Home Blog Page 54

கவியரசு கவிதைகள்

0

1.கொல்லமுடியாத புன்னகை

சுவாசப்பாதையின் சுவர்களெங்கும்
கண்ணாடிகள் தெறிக்கின்றன
நுரையீரலில் உறைந்திருக்கும்
மஞ்சள் மலரை
கிழித்துத் துப்பும் புயலுக்கு
மீளவும்
வீட்டுக்குள் வர விருப்பமே இல்லை
கரகரப்பில் அடங்காமல்
பாய்கிறது சிறுத்தை
அலறுகிறாள்
தூளியில் உறங்கும் மகள்
குளியலறைக்கு ஓடி ஒளியுமென்னை
இழுத்து இழுத்து புகைக்கிறது இரவு
எரியும் நுரையீரல் காட்டைத்
தடவிக் கொடுக்கிறேன்
விலாவிலிருந்து
மேல்நோக்கித் தாவும் வலிமிருகம்
குரல்வளையைக் கவ்வுகிறது
பின்னங்கால்களை உறைய வைக்க
தடவப்படும் தந்திரப்பசைக்கு
நேரமென்பது எப்போதும் குழப்பும் ஓவியம்
உறக்கத்திற்கும் விழிப்புக்கும் இடையில்
நோய்மையின் கதவைத்
திறந்து திறந்து மூடுகிறேன்
வெவ்வேறு நிறங்களில்
ஜொலிக்கின்றன மாத்திரைகள்
விழுங்கியதெல்லாம் தொலைகிறது
ஆழமான மஞ்சள் மலருக்குள்
சூரணம்
கஷாயம்
கபம் அறுக்கும் லேகியம்
எப்படி அழித்தாலும்
முற்றும் தொலையாது சிரிக்கும் மலர்
இந்தக் கார்காலம் சென்று
அடுத்த கார்காலம் வா என்கிறது
கொல்லமுடியாத
புன்னகையின் முன்
தோற்று வணங்குகிறேன்

***

2. ஒளிரும் தெய்வம்

என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்
எனக் கேட்டபிறகு
எதிரே அமர்ந்திருந்தவரைக் காணவில்லை
பின்னொளிந்து
கண்களைப் பொத்தி விளையாடுபவர்
இருக்கையுடன் பிய்த்து
மேற்கூரையை உடைக்கிறார்
ரயிலை சீசாப்பலகையாக்கி
அடித்து அடித்து மேலேற்றும்போது
நானும் இப்பூமியில்தான் உள்ளேன்
இழுத்துக்கொள் இழுத்துக்கொள்
நிலம் நோக்கிக் கூவுகிறேன்
எடையை இழுக்கும் இடத்தில்
ஆழமான குழியைத் தோண்டுகிறவர்
மீளத்திரும்பமுடியாத இடத்தில் மிதக்கவிட்டபிறகு
எப்படி அது
என் தோளில் வந்து தங்கியதென
நேர்காணல் ஆரம்பிக்கிறார்
பறக்கும் அதிகாலை தோசைகள்
தீய்ந்த முகத்துடன் படபடக்கின்றன
பின்தொடரும் வயிற்றுக்குள்
குத்துவிடும் போது எழும் ஓசை
நடந்து நடந்து
முடிவு தெரியாதவர்களின்
கால்களில் விழுந்து வணங்குகிறது
இலையுதிர்க்கால வீதிகளில்
சேகரித்து வைத்திருப்பதையெல்லாம்
கொட்டி எரிக்கிறார்கள்
சருகுகள் கருகும் தீ
பறந்து வந்து சுடுகிறது வயிற்றை
மாலையில் உறித்துண்ண
வைத்திருந்த ஆரஞ்சுப் பழத்தை
விண்மீன் சுளைகளாக தூக்கி வீசியதும்
தொண்டையைத் தடவுகிறார்
உங்கள் நாவுகளுக்காகத்தான்
ஒளிரும் சுவைகள் உருவாக்கப்பட்டதா ?
சீசாப்பலகைக்கு அடியிலிருக்கும்
வலிமையான ஸ்ப்ரிங்
தண்டுவடத்தைப் பார்த்து சிரிக்கிறது
வலிந்தேறும் தாகம்
இறைப்பை நெருங்க முடியவில்லை
தண்ணீர் பாட்டிலை உடைக்கிறார்
எங்கிருந்தோ ஓடிவந்து
காப்பாற்றுகிறது வேலை தெய்வம்
ஊணுருகத் தழுவிய பிறகு
தோள்களிலேற்றி ஒளிரவிடுகிறார்
வேலையை வாங்கியவுடன்
நிரந்தரத்தைப் பிடித்துவிட்ட கம்பீரத்துடன்
நடந்து செல்கிறார்

***

3. நீருக்குள் மூழ்குபவள்

கிணற்றுக்குள் குதிக்கும் போது
தலை மட்டும் மூழ்கவில்லை
எழுந்து நிற்கும் கூந்தல் காட்டில்
வீறிட்டழுகிறது குழந்தை
நீருக்குள் பரவும் ஒலி
ஆழம் நோக்கும் பாதங்களை
மூழ்கவிடாமல் தாங்கிப்பிடிக்கிறது
சூழும் கொடிகளின் கண்களில்
மின்னுவதெல்லாம்
செழுமையான உடல் மட்டுமே
பாம்புகளென சீறிப் பாயும் பழங்கதைகள்
முதலில் கொத்துவது
அவளுடைய மூளையைத்தான்
கயிற்றை வீசி
குழந்தையைத் தூக்கும்
தலைவனை நோக்கி
பாம்புகளை எறிகிறாள்
துடிக்கும் அவனைக் கொத்தும் கதைகள்
அறுவடை வயலைக் கொளுத்துகிறது
உனக்கு ஒன்றுமில்லை
நன்றாகத்தானிருக்கிறாய்
கிணற்றுக்குள் குதிக்கும் குரல்கள்
நெஞ்சில் மோதியதும்
எறும்புகளாகி மடிகின்றன
கொடிகள் முகம் நோக்கி நகரும் வேளை
சுற்ற ஆரம்பிக்கிறது கிணறு
காப்பாற்ற யாருமில்லாத
அலைகள் சுழலும் பெருங்கடல்
சுற்றிச் சுற்றி விரியும் சன்னதம்
முகம் மறையும் பித்துக் கணத்தில்
நல்ல வேளையாக மலர்கிறது உறக்கம்
விழிக்கும் போதே மறைகின்றன
கீழிழுக்கும் தண்ணீரும்
மேலெழும்பிய காடும்
எரியும் வயல்வெளியில்
குழந்தையைக் கொஞ்சியபடியே நடப்பவள்
தலைவனிடம் கேட்கிறாள்
அணைப்பதற்கு ஏன்
எந்தக் கிணற்றிலும்
தண்ணீர் இல்லை.

***

இரா.கவியரசு – அரசுப்பணியில் இருக்கும் இவர். தற்போது திருத்தணியில் வசித்துவருகிறார். அண்மையில் நல்ல கவனம் பெற்ற இவரது கவிதைத்தொகுப்பு – நாளை காணாமல் போகிறவர்கள்
rajkaviyarasu@gmail.com

மாற்றத்தைக் கொண்டுவரும் நம்பிக்கைத் தாரகை – அமண்டா கோர்மன்

0

கார்குழலி

ஜனவரி 20-ஆம் நாளன்று வாஷிங்டன் டி.சி.-இல் இருக்கும் அமெரிக்கச் சட்டமன்றக் கட்டிடமான கேபிடல் ஹில்லின் மேற்கு வாயிலில் நடைபெற்ற விழாவில் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார் மக்களாட்சிக் கட்சியின் ஜோ பைடன். பெரும்பாலும் மெய்நிகர் வழியில் நடைபெற்ற விழாவில் நேரடியாகக் கலந்துகொள்ள வெகு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. அப்படி அழைக்கப்பட்டவர்களில் அந்த 22-வயது இளம்பெண்ணும் ஒருவர். அவர் பார்வையாளர் அல்ல, விழாவைச் சிறப்பிக்க வந்த கலைஞர்களில் ஒருவர். அந்தப் பனிக்காலக் காலையில் உறைய வைக்கும் குளிர்காற்று வீசியதோடு மெலிதான பனிப்பொழிவும் ஏற்பட்டபோது வந்திருந்த விருந்தினர்கள் தாங்கள் அணிந்திருந்த கம்பளி ஆடைகளோடு விழா ஏற்பாட்டாளர்கள் வழங்கிய சால்வைகளையும் அணிந்துகொண்டு உடலுக்குக் கதகதப்பூட்டிக்கொள்ள முயன்றனர்.

சிறிது நேரத்தில், கண்ணைப்பறிக்கும் மஞ்சள் வண்ண அங்கியும் சிவப்பு வண்ணத் தலைப்பாகையும் அணிந்திருந்த அந்தக் கறுப்புப் பெண் மேடையேறியதும் அந்த இடமே சூரியனின் வெங்கதிரால் ஒளியும் வெப்பமும் ஊட்டப்பட்டதுபோல மிளிர்ந்தது. மிடுக்கான தோற்றமும் தன்னம்பிக்கை தெறிக்கும் உடல்மொழியும் கொண்ட அந்தப் பெண் பைடனின் வரலாற்றுச் சிறப்புமிக்க பதவியேற்பு விழாவிற்காகத் தான் எழுதிய கவிதையை வலிமையான குரலில் முழங்க ஆரம்பித்தார். கவிதையின் சொற்களுக்கேற்ப அவருடைய கையும் விரல்களும் கடலலைபோலக் காற்றில் அசைந்தன. உலகை இரட்சிக்க வந்த ஒரு பெண் கடவுளைப்போல மேடையின் நாலாபுறமும் பார்வையைச் சுழற்றியபடி அவர் வாசித்த கவிதையை உலகமே வியந்து கேட்டது. அந்த மேடையில் வேறு பல பெண் சாதனையாளர்களும் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஒரு வகையில் அந்தப் பெண்ணுக்கு வழிகாட்டியைப் போலவும் அவருக்காகக் களத்தைத் தயார்செய்து வைத்தவர்கள் போலவும் அவரின் வருகைக்காகக் காத்திருந்த மூத்த பெண் கடவுளர்கள் போலவும் அவரின் வலிமையிலும் ஆற்றலிலும் மாட்சியிலும் மெய்சிலிர்த்தனர். அவரை மனதாரக் கட்டித் தழுவினர்.

அந்த மாபெரும் சபையில் கவிதை வாசித்த அந்த இளம்பெண்ணின் பெயர் அமண்டா கோர்மன் (Amanda Gorman). அமெரிக்காவின் முதல் தேசிய இளைய அரசு கவி என்ற பெருமையைப் பெற்றவர். அவருடைய முதல் கவிதைத் தொகுதியான ‘உணவு போதாமல் இருக்கும் ஒருவரை’ (The One for Whom Food Is Not Enough) பதினேழாவது வயதில் வெளிவந்தது.

சமூக அக்கறைகொண்ட கவிதைகளை எழுதுவதோடு அந்த அக்கறைக்கும் பொறுப்புக்கும் செயல்வடிவம் கொடுப்பவராகவும் இருக்கிறார் அமண்டா கோர்மன். வளரிளம் பருவத்தினரின் எழுத்துத் திறமையை வளர்ப்பதற்காக இலாபநோக்கமில்லா நிறுவனமொன்றைத் தொடங்கி அதன்மூலம் எழுத்துப் பணிமனைகளை நடத்துகிறார். அதுதவிர பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து சமூக மாற்றம், வளர்ச்சி, பெண்களின் முன்னேற்றம், கறுப்பின மக்களுக்குச் சமத்துவம் இவற்றுக்காகக் குரல்கொடுக்கிறார்.

இத்தனையோடு கூடவே இளைஞர்களுக்குப் பொதுவாக இருக்கும் ஆசைகளையும் இரசனைகளையும் கொண்டவராகவும் இருக்கிறார். கேபிடல் ஹில்லில் பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுக் குதூகலிக்கிறார். சில வருடங்களுக்கு முன்னர் மிச்சல் ஒபாமாவை முதலில் சந்தித்தபோது அவரின் தனிப்பட்ட பாதுகாவலரிடம் தன் கவிதை ஒன்றைக் கொடுத்து மிச்செலிடம் சேர்த்துவிடுமாறு கேட்டுக்கொண்டதைச் சொல்லிச் சிரிக்கிறார். இரட்டையர்களான தானும் தன் சகோதரி கேப்ரியேலும் (இவர் ஒரு திரைக்கதை எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர்) புகழ்பெற்ற இடங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பதிவிடுகிறார்.

அமண்டா கோர்மன் எல்லாப் பெண்களையும் போலவே புதுப்பாணி ஆடை அணிகலன்களில் ஆசைகொண்டவர். பதவியேற்பு விழாவில் ஓப்ரா வின்ஃபிரே (Oprah Winfrey) பரிசளித்த கூண்டுப் பறவை மோதிரத்தையும் தங்கக் காதணியையும் அணிந்திருந்தார். கவிஞர் மாயா ஏஞ்சலோவின் ‘கூண்டுப் பறவை பாடுவது ஏன்’ (Why the Caged Bird Sings) என்ற கவிதையை நினைவூட்டும் வகையில் அந்த மோதிரம் வடிவமைக்கப்பட்டு இருந்தது சிறப்பு. மிலன் நகரில் நடைபெற்ற ஃபேஷன் நிகழ்ச்சியில் புகழ்வாய்ந்த புதுப்பாணி ஆடை உற்பத்தி நிறுவனமான பிராடாவின் (Prada) ஆடை அணிவகுப்பில் கலந்துகொண்டார். ஹெல்முட் லாங் (Helmut Lang) என்ற வடிவமைப்பாளர் வடிவமைத்த ஆடைகளை அணிந்துகொண்டு விளம்பரங்களில் நடித்திருக்கிறார்.

கவிதைக்கும் புதுப்பாணி உடைகளுக்கும் உள்ளார்ந்த உறவு இருப்பதாகக் கூறுகிறார் அமண்டா கோர்மன். தான் எழுதும் கவிதைகளின் உணர்வை வெளிப்படுத்தத் தான் அணிந்துகொள்ளும் ஆடை உதவுகிறது என்கிறார். “என் கவிதை மொழிக்குக் காட்சி சார்ந்த அழகுணர்ச்சியைத் தருகின்றன புதுப்பாணி உடைகள். நான் மேடையில் கவிதை வாசிக்கும்போது என் உடையைப்பற்றி மட்டும் நினைப்பதில்லை. நான் அணிந்திருக்கும் வகாண்டா ஃபோரேவேர் (Wakanda Forever) டீ-ஷர்ட்டும் மஞ்சள் வண்ணப் பாவாடையும் ஒரு கவிஞராக என்னை எப்படி அடையாளபடுத்துகிறது என்பதைப் பற்றியும் சிந்திக்கிறேன்.”

ஆழ்ந்த சிந்தனையும் வலிமையான குரலும் பரந்த வாழ்வியல் கோட்பாடுகளும் கொண்டவராக இருப்பதோடு இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் வருங்காலத்தின் நம்பிக்கைத் தாரகையாகவும் இருக்கும் அமண்டா கோர்மனைக் கொண்டாடும் மனநிலையில் நான் எழுதிய கவிதையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.


கொற்றவையின் மாட்சியைக் கொண்டாடுவோம்

நீ ஒரு கறுப்புச் சூரியன்;
ஒளிரும் உன் முகம்
மன இடுக்குகளில் ஒளிந்திருக்கும்
பயத்தையும் பொய்ம்மை இருளையும்
விரட்டி அடிக்கிறது.

மலர்க் கிரீடத்தை மொய்க்கும்
கருவண்டுக் கூட்டத்தை ஒத்த
உன் அடர்கூந்தலோ
உன் முகச் சூரியனின்
ஒளி சிதறிவிடாமல் இருக்கக்
கரை கட்டுகிறது.

இளவேனில் சூரியனின் கதகதப்பும்
அதில் உயிர்த்தெழுந்த
பசுந்தளிர்களும் வண்ணமலர்களும்
உன் மேனியை
ஆடையாக அலங்கரிக்கின்றன.

வீரியமிகுந்த
விடுதலை விதைகளின் சரம்
உன் காதுகளில் இருந்து
வழிந்தோடி
நிலந்தொட்டு முளைக்கிறது.

உன் சின்னஞ்சிறிய
கூர்ந்த கருவிழிகளின்
நேர்கொண்ட பார்வையும்
தொலைநோக்கும்
புதிய பாதைகளைச் சுட்டுகின்றன.

பொருள்பொதிந்த புன்னகையைச் சிந்தும்
உன் மெல்லிய உதடுகள்
கனல்வீசும் சொற்களைக்
கவிதையாகக் கோர்த்து
மானுடத்தின் எதிரிகளின்மீது கக்குகிறது.

குளிரொளி சிந்தும் நிலவைச்
செதுக்கிச் செய்த
உன் வெண்பற்கள்
தோள்கொடுக்கும் தோழர்களின் பக்கம்
பால் புன்னகையைப் பொழிகிறது.

உன் கவிதையின் சந்தத்தோடு இசைந்து
தென்றலில் அசையும் பூங்கொடியாக
வளைந்தாடும் உன் விரல்களின் நளினம்
பிரிவினையைத் தூண்டும் வீணர்களுக்கு
விஷம் கக்கும் பாம்பின் நடனமாகக்
காட்சியளிக்கிறது.

உன் சுடர்மிகும் அறிவும்
சிந்தனைத் திறனும்
நீ பாடும் கவியும்
சமத்துவ ஒளியைப்
புவியெங்கும் பாய்ச்சுகின்றன.

மூன்றாம்தரக் குடிமக்களாக
விதிக்கப்பட்டவர்களின் மீட்பரை
ஆணாகவே வரித்துக்கொள்ளும் கண்களுக்குக்
கொற்றவையின் மாட்சி
புலப்படுவதில்லை.

மெல்ல நகைத்துக்கொள்ளும்
உனக்குத் தெரியும்,
பொங்கிச் சுழித்தோடும்
காட்டாற்றுக்குக்
கடவுச் சீட்டு தேவையில்லை.
வீறுகொண்டு எழும் சிங்கம்
கட்டியக்காரனின் பாடலுக்குக்
காத்திருப்பதில்லை.


இதோ அமண்டா கோர்மன் எழுதிய கவிதையொன்றின் தமிழ் மொழியாக்கம்.

கவிதை: ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு எழுத்தாளர் இருக்கிறார்
ஆங்கிலத்தில்: அமண்டா கோர்மன்
தமிழில்: கார்குழலி

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும்
ஒரு எழுத்தாளர் இருப்பதாக நம்புகிறேன்:
தன் ஒளிவீசும் எதிர்காலத்தைத்
தானே தீர்க்கமாக இயற்றும் ஒரு கவிஞர்,
விடியலைத் தள்ளிவைத்து
இரவு முழுதும் பணியாற்றுகிறார்,
தன் பக்கத்தில் இருந்து ஊக்கமூட்டும்
பெண்களின் வெற்றிக்காக,
தனக்குள்ளே உயிர்வாழும்
பெண்களின் வரலாற்றுக்காகவும்.
ஒரு ஏஞ்சலோ, ஒரு சிஸ்நெரோஸ், ஒரு ச்சிம்மமண்டா,
ஆணின் உயரத்துக்குச் சமமாக நிற்கிறாள்,
அவளுடைய எழுத்து எவருக்கும் கீழ்ப்படிவதில்லை,
அவளுடைய பாலினத்தைக் கடந்த காரணத்தால் அல்ல,
மாறாக, அவளுடைய பாலினத்தினால்தான்.
ஏனெனில், அவள் எழுதுகிறாள்,
அதன் வழியாகப் போர்த்தொடுக்கிறாள்.
அவள் ஆண்களின் முன்னிலையில்
மௌனத்தை அணிந்துகொள்வதால்
புதிய காலங்கள் எழுதப்படுவதில்லை,
விரட்டிச் செல்லும் பேனாவின் மூலம்
தன் எதிர்ப்பைக் காட்டுவதால்தான்.

***

கார்குழலி – மொழிபெயர்ப்பு மற்றும் கவிதைகளில் தொடர்ந்து இயங்கி வரும் கார்குழலி. வெவ்வேறு இதழ்களின் கட்டுரைகளும் எழுதிவருகிறார். விரைவில் அவரது கவிதைகள் தொகுப்பாக இருக்கின்றன.

ரா.த ஜீவித்தா கவிதைகள்

0

நகரும் மாலையின் சங்கீதம்

திரிந்தும் திரளாத வானம் சுவாசத்தை ஒதுக்கி ஆசுவாசங்கொள்கிறது
கருத்த மேகங்களின் புறமுதுகில்

மாறிமாறி அமர்ந்தும் தாய்மொழி கொண்டு அழைத்தும் உறங்கும்
தென்னங்கிளைகளை உசுப்புகிறது காகக் கூட்டம்

மதுக்கோப்பைகளை காலி செய்தவனின் மடியில் கிடந்த
மொழிப்பெயர்ப்பு கலவிப்புத்தகத்தில்
ஈஸ்மெண்ட் வண்ணத்தில் வரையப்பட்ட
ஈருடலின் நிர்வாண ஓவியங்கள்
மறுபக்கத்திடம் மறைவினை கொஞ்சியபடி

உறுதியான கொம்புகளால் பின்னிக்கொண்டு உச்சந்தலையினால்
ஒன்றையொன்று முட்டிமோதி விலக்குகிறது
கூரையில்லா கிடையில்
அடைப்பட்டிருக்கும் கிடாக்கள்

அவசர அவசரமாய் அத்தனையும் இயல்புக்குள் பெயல் கொள்கிறது
துளித்துளியாய் இறங்கும் மழையினோடு

சாரலின் ஈரத்தை எட்டி உதைத்தும், வளைந்தும் நெளிந்தும்
புறக்கணிக்கிறது
ஆசையோடு அடிவயிற்றில் சேய் தடவும் சாரலின் ஈரத்தை
பனிக்குடத்தில் மிதக்கும் சிசு.

***

பேருந்தின் உள் நுழையும் கீற்று

பின்னங்கழுத்தில் படிந்த முகப்பூச்சை நுனிவிரலில் உருட்டியபடி
வலப்பக்க சன்னலை வெறித்துக் கொண்டிருக்கிறது அவ்விழி

நிறுத்தத்திற்கு நிறுத்தம் அதிகரிக்கும்
மேற்பிடிக் கைகளின் கூட்டத்தில் நகர்ந்து, மறைபடுகிறது ஒளி

இடப்புறமும் முன்புறமும் தலைத்தூக்கித் திரும்பிப் பார்த்துவிட்டு
மீண்டும் ஒளிக்கீற்றினை அவதானித்து
வலப்பக்கமாய் சரிந்தபடி
தடவத் துவங்குகிறது முறுக்குச் சங்கிலியை

வெளிச்சத்தை மட்டுமே உணரும் விழிகளை ஏமாற்றிய
ஊழிற்கு வினையாய்
தன்மீது வீழும்
செங்கதிர்களை திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கிறது
எதிரொளியாய்
அத்தனை சாளரங்களும்.

***

பழைய பூக்களின் ஆன்மா

பூமியின் மார்பின்மீது மலரும்
பூக்களின் கால்களுக்கு
எப்போதும் தடம் மாறிப்
பறந்திடும் ஆவலுண்டு

சில வினாடிகளில் வளையும் பூக்களின் தண்டுகள் தன்
திசைகளில் வெளிச்சத்தை
தேடி அடைவதற்கு
என்பதெல்லாம் கட்டுக்கதைகளே

அவை சீரான மத்திம நிறத்தில் நேராக மலரும் சூழலை
கண்டடையவே எத்தனிக்கிறது.

காற்றின் வழி உள்நுழைந்து மகரந்தத்தின் வாசனையை
கலைக்கும் நேரங்களில்
தாமாகவே உதிர்த்துவிடுகின்றது
இழையெனும் இச்சைகளை

மேகங்களின் துளிகளில்
மீண்டும் துளிர்க்கும் பூக்களின் பழைய ஆன்மா
புன்னகைத்துக் கிடக்கிறது
ஒற்றை விண்மீனின் வழியாய்.

***

சிமிழில் அடைபட்ட சில சொற்கள்

மறைத்து வைத்தும், ஒளித்து வைத்தும் நிதம் நிதம்
தட்டுத்தடுமாறி தெளியச்செய்த
இவைக்கான அத்தனைக் காரணங்களையும் நிராகரித்துக்கொண்டு
கூட்டற்றவளாய் இப் பிரபஞ்சத்தோடு லயம்கொண்டுத் திரிகிறேன்.

நிகழ் காலத்தில் இல்லாததும், இறந்தகாலத்தில் போலியுமாய்
சுகித்துத் திரிந்த உன் ஞாபகங்களை அல்ல
ஞாபகத் தவறுகளை;
அளவுக்கு அதிகமாக கொதிக்கும் நீர் ஆவியாவது போல்
என் எண்ணங்களிலிருந்து விலக்கி வருகிறேன்.

மேலும், நான் கூடிய இப்பிரபஞ்சத்தில் தீராத நோவுகளுக்கு துணையாய்
குடியானவனின் கார்காலக் கொண்டாட்டங்களும்,
ஆழந்த உறக்கத்தினூடே அரிதாய் வரும் கனாவில்
வெளிர் மஞ்சள் நிற ஆடை அணிந்த
என் பால்ய தோழியும் முகத்தினோடும்
புத்துணர்ச்சிக் கொள்கிறேன்

வெட்டியப்பின் வெந்நீரூற்றப்பட்ட வேரினை மண்ணரித்தது போல்
மீண்டும் என்னில் துளிர்க்க சாத்தியமில்லாது சிதைந்து போனவனே நீ.
எனினும் சொற்களில் அடக்கவியலாத
இப்பெரும் களிப்பை தந்தது ஒருபோதும் நீயல்ல..!

தேக்கிவைக்கத்தவறி கொட்டிக் கவிழ்க்கப்பட்ட
வென் கோபங்களும் குரோதங்களே;
இதுவும் உனக்கென நினைப்பதிலிருந்து
சற்று விலகி நின்று பார்…

எளிதாய் அறிந்துகொள்வாய்,
இவ்வாழ்வில் அன்பென்பது அமிர்தமல்ல.
நேசிக்கபட்டவரின் வெறுப்பென்பது
வார்த்தைகளால் வதைத்து,
கோபங்களால் துன்புறுத்தி,
சாபங்களால் குத்திக்கிழிப்பதைக் காட்டிலும்…
அதிலிருந்து விலகி எங்கிருந்தேனும்
உன் குரூரக்கண்களில் எதிர்படும் நான்
முழு பிரஞ்சையோடு நீயற்ற வாழ்வும் நிலைதன்மை
கொண்டதை உணர்ந்து
என்னோடு உன்னையும் சேர்த்து சிரிக்கச் செய்வேனாக.

***

மோட்ச வாயிலின் மிதப்புநிலை

வார்த்தைகளை உலர்த்தி அந்தரத்தில் அசைகிறது
நகைப்பின் வழி ஊசல்.

எய்யப்படும் அம்புகளாய் தேகத்தை ஊடுருவி
வழிந்து வெளியேறுகிறது வெயில்.

தூசியினை துடைத்தெடுக்கும் தும்பிகளுக்கு
துணையாகிறது
விரலுரசி அவிழ்த்த கூந்தல்.

பெருவெளியில் பரவிக்கிடக்கும் ஒளி
லார்வாக்கள் உயிர்ப்பித்த சாம்பல் பாறையில்
செந்தனலாய் வியாபித்துள்ளது.

இச்சைகளோடு இமை திறப்போரை தடுத்து நிறுத்த
ஏவலோடு காவலாய் ஞமிலி.

கருத்த இரவு, கூரிய வாள், நாய்களை வேட்டையாடுபவன்
கட்டாயமாய் தேவைப்படுகின்றனர்.

ஒவ்வொரு முறையும் ஊசலின் கயிற்றை அறுத்து
அப்சரஸ்களின் ஏகாந்த வாழ்வியலை கட்டுடைத்து சிதைக்க.

ஆயினும் மோட்சம் பெறப்போவதை எண்ணி தாண்டவம் கொண்டு
குலுங்கி விரியும் நிலத்தில் புதைந்துகொண்டே இருக்கின்றனர்
ஒவ்வொரு வேட்டையாளனும்.

***

ரா.த.ஜீவித்தா
Jeeviammu1210@gmail.com

ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு – 8

0

ரூபன் சிவராஜா

இதற்கு முந்தைய பதிவுகளை வாசிக்க இங்கே அழுத்தவும்

‘Rashomon’ விளைவு

Rashomon – 1950இல் வெளிவந்த ஜப்பானியத் திரைப்படம். இதன் இயக்குனர் Akira Kurosawa. ஐப்பானிய நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தின் கதைக்களம்.

சாமுராய் ஒருவனின் மனைவி கொள்ளையர்களால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுகிறாள். நீதிமன்ற வழக்கு நடைபெறுகிறது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்ட முக்கிய நபர்கள் ஒவ்வொருவரின் கோணத்திலும் தனித்தனியாக மீள்காட்சிகளோடு கதை சொல்லப்படுகிறது. அதாவது குற்றவாளி, பாலியல் வன்புணர்வுக்கு உட்பட்டவர், கணவன், நேரடிச் சாட்சி என நான்கு பாத்திரங்களின் அனுபவக் கோணங்களினூடு கதை சொல்லப்படுகின்றது.

வானவில் அரங்கின் உத்திகளில் ஒன்று இந்தத் திரைப்படத்தின் பெயரால் அழைக்கப்படுகின்றது. அது வானவில் அரங்கின் வினைத்தாக்கம் மிக்க உத்தியாகப் பயன்படுத்தவும்படுகிறது. இந்த திரைப்படக் கதைசொல்லல் உத்தி நேரடியாக வானவில் அரங்கத்திற்குள் Boalஇனால் உள்வாங்கப்பட்டிருக்கின்றது.


இந்த உத்தியில் பல்வேறு திரைப்படங்கள் உலகெங்கும் வெளிவந்திருக்கின்றன. அண்மையில் வெளிவந்த ‘ Anveshanam ‘ மலையாளத் திரைப்படமும் இந்த உத்தியில் அமைந்ததே. குழந்தைகள் மீதான பெரியவர்களின் வன்முறையும் அந்த வன்முறைக்கான தண்டனையிலிருந்து தப்பிக்கொள்ளப் பெரியவர்கள் மேற்கொள்ளும் பிரயத்தனங்களும் இப்படத்தின் மையப்பேசுபொருள். காவல்துறை, மருத்துவத்தாதி, தாய், தகப்பன், நண்பர் என ஐந்து தரப்புக் கோணங்களில் நடந்திருக்கக்கூடிய சம்பவம் மீள்கதைசொல்லல் மூலம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

வானவில் வடிவத்திற்கு பரந்துபட்ட ஆற்றுகை முறைமைகள் மற்றும் நுட்பமான உத்திகளை Boal பரிந்துரைத்திருக்கின்றார். ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கின் முன்னைய வடிவங்களிலிருந்து பல வழிகளில் மாறுபட்ட புறச்சூழல்களைக் கருத்திற்கொண்ட உத்திகள் இவை.

வானவில் அரங்க உத்திகள்:

• The ‘Normal mode’ – சாதாரண நிலை:
ஒரு சூழ்நிலை அல்லது அனுபவம் கட்டமைக்கப்பட்ட இயல்பான முறைமையில் வெளிப்படுத்தப்படும். யதார்த்தவாதம் ஒரு உத்தியாக பயன்படுத்தப்படுவதாக அர்த்தம் கொள்ள வேண்டியதில்லை. வாழ்வியல் சூழல் அல்லது அனுபவம் அல்லது நிகழ்வு ஒன்றின் யதார்த்தத்தை வெளிப்படுத்துகின்ற நிலை. இது ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கின் பாரம்பரிய வடித்தை ஒத்தது. இருவேறு விருப்புகள் மோதலுக்குள் செல்கின்றன. மோதல் ஒரு நெருக்கடியைத் தோற்றுவிக்கின்றது. நெருக்கடி புதிய வாய்ப்பினை அல்லது தீர்வைக் கண்டடைவதில் முடிவடைகிறது.

• The ‘Breaking the oppression’ ஒடுக்குமுறையைத் தகர்த்தல்:

இந்த உத்தி, சூழ்நிலையை மாற்றுவதற்கு முனைவதாகும். மாற்றம் சாத்தியம் இல்லையெனில் அதனை ஆற்றுகையாக மேடையேற்றுவதில் பயனில்லை என்பதற்கமைய இவ்வுத்தி எது நிகழ்ந்தது என்பதை விடுத்து எது நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சூழ்நிலையை மீள் உருவாக்கம் செய்கிறது.

• The ‘stop and think’- நிறுத்திச் சிந்தித்தல்
இது பேசப்படாத எண்ணங்களையும் உணர்வுகளையும் கண்டடையும் முனைப்புச் சார்ந்தது. அரங்கின் ‘ஜோக்கர்’ (நெறியாளர்) ‘ஸ்ரொப்’ கட்டளையைப் பயன்படுத்தி நடிகர்கள் தவிர்க்கும் அல்லது பேசாது கடந்து செல்லும் விடயங்களில் கவனம் செலுத்த வைப்பார். அதன் மூலம் முன்னர் புரிந்துகொள்ளத் தவறிய விடுபட்ட விடயத்தைக் காணவும் புரிந்துகொள்ளவும் மாற்றம் நோக்கிச் சிந்திக்கவும் வழிகோலப்படும்.

• The ‘softly softly’ – மென்நிலை
இந்த உத்தியானது, உணர்வுக் கொந்தளிப்புக்குப் பதிலாக பிரதிபலிப்பினை ஊக்குவிப்பது. இதன் மூலம் பார்வையாளர்களை ஆற்றுகையாளர்களாக அரங்கத்திற்குள் பங்கேற்கச் செய்தல். அதாவது Spect actorsஐ Actor ஆக பங்குபெறச் செய்தல்.

• The ‘lightning forum’ – மின்னல் அரங்கு
ஒரு சிக்கலுக்கு வெவ்வேறு சாத்தியமான தீர்வுகளை விரைவாகக் கண்டடைய அனுமதிக்கிறது.

• The ‘agora’ – அகோர நிலை
அகமுரண்பாடுகளை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. ஆற்றுகையாளர்கள் வெவ்வேறு விருப்பங்களின் பிரதிநிதிகளாக அல்லது protagonist இன் அங்கமாக இருந்து உரையாடல் அல்லது மோதலில் ஈடுபடுகின்றனர்.

• The ‘fair’ mode – நியாய நிலை
பல வகையான மெருகூட்டல்களுக்கு இடமளிக்கின்ற உத்தி. இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்களைக் கொண்டிருத்தல். அதனால் ஆற்றுகையாளர்கள் பதற்றமற்றிருப்பர்.

• The ‘three wishes’ – மூன்று விருப்பங்கள்
விருப்பங்களுக்கேற்ப சூழல்கள் முதன்மைப்பாத்திரத்தினால் மாற்றத்திற்கு உட்படுவதை அனுமதிக்கிறது இந்த உத்தி. முதன்மைப்பாத்திரம் உறுதியான விருப்பங்களை இன்னமும் கொண்டிருக்கவில்லை என்பதோடு குறிப்பிட்ட சிக்கல் ஒன்றிலிருந்து அவர் விடுபட விரும்புகிறார் என்பது இவ்வுத்தி மூலம் வெளிப்படுத்தப்படும்.

 The ‘disassociation’ – துண்டித்தல்
அக-உரையாடல் அல்லது அக-உணர்வு வெளிப்பாட்டினையும், புற-உரையாடலையும் விருப்பங்களின் செயற்பாடுகளையும் ஆற்றுகையின் படிநிலைகளில் வேறுபடுத்துகின்றது -பிரிக்கின்றது. முதலில் ஆற்றுகையாளர்கள் தத்தமது பாத்திரங்களின் அகவயப்பட்ட எண்ணங்களை ஒரேநேரத்தில் குரற்பயிற்சி செய்வர். பின்னர் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வர். இறுதியில் பேசிக்கொள்ளாமல் ஆற்றுகை செய்வர்.

 The ‘playing to the deaf ’ – செவிப்புலனற்றோருக்காக ஆற்றுகை:
இந்த உத்தி முழுக்காட்சியையும் வார்த்தைகளின்றி ஆற்றுகை செய்வதைக் குறிக்கின்றது. இது அதிகம் உரையாடலில் தங்கியிருக்கும் காட்சிகளை கூர்மைப்படுத்துவதற்கான வழிமுறையாகும்.

மேற்சொன்ன பெரும்பாலான அனைத்து உத்திகளும் மேம்படுத்தல் (மெருகூட்டல்) செயற்பாடுகளுடன் தொடங்கும். முதன்மைப்பாத்திரம் பார்வையாளர்களுடன் (Spect actors) இணைந்து காட்சியை ஆற்றுகை செய்வார். இச்செயல்முறையில் உணர்வுபூர்வமாகத் தாம் செய்யும் பாத்திரத்துடன் ஒன்றிப்போகும் திறனுடையவர்களாக ஆற்றுகையாளர்கள் இருத்தல் வேண்டும். அதாவது பாத்திரத்துடன் தம்மை அடையாளப்படுத்தும் வகையில், பார்வையாளரின் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்தும் வகையில் ஆற்றுகையை நிகழ்த்த வேண்டும்

உருவகங்கள்
இந்த உத்திகள் பலவற்றில் உருவகங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஆற்றுகையாளர்கள் சிலை அல்லது ஓவியமாக ஒரு சூழ்நிலையை வடிவமைப்பர். அந்த உருவகங்கள் மூலம் நிலவுகின்ற ஒடுக்குமுறைச் சூழல் அல்லது அடைய விரும்புகின்ற விடுதலையின் ‘மாதிரி’ காட்சிப்படுத்தப்படும். அக-ஒடுக்குதலுக்குள்ளான பங்கேற்பாளர்கள் உருவகங்களை வடிவமைப்பர். தாம் சுய-ஒடுக்குதலுக்கு உள்ளாகியிருந்ததை அல்லது ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்த தருணத்தை உருவகங்கள் மூலம் வெளிப்படுத்துவர். அதுவொரு இலட்சிய நிலையின்பாற்பட்ட உருவகமாக இருக்காது. கற்பனையான அல்லது நடைமுறைச் சாத்தியம்மிக்க இலக்குகளைக் கொண்ட விருப்பங்களை (Desires) பிரதிபலிப்பதாக அமையும் என்கிறார் Boal.

உளவியல் துறைக்கும் நாடகத்துறைக்குமான பாலம்

மனித உளவியலையும் மனிதர்கக்கிடையிலான உறவுநிலை சார்ந்த உளவியலையும் ஆராய்வதற்கும் இந்த உத்திகள் பயனுடையவை. அந்த வகையில் உளவியலாளர்களின் கவனத்தையும் இது ஈர்த்துள்ளது. 1989இல் psycho dramaவின் தந்தை என விளிக்கப்படும் Jacob Moreno -நூற்றாண்டு விழவை முன்னிட்டு அம்ஸ்டர்டாமில் நடைபெற்ற உளவியல் மாநாட்டில் Boal, வானவில் அரங்கு பற்றி உரையாற்றியதாகத் தகவல்கள் கூறுகின்றன. வானவில் அரங்கின் குறிப்பிடத்தக்க சில உத்திகளை உளவியல் துறைக்கும் நாடகத்துறைக்குமான பாலம் எனச் சொல்லலாம். இருப்பினும் உள ஆற்றுப்படுத்தலுக்குரிய உத்திகள் மனிதர்களைச் சமூக மயப்படுத்தும் நேரடியான நோக்கினைக் கொண்டிராது. மனிதர்கள் தனிப்பட்ட ரீதியில் தமக்குள் எத்தகைய சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரமுடியும், சடங்குபூர்வமானதும் சட்டகபூர்வமான நடைமுறைகளிலிருந்து எவ்வாறு வெளிவரமுடியும் என்பவை பற்றியது உளவியல் அணுகுமுறை.

உளவியல்துறைக்கு அப்பால் நாடக, திரைப்பட எழுத்துரு மற்றும் அவற்றின் பாத்திர உருவாக்கத்திற்கும் வானவில் உத்திகள் பயன்படக்கூடியன. அதேபோல் இலக்கிய, நாடகப் பிரதிகளில் பாத்திரங்களின் குணாதிசயங்களை பகுப்பாய்வு செய்யவும் இதன் உத்திகளைக் கைக்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக இப்சனின் நாடகப் பாத்திரங்கள் பெரும்பாலும் மனிதர்களுக்கிடையிலான உறவு, அதிலும் ஆண்-பெண் உறவு, சமூக உறவு சார்ந்தவை. குறிப்பாக முதன்மைப் பாத்திரங்கள் சிக்கலானதும் நுணுக்கமான பரிமாண இயல்புகளைக் கொண்டவை. இரட்டை நோக்குடைய வார்த்தைகளை உதிர்க்கின்ற பாத்திரங்கள். இப்சனின் பாத்திரங்களைப் புரிந்துகொள்வது கடினமானது. அந்தப் பாத்திரங்கள் நேரடியாகப் பேசுகின்ற அர்த்தங்களைத் தாண்டி உள்அர்த்தங்களை உற்று உணர வேண்டும். இத்தகு இலக்கியப் பிரதிகளின் பாத்திரங்களைப் உற்றுணரவும் பகுப்பாய்வு செய்யவும் வானவில் உத்திகள் பயன்படக்கூடியன.

மனித இயல்பின் பல்பரிமாண வெளிப்பாடு
மனித இயல்புக்குள் இருக்கக்கூடிய அனைத்து விதமான நுணுக்கமான பக்கங்களையும், குறிப்பாக ஒடுக்கப்படுகின்ற, தளைகளுக்குட்பட்டிருக்கின்ற பக்கங்களை வானவில் உத்திகளின் மூலம் வெளிக்கொணர முடியும். ஆரம்பத்தில் முதன்மைப்பாத்திரத்தின் குண இயல்பில் மேவிநிற்கின்ற, குறிப்பிட்ட சூழலில் ஆதிக்கம் செலுத்துகின்ற இயல்பின் பக்கங்கள் வெளிப்படும். அடுத்தடுத்த படிநிலைகளில் மெருகூட்டலுக்கும், சூழ்நிலைகளுக்குப் பொருத்தமான உத்திகள் உள்ளீடு செய்யப்பட்டு அரங்கம் நகர்த்தப்படும் போது குண இயல்பின் ஏனைய பக்கங்கள் வெளிப்படும்.

Boal இதனை சூரிய வெண்ணொளி மழைத்துளிகளை ஊடறுத்துச் செல்லும் போது ஏழு நிறங்களும் தோன்றும் ஒளியியல் நிகழ்வுக்கு ஒப்பிடுகிறார். அதாவது முதன்மைப்பாத்திரத்திடம் ஆதிக்கம் செலுத்துகின்ற குண இயல்பு எதிர்-பாத்திரம், துணைப் பாத்திரங்களுடன் முட்டிமோதி வெளிப்படும் போது பல்பரிமாணமுடைய குணஇயல்புகள் பிரதிபலிப்பதற்கு வழிகோலப்படுகின்றது என்பதாகும்.

தொடரும்.. (இந்த தொடரை முழுமையாக வாசிக்க..)


ரூபன் சிவராஜா – தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது.

பொருள் மதிப்பு வாழ்வு (கட்டுரை)

0
பாலசுப்ரமணியன் பொன்ராஜ் - 

குகைகளில் துவங்கியவர்களின் தலைமுறையினருக்கு விண்ணோருலக நதிகளையும், சொர்க்கங்களின் கனிகளையும் காணும் வாய்ப்பை அளிக்கும் ஸ்கைஸ்க்ராப்பர் வாழ்க்கை நம்முன்னே முளைக்கத் துவங்கியுள்ளது. உயரக் கோபுரத்தை அரச இலட்சிணையாக வைத்திருக்கும் தமிழ் நிலப்பரப்பில் தனியார் மூதலீட்டில் தனிநபர்களுக்காக எழும் விண்முட்டும் குடியிருப்புகள். பெருநகர வாழ்க்கை, அதன் அடையாள உற்பத்தி, மனக்கட்டமைப்புகள் குறித்து ஆழமாக கண்திறக்கும் சிந்தனைகளின் துவக்கம் நிகழ வேண்டும். நவீன வாழ்க்கையின் அடுத்தடுத்த கூறுகள் தமிழ் சமூகத்தின் உள்நுழைந்து அதன் அடிப்படைகளாகத் திரண்டு நிற்கும் கட்டுமானங்களை மாற்றியமைக்கும் இன்னாட்களில் விமானங்கள் மட்டுமே தலைக்கு மேல் பறக்கும். தெய்வங்களுக்கான செய்தியைக் கடத்தும் கோபுரங்கள், ரேடியோ அலைவரிசை டவர்கள், கிளைபடர்வின்றி உயரும் மரங்களையும் தலைதாழ்த்திப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பு முன்னெப்போதும் மனிதர்களுக்கு கிட்டாதது. ஸ்கைஸ்க்ராப்பரின் உச்சாணியில் நிற்பவர்கள் காணும் காட்சியில் உலகின் பலவெளிகளின் பரப்பு சுருங்கி எல்லையற்ற பரப்பின் ஒரு புள்ளியில் நிற்பது போன்றவொரு (மன)நிலை உருவாகும்.

தனிமனிதனை அச்சாக்கி உலகைச் சுழற்றிய பத்தொன்பதாம் நூற்றாண்டு நீராவி எந்திரப்புகையில் பிறந்தது. எந்திர ஓசையினால் அந்நியமான வாய் திறந்த நவீன மனிதன் “எட்வர்ட் மன்ச்”-ன் ஓவியத்தில் காதுகளைப் பொத்தினான். தொடுதிரைகள் விரல்களின் மைதானமாகி விட்ட நூற்றாண்டில் நிற்கும் மனிதன் கண்களை மூடுவதற்கு கைகளற்றுப் போய் ஓவியத்தில் காதுகளைப் பொத்தியவற்றை எடுக்க முடியாத நவீனயுகச் சிக்கல்களை உணருமுன்பாகவே உயரமாகி எழுந்து நிற்கிறது பெருநகர வாழ்விற்கான தூர இருந்தே பார்க்கக் கிடைக்கும் அழைப்பான ஸ்கைஸ்ராப்பர்கள்.

ஸ்கைஸ்ராப்பர் = வெற்று வெளியில் முதலீட்டால் உருவான ஒரு வாழ்வெளி.

பெரிய, விரிவான கட்டிட அமைப்புகள், அணைகள், தொழிற்சாலைகள் ஆகியவை நவீனத்துவ காலகட்டத்தின் அடையாளங்கள் என்றால் மால்கள், ஒபேக் கண்ணாடி பதித்த தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள், ஸ்கைஸ்க்ராப்பர்கள் பின்-நவீனத்துவ அடையாளங்கள். விரிவை, அகலத்தை பதிலீடு செய்யும் உயரம். அரசின் முதலீடில்லாமல் தனியார் முதலீட்டால் உயர்ந்தெழும் கட்டிடங்கள் மூலதனத்தின் சக்தியைக் காட்டும். அதன் அர்த்தம் என்பது மூலதனத்தின் வளர்ச்சியை ஒரு காட்சிப்பொருளாகக் காட்டுவது. OTIS லிஃப்ட்டுகள் மனிதர்களை ஏற்றி இறக்கும் 2000+ அடி உயர புர்ஜ் கஃலிபா’வின் கூர்முனை விண்ணுலகத்தோரின் புட்டத்தில் குத்தும். உயர எழும் மூலதனம் அதன் கீழேயுள்ள இயற்கையின், முந்தைய காலகட்டத்தின் மனித உயரங்களை சிறியதாக்கிப் பார்க்கும். மூலதனம் தான் உயரமானது அதற்கு அடுத்த உயரத்தில் இருப்பது ஒருவேளை கடவுள்.

மனிதனைக் கடந்து பரவி வாழ்வில் ஊடுருவி நிற்கும் அவனே உருவாக்கிய பொருட்கள், தொழில்நுட்பங்கள், மயக்கமூட்டும், கண்களை குருடாக்கும் மின்னொளி பரவிய நகரங்கள், கட்டிடங்கள், பொருட்களின் டிசைன்கள், உறுத்தும் அடர் வண்ணங்கள், பெருகும் ஒலியினால் மனிதனது புற அடையாளங்களும் அகக் கட்டமைப்புகளும் அடைந்த மாற்றம் இரு நூற்றாண்டுகால வேகம் கண்டத்திட்டுகளாக அதிர்ந்து மின்னலைகள் காற்றில் எழும்பி கணினித் திரைகளில் விரல்நுனிகளால் ஆளப்படும்.

கட்டிடக்கலையில் துவங்கிய பின்-நவீனத்துவச் சிந்தனை நுகர்வுப் பண்டங்கள் அவற்றின் குறிகள், அடையாள உருவாக்கம் குறித்து பேசினால் நவீனத்துவம் பொருட்களின் உற்பத்திப் பெருக்கம், தொழிற்சாலை உற்பத்தி முறையை விரிவாகப் பேசுவது. இயந்திரங்களின் ஒலியிலும், மின்னொளியிலும் நூற்றாண்டைக் கடந்த மனித வாழ்வு அதன் அர்த்தங்களை மறுவரைவு செய்த இச்சிந்தனைகளில் முன்னதான நவீனத்துவத்தின் வழி நகரமயச் சமூகத்தின் கூறுகளைப் பேசியவர் கியார்க் சிம்மெல் (1858-1918).

தனிமனிதன் தன்னுடைய இருப்பின் சுதந்திரத்தை, தனித்துவத்தைப் பேணுவதற்காக சமூகத்தின் மரபார்ந்த அதிகாரங்கள், வரலாற்றுப் பாரம்பரியத்தின் சுமை, புறக்கலாச்சாரம், வாழ்வின் தொழில் நுட்பங்கள் ஆகியவற்றிற்கு எதிராக மேற்கொள்ளும் முயற்சிகளில் இருந்துதான் நவீன வாழ்வின் ஆழமான பிரச்சனைகள் வழிகின்றன. நவீனத்துவ காலகட்டத்து மனிதனது இருப்பின் நிலையை சிம்மெல் செய்த வரையறை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஜெர்மானிய தத்துவத் துறைக்கு சமூகவியல், பெருநகர வாழ்க்கை, தனிமனிதன்-குழு இரண்டு பிரிவுகளின் உறவு குறித்த அவதானிப்புகள், பணத்தின் தத்துவம் போன்ற பங்களிப்புகள் செய்த சிம்மெல் நவீன பெருநகர் வாழ்க்கையின் கூறுகளை அதன் குழந்தைப் பருவத்திலேயே கணித்தவர்களில் ஒருவர். இயந்திரத்திலிருந்து பிறந்த அந்த நூற்றாண்டு மனித சிந்தனையில், வாழ்முறையில் ஏற்படுத்திய அகப்புறத் தாக்கங்களை விரிவாகப் பேசியவர்.

ஆதிமனிதன் தன்னுடைய மெய்யான இருப்பிற்காக அவன் இயற்கையோடு நிகழ்த்திய போராட்டங்களின் நவீன வடிவத்தை இவ்வெதிர்ப்பு பிரதிநிதித்துவப்படுத்துகிறது. வரலாற்று ரீதியாக அரசியல், மதம், அறம், பொருளாதாரம் இவற்றோடு உருவாகிவிட்ட பிணைப்பிலிருந்து சுதந்திரத்திற்கான, மனிதர்கள் அனைவரிலும் சமமாக இருந்த அசலான, இயல்பான மதிப்பீடுகள் தடையின்றி முன்னேறுவதற்காக 18-ம் நூற்றாண்டு அழைப்பு விடுத்திருக்க; 19-ம் நூற்றாண்டு, மனிதனின் சுதந்திரத்திற்கு கூடுதலாக அவனை தனிச்சிறப்பு (unique) மிக்கவனாக, இன்றியமையாதவனாக ஆக்கும் அவனுடைய தனித்துவம் (வேலைப் பங்கீடோடு தொடர்புடையது) மற்றும் அவனுடைய சாதனைகளோடு ஆனால் அதேசமயம் மற்றவர்களின் பதில் நடவடிக்கைகளோடு மேலும் சார்ந்திருத்தலை வளர்த்தது.

நவீன மனிதனது தனித்துவத்திற்கான போராட்டத்தை ஆதிமனிதனது தப்பிப் பிழைப்பதற்கான போராட்டத்தோடு தொடர்புறுத்தும் சிம்மெல் நவீன காலகட்ட வாழ்வில் சுதந்திரமாகவும், தனித்துவத்தோடு இருப்பதே மனித வாழ்வின் சாரமாக இருக்கிறது எனக் காட்டுகிறார்.

George Simmel

பொருட்களின் மதிப்பில் மார்க்சிய அணுகுமுறையான பயன்பாட்டு மதிப்பு மற்றும் பரிவர்த்தனை மதிப்பு ஆகியவற்றோடு பொருட்களின் மீதான மனிதமனம் உண்டாக்கும் மதிப்பு குறித்து பேசியவர் சிம்மெல். பொருட்களின் மதிப்பு பரிவர்த்தனையால் மட்டுமே உருவாவதில்லை எனும் சிம்மெல் பணத்தின் தத்துவம் புத்தகத்தில் விரிவாக இதைப் பேசியிருக்கிறார்.

மனிதர்கள் பொருட்களை உண்டாக்கி மதிப்பைத் (value) தோற்றுவித்து பிறகு அவற்றிடமிருந்து ஒரு விலகலை உருவாக்கி பின்பு அந்த தூரத்தை கடக்க முயற்சி செய்கின்றனர்.அருகிலிருக்கும் பொருட்களும், அடைவதற்கு மிக தூரத்திலிருக்கும் பொருட்களும் மதிப்பு உடையவையாக கருதப்படுவதில்லை. பற்றாக்குறை, நேரம், தியாகம் மற்றும் பொருட்களை அடைவதற்கான நெருக்கடிகளும் மதிப்பை உருவாக்கும் கூடுதல் காரணங்கள்.

பொருட்கள் மதிப்பு மிக்கவையாக இருப்பதால் அவற்றைக் கையகப்படுத்துவது சிரமம் இல்லை; ஆனால் அந்தப் பொருட்களை மதிப்பு மிக்கவையாக அழைப்பதே அவை நமது கைப்பற்றும் விருப்பத்தை தடுப்பதால்தான்.1 பொருட்களுக்கும் நமக்கும் இடையிலான தூரத்தால்தான் விருப்பம் அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்கிறது என்றும் பொருட்களின் மதிப்பில் இந்த தூரம் பங்காற்றுகிறது என்றும் சொல்கிறார்.

நகர வாழ்க்கை வேலைப் பங்கீட்டிற்கும் நிதிமயப்படுத்தலுக்கும் வழி வகுக்கிறது. நிதிசார் பரிவர்த்தனைகள் அதிகமாக ஒரு தனிமனிதன் என்பவன் யார்? என்பதிலிருந்து அவனால் என்ன செய்ய முடியும்? என்பதாக மாற்றம் நிகழ்கிறது. (சிம்மெல்)

அறிவொளிக்கால, ரொமாண்டிசிச, நவீனத்துவ பின்நவீனத்துவ காலம் வரைக்குமான சித்திரங்களை சிம்மெலின் இவ்வாக்கியங்கள் வழங்குகின்றன.

நவீனத்துவ காலம் பொருட்களின் மறு உற்பத்தி வழியாக அடையாளப்படுத்தப்பட்டது என்றால் பின்-நவீனத்துவ காலத்தில் அப்படி மறு உருவாக்கப்பட்டப் பொருட்களின் பெருக்கத்தை அதன் மதிப்பை குறுகிய காலத்தில் துய்த்து ஒன்றுமில்லாமல் ஆக்குவதாக உள்ளது. நவீனத்துவ காலத்தில் உற்பத்தி முக்கியத்துவம் பெற்றால் பின்-நவீனத்துவ காலத்தில் நுகர்வு முக்கியத்துவம் பெறுகிறது.

பொருளாதார நிபுணர்கள் இப்போது தோல்வியடைந்து கொண்டிருக்கும் ”ஜெனரல் மோட்டார்”-ஸை வெற்றிகரமான நவீனக் குழுமமாகப் பார்த்தால் நுகர்வோர் ‘அமேஸானை” ஒரு டிபிகல் பின்-நவீனத்துவமாகப் பார்க்கின்றனர்.2

நவீனத்துவத்தின் என்ன? எது? என்பது அனைத்தும் மற்றும் எத்தனையாக? மாற்றியிருக்கிறது.

பொருட்களின் நீண்ட கால வாழ்வு மதிப்புமிக்கதாக இருந்தது போய் குறுகியகால இருப்பே அதன் மதிப்பைக் கூட்டுவதாக உள்ளது. காலத்தின் வேகத்தை இந்தக் குறுகிய காலமே தாக்குப்பிடிக்கும் பொருட்களின் மதிப்பின் வழியாக அதிகரித்திருக்கிறோம். ஒளியின் அளவு வேகத்தின் மூலம் காலத்தை நீட்டிக்க முடியும் என்கிற ஐன்ஸ்டீனிய விதிக்கு எதிராக, நீண்ட காலத்தை இந்தத் துய்ப்பின் வழியாகக் குறுகிய ஒன்றாக மாற்றும் வாழ்க்கையை வாழ்கிறோம்.

பெருக்கம் நிறைவை அளிப்பதற்கு பதிலாக அனைத்தையும் அன்லிமிடெடாக வழங்கி நிறைவை எடுத்துக் கொள்கிறது. அனைத்துப் பொருட்களின் மீதும் எவ்வித மதிப்புமின்றியே துய்க்கிறோம். அதன் மதிப்பும் நம்முடைய தனித்துவத்தை அலங்கரிப்பதற்காகவே வழங்குகிறோம்.

பொருட்களின் வழியாக மதிப்புமிக்கதாகக உருவாக்கப்பட்ட நவீன வாழ்க்கை அப்பொருட்களின் வழியாகவே மதிப்பற்றதாக மாறிவிட்டது. இந்தியா போன்ற சமூகங்களில் நவீன பொருட்கள் சார் வாழ்க்கையின் மீதான ஏக்கமும் நகரங்களில் பொருட்களின் மீதான நிறைவின்மையையும் ஒருங்கே நிலவுகின்றன. இந்நிலையில் ஒரு கேள்வி முன்னிற்கிறது.

நாம் யாராக இருக்கிறோம்? என்பது போய் நாம் எங்கே இருக்கிறோம்? என்பதே அது.

ஒரு பெருநகரத்தில் வாழும் மனிதனும் கிராமத்தில் வாழும் மனிதனும், மனிதன் என்னும் அளவில் கூட இப்போது சமமாக எண்ணப்படுவானா என்பது சந்தேகம். நகரங்களில் வாழும் கிராமத்தவர்களும் ஒரு பிரிவு. செழிப்பும், செழிப்பு மிக்க இடங்களில் வாழ்தலுமே மதிப்பை உருவாக்கி மனிதன் என்பதற்கான அர்த்தத்தை அளிக்கின்றன.

நவீனத்துவம் உருவாக்கிய தனிச்சிறப்பு மிக்க (unique) அடையாளம் காலாவதியாகி கூட்டுத்தனிச்சிறப்பு (collective uniqueness) உதா அபார்ட்மெண்ட் வாசம், Gated Community living, தொழில் சார்ந்து (profession) உருவாகும் தோழமையுணர்வு போன்றவற்றால், தனிமனிதனின் புற அடையாளங்கள் வழியாக இல்லாமல் கூட்டு அடையாளங்களை தனிமனிதன் எய்துவதால் அவனது தனிச்சிறப்பு கட்டமைக்கப்படுகிறது. அப்படி ஒரு கூட்டு அடையாளம் தான் ஸ்கைஸ்க்ராப்பர்.

குறிப்புதவி :

  1. பணத்தின் தத்துவம் – கியார்க் சிம்மெல்
  2. அப்படியானால் பின்-நவீனத்துவம் என்பது என்ன – சார்லஸ் ஜென்க்ஸ்

***

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

“கனவு மிருகம்” , “துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை” ஆகிய நூல்களின் ஆசிரியர்.
tweet2bala@gmail.com

எல்லை நீத்த தமிழ் படைப்புக்களம் (கட்டுரை)

0

நாஞ்சில் நாடன்

(இந்த மாதம் வெளிவரயிருக்கும் இசூமியின் நறுமணம் சிறுகதைத் தொகுப்பு குறித்த எழுத்தாளார் நாஞ்சில்நாடனின் மதிப்புரை.)

சூமியின் நறுமணம்’ என்ற தலைப்பிலான ரா.செந்தில்குமாரின் சிறுகதைத் தொகுப்பு பன்னிரு சிறுகதைகள் கொண்டது. இவற்றுள் பல கதைகள் இணையத்தின் மூலம் வாசிக்க வாய்த்தவை. முன்னுரை எழுதும் பணிக்காக ஒருசேர வாசித்தேன். நான் முன்னுரை எழுதும் எந்த நூலையும் இரண்டு முறை வாசிப்பேன். எனவே இரண்டாம் முறையும் வாசித்தேன். புத்தக வடிவில் என் கையில் கிடைத்ததும் இன்னொரு முறையும் வாசிப்பதற்கான தூண்டுதல் இக்கதைகளில் உண்டு.

பன்னிரு கதைகளில் நான்கு கதைகள் நீங்கலாக மற்றெல்லாம் ஜப்பானிய சூழலில் எழுதப்பெற்றவை. அவற்றுள் நடைமுறை, அலுவலகம், குடும்பம், வாழ்க்கை, மாநகர இயக்கங்கள் மற்றும் ஜப்பானிய தேசத்தின் குணநலன்கள் நுட்பமாகப் பேசப்படுகின்றன.

வழக்கமாகப் பிறமொழிக் கதைகளை, ஆங்கிலம் வழித் தமிழ் மொழிபெயர்ப்புகளாக வாசிக்கும்போது நாம் ஒரு அந்நியத்தன்மையை உணர்வோம். விதிவிலக்குகள் இருக்கலாம். என்றாலும் அதே பாடுபொருள்கள், மூலமே தமிழாக அமையும்போது வாசிப்பின் வசீகரம் அதிகரிக்கிறது. தலையாய எடுத்துக்காட்டு மூத்த தமிழ் எழுத்தாளர், கனடாவில் வாழும் அன்னார் அ.முத்துலிங்கம் அவரை மூத்த இலங்கை எழுத்தாளர் என்று பிரித்துப் பேசுவதில் எனக்கு ஒவ்வாமையுண்டு. மேலும் சில இலக்கியவாதிகள் பெயர் குறிப்பிடலாம். நாகரத்தினம் கிருஷ்ணா, ஷோபா சக்தி, காலம் செல்வம் என்ற அருளானந்தம், டி.சே.தமிழன் என்று அறியப்படும் இளங்கோ, ஆசி.கந்தராசா, நொயல் நடேசன், வ.ஐ.செ.ஜெயபாலன், தமிழ்நதி என்று சிலர் உடனடியாக நினைவுக்கு வருகிறார்கள்.

புலம்பெயர்ந்து இருநூறு ஆண்டுகளோ, இருபதாண்டுகளோ அவர்கள் மூலமாகத் தமிழ் வாசகனுக்கு நேரடியாகத் தெரியவரும் அந்நிய மண்ணின் மரபுகள் உண்மையான அனுபவங்களாகின்றன. ஐரோப்பிய, அமெரிக்க, கனடா, வளைகுடா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் பண்பாடுகளை நேரடியான தமிழ் எழுத்தாளர் அனுபவமாகவே நமக்கு இன்று வாசிக்க இயலும். ஆனால் சீனா, ஜப்பான், கொரியா போன்ற நிலப்பரப்புகளின் ஆக்கங்களை மொழிபெயர்ப்பு மூலமாகவே இதுவரை அறிந்த்து வந்தோம். ஆனால் அண்மைக்கால அனுபவம் வேறு. அந்த வகையில் ‘இசூமியின் நறுமணம்’ எனும் இந்தத் தொகுப்பின் எட்டு கதைகள் மூலம் ஜப்பானியப் பண்புகளைப் படைத்துக்காட்ட முயலும் ரா.செந்தில்குமாரின் முயற்சி பாராட்டுதலுக்குரியது, வரவேற்கத் தகுந்தது. ‘எல்லை ஒன்றின்மை எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும்’ என்றுதான் பாரதியார் கம்பனையே முயற்சி என்கிறார். அந்த மதிப்பீட்டிலேயே ரா.செந்தில்குமாரின் இந்தக் கதைகளையும் முயற்சி என்கிறேன். ரா.செந்தில்குமார் என்பது பெயர்தான் என்றாலும் டோக்கியோ செந்தில் எனும் பெயரிலேயே நண்பர் பலரும் அறிவார் அவரை. எதிர்காலத்தில் ‘நாமமும் அனுமன் என்பேன்’ என்று கம்பன் கூறுவதைப்போல தமிழிலக்கியத்தில் பெயர்நிலைக்க அவர் முயல வேண்டும்.

காதலியின் திருமண வரவேற்புக்குப் பரிசுப்பொருள் தேர்ந்து வாங்கிப்போகும் காதலனின் மெல்லுணர்வுகளும் வஞ்சிக்கப்பட்ட தாம்பத்யத்தின் வல்லுணர்வுகளுமாக மிடைந்து காட்சிதரும் கதை ‘மலரினும் மெல்லிது’. நொடித்துப் போனதொரு குடுப்பத்துப் பெண்டிரின் கையறு நிலையை சூசகமாக உணர்த்தும் கதை ‘மடத்து வீடு’. வளர்ந்ததொரு கழுகின் உச்சியில் ஏறி இன்னொரு கழுகுக்குத் தாவும் சாகசப் பயிற்சி இருப்பவர் மட்டுமே இக்கதைகளின் உளவியல் அறிந்து அனுபவிக்க இயலும். உழுபவனுக்கே நிலம் சொந்தம் எனும் கோஷம் உரத்துக் கேட்ட காலத்தின் கதை ‘அனுபவ பாத்தியம்’. எத்தரப்பில் நின்றும் நியாயத்தை அத்தனை எளிதாக உரைத்துவிட இயலாது என்பதை வாசகனுக்கு அர்த்தப்படுத்தும் சிறுகதை. மனித வாழ்க்கையில் சூதும் வாஞ்சனையும் புதிய சங்கதிகள் அல்ல. அதன் ஒரு வடிவம் ‘அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்’ எனும் கதை. வஞ்சிக்கப்பட்டவரின் அவமானமும் வீழ்ச்சியும் அதன் காரணங்களும் பேசும் கதை.

மேற்சொன்ன நான்கும் சமகாலத் தமிழ்நாட்டுச் சூழலில் உரைத்தல் படும் கதைகள். மீதி எட்டும் ஜப்பானியப் பின்புலம். ரா.செந்தில்குமார் பதினெட்டு ஆண்டுகளாக ஜப்பான் நாட்டில் டோக்கியாவில் வாழ்பவர். இந்தத் தொகுப்பின் ஜப்பானியத் தளத்தில் நடக்கும் கதைகளை வாசிக்கும்போது 2018-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஜப்பானில் வாழ்ந்த ஒன்பது நாட்களும் எனக்கு நினைவு வந்தன. முழுமதி அறக்கட்டளையின் அழைப்பில் சென்று வந்தேன். ரா.செந்தில்குமார் – காயத்ரி தம்பதியினரும் கவின், கவிதா என்ற அவர் மக்களும் – எனக்கு பேரனும் பேத்தியும் – காட்டிய அன்பு என்றும் நிலைத்திருக்கும் நெஞ்சில். அஃதே போன்று ரகுபதி ராஜசேகர் – ரம்யா தம்பதியினரும் அவர்தம் இரு பெண்மக்களும். உலகெங்கும் நமக்கு இன்று பேரன் பேத்திகள்.

ஜானி வாக்கர், புளூ லேபில், ஜாக் டேனியல்ஸ், க்ளென் லிவெட், க்ளென் ஃபிடிஷ் விஸ்கிகளுக்கு சற்றும் பின்வாங்காத ஜப்பானிய சிங்கிள் மால்ட் விஸ்கியொன்று பருகினேன் சிலநாட்கள். தொகுப்பின் கதையொன்றில் அந்த விஸ்கி குறிப்பிடப் பெறுகின்றது. யமாசாகி என்பது அதன் பெயர். எதற்குச் சொல்கிறேன் எனில் மலர்கள், உணவுகள், இசை எனப் பல குறிப்புகள் உண்டு இந்த எட்டுக்கதைகளிலும்.

ஜப்பான் பயணத்தின் போது தகவலாகத் தெரிந்து கொண்ட விடயம் ஒன்றுண்டு. அங்கு பிரசவங்களின் போது சிசேரியன் என்பது மிகமிக அரிது என்பதது. இன்னொன்று ஆண்டுதோறும் அந்நாட்டில் நிகழும் தற்கொலைகளின் எண்ணிக்கை. ‘அன்பும் அறனும் உடைத்தாயின்’ எனும் சிறுகதையில் சிவநேசன் எனும் மலேசியத் தமிழரின் தற்கொலை அந்தத் தகவலை உறுதி செய்தது. இன்னதென அறிகிலாத காரணத்திற்காக அங்கு வழக்கமாக நடக்கும் இரயில் முன் பாய்தல்களில் இதுவுமொன்று என வாசகனால் இயல்பாகத் தாண்டிப் போக இயலாதபடி சித்தரிக்கப்பட்ட கதை.

சாவு பற்றிய இன்னொரு கதை ‘செர்ரி பிளாசம்’ ஆனால் இங்கு மரணம் தற்கொலையல்ல, கொலையல்ல, நோய். இளம் கணவர் உடலுடன் காதல் மனையாட்டி ஊர் திரும்பும் கதை. என்னை சாலவும் பாதித்த கதை. பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நெதர்லாண்டில் இருந்து பம்பாய் – திருவனந்தபுரம் மார்க்கமாக சடலமாக நாகர்கோயில் திரும்பிய என் தம்பியின் நோய்ப்பட்ட மரணத்தை நினைவூட்டியது. உடன் பயணித்து வரும் பிணத்துக்காக ஊரில் காத்திருந்தவரும் அறிவார் அதன் வலியை.

‘கனவுகளில் தொடர்பவள்’ என்ற தலைப்பு காதலை, காமத்தை நினைவுறுத்தக் கூடும். ஆனால் கதைப்பொருள் அவையல்ல. நூதனமான அனுபவம் தரும் கதை. குளிரும் மதுவும் தனித்த இரவுகளுமாகக் கடந்தும் முடிவிலே மர்மம் தெளிவுறாதக் கதை.

‘ஒரு அறைக்குள் தமது வாழ்க்கையை சுருக்கிக் கொண்டவர்கள் ஜப்பானில் பதினைந்து லட்சத்திற்கும் மேலான போது’ என்றொரு வரி நம்மைக் கவலைக்கு உட்படுத்தும் கதை – ‘சிடியா கிராசிங். இது வேறொரு அனுபவம்.

‘இசூமியின் நறுமணம்’ தொகுப்பின் தலைப்புக் கதை. அலுவலக நண்பர்கள் ஆறுபேர் குட்டை மேசையில் குழுமி அமர்ந்து கொண்டாட்ட மதுபாவிப்பில் உரையாடும் கதை. பாலியல் தொடர்பான செய்திகள் விளம்பப்படும் உரையாடல். ஆனால் ஒருசொல்லும் வாசகனை வக்கிரத்தின்பால் இட்டுச் செல்வதில்லை. வட இந்திய ‘சாய் கா துக்கான்’ என்று அழைக்கப்படும் சாயாக்கடைகளில், வாடிக்கையாளர்கள் சிலர் கேட்பார்கள் ‘கொஞ்சம் மலாய் சேர்த்துப் போடுங்கள்’ என்று பாலியல் சம்பவங்கள் வரும் கதைகளில், நாவல்களில், எழுதியவரைப் பார்த்து, படைப்பாளப் பதிப்பாளர்கள், பாலியல் சம்பவங்களை ‘கொஞ்சம் ஏத்தி எழுதிக்கொடுங்கள்’ என்று கேட்பதுண்டு எனும் செய்தி நினைவுக்கு வருகிறது.

எட்டு மாதங்களாக, வாரம் முன்று நாட்கள் மட்டும் மென்பொருள் நிர்வகிக்க நண்பர்களின் அலுவலகத்துக்கு வரும் இசூமி எனும் இளம் பெண்ணிலிருந்து பகரும் மேனி வாசம் பற்றிய உரையாடலே மேற்சொன்ன சிறுகதை. அற்புதமான கடைசி வரிகளுடன் கதை முடிகிறது. அறிவார் அறிவார், அறியார் அறியார் அந்த மணத்தின் தனித்துவத்தை.

‘தானிவத்தாரி’ எனும் கதைத் தலைப்பு ஜப்பானியச் சொல். அதன் பொருள் கவிதை போலிருக்கிறது – அடர்ந்த பள்ளத்ததாக்கைக் கடந்து மற்றொரு பள்ளத்தாக்குக்குச் செல்லும் பாடல். இந்த கதையின் கதாபாத்திரம் கஷூமி சிறப்பான படைப்பு.

சிறுகதைகளில் சில நாவலுக்கான மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. ரா.செந்தில்குமார் முயன்று பார்க்கலாம். அதற்கான அனுபவப் பரப்பு அவருக்கு உண்டென இக்கதைகள் உணர்த்துகின்றன. ‘வினையே ஆடவர்க்கு உயிரே’ என்பார் குறுந்தொகையில் பாலை பாடிய பெருங்கடுக்கோ.

***

வாழ்த்துக்களுடன்
நாஞ்சில் நாடன்
கோயம்புத்தூர்.


மாற்று (சிறுகதை)

2

கவிதைக்காரன் இளங்கோ

ஸார் என்னைக்காவது ட்ரை பண்ணியிருக்கீங்களா?”

கம்மனாட்டி பையன் விடமாட்டான் போலிருக்கே என்றுதான் முதலில் தோன்றியது. கோபம் வந்தது. ஒவ்வொருத்தனுக்கும் அடுத்தவன் விஷயத்துக்குள்ளே மூக்கை நுழைத்து மோந்து பார்ப்பதில் அப்படியென்ன லயிப்பு மயிரு? மாதக் கடைசிக்கும் மாத தொடக்கத்துக்கும் நடுவே என்ன வித்தியாசம் இருந்துவிட முடியும். தேதி என்பது ஓர் எழவெடுத்த நம்பர். காலக் கணக்குத்தானே சம்பளக் கணக்கும். உத்தியோகம் என்பது புருஷ..

அடச்சே.

“என்னமோ சொன்னீங்கதானே ஸார்? சரியா காதுல விழல. இன்னொருவாட்டி சொல்லுங்க ஸார்”

அவனைத் திரும்பிப் பார்த்தேன். இந்தக் கண்களை இத்தனை வருடமாக தன்னுடனே சுமந்து திரியும் இவனைப் போன்ற ஜன்மமெல்லாம் இரவு நிம்மதியாக தூங்கத் தெரிந்திருக்கிற அயோக்கியன்கள். வீட்டில் தினம் பெண்டாட்டிகளிடம் வம்பளப்பதற்கு விஷயங்கள் இல்லாமல் வெறும் பையோடு போய்ச் சேர்ந்தால் அன்றைய சம்போகத்தில் குறைவிழும் போல.

“ரொம்ப மன அழுத்தமா இருந்துச்சுன்னா இன்னைக்கு வேணா ஸார். நாளைக்கு சொல்லுங்களேன். வாய் எதுவோ முணுமுணுத்துச்சு. எனக்குத்தான் சரியா கேட்கலை. இன்னைக்கு காத்து வேற ஓவரா இருக்கு ஸார்”

பன்னாடை.

“என்னங்க ஸார்?”

“ஒன்னுமில்ல”

“ஸார். உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லணும்னு ரொம்ப நாளா யோசனையாவே இருக்கறேன். எப்படி சொல்லுறது எப்போ சொல்லுறதுன்னு ஒரு இது”

இன்னுமொரு அடுத்தவன் கதை. வீண் அலப்பறை. ஓர் அந்தரங்க கிளுகிளுப்பு. அக்மார்க் எச்சக்கலத்தனம். யாருக்குத்தான் பிரச்சனைகள் இல்லை. எங்குதான் மனக்கசப்பு இல்லை. எதிரெதிர் துருவங்கள் அருகருகே உட்கார்ந்தபடி காலம் தள்ள வேண்டிய கட்டாயம் தான் திரும்பும் பக்கமெல்லாம் கதையாக விரிந்து கிடக்கிறது. இதில் புதுசா என்னத்தை சொல்லிவிடப் போகிறேன் என தூக்கிக்கொண்டு வந்துவிட்டான். சரியான தகவல் பொறுக்கி. இதுவொரு கொடுத்தல் வாங்கல் பேரம். டபுள் என்ட்ரி சிஸ்டத்தின் மண்டைக்கனம் பழகிய தடியன். Debit what comes in Credit what goes out.

அய்யோ.. ங்கோத்தா..! எனக்கெதுக்குடா அடுத்தவன் விஷயம். நானே நாறிக்கொண்டு நசிந்துகொண்டு இருக்கும்போது, பழகின நொள்ளைக்கு இதெல்லாம் தேவைத்தான்.

“எதுவா இருந்தாலும் இப்போ வேணாம் மூர்த்தி. ஏற்கனவே மண்டை ரொம்பி கிடக்குது”

நாகரீகமாக மறுத்துவிட்டதை அரைமனதோடு ஏற்றுக் கொண்டவனாக தொலைவில் தெரியும் கடலைப் பார்த்து மெதுவாக முகத்தைத் திருப்பிக் கொண்டான். வாக்கிங் போகிறவர்கள், பார்வைக்கு குறுக்கே இடது வலதாக போய்க் கொண்டிருந்தார்கள். கடல் தன் நிறத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக உருமாற்றிக் கொண்டே வந்தது. சாம்பல் நிறம் கருமை ஏறி, மன இருளை நோக்கி இட்டுச் செல்வதைப் போல தோற்றம் அளித்தது. நான், வலதுபக்கமாகத் திரும்பி கலங்கரை விளக்கத்தைப் பார்த்தேன். அதன் உச்சியில் சுழன்று கொண்டிருந்த விளக்கு வெளிச்சம் கண்களுக்கு புலன்படத் தொடங்கிவிட்டிருந்தது. அருகே இருந்த மின்கம்பத்தின் கொண்டையில் சட்டிவடிவத்தில் கமிழ்ந்திருந்த விளக்குக் குடுவையின் மீது வந்தமர்ந்த காகம் ஒன்று எங்கள் இருவரையும் தலைசாய்த்து ஒற்றைப் பார்வை பார்த்துவிட்டு சிறகுகளை அலகுகொண்டு கோதிவிட்டுக் கொண்டது. கடற்கரையின் குறிப்பிட்ட மணற்பகுதி முழுவதும் பரவி வெளிச்சம் பாய்ச்ச நிறுவப்பட்டிருந்த உயரமான கூட்டுவிளக்கு மின்கம்பத்தின் தலையில் கூடுகட்டி தஞ்சம் அடையும் பருந்துகள், அதற்கும் சற்றே உயரத்தில் வட்டமடித்தபடியே இருந்தன. திடுமென விளக்குகள் எரிந்ததில் காகம் அசரவில்லை. பருந்தும் மருளவில்லை. இயக்கமும் இருப்பும் தொந்தரவாகவில்லை.

“எல்லாமே ஒரு பழக்கம்தான்”

அவன் கவனம் கலைந்து மீண்டும் என்னைப் பார்த்தான். மேற்கொண்டு நான் பேசப்போவதைக் கேட்பதற்குத் தயாராவதை அவனுடைய கண்கள் மின்னி அடையாளப்படுத்தின. பார்க்கும் பார்வையை கடைவிரிக்கும் கண்களின் வழியே யார் வேண்டுமானாலும் யாருக்குள்ளும் நுழைந்துகொண்டு உளவு பார்க்கலாம். தந்திரங்கள் மலிந்து கிடக்கும் மனத்தின் இருளுக்குள் புரளும் யோசனை குப்பைகளுக்கு ஒரு சிறிய சலாம் வைத்தால் போதும். இவ்வாறாக, அவனுடைய ஆவலைத் தூண்டுகிறேனா? காத்திருக்க வைத்து இன்பம் துய்க்க எத்தனிக்கிறேனா? ஆனால் எனக்கது நோக்கமல்ல. அதுதான் நோக்கமோ என அவன் நினைக்கக்கூடும். ஒரு மனநிலையின் பகுதிகளை கொஞ்சமாய் விண்டு எடுத்து இதனை இப்படிப் பார்க்க கூடாது. இதற்கு வேறொரு அர்த்தம் இருக்கிறது என மன்றாடுவது மோசமான பழக்கமாகி விட்டது.

அவனுக்கு என்ன தலையெழுத்து? என்னைச் சரியாகப் புரிந்து கொள்வதற்காகவே எவரோ பெற்று வளர்ந்து இப்படி எருமை கடா வயதில் இங்கே பக்கத்தில் உட்கார்ந்து என் வாயைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நானாக நினைத்துக் கொள்ள வேண்டுமா என்ன?

அயோக்கியத்தனம்.

“ஸார் ப்ளீஸ் சொல்லுங்க. என்னைக்காவது ட்ரை பண்ணியிருக்கீங்களா?”

பேசிவிடுவது என நினைக்கும் நொடியில் மீண்டும் அதே கேள்வியைத் தொடங்கி வைக்கிறான் பொறுமையற்ற அகௌண்ட்ஸ் தடியன்.

“டூ பர்சனலா கேட்கறீங்க மூர்த்தி. அதான் யோசிக்கிறேன்”

இப்போது அவன் சட்டென அமைதியாகி விட்டான். குனிந்து தன்னுடைய மணிக்கட்டு கடிகாரத்தின் கண்ணாடி மீது கட்டைவிரல் கொண்டு வட்டங்கள் வரையத் தொடங்கினான். மனித மௌனங்களுக்குள் சுழலும் கசடுகள் அதனோடு சம்பந்தப்பட்ட வேறொன்றின் மீது கவனம் குவிக்கும் உளவியலைப் பற்றி கொஞ்சமாக அறிந்திருந்தேன். அது எனக்குமே அதிகம் நடப்பதால் இப்போதெல்லாம் அவை சலிப்பூட்டுவதோ எரிச்சல் ஏற்படுத்துவதோ கிடையாது. இப்படியான கோளாறு செயல்கள் எல்லாம் ஒரு டைம்லெஸ் மொமெண்ட்.

எங்கள் இருவரிடமும் நிறைய நேரம் இருப்பதை உணர்த்தும் தருணமாகவும் அது இருந்தது. அல்லது நான் அப்படி எடுத்துக் கொண்டேன்.

இதொரு சௌகரியம்.

கடிகாரத்தின் பட்டை பக்கிளை நிமிண்டி அதன் துளையிலிருந்து விடுவித்து கழற்றி சட்டைப் பையில் போட்டுக்கொண்டான். சதுரமான அடையாளத்தோடு தோல் நிறத்தின் அசல் வெண்மை நிறம் படர்ந்திருந்த மணிக்கட்டின் உட்பக்கம் ஓடிய உயிர்நாடி நரம்பின் புடைப்பை தடவிவிட்டுக் கொண்டே என்னை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு குனிந்து கொண்டான்.

“என்னோட ரகசியத்தை உங்ககிட்ட மட்டும் சொல்லணும்னு ஒரு இது ஸார்”

“டூ பர்சனல்னா வேணாம் மூர்த்தி. விட்ருங்க. எனக்கும் மூட் இல்ல”

“இல்ல ஸார். கேட்டுக்கிட்டீங்கன்னா எதுனாச்சும் சொல்லுவீங்களா இருக்கும்”

“வாஸ்தவம் தான். அப்டி பார்த்தாலும், ஆஃபீஸ்ல நான் உங்களுக்கு அவ்ளோ க்ளோஸ் இல்லையே. ரத்னம் தானே உங்க தோஸ்த்?”

“புரியுது ஸார். ஆனாலும் நீங்க ஒரு தனி பர்சனாலிட்டி”

மனத்துக்குள் ‘டேய்’ என ஒரு குரல் மூண்டு அடங்கியது.

“போன வாரம், என்னோட பர்சனல் விஷயம்தான் மொத்த ஆஃபீஸுக்கும் நொறுக்கு தீனி. இல்லையா மூர்த்தி? இப்ப ஏழுநாளா அது ஜீரணம் ஆகற வரைக்கும் வெயிட் பண்ணீட்டிருந்தீங்களா என்ன?”

“ஸாரி ஸார். நான் ஒரு சராசரி மரமண்டை. ஆனா, இந்த ஒரு வாரமா எனக்கு சரியான தூக்கம் இல்ல. உண்மைய சொல்லணும்னா உங்க விஷயம்தான் உள்ளே கலந்துகட்டி ஓடிக்கிட்டே இருக்கு”

“என்ன வேணும் மூர்த்தி உங்களுக்கு?”

“சாவு ஸார்”

நான் அதிர்ச்சியெல்லாம் அடையவில்லை. இம்முறை கடல் நோக்கி என் முகத்தை திருப்பிக் கொண்டேன். பரந்து அலையும் இந்தக் கடற்காற்றை வடிகட்டி காலங்காலமாக தம்முள் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறதே வெண்சங்கு! அது ஏன்? எனச் சம்பந்தமில்லாமல் ஒரு கேள்வி எழும்பியது. இப்படித்தான் முன்பு கன்யாகுமரி போயிருந்தபோது..

“என் மனைவிக்கு நான் ரெண்டாவது புருஷன் ஸார்”

நம்பமுடியாத விஷயமாக இருக்கிறது. நிஜமாகவே இவனிடம் இதனை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இதில் நம்புவதற்கும் நம்பாமல் போவதற்கும் என்ன இருக்கிறது? இதுமாதிரியான ரெண்டுங்கெட்டான் நினைப்பு எல்லாமே, நாம் பரிணமித்துவிட்ட கணந்தொட்டே தனிப்பட்ட முறையில் வரையறை செய்து பழகிக்கொண்ட கற்பிதங்கள் அல்லவா. இவற்றுக்கிடையே, ஒரு மனதைப் பிளந்து எடுத்துப் பரிமாறும் எந்த அசலுமே ரத்தமும் சதையுமாக கவுச்சி வாடையோடு இருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

அட மூர்த்தி.

“காதல் செய்துதான் பண்ணிக்கிட்டோம். அவ, ஒரு டிவோர்ஸி. முந்தின வாழ்க்கைல அவளுக்கு குழந்தை எதுவும் இல்லை. எங்களோட இந்த முப்பத்து ரெண்டு மாசத்துல, மூனு வாரத்துக்கு முன்னாடி எங்களுக்குள்ள ஒரு கடும் வாக்குவாதம் முத்திச்சு. எங்கேயோ எப்பயோ அவளுக்கு என்மேல இருக்கிற பிடிப்பு போயிருச்சு. அன்னைக்கு அவ பேசப்பேச அதை என்னால உணர மட்டும் முடிஞ்சது. ஆனா, நிறுவ முடியலை. அப்பப்போ, வார்த்தையால உரசிக்கிட்டு இருந்திருக்கோம். என்னைவிட அந்தாளு பெட்டரோன்னு அவளுக்குத் தோனிருச்சு போல. ஒரு லெவெல்ல அதை வார்த்தையாவே கொட்டிட்டா. என்னால அதுக்கு மேல ஒன்னும் பேச முடியலை. பேசி என்ன பிரயோஜனம் சொல்லுங்க? கொட்டினதை அள்ளி எடுத்தா கையை விட்டு மாயமா மறைஞ்சுடுதா என்ன? அப்புறம் ரொம்ப அசிங்கமா ஒரு அமைதி. அந்த நொடி என்னோட பெட்ரூம் சாவு விழுந்த எடம் மாதிரி மாறிடுச்சி ஸார். இதுக்காக ரெடியா இருந்த மாதிரி மறுநாளே கிளம்பி போயிட்டா. நான் தடுக்கலை. தடுக்கவும் தோனலை. எப்படி கணக்குப் போட்டு பார்த்தாலும் டேலி ஆகலை. இதுல உங்களைப் பத்தின விஷயமும் சேர்ந்துக்கிச்சா.. கடவுளே, இந்த ஒரு வாரமும் ரியலி ஹாரிபில்”

துக்கம் ஒரு மகா இம்சை. காய்ச்சின இரும்பு குண்டு ஒன்று சல்லென்று தொண்டை வழியாக இறங்குகிற சனியன். யாரும் யாரையும் பார்த்து கொஞ்சநேரம் அதை நான் வாங்கிக் கொள்கிறேன், இப்படி என்னிடம் கொடு, நீ கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள் என சொல்லிவிட முடிவதில்லை. பரிமாற்றத்துக்கு உரிய வஸ்துவாக எப்போதுமே அது இல்லை. ஆனால், அதற்காகத்தானே இவன் என்னை மடக்கிப் பிடித்திருக்கிறான்.

நான் இப்போது என்ன செய்துவிடக்கூடாது என்பதைப் பற்றி யோசிக்கத் தொடங்கியிருந்தேன்.

“முழுகாம இருக்கா ஸார்”

அவனைத் திரும்பிப் பார்த்தேன். இன்னும் குனிந்தபடியே தான் இருந்தான். இவனுக்கு என்னதான் வேண்டும் என்னிடம்? இத்தனை அந்தரங்கமான விஷயத்தை சொல்ல என்னைத் தேர்ந்தெடுத்த அவசியம் என்ன? நானும் ஒரு டிவோர்ஸி என்பதால் மட்டும்தானா? ஆனால் இவனுடைய பிரச்சனை வெறும் நேர்க்கோடாக இல்லையே. குறுக்கே ஒரு பழைய கோடு உள்ளது. இப்போது இன்னொரு சிறிய கோடும் உருவாகியுள்ளது. சமீபமாக பரிதாபப்படும் மனநிலை என்னைவிட்டு தூர போய்க்கொண்டே இருக்கிறது. பச்சாதாபங்களுக்கோ எப்போதும் விலை கிடையாது. அவை இனாம்.

“நீங்க வருத்தப்படறீங்களா மூர்த்தி? அவங்களை மிஸ் பண்றீங்களா?”

“இந்நேரம் கலைச்சிருப்பா”

அடச்சை! அவ அவளை அவ அவளாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே என்று ஏன் மனதளவிலே கூட விடமுடியவில்லை. என்ன நடந்தது? ஏன் நடந்தது? எனத் துருவித்துருவிக் கேட்பதில் இருக்கும் சுவாரஸ்யத்தைப் பழகிய தடியன்கள். டேய்! இதெல்லாம் தனியே கிடந்து மருகிக்கொள்வதற்கான நிர்ப்பந்தங்கள். அவற்றை நான் தெரிந்து என்ன ஆகப்போகிறது. இப்போ இங்கே, இவன் நெஞ்சு கனமேறி உட்கார்ந்திருக்கிறான். நான் இவனுக்கு என்ன செய்துவிடக் கூடாது என்பதையே என்னுடைய மூளை ரிப்பீட் அடித்துக் கொண்டிருக்கிறது.

“இத்தனை வருஷத்துல உங்களை எனக்கு முழுசா தெரிஞ்சிக்க சந்தர்ப்பம் இல்லவே இல்ல மூர்த்தி. ஜஸ்ட் ஒன்னா வேலை பார்க்கறோம் அவ்ளோதானே. இதில, திடீர்னு உங்க மனைவி பத்தி நீங்க வாசிக்கிற குற்றப்பத்திரிகையை அப்படியே ஏத்துக்க முடியலை. ஆனா, அது உங்க வெர்ஷன். உங்க வலி. அந்த அடிப்படை புரிதல்ல இருந்து மட்டும் ஒன்னு கேட்கவா? கேட்கலாமா?”

அவன், திருதிருவென்று முழித்தபடியே மெதுவாக அனுமதி கொடுத்தான்.

“கேளுங்க ஸார்”

“நீங்க சொன்னீங்க இல்லையா, என் மனைவிக்கு நான் ரெண்டாவது புருஷன் அப்டின்னு?”

“ஆமா ஸார்”

“அப்படி சொன்னதுக்கு பதிலா, என் மனைவி ஏற்கனவே கல்யாணம் ஆனவங்க அப்டின்னும்கூட நீங்க என்கிட்டே சொல்லியிருக்கலாம் இல்லையா? ஏன் மூர்த்தி! உங்களுக்கு ரெண்டாவதுங்கற அந்த எண்ணிக்கை முக்கியம்னு பட்டுச்சோ?”

பேச்சில்லை. யோசிக்கிறான். யோசிக்கட்டும். நிறைய நேரம் இருக்கிறது. ஒரு நுட்பத்தை கூராய்வு செய்ய மூளை போதிய நேரத்தைக் கோருகிறது. நாம் கொடுக்க மறுத்து விடுகிறோம். அப்படியொரு மூர்க்கம் நம் சுபாவத்தில் இருக்கவே செய்கிறது. அதுவோ, என்னத்தையாவது கிறுக்கித் தள்ளிவிட்டு, சர்தான் போடா என்றுவிடும். பத்து நிமிடங்களாவது கடந்துவிட்டிருக்கும். தரையிலிருந்து பார்வையைப் பெயர்த்தவன் குழப்பத்தோடு நிமிர்ந்து என்னைப் பார்த்தான்.

“ஆமால்ல.. ஏன் ஸார் அப்படி சொல்லிட்டேன்!?”

எவ்வளவு தூரத்துக்கு இந்தப் பேச்சை எடுத்துப்போவது என்கிற அறிகுறியே என்னிடம் இல்லை. ஒரு சுழலுக்குள் என்னை மெதுவாக இழுக்க ஆரம்பித்து விட்டான் இந்தப் பயல் என்பது மட்டும் துல்லியமாகிக் கொண்டே வந்தது.

“பிடித்தங்களைத் தாண்டி தொடக்கத்திலிருந்தே உங்க மனைவி மீதான ஒரு பரிதாபத்தை உங்களோடவே சுமந்துகிட்டே ஒரு வாழ்க்கையை நீங்க வாழ்ந்திருப்பீங்களா இருக்கும். உங்களை விட அந்தாளு பெட்டர்ன்னு அவங்க சொல்லிடும்போதே நீங்க ரெண்டாவது புருஷன்ங்கற உங்களோட பர்சனல் நினைப்பு காயப்பட்டிருக்கும். அப்புறம் முப்பது மாசம் வாழ்ந்திருந்தா என்ன? முன்னூறு மாசம் வாழ்ந்திருந்தா என்ன? எல்லாம் ஒன்னுதான் மூர்த்தி. இதுல கோளாறுன்னு பார்த்தா, யாரோட லிஸ்ட்ல நீங்க எத்தனையாவதா இருக்கறீங்கன்ற உங்களோட பர்சனல் பரிதவிப்பாவும் அது இருக்கலாம். உங்க ஸ்தானத்தை நீங்க எப்பயோ தீர்மானிச்சிக்கிட்டீங்களோ என்னவோ”

“அப்படின்னா.. குற்ற உணர்வுக்கு ஆளாகறேனோ ஸார்?”

“நோ ஹார்ட் ஃபீலிங்ஸ் மூர்த்தி. உங்க வெர்ஷன் எனக்கு இதைத்தான் வெளிப்படுத்துது. வேற யார்கிட்டயாவது டிஸ்கஸ் பண்ணீங்கன்னா வேற மாதிரி சொல்லுவாங்களா இருக்கும். தட்ஸ் மே பீ”

“திரும்பி வரமாட்டான்னு தோனிருச்சி ஸார்”

“அப்டியா! திரும்பி வரமாட்டாங்கன்னு மட்டும் தோனிச்சா? இல்ல, வரவேண்டாம்னு தோனிச்சா?”

“ரெண்டும் தான் ஸார்”

பதில் தீர்க்கமாக இருக்கிறது. ஒருவார காலம் தனிமையில் உழன்றதின் நீட்சிதான் இதுவும்.

“ஏன்? உங்களுக்கு தேடி போய் கூப்பிடணும்னு தோனலையா?”

“உடைஞ்ச பாத்திரம்.. ஒட்ட…”

அவனை முடிக்கவிடாமல் இடைவெட்டினேன்.

“இந்த புல்ஷிட்லாம் நம்மகிட்ட நிறையவே இருக்குல்ல மூர்த்தி?”

தேடிப்போய் கூப்பிடணும்னு தோனலையான்னு கேட்டா அவரவர் வழி அவரவர்க்குன்னு சொல்லும்படியா ஏன் மண்டைக்குள்ளே வர மாட்டேங்குது தடியனுக்கு. அதான் அப்பவே சொன்னானே, மரமண்டைன்னு. சரியான மரமண்டைதான். இந்த கேடுகளையெல்லாம் நான் ஏன் நொந்துக்கணும்? இப்படியான ஆட்கள் சிலசமயம் அழுது தொலைத்துவிடுவான்கள். அப்படித் தயாராகிறானோ எனப் பார்த்தேன். முகத்தில் அதற்கான அறிகுறியே இல்லை. வாய் மட்டும் கோணிக்கோணி மீசைக்குள் ஒதுங்குவதும் வெளிப்படுவதுமாக இருந்தது. ஏதும் தனக்குள் பேசிக்கொண்டிருக்கிறானா? பேசட்டும். பேசட்டும். நேரம் கிடக்கிறது.

“சாவு பத்தின யோசனையாவே வருது ஸார்”

“ம்ம். யேன்? செத்துடறது பெட்டர்ன்னு தோனுதுங்கறீங்களா?”

“அப்படியும் தோனுது ஸார்”

வேறு என்னவெல்லாம் தோன்றுகிறது எனக்கேட்க விருப்பமில்லை எனக்கு. சுழல் முறையாக இவையெல்லாம் ஒன்றுபோலவே மீண்டும் மீண்டும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காரணங்களை முன்னிறுத்தி நடப்பவைதான். என்னுடைய தனிப்பட்ட உளக்குமுறல்களோ இம்மாதிரி சமயங்களில் தானாகவே மேலெழும்பி ‘நானுமிருக்கிறேன் பார்’ என்று குமிழ்விட்டு வெடிக்கக் காத்திருப்பவை தான். அவற்றின் மீது பத்து பதினைந்து மாற்றுப் பழக்கங்களை கனமாக போட்டு அமிழ்த்தி அடக்கி வைத்திருக்கிறேன். ஒன்றை மீறினாலும் மற்றது பார்த்துக் கொள்ளும். அவற்றில் குடியோ கஞ்சாவோ சமயங்களில் கை கொடுத்திருக்கிறது.

இதையெல்லாம் பரிந்துரை செய்யவா முடியும். நெவர்.

தனிமனித அபத்தங்களுக்கு எதிரான மாற்று நடவடிக்கைகள் குறித்து தனிமனிதனுக்கு கிளாஸ் எடுப்பது போன்ற போரடிக்கும் செயல் வேறு என்ன உண்டு? குடிப்பதற்கு துணையாக குறைந்தபட்ச ஊறுகாய் கூட கிடைக்காத சமயத்தில் யோசிக்காமல் பக்கத்திலிருக்கும் சுவரையாவது நக்கிக்கொள்ளும் சுய சுரணை இருந்தாக வேண்டும்.

“ஸார் என்னைக்காவது ட்ரை பண்ணியிருக்கீங்களா?”

தன்னைப் பற்றி சொல்லி என்னைப் பற்றிக் கேட்கிறான். எத்தனை இக்கட்டிலும் சூட்சுமம் அறிந்தவர்களாக இருக்கிற மனிதர்கள் அநேகர் உண்டு என்பதற்கு, இதோ இப்போது இவனுமே ஒரு நல்ல உதாரணம் தான். நானுமே ஒருமாதிரி ட்யூன் ஆகிவிட்டிருந்தேன்.

“ட்ரை பண்ணியிருக்கேன் மூர்த்தி”

“ப்ளீஸ். சொல்லுங்க ஸார்”

“தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க?”

நான் சிரித்தபடியேதான் கேட்டேன். ஆனால், நான் இவனுக்கு என்ன செய்துவிடக் கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள அரும்பாடுபட்டேன்.

“எனக்கு யூஸ் ஆகும் ஸார்”

“நோ! நிச்சயமா யூஸ் ஆகாது மூர்த்தி. ஆனா, பகிர்ந்துக்கறேன். முன்னே ரொம்ப தொடக்கத்துல, என்னோட மனப்பிளவின் ஆரம்பத்துல, ஒரு தனிமை வேகத்துல அப்படி தோனிச்சு. ஒரு நேர்க்கோட்டு யோசனை. அவளைத் தண்டிச்சிடணும். அதெப்படி? பெட்ரூம் ஃபேன்ல தூக்குப் போட்டு தொங்கிடணும்னு யோசிச்சிட்டேன். ரொம்ப தோதா, அவளோட துப்பட்டாவத்தான் தேர்ந்தெடுத்தேன். அது ஒரு கில்லிங் எலிமெண்ட்னு நினைச்சுக்கிட்டேன். ஃபேன் றெக்கைல முடிச்சு போட்டுட்டு ஸ்டூல் மேல நின்னுக்கிட்டு இருந்தேன். சுருக்கு ரெடி பண்ணி கழுத்துலயும் மாட்டிட்டேன். எதிர்ப்பக்கம் மூடியிருந்த ஜன்னல் கண்ணாடி வழியா பரவி இருந்த வெளிச்சத்தையே கொஞ்சநேரம் பார்த்துக்கிட்டே நின்னேன். ஏன்னு கேட்டா பதில் இல்ல. திடீர்னு அந்தப் பக்கமா ஒரு பல்லி எங்கிருந்தோ வந்து அந்த வெளிச்சத்து மேலே நிழலா நின்னுருச்சு. வந்த வேகத்துல அப்படியே நின்னுருச்சு. ஏன் டக்குன்னு நின்னுருச்சு? அதுக்கப்புறம் அதுகிட்ட எந்த அசைவும் இல்ல. ஒரு பரந்த வெளிச்சத்தின் மேல ஒரு சிறிய உயிரின் நிழல். எனக்கோ மனசுக்குள்ள அதுவரை நடந்ததெல்லாம் கன்னாபின்னான்னு முன்னேயும் பின்னேயுமா ஓடுது. குனிஞ்சு என் பாதங்களைப் பார்க்கிறேன். ஸ்டூல் மேல நிக்கிற கால்கள் முழுசும் க்ளியரா இல்லாம ஒரே வெளிச்சமாவும் சின்னச்சின்னக் கோடுகளாவும் தெரியுது. நினைவு தடுமாறினா கூட ஸ்டூல் மேல இருக்கிற பிடிப்பிலருந்து கால் தானாவே விடுபட்டிரும்ன்னு தோனுது. இப்படி செத்துட்டா தண்டிச்சதா ஆகிடுமான்னு கூடவே ஒரு கேள்வி வருது. ஆமா அப்படித்தான்னு ஒத்துக்கற மாதிரி ஒரு பதிலே மண்டைக்குள்ள இல்ல. அப்பத் தெரிஞ்சுக்கிட்டேன், ஆக்சுவலி சாகவெல்லாம் தயாரா இல்ல. அது என்னனு தெரிஞ்சுக்கணும்ன்னு எனக்கு ஒரு மூளைக்கெட்ட வெறித்தனம். கிட்டத்தட்ட இருக்கறதுக்கும் இல்லாம போறதுக்குமான விளிம்பு. நிமிர்ந்து பார்த்தப்ப அப்பவும் அந்த பல்லி அங்கேயே நிக்குது. மெதுவா சுருக்கிலருந்து மீண்டு கீழே இறங்கிட்டேன். அன்னைக்கு ராத்திரி பெட்ல படுத்துக்கிட்டே அந்தச் சுருக்கு முடிச்சைப் பார்த்துக்கிட்டே இருந்தேன். எப்போ தூங்கினேன்னு தெரியல. காலையில கண்ணு முழிச்சப்போ தொங்கிட்டிருந்த அந்தத் துப்பட்டா மேல எனக்கு எந்த ஒரு அர்த்தமும் தோனலை. ஆனா, எவ்ளோ மனப் புலம்பல் கொண்டிருக்கோம்ன்னு அப்படி ஒன்னை ட்ரை பண்ணும்போது தெரிஞ்சிடுது. அது ஒரு முடிவெடுத்தல் மட்டுந்தான். அதுக்கு மேல பெரிசா நத்திங் இம்ப்பார்ட்டன்ஸ். செத்து போயிட்டா இந்த உலகத்துக்கு நான் யாரு? ஜஸ்ட் ஒரு மெமரி. அவ்ளோதான் இல்லயா?”

சட்டி விளக்கின் மீது உட்கார்ந்திருந்த காகம் ஒரு முறை ‘கர்ர்ர்’ என்றது. அதைத் திரும்பிப் பார்த்தேன். அவனும் பார்த்தான். அது அசரவில்லை. எங்களை உற்று நோக்கிவிட்டு தலையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டுவிட்டது.

செத்துப் போவதைப் பற்றி எத்தனையோ பேசலாம். நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. காரணங்கள் மட்டுமே வெவ்வேறானவை. அந்தந்த காலத்தை அவைத் தின்று செரித்துக் காத்திருப்பவை. தானே தன் வாழ்வை முடித்துக்கொள்ள நினைக்கும்போது ஒருமுறைக்குப் பல முறை யோசித்துப் பார்ப்பதற்கான அவகாசத்தையும் தாண்டி, யோசித்துப் பார்ப்பதே பெரும் அவகாசமாகவும் இருக்கிறது. இதெல்லாம் இவனுக்கு எப்படிப் புரிந்துவிடக் கூடும்? அவன் வலி அவனுக்கு. அவன் காரணம் அவனுக்கு. அவனுடைய தனிமை அவனை என்ன வேண்டுமானாலும் செய்யும். அதைப் புறக்கணிக்கவோ புறந்தள்ளவோ முடியாது. அதனுள்ளிருந்து வெளியேறிட ஈர்க்கும் விஷயங்களை கண்டுபிடித்துக் கொள்ளத் தெரியவேண்டும். இவனைப் போன்றவர்கள் கணக்குப் போட்டு சமன்படுத்த முயல்பவர்கள். பேலன்ஸ் ஷீட் டேலி ஆகும்வரை போராடத் தெரிந்தவர்கள். குறைகளை ஈடுகட்ட பொய்யாகவேணும் ஒரு என்ட்ரியை உண்டுபண்ணத் தெரிந்த கெட்டிக்காரர்கள். ட்ரையல் பேலன்ஸில், வரவும் பற்றும் பண்டங்களாகத் தான் இருக்க வேண்டும் என்றோ பணமாக மட்டுமே மதிப்பிடப்பட வேண்டும் என்றோ நிர்ப்பந்தம் இல்லை. அது ஓர் ஏற்பாடு. உலகம் தழுவிய பொதுவில் ஒத்துக்கொள்ள பழகி வைத்திருக்கும் பொருளாதார அமைப்பின் எளிய கோட்பாடு. தனிமனித மனம் செய்கின்ற அயோக்கியத்தனங்களுக்கு பொருள் கூட்டத் தெரிந்த பயன்மதிப்பைச் சுயமாய் சம்பாதித்துக் கொள்ள அனுபவம் என்கிற பெயரில் கொஞ்சமாவது அவமானத்தைப் பெற்றிருக்க வேண்டும். அது கோடு கிழித்துக் காட்டும் வழித்தடத்தில் எல்லையற்ற இருளின் அடர்த்தியைத் தீண்டிப் பார்க்கும் வலுவுள்ள சொற்களை உற்பத்திச் செய்ய மனித நாக்குக்குத் தெரிந்திருக்கிறது.

அது ஒரு வித்தை மட்டுமே. ஆனால் சபை ஏறத் தெரிந்த வித்தை.

“என்ன சொல்லுறதுன்னு தெரியலை. ஆனா, நீங்க இவ்ளோ அழுத்தங்களை தாண்டித்தான் எங்க முன்னாடி நடமாடிக்கிட்டு இருக்கீங்கங்கறதை நினைச்சு பார்த்தாலே மலைப்பா இருக்கு ஸார்”

இவனுக்கு நான் எதைச் செய்துவிடக் கூடாதோ அதை செய்துவிட்டேனா!

“உங்களை மறக்க மாட்டேன் ஸார்”

அவன் எழுந்து கொண்டான். அவ்வளவுதான் பேச்சு முடிந்தது. வந்த வேலை முடிந்தது. என்னை மடக்கிப் பிடித்து பேச வைத்து, பதிலுக்கு பதில் வேண்டியதை வாங்கிக் கொண்டவனாக நிற்கிறான். ஆனால், என்னைப் பொறுத்தவரை என்னிடமிருந்து இன்னும் ஒரு ஸ்மார்ட் மூவ் தேவைப்படுகிறது.

“என்னை நினைச்சுக்கிட்டே இருக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு கிடையாது மூர்த்தி. வேலைங்கற பேர்ல ஒரு கூரைக்கு கீழே வீ ஆர் ஜஸ்ட் மேட்ஸ். எவனுக்கோ உழைச்சுக் கொடுத்து கூலி வாங்கி அதைக் கொண்டு பிழைக்க மட்டுமே தெரிஞ்சு வச்சிருக்கிற ஜஸ்ட் ஸம் இடியட்ஸ்”

“அப்போ, பர்சனலுக்கும் அதுக்கும் இருக்கிற பாலம்?”

“குட். ஆஃபீஸ் நேரத்தையும் முடிச்சுட்டு வந்து இப்படி உட்கார்ந்துகிட்டு பேசிட்டிருக்கோம்ல! இதோ இந்தப் பறவைகளுக்கு நம் பாஷை புரியாது. அந்த நாய், இந்த கடல் சத்தம், கலங்கரை விளக்கம், பின்னால இருக்கிற ஐ.ஜி. ஆஃபீஸ். இது எதுக்குமே நம்ம பாஷை புரியாது. எல்லாமே ஒரு கூகிள் மேப்பில் இருக்கிற சில புள்ளிகள். இப்போ இன்னைக்கு இந்த நிமிஷம் நாம இங்க இருக்கிறோம், நாளைய கணக்குல நேத்து இங்க இருந்தோம்ங்கறதுக்கான அடையாளங்கள்”

“ஒரு மெமரி”

“ம்”

“அவ்ளோதான்ல ஸார்?”

“கிட்டத்தட்ட ஆமா”

விர்ரென்று அந்த காகம் சிறகு உதறி பறந்து போயிற்று.

“எனக்கு என்ன வேணும்னு தெளிவா புரிஞ்சிருச்சு ஸார்”

“அப்படியா? ஆனா, நம்மளோட இன்றைய பேச்சுக்கு ஒரு பேரு இருக்கு மூர்த்தி. அது ஒரு வகையறா”

கொக்கி போட்டாகிவிட்டது. அவன் என்னையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். காற்றில் ஈரம் கலந்த உப்புச்சுவை கூடியிருந்தது.

“இதெல்லாம், காலகாலமா எல்லாரும் பண்றதுதானே ஸார்? இன்னும் எத்தனையோ ரெண்டு ரெண்டு பேரு இதோ இப்போ இந்த பீச்ல உக்காந்திருக்காங்களே.. அவங்களும் கூடத்தானே ஸார்? டிஸ்கஷன்ஸ் எங்கேயும் எப்பவும் இருக்குல்ல? சிலது அற்பத்தனமா. சிலது இன்டலக்ச்சுவலா..”

பரவாயில்லையே. மரமண்டையில் அக்கௌண்ட்ஸையும் தாண்டி நிறைய கீறல்கள் இருக்கிறது போலவே.

“ய்யா.. யூ ஆர் ரைட்”

“ஆனா.. நீங்க சொல்ல வந்தது என்னன்னு சொல்லுங்க ஸார்”

மிக நிதானமாய் இடவலதாக தலையை அசைத்துக் கொண்டேன்.

“நாளைக்கு ஆஃபீஸ்ல காஃபி பிரேக்ல சொல்லுறேன் மூர்த்தி”

நானும் எழுந்து கொண்டேன். நம்ப முடியாதவன் போல என்னையே பார்த்திருந்தான். போட்ட கொக்கி மண்டையோட்டை துளைத்து சதக்கென்று பொருந்திக் கொண்டுவிட்டது. அவனுடைய முகம் இறுகிப் போயிருந்தது. அப்பாடா!

பாறாங்கல் கனத்திற்கு நெஞ்சில் ஏறி அமர்ந்திருக்கும் துயரத்துக்கு ஈடாக வாய்வழி தத்துவங்கள் சமன் ஆவதில்லை. ஆகக்கூடாது. இருந்தாலும், இவனுக்கு நான் என்ன செய்துவிடக் கூடாது என்பது என்னுடைய குறைந்தபட்ச அகங்காரம்.

கை குலுக்கினான். அதில் உயிர்ப்பில்லை. உறுதியில்லை. வெரிகுட் என நினைத்துக் கொண்டேன். அவன் தன் கடிகாரத்தை மீண்டும் கட்டிக்கொள்ளவில்லை. அந்த மணிக்கட்டின் நரம்புகள் ரத்தத் துடிப்புடன் புடைத்திருந்தன.

இன்றைய இரவை நீ தாண்டிவிடாமல் வெற்றிகரமாக செத்துவிடு மூர்த்தி. அட்லீஸ்ட் நீயாவது.

*

காலையில், முதல் ஆளாக அலுவலகம் போயிருந்தேன். ஒவ்வொருவராக வந்து சேர்ந்துவிட்டார்கள். மூர்த்தி வரவில்லை. அலுவலக நேரம் கடந்து போய்க்கொண்டே இருந்தது. என்னுடைய அறையிலிருந்து பார்த்தபோது மூர்த்தியின் இருக்கை காலியாகவே இருந்தது. ஆள் வரவில்லை என்றால், இந்நேரம் செய்தி வந்திருக்க வேண்டுமே. சுவாரசியம் மேலோங்கச் சற்றே சரிந்து உட்கார்ந்து முதுகைப் பின்னுக்குத் தள்ளி வாகாக என்னுடைய கால்களை மேஜைக்கு கீழே நீட்டியபடி, கைகளைத் தலைக்குப் பின்னால் கோர்த்துக் கட்டிக்கொண்டேன். எக்ஸிகியூட்டிவ் நாற்காலியின் வசதியே வசதி..

திடீரென எனது அறைக்கதவைத் தள்ளி மூர்த்தி உள்ளே நுழைந்தான். தலைமை அக்கௌண்ட்டன்ட் என்றாலும் அரிதாக, அவனுக்கு அந்த உரிமை உண்டு. புரிந்து கொண்டேன். ரெஜிஸ்டரில் கையெழுத்து போட்ட வேகத்தில் நேரே என்னிடம் வந்திருக்கிறான். இடது மணிக்கட்டில் துணி பேண்டஜ் சுற்றியிருந்தது. அதில் மருந்தின் எண்ணெய்த்தன்மைப் படர்ந்து மஞ்சள் நிறம் துருத்தியபடி சிறியதாக அடர்த்தியாய் வட்டமிட்டிருந்தது.

“ஐ ட்ரைட் அண்ட் ஃபெயில்ட். நேத்து அவ்ளோ சொன்னீங்களே. ப்ச், ஆனாலும் முடியலை. ஸாரி ஸார்”

“யூ ஆர் வெல்கம்”

என்னைத் தோற்கடித்து விட்டான் பாவி.

“ஸார். ஒரு காஃபி சாப்பிடலாமா?”

காத்திருந்தேன் அல்லவா. புன்னகையுடன் எழுந்து கொண்டேன். அதிகார பீடத்தை பிருஷ்டத்துக்கு பின்னே அறையோடு விட்டு வெளியேறினேன். எங்களை நிமிர்ந்து பார்த்துவிட்டு குனிந்து கொண்டார்கள். கேண்டீனை நோக்கி நடையைக் கட்டினோம். காரிடார் வெறிச்சோடிக் கிடந்தது.

“நாளைக்கு சொல்றேன்னு சொன்னீங்களே. ஒரே மண்டைக்குடைச்சல். அதுவொன்னுதான் என்னை என் தனிமையிலிருந்து இழுத்து வெளியேத்தி கொண்டு வந்து இங்க உங்க முன்னாடி விட்டிருக்கு. இப்போ சொல்லுங்க ஸார். எனக்கு அதைத் தெரிஞ்சுக்கணும்”

“ஹ..! இதுவுமே கூட ஒரு பகிர்வுதான் இல்லையா? நேரா கேண்டீன் போயிருவோமே மூர்த்தி. நிக்காம வாங்க”

நடையை மெதுவாக்கினேன். இணையாக வந்து கொண்டிருந்தவன் என்னையே கவனித்துக் கொண்டிருந்தான். அவனுடைய மனம் முந்தைய இரவிலிருந்து பொறுமையின் விளிம்பில் தொக்கியபடி முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டே இருக்கிறது.

அப்போது நான் என்னுடைய முழுக்கைச் சட்டையின் இடது மணிக்கட்டு பட்டனை அவிழ்த்து சட்டென முழங்கை வரை சட்டையை சுருட்டிக் காட்டினேன். எனது மணிக்கட்டின் உட்பக்க உயிர்நாடியில் தொடங்கி மேல்நோக்கிய விதமாய் கோடு கோடாக எண்ணற்ற தழும்புகள், பார்-கோட் போல ஒன்றையடுத்து ஒன்று என நெருக்கிப்பிடித்து நின்றிருந்தன. ஆழமான கத்திக்காயத்தினால் உண்டான அவை இப்போது ஊட்டமான நரம்பினூடே புடைத்துப்போய் அடையாளமாகியிருந்தன.

எவற்றின் அடையாளங்கள் அவை? எவ்வெவ்வற்றின் அடையாளங்கள் அவை? விளக்கி விவரித்தால் அவையெல்லாம் விரிந்து கொண்டே போகும் வல்லமை வாய்ந்தவை. இதோ இவனுடைய கண்பார்வையைப் போல ஒரே திக்கில் நிலைகுத்தி உறைந்து போகச் செய்பவை.

அடேய்! என்ன நடந்துவிட்டது? உனக்குப் புரியவில்லையா? இது ஒரு நெருப்பாறு. நீந்தத் தொடங்கும்போதே கால்கள் மாயமாகிவிடும். கரையேறும் மிச்சமும் வெந்துபோய் மீந்திருக்கும்.

நீ உன்னிடமுள்ள ஒரு காயத்தைக் காட்டினாய். பதிலுக்கு நான் பல தழும்புகளைக் காட்டிவிட்டேன். வக்கிரமாகச் சொல்ல வேண்டும் என்றால் அது ரகசியங்களின் பண்டமாற்று. பரஸ்பர பயன்மதிப்பை ஆர்ப்பாட்டமின்றி கூட்டிக்கொள்ள முடிகிற ஒற்றை ஜர்னல் என்ட்ரி.

அத்தழும்புகளைக் கண்டதிலிருந்து அவனுடைய முகத்திலிருந்த தீவிரத்தன்மை இனி எந்தத் திசை நோக்கிப் பாயவேண்டும் எனத் தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறது.

கேண்டீனில் ஆளுக்கொன்றாக வாங்கிக்கொண்ட இரண்டு கோப்பை காஃபிகளோடு ஒரு நீண்ட டேபிளில் எதிரெதிரே உட்கார்ந்து கொண்டோம். அந்த அகன்ற ஹாலில் கேட்பாரற்றுக் கிடக்கும் டேபிள்களுக்கு மேலே சப்தமிட்டபடியே வீணாக ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறிகளை ஒருமுறை பார்த்துக் கொண்டேன்.

முதல் சிப் காஃபியின் மிடறை விழுங்கி அதன் கசப்பை ருசித்து அனுபவித்தபடி எனது கோப்பையை உயர்த்திப் பிடித்து நான் அவனிடம் சொன்னேன்.

“இதுக்கு பேரு Trading the Insults”

***

கவிதைக்காரன் இளங்கோ
சென்னை

ஆசிரியரின் படைப்புகள்:

பனிகுல்லா, மோகன். – சிறுகதைத் தொகுப்பு
ப்ரைலியில் உறையும் நகரம், 360 டிகிரி, கோமாளிகளின் நரகம். – கவிதைத் தொகுப்புகள்
ஏழு பூட்டுக்கள். – நாவல்
திரைமொழிப் பார்வை – கட்டுரை

“பேய்ச்சி” தடை (எதிர்வினை)

0

சு.வேணுகோபால்

ம.நவீனின்பேய்ச்சி‘ நாவல் மலேசிய உள்துறை அமைச்சால் தடை செய்யப்பட்டுள்ளதாக இன்று அறிந்தேன். அது ஒரு ஆபாச படைப்பு எனும் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளது. மலேசிய தமிழ் பேரறிஞர்கள், தமிழ்க்காவலர்கள், இலக்கியத்திற்கு எறுவூட்டிய கட்சிக்காரர்கள், இன்னபிற தமிழை வாழவைக்கும் தங்கமணிகளின் அழுத்தத்தால் நேர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். பேய்ச்சி நாவல் வெளிவந்த நாளிலிருந்து அந்நாவலுக்கு எதிர்மறையான சூழலை, இலக்கியம் என்றால் என்னவென்று தெரியாத சில அன்பர்கள் கூக்குரல் இட்டு வந்ததைப் பார்க்கும்போது தடைக்கான பின்னணியில் இருப்பவர்கள், மௌனமாக மறைந்து காயை மாற்றியவர்கள் எல்லாம் பின்னால் தெரியத்தான் போகிறார்கள்.

முதலில் ஒன்று, ம.நவீன் தீவிரமான ஒரு இலக்கியவாதி. மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றில் கூடுதலான உண்மைகளை வெளிப்படுத்த முனையும் ஒரு கலைஞன். இந்த ‘கூடுதலான உண்மை’ என்பது பலருக்குக் கசப்பைத் தருவதாக இருக்கிறது. புதுமைப்பித்தன் இந்த அம்சத்தாலேயே கொண்டாடவும்பட்டான். தூற்றவும்பட்டான். தூற்றியவர்கள் இன்று மண்ணோடு மக்கி யாரென்று தெரியாமல் போய்விட்டார்கள். உலக இலக்கியத்தின் உச்சங்களில் ஒன்று என்று சொல்லப்படும் அன்னா கரினாவில் காதலனையும் கணவனையும் ஒருபுறம் அணைத்துக் கொண்டு கிடப்பதாக ஒரு காட்சி வரும். ரஷ்ய மக்கள் அன்றும் கொண்டாடினார்கள். இன்றும் கொண்டாடுகிறார்கள் தான். மனிதனின் அகத்தை நிறைக்க முயன்ற கலைஞன் என்றார்கள்.

தமிழ்ச்சமூகம் ஒரு நாகரீகமான சமூகம் என்று பொதுமேடைகளில் முழங்கிக்கொள்வது; அதைப் புனிதப்படுத்துவது; கெட்ட வார்த்தைகளையே பேசாத சமூகம் என்பது போல எழுதுவது; தமிழர்கள் கலவி கொள்ளாமலே கன்னத்தில் அல்லது நெற்றியில் முத்தமிட்டாலே கரு உண்டாகி குழந்தைப் பேற்றை அடைபவர்கள் என்ற ரேஞ்சுக்கு பேசுவது எல்லாம் உண்டுதான். இதெல்லாம் இலக்கியத்தின் பகுதியல்ல. சண்டை சச்சரவுகளில் தமிழர்கள் கெட்ட வார்த்தையையே பேசாதது போல நடிக்கிறார்கள். எங்கள் ஊர்களில் குழாய்ச்சண்டை வராத ஊர்களே கிடையாது. எத்தனை தூமய குடிக்கிகள், எத்தனை சாண்ட குடிக்கிகள் பொங்கிப் பிரவாகமாக வருவதைக் கேட்காத மனித ஜீவன் இருக்குமா?

என் நாவலில் கோபத்தின் வெளிப்பாடாக இரண்டு இடங்களில் கெட்ட வார்த்தைகளைப் பாத்திரங்கள் பேசும். சுந்தர ராமசாமி தனிப்பட்ட முறையில் அதைப் பயன்படுத்தியிருக்க வேண்டாம் என்றார். அவர் என் மூத்த தலைமுறை எழுத்தாளர். கொஞ்சம் நாசூக்கான சமூகப் பின்னணியில் இருந்து வந்தவர். அவரது மனம் அதை ஏற்க மறுக்கிறது என்ற அளவில் புரிந்து கொண்டேன். நான் நாசூக்கான பின்னணியில் இருந்து வரவில்லை. முரட்டுத்தனமான கிராமியச் சூழலில் வளர்ந்தவன்; வளர்க்கப்பட்டவன். என் எழுத்தும் என் உலகும் வேறு என்பதால் சு.ரா.விடம் இரு இளிப்பு மட்டுமே இளித்தேன். சுந்திர ராமசாமியின் மகன் கண்ணன் காலச்சுவடில் சல்மாவின் ‘மூன்றாம் ஜாமங்களின் கதை’ நாவலைக் கொண்டு வந்தார். நாவலில் யோனி பற்றிய வசைச்சொல்லைப் பலர் எண்ணி இத்தனை காலங்கள் இலக்கியக் கிசுகிசுவாக பேசியவர்களெல்லாம் உண்டு. நான் அதன் இலக்கியத்தரம் குறித்து மட்டுமே பேசினேன்.

ஒரு எழுத்தாளன் கெட்ட வார்த்தைகளை வேண்டுமென்றே பயன்படுத்துகிறானா? மாந்தர்களின் செறிவுநிலையில் கோபத்தின் வெளிப்பாடாக அல்லது வேறு தன்மைகளின் அடிப்படையில் வெளிப்படுகிறதா? என்று தான் பார்ப்பேன். கெட்ட வார்த்தைகளை வேண்டுமென்றே பயன்படுத்தும் போலி இலக்கியப் பம்மாத்துப் பேர்வழிகளின் படைப்புகளை நான் புறந்தள்ளியே வந்திருக்கிறேன். பேய்ச்சி நாவல் மூன்றாம் தரமான வெளிப்பாடு என்பது எங்கும் இல்லை. சமூக வாழ்க்கையிலிருந்தே வந்திருக்கின்ற சொற்களாக இருக்கின்றன.

புதுமைப்பித்தன் தனது காலத்திலேயே ஹோமோசெக்ஸ் உறவு பற்றி கதை எழுதியிருக்கிறார். ஆ.மாதவன் ‘கோமதி’ என்ற சிறுகதையில் கோமதி என்ற ஒரு பசுவுடன் கலவியில் ஈடுபடும் இரு பாட்டாளிகள் பற்றி எழுதியிருக்கிறார். கரிச்சான் குஞ்சு அறுபது ஆண்டுகளுக்கு முன் ‘பசித்த மானுடம்’ நாவலில் முழுக்க முழுக்க ஹோமோ செக்ஸுவல் பிரச்சினையை மையமாக வைத்து எழுதி வெளியிட்டபோது யாரும் அதைத் தடைசெய்ய வேண்டும் என்று கூறியதில்லை. இந்த நாவலை எழுதிய கரிச்சான் குஞ்சு ஒரு ஆச்சார சீலர். இதற்கும் 40 ஆண்டுகளுக்கு முன் இஸ்மத் சுக்காய் என்ற இஸ்லாமிய பெண் எழுத்தாளர் லெஸ்பியன் உறவை ‘போர்வை’ என்ற கதையாக எழுதினார். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவரை வேறு வேலையைப்பாரு என்று தள்ளுபடி செய்ததெல்லாம் உண்டு. மண்டோ இந்த வழக்கில் சுக்காய் பக்கம் நின்றார். அதே சாதத் ஹாசன் மண்டோ பெண்களை ஆபாசமாக எழுதிவிட்டார் என்று ஆறுமுறை (இந்தியாவில் மூன்றுமுறை) அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டதை பாகிஸ்தான் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததெல்லாம் வரலாறு.

பேய்ச்சி நாவல் ஹோமோசெக்ஸ் பற்றியோ லெஸ்பியன் பற்றியோ வலிந்து காட்டும் நாவல் அல்ல. தமிழ்க்குடியின் நூற்றாண்டுகளை, புலம்பெயர் வாழ்க்கையைப் பற்றி பேசும் நாவல். அவர்களின் நம்பிக்கைகள் மலேசிய மண்ணில் வேரோடிப் போயிருக்கும் தடங்களைச் சொல்லும் நாவல். அதில் தோட்டத் தொழிலாளர்கள் விசச்சாராயம் அருந்தி 24 பேர் அளவில் இறந்துபோன ஒரு மோசமான சூழலையும், செம்பனையின் வரவை ஒட்டி தோட்டத்தமிழர்கள் வெளியேற்றப்பட்ட அடுத்த காலக்கட்டத்தைப் பற்றியும் மையமாகப் பேசும் நாவல். இதன் ஊடே மனிதர்களின் ஆசாபாசங்களையும் பேசுகிறது. தமிழன் வாழ்ந்த தோட்டக்காடு எல்லாம் தமிழர்கள் ஆன்ம உணர்ச்சி தனிமையில் தத்தளித்து ததும்பும் அபூர்வ கணத்தைச் சொல்லும் நாவல். இடத்தின் மீதும், மானுடத்தின் மீதும் தீவிரப்பற்றுக் கொண்ட ஆவேசம் மிக்க மாந்தர்களே இதில் எழுந்து வருகிறார்கள். தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்கள், கொஞ்சம் மனது வைத்து முதலில் பேய்ச்சியைப் படித்தார்களேயானால் மிகமிக எளிய உண்மை புரியும். அவர்களுக்கு பிடித்தமான விசயம் கூட இருக்கிறது. தப்பு செய்தவன் தண்டனையடைகிற மாதிரி மணியம் பாத்திரம் அமைவதை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். இதைவிட இனி யார் விளக்க முடியும்? இனி என்னம்மா உங்களுக்குப் பிரச்சனை?

சார்த்தர், ஒரு நடுத்தர மனிதன் 18 வயது பையன் மீது மோகம் கொண்ட கதை ஒன்றை எழுதியிருக்கிறார். கதை ‘கடற்கரையில்’ என்பதாக ஒரு ஞாபகம். நம்ம ஊர் நீலபத்மநாபன் ‘ஜின்னின் மனம்’ என்ற கதையில் எழுதியிருக்கிறார். இப்படி எத்தனையோ உதாரணங்கள் உண்டு. ஆனால், நான் சொன்ன இந்தக் கதைகள் எல்லாம் கலாபூர்வமாக எழுதப்பட்டவை. ஆபாசம் ஒரு துளி இல்லாதவை. நான் இதுவரை இம்மாதிரியான கதைகள் எழுதியதில்லை என்றாலும், வாழ்வின் வேறுவிதமான பக்கங்களை இவர்கள் எழுதியிருக்கிறார்கள் என்றே பார்க்கிறேன். அதே சமயம் மொண்ணையாக வித்தியாசம் கருதி வக்கிரமாக எழுதப்பட்ட எந்த படைப்பையும் நான் பொருட்படுத்தியதே இல்லை. எனக்கு எது கலை எது வக்கிரம் என்பது நன்றாகவே தெரியும்.

பிரச்சனை ‘பேய்ச்சி’ நாவல் என்பதைவிட ம.நவீன் என்ற தனிமனிதன் மீது கொண்ட காழ்ப்புணர்வே காரணமாக எனக்குப்படுகிறது. அவன் மூத்த எழுத்தாளர்களின் படைப்புகள் மீது இலக்கியம் சார்ந்து விமர்சனத்தை முன்வைப்பது பிரச்சனை. அந்த எழுத்தில் உள்ள பலவீனங்களை உலக படைப்புகள் முன்வைத்து விவாதிப்பது பிரச்சனை. இலக்கியத்தரம் பற்றி பேசுவது பிரச்சனை. எழுதுவதெல்லாம் இலக்கியம் இல்லை என்று விமர்சிப்பது பிரச்சனை. கவிதை ஒரு உச்சத்தை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும் போது இன்னும் மலேசியாவில் பாமர ரசனையில் வெற்றுப் புகழ்ச்சியில் மூழ்கிக் கிடக்கிறதே என்று சொல்வது பிரச்சனை. பெரும் தமிழ் அமைப்புகளுக்குப் பிரச்சனை. தங்கள் இலக்கிய நம்பிக்கை ஆட்டங் காண்கிறதே என்பது பிரச்சனை.

உண்மையில் இலக்கிய உணர்வு உள்ளவர்கள் பேய்ச்சியின் இலக்கியத் தன்மையைப் பற்றி பேசியிருக்க வேண்டும். மலேசிய தமிழ் நாவல் உலகில் முதன்முதலாக வாழ்வின் வெம்மையை, மனித அவஸ்தைகளை, கையறு நிலையின் பரிதவிப்பை, ஆவேசத்தை உக்கிரமாக வெளிப்படுத்துகிறது பேய்ச்சி நாவல். பேய்ச்சிக்குத் தடை என்பதை நான் இலக்கியத்திற்குத் தடை என்பதாகவே குறிப்பாக்குகிறேன். மலேசியத் தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து ஒரு உலகத்தரமான நாவல் வரப்போகிறது என்ற நம்பிக்கையில் இருந்தேன். அதற்கான புதிய இலக்கியச்சூழல் உருவாகிவிட்டதை உணர்ந்து மகிழ்ந்தேன். குறிப்பாக பெண்கள் நல்ல தீவிரத்தோடு எழுதுவதைக் கண்டு மகிழ்ந்தேன். இலக்கியக் கலைப்படைப்பை பேய்ச்சி மூலம் நடத்திப் பார்த்திருக்கிறார்களோ என்று எனக்கு கேள்வி எழுகிறது. இலக்கியம் தெரியாத அதிகார சக்திகள் முன்னின்று நகர்த்திருக்கலாம். நாளை இன்று எழுதி வந்திருக்கும் இளம் பெண் எழுத்தாளர்களை அவர்களின் இயல்பான எழுத்துமுறையைத் தண்டிக்க குண்டாந்தடியைத் தூக்கி வரலாம். ஆனால் உயர்ந்த இலக்கியமா? மொக்கையான புகழ்ச்சி இலக்கியமா? என்பது குறித்து மலேசிய இளம் எழுத்தாளர்கள் இனி எதிர்கொள்வதில்தான் இருக்கிறது.

இது ஒரு சந்தர்ப்பம். உலகின் மேலான படைப்புகளை இவர்கள் முன் இன்னும் தீவிரமாக பேசுவதும் எழுதுவதும் தான் சரியாக இருக்கும். நம்மில் ஒரு தி.ஜானகிராமனை, கு.அழகிரிசாமியை, புதுமைப்பித்தனை கண்டடைந்து உருவாக்கப் போகிறோமா? அல்லது மூன்றாம்தர இலக்கியத்தை முதல் தரம் என்று போலியாக காட்டி சொரிந்துக் கொள்ளப் போகிறோமா? ஒன்றே ஒன்று, உலகம் முழுக்க உன்னதமான படைப்பாளி இந்த சமூகத்தால் காயங்கள்பட்டே தனது மகத்தானப் பங்களிப்பை செய்துவிட்டுப் போயிருக்கிறான்.

***

சு.வேணுகோபால்

தமிழ் நவீன இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவர். கூந்தப்பனை, வெண்ணிலை, நுண்வெளி கிரகணங்கள் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

சுடலையாண்டவர்

2

ரமேஷ் ரக்சன்

மாரடித்து அழுவது தன் கணவன் முன்பாகத்தானா என்று வேணிக்கு சந்தேகம் வராத அளவிற்கு முகத்தை கொஞ்சம்போல விட்டுவைத்துவிட்டு பூத உடலை பொதிந்து இறக்கி வைத்துவிட்டுச் சென்றிருந்தனர். நேராக சுடுகாட்டிற்கு கொண்டு செல்லவிருந்த உடலை “அந்தப் புள்ளைக்காகவாவது வீட்டுக்கு கொண்டு வந்துட்டு எடுங்கப்பா” என்பதை யாரோ சொல்ல யாரோ ஏற்றனர். ஊர் பக்கத்தில் வண்டி வந்துவிட்ட தகவல் சொன்னதும் ரோடேறியிருந்தாள். திருப்பத்தில் ஆம்புலன்ஸின் பின்சக்கரத்தில் சிக்க வேண்டியவளை யாரோ தன்பக்கம் வெடுக்கென எட்டி இழுத்தார். சேலை தெத்தி விழாமலிருக்க சேலையை ஏந்திப் பிடித்துக்கொண்டு வண்டி பின்னாடியே ஓடினாள். ராகேஷ் நடப்பவை யாவற்றையும் ஊமை நாடகமாகப் பார்த்துக்கொண்டு நின்றான். தன் தாயோடு சேர்ந்து ஊரார் ஓடுவதைப் பார்த்து அவனும் முட்டி மடங்காத ஓட்டம் ஓடினான்.

துக்க வீட்டிற்கு உண்டான எந்தச் சடங்கையும் செய்ய விரும்பாமல், அங்கு மண்டிக்கிடந்த துக்கத்தைக் கலைக்க மனமின்றி கோபாலு வெறுமனே வெள்ளை வானம் பார்த்துக்கொண்டு நின்றார். ஒப்புக்கு பச்சையோலை பந்தல் போடப்பட்டிருந்தது. அவருக்கு தன்னால் சங்கு ஊத முடியும் என்று தோன்றவில்லை. துண்டின் முனையில் கட்டி தோளில் தொங்கப்போட்டது முதுகில் அப்படியே கிடந்தது. அதன் எடையை முதல்முறையாக உணர்ந்தார். நேரம் சென்றதே ஒழிய எல்லோரும் அணக்கம் காட்டாமல் நின்றிருந்தனர். “நேரம் ஆவுதும்மோ” – சொல்ல முற்படும் போதெல்லாம் விம்மிக்கொண்டு வந்தது. அப்படியெல்லாம் ஊரார் முன் உரிமை கொண்டாடி அழுதுவிட முடியாதென கோபாலுக்கும் தெரியும். சும்மா நின்றார்.

பெண்களும் கூட வேணியை அப்படியே விட்டிருந்தனர். கோபாலுவின் முகத்திற்கு நேரே டவலை அசைத்துக்காட்டி “ஆகவேண்டியத பாரு இருட்டுது” என்றார் ஒருவர். இவர்களின் செய்கை வேணியின் அழுகையை திசை திருப்பியது. கோபாலின் கண்ணீர் விண் முட்டி நின்றது. தன்னைச்சுற்றி ஆண்கள் நிற்கும் ஓர்மை வர,  இரண்டாவது முறையாக ஜாக்கெட்டின் கடைசி ஊக்கைப் போட முயன்றும் அழுகையின் வழியே உண்டான கை நடுக்கம், போட முடியவில்லை. சுடலை வந்து ஆடும்போது, எரியும் தீப்பந்தத்தில் ஊடே ஊடே எண்ணெய் ஊற்றும் கோபாலுவைப் பார்த்தாள். கொண்டை போட்டபடி எழுந்தவள் மொத்த அழுகையையும் விழுங்கிக்கொண்டு கிழக்கு நோக்கி ஓட ஆரம்பித்தாள். “லூசுமட்ட வண்டில எதும் வுழுந்துறாம ஓடி போய் புடிங்க” என்று அங்கிருந்த பெண்கள், ஆண்களை விரட்டினர்.

தெருவோரம் நின்று சாமியாடி சேகர், சாமியாடி வரும் அழகைப்பற்றி பேசி நின்றவர்கள் மறைத்தற்கு, “சாவ மாட்டேன் விடுங்க” என்று ஓட்டமும் நடையுமாக சென்ற வேணியைப் பின் தொடர்ந்து சென்ற சிலரின் பெயர்களைச் சொல்லிவிட்டு, எட்டு வைத்து ஓடமுடியாத பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்த கதையை  நிறுத்திக்கொண்டு வேணியின் வருகையை எதிர்பார்த்து நிற்கத் தொடங்கினர்.

கையில் அரிவாளோடு, எண்ணெய் ஊறிப்போய் கருத்த உடலோடு மைனர் செயினில் “சுடலைமாடன்” பெயர் மினுங்க, கிழக்கு நோக்கி முறுக்கு மீசையோடு நின்றிருந்த சுடலைமாடனைப் பார்த்து காரித்துப்பினாள். மூன்றுமுறை மண்ணள்ளித் தூற்றினாள். “இத்தன வருஷம் ஒண்ணைய சொமந்த அந்த மகராசன எடுத்துட்டு எங்கள நட்டாத்துல விட்டுட்டல்லா? எம்புருஷனோட போய்ரு. என் புள்ள மேல வராத. காலேஜ்லாம் படிக்கணும். இதோட போய்ரு. வேற யாரனா புடிச்சிக்க. எங்கள விட்ரு”

“சாமியாடினவன் குடும்பம் எவன் குடும்பம் வெளங்கியிருக்கு? சீரழிஞ்சி போவும்னு சும்மாவா சொல்லி வச்சிருக்கானுவ.” 

பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்வதற்குள் தலையில் நன்றாக முடி வளர்ந்திருந்தது கல்லூரி சேர்ந்த புதிதில், விடுதி அறையில் வைத்து ஒவ்வொரு முறை அரசு கொடுத்த மடிக்கணினியை திறக்கும் போதெல்லாம், பலிபீடத்தின் மீது ஏறி நின்ற பூட்ஸ் கால்களும், சுடலைமாடன் ஆடுபவரை மைக்கில் “என் கைய கட்டிருப்பா அந்தந்த இடத்துல பலி குடுத்துக்கிடுங்க” என்று சொல்ல வைத்த காக்கிக் கூட்டங்களும், கண்முன்னே வந்துகொண்டே இருந்தது. கேரளத்து மந்திரவாதிகளை வரவழைத்துப் பெண்கள் பயன்படுத்திய தீட்டுத்துணியை கற்சிலைக்கு நடுவே வைத்து ஒத்தப்பனை சுடலை ஆண்டவரை கட்டிப்போட்டதாக கொடை முடிந்து ஊருக்கு வந்துசேர்ந்த பிறகு, ராகேஷ்-க்கு சொல்லப்பட்ட கதையும் மண்டையைக் குடைந்து கொண்டே இருந்தது.

நாட்கள் செல்லச் செல்ல பூட்ஸ்கால்கள் மட்டும் மனதில் தங்கிப்போனது. ஒரு கட்டத்தில் அந்தக் கால்களை தன் தலைமீது வைத்து நிற்பதாகப்பட்டது. கொடை என்றால் பத்து போல கிடா மட்டுமே கீறும் தன் ஊரினை சபித்திருக்கிறான். ஆயிரத்தில் வெட்டப்படும் பக்கத்து ஊரினை ஏக்கப்பெருமூச்சோடு நினைக்கையில், சைவ பூஜை அவனை நெடு நாட்களுக்கு தொந்தரவு செய்வதாக இருந்தது.

‘ஒரு புள்ள போதும் ஒரு புள்ள போதும்’ என்று கேட்போரிடத்தில் எல்லாம் சொல்லி வந்த வேணிக்கு அந்த ஒரு புள்ளையையும், ஊர்வாடையே வேண்டாமென ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு வந்தபிறகு, களைவெட்டு வேலைக்குச் செல்வதைத் தவிர வேறு வழி தெரியாமல் இருந்தது. காலை 6 மணிக்கு வேலைக்குச் சென்று 2 மணிக்கு கரையேறி, வாய்க்காலில் திறந்து விட்டிருக்கும் தண்ணீரில் வெயிலுக்கு இதமாக சேலைக்கு மேலேயே அரக்க பறக்க தண்ணீர் ஊற்றிவிட்டு, வீட்டிற்கு வந்தாள் என்றால், காலையில் தூக்கு வாளியில் ஊற்றிச்சென்ற கஞ்சி போக, குத்துச்சட்டியில் நுரையடித்துக் கிடக்கும் தண்ணீரை மாற்றி நாரத்தங்காய் ஊறுகாய் வைத்து சாப்பிடுவாள். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ஒரு தூக்கம். ஐந்து மணி ஆகியிருக்கும்.

ஒவ்வொருமுறையும் கடைவீதிக்குச் சென்று குழம்பிற்குத் தேவையானதை வாங்கிவிட்டுத் திரும்பும் போது யாராவது ஒருவர், “பிடிவாதக்காரி இந்த வருஷம் மகன கொடைக்கு வரவிடாம வச்சிக்கிகிட்டாளே -அட விடுப்பா சாமி என்ன வேற யாரு மேலயுமா எறங்குச்சி. சின்ன பைய தான. கொண்டு வரணும்னு நெனச்சிட்டா யாரால தடுக்க முடியும்? எப்படி நாளும் கொண்டுட்டு  வருவாரு. என்ன ஒண்ணு கோயில்கொடதான் சுடலை ஆடாம பாக்க நல்லா இல்ல”

என்.சி.சி அவன் கனவை இன்னும் கூர்மையாக வளர்த்தெடுக்க உதவியது. முட்டி மடங்காத அவன் கால்களை முதலில் பழித்தான். பின்பு தன்னை வருத்தி மெருகேற்றினான். பாலிடெக்னிக் முடிக்கவேண்டும் என்ற இலக்கை விட, அவன் விரும்பும் உடலைக் கண்டுவிட வேண்டும் என்பது தீயில் எண்ணையூறிக் கிடந்தது. பெண்களே இல்லாத அவன் துறையில் அவன் கவனமெல்லாம் தன் உடல் மேலேயே குவிந்து கிடந்தது. கண் மூடினால் கல்லூரியின் அவ்வளவு பெரிய மைதானத்தில் அவன் ஒருவன் மட்டும் தனித்து ஓடிக்கொண்டும், ஈட்டி எறிந்து கொண்டும், தண்டால் எடுத்துக்கொண்டும் இருப்பான். கண் திறந்தாலும் அவன் அப்படித்தான். தான் வணங்கப்படப்போகும் நாளுக்காக காத்திருக்கத் தொடங்கினான்.                        

தன் அப்பாவைப்போல உடலில் முடி முளைக்காததற்காக மிகவும் சந்தோஷப்பட்டான். தன் உடல் தயார் ஆனதும் ஊர் பார்க்கப்போகும், கட்டுடலை நினைத்துப் பெருமை பூண்டான். தீப்பந்தம் ஏந்தி ஆடுகையில் கருகிப் போகும் நெஞ்சு முடிகள் பற்றிய கவலை அவனுக்கு அவசியப்படாமல் இருந்தது.

“சுடலைமாடன் கதை மகுட ஆட்டம்” என்ற தலைப்பிலிருந்த யூ டியூபை ஆடியோவாகத் தரவிறக்கம் செய்து மொபைலிலும் லேப்டாப்பிலும் வைத்திருந்தான். அவன் சோர்விற்கும், உற்சாக மனநிலைக்கும், ஊர் நினைப்பிற்கும் தீனி போடுவதாக அது அமைந்திருந்தது. கணியான் பாடும் குரல் வசீகரமாக இருந்தது. சொற்களில் கவனம் போகாத நாளில் கூட அந்தக் குரலை கேட்டுக் கொண்டிருந்தான். பறையிசையும் சலங்கை ஒலியும் அவனை அசைப்பதாக உள்ளுக்குள் பட்டது. அதை நினைத்து தான் அப்பாவின் ரத்தமென கர்வப்பட்டான். செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் முட்டை கூட சாப்பிடாமல் தன்னை கட்டுக்கோப்பாக கொண்டு சென்றான்.

நெஞ்சிறங்கி, தொப்பை விழுந்த வயிற்றை வைத்துக்கொண்டு பெண் வேடமிட்டு ஆடும் இரண்டு ஆண்களை முன்னும் பின்னுமாக துரத்தும் தன் அப்பாவின் நினைப்பை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றிருந்தான். தலையில் கட்டப்பட்டிருக்கும் சிகப்புத் துணிக்குப் பதிலாக தொப்பி வைப்பதுபோல கற்பனை செய்து கொள்வான். அறை நண்பர்கள் இல்லாத வேளையில் மெழுவர்த்தி ஏற்றி சுடரை சுடலைமாடனாக பாவித்துக் கொண்டான். அந்தச் சுடரை நெற்றியில் நிறுத்திப் பார்க்கப் பழகினான். நின்றாடும் அந்தச் சுடர் தான்தான் என்று நம்பினான். சீசன் டவல் மட்டும் கட்டிக்கொண்டு சுடரில் மினுங்கும் தன்னுடலை வெகுவாக ரசிக்கத் தெரிந்திருந்தான். அவன் கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தெல்லாம் இவனின் சாமியாட்டம் காணுவதற்கென்றே கிளம்பி வந்து கூட்டம் நிரம்பி வழிவதுபோல கற்பனை செய்து கொண்டான். அவர்கள் குரலாகவே பேசிக் கிடந்தான். அப்பா இறந்தபின் வந்த, அந்த வருடக்கொடைக்கு வரிபோட்டதைக் கூட அம்மா சொல்லாமல் மறைத்துவிட்ட வருத்தம் அவனிடம் மிகுதியாகவே இருந்தது. தன் பக்தியின் ஓர்மையை இன்னும் கூட்டி சாமிக்கும் அவனுக்குமான உறவை பலப்படுத்தத் தொடங்கினான்.

நினைவின் அலைக்கழிப்பு வேணியின் தேகத்தை வெகுவாக குலைத்திருந்தது. கத்தை கத்தையாக முடி உருவி விழத் தொடங்கியது. சமைப்பது தனக்கு மட்டும் தான் என்றாலும், தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு சோறு வடித்தாள். பருப்பு, கீரை வகைகள் கடைந்தாள். சோற்றில் முடி எடுப்பது அவளுக்கு அருவருப்பாகவே மாறியிருந்தது. வேலைக்குச் செல்லாத நாட்களில் மணிக்கொருமுறை கேட்கும் வேதகோயில் வசனத்தில் தன் மனதுக்கு இதமாக உணரும் வசனத்தை திரும்பத் திரும்ப சொல்லியபடி அமைதி மனநிலைக்கு போராடினாள். தன்னைத் தானே ஆற்றுப்படுத்துகையில், உள்ளெழும் தன் குரல் மீது வெறுப்பு வளரத் தொடங்கியது.

அவ்வப்போது திண்ணையிலிருந்து ஓரிரு ஆறுதல் வார்த்தைகள் பேசிச் சென்று கொண்டிருந்த ஜெயமணி அக்காவை அதுவரை வீட்டிற்குள் அழைக்காதவள் வீட்டிற்குள் அழைத்து கதை கேட்க ஆரம்பித்தாள். ஜெயமணி அக்கா நெருங்கிப் பேசுவது போலத் தெரிந்தாலும் அவரின் உடையும் உடல் மொழியும் தொட்டுப் பேசிவிட அனுமதிக்காமல் இருந்தது. வெடித்து அழவும், வேணியின் தலையைத் தடவவும் ஜெயமணி அக்கா தேவைப்பட்டார். ஆனால் ஏதோ பயம் அவளை விட்டு விலகாதிருந்தது. பைபிளுக்கு வெளியே பைபிளைச் சுற்றி ஆங்காங்கு கேள்விப்பட்ட கதைகளை சொல்லி வந்தவர், சண்டே கிளாஸ் பிள்ளைகளை கவர்வதற்கு மனனம் செய்து வைத்திருந்த வசனங்களை மேற்கோள் காட்டி வேணியை ஆற்றுப்படுத்தத் தொடங்கினார். ஜெயமணி அக்காவின் குரலில் வசன உச்சரிப்பில் ஆறுதல் அடைந்தாள். அவள் மனதில் குமையும் கேள்விகளுக்கு பதில் சொல்வதாகவே இருந்தது ஜெயமணி அக்கா சொன்ன வசனங்கள்.

நான்கு பக்க பாட்டு புஸ்தகத்தை வேணியிடம் ஜெயமணி அக்கா நீட்டினாள். என்னவென கேட்க நினைத்தபடி வாங்கிக்கொண்டாள். அந்தப் பாடலின் ராகம் அவளுக்குத் தெரியாமல் இருந்தது. உள்ளுக்குள்ளே பேசிப்பேசி இறுகி திக்குமுக்காடி நின்றவளுக்கு வாய்விட்டுப் பாட முடிந்தது, பெரும் தப்பித்தலாகப்பட்டது. வாய்விட்டுப் பாடுவதின் வழியே, அதிலிருந்த வார்த்தைகளின் வழியே தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று நம்பினாள். கர்த்தரை ஆண்டவர் என்று சொல்லிப் பேசும்போது சுடலை ஆண்டவர் நினைவில் வந்துபோக  தடுமாறினாள். ஜெயமணி அக்காவிடம் தைரியமாக “மண்டியிட தோணல” என்றாள்.  

ஜெயமணி அக்காவின் கம்மல் இல்லாத காது வளைவு, முதலில் சுருக்குக்கயிறு போலத் தோன்றியது. முந்தானையெடுத்து தலையில் போட்டு முட்டி மடித்து வேணியின் முன்பு தரையில் அமர்ந்ததும் சகஜமானாள். இத்தனை நாள் பேசியதில் வேணியின் குடும்பம் பற்றி இன்றைய நிலவரம் தெரிந்திருந்தது. “உன் அக்கா, தங்கச்சிங்க  யாருமே பள்ளிக்கூடம் கூட போனது இல்ல. நீ மட்டும் எட்டாவது வரைக்கும் படிச்சிருக்கன்னா எந்தப்பிள்ளை தன்கிட்ட வரணும்னு ஆண்டவருக்குத் தெரியும் ”இவ்வளவு நாள் சச்சரவா இருந்தது விலகி இப்பதான் உனக்குள்ள சமாதானம் வந்திருக்கு. ஆண்டவரோட பார்வை உம்மேல பட்டிருக்கு.

“கர்த்தர்னே சொல்லுங்கக்கா”. .

மூன்று மாதத்திற்கு ஒருமுறை, வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு பேருந்து ஏறினால் நான்கு மணிநேர பிரயாணத்தில் வீடு வந்து விடும் ராகேஷ்-க்கு, இரவு உணவாக, வேணி அசைவம் எடுத்து சமைத்து வைத்திருப்பது அம்மா தன் மீது வைத்திருக்கும் பாசமாக தெரிந்தது. கொடை முடிந்து இரண்டாவது தடவை ஊருக்கு வருகையிலே அர்த்தம் புரிந்திருந்தது. டிவி ஸ்டாண்டின் கீழ்தட்டில் கிறிஸ்தவ நெடி தாக்குப்பிடிக்க முடியாத அளவிற்குப் போயிருந்தும், குறுக்கீடு செய்ய மனமின்றி தவித்தான். பளிச்சென்று அம்மா உடுத்தும் சேலையின் தேர்வு அவனுக்குத் தெரியும். அதுகூட மாறியிருந்தது கண்டு, இதற்கு மேல் பேச ஒன்றுமில்லையென ஊருக்கு வந்தவன் வீட்டிற்குள் கிடக்காமல் கிரிக்கெட் மைதானத்திலும் குளக்கரையிலும் திரிந்தான். இருவருக்குமே சங்கடம் வராதவாறு சனிக்கிழமை அந்தியில் வந்து சென்றார் ஜெயமணி அக்கா.

வேதகோயில் படியேற தயங்கிக்கிடக்கும் சாமியாடி சேகரின் மனைவிக்கு, ஜெயமணி அக்கா எவ்வளவு முயன்றும் அந்த தயக்கத்தைப் போக்க கடினமாக இருந்தது. சுடலை மாடனை பழிவாங்க, ஜெயமணி அக்கா தொட்டும் தொடாமல் அழைத்துக்கொண்டே இருந்தார். “இங்கயே நல்லாதான்கா இருக்கு” என்கிறவளின் தெளிவு, ஜெயமணி அக்காளை சோதித்தபடியே இருந்தது. “நான்தான் வீட்ல இருந்தே கேக்கனே சாருக்கு ஒழுங்காவே பிரசங்கம் பண்ணத் தெரியல; .புள்ள வளக்கத பத்தி போன வாரம் அவரு சொன்ன கதைலாம் குடும்பத்துக்குள்ள ஆவாத கதை மாறியே இருக்கு”.

“கர்த்தருக்கு தெரியும். நீ ஆலயத்துக்குள்ள வரப்போற நாள். நம்ம பேசி என்ன பண்ணிட முடியும்?”

ராகேஷ்-க்கு அடுத்த தடவை ஊருக்கு வர வேண்டுமா என்ற யோசனை வலுப்பெற்றது. இன்னும் ஆறு மாதத்தில் கோயில் கொடை வரும். அதையொட்டி ஊருக்கு வந்தால் போதுமென்ற முடிவிற்கு வந்திருந்தான். ஒரு நாள் விட்டு ஒரு நாள் அலைபேசியில் பேசிவிடும் அம்மாவிடம் இடைவெளி எடுத்துக்கொண்டான். அம்மாவும் தான் அழைக்காதது பற்றி அவனிடம் கேட்காதது வருத்தமாகவும், ஏமாற்றமாகவும் இருந்தது. ஏனோ சண்டைபிடிக்கத் தோன்றியது. அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்ளும் அம்மாவை, உரிமை எடுத்துக்கொள்ளாமல் கொஞ்சம் கொஞ்சமாக மனதிற்குள் தள்ளி வைக்கத் தொடங்கினான். உண்டாகும் அழுத்தத்தை சமாளிக்க கல்லூரி உடற்பயிற்சி கூடத்திலேயே பழியாகக் கிடந்தான். “நீ என்ன ஆணழகன் போட்டியிலயா சேர போறா? இப்டி கெடந்து போராடுதா” என்றும் கேட்டுப் பார்த்துவிட்டனர்.

கோபமும் வெப்ராளமும் ஒருசேர எட்டிப்பார்க்கும் வேளையில் பிளேட்டின் எடையை கூட்டிக்கொண்டே போவான். பார்ப்பவர்க்கு தசை நார்கள் கிழிந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கும். கலகலவென இருந்தவன் தனக்குள் பூட்டிக்கொள்ளத் தொடங்கினான். அந்த மாற்றத்தை, அவன் உடற்பயிற்சி வழியே பெற்றிருப்பான் என சமாதானம் சொல்லிக்கொண்டனர். அவனின் மெளனம் கலைக்க முடியாததாக இருந்தது.

எதற்காக இந்த அளவு போராடி உடலைத் தயார் செய்யத் தொடங்கினோம் என்பதே கேள்விக்குறியாக நின்றது. ஊருக்குச் செல்வதன் மூலம் காதில் விழும் அவமானத்தின் வார்த்தைகள் என்னவாக இருக்கும் என்பதை டெய்லர் வாயிலாக, டெய்லர் சொல்லாமலே யூகித்துக் கொண்டான். தான் தனித்து விடப்பட்டிருப்பதை எங்கு கொண்டு இறக்கி வைக்க என்பது தெரியாமல், விடுதிக்காப்பாளரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு கடற்கரையில் கால் நனைத்துக் கிடந்தான். தவறவிட்ட அழைப்பைப் பார்த்துவிட்டு டெய்லர் திரும்ப அழைத்தார்.

பகல் பொழுதில் வீட்டிலிருக்கும் பெண்கள், தங்களுக்குள் குழுவாக பேசி மைக் பயன்படுத்தாமல் காலை 11 மணிக்கு மேல் மதியம் 2 மணிக்குள் ஆலயத்திற்கு வந்து ஜெபித்துக்கொள்ள சபையிலிருந்து ஒரு சாவி கொடுக்கப்பட்டிருக்கிற கதையை ராகேஷிடம் சொன்னார். “இப்டியே போனா உங்க அம்ம வேத கோயிலுக்கு வரி குடுத்துருவாவ போலல்லா தெரியுது” என்றார். தன்னை அவமானத்தின் சின்னமாகப் பிரகடனப்படுத்திக் கொண்டான்.

“வேற ஏதாவது பேசுங்கணே இல்லனா பொறவு கூப்பிடுதேன்” என்றான் ராகேஷ். 

கடல் மணலில் பெருவிரல் நுழைத்து நுழைத்து நகக்கண் விண் விண்னென தெறித்தது. அந்த வலிதான் அப்போதைக்கு ஆற்றுப்படுத்துவதாகவும் இருந்தது. கிடா, வேண்டியவர்கள் அவரவர் அமர்ந்திருந்த இடத்தில் வைத்தே உத்தரவை நிறைவேற்ற கிடாவை மலர்த்திப்பிடித்து குரல்வளையிலிருந்து கீறிவிட்டது, கால் வைக்கும் இடமெல்லாம் திட்டு திட்டாக ரத்தம் உறைந்து ஈ மொய்த்துக் கிடந்த தரையே திரும்பத் திரும்ப ஞாபகம் வந்தது.  

“செங்கமால்காரன் பொண்டாட்டி, இளையபெருமாளுக்கு உண்டான கதை புருஷன்காரனுக்குத் தெரிஞ்சி அவனே பெத்துக்க ஒத்துக்கிட்ட பிறகும், “கடவுளின் பிள்ளை” லட்சுமணன் என்கிற லெனின் ஊடே நிற்கிற கதையையும் சொன்னார். குறிப்பிட்டு யாரைத் திட்டுவதென தெரியாமல் பொதுவாக “தேவடியாமக்க” என்று அமைதியானான்.

தன் காதில் எதுவுமே விழாதது போல தொடர்ந்தார். “சுடலை மாடனுக்கு டவுசரும் குல்லாவும் நேர்த்திக்கடன் இருக்கு. டவுன்ல போய் எடுத்தா வெலை அதிகமாம்.    உங்களுக்கு தைக்கத் தெரியுமாணேன்னு செல்வின் வீட்ல இருந்து கேட்டுட்டு நின்னப்ப, யார் கல்யாணத்துக்கோ போவணும்னு ஜெயமணி அக்காவும் தைக்க கடுத்துருந்த அளவு ஜாக்கெட்ட வாங்கிட்டு போவ வந்து நின்னுச்சி. உங்க அம்மகிட்ட எக்குதப்பா எதும் சொல்லிக் குடுத்துருமோன்னு பயத்துல முன்னாடியே உன்கிட்ட சொல்லுதேன்” என்றார்.

“என் பேண்ட் அளவு உங்ககிட்ட இருக்குல்லா அந்த அளவ கணக்குபண்ணி டவுசர் தைங்க. சாமியே வரலனாலும் இந்த வருசம் கொடைக்கு நான் ஆடுவேன்”.  

***

ரமேஷ் ரக்சன்

ஆசிரியரின் பிற படைப்புகள்:
16”, “ரகசியம் இருப்பதாய்”, “பெர்ஃப்யூம்” – சிறுகதைத் தொகுப்புகள்
நாக்குட்டி” நாவல்
rameshrackson@gmail.com

Brexit: பின்-விலகல் வணிக உடன்படிக்கையும் எதிர்காலமும் (கட்டுரை)

0

ரூபன் சிவராஜா

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் விலகலுக்குப் பின்னான வணிக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்தும் இழுபறி நிலவி வருகின்றது. டிசம்பர் 9-ம் திகதி பின்-விலகல் வணிக உடன்படிக்கைக்கான (Post-brexit trade deal) பேச்சுவார்த்தையின் இறுதிச்சுற்றுக்காக பிரித்தானியப் பிரதமர் Boris Johnson, ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen ஆகியோர் பெல்ஜியத் தலைநகர் டீசரளளநடளஇல் சந்தித்தனர். இருப்பினும் இருதரப்பிற்குமிடையிலான இடைவெளி பெரிதாகவே இருந்து வந்துள்ளது. உடன்படிக்கையுடன் (With Deal) விலகுவது அல்லது உடன்படிக்கை இல்லாது விலகுவது (No-deal) என்ற தெரிவுகள் பிரித்தானியா மத்தியில் உள்ளன. உடன்படிக்கை எட்டப்படாது விலக நேரிடுமாயின் உலக வர்த்தக நிறுவனத்தின் (World Trade Organization, WTO) விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றிய – பிரித்தானிய வணிக உறவு அமையும். உடன்படிக்கை இல்லாத விலகலைத் தவிர்ப்பதற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் இணக்கப்பாடுகள் எட்டப்பட வேண்டும் என்பதற்கு அப்பால் அந்தத் தீர்மானங்கள் ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும் பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மையைப் பெற வேண்டும்.

2016-இல் பொதுஜன வாக்கெடுப்பு மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான முடிவு எட்டப்பட்டது. 51,9 வீதமான மக்கள் விலகலுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 2017-இல் அன்றைய பிரதமர் Theresa May விலகலுக்குரிய உத்தியோகபூர்வ செயற்பாடுகளை முன்னெடுக்கத் தொடங்கினார். ஆனபோதும் விலகல் ஒப்பந்தத்திற்குரிய பெரும்பான்மையை விதிக்கப்பட்ட கால எல்லைக்குள்; (29.மார்ச் 2019), பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எட்ட முடியவில்லை. மூன்று தடவைகள் பெரும்பான்மையைப் பெறமுடியாமல் நிராகரிக்கப்பட்டு விலகல் தள்ளிப் போடப்பட்டது. 2019 நடுப்பகுதியில் Boris Johnson பிரதமராகப் பொறுப்பேற்றதை அடுத்து ஒக்ரோபரில் விலகல் உடன்படிக்கை எட்டப்பட்டது. வட-அயர்லாந் எல்லை நடைமுறைகள் தொடர்பான பிரித்தானியாவின் விட்டுக்கொடுப்பு இழுபறியை முடிவுக்குக் கொண்டு வந்து விலகல் உடன்படிக்கைக்கு வழிகோலியது. டிசம்பரில் நடைபெற்ற புதிய தேர்தலில் கென்சர்வற்றிவ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து விலகல் உடன்படிக்கை நாடாளுமன்றப் பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்பட்டது.

2017-லிருந்து இரண்டாண்டு காலத்திற்கும் மேலான இழுபறிகளை அடுத்து 2020 ஜனவரி இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியது. 2020 டிசம்பர் இறுதி வரையான பதினொரு மாதங்கள் நிலைமாறு காலமாக (Transition period இணக்கம் காணப்பட்டது. அதன் பொருள் நிலைமாறு காலத்து வணிக உறவுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவே இருந்தன என்பதாகும். 2020 டிசம்பர் 31-ம் திகதிக்கு முன்னர் பின்-விலகல் உடன்படிக்கை எட்டப்பட வேண்டுமென்பதற்கு அமைய அதனை இலக்காகக் கொண்டு மார்ச் 2020-இலிருந்து பலசுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தன.

விலகல் உடன்படிக்கை

‘விலகல் உடன்படிக்கை’ (Withdrawal agreement) வேறு – பின்-விலகல் உடன்படிக்கை (Post-brexit trade deal) என்பது வேறு. விலகல் உடன்படிக்கை என்பது ஏற்கனவே இருந்த நடைமுறைகள், வணிக உறவுகளிலிருந்து வெளிவருவதற்கானது. அவற்றை ஒரு ஒழுங்குமுறைக்கேற்ப முறித்துக் கொள்வது தொடர்பானது. எளிமைப்படுத்திச் சொல்வதானால் முன்னையது விலகல் முடிவினை இருதரப்பும் ஏற்றுக்கொள்கின்ற ஒப்புதல்களும், இடைக்கால ஏற்பாடுகளோடு நிலுவையில் உள்ள கொடுக்கல் வாங்கல்களுக்கான தீர்வுகளையும் முடிவுகளையும் எட்டுதல். அதன் முக்கிய அம்சங்களாக நிதிநிலமைகள் சார்ந்த தீர்வு, வெளியேற்றம் எவ்வாறு நிகழவேண்டும், பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளின் உரிமைகள், ஐரோப்பிய நாடுகளில் வாழும் பிரித்தானியப் பிரஜைகளின் உரிமைகள், வட-அயர்லாந் எல்லை தொடர்பான விவகாரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

பின்-விலகல் உடன்படிக்கை

பின்-விலகல் உடன்படிக்கை என்பது எதிர்கால வணிக உறவுகளுக்கான பரஸ்பர இணக்கப்பாடுகளைக் குறிப்பது. அதாவது விலகலுக்குப் பின்னரான நீண்டகால ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி, தொழில்வளங்கள், தொழிற்துறைப் போட்டிக்கான நிபந்தனைகள், எல்லை நடைமுறைகள் சார்ந்த உடன்படிக்கைகள் பற்றியது. பொருட்களின் விற்பனை, கொள்வனவு, விலைநிர்ணயம், வரி நடைமுறைகள் இதில் முக்கியமானவை. அத்தோடு மீன்பிடி, விவசாயம், பாதுகாப்புச் சார்ந்த கூட்டுச் செயற்பாடுகள், வான் போக்குவரத்து, கல்வி மற்றும் அறிவியல், தகவல் பரிமாற்றம் சார்ந்த விடயங்களுக்காக விதிமுறைகள், நடைமுறைகளையும் உள்ளடக்கியதான உடன்படிக்கை பற்றிய பேச்சுவார்த்தை இது.

இழுபறியின் மையம்

தற்போதைய பேச்சுவார்த்தையின் இழுபறிப் புள்ளிகளில் முக்கியமான விவகாரம் பிரித்தானியக் கடற்பிராந்தியத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான மீன்பிடி உரிமை சார்ந்தது. அதிலும் விலகலுக்குப் பின்னர் மீன்பிடி உரிமையின் காலஅளவு மற்றும் விதிமுறைகள் பற்றியது. தனது கடற்பிராந்திய மீன்பிடி உரிமையை ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பதில் பிரித்தானியா முனைப்புக் கொண்டுள்ளது. அந்த வகையில் கடல் ஆளுகை, கடல் மீதான இறைமை பற்றிய விடயத்தினைப் பிரித்தானியா முக்கியமானதாக முன்வைக்கின்றது. தனது கடல்வளத்தினை ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் பகிர்வதில் பிரித்தானியாவிற்கு உடன்பாடில்லை. முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் இருப்பதையே விரும்புகிறது.

பேச்சுவார்த்தையின் இன்னுமோர் இழுபறி வணிக உறவின் சச்சரவுகளுக்கான தீர்வுப் பொறிமுறை பற்றியது. அவை சட்டரீதியாக ஐரோப்பிய நீதிமன்றத்தினால் (European Court of Justice) கையாளப்பட வேண்டுமென்பது ஒன்றியத்தின் நிலைப்பாடு. இதுவிடயத்தில் தனியான பொதுச் சட்டப் பொறிமுறையைக் கோருகின்றது பிரித்தானியா.

வட-அயர்லாந்த் எல்லை விவகாரம்

பேச்சுவார்த்தையின் இழுபறியின் மற்றுமோர் விவகாரம் வட அயர்லாந்த் – அயர்லாந்த் இடையிலான எல்லையை விலகலுக்குப் பின் எவ்வாறு பேணுவது என்பது தொடர்பானது. 2020 ஜனவரி வட-அயர்லாந்த் எல்லை நடைமுறை தொடர்பான புதிய இணக்கம் (Northern Ireland Protocol) ஏற்படுத்தப்பட்டது. வட-அயர்லாந் எல்லையானது அயர்லாந்திற்கும் பிரித்தானியாவிற்கும் திறந்த எல்லையாகப் பேணப்படும் என்ற இணக்கமும் எட்டப்பட்டுள்ளது. வட-அயர்லாந்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமிடையில் உள்ளக சந்தையில் உள்ளடக்கப்படுவது சார்ந்த சில விசேட ஏற்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதான தகவல்களும் வெளிவந்துள்ளன. ஐரோப்பிய சுங்க ஒன்றித்தில் வட-அயர்லாந்த் நீடிப்பது தொடர்பான இணக்கமும் எட்டப்பட்டுள்ளது.

அயர்லாந்திற்கும் – வட அயர்லாந்திற்குமிடையிலான எல்லையே பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஒரேயொரு தரைவழி எல்லை. அயர்லாந் ஐரோப்பிய ஒன்றிய நாடாகவும், வட அயர்லாந் உள்ளக-சுயாட்சியுடைய பிராந்தியமாக பிரித்தானியாவின் கீழ் உள்ளமையும் இந்த எல்லை பற்றிய சர்ச்சைக்கான மூலமாகும். இதன் எல்லையூடாகவே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான தரைவழிப் போக்குவரத்து இடம்பெறுகிறது. பயணிகள், வாகனங்கள், பொருட்கள் ஏற்றிச்செல்லும் பார உந்துகள் இந்த எல்லைகளிலேயே சோதனையிடப்படுகின்றன. 500 கி.மீ நீளமான எல்லை இது.

1998-ல் அயர்லாந்திற்கும் பிரித்தானியாவிற்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கையின்படி அயர்லாந் – வட அயர்லாந்திற்கு இடைப்பட்ட எல்லை நடைமுறையில் கண்காணிப்பும் சோதனைச் சாவடிகளும் அற்றதாகப் பேணுவதென்று இருதரப்பினாலும் இணங்கப்பட்டது. அயர்லாந்தும் பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கமாக இருந்தபோது அந்நடைமுறையைப் பேணுவதில் சிக்கல் இருக்கவில்லை. இரு நாடுகளுக்குமிடையில் மனிதர்களின் நடமாட்டமும் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதும் சுதந்திரமாக இயங்க முடிந்தது. பிரித்தானியாவின் விலகல் எல்லைக் கடப்புத் தொடர்பான புதிய ஏற்பாட்டினைக் கோரி நிற்கின்றது.

யார் தீர்மான சக்தி?

ஐரோப்பிய ஒன்றியமானது ஒரு வணிக உடன்படிக்கை மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தினது வணிக விதிகளையும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றச் செய்வதில் முனைப்புக் காட்டுகிறது. பொருளாதார உறவுகளில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குக் கட்டுப்படாமல் தீர்மான சக்தியாக தானே இருக்க வேண்டுமென்பது பிரித்தானியாவின் அவா. தனக்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டுமென்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் அவா. எனவே இங்கு பொருளாதார அதிகாரம், அதாவது பொருளாதார நலன் சார்ந்த தீர்மானங்களை யார் எடுப்பது என்பது உடன்படிக்கையின் இழுபறி முறுகலுக்கான முதன்மைக் காரணி எனலாம்.

அத்தோடு ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார அரசியலின் மாற்றங்களுக்கு பிரித்தானியா இசைந்து போகும்படியான ஒரு உடன்படிக்கைக்குள் கொண்டு வருவது ஒன்றியத்தின் இலக்கு. அதாவது ஒன்றியத்திற்குள் அங்கம் வகிக்காத நோர்வே, ஐஸ்லாண்ட், Liechtenstein போன்றன அங்கம் வகிக்கும் அதன் பொருளாதாரக் கட்டமைப்பான European Economic Area தொழிற்படுவது போன்ற வணிக நடைமுறைகளுக்குள் உள்ளடக்கப் பார்க்கின்றது.

ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டுறவும் கட்டமைப்புகளும்

ஐரோப்பிய ஒன்றியமானது அங்கத்துவம் வகிக்காத பல நாடுகளுடன் வெவ்வேறு பொருளாதார ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றித்தில் அங்கத்துவம் விண்ணப்பித்த பல நாடுகள் பல்வேறு காரணங்களால் இன்னமும் இணைக்கப்படாத சூழல் நிலவுகின்றது. இவ்வகை ‘விண்ணப்பித்த நாடுகள்’ (Accession countries) ஒன்றித்துடன் சில வணிகக் கூட்டுறவு ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன. உள்ளகச் சந்தையின் சில துறைகளில் மட்டுப்படுத்தப்பட்ட பங்கேற்பினைக் கொண்டுள்ளன. அப்பேனியா, போஸ்னியா- ஹர்சகோவினா, கொசவோ, வட மகடோனியா, மொன்ரநீக்றோ, மற்றும் சேர்பியா ஆகியன இதில் அடங்குகின்றன. அத்துடன் Deep and Comprehensive Free Trade Area (DCFTA) என்ற உடன்படிக்கை ஊடாக முந்நாள் சோவியத் தாடுகளான ஜோர்ஜியா, மல்டோவா, உக்ரைன் ஆகியனவும் சில தேர்வு செய்யப்பட்ட துறைகளில் ஒன்றித்தின் உள்ளக சந்தையில் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் உள்வாங்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவோ ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் செய்துகொண்ட (EU-Canada Comprehensive Economic and Trade Agreement (CETA) பொருளாதார உடன்படிக்கையை ஒத்த ஒரு ஏற்பாட்டினை விரும்புகின்றது. (இவ்வுடன்படிக்கை 2017 இறுதியிலிருந்து நடைமுறைக்கு வந்தது. கட்டணங்கள், வரிகளைக் குறைத்து, பொருட்கள் மற்றும் சேவைகளின் பரஸ்பர ஏற்றுமதி-இறக்குமதியை எளிதாக்குவது இதன் நோக்கம்.)

கனடாவுடனான ஒன்றியத்தின் வணிக உடன்படிக்கையை ஒத்த உடன்படிக்கை தொடர்பான பிரித்தானியக் கோரிக்கையை ஒன்றியம் நிராகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருந்து, பாரிய வணிக உறவினைக் கொண்டிருந்த பெரிய நாடு என்பதோடு அதன் அமைவிட அருகாமையும் நிராகரிப்பிற்கான காரணிகள். பிரித்தானியக் கடலில் மீன்பிடி தொடர்பான சர்ச்சையும் பேச்சுவார்த்தையைக் கடினமாக்கிய அம்சங்களில் ஒன்று.

ஐரோப்பிய உள்ளகச் சந்தை

பிரித்தானியாவைத் தனது தரநிர்ணயங்களுக்கும் விதிமுறைகளுக்கும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு உடன்படிக்கை எட்டப்படுவதில் ஐரோப்பிய ஒன்றியம் முனைப்புக் கொண்டுள்ளது. ஐரோப்பிய உள்ளகச் சந்தையின் (European single market) சாதகமான வாய்ப்புகளை உள்ளடக்கிய ஒரு வணிக உடன்படிக்கையை எட்டுவதிலும் பிரித்தானியா முனைப்புக் கொண்டுள்ளது. அத்தோடு ஒன்றியத்தின் தர நிர்ணயங்களுக்குக் கட்டுப்படுவதில் பிரித்தானியா விருப்பம் கொண்டுள்ளது. ஆனால் ஒன்றியத்தின் நடைமுறைகளையே எதிர்காலத்தில் பின்பற்ற வேண்டுமென்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. இது எதிர்காலத்தின் இறைமையை முற்றுமுழுதாக விட்டுக்கொடுப்பதற்கு ஒப்பானதாகும். பிரித்தானியாவைப் பொறுத்தவரை வணிக பொருளாதார, உற்பத்தி, குடிவரவு, வேலைவாய்ப்பு உட்பட்ட இன்னபிற நலன்கள் என்பதோடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதன் மூலம் அதன் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதும் பிரித்தானியாவின் இலக்கு.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளகச் சந்தை அமைப்பில் பிரித்தானியா அங்கம் வகிப்பதாயின் ஒன்றியத்தின் விதிமுறைகளை அனைத்துத் துறைகளிலும் பின்பற்ற வேண்டும். வணிகத் தகராறுகள், முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்கின்ற பொறுப்பு ஐரோப்பிய நீதிமன்றத்தினுடையதாக இருக்கும். விலகலுக்குப் பின்னர் பிரித்தானியா ஐரோப்பிய நீதிமன்றத்திற்குக் கட்டுப்பட்டதாக இருக்க மாட்டாது. எனவே வணிகத் தகராறுகள் சார்ந்த சட்ட ரீதியான பொறிமுறை அவசியமாகின்றது. பின்-விலகல் உடன்படிக்கையில் இவ்விடயம் சார்ந்த பொறிமுறை பற்றிய இணக்கம் எட்டப்பட வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளகச் சந்தை நடைமுறை என்பது 1993-இல் அங்கத்துவ நாடுகளுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட வணிக இணக்கப்பாடாகும். இது அங்கத்துவ நாடுகளுக்கிடையிலான உற்பத்தி மற்றும் வணிகம் சார்ந்த இணைவாக்கத்தை வலுப்படுத்துவதற்கான கட்டமைப்பு. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார அரசியல் நலனைப் பிரதிபலிக்கும் முக்கிய பொறிமுறை. அங்கத்துவ நாடுகளின் உற்பத்தி விதிமுறைகள் குறித்த சில பொதுவான கொள்கைகள் மற்றும் உற்பத்திகளுக்கான மூலதனம், தொழிலாளர், பொருட்கள், நிறுவன மற்றும் சேவைகளின்; சுதந்திர இயக்கம் மற்றும் நடமாட்டத்திற்குரிய சாதகமான விதிமுறைகளைக் கொண்டுள்ளது. அங்கத்துவ நாடுகளிடையே எல்லைகள், தொழில்நுட்பத் தரநிலைகள் மற்றும் வரி சார்ந்த தடைகள் முடிந்தவரை நீக்கப்பட்டுள்ளன.

உடன்படிக்கை இல்லாத விலகல்? – பொருளாதார, அரசியல் வீழ்ச்சி

உடன்படிக்கை எட்டப்படா விட்டால் பிரித்தானியா உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ஒரு பொருளாதார, அரசியல் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்ற கருத்துகள் மேலோங்கியுள்ளன. உடன்படிக்கை இல்லாத விலகல் நிகழுமாயின் கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரம் மேலும் மோசமாகப் பாதிக்கப்படும். உற்பத்தி, நிதிச்சேவை, விவசாயம், தொழிற்துறைகளிலும் பாதிப்பு ஏற்படுமெனவும் எச்சரிக்கப்படுகின்றது.

30 வீதமான உணவுப் பொருட்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. அதில் 10 வீதம் கடல்வழியாகக் கொண்டு செல்லப்படுகின்றது. இந்நிலையில் உள்நாட்டில் பொருட்களின் விலையேற்றம், கட்டண அதிகரிப்பு, விநியோகச் சங்கிலியில் சீர்குலைவு உட்பட்ட விளைவுகள் தொடர்பான அச்சங்களும் வெளிப்படுத்தப்படுகின்றன. விலையேற்றம், கட்டண உயர்வுகளால் குறைந்த வருமானமுடைய நடுத்தரக் குடும்பங்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தொழிலாளர்களோ, பிரித்தானியத் தொழிலாளர்களோ தத்தம் நாடுகளுக்கு வெளியில் தொழில் நிமித்தமாகச் சுதந்திரமாகச் சென்று வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள முடியாது. விலகலுக்கு முன்பு தொழில்நிமித்தம் குடிபெயர்ந்தவர்கள் இதில் விதிவிலக்கு. அவர்களின் தொழில்சார் மற்றும் வதிவிட உரிமைகளுக்கு உத்தரவாதமுண்டு.

மிகப்பெரிய பொருளாதார அதிர்ச்சியைச் சமாளிக்கும் அதே வேளையில், வணிக நிறுவனங்கள் எவ்வாறு விலகலுக்குத் தயாராகின்றன என்பது பற்றிய புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. பத்தில் ஏழு தொழில் நிறுவனங்கள் உடன்படிக்கை இல்லாத விலகல் தமது வணிகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பதாக டிசம்பர் ஆரம்பத்தில் London School of Economics Centre for Economic Performance வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி ஊடகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. 59 விதமான வணிக நிறுவனங்கள், உடன்படிக்கையில்லாத விலகலுக்குத் தம்மை ‘ஓரளவு தயாராக’ வைத்திருப்பதாகக் கருதுவதாகவும் அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. எனவே உடன்படிக்கை இல்லாத விலகல் பாரிய நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதோடு கொரோனா பெருந்தொற்றுப் பரம்பல் உடன்படிக்கையின் இன்றியமையாமையை மேலும் வலியுறுத்தியுள்ளது.

***

ரூபன் சிவராஜா

“அதிகார நலனும் அரசியல் நகர்வும்” நூல் ஆசிரியர். svrooban@gmail.com