Home Blog Page 50

செப்பனிடப்படும் சுவர் – ராபர்ட் ஃப்ராஸ்ட்

1

தமிழில் : ராஜி வாஞ்சி

சுவரை விரும்பாத ஏதோவொன்றுள்ளது
அது …
நிலத்தை உறைபனியால்
தடித்து வெடிக்கச் செய்கிறது..
சுவரின் கற்களை உருட்டி
வெயிலில் சிதறடிக்கிறது..
இருவர் நுழையும் இடைவெளியொன்று
இதோ …சுவரில்..

வேகமாய் குரைத்து
விரையும் நாய்களுக்கு இரையாய்
கல் விழுந்த சுவர்ப்பொந்துகளில்
பதுங்கும் முயல்களை
பற்றிக் கொடுக்கும் வேட்டையர்கள்
சுவற்றின் கற்களை அகற்றி
நான் கண்டதுமில்லை கேட்டதுமில்லை.
ஆனால் சுவர் செப்பனிடப்படும்
இந்த வசந்த காலங்களில் மட்டும்
சுவரின் கற்கள் வீழ்ந்து விடும்
மாயம் மட்டும் புரிவதேயில்லை.

மலை தாண்டி வசிக்கும்
பக்கத்து வயல் உரிமையாளன்
வசந்தகால சுவர் பராமரிப்புக்கான
என் அழைப்பை ஏற்றான்..
சந்தித்தோம்
நடந்தோம் இருவரும்
அவரவர் நிலங்களில்
இடையே சுவர் இருந்தது.

வட்டமாய் ரொட்டி போல சிலவும்
உருளும் பந்துகளாக சிலவும்
வயலின் இரண்டு பக்கங்களிலும்
சிதறிக் கிடக்கும் குறும்பாறைகளை
சுவற்றில் பதித்து சமன் செய்ய
மந்திரவித்தை தான் செய்ய வேண்டுமோ?
பாறை பதித்து எம் முதுகுகள்
மறுபக்கம் திரும்பும் வரையேனும்
சுவற்றில் தங்கிவிடுங்கள் கற்களே!

கற்களை தாங்கிய கை விரல்கள் கடுத்திட
இதுவோர் வெளியரங்க விளையாட்டோ
மனதோரம் சின்ன வினாவொன்று
சுழன்று …சுழன்று…
தேடியது சுவரின் அவசியத்தை
அடுத்தவன் நிலமெல்லாம் பைன் மரங்களாக
ஆப்பிள் பழச்சோலை என்னதாக இருக்க

எனது ஆப்பிள் மரங்கள் என்றுமே
பழத்தோட்ட எல்லையைக் கடப்பதுமில்லை
பைன் மரக்கனிகளை உண்பதுமில்லை
என்றேன் பக்கத்து பண்ணைக்காரனிடம்.
‘நல்ல வேலிகள் நல்லுறவை வளர்க்கும்’
என்பதே அவனின் பதிலானது.
வசந்தகால குறும்பொன்று
குறுகுறுத்தது என் மனதில் ..அவனிடம்
கருத்தொன்றை திணிக்கவும் துடித்தது.

நிலங்களுக்கிடையே நல்லுறவு பெருகிட
தடுப்புச் சுவர்களுக்கு என்ன வேலை?
பயிர் மேயும் பசுக்கள் எங்கே?
நம்மிடம் தான் பசுக்கள் இல்லையே..
சுவரொன்றை எழுப்பும் முன்
சில கேள்விகள் என்னிடம் உண்டு
எதனைக் காக்க வேலியும் சுவரும்?
எதைத் தடுக்க சுற்றுச் சுவரும் தடுப்பும்?
சுவர் கட்டாதது யாரை காயப்படுத்துகிறது?

சுவரை விரும்பாத ஏதோ ஒன்றுள்ளது
அது …
தரைப்புழுதியாய் சுவற்றை மாற்ற நினைக்கிறது.
அது குறுந்தேவதைகளின்
பெருவிருப்பமென கூற என்னால் முடியும்.
மறுதலிக்க அவன் வரக்கூடும்.
உயர்த்திப் பிடித்த கைகளில்
கடினமான கற்கள்
உறுதியான பிடிப்பில்
கற்கால குகைவாழ் காட்டுமிராண்டியாக
இதோ அவன் என் எதிரில்

சூழும் இருளுக்குள் அவன் நகர்வு
எனக்குள்ளொரு காட்சியாக..
காடுகளின் கனத்த கருமையும்
மரங்களின் நிழல் நீட்சியும்
இந்த இருளுக்கு காரணமாகவில்லை..
அவன் தந்தையின் சொல் தாண்டி
அங்குலம் நகர மாட்டான்
நகர்வின்மையை பொக்கிஷமாய்
பொதிந்து கொள்கிறான் நினைவில்..
அவன் மீண்டும் சொல்கிறான்…
‘நல்ல வேலிகள் நல்லுறவை வளர்க்கும்’

மொழிபெயர்ப்பு : ராஜி வாஞ்சி, சங்க இலக்கியப் பாடல்களை எளிய புதுக்கவிதை வடிவிலும் சிறுகதைகளாகவும் எழுதி வரும் இவர். அவ்வப்போது பழைய ஆங்கிலக் கவிதைகளை மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார். அண்மையில் இவரது நூலான “ நீளிடைக் கங்குல்” – சங்ககாலமும் சமகாலமும் எனும் கட்டுரைத் தொகுப்பு வெளியானது. புதுக்கோட்டையில் பிறந்த இவர் இப்போது அமெரிக்காவில் ஹூஸ்டனில் வசித்து வருகிறார். ஆசிரியர் தொடர்புக்கு : –  shrivanchi@gmail.com.

கவிதை குறித்து
அமெரிக்க நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள பாஸ்டன் நகரும், அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் பண்ணைகள், கடுங்குளிர் காலத்தில், ஆண்டின் நான்கைந்து மாதங்கள் பனிப்போர்வைக்குள் மூழ்கி கிடக்கும். உறைபனி மண்ணை விரிவடையச் செய்து, வயல்களுக்கு இடையில் வேலியாக உள்ள கல்லால் ஆன சுவர்களையும் ஆட்டம் காண வைத்து விடும். அச்சுவர்கள் ஒன்றன்மேல் ஒன்றாக கற்கள் அடுக்கப்பட்டு கட்டப்பட்டவை. பனிக்காலம் விலகி, மெல்ல வசந்தகாலம் தலை காட்டத் தொடங்கும் போது, அடுத்தடுத்துள்ள பண்ணை உரிமையாளர்கள், இரு நிலங்களுக்கு இடையே பொதுவாக உள்ள சுவரை செப்பனிடுவார்கள் இதுவொரு வருடாந்திர பராமரிப்பு வேலை. ராபர்ட் ஃப்ராஸ்ட், இவ்வாறு ஒரு முறை தன்னுடைய பண்ணையில் உள்ள சுவரை செப்பனிட மெனக்கெடும் நேரம், அவர் மனதில் தோன்றிய எண்ணங்களே ‘Mending Wall’ கவிதை. ஆனால் அவர் கவிதையில் கூற வருவது இந்த வெற்றுச் சுவர்களைப் பற்றியது அல்ல என்பதை நாம் அறிவோம்.

– ராஜி வாஞ்சி

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

0

ஈக்வலைஸர்
*
காத்திருப்பை நிலவறை வரை
வெட்டிக்கொண்டே
போகிறேன்
பின்னும் மட்கிய நினைவு தப்பலில்
பிசுபிசுக்கிறது அர்த்தமின்மை

எப்போதுமே
நல்சுவாசம் வேண்டவில்லை

போதாமைகளை
எழுதி தீர்த்திட கையாண்ட முனைப்புகள் யாவும்
நோக்கங்களையே ரத்து செய்தவண்ணம்
குறைந்து ஒளிர்கின்றன

உங்களிடம் தருவதற்கோ பெறுவதற்கோ
இடம் இருக்கிறதா

அவை
தாள்கள்
தாள்கள்
மேலும் மேலும் தாள்கள்
புதிய வடிவத்தினை கொண்டிராத
தாள்கள்

இட வலம் என திசை நான்கிலும்
கீழும் மேலும் பக்கவாட்டு மற்றும்
எண்கோணங்களிலும்
சதா
டொட்ட் டட் டுட் டொட் டட் டட்
டட டட் டுட் டட் டடடட்

சீரான அலைவரிசை ஒழுங்கின்மையை
தப்பவிடாத
மென் தட்டச்சு சப்தத்தில் இருந்து தப்பிவிடவே
வெட்டியெடுத்து வீசிக்கொண்டிருக்கிறேன்
காத்திருப்பை

தனிமையை

மற்றும்
நீங்கள் தரவிருக்கிற அவகாசத்தையும்

***

முடிவிலியின் நீலப்பிரிகை
*
இப்போதும் வந்திருக்கிறாய்
என்னை வேடிக்கைப் பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறாய்
உடைகளை களைந்துவிட்டு சிகரெட் கேட்கிறாய்
பால்கனியின் சில்லிட்ட கம்பியில் உடலைத் தேய்க்கிறாய்

குளிர்ந்து உறைகிறது எனது காது மடல்
இம்சிக்கிறாய்

படியவில்லை உனது அடம்
உன்னைக் கொல்லும் கொலைக்கருவியைத் தேடுகிறேன்

அதனையே
உனது உடலுக்குள் இருந்து உருவி எடுக்கிறாய்
மின்னுகிறாய் கூர்மையாய்

மெல்ல என்னருகே வந்து
எனது இதயத்தில் செலுத்துகிறாய்
கடைசி சுவாசம் என நம்பி வாயைத் திறக்கிறேன்
முத்தமிடுகிறாய்

என்னிலிருந்து பிரிந்து நான் போய்க்கொண்டிருக்கிறேன்

எனது இருக்கையில் உட்கார்ந்தபடி
நான் மாயமாவதை
ஆவலோடு வேடிக்கைப் பார்க்கிறாய்

நாளையும் வருவேன்
உன்னை வேடிக்கைப் பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்துவாய்
நான் உடைகளை களைந்து விட்டேன்
அப்போதே

***


ஒரு முடிவுக்கு வரலாம்
*
ஏற்றுக்கொள்ளத்தக்க முட்டாள்தனங்களை
பரிசளிக்கும் உன்மத்தத்தை
சிறு பெட்டியில் அடைத்து
எனது மேஜை மீது வைத்திருக்கிறேன்

இந்த அறையை விட்டு
நீங்கும்போது
எடுத்துப் போய்விடுங்கள்

உங்கள் அனுபவம் உங்களுக்கானது
உங்கள் சந்தேகங்கள் உங்களுக்கானது
உங்கள் வாக்குறுதிகள் உங்களுக்கானது
உங்கள் தப்பிதங்கள் உங்களுக்கானது

மேற்கொண்டு
ஓர் உரையாடலை வீணாக்கும் பொருட்டு
என் கதவின் காலிங் பெல்லை
அழுத்தும்
பாசாங்குகளோடு

இனி
உங்கள் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்

***


சுமை
*
புராதன இதயத்தின் அறைச்சுவர் மீது
கால் வைத்து
எக்கி
நயமாக உருவி எடுக்கிறேன்
ஒரு வார்த்தையை

மன உச்சியிலிருந்து

உங்கள் பேரம் படியும்வரை
அடிவாரம் நோக்கி
உருண்டு வர

கால அவகாசம் வேண்டும்

அதுவரை
கழுதைகளை மேய்ச்சலுக்கு விரட்டிவிடுங்கள்

***


முன்பொரு பாலையில் செத்துக்கிடந்த நெய்தல்
*
கானல் நீரின் விளிம்பில் துள்ளுகிறது
வெளிச்ச மீன்

செதில்களை இறைஞ்சும் பொழுதொன்றை
துக்கத்தில் மிதக்க விடுகிறாய்

ஒரு பெக் மதுவில் குமிழ்
உடைக்கிறது
ரசம் உய்ய
பெருமௌனத்தை

கபடுகளின் அடுக்குத் தொடரில் கவனமற்று
சரிந்து இறங்குகிறேன்

நீர்மையை மனங்கொண்டு
துடுப்பேதும் இல்லாமலே நீளுகிறது
இப்போதும்

ஒரு
பழைய விரல்

***


கவிதைக்காரன் இளங்கோ : கணையாழியின் துணை ஆசிரியராகப் பணிபுரிகிறார். ஆசிரியரின் படைப்புகள்: பனிகுல்லா, மோகன் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், ப்ரைலியில் உறையும் நகரம், 360 டிகிரி, கோமாளிகளின் நரகம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் ஏழு பூட்டுக்கள் எனும் நாவலும், திரைமொழிப் பார்வை எனும் கட்டுரை நூலும் வெளியாகியுள்ளன.. தொடர்புக்கு- elangomib@gmail.com .


ஆயிரம் பொன்!!!

0

யோகேஷ்வர்

முதல்கதை – 02

ஆயிரம் பொன்!!!

ங்கும் பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும் புல்வெளிகள். வயலை ஒட்டியே காடுகளும், மனிதன் மற்றும் காட்டு விலங்குகளும் சேர்ந்து வாழும் ஒரு சமஸ்தானம். இது வியட்நாமின் கிராமங்களில் மட்டுமே பார்க்க முடியும். இந்த மக்களின் ராபின் ஹூடாகவும், வெளியுலகிற்கு தீவிரவாதியாக தெரியும் பாபுவைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். மக்களின் நலன் கருதி அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் ஒரே காட்டு விலங்கும் அவன் தான். வியட்நாமில் இருக்கும் ஒரு வளர்கின்ற தாதாவாகவும் சொல்லாம். ஆனால் அடியாட்களோ மிகக்குறைவு. காரணம், இவன் மனதில் தவறு என்று தெரிந்த உடனே கொன்றுவிடுவான். இதனாலேயே இவனிடம் வேலைக்குச் சேருவதை பலரும் மறுத்தனர். ஆனால் மக்களுக்கு உதவும் நல்ல எண்ணம் படைத்தவன். அதான் சொன்னேன் இவனை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் என்று……..

இவனுக்கு அங்க அடையாளங்கள் என்று சொன்னால் இடுப்பில் மரு, உதட்டில் மச்சம் என்று சிம்ரன் போல் இல்லாமல் பரட்டைத்தலை, ஒரு நாளைக்கு 3 சிகரெட்க்கு மேல் குடித்து கருப்பு நிறத்தில் காட்சியளிக்கும் உதடுகள். 

“அண்ணே எழுந்திரிங்க!!!” பாபுவை மென்மையாக உசுப்பினான் மயில்வண்ணன்.

“சும்மா எழுப்புடா” என்று சொன்னான் கோவிந்தன்.

“நீ ஏன் சொல்ல மாட்ட, போன வாட்டி ‘உங்க பக்கத்துல கட்டுவிரியன் இருக்கு பார்த்து எழுந்திரிங்க’ என்று எழுப்பி சொன்ன பழனிய சுட்டுக் கொன்ற கொடூர கொலை சம்பவம் இன்னும் என் கண்ணுல இருக்கு அவளோ சீக்கிரம் மறந்து போறதுக்கு அது என்ன அரசாங்கம் சொல்லுற அறிக்கையா என்ன” என்று சொன்னான் கோவிந்தன்.

தூக்க கலக்கத்தில் எழுந்தான் பாபு. அவனை அப்படியே அலேக்காக ஜீப்பில் தூக்கி உட்கார வைத்தான் பயில்வான் பரமசிவம்.

“எங்கடா காலையில கூட்டிட்டு போறீங்க, என்னைய கொலை பண்ண பாக்கிறீங்களா” என்று சொன்னான் பாபு. அதை உற்று நோக்கி ஒருவிதமான படபடப்பில் கவனித்தான் கரன். நிகழ்வு நடந்த இடத்திற்கு வந்தார்கள். ஒரு சரக்கு பாட்டிலை கையில் எடுத்து குடித்துக் கொண்டே வந்தான் பாபு.

டேய் !!!! இது எப்படி?? என்று பாபு, மயில்வாகனை பார்த்து கேட்டான்.

“அண்ணே நம்ம எதிரி நாடான U.S காரனுங்க தான் இதுக்கெல்லாம் காரணம். அவனுங்க 20 லட்சம் கண்ணிவெடி நம்ம மண்ணுக்கு அடில பொதச்சு வச்சிருக்காங்கனு உங்களுக்கு தெரியாதா” என்று சொல்லிக் கொண்டிருந்த மயில்வாகனனை திடீரென கண் இமைக்கும் நேரத்தில் வந்த ஒரு புல்லட் அவனை மண்ணில் சாய்த்தது. அவன் துடித்துக் கொண்டே இருக்க, அருகில் சென்று “ஏன்டா கேன பயலே உனக்கு குளிர் விட்டு போச்சா, நமக்கு தெரிஞ்ச பையன் புதுசா வேலைக்கு சேர்த்துகிட்டா என்கிட்டேயே தெனாவெட்டா பேசுற. இங்க என்னத்தவிர யாரும் அதிகமா பேச கூடாது.. இவன கொண்டுபோய் எங்கையாது எரிச்சுடுங்கடா” என்று சொல்லிவிட்டு கரன் பக்கம் திரும்பினான் பாபு.

“சரிடா.. நீயாவது சொல்லுடா இங்க என்ன நடந்துச்சு?”.

“அது வந்து ….. அது வந்து.….”

“ப்ச், இப்ப சொல்லப் போறியா இல்ல உன்னையும் அவன் கூட அனுப்பவா.” என்று கேட்க, அவன் கண்களில் ஒரு மரண பயம் தெரிந்தது.

“அது ஒன்னும் இல்ல அண்ணே! அந்த எமகாரனுங்க வைச்ச கண்ணிவெடில காலு வச்சு பாவம் அநியாயமாசெத்து போச்சுண்ணே.,”

“டேய் என்ன கருமம்டா இது.. நாத்தம் தள்ளுது” என்று சொன்னான் பாபு.

பெரிய மாமிசத் துண்டுகள் அந்த இடம் முழுவதும் சிதறி கிடந்தது. அந்த விலை மதிப்பில்லாத ஒன்றை பார்த்த பிறகுதான் முடிவு செய்தான் அது ஒரு யானை என்று. பொதுவாக இது வியட்நாம், கம்போடியா, லாஒஸ் போன்ற இடங்களில் நடக்கக்கூடிய சாதாரண விஷயம் தான். யானைகள் எப்போதும் கூட்டமாகத் தான் அலையும். குட்டி ஆண் யானை பெரிதானதும் தாய் யானை அவைகளைத் துரத்தி விடும். இதற்கு காரணம் ஒரே கூட்டத்துக்குள் இனப்பெருக்கம் நடந்து பிறக்கும் யானை ஏதோ ஒரு குறையோடு பிறக்கும். நம் மனித இனத்துக்கே ஒரே சொந்தத்தில் திருமணம் செய்து குழந்தை பெற்றால் குழந்தை குறையுடன் பிறக்குமாம் என்ற ஒரு பேச்சு இன்னும் வழக்கில் இருக்கு. ஒரே குடும்பத்துக்குள் நடக்கும் இனப்பெருக்கத்தை INBREEDING என்று சொல்வார்கள். இதனால் மரபணுக்களில் மாற்றம் நடந்து பிறக்கும் போதே ஏதோ ஒரு குறைபாடு, அல்லது ஏதோ ஒரு குறையோடு பிறக்கும். என்னதான் தாய் யானை துரத்திவிட்டாலும் அந்தக் கூட்டத்தைப் பின்தொடர்ந்து வரும் அந்த இளம் ஆண்யானை பின்பு வேறு வழியில்லாமல் கூட்டத்தைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டு பிரிந்துவிடும். இப்படிப் பிரியும் யானை உணவு தண்ணீர் தேடி கண்ணிவெடியில் கால் வைத்து இறந்துவிடும். சில அதிர்ஷ்டசாலி யானைகள் இது மாதிரி துரத்திவிடப்பட்ட ஆண் யானைக் கூட்டத்திற்கு வந்து சேரும். இதை நகைப்புடன் சொல்ல வேண்டும் என்றால் அது ஒரு BACHELOR’S CLUB.  பரிணாம வளர்ச்சியில் யானைகள் பெரிய புத்திசாலிகள் தான். அவர்கள் தான் காடுகளை உருவாக்கியவர்கள் எனும் மரியாதையுடன் இன்றும் பேசப்படுகிறார்கள். வியட்நாம், லாஒஸ், கம்போடியா போன்ற இடங்களில் அமெரிக்கா ராணுவம் ஒரு குழு அமைத்து கண்ணிவெடிகளை பூமிக்கடியில் புதைத்து வைத்தார்கள். இது இரண்டாம் இந்தோ-சீனா போரில் புதைக்கப்பட்டவை. ஒருசில கண்ணிவெடிகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் ஏராளமான கண்ணிவெடிகள் கண்டுபிடிக்காமல் இருக்கிறது.

“அண்ணே இத இப்ப என்ன பண்றது” என்று கரன் கேட்க,

“டேய் இந்த தந்தத்த பார்க்கும் போது எவ்வளவு அழகாக இருக்கு. சீனால இருக்கும் கள்ளச்சந்தைல இத நல்ல விலைக்கு விற்கலாம். எவ்வளவு நாள் தான் நானும் கஞ்சா, பெண் கடத்தல், தங்கம் திருடுதல், ஆளைப் போட்டுதள்ளுதல்னு இருக்கிறது. ஏதாவது புதுசா செஞ்சா மட்டும் அந்த “ச்ஹி லீ” கேங்க விட பெரியாளா வாழ முடியும். அப்ப தான் ஊர்ல ஒரு பெரிய தலக்கட்டு போல இருக்க முடியும்” என்று சொன்னான் பாபு.

“ச் ஹி லீ எல்லாம் ஒரு ஆளே இல்லை. அவன் எல்லாம் இப்பதான் அண்ணே..  நம்ம எப்போதிலிருந்து தொழில் பண்றோம்” என்றான் பரமசிவம்.

“அப்படி யாரையும் எளிதாக நினைக்காதே. இப்போ ஊருல அவன பார்த்தும் பயப்படுறாங்க மக்கள்”

கோவிந்தன், கரன் மற்றும் மயிலவாகனன் தான் வேலைக்கு சேர்ந்த புது ஆட்கள். இவர்கள் சேர்ந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை. மயில்வாகனன் அதிபுத்திசாலி. அதான் சீக்கிரமே இறந்துவிட்டான், கரன் விவேகமானவன், கோவிந்தன் ஒரு பயந்தாங்கோலி.  ஆனால் பயில்வான் பரமசிவமும் பாபுவும் இந்தத் தொழிலுக்கு வரும் முன்பிலிருந்து நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரின் வீட்டையும் அமெரிக்க ராணுவம் தரைமட்டமாகச் சிதைத்து விட்டது. இவர்கள் இருவரும் அவர்களை எதிர்த்துப் போராடிய நபர்களில் முக்கியமான நபர்கள். மக்கள் ஆதரவை அதிகமாக பெற்று வியட்நாமில் முக்கிய புள்ளிகளாக மாறினார்கள்.

அந்த தந்தத்தை அரம் பயன்படுத்தி வெட்டி எடுத்து, நன்கு கழுவி ஒரு பெட்டிக்குள் வைத்தான் பாபு.

“டேய் எல்லாரும் வாங்கடா.. நாம சீனா கிளம்புவோம்” என்று கூறினான் பாபு. இந்தமுறை பயில்வானை வரவேண்டாம் என்று சொல்லிருந்தான். அதற்கு காரணம் புதிதாக தொழில் செய்ய வந்தவர்கள் தொழிலை அவன் இடத்திலிருந்து கற்றுக்கொள்ளட்டும் என்பதே.

வியட்நாமில் “டா நான்ங்” என்ற நகரத்தை அடைந்தார்கள். பெரிய விசாலமாகக் காட்சியளித்தது “பா னா” மலைகள். பார்த்து பிரமித்தான், சிறு வயதில் பார்த்த அதே காட்சி, செடிகொடிகளின் பச்சை நிறத்தில் சூரியனின் மஞ்சள் நிறமும் கலந்த ஒருவிதமான சாயம் எத்திசையிலும் பரவியிருந்தது. பிரெஞ்சுக்காரர்களால் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டிருந்த கோட்டை.

“இவ்வளவு நாட்கள் இந்த ஊரில் தான் இருந்தேனா?? ஏன் என் மர மண்டைக்கு இது எட்டவில்லை. என்ன ஒரு அற்புதமான காட்சி”. தன்னை ஒரு குழந்தை போல எண்ணிக் கொண்டிருந்தான் பாபு.

திடீரென வண்டி நிறுத்தப்பட்டது.

“அண்ணே.. DA NANG இண்டர்நேஷனல் ஏர்போர்ட்” வந்திருச்சுண்ணே” என்று கரன் கூறினான்.

அந்த பெட்டியை கையில் வைத்துக் கொண்டு வண்டியில் இருந்து இறங்குவதற்கு கடினமாக இருந்தது. கீழே இறங்கி சோம்பல் முறித்து பேண்டை சரிசெய்தான் பாபு. சீனாவிலிருந்து திரும்பி வரும்போது கைநிறைய பணமூட்டைகளுடன் வருவோம் என்று சந்தோசத்தில் இருந்த பாபுவை நோக்கி வந்த ஒரு பழைய மஸ்தா பீ சிரியஸ் ட்ரக் அவன் தொடையில் அடித்து ஆகாயத்தில் தூக்கிப் பறக்க விட்டது, டரக்கின் மேற்பரப்பில் மோதி விழுந்து, தரையில் உருண்டான். எவனோ இரண்டு பேர் அந்த காரை விட்டு இறங்கி அவனிடம் இருந்த தந்தத்தை எடுத்து சென்று விட்டார்கள். இது எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விஷயம். அவன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.

“யாராவது வாங்கடா!!” என்று கதறினான்.

“உன்ன கொலை செய்ய தான் நாங்க இவ்வளவு நாள் காத்துக் கெடந்தோம் பாபு.”

“ நாங்க யாரு தெரியுமா? ச்ஹி லீ யோட ஆளுங்க. உன்ன கண்காணிக்க தான் எங்க பாஸ் இங்க அனுப்பினாரு.”

“இதுல நீ தந்தம் வித்து பெரியாளா வளர்ந்திடுவனு உனக்கு நெனப்பு வேற, தனியா அனாதை பொணமா சாவுடா” என்று கரனும் கோவிந்தனும் இகழ்ந்துவிட்டுச் சென்றார்கள்.

“எவன் கிட்டையோ வேலை செய்தது பிடிக்கவில்லை என்று சொல்லி என்கிட்ட வேலைக்கு சேர்ந்தீங்க. அதையும் நம்பி நானும் உங்களை வேலைக்கு சேர்த்தேன்” என்று முனகிக் கொண்டே இருந்தான் பாபு.

ரோடு முழுவதும் ரத்தம் ஓடியது. வலது காலில் தொடை பகுதியிலுள்ள FEMUR என்கிற எலும்பு முறிந்து விட்டது. அவன் மீது பிரம்மாண்டமான கரிய நிழல் ஒன்று படியத்தொடங்கியது. அது தந்தங்களைக் கொண்டு பற்றிக்கொள்ள ஏதுவாய் குனிந்தது. அதைப் பற்றி எழ முயற்சிக்கையில் அவன் கையில் திரவமாகப் பிசுபிசுத்தது. தன்னுடையது தான். ரத்தத்தைப் பார்த்ததும் மயக்க நிலைக்குச் சென்றான்.

உடனே அவனை யார்யாரோ காப்பாற்ற வந்தார்கள். அதில் ஒருவர் அவனுடைய நாடியை பார்த்தார். கண்ணிமையைத் திறந்து பார்த்தார். வெயில் கண் இமையைச் சுறுருக்கின. வேக வேகமாக அவனை ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள். வண்டி வேகமாகப் பறந்தது. சுவாசம் வரவேண்டும் என்று ஏதோ வைத்தார்கள். பாபுவுக்கு மூச்சு திணறியது. உடனே அந்த மருத்துவருக்கு அழைப்பு வந்தது.

“இப்பதான் நடந்தது…………
ஏதோ கார் விபத்து……………
ம்ம்ம்… ஃப்ரெஷ்ஷா இருக்கு………”

ஆம்புலன்ஸில் இருந்தபடியே சில பேரங்கள் பேசப்பட்டது. பேரங்கள் இவனுக்கு பரிட்சமையானவையாகவும் அதே சமயம் புதிதாகவும் இருந்தது.

அவனுக்கு மேலும் மேலும் மூச்சு திணறியது. தலையில் யானையின் பிளிறல் சப்தம்

“கார்பன் மோனாக்சைட் இன்னும் இரண்டு சிலிண்டர் வாங்கணும். இது தான் கடைசி சிலிண்டர். சார் நாம அடுத்து என்ன பண்ணப் போறோம்” என்று கேட்டார் அந்த மருத்துவ உதவியாளர். போதிய அளவு செலுத்தாததால் அவன் சிறிது நினைவுடனே இருந்தான்

முழு உயிரும் போகும் முன்னரே வேலையை ஆரம்பித்தார்கள். அவனுக்கு ஒன்று சொல்லத் தோன்றியது… “ஒரே ஒரு வித்தியாசம் தான் விலங்கு – வெளி பாகம். மனிதன் – உட்பாகம்” யாரிடமாவது…

**

யோகேஷ்வர்
Sapien.yogi@gmail.com – திண்டுக்கல்லில் இளங்கலைப் படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வரும், இவரது முதல் கதை இது.

ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு – பகுதி 09

0

சட்டவாக்க அரங்கு – சமூகத்திற்கான கலைச் செயற்பாடு

– ரூபன் சிவராஜா

(இத்தொடரின் முந்தைய பகுதிகளை வாசிக்க.. இங்கே சொடுக்கவும்)

ட்டவாக்க அரங்கம் (Legislative Theatre) என்பது அகஸ்டோ போல் வடிவமைத்த ஒடுக்கப்பட்டோருக்கான அரங்க வடிவங்களில் ஒன்று. இறுதியானதும் கூட. நேரடியான சமூக அரசியல் செயற்பாட்டினைக் கொண்ட வடிவம் இது. அதன் ஆற்றுகைச் செயல்முறையும் அடைவும் அரங்கக் கலைக்கு சமூகப் பொறுப்பினையும் அரசியல் கடப்பாட்டினையும் அர்ப்பணிப்பினையும் கொடுக்கின்றது. ஒடுக்குமுறைக்கெதிரான கலை மற்றும் ஜனநாயக-அரசியற் செயற்பாடு. இதன் அடைவு என்பது உள்ளுராட்சி சபை நகர சபை பிரதேச சபை நாடாளுமன்றம் ஆகியவற்றில் சட்டங்களாகவும் சட்டத்திருத்தங்களாகவும் நிறைவேற்றப்படக்கூடிய உத்திகளையும் செயல்முறைகளையும் கொண்டுள்ளன.

