கு இடையூறாக இருக்க வேண்டாம் என முடிவு செய்தான். இனி அவளை சந்திக்கக் கூடாது என்பதற்காகவே திருப்பூரிலேயே கிடந்தான். அம்மா எவ்வளவோ வற்புறுத்தியபோதும் திருமணம் செய்துகொள்வதற்கு இவன் மனம் தயாராகயில்லை.

“சாமி, எங்களை இப்படிக் கொண்டுவந்து சந்திக்க வைத்துள்ளதே. என்னிடம் அருள்வாக்கு கேட்க வந்திருக்கிறாளே. எப்படி சொல்லப் போகிறேன்… ஏற்கனவே சாமி வருமா என்று பயந்து கொண்டிருக்கும் போது இவள்வேறு வந்திருக்கிறாள். என்னைப் பற்றி என்ன எண்ணம் கொண்டிருக்கிறாளோ. உண்மையாகவே சாமிவந்து அவள் விரும்பாத எதையாவது கூறினாலும், நான் பழைய கோபத்தில் கூறியதாகத்தானே எண்ணுவாள். அவளுக்கு இப்போது என்ன பிரச்சனையோ தெரியவில்லையே. முகத்தைப் பார்க்கும்போது பெரியதாக கவலையோ சோகமோ இருப்பதாகத் தெரியவில்லை. குழப்பம்தான் தெரிகிறது. ஆனாலும் சாமியைத் தேடி வந்திருக்கிறாளென்றால் ஏதோ பிரச்சனை பெரியதாகத்தான் இருக்கவேண்டும். என்ன நடக்கப் போகிறதோ… அப்பா கருப்பா… காப்பாத்தப்பா…” என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தான் சின்னய்யா.

*

முதல் சாமியழைப்பிற்கு அழைக்கும் விதமாக மணி ஒலித்தது. பெரிய சாமியாடி சுப்பையா எழுந்து சென்று சற்று தள்ளி அமர்ந்திருந்த சின்னய்யாவை தோளில் தொட்டு அறைக்குள் செல்லவேண்டும் என கையால் சைகை காட்டிவிட்டு வீரபத்திரர் இருக்கும் அறைக்குள் நுழைந்தார்.

இந்த முதல் சாமியழைப்பு வெள்ளாட்டினை பலி ஏற்பதற்காக. இரண்டு வெள்ளாடுகளை பிடித்திருந்தார்கள். வீரபத்திரருக்கு பூரண அலங்காரம் செய்திருந்தார்கள். அரிவாளுக்கு திருநீரால் பட்டை அடித்து அதன்மேல் மஞ்சளும் குங்குமமும் இட்டிருந்தார்கள். சாமந்தியையும் ரோஜாவையும் இணைத்து இடையிடையே மரிக்கொழுந்தை நுழைத்துக் கட்டிய மாலையை உச்சியிலிருந்து பாதம்வரை சாத்தியிருந்தார்கள்.

வீரபத்திரருக்கு இருபுறமும் இருந்த வெள்ளையம்மாவிற்கும் வயிராத்தாளுக்கும் பச்சை மற்றும் மஞ்சள் வண்ணத்தில் பட்டுப்புடவை சார்த்தி மல்லிகை மற்றும் முல்லை மலர்களால் அலங்கரித்திருந்தார்கள்.

உள்ளே வர வேண்டியவர்கள் வந்தவுடன் கதவைச் சாத்தினார்கள். சுற்றி நெருக்கியபடி நின்று கொண்டிருந்தவர்கள் முகத்தில் எதிர்பார்ப்பும் ஆர்வமும் படர்ந்திருந்தது. பெரிய தூபக்காலிலிருந்த தணலில் சாம்பிராணித் தூளை தூவினார் பூசாரி. குள்ளமாக இருந்தாலும் திடகாத்திரமாக இருந்த பூசாரியின் உடலில் ஊறிய வியர்வை வடியும் நிலையில் இருந்தது.

அறை முழுவதும் புகை சூழ்ந்து சூழலை மேலும் இறுக்கமாக்கியது. சுப்பையா அருகிலிருந்த சின்னய்யாவை நோக்கினார். வெளியில் அமர்ந்திருந்தபோது இருந்த குழப்பமும் பயமும் அவன் முகத்திலிருந்து அகலாமல் அப்படியே இருந்தது. மணியையும் உடுக்கையையும் அடித்தபடி வீரபத்திரருக்கான போற்றிகளைக் கூற ஆரம்பித்தார் பூசாரி. எல்லோருடைய உடலுமே லேசாக விதிர்த்தது.

மெல்ல மெல்ல வேகமெடுத்த போற்றி உச்சத்தை நோக்கி அடியெடுத்து வைத்தபோது சுப்பையா உடல் அவரின் கட்டுப்பாட்டிலிருந்து உதறிக் கொண்டு துடித்தது. இறுக்கிக் கொண்ட உதடுகளிலிருந்து “ம்ம்ம்” என்ற ஒலி அழுத்தமாக எழுந்ததை பார்த்துக் கொண்டிருந்தார். இவர் கையிலிருந்த சூலம் முதல் ஆட்டின் கழுத்தின் மீது குத்தியது. அதை பின்புறமாக இழுத்துக் கொண்டு அடுத்ததை முன்பக்கம் கொண்டு வந்தார்கள். இன்னும் ஒருமுறை இவர் வாயிலிருந்து உறுமல் எழுவதையும் ஆட்டின் கழுத்தின்மீது சூலத்தால் குத்தப்படுவதையும் பார்த்தார். சுற்றி நின்றிருந்தவர்களின் முகங்கள் பரவசத்தில் மிளிர கைகூப்பிக் கொண்டிருந்தார்கள். சட்டென சுப்பையாவின் உடலில் இருந்த இறுக்கம் தளர்ந்து தொய்ந்தது. இதை எதிர்பார்த்து இவர் அருகிலிருந்த இருவர் கீழே விழாமல் இவரைப் பிடித்துக்கொண்டு அறைக்கு வெளியே கூட்டிவந்து அமர வைத்தார்கள்.

சாமி சூலத்தால் ஆடுகளை குத்துவது பலிக்கு ஒப்புதல் அளிப்பதுதான். இனிமேல் அந்த ஆடுகளை அறுத்து, உரித்து, வெட்டி, சமைத்து படையலிடும் வரை சுப்பையாவும் சின்னய்யாவும் வெறுமனே அமர்ந்து தான் இருக்கவேண்டும்.

இவருடைய பணி பாதி முடிந்துவிட்டது. பெரியசாமி இவருடலில் தோன்றுவது சில நிமிடங்கள்தான். அதற்கே உடலெல்லாம் மூன்று நாட்களுக்கு வலி இருந்து கொண்டிருக்கும். சின்னச் சாமியாடிகளுக்கு ஒருமணி நேரம்வரை சாமி உடலில் இருக்கும். ஒரு வாரத்திற்கு அவர்களால் வேலைக்கு போகமுடியாது. சின்னய்யா அதேபோல பிரமை பிடித்தவன்போல அமர்ந்திருந்தான். இயல்பாக இருந்தவன் முகத்தில் குழப்பமும் கவலையும் படர்ந்தது, அந்தக் குழந்தைகள் வந்து பேசிச் சென்றபின் தான் என்று சுப்பையாவிற்குத் தோன்றியது.

கோவில் வீட்டிற்கு வெளியே வராண்டாவில் இரவு பந்திக்கு மக்கள் தயாராகினர். எளிமையான டிபன்தான். இட்லி பொங்கலுடன் ஒரு இனிப்பும் இருக்கும். உண்டவுடன் அனைவரும் இரண்டு மணிநேரம் ஆங்காங்கே அமர்ந்தும் படுத்தும் ஓய்வெடுப்பார்கள். மணிச்சத்தம் கேட்டவுடன் எழுந்து வருவார்கள்.

சுப்பையா சின்னய்யாவை நோக்கினார். தான் முதல்முறை சாமியாடியாக வந்த நினைவுகள் எழுந்தன. இவரின் அப்பா மாட்டு வண்டியில் செல்லும்போது சிறிய கல்லில் ஏறியிறங்கியது. அதை எதிர்பாராதவர் சட்டென்று கீழே விழுந்துவிட்டார். அவரின் கால்மீது வண்டி ஏறி இறங்கியது. வண்டியில் சுமை ஏதும் இல்லாததால் முடத்தோடு போயிற்று. காலில் ஒரு கோணல் உண்டாயிற்று. ஊனத்துடன் இருப்பவர் சாமியாடக் கூடாதென்பதால் புது சாமியாடியை தேர்வதற்காக சாமியழைத்துப் பார்க்க இவரையும் அழைத்தார்கள்.          

காமாட்சியம்மன் சன்னதியில் என்ன நடந்ததென்பது இன்னுமே இவருக்கு சரியாகப் புலப்படவில்லை. ஏதோவொரு வேகத்தில் இருமுறை துள்ளியதாகக் கூறினார்கள். இவரேயே பெரிய சாமியாடியென முடிவு செய்தார்கள். வாரிசு அரசியல் போல அமைந்தது இவரது அப்பாவிற்குமே ஆச்சர்யம்தான். முதல் பூசைக்கு வரும்போது இவரிடம் அப்பா கூறியது “உடலை கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டும் பார்” என்பதை மட்டும்தான். முதலில் அது எப்படியென்று புரியாமல் இருந்தாலும் சாமியழைத்து மணியடித்தவுடன் அப்பா சொன்னபடி, தோல்பாவை பொம்மைபோல தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டு வேடிக்கை மட்டுமே பார்த்தார். உடல் அதுவே இறுகியது துள்ளியது பேசியது பின்பு துவண்டது. 

பல ஆண்டுகள் பள்ளியில் படித்துக் கொண்டிருப்பவனுக்கு முதல்முதலாக பள்ளியில் சேர பயமும் தயக்கமுமாக வரும் பிள்ளையிடம் தோன்றும் கரிசனம் போல சின்னய்யாவைப் பார்க்கும்போது சுப்பையாவிற்கு ஒருவிதப் பிரியம் தோன்றியது. அவன் அருகில் சென்று, அவன் தோளில் இடது கையை வைத்து கரங்களின் மேல் வலது கையை வைத்தபடி அமர்ந்தார். அவன் உடல் தயக்கத்தில் குறுகியது. நிமிர்ந்து இவர் முகத்தில் தெரிந்த புன்னகையை பார்த்தவுடன் முகத்தை இயல்பாக்க முயன்றான்.

“சின்னய்யா, ஏன் கவலையா இருக்க மாதிரி தெரியுது” என்றார்.

“இல்லண்ணே, பயமா இருக்கு” என்றான்.

“ஏன் சாமி வருமான்னா”

“ஆமாண்ணே”

“அதுக்கு மத்தவங்கதான் கவலப்படணும். நீயோ நானோ கவலப்பட்டு என்ன செய்யறது. நம்ம கையிலயா இருக்கு”

“அதுகூட பரவாயில்ல. சாமிவந்து அவங்களுக்கு விரும்பாதத சொல்றப்ப நாம சொல்றோம்னு தப்பா நெனச்சுக்கிட்டாங்கன்னா”

“நெனச்சுக்கிட்டு போறாங்க. அதுக்கு நாம என்ன செய்யறது. அந்த நம்பிக்கை இல்லாதவங்க எதுக்கு இங்க வாராங்க”

“சொல்றது நடக்கலைனா”

“அது சாமிக்கும் அவங்களுக்கும் உள்ள பிரச்சனை. அதுல நீயோ நானோ என்ன செய்யமுடியும்”

“ஆமால்ல” என்று மெல்லக் கூறியவன் முகத்தில் லேசாக தெளிவு வரத் தொடங்கியது.

“சின்னய்யா… எங்கப்பா என்கிட்ட சொன்னத ஒனக்கு சொல்றேன். ஒன் ஒடம்ப கட்டுப்படுத்தாம அது இஷ்டத்துக்கு விட்டுட்டு வேடிக்க மட்டும் பாரு. நடக்கறதுக்கும் ஒனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லேன்னு புரிஞ்சுக்க. மனசுல கவலையோ குழப்பமோ எதுவும் வராது” என்றார்.

இவர் சொன்னதை சின்னய்யா மெதுவாக உள்வாங்குவது தெரிந்தது. முகம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைந்தது.  மலர்ந்த அவன் முகத்தில் இவருக்கான நன்றி மிளிர்ந்தது.

*

சுப்பையா அண்ணன் சின்னய்யாவின் தோளைத் தொட்டு பேசியது இவனுக்கு தன் தாத்தா பேசியது போல இருந்தது. இவனுக்கு ஐந்து வயதாக இருந்தபோதே அவர் காலமாகிவிட்டார். ஆனாலும் தாத்தாவைப் பற்றி யாராவது கூறினால், சின்னப் பையனான தன் தோள்மீது கை வைத்து அணைத்தபடியே அவர் நடந்து வந்தது மிகப்பழைய கருப்பு வெள்ளை சினிமாபோல இவன் மனதில் தோன்றும். அவர் இருந்திருந்தால் சாமியாடும் அனுபவத்தை அவரிடமிருந்து தெரிந்து கொண்டிருக்கலாம்.

ராமய்யா அண்ணன் அவர் அப்பா கூறியதாச் சொன்னது மனதின் இறுக்கத்தையும் பயத்தையும் மட்டுப்படுத்தியது. நடக்கப் போவதில் இவனுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என அவர் கூறியபோது பெரும் விடுதலையுணர்வு தோன்றியது. நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்தால் போதும் என்ற நினைப்பே உடலையும் மனதையும் உற்சாகம் கொள்ள வைத்தது.

பூசாரி மணியடித்தார். வெளியே மலர் அலங்காரத்தோடு இருந்த கருப்புசாமிக்கும் வாழையிலை விரித்து படையல் போட்டிருந்தார். இலையை நிறைத்து சோறு வைத்து எண்ணெய் மிதக்கும் குழம்பை கறியுடன் பரிமாறியிருந்தார். சிவந்து எண்ணை மிளிரும் பிரட்டிய கறி ஒருபக்கமும், கடலைப் பருப்பு போட்டு செய்த இரத்தக் கூட்டினை மறுபக்கமும் வைத்திருந்தார். அவற்றிலிருந்து ஆவி எழுந்து எல்லோருடைய நாசியையும் நிறைத்து உள்ளத்தில் லேசான கிளர்ச்சியை உண்டாக்கியது.

சுப்பையாவும் சின்னய்யாவும் வீரபத்திரரின் அறைக்குள் நுழைந்தார்கள். உள்பக்கம் மூன்று தலையிலைகளை விரித்து அதேபோல பரிமாறப்பட்ட சோற்றிலிருந்து எழுந்த ஆவி சாம்பிராணி புகையுடன் ஒன்றாகக் கலந்திருந்தது. பூசாரி, இடக்கையில் மணியையும் வலக்கையில் உடுக்கையையும் அடித்தபடி சாமிகளை அழைக்க ஆரம்பித்தார்.

