Home Blog Page 51

தகவற்தொழில்நுட்ப நிறுவனங்கள்: சந்தைப் போட்டிக்கெதிரான போக்கும் சட்ட நடவடிக்கைகளும்!

0

ரூபன் சிவராஜா

மெரிக்காவில் பேஸ்புக்கிற்கு எதிரான வழக்குகள் 2020 டிசம்பர் நடுப்பகுதியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒன்றரை ஆண்டுகால விசாரணை ஆய்வுகளுக்குப் பின்னரே இச்சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. அமெரிக்காவின் அரச வணிக ஆணையம் (Federal Trade Commission) பேஸ்புக்கின் ஏகத்துவ சந்தை அதிகாரத்திற்கு எதிராக இந்த வழக்கினைத் தொடுத்துள்ளது. Instagram, WhatsApp ஆகிய இரண்டு கொள்வனவுகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தபோதும் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கவில்லை. Instagram மற்றும் WhatsApp ஆகியவற்றை பேஸ்புக்கிடமிருந்து பிரித்துத் தனி நிறுவனங்களாக ஆக்குவது வணிக ஆணையத்தின் இலக்கு எனப்படுகிறது. பேஸ்புக், கூகிள் போன்வற்றின் பாவனையாளர் தகவல் தகவமைப்பு என்பது தனிநபர் தகவல் பாதுகாப்பினைப் பாரிய கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. பேஸ்புக்கிடமிருந்து இன்ஸ்ராகிராம் மற்றும் வட்ஸ்அப்பினைப் பிரித்தெடுக்கும் பட்சத்தில் தனிநபர் தகவல் பாதுகாப்பினை மேம்படுத்தமுடியும் என்ற வாதம் முன்வைக்கப்படுகின்றது.

போட்டியாளர்களைச் சந்தை நீக்கம் செய்தல் தொடர்பான அணுகுமுறை பேஸ்புக்கின் உள்ளக மின்னஞ்சல்களின் தகவல்களில் இருந்தும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2008-இல் அதாவது பேஸ்புக் உருவாக்கப்பட்ட சில ஆண்டுகளில், ‘போட்டியிடுவதைவிட கொள்வனவு செய்வது இலகுவானது’ என்று மார்க் எழுதியமை தெரியவந்துள்ளது. அதேபோல், 2012-இல் மின்னஞ்சல் ஒன்றில் ‘எவ்வளவு தொகை வேண்டுமானாலும் Instagram கொள்வனவிற்குச் செலுத்தத் தயாராக உள்ளதாக’ எழுதியுள்ளார்.

பேஸ்புக், இன்ஸ்ராகிராம் மற்றும் வட்ஸ்அப் ஆகிய மூன்றும் ஒன்றோடென்று ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. உதாரணத்தின் மூலம் அதனை விளக்குவது பொருத்தமானது. நாம் இந்த மூன்றிலும் கணக்கு வைத்திருக்கும் ஒருவராக இருந்தால் நாம் இன்ஸ்டாகிராமில் படங்களைப் பதிவேற்றும் போது ஒரே நேரத்தில் தன்னியல்பாக அந்தப்படம் பேஸ்புக்கிலும் பதிவேற்றப்படும் பொறிமுறைத் தெரிவு உள்ளது. அதேபோல் பேஸ்புக் தகவல் பரிமாற்ற தொழிற்பாட்டுக்கும் வட்ஸ்அப் தகவல் பரிமாற்றத் தொழிற்பாட்டிற்குமிடையில் அவற்றை இணைக்கும் பொறிமுறையும் உண்டு.

அமெரிக்காவினுடைய நீதித்துறை அமைச்சகம் கூகிள் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளது. பேஸ்புக் மீது வழக்குத் தொடரப்பட்ட அதே காரணம் சார்ந்தது தான் கூகிள் மீதான வழக்கும். புதிய வரவுகளையும் புத்தாக்க (Innovation) உருவாக்கங்களையும் தடுக்கின்றது என்பதும் கூகிள் மீதான குற்றச்சாட்டு. கூகிளின் தேடியந்திரம் தான் (Google search engine) அப்பிள் நிறுவனத் தயாரிப்புகளான i-Phone மற்றும் Mac-கணினிகளின் இணைய உலாவிகளாகப் (Web Browser) பாவனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென்ற ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக அப்பிள் நிறுவனத்திற்கு பில்லியன் டொலர் தொகையினையும் செலுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கு அமெரிக்காவின் சந்தைப் போட்டி சார்ந்த கட்டுப்பாடுகளை விதிப்பதோடு வணிக ஏகத்துவத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ‘நம்பிக்கை மீறல் சட்டத்தின்’ (Antitrust laws) கீழ் முன்னெடுக்கப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் 90 வீதமான இணைய உலாவிகள் கூகிள் தேடியந்திரத்தினையே பயன்படுத்துகின்றன. Bing, Yaahoo உட்பட்ட வேறு தேடியந்திரங்கள் மிகக்குறைந்த விரல்விட்டு எண்ணக்கூடிய விகிதத்திலேயே பயன்படுத்தப்படுகின்றன. கூகிள் வெறுமனே தேடுதள இயந்திரம் மட்டுமல்ல என்பதைப் பலரும் அறிவோம். அது மிக நுண்ணிய உலக வரைபட வழிகாட்டி, மின்னஞ்சல், நேரடி ஒளிபரப்பு வசதி உள்ளடக்கிய YouTube காணொளித் தளம், Google disk எனப்படும் மெய்நிகர் சேமிப்பு இடம், Google Meeting  எனப்படும் காணொளிச் சந்திப்புச் செயலி உட்பட்ட இன்னபிற வசதிகளைக் கொண்டுள்ளது. YouTube தளம் 2005-இல் மூன்று முன்னாள் Paypal ஊழியர்களால் உருவாக்கப்பட்டது. 2006-இல் இதனைக் கூகிள் 1.65 பில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்கியமை குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் கூகிளைத் தவிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது என்ற நிலையை அந்நிறுவனம் ஏற்படுத்தியிருக்கின்றது. பேஸ்புக் போலவே நாம் என்ன செய்கின்றோம் என்பது மட்டுமல்லாமல் நாம் எங்கு செல்கின்றோம், எதனைத் தேடுகின்றோம், பார்க்கின்றோம், வாசிக்கின்றோம், பேசுகின்றோம் என்பதையெல்லாம் கூகிள் அறிந்து தகவமைத்து வைத்திருக்கின்றது.

பேஸ்புக் உள்ளடக்கம் சார்ந்த மதிப்பீடுகள், தடை மற்றும் நீக்கம் போன்றவற்றைப் பெரும்பாலும், அதாவது 90 வீதத்திற்கு மேலாக Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலமே செயற்படுத்துகின்றது. மனித வள கட்டுப்பாட்டாளர்கள் (Human moderators) குறைந்தளவிலேயே பயன்படுத்தப்படுகின்றனர். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பேஸ்புக்கில் பகிரப்படும் இன-நிற-ஒடுக்குமுறைவாதக் கருத்துகள் மற்றும் அவதூறு, வெறுப்புக் கருத்துகளை உரியமுறையில் அடையாளம் கண்டு நீக்குவதில் வெற்றியளிக்கவில்லை என்பதைப் பேஸ்புக் நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.

வழக்கு சாதகமாக வெல்லப்படுமாயின் 2005-இல் பேஸ்புக் தொடங்கப்பட்டதிலிருந்து தடையற்ற வளர்ச்சிப் பாதையில் நகர்ந்த முழு நிறுவனத்தையும் மறுசீரமைக்க நேரும். இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்றன பேஸ்புக்கிலிருந்து பிரித்தெடுக்கப்படுவதற்கு நிர்ப்பந்திக்கப்படலாம் எனப்படுகிறது. அத்தகைய பிரித்தெடுப்பு என்பது பேஸ்புக் நிறுவனத்திற்கான “இருத்தலியல் அச்சுறுத்தல்” என்று மார்க் தெரிவித்துள்ளமை கவனிக்கத்தக்கது.

அதேபோல் அமேசோன் இணைய வணிகத் தளமும் அந்தத்துறையில் தனித்த அதிகாரத்துடன் இயங்குகின்றது. 1995-இல் ஒரு இணைய புத்தக விற்பனைத் தளமாக அது தொடங்கப்பட்டது. இன்று பெரும்பாலான எல்லாவகைப் பொருட்களினதும் இணைய வழிக்கொள்வனவுத் தளமாக ஆகியிருக்கின்றது. உலகின் எல்லாப் பாகங்களிலும்; கிளைகளைக் கொண்டுள்ளது. 2017-இல் அதன் வருமானம் 177 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதோடு, 300000-ற்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனம். அனைத்து வகையான உடுபுடவைகள், இலத்திரனியல் நுகர்வுப்பொருட்கள், புத்தகங்கள், இசை, பாடல்கள், திரைப்படங்கள், அலுவலகப் பாவனைக் கருவிகள் உள்ளிட்ட அனைத்தையும் அமேசோனில் கொள்வனவு செய்யலாம். அமேசான் பிரைம் என்பது திரைப்படங்களுக்கான அதன் தனித் தளம். அமேசோனின் வணிக வெற்றி அதன் உரிமையாளர் Jeff Bezos-இனை உலகின் முதன்மைச் செல்வந்தராக ஆக்கியது. 2018-இல் அவரது வருமானம் 155 பில்லியன் அமெரிக்க டொலர் எனப்படுகிறது.

அமேசோனின் மற்றுமோர் முக்கிய வணிக அமைப்புமுறை என்பது ஏனைய சிறிய மற்றும் பெரிய உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களின் பொருட்களை விற்பதற்குரிய அனுசரணை வழங்குவது. அதற்கான இணையத் தொழில்நுட்பத்தைப் அந்நிறுவனங்களுக்கு வழங்குவதன் மூலமும் தனது வருமானத்தைப் பெருக்குகின்றது. அவர்களும் வேறு மாற்று வழியைத் தேடமுடியாதபடி அவர்களுக்கான ‘பூட்டு’ போடப்பட்டுள்ளது. ஏனெனில் மிகப்பாரிய எண்ணிக்கையிலான நுகர்வோரைத் தன்னுள் அமேசோன் வைத்திருக்கின்றது.

கோவிட்-19 பெருந்தொற்றின் பேரிடர் காலம் இணையவழிக் கொள்வனவுகளை முன்னரைவிட பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஏலவே சந்தை அதிகாரத்துடன் திகழ்ந்த அமேசோன் கோவிட் காலத்தில் மேலும் பலமடைந்துள்ளது. இந்த நெருக்கடியின்போது அதனைப் பயன்படுத்தி, இணைய வணிகத்தில் தனது சந்தை அதிகாரத்தை அதிகரித்துவரும் அமேசோன், அமேசோனுக்குப் பொருட்களை விநியோகஸ்தர்கள் மீது அழுத்தம் கொடுக்கவும், மூன்றாம்-தரப்பு விற்பனையாளர்களின் பொருட்களைவிட தன் சொந்த முதல்-தரப்பு தயாரிப்புகளுக்கு சாதகமாகவும் பயன்படுத்துகின்றமைக்கு சான்றுகள் உள்ளதாக வழக்கினைத் தொடுத்துள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் Antitrust சட்டவாக்கத் துணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தைப்போட்டி ஆணையமும் (EU competition commission) இந்நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. ஐரோப்பிய நாடுகள் பலவும் இவற்றுக்கு பெரும் வரித்தொகைகளையும் விதித்துள்ளன எனக் கூறப்படுகின்றது. கூகிளின் சந்தைப் போட்டி மோசடிகளுக்காக ஒன்றரை பில்லியன் டொலர் குற்றப்பணம் கடந்த 2019 மார்ச்சில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டது.

கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல பேஸ்புக், கூகிள், அப்பிள் மற்றும் அமேசோன் போன்றவை தம்மையொத்த பிற தளங்கள் உருவாகி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும்போது அவற்றைத் தாமே கொள்வனவு செய்து வந்துள்ளன. 2012-இல் பேஸ்புக் Instagram-னையும் 2014-இல் WhatsApp-னையும் கொள்வனவு செய்தது. இன்ஸ்ராகிராம் மற்றும் வட்ஸ்அப் ஆகியன பேஸ்புக்கினால் கொள்வனவு செய்யப்படாது விடப்பட்டிருக்குமாயின் அவை பேஸ்புக்கிற்குச் சவாலான தளங்களாக சந்தைப் போட்டியை அவை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்ற பார்வை உள்ளது. அண்மையில்கூட Parler என்ற தகவல் பரிமாற்றத் தளம் (செயலி) கிட்டத்தட்ட அரங்கிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. இது அடிப்படையில் Trump ஆதரவு செயலி என்பதோடு தீவிர வலதுசாரிச் சார்புக் கருத்துகளைப் பரப்புகின்றதும் பரிமாறுகின்றதுமான தளம் எனப்படுகிறது. கூகிள் மற்றும் அப்பிள் ஆகியன முறையே தமது Google Play மற்றும் App Store செயலிகள் கொள்வனவுத் தளத்திலிருந்து அச்செயலியை நீக்கியுள்ளன. அமேசோன் அச்செயலிக்கான சேர்வர் இடத்தினையும் (Server storage) மறுத்திருந்தது. இத்தகைய போக்குகள் தகவல்-தொடர்பாடல் தொழில்நுட்ப வணிகப் பெருநிறுவனங்கள் எத்தகைய அதிகாரத்தைத் தம்வசம் கட்டமைத்து வைத்துள்ளன என்பதைப் பறைசாற்றுகின்றது.

பொதுவாக வணிக ஏகத்துவம் என்பது போட்டி நிறுவனங்கள் உருவாக இடமளிக்காமல் தனது இடத்தை தனித்த முதலிடமாகப் பேணுவதைக் குறிக்கின்றது. இந்த நிலை பாவனையாளர்கள் நுகர்வோரை விட விஞ்சிய அதிகாரத்தை குறித்த நிறுவனத்திற்கு வழங்குகின்றது. நுகர்வேரை அதில் தங்கியிருக்கின்ற நிலையை ஏற்படுத்துவதைக் குறிக்கின்றது. அவர்கள் விருப்பத்திற்கு மாறாக பொருளின் வடிவத்தை, உள்ளடக்கத்தை,  இன்னபிற விடயங்களை மாற்றவும் விலையை ஏற்றவுமான அதிகாரத்தை நிறுவனம் தன்கையில் வைத்திருப்பதைக் குறிக்கின்றது. பேஸ்புக் பாவிப்பதற்கு அதன் பாவனையாளர்கள் பணம் செலுத்துவதில்லை. ஆனால் அதன் ஊடாக அதிகப்படியான விளம்பரங்கள் எம்மை நோக்கி, எமது பார்வைக்கு வந்தவண்ணம் உள்ளன.

இந்த விளம்பரங்களை நுகர்வோரின் (பேஸ்புக் பாவனையாளர்கள்) பார்வைக்குக் கொண்டுசெல்வதற்கு ஏதுவாக பாவனையாளர்களாகிய நாம் எம்மைப் பற்றிய பல்வேறு தகவல்களையும் அளிக்கின்றோம். எமது பதிவுகள், பகிர்வுகள், நாம் எந்தெந்த விடயங்களை விரும்புகிறோம் என்பதன் மூலம் எமது விருப்பு வெறுப்புகள் தகவமைக்கப்படுகின்றன. நாம் யார், நாம் என்ன செய்கின்றோம் என்ற தகவல்கள் திரட்டப்படுகின்றன. மேற்சொன்ன எம்மைப் பற்றிய தகவல்களைத் தகவமைத்து, வகைப்படுத்தி திரட்டுகின்ற பொறிமுறைகளையும் கேளிக்கை, மகிழ்வூட்டல் விளையாட்டுகளையும் செயலிகளையும் (Apps) பேஸ்புக் கொண்டுள்ளது.

பேஸ்புக்கின் சந்தை அதிகாரம் என்பது விளம்பரங்களில் கட்டியெழுப்பப்பட்டதாகும். இது விளம்பரதாரர்களுக்கும் பெரும் இலாபத்தைக் கொடுக்கின்றது. ஏனெனில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. உலகளாவிய ரீதியில் 2,8 பில்லியன் பேர் பேஸ்புக் பாவனையாளர்களாக உள்ளனர். வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்ராகிறாம் பாவனையாளர்கள் 3 பில்லியன் பேர் எனத் தரவுகள் கூறுகின்றன.

சமூக ஊடக அமைப்புமுறை என்பது முற்றிலும் வணிக மாதிரியமைப்பினைக் கொண்டது. இன்னொரு வகையில் சொல்வதானால் அது தகவல்களை அடிப்படையாகக் கொண்ட பெருவணிகம். பாவனையாளர்கள் பற்றிய தகவல் சேகரிப்பும், சேகரிக்கப்பட்ட தகவல்களை வணிக நிறுவனங்களின் விளம்பரத் தேவைகளுக்காக விற்பதும் பேஸ்புக்கின் முதன்மை வருமானம். பேஸ்புக் பாவனையாளர்களின் விருப்பு, வெறுப்பு, குறிப்பாக நுகர்வுப் பொருட்கள் சார்ந்து அவர்களின் விருப்புகளை அறிந்து, அதற்குரிய வகையில் அவர்களுக்கு விளம்பரங்களைக் காண்பித்தல், அனுப்புதல் என்பதாக வணிக அணுகுமுறை உள்ளது. சமூக ஊடகமாக விளிக்கப்பட்டாலும் அது உண்மையில் ஒரு வணிக நிறுவனம். அது கொண்டிருக்கும் பரந்த வாய்ப்புகளும் தகவல் பரப்பலுக்கான பரந்தவெளியும் ஊடக நிறுவனத்திற்குரிய; பயன்பாட்டு மற்றும் விளைவுகளைக் கொண்டுள்ளது. எனினும் ஊடகம் சார்ந்த அறம்சார் கருத்துச்சுதந்திரம் சார் நியமங்களை அது பின்பற்றுவதில்லை. ஊடக நிறுவனம் என்ற வரையறைக்குள் சிக்காமல் சமூக-வணிக நிறுவனம் என்ற நிலையைத் தக்கவைப்பதில் மார்க் பிரயத்தனம் கொண்டுள்ளார்.

சமூக, அரசியல், தகவல் சார்ந்த கருத்தியல் பகிர்விற்கும் அறிவுப்பரிமாற்றங்களுக்கும் கூடி விவாதிப்பதற்குமான ஊடக நியமங்களுக்கு உட்பட்ட மாற்று ஊடகத் தளங்களை உருவாக்குவது தொடர்பான தேவைகள் பற்றியும் சில மட்டங்களில் பிரஸ்தாபிக்கப்படுகின்றது. பேஸ்புக், கூகிள் போன்ற இன்றைய தகவற் தொழில்நுட்ப வணிக ஊடகத் தளங்கள் அல்லாத மாற்று ஊடகங்கள் பற்றிய பிரஸ்தாபிப்பு அது. அதேவேளை பேஸ்புக் ஏகத்துவமாக இருப்பது அதன் வடிவம், பயன்பாட்டுவெளி சார்ந்து இயல்பானது என்ற கருத்தும் சில மட்டங்களில் நிலவுகின்றது. பேஸ்புக்கினை ஒத்த அதே சேவை பயன்பாட்டினைக் கொண்ட வெவ்வேறு சமூக ஊடகத் தளங்கள் உருவாக்கப்படின் அதன் உள்ளார்ந்த அர்த்தம் இழக்கப்பட்டுவிடும் என்றும் கருதப்படுகின்றது.

பேஸ்புக்கைப் பாவிக்கத் தொடங்கியவர்களில் பெரும்பான்மையினர் அதனைவிட்டு விலகுவது கடினம். தனிநபர் பாவனை, உலகின் பொதுவிடயங்கள் சார்ந்த தகவல்கள், பகிர்வுகள் என்பதைத் தாண்டிய வகிபாகத்தினை அது கொண்டிருக்கின்றது. குடும்பம், நட்புவட்டம், கல்வி, கலை, பண்பாடு, விவாதம் மற்றும் இன்னபிற சமூக உறவுகளின் பிணைப்பு சக்தியாக அது முக்கிய இடத்தினை வகிக்கின்றது. இந்நிலையில் அதன் ஏகத்துவ அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் புறந்தள்ளக் கூடியவை அல்ல.

ரூபன் சிவராஜா

தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது. தொடர்புக்கு – svrooban@gmail.com

விவசாயிகளோடு நுகர்வோரையும் சுரண்டும் சலுகை முதலியம்: ரத்தன் கஸ்னபிஸ்

0

புகழ்பெற்ற மார்க்சிய – பொருளியல் பேராசிரியர் ரத்தன் கஸ்னபிஸ் இந்த முரண்பாட்டை ஆராய்கிறார்

சுபோரஞ்சன் தாஸ்குப்தா

முதலாளித்துவத்தின் கோட்டைகளான அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் அவர்களின் விவசாயத் துறைக்குப் பெருமளவில் மானியமளித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ‘சந்தை-ஆதரவு’ (pro-market) ‘முதலிய-ஆதரவு’ (pro-capital) நரேந்திர மோதி ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’க்குக் (MSP) கூட சட்டப்படியான உத்தரவாதம் வழங்கத் தயாராக இல்லை. ஏன்? முன்னேறிய மேற்கத்திய முதலாளித்துவத்துக்கும் சலுகைசார் இந்திய முதலாளித்துவத்துக்கும் என்ன வேறுபாடு? இந்த முரண்பாட்டைப் புகழ்பெற்ற மார்க்சிய – பொருளியல் பேராசிரியர் ரத்தன் கஸ்னபிஸ் மானுட அறிவியல் பேராசிரியரான இக்கட்டுரையாளருடன் ஒரு நேர்காணலில் ஆராய்கிறார்.

