Home Blog Page 55

தட்டப்பாறை – நாவல் பகுதி

0

(மோபின் திருவிழா காட்சி)

புதானின்னு (Abu tani) ஆதிகாலத்துல ஒரு வேட்டையாடி சமூகம் இந்த நிலப்பரப்புல இருந்தது. அபுன்னா தந்தைன்னும் தனின்னா மனிதன்னும் அர்த்தமாம். மனித இனத்தின் தந்தை abu tani. இதுல kani தான் tani ஆயிருச்சுன்னு நினைக்கிறேன். அதை அப்புறம் பாக்கலாம். இந்த அபுதனி கூட்டத்தச் சேர்ந்த வேட்டையாடி ஒருத்தனும் அவனோட கிபுங் நாயும் ஒரு மானைத் தேடி ஒடுறப்போ தகர்-தஜி கூட்டத்தார் கிட்ட போய் மாட்டிக்கிட்டான்.

உரால் மலையைச் சேர்ந்த ருஷியனைக் கொஞ்சம் சுரண்டினால் அவனுக்கு உள்ளே ஒரு தாதன் வெளிப்படுவான்னு ஒரு பழமொழி இருக்கு. இந்த தாதர் தான் தகர். அவனோட இன்னொரு கூட்டமான பாமிர் மலைகளில் வாழ்ந்த இனக்குழு தான் தஜி. தகர்-தஜி கூட்டத்துக்கு இடையே வேற ஒரு இனக்குழு ஆள் உள்ளே வந்ததை சம்மதிக்காம அபுதனியை சிறைபிடிச்சி வச்சிருப்பாங்க. அங்க தங்கி இருந்தவன், தகர்-தஜி கூட்டத்தார் விவசாயம் செய்றதை பார்ப்பான்.

அவங்களோட சேர்ந்து அவனும் விவசாயம் கத்துப்பான். ஒருநாள் அவனை விடுதலை செய்றப்போ அவனுக்கு அரிசி, தினை, மக்காச் சோள விதை கொடுப்பாங்க. அதை எடுத்திட்டு போய் தன்னோட கூட்டத்தார்கிட்ட காமிக்கிறதா “அபுதனியும் டிகோ அனியும்” ன்னு ஒரு மரபுக்கதை இந்த மண்ணுல இருக்கு.

ஐந்து தானியங்கள் என்கிற சீன புராணக் கதைகளின் படி விவசாயத்தை உலகிற்கு வெளிப்படுத்திய வேட்டையாடி அரசன் ஷென்னோங்கிற்கு கடவுள் ஐந்து தானியங்கள் வழங்குவார்.

ரெண்டு கதையும் கேட்டா ஏதோ ஒரு மேட்சிங் இருக்கிறதா தோனும். ஷென்னோங் தான் தேயிலையை கண்டுபிடிச்சவர்ன்னு ஆங்கில ஏடு கூறுது.

இதே நேப்பாள்ல பஹுன் (Bahun or Khas Brahmin) ன்னு ஒரு விவசாயக்குடி இருக்கு. அவனுக்கு மலை பிராமணன்னு பேரு. இந்த பஹுன் பத்தி அதிகம் தேடுனா விவசாயம் செய்த கேரள மலை பிராமணர்களான குறிசியர் (Kurichiyar) வரை போய்சேரும்.

குறிச்சியர் (குறும்பாடு) தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆளுங்க. அதாவது ஜாதின்னு எல்லாம் ஒன்னும் கிடையாது. எல்லாரும் மலையில் விவசாயம் செஞ்ச காணிக்காரன் தான். முத்தி கொடுத்து மலைகளை திருத்தி வேளாண் தொழில் செஞ்சவன். பெரிய அண்ணன் (பெரிய மலையாளி), நடு அண்ணன் (கொல்லி மலையாளி), சின்ன அண்ணன் (பச்சை மலையாளி) ன்னு வாழ்ந்த கூட்டம்தான் திருச்சி மலையாளிங்கிற இனக்குழு. சரி வா விருந்துக்குப் போவோம்” என்று மனோவை அழைத்துக் கொண்டு அருணாச்சல பிரதேசத்தின் இத்தா நகரின் (Ittanagar) திக்ரோங் நதியோரம் வந்து சேர்ந்தார் ராகுல்.

“என்ன விசேஷம். ஊரே கூடி இருக்கு”

“இதுக்கு பேரு மோபின் திருவிழா. அதான் ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கு. அஞ்சு நாள் நடக்கும் இந்த அறுவடைக் கால உழவர்களின் கொண்டாட்டம்”

“மொபின் திருவிழான்னா”

“மொபின் ஆனே (Mopin Ane-goddess of forest) ங்கிற மலைத்தாய் செல்வத்தையும், வளத்தையும் தருவதாகவும், தீய சக்திகளை விரட்டி அமைதியும், அருளும், வளமும் தரும்னு நம்பும் பழங்குடி விழா. வா உள்ளே போய் பாப்போம்” என்று கூட்டத்திற்கும் நுழைந்தனர் இருவரும்.

புற்களால் ஆன தலைக்கிரீடம் செய்து விதவிதமான பச்சை நிற மாலைகள் அணிந்து அபுதானி பழங்குடிகள் அரிசியைப் பொடியாக்கி ஒருவர் மீது ஒருவர் பூசி விளையாடிக் கொண்டிருந்தனர். கருந்துளசி, ரோஜா, செம்பருத்தி, நந்தொட்டி, வாடாமல்லி, பச்சிலைகளைக் அழகாக கோர்த்து மாலையாக்கி மலைத்தாய்க்கு அணிவித்திருந்தனர். பரிசுத்தமான குங்கிலிய பிசினின் மணமே அப்பகுதிக்கு ஒரு விதமான தெய்வீகத்தன்மையைக் கொண்டு வந்திருந்தது.

அரிசி ஒரு பாத்திரத்தில், ஏழு கரித்துண்டு, ஏழு வெள்ளாம் பீர்க்கல், ஏழு ஈச்ச விதை, ஏழு மூங்கில் விதை, வெற்றிலையும், மிளகும் கொண்டு படையல் செய்யப்பட்டிருந்தது அந்த ஊர் மலையம்மன் முன்பு. ஊர்த்தலைவர் மூட்டுக்காணி தலைமையில் தங்கள் பாராம்பரிய உடையணிந்து போப்பிர் என்னும் நடனமாடி சடங்குப் பாடல்கள் பாடும் மக்களை ஆர்வமுடன் பார்த்தான் மனோ.

ஏறக்குறைய பொங்கலின் சாயலில் இருந்தது திருவிழா.

***

(ஒரு சந்திப்பின் போது…)

ன்று இரவு அவர்களுக்காகப் பிரத்யேகமாக ஒட்டன் துள்ளல் நடனம் ஆட திய்யன் மற்றும் புல்லையர்கள் சிலரை எடக்கல் சர்ச் ஆட்கள் மூலமாக ஏற்பாடு செய்திருந்தான் வர்கிஸ்.

ஏழைகளின் கதகளி என்று அழைக்கப்படும் ஒட்டன் துள்ளல் அல்லது பறையன் துள்ளல் பார்த்துக் கொண்டிருக்கும் போது “ஏன் கதகளி ஆடும்போது முகத்துல பச்சை நிறம் பூசுறாங்க தெரியுமா” என்று கேட்டுவிட்டு வர்கிஸ் கூறிய பதில் சற்று அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை கொடுத்தது.

கொழும்பு இல்ல அது.. கொழ அம்ப, கொழம்பன்னு தான் சொல்லுவாங்க. கொழ அம்பன்னா பச்சை அம்மான்னு அர்த்தம், திருச்சி பச்சைமலைல தான் மலையாளி பழங்குடி அதிகம் இருக்கிற இடம். அங்க இருந்து நேர்கோடு இழுத்தா மத்தியப்பிரதேசப் பச்சைமலை வந்திரும்.

“பச்சமாமா” ன்னு தேடுனா அமேரிக்க இன்கா கதை வந்திரும். மாமான்னா அரபியில அம்மான்னு அர்த்தம். அரபியில பச்சைக்கு அஹலர் ன்னு பேரு. அஹீர் வேடர் குடி இங்க இருந்து போனது தான். பச்சைக்குன்னு நிறைய கதை இருக்கு. ஒருநாள் அதைப்பத்தி பேசுவோம். ஆதியனை பார்க்கக் கூடாதுன்னு சொன்னேன். ஆனா நாளையில இருந்து நாம பாக்கப்போற ரவுல, அஹீர், பில் எல்லாருமே மாடு கூட தொடர்புடையவங்க தான்.

