Home Blog Page 53

ரமேஷ் பிரேதன் நேர்காணல்

0

சித்ரன்: “உலகிலுள்ள தமிழர்கள் அனைவரும் ழகரத்தைச் சரியாக உச்சரிக்கும் காலத்தில் அவர்களுக்கென்று தனிநாடு பூமியில் தானே மலரும்.” – ஒரு பின்காலனியக் கவிஞன் கற்பனாவாதக் கவிஞனாய் உருமாறிவிட்டான் என இதை எடுத்துக்கொள்ளலாமா?

இல்லை. ஐந்தவித்தான் என்ற நாவலில் மாதவன் என்ற கதாபாத்திரம் சொல்லும் கூற்று இது. இதற்கும் இப்பனுவலாசிரியனுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை. தமிழறிவின் தெளிந்த வடிவம் ஐயாயிரமாண்டுகள் என்கிறோம். தொல்காப்பியத்தின் வயது மூவாயிரமாண்டுகள் என்கிறோம். திருவள்ளுவரே என்னைவிட இரண்டாயிரமாண்டுகள் மூத்தவர் என்று பெருமைபட்டுக்கொள்கிறேன். எல்லாமிருந்தும் என்ன செய்வது? செம்மொழியோருக்கு ஒரு தற்கால நாவலை வாசிக்கத் தெரியவில்லையே. ஏனென்றால், பார்த்தல், கேட்டல் மூலமே ஒன்றைப் புரிந்து ரசிக்கத்தெரிந்த நமக்குப் படித்துப் புரிந்து ரசிக்க இன்னும் பழக்கப்படவில்லை. போகப்போக, வைகைப்புயல் வடிவேலுவை ரசிப்பதுபோல மாதவனின் இக்கூற்றின் நகையைப் புரிந்து ரசிப்பீர். தமிழர் தனிநாடு என்பது இன்று தமிழர் பொதுபுத்திக்கு நக்கல் நகைச்சுவையாகிவிட்டது. இந்தித் திணிப்பு மட்டுமில்லை, ழகரத் திரிபும் தமிழை அழிக்கும் சதிவேலையாகும். மொழியரசியல் என்பதைச் சொந்த நாவிலிருந்துத் தொடங்கவேண்டும். உலகில் புலி இனம்போல ழகரத்தை உச்சரிக்கும் தமிழர் எண்ணிக்கையும் அருகிவருகிறது. தனது தாய்மொழியின் பெயரைப் பிழையாக உச்சரிக்கும் ஏதேனுமோர் இனம் உலகிலுண்டா?

சபரிநாதன்: தமிழ்ச் சமூகத்தில் கவிதை என்பதற்கு பொதுக்கற்பனையிலும் பாரம்பரியத்திலும் பெரிய இடம் இருக்கிறது. ஆனால் எதார்த்தத்தில் கவிதை ஒரு விளிம்புநிலை வடிவமாகவே உலவுகிறது. இந்த முரண்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?

பொதுச் சமூகத்திற்கான பொதுவான அறிவு என்பது அச்சமூகத்தின் வழக்கில் விளைந்த மொழி மற்றும் மதம்; இவை தவிர, எல்லாருக்கும் எல்லாமாகி நிற்கும் வேறொன்றில்லை. தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமில்லை; பிற எந்தவொரு சமூகத்திற்கும் கலை இலக்கியம் என்பது பொதுபுத்திக்கானவை இல்லை  முகநூல் நட்பில் எனக்கு ஐயாயிரம்பேர் இருக்கிறார்கள்; இருபினும், எனது பதினான்காம் கவிதை நூல் ஐம்பது படிகள் மட்டுமே அச்சிடப்பட்டன. அடுத்த ஐம்பதாண்டில் என்னை கல்வியாளர் வட்டத்தில் ஐந்துபேர் தெரிந்துவைத்திருப்பார்கள்; அதில் ஓரிருவர் என்னைப் படித்தவராக இருக்கலாம். இது இப்படியே இருக்கட்டும். இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள் இருநூறு ஆண்டுகளுக்கு முன்புதான் பொதுச் சமூகத்திற்கு வந்தது. அப்பனுவல் இன்னும் தமிழ்ப் பொது அறிவில் ஓர் அங்கமாகவில்லையே.

சனாதன அடிமைத் தளைகளை நொறுக்கி வெளியேறிய விடுதலை இறையியலாளர்களான; நவீனகாலத் தமிழ்த் தேசத்தின் முப்பெரும் ஆளுமைகளான ஐயா வைகுண்டர், அருட்பிரகாச வள்ளலார், பண்டிதர் அயோத்திதாசர்  முதலானோர் தமிழ்நாட்டில் அந்தந்த நிலம், இனம், சாதி வட்டார அளவிலேயே முதன்மை பெற்றிருக்கிறார்கள். சனாதனத்தால் கட்டமைந்த தமிழர் பொதுபுத்தி இவர்களை மதம் கடந்த இறையியலாளர்களாக முழுமையாக ஏற்கவில்லை. வடக்கிலிருந்து நேற்றுவந்த சாய்பாபா தமிழ் நிலத்தில் ஒவ்வொரு வீட்டின் பூசையறையிலும் இடம்பிடித்துவிட்டார்.   கலை இலக்கியம் தத்துவம் விடுதலை இறையியல் என்பன பொதுச்சமூகத்திற்கானவை இல்லை. 

சபரிநாதன்: பெரும்பாலும் நடப்பது என்ன? ஒரு கவிதைக்கருவில் இருந்து மொழிப்பரப்பிற்குள் நுழைவீர்களா? மொழிவெளியில் இருந்து புறப்பட்டு கவிதையைக் கண்டுபிடிப்பீர்களா? உங்கள் கவிதையாக்க அனுபவம் பற்றி கொஞ்சம் சொல்லமுடியுமா? ஒரு வாசகனாக கவிதையில் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன? ஒன்றைச் சிறந்த கவிதையாக நீங்கள் கருதுவதற்கான காரணிகள் என்னென்ன? கவிதையில் சிந்தனையின் இடம் என்ன? உணர்ச்சியும் அறிவும் எதிரெதிரானவை என்ற தமிழ்ச்சூழலின் பொதுவான நம்பிக்கையை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்? சொற்தேர்விலும் வளத்திலும் அதீத மொழிப்பிரக்ஞை செயல்படும் கவிதைகள் உங்களது. மொழியுடனான உங்கள் உறவு எத்தன்மையது? கவிதையில் மொழி எப்படி வந்தமையவேண்டுமென விழைகிறீர்கள்?

சபரி, நீங்கள் தனித்தனியாக எழுப்பிய கேள்விகளை ஒன்றாகத் தொகுத்துக்கொண்டு; எனக்கான விவாதப் புள்ளிகளை வரிசைப்படுத்திக்கொள்கிறேன். மொழியிலிருந்து புறப்பட்டு கவிதையைக் கண்டடையமுடியாது. ஒரு கருவிலிருந்தே கவிதையை நான் வளர்த்தெடுக்கிறேன். அக்கரு ஒரு சொல்லாகவோ காட்சிப் படிமமாகவோ திட திரவ காற்று நிலையில் ஒரு பொருளாகவோ இருக்கலாம். வெறும் உணர்ச்சி நிலையை மட்டும் பிடித்துக்கொண்டு கவிதை மட்டுமில்லை நம்மால் அழக்கூட முடியாது; ஒரு காரியத்துக்குக் காரணம் தேவை. எனது கவிதைகள் யாவும் நன்கு திட்டமிடப்பட்டவை; சிம்பொனி இசைக் கட்டமைப்பைப்போல சல்வதோர் தலியின் ஓவிபப் படலம்போல சிற்பத்தின் நடனத்தின் முன்கூட்டிய திட்டமிடல்போல நாவல், திரைப்படம் இவற்றின் ஒழுங்கமைப்பைப்போல திட்டமிட்டே கலைத்தொழில்நுட்பத்தை வரையறுக்கிறேன். கவிதை மட்டுமில்லை, அனைத்துக் கலைவடிவங்களும் செயற்கையானவையே. இயற்கைக்கு வெளியில் நிற்பவை எல்லாம் செயற்கையே. மரம் இயற்கை; போன்சாய் செயற்கை. கந்தசாமி இயற்கை, கடவுள் செயற்கை; இது புதுமைப்பித்தனுக்குத் தெரியும்.

மீசை அரும்பும் காலத்திலேயே அணி இலக்கணம் கற்றுத் தேர்ந்து பாப்புனைந்தேன். தளைத்தட்டாமல் அசை பிரித்து சொற்களைத் தேர்ந்து பாவகைமையில் கவிதைகளைக் கட்டமைத்த பழக்கம் இன்றுவரை துணைநிற்கிறது. உடம்புறவில் கட்டமையும் கவிதையியல் தொழில்நுட்பத்தை எனது பிரதியாக்கங்களில் படித்துத் தெளியலாம். நான் தேர்ந்த கவியாக இல்லாமலிருக்கலாம், அது உங்கள் பிரச்சினை; ஆனால், என்னளவில் அறுதியிட்டுச் சொல்வேன், நானொரு தேர்ந்த வாசகன். கவிதையொன்றில் எழுதியிருப்பேன்; நட்சத்திரம் என்றால் அதுவொரு சொல், விண்மீன் என்றால் அதுவொரு படிமம். மொழி என்பது எனக்கொரு கலைப்பொருள், அது பேசவும் எழுதப்படிக்கவும் மட்டுமன்று.

சிறந்த கவிதை என்று எப்படித் தேர்வது? பிரதி ஒன்று; வாசிப்பு நூறு. எழுதப்பட்டதை மறுகட்டமைப்பு செய்வது வாசகர் மூளையே. வாசிப்பில் அடைபடும் பிரதியும், முன்முடிபுகளை முன்மொழியும் பிரதியும் எனக்கு ஒவ்வாதவை. பன்முகப்பிரதி வாசிப்பைப் பன்முகப்படுத்தும். பிரதியை ஒருமுகப்படுத்துவதே வாசிப்பின் அரசியல்; அது விமர்சனப் பாசிசத்தை உருவாக்கும். மதச் சித்தாந்திகளுக்கும் அரசியல் சித்தாந்திகளுக்கும் எனது பனுவல்களுக்குள் அனுமதியில்லை; அவை, அவர்களை வெளித்தள்ளிவிடும்.

உணர்ச்சியும் அறிவும் எதிரெதிரானவை இல்லை; உணர்ச்சியை அறிவு வழிநடத்தவேண்டும்; கலையின் இயங்கியல் அதைச் செய்யும். உள்ளம் என்பது தொகுப்பறிவு, அது தொகுப்புணர்ச்சி அன்று. அறிவைப் பொருண்மை செய்தல்வேண்டும். அறிவும் கலையும் சேர்ந்த பொருண்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு, திருக்குறள்; இதை எழுதியவனே, தமிழின் மூத்தத் தலைமுறையின் முதன்மைக் கவிஞன்.

இருப்பதை நகலெடுப்பது கலைச்செயல் இல்லை; இருப்பதை வேறொன்றாக ஆக்குவதே படைப்பின் ரசவாதம். தமிழ்மொழி இயல்பிலேயே கவித்துவமானது. தாய்மொழி ஒரு சமூகத்தின் இயற்கை விளைவு. நானொரு மொழிவழி கலைஞன்; எந்த வழியிலும் பாசிசம் அண்டாத உள்ளத்தின் ஒளி பிரதியில் துலங்கவேண்டும்.

லக்ஷ்மி சரவணகுமார்: உங்களது அனேக புனைவுலகில் (சமீபத்தில் வெளியான நல்லபாம்பு உட்பட) பெருங்கதையாடல்களுக்கு மாறாக சிறுதெய்வ வழிபாட்டையே நீங்கள் பிரதானப்படுத்துகிறீர்கள். இதை ஓர் அரசியல் செயல்பாடாக எடுத்துக்கொள்ளலாமா?

உலகப் பெருமதங்கள் யாவும் அரசியல் செயல்பாட்டுக் களங்களே. இந்தத் துணைக்கண்டத்தில் ஒவ்வொரு கடவுளும் அரசியல்வாதிகளே. கடவுளரை எதிரிடையாகவைத்து விளைந்த சமயப் போர்கள் இந்த நூற்றாண்டிலும் ஓய்ந்தபாடில்லை. மனிதவுறவுகள் இல்லாமல் ஒரு சமூகத் தன்னிலையால் வாழமுடியும்; ஆனால், கடவுளில்லாமல் இயலாது. தமக்கென்று ஒரு கடவுள் இல்லாமல் இவ்வுலகில் எந்தவொரு மூலையிலும் ஓர் இனக்குழு இல்லை. மதம் என்னும் கருத்தியல் சட்டகமே, சமூகத்தின் முதல் அரசியல் அமைப்பு; அதுவே பன்னாட்டு அரசியல் அமைப்புகளைப் பின்னின்று இயக்குகிறது. இத்துணைக்கண்டத்தில் ஐம்பூதகங்களும் கல், மண், மரம் செடி கொடி, மலை, கடல், மீன், பன்றி, குரங்கு, யானை பானை, பாம்பு என உயிருள்ளவை உயிரில்லாதவை யாவும் தெய்வங்களே. சாமியாடும் பெண்கள் நரம்பு நோயாளிகளில்லை; அவர்கள் மாரியாயி கூடுபாய்ந்த அந்நேரத்திற்கான தெய்வங்கள். நடுகற்கள், சுமைதாங்கிக் கல் அமைப்புகள், உயிர்க் குடித்த பாழுங்கிணறுகள், தொழிற் கருவிகள், வேட்டைக் கருவிகள், போர்க் கொலைக்கருவிகள், பனையோலை, எழுத்தாணி, பாடபுத்தகம், பேனா பென்சில் எல்லாமே சிறுதெய்வங்கள்தாம். தெய்வம் என்பது சமூகமனநிலை; நாத்திகம் என்பது சமூக அறிவுநிலை. பெருதெய்வங்களை முன்வைத்து கட்டமையும் சமூக மேலாதிக்கப் பாசிசத்தை வலுவிழக்கச்செய்ய சிறுதெய்வ வழிபாடுகளை முன்னெடுக்கவேண்டும். மூத்தப் பனுவலான சிலப்பதிகாரமே இதைத் தொடங்கிவைக்கிறது. ஒளவை, புனிதவதி, திருவள்ளுவர், திருமூலர், பதிணெண் சித்தர்கள் தொடங்கி வள்ளலார் வரையிலான கவிஞானியர்கள் கடவுளாகவே வழிபடப்படுகிறார்கள். திருவதிகை வீரட்டானேசுவரர் பெருங்கோவிலுக்கு வெளியே வெட்டவெளி மண்தரையில் மூக்குடைக்கப்பட்டு வீற்றிருக்கும் புத்தரும் ஒரு சிறுதெய்வமாகத்தான் வழிபடப்படுகிறது. மதம்சார் பெருந்தெய்வம் புதிதாகத் தோன்றாது; சிறுதெய்வம் காலந்தோரும் தோன்றிக்கொண்டேயிருக்கும். நானொரு தமிழ் நாகன்; நாகத்தை வழிபடுபவன். நாகத்தைக்கூடி குட்டி நாகத்திற்குத் தந்தையானவன். நல்லபாம்பு: நீல அணங்கின் கதையில் அவளை நீங்கள் வழிபடலாம். ஆம், கார்பரேட் கடவுளருக்கு எதிராக நான் நாட்டுக்குடித் தெய்வங்களை முன்னிறுத்துகிறேன். இத்துணைக்கண்டத்துக்குள் வெளியிலிருந்து வந்தவர்கள் மண்ணின் மக்களின் மொழி, நிலம், தெய்வம், கலை, கதை என அனைத்தையும் களவாடி தமதாக்கிக்கொண்டார்கள். அவர்களிடமிருந்து நமது நாட்டார் தெய்வங்களையேனும் பறிகொடுத்துவிடாமல் பாதுகாக்கவேண்டும்.

லக்ஷ்மி சரவணகுமார்: சொல் என்றொரு சொல் நாவலிலும் உங்களின் அனேக கவிதைகளிலும் பெளத்தம் குறித்த ஆழ்ந்த புரிதல்களை வெளிப்படுத்தியுள்ளீர்கள். அதே சமயம் 2009 இலங்கை யுத்த காலகட்டத்தில் நீங்கள் உங்களை ஈழ ஆதரவாகவேதான் வெளிப்படுத்தியுள்ளீர்கள். தமிழ் இலக்கியச் சூழலில் பெரும்பாலானோர் குறிப்பாக பெளத்தத்தில் ஆழ்ந்த பற்றுள்ளவர்களாய்த் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறவர்களும்கூட சிங்கள பெளத்த பேரினவாதத்தை கண்டிக்கவில்லையே இந்த மனநிலையை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

நான் பெளத்தத்தின் வழியாகத்தான்  அயோத்திதாசரையும் அம்பேத்கரையும் வந்தடைந்தேன். பெளத்தம் என்பது சிந்தனைப் பள்ளி; அது மதமாகத் திரிந்து பல கிளைகளாகப் பிரிந்து உலகப் பெருமதங்களில் ஒன்றாக பாசிசக் கட்டமைப்போடு செயல்படுகிறது. இலங்கை, மியான்மர் போன்ற நாடுகளில் மதப்பெரும்பண்மையினர் மதத்தின் பெயரால் மதச்சிறுபாண்மையினரை ஒடுக்கவில்லை; அவர்கள் இனம் என்ற உயிரியல்/ இனக்குழு வரையரையை முன்வைத்தே இனச்சிறுபாண்மையினரை ஒடுக்கவும் கொன்றொழிக்கவும் செய்கிறார்கள். பெளத்தப் பெரும்பாண்மையினர் சிங்களர்களாகவும்  இந்துச் சிறுபாண்மையினர் தமிழர்களாகவும் இருப்பதுதான் பிரச்சினை; இங்கு இருவேறு மதங்களை எதிரிடையாக முன்வைப்பது ஓர் அரசியல் கபடம். இந்தியாவில் இந்துக்களானத் தமிழர்கள் தனித்துவம் பேணும் தேசிய இனம் என்பதாலேயே இந்திய ஆரியப் பேரரசால் ஒடுக்கப்படுகிறது. இந்து என்ற மத அடையாளம் தமிழர் தேசிய இனத்தை அடக்கி ஒடுக்கி தனித்துவம் அழித்து முடக்கப்பார்க்கிறது. இதேபோல இலங்கையில் தமிழர்கள் அனைவரும் பெளத்தர்களாக இருந்திருந்தாலும் இந்த இன அழித்தொழிப்பு நடந்திருக்கும். கிறித்துவ, இஸ்லாமிய மதப்பிரிவுகள் ஒன்றையொன்று பகைமைப்பாரட்டுவதைப் போன்றதன்று; இது, ஒரு நிலத்தில் வாழும் இருவேறு இனக்குழுக்களின் சுயநிர்ணய அரசியல் பிரச்சினை. இந்து தேசியத்தைக் கட்டமைக்க முனைந்துவரும் இந்திய அரசின்          (காங்கிரஸ், பி.ஜே.பி. இரண்டிற்கும் ஒரே நோக்கம்தான்) பேருதவியோடுதான் இரண்டுலட்சம் ஈழ இந்துக்கள் கொன்றழிக்கப்பட்டனர். இந்தத் துணைக்கண்டத்தில் ராமாயணம் காலந்தொட்டு ஆரியர்கள் தமிழர்களை அழித்துவருகின்றனர். இந்தியா என்ற கட்டமைப்புக் குலைந்தால்தான் இப்போர் வரலாற்றில் ஒரு முடிவுக்கு வரும். பாவம், புத்தர் என்ற அறிவுஜீவி என்ன செய்வார்? அவரே ஆற்றுநீர் பங்கீட்டுப் பிரச்சினையில் சாக்கியர், கோலியர் என்ற இரு இனக்குழுக்களிடையே சிக்கிச் சின்னாபின்னப்பட்டுத் தன்னை சமூக விளக்கம் செய்துகொண்டவர்தானே.

லக்ஷ்மி சரவணகுமார்: இந்தியத் தமிழர்க்குத் தனிநாடு அமையாதவரை ஈழத் தமிழர்க்குத் தனிநாடு சாத்தியமில்லை. தனி ஈழத்திற்காக இங்கிருந்து குரல் கொடுக்கும் தமிழர்களைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது. ஈ.வெ.ரா. சொன்னதைத்தான் அன்று பாரிசில் பேசினேன்; ஓர் அடிமை இன்னோர் அடிமைக்கு எப்படிக் குரல்கொடுப்பான்?’ [பக். 126] ஐந்தவித்தான். நாவலில் கதாப்பாத்திரம் சொல்லும் இந்த வரிகளை உங்களின் அரசியல் நிலைப்பாடாக கொள்ளலாமா? எனில், பின் நவீனத்துவத்தில் தேசிய சிந்தனைகளுக்கான உரையாடல்களின் இடத்தை நாம் எவ்வாறு வரையறுப்பது?

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சோவியத் யூனியன் என்ற கூட்டமைப்பு தனித்தனி குடியரசுகளாகப் பிரிந்த பிறகுதான் அதுவரை ஒற்றைக் கூண்டுக்குள் அடைபட்டிருந்த வேறுபட்ட தேசிய இனங்கள் விடுதலை வானில் பறக்கலாயின. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு சோவியத் கண்காணிப்பின் கீழ் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பட்டபாடுகளை அறிவோம். இனம், மொழி, பண்பாடு என அனைத்திலும் வேறுபட்ட தேசிய இனங்களை ஓர் அரசியல் கோட்பாட்டால் அமைந்த அரசின்மூலம் ஒற்றைக் குடையின் கீழ் நிறுத்துவதை, விடுதலையை அவாவும் எந்தவொரு கோட்பாடும் ஏற்காது. பொதுவுடமைக் கட்டமைப்பு என்பதும் தேசிய இனங்களின் ஒருங்கிணைவு என்பதும் வேறுவேறு. ஒரு மதப்பிணைப்பைக்கொண்டு இத்துணைக்கண்டத்தின் வேறுபட்ட தேசிய இனங்களை அடாவடியாக ஒன்றுகூட்டி வைத்திருக்கும் இன்றைய இந்திய நிலைமைக்கு ஒப்பானதே அது. இன்றைய ஆளும் அரசின் உச்ச அழுத்தத்தில் இந்திய ஒன்றியத்தின் பிணைப்புகள் தெறித்து; மொழிவழி மாநிலங்கள் யாவும் தனித்தனியாகப் பிரிந்து மொழிவழி தேசங்களாக உருத்திரளும். மதம், முதலாளித்துவம், பொதுவுடைமை என எதுவும் புதிய தேசங்களுக்கு முன்நிபந்தனையாக இருக்காது. அப்போது, சுயலாபங்களுக்காக இந்திய ஒன்றியத்தைத் தாங்கிப்பிடிக்கும் பாசிச சக்திகள் விரட்டியடிக்கப்படும். இது இந்நூற்றாண்டில் நிகழும். இது இலங்கைக்கும் பொருந்தும்; அங்கு, இரு தேசங்கள் மலரும். சுழலும் நிலம் நிற்கும்வரை வரலாறு தேங்காது.

சபரிநாதன்: நீங்கள் கூர்மையான கருத்தியல் மற்றும் விமர்சனச் செயல்பாடுகளில் பங்கெடுத்தவர். அந்த விவாதங்களும் அது சார்ந்த தேர்வுகளும் கவிதையாக்கத்தில் இடையீடு செய்துள்ளதாக எண்ணுகிறீர்களா?

கவிதைகள், புனைகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் வழியாகவே நான் அறியப்படுகிறேன். எனது அரசியல் செயல்பாடுகள் யாவும் கோட்பாடு சார்ந்த விவாதங்களாகவே இருந்தன. என்னை ஒரு கம்யூனிஸ்ட் எனச் சொன்னால், முறைப்பார்கள், அம்பேத்கரிஸ்ட் எனச் சொன்னால், ஏறயிறங்கப் பார்ப்பார்கள், தமிழ்த்தேசியவாதி எனச் சொன்னால், உதைக்கவருவார்கள். ஏனெனில், நான் அரசியல் கோட்பாடுகளுக்குள் நின்று படைப்பிலக்கியம் செய்வதில்லை. நானொரு நாடோடி கவிஞன்; எந்தவொரு சமூக அமைப்பிலும் எனக்கு இடமில்லை. என்னைப் பின்நவீனத்துவவாதி என்கிறார்கள்; சிரிப்பதைத் தவிர எனக்கு வேறேதும் செய்யத்தோணவில்லை. இரும்பைத் தங்கமாக்க அதன் இயல் தன்மையை மாற்றும் ரசவாதியைப்போல; ஆண் + பெண் = ஆபெண் என உயிரியல் ரீதியாக அன்றி கவிதையியல் ரீதியாக தனித்த பாலைத் திரிக்கும் ரசவாதவேலையில் ஈடுபட்டுள்ளேன். பாலில் தேங்கும் உடம்பும் கோட்பாட்டில் தேங்கும் அறிவும் மேலாதிக்கமாய் உருத்திரளும்.

சபரிநாதன்: உங்கள் கவிதைகளில் அறிவுநிலையிலோ உணர்ச்சிகரத்திலோ ஒருவித வன்தன்மை அல்லது ஒருவகை மூர்க்கம் இருப்பதாக தோன்றுவதுண்டு. அப்படியான தோற்றத்திற்கு வாய்ப்புள்ளதாக கருதுகிறீர்களா?

ஆசனவாயில் சொருகப்பட்ட கழுமர உச்சிலிருந்து புவியீர்ப்பு விசையில் கீழ்நோக்கி இறங்கியபடி சுற்றி நிற்பவரை வேடிக்கைப் பார்க்கிறேன். என்னிடமுள்ள உச்சபட்ச ஆயுதப் பயன்பாடு எனில்; வாயில் உமிழ்நீரைக் கூட்டிக் காறித்துப்புவதுதான். நானோர் உள்ளோட்டை மனிதன்; ஒரு முத்தத்தால் என்னைக் கொன்றுவிடலாம். என்னை வாசித்தத் திளைப்பில் ஒருவர் செத்தால் அவருடன் உடன்கட்டை ஏறுவேன் அல்லது சேர்ந்துப் புதைவேன். திருவள்ளுவரில் தொடங்கி இராமலிங்கரிடம் அடைக்கலமானவன். அருட்பெருஞ் சோதி, தனிப்பெரும் கருணை.

சபரிநாதன்: நீங்கள் விரும்பி வாசிக்கும் கவிஞர்கள் யாவர்? (தமிழ் மற்றும் அயல்மொழிகளில்)

பிரெஞ்சு மொழியில் ஷார்ல் பொத்லேர், அர்துய்ர் ரெம்போ, போல் எலுவார், ழாக் ப்ரெவெர். ஆங்கிலம் வழியில் ரவீந்திரநாத் தாகூர், அக்தோவியோ பாஸ், பாப்லோ நெருதா, லூயிஸ் போர்கஸ், தமிழில் திருவள்ளுவர், திருமூலர், சுப்ரமணிய பாரதி.

சூர்யதேவ்: தற்காலத் தமிழ் இலக்கியவாதிகளில் யாருடைய எழுத்து தங்களுக்கு நம்பிக்கை தருவதாக உணர்கிறீர்கள்?

ஜெயமோகன் தனது அரைநூற்றாண்டு வாழ்க்கையிலேயே உச்சத்தைத் தொட்டுவிட்டார்; இருபத்திநான்கு மணிநேரமும் நிலைக்கண்ணாடி முன்னின்று தன்னைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்கிறார். எஸ். ராமகிருஷ்ணன் ஒரு தன்னிறைவுகொண்ட பேராசிரியர். கோணங்கி ஒரு maverick; இவரையொத்தவர்களையே என் மனம் அவாவுகிறது. கவிதையில் என்.டி. ராஜ்குமார், ரியாஸ் குரானா, யவனிகா ஶ்ரீராம். இளங்கோ கிருஷ்ணன், எஸ். கயல், வெயில், சங்கரராம சுப்ரமணியன் இவர்களை வாசிக்கத் தவறுவதில்லை. இசையைத் தேர்ந்தெடுப்பதைப்போலத்தான் இலக்கியப் பனுவல்களைத் தேர்கிறேன். வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தால் உலக அரங்கில் உச்சத்தைத் தொடும் ஆற்றல்கொண்ட ஆளுமை எஸ். முருகபூபதி. லக்‌ஷ்மி சரவணகுமாரிடமிருந்து அரிதினும் பெரியதாக எதிர்பார்க்கிறேன். சு. தமிழ்ச்செல்வியின் ஆறுகாட்டுத்துறை என்ற நாவலை ஓர் ஆண் எழுதியிருந்தால் இச்சமூகம் கொண்டாடியிருக்கும்; folk classic என்று பத்தாண்டுகளாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறேன். இவர்,  எட்டு நாவல்களை எழுதிவிட்டு அமைதியாக இருக்கிறார். இந்த இலக்கியச் சூழலின் கயமை எனக்கு அயற்சியைத் தருகிறது. தமிழ்க்குடியின் மதிப்பும் மரியாதையும் இலக்கியத்தின் மூலமே வரலாற்றில் முன்னிறுத்தப்படுகிறது.   நூறு பூக்கள் மலரட்டும்.

சபரிநாதன்: உங்கள் அனுபவத்தில் கவிஞனாக வாழ்வதென்றால் என்ன?

தமிழ்க் கவிஞனாக வாழ்வது என்று திருத்திக்கொள்கிறேன்; அராக்கிரி.

சூர்யதேவ்: வாழ்க்கைக்கும் எழுத்துக்குமான இடைவெளியை என்றேனும் உணர்ந்ததுண்டா?

இதுவரை இல்லை.

சூர்யதேவ்: பிரேம்/ரமேஷ் பிரிவிற்குப் பிறகான தங்கள் எழுத்து பற்றிய சுயமதிப்பீடு என்ன?

இது இந்தியா – பாக்கிஸ்தான் பிரிவினையா? அரசு வேலையை முன்வைத்து பாதுகாப்பாக, சுய தணிக்கையோடு எழுதவேண்டியிருந்த நெருக்கடி இப்போது இல்லை. பிரேமிடமிருந்துப் பிரித்து, மாலதி மைத்ரி அவர்கள் என்னை விடுதலை செய்தார்; அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

சித்ரன்: கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள் கதையில் இசையாசிரியை பெர்னாதேத் தன் முழுவாழ்வையும் குழந்தை இசைக் கலைஞனான ழீலிற்காய் அர்ப்பணித்திருப்பாள். ஆனால் அவள் எதிர்பார்ப்பை நிறைவேற்றாது மனச்சிதைவுற்றுத் திரியும் ழீலிற்கு பெர்னாதேத் பின்வருமாறு எழுதுவாள் “அழுதால் மயக்கம் வருகிறது. தனிமையில் மயக்கம் வந்தால் தண்ணீர் தர யார் இருக்கிறார்கள் ழீல்”. தமிழ் இலக்கியப்பரப்பின் எல்லைகளை விரிவாக்கிய ரமேஷ் பிரேதன் இன்று தன்னைச் சூழ்ந்துள்ள தனிமையை எப்படி எதிர்கொள்கிறார்?

வேணாம். வேணாம். வலிக்குது. அழுதுருவேன்.

நேர்காணல் பகுதி முடிந்தது

நன்றி சித்ரன் & நண்பர்கள்

(

உலகின் அழகிய துயரம்

1

(ஜீவ கரிகாலன்)

காலை சார்ஜ்ஜில் போட்டிருந்த செல்போன் இத்தனை வேகத்தில் தீரும் என அவன் எதிர்பார்க்கவேயில்லை, ஸ்விட்ச் ஆன் செய்ய மறந்துவிட்டிருந்தான். அவனது வாழ்நாளில் தவறிப்போன முதல் செயல் அது. . வாடகைக்காரில் இருந்து இறங்கும்போதே மனம் அழுத்தம்பெற ஆரம்பித்தது. திமிங்கலத்தின் வாயெனத் திறந்துகிடந்த விமானநிலையத்தின் உள்ளே நுழையும் போது அவன் செல்பேசி மரணப்படுக்கையில் வரும் விக்கலைப் போல திக்கிக் கொண்டிருந்தது. வேகவேகமாக செக்-இன் செய்துவிட்டு தனது கடவுச்சீட்டினைக் கையிலெடுத்தபடி அடுத்த கட்ட சோதனைக்குச் சென்றான். சோதனைக்கான இடத்தில் செல்பேசியை ட்ரேயில் போடும் போது அது செத்தேவிட்டது. நீண்ட வரிசையில் அவனும் ட்ராலியில் வைத்திருக்கும் செல்லினைப் பார்த்தபடியே நகர்ந்துகொண்டிருந்தான். அவனது போன் இருந்த தட்டும் மின்மயானத்திற்கு செல்வது போலவே ஸ்கேனரில் நுழைந்தது. ஆனால் அவனுக்கு முன்னர் பதினைந்துபேராவது இருந்தார்கள். ரயில்வே கவுண்ட்டர், ரேஷன் கடையை விட விமானநிலையத்தின் தனிநபர் சோதனைக்கான க்யூ கொடுமையானது என்று அவன் தன் நண்பர்களிடம் சொல்வதுண்டு.. அந்த உரையாடல்கள் நடந்தே பத்தாண்டுகளுக்கும் மேலே இருக்கும். விமானப் பயணம் என்பது அன்றாடங்களில் ஒன்றாக மாறவில்லை என்பது மட்டுமே ஆறுதல். ஆனாலும் எங்காவது பயணித்துக்கொண்டே தான் இருக்கிறான். அது அவனாக தன்னை ஈடுபடுத்திக் கொள்வது. நாடறிந்தவன் என்று இவனைச் சொல்லிவிட முடியாது, நாடறிந்த மில்லியனர்கள் பலரும் அறிந்த பிரபலமான பெர்சனல் பாங்க்கர்.

அவனோடு படித்த கல்லூரி நண்பர்கள் வங்கித் தேர்வு எழுதிய காலம். விடாப்பிடியாக தனியார் வங்கியில் தான் வேலைக்குச் சேர வேண்டும் என்று சபதமிட்டுக் கொண்டான். கல்லூரிக்கு சென்ற எல்லா நாட்களிலும் நூலகம் சென்று பொருளாதாரம் குறித்த நாளிதழ்களை மட்டுமாக வாசித்து தன்னை வளர்த்தெடுத்தவன், திட்டமிட்டபடியாக அவன் வாழ்வு கூடவே வந்தபோது. நண்பர்களிடமிருந்தே விலக ஆரம்பித்தான். பெற்றோர்களுக்கு பொருளாதார ரீதியாக உடனிருப்பதைத் தவிர ,பெரிய தூரம் ஒன்றைக் கணக்கிட்டு கடைபிடித்தான். ஏழெட்டு வருடங்களிலேயே வெளிநாட்டு வங்கியில் பணி, மூன்று வருடங்களில் பதவி உயர்வு. அங்கிருந்து வேறொரு நாட்டிற்கு சென்று மிகப்பெரிய தனியார் வங்கி ஒன்றில் தலைமை அதிகாரியாகப் பணியாற்றினான். அடுத்த ஐந்து வருடங்களில் வேலையைத் துறந்துவிட்டு, தனியாக ஒரு பெர்சனல் பாங்க்கிங் நிறுவனம் ஆரம்பித்தான். அவனது அனுபவத்தில் கிடைத்த வாடிக்கையாளர்கள் காந்தவிசையில் ஈர்க்கப்படுவதைப்போல இவனைத் தொடர ஆரம்பித்தார்கள். வெவ்வேறு நாடுகளில் உள்ள தமது வாடிக்கையாளர்களின் முதலீடுகளைப் பரிந்துரைப்பது மட்டுமே வேலை. அவனது அலுவலகத்தின் மொத்த வேலையாட்களும் இதற்கான தரவுகளைச் சேமிப்பதற்காக அமர்த்தப்பட்டவர்கள், மற்றபடி உலகின் பல்வேறு கால மண்டலத்திலிருந்தும் இவனது வாடிக்கையாளர்கள் அழைத்துக் கொண்டிருப்பார்கள். இத்தனை முக்கியத்துவம் பெற்ற அவனது செல்போன் முதன்முதலாக இப்போது அணைத்துவைக்கப்பட்டிருந்தது.