கே: நம் நாட்டின் ஆளும் அரசு சந்தைப் பொருளாதாரத்தின் கொள்கைகளுக்கும் நடைமுறைகளுக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு வலதுசாரிப் பழமைவாத அரசாங்கமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. அது உண்மை என்றால், ஏன் இந்தத் தே.ஜ.கூ. (NDA) அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவின் சந்தைக் கொள்கைகளைப் பின்பற்றி வேளாண்மைத் துறைக்குப் பெரிதும் மானியம் அளிக்கவில்லை?

கஸ்னபிஸ்: மேற்கு நாடுகளில் உள்ள முன்னேறிய முதலாளித்துவத்திற்கும் வளரும் நாடுகளில் உள்ள சலுகை முதலாளித்துவத்திற்கும் ஓர் அடிப்படையான பெரிய வேறுபாடு உள்ளது. விவசாயத்திற்கு மானியம் வழங்காமல் முதலாளித்துவம் உயிர்வாழ முடியாது என்பது முன்னேறிய முதலாளித்துவத்திற்கு நன்றாகவே தெரியும். வேளாண்மைத் துறை, அதன் உற்பத்தியின் தன்மை காரணமாக குறைந்த மூலதனச் செறிவுடையதாகத் தொடர்ந்து இருக்க வேண்டும். உண்மையில், வேறு துறைகளில் போடும் அதே அளவு முதலீட்டை வேளாண்மையில் போட்டால் அவற்றைவிடக் குறைந்த உபரியையே உருவாக்கும். எனவே வேளாண் துறையில் அதிகப்படியான இலாப விகிதத்தை உறுதி செய்யாவிட்டால் உங்களால் விவசாயத்தை நோக்கி மூலதனத்தை ஈர்க்க முடியாது.

இதனால்தான் ஒரு துறையிலிருந்து மற்றொன்றுக்கு சுதந்திரமாக மூலதனத்தை நகர்த்துவதற்கான ஏற்பாட்டுடன் கூடிய முதலாளித்துவ உற்பத்திக் கட்டமைப்பில் வேளாண்மைக்கு குறிப்பாக சோள உற்பத்திக்கு மானியம் வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதில் கடினமான உண்மை என்னவென்றால் நீங்கள் மானியம் வழங்கா விட்டால் மூலதனம் விவசாயத்தை விட்டு விலகிச் செல்லும்.

மறுபுறம் ஒரு மூடிய பொருளாதாரத்தில் சோளத்தின் விலை உயரும், ஊதியங்கள் அதிகரிக்கும். அந்தத் தொழிலில் இலாபம் குறையும். சுருக்கமாகச் சொன்னால் விவசாயத்திற்கு மானியம் வழங்காததன் மூலம் நீங்கள் உங்கள் தொழிலைக் கொல்லலாம். அதற்கொரு தீர்வாக சோளத்தை இறக்குமதி செய்யலாமே என்று பரிந்துரைக்கப்படலாம். ஆனால் எந்தவொரு முன்னேறிய நாடும் அவ்வாறு செய்வதை விவேகமானதாகக் கருதாது. ஏனெனில் அது உணவுப் பாதுகாப்பிற்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். அதன் அரசியல் விலை மிகப் பெரியதாக இருக்கும். முன்னேறிய நாடுகளில் உள்ள முதலியம் இந்தத் தர்க்கத்தை அறிந்திருக்கிறது. எனவேதான் 2019-ஆம் ஆண்டில் அமெரிக்க விவசாயிகள் 22 பில்லியன் டாலருக்கும் மேலான அரசுப் பணம் பெற்றது எந்த வியப்பையும் ஏற்படுத்தவில்லை. கடந்த 14 ஆண்டுகளில் வழங்கப்பட்ட மிக உயர்ந்த வேளாண் மானியம் இது. அதுவும் இந்தப் பணத்தைக் கட்டியது பெருநிறுவனத் துறை (the corporate sector).

ஆனாலும் தே.ஜ.கூ-வின் இந்தியாவில் விவசாயச் சீர்திருத்தப் பிரச்சினையை விவசாயத்துக்குத் தான் கட்டக் கடமைப்பட்ட கடனைச் செலுத்தாமலேயே அந்தத் துறையை அபகரிக்க விரும்பும் முதலியத்தின் மிகச்சிறிய பகுதி ஒன்றின் கண்ணோட்டத்தில் நின்று பார்த்து அதைத் தீர்த்து வைக்கும் ஓர் அரசியல் ஆட்சி முறை உருவாகியுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் முதலியத்தின் மிகச்சிறிய பகுதியினரின் நலனுக்காகத் தொண்டாற்றும் அரசியல் ஆட்சி வடிவமைக்கப்பட்டுள்ள முதலாளித்துவம் சலுகை முதலாளித்துவமாகும். இங்குதான் மேற்கில் உள்ள முன்னேறிய முதலாளித்துவத்திற்கும் இந்தியாவில் உள்ள சலுகை முதலாளித்துவத்திற்கும் உள்ள வேறுபாடு இருக்கிறது.

இந்தியாவிலும் வளரும் நாடுகளிலும் உள்ள சலுகை முதலாளித்துவம் ஆட்சியில் உள்ள அரசியல் அதிகாரத்துடன் ஒரு மென்மையான நிலையான உறவை நிறுவி அவர்கள் தம் பரஸ்பர நலனுக்காக இணைந்து செயல்படுகின்றனர். சலுகை முதலாளித்துவத்தின் இந்தச் சிறிய பிரிவு அரசியல் அதிகாரத்தை நிதியளித்து ஆதரிக்கிறது. அதற்குப் பதிலாக அரசியல் அதிகாரம் சட்டங்களையும் விதிகளையும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வளைத்துக் கொடுக்கிறது.

கே: சலுகை முதலாளித்துவம் எவ்வாறு இயங்குகிறது – செயல்படுகிறது? அரிசி அல்லது கோதுமை என்று ஒரு குறிப்பிட்ட பொருளை – ஒரு குறிப்பிட்ட எடுத்துக்காட்டை எடுத்துக்கொண்டு பேசலாமா?

கஸ்னபிஸ்: சலுகை முதலியம் இரட்டைச் சுரண்டலைக் குறிவைக்கும். சலுகை முதலியம் உற்பத்தி செய்வோருக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக் குறைவாகவே செலுத்தும். சோளச் சந்தை இப்போது எந்தவொரு குறைந்தபட்ச ஆதரவு விலைக் கடமைகளும் இல்லாமல் முற்றுரிமையின் கீழ் (பல விற்பனையாளர்கள், ஒன்று அல்லது ஒருசில வாங்குபவர்கள் மட்டுமே) இருக்கும் என்பதால் இது நிகழ வாய்ப்புள்ளது. சுரண்டலின் முதல் அம்சம் இது – குறைந்தபட்ச ஆதரவு விலையை மறுப்பதன் மூலம் தயாரிப்பாளர்களைச் சுரண்டுவது. இன்னோர் அம்சம் என்னவென்றால், மண்டி (ஒழுங்குபடுத்தப்பட்ட மொத்தச் சந்தை) கொள்முதல் முதலில் குறைந்து பின்னர் இறுதியில் நின்றே போகும் என எதிர்பார்க்கப்படுவதால் பொது விநியோக முறைமை (PDS) பலவீனப்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்பதால் நுகர்வோர் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்தச் சூழ்நிலையில் அரிசியும் கோதுமை மாவும் பல்வேறு வர்த்தகப் பெயர்களில் சந்தையில் வரும், ஒவ்வொன்றும் கூடுதலான விலைப்பட்டியைக் கொண்டிருக்கும். இதன் மூலம் இந்தியர்களில் ஒரு பகுதியினருக்கு உணவு பெறும் உரிமையே மறுக்கப்படும். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வராத நடுத்தர வர்க்கம் அல்லது உயர் வகுப்பினரும் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். உண்மையில் இந்தச் சூழலில் சலுகை முதலியம் மிகைச் சுரண்டலுக்கான (super exploitation) ஒரு சந்தையைக் கண்டுபிடிக்கும்.

இந்தக் கொள்முதல் நடைமுறையில் இடைத்தரகர் அல்லது தரகர் அல்லது முகவர் ஆகியோர் நிச்சயம் இருக்கவே செய்வார்கள். தொலைதூர கிராமங்களை உள்ளடக்கிய ஒரு மாற்றுக் கொள்முதல் பொறியமைப்பை உருவாக்குவது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும் என்பதால் சலுகை முதலாளித்துவம் அதைச் செய்ய வாய்ப்பே இல்லை. இடைத்தரகர்கள் பெறும் தரகு ஒட்டுமொத்தச் செலவில் சேர்க்கப்பட்டு அதுவும் வாங்குபவர்கள் மீதே திருப்பிவிடப்படும். கசப்பான நேர்மையோடு சொல்ல வேண்டும் என்றால் சலுகை முதலாளித்துவம் உருப்படியாக ஒன்றுமே செய்யாது.

கே: அப்படியானால் வெறுப்புக்கும் விமர்சனத்துக்கும் உரிய இந்த இடைத்தரகர்கள் இந்த வேளாண் சட்டங்களின் செயற்படுத்தலுக்குப் பின்னரும் தொடர்ந்து செயல்படுவார்கள் என்பதைத்தான் இது குறிக்கிறதா?

கஸ்னபிஸ்: ஆம். அவர்களுக்குப் புதிய மேலாடை கிடைக்கும். அவர்களின் புறத்தோற்றங்கள் மாறும். ஆனால் அவர்கள் பெரிய நிறுவனங்களை உண்மையான உற்பத்தியாளர்களோடு இணைப்பவர்களாக, பெரிய நிறுவனங்களின் இடைத்தரகர்களாக இருக்கவே செய்வார்கள் – சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

முன்னேறிய முதலாளித்துவமோ சலுகை முதலாளித்துவமோ, எந்த வகையான முதலாளித்துவமாக இருந்தாலும் அதனால் முகவர்கள் இல்லாமல் செயல்படவே முடியாது என்பதை நாம் இங்கு மிகத்தெளிவாகக் கூறியாக வேண்டும். எனவே வேளாண் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் தரகர்கள் மறைந்துவிடுவர் என்ற எண்ணம் ஒரு பகற்கனவைத் தவிர வேறில்லை.

கே: குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு நிரந்தரச் சட்ட உத்தரவாதம் வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ முயற்சியை இந்த அரசாங்கம் வழங்கவில்லை. இதற்கு மாறாக, பெரியண்ணன்கள் – அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் – விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கியே அவர்களின் வெண்ணெய் மலைகளையும் பாலாடைக்கட்டி மலைகளையும் உருவாக்குகிறார்கள். சில்லறை விற்பனையிலும் மொத்த விற்பனை அளவிலும் கூட வேளாண் பொருட்களின் விலைகள் முதலாளித்துவ அரசாங்கத்தாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன. சுருக்கமாகச் சொல்வதானால், முன்னேறிய மேற்கு நாடுகளில் வேளாண் துறையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு, அவர்கள் முதலாளித்துவமாக்கல் கொள்கையைப் பின்பற்றவில்லை, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பொதுநல நடவடிக்கைகளையே (welfare measures) பின்பற்றுகிறார்கள்.

கஸ்னபிஸ்: முதலாளித்துவத்திற்கு மானியமளிக்கப்பட்ட விவசாயம் ஏன் அவசியம் என்பதை விளக்கினேன். முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் அதற்கு ஒரு முக்கியமான பொதுநலப் பரிமாணத்தைச் சேர்த்துள்ளன என்பதையும் நான் சொல்ல வேண்டும். ஐரிஷ் பஞ்சத்தின் நாட்கள் எப்போதோ மலையேறிப் போய்விட்டன. ஆனால், அத்தகைய நடவடிக்கைகளும் முதலியத்துக்குத் தொண்டாற்றத்தான் செய்கின்றன. இது போன்ற பொதுநல நடவடிக்கைகளின் விளைவாக முதலியம் மொத்த உற்பத்தித்திறனுக்கும் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் வகையிலான ஆரோக்கியமான பணியாளர்களைப் பெறுகிறது.

கே: முன்னேறிய, முதலாளித்துவ ‘முதல் உலகம்’ உணவுப் பாதுகாப்பின் முன் நிபந்தனைகளை மதச்சடங்கு போலப் பொறுப்பாக நிறைவேற்றுகிறது. முதல் உலகம் பணப்பயிர்களை வளர்ப்பதில் கண்மூடித்தனமாக விரைந்து இறங்குவதில்லை. இருப்பினும் இங்கோ, உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது, ஏற்கனவே அடிப்படை உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்த குறிப்புகள் விடப்படுகின்றன. அதாவது நம் “முதலாளித்துவ” அரசாங்கம் இந்தத் துறையில் கூட பெரியண்ணன்களின் கொள்கைகளைப் பின்பற்றவில்லையே. ஏன்?

கஸ்னபிஸ்: வேளாண் துறைக்கான மூன்று புதிய சட்டங்களில் ஒன்று ஒப்பந்த விவசாயத்திற்கான சட்ட ஏற்பாட்டை (legal provision for contract farming) உருவாக்குகிறது. ஒப்பந்த விவசாயத்தின் கீழ், உணவுப்பயிர் சாகுபடியின் கீழ் உள்ள பெரும் பகுதிகள் பணப்பயிர் நிலங்களாக மாற்றப்பட்டு அப்பொருட்கள் சர்வதேச சந்தையை, குறிப்பாக வெப்பமண்டலப் பழங்களுக்கும் காய்கறிகளுக்கும் அதிகத் தேவை இருக்கும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள சந்தைகளைக் குறிவைக்கும்.

இதன் விளைவாக ஸ்ட்ராபெர்ரிகளை ஏற்றுமதி செய்துகொண்டு ஆனால் கோதுமையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் உள்ள ‘புர்கினா ஃபாஸொ’வில் (சஹாராவடி ஆப்பிரிக்காவில் உள்ள நாடு) நடந்தது போல உணவுப் பாதுகாப்பின் நான்கு தூண்களான இருப்பு, கிடைப்பு, பயன்பாடு, நிலைப்பு (availability, access, utilisation and stability) ஆகியவை அச்சுறுத்தப்படும். முதலியத்தின் ஒரு சிறு பகுதிக்குத் தொண்டாற்றுவதையே தன் கடனாகச் சுருக்கிக் கொண்டுவிட்ட இந்தப் புதிய அரசியல் ஆட்சியின் கீழ் இந்தப் படுமோசமான சமனற்ற ஈடுகட்டல் அனுமதிக்கப்படுகிறது. முன்னேறிய நாடுகள் ஒருபோதும் அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்வதில்லை. ஏனென்றால் முதலியத்தின் ஒரு சிறிய பிரிவினர் ஒருபோதும் ஒட்டுமொத்த முதலியத்தின் நலனை விலை கொடுத்துத் தன் நலனை மேம்படுத்திக்கொள்ள முடியாத வகையிலான ஓர் அமைப்பை அவர்கள் கவனமாக உருவாக்கியுள்ளனர்.

***

தொடர்புக்கு : bharathee@gmail.com

யாதுமானவள்

0

பிரபாகரன் சண்முகநாதன்

கொக்..கொக்…

கோழிகளின் இரைச்சலும் அவை மண்ணைக் கிளருகின்ற ஓசையும் தெளிவாக காதில் வந்தடைந்தது. சலசலன்னு கேணி நீரில் முகத்தை அலம்பினால் தான் தேவலை என்று தோன்றவும் படுத்திருந்தக் கோணத்தில் இருந்து மரக்கதவின் நுனியைப் பற்றியவாறே எழுந்துப் பின்கட்டுக்கு விரைந்தாள். கடக்…கடக் என சுழலும் கப்பியின் ஒரு முனையில் இருந்த வாளியோடு பிணைத்திருந்தக் கயிறைத் தூக்கி கிணற்றுக்குள் போடவும் தொபுக் என தண்ணீருக்குள் வாளி விழுந்தது. கயிறின் மறுமுனை கிணற்றின் ஒரு பக்க தூணில் கட்டப்பட்டிருந்தது. நிதானமாக கயிறைப் பிடித்து வாளியை இழுக்க தொடங்கினாள். தண்ணீருக்குள் சர்ரென்னு மேலேறிய நீர் நிறைந்த வாளி நீர்ப்பரப்பைத் தாண்டியதும் கனம் கூடிற்று. வாளியை மேல் இழுக்க தன் முதுகைக் கயிற்றோடு ஒட்டி முன் வளைய வேண்டி இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மேலேறிய வாளியின் விளிம்பு தெரிந்ததும் கயிற்றைக் கொஞ்சம் பிடி தளர்த்தி வாளியை வெளியே இழுத்தாள்.

கிணற்றடிவாரத்தில் மேவப்பட்டு இருந்த சிமிண்ட் தளத்தில் வாளியை வைத்து இரு கைகளாலும் நீரை மோண்டு முகத்தில் அடிக்கவும் அதன் குளுமை புத்தியைத் தெளிவாக்கியது போல இருந்தது அலமேலுவுக்கு. இன்னொரு முறை அதைப் போலவே முகத்தைக் கழுவிக்கொண்டு சம்பிரதாயங்களை மீறி நெற்றியில் ஒட்டிக்கொண்டு இருந்த சிறிய கருப்பு பொட்டு அதன் இடத்தில் தான் இருக்கிறதா என்பதை சரி செய்தாள்.

எங்கிருந்து இந்த ஆசுவாசம் கிடைக்கிறது என தெரியவில்லை. கிணற்றடிக்கு மட்டும் அப்படி ஒரு புனிதத்தன்மையை எது சேர்த்துக் கொடுக்கிறது என்பதற்கு விடையெல்லாம் இல்லை. சுற்றி நிற்கிற வேப்ப மரம், புளிய மரம், முருங்கை மரம் மாறி மாறி கிணறின் தாழ்வாரத்துக்கு வெயிலை அண்ட விடாமல் பார்த்துக் கொள்கின்றன. எத்தனை பிரச்சனை இருந்தாலும் இங்க வந்து நின்னுட்டா அப்போதைக்கான தெளிவை வாரி வழங்குது. கிணறின் வழியாக தான் இந்த மண் மனிதர்களிடம் பேச விரும்புது. கடவுள் மேல இருக்குறது இல்லை. மண்ணுக்குள்ள தான் இருக்காரு. அவருடைய வழிபாதையாகத் தான் கிணறு இருக்கும். மனிதர்களைக் கண்காணிக்க அவர் கிணறு வழியாக வந்து செல்கிறார்.

எங்கோ போகிற நினைவுகளைக் கட்டி இழுத்துட்டு வர இந்திராவின் நினைப்பே போதுமானதாக இருந்தது. அலமேலு பெருமூச்சு விட்டபடி காற்றில் சொற்களை உதிர்த்தாள். யாரும் கேட்க இல்லாத போதும் பேசும் பழக்கம் இன்னிக்கு நேத்து இல்ல இந்திராவின் அப்பா இறந்து, ஆண்கள் அவரை எரிக்க தூக்கிக் கொண்டும் பெண்கள் நீர்மாலை எடுக்கவும் போன பிறவு இதே கிணற்றடியில் யாரிடமோ பேசுவது போல சத்தம் போடத் தொடங்கிய போதே தொடங்கியது. அலமேலுவை அவள் வீட்டில் வேலை செய்த மகமாயி அக்கா தான் ஆற்றுப்படுத்தி மடியில் சாய்த்துக் கொண்டாள். ‘கவலைப்படாதே பொன்னுத்தாயி. மனுசன பிறந்த யாரும் ஒருநாள் இந்த உலகத்தை விட்டு போகத்தான் வேணும். அதுவரைக்கும் களத்துமேட்டு அய்யனார் காவல் தான் துணை தாயி’

“என் தப்பு என் தப்பு. அவன் குடிகாரன்னு தெரிஞ்சு இருந்தா என் பிள்ளைய கட்டிக் கொடுத்திருக்க மாட்டேனே. என்ன பெத்த அப்பா, எனக்கு அந்த மட்டுக்கு கூட அறிவு இல்லாம என்னைய வளர்த்து விட்டுட்டு போயிட்டீகளே. என் பிள்ளை அங்கு கஷ்டப்படுறப்போ இங்க நான் எப்படி நிம்மதிய கஞ்சி குடிச்சுட்டு கிடக்க முடியும்” -சத்தம் மதிலைத் தாண்டி வீதியில் முட்டி எதிரொலித்தது.

அழுகைக்கு நடுவே வார்த்தைகளும் அதற்கு முன்பே இளைப்பும் வர, ஆற்றமாட்டாது வற்றிய நெஞ்சில் கைவைத்தாள் மூச்சுக்குத் திணறியவாறே. சாமியறையின் கதவுக்கு மேல் நிலையில் இருந்த உறிஞ்சுகிற மருந்தை வாயில் மூன்று நான்கு முறை இழுத்த பிறகே அமைதியானாள்.