சுற்றியிருந்த அத்தனை பேரின் உள்ளமும் ஒன்றேயாகி சாமியாடிகளை மட்டுமே கவனித்தது போலத் தோன்றியது. ஆனால், சின்னய்யா, சுப்பையாவையும் தன்னையும் தனித்தனியாக நோக்கினான்.

பூசாரியின் குரல் உடுக்கையொலியுடன் இயைந்து ஒலிக்க ஆரம்பித்தது.

வானும் மண்ணும் ஆனவரே

நீரும் காத்தும் ஆனவரே

எங்கள் குலம் காக்க

வந்துவிடு அய்யா…

மாட்டையும் வீட்டையும் காப்பவரே

மரத்தையும் பயிரையும் காப்பவரே

எங்கள் குலம் காக்க

வந்துவிடு அய்யா….

சுப்பையா அண்ணனின் உடல் அவர் கட்டுப்பாட்டில் இருந்து மெதுவாக நழுவுவது இவனுக்குத் தெரிந்தது. அதே நேரம் இவனுக்கு லேசான கிறுகிறுப்பு தோன்றியது. நில அதிர்வின்போது ஏற்படுவதுபோல உடல் பரிதவித்தது.

பூசாரியின் குரலில் கார்வை அடர்ந்து செவியில் வந்து அறைந்தது. அவரின் குரலும் உடுக்கையொலியும் சின்னய்யாவின் முழுப் பிரக்ஞையையும் கட்டுப்படுத்தியது.

சூரிய சந்திரன் ஆனவரே
வெயிலும் மழையும் ஆனவரே
எங்கள் குலம் காக்க
வந்துவிடு அய்யா 
உன் நிழல்தேடி வந்துள்ளோம்
உன்னை அண்டி வந்துள்ளோம்
எங்கள் குலத்தைக் காக்கவே
விரைந்து வா அய்யா
வந்துவிடு அய்யா
வந்துவிடு அய்யா
அண்டியவரைக் காக்கவே
பெண்டு புள்ளையைக் காக்கவே
விரைந்து வா அய்யா
வந்துவிடு அய்யா

இவன் உடல் இவனின் எந்தப் பிரயத்தனமும் செய்யாமலேயே குதித்தது. இவன் வாயிலிருந்து இதுவரை கேட்டிராத உறுமல் வந்ததை திகைத்தபடி பார்த்தான். இவன் காலில் கட்டியிருந்த சலங்கை பூசாரியின் உடுக்கையொலிக்கு ஏற்றபடி இசைத்தது. பார்த்துக் கொண்டிருந்த ஆண்கள் கைகூப்பித் தொழுதனர். விம்மலை அடக்கிய சிலரின் விழிகளில் கண்ணீர் துளிர்த்துச் சொட்டியது. பெண்களின் பக்கமிருந்து ஒரே நேரத்தில் எழுந்த குலவைச் சத்தம் அறையெங்கும் நிறைந்து வழிந்தது.

சில நிமிடங்கள் குதித்துவிட்டு இவன் உடல், கோவிலைச் சுற்றி ஓட ஆரம்பித்த சுப்பையாவைத் தொடர ஆரம்பித்தது. பின்னால் தோளில் கைவைத்தபடி ஓடியவர்களுடன் பதறியபடி இவனும் ஓடினான். மூன்று சுற்று சுற்றியவுடன் ஓரிடத்தில் நின்றார்கள். இவனும் வந்து இணைந்து கொண்டு ஆசுவாசமடைந்தான்.

ஒவ்வொருவராக பெரியசாமியை வணங்கி திருநீறு பூசிக் கொண்டு இவனருகில் வந்தார்கள். வலது கையிலிருந்த அரிவாளை இடது கைக்கு மாற்றி அதனை வாகாக தரையில் ஊன்றிப் பிடித்துக் கொண்டு கருப்பர் நின்றார். ஒவ்வொருவராக இவனைச் சுற்றி குழுமினார்கள். எல்லோருடைய முகங்களிலும் எதிர்பார்ப்பு தெரிந்தது. சுற்றி நின்றவர்களைப் பற்றி எந்த விவரமும் இவனுக்குத் தெரியாது. இவன், இவ்வளவு நேரமும் ஊரெல்லாம் சுற்றும் வண்டியின் சக்கரத்தில் இருந்த பல்லியைப் போல தன் உடலோடு சுற்றி வந்தான். இப்போது, யானையின் மேல் அமர்ந்து அது ஆற்றுவனவற்றைப் பார்க்கும் பயமறியாச் சிறுபிள்ளையென எல்லாவற்றையும் நோக்கிக் கொண்டிருந்தான். சுற்றியிருந்தவர்களுக்கு உள்ள அதே எதிர்பார்ப்போடு.

மீனாட்சி கூட்டத்தின் சுற்றுக்கு வெளியே தயக்கத்துடன் நின்றாள். கருப்புசாமி கைநீட்டி அவளை அழைத்தது. அவள் ஒரு கணம் திகைத்து பின் தெளிந்து கூட்டத்தை விலக்கிக் கொண்டு அருகில் வந்தாள். கருப்பரின் விழிகளை நோக்கியவுடன் கைதொழுதாள். கருப்பர் சின்னய்யாவின் கையை அவள் தலைமேல் வைத்தார்.

“ஏம்மா உனக்கு குழப்பம். இனிமே எந்தக் குழப்பமும் தேவையில்லை…” என்று வெளிவந்த கருப்பசாமியின் சொற்களைக் கேட்டு நெகிழ்ந்து வணங்கினாள். அதைக் கண்டபோது சின்னய்யாவின் முகத்தில் பெரும் நிறைவு தோன்றியது.

***

கா. சிவா – “விரிசல்” எனும் சிறுகதைத் தொகுப்பு அண்மையில் வெளியானது. தொடர்ந்து பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆசிரியர் தொடர்புக்கு – sivaangammal1983@gmail.com

ஸ்டெர்லைட்-கோவிட் அரசியல்_ ஐயங்கள்

0

பாரதிராஜா

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படப் போகிறது. நான்கு மாதங்களுக்கு மட்டும், அதுவும் ஆக்சிஜன் கிடைக்காமல் செத்து விழும் கோவிட் நோயாளிகளைக் காக்கும் பொருட்டு, ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் என்று தொடங்கியிருக்கிறார்கள். இது இப்படியே முடியுமா என்றால், அதற்கான விடை நம் எல்லோருக்குமே தெரியும். இது எதில் போய் முடியும் என்பதும் நமக்குத் தெரியும்.

இப்போதைய கோவிட் நோயின் பரவல் வேகத்தையும் கொடூரத்தையும் வைத்துப் பார்த்தால், இந்தியா இதைவிட்டு முழுமையாக வெளியே வர இன்னும் ஓர் ஆண்டாவது ஆகும் போலத் தெரிகிறது. நோம் சோம்ஸ்கியின் சொற்களில் சொல்வதானால், ஒரு கோமாளியின் கையில் சிக்கிச் சீரழிந்துகொண்டிருந்த அமெரிக்கா இப்போது வெகுவேகமாக அந்தக் கொடுங்கனவிலிருந்து மீண்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது. அது போலவே சென்ற ஆண்டில் கோவிட் வரைபடங்களில் முன்னணியில் இருந்த மற்ற பல நாடுகளும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து விட்டன.

“பிறப்பிலேயே எதிர்ப்பு சக்தியோடு பிறந்தவர்கள், எங்களை எந்தக் கிருமியும் நெருங்க முடியாது” என்று சொல்லிக்கொண்டு திரிந்தோம். நம் கேடு கெட்ட அரசியலும் அடிப்படை அறிவற்ற நம்பிக்கைகளும் சேர்ந்து விளையாடிய விளையாட்டில், திடீரென்று ஒரே மாதத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இதுவரை எந்த நாடும் பார்த்திராத அளவுக்குக் கொடுமையான பரவலையும் சாவுகளையும் பார்க்கத் தொடங்கியிருக்கிறோம். இது இன்னும் அதன் உச்சத்தை நெருங்கிவிட்டதா என்று தெரியவில்லை. முழுமையாக ஓர் உலுக்கு உலுக்கிவிட்டுத்தான் அடங்கும் போலத் தெரிகிறது. அதற்குப் பல மாதங்கள் ஆகும். இந்தியாவில் முடிந்துவிட்டாலும், நம்மால் பாதிப்புக்கு உள்ளாகப் போகும் வேறுபல நாடுகள் அதற்குப் பின்பும் பல மாதங்கள் எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ‘சீனா வைரஸ்’ என்று சொன்ன வாய்கள் ‘இந்தியா மாற்றுரு’ என்றோ இந்தியத் தலைவரின் பெயரையோ அதற்குச் சூட்டி அழைத்துப் பெருமைப்படலாம். அதற்கும் கூட நம் பீத்தல் பேர்வழிகள் வெட்கமின்றிப் பெருமைப்படவும் வாய்ப்பிருக்கிறது. எனவே நான்கு மாதங்களில் இந்தியாவில் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டாலும், உலக நாடுகளுக்கெல்லாம் உதவும் பொருட்டு என்று சொல்லி மேலும் பல மாதங்கள் இது நீடிக்கப்படவே செய்யும். உலகத்துக்கு உதவுவதற்காகத் தொழில் செய்கிற மரபில் வந்தவர்கள் தானே வேதாந்தா குழுமம்!

இது தமிழகத்தில் அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சியைப் பொறுத்து மாறும் என்று நம்பலாமா? நம்மில் அப்படி நம்புவோரும் இருக்கிறோம். “அப்படியெல்லாம் நம்புவதற்கு நாம் என்ன ஈனா வானாவா?” என்று கேட்போரும் இருக்கிறோம். தமிழகத்தில் ஆட்சி மாறினால் எத்தனையோ கோமாளித்தனங்கள் முடிவுக்கு வரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. கோமாளித் திருடர்களை விட அறிவாளித் திருடர்கள் எந்நாளும் கீழ் இல்லை. அதுவும் அறிவாளித் திருடர்களை விடவும் அதிகமாகத் திருடும் கோமாளித் திருடர்கள் – தன்மானமற்ற திருடர்கள் மிகமிக ஆபத்தானவர்கள். ஆனால் தமிழகத்தில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் இவையெல்லாம் இப்படியேதான் தொடரும் என்கிற ஒரு பெரிய பட்டியலும் இருக்கிறது.

அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, தமிழகம் இந்தியாவுக்குள் இருக்கிறது. தேசபக்தியோடு இந்தியாவைச் சுரண்டும் அமைப்பு அப்படியே தான் இருக்கப் போகிறது. அதற்குள் இருக்கும் தமிழகத்தைச் சுரண்டும் அமைப்பு மட்டுமே மாறப்போகிறது. நடுவண் அரசு அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவர்கள் யாருக்கு வலிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதை மிக எளிதாகச் சாதித்துக் கொள்வார்கள். அதற்கு எதிலும் இறங்கி அடிக்கும் மம்தா பானர்ஜியும் உத்தவ் தாக்கரேயுமே ஈடு கொடுக்க முடியாமல் போராடிக் கொண்டிருக்கிற போது, அதைவிடப் பெரிய எதிர்ப்பு அரசியலை இங்கே அமையப் போகும் திராவிட அரசு செய்ய முடியுமா என்று தெரியவில்லை. அப்படி அவர்கள் துணிந்து இறங்கும் வேளையில், அவர்களை எதை வைத்துக் கட்டிப்போட முடியும் என்ற சூத்திரத்தைக் கை தேர்ந்த ஒரு கூட்டந்தான் மேலே அதிகாரத்தில் இருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும்.

அடுத்தது, ஸ்டெர்லைட் போன்ற ஒரு நிறுவனம் நடுவண் அரசு அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களை மட்டுமே கைக்குள் போட்டுக் கொண்டிருக்கும் என்று நம்புவதும் கற்றுக்குட்டித்தனம். வெளிப்படையாக ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் பேசும் பல அரசியல்வாதிகளே அவர்களிடம் நன்கொடை வாங்கியவர்களாக இருப்பார்கள் என்பதும் நமக்குத் தெரியும். இருக்கிற எட்டு அல்லது ஒன்பது கட்சிகளில் இரண்டே இரண்டு கட்சிகளைத் தவிர எல்லோருமே ஸ்டெர்லைட்டிடம் கை நீட்டியிருக்கிறார்கள் என்றொரு தகவல் முன்பு கசியவிடப்பட்டது. அப்படிக் கை நீட்டிப் பணம் வாங்கிவிடுபவர்கள் எப்படி எதிர்நிலை எடுக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் புரிவதில்லை. கை நீட்டிப் பணம் வாங்கிவிட்டால் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க வேண்டும் என்றில்லை. அது தனிமனிதச் சமன்பாடுகளிலேயே வேலை செய்வதில்லை. அரசியலில் அப்படி இருக்கவே முடியாது. அரசியல் ஆதரவு என்பது கறுப்பு-வெள்ளை நிலைப்பாடு அல்ல. அது வானவில் போன்று பல்வேறு நிறங்கள் கொண்ட நிறமாலை. கண்மூடித்தனமாக ஆதரிப்பது, கண்மூடித்தனமாக எதிர்ப்பது ஆகிய இரண்டுக்கும் நடுவில் எத்தனையோ நிறங்கள் இருக்கின்றன. நடுநிலையாகப் பேசுவது போன்றே ஆதரிப்பது, கடுமையாக எதிர்ப்பது போல் ஆதரிப்பது, சிறிய சிறிய கோளாறுகளை எதிர்த்துக்கொண்டு பெரிய பிரச்சனைகளில் ஆதரிப்பது, எல்லாத்திலும் எதிர்த்துவிட்டு அவர்களின் இருப்பை மட்டும் ஆதரிப்பது, பொதுவாக ஆதரித்துவிட்டுப் பெரிய பிரச்சனைகளில் பின்வாங்குவது என்று பலவிதமான நிலைப்பாடுகள் இருக்கின்றன. இவர்கள் எல்லோருமே தொழில் செய்பவர்களுக்கு வேண்டும். இவர்களுக்கும் நிதி ஆதரவு கொடுக்க முதலாளிகள் வேண்டும். முதலாளித்துவக் கட்டமைப்பில் இதுவொரு தவிர்க்க முடியாத நச்சுக் கூட்டணி.

“ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட்டைத் திறக்க வேண்டும்” என்ற செய்தி கசியவிடப்படும் போதே, அதற்கான கைக்குள் போடும் (லாபியிங்) வேலைகளும் தொடங்கியிருக்கும். சட்டத்தின்படி, இது போன்ற ஒரு பெரிய முடிவை ஓர் இடைக்கால அரசு தான்தோன்றித்தனமாக எடுக்க முடியாது என்று வைத்துக்கொண்டாலும் (“அப்படியே சட்டத்தின் ஆட்சிதான் இங்கே நடந்து கொண்டிருக்கிறதாக்கும்!” என்று வேறு கேட்பீர்கள்), இது மக்களின் உயிர் தொடர்பான பிரச்சனை என்பதால், மக்கள் நலன் கருதி அவசர கால முடிவாக இதை அறிவித்திருக்க முடியும். அதுவும் இந்தியச் சட்டமன்றங்களில் எந்தச் சட்டமன்றமும் கண்டிராத அளவில் மக்களாட்சிக்கு எதிரான கோமாளித்தனங்களைக் கண்ட வரலாறுடைய நம் சட்டமன்றத்தில், அக்கோமாளித்தனத்தின் வழிவந்த அடிமைக் குஞ்சுகள், அப்படியெல்லாம் செய்யாமல், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி எல்லோருமாகச் சேர்ந்து முடிவெடுத்து அறிவித்திருப்பதை நாம் வரவேற்கத்தான் வேண்டும். சட்டத்தின் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது என்று நம்புவதற்கு இதற்கு மேலும் உங்களுக்கு என்ன வேண்டும்?

நீங்கள் எல்லாம் சொல்கிற மாதிரி, நோய் பரவலைக் காரணமாக வைத்து மாநிலத் தேர்தல் முடிவுகளையோ வாக்கு எண்ணிக்கையையோ ரத்து செய்து உத்தரவிட்டு மக்களாட்சியைப் படுகொலை செய்யும் அளவுக்கு மனச்சாட்சி இல்லாத மோசமான நடுவண் அரசல்ல நம்முடையது. நம்புங்கள். இதுவே செய்யாதவர்கள், மொத்த நாட்டையுமே அவசர நிலை அறிவித்து விழுங்கிவிடுவார்கள் என்றெல்லாம் நீங்கள் பேசுவது ஏற்கத்தக்கதாக இல்லை. அதற்கான அவசரமும் இல்லை. இது போன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாட்டு நலன் கருதிச் சொன்ன பேச்சைக் கேட்கிற எதிர்க்கட்சிகள் இருக்கும் வரை சட்டத்தின் ஆட்சியே நடத்த அனுமதிக்கப்படும்.

நான்கு மாதங்களாகத் தொடங்கி, ஏழு மாதங்களாகவோ பத்து மாதங்களாகவோ நீட்டிக்கப்படும் ஆக்சிஜன் தயாரிப்பு, அடுத்து அது தாமிர ஆலையாக இல்லாமல் நிரந்தர ஆக்சிஜன் ஆலையாக மாற உதவினால் அதையும் வரவேற்போம். ஆனால் மெதுவாகத் தாமிரம் தயாரிக்கும் வேலையும் தொடங்கும் அல்லது தாமிர உற்பத்தியைத் தொடங்குவதற்கான தயாரிப்பு வேலைகள் தொடங்கும். முதலில் ஆலையை அரசு கையகப்படுத்தி இருக்க வேண்டும். இப்போது தொடங்கும் வேலையையும் அரசு நடத்தியிருக்க வேண்டும். அதுதான் மக்களுக்காக ஆளும் எந்த அரசும் செய்யும்.

“செத்து மண்ணாகிப் புல் முளைத்திருக்குமே! ஏழு கோடி உயிர்களையும் அவர்கள் தானே காப்பாற்றினார்கள்! அவர்கள் போட்ட உயிர்ப் பிச்சையை வைத்துக்கொண்டு வெட்கமில்லாமல் அவர்களையே ஆலையை மூடச் சொல்கிறீர்களே!” என்று நாளை தமிழர்களின் மனச்சாட்சியை உலுக்குவார்கள் விலை போன மனச்சாட்சிக்காரர்கள். “வேண்டும் வேண்டும்! ஸ்டெர்லைட் வேண்டும்!” என்று வீதிகளிலும் செய்தித் தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் ஆதரவு பெருகுவது போல் கூலிக்கு மாரடிப்பவர்கள் இறக்கிவிடப்படுவார்கள். அப்போது, நீங்களும் நானுமே நமக்கே தெரியாமல், “அவர்கள் சொல்வதும் நியாயந்தானே?” என்று சொல்லத் தொடங்கியிருப்போம்.

அடுத்து வரும் ஆட்சியில் தூத்துக்குடியில் 13 உயிர்கள் கொல்லப்பட்டதற்கு விசாரணைக் குழு அமைக்கப்படுமா? “நீ ஏழு கோடி உயிரைக் காப்பதாக இருந்தாலும் சரி, எழுநூறு கோடி உயிரைக் காப்பதாக இருந்தாலும் சரி, உப்பு தின்றதற்குத் தண்ணீர் குடித்தாக வேண்டும்” என்று சொல்கிற கறார் அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் கலந்து கொண்ட எந்தக் கட்சிக்காவது இருந்ததா? இழவு வீட்டில் அரசியல் செய்யக் கூடாது என்பார்கள். கொலைகாரனை வீட்டுக்குள் விடுவது, அதுவும் உங்கள் உயிர் காக்க வருகிறேன் என்று சொல்லிக்கொண்டு வருகிற திருட்டுப் பயலான கொலைகாரனை வீட்டுக்குள் விடுவது மட்டும் சரியா என்ன? இதை அதிகாரத்துக்கு வருபவர்கள் நினைவில் வைக்கவும் மாட்டார்கள்; மக்களுக்கும் மறக்கடிக்கவே முயல்வார்கள். அதுதான் அவர்களின் பிழைப்புக்கான வழி. ஆனால் மக்கள் மறக்கக் கூடாது. நீங்களும் நானும் மக்கள்.

இந்நேரம் தமிழக அரசு வேதாந்தா நிர்வாகத்தை அழைத்து, “அடுத்த நான்கு மாதங்களுக்கு ஒழுங்காக ஆக்சிஜன் உற்பத்தி செய்து கொடுங்கள்” என்று சொல்லியிருந்தால், அதற்கு வேதாந்தாவும் பயந்து போய் வந்து வேலையைத் தொடங்கியிருந்தால், அதுதான் வலிமையான அரசாங்கம் நடப்பதற்கான அறிகுறி. அவ்வளவு கூட வேண்டாம். “உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க, மக்கள் நலன் கருதி, நாங்கள் வேலையைத் தொடங்குகிறோம். நாங்கள் இப்போது செய்யும் உதவியைக் கருத்தில் கொண்டு எங்களின் பழைய பாவங்களுக்கு மன்னிப்பு கொடுக்க வேண்டும்” என்று பேரம் பேசியிருந்தால் கூட ஒரு வியாபாரியின் கோரிக்கையாக ஏற்றுக்கொள்ளலாம். இவர்கள் எல்லோருமாக விளையாடும் விளையாட்டுதான் நமக்குப் பெரும் எரிச்சலூட்டுவது. அவர்கள் வந்து, “நாங்கள் மக்கள் உயிரைக் காக்கத் துடிக்கிறோம்; எங்களுக்கு அனுமதி வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்திடம் போய்த் துடிப்பார்களாம். “ஐயா, நீங்களே திறக்கக் கூடாது என்று பூட்டிப்போடச் சொன்ன பாதகர்களின் ஆலை ஐயா இது. இதைத் திறக்க மாட்டோம் ஐயா” என்று அதைத் தமிழக அரசு எதிர்த்து வாதிடுமாம். உச்ச நீதிமன்றம் உடனே தமிழக அரசிடம், “இதை நீங்களே ஏன் எடுத்து நடத்தக் கூடாது?” என்று கேட்டுவிட்டு, அந்தப் பக்கம் திரும்பி, “நீங்கள் நடத்துவீர்களோ அவர்கள் நடத்துவார்களோ யார் நடத்துவார்களோ அதுபற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் ஆக்சிஜன் உற்பத்தி இப்போதே தொடங்க வேண்டும்” என்பார்களாம். இந்த வேகத்தை ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் செத்து விழுந்து கொண்டிருக்கும் மாநிலங்களில் ஆளும் அரசுகளைக் கேட்பதிலும் காட்டியிருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்!

“ஆக்சிஜன் பற்றாக்குறை என்று ஒன்றே இல்லை; கோவிடால் இந்தியாவில் நடக்கும் சாவுகளே மிகவும் குறைவு; இது எல்லாமே இந்தியா வல்லரசாகி விட்டதைச் சகிக்க முடியாத எதிரிகள் கிளப்பிவிடும் புரளிகள்” என்று ஒரு கூட்டம், சமூக வலைத்தளங்களில் உதவி கேட்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களைக் கூட மிரட்டி அவர்களின் பதிவுகளை நீக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதையே இன்னும் பெரிய அளவில் அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. இந்தியா வல்லரசானதை விடக் கொடுமை, தமிழகத்திலும் கேரளத்திலும் உ.பி. மாடல் பற்றியும் குஜராத் மாடல் பற்றியும் பேசிக் கொண்டிருக்கும் கோமாளித்தனம். இதில் அறிவில்லாமல் ஈடுபட்டிருக்கும் கூட்டமும் இருக்கிறது; தான் செய்கிற பரப்புரை எவ்வளவு பெரிய மோசடி என்று தெரிந்தே செய்யும் கூட்டமும் இருக்கிறது. அதற்கான காரணம் என்னவென்றும் நமக்குத் தெரியும்.

இவ்வளவு கீழான வேலைகளையும் கடவுளின் பெயரால் செய்ய முடிகிறது என்றால் இவர்கள் எப்படிக் கடவுளை நம்புபவர்களாக இருக்க முடியும் என்றுதானே உங்களுக்கு வியப்பாக இருக்கிறது! “அது கடவுள் நம்பிக்கையெல்லாம் இல்லைங்க, மதவெறி” என்கிறார்கள் சிலர். “மத வெறியெல்லாம் இல்லைங்க, ஒரு சிலரின் சாதி வெறிக்கு அப்படிப் பெயர் கொடுத்து ஏமாற்றுகிறார்கள்” என்கிறார்கள் இன்னொரு சாரார். “ஒரு வெறியும் இல்லைங்க, எவனோ பிழைப்புக்குப் பண்ற திருட்டு வேலைகளுக்கு ஏமாளிப்பயலுக இந்தப் பெயர்களைச் சொல்லிக்கிட்டுப் பின்னால் போகிறார்கள்” என்றும் சிலர் சொல்கிறார்கள். இதில் எதுதான் உண்மை என்று புரிந்து தொலைய மாட்டேன் என்கிறது நமக்கு. பற்றாக்குறையே இல்லாத ஆக்சிஜனைத் தயாரிக்கவா இவ்வளவு அவசரம்? அதுவும் அதிகம் பாதிக்கப்படாத தமிழகத்துக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படுமாம். அடுத்த நிமிடமே மாடியிலிருந்து ஒரு கத்துகிறான்: “முன்னுரிமையும் கிடையாது. மண்ணாங்கட்டியும் கிடையாது. ஒழுங்கா தயாரிக்கிற ஆக்சிஜனை பூராம் எங்கட்டக் குடுத்துட்டுப் போயிட்டே இரு.”

தூத்துக்குடி மக்கள் நினைத்தால் இதையும் போராடித் தடுக்கலாம். அப்போது என்ன நடக்கும்? ஏற்கனவே ஏற்பட்ட எல்லாத் தோல்விகளுக்கும் கொரோனா மேல் பழியைப் போட்டுத் தப்பியது போல் இந்தியாவில் ஏற்படும் எல்லாச் சாவுகளுக்குமான பழி தூத்துக்குடி மக்கள் மீது போடப்படும். ‘சாகக் கிடக்கிற மக்களுக்குக் கூட உதவ மனசில்லாத இந்தக் கூட்டம் இருந்தால் என்ன கொல்லப்பட்டால் என்ன?’ என்கிற பிம்பம் கட்டியெழுப்பப்படும். அதற்கும் பக்கத்து ஊர்க்காரர்களே பலியாகி ஏசுவார்கள் பேசுவார்கள். எப்படி ஒரு சூழ்நிலையில் கொண்டுவந்து விட்டிருக்கிறார்கள் பாருங்கள். அடுத்து தாமிரம் தயாரிக்க வேண்டிய கட்டாயத்தையும் உருவாக்கிவிடக் கூட வாய்ப்பிருக்கிறது.

ஆலை வேலையைத் தொடங்கும் போது, அவர்கள் என்னென்ன உற்பத்தி செய்கிறார்கள் – என்னென்ன தகிடுதத்தங்கள் செய்யாமல் இருக்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவில் மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் துறைக் கண்காணிப்பாளர், சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆகியோரோடு சேர்த்து, ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சூழலியலாளர்கள், உள்ளூர் மக்கள் போன்றோரின் பிரதிநிதித்துவமும் இருக்க வேண்டும் என்று பேசப்பட்டிருக்கிறது. முதலாளி சார்பாகவும் பிரதிநிதிகள் இருக்க வேண்டும், மக்கள் சார்பாகவும் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்ற நியாய உணர்வோடு செயல்பட்டிருக்கிறார்கள். பாராட்டத்தான் வேண்டும்.

ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது என்ற செய்தி வந்தவுடன் வேதாந்தாவின் பங்குச்சந்தை மதிப்பு 5% ஏறியது. அதாவது அதிலிருந்து அந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஏதோ நம்பிக்கைக் கீற்று தென்பட்டிருக்கிறது. அதனால்தான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கைக் காசைப் போட்டு ஊருக்கு நல்லது செய்யும் நிறுவனத்துக்கு நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஆதரவு அளிப்பவர்களா இந்த முதலீட்டாளர்கள்? பங்குச் சந்தை எப்படி வேலை செய்கிறது பங்குச் சந்தையில் பணம் போடுபவர்கள் எப்பேற்பட்டவர்கள் என்பதைத் தெரிந்தவர்களுக்கு இது நன்றாகப் புரியும். கடந்த ஐந்தாண்டுகளில் 2018 தொடக்கத்தில்தான் வேதாந்தாவின் பங்கு அதன் உச்ச மதிப்பை அடைந்தது. அந்த ஆண்டு நடுவில்தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்தது. அப்போதிருந்து அவர்களுக்குப் பிடித்திருந்த சனி இப்போதுதான் நீங்குவதற்கான அறிகுறி தென்பட்டிருக்கிறது. அப்போதிருந்து 2020 மார்ச் வரை குறைந்துகொண்டே வந்த பங்கு மதிப்பு, அதிலிருந்து மீளத் தொடங்கியது. கடந்த நவம்பரிலிருந்து ஏறுமுகமாக இருக்கிறது. இப்போது எல்லோரும் எழுந்து மூஞ்சியைக் கழுவி நம்பிக்கையோடு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நம் உயிரை எடுக்காமல் நன்றாக இருந்தால் நமக்கென்ன கஷ்டம்! ஆனால் இந்தக் கணக்கு அப்படி இல்லையே! அதுதானே நமக்குப் பிரச்சனை.