சோதனை முடிந்து உடைகளைச் சரிசெய்தபடி செல்போன் ட்ரேயை தேடிப் பிடித்தான்.. சில்லிட்டிருந்தது. எப்போதும் இப்படி நடந்ததில்லை. சோதனையின் போது ஏற்படும் ஸ்ட்ரெஸ்ஸை ஈடுகட்ட, சோதனை முடிந்ததும் அவனது மனம் ஜானி வாக்கர் பற்றி நினைத்துக்கொண்டிருக்கும். அது, பங்கு வர்த்தகத்தில் வாங்கும் ஆப்ஷன்களைப் போல. அவன் இயல்பு அது. மது அருந்துவதைக் கூட தனது தொழில் மனத்தோடு தான் பார்ப்பான்.

“உடல்தேவைக்கு எதற்கு ஈக்விட்டி மார்க்கெட் போகணும், நமக்கு தான் ஆப்ஷன்கள் இருக்கே” என்பது அவனது பொன்மொழிகளில் ஒன்று. அவனது கடவுச்சீட்டின் முத்திரைகளே சொல்லும் அவனது உடல்தேவைக்காகவும் பலமுறை அவன் பிற தேசங்களுக்கு சென்று வந்ததை. ஆனால் அத்தகைய பயணங்கள் பங்கு வர்த்தகம் போல் ஏற்ற இறக்கத்தோடு அல்லாமல் சீரான இடைவெளியில் அமைந்திருக்கும். பங்கு வர்த்தகம், கமாடிட்டி, ரியல் எஸ்டேட், நலிந்த தொழில் நிறுவனங்களை வாங்குவது தீவுகள், ஓவியங்கள், கலைப்பொருட்கள் வாங்கும் ஒரு சிண்டிகேட் நிறுவனத்தில் இவனும் உறுப்பினராகியிருந்தான்.

மத்தியவயதைத் தாண்டியும் இளைஞனைப் போன்றே தோற்றமளிக்கும் அவனுக்கு, அவனது வாழ்க்கை முழுக்க இப்படித்தான் எல்லாவற்றையும் வேறு ஒன்றால் சமன் செய்ய முடியும் என்றொரு தீவிரமான நம்பிக்கை. அதுவொரு சிறிய நகரத்தின் உள்ளூர் விமானநிலையம், விமானநிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு பெரும்பகுதி நிலத்தை வாங்குவதற்கான பேரத்தில் தனது வாடிக்கையாளர் சார்பாக கலந்து கொண்டு திரும்புகிறான். உள்ளூர் விமான நிலையம் என்பதால் நேரே லவுஞ்சில் போய் அமர்ந்து கொள்ள இயலாது, ரயில்நிலைய முன்பதிவு கவுண்ட்டர் போன்ற இரும்பு நாற்காலிகள். குளிரூட்டப்பட்ட அறை, துருப்பிடிக்காத இரும்பு நாற்காலிகள் என்பது மட்டும் தான் வித்தியாசம். அதுவும் கூட மாநகரத்து மெட்ரோ ரயில்நிலையம் என்கிற அளவிற்கு கூட வரவில்லை.

இருக்கையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தவனுக்கு அதிர்ச்சி தரும் வகையில், அவனது வாடிக்கையாளர்களுக்கு வாங்கிக் கொடுத்த அசலான ஓவியம் ஒன்றின் பிரதி சுவரில் மாட்டப்பட்டிருந்தது கண்ணில் பட்டது. சமீபத்தில் இதற்கும் முன்னர் மூன்று நான்கு முறை வந்து போனபோதெல்லாம் கண்ணில் மாட்டாமல் இருந்தது ஆச்சரியம் தான்.

தங்கமுலாம் பூசப்பட்ட ஒரு கேன்வாசில் ஐந்துக்கு நான்கு அடி என்கிற அளவில் கரும்பச்சை நிற பின்னணி வண்ணத்தில் சோகத்தில் கவிழ்ந்த ஒரு பெண் முகத்தின் கண்ணாடி பிம்பம் வரையப்பட்டிருந்தது அதில் அந்த பிம்பத்தில் Aye Man என்று கையெழுத்திடப்பட்டிருந்து. அந்த ஓவியம் உலகப்புகழ்பெற்ற அயன் மேண்டி என்கிற செயற்கை நுண்ணறிவு வல்லுனரால் அவரது விடுமுறை காலத்தில் வரையப்பெற்ற ஓவியம். அயன் மேண்டியின் புகழினாலே புதிதென எதுவும் சொல்ல முடியாத நுட்பங்களைக் கொண்ட அவ்வோவியம். ‘உலகின் அழகிய துயரம்’ என்று பெயரிடப்பட்டிருந்த அவ்வோவியம் மிகக்குறுகிய காலத்தில் புகழ்பெற்றது.

லண்டனின் புகழ்பெற்ற காலரியில் அந்த ஓவியம் முதன்முதலாகக் காட்சிப்படுத்தப்பட்டது, யாரும் எதிர்பாராத அளவு அந்த ஓவியம் கவனம் பெற ஆரம்பித்தது. பத்திரிகைகள் “ஐ-போன் லாஞ்சிற்கு இணையான வரவேற்பு” என்று செய்திகள் வெளியிட்டன. அவ்வோவியம் குறித்த செய்தியும், அந்தப் பெண்ணின் சோகத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று கேலரிக்குச் சென்று பார்ப்பவர்கள் வெவ்வேறு காரணங்களை அதில் எழுதி வைக்க ஆரம்பித்தார்கள். க்வோரா, ட்விட்டர் போன்ற தளங்களில் அது பெரியதொரு கவனம் பெற்றது. ஐரோப்பிய கலையுலகில் அவ்வோவியம் பிரபலமடைந்து வருகிறது என்பதை அறிந்தவன், தாய்லாந்து நாட்டு எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் அதிபரான ஒரு அமெரிக்க வாடிக்கையாளரின் பெரிய முதலீட்டினை அந்த ஓவியத்திற்கு பரிந்துரைத்தான். ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் விமானநிலையம் வழியாகக் கொண்டு செல்லப்பட்டு, ஒரு கேலரியில் அவ்வோவியம் பத்திரப்படுத்தப்பட்டது. அந்நகரில் இப்படி ஏராளமான கலைப் பொக்கிஷங்கள் பெரும்பணக்காரர்களின் முதலீடாக, கருப்பு பணத்திற்கு மாற்றாக இவ்வாறு பாதுகாக்கப்பட்டு இருக்கும். ஊடகங்களில் வெளியான படங்களைக் கொண்டு ஓவியத்தில் இருக்கும் இத்தனை நுட்பங்கள் எவ்வாறு இந்தியாவில் வைத்து போலி ஒன்று உருவாகியிருக்கும் என்கிற கேள்விகள் அவனைத் துரத்திக்கொண்டே இருந்தன. அனுமதியின்றி இவ்வாறான பிரதியை எடுத்து அதுவும் ஒரு விமானநிலையத்தில் வைப்பது சட்டத்திற்கு புறம்பானது என்பதோடு ஸ்விஸ்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஓவியத்தின் நகல் எப்படி இங்கே கொண்டுவரப்பட்டது, இது அசலான ஓவியமாக இருப்பின் எப்படி கொண்டுவரப்பட்டிருக்கும் என்ற யோசனை இவனை கலவரப்படுத்தியது.
ஓவியம் குறித்து நன்கு யோசித்துப் பார்த்ததில் அது 36க்கு 26 இன்ச் எனும் அளவில் உள்ள ஓவியம் என்று தோன்றியது. விமானநிலையத்தில் இருப்பதோ ஐந்திற்கு நான்கு அளவிலான ஓவியம். மேலும் அந்த ஓவியத்தின் சட்டகம் மரத்தாலானது மட்டுமே என்கிற நினைவும் வந்தது. இங்கே தான் தங்கமூலாம் பூசப்பட்ட சட்டகம், இந்நாட்டு மக்களின் தங்கத்திற்கான ஏக்கம் வெளிப்படுத்தப்பட்டிருந்ததாக தனக்குத்தானே ஏளனம் செய்தான்.

‘அயோக்கியத்தனம்’ என்று மனதில் சொல்லிக்கொண்டே, ஏர்போர்ட் மேனேஜரிடம் சண்டை போட வேண்டும் என்கிற கோபமான உடல்மொழியோடு நகரலானான். எதற்கும் படம்பிடித்து வாடிக்கையாளர்களுக்கும், அந்த ஓவியத்தை விற்பனை செய்த கேலரிக்கும் அனுப்பலாம் எனத் தோன்றியது. ஆனால் செல்பேசியில் உயிரில்லை என்கிற நினைவுவர, அதை சார்ஜ் செய்திட முனைந்தான். எல்லா சார்ஜ் பாய்ண்ட்களும் சார்ஜர்கள் பொருத்தப்பட்டு மறுமுனை கைப்பேசிகளை இணைப்பில் வைத்திருந்தன. அந்த நாள் தனக்கானது இல்லை என்று நினைத்தபடி ஒவ்வொரு சார்ஜிங் பாய்ண்ட்டிலும் நின்று கொண்டிருந்தான். ஒரேயொரு ப்ளக் பாய்ண்ட்டில் சார்ஜர் பொருத்தப்பட்டிருந்தும் கைப்பேசி சரியாகப் பொருத்தப்படாமல் இருந்ததால், அந்த இடத்தைத் தேர்வு செய்தான்.

இதற்கு முன் திருடியதில்லை அல்லது புரோக்கர்கள், முகவர்கள், ஏஜென்சி இல்லாமல் நேரடியாகத் திருடியதில்லை என்கிற எண்ணம் அப்போது அவனுக்கு வந்ததும் அவசியமில்லை தான். இது எப்படி திருட்டாகும் என்கிற ஆறுதலையும் அவன் அகம் சொன்னது. இது க்ரைமின் எல்லைக்குள் வராத ஐந்து முதல் பனிரெண்டு வாட்ஸ் நான்-க்ரைம் தான் என்று தேற்றிக்கொண்டது.

அந்த சார்ஜரை கழற்றி வைத்து இரண்டு நிமிடங்கள் வரை பார்த்துக்கொண்டிருந்தான். யாரும் வரவில்லை, துரிதமாக அந்த துளைகளில் தனது சார்ஜரைப் பொருத்தினான். சார்ஜரைப் பொருத்திவிட்டு, தன் கைப்பேசியையும் இணைத்துவிட்டபின் சற்று ஆசுவாசமடைந்தான். உலகோடு அவனுக்கு இருக்கும் தொடர்பு கைப்பேசி இல்லையெனில் பத்து முதல் இருபது சதவீதம் தான் இருக்கும்.

சில நிமிடங்கள் கரையவும், தன் அருகே ஒரு ஆள் இருப்பதையும் தன்னிடம் பேசுவதற்கும் உணர்ந்தான்.
அந்த நகரத்திற்கும், தேசத்திற்கும் சம்பந்தமே இல்லாதது போன்ற ஒரு பெண் நின்றிருந்தாள். நீல வண்ணத்திலும் நீளமான அலங்காரம் செய்யப்பட்ட உடையை அணிந்திருந்த பெண், அவனைப் பார்த்து கையை நீட்டினாள். சற்றும் பரிட்சயமில்லாத ஒருத்தியாகவும் எங்கேயோ சந்தித்தது போன்றும் ஒரு கலவையான உணர்வு அவனுக்கு வந்தது. அவளது தோளில் இருந்து தொங்கும் ஒரு கூடை போன்ற பையில் கங்காருக்குட்டி போல் அவனையே உற்றுநோக்கியபடி ஒரு குழந்தை இருந்தது. அந்த சார்ஜர் அவளுடையது என்று கைநீட்டினாள்.

‘மன்னிக்கனும்’ என்று அவன் போட்டிருந்த சார்ஜரை எடுக்கச்செல்கையில், அவனைத் தடுத்தாள்.
இத்தனை காலமாய் இல்லாத ஒரு சமன்குலைவு அவனுக்குள் நிகழ்ந்துகொண்டிருந்தது. தடுமாறியபடியே அவளிடம் பேசிக்கொண்டிருந்தான். அவளும் தான் பயணிக்கின்ற விமானத்தில் பயணிக்க இருப்பதாகவும், தனியாக வந்திருப்பதாகவும் தெரிந்துகொண்டான். அம்மாநகருக்கு அவள் முதல்முறை வந்ததாகவும், அலுவல் நிமித்தம் வந்து செல்வதாகவும் சொன்னாள். சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும் கைப்பேசியினை இப்போது உயிர்ப்பிக்க வேண்டாம் என்றும் நினைத்துக்கொண்டான்.

ஒரு சில நொடிகளிலேயே அவன் கடந்து வந்த தேசங்களின் பெண்களோடு ஒப்பிட்டு அவளை ஒப்பிட்டுக் கொண்டிருந்தான். உலகின் மிகச்சிறந்த அழகிகளின் குழுவிலிருந்து வந்தவள் என்று பட்டம் சூட்டலாம், ஆனால் முகத்தில் ஒரு பாதுகாப்பின்மையும், அச்சமும், கலவரத்தை மறைத்து வைத்திருக்கும் கதிர்வீச்சை உமிழும் கண்களும், பயணத்தால் வந்திருக்கின்ற கடும்வெப்பத்தைத் தாங்காத உதடுகள் தன் ரேகைகளை ஓவியங்களின் textureஐப் போலவே அவனுக்கு உணர்த்த அவள் உக்ரேனியனாக இருக்குமோ என்றும் எண்ணங்கள் பலவிதமாக மனச்சுவற்றில் சாயம்பூசிவிட்டு அதனைச் சுரண்டிக்கொண்டிருந்தது. அவள் ஏதோ தவிப்பில் இருப்பதும், அந்நியப்பட்டு இருப்பதும் உறுதியாக புலனாகியது. அவளது சார்ஜரை தொடாமல் இருந்திருந்தாலும், அவனிடம் இன்று பேசியிருப்பாள் என்று நம்ப ஆரம்பித்தான். பொதுவாக அவன் இப்படி நம்ப ஆரம்பித்தால், அவற்றை முதலீட்டாளர்களுக்கு பரிந்துரையாக்குவதை மட்டுமே செய்து வந்தான்.. நீண்ட காலம் கழித்து அவனது தொழிலை முற்றிலுமாக மறந்திருந்த விசேஷ நிமிடங்கள் என்று அவன் தன் அனுபவத்தை பின்னாட்களில் கூறினாலும், யாரும் நம்பப்போவதில்லை..

‘மேலும் ஒரு உதவி’ என்று அவள் கேட்க ஆரம்பிக்கும் முன்னரே, அதற்கு தயாராக இருந்தான். ஆனால் அவள் கேட்டிருந்த உதவி அவன் முற்றிலுமே எதிர்பாராதது, அவன் இத்தனை நாட்களாய் எதற்கு தன்னை ஆட்படுத்தக்கூடாது என்று சொன்னானோ அதுவே அவனது மடியில்.

‘ஒதுங்கிடம் வரை செல்லும் மட்டும் மான்யாவை பார்த்துக்கொள்ள முடியுமா’ என்று அவள் கேட்கையில் தயங்கியபடியே உட்கார்ந்தான்.

‘கொஞ்சம் எழுந்தால் உங்கள் தோள்களில்’ என்று மாட்டிவிட அருகில் வந்தாள்.

கைப்பையில் இருந்த சானடைஸரைக் கொண்டு கைகளை துடைத்துவிட்டு. கைகளை நீட்டி வாங்கி மடியில் வைத்துக் கொண்டான். அக்குழந்தையை வாங்கும் போது அவளது எட்டு விரல்களை மட்டுமே அழுத்தமாகத் தொட முடிந்தது. அவளது நம்பிக்கையை அந்த ஸ்பரிசம் கெடுத்துவிட்டிருக்காது என்று நம்பினான். அவன் மான்யாவைத் தூக்கும்போது ஒரு மலர்க்கூடையைத் தூக்குவது போல் தான் இருந்தது. அவனைக் கண்டு அது மிரளவில்லை.

“அண்ணே மருமகனை தூக்கிக் கூட பார்க்கமாட்டியா?” என்று தங்கை கேட்டதற்கு, இன்ஃபெக்ஷன் ஆகிடும்லா என்று சொன்னபடி செக்கில் பணம் எழுதிக்கொண்டிருந்தவன் அவன்.

சவுகரியமாக அவன் மடியில் மான்யா அமர்ந்து கொண்டிருந்தாள். அவள் என்ன வயசு, எத்தனை மாதக் குழந்தை என்று கூட அவனால் புரிந்துகொள்ள முடியாத அளவு அது அவனது முதல் அனுபவமாக இருந்தது.. அந்த சிறிய நகரத்தின் விமானதளம் இதுபோன்ற பெண்களுக்கு கேர்டேக்கர்களை உதவிக்கு வைக்காதது குறித்து புகாரளிக்க வேண்டும் என்று தோன்றியது.
இத்தனை நேரமாய் அவனை கவனிக்காமல் இருந்தவர்கள், எல்லோருமே அவனைப் பார்ப்பது போல் இருந்தது. அவள் சவுகரியமாக உட்காந்திருந்தாலும், அக்குழந்தையை கீழே போட்டுவிடுவோமோ என்கிற பயமும், மற்றவர்களும் அப்படித்தான் நினைப்பார்களோ என்றும் நினைத்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் தலை சாய்த்தான். இரண்டு பென்னி ஸ்டாக்குகள் போல் சிறிதே தெரியும் பற்கள் கொண்ட வாயிலிருந்து ஒரு முழுமையான சிரிப்பு அவனைப் பார்த்து தலையசைத்து சிரித்தது.

‘ஹோ.ஹோ.. ஸ்வீட் கேர்ள்.. கங்காருக்குட்டி’ என்று உரத்த குரலிலேயே சொன்னான். அவனது குரலின் டெசிபல்களால் திடுக்கிட்டாலும் அவனைப் பார்த்து சிரித்தபடியே இருந்தது.

‘மான்யா என்றால் என்ன’ என்று கைப்பேசி குரல்வழியாக கேட்டுவிட்டு அக்குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தான். அது அவன் நினைத்தது போலவே ரஷ்யப் பெயர், உக்ரேனியர்களும் பயன்படுத்துவார்கள் என்று ஒரு ஆண் குரல் செயலியிலிருந்து ’மான்யா என்றாள் நேசிக்கப்படுபவள்’ என பதிலளித்தது. இப்போதெல்லாம் செயலிகளில் புது வெர்ஷன் வந்தவுடன் ஏற்கனவே இருக்கும் செயலிகளில் ஒலிக்கும் பெண் குரலை ஆண் குரலாக்கிவிடுகிறார்கள். இப்படி ஒரு யோசனையைக் கொடுத்தவன் ஈடாக எவ்வளவு பெற்றிருப்பான் என்று நினைக்கும்போதே, அந்தக் குழந்தை சிணுங்க ஆரம்பித்தது. பக்கத்தில் வேறு ஒரு வயதான ஆள், அவர்களைப் பார்த்து திரும்பி நின்று கொண்டிருந்தான். என்ன வேண்டும் என்று கேட்டதற்கு ‘மான்யா என்றால் போற்றுதலுக்குரியவள், மலர்களால் பூஜிக்கத்தகுந்தவள் என்றும் சொல்லலாம்’ என்றார்.

‘நன்றி ஐயா’

‘நல்லவேளை அது ஒரு உக்ரேனியனாகவே பிறந்தது’ என்றான்.

‘எந்த நிலத்தில் எது தேவையாக இருக்கிறதோ, அதை தான் அவர்கள் பெயரிலாவது வைப்பார்கள்’ என்றார். அவனுக்கு அந்த முதியவரைப் பிடித்துப்போனது. மிக அருமையான மனிதராகவும், நல்ல படித்த மேதையாகவும் இருக்கக்கூடும் என நினைத்துக்கொண்டான்.

தன் வாழ்வில் அதிகப்படியான அந்நியர்களுடன் பேசிய நாள் என்று கடந்த பத்தாண்டுகளில் அந்நாளை அவன் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடும்.

பதினைந்து நிமிடங்களாகியும் அந்தப் பெண் வாராதது, சிறிதளவு கலவரத்தை ஊட்டியது. குழந்தை அழுதுவிடுமோ என்கிற பயம் வேறு மெதுவாக அதிகரிக்க ஆரம்பித்தது. வெளிநாட்டிலிருந்து வந்தவள், உஷ்ணம் தாங்க முடியாமல் உதடுகள் வெடித்திருந்தது ஞாபகம் வர, அவனாக அவளது வயிற்றில் பிரச்சனைகள் ஏற்பட்டால் தாமதமாக ஆகக்கூடும் என்கிற தற்காலிக நிம்மதியடைந்தான். குழந்தை அதன் உடலைத் திருப்பி அவனது வயிற்றுப்பகுதியில் கைவைத்தது. அதனை முழுமையாகத் தன் வயிற்றில் கிடத்த, அது படுத்துக்கொண்டது. எந்தவித கலவரமும் அடையாமல் கண்களை மூடிக்கொண்டது.

“உண்மையிலேயே அவளுடைய குழந்தைதானா இது?”, “பூ,மலர் என்று கூட பிரித்துவிட முடியாது, இரண்டுமே பூ தான்”
தானும் இப்போது குட்டியைச் சுமக்கும் கங்காருவாய் மாறியதாக உணர்ந்தான். அந்தக் குழந்தையும் எப்படியாகினும் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என டேபிளில் வைக்கப்படும் ஒரு காஷா கிண்ணத்தைப் போல் பொலிவாகவும் நிம்மதியாகவும் சிரித்த முகத்தோடும் கண்களை மூடியிருந்தது. சுற்றி நடக்கின்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டிருந்தபடி குழந்தையை ரசித்துக்கொண்டிருந்த அவன், திடீரென்று சுதாரித்தவனாக நேரத்தைப் பார்த்தான். விமானம் அருகே செல்லும் ஃபீடர் பேருந்திற்காக மக்கள் க்யூவில் நின்று கொண்டிருந்தார்கள். ஒரு வசதியும் இல்லாத விமானநிலையத்திற்கு சைலண்ட் ஏர்போர்ட் என்கிற பெருமை எதற்கு என்கிற கோபம். ஆனால் அதனை நீட்டிக்க நேரம் இல்லை.

சார்ஜரையும், கைப்பேசியையும் தன் கைப்பையில் போட்டுவிட்டு ஒதுங்கிடம் நோக்கி ஓடினான். அக்குழந்தை சத்தம் போடாமல் அவனையே கட்டிக்கொண்டது. ஒதுங்கிடம் அருகே சென்று ஒரு துப்புரவு பணியாளரை அழைத்து உள்ளே பார்க்கச் சொன்னான்.. ஒரு வெளிநாட்டுப் பெண், மான்யா அம்மா என்றெல்லாம் அழைக்கச் சொன்னான். வெளியே இருந்தே கத்தினான்.

அதற்குள் அவனது பெயரைச் சொல்லி அழைக்க ஆரம்பித்தார்கள். வேறு ஏதாவது ஒதுங்கிடம் இருக்கா எனக்கேட்டபோது அவர்கள் விமானநிலையத்தின் மறுமுனையை, மேல்தளத்தில் இரண்டைச் சொன்னார்கள். அவனால் அக்குழந்தையைத் தூக்கியபடி ஓட முடியாது.

முதன்முறையாக அப்போது தன் வயது குறித்தும் எண்ணம் வந்தது. தன் மகள் மீது சிறிதும் அக்கறை இல்லாதவள் என்ன வகையான பெண்ணாக இருக்கக்கூடும் என்று அச்சம் வந்தது. முதலில் அமர்ந்த இருக்கை அருகே வந்து, அக்குழந்தையை அதே இருக்கையில் அமர்த்தினான். கையிலிருந்த சிறிய வாட்டர் பாட்டிலை அவளிடம் கொடுத்துவிட்டு நகர்ந்துவிட முனைந்தான். திரும்பிப்பார்க்காமல் செல்லக் கூடியவன் தான். ஆனால், அவனால் குழந்தையைப் பார்க்காமல் திரும்ப முடியவில்லை. அது அழுதால் கூட ஒரு இறுகிய மனம் உருவாகி அவனை அங்கிருந்து நகரும் தெம்பினைக் கொடுத்திருக்கும். அவன் எத்தனை அழுகையை, கெஞ்சலை, வேண்டுகோளை, பச்சாதாபங்களைப் புறந்தள்ளிவிட்டு எஸ்கலேட்டர்களில் ஏறியவன். ஆனால் மான்யாவின் முகத்தில் ஒரு இனத்தின் ஆயிரமாண்டு அச்சத்தின் தொடர்ச்சியை, கலவரத்தை உணர முடிந்தது. அதில் தான் வருங்காலத்தில் சந்திக்க இருக்கின்ற துயரங்களின் தடங்களும் இருந்தன.
வரலாறு குறித்த அவனது ஆர்வம் தன்னை பலவீனமாக்குகிறது என்று புரிந்து கொண்டான். இந்த முறை ஒரு மலர்க்கூடையைப் போலே அவள் எளிதான எடையாக இருக்கவில்லை. அது பொன்னாலான சிற்பம் போன்றே மகிழ்ச்சி தரும் எடையாகவும் இருந்தது. இதுபோல் இதயத்துடிப்பின் மாறுபாடும் முன்பு அவனுக்கு நிகழாத ஒன்று. சிறுவயதில் மனதில் பதிந்த அம்மிக்கொத்து சப்தம், இப்போது தனக்குள்ளேயும் கைக்கடிகாரத்திலுமாய் கேட்டது, உள்ளே கேட்பது சற்று வேகமாகவும் இருந்தது. “ஒருவேளை அவள் விமானத்திற்கு போயிருந்தால்?”

This is our final call என்று சொல்லும்போது.. ‘ஹே’ என்று விமானசேவை அதிகாரிகளை நோக்கி கையசைத்தபடி மான்யாவையும் தூக்கிக்கொண்டு ஓடினான். இவ்வளவு நேரம் அருகில் தான் இருந்திருக்கிறான் என்கிற கோபத்தை கண்களால் காண்பித்த அந்த பெண்.

‘போர்டிங்பாஸ்’ என்று ஒரே அசையாக மாற்றி உச்சரித்தார். அதுதான் அவரது அதிகபட்ச கோபமாக விமானசேவை நிறுவனத்தின் விதிவரம்பிற்குள் இருந்தது.

‘ஸாரி சார். உங்களுக்கு மட்டும் தான் இருக்கு, உங்க மகளுக்கு இல்லை’

‘ஐயோ இவுங்க என் மகள் இல்லை, இவுங்க அம்மா விமானத்துல தன் குழந்தைய விட்டுட்டுப் போயிட்டாங்க’

‘ஸாரி சார். இந்த வாயேஜ்ல ஒரு பாஸ் மட்டும்தான் மீதம். அது உங்களுடையது தான்’

‘ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க, இது எவ்ளோ சின்னக் கொழந்த பாருங்க டாமிட்’

சில நொடிகள் மவுனத்திற்கு பின்னர்.

‘சார் ப்ளீஸ் புரிஞ்சுக்கங்க.. போர்டிங் பாஸ் இல்லாம யாரும் உள்ள போக முடியாது. ஃப்ளைட் கிளம்பனும்’

‘சரி உங்க உயரதிகாரிய கூப்பிடுங்க.. குழந்தையோடு ஒருமுறை ஃப்ளைட்ல போய் பார்ப்போம், அவுங்க அம்மா உள்ளே இருந்தாங்க என்றால் கொடுத்துவிடுவோம்.. இந்தக் குழந்தைய எங்கே விட்டுட்டு வர.. அவுங்க ஜஸ்ட் ரெஸ்ட்ரூம் போறேன்னு என்னிடம் கொடுத்துவிட்டுப் போனாங்க’

கோர்வையே இல்லாமல் நா பிறழ அவன் பேசிய யாவற்றையுமே கேட்டுக்கொண்டிருந்தவர்கள். ‘ஸாரி’ என்று மட்டுமே பதிலளித்தார்கள்.

‘நான்கே நான்கு வாசல்கள் உள்ள விமானநிலையம் இது, யாராவது உடன்வாருங்கள் பார்த்துவிடுவோம். இவர்கள் வேற்று நாட்டவர்கள் எங்காவது மாறி போயிருக்கலாம். நாமெல்லாம் மனுஷங்க தானே’ என்று ஆக்ரோஷமாக கத்திவிட. அக்குழந்தையும் அழ ஆரம்பித்தது. உடன் அப்பெண்மணி விமானத்திற்குள் அறிவிப்பு செய்யும்படி வாக்கிடாக்கியில் சொல்லிவிட்டு, விமானநிலைய அதிகாரிகளை வரச்சொன்னார்.

விமானநிலைய அதிகாரியிடம் ஒப்படைக்கச் சொல்வார்கள் என்று அவனும் நம்பினான். குழந்தை அழத்தொடங்கியது. அதிகாரிகளிடம் முறையிட அவனிடம் நிறையவே புகார்கள் இருந்தன. ஆனால் கெஞ்சிக்கொண்டிருந்தான். ஆனால் அவர்கள் கேட்ட குறைந்தபட்ச தகவலைக் கூட அவனால் தர இயலவில்லை, அந்தப் பெண்ணின் பெயரென்ன என்ற அடிப்படை கேள்வி அது.

‘நீங்கள் இந்த விமானத்தை தவறவிடுகிறீர்கள். இது சர்வதேச விமான நிலையம் அல்ல. அடுத்த விமானம் நாளைக்கு தான். அதுவும் இந்த சர்வீஸ் வாரம் இருமுறை தான்’ என்று கண்டிப்புடன் சொல்ல. அவன் குழந்தையை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கு தயாரானான்.

அழுது கொண்டிருக்கும் குழந்தையிடம் எப்படி மன்னிப்பு கேட்பது. பாதங்களைத் தொடுவது, நெற்றியில் முத்தமிடுவது, அந்தக் கைகளை எடுத்து முகத்தில் அறைவது, முகத்தில், நெஞ்சில் கால்களில் கைகளில் முகத்தை வைத்து மன்னிப்பிற்காக இறைஞ்சுவது. அது பற்றியிருக்கும் விரல்களுக்குத் தான் எத்தனை வலிமை.

விமான சேவை அதிகாரி அக்குழந்தையை வாங்கி, விமானநிலைய ஊழியரிடம் ஒப்படைத்தார். எமெர்ஜென்சி என்று வாக்கிடாக்கியில் பேசியபடி அக்குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றார். அலட்சியமாக அவர்கள் அக்குழந்தையைக் கையாள்வதாக அவனுக்குத் தோன்றியது. எதற்கும் விமானத்திற்குள் அவளது அன்னை ஒளிந்திருந்தால் ஒரு அறை விட்டு வெளியேற்றலாம் என்று ஒவ்வொரு இருக்கையாகத் தேடினான், அவன் கூடவே ஒருவர். ஒவ்வொருவர் முகமாகத் தேடுகையில் அவன் மீது எப்பவும் கவிழாத இருள் கவியத் தொடங்கியது.

இதுவரை சந்திக்காத தனிமையை உணர்த்துகின்ற பிரிவு அல்லது இத்தனை நாள் ஓடிக்கொண்டிருந்த வாழ்வின் விழுமியங்களை ஒட்டுமொத்தமாக உடைப்பதற்கு ஒரு சிறு கையின் வெப்பம் போதுமாக இருக்கிறது என்பதை உணர்ந்தான். அந்த உணர்வு தான் இருள் என்றால் அது இருளில்லை என்பதை உணர்வான்.

‘இது இருளில்லை கரும்பச்சை வண்ணம்’

சீட்பெல்ட் போடும்படி அருகே வந்து காதினில் சொல்லிச் சென்ற போது அவனுக்கு சட்டெனத் தோன்றியது. விமானம் நிதானத்திற்குச் செல்லும்வரை அமைதியாக இருந்தவன், பையினில் இருக்கும் ஐ பேடினைத் திறந்து, அவுட்லுக் மெசெஞ்சரில் தன் காரியதரிசிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினான். ஜூரிச்சில் அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த கேலரியிலிருக்கும் ‘உலகின் அழகிய துயரம்’ ஒரு போலியானதாக இருக்கக்கூடும் என்று மின்னஞ்சல் அனுப்பிவைத்தான். மேலும் தாய்லாந்து பயணத்தை ரத்து செய்யவும் அதில் கூறியிருந்தான்.

இன்னொரு மெயிலில் அந்த சிறு விமானநிலையம் புதுப்பிக்கப்படுதல் தொடர்பாக வெளியிட்டிருந்த டெண்டரை மிகக்குறைந்த விலையிலாவது வாங்கிப் புதிப்பித்து தர முடியுமா என்று ஒரு நெருக்கமான வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் செய்தான்.

க்வோரா செயலியில் அந்த ஓவியம் பற்றிய விவாதங்கள் நினைவுக்கு வந்தன, அவனும் கூட அதில் ஒரு காரணம் சொல்லியிருந்தான். தூங்குவதாய் கண்களை மூடி பாவனை செய்தபோது, மான்யா தொட்டுத் தடவிய தன் கன்னங்களில் தங்கம் பூசப்பட்டிருந்ததாகக் காட்சி ஓடியது. குழந்தையை ஒப்படைக்கும்போது ஓவியம் இருந்த சுவர் வெற்றாகக் காட்சியளித்தது ஏன் என்கிற குழப்பம் தீர அவன் சொந்த வீட்டிற்கு பல மாதங்களுக்குப் பிறகு திரும்பச் செல்லக்கூடும். அதுவும் ஆத்மார்த்தமாய்.

***

ஜீவ கரிகாலன் – டிரங்கு பெட்டிக் கதைகள், கண்ணம்மா இரு சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர். மின்னஞ்சல்: yaavarum1@gmail.com, yaavarumdocs@gmail.com

(நன்றி: ஓவியம் – பாஜினவ் செர்ஜெ – ஆர்ட்நவ் ரஷ்யா)

பெருந்தொற்று (மொழிபெயர்ப்பு)

0
art by Stanley Whitney

டினோ புஸ்ஸாட்டி (தமிழில் : நரேன்)

டினோ புஸ்ஸாட்டி (Dino Buzzati) – (1906-1972) : இத்தாலிய எழுத்தாளர். இவர் தன்னுடைய எழுத்துலக வாழ்க்கையில் ஒரு பத்திரிக்கையாளனாக நுழைந்து நாவல்கள், சிறுகதைகள், ஓவியம்,  நாடகங்கள், கவிதைகள் என பல்துறையில் மிகப் பிரபலமாக விளங்கியவர். இவருடைய நாவல்களும் சிறுகதைகளும் மீயதார்த்தவாதத்தையும் குறியீட்டியத்தையும் இத்தாலிய இலக்கியத்திற்கு அறிமுகப்படுத்தியது. முக்கியமாக அவரது எழுத்துகளில் மேற்படரும் அபத்தம் இவரைத் தனித்துவமான புனைவிலக்கியவாதியாக முன்னிறுத்தியது. தான் ஒரு ஓவியன் என்பதால் அவரே காமிக்ஸ் புத்தகங்களையும் உருவாக்கினார். இத்தாலிக்கு வெளியே பிரான்ஸில் மட்டுமே பிரபலமாக அறியப்பட்ட இவர் தற்போதுதான் ஆங்கில வாசக உலகம் இவரின் படைப்புகளை மெல்ல கவனிக்கத் தொடங்கியிருக்கிறது.