இளைப்பு முன்னாடி இருந்தே இருக்கு. சரியா சொல்ல வேண்டுமென்றால் அப்பா இறந்த மறுவருஷம் வீட்டின் பண்டம் பாத்திரம் எல்லாமும் அரிசியான பிறவு இனி அம்மா ஒன்றே ஒன்று என வைத்திருந்த குண்டுமணி தங்கமும் மு.சொ.குட்டியப்பன் நகை கடைக்குப் போனபோது, அம்மா முறுக்கு சுட்டு கடைக்குக் கொடுத்தனுப்பினாள். வெளிநாட்டில் இருந்து அப்பா ரொட்டி வாங்கிட்டு வந்த தகர டின்கள் அவை. பளீர் வெள்ளையில இருக்கும் தேன்குழல் முறுக்குகளைக் கொண்டு போயிக் கொடுத்துட்டு திரும்பும் போது மண்டைய பொளக்குற வெயில். சிகப்பி அக்கா வீட்டுக் கொய்யா மரத்து நிழலுல நின்ற போது சிகப்பி அக்காவின் வீட்டுக்காரர் சொக்கு அய்த்தான் ‘என்ன இங்க நிக்குற’ என தன் முகப்பில் இருந்து குரல் கொடுத்தார். அம்மா கடைக்கு போயிட்டு வரச்சொன்ன விவரத்தைக் கேட்டுட்டு ‘சரி இந்த வெயிலுல தான் போவணுமா, உள்ள வா. கம்மாய் தண்ணீர் குடிச்சுட்டு போலாம்.’ அய்த்தான் எப்போ பார்த்தாலும் இரண்டு வார்த்தை பேசாம விடமாட்டாரு. அப்பப்போ மிட்டாய் கூட குடுப்பாரு. உள்ள போயி இரண்டு நிமிஷம் தான். இரண்டு தகர டின்களையும் கால்களில் இடற பற்றிக்கொண்டு வீட்டுக்கு ஓடிவந்து கண்ணீரோடு கிள்ளியதால் சிவந்த தோலின் தடங்களைக் காட்டி அம்மாவிடம் அழுத போது தொடங்கிய இளைப்பு இது. இத்தனை வருசமாகியும் இன்னும் விட்டபாடில்லை. அலமேலு வளர வளர இளைப்பும் தேம்பலும் வளர்ந்து கொண்டே தான் வந்தது.

செந்திலோட அழைப்பு செல்பேசியை அதிரச் செய்தது. செந்தில் கிட்ட பேசி எத்தனை நாளாகிடுச்சு. இந்திரா அவனுக்கும் கூப்பிட்டு சொல்லி இருப்பாள். இல்லைனா இந்த வேளையில் அவன் கூப்பிடவே மாட்டான். ‘மாமி, இந்திரா கூப்பிட்டாளா உங்களை. அங்க அவன் பெரிய பிரச்சனையா பண்ணிட்டு இருக்கானாம். யாரும் இல்லாத பிள்ளைன்னு நினைச்சுடானா. நம்ம பிள்ளை தான் மாமி நமக்கு முக்கியம். போய் நாலு தட்டு தட்டுனா தான் சரிப்பட்டு வரும் போல’

‘இன்னிக்கு நேத்தாடா இது நடந்துட்டு இருக்கு. அவள கட்டிக் கொடுத்த முதல் வருசத்துல இருந்து இப்படி அம்மாவாசைக்கொரு தரம் பெளர்ணமிக்கொரு தரம் அவனுக்கு கிறுக்கு பிடிச்சு இப்படி எதாவது பண்ணிட்டே தானே இருக்கான். விடுடா அவ சமாளிக்கட்டும்’

‘என்ன மாமி, நீங்களே இப்படி பேசுறீக. நீங்க கேக்க மாட்டீக. நான் அப்பா கிட்ட பேசிட்டு நேர்ல போயி பார்த்துட்டு வரேன்.’

டப்பென்று அலைபேசி நின்று போனது. துடியான பையன். கூடப் பிறந்தவன் கூட இப்படி பார்த்துக்க மாட்டான். அவன விட நான்கு வருஷம் பெரியவ இந்திரா.

‘பொழுது சாய்ஞ்சுட்டு வர்றது கோழிகளை அடைக்கணும்’ என்கிற உணர்வு வந்தவளாக பின்கட்டில் நுழைந்தாள். பாத்திரம் கழுவுன நீர் தாரையாக வடிந்து செல்லும் ஈரமான மண்ணைக் தாய்க்கோழி கிளறியது. அதனோட எட்டு குஞ்சுகளும் கிவ்…கிவ்வென்று தாயின் காலுக்கும் கிளறும் மண்ணுக்கும் இடையே சுற்றிச்சுற்றி வந்துட்டு இருந்தது. இது முறைப்பான கோழி. தன்னுடைய குஞ்சுகளைக் கொத்த வருகிற காக்கையைக் கூட மதில் உயரத்திற்கு எட்டிப் பறந்து கொத்தி விரட்டி விட்டுரும். அது கூடவே சேர்ந்து வளர்ந்த சேவலைக் கூட நெருங்க விடாது. குஞ்சுகள் கொஞ்சகொஞ்சாம வளர்ந்துட்டு வருதுக. இன்னும் நாள் போனா குஞ்சுகள தனியா பிரிச்சு விட்டுரும். அப்புறம் அதுக அதோட வாழ்க்கைய சுமந்துட்டு சுத்த வேண்டியது தான். குழம்பானாலும் சரி. கொள்ளை போனாலும் சரி.

மனிதர்களினால் அப்படி இருக்க முடிறது இல்லை. பொண்ணா பிறந்து மக்களைப் பெத்துட்டா கடைசி வரைக்கும் மனசுல சுமந்துட்டே தான் வாழ வேண்டியது இருக்கு. இயல்புக்கு வந்தவளாக நீர் கழிக்க வேப்ப மரத்துக்கு பின்புறம் சென்றாள். சரேலென்று நீளமா எதுவோ ஓடியது. காட்டுத்தனமா வளர்ந்த புதர்களைச் சபித்துக் கொண்டே கொடிகளை விலக்கினாள். பின்புறம் நாமம் இட்ட நல்லபாம்பு ஒன்று ஓடியது. வம்ப நாராயணா என வாய்க்குள்ளேயே இரண்டு மூன்று முறை முணுமுணுத்து விட்டு வீட்டின் முகப்பை அடைந்தாள்.

‘ஆச்சி’ என்றவாறே பூக்கார இலட்சுமி வாயெல்லாம் வெத்திலைக் கறை மின்னக் கூடையோடு வாசலில் நின்றாள். ‘வாடீ, உள்ளே’ திண்ணையில் அலமேலு அமரவும் இலட்சுமி படிகளில் அமர்ந்து கொண்டாள். ‘என்ன ஆச்சி நினைப்பு இங்க இல்ல போலயே’

‘எல்லாம் நான் பெத்த மகளை சுத்தி தாண்டீ. நீயும் ஒரு மக பெத்து வச்சுருக்கியே. பார்த்துடி. பொம்பள பிள்ளைய வளர்த்து கட்டிக் கொடுக்குறது மட்டுமில்ல. பெத்தவ உசிரோட இருக்குற வரைக்கும் சுமக்கணும். லேசுப்பட்ட காரியமா. என்ன பெத்தவரு கட்டுனவரு எல்லாம் சுளுவா கண்ண மூடிட்டாங்க. நான் தானே கிடந்து தவிக்குறேன்’

‘திரும்பி மாப்பள தண்ணீய போட்டுட்டு தகறாறு பண்ணுனாராக்கும்’

‘அவ பூ மாதிரி டி’ ஆச்சி வேற ஏதோ பேச ஆரம்பிக்கிறத உணர்ந்த போது கிளம்பிவிட எத்தனித்தாள் லட்சுமி. ‘நீங்க பழைய கதைய ஆரம்பிச்சுடுவீக. அப்புறம் கட்டுன பூவெல்லாம் நான் எங்க போடுறது.’ என்றவாறே எழுந்து சென்றாள்.

‘டீ குடிச்சுட்டு போலாம், இருடி’

‘வரேன் ஆச்சி’ என தெரு முக்கில் இருந்து சத்தம் கொடுத்துட்டு லட்சுமி சென்றுவிட்டாள்.

பொழுது கவிழ்ந்து இருட்டு வந்தது. சின்ன பிள்ளைல இருந்தே இந்திராவுக்கு இருட்டுனா பயம். இருட்டுல அதைக் காட்டி சோறு ஊட்டிரலாம். பகல்ல கிணற்றுநீர் மேல படிந்துக் கிடக்கிற இருட்டைப் பூச்சாண்டி என சொல்லி சோறு ஊட்டியது இந்திரா வளர்ந்த பிறகும் பயம் விட்டுப்போகலை. அவரு எதை வச்சு இந்திரான்னு பேரு வச்சாரோ. அவருக்கே வெளிச்சம்.

இந்திரா அவ்வளவு பாசக்காரி. எதுனா ஒன்னுனா துடிச்சுப் போவா. அம்மா பார்த்த வேலையையே தானும் பார்ப்போம்னு அலமேலு அவரு இறக்குறதுக்கு முன்னாடி வரைக்கு யோசிச்சதுக் கூட கிடையாது. குளிர்பருவக் காலத்தில் தான் அப்பாவும் இறந்தது. தன்னையும் தம்பியையும் வச்சுக்கிட்டு தனியா அம்மா நின்ன மாதிரியே இந்திராவைத் தூக்கிகிட்டு தானும் நின்றாள். முறுக்கு சுட்டே இந்திராவை வளர்த்து கல்லூரி வரைக்கும் படிக்க வச்சு குணமான மாப்பிள்ளையா பார்த்து கட்டிவச்சா. ஆமா குணமான மாப்பிள்ளை தான். இதே இந்திரா தான் போன மாதம் அவ்வளவு மகிழ்ச்சியோடு பேசுனது. ஒன்ன்னாவது படிக்கிற பேரனுடைய முகம் நினைவில் எட்டி பார்த்தது. அப்பாவைப் பார்த்த மாதிரி இருக்கும் அலமேலுவுக்கு.

கூடவே வச்சு பார்த்துக்குறதுக்கும் ஒரு கொடுப்பினை இருக்கணும் போல. யாருக்கு எது ஒட்டுமோ அதுதான் ஒட்டும். அவளே கிணத்துல நீந்தி மேலேறி வரட்டும் அவ அம்மாவைப் போல. ஆயாவைப் போல. இளைப்பு மீண்டும் ஆரம்பித்த போது, வெளியே பனியும் இருளும் கிணற்றில் அமைதியாக படர்ந்து கொண்டிருந்தது. கிணறு தனக்குள்ளே கொண்டிருந்த வெம்மையை இறுக்க அணைத்தவாறே உறங்கச் சென்றது.

***

பிரபாகரன் சண்முகநாதன்

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

0

அங்கிருந்து இதனை நோக்கி..

சரி
பார்த்துக்கொள்ளலாம் என்றபோதும்
இளகவில்லை மனம்

குடைந்தபடி உருளும் சொற்கோளங்கள்
சரிந்து விழுகின்ற தருணம்
உவப்பாக இல்லை

வெயில் அகன்று துலங்கும் திரைக்கு பின்னே
மௌனமாக நின்றிருக்கும் நிழலை
கையில் எடுத்துக்கொண்டேன்

இந்த இரவுக்கு நீ
ஆதரவாக இரு

சரிபார்த்துக்கொள்ளலாம்

***

சொல்லியான பின்..

உராயாமல் பேச்சு குறுகின
மஜ்ஜையின் பிசுபிசுப்பை அறிந்து
அலுங்கி சிரிக்கிறாய்

மேலும் பல மைல்கள் கடக்கவிருப்பதை
குறிப்பிட்டு
பேசாமல் நடக்கும்படி

முன்னே விரிந்திருக்கிறது
பாதை

***

Split Alter

ஆளுக்கொரு ஜோக் சொல்லிக்கொள்வதில்
என்ன இருக்கிறது

அவரவருக்கான ஒரு ஜோக்கும்
ஜோக்கராகும்
மனமும்

***

நியமங்கள்

பறவையே
வலசைக் காற்றில் மிதந்தலை
நின் அலகுத் துளையை நிரடும் வைகறை ஒளி
எம்மொழி மினுக்கம்

*

நீங்கிடத் துயிலும் மலர் மோனம்
தலைகீழ் உலகை
பறித்து
வீசுகிற தொலைவில்
புலர்
வழி

*

எவ்வெப்போதும் இருந்திருந்த ஒளியூடே
சில்லிட்டு தெறிக்கிறாய்
மனமாக

கைவாகில் என்ன உண்டு

உன்மத்தம்
மற்றும்

சிறு திமிர்

***

நாம் நீங்கள் மற்றும் அவர்கள்..

எந்திரங்கள் உராயும் நிசியில்
பொறுத்திருந்து
உரசிக்கொள்ளும் சொற்ப முத்தத்தை விட்டு
சரசரவென உதிர்கிறது
சயனத்துரு

***


கவிதைக்காரன் இளங்கோ
elangomib@gmail.com

பால்வெளி மயக்கம்

0

ஜீவ கரிகாலன்

ணவு தீர்ந்து போன யுகத்தில் எஞ்சியிருக்கும் சொற்ப மனிதக்கூட்டத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாய் நான் கனவு கண்டுகொண்டிருக்க.. “பகல்லயே தூக்கமா?” என்று கிள்ளியபடி எழுப்பிவிட்டாய். ஒளிரூட்டும் ஆடைகளை அணிந்த உன்னைப் பார்க்கையில் கண்கூசிட முகத்தைத் திருப்பிக்கொண்டு ஆடையை அவிழ்க்கச் சொன்னேன்.

காலை ஆகாரம் தேடி பயணிக்கும் நேரத்தில் “என்ன இது ட்ரெஸ் போட்டுக்கிட்டு” என்று திட்டியபடி, தூசுப்படலங்களை வழித்துப்போடும் வேலையில் உனக்கு உதவி செய்ய ஆரம்பித்தேன்.

“ஒவ்வொரு யூனிட் காலத்திலும் நீ பாதி நேரம் இப்படி ஆடை அணிந்து கொள்கிறாய். நாம் அடிக்கடி வேட்டையாட வெளியே செல்ல வேண்டும் என்று உனக்கு ஏன் புரியாமல் இருக்கிறது.”

முன்பொரு யுகத்தில் ஒரு பெரும் கருஞ்சூறாவளி ஒன்று நம்மை விழுங்கியபோது என்னென்னவோ மாற்றங்கள் நடந்தது. சிறியது பெரியதாகவும், பெரியது சிறியதாகவும் மாறிக்கொண்டன.. என்னமோ துளையென்று நம் முன்னோர்கள் அழைத்து வந்த நிகழ்வு, அதுவே தான் புயலாக மாறி அழித்தது.

இப்போது மீந்துபோனவற்றில் உயிரோடிருக்கும் நட்சத்திரங்களை வேட்டையாடிக் கொன்று தின்று உயிர் வாழ்கிறோம். உயிர் வாழ எஞ்சியிருக்கும் நட்சத்திரங்களை உன் ஆடைகளுக்குள் அதுவும் உன் பருத்த முலைகளின் காம்புகளில் அலங்கரிப்பதற்கோ மறைப்பதற்கோ பயன்படுத்துகிறாய். அவையும் கூட உன் முலைகளின் உஷ்ணம் தாங்காது சீக்கிரம் வாடிப்போய் சுருங்கிக் கொள்கிறது. உணவை வீண் செய்வது என்னால் பொறுத்துக் கொள்ள முடியாத செயல். உன்னைப் பலமுறை எச்சரித்து விட்டேன் என்றாவது ஒருநாள் உனக்கும் எனக்குமான போர் ஆரம்பிக்குமாயின் – இம்முலை நட்சத்திரங்களே காரணமாகும் குறித்துவைத்துக் கொள்..

இத்தனை ஆக்ரோஷமாக உன்னிடம் கத்திக் கொண்டிருக்கும் ஒருவனை அலட்சியமாகப் பார்த்து சிரித்தபடி என் கன்னத்தை தட்டுகிறாய்.. கொஞ்சம் பலத்துடனே.. ’

ஆஆ…

திடீரென்று கண் விழிக்கையில் என்னருகே நீ.

“என்னடா கனவா இது” என்றபடி என்னைக் கிள்ளிப் பார்த்தாய். எனக்கும் நன்றாகவே வலித்தது.

சொன்னேன்

“ஐயோ அப்ப இதுதான் நெஜமான்னு சந்தோசத்துல தலைகால் புரியலடா..”

மெதுவா உன்னை பேர் சொல்லி அழைத்துப் பார்த்தேன். அப்புறம் நான் வைத்த இன்னொரு பெயரையும் சொன்னேன்.

“டிஸ்டர்ப் பண்ணாத”

கை மட்டும் என்று கேட்டேன். ம்ம் ஆனா என் கால்ல தான் வைக்கனும்னு சொன்னாய்..

கால்களில் இருந்து மெதுவாக நண்டு மாதிரி ஊர்ந்து உன் ஆடையை எதிர்திசைக்கு அனுப்பிடப் பார்த்தேன். ஏனோ நீ ‘செருப்பு’ என்று மட்டும் சொன்னாய். நீ சொன்ன செருப்பு நான் வென்ற கோப்பைகளுக்குப் பக்கத்திலே தான் இருப்பதாய் உணர்ந்தேன்.

கவனத்தை திசை திருப்ப உன் பெருவிரலால் என் தாடையை திருப்பி விட்டாய், மறுபடியும் கால்களைப் பிடிச்சுவிட்டேன்..

மடியில் வைத்திருந்த பாதங்களை கீழே வச்சுருந்தா ஆயிரம் முத்தம் கொடுத்திருப்பேன்.

ஆனா நான் உனக்கு கொடுப்பதாக நீயும் உணர வைத்தேன். அது ஒரு மயக்கம், உலகின் ஏதோ ஒரு புள்ளியில் இருந்து கொண்டு, அது ஒரு மலையுச்சியாகவோ, வெட்டவெளியாகவோ இருப்பதானாலேயே தெரியும் நட்சத்திரக் கூட்டங்களில் அதோ கேலக்ஸின்னு சொல்லிட்டு நட்சத்திரங்களைப் பார்த்து மயங்குற மாதிரி தான்.. நாம நிக்குற புள்ளியும் கேலக்ஸியில் தான் இருக்குதுன்னு உணராமயே நமக்கு கிடைக்காத ஒன்றை தூரத்தில் இருப்பதாக நினைத்தபடி மயங்குவது. என்ன விழிப்புணர்வு அடைந்தேனா?

உனக்கு முதல் முத்தம் கொடுக்க ஆரம்பித்த பின்னர் இந்த பிறப்பு முடியும் வரை நான் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறேன் என்பதை உணரும் தருணம் இது. கேலக்ஸிக்கு நன்றி.

அப்படித்தான் பாதம், பாதக்கமலம், ஸ்ரீபாதம் என்று சொல்வது எல்லாம் கேசம் வரை நீண்டு செல்வதற்கான ஒரு தொடக்கம் தான்.

இந்தா என்று கால்களை நீ நீட்டுவதும் கூட ஒன்றைத் தொடங்குவதற்குத் தானே. நீ உணர்கின்ற முத்தங்களுக்கு இடையே மெய்மையைக் கலைத்துப் போடும், பொய் X மெய் இரண்டும் எனக்கு ஒன்று தான்.

கண்களை மூடிக்கொண்டே இருக்கற நீ, நான் சொல்ல உணர்வதை எப்படியோ உணர்ந்து சிரிக்கிறாய்.

“பொய்யா மெய்யா”

“இரண்டும் தான்”

“எப்படி நீ நான் கேட்காத கேள்விக்கு பதில் சொல்கிறாய்.”

“இல்லை இல்லை நீ நான் கேட்கும்முன்னே காலத்தை குழப்பிப் போடுகிறாய். இந்த பதிலுக்கு சரியான கேள்வியை நானே கேட்டுவிடுகிறேன்.”

“அதுவரையிலும் உனக்கு கால் மட்டுந்தான்”

“உனக்கு தான் கால்கள் சாதாரணமானது. எனக்கு அது ஒரு நட்சத்திரத் தொகுதி, முத்தங்களால் எண்ணிப் பார்ப்பது என் வழக்கம் என்று உனக்குத் தெரியாதா என்ன?”

நானும் ஃபுட்-ஃபெடிஷ் குழுமத்தில் சேர்ந்துவிட்டேனோ என்று தோன்றியது.  புதிய பெயர்களைக் கொண்டு பெருமை கொள்வதில் இந்த நாகரிகம் தான் எத்தனை அக்கறையாய் இருக்கிறது பார்த்தாயா? எனக்கு ஆதிஷேசன் மேல் பள்ளி கொண்டிருக்கும் திருமாலின் ஞாபகமும் வந்தது.