கடைசியாக ஒரு தகவல். சென்ற மாதந்தான் பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் தாமிர உருக்காலை கட்டுவதற்கு இந்திய மாநில அரசுகளில் ஒரு தகுந்த கூட்டாளி தேடிக் கொண்டிருப்பதாக வேதாந்தா குழுமம் அறிவித்தது. அந்த மாநிலம் எதுவாக இருக்கப் போகிறதோ தெரியவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாட்டை விட இப்போதைய தமிழ் நாடு நிறையவே விழித்துக் கொண்டிருக்கிறது. அதனால் அது நாமாக இராது என்று நம்புவோம்.

***

பாரதிராஜா – தூத்துடி மாவட்டம் பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர். இப்போது பணி நிமித்தம் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். அரசியல் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் தொடர்ச்சியாக பங்களித்து வருகிறார்.

‘வடதிசை நாடு’ திரைப்படமும் பெண்களின் எழுச்சியை ஆவணப்படுத்துதலும்

0

கார்குழலி

வ்வொருவராக ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து வீட்டைவிட்டு வெளியே வரத்தொடங்கிய காலம் மாறி இன்று எங்கெங்கும் எத்துறையிலும் தங்கள் முத்திரையைப் பதித்து வருகிறார்கள் பெண்கள். தங்களின் வாழ்வில் திண்ணமாகக் காலூன்றும் விழைவையும் தங்களின் உணர்வுகளைக் கலைகளின் வழியே வெளிப்படுத்திக்கொள்ளப் பொங்கிவரும் ஆசையையும் அணைபோட்டுத் தடுக்காமல் பொங்கிப் பாயும் ஆற்றினைப் போலப் பயணப்படத் தொடங்கிவிட்டார்கள். தங்களுக்கென வரையறுக்கப்பட்ட சதுரப்பெட்டிக்குள் முடங்கிவிடாமல் சமூகத்தின் இலட்சுமண ரேகைகளைத் தாண்டி நடைபயிலும் இவர்களைப் பார்க்கும்போது பல ஆயிரம் ஆண்டுகளாகக் கோலோச்சிவரும் ஆண்மையச் சமூகத்துக்கு ஓர் இயல்பான குழப்பம் ஏற்படுகிறது. கூடவே இனம்புரியாத பயமும் தயக்கமும் தலையெடுக்கிறது. காலங்காலமாக தனக்கென வகுத்துக்கொண்ட படிநிலையும் முக்கியத்துவமும் கைவிட்டுப் போய்விடுமோ என்ற பதற்றம் ஏற்படுகிறது. தன்னால் வரையறுக்கப்பட்ட இடத்திலேயே பெண்ணை இருக்கச் செய்யவேண்டும் என்பதை உறுதிபடுத்திக்கொள்ளப் பயன்படுத்தும் ஆயுதம்தான் பாலியல் வன்முறை. அதிகாரத்தையும் வலிமையையும் செலுத்தும் செயல்பாடு என்பதால் இது பெரும்பாலும் ஆண்களால் பெண்களின்மீது நிகழ்த்தப்படுகிறது.

ஆண்மையச் சமூகம் விதித்த கட்டுப்பாட்டு எல்லையைத் தாண்டும் பெண் குடும்பத்திலும் பொதுவெளியிலும் எத்தகைய குரூரங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதைப் பலசமயம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடிவதில்லை. அப்படிப்பட்ட உண்மைக் கதைகள் பற்றித் தெரியவரும் போது ஏற்படும் மனவலியைத் தாங்கமுடியாததால் அதற்கான தீர்வைத் தரமுடியாது என்பதால் பெரும்பாலானோர் அவற்றைப் பாராதது போலவும் கேளாதது போலவும் கடந்துசென்று விடுகிறோம் என்பது தான் உண்மை.

அந்த வகையில் ‘நீ பெண் என்பதால் இங்கே உனக்கு அனுமதியில்லை’ என்று வன்முறை மொழியில் ஆண்கள் சொல்லும் நிதர்சனத்தை முகத்தில் அறைந்து சொல்லும் படம் ‘நார்த் கண்ட்ரி’ (North Country). கல்லூரியிலும் பணியிடத்திலும் பொது இடத்திலும் காலடி எடுத்துவைக்க பெண்கள் எத்தனையோ ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. இன்று வரையிலும் ஒவ்வொரு இடத்திலும் தங்களின் உரிமையை நிலைநாட்டிக் கொள்ள இடைவிடாமல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியிருக்கிறது. அப்படிப் பணியிடத்தில் உடல், உள்ளம், உணர்வு எனப் பல நிலைகளில் தினந்தோறும் போராட்டம் நடத்திக்கொண்டே இருக்கும் பெண்களைப் பற்றிய உண்மைக்கதைதான் ‘நார்த் கண்ட்ரி’. 2005-ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் நிக்கி காரோ, நாயகி சார்லைஸ் தெரான்.

ஐக்கிய அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் நடந்த பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான ஒரு வழக்கைப் பற்றிய கிளாரா பிங்காமின் புத்தகத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம் ‘நார்த் கண்ட்ரி’. இந்த வழக்கு 1988-இல் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால்தான் நடைபெற்றது என்றாலும் படத்தில் வரும் சம்பவங்களைப் பார்க்கும்போது மனிதர்கள் நாகரிக வளர்ச்சி பெறுவதற்கு முன்னரான கற்காலத்தில் நடந்த கதையோ என்ற சந்தேகம் ஏற்படும்.

படத்தின் நாயகி ஜோஸி அய்ம்ஸ் குடும்ப வன்முறை காரணமாகக் கணவனை விட்டு விலகி குழந்தைகளுடன் பெற்றோரின் வீட்டில் தஞ்சமடைகிறாள். கணவனால் அவள் படும் துன்பங்களைப் புரிந்துகொண்டு மகளுக்கு ஆதரவாக நடந்துகொள்கிறார் அம்மா. ஜோஸியின் மூத்த மகனுடைய தந்தை யார் என்பது இன்றுவரையிலும் தெரியாத காரணத்தால் அவளுடைய நடத்தை மேல் அப்பாவுக்கு எப்போதுமே சந்தேகம் உண்டு. ஜோஸி தனக்குப் பெருத்த அவமானத்தை ஏற்படுத்துகிறாள் என்றும் அவள் கணவனுடைய கோபத்துக்குக் காரணம் அவளுடைய ஒழுக்கங்கெட்டதனம்தான் என்றும் திடமாக நம்புகிறார். அதனால் நிர்கதியாய் வந்து நிற்கும்போதும் அவள்மீது வெறுப்பை உமிழ்கிறார்.

இனி கணவனின் வீட்டுக்குத் திரும்புவதில்லை என்று முடிவுசெய்து வேலை தேடுகிறாள் ஜோஸி. அந்த ஊரில் இருக்கும் இரும்புச் சுரங்கத்தில் வேலைதேடிக் கொள்ளலாம் என்று பள்ளித்தோழி மூலம் தெரிந்து கொள்கிறாள். ஜோஸியின் அப்பாவும் அங்கேதான் வேலை செய்கிறார் என்றாலும் சுரங்கத்தில் பெண்கள் வேலை செய்வதில் அவருக்கு உடன்பாடு இல்லை. பெண்கள் வீட்டில் இருக்க வேண்டியவர்கள், வேலைக்குச் செல்வது மூலம் ஆண்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறிக்கிறார்கள் என்ற எண்ணம் தந்தைக்கு மட்டுமல்ல, அந்த ஊரில் இருக்கும் மற்ற ஆண்களுக்கும் இருக்கிறது என்பதைப் போகப்போகத் தெரிந்து கொள்கிறாள் ஜோஸி.

பணியிடத்தில் பெண்கள் எல்லோரும் ஒருவருடன் ஒருவர் நட்புடன் பழகுகிறார்கள். ஆனால் அங்கு பணிசெய்யும் ஆண்களில் பெரும்பாலானோர் தங்களுடைய வேலைவாய்ப்பை ஒரு பெண் பறித்துக்கொள்கிறாள் என்றும் பெண்ணின் இடம் எது என்பதை அவளுக்கு உணர்த்த வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். சுரங்கத்தில் உடன் பணிசெய்யும் பெண்களைத் தொடர்ந்து இழிவுபடுத்துகிறார்கள், பாலியல் கொடுமைகளைச் செய்கிறார்கள், நாகரிகமடைந்த மனிதர்கள் செய்யத்துணியாத பல இழிசெயல்களைச் செய்கிறார்கள்.

குறிப்பாக, ஜோஸியின் பள்ளித் தோழனான பாபி, கடந்தகாலத்தை நினைவில் வைத்துக்கொண்டு அவளைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்துகிறான். பிறகு பழியை அவள்மீதே தூக்கிப்போட்டு ஊரே தூற்றும்படி செய்கிறான். பணியிடத்தில் தோழன் செய்யும் துன்புறுத்தல் குறித்து ஜோஸி முதலில் தன்னுடைய மேலாளரிடம் புகார் செய்கிறாள். அடுத்த கட்டமாக, சுரங்க நிறுவனத்தின் முதலாளியிடம் பணியிடத்தில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி எடுத்துச் சொல்கிறாள். முதலில் ஜோஸிக்கு ஆதரவாகப் பேசும் முதலாளி பின் அவளை நம்ப மறுக்கிறார். இப்படியொரு இக்கட்டான நிலையில் திணறிப் போகிறாள் ஜோஸி.

பள்ளித் தோழன் பணியிடத்தில் தொடர்ந்து பாலியல் வன்முறையைச் செய்வதால் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடிவு செய்கிறாள் ஜோஸி. பெண் பணியாளர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து வழக்குத் தொடுத்தால் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று ஆலோசனை சொல்கிறார் ஜோஸியின் வழக்கறிஞர். வேலை போய்விடும் அல்லது இன்னும் அதிகமான துன்புறுத்தலுக்கு ஆளாகலாம் என்ற பயத்தில் இந்த வழக்கில் இணையத் தயங்குகிறார்கள் மற்ற பெண்கள். இந்த நிலையில் நிறுவனத்தின் மீது தான் தொடுத்திருக்கும் வழக்கு குறித்து விளக்குவதற்காக தொழிற்சங்கக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஜோஸி பேசமுனையும் போது இழிவுபடுத்தப்படுகிறாள். கூட்டத்தில் இருக்கும் ஜோஸியின் அப்பா திடீரென யாரும் எதிர்பாராத செயலொன்றைச் செய்கிறார். இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. நிறுவனத்தின் சார்பில் வழக்காடும் பெண் வழக்கறிஞர் ஜோஸியின் நடத்தை குறித்து கேள்வி எழுப்புகிறார். தனிப்பட்ட வாழ்க்கையிலும் பணியிடத்திலும் தன்னை நோக்கிப் பாயும் சவால்களை ஜோஸி எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை.

ஒரு காட்சியில் பெண்கள் உடைமாற்றும் அறையும் கழிவறையும் இருக்கும் பகுதியில் சுவர் முழுவதும் அசிங்கமான சொற்களை எழுதி, கூடவே மலத்தையும் பூசி வைத்திருக்கிறார்கள். அங்கே வரும் மேலாளர் பெண்களைக் கடிந்துகொள்வதோடு அதை அவர்களே சுத்தம் செய்யவும் பணிக்கிறார். என்ன மறுமொழி சொல்வதென்று அறியாமல் திணறும் பெண்கள் பிறகு மௌனமாகச் சுத்தம் செய்யத் தொடங்குகிறார்கள்.

உணவு இடைவேளையின் போது பாத்திரத்தைத் திறக்கிறார் ஒரு பெண். உள்ளே ஆண் உறுப்பைப் போன்ற வடிவம்கொண்ட பாலியல் சாதனமொன்று வைக்கப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்துக் கைகொட்டிக் கேலிசெய்து சிரிக்கிறார்கள் அங்கிருக்கும் ஆண்கள். இதுபோதாதென்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பெண்களின் உடலைத் தகாதமுறையில் தொட்டும் உரசியும் தொல்லை தருகிறார்கள். ஏதும் பேசாமல் நகர்ந்து செல்கிறார்கள் பெண்கள்.

மனதைப் பிசைந்த மற்றொரு காட்சி. சுரங்கத்தில் பெண்கள் பெரும்பாலான நேரங்களில் வெட்டவெளியில் வேலைசெய்ய வேண்டியிருக்கிறது. தேவையான இடத்துக்கு நகர்த்திச் செல்லக்கூடிய கழிவறைகளைத் தங்களுக்காக நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகத்திடம் வைக்கிறார்கள். ஒருநாள் பெண்களில் ஒருவர் கழிவறையைப் பயன்படுத்த உள்ளே நுழைந்ததும் மூன்று ஆண் பணியாளர்கள் ஒன்றுசேர்ந்து அந்தப் பெண் பயத்தில் அலற அலறக் கழிவறையைத் தலைகீழாகத் தள்ளுகிறார்கள். கழிவறைக் குழிக்குள் இருக்கும் மலமும் சிறுநீரும் கலந்த கழிவுநீர் அந்தப் பெண்ணின்மீது கவிழ்கிறது. சுற்றிநின்று கைகொட்டிச் சிரிக்கிறார்கள் அந்தக் காரியத்தைச் செய்த ஆண்கள். இத்தனைக்கும் அந்தச் சுரங்கத்தைச் சுற்றி நிறுவப்பட்ட நகரியம் அது. மிகச்சிறிய சமூகம். ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமான மனிதர்கள். அப்படி இருந்தும் அருவருப்பூட்டும் செயல்களைச் செய்ய தயங்காத ஆண்கள். என்ன செய்தாலும் யாரும் தண்டிப்பதில்லை. அதற்கும் சேர்த்துப் பெண்கள் தான் துன்பப்பட வேண்டியிருக்கிறது.