இவரின் சிறுகதைகள் நாம் அன்றாடம் காணும் உலகின் சிதைவை மிகவும் விசித்திரமானதொரு  உணர்வுடன் நிறுவுகிறார். மெல்லிய அங்கதமுடன் நம் வாழ்வின் நகை முரண்களை யதார்த்தமாகச் சொல்லிச் செல்பவை இவரின் கதைகள். எளிய மக்களின் வாழ்வை நோய்த்தொற்று போன்ற ஒரு பேரிடர் கைப்பற்றும்போது அரசியல் சித்தாந்தங்கள் அதன்மீது சூழ்ந்து அச்சூழலைத் தனதாக்கிக் கொள்ள முனையும் ஒரு அபத்தம் இச்சிறுகதையில் வெளிப்படுகிறது. மனிதர்களின் உயிரிலும் காக்கும் மருந்திலும் தன் வண்ணத்தைப் பூசிட ஒவ்வொரு அரசும் ஒரு நோய்க்கிருமியின் வேகத்தைவிட அதீதமாகச் செயல்படுகிறது. அப்படியான அரசாங்கங்களையும் அவற்றை அண்டிப்பிழைக்கும் அனேகர்களையும் விட எந்தக் கிருமியால் ஒரு பெருந்தொற்றை கொடுத்துவிடமுடியும் என்ற கேள்வி எழுகிறது.

                                                            பெருந்தொற்று 

                                                            – டிநோ புஸ்ஸாட்டி

ஒருநாள் காலை நேரம் மிகச் சரியாக எட்டு மணியைக் கடந்து முப்பது நிமிடங்கள் ஆகியிருந்தபோது கர்னல் என்னியோ மொலினாஸ் சி.ப்.பில்[1] உள்ள பெரிய அறையொன்றின் தலைமைப் பீடமான தனது மேஜையில் அமர்ந்திருந்தார். அவ்வமைச்சகத்தைச் சேர்ந்த மற்ற பணியாட்களைப் போல அவரும் சீருடையின்றி பொது உடையில் இருந்தார். அவர் அத்துறையின் தலைவர் என்பதால் அவரின் மேசை ஒரு உயர்ந்த பீடத்தின் மீது போடப்பட்டிருந்தது, அங்கிருந்தவாறே தன்னிடம் பணிபுரியும் குறிமுறை[2] நீக்குபவர்களின் மேஜைகளை அவர் கண்காணிக்க முடியும். சுவர்களிலெல்லாம் வரிசையாக உயர்ந்த அலமாரிகள் பொருத்தப்பட்டு அவை முழுதும் புத்தகங்களாலும் ஒலிநாடாக்களாலும் நிறைக்கப்பட்டிருந்தன: அகராதிகள், களஞ்சியங்கள், நிலப்படங்கள், கோப்புகள், செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிக்கைகளின் தொகுப்புகள், ஆராய்ச்சிகளுக்கும் குறிப்புகளெடுக்கவும் அடிப்படையாகத் தேவையான அத்தனையுமிருந்தன. இந்த மிகப்பெரிய அலுவலகம் முழுவதும் போரை எதிர்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்று, இப்பொழுதெல்லாம் மந்தகதியில்தான் இயங்குகிறது; ஆனால் அத்துறையின் ஊழியர்கள் தற்போதும் முழுவதுமாக பணியமர்த்தப்பட்டிருந்தனர். அங்கு பணிபுரிந்த ஆட்கள் அக்குறிப்பிட்ட வேலையைச் செய்வதில் நாட்டிலேயே மிகச் சிறந்தவர்கள். அமைச்சகத்தில் அவர்கள் “இருபத்தி நான்கு மேதைகள்” என்று விளையாட்டாக அறியப்படுபவர்கள்.

கர்னல் தனது மீசை மயிர் முனையை மென்மையாகத் தடவிக் கொடுத்தார், தினசரி வருகைப்  பதிவேட்டைத் திறந்தார், அதில் தன் செயலாளர் சற்று முன் எழுதியிருந்த காலைக் குறிப்புகளைப் பார்த்தபின் பெயர்ப் பட்டியலை வாசிக்கத் தலை நிமிர்த்தினார். இருபத்தி நான்கில் எட்டு மேசைகள் காலியாக இருந்தன. “ஹ்ம்ம்ம்…”, என்று தனக்கேயுரிய பாணியில் முணுமுணுத்தார். முன்வரிசையிலிருந்த ஒருவன் அவரின் வருத்தமுற்ற கண்களைக் கண்டு அவரை நோக்கிப் புன்னகைத்தான். நம்பிக்கையிழந்தவரைப் போல் தன் தலையை அசைத்தார். பொதுவாக  இனிமையானவராயினும் மற்றவர்களிடமிருந்து தன்னைச் சற்று தொலைவில் இருத்திக்கொள்ளும் வழியறிந்தவர் இந்தக் கர்னல். அந்த இளைஞனின் புன்னகை மேலும் விரிவடைந்தது, “சார், இது இப்படியே போனால் நமது இலாகா இன்னும் இரண்டு நாட்களில் மொத்தமாக காலியாகிவிடும்.” மொலினாஸ் அதைத் தலையசைத்து ஆமோதித்தார்.

இந்த நேரத்தில்தான் ஸ்பிரின்ஸெல் கட்டுக் கட்டாக குறிமுறை அவிழ்க்கப்படவேண்டிய தகவல்கள் கொண்ட கோப்புகளுடன் உள்ளே நுழைந்தான். து.இ.ம. இலாகாவின் (துருப்புகள் இயக்கம் மற்றும் இடைமறிப்பு இலாகா) செயலாளரான அவன் அநியாயத்திற்கு மெலிந்தும் பசி வெறிப் பார்வையும் கொண்டவனாகக் காணப்பட்டான். ஸ்பிரின்ஸெல் எளிய பதவியிலிருப்பவனாயினும் அதிக மரியாதை பெறுபவனாக இருந்தான். சிலர் அவன் உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்தவன் என்று சொன்னார்கள், ஆனால் அது சுத்த முட்டாள்தனமான கூற்றாகவே இருக்க முடியும். மற்றவர்கள் ஒரேயடியாக அவன் ஒரு உளவாளி என்றே அறிவித்துவிட்டனர். சுருக்கமாக, அவனை அத்தனை பேரும் அஞ்சினர். அவன் உடனிருக்கையில், மக்கள் மிகக் கவனமாகவே பேசினார்கள்.

ஸ்பிரின்ஸெல் உள்ளே நுழைவதைக் கண்டதும், ஸ்பிரின்ஸெல் ஏதோ தன்னுடைய மேலதிகாரி என்பதைப் போலவும் அவனுக்கு முன் விரைப்பாக எழுந்து நிற்கும்படியும் தன்னுடைய உள்ளுணர்வு தன்னை உந்துவதைக் கவனித்து அதைக் கட்டுப்படுத்தினார் கர்னல். அதற்குப் பதிலாக வெறும் பெரிதாகப் புன்னகைத்தார்.

ஸ்பிரின்ஸெல் மேடையின் மீதேறிச் சென்று கோப்புகளைக் கீழே வைத்துவிட்டு, மூன்றில் ஒரு பங்கு காலியாக இருந்த மேசைகளைச் சுட்டிக் காட்டி கண்ணடித்தான். “என்னா சார், களையெடுப்பு போல ஏதேனுமா…ஆஹ்?” எதனாலேயோ அவனுடைய கேலிப்பேச்சுகள் குழப்பமானதாக… புரிந்து கொள்ளமுடியாததாகவே இருந்தன.

“எனதருமை ஸ்பிரின்ஸெல், குளிர் காய்ச்சல்…. இந்த வருடம் அது உண்மையிலேயே ஒரு பெருந்தொற்று நோய்தான்.. அதிர்ஷ்டவசமாக இதுவரையிலும் கொடும் துன்பத்தைக் கொடுக்காத ஒரு வடிவத்தைத்தான் எடுத்திருக்கிறது. சிக்கல்களே இல்லை… படுக்கையில் நான்கே நாட்கள், பிறகு எல்லாம் சரியாகிவிடும்…”

“ஹ்ஹே.. நான்கு நாட்கள்! சிலசமயங்களில் நான்கு வருடங்கள், ஹா ஹா..!” என்று நீட்டிக் குழைந்தபடி சற்றும் அகமகிழ்வற்ற வறண்ட, கடுமையான வெறுப்புமிழும் தன்னுடைய சிரிப்புகளில் ஒன்றை உதிர்க்கத் தொடங்கினான் ஸ்பிரின்ன்ஸெல். 

மொலினாஸுக்குப் புரியவில்லை. “நான்கு வருடங்களா? அதெப்படி குளிர் காய்ச்சல் ஒருவருக்கு நான்கு வருடங்களுக்கு நீடிக்கும்?”

“ஹ்ஹே” – ஸ்பிரின்ஸெல் எப்போதும் தன்னுடைய பேச்சுகளைத் தொடங்குவதும் முடிப்பதும் இந்த அருவருப்பான நாசியொலியுடந்தான். “அது தற்போது எடுத்திருக்கும் வடிவம் மிதமானதுதான் என்பதை நானும் முழுமையாக ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் நான் “ஸ்பானிஷ்” வகையறாவைத்தான் விரும்புவேன், உடனிருப்பவர்களுக்கு அது ஏற்படுத்தக்  கூடிய அத்தனை அபாயங்களையும் மனதில் கொண்டேதான் இதைச் சொல்கிறேன். இந்த நோய்த்தொற்று எவரையும் அடுத்த உலகத்திற்கு அனுப்பிவைக்கக் கூடியதாக இல்லை, ஆனால் அதேயளவிற்கு எவராலும்  விரும்பத்தகாததாக இருக்கிறது”

“அது சரி, அதுதானே இயல்பு. குளிர்காய்ச்சல் ஒருபோதும் யாருக்கும் இனிமையானதாக இருப்பதில்லையே!”

“ஹ்ஹே… சார், உங்களுக்கு இதைப் பற்றி ஒன்றும் புரியவில்லை என்பது மிக அப்பட்டமாகத் தெரிகிறது… ஹ்ஹே!”

“எதைப் பற்றி? எனக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும்?”

ஸ்பிரின்ஸெல் ஏமாற்றத்தில் தலையசைத்தான். “நான் இப்படிச் சொல்வதற்கு என்னை மன்னிக்க வேண்டும் சார், சி.ப்.பின் தலைவரான ஒருவருக்கு இது கொஞ்சம் அதிகம்தான். என்னையே எடுத்துக்  கொள்ளுங்கள், யாருடைய உதவியுமின்றி அதை நானே புரிந்து கொண்டேன்.”

“எதைப் புரிந்து கொள்ள வேண்டும்?” தற்போது சற்றே தளர்வடைந்து கலக்கமுற்ற குரலில் கர்னல் கேட்டார்.

“ஹ்ஹே, ஹ்ஹே-உங்கள் மீது நம்பிக்கை வைத்துச் சொல்லலாம் என்றுதான் நினைக்கிறேன். நீங்கள் ஒரு பொறுப்பான மனிதர், கூச்ச சுபாவமுடையவர்; அப்படிப்பட்டவராக இல்லாதிருந்தால் உங்களால் இந்தப் பதவியைப் பெற்றிருக்கவே முடியாது.“ – கர்னலின் பதற்றத்தை ரசிப்பதற்காக ஒரு நீண்ட இடைவெளிவிட்டு பின்பு மர்மமான தொனியில், சன்னமான குரலில் சொன்னான் – “ஆனால் சார்.., நீங்கள் கவனிக்கவில்லையா.. இந்த குளிர் காய்ச்சல் தன்னுடைய இரையை தற்போக்காகத் தேர்வு செய்வதில்லை என்பதைக் கவனிக்கவில்லையா.. ஹ்ஹே?”

“எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை, எனதருமை ஸ்பிரின்ஸெல். எனக்கு உண்மையிலேயே…..”

“ஹ்ஹே.. அப்படியென்றால் நான் உங்களுக்கு ஒவ்வொரு வார்த்தையாக புட்டு புட்டு வைக்க வேண்டும். இந்த நுண்ணுயிரிகள் அல்லது நோய்க் கிருமிகள் அல்லது அது என்ன எழவோ… அவற்றுக்கு ஒரு சிறப்பான தனித்தன்மை இருக்கிறது. அவற்றால் ஒருவனின் இதயத்திற்குள் புகுந்து அவனைப் புரிந்து கொள்ளமுடியும் என்பதைப் போல ஆட்களைப் பிரத்தியேகமாகத் தேர்வு செய்கிறது…. அவைகளை ஏமாற்றுவதற்கு வழியே கிடையாது, ஹே..!”

மொலினாஸ் கலவரத்துடன் அவனைப் பார்த்தார். “இங்கே பார், என் அன்பு ஸ்பிரின்ஸெல், உனக்குக்  கிண்டல் செய்து விளையாடவேண்டும் என்பது போன்ற எண்ணம் இருக்கலாம்…. ஆனால் நீ இப்படியே புதிர் போட்டபடி பேசிக் கொண்டே போனால் என்னால் புரிந்து கொள்ள முடியும் என்று நீ எப்படி எதிர்பார்க்கலாம்? ஒருவேளை இன்று என் சிந்தனையின் வேகம் சற்று குறைந்துபோயிருக்கலாம். நான் தலைவலியோடுதான் இன்று காலை எழுந்தேன். எனக்கு எதுவும்…”

“ஹ்ஹே.. உங்களுக்கு ஒன்றுமில்லை இல்லை சார், உங்களுக்கில்லை! உங்களுக்குக் குளிர் காய்ச்சல் தொற்று ஏற்படாது! ஒழுக்கத்தின் முழு மனித உருவமே நீங்கள்தானே, ஹ்ஹே..!”

“இதில் ஒழுக்கம் எங்கிருந்து வருகிறது?”

“ஹ்ஹே.. நான் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும் சார். இன்று நீங்கள் சற்று மந்தமாகத்தான் இருக்கிறீர்கள்..”. அவன் தன் குரலை மேலும் தாழ்த்திச் சொன்னான், “சார்.., உண்மை என்னவென்றால், வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால்: உங்களுக்குத் தொற்றுக் காய்ச்சல்   வந்தால், நீங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர் என்று அர்த்தம்.”

“அரசாங்கத்திற்கு எதிராகவா?”

“ஹ்ஹே.. நம்புவதற்கு எனக்கும் கூட கடினமாகத்தான் இருந்தது… ஆனால் கடைசியாக நானும் ஏற்றுக்கொண்டேன். என்னை நம்புங்கள், நம்மை வழிநடத்தும் தலைவரின் பெருந்திறமையைப் பற்றி நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுமேயில்லை… நாட்டின் நாடித்துடிப்பை உணர்ந்துகொள்வதற்கு என்னவொரு சிறப்பான யோசனை… அரசு காய்ச்சல்! இதுவொரு அற்புதமான விஷயம் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? நாடு முழுவதும் ஊடுருவியிருக்கும் தேசத் துரோகிகள், அவநம்பிக்கையாளர்கள், அரசின் மீது சந்தேகம் கொள்பவர்கள், எதிரிகள் இவர்களை மட்டும் தேடிப் பிடித்துத் தாக்கும் காய்ச்சல்… அதே நேரத்தில் அர்ப்பணிப்புள்ள குடிமகன்கள், தேசபக்தர்கள், மனசாட்சிப்படி வேலை செய்யும் தொழிலாளர்கள் இவர்களையெல்லாம் தொடவே தொடாது!”

கர்னல் தனது ஆட்சேபக் குரலை இப்போது எழுப்பினார். “ஆனால் எனதன்பு ஸ்பிரின்ஸெல், இப்படி ஒரு விஷயம் எப்படிச் சாத்தியப்படும்? இன்றைக்கு இங்கே இல்லாதவர்களெல்லாம் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் என்கிறாயா? “

“ஹ்ஹே.. உங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லையென்றால் மிகக் கவனமாகச் சிந்தியுங்கள், ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியாகச் சிந்தித்துப் பாருங்கள்… இதெல்லாம் எவ்வளவு சரியாகப் பொருந்திப் போகிறது என்பது உங்களுக்குப் புரியவரும்… உதாரணத்திற்கு, அதோ அந்த முதல் மேசை, யாருடையது அது?”

“லெஃப்டினெண்ட் ரெக்கார்டினியுடையது”

“ஹ்ஹே, ரெக்கார்டினி நம் தலைவரின் ஆட்சிக்கு எதிரானவர் அல்ல என்று சத்தியம் செய்ய நீங்கள் தயாரா? கொஞ்சம் பின்னோக்கி யோசியுங்கள்… ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் அவர் தன்னை மீறி உங்களிடம் உண்மையாக வெளிப்பட்டிருப்பார் என்று நான் உறுதியாகச் சொல்வேன். உங்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தவர்தானே.. ஹ்ஹே?”

“அட ஆண்டவா, ரெக்கார்டினி ஆட்சியின் மீது பெரும் ஆர்வத்தைக் காட்டியவர் இல்லைதான், ஆனால் அதற்காக அவர் மீது குற்றம் சுமத்த முடியாது இல்லையா?”

“ஹ்ஹே.. ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள், அரசுக் காய்ச்சல் ஒருபோதும் தவறு செய்யாது… அதோ அங்கிருக்கும் காலியான மேசை, அது யாருடையது?”

“அது பேராசிரியர் கியூரிகோவினுடையது, மூன்றடுக்கு சங்கேத மொழியில் வல்லவர் அவர்…. இந்த இலாகாவிலேயே மிகவும் திறமையான மூளை.”

“ஹ்ஹே, பார்த்தீர்களா மறுபடியும்! நான் சொல்வது சரியென்றால், அவர் ஏற்கனவே பல அதிகாரிகளிடம் உரசிக் கொண்டவர்… அவர் சென்ற வருடம் கிட்டத்தட்ட வெளியேற்றப்பட இருந்தார் இல்லையா?”

“நீ சொல்வது சரிதான்,” ஒப்புக்கொண்ட கர்னல் சற்றே கவலையுற்றவராகச் சொன்னார், “ஆனால்.. ஆனால் இதில் சிலருக்கு வேறு காரணங்களுக்காகவும் உடல் நலமில்லாமல் போயிருக்கலாம்தானே?… இது மிக அபாயகரமான முறையாக இருக்கிறதே… ஒருவரை மிகச் சுலபமாகத் தவறானவராகக் கருதிவிடக் கூடும்”.

“ஹ்ஹே, அதைப் பற்றி பயப்படவேண்டாம் சார், உளவுத் துறை அதைக் கவனித்துக் கொள்ளும்… வருகைப் பதிவேட்டைப் பாருங்கள்… இன்று வராதவர்களின் பெயர்களுக்கு எதிராகச் சிவப்புக் குறி போடப்பட்டிருந்தால் அவர்களுக்கெல்லாம் இக்காய்ச்சல் என்று அர்த்தம்.. எவ்வளவு நேர்த்தி!!”

கர்னல் தன் நெற்றியின் மீது கை வைத்துப் பார்த்தார். தனக்கும் உடல் நலமில்லாமல் போனால் என்ன ஆகும் என்று யோசித்தார். துரதிர்ஷ்டவசமாக நானும் சில சமயங்களில் தலைவரைச் சபித்திருக்கிறேன். தன் எண்ணங்களை வலுக்கட்டாயமாக ஒருவர் எப்படி தடுத்து நிறுத்துவது?

“ஹ்ஹே.. நீங்கள் தலைவலி என்று சொன்னீர்கள் இல்லையா? நீங்கள் இன்று வெளிறிப்போய்தான் காணப்படுகிறீர்கள் சார், ஹ்ஹே..! ஸ்ப்ரின்ஸெல் வில்லத்தனமான சிரிப்பைச் சிறிதாக உதிர்த்தான்.

“இல்லை.. இல்லை, இப்போது நான் நன்றாகவே இருக்கிறேன்,” தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னார் மொலினாஸ். “நல்லவேளை, நான் மிக நலமாகவே உணர்கிறேன்.”

“ஹ்ஹே… அப்படியென்றால் நல்லது…. பிறகு பார்ப்போம் சார், ஹ்ஹே?” தனக்குத்தானே கொக்கரித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிப் போனான்.

இது என்ன மாதிரியான விளையாட்டு? ஸ்பிரின்ஸெல் என்னைக் கேலி செய்கிறானா? அல்லது மக்களின் மனசாட்சியைப் பரிசோதித்துப் பார்ப்பதற்காக உண்மையிலேயே அரசாங்கம் இப்படியான ஒரு கொடூரச் செயலை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறதா? இன்று வராத தன் கீழ்நிலை ஊழியர்கள் எட்டு பேரையும் கருத்தில் கொண்டார். அவர்களைப் பற்றி அவர் யோசிக்க யோசிக்க அரசு காய்ச்சல் – அப்படி ஒன்று இருக்குமானால் – தன்னுடைய இரையை மிகச் சரியாகத்  தேர்ந்தெடுத்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்பவராக அவர் மாறினார். ஒன்றில்லாவிட்டாலும் மற்றொரு காரணத்திற்காக இந்த எட்டு பேரும் உண்மையான தேசபக்தி உடையவர்கள்தானா என்று சந்தேகங்கொள்ளத்தக்கவர்கள்தான். எட்டு பேரும் மிகவும் புத்திசாலிகள், நிச்சயமாக பெரும் புத்திசாலிகள், ஆனால் அரசியல் நம்பிக்கையைப் பொறுத்தவரையில் அது எதிர்மறையான அம்சமாகக் கருதப்படுகிறது! ஆனால் இப்போது அவர் தன்னையே கேட்டுக் கொண்டார், “நிச்சயமாக இந்த இழிவான கிருமி தவறுகள் இழைக்கக்கூடும், ஒன்றுமறியாத அப்பாவிகளையும் தாக்கக்கூடும் தானே? என்னையும் தாக்குமா? நிச்சயமாக எல்லோருமே எப்போதோ ஒருமுறையாவது தலைவருடன் ஒத்துப் போகாமலோ அல்லது எதிர்ப்பாகவோ இருந்திருக்கக்கூடும் அல்லவா? நான் நோய்வாய்ப்பட்டால் என்னை என்ன செய்வார்கள் அவர்கள்? பதவி விலக்குவார்களா? நீதிமன்றக் கூண்டில் நிறுத்துவார்களா? என் உடல் நிலை சரியில்லாமல் போவதை உணரத் தொடங்கினாலும் நான் விட்டுக் கொடுக்கக்கூடாது“.

அவர் உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரது தலைவலி மிகவும் மோசமடைந்தது. அவரது காதுகளில் இரைச்சலொலி பெருகியது. அரவணைப்பிற்காகவும் ஓய்விற்காகவுமான வேட்கை கட்டுக்கடங்காமல் வளர்ந்தது. ஸ்பிரின்ஸெல் கொண்டு வந்த கோப்புகளை பெரும் பிரயத்தனத்தோடுதான் அவரால் திறக்க முடிந்தது. அதிலிருந்த செய்திகளைப் படித்துப் பகுத்து வைத்தார். ஆனால் அவை அவர் கண்களுக்கு முன்னால் உருக்குலைந்து மிதக்கத் தொடங்கின. புரிந்து கொள்ளமுடியாத புள்ளி விவரங்கள் கூடிய ஒரு தாளைக் குனிந்து உற்று நோக்கி அதை ஆய்வதைப் போல பாவனை செய்து, நாடித் துடிப்பை அழுத்தி கைக்கடிகாரத்தின் துணை கொண்டு எண்ணத் தொடங்கினார்: தொண்ணூற்றி எட்டு. உடல் வெப்பம் இருக்குமோ? ஒருவேளை வெறும் பயம்தானா?

அவர் தன் வீட்டை அடைந்ததும் வேகமாக வெப்பமானியை எடுக்க ஓடினார். கால் மணி நேரத்திற்கும் மேலாக அதை தன் வாயில் வைத்திருந்தார். இறுதியாக வெளியில் எடுத்துப் பார்க்க போதுமான தைரியத்தைச் சேகரித்து பின் பார்த்ததும் மூச்சற்றுப் போனார்: நூற்றி இரண்டு.

மலேரியா மருந்தை நன்கு அளந்து தேவையானளவு உட்கொண்டார். இரைச்சலொலியில் காதுகள் அதிர ஒவ்வொரு அசைவிலும் தலைவலி கூடிக்கொண்டே போக, அம்மதியம் அவர் தன் அலுவலகத்திற்குத் திரும்பச் சென்றார். ஆச்சரியம்: ஸ்பிர்ன்ஸெல் அவருக்காக அவரது மேசையருகில் காத்திருந்தான், தன்னுடைய பழிக்கும் பார்வையை அவர் மேல் நிலை குத்தியிருந்தான்: “ஹ்ஹே சார், நான் இப்படிச் சொல்வதற்கு என்னை மன்னிக்க வேண்டும், ஆனால் உங்கள் மதிய உணவின் போது நீங்கள் அளவிற்கு அதிகமாக மது அருந்திவிட்டீர்கள் போலிருக்கிறது… உங்கள் கண்கள் இவ்வளவு மோசமாக வெளுத்திருக்கிறதே, ஹ்ஹே!”

“இரண்டு குடுவைகள்தான், கண்டிப்பாக அதற்கு மேலே எடுத்துக்கொள்ளவில்லை,” தன் மீது வீசப்பட்ட பழியைப் புறந்தள்ளும் பாவனையில் சொன்னார் மொலினாஸ்.

“ஹ்ஹே.. அது சரி, தலைவலி எப்படியிருக்கிறது?”

“சுத்தமாக போயே போச்சு,” சற்றும் தணியாத பதட்டத்துடன் சொன்னார் மொலினாஸ். காகிதக் குவியலிடையில் எதையோ பரபரப்புடன் துழாவி தனக்கு நிறைய வேலை இருப்பதைப் போல ஒரு காட்சியை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்.

ஸ்பிரின்ஸெல் அங்கிருந்து சென்றான், ஆனால் சற்று நேரத்திலேயே திரும்ப வந்தான். இப்படி இங்கே அடிக்கடி திரும்ப வருவதற்கான காரணங்களை யோசிப்பதையே அவன் வெகுவாக மகிழ்ந்து அனுபவித்தான். தன்னுடைய புதிர்க் கேள்விகளை வரிசையாகத் தொடர்ந்து அடுக்குவான் : கர்னல் தன் கழுத்தைச் சுற்றி எதற்காகக் கம்பளித் துண்டைச் சுற்றியிருக்கிறார்? அவருக்குச் சளி பிடித்திருக்கிறதா? அல்லது அவருக்கு இருமல் இருக்கிறதா? லேசாகக் குரல் கம்மியது போல் இருக்கிறதா?

மொலினாஸ் தன் மீது விழும் தாக்குதல்களைத் தொடர்ந்து தடுத்தபடியே இருந்தார் எனினும் அவர் சோர்வடைந்து போனார். ஸ்பிரின்ஸெலின் வார்த்தைகள் அவரது தலைக்குள் மணியோசையைப் போல எதிரொலித்தபடி இருந்தன. பெரும் எடை மிகுந்த ஈயக் குண்டு ஒன்று அவரின் பிடரியில் கட்டி  தொங்கவிடப்பட்டது போலிருந்தது அவருக்கு. நடுக்கம் ஒரு அலையென அவரைத் தாக்கியது.   நெஞ்சம் கூர்மையாகப் பற்றியெரிவது போன்றதொரு உணர்வு. நிச்சயமாக இது முழுமையான காய்ச்சல்தான். அதை யாரிடமும் குறிப்பிட்டுச் சொல்லவும் முடியவில்லை, நிலைமையை அது மேலும் மோசமாக்கிவிடும். அதுவும் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதைத் தெளிவாகவே கண்டுபிடித்துவிட்ட அந்த உளவாளி ஈனன் ஸ்பிரின்ஸெல் அவர் இறுதியாக நிலைகுலைந்து சரிவது வரை கூட காத்திருக்கும் பொறுமையிழந்து கொண்டிருந்தான்.

இல்லை, அவர் தன்னை விட்டுக்கொடுக்கக் கூடாது. அதற்கடுத்த நாள், தன் உடலின் வெப்பம் நூற்றி மூன்றை நெருங்கியிருந்த போதிலும், தன் தலை உருக்கிய ஈய உருண்டை போலக் கனப்பதாகத் தோன்றினாலும், தன்னுடைய அலுவலக மேஜையில் வந்து அமர்ந்திருந்தார் கர்னல். “என்ன ஆச்சு சார்,  உங்கள் முகம் இப்படி செக்கச் சிவந்து இருக்கிறதே, ஹ்ஹே?”

“குளிரினால் இருக்கலாம்,” தளர்ந்துவிடக்கூடாது என்ற உறுதியுடன் பதிலளித்தார் கர்னல்.

“ஹ்ஹே, சார், நீங்கள் நடுங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். எதனால் உங்களுக்கு இப்படியொரு நடுக்கம் ஏற்படுகிறது?”

“நடுக்கமா? சுத்த பேத்தல்.”

“ஹ்ஹே சார், உங்களுக்கு உடம்புக்குச் சரியில்லையென்றால் எனக்கு உண்மையிலேயே வருத்தமாகத்தான் இருக்கும்.”

“அபத்தம்.. அபத்தம்..  தொண்டையில் வெறும் லேசான கரகரப்புதான்…” நூற்றிரெண்டு புள்ளி ஆறு, நூற்றிரெண்டு புள்ளி எட்டு. கர்னல் ஒரு ரோபோவின் ஒழுங்கைப் போல வழக்கமான நேரத்திற்குத் தொடர்ந்து அலுவலகத்திற்கு வந்தார், வேலைகளை அவருக்குக் கீழ் பணிபுரியும் ஆட்களுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டு தன்னுடைய மேஜையில் அசைவின்றி அமர்ந்து கொள்வார், வறட்டு இருமல்களால் வெடித்துத் துன்புறுவார்.

“ஹ்ஹே, சார், உங்களுக்குச் சுவாச நோய் வந்துவிட்டது போல் இருக்கிறதே, ஹ்ஹே?”

“இல்லையில்லை.., வெறும் தொண்டைப் பிரச்சினைதான். நான் முற்றிலும் நன்றாகவே இருக்கிறேன், உறுதியாகச் சொல்கிறேன்.”

நான்காவது நாள் அவர் கிட்டத்தட்ட வீழ்த்தப்பட்டார். “வாங்களேன் நாம் வெளியில் போய் ஒரு காஃபி சாப்பிட்டு வருவோம்,” தூண்டில் போட்டான் ஸ்ப்ரின்ஸெல். அவரை ஏதோ சோதனைக்குள்ளாக்கத்தான் இதைச் செய்கிறான் என்பது வெளிப்படை! வெளியே கடுமையான குளிர், கதகதப்பான அலுவலகத்திற்குள்ளேயே அவருடைய பற்கள் தந்தியடித்துக் கொண்டிருந்தன.

“அழைப்பிற்கு நன்றி. ஆனால் வேண்டாம். இன்று எனக்கு நிறைய வேலை இருக்கிறது.”

“ஹே.. அதிக நேரம் ஆகாது: இரண்டே நிமிடங்கள்தான்.”

“இல்லை வேண்டாம், என் அன்புத் தோழனே…”.

“ ஒருவேளை உங்களுக்கு உடம்பு முடியாமல் இருக்கிறதோ, ஹ்ஹே..?”

“இல்லை.. இல்லை. நான் நன்றாக இருக்கிறேன்.”

“ஹ்ஹே.. என்னை மன்னிக்கனும் சார். நீங்கள் ஏதோ வலியில் இருப்பதைப் போலக் காணப்பட்டீர்கள் அதனால்தான்….”

ஐந்தாவது நாள் அவரால் எழுந்து நிற்பதே சிரமமாகிப் போனது. காய்ச்சல் வந்த அவரது வேலையாட்களில் ஒருவர் கூட (இப்போது கணக்கு மொத்தம் பதினாறாகியிருந்தது) திரும்ப வரவேயில்லை. எங்கே இருக்கிறார்கள் அவர்கள்? என்ன ஆனது என்று தெரிந்து கொள்ள அவர்கள் வீடுகளுக்கு தொலைபேசியில் அழைத்தால், உறவினர்கள்தான் எடுக்கிறார்கள். எடுத்து, “அவர் இங்கு இல்லை” என்று மட்டும் பதிலளிக்கிறார்கள், மேலதிக விளக்கம் எதுவும் கொடுக்காமல். சிறையிலிருக்கிறார்களா? எங்காவது தலைமறைவாகியிருக்கிறார்களா? நாடு கடத்தப்பட்டார்களா? தனக்கு நிமோனியாதான் என்பதில் மொலினாஸ் உறுதியாக இருந்தார், ஆனால் மருத்துவரிடம் செல்வதற்கு அவருக்குத் தைரியம் இல்லை. நிச்சயமாக அவர் படுக்கையில் அனுமதிக்கும்படி அறிவுறுத்துவார் பின்னர் அமைச்சரவைக்கு  அவரே தெரிவித்துவிடவும் வாய்ப்பிருக்கிறது.

ஆறாவது நாள். இருபத்தி நான்கு மேஜைகள் அத்தனையும் காலி: அவற்றை ஆக்கிரமித்திருந்தவர்கள் அத்தனை பேருக்கும் காய்ச்சல். ஸ்பிரின்ஸெல் முன்னெப்போதையும்விட அதிகம் பழித்துச் சுட்டுவதைப் போல வாய் பொத்தி சிரித்தான்: “ஹ்ஹே, ஹே, அறிவுஜீவிகளின் மீது நம் தலைவர் அவநம்பிக்கை கொண்டிருப்பது அவ்வளவு தவறு என்று இனி சொல்லவிட முடியாது அல்லவா! இந்த புகழ் பெற்ற சி.ப்.பில் இனி மீதமிருப்பது என்ன? வெறும் தகவல் பட்டுவாடா செய்யும் ஆண்கள், சுமை தூக்கிகள், கிளார்க்குகள்… எளிய ஆத்மாக்கள். அவர்கள்தான் முழு மனதுடன் விசுவாசமாக இருப்பவர்கள்… ஆனால் மேதைகள் அத்தனை பேரும் அடித்து வீழ்த்தப்பட்டுவிட்டார்கள். மேதைகள், அரசை வெறுப்பவர்கள்!… ஹ்ஹே ஹ்ஹே, சார், நீங்கள் மட்டும்தான் ஒரே விதிவிலக்கு, இன்னமும் அசராமல் தனித்து நிற்கிறீர்கள்!” ஸ்பிரின்ஸெல் கண் சிமிட்டினான், ‘நீங்கள் அதே கூட்டத்தைச் சேர்ந்த ஆள்தான், நீங்களும் விரைவில் போய் விடுவீர்கள்!’ என்பதை மறைமுகமாகச் சுட்டுவதைப் போல.