“இப்பவாச்சும் வந்ததே.. சரி கதய சொல்லு”

‘ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியின் போது அம்மா வைக்கின்ற கொலு பிரம்மாண்டமாய் இருக்கும். ஒருநாள் பஞ்சம் பிழைக்க அதிகாலையே யாருக்கும் தெரியாமல் ஊரைவிட்டுப் போகும்போது அவற்றை விட்டுவிட்டே கிளம்பினோம். கொஞ்சம் நிலைமை சரியாகும் போது ஊருக்குப் போனபோது அத்தைங்க அவற்றை அவுங்க வீட்டு அலங்காரத்துக்கு எடுத்து வச்சுருந்தாங்க அதில் எனக்குப் பிடிச்ச பொம்மை காமதேனுவும் அடக்கம். காமதேனு என்பதே பால்வெளியைக் கடையும் போது வந்தது தான் என்பதால் அது என்ன கேட்டாலும் தரும் எனும் கதைதான் அதற்குக் காரணம். அதற்குப் பின்னர் நடந்த நவராத்திரிகளில் சம்பிரதாயமாக சில பொம்மைகளை எங்கள் வீட்டில் வைத்து வழிபாட்டாலும், காமதேனு பொம்மை இல்லாததால் நான் அம்மாவுக்காக காமதேனுவிடம் காமதேனு உள்ளிட்ட பொம்மைகள் திரும்ப கிடைக்கனும் என்று பிரார்த்தனை செய்தேன்.

“காமதேனு சிலையே இல்லாமல் எப்படிடா காமதேனுகிட்ட வேண்டுவ” என்று என் தம்பி சொல்லும் வரை எனக்கு அது உரைக்கவேயில்லை. அப்போது எங்களிடம் காமதேனுவும் இல்லை பள்ளிகொண்ட பெருமாளும் இல்லை. அப்போதிருந்து தான் நான் பாற்கடலைத் தேட ஆரம்பித்தேன், இதற்காக ஏலகிரி மலையில் உள்ள காவலூர் டெலெஸ்கோப் இருக்கும் பகுதியில் அத்துமீறி நுழைந்ததற்காக ஒரு முறை கைது செய்யப்பட்ட கதையை ஏற்கனவே உனக்கு சொல்லியிருக்கிறேனே… சரி நவராத்திரி கதைக்கே போவோம்..

நீ சிணுங்கவதைப் புரிந்தும் மேற்கொண்டு சொல்ல ஆரம்பித்தேன்.

எப்படியோ படிப்பில் தேறி, மரக்கிளையைப் பிடிப்பதுபோல் ஒரு வேலையைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தேன். பக்தியெல்லாம் பஞ்சத்தில் பொட்டலம் கட்டி தெருவிலே போட்டு வைத்தாலும், நவராத்திரி காலங்களில் யார் வீட்டுக்காவது போய் கொலு பார்க்கலாம் என்றே தோன்றும்.. மைலாப்பூரில் நவராத்திரி காலத்தில் கொலு பொம்மைகள் நடைபாதைகளிலும், திடீர் கடைகளிலும், சில மண்டபங்களைப் பிடித்தும் அமோகமாக வியாபாரம் நடக்கும்.

விஜய தசமியன்று பத்தாவது நாளில் அதுவரை மாதக்கணக்கில் விற்பனையாகி வந்த பொம்மைகள் ஐம்பது அறுபது சதவீத தள்ளுபடியில் விற்க ஆரம்பிப்பார்கள். ஏக களேபரமாக இருக்கும். அடுத்த வருடத்திற்காக வாங்கிச் செல்லும் புத்திசாலிப் பெண்மணிகள் காரில் வருவார்கள், ஆனால் அதிபுத்திசாலித்தனமாய், துறுதுறுவெனத் திரியும் தங்களது ஹைபர் ஆக்டிவ் குழந்தைகளையும் கூட்டி வருவார்கள். இவற்றையெல்லாம் நான்கு வருடங்களாகத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். ஒருவகையான சேடிஸம் தான் அது என்றாலும், அப்படித் தள்ளுபடியில் வாங்கி செல்லும் பொம்மைகள் வீடு செல்வதற்குள் உடையும் என்று நம்பிக் கொண்டிருந்தேன்.

பொம்மைகள் எங்கிருந்தெல்லாம் தயாரிக்கப்பட்டு வருகின்றன எனத் தேடலானேன். வடக்குப்பகுதியிலிருந்து வரும் நாடோடிகள் செய்யும் அலங்கார பொம்மைகளை என்னால் இந்த வரிசையில் ஏற்க முடியாது. அதே போல காதிகிராஃப்ட் பொம்மைகளை விட, மடிப்பாக்கத்திலிருந்து வரும் பொம்மைகளை விட, பெங்களூரில் இருந்து வரும் பொம்மைகளை விட, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வரும் பொம்மைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் நேர்த்தியும் முக லட்சணமும் பிரத்தியேகமானது.

பொதுவாக நான் பொம்மைக்கடைக்காரர்களிடம் பேசவே மாட்டேன். அவர்கள் சிற்பிகள் அல்ல என்று தெரிந்தாலும், ஏதோ ஒரு உணர்வு அவர்களிடம் பேசவிடாமல் தடுத்தது. சொல்லிக்கொள்ளும்படியான வேலை இல்லாதவன் என்பது நெற்றியில் டட்டூவாக இருப்பது போன்ற உணர்வு கூட காரணமாயிருக்கலம். அப்படியாக ஒரு வருடத்தின் விஜய தசமியில் கிட்டத்தட்ட வியாபாரம் முடிந்து எடுத்து வைத்துக்கொண்டிருந்த அந்த வயதானவரிடம் என்னையும் மீறி பேச்சுக் கொடுக்கலானேன்.

“இந்த மீரா எவ்ளோ?”

“ஸாரி ரெண்டு தான் மிச்சமிருக்கு, அது நல்ல விலைக்குப் போகும். நோ டிஸ்கவுண்ட்ஸ்” என்றார்.

எனக்கு ஆதிகேசவன் மீது கவனம் திரும்பியது

“ஆமா திருவரங்கநாதன் ஏன் இவ்ளோ இருக்கு”

“சுத்தமா போகவேயில்லைப்பா.. பிக் டிஸ்ஸப்பாயிண்ட்மண்ட்”

“ஓ.. எதுனால”

“தெரிலயேப்பா” மும்மூரமாய் அடுக்கிக் கொண்டிருந்தார். உதவட்டுமா என்று சைகை செய்ததற்கு, சைகையிலேயே வேண்டாம் என்றார்.

“ஏன் விக்கலைன்னு எனக்குத் தெரியும்”

“அப்படியா, சரி ஏன்னு சொல்லு?”

“இன்னைக்கு இருக்கற அரசியல் சூழல் தான் காரணம். ஆணுக்கு சமமா பெண் எல்லா துறைலயும் வேல பாக்குற காலத்துல, எந்த பெண்ணுக்கும் ஆம்படையான் காலை அமுக்கிவிடனும்னு, அதுவும் இந்த காலத்துல தோனுமா என்ன? பொலிட்டிக்கலா மட்டுமல்ல ஸோசியலாவே இந்த இமேஜ் இப்ப எக்ஸ்பையரி ஆச்சு தாத்தா” என்றேன்.

“டேய் ஏண்டா படுத்தற” என்று நீ கேட்டது நியாயம்தான். கதைசொல்லி தூங்கவைக்க நீ என்ன குழந்தையா? ஆனாலும் கதைக்கு ‘ம்’ கொட்டாமல் காதுகளை நிரடிவிட்டுக் கொண்டே இருப்பது அக்கதைக்கு விருது வாங்குவதைப் போன்றது.

“விருது வாங்கி….”

எனக்குள்ளே இருக்கும் ஒரு வன்மக்காரனையும் மீறி உன்னோடு நான் இப்படியெல்லாம் இருக்க முடிவது திருவரங்கனின் அருள் தான்.

“தெரியுமா அன்னைக்கு அவர் எனக்கு சும்மாவே ஒரு அந்த பள்ளிகொண்ட பெருமாளை எடுத்துக் கொடுத்தார். என்னால நம்பவே முடியல..”

“ரியலி காசு வாங்காமலா?” என்று கால் விரல்களைக் கொண்டே என் தாடையை நிமிர்த்திக் கேட்டாய். உன் கண்களில் பொய்யற்ற வியப்பையும் அவ்வப்போது காண்கிறேனே.

“ஆனா பஸ்ஸிலே போகும்போதே கீழ போட்டு ஒடச்சுட்டேன்”

“அட எரும” என்கிற ஆண்களுக்கே உரித்தான பிராண்டட் பட்டத்தை நீ எனக்கும் 1330-வது முறையாகத் தந்தாய்.

அதென்ன 1330 குத்துமதிப்பா சொல்றியா என்றாய்

கூடி முயங்கப் பெறின் என்று சிரித்தேன். ஒரு சின்ன சந்தேகம் வந்தது.

மறுபடியும் என்னையே கிள்ளிப் பார்த்தேன்.. வலித்தது

அந்த வெளிர் மஞ்சள் நிற சேலையில் ஆஹா. உன் பாதங்களின் வெப்பத்தை கொஞ்சம் அதிகப்படுத்தினேன்.. என் விரல்களை இதழ்களாக நினைத்தபடி உன் பாத விரல்கள் ஒவ்வான்றாகத் தொட்டுத்தொட்டு நீவி விட்டேன்..

அப்போ தான் இந்த மெட்டி ஞாபகம் வந்தது. திரும்பிப் பார்த்தேன், அருகில் இருந்த பையை எட்டி எடுத்தேன். அதில் இருந்த ஒரு சிறு பையைத் திறந்து பெட்டியை எடுத்தேன். ஏற்கனவே இருந்த மூன்றில் ஒன்றை மீண்டும் தொலைத்திருந்தேன். மீதம் இரண்டு மட்டுமே. உன் கண்ணருகில் காண்பிக்கும் போது, அதை தட்டிவிட்டு “இதெல்லாம் ஓல்ட்டா” என்றபடி என்னை உன் மாரில் சாய்த்துக்கொண்டாய். மெட்டி தளத்தில் உருளும் சப்தத்தை வைத்து அது எங்கே போயிருக்கும் என நான் கவனித்த திசையிலேயே உன் பார்வையும் திரும்பியது. எனக்குச் சிரிப்பு தான் வந்தது. நல்லவேளை சிரித்திருந்தால் வேறுமாதிரி ஆகியிருக்கும். அதிகாரம் ஊடல் உவகை.

திடீர்னு என்னிடம் ஒரு கேள்வியும் கேட்டாய்.

“ஆமா நீ சொல்றது கரெக்ட்தான. எவளாவது புருஷன் காலை அமுக்கிவிடுற பொம்மையை வைத்து அழகு பார்ப்பாளா, ஆனாலும் நீ பொண்ணுங்கள இவ்ளோ புரிஞ்சுவச்சுருக்க அளவை பார்த்தா உனக்கு அனுபவம் ஜாஸ்தியோன்னு தோணுது”

“யம்மே… ஈயாளு கடைஞ்செடுத்த உத்தமனாக்கும்”

கடித்து வைத்தாய். ஏ … உனக்கு பொய்க்கடி என்பது பற்றி தெரியாதா. ஒரு நாய் வளர்த்தால் கூட பொய்க்கடியென்றால் என்னவென்று தெரிந்திருக்கும். அதுசரி ஒரு பூனை எப்படி நாய் வளர்க்கும். உனக்கு மீத கதையையும் சொல்லத் தோன்றியது

“ஒன்னு தெரியுமா அடுத்த வருசம் மைலாப்பூர்ல அதே தாத்தாவைப் பார்த்தேன். அவர் அந்த வருஷ அதிக விற்பனை திருவரங்கநாதன் தான் என்றார். எனக்கு கடும் ஆச்சரியமா போச்சு. ஆனா அவர் அந்த பொம்மையைக் காட்டி கண்ணடிச்ச போதுதான் நல்லா கவனிச்சேன். திருவரங்கநாதன் தன் கால்களை அமுக்கக் கொடுக்காமல் மடியில் தலை வைத்துப் படுத்துருந்தான். லக்ஷ்மியில் கைகளில் ஒன்று அவர் தலையையும், இன்னொன்று அவர் காது மீதும் இருந்தது. உன்னைப் போலே நிரடிக் கொடுத்திருப்பார்” என்றேன்.

நீயோ “ப்யூட்டிஃபுல்” என்றாய்.

இப்போது நீ கேட்க முனைந்த கேள்விக்கு பதில் சொல்லட்டுமா, அவர் அந்த முறையும் ஒன்றை இலவசமாகத் தந்தார். ஆனால் நான் வாங்கவில்லை. சந்தோசமாகவே மறுத்தேன். அதற்குப் பின்னர் கொலு மீதிருந்த ஆர்வம் போய்விட்டது. என்ன, அன்று மட்டும் நீ எனக்கு இப்படி கிடைப்ப என்று தெரிஞ்சிருந்தா, அதை வாங்கிருப்பேன்.

“ஓ சாருக்கு மடில தலை வைக்கனுமா” என்று நக்கலோடு தான் கேட்டாய். காய்ச்சலுற்ற உன் உடலில் உஷ்ணத்திற்காக இரண்டு பாதங்களையும் சூடுபறக்கத் தேய்த்துவிட்டேன். 

“நான் கொஞ்சம் திரும்பிப் படுத்துக்குறேன். என் இடுப்பையும் கொஞ்சம் தேச்சுவிடுறியா” என்று நீ கேட்டபோது, என் கண்ணில் ஒரு சிறு மீன் டால்பீன் போல் இடம் வலம் மாற்றித் துள்ளிக் குதித்தது.

ஒகேன்னு கொஞ்ச கொஞ்சமாய் முன்னேற, அதற்கேதுவாக நீ திரும்பிப் படுத்தாய். ஆனால் மறக்காமல் உன் பாதங்களை விடுவிக்கும் போது ரெண்டுலயும் தலா ஒன்று மட்டும் கொடுத்தேன்.

கொஞ்சம் சேலையக் கீழிறக்குன்னு சொன்னேன். சேலையைக் கீழிறக்கியபடி குப்புறப்படுத்தாய்.

விலக்கினேன். நீ சொல்லியிருந்த அந்த மச்சத்தைத் தேடினேன். மீன் போன்ற வடிவத்தில் இருக்கும் அது நான் பார்க்கவும் அது தன் இறக்கைகளை படபடவெனத் துடித்தது.. நீந்துவதற்குத் தயாராக இருப்பது போல் பாவித்தது. உன் இடுப்பினில் நான் கை வைத்ததும் அது என் கை வழியாக நழுவி துள்ளிக் குதித்து மேலே போய்விடுமோ என்று லேசாகப் பயந்தேன். ஆனால் அது ஏன் விண்மீனாக விரும்பப் போகுது, வீடற்றவனுக்கு தான் வானம் கூரையாகும். அது பால்நதியில் தானே ஜனித்திருக்கிறது, ஆகவே உன் இடுப்பைவிட்டு வெளிவராது ஆனால் அவ்வப்போது இடம்மாறிக்கொள்ளும். அதனால் என்ன?

வறுத்த கோதுமை நிற இடுப்புக்கு மேல் என் கரிய கைகளை வைத்தவுடனேயே எனக்குத் தோன்றியது. ஏன் திருவரங்கப் பெருமான் ஸ்ரீதேவியின் பாதங்களை முத்தமிடக் கூடாது என்று தோன்றியது …. மைலாப்பூரில் அப்படி ஒரு பொம்மையை சிலையைப் பார்க்க முடியுமா. இடுப்பிலிருந்து கை விடுத்து மீண்டும் உன் கால்களை அடைகையில், என்னைச் சூழ்ந்தது மார்கழியின் வாசம்.

ஆம் நான் சொன்னது மார்கழியின் குளிரை அல்ல அதன் வாசனையை.

கட்டிலின் ஸ்ப்ரிங் நெளிந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். தூக்கத்தைக் களைக்காத முத்தங்களைக் கொடுக்க பயிற்சி பெற்றவனாக நான் இயங்கிக் கொண்டிருக்கும் போதே எனக்கு ஒரு நப்பாசை. நான் ஏன் இப்போது அந்த மைலாப்பூர் தாத்தாவிடமோ அல்லது பொம்மை செய்யும் கலைஞரிடமோ கனவில் வந்து திருவரங்கநாதனின் புதிய திருக்கோலம், ஸ்ரீதேவியின் பாதங்களை முத்தமிடும் விஷ்ணுவை பொம்மையாக்கக் கூடாதா என்று கேட்டுவிட ஆசை வந்தது.

‘ஐயயோ அப்படிலாமா பொம்மை வைப்பாங்க’ என்று என் மனக்கேள்விக்கு நீ பதிலாக இன்னொரு கேள்வி கேட்டாய்.

உனக்குத் தெரியும் ஒரு ஃப்ரெஞ்ச் ஆர்டிஸ்ட் புள்ளிக் கோலங்களை ஆய்வு செய்து அவற்றில் நவீன மொழியில் படங்கள் வரைஞ்சு காட்சிகள் வைக்கறாங்க, அதுல அவுங்க ஒரு எட்டுக்கு எட்டு கோலத்தைப் பற்றி விவரணை செஞ்சாங்க, எட்டு போன்ற வடிவத்திலேயே மேலும் கீழுமாய் சிறிதும் பெரிதுமாய் இரு ஜோடி பாதங்கள் வரையப்பட்டிருக்கும் அதை 3D பண்ணி பெரிதாகக் காட்டினால் ஒரு ஆண் பாதத்தில் அதாவது விஷ்ணு பாதத்தில் ஒரு பெண் அதான் ஸ்ரீதேவியின் பாதங்களை வைத்தது போன்ற ஒரு காட்சியை வைத்துள்ளார்கள் என்று விவரணை செஞ்சாங்க.

“வெரி இண்ட்ரெஸ்டிங் டா..” என்றாய். அதனால தான் சொல்றேன் எராடிக்கெல்லாம் நமக்கு புதுசில்ல ஹனி, அது மார்கழியைப் போலவே விசேஷமாக நமக்குள் பனிரெண்டில் ஒரு பங்கு அங்கம் வகிக்கும். பாதாதி கேசம் என்று சொல்றது ரசிப்பதற்கான ஒருமுறை.. அதற்கும்மேல் பேசியது போதும் என்று என் வாய் பொத்தினாய்.

ஐயா பாதாதி.. முடிஞ்சிருச்சுய்யா, வேற ஏதும் செய்யறிங்களா என்றாய்.

முயங்குவதற்காக பாயும்போது இந்த பால்வெளி எப்படி குறுக்கே வந்தது. தூசு படிந்த நட்சத்திரங்களினூடே, வெப்பம், குளிர் இரண்டையும் கடந்தே லட்சம் கோடி கோள்களில் ஊடுருவி ஊடுருவி தேடிக்கொண்டே போய்க் கொண்டிருக்கிறேன். எல்லாவற்றையும் கிழித்துக் கொண்டு தேடிக்கொண்டிருக்கும் அந்த இயந்திர நாற்காலி கிழட்டு விஞ்ஞானியையும் முந்திக்கொண்டு, மற்றொரு ஐரோப்பிய கிழவனையும் முந்திக்கொண்டு அதனை நோக்கி ஊடுருவிக் கொண்டே இருந்தேன். ஏதோ ஒரு கிரகத்தின் நகம்கீறி என் சுண்டு விரலில் ரத்தம் வர நிறுத்திப் பார்த்தேன். என் விரலை நீ எப்போதும் உறிஞ்சுவாயே என்று தோன்றிட….

பால்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் கிரகங்களின் வட்டப்பாதைகளில் படிந்திருக்கும் தூசுப்படலங்கள் நாகமாய் அங்கு எழுந்து நின்றது.

பள்ளிகொண்ட பெருமாள் என்று சொல்பவனின் தலையை வெட்டிவிடு என்று ஸ்ரீசக்கரத்தை விடுவித்துவிட்டு, லேசாக அந்த வெண்சங்கினை ஊதிப்பார்த்தேன்..

“ப்ப்ப்வூஃஃப்ப்”

ஸ்ரீதேவியின் மாயக்குரல் விஷ்ணுவாகிய என்னை மீண்டுமொருமுறை அழைத்தது “டே எருமமாடு…”

மீண்டும் கிள்ளிப் பார்த்தேன். வலித்தது.

ஆனால் இந்த முறை வலிக்கும் போது வேறு மாதிரி வலித்தது.

எழுந்து உட்கார்ந்தால் ஒரு பாய், சுற்றிலும் புத்தகங்கள், அருகில் என் சகாக்கள் என என் அதே மேன்ஷன். இதென்ன ஸ்டீரியோ டைப் கதையாக இருக்கிறதே..

ஹனி எனக்கு இப்போது ஒரு சந்தேகம். நான் இப்போது அசலாக எங்கிருக்கிறேன்?

ஆனால் உன் கால்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டிருப்பதில் நீ கண்ணயர்ந்து தூங்க ஆரம்பிக்க, உன் கனவில் நானும் என் சகாக்களும் எங்கள் அறையில் தூங்கிக் கொண்டிருக்கிறொம் என நம்புகிறேன்.

விழிக்கும் போது நான் கேட்பதற்கு ஆம் என்று சொல். கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். அப்புறம் நீ சீக்கிரமே தூங்கிவிடு அப்போது தான் நான் உன் அருகினில் வருவேன்.