ஜோஸி தன் வாழ்க்கையை போராட்டக்காரியாகத் துவங்கவில்லை. கணவனின் அடி உதையைத் தாங்கமுடியாமல் அவனைவிட்டு விலகிப் பெற்றோரின் வீட்டில் அடைக்கலம் தேடுகிறாள். இரும்புச் சுரங்கத்தில் மண்ணிலும் அழுக்கிலும் இயந்திரங்களின் எண்ணெய்ப் பிசுக்கிலும் போராடித்தான் சம்பாதிக்கிறாள். வேறு எந்தப் பணியைக் காட்டிலும் சுரங்கப் பணியில் நல்ல வருவாய். தவணை முறையில் சொந்தமாக வீடுவாங்க முடிகிறது. நல்ல வாழ்க்கை வாழ உதவும் வேலையை வேண்டாமென்று விட்டுவிடவோ பிறந்துவளர்ந்த ஊரைவிட்டுப் புதிய ஊருக்குச் செல்லவோ மனமில்லை. எனவே அங்கேயே இருந்து தன் உரிமைக்காகப் போராடும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். தப்ப வழியில்லாமல் அகப்பட்டுக்கொள்ளும் விலங்கு எதிரே நிற்கும் வேட்டைக்காரனின் மீது பாய்வதைப்போன்ற தற்காப்புச் செயல் அது. ஆனால் இந்தப் போராட்டத்தினால் கிடைக்கும் தீர்வு ஜோஸிக்கு மட்டும் உண்டானதல்ல. அவருடன் பணிபுரியும் அத்தனைப் பெண்களுக்கும் அவர்களின் வருங்கால சந்ததியினருக்கும் சேர்த்துத்தான் கிடைக்கிறது.

பெண்களைச் சக பணியாளர்களாகப் பார்க்காமல் பாலினத்தை முதன்மைப்படுத்துவதால் நிகழ்த்தப்படும் துன்புறுத்தலையும் வன்முறையையும் மௌனமாகக் கடக்காமல் அதை எதிர்த்துச் சட்டரீதியாகப் போராடும் பெண்கள், அடுத்துவரும் தலைமுறைக்கு முன்னேற்றப் பாதையைக் கட்டமைக்கும் பணியையும் செய்கிறார்கள். இந்தியாவின் அரசியல் சாசனம் எல்லாக் குடிமக்களுக்கும் கண்ணியத்துடன் வாழும் உரிமை இருக்கிறது என்று பறைசாற்றுகிறது. என்றாலும் பாலியில் துன்புறுத்தலுக்கான தெளிவான சட்டம் இல்லை. 1997-இல் நடைபெற்ற விசாகா வழக்கின்போதுதான் பாலியல் துன்புறுத்தல் என்ற குற்றம் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தது. குழந்தைத் திருமணத்துக்கு எதிராகச் செயலாற்றிய பன்வாரி தேவி என்ற சமூக சேவகி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானார். அந்த வழக்கின் விசாரணையின் போது பாலியல் துன்புறுத்தலுக்கான தனிச்சட்டங்கள் தேவை என்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. பாலியல் துன்புறுத்தல், பாலினம் காரணமாக பாகுபாடு காட்டுவது ஆகியவற்றில் இருந்து பணிபுரியும் பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுவதற்காக தெளிவான விரிவான வழிமுறைகளை உருவாக்கியது.

இத்தகைய உண்மை நிகழ்வுகளை உள்ளது உள்ளபடியே பதிவுசெய்யும் தமிழ்த் திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பாலியல் வன்முறை குறித்துப் பல படங்கள் வந்திருந்தாலும் பணியிடத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், இழிவுகள், துன்புறுத்தல்கள் இவை குறித்து ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லப்பட்ட தமிழ்ப் படங்களே இல்லையென்றுதான் சொல்லவேண்டும். 2000-ங்களின் தொடக்கத்தில் வந்த ‘மகளிர் மட்டும்’ அலுவலக மேலாளரின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் வெவ்வேறு படிநிலைகளில் இருக்கும் பெண்களைப் பற்றியது. குறிப்பிட்ட பணியில் அல்லது துறையில் பெண் என்ற ஒரு காரணத்தினால் மட்டுமே அவள்மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையையும் அந்தப் பெண் எதிர்கொள்ளும் தனிப்பட்ட பிரச்சனைகளைப் பற்றியும் பேசிய தமிழ்ப் படம் எதுவும் என் கவனத்துக்கு இன்னும் வரவில்லை.

‘வடதிசை நாட்டின்’ பெண் சுரங்கத் தொழிலாளர்களைப் போலவே நம் நாட்டிலும் பெண்கள் புதிதாக அடியெடுத்துவைக்கும் துறைகளில் போராட்டங்களும் சட்டத் தீர்வுகளும் அதையடுத்த மாற்றங்களும். இவற்றைச் சட்டப் புத்தகங்களில் ஆவணப்படுத்துவதோடு பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லவும் அவர்களின் நினைவில் நிறுத்தவும் கவிதை, நாடகம், திரைப்படம் போன்ற வெகுஜன ஊடகங்களைப் பயன்படுத்துவது அவசியம். ஆவணப் படங்களைவிடவும் புனைவுசார்ந்த திரைப்படங்களும் நாடகங்களும் அதிகமான பேரைச் சென்றடையும். திரைப்படத்துறை பலகோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் இலாப நோக்கோடு செயல்படும் துறை என்றாலும் இதுபோன்ற ஊக்கமும் உந்துதலும் தரும் கதைகளைப் பதிவு செய்வதை ஒரு சமூகக் கடமையாகக் கலைஞர்கள் பார்க்க வேண்டும்.

***

கார்குழலி – சென்னையில் வசித்து வருகிறார். இணையவழிக் கற்றல் துறையில் பணிபுரிந்து வருகிறார். கவிதைகள் எழுதுவதுடன் தொடர்ந்து குழந்தைகளுக்கான நூல்கள், மொழிபெயர்ப்பு என இயங்கி வருகிறார். அத்துடன் தமது துறை சார்ந்த கட்டுரைகளோடு வெவ்வேறு கட்டுரைகளை பல்வேறு இதழில் எழுதி வருகிறார்.

ராட்டினம்

0

தென்றல் சிவகுமார்

ண்ணாடியில் பார்க்கையில் அவசியம் முகம் கழுவ வேண்டுமா என்று தோன்றியது. அழுது முடித்த முகம் இத்தனை பொலிவாக இருக்க முடியுமா? கண்ணாடிக்குப் பக்கத்தில் இருந்து யாராவது பார்த்துக் கொண்டிருந்தால் நன்றாயிருக்கும். யாராவது என்ன யாராவது? வேறு யாரை அப்படி நினைத்துவிட முடியும்? ஒரு பேனாவைப் பற்றியிருக்கும் வாக்கில் இரண்டு விரல்களை வலக்கண்ணின் மேல் சார்த்தியபடி வேறு யார் அப்படிப் பார்த்துச் சிரித்துவிடப் போகிறார்கள்? குளியலறை வாசல் கால்மிதியின் நீலச் சிறுவட்டத்தை வேறு எந்தப் பாதங்கள் அத்தனை கச்சிதமாக ஆக்கிரமித்து விட முடியும்? அழுவதைப் பார்த்துச் சிரிக்கையிலும் கோபமூட்டாமல் அன்பு பொங்க வைக்க வேறு யாரால் முடியும்? என்ன அசதி இது? தூக்கமே வியாதி, தூக்கமே மருந்து.

மூடியிருக்கும் கண்களுக்குள் அலைபாயும் கருமணிகள் எந்நேரமும் மயக்கம் தெளியலாம் எனும் நம்பிக்கையைக் கொடுத்தன. கொஞ்ச நேரம் முன்பு வரைக்கும் இப்படி எந்த அசைவும் இன்றி அமைதியான மயக்கத்தில் இருந்தபோது அலைபாய்ந்த விலாசினியின் மனம் இப்போது ஓய்ந்தது. தூக்கம் கூட வரும் என்று தோன்றியது. பசிக்கிறாற் போலவும் இருந்தது. கௌதமுக்கு ஃபோன் செய்வது உசிதமா இல்லையா எனத் தீர்மானிக்க முடியவில்லை. எதற்கும் இன்னும் கொஞ்சம் காத்திருக்கலாம் எனத் தோன்றியபோதே கண்களைச் சுழற்றியது. நாற்காலியில் அமர்ந்தபடி அத்தையின் கட்டில் மேல் அவர் கையருகில் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். பெரிதாய் வேறெதும் தோன்றவில்லை. வலக்கையைச் சற்று மேல் நீட்டி, க்ளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்த அத்தையின் இடக்கையை ஆனமட்டும் மிருதுவாகப் பற்றிக் கொண்டாள். யாருக்கு யார் ஆறுதலாய் இருந்தால் என்ன? இருந்தால் போதும்.

சின்னக் காயம்தான், வண்டிக்குக் கூடப் பெரிதாய்ச் சேதமில்லை, ஆனால் அதெல்லாம் நான் தானே சொல்லவேண்டும், நீ பதறுவதுதானே நியாயம்என்று அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டே நூலக வளாகத்தில் வைத்துக் கேட்கும் இந்தப் பட்டூவை என்ன சொல்லி ஆற்றுவதென்று புரியவே இல்லை. போதாததற்கு சிரிப்பு வேறு வெடித்துக் கிளம்பியது. “உஷா அஞ்சே அஞ்சு நொடி சிரிக்காம இருந்து, நா வேணா கூடவே வந்துரவான்னு மட்டும் கேளு, போதும்என்றபின் மிகத் தீவிரமாக முயன்றும் மூன்று நொடிதான் தாக்குப்பிடிக்க முடிந்தது. மெல்லிசாக ஹும் என்றுதான் சத்தம் வந்திருக்கும், அதற்கே முகத்தைத் திருப்பிக்கொண்டு முணுமுணுத்த செல்லக் கோபத்தின் மேல் இன்னும் இன்னும் அன்பு பொங்கிற்று. நாலைந்து ஹும் சேர்ந்தாற்போல் சிதறியது.

கையை விலக்காமல், நிமிர்ந்தும் அமராமல், அப்படியே தலையை மட்டும் அண்ணாந்து பார்த்தபோது அத்தையின் விரிந்த புன்னகை அசத்தியது. இந்நேரம் கண்கள் திறந்திருந்தால் பளபளத்து மின்னியிருக்கும் என்று தோன்றியது. கண்கள் மூடியிருந்தாலும் கையைச் சற்று அசைத்திருக்க வேண்டும், அதனால்தான் அந்த அரை உறக்கம் கலைந்து, கலைந்தவுடன் நிமிர்ந்து பார்க்கும் உந்துதல் ஏற்பட்டிருக்க வேண்டும். நினைக்கையிலேயே “இண்ட்யூஷன் ஆர் இல்யூஷன்” என்று சிரிக்கும் கௌதம் முகம் மனசுக்குள் முளைத்தது. அவன் அத்தை ஜாடைதான். ஆனால் அத்தையின் இந்தப் புன்னகை ரொம்பப் புதுசு. கௌதமின் புன்னகை எப்போதும் இப்படி இருந்ததில்லை. அன்பானவன் தான் சந்தேகமே இல்லை, என்ன ஒன்று.. எண்களால் நிரம்பியவன், அல்லது அவன் வார்த்தைகளில் சொல்வதானால் லாஜிக்கல் திங்கர். என்ன சொன்னாலும் பரவாயில்லையென்று குறுஞ்செய்தி இட்டாயிற்று. “உன் அம்மாவின் மிக அழகான புன்னகையைப் பார்த்தேன். சீக்கிரம் விழித்துவிடுவார் என்று தோன்றுகிறது”.

ஷான்னா உதயத்துக்கு முந்தைய காலம்தானே, ஆனா புன்னகை மட்டும் எவ்வளவு வெளிச்சம்? முறைச்சாலும் அதே போலக் கண் கூசுது. உனக்கு சூர்யான்னு பேரு வெச்சிருக்கலாம்.” இப்படிச் சொன்னால் மாறி மாறிப் புன்னகைத்து முறைத்துச் சிரித்துஅப்போதும் கண் துளிர்த்துவிடும். “இதை உலர்த்த நாந்தான் வருவேன், அப்போ நான் தான் சூர்யாவா?” “இல்லை நீ காற்று, கோடைகாலக் காற்றே” “ஆங் அது மலேஷியா, ஒன் அண்ட் ஒன்லி.”

ன் செண்டன்ஸ் ஒன்லி” அம்மா விழித்தபின் செய்தி அனுப்பு என்று சொல்லிவிட்டு முக்கியக் குறிப்பாக இதை இணைத்திருக்கிறான் கௌதம். நாமென்ன எழுத்துக்கு இத்தனை காசு என்று தந்தியா அடிக்கிறோம்? சரி அவன் வேலை அப்படி. அலுவலக மின்னஞ்சல்கள் ஆறு இருந்தன. அவற்றைப் பார்த்தபடியே அத்தையையும் பார்ப்பது மிக வினோதமாக இருந்தது. வாழ்க்கை என்னவெல்லாம் செய்துவிடுகிறது. அம்மாவை அழைத்துப் பேசலாம் என்று தோன்றியது. கொஞ்சம் பதட்டத்தில்தான் இருப்பார். அத்தை சிரித்ததைச் சொல்லலாம். நினைத்த மாத்திரத்தில் அம்மாவின் அழைப்பு வந்தது, “போர் அடிக்கிதாம்மா.. எவ்ளோ சொன்னாலும் கேக்காம ஃபோன் பண்ணுன்னு ஒரே அடம்” என்றவுடன் சஞ்சு பேசத் தொடங்கினாள். எல்லாக் கேள்விகளுக்கும் நிதானமாக, சத்தம் குறைத்துப் பதில் சொன்னபிறகும் அனத்திக்கொண்டே அம்மாவிடம் கொடுத்தாள். “அம்மா அத்தை முகமெல்லாம் அசைவு இருக்கும்மா… சீக்கிரம் மயக்கம் தெளிஞ்சிடும்னு நெனைக்கறேன்…”. “கண்ணு முழிச்சான்னா சொல்லு… எனக்கும் பாக்கணும்போல இருக்கு..”. பள்ளித் தோழிகளுக்கு மத்தியில் அமைந்த அதிசய சம்பந்தம், பாக்கணும் போலத்தானே இருக்கும். அத்தையின் சிரிப்பு இப்போது அளவு குறைந்திருந்தது. ஆனால் அதிலொரு குறும்பு இணைந்திருந்தது. கண்கள் திறவாமலே என்னவெல்லாம் யூகிக்கிறேன் என்று நினைத்துக் கொண்டாள்.

