Home Blog Page 52

பூனைக்குட்டியைக் கொஞ்சுகிறவள்

0

கார்த்திக் புகழேந்தி

கிருபா நீ முன்பொரு யுவதியைக் காதலித்துக் கொண்டிருந்தவன் என்று எனக்குச் சொன்ன அந்த இரவில்தான் உன்னை ரொம்பவும் பிடித்துப் போனது. நானே உன்னிடம் ஒவ்வொரு இழையாகக் கழன்று விழுந்து கொண்டிருந்தேன். நல்லவேளை நீயாகவே வந்து, ‘என் விரல்களைப் பற்றிக் கொள்ளட்டுமா’ என்று கேட்டு நம் உரையாடலின் ஆயுள்ரேகையை நீட்டிக்கத் தொடங்கிவிட்டாய்.

உண்மையைச் சொல்லவா.. நான் உன்னை அளவு கடந்து நேசிக்கும் அளவுக்கு உன்னைக் காயப்படுத்துகிறவளாகவும் எப்போதும் இருப்பேன். நீ என்னைச் சகித்துக் கொண்டுதான் ஆகவேண்டும்.. வேறு வழியில்லை உனக்கு. ஒருவேளை உனக்குத் தப்பிக்க வழி இருந்தால் இப்போதே அதற்கான பாதைகளைத் தேடிக்கொள். எனக்குத் தெரியும்… நீ அப்படிச் செய்கிறவன் இல்லை. உனக்கு அவ்வளவு தைரியமெல்லாம் கிடையாது. நீ நான் தேர்ந்தெடுத்திருக்கிற பூனைக்குட்டி. நிஜமாகவே சொல்கிறேன். எனக்குப் பூனைக் குட்டிகளைக் கண்டாலே பிடிக்காது. அதன் கழுத்தைக் கடித்து மென்று துப்புகிற கனவுகளில் இருந்து திடுக்கிட்டு விழித்து தண்ணீர் குடிக்க அலைபாய்கிறவள் நான்…”


“ஹேப்பி சில்ட்ரன்ஸ் டே”

“ஓவர்ங்க இதெல்லாம்…”

“ஹாஹா… எனக்காக இல்லாட்டியும் நேருவுக்காக அட்ஜெஸ்ட் பண்ணிக்கங்க”

“டூ மச்… பட் நல்லாதான் இருக்கு. நம்மளையும் குழந்தைன்னு சொல்ல ஆள் இருக்கே”

“ஆஹா… அப்போ நீங்க உண்மையிலே குழந்தை இல்லையா”

“போதும் ஆரம்பிக்காதீங்க”

“ஹாஹா… எனிவே ஹேர்ட்டி விஷ்ஷஸ் டு யூ பார்கவி”

மெலிதாகத் துவங்கிய அந்த மெஸெஞ்சர் உரையாடலின் வெப்பம் இரண்டாவது நாளின் மாலையிலே ஒரு ஜோடி காபி குவளைகளின் எதிரெதிர் புறத்தில் கொண்டுவந்து அமர்த்தியிருந்தது இருவரையும்.

விரல்களில் திட்டுத்திட்டாக க்ரே நிற நெயில்-பாலீஷ் இஷ்டமின்றி சுரண்டப்பட்டிருந்தது. அது புன்னகைக்க மறந்தவர்களின் விருப்பமான நிறம். யாரோ பூசும்போது நீயும் விரல்காட்டு என்றதும் நீட்டியிருக்கலாம். நிறையபேர் சூழ இருந்தும் தனிமையான நேரங்களைக் கடத்திக் கொண்டிருக்கும் பெண்ணாக இவள் இருக்கக்கூடும். அன்பின் பொருட்டு மற்றவர்களுக்காகச் செய்துகொள்கிற சமாதானங்களின் பேரில் வாழ்கிற மனம்.

பழைய மாடலினான பச்சை சிவப்பு நிறத் தொங்கும் கம்மல்கள். அம்மாவுடையதாக இருக்கலாம். வலது கையில் தங்கத்தினாலான இரண்டு வளையல்கள். இடதில் சில்வர் அனலாக் வாட்ச். அடர் நீலநிறத்தில் வெள்ளைப் புள்ளிகள் நிறைந்த குர்தி. சம்பந்தமில்லாத புடைப்பில் பர்ஸ். ஓப்போ போன், கட்டைக்கூந்தல், ஆளுமையான உடல்மொழி.

பெண்களில் நளினம் ஒரு வகை கிருபா, ஆளுமை இன்னொரு வகை என்பான் வருண். வருண் எனக்குத் தெரிந்து பெண்களைப் பற்றி அதிகம் கமெண்ட் அடிப்பவனில்லை. ஆனால், அவனுக்கு நிறைய தோழிகள் வாய்த்திருந்தார்கள். அதைக் குறித்தான அங்கதங்களைக்கூட அவன் மிக லாவகமாகக் கடந்து போகிறவனாக இருந்தான்.

“என்ன தைரியத்தில் வெளில மீட் பண்ணலாம்னீங்க?”

புரை ஏறியது எனக்கு. “அட நீங்க வேற, நான் சும்மா சாதாரணமா ஒரு காபி சாப்பிடலாமான்னு கேட்டா! நீங்க அட்ரஸ் அனுப்பி பிக்-அப் பண்ண வந்துடச் சொல்லிட்டீங்க. அட்ரஸ் பார்த்தா போலீஸ் குவாட்டர்ஸ். பேஸ்தடிச்சுடுச்சு. நிஜமாவே நீங்க போலீஸ் பேமிலியா?”

“சித்தியும், சித்தப்பாவும் போலீஸ். அப்பா டாக்டர். அம்மா ஹவுஸ் ஒயிப்… தம்பி தங்கச்சிங்க கூட இருக்கலாம்னு இங்க தங்கியிருக்கேன்.” ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திக் கொண்டே போனாள். அவனுக்கு யாரைக் குறித்தும் பெரிய அக்கறை ஏற்பட்டிருக்கவில்லை. ‘நீ கொஞ்சம் அழகாக இருக்கிறாய்! அதை உன் கண்களே சொல்கிறது. ஆனால், அதை உன்னிடம் முதல்நாளிலே இன்பாக்ஸில் சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டதே போதுமானது. இப்போதைக்கு எனக்கு காபியைச் சூடாகக் குடிக்க வேண்டும். அடுத்து உன்னோடு உரையாட வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். ஏ… அவஸ்தையே சாகடிக்காதே..

“உள்ள போலாமா…”

“ம்ம்…”

“உங்க கேள்வியை உங்ககிட்டே திரும்பிக் கேட்கிறேனு நினைச்சுக்காதீங்க. நீங்க என்ன தைரியத்தில் பீச் போகலாமான்னதும் ஓகே சொன்னீங்க”

“வீடு இங்கதானே… பக்கத்திலே… நினைச்சா நடந்தே பீச் வந்துடுவேன். பர்சனலி இங்க நான் எந்த அந்நியத்தன்மையும் உணர்ந்ததில்லை, ஸோ…” தோள்களைக் குறுக்கி வார்த்தைகளை முடிவில்லாமல் நிறுத்தினாள். வேகமாக வந்த கடற்காற்று அவளை லேசாகச் சிலிர்க்கச் செய்துவிட்டுப் போனது.

கடற்கரைகளோடு பர்ஸனல் கனெக்ட் வைத்துக் கொள்கிற பெண்கள் ஆபத்தானவர்கள். அவர்கள் பிரமாண்டங்களை அதன் கழுத்தைப் பிடித்து உலுக்கி, கீழே தள்ளி காலுக்கடியில் போட்டு மிதித்து விளையாடுகிறவர்கள். ஜாக்கிரதையாக இரு என்று வருண் காதுக்குள் ஏறி நின்று கூவினான்.

“நான் ஒரு சிகெரெட் எடுத்துக்கணும்”

“ஸ்யோர்”

அவள் அதை விரும்பவோ, வெறுக்கவோ இல்லை. திடீர் பதட்டத்தை வாரிச் சுருட்டி தனக்குள் ஒளித்து வைத்துக் கொள்பவளாகக் கச்சிதமாக நடித்தாள். வர்ரே வாஹ்.. நீ கமலினி முகர்ஜியை எல்லாம் சாப்பிட்டு விடுவாய்.
திசைகளெல்லாம் காற்றாய் மாறி சிகரெட்டைப் பற்றவைக்க முடியாமல் அல்லாட விட்டது. ஒன்று.., இரண்டு… பத்துப் பதினைந்து முறை முயன்றும் சிகரெட் பற்றிக் கொள்ளவே இல்லை. அவள் ஏளனமாக ஒரு புன்னகையை வீசினாள். இந்த முறை ஒரே சொடுக்கில் சிகரெட் முனை தீப்பற்றியது.

ஒருவழியாக நெடுந்தொலைவு மணலில் நடந்து வந்திருந்தோம். மெரினா கடற்கரை நட்சத்திர மோட்சங்களைச் சுவைத்துக் கொண்டிருந்த காதலர்கள் சகிதம் தன் வழக்கமான அமைதியோடிருந்தது.

“இப்படி உட்காரலாமா!”

இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டோம். கண்முன் கடல் விரிந்து நுரைத்திருக்க, தூரத்தில் தெரிந்த துறைமுக வெளிச்சத்தைப் பார்த்ததும் அவள் கண்கள் தீயாய் அலைபாய்ந்தது. மனதுக்குள் எண்ணற்ற ரகசியங்களைக் கொண்டவர்கள் தூரத்து வெளிச்சங்களின் மீது ஓர் அலாதி இன்பத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

நான் என்னைப் பற்றிச் சொல்லத் துவங்கினேன். இந்த ஊருக்கு வந்து சேர்ந்த்து முதல் எட்டாண்டு கால ஓட்டத்தையும், இடைப்பட்ட நாட்களில் கடந்து போனவர்களையும் விலாவரியாக விவரித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு வார்த்தையும் கீழே சிதறி விழுந்துவிடக் கூடாது என்பதுபோல அவ்வளவு தீர்க்கமாய்க் கேட்டுக் கொண்டிருந்தாள். உண்மையில் அவளது அந்த சித்திரம் என் ஆழ்மனத்தில் ஒரு பயத்தையும், நடுக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அதைத் துளியும் வெளிக்காட்டக் கூடாது என்கிற கர்வத்தில் நான் மூச்சுப்பிடிக்கப் பேசிக்கொண்டே இருந்தேன்.


“நீ பொய் கிருபா. அய்யோ! இன்னொரு தடவையும் தோற்றுப் போறதை என்னால கற்பனைகூட பண்ணிப் பார்க்க முடியலையே. தயவுசெஞ்சு என்ன இதோட விட்டுடு. இதுவரைக்கும் மனசார எந்த சந்தோஷத்தையும் நீ எனக்கு தந்ததே இல்லைல்ல. உன்னால அழுது, அழுது நான் இழந்தது தான் மிச்சம். ஒரு எறும்பை நசுக்கிக் கொல்ற மாதிரி தினம் தினம் என்னைக் கொல்ற நீ. உன்கிட்டக் கெஞ்சி கெஞ்சி, நான் ஒண்ணுமில்லாமபோய் உன் முன்னாடி நிக்கிறேன். ஆனா நீ..”

“லூசு மாதிரி பண்ணாத பார்கவி. நான் எதுவுமே பண்ணாம..”

“அதைத்தான் நானும் சொல்றேன் நீ எதுமே பண்ணல. எனக்காக எதுவுமே பண்ணல. எது பண்ணாலும் உன்னோட தேவைதான் உனக்கு முக்கியம். நீ நீ நீ.. உன்னோட வாழ்க்கை முழுசா நீ மட்டுமே தான் இருக்க. நான் இல்லவே இல்ல. என்னோட இடம்ன்னு ஒண்ணு உன் லைஃப்ல இருக்கா இல்லையான்னே தெரியாம உன் முன்னாடி தோத்துப்போய் நிக்கிறேன் நான்”

“படுத்தாதே.. வேலை இருக்குன்னு சொல்றது தப்பா. இன்னைக்கு நைட்டுக்குள்ள இஷ்யூ முடிச்சு அனுப்பியாகணும். தயவுசெஞ்சு புரிஞ்சுக்கோ. நான் அப்புறம் கூப்ட்றேன்.. வைக்கிறேன்”

பதினோறு மிஸ்டு கால்களுக்குப் பிறகு, மூன்றாவது ரிங்கில் அந்த அழைப்பை ஏற்க நேரும்போது கிட்டத்தட்ட மிருகமாகியிருந்தேன்.

“என்னடி உன் பிரச்சன…”

“எனக்கு நீ வேணும். எப்போ வர்ற..”

“பார்கவி, இன்னைக்கு என்னால வெளில நகரக்கூட முடியாது. நான் வேலைல இருக்கேன். கொஞ்சம் புரிஞ்சுக்க ப்ளீஸ்”

“நான் அதை எல்லாம் கேட்க வரல. எப்போ வர்றேன்னு சொல்லு”

“எட்டு மணிக்குள்ள முடிச்சுட்டு வந்துட்றேன். கேட் கிட்ட வந்து நில்லு. கால் பண்றேன்.”

உட்சபட்ச மன வக்கிரத்திலிருந்து உதிர்ந்துவிழும் கெட்டவார்த்தை ஒன்றால் என் மேலாளனைச் சபித்தேன். பார்க்கும் போதெல்லாம், ‘எப்போ சார் கல்யாணம்’ என்று கேட்கிறவன் எவனாவது இப்போது கண்ணில் பட்டால் அவன்மீது ஆக்ரோஷத்தோடு பாய்ந்து அவன் கழுத்தைக் குதற வேண்டும் போலிருந்தது. ச்சே.. என்ன வாழ்க்கை இது. காதலிப்பது என்பது இவ்வளவு கொடூரமாக நம்மை வதைக்கும் செயலா? இந்த மயிருக்கு அடிமையாகக் கிடந்து செத்துத் தொலைக்கலாம்.


~உன்னை நான் எவ்ளோ விரும்புறேன்னு உனக்குப் புரியாது. நீ இல்லைன்னா நான் ஒண்ணுமே இல்லை. ஏன்னா உன்னை அவ்ளோ லவ் பண்றேன். என்கூட இரு, எனக்கு டைம் கொடுன்னு கேட்கிறேன். அதுக்கும் என்னைக் கெஞ்ச வைக்கிற. உன் காலுக்குப் பின்னாடி நாய் மாதிரி சுத்தி சுத்தி வர்றேன்னு தானே என்னை நீ இவ்ளோ அவமானப்படுத்துற. இப்போ சொல்றேன் கிருபா நீ எனக்கு வேணாம். ~

~யாருமே இல்லாம நீதான் எல்லாமும்னு இருந்துட்டேன். நிஜமாவே நான் உன்னை எப்பவும் கஷ்டப்படுத்தனும்னே நினைச்சுட்டு இருக்க மாட்டேன். எனக்கு முழுசா மொத்தமா நீ வேணும்னுதான் இவ்ளோவும் பண்றேன். என்ன எங்கே எப்படி இதெல்லாம் உன்னை என்கிட்ட இருந்து விலக வைக்குதுன்னு சத்தியமா புரியலை. இந்தப் புறக்கணிப்பு, உன் போஸ்ட் கூட நான் பார்க்க முடியாம செட்டிங்ஸ் மாத்தி வச்சிருக்கப்ப ரொம்ப வலிக்குது. இந்த வலி என்னை என்னமோ செய்யுது. நிஜமா இன்னிக்கு என்னால எதுவுமே முடியலை.~

சோலிசுத்தம். இரண்டு தனித்தனி குறுஞ்செய்திகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வந்து மெஸெஞ்சர் பாப்-அப்பில் வட்டமடித்திருக்கிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை தானே என்கிற கவனத்தில், சில குறிப்புகளை எழுதுகிற அசட்டையில் கணினியில் அமர்ந்திருந்ததால் செல்போனைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டேன்.

பார்கவியின் இரண்டு அணுகுண்டுகள் வந்து என் வேளச்சேரி வீட்டின் மொட்டை மாடிக்குமேல் விழுந்திருக்கிறது.

இரண்டு தனித்தனி குறுஞ்செய்திகளையும் ஒன்றுக்கு இரண்டு தடவை வாசித்த பிறகுதான் விஷயம் புரிந்தது. முந்தையநாள் காலையில் அலுவலக கேபினில் எடுத்துக் கொண்ட செல்ஃபியை மெஸெஞ்சர் ஸ்டோரிஸில் வைத்திருந்தேன். சனிக்கிழமை மாலையில் வழக்கமாக சாப்பிடச் செல்லும் உணவகத்தில் பக்கம்பக்கமாக அமர்ந்திருக்கிறபோது, அந்த செல்பியை அவள் கண்களில் காண்பித்து விட்டேன்.

பப்ளிக் படம் தானே என்ற என் எண்ணத்தில் விழுந்தது வெடி. எங்கே எனக்குக் காட்டவேயில்லையே என்று தன் போனை இரண்டொருமுறை சரிபார்த்தாள். அப்போது அடிக்கத் தொடங்கிய கோடாங்கி வீட்டுக்குப் போன பிறகு நள்ளிரவில் திரும்ப அணு ஆயுதமாக உருவெடுத்திருக்கிறது. இருந்தும் இரண்டாவது செய்தியில் கொஞ்சம் வெப்பம் தணிந்திருக்கிறது. சோர்வினால் அவளாகவே கொஞ்சம் சமாதானமாகியிருக்கலாம். எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக்கொள்ளலாம் என்று கண்களை இறுக்கிக் கொண்டேன்.


“ஈவ்னிங் என்ன தோணுச்சு உனக்கு”

“29 வருட பிரம்மச்சரியமும் இதற்குத் தானே காத்துக்கிட்டு கிடந்துச்சு. எப்படி தூங்கினேன்னே தெரியாத அளவுக்குத் தூங்கினேன்”

“சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டா இப்படியே நிம்மதியும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமுமா முடியும்ல”

“என்ன எங்க கட்டிக்கப் போற”

“என்ன உளறிட்டு இருக்க”

“அது எப்ப என்ன கட்டிக்கப் போற. ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிடுச்சு”

“விடிஞ்சும் உன் போதை தெளியலைபோல”

“நேத்து போதைல விழுந்தது நீதாண்டி எர்ம”

“என்னோடு நீயிருந்தால்… பாட்டு கேட்டுக்கிட்டு இருக்கேன்”

“அடடா அடடா”

“நல்ல தலைப்பு கவிதை தொகுப்புக்கு வச்சிக்கலாம் நீ”

“நான் ஏன் கவிதை எழுதப் போறேன்”

“அதான நீ எனக்குன்னா எங்க எழுதுவ. இதே மத்தவங்களுக்குன்னா…”

“ஆரம்பிக்காத ப்ளீஸ்”

“நான் ஒண்ணும் சொல்லல இப்போ. எனக்கு உன்கிட்ட தேவையானது இதுமட்டும் தான். அவ்ளோ லவ், வெறி, பைத்தியம். You’re my destiny.”

இதற்குமேலே பேச்சை வளர்த்தால் அது ஏழரையில் கொண்டுபோய் முடியக்கூடும் என்பதால் இறுக்கி அணைப்பதுபோல இரண்டு ஜிஃப் பைல்களை அனுப்பி வைத்தேன். அப்புறம் படுக்கையில் இருக்கும் ஜோடிகளின் முத்தம் ஒன்று. இன்னொன்று நேரடியாக உதட்டில்.

“சீக்கிரம் வீட்ல பேசவும் ரெடியாகு. நான் பத்து மணிக்கு மேல கால் பண்றேன்.”

நல்ல மூடைக் கெடுக்க விரும்பாதவளாக அவளே இந்தமுறை இரக்கத்தோடு நடந்து கொண்டாள். அதிகாலை மூன்று பத்துக்குக் கடைசியாக அனுப்பின ஜிஃப் பைலில் இருந்த ஆண், அந்தப் பெண்ணின் மேல் உதட்டிலிருந்து முடிந்தமட்டும் மென்மையாக மகரந்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தான்.

என்ன கருமம் இது எவனோ எவளையோ முத்தம் கொடுக்குறதைக் காட்டித்தான் நான் இவளைச் சமாதானப்படுத்த முடியனுமா? அல்லது நேற்றைக்கு சாயங்காலத்தில் இதே அறையில் நடந்த களியாட்டத்தின்போது, இருளில் சூடாகிப் பருத்து நின்ற அவள் இடது மாரினிலிட்ட முத்தங்கள் அவளைக் கிளர்ச்சி கொள்ளச் செய்திருக்குமா?


நாங்கள் அடிக்கடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தேநீர் விடுதியில் சந்தித்துக் கொண்டோம். வீடு திரும்புகிறபோது, இன்னுமொரு சுற்று ஊரை வளைய வந்த பிறகே குவாட்டர்ஸை அடைந்தோம். மஞ்சள் பழுப்பு சோடியம் விளக்கின் வெளிச்சத்தில் ஊறிய சாலைகளில் இருச்சக்கர வாகனத்தின் மிதமான வேகத்தில் நகரும் என்னை பில்லியனில் இருபக்கம் காலிட்டு அமர்ந்தபடி, மார்பகங்கள் அழுந்த முதுகில் சாய்ந்துகொண்டு, வலது காதுக்குப் பக்கமாக தன் கன்னத்தை உராய்ந்தபடியும், வெளிச்சங்கள் நிழலாகிக் கரையும்போது கழுத்தின் பின்புறத்தை நுனி நாவால் ஈரப்படுத்தியும் சூடேற்றக் கற்றுக் கொண்டாள்.

அவள் அப்படிச் செய்யும்போது இன்னும் இன்னும் என்று இதயம் ஏங்கும். பெட்ரோல் டேங்குக்கும் தொடைக்கும் நடுவே கதகதப்பு கூடும். தோள்களில் வளைந்து கிடக்கும் இடது புறங்கையை முத்தமிட்டு வாளிப்பேன். கொஞ்சல் கடிகளும் அரங்கேறும். கிடைத்த இடைவெளியில் ‘இதுபார் கன்னத்தில் முத்தமொன்று’ எனும்போது.. ‘ஹே ரோட்ல போய்ட்டு இருக்கோம் எர்ம’ என்று தோளில் ஓர் அடிவிழும்.

பார்கவிக்கு ஏற்பட்டிருந்த பழைய சிக்கல்களுக்கான காரணங்கள் பற்றியெல்லாம் அவள் என்னிடம் சொல்வதற்கு வாயெழும்போதெல்லாம் நான் அதைக் காதுகொடுத்துக் கேட்டதேயில்லை. முதல் சந்திப்பிலே அவள் மேலோட்டமாகச் சில விஷயங்களைக் கோடிட்டுக் காட்டியிருந்தாள். இனியும் அதுபற்றித் தெரிந்துகொள்வதில் எனக்கு எந்த சிரத்தையும் இல்லை.

நான் உன்னை நேசிக்கிறேன். என்னுடைய வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நான் நகர்வதற்கு நீ காரணமானவளாக இருப்பேன் என்று என் உள்மனம் சொல்கிறது. நாம் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்வோமா என்ற கேள்வியை அன்றைக்கு மாலையில் கேட்டபோதே நம்முடைய பழைய கதைகள் அத்தனையும் கடற்காற்றோடு கரைந்து போனது.

முதல்முறையாக நீ என்னையும் நான் உன்னையும் காதலிப்பது குறித்து, நம் இருவருக்கும் நெருக்கமான பரஸ்பர நண்பர்களிடம் சொன்னபோது, அவர்கள் குறைந்தபட்ச மகிழ்ச்சியைக் கூட வெளிக்காட்டாத வகையில்தான் புன்முறுவல் செய்தார்கள். நான் அவர்கள் கண்களை ஊடுருவிப் பார்த்தேன். அதில் தூரத்து பில்டிங்கின் உச்சியில் மிளிரும் “ஜீஸ்ஸ் ஸேவ் அஸ்” என்கிற நியான் விளக்கு வாசகம் மின்னி மின்னி மறைந்தது. அவ்வளவே!


இது வேலைக்கே ஆகாது. இவர்களிடம் கேட்டுவிட்டுத்தான் மூன்று பக்கங்களுக்கான அந்த தயாரிப்பாளரின் நேர்காணலை எடுத்துக் கொடுத்தேன். ஷூட்டிங் வராமல், பாத்ரூமிற்குள் வைத்து டப்பிங் செய்துகொடுத்து, தான் செய்கிற தொழிலை இவ்வளவு இழிவாகக் கையாண்ட நடிகனை, அவனை வைத்துப் படம் எடுத்த இயக்குநரும், தயாரிப்பாளரும் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். அந்த வாரமே வெளிவந்திருந்தால் ஹாட்-டாக்காக (HOT TALK) மாறியிருக்கும்.

‘அடுத்த வாரம் போட்றலாம் கிருபா’ என்று பாலிவுட் நடிகையின் சென்னை பிரவேசத்தின் போட்டோ ஷூட்டை முன்னிலைப்படுத்தியது எல்லாம் அலுவலக லாபி சக்ரவர்த்தினிகளின் விஷமம்தான். இஷ்யூவில் பேட்டி வராததைப் பார்த்த தயாரிப்பாளர் நேராக அதே கண்டன்டோடு சேனல்கள் வாசலில் நின்றுவிட்டார். மொத்த உழைப்பும் விழலுக்கு இறைத்த நீர். இவர்களது மெத்தனத்தைக் குறித்த கடுப்பில் காச் மூச்சென்று கொலீகை வேறு பிடித்து ஒரு ஏறு ஏறிவிட்டேன்.

டீக்கடை வாசலில் நின்றபடி இரண்டாவது சிகரெட்டைப் புகைத்துக் கொண்டிருந்தபோது, பார்கவி மெஸெஞ்சரில் வட்டமிட்டாள். திறந்து பார்த்தேன். இரவு உடையில் கட்டிலில் சாய்ந்தபடி அமர்ந்து சிரிக்கிற புகைப்படம். பதிலுக்கு இரு ஹார்டின் ஸ்மைலியை அனுப்பி வைத்தேன்.

“பிஸியா?”

“லைட்டா”

“ம்ம் சரி”

அரைமணி நேரம் கழிந்தபிறகு ஆசுவாசமாக ஃபேஸ்புக்கைத் திறந்தேன். நண்பர்கள் குழுவில் அந்த நடிகனைக் குறித்து சுடச்சுட வந்திருந்த மீம்ஸ்களைப் பகிர்ந்து களேபரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

‘ஓத்தா… இவன்லாம் எவ்ளோ கொழுப்பிருந்தா பாத்ரூம்ல வச்சி ரெக்கார்டிங் பண்ணிக் குடுத்திருப்பான்’ என்று காரணமில்லாமல் மனசார வைது ஒரு மெஸேஜைத் தட்டிவிட்டேன்.