ஏனென்றால் அதுதான் மெய்.

மீண்டும் சங்கொலித்தது. சுற்றிக் கொண்டிருக்கும் கிரகங்களிடமிருந்து சற்றுத் தள்ளியிருந்து மிதந்து கொண்டிருந்தேன். நிம்மதியாக இருந்தது…

***

ஜீவ கரிகாலன்

பதிப்பாளர், கண்ணம்மா, டிரங்கு பெட்டி நூல்களின் ஆசிரியர். Ph – 9940021472

புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – 2020 பரிசுப்பட்டியல்

3

வணக்கம்.

யாவரும் பப்ளிஷர்ஸ் நடத்துகின்ற புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – 2020 குறித்து, 2020 மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியானது.

180-க்கும் மேற்பட்ட குறுநாவல்களிலிருந்து எமது தேர்வுக்குழு குறும்பட்டியல் தயாரிப்புக்கான வேலையில் இறங்கியது. தேர்வுக்குழுவின் பரிந்துரைப்படி இருபது எழுத்தாளர்களின் பெயர்கள் அடங்கிய குறும்பட்டியல் கடந்த டிசம்பர் 31, 2020 அன்று யாவரும் பப்ளிஷர்ஸ் இணையதளத்தில் வெளியானது.

இறுதிப்பட்டியல் வெளியிடும் நடுவராக இருக்க எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்கள் சம்மதித்தார். குறும்பட்டியலில் இருந்து பரிசுக்குத் தேர்வுபெறும் பத்து குறுநாவல்களை சிரத்தையுடனும் அக்கறையோடும் தேர்வுசெய்து கொடுத்தமைக்கு எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களுக்கு யாவரும் பப்ளிஷர்ஸ் மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது..

பரிசு பெற்றோர் பட்டியல் பின்வருமாறு.

  • *மென்முறை – நாராயணி கண்ணகி

*பத்துப் பாத்திரங்கள் – சுரேஷ் பிரதீப்

*நாற்பது நாட்கள் – மலர்வதி

*ஜப்பான் – பாலாஜி பிரசன்னா

*முப்போகம் – மயிலன் ஜி சின்னப்பன்

*தீதிலர் – பி கு

*புயா மின்னா இதி – மணி எம்.கே மணி

*காயாவனம் – வா.மு கோமு

*யாகத்தின் பெருநெருப்பு – அ.மோஹனா

*மைனிகள் – எம்.எம் தீன்

வெற்றிபெற்ற எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 10000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் பரிசுப்போட்டி, க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி ஆகிய இரண்டிற்கும் சேர்த்து யாவரும் அமைப்பின் பத்தாவது ஆண்டு சிறப்பு நிகழ்வில் பரிசுகள் வழங்கப்படும். விழாவின்போது சிறுகதைத் தொகுப்பும், குறுநாவல் தொகுப்பும் வெளியிடப்படும். உடன்நின்ற நண்பர்களுக்கும், தேர்வுக்குழுவிற்கும், எம்மை ஆதரிக்கும் அனைவருக்கும் எமது உளங்கனிந்த நன்றி.

நன்றி
ஜீவ கரிகாலன்
01/04/2021

மூங்கில் – 2

1

சுஷில் குமார்

மூங்கில் – 1

க்கவாதத்தால் இழுத்துக் கோணிய அப்பாவின் முகமும் அவரது கலையம்சம் நிறைந்த தூரிகைகளைப் போன்ற விரல்களும் என் கண்ணில் மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருக்க, மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு ஓடினேன். நான் நினைப்பது மட்டும் நடந்திருந்தால் எப்படியிருக்கும்? எவ்வளவு பெரிய சாதனை இது! தன் வலியை மீறி, இப்படி ஒன்றை ஓர் உன்னத கலைஞனைத் தவிர வேறு யாரால் செய்துவிட முடியும்? படபடப்போடு கதவைத் திறந்து அப்பாவின் அறைக்குள் சென்றேன். வெயில் பழகிய கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன, கண்களைக் கசக்கி நிமிர்ந்து பார்க்க, நேர் எதிரே உயிரோட்டமான ஓர் ஓவியம்!

அந்த நொடி நான் நுழைந்தது திருவிதாங்கூர் அரண்மனைக்குள். ஐந்தடி உயர மூங்கில் தட்டியில் என் கண் முன்னால் தத்ரூபமாக நின்றார் ராஜா ரவி வர்மா. வாயடைத்துப் போய் நின்ற என்னைப் பார்த்து அவர் புன்னகைத்தார். அவர் அருகில் சென்று மெல்ல தொட்டுப் பார்த்தேன். என் அப்பாவின் உடல் சூடு என் கைகளின் வழி ஊடுருவி என் உடல் முழுதும் பரவியது. உடல் சிலிர்த்துக்கொள்ள, சட்டென்று பின்னால் சென்று அந்த ஓவியத்தைக் கூர்ந்து கவனித்தேன். அது அப்பாவின் முகமேதான்.

அப்பா ராஜ உடையுடன் இடது கையில் ஒரு கைத்தடி வைத்திருந்தார். நான் நினைத்தபடியே இடது கையில் தான்! அவரது முழுக்கை மேற்சட்டையின் வலது மார்பில் ராஜாங்கப் பதக்கம் மின்னியது. ஆமாம், இடது கையில் கைத்தடி என்றால் பதக்கம் வலது மார்பில்தான் இருக்க வேண்டும். ஓவியத்தின் இடது கீழ்ப்புறத்தில் அப்பாவின் பெயர் எழுதப்பட்டிருந்தது. அதுவும் வலமிருந்து இடமாக. என் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் பொங்கிப் பெருகி என்னைக் கரைத்ததைப் போலிருந்தது. தனக்கு வரவிருப்பதை உறுதியாகத் தெரிந்துகொண்டு தன்னிடமிருந்த அதி அற்புதக் கலைக்கு ஈடாக இன்னொன்றை உருவாக்க நினைத்திருக்கும் அப்பா. என்ன ஒரு கலைஞன்! அத்தனை வருடம் வரைந்து பழகிய வலதுகை செயலிழக்க ஆரம்பித்த நொடி முதலே தன் இடது கையைத் தயார் செய்திருக்கிறார். தன் அறையைப் பூட்டிக்கொண்டு யாரிடமும் முகம் கொடுத்து கூட பேசாமல் ஒரு தவ வாழ்வு வாழ்ந்தது இதற்காகத்தானா?

அப்பா அடிக்கடிச் சொல்வது ஞாபகம் வந்தது. “கலைஞனுக்கு ஒடம்புன்னு ஒன்னு கெடயாது மக்ளே. ஒன்னு கெடக்க ஒன்னு ஆனா என்ன, அவன் சும்மா கெடந்தாலே போறும் பாத்துக்கோ, அவன் நெனைக்கதும், சொல்லுகதுமே போறும்.”

அந்த நொடி எனக்குள் மிகப்பெரிய பாரமொன்று வந்து இறங்கியது. இக்கலைஞனையும் அவனது உன்னத கலையையும் எப்படிக் காப்பாற்றி தக்க வைப்பது? சாப்பாட்டிற்கே வழியற்ற நிலை முன்னிருக்கும் போது இவனது கைதொட்டு இக்கலையினை நான் எப்படிப் பெற்றுக்கொள்வது? அம்மாவும் அக்காவும் முற்றிலும் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள். தம்புரான் கம்பெனிக்கு அவர்கள் பின்னிக்கொடுத்த ஆயிரமாயிரம் ஒயர் கூடைகளினால் என்ன பெரிதாக சம்பாதித்து விட்டார்கள். எல்லாமே அப்பாவின் இந்த சிலநாள் மருத்துவச் செலவுக்கே போதுமானதாக இல்லையே. அம்மா வங்கியில் ஏதும் சேர்த்து வைத்திருப்பாளோ?

சரி, வருவதைப் பார்த்துக் கொள்ளலாம். அப்பாவிற்குப் பதிலாக நான் வரைவேன். அவர் அளவிற்கு முடியாவிட்டாலும் என்னாலும் விலைபோகும் ஓவியங்களை வரைந்துவிட முடியும். அடுத்த மாதம் சபரிமலை கூட்டம் வந்துவிடும். அதற்குள் எவ்வளவு மூங்கில் தட்டி ஓவியங்களை வரைகிறேனோ, வரைந்துவிட வேண்டும்.

வீட்டைப் பூட்டிவிட்டு எதிர்காலத்தைப் பற்றி ஏதேதோ யோசித்தவாறு மருத்துவமனை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் புறந்தள்ளி அப்பாவின் இடக்கை ஓவியம் மீண்டும் மீண்டும் என்முன் வந்து என்னைப் பரவசப்படுத்தியது. அடடா! என்ன ஒரு மனிதன்! அப்போது சட்டென ஒரு யோசனை. அப்பாவை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது அவருக்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டும். அந்த அதிசய ஓவியத்தைப் பெரியதாக சட்டமிட்டு வீட்டுச் சுவற்றில் மாட்ட வேண்டும். அப்பா வீட்டில் காலெடுத்து வைக்கும்போது தனது கம்பீர ரவிவர்மா முகத்தில் முழித்து என்ன செய்கிறார் பார்ப்போம்.

“ஏ புள்ளோ, நில்லும்மோ.” மருத்துவமனைக்கு எதிரே இருந்து யாரோ அழைத்தார்கள். திரும்பிப் பார்த்தேன். தம்புரான் முதலாளி. அப்பாவைப் பார்க்க வந்திருப்பார். அவரே என்னை நோக்கி வந்தார்.

“அப்பாவ இப்பத்தான் பாத்தேம்மோ. மனசே கேக்கல பாத்துக்க. டாக்டருவ ஒரு வாரத்துல கூட்டிட்டு போக சொன்னாவளோ?”

“ஆமா சார்.” என்னை எதற்காக நிறுத்தியிருப்பார்?

“சாரா? மாமான்னு சொல்லும்மோ. ஒங்கம்மையும் நானும் அண்ணன் தங்கச்சி மாறில்லா? செரி, புள்ள ஒன்னயும் நெனச்சி கவலபடப்புடாது பாத்துக்க, மாமா இருக்கேன். என்ன வேணும்னாலும் கம்பெனிக்கி வா, என்ன புள்ளோ?” என்று சொல்லியவாறு ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து என் கையில் திணித்தார். வேண்டாமென தலையாட்டி அவரிடம் திருப்பிக் கொடுக்க கை நீட்டினேன். அவர் என் கையை விலக்கி விட்டவாறு, “அப்பாக்கு பழம் கிளம் வாங்கு புள்ளோ.” என்று சொல்லிவிட்டு திரும்பி நடந்தார். நான் அவரையே பார்த்துக்கொண்டு நிற்க, ஒரு நொடி நின்று திரும்பியவர், “ஒங்கப்பனுக்க ஆர்ட்ட மாறி ஒரு பய செய்ய முடியாது, பாத்துக்க.” என்றார்.

*

அங்குமிங்கும் கடன் வாங்கி பணம் கட்டிவிட்டு, பதினான்கு நாள் மருந்து வீச்சத்திலிருந்து விடைபெற்று, மருத்துவமனையிலிருந்து அப்பாவை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் கிளம்பினேன். அம்மாவின் மௌனமும் கண்ணீரும் அவளை விட்டுப் பிரிவதாயில்லை. அப்பா என் கையை இறுக்கிப் பிடித்தவாறு வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவரது முகத்தைப் பார்ப்பதை வேண்டுமென்றே தவிர்த்தேன். அந்த ஓவியத்தில் இருக்கும் கம்பீரமான முகமே எனக்குப் போதும்.

“எப்பா, ஒங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கனே!” அப்பா கவனித்த மாதிரி தெரியவில்லை.

“எப்பா, எப்பா. உங்கள்ட்ட தா சொன்னேன்..”

கஷ்டப்பட்டு முகத்தை என் பக்கமாகத் திருப்பி கண்களால் என்ன என்று கேட்டார். நான் அவரது கண்களைத் தவிர்த்தவாறு, “ஒங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்னு சொன்னேன்.” என்றேன்.

அப்பா தலையை ஆட்டிவிட்டு மீண்டும் திரும்பினார்.

ஆட்டோவிலிருந்து இறங்கி அவர்களுக்கு முன்பாக நான் ஓடினேன். கதவைத் திறந்து உள்ளே ஓடி எதிர் சுவரில் மாட்டியிருந்த திரைச்சீலையைப் பிடித்துக்கொண்டு நின்றேன். அக்கா அப்பாவை கைத்தாங்கலாகப் பிடித்திருக்க, அம்மா வீட்டிற்குள் வந்தவாறு, “கிறிக்கி, அப்பாக்கு ஆரத்தி எடுக்காண்டாமா? ஓம்பாட்டுக்கு ஓடுக, அங்கன என்னத்தப் புடிச்சிட்டு நிக்கட்டி எரும?” என்று கத்தினாள்.

ஆரத்தி எடுத்து அப்பாவிற்குப் பொட்டு வைத்து இருவரும் பிடித்துக்கொள்ள அப்பா மெல்ல காலடி எடுத்து வைத்தார்.

“எப்பா, நில்லுங்க. கண்ண மூடிட்டு உள்ள வாங்க. ப்ளீஸ்ப்பா, ப்ளீஸ்ப்பா.” என்று அப்பாவைப் பார்த்து கத்தினேன் நான். அவரது முகத்தில் எந்த உணர்ச்சியும் தெரியவில்லை. வாசல்படி தாண்டி அப்பா உள்ளே காலடி எடுத்து வைத்தபோது திரைச்சீலையை இழுத்தேன். அதி கம்பீரமாக அப்பாவாகிய ராஜா ரவிவர்மனின் உருவம் எழுந்து நிற்க, அக்கா ஆச்சரியமாகப் பார்க்க, அம்மா விசித்திரமாக என்னையும் அந்த ஓவியத்தையும் பார்த்து முழிக்க, ஒருநொடி தன் ஓவியத்தைப் பார்த்த அப்பா முகத்தைத் திருப்பிக் கொண்டு முனகியவாறு அடுத்த அடியை எடுத்து வைத்தார்.

“ஒனக்கு வேற சோலி இல்லயாட்டி? வந்து அப்பாக்கு ஒரு தலவாணி எடுத்து வையி.” என்று முறைத்தாள் அம்மா. அப்பா ஒரு நாற்காலியில் முனகிக்கொண்டே உட்கார்ந்தார். என்னவென்று புரியாத ஒரு மொழி, இனி இதுதான் அவரது மொழியாகிப் போகுமோ? அவரது தலை தொங்கிக் கொண்டிருந்தது. அக்காவும் அம்மாவும் கேட்கும் எதற்கும் பதில் சொல்லாமல் தரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா சத்துமாவுக் கஞ்சி வைத்து எடுத்து வந்து அப்பாவிற்கு ஒரு கரண்டியில் ஊட்டினாள். பாதி உள்செல்ல பாதி வெளியே வழிய, அப்பா அங்கே இல்லாததைப் போல வேறு எங்கோ இருந்தார். கை, கால், உடல், தரையெங்கும் கஞ்சி சிந்தி வழிய எனக்குள் இருந்த சிறு நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக வழிந்து சென்றது. நான் அவரது அருகே சென்று என்னவெல்லாமோ பேசிப்பார்த்தேன். சிறு அசைவு கூட இல்லை.

  • அப்பாவின் ஓவிய அறையில் இருந்த எல்லா பொருட்களையும் ஓர் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு அவருக்காக கட்டிலைப் போட்டு சன்னலைத் திறந்து திரைச்சீலையை இழுத்து விட்டேன். அப்பாவை கைத்தாங்கலாக அழைத்து வந்து கட்டிலில் உட்கார வைத்தேன். அப்பா என் கையைத் தட்டிவிட்டுக் கொண்டேயிருந்ததைப் போல தோன்றியது.

“சமுக்காளம் வேணுமாப்பா? குளுருகா?”

“கொஞ்சம் கடுங்காப்பி போடவாப்பா?”

“கைகால் வலிக்காப்பா? அமுக்கி விடட்டா?”

கேட்ட எதற்கும் பதில் சொல்லாமல் எடுத்துவிட்ட என் கைகளை இன்னும் தட்டிவிட்டுக் கொண்டிருந்தார் அப்பா.

பழைய விசயம் எதையாவது ஞாபகப்படுத்தலாமென, “எப்பா? எப்பிடிப்பா எடது கைலயே வரஞ்சியோ? என்னால நம்பவே முடில.” என்றேன்.

அப்பாவின் கை நடுக்கம் ஒரு நொடி நின்றது. மெல்லத் திரும்பி என்னைப் பார்த்தவர் அறையைச் சுற்றிலும் எதையோ தேடுவதைப் போல பார்த்தார். அப்பாவின் நடுங்கும் முகத்திலிருந்து ஒரு சொல்லாவது வந்து விடாதா என காத்து நின்றேன். மீண்டும் சிலமுறை சுற்றிலும் பார்த்தவர் மூலையில் ஒதுக்கி வைத்திருந்த அவரது ஓவியப் பொருட்களை கூர்ந்து பார்த்தார். சில கணங்கள் அதை வெறித்துப் பார்த்தவர் முகம் சிறுத்துப் போக, நடுங்கியவாறு எழுந்து கொள்ள முயற்சித்தார். நான் ஓடிப்போய் அவரது கையைப் பிடித்து தூக்க, வெடுக்கென என்னைத் தள்ளிவிட்டு, கட்டிலில் விழுந்தார்.
பதறிப்போய், “எப்பா, எப்பா, ஏம்ப்பா எம்மேல கோவப்படுகியோ? நா என்னப்பா செஞ்சேன்?” என்று கேட்டேன்.

அப்பா தெளிவில்லாமல் ஏதோ சொன்னார்.

“எப்பா, என்னப்பா? மனசிலாகலப்பா.” என்று அவரது முகத்தின் அருகே சென்றேன். அப்படியொரு வெறுப்பு! கண் சிவக்கும் அளவு கோபம். ஒரு நொடி பயந்தே விட்டேன்.
உறுமும் குரலில் தெளிவற்று துண்டுத்துண்டாய், “கைகாலு தான வெளங்காமப் போச்சு. சொரண கெட்டுப் போச்சுன்னு நெனச்சியோ? ஒங்கப்பன் இன்னும் பொணமா ஆகல்ல கேட்டியா?” என்றார் அப்பா.
“எப்பா, ஏம்ப்பா இப்பிடிப் பேசுகியோ?” என்றவாறு அழுது நின்றேன் நான்.

“வெளிய போட்டி, பிச்சக்காரக்கூ……”

அப்பா அதுவரை என்னை ஒரு வார்த்தை கூட திட்டியதில்லை. வெப்ராளம் தாங்காமல் நான் திரும்பி வெளியே செல்ல, அப்பா எழுந்து கெட்ட வார்த்தைகளாகக் கத்திக்கொண்டு சுவரைப் பிடித்து நடந்து விழுந்து எழுந்து மெல்ல வெளியே வந்தார். ஏதோ முனகியவாறு ரவிவர்மன் ஓவியத்தின் அருகே வந்து சில நொடிகள் நின்றார். அந்த முகத்தைப் பார்க்க விரும்பாதது போல தலையைத் தொங்கப் போட்டு நின்றவர், அதன் கீழே மேசையின் மீதிருந்த நடராஜர் சிலையை எடுத்து தன் உடலோடு ஒட்டிப் பிடித்துக்கொண்டு தன் அறைக்குள் சென்றார். திருவிதாங்கூர் இராஜா என் தாத்தாவின் கலைக்குப் பரிசாகக் கொடுத்த அரச மரியாதைச் சின்னம் அது.
அம்மாவும் அக்காவும் சிலையாக நின்றனர். என்னைப் பார்த்து என்னவென்று சைகையில் கேட்டனர். நான் ஒன்றும் பேசாமல் அப்பாவின் அறைக்கதவருகே சென்று நின்றேன். உள்ளே, பொருட்கள் ஒவ்வொன்றாக கீழே விழும் சத்தம் கேட்டது. அப்பா கத்துவதும் மூச்சிரைப்பதும் என் காதுகளுக்குள் விழுந்து என்னை பயமுறுத்தியது.
*
அப்பா அந்த அறையை விட்டு வெளியே வருவதேயில்லை. அடிக்கடி உள்ளிருந்து கெட்ட கெட்ட வார்த்தைகள் கேட்கும். பொருட்கள் விழும் சத்தமும், அப்பா வலியில் முனகும் சத்தமும் சேர்ந்து எங்களை எப்போதும் ஒரு பதைபதைப்பிலேயே இருக்கச் செய்தது. சாப்பாடு கொண்டு போகும்போது அம்மாவும் அக்காவும் பயந்து பயந்துதான் சென்றார்கள். சாப்பாட்டின் அளவும் குறைந்து கொண்டே போனது. தனது அறையை சுத்தம் செய்யவோ, பொருட்களை தொடவோ கூட அவர் அனுமதிக்கவில்லை. உறுமிக் கத்தி வெளியே தள்ளிவிடுவார். நான் சென்று மருந்து கொடுக்கும்போது மட்டும் அமைதியாக உட்கார்ந்திருப்பார்.
அப்பா உறங்கும் சமயத்தில் நான் உள்ளே சென்று அவரது ஓவியப் பலகையைப் பொருத்தி மூங்கில் தட்டி ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன். எவ்வளவு முயன்றாலும் என்னால் அந்த அறையில் இருந்து கவனம் குவித்து வரைய முடியவேயில்லை. நான் ஒரு திசையில் கோடிழுத்தால் அது இன்னொரு புறம் இழுத்துக்கொண்டு சென்றது. வண்ணங்கள் நான் நினைப்பதைப் போலன்றி எப்படியெப்படியோ வந்து தாமாகவே நிறைந்தன. கடைசியில், நான் நினைத்ததன்றி வேறேதோ ஒன்று அந்த தட்டியில் உருவாகி நின்று என்னைப் பார்த்து வேடிக்கையாய்ச் சிரிப்பதைப் போலத் தோன்றும். முதலில் நான் இதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து முயற்சி செய்தேன். போகப்போக, எனக்குள் ஒருவித பயம் தொற்றிக்கொண்டது.
ஒருநாள், நான் மும்முரமாக வரைந்து கொண்டிருந்த போது திடீரென யாரோ என்னைப் பிடித்துத் தள்ளிவிட அலறிக்கொண்டு கீழே விழுந்துவிட்டேன். அந்த மூங்கில் தட்டியும் ஓவியப் பலகையும் என்னைத் தொடர்ந்து முன்சரிந்து என்மீது விழ பயத்தில் நான் மயங்கி விட்டேன்.
கண்விழித்த போது, அம்மா என் கை காலில் எண்ணெய் போட்டு நீவிவிட்டுக் கொண்டிருந்தாள்.