ஏன் பாக்கக் கூடாதுன்னு சொன்னேன்னா அஹீர்-ங்கிறது அரபிச்சொல். கத்தியாவர், நவயதி (Nawayathi), மேமன், சிந்தி, ராஜ்புத், பெஸ்தோன்னு சிந்து சமவெளியைத் தாண்டினா எல்லாமே முஸ்லிம்ஸ்.” மெஸியான்னா (தேவதூதர்) ‘கால்நடை’ன்னு அரபியில அரத்தம்னு அங்கவரப் போயிரும்” என்றான் சிரித்த படி வர்கிஸ்.

“இதுக்கே நிறைய வேலை பார்க்க வேண்டியதிருந்தது. அஹீர்ங்கிற வார்த்தை வராம பார்த்துக்கிட்டோம். கௌலி, கோசி,கோப், ராவ் சாப், தௌவா, அகத், ஆயர், யாதவ், கோன், கோனார்ன்னு பலபேருல அஹீரை பிரிச்சி சர்வே செஞ்சோம். காரணம் மெசபடோமிய கடவுள் ஹத்தாத் (Hadad) தலையில காளைக்கொம்பு கொண்ட தலைப்பாகையோட தாடி வச்சிருப்பார். அவருதான் சுமேரிய சூரிய கடவுள் இஷ்கூர் (Iskur) கூட மேட்ச் ஆவார்.

இஷ்கூர் வம்சாவளி தான் இராமர் கடவுளாம். இது இல்லாம Zeus, Gaia, Yaan, Apis, Paandil எல்லாமே எருதை காட்டி கொடுத்திரும். Paandil – “பாண்டில்” அப்படின்னா எருதுன்னு சுத்தி வளச்சி நேரா அது எல்லாமே தமிழ்நாட்டுல வந்தி நின்னுரும். ஆதியனுக்கு எருவுலன்னு பேரு வேற இருக்கு”

“வாவ், இதைத் தேடித்தான் நான் பிரான்ஸ்ல இருந்து வந்திருக்கேன்”

“இதையா சீரியலா எடுக்கணும்னு நினச்சிருக்க”

“ஆமா”

“க்கும்.. இதுதான் எல்லாத்துக்கும் தெரியுமே. கிரேக்க புராணக்கதையில் சியுசு-ங்கிற கடவுள் இளவரசி ஈரோப்பாவை பாதுகாப்பா கடத்திச் செல்ல காளை மாடா மாத்தி தன்னோட முதுகுல சுமந்துகிட்டார்ன்னு வருது. எவ்வளவு ரிசெர்ச் நடக்குது தெரியுமா இந்தியால. வெளிய நடக்கிற அரசியல் எல்லாம் சும்மா. இந்தியாவோட அடையாளத்தையே மாத்த உள்ளுக்குள்ள பலவேலை நடந்திட்டு இருக்கு. இறைத்தூதர் நோவா காலத்துக்கு அப்புறம் வந்த ‘ஆது சமூகத்தார்’ தான் இவுங்க எல்லாருமே”

“அதுக்கு எல்லாம் ஆதாரம் இருக்கா”

“ஹ்ஹஹஹ.. நீ புதுசா ஹிஸ்டரி படிக்க வந்திருக்கியா, ஜோசுவா ப்ராஜெக்டோட டார்கெட்டே இந்தியாவும் ஆப்ரிக்காவும்னு சொல்லும் போதே புரிய வேண்டாமா. சரி ஆட்டத்தைப் பாரு. உயிர கொடுத்து ஆடிட்டு இருக்கான் மலைவாசி”

கூலிக்காக ஆடுகிறோம் என்ற எண்ணமெல்லாம் இன்றி துள்ளல் கலந்த ஆக்ரோஷத்துடன் தரையில் இருந்து தாவி ஆடிக்கொண்டிருந்தது பறையன் எனும் இயற்கை.

மறுநாள் ஆவென அகலக் கண்விரித்து எடக்கல் குகைகள் முழுக்கச் சுற்றிவிட்டு கரிந்தண்டன் ஆவி இன்றும் சுற்றுவதாக கருதப்படும் வயநாட்டு மலைப்பகுதியின் ஆலமரத்தைப் பார்த்து அங்கிருக்கும் பனியர்குடி மக்களை சந்தித்து அவர்கள் மதிக்கும் பளிச்சியம்மனுக்கும் வள்ளி என தமிழ்நாட்டில் அழைக்கப்படும் தெய்வத்திற்குமானத் தொடர்புகளை அது கொழும்பு குவேனி வரை தொட்டுச்செல்லும் வாய்மொழி தொடர்புகளை எல்லாம் வர்கிஸ் கூறியபடி வந்தான்.

கர்னாடகா நாகர்ஹோளே தேசியப்பூங்கா வந்தடைந்த போது அங்கிருக்கும் முக்ரி பழங்குடி (Mukri) மக்களை வர்கிஸ் அறிமுகம் செய்து வைத்தான்.

“நான் சொன்னேன்ல மிடில் ஈஸ்ட் வரைக்கும் தொடர்பு வந்திரும்னு. முக்ரின்னு என்சைக்ளோபீடியால தேடுனா குர்திஸ்தான் முஸ்லீம் வரைக்கும் போயிரும் இந்த பழங்குடி”

“அஜர்பைஜான், ஈரான்னு எல்லாம் வருது” என்று மொபைலில் நெட்டைக் கிண்டியபடி கூறிய டேனியலிடம்,

“இவனும் பாம்பாட்டி தான். கருநாகம் தான கருனாடகம். இவுங்கள்ளே ஹெப்பின்னு ஒரு குரூப் இருக்கு. அது முஸ்லீமா மாறுன உயர்ஜாதி” என்ற வர்கிஸின் பேச்சைக் கேட்டதும் கடக்கரைக்கு இருளன் கூறியது தான் நினைவில் வந்தது.

“ங்கொய்யால… சாதிக்கும் மதத்துக்கும் பின்னாடி நடந்தா பைத்தியம் தான் பிடிக்கும். அப்படி ஒரு இடியாப்ப சிக்கல் இந்தியால. நன்கு வேகவைத்த கறித்துண்டை எடுத்து உதறினால் கையில் நீண்ட எலும்பு மட்டும் மிஞ்சுவது போல புராணக் கதைகளை உதறினால் பரிசுத்த ஆதிக்குடியின் வாழ்வு வெட்ட வெளிச்சமாகத் தெரியும்” என்று அவர் கூறியதை நினைத்தபடி வந்தான்.

அங்கிருந்து தடியண்டமோல், கூர்க், புஷ்பகிரி, குமார பர்வத, சார்மடி மலை கடந்து ஹெப்பி அருவியில் குளித்து அங்கிருந்த ரிசார்ட்சில் அன்று இரவு தங்கி குளிருக்கு இதமாகச் சரக்கடித்து ஒரு ஜாலியான டிரிப்பாக இருந்தது.

இருளன் போல எந்தப் பழங்குடி வீட்டிலும் தங்க வைக்காததால் குளிர் தரை, சாமை ரொட்டி, மரக்கோதுமை, கேப்பை கூழ், வரகரிசி கஞ்சி என்றெல்லாம் இல்லாமல் ஹோட்டல் சாப்பாடும் சரக்கும் குளிருக்கு இதமாக ரிசார்ட்ஸ் பிளாங்க்கெட்டும் என சுகவாசியான நிழலாக இருந்தது மேற்குத்தொடர்ச்சி மலைப் பயணம்.

ஒருமுறை வர்கிஸ் உடன் பயணித்து காடு கடந்துவிட்டால், அடுத்து வரும்போது நமக்கு தோதுபோல பயணத்தை நடத்தலாம் என நினைத்துக் கொண்டான் டேனியல்.

மறுநாள் குதிரைமூக், காளி புலிகள் வனம், ஜம்போடி, ஹல்லூர் எனச் சுற்றி அடித்து அக்கா-தங்கச்சி அருவி(Akka-tangi falls)யில் குளித்து அன்று இரவு பதாமி குகைகள் (Badami caves) கொண்ட பகுதியான அகஸ்தியர் ஏரி(Akastiya lake)யை ஒட்டிய ஆயுர்வேதிக் ரிசார்ஸில் அறை எடுத்துத் தங்கினார்கள்.

அன்று இரவு கொண்டு வந்திருந்த கஞ்சாவை இருவருக்கும் சிகரெட்டில் சுருட்டிக் கொடுத்தான் வர்கிஸ். டேனியலுக்குப் பழக்கம் என்பதால் உடல் தாக்குப்பிடித்தது. கடக்கரை தான் ஜெயின்ட் வீல் உச்சியில் இருந்து தலைகுப்புற விழுந்தது போல கட்டிலில் விழுந்து கிடந்தான்.

மறுநாள் காலை பாதாமி குகைக்கோவில்களை சுற்றி வலம் வந்தனர். இந்து, புத்த, ஜைன மதத்திற்கான சிலை அடையாளங்கள் இருப்பினும் இந்த நிலத்தை தொலமி (Ptolemy) “பெட்ரீகல்-மிசிங்கி” pedregal(msingi) என அழைக்கிறார்.