அதே நேரத்தில் பார்கவியிடம் இருந்தும் ஒரு மெஸேஜ் எட்டிப் பார்த்தது.

“ஆன்லைன்ல இருப்ப, ஆனா என்கிட்ட பேசதான் உனக்கு டைம் இல்லல்ல”

“எம்மா தாயே, இப்போதான் வேலை முடிச்சுட்டு போனைக் கையில் எடுக்கேன் நீ மெஸேஜ் பண்ற”

“சும்மா நடிக்காத. சரி சொல்லு சாயங்காலம் என்ன ப்ளான்?”

“இன்னும் முடிவாகலை”

“வெளில போறமா?”

“தெரியலை பாப்போம்”

“இப்ப ஏன் இப்படி கோவமா பேசிட்டு இருக்க”

“சரிமா சொல்லு. ஆறரைக்கு ரெடியா இரு. வர்றேன்”

“ஒண்ணும் தேவையில்ல. உனக்கு எது சந்தோசமோ அதையே போய் பண்ணு. நான் ஒருத்தி இருகேன்னு யோசிச்சுக்கூட பார்த்துடாத”

இணைப்பு துண்டிக்கப்பட்டது. அடுத்த மூன்றாவது வினாடியில் அவளிடமிருந்தே அழைப்பு வருமென்று தெரியும். போன் இணைப்பைத் துண்டித்த உடன் மனம் மாறும் பெண்களைக் குறித்து, இந்தப் பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று யாராவது தத்துவ விசாரணை செய்தால் தேவலாம். பெண்கள் என்று பன்மையில் குறிப்பிட்டது மட்டும் அவள் காதில் விழுந்தால், ஓஹோ அப்போ சார்க்கு இன்னும் எத்தனை பெண்களைத் தெரியும் என்று வைத்து செய்ய ஆரம்பித்துவிடலாம்.

“கிளம்பி இருக்கேன். ஆறரைக்கு வந்துட்டு கூப்பிடு”

டொக்.


வீட்டில் யாருமில்லை என்கிற அரூப தைரியம் எங்களை ஒன்று சேர்த்திருந்தது. உடைகளைக் களைவதற்கு முன்பாக அவளைத் தொடுவதை அனுமதிக்க மாட்டாள். உள்ளாடைகள் வரைக்கும் நீக்கிவிட்ட பிறகே நெருங்கி வருவதில் ஒரு சுகமும் சுதந்திரமும் இருக்கலாம். இருந்தும் நான் பலதடவை பின்னால் இருந்து அணைத்து, கைகளைக் கொண்டு அவள் முதுகுப் பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தத் துணிந்ததுண்டு.
அதைச் சம்மதிக்காதது போல உள்ளூர விரும்புகிறவளை ரசிப்பேன். முதல் கவனம் இடதுபக்கத்திலே குவியுமென்று அவளுக்குத் தெரியும். உதடு குவித்து சூட்டோடு பருகத் தலைப்படுவேன் என்பதற்காகவே பின்னோக்கி வளைந்து வாய் புகுப்பாள்.

எதையும் கீழிருந்து தொடங்கு என்ற கட்டளைகள் தேவனிட்டது போலச் செவிசாய்க்கப் பழகிவிட்டேன். உள்ளங்கால் பருவத்தில் துவங்கி, அல்குல் பெருகி நீர்மையாகும் தருணம் வரை அந்தக் காலடியிலே கிடப்பேன். இருவருமே மூச்சிழந்து போவதுவரை தீவிரமாய் ஈடுபட்டு, உலகின் எல்லா ஞானப் புயல்களில் இருந்தும் பாதுகாக்கப்பட்டு, உடலெங்கும் பிரகாசம் பீறிட, சமாதானமும் சத்தியம் நிறைந்த வார்த்தைகள் ஒருவருக்கொருவர் உள்ளிறங்க, ‘பூக்கள் நிறைந்த கிளைகளுக்கு நடுவில் இருக்கும் பறவையைப் போல உன்னை நேசிக்கிற கடவுளின் பாதுகாப்பில் நீ இளைப்பாறுவாய்’ என்று தேவன் சொன்ன வாக்கியங்களில் இருவரும் களித்திருந்தோம்.

முயக்கம் முடியும்வரை வாய்விட்டு பிதற்றுகிற ஆங்காரங்கள் தீரும் மட்டும் கையாளப்படும் உடல்கள். இறுமாப்புடன் நீ எனக்குத்தான் என்று காதைக் கவ்வியபடி கூச்சலிடுவாள். உழைந்து கலைவாள். இரண்டாம் மூன்றாம் முறைகளுக்குப் பிறகு கண்கள் சொக்கி மயங்கிச் சரியத் துவங்கும்போது அவள் விரல்கள் என் மார்புக் காம்புகளை நீவிக்கொண்டிருக்கும். பிறகு ரகசியமாய் நீ எனக்குப் பத்தவே இல்லை என்று கொஞ்சுவாள். அப்போது பார்கவியின் கண்களைப் பார்ப்பதை நான் முற்றிலும் தவிர்த்து விடுவேன். அவள் என்னை அவ்வளவு ஆதுரமாகக் கொஞ்சுவது ஒரு பூனையை மடியில் கிடத்திக் கொஞ்சுவது போலத் தோன்றும்.

பூனையாக இருப்பது சந்தேகத்திற்கு இடமானது. பூனையுமே சந்தேகத்தின் குறியீடுதான். மெஸெஞ்சர் குறுஞ்செய்தி அந்த நேரத்தில் ‘டிங்’ என்று சத்தமிட்டபோது, நான் வலித்து அவள் கண்களைப் பார்த்தேன் அதில் இருந்த தீவிரம் ஒரு பூனையைக் கொலைசெய்யப் போகும் நேரத்திற்குச் சமமானது என்பேன்.


இந்தமுறை என்னால் தவிர்க்கவே முடியாமல் போனது. பார்கவி தன்னுடைய பழைய கதைகளின் தோல்விகரமான முடிவுகளைக் குறித்து மெஸெஞ்சரில் துண்டு துண்டாக விவரித்துக் கொண்டிருந்தாள். பருவத்தில் காதலாகத் தொடங்கியது முதல் தீர்ப்பின் நகலைக் கையில் பெற்றது வரை, இரண்டுநாள் முன்பு, அவளை யாரோ சமாதானம் செய்து திரும்ப அழைத்துப் போவதாக கனவுகூட வந்ததாகச் சொன்னாள். என்னைத் தனியாக நீ விட்டுவிடுவதால் தான் இப்படி எல்லாம் கனவு வருகிறது என்றாள். நான் மீண்டும் தனித்திருக்கிற உணர்வுகளால் சூழப்பட்டிருக்கிறேன் என்றாள். உன்மீது நான் காட்டுகிற அன்பில் கொஞ்சமாவது நீ திருப்பிக் காட்டியிருந்தால் இப்படியெல்லாம் தோன்றியே இருக்காது என்றாள்..

அவள் சொல்லிக் கொண்டே இருந்த நேரத்தில், அலுவலக மேசையின் முன்னால் உள்ள எனது சுழலிருக்கையில் நான் கொஞ்சம் திடகாத்திரமாக நிமிர்ந்து அமர்ந்தேன். ஒரு நீண்ட கட்டுரையைத் தட்டச்சு செய்வதற்கான உடல் சமிக்ஞை அது.

“பார்கவி உன்னுடைய தலைமுறையில் உன்னுடைய தாத்தா காலத்திலிருந்து படித்த பட்டதாரிகளைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவள் நீ. வசதி வாய்ப்புகளிலும் தன்னிறைவான நிலையை அடைந்தவள். நான் எனது தலைமுறையிலே முதன்முதலாக ஊரைவிட்டு வெளியேறிவந்து இந்த நகரத்தில் எழுந்து நிற்கப் போராடிக் கொண்டிருப்பவன். என்னுடைய சந்ததிகளின் முதல் துளி ஈரம் நான். பொய்த்துப் போகிற மழையைப்போல இல்லாமல் என்னுடைய வற்றி வறண்ட நதிகளுக்காக வேண்டி, என்னுடைய ஊரின் மலையையாவது நான் நனைவிக்க வேண்டும். ஒருசொட்டு ஈரத்தைப் பற்றி எழும் விதைகளுக்காக நான் நிச்சயம் சூல்கொண்டே ஆகவேண்டும். அப்படிச் சூல்கொண்டு எழுந்து நிற்பதற்கு எனக்குக் கிடைத்த ஒரே பிடிதரம் என்னுடைய வேலை. ஆகவே உன்னைக் காட்டிலும் அதிகம் இந்த வேலையை நான் பன்மடங்கு நேசிக்கிறேன்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால் என்னுடைய வாழ்வில் நீ எவ்வளவு முக்கியம் என்பதை நான் மனப்பூர்வமாக அறிவேன். என்னுடைய காதலின் மகத்துவத்தைப் பெரிதாக்கிக் காட்டும் தேவையை இட்டு நிரப்பாமலே நீ எனக்குக் கிடைத்திருக்கிறாய். ஆனாலும் உன்னை உன் மனக் காயங்களில் இருந்து விடுவித்து, நீ அனுபவித்த துன்பங்களில் இருந்து உன்னை சொஸ்தப்படுத்துகிற ஓர் இலக்கை நீயாகவே தொடர்ந்து எனக்கு நிர்ணயித்துக் கொண்டே இருப்பதை ஏனோ நான் விரும்ப மறுக்கிறேன்.

ஒருவேளை எனக்கு நீ நிர்ணயிப்பதுபோல, என்னிடத்தில் உனக்கு எந்த இலக்கும் இல்லை என்று நம்புகிறேன். அதனாலே நீ கொட்டிக் குவிக்கும் அன்பு எனக்குப் போதுமானதாய் இருக்கிறது. அதில் திளைத்துக் கொண்டே பரிபூரணமடைகிறேன். அந்த பரிபூரணத்தை நீ அடையாதது வேதனையாக எனக்குள் மிஞ்சுகிறது. ஒருவேளை நான் உன்னுடன் செலவழிக்கிற நேரங்கள் உனக்குப் போதவே போதாது என்று நம்பச் செய்கிற உன் கடந்த காலத்துக்குள் நீ சிக்கிக் கொண்டிருப்பதாய் நான் பிரமையில் இருக்கிறேனா என்றுகூட தெரியவில்லை.

அப்படி ஒரு சுழலுக்குள் நீ சிக்கியிருந்தால் உன்னை அதிலிருந்து கைப்பிடித்துத் தூக்குகிறவனாக நான் இருப்பேன். ஆனாலும் எழுந்து நடக்க வேண்டிய தேவையை நீதான் உருவாக்க வேண்டும். அதுமட்டும்தான் உன்னை எல்லா பலவீனங்களில் இருந்தும், உன் கொடிய கனவுகளில் இருந்தும் காப்பாற்றும்.

கூடவே, நம்முடைய அன்பில் பூர்த்தியடையாமல் நாம் சண்டையிடவில்லை. நம்முடைய விலகல்களும் சண்டைகளும்கூட என்மீது உனக்கிருக்கும் பாதுகாப்புக் குறையுணர்வுகள் தான் காரணம் என்று அஞ்சுகிறேன். யாரோ வந்து உன்னைத் தூக்கிக்கொண்டு போவதும், எங்கோ யாருடனோ உனக்குத் தெரியாமல் நான் குலவிக் கொண்டிருப்பதுவுமாக உனக்குள் ஏற்படும் குறையுணர்வை குப்பைகளைக் கொஞ்சம் கைவிடேன்.

ரொம்பவும் மென்மையாக எழுத நினைத்தேன். இவ்வளவு முரட்டுத்தனமாக உன்னோடு உரையாட வேண்டியிருக்கும் என்று நான் கற்பனைகூட செய்தது இல்லை. என்போல் கிராமத்துப் பின்புலத்தில் இருந்து வந்தவர்களுக்கேயான இயல்பான தாழ்வுமனப்பான்மை என்னை உழற்றியடிக்கிறது. எங்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை என்கிற இறைஞ்சும் சொற்களையும் கூடவே முதுகிலேற்றி அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் நான் அந்த மூட்டையைக் கடாசிவிட்டேன். யாரையும் சார்ந்து நிற்காத கால்களுடன் இந்த நகரில் அலைந்து பழகிவிட்டேன். அது உன்னையும் அந்த எல்லையிலே வைத்து அளவிடுகிறது.

எல்லா பாவங்களையும் செய்துவிட்டு, இன்னொருவர் ரத்தத்தால் அதைக் கழுவக் கற்றுக்கொடுத்து விட்டார்கள். பிரியமுள்ள பார்கவி, காயங்களின் குருதி உன் உள்ளத்திலிருந்து விடாமல் கசிந்து கொண்டிருப்பதை நான் கேட்டறியாமல் என்னைக் குறித்தே இவ்வளவு காலமும் பிரஸ்தாபித்துக் கொண்டு திரிந்திருக்கிறேன். என்னை மன்னி. இனி உன் காயங்களுக்கு நான் மருந்திடுகிறவனாக அல்ல உன் மருந்தாகவே ஆவேன்..” என்று எழுதி முடித்த நொடி நேரத்தில் பேட்டரி லோவ் காட்டிக் கொண்டிருந்த மொபைல் அப்படியே அணைந்து மொத்தச் செய்தியும் அழிந்துபோனது.


“என்ன தான்டா பிரச்னை உங்களுக்குள்ள?”

“……….”

“சொன்னாதானே தெரியும். நல்லா இருக்கீங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தா திடீர் திடீர்ன்னு ஆரம்பிக்கிறீங்க?”

பார்கவிக்கும் எனக்கும் முற்றுகிற சின்னச் சின்ன சண்டைகளில் அநேகமாக நான் அவளுக்குத் தருகிற தண்டனை அவளை ஃபேஸ்புக்கில் ப்ளாக் செய்வதும், போனை எடுக்காமல் தவிர்ப்பதும்தான். அந்தச் சிலமணி நேர அல்லது மூன்று நாட்கள் வரை நீளும் இடைவெளிக்குள் அவள் வல்லூறு தூக்கிச்செல்லக் காத்திருக்கும் சோமாலியா குழந்தையைப்போல மனத்தளவிலும், உடலளவிலும் சிதைவுற்றுப் போயிருப்பாள். பிறகு, போன் எடுக்காத பிரச்சனை என் நண்பர்களின் காதுக்குச் சென்றுசேரும்போது இதுமாதிரியான விசாரணைகள் தொடங்கும். அன்றைக்கு மாலையிலே கூப்பிட்டு வைத்து அர்ச்சனைகளை ஆரம்பிப்பார்கள். நான் வழக்கம்போல ‘இவ எனக்கு வேண்டாம். இவளால என் நிம்மதியே போயிடுச்சு’ என்பேன். பார்கவி ஆத்திரமடைந்து கத்துவாள். கண்ணீர் முட்டிக்கொண்டு வரும். நேராகக் கிட்டவந்து, “நீ என்னடா என்னை வேண்டாம்ன்னு சொல்றது. நான் சொல்றேன் எனக்கு நீ வேண்டாம் போடா” என்பாள். உட்சபட்ச ஈகோவும் கடல்போலக் கொந்தளிக்கும். திரும்பத் திரும்ப “வேண்டாம் போடா! நீ வேண்டாம் போடா… நீ வேண்டாம் போடா..!” என்று சொல்லிக் கொண்டே இருப்பாள்.

ஏதோ ஒரு வினாடியில் அவள் கண்களை நான் சந்தித்துவிடும்போது, பார்கவி என்று அவள் கைகளைப் பிடித்து மண்டியிட்டுவேன்.

தீர்ந்தது கதை.

மீண்டும் புதிதாய்ப் பிறந்தோம் என்பதுபோல காதல் வழிந்து கரைந்தோடத் துவங்கும் சோடியம் விளக்குச் சாலைகளில்… ஒவ்வொரு முறையும் பூனைக் குட்டியாக மாறுவதும், பிறகு ரத்தத்தால் கழுவப்படுவதுமென நிகழும் இந்த விளையாட்டை இருவருமே நிறுத்திக் கொள்வது என்று முடிவெடுத்த ஒரு நல்ல நாளில் உடல்கள் தழுவிக்கொண்டு கிடந்த நேரத்தில் மெஸெஞ்சர் ‘டிங்’ என்று சத்தமிட்டது. நான் சட்டென்று அவள் கண்களைப் பார்த்தேன் ஒரு பூனையைக் கொலை செய்யப் போகும் அதே தீவிரம்.

மகனே! சாகும் வரைக்கும் உனக்குச் சங்குதான்டா!

***

கார்த்திக் புகழேந்தி

பூர்வீகம் நெல்லை. தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். மூன்று சிறுகதைத் தொகுதிகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. தொடர்புக்கு -writerpugal@gmail.com

ஓவியம் – Katsushika Hokusai

கடவுளாலும் கைவிடப்பட்ட ஆசீர்வாதம் பெற்றவர்கள்.

0

ரவிசுப்பிரமணியன்


  • கூடு திரும்புதல் எளிதன்று” – தங்கம் மூர்த்தியின் கவிதைத் தொகுதிக்கான மதிப்புரை

இரண்டு முகக்கவசங்களை
அணிந்தே செல்கிறாய்
தோலில் ஒன்று
துணியில் ஒன்றென.

வெட்டுக்காய்களை மாற்றி மாற்றி வைத்து காலம் ஆடும் விளையாட்டை, மனிதனின் நிரந்தர குணாம்சத்தோடு இப்படி எளிமையாய் கவிதையில் படம் பிடிக்கும் தங்கம் மூர்த்தி பிரபலமான கல்விப்புல நிறுவனத்தின் நிறுவனர். எழுதியவர்கள் பிரபலமான காலம் போய் பிரபலமானவர்கள் எல்லாம் எழுதுகிற காலத்தில் தன் கவிதைகளால் ஊர்ஜிதமாக தன்னை ஸ்தாபித்துக் கொண்டவர்.

நடைபாதையில் கிடந்த சிறு மலரொன்றை
மிதிப்படக் கூடாதென்று கையிலெடுத்துப் போன குழந்தையிடத்தில்
தன் வாசம் முழுவதையும் பரவிட்டது மலர்.

கவிதைகளில் மட்டும் இப்படி அர்த்தம் ததும்பும் சுகந்தம் பரவவிடுபவர் அல்ல இவர். தன் வாழ்வின் செயல்பாடுகளாலும் கவிதைகளை எழுதிப் பார்ப்பவர். இலக்கியம் பற்றி எழுதுவதும் பேசுவதும் மட்டுமின்றி புதிய இலக்கிய முயற்சிகளுக்கு, இலக்கியவாதிகளுக்கு, தன் பேச்சுத் திறத்தால் தமிழைப் பரப்புபவர்களுக்கு, கல்வியாளர்களுக்கு, மாணவ சமூகத்துக்கு, புதுமையான ஆக்கப்பூர்வ கற்பனைக் கண்டுபிடிப்புகளுக்கு அவர் எவ்வித உற்சாகத்தை, உதவிகளை எல்லாம் வெளியே தெரியாமல் செய்து வருகிறார் என்பதை நான் ஓரளவு அறிவேன். வார்த்தையில் வசப்பட்டு விடுவது மட்டுமா கவிதை.

எம்.வி. வெங்கட்ராமின் நூற்றாண்டு இது. அவரது மொத்த கதைகளையும் தொகுக்கும் வேலையை நான் செய்து வருகிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் புத்தகம் வந்துவிடும். இரண்டரை ஆண்டுகளுக்கு முன் இந்தப் பணியில் ஈடுபடத் துவங்கிய என் கையில் எந்த பணமும் இல்லை. கதைகள் இருக்கும் ஊர்களைத் தேடி அந்த அந்த ஊருக்குப் போகும்போது அங்கிருக்கும் அந்த உள்ளூர் நண்பர்கள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர், அதே பல்கலைக்கழகத்தின் இலக்கியதுறை ஆசிரியர் காமராஜ் உட்பட எங்களுக்கு தங்குமிடம், சாப்பாடு, வாகன வசதிகள் போன்று ஊர்கள் தோறும் சிலர் செய்து தந்த உதவிகளை என்னால் மறக்க இயலாதது.

புதுக்கோட்டை ஞானாலயா நூலகத்தில் இருந்த சில மூலக்கதைகளுக்காக நானும் இந்த தொகுப்பு பணியில் என்னோடு உதவியாக இருந்த பேரா. கல்யாணராமன், ஆய்வு மாணவர் தனசேகர் ஆகியோரோடு ஐந்து நாட்கள் புதுக்கோட்டையில் தங்கியிருந்து தேடி நகல் எடுக்க வேண்டிய சூழல். என்ன செய்வது என்று தவித்த போது தங்கம் மூர்த்தி தானாக முன்வந்து வழக்கம் போல் நேசக்கரம் நீட்டினார். நவீன இலக்கியத்துக்கான ஒரு தமிழ்ப்பணியை நீங்கள் செய்கிறீர்கள். நான் உங்களுக்கு எதும் செய்யவில்லை. அந்த பணிக்கான செலவில் என்னாலியன்றதைச் செய்வது என் இலக்கியக் கடமை என்று ஐந்து நாட்கள் எங்கள் மூவருக்குமான எல்லா செலவைகளையும் பார்த்துக் கொண்டார். கிட்டத்தட்ட கணக்கு வழக்கு தெரியாத என் கணக்குப்படி 45,000-க்கு மேல் செலவு செய்திருப்பார். இதை பணமிருக்கும் யாரும் எளிதாய் செய்துவிடலாம் தான். ஆனால் மூர்த்தி கவியல்லவா. அந்தக் கவிமனசு அதோடு நிற்குமா. மிகவும் பரபரப்பான வேலைகளுக்கு மத்தியில் நாங்கள் இருக்கும் நூலகத்துக்கு அவரால் முடிந்த இரண்டு நாட்கள் மதிய உணவை கட்டிக்கொண்டு வந்து எங்களுக்குப் பரிமாறுகிறார். ஊர் திரும்ப விடுதி வாசலுக்கு வருகிறோம். அவர் காரில் வந்து எங்கள் மூவருக்கும் பெரிய கட்டை பை நிறைய பழங்கள், கேக்குகள், ஸ்வீட்ஸ் என்று தூக்க முடியாத அளவுக்குக் கொடுத்து எங்களை வணங்கி வழியனுப்பிச் செல்கிறார். அது வெறும் தின்பண்டங்களா, பொருள்களா, உபசரிப்பா, மூர்த்தியின் மனசு அல்லவா. அலங்கார வித்தாரமாய் ஊருக்கு உபதேசமாய் மேடையில் ஏதேதோ முழங்கிவிட்டு அடுத்த லாபத்துக்கு என்ன காரியம் செய்யலாம் என்று மட்டுமே பார்க்கப் போய்விடும் சராசரி பிரகிருதி அல்ல மூர்த்தி. அதனால் தான் இப்படி ஒரு கவிதையை அவரால் எழுத முடிகிறது.

யாரோ ஒருவரின் துயரத்தை விரட்டலாம்
வீணையின் நரம்புகள்

யாரோ ஒருவரின் தற்கொலையைத் தடுக்கலாம்
சில வரிகள்

யாரோ ஒருவரின் தனிமையை தகர்க்கலாம்
வந்தமரும் சில குருவிகள்

யாரோ ஒருவரின் தைரியத்தை வளர்க்கலாம்
நண்பனின் சில சொற்கள்

யாரோ ஒருவரின் கண்களை நனைக்கலாம்
ஸ்வர்ணலதாவின் போறாளே பொன்னுத்தாயி

உங்களுக்குள்தான் ஒளிந்திருக்கிறார்
அந்த யாரோ ஒருவர்

என்று கவிதையை முடிக்கிறார். எதையும் முதலில் உன்னிலிருந்து துவங்கு என்கிறார் விவேகானந்தர். அப்படிச் சொல்பவரே செயலாளராகவும் வாழும் ஒருவரால் தான் இப்படி எழுத முடியும்.

உணர்வுகளில் மட்டுமல்ல சுயமுகம் மாறி நிற்கும் ஊர்களைப் பற்றியும் விசனப்பட்டு அவர் எழுதியுள்ள இந்தக் கவிதை – எவ்வளவு எல்லாம் நாம் இழந்து போனோம் என்று பட்டியலிட்டு ஏங்க வைக்கிறது. மரங்களாலும் வயல்களாலும் சூழப்பட்ட எங்கள் ஊர் வெறும் ஜிகினாக்களாலான அலங்கார பாலைவனம் போல் இன்று காட்சியளிகிறது. மாலை நேரங்களிலும் இரவுகளிலும் ஆன்மா துலங்க தெரிந்த எங்கள் ஊர் கரகாட்ட கலைஞர்களின் மினுமினுக்கும் பளபள உடைகள் ஊள்ளீடற்ற வெற்று ஹேங்கரில் ஆடுவது போல் ஆடிக்கொண்டிருக்கிறது. எதைக் கொடுத்து நாம் எதை வாங்குகிறோம். அல்லது எதையெல்லாம் வாங்க எது எதையெல்லாம் மதிப்பறியாது கொடுத்து நிர்கதியாக நிற்கிறோம் என்று எத்தனையோ கேள்விகளை எழுப்புகிறது இந்தக் கவிதை. எதையோ ஒன்றைச் சுட்டி சொல்லாத வேறொன்றை நோக்கி நகர்த்தி உங்களை அல்லாட வைக்கும் வித்தையல்லவா கவிதை.

கவிஞனும் பைத்தியமும் ஒன்று என்கிறார்கள் மனோதத்வ வல்லுனர்கள். மூர்த்தி ஒரு கவிதையில் இப்படி எழுதுகிறார்.

நானொரு புத்தகம்
அதிலும் கவிதை புத்தகம்
நீ அதை இன்னும் தப்பு தப்பாய் வாசிக்கிறாய்

நானே லூசு. அதிலும் கவிதை எழுதும் லூசு. அப்பறம் நான் எழுதுவது எப்படி இருக்கும். அதையும் நீ தப்பும் தவறுமாய் வாசித்தால் விளங்குமா என்று கேட்கிறார்.