1993இலிருந்து 1996 வரையான காலப்பகுதியில் பிரேசிலின் Rio de Janeiro மாநில சட்டமன்ற உறுப்பினராக Boal நேரடி அரசியலில் ஈடுபட்டபோது பல முக்கிய சட்டங்களும் திருத்தங்களும் இந்தச் சட்டமன்ற அரங்கச் செயற்பாட்டினூடாக நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கும்  நலன்களுக்கும் பாதுகாப்பிற்குமான சட்டங்கள் அவை.

சட்டவாக்க அரங்க வடிவம், செயற்பாட்டுப் படிநிலைகள், சட்ட உருவாக்கப் படிநிலைகள் தொடர்பாக கட்டுரையின் இனிவரும் சில பகுதிகள் அமைகின்றன.

ஜனநாயக சமூகத்தில் குடிமக்கள் தமது பாராளுமன்றத்தில் வெறுனே பார்வையாளர்களாக இருக்கக்கூடாது. அவர்கள் செயல்களினூடாகத் தமது வாழ்விற்கான பொறுப்பினை எடுக்கவேண்டும். நிலைமாறு ஜனநாயகம் என்பது உரையாடல், ஊடாட்டம், மாற்றம் என்பவற்றைக் குறிக்கிறது’ என்கிறார் Boal.

நேரடி மற்றும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் வரம்புகளை விளங்கிக் கொண்டு கூட்டுப் பிரதிபலிப்பு உரையாடல் மற்றும் மாற்றத்திற்கான வாய்ப்புகளையும் வெளிகளையும் உள்ளடக்கிய ஐனநாயக உத்திமுறைகளை சட்டவாக்க அரங்கத்தில் வடிவமைத்தார். சட்டவாக்க அரங்கு என்பது அடிப்படையில் ‘மக்கள் அரங்கிலிருந்தே’ (Forum Theatre) பரிணமிக்கிறது. ‘மக்கள் அரங்கு’ தான் மேலதிக செயற்பாட்டு உத்திகளோடு அடுத்த படிநிலைக்கு நகர்த்தப்பட்டு சட்டவாக்க அரங்காக வடிவமாற்றம் அல்லது விரிவாக்கம் பெறுகின்றது.

மக்கள் அரங்கின் இலக்கு, நம்பிக்கையைக் கட்டியெழுப்பி, முரண்பாடுகளுக்கான புதிய, மாற்றுத் தீர்வுகளை நிகழ்த்திக்காட்டலூடாக வெளிப்படுத்தி, மாற்றம் நோக்கிய சிந்தனையைத் தூண்டுதலாகும். முரண்பாட்டுகளைக் கொண்ட கருப்பொருளை காட்சிபூர்வமாக வெளிக்கொணரவும் அதன் முரண்பட்ட விருப்பங்களை விளங்கிக் கொள்ளவும் வழிவகுக்கிறது. சட்டவாக்க அரங்கத்தின் இலக்கு ஒடுக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகளைச் சட்டரீதியாகச் சாத்தியப்படுத்துதலும் நலன்களைப் பாதுகாத்தலுமாகும். முன்னையது கலையின் ஊடாக தனிப்பட்ட மனங்களிலும் சிந்தனையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி. பின்னையது நடைமுறையில், அரசியல் அதிகாரத்தில் நிறுவனரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கானது. விளிம்புநிலை அல்லது ஒடுக்கப்பட்ட தரப்பினரின் விருப்பங்களையும் அபிலாசைகளையும் நிலவுகின்ற ஆட்சி நிர்வாக முறைமைக்குள் புதிய சட்டங்களாக அல்லது சட்டத்திருத்தங்களாக முன்மொழிதல் என்பதே சட்டவாக்க அரங்கின் நோக்கம்.

‘மக்கள் அரங்கில் பார்வையாளர்கள் ஆற்றுகையாளர்களாக மாறுகின்றனர். சட்டவாக்க அரங்கில் குடிமக்கள் சட்டவாக்கிகளாக மாறுகின்றனர்’ என்கிறார் Boal.

சட்டவாக்க அரங்கம் நிகழ்த்தப்படும் முறைமை, வடிவம், உத்தி, இறுதி அடைவு சார்ந்து மூன்று முக்கிய படிநிலைகளைக் கொண்டுள்ளது.

1)         கூட்டுப் படைப்பாக்கம் (Collective Creation)

2)         மக்கள் அரங்கு, எழுத்துமூல முன்மொழிவு (Forum Theatre and written proposals)

3)         சட்ட உருவாக்கத்திற்கான கருத்தமர்வு (Legislative phase)

இந்த அமர்வுகளில் குறிப்பிட்ட அரங்கச் செயற்பாட்டாளர்கள் (பங்கேற்பாளர்கள்/ஆற்றுகையாளர்கள்), முதன்மைப் பாத்திரங்களாக (Protagonist) செயற்படுவர். ஆற்றுகையாளர்கள் (Actors), நெறியாளர்(Joker), பொதுமக்கள் (Spec-Actors),சட்ட மற்றும் கருத்தியல் நிபுணர்கள் இந்த அரங்கச் செயற்பாட்டுப் படிநிலைகளுக்குள் இயங்குவர். பங்கேற்பின் வெவ்வேறு படிநிலைகள் வெவ்வேறு தாக்கங்களை உண்டுபண்ணுகின்றன.

கூட்டுப் படைப்பாக்கம்

‘கூட்டுப் படைப்பாக்கம்’ எனும் முதற்படிநிலையில் குழுநிலை உருவாக்கத்துடன் ஆற்றுகையாளர்களுக்கான செயற்பாடுகள் தொடங்குகின்றன. குழுவின் உறுப்பினர்களுக்கிடையிலான நம்பிக்கையை உருவாக்குதல், குழு ஒத்திசைவினை ஏற்படுத்துதல் இப்படிநிலையின் அடிப்படை நோக்கங்கள். பங்கேற்பாளர்கள் இலகுவாகவும் சுதந்திரமாகவும் ஒருவரோடொருவர் நெருங்கி ஊடாடுவதற்கான ‘வெளி’, விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகள் மூலம் உருவாக்கப்படுகின்றன. அந்த வெளியானது தனித்த மற்றும் கூட்டுப் படைப்பாக்கத்திற்கான வெளியாகப் பரிணமிக்கிறது. இந்த வகையான இலகுபடுத்தல் (Warmup) செயற்பாடுகள் எந்தவொரு நாடக, ஆற்றுகை, கலை வெளிப்பாட்டு ஒத்திகைகள் மற்றும் நிகழ்த்துகைகள், படைப்பாக்கங்களுக்கும் இன்றியமையாதவை.

இத்தகைய ஆரம்பநிலைத் தயார்ப்படுத்தல்களின் பின் பலரைப் பாதிக்கின்ற ஒடுக்குமுறை அல்லது சமூகப்பிரச்சினை சார்ந்த கருப்பொருள் ஒன்றினை நெறியாளர் அறிமுகப்படுத்துவார். ஆற்றுகையாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட கருப்பொருளுடன் தொடர்புடைய வன்முறை, ஒடுக்குமுறை சார்ந்த உதாரணச் சம்பவங்களை அறிமுகப்படுத்துவர். அவை ஆற்றுகையாளர் நேரடியாக அனுபவித்த அல்லது வேறு வழிகளில் அறிந்த கதை அல்லது சம்பவமாக இருக்கும். அவை பற்றிய கலந்துரையாடல் இடம்பெறும். ஒவ்வொரு கதை/சம்பவமும் மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றிலிருந்து ஒரு கதை/சம்பவம் ஆற்றுகைக்காகத் தெரிவுசெய்யப்படும். தொடர்ந்து தெரிவுசெய்யப்பட்ட கதை அதனை முன்மொழிந்தவரின் மேலதிக பங்களிப்புடன் ஆற்றுகைக்கான தயார்ப்படுத்தல் இடம்பெறும்.

அரங்க ஆற்றுகைப் பகுதி பிரச்சினையின் அடிப்படைக் கூறுகளை விபரிக்கும் வகையிலும் கற்பனை மற்றும் குறியீட்டு அம்சங்களைத் தாங்கியதாகவும் இருக்கும். கற்பனையும் குறியீடும் நாடகப்படைப்பாக்கத்தில் முக்கியமானவை. அவற்றின் மூலமே கலையினதும் நாடகத்தினதும் மொழி முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதில்தான் மக்கள் அரங்கிற்கான கூட்டுப்படைப்பாக்க மற்றும் கலைத்துவ அம்சங்களுடன் நாடக எழுத்துரு, ஆற்றுகையாளர் தெரிவு, பின்னணி இசை உட்பட்ட கூறுகளும் தீர்மானிக்கப்படுகின்றன.

அரங்க ஆற்றுகைகளின் அர்த்தம், சக்தி, தாக்கம், புரிதல் என்பன பரந்துபட்டவை. மாறுபட்டவையும்கூட. ஒரு பக்கம் கலைவெளிப்பாடு, படைப்பாக்கம், ஆற்றுகை, பார்வையாளனுக்கான காட்சியனுபவம், சிந்தனைத் தூண்டல், சமூக மாற்றத்திற்கான கருவி. மறுபக்கம் அரங்க ஆற்றுகைக்கான தயார்ப்படுத்தல்கள் அரங்கப் பயிற்சிகள், விளையாட்டுகள், ஒத்திகைகள் கூட்டுப்படைப்பாக்கத்திற்கான களமாகவும் தூண்டுதலாகவும் அமைகின்றது. அது அரங்க மொழியின், கலை மொழியின், நாடக மொழியின் மொத்த வெளிப்பாட்டினைப் பொறுத்து அதன் சக்தி, தாக்கம், அர்த்தம் மாறுபடுகிறது. மொழியின் மொத்தக் கூறுகளைப் பொறுத்து அரங்கம் ஏற்படுத்தும் தாக்கம், கடத்தும் உணர்வு, அறிவு, கலாச்சார அம்சம்களைப் பொறுத்து வெவ்வேறு பரிமாணங்களை அடைகின்றது. முரண்பாட்டின் தாக்கத்தையும் உணர்வுபூர்வமான அம்சங்களையும் காட்சிபூர்வமாக மீளுருவாக்கம் செய்ய சொற்களற்ற தொடர்பாடல் செய்கைகளான உடல் அசைவுகள், நெருக்கம், குரலின் தொனி, முகபாவங்கள் என்பன முக்கியமானவை. மொழியின் கூறுகள் என்பவை உரையாடல் மொழியைக் குறிப்பதன்று. கலையின் மொழியைக் குறிப்பது. கலையின் மொழி என்பது பல்பரிமாணம் கொண்டது.

மக்கள் அரங்கு – நிகழ்த்துகை, எழுத்துமூல முன்மொழிவு

இரண்டாவது படிநிலையில் மக்கள் அரங்கு நிகழ்த்துகையும் எழுத்துமூலமான முன்மொழிவுகளின் கையளிப்பும் இடம்பெறும். ஆற்றுகை நிகழ்த்தப்படுவதற்கு முன்னர் எழுத்துமூலமான தீர்வுகள் முன்வைக்கப்படும். இந்தக் கட்டத்தில் அரங்க வெளிக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். பொதுமக்கள் அரங்க வெளிக்குள் பிரவேசிக்கும் போது அவர்களின் கைகளில் பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்களுடைய அட்டைகள் வழங்கப்படும். (ஆற்றுகைக்குப் பின்னர் எழுத்துமூலம் கையளிக்கப்பட்ட தீர்வுகள் மீதான வாக்கெடுப்பிற்கு அந்த அட்டைகள் பயன்படுத்தப்படும்.) மக்கள் அரங்கின் உத்தி மற்றும் நிகழ்த்துகை முறையினை அறிமுகம் செய்து, சட்டவாக்கப் படிநிலையை நெறியாளர் விளக்குவார்.

எடுத்துக்கொண்ட கருப்பொருள் ஒரு உண்மையான சமூகப் பிரச்சினையை, முரண்பாட்டினை, ஒடுக்குமுறையைப் பிரதிபலிக்கின்றதா எனப் பார்வையாளர்களின் அபிப்பிராயங்களும் மதிப்பீடுகளும் உள்வாங்கப்படும். முரண்பாட்டுக்கான சாத்தியமான தீர்விற்கான பரிந்துரைகளும் அவர்களிடமிருந்து கோரப்படும். பார்வையாளர்களின் தலையீடு அனுமதிக்கப்படும். அரங்கில் பார்வையாளர்கள் ஆற்றுகையாளர்களாக மாறுவர். (இந்தத் தொடரின் ‘மக்கள் அரங்கு’ தொடர்பான முன்னைய கட்டுரையில் அதன் நிகழ்த்துகை முறைமை, வடிவம்,உத்திகள் தொடர்பான விபரிப்புகளைக் காண்க). நிகழ்த்துகையின் நிறைவில் பார்வையாளர்களும் தீர்வுக்கான தமது முன்மொழிவுகளை எழுத்துமூலம் வழங்குகின்ற முறைமையுள்ளது.

சட்ட உருவாக்கம்

மூன்றாவது படிநிலையில், முன்மொழியப்பட்ட பரிந்துரைகள் மீதான தெரிவும், மொழிசார்ந்த செழுமைப்படுத்தலும் (சட்டமன்ற மொழி) இடம்பெறும். முதலில் அரங்கக்குழுவிலுள்ள சட்டத்துறை வல்லுனர்கள், அப்பரிந்துரைகள் நிலவுகின்ற சட்ட அமைப்பியல் வரையறைகள் விழுமியங்களுக்கு உட்பட்டதா என ஆராய்வார்கள். தொடர்ந்து அவற்றைச் சுருக்கியும் சாராம்சப்படுத்தியும் பொதுமக்களுக்கு விளக்கி, அவற்றின் மீதான வாக்கெடுப்பிற்கு விடப்படும்.  வாக்களிப்பின் பின் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகள், அரசியல்வாதிகள் மத்தியில், சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பரப்புரை செய்யப்படும். சட்ட மன்றத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் மத்தியில் வாக்களிப்பிற்கு விடப்பட்டு, பெரும்பான்மையைப் பெறுமிடத்து அவை தீர்மானமாக நிறைவேற்றப்படும். சட்ட வரைபின் இறுதிப்படிநிலை பாரிய பங்களிப்பினைக் கோருகின்ற விடயமாகும். நடைமுறை யதார்த்தம் பற்றிய நுண்ணறிவும் பரந்த பார்வையுமுடைய முழுமையான புரிதலுக்குரிய வகையில் சட்டவாக்க அரங்கின் செயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

(தொடரும்..)

ரூபன் சிவராஜா – தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது.

பெருந்தொற்று – டினோ புஸ்ஸாட்டி

0

தமிழில்: நரேன்

டினோ புஸ்ஸாட்டி (Dino Buzzati) – (1906-1972) : இத்தாலிய எழுத்தாளர். இவர் தன்னுடைய எழுத்துலக வாழ்க்கையில் ஒரு பத்திரிக்கையாளனாக நுழைந்து நாவல்கள், சிறுகதைகள், ஓவியம், நாடகங்கள், கவிதைகள் என பல்துறையில் மிகப் பிரபலமாக விளங்கியவர். இவருடைய நாவல்களும் சிறுகதைகளும் மீயதார்த்தவாதத்தையும் குறியீட்டியத்தையும் இத்தாலிய இலக்கியத்திற்கு அறிமுகப்படுத்தியது. முக்கியமாக அவரது எழுத்துகளில் மேற்படரும் அபத்தம் இவரைத் தனித்துவமான புனைவிலக்கியவாதியாக முன்னிறுத்தியது. தான் ஒரு ஓவியன் என்பதால் அவரே காமிக்ஸ் புத்தகங்களையும் உருவாக்கினார். இத்தாலிக்கு வெளியே பிரான்ஸில் மட்டுமே பிரபலமாக அறியப்பட்ட இவர் தற்போதுதான் ஆங்கில வாசக உலகம் இவரின் படைப்புகளை மெல்ல கவனிக்கத் தொடங்கியிருக்கிறது.

இவரின் சிறுகதைகள் நாம் அன்றாடம் காணும் உலகின் சிதைவை மிகவும் விசித்திரமானதொரு உணர்வுடன் நிறுவுகிறார். மெல்லிய அங்கதத்துடன் நம் வாழ்வின் நகை முரண்களை யதார்த்தமாகச் சொல்லிச் செல்பவை இவரின் கதைகள். எளிய மக்களின் வாழ்வை நோய்த்தொற்று போன்ற ஒரு பேரிடர் கைப்பற்றும்போது அரசியல் சித்தாந்தங்கள் அதன்மீது சூழ்ந்து அச்சூழலைத் தனதாக்கிக் கொள்ள முனையும் ஒரு அபத்தம் இச்சிறுகதையில் வெளிப்படுகிறது. மனிதர்களின் உயிரிலும் காக்கும் மருந்திலும் தன் வண்ணத்தைப் பூசிட ஒவ்வொரு அரசும் ஒரு நோய்க்கிருமியின் வேகத்தைவிட அதீதமாகச் செயல்படுகிறது. அப்படியான அரசாங்கங்களையும் அவற்றை அண்டிப் பிழைக்கும் அனேகர்களையும் விட எந்தக் கிருமியால் ஒரு பெருந்தொற்றைக் கொடுத்துவிட முடியும் என்ற கேள்வி

பெருந்தொற்று 

– டிநோ புஸ்ஸாட்டி

ருநாள் காலை நேரம் மிகச்சரியாக எட்டு மணியைக் கடந்து முப்பது நிமிடங்கள் ஆகியிருந்தபோது கர்னல் என்னியோ மொலினாஸ் சி.ப்.பில்[1] உள்ள பெரிய அறையொன்றின் தலைமைப் பீடமான தனது மேஜையில் அமர்ந்திருந்தார். அவ்வமைச்சகத்தைச் சேர்ந்த மற்ற பணியாட்களைப் போல அவரும் சீருடையின்றி பொது உடையில் இருந்தார். அவர் அத்துறையின் தலைவர் என்பதால் அவரின் மேசை ஒரு உயர்ந்த பீடத்தின் மீது போடப்பட்டிருந்தது, அங்கிருந்தவாறே தன்னிடம் பணிபுரியும் குறிமுறை[2] நீக்குபவர்களின் மேஜைகளை அவர் கண்காணிக்க முடியும். சுவர்களிலெல்லாம் வரிசையாக உயர்ந்த அலமாரிகள் பொருத்தப்பட்டு அவை முழுதும் புத்தகங்களாலும் ஒலிநாடாக்களாலும் நிறைக்கப்பட்டிருந்தன: அகராதிகள், களஞ்சியங்கள், நிலப்படங்கள், கோப்புகள், செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிக்கைகளின் தொகுப்புகள், ஆராய்ச்சிகளுக்கும் குறிப்புகளெடுக்கவும் அடிப்படையாகத் தேவையான அத்தனையுமிருந்தன. இந்த மிகப்பெரிய அலுவலகம் முழுவதும் போரை எதிர்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்று, இப்பொழுதெல்லாம் மந்தகதியில்தான் இயங்குகிறது; ஆனால் அத்துறையின் ஊழியர்கள் தற்போதும் முழுவதுமாக பணியமர்த்தப்பட்டிருந்தனர். அங்கு பணிபுரிந்த ஆட்கள் அக்குறிப்பிட்ட வேலையைச் செய்வதில் நாட்டிலேயே மிகச்சிறந்தவர்கள். அமைச்சகத்தில் அவர்கள் “இருபத்தி நான்கு மேதைகள்” என்று விளையாட்டாக அறியப்படுபவர்கள்.

கர்னல் தனது மீசை மயிர் முனையை மென்மையாகத் தடவிக் கொடுத்தார். தினசரி வருகைப் பதிவேட்டைத் திறந்தார். அதில் தன் செயலாளர் சற்றுமுன் எழுதியிருந்த காலைக் குறிப்புகளைப் பார்த்தபின் பெயர்ப் பட்டியலை வாசிக்கத் தலை நிமிர்த்தினார். இருபத்தி நான்கில் எட்டு மேசைகள் காலியாக இருந்தன. “ஹ்ம்ம்ம்…” என்று தனக்கேயுரிய பாணியில் முணுமுணுத்தார். முன்வரிசையிலிருந்த ஒருவன் அவரின் வருத்தமுற்ற கண்களைக் கண்டு அவரை நோக்கிப் புன்னகைத்தான். நம்பிக்கையிழந்தவரைப் போல் தன் தலையை அசைத்தார். பொதுவாக இனிமையானவராயினும் மற்றவர்களிடமிருந்து தன்னைச் சற்று தொலைவில் இருத்திக்கொள்ளும் வழியறிந்தவர் இந்தக் கர்னல். அந்த இளைஞனின் புன்னகை மேலும் விரிவடைந்தது, “சார், இது இப்படியே போனால் நமது இலாகா இன்னும் இரண்டு நாட்களில் மொத்தமாக காலியாகிவிடும்.” மொலினாஸ் அதைத் தலையசைத்து ஆமோதித்தார்.

இந்த நேரத்தில்தான் ஸ்பிரின்ஸெல் கட்டுக்கட்டாக குறிமுறை அவிழ்க்கப்பட வேண்டிய தகவல்கள் கொண்ட கோப்புகளுடன் உள்ளே நுழைந்தான். து.இ.ம. இலாகாவின் (துருப்புகள் இயக்கம் மற்றும் இடைமறிப்பு இலாகா) செயலாளரான அவன் அநியாயத்திற்கு மெலிந்தும் பசிவெறிப் பார்வையும் கொண்டவனாகக் காணப்பட்டான். ஸ்பிரின்ஸெல் எளிய பதவியிலிருப்பவனாயினும் அதிக மரியாதை பெறுபவனாக இருந்தான். சிலர் அவன் உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்தவன் என்று சொன்னார்கள், ஆனால் அது சுத்த முட்டாள்தனமான கூற்றாகவே இருக்க முடியும். மற்றவர்கள் ஒரேயடியாக அவன் ஒரு உளவாளி என்றே அறிவித்துவிட்டனர். சுருக்கமாக, அவனை அத்தனை பேரும் அஞ்சினர். அவன் உடனிருக்கையில், மக்கள் மிகக் கவனமாகவே பேசினார்கள்.

ஸ்பிரின்ஸெல் உள்ளே நுழைவதைக் கண்டதும், ஸ்பிரின்ஸெல் ஏதோ தன்னுடைய மேலதிகாரி என்பதைப் போலவும் அவனுக்கு முன் விரைப்பாக எழுந்து நிற்கும்படியும் தன்னுடைய உள்ளுணர்வு தன்னை உந்துவதைக் கவனித்து அதைக் கட்டுப்படுத்தினார் கர்னல். அதற்குப் பதிலாக வெறும் பெரிதாகப் புன்னகைத்தார்.

ஸ்பிரின்ஸெல் மேடையின் மீதேறிச் சென்று கோப்புகளைக் கீழே வைத்துவிட்டு, மூன்றில் ஒரு பங்கு காலியாக இருந்த மேசைகளைச் சுட்டிக்காட்டி கண்ணடித்தான். “என்னா சார், களையெடுப்பு போல ஏதேனுமா… ஆஹ்?” எதனாலேயோ அவனுடைய கேலிப்பேச்சுகள் குழப்பமானதாக… புரிந்துகொள்ள முடியாததாகவே இருந்தன.

“எனதருமை ஸ்பிரின்ஸெல், குளிர் காய்ச்சல்…. இந்த வருடம் அது உண்மையிலேயே ஒரு பெருந்தொற்று நோய்தான்.. அதிர்ஷ்டவசமாக இதுவரையிலும் கொடும் துன்பத்தைக் கொடுக்காத ஒரு வடிவத்தைத்தான் எடுத்திருக்கிறது. சிக்கல்களே இல்லை… படுக்கையில் நான்கே நாட்கள், பிறகு எல்லாம் சரியாகிவிடும்…”

“ஹ்ஹே.. நான்கு நாட்கள்! சிலசமயங்களில் நான்கு வருடங்கள், ஹா ஹா..!” என்று நீட்டிக் குழைந்தபடி சற்றும் அகமகிழ்வற்ற வறண்ட, கடுமையான வெறுப்புமிழும் தன்னுடைய சிரிப்புகளில் ஒன்றை உதிர்க்கத் தொடங்கினான் ஸ்பிரின்ன்ஸெல். 

மொலினாஸுக்குப் புரியவில்லை. “நான்கு வருடங்களா? அதெப்படி குளிர் காய்ச்சல் ஒருவருக்கு நான்கு வருடங்களுக்கு நீடிக்கும்?”

“ஹ்ஹே” – ஸ்பிரின்ஸெல் எப்போதும் தன்னுடைய பேச்சுகளைத் தொடங்குவதும் முடிப்பதும் இந்த அருவருப்பான நாசியொலியுடன் தான். “அது தற்போது எடுத்திருக்கும் வடிவம் மிதமானதுதான் என்பதை நானும் முழுமையாக ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் நான் “ஸ்பானிஷ்” வகையறாவைத்தான் விரும்புவேன், உடனிருப்பவர்களுக்கு அது ஏற்படுத்தக் கூடிய அத்தனை அபாயங்களையும் மனதில் கொண்டே தான் இதைச் சொல்கிறேன். இந்த நோய்த்தொற்று எவரையும் அடுத்த உலகத்திற்கு அனுப்பிவைக்கக் கூடியதாக இல்லை, ஆனால் அதேயளவிற்கு எவராலும் விரும்பத்தகாததாக இருக்கிறது”

“அதுசரி, அதுதானே இயல்பு. குளிர்காய்ச்சல் ஒருபோதும் யாருக்கும் இனிமையானதாக இருப்பதில்லையே!”

“ஹ்ஹே… சார், உங்களுக்கு இதைப் பற்றி ஒன்றும் புரியவில்லை என்பது மிக அப்பட்டமாகத் தெரிகிறது… ஹ்ஹே!”

“எதைப் பற்றி? எனக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும்?”

ஸ்பிரின்ஸெல் ஏமாற்றத்தில் தலையசைத்தான். “நான் இப்படிச் சொல்வதற்கு என்னை மன்னிக்க வேண்டும் சார், சி.ப்.பின் தலைவரான ஒருவருக்கு இது கொஞ்சம் அதிகம்தான். என்னையே எடுத்துக் கொள்ளுங்கள், யாருடைய உதவியுமின்றி அதை நானே புரிந்து கொண்டேன்.”

“எதைப் புரிந்துகொள்ள வேண்டும்?” தற்போது சற்றே தளர்வடைந்து கலக்கமுற்ற குரலில் கர்னல் கேட்டார்.

“ஹ்ஹே, ஹ்ஹே-உங்கள் மீது நம்பிக்கை வைத்துச் சொல்லலாம் என்றுதான் நினைக்கிறேன். நீங்கள் ஒரு பொறுப்பான மனிதர், கூச்ச சுபாவமுடையவர்; அப்படிப்பட்டவராக இல்லாதிருந்தால் உங்களால் இந்தப் பதவியைப் பெற்றிருக்கவே முடியாது.” – கர்னலின் பதற்றத்தை ரசிப்பதற்காக ஒரு நீண்ட இடைவெளிவிட்டு பின்பு மர்மமான தொனியில், சன்னமான குரலில் சொன்னான் – “ஆனால் சார்.., நீங்கள் கவனிக்கவில்லையா… இந்த குளிர் காய்ச்சல் தன்னுடைய இரையை தற்போக்காகத் தேர்வு செய்வதில்லை என்பதைக் கவனிக்கவில்லையா.. ஹ்ஹே?”

“எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை, எனதருமை ஸ்பிரின்ஸெல். எனக்கு உண்மையிலேயே…..”

“ஹ்ஹே… அப்படியென்றால் நான் உங்களுக்கு ஒவ்வொரு வார்த்தையாக புட்டு புட்டு வைக்க வேண்டும். இந்த நுண்ணுயிரிகள் அல்லது நோய்க்கிருமிகள் அல்லது அது என்ன எழவோ… அவற்றுக்கு ஒரு சிறப்பான தனித்தன்மை இருக்கிறது. அவற்றால் ஒருவனின் இதயத்திற்குள் புகுந்து அவனைப் புரிந்துகொள்ள முடியும் என்பதைப் போல ஆட்களைப் பிரத்தியேகமாகத் தேர்வு செய்கிறது…. அவைகளை ஏமாற்றுவதற்கு வழியே கிடையாது, ஹே..!”

மொலினாஸ் கலவரத்துடன் அவனைப் பார்த்தார். “இங்கே பார், என் அன்பு ஸ்பிரின்ஸெல், உனக்குக் கிண்டல் செய்து விளையாட வேண்டும் என்பது போன்ற எண்ணம் இருக்கலாம்…. ஆனால் நீ இப்படியே புதிர் போட்டபடி பேசிக்கொண்டே போனால் என்னால் புரிந்துகொள்ள முடியும் என்று நீ எப்படி எதிர்பார்க்கலாம்? ஒருவேளை இன்று என் சிந்தனையின் வேகம் சற்று குறைந்து போயிருக்கலாம். நான் தலைவலியோடுதான் இன்று காலை எழுந்தேன். எனக்கு எதுவும்…”

“ஹ்ஹே.. உங்களுக்கு ஒன்றுமில்லை இல்லை சார், உங்களுக்கில்லை! உங்களுக்குக் குளிர் காய்ச்சல் தொற்று ஏற்படாது! ஒழுக்கத்தின் முழு மனித உருவமே நீங்கள்தானே, ஹ்ஹே..!”

“இதில் ஒழுக்கம் எங்கிருந்து வருகிறது?”