Msingi என்றால் எதியோப்பிய ஸ்வைஹிலி மொழியில் “துவக்கம்” என்று பொருள். ஆனால் எதன் துவக்கம் என்றுதான் தெரியவில்லை என்றான் வருத்தத்துடன் வர்கிஸ் .

***

தட்டப்பாறை
முஹம்மது யூசுஃப்
புதிய வெளியீடு
யாவரும் பப்ளிஷர்ஸ்

பாஷையை நீர்மையாக்கி களத்தில் இறக்கிய விளையாட்டு(தமிழினியின் வி.ஜே.வஸந்த் செந்திலின் “திராவிட அழகி” கவிதைத் தொகுப்புக்கான மதிப்புரை)

1

ரவி சுப்பிரமணியன்

சிலபேர் தொடர்ந்து நமக்கு வியப்பை வழங்கிக்கொண்டே இருப்பார்கள். அறிவால் ஆற்றலால் அன்பால் ஞானத்தால் இப்படிப் பலவிதமாய். நண்பர் வி.ஜே. வஸந்த் செந்திலை அவர் வசந்த் செந்திலாக இருந்த காலத்திலிருந்தே 22 வருஷங்களுக்கு மேலாக நான் அறிவேன். அவர் இன்னும் அந்த ஆச்சர்யத்தை எனக்கு தந்துகொண்டே இருக்கிறார்.

தொழில் நிமித்தம் மருத்துவராக உள்ள ஒருவர் எப்படி கவிதை, கதை, மொழிபெயர்ப்பு(ஆல்பர் காம்யூ, சாரத்தர்), கட்டுரை, விமர்சனம், மருத்துவம், அறிவியல் என்று பல்வேறு விதமாகக் காத்திரமாக எழுதிக் குவிக்கிறார், செயல்படுகிறார் என்பது எனக்கு இன்றும் புதிராகவே உள்ளது.

தமிழ் இலக்கணம் உட்பட எவ்வளவு புத்தகங்கள். எவ்வளவு விஷயங்கள் இந்த வயசில் இது எப்படிச் சாத்தியம் என்று நான் பலநாட்கள் நினைத்திருக்கிறேன். நமக்கு ஒரு கவிதையை எழுதிவிட்டால் பத்து நாளுக்கு இதுபோதும் என்று தோன்றி பலசமயம் ஈஸிசேரில் படுத்துக் காலாட்டிக் கொண்டிருக்கிறோம். இந்த ராட்சனுக்கு எப்படி இவ்வளவு சாத்தியமாகி இருக்கிறது என்பது மட்டுமல்ல அவருக்குத் தெரிந்த இன்னும் நுட்பமானச் செறிவான பல விஷயங்கள் எழுதப்படவும் இல்லை என்பதும். அவரிடம் அடிக்கடி பேசும்போது அரசியல், சினிமா உட்பட பல்துறை சார்ந்து அவர் பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள் அத்தகையவை. ஆனால் பேசும்போது நான் ரொம்ப சீரியஸான ஆள் என்ற எந்த தன்மையையும் உருவாக்க மாட்டார். குசும்பும் நக்கலும் பகடியும் அவருக்குக் கூட பிறந்தவை. பேசும்போது நம்மை பதின்ம வயதுகளின் இளமைக்கு தள்ளிவிட்டுக் கொண்டே இருப்பார்

நான் பெரிதாய் சிந்தித்து ஒரு விஷயத்தை ‘பம்’ என்று பஞ்சு மிட்டாய் மாதிரி அவரிடம் நீட்டுவேன். அவர் பொசுக்கென்று ரெண்டு கையாலும் அதை நசுக்கி அந்த ரோஸ் சாயத்தை முகத்துக்கு நேரே காண்பிக்கையில் எனக்குக் கூச்சமாக ஆகிவிடும்.

என் கவிதைகளில் 90 விழுக்காட்டுக்கு மேல் மூன்றாம் தொகுப்பிலிருந்து அவர் பார்வைக்குச் செல்லாமல் நான் வெளியிட்டதில்லை. திருத்தித் திருத்தி என்னை அவர் மீண்டும் எழுத வைத்துக் கொண்டே இருப்பார். அவர் கருத்தை என்மீது திணிக்காமல் நான் நெகிழ நெகிழ என்னை எனக்கே கண்டுபிடித்து அவர் எனக்கே வழங்கிக் கொண்டே இருப்பார். சிலசமயம் அவருடனான விவாதத்தில் பறக்கும் அனலில் நான் அவரை நிராகரிப்பேன். அவர் கூலாய் இன்னொரு பழச்சாற்றுக் கோப்பையுடன் புன்னகைத்து நின்று கொண்டிருப்பார்.

இவரது “தமிழ் இலக்கணம் எளிய அறிமுகம்” புத்தகத்தைப் படித்துவிட்டு சுஜாதா ஒருமுறை “அவ்ளோ சின்ன பையனா, என்னாப்பா சொல்ற. லேசுபட்டது இல்லப்பா இது” என்று ஆரம்பித்து இவரைப் பற்றி இவர் கவிதைகள் பற்றி ஆழ்வார்பேட்டை வீட்டில் ஒரு அஞ்சு நிமிஷம் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அவரது “அம்பலம்” இணைய இதழின் கேள்வி பதில் பகுதியில் அந்நூலை தமிழ் இலக்கணம் கற்க விரும்புபவர்களுக்குப் பரிந்துரைத்தார்.

என்னவோ செந்திலின் பதின்ம வயதிலிருந்து இன்றுவரை அவர் என் கவிதை வாசகராகவும் இருந்து வருவது ஒரு கொடுப்பினைதான். வயது எங்களுக்குள் எப்பவும் ஒரு தடையாய் இருந்ததில்லை. இவ்வளவும் ஏன் இப்போ. அண்மையில் “தமிழினி” வெளியிட்டுள்ள அவரது “திராவிட அழகி” கவிதைகளை வாசித்த போது எனக்கு மேலும் ஒன்று தோன்றியது. அதற்கு பதிலாக உள்ள கவிதையைச் சொன்னால் எனக்கு என்ன தோன்றியது என்பது உங்களுக்கு விளங்கிவிடும்.

யாவரும் கேளீர்

நீங்கள் ஒன்று கூடி
அவனைப் புறந்தள்ளுகிற வேகத்தில்
அவன் எழுதிய மகா கவிதை ஒன்று
எதிர்பாராத தாக்குதலுக்கு உள்ளாகிறது

தடுமாறி விழுந்து
தம்ஸ் அப்பைத் தலைகீழாகச் சொல்லி
மூச்சை விடுகிறது அது

பேரரசன் பாமரன் உடையில்
மரணமடைவதை
கண்ணதாசனுக்குப் பின்னால் வந்த கவிகள்
மரத்துக்குப் பின் ஒளிந்து கவனிக்கிறார்கள்

கிரீடமற்று விழுந்தாலும்
அதன் உடல்
பேரரசனின் ஆகிருதியில் கிடப்பதைப் பாருங்கள்

ஆம்
அது ஒரு மகா கவிதை

நூற்றாண்டுகள் கழித்து
தோண்டி எடுத்து
அதற்கு நீங்கள்
கணியன் பூங்குன்றன் என்று பெயர் வைப்பீர்கள்.

அவர் யார் யாரையெல்லாம் நினைத்து இந்த கவிதையை எழுதினார் என்று எனக்குத் தெரிந்தாலும் இது உண்மையில் செந்திலுக்கும் பொருந்துகிற கவிதை தான். இப்படி எத்தனை செந்தில்கள் நம்மைச் சுற்றி குருத்துத்தாது உள்ளவைகள் நிராகரிக்கப்பட்டு ஏன் நாலந்தரங்களே பெரும்பாலும் எல்லாத் துறையிலும் முதலிடத்துக்கு வருகின்றன என்ற அவரது கரிசனக் கவலை ஒரு மெல்லிய பிளாக் ஹியூமரோடு வெளிப்பட்டுள்ளது.

“கவிதையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது
சந்தேகமின்றி இந்த நிபந்தனையுடன்
வெற்றுத் தாளில் நீ முன்னேற வேண்டும்”

என்ற நிக்கனார் பாராவின் கவிதை வரிகள் இவர் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கையில் இரண்டு முறை எனக்கு ஞாபகம் வந்தது.

எந்த முஸ்தீபுகளும் இல்லாமல் பாமர எளிமையாய் சட்டென அற்புதங்களை நிகழ்த்தும் கவிதைகளையும் அவரால் அசால்ட்டாக எழுதிவிட முடியும் என்பதற்கு என்னிடம் பல உதாரணங்கள் இருந்தாலும் பிளட் டெஸ்ட்க்கு என்ன ஒரு பாட்டிலா வேண்டும்.