எட்டாவது நாள். எரியும் நிலக்கரிக் குவியலைப் போன்ற நெஞ்சோடும் நூற்றி நான்கை நெருங்கிவிட்ட உடற் சூட்டோடும், கர்னல் தன்னுடைய அலுவலகத்திற்குள் வழக்கமான நேரத்தில் நுழைந்தார். பேயைப் போன்று காட்சியளித்தார். இன்னும் சற்று நேரத்தில் ஸ்பிரின்ஸெல் வந்துவிடுவான் என்றும் அவன் கணைகளை தடுத்தாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய உடனே தனக்குள்ளே  ஆழத்திலிருந்து சற்றே இனிக்கும் ஒரு அருவருப்பு மேலெழுந்தது… கை அலம்பும் வட்டிலில் நிறைந்து மேலெழும் நீரைப் போல மேலே மேலேவென அது எழுந்து வந்தது.

ஆனால் இந்தக் காலையில் ஸ்பிரின்ஸெல் நேரந்தவறிவிட்டான். ஒருவேளை அவன் எனக்குக் காய்ச்சல் வந்துவிட்டது என்று தெரிந்து கொண்டிருக்கலாம். ஒருவேளை அவன் ஏற்கனவே இதைப்பற்றிய அறிக்கையைக் கொடுத்துவிட்டிருக்கலாம். எனக்கு பெரும் அவமானம் நேர்ந்துவிட்டது, எல்லாம் பாழாகிவிட்டது. அதனால்தான் அவன் இன்று வரவில்லை.

அதன்பிறகு சற்று நேரத்தில், அமைதியான வெற்று அறைகளைக் கடந்து காலடிச் சத்தம் தன்னை நோக்கி நெருங்கி வருவதைக் கேட்டார். ஸ்பிரின்ஸெல் அல்ல ஆனால் அவன் அடிமைகளில் ஒருவன், தகவல்கள் அடங்கிய கோப்புடன் வந்தான். “ஸ்பிரின்ஸெல் எங்கே?,” கேட்டார் கர்னல்.

அம்மனிதன் உடலசைவிலேயே தன் விரக்தியை வெளிப்படுத்தினான்: “அவர் இன்று வரவில்லை. அவர் வரப்போவதில்லை. அவர் படுக்கையில் இருக்கிறார்.”

“எதற்காக?”

“அவரின் உடல் வெப்பம் கட்டுக்கடங்காமல் எகிறிக்கொண்டிருக்கிறது.”

“யாருக்கு? ஸ்ப்ரின்ஸெலுக்கா?”

“அவருக்குக் காய்ச்சலும் கூட… மேல்மட்டத்தில் இஃதொரு முக்கியச் சம்பவமாகவும் பேசப்படுகிறது.”

“காய்ச்சலா? ஸ்பிரின்ஸெலுக்கா? என்னிடம் விளையாடாதே..”

“ஏன்? இதிலென்ன ஆச்சரியம்? அவர் நேற்றிலிருந்தே கொஞ்சம் நலமில்லாமல்தான் இருந்தார்.”

கர்னல் தன் நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்தார். பெரும் நம்பிக்கையும் வாழ்க்கையின் பூரிப்பும் அவருள் தோன்றியது. அவர் பாதுகாப்பாகத்தான் இருந்திருக்கிறார், மிகப் பாதுகாப்பாக. அவர் வென்றுவிட்டார்! அந்த பரிதாபத்திற்குரிய உளவாளிதான் வீழ்ந்தான், அவர் அல்ல! மொலினாஸ் தற்போதே நலமாகிவிட்டதைப் போல உணர்ந்தார், நோய்க்கூறு எதுவுமில்லை, நெஞ்சில் பற்றி எரிந்த நெருப்பு தற்போதில்லை, உடல் சூடும் இல்லை. மோசமான கட்டத்தை கடந்தாகிவிட்டது.

ஆழமாக மூச்சை இழுத்து விட்டார். இத்தனை வருடங்களில் முதன்முறையாகக் கண்களை உயர்த்தி ஜன்னலை நோக்கினார். உறைந்த மேற்கூரைகளுக்கு அப்பால், தெள்ளத்தெளிவான நீல வானத்தின் அடியில், தூரத்துச் சிகரங்கள் பனி போர்த்திய வெண்மையை மினுமினுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். வெள்ளி முகில்கள் மெல்ல ஊர்ந்தபடி பூமியின் துயரங்களையெல்லாம் கடந்து மேலே மகிழ்வுடன் அசைந்தாடி மிதப்பதைப் போலத் தோன்றியது. அவர் அவற்றைப் பார்த்தார்: எவ்வளவு காலமாக அவற்றின் இருப்பை அவர் பொருட்படுத்தாமல் இருந்திருக்கிறார்? மனிதர்களாகிய நம்மிடமிருந்து அவை எவ்வளவு வித்தியாசமானவை, அவர் எண்ணினார். கடவுளே, எவ்வளவு பரிசுத்தம், எத்தனை அழகு!

***

[1] Cipher – சிஃபர், மறையெழுத்து அலுவலகம்.

[2] Decoder – குறிமுறை நீக்கி

தமிழில் : நரேன் – சொந்த ஊர் ராணிப்பேட்டை, பணி நிமித்தம் தற்போது வசிப்பது கோவையில். இவரது இந்த கதையை சரியாகச் சொல்வோம் எனும் சமகால புலம்பெயர் எழுத்தாளர்களின் கதைகள் அடங்கிய தொகுப்பு நல்ல கவனம் பெற்ற தொகுப்பு எனச் சொல்லலாம்.

புதுமைப்பித்தனுக்கு மனிதாபிமானம் அவசியமில்லை !

0

மணி எம் கே மணி

சமீபத்தில் நண்பர் கோகுல் பிரசாத் தமிழினிக்காக ஒரு கட்டுரை கேட்டார்.

அதற்காக தால்ஸ்தாயின் போரும் வாழ்வும் முழுமையாகப் படித்து கட்டுரை எழுதிக் கொண்டிருந்த போது ஒன்று மனதில் பட்டது. அவர் நீதிபோதனையின் ஆள் என்பது போல நிறுத்தி புனிதத்தைக் கொண்டாடுகிற இடத்திற்கெல்லாம் அவரைக் சிலர் கொண்டு வந்தார்கள். இந்த ஊர்வலம் எதற்கு என்றே பிடிபடவில்லை. இத்தனைக்கும் ஜெமோ உள்ளிட்ட பலரும் அவரைப் பற்றி இடைவிடாமல் பேசியிருந்தும் அவருக்கு எதற்கு இந்த குல்லாவைப் போடுகிறார்கள் என்கிற அதிர்ச்சி. அவர் எழுதாத வன்முறை கிடையாது. அவர் எழுதாத ஒழுங்கீனம் கிடையாது. அப்புறம் என்ன? சார், இப்ப டிரெண்டு மனிதாபிமானம் சார். டால்ஸ்டாய் எழுதினார், இல்லையா? அது ! அவர் எங்கே இவைகளை எழுதினார்?

அதாவது, மனிதர்களிடம் மனிதாபிமானத்தைக் கண்டடைடைவதில் கலை இப்போது ஈடுபட்டிருக்கிறது. குணதோஷம் உள்ளவர்களைக் கைவிடுவதிலும் தான். அப்படியாக புதிய ஒரு சாதியைக் கட்டுமானம் செய்து கண்ணீர் பெருக்கிக் கொண்டிருப்பதில், மற்றொரு பக்கம் இருக்கிற ஒரு கூட்டம் மக்களை ஒழித்துக் கட்டி விடுவதைப் பற்றின குற்றவுணர்ச்சி இப்போதைக்கு மேலேழும்புவதாக இல்லை. பதிலாக, இதன் எதிர்விளைவாக அறவுணர்வுகளைக் கைவிடுவதில் பலருக்கும் இறுமாப்பை, பெருமிதத்தை வளர்க்க வழி வெட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். கருத்து சொல்ல வந்து விடக்கூடிய அத்தனை பயல்களும் தாங்கள் ஏறி நின்று கொள்ள ஒரு மேடையைக் கண்டிபிடித்து விடுகிறார்கள். டிரெண்டில் இருக்கிற ஒரு அநீதியை தேடிக் கண்டடைந்து அதற்கு எதிரான கோஷத்தை மனப்பாட செய்யுள் போல வீசிக் கொண்டிருந்து அவன் தன்னை மனிதருள் மாணிக்கம் என்று கருதிக் கொள்ள முடிவது எப்படி சாத்தியமாகிறது என்று பார்த்தால், சாரங்களை விலக்கி விட்டு சில சூத்திரங்களை எடுத்துக் கொள்வதுதான் என்பது பிடிபடும். அதுமட்டுமல்ல, கவனித்துப் பார்த்தால் உலகு, உபதேசிகளின் வன்முறை களமாகிக் கொண்டிருக்கிறது. அவர்கள் தான் இந்த மண்ணின் அற்புதமான கலைஞர்களை எல்லாம் தலையில் கொட்டி உட்கார வைக்க திட்டம் வகுத்தவாறே இருக்கிறார்கள்.

அவ்வப்போது இளையராஜா போன்றவரைக் கூட அவர்கள் ஒழுக்கத்தின் மூத்திர சந்துக்கு வரியா வரியா என்று அழைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். புதுமைப்பித்தனைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.

நண்பனின் சடலத்துக்கு அருகே இருந்து கொண்டு அவனுடைய மனைவியை மானசீகமாக சம்போகம் செய்து முடித்து விட்டவனைப் பற்றி புதுமைப்பித்தனுக்கு என்ன திருப்தி என்பதாக யோசிப்பதில் அவரை வெறுப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். பால்வண்ணம் பிள்ளை நையாண்டி செய்யப்பட்டிருக்கிறார். சுப்பையாப் பிள்ளையின் காதல்களை எல்லாம் ஒரு கதையாக அனுபவம் பெறுவதில் நகைச்சுவை கண்டு எழுதி இருக்கிறார்கள். இப்படி எழுத ஒன்றும் தோன்றாமல் எதை எதையோ நுணுக்கிக் கொண்டு எழுதியிருந்திருக்கிறார் அவர். பத்து பேராக வட்டம் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டு கட்டு உடைத்த கோபாலையங்காரின் மனைவி யாரோ ஒரு இடைச்சிப் பெண்ணின் வாழ்வை சிறுமை செய்கிற நோக்கம் கொண்டது தானா? இதெல்லாம் யாருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கக் கூடியவை அல்ல. வாழ்வை பரிசீலனை செய்வதற்காக தான் நான் கலையை நாடுகிறேன் என்கிற எந்த மனிதனும் சுயமாக அடையத் தக்க ஒரு உண்மை தான் அது. மடமையும், சோர்வும் உண்டாக்கக்கூடிய பொறுப்பின்மை, கிளிப்பேச்சு பேசுகிறவர்களிடம் அடைக்கலம் கொள்ள செய்வதனால், தன்னை சூழ்கிற இழிவை மறுத்துக்கொள்ள கூட்டத்தின் கேள்விகளை பொறுக்கிக் கொண்டு அவர்கள் கல்லெறிகிறார்கள்.

அவர்கள் உங்களை விளக்கம் சொல்ல விட மாட்டார்கள். சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அவர்களுக்கு அவர்கள் நடக்கிற சந்து முனையில் நீதி கிடைத்து விட வேண்டும். ஒரு அலசல், ஒரு முனைப்பு, ஒரு போராட்டம் எதுவுமே இல்லாமல் உலகு இவர்கள் ஆசைப்படுகிற இடத்தில் நின்று கொண்டு ஒரு படை வீரன் போல சல்யுட் அடிக்க வேண்டும். அப்புறம் என்ன, வாயில் நுழையக் கூடிய வாழைப்பழ சைசுக்கு இவர்கள் கூவித்திரிந்து குத்தாட்டம் போடும்போது மேலும் மேலும் கூச்சல் எழுப்ப போலிகள் வந்து கூடுகின்றனர்.

இங்கே வாழ்வு அவ்வளவு சுலபம் அல்ல. அது கோடி வலைப் பின்னல்கள் கொண்டு, அடித்துப் பிடுங்கித் தின்று வயிறு வளர்ப்பதை சகஜமாக்கிக் கொண்டிருப்பது. பசித்த வயிறுகளை அவமானப்படுத்துவதில் அது எந்தக் காலத்திலேனும் பின் வாங்கியிருக்கிறதா? ஒரு போதும் தன்னில் நிறைவு கொள்ளாத கோடி மனிதர்கள் தங்களுடைய பதட்டத்தினால் தன்னையறியாமல் சமூகத்தின் மீது நிகழ்த்துகிற களியாட்டங்களினால் யாருக்கு என்ன என்பதையே முடிவு செய்ய முடியாது எனும்போது, அதை முன்னிறுத்தி எவ்வளவு முன்முடிவுகள், தீர்மானங்கள், ஒதுக்கி வைத்தல், மற்றும் தண்டனைகள்? அதைப் போலவே நிறைவேறாத கோடி கனவுகள் வக்கிரம் முறுக, எல்லாவற்றையும் கரைக்கு தள்ளுகிற அலைகளின் மனதை எங்கேனும் தொகுத்து வைத்திருப்போமா?

புபி, தான் அடைந்த உணமைகளின் களிப்பில் சன்னதம் கொண்டு ஆடுகிறார். அவருக்கு உலகு மீது ஏளனமுண்டு. அவரைக் கரித்துக் கொட்டுகிறவர்களில் இருந்து, தூக்கி வைத்துக் கொண்டாடினவர்கள் வரை வரும் எண்ணிக்கையில் அவருடைய மனம் சென்றிருக்காது. அதன் அர்த்தம் என்னவென்றால் அவர் இடைவிடாமல் செய்யக் கூடிய வேலைகள் இருந்தன. ஒன்றை முடிக்கும்போது வேறு ஒன்று அவரை அலைகழித்திருக்கும். ஒருமுறை விழி மூடித் திறப்பதற்குள் மனிதர்கள் தங்களை மிருகங்களாக மாற்றும் தருணங்களை அல்லது கடவுளாக ஒளிர்ந்து விடுவதைக் கூட பார்த்திருப்பவரின் மனம் என்ன? எழுதித் தீர்த்தவாறிருந்தார். திருமண வாழ்க்கை அது பாட்டுக்கு இருக்கட்டும், நாம் ஆனந்தமாக இருப்போம் என்று கல்யாணிகளால் சொல்ல முடியும் என்பது ஒரு அப்பட்டமான உண்மை, ஆனால் அதை சொல்லி விட்டோமே என்பதால் ஒரு கல்யாணி குளத்தில் மிதக்கிறாள். பொன்னகரத்தின் மாண்பைக் காக்காமல் அம்மாளு தனது வாடிக்கையாளனுடன் இருட்டில் மறைகிறாள், செல்லம்மாள் வீடு பேறடைகிறாள், அகல்யா மீண்டும் கல்லாகிறாள். ருக்மணிக்கு சித்த பிரமை வருகிறது.

இது எவற்றிற்குமே அந்தப் பெண்கள் பொறுப்பில்லை என்று சொல்ல வந்த உண்மையில் தான் அவருடைய கலை இருக்கிறது. பாரதியார் லட்சியக் கனவுகளில் பித்து பிடித்து நடந்தவர். அவர் உணர்ச்சிவசப்பட்ட வாழ்வைக் கொண்டு செல்ல மனிதனுக்கு தகுதியில்லை என்கிறார் புபி. ஆரம்ப கோலாகலங்களுக்கு அப்புறம் நீர்த்துப் போகிற லட்சியங்கள் அப்புறமாக வெறுமனே பொழுது போக்குகிறது என்பது நாமறியாத சம்பவமில்லை. ஏன் அய்யங்காரின் மனைவி இடைச்சி குடிக்கக் கூடாதா, கவுச்சி சாப்பிடக் கூடாதா? புருஷனையும் துணைக்கு சேர்த்துக் கொண்டு ஏ பாப்பான் என்று கூப்பிடத்தான் கூடாதா?

அவரை இருண்மை எழுதுகிறவர் என்றார்கள். தீமைகளைத் தேடி, தேடி அதன் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறார் என்றார்கள். எதுவாக இருக்கட்டும். வாழும் காலத்தில் நெருப்பை எடுத்து ஒளித்துக் கொண்டவாறு இருந்து, வெளியே நிலவின பதட்டத்தை தணித்தவாறு இருக்கிற அசட்டுத்தனத்தை அவர் கைகொண்டதில்லை. ஒரு நல்ல கலைஞன் அதை செய்ய மாட்டான். இதெல்லாம் இங்கே நிலவக் கூடியது தானே, அதை எதற்கு திரும்ப, திரும்ப சொல்லியவாறு இருக்க வேண்டும் என்று கேட்பவர் உண்டு.நண்பனின் மனைவியோ, அந்த உடலுறவோ அவருக்கு தேவையில்லை.

மனித உறவுகளில் இருக்கிற இரட்டை நிலையை பேசி, பேசி அவைகளைப் பற்றி பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. சுப்பையா பிள்ளை யார், நமது கண்ணிய உலகின் பிரஜை. அத்தனை சட்ட திட்டங்களுக்கும் தலையை ஆட்டக் கூடியவர். நல்லவன் என்கிற பெயரை எடுக்க உயிர் கரைப்பவர். ஆனால் அவருக்குள்ளே சற்று சோம்பலாக எரிந்து கொண்டிருக்கிற அந்த வெடிகுண்டு எங்கே வெடிக்குமோ, அல்லது எங்கே அணையுமோ யாருக்கு தெரியும்? வருத்தப்பட்டு பாரம் சுமந்து அலைகிற அந்த ஆத்மாவுடன் வாழத் தலைப்பட்டவரின் நிலைமை தான் என்ன? பிள்ளைகள் படிக்கிற பார்ட்ஸ் ஆப் தி பாடியில் ஆண்குறியும், பெண்குறியும் இல்லை என்பதால் அவைகளை வெட்டி எறிந்து விட முடியுமா என்பது போல தான் வாழ்க்கையில் ஒரு எழவும் இல்லை என்று முடித்துக் கொள்வது.

நல்லவை, தீயவை என்பதெல்லாம் பல பகுதிகளின் சிறு சிறு அடையாளம். அந்த பாகுபாடுகளை எல்லாம் கடக்காதவன் முறைப்படி எழுதக்கூடாது, அப்படி எழுதுவதன் மூலம் குழப்பங்கள் உண்டாக்கக் கூடாது என்று சொல்ல வேண்டும். ஆனால் வாழ்வே சடை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதில் யாருக்கு யார் எதைத்தான் சொல்ல? ஆயின் எல்லாம் கடந்து வருகிறவன் எழுதுவது அவன் மனிதம் மீது கொண்டிருக்கிற மாண்பு என்று தான் சொல்ல வேண்டும். எல்லா நெருக்கடிகளுக்கும் அப்பால் நிற்கிற மனிதனின் மனதை சென்று அடைய அவனால் முடியும். உதாரணமாக ஒன்று, வாதாவூரானை, அவனது மனதை, அவனது வேதனையை புபி எழுதியது போல யாரால் எழுதி விட முடியும் ? மேலும் ஒன்று, கடவுளை வெறும் சந்தாதாரராக்கி தனது மனித சுபாவத்தில் இருந்து நிலை தடுமாறாமல் தன் பாட்டிற்கு குடும்பம் பார்க்கிற கந்தசாமிப் பிள்ளையை யாரால் வடித்து எடுத்து விட முடியும்? பைக்கார்ஸ் கொள்ளுகிற வெறி சரியா, கும்பிட்டுப் போகிற நிழல்கள் சரியா, சாத்தனின் துக்கம் சரியா? இவைகள் மூன்றையும் அடுக்கி சொல்லி விட்டு தன் பாட்டிற்குப் போகிற கலைஞனை நம்மால் எவ்வளவு தூரம் அறிய முடிகிறது?

புதுமைப்பித்தன் சிறுகச்சிறுகப் படிக்கப்பட்டார். ஒரு நேரத்தில் பேஷனாகக் கூட இருந்தார். அவரே தன்னுடைய காரணங்களுக்கு பல கோணங்களில் விளக்கம் கொடுத்து தலையில் அடித்துக் கொண்டிருந்ததை பார்த்திருக்கிறோம். தொ மு சி யும், க நா சுவும், சுந்தர ராமசாமியும் அவரைப் பற்றின எவ்வளவோ சித்திரங்களை நிலை நாட்டியிருக்கிறார்கள். வெகுஜன வெறுமைக்கு பாட்டி கதை சொல்லிக் கொண்டிருந்த கல்கி போன்ற ஆட்களோடு சண்டைப் போட்டுக் கொண்டிருக்க வேண்டியிருந்ததில் கூட நாம் அவரை அடைய முடியும். இவைகளினால் அல்லாமல் அவருடைய ஆக்கங்களின் வழியே அவரை அடைவது உண்டல்லவா, அதுதான் அசல் தரிசனம். சொற்களை அவர் பல நேரமும் என்னவோ மாணிக்கக் கற்களைப் போல கையாண்டிருப்பார்.

நான்மாடக் கூடலில் அன்று மூவர் உறங்கவில்லை என்று துவங்குவதாகட்டும், இதுதான் ஐயா பொன்னகரம் என்று முடிப்பதாகட்டும், அதில் இருக்கிற கம்பீரம் சொல்லி முடியாது. இதெல்லாம் யாருக்கும் வந்து விடக் கூடியது தானே என்பது போலிருந்தால் முன்னால் பின்னால் அவர் சொற்களை அடுக்கியிருக்கிற தொழினுட்பத்தினால் கிடைக்கிற பரவசத்தை யாராலும் கொடுக்க முடியாது. அநேகமாக தமிழில் கவிதைகள் செய்ய வந்தவர்கள் கூட இதை அறிந்திருந்து, தாங்களும் அதை செய்து பார்த்தார்கள் என்பதற்கு உதாரணம் கிடையாது. பாரதி சொற்களுடன் பதுக்கியும், வீசியும் விளையாடிப் பார்த்தது போல, பின்னால் பிரமிள் செய்து காட்டியதைப் போல புதுமைபித்தன் தனது படைப்புகள் அத்தனைக்கும் இவ்விளையாட்டை செய்து பார்த்திருக்கிறார். சிறுகதைகள் பற்றி எல்லாம் சொல்லவே தேவையில்லை, அவருடைய கவிதையில், நாடகத்தில், விமர்சனங்களில், பகுதியே எழுதின நாவலில், திரைக்கதையில் அந்தக் கற்கள் எதிர்பாராத திருப்பங்களில் ஜொலிப்பதைப் பார்க்க முடியும்.

அவருடையப் படைப்புகளில் ஈடுபடுவது என்பதே ஒரு சாகசப் பயணம் தான் என்பதை நான் பல முறையும் பேசி, எழுதி இருந்திருக்கிறேன். அதன் அர்த்தம் நமது பயணத்தில் அவைகளின் வியப்பை சந்தித்தவாறு இருப்போம். இவ்வளவு சொன்ன புபியின் மொழி ஆளுமை என்பதே கூட அவர் தனது படைப்பின் இன்றியமையாமை உணர்ந்து, அது ஒரு துளியும் சிந்தி விடக்கூடாது என்று தன்னுடைய படைப்புகளைக் காப்பாற்றிக் கொண்ட முயற்சியே தான். பரிசோதனைகள் எல்லாமே கூட அவருடைய கதை சென்று சேர்வது எப்படியென்பதைப் பொறுத்திருக்கும்.

எனவே மனிதாபிமானம் வளர்க்க விரும்புபவர்கள் தெருக்களில் காத்திருந்து முதியோரை , கண் பார்வையற்றோரை சாலை கடக்க உதவி செய்யலாம். கறுப்பு, சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், காவி, ரோஸ் உடையணிந்து போராட்டம் பண்ணி கூச்சலிட்டு முடிக்கலாம். ஏதாவது ngo-க்களில் இணைந்து நோயாளிகளை பராமரிக்கலாம். நான் கட்டுரையை முடிக்கும் வண்ணமாக எழுத்தாளர்கள் கலையை, மற்றும் வாழ்க்கையை எழுதிப் பார்க்க முயலலாம் என்று கூறி அமைகிறேன், நன்றி.

***

மணி எம்.கே.மணி திரைத்துறையில் பணியாற்றிவரும் இவரது மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் எனும் சிறுகதைத்தொகுப்பு, வேறுசிலஆட்கள், எழும்சிறுபொறி – திரைப்படங்கள் குறித்த கட்டுரைத்தொகுப்பும் அண்மையில் மதுரவிசாரம் எனும் நாவலும் வெளியாகி நல்ல கவனம் பெற்றது. – தொடர்புக்கு – mkmani1964@gmail.com

வேல்கண்ணன் கவிதை

0

ஓவியம் : கணேஷ் பைன்

கருப்பு வெள்ளைப் புகைப்படம்

பழுப்பேறி
திட்டுத் திட்டாய் புள்ளிகள்
திரைச்சீலையில் அலங்கார வளைவு
நீள்மேசையில் காகிதப்பூ
படியவாரிய தலை
முழுக்கை சட்டை பேண்ட்
ஹெச்எம்டி கைக்கடிகாரம் தெரிய முன் கைகள் கட்டி
நின்றிருந்தார் அப்பா
கால் மேலிட்டு
சகல செளபாக்கிய நகைகளையும் அணிந்து
அமர்ந்திருந்திருந்த அம்மா
வண்ணமாயிருந்தார்

அப்பாவின் உடல் கிடத்தப்பட்ட நாளில் கண்ட வண்ணமது

***

வேல்கண்ணன் – இசைக்காத இசை குறிப்பு, பாம்புகள் மேயும் கனவு நிலம் தொகுப்புகளின் ஆசிரியர். திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் தற்போது பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார்.

வீக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தல்: தகவற்போரும் விளைவுகளும் Assange மீதான சட்ட நெருக்குவாரங்களும்

1

ரூபன் சிவராஜா

அமெரிக்காவிடம் Assange கையளிக்கப்படுவதைத் தடுக்கும் தீர்ப்பின் பின்னணியில், Assange பின்னணி குறித்தும் வீக்கிலீக்ஸ் தோற்றம் வளர்ச்சி பற்றியும், அவர் எதிர்கொண்டுள்ள சட்டச் சிக்கல்கள் தொடர்பாகவும் இக்கட்டுரை பேசுகின்றது.

இன்றைய யுகம் என்பது தகவல் யுகம். சமகாலத்தில் காணக்கூடிய எந்தவொரு பலத்தைவிடவும் பன்மடங்கு வலிமையானதும் உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும் சக்தியும் தகவல் தொழில்நுட்பத்திற்கு உண்டு. அதனை உணர்த்திய அண்மைய உலகளாவிய நிகழ்வு வீக்கிலீக்ஸ் (Wikileaks) தகவல் கசிவுகளும் அவை ஏற்படுத்திய விளைவுகளும் எனலாம். அதன் நிறுவனர் Julian Assange. அமெரிக்காவின் மோசமான போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும், இராஜதந்திரப் பிறழ்வுகளையும் அம்பலப்படுத்தியது. இன்னபிற நாடுகளின், ஊழல், மனித உரிமை மீறல்கள், சட்டத்திற்குப் புறம்பான செயல்களையும் வீக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியது.

Assange கடந்த பத்து ஆண்டுகளாக சட்ட ரீதியான வழக்கு, விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றார். படைத்துறையின் இரகசிய ஆவணங்களை வெளியிட்டமை மட்டுமல்ல அவர் மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டு. ர்யஉமiபெ மற்றும் உளவுபார்த்தல் குற்றச்சாட்டுகளை அவர் மீது முன்வைத்து, தம்மிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா கோரிவந்திருக்கின்றது. அவர் தண்டிக்கப்படுவது அல்லது அமெரிக்காவிடம் கையளிக்கப்படுவது, கருத்துரிமை சார்ந்த ஆபத்தான முன்னுதாரணமாகிவிடும். ஊடகச் சுதந்திரத்திற்குக் அச்சுறுத்தலாக அமைந்துவிடுமென்ற கருத்தே மேலோங்கியுள்ளது. குறிப்பாக மனித உரிமை, கருத்துரிமை மற்றும் உலகளாவிய ஊடகச் சமூகம் அவ்வாறு கருதுகின்றது.
தீர்ப்பு – அமெரிக்காவிடம் கையளிக்க முடியாது!

Julian Assangeஐ அமெரிக்காவிடம் கையளிக்க முடியாது என்ற தீர்ப்பு பிரித்தானிய நீதிமன்றத்தில் ஜனவரி 4ம் திகதி எட்டப்பட்டுள்ளது. பிரித்தானியக் குற்றவியல் நீதிமன்றில் மாவட்ட நீதிபதி Vanessa Baraitser தீர்ப்பினை வழங்கியுள்ளார். சர்வதேச மனித உரிமை அமைப்புகள், ஊடக அமைப்புகள் இத்தீர்ப்பினை வரவேற்றுள்ளன. இருந்தபோதும் இந்தத் தீர்ப்பு ஊடக-கருத்துச்சுதந்திரத்தினை அடிப்படையாகக் கொண்டதாக அல்லாமல், அவரின் உள மற்றும் உடல் நிலையைக் கருத்திற்கொண்ட மனிதாபிமான ரீதியிலான தீர்ப்பாகும். Julian Assange இன் உளநலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் அமெரிக்காவிடம் கையளிக்கப்படுமிடத்து அங்கு அவர் சிறையில் தற்கொலை முயற்சிக்கு தள்ளப்படக்கூடும். தற்கொலை முயற்சியைத் தடுக்கும் திராணி அமெரிக்க சிறைத்துறைக்கு உள்ளதா என்ற வலுவான சந்தேகமும் தீர்ப்பில் வெளிப்படுத்தப்பட்டதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

அவரை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது தவறு. அப்படி நிகழ்வது அடிப்படை மனிதாபிமானக் கரிசனைக்கு முரணானது என்பது ஐரோப்பிய மனித உரிமைப் பார்வையாகும். ஆனால் இந்தத்தீர்ப்பிற்கு எதிராக அமெரிக்கா மேன்முறையீடு செய்துள்ளது. எனவே கையளிப்பு ஆபத்து முற்றிலும் நீங்கிவிட்டதாகச் சொல்லமுடியாது. Assange மீதான அமெரிக்காவின் தேடுதல் வேட்டையும் அவரைச் சுற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கும் சட்டச்சிக்கல்களும் விமர்சன பூர்வ ஊடகச் செயற்பாட்டினைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது என்ற வலுவான கருத்து பரவலாக நிலவிவந்துள்ளது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா Assangeஐ தண்டிக்கின்ற எண்ணத்தைக் கைவிட்டிருந்ததாகவும், டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் அம்முடிவு மீண்டும் மாற்றப்பட்டதாகவும், யுளளயபெந தரப்பு வழக்கறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஜூலியன் அஸ்சேஞ்: அடிப்படையில் ஒரு Hacker

Assange ஒரு அவுஸ்ரேலியப் பிரஜை. அடிப்படையில் ஒரு கணினித் தொழில்நுட்பவியலாளர். அதிலும் குறிப்பாக கடினமான கணினி வலையமைப்புகளுக்குள் உட்புகுந்து தகவல்களை எடுப்பதில் நிபுணத்துவம் கொண்டவர். இதனை Hacking என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

மிக இள வயதிலிருந்தே கடினமான கணினி வலையமைப்புகளை உடைத்து உட்சென்று (தடயங்களின்றி) தகவல்கள், ஆவணங்களை கபளீகரம் செய்கின்ற திறனை வளர்த்துக்கொண்டவராக இருந்துள்ளார். 1980களின் இறுதியில் ‘International subversives எனும் குழுவினை இவர் அமைத்தார். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பல முக்கிய கணினி வலையமைப்புகளின் தகவல்கள், ஆவணக்கோப்புகள் இக்குழுவினரால் கபளீகரம் செய்யப்பட்டன. அவற்றுள் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத் தலைமையகமான பென்ரகன் (Pentagon) மற்றும் அமெரிக்க தேசிய அறிவியல் ஆய்வக (Los Alamos National Laboratory) கணினித் தொழில்நுட்ப வலையமைப்பும் அடக்கம். இத்தகைய கணினித் தகவல் Hacking குற்றத்திற்காக 1991இல் அவுஸ்ரேலியக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு, தண்டப்பணம் செலுத்தக் கோரப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார். ர்யஉமiபெ பெரிய குற்றச் செயலாகப் பார்க்கப்படாமையினால் சிறைத்தண்டனையிலிருந்து அன்றைய காலகட்டத்தில் தப்பமுடிந்தது.

‘ஆவணக் கசிவு தகவற்போரின் முக்கிய கருவி!’

Assangeஇன் அரசியல் நிலைப்பாடு என்பது வலது, இடது என்ற வரையறையை மையப்படுத்தியது அல்ல. அவருடைய நோக்கு, தனிமனிதனுக்கும் அரசுக்குமிடையிலான போராட்டம் என்பதாகக் கருதப்படுகின்றது. இரகசிய ஆவணங்களின் கசிவு என்பது தகவற்போரின் முக்கிய கருவி என்பதும், துணிச்சல் அதற்குத் தேவையான அடிப்படை என்பதும் அவருடைய துணிபு.

1997 இல் தகவல் தொழில்நுட்பத்துறை ஆய்வாளரும் எழுத்தாளருமான Suelette Dreyfus உடன் இணைந்து ‘Underground’ எனும் புத்தகத்தினை எழுதி வெளியிட்டார். Hacking-கலாச்சாரத்தின் முக்கிய விதிமுறைகள் இதன் பேசுபொருள் என அறியமுடிகிறது. கணிப்பொறிகள், அவற்றின் வலையமைப்புகளுக்குள் Hacking மூலம் நுழையும் போது, அவற்றின் உள்ளடக்கத்தைச் சிதைத்தலாகாது – அவற்றைச் செயலிழக்கச் செய்வது உட்பட – அவற்றின் தகவல்களை மாற்றக்கூடாது – Hack செய்து உள்நுழைந்ததற்கான தடயங்களை அழிப்பதைத் தவிர வேறெந்த மாற்றங்களையோ அழித்தல்களையோ செய்யக்கூடாது என்பது அப்புத்தகத்தின் முக்கிய உள்ளடக்கம் எனக் கூறப்படுகின்றது.
வீக்கிலீக்ஸ்: தோற்றம், வளர்ச்சி, விளைவு

2006இல் வீக்கிலீக்ஸ் என்ற இணையத்தளம் நிறுவப்பட்டது. அந்த இணையத்தளத்தின் தனித்துவம் என்னவெனில் வழமையான ஊடகங்களில் வெளிவராததும், புலனாய்வு ஊடகங்களிற்கூட வெளிவராத இரகசிய ஆவணங்கள் அதில் வெளியிடப்பட்டன. அந்த ஆவணங்கள், தகவல் ஆதாரங்கள் ஊடாக அம்பலப்படுத்தப்பட்ட செய்திகள் உலகளாவிய அதிர்வலைகளை ஏற்படுத்தின. அதனூடாக அமெரிக்க படைத்துறை, புலனாய்வு, இராஜதந்திர இரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டன.