நான் எப்படிப்பட்ட ஒரு அதிர்ஷ்ட்ட கட்டை தெரியுமா என்று இன்னொரு கவிதையில் சொல்கிறார்.

எனக்கென ஒர் கவிதை எழுத நினைத்தார்
கடவுள்

அந்த அருள் வேளையில்
அவரிடம் காகிதம் இல்லை
எழுதுகோலுமில்லை

தானொரு கடவுள் என்பதை உணர்ந்து
அவற்றை வரவழைத்தப்போது
கவிதை மறந்திருந்தது கடவுளுக்கு.

யோசித்தால் எவ்வளவு அர்த்த தளங்களுக்கு இட்டுச்செல்கிறது இந்தக் கவிதை. கடவுளாலும் கைவிடப்பட்ட லூஸ்ஸுகளாகவே நாம் இருப்போம். அதனால்தான் நம்மால் இப்படி ஏதும் செய்ய முடிகிறது. நீங்களும் அப்படியே இருக்க என் கவிதைச்சகாவான உங்களையும் நான் வாழ்த்துகிறேன் மூர்த்தி.

***

கவிதை நூல் தலைப்பு : “கூடு திரும்புதல் எளிதன்று
ஆசிரியர் : தங்கம் மூர்த்தி
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர் வெஸ்ட்,
சென்னை – 78.
discoverybookpalace@gmail.com

kaviyamoorthi@yahoo.com

ரவிசுப்பிரமணியன்

ஐந்து கவிதை தொகுப்புகள், ஒரு கட்டுரை நூல், இரு தொகுப்பு நூல் என ஒன்பது நூல்களை இதுவரை இவர் வெளியிட்டுள்ளார். கும்பகோணத்தைச் சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் முதுகலைப் பொருளியல் (1983-85) பயின்றவர். கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், ஆவணப்படங்கள் என்ற நிலையில் இவரது பங்களிப்புகள் உள்ளன. சிறுகதைகளும் எழுதிவருகிறார். பாவலர் இலக்கிய விருது, சாரல் இலக்கிய விருது, அகல் இலக்கிய விருது, சென்னை இலக்கியத் திருவிழா விருது போன்ற விருதுகள் வழங்கும் குழுவிலும் உறுப்பினராக உள்ளார். பல தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளுக்கு இசையமைத்துள்ளார். 80க்கு மேற்பட்ட நவீனக் கவிதைகளுக்கு இசை வடிவம் தந்துள்ளார். சாகித்திய அகாதமி ஆலோசனைக்குழுவில் உறுப்பினராக (2003-2007) இருந்துள்ளார். இயக்குனரும், படத்தொகுப்பாளருமான பி. லெனினிடம் ஐந்து ஆண்டுகள் உதவி இயக்குனராகவும், விஜய் மற்றும் ஜெயா தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி இயக்குனராகவும், முதுநிலை செய்தி உதவி ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார். ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக கலை, இலக்கியப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். 65 வது தேசிய திரைப்பட விழாவின் விருதுக்குழுவின் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். தற்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு இலக்கிய ஆளுமையாக உள்ளார்.
மின் அஞ்சல் முகவரி : ravisubramaniyan@gmail.com

ஓவியம் – Katsushika Hokusai

அவனொரு குழந்தை வளர்க்கிறான்

1

ஐ.கிருத்திகா

டுக்கு நந்தியாவட்டை வட்ட வட்டமாகப் பூத்திருந்தது. குட்டை மரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பால் சிந்தியது போல. மரம் இளசு. எண்ணி ஏழெட்டுப் பூக்களிருக்கும். அதுவே பெரிய விஷயம்தான். ஒரு பூ பூத்தாலும் மனம் பொங்கிவிடுமே. ஏழெட்டுப் பூக்கள் அதிகம்தான். இதற்கே எத்தனை ஆயாசம். செம்பருத்தியும், நீல சங்கும் கிராமபோன் போலவும், இங்க் சொட்டு போலவும் பொக்கென்று பூத்திருக்கையில் நந்தியாவட்டைக்கு மட்டும் ஏனிந்த பிடிவாதம் என்று கதிரேசன் பலமுறை எண்ணியதுண்டு.

கொல்லையின் முடிவில் மூங்கில் கழிகள் செழித்திருந்தன. அதுதான் காரணம் என்றாள் கவிதா. மூங்கில் எதையும் அண்டிப் பிழைக்க விடாது என்பது அவள் தர்க்கம். செம்பருத்தி செழித்தது எப்படியென்றால், வாழ்வின் சூட்சுமம் அறிந்தது அது என்று சிரிப்பாள். இளமஞ்சள் நிறத்தில் முற்றிய மூங்கில் கழிகள் நீண்டும், வளைந்தும் நிற்பதை யாராவது விலை கேட்டு வருவார்கள்.

கழிக்கு இவ்வளவு ரூபாய் என்று நூறைப் பத்தாக்கி விலைபேசி வாங்கிப் போவார்கள். அதில் பொருளாதாரம் உயர்ந்துவிடவோ, சரிந்து விடவோ இல்லை. இருந்தும் வேரோடு அகற்ற மனம் வரவில்லை. வேலிக்கு முள் அறுத்துக் கொள்ளவாவது வேண்டுமே. மாமரம் வளர்ச்சியில்லாத குழந்தை போலத்தான் நிற்கிறது.

கதிரேசன் மாமரத்தடியில் நின்று நந்தியாவட்டைப் பூக்களைப் பார்த்தான். தொடர் முயற்சியில் வெற்றியடைந்தது போல உள்ளே ஒரு துள்ளல் எழுந்தது. மாமரத்தின் சிறு கிளையொன்று அவன் முன்னே அசைந்தது. சவலைக் குழந்தையின் கையசைப்பு போல திராணியில்லாத அசைவு. பிறந்த குழந்தையின் பால்வாசம் மாறாத அம்மாவினுடைய கவனத்தை ஈர்க்க முயலும் முயற்சியாக அப்படியொரு மெலிதான சவலைக் குழந்தையின் ஏக்கமான அசைவு. தடவிக்கொடுக்க வேண்டும் போலிருந்தது. கதிரேசன் மரத்தை இதமாகத் தடவிக் கொடுத்தான்.

அந்தி வெயில் சிந்திய அவன் முகத்தில் தாய்மையின் கனிவு பொலிந்தது. நந்தியாவட்டை செடி காற்றில் அசைந்து குதூகலித்தது. கவிதா காபியோடு வந்தாள். ஒரு கையை மரத்தில் பதித்து இன்னொரு கையை இடுப்பில் ஊன்றி கதிரேசன் நின்றிருந்தான். தன் வகுப்புப் பிள்ளைகள் அனைவரும் பாஸாகிவிட்டது போல முகம் நிறைந்த களிப்பு.

சடுதியில் மின்னி மறையும் மின்னல் போல அதைத் துடைத்துப்போட மனமின்றி கவிதா அப்படியே நின்றாள். மூங்கில் கழிகள் உராய்ந்து ஒருமாதிரி ப்ளிச் என்ற சத்தத்தை உண்டாக்கியதில் இயல்பாய் திரும்பிப் பார்த்தவன் மெல்லமாய் சிரித்தான்.

“எட்டு பூ…..”

ஐந்தும். மூன்றுமாய் விரல்களைக் காட்டினான். வைத்தியச்சி பிரசவ அறையிலிருந்து எட்டிப் பார்த்து இளகிய குரலில் பாலினம் சொல்வதைப் போலிருந்தது. வைத்த மூன்றாவது செடி அது. முதல் செடி நட்டு சில வாரங்களில் வாடி வதங்கிப் போனது. கந்தையா வீட்டு வாசலிலேயே வைத்திருப்பார்கள். சைக்கிளைக் காம்பவுண்டு சுவரையொட்டி வேப்பமர நிழலில் நிறுத்தி வைக்கும்போதே கதிரேசன் நந்தியாவட்டைப் பூக்களை எண்ணிவிடுவான். இருபது, இருபத்தைந்துக்கு குறையாது. இத்தனைக்கும் ஒரு சத்து, சவரட்சணை கிடையாது. சீந்துவாரின்றி நிற்கும். தண்ணீர் ஊற்றுவார்களோ என்னவோ…..நின்று பார்த்தால்,

“அது கெடக்கு வாங்கண்ணே….” என்பாள் கந்தையாவின் மனைவி கோமதி. சட்டென உள்ளே சென்றுவிட மனம் வருவதில்லை. படியில் செருப்பை விடுவதுபோல் சற்று தாமதிப்பான்.

“கொல்லையில ஏகப்பட்ட ரோசு பூத்துக் கெடக்கு…..”
அவளுக்கு அதுதான் பெருமிதம்.

“எல்லாமே பன்னீர் ரோசு….. வந்து பாருங்க…..”

ஒருமுறை விடவில்லை. அவள் சொன்னதற்காக கொல்லைக்குப் போனான். கந்தையா முண்டாசு கட்டிக்கொண்டு கடப்பாரையில் தேங்காய் உரித்துக் கொண்டிருந்தான். கிணற்றடியில் துணி துவைக்கும் கல்லுக்கருகில் பம்மலாய் அடர்ந்திருந்த செடியில் இளஞ்சிவப்பு நிற ரோஜாப்பூக்கள் கொல்லென்று பூத்திருந்தன.

“பத்து பூ பறிச்சி சாமிக்கு சாத்திட்டேன்.”

கோமதி பூத்திருந்த பூக்களோடு அதையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளச் சொல்வது போலிருந்தது. கதிரேசன் கல்லில் அமர்ந்தான். கந்தையா கடைசி தேங்காயை உரித்து மட்டையைக் குவியலில் லாவகமாய் விட்டெறிந்துவிட்டு காயை காதிற்கருகில் கொண்டு சென்று ஆட்டிப் பார்த்தான். கருங்கல் குளிர்ச்சியாக இருந்தது. வழுவழுப்பற்று கரடுமுரடாயிருந்தது பெரிதாய் தெரியவில்லை. அதன் சாய்மானம்தான் சற்று இடைஞ்சலாயிருந்தது. கதிரேசன் நகர்ந்து அமர்ந்து கொண்டான்.

“போவும்போது பூப்பறிச்சி தர்றேன். கொண்டுக்கிட்டு போங்கண்ணே….”
கோமதி ஒரு கையில் காபியும், இன்னொரு கையில் பிளாஸ்டிக் கவருமாய் வந்தாள்.

“நந்தியாவட்டை செடி ஒன்னு வைக்கணும்.”

காபியை ஒரு மிடறு விழுங்கிவிட்டுச் சொன்னவனை கோமதி வித்தியாசமாய் பார்த்தாள். முட்களை உரசிக் கொண்டு பூப்பறிக்க தேவையில்லை என்று தோன்றிவிட்டது. ஒரு பக்கமாய் உதடிழுத்து சிரித்து வைத்தாள்.
கந்தையா இரண்டடி தடிமனான குச்சியை வெட்டித் தந்தான்.

“அரையடி மண்ணுல பொதையிற மாதிரி ஊனி நுனியில சாணியத் தடவிவுடுங்க….”

கோமதியின் குரல் பின்னோடு மிதந்து வந்தது. அதுதான் முதல் செடி. கொல்லையில் தோதான இடம் பார்த்து குச்சியை நட்டு வைக்க ஒருமணி நேரத்திற்கும் மேலாயிற்று. டியூஷன் படிக்க வந்த பிள்ளைகள் திண்ணையிலமர்ந்து கதை பேசிப்பேசி நேரத்தைப் போக்கினர். இரண்டாள் உயரத்துக்கு வளர்ந்து நின்ற தென்னை மரத்துக்குப் பத்தடி தள்ளி ஆனால் தூரத்திலிருந்து பார்க்கும்போது இரண்டும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போல் கதிரேசன் குச்சியை நட்டு வைத்தான். களைக்கோட்டு உதட்டில் சேறு அப்பியிருந்தது. அதைக் கையில் பிடித்தபடி நட்டு வைத்த குச்சியைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

“என்னங்க, வேல ஆச்சா….?”

சுண்டல் குலுக்கிக் கொண்டிருந்த கவிதா அடுப்பைத் தணித்து வைத்துவிட்டு கொல்லை நிலைப்படியில் கையூன்றி எட்டிப்பார்த்து கேட்டாள். கதிரேசன் தலையசைத்தான்.

“புள்ளைங்க ரொம்ப நேரமா ஒக்காந்துருக்குதுவோ…..”

“இதோ வர்றேன்.”

களைக்கோட்டை நீர்விட்டு அலம்பி வைத்துவிட்டு முகம் கழுவி நிமிர்ந்தபோது அடுக்கு நந்தியாவட்டை செடி பச்சைப் பட்டு கட்டிய சிறு பெண்குழந்தை போல நின்றிருந்தது. தலை நிறைய பூ தைத்த பெண் குழந்தை. கதிரேசன் தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.

குச்சி துளிர்க்க தொடங்கி இரண்டு வாரத்தில் நம்பிக்கையின் வேர் பற்றுறுதியுடன் வளர்ந்த சமயத்தில் செடி பொசுக்கென வாடிப்போய் உயிரைவிட்டது. மனம் துக்கத்தின் சாயலைப் பூசிக்கொண்டது. இரண்டாவது குழந்தைக்கான முயற்சி போல மறுபடியும் குச்சி நடப்பட்டது. இந்தமுறை வேறு இடத்தில் நட்டு வைத்தான். அது சிறு தளிர் கூட விடாமல் காய்ந்து போனது.

“பரவாயில்ல விடுங்க. இன்னொன்னு வச்சாப்போவுது. ” கவிதா அவன் முகம் பார்த்தபடி கூறினாள்.

“இந்த வருஷம் விட்டத அடுத்த வருஷம் பிடிச்சிடலாம்.”

தேர்வில் தவறிய மாணவர்களுக்கு அவன் ஆறுதல் சொல்லுவான். சில பேரைத் தோளோடு அணைத்துக் கொள்வான். அப்படியொரு அணைப்பின் இதம் அவள் வார்த்தையிலிருந்ததை அவன் புரிந்துகொண்டு லேசாய் தலையாட்டி சிரித்தான். கவிதா கொடியில் கிடந்த புடவையை இழுத்து மடிக்கத் துவங்கினாள்.

மெரூன் நிறத்தில் வெள்ளைப்பூக்கள் சிதறிய புடவை. பூக்கள் நந்தியாவட்டை போல தகடு, தகடாக புடவையில் மிதந்தன. புதுப்புடவை. அதனால் பூக்கள் வெண்மையின் நிறம் மங்காது ஒளிர்ந்தன. நந்தியாவட்டையின் அழுத்தமான இதழ்களைத் தடவினால் மெத், மெத்தென்றிருக்கும். குழந்தையின் கன்னம் போல.

கதிரேசன் நினைத்துக்கொண்டே பெஞ்சில் மடித்து வைக்கப்பட்டிருந்த புடவையை வருடினான். மிருதுவாய், மொது, மொதுவென்று போர் செட்டிலிருந்து கொட்டும் நீர் போலிருந்தது. பூக்கள் நீரில் நீந்தும் மீன்களாய் அலைந்தன. மூன்றாவது குச்சி உயிர் பிழைத்துவிட்டது. அழுத்தமான பச்சையில் இலைகள் துளிர்க்கத் தொடங்கின. பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் அதிலிருந்து திட்டு வாங்கவேயில்லை.

“நீங்கள்லாம் பொறுப்பா படிச்சு பெரியாளா வரணும்.”
கதிரேசன் அறிவுரை சொன்னான். குரல் தழைந்தே வந்தது.

“நாளைக்கு நல்ல நிலைமைக்கு வர்றதுக்கு இன்னியிலிருந்தே முயற்சி செய்யணும். “

இரண்டு கைகளையும் விரித்து மெதுவாக சொன்னான். எப்போதும் அவன் இளகினவன்தான். பிள்ளைகளை அனாவசியமாக கடிய மாட்டான். அவனையும் சோதிக்கும் மாணவர்கள் இருந்தார்கள். அவர்களிடம் மட்டும் கடுமையைக் காட்டுவான். செடியில் மொட்டுகள் உருவான சமயத்தில் அவர்களிடமும் கனிவாகவே பேச முடிந்தது. குரலில் ஒரு அவுன்ஸ் கனிவு கூடிப்போயிருந்தது. கவிதாவுக்கே ஆச்சரியம் தான்.

கொல்லையில் அவனொரு குழந்தை வளர்க்கிறானென்று எல்லோரிடமும் சொல்லிச் சிரித்தாள். காலை, மாலை இருவேளையும் செடியுடன் முக்கால்வாசிப் பொழுதுகள் கழிந்தன. மஞ்சளைக் கரைத்து கொஞ்சம் ஜிகினாத்துகள்களைத் தூவி விட்டது போன்ற மாலை வெயிலில் கதிரேசன் பின்னால் கைகளைக் கட்டிக்கொண்டு கொல்லையில் நின்றிருப்பான்.

சிவிக், சிவிக் ஒலியெழுப்பும் பறவை காலை நேரத்தில் அவனோடு ஜோடி போட்டுக் கொண்டது. அது தென்னை மரத்திலமர்ந்து குரல் கொடுத்தபடியிருக்கும். கிணற்றடி சாக்கடையோரம் வளர்ந்திருந்த ஒற்றைக் கல்வாழை செடியின் யானைக் காது இலையொன்று காற்றுக்கு எப்போதும் அசைந்தபடியிருக்கும். அது மௌனமாக ஞானிபோல நின்று சுடர்விடும் கண்களுடன் பார்த்தபடியிருக்கும் கதிரேசனை புத்தனாகக் கருதக்கூடும் என்று கவிதா நினைத்துக் கொண்டாள்.

நினைத்தது நடந்துவிட்ட நிறைவில் அவ்வபோது பரவசத்துடன் செடியைப் பார்ப்பவனிடத்தில் காரணம் கேட்க கவிதாவுக்குத் தோன்றவில்லை.

மயில் கழுத்து வண்ண சேலை உடுத்திக் கொள்ளும்போது அவளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். உற்சாகமாக பாட்டு பாடியபடியே வேலை பார்ப்பாள். அன்று சாம்பார், கூட்டு கூட பிரமாதமாயிருக்கும். வெள்ளிக்கிழமை தலைக்கு நீர் விட்டுக்கொண்டு அந்த சேலையைக் கட்டிக்கொள்வாள். மயில் கழுத்து வண்ண சேலைக்கும், மன மகிழ்வுக்கும் நடுவில் இருப்பதென்ன என்று அவளால் ஊகித்தறிய முடியவில்லை. கதிரேசன் மனநிலையை அதைக்கொண்டே அவள் புரிந்து கொண்டாள். கந்தையா வந்திருந்தான்.

“நாளைக்கி பழனி கெளம்புறேன். அவன்கிட்ட சொன்னனே. சொன்னானா….?”
சாய்வு நாற்காலியில் இதமாய் சாய்ந்தபடியே கேட்டான். கவிதா தண்ணீர் தந்தபடியே தலையாட்டினாள்.

“கோமதி ஒங்கிட்ட குடுக்க சொன்னாம்மா.”
கையிலிருந்த பிளாஸ்டிக் பையை நீட்டினான். பன்னீர் ரோஜாப்பூக்கள் பையை மீறி வாசனையை கூடத்தில் கொட்டின.

“நல்ல வாசனை. இப்பெல்லாம் இந்தப்பூ கெடைக்கிறதேயில்லண்ணே…”

கவிதா கூடத்தில் வரிசையாக மாட்டப்பட்டிருந்த தாத்தா, பாட்டி, மாமனார், மாமியார் படங்களுக்கு பூக்களை சாத்தினாள். கொல்லையிலிருந்து வந்த கதிரேசன் முகம் துலக்கமாய் மினுங்கியது. கந்தையாவின் வருகையை எதிர்பார்த்திருந்தவன் போல,

“பத்து பூடா…..” என்றான். கந்தையா கொல்லைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்தான்.

“எங்க வீட்டுல இருக்குறதோட வாரிசுடா.”

அவன் சொன்னதைக் கேட்டு கவிதாவுக்கு சிரிப்பு வந்தது. கதிரேசனைப் பார்த்தாள். அவன் வாய் திறவாமல் சிரித்துக் கொண்டிருந்தான். வேட்டி நுனி மண்ணில் புரண்டதற்கு அறிகுறியாக புழுதியேறியிருந்தது. கடந்த சில நாட்களாக அவன் வாகாக அமர்ந்து கொண்டு செடியைத் தடவிக் கொடுப்பதை கவனித்தாள்.
பக்கத்து வீட்டு கிருஷ்ணமூர்த்தி வேலிக்கு அந்தப்புறமிருந்து அதைப் பார்த்துவிட்டு ஒருநாள் கேட்டான்.

“அண்ணியாரே, அண்ணன் நான் பாக்கும்போதெல்லாம் அந்த செடிக்குப் பக்கத்துலயே நிக்கிறாரே…… என்ன சங்கதி……?”

“அவரு நந்தியாவட்டை செடி வளக்குறாரு. “
அதற்குமேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“பெரியவனுக்கு மொட்டை போட்டுட்டு வந்துரலாம்னு இருக்கோம்.”
கந்தையா, கதிரேசனிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

விடுமுறை என்பதால் திண்ணை வெறிச்சோடியிருந்தது. டியூஷன் பிள்ளைகளின் வரத்தின்றி மௌனம் அங்கு அடைபட்டுக் கிடந்ததில் மாடக்குழியில் கவிதா ஏற்றிவைத்த விளக்கின் சுடர் சின்ன அசைவுமின்றி முருகன் கைவேல் நுனிபோல கொழுந்து விட்டிருந்தது. கந்தையா, கவிதா தந்த அவலைச் சுவைத்து விட்டுக் கிளம்பினான்.

“அவல்ல வெல்லம் கடிபடுற மாதிரி உடைச்சும், உடைக்காமலயும் போட்ருக்குறது நல்லா இருக்கும்மா. கோமதி கிட்டயும் சொல்றன். “

கந்தையா கிளம்பிவிட்டான். கிரில் கதவைத் திறந்து அவனை வழியனுப்பிவிட்டு கதிரேசன் காம்பவுண்டு சுவரில் முழங்கைகளை ஊன்றி சிறிதுநேரம் நின்றிருந்தான். தெருவிளக்குகள் பளிச்சிடத் தொடங்கின. ஒரு குழல் விளக்கு மட்டும் சிமிட்டி, சிமிட்டி தன்னிருப்பைக் காட்டிக் கொண்டிருந்தது. அந்த விளக்கு வெகுநாட்களாக சரிசெய்யப்படாமல் அப்படியே இருந்ததில் கதிரேசன் அதைப் பார்க்கும்போதெல்லாம் முனகிக் கொண்டேயிருப்பான்.

அன்று கண்கள் அந்த விளக்குக் கம்பத்தையொட்டிய வேலியில் படர்ந்திருந்த பெயர் தெரியாத கொடியின் மீது பதிந்திருந்தது. சிறுசிறு மூக்குத்திகளாய் பூத்திருந்த பூக்களின் மையத்தில் முட்டைக்கருவின் மஞ்சள் நிறத்தில் ஒரு மேடு. ஒரு கையரிசியை அள்ளி இறைத்துவிட்டாற்போல் அவனுக்குத் தோன்றியது.

வயலில் வேலைப் பார்த்துவிட்டு இரண்டு பெண்கள் ஆண்பிள்ளை சட்டையணிந்து கையில் தூக்குவாளிகளோடு பேசியபடி தெருவில் நடந்து போயினர். அவர்கள் கடந்ததில் கவனம் சிதறியவன் கையிலூறிய எறும்பைத் தட்டிவிட்டு உள்ளே வந்தான்.

கவிதா தூபக்காலோடு எதிர்ப்பட்டாள். கந்தையா வீட்டு ரோஜாவிலொன்று அவள் தலையில் ஏறியிருந்தது. சடையைத் தளரப் பின்னியிருந்தாள். ரோஜாவின் ஓரிரு இதழ்கள் தரையில் சிந்தியிருந்தன. வெள்ளிக்கிழமை வாசனை வீடெங்கும் பரவியிருந்தது. தூபக்காலில் கனன்று கிடந்த நெருப்பில் சாம்பிராணி புருபுருத்து வழிய புகை சிறுசிறு வளையங்களாக வட்டமிட்டுக் கொண்டிருந்தது. கவிதா கூடத்துப் படங்களுக்கு சாம்பிராணி காட்டினாள். வயிறு நன்றாகவே மேடிட்டிருந்தது.
ஏழாம் மாதம். மசக்கை எதுவுமின்றி பிடித்ததை சாப்பிட்டு உடம்பு மெருகேறியிருந்தது.

“ராத்திரிக்கு அவல் உப்புமா பண்ணட்டுமா….?”
கவிதா தூணில் சாய்ந்தமர்ந்து கொண்டாள்.

“கஷ்டப்படாத. மாவு இருந்தா நான் தோசை சுட்டுப் போடுறன். “

கதிரேசன் டிவியில் அலைவரிசையை மாற்றியபடியே சொன்னான். இதுதான் வேண்டுமென்கிற பிடிவாதமில்லை. பசிக்கும் நேரத்தில் சாப்பிட வேண்டும். அது போதும். கவிதா கால்களை நீட்டிக்கொண்டாள். வயிறு கனத்தது. இப்போதெல்லாம் அவள் அதிகம் தூங்குகிறாள். குழந்தைக்கும் சேர்த்து சாப்பிட வேண்டுமென்றார்கள். உறக்கத்தை ஏன் சொல்லவில்லை என்றிருந்தது. வளைகாப்பு வளையல்கள் கைகளில் சிணுங்கின. அம்மாவுக்கு அவளை அனுப்ப மனசேயில்லை. அவள்தான் பிடிவாதம் பிடித்து வளைகாப்பு முடிந்த கையோடு கிளம்பிவிட்டாள். கதிரேசன் டிவியை நிறுத்திவிட்டு அவளருகில் அமர்ந்துகொண்டான்.

“பேசாம அங்கயே இருந்திருக்கலாம். இங்க வந்து கஷ்டப்படுற.”

இடதுகையால் அவள் வயிற்றை இதமாக தடவிவிட்டான். கொலுசு அழுந்திய கணுக்காலில் உண்டான பள்ளத்தைக் கூர்ந்து கவலைப்பட்டான். எதிலும் ஒரு நுண்ணிய அவதானிப்பு. அதுதான் அவன் குணம். விலகலற்ற பொருந்திய தன்மை இழைந்து கிடக்கும் குணம்.