அச்சு

யாரால் இந்த பூமி
இப்படி பிறழாமல்
சுற்றிக் கொண்டிருக்கிறது
என்று தெரியவில்லை

இதோ இந்த தெருவை
தன் வீட்டின் உள்ளறை போல
திருத்தமாக சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிற
இந்த ஒனிக்ஸ் பணிப்பெண்
காரணமாக இருக்கலாம்.

இப்படிச் சாதாரணங்களின் மூலம் அசாதாரணங்களை நிகழ்த்திக் கொண்டு ஒற்றைக் கம்பிமேல் பிடிமானம் இல்லாமல் அவர் நடக்கும் போது பதறி நாம் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தால் “ஏன் கைதட்டினா என்னா குறைஞ்சிருவிங்களா” என்று கேட்டபடி பேலன்ஸாக நடந்து கொண்டே சிரிப்பார். இந்த சாகஸம் மட்டுமல்ல, குறும்பு, இளமை, எள்ளல், அபூர்வம், புதிர், விசித்திரம், உரையாடலில் கவிதையை வசப்படுத்தி விடுகிற வல்லமை இப்படி பல தன்மைகளை இந்தத் தொகுப்பில் காண்கிறேன்.

மிஸ்டர் 100

நூறு ஒன்வே அபராதங்களையும்
நூறு ஹெல்மெட் அபராதங்களையும்
நூறு நோ பார்க்கிங் அபராதங்களையும்
நூறு பிச்சைக்காரர்களை விரட்டி அடித்ததற்காகவும்
நூறு பூஞ்சை மனிதர்கள் மேல் வழக்கு பதிந்ததற்காகவும்

அவருக்கு
அந்த ஆண்டின்
சிறந்த போலீஸ்காரர்
விருது வழங்கப்பட்ட நாளில்
அவர் அந்த போலீஸ் வேலையை ராஜினாமா செய்தார்.

இது என்ன குற்ற உணர்வா, போதும்ண்டா சாமி இந்த கடமை என்ற அலுப்பா, இல்லை வேறு எதற்கும் பெரிசாக ஏற்பாடு செய்துவிட்டுக் கிளம்புகிறாரா, வீட்டுச்சூழலா, உடல் நலமில்லையா. எத்தனை உள் அடுக்குகளைக் கொண்டிருக்கிறது இந்தக் கவிதை. விளக்கம் வியாக்யானம் எல்லாம் விட்டுவிட்டு இன்னுமொரு கவிதையை மட்டும் சொல்லிவிட்டு சுபம் சொல்லலாம் என்று தோன்றுகிறது. அதற்கெல்லாம் அப்பாற்பட்டு எப்போதும் இன்னொரு புது அர்த்ததோடு நிற்பவை செந்திலின் கவிதைகள்.

அறிந்து இடுக

அம்மாவுக்கு அதே அநீமியா
அதே அயர்ன் டேப்லட் என்றேன்

‘ம்’ எனக்குத் தெரியும்

எனக்குத் தெரியும் என்றவள்
டேப்லட் லிவோஜன் குடுங்க என்றாள்

அப்பாவுக்கு புரோட்டின் பவுடர்
என்றேன்

‘ம்’ என்றாள்

அவ்வளவு தானா என்றார்
கடைக்காரர்

இரண்டு
எறும்பு மருந்து பாக்கெட்
என்றேன்

மகள் கேட்டாள்

நம்ம வீட்டு எறும்புக்கு
உடம்பு சரியில்லையாப்பா

நானும் கடைக்காரரும்
விக்கித்து நின்றோம்

எறும்பு மருந்தை
அவரும் கொடுக்கவில்லை
நானும் கேட்கவில்லை

திரும்பும் போது
வழியில் கடவுள் எதிர் வந்தால்
இந்த உலகத்தை நீங்கள் ஏன்
குழந்தைகளிடமே கொடுத்துவிடக்கூடாது
என்று கேட்கும் முடிவில் இருந்தேன்.

பலர் பீடங்களையே உருவாக்கி ஜபித்துக் கொண்டிருக்கையில் தமிழினி – தரத்தில் உயர்ந்த பார்வைக்குப் படாத உதிரிகளுக்காவும் கண்டுகொள்ளப் படாதவைகளுக்காகவும் பீடங்களை உருவாக்கி நஷ்டத்தோடு களிகொள்ளும் என்பதற்கு இந்தப் புத்தகங்களும் உதாரணம். செந்திலின் இலக்கணப் புத்தகத்தையும் நான் படித்துவிட்டேன். ஆனால் அடுத்த பிறவியில் அது குறித்து எழுதுவதாய் உத்தேசம்.

***

ரவி சுப்பிரமணியன்

ஐந்து கவிதை தொகுப்புகள், ஒரு கட்டுரை நூல், இரு தொகுப்பு நூல் என ஒன்பது நூல்களை இதுவரை இவர் வெளியிட்டுள்ளார்.

வீட்டிலிருந்தே வேலை (கட்டுரை)

0

பாரதிராஜா

ண்பதுகளில் படித்த இளைஞர்கள் என்றாலே வேலையில்லாமல் தாடி வைத்துக்கொண்டு அலையும் கூட்டம் என்கிற ஒரு நிலை இருந்தது. அதுவே தாராளமயமாக்கத்துக்குப் பிந்தைய புதிய ஆயிராண்டில் வேகமாக மாறி, இந்தப் படிப்பு – அந்தப் படிப்பு என்றில்லாமல் எல்லாப் படிப்பு படித்த இளைஞர்களும் கணிப்பொறித் துறைக்குள் வந்து குவியத் தொடங்கினர். நாமெல்லாம் படித்து முடித்த பின் வளர்ப்பதற்கு தாடி ஒழுங்காக வளருமோ வளராதோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த தலைமுறை திடீரென்று முற்றிலும் புதிய உலகம் ஒன்றுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு விதவிதமான புதிய அனுபவங்களால் திக்குமுக்காட வைக்கப்பட்டது.

அப்படியான அனுபவங்களில் ஒன்று, முதலில் பெரும் பெரும் மேசைக்கணினிகளை வைத்துக்கொண்டு டொக் டொக்கென்று தட்டிக்கொண்டிருந்தவர்களுக்கு, மடிக்கணினிகள் வந்த பின்பு கூடுதலான சுதந்திரம் கிடைத்தது. முதலில் மேலாளர்கள், பின்னர் மூத்த பணியாளர்கள் என்று தொடங்கியது, சில நிறுவனங்களில் எல்லோருக்குமான வசதியாக அளிக்கப்பட்டது. மடிக்கணினிகளோடு சேர்த்து எந்த நேரமும் வேலை செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டிய எதிர்பார்ப்பும் வந்திறங்கியது. கூடுதல் பொறுப்போடு சேர்த்துக் கூடுதல் சுதந்திரமும் வந்து சேர்ந்தது.

“இரவெல்லாம் விழித்து வேலை பார்த்தவனுக்குக் காலையில் சிறிது தாமதமாக வருவதற்கு உரிமையில்லையா!” என்ற கேள்விக்கான பதிலாக எந்த நேரமும் வந்து எந்த நேரமும் சென்றுகொள்ளலாம் என்ற சுதந்திரம் வந்து சேர்ந்தது. அப்படியே எந்த நேரமும் அழைத்துத் தொல்லை செய்வோம் என்கிற தலைவலியும் வந்தது. கொடுத்து வாங்கும் இந்தப் பணியிடப் பண்பாட்டுக்கு முழுதும் பழகிவிட்டவர்களாகத்தான் ஒரு தலைமுறையே உருவானது. மதியம் வந்து இரவில் திரும்பினாலும் பரவாயில்லை, அவ்வப்போது அலுவலகமே வராவிட்டாலும் பரவாயில்லை போன்ற வசதிகள் வழங்கப்பட்டன. இரவெல்லாம் விழித்து வேலை பார்க்கத் தயாராக இருக்கும் பணியாளர் படையின் மூலம் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருக்கும் வாடிக்கையாளர்களோடு கூடுதல் நேரம் உரையாட முடிகிறது, அவர்களுக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க முடிகிறது என்பவை போன்ற வசதிகள் நிறுவனங்களுக்கும் நன்மை பயத்தன.