ஆவணக்கசிவு சார்ந்து உலகளாவிய பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சமகால தகவற்;தொழில்நுட்பம் வீக்கிலீக்ஸ் என்றால் அது மிகையல்ல. உலக வல்லரசான அமெரிக்காவின் போர்க்குற்றங்கள், மனித உரிமைமீறல்களை அம்பலப்படுத்தி, உலகளாவிய ரீதியில் அமெரிக்காவை பெரும் நெருக்கடிகளுக்குள் தள்ளியதில் அதன் பங்கு காத்திரமானது.
2006இல் வீக்கிலீக்ஸ் தொடங்கப்பட்டாலும் 2010இலேயே அது சர்வதேசத்தின் மிக முக்கியமான கவனத்தினைப் பெற்றது. மிக முக்கியமானதொரு சிறிய காணொளித் துண்டு, 2010இல் சர்வதேச கவனத்தை வீக்கிலீக்ஸ் பக்கம் திருப்பியது. அதிலிருந்து சர்வதேச மட்டத்தில் வீக்கிலீக்ஸ் பேசுபொருளானதோடு அதன் நிறுவனரான Assangeம் பேசப்படும் நபரானார். ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தினர் உலங்குவானூர்தியில் இருந்தபடி, ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களையும், அப்பாவிப் பொதுமக்களையும் சுட்டுக் கொன்ற காட்சிகள் அந்தக் காணொளிப்பதிவில் உள்ளடங்கியிருந்தது.
அம்பலப்படுத்தல்: அமெரிக்க போர்க்குற்றங்கள், கைதிகள் சித்திரவதை

2006 – 2009 காலப்பகுதியில் அரசுகள், பெருவணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் குற்றவியல் செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது. 2007 இல் பிரித்தானியாவின் The Guardian முதன்முறையாக வீக்கிலீக்சுடன் இணைந்து செயற்பட்டது. கென்ய நாட்டின் முந்நாள் ஜனாதிபதி Daniel Arab Moi இற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு ஆவணங்களைப் பிரித்தானியாவின் கார்டியன் பத்திரிகையும் வீக்கிலீக்சும் இணைந்து வெளியிட்டன. அந்த அம்பலப்படுத்தல்கள் கென்ய அரசாங்கத்தின் இரகசிய ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. 2010இல் ஆப்கானிஸ்தான் போர் சார்ந்த அமெரிக்க ஆவணங்களும் (Afghanistan war logs), ஈராக் போர் சார்ந்த ஆவணங்களும் (Iraq war logs) வெளியிடப்பட்டன. அத்தோடு உலகெங்கிலுமுளள அமெரிக்கத் தூதரகங்களின் 250 000 வரையான அறிக்கைகள், குறிப்புகளும் அம்பலப்படுத்தப்பட்டன.

2011இல் குவான்டனாமோ சட்டவிரோத தடுப்பு முகாமில் போர்க்கைதிகள் மீதான அமெரிக்க இராணுவத்தின் மோசமான சித்திரவதைகள் காணொளிகளுடன் அம்பலப்படுத்தப்பட்டன. (குவான்டனாமோ கியூபாவின் தென்கிழக்கு கரையில் அமைந்துள்ள விரிகுடாப் பிரதேசம்) 2002 இல் George W. Bush காலத்தில் அங்கு அமெரிக்கக் கடைற்படைத் தளமும் தடுப்பு முகாமும் அமைக்கப்பட்டன. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த போர்க்கைதிகள் அங்கு கொண்டுசெல்லப்பட்டு மிக மோசமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் அல்-கைடா உறுப்பினர்கள், செப்ரெம்பர் 11 தாக்குதல் சந்தேக நபர்களும் அடங்கியிருந்ததாக கூறப்பட்டது. போர்க் கைதிகளின் சட்ட உரிமைகள் தொடர்பான ஜெனீவா உடன்படிக்கையை மீறிய வகையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட மோசமான சித்திரவதைகள் அம்பலப்பட்டன. இதனால் உலகளாவிய எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் அமெரிக்கா எதிர்கொண்டது. சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பு, சர்சதேச செஞ்சிலுவைச் சங்கம் உட்பட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட்ட அமைப்புகளும் கண்டித்தன.

அமெரிக்க எல்லைக்கு வெளியில் இந்தத் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டிருப்பதால், கைதிகளுக்குரிய அடிப்படைச் சட்ட உரிமைகளை வழங்கத் தேவையில்லை. அத்தோடு போர்க்காலத்தில், ‘சட்ட விரோத எதிரிகள்’இ போர்க்கைதிகள், பொதுமக்களைக் கையாள்வதில் ஜெனிவா தீர்மானங்களைக் கடைப்பிடிக்கவேண்டிய அவசியமில்லை எனவும் Bush நிர்வாகம் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தது. குவான்டனாமோ தடுப்புமுகாம் ஜெனீவாத் தீர்மானங்களையும் இராணுவ நீதிநெறிமுறைகளையும் மீறுவன என அமெரிக்க உச்சநீதிமன்றம் 2006ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

The Guardian & The New York Times வீக்கிலீக்சுடன் கூட்டு

வீக்கிலீக்ஸ் தொடர்ச்சியாக வெளிப்படுத்திய இந்த ஆவணங்கள் அப்பாவிப் பொதுமக்கள் மீதான படுகொலைகள், கைதிகள் மீதான சித்திரவதைகள் உட்பட்ட அமெரிக்கப் படைகளின் மோசமான மீறல்களை அம்பலப்படுத்தின. அதாவது அமெரிக்காவின் பயங்கரவாத்திற்கெதிரான போரின் முகத்தை அம்பலப்படுத்தியது. அமெரிக்காவின் போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் வெளிக்கொணர்ந்தமைக்காக வீக்கிலீக்ஸ் உலகளாவிய பாராட்டுதல்களையும் பெற்றுக்கொண்டது. இந்த அம்பலப்படுத்தல்களில் வீக்கிலீக்சுடன் பிரித்தானிய The Guardian மற்றும் அமெரிக்க The New York Times ஆகியனவும் குறிப்பிட்ட அளவில் இணைந்து செயற்பட்டன.

பெரும் எண்ணிக்கையிலான மூலத்தகவல் ஆவணங்களை முதற்கட்டத் தணிக்கைக்கு உட்படுத்தாமல், தகவல்களின் உள்ளடக்கத்தை மதிப்பீடு செய்யாமல் வெளியிடத் தொடங்கியபோது வீக்கிலீக்சின் ஊடக நெறிமுறை மீதான விமர்சனங்களும் எழத்தொடங்கின. ஆவணங்களில் உள்ளடக்கப்பட்டிருந்த ‘தனிநபர் பாதுகாப்பு’ பற்றிய கவனம் செலுத்தப்படாமல் மூல ஆவணங்கள் உள்ளது உள்ளபடியே வெளியிடப்பட்டமை விமர்சனங்களின் அடிப்படையாக அமைந்தது.

***

ரூபன் சிவராஜா – தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது.

மரம்போல்வர்

2

சுஷில் குமார்

                                 

லும்பும் தோலுமாக நூற்றுக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் முன் வரிசையில் அமர்ந்திருக்க, அந்த பிரம்மாண்ட வேப்பமர மூட்டின் கீழே ஒரு குத்துக்கல்லின் மேல் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தாள் சிவப்புச் சேலையம்மை. பின்னாலிருந்து முண்டியடித்துக் கொண்டும் எகிறி குதித்துக் கொண்டும் முன்னே வரச் சச்சரவிட்ட ஆண்களை நாலைந்து திடகாத்திரமான மல்லர்கள் மூங்கில் கழிகளால் அடித்து விரட்டினர். கூட்டமெங்கும் ஒரே கூப்பாடு. பெருமூச்சுகளில் கலந்தபடி தூரத்து அடுப்புகளில் வெந்துகொண்டிருந்த கஞ்சி வாசம் காற்றில் மிதந்து வந்தது. பனையோலைத் தொன்னைகளைத் தாங்கி சிவப்புச் சேலையம்மை ஊற்றிய கஞ்சியை நடுங்கியவாறு குடித்து சீவித்துக் கிடந்தன இப்போதோ எப்போதோ எனக் காத்திருந்த பல்லுயிர்கள்.


சாய்வு நாற்காலியில் சாய்ந்து கிடந்தபடி உத்திரத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் அப்பா. தலையில் சொருகியிருந்த கருப்பு சட்டமிட்ட கண்ணாடி எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடுவது போல நின்றது. அவரது வலது கை விரல்கள் நாற்காலியின் கைப்பிடியில் நீண்ட யோசனையில் தட்டிக் கொண்டிருந்தன. அப்பாவின் பின்னால் சன்னல் விளிம்பில் உட்கார்ந்து அவரையும் அடுக்களை வாசலில் உட்கார்ந்து அரிசி புடைத்துக் கொண்டிருந்த அம்மாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இருவரும் ஏதும் பேசிக்கொள்வது மாதிரித் தெரியவில்லை. வேண்டுமென்றே சன்னலிலிருந்து தொப்பெனக் கீழே குதித்து அப்பாவின் அருகே சென்று நின்றேன்.

“அப்பா, நீத்தண்ணி எடுக்கவாப்பா?”

அப்பாவிடமிருந்து எந்த பதிலுமில்லை. நேற்று ஜோதிடரைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து இப்படித்தான் இருக்கிறார். அண்ணனுக்குப் பெண் பார்த்து பூவைத்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. நிச்சயதார்த்தம் செய்து திருமணத் தேதி குறிக்க வேண்டியதுதான். பெண் வீட்டாரிடமிருந்து தொடர்ந்த அழைப்புகளும் நினைவுறுத்தல்களும் வந்தபடிதான் இருந்தன. இப்படியொரு நல்ல குடும்பத்தை விட்டுவிட அவர்களுக்கு மனதும் இல்லை. அண்ணனும் என்ன சும்மாவா? படிப்பு, விளையாட்டு, பேச்சு என எல்லாவற்றிலும் கெட்டிக்காரன். இன்று ஒரு தேசிய வங்கியில் துணை மேலாளராக இருக்கிறானென்றால் அதற்கு முழுக் காரணம் அவனது கடின உழைப்புதான். வரப் போகிற அண்ணியும் இன்னொரு வங்கியில்தான் வேலை பார்க்கிறாள். காதலா இல்லையா என எனக்குக் கூடத் தெரியாமல் சாதுரியமாக இதுவரை கொண்டுவந்து விட்டானே!

ஆனால், ஜோதிடரைப் பார்த்தது அதற்காக இல்லை. விசயம் எங்கள் வீட்டு சாமி மரத்தைப் பற்றித்தான்.

வடசேரி பேருந்து நிலையத்தில் இறங்கி உழவர் சந்தைக்குள் நுழைந்து மேலேறி சாலையைக் கடந்தால் அண்ணா சிலை சந்திப்பு இருக்கிறது. அந்த முச்சந்தியில் உள்ள பெரியசாமி பெட்ரோல் பங்க்கில் தான் அப்பா முப்பது வருடங்களுக்கும் மேலாக வேலை செய்கிறார். அதன் இடப்புறமாகத் திரும்பினால் ‘ஃபோர் ரூட்’ என்றழைக்கப்படும் நீண்ட சாலை. ‘ஃபோர் ரூட்ல பொண்ணெடுத்தா சாப்பாடு போட்டு முடியாதே’ என்று சொல்வதுண்டு. வரப்போகிற அண்ணியும் கூட அந்தப் பகுதியைச் சார்ந்தவள்தான். அப்பாவின் சொந்த பந்தங்கள் நிறைய பேரும் அந்தச் சாலையை நம்பி வாழ்க்கையை ஓட்டியவர்கள்தான். பெரும்பாலும் விவசாயம் தான். நெல், வாழை துவங்கி உள்ளே செல்லச் செல்ல நல்ல வருமானம் தரும் பணப்பயிர்கள் செழித்து வளரும் மலைப் பகுதிகள் என்று மிகவும் அழகான கிராமங்கள். அப்பா வேலை தேடி நகரத்திற்கு வந்து முதல்முதலில் இறங்கியது இந்த பெட்ரோல் பங்க் வாசலில்தான். முதலாளிக்கும் அப்பாவை விட்டுவிட மனதில்லாமல் இன்னும் பிடித்து வைத்திருக்கிறார். அண்ணன் கூட அப்பாவை வேலையை விட்டுவிட்டு ஓய்வெடுக்குமாறு அடிக்கடி சொல்வான்.

“அது நமக்குச் செரிப்பட்டு வராது மக்ளே..போகது வரப் போட்டும் பாப்பம்…” என்பார் அப்பா.

அம்மாவை கட்டிக்கொண்டு வந்து வீடு தேடி அலைந்த அப்பாவை அழைத்து முதலாளி தனது டூரிங் டாக்கீஸ் கட்டிடத்தின் அருகில் உள்ள ஒரு சிறிய சரக்குக் கிடங்கை சரி செய்து இருந்துகொள்ளுமாறு சொல்லியிருக்கிறார். ஒடுங்கிய வீடுதான். டூரிங் டாக்கீஸ் வாசலை அடுத்த ஒரு பைக் வந்துசெல்லும் அளவு குறுகிய முடுக்கில் நுழைந்தால் மூத்திர வாடையைப் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். பத்து நொடிகள் இழுத்துப் பிடித்த மூச்சை விடும்போது எங்கள் வீட்டு வாசலை ஆக்கிரமித்து நிற்கும் அந்த சாமி மரத்தில் வந்துதான் முட்டி நிற்பீர்கள். ‘சாமி மரம் இருக்கிறது’ என ஒரு அறிவிப்பு பலகை வைத்தால் ஒருவேளை மூத்திர வாடை குறையுமோ என்னவோ!

அதுவொரு பிரம்மாண்டமான வேப்ப மரம். அதன் அடிப்பகுதியைச் சுற்றி கைகளை வளைத்து கட்டிப்பிடிக்க முயற்சித்து இதுவரை எனக்கும் அண்ணனுக்கும் வெற்றி கிடைத்ததில்லை. அப்பாவையும் அம்மாவையும் சேர்த்து நாங்கள் நால்வரும் நின்றால் ஒருவேளை அதைக் கட்டிப்பிடிக்க முடியலாம். ஆனால், அது ஒருபோதும் நடந்ததில்லை.

அப்பா அந்தச் சரக்கு கிடங்கைச் சரி செய்து வீடாக்கிய காலத்திலேயே இந்த மரம் இதே அளவு பிரம்மாண்டமானதாகத்தான் இருந்ததாம். அதற்கு இருநூறு வயதாம்! ஒவ்வொரு மாத கடைசி வெள்ளிக்கிழமையும் அம்மரத்தின் அடித்தண்டில் சுற்றியிருக்கும் சிவப்புத் துணியில் மாலையிட்டு அதன் முன் நெய் விளக்கேற்றி வணங்குவது எங்கள் வழக்கம். இந்தப் பழக்கம் எப்படி வந்தது என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால், எங்கள் குடும்பத்தை தவிர வேறு சிலரும் அவ்வப்போது வந்து மரத்தை வழிபட்டுப் போவதுண்டு.

பூஜை செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து வேப்பம்பழம் பறித்து சாப்பிடுவதும், அதன் தாழ்ந்த பக்கக் கிளையில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் பழைய லாரி டயரில் கால்களை நுழைத்து மல்லாக்கப் படுத்து ஊஞ்சலாடுவதும், அந்த சாமியின் கண்களைப் போலிருக்கும் கணுக்களில் ஊறி வரும் மினுமினுக்கும் பசையைச் சுரண்டிச் சாப்பிடுவதும், அம்மாவின் அடிக்குத் தப்பி ஒளிந்துகொள்வதும் என அந்த வேப்ப மரத்தில்தான் எனது பள்ளிப்பருவம் முழுவதும் கழிந்தது.

அந்த மரம் முழுவதும் தொற்றிப் படர்ந்து வளரும் ஒருவகைக் கொடி இருக்கிறது. அதைப் பார்க்கும்போதெல்லாம் என்னுள் ஒருவித பயம் வந்து தொற்றிக்கொள்ளும். எல்லையில்லா நீளம் கொண்ட விசப் பாம்புகள். அந்தக் கொடியில் அரிதாகத் தோன்றும் பூக்கள் பார்ப்பதற்கு கருஞ்சிலந்திகள் போலவே இருக்கும். ஒருவேளை எனக்கு மட்டுந்தான் அப்படித் தோன்றியதோ என்னவோ.  

சாமி மரம் என்பதைத் தாண்டி அந்த மரம் எங்கள் வீட்டில் ஒரு முக்கியமான நபர் தான். காரணம் உண்டு. அதன் அடிமரத்திலிருந்து கிளைத்துச் செல்லும் பிரதானக் கிளை எங்கள் வீட்டின் உள்ளாக நுழைந்து நடுவீட்டில் ஓட்டைத் துளைத்துக் கொண்டு மேலேறிச் செல்கிறது. முதலாளி அந்த காலத்திலேயே சரக்குக் கிடங்கை அப்படித்தான் கட்டியிருக்க வேண்டும். நல்ல வேப்ப மரக் காற்றில்தான் எங்களது உறக்கம், கனவுகள், மகிழ்ச்சி, சச்சரவுகள் எல்லாம்.

முதலாளி பெருந்தன்மையாக வாடகையே வேண்டாம் என்று சொன்னாலும் அப்பா அவரால் முடிந்ததை கொடுத்து வந்திருக்கிறார். என்ன, ஒரு ஐநூறோ ஆயிரமோ இருக்கலாம். அப்பாவின் முப்பது வருட உழைப்பு அண்ணாவின் படிப்பு, எனக்கான நகைகள் சேமிப்பு, இதுபோக அப்பாவின் தங்கை, தம்பி குடும்பங்களுக்கான உதவிகள் என சரியாக இருந்திருக்கும். இவற்றுக்கிடையில் என்ன பெரிதாக சேமித்து வைத்துவிட முடியும்? ஆனாலும் அப்பாவின் பெரும் கனவு இந்த இடத்தை சொந்தமாக்கி எங்கள் குடும்பத்திற்கென ஒரு சொந்த வீடு கட்டுவது. அவர் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கிடந்து உத்திரத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அவரது மனதில் இதுதான் ஓடிக் கொண்டிருக்கும்.

ஒருநாள் என்னிடம், “மக்ளே..அப்பா இன்னும் எத்தன நாளோ, மாசமோ? ஒங்கம்மயக் கொண்டு ஒண்ணுக்கும் ஆகாது, நல்லா இருந்து அழச்சொல்லு, அழுவா…பின்ன, வஞ்சமில்லா அப்பிராணி வேற…ஒங்கண்ணன் கெட்டிக்காரன்..அவந் தலையெழுத்த அவனே பாத்துக்குவான்…பெரிய பேங்க் ஆபீசர் ஆயிருவான்னு வையி…பின்ன, ஒனக்கு தான் பாக்கணும்….” என்று சொல்லி அமைதியாக இருந்தார்.

பின் என் கையைப் பிடித்து, “அப்பா ஒங்களுக்கு ஒரு வீட்ட கெட்டித் தந்துருவம் மக்ளே…மொதலாளிட்ட இந்த எடத்தயே பேசி வாங்கணும்…ஒங்கம்ம கிட்ட ஒரு அஞ்சு பவுனு தேறும், அவ நமக்குத் தெரியாம எதும் ஒளிச்சும் வச்சிருப்பா…பின்ன, எங்கயாம் பொரட்டி, லோன கீனப் போட்டுக் கெட்டிரலாம்லா? மொதலாளியே கொஞ்சம் செய்வாரு எப்பிடியும்…நம்மல்லா அவருக்கு வலது கையி…” என்றார்.

சொன்ன மாதிரியே முதலாளி இந்த இடத்தை அப்பா பெயருக்கே எழுதிக் கொடுத்து விட்டார். பேச்சுக்கு ஏதோ ஒரு விலை. அதுபோக, “அண்ணாச்சி…நல்லா ஜம்முன்னு கெட்டணும், என்னா? வீட்டுக்கு நெல, சன்னல் எல்லாம் நம்ம கணக்கு, செரியா?” என்று சொன்னாராம்.

“மக்ளே, என்ஜினியர்ட்ட ஒரு வார்த்த என்னான்னு கேக்கப்படாதா?” என்று வங்கிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த அண்ணனிடம் கேட்டார் அப்பா.

“எப்பா..நீங்க ஒண்ணும் யோசிக்காண்டாம்…நா எல்லாம் பாத்துக்குறேன்…ப்ளான் போட்டாச்சி…சாய்ங்காலம் வந்து காட்டுகேன்…” என்று சொல்லி ஓடினான் அண்ணன்.

அப்பா அம்மாவின் முகத்தைப் பார்த்து பெருமிதமாகச் சிரித்து, “பாத்தியாட்டி, நல்லா அவியலும் நாரங்கா பச்சடியும் முழுங்குனா மட்டும் போறாது…நம்ம கெழடாயிட்டம்…இப்ப பயக்க என்னா ஸ்பீடுங்க? பில்லருங்காம், மாடுலர் கிச்சனுங்காம்…நமக்கென்ன தெரியும்…செரி, பாப்பம்…” என்றார்.

அம்மா வழக்கம்போல மௌனச் சிரிப்பு சிரித்துவிட்டு அடுக்களைக்குள் சென்று பாத்திரங்களை உருட்ட ஆரம்பித்தாள்.

“இவளுக்க உருட்டக்கம் ஒருநாளும் ஓயாது போலல்லா இருக்கு..செரியான ஓட்ட கையாக்கும்..” என்று அப்பா என்னைப் பார்த்து சலித்துக் கொண்டார்.

மாலையில் அண்ணன் வந்து வீட்டிற்கான வரைபடத்தினைக் காட்டி விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தான். நான் இருவருக்கும் தேநீர் போட்டுக் கொண்டு வந்தேன்.

“மக்ளே…இதெப்பிடி முடுக்க ஒட்டி மொத ரூம் போட்ருக்கு?”

“ஏம்ப்பா? மொதல்ல ஒரு சின்ன ரூம், சின்ன ஹால் மாதி, யாரும் வந்தா இருந்து பேசதுக்கு…பொறவு, நடு வீடும், கிச்சனும் வரும்…சைடுல ஒரு பெட் ரூம்…செரியா தான இருக்கு?”

“அதில்ல மக்ளே…முத்தத்துல நம்ம சாமி மரம்லா நிக்கி..” அப்பா குழப்பமாக அண்ணனைப் பார்த்தார்.

அண்ணன் எதார்த்தமாக வரைபடத்தை மடித்தவாறு, “அதுக்கென்னப்பா? ஸா மில்லுல சொன்னா அறுத்துக் கொண்டு போயிருவாம்..பத்து நிமிச வேல…” என்றான்.   

அப்பா ஒரு நொடி வெலவெலத்துப் போய்விட்டார். அடுக்களையிலிருந்து அம்மாவும் வந்து திகைத்து நின்றார். எனக்கு சட்டென அந்த நீள விசப் பாம்புதான் கண்முன் வந்து நின்றது. அப்பா எதுவும் பேசாமல் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து, “மக்ளே..ஃபேனப் போடு…” என்றார்.

நான் சட்டென மின் விசிறியைப் போட்டு விட்டு அடுக்களைக்குள் சென்று அப்பாவுக்குத் தண்ணீர் எடுத்து வந்தேன். என்னை அறியாமலேயே என் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அடுக்களை முழுவதும் கருஞ்சிவப்பு நிறப் பூரான்கள் நெளிந்து ஓடிக்கொண்டிருந்தன. தரையில் கால்வைக்கக் கூட இடமில்லாதது போல ஆயிரக்கணக்கான பூரான்கள். என் கால் கொலுசுகளின் மணிகளில் சுருண்டு ஏறிய பூரான்களை உதறி விட்டு படபடத்து ஓடி வந்தேன்.

அண்ணன் அப்பாவின் அருகே வந்து உட்கார்ந்து, “எப்பா…நம்ம சாமிதான? நா நெறைய எடத்துல விசாரிச்சிட்டேன்…நெறைய பேரு இப்படி மரத்த வெட்டி மாத்தித்தான் வீடு கெட்டிருக்கா…சாமி நம்மள என்ன செய்யப் போகுப்பா? வேண்ணா அதுக்கு எதாம் பூஜ, பரிகாரம் உண்டும்னா செஞ்சிருவம்…” என்றான்.

அவன் சொன்னது எதுவும் அப்பாவின் காதுகளில் விழுந்தமாதிரி தெரியவில்லை. அம்மா கண்ணீர் வடிய முந்தானையால் துடைத்துக் கொண்டு கன்னத்தில் கையை வைத்து உட்கார்ந்து விட்டாள்.

“எப்பா…எப்பா…நமக்கு இருக்கதே ஒரு சென்ட்டு எடந்தா..இதுல மரத்த வெட்டாம விட்டா எப்பிடிக் கெட்ட முடியும்? பாதி மரம் நடு வீட்லத்தான் நிக்கி..ஒண்ணும் கவலப்படாதீங்கப்பா…நா வேண்ணா மொதலாளி மாமாட்ட வந்து ஒரு வார்த்த சொல்லட்டா?”

சில நொடிகள் அமைதியாக இருந்த அப்பா சட்டென எழுந்து விறுவிறுவென வெளியே சென்று விட்டார்.

அண்ணன் அம்மாவைப் பார்த்து, “எம்மா…அப்பா பாட்டுக்கு ஒண்ணுஞ் சொல்லாமப் போறா? நா பேங்க்ல லோனுக்கு ஏற்பாடெல்லாம் பண்ணியாச்சி பாத்துக்கோ…இப்பக் கெடந்து கொமச்சிரப் புடாது…” என்று எரிந்து விழுந்தான்.

அம்மா இன்னும் கண்ணீரிலிருந்து வெளிவந்த பாடில்லை.

அப்பா தேரூர் ஜோசியர் வீட்டுக்குப் போயிருந்தாராம்.

“ஓஹோ…நெலம கொஞ்சம் சிக்கல்தான் கேட்டேளா? மரம் வேற இருநூறோ நானூறோ வருசம்னு சொல்லுகியோ…எங் கணிப்பு படிப் பாத்தா, ஒங்க குடும்பங்கிறதால அந்த தெய்வம் அமைதியா இருந்துருக்கு..நீங்க சுத்த பத்தமா பூஜ காரியம்னு பண்ணிருப்பியோ, இல்லையா? இல்லாட்டி சோலிய முடிச்சிருக்கும் பாத்துக்கோங்கோ”

“ஆமா அண்ணாச்சி..மகன் பேங்க்லயாக்கும் சோலி…ஒரு லோனப் போட்டு நம்மட்ட இருக்கதயும்  சேத்து கெட்டிரலாம்னு நெனச்சேன்…பய மரத்த எடுத்தாத்தான் எடம் காணும்னு சொல்லுகான்..அவன் சொல்லுகதும் செரிதான், ஆனா தெய்வக் குத்தம்லா, பிள்ளேளுக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிரக் கூடாதுல்லா?”

“அதும் செரிதான்…ஒரு சென்ட்டுல என்னத்தக் கெட்ட முடியும் பின்ன? ஒண்ணு இரியும்…பூப்போட்டுப் பாத்துருவம்…”

ஜோதிடர் பூப்போட்டுப் பார்த்து விட்டு அப்பாவை ஒரு மாதிரியாகக் குழப்பி விட்டிருக்கிறார்.

“ம்ம்ம்…செரி..மரத்துல இருக்கது பெரிய அம்மையாக்கும்…வெளம் கூடுனது பாத்துக்கோங்க…சும்மா யோசிக்காம செய்யாம ஒண்ணும் பண்ணிரப்படாது…ஆனாலும் நமக்கு வீடு காரியம்லா…நம்ம ஒண்ணு செய்வம்…நா ஒரு நம்பூதிரி நம்பர் தாரேன்…நான் சொன்னேன்னு போயி பாருங்கோ..அவரு வந்து செஞ்சிக்கழிக்கட்டும்…பின்ன எல்லாம் செரியா நடக்கும்…”

சாய்வு நாற்காலியிலிருந்து மெதுவாக எழுந்து நின்ற அப்பா உள்ளே சென்று சுவற்றில் மாட்டியிருந்த சட்டையை எடுத்து அணிந்தார். முகத்தில் யோசனை இன்னும் தீர்க்கமாகத் தெரிந்தது.

“மக்ளே..வீட்டத் தூத்துத் தொடச்சிப் போடு..சாய்ங்காலம் ஒரு பூஜ உண்டும்…அப்பா இன்னா வாறேன்…”

“செரிப்பா…கஞ்சி எடுக்கம்ப்பா, குடிச்சிட்டுப் போங்கோ…காலேலேந்து ஒண்ணும் குடிக்கலல்லா…”

அப்பா ஏதும் பதில் சொல்லாமல் தனக்குத்தானே எதோ பேசியவாறு வெளியே சென்றார்.

சாய்ங்காலம் நடுவீட்டில் பெரிய கோலம் போட்டு, நடுவில் குத்துவிளக்கு வைத்து, தலை வாழை இலை போட்டு என்னவெல்லாமோ விசித்திரமாகப் படைத்திருந்தார்கள்…மஞ்சளை நீரில் பிசைந்து உருட்டி ஒரு குட்டி உருவமாகச் செய்து இலையில் கிடத்தியிருந்தார்கள், அதைச் சுற்றிக் கருத்த எள் ஒரு குவியல், மற்ற தானியங்கள் ஒரு குவியல், இலையின் முன் ஒரு பெரிய தடியங்காய், நான்கு முட்டைகள், எலுமிச்சம்பழம், தயிர், பால், நெய், தேன் என என்னென்னவோ. நம்பூதிரி மந்திரங்களைச் சொல்லி அந்த உருவத்திற்கு ஒவ்வொன்றாகப் படைத்தார். நடுவீட்டில் நுழைந்து செல்லும் மரக் கிளையிலிருந்து அந்தக் கொடிகள் மெல்லத் தாழ்ந்து வர ஆரம்பித்தன. நான் அம்மாவின் பின்னால் சென்று குறுகி உட்கார்ந்து கொண்டேன். வாசலின் குறுக்காக யாரோ ஒரு வயதான பெண் சிவப்புப் பட்டுடுத்தி சாமி மரத்தடியில் உட்கார்ந்திருந்தாள். அந்த உருவம் தெளிவாகத் தெரியாமல், தோன்றி மறைந்துகொண்டிருந்தது. தரையில் குத்துக் காலிட்டு உட்கார்ந்து முன்னும் பின்னுமாக ஆடிக் கொண்டிருந்தது. எவ்வளவு கூர்ந்து பார்த்தும் அந்த உருவத்தின் முகத்தை மட்டும் என்னால் பார்க்க முடியவேயில்லை. நான் அம்மாவின் காதுகளில் சென்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தேன். அம்மா எனக்குப் பதில் சொல்லாமல் நான் பேசுவது கேட்காதது போல பூஜையில் உறைந்து போயிருந்தாள்.

சற்று நேரத்தில் நம்பூதிரி விளக்குகளை எல்லாம் அணைக்கச் சொன்னார். என்னையும் அம்மாவையும் வீடு முழுதும் நூற்றியெட்டு மண் தீபங்கள் ஏற்றச் சொன்னார். வாசலிலிருந்த அந்த உருவம் மெல்ல மெல்ல வீட்டின் உள்ளே வர ஆரம்பித்தது, அதன் முன்னும் பின்னுமான அசைவுகள் இப்போது நின்று மெல்ல இருந்த இடத்திலேயே சுற்ற ஆரம்பித்தது. நான் தரையைப் பார்த்தவாறு தீபங்களை ஏற்றி முடித்தேன்.

நம்பூதிரி எங்கள் எல்லோருக்கும் ஒரு சிவப்புத்துணியைக் கொடுத்து வாயைச் சுற்றி கட்டிக்கொள்ளச் சொன்னார்.

“ஞான் சொல்லும் வரக்கிம் யாரும் ஏதும் பேசாண்டா…விருட்சத்திலுள்ள அம்மய மாத்திரம் மனசில் வச்சா மதி…கொச்சு போயி ஒரு சொம்பு வெள்ளம் கொண்டு வா..”

நான் அம்மாவின் முகத்தைப் பார்த்து அசையாமல் நின்றேன். அடுக்களை முழுதும் பூரான்கள். அம்மா என்னைப் பார்த்துத் தலையசைக்க நான் மெல்ல அடுக்களைக்குள் சென்றேன். பூரான்கள், பூரான்கள், பூரான்கள். தண்ணீர்க் குடத்தைச் சுற்றிலும் ஒரு நீண்ட கருநாகம்.

அதன் பிறகு என்ன நடந்தது என்பது எனக்குச் சரியாக நினைவில் இல்லை. நம்பூதிரி எழுந்து வீடு முழுதும் தீர்த்தத்தைத் தெளித்துக் கொண்டிருந்தார். அந்த உருவம் எங்கள் குத்து விளக்கின் அருகே தலையைத் தொங்கப்போட்டு உட்கார்ந்திருந்தது.

“பின்ன, நமக்கு எல்லாம் செரி ஆயிக்காணும்…ஒரு மூணு தெவசம் விட்டு காரியங்கள நோக்காம்..நோன் வெஜ் வேண்டா கேட்டோ…கொஞ்சம் சுத்தமாய்ட்டு இரிக்கணும்…நெலையில் ரெண்டு தீபம் வைக்கணும்…அம்ம எல்லாம் செரியாக்கித் தருவா…ஒண்ணும் பயப்படாண்டா…” என்று சொல்லிக் கிளம்பினார். அவர் பின்னால் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு அந்த உருவமும் சென்றது.

அன்று இரவு வீட்டில் யாரும் சரியாகத் தூங்கவில்லை. நான் அம்மாவின் முந்தானையைக் கைவிரலில் சுற்றிக் கிடந்தேன். சாமி மரத்தின் கொடிகள் எல்லாம் விரித்த நீள்சடைக் கற்றைகளாகக் கீழிறங்கி என் கால்களில் சுற்றிக் கொள்ள ஆரம்பித்தன. பின், மெல்ல மெல்ல என் உடல் முழுதும் பரவி என்னை இறுக்கின. கழுத்தைச் சுற்றி நெருக்கியபோது மூச்சு விட முடியாமல் திணறிப் பதறி அலறிவாறு எழுந்து உட்கார்ந்தேன். அம்மாவும் பதறிப் போய் எழுந்து, “ஒண்ணுல்ல மக்ளே..கெட்ட சொப்பனமா இருக்கும்…போயி திருநீறு பூசிட்டு வந்து படு…” என்றார்.

அடுத்த நாள் காலை குடும்பத்தோடு முப்பந்தல் இசக்கி அம்மன் கோவிலுக்குப் போய் பொங்கல் வைத்தோம். பூசாரியிடம் விசயத்தைச் சொல்லி அம்மன் காலடியில் வைத்த சிவப்புக் கயிற்றைக் கட்டிக் கொண்டு வீடு திரும்பினோம்.

வீட்டு முடுக்கில் நுழையும்போதே ஏதோ சரியில்லை என்று ஒரு எண்ணம். பயத்தோடு படபடத்தவாறு அப்பாவின் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு நடந்தேன். வீட்டு முற்றம் முழுவதும் கரிந்த வேப்பிலைகள் விழுந்து பரந்து கிடந்தன. சாமி மரத்தைச் சுற்றியிருந்த கொடிகள் வீட்டு ஓட்டின் மேல் மொத்தமாக விழுந்து கிடந்தன. வீடு முழுதும் வேப்பெண்ணெய் வாடை. அடுக்களையிலிருந்து சாரை சாரையாய் எறும்புக் கூட்டம் நடு வீட்டைத் தாண்டி முற்றத்தின் வழி சென்று சாமிமர மூட்டில் ஒரு பொந்திற்குள் சென்று முடிந்தன.