மழை சன்னமான ஊசித்தூறல்களாய் விழுந்தது. கவிதா கொல்லைப்புறம் வந்தபோது கதிரேசன் பிரஷுடன் நந்தியாவட்டை செடியருகில் நின்றிருந்தான். கிணற்றடி சிமிண்ட் தளத்தில் ஈரம் படர்ந்திருந்தது.

”படி ஈரமா இருக்கு. பாத்து எறங்கு.”

அங்கிருந்தே சைகை செய்தான். காலைநேர அசதி உடம்பை அசத்திற்று. ஈரமற்று குளிர்ந்திருந்த முதல் படியில் கவிதா கையூன்றி அமர்ந்தாள். காற்றின் வேகத்தில் சில தூறல்கள் முகத்தில் விழுந்தன. கதிரேசன் கிணற்றில் நீர் இறைத்து வாய் கொப்பளித்து முகம் கழுவினான்.

“மணி ஆறுதான ஆகுது. அதுக்குள்ள ஏன் எழுந்த….?”
நெற்றி சுருக்கிக் கேட்டவன்,

“வாயேன்…..” என்று அவள் கைப்பிடித்து அழைத்துப்போனான்.

மூங்கில்கள் பிளிச் சத்தத்தோடு அசைந்தன. தங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசிக்கொள்வது போலிருந்தது. ஒற்றை மாமரமும், தென்னை மரமும் தங்கள் வீட்டுப்பிள்ளைகள் என்பது போல் பெருந்தன்மையாக நின்றிருந்தன. கதிரேசன் பூக்களைக் காட்டினான்.

“பதிமூனு பூ….”

தலையசைத்து கண்கள் விரித்து அதிராமல் சொன்னான். கந்தையா வீட்டு வாசலில் படியேறுபவர்களுக்கு பூச்செண்டு கொடுப்பது போல் செடி நின்றிருக்கும். அதேபோல் இங்கேயும். கவிதாவுக்கு அவன் கைகளைப் பிடித்துக்கொள்ள வேணும் போலிருந்தது. வயிற்றுக் குழந்தையின் சாயல் அவன் முகத்தில் தெரிந்தது.

***

ஐ. கிருத்திகா


ஓவியம் – Katsushika Hokusai

ஆனந்த் குமார் கவிதைகள்

0

வனம்

முதலில் ஒரு
சிறுமரம் வந்தது மேடைக்கு

பின் சில செடிகளும்
நூலில் கோர்த்த இலைகளும்

விரல்களை கொம்பெனக்கொண்டு
தாவி வந்ததொரு மான்

தொடர்ந்து கையூன்றா புலிகளும்
கரடியும் சிங்கமும் உலவ
மேடையில் படர்ந்தது
கானகம்

குயிலும் யானையும் ஒரே அளவான
அடர்ந்த பெரும் கானகம்.

கானகத்துள் போனவரெல்லாம்
கானகத்துள் போனார்
மற்றவர் எழுந்து
வீடு போனார்.

*

அகாயம் மேவுதல்

எங்கு சென்றாலும்
இந்த நாளைத்தான்
எடுத்துச்செல்ல வேண்டியிருக்கிறது
அருவியின் சாரல் விளிம்பில்
ரயிலின் கசகசப்பில்
தொலைதூர தேசமொன்றில்

எதை கையிலெடுத்தாலும்
இந்த மண்ணைத்தான்
உண்ண வேண்டியிருக்கிறது
அதிகாலை பசியெரிப்பில்
கஃபேயின் குளிரறையில்
இன்னொருவர் பெயரெழுதிய
உணவுப் பொட்டலத்தில்.

என்ன சொன்னாலும்
ஒரு மெல்லிய பறத்தலைத்தான்
நான் சொல்ல முடிகிறது
எடை யாவும் களைதலை
பாதங்களின் விடுபடலை
ஆகாயம் மேவுதலை.

*

சுவை

அம்மாதான் சமைத்திருந்தாள்
மீண்டும்
அதே சுவை.

அப்படியே என் ஆறு வயதை
அள்ளியள்ளி உண்டேன்.

பாதி வயதில்
அப்பா
சுருண்டு கிடந்த அம்மாவை
இன்னுமொரு மிதி மிதித்தார்
நான்
எப்பொழுதும் சாப்பிடாத
அந்த மீதி உணவை
வைத்துவிட்டு
எழுந்தேன்

***

மலர் தொட்டியை கொஞ்சம்
சுவற்றிற்கு அருகிலேயே வைத்துவிட்டேன்
புதிய மலரென
பூப்பதற்கு முந்தைய நாள்
சுவற்றை கொஞ்சம்
சீண்டிப் பார்க்கிறது மொட்டு.

அம்மாடி,
அத்தனை உறுதி ஒன்றுமில்லை.
சிறுமகள் தொட்ட
தந்தையின் உடலென
கொஞ்சம்
நெகிழ்ந்துதான் போனதென்
வீடு

***

ஆனந்த் குமார்

ஓவியம் – Katsushika Hokusai

என்னைக் கொன்று சாப்பிட அப்படியொரு இஷ்டமா?

3

முதல்கதை

சங்கர நாராயணன்

என்னைக் கொன்று சாப்பிட அப்படியொரு இஷ்டமா?

சில நாள்களாக ஜந்துக்கள் அங்கே அந்த தென்படவில்லை. எங்கே சென்றிருக்கும் அவை? வெகு தூரத்திலிருந்து அவற்றைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அருகே நெருங்குவதற்குப் பயமாக இருக்கும். ஒருமுறை இரவில் உள்நுழைந்து சென்று பார்த்ததில் கொஞ்சம் உணவு கிடைத்தன, அவைகள் நான் இதுவரை தின்றது போல அல்லாமல் நன்றாகவே இருந்தன. ஆனால் போதவில்லை. சிறிது நேரங்களில் கூட்டமாக அந்த ஜந்துக்கள் பெரும் சப்தம் எழுப்பிக்கொண்டு வந்துவிட்டன. கூட்டமாக வரவும் அங்கிருந்து தப்பித்து வந்தேன். இருட்டில் அந்த ஜந்துக்களால் என்னைத் தொடர்ந்து வர முடியவில்லை.
பின்னொரு நாளில் இரண்டு ஜந்துக்களைத் தனியாகப் பார்த்தேன் தூரத்திலிருந்து என்னைப் பார்த்தபடியே நின்றிருந்தன. வெகுநேரம் அவைகள் என்னைப் பார்த்தவாறே நின்று கொண்டிருந்தன. எனக்கு உள்ளூர பயத்தை ஏற்படுத்தியது. சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு மரக்குச்சியை மேலே நோக்கிக் காண்பித்து பெரும் சப்தம் எழுப்பியது. அதைக் கேட்கவே எனக்கு வெறி உண்டாகித் தொடர்ந்து அந்த ஜந்துக்களைத் தாக்க அவைகளை நோக்கி ஓடினேன். ஆனால் மீண்டும் சத்தம் எனக்கு வெகு அருகிலேயே கேட்டது. எனக்கு முன்னிருந்த சிறிய பனிப்பாறை ஒன்று சிதறின. எனக்கு உள்ளூர உடம்பு அதிர்ந்தது. உடனடியாகத் திரும்பி ஓட ஆரம்பித்தேன்.

வெகுதூரம் வரையிலும் அந்த ஜந்துக்கள் என்னைத் தொடர்ந்ததை என்னால் பார்க்க முடிந்தது. அதன் வாசனையை என்னால் நுகர முடிந்தது. சிறிது நேரத்திற்குப் பின் அந்த வாசனை நுகரக் கிடைக்கவில்லை, ஆனால் இன்று வரையிலும் அவ்வாசனை நினைவிலேயே உள்ளது. அவ்வப்போது அவ்வாசனையை உணர்வேன். தேடும்பொழுது கிட்டுவதில்லை. மேலும் சிலநேரம் அந்த ஜந்துக்களை இவ்விடத்தில் கூட்டமாகப் பார்த்து இருக்கிறேன், ஆனால் நெருங்கிச் செல்ல பயமாக இருக்கும்.
என்னைப் பார்த்தவுடன் கூட்டமாக அவைகள் என்னை நோக்கி ஓடிவர சில வினோத அமைப்புள்ள குட்டி மிருகங்களின் மேல் ஏறி வேகமாக என்னை நோக்கிச் சத்தமிட்டபடியே வரும்.
இதுபோன்றே முன் நடந்த ஒரு சம்பவத்தில் என்னுடன் வந்த எனது சக தோழன் அவைகளிட்ட சப்தத்தில் சுருண்டு விழுந்து ரத்தம் வந்து செத்தான். இத்தனைக்கும் பயத்தில் தன்னை காப்பாற்றிக் கொள்ளவே திரும்பி அவைகளைப் பார்த்து உறுமினான். ஆனால் விதி அவனை விட்டு வைக்கவில்லை. அதைப் பார்த்த நான் அருகிலிருந்த பனிக்குன்றின் மீது வேகமாக மூச்சிரைக்க ஏறினேன். பல முறை சறுக்கியும், சில முறை விழுந்தும் என் கனத்த உடலைத் தூக்கிக் கொண்டு ஏறிச்சென்றேன். அவைகளிட்ட பெரும் சப்தம் எனக்கு பெரும் கோபத்தை உண்டாக்கியது, அதையும் மீறி கிலியை உண்டாக்கியது.

எதை உண்ண எதை விட என்று தெரியாமலேயே பார்க்கும் அனைத்தையுமே உண்ண எனக்கு வெறி வரும். இவர்களை என்றேனும் ஒருநாள் சுவைத்துவிட வேண்டுமென்று மனம் லட்சியம் பூண்டது.

சில வேளைகளில் தொலைதூரம் வரையிலும் ஒரேமாதிரி காட்சியாக வெளுப்பாக உலகம் நிலை கொண்டிருக்கும். உணவிற்காகக் காத்திருக்கும் வேளைகளில் நானும் காட்சியோடு ஒன்றிவிடுவேன். நான் இருப்பது தெரியாமல் இரைகள் தானாக வந்து என்னிடம் சிக்கும். இந்த இரண்டு கால் ஜந்துக்கள் கூட சில நேரங்களில் என்னை நெருங்கி வந்துவிடும். ஆனால் எப்படியோ தப்பித்துப் போய்விடும். அவைகளைப் பார்த்தால் எனக்கும் உள்ளூர பயம் தான்.
எனக்குப் பிடித்த சில ஜந்துக்கள் சமுத்திரத்திலிருந்து கூட்டமாக வந்து இரண்டு பற்களைக் காட்டி இளித்துக் கொண்டு என்னைச் சாப்பிடு என்று நிற்கும். ஆனால் இந்த ஜந்துக்கள் அப்படியல்ல, சிறிய ஜந்துக்கள். பல நிறங்களில் பல தினுசாக இருக்கின்றன. அவைகள் எந்தச் சுவையில் இருக்கும் என்று எனக்குத் தெரியாது ஆனால் அவர்களுக்கு ஆர்ப்பரித்துக் கிளர்ந்தெழச் செய்யும் மணம். ஒரு நாளேனும் ஒருநாள் அவைகளைச் சுவைத்துப் பார்த்திட வேண்டும் என்று ஆசை.
கடலிலிருந்து கூட்டமாக வரும் ஜந்துக்கள் வேறுவகையான வாசம் கொண்டவை, சுவை மிகுந்தவை. அவைகளும் எனக்குப் பிரியப்பட்டவை தான். இம்மாதிரியான கால நிலையில் அவைகள் கூட எனக்குக் கிடைப்பது அரிதாகி விட்டது.
தூரத்திலிருந்து பார்க்க இந்த சிறிய ஜந்துக்களின் இயக்கங்கள் வெகுவாக என்னை ஆச்சரியப்பட வைக்கும். சீராக இயங்கும் பல குட்டி ஜந்துக்களை இவர்கள் வைத்திருந்தனர். மேலும் அவைகள் அந்த ஜந்துக்களின் கட்டளையின் பேரிலேயே இயங்கின. மற்ற நேரங்களில் தேமே என்று உட்கார்ந்திருக்கும்.

ஒருமுறை தேமே என்று தனியே நின்றிருந்த குட்டி ஜந்துக்களைத் புசிக்க ஆசைப்பட்டேன் . ஆனால் முடியவில்லை. கடினமாக இருந்தது. உருட்டி விளையாடிவிட்டு வந்தேன். அதைப் பார்த்து அந்த ஜந்துக்கள் மீண்டும் சப்தம் எழுப்பித் துரத்தி வந்தது. நான் அவர்களிடம் சிக்கவில்லை.

மற்றொருமுறை இரண்டு ஜந்துக்கள் ஒன்றோடு ஒன்று உரசியபடியே வெகுநேரம் நின்றிருந்தது. அதைப் பார்த்த எனக்கு நிலை கொள்ளவில்லை. பெரும்பான்மையான நேரங்களில் தனிமையிலே இனிமையைக் காணத்தான் விருப்பம். ஆனால் சிலமுறை உடலில் நிகழும் வெப்ப மாற்றத்தால் அவளைத் தேடிப் போவேன். அவளும் எதுவும் சொல்லாமல் என்னை ஏற்றுக் கொள்வாள். ஒருநாள் இருநாள் அவளுடன் தங்கி இருந்து சல்லாபம் செய்துவிட்டு என்னை நான் தனிமைப்படுத்திக் கொள்வேன். ஆனால் அன்று அவர்களின் நெருக்கத்தில் அதுபோல ஒரு வெப்பத்தை என்னுள் உணர்ந்தேன். அவளைத் தேடிப்போய் பார்த்து விட்டு வந்தேன்.

பிறகு பெரும் பனி கொட்டியது, காற்று வீசியது, சில நாள்களாக அந்த ஜந்துக்கள் கண்களில் தென்படுவதே இல்லை.

ஒருவேளை குளிரின் தாக்கம் தாளாமல் உள்ளேயே இருக்குதுகள் போல என்று நினைத்துக் கொண்டேன். என்னைப் போன்ற அடர்த்தியான ரோமம் அதுகளுக்கு இல்லை ஆனால் வினோதமான அமைப்புடனான ரோமங்களை வைத்திருந்தன. சிலமுறை எனது ரோமத்தைக் கூட திருடி வைத்துக்கொண்டது போல எனக்குத் தெரிந்தது. சரி ரோமப்பஞ்சம் என்று நினைத்துக் கொண்டேன்.

வெளிச்சங்களும் இரவுகளும் இடைவிடாது என்னை ஆக்கிரமித்த பொழுதும் இவ்விடம் எனக்குச் சலிப்பைத் தந்ததே இல்லை. அவைகளைத் தொலைத்தது பற்றி வருந்தியது இல்லை. ஒரு நாளும் எதையுமே ரசித்தது இல்லை. ஏனென்றால் சதாசர்வ காலமும் என் எண்ணத்தில் உணவைப் பற்றிய தேடலே இருந்தது. அது என்றுமே எனக்குச் சலிக்கவே இல்லை. தொடர்ந்து உணவு கிடைக்காமல் போகும் தருணங்களில் உடலின் வெப்பத்தைத் தக்கவைக்க ஆங்காங்கே கிடைக்கும் சிறு சிறு உணவுகள் ஆறுதலைத் தரும். ஆனால் அது மட்டுமே போதாது, எனது மனமும் உடலும் ஒரு பெரும் வேட்டைக்கான தயார் நிலையிலேயே என்றும் இருக்கும். இன்று எப்படியாவது சென்று சுவைத்து விட வேண்டும் என்று அவைகளின் இடத்தை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பிக்கிறேன்.

அதே நேரத்தில் சடாரென்று இரு ஜந்துக்கள் என்னை நோக்கி ஓடிவர நான் பயந்து பின்வாங்கினேன். நமக்கான உணவு அவைகள் தான் என்று முடிவுகட்டி அருகிலிருந்த பனிக்குன்றின் பின் காத்திருக்கிறேன் . உணவிற்காகப் பொறுமையே தோற்றுவிடும் அளவிற்குப் பொறுமையுடையவன் நான். எனக்கான இரை எவ்வளவு தூரத்திலிருந்தாலும் சரி எனக்குத் தெரிந்துவிடும். அதை அடையும் தந்திரமும் எனக்கு அத்துபடி. என் மொத்த உருவத்திலும் கருப்பான எனது மூக்கை எனது கையை வைத்து மறைத்து விட்டால் பனிப்பாறைகளுடன் ஒன்றிவிடுவேன். இரைகள் என்னைத் தேடிவரும் என்பதை உணர்ந்து நேரம் போவதே தெரியாமல் காத்திருப்பேன். அதுபோல ஒரு காத்திருப்பு முடிவுக்கு வந்தது. அந்த ஜந்துக்கள் எனக்கு மிக அருகினில் வந்துவிட்டன என்பதை நுகர்ந்து அறிந்தேன். மெதுவாக எனது பின்னங்கால்களின் உதவியுடன் அவைகளைப் போலவே மெதுவாக நின்று பார்க்கத் தொலைவில் ஜந்துகள் தெரிந்தன.

சிறிது நேரத்தில் அந்த இரு ஜந்துக்களும் மிக நீண்ட குச்சி போன்ற ஒன்றைக் கையில் வைத்துப் பதுங்கி பதுங்கி என்னை நோக்கி வந்துகொண்டிருந்தன. எனது உள்ளுணர்வு அசம்பாவித சமிக்ஞையை கொடுக்க அவ்விடத்தை விட்டு மெதுவாகப் பின் நகர்கிறேன்.

அதே நேரத்தில் பெரும் சப்தத்துடன் மேலே ஒரு பறவை. தனது இறக்கைகளை ஒருபுறம் சுற்றியவாறு பறந்து கொண்டிருக்கிறது. நிலமே அதிருமளவிற்கான பேரிரைச்சல். இதே போன்ற ஜந்துக்கள் ஒன்றுக்கு இரண்டாக உள்ளே இருக்கிறது. உள்ளமர்ந்திருந்த ஜந்துக்களும் மிக நீண்ட குச்சி போன்ற ஒன்றை என்னை நோக்கிக் காண்பித்துக் கொண்டு இருக்கிறது. சுளீரென்று ஏதோ ஒன்று எனது பின்னங்காலில் குத்தியது. வலிக்கவில்லை ஆனால் உடம்பில் ஓர் உதறல். அதை வேகமாகத் தட்டிவிட்டுப் பனி நிரம்பிய பள்ளத்தாக்கில் வேகமாகத் தாவி ஓடுகிறேன்.

சமநிலையை அடைந்து பனிப்பாறைகள் நிரம்பிய நீரினுள் விழுந்து மீண்டும் ஒரு பனிப்பாறையைப் பிடித்து எனது பரந்த உடலைக் கிடத்தி அடுத்த பனிப்பாறையின் மேல் தளத்திற்கு வந்துவிட்டேன். நீரில் நனைந்து எழுந்ததில் எனது எடை வெகுவாகக் கூடி இருக்கிறது அது எனது ஓட்டத்திற்கு மேலும் சிரமத்தைச் சேர்த்து என்னைச் சோர்வடையச் செய்தது. மிதந்து கொண்டிருக்கும் பல பனிப்பாறைகளில் சிரமேற்கொண்டு தாவிக்கொண்டிருக்கிறேன். அண்ணாந்து பார்க்க, அந்தப் பறவை எனக்கு மேல் பெரும் கூச்சலிட்டுப் பறந்து கொண்டிருக்கிறது, என்னைப் பார்த்துக் குறிவைத்து வந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்த்துக்கொண்டே கால் வைக்க அந்தப் பனிப்பாறை எனது பாரம் தாங்காமல் உடைந்து, தடுமாறி நான் நீரினுள் ஆழத்தை நோக்கி வேகமாகத் தன்னிச்சையாகப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டு, இழந்த மூச்சை மீட்க அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நீரின் மேற்பரப்பை நோக்கி வந்தாகிவிட்டது. எனக்காகவே காத்துக் கொண்டிருந்த அந்தப் பறவை எனது முன் நெற்றியில் மீண்டும் குத்தியது. குத்திய நொடியில் உடம்பின் இயக்கம் சிறிது தளர்வுற்றது. ஆனாலும் எழுந்து அடுத்த பனிப்பாறையைப் பிடித்து தரைக்கு வந்துவிட்டேன்.

இந்த நீண்ட வானத்தை ஒத்த இந்த வெள்ளை சமவெளி எனது உறுதியை வலுவாக்க இப்பொழுது என் ஓட்டம் வேகமெடுத்தது. எனது காத்திருப்பின் பொறுமை எனக்குத் தெரியும், ஆனால் இந்த உயிருக்கான ஓட்டம் எனது சகிப்புத்தன்மையை எனக்கு விளங்க வைக்கிறது. இது புது அனுபவமா? அவஸ்தையா?
பல காலமாக நடந்தபடியே இருந்திருக்கிறேன். நீந்தியபடியே இருந்திருக்கிறேன், ஆனால் இப்படியொரு ஓட்டத்தை ஓடியது கிடையாது. அடர்த்த வெளிர் மயிர் நிரம்பிய எனது கரிய தேகம், அந்த அடர்த்தியினால் வெப்ப மிகுதியில் கொதித்துக் கொண்டு இருக்கிறது. என்னைக் கொன்று சாப்பிட அப்படியொரு இஷ்டமா?

இத்தனைக்கும் என்னைவிட உருவத்தில் சிறியதாக அல்லவா இருக்கிறது. அதை நினைக்கையிலேயே எனது உடலும் மனமும் ரணமாய் கொதிக்கிறது. தலையின் மேற்புற மையத்தில் நுழைந்த ஊசி செருகல் போன்ற உணர்வு உடம்பின் அனைத்து இடங்களிலும் குத்துகிறது. எனது விருப்பம் இல்லாமலேயே என் வேகம் குறைகிறது. எனது முன்னங்கால் இடற நான் கீழே விழுந்தேன். தொலைவில் பனிமுகடுகள், என்னைப் போன்றே மயங்கிக் கிடக்கிறதோ? சிறிது நேரத்தில் எதனால் இப்படிக் கிடக்கிறோம் என்றுணர முடியாமல் என் இமைகளின் காட்சிகள் அஸ்தமித்தன.

தேவைக்கு அதிகமான உணவு வாய்க்கப்பட்ட நாட்களில் நீண்ட இரவுகளில் பகலை தொலைத்தும், நீண்ட பகலில் இரவுகளைத் தேடியும் நகராமல் இருந்திருக்கிறேன். அது போல ஒரு நீண்ட களைப்பிலும் உறக்கத்திலும் இருந்து எழுந்தது போன்ற ஒரு உணர்வு. மிகவும் இலகுவாக இருக்கிறேன். தண்ணீர் குடித்தால் தேவலாம் என்று தோன்றி நீரின் அருகில் செல்ல, அதில் எனது உருவம். தான் முன்பு போல இல்லையே என்று தோன்றியது.

பசி வயிற்றைக் கிள்ளுகிறது. நீண்ட பனித்தரையின் விளிம்பில் தொடரும் குளிர்ந்த நீரின் கரையில் அமர்ந்தேன். அவ்வப்போது அந்த கடல் மிருகம் மூச்சு வாங்க மேலே வரும். அதன் வரவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன். வெகு நேரமாகியும் அது வரவில்லை.

தொலைவில் உணவேதும் இல்லையா அல்லது எனது மூக்கின் நுகர்வுத்திறன் குறைந்து விட்டதா, தெரியவில்லையே என்ற குழப்பம். முன்பு போல ஏன் நம்மால் நடக்க முடியவில்லை, தடுமாறி அதே இடத்தில் அமர்ந்து காத்திருக்கிறேன்.

முன்பு போல ஊசி குத்தாமலேயே இமைகள் சொருக ஆரம்பிக்கிறது. எவ்வளவு நேரம் காத்திருக்கிறோம் என்று தெரியாமலேயே தூங்கித்தூங்கி எழுகிறேன். ஆனால் அவ்விடத்தை விட்டு இம்மியளவும் நகர முடியவில்லை. அப்படியாகவே விழுந்து உணவும் கிட்டாமல் படுத்த வண்ணமே இருக்கிறேன். நினைவில் மட்டுமே நான் இருக்கிறேன், இயக்கத்தில் நான் இல்லவே இல்லை. அந்த விசேஷ பலம் பொருந்திய சிறிய ஜந்துகளின் வாசனை இப்பொழுதும் கூட நினைவில் இருந்தது. ஏன் அனைத்து வாசனைகளும் நினைவில் உள்ளது. ஆனால் எதையுமே நுகரும் திராணியற்று கிடக்கிறேன்.

அப்படியாகவே வெகுநேரம் என் இயல்பின் பொறுமையையும் இக்கிடத்தல் வென்று கடந்து சென்று கொண்டிருக்கிறது. அப்பொழுது என் கண்ணை நோக்கி ஒரு சிறிய பறவை ஒன்று விஸ்வரூபமெடுத்து அருகில் வந்தது. அந்தச் சிறிய பறவை என்னைக் காட்டிலும் பெரிதாக இருந்தது. இல்லை.. அது எனது பிரமை. கையைத் தூக்கி அதைப் பிடிக்கப் போனேன், அது சிறிது எம்பிப் பறந்து கைக்கெட்டாதவாறு அமர்கிறது. சிறிது நேரத்தில் எனது முகத்தின் மிக அருகினில் வந்து எனது சீரிய பெருமூச்சின் சூட்டில் சிறிது நேரம் குளிர் காய்ந்து நடனமாடிக் கொண்டிருக்கிறது.

என் வலிகளையும், பசியையும் போக்க இந்த ஒற்றைப் பறவை போதாது. ஓராயிரம் கடல் ஜந்துகள் தேவை. ஆனால் இந்த ஒற்றைப் பறவையைப் பிடிக்கக்கூட என் கையைத் தூக்க முடியவில்லை. பறவை மெதுவாக அருகில் வந்து, பாதி இமை மூடிய கண்ணருகில் அமர்ந்தது. தன் முழு பலத்தையும் சேர்த்துக் குலுக்க பறவை பறந்துவிடும். ஆனால் வேண்டாம் என்று தோன்றியது. பெரும்பாலும் தனிமையையே விரும்பிய எனக்கு இந்த சிறு பறவையின் இருப்பு தேவைப்பட்டது. சிறிது நேரம் எனது உடம்பின் மேலே குதித்து விளையாடிவிட்டு, ஆங்காங்கே இருக்கும் ஒட்டுண்ணிகளைப் பிடுங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. சலனமற்று கிடந்த எனது முகத்தின் அருகினில், மிக அருகினில் அதன் வாசத்தை உணர்கிறேன்.