இதுவே சொந்த வேலைகள் இருக்கும் போது, வீட்டிலிருந்தே வேலை பார்க்கிறேன் என்று சொல்லி உட்கார்ந்துகொள்ளும் உரிமையைக் கொடுத்தது. அப்படியே மெதுவாக எப்போதுமே வீட்டிலிருந்து வேலை செய்துகொள்ளும்படியான உரிமையுடைய ஒரு பிரிவினரை உருவாக்கியது. பிரசவ விடுப்பில் சென்ற பெண்கள், விபத்தில் அடிபட்டு நகர முடியாமல் வீட்டில் மாட்டிக்கொண்டவர்கள், நோய்வாய்ப்பட்ட குடும்பத்தினருக்கு உதவும் பொருட்டு வீட்டில் இருக்க வேண்டியவர்கள் போன்றவர்கள், கொடுக்கப்படும் இந்த உரிமைக்குப் பதிலாகக் கூடுதல் உழைப்பைக் கொடுக்கவோ, குறைந்த ஊதியத்துக்குப் பணிபுரியவோ தயாராக இருப்பின், அவர்களே திறமை மிக்கவர்களாகவும் இருப்பின், அதுவும் நிறுவனத்துக்கு ஆதாயந்தானே! இப்படித்தான் இந்த வீட்டிலிருந்தே பணிபுரியும் பண்பாடு நம் மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொண்டது.

கிட்டத்தட்டப் பத்தாண்டுகளுக்கு முன்பே இப்படியான ஒரு சூழ்நிலையில் தொடர்ந்து ஓராண்டு காலம் வரை வீட்டிலிருந்தே பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் கிடைத்த அனுபவங்களையும் பாடங்களையும் எழுத வேண்டும் என்கிற திட்டம் அப்போதிருந்தே தள்ளிப்போடப்பட்டுக்கொண்டே வந்து, இப்போது கொரோனா கொடுத்திருக்கும் அனுபவங்களின் மூலம் சாத்தியப்பட்டிருக்கிறது.

சில நிறுவனங்கள், சில குழுக்கள், சில பணியாளர்கள் என்று ஆங்காங்கே சில பகுதிகளில் மட்டும் இருந்த பண்பாடு கொரோனாவின் புண்ணியத்தில் எல்லோருக்குமானதாக மாறியிருக்கிறது. இதற்கு முன்பு, “எனக்கென்னவோ இதில் எல்லாம் நம்பிக்கை இல்லைங்க. நம் கண் முன்னால் இருந்துகொண்டே டேக்கா கொடுப்பவர்கள், வீட்டில் உட்கார்ந்துகொண்டெல்லாம் வேலை பார்ப்பார்கள் என்ற கதையை நான் நம்பத் தயாரில்லை” என்று சொன்னவர்களும் சேர்த்து எல்லோருமே வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டிய – வேலை வாங்க வேண்டிய கட்டாயம் நம் மீது திணிக்கப்பட்டது. இப்படித்தான் வேலை செய்தாக வேண்டும் என்று ஆன பின்பு எதிர்பார்த்ததைவிடவும் கூடுதலாகவே அந்த முறைமை வெற்றியடைந்துவிட்டது போலத் தெரிகிறது.

அதே வேளையில், முதலில் சில மாதங்கள் எல்லோருமே வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதில் உற்பத்தி கூடியுள்ளது என்று கூப்பாடு போட்டவர்களில் ஒரு பகுதியினர் மெதுவாகக் குரல் ஓய்ந்து, “அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது” என்று பின்வாங்குகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. எதையுமே அப்படியே நம்பிவிடவும் முடியாது. இப்போது ஆதாயம் அளிப்பதாக இருந்தாலும் தொலைநோக்கில் திருப்பி அடிக்கும் என்ற அச்சம் வந்தால் கூட, இப்போதே அது சரியாக எடுபடவில்லை என்று கூச்சமில்லாமல் இறக்கிவிடுவதுதான் பெருநிறுவனங்களின் தொழில் தர்மம்!

உண்மையாகவே காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை உழைக்கிறவர்கள் இருக்கிறார்கள். பயணத்தில் வீணாக்கிய சில மணி நேரங்களையும் சேர்த்து இப்போது அவர்களுக்குக் கூடுதல் நேரம் கிடைக்கிறது. அதையும் தன் நிறுவனத்துக்கே அர்ப்பணிக்கிறார்கள். அவர்கள் இப்போது உழைக்கிற மாதிரியே எப்போதும் உழைப்பார்களா என்ற நியாயமான சந்தேகம் இந்த நிறுவனங்களுக்கு இருக்கிறது. இப்போது எங்கும் போக முடியாமல் வீட்டுக்குள் மாட்டிக்கொண்டு முடங்கிக் கிடப்பதால் இப்படி உழைக்கிறார்கள். நாளை எல்லாம் சரியாகிவிட்ட பின் வண்டியைப் பூட்டிக்கொண்டு ஊர் சுற்றக் கிளம்பிவிடுவார்களே! அவசரப்பட்டு இந்த வெற்றியைக் கொண்டாடிவிட்டால் நாம்தானே நாளை அனுபவிக்க வேண்டும் என்றெண்ணி இப்போதே தெளிவாக அடக்கி வாசிக்கக் கூடும்.

பெருநிறுவனங்கள் என்பவை தனிமனிதர்களைப் போல ஒற்றை மூளையில் இயங்குபவை அல்ல; எந்தச் சிறு நகர்விலும் இருக்கும் எல்லாவிதமான ஏற்றத்தாழ்வுகளையும் துல்லியமாகக் கணக்குப் போட்டு அதற்கேற்றபடி உலகையே நகர்த்தும் ஆற்றலும் அதற்குத் தோதான அமைப்புகளையும் கொண்டவை.

அடுத்தது, “எல்லோருமே இப்படி உழைப்பவர்களா?” என்கிற கேள்வியும் இருக்கிறது. வீட்டுக்குள்ளேயே கிடக்க வேண்டிய இந்த வேளையில் கூட, சரியான நேரத்துக்கு வந்து நிற்க முடியாத – வேலையில் கவனம் செலுத்தத் திணறும் – கிடைத்திருக்கும் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்திவிடும் கூட்டம் ஒன்றும் இருக்கிறது. அவர்களையும் சேர்த்துத்தான் இந்த முறைமை எடுபடுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியதிருக்கிறது.

இன்று தொழில்நுட்பம் இதற்கெல்லாம் ஈடுகொடுத்து வளர்ந்திருப்பதால் இது சாத்தியப்பட்டிருக்கிறது. இதுவே இருபது – முப்பது ஆண்டுகளுக்கு முன்பு முடிந்திருக்குமா? நிச்சயமாக இல்லை. இந்தியா முழுக்கவும் இணையம் புகுந்துவிட்டது. குறிப்பாகத் தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களில் ஒவ்வொரு கிராமத்துக்கும் இணையம் வந்துவிட்டது. கடைசியாக மின்சாரத்தைப் பார்த்த கடைக்கோடிப் பாட்டாளிகளின் பிள்ளைகளும் கூட இப்போது ஓட்டு வீட்டில் அமர்ந்துகொண்டு பன்னாட்டு நிறுவனங்களின் அழைப்புகளில் கலந்துகொள்கிறார்கள். அதை நமக்குச் சாத்தியப்படுத்தியது தொழில்நுட்பம் மட்டுமல்ல, அந்தத் தொழில்நுட்பத்தை மக்கள்மயப்படுத்தியதும் அதற்கொரு முக்கியக் காரணம். அதில் தமிழகம் முன்னணியில் இருப்பது நமக்கெல்லாம் பெருமையே!

இதன் முடிவில் எந்தத் தொழில் எல்லாம் வீட்டிலிருந்தே செய்ய முடியாதவை என்கிற தெளிவும் கிடைத்துவிடும். “இவ்விடம் வீட்டிலிருந்தே வேலை செய்தல் என்னும் பேச்சுக்கே இடமில்லை” என்று அட்டை மாட்டிவிடுவார்கள். எந்தத் தொழிலுக்கெல்லாம் வீட்டைவிட்டே வெளியேற வேண்டியதில்லை என்கிற தெளிவும் கிடைத்துவிடும். கணிப்பொறித் துறையினர் மட்டுமல்ல, மருத்துவர், ஆசிரியர், கணக்காளர் போன்ற பணிகளே வீட்டிலிருந்தே செய்யத்தக்க பணிகளாக உருவெடுப்ப. வீட்டில் இருந்து செய்யத்தக்க வேலையா என்பதன் அடிப்படையில் தனிமனிதர்கள் தமக்கான சரியான துறையைத் தேர்ந்தெடுக்கும் போக்கு வளரும். மனித வாடை பிடிக்காதவர்கள் வீட்டிலிருந்தே செய்யும் வேலைகளை நோக்கி நகர்வார்கள். அதனால் பல புதிய உளவியல் பிரச்சனைகளும் நோய்களும் உருவாகலாம். காடுகளுக்குள் அலைந்துகொண்டிருந்த விலங்கொன்று சமூக விலங்காகி அதுவும் சுருங்கி ‘வீட்டு’ விலங்காகிப் போதல் எவ்வளவு பெரிய பரிணாம மாற்றம்! அதற்கான விலை சாதாரணப்பட்டதாகவா இருக்கும்! அப்படியானவர்களைக் குறி வைத்து தியானம், யோகா, உடற்பயிற்சி, நோகாமல் நுங்கு தின்கிற மாதிரியான குறிப்பிட்ட விதமான கேளிக்கைகள் என்று விற்கும் குருமார்கள் கூடுவார்கள்.