“ஹ்ஹே.. நான் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும் சார். இன்று நீங்கள் சற்று மந்தமாகத்தான் இருக்கிறீர்கள்..”. அவன் தன் குரலை மேலும் தாழ்த்திச் சொன்னான், “சார்.., உண்மை என்னவென்றால், வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால்: உங்களுக்குத் தொற்றுக் காய்ச்சல் வந்தால், நீங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர் என்று அர்த்தம்.”

“அரசாங்கத்திற்கு எதிராகவா?”

“ஹ்ஹே.. நம்புவதற்கு எனக்கும் கூட கடினமாகத்தான் இருந்தது… ஆனால் கடைசியாக நானும் ஏற்றுக்கொண்டேன். என்னை நம்புங்கள், நம்மை வழிநடத்தும் தலைவரின் பெருந்திறமையைப் பற்றி நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுமேயில்லை… நாட்டின் நாடித்துடிப்பை உணர்ந்து கொள்வதற்கு என்னவொரு சிறப்பான யோசனை… அரசு காய்ச்சல்! இதுவொரு அற்புதமான விஷயம் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? நாடு முழுவதும் ஊடுருவியிருக்கும் தேசத்துரோகிகள், அவநம்பிக்கையாளர்கள், அரசின் மீது சந்தேகம் கொள்பவர்கள், எதிரிகள் இவர்களை மட்டும் தேடிப்பிடித்துத் தாக்கும் காய்ச்சல்… அதே நேரத்தில் அர்ப்பணிப்புள்ள குடிமகன்கள், தேசபக்தர்கள், மனசாட்சிப்படி வேலை செய்யும் தொழிலாளர்கள் இவர்களையெல்லாம் தொடவே தொடாது!”

கர்னல் தனது ஆட்சேபக் குரலை இப்போது எழுப்பினார். “ஆனால் எனதன்பு ஸ்பிரின்ஸெல், இப்படி ஒரு விஷயம் எப்படிச் சாத்தியப்படும்? இன்றைக்கு இங்கே இல்லாதவர்களெல்லாம் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் என்கிறாயா? “

“ஹ்ஹே.. உங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லையென்றால் மிகக் கவனமாகச் சிந்தியுங்கள், ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியாகச் சிந்தித்துப் பாருங்கள்… இதெல்லாம் எவ்வளவு சரியாகப் பொருந்திப் போகிறது என்பது உங்களுக்குப் புரியவரும்… உதாரணத்திற்கு, அதோ அந்த முதல் மேசை, யாருடையது அது?”

“லெஃப்டினெண்ட் ரெக்கார்டினியுடையது”

“ஹ்ஹே, ரெக்கார்டினி நம் தலைவரின் ஆட்சிக்கு எதிரானவர் அல்ல என்று சத்தியம் செய்ய நீங்கள் தயாரா? கொஞ்சம் பின்னோக்கி யோசியுங்கள்… ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் அவர் தன்னை மீறி உங்களிடம் உண்மையாக வெளிப்பட்டிருப்பார் என்று நான் உறுதியாகச் சொல்வேன். உங்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தவர்தானே.. ஹ்ஹே?”

“அட ஆண்டவா, ரெக்கார்டினி ஆட்சியின் மீது பெரும் ஆர்வத்தைக் காட்டியவர் இல்லைதான், ஆனால் அதற்காக அவர் மீது குற்றம் சுமத்த முடியாது இல்லையா?”

“ஹ்ஹே.. ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள், அரசுக் காய்ச்சல் ஒருபோதும் தவறு செய்யாது… அதோ அங்கிருக்கும் காலியான மேசை, அது யாருடையது?”

“அது பேராசிரியர் கியூரிகோவினுடையது, மூன்றடுக்கு சங்கேத மொழியில் வல்லவர் அவர்…. இந்த இலாகாவிலேயே மிகவும் திறமையான மூளை.”

“ஹ்ஹே, பார்த்தீர்களா மறுபடியும்! நான் சொல்வது சரியென்றால், அவர் ஏற்கனவே பல அதிகாரிகளிடம் உரசிக் கொண்டவர்… அவர் சென்ற வருடம் கிட்டத்தட்ட வெளியேற்றப்பட இருந்தார் இல்லையா?”

“நீ சொல்வது சரிதான்,” ஒப்புக்கொண்ட கர்னல் சற்றே கவலையுற்றவராகச் சொன்னார், “ஆனால்.. ஆனால் இதில் சிலருக்கு வேறு காரணங்களுக்காகவும் உடல் நலமில்லாமல் போயிருக்கலாம்தானே?… இது மிக அபாயகரமான முறையாக இருக்கிறதே… ஒருவரை மிகச் சுலபமாகத் தவறானவராகக் கருதிவிடக் கூடும்”.

“ஹ்ஹே, அதைப்பற்றி பயப்பட வேண்டாம் சார், உளவுத்துறை அதைக் கவனித்துக் கொள்ளும்… வருகைப் பதிவேட்டைப் பாருங்கள்… இன்று வராதவர்களின் பெயர்களுக்கு எதிராகச் சிவப்புக்குறி போடப்பட்டிருந்தால் அவர்களுக்கெல்லாம் இக்காய்ச்சல் என்று அர்த்தம்.. எவ்வளவு நேர்த்தி!!”

கர்னல் தன் நெற்றியின் மீது கை வைத்துப் பார்த்தார். தனக்கும் உடல் நலமில்லாமல் போனால் என்ன ஆகும் என்று யோசித்தார். துரதிர்ஷ்டவசமாக நானும் சில சமயங்களில் தலைவரைச் சபித்திருக்கிறேன். தன் எண்ணங்களை வலுக்கட்டாயமாக ஒருவர் எப்படி தடுத்து நிறுத்துவது?

“ஹ்ஹே.. நீங்கள் தலைவலி என்று சொன்னீர்கள் இல்லையா? நீங்கள் இன்று வெளிறிப்போய்தான் காணப்படுகிறீர்கள் சார், ஹ்ஹே..! ஸ்ப்ரின்ஸெல் வில்லத்தனமான சிரிப்பைச் சிறிதாக உதிர்த்தான்.

“இல்லை.. இல்லை, இப்போது நான் நன்றாகவே இருக்கிறேன்,” தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னார் மொலினாஸ். “நல்லவேளை, நான் மிக நலமாகவே உணர்கிறேன்.”

“ஹ்ஹே… அப்படியென்றால் நல்லது…. பிறகு பார்ப்போம் சார், ஹ்ஹே?” தனக்குத்தானே கொக்கரித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிப் போனான்.

இது என்ன மாதிரியான விளையாட்டு? ஸ்பிரின்ஸெல் என்னைக் கேலி செய்கிறானா? அல்லது மக்களின் மனசாட்சியைப் பரிசோதித்துப் பார்ப்பதற்காக உண்மையிலேயே அரசாங்கம் இப்படியான ஒரு கொடூரச் செயலை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறதா? இன்று வராத தன் கீழ்நிலை ஊழியர்கள் எட்டு பேரையும் கருத்தில் கொண்டார். அவர்களைப் பற்றி அவர் யோசிக்க யோசிக்க அரசு காய்ச்சல் – அப்படி ஒன்று இருக்குமானால் – தன்னுடைய இரையை மிகச்சரியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்பவராக அவர் மாறினார். ஒன்றில்லாவிட்டாலும் மற்றொரு காரணத்திற்காக இந்த எட்டு பேரும் உண்மையான தேசபக்தி உடையவர்கள்தானா என்று சந்தேகங்கொள்ளத்தக்கவர்கள்தான். எட்டு பேரும் மிகவும் புத்திசாலிகள், நிச்சயமாக பெரும் புத்திசாலிகள், ஆனால் அரசியல் நம்பிக்கையைப் பொறுத்தவரையில் அது எதிர்மறையான அம்சமாகக் கருதப்படுகிறது! ஆனால் இப்போது அவர் தன்னையே கேட்டுக்கொண்டார், “நிச்சயமாக இந்த இழிவான கிருமி தவறுகள் இழைக்கக்கூடும், ஒன்றுமறியாத அப்பாவிகளையும் தாக்கக்கூடும் தானே? என்னையும் தாக்குமா? நிச்சயமாக எல்லோருமே எப்போதோ ஒருமுறையாவது தலைவருடன் ஒத்துப் போகாமலோ அல்லது எதிர்ப்பாகவோ இருந்திருக்கக்கூடும் அல்லவா? நான் நோய்வாய்ப்பட்டால் என்னை என்ன செய்வார்கள் அவர்கள்? பதவி விலக்குவார்களா? நீதிமன்றக் கூண்டில் நிறுத்துவார்களா? என் உடல் நிலை சரியில்லாமல் போவதை உணரத் தொடங்கினாலும் நான் விட்டுக் கொடுக்கக்கூடாது“.

அவர் உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரது தலைவலி மிகவும் மோசமடைந்தது. அவரது காதுகளில் இரைச்சலொலி பெருகியது. அரவணைப்பிற்காகவும் ஓய்விற்காகவுமான வேட்கை கட்டுக்கடங்காமல் வளர்ந்தது. ஸ்பிரின்ஸெல் கொண்டு வந்த கோப்புகளை பெரும் பிரயத்தனத்தோடுதான் அவரால் திறக்க முடிந்தது. அதிலிருந்த செய்திகளைப் படித்துப் பகுத்து வைத்தார். ஆனால் அவை அவர் கண்களுக்கு முன்னால் உருக்குலைந்து மிதக்கத் தொடங்கின. புரிந்து கொள்ளமுடியாத புள்ளி விவரங்கள் கூடிய ஒரு தாளைக் குனிந்து உற்று நோக்கி அதை ஆய்வதைப் போல பாவனை செய்து, நாடித்துடிப்பை அழுத்தி கைக்கடிகாரத்தின் துணை கொண்டு எண்ணத் தொடங்கினார்: தொண்ணூற்றி எட்டு. உடல் வெப்பம் இருக்குமோ? ஒருவேளை வெறும் பயம்தானா?

அவர் தன் வீட்டை அடைந்ததும் வேகமாக வெப்பமானியை எடுக்க ஓடினார். கால்மணி நேரத்திற்கும் மேலாக அதை தன் வாயில் வைத்திருந்தார். இறுதியாக வெளியில் எடுத்துப் பார்க்க போதுமான தைரியத்தைச் சேகரித்து பின் பார்த்ததும் மூச்சற்றுப் போனார்: நூற்றி இரண்டு.

மலேரியா மருந்தை நன்கு அளந்து தேவையான அளவு உட்கொண்டார். இரைச்சலொலியில் காதுகள் அதிர ஒவ்வொரு அசைவிலும் தலைவலி கூடிக்கொண்டே போக, அம்மதியம் அவர் தன் அலுவலகத்திற்குத் திரும்பச் சென்றார். ஆச்சரியம்: ஸ்பிர்ன்ஸெல் அவருக்காக அவரது மேசையருகில் காத்திருந்தான், தன்னுடைய பழிக்கும் பார்வையை அவர்மேல் நிலை குத்தியிருந்தான்: “ஹ்ஹே சார், நான் இப்படிச் சொல்வதற்கு என்னை மன்னிக்க வேண்டும், ஆனால் உங்கள் மதிய உணவின் போது நீங்கள் அளவிற்கு அதிகமாக மது அருந்திவிட்டீர்கள் போலிருக்கிறது… உங்கள் கண்கள் இவ்வளவு மோசமாக வெளுத்திருக்கிறதே, ஹ்ஹே!”

“இரண்டு குடுவைகள்தான், கண்டிப்பாக அதற்கு மேலே எடுத்துக் கொள்ளவில்லை,” தன்மீது வீசப்பட்ட பழியைப் புறந்தள்ளும் பாவனையில் சொன்னார் மொலினாஸ்.

“ஹ்ஹே.. அதுசரி, தலைவலி எப்படியிருக்கிறது?”

“சுத்தமாக போயே போச்சு,” சற்றும் தணியாத பதட்டத்துடன் சொன்னார் மொலினாஸ். காகிதக் குவியலிடையில் எதையோ பரபரப்புடன் துழாவி தனக்கு நிறைய வேலை இருப்பதைப் போல ஒரு காட்சியை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்.

ஸ்பிரின்ஸெல் அங்கிருந்து சென்றான், ஆனால் சற்று நேரத்திலேயே திரும்ப வந்தான். இப்படி இங்கே அடிக்கடி திரும்ப வருவதற்கான காரணங்களை யோசிப்பதையே அவன் வெகுவாக மகிழ்ந்து அனுபவித்தான். தன்னுடைய புதிர் கேள்விகளை வரிசையாகத் தொடர்ந்து அடுக்குவான்: கர்னல் தன் கழுத்தைச் சுற்றி எதற்காகக் கம்பளித் துண்டைச் சுற்றியிருக்கிறார்? அவருக்குச் சளி பிடித்திருக்கிறதா? அல்லது அவருக்கு இருமல் இருக்கிறதா? லேசாகக் குரல் கம்மியது போல் இருக்கிறதா?

மொலினாஸ் தன்மீது விழும் தாக்குதல்களைத் தொடர்ந்து தடுத்தபடியே இருந்தார் எனினும் அவர் சோர்வடைந்து போனார். ஸ்பிரின்ஸெலின் வார்த்தைகள் அவரது தலைக்குள் மணியோசையைப் போல எதிரொலித்தபடி இருந்தன. பெரும் எடை மிகுந்த ஈயக்குண்டு ஒன்று அவரின் பிடரியில் கட்டித் தொங்கவிடப்பட்டது போலிருந்தது அவருக்கு. நடுக்கம் ஒரு அலையென அவரைத் தாக்கியது.   நெஞ்சம் கூர்மையாகப் பற்றியெரிவது போன்றதொரு உணர்வு. நிச்சயமாக இது முழுமையான காய்ச்சல்தான். அதை யாரிடமும் குறிப்பிட்டுச் சொல்லவும் முடியவில்லை, நிலைமையை அது மேலும் மோசமாக்கிவிடும். அதுவும் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதைத் தெளிவாகவே கண்டுபிடித்துவிட்ட அந்த உளவாளி ஈனன் ஸ்பிரின்ஸெல் அவர் இறுதியாக நிலைகுலைந்து சரிவது வரை கூட காத்திருக்கும் பொறுமையிழந்து கொண்டிருந்தான்.

இல்லை, அவர் தன்னை விட்டுக்கொடுக்கக் கூடாது. அதற்கடுத்த நாள், தன் உடலின் வெப்பம் நூற்றி மூன்றை நெருங்கியிருந்த போதிலும், தன் தலை உருக்கிய ஈய உருண்டை போலக் கனப்பதாகத் தோன்றினாலும், தன்னுடைய அலுவலக மேஜையில் வந்து அமர்ந்திருந்தார் கர்னல். “என்ன ஆச்சு சார், உங்கள் முகம் இப்படி செக்கச்சிவந்து இருக்கிறதே, ஹ்ஹே?”

“குளிரினால் இருக்கலாம்,” தளர்ந்துவிடக் கூடாது என்ற உறுதியுடன் பதிலளித்தார் கர்னல்.

“ஹ்ஹே, சார், நீங்கள் நடுங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். எதனால் உங்களுக்கு இப்படியொரு நடுக்கம் ஏற்படுகிறது?”

“நடுக்கமா? சுத்த பேத்தல்.”

“ஹ்ஹே சார், உங்களுக்கு உடம்புக்குச் சரியில்லையென்றால் எனக்கு உண்மையிலேயே வருத்தமாகத்தான் இருக்கும்.”

“அபத்தம்.. அபத்தம்..  தொண்டையில் வெறும் லேசான கரகரப்புதான்…” நூற்றிரெண்டு புள்ளி ஆறு, நூற்றிரெண்டு புள்ளி எட்டு. கர்னல் ஒரு ரோபோவின் ஒழுங்கைப் போல வழக்கமான நேரத்திற்குத் தொடர்ந்து அலுவலகத்திற்கு வந்தார், வேலைகளை அவருக்குக் கீழ் பணிபுரியும் ஆட்களுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டு தன்னுடைய மேஜையில் அசைவின்றி அமர்ந்து கொள்வார், வறட்டு இருமல்களால் வெடித்துத் துன்புறுவார்.

“ஹ்ஹே, சார், உங்களுக்குச் சுவாச நோய் வந்துவிட்டது போல் இருக்கிறதே, ஹ்ஹே?”

“இல்லையில்லை.., வெறும் தொண்டைப் பிரச்சினைதான். நான் முற்றிலும் நன்றாகவே இருக்கிறேன், உறுதியாகச் சொல்கிறேன்.”

நான்காவது நாள் அவர் கிட்டத்தட்ட வீழ்த்தப்பட்டார். “வாங்களேன் நாம் வெளியில் போய் ஒரு காஃபி சாப்பிட்டு வருவோம்,” தூண்டில் போட்டான் ஸ்ப்ரின்ஸெல். அவரை ஏதோ சோதனைக்குள்ளாக்கத்தான் இதைச் செய்கிறான் என்பது வெளிப்படை! வெளியே கடுமையான குளிர், கதகதப்பான அலுவலகத்திற்குள்ளேயே அவருடைய பற்கள் தந்தியடித்துக் கொண்டிருந்தன.

“அழைப்பிற்கு நன்றி. ஆனால் வேண்டாம். இன்று எனக்கு நிறைய வேலை இருக்கிறது.”

“ஹே.. அதிக நேரம் ஆகாது: இரண்டே நிமிடங்கள்தான்.”

“இல்லை வேண்டாம், என் அன்புத் தோழனே…”.

“ஒருவேளை உங்களுக்கு உடம்பு முடியாமல் இருக்கிறதோ, ஹ்ஹே..?”

“இல்லை.. இல்லை. நான் நன்றாக இருக்கிறேன்.”

“ஹ்ஹே.. என்னை மன்னிக்கனும் சார். நீங்கள் ஏதோ வலியில் இருப்பதைப் போலக் காணப்பட்டீர்கள். அதனால்தான்….”

ஐந்தாவது நாள் அவரால் எழுந்து நிற்பதே சிரமமாகிப் போனது. காய்ச்சல் வந்த அவரது வேலையாட்களில் ஒருவர்கூட (இப்போது கணக்கு மொத்தம் பதினாறாகியிருந்தது) திரும்ப வரவேயில்லை. எங்கே இருக்கிறார்கள் அவர்கள்? என்ன ஆனது என்று தெரிந்து கொள்ள அவர்கள் வீடுகளுக்கு தொலைபேசியில் அழைத்தால், உறவினர்கள்தான் எடுக்கிறார்கள். எடுத்து, “அவர் இங்கு இல்லை” என்று மட்டும் பதிலளிக்கிறார்கள், மேலதிக விளக்கம் எதுவும் கொடுக்காமல். சிறையிலிருக்கிறார்களா? எங்காவது தலைமறைவாகியிருக்கிறார்களா? நாடு கடத்தப்பட்டார்களா? தனக்கு நிமோனியாதான் என்பதில் மொலினாஸ் உறுதியாக இருந்தார், ஆனால் மருத்துவரிடம் செல்வதற்கு அவருக்குத் தைரியம் இல்லை. நிச்சயமாக அவர் படுக்கையில் அனுமதிக்கும்படி அறிவுறுத்துவார் பின்னர் அமைச்சரவைக்கு அவரே தெரிவித்துவிடவும் வாய்ப்பிருக்கிறது.

ஆறாவது நாள். இருபத்தி நான்கு மேஜைகள் அத்தனையும் காலி: அவற்றை ஆக்கிரமித்திருந்தவர்கள் அத்தனை பேருக்கும் காய்ச்சல். ஸ்பிரின்ஸெல் முன்னெப்போதையும்விட அதிகம் பழித்துச் சுட்டுவதைப் போல வாய்பொத்திச் சிரித்தான்: “ஹ்ஹே, ஹே, அறிவுஜீவிகளின் மீது நம் தலைவர் அவநம்பிக்கை கொண்டிருப்பது அவ்வளவு தவறு என்று இனி சொல்லிவிட முடியாது அல்லவா! இந்த புகழ் பெற்ற சி.ப்.பில் இனி மீதமிருப்பது என்ன? வெறும் தகவல் பட்டுவாடா செய்யும் ஆண்கள், சுமை தூக்கிகள், கிளார்க்குகள்… எளிய ஆத்மாக்கள். அவர்கள்தான் முழு மனதுடன் விசுவாசமாக இருப்பவர்கள்… ஆனால் மேதைகள் அத்தனை பேரும் அடித்து வீழ்த்தப்பட்டுவிட்டார்கள். மேதைகள், அரசை வெறுப்பவர்கள்!… ஹ்ஹே ஹ்ஹே, சார், நீங்கள் மட்டும்தான் ஒரே விதிவிலக்கு. இன்னமும் அசராமல் தனித்து நிற்கிறீர்கள்!” ஸ்பிரின்ஸெல் கண் சிமிட்டினான், ‘நீங்கள் அதே கூட்டத்தைச் சேர்ந்த ஆள்தான், நீங்களும் விரைவில் போய் விடுவீர்கள்!’ என்பதை மறைமுகமாகச் சுட்டுவதைப் போல.

எட்டாவது நாள். எரியும் நிலக்கரிக் குவியலைப் போன்ற நெஞ்சோடும் நூற்றி நான்கை நெருங்கிவிட்ட உடற்சூட்டோடும், கர்னல் தன்னுடைய அலுவலகத்திற்குள் வழக்கமான நேரத்தில் நுழைந்தார். பேயைப் போன்று காட்சியளித்தார். இன்னும் சற்று நேரத்தில் ஸ்பிரின்ஸெல் வந்துவிடுவான் என்றும் அவன் கணைகளை தடுத்தாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய உடனே தனக்குள்ளே ஆழத்திலிருந்து சற்றே இனிக்கும் ஒரு அருவருப்பு மேலெழுந்தது… கை அலம்பும் வட்டிலில் நிறைந்து மேலெழும் நீரைப் போல மேலே மேலேவென அது எழுந்து வந்தது.

ஆனால் இந்தக் காலையில் ஸ்பிரின்ஸெல் நேரந்தவறி விட்டான். ஒருவேளை அவன் எனக்குக் காய்ச்சல் வந்துவிட்டது என்று தெரிந்து கொண்டிருக்கலாம். ஒருவேளை அவன் ஏற்கனவே இதைப் பற்றிய அறிக்கையைக் கொடுத்துவிட்டிருக்கலாம். எனக்கு பெரும் அவமானம் நேர்ந்துவிட்டது, எல்லாம் பாழாகிவிட்டது. அதனால்தான் அவன் இன்று வரவில்லை.

அதன்பிறகு சற்று நேரத்தில், அமைதியான வெற்று அறைகளைக் கடந்து காலடிச் சத்தம் தன்னை நோக்கி நெருங்கி வருவதைக் கேட்டார். ஸ்பிரின்ஸெல் அல்ல ஆனால் அவன் அடிமைகளில் ஒருவன், தகவல்கள் அடங்கிய கோப்புடன் வந்தான். “ஸ்பிரின்ஸெல் எங்கே?”, கேட்டார் கர்னல்.

அம்மனிதன் உடலசைவிலேயே தன் விரக்தியை வெளிப்படுத்தினான்: “அவர் இன்று வரவில்லை. அவர் வரப்போவதில்லை. அவர் படுக்கையில் இருக்கிறார்.”

“எதற்காக?”

“அவரின் உடல் வெப்பம் கட்டுக்கடங்காமல் எகிறிக் கொண்டிருக்கிறது.”

“யாருக்கு? ஸ்ப்ரின்ஸெலுக்கா?”

“அவருக்குக் காய்ச்சலும் கூட… மேல்மட்டத்தில் இஃதொரு முக்கியச் சம்பவமாகவும் பேசப்படுகிறது.”

“காய்ச்சலா? ஸ்பிரின்ஸெலுக்கா? என்னிடம் விளையாடாதே..”

“ஏன்? இதிலென்ன ஆச்சரியம்? அவர் நேற்றிலிருந்தே கொஞ்சம் நலமில்லாமல்தான் இருந்தார்.”

கர்னல் தன் நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்தார். பெரும் நம்பிக்கையும் வாழ்க்கையின் பூரிப்பும் அவருள் தோன்றியது. அவர் பாதுகாப்பாகத்தான் இருந்திருக்கிறார், மிகப் பாதுகாப்பாக. அவர் வென்றுவிட்டார்! அந்த பரிதாபத்திற்குரிய உளவாளிதான் வீழ்ந்தான், அவர் அல்ல! மொலினாஸ் தற்போதே நலமாகிவிட்டதைப் போல உணர்ந்தார், நோய்க்கூறு எதுவுமில்லை, நெஞ்சில் பற்றி எரிந்த நெருப்பு தற்போதில்லை, உடல் சூடும் இல்லை. மோசமான கட்டத்தை கடந்தாகிவிட்டது.

ஆழமாக மூச்சை இழுத்து விட்டார். இத்தனை வருடங்களில் முதன்முறையாகக் கண்களை உயர்த்தி ஜன்னலை நோக்கினார். உறைந்த மேற்கூரைகளுக்கு அப்பால், தெள்ளத்தெளிவான நீலவானத்தின் அடியில், தூரத்துச் சிகரங்கள் பனிபோர்த்திய வெண்மையை மினுமினுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். வெள்ளி முகில்கள் மெல்ல ஊர்ந்தபடி பூமியின் துயரங்களையெல்லாம் கடந்து மேலே மகிழ்வுடன் அசைந்தாடி மிதப்பதைப் போலத் தோன்றியது. அவர் அவற்றைப் பார்த்தார்: எவ்வளவு காலமாக அவற்றின் இருப்பை அவர் பொருட்படுத்தாமல் இருந்திருக்கிறார்? மனிதர்களாகிய நம்மிடமிருந்து அவை எவ்வளவு வித்தியாசமானவை, அவர் எண்ணினார். கடவுளே, எவ்வளவு பரிசுத்தம், எத்தனை அழகு!


[1] Cipher – சிஃபர், மறையெழுத்து அலுவலகம்.

[2] Decoder – குறிமுறை நீக்கி

***

நரேன்

Facebook & Google தகவற்தொழில் நுட்ப வணிக நிறுவனங்களின் ஏகத்துவமும் எதிர் அழுத்தங்களும்

1

ரூபன் சிவராஜா

டிஜிற்றல்-வாழ்வு’ என்பது மனித நாளாந்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகிவிட்டது. அதில் பேஸ்புக் கோலோச்சுகின்றது. ஊடகம் என்பது ஒரு அரசினது (State) நான்காவது அதிகாரம் என்ற கூற்று பொதுவாக மேற்கின் பயன்பாட்டில் உள்ள சொல்லாடல். முதல் மூன்றும் முறையே பாராளுமன்றம், அரசாங்கம், நீதிமன்றம் என்பனவாகும். முதல் மூன்று அதிகாரங்களையும் விமர்சன பூர்வமாக அணுகுகின்ற அதிகாரம் ஊடகங்களுடையது. ஊடகங்களை கண்காணிப்பு மற்றும் கவனத்திற்குக் கொண்டுவரும் வகிபாகத்தைக் கொண்ட ஒரு காவல்நாய் என்று கூறப்படுவதும் உண்டு. ஜனநாயக நடப்புகள் சரியான முறையில் பின்பற்றப்படுவதைக் கண்காணிப்பதும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும் அதன் பொறுப்பு. அந்த வகையில் ஊடகத்திற்கெனப் பல்வேறு கட்டமைக்கப்பட்ட நியமங்கள் உள்ளன.

நவீன ஊடக நியமங்களை மீறிய நடைமுறைகளையும், பயன்பாட்டு வெளியையும் விளைவுகளையும் கொண்டதாக சமூக ஊடகங்கள் உருப்பெற்றுள்ளன. பேஸ்புக் கொண்டுள்ள அதிகாரக்குவிப்பு ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாக ஜனநாயகமற்ற, சர்வாதிகார மற்றும் ஒடுக்குமுறை ஆட்சியாளர்களுக்கு உவப்பானதல்ல. இந்த விடயம் ஒருபுறமிருக்க, தகவற்தொழில்நுட்பத் தளங்களின் போக்கு, கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு முரணானதாகவும் சென்றுகொண்டிருக்கின்றன. இவற்றின் ஏகத்துவ அதிகாரம் விவாதக் கலாச்சாரத்தின் மீது ஏற்படுத்தும் எதிர்மறைத் தாக்கங்கள் குறித்த விமர்சனங்கள் இறுதிக்காலங்களில் அதிகரித்துள்ளன.

புதிய நிறுவனங்கள் சந்தை நீக்கம்

இன்றைய உலகின் தகவல் தொழில்நுட்ப பெருவணிக நிறுவனங்கள் கூகிள், பேஸ்புக், அமேசோன், அப்பிள் ஆகியனவாகும். இவை அமெரிக்க நிறுவனங்கள். ஏகபோக அதிகாரத்தைக் கொண்டவையாகப் பூதாகரமான வளர்ச்சியை அடைந்துள்ளன. தத்தமது துறையில் சந்தைப்போட்டியற்ற அல்லது போட்டிக்கு இடம்கொடுக்காத வகையில் தமது இடத்தைத் தக்கவைப்பதற்குரிய மூலோபாய அணுகுமுறைகளைக் கையாண்டு வந்துள்ளன. புதிதாக உருவாகி வளர்ந்து, பாவனையாளர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெறும் தகவற்தொழில் நுட்ப, தகவற் பரிமாற்ற ஊடக நிறுவனங்களைத் தம்வசப்படுத்தி வந்துள்ளன. இதன் பொருள் பெருந்தொகை நிதியினைக் கொடுத்து அவற்றைக் கொள்வனவு செய்து தமது உரித்தாக்குவதும், கையகப்படுத்துவதுமாகும். இது சந்தைப் போட்டி இல்லாத தனிக்காட்டு ராஜாவாகத் தமது நிறுவனத்தை தனி அதிகாரத்துடன் பேணுகின்ற அணுகுமுறை. பேஸ்புக் மற்றும் கூகிள் இதில் முதன்மையானவை.

பேஸ்புக் மற்றும் கூகிள் நிறுவனங்கள் மீது அவற்றின் ஏகத்துவ அதிகாரம் மற்றும் தணிக்கை அணுகுமுறை சார்ந்த விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. இவற்றின் ஏகத்துவ சந்தை அதிகாரத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் அமெரிக்காவில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவருகின்றன. மட்டுமல்லாமல் உலகளாவிய ரீதியில் பல்வேறு அழுத்தங்களும் தொடர்ச்சியாக இந்நிறுவனங்கள் மேல் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சில நாடுகள் பேஸ்புக் நிறுவனத்துடன் முறுகல் நிலையினையும் கொண்டுள்ளன.