“இனி நீ அங்க போவாத மக்ளே. என்னத்தச் சொல்ல? இந்த மனுசனுக்கு இப்பிடி ஆகும்னு யாரு நெனச்சா? யாராம் செய்வின வச்சிட்டாளோ என்னமோ? ஒம் மூஞ்சியயாது பாக்கா, அக்கா மூஞ்சியயும் எம் மூஞ்சியயும் திரும்பிக்கூட பாக்கதில்ல. எங்க மேல அப்பிடி என்ன கோவமோ? இன்னும் எத்தன நாளைக்கி இந்த ஒயர்கூட பின்னி சாப்பிட முடியும் மக்ளே? தம்புராண்ணன் ஒன்ன வந்து பாக்கச் சொன்னாரு, நீ ஒன்னு போயி அவர பாரு மக்ளே. எதாம் நல்ல காலம் பொறக்கான்னு பாப்பம்.” என்று முடித்தாள் அம்மா.

*

“இது யாரு வந்துருக்கா? ஆர்டிஸ்ட்டுல்லா? வா புள்ளோ, வா, வந்து இரி.” கம்பெனிக்குள் நுழைந்தபோது எழுந்து வந்து வரவேற்றார் தம்புரான் மொதலாளி.

சுற்றிலும் பல பெண்களும் சிறுமிகளும் பலவிதமான கைவினைப் பொருட்களை செய்து கொண்டிருந்தனர். பனை நாரில் பொம்மைகள், பர்சுகள், பைகள், தேங்காய் சிரட்டையில் ஓவியங்கள், சிறுசிறு பொம்மைகள், கடவுள் வடிவங்கள் இன்னும் பல. தூரத்தில் மூங்கில் தட்டி தைக்கும் பணியும் நடந்தது. ஒருவர் அந்த தட்டியை குறிப்பிட்ட அளவுகளில் வெட்டிப்போட, இன்னொருவர் அதை எடுத்து ஒரு இயந்திரத்தின் உள்ளே ஒவ்வொன்றாக அனுப்பினார். இயந்திரத்தின் மறுபக்கம் நின்றவர் தட்டியை எடுத்து பரிசோதித்து சுற்றி வரும் ஒரு ரப்பர் பட்டையில் தொங்கும் கொக்கிகளில் மாட்டினார். அது சுற்றி இன்னொரு அறைக்குள் சென்றது. எல்லா தட்டிகளிலும் மகாலட்சுமி கையிலிருந்து தங்க நாணயங்களாக கொட்டிக் கொண்டிருந்தன.
“என்ன புள்ளோ பாக்கா? ஓ, அப்பாக்க தொழில்லா? இப்ப எல்லாம் அச்சுல தாம் புள்ளோ, என்னல்லாமோ வந்துட்டு பாத்துக்க, கொஞ்சம் மகாலட்சுமி போடுவோம், பொறவு கைல வெளக்க புடிச்ச ஒரு பொண்ணு உண்டும்லா, கண்டிருக்கியா? அத போடுவோம், பின்ன, கொஞ்சம் யான படமும் போவும் பாத்துக்க. ஆனா, எல்லாம் இப்போ எக்ஸ்போர்ட்டுதான் பாத்துக்க, நம்மூர்ல எவன் வந்து வாங்குகான்? முன்னாடி மாதி வரையதுக்கும் ஆளுவ கெடயாது, என்னத்தச் சொல்ல? மூங்கில்ல பிரியாணில்லா செய்யானுவ இப்ப? ஒங்கப்பன் மாக்கு மாக்குன்னு வரஞ்சும் என்னத்துக்கு? நூறு ருவாய்க்கு தரியான்னு கேப்பானுவ. பாப்பம், எத்தன நாளக்கின்னு. பின்ன, நமக்கும் வேற வழி இல்லல்லா? வயித்துப் பொழப்ப பாக்கணும்லா புள்ளோ?”
எல்லாம் கேட்டு நான் அமைதியாக நின்றேன்.

“நா ஒருத்தன், என்னல்லாமோ சொல்லிட்டுக் கெடக்கேன். நீ இரி, ஒரு மேட்டரு பேசணும் ஒனட்ட.” என்றார்.

“பரவால்ல சார், சொல்லுங்க.”

“எப்பிடி வளத்து வச்சிருக்கான் பாத்தீரா ஓய்? மரியாதயான புள்ளயோ ரெண்டும், என்னா?” என்று பக்கத்தில் நின்ற இன்னொருவரிடம் சொன்னார் முதலாளி.

“அப்பா நெலம ரொம்ப மோசமாருக்குன்னு சொன்னாவ, இப்ப எப்பிடிம்மா இருக்காவ?”

“அப்பா அவ்வோ ரூம வுட்டு வரவே மாட்டுக்கா சார். சாப்பாடு, மருந்து கொண்டு கொடுப்போம். யார்ட்டயும் பேச்சும் கெடயாது.”

“அவனுக்குள்ள என்ன ஓடுகோ என்னமோ? கடவுளுக்குத் தான் வெளிச்சம். சரி, விடு.. சித்தப்பா, பெரியப்பா எவனாம் வந்து எதாம் செஞ்சானுவளா?”

நான் தலையாட்ட, “எல்லாவனையும் கொண்டு வெறும் வாய்ச்சவடாலுக்கு தான் கொள்ளும். மாமா ஒரு யோசன சொல்லுகேன், ஒனக்கு புடிச்சா செய்யி, என்ன புள்ளோ?” என்றவாறு தன் மேசை இழுப்பறையைத் திறந்து எதையோ வெளியே எடுத்தார்.
ஒரு நீலநிறத் துணிப்பை, நகைகள் வைக்கும் பை போன்றிருந்தது. அதன் சுருக்கை இழுத்து உள்ளிருந்ததை தன் மேசையின் மீது கொட்டினார். சிறுசிறு கண்ணாடி உருளைகள். அதில் ஒன்றை எடுத்து என்முன் நீட்டினார்.

“இத எடுத்துப் பாரு புள்ளோ. அந்தா, அங்கன போயி வெளிச்சத்துல பாரு.”

நான் அதை வாங்கி வெளிச்சத்தில் வைத்துப் பார்த்தேன். அந்த சின்னஞ்சிறு கண்ணாடி உருளைக்குள் ஒரு சிறு நகத்துண்டு அளவிற்கு ஓர் உருவம். கூர்ந்து பார்த்த போது பிரமித்துப் போனேன். அவ்வளவு அழகான ஒரு விநாயகர் சிலை. முகம் மலர அதைச் சுற்றிச்சுற்றி பார்த்தேன். எப்படி இதை செய்திருப்பார்கள்?
“கொள்ளாம்லா? இதாக்கும் இப்ப லேட்டஸ்ட்டு. ஒரு பீஸ் நூத்தம்பது ரூவா, சபரிமல சாமிமாரு, ஆந்த்ராகாரனுவன்னா ஒரு முன்னூறு ரூவா தருவானுவ.”

“இது என்ன மெட்டீரியல் சார்? இத.. இத எப்பிடி செய்வாங்க?”

“நீயே சொல்லு பாப்பம்..”

நான் மீண்டும் அதை சுற்றிச் சுற்றி பார்த்தேன். என்னவென்று புரியவில்லை.

“இதுக்க பேரு ரைஸ் ஆர்ட்டும்மோ. வெறும் அரிசி தான் பாத்துக்க. என்னெல்லாம் கண்டுபுடிக்கானுவோ!”

எனக்கு பயங்கர ஆச்சரியமாக இருந்தது. மறுபடியும் அதை ஒருமுறை பார்க்கும்போது தான் அந்த விநாயகர் ஒரு அரிசியாகத் தெரிந்தார்.

“செரி, மேட்டர சொல்லுகேன். நமக்குத் தெரிஞ்ச ஒரு ஆளு இந்தத் தொழில படிச்சிருக்காரு. நீ வந்தேன்னா, ஒனக்கு சொல்லிக் குடுக்க ஏற்பாடு செய்யேன். நீ படிச்சுட்டு இங்கன உள்ளவமாருக்கு சொல்லிக் குடு. நமக்கு வியாவாரமும் நடக்கும், ஒனக்கும் ஒங்குடும்பத்துக்கு ஏதாஞ் செஞ்ச மாறியும் இருக்கும். மாச சம்பளமா போட்டுத் தருவேன், என்ன புள்ளோ?”
அந்த விநாயகர் உருவம் என் கண்ணை விட்டு அகலாமல் நின்றது. சட்டென, அப்பா மூங்கில் தட்டியில் வரையும் பகவதியம்மனும் அவளது மூக்குத்தியும் அந்த கணம் நினைவிற்கு வந்தது. முதலாளியின் யோசனையும் சரியாகப்பட்டது.
“நா அம்மைட்ட பேசிட்டு வந்து சொல்லுகேன் சார். பாக்க ரொம்ப அழகாருக்கு.”

“செரிம்மோ, போய்ட்டு வா.” என்றவரிடம் அந்த கண்ணாடி உருளையை நீட்டினேன்.

“அது ஒனக்கு. வச்சிக்க புள்ளோ.”

*

வீட்டில் நுழைந்தபோது அம்மாவும் அக்காவும் ஏதோ இரகசியமாக பேசிக் கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் பேச்சை மாற்றியதைப் போலிருந்தது.

“என்னாச்சி மக்ளே, தம்புராண்ணன் என்ன சொன்னாரு?”

நான் பதில் பேசாமல் நேராக அப்பாவின் அறைக்குள் சென்றேன். சற்று நேரத்திற்குப் பின் வெளியே வந்து அப்பாவின் ராஜா ரவிவர்மா ஓவியத்தை பார்த்தபடி அம்மாவிடம் சென்றேன்.

“ஓ, ஒங்கப்பாட்ட தான் மொதல்ல சொல்லுவியோ? பெரிய இவ? என்ன வெசயம்னு சொல்லுட்டி ஊமக்குசும்பி.” என்று கேட்டாள் அம்மா.

“மொதல்ல நீங்க ரெண்டுவேரும் என்ன ரகசியம் பேசிட்ருந்தீங்கோன்னு சொல்லுங்கோ, பொறவு நாஞ் சொல்லுகேன்.” என்றேன்.

இருவரும் மாறிமாறிப் பார்த்தவாறு கண்ணைக் காட்டி என்னை அடுக்களைக்குள் அழைத்துச் சென்றார்கள்.

“எம்மா, என்ன, சொல்லு?”

“எட்டி, இப்பிடியே எத்தன நாளக்கி ஓடும்னு தெரில பாத்துக்கோ, எதாம் கொஞ்சம் பைசா கெடச்சா பேங்க்குலயாது போட்டு வைக்கலாம். சாப்பாட்டுக்கு நானும் ஒங்கக்காவும் எதாம் பாத்துருவம். பின்ன, இன்னும் காரியங்கோ உண்டுல்லா, மக்ளே.”

“என்ன காரியம்? சுத்தி வளைக்காம சொல்லும்மா.”

“அது, ஒங்கக்காவுக்கு எதாம் எடம் பாக்காண்டாமா மக்ளே? அப்பா இப்பிடி ஆயிட்டாளேன்னு எத்தன நாளக்கி அழுத்துட்டே இருக்கச் சொல்லுக? பின்ன, அவ்வொளுக்கு நம்ம மூஞ்சியப் பாக்கக் கூட புடிக்கல்ல..” என்றவாறு அழ ஆரம்பித்தாள் அம்மா.

“எம்மா, எம்மா, அழாத.. அப்பாக்குக் கேட்டுறாம. அழாதம்மா.”

“மக்ளே, நம்ம தம்புரான் கம்பெனில லோடு ஆட்டோ ஒட்டுகாம்லா சொயம்பு? செல சமயம் நம்ம வீட்ல வந்து கூடையெல்லாம் எடுத்துட்டுப் போவாம்லா?”

“ஆமா, அவனுக்கு என்ன இப்போ?”

“அவனுக்கு ஒங்கக்கா மேல இஷ்டமாம். கெட்டி வைங்கன்னு தம்புராண்ணன்ட்ட சொன்னானாம். அவரும் நல்லது தானன்னு எனட்ட சொன்னாரு.”

நான் அக்காவைப் பார்க்க, அவள் முகத்தைக் கீழே கொண்டு போனாள். வெட்கமாக இருக்கும்.

“எம்மா, என்ன பேசுக நீ? அவன் நல்ல ஆளுதான், செரி. ஆனா, அப்பாட்ட ஏதும் கேக்காம என்ட்ட சொல்லுக, நா என்ன செய்ய?”

“எட்டி, சொல்லதக் கேளு மொதல்ல, இப்ப கொஞ்சம் பைசாக்கு வழி பண்ணணும் பாத்துக்கோ. அக்காக்கு கல்யாணம் பண்ணி வைப்போம், கடவுள் புண்ணியத்துல அவ நல்லாருக்கட்டும் மக்ளே. பொறவு நமக்கு தான, எதாஞ் செய்யலாம்.”

“செரி, அப்பாட்ட நாம் பேசுகேன். ஆமா, பைசாக்கு என்ன செய்யப்போற?”

“நக நட்டுன்னு இப்ப ஒன்னும் போடாண்டாம் மக்ளே. ஒரு பத்தாயிரம் ரூவாயாது அவங் கைல கொடுக்காண்டாமா சொல்லு..”

நான் தலையாட்டி நின்றேன். அம்மா என் அருகே நெருக்கமாக வந்து, “மக்ளே, அப்பா நெறைய படம் வரஞ்சி விக்காம வச்சிருக்கால்லா? அதெல்லாம் வித்தா கொஞ்சம் பைசாவாது கெடைக்கும்லாட்டி?” என்று கேட்டாள்.
எனக்கு எல்லாம் புரிந்தது. அப்பாவின் ஓவியங்கள் எல்லாம் விற்பனைக்கு அல்ல, குருவாயூர் கேசவனையும் மூக்குத்தியுடன் சிங்கத்தின் மேலிருக்கும் பகவதியம்மையையும் வரைந்தால் அப்படியே தனது அலமாரியில் அடுக்கி வைத்து விடுவார். அந்த நாட்களில் அப்பா சந்தோசத்தில் மிதப்பார். எங்களை கடற்கரைக்கு அழைத்துச் சென்று கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுப்பார். அந்த ஓவியங்களை என்னை மட்டுமே தொட அனுமதிப்பார்.

“மக்ளே, செல வெசயங்க நம்ம கைல இல்ல பாத்துக்கோ, அது தானா நடக்கும். அத அப்படியே விட்டுறணும். அது அப்படி இருந்தாதான் அழகு, அப்படிதான் நெலைக்கும் பாத்துக்கோ. இந்த கேசவன பாரு, அவன் கண்ணுல தெரிய கருணைய நா வரஞ்சிற முடியுமா? இல்ல, எவனாம் வரஞ்சிற முடியுமா சொல்லு. அவன் போய்ட்டாலும் நம்ம மேட்டுல ஒவ்வொரு தடவயும் உயிரோட எந்திச்சி வாராம்லா? அது நம்ம கைல இல்ல பாத்துக்கோ. பின்ன, நம்ம பௌதியம்மய வரையதெல்லாம் ஒரு கனவாக்கும். எப்படி தொடங்கும், எங்க போயி முடியும்ன்னு சொல்லிற முடியாதுல்லா? அது, கோயில்ல பிரதிஷ்டை செய்ய மாதிதான் பாத்துக்கோ.” இதைச் சொல்வது அவரே இல்லையோ எனக்கூட சிலசமயம் எனக்குத் தோன்றும்.
அம்மா என் கையைப் பிடித்து, “மக்ளே, நீதான் அப்பாட்ட போயி கேக்கணும். என்னால முடியாது, கொன்னே போடுவா பாத்துக்கோ.” என்றாள். என்னால் ஒருபோதும் அதைச் செய்ய முடியாது. முடிந்தாலும் நிச்சயமாக நான் செய்ய மாட்டேன்.

*

அன்றிரவு குருவாயூர் கேசவனும் பகவதி அம்மனும் என்னை உறங்க விடாமல் அலைகழிக்க, பித்து பிடித்ததைப் போல எழுந்து மெல்ல அப்பாவின் அறைக்கதவின் பக்கம் சென்று சத்தமின்றி நின்றேன். எதற்கு சென்றேன், என்ன நினைத்தேன் என எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. சற்று நேரம் நின்றுவிட்டு திரும்பிய போது உள்ளே ஏதோ சத்தம் கேட்டது. மீண்டும் அருகே சென்று கூர்ந்து கேட்டேன். அப்பா ஏதேதோ முனகிக் கொண்டிருந்தார். தொடர்ந்து ஏதேதோ சத்தங்கள்.
நான் பயத்தில், “எப்பா, எப்பா? எதாம் வேணுமாப்பா?” என்று கத்தினேன்.

எந்த பதிலும் எனக்கானதாக இல்லை. தொடர்ந்த சத்தங்கள், முனகலோடு ஏதோ கரியும் வாடையும் சேர்ந்து வந்தது.

“எம்மா, எம்மா, எந்திரிம்மா, அப்பா ரூம்ல ஏதோ கரிஞ்ச வாட அடிக்கிம்மா.” அம்மா பதறியவாறு எழுந்து வந்தாள். அக்கா உறக்கக் கலக்கத்தில் சலித்துக் கொண்டு நின்றாள்.

வாடையைத் தொடர்ந்து கதவிடுக்கின் வழியாக புகை கசிவதைப் பார்த்ததும் நான் அலறிவிட்டேன். ஓடிச்சென்று புழக்களையில் கிடந்த மூங்கில் வெட்டும் அரத்தை எடுத்து வந்தேன். புகை மேலும் அதிகமாகியிருந்தது.

“எம்மா, இதப்புடி.” அரத்தை கதவிடுக்கில் வைத்து கொண்டியின் மீது முன்னும் பின்னுமாக இழுத்தேன். அம்மா தொடர்ந்து கத்திக்கொண்டே கதவைத் தட்டினாள். கதவின் நான்கு பக்க இடுக்குகளிலுமிருந்து புகை பெருகி வந்தது. மண்ணெண்ணெய் வீச்சம். திடீரென ஏதோ ஒன்று படாரென கீழே விழுந்த சத்தம் கேட்டது.
“எப்பா, எப்பா, கதவத் தொறங்கப்பா.” என்று கத்தியவாறு மேலும் வேகமாக அறுத்தேன். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்து சிலர் ஓடி வந்தனர்.

“தள்ளும்மோ, பிள்ள தள்ளு.” என்று சொல்லிய ஓர் அண்ணன் கதவை ஓங்கி உதைத்தார். இரண்டு மூன்று முறை உதைத்ததும் கதவு பிளந்துகொண்டு ஒரு புறமாகத் திறந்தது.

அறை முழுதும் கரிய புகை. அப்பாவின் அலமாரி கீழே சரிந்து கிடந்து எரிந்து கொண்டிருந்தது.

“எப்பா, எப்பா..” என்று அப்பாவைத் தேடினேன். புகை மூட்டத்திற்கிடையே கட்டிலின் அருகே தன் நாற்காலியில் உட்கார்ந்து சன்னலை நோக்கி மெல்ல ஆடிக்கொண்டு இடது கையிலிருந்த தனது ஓவிய தூரிகையால் காற்றில் வரைந்து கொண்டிருந்தார். அவரது காலடியில் நான் வைத்துவிட்டு வந்திருந்த அந்த கண்ணாடி உருளை அப்போதும் அவரது காலடியிலேயே கிடந்தது.