“நம்மளாலல்லாம் நாலு நாளைக்கு மேல் வீட்டுக்குள் இருக்க முடியாதப்பா!” என்கிறவர்கள் இப்போது வீட்டுக்குள் இருந்து செய்ய முடிகிற வேலைகளில் இருந்தாலும் அவற்றைவிட்டுத் தப்பி ஓட என்னென்ன வேலைகள் செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்யத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் பலரின் குடும்பங்களில் மற்ற வீடுகளைப் போலல்லாமல் எப்போதும் வீடு தங்காமல் திரியும் துணையின் மூஞ்சியைப் பார்க்கச் சகியாமல் வரும் ஆத்திரத்தால் பூகம்பங்கள் வெடிக்கும். இன்னொரு பக்கம், எந்நேரமும் தன்னோடே வீட்டுக்குள்ளேயே கிடக்கும் துணையின் மூஞ்சியைப் பார்க்கச் சகியாமல் வரும் கோபத்தாலும் பல குடும்பங்கள் உடைவ. அதுவும் எந்நேரமும் வேலையே கிறுக்காகக் கிடக்கிற துணைகளால் வரும் பிரச்சனைகள் மேலும் உக்கிரமாக இருக்கும். எட்டு மணி நேரத்தைப் பத்து மணி நேரத்துக்குள்ளாவது முடித்துக்கொள்ளத் தெரியாவிட்டால் சிக்கல்தான்.

வாரத்தில் ஒரு நாள் வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள், வாரத்தில் ஒரு நாள் பணியிடம் செல்பவர்கள், இரண்டு நாட்கள் வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள், இரண்டு நாட்கள் பணியிடம் செல்பவர்கள் என்று வெவ்வேறு விதமான ‘இனக் குழுக்கள்’ உருவாகிவிடுவார்கள்.

பணியாளர்கள் ஓரிடத்தில் கூடிப் பணிபுரிவதைவிட அவரவர் வீட்டிலேயே கிடந்து பணிபுரிவதன் மூலம் நிறுவனங்களுக்கு இன்னொரு பெரிய வசதியும் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் புலம்புவதை எல்லாம் வீட்டில் இருப்பவர்களிடமே புலம்பிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பிவிடுவார்கள். ஒரு வேலையை வெறுத்து இன்னொரு வேலை தேட வேண்டும் என்கிற உந்துதலோ சங்கம் வைத்து உரிமையைக் கோர வேண்டும் போன்ற எண்ணங்களோ எழவே எழா. அதே வேளையில், பணியிடத்துக்கு வந்தால் மற்றவர்கள் முன்னால் செய்ய முடியாத வேலைகள் பலவற்றை வீட்டில் இருந்தால் கூச்சமில்லாமல் செய்ய முடியும். அதில், வேலை தேடுதல், நேர்காணல்களில் கலந்துகொள்ளல், தனிப்பட்ட திறமையை வளர்த்துக்கொள்வதற்கான பயிற்சிகளில் ஈடுபடுதல் ஆகியவை அடக்கம்.

வீட்டிலிருந்தே வேலை செய்தல் வேலை செய்ய வேண்டுமென்றால், அதற்குச் சில அடிப்படைத் தேவைகள் இருக்கின்றன. தனியாக அமர்ந்து வேலை செய்ய – இணைய வழிச் சந்திப்புகளில் கலந்துகொள்ள ஏதுவான தனி அறையோ அமைதியான இடமோ இருக்க வேண்டும். தனி அறை இருந்தாலும் வெளியிலிருந்து சத்தம் புகாத வகையில் அவ்வறை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியான வீடுகளைக் கட்டுவதும் ஏற்கனவே இருக்கும் வீடுகளில் மாற்றங்கள் செய்வதும் கட்டுமானத்துறையில் சில புதுமைகளைப் புகுத்தும். நல்ல இணைய இணைப்பு இருக்க வேண்டும். வீட்டிலிருப்பவர்கள், எந்த நேரமும் “கறிவேப்பிலை வாங்கி வா”, “கொத்தமல்லி வாங்கி வா” என்று நொச்சுப் பண்ணிக்கொண்டே இருக்கக் கூடாது.

வீட்டிலிருந்தே வேலை என்பதன் விளைவாக வீட்டிலிருந்தே வேலை தேடுதல் என்பதும் கூடிவிடும் என்பதால், அதனால் உருவாகப் போகும் பிரச்சனைகளில் ஒன்றாகச் சொல்லப்படுவது அதனால் கூடப் போகும் மோசடிகளின் எண்ணிக்கை. “வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் வாங்க” பேர்வழிகளுக்கு இது ஒரு பெரும் வாய்ப்பு. இவர்கள் எளிதில் ஏமாறக்கூடிய பாவப்பட்ட ஒரு கூட்டத்தை வைத்து நன்றாகக் காசு பார்த்துவிடுவார்கள். கட்டடம் வேண்டியதில்லை, முகவரி வேண்டியதில்லை, ஒரேயோர் இணைய இணைப்பும் தேன் வழிய ஆங்கிலத்தில் பேசும் ஆற்றலும் இருந்தால் போதும். ஒரு பெரும் எண்ணிக்கையை ஏமாற்றிவிடலாம்.

இது போன்ற சில்லறைப் பிரச்சனைகள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்தக் கொரோனாக் கொள்ளை நோயின் புண்ணியத்தில் நிகழ்ந்திருக்கும் வீட்டிலிருந்தே வேலை செய்தல் சார்ந்த மாற்றங்களால் மனித குலமே ஒரு பெரும் மாற்றத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே அருகில் இருக்கும் மனிதர்களுடனான நெருக்கம் மனிதர்களுக்கு வேகமாகக் குறைந்து வந்துகொண்டிருந்தது. ஒரே வீட்டில் இருக்கும் கணவனும் மனைவியும் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வதைவிட உலகின் வேறு ஏதோ ஒரு மூலையில் இருக்கும் முகமே தெரியாத அல்லது உண்மை முகமே தெரியாத எவர் எவருடனோ மணிக்கணக்காக நேரம் செலவிடுவதை அனுபவித்துச் செய்கிற போக்கு கூடிக்கொண்டே வந்துகொண்டிருந்தது. இத்தனை இலட்ச ஆண்டு காலப் பரிணாம வளர்ச்சியில் உருவாகி வந்திருக்கும் மனிதனுக்குள் இருக்கும் ஏதோவொரு தேவைதானே இதற்குக் காரணமாக இருக்க வேண்டும்! ஆனால் அப்படிப்பட்டவர்களே கூட வேலை என்று வந்துவிட்டால் நேரில் இருந்தால்தான் எளிதாக இருக்கிறது என்று எண்ணுபவர்களாகத்தான் இருக்கிறார்கள்; புதிதாக ஏதொவொன்றைப் பற்றிப் படிப்பதற்கோ பயிற்சி பெற்றுக்கொள்வதற்கோ நேரில் இருந்து கலந்துகொள்ளாவிட்டால் தன்னால் கவனிக்கவே முடியாது என்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோருமே வெகுவிரைவில் இந்தப் புதிய முறை வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடுவார்கள். உணவுக்காக நாடோடியாக வாழ்ந்த மனிதன் விவசாயம் கண்டுபிடித்ததும் ஓரிடத்தில் நிலைகொண்டுவிட்டதும், ஆனாலும் உள்ளுக்குள் இருந்து அரித்துக்கொண்டிருக்கும் ஊர் சுற்றும் ஆசையைச் சுற்றுலா என்ற பெயரில் அவ்வப்போது செய்துகொள்வது போல, காலமெல்லாம் நாளெல்லாம் உடலுழைப்பே செய்து பழகியிருந்த போதும், புதுப்புதுக் கண்டுபிடிப்புகளின் மூலம் உடலுழைப்பு குறைந்துவிட்ட பின்பு அதனால் உருவான கேடுகளைக் களைவதற்காக ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செய்துகொள்ளும் வகையில் உடற்பயிற்சி கண்டுபிடித்ததைப் போல, தொழில் தொடர்பான எல்லா வேலைகளையும் வீட்டிலிருந்தே செய்துகொண்டு, அதனால் ஏற்படப் போகும் மனிதர்களுடனான இடைவெளியையும் அதனால் ஏற்படப் போகும் உளவியல் பிரச்சனைகளையும் சரிசெய்துகொள்வதற்கு, அதற்கென்றே ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் மனிதர்களையும் ஒதுக்கி அதை வேலைக்கு வெளியில் வைத்துக்கொள்வார்கள்.