அவுஸ்திரேலியா – பேஸ்புக் முறுகல்

தமது நாட்டின் செய்தி சார் உள்ளடக்கங்களுக்கு பேஸ்புக், கூகிள் பணம் செலுத்தவேண்டுமென்ற சட்டத்தினைக் கொண்டுவருவது தொடர்பாக அவுஸ்ரேலியா நடவடிக்கை எடுத்துவருகின்றது. இதற்குப் பேஸ்புக் இணங்க மறுத்துள்ளதோடு, பெப்ரவரி நடுப்பகுதியிலிருந்து அவுஸ்திரேலிய ஊடக நிறுவனங்களின் செய்திகளுக்கு பேஸ்புக் தளத்தில் தடையும் விதித்தது. அதன் பொருள் அவுஸ்திரேலியா ஊடகங்களின் செய்திகளை அவுஸ்ரேலியர்கள் மட்டுமல்ல உலகின் எந்தப் பாகத்திலுள்ள பாவனையாளர்களும் பேஸ்புக்கில் பார்க்கவோ, பகிரவோ முடியாது என்பதாகும். அவுஸ்ரேலிய சட்ட முன்மொழிவு அதன் அனைத்து ஊடகங்களாலும் வரவேற்கப்பட்டிருந்தன. நாட்டின் கீழவையில் பெரும்பான்மையை எட்டியிருந்த சட்ட முன்மொழிவு அடுத்துச் செனற் சபைக்கு எடுத்துச் செல்லப்படவிருந்தது. ஆனால் செனற் சபை வாக்கெடுப்பிற்கு முன்னர் இருதரப்பிற்குமிடையில் பேச்சுவார்த்தையின் மூலம் எதிர்கால நடைமுறை தொடர்பான சாதகமான தீர்வு எட்டப்படுவதற்கு ஏதுவாக இரண்டு மாத காலநீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தடையைத் தற்காலிகமாக நீக்கி அவுஸ்திரேலியச் செய்திகளை பேஸ்புக் மீண்டும் அனுமதித்துள்ளது.

கூகிள் நிறுவனமும் முதலில் பேஸ்புக்கினை ஒத்த நடவடிக்கையை எடுக்கப்போவதாக, அதாவது அவுஸ்திரேலியச் செய்திகளைத் தனது தளத்திலிருந்து நீக்கப்போவதாக அவுஸ்ரேலியாவை அச்சுறுத்தியது. பின்னர் அவுஸ்ரேலிய அழுத்தத்திற்கு சமரசம் செய்து கொண்டிருக்கின்றது. அடுத்தடுத்த மாதங்களில் இதே போன்ற சட்ட முன்மொழிவைக் கொண்டுவரவிருப்பதாக கனடா தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியாவை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய நாடுகளும் தகவற் தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் தொடர்பில் இதனை ஒத்த சட்ட அமுலாக்கங்களை நடைமுறைப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகநாடுகள் இதனை ஒரு முன்மாதிரியாகப் பின்பற்றப்படக் கூடும் என்ற அச்சம் இந்நிறுவனங்களுக்கும் உண்டு.

அரசியல் உள்ளடக்கத் தணிக்கை அதிகாரம்

பேஸ்புக் சார்ந்த மற்றுமொரு சமகால விவாதம் அரசியல் உள்ளடக்கம் சார்ந்த அதன் அணுகுமுறைகள். அரசியல் சார்ந்த உள்ளடக்கங்களை எந்த அளவில் அனுமதிப்பது என்பது தொடர்பான கட்டுப்பாடுகளைத் தாம் கொண்டுவரப் போவதாக பேஸ்புக் நிறுவனர் Mark Zuckerberg தெவிவித்திருக்கின்றார். இந்த அரசியல் உள்ளடக்கம் தொடர்பான பேஸ்புக்கின் அணுகுமுறையை முன்வைத்தும் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

எந்த வகையான உள்ளடக்கத்தைத் தணிக்கை செய்வது, எதனை அனுமதிப்பது, எதனை நீக்குவது என்ற முடிவுகளைத் தனியொரு நிறுவனமாக அது எடுத்துவருகின்றது. அந்த அணுகுமுறை என்பது ஒப்பீட்டளவில் மேற்கின் அரசியல் நலன்கள், அதிகார மற்றும் பொருளாதார நலன்களுக்குச் சாதகமானவை. அத்தோடு மேற்குடன் நல்லுறவைப் பேணுகின்ற ஆசிய, ஆபிரிக்க மற்றும் மத்தியகிழக்கு நாடுகளின் அரசாங்கங்களுக்கும் சாதகமானவை. பேஸ்புக் தணிக்கை என்பதே அடிப்படையில் அரசியல் நோக்கம் கொண்டது. கூகிளும் யூரியூப் மற்றும் அதன் தேடுதளங்களில் அத்தகைய நீக்கங்களைச் செய்து வருகின்றது. ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படும் பலஸ்தீன, குர்தீஸ் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான அணுகுமுறையையும் அவதானிக்க முடிகிறது. ஈழ விடுதலைப் போராட்ட வரலாறு, அடையாளங்கள், நினைவுகள் சார்ந்த பதிவுகள், படங்கள் சில பொதுமைப்படுத்தல் காரணங்களின் கீழ் நீக்கப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம், மாவீரர் நினைவுப் பதிவுகளை இடுவோரினது பேஸ்புக் கணக்கு ஒருமாதம் வரை முடக்கப்படுவது கடந்த சில வருடங்களாக இடம்பெற்றுவருகின்றன. இது விடயம் தமிழர்கள் மத்தியில் பேசுபொருளாகவும் ஆகியுமிருக்கின்றது.

Donald Trump பதிவுகள்: வன்முறைக்கான தூண்டுதல்

அரசியல் உள்ளடக்கம் சார்ந்த பேஸ்புக்கின் தணிக்கை அரசியல் கடந்த சில ஆண்டுகளாகவே கடும் விமர்சனத்திற்கு உட்பட்டுவந்துள்ளன. ஆனபோதும் அண்மையில் அமெரிக்க முந்நாள் ஜனாதிபதி Donald Trump இன் பேஸ்புக் மற்றும் ருவிற்றர் கணக்குகள் முடக்கப்பட்ட பின்னணியில் இந்த விவகாரம் மீண்டும் பேசப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை (ஜோ பைடன் வெற்றியை) அங்கீகரிப்பதற்காக செனற் சபை மற்றும் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் (06.01.2021) கூடியிருந்த போது, Trump-இற்கு ஆதரவான வலதுசாரிக் கடும்போக்காளர்கள் கொங்கிரஸ் அவைக்குள் அத்துமீறி உள்நுழைந்து வன்முறையில் இறங்கினர். இந்த வன்முறையிலும் கலவரத்திலும் ஒரு காவல்துறை  அதிகாரி உட்பட ஐந்து பேர் அக்கலவரத்தில் கொல்லப்பட்டனர். சமூக ஊடகங்களில் தனது பதிவுகள் மூலம்  Trump தனது ஆதரவாளர்களை இந்த வன்முறைகளுக்கு தூண்டினார், அணிதிரட்டினார் என்பது பலரும் அறிந்ததே. Mark-ன் இந்த முடிவிற்கு வலுச்சேர்க்க இதுவும் காரணமாகியிருக்கின்றது.

அமெரிக்க கொங்கிரஸ் அவைக்குள் ஆதரவாளர்கள் அத்துமீறி துழைவதற்குரிய கோரிக்கை நேரடியாக உரை ஒன்றின் மூலம் Trump-இனால் வழங்கப்பட்டது. கலவரத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், வோஷிங்டன் டி.சி.யில் தனது ஆதரவாளர்கள் முன் அவர் உரை நிகழ்த்தினார். தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளது என்று கூறியதுடன், தமது ‘பலத்தினைக் காட்ட வேண்டுமென’ ஆதரவாளர்களிடம் வலியுறுத்தினார். அனைவரும் கொங்கிரஸ் கட்டிடத்திற்குள் செல்ல வேண்டும் என்றும் கூறினார். ‘நீங்கள் விரைவில் கொங்கிரஸ் கட்டடத்திற்குள் அணிவகுப்பீர்கள், அமைதியாகவும் தேசபக்தியுடனும் உங்கள் குரல்களைச் செவிமடுக்கச் செய்வீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்’ என்று அந்த உரையில் குறிப்பிடப்பட்டிருந்தார். இவ்வுரை பின்னர் சமூக ஊடகங்களிலும் பதிவேற்றப்பட்டது.

கலவரம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அவர் இட்ட ருவிட்டர் பதிவு இப்படி இருந்தது:

தேர்தல் வெற்றி கபளீகரம் செய்யப்பட்டால் இப்படி நிகழும். சிறந்த தேசபக்தர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள்.  அமைதியும் அன்புடனும் வீடுகளுக்குச் செல்லுங்கள். இந்த நாளை என்றென்றும் நினைவில் கொள்ளுங்கள்’

மேற்படி பதிவுகள் டிவிட்டர், முகநூல் உட்பட்ட இன்னபிற தளங்களிலிருந்து நீக்கப்பட்டது. அடுத்த நாள் பேஸ்புக் நிறுவனர் மார்க், Trump-இன் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டு அவர் காலவரையறையற்று நீக்கப்படுவதாகவும் தனது சுவரில் குறிப்பிட்டார். குறைந்தது அவருடைய ஜனாதிபதிக் காலம் முடிவடையும் ஜனவரி இறுதிவரை முடக்கப்படும் என அறிவித்தார்.

சமூக ஊடகங்களிலிருந்து Trump நீக்கப்பட்டிருக்காவிட்டால் மேலும் வன்முறைகள் தூண்டப்பட்டிருக்க வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை. பல மில்லியன் கணக்கானவர்களை நேரடியாகச் சென்றடையக்கூடிய தளத்தில் வன்முறையைத் தூண்டும் வகையிலான கருத்துகளையும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் பதிவுசெய்து வந்தவர். அவரை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கியமை நன்மையானது என்ற கருத்து நிலவும் அதேவேளை அந்த நடவடிக்கை அச்சமூட்டுவதாகவும் பார்க்கப்படுகின்றது. கருத்துரிமை சார்ந்ததாக எதிர்வாதம் முன்வைக்கப்படுகின்றது. இங்கு Trump நீக்கப்பட்டமை சார்ந்த சரி பிழைகளுக்கு அப்பால் சமூக ஊடகம் கொண்டிருக்கின்ற அதிகாரம் ஆபத்தானதாகப் பார்க்கப்படுகின்றது. அதற்கான உதாரணமாகவும் இந்நிகழ்வு பார்க்கப்படுகின்றது.

டொனால்ட் டிரம்ப் – சொந்தமாகப் புதிய சமூக ஊடகத் தளம்?

டொனால்ட் டிரம்ப் சொந்தமாகப் புதிய சமூக ஊடகம் ஒன்றினைத் தொடங்கவுள்ளதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அவருடைய முன்னாள் ஆலோசகர் Jason Miller, தொலைக்காட்சிக்கு (Fox News) வழங்கிய செவ்வியில் இந்தத் தகவல் பகிரப்பட்டிருப்பதாக மார்ச் இறுதியில் ஊடகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் அப்புதிய சமூக ஊடகத்தளம் பாவனைக்கு வரும் எனப்படுகிறது. அதன் வருகை பல மில்லியன் கணக்கான பயனாளர்களை தன்வசப்படுத்தும் என்பதோடு சமூக ஊடகச் சந்தையை மறுவரையறை செய்யும் எனவும் Jason Miller தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  சமூக ஊடகங்களிலிருந்து நீக்கப்பட்டதற்கான டிரம்பின் நேரடிப் பதிலடியாக இது பார்க்கப்படுகின்றது. ருவிற்ரரில் 80 மில்லியன் வரையானவர்கள் டிரம்பைப் பின்தொடர்பவர்களாக இருந்துள்ளனர்.

டிரம்பின் இத்திட்டம் சுலபமானதல்ல. ஏனெனில் அதற்குரிய இணையத் தொழில்நுட்ப வளங்கள் ஊடக ஏகத்துவ சக்திகளான Microsoft, Google & Amazon வசமே உள்ளன. இந்நிலையில் டிரம்பின் புதிய சமூக ஊடகத் தளத்திற்கான சேவர் (server) வளத்தினை இந்நிறுவனங்கள் வழங்கப்போவதில்லை. அமெரிக்க ஆளுகைக்கு உட்படாத வேறு நிறுவனங்களிடமிருந்தே சேவர் வளங்களைப் பெறவேண்டி ஏற்படும். அதில்கூட சிக்கல்கள் இல்லாமலில்லை. Microsoft, Google & Amazon அல்லாத வேறு சிறிய ஊடகத் தொழில்நுட்ப நிறுவனங்கள் டிரம்பின் மில்லியன் கணக்கான பயனாளர்களைக் கவர்ந்திழுக்கும் இலக்கிற்கான தாங்குசக்தியைக் கொடுக்க வல்லனவா என்ற கேள்விகளும் நிலவுகின்றன.

பேஸ்புக்கின் பிரச்சார உத்தி?

இவற்றுக்கிடையில் சமூக ஊடகங்களிலிருந்து Trump வெளியேற்றப்பட்டமை தொடர்பான மற்றொரு பார்வையையும் உள்ளது. அதாவது புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கும் ஜனநாயகக் கட்சியினதும் அரசாங்கத்தினதும் நன்மதிப்பைப் பெற்றுக் கொள்கின்ற பிரச்சார உத்தியாகவும் பார்க்கப்படுகின்றது. இந்நிறுவனங்கள் மீதான அழுத்தம் அதிகரித்து வருகின்ற புறநிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகள் பிரதிநிதிகள் அவை மற்றும் செனற் அவை ஆகிய இரண்டினையும் ஆளப்போகும் ஜனநாயகக் கட்சியிடம் நன்மதிப்பைப் பெறுவது என்பது இதற்கான முக்கிய காரணியாகவும் சில மட்டங்களில் பார்க்கப்படுகின்றது. எனவே இந்நிறுவனங்களின் ஏகத்துவ அதிகாரம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முக்கிய கட்டத்திற்குள் நகரும்போது பைடன் நிர்வாகம் இதற்கான நன்றிக்கடனாக விட்டுக்கொடுப்புகளைச் செய்யக்கூடும் என விமர்சகர்கள் அச்சம் தெரிவித்துமுள்ளனர்.

Trump நீக்கப்பட்ட காலமும் நோக்கமும் கவனிக்கப்படவேண்டியது. புதிய ஜனாதிபதியின் வெற்றி அறிவிக்கப்பட்ட பின்னர், Trump-இன் பதவி நிறைவிற்குச் சிலநாட்கள் மட்டுமே இருந்த நிலையில் இது நிகழ்ந்திருக்கிறது. தனது ஆட்சிக் காலம் முழுவதும் சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரியதும் விமர்சனங்களுக்குரியதுமான பதிவுகளை இட்டு வந்துள்ளார். கடந்த 2020 நடுப்பகுதியில், தனது சமூக ஊடகப் பதிவுகளின் மூலம்,  ‘Black live matters’ போராட்டங்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டினார். அக்காலங்களில் அவர் அதிகாரம் மிக்கவராக இருந்த காரணத்தால் நீக்கம் தொடர்பான எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை.

ஏகத்துவ அதிகாரமும் கருத்துரிமை மீறலும்

இங்கு இரண்டு பாரிய சிக்கல்கள் வெளிப்படுகின்றன. எந்தக் கருத்தினை, எந்த அரசியலினை அனுமதிப்பது, எந்த அரசியலுக்குத் தடைவிதிப்பது, எந்த அரசியலை நீக்குவது என்பது அடிப்படைக் கருத்துரிமை மீறல் என்பது ஒன்று. அடுத்ததாக இத்தனையையும் தீர்மானிப்பது பேஸ்புக் என்ற ஒரு தனித்த நிறுவனம். இங்கே நிறுவனம் எனும் போது அதன் நிறுவனர் மார்க் ஆகப்பெரும் கருத்தியல் அதிகாரம் கொண்ட உலகளாவிய நபராக ஆகியிருக்கின்றார் என்பது இரண்டாவது சிக்கல். அரசியல் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கின்ற கருத்தியல் அதிகாரத்தை பேஸ்புக் நிறுவனத்திற்கு வழங்குவது கருத்துரிமை, ஜனநாயக, ஊடகச் சுதந்திரம் சார்ந்த பாரிய சிக்கல். அத்தோடு அவற்றைக் குழிதோண்டி புதைப்பதற்கான அதிகாரத்தை வழங்குவதற்கு ஒப்பானது.

உதாரணமாகச் சொல்வதானால் ‘Antifa’ எனும் பாசிசத்திற்கு எதிரான அமைப்புடன் தொடர்புடைய பல்வேறு குழுக்களை 2020-இல் பேஸ்புக் தடைசெய்தது. ‘Antifa’ என்பது பாசிசத்திற்கு எதிரான நாடு கடந்த ஒரு அரசியல் மற்றும் கருத்தியல் செயற்பாட்டு இயக்கம். திட்டமிடப்பட்ட பாசிச, நாசிச மற்றும் வலதுசாரிக் கடும்போக்குவாதத்திற்கு எதிராகச் செயற்படும் இயக்கம். சிவில் சமூகத்தின் பங்கேற்புடனும் நேரடியான எதிர்ப்பு நடவடிக்கைகளின் மூலமும் பாசிச அமைப்புகள் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பது இந்த இயக்கத்தின் மையச் சிந்தனை. பாசிச அமைப்புகள் சுதந்திரமாக இயங்குவதற்குரிய வெளியை அனுமதித்தால் சமூகத்தில் பாரதூரமான விளைவுகளை அவை ஏற்படுத்தும் என்ற வரலாற்றுப் புரிதலின்பாற்பட்டது இந்த அமைப்பின் இச்சிந்தனை.

எதிர்ப்புக்குரல்களை ஒடுக்கும் போக்கு

இன்றைய கொரோனா பேரிடர் காலம் மக்கள் ஒன்றுகூடி விவாதிக்கின்ற சூழல் இல்லாமல் ஆகிவிட்டது. இணையவழிக் கலந்துரையாடல்களும் தொடர்பாடல்களும்தான் சமூக இயங்குதலை ஓரளவு உயிர்ப்புடன் வைத்துள்ளன. சமூக ஊடகங்கள்தான் தகவல் பரிமாற்றத்திற்கும், கலந்துரையாடல்கள், விவாதங்களுக்குமான தளம் என்றாகியும் விட்டன. இனிவரும் சூழலில் இவற்றின் தேவை இன்னும் அதிகரிக்குமே தவிர குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் இந்த ஏகத்துவ அதிகாரம் என்பது பாரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியன. ஏலவே பேஸ்புக்கின் வடிகட்டல், தணிக்கைப் பொறிமுறைகள் தகவல்களையும், விவாதங்களையும், அரசியல் கருத்துகளையும் கணிசமாகக் கட்டுப்படுத்துகின்றன. தடுக்கவும் செய்கின்றன. பேஸ்புக் மேலும் இறுக்கமான தணிக்கை, தடைகள், நீக்குதல்களை நடைமுறைப்படுத்துமாயின் மேலும் பல எதிர்ப்புக்குரல்கள் அழுத்தப்படும் என்பது இதிலுள்ள ஆபத்துகளாகும்.

***

ரூபன் சிவராஜா

தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது.

புகை

0

லாவண்யா சுந்தரராஜன்

நீங்கள் போட்டு அனுப்பிய திட்டம் நன்றாக இருக்கிறது. வெற்றிகரமாக அதைச் செயல்படுத்தி விடுவீர்கள் என்று நம்புகிறேன். ஏற்கனவே நொய்டா அலுவலகத்தில் நீங்கள் பொறுப்பெடுத்த பின்னர் காத்திருப்போர் பட்டியலிலிருந்து நான்கு நபர்களை வருமானம் ஈட்டும் நபர்களாக வெற்றிகரமான மாற்றியிருக்கிறீர்கள்.”

சுத்த ஆங்கிலத்தில் ஒரு பக்கத்துக்கும் மேல் எழுதப்பட்டிருந்த மின்மடலை மீண்டும் வாசித்தபடி காலந்தி குஞ்ச் தாண்டி கிரேட்டர் நொய்டா செல்லும் எஸ்பிரஸ் ஹைவேயில் தீபக் மற்றும் அவனுடன் வரும் இன்னும் மூன்று பேர் வரும் வண்டிக்காக, அபர்ணாவும் அவளுடன் இன்னும் இரண்டு பேரும் காத்திருந்தனர். அந்த மடலில் சாரம்சம் நிறுவனத்திற்கு எந்த புகாரும் தேவையில்லை, வேலையில் ஏமாற்றும் யாராக இருந்தாலும் மேலாளர் தன் ஆளுமையால் அவர்களை மனமாற்றி மலையைப் புரட்ட வேண்டும். வண்டியின் ஜன்னல் வழி வெளியே பார்த்தாள். அங்கே கையின் விரல்கள் போல மடல் விரிந்த கல்யாண முருங்கையின் அழகைப் பார்த்த வண்ணம் அதன் அழகில் நொடி நேரம் வியந்திருந்தாள். சாம்பல் தலை நாகணவாய் பறவை அந்த மலர்களை அப்படி இப்படி தலையைத் திருப்பி பார்த்துக் கொண்டிருந்தது. இறக்கைகளை மடக்கி அமர்ந்திருந்த அந்த பறவையைப் பார்க்கும் போது எவ்வளவு சாது போல இருக்கிறது என்று நினைக்கும் போதே அது தனது இறக்கையை விரித்தது. அது அவ்வளவு பெரிய விசிறி போல விரியுமென்று அவளால் அதுவரை கற்பனை கூடச் செய்ய முடியவில்லை. இத்தனை விசிறியை அது எங்கிருந்து அடக்கி வைத்திருந்தது என்று எண்ணத் தோன்றியது. இறகை மடக்கி அமர்ந்திருக்கும் அந்த பறவை அமர்ந்த தோற்றத்தில் தீபக் போலவே இருந்தது. சோம்பலாக அமர்ந்த பறவையின் விரிசிறகு அபர்ணாவின் எண்ணத்தைக் கல்யாண முருங்கை மலர்களிலிருந்து வேறு எங்கோ விரட்டியது. பெங்களூரில் எப்படி நிம்மதியான வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருந்தேன் என்று யோசித்துக் கொண்டிருந்தாள். பத்தே நிமிடம் நடந்தால் அலுவலகத்தை அடைந்து விடுவாள். இங்கே ஒருநாளுக்கு நூற்று முப்பது கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். இடையே இப்படி வெட்டியான காத்திருப்பு வேறு. வெறுப்போடு மீண்டுமொரு முறை மின்மடல்களை பிரித்துப் பார்க்கலானாள்.

காஜியாபாத்திலிருந்து வரும் வண்டி வந்து சேர்ந்தது. அந்த வண்டியில் பயணித்தவர்கள் இறங்கி அபர்ணாவும் மற்றவர்களுமிருந்த வண்டியில் ஏறினார்கள். அபர்ணா பார்வையாலேயே “என்ன தீபக்.. தினம் நாங்க வந்து இருபது நிமிஷமாவது காத்திருக்கோம்” என்று கேட்பது போல் கடுமையாக்கப் பார்த்தாள். தீபக் அலட்சியமான பார்வையொன்றை வீசிவிட்டு அபர்ணாவைக் கடந்து போய் அமர்ந்து கொண்டான். அவனைப் பார்க்க அப்படியே தூங்கி எழுந்து வந்தவன் போலிருந்தான். பல் மட்டுமே துலக்கி முகச்சவரம் செய்திருந்தான். குளிப்பது கூட அலுவலகத்தில் அவன் கணக்குப்படி அலுவலகத்துக்காக எட்டு மணி செலவழிக்க வேண்டும். அதில் போக்குவரத்து முதல் அலுவலகத்துக்காக தயாராவது வரை எல்லாம் அடக்கம். அந்த எட்டுமணி நேரத்தைத் தவிர பிறநேரம் எல்லாம் அவன் உற்சாகமாக இருப்பதாக அபர்ணா வந்த புதிதில் ஒருமுறை சொன்னான். பயனாளர் நேர்முகத்துக்கு படிப்பதும், அவர்களது அலுவலகத்தில் போய் வேலை செய்வதும் தனக்கு இடக்கையில் சொடக்கு போடும் வேலை போன்றது. எளிமையானது என்று சொல்ல இடர்கரடக்கலாக அவன் உபயோகித்த மொழியும் அதன் பிரயோகமும் அபர்ணாவை அவனிடமிருந்து விலக்கி வைத்தது. பொதுவாக தன்கீழ் பணியாற்றும் எல்லோரிடமும் நட்புடன் பழகுவது போல தீபக்குடன் பழக முடியவில்லை. தீபக் இதை பணித்தலைமைத் திமிர் என்று சொல்லி வருவதாகவும் சகபணியாளர்களின் பேச்சிடை அவளுக்கு தெரிந்தது

“இன்னிக்கும் செக்டர் பதினாறில் ஒரே கூட்டமோ?” என்று தீபக் ஏறுவதற்கு முன்பே வண்டியில் ஏறும் பாலகிருஷ்ணாவிடம் கேட்டாள். தீபக்கிற்கு தமிழ் புரியாது. ஆனாலும் அவனது செவி மடல்கள் ஓசைக்கு விடைக்கும் பூனையின் காதுகள் போல் விரைத்து அவர்கள் என்ன பேசுகின்றார் என்பதை அறியத் துடித்தது. தினேஷ் காலை வணக்கம் சொல்லி அமர்ந்தான்.

“அவன் பார்த்துட்டே இருக்கான் சீஃப், இன்னிக்கும் அங்கே தான் நேரமாச்சு. அதுக்கு அப்பறம் டிராபிக்”

“புரியுது. விரைவில் இதுக்கு தீர்வு பண்றேன்”

வண்டி எக்ஸ்பிரஸ் ஹைவேயில் 120 கி.மீ வேகமெடுத்தது. தீபக் மட்டுமில்லாது, வண்டியிலிருக்கும் மற்ற அனைவருமே சமீபத்தில் அவர்களது ஒப்பந்த வேலை முடிந்து நிறுவனத்து வருமானம் ஈட்டுபவர்கள் பட்டியிலிருந்து வெளியேறியவர்கள் அல்லது புதிதாக வேலை எடுக்கப்பட்டவர்கள். எல்லோருமே நிறுவனத்துக்கு வருமானம் ஈட்டித்தரக் காத்திருப்போர். வருமானம் ஈட்டும்போது அவர்களது சம்பளத்தைப் போல ஐந்து மடங்குக்கு மேலாக கட்டணம் வசூலித்துக் கொள்ளும். நிறுவனத்துக்கு வருமானம் ஈட்டித் தராத ஒவ்வொரு நாளும் செலவு சுமை காரணமாக நிறுவனம் அவர்களை உன்னிப்பாகக் கண்காணிக்கும். அவர்கள் அனைவருக்கும் அபர்ணா புதிய தொழில் நுட்பங்களை சொல்லிக் கொடுத்து புதிய ஒப்பந்தத்தில் நிறுவனத்தின் வரவு கணக்காக விரைவில் மாற்ற வேண்டும். அது எவ்வளவு சீக்கிரம் செய்ய முடிகிறதோ அதை வைத்துதான் அவளது செயல்திறன் கணக்கெடுக்கப்படும். பெங்களூரில் இருந்தவரை இதுபோன்ற ‘அச்சார்ட் கிரியேசன் புரஜெட்’ என்ற நிறுவனத்துக்கு வரவு ஈட்டும் மனிதவளங்களை உருவாக்கும் பயிற்சி திட்டங்கள் பலவற்றை மிகவும் வெற்றிகரமாகச் செய்திருக்கிறாள். அதற்காக விருதெல்லாம் வாங்கியிருக்கிறாள். நிறைய தொழிற்நுட்ப கட்டுரைகளை எழுதி பத்திரிக்கைகளில் நிறுவனத்தின் வழியே பிரசுரித்திருக்கிறாள். திருமணமாகி ஓரிரு ஆண்டுகள் கணவனுக்கு பெங்களூர் வேலை எதுவும் சரியாக அமையாத காரணத்தால் அவள் கணவன் பணிபுரியும் குர்கவுன்னில் வசிக்க முடிவு செய்து, கிரேட்டர் நொய்டாவுக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வந்தாள். பெங்களூரில் ஒப்பந்தம் முடிந்து வெளியே வரும் நபர்கள் அனைவருமே ஆவலோடு கற்பார்கள். அங்கே நிறுவனங்களும் அதிகம். உடனடியாக வேறு ஒப்பந்தந்ததுக்கு போய் விடுவார்கள். இங்கே நிலைமை வேறு மாதிரி.