***

சுஷில் குமார்

30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியாகியுள்ள நிலையில், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு மூங்கில் யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளி வந்திருக்கிறது. sushilkumarbharathi2020@gmail.com

ஓவியம் – Katsushika Hokusai

— THUS SPAKE பின்நவீனத்துவப் பன்றி

0

ரமேஷ் பிரேதன்

விதை என்ற சொல்லிலிருந்து கவிதை என்ற சொல் உருவானது. தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன் வாழ்ந்த பாணன் – பாடினி மரபினரிடையே அச்சொல்லுக்கான பொருள் புழக்கத்திற்கு வந்தது. ஐந்திணைகளிலும் திரிந்த இவர்கள் பசிக்குப் பாக்களைத் தின்று யாழினைப் பருகி உயிர் வளர்த்தனர். சங்கம் என்பதை கனவிலும் அறியாத நாடோடிகளான இவர்கள் வரலாற்றில் பாணர், பறையர், பரதவர், பள்ளர், பாண்டியர் எனப் பல்வேறான பகரச் சொற்களால் குறிப்பிடப்படுகின்றனர். பா என்ற ஓரசைச் சொல்லால் அடையாளப்படுத்தப்பட்ட இவர்கள் இன்று எழுத்து வழக்கில் தமிழர் என்றும் பேச்சு வழக்கில் தமிலர் என்றும் குறிப்பிடப்படுகின்றனர். இந்தத் தமிழர்களின் நவீன காலம் என்பது ஈராயிரமாண்டுகளிலிருந்து வரையறை செய்யப்படுகிறது. பின்நவீனக் காலம் என்பது பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து – மன்னிக்கவும்; பிரெஞ்சு மாணவர் புரட்சியிலிருந்து உலக அளவில் கணிக்கப்படுகிறது. அப்புரட்சி நடந்தது 1968. ழாக் தெரிதா என்பாரின் முதல் நூல் பாரிஸ் கம்யூனில் வெளிவந்த காலமும் அதுவே. நான் பிரெஞ்சிந்தியா என்றழைக்கப்பட்ட பாண்டிச்சேரி என்னும் இடைக்காரி நாட்டு வேளிர்க்குடியில் தோன்றிய காலப்பகுதியும் அதுவே. பிறக்கும்போதே நான் போஸ்ட்மார்டனிஸ்டாகப் பிறந்தேன். பிறக்கும்போதே செத்துப் பிறந்ததால் நான் பிரேதன் என அழைக்கப்பட்டேன். கவிதை எழுதிய காலப்பகுதியில் ரமேஷ் என்ற புனைப்பெயரையும் சேர்த்து ரமேஷ் பிரேதன் என ஆளானேன். தமிழ்ப் பின்நவீன / பின்நவீனத்துவக் காலம் என்பதை எனது பிறப்பிலிருந்து நான் கணக்கிடுகிறேன். மிஷேல் ஃபூக்கோ என்பார் அன்றுவரை பெயரிடப்படாத; பிற்காலத்தில் எய்ட்ஸ் எனப் பெயரிடப்பட்ட பால்வினை நோயால் செத்த அன்று நான் கன்னிகழிந்தேன். என் தோழிகளில் ஒருத்தி செய்த பொருளுதவியால் என் முதல் நாவல் வெளிவந்ததைக் கொண்டாடும் முகமாகத்தான் அத்தோழியால் நான் கன்னிகழிந்தேன். அதுநாள்வரை கையே கதியென்றிருந்த நான் அதற்குப் பிறகு கவிஞன் என்ற மனிதக்குரங்கு நிலையிலிருந்து கதைஞன் என்ற நிலைக்குத் தண்டுவடம் நிமிர்த்தப்பட்டு தன்னிலை உயர்ந்தேன்.

வரலாற்றால் ஆன எல்லாமே புனைவுதான். பிரதி என்பது புனைவு. TEXT IS FICTION. பிரதிகள் எல்லாமே புனைவுதான். ஒவ்வொரு சொல்லும் பொருளுடையது. பொருள், அதாவது அர்த்தம் என்பதும் புனைவே. சொற்களாலான எல்லாமே புனைவு என்றான பிறகு கவிதை, கதை என்ற பிரிவுகள் இல்லை. எல்லாவற்றையும் பின்நவீனத்துவம் பிரதியென அறுதியிடுகிறது. பிரதியே பிரம்மம். பிரம்மம் என்பது புனைவு. சூன்யம் என்பது பிரதி. மனிதக்குரங்கு என்பது பிரதி; மனிதன் என்பது புனைவு. கவிதையும் புதினமும் வேறுவேறு இல்லை; இரண்டும் புனைவு. அதாவது, இருபொருள் ஒருமொழி.

நான் கன்னிகழிந்த நாள்வரை எனது உடம்பை ஒரு உயிரியல் பொருள் (biological meterial) என்றுதான் கருதிவந்தேன்; கன்னிகழிந்த பிறகுதான் அதை ஓர் உயிரியல் பிரதி (biological text) என்று உய்த்துணர்ந்தேன். எனது உடம்பை ஒரு பிரதியாகக் கண்டறிந்த அக்கணம் ‘மரணமற்ற பெருவாழ்வு’ என்பதன் பொருள் யாது என்பதை அறிந்தேன். உடம்பை ஒரு பிரதியாக உணரும்போது மரணம் இல்லை, பொருளற்ற போர் இல்லை. பிரதி தரும் இன்பம் (plessure of the text) என்பது ஓர் இலக்கியச் சொல்லாடல் மட்டும் அன்று; அது உயிரியல் செயல்பாடுமாகும்.

பின்நவீனத்துவப் பிள்ளையார் என்ற பெயரில் ஏதேனும் ஒரு கோயில் உருவாகலாம்; ஆனால் பின்நவீனத்துவப் பிரதியை திட்டமிட்டு யாரும் உருவாக்குவதில்லை. பின்நவீனத்துவம் என்பது ஒரு கருத்துரு. அதற்குச் சட்டகம் இல்லை. அது அமீபா போன்ற வடிவிலி. கெட்டிதட்டிய எந்தவொரு தத்துவச் சட்டகமும் அதிகார மையமாகச் செயல்படுவது வரலாற்றில் காலந்தோறும் நிரூபிக்கப்பட்ட ஒன்று. பின்நவீனப் பிரதி என்றவொன்று கட்டமைக்கப்படுமானால் அது முரண் இயங்கியல் நிலைகொண்டு பின்நவீனத்துவக் கருத்தியலுக்கு எதிரான திசையில் இயங்கும். ஆக, பின்நவீனத்துவப் பிரதி என்ற ஒன்று இல்லை. பின்நவீனத்துவ வாசிப்புத்தான் சாத்தியம். அதிகபட்ச சனநாயகவாதியால் மட்டுமே ஒரு பிரதியை பின்நவீனத்துவ வாசிப்பிற்கு உட்படுத்த முடியும்.

ஒரு பிரதிக்கு நவீன/பின்நவீன என்ற அடைமொழிகள் தேவையில்லை. அது அடைமொழி இல்லாத ரெளடி. பிரெஞ்சுப் பின்காலனிய நிலமான பாண்டிச்சேரியில் அடைகாக்கத் தெரியாத பின்நவீனத்துவப் பன்றி ஒன்று உயிர்வாழ்கிறது; அதைப் பற்றி பிறகு எழுதுகிறேன். திருக்குறள், பகவத்கீதை, பைபிள், திருக்குரான் எனும் நான்கு பெருங்கதையாடல் பேரிலக்கியங்களையும் பின்நவீனத்துவ வசிப்புக்கு உட்படுத்தப்போகிறேன். இது என் வாழ்நாள் பணியாக இருக்கும். இதற்கான உடற்பலம், மனபலம், பணபலம் இவை மூன்றையும் அருட்பெருஞ் சோதி தனிப்பெரும் கருணை தரும்.

தமிழில் பின்நவீன அறிவாளிகள் இருக்கிறார்கள், ஆனால் பின்நவீனத்துவச் சிந்தனையாளர்கள் இல்லை. நான் முப்பது ஆண்டுகளாக இங்கு இயங்கி வருகிறேன்; இதுவரை ஃபாஸிசம் படியாத அறிவை நான் நுகர்ந்ததில்லை.
சாதியமும் பெண்ணியமும் கவிதையியல் சார்ந்த சொல்லாடல்களில்லை; இவை சமூகவியல் சார்ந்தவை. இந்த அரசியல் சொல்லாடல்களால் பின்நவீனத்துவ வசிப்பிற்கு இணக்கமான குறுங்கதையாடல்களை உருவாக்க முடியாது. திருக்குறள் போன்ற நீதியிலக்கியம் என்னும் பெருங்கதையாடல்களைத்தான் உருவாக்க முடியும். நாம் நீதிபோதகர்களை தத்துவவாதிகள், இலக்கியவாதிகள் என நம்பி ஏமாந்துவிடுகிறோம். சிலப்பதிகாரத்தில் கண்ணகி தனது முலையைப் பிய்த்தெறிந்து மதுரையை எரிக்கிறாள். இந்த இடத்தில் முலை என்பது ஓர் உடலுறுப்பு என்ற நிலையிலிருந்து ஒரு குறியீடாக/ பிரதியாக பரிணமிக்கிறது. ஒரு பெருங்கதையாடலாக முடிந்துபோகவிருந்த சிலப்பதிகாரம் ஒரு மாயயெதார்த்தத் தாவலில் குறுங்கதையாடலை முன்னெடுக்கும் ஒடுக்கப்பட்ட, நொறுக்கப்பட்ட மனிதரின் வாதையைப் பேசும் உலக இலக்கியமாகிவிடுகிறது. பின்நவீனத்துவ வாசிப்பில் கம்பராமாயணத்திற்கு நேரும் அதோகதி சிலப்பதிகாரத்திற்கு நேர்வதில்லை. வாசிப்பின் அரசியலை கோரிநிற்கும் பின்நவீனத்துவம் பிரதியாக்கத்தின் போது அரசியலைத் திணிப்பதில்லை. கம்பராமாயணம் மேலாதிக்க ஃபாசிச அரசியல் பிரதி. கண்ணகியின் வாதையை ஏற்கும் கவிதையியல் சீதையின் வாதையை நம்புவதில்லை. இங்கு குறுங்கதையாடலுக்கும் பெருங்கதையாடலுக்குமான வாசிப்புக்கான உதாரணங்களாகத்தான் சிலப்பதிகாரம், ராமாயணம் என்ற பிரதிகள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றின் இலக்கிய மேன்மையை மதிப்பிடுவதற்காக இல்லை.

கவிதை, கதை, கட்டுரை என்ற மூன்றும் மூன்று பிரிவுகளாக இயங்காமல், மூன்றும் ஒன்றுடனொன்று கலந்த நிலையில் புதிய பிரதி என்றவொன்று உருவாகும். ஓவியன், மருத்துவன், பொறியாளன் என பல தளங்களில் இயங்கிய ஒற்றை மூளை லியார்னாடோ டாவின்சி காலத்தில் இருந்தது. அது தொழிற் புரட்சிக்குப் பிறகு தனித்தனி மூளைச் செயல்களாகப் பிரிந்து இயங்கின. இலக்கியத்தில் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் என்ற நான்கு பெரும் பிரிவுகள் தனித்தனியாக இயங்க மறுத்து ஒருவகையான கூட்டுப் படைப்பாக உருத்திரியும். மூளை என்பதும் மனிதர் என்பதும் ஒரு பிரதி. கோயில் பூசாரி ஒரு பாடலை காதில் சொல்லி உச்சந்தலையில் வேப்பிலையால் அடித்து நெற்றியில் மஞ்சள், குங்குமம், திருநீறு கலவையைப் பூசி சாவிலிருந்து ஒரு நோயாளியை மீட்டெடுப்பதைப் போல அப்பிரதி இருக்கும். இனப்பெருக்கத்தை மறுத்த பாலியல் செயல்பாடு ஊக்குவிக்கப்படும்போது பெண்ணியம் என்பது பொருளற்றுப் போவதுபோல; மேலாதிக்கம் என்பது அடிப்படையான உயிரியல் விதி என்பதை ஏற்றுக்கொள்ளும்போது பொதுவுடமை என்ற கருத்தாக்கம் பொருளற்றதாகிவிடும்.

பொதுவுடைமை, பெண்ணியம் என்ற இரண்டு கற்பிதங்களே மானுட அறம்சார் சொல்லாடல்களை அனைத்து அறிவுத்தளங்களிலும் தொடர்ந்து எழுப்புகின்றன. தன்னிலை ஒவ்வொன்றையும் குற்றவுணர்வில் நிறுத்தி வைப்பதன் மூலம் பொதுவுடமை, பெண்ணியச் சித்தாந்தங்கள் மேலாதிக்க அதிகார மையங்களாக தம்மை ஏகபோகமாக நிறுவிக்கொண்டன. இது இருபதாம் நூற்றாண்டில் நடந்தது. இந்த நூற்றாண்டு அமெரிக்க மைய குடியரசுச் சொல்லாடல்களாலும் இவற்றைத் தவிர்த்த பிற, மத அடிப்படைவாதச் சொல்லாடல்களாலும் நிறுவப்படும். இந்த நூற்றாண்டின் பேரழிவுச் சொல்லாடல்கள் கடவுளின் பெயரால் நிகழ்த்தப்படும். அமெரிக்க ஏகாதிபத்தியம், மத அடிப்படைவாதம் என்ற இரட்டை எதிரிடைகளால் நமது பேச்சும் எழுத்தும் வடிவமைக்கப்படும். வரலாற்றில் முன்னெப்பொழுதுமில்லாத படுகொலைகள் அரங்கேறும். போன நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டு அதன் நடுப்பகுதியில் நிகழ்த்திப்பார்க்கப்பட்ட அணு ஆயுத நடனம் இந்த நூற்றாண்டில் பரவலாக அரங்கேறும். போன நூற்றாண்டில் ஈரோஷிமா, நாகசாகிச் சொல்லாடல்களிலிருந்தே பின்நவீனத்துவ அறம் முன்னெடுக்கப்படுகிறது. பின்நவீனத்துவ அறத்தைப் பேசும் பிரதிகளை எழுதுபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இனி BINARY OPOSITION என்ற இரட்டை எதிரிடைகளுக்குள் மட்டுமே அடங்கிவிடாது.

கணினி தொழில் நுட்பவளர்ச்சி மனித கற்பனைக்குச் சாத்தியமான அனைத்தையும் காட்சிப்படுத்திவிடுகிறது. மிகையதார்த்த ஓவியங்கள் செல்வாக்கிழந்துவிட்டன. ஸல்வதோர் தலி பித்தநிலையில் படைத்தவை இன்று கணினி வரைகலை மூலம் அதன் பிரம்மாண்ட கலைச் சாதனையின் திகைப்பை ஒன்றுமில்லை என்றாக்கிவிட்டது. ஆனால், ஒன்றுமட்டும் தொழில்நுட்ப அறிவால் தீண்டமுடியாத நிலையில் காலத்தை விஞ்சி நிற்கிறது. ஆம், தத்துவம், கருத்தியல் என்பவை கலைப்படைப்பில் மூலாதாரமாக நின்று செயல்படும்போது வெற்று தொழில்நுட்பக் கலைநேர்த்தி என்பது காலாவதியாகிவிடும். தத்துவச் சொல்லாடல்களின் செறிவே இசை, ஓவியம், எழுத்து மற்றும் நிகழ்த்துக் கலைகளை மனிதார்த்த பொருண்மை மதிப்பீட்டில் முன்நிறுத்தும்.

இலக்கியம் என்பது ஒற்றைத் தன்மையது இல்லை; அது பல்வேறு பண்பாட்டின் சந்திப்பு மையமாக விளங்குகிறது. இரண்டாயிரம் வயது கொண்ட திருக்குறளும் இதற்கு விதிவிலக்கு இல்லை. அப்பிரதியும் சமண பெளத்த ஆசீவகச் சொல்லாடல்களின் தொகுப்பறிவுதானே தவிர சுயம்புவான தமிழ் அறிவிலிருந்து (epistamalogy of tamil) உருவானது இல்லை. எந்தவொரு பிரதியும் ஓர் இனத்தின் மூல அறிவிலிருந்து மாத்திரமே தோன்றியது இல்லை. ‘கலைச்செல்வங்கள் யாவையும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்’ என்ற வேண்டுதல் இருக்கு வேதத்திலேயே பதிவாகி இருக்கிறது. தூய தமிழறிவோ சமஸ்கிருத அறிவோ இல்லை. Epistamalogy of knowledge என்பது ஒரு சமூகத்தின் கூட்டு அறிவு என்பதையே குறிக்கிறது. ஓர் இனத்தின் அறிவு என்பது பொதுவானதாகவும் வழக்காறு என்பது தனித்துவமானதாகவும் இருக்கிறது. அறிவு என்பது சனநாயகத் தன்மை கொண்டது. ஓர் இனத்திற்கு மட்டுமேயான அறிவு ஃபாசிசத் தன்மையது. ஈயத்தை இனி யார் காதிலும் ஊற்றமுடியாது. சர்வதேச கலை இலக்கிய அறிவை முன்னெடுக்கும் அதேவேளையில் இனக்குழு மரபு சார்ந்த அறிவையும் அடையாளப்படுத்துகிறது பின்நவீனத்துவம். மேற்கிலிருந்து knowledge is power என்னும்போது நம்மிடமிருந்து ‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ ஆகிறது.

ஒவ்வொரு சொல்லும் பொருள் உடையது மட்டுமில்லை; ஒவ்வொரு சொல்லும் தன்னுள் புனைவைக் கொண்டுள்ளது. சொற்களின் கூட்டியக்கம் இலக்கியம் என்னும் மாபெரும் புனைவைக் கட்டமைக்கிறது. என்னுள் மரணத்தை ஏற்படுத்தாத எந்தவொன்றும் புனைவே. கடவுள் புனைவு, அணு ஆயுதம் அல்புனைவு. புனைவு என்பது போருக்கு எதிரான மனநிலையை தக்கவைக்க உதவும். புனைவு மரணமற்ற பெருவாழ்வை சாத்தியமாக்கும். மாணிக்கவாசகப் பெருமானால் கவிதைக்குள் கடவுளை சிக்கெனப் பிடிக்க முடியும். பின்நவீனத்துவம் மேலதிகப் புனைவுகளை வேண்டிநிற்கிறது. அரசியலைவிட துரிதமாக இலக்கியம் நம்மை விடுதலை செய்யும். பின்நவீனத்துவ அரசியலும் இலக்கியமும் நம்மை எதற்குள்ளும் தேங்கி நிற்கவோ அடைபடவோ விடுவதில்லை. அதிகாரத்திற்கு எதிராக செயல்படும் எந்தவொரு கலைஞரும் மூன்றாம் நாள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவார். எழுதப்படும் இலக்கியம் என்பது எதிர் வரலாறு. அதற்குள்ளிருந்து கிளைக்கும் சொல்லாடல்கள் புதிய விடுதலையைப் பேசும். இனிவரும் காலங்களில் எழுதப்படும் கவிதைகளும் கதைகளும் எதிர் வரலாறாய் அமையும். யாரும் எதிர் வரலாற்றிலிருந்துத் தப்பிக்க முடியாது.

***

ரமேஷ் பிரேதன்

சொல் என்றொரு சொல், மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன், காந்தியைக் கொன்றது தவறு தான், கட்டுரையும் கட்டுக்கதையும், ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து, ஐந்தவித்தான், நல்ல பாம்பு(நீல அணங்கின் கதை), அவன் பெயர் சொல் நூல்களின் ஆசிரியர்.
rameshpredan@gmail.com

ஓவியம் – Katsushika Hokusai

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

0

நுழையா பாவனையோடு..