“செரி, செரி…எல்லாம் நல்லதாத்தான் இருக்கும்…யாரும் ஒண்ணும் நெனைக்காம நடக்க வேண்டியதப் பாப்பம்…டேய், நீ மத்த ஸா மில் காரன்ட்ட சொல்லிரு…மக்ளே, வாரியல எடு…இதத் தூத்து மாத்திருவம்…” என்றார் அப்பா.

எவ்வளவு பெருக்கினாலும் வேப்பிலைகளும் கொடிகளும் விழுந்துகொண்டேயிருந்தன. அடுத்த இரண்டு நாட்களில் எங்கள் சாமி மரம் கிட்டத்தட்ட வெற்றுடம்பாக ஆகிவிட்டது. என்ன ஒரு கம்பீரம்! எங்கள் வீட்டைத்தாண்டி பக்கத்து வனத்துறை சுற்றுச் சுவரின் மீது தாழ்ந்து சென்று தரையோடு தரையாக வளைந்து நீண்டு செல்லும். டூரிங் டாக்கீஸ் சாலையிலிருந்து பார்த்தால் ஒரு சிறு மலை போலத் திரண்டு நிற்கும். சில சமயங்களில் சில இடங்களைக் கடக்கும்போது நம்மை அறியாமலேயே நம் கைகள் நெஞ்சைத் தொட்டு வணங்கும், இல்லையா? அந்த மாதிரியான ஒரு தெய்வாம்சம் இப்போது எலும்புக் கூடாக உருகி நின்றது. போவோர் வருவோரெல்லாம் வந்து ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக எங்கள் மரத்தைப் பார்த்து துக்கம் விசாரிக்க ஆரம்பித்து விட்டனர்.

“இப்படி மனசில்லாம இந்த வீட்டக் கெட்டணுமாப்பா? பழைய வீடு அப்படியே இருக்கட்டும்ப்பா…எனக்கு மனசே செரியில்ல…அழுகையா வருகு..நம்ம சாமில்லாப்பா?”

அப்பா பதில் பேசாமல் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கிடந்தார். அவரது விரல்கள் மார்பின் குறுக்கே நிலையாகக் கிடந்தன.

அடுத்த நாள் காலை சாமி மரத்தை வெட்டப் போகிறார்கள். அதற்கடுத்த நாள் எங்கள் புது வீட்டிற்கான கல் போடும் சடங்கு. வீடு கட்டி முடித்ததும் அண்ணனின் திருமணம். எல்லாம் சரியாக நடக்க வேண்டும். என்ன இருந்தாலும் அப்பாவின் வாழ்நாள் லட்சியமில்லையா? ஒரு மிகப் பெரிய சாதனையும் தானே? எங்களை எப்படியெல்லாம் வளர்த்தார்! ஒரு சுடுசொல் உண்டா? ஆனால், அப்பா, அம்மாவின் முகங்களில் இருந்த ஐஸ்வர்யம் மட்டும் காணாமல் போய்விட்டது.

உறக்கம் நிலைகொள்ளாமல் என்னவெல்லாமோ யோசித்துக் கிடந்தேன். நினைவிழந்து எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை. அந்த சிவப்பு உருவம் என்னருகே உட்கார்ந்து என் தலையை வருடிக் கொடுத்துக்கொண்டிருந்தது. அது மட்டும் நிச்சயமாகத் தெரியும்.

“எம்மா…எம்மா…ஏம் புள்ள…ஏம் புள்ள…மக்ளே…எந்தி மக்ளே…எந்தி மக்ளே…” என்று அம்மா பதற்றத்தோடு தட்டி எழுப்ப, பதறி எழுந்தேன். பொழுது விடிந்திருக்கவில்லை. அம்மா கேவிக் கேவி ஓங்காரமிட்டு அழுது கொண்டிருந்தாள்.  

மார்பில் ஓங்கி அறைந்தவாறு, “எஞ்சாமி…இப்பிடிச் செஞ்சிட்டியே…எங் கொலத்தக் காத்த அம்மையில்லா…என்ன பாவம் செஞ்சமோ? எங்களுக்குக் கஷ்டம் வைக்காண்டாம்ன்னு நீயே இப்பிடிச் செஞ்சிட்டியேம்மா!” என்று கதறினாள்.

கண்களைக் கசக்கித் திறந்து பார்த்தேன். அப்பா தலையில் கையை வைத்து ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தார். நடுவீட்டைப் பிளந்துகொண்டு எங்கள் சாமி மரத்தின் அடி வேர் மூட்டோடு நிலத்தின் வெளிவந்து நின்றிருந்தது. வீட்டின் ஒரு பக்கச் சுவரை முழுதும் இடித்து சாய்த்து வனத்துறை நிலத்தில் மூளியாய் விழுந்து கிடந்தது எங்கள் சாமி மரம். வீட்டு முற்றத்திற்குச் சென்று பார்க்கும் தெம்பு எனக்கில்லை.

அழுது ஓய்ந்த அம்மா என் மடியில் விழுந்து உறங்கிப் போனாள். நானும் அவள் மீது சாய்ந்து கிடந்தேன். அந்த சிவப்பு உருவம் திரும்பிப் பார்க்காமல் மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது.

“ராவுல மழ, காத்து ஒண்ணுமே இல்லயே? என்ன அதிசயமா இருக்கு? எத்தன தலமொற பாத்த மரம்! எப்பிடியாக்கும் விழுந்துருக்கும்?” என்று யாரோ கேட்பது கேட்டது.

ஸா மில் காரர்கள் வந்து மரத்தை துண்டுகளாக அறுக்கும் சத்தம் என் காதுகளுக்குள் பெருத்த வலியாக அழுத்தியது.

“செரியான மரம், என்னண்ணே? நல்லதாப் போச்சு…வீட்டு நெலைக்கு வேற மரம் பாக்காண்டாம்…சன்னல் எல்லாம் போட்டாலும் இன்னும் நாலு வீட்டுக்குத் தேறும், என்ன சொல்லுகியோ?” என்று யாரிடமோ கேட்டுக் கொண்டிருந்தான் அண்ணன்.

***

சுஷில் குமார் – 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியாகியுள்ள நிலையில், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு விரைவில் யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வரயிருக்கிறது. sushilkumarbharathi2020@gmail.com

நீந்தும் நூலகங்கள்

0

நாராயணி சுப்ரமணியன்

லகத்தைத் தாங்குவது திமிங்கிலங்கள்தான் என்று பண்டைய மக்கள் நம்பினார்கள். “மூன்று திமிங்கிலங்கள் பூமியைத் தங்கள் முதுகில் சுமந்தபடி பிரபஞ்சக் கடலில் நீந்திக்கொண்டிருக்கின்றன” என்பது ஒரு தொல் நம்பிக்கை.

சிரியஸ் நட்சத்திரத்திலிருந்து இறங்கி வந்த முன்னோர்கள், புவியின் வரலாற்றைப் பாதுகாக்கும் ஆவணக்காப்பாளர்களாகத் திமிங்கிலங்களை நியமித்திருக்கிறார்கள் என்று சிவப்பிந்தியத் தொல்குடிகள் நம்புகிறார்கள். “ஒவ்வொரு திமிங்கிலமும் நீந்துகின்ற ஒரு நூலகம்” என்கிறது ஒரு சொலவடை.

ஆதிகாலம் தொட்டு இன்றுவரை பெரிய விலங்குகளின் மீதான மனிதனின் வியப்பும் மரியாதையும் மாறவில்லை. கரையொதுங்குகிற திமிங்கிலங்களுக்காக நீத்தார் சடங்குகளை உணர்வுபூர்வமாக நடத்துகிற பழங்குடிகள் இன்றும் உலகத்தில் இருக்கிறார்கள். பெரிய விலங்குகளுக்கு முன்பு நிற்கும்போது மனிதன் தான் எத்தனை சிறியவன் என்பதை உணர்கிறான், வியப்பில் அமிழ்கிறான். “Whale Watching” என்ற பணம்கொழிக்கும் ஒரு மிகப்பெரிய சுற்றுலாவே இந்த உளவியலின் அடிப்படையில்தான் இயங்குகிறது.

இது வெறும் உணர்வுரீதியான பிணைப்புதானா? நம் உணர்வுகளால் உந்தப்பட்டு, தேவையில்லாமல் திமிங்கிலங்களைத் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறோமா? திமிங்கிலங்கள் சூழலுக்கு எப்படிப்பட்ட பங்களிப்பைத் தருகின்றன? – கடந்த சில ஆண்டுகளாகவே உலக அளவில் இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவதில் விஞ்ஞானிகள் தீவிரமாக இருக்கிறார்கள்.

சில விளக்கங்கள்

பதில்களை நோக்கிப் பயணிப்பதற்கு முன்பாக சில கருத்துக்களைத் தெளிவுபடுத்தவேண்டியிருக்கிறது. சூழலியலைப் பொறுத்தவரை எல்லா விலங்குமே முக்கியத்துவம் வாய்ந்ததுதான். திமிங்கிலத்தையும் பவளத்திட்டில் வசிக்கும் ஒரு நத்தையும் ஒரு தராசில் வைத்து “இதில் எது முக்கியம்?” என்று கேட்பதை விட அபத்தம் இருக்க முடியாது. ஆனால் துரதிருஷ்டவசமாக, சூழல் சீர்கேடு, சூழல் பாதுகாப்பு என்கிற இரு தளங்களிலும் இதுபோன்ற கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன. சூழலைக் கெடுக்காமல் இருக்கவும், சூழலைப் பாதுகாப்பதற்கும் நாம் தனிப்பட்டு முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கிறது. நிதி ஒதுக்கீடு, அரசுகளின் ஒத்துழைப்பு, உலக நாடுகளின் ஒருங்கிணைப்பு, திட்டங்கள், கொள்கைசார் முடிவுகள், மக்களின் பங்களிப்பு என்று எத்தனையோ தேவைப்படுகிறது. ஆகவே சில நேரங்களில் இந்தக் கேள்வியை எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல், அதற்கான பதிலையும் தேடுவது அவசியமாகிறது.

இரண்டாவதாக, “இந்த விலங்கு சூழலுக்கு என்ன பங்களிப்பைத் தருகிறது?” என்று கேட்டு, அதற்கான பதில் திருப்திகரமாக இருந்தால் மட்டுமே அதைப் பாதுகாப்பது என்பது மனிதனை மையப்படுத்திய ஒரு கருத்தாக்கம்தான் (Anthropocentric Ideology). அந்தக் கருத்தாக்கம் இருக்கும்போது, “இந்த விலங்கு இல்லாவிட்டால் சூழல் சீர்குலையும், நானும் பாதிக்கப்படுவேன்” என்பது மட்டுமே அந்த விலங்கைக் காப்பதற்கான உந்துதல் . தனிப்பட்ட ஒரு உயிரியாக இருப்பதாலேயே ஒரு விலங்குக்கு வரும் மதிப்பு (Inherent Value of life) அதற்கு மறுக்கப்படுகிறது. அதுவும் துரதிருஷ்டவசமானதுதான். நியாயமாகப் பார்த்தால், நமக்கு உதவுகிறதோ இல்லையோ, சூழலுக்குப் பங்களிக்கிறதோ இல்லையோ  நாம் அந்த விலங்கை அழிக்காமல் பாதுகாக்கவேண்டும். ஆனால் நிதர்சனம் அப்படி இல்லை என்பதாலேயே சூழலியல் பங்களிப்புகளைப் பற்றி விரிவாகப் பேசவேண்டியிருக்கிறது.

ஆயிரம் மரங்கள்

“உலகத்தின் காலநிலையை சீர்படுத்தவேண்டுமானால், திமிங்கிலங்களைக் காப்பாற்றினால் போதும். ஒரு திமிங்கிலம் என்பது ஆயிரம் மரங்களுக்கு சமம்” – இது சொலவடை அல்ல, அறிவியல் தகவல்.

இது எப்படி என்று விரிவாகப் பார்க்கலாம். காற்றிலில் அளவுக்கு அதிகமாக சேரும் கரியமில வாயு, புவி வெப்பமடைவதற்கு முக்கிய காரணம் என்பது அனைவரும் அறிந்ததுதான். காற்றிலிருந்து கரிமத்தைப் பிரித்து, அதை பூமியின் ஆழத்தில் எப்படியாவது சேர்த்துவிட்டால், தொடர்ந்த பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம் என்பது ஒரு லட்சியக் கனவு. இதற்காக முன்வைக்கப்படும் அறிவியல் தொழில்நுட்பங்கள் எல்லாமே சிக்கலானவை. ஆனால் இதற்கு ஒரு எளிய வழி உண்டு என்கிறார்கள் கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் – திமிங்கிலங்களைப் பாதுகாத்து அவற்றின் எண்ணிக்கைகளை மீட்டெடுத்தால் தானாகக் கரிம சுழற்சி சமநிலைக்கு வந்துவிடும்.

திமிங்கிலங்களின் உடலில் தொடர்ந்து கரிமம் (Carbon) சேர்கிறது. அளவில் பெரிய ஒரு திமிங்கிலம் தன் வாழ்நாளில், காற்றிலிருந்து  33 டன் கரியமில வாயுவின் விளைவுகளை நீக்கி, தன் உடலில் கரிமமாக சேர்த்துக்கொள்கிறது! ஒரு மரம் வெறும் 21 கிலோவை மட்டுமே நீக்குகிறது என்பதோடு நாம் இதை இணைத்துப் புரிந்துகொள்ளலாம். இவ்வாறு காற்றிலிருந்து பிரிக்கப்படும் கரிமம், திமிங்கிலம் இறந்து ஆழ்கடலுக்குள் மூழ்கும்போது, கடலின் அடியாழத்துக்குச் சென்றுவிடுகிறது. அது மீண்டும் கடல்பரப்புக்கு வருவதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கும்.

திமிங்கில உரம்

நம்மால் நினைத்தே பார்க்கமுடியாத ஒரு பங்களிப்பு, திமிங்கிலங்களின் கழிவிலிருந்து வருகிறது. கடலின் ஆழத்தில் இருந்து மேற்பரப்புக்கு வருகிற திமிங்கிலங்கள், ஆழ்கடல் உணவுகளிலிருந்து பல உயிர்ச்சத்துக்களைக் கழிவுகளாக வெளியேற்றுகின்றன. நைட்ரஜன், பாஸ்பரஸ், இரும்பு என்று பல நுண்சத்துக்கள் இந்தக் கழிவுகளில் உண்டு. ஆழத்திலிருக்கும் சத்துக்களை மேற்பரப்புக்குத் திமிங்கிலங்கள் இழுத்து வருகின்றன என்பதால் இது Whale Pump என்று அழைக்கப்படுகிறது.

கரையிலிருந்து செல்லச் செல்ல, கடலின் மேற்பரப்பில் இருக்ககூடிய சத்துக்களின் அளவு குறைந்தபடியே இருக்கும். ஆகவே, சூரியன் தகித்துக்கொண்டிருந்தாலும் அந்த சூரிய ஒளியைப் பயன்படுத்தி உணவு தயாரிப்பதற்கான நுண்பாசிகள் (Phytoplankton) அங்கு வளர்வதில்லை. குறிப்பாக, தென்னாப்பிரிக்காவின் தென்கோடி முனையிலிருந்து அண்டார்ட்டிகா வரை நீண்டிருக்கும் பகுதியை நினைத்துப் பாருங்களேன், நிலமே இல்லாத கடற்பரப்பு அது. இதுபோன்ற கடல் பாலைவனங்களுக்கெல்லாம் உயிர்ப்பை வழங்குவது திமிங்கிலங்களின் கழிவுதான். திமிங்கிலக் கழிவுகளிலிருந்து உயிர்ச்சத்துக்களை எடுத்துக்கொண்டுதான் இங்கு நுண்பாசிகள் பல்கிப் பெருகுகின்றன.  

கடல்பரப்பிலேயே ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குத் திமிங்கிலங்கள் வலசை போகும்போதும் அவை நுண்சத்துக்களைப் பரப்புகின்றன. இது Whale Conveyer Belt என்று அழைக்கப்படுகிறது.

நுண்பாசிகளைக் குறைவாக எடைபோட்டுவிடமுடியாது. கரிமத்தை உள்வாங்கிக் காலநிலையை சமன்படுத்துவதில் இவற்றுக்கும் பெரும்பங்கு உண்டு. கடலின் நுண்பாசிகள் சராசரியாக 37 பில்லியன் டன் கரிமத்தை உள்வாங்குகின்றன. நிலத்தின் கணக்குப்படி இது நான்கு அமேசான் காடுகளுக்கு சமம்! ஒரு கடற்பரப்பில், சராசரியாக இருக்கும் நுண்பாசிகளின் அளவை விட 1% கூடுதலாகப் பாசிகள் வளர்ந்தாலே, அது 2 பில்லியன் பெருமரங்களுக்கு சமம்! முன்பு இருந்த அளவுக்கே திமிங்கிலங்களின் எண்ணிக்கை மீண்டு வந்தால், அவற்றால் பெருகும் நுண்பாசிகள் மட்டுமே 17 லட்சம் டன் கரிமத்தை சேகரிக்கும்!

இறந்தும் ஆயிரம் பொன்

இறந்த திமிங்கிலங்களின் உடல்கள், மெல்ல மெல்ல நீரில் மூழ்கி, கடலின் அடியாழத்துக்கு செல்கின்றன. இது Whale fall என்று அழைக்கப்படுகிறது. கடலின் தரையைத் தொட்ட உடனேயே திமிங்கிலத்தின் உடலை உண்பதற்கு விலங்குகள் குவியத் தொடங்கிவிடுகின்றன. நீண்டநாட்களாக உணவில்லாமல் இருந்த ஆழ்கடல் விலங்குகள் இதை ஒரு உணவுத் திருவிழாவாகவே பாவிக்கின்றன. இறந்த ஒரு திமிங்கிலத்தின் உடலைச் சுற்றி மட்டும் சுமார் 400 விலங்குகள் கண்டறியப்பட்டுள்ளன. கணவாய்கள், விலாங்குகளைப் போன்ற மீன்கள், கணுக்காலிகள், பாக்டீரியாக்கள் என்று ஒரு கூட்டத்துக்கே  தொடர்ந்து 8 வருடங்களுக்கு உணவளிக்கிறது ஒரேயொரு திமிங்கிலத்தின் உடல்!

மீதமிருக்கும் எலும்புகளும் வீணாவதில்லை. எலும்புகளைச் சுற்றி ஒரு தனி வாழிடமே உருவாகிவிடும். எலும்புகளை உடைத்து உயிர்சத்துக்களாக மாற்றும் பாக்டீரியாக்கள் வந்துவிட்டால் அடுத்தடுத்து பாக்டீரியாக்களை உண்ணும் சிறு விலங்குகள், பெரு விலங்குகள் என்று கூட்டம் கூடிவிடும். அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு இந்தக் கும்பலுக்கு உணவளிப்பது அந்த எலும்புக்கூடுதான் !

மழைக்காடுகளும் திமிங்கிலங்களும்

கடலுக்குள் இருக்கிற திமிங்கிலங்களின் தாக்கம் நீர் உலகத்தோடு முடிந்துவிடுவதில்லை. பல கண்ணுக்குத் தெரியாத பிணைப்புகளால் நிலத்திலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன திமிங்கிலங்கள்.

கலிஃபோர்னியா காண்டோர் என்ற ஒரு பாறுக்கழுகு (Vulture)வகை உண்டு. இந்தப் பறவை இனத்தின் அழிவுக்குக் காரீய நச்சு (Lead Poisoning) ஒரு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. இதற்கும் திமிங்கிலங்களுக்கும் தொடர்பு உண்டு!

இறந்த திமிங்கிலங்களின் உடல்கள் இந்தப் பாறுக்கழுகுகளுக்கு விருப்பமான உணவு. திமிங்கிலங்களின் எண்ணிக்கை குறைந்ததால், உணவு கிடைக்காமல் இந்தக் கழுகுகள் இறந்த நிலவாழ் விலங்குகளை உண்ணத்தொடங்கிவிட்டன. கலிஃபோர்னியா பகுதியில் பல விலங்குகளின் உடலுக்குள் வேட்டைக்காரர்களின் தோட்டாக்கள் இருக்கும். ஆகவே அவற்றை உண்ணும் காண்டோர் கழுகுகளும் நச்சு தாக்கி இறந்துகொண்டிருக்கின்றன.

ஆழ்கடலில் திமிங்கிலங்களின் எண்ணிக்கை குறைந்தால் விண்ணில் பறக்கும் பறவைகள் இறக்கின்றன. இது ஒரு உதாரணம்தான். சூழலியல் என்பது மிகவும் நுணுக்கமாக நெய்யப்பட்ட ஒரு துணியைப் போல. எந்த நூலைப் பிடித்து இழுத்தால் எங்கே சுருக்கம் விழும் என்று சொல்லவே முடியாது.

“யானைகள்தான் இந்தக் காட்டை உருவாக்கின. அவை தங்கள் தந்தங்களால் கீறிய குழிகளில் ஆறுகள் பாய்ந்தோடின, அவை தும்பிக்கைகளால் காற்றை ஊதியபோது இலைகள் விழுந்தன. மலைகள், மரங்கள், மரங்களின்மேல் இருக்கிற பறவைகள், எல்லாவற்றையும் உருவாக்கியது யானைகள்தான்”   ஜங்கிள் புக் நாவலில் இப்படி ஒரு வசனம் வரும். ஒரு நீலத்திமிங்கிலத்தின் சராசரி எடை நாற்பது யானைகளுக்கு சமம். ஒரு வேளை மௌக்லி கடலுக்குள் வசித்திருந்தால் அவன் தினமும் திமிங்கிலங்களைத்தான் வணங்கியிருப்பான்.

தரவுகள்

  1. Nature’s Solution to Climate Change, Ralph Chami et al, International Monetary Fund, 2019.
  2. The Impact of Whaling on the Ocean Carbon Cycle: Why Bigger was better, A.J.Pershing et al, PLoS One, 2010.
  3. Global Nutrient Transport in the world of giants, C.E.Doughty, Biological Sciences, 2016.
  4. Whale Poop pumps up ocean health,Science Daily, 2010.
  5. Whale Fall Ecosytems: Recent insights into Ecology, Paleoecology and Evolution, C.R.Smith, Annual Reviews of Marine Science, 2015.
  6. Will Lead Bullets Finally Kill off the California Condor?, Ted Williams, Yale Environment, 2013.

***

நாராயணி சுப்ரமணியன்

கடல்வாழ் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.”நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” என்ற உயிரியல் நூலை எழுதியுள்ளார். தமிழில் கடல்சார், அறிவியல் பொருண்மைகளைக் கவிதைகளில் எழுதி வருபவர். விகடன் தடம், வாசகசாலை, அரூ இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. Email: nans.mythila@gmail.com

காலம் கவிழ்த்த கோரத்தாண்டவம் – சு.வேணுகோபால்

0

கையறு நாவல் முன்னுரை

சமீப காலங்களில் மலேசிய நாவல் உலகில் நம்பிக்கை தரும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அ.ரங்கசாமியின் நினைவுச்சின்னம், சை.பீர்முகம்மதுவின் அக்கினி வளையங்கள் இரண்டும் முக்கியமான வரவுகள். இரண்டாம் உலகப்போர்ச் சூழலில் மலேசியத் தமிழர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள், சிதைவுகள், அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடுகள், ஏமாற்றங்கள் என ஒரு பெரும் சித்திரத்தை அ.ரங்கசாமியின் நினைவுச்சின்னம் நாவல் காட்டுகிறது. அவரது மற்றொரு நாவலான இமயத் தியாகம், நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்துடனும் இணைந்து தமிழர்கள் ஆற்றிய அளப்பரிய பணியை ஆவணமாக்கியிருப்பதைச் சொல்ல வேண்டும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான மலேசிய தேசிய உணர்வு மேலோங்கி இருப்பது அறுபதுகளின் காலத்தில் கம்னியூச இயக்கச் செயல்பாடுகள் தீவிரம் பெற்றன. இதில் தமிழர்கள் இணைந்தும் ஒதுங்கியும் விலகியும் நின்ற தடத்தின் ஊடே ஒரு விடுதலையின் எழுச்சி எழுந்து வீழ்ந்துபட்ட சித்திரத்தை ‘அக்கினி வளையங்கள் நாவல் விவரிக்கிறது. சீ.முத்துசாமியின் ‘மலைக்காடு’ நாவலின் தமிழர்களின் உயர்விற்குப் பாடுபட்ட கணபதி போன்ற தலைவர்களின் தியாகங்கள் புனைவுகொள்ளாமல் தரவுகளாகத் தரப்பட்டுள்ளன. இந்நாவலில் கம்னியூசப் போராளக் குழுக்களில் தமிழ் இளைஞர்கள் சேர நேர்ந்த நிர்பந்தங்கள் பற்றிய தரவும் புனைவுமான சிறிய பகுதி காட்டப்படுகிறது.

அ.ரங்கசாமியின் நாவலில் வரலாற்றுத் தகவல்கள், புனைவின்வழி ஆவணங்களாக மாறியிருக்கின்றன. ‘அக்கினி வளையங்கள் நாவலில் தரவுகள் புனைவின் சாத்தியப்பாட்டுகளுக்குப் பேருதவி புரிந்திருக்கின்றன. சை.பீர் முகம்மது புனைவின் சாத்தியங்களான அக்கால வாழ்க்கையை விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறார். ஆர்.சண்முகம் அவர்களின் சயாம் மரண இரயில்’ இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் இரயில் பாதை போடச்சென்ற தமிழர்களை ஒரு வரலாற்றுச் சாக்காக வைத்துக்கொண்டு காதலையும் கொலையையும் கலந்துகட்டி நிலத்தில் கால்பாவாத ஜனரஞ்சக இரசனைக்கேற்ப ‘ரொமேன்டிக்’ நாவலைத் தந்தார்.

மலேசிய வரலாற்றில் டாலரின் மதிப்பிழந்து 1967 சூழலில் நடந்த கலவரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட பாண்டியனின் ரிங்கிட், ஹின்ட்ராஃப் எழுச்சிக்குப்பின் இருந்த தமிழர்கள் பந்தாடப்பட்ட வாழ்வை அடிப்படையாகக் கொண்டு செல்வன் காசிலிங்கம் எழுதிய ‘மிச்சமிருப்பவர்கள்குறுநாவல் வரலாற்றின் தருணங்களைச் சொல்கின்றன. ம.நவீனின் ‘பேய்ச்சி’ நாவல் தனித்த வகையானது.

பா.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி தமிழர்கள் வாழ்வின் சாரங்களையும், ஒரு கால வரலாற்றின் சாற்றினையும் உறிஞ்சிக்கொண்டு புனைவில் நிகழ்த்தியிருக்கும் மகத்தான சாதனை தனியே உயரத்தில் நிற்கிறது.

இந்த வகையில் ஒரே சமயத்தில் இந்திரஜித்தும் (சிங்கப்பூர்), கோ.புண்ணியவானும் சயாம் இரயில் பாதை அமைக்கும் பணியில் தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்களை நாவலின் களமாகக் கொண்டு எழுதியிருக்கின்றனர். களம் ஒன்றே என்றாலும் இருவர் காட்டும் மனிதர்களின் குணங்கள் வேறாக இருக்கின்றன. இருவரின் பார்வையும் எழுத்துப்பாணியும் வேறாக இருக்கின்றன. இருவரும் பிரதானமாகச் சிறுகதையாளர்கள். அதன் தன்மை நாவலில் மேலோங்கியும் விடுகின்றன. புண்ணியவான் கூடுதலான விதத்தில் வாழ்வை ஆழ அகலத்தோடு தந்திருக்கிறார்.

புண்ணியவானின் ‘கையறு’ நாவல் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய படைகளின் மலேசிய நுழைவு தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய இரண்டு விதமான சிதைவுகளைப் பெரிய சித்திரங்களாகக் காட்டுகின்றன. ஒன்று, தோட்டக் காடுகளில் ஜப்பான் இராணுவம் ஏற்படுத்திய தாக்குதல்கள். மற்றொன்று சயாமிலிருந்து பர்மாவிற்கு இரயில் பாதை போட ஆசைகாட்டியும் ஏமாற்றியும் பிடித்து ஏற்றிச்செல்லப்பட்ட தமிழர்கள் பட்ட பெரும் பாடுகள், அவமானங்கள், துன்பங்கள் நாவலில் பேசப்படுகின்றன.

வரலாற்றின் தரவுகளை நாவலாகத் தரும் பாணியிலிருந்து முற்றாக விலகி மலேசியத் தமிழர்களின் மேல் விழுந்த காலத்தின் அலங்கோலத்தைப் புனைவின்வழி விரித்துக் காட்டுகிறார். காலத்தின் சாரமும் மானுட வாழ்வின் கோரமுகங்களும் வரலாற்றின் சந்தர்ப்பத்தில் என்னவாக வெளிப்பட்டன என்பதைக் ‘கையறு’ நாவல் காட்டுகிறது.

புண்ணியவான், என்னென்ன விதங்களில் தமிழர் குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாயின, பாதுகாப்பற்ற நிலையில் எதிர்வினையாற்ற முடியாத, கேள்வி கேட்க முடியாத நியாய தர்மங்களுக்கு இடமில்லாத அபலைகளாகப் பெண்கள் நிற்க வேண்டிய இக்கட்டானச் சூழலை அசலாகத் தந்திருக்கிறார். போர்ச்சூழல் தனித்த பண்பாடு கொண்ட தமிழ்ச்சமூகத்தைப், பல்லினச் சமூகம் வாழும் இடத்தில் தலைகீழாகப் புரட்டிப்போட்டுச் சிதறடித்தப் புள்ளிகளைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுகிறார். அதனாலேயே அந்நாவலில் சம்பவங்களின் செறிவுகள் நன்றாகக் கூடி வந்திருக்கின்றன. சிறுகதையாளனின் பலமான பார்வை நாவலுக்குச் சிலசமயம் இறுக்கத்தைத் தருகின்றன. கலங்கடிக்கப்பட்ட காலத்தின் மாதிரி வடிவம் புண்ணியவானின் கையறு நாவல்.

என்னென்ன விதமாய் தாக்குதலுக்கு உள்ளானார்கள் என்பதற்கான புனைவுவெளியைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். இந்தப் புனைவு நாவலுக்கு நிஜத்தன்மையை உண்டாக்குகிறது. நிகழ்வின் கதியில் நாவலில் புனைவுவெளி விரிவதால் நம்மை அந்த உலகத்தோடு இரத்தமும் சதையுமாக ஒன்ற வைக்கிறது. வரலாற்றுத் தடங்கள் தகவல்களாகத் தரவுகளாக இல்லாமல் வாழ்வாக மலர்ந்திருப்பதாலேயே படைப்பின் சாத்தியப்பாடு நாவலில் கூடி வந்திருக்கிறது. படைப்பாக்கத்திற்கும் ஆவணத்திற்குமான  நுட்பமான வேறுபாட்டை உணர்ந்த படைப்பாளியாகப் புண்ணியவான் இருப்பதாலேயே கையறு நல்ல படைப்பாக நமக்குக் கிடைத்திருக்கிறது.

காலம் ஆடிய கோரத்தாண்டவம் என்பதில் நாவல் குவிந்திருக்கிறது. உலகம் முழுக்கத் தமிழர்கள் புலம் பெயர்ந்திருக்கிறார்கள். அவர்களுடன் பண்பாடும் புலம்பெயர்ந்து வந்திருக்கிறது. பண்பாடு அவர்களிடம் சுமையாக இல்லாமல் தங்கள் இனத்தின் அடையாளங்களாகத் தனித்துவமாக வாழும் ஓர் இனமாகக் காட்டியே நிலைகொண்டிருக்கிறது. இதில் சாதகமும் உண்டு; பாதகமும் உண்டு. பிற சமூகங்களுடன் ஒட்டி உறவாடாமல் தனித்திருக்க வைத்திருப்பதும் இந்தப் பண்பாடுதான். அதிகாரமிக்க, பலமிக்க படைகளால் அந்தப் பண்பாடு தாக்குதலுக்கு உள்ளாகும்போது தமிழரின் மனங்கள் கலங்குகிறது. அது அவர்களுக்குப் பெரும் வேதனையைத் தருகிறது.

அம்மன் வழிபாடு நடக்கிறது. உடுக்கை முழங்க, கத்திமேல் ஏறி நின்று பூசாரி அருள்வாக்கு வழங்க, சாமிக்குக் கிடா பலிகொடுக்க, பூக்குழித் தணலில் பெண்களின் பாதங்கள் மிதித்துக் கடக்க இரத்தத்தோடு கலந்த வழிபாடு நடக்கிறது. மலாயா மண்ணில் அதனை உணர்வோடு அரங்கேற்றுகின்றனர். ஆங்கிலேயத் தோட்டத் துரைமார்கள், துரைசாணிகள், குழந்தை குட்டிகள் அந்த வினோதத்தை வேடிக்கைப் பார்க்க வருகின்றனர். துரைமார்களுக்கு அனல் தாக்காமல் இருக்க கங்காணிகள் அடிமைச் சேவகம் செய்கின்றனர். வேட்டைப்புலியென ஜப்பான் படை நுழைந்திருப்பதை அறிந்ததும் தமிழர்களை நட்டாற்றில் விட்டுவிட்டுத் தப்பிக்கின்றனர். உயிருக்கு உயிராக நேசித்த கித்தா காடுகளுக்குத் தீயிட்டு அழிக்கின்றனர். உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலையிலும் இரப்பரின் பயனை ஜப்பான்காரன் அனுபவித்து விடக்கூடாது என்று ஆங்கிலேயர் தீவைத்து அழிக்க உத்தரவிடுகின்றனர். ஆங்கிலேயக் கைக்கூலிகளாக இருந்த கங்காணித் தமிழர்களும் அதற்குத் துணை போகின்றனர்.

சூழ்நிலை மாறிய கணத்திலேயே தமிழர்கள் கைவிடப்படுகின்றனர். நாடற்ற, பலமற்ற தமிழர்கள் நிர்கதியாக நிற்கின்றனர். இந்த நிர்கதியைப் பயன்படுத்திக் கொண்டு ஜப்பான் இராணுவம் தொடர்ந்து தொந்தரவு செய்கிறது. ஏதும் செய்ய முடியாத ஏதிலிகளாக நிற்கும் நிலைக்கு ஆளாகின்றனர். இரணங்களைச் சுமக்கும் காலம் தமிழர்களைக் கவ்வுகிறது.

ஹார்வார்ட் தோட்டம், பதினெட்டாம் கட்டை, தாத்தா கம்பம், பாலோ என்று இந்த மூன்று பக்கமான தோட்டக்காட்டுத் தமிழர்கள் சயாம் இரயில்பாதை பணிக்குப் பிடித்துச் செல்லப்படுகின்றனர். பெரும்பாலான ஆண்கள் வெளியேற ஜப்பான் இராணுவம் தோட்டக்காட்டில் நுழைந்து பெண்களைத் தொந்தரவு செய்யத் தொடங்குகிறது. வெள்ளைக்காரனுக்குக் கைகட்டி சேவகம் செய்த தமிழக்கங்காணிகள் அதிகாரம் பெற்ற ஜப்பானியர்களுக்குக் கையாளாக மாறுகின்றனர். பெண்களைச் சீரழிக்க வருபவனுக்குத் துணை நிற்கின்றனர். காட்டிக் கொடுக்கின்றனர். கூட்டிக்கொடுக்க முனைகின்றனர். தமிழ் இனம், தமிழ் பண்பாடு என்பதெல்லாம் வெற்று வார்த்தைகளாகின்றன. சுயநலவாதிகளாகத் துரோகிகளாகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்பவர்களாக மாறும் இவர்களின் சல்லித்தனங்களை மாந்தர்களின் வழிகாட்டுகிறார்.