முதல் நாள் கிரேட்டர் நொய்டா அலுவலகத்தில் நுழைந்ததும் அது பெங்களூர் அலுவலகத்தில் அவளுடைய தனியறையை விடச் சற்றே பெரியதாக இருந்ததைப் பார்த்ததுமே அவளுக்கு அந்த அலுவலகத்தின் மீது எந்த மதிப்பும் வரவில்லை. மேலும் அங்கிருந்த ஓரிருவரைத் தவிர மற்ற அனைவருமே கற்பதில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. எவ்வளவு நாள் காத்திருப்பு பட்டியலில் இருந்தால் என்ன எனக்கு தான் சம்பளம் வருகிறதே என்பது போல அவர்களது நடவடிக்கைகள் அதிக அசட்டைத்தனமாக இருந்தது. அந்தக் கட்டிடத்தில் மனிதவள உருவாக்கத் திட்டப் பயிற்சிக்கு மொத்தமே எட்டுபேர் தான் இருந்தனர். வருமானம் ஈட்டுபவர் பட்டியலில் பன்னிரண்டு பேர் இருந்தனர். ஒப்பத்திலிருக்கும் நபர்கள் பயனாளர் அலுவலகத்திலேயே சென்று வேலை பார்ப்பார்கள். அபர்ணாவையும் சேர்த்து ஒன்பது பேருக்கு அப்படியொரு தனி அலுவலகம் அமைக்கப்பட்டிருந்ததே பெரிய விஷயம் தான். பெங்களூரில் அவர்களது நிறுவனத்துக்கு சொந்தமாக மிகப்பெரிய கட்டிடம் இருந்தது. அது மட்டுமல்லாமல் பெங்களூரின் பல இடங்களில் அவர்களுக்கான அலுவலங்கள் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் கிரேட்டர் நொய்டா கிளை மிகப் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்தது. ஒரே ஒரு நிறுவனத்துடன் மட்டுமே ஒப்பந்தப் பணி நடந்து கொண்டிருந்தது. கிளை விரிவடையும் வரை எல்லோருமே வெப்ப நாற்காலியிலே அமர்ந்திருக்க வேண்டும். அதைப் பற்றிய எந்த சிந்தையுமே இல்லாமல் சிலர் இருப்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. மென்பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனத்தில் நேரடியாகப் பணிபுரிபவர்கள் ஒருமுறை வேலைக்குள் நுழைந்து விட்டால் போதும். ஆனால் ஒப்பந்தப் பணியில் அமர்த்தப்படும் பணியாளர்கள் ஒவ்வொரு முறையும் புதிதாக நிறுவனத்துக்குப் போவது போல நேர்முகத்தில் தேர்வெடுக்க வேண்டும். எல்லா பரீட்சைக்கும் கடைசி நேரத்தில் படித்துத் தேர்வெழுதித் தேறிவிடலாம். ஆனால் பணம் தரும் முதலாளிகள், நிறுவனர்களை அவ்வளவு சுலபமாக ஏமாற்ற முடியாது.

அபர்ணா நோய்டா கிளைக்கு வரும் முன்னர் தீபக் ஒருமுறை பயனாளர் நிறுவனத்தில் நடந்த நேர்காணலில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தான். ஆனால் அது மட்டும் போதுமா, இதென்ன இடக்கையில் சொடக்கு போடும் வேலையா? வேலையில் அவனது நேர்மையற்ற போக்கை எப்படியோ கண்டறிந்து நெக்கு சாக்கு சொல்லி சொந்த நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பி விட்டார்கள். அவனது வேலை செய்ய மறுக்கும் சோம்பேறித்தனத்துக்கு அது மிக வசதியாகப் போய்விட்டது. மேலும் அங்கே இருந்த மற்றவர்களை விட மூத்த பணியாளர் என்ற விதத்தில் அலுவலகத்தின் முழுப்பொறுப்பும் அவன் கையிலிருந்தது. பெங்களூரிலிருந்து கைப்பயிற்சி படிப்பித்தல் எல்லாம் அவெந்திகா மேற்பார்வையில் நடந்து கொண்டிருந்தது. அவெந்திகாவும் அவனும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே எப்படியோ ஒத்துப்போய் விட்டதோ அல்லது அவன் மிகத் திறமையாக இங்கே நடக்கும் விஷயங்களை மாற்றிச் சொன்னானோ தெரியாது. அபர்ணா வந்ததும் முதலில் ஒவ்வொரையும் படிக்க வைக்க, வேலை செய்ய வைக்க பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. அவன் தன்னுடைய சோம்பேறித்தனத்துக்கு உகந்தவாறு எல்லோரையும் உருவாக்கி வைத்திருந்தான். அவர்களது மனநிலையை மெல்ல மெல்ல மாற்றி, நேர்முகத்துக்கு தயார் செய்ய பெரும் முயற்சியெடுக்க வேண்டியிருந்தது. எல்லோரும் செய்தால் ஒருவாரத்தில் முடியும் வேலையெல்லாம் பல வாரங்களுக்கு நீண்டது. இதை சரிசெய்ய முதலில் தீபக்கை சரிசெய்ய வேண்டுமென்று அபர்ணாவுக்கு புரிந்து தான் மேலாளரின் உதவியை கேட்டபோது அவர் அவளது ஆளுமையை நிறுவச் சொல்கிறார். பேசி சரிசெய்யப் பார்ப்போம் என்று நினைத்தாள்.

மென்பொருட்களுக்கு விற்பனை செய்து வருமானம் ஈட்டாமல், மனிதவளங்கள் வருமானம் ஈட்டித் தருவதையே நம்பியிருக்கும் நிறுவனங்களில் எழுபது சதவீதம் பேருக்கு மீதமிருக்கும் முப்பது சதவிகிதம் ஆட்களே சம்பாதித்துக் கொடுப்பார்கள். அதனால் வேலைக்குக் காத்திருப்பவர்களுக்கு வருமானம் ஈட்டித் தருபவர்களுக்கு கிடைப்பது போல மரியாதையோ, பெரிய வசதிகளோ கிடையாது. அபர்ணாவும் பிறரும் இருந்த அலுவலகம் அவர்களின் பணியாளர் நிறுவனத்துக்கு மிக அருகிலிருந்தது. அந்த இடம் அதிகமும் பாதுகாப்பற்ற இடமாக இருந்தது. கிரேட்டர் நொய்டா குற்றங்கள் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருந்தது. வழிப்பறியும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும் அடிக்கடி நடந்தது. இருந்தாலும் வாடகை குறைந்த இடமென்பதால் அங்கே அலுவலகத்தை தேர்ந்தெடுத்திருந்தார்கள். வருமானம் ஈட்டுவோர்க்கு வந்துபோகத் தனியாக வண்டி வசதியெல்லாம் செய்து கொடுக்கப்படும். நொய்டா கிளையின் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் எட்டு நபர்களும் குர்காவுன், ப்ரிதாபாத் மற்றும் காசியாபாத் பகுதிகளிலிருந்து வந்தனர். அவ்விடங்கள் எல்லாம் வகைக்கொரு திசையில் இருந்தது. காலந்திகுஞ்ச் அருகில் மூன்று ஊர்களிலிருந்து வரும் பாதைகள் ஒன்று சேரும். அதுவரை வெவ்வேறு வண்டியில் வந்து அந்த இடத்திலிருந்து ஒரே வண்டியில் பயணத்தால் செலவு மிச்சமென்று எல்லோருக்கும் பாதி வழிக்கு மேல் ஒன்றாக பயணிக்க ஒரு வண்டி மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. இது கொடுத்ததே பெரிய விஷயம். பல கட்ட மடல்களை அபர்ணா எழுதிய பின்னரே கொடுக்கப்பட்டது. அங்கே சாலையில் அதிவேகத்தில் விரையும் வண்டிகளைப் பற்றியும், பொதுமக்கள் பயணம் செய்யும் வாகனங்களில் வந்தால் அலுவலகம் வந்துசேரும் வழியில் இருக்கும் பாதுகாப்பின்மை பற்றியும் எழுதி இந்த வாகன ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். அது சரியாக இயங்கவில்லை, சரியான நேரத்துக்கு அலுவலகம் அடையவில்லை என்று நிலைய தலைமையில் இருக்கும் அவளே எழுதி போட்டால் அவ்வளவு தான். வாகன வசதி ரத்து செய்யப்படும். வருமானம் ஈட்டும் வேலைக்கு போக வேண்டும் என்ற அக்கறையற்ற பொறுப்பற்ற சகபயணிகள் பற்றி யோசித்துக் கொண்டேயிருந்த போது அலுவலகம் வந்து சேர்ந்தது.

அலுவலகம் இருந்த அந்த பெரிய வளாகத்தில் நுழைவாயிலின் முதற்கட்ட சோதனைக்காக வண்டி நின்று கொண்டிருந்தது. பார்க்கக் கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் வண்ணக் கண்ணாடியைச் சுவர் முழுவதும் ஒட்டி வைத்திருந்தார்கள். பார்க்க அழகான கண்ணாடி மாளிகை போலிருந்த அந்த பெரிய கட்டிடத்தில் ஏழாம் மாடியில் ஒரு கோடியில் அவர்கள் அலுவலகம் இருந்தது. வண்டி கட்டிடத்தை வலமாக ஒரு சுற்று சுற்றி கீழ்தளத்திலிருந்த வாகனம் நிறுத்தி வைக்கும் இடத்தை அடைந்தது. அங்கிருந்து அனைவரும் மின்தூக்கியை நோக்கி நடந்தனர். தீபக் வண்டியிலிருந்து கடைசியாக இறங்கி ஏதோ தேடுவது போலப் பாசாங்கு செய்து கொண்டிருந்தான். தினம் புகைத்துவிட்டு மேலே வரவே கணிசமான நேரத்தைக் கடத்துவான். மெதுவாக நடந்து வந்து சேர்ந்தான். அபர்ணா மின்தூக்கியின் கதவுகள் அவன் வருகைக்காகப் பிடித்து வைத்திருக்க சொன்னாள். மின்தூக்கியை விட்டு இறங்கியதும் அவன் நேராக ஒப்பனையறையை அடைந்தான். அபர்ணா கண்ணாடித் தடுப்புகள் கொண்டு அமைக்கப்பட்ட அவளுடைய அறைக்குச் சென்றாள். அங்கே கைப்பை மற்றும் சாப்பாடு பைகளை வைத்து விட்டு, ஒப்பனையறைக்குள் நுழைந்த போது, பக்கத்திலிருந்த ஆண்கள் ஒப்பனையறையிலிருந்து புகை மண்டலம் வெளியேறிக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியாக பெண்கள் ஒப்பனையறையிலும் அது அத்துமீறி நுழைந்திருந்தது. ஆண்கள் ஒப்பனையறைக் குளியலறையிலிருந்து தண்ணீர் கொட்டும் சப்தம் கேட்டது. தீபக்தான் குளித்துக் கொண்டிருக்க வேண்டும். அவன் குளித்து முடித்து அலுவல மேசையை அடைவதற்கு குறைந்தபட்சம் அரைமணி நேரத்துக்கு மேலாகும். எரிச்சலோடு தனது இருக்கையில் வந்து அமர்ந்தாள் அபர்ணா.

“இனி தினமும் 9.30 நிமிடத்துக்குத் தினசரி முன்னேற்றங்களை பகிரும் சந்திப்பு இருக்கும். ஆகவே எல்லோரும் அலுவலகத்தில் 9.20-க்கு இருக்க வேண்டுமென்று” என்று அனைவருக்கும் ஒரு மடலை அனுப்பினாள். தீபக்கிற்கு தன்னை வந்து சந்திக்குமாறு தனிமடலொன்றை அனுப்பினாள். இன்று ஒவ்வொருவருக்கும் என்னென்ன படிக்கச் சொன்னோம் என்னென்ன படித்து முடித்தோம், அது இயக்கவிதி முறைகளைப் பரிசோதிக்கும் சிறு அளவிலான கணினிக் கூறுகளை, விளக்கங்களை எழுதி வைத்தார்களா என்பதை அவரவர் மேசைக்குச் சென்று பார்த்துக் கொண்டிருந்தாள். தீபக் வருவது தெரிந்தது, அவன் நாற்காலிக்கு எதிர்புறமிருந்தவர்களிடம் பணி ஆலோசனையில் இருந்தாள் அவள், என்றாலும் தீபக்கின் கணினியை அவளால் பார்க்க முடியும். அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று தீபக்கிற்கும் தெரியும். அவன் தனது கணினியைத் திறந்தான். அரை நிர்வாணமான புகைப்படம் ஒன்று திறந்ததை வேகமாக மூடினான். அவள் தற்சமயம் அனுப்பிய மடலைத்தான் படித்தான். நாற்காலியை வேகமாக பின்னுக்குத் தள்ளிவிட்டு, தனது தோழியை அழைத்துக் கொண்டு காப்பி குடிக்கும் பகுதிக்குச் சென்றான். “இவ எல்லாம் எனக்கு புகை போல, ஃப்பு என்று ஊதித் தள்ளிவிடுவேன்” என்று பிஹாரியில் சத்தமாகச் சொன்னபடி நடந்தான். அர்ச்சனா தற்போது தான் தட்டுத்தடுமாறி ஹிந்தியில் பேசக் கற்றுக் கொண்டிருந்தாள். சில ஹிந்தி எழுத்துகளையும் கற்று எழுத்துக் கூட்டி போஸ்டர்களை வாசிப்பது தான் அவளுடைய நீண்ட பயணத்தின் பொழுதுபோக்கு. பிஹாரியில் தீபக் பேசியது ஓரளவு அவன் முகபாவனையிலும், வாயை ஊதிக்காட்டியதிலிருந்தும் அவளை துச்சமாக தூசி போல நினைத்து ஏதோ சொல்கிறான் என்பதாகப் புரிந்தது. அபர்ணாவின் முகம் கடுப்பாகியது. பாலகிருஷ்ணனும் “என்ன இப்படி கேவலமா இருக்கான்” என்றான். தினேஷ் கொஞ்சம் பயந்து போயிருந்தான். “நாம வேலைய பார்ப்போம். அவனுக்கு விரைவில் சிக்கல் புரியும்” என்றபடி காப்பி குடிக்கும் பகுதியைப் பார்த்தாள். அங்கிருந்து கண்ணாடிக் கதவுகள் வழியே அந்த இடத்தைப் பார்க்க முடியும். தீபக் அங்கே கைகளை ஆட்டி ஆட்டி வேகமாகக் கோபமாய் தனது நண்பனுடன் பேசிக் கொண்டிருப்பது போல தெரிந்தது. முக பாவனைகள் கொஞ்சம் தெரிந்தாலும் என்ன பேசிக்கொண்டார்கள் என்று கேட்கவில்லை.

அபர்ணா அடுத்தடுத்த நபர்களிடம் என்னென்ன பிரச்சனைகளென்று கேட்டு அருகிலேயே இருந்து சரிசெய்து கொண்டிருந்தாள். வேலை கவனத்தில் அவளுக்கு தீபக் மீண்டும் தனது இருக்கை வந்தானா என்ன என்று கவனிக்க நேரமில்லை. மணி பதினொன்றரை ஆயிற்று. அபர்ணா காப்பி குடிக்கப் போனபோதும் தீபக்கும் அவன் தோழியும் பேசிக் கொண்டிருந்தவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு தனது இருக்கைக்குக் கிளம்பத் தயாரானார்கள். அபர்ணா காப்பி தயாரிக்கும் இயந்திரத்தில் கோப்பையை வைத்து கபே லேட்டோ என்று எழுதப்பட்ட பொத்தானை அழுத்தினாள். பாதிக் கோப்பையே நிறைந்திருந்தது.

“இதில் பால் நிறைக்கவில்லையா?”

பதில் சொல்லாமல் உதவியாளன் தீபக் இருந்த இடத்தை நோக்கினான். அவனும் இவன் கண்களை நோக்கிவிட்டு தனது கணினியில் ஏதோ செய்வது போல குனிந்து கொண்டான். குளிர்சாதனப் பெட்டியைப் பார்த்தாள். அது காலியாக இருந்தது. இதற்குக் கொடுக்கப்படும் வாடகைக்கேனும் இதில் ஏதேனும் வாங்கி வையுங்கள் தோழா என்று ஹிந்தியில் சொல்லிவிட்டு தனது இருக்கையை அடையும் முன்னர், தீபக் அருகே சென்று பார்க்கும் போது அவள் கையில் காப்பி கோப்பையில் இன்னும் கொஞ்சம் காப்பி மிச்சமிருந்தது.

“தீபக் என்னுடைய அலுவலகத்துக்கு வந்து பார்க்கச் சொன்னேன்.. நீங்கள் இன்னும் காலை காப்பியே முடிக்கவில்லையா”

“நான் வந்தேன். நீங்கள் பிறரிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள். உங்கள் அலுவலகத்தில் இல்லை.”

“சரி இன்னும் ஐந்து நிமிடங்களில் வந்து பாருங்கள்”

அதற்குள் உதவியாளன் பால் நிறைத்து விட்டதாகச் சொன்னான். மீண்டும் காப்பி குடிக்குமிடத்துக்குச் சென்றாள் அபர்ணா. காப்பிக் கோப்பையைக் காப்பி தயாரிக்கும் இயந்திரத்தின் காப்பி வழங்கும் குழாய் அருகே வைத்துவிட்டு அந்த விலையுயர்ந்த நவீன காப்பி இயந்திரத்தையே பார்த்த வண்ணமிருந்தாள். அந்த காப்பி தயாரிக்கும் இயந்திரத்துக்கு மாத வாடகை அதன் விலையில் பாதியிருக்கும். அது மட்டுமில்லாமல், அங்கிருக்கும் நாற்காலி, மேசைகள், குளிர்சாதனப் பெட்டி எல்லாமே வாடகைக்கே எடுக்கப்பட்டிருந்தது. தீபக் நொய்டா கிளையின் முதல் ஊழியர் என்பதால் நிறுவன மேலிடம் சில விஷயங்களுக்கு அவன் உதவியை நாடியிருந்தது. அதை சாதகமாகக் கொண்டு சாமார்த்தியமாகப் பேசி ஒப்பந்தங்களைத் தனது சொந்தக்காரருக்கு வாங்கிக் கொடுத்திருந்தான் என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். ஆனால் அவனைக் கேட்டால் இதற்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை என்பான்.

மீண்டும் தன்னுடைய அறைக்கு வந்த போது தீபக் அவனுடைய இடத்தில் இல்லை அவன் சரியாக 11.45-க்கு உடற்பயிற்சி நிலையத்துக்குச் செல்வான். எல்லா கணினி சேவை நிறுவனங்களில் தனது பணியாளர்களின் உடல்நலம், மனநலனில் மிகுந்த கவனம் கொண்டிருக்கும். அவர்களுடைய நிறுவனமே ஒரு உடற்பயிற்சி நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டு கணிசமான தொகையைக் கொடுத்து பணியாளர்களை அவர்கள் இடத்துக்கு அழைத்துச் செல்ல வாகன வசதியோடு ஏற்பாடு செய்யும். அப்படிப்பட்ட உடற்பயிற்சி நிறுவனங்களும் தங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொண்டிருந்தனர். இருக்கும் வேலைகளைச் சரியாகச் செய்தால் அங்கே போக நேரம் ஒதுக்கக் கூட முடியாது. வருமானம் ஈட்டும் ஊழியர் யாருமே அங்கே எட்டிப் பார்ப்பதில்லை. சில சமயம் அபர்ணா அங்கே போய் வருவதுண்டு ஆனால் தினமும் போவது கடினம். தீபக் அங்கே கிளம்புவதில் நேரம் தவற மாட்டான்.

மைக்ரோ வோவனில் மதிய உணவைச் சூடுசெய்யக் கொடுத்தனுப்பி விட்டு அலுவலகத்தினுள் அபர்ணாவின் குழு கைப்பயிற்சிக்காக தயார் செய்த தகவல் பரிமாறும் செயலி மூலம் தீபக்கிற்கு மடல் அனுப்பினாள். “காலையிலேயே சொன்னபடி என்னை நீங்கள் இன்னும் வந்து சந்திக்கவில்லை. இன்று அனைவரிடம் வேலை சார்ந்த விஷயங்களைப் பேசி முடித்து விட்டேன். தற்சமயம் மதிய சாப்பாடு நேரமாகி விட்டது. ஆகவே மதிய உணவு முடிந்ததும் கட்டாயம் வந்து பார்க்கவும்” என்று அனுப்பினாள். அதை அவன் வாசித்து விட்டது தெரிந்தது. ஆனாலும் பதில் எதுவும் சொல்லவில்லை. தீபக் தனது மதிய உணவு டப்பாவை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தான். அபர்ணாவின் உணவு அப்படியே சூடாக்கப்படாமல் திரும்பி வந்தது.

“மைக்ரோ வேவ் வேலை செய்யல மேடம்”

“நேத்தும் இதுதானே சொன்னீங்க ஏன் வேலை செய்யவில்லை, சரிசெய்யச் சொல்ல வேண்டியது தானே”

“…”

“என்ன பாக்கறீங்க? நீங்க தானே இதெல்லாம் சரியா இருக்கான்னு பார்த்து வைக்கனும்”

“…”

“ஏதேனும் சாதனம் வேலை செய்யலைன்னா சரிசெய்ய ஆள கூப்பிட வேண்டியது தானே”

“தீபக் சாரின் அண்ணனிடம் பேசி நாளைக்குள் சரி செய்கிறேன்”

“நாளைக்குள் சரியாகவில்லை என்றால் நான் மேலிடத்துக்குப் புகார் அனுப்பி விடுவேன்”

“நேற்று கேட்ட போது நீங்கள் மட்டும் தானே அதனை உபயோகிக்கிறீர்கள் என்று சாரின் அண்ணா சொன்னார்”

“சரி. இனி அதை யாரும் உபயோகிக்க வேண்டாம் என்று எழுதி ஒட்டி விடுங்கள். இனி அதற்கு மாத வாடகை தரவேண்டாமென்று மேலிடத்துக்கு எழுதி விடுகிறேன். சாருடைய அண்ணாவை வந்து அந்த கருவியை எடுத்துச் சென்றுவிடச் சொல்லுங்கள்”

அவள் நினைத்தபடி அந்த உதவியாளன் நேராகச் சென்று தீபக்கிடம் பேசினான். அதற்கு அவன் என்ன சொன்னான் என்று கவனிக்கும் ஆர்வம் அபர்ணாவுக்குக் கொஞ்சமும் இல்லை. அவளது மதிய உணவை அவள் தடுப்பறைக்குள்ளே முடித்துக் கொண்டு அடுத்த நாள் அவளுடைய குழுவிற்கும் கொடுக்கப்பட வேண்டிய திட்டங்களைத் தயாரிப்பதில் ஆர்வமானாள். மதிய சாப்பாட்டை ஆற அமர முடித்து விட்டு கிட்டதட்ட மூன்று மணிக்குத் தனது இருக்கைக்கு வந்தமர்ந்தான் தீபக். அதன் பின்னர் அங்கிருந்து மெல்ல ஊர்ந்து வந்து அபர்ணாவின் அறைக்கதவை மெல்லத் தட்டினான்.

“நான் உள்ளே வரலாமா?”

“வாங்க தீபக்.. சில முக்கிய முடிவுகளை சீஃப் எடுக்கச் சொல்லியிருக்கார்.”

“..”

“நாளை முதல் தினத்தொடக்கத்தில் சந்திப்பு இருக்கும். முதல் நாள் செய்த வேலை, அன்று திட்டமிட்டிருக்கும் வேலை இதற்கான முழு தெளிவு உங்களுக்கு இருக்க வேண்டும். இதோ இந்த எல்லா வேலைகளும் பாக்கியிருக்கின்றன. இதில் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். எடுத்துக் கொண்டு நீங்களே எவ்வளவு நாள் ஆகுமென்று சொல்லலாம். அதே திட்டப்படி நாம் தினம் அந்த வேலை முடிந்ததா என்று பார்க்க வேண்டும்”

“…”

“முக்கியமாக காலை 9.30-க்கு அந்த சந்திப்பு நடக்க வேண்டும்”

“அபர்ணா நாம் அலுவலகம் அடைவதே 10.30 தானே”

“ஆம். இனி அதை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தொடங்கச் சொல்லி சிஃப் உத்தரவு”

“10.30-க்கு வந்தாலே என்னால் நீங்கள் கொடுக்கும் எல்லா வேலைகளையும் செய்துவிட முடியும். அதுவும் எல்லாம் படிப்பது. எப்போதாவது தான் கோட் எழுத வேண்டியிருக்கும்”

“இல்லை. இப்போது நான் நிர்மாணித்திருக்கும் திட்டத்தில் தினம் கோட் எழுதும்படி இருக்கும். கம்பிளிட் ஸ்டாக் எழுதப் போகிறோம். ரொம்ப ஸ்வாரஸியமாக இருக்கும்”

“என்ன செய்தாலும் கிளையெண்ட் இன்டெர்வியு அப்போது என்ன கேட்பார்கள் என்று கேட்டுப் படித்தால் போதுமானது தானே”

“இல்லை.. இனி அப்படியில்லை. இங்கே இருக்கும் மட்டும் புதிது புதிதாகப் படிக்கவும், செயலிகள் செய்யவும், அவற்றை பொது நடைமுறையில் பயன்படுத்தும் விதத்தில் கஸ்டமர் புரஜெட் போலவே செய்ய இருக்கிறோம். உதாரணத்துக்கு நாமே உருவாக்கிய ஷாட் பாக்ஸ் போல”

“உங்களுக்கு 7.15-க்கு கிளம்ப வேண்டியிருக்குமே.”

“அது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாமென்று நினைக்கிறேன். நமது சந்திப்பு 9.30-க்கு தொடங்க வேண்டும். அதற்கு நமது வண்டி இங்கே 9.20-க்கு வந்து சேர வேண்டும். அதாவது உங்கள் வண்டி எக்பிரஸ் ஹை-வேயில் 8.45 இருக்க வேண்டும்”

“அதை என்னிடம் ஏன் சொல்கின்றீர்கள்”

“எல்லோரிடமும் சொல்லியாச்சு. தனித்தனி மடலில் சொல்லி அனுப்பி விட்டேன். உங்க வண்டியில் நீங்க தான் சீனியர். ஆகவே இதனை நீங்கள் தான் வழிநடத்த வேண்டும்.”

“என்னால் முடியாது”

“ஏன்”

“எல்லோரும் நேரம் கடத்துவார்கள். அவர்களை என்னால் கட்டுப்படுத்த முடியாது”

“தீபக் நீங்கள் கிட்டத்தட்ட ஆறு வருட அனுபவம் கொண்டவர். ஓரிரு ஆண்டுகளில் அடுத்த படிக்கு உயர வேண்டும். உங்கள் ஆளுமைத்திறன் இதிலிருந்து தானே கண்காணிக்கப்படும். உங்களால் முடியும்”

“இல்லை அபர்ணா. எங்கள் பாதை போக்குவரத்து மிகவும் அதிகம் எங்களால் 8.45-க்கு அங்கே வரமுடியாது. என்னுடைய நிலையத்திலிருந்து 7.45-க்கு நான் கிளம்ப வேண்டியிருக்கும்.”

“உங்களை விட அரைமணி முன்னர் நான் கிளம்ப வேண்டியிருக்கும்”

“இல்லை என்னால் முடியாது.”

“சரி இதனை எனக்கு மடலில் எழுதி அனுப்புங்கள்”

“ஏன் அனுப்ப வேண்டும்”

“நான் சிஃபுக்கு சொல்ல வேண்டும். என்னால் 9.30-க்கு தினம் தொடக்கச் சந்திப்பை நடத்த முடியாதற்குக் காரணமாகக் காட்ட வேண்டும்”

“…”

“சரி நேற்று என்னென்ன வேலை செய்தீர்கள். இன்று என்ன செய்தீர்கள் என்றும் ஒரு மடலை அனுப்பி விடுங்கள்”

“நான் படித்துக் கொண்டிருந்தேன்.”

“சரி என்னென்ன படித்தீர்கள் என்று பட்டியலிட்டு 8 மணி நேரத்துக்கு எவ்வளவு படித்திருக்கிறீர்கள் என்று நியாயப்படுத்தி மடலை எழுதிவிடுங்கள். கடந்த வாரம் கொடுத்த கோடிங் ஏன் முடிக்கவில்லை என்று எழுதிவிடுங்கள்”

“நீங்கள் கொடுத்த வேலை எனக்குப் புரியவில்லை”

“அதை நீங்கள் உடனே கேட்டிருக்க வேண்டும். அதே போலொரு வேலையை தினேஷுக்கு கொடுத்தேன். அடுத்த நாளே அவன் முடித்து விட்டான்”

“தினேஷுடன் நீங்களே அமர்ந்து வேலை செய்கின்றீர்கள்”

“அவனுக்கு இருக்கும் சந்தேகங்களை மட்டுமே தீர்கிறேன். நீங்கள் கேள்வியைப் பட்டியலிடுங்கள். நான் பதிலளிக்கவில்லை என்றால் புகார் செய்யலாம்”

“நிமிடக்கணக்கில் என்ன செய்து கொண்டிருந்தேன் என்றெல்லாம் சொல்ல முடியாது”

“அதையும் சேர்த்தே மடலில் எழுதி விடுங்கள். கடந்த நான்கு மாதத்தில் இரண்டுமுறை நேர்முகத்துக்கு சென்று தேர்வாகவில்லை. இதை எல்லாம் நான் மேலிடத்துக்கு தகுந்த ஆதாரத்தோடு தெரிவிக்க முடியும். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. உங்களுக்கு உதவி செய்யவே நினைக்கிறேன்”

“நீங்கள் என்னை வேண்டுமென்றே டார்கெட் செய்கின்றீர்கள்.”

“என்னுடைய வேலையைச் செய்கிறேன். உங்களை நீண்ட காலமாக பில்லிங்கில் மாற்ற முடியவில்லை. நான் இதற்குப் பதில் சொல்லும் நிலையில் இருக்கிறேன்”

“நீங்கள் கொடுத்த வேலையை முடிக்க என்னால் என்னுடைய ரத்தத்தைக் கொடுக்க முடியாது”

“குரலை உயர்த்த தேவையில்லை. நீங்கள் மடலை அனுப்பி வையுங்கள். இப்போது நீங்கள் போகலாம்”

பதில் எதுவும் சொல்லாமல் அவன் வேகமாக எழுந்து சென்றான். அடுத்த இரண்டு நாட்கள் உடல்நலக் குறைவென்று விடுப்பு எடுத்தான். அதற்கும் அடுத்த நாள் வீட்டிலிருந்து பணி என்று மடல் அனுப்பியிருந்தான். மூன்றாம் நாள் திடீரென மனிதவள மேலதிகாரியிடமிருந்து இப்படியொரு மடல் வந்தது.