்ப எத்குடீ கண்ண உர்டி ொறைக்குற?” “பஸ்ல ி்னு்டு வந்திய?” “இல்லஜன்ன சீட்டு ெடச்சிது” “பக்கத்துல?” “ஏய யார ஒர ெரியவ உக்காந்திருந்தாரஅத்கெ்ன?” “எனக்கு அவர ேல ொறாமையா இர்கு” “அடி்பாவி” “எனனம இன்னி்கு எல்லாத்த ேலயு ொறாமையா இர்குஇன்னிலேருந்து இத ோகாதநீ பாக்குற எல்ல எடத்துலயு நாந்தனே இர்கணுஉன ேச்சு ொத்த எனக்குதனே சொந்த?” “ லூசஇத்லாமஆமா இரஅப்டி பாத்தா நான இதையே சொலலாம தான?” “காப்பி அடி்காதொந்தம எதாவத ்லு... பட்டூதனே நீகார்ப இல்லயே?” “என்னாச்ச இன்னி்கு?” “என்னமோ? ஒருநாள ிரி்கணு, ஒருநாள அழண, ஒருநாள காரணமே இல்லாமக ோவிச்சு்கணு்னுலாம ோணுறாப்ல இன்னி்கு இத..”

த்தை மீண்டும் சலனமற்ற உறக்கத்துக்குள் ஆழ்ந்துவிட்டார் போலிருந்தது. அல்லது மருத்துவ மயக்கத்தின் பிடி இன்னும் தளரவில்லையோ என்னவோ? நல்லவேளை கௌதமுக்கு இன்னொரு செய்தியை அனுப்பவில்லை என்று நினைத்துக் கொண்டாள். முற்பகல் பதினொரு மணிக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. தலைமை மருத்துவர் மயக்கம் தெளிய நான்கு முதல் ஆறு மணிநேரம் ஆகலாம் என்று சொல்லியிருந்தார். இப்போது மணி மூன்றரை. கௌதம் இப்படிக் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டானா? ஒருவேளை தானும் அலுவலகத்தில் இருந்திருந்தால் நேரம் நினைவிலிருக்காதோ என்னவோ என்றும் யோசித்தாள். அம்மா கொடுத்தனுப்பியிருந்த ரொட்டித்துண்டுகளின் ஒன்றை எடுத்தாள். விரல் நுனிகளாலேயே எடுத்து அப்படியே கடித்துண்ணும் அளவில் வெட்டப்பட்டு அவளுக்குத் தோதான விதத்தில் அடுக்கி… அம்மாவின் நேர்த்தி எப்போது கைகூடுமோ.

்வளவு ித்தி்ப மனச எப்படித்தான தாங்குகிறதோ? எவ்வளவு ுளி்பு காரம ுற்றி வந்தால எல்லாவற்றைய கழுவித்த்ளிவி்டுத் தன்ன ேலெழுதி்கொ்ளு இனி்பு்கு இப்படி பழகியாயிற்று. அவ்விடமிருந்து வர கற்கண்டு ொடி ஒவ்வொன்று ெரிய ெரிய கட்டிகளாகி மனம ுழு்க ிறைந்து, மூளைக்கு இடம்பிடித்து, ில சமயம ேச்சிலு ெறித்து விடுகின்றன. இவ்வளவு அன்பான உன்ன இதுவர பார்த்ததி்ல என்கிறாள உயிர்த்தோழி. “என்னுயிர்த் ோழி ேளொரு ேதி…”

ண்ணீர் குடித்துவிட்டு மெல்ல அறைக்குள் முடிந்தவரை ஓசையெழுப்பாமல் நடக்கத் தொடங்கினாள் விலாசினி. செருப்பற்ற வெறும்பாதங்கள் முதலில் அந்தத் தரையோடு ஒத்திசையவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் பழகியபின் நிம்மதியாயிற்று. இரண்டு நிமிடங்கள் பழகுவதற்குள் சன்னமான பதட்டம் எழுவது என்னவொரு அனிச்சமலர்த் தன்மை? நன்றாகப் பாதங்களை ஊன்றி வைத்து மீண்டும் நடக்கத் தொடங்கினாள். அலைபேசியை மறுகைக்கு மாற்றி புதிய குறுஞ்செய்திகள் எதுவும் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள். அதன் ஒலியை அமர்த்தியது முதல் இந்தச் செய்கை பழகியிருந்தது. உண்மையில் அத்தையின் உறக்கமோ மயக்கமோ கலைந்து தெளிவது நல்லதுதான். ஆனாலும் அதிர்ந்து நடக்கவோ, அலைபேசியில் இயல்பான குரலில் பேசவோ முடியவில்லை. தனக்குள் லேசாகச் சிரித்துக்கொண்டாள். மருத்துவமனையில் இருக்கும்போது பல விசித்திரங்கள் நடத்தை விதிகளாக மாறிவிடுகின்றன.

ந்த நிலைதான் என்ன விதியோ…” சட்டென்று ிலைகுலைந்து பாடல்கு ிழுந்து அலைபாய்ந்தபோது உல்கி எழ்பிிதியோ்னு ்லத் ோணியிரு்கு பார்னு ்டுகி்டே இர்கே.. என்ன தூங்கி்டிய?” “இல்ல என்னவோ பண்ணிருச்சுநல்லத ெண்டு வார்த்த ்லே்ளீஸ்்லிவி்டான, ்ன கையோடு அப்படியே திரு்பி ஓடிவி்டான. ொங்கித் தணிந்து ொதித்துச் ுண்டு மனசை என்ன ய்த அடக்க?

யாம்மா வடிவாம்பாள் வாளித் தண்ணீருடன் வந்தார். “என்னா பாப்பா இன்னுமா முழிக்கல? நீ எதனா கொரல் குடுத்துப் பாத்தியா?” “இல்லம்மா. டாக்டர் நாலரை அஞ்சு மணிக்கு வந்துடுவாங்கல்ல.. அதுவரைக்கும் வெய்ட் பண்ணலாம்ன்னு சொல்லிருக்காங்க.. நீங்க தொடச்சிட்டே ஒரு பார்வை பாத்துக்கங்க.. நான் முகம் கழுவிட்டு வந்துடறேன்”. நேரங்கெட்ட நேரத்தில் தூக்கம் வருவதும் அன்றாடம் கெடுவதுமான சடவு. குளிர்ந்த நீர் முகத்தின் மலர்ச்சியைச் சொடுக்கி மீட்டுக்கொடுத்தது. முகம் துடைத்தபடி வெளிவந்தபோது வடிவாம்பாள் வேலை முடிந்திருந்தது. “முழிச்சுட்டாங்கன்னா பாத்ரூம் எதனா போகணும்னா கூப்பிடு பாப்பா” என்று சொல்லிவிட்டு அடுத்த அறைக்குப் புறப்பட்டார். கௌதம் அழைத்தான். லேசான வியப்புடன் முழு முகமும் சிரிக்க எடுத்துப் பேசினாள். சஞ்சுவிடமும் பேசியிருக்கிறான். மருத்துவர் வந்ததும் அல்லது விழிப்பு வந்ததும் அழைக்கும்படி சொன்னான். அவ்வளவுக்கு மோசமில்லை என்று தனக்குள் சொல்லிக்கொண்டு அலைபேசியை விரல்களால் வருடிக்கொண்டிருந்தாள்.

டம்பிடித்து பட்டூவுட ராட்டின பயணம. “என்னதிது ி்ன்பு்ள மாதிரி?” “இல்லஎனக்கு உங்கூட ஏர்ளே்ல்லாம ோகணு்னு ஆசைஇப்போதைக்கு அதுல பாதி ிறுகிறு்பு இந்த ராட்டினத்து ேல இர்கு்ளீஸ்... உன கையைப ிடிச்சி்டு பக்கத்துல உக்காந்த்கறேரே ஒர தரம ோதுஅத்தோட வீட்டு்குத் ிரு்பிடலாமபஸ்ல கூட தனிய உக்காந்து்கறே்ளீஸ் ்டூ” “நச்சரி்புடி நீயிஉன்ன கட்டி்டு நான என்ன பாட படணுமோ?” ராட்டின ்ல ்ல அசைந்து ேகமெடுத்தது. ஆகாயம, ொரு்காட்சி கூ்டமு, இடையி அருகிரு்கு உயிருமாக எல்லாம ுழன்றன. அடிவயி்றிலிருந்து அச்சம எக்கி எக்கி இறங்கியது. கண்கள இறுக மூடி்கொண்டு ுழன்று ுழன்று வந்த, ொஞ்சமாக ேக தணிந்தவுட ஓர அலறல தன்ன மீறி ெளி்ப்டது, “பட்டூஊஊ

ட்டூஊஊ” விதிர்விதிர்த்துத் திரும்பினாள் விலாசினி. அத்தை இன்னும் கண்களைத் திறக்கவில்லை. ஆனால் சர்வநிச்சயமாக அந்தச் சொல் காதில் விழுந்தது. சஞ்சுவையோ கௌதமின் அக்கா பிள்ளைகளையோ அத்தை ஒருநாளும் அப்படி அழைத்ததில்லை. ஒருவேளை கௌதம் அல்லது கௌரியக்காவை அப்படி அழைத்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டாள். அத்தையின் புன்னகை மொத்தமாக வடிந்திருந்தது. ஓடிச்சென்று அவர் வயிற்றின் மேலிருந்த வலதுகரத்தை இறுகப் பற்றிக்கொண்டாள். மெல்ல அவரது தலையை வருடிக்கொடுத்தாள். “அத்தை… அத்தை…” என்று அழைத்துப் பார்த்தாள்.

லறியவுட ராட்டினத்திலிருந்து அப்படியே தூக்கியெறிய்ப்டாற ோன்ற உணர்வு. ஆனால எங்கு ிழவி்ல. ்ல ிதந்து ிதந்து வந்து ஒர பட்கையி, சாய்த்த ுடத்திலிருந்து ுவளைக்குச் சரியு நீரைப ோல, அப்படியே வழிந்து வீழ்ந்தாற்போல ெத்தென்ற வீழ்ச்சி. கண்களைத ிற்க ெரு ிரயத்தன.

ண்களைத் திறந்தபோது, அண்ணாந்திருந்த முகத்துக்கு நெருக்கமாகக் குனிந்த முகத்துடன் விலாசினி நின்றிருப்பதும், அவளொரு கை தலையை வருடிக் கொண்டிருப்பதும் தெரிந்தது. மெல்லப் புன்னகைத்து க்ளுகோஸ் ஏறும் இடக்கையைக் கவனித்துவிட்டு, வலது கையை உயர்த்தி தம்ஸ் அப் காட்டினார் உஷா. “வலிக்குதா அத்தை?” என்றதற்கு இல்லை என்பதாகத் தலையசைத்தார். சிஸ்டர் ப்ரவீணா வந்து பார்த்துவிட்டுத் தண்ணீர் கொடுக்கச் சொன்னார். படுக்கையின் பக்கவாட்டில் திருகி, ஒரு பாகத்தை மெல்ல நிமிர்த்திச் சாய்த்து, அத்தைக்கு நீர் கொடுத்தபோது நிம்மதி கண்களில் நிறைந்தது.

மறுநாள் வீடு திரும்பியபின் அம்மா சஞ்சுவையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார். அத்தையின் அறையில் நெடுநேரம் அவர் கைகளைப் பற்றிக்கொண்டு மௌனமும் பேச்சுமாக அளவளாவினார்கள். இடையில் விலாசினி காஃபி எடுத்துச் சென்றபோது சட்டென்று பேச்சு தடைப்பட்டது. அவளுக்கு சஞ்சுவும் அவள் தோழியும் பேசிக்கொள்ளுவதுதான் ஞாபகத்துக்கு வந்தது, கூடவே பாரம் நீங்கியபின் வரும் நல்லதொரு சிரிப்பும்.

அம்மா வெளியில் வந்தவுடன், நேரே அடுக்களைக்கு வந்து, “தூக்கத்துல, மயக்கத்துல எதோ உளறியிருப்பா போல.. நீ ஒன்னும் கண்டுக்காதே” என்றார். “சரி பட்டூ” என்று சொல்லத் தோன்றியதைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் விலாசினி. இடப்பக்கம் கோணிக்கொண்ட சிரிப்புடன், எதையும் தேடாத கண்களுடன் சொன்னாள், “சரிம்மா”. வேகவேகமாக ரிமோட்டை எடுத்து சஞ்சு, சேனலை மாற்றியபோது “ஏம்பா சுனியோ” என்று டோரேமானும் நோபிட்டாவும் பேசத் தொடங்கினார்கள். அதற்குமுன் மெல்லிய சத்தத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் நின்ற இடத்திலிருந்து அம்மா முணுமுணுக்கத் தொடங்கினார், “ஓடிவந்த வேகமென்ன வெள்ளி நிலவே நீ..”

***

தென்றல் சிவகுமார் – கவிஞர், மொழிபெயர்ப்பாளர். 2019 ஆண்டு இவரது முதல் கவிதைத் தொகுப்பு “எனில்” வெளியானது. தாமரைச்செல்வி எனும் பெயரில் இவர் மொழிபெயர்த்த “முகமூடிகளின் பள்ளத்தாக்கு” நாவல் அண்மையில் நல்ல கவனம் பெற்றது. ஆசிரியர் தொடர்புக்கு – thendralsivakumar@gmail.com

மௌன கூடாரம்

2

ஐ. கிருத்திகா

ஞ்சி துருவேறிய ஜன்னல் கம்பிகளைப் பற்றியபடி எக்கி நின்று வெளியே  பார்த்தாள். தெருவில் ஜன நடமாட்டம் மிகுதியாயிருந்தது. இரைச்சலுக்குப் பெயர்போன தெரு அது. இரவு பத்து, பன்னிரண்டு மணி வரைகூட ஆட்கள் வருவதும் போவதுமாயிருப்பர்.

குறுகிய தெருவாயிருந்தாலும் பிரதானசாலை இரண்டை இணைப்பதால் மக்கள் அந்தக் குறுக்கு சந்தில் முண்டியடித்து விரைவர். ஆட்டோக்கள் சாகச வித்தை காட்டி பறக்கும். அவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் ரஞ்சி மௌன கூடாரத்துக்குள் இருப்பது போல நின்றிருப்பாள்.

பின் மதியப்பொழுதுகளில் தெரு சற்று அமைதியாயிருக்கும். ஆனால் அவளுக்குள்ளிருக்கும் அமைதியின் அசாத்தியத்துடன் ஒப்பிடுகையில் அதுவும் இரைச்சல்தான். அழகு குலையாத கன்னிப்பருவம் எப்போதாவது அவளுக்கு நினைவு வரும்.

தாழம் மடல்கள் கொண்டு நெய்தது போலிருக்கும் அவள் மேனியில் அழகுகளின் கூடுதல் அலங்காரம் கொட்டி வழிந்து விடாமல் உறைந்து போனதில் அவளுக்குப் பெருமை ஒன்றுமில்லை. அவ்வழகுகளில் ஊர்ந்த முரட்டு விரல்களின் ஸ்பரிசம் அவளை அருவருக்கச் செய்தன. அவள் அசூயையோடு நினைவுகளைப் புறந்தள்ளுவாள். 

ரஞ்சி மறுமுறை ஜன்னல் வழியே வெளியேப் பார்த்தாள். மனிதர்கள் நடப்பதும், ஆட்டோக்கள் செல்வதுமாக தெரு ஜேஜேவென்றிருந்தது. அவளுக்கு நேரம் தவறாமல் வேளாவேளைக்கு ஆகாரம் வழங்கப்பட்டது. ஒரு பெண்மணி தினமும் வந்து அவளைக் குளிக்க வைப்பாள்.

நெஞ்சுக்கு மேலே பாவாடையை உயர்த்திக் கட்டி கல்லில் அமரவைத்து தண்ணீரை ஊற்றுவாள். பாவாடையைத் தளர்த்த சொல்லி சோப்பை அழுந்த தேய்ப்பாள். மார்பு, வயிறு, அதற்குக் கீழே என்று எங்கும் அவள் கை அழுந்தும். அப்போது அவள் வாய் முணுமுணுக்கும்.

சத்தமா பேசினாதான் என்ன என்று ரஞ்சி நினைத்துக் கொள்வாள். சிலசமயம் பாவாடை தளர்ந்து கிடக்கும். நீர்பட்டு மினுங்கும் உடலை அவள் பார்த்தபடியே நின்றிருப்பாள். பெரிய மூச்சொன்றை விடுத்து வளையல்களை இறுக்கியபடி சோப்பைக் குழைப்பாள். 

நான்கு பேர் வசிக்கக்கூடிய அளவு பெரிய வீடு அது. முன்பொரு காலத்தில் ரஞ்சி அம்மா, அப்பாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த வீடு. அப்பாவின் கதைகள் அவளுக்குத் துள்ளலைத் தந்திருக்கின்றன. அப்பாவிற்கு அவளொரு குட்டி மகாராணி. நைட்டிங்கேல் பறவையென்று அப்பா அவளை வர்ணிப்பார்.

கதைகள் நிறைந்த இரவுகள் அவளுடையவை. விக்கிரமாதித்தனுடைய வேதாளத்தை அவள் தோளில் அப்பா ஏற்றிவிடுவார்.

நட்சத்திரங்கள் மினுங்கும் இரவுகளில் கதைகளின் வர்ணஜாலங்கள் அவளைக் கிறங்கடிக்கும். அப்பா அவளை எப்போதாவது பாட்டுப்பாடச் சொல்வார். ரஞ்சி சின்னக்குரலில் ராகமாகப் பாடுவாள். அப்போதுதான் ஒருமுறை சொன்னார், நீ ஒரு நைட்டிங்கேல் பறவையென்று.

விசித்திரமான குரலெழுப்பும் அப்பறவையை அவள் பார்த்ததேயில்லை. அதுபற்றி அவள் ஒருநாள் அப்பாவிடம் கேட்டாள். அவரும் அதைப் பார்த்ததில்லையென்று கூறினார். பின், ஒருவேளைப் பார்த்திருந்தாலும் அதுதான் நைட்டிங்கேல் பறவையென்று தெரியாமலே பார்த்திருப்பேன் என்றார். 

“அப்ப ஏன் அந்தப் பேரை எனக்கு வச்சீங்க…?” 

ரஞ்சி விடவில்லை. அப்பா சிரித்துவிட்டு அவள் தலைகோதினார். எப்போதுமே மயிலிறகால் வருடுவது போன்ற அவரின் ஸ்பரிசம் ரஞ்சிக்குத் தேவையாயிருந்தது. 

“நீ பாடின உடனே எனக்கு அந்தப்பேர் தோணுச்சு. வச்சிட்டேன்” என்றவர் அதன்பிறகு அவள் எப்போது பாடினாலும் நைட்டிங்கேல் என்றே அவளை அழைக்கத் தொடங்கினார்.

அம்மாவுக்கும் ரஞ்சி என்றால் உயிர். ஆனால் அப்பாவைப்போல அவள் செல்லம் கொஞ்சவில்லை. தன் கைப்பட்டமாகவே மகளை வைத்திருந்தாள். அது சிலசமயம் ரஞ்சியை சலிப்படைய செய்தது. 

“ரொம்ப கண்டிப்பும்மா நீ….”

தேன்நிற விழிப்பாவைகளை உருட்டி அவள் முகம் சுருக்குவாள். காதோர பூனை மயிர்களில் சூரிய ஒளி பட்டு தங்க இழைகளாக மின்னும். மேலுதட்டு வியர்வை அரும்புகளை அம்மா பார்த்தபடியிருப்பாள். அப்போது வயிற்றுக்குள் சிலீரென்று திகிலெழும். 

“சித்ரா வீட்டுல விளையாடிட்டு வர்றேன்.” 

ஒருநாள் ரஞ்சி அடம்பிடித்தாள். அம்மா விடவில்லை. 

“நீ மட்டுந்தான் அதிசயமா பெத்து வச்சிருக்க…”

அப்பா சலித்துக்கொண்டார். மகள் போராடுவது அவருக்குப் பிடிக்கவில்லை. இருந்தும் அம்மாதான் ஜெயித்தாள். பெண்மை, உடைத்த சோடா போல் பொங்கி வழிந்தது ரஞ்சிக்கு. இருந்தும் அப்பாவுக்கு அவளொரு குழந்தைதான். மகளின் வளர்ச்சி அம்மாவின் கண்களுக்கு விளக்கெண்ணெய் வார்த்துவிட்டது. பன்னிரண்டில் ரஞ்சி தளிர்க்கொடியாய் சந்தனக் குழைவுகளின் சுமை தாங்காது பூரித்துக்கிடந்தாள். 

ரஞ்சி வெற்றுத்தரையில் கன்னம் பதித்துப் படுத்துக்கொண்டாள். அம்மாவுக்குத் தெரியாமல் சித்ரா வீட்டுக்குப் போனது ஞாபகத்துக்கு வந்தது. அரவமற்ற வீட்டில் சித்ராவின் அண்ணன் பலவந்தப்படுத்தி அணைத்தது, உதடு கவ்வியது, முலைகளைக் கசக்கியது, அவனிடமிருந்து திமிறி ஓடிவந்தது காட்சிகளாய் கண்ணுக்குள் ஓடியது.

இன்னொருமுறை ஊரிலிருந்து வந்திருந்த அப்பாவின் நண்பரொருவர் தனிமையில்  இயல்பாக  பேசுவதுபோல் அவளை மடியிலமர்த்தி சட்டைக்குள் கையைவிட்டு சில்மிஷம் செய்ய ரஞ்சி விசும்பினாள். இப்படி ஏழெட்டு நிகழ்வுகள்….. மூச்சுத்திணறல் உண்டாக்குவது போலிருந்த அந்த நினைவுகளிலிருந்து மீண்டுவிட ரஞ்சி சட்டென எழுந்தமர்ந்தாள்.

ஜன்னலின் மூடிய கதவுகளின் வழியாக உட்புகுந்த வெயில் ஒரு நூல் போல தரையில் நீண்டு கிடந்தது. அந்த வெளிச்சத்தைப் பார்த்தபடியே சுவரில் சாய்ந்து கொண்டாள். எதிர் சுவரில் தொங்கிய குடும்ப போட்டோவில் அவள் இரட்டை ஜடை போட்டு குண்டு கன்னம் குழிவிழ சிரித்தபடி நின்றிருந்தாள். அம்மாவும், அப்பாவும் தோளுரச நாற்காலியில் அமர்ந்திருந்தனர். மழை கொட்டிய ஒருபொழுதில் ஸ்டூடியோவுக்குப் போய் எடுத்த போட்டோ அது.

அம்மா அவளுக்குக் கிளிப்பச்சையில் ரோஸ் பார்டர் வைத்த பட்டுப்பாவாடை கட்டி விட்டிருந்தாள். அவள் பெரிது, பெரிதாய் பூப்போட்ட கார்டன் புடவையும், அப்பா டெர்லின் சட்டையும் அணிந்திருந்தார்கள். 

“கண்ண சிமிட்டாம பாரும்மா…”

ஸ்டுடியோக்காரர் சொன்னதும் பிளாஷ் மின்னும் வரை விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் உதடுகள் பிளவுபடாது மெல்லிய கோடுகளாய் விரிந்தன. 

இரட்டை ஜடைகள் மார்பில் தொங்கிற்று. அந்தப் புகைப்படத்தை எடுக்கும்போது அவளுக்குப் பத்து வயது. அப்போதே மெல்லரும்புகள் அவிழ்ந்து விட்டன. ஜடைகளை முன்பக்கம் போட்டுக்கொள்ளும் பழக்கம் அம்மாவால் ஏற்பட்டது.

“ஒத்த ஜடை போட்டு விடும்மா… …” என்றால் அம்மா இசையமாட்டாள். பிடிவாதமாய் இரட்டை ஜடை பின்னிவிடுவாள். 

“இப்பவே எதுக்கு ஒத்தை ஜடை…. பெரியவளாயிட்டா கடைசிவரைக்கும் ஒத்தை ஜடைதான் போட்டாகணும். இந்த வயசுல ரெட்டை ஜடை போட்டுக்கிட்டாதான் உண்டு” என்பாள். 

அதோடு இரண்டு ஜடைகளையும் முன்னால் போட்டுக்கொள்ள சொல்லி வற்புறுத்துவாள்.

“முன்னாடி போட்டுக்கிட்டா கூசுதும்மா…”

ரஞ்சியின் கெஞ்சலுக்கு அம்மா காதுகள் பூட்டிக்கொண்டன. ஆரம்பத்தில் ஒவ்வாமையாக இருந்தது பின்பு பழகிப்போனது. வெளியில் செல்லும்போது கை அனிச்சையாக ஜடைகளை முன்னால் போட்டுக்கொண்டது.

சுவரில் ஆணியடித்து போட்டோ தொங்கவிடப்பட்டபோது ரஞ்சிக்குக் குதூகலம் தாங்கவில்லை. ஆங்காங்கே சுண்ணாம்பு பெயர்ந்து போயிருந்த சுவற்றுக்குப் போட்டோ புது வண்ணத்தைப் பூசி விட்டதாக அவள் எண்ணினாள். மிகையில்லாத அழகோவியம் போல தொங்கிய போட்டோவை அவள் போகும்போதும், வரும்போதும் நின்று பார்த்தாள். ஜன்னல் திறந்திருக்கும் சமயங்களில் உள் நுழையும் சூரிய வெளிச்சம் தங்க இழைகளைக் கொண்டு நெய்தது போல போட்டோவை மின்ன செய்தது. ரஞ்சியின் முகம்  முந்திரிப்பழம் போல் ஜொலிப்பதாக அப்பா, அம்மாவிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டார்.

ரஞ்சி நிலைகுத்த போட்டோவைப் பார்த்தாள். தூசுகளடர்ந்த போட்டோ சுவருக்குப் பாரம் போல் தொங்கியது. வீடு மயான அமைதியிலிருந்தது.

குழந்தை போல் ஊஞ்சலில் மல்லாந்து கிடக்கும் ரஞ்சியை அவள் பரிதாபமாகப் பார்ப்பாள். பழரசம் கொண்டு பாலீஷ் போட்டது போல் மினுமினுக்கும் ரஞ்சியின் இதழ்களைச் சுவைக்க இரவு வருபவனை சபித்தபடி அவள் வீடு பெருக்குவாள்.

பெரும்பாலும் முந்தானை விலகியிருக்க ரஞ்சி உத்திரத்தை வெறித்தபடி கிடப்பாள். அவள் முந்தானையை இழுத்து சரிசெய்து விடுவாள்.

ஒவ்வொருமுறையும் சரிசெய்யும்போது மலைக்கச் செய்யும் அழகுகளைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கும். அப்போது ரோமக்கால்கள் குத்திட்டுக் கொள்ளும். ரவிக்கையை மீறிய பிளவு நீள்கோடாய் உள்சரிந்து அடர் திரட்சிகளை பிரித்ததை அவள் ஒருமுறை கண்ணாரக் கண்டாள்.

ஏனோ தொட்டுப் பார்க்க வேணும் போலிருந்தது. விரல்களை ரவிக்கைக்குள் நுழைத்து இதமாய் தடவிப்பார்த்தாள். திரட்சிகள் சில்லிட்டிருந்தன. ரஞ்சி அசையாமல் கிடந்தாள். சிற்பமொன்று வடிவாம்சத்துடன் பள்ளி கொண்டிருந்தது போலிருந்தது அவள் தோரணை. அவளுக்குக் கையெடுத்துக் கொள்ள மனசேயில்லை. குழந்தையை வருடுவது போல ஒவ்வொன்றாய் வருடினாள். 

“என்னாத்த கொட்டி இப்புடி படைச்சான் உன்னைய… இந்தமாரி இருந்தா ஆம்பள ஆசப்படமாட்டானா… இருந்தாலும் அந்தப்பய ஒன்னைய அலங்கோலம் பண்ணியிருக்கக்கூடாது. அவன் வெளங்கவே மாட்டான். ரத்தம் கக்கி சாவான். கைகால் வெளங்காம போயிரும் பாரு…”

அவள் கண்களில் நீர்வழிய படபடத்தாள். ரஞ்சி பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவள் ரவிக்கைக் கொக்கிகளை மாட்டிவிட்டு கன்னம் வழித்து முத்தம் தந்தாள். ரஞ்சி கண்கள் சுருக்கி சிரித்தாள். ஏனோ அந்த முத்தம் ரொம்பப் பிடித்திருந்தது. அம்மாவினுடையதைப் போல.

அம்மா அடிக்கடி முத்தம் தருவாள். உணர்வின்றி கிடக்கும் மரக்கட்டைக்கும் உயிர் தரும் முத்தம். இரவில் அம்மாவின் மார்பில் பொதிந்து தூங்கும்போது தலைமுடியைக் கோதியபடியே அவள் முத்தம் கொடுப்பாள். நினைவில் உறைந்து கிடக்கும் முத்தம். உடல் முழுவதுக்குமான சூட்டைக் கிளப்பி குளிர்காயச் செய்யும் முத்தம். 

அவன் ஆக்ரோஷமாக முத்தமிடுவான். பற்கள் பதிந்து போகும். ஏனோ உடல் நடுங்கி வெடவெடக்கும். இணங்க மறுக்க அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. ரஞ்சி சில நேரங்களில் மட்டுமே சுய உணர்வுடனிருந்தாள். அந்நேரங்களில் அம்மா, அப்பாவின் நினைவு வரும். சம்பவங்கள் மனத்திரையில் நிழலாடும்.