மிக நீண்ட கனவின் வராண்டாவில் விழித்தெழுந்தேன்
முடிவற்ற பிரகாச ஒளியை மனம் கண்ணுற்றது

காலடி ஓசைகள் உருவங்களை சுமந்தலைந்தன
திசைகள் கிடையாது

விவரணக் குறிப்புகள் எங்கும் ஒட்டப்பட்டிருக்கவில்லை
குறைந்தபட்சம் ஒரு சொல்லையாவது தந்துதவ புலனாகா
பிம்பங்கள் வியாபிக்கும் கணமது

சரியும் விதிகள் மோதி நசுங்கும் உறவுகளை
சமநிலைக் குழைவோடு பிரதியெடுக்கும் வாதமொன்று
விரித்துக் கிடந்த மேஜையில்

மினியேச்சர் குடும்ப அமைப்புகள் கட்டியெழுப்பப்பட்டிருந்தன

காலி செய்யப்பட்ட நகரங்களின் அகாலத் தருணத்தில்
நின்றபடி மொழியை நினைவுகூர யத்தனித்தால்
குறுக்கிடுகிற குகை ஓவியங்களில்
தட்டச்சு செய்யப்பட்ட முகவரிகளின் லிபியில் எண்கள்
உடைந்து கிடந்தன

மனித எலும்புகளில் வார்க்கப்பட்ட சாவிகளின் பற்களில்
காலத்தின் கணக்கு சூட்சுமம்
பழைய கட்டிட அடுக்குகளை உருவகிக்கின்றன

திறந்து பார்ப்பதற்குரிய பரிதாபக் கபாலத்துக்குள்
நீண்டு கிடக்கிறது திறக்கப்படாத வராண்டா

***

நீங்கள் அப்பால் திரும்பிக் கொள்ளுங்கள்

முதலில் கதவு அடைந்துகொண்டது

பிசிர்ந்த காற்றின் திடுக்கிடலோடு உதிர்ந்துவிடும் தூக்கத்தை
மெல்ல இழுத்து போகின்ற எறும்பை
விட்டுவிடாமல்
பின்தொடரும் மனத்தை

நாளைய
மீளா கனவில் அசைந்துகொண்டிருக்கும் கிளையொன்றில்
சுருட்டி வைத்தாகிவிட்டது

இன்னும் அதனை
அது அறிந்திருக்கவில்லை

அவ்வப்போதே முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்த
நொடியில்

அடைந்துகொண்டுள்ள கதவு தாழிடப்படுகின்ற ஓசை
தொலைதூர பாலை மணலில்
புதைவதை
கண்டுகளித்தும் கொண்டிருக்கிறேன்

அவ்வாறாகி

எக்களிப்பின்
ரகசிய துள்ளலை வீதிதோறும் வடம் பிடித்து இழுத்தோடிட
இவ்வார்ப்பில்
தீ குழைய நொதும்பி கொண்டிருக்கும் மனிதச் சக்கரங்கள்

உருண்டோடி உடன் வர

ஓங்கிய
சம்மட்டியால்
அடிபடுகிறது அறையின் அச்சாணி

***

இடைக்காலங்களின் கோடை

என் புழக்கடையெங்கும் பூத்திருந்தன மலர்கள்
கரும்பாசி தளுக்கும் கிணற்றடி
காலம் அறுந்தும் கயிறைத் தொங்கிட அனுமதித்த
ராட்டை

ஆழத்தில்
கருநிழல் நீரின் சலசலப்பு

பாரேன்
வெயில் ஊறும் மேகங்களுக்கு தெரிந்திருக்கவில்லை

யவ்வன கவுச்சி தீரா
இவ்வனப்பின் தகிப்பில்
பின்னிரவாகி
கசியும்

நிலவின்
பாங்கு

***

அழியாத் தடம்

பவிசின் நறுமணத் தள்ளாட்டத்தில்
எத்தனையாகச் சுழன்று மீண்டு
சுழன்று
கிறக்குகிறாய்

வாகாக கவ்விக்கொள்ள
துடித்தழைத்த
இதழ்களை ஊற வைத்திருந்த இரவின்
தயவை
கொஞ்சமாகத் திறந்து வை

இருள் மூளும் பசிய பாதையை நடுக்கிடும்
கடுங்குளிர்
நினைவில் கொளுத்தும்

உடற்சூடு பற்றிப் படர்ந்திருந்த
பழங்
கதகதப்பை

***

கவிதைக்காரன் இளங்கோ
elangomib@gmail.com

ஓவியம் – Katsushika Hokusai

சகட ஒலிக்கு அஞ்சும் குருகுகள்

0

நாராயணி சுப்ரமணியன்

டலுக்கடியில் சென்று விலங்குகளைப் பார்க்கும் அனுபவம் அலாதியானது. அழகான விலங்குகள், நீருடன் ஓடிப்பிடித்து விளையாடும் சூரிய ஒளியின் கீற்று, அலைகளின் பந்தாட்டம் என்று விரியும் அந்த அனுபவத்தின் முக்கியமான ஒரு அம்சம் கடலுக்கடியில் கேட்கும் ஒலி. எந்த வாழிடத்துக்கு சென்றிருக்கிறோம் என்பதைப் பொறுத்து ஒலிகளின் தன்மை மாறுபடும். அலைகளின் ஓசையையும், கடலுக்கடியில் அணிந்து கொள்ளும் முகமூடிக்குள் பேரிரைச்சலாகக் கேட்கும் நமது சுவாசத்தின் ஒலியையும் மீறி சில விஷயங்கள் நம் காதை எட்டிவிடும்.
ஒலிகளைத் துல்லியமாகக் கேட்பதற்காக, ஒரு சில வினாடிகள் மூச்சை இழுத்துப் பிடித்துவிட்டு கவனித்த அனுபவம் கூட எனக்கு உண்டு. பவளப்பாறைகளின் மேல் உள்ள பாசித்துணுக்குகளைச் சுரண்டும் கிளிமீன்களின் க்ரக் க்ரக், கொடுக்குகளை வைத்துச் சண்டையிடும் நண்டுகளின் க்ளிக் ஒலி, பாறையின் மேல் உள்ள பாசியை மேயும் மட்டிக்கிளிஞ்சல்களின் கிறீச்சிடல் என்று கலவையான ஒலிகளைக் கேட்டிருக்கிறேன்.

ஒலியின் வால்பிடித்து வீடு திரும்புதல்

காற்றில் பயணிப்பதை விட ஐந்து மடங்கு அதிக வேகத்துடன் கடல்நீரில் பயணிக்கின்றன ஒலி அலைகள். இரை பிடிக்க, வீட்டை வந்து அடைய, வழி கண்டுபிடிக்க, தனக்கான இடத்தை வரையறுக்க, இணை தேட, எச்சரிக்க, எதிரிகளைத் தாக்க என்று பல்வேறு காரணங்களுக்காக ஒலிகளைப் பயன்படுத்துகின்றன கடல்வாழ் உயிரினங்கள். கிட்டத்தட்ட 20,000 மீன் இனங்களால் நன்றாகக் கேட்க முடியும், 800 மீன் இனங்கள் ஓசையை உருவாக்கும் ஆற்றல் படைத்தவை.
ஃபைண்டிங் நீமோ திரைப்படத்தில் வரும் நீமோ ஒரு கோமாளி மீன் (Clown fish). இது பவளப்பாறையில் வசிக்கும் இனம் என்றாலும் முட்டையிலிருந்து வெளியில் வரும் லார்வா, முதலில் ஆழ்கடல் பரப்பில் தான் சுற்றிக் கொண்டிருக்கும். லார்வாவிலிருந்து மீனாக உருமாறும் பருவம் வரும்போது, தன் தாய்வீடான பவளத்திட்டு எங்கே இருக்கிறது என்பதை சத்தங்களால் தான் தேடிக் கண்டுபிடிக்கும். ஒரு பவளத்திட்டு என்பது சந்தடியும் இரைச்சலும் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை சந்தை போன்றது. அந்த அதீத ஒலியைப் பின்தொடர்ந்து வரும் லார்வா, ஒரு வழியாக பவளத்திட்டை அடைந்தவுடன் தன் வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பிக்கும்!

செயற்கை ஒலிகளின் குறுக்கீடுகளற்ற ஒரு சூழலில், கடற்புல் படுகைகளின் தொடர்ந்த ஒளிச்சேர்க்கையால் உருவாகும் ஆக்சிஜன் குமிழ்கள் தொடர்ந்து மேலெழும்பி, கடற்பரப்பை நோக்கிப் பயணிக்கின்றன. மேலே போகப்போக அளவில் பெரிதாகி, இவை உடைகின்றன. ஆயிரக்கணக்கில் இவை உடையும் ஓசை, நூற்றுக்கணக்கான சிறு மணிகளின் ஓசையைப் போல சேர்ந்திசைத்து, லார்வா மீன்களை வீடு திரும்புமாறு அழைக்கின்றன.

ஒலிச்சித்திரங்கள்

கௌபாய் வெஸ்டர்ன் திரைப்பட நாயகர்களுக்கெல்லாம் சவால்விடக் கூடியது பிஸ்டல் இறால் என்கிற கடல்வாழ் விலங்கு (க்ளிண்ட் ஈஸ்ட்வுட் ரசிகர்கள் மன்னிப்பார்களாக). இந்த இறால்களை “Gunslingers” என்று செல்லமாக அழைக்கிறார்கள் கடல்சார் ஆராய்ச்சியாளர்கள். இரை பிடிப்பதற்காக இது நீர்க்குமிழியாலான, அதிவேகத் தோட்டா ஒன்றைத் தயாரித்து, தனது பெரும் கொடுக்கால் வெளியிடும். இந்த நீர்க்குமிழி தோட்டா வெளியேறும்போது சராசரியாக வரும் சத்தமே 210 டெசிபலுக்கும் மேல்! துப்பாக்கியிலிருந்து வெளிவரும் தோட்டாவின் ஒலியே 150 டெசிபல்தான் என்பதோடு நாம் இதை ஒப்பிட்டுக் கொள்ளலாம். இந்த நீர்க்குமிழித் தோட்டாவின் வேகமும் சத்தமும் இரையைத் திகைக்க வைத்து மயக்கத்திலாழ்த்தி விடுவதால் இறால் எளிதாக வேட்டையாடுகிறது.

மிட்ஷிப்மன் என்ற ஒருவகை மீன், பாடல்களைப் பாடித்தான் பெண்மீன்களைக் கவர்கிறது. கூடுகட்டி முட்டையிட்ட பின்பு, குரைப்பது போன்ற ஒரு எச்சரிக்கை ஒலியை எழுப்பி முட்டைகளைக் காவல் காக்கிறது. கூன்முதுகுத் திமிங்கிலங்களின் பாடல்களை வயலின் இசைக்கு ஒப்பிடுகிறார்கள் சில வல்லுநர்கள். குடும்பத்தினருடன் தொடர்ந்து உரையாடுவது, வழி கண்டுபிடிப்பது என்று எல்லாவற்றுக்குமே ஒலியை மட்டும் நம்பியிருக்கின்றன திமிங்கிலங்களும் ஓங்கில்களும்.

இவை சில உதாரணங்கள் மட்டுமே. பல்லாயிரக்கணக்கான மைல்களைத் தாண்டியும் ஒலி பயணிக்கக்கூடியது என்பதால், கடலின் முக்கியமான தகவல் தொடர்பு ஊடகம் ஒலிக்கற்றைதான். ஒரு ஆரோக்கியமான கடல் சூழல் என்பது சந்தடியும் இரைச்சலும் நிறைந்தது. கடலுக்குள் இந்த தொடர் சத்தம் கேட்கவில்லை என்றால் ஏதோ கோளாறு என்றுதான் பொருள்.

இரைச்சல்களால் அழிக்கப்படும் கடல் ஓசை

கப்பல் போக்குவரத்து, எண்ணெய் / எரிவாயு இருக்கும் இடங்களைக் கண்டறிவதற்காக நடத்தப்படும் ஆய்வுகள், காற்றுத் துப்பாக்கிகள், எண்ணெய் எடுப்பதற்காகக் குழாய்கள் போடும் இரைச்சல், ராணுவ சோனார், வெடிவைத்து மீன்பிடித்தல், எண்ணெய்க் கிணறுகளின் இயக்கம், பழைய போர்களின்போது மிச்சம் வைக்கப்பட்ட கண்ணி வெடிகளை வெடித்துத் தீர்ப்பது, கட்டுமானங்களின் இரைச்சல் என்று கடலுக்குள் ஏராளமான வழிகளில் ஒலி மாசுபாட்டை உண்டாக்குகிறோம். கடந்த ஐம்பது வருடங்களில், முக்கியக் கப்பல் வழித்தடங்களின் இரைச்சல் 32 மடங்கு அதிகரித்துவிட்டது என்கிறது ஒரு ஆய்வு! இந்த ஒலி மாசுபாட்டால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

ஒலியாலான முகமூடி (Acoustic Masking)

இதை நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். இரைச்சலான ஒரு சாலையில் நாம் பேசும் ஒலி கேட்காது, இல்லையா? அதைப் போலவே, கடல்வாழ் உயிரினங்களின் ஒலி, செயற்கை ஒலியால் மூடி மறைக்கப்படுகிறது. அதனால் விலங்குகளால் எளிதில் இரைதேட முடிவதில்லை, ஒன்றிணைந்து பயணிக்க முடியவில்லை, வழி கண்டுபிடிக்க முடியவில்லை. சில திமிங்கில இனங்களில், 80%-க்கும் மேற்பட்ட ஒலிகளும் பாடல்களும் இரைச்சல்களால் மூடி மறைக்கப்பட்டிருக்கின்றன.

உடல்ரீதியான பாதிப்பு

தொடர்ந்து இரைச்சல் கேட்டுக்கொண்டே இருக்கும்போது, செவித்திறன் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் கடலுக்கடியில் கண்ணிவெடி இயக்கப்படும்போதும், சுற்றியுள்ள 60 பாலூட்டிகள் நிரந்தரமாகக் கேட்கும் தன்மையை இழக்கின்றன என்கிறது ஒரு அதிர்ச்சிகரமான தரவு! ஒரு வருடத்துக்கு இங்கிலாந்துக் கடற்பகுதியில் மட்டும் ஐம்பது கண்ணிவெடிகள் வெடிக்கப்படுகின்றன என்பதை நாம் இதனோடு பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். இரண்டாம் உலகப்போரின் போது புதைக்கப்பட்ட வெடிகள் என்பதால், உலக அரசுகள் இவற்றைத் தொடர்ந்து தேடி வெடிக்கச் செய்கின்றன.

காற்றுத் துப்பாக்கி (Air gun) என்பது கடலுக்கடியில் இருக்கும் எண்ணெய் வளங்களைக் கண்டறியும் ஒரு கருவி. ஒரே நேரத்தில் குறைந்தது 30 காற்றுத்துப்பாக்கிகளை இயக்கினால் மட்டுமே எண்ணெய் வளங்களைக் கண்டறிய முடியும். இதனால் உண்டாகும் சத்தம் 200 டெசிபல்களைத் தாண்டும். 2017-ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஒரு காற்றுத் துப்பாக்கியை வெடித்தாலே, அதிலிருந்து 1.2 கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் மொத்த நுண்விலங்குகளில் 75% அதிர்ச்சி தாங்காமல் உடனே இறந்துவிடுகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல முதுகெலும்பற்ற கடல்விலங்குகளின் உடலில் Statocyst என்கிற உறுப்பு உண்டு. நம் உள் காதில் உள்ள திரவத்தைப் போல, வழி கண்டுபிடிக்கவும் சமநிலையில் இருக்கவும் இதுதான் உதவுகிறது. ஒலி மாசுபாட்டினால் இந்த உறுப்பு பாதிக்கப்படுகிறது. ஆகவே விலங்குகளால் வழி கண்டுபிடிக்க முடிவதில்லை. சமநிலையை இழந்து நீந்தும்போது, அவை பாறைகளில் மோதி இறக்கின்றன.

திமிங்கிலங்கள் அடிக்கடிக் கரை ஒதுங்குவதற்கும் இது ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. செவித்திறன் இல்லாத திமிங்கிலங்களால் ஒலியை வைத்து வழி கண்டுபிடிக்க முடிவதில்லை, அவை தாறுமாறாகப் பயணித்துக் கரையொதுங்கி இறக்கின்றன.

செயல்பாடுகளில் மாற்றம்

திடீர் ஒலி பல விலங்குகளுக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவை திகைத்து நின்றுவிடுகின்றன. சில நேரங்களில் வேட்டை விலங்குகளிலிருந்து தப்பிப்பது போன்ற இயல்பான செயல்பாடுகளையும் அவை நிறுத்திக் கொள்கின்றன. இரைச்சல் நிறைந்த கடலில் வாழும் திமிங்கிலங்கள், இணை தேடுவதற்காகப் பாடும் பாடலை சரியாகப் பாடுவதில்லை, அதனால் இனப்பெருக்க விகிதம் குறைகிறது.

எண்ணிக்கையில் மாற்றம்

வலசை போதல், வழி கண்டுபிடித்தல், வீடு அடைதல் என்று எல்லாவற்றுக்குமே ஒலியை நம்பியிருக்கும் விலங்குகள், ஒலி மாசுபாட்டால் பாதிக்கப்படும்போது, அவற்றின் எண்ணிக்கை குறைகிறது. தொடர் இரைச்சல் இருந்தால் அவை வலசையைத் தவிர்த்துவிடுகின்றன. வழக்கமான பாதைகளில் பயணிக்காததால், அவற்றுக்குக் கிடைக்கும் உணவும் கிடைப்பதில்லை, உடல் மெலிந்து அவை இறக்கின்றன.

அதிகமாகக் காற்றுத் துப்பாக்கிகள் பயன்படுத்தும் இடங்களில், வழக்கமாகக் கிடைக்கும் மீன்களை விட, 40 முதல் 80% குறைவான மீன்களே கிடைப்பதாக சொல்கிறார்கள் நார்வே நாட்டின் மீனவர்கள், இதே நிலை இரைச்சல் அதிகமான எல்லா இடங்களிலும் இருக்க வாய்ப்பு உண்டு.

மன அழுத்தம்

ஒலி மாசுபாட்டின் முக்கியமான பாதிப்பு இது. தொடர்ந்து ஒலிபெருக்கிகள் இயக்கப்படும்போது நாமே எரிச்சலடைகிறோம், விலங்குகள் மட்டும் விதிவிலக்கா? தொடர்ந்து இரைச்சல் இருக்கும்போதோ, திடீரென்று பேரிரைச்சல் வரும்போதோ, கடல்வாழ் விலங்குகளின் உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவற்றை Stress hormones என்பார்கள். இவை தொடர்ந்து உடலில் இயங்கும்போது, உணவு உண்பதில் ஆர்வம் இருக்காது, நோய் எதிர்ப்பு சக்தி குறையும். சில விலங்குகளுக்கு சத்தத்தைக் கேட்கும்போது இதயத்துடிப்பு அதிகரிக்கிறது, அதுவும் பல நோய்களை ஏற்படுத்துகிறது. கப்பல் போக்குவரத்து அதிகமாக இருக்கும் பகுதிகளில், திமிங்கிலங்களின் உடலில் இந்த ஹார்மோன்கள் அதிகமாக இருக்கின்றன என்று உறுதிப்படுத்தியது 2001-ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு.

தீர்வுகள்

தாயின் வயிற்றுக்குள் பனிக்குட நீர் அசையும் ஒலிதான் மனிதனின் காதுகள் கேட்கும் முதல் ஓசை. நீருக்குள் ஒலியைக் கேட்டுப் பழகிய பின்பு தான் நாம் வெளி உலகத்துக்கே வருகிறோம். ஆனால் கடலுக்குள் ஏற்படும் ஒலி மாசுபாட்டிற்கும் நாமே காரணமாக இருக்கிறோம் என்பதுதான் பெரிய முரண்.

அதீத ஒலி அளவில் ஹெட்ஃபோன்களில் பாட்டுக் கேட்கிறோம் என்று வைத்துக்கொள்ளலாம். தலை வலிக்கிறது, எரிச்சலாக இருக்கிறது. என்ன செய்வோம்? ஒலி அளவைக் குறைக்கலாம், அல்லது ஹெட்ஃபோனையே கழற்றிவிடலாம். கழற்றவே முடியாத ஹெட்ஃபோன் என்றால்? கடல்வாழ் விலங்குகள் தினசரி உழலும் இரைச்சலான நரகம் அப்படிப்பட்டதுதான்.

மனிதக் காதுகளைப் பொறுத்தவரை 65 டெசிபல்களுக்கு மேல் இருக்கும் எந்த ஒலியும் மாசு என்று வரையறுக்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால் சர்வசாதாரணமாக 200 டெசிபல்களைத் தாண்டிப் போகின்றன மனிதனால் ஏற்படும் கடலடி இரைச்சல்கள்.

ப்ரொபெல்லர்களை மாற்றியமைப்பது, சைலன்சர்கள் பொருத்தி வேலை செய்வது, கப்பல்களின் வேகத்தைக் குறைப்பது, சில ஒலிமிக்க கருவிகளுக்கு மாற்று கண்டுபிடிப்பது என்று தீர்வுகள் எல்லாமே எளியவைதான். ஆனால் செயல்படுத்துவதில் வழக்கமான தயக்கங்களும் பொருளாதாரச் சிக்கல்களும் அரசியல் குறுக்கீடுகளும் வந்துவிடுகின்றன.

உமணர்களின் உப்பு வண்டியுடைய சக்கரங்கள் உருளும் ஒலி கேட்டு, குருகுகள் பயந்துபோய் பறந்து ஒளிந்து கொண்டன” என்கிறது ஒரு நற்றிணைப் பாடல். ஒலி கேட்டால் விலங்குகள் பயப்படும் என்பது மனித இனத்துக்கு எப்போதோ தெரியும். ஆனால் ஏனோ நாம் இன்னும் காற்றுத் துப்பாக்கிகளைக் கடலுக்குள் இயக்குவதை நிறுத்திக்கொள்ளத் தயாரில்லை.

***

தரவுகள்

  1. The soundscape of Anthropocene ocean, Charles Duarte et al, 2021, Science.
  2. Noise in the sea and its impacts on marine organisms. Chao Peng et al, 2015.
  3. Widely used marine seismic survey air gun operations negatively impact zooplankton. Robert McCauley et al, 2017, Nature.
  4. Evidence that ship noise increases stress in right whales, Rosalind Rolland et al, 2012, Proceedings of the Royal Society.

நாராயணி சுப்ரமணியன்

கடல்வாழ் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.”நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” என்ற உயிரியல் நூலை எழுதியுள்ளார். தமிழில் கடல்சார், அறிவியல் பொருண்மைகளைக் கவிதைகளில் எழுதி வருபவர். விகடன் தடம், வாசகசாலை, அரூ இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. Email: nans.mythila@gmail.com

ஓவியம் – Katsushika Hokusai