“உங்களது பணியாளர்களிடம் உங்களைப் பற்றி கருத்துகளைக் கேட்டறிய உள்ளோம். நீங்கள் அவர்களைத் தவறான வழியில் நடத்துவதாக எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது. தீபாவளிக்கு மறுநாள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் சொல்லிவிட்டு, மறுநாள் வந்து எல்லோரையும் கையெழுத்து இடச்சொல்லி வற்புறுத்தியிருக்கின்றீர்கள். அப்படி கையெழுத்திடாதவர் மேல் காழ்ப்புணர்வுடன் நடந்து கொள்கின்றீர்கள். நாங்கள் அலுவலக கையேட்டைப் பார்த்து விட்டோம். தீபாவளிக்கு மறுநாள் ஒருசிலர் கையெழுத்து இட்டிருக்கின்றீர்கள். அன்று சிசிடிவியில் பார்த்தோம். யாருமே அலுவலகத்துக்கு வரவில்லை. மேலிடத்தின் அனுமதியின்றி அலுவலகத்துக்கு வரவேண்டுமென்று சொல்ல உங்களுக்கு அனுமதியில்லை. அதே போல அலுவலகத்துக்கு வராமல் வந்தது போலக் கையெழுத்து இடுவது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். இது உங்களுக்கு நாங்கள் கொடுக்கும் முதல் எச்சரிக்கை. இதைவிட முக்கியமான மற்றொரு பிரச்சனையை ஆதாரங்கள் இணைக்காமல் சொல்லியிருக்கிறார்கள். குழுவின் பெண்கள் மீது வெறுப்பை காட்டுகின்றீர்கள் என்றும், சில ஆண்களிடம் சகஜமாகப் பழகி நன்றாக சொல்லிக் கொடுக்கின்றீர்கள் என்றும் புகார் வந்திருக்கிறது. உங்கள் மொழி பேசும் நண்பர்களிடம் மென்மையாகவும், பிறமொழி பேசுபவர்களிடம் கடுமையாகவும் நடக்கின்றீர்கள் என்றும் அதே புகார் தெரிவிக்கிறது. ஆகவே நீங்கள் வரும் மாதம் முழுவதும் கண்காணிப்பில் இருப்பீர்கள் என்று தெரிவிக்கிறோம். இந்த விஷயங்களில் எல்லாம் நீங்கள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று உங்களுக்கு நாங்கள் வலியுறுத்துகிறோம்.”

***

லாவண்யா சுந்தரராஜன்

ஆசிரியர் தொடர்புக்கு lavanya.sundararajan@gmail.com

நங்கையின் நாராயணன்

1

சுஷில் குமார்

த்மநாப சுவாமி கோவில் கோபுரம் அதிகாலை சூரியனின் கதிர் பட்டு நாற்புறமும் பிரதிபலித்து விஸ்வரூபம் எடுத்து உலகம் முழுமைக்குமான ஒற்றைக் கலங்கரை விளக்கம் போல நிமிர்ந்து நின்றது. உச்சியிலிருந்து நொடிக்கொரு முறை கிழக்கு நோக்கிப் பறக்கும் புறாக்கூட்டம் சுற்றி வரவர முடிவடையாத பெரும் சங்கிலியாக நீண்டு சென்றது. ஒரு சுற்று சுற்றிவிட்டு மீண்டு வரும் புறாக்கள் தங்கள் முறைமை தவறாது கோபுரத்தின் பின்புறமாக உட்சென்றன. கோவிலைச் சுற்றியுள்ள நான்கு பெரும் வீதிகள், அவற்றிலிருந்து கிளைத்துப் பரவிச் செல்லும் உப தெருக்கள், இந்த மைய நகரைச் சுற்றி பக்கத்து கிராமங்களுக்கு விரிந்து செல்லும் வண்டிப் பாதைகள், ஒற்றையடிப் பாதைகள், பாதையற்ற பாதைகள் என கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் திரள். எங்கும் ‘நாராயணா, பத்மநாபா, அனந்தா’ முழக்கம். பெரிய வீதிகள் நான்கிலும் ஓரமாக நெடிய பந்தியில் இலை போட்டு அன்னதானம். முந்தைய மதியம் ஆரம்பித்தது இன்னும் முடிந்த பாடில்லை, இன்னும் இரண்டு நாட்களுக்குத் தொடருமென செய்தி. ஒரு பந்தியின் எச்சில் இலைகளைக் கொண்டு போய் கொட்டிவிட்டு வருவதற்குள் ஊருக்குள் நான்கு பந்தி மக்கள் பெருகினர்.

மகாராஜா ஸ்ரீ மூலம் திருநாள் ராம வர்மாவின் புகழை அன்னதானம் உண்டு நிறைந்த ஒவ்வொரு நாவும் பாடியது. முந்தைய மாலை பூசை முடிவில் பல்வேறு புதிய நலத்திட்ட அறிவிப்புகளை வாசித்தார் திவான் கிருஷ்ணன் நாயர். மக்கள் திரள் பெருமகிழ்ச்சியில், ‘ஓம், ஓம்’ எனக் கூச்சலிட்டு, மகாராஜா குடும்பத்தையும், திருவிதாங்கூர் நாட்டையும், காக்கும் தெய்வங்களையும் என எல்லோரையும் வாழ்த்தினர். ஒருவருக்கொருவர் மாறி மாறி கட்டிப்பிடித்து ஆடினர்.

“ஏலேய், அதென்ன மக்ளே, திவான் ஏதோ புதுசாச் சொன்னாரே, என்னமோ பெரிய வண்டியாம்லா?”

“அட முட்டாப்பயலே, இது கூட தெரியாதா ஒனக்கு? நான் போன மாசமே அத பாத்துட்டேன், தெரியுமா? செங்கோட்டைன்னு ஒரு பெரிய ஜில்லா உண்டும், தெரியுமா?”

“நமக்கெங்கண்ணே அதெல்லாம் தெரியும். நா திருவந்தரம் தாண்டி எங்க போனேன்?”

“அட கேளுடே, அந்த ஊருலந்து நம்ம கொல்லம் வரக்கி இந்த வண்டி மொதல்லயே வந்தாச்சு பாத்துக்கோ, நா எங்க மாமனார பாக்கப் போனம்லா, அப்பவாக்கும் பாத்தது. தாளி, என்னா பெருசுங்க? அப்பிடியே போய்க்கிட்டே இருக்கு பாத்துக்கோ, என்னா கூட்டம்? என்னா கூப்பாடு? ஆனா, எப்பிடித்தான் பயப்படாம வாரானுகளோ? என்ன ஏறச் சொன்னா, ஊர விட்டே ஓடிருவேன், என்ன சொல்லுக?”

“ஹிஹிஹி. அதான, நம்ம யாரு! வெள்ளக்காரன் கொச்சி கிட்ட வந்தா நீ கன்னியாரில போயி மறுவீட்டுச் சாப்பாட்ட முழுங்கிட்டுக் கெடப்ப.”

“ஆமா, இவரு நம்ம ராசாக்க தளபதில்லா, கேனப் பயலுக்குப் பொறந்த பயல, நாளக்கி வண்டி வரும்போ குறுக்கப் போயி விழுந்துறாத, பொறவு ஓம் பொண்டாட்டிக்கி ஓங் கோவணத்தத் தான் கொண்டோய் குடுக்கணும்.”

சற்று நேரத்தில் குதிரையில் வந்த முண்டாசணிந்த வீரர்கள் கோவில் முன்புற திடலில் இருந்த மக்களை ஓரமாக நிற்கச் செய்து இடையில் பாதையை ஏற்படுத்தினர். மக்கள் ஆரவாரம் வானை எட்டியது. கோவில் கோபுரப் புறாக்கள் கோவிலைச் சுற்றிச் சுற்றி வேகம் கூட்டி பறக்க ஆரம்பித்தன. முரசம் கொட்டியவாறு அங்கிருந்த திடலின் மையத்திலிருந்த பெரிய திண்டின் மேலேறி நின்ற வீரன் ஒருவன் மக்கள் குரலின் ஊடாக தன் குரலை தனித்துப் பெருக்கிக் கத்தினான், “எம்பிரான் திருமேனி, காக்கும் கடவுள், கருணைப் பெருங்கடல், மா சமுத்திர விண்ணவன், பெரும்புகழ் கோன், ஸ்ரீ ஸ்ரீ மூலம் திருநாள் ராம வர்மா மகாராஜா வருகிறார், வருகிறார். ஓம், ஓம்.”

மக்கள் கூவி ஆர்ப்பரித்து விண்ணோக்கி மலர் தூவினர்.

சற்று நேரத்தில் பன்னிரு இணை குதிரைகள் மெல்லக் காலடி எடுத்து வர, மூன்று பல்லக்குகள் பின் தொடர, திவான் கிருஷ்ணன் நாயரின் கம்பீரமான குதிரை முன்வர, கருத்த பேருருவுடைய, சர்வ ஐஸ்வர்யங்களும் பொருந்திய, தங்க முகப்படாமணிந்த திருவிதாங்கூர் அரண்மனையின் செல்லப்பிள்ளை நங்கையின் மீதமர்ந்து மக்களைப் பார்த்து ஆசி வழங்கியவாறு புன்னகைத்து நிறைந்து வந்தார் மகாராஜா ஸ்ரீ மூலம் திருநாள். கோவில் முகப்புத் திடலின் அருகே வந்து மண்டியிட்டு அமர்ந்தாள் நங்கை, துதிக்கையை மேலெழுப்பி தன் தகப்பனைக் கீழ் இறங்கி வருமாறு அழைத்தாள். வயதாகி விட்டிருந்தாலும் மகாராஜாவின் கம்பீரமும் முக லட்சணமும் இன்னும் அப்படியேதான் இருந்தது.

பஞ்ச வாத்தியங்கள் முழங்க, நடன மங்கையர் வரவேற்று ஆடி முன்செல்ல, மகாராஜா கோவிலின் உள்நுழைந்தார். திவான் பின் தொடர, சேடிப்பெண்கள் சுற்றிவர உடன் சென்றாள் அரண்மனையின் மகாலட்சுமி இளவரசி சேது லட்சுமி பாய். அவளது விரல் பிடித்து வெட்கத்தில் தலை குனிந்து நடந்தான் சிறுவன் சித்திரை திருநாள் பாலராம வர்மா.

புதிதாகத் தொடங்கவிருக்கும் புகைவண்டிப் போக்குவரத்து மற்றும் பிற திட்டங்களுக்கான வரைவுகளை அனந்த பத்மன் சந்நிதியில் வைத்து பூசை செய்து பெற்றுக்கொண்டார் மகாராஜா. பின், அவற்றைத் திவானிடம் கைமாற்றி விட முரசம் பலமாக நீண்டு ஒலித்து திட்டங்களை உறுதி செய்தது.

கோவில் பிரகாரம் சுற்றி வரும்போது சித்திரைத் திருநாள் பாலராம வர்மா சேது லட்சுமியின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினான்.

“என்ன வேணும் உனக்கு? மகாராஜா பார்க்கப் போறா, ஓத்திரம் பண்ணாம வாடா.”

அவன் அழுவது போலச் சிணுங்கி அவளை மீண்டும் பிடித்து இழுத்தான்.

“என்ன டா வேணும்? சொல்.” என்று முறைத்தாள் சேது லட்சுமி.

அவன் அவளைத் தன் முகத்தருகே இழுத்து அவள் காதில் கிசுகிசுத்தான்.

“அய்யோடா, என்னால் முடியாது. வேணுமானால் நீயே கேட்டுக்கோ.” என்றாள்.

அவன் மீண்டும் சிணுங்குவதைப் போல நடித்து அடம் பிடித்தான்.

“சரி, சரி. அரண்மனைக்குப் போனதும் மகாராஜா கிட்ட சொல்றேன், இப்ப அழாம வா கண்ணா.”

“எனக்கு பத்மநாப சாமி கோவில் கோபுரமும் வேணுமே!” என்று அவளது ஆடையைப் பிடித்து இழுத்து நிறுத்தினான்.

“அதெப்படி முடியும்? நங்கை இப்பவே அரண்மனைக்குப் போயிருவாளே. மகாராஜா என்ன சொல்லப் போறாரோன்னு நானே பயந்துட்ருக்கேன்.”

“நீ இப்பவே போயி மகாராஜாட்ட கேளு, இல்லைன்னா நான் அரண்மனைக்கே வரல்ல.” என்று பக்கத்திலிருந்த தூணைக் கட்டிப்பிடித்துக் கொண்டு நின்றான்.

“அடேய், முரண்டு பிடிக்காம வரியா, இல்லையா?”

அவன் அசைவதாக இல்லை.

“சரி, வா கோவிலை விட்டு வெளியே போவோம் மொதல்ல, நானே போயி மகாராஜாட்ட கேக்குறேன்.”

கோவில் முகப்பில் மக்கள் மலர் தூவி வாழ்த்த, மகாராஜா திண்டின் மீது நின்று எல்லோரையும் பார்த்து வணங்கினார். பின், கோவில் கோபுரத்தை நோக்கி கை தூக்கி வணங்கி பின் மீண்டும் மக்களைப் பார்த்து வணங்கினார். திவான் வந்து அவரது காதில் ஏதோ சொல்ல, மெல்ல திண்டை விட்டுக் கீழிறங்கினார். சேது லட்சுமியைப் பார்த்து கையசைத்துக் கூப்பிட அவள் வந்து குனிந்து வணங்கி அவரிடம் எதோ சொன்னாள்.

மகாராஜா ஒரு கணம் அவளைப் பார்த்து ஆச்சரியமடைந்து சிரித்தார். பின் திரும்பி பின்னால் நின்றிருந்த சித்திரைத் திருநாளைப் பார்த்தார். அவன் வெட்கத்தில் தலைகுனிந்து ஓடிச்சென்று சேது லட்சுமியின் பின்னால் ஒளிந்து கொண்டான்.

மகாராஜா திவானை அழைத்துப் பேசினார். திவான் மெல்ல புன்னகைத்துக் கேட்டுக்கொண்டார்.
*
ஒரு வாரத்திற்குப் பிறகு அரண்மனை தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்த மகாராஜாவைப் பார்க்க வந்திருந்தார் திவான் கிருஷ்ணன் நாயர். மகாராஜாவை வணங்கி அருகே வந்து நின்றார்.

“வாங்கோ திவான். ஏதும் அவசரமோ?” என்று குழப்பமாகப் பார்த்தார் மகாராஜா.

திவான் மீண்டும் வணங்கி புன்னகையுடன், “இல்லை திருவே. எல்லாம் நமது இளவரசின் ஆசை சம்பந்தமாகத்தான். அரசவையில் வைத்து பேச வேண்டாமென நினைத்தேன்.” என்றார்.

“ஓ, அதனாலென்ன, சொல்லுங்கள். முடிந்ததா?”

“மன்னிக்க வேண்டும் திருவே. ஒன்றும் சரியாக வரவில்லை, நம் அரண்மனை ஓவியர்களாலேயே முடியவில்லை.”

“என்ன? ஏன்? ஏன்?”

“திருவே, பாலராமரின் ஆசைப்படி நங்கை வலது முன்னங்காலை கோவில் திண்டின் மீது வைத்து துதிக்கை தூக்கி நிற்க வேண்டுமாம். அப்போதுதான் அவர் அதன் மீது ஏறி நிற்பாராம். இது போதாதென்று பத்மநாபர் கோபுரமும் பின்னணியில் வர வேண்டுமாம்.”

“சரி, அதனாலென்ன?”

“முதலில் நங்கை யார் சொல்லியும் அப்படி நிற்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள். காலைத் தூக்காமல் முரண்டு அங்குமிங்கும் ஆடுகிறாள். இதில் எங்கே ஓவியர்கள் வந்து அவளை அசையாமல் நிற்கச் செய்து வரைய?”

“என்ன திவான் சொல்றீர், நங்கை நல்லப்பெண் அல்லவா?”

“திருவே, அவள் இதுவரை நிலையாக எங்குமே நின்றதில்லையே! கொட்டிலில் கூட ஒரே ஆட்டம் தானே. என்ன செய்வதென்றே தெரியவில்லை. பாலராமர் வேறு உணவு உண்ணாது அடம் பிடிக்கிறார். யாரிடமும் பேசவும் மறுக்கிறார்.”

“சேது லட்சுமியிடம் சொல்லிப் பார்த்தீரா?”

“அவர்களும் கையை விரித்து விட்டார்கள்.”

மகாராஜா அங்குமிங்கும் நடந்தவாறு யோசித்தார்.

“சரி, ஒன்று செய்யும், நங்கையை நிலையாக நிற்கச் செய்ய பாகர்கள் வேண்டுமென்று செய்தி அனுப்பும். ஊரெங்கும் முரசம் செல்லட்டும். பார்க்கலாம்.”

திவான் குழப்பமாக தலையசைத்து விட்டு விடைபெற்றுச் சென்றார்.

பதினோரு பாகர்கள் நாட்டின் பல்திசைகளிலுமிருந்து வந்து முயற்சித்துப் பார்த்தார்கள். நங்கையின் ஆட்டத்தை நிறுத்த முடியவேயில்லை. முதல் இருவர் சொல்வதை சற்று பயந்தவளாகக் கேட்டு சில நொடிகள் அசையாமல் நின்றாள், பிறகு ஒரே ஆட்டம்தான். அரண்மனை யானையாதலால் பாகர்கள் குத்தூசியைக் கையால் தொடவே பயந்தனர். அப்படியே குத்தூசியில் எவ்வளவு நேரம்தான் அவளை கட்டுப்படுத்திவிட முடியும்? சித்திரைத் திருநாள் பாலராம வர்மாவிற்கு அந்த ஆசை ஒரு நோயாகவே மாறிவிட்டதைப் போலிருந்தது. பகல் இரவு எந்நேரமும் நங்கையின் மீது தான் எப்படி ஏறி நிற்பேன் என்பதையும், பின்னாளில் திருவிதாங்கூர் மகாராஜா ஆனவுடன் அந்த ஓவியத்தை தன் அரசவையில் வைக்கப் போவதைப் பற்றியும் போவோர் வருவோரிடமெல்லாம் திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பித்தார். துணைக்கு ஆட்களில்லா பொழுதுகளிலும் அவ்வாறே தனக்குத்தானே பேசவும் செய்தார். மகாராஜா மூலம் திருநாளிற்கு இது ஒரு தலைவலியாகவே மாறிவிட்டது.

திவானிடம் பலமுறை கலந்துரையாடி செய்தியை நெல்லைச் சீமைக்கும் மதுரைக்கும் அனுப்பினார். வேண்டியதைச் சாதிக்கும் பாகருக்கு மிகப்பெரிய பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டது. ஊரெங்கும் அதைப் பற்றிய பேச்சாகிப் போனது.

“நம்ம மகாராசாவுக்கு பித்து புடிச்சிருச்சோ? எவ்ளோ நல்லது பண்ணவரு இப்போ மகனுக்காக இப்பிடி செய்றாரே!”

“ஏல, சத்தமாப் பேசாத, எவனாம் ஒளவாளிப் பயக்க கேட்டுறப் போறான். பொறவு கழுவுல ஏத்திப் போடுவாரு ராசா, தெரியும்லா?”

“அதும் செரிதான், நமக்கென்ன டே, சோமா தின்னமா, மத்தியானம் ஒரு ஒறக்கத்தப் போட்டமான்னு இருக்கலாம், அரச குடும்பத்துல ஆயிரம் நடக்கும். பின்ன, அவ்வோளுக்கு இருக்கு, செய்யா, நம்ம படத்த நம்மளே வரையத்தான் முடியும்.”

“அதச் சொல்லு, இப்ப பாகன்மாரெல்லாம் மாமியா வீட்டுல போயி ஒளிஞ்சி கெடக்கதாட்டும் சேதி உண்டும், கேட்டியா?”

“பின்ன, ஒத்த ஆனைய அசையாம நிக்க வைக்க முடியாம இவனுகோல்லாம் என்ன மயிரு வேல படிச்சானுகோ? ஒருவேள அந்த ஆனக்கி மதம் கிதம் புடிச்சிருக்குமோ?”

“என்ன எழவோப்பா. செரி, பாப்பம், இது எங்க போயிதான் முடியும்னு. எளையவருக்கு எதாம் ஆயிராம இருந்தாச் செரிதான்.”
*
ஒரு வாரம் கடந்தது. சித்திரை பௌர்ணமியின் முன்தினம் மாலை சித்திரைத் திருநாள் மிகவும் முடியாமல் படுக்கையில் கிடக்க, மகாராஜாவும் மொத்த குடும்பமும் வாடிப் போய் சுற்றியிருக்க, அரசாங்க வைத்தியர் ஒன்றும் புரியாமல் உட்கார்ந்திருந்தார்.

“திருவே, எத்தனை நாட்களுக்கு இப்படி காத்திருப்பது? அபின் ஓரளவுக்குத்தான் கொடுக்க முடியும். சித்தத்திற்கு ஆறுதல் இன்றி உடல் எப்படித் தேறும்? இதுபோல் என் வாழ்வில் நான் பார்த்ததேயில்லையே!” என்று வருந்தினார் வைத்தியர்.

மகாராஜா அசைவின்றி சிந்தனையில் ஆழ்ந்து உட்கார்ந்திருக்க, அங்கு வந்த திவான் அவரது அருகே வந்து நின்று வணங்கி ரகசியமாக எதோ கூறினார். மகாராஜாவின் முகம் பிரகாசமடைய சட்டென எழுந்து நின்று, “வாரும், போய் பார்க்கலாம்.” என்றார்.

அரண்மனை யானைக் கொட்டிலில் அரண்மனை பாகர்கள் அனைவரும் பரபரத்து நிற்க, ஓர் ஓரமாக அசையாது உட்கார்ந்து கண் மூடியிருந்தான் ஒரு வாலிபன். கட்டுடல், நீண்ட கேசம், இடுப்பில் வெறும் காவியுடை, மேலுடலில் ருத்திராட்ச மாலை, மார்பிலும் கரங்களிலும் திருநீற்றுப் பட்டை, பார்ப்பதற்கு அந்த பகுதியைச் சார்ந்தவன் போலத் தெரியவில்லை. யாரிடமும் எதுவும் பேசாமல் தனித்து உட்கார்ந்திருந்தான். சிலர் அவனருகே சென்று பேச்சு கொடுத்த போதும் ஒரு பதிலுமில்லை. எல்லோரும் ஒருவித பயத்தோடு அவனை விட்டு விலகி நின்றதைப் போலத் தோன்றியது. கொட்டிலின் உள்ளே நங்கை எப்போதும் போல ஆடிக் கொண்டிருந்தாள்.

மகாராஜா வருவது திவானிற்கும் அங்கிருந்த பாகர்களுக்கும் மட்டுமே தெரிந்திருந்தது. சற்று நேரத்தில் குதிரைகளின் குளம்படிச் சத்தம் கேட்டு அங்கிருந்த அனைவரும் எழுந்து வணங்கி நிற்க, அந்த வாலிபன் இன்னும் அசையாது கண்மூடியே இருந்தான். முதலில் வந்த குதிரையிலிருந்து திவான் கிருஷ்ணன் நாயர் துள்ளியிறங்கினார். அவர் மகாராஜாவின் குதிரையைப் பிடித்து சில அடிகள் உடன் செல்ல, குதிரை நின்றது. மகாராஜா மெல்ல இறங்கும்போதே கொட்டில் வாசலருகே உட்கார்ந்திருந்த அந்த வாலிபனைப் பார்த்தார். திவானிடம் கண்ணைக் காட்ட, திவான் கையசைக்க, அங்கிருந்த அத்தனை பாகர்களும் அங்கிருந்து வணங்கியவாறு வெளியேறினர்.

மகாராஜாவும் திவானும் கொட்டிலின் அருகே நெருங்க, உட்கார்ந்திருந்த அவ்வாலிபன் மெல்ல எழுந்து கைகூப்பி நின்றான். கண்கள் இன்னும் மூடியே இருந்தன.

கைதொடும் தூரத்தில் அவர்கள் நெருங்கியபோது அவன் கண்திறந்து, “திருவிற்கு வணக்கம். சேதியறிந்து பணி செய்ய வந்திருக்கிறேன். அடியேன் மேற்குதிசை ஓவியன். பெயர் நாராயண பிள்ளை.”

மகாராஜா திவானைப் பார்த்து குழம்பியவாறு, “ம்ம், ஆனால் ஓவியம் வரைவது இங்கு குழப்பமில்லையே கொச்சே.” என்றார்.

மெல்லிய புன்னகையோடு, “திருவே, குழப்பம் அடியேனுக்கு விளங்கியது. அதற்கான வழியும் உண்டு. நாளை மாலை முழு நிலவில் எல்லாம் சரியாக்கித் தருவேன்.” என்றான்.

மகாராஜாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், அவனது முகத்தையும் அவன் பேசிய விதத்தையும் பார்த்து அவருக்குள் ஒரு சிறு நம்பிக்கை உருவாகி விட்டது.

“திவான், இவருக்கு வேண்டியதை செய்து கொடுங்கள். அனந்தன் சித்தப்படி எல்லாம் நடக்கட்டும்” என்றார் மகாராஜா.

*

பௌர்ணமி நிலவு அன்று இன்னும் பிரகாசமாக இருந்தது. மக்கள் கூட்டம் எப்படியோ சேதியறிந்து வந்து கூடிவிட்டது. காவலர் வந்து கூட்டத்தை அமைதிப்படுத்தி அமர வைப்பதற்குள் பெரும்பாடாகி விட்டது. திவான் பரபரப்பாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்க, பத்மநாப சுவாமி கோவில் திடலின் முன் போடப்பட்டிருந்த ஒரு மர இருக்கையில் அமர்ந்து கண்மூடியிருந்தான் நாராயண பிள்ளை. அவன் முன் பெரிய அரிசி மாவுக் கோலமிட்டு அதன் மத்தியில் ஒரு மண்விளக்கு வைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றிலும் பல வண்ணங்களில் பூக்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அதே காவியுடை, கூடுதலாக தோளில் ஒரு கருப்புத் துண்டு.

மொத்த கூட்டமும் ஏதோ விசித்திரத்தை எதிர்நோக்கி பேச்சற்று இருக்க, மகாராஜா வருவது அறிவிக்கப்பட்டது. நாராயண பிள்ளை மெல்லிய புன்னகையோடு எழுந்து நின்று பத்மநாபர் கோபுரத்தை நோக்கி வணங்கினான். மகாராஜா நெருங்கி வர, மக்கள் கூட்டம் வாழ்த்தி ஆர்ப்பரிக்க, அவன் வான் நோக்கி வணங்கி நின்றான். மகாராஜா கையசைக்க மக்கள் கூட்டம் அமைதியடைந்தது. நாராயண பிள்ளை மகாராஜாவின் அருகே சென்று வணங்கினான். அவர் அவனது கைகளைப் பிடித்து தலையைத் தொட்டு வாழ்த்தினார். இதை எதிர்பார்க்காத மக்கள் கூட்டம் சலசலத்தது. திவானும் கூட என்ன நடக்கிறது என வியந்து பார்த்தார். மகாராஜா அவ்வளவு எளிதில் யாரையும் தொட்டுப் பேசுவதேயில்லை.

நாராயண பிள்ளை மகாராஜாவை மீண்டும் வணங்கி தன் இடத்திற்குச் சென்று அமர்ந்தான். அவன் தலையசைக்க, திவான் கையசைக்க கோவிலின் பக்கவாட்டிலிருந்து சலங்கையும் சங்கிலியும் குலுங்க முழுதணி கோலத்தில் முகப்படாம் ஜொலிக்க ஆடியாடி நடந்து வந்தாள் நங்கை. மக்கள் கூட்டம் அவளை வாழ்த்தி ஆர்ப்பரித்தது.

பாகர்கள் புடை சூழ கோவில் திடலின் அருகே வந்து மகாராஜாவைப் பார்த்து துதிக்கையை ஆட்டி நின்றாள். மகாராஜா அவளது துதிக்கையைத் தொட்டு முத்தமிட்டு விலகி நின்றார்.

நாராயண பிள்ளை மெல்ல மந்திர உச்சாடனங்களைச் சொல்ல ஆரம்பித்தான். அவனது குரல் தென்றலென எழுந்து காற்றென மாறி பின் அந்தப் பகுதி முழுதும் எதிரொலித்தது. சில நிமிடங்களுக்கு ஒருமுறை நிறுத்தி பூக்களை எடுத்து கண்மூடி தன் முகத்தருகே கொண்டு வந்து பின் அந்த மண்விளக்கை மூன்று முறை சுற்றி கோவிலை நோக்கி வீசி எறிந்தான். நங்கை அவனைப் பார்த்து மெல்ல நளினமாக ஆடிக் கொண்டிருந்தாள். பதினெட்டு முறை அவ்வாறு பூக்களை எறிந்த பின், தன் தோளில் கிடந்த கருப்புத் துண்டையெடுத்து தன் வாயைச் சுற்றி இறுக்கிக் கட்டினான். மக்கள் அவனையும் நங்கையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிலரது முகத்தில் என்னதான் செய்துவிடப் போகிறான் என்கிற கேலியும் தெரிந்தது.

மெல்ல தன் இருக்கையிலிருந்து எழுந்தவன் தன் வலக்கையை நீட்டி பாகர்களை விலகிச் செல்லுமாறு சைகை செய்தான். மக்கள் கூட்டம் பயத்திலும் ஆர்வத்திலும் ஊளையிட்டது. பாகர்களில் ஒருவன் நங்கையின் கால் சங்கிலியை கோவில் திண்டின் அருகேயிருந்த கம்பத்தில் கட்டப் போனான். அவனைப் பார்த்து வேண்டாமென சைகை செய்தவாறே நங்கையை நெருங்கினான் நாராயண பிள்ளை. நங்கையின் துதிக்கை முன்னோக்கி எழ, கால்களை ஆட்டி பிளிறினாள். அச்சத்தம் கோவில் கோபுர புறாக்களை எல்லாம் சிதறிப் பறக்கச் செய்தது. கூட்டத்தில் பலர், “அனந்தா, பத்மநாபா, நாராயணா.” என தங்களையறியாமல் கத்த ஆரம்பித்தனர். நங்கையின் முன் ஐந்தடி தூரத்தில் வந்து நின்றான் நாராயண பிள்ளை. நங்கை மூர்க்கமாக அவனைப் பார்த்து ஓரடி எடுத்து வைத்து துதிக்கை தூக்கிப் பிளிறியது.

மெல்ல புன்னகைத்தவாறே தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த ஒரு குச்சி போன்ற ஏதோவொன்றை எடுத்தான். அவன் கண்களை மூடி ஏதோ உரக்கச் சொன்னவாறு அக்குச்சியை நங்கையை நோக்கி நீட்ட அது ஓர் ஓவியத் தூரிகையாக மாறியது. நங்கையின் துதிக்கை தானாக கீழிறங்க ஒரு கணம் அசையாது நின்றாள். மக்கள் கூட்டம், “ஓம், ஓம்” என்றது. அவன் தன் தூரிகையை ஒருமுறை இடம் வலமாக ஆட்ட, அதற்கேற்றார்போல நங்கையும் இடம் வலமாக ஆடினாள். மீண்டும் ஒரு முறை அவன் அவ்வாறே செய்ய நங்கையும் அவ்வாறே செய்தாள். மகுடிக்கு ஆடும் கருநாகமென நங்கை ஆடியதைக் கண்டு மொத்த மக்கள் கூட்டமும் உறைந்து நின்றது.