இந்த வேகமான மாற்றத்தை எளிதாக்கும் வேலையை மாய மெய்மை (Virtual Reality) என்கிற வேகமாகச் சந்தைக்கு வந்துகொண்டிருக்கும் தொழில்நுட்பம் சாத்தியப்படுத்திவிடும். அதன் பின்பு நடக்கப் போவதுதான் மனித குலத்துக்குப் பெரும் பாய்ச்சலாக இருக்கப் போகிறது. உடலால் ஒரே இடத்தில் இருந்துகொண்டு, அமெரிக்காவில் நடக்கிற அலுவலக மாநாட்டிலும் கலந்துகொள்ளலாம்; அது முடிந்த அடுத்த நிமிடமே மதுரையில் நடைபெறும் ஒன்னுவிட்ட சித்தப்பா மகனின் திருமணத்திலும் கலந்துகொள்ளலாம்; அது முடிந்த மறு நிமிடமே ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை நேரில் காண்பது போலவே மாடத்தில் நின்று காணலாம். கையில் ரிமோட் வைத்துக்கொண்டு சேனல் மாற்றுவது போல, ஒன்று சலிப்பாக இருந்தால் இன்னொன்றைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாம். இது அரசியல், பொருளியல், அறிவியல், வணிக, மருத்துவ ரீதியாக நினைத்துப் பார்க்க முடியாத பல மாற்றங்களை நிகழ்த்தப் போகிறது. அது ஒரு புறமென்றால், “வாழ விரும்பும் இடம் ஒன்றாக இருக்கிறது, இருக்க விரும்பும் இடம் ஒன்றாக இருக்கிறது, இருக்க வேண்டிய இடம் ஒன்றாக இருக்கிறது!” என்று உழலும் எளிய மனிதர்களுக்கும் இது பெரும் மாற்றமாக இருக்கும்.

“பிழைப்புக்காக ஊரைவிட்டு வந்து இருபது ஆண்டுகள் ஆகின்றன. நாமெல்லாம் இவ்வளவு மாறிவிட்டோம். நம் ஊரும் நம்மைப் போலவே மாறியிருக்குமே! அது எப்படி மாறிவிட்டது என்று போய்ப் பார்க்கக்கூட முடியவில்லையே! தைப் பொங்கலுக்கும் பங்குனிப் பொங்கலுக்கும் ஊரில் இருந்து கொண்டாடுவது போல வருமா!” என்று நினைவில் ஊர் உள்ள மிருகமாகவே வாழும் கிராமத்து – சிறுநகரத்து மனிதர்களுக்கெல்லாம் இது ஒரு வாழ்வைப் புரட்டிப் போடும் மாற்றமாக இருக்கும். பெரும்பாலான வேலைகளை – அதுவும் வளமான வாழ்க்கையைக் கொடுக்கும் வேலைகளை – தன் சொந்த ஊரில் இருந்துகொண்டே செய்துகொள்ள முடியும் என்கிற மாற்றம் சாதாரணப்பட்ட மாற்றமா! ஊரில் இருக்கும் தன் உறவினர்களோடே வாழ்ந்துகொண்டே உலகின் தலைசிறந்த பள்ளிகளில் கூட தன் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியும் என்கிற மாற்றம் எப்பேர்ப்பட்ட மாற்றம்! உருப்பட வேண்டுமென்றால் பெருநகரங்களுக்குப் போயாக வேண்டுமென்கிற விதி தளர்த்தப்படப் போகிறது. “கெட்டும் பட்டணம் போ!” என்கிற பழமொழியெல்லாம் வழக்கொழியப் போகிறது.

உலகம் முழுமைக்குமே நகர – கிராம இடைவெளி என்பது பெரிய பிரச்சனையாகி வருகிறது. குறிப்பாக ஏற்கனவே சாதிய மனநோயில் சிக்கிக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் சீரழிந்து கிடக்கும் நம் போன்ற சமூகத்துக்கு இது ஒரு கூடுதல் தலைவலி. இந்த வீட்டிலிருந்தே வேலை என்கிற புதிய பண்பாடு அதற்கொரு பெரும் நிவாரணமாக இருக்கும். நகரங்களின் நெரிசல் குறைவது மட்டுமல்ல, நகர அமைப்பே கேள்விக்குள்ளாகலாம். பெரும்பாலானவர்கள் அவரவர் ஊருக்குத் திரும்ப நேர்ந்தால், வளர்ச்சியும் வசதிகளும் பரவலாக்கப்பட்டு, முதலில் அவை எல்லா ஊர்களுக்குமானவையாகி அப்படியே பின்னர் எல்லோருக்குமானவையாகலாம்.

“கதை செம்மையாக இருக்கிறதே! இதெல்லாம் நடக்குமா?” என்கிறீர்களா? அது நம் எல்லோருடைய தலைவிதியையும் நிர்ணயிக்கும் பெருநிறுவனங்களின் கைகளில் இருக்கிறது. பின்னர் சிறிது நம் கைகளிலும் இருக்கிறது. அவர்கள் நம் ஆசையை நிறைவேற்ற வேண்டுமென்றால், நாம் அவர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டும். வீட்டிலிருந்தே வேலை செய்வதன் மூலம் அவர்களுக்கு ஆதாயம் மட்டுமே இருக்கிற மாதிரிப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? தொழுவத்திலேயே கிடந்தாலும் மாடாக உழைக்க வேண்டும். ‘மாடு தொழுவத்திலேயே கிடப்பதை விரும்புகிறது, எனவே அதற்காகப் புல்லைச் சிறிது குறைத்துப் போட்டாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு கூடுதலாக உழைக்கும்’ என்று அவர்கள் நம்பும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

***

பாரதிராஜா

தொடர்புக்கு : bharathee@gmail.com

அம்மாவுக்கு கொரோனா இல்லை (சிறுகதை)

1

அ.மலைச்சாமி


                                                                                                                     

திடுமென்ற சத்தம் செவி திருகிய அதிர்ச்சியால் கணிப்பொறியில் நான் ஓட்டிக்கொண்டிருந்த கார் சாலையின் மையத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. அப்பா பாத்ரூம் பக்கமாக ஓடியது தெரிந்தது.

அம்மா என கூப்பிட்டுக் கொண்டே திறந்து கிடந்த கழிவறைக் கதவருகே சென்றேன். ‘அங்கயே நில்லுப்பா’ என உள்ளிருந்து அப்பாவின் குரல் கேட்டது.

‘என்னாச்சுப்பா’ என்றேன். அப்பா அதற்கு பதில் சொல்லவில்லை. மலக்கோப்பையில் தண்ணீர் உருளும் சத்தம் கேட்டது.

இரண்டொரு நிமிடங்களில் அம்மாவை தன் தோளில் முழுதும் சாய்த்தபடி அப்பா வந்தார். அம்மாவின் நைட்டி நனைந்திருந்தது. ஆறாத்துயரத்தோடு அம்மா அப்பாவைப் பார்த்தாள். அப்பா மீண்டும் கழிப்பறைக்குள் கூட்டிச் சென்றார். சில நிமிடங்களில் மீண்டும் வெளியே வந்தபோது, சுவாசிப்பதற்கே அம்மா அசௌகர்யப்படுவது தெரிந்தது. அவள் கண்கள் திறந்திருந்த போதும் எதையும் பார்த்ததாகத் தோன்றவில்லை.

‘வேற நைட்டி எடுத்துட்டு வா’ என்றார் அப்பா. பதற்றத்தோடு ஓடிப்போய் கையில் சிக்கிய ஒரு நைட்டியை எடுத்துக் கொண்டுவந்து கொடுத்தேன். நைட்டியை வாங்கிக் கொண்டு பாத்ரூம் கதவை மூடினார்.

‘அண்ணன வந்து கார் எடுக்கச் சொல்லு’ என பாத்ரூமின் உள்ளிருந்து அப்பா குரல் கொடுத்தார். ஓட்டமாக ஓடி அண்ணனை மொட்டைமாடியிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தேன். அண்ணன் கிலியோடு ஓடிவந்தான். கதவு மூடியிருந்த போதும் அப்பா மீண்டும் எங்களை வெளியிலேயே நிற்கச் சொன்னார். சில நிமிடங்கள் கழித்து இருவரும் வெளியே வந்தனர். தன்னை முழுவதுமாக அப்பாவின் மேல் சாய்த்தியிருந்தாள் அம்மா. அண்ணனும் நானும் அம்மா கிடத்தப்பட்டிருந்த கட்டிலணுகி நின்றோம். அம்மா கண்களைச் சுருக்கி மூடியிருந்தாள். பேசும் திராணியில் அவளில்லை. அதற்கு அவகாசமும் இல்லை. அண்ணன் சடுதியாகக் கார் எடுக்க ஓடினான்.