என் பாதி மூடிய கண்ணின் இடைவெளியை உற்று நோக்கிவிட்டு. அதன் அலகைக் கிட்டே கொண்டுவர அதன் எண்ணம் எனக்குப் புரிந்துபோய் விட்டது. எனது இமைகள் தானாக மூடிக்கொண்டது.

இப்பொழுது முழுவதும் இருட்டு. இருட்டின் விஸ்தாரத்தைப் பார்க்கிறேன். எல்லையற்ற ஆனந்தத்தை அது கொடுத்துக் கொண்டிருக்கிறது. வலிகளிலிருந்து விடுபடும் பொழுது கிட்டும் பேரானந்தத்தின் பேருவகையில் திளைத்துக் கொண்டிருக்கிறேன். புதிய உலகின் தொடக்கத்தில் நான்.

***

சங்கர நாராயணன்

நாமக்கல்லில் பிறந்த இவர் தற்போது அமெரிக்காவில் மிக்ஸிகன் மாகாணத்தில் வசித்து வருகிறார். இவரது முதல் சிறுகதை இது. shansapmail@gmail.com

ஓவியம் – Katsushika Hokusai

ஜீவன் பென்னி கவிதைகள்

1

நதியில் எறிந்த கற்களை தேடி எடுப்பவன்
எரியும் மனிதனின் கடைசி நொடிகளை
ஒரு நேர்கோட்டைப் போல உங்களால் வரைந்திட முடியாது.

1.
மென்மையாக ஒரு கொலையை முடித்து வைப்பதென்பது,
பழகிய புல்லாங்குழலை கடைசியாக ஒருமுறை வாசித்து விட்டு
வெகுதூரமாக எறிந்திடுவது
அல்லது
பழக்கப்படுத்தியிருந்த உயிரின் நம்பிக்கைகளை உயரமான
ஒன்றிலிருந்து தள்ளி விடுவது
அல்லது
கடைசியாகக் கெஞ்சிடும் ஒரு மனதின் லயத்திலிருந்து விரிந்திடும்
உலகை ரசித்துக் கொண்டிருப்பது
அல்லது
அவ்வளவு விலகி நின்று
வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அன்பொன்றை
எல்லாவிதங்களிலும் சுலபமாகக் கைவிடுவது

2.
கரடுமுரடான ஒரு எதிரியிடம் பழகுவதென்பது
அந்த வழியாக ஓடிடும் நதியொன்றின் மீது சிறுசிறு கற்களை
எறிந்திடுவது போலானது தான்
பிறகு
வற்றிய அந்நதியில்
அக்கற்களைத் தேடிப்போய் எடுத்துப் பாதுகாப்பது தான்
அவ்வெதிரியின் சிரிப்பை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருப்பதென்பது.

3.
ஒரு பூவைப் பறித்து கசக்கியெறியும் குரூரத்தில்
ஒருவன் தன் ஞானத்தைத் திறந்து விடுகிறான்
மற்றொருவன் அவனது அறியாமையை பகிர்ந்து கொள்கிறான்
வேறொருவன் உலகின் அமைதியை உற்றுப் பார்க்கிறான்
சம்பந்தமேதுமில்லாதவன் கொலையை பாதியில் கைவிடுகிறான்

4.
இந்தப் பாதையில் கிடக்கும் பாதத்தடங்கள்
நேற்றின் கனிந்த பாடலொன்றை
எல்லோருக்காகவும் பாடிக் காண்பிக்கின்றன.
உலகம் முடிகின்றன இடம் வரை
அப்பாதங்களை அழைத்துச் சென்று காண்பித்து விட்டு
திரும்பவும் அழைத்து வந்து அதேயிடத்தில்
கிடத்தியிருக்கிறது..

5.
ஒரு சன்னலைப் போல எவன் தன்னைத் திறக்கிறானோ
அவனே மனிதனுக்கு வெகு அருகிலிருக்கும்
மற்றொரு மனிதனாகிறான்

6.
எல்லாவற்றையும் தேடி எடுத்துத் தருபவன்
சிறிய பொருளொன்றின் மீது படிந்திருக்கும் திசையையும்
காலத்தையும் சேர்த்தேக் கொடுக்கிறான்

7.
ஒரு மனிதன் ஒரு வரிசையைக் குலைக்கிறான்
குலைந்த அவ்வரிசை சில மனிதர்களை ஆயுதமாக்குகிறது
சில ஆயுதங்கள் அந்த இடத்தை மௌனமாக்குகின்றன
பிறகு
ஒரு தற்காலிக வரிசையை சிலர் உருவாக்க முயல்கின்றனர்

8.
திறக்கப்படும் சன்னல்
வானம் தனிப்பட்ட யாருடையதாகவு மிருப்பதில்லை யென்கிறது
மூடப்படும் சன்னல்
தலைகீழான ஒற்றைக் குரூரத்தை யார் மீதோ கையாளுகிறது
இல்லாத சன்னல்
தொடர்பற்ற பல கனவுகளை வெளியேற்றிட வழியற்றிருக்கிறது
நினைவிலிருக்கும் சன்னல்
எப்போதும் உதிர்ந்து பறக்கும் ஒரு சந்தோசத்தைக் காண்பிக்கிறது

9.
கடைசியாக மண்ணில் கிடந்த ஆயுதங்களிலொன்றைக்
கைகளிலெடுத்துப் பார்க்கிறான்
உயிர்களைப் பறித்திட்ட கருவி போலவே இல்லை யது
ஒரு ஆறுதலுக்காகத் தவித்திடும் சிறிய மனதை ஒற்றிய
வடிவத்தில்
அவனின் கைகளுக்குள் முழுவதுமாக அடங்கிக்கொள்கிறதது

10.
அவனின் நினைவிலிருந்த ஒரு ஆயுதத்தில்
ஒரு நொடி மிச்சமிருந்தது
அதற்கு முன்பாக ஒரு இதயமிருந்தது
வெட்டப்படுவதற்கு முன்பிருந்த அதன் துடிப்பின்
இசையை அதிலிருந்து தான் அவன்
முழுமையாகக் கேட்டுப் பார்க்கிறான்

***

ஜீவன் பென்னி

ஓவியம் – Katsushika Hokusai

மியான்மார் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு: அதிகார முரண்பாடுகளும் வரலாற்றுப் பின்னணியும்

0

ரூபன் சிவராஜா

70 ஆண்டுகளுக்கு மேலான உள்நாட்டு முரண்பாடுகள், இராணுவ ஆட்சி வரலாற்றையும் கொண்டுள்ளது. இது மூன்றாவது இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு. 1962-லிருந்து 2011 வரையான 50 ஆண்டுகள் இராணுவ ஆட்சிக்குள் இருந்தது. 2011-லிருந்து உள்ளக மற்றும் வெளியக அழுத்தங்கள், மற்றும் பொருளாதார நலன்கள் சார்ந்த தெரிவுகள் ‘ஜனநாயகப் பாதை’யில் நகர்வதற்கான நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியிருந்தது.

2021 பெப்ரவரி முதலாம் நாள் மியான்மார் இராணுவம் ஆட்சிக்கவிழ்ப்புச் செய்து நாட்டின் ஆட்சியதிகாரத்தைத் தம்வசப்படுத்திய செய்தி உலக அரசியலின் பேசுபொருளாகியுள்ளது. தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் Aung San Suu Kyi உட்பட்ட அரசியல் தலைவர்கள், முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்க் கைதுசெய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தலைநகர் ரங்கூன் உட்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பிற்கு எதிரான கண்டன ஒன்றுகூடல்களில் குறிப்பிட்ட தொகை மக்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

மியான்மாரில் இராணுவ ஆட்சி, ஆட்சிக்கவிழ்ப்பு என்பன புதியதோ அன்றி அதிர்ச்சிக்குரிய நிகழ்வோ அல்ல. தெற்காசிய வரலாற்றில் பல தசாப்தங்கள் இராணுவ ஆட்சியின் கீழ் வைத்திருக்கப்பட்ட நாடு அது. 1948-இல் பிரித்தானிய கொலனித்துவ ஆளுகையிலிருந்து விடுதலை பெற்ற பின்னரான இற்றைவரையான 70 ஆண்டுகளுக்கு மேலான உள்நாட்டு முரண்பாடுகள், இராணுவ ஆட்சி வரலாற்றையும் கொண்டுள்ளது. இது மூன்றாவது இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு. 1962-இலிருந்து 2011 வரையான 50 ஆண்டுகள் இராணுவ ஆட்சிக்குள் இருந்தது. 2011-இலிருந்து உள்ளக மற்றும் வெளியக அழுத்தங்கள், மற்றும் பொருளாதார நலன்கள் சார்ந்த தெரிவுகள் ‘ஜனநாயகப் பாதை’யில் நகர்வதற்கான நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியிருந்தது.

தற்போதைய இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பினை மேற்கு கண்டித்திருக்கின்றது. ஐ.நா-வில் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டு ஆராயப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் விடுவிக்கப்பட வேண்டும், இராணுவத்தின் ஓராண்டுகால அவசகாலச் சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு, ஜனநாயக நடைமுறைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன. அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதாரத் தடை தொடர்பான அச்சுறுத்தலை விடுத்துள்ளன. ஐ.நாவில் பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரமுள்ள சீனாவும், ரஸ்யாவும் சர்வதேச கூட்டு நடவடிக்கைகளிலிருந்து மியான்மாரைக் காப்பாற்றி விடுகின்றன. 2017-இல் ரொகிங்ய மக்களுக்கெதிரான இன அழிப்பிற்கெதிராக தீர்மானங்களிலும் இவ்விரு நாடுகளும் அவ்வாறே நடந்து கொண்டன. இம்முறை இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிரான நடவடிக்கைகளையும் தமது வீட்டோ அதிகாரத்தின் மூலம் முறியடித்துள்ளன.

மியான்மாரின் இராணுவ ஆட்சிபீடத்தின் முதன்மை ஆதரவு சக்தியாகச் சீனா தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. அதேவேளை சீனாவைத் தமது இருப்பிற்கான அச்சுறுத்தலாகவும் மியான்மாரின் இராணுவம் பார்த்து வந்துள்ளது. இராணுவ ஆட்சிபீடம் சீனாவில் முழுமையாகத் தங்கியிருக்கும் நிலையில் இருந்த அதேவேளை, சீனாவின் நலன்கள் மற்றும் தலையீடு சார்ந்த அச்சமும் இராணுவ ஆட்சிபீடத்திற்கு இருந்து வந்துள்ளது என்கிறார் நோர்வேஜிய சமூக மானிடவியல் பேராசிரியரும் மியான்மார் மற்றும் இலங்கைத் தீவின் அரசியல் சூழ்நிலைகள் தொடர்பான ஆய்வு அறிதலும் அனுபவமுமுள்ள கிறிஸ்தியான் ஸ்தொக்க.

மியான்மார் நாட்டின் மொத்த சனத்தொகை 52 மில்லியன் (2014 கணக்கெடுப்பின்படி). பல்வேறு இனத்துவக் குழுக்களைக் கொண்டுள்ளது. எட்டு வரையான அரசினால் அங்கீகரிக்கப்பட்ட இனத்துவத் தேசிய இனங்கள் மியான்மாரில் உள்ளன. ரொகிங்யா போன்ற இன்னும் பல அங்கீகரிக்கப்படாத, குடியுரிமை மறுக்கப்பட்ட சிறுபான்மை இனங்களும் உள்ளன. இதில் 68 வீதமான பெரும்பான்மையினர் பர்மியர்கள். அவர்களே அரசியல் மேலாதிக்கம் செலுத்தி வருபவர்களுமாவர். ஏனைய சிறுபான்மை இனக்குழுமங்களின் சுயாட்சி உரிமைகள் தொடர்பான முரண்பாடுகள் ஆயுத மோதல்களுக்கும் உள்நாட்டுப் போர்களுக்கும் இட்டுச்சென்றன. 85 வீதமானவர்கள் பொளத்தர்கள், 4 வீதமானவர்கள் கிறிஸ்தவர்களும் 4 வீதமானவர்கள் முஸ்லீம்களுமாவர்.

ஆட்சிக் கவிழ்ப்பிற்கு இராணுவபீடம் சொல்லும் காரணம், கடந்த ஆண்டு (2020) நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடிகள் நடந்துள்ளன என்பதாகும். தேர்தல் ஆணையத்திற்கு பல முறைப்பாடுகள் கொண்டுசெல்லப்பட்டபோதும், அவை தேசிய ஜனநாயக கூட்டமைப்பு அரசாங்கத்தினால் தடுக்கப்பட்டுள்ளன என்பதுமாகும். நாட்டின் தேசிய பாதுகாப்புக் கருதித் தாம் ஆட்சிப்பொறுப்பேற்றதாக இராணுவபீடம் கூறியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தினைத் தாம் மறுசீரமைத்து, ஓராண்டுக்குள் புதிய தேர்தலை நடாத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கத்திடம் ஆட்சிப் பொறுப்புக் கையளிக்கப்படுமென இராணுவத் தளபதி Min Aung Hlaing கூறியிருக்கின்றார்.

ஆனால் உண்மை நிலவரம் வேறானது. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலோ, இறைமை அச்சுறுத்தல் சார்ந்த பிரச்சினைகளோ அங்கு இல்லை. இது முற்றிலும் அதிகாரம் சார்ந்த முரண்பாடுகளின் விளைவு என்பது மியான்மார் நிலைமைகளை அறிந்த ஆய்வாளர்களின் பார்வையாகும்.

மியான்மாரின் பழைய பெயர் பர்மா. வடகிழக்கில் சீனாவையும், தென் கிழக்கில் தாய்லாந்தினையும், கிழக்கில் லாவோசினையும், மேற்கில் இந்தியா மற்றும் வங்கதேசத்தினையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. 1948 வரை பிரித்தானியக் கொலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த மியான்மாரில் அவர்களின் வெளியேற்றத்திற்குப் பிற்பட்ட காலங்களில் முற்றிலுமாக அமைதியற்ற பல்வேறு முரண்பாடுகளால் சூழப்பட்ட வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட காலங்களாகவே இருந்து வந்திருக்கின்றன. இம்முரண்பாடுகள் இராணுவ ஆட்சியதிகாரத்தை கைக்கொண்டிருந்த அதிகார மையங்களுக்கும் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் வலியுறுத்தி வந்த சக்திகளுக்குமிடையிலுமான முரண்பாடுகளாக இருந்துள்ளன.

1962-இல் இராணுவம் ஆட்சிக்கவிழ்ப்பு முதன்முதலில் நிகழ்த்தப்பட்டு ஜெனரல் Ne Win தலைமையில் இராணுவ ஆட்சி நிறுவப்பட்டது. அந்தக் காலப்பகுதியிலிருந்து அதாவது 1962-ஆம் ஆண்டிலிருந்து 2011 வரையான அரைநூற்றாண்டு காலங்கள் மியான்மாரில் இராணுவ ஆட்சியே நிலவி வந்திருக்கின்றது. தென்கிழக்கு ஆசியாவில் செல்வச் செழிப்பான நாடுகளில் ஒன்றாக விளங்கி வந்த அந்நாடு இராணுவ ஆட்சிக்குட்பட்ட காலங்களில் உலகின் மிக வறிய நாடுகளில் ஒன்றென்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது. சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. ஆனபோதும் சீனாவுடன் தொடர்ச்சியான வணிக மற்றும் படைத்துறை உறவும் ஏனைய சில ஆசிய நாடுகளுடன் வணிக உறவும் இருந்துவந்துள்ளது.

இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் முன்னரும் பலதடவைகள் நடந்துள்ளன. 1988-இல் இராணுவ ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டம் முதன்முதலில் எழுந்தது. ஜனநாயகத்தை நிலைநிறுத்தக் கூடிய வகையில் மறுசீரமைப்புகள் கொண்டு வரப்பட வேண்டும். சுதந்திரமான முறையில் தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு மக்கள் போராட்டங்கள் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டன. எதிர்ப்புப் போராட்டங்கள் பௌத்த துறவிகள் மற்றும் மாணவர் சமூகம் தொழிற்சமூகங்களால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டன.

அன்றைய நாட்களில் அதாவது 1988-இல் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இராணுவத்தினரால் கடுமையாக தாக்கி அழிக்கப்பட்டனர். பெரும் ரத்தக்களறியில் 3000-ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். பலநூற்றுக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து 1990-ம் ஆண்டு (இராணுவ ஆட்சி நடாத்தப்பட்டு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர்) ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 1990-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அத்தேர்தலில் National league for democracy – ஜனநாயகத்திற்கான தேசியக் கூட்டமைப்பு மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி பெற்றது. 1930-1940 வரையான காலப்பகுதியில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக நாட்டின்; விடுதலையை வலியுறுத்தி போராட்டத்தினை முன்னெடுத்த ஜெனரல் Aung San-இன் மகள்தான் Aung San Suu Kyi. அவரே ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்.

ஜனநாயகத்திற்கானதும் மக்கள் உரிமைகளுக்கானதுமான அமைதிவழிப் போராட்டத்தினை முன்னெடுத்து வந்த Suu Kyi 1990-ம் ஆண்டு, இராணுவ ஆட்சி மையத்தினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இராணுவ ஆட்சிக்கெதிரான மக்கள் புரட்சிகளுக்கு தலைமை தாங்கினார் என்ற குற்றசாட்டின் பேரிலேயே அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

1990-ம் ஆண்டு நடாத்தப்பட்ட தேர்தலில், ஏறத்தாழ 90 வரையான அரசியல் கட்சிகள் போட்டியிட்டன என்று தகவல் தெரிவிக்கின்றன. இதில் Aung San Suu Kyi தலைமையிலான தேசிய ஜனநாயகம் கட்சி பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் வெற்றியீட்டியது.! ஆனபோதும் ஜனநாயகத் தேர்தலை புறக்கணித்த இராணுவ ஆட்சிப்பீடம் தேர்தலில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளையும் தடைசெய்ததோடு, தேர்தலில் வென்ற கட்சியிடம் ஆட்சியதிகாரத்தைத் கையளிக்கவும் மறுத்தது. தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற இடங்களைப் பறித்து, அவற்றில் இராணுவத்தை சேர்ந்த வேட்பாளர்களை உறுப்பினர்களாக நியமித்தது.1990ம் ஆண்டிலிருந்து Aung San Suu Kyi பல்வேறுதடவைகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

வன்முறையற்ற அமைதி வழிமுறைகள் மூலம் ஜனநாயகத்திற்காகவும் மனித உரிமைகளுக்கான அவரது போராட்டங்களுக்காக 1991-ம் ஆண்டு நோர்வேயினால் அவருக்கு சமாதானத்திற்கான நோபல் விருது வழங்கப்பட்டது. அவர் நோபல் விருதினை நோர்வேக்கு பயணம் சென்று பெற்றுக்கொள்ளாத வகையில் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். சமாதானத்திற்கான நோபல் விருது அவருக்கு வழங்கப்பட்டதை அடுத்து பர்மாவின் இராணுவ ஆட்சி அதிகார மையத்திற்கெதிரான அனைத்துலக அழுத்தம் அதிகரித்தது எனலாம்! ஆனபோதும் அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் மியான்மாரின் அரசியல் மாற்றத்திற்கு வழியேற்படுத்தவில்லை.

2007-இலும் தலைநகர் உட்பட்ட நகரங்களில் பெருவெடுப்பிலான அமைதிப் பேரணிகள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பொத்த துறுவிகள் பல்லாயிரக்கணக்கில் எதிர்ப்பு பேரணிகளில் கலந்து கொண்டிருந்தனர். ஒரு லட்சம் வரையிலான பௌத்த துறவிகளும் மக்களுமாக இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஜனநாயகம், மனித உரிமையை வலியுறுத்தியும் போராட்டங்களை முன்னெடுத்தனர். மியான்மாரின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்தியாக பௌத்த துறவிகள் கிளம்பிய செய்திகள் அன்றைய காலகட்டத்தில் உலக ஊடகங்களில் முக்கிய செய்தியாகியிருந்தன.

2008-இல் ஏற்பட்ட நர்கிஸ் சூறாவளி இடரில், 138,000-க்கும் அதிகமானோர் பலியாகினர். உயிர்களை இழந்தனர், 2007 புத்த பிக்குகளைக் மோசமாகக் கையாண்ட விதம் என்பனவும் அரசியல் ஆட்சி முறைமை சார்ந்த மறுசீரமைப்புகளைக் கோரிநின்றது. ஜனநாயகத்திற்குத் திரும்பும் பாதையில் 2008-இல் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது. 2008-இல் தமது அதிகார நலன்களை நிலைநிறுத்தும் இலக்கோடு அரசியலமைப்பு மாற்றத்தினைக் கொண்டு வந்தனர். அதற்கமைய 2010-இல் தேர்தல் நடாத்தப்பட்டு, 2011-இல் நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. புதிய அரசியலமைப்பும், தேர்தல் நடாத்தப்பட்ட முறையும் ஜனநாயகத்திற்கான அமைப்பு மற்றும் சிறுபான்மை இனங்களின் விமர்சனங்களுக்கு உட்பட்டன.

அரசியலமைப்பின் மூன்று முக்கிய கூறுகள் இராணுவத்தின் தொடர்ச்சியான பிடியினை உறுதிப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டன. நாடாளுமன்றத்தில் 25 சதவீத இடங்கள் இராணுக்கட்சியின் (Union solidarity and development party) பிரதிநிதிகளுக்குரியது என்பதோடு மூன்று முக்கிய அமைச்சகங்களும் அவர்களுக்குரியது. பாதுகாப்பு அமைச்சு, உட்துறை விவகாரங்கள் மற்றும் எல்லைக் பாதுகாப்பு ஆகியன அவையாகும். நாடாளுமன்றம் மேலவை (தேசிய அவை), கீழவை (உறுப்பினர் அவை) என இரண்டு அவைகளைக் கொண்டது. இரண்டிலும் படைப்பிரிவைச் சேர்ந்த 25 வீதமானவர்கள் பிரதிநிதித்துவம் அரசியலமைப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அத்தோடு அரசியலமைப்பு திருத்தங்கள், மாற்றங்களுக்குக் குறைந்தது 75 சதவீத உட்கார்ந்த உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்பதும் அரசியலமைப்பின் முக்கிய மூன்று இராணுவபீடத்திற்குச் சாதகமாக அவர்களாலேயே கொண்டு வரப்பட்ட அம்சங்கள்.

வெளிநாட்டுப் பின்னணியையுடைய வாழ்க்கைத் துணை அல்லது பிள்ளைகளையுடைய எவரும் ஜனாதிபதியாக முடியாது. இந்த விதிமுறை Suu Kyi-ஐ மனதிற்கொண்டு உள்ளடக்கப்பட்டதாகும். அவருடைய மறைந்த கணவர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர் என்பதோடு இரண்டு மகன்களும்பிரித்தானியக் குடியுரிமையை வைத்திருப்பவர்கள். என்பது அவர் ஜனாதிபதியாவதைத் தடுக்கின்றது. கடந்த தேர்தலின் (2015) பின்னர் NLD கட்சியைச் சேர்ந்த தனக்கு நெருக்கமான Htin Kyaw என்பவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து தனது கட்டளைகளை அவர் நடைமுறைப்படுத்துவார் என்பதையும் தெளிவுபடுத்தினார். நாடாளுமன்றத்தினூடாக அரச ஆலோசகர் என்ற புதியதொரு பதவியை கட்சி உருவாக்கியது. நடைமுறையில் அந்தப் பதவி அவரை அரசாங்கத்தின் அதிகாரம்மிக்க தலைவராக்கியது.

2015-இல் ஒபாமா தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் நாட்டின் மீதான பொருளாதாரத் தடையை நீக்கியதோடு, மியான்மாருக்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெயரும் ஒபாவுக்கு உண்டு. அமெரிக்காவைத் தொடர்ந்து மேற்கின் பல்வேறு நாடுகளும் வணிக, நிதி நிறுவனங்களும் தடைகளை நீக்கின. 2012-ம் ஆண்டின் ஆரம்பத்தில் உலக வங்கி மியான்மருடன் மீண்டும் உறவைப் புதிப்பித்தது. அரச நிறுவனங்களுக்கு கடன் வழங்கியது. அத்தோடு கடன் முகாமைத்துவம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டுச் சட்டம் குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கியது. மிகப்பெரிய அளவிற்கு வெளிநாட்டு மூதலீடுகள் நாட்டிற்குள் செல்லத் தொடங்கியது.

***

ரூபன் சிவராஜா

தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது.

ஓவியம் – Katsushika Hokusai

மியான்மார்: உள்ளகச் சிக்கல்களும் வெளித்தரப்புகளின் நலன்களும்

0
Protesters hold placards and flowers during a demonstration against the military coup in Yangon on February 7, 2021. (Photo by Ye Aung THU / AFP)

ரூபன் சிவராஜா

சீனாவிற்கு மியான்மார் சார்ந்து தொலைநோக்கு அடிப்படையிலான இலக்குகள் உள்ளன. சீனாவின் வணிகம் மிகப்பெருமளவில் கடலை மையப்படுத்தியது. இந்துமா கடலுக்கு மலாக்கா நீரிணை ஊடான சுற்றுப்பாதையைத் தவிர்த்து நேரடிப் போக்குவரத்துப் பாதைக்கு மியான்மார் அவசியமான தளம். Rakhine கரையோரத்திலிருந்து (Port of Kyaukphyu ) சீனாவின் தென்மேற்கு மாநிலமான Yunnan-இற்கு ஆழ்கடல் வழியான எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டத்துடன் (Belt and Road) தொடர்புபட்டது. 2015-இற்குப் பின்னர் மியான்மாரில் சீனாவின் தலையீடு அதிகரித்துள்ளதான பார்வை நிலவுகிறது.