பல நேரங்களில் அவள் மாய உலகில் சஞ்சரித்திருந்தாள். இருளுக்கும், வெளிச்சத்துக்கும் இடைப்பட்ட நிலை. ஒருவித மயக்க நிலை. புகைமூட்டத்துக்கு நடுவே மாட்டிக்கொண்டது போல திக்குத் தெரியாது தவிக்கும் நிலை. அப்போது ஏதேதோ ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எண்ணங்கள் திரள், திரளாக தோன்றி சரடுகளாகத் திரியும். திரிந்த சரடுகள் வட்டச் சுற்றுகளாக சுற்றிக் குழிந்து சுழலில் அமிழ்வது போல நிமிடமாய் மறைந்து போகும். சுய உணர்வுற்றிருக்கும் நேரங்களில் அவள் தன்னைப்பற்றி சிந்திப்பாள். தனிமையின் அந்தகாரத்தை எண்ணி குமைவாள். 

‘தனிமை ஏன் இவ்வளவு அந்தகாரமாக உள்ளது. அது இருளை மட்டுமே தன்னகத்தே வைத்துக் கொண்டுள்ளதே. வெளிச்சத்தின சாத்வீக நிலையான ஒளியை அது எங்கே மறைத்து வைத்துள்ளது. இணுக்கு ஒளிக்கும் துழாவும் வாழ்க்கை இயல்பாக அமைந்து போனதா அல்லது வலிந்து திணிக்கப்பட்டதா ‘ என்றெல்லாம் சுய நினைவுள்ளவள் போல் யோசிப்பாள். கால்களில் சங்கிலியிடப்பட்டது போல நகரமுடியாது தவிப்பதாய் உணர்வாள். 

அவன் அநேகமாய் ஒருநாள் விட்டு ஒருநாள் வருவான். நட்சத்திரங்களைச் சூட்டிக்கொண்ட இரவுகளில் போதை தளும்ப வருபவன் ரஞ்சியை ஆக்ரோஷமாக கொண்டாடித் தீர்ப்பான். ரஞ்சி அசையாது கிடப்பாள். உணர்வு துய்த்தது போல உடல் விறைத்துக் கிடக்கும். உணர்வின் எச்சங்கள் மிச்சங்களாக உதடுகளில் நடுக்கத்தைப் பரப்பும். கால்கட்டை விரல்களைச் சொடக்கிடச் செய்யும். ஆட்டம் முடிந்து அயர்ந்து கிடக்கும் அவனை ரஞ்சி சலனமின்றி நோக்குவாள். 

“ரஞ்சிக்கு எந்த நாட்டு இளவரசன் மாலை சூட்டப் போறானோ…”

என்று அப்பா அடிக்கடி கண்களில் கனவுகளை மிதக்கவிட்டு சிலாகிப்பார்.

காந்தள் மலர்கள் அடர்ந்த வனத்தில் செஞ்சுடராய் ரஞ்சி நின்றிருக்கிறாள். நீள்விரல்களின் நுனிகள் பழுத்த தீக்கொழுந்து போல ஒளிர்விட, ரோஜா மாலையொன்றை கைகளில் ஏந்தியிருக்கிறாள். அவள் உடல் நோகுமென்ற அச்சத்தில் மரங்கள் பூக்களை உதிர்க்காது தூவுகின்றன. பாதங்களின் இளஞ்சிவப்பு நிறத்தில் கீழே கிடந்த பூக்கள் வெட்குகின்றன.

ரஞ்சியின் கண்களில் எதிர்பார்ப்பின் துளிச்சுடர் பிரகாசிக்கிறது. இளஞ்சூரியக் கதிரொன்று அவள் மீது நீள்கோடாய் விழுந்து பெருமிதமடைகிறது. தூரத்தில் குதிரையின் குளம்படி சத்தம் கேட்க, ரஞ்சி உதடுகள் பிளவுற்று, கன்னங்களில் குல்மொகரின் சிவப்பேறிய தோரணையில் வெட்கத்தோடு நின்றிருக்கிறாள்.

அப்பாவுக்குள் இந்தக் காட்சி அடிக்கடி ஓடும். ஒருநாள், கனவில் கண்ட இந்த காட்சிப் படிமத்தை மனப்பேழைக்குள் பூட்டி வைத்திருந்தவர் அவ்வபோது அதைக் கண்களுக்குள் ஓடவிட்டு பரவசப்பட்டுப் போவார்.  

“நைட்டிங்கேலைப் பத்தி கனவு காண ஆரம்பிச்சாச்சா….?” என்று அம்மா கிண்டலடிப்பாள். 

அவன் ரஞ்சியின் கன்னம் தட்டி நெற்றியில் அலைந்த ஒற்றை கற்றையை விரலால் ஒதுக்கிவிட்டான். ரஞ்சி சூன்யத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள். அவனிடமிருந்து வந்த நெடி ஆரம்பத்தில் அவளை முகம் சுளிக்க வைத்தாலும் நாளாக ஆக அவள் அதற்கு பழக்கப்பட்டவளாகிப் போனாள். அவன் ரஞ்சியை முழுவதுமாய் ஆக்கிரமித்திருந்தான்.

முதல் அழுகைக்குப் பின்பு அவளிடம் பொட்டு முனகலில்லை. இணக்கமும், விலகலுமற்ற தன்மையில் அவள் மரக்கட்டை போல கிடந்தாள். அவனுக்கு அதுபற்றிய சிந்தனையில்லை. அவன் வேண்டியது கிடைத்ததும் திருப்தியுற்று அதிலேயே உழன்று கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் போலத் தோன்றும். அவளழகை வர்ணித்துப் பிதற்றுவான்.

முதன்முறையாக அவளை தெருவில் வைத்துப் பார்த்தபோதே கிறங்கிப் போனவன் அவன். வாசலில் அம்மா கோலம் போட்டுக்கொண்டிருக்க, ரஞ்சி படிக்கட்டில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அன்று சாமி ஊர்வலம். வீடுதோறும் தெருவடைத்து கோலமிட்டிருந்தனர். அம்மாவின் விரல்களில் வழிந்த பிசிரற்ற இழைகள் வெள்ளிக்கீற்றுகளாக வளைந்து, நெளிந்து ஓடியதை ரஞ்சி வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு சன்ன இழைகள் வசப்படுவதேயில்லை. பட்டை, பட்டையாக தீட்டி வைப்பாள். 

“பழக, பழக தன்னால வரும்” என்பாள் அம்மா.

படிக்கட்டு தெளித்த நீரில் சில்லென்றிருந்தது. அதில் ரஞ்சி அந்திமஞ்சள் வெயிலின் சாயலில் அமர்ந்திருந்தாள். பிரதான சாலையை அடையும் பொருட்டு அவ்வழியாக வந்த அவன் ரஞ்சியைக் கண்டதும் சட்டென்று புல்லட்டை நிறுத்திவிட்டான். அதற்குள் சற்றுதூரம் கடந்து விட்டிருந்தது. மெல்ல ஒரு U வளைவு வளைத்து ரஞ்சி வீட்டின் எதிரேயிருந்த அந்த வீட்டின் முன்புறம் சற்று தள்ளி நிறுத்தினான்.

பைக்குள்ளிருந்த அலைபேசியை எடுத்து யாருக்கோ பேசுவது போல் காதில் வைத்துக் கொண்டு அவளை ரசிக்கத் துவங்கினான். பெண்மை ததும்பிய அவளுடல் அவனுள் போதையேற்றியது. ரஞ்சி கைநீட்டி அம்மாவிடம் வெகுமும்முரமாக பேசிக் கொண்டிருந்தாள். மேலே பரவியிருந்த துப்பட்டா வழுக்கிச் சரிந்தது. அவனுக்குக் கண்கள் நிலைகுத்தி ஸ்தம்பித்தன.

சாமி ஊர்வலம் சென்ற அந்தநாளில் தெரு தெய்வீகத்தன்மையுடன் ஒளிர்ந்தது. வீடுதோறும் விளக்குகள் சுடர்விட்டு ஜொலித்தன. ரஞ்சியின் வாழ்க்கையில் வரப்போகும் நாட்களின் இருள் முழுமைக்குமான ஒளியை அவை அன்று ஒரே நாளில் சுமந்து பிரகாசித்தன. 

சன்னத்தூறல்கள் வலுத்து பெருமழை கொட்டியது. ரஞ்சி தூணைப் பிடித்தபடி மழையை வெறித்துப் பார்த்தாள். காதுமடல்கள் குளிர்ந்தன. மழை இரைச்சலோடு பொழிந்து தள்ளிற்று. துடைத்தழித்தது போல அவளுள் மயான அமைதி. தனிமைக்கு வர்ணம் பூசி அழகூட்டும் விதமான அமைதி. சில நேரங்கள் அமைதி அவளுக்குப் பிடித்திருந்தது.

தெளிவற்ற நினைவுகளின் படிமங்கள் அடுக்கடுக்காய் மனதில் படிந்து மேல் கீழாய், கீழ் மேலாய் குழம்பி ஒருவித மயக்க நிலைக்கு அவளை ஆட்படுத்தியபோது அவள் தனிமையை பெரிதும் விரும்பினாள். எப்போதாவது பழைய சம்பவங்கள் நினைவுக்கு வரும்போது, அம்மா, அப்பாவைத் தேடித் தவிக்கும்போது அந்தத் தனிமையை எண்ணி அவள் நடுங்கினாள். 

மனைவியின் அருகாமையை விட அவனுக்கு ரஞ்சியின் அருகாமையே தேவையாயிருந்தது. கட்டுக்கடங்காத வெறியுடன் அவன் அவளை அணுகினான். அவளின் வலி பற்றி அவனுக்கு எப்போதுமே எண்ணமிருந்ததில்லை. 

“நெஞ்செல்லாம் கீறி வச்சிருக்கான் பாவிப்பய…” 

அந்தப் பெண்மணி வசைபாடியபடியே ரத்தம் கசிந்து காய்ந்திருந்த இடங்களில் மஞ்சளைக் குழைத்துப் பூசுவாள். ரஞ்சிக்கு உதடுகள் இறுகும். எங்கும் ரணம். மாய உலகில் அலைபாய்ந்து கொண்டிருக்கின்ற அவள் கண்ணாடி முன் நின்று தன்னையே பார்த்தாள். ஈரம் உலராத கூந்தலில் நீர்முத்துக்கள் அரும்பி சரங்களாய் கீழே கொட்டின. சேலை உடலோடு ஒட்டிக்கிடந்தது.

முற்றத்திலிறங்கி பாதங்கள் ஊறும்மட்டும் மழையில் நின்றிருந்தவள் கிட்டதட்ட பத்து நிமிடங்களுக்குப் பிறகு நீர் வழித்தடத்தை உண்டு பண்ணியபடியே  வந்து கண்ணாடி முன்பு  நின்றாள். ரஞ்சிக்கு மழையில் நனைவது ரொம்பப் பிடிக்கும். 

அன்றும் அப்படி மழையில் குதியாட்டம் போட்டதில்தான் சளி பிடித்துக்கொண்டு காய்ச்சல் அடிக்கத் தொடங்கியது. அம்மா கோபத்தில் திட்டித் தீர்த்து விட்டாள். 

“சொன்னப்பேச்சு கேக்கறதில்ல. மழையில நனையாத, காய்ச்சல் வந்துடும்னு தலப்பாடா அடிச்சிக்கிட்டேன். அடங்கினியா நீ… இப்பப்பாரு. ஒடம்பு என்னமா கொதிக்குதுன்னு….”

அப்பா பதறி ஆட்டோவை அழைத்துவர ஓடினார். நுனிவிரல் நனைத்து விளையாடியவளை மழைநீர் சுவைக்கக் கற்றுத் தந்தவர் அவர்தான். கூடவே சொட்ட, சொட்ட நனைதலின் சுகம் பற்றியும் நாலு வார்த்தைகள் சொல்லி வைத்தார். அதிலிருந்து ரஞ்சிக்கு மழை மோகம் பிடித்துக் கொண்டது.

வலுமழையில் பாதை தெரியாது ஆட்டோ தடுமாறியது. வைப்பரின் இயக்கம் முடுக்கி விடப்பட்டபோதும் மழை அசராது கண்ணாடியில் வழிந்து நழுவியது. அடித்த மழைக்கு எதிரே வந்த மினி லாரி, டிரைவரின் கண்களுக்குப் புலப்படவில்லை. 

மழைநீரில் ரத்தச் சிதறல்கள் தெறித்து கலந்தன. அம்மா, அப்பாவின் நிர்மலமான முகங்களில் மகளின் எதிர்கால கனவு உறைந்து போயிருந்தது. விழிகளும்  உறைந்திருந்தன. ரஞ்சி தலையில் அடிபட்டு சுய நினைவிழந்திருந்தாள். 

ரஞ்சி ஈரப்புடவையோடு மூலையில் சுருண்டிருந்தாள். 

“வயசு இருபதாவுது. ஆனா இன்னும் குழந்தைமாதிரி விளையாட்டுத்தனம் போகல……”

அம்மா அங்கலாய்த்ததில் கொஞ்சம் பெருமிதம் கலந்திருந்தது. கொய்யாக்காய் பறிக்க மரத்திலேறியபோது சூவை எறும்புகள் அவள் உடம்பை பதம் பார்த்திருந்தன. இடுப்பு, கையெங்கும் சிவப்பு, சிவப்பான தடிப்புகள். அம்மா தேங்காய் எண்ணெயைக் குழைத்து தடவியபடியே அவளைக் கடிந்து கொண்டாள். மஞ்சள் உடம்பில் இளஞ்சிவப்பு நிற தடிப்புகள் மாதுளை முத்துக்கள் போல் மின்னின.

“என்கிட்ட கேட்டாப் பறிச்சு தந்திருப்பேனேம்மா…….”

அப்பா பதறிக் கூறினார். 

ரஞ்சி செருமத் தொடங்கினாள். கண்கள் சிவந்து உடலில் சூடு ஏறிக் கொண்டிருந்தது. கணகணவென்று ஏறிய சூடு தகிக்கத் தொடங்கியது. சேலையின் ஈரம் உடம்புச்சூட்டில் உலரத் தொடங்கியது. ரஞ்சி மெல்ல எழுந்து முழங்காலில் முகம் புதைத்து ஓங்கி அழுதாள். முற்றத்தின் குறட்டில்  நின்று அதட்டும் அம்மாவைக் காணாது, நைட்டிங்கேல் பறவையென்று கூறிச்சிரித்த அப்பாவைக் காணாது  நடுநடுங்கி அழுதாள்.

***

திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டையில் பிறந்தவர். திருச்சியில் வசிப்பவர். தொடர்ந்து எழுதிவரும் இவரது கதைகள் பல்வேறு இதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன. இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் ‘உப்புச்சுமை’ மற்றும் ‘நாய்சார்’ ஆகியன வெளியாகியுள்ளன.