பூப்பெய்திய பிஞ்சுக்குழந்தையை எப்படி எப்படியெல்லாமோ பாதுகாக்க முயன்றும் இறுதியில் ஜப்பான்காரனால் நாசமாக்கப்படுகின்ற அவலமே நடந்தேறுகின்றது. இந்தப் பாலியல் வேட்கைக்குப் பயந்து பன்னிரண்டு வயது சிறுமியைப் பாதுகாப்பதாகக் கருதி அவசர அவசரமாகத் திருமண ஏற்பாடுகள் செய்கின்றனர். கணவன் இல்லாத இளம் பெண்களின் வீடுகள் திடீர் திடீரென்று தட்டப்படுகிறது. அடுத்தவரை அண்டி ஒளிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது. பெண்கள் தண்ணீர் எடுக்கும் தொட்டிகளில் ஜப்பானியர்கள் நிர்வாணக்குளியல் செய்கின்றனர். அவர்களின் வேட்டைக்குப் பயந்து பதுங்குகின்றனர்.

திரும்பி வராத கணவன்மார்கள் இறந்துவிட்டதாகச் சொல்லி உறவுவழி ஆண்கள் பாதுகாப்பு என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றித் தன்வசப்படுத்துகின்றனர். வறுமை, குழந்தைகளின் சின்னச்சின்ன ஆசைகளை நசுக்கி எறிகிறது. பிரியமான உணவைக் கேட்டுக் கெஞ்சுகின்றனர். பசி இவர்களைத் துரத்துகிறது. தோட்டக்காடுகளில் கிழங்குகளைத் திருடித்தின்று ருசியாறுகின்றனர். நல்ல அரிசி உணவிற்காக அக்குழந்தைகளின் தாய் மலாய் விவசாயியின் இச்சைக்கு இணங்கிப் போகிறாள்.

கணவன்மார்கள், தம்பிகள், அண்ணன்கள் இல்லாத தோட்டக்காடு வெறிச்சோடிக் கிடக்கிறது. வெள்ளைக்காரர்களின் பிடுங்கல்கள் போல உறவுக்காரர்களின், ஜப்பானியர்களின், கங்காணிகளின் தொந்தரவுகள் வந்து தாக்குகின்றன. சந்தர்ப்பம் வாய்த்தால் எந்த வக்கிரத்தையும் செய்யத் துணிகிறார்கள். அவரவர்களின் தந்திரங்களுக்குத் தோதான வகையில் நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

அரும்புமீசைப் பையன்கள் தப்பித்து ஓடிப்போகிறார்கள். கம்யூனிச இயக்க கொரில்லா படையில் சேரும் சூழல் உருவாகிறது. பார்வதியை நாசம் செய்த கங்காணியையும், ஜப்பான்காரனையும் வெகு ஜாக்கிரதையாக பதுங்கி இருந்து அடித்து நொறுக்கி காட்டில் எறிகின்றனர். இது ஒருவகையான எதிர்ப்பு. ஒரு நீதி. முடிந்தவரைக்குமான எதிர்ப்பு. சிதைக்கப்பட்டத் தோட்டக்காட்டில் இப்படியான தன்மான உணர்வும் மிகச்சிறிதாக வெளிப்படுகிறது. ஜப்பான்காரன் மலேசியாவே தங்கள் கைகளுக்கு வந்துவிட்டது போல பள்ளியைத் திறக்கச் சொல்லி முழந்தைகளை ஜப்பான் தேசிய கீதத்தைப் பாடும்படி மிரட்டுகிறான். அதிகாரத் தோரணை அவனது ஆசைகளை வெளிப்படுத்துகிறது.

நல்லவர்களும் கெட்டவர்களுமான மனிதர்கள் பல்வேறு குணங்களைச் சொல்லாமல் காட்டுகிறார். அவர்களின் செயல்பாடுகளைத் துல்லியத்தோடு நிதானமாக விவரிக்கிறார். புண்ணியவான் எந்த இடத்திலும் இந்த மாந்தர்களுக்குள் புகுந்து பேசவில்லை. அவர்களின் இயல்புகளைப், பதட்டங்களை, காருண்யத்தைத், தந்திரங்களை, பசியை, காமத்தை மிகையில்லாமல் நிஜமான அவர்களின்  குரலில் நிஜமான ஆகிருதிகளை உருவாக்கிக் காட்டியிருப்பதில் ஓர் எளிமையும், தான் என்ற எழுத்தாளத் தோரணையை ஒதுக்கி வைத்து மாந்தர்களின் பாடுகளைச் சொல்வதிலேயே முனைந்திருக்கும் (விலகி நின்று) எழுதும் எழுத்துப்பணியும் இந்த நாவலின் படைப்பு ரீதியான பலம். இதனாலேயே, பல மாந்தர்களின் செயல்கள் அப்படி அப்படியே வாசகர்களின் நெஞ்சில் நிற்கின்றன. இந்த வாசக நெருக்கம் நன்றாகவே கூடி வந்திருக்கிறது.

நாவலில் உருவாகியிருக்கும் தோட்டக்காட்டுப் பின்னணியில் புறச்சித்திரங்கள் மொழியில் துல்லியத்தோடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காணும் காட்சிகள் மனதில் உருவாக்கும் புதிய வடிவை நுட்பமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அடர்த்தியான புறப்பின்னணி கொண்டதில்லை என்றாலும் போதுமான அளவு அழகாகக் கூடி வந்திருக்கின்றன.

ஜப்பான்காரனுக்குப் பயந்து தூக்கிட்டுக்கொள்ள முயலும் மைக்கெல் துரையைக் காப்பாற்றும் பேச்சாயி, தக்கிடோவிடமிருந்து பார்வதியைக் காப்பாற்ற தாத்தா செய்யும் ஏற்பாடுகள், தொடர்ந்து துப்புத்தேடி அலையும் சிவதாசின் கள்ளத்தனங்கள், பார்வதியைப் பாதுகாக்க முடியாமல் பறிகொடுக்கிற மலாய்க் குடும்பத்தாரின் கையறு நிலை, தக்கிடோவைக் கொலை செய்ததாக அப்பாவிச் சீன முதியவர்களைக் கொலை செய்யும் அடாவடித்தனங்கள், ஜப்பான்காரனுக்குத் தெரியாமல் இராசாத்திக்குச் செய்யும் மூப்புச்சடங்கு, சாக்கன் இறந்ததாகக் கூறி செவத்தியின் மனதை மெல்ல மெல்லக் கரைத்துத் தன் தந்திரத்தால் சேது வீழ்த்தும் சாகசம் என ஒவ்வொரு பகுதியும் நெருக்கடி மிக்கக் காலத்திலும் அதற்குரிய நிதானத்துடனும் இடம்விட்டு இடம் நகர்வதில் ஏற்படும் படபடப்பும் புதிய இடச்சூழலும் மாட்டிக்கொண்ட பின் ஏற்படும் திகைப்பும் நிர்கதியும் அசலாக உருவாகியிருக்கின்றன. நிகழ்வுகளும் சரி, அந்த நிகழ்வின் ஆதாரமாக நிற்கின்ற மாந்தர்கள் தங்கள் காரியம் பொருட்டு கையாளும் அணுகுமுறைகளும் சரி வெகு இயல்புடன் உருவாகியிருக்கின்றன. காலம் தந்த பதைபதைப்பு மனிதர்களை இயக்குவதோடு மனிதர்கள் தங்களுக்குத் தோன்றும் யோசனையின்படியோ சூழல் இழுக்கும் வழியிலோ சென்று சேர்கின்றனர். சொல்லப்போனால் பெண்கள் வீழ்ந்துவிடும் துயரத்தைச் சூழல் எவ்விதமெல்லாம் நிகழ்த்தியது என்பதை ஆர்ப்பாட்டம் இல்லாமல் காட்டுகிறார்.

மருது, தெரேசா, தாத்தா, ‘பேசாம இரு’ ‘பேசாம இரு’ என்று சொல்லும் இராணியின் அம்மா, செவத்தி, எஜமான விசுவாசத்தோடு காப்பாற்றும் ஆராயி, தொடர்ந்து மோப்பம் பிடித்துச் சுற்றும் சிவதாஸ் கங்காணி என இந்த மனிதர்கள் மிக நன்றாக உருவாகி இருக்கிறார்கள்.

பாச்சோக் கடற்கரைக்கு ஜப்பான் படை வருவதும், சயாமில் இரயில் பாதை போட அதிக சம்பளம் தருவதாக ஆட்களை ஏமாற்றி இழுப்பதும், திடகாத்திரமான இளைஞர்களைக் குறிவைத்து ஏமாற்றி பிடித்து ஏற்றுவதாகக் களேபரங்கள் நடக்கின்றன. கங்காணிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு தோட்டக்காட்டு லயத்தையும் காட்டிக்கொடுத்து ஆட்களைச் சிக்க வைக்கின்றனர். ஹார்வார்ட் தோட்டத்திலிருந்தும் பதினெட்டாம் கட்டை தோட்டத்திலிருந்தும் ஆட்கள் பிடிபடுகின்றனர். ஓரிரு வாரத்திற்கு முன்னதாகத் திருமணமான இளைஞர்கள் சிக்கிக் கொள்கின்றனர். அதுவரை தங்களை ஆண்ட வெள்ளைக்காரர்களோ கொஞ்சம் அதிகாரத்தோடு இருந்து கங்காணிகளாலோ தமிழர்களின் தெய்வங்களாலோ அருகில்  இருக்கும் சீனர்களாலோ மலாய்க்காரர்களாலோ தடுத்து நிறுத்த முடியாத பலமற்றவர்களாகத்தான் இருக்கின்றனர். இதையெல்லாம் மீறி மீசை அரும்பும் மகனைத் (கன்னியப்பன்) தப்பிக்க வைக்கிறாள் தாய். அவனைக் கொரில்லா வீரனாகச் சூழல் மாற்றி அனுப்புகிறது. நாஜிகளின் வதை முகாமில் சிக்கிய யூதர்களைப் போலத் தமிழர்கள் மனைவி மக்களைப் பிரிந்து  சயாம் இரயில் பணித்திட்டத்தில் மாட்டிக் கொள்கின்றார்கள்.

பதினெட்டாம் கட்டை தோட்டக்காட்டில் மாட்டிக் கொண்டவர்கள் இடைசாதியினராகவும் ஹார்வார்ட் தோட்டத்தில் மாட்டிக் கொண்டவர்கள் தலித் மக்களாகவும் கொள்ள இடமிருக்கிறது. இந்தத் தமிழர்கள் வாங்கும் அடிகள் உதைகள் நோய்கள் எல்லாம் ஒன்றேயானவை. வேற்றுமை இதில் இல்லை. மயில்வாகனம், சேவு, கருக்கான், சதாசிவம், சந்நாசி, சுள்ளாண்டி, பக்கிரி, தேனப்பன், பீட்டர், ஜோசப், அக்கினீஸ், சிங்கப்பூர் புரட்சிக்காரர் டேன் சூன் செங், ஆங்கிலேயர்,  இவர்கள் ஒவ்வொருவரும் பெற்ற மோசமான அனுபவங்கள் நிகழ்வுகளாகின்றன. மூன்று முகாம்களுக்குப் பிரித்து அனுப்பப்பட்டு வதைபடுகின்றனர். தக்கின், சிம்போங், (மறுபடி) மெய் குவாங் முகாம்களில் இவர்கள் பட்ட அடிகள், பெற்ற நோய்கள், வேலையின் அழுத்தங்கள், சாவில் நிகழ்ந்த மனப்பிறழ்வுகள், பெண் பிள்ளைகள் என்ன ஆனார்களோ என்று தவிக்கும் தரப்புகள்,  ஏதாவது பதிலடி தர வேண்டும் என்ற வெற்றுக் கொதிப்புகள், விடுதலை எழுச்சியின் ஒளிக்கீற்றுகள், அடித்தே கொல்லப்பட்ட மரணங்கள், எரித்துக் கொல்லப்பட்ட நோயாளிகள், தப்பிக்க நினைப்பவர்களுக்கு விழும் மூக்குடைப்புக்கள், மடிவுவாடை அடிக்கும் ஒவ்வாத உணவுகள், கொசுக்கடிகள், இடைவிடாத வேலைச்சுமைகள் வயிற்றுப்போக்குகள், காலரா உண்டாக்கிய மரணங்கள், சந்தேகத்தின் பேரில் வாங்கும் அடிகள் என தமிழர்கள் பட்டத் துயரங்களை முகாம்களின் வழியே காட்டுகிறார். அதில் வெள்ளைக்காரர்களும் சீனர்களும் உண்டு. அதிகமும் இவர்கள் அரசியல் கைதிகளாக வதைபடும் நிலையைத் தொட்டுக்காட்டி இருக்கிறார்.

காஞ்சனாபுரி வரை இரயிலில் சென்றவர்களை இறக்கியதும் அடுத்து மிகநீண்ட கால்நடை பயணத்திற்கு ஆசனவாயிலில் மருந்து திணித்துத் தயார் செய்கிறார்கள். இயற்கை உபாதைகள் வராமலிருக்க இரண்டு நாள் மூன்று நாள் வெளிக்குப் போகாமல் அவதிபடுகின்றனர். அதைப்பற்றி இரகசியமாகப் பேசிக்கொள்கின்றனர். ஆசனவாயில் மருந்து திணித்ததன் காரணத்தைப் பின்னால் புரிந்து கொள்கின்றனர். அலுப்பும் உடல்நோவும் நடையைத் தளர்த்துகிறது. தயங்கி நடப்பவர்களுக்கு அடி விழுகிறது. எங்கும் ஜப்பான்காரன் சைக்கிளில் லத்தியோடுப் பின்தொடர்கிறான். மலம் கழிக்காததால் வயிற்றைச் சீர்கேடாக்குகிறது. வாந்தி எடுக்கின்றனர். தாகத்திற்கு நீர் தராமல் மிரட்டி நடத்திக்கொண்டே இருக்கின்றனர். என்ன கொடூர தாக்குதல் விழுந்தாலும் அதையும் மீறி தாகத்தைத் தணிக்க தேங்கி இருக்கும் நீரைப் பருகுகின்றனர். அவசர அவசரமாக வெளிக்கு இருந்துவிட்டு ஓடி வந்து வரிசையில் சேர்கின்றனர். சுள்ளாண்டி என்ற மாந்தனை வைத்து இந்த வழிநடை அனுபவத்தைக் காட்டுகிறார். வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நடக்க முடியாமல் படுத்துவிட அவனைத் தூக்கிச் சுமந்து செல்லும் சுமையும் அவர்கள் மேல் விழுகிறது. முகாமில் சேர்க்கப்பட்டு வேலை செய்ய முடியாமல் இறந்தும் போகிறான். இந்த மரணம் அவனது மனைவி குப்புச்சிக்குச் சென்று சேர்வதில்லை. ஒவ்வொரு மரணமும் இப்படித்தான் நிகழ்கிறது.

இப்படி ஒவ்வொரு மாந்தரையும் முன்னிறுத்திச் சயாமில் பெற்ற அனுபவங்களைச் சொல்கிறார். உண்ண முடியாத கருவாடு, எலிப்புழுக்கை கலந்த உணவு, கடுங்குளிரில் தற்காத்துக் கொள்ள காகிதத்தையோ பனைமட்டையையோ சுருட்டிப் பீடியாகச் சுருட்டாகப் புகையை இழுத்துக்கொள்ளத் தவிக்கும் தவிப்பு, அத்தாப்புக் கூரை வழியே கொட்டும் பனி, அட்டைக்கடிகள், அரிப்பு, என நாள்தோறும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

ஜோசப்புடன் வந்த அவனது மனைவி அக்கினீஸ் ஜப்பானியரிடம் அடி வாங்கிக் கர்ப்பிணியாகவே இறந்து போகிறாள். உடல்நலமின்றி வேலை செய்யும் சாக்கனுக்கு மூங்கில் தப்பை அடி விழுகிறது. விஷக்காய்ச்சல் கண்டு சாவின் தருவாயில் இருக்கும் சேவுவை உயிரோடுப் புதைக்க வைக்கிறான். வெளிக்குப்போன இடத்தில் விஷநாகம் கடித்து உடல் வீங்கிச் சாகிறான் சங்கிலி. அக்கினீஸின் கணவன் மனப்பிறழ்விற்கு ஆளாகி புதைமேட்டில் அலைகிறான். சிகிச்சைக்குப் போன வேலைய்யா ஒரு காலை இழந்து வருகிறார். ‘பெரி பெரி’ நோய்க்கும் விஷக்காய்ச்சலுக்கும் ஆளாகின்றனர். வேலை செய்ய முடியாமல் தடுமாறும் சாக்கனை மூங்கில் தப்பையால் அடித்தே வேலை வாங்குகின்றனர். இத்தனை கொடூரங்கள் ஒருபுறம் நடக்க மாலை வேளைகளில் ஜப்பானியர்கள் மது அருந்தி சயாமிய பெண்களுடன் இரவெல்லாம் கொட்டகையில் கொட்டம் அடிக்கின்றனர்.

நோய்வாய்ப்பட்ட சதாசிவம் சிகிச்சை முகாமில் மாட்டிக்கொள்கிறான். எழுந்து நகர முடியாத நோயாளிகள் குப்பையாகக் கிடக்கின்றனர். புண் நாற்றம் வீசுகிறது. ஒவ்வொரு நாளும் மரணம் நிகழ்கின்றது. சரியான மருத்துவரும் மருந்தும் இல்லாமல் அழுகிக்கிடக்கின்றனர். ஜப்பானியப் படையிடம் அரசியல் கைதியாகச் சிக்கிய சிங்கப்பூர் தேன் சூன் கெங் புரட்சிக்காரரை சிகிச்சைக் கூடாரத்தைத் தீயிட்டு எரிக்கும்படி நெருக்குகிறான். மானுட விடுதலையின் மனிதாபிமானி, லட்சியவாதி முதலில் மறுத்தாலும் தண்டனைக்குப் பயந்து நெருப்பிடும் சதிக்கு ஆளாகிறார். இவையெல்லாம் மாந்தர்களின் அனுபவத்தின் வழியாகக் காட்டுகிறார்.

சாக்கன் நோயிலிருந்து மீண்டாலும் தோட்டக்காட்டில் இறந்ததாகச் செய்தி பரவ செவத்தியை மருது வளைத்துப் போடுகிறான். தீயில் சதாசிவம் எரிந்து போயிருக்கலாம் என்ற செய்தி தெய்வானைக்குத் தாலியிறக்கும் சடங்கு முறையாக நடந்தேறுகிறது. நேதாஜியின் புகைப்படத்தை லயத்து வீடுகளில் மாட்டி ஜப்பான்காரனிடமிருந்து தப்பிக்கப் பார்க்கின்றனர். சயாம் இரயில் பாதையைப் பார்வையிட வந்த நேதாஜி பாட்டாளிகளிடம் சின்ன விசாரிப்பு கூட இல்லாமல் கடந்துபோய் விடுகிறார். குரலற்றத் தமிழர்கள் பகடைக்காய்களாக உருட்டப்படுகின்றனர். வாழ்வின் முரண்களை உணர்ந்து கொள்ளும் விதமாக நாவல் முழுக்க விரவியிருக்கின்றது. ஒருபக்கம் நம்பிக்கை இன்னொரு பக்கம் நம்பிக்கை சிதறடிக்கப்படும் காட்சிகள். இவற்றைக்கூடப் புண்ணியவான் எதிர் எதிராக வைக்கவில்லை. வாசகன் கொண்டுகூட்டி பார்த்துக்கொள்ளும்படியான எழுத்தாக்கமாக இருப்பதையும் சொல்ல வேண்டும். தோட்டக்காடு ஓர் உலகமாகவும் சயாமில் ஓர் உலகமாகவும் இயங்கிக் கொண்டிருப்பதைத்தான் காட்டுகிறார்.

ஹிரோஷிமா நாகாசாக்கி அணுகுண்டு வீச்சால் இரயில் பாதை பணி நிறைவு பெறுகிறது. அடித்தும் உதைத்தும் அதிகாரம் செய்துகொண்டிருந்த ஜப்பான் படை கமுக்கமாக யாருக்கும் தெரியப்படுத்தாமல் வெளியேறி விடுகிறது. தோட்டக்காட்டை நோக்கி நிம்மதியைத் தேடிப் புறப்படுகின்றனர். அதன் சீரழிவு தெரியாமலேயே நம்பிக்கையுடன் திரும்புகின்றனர். இங்கேயே செத்து மண்ணாகிப் போனது தெரியாமல் குப்புச்சி போன்றோர் கணவனுக்காக் காத்திருக்கின்றனர். மகளின் உண்மை நிலை  தெரியாமல் சதாசிவம் பாசத்தை ஏந்திக்கொண்டு மகள் கனவோடு இரயில் ஏறுகிறார். இப்படி எத்தனையோ தலைகீழ் மாற்றங்கள் ஒருவருக்கு ஒருவர் தெரியாமலேயே காலம் நிகழ்த்தியிருப்பதை அறியாமல் காத்துக் கிடக்கின்றனர். இருவேறாகப் போன காலத்தின் சித்திரத்தை இந்நாவல் அமைதியான தொனியில் விரித்து வைத்திருக்கிறது.

உதைபடும் போதெல்லாம் இந்த ஜப்பான்காரர்களுக்குத் தக்க பதிலடி தர நினைக்கிறார்கள். முடியாமல் போகிறது. சேவு மரணத்தின் தருவாயில் கிடக்கிறான். அவனை உயிரோடு புதைக்கும்படி மிரட்டி நிர்ப்பந்தம் செய்கிறான். அந்த அதிகாரியின் கண்களைப் பக்கிரி இருகணம் நேருக்கு நேராக குருகுருவென பார்க்கிறான். அந்தப் பார்வையைப் பொருட்படுத்தாமல் அவர்களைத் தூக்கச்சொல்லி வேகப்படுத்துகிறான். அந்தப் பார்வை ஜப்பான்காரனுக்கு கொந்தளிப்பை உண்டாக்குகிறது. அந்தச் சம்பவத்தால் பக்கிரி மன உளைச்சலுக்கு ஆளாகி துணிச்சலாக ஒரு முடிவெடுக்கிறான். புண்ணியவான் இதையெல்லாம் நினைக்காமல்தான் எழுதுகிறார். இது, நாவலில் பொருத்தமாகக் கூடி அர்த்தப்பரிமாணம் கொள்கிறது.

ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக மானிட உணர்வுகள் வெளிப்படுகின்றன. சூழலுக்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்றபடி மனிதர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். கொட்டகைக்கு நெருப்பிடும் தேன் சூன் செங்கை ஜப்பான் அதிகாரி நெருக்குகிறான். எந்தப் பாவமும் அறியாத நோயுற்ற பாட்டாளிகளைக் கொல்ல அவனது மனம் மறுக்கிறது. அவனது மறுப்பு அவனுக்கு ஆபத்தை தரும். மனித உணர்வின் அல்லாட்டத்தைச் சிறப்பாக வெளிப்படுத்திய பகுதி இது. வெள்ளைக்கார துரை ஒரு சுருட்டுக்காகச் சக பாட்டாளி தமிழனிடம் மன்றாடும்போது  காலத்தின்முன் சாதாரண மனிதனாகிறான். ஆராயி தாத்தாவிடம் வெளிப்படுவது நெருக்கடியில் அல்ல. அந்த மனிதர்களிடம் இயல்பிலேயே படிந்திருக்கும் நல்லியல்பினால் உண்டானது. நல்ல மனிதர்களின் சின்னச்சின்ன நற்காரியங்கள் பயனற்றுப் போகின்றன. அவர்கள் ஏதும் செய்ய முடியாத நிலையில் நிற்கின்றனர். மோசமான சூழலைப் பயன்படுத்தி துரோகம் செய்யவும் விளைகின்றனர். விதவிதமான மானுட ஆட்டங்கள் காலத்தின் முன் நிகழ்கிறது. காலம் இந்நாவலின் மையமாக நின்று மனிதர்களைப் பந்தாடுகிறது.

கையறு நாவலில் ஓங்கி ஒலிப்பது துயரத்தின் குரல். காலம் தமிழர்களைக் கையறு நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்துகிறது. இந்தச் சிதறடிப்புக்கு ஆட்பட்டதன் காரணம் என்ன? தமிழர்கள் ஒன்றுசேர முடியாதபடி தோட்டக்காட்டின் தொடர்புகளற்று வீழ்ந்து கிடப்பது, நாடற்றவர்களாக இருப்பது, கேள்வி கேட்க முடியாத சிறுபான்மையினராக இருப்பது, அறியாமையில் இருப்பது, அடுத்தவர்கள் சொல்வதை நம்புவது. இதையெல்லாம் விட, தமிழர்களின் பரம்பரைச் சொத்தான வறுமையினால் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறியது. மலாயா மண்ணில் அவர்களின் மூலதனமான உழைப்பே அவர்களைச் சீரழிக்கிறது. நாடற்றவர்களை யார்யாரோ பயன்படுத்திக் கொண்டு தூக்கி எறிந்துவிட்டுச் செல்கின்றனர்.

இந்த அலைகழிப்பிற்குப் பொருள்தான் என்ன? யார் யாருக்கோ நடக்கும் உலகப்போர் சம்பந்தமற்ற மலாயா தமிழர்களை இழுத்துச் சிக்க வைக்கிறது. எத்தனையோ இழப்புக்கள். எத்தனையோ அவமானங்களுக்குப் பின்னும் அவர்கள் பெற்றது என்ன? வெறுமை. அந்த வெறுமையோடு மீண்டும் வாழ்க்கையை நோக்கித் திரும்புவதை நாவல் சொல்கிறது.

புண்ணியவான் முன்னால் தத்துவங்களைவிட வாழ்க்கையே முன் நிற்கிறது. நீண்ட சயாம் இரயில்பாதையின் அடியில் தமிழர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன. எளிய பாட்டாளித் தமிழர்களின் நம்பிக்கையும் ஏமாற்றங்களும் அதன்மேல் படிந்திருக்கின்றன. இது தமிழர்களின் தியாகமோ அர்ப்பணிப்போ அல்ல. அவர்கள் பட்ட கொடுந்துயர வாழ்வு. அந்த வாழ்வை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் புண்ணியவான். பலிகடா ஆக்கப்பட்ட தமிழர்களின் ஆவி அத்தண்டவாளம் நெடுக மிதப்பதைச் சொல்லியிருக்கிறார். தமிழர்கள் கண்டது என்ன? வெறுங்கையோடு வந்து வெறுங்கையோடு போனதுதான். ஒன்றரையாண்டு பாடுபட்டுச் சேர்த்த ஜப்பானியரின் பணம் செல்லாமல் போகிறது. மீண்டும் ஆங்கிலேயன் ஆட்சிக்கு வரப்போகிறான். அப்போது தெரிந்துகொள்ள நியாயமில்லை. ஆனால், வாழ்ந்தாக வேண்டும். காயங்களோடும் கண்ணீரோடும் நம்பிக்கைகள் பொய்த்துப் போகப்போவதை ஏற்றாக வேண்டும். மலாயா தமிழர்கள் துயரம் நதியாக ஓடுகிறது. புண்ணியவான் ஓரிடத்தில் நிறுத்தி நமக்குக் காட்டியிருக்கிறார்; கையறு நாவல் வழியாக. மலேசிய நாவல் இலக்கியத்திற்கு செழுமை பெறும் நாவலாகத் தந்திருக்கிறார். பம்மாத்து இல்லாமல் உண்மையை  நாடிய நாவல். நல்ல  நாவல். தமிழுக்கும்தான்.

பக்கிரி முகாமிலிருந்து தப்பிச்செல்லும் பகுதி இந்நாவலின் சிறந்த பகுதிகளில் ஒன்று. அவனது பயம் காடு தரும் விநோத உருவங்கள், லட்சியம்,  நிலவு தரும் காட்சிகள், திக்கற்ற பயணம், நம்பிக்கை விடுதலை உணர்வு என எல்லாம் மாறிமாறி அவனை இயக்குவதைச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

ஓடும் அவனுக்கு தன் நிழல் அச்சமூட்டியது, பின் ஓடஓட பழகிப்போனது. பின் தன் நிழலே தனக்கு உதவியாகப் பின்தொடர்ந்தது.

மரங்கள் வளர்ந்து நீண்டு கிடந்த நிலத்திற்குப் பின்னால் மலைத்தொடர்களின் உச்சிகளும் பள்ளத்தாக்குகளும் நெளிந்தன

ஒரு வில்லிலிருந்து ஒரே நேரத்தில் பாய்ச்சப்பட்ட அம்பென வனத்தை ஊடுறுத்துப் பாய்கிறது தண்டவாளம்.  அதன் முனையில்  நிலவு மேகம் மறைந்து விளையாடும் வியாபகத்தைக் கடந்து ஒளிர்ந்தபடியே பயணிக்கிறது.  நிலா, அது ஊர்ந்து செல்லும் வினோத பறவை.

தண்டவாளத்தில் விழுந்து கிடப்பதாகத் தெரியும் சிறிதும் பெரிதுமான பாறைகள் ஒரு கணம் யானையும் கன்றுமாகத் தோன்றுகின்றன.

பக்கிரியின் தனிமையான பயணத்திற்கும் உருவாகும் எண்ணத்திற்கும் புறச்சூழலுக்குமான தேர்ந்த  மொழி உருவாகி நெருக்கம் கொள்ள வைக்கிறது.

புண்ணியவான் கூடுதல் குறை இல்லாமல் போதுமான அளவு மாந்தர்களின் கண்கள் வழி  புறஉலகத்தை விவரணைப்படுத்தி வருகிறார்.  அதிலே  துல்லியமான விவரணை இருக்கிறது.  பூசாரி நீரில் மூழ்கி வருகிறார்,  இடுப்பு வேட்டி புட்டத்திலும் தொடையிலும் ஒட்டிக்கொண்டு சிற்சில இடங்களில்  சிறிதும் பெரிதுமான வெள்ளைக் கொப்புளங்களால் விம்மிக்கிடந்தன என்று எழுதி விட முடிகிறது.

கூத்தைப் பார்க்கத் தாமதமாக வருபவர்கள் கையில் மண்ணெண்ணெய் விளக்கை ஏந்தி வருகின்றனர். ‘பிளந்த விறகில் புழு இருப்பதைக் காண முடிகிறது .புண்ணியாவானின் புற உலக கவனிப்பு இப்படித் துல்லியமாக அமைந்து நாவலுக்கான கலையமைதியை நல்குகிறது.

ரயில் புகையின் நாட்டியத்தை ‘வாலைச் சுருட்டிச் சுருட்டி இரையைக் கொத்தப் பாய்வது போன்று புகை மேலேறி மறைந்தன’ என்று எழுதுகிறார்.  ‘அந்நியச் சூழல் உருவாக்கும் எண்ணத்தைப் புதிய ஊரில் நண்பர்கள் அருகில் இல்லாதபோது பெருங்கூட்டத்தில் இருப்பதுகூட தனிமையாக இருப்பதற்கு ஈடானது என்பதை உணர்த்தியது போன்ற தத்துவமும் அவர் எண்ணத்தில் உதிக்கிறது.

வெள்ளைக்காரன் கோவணத்துடன் வேலை செய்கிறான்.  மூங்கில் கழியால் அடி விழுகிறது.  வெள்ளைக்காரர்களை வேலை வாங்குவதை விட அவர்களின் மானத்தை வாங்குவதுதான் தலையாய நோக்கமாக இருந்தது ஜப்பானியர்களுக்கு.  இப்படியான அவதானிப்புகள்.

காட்டை வெட்டி ஊடே தண்டவாளம் போடுகிறார்கள்.  ‘அடர்காட்டைத் திறந்து விட்டது போலத் தண்டவாளம் போடப்படும் பாதை வெட்டவெளியாகி நீண்டுகொண்டே போகிறது.  இருண்டு கிடந்த இடத்தில் ஒரு குறுகிய நிலப்பகுதி வெளிச்சமாகக் கிடக்கிறது’’. இவ்வாறு புதிய தோற்றத்தை கண்முன் கொண்டுவர முடிகிறது அவரால்.

தொடர்ந்து, உடன் வேலைசெய்த நண்பர்கள் நோயால் இறக்கின்றனர். ‘பொழப்பத் தேடி வந்தோமுன்னு நெனச்சோம், சாவத்தேடி வந்திருக்கோம் என்று அனுபவம் தரும் எளிய வெளிப்பாடு நாவலை இந்த அவதானிப்புகள், விவரணைகள், மனம் கொள்ளும் கோலங்கள் உயிர்ப்புள்ள கலையாக மாற்றுகின்றன.

நாவலின் வடிவம் சார்ந்த என் பார்வையை  முன்வைக்கலாம் என்று நினைக்கிறேன்.  புண்ணியவானின் கவனம் முழுக்க விஷயம் சார்ந்த தேர்வுகளில்  குவிந்திருக்கிறது.   சிறுகதையாளனின் மனம் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு பார்வையை வெளிப்படுத்தக் கூடியது.  இந்த அம்சம் இந்த நாவலில் கூடி வந்திருப்பது நல்ல அம்சமே.  அதே சமயம், மேலதிகமாக தொடர்புகொள்ள வேண்டிய  இழைகள் அந்தந்த இடத்தில் துண்டிக்கப்பட்டு  இணைவு கொள்ளாமலும் இருக்கின்றன.  இந்த இணைவுகள்தான்  வாழ்வை முழுதாகப் பார்க்க உதவுகின்றன.  உதாரணமாக,  பூப்பெய்திய சிறுமி  பார்வதியை தக்கிடோ தூக்கிச்சென்று கற்பழிக்கிறான்.  இது நாவலின் ஆரம்பத்திலேயே வருகிறது. அடுத்து அவள் என்ன ஆனாள் என்பது தெரியாமலே நாவலில் கைவிடப்படுகிறது.  ஒரு கற்பழிப்பு நிகழ்ந்ததற்கு உதாரணம் காட்டுவதல்ல நாவல். அதன் முழுமையைக் காட்டுவதுதான் நாவல் பார்வை என்பது.

ஜப்பான்காரன் நுழைகிற நாளிலிருந்து ஹிரோஷிமா நாகசாகியில் குண்டு வீசிய நாள்வரையிலான  ஒரு கொதிநிலையான  காலத்தை நாவலுக்கு எடுத்துக் கொண்டுள்ளார்.  ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் வாழ்க்கையைச் சொல்கிறார்.  நன்றாகவே இருக்கிறது.  அதன் அடுத்த நகர்வு  என்னவிதமான பாதிப்புக்களை எதிர்கொள்ளும்படியாயிற்று என்பதான இடங்கள் பேசப்படாமல் தனித்தனியாக நிற்கின்றன.  சிறுகதையிலிருந்து நாவல் வேறுபடுகிற  இடம் இதுதான்.  சிதைந்த உலகை சில இழைகளால் ஒருங்குகூட்டிப் பார்க்கும்போது மனிதர்களின் வேறுமுகங்களைக் காணமுடியும்.  அப்படியான முகங்களை இனிமேல் சந்திக்க போகிறார்கள் என்ற  சூசகம் நாவலில் இருக்கவே செய்கிறது. நான் சொல்ல வருவது மனிதர்கள் பற்றி மட்டுமல்ல.  எரிந்த கித்தா காடுகள்,  ஓடிப்போன வெள்ளைக்காரர்கள்,  வந்து சேர்ந்த கொரில்லாக்கள்  இப்படியான புதிய மாற்றத்தையும் சேர்த்தேதான் சொல்கிறேன்.