2015 தேர்தலில் Aung San Suu Syi பெரும் வெற்றியடைந்தார். தொடர்ந்தும் பெரும்பான்மை ஆதரவு அவருக்கு மக்கள் மத்தியில் உள்ளது. இம்முறைத் தேர்தலிலும் பெரும் வெற்றியடைந்தார். தேர்தல் நடாத்தப்பட்ட முறை அல்ல பிரச்சனை. தேர்தல் முடிவுகள்தான் இராணுவபீடத்திற்குப் பிரச்சனை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமது அரசியல் வகிபாகமும் அந்தஸ்தும் பலவீனமடைந்த நிலையில் மேலும் ஐந்து ஆண்டுகள் தமது அதிகார இருப்பினைக் கேள்விக்கு உட்படுத்திவிடுமென்ற அச்சமே புதிய அரசாங்கம் கூடவிருந்த சிலமணி நேரங்களுக்கு முன்னர் ஆட்சிப் பறிப்பு முடிவினை இராணுவபீடம் எடுக்கவைத்துள்ளது. 80 வீதமான நாடாளுமன்ற இருக்கைகளை தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பு வென்றது. இது இராணுவக் கட்சிக்கு பெருத்த வீழ்ச்சியும் அவமானமும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் (2011) ஜனநாயகத் திறவுக்கு இராணுவ ஆட்சிபீடம் இணங்கியமைக்கான பின்னணிகளில் முக்கியமானது நாட்டின் மீதான சீனச்செல்வாக்கினைக் குறைத்து, மேற்கினை நாட்டுக்குள் அனுமதிப்பதாகும். அதன் மூலம் ஒருவகைச் சமநிலையை உருவாக்குகின்ற நோக்கத்திலானது என்கிறார் பேராசிரியர் ஸ்தொக்க. மேற்கினை உள்வர அனுமதித்தல் என்பது சீனாவைக் கையாள்வதில் ஒரு எதிர்வலுவினை உருவாக்குவதும், சீனாவைக் கையாள்வதற்கான ஒரு துருப்புச் சீட்டாகக் கையாள்வதும் தொடர்பான மியான்மார் இராணுவ ஆட்சியாளர்களின் நோக்கத்தைக் குறிக்கின்றது. ஆனால் மேற்கின் உள்நுழைவு என்பது சீனாவை முற்றிலுமாக அரங்கிலிருந்து அகற்றவில்லை. ஆனால் சீனாவின் அதிகாரம் ஒருபடி பின்தள்ளப்பட்டது என்பதில் உண்மையுள்ளது.

2015 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பு பாரிய வெற்றி பெற்றது. இராணுவ பீடம் தமக்குச் சாதகமாக அரசியலமைப்பினை மாற்றியிருந்தபோதும் Aung San Suu Kyi-இன் பாரிய வெற்றியும் அவர் அரசாங்கத்திற்குத் தலைமை தாங்குகின்ற நிலை உருவாகியமையும் இராணுவபீடத்தின் அதிகார நலன்களுக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தின. சீனாவிற்கு சார்பாக வலுச்சமநிலை மாறுவதற்கு ஏதுவான சூழல் அமைந்தது. Suu Kyi மேற்கின் செல்லப் பிள்ளையாக இருந்தார் என்பதும் சமாதானத்திற்கான நோபல் விருது உட்பட்ட பல்வேறு மனித உரிமை விருதுகளை மேற்குலகம் அவருக்கு வழங்கியிருந்தமை உலகறிந்தது. ஆனால் அவர் பதவிக்கு வந்த பின்னர் மேற்கு எதிர்பார்த்த தாராளவாத ஜனநாயகவாதியாக செயற்படவில்லை. அவரின் நடவடிக்கைகளும் நிலைப்பாடுகளும் மேற்கிற்கு ஏமாற்றத்தைக் கொடுத்தன.

அவர் முதன்முறையாகப் பர்மிய – பௌத்த ஜனநாயகப் புரிதலுடன் உள்நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு, இராணுவ பீடத்துடனான மேற்கின் உறவு சார்ந்தும், மேற்கின் அரசியல் ஈடுபாடு வணிக, பொருளாதார ஈடுபாடாக மாறியதையிட்டு அதிருப்தியடைந்ததாகவும் சுட்டிக் காட்டுகிறார் பேராசிரியர் கிறிஸ்தியான் ஸ்தொக்க.

ஆனால் மேற்கின் அணுகுமுறை என்பது, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமை, கருத்துச் சுதந்திரம், அபிவிருத்தி, என்ற பேர்களில் தமது வணிக பொருளாதார நலன்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்துவதே இறுதி இலக்கு. குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இத்தகையை சொற்பிரயோகங்களுடனேயே அமெரிக்காவும் மேற்கும் தலையீடு செய்து களமிறங்குகின்றன. இதற்குப் பல்வேறு உதாரணங்களை வரலாற்றிலிருந்து கூறமுடியும். முரண்பாடுகள், உள்நாட்டுப் போர்கள் நடைபெறும் நாடுகளில் மேற்கினால் முன்னெடுக்கப்படும் சமாதான முயற்சிகளுக்குப் பின்னால் அவர்களின் பொருளாதார நலன்கள் இருந்திருக்கின்றன என்பதுவும் அறியப்பட்டதே.

மியான்மாரைப் பொறுத்தவரையிலும் ஜனநாயகப் பாதைக்குத் திரும்புதல் என்ற அணுகுமுறை, மேற்கத்தைய வணிகத் தரப்புகள் போட்டிபோட்டுக் கொண்டு இராணுவ பீடத்துடன் உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்குரிய கதவுகளைத் திறந்தது. எனவே இது பரஸ்பரம் மியான்மார், சீனா உட்பட்ட பிராந்தியத் தரப்புகள் மற்றும் மேற்கு ஆகியவை தத்தமது நலன்களுக்கான அறுவடையைக் கருத்திற்கொண்டு முன்னெடுத்த அணுகுமுறைகளாகும்.

2012-இலிருந்து மதரீதியான வன்முறைகள், குறிப்பாக நாட்டின் முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்தன. பவுத்த தேசியவாதம் வன்முறையோடு மீள் எழுச்சியடைந்தது. ராக்கின் மாநிலத்தில் (Rakhine province) ரொகிங்ய மக்களுக்கு (Rohingya) மக்களுக்கு எதிரான படுகொலைகளும் வன்முறைகளும் அதிகரித்தன. Rakhine முரண்பாடு என்பது அடிப்படையில் மத முரண்பாடு அல்ல. அது ரொகிங்ய மக்கள் மீதான அப்பட்டமான இன ஒடுக்குமுறை. 1982-இல் ரொகிங்ய மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு, பல்வேறு அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. மியான்மாரின் பௌத்த பெருந்தேசியவாதம் அம்மக்கள் மீதான பாரிய வன்முறைகளை 2015 காலப்பகுதியில் கட்டவிழ்த்துவிட்டது. 2017-இல் இராணுவ வன்முறைகளில் 6700 வரையான ரொகிங்ய மக்கள் கொல்லப்பட்டதோடு, 700 000 வரையான ரொகிங்யர்கள் சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, வங்கதேச எல்லைகளை நோக்கி விரட்டப்பட்டனர்.

இந்த நடவடிக்கைகளை இன அழிப்பு என ஐ.நா வரையறை செய்தது. அத்தோடு இதனுடன் தொடர்புபட்ட சில இராணுவ ஜெனரல்களின் பெயரைக் குறிப்பிட்டு, இன அழிப்பு, போர்க்குற்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை நடாத்துமாறும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்துமாறும் கோரியிருந்தது.
Rohingya முஸ்லீம் சிறுபான்மையினர் மீதான மியான்மார் அரச இராணுவ இயந்திரத்தின் இன அழிப்பு நடவடிக்கைக்கு தார்மீக எதிர்ப்பினையோ கண்டனத்தையோ வெளிப்படுத்தவில்லை என்ற அடிப்படையில் 2012-ஆம் ஆண்டு Suu Kyi-க்கு வழங்கப்பட்ட மனித உரிமை விருதினை அமெரிக்க Holocaust Museum 2018-இல் மீளப்பெற்றது 1997-ஆம் ஆண்டு Oxford பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட சுதந்திரத்திற்கான விருதும் (Freedom Award) கடந்த 2017 நவம்பர் மாதம் மீளப்பெறப்பட்டது.

விருது மீளப்பெறுகை தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் இப்படிக் குறிப்பிட்டிருந்தது:

‘இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிரான நீண்ட எதிர்ப்புப் போராட்டம், மியான்மார் மக்களின் சுதந்திரத்திற்கும் மனித உரிமைகளுக்குமாக ஓங்கி ஒலித்த உங்கள் குரல் உலகெங்கிலுமுள்ள பல மில்லியன் கணக்கான மக்கள் மத்தியில் நீங்கள் உருவாக்கிய உத்வேகத்தின் அடிப்படையில் உங்களுக்கு 2012-இல் விருது வழங்கியதில் நாம் பெருமைகொண்டோம். இப்போது மிகுந்த வருத்தத்துடன் அந்த விருதினை மீளப்பெறுகிறோம். இந்த முடிவிற்கு நாம் இலகுவில் வரவில்லை.’

அருங்காட்சியகம் ரொகிங்ய மக்களுக்கெதிரான மியான்மார் இராணுவத்தின் நடவடிக்கைகளையும் அதற்கான Aung San Suu Kyis-இன் பதில்களையும் நுணுக்கமாகக் கண்காணித்து வந்ததோடு, மியான்மார் மற்றும் வங்கதேசத்திற்குப் பல பயணங்களை மேற்கொண்டு முதற்கட்ட ஆதாரங்களையும் சேகரித்துள்ளது. இன அழிப்புத் தொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டிருந்ததாக 2018-இல் The Guardian செய்தி வெளியிட்டிருந்தது.

மியான்மார் நாட்டின் இராணுவ சர்வாதிகார ஆட்சியை எதிர்த்துக் குரல் கொடுத்து, அதற்காக 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த Aung San Suu Kyi நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடுமளவிற்கு சர்வதேச சமூகத்தால் கொண்டாடப்பட்டவர். ஆனால் 2017-இல் ரொகின்ய மக்கள் மீதான வன்முறை, அழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கிற்கும் அவருக்குமிடையிலான உறவில் விரிசலும் பரஸ்பரம் கசப்பும் ஏற்படத்தொடங்கியது. ரொகிங்கிய மக்கள் மீதான இராணுவத்தின் இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிராகரித்து இராணுவத்தினைப் பாதுகாத்தார். மேற்குக்கும் Aung San Suu Kyi இற்குமிடையிலான விரிசல் சீனா அவரை நெருங்க வழிவகுத்தது.

சீனாவிற்கு மியான்மார் சார்ந்து தொலைநோக்கு அடிப்படையிலான இலக்குகள் உள்ளன. சீனாவின் வணிகம் மிகப்பெருமளவில் கடலை மையப்படுத்தியது. இந்துமா கடலுக்கு மலாக்கா நீரிணை ஊடான சுற்றுப்பாதையைத் தவிர்த்து நேரடிப் போக்குவரத்துப் பாதைக்கு மியான்மார் அவசியமான தளம். Rakhine கரையோரத்திலிருந்து (Port of Kyaukphyu) சீனாவின் தென்மேற்கு மாநிலமான Yunnanஇற்கு ஆழ்கடல் வழியான எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டத்துடன் (Belt and Road) தொடர்புபட்டது. 2015-இற்குப் பின்னர் மியான்மாரில் சீனாவின் தலையீடு அதிகரித்துள்ளதான பார்வை நிலவுகிறது.

மியான்மாரில் சீனாவின் வகிபாகமும் தலையீடுகளும் சிக்கலான பரிமாணங்களைக் கொண்டதாகவும் பார்க்கப்படுகின்றது. ஒரு தளத்தில் அல்ல. பல தளங்களில், அதாவது அரசியல், இராணுவ, பொருளாதாரம் என அனைத்திலும் சீனா களமிறங்கி நிற்கின்றது. அங்குள்ள சிறுபான்மை இன ஆயுதப் போராட்டக் குழுக்களுடனான சமாதான முயற்சிகளில் சீனா அனுசரணைப் பாத்திரம் வகிக்கின்றது. சமாதான முயற்சியில் சீனாவின் நிலைப்பாடு ஒடுக்கப்படுவோரின் உரிமைகள், கோரிக்கைகளின் நிலைப்பட்ட அணுகுமுறை அல்ல. மாறாக பொருளாதார நிலைப்பட்ட சமாதான அணுகுமுறை அவர்களுடையது. பொருளாதார மேம்பாடும், மக்களை வாழ்க்கைத்தர நெருக்கடிகளிலிருந்து மீட்கும் திட்டங்கள் சமாதானத்திற்கான அடிப்படைகளை உருவாக்கும் என்பது சீனாவின் முரண்பாட்டுக் கையாள்கை, சமாதான அணுகுமுறை. தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பின் ஆட்சிக்காலத்தில் சீனா தனது, வகிபாகத்தினையும் செல்வாக்கினையும் பலப்படுத்தியமை இராணுவபீடத்திற்கு உவப்பானதாக அமையவில்லை.

மியான்மார் விடயத்தில், பல பந்தயக் குதிரைகளில் பணம் கட்டுகின்ற அணுகுமுறையைச் சீனா கடைப்பிடித்து வந்துள்ளது. ஒன்று சறுக்கினால் மற்றொன்று என்பதே அந்த அணுகுமுறை. பொதுவாகவே பனிப்போருக்குப் பின்னான காலத்தில் உலகநாடுகளின் வெளியுறவுத் தீர்மானங்களும் நகர்வுகளும் கோட்பாட்டு இலட்சியங்களின் அடிப்படையில் எடுக்கப்படுவதில்லை. நலன்களின் அடிப்படையில்தான் எடுக்கப்படுகின்றன. இதற்கு உலகநாடுகள் எதுவுமே விதிவிக்கல்ல. ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவிற்கு ஆதரவாக கியூபா வாக்களித்தமை என்பது இதற்குரிய முக்கியமான எடுத்துக்காட்டு.

மேற்கு தனது பொருளாதார நலன்களுக்காக பெயரளவில் பெரிதாகவும் செயலளவில் சிறிதாகவேனும் ஜனநாயகம், நல்லாட்சி, சமாதானம் போன்றவற்றை ஏற்றுமதி செய்கின்றது. சீனா கோட்பாட்டு இலட்சியங்களின் அடிப்படையில் வெளியுறவு முடிவுகளை எடுப்பதில்லை. பொருளாதார நலன் சார்ந்தே அதன் முடிவுகள் அமைவன. பொருளாதார ஸ்திரத்தன்மை, அபிவிருத்தி நிதியுதவி என்பனவே சீனாவின் வெளியுறவு மூலோபாயங்கள். அந்த வகையில் மியான்மாரைத் தளமாகப் பேணுதல் என்ற இலக்கிற்குரிய முடிவுகளையே சீனா எடுக்கும். மியான்மாரின் உள்நாட்டுச் சக்திகளுடன் தனது நலனுக்குரிய வகையில் உறவைப் பேணும் முடிவினையே அது எடுக்கும். அது இராணுவ பீடமாயிருந்தால் என்ன, போன்ற ஜனநாயக கட்சித் தலைவர்களாக இருந்தால் என்ன. அந்தந்தக் காலகட்டத்தில் அதிகாரத்தில் உள்ளவர்களுடன் உறவைச் சீனா பேணும். இராணுவ ஆட்சி எத்தனை காலம் நீடிக்கும் என்பது யாரும் அறியாதது. தற்போது அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் இராணுவத்தினர். எனவே அவர்களைப் பாதுகாக்க எண்ணுகிறது சீனா.

தென்-கிழக்கு ஆசியாவில் சீனாவிற்கு எதிரான அமெரிக்க அணிதிரட்டலுக்கு மியான்மாரும் அமெரிக்க நலன்களுக்கு முக்கியமானது. இந்தியாவும் மியான்மாரில் தனது வகிபாகத்தை உருவாக்குவதில் முனைப்புக் கொண்டுள்ளது. ஜப்பானும் ஏற்கனவே சமாதான அனுசரணை, அபிவிருத்தி நிதியுதவி ஆகியவற்றினூடு ஒருவகையான பொருளாதார அதிகாரத்தை மியான்மாரில் கொண்டுள்ளது. இந்தியா, ஜப்பான் ஆகிய இரண்டும் பிராந்தியத்தில் சீனாவின் போட்டி சக்திகள். அமெரிக்காவின் ஆதரவு சக்திகள். அளவுகளில் வேறுபாடிருப்பினும் இலங்கை போன்று மியான்மாரும் சிக்கலான உள்நாட்டு முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. மட்டுமல்லாது புவிசார் அரசியல் முரண்பாட்டுச் சக்திகளால் தத்தமது நலன்களுக்காகக் கையாளப்படும் தேசமும்கூட.

பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளின் இரண்டு கூட்டு(கள்) பர்மாவை மையம் கொண்டுள்ளன. ஒன்று அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய நட்பு சக்திகளின் கூட்டு ஒரு புறம். இது சர்வதேச மற்றும் பிராந்திய சக்திகள் இணைந்த கூட்டு. மற்றையது சீனாவின் நலன்கள் சார்ந்த தலையீடு. இதில் சீனா தனிப்பெரும் தரப்பு எனினும் பிராந்தியத்தின் கம்போடியா மற்றும் பிலிப்பைன் ஆகியன சீனாவின் ஆதரவு சக்தியாக உள்ளன.

***

ரூபன் சிவராஜா

தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது.

மார்ச் 2021 இதழ் :)

0

சென்னை புத்தகக்காட்சியை ஒட்டி மிகத் தாமதமாக மார்ச் இதழைக் கொண்டு வருகிறோம். இந்த தாமதத்தைப் பொருத்துக்கொண்ட ஆசிரியர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி.

இரண்டு சிறப்பிதழ்கள் வெவ்வேறு பொறுப்பாசிரியர்களைக் கொண்டு தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்த இதழுக்கு புகழ்பெற்ற ஹொகுசாய் அவர்களின் படங்களைப் பயன்படுத்தியிருக்கிறோம். ஹொகுசாய் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் நிறையவே எழுதியிருக்கிறார்.

ஒரு பக்கம் கொரோனா இரண்டாம் அலையும், மற்றொரு பக்கம் சட்டமன்றத் தேர்தலும் மிரட்டிக்கொண்டு வருகிறது. தொற்றுப்பரவலுக்கு தடுப்பூசி போல, ஜனநாயகத்தைக் காக்கும் நேர்மையான ஓட்டுக்கள் தடுப்பூசியே.

அடுத்த இதழில் குறுநாவல் போட்டி முடிவுகளை எதிர்பார்க்கலாம் (அதற்கு முன்னேயும் வரலாம்)

நன்றி

ஆசிரியர் குழு சார்பாக
ஜீவ கரிகாலன்

இளவரசன்

0

ஷான்

நானும் இளவரசனும் அந்தச் சிறிய குன்றின் உச்சியில் அமர்ந்திருந்தோம். அவன் தொலைவில் மறைந்து கொண்டிருந்த சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தான். சூரியன் ஏரியில் மறைகிறதா தொடுவானத்தில் மறைகிறதா என்று நான் கவித்துவமாக ஏதோ யோசித்துக் கொண்டிருந்தேன்.

“மேத்ஸ்னால சால்வ் பண்ண முடியாத ப்ராப்ளமே உலகத்துல இல்லை தெரியுமாடா” என்றான்.

அது 1995.

நாங்கள் இருவருமே நான்காம் ஆண்டு ஆர்க்கிடெக்சர் படிப்பில் இருந்தோம். நாங்கள் தங்கியிருந்த புதிய ஹட்கோ குடியிருப்பு அந்த மலையிலிருந்து பார்த்தால் நெருப்புப் பெட்டிகளை அடுக்கி வைத்தது போல் தெரிந்தது. அடிக்கடி நாங்கள் இருவரும் நடந்து இந்தக் குன்றின் உச்சிக்கு வருவோம். எப்போதாவது நண்பர்களும் உடன் வருவார்கள். ஹட்கோவைச் சுற்றிலும் வீடுகள் இல்லை. கரடுகளும் செடிகளும் புற்களும்தான். ஆங்காங்கே சிறு கற்குன்றுகள். அந்த இடத்திலிருந்து ரயிலே வராத மீட்டர் கேஜ் ரயில் நிலையம் தெரியும். இடது புறம் அகண்ட ஏரி ஒன்றும் தெரியும். ஏரியில் சூரியன் மறையும் அந்தக் காட்சி இளரசனுக்கு மிகவும் பிடிக்கும். அவன் உட்காரும் இடம் மாறவே மாறாது. அந்த பாறையின் மீது நானோ வேறு யாருமோ அமர்ந்துவிட்டால் கோபித்துக் கொள்வான். அதற்காகவே அங்கே அவனுக்கு முன் ஓடி அமர்ந்து அவனை வெறுப்பேற்றுவோம்.

இளவரசனுக்கு உயரமான ஒல்லியான உருவம். முழுதாக வளராத மீசை. இவற்றோடு ஏதோ காரணத்தால் ஏகமாக உதிர்ந்து கொண்டிருந்த முடியும் சேர்ந்து கொண்டு ஒரு விதமான குழந்தைத் தோற்றத்தை அவனுக்குத் தந்தது. நாங்கள் அனைவரும் காதலன் படத்தின் பிரபுதேவா ஸ்டைலில் கூடாரம் போல ஜீன்ஸைத் தைத்துப் போட்டுக் கொண்டு விதவிதமாக வண்ணத்தில் சட்டை போட்டுக் கொண்டு திரியும்போது அவன் மட்டும் மெல்லிய நிறத்தில் கோடு போட்ட சட்டையை இன் செய்து அளவெடுத்துத் தைத்த பேண்ட் போட்டுக் கொண்டு கலெக்டர் ஆஃபீஸ் குமாஸ்தா போல இருப்பான். அடர்த்தி குறைந்த முடியைப் படிய வாரியிருப்பான்.

“நீயே சொல்லுடா.. அந்தப் படம் வரதுக்கு முன்னாடி இப்படி கோமாளி மாதிரி டிரஸ் போட்டுட்டு யாராவது வந்திருந்தா நீங்களே கிண்டல் பண்ணி இருப்பீங்க. ஒரு படத்துல ஹீரோ போட்டுட்டு வந்ததும் திடீர்னு இது ஃபேஷன்னு சுத்தறீங்க. நாளைக்கு இன்னொன்னு வரும். காசுக்குக் கேடு”

ஆனால் குமாஸ்தா தோற்றத்தை வைத்து அவனை எடை போடக்கூடாது. வாயைத் திறந்தால் கணிதமும் ரிலேட்டிவிட்டி தியரியும் வானவியலும் வந்து விழும். அவனும் என்னைப் போல் பன்னிரண்டாம் வகுப்பு மட்டும்தான் படித்துவிட்டு வந்தானா அல்லது ஏதேனும் கல்லூரியில் டாக்டரேட் படித்துவிட்டு வந்தானா என்று ஒரு சந்தேகம் வரும். படிப்பில் படு கெட்டி. தேர்வு நெருங்கினால் அவனிடம்தான் நாங்கள் நோட்ஸ் கேட்டு வரிசை கட்டி நிற்போம்.

“நோட்ஸ் தரேன். ஆனா ஒரு கண்டிஷன். இந்த வீட்டை விட்டு வெளியே கொண்டு போகக்கூடாது. என் கண் முன்னால காப்பி பண்ணி எழுதிட்டு திரும்பத் தரணும். என் நோட்சைப் பாத்து படிக்கவோ, ஜெராக்ஸ் எடுக்கவோ கூடாது”

“டேய் டேய்.. ப்ளீஸ்டா… நீ மொத சேப்டர் படிக்கும்போது நான் கடைசி சேப்டர் படிக்கலாம்ல?”

அவன் ஒத்துக் கொள்ளவே மாட்டான். வேறு வழியின்றி மாங்கு மாங்கென்று நான் அதைப் படியெடுப்பேன். மற்றவர்கள் அவனுக்குத் தெரியாமல் என்னிடமிருந்து ஜெராக்ஸ் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அப்படிப் படியெடுப்பது தேர்வில் எனக்கு நிறைய உதவும். அவன் ஏன் சொல்கிறான் என்பது அப்போது புரியும்.

அவனிடம் பெரும்பாலும் யாரும் அதிகம் பேசமாட்டார்கள். திடீரென்று இந்தக் கதையின் ஆரம்பத்தில் வந்தது போல் தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் ஏதாவது சொல்வான். நண்பர்கள் அவனிடம் விவாதம் தொடங்குவதைப் பெரும்பாலும் விரும்ப மாட்டார்கள். முடிந்த அளவு கழன்று கொள்வார்கள். ரஜினி ரசிகர்களிடம் லா ஆஃப் தெர்மோடைனமிக்ஸ் பேசினால் எப்படி இருக்கும். நான் கொஞ்சம் அறிவியல் புனைவுகள், சுஜாதா என்று படித்திருப்பதால் அவனிடம் தம் கட்டிப் பார்ப்பேன்.

“மேத்ஸ் எப்படிடா உலகத்துல எல்லா பிரச்னையையும் சால்வ் பண்ண முடியும்?”

“நம்மைச் சுத்திலும் பாருடா… அந்த ஏரியில எவ்வளவு தண்ணி இருக்குன்னு எப்படி கால்குலேட் பண்ணுவே? சூரியன் இருக்கு. அதோட லைஃப் என்னன்னு எப்படித் தெரியும்? நாளைக்கு வெதர் எப்படி இருக்கும்னு எப்படி ப்ரெடிக்ட் பண்றாங்க? மேத்ஸ் மை ஃப்ரண்ட்… எல்லாமே மேத்ஸ்”

சொல்லிவிட்டு 1942 எ லவ் ஸ்டோரி படத்திலிருந்து ஒரு பாட்டை கீச்சு கீச்சென்று விசிலடிக்க ஆரம்பித்தான். காது கூசியது. ஆனால் அவன் மனதுக்குள் அது புல்லாங்குழலாக ஒலித்துக் கொண்டிருக்கும். தூர்தர்ஷனில் ஒரு முறை கேட்டதிலிருந்து அந்தப் பாடலின் ரசிகனாகிவிட்டான். இந்தி தெரியாது. மெட்டு மட்டும் விடாமல் அவனோடு ஒட்டிக் கொண்டது. அவனுக்கு ஏதோ ஒன்று பிடித்துவிட்டால் அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சில வாரங்கள் பயணிப்பான். அதைப் பற்றியே விடாமல் பேசிக் கொண்டிருப்பான். அவனுடைய இப்போதைய போதை ஆர் டி பர்மனின் இசை. முன்பு ஒரு காலத்தில் டெபோனேர் புத்தகம்.

“அது எப்படிடா முடியும்? நிஷாவோட அக்கா புருஷன் தினமும் அவங்களைப் போட்டு அடிக்கறாராம். அதை எப்படி மேத்ஸ் சால்வ் பண்ணும்?”

“பண்ணும்டா… உலகத்துல எல்லாமே கணக்குதான். அந்த அக்காதான் அந்தக் கணக்கை போட்டுப் பாக்கணும். ஆனா மேத்ஸ்க்குன்னு ஒரு மரியாதை இல்லையாடா? இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாச்சுன்னு மேத்ஸ்கிட்ட கேளு. பதில் சொல்லும். இது வரைக்கும் மேத்ஸ் தீர்க்க முடியலைன்னு நீ ஏதாவது சொன்னா அது மேத்ஸ் பிரச்னை இல்லை. அந்த ஃபார்முலாவை நாம இன்னும் கண்டுபுடிக்கலைன்னு அர்த்தம்”

ஒரு கல்லைக் கையில் எடுத்து உருட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“சரி.. இப்ப நிஷா இருக்காள்ல. அவகிட்டே எப்படி என் லவ்வை சொல்றது? எதையாவது எறிஞ்சுடுவாளோன்னு பயமா இருக்கு. உன் மேத்ஸ் மூலம் அதுக்கு ஏதாவது வழியிருந்தா சொல்லு. இப்போதைக்கு எனக்கு சொல்யூஷன் இல்லாத பெரிய ப்ராப்ளம் அதுதான்”

நிஷா. எங்கள் கல்லூரியின் அதே வளாகத்தில் நடக்கும் இன்னொரு கலைக் கல்லூரியில் கேட்டரிங் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். இருவரும் ஒரு ஆண்டுக்கு மேல் பேசிப் பழகிக் கொண்டிருந்தாலும் அவளிடம் என் விருப்பத்தைச் சொல்ல எனக்கு ஒரு பெரிய தயக்கம் இருந்தது.

“போடா டேஷ்.. ரெண்டு கேள்வி கேட்டிருக்கே ரெண்டுலயும் நிஷா… ”

நண்பர்கள் அனைவரும் கெட்ட வார்த்தை சரளமாகப் பேசுவோம். இளவரசன் அதிலும் ஒரு கொள்கை வைத்திருந்தான். டேஷ் என்றுதான் சொல்லுவான். நாம் ஃபில் அப் செய்து கொள்ள வேண்டும்.

“இதுக்கு நீயே நேரடியா திட்டலாம்டா. எங்க சாய்ஸ்க்கு விட்டா இன்னும் அசிங்கமாத் தோணுது”

“மொதல்ல உன்னோட அந்த கவிதை நோட்டை எடுத்து நெருப்புல போடறேன் பாரு. எப்பப்பாரு கண்ணே மணியேன்னு கிறுக்கிக்கிட்டு. அவ போற எடத்துக்கெல்லாம் போய் நின்னுக்கிட்டு. ப்ரொடக்டிவா யோசிக்க வேண்டிய வயசுடா இது”

“டேய்.. லவ்வுடா.. அது இருந்தாதானே ப்ரொடக்ட்ஷன் ரீ-ப்ரொடக்ஷன் எல்லாம்?”

“சரிடா… பளிச்சுன்னு அவளுக்கு உன்னைப் பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சுட்டா அப்புறம் நிம்மதியா போன வருசத்து அரியர்க்கு படிக்கலாம்ல.. நான் ஒண்ணு சொல்லட்டா?”

“சொல்லு”

“நீயெல்லாம் லவ் பண்ற மெட்டீரியலே கிடையாது. உன் குடும்பம் பத்தி எனக்குத் தெரியும். உன்னைப் பத்தியும் எனக்குத் தெரியும்.”

எனக்கு சுருக்கென்று கோபம் வந்தது. அவனுக்குத் தெரியும் என்றால் அது சரியாகவும் இருக்கும்.

“உனக்கு மயிர்ல தெரியும்”

“உனக்கு காதலை சொல்றதுக்குக் கூட பயமில்லை. ஆனா சொல்லி அவ ஒத்துக்கிட்டா அதுக்கப்புறம் என்ன ஆகும்னு பயம். நிஜமா உனக்குத் தேவை அவளோட ஃப்ரண்ட்ஷிப்தான். ஒரு நெருக்கம். அப்பப்போ கையைப் பிடிச்சுக்கணும். அவ்வளவுதான். அது கிடைச்சுட்டா நீ தெளிஞ்சுடுவே”

அவனிடம் பேசிப் பயனில்லை. காதல், பெண்கள், கவிதை இதெல்லாம் அவனைப் பொருத்தவரை நேர விரயம். மக்கள் தொகையை அதிகரித்து நாட்டை இன்னும் வறுமையில் வீழ்த்தும் வழிகள். ஆனால் அவனுக்கும் ஒரு காதல் இருந்தது. விண்வெளி மீது. ஆனால் அவன் தந்தை பொதுப்பணித்துறையில் பொறியாளர். ஆர்க்கிடெக்டுகளின் சந்தை மதிப்பு அறிந்தவர். அவன் இதுதான் படிக்கவேண்டும் என்று கட்டாயமாக சொல்லிவிட்டார். தந்தையிடம் மன்றாடிப் பார்த்துவிட்டான். பயனில்லை. உனக்கெல்லாம் ஒண்ணும் தெரியாது என்று சொல்லிவிட்டார். வானத்தைப் பார்த்து புலம்புவான்.

“இந்த பூமி ரொம்ப ரொம்ப சின்னதுடா. இன்சிக்னிஃபிகன்ட். அந்த வானத்தைப் பாரு. அதுல பறக்கணும்டா. பைலட்டுங்களைப் பாருடா. பொறாமையா இருக்கு. ரெக்கையே இல்லாம பறக்கறாங்க. அவங்க மட்டும் போன ஜென்மத்துல ஏதோ புண்ணியம் பண்ணிட்டு வந்திருக்காங்க”

“ஆமாம்டா.. நானும் ஒரு படத்துல பாத்திருக்கேன். ஏர்ஹோஸ்டஸ் கூடவே போவாங்க… வருவாங்க… வெளிநாட்டுல ஒரே ஓட்டல்ல ஒண்ணா தங்குவாங்க.”

“உனக்கு ஏன்டா எப்ப பாத்தாலும் புத்தி இப்படிப் போகுது?”

“நான் மனுசன்டா… நீ தெய்வம். சரி போலாமா? ப்ராஜக்ட் முடிக்கணும்”

இருவரும் எழுந்து கொண்டோம். இன்னும் இரண்டு நாட்களில் எங்களுடைய இந்த செமஸ்டருக்கான ப்ராஜக்ட்டின் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பெங்களூரின் புறநகர்ப் பகுதியில் ஸ்டேடியம் ஒன்றை கற்பனையாக வடிவமைக்க வேண்டும். இரவு பகலாக அறையில் அனைவரும் வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். அதற்கான திட்ட வரைபடங்கள், ஓவியங்கள், குறுக்குவெட்டுத் தோற்றங்கள் என்று நிறைய வரைய வேண்டும். வழக்கம் போல நாள் நெருங்க நெருங்க தூக்கம் சாப்பாடு இல்லாமல் அடித்துப் பிடித்து வேலை நடக்கும்.

எத்தனை நாள் கொடுத்தாலும் நாங்கள் வெட்டியாக ஊர் சுற்றிவிட்டு அப்படித்தான் வேலை பார்ப்போம். இளவரசன் போன்ற ஒரு சில மண்டைகள்தான் ஆரம்பத்தில் இருந்தே வேலை பார்த்து கடைசியிலும் அதே வேகத்தில் உழைப்பார்கள். அவன் பேசுவதில் பாதி கல்லூரியின் பேராசிரியர்களுக்கே புரியாது. ஏதோ வானத்தில் இருந்து இறங்கி வந்த விண்கப்பலைப் போல தன் ஸ்டேடியத்தை வடிவமைத்திருந்தான். பார்க்கவே மிரட்டலாக இருந்தது.

அவன் அருகில் என்னுடைய ஸ்டேடியமும் உருவாகிக் கொண்டிருந்தது. ஸ்டேடியத்தை நீள்வட்ட வடிவத்தில் உருவாக்கினால் அதை வரைவதற்குக் கடினமாக இருக்கும் என்று அதை செவ்வகமாக வடிவமைக்கும் ஆள் நான். இருக்கு என்றும் சொல்ல முடியாது, இல்லை என்றும் சொல்ல முடியாது என்ற அளவில்தான் என்னுடைய வேலை இருக்கும்.

ஹவுசிங் போர்டை அடைந்து நாங்கள் குடியிருந்த நடுத்தர வருமானக் குடியிருப்புக்கு வந்தோம். பொன்ராஜ் சட்டையைப் போட்டுக்கொண்டு கிளம்பிக் கொண்டிருந்தான். ஜேக்கப் ஏற்கனவே தயாராகி அமர்ந்திருந்தான்.

“டீ சாப்பிடப் போறோம். வரீங்களாடா”

அந்த அழைப்புக்கெல்லாம் நான் உடனே கிளம்பி விடுவேன். ப்ராஜெக்ட் எல்லாம் பிறகுதான். இளவரசன் வேலை பார்க்க வீட்டுக்குள் சென்றுவிட்டான். அவன் வரமாட்டான் என்று எங்களுக்கும் தெரியும். எட்டு மணிக்கு சாப்பிடத்தான் இனி வெளியே வருவான்.

டீ சாப்பிட்டு முடித்து வீடு வந்த பிறகும் எங்கள் அரட்டை தொடர்ந்தது. ரங்கீலா என்று ஒரு படம் வெளிவருகிறது. வழியில் போஸ்டர் பார்த்துவிட்டு வந்திருந்தோம். நம்ம ஊர் ஏ ஆர் ரகுமான் இசையில். ப்ராஜக்ட் முடித்ததும் அந்த மாலையில் அனைவரும் செல்ல முடிவு செய்துகொண்டோம். இப்போது ஸ்டேடியம் ப்ராஜக்ட் பக்கம் பேச்சு திரும்பியது.

“நான் ப்ராஜக்ட் பண்ணலைடா” என்றான் பொன்ராஜ்.

“ஏன்டா?”

“பிஜூ சார்தான்டா டிசைன் ஜூரி. எனக்கு இங்கிலீஷ் சுட்டுப் போட்டாலும் பேச வராது. அந்த ஆளைப் பாத்தா தமிழும் சேர்ந்து வராது. எப்படியும் ஃபெயில் பண்ணிடுவான். அடுத்த வருசம் வேற யாராவது ஜூரி வருவாங்க. அப்ப பாத்துக்கலாம்னு இருக்கேன்”

உயரம் குறைவு என்றாலும் பிஜூ சார் எங்களுக்கு ஒரு நீண்ட கொடுங்கனவு. நாட்டின் பெரிய ஆக்கிடெக்சர் கல்லூரியில் படித்துவிட்டு வந்தவர். எங்கள் கல்லூரியையே கொஞ்சம் தீண்டத் தகாத கல்லூரியாகத்தான் நினைத்தார். ஆர்க்கிடெக்சர் படிக்கும் மாணவர்கள் கஷ்டப்படவும் அவமானங்களை சந்திக்கவும் தயாராக இருக்கவேண்டும் என்று அவர் முடிவு செய்திருந்தார். ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் வகுப்புக்குள் செல்ல முடியாது. ஜன்னலுக்கு வெளியே பார்வை திரும்பினால் சாக்பீஸ் பறந்து வரும். வகுப்பறைக்குள் தமிழில் பேச முடியாது. எங்களைப் போன்ற தமிழ் மீடியம் மாணவர்கள் அவர் கேள்விகளுக்கு திமிங்கலத்தை விழுங்கியது போல் விழிப்போம்.

ஆனால் வெளியே வந்தால் தோள் மீது கை போட்டு லோக்கலாகப் பேசுவார்.

“இத பாரு மச்சி. நீ எப்படியும் இந்த செமஸ்டர் இன்டர்னல் பாஸ் ஆக மாட்டே. ஏன்னா நான்தான் ஃபெயில் பண்ணப் போறேன். எதுக்கு ரொம்ப அலட்டிக்கறே? வா டீ சாப்பிடப் போலாம்”

ஆனால் அவரை அப்படியே ஒதுக்கவும் முடியாது. அபாரமாகப் பாடம் எடுப்பார். எங்களோடுதான் டீ சாப்பிட வருவார். கல்லூரி கேண்டீனில் எதுவும் சகிக்காது. கல்லூரிக்கு வெளியே ஒரு தாபா இருக்கிறது. அரை கிலோமீட்டர் நடக்க வேண்டும்.

“நியாயமா உன்னை பாஸ் பண்ணி விட்டுடலாம். ஆனா ஆர்க்கிடெக்சர் விளையாட்டு இல்லை மச்சி. தினமும் கிரவுண்ட்ல கிரிக்கெட் விளையாடிட்டு கடைசி நாள்ல அவசர அவசரமா ஏதோ ஒண்ணை வரைஞ்சு அதை டிசைன்னு சொல்லி வெச்சிருக்கே. இப்ப பாஸ் பண்ணி விட்டுட்டா அப்புறம் பின்னாடி வாழ்க்கைல நீ கஷ்டப்படுவே. இப்ப கஷ்டப்பட்டா ஆறு மாசம்தான் மச்சி”

இத்தனைக்கும் அவரும் கூட வந்து கிரிக்கெட் ஆடியிருப்பார். ஏற்கனவே ஐந்து வருடங்கள் படிப்பு. பிஜூ சாரால் அது பலருக்கு ஆறு வருடங்கள் கூட ஆகியிருக்கிறது.

“உனக்கு வேலைதானே. நான் வாங்கித் தரேன் மாப்ள. நீ வேலை பாத்துட்டே வந்து அரியர் எழுது. எங்க காலேஜ்ல மூணு நாலு வருசமா டிசைன் அரியர்ஸ் வெச்சவங்க எல்லாம் இருக்காங்க தெரியுமா?”

பிஜூ சாரின் பெயர் எங்களை மீண்டும் ப்ராஜக்ட் வேலையை நோக்கித் திருப்பியது. இந்த முறை ஸ்கீம் எனப்படும் திட்ட வரைபடங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு ரிவ்யூ என்று பெயர். அதில் திருத்தங்கள் சொல்வார்கள். அதன் பிறகு ஒரு மாத காலத்தில் ஃபைனல் எனப்படும் முழு வண்ண வரைபடங்களை முன் வைக்க வேண்டும். அதற்கு ஜூரி என்று பெயர். கூடவே அந்த வரைபடங்களுக்கான மாதிரியை அட்டையில் செய்து எடுத்துச் செல்ல வேண்டும். அதைப் பொறுத்துதான் இறுதி மதிப்பெண். பிரசன்டேஷனுக்கு என்று தனி மதிப்பெண் உண்டு. ஜூரி நடக்கும் தினங்கள் ஒரே களேபரமாக இருக்கும். இரண்டு கைகளிலும் வரைபடங்கள், மாடல்கள் என்று சென்றால் தெருவே எங்களை வேடிக்கை பார்க்கும்.

“டேய் ஓடி வாங்கடா எட்டு பத்து பஸ் விட்டுட்டா அப்புறம் எட்டு நாப்பதுக்குதான் பஸ். அது லேட்டா போகும். அப்புறம் பிஜூ சப்மிஷனை ஒத்துக்காது” என்றான் ஜேக்கப்.

ஒன்பது மணிக்கு இரண்டு நொடிகள் தாமதம் என்றாலும் அப்படியே திரும்பி வர வேண்டியதுதான். பிறகு அடுத்த கதவு ஆறு மாதங்கள் கழித்துத்தான் திறக்கும். டவுன் பஸ்ஸில் அட்டையால் செய்யப்பட்ட மாடல்களை திக் திக் மனதுடன் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். அருகிலேயே மண்வெட்டியோடு ஆட்கள் ஏறுவார்கள். பள்ளிச் சிறுவர்கள் சுரண்டிப் பார்ப்பார்கள்.

இளவரசன் காலை ஆறரை மணிக்கே கிளம்பிவிட்டான்.

“நான் போற ஏழு மணி பஸ் பஞ்சர் ஆகிட்டா கூட பின்னாடி எட்டு பத்து பஸ் வரும். நேரா எட்டு பத்து பஸ்க்கு போறது ரிஸ்க். ஏதாவது ஆகிட்டா ஆறு மாசம் வேஸ்ட் ஆகிடும். அதுக்கு ஒரு மணி நேரத்தை இப்போ வேஸ்ட் பண்றது தப்பில்லை”

இது அவன் லாஜிக். எட்டு பத்து பஸ்சையும் விட்டுவிட்டு போக்கு லாரியில் ஏறி தொங்கிக் கொண்டு சென்று விழுந்தடித்துக் கொண்டு ஓடி கடைசி நிமிடத்தில் டிராயிங்கை உள்ளே வைப்பது எங்கள் லாஜிக். பொன்ராஜ் கையை வீசிக் கொண்டு ஜாலியாக வந்தான்.

பிஜூ ஏற்கனவே வகுப்பில் இருந்தார். அப்படி ஒரு அமைதி. இளவரசனின் ரிவ்யூ நடந்து கொண்டிருந்தது. தன்னுடைய ஸ்டேடியத்தில் கார்கள் எப்படி நேரடியாக ஆட்களை கேலரியில் இறங்கி விட்டுவிட்டு பிறகு பார்க்கிங் நோக்கி செல்ல முடியும் என்று அவன் விவரித்துக் கொண்டிருந்தான்.

“குட்” என்றார் பிஜூ. அவர் திட்டாமல் இருந்தாலே பாராட்டுதான். அவரிடமிருந்து குட் வாங்குவதென்றால் அது சூப்பர் குட் என்று பொருள். இளவரசன் முகத்தில் பெரும் மகிழ்ச்சி. அவனுக்கும் பிஜூ சார் மீது அத்தனை மரியாதை. கிட்டத்தட்ட கடவுள்.

“குட்” என்றார் மறுபடியும். இப்போது அவர் பார்வை எங்கள் மூவர் மீது திரும்பியது.

“என்ன மாப்ள கை வீசிட்டு வந்திருக்கே” என்றார் பொன்ராஜைப் பார்த்து.

“நான் ப்ராஜக்ட் பண்ணலை சார்” என்றான் பொன்ராஜ். ஆனாலும் அவனுக்கு தைரியம்.

“சூப்பர்.. அப்புறம் இங்கே என்ன புடுங்கறதுக்கு வந்திருக்கே? கெட் த ஹெல் அவுட் ஆஃப் மை க்ளாஸ்”

அவர் புன்னகை மாறாமல் சொல்ல பொன்ராஜூம் அதே புன்னகையுடன் எழுந்து வெளியேறினான்.

“நீங்க என்ன?”

நானும் ஜேக்கப்பும் வரைபடங்கள் சுருட்டி வைத்திருந்த நெகிழி உருளைகளை உயர்த்திக் காட்டினோம். உள்ளே சென்று அமரும்படி சைகை காட்டினார். எங்களுக்குப் பின்னால் வந்த யாருக்கும் அனுமதி இல்லை. நேரம் கடந்துவிட்டது.

என் முறை வந்தது. பிஜூ சார் என்னுடைய ஸ்டேடியத்தை கட்டுவதற்கு முன்பே சல்லி சல்லியாக இடித்துக் கொண்டிருந்தார். அடுத்த முறை ஜூரிக்கு வரும்போது தவறுகளை சரிசெய்தால் மட்டுமே பாஸ் மார்க் கிடைக்குமென்ற எச்சரிக்கையுடன் அனுப்பப்பட்டேன். ஒரு சிலரின் டிராயிங்குகளில் மார்க்கர் வைத்துக் கிறுக்கினார். அதை வரைந்து வந்த தோழி கேண்டீனில் குமுறிக் குமுறி அழுதாள். ஜேக்கப்பின் வரைபடம் டர்ரென்று கிழிந்தது.

“கம் நெக்ஸ்ட் செமஸ்டர்”

பிஜூ சாரின் ரிவ்யூ என்றாலே கால்கள் நடுங்கும். அன்று இன்னும் உச்சத்தில் இருந்தார். எட்டு பேர் மட்டுமே அடுத்த கட்டத்துக்குத் தேறினோம். முப்பது பேர் அடுத்த செமஸ்டர் என்று சொல்லிவிட்டார். துறையின் தலைவர் கொஞ்சம் பதறிவிட்டார். தனியாகச் சென்று அவரிடம் பேசிப் பார்த்தார். ஆனால் பிஜூ சார் அதற்கெல்லாம் மசியவில்லை.

அன்று மாலை அறையில் பலத்த நிசப்தம் நிலவியது. என்னையும் இளவரசனையும் தவிர மற்றவர்கள் ப்ராஜக்டில் ஃபெயில். ஜேக்கப் பிஜூ சாரை வாயில் வந்தபடியெல்லாம் திட்டிக் கொண்டிருந்தான்.

“அவன் ஃபெயில் போடட்டும் இல்ல பாஸ் போடட்டும். மயிரு என் டிராயிங்க எப்படிடா கிழிக்கலாம். கோர்ஸ் முடியட்டும். ஒரு நாள் தெருவுல ஓட விட்டுப் புரட்டி எடுக்கறேன்…”

இளவரசன் இதையெல்லாம் கவனிக்காமல் ஆர்டி பர்மனை விசிலடித்தபடி தன்னுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஜூரிக்கான வேலையை அவன் இப்போதே தொடங்கியிருந்தான். ஜேக்கப் அவனை முறைத்தான்.

“டேய்.. .இன்னும் ஒரு மாசம் இருக்கு. ஓவரா பண்றான்டா அவன்.”

அவன் கையிலிருந்த பென்சிலைப் பிடுங்கினான்.

“டேய் டேஷ்… பென்சிலக் குடுடா”

“நாங்க ரங்கீலா போறோம். வரியா இல்லையாடா?”

“நான் வரலை. அந்த லவ் ஸ்டோரில புதுசா என்னடா இருந்துடப் போகுது?”

“இப்படியே போனா நீ தனியாதான் இருக்கணும். இங்க மட்டுமில்ல, வாழ்க்கைலயும்” என்றான் ஜேக்கப் பென்சிலை அவனிடம் வீசியபடி.

அந்த ஹவுசிங் போர்டில் எழுநூறு வீடுகள் இருந்தாலும் நான்கைந்து வீடுகளில் மட்டுமே ஆட்கள் குடிவந்திருந்தார்கள். அவற்றில் எங்கள் வீடும் ஒன்று. இரவு நேரத்தில் ஒருவித அமானுஷ்ய அமைதி நிலவும். ஏதோ யோசித்தவன் பேண்ட்டை மாட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான். அன்று இளவரசன் அத்தனை சந்தோஷமான மன நிலையில் அவன் இருந்தான். போஸ்டரைப் பார்த்து ஒரு வினாடி நின்றான். வழக்கம்போல அவன் கேள்விகளுக்கு நான்தான் பதிலளிக்க வேண்டியிருந்தது. ஜேக்கப்பும் பொன்ராஜும் நகர்ந்துவிட்டார்கள்.

“அது யாருடா?”

“ஜாக்கி ஷெராப்”

“அதில்லடா.. இது?”

“இது அவரோட பனியன்”

“டேய்”

“பனியனுக்கு உள்ளேயா? ஊர்மிளா டா.. ”

“அழகா இருக்காள்ல”

படக்கென்று திரும்பிப் பார்த்தேன்.

“டேய் நீயாடா பேசறே?”

ஊர்மிளாவை மறுபடி பார்த்தேன். எனக்கு எதுவும் விசேஷமாகத் தெரியவில்லை. இன்று அவனுக்குப் பிரியமான பிஜூ சாரிடம் பாராட்டு வாங்கியதில் கூடுதல் குதூகலமாக இருக்கிறான். நாளை சரியாகிவிடுவான் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் படம் பார்த்த பிறகு நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. ஆர்டி பர்மனை விட்டுவிட்டு அவன் ஊர்மிளா பைத்தியமாக மாறிவிட்டான். அறையில் ஒரு அசெம்பிள்டு டேப் ரெக்கார்டர் இருக்கும். ஆம்ப்ளிஃபையருடன் ஒரு பானையில் ஸ்பீக்கரைக் கவிழ்த்து வைத்து பாடல்களை அலற விடுவோம். படம் பார்த்துவிட்டு வந்த பிறகு இளவரசன் வேறு பாடல்களைப் போட விடுவதே இல்லை. ரங்கீலா பாடல்கள்தான் திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருக்கும். ஆளுயர ஊர்மிளா படம் ஒன்றை வாங்கி வந்து அறையில் மாட்டினான். ஊர்மிளா குறித்த செய்திகளை தேடித் தேடிப் படித்தான். ரங்கீலா படத்துக்கு ஐந்து முறை போயிருந்தான். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

“அவனுக்கு என்னடா ஆச்சு?” ஜேக்கப் ஆச்சரியப்பட்டான்.

“விடுடா இப்பதான் வயசுக்கு வந்திருக்கான். அப்படியாவது ஸ்பேஸ், மேத்ஸ்னு எல்லாம் பேசாம இருக்கானே?”

“இதுக்கு அதுவே பெட்டர். வாயைத் திறந்தா ஊர்மிளா ஊர்மிளான்னு கொல்றான்டா…”

அங்கு நானும் இளவரசனும் மட்டும் ப்ராஜக்டைத் தொடர்ந்து செய்தோம். மற்றவர்கள் அழுத்தம் எதுவுமின்றி வேறு பாடங்கள் படிப்பதும் அடிக்கடி கிரிக்கெட் விளையாடப் போவதுமாக இருந்தார்கள். எனக்குப் பொறாமையாகக் கூட இருந்தது. அறையில் பெரும்பாலும் நானும் இளவரசனும் மட்டும்தான். அவனுக்கு அது இன்னும் வசதியாகி விட்டது. ரங்கீலா கேசட் தேய்ந்தது. எனக்கு அந்த இசையே ஒவ்வாமையாகிவிட்டது.