மகாராஜாவின் முகம் புன்னகையில் மலர்ந்தது. அவரது கைபிடித்து நின்ற சித்திரைத் திருநாள் ஆச்சரியமாகப் பார்த்தபடி சிரித்தான். சேது லட்சுமி நாராயண பிள்ளையை மட்டுமே உற்று நோக்கியிருந்தாள். அடுத்த சில மணித்துளிகள் நாராயண பிள்ளை கண்மூடி சில மந்திர உச்சாடனங்களைச் செய்ய, அதைக் கூர்ந்து கேட்டு அசைவின்றி நின்றாள் நங்கை.

மீண்டும் கண்திறந்த நாராயண பிள்ளை தன் வாயை மூடியிருந்த கருப்புத் துணியை அகற்றி நங்கையை நோக்கித் தூரிகையை நீட்டி, “இவிட வா மோளே.” என்று சொல்லி புன்னகைத்தான். நங்கை தன் காதுகளை ஆட்டியவாறு தாயை நோக்கி ஓடும் கன்றென ஓடி வந்து அவனருகே நின்றது. மக்கள் கூட்டமெங்கும் கேவிக்கேவி அழும் சத்தம். கைதட்டி உற்சாகத்தில் சன்னதம் வந்ததை போல எல்லோரும் ஆட ஆரம்பித்தனர். நாராயண பிள்ளை நங்கையின் துதிக்கையை தடவிக் கொடுத்தான். அதன் முகப்படாமைத் தொட்டு முத்தமிட்டான். நங்கை தன் துதிக்கை நீட்டி அவனை ஆரத்தழுவினாள். அவனை வளைத்திழுத்து தன்னோடு நெருக்கிக் கொண்டுவந்தாள். திடீரென துதிக்கையின் பிடி இறுக நாராயணனை சுருட்டி மேல் தூக்கிப் பிளிறினாள். மக்கள் பயத்தில் அலற, எதுவும் நடக்காததைப் போல புன்னகையோடு அவளோடு இணைந்து உடனிருந்தான் நாராயண பிள்ளை. பின், மெதுவாக அவனைக் கீழேவிட்டு அவன் தலை மீது துதிக்கையால் ஒருமுறை தொட்டுவிட்டு பழையபடி ஆடி நின்றாள்.

சற்று நேரத்திற்கு அங்கு நடந்த எல்லாமே ஒரு கனவு போல எல்லார் மனதிலும் மீண்டும் மீண்டும் வந்து போனது. நாராயணன் நங்கையுடன் சிரித்துப் பேசிக் கொண்டேயிருந்தான். அவளும் அவனுக்கு பதில் கூறி ஆடி நின்றாள்.

நாராயண பிள்ளை திவானைப் பார்த்து கையசைக்க, கோவில் திண்டின் முன் இருபதடி தூரத்தில் ஒரு பெரிய மர மேசை போடப்பட்டது. பின், நான்கு பேர் சேர்ந்து ஒரு பெரிய ஓவியப் பலகை தாங்கியைத் தூக்கி வந்தனர். அதை அந்த மர மேசையின் பக்கத்தில் வைத்து, பல குவளைகளைக் கொண்டு வந்து மேசையின் மீது வைத்தனர்.

பின் நால்வர் சேர்ந்து ஒரு கருப்புத் துணி சுற்றிய உருளை போன்ற ஒன்றைத் தூக்கி வந்தனர். ஓவியப் பலகையின் அருகே அதை வைத்து தரையோடு உருட்டி விரித்தனர். பெரிய சதுர வடிவிலான ஒரு தட்டி போல இருந்தது. அதை மெல்ல தூக்கி அந்த தாங்கியின் மீது மாட்டினர். அதுவரை யாரும் பார்த்திராத புதியதொரு உத்தியாகத் தெரிந்தது. மெல்லிய பட்டைகளாக சீவப்பட்ட மூங்கில் குச்சிகளைச் சேர்த்து நெய்த மூங்கில் தட்டி!

மகாராஜாவும் திவானும் ஆர்வம் மேலிட வியந்து பார்த்து நிற்க, நாராயண பிள்ளை தன் தூரிகையை எடுத்து கைவீசியவாறு அந்த மர மேசையின் அருகே வந்து நின்றான்.

“வா மோளே, வா, அனந்தனைக் காணாம், வா.” என்றான்.

நங்கை ஆடியாடி கோவிலின் முன் வந்து திண்டின் மீது தன் வலக்காலை தூக்கி வைத்து நின்றாள். கல்லென, சிலையென, கர்ப்பத் திருமேனியென, மகாராஜனென. மக்கள் கூட்டம் ஒருசேர, “அனந்தா, பத்மநாபா, நாராயணா” என்று முழக்கமிட்டது. மீண்டும் மீண்டும் உச்சரிக்க சற்று நேரத்தில் அது, “நாராயணா, நாராயணா, நாராயணா.” என்று மட்டுமேயாகி ஒலித்தது. மகாராஜா மகிழ்ச்சியில் தனை மறந்து இருகை கூப்பி நிற்க, கோவில் புறாக்கள் அத்தனையும் கோபுரத்தோடு ஒட்டியிருந்து, “நாராயணா, நாராயணா.” என்றன.

நங்கை துதிக்கையை மேல்நோக்கித் தூக்கிப் பிளிற, “நாராயணா” எனக் கேட்டது. நோயாளியாக நின்றிருந்த சித்திரைத் திருநாள் பாலராம வர்மா அதுவரை பிடித்திருந்த சேது லட்சுமி பாயின் கைகளை விட்டு, வெட்கம் நீங்கி, நிமிர்ந்து துள்ளியோடிச் சென்று நங்கையின் மீது ஏறி நின்றான்.

***

சுஷில் குமார்

sushilkumarbharathi2020@gmail.com

அமிலத்தில் கரையும் கடல் பட்டாம்பூச்சிகள்

0

நாராயணி சுப்ரமணியன்

கடலின் சூழல் என்பது மிகவும் நுணுக்கமான வேதிவலைப் பின்னல்களால் எப்போதும் சமநிலையில் பாதுகாக்கப்படுகிறது. கடல்வாழ் உயிரினங்கள் பலவும் இந்த சமநிலையையே நம்பியிருக்கின்றன. வேதிக்கூறுகள் மாறும்போது உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. கடல்நீர் அமிலமாதல் (Ocean acidification) என்கிற சூழலியல் பாதிப்பு கடலுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. பல்வேறு அறிவியல்/அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு இது உறுதிப்படுத்தப்பட்டு, இப்போது பரவலாக விவாதிக்கப்படுகிறது.

அறிவியல் பின்னணி

காலநிலை மாற்றத்தோடு கூடவே பிறந்த இரட்டைப் பிள்ளை இது. காலநிலை மாற்றத்துக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிற கரிம உமிழ்வுதான் இதற்கும் காரணம். காலநிலை மாற்றம் என்பது பொதுவான அச்சுறுத்தல் என்றால், அமிலமாதல் கடலுக்கு மட்டுமேயான அச்சுறுத்தல்.

 காற்றிலிருக்கிற கரியமில வாயுவை, கரிமத்தை உறிஞ்சும் தன்மை கடலுக்கு உண்டு. இதனால் ஏற்படும் வேதியியல் மாற்றங்களை, கடலின் அன்றாட சுழற்சிகளே சமன் செய்துவிடும். ஆனால் வாகனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல செயல்பாடுகளால், காற்றில் கரிமம் அதிகரிக்கும்போது, கடல்நீருக்குள் உறிஞ்சப்படும் கரிமத்தின் அளவும் அதிகரிக்கிறது. அளவுக்கு அதிகமாகக் கரியமில வாயு கடலுக்குள் சேரும்போது, பொதுவான சுழற்சிகளால் அந்த மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது. சமநிலை சீர்குலைகிறது; கடலின் வேதித்தன்மையே மாறுகிறது.

கடல்நீர் பொதுவாக காரத்தன்மை கொண்டது (Alkaline). அளவுக்கதிகமாகக் கரியமில வாயு உறிஞ்சப்படும்போது, அது கடல்நீருடன் வேதி வினை புரிந்து, கார்பானிக் அமிலமாக மாறுகிறது. இதனால், கடல்நீர் அமிலத்தன்மை கொண்டதாக மாறுகிறது. இதைத்தான் விஞ்ஞானிகள் கடல்நீர் அமிலமாதல் என்று அழைக்கிறார்கள்.

தொழிற்புரட்சி தொடங்கியதிலிருந்து இன்றுவரை மொத்தம் 400 பில்லியன் டன் கரிமத்தை நாம் வெளியிட்டிருக்கிறோம்.. இதில் கிட்டத்தட்ட 30% கடலுக்குள் சென்று சேர்ந்திருக்கிறது! இவ்வாறு சேர்ந்த கரிமத்தால், கடல்நீரின் அமில-கார எண் (pH) 0.1 என்ற அளவில் அதிகரித்திருக்கிறது! “அட, 0.1க்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமா? என்னவோ அமிலத்தையே கடலில் கொட்டியதுபோல் குதிக்கிறீர்களே” என்ற கேள்வி எழலாம். அமில-கார அட்டவணையின் மொத்த அளவீடே 14 தான். ஆகவே, 0.1 pH அதிகரிப்பது என்றால், சராசரி அளவை விட 30 சதவிகிதம் அமிலத்தன்மை கூடியிருக்கிறது என்று பொருள்! என்கிறது ஒரு தரவு. நாம் வெளியிடும் கரிமத்தை உறிஞ்சிக்கொள்கிற கடல், கொஞ்சம் கொஞ்சமாக அமிலமயமாகிக்கொண்டிருக்கிறது.

கடல்நீரின் அமில-காரத்தன்மையில் அவ்வப்போது நுண் வேறுபாடுகள் ஏற்படும், அது புவியியல் சுழற்சியில் ஒரு பகுதிதான். ஆனால், இப்போது அமிலத்தன்மை அதிகரித்திருக்கும் வேகம் அசுரத்தனமானது. கடந்த 20 மில்லியன் ஆண்டுகளின் சராசரி மாற்ற விகிதத்தோடு ஒப்பிடும்போது, இது நூறு மடங்கு கூடுதல்!

கரிம உமிழ்வுகள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், 2100ம் ஆண்டுக்குள் கடலின் சராசரி அமில கார எண் 8.1 என்பதிலிருந்து 7.7 என்பதாக சரிந்துவிடும். அப்படிப்பட்ட கடலில் பல இடங்கள் உயிர்கள் வாழத் தகுதியில்லாததாக மாறிவிடும். குறிப்பிட்டு சொலல்வேண்டுமானால்  2038ம் ஆண்டிலிருந்தே கடலின் சமநிலை சீர்குலையத் தொடங்கிவிடும் என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

1990களின் பிற்பகுதியில் கண்டறியப்பட்ட சூழலியல் பிரச்சனை இது. 2003ல் இதற்கு “கடல் அமிலமாதல்” என்ற பெயரும் வைக்கப்பட்டது. கடலின் அமிலத்தன்மை/காரத்தன்மையை அளப்பதில் இருந்த சில நடைமுறை சிக்கல்கள், அமிலமாவதற்குக் காரணமான கரிமம் எங்கிருந்து வருகிறது என்ற ஆராய்ச்சியில் இருந்த தடைகள் போன்றவற்றால் இதை உறுதிப்படுத்தவே பல வருடங்கள் பிடித்தன. ஆனால், அதன்பிறகு நடந்த எல்லா ஆராய்ச்சிகளுமே, நாம் நினைத்ததை விடவும் இதில் ஆபத்து அதிகம் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.

ஆராய்ச்சிக்களங்கள்

எதிர்காலத்தில் கடல்நீரின் அமிலத்தன்மை அதிகரிக்கும்போது எந்த மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்பதை ஆராய வேண்டுமானால், அமிலத்தன்மை நிறைந்த இயற்கையான கடற்பகுதிகள் வேண்டும். அப்போதுதான் பாதிப்புகளைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். அதற்காக இயற்கையாகவே இருக்கும் அமிலப் பகுதிகளை ஆராய்ச்சியாளர்கள் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.

அவற்றுள் முக்கியமானவை Carbon dioxide seeps என்று அழைக்கப்படும் கரியமிலப் பிளவுகள். கடலுக்கடியில் இருக்கும் தகடுகளில் விரிசல் ஏற்படும்போது, பூமிக்கு அடியிலிருந்து எரிமலைக் குழம்புகளோ கரியமில வாயுவோ வெளியேறலாம். கரியமில வாயு வெளியேறும் இடங்களில், சுற்றியுள்ள கடல்நீரின் அமிலத்தன்மை மிகவும் அதிகமாக இருக்கும். இதுபோன்ற பகுதிகளைத் தேடிச்செல்லும் விஞ்ஞானிகள், அங்கு உள்ள சூழலையும் விலங்குகளையும் ஆராய்ந்து, எதிர்காலத்தில் கடல் இப்படித்தான் இருக்கும் என்ற கணிப்பை முன்வைக்கிறார்கள்.

 இந்த பிளவுப் பகுதிகளில் மிகக்குறைவான உயிரினங்களே காணப்படுகின்றன, பவளப்பாறைகள் அவ்வளவாக வளர்வதில்லை, களைகளாகக் கருதப்படும் பாசிகள் அதிகமாக வளர்கின்றன, உயிரிப் பல்வகைமை மிகவும் குறைவாக இருக்கிறது. இங்கு வந்துபோகும் மீன்களும் குறைவு. அமிலமாதல் தொடர்ந்தால், எதிர்காலத்தில் எல்லா கடற்பகுதிகளும் இப்படிப்பட்டவையாக மாற வாய்ப்பு உண்டு.

கடல் பட்டாம்பூச்சிகள்

2012ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் “கடல்நீர் அமிலமயமாதலால் உயிரினங்கள் பாதிக்கப்படும்” என்பதற்கான முதல் ஆதாரம் கண்டறியப்பட்டது.கடல் பட்டாம்பூச்சிகள் (Sea Butterflies) என்கிற ஒரு கடல்வாழ் உயிரி உண்டு. நிலத்தில் நத்தையைப் பார்த்திருக்கிறோம் இல்லையா? ஊர்வதற்கு பதிலாக, தசைப்பிடிப்பான உடலை சிறகுபோல் விரித்து, நத்தைகள் நீரில் நீந்தினால் எப்படி இருக்கும்? அந்தக் கற்பனையின் உயிர் வடிவம்தான் கடல் பட்டாம்பூச்சி.

அண்டார்டிகாவையொட்டிய தெற்குக் கடல் பகுதியில் அதிகரித்துவரும் அமிலத்தன்மையால், கடல் பட்டாம்பூச்சிகளின் ஓடுகள் வலுவிழந்து வருகின்றன என்று அந்த ஆய்வு உறுதி செய்தது. எலக்ட்ரான் நுண்ணோக்கி வழியாகப் பார்த்தால், நல்ல கடல் சூழலில் இருக்கும் ஓடுகளோடு ஒப்பிடும்போது, அமிலமான கடலில் இருக்கும் ஓடுகள் திட்டுத் திட்டாகக் காட்சியளித்தன. வியப்பில் ஆழ்ந்த விஞ்ஞானிகள், ஒரு சோதனை முயற்சியாக, சில கடல் பட்டாம்பூச்சிகளை, 7.7 அமிலத்தன்மை உடைய கடல்நீரில் போட்டுப் பார்த்தார்கள். வெறும் 45 நாட்களில்,ஓடு முற்றிலும் கரைந்து, காணாமலேயே போய்விட்டது! 2100ல் கடலின் அமிலத்தன்மை 7.7 என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். ஆக, நாம் உமிழ்வுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், 2100ம் ஆண்டில், கடல் பட்டாம்பூச்சிகளின் ஓடுகள் முற்றிலும் கரையும் அளவுக்கு அமிலத்தன்மை மோசமாக இருக்கப்போகிறது!

ஓடுள்ள பிற உயிரினங்கள்

கடல்நீர் அமிலமாகும்போது, அதில் உள்ள ஆர்கனைட்டின் அளவு குறையும். ஆர்கனைட் இல்லாமல் விலங்குகளால் ஓடு போன்ற அமைப்பை உருவாக்க முடியாது. ஓடு உருவாக்க சில விலங்குகள் அதிக ஆற்றலை செலவழிக்க வேண்டியிருக்கும், சில விலங்குகளால் ஓட்டை உருவாக்க முடியாமலே கூடப் போகலாம்.

முத்துச்சிப்பிகள், மட்டிகள், முள்ளிச்சங்குகள், சங்குகள், கிளிஞ்சல்கள், கடற்பரட்டைகள், உறுதியான வெளி ஓடு கொண்ட சில வகை பாசிகள், நுண் விலங்குகள் ஆகிய எல்லாமே பாதிக்கப்படும்.2100க்குள் சிப்பிகளின் ஓட்டில் 10% குறைபாடும், மட்டிகளின் ஓட்டில் 25% குறைபாடும் ஏற்படும். ஓடு வலுவாக இல்லாததால் இவை எளிதில் இறக்கும், இவற்றால் பாறைகளோடு தங்களை இறுகப் பிணைத்துக்கொள்ள முடியாது.

 அமிலமான கடலில், வளரர்ந்த பவள உயிரிகள் நிறமிழந்து வெளிறிப் போகும். வயது குறைந்த பவள உயிரிகளால் வலுவான கால்சியம் கார்பனேட் ஓடு ஒன்றை உருவாக்க முடியாது, பவளப்பாறைகள் திடமாக உருவாகாது. சுருக்கமாக சொல்லப்போனால், பவளப்பாறைகளுக்கு எலும்புப்புரை ஏற்படும்! வெளிப்பார்வைக்கு வலுவான பாறைகளாகத் தெரியும் பவள உயிரிகள், தொட்டால் பொடிந்துபோகிற அளவுக்கு பலவீனமாக இருக்கும். இதை “Coral Osteoporosis” என்று அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்த அச்சுறுத்தலால் மட்டுமே எதிர்காலத்தில் பவளப்பாறைகளின் எண்ணிக்கை 47% வரை குறையலாம்.

மீன்களும் திமிங்கிலங்களும்

அளவுக்கு அதிகமான அமிலத்தன்மையால் மீன்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை, போதைப்பொருள் உட்கொண்ட மனிதர்களின் செயல்பாடுகளோடு ஒப்பிடுகிறார்கள் விஞ்ஞானிகள். “Fishes on Acid” என்று இதை அவர்கள் விவரிக்கிறார்கள்.  இடம் கண்டறிவதில் குழப்பம், கேட்கும் திறன் பாதிக்கப்படுவது, மோப்ப சக்தி குறைவது, ஆபத்தான இடம் என்று தெரிந்தும் அங்கு பயணிப்பது என்று மீன்களுக்கு பல பாதிப்புகள் வரும் என்கிறார்கள். “கடல்நீரின் அமிலத்தன்மை, இந்த மீன்களுடைய மூளையையே மாற்றி அமைக்கிறது” என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சில வகை ஊசிக்கணவாய்களின் வளர்ச்சி விகிதமும் அமிலத்தன்மையால் குறைந்துவிடுகிறது. சில மீன்களின் வேதி சமநிலை மாறி, அவை அமில அதிர்ச்சியால் இறக்க்கூடும்.

Volcanic carbon dioxide seeps of Ischia, Italy.
Credit: Pasquale Vassallo,
Stazione Zoologica Anton Dohrn.

அமிலத்தன்மை அதிகரித்தால், கடலுக்குள் ஒலி பயணிக்கும் தூரமும் அதிகரிக்கும்.  2050க்குள், கடலுக்குள் 70% கூடுதல் தொலைவுக்கு ஒலி அலைகள் பயணிக்கலாம். எங்கேயோ ஓடுகிற கப்பலின் இரைச்சல்கூட, நெடுந்தொலைவு தள்ளி இருக்கிற கடற்பகுதிக்கு சென்று சேரலாம், எதிர்காலத்தில் கடல்முழுக்க இரைச்சலாக இருக்கப்போகிறது. இதில், ஒலியை வைத்து மட்டுமே வழி கண்டுபிடிக்கும் விலங்குகள் தீவிரமாக பாதிக்கப்படும். திமிங்கிலங்களின் வலசைப்பாதைகள், உணவு உண்ணும் இடங்கள் எல்லாமே குழப்பம் நிறைந்தவையாக மாறும்.

அதிக பாதிப்புகள் உள்ள இடங்கள்

குளிர்நீர் உள்ள கடல்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. நீரின் வெப்பத்தன்மை குறையும்போது, அது கரிமத்தை உறிஞ்சும் வேகமும் அதிகரிக்கும், ஆகவே குளிர் கடல்கள் எளிதில் அமிலமாகிவிடும் ஆபத்து உண்டு. வடக்கு அட்லாண்டிக், வடக்கு பசிபிக், ஆர்டிக் போன்ற கடல்கள் அதிகமாக பாதிக்கப்படும்.

பெரிய தொழிற்சாலைகள் உள்ள கடலோரப் பகுதிகள், பெருநகரங்களுக்கு அருகில் இருக்கும் கடற்கரையோரங்கள் ஆகியவற்றில் பாதிப்பு அதிகரிக்கும். இந்த இடங்களில் கரிம உமிழ்வு அதிகம் என்பதால், கடலுக்குள் சென்று சேரும் கரியமில வாயுவின் அளவும் அதிகமாக இருக்கும்.

அரசியல் சிக்கல்கள்

காலநிலை மாற்றத்தால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளே பரவலாக விவாதிக்கப்படுகின்றன. அதற்குப் பின்னணியில் வலுவான காரணமும் இருக்கிறது. மனிதர்களுக்கு வருகிற ஆபத்துக்களை மட்டுமே மையப்படுத்தி விவாதித்துக்கொண்டிருக்கிறோம். இருந்தும் உலக அரசுகள் கரிம உமிழ்வுகளைக் கட்டுப்படுத்துவதில் கொஞ்சம் சுணக்கமாகத்தான் இருக்கின்றன. இதில், “எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தால் உயிரினங்கள் பாதிக்கப்படும்” என்ற ஒரு தகவலை முன்வைத்தால் திட்ட வரைவியலாளர்கள் அதைக் கண்டுகொள்வார்களா என்பதே தெரியவில்லை. அந்த உயிரினத்தின் இழப்பால் எத்தனை கோடி டாலர் நஷ்டம் ஏற்படும் என்பதைக் கணக்கிட்டு சுட்டிக்காட்டினால், ஒரளவு எதிர்வினையும் பாதுகாப்பு சட்டங்களும் வருகின்றன. இதுதான் நிதர்சனம்.

“காலநிலை மாற்றத்துடன் பிறந்த ரெட்டைப் பிள்ளை” என்று அழைக்கப்படும் அமிலமாதல், போதுமான கவனத்தைப் பெறவில்லை என்பதே உண்மை. “நாம் வெளியிடும் கரிமத்தைக் கடல் உள்வாங்குகிறது” என்று முதன்முதலில் அறிவியலாளர்கள் தெரிவித்தபோது, “நல்லதுதான், எல்லாம் கடலுக்குள் போய்விடுமே” என்ற ரீதியிலேயே அரசுகள் இதை எதிர்கொண்டன. ரகசியமாகக் குப்பைகளைக் கடலுக்குள் கொட்டிவிடுவதுபோலவே இதைப் பார்த்தனர் அன்றைய திட்ட வரைவியலாளர்கள். “நமக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே” என்கிற மனிதனை மையப்படுத்திய (Anthropocentric) சிந்தனை இது.

இப்போதுகூட, “அமிலமாதலால் சிப்பி கிளிஞ்சல்கள் அழிவதால் மீன்பிடித்தொழில் பாதிக்கப்படும், பவளப்பாறைகள் அழியும்போது மீன்வளம் குறையும், அமிலமயமான கடலில் இருந்து பிடிக்கப்படும் சிப்பிகளில் புரதச்சத்து 50% குறைவு. கிளிஞ்சல் தொழில் பாதிக்கப்ட்டால் 2100க்குள் நூறு பில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டம் ஏற்படும்” என்றெல்லாம் எழுதவேண்டியிருக்கிறது. “மனிதனுக்கு ஆபத்து” என்ற மையப்புள்ளியிலிருந்து விலகாமலேயே இதைப் பேசவேண்டியிருக்கிறது, இல்லாவிட்டால் இது சர்வதேச ஒப்பந்தங்களில் பேசுபொருளாகவே மாறுவதில்லை.

மனிதனுக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே சூழல் பிரச்சனைகள் கண்டுகொள்ளப்படுகின்றன என்பது கவலைக்குரிய போக்கு. நம்மைச் சுற்றியுள்ள சூழலைப் பாதுகாப்பதும் சீர்குலைக்காமல் இருப்பதும் ஒரு அடிப்படை அறம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் ஏன் திட்ட வரைவுகள் வடிவமைக்கப்படுவதில்லை? லாப/நஷ்டக் கணக்குகளைக் காட்டி இயற்கையைப் பாதுகாக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை சொல்லவேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது? இந்தக் கேள்வி நிச்சயம் பழமைவாதத்தின் அடிப்படையில் எழுப்பப்படவில்லை. பரிணாமத்தின் உச்சத்தில் தன்னைக் கற்பனை செய்துகொள்கிற மனித இனம், மற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் பொறுப்பு தரப்பட்டால் மட்டும் ஏன் நழுவித் தப்பிக்கிறது? இந்தக் கேள்விக்கான பதில், எதிர்காலத்தில் மனித இனம் இருக்குமா என்பதையே முடிவு செய்யும்.

நம்பிக்கைக் கீற்று

அமிலமாதல் ஆராய்ச்சிகளில் அவ்வப்போது வெளிவரும் சில தரவுகள் நம்பிக்கை தருகின்றன. நண்டு, இறால் உள்ளிட்ட சில உயிரினங்கள் அதிக அமிலத்தன்மையிலும் ஓரளவு தாக்குப்பிடிக்கின்றன. சில கடல்வாழ் உயிரிகள் தங்களையே மாற்றியமைத்துக்கொண்டு அமிலத்தன்மையை சமாளிக்கின்றன. கடற்புல் படுகைகள் (Seagrass beds) கடல்நீர் அதீத அமிலமாகாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றன. இதுபோன்ற பல ஆராய்ச்சி முடிவுகளைத் திரட்டினால்,  அமிலத்தன்மையால் ஏற்படும் பாதிப்புகளை எந்த விலங்குகள் எதிர்கொண்டு தப்பிப்பிழைக்கும் என்று நம்மால் கணிக்க முடியும். அமிலமாதலுக்கு எதிரான போராட்டத்தில் எந்த விலங்குகள் நமக்குத் துணைபுரியும் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

“இயற்கை ஒரு முடிவிலி என்பது மனிதன் வைத்திருக்கும் கடைசி மாயை. இயற்கையை, பெருங்கடலை, எல்லாவற்றையும் பெரிய அளவில் மாற்றியமைக்கும் ஆற்றல் மனிதர்களுக்கு வந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டால் இந்த மாயை பறந்தோடிவிடும். இந்த மாயை விலகினால் மட்டுமே, இயற்கையைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பில் இருக்கிறோம் என்ற உண்மை தெரிய வரும். மனிதனால் இயக்கப்படும் காலவெளி இது. இதில் நுழைந்திருக்கும் அனைவருக்கும் நல்வரவு” என்று எழுதுகிறார் சூழலியல் அறம் பற்றி ஆராய்ந்துரும் பேராசிரியர் ஃப்ரெட்ரிகே போஹ்ம். 

தன்னால் ஏற்படுகிற பாதிப்பு என்று இதை அறம்சார்ந்து அணுகுகிறோமோ, தனக்கும் பாதிப்பு நாளை வந்துவிடும் என்ற அச்சத்தோடு அணுகுகிறோமோ, கடல்நீர் அமிலமாதலை நாம் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும்.  65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் விண்கல் ஒன்று பூமியைத் தாக்கியபோதுதான் இந்த அளவுக்கு மோசமான அமிலத்தன்மை இருந்ததாம். இன்னும் மனிதன் விண்வெளியை அண்ணாந்து பார்ப்பவனாகவே இருக்கிறான், ஆனால் அவனது தொடர் செயல்பாடுகள் விண்கல்லின் தாக்கத்தை ஒத்திருக்கின்றன என்பது தத்துவரீதியாக  என்னவோ செய்கிறது.

தரவுகள்

  1. Extensive dissolution of live pteropods in the Southern Ocean, Bednarsek et al, Nature Geoscience, 2012.
  2. Anthropogenic carbon and ocean pH, Ken Caldeira and Michael Wickett. Oceanography, 2003.
  3. A short history of ocean acidification science, P.G.Brewer, Biogeosciences, 2013.
  4. Changing Ocean, marine ecosystems and dependent communities, Bindoff et al, IPCC Special Report, 2019.

***

  • நாராயணி சுப்ரமணியன்
  • ஆசிரியர் தொடர்புக்கு :nans.mythila@gmail.com

நீர்வழிப் படூஉம் புணைபோல…

0

கா. சிவா

வ்வளவு தூரம் நடந்து வந்த சாலை இடதுபுறமாக வளைந்து செல்லும் இடம் வந்ததும், நேராக தெற்கில் இருக்கும் தன் ஊரை நோக்கிச் செல்வதற்காக சாலையைவிட்டு சரிந்து இறங்கிய ஒற்றையடிப் பாதையில் நடக்க ஆரம்பித்தார் கர்ணன். இந்தப் பாதை வயல்களின் வரப்புகளை வாகனமாகக் கொண்டது. மார்கழி மாத வயல்களில் மஞ்சளும் கரும்பச்சையுமான நெற்பயிர்கள் பொன்னிறக் கதிர்களைச் சூடிய தலையை கிறக்கத்துடன் லேசாக அசைத்துக் கொண்டிருந்தன. பரந்து விளைந்திருந்த வயல்வெளியைப் பார்த்தவுடன் மனதில் ஏற்பட்ட ஏதோவொரு நிறைவில் கர்ணனின் கண்களில் நீர் துளிர்த்து இருதுளிகள் கன்னத்தில் சிந்தியது.