அந்தக் காலத்தில் என்னென்ன விதமான சம்பவங்கள் நிகழ்ந்தன என்பதற்குச்   சாட்சியமாய் புனைவுகளை வைத்தால் போதும் என்ற பார்வை புண்ணியவானிடம் இருக்கிறது. நாவலில் தேவையற்ற சிறுபகுதிகளைக் கூட இல்லாமல் ஆக்குகிறது.  இது நாவலுக்குச் செறிவைத் தருகிறது.  ஆனால், தேவையற்ற பகுதிகள் நாவலில் மானிட வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிவிடக் கூடும்.  அழகாக்கும். ஆழமாக்கும்.  கவித்துவ கணங்களைச் சென்றடையும்.  அந்தக்காலத்தில் நடந்த பாதிப்புகளை மட்டுமே சொல்ல வேண்டும் என்பதில்லை.  அதைச்சுற்றி வேறு நிகழ்வுகளும் நிகழ்ந்திருக்கக் கூடும்.  பறவைகள் வந்து சென்றது கூட நாவலின் ஒரு  பகுதியாகிவிடும்.  நாவல்  புண்ணியவானின்    கைப்பிடியில் அதிகமும் இயங்குகிறது.  அவர் கொஞ்சம் கயிற்றைக் கையிலிருந்து விட்டுவிட்டுப் பின்தொடர்ந்தால் வேறு பகுதிகளும் திறந்திருக்கும்.  அது  படைப்பை இன்னும் பலம் உடையதாக ஆக்கும். எதிர்மறை மாந்தனாக வரும் சேது, நேர்மறை மாந்தனாக வரும் பக்கிரி,  இவ்விருவரின் ஆட்டங்களைக் கைவிட்டுத்தான் பின்தொடர்ந்து இருக்கிறார் என்பதைக் கவனித்தால் அதன் வீச்சு உயர்வது தெரியும். இது நாவலின் கலை வடிவம் பற்றிய புரிதலை உண்டாக்கும். தேன் சூன்  செங் நாவலில் தத்தளிப்போடு வெளிப்படுகிறார் என்பது நல்ல இடம்தான்.  ஆனால், அவர் நாவலில் முன் அறிமுகம் இல்லாமல்  திடுக்கென வருகிறார். இரண்டாண்டு பணியில் அவரை ஏதோ ஒரு ஓரத்தில் ஊடாட விட்டிருக்க வேண்டும்.  அப்படி ஊடாடியிருந்தால் இன்னுமே கூடுதல் அழுத்தம் பெற்றிருப்பார். புண்ணியவான் விஷயத்தைச் சொல்லிவிட்டால் போதும் என்று நினைக்கிறார். இது சிறுகதையாளனுக்கு உடையது. நாவல் இன்னும் கொஞ்சம் எட்டப்பார்த்து எழுதச் சொல்கிறது சரியான  விஷயத்திற்காக.

நாவல்  அன்றாடத்தனத்திலிருந்து விரிகிறது.  அப்படியிருக்க நேதாஜி சயாம் ரயில் போகும் இடத்திற்கு வந்து போகும் செய்தியைக் குறிப்பாக இருவர் பேசிக் கொள்கின்றனர்.  அவர்  அசட்டையாகப், புரட்சிக்கான மனநிலையில் பாட்டாளியின் துயர வாழ்வை விசாரிக்க வேண்டும் என்ற நினைவு இல்லாமலும்,  அல்லது உதிரம் குடித்த பணியாளர் துயரம் என்னவென்று தெரியாமலும்,  கேட்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போயிருக்கலாம்.  அதை நிகழ்த்தி இருக்க வேண்டும்.   புண்ணியவான் எழுத்து  பாணியை காட்சி ரூபமான புனைவாக்கமாக இருக்கும்போது இதை எப்படித் தவற விட்டார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.  ரங்கசாமியும்,  சண்முகமும் தங்களது  நாவலில் நேதாஜி பற்றி  சொல்லிவிட்டார் என்று விவரிக்காமல் விட்டாரா என்று  தெரியவில்லை.  ஆனால் அவர்கள் சொல்லாத முறையில் நேதாஜியை புனைவில் சந்திக்க வைத்திருக்க முடியும்.

ஜப்பான்காரன் நுழைந்ததும் டாலர் வீழ்ச்சி பற்றியும் ஏற்றுமதி இறக்குமதி பற்றியும் பேச்சு வருகிறது.  சயாமிற்குள்  ஜப்பானியர் வரும்போதே  அவர்களுடன் இணக்கமான அரசியல்  வைத்துக் கொண்டதாகப் பேச்சு வருகிறது.  இம்மாதிரி விஷயங்கள் உடனுக்குடன் தோட்டக்காட்டு மக்களின் செவிகளுக்கு வர வாய்ப்பில்லை.  நாவல் வளர்ந்து ஜப்பானியரின் ஊடாட்ட அனுபவங்கள் வந்த பின்பு வந்திருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும்.

நாவலின் வடிவம் சார்ந்து கூட இன்னும் கவனத்தோடு வடிவமைத்து இருக்கலாம். ஒவ்வொரு அத்தியாயமும் வாசகனுக்குச் சிக்கலில்லாமல் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.  வாசகர்களுக்காக எளிமைப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.  மற்றபடி நாவல் அதன் உண்மைத்தன்மையால்  பலமாக நிற்கிறது.

ஓர் இடத்தை, நிகழ்வை, காட்சியை, காட்சி தரும் அனுபவத்தை, காட்சி மனதில் ஏற்படுத்தும் மாயத்தை,  வித்தியாசமான  எண்ணங்களை,  நிலக்காட்சியை அதன் மாயரூபத்தை ரொம்பவும் பிரயத்தனப்படாமலேயே எழுத்தில் கொண்டு வந்துவிட முடிகிறது புண்ணியவானால். அதே சமயம் அவற்றை  அளந்து கொஞ்சமாக வைக்கிறாரோ என்ற உணர்வும் சில இடங்களில் ஏற்படுகிறது.  இரும்புத் தண்டவாளங்களைத் தூக்கிச் சுமக்கும் அவர்களின் தோல்  அழுந்திச் சிவந்திருப்பதை எழுத முடிகிறது.  பெருமரம் வெட்டுப்பட்டு மண்ணில் சரிந்து விழும்போது எழும் ஓசை புயலொன்று சடுதியில் ஏறிச்சென்ற சலனமாய் எழுத முடிகிறது. இந்த அளவு போதும் என்று நினைக்கிறாரோ என்று தோன்றுகிறது. பணிபளுவின் முழுச்சித்திரம்,   அழிக்கப்படும் காட்டின் முழுச்சித்திரம் இன்னும் அடர்த்தி கொண்டதாக இருக்கும்.  ஒரு மரம்  வீழ்வது முழுச்சித்திரத்தைத் தந்துவிடாது.

நிகழ்விற்குப் போதுமான தோற்றங்களை ஏற்படுத்தினால் போதும் என்ற மன அமைப்பு கவித்துவ  கணங்களுக்கான  புனைவை இழக்கிறது.  அது மலரும் போதுதான் நாவலின் கவித்துவ கணங்கள் கூடிவரும்.  அது  புண்ணியவானின் எழுத்துப் பாணியினாலேயே தடைபடுகிறது.

ஓரிடத்தில்  சயாமியப்பெண் யானையை ஓட்டிச்செல்லும் பாகியாக ஒரு வரியிலும்,  சயாமிய பெண்ணின்  உடை பற்றி ஓர் இடத்தில் ஒரு  வரியும்,  ஜோசப்பை அழைத்து வந்துவிடும் இடத்தில் ஒரு வரியுமாக வருகிறாள்.  இதைத்தான் அடர்த்தியற்ற தோற்றதன்மை என்கிறேன். சயாம் நாட்டில் சயாமிய ஆடவர்களைப் பார்க்க முடிவதில்லை.  அவர்களது வறுமை, உழைப்பும் கூட அறிய முடிகிறது.

அக்கினீஸ் வரும் பகுதியில் பாட்டாளிகளின் பேச்சில் நிராயுதபாணியாக என்ற சொல் வருகிறது. சிவதாஸ்  பிடிபட்ட நிலையில் முதுகுப்புறம் எழுபத்தைந்து டிகிரிக்குச் சாய்ந்தது என்று கிண்டலாகச் சொல்லப்படுகிறது.  செவத்தியின் கையறு நிலையை அவள் படித்துப் போட்ட நாளிதழ் போலக் கிடந்தாள் என்று காட்சிப்படுத்தப்படுகிறது. நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்தச் சொற்கள் அறிவார்த்தமான இடங்களில் சொல்லப்படும்போது நெருடலாக  இருக்காது. பாட்டாளிகளுக்குப் பழக்கமில்லாத  சொற்களை பயன்படுத்தும்போது அம்மக்களுக்கு அந்நியத்தன்மையான சொற்களாக இருக்கின்றன.  75 டிகிரி சாய்வு என்பது நல்ல ஒப்புமையாக இருக்கலாம். சூழலுக்குப் பொருத்தமில்லாதது. கல்விப்புலம் சார்ந்தது.

அதேசமயம் மலேசியத் தமிழர்களிடையே புழங்கும் சில தனித்துவமான சொற்கள்,  ஜப்பான்காரனின் அதிகார மொழி,  இருநூறு ஆண்டுகளுக்கு முன்னமே தமிழகத்திலிருந்து மனதில் ஏந்தி வந்த வட்டார மொழி, சில மலாய் சொற்கள் என மலேசியத் தமிழர்களின் மொழி கலந்து புதுமை பெற்று வெளிப்பட்டிருக்கிறது. இது நாவலை மலேசியத்தன்மை ஆக்குகிறது.  மலேசிய மண்ணின் மரங்கள் செடிகள் கொடிகள் என்று வரும்போது இன்னும்  வேரூன்றி நிற்கிறது.

இது என் பார்வைதான். இந்தப் படைப்பாக்கச் செயல்பாடுகளையும் தாண்டி  கையறு நாவல் நன்றாகவே உருவாகியிருக்கிறது. தேர்வு  சார்ந்தும் பார்வை சார்ந்தும்  இந்நாவலில் கூடி வந்திருக்கும் விஷய கனம் பலமாக இருக்கிறது.

தங்களோடு வேலை செய்த மனிதன் மரணமுற்ற போது அவனுக்கு ஒரு நடுகல்லைத் தூக்கி வைக்க  நினைக்கிறார்கள். கர்ப்பிணியான  அக்கினீஸ் மரணமுற்ற போது ஒரு சுமைதாங்கி கல் வைக்கிறார்கள். அக்காலத்தில் பெண்கள் கைலி வேட்டி கட்டி இருந்ததைச் சொல்வது கூட முக்கியம்தான். புனைவுக்கு இவை வலிமை சேர்க்கின்றன.

தெரேசா குனிந்து கதிர்களைச் சேர்த்து கட்டும்போது ‘அவன் நிழல் அவள் மேல் விழுந்திருந்தது எனச் சொல்வது, எவ்வளவு நுட்பமான இடம்!  ராசாத்திக்கு பூப்புச்சடங்கு நடக்கிறது.  மூன்றுநாள் தீட்டு கழிக்க, உலக்கை, பூ, சீனச்செய்தித்தாள் வைக்கின்றனர்.  அதையெல்லாம் விட தாளைச்சுற்றி காத்து கருப்பு அண்டாமல் இருக்க மூன்று விளக்குமாறு குச்சிகளை உருவி தாள் சுற்றி வைக்கிறாள். அந்த எளிமை ரொம்ப அழகானது.

தெய்வானையின் தாலி இறங்கும் சடங்கில்,  தாலியைப் பால்சொம்பில் போடுவதும், செங்கலை நிறுத்தி கணவனின் ஆன்மா நல்ல நிலையை அடைய வேட்டியை வைத்து வணங்குவதும் மலேசியாவில் வழக்கமாக இருக்கிறது. இந்தப் பண்பெல்லாம் கையறு நாவலை அடர்த்தியாக்குகிறது.  அழகாக்குகிறது.

***

– சு. வேணுகோபால்
1.11.2020

(கையறு, நாவல் , கோ.புண்ணியவான் பதிப்பகம், இந்திய விற்பனை உரிமை “பி ஃபார் புக்ஸ் – 9042461472” அல்லது இணையத்தில் வாங்க இங்கே சொடுக்கவும்)

குரலற்றவர்கள்

0

ஹரிஷ் குணசேகரன்

ரோனா ஊரடங்கு அறிவிக்கப் படுவதற்கு முன்பே அவனுடைய வேலை தள்ளாடி ஊசலாடிக் கொண்டு தானிருந்தது. இரண்டரை வருடங்களாக யாருமே குறை சொல்ல முடியாதபடி அந்நிறுவனத்தில் பணிபுரிந்தவன் என்பதால் சின்னதாக நம்பிக்கை ஒட்டிக் கொண்டிருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அந்த மின்னஞ்சல் இருந்தது. முடிந்த மட்டும் சக்கையாகப் பிழியப்பட்டு தூக்கியெறியப் படுவதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை.‌ சோதனையான கரோனா சூழலில் வேலை பறிக்கப்படுமென கனவிலும் அவன் நினைத்ததில்லை.

“எல்லாம் பழைய பிராஜெக்ட் மேனேஜர், ராகவன் கடங்காரனால தான். ரெண்டு வருஷமா அவருக்கு கீழ ஒழைச்சிக் கொட்டுனனே.‌ இந்த வருஷம் ரேட்டிங் போடுற சமயத்துல வேற டீமுக்கு மாத்தி விட்டுட்டாரு. அங்க போனா, அந்தப் புது மேனேஜர் ராஹுல் நம்பியார் அஞ்சுக்கு மூணு ஸ்டார் தான் கொடுத்தார். அடப்பாவிங்களா, மனசாட்சியே இல்லாம நடந்துக்றீங்களே. நானும் வேலை செஞ்சதெல்லாம் வெவரமா எடுத்து போட்டு மீதி ஸ்டார் எங்கய்யான்னு கேக்றேன். தோ பாருப்பா, நீ எப்படி வேலை செஞ்சேன்னு எனக்குத் தெரியாது. நீ என் டீமுக்கு புதுசு, நல்லா வேலை செய்யு.. அடுத்த ரேட்டிங்குக்கு நான் பொறுப்புன்னு சொல்லிட்டு அடுத்த வேலையைப் பாக்க போயிட்டாரு. அங்க ஆரம்பிச்ச சனியன் தான், விடவே இல்லை”, டீக்கடை முன்பு நின்றபடி அவன் கைபேசியில் உடன் பணிபுரிந்த நண்பனிடம் புலம்பினான். அக்கடைக்கு முன்பாக இருந்த அலுவலக கட்டிடத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு கிளம்ப எத்தனித்தபோது, அவன் கால்கள் நகரவில்லை. “நான் வீட்டுக்குப் போயிட்டு கூப்டுறேன்.” மேலும் பேச முடியாமல் அவன் குரல் கம்மியது.

கிளைண்ட் போதிய பணம் ஒதுக்கவில்லை, அதனால் ஆட்குறைப்பு செய்ய வேண்டி இருப்பதாகவும் இரண்டு மாதத்தில் கூப்பிட்டுக் கொள்வதாகவும் சொல்லி அவனை ராகவன் கழற்றி விட்டார். நான்கு நாட்கள் கூட பெஞ்சில் இருக்க விடாமல், பிராஜெக்ட் மேனேஜர் ராஹுல் அழைத்து தேனொழுகப் பேசி சேர்த்துக் கொண்டார். சென்னையிலேயே வேலை செய்வதைத் தவிர அவனுக்கு வேறு எதிர்பார்ப்புகள் இல்லை. புது ப்ராஜெக்டில் வேலையும் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. கிளைண்ட் பெங்களூரை சேர்ந்தவர் என்பதால் அடிக்கடி பெங்களூர் பயணிக்க வேண்டி இருந்தது. அந்த நகரத்திற்கே உரித்தான வாகன நெரிசலும் மூட்டைப் பூச்சி தொல்லையும் அதற்கு மேல் வீட்டு சூழலும் மனதை இறுக்க ராஹுலை அழைத்து பிராஜெக்டில் இருந்து விடுபட ரிலீஸ் கேட்டான்.

“என்ன விக்ரம், திடீர்னு கேக்றீங்க.. நான் கிளைண்ட் கிட்ட இண்ட்ரோ கூட தந்துட்டேன். நீங்க அங்க இல்லைன்னா அவர் டெலிவரி மேனேஜர் கிட்ட எஸ்கலேட் பண்ணிடுவாரே. நீங்க ஃபுட் அலவன்ஸ், ட்ராவல் அலவன்ஸ் கூட எடுத்துக்கோங்க. இன்னும் கொஞ்ச நாள் அங்க இருங்க ப்ளீஸ். அதுவும் இல்லாம…”, அவர் விடாமல் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டே போனார்.

“புரியுது, ராஹுல்.. ஆனா என் வொய்ஃப் பிரக்னென்டா இருக்காங்க சென்னைல. பாத்துக்க யாரும் பக்கத்துல இல்லை. நான் கிளைண்ட் எடத்துல, அதுவும் பெங்களூர்ல தொடர்ந்து வேலை செய்ய வேண்டி இருக்கும்னு தெரிஞ்சிருந்தா..”

“சரி.. அப்ப உங்களுக்குப் பதிலா அனில் ஷர்மாவை அட்ஜஸ்ட் பண்ண சொல்றீங்களா. ரெண்டு பேர்ல ஒருத்தர் பெங்களூர்ல இருந்தே ஆகணும்”

‘அது முடியாத காரியம் ஆச்சே. நான் தான் பெரிய இதுன்னு நெனச்சிட்டு ஈகோவோட சுத்திட்டு இருக்றவன். நாம ஒண்ணு சொன்னா வேணும்னே அதுக்கு எதிரா தான் செயல்படுவான். சுத்தம்.. போச்சு போ. ஏன் இந்தாளு தான மேனேஜரு. இவரு எடுத்து சொல்லலாம்ல அனில்கிட்ட. ஏன்டா படுத்தி எடுக்றீங்க.. முடியலை என்னால’ – உள்ளுக்குள் குமைந்தான்.

அனிலை டீம்ஸ் மெசெஞ்சரில் அழைத்து தன்னுடைய நிலையை விளக்கி பெங்களூர் வந்து தன்னை விடுவிக்க முடியுமாவென கேட்டான்.

“அச்சா, தட்ஸ் ரியலி டஃப் டூட்.. ஐ ஆம் சாரி. நானும் கேர்ள் ஃப்ரெண்டும் புது ஃப்ளாட்டுக்கு அட்வான்ஸ் பண்ணிட்டு இப்ப தான் மூவ் ஆனோம்”

அவன் மீண்டும் மெல்லிய குரலில் கெஞ்ச, சத்தியம் பண்ணாத குறையாக அதையே மீண்டும் சொன்னான் அனில்.

பெங்களூர் அலுவலகத்திற்கு வருவதும், வேலை செய்வதும், நேரத்தே அறைக்கு கிளம்புவதுமாக இருந்தான். எப்போதும் முகம் சோர்ந்து சோபை இழந்து காணப்பட்டான்.

‘உங்களுக்கு எக்ஸ்ட்ரா டைம் எடுத்து என்ன மைத்துக்கு ஒழைச்சிக் கொட்டணும். போட்ற ரேட்டிங் தான் போடுவீங்க, குடும்பத்தை விட்டு பிரிச்சு எங்கயாச்சும் போடுவீங்க. அதுக்கு நான் மத்தவங்க மாதிரி இப்படியே பட்டும் படாம இருந்துக்றேன்.’ அவன் மனநிலை இப்படி தானிருந்தது.

அப்போதே அவனை குறி வைத்து கட்டம் கட்டத் தொடங்கினார்கள். கட்டணம் செலுத்தி தங்கும் விருந்தினர் அறையின் மெத்தையில் படுத்திருந்தவன், மூட்டைப் பூச்சி ஊரும் உணர்வு திடுமென்று தோன்றியதால் பதறியெழுந்து உதறிக் கொண்டான். இரண்டு மூன்று முறை அவன் முறையிட்டு மண்ணெண்ணெய் கலந்த மருந்து அடித்தும் மூட்டைப் பூச்சி ஒழிந்த பாடில்லை.

“என்னடா ஒருத்தன் சென்னைலருந்து வந்து வேலை செய்றானே.. அவனுக்கு நல்ல ஹோட்டல் புக் பண்ணித் தருவோம். இல்லை கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்லயாச்சும் எடம் தருவோம். ஒரு எழவையும் காணோம். டாஸ்க்ல மட்டும் இம்மி பெசகிட்டா ஒடனே எஸ்கலேட் பண்ணிடுவானுங்க. கிறுக்கனுங்க..” தனியாக புலம்பி பெருமூச்சு விட்டான்.

கவிந்த நிசப்தத்தையும் மனதின் சலனத்தையும் அறுத்து, காலையிலிருந்து ஐந்தாவது முறையாக அழைத்து அப்போதும், “எப்பங்க வருவீங்க..” என்று கேட்ட மனைவியிடம் “நாளைக்கு அங்க இருப்பேன்மா.. நீ தூங்கு. பத்ரமா பூட்டிட்டு படு.” என்றான்.

“சே.. இந்த மூட்டைப் பூச்சி சனியனுங்க வேற. இருக்க கொஞ்ச நஞ்ச ரத்தத்தையும் உறிஞ்சி குடிச்சிடும் போல. இந்தக் கருமத்துக்கு மாச வாடகை ஆறாயிரம் ரூபா”, கண்டு கண்டாக தடித்த இடங்களை தேய்த்தான். இரவெல்லாம் தூங்காமல் கை கால்கள் குளிரில் நடுநடுங்க இழுத்துப் போர்த்தி வெற்றுடம்புடன் படுத்திருந்தான்.

சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு கிளம்பி வந்ததால் ஹெச்.ஆர் அழைத்து பேசி கண்டித்தார்.‌ அவரிடம் நடந்த அனைத்தையும் விவரித்து, சென்னை அலுவலகத்தில் எவ்வளவு கடினமான வேலை கொடுத்தாலும் செய்வதாக சொன்னான். ராஹுல் முகம் கொடுத்து பேசாமல் உடனே பிராஜெக்டிலிருந்து நீக்கினார். தற்போது அனில் பெங்களூருக்கு பெட்டி படுக்கையோடு கிளம்பியாக வேண்டுமே! பாவம் என்ன செய்வான்.. ஹி.. ஹி.. தனக்குள் சிரித்துக் கொண்டான்.

தொடர்ந்து பழக்கப்பட்ட மேனேஜர்களை சந்தித்து தனது நிலையை எடுத்துக் கூறி பிராஜெக்டில் சேர்த்துக் கொள்ள சொல்லி வலியுறுத்தினான். தெரியாத மேனேஜர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள் கிணற்றில் போட்ட கல்லாய் மாறின.

ஒரு மாதம் பிராஜெக்டில் இல்லாமல் பெஞ்சில் இருந்ததால் கம்பெனி தான் அவனுடைய முழு சம்பளத்தையும் தந்தது. சேர்ந்த இத்தனை வருடங்களில் கிளைண்டுகளிடம் மிக நல்ல பேர் வாங்கியதை நினைத்துப் பார்த்தான். ராகவனுக்கு தெரியாமல் ஒரு கிளைண்ட், “ஏன்பா.. நான் உனக்கு சம்பளமா ஒன்றரை லட்சம் தந்துட்டு இருக்கேன்.” என்று போட்டு உடைத்தார்.‌ அன்றிரவு அவனுக்குத் தூக்கம் கொஞ்சம் கூட வரவில்லை.

“அடப்பாவிங்களா.. என் மாச சம்பளம் ஐம்பதாயிரத்தை கூடத் தொடலை. ஆனா என்னை கணக்கு காட்டி ஒன்றரை லட்சம் வாங்குறீங்களா”, மனதுக்குள் புழுங்கினான்.

அமெரிக்காவை சேர்ந்த சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு எலக்ட்ரானிக் வர்த்தகம் சார்ந்து பிராடக்ட் டிஸைன் செய்யும் வாய்ப்பு இவனுக்கு கிடைப்பது போல இருந்தது. அதனைத் தடுத்து தானே அதையும் கூடுதலாக செய்வதாக சொல்லி வாய்ப்பை தட்டிப் பறித்தான் கிருபா ஷங்கர். இத்தனைக்கும் கிருபாவும் இவனும் ஒன்றாக ட்ரெய்னிங் முடித்து ஒன்றாக பணியில் சேர்ந்தவர்கள். அவனை சந்தித்து கெஞ்ச இவன் மனம் ஒப்பவில்லை. பரமபத விளையாட்டில் தொடர்ச்சியாக பாம்பு தீண்டி முன்பு இருந்ததை விட மோசமாக கீழிறங்கி வீழ்வதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இருந்தும் சாதகமாக தாயக்கட்டை சுழன்று, திரும்பி, அதிர்ஷ்டத்தில் ஏணி வாய்க்காதா வென்று ஏங்கினான். மீண்டும் மீண்டும் மின்னஞ்சல் கணக்கை பார்த்தபடி இருந்தான். ஆனால் திரும்ப திரும்ப கிடைத்தது என்னவோ, “உங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. ஜங்லி ரம்மியில் ரம்மி விளையாடி ரூபாய் ஒரு லட்சத்தி அறுபதாயிரம் வெல்லுங்கள்” என்கிற சனியன் பிடித்த குறுஞ்செய்தி தான்.

தொடக்க காலத்தில் கேம்பஸ் பிளேஸ்மெண்டில் தேறி, ஒன்றாக கார்ப்பரேட் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த நண்பர்களில் தான் மட்டுமே பின் தங்கியதாக அவனுக்கு நினைப்பு இருந்தது. சேர்ந்த புதிதில் எல்லோருடைய சம்பளமும் வருடத்திற்கு தலா மூன்று லட்சத்தி இருபதாயிரம் ரூபாய். அதில் பெருந்தொகையை இன்ஜினியரிங் படித்தபோது உண்டான கடன் விழுங்கிக் கொண்டது. ஒன்றாக அறையெடுத்து நண்பர்களோடு தங்கியிருந்ததால் வீட்டு வாடகை கையைக் கடிக்கவில்லை. கால சக்கரம் வேகமாக சுழன்று இரண்டு வருடங்கள் ஓடியதும் ஒவ்வொருவராக வேறுவேறு நிறுவனங்களுக்கு இடம்பெயர்ந்தார்கள். இவன் சேர்ந்த புதிய கம்பெனியில் தரப்பட்ட வருட சம்பளமான நான்கு லட்சத்தி ஐம்பதாயிரத்தை தன்னுடைய நண்பர்களின் ஐந்து லட்சத்தி நாற்பதாயிரத்தோடு ஒப்பிட்டு வருந்தினான். தான் தவறான தொழில்நுட்பத்தை தேர்வு செய்து நிபுணத்துவம் பெற முயல்வதாகக் கூட கருதினான். நாட்கள் செல்ல செல்ல, சம்பளத்தைவிட செய்யும் வேலையில் விளையும் திருப்தி தான் முக்கியம் என்கிற மனப் பக்குவத்தை அடைந்தான்.

திருமணமான போது அவனுடைய மாத சம்பளம் நாற்பத்தி ஐந்தாயிரத்தை எட்டியிருந்தது. இருந்தும் தன்னைவிட தன் மனைவி அதிக சம்பளம் வாங்குவது அவனுக்கு நெருக்கடியாக இருந்தது. நன்றாக வேலை செய்து கொண்டிருந்தவள் வேலைப் பளு காரணமாக சீனியர் சாஃப்ட்வேர் இன்ஜினியர் பொறுப்பை துறந்த போது, இவனுள் சத்தமின்றி நிம்மதி சுரந்தது.

சற்றுமுன் அவனுக்கு வந்த மின்னஞ்சல் இது தான்:

ஹாய் விக்ரம்,

தொடர்ந்து பிராஜெக்ட் இல்லாம பெஞ்ச்ல இருக்கீங்க. நாங்க தர்ற பிராஜெக்டையும் நிராகரிக்றீங்க எதுவும் சென்னைல இல்லைன்னு.‌ நீங்க இனிமே தொடர முடியாது. உடனே ஆஃபிஸுக்கு வந்தீங்கன்னா ரிலீவிங் ஃபார்மேலிட்டீஸை ஆரம்பிச்சிடலாம்.

நன்றி,

கிரிஷ் குமார், ஹெச்.ஆர் மேனேஜர்.

வீட்டிலிருந்தபடி வேலை செய்யும் சூழலை உலகம் முழுக்க இருக்கும் நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு உருவாக்கித் தரும்போது, பழைய சம்பவத்தை நினைவில் கொண்டு தன் வேலையைப் பறித்த நிறுவனத்தை நினைத்து நொந்தான். கட்டளைக்கு கீழ்ப் படிந்திருந்தால் இந்த நிலை தனக்கு வந்திருக்காது என்பதை அவன் அறிவான்.

அவன் இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருக்க கிரிஷ்ஷை அழைத்து, “கிரிஷ்.. இன்னைக்கு என்னால வர முடியாது. நாளைக்கு காலைல ஆஃபிஸ் வந்துட்றேன். அது போதுமா?” என்றான். அவன் குரல் உடைந்தது கண்டு தன்னையே நொந்து கொண்டான்.

ராகவனிடமோ ராஹுலிடமோ பேசினால் ஏதாவது செய்ய முடியுமா? யாரிடம் நியாயம் கேட்டு என்ன ஆகப் போகிறது? ஊரடங்கு காலத்தில் இரக்கமற்று துரத்தும் குயுக்தி தெரிந்தவர்களை எப்படி தடுக்க முடியும்? நமக்கு குரல் கொடுக்க யார் இருக்கிறார்கள்? அவன் மிகக் களைப்பாக உணர்ந்ததால் சாய்வு நாற்காலியில் விழுந்து கண் மூடினான்.

அவனை உலுக்கி எழுப்பி, “விக்ரம்..‌ சாப்டுட்டு தூங்குங்களேன்” என்றாள் அம்மு.

அடுத்த தினம் சீக்கிரமாக எழுந்து காலை உணவு தயாரித்து மனைவியை எழுப்பி பால் தம்ளரை நீட்டினான்.

“ஹே, அம்மு.. நான் ஒண்ணு சொல்லுவேன், பொறுமையா கேக்கணும்”

“என்ன‌ விக்ரம்.. என்னாச்சு?”

“என் அக்கவுண்ட்ல துளி கூடப் பணம் இல்லை. லாக் டவுன் பீரியட் எக்ஸ்டெண்ட் ஆகிருக்கேன்னு ஹவுஸ் ஓனர் கட்டாயம் பாக்க மாட்டான். இத்தனை வருஷம் வேலை செஞ்ச கம்பெனியே பாக்கலை.”

“டோண்ட் வொர்ரி. என் அக்கவுண்ட்ல நான் ரிலீவ் ஆனப்ப போட்ட சம்பளத்தை இன்னும் எடுக்கலை. அதுபோக ஃபிக்ஸட் டெப்பாஸிட் என் பேர்ல போட்டது இருக்கு. ரெண்டு, மூணு மாசம் ஈஸியா தாக்குப் பிடிக்கலாம்.” என்று கரம் பற்றினாள்.

“இது போதும்மா எனக்கு..” அவளை கட்டிக் கொண்டு கண்ணீர் சிந்தினான். அவள் வேலையை விட்டு நின்றபோது லேசாக மகிழ்ந்த குரூர புத்தியை நினைத்து தலைகுனிந்தான். உப்பிய வயிற்றை, சிசுவை முத்தமிட்டவனிடம், “வேற ஜாப் அப்ளை பண்ணுங்க.. கெடைக்றப்ப கெடைக்கட்டும். லிங்க்ட்-இன்ல ஏகப்பட்ட பிரொஃபஷ்ஷனல்ஸ் வேலை போய்டுச்சி ரெஃபர் பண்ணுங்கன்னு போஸ்ட் போட்ருக்காங்க” என்றாள்.

ஆஃபிஸ் கிளம்பி ‘கோமதி மளிகைக் கடை’ வழியாக சென்றபோது கையேந்தி முக்காடிட்டு நின்ற நடுத்தர வயது பெண்ணிடம் இருபது ரூபாயை நீட்டினான். மொத்த குடும்பமும் பட்டினி கிடப்பதாக சொல்லி அரிசி வாங்கித் தரும்படி கெஞ்சினாள். ஐம்பது ரூபாயை தந்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் ஆட்டோ ஸ்டாண்ட் நோக்கி விரைவாக நடந்தான்.

பரங்கிமலை மெட்ரோவில் இறங்கி பேரம் பேசியும் இருநூற்றி ஐம்பது ரூபாயில் நின்ற தானி ஓட்டுநரிடம் முகம் சுழித்தபடி பணத்தை நீட்டினான். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நிலவினாலும் கரோனா அச்சத்தால், பெரும்பான்மை ஊழியர்கள் வீட்டிலிருந்தபடி வேலை செய்வதால் கூட்டமில்லை. முகக்கவசம் அணிந்து இடைவெளி விட்டு அமர்ந்த பயணிகள் மத்தியில் கத்தலும் அலறலும் கேட்டு திடுக்கிட்டான். புத்தி சுவாதீனம் இல்லாதவர் போல் தெரிந்த வாலிபர் மெட்ரோ சீட்டில் அமராமல் முரண்டு பிடித்து அர்த்தமில்லா குரலில் கத்தினார். அவரை அழைத்து வந்திருந்த பெரியவர் சமாதானப் படுத்தியும் கேட்காததால் விரக்தியடைந்து அறைந்தார். அந்த வாலிபரின் அலறல் இவனை என்னவோ செய்ய, எழுந்து அந்தப் பெரியவரை நெருங்கினான். அதற்குள் கீழ்த்தளத்தில் இருந்து செக்யூரிட்டி வந்துவிட “சாரி சார்.. சாரி சார்.. இவனை எங்கயும் என்னால கூட்டிட்டு போக முடியலை.” என்று கைகூப்பி பயணிகளிடம் மன்னிப்பு கேட்டார் பெரியவர்.

“இப்ப நான் என்ன பண்ணனும்..”, பெரியவர் அந்த செக்யூரிட்டியிடம் உறுதியாகக் கேட்டார்.

“மத்த பேசெஞ்சர்ஸுக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கு..” என்று அவர் இழுக்க, பெரியவர் தன் மகனை இழுத்துக் கொண்டு வெளியேறினார்.

மெட்ரோ ரயில் கதவு மூடிக் கொள்ள, “சே.. அவங்களுக்காகப் பேசி இருக்கணும். நாம குரல் கொடுத்து இருக்கணும். தப்பு பண்ணிட்டோமே!” என்று உறைத்தது. ஒருவித குற்றவுணர்ச்சியால் தலை குனிந்தபடி ஆலந்தூர் வரை பயணித்தான்.

***

ஹரிஷ் குணசேகரன்