ஒரு மாதம் எப்படி அத்தனை வேகமாகப் போனதென்று தெரியவில்லை. நாளை ப்ராஜக்ட் ஜூரி. நான் எப்போதும் போல இரவு உணவு கூட சாப்பிடப் போகாமல் வரைந்து தள்ளிக் கொண்டிருந்தேன். இரண்டு இரவுகள் தூக்கம் இல்லை. இன்று இரவும் இருக்கப் போவதில்லை. இளவரசன் ஆறாவது முறை ரங்கீலா படத்துக்குப் போயிருந்தான். ஏனென்றால் அவன் தன்னுடைய வேலையை நேற்றே முழுவதுமாக முடித்து வைத்திருந்தான். கூடவே அசத்தலாக அச்சு அசலாக ஒரு உருவ மாதிரியும் செய்து வைத்திருந்தான். அது பற்றிக் காற்று வழியாகக் கேள்விப்பட்டு அதைப் பார்க்க எங்களுடைய சீனியர்கள் கூட தூரத்திலிருந்து பஸ் பிடித்து வந்து சென்றிருந்தார்கள். வந்தவர்கள் என்னுடைய டிசைனை எட்டிப் பார்த்து உதட்டைப் பிதுக்கிவிட்டுப் போனார்கள்.

திடீரென்று மழை தொடங்கி வலுத்துப் பெய்தது. நிற்கவே இல்லை. இளவரசன் தெப்பலாக நனைந்து வந்து சேர்ந்தான். வெடவெடவென நடுங்கினான். உடைகளை மாற்றிக் கொண்டு படுத்துவிட்டான்.

காலை ஆறு மணிக்கு அவனை எழுப்பினேன். உடல் அனலாக சுட்டது. போர்வையை இழுத்தால் பதிலுக்கு இழுத்துக் கொண்டான். நான் அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டே அவ்வப்போது அவனை உலுக்கிக் கொண்டிருந்தேன்.

“டேய் எழுந்திருடா.. ஜூரிக்கு நேரமாச்சு. நீதான சீக்கிரம் போகலாம்னு சொன்னே?”

அவனால் பதில் சொல்ல முடியவில்லை. முனகினான். பிறகு மெல்ல எழுந்தான். கண்களை சிரமப்பட்டு விரித்தான். முனகலாக சொன்னான்.

“நீ முன்னாடி போய் என்னோட டிராயிங்கை சப்மிட் பண்றியா? நான் ஜூரிக்கு வந்து சேர்ந்துடுவேன்”

“நீ வரும்போது எடுத்துட்டு வாடா. பிஜூ சார்கிட்டே நான் சொல்றேன்”

“இல்லடா அவர் ஒத்துக்க மாட்டாரு. நீ ஹெல்ப்புக்கு ஜேக்கப்பை கூட்டிட்டு முன்னாடி கிளம்பு. நான் எப்படியாவது வந்துடறேன். ப்ளீஸ்டா…” தள்ளாடியபடி எழுந்து குளிக்கப் போனான். ஜேக்கப் குளிக்காமல் கொள்ளாமல் பேண்ட்டை மாட்டிக் கொண்டு கிளம்பினான். காலையில் பனி இன்னும் விலகவில்லை. வழியில் ஒரு டீயை மட்டும் உள்ளே தள்ளிவிட்டு நானும் ஜேக்கப்பும் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தோம்.

இளவரசன் செய்த ஸ்டேடியத்தின் மாடலை உடைந்து விடாமல் தூக்கிச் செல்வதற்குள் படாத பாடு பட்டுவிட்டோம். ஒரு வழியாக சரியான நேரத்தில் வகுப்பை அடைந்து வரைபடங்களையும் மாடலையும் உள்ளே வைத்துவிட்டோம். மொத்தமே எட்டு பேர்தான் இரண்டாவது ரிவ்யூவுக்குத் தகுதி பெற்றிருந்தோம் என்பதால் வகுப்பில் கூட்டம் குறைவு. ஜேக்கப் பிஜூ சாரின் கண்களில் படாமல் அப்படியே நழுவி கேண்டீன் போய்விட்டான்.

என்னைத்தான் முதலில் அழைத்தார் பிஜூ சார். வகுப்பறையின் வகுப்பின் முன்பக்கம் பாடம் எடுக்கும் கரும்பலகை. வகுப்பின் பின்புறச் சுவரில் வரைபடங்களை அதற்கான பலகைகளில் குத்தி வைக்க வேண்டும். மாடலை இறுதியாக வைக்க வேண்டும். நான் மாடல் செய்யவில்லை. அதற்கு மதிப்பெண் குறையும். பிஜூ சார் காலியாக இருந்த அந்த இடத்தைப் பார்த்தார்.

“என்ன மாப்ள ? மாடல் இல்லையா? ஏற்கனவே நீ பார்டர் மார்க்… சரி வா பாக்கலாம்”

கைகளைத் தேய்த்துக் கொண்டு தயாரானார்.

ஜூரி தொடங்கியது. ஸ்டேடியத்தை வடிவமைக்க நான் எடுத்துக் கொண்ட காரணிகள், பருவநிலை, காற்று, வாகனங்கள் நிறுத்தம், நீர் வடிகால், கூட்டத்தை நிர்வகித்தல் என்று கேள்விகள் சரமாரியாக வந்து விழுந்தன. ஏதோ சமாளித்தேன். இளவரசன் இது பற்றியெல்லாம் அறையில் ஓயாமல் பேசுவான். என்னிடமும் கேள்வி கேட்பான். அது எனக்கு உதவியாக இருந்தது.

“பரவால்ல மாப்ள.. ஒளறினாலும் கொஞ்சம் தெளிவா ஒளறிப் பழகிட்டே” என்றார் பிஜூ. தேறிவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் வரைபடங்களை சுருட்டத் தொடங்கினேன்.

கடைசி ஆளுக்கு ஜூரி நடந்து கொண்டிருந்தது. இன்னும் இளவரசன் வந்து சேரவில்லை. எனக்கு மனது அடித்துக் கொண்டது. என்னுடைய ஜூரிக்குக் கூட நான் அவ்வளவு கவலைப்படவில்லை.

முடியும் தருவாயில் ஒரு வழியாக இளவரசன் வந்து சேர்ந்தான். கண்கள் காய்ச்சலால் சிவந்திருந்தன. கடைசி ஜூரியை முடித்துக் கொண்டு பிஜூ சார் தனது நோட்டுப் புத்தகத்தில் மதிப்பெண்களை எழுதிக் கொண்டிருந்தார். இளவரசன் அவசர அவசரமாக தனது வரைபடங்களைப் பலகையில் குத்தினான். நான் அவனுக்கு உதவினேன். பிஜூ சார் தனது குறிப்புகளை முடித்துக்கொண்டு நோட்டுப் புத்தகத்தை மூடிக் கிளம்பினார். இளவரசனை அவர் பார்த்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை.

“சார்.. எனக்கு இன்னும் ஜூரி முடியலை” என்றான் இளவரசன் குழப்பமாக அவர் பின்னால் சென்று. பிஜூ சார் நின்று திரும்பிப் பார்த்தார்.

“நீதான் டைமுக்கு வரலையே மாப்ள.. அடுத்த செமஸ்டர் பாக்கலாம்”

இளவரசன் பதறிவிட்டான். அவர் நடக்க அவர் பின்னால் ஓடினான். நானும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஓடினேன்.

“சார் சார் அவனோட டிராயிங், மாடலெல்லாம் நான் வரும்போதே கொண்டு வந்துட்டேன். அவனுக்கு ஒடம்பு சரியில்லை… ”

கை உயர்த்தி நான் பேசுவதைத் தடுத்தார்.

“உன்னோட ஜூரி முடிஞ்சாச்சுல்ல. ஷட் அப் அண்ட் கோ டூ யுவர் ப்ளேஸ்”

ஒரே அதட்டலில் எனக்கு எல்லாமே அடங்கிவிட்டது. இளவரசன் பயப்படவில்லை.

“சார்… உங்களுக்கு சப்மிஷன் பண்ணனும். அதை சொன்ன நேரத்துக்கு பண்ணியாச்சு. ப்ளீஸ் சார்.. இதுக்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன்”

பிஜூ சார் அவன் எதிர்த்துப் பேசியதை ரசிக்கவில்லை. ஒரு நொடி முகம் சிவந்து பிறகு முகம் மாறி புன்னகைத்தார். இது அதைவிட அபாயமானது.

“யார்.. நீயா? இன்னைக்கு ஜூரியை வெச்சுக்கிட்டு நேத்து உன்னை யாரோ தியேட்டர்ல பாத்ததா சொன்னாங்களே மச்சி”

அந்த யாரோ அவராகத்தான் இருக்கும்.

“சார். அது என்னோட இஷ்டம்.. டிசைன் எப்படி இருக்குன்னு மட்டும் ஜூரி பண்ணுங்க. என்னை ஜட்ஜ் பண்ணாதீங்க”

அவன் குரல் உயர்ந்தது. டேய் வாயை மூடுடா என்று என் மனதுக்குள் கத்தினேன். பிஜூ சாரின் கோபம் உச்சத்தை அடைந்திருந்தது.

“ஜூரிதானே? பண்ணிட்டாப் போச்சு”

வேகமாக நடந்து சுவரில் குத்தியிருந்த அவனுடைய வரைபடங்களின் அருகே சென்றவர் ஒரு காகிதத்தைப் பிடித்து இழுத்தார். நட்ட நடுவே டர்ரென்று கிழிந்தது.

“இப்ப எதை ஜூரி பண்றது மச்சி?”

எனக்கு பகீரென்றது. ஒன்றன் பின் ஒன்றாக அவற்றைக் கிழித்தார். அவற்றை வரைய இளவரசன் எத்தனை இரவுகள் கஷ்டப்பட்டான் என்பதை அருகிலிருந்து பார்த்தவன் நான். அவன் அப்படியே நின்று கொண்டிருந்தான். கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென்று உதிர்ந்து கொண்டிருந்தது.

“உனக்கு இன்னும் ஆறு மாசம் டைம் இருக்கு மாப்ள. இன்னும் நல்லா புதுசா பண்ணிட்டு வந்துடு”

சொல்லிவிட்டுத் தனது நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டார். இளவரசன் அப்படியே உடைந்து அழத் தொடங்கிவிட்டான். நாங்கள் அனைவரும் செய்வதறியாமல் நின்று கொண்டிருந்தோம். பிறகு நான் மெல்ல அவனை நெருங்கினேன்.

“டேய்.. அழாதடா ப்ளீஸ்”

“அவர் சரியா வேலை செய்யாதவனைத் திட்டட்டும். டிராயிங்கை கிழிக்கட்டும். என்ன வேணா பண்ணட்டும். நான் எல்லாமே சரியாப் பண்ணியிருக்கேன். திஸ் ஈஸ் நாட் ஃபேர்டா”

அழுகையினூடே ஆவேசமாகச் சொன்னான் இளவரசன். ஏதோ நினைத்தது போல் ஆவேசமாக எழுந்தான். தனது ஸ்டேடியம் மாடலைத் தூக்கிக் கீழே போட்டான். காலால் ஓங்கி மிதித்தான். அது முழுதாக உடையும் வரை மிதித்துக் கொண்டிருந்தான். நான் ஓடிச்சென்று அவனைப் பிடித்து இழுத்தேன்.

“டேய்.. கிறுக்கா.. என்னடா பண்றே.. வாடா..”

யாரும் பார்க்கும் முன் அவனைத் தள்ளிக்கொண்டு வெளியே வந்தேன். பொங்கென்று எடையற்று இருந்தான். ஒரு வழியாக இறுகிய முகங்களோடு வீடு வந்து சேர்ந்தோம். அவன் வழியெங்கும் பேசவில்லை.

வீட்டிற்கு வந்ததும் படுத்துவிட்டான். மூன்று நாட்கள் கடும் காய்ச்சல். ரொட்டியும் பாலும்தான் உணவு. அருகே இருந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். அவர் எழுதித்தந்த மருந்து சாப்பிட்டபின் காய்ச்சல் குறைந்திருந்தது. காய்ச்சலை விட அவன் முகத்தில் தங்கியிருந்த பார்வை அச்சமூட்டுவதாக இருந்தது.

“வீட்டுக்கு போன் பண்ணட்டுமாடா” என்று கேட்டேன். இளவரசன் சுவரை வெறித்தபடி பேசினான்.

“நான் ஃபர்ஸ்ட் மார்க்னு சொல்றதையே எப்பவும் எங்கப்பா சாதாரணமாத்தான் கேட்டுக்குவார். ஒரு சப்ஜெக்ட்ல ஃபெயில் ஆகிட்டேன்னு அவர்கிட்ட எப்படிடா சொல்லுவேன்?”

“சரி சொல்லாதே.. விட்டுடு. அடுத்த செம்ல க்ளியர் பண்ணிட்டு சொல்லிக்கலாம்”

“அது எப்படிடா? நான் இப்ப வரைக்கும் வீட்டுல எதையும் மறைச்சதில்லை. இதையும் மறைக்கப் போறதில்லை”

எனக்கு அவனை அறையலாம் போல இருந்தது.

“சரி… இப்ப என்னதான்டா பண்ணலாம்?”

“ரங்கீலா போலாமா?” என்றான். ஊர்மிளாவே துணை என்று அவனுடன் நானும் கிளம்பினேன். படத்தின் பாதியில் தூங்கியும் போனேன்.

ஆனால் இந்த முறை ஊர்மிளாவால்கூட அவனை மகிழ்விக்க முடியவில்லை. இரண்டு வாரங்களில் மற்ற பாடங்களுக்கான எழுத்துத் தேர்வுகள் தொடங்க இருந்தன. நாங்கள் படிக்கத் தொடங்கிவிட்டோம். எப்போதும் விழுந்து விழுந்து படிக்கும் இளவரசன் அந்த முறை புத்தகங்களைத் தொடவே இல்லை. அடிக்கடி காணாமல் போய்விடுவான். தேடிப் போனால் அந்தக் குன்றின் உச்சியில் அவனுக்கான பாறையில் தனியாக அமர்ந்து கொண்டிருப்பான். சில நேரங்களில் நான் அருகே அமர்வேன். எத்தனை நேரம் ஆனாலும் எதுவும் பேசாமல் இருப்பான். நான் அவனோடு பழைய மாதிரி உரையாடல்களை உருவாக்க முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருந்தேன்.

தேர்வுக்கு முன்பான ஞாயிறு, குளித்துவிட்டுத் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு வெளியே வந்தவன் அறையில் அமர்ந்திருந்த பெண்ணைக் கண்டதும் பதறிவிட்டேன். அறையில் ஒரு பெண் இருந்ததே பேரதிர்ச்சி. அதிலும் நிஷா. இவள் எப்படி இங்கே? பரபரவென்று உடை மாற்றிக் கொண்டு அவளை அருகிலிருந்த மலைக் கோவிலுக்கு நடத்தி அழைத்து வருவதற்குள் இதயம் வாய்க்கு வந்துவிட்டது. தனிமை கிடைத்ததும் வெடித்தாள்.

“சொல்ல தைரியம் இல்லாதவன்லாம் எதுக்குடா லவ் பண்றீங்க?”

அவள் என் முகம் பார்க்க நான் புற்களைக் கிள்ளிக் கொண்டிருந்தேன்.

“இல்லை.. செமஸ்டர் எக்ஸாம் முடிச்சு சொல்லிடலாம்னுதான் இருந்தேன்”

“கிழிச்சே… இளவரசன்.. ஹாஸ்டலுக்கு வந்தான். உன்னை லவ் பண்றவன் இதயம் படம் பாத்துட்டு ஃபீல் பண்ற டைப். இப்படியே இருந்துட்டு ஊருக்கும் போயிருவான். உனக்கு விருப்பம்னா நீயாவது போய் பேசுன்னு சொன்னான்”

எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. இளவரசன் திடீரென்று ஏன் அப்படிச் செய்தானென்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

“சரி வா… லவ் பண்ணுவோம்” என்றாள் நிஷா.

அந்த தினம் எனக்கு மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. இருவரும் இணைந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டோம். கை கோர்த்தபடி படம் பார்த்தோம். இளவரசன் சொன்னது நினைவுக்கு வந்து தொலைத்தது. ஒரு வழியாக அவளை ஹாஸ்டலில் ஒப்படைத்துவிட்டு இரவு ஒன்பது மணிக்கு நண்பர்களின் ஆரவாரத்துக்கு நடுவில் வீட்டுக்குள் நுழைந்தேன்.

நெஞ்சம் நெகிழ முதலில் இளவரசனைத்தான் தேடினேன். அவன் இல்லை.

“சாயந்திரமா வந்தான்டா. திடீர்னு ஊருக்குப் போறேன்னு கிளம்பிட்டான். அவனோட நோட்ஸ், புக்ஸ் எல்லாம் எடுத்துக் கொடுத்துட்டுப் போனான்”

எனக்கு ஏனோ அது சரியாகப்படவில்லை.

“ஊருக்கா? நாளைக்கு எக்சாம்டா”

“ஆமாம்டா.. நாங்க அவன் பையைக் கூடப் பிடுங்கி வெச்சோம். ஆனா சண்டை போட்டுட்டு வாங்கிட்டுப் போயிட்டான்”

“அப்படி என்னடா அவசரம்? என்கிட்ட சொல்லாம கூட போற அளவுக்கு?”

என் குரல் கம்மியது. அவசரமாகப் பேருந்து நிலையத்துக்கு ஓடினேன். தேடிப் பார்த்தேன். அவன் அங்கு இல்லை. இல்லாதபோது இளவரசன் இன்னும் நெருக்கமாகத் தோன்றினான். ஜேக்கப் என் தோள் மீது ஆதரவாகக் கை வைத்தான்.

“என்னமோ அவன்கிட்டே சரியில்லடா. வீட்டுல போய் இருந்துட்டு வரட்டும். அவன் நினைச்சா மூணு செமஸ்டர் ஒண்ணா எழுதிக்கூட பாஸ் பண்ண முடியும். எக்சாம் எல்லாம் ஒரு பிரச்னையே இல்ல அவனுக்கு”

எனக்கு சமாதானமாகவில்லை. எதிலும் மனம் ஒட்டவில்லை. அடுத்த நாள் அவன் வீட்டுக்கு போன் அடித்தேன். அவன்தான் எடுத்தான்.

“வீட்ல எல்லாம் சொல்லிட்டேன்டா. அப்பா எதுவும் திட்டலை. கொஞ்ச நாள் காலேஜ்ல இருந்து தள்ளி இருக்கலாம்னு வந்திருக்கேன். அதனால இனிமே வீட்டுக்கு போன் பண்ணாதடா. நான் அங்க வந்துட்டு பேசறேன்… சாரிடா” என்றான். ஓரளவு தெம்பாக இருக்கிறானென்று தோன்றியது. நிஷா பற்றிப் பேசும் முன்பாக வைத்துவிட்டான்.

தேர்வுகள், விடுமுறை என்று நாட்கள் ஓடின. மீண்டும் அனைவரும் அடுத்த செமஸ்டரைத் தொடங்க விடுமுறை முடிந்து திரும்பியபோது இளவரசன் வரவில்லை. ஓரிரு வாரங்கள் பார்த்துவிட்டு அழைத்தபோது அவன் அப்பா எடுத்தார்.

“அவன் இப்ப பேசற நிலைமைல இல்லைப்பா. யார் கூடவும் பேசறது இல்லை. சொல்லிப் பாத்துட்டு விட்டுட்டோம்”

அடுத்த சில வாரங்களில் நிஷா, தேர்வுகள், நிஷா, அடுத்த டிசைன் ப்ராஜக்ட், நிஷா, சினிமா, பெங்களூர் என்று என் நாட்கள் நிறைந்து இளவரசன் கொஞ்சம் பின்னணிக்குப் போய்விட்டான். அந்த செமஸ்டர் முடியவிருந்த ஒரு நாளில் திடீரென்று இளவரசன் தன் அப்பாவுடன் வந்திருந்தான். அவன் அப்பா ஹெச்ஓடியுடன் பேசி தேர்வு எழுத ஸ்பெஷல் அனுமதி வாங்க வந்திருந்தார். ஏதோ ட்ரீட்மெண்ட் நடந்து கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டோம். இளவரசன் அவன் அப்பாவுடன் ஓட்டலில் தங்கிக் கொண்டு தினமும் வந்து தேர்வு எழுதினான்.

உடம்பு பெருந்திருந்தான். அவனிடம் இருந்த குழந்தைத் தன்மை தொலைந்திருந்தது. நான் பேசப் போனபோதெல்லாம் ஓரிரு வார்த்தைகளுடன் அவசரமாக கண்கலைத் தவிர்த்து விலகிவிட்டான். கடைசித் தேர்வு முடிந்த அன்றே கிளம்பிவிட்டான். யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை.

கடைசித் தேர்வு முடிந்த அன்றே கிளம்பிவிட்டான். யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை.

கல்லூரி முடிந்ததும் அனைவரும் வெவ்வேறு திசைகளில் பறந்துவிட்டோம். நான் ஒரு வேலை கிடைத்து இரண்டு ஆண்டுகளாக பெங்களூர் வாசியாகியிருந்தேன். நிஷா சிங்கப்பூரில் திருமணம் முடிந்து செட்டில் ஆகியிருந்தாள். இளவரசனின் கணிப்புப்படி இப்போது நாங்கள் நல்ல நண்பர்களாக மட்டும் இருந்தோம். தன் குழந்தையின் படத்தை பதிவுத் தபாலில் அனுப்பியிருந்தாள்.

ஒரு வார இறுதியில் அலுவலகத் தோழர்களுடன் பிரிகேட்ஸ் சாலையில் சுற்றிக் கொண்டிருந்த போது தோளில் ஒரு கை விழுந்தது.

“டேய் மாப்ள” அது ஜேக்கப்.

திடீர் சந்திப்பில் இருவரும் குதூகலமாக உரையாடிக் கொண்டோம். பிஜூ சார் இப்போது கல்லூரியிலிருந்து சென்றுவிட்டார் என்பதால் அவன் உட்படப் பலரும் ஸ்டேடியம் ப்ராஜக்டை முடித்து பாஸ் செய்துவிட்டதாக சொன்னான். எனக்கு அப்போதுதான் இளவரசன் நினைவு வந்தது.

“இளவரசன் என்னடா செஞ்சான்?”

நான் இதைக் கேட்டதும் ஜேக்கப் முகம் மாறியது. தடுமாறி பிறகு குரலைத் தணித்து சொன்னான்.

“உனக்குத் தெரியாதாடா? அவன் சூசைடு பண்ணிக்கிட்டான்”

எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

“ஒளறாதடா”

“பொன்ராஜூம் நானும் நாலு மாசம் முந்தி அவன் வீட்டுக்குப் போனோம்டா. அப்பதான் எங்களுக்கே தெரிஞ்சது. மேத்ஸ், ஸ்பேஸ் அது இதுன்னு ஏதோ லெட்டர் எழுதி வெச்சிருக்கான். அவன் அப்பா காட்டினாரு. பாவம்டா”

ஒரே அறையில் தங்கி உரையாடி, சண்டையிட்டுக் கிடந்த ஒரு ஆன்மா திடீரென்று இல்லை என்பது காலடியில் இருந்த நிலம் உருவப்பட்டது போன்ற உணர்வைத் தந்தது. அது எனக்குத் தெரியவே இல்லை என்பது இன்னும் தாள முடியவில்லை.

அன்று இரவு நன்றாகக் குடித்துவிட்டு நிஷாவுக்கு ஐஎஸ்டியில் அழைத்துப் பேசினேன். நான் எப்போதாவது இப்படி செலவு செய்து அழைத்தால் ஒன்று குடித்திருப்பேன் அல்லது ஏதாவது முக்கியமான உரையாடலுக்காக இருக்கும் என்று அவள் அறிவாள். செய்தியைச் சொன்னதும் சில நொடிகள் அந்தப் பக்கமிருந்து சத்தம் இல்லை. குழந்தை மெலிதாகச் சிணுங்கும் ஓசை கேட்டது. அதை ஸ்ஸோ ஸ்ஸோ என்று ஆசுவாசப்படுத்தினாள்.

பிறகு “சாரிடா…” என்றாள் மெல்லிய குரலில்.

“அவன் என்னென்னமோ தத்துவம் பேசுவானேடா… அவனுக்கு எல்லாமே தெரியும்னுதான் நான் நினைச்சிருந்தேன். அவன் எப்படிடா?”

“அவனுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு நிஷா. ஆனா ஒரு தோல்வி எப்படியிருக்கும்னு தெரியலை. எல்லாத்துக்கும் மேத்ஸ்ல ஒரு சொல்யூஷன் இருக்குன்னு சொன்னவனுக்கு தோல்வியை ஜெயிக்க என்ன ஃபார்முலான்னு கண்டுபிடிக்க முடியலை. அது ரொம்ப சிம்பிள்னு அவனுக்குத் தெரியலை” என் குரல் உடைந்தது.

“உனக்குதான் அவன் ரொம்ப க்ளோஸ் இல்ல…?” என்றாள்.

சில நொடிகள் அமைதியாக இருந்தேன். எனக்கு அந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லை. ஏதோ ஒரு புள்ளியில் என்னை அவனும் அவனை நானும் தவறவிட்டிருக்கிறோம்.

“நாளைக்கு ஹட்கோ போலாம்னு இருக்கேன்” என்றேன்.

மறுநாள் அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லிவிட்டு மதியம் போல் கிளம்பி நான் இளவரசனோடு எப்போதும் அமரும் அந்தக் குன்றின் உச்சிக்கு வரும்போது மாலையாகியிருந்தது. இப்போது ஹட்கோவைச் சுற்றிலும் இன்னும் பல குடியிருப்புகள், வீடுகள் முளைத்திருந்தன. நகர வளர்ச்சியால் மனிதர்களைப் போலவே ஹட்கோவும் தன் தனிமையை இழந்திருந்தது. சூரியன் அதே ஏரியில் எப்போதும் போலவே இறங்கிக் கொண்டிருந்தது. இளவரசன் எப்போதும் அமரும் பாறை காலியாக இருந்தது. ஒரு நொடி தயங்கிவிட்டு அவன் இடத்தில் அமர்ந்து வானத்தை அண்ணாந்து பார்த்தேன். அது எல்லையற்று விரிந்திருந்தது.

***

ஷான் - கவிதை, நாவல், அறிவியல் கட்டுரைகள், திரைக்கதை என பல்துறையில் இயங்கும் இவர்.. ஒரு தனியார் இணைய வழிக்கற்றல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகத்திலும் இருக்கிறார். அவரது “வெட்டாட்டம்”, “பொன்னி” ஆகிய நாவல்கள் சமீபத்தில் பெரிதும் கவனிக்கப்பட்டவை. தொடர்புக்கு - shan.mugavari@gmail.com