சூரியன் மறையப் போவதைப் பார்த்து கையிலிருந்த ஹெச்.எம்.டி கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஐந்தரை ஆனது. பெருமாள் இறந்த செய்தியை ராமன் போனில் சொன்னவுடன் இருட்டுவதற்குள் ஊருக்குள் சென்றுவிடலாம் என்றுதான் முதலாளியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு மனைவியிடம் சொல்லிவிட்டு திருச்சியிலிருந்து கிளம்பினார். பேருந்து தாமதமாக வந்ததால் இருட்டிவிடும் போலிருக்கிறது.

சம்பங்கியும் துளுக்கஞ்சாமந்தியும் கலந்து தொடுக்கப்பட்ட மாலையை இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றிக் கொண்டார். இதோ வயற்காடு முடியப் போகிறது. நடுவில் இருக்கும் சிறு ஆற்றைக் கடந்துவிட்டால் கண்மாய்க்கரை கண்ணுக்குத் தெரிந்துவிடும். அதில் ஏறி மறுபக்கம் இறங்கினால் சுடுகாடு வந்துவிடும். அப்படியே மாலையைப் போட்டுவிட்டு ஊருக்குள் செல்ல வேண்டியதுதான் என தனக்குள் சொல்லிக் கொண்டு நடந்தார். வழியில் எவருமே தட்டுப்படவில்லை. இப்பனிக் காலத்தில் வயல்களில் பெரிதாக எந்த வேலையுமில்லை. மயிலோ பறவைகளோ வந்தால் ஓட்டுவது மட்டும்தான். அதுவும் மதியத்தில் தான். பயிர்களுக்கு தண்ணீரும் தேவையில்லை. பொழியும் மார்கழிப் பனியினை உண்டு நெல்மணிகள் தானே பெருக்கும்.

சுடுகாட்டைத் தாண்டித்தான் ஊருக்குள் செல்ல வேண்டுமென்பதால் கர்ணன் எப்போதும் தனியாக மாலை நேரங்களில் ஊருக்கு வருவதில்லை. பெருமாள் இவனுடைய நெருங்கிய நண்பனென்பதால் ஒரு ஆவேசத்தில் கிளம்பிவிட்டார்.

தன் நாற்பது வருட வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நீர் ஓடிய ஆற்றின் மணலில் நடந்தார் கர்ணன். சூரியன் பனை மரங்களுக்குள் இறங்கி மறைந்துவிட மேகங்களில் லேசான செந்நிறத் தீற்றல்கள் மட்டும் தெரிந்தது. “ஊருக்குப் போற வழியில ஏன்டா சுடுகாட்ட வச்சானுங்க. கொஞ்சம் தள்ளி தூரமா வச்சிருக்கலாம்ல” என சிறிய வயதில் அருகிலிருக்கும் ஊருக்குப் போய்விட்டு வரும்போது நண்பர்களிடம் சத்தமாகக் கேட்டது நினைவுக்கு வந்தது. சிறு வயதில்தான் அப்படிக் கேட்க முடியும். சற்று வயதானவர்கள் கேட்டிருந்தால் ஒருவேளை வேறு இடத்திற்கு மாறியிருக்கக் கூடும். எல்லோர் மனதிலும் அந்த எண்ணம் இருந்தாலும் முதலில் கூறுபவரை பயத்தாங்கொள்ளி எனப் பகிரங்கப்படுத்தி ஏளனக் கதைகளுக்கு முன்மாதிரியாக்கி விடுவார்கள் என்பதால் யாரும் வாயைத் திறந்திருக்க மாட்டார்கள். இன்னொரு காரணமும் இருந்திருக்கலாம். புதைத்துவிட்டு அப்படியே தலைமுழுகி விட்டுச் செல்வதற்கு வசதியாக இருப்பதால் இங்கே அமைத்திருக்கலாம். ஒருநாள் இம்மாதிரி இருட்டும் நேரத்தில் தன் மாமாவுடன் வந்தபோது, அவர் பழைய ராஜாக் கதைகளை சொல்லியபடி வந்தது, அவரின் அஞ்சித் துடித்த மனதை தைரியப்படுத்திக் கொள்ளத்தானோ என இப்போது இவருக்குத் தோன்றியது.

கண்மாய்கரையின் மேல் ஏற ஆரம்பித்தார். பனை மரங்களையும் வேலிக்கருவைகளையும் பின்னிப் பிணைத்திருக்கும் முள்ளடர்ந்த கொடிகளுடன் பதினைந்தடி உயரத்தில் நீண்டு வளைந்து செல்லும் கரையில், குறுக்காக நான்குபேர் நடக்கும் அகலத்திற்கு சிறு பாதையிருந்தது. கண்மாயில் நீர் குறைவாக இருக்கும் போது இதன் வழியாக ஏறிக் கடக்கலாம். நீர் அதிகமாக இருந்தால் சுற்றித்தான் செல்லவேண்டும். கரையின் மேல் நின்று பார்த்தார். முழங்கால் அளவுக்கு, லேசான மஞ்சள் நிறத்தில் தண்ணீர் கிடந்தது. கொஞ்ச தூரத்தில் புதிதாக புதைத்த தடம் சற்று உயரமாகத் தெரிந்தது. தூரத்திலிருந்து பார்த்ததால் அகலம் அதிகமாக இருப்பதாகத் தோன்றியது. மணல் பகுதி என்பதால் சில நாட்களிலேயே கொஞ்சம் கொஞ்சமாகத் தடம் காற்றிலும் மழையிலும் உருவழிந்து சமதரையாகிவிடும். அடுத்தமுறை வேறு ஒருவருக்காக வரும்போது மறைந்த அடையாளத்தை உத்தேசமாகக் கணித்து உறவினரைப் புதைத்தது இந்த இடமா, அந்த இடமா என விவாதித்துக் கொள்வார்கள்.

வானத்தின் நீலம் மெதுவாக கருமையாகத் தொடங்கிவிட்டது. யாருமே கண்ணில்படவில்லை. அரைமணி நேரம் முன்னதாக வந்திருந்தால் எல்லோரும் இருந்திருப்பார்கள். அவர்களுடனேயே சென்றிருக்கலாம். “எனக்கென்ன பயம். என்னுயிர் நண்பன்தானே. என்னை என்ன செய்யப் போகிறான்”. “அவன்தான் உயிர் நண்பனாயிற்றே. அவன் செத்தபின் உன்னை மட்டும் வாழ விடுவானா”. “எத்தனை முறை ஆபத்துகளிலிருந்து என்னைக் காப்பாற்றினான். இப்போது மட்டும் தீங்கிழைப்பானா”. “அது அவன் உயிரோடு இருந்த போது. இப்போதுதான் இறந்துவிட்டானே. உன்னை ஏன் வாழவிட வேண்டும்” என இரு தரப்பாக தனக்குள்ளேயே மோதியபடி புதைமேட்டிற்கு அருகே வந்துவிட்டார். நிமிர்ந்து பார்த்தபோது சற்று அதிர்ந்து விட்டார். அங்கே இரண்டு புதைமேடுகள் இருந்தன. அவற்றின் இரண்டு பக்கங்களிலும் சிதைக்கப்பட்ட பாடைகள் கிடந்தன. ஒரு புதைமேட்டில் ஒரு மாலை மட்டும் கிடந்தது. மற்றொன்றில் மூன்று மாலைகள் கிடந்தன. ஊரில் ஒரே நாளில் இரண்டு சாவா. போனில் சொன்னவன் இதைக் கூறவில்லையே. இன்னொருவர் தனக்கு நெருக்கமானவராக இல்லாதவராக இருக்கலாம் என்று சமாதானமானாலும் இதில் எது பெருமாளின் சமாதி என்று கணிக்க முடியவில்லை. இரண்டு சமாதிகளும் ஒரே அளவினதாகவே இருந்தன. கையில் இருப்பதோ ஒரே மாலை. இப்போது மாலையை மாற்றிப் போட்டால் பெருமாள் கோபம் கொண்டு பிடித்துக் கொள்வானோ. பெருமாளாவது பரவாயில்லை, என் நண்பன். இன்னொருவர் என்னை அடிப்பாரோ. அப்படி அடிக்க முடியாது. அதை என் நண்பன் அனுமதிக்க மாட்டான். பெருமாள் சற்று சோகையானவன். வாய்தான் நீளம், பலம் குறைவு. தெரியாத அவர் பலமான கோபக்காரராக இருந்தால்….  பயம் மேலும் அதிகமானது. கர்ணனால் முடிவு எடுக்க முடியவில்லை. இருட்டு வேறு உடலில் லேசாக படர ஆரம்பித்தது. அப்போது நாயின் கூரிய குரைப்பொலி தூரத்தில் ஒலித்தது. அல்லது ஒலித்தது போலத் தோன்றியது. சட்டென்று மனதிலொன்று தோன்ற, இரண்டு புதைமேடுகளில் ஒன்றின் மேல் மாலையை போட்டுவிட்டு “உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்” என்று கையை தலைக்குமேல் குவித்து வணங்கிவிட்டு வேகமாக ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

இன்னொருவர் யாராக இருக்கும். பெரிதாக நோயுடன் யாரும் ஊரில் இல்லை. யாருக்கேனும் விபத்து நேர்ந்திருக்குமோ. அல்லது அடிதடி முற்றி இறப்புவரை சென்றிருக்குமா. சேச்சே… அதுமாதிரி இந்த ஊரில் நடக்க வாய்ப்பில்லையே… என மேலோட்டமாக யோசித்தபடி பயத்தை உள்ளுக்குள் அழுத்திக்கொண்டு நாயின் குரைப்பொலியை மனதால் பற்றிக்கொண்டே வேகமாக நடந்து ஊருக்குள் நுழைந்து விட்டார்.

ஊருக்குள் செல்ல மூன்று சாலைகள் தொடங்கும் இடத்தில் பெருமாள் கோவில் இருந்தது. அதனை ஒட்டியே அரசுப் பள்ளிக்கூடமும் சர்க்கார் கிணறு என அழைக்கப்படும் பெரிய பொதுக்கிணறும் இருந்தது. பெருமாள் கோவிலில் மாலை பூசைக்கான ஏற்பாடுகளை தாசரி செய்து கொண்டிருந்தார். வெளியே ஆலமரத்தின் அடியில் சில சிறுவர்கள் கல்லா மண்ணா விளையாடிக் கொண்டிருந்தார்கள். தான் பறித்த சிறிய குழிக்குள் படுத்திருந்த நாய் தனக்குள் ஆழ்ந்திருப்பதான பாவனையுடன், இவரைக் கண்டுகொள்ளாமல் அவர்களின் விளையாட்டை நோக்கிக் கொண்டிருந்தது. நாயை சற்று நேரம் உற்றுப் பார்த்தவர், சுடலைக்கரையிலிருந்து நேராக வீட்டிற்கு செல்லக்கூடாதே என்பதற்காக கிணற்றிலிருந்து நீரிறைத்து குளித்துவிட்டு அதே உடைகளையே பிழிந்து போர்த்திக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தார்.

வெளியே, திண்ணையில் சாய்ந்து அமர்ந்திருந்த அண்ணன் அரவம் கேட்டு நிமிர்ந்து “வாடா தம்பி” என்று அழைத்து நலம் விசாரித்தபோது எப்போதுமிருக்கும் உற்சாகம் அவரிடம் இல்லை. கர்ணனைவிட அண்ணனுக்கு பத்து வயது அதிகம். கர்ணன் புன்னகைத்தபடி பதிலளித்துவிட்டு உள்ளே சென்றார். அத்தாச்சி அடுப்படியில் இருந்தார். அவர் கர்ணனுக்கு அத்தாச்சி மட்டுமல்ல, இன்னொரு அம்மாவும்கூட. 

நடையோசை கேட்டு திரும்பிய அத்தாச்சி “வா கர்ணா. என்ன இன்னங் காணாமேன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன்” 

கர்ணன் வெறுமனே புன்னகைத்தார். “பொண்டாட்டிய கூட்டிட்டு வரலையா…. அதுசரி உன்ன விட்டதே பெருசு….” என்று குறுஞ்சிரிப்புடன் நோக்கினார். அதை ஆமோதிப்பதைப் போல இவர் தலையசைத்தார்.

“கூட்டாளி வீட்டுக்குப் போனியா”

“இல்ல அத்தாச்சி. துணிய மாத்திக்கிட்டுதான் போகணும்”

“துணிய மாத்திக்க. ஆனா அங்க போக வேணாம்”

ஏன் என்ற கேள்வி தொக்கி நிற்க அத்தாச்சியை கர்ணன் நோக்கினார். அத்தாச்சி எதுவும் சொல்லாமல் திரும்பி கிண்ணத்திலிருந்த காப்பியை மூன்று குவளைகளில் ஊற்றினார். அங்கேயே நின்றிருந்த கர்ணனை நோக்கியவர் “போயி மாத்திக்கிட்டு வா” என்று அதட்டுவது போல சொன்னதும், இவர் உள்ளே சென்று வேட்டியைக் கட்டிக்கொண்டு துண்டால் உடலைப் போர்த்தியவாறு வெளித்திண்ணைக்கு வந்தார்.

அண்ணன் காலிக் குவளையை கீழே வைத்துவிட்டு “வா உக்காரு” என்று இவரிடம் கூறினார்.

அத்தாச்சி நீட்டிய குவளையை வாங்கிக் கொண்டு அவர் முகத்தை நோக்கினார்.

“நீதான் அவன உங்கூட்டாளின்னு நெனச்சுக்கிட்டு இப்படி பறந்து வந்துருக்க. ஆனா அவனோ அவம் பொண்டாட்டியோ அப்படி நெனக்கல”

“ஏன் அத்தாச்சி… என்னாச்சு” என வேகமாகக் கேட்டபடி இறுக்கமாயிருந்த இருவரின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தார்.

“அதை ஏண்டி இப்போ சொல்லிக்கிட்டு இருக்க” என்று மனைவியை அடக்கிய அண்ணன், இவரை ஆதுரத்துடன் நோக்கி “மனுசங்களோட மனசு எப்பவும் ஒரே மாதிரி இருக்காது. ஒரு வயசுல நல்லதாத் தெரியிற விசயம் சில வருசத்துக்குப் பிறகு வேற மாதிரித் தெரியும். அது அவங்களோட தப்பு இல்ல. கூட இருக்கிறவங்க வேற கோணத்துல காட்டறபோது, அட ஆமால்ல இதுவரைக்கும் இப்படி பாக்கத் தோணலயேன்னு தோனும். அப்போதைக்கு இதுவரைக்கும் நல்லதா தெரிஞ்ச எல்லாமே தப்பாவோ துரோகமாவோதான் தெரியும்”

“பெருமாளுக்கும் அப்படித்தான். கடைசி காலத்துல எல்லாரையுமே தனக்கு எதிரா துரோகம் செஞ்சவங்கன்னு மனசுல நெனக்க ஆரம்பிச்சுட்டான். தான் நோயில கஷ்டப்படறப்ப மத்தவங்கல்லாம் நல்லா இருக்கிறத அவனால தாங்கிக்கவே முடியல. முக்கியமா இருவது வருசம் கூடவேயிருந்த நீ சந்தோசமா இருக்கிறது அவனுக்கு பெரிய வேதனையக் கொடுத்திடுச்சு. அந்த வலியில ஏதாவது சொல்லியிருப்பான். அதயெல்லாம் பெருசா நெனக்காத…” என்று கூறிவிட்டு “இவ வேற… அறிவில்லாம வந்ததும் வராததுமா அதப்போயி சொல்லிக்கிட்டு இருக்கா” என்றபடி மனைவியை முறைத்தார். வேகமாக எழுந்த அத்தாச்சி தவறு செய்யாமல் அடி வாங்கிய குழந்தையைப் போன்ற முகத்துடன் வீட்டினுள் சென்றார்.

“பெருமாள் குடும்பத்துல ஏதோ சொன்னதுக்கு நீங்க ஏண்ணே வருத்தப்படறீங்க” தனக்குள் பெருகிய தவிப்பை அடக்கியபடி சோர்ந்திருந்த அண்ணனிடம் கர்ணன் கேட்டார்.

“பெருமாள் பேசினதுக்காக வருத்தமில்ல. அவன் சொன்னதுனால நாம தப்பானவங்களா ஆயிடுவமாயென்ன… இது வேற விசயம்” என்றவர் அடுத்த வார்த்தை பேச தயங்கி நிறுத்தினார். தொண்டை வரை வந்த வார்த்தையை நாக்கால் தடுப்பது போல தாடை அசைந்தது.

தன்னிடம் பேசுவற்கு எப்போதும் தயங்காத, அப்பாவையே காணாத தனக்கு அப்பாவாகவே விளங்கும் தன் அண்ணன் இப்போது எதையோ சொல்ல முடியாமல் தவிப்பதைப் பார்த்து கர்ணன் திகைத்தார். எதுவும் கேட்காமல் உணர்வுகள் தளும்பும் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருத்தார். நிரம்பிய பாத்திரத்திலிருந்து கீழே சொட்டப்போகும் முதல் துளியை எதிர்பார்ப்பது போன்ற பதட்டத்துடன் காத்திருந்தார்.

குனிந்து அமர்ந்திருத்த அண்ணன் நிமிர்ந்து கர்ணன் முகத்தை தீர்க்கமாக பார்த்தபோது சொல்வதற்கான வார்த்தைகளைத் தேர்ந்துவிட்ட உறுதி தெரிந்தது.

“தம்பி, இதுவரைக்கும் உன்கிட்ட இந்த விசயத்தை மட்டும்தான் மறைச்சிருக்கேன். முன்னாடியே சொல்லியிருக்கலாம், என் நிலமைய புரிஞ்சுக்குற பக்குவம் உனக்கு வந்திடுச்சான்னு உறுதியா தெரியாததால தான் சொல்லலை”

“ஆனா இன்னைக்கி சொல்லித்தான் ஆகணும்” என்று ஆரம்பித்தவர் இயல்பாக சுவரில் சாய்ந்து அமர்ந்தார். இப்போது அவரிடம் எந்த தயக்கமும் இல்லை.

“இந்த கந்தசாமி அய்யா இருக்காருல்ல… இல்ல இருந்தாரு” என்று அண்ணன் கூறியதும் “என்னாச்சுண்ணா அவரு போயிட்டாரா” என்று கர்ணன் ஆச்சர்யமாகக் கேட்டார்.

“ஆமா நேத்துதான். நாந்தான் எல்லாக் காரியமும் செஞ்சேன்”

“நீங்க ஏன் செஞ்சீங்க”

“வெளியூருக்குப்போன அவரோட ஒரே பேரனும் எங்கேயிருக்கான்னு தெரியல. அதுக்காக மட்டுமில்ல” என்றவர் கர்ணனின் தோளில் ஆதுரத்துடன் கையை வைத்தார்.

“நம்மளோட சின்ன வயசுலயே அப்பா போயிட்டாரு. எனக்குப் பின்னாடி ஒன் ஆச்சிக ரெண்டு பேரு. அப்புறம் நீ. எனக்கு அப்ப பன்னென்டு வயசு. அம்மாவுக்கு வீட்டு வேல மட்டுந்தான் தெரியும்”

“சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டம். நாங்க மூனுபேருமே வயல் வேலைகளுக்குப் போக வேண்டிய நெலமை. அன்னைக்கி ஒன் ஆச்சிக ரெண்டு பேரும் வம்பரம்பட்டி வேலாயுதத்தோட கொல்லைக்கு வேர்க்கடலை புடுங்க போயிட்டாங்க. அம்மாவுக்கு ஒடம்புக்கு முடியாம படுத்திருந்தாங்க. நான் மேலவீட்டு செந்திமாமா வயலுக்கு வேலைக்கு போயாகணும். ரெண்டு வயசுப் பயலாயிருந்த ஒன்ன வீட்ல விட்டுட்டுப் போக முடியாம நானே தூக்கிக்கிட்டுப் போனேன்”.

“தூக்குனா ஒரே அழுகை. பசியில அழுதியோ வேற எதுக்காக அழுதியோ புரியல. சாப்பிடவும் எதுவும் வீட்ல இல்ல. நீராரத் தண்ணி மட்டுந்தான் இருத்துச்சு. அத நீ வேண்டான்னு தள்ற. ஒன்னும் பண்ண முடியாம ஒன்னத் தூக்கிட்டு வயலுக்குக் கெளம்பினேன்”.

*

இரண்டு வயதுக் கர்ணனைத் தூக்கிக் கொண்டு தவசி மேல வயலை நோக்கி நடக்கிறான். பனிரெண்டு வயது பையனை நம்பி ஒரு குடும்பத்தை விட்டுவிட்டு சென்றுவிட்ட அப்பாவின் மேல் பெருங்கோபம் எழுந்தது தவசிக்கு. பத்து வயதிலும் எட்டு வயதிலும் இருக்கும் தங்கைகளை வேலைக்கு அனுப்ப வேண்டியதாகிவிட்டதன் ஆற்றாமை மனதைக் குடைந்தது. அம்மாவின் உடல்நிலை வேறு படுத்தியது. அம்மாவும் இல்லாது போனால் என்று எழுந்த எண்ணத்தால் கழிவிரக்கம் தோன்றினாலும், பயத்தில் உடல் ஒருமுறை சொடுக்கிக் கொண்டது. கர்ணனின் கனத்தால் கைகளில் உண்டான வலியைவிட அவன் அழுவது பெரும் துயரளித்தது. மணி பத்துக்கு மேல் இருக்குமே என்று எண்ணியபடியே வேகமாக நடந்தபோது ஒழுங்கையில் புழுதி எழுந்தது.  எதிரில் கண்மாய் தெரிந்தது. அதில் கிடக்கும் இடுப்பளவு நீரில் இறங்கி நடந்து கரையிலேறி இறங்கினால், நாலாவது வயல் செந்திப்பிள்ளையின் வயல்.

எப்போது வயலை அடைவோம்… இந்தப் பயலை கீழே இறக்கிவிட்டு வயலில் இறங்கி களையெடுக்கத் தொடங்குவோம் என்று துடிக்கும் ஆவலாதியுடன் வேகமாக நடந்தான் தவசி. கண்மாய் நீரில் கால் வைக்கும்போது கரையிறங்கிக் கொண்டிருந்தார் ராமாயி ஆச்சி. செந்திப்பிள்ளையின் மனைவி. முகத்தின் இரண்டு பக்கமும் உண்டாக்கிய பெரும் துளைகளுக்கு கீழே பையின் கைப்பிடி போலத் தோன்றிய காதில், தோளைத் தொட எத்தனித்தபடி தொங்கிய தண்டட்டிகள் வேகமாக ஆடும்படி நடந்து வந்தார். தவசியைப் பார்த்ததும் அவர் முகம் மேலும் விகாரமாகிக் கருத்தது.

“இதுதான் வேலைக்கு வர்ற நேரமா. வேலைக்கு வர்றேனு முன்னாடியே நெல்லு வாங்குனாளே… ஒங்காத்தா. இப்பத்தான் அனுப்புனாளா. அதோட சின்னப் பயல வேற தூக்கிக்கிட்டு வந்திருக்கியே. வேலயப் பாக்க வந்தியா, இல்ல வெளயாட்டுக் காட்ட வந்தியா. வேலை மேல ஒரு மரியாத வேண்டாமா. எரும மாட்டு மேல மழ பேய்ஞ்ச மாறி நின்னாப் வேல ஆயிடுமா. ஒவ்வொருத்தரும் உச்சி வெயில் நேரத்துல வந்தா வேல கிலுகிலுன்னுதான் நடக்கும்…”

நிறுத்தாமல் வைது கொண்டேயிருந்தவரிடம் தவசியால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை. அவர் இவனிடம் பதிலை எதிர்பார்த்த மாதிரியும் தெரியவில்லை. வாய் வலித்ததோ, வேறு வேலை நினைவுக்கு வந்ததோ கத்துவதை அப்படியே நிறுத்திவிட்டு அசைந்தபடியே சென்றுவிட்டார்.

மனதின் வேதனை உச்சத்தை அடைய கையின் வலியும் தாங்கமுடியாமல் ஆனது. நான்கடி தண்ணீருக்குள் நடந்தவர் கர்ணனை தொப்பென்று நீரின் மேல் போட்டான். தண்ணீர் குவிந்து உள்வாங்கி அவனை வாங்கிக் கொண்டது. விழுந்த வேகத்தில் உள்ளே அமுங்கியவனை மேலே எத்தியது. தவசி தான் என்ன செய்கிறோம் என்பதையே உணராமல் கர்ணனை நீருக்குள் அமுக்கினான். தன்னுடலினுள் எழுந்த வேறொரு அரக்கனை தடுக்க முடியாமல், பயத்தோடு வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தான். கர்ணன் அழுகையை நிறுத்திவிட்டு அண்ணனையே வெறித்துப் பார்த்தான். திகைப்பில் கைகால்களை உதறக்கூட இல்லை. நீருக்குள் முழுகியவுடன் கர்ணனுக்கு கண்களுக்குள் கருப்பாகவும் சிவப்பாகவும் வெளிச்சம் பாய்ந்தது. கண்கள் சொருகியது. கால்கள் அனிச்சையாக உதறிக்கொண்டது.

அந்தக் கணம் தவசியை எத்திவிட்டு கர்ணனைத் தூக்கினார் கந்தசாமி. அவன் தலையை தாழ்த்தி வாய் வழியாக நீரை வெளியேற வைத்தார். சிவந்த கண்களிலிருந்து நீர் வழிய இருமியபடி அண்ணனைப் பார்த்தான். எழுந்து நின்று நடந்த எதையுமே நம்ப முடியாமல் திகைத்து நின்றான் தவசி.

“தவசி… என்னப்பா ஆச்சு”

“அய்யா… என்ன நடந்துச்சுன்னே தெரியல. என்னன்னவோ நெனச்சுக்கிட்டு வந்தேன். இந்தப்பய வேற அழுதுகிட்டே இருந்தான். ராமாயி அத்தையும் ரொம்பத் திட்டிட்டாங்க. என்னவோ ஒரு ஆத்திரம் ஒடம்ப உலுக்குச்சு. என்ன நடந்துச்சுன்னே புரியலையா”

“சரி விடு. ஒவ்வொரு மனுசனுக்குள்ளேயும் ஒரு அரக்கன் இருக்கான். எப்ப எப்பன்னு காத்துக்கிட்டு இருப்பான். அவன் வெளிய வர்றதுக்கு நம்மளோட துளியளவு ஆசையோ விழைவோ போதும். ஆல விதை மொளச்சி பெருசா படர்ந்து பரவற மாதிரி எழுந்து வானத்த நெறச்சு எதிர்ல நிக்கும். பயத்தோட கையக்கட்டிக்கிட்டு ஓரமா நின்னு அது நிகழ்த்துறத வேடிக்க மட்டுந்தாந் நம்மால பாக்க முடியும்”.

“நல்ல வேள நான் வந்துட்டேன். விபரீதமா ஏதும் நடக்கல. இப்ப நடந்தத யாருக்கிட்டயும் சொல்லாத. இந்தப் பயகிட்டகூட. வேற மாதிரி புரிஞ்சிக்கிட்டா வீணா சங்கடம் வந்திடும்” என்று தோளில் தட்டிக் கொடுத்தவர் கர்ணனனையும் கொடுத்துவிட்டு “ஏதாவது வேணும்னா என்கிட்ட கேளு.. ஒன்னும் சங்கடப்படாத” என்று சொல்லிவிட்டு நடந்தார்.

*

அண்ணன் கூறியதை மனதினுள் கண்ட கர்ணன் நீர் வழியும் முகத்துடன் இருந்த அண்ணனைப் பார்த்தார்.

“அதுக்கப்பறம் யோசிச்சு பாத்தப்ப தான் தெரிஞ்சது, அவரு செஞ்சது எவ்வளவு பெரிய காரியம்னு. ஒனக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தா நான் என்னவாயிருப்பேன். அப்பவே செத்திருப்பேன். இல்லைன்னா அதையே நெனச்சு பைத்தியமா ஆயிருப்பேன். நம்ப குடும்பம் ஒன்னுமில்லாம தண்ணியில கரைஞ்சி போயிருக்கும்.”

“நம்ம குலசாமி அவரோட ரூபத்துல அங்க வந்ததுன்னு நம்புனேன். ஆனா யாருக்கிட்டேயேயும் இதுவரைக்கும் சொன்னதில்ல. ஒன் அத்தாச்சிக்கி கூட இது தெரியாது” என்றபடி திரும்பி வாசலைப் பார்த்தார். அண்ணனின் கைகள் கர்ணனின் கைகளுக்குள் இருந்தன. கர்ணன் தன் கைகளால் அவர் கைகளை மெதுவாக தடவிக் கொண்டிருந்தார்.

“நேத்து சாயந்திரம் சும்மா படுத்திருந்தவர் எந்திரிக்கல. பக்கத்து வீட்ல இருக்கிற கமலாதான் வந்து சொன்னுச்சு. நாந்தான் ஊர் டிரஸ்டிக்கிட்ட பேசி எல்லாக் காரியத்தையும் செய்யறேன்னு ஏத்துக்கிட்டு செஞ்சேன்”.

“ஒன்னையும் வரச்சொல்லி போன் பண்ணலாம்னு நெனச்சேன். புதுப்பட்டிக்கு போயிதான் பேசணும். இத யாருக்கிட்ட சொல்லியும் பண்ணச் சொல்ல முடியாது. என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தப்ப தான் பெருமாளு செத்தான். எப்படியும் அதுக்கு வருவன்னு இருந்துட்டேன்”.

என்று நிறுத்தியவர் கர்ணனை நிமிர்ந்து நோக்கி “அவரு சமாதிக்கு போயி வணங்கிட்டு வந்திரு. அந்த ரெண்டுல…” என்று அவர் சொல்லும் முன்பாக கையை நீட்டித் தடுத்து “அதச் சொல்லாதீங்க. நான் அவரத்தான் வணங்கிட்டு வந்தேன்” என தீர்க்கமாக கூறிவிட்டு நகர்ந்த கர்ணனை திகைப்புடன் நோக்கினார் தவசி.

***

கா. சிவா