ஒரு சட்டைக்குள் தன்னைத் திணித்தவாறு அப்பா வந்தார்.

‘விஷ்வா கார எடு. நானு அம்மாவ தூக்கிட்டு வாரேன்’ என்றார்.

‘மூனு மாசமா எடுக்காததால கார் ஸ்டார்ட் ஆகலப்பா’ என்றான் அண்ணன்.

‘சரி ஆம்புலன்ஸுக்கு போன் போடு’

போன் என்கையில் இருந்ததால் நானே பக்கத்திலிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு போன் செய்தேன். நாங்கள் வழக்கமாக செல்லும் மருத்துவமனைதான் அது. நீண்ட கொரோனா எச்சரிக்கைக்குப் பின்தான் அழைப்புமணி அடித்தது. காத்திருப்பை சகிக்கமுடியாமல் இணைப்பைத் துண்டிக்க முனைந்தபோது போனை எடுத்தார்கள். பத்து நிமிடத்தில் வண்டி வந்துவிடும் எனச் சொன்னார்கள்.

நாங்கள் மருகி நிற்பதைப் பார்த்து எங்கள் குடியிருப்பின் பக்கத்து பிளாட்டை சேர்ந்த இரகுநாதன் அங்கிள் வந்து விசாரித்தார். ‘ஆம்புலன்ஸுக்கு காத்திருக்க வேண்டாம். நம் காரில் போகலாம்’ எனச் சொல்லிவிட்டு அவர் காரை முடுக்கிய வேளை. ஆம்புலன்ஸ் எங்கள் குடியிருப்பு வளாகத்துக்குள் வந்தது. முதலுதவி கிடைக்குமென்பதால் அம்மாவை ஆம்புலன்ஸிலேயே ஏற்றினோம். முதல்முறையாக சேலையற்ற வேறொரு வஸ்திரத்தை உடுத்தியபடி அம்மா வீட்டைவிட்டு வெளியேறுகிறாள். நான் எடுத்துக் கொடுத்த நைட்டியின் வலதுகை அக்குள் பக்கம் சிறிய கிழிசலிருந்ததை ஆம்புலன்ஸில் ஏற்றுகையில் பார்த்தேன். சேலை எடுத்துக் கொடுத்திருக்கலாம் தான். ஆனால் அதை அப்பாவுக்கு உடுத்திவிடத் தெரியாது. நான் பெண்ணாய் இருக்கக்கூடும் என்றுதான் மூன்றாவதாக என்னைப் பெற்றதாக அம்மா அடிக்கடி சொல்வாள். கணவன், பிள்ளைகள் என நான்கு ஆண்களுடன் தான் தனித்திருந்தமைக்காக அம்மா துயருற்று நான் பார்த்ததே இல்லை. அம்மாவுக்கு ஏதோவொரு ஊசி போட்டார்கள். அவளிடமிருந்து எழும்பிய ‘ஷ்’ என்ற சத்தம் என் காதில் விழவில்லை. நான் வீட்டுக்குள் ஓடிச்சென்று ஒரு புடவை, ஜாக்கெட்டை எடுத்துக்கொண்டு வந்தேன். முகக்கவசமும் கையுறைகளும் அணிந்திருந்த செவிலியிடம் கொடுத்து, மருத்துவமனை சென்ற பின் அம்மாவுக்கு உடுத்தி விடவேண்டும் எனக் கோரினேன். சேலையை அப்பா வாங்கி வைத்துக் கொண்டார். விஷ்வா அண்ணனும் அப்பாவும் ஆம்புலன்ஸில் ஏறிக்கொண்டார்கள். அவர்களுக்கும் முக கவசம் கொடுத்து அணிந்து கொள்ளச் செய்தார்கள் செவிலிகள். அம்மா மிக மெதுவாகக் கையசைத்து எங்களுக்கு டாடா காட்டினாள்.

இளைய அண்ணனான சித்தார்த் எங்கள் ஸ்கூட்டரை வெளியே எடுத்தான். அவன் இன்னும் அந்த வண்டி ஓட்டுவதற்கான உரிமம் வாங்கியிருக்கவில்லை. ஆம்புலன்ஸுக்கு பின்னாலேயே சென்றால் போலிஸ் தொந்தரவு இருக்காது என்று சொல்லியவாறு வேகமாக ஸ்கூட்டரை முடுக்கினான். நானும் அவனுடன் தொற்றிக்கொண்டேன்.

கொரோனா ஊரடங்கு காலமானதால் சாலையில் வெயில் மட்டும் பெருகி நிரம்பி மறுகால் போய்க் கொண்டிருந்தது. வீட்டிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில்தான் அந்த மருத்துவமனை இருந்தது. ஓரிரு நிமிடங்களில் மருத்துவமனை வளாகத்திற்குள் சென்றிருந்தோம். ஆம்புலன்ஸிலிருந்து சக்கரப்படுக்கையுடன் அம்மாவைக் கீழே இறக்கி ஐசியூவிற்கு தள்ளிக்கொண்டு போனார்கள். நாங்கள் நால்வரும் அம்மா இருந்த அறைக்கு வெளியே திகிலோடு காத்திருந்தோம். மருத்துவர் கூப்பிடுவதாக ஒரு செவிலி அப்பாவிடம் வந்து சொன்னாள். மருத்துவரைச் சந்தித்துவிட்டு செல்போனில் பேசியபடியே வெளியே வந்தார். விஷ்வா அண்ணனை கூப்பிட்டு ‘ஸ்கூட்டரை ஓட்டிக்கிட்டு நீ பின்னாடி வா’ எனச் சொன்னார். என்னையும் சித்தார்த் அண்ணாவையும் வீட்டுக்குப் போகச்சொன்னார். ஆம்புலன்ஸில் அம்மாவை மீண்டும் ஏற்றினார்கள்.

‘இங்க கொரோனா வார்டு இல்லையாம். அதனால வளசரவாக்கத்தில இருக்குற பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறம்’ என்று சொல்லிவிட்டு விஷ்வா அண்ணன் ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு கிளம்பினான். நானும் சித்தார்த்தும் வீட்டுக்கு நடந்து கொண்டிருந்தோம். வைகாசி உச்சி வெயில். அம்மாவுக்கு கொரோனாவோ என்ற அச்சமே மிகுந்த உஷ்ணமாயிருந்தது. எங்கள் தெருவிலிருந்து மூன்று தெரு தள்ளி ஒரு நபருக்கு போனமாதம் கொரோனா வந்திருந்தது. அதற்காக எங்கள் குடியிருப்பு வளாக ஜன்னல்கள் மூன்று வாரங்கள் பூட்டியே இருந்தன. எங்களிடமிருந்து இந்த சமூகம் விலகிக் கொள்ளுமோ என்று பயமாயிருந்தது.

புனித தோமையார் மலைப் படிக்கட்டருகே இருகரங்களையும் நீட்டிய இயேசுவின் சொரூபம் நிறுவப்பட்டிருந்தது. அவர் வெறும் கைகளையே நீட்டியிருந்தார். பரறங்கிமலையின் அடிவாரத்தில் இருக்கும் எங்கள் வீட்டுக்கு வந்தோம். இரகுநாதன் அங்கிள் அவரின் எட்டுவயது மகள் மலர்செல்வியுடன் நெகிழிப்பந்தை எத்தி விளையாடிக்கொண்டிருந்தார். எங்களைப் பார்த்தவுடன் மகளுடன் விளையாடுவதை நிறுத்திவிட்டு சித்தார்த்திடம் விசாரித்துக் கொண்டிருந்தார். நிகழும் விளையாட்டு நின்றுபோன ஏமாற்றத்துடன் அந்தப் பந்தை எத்தினாள் மலர்செல்வி. அது என் காலடியில் மோதியது. அவளின் ஏமாற்றத்தை அசெளகர்யமாக உணர்ந்ததால் நானும் ஒருமுறை பந்தை அவளை நோக்கி எத்தினேன். மலர்செல்வியின் அம்மா வீட்டினுள்ளிருந்து ‘மலரூ’ என உரக்க கூப்பிட்டாள். மலர் செல்வி சிணுங்கலோடு வீட்டுக்குள் போனாள். ஒன்றும் பயப்பட வேண்டாம் என்று எங்களுக்கு தைரியம் சொன்னார் இரகுநாதன் அங்கிள். அவர் வீட்டுக்கதவு சாத்தப்பட்டது. நாங்கள் வீடடங்கினோம்.

பணி நிமித்தமாக அம்மா அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று வருவாள். அவ்வாறு வெளியூர் செல்லும்போது இரண்டு, மூன்று நாட்களுக்கு வருமளவுக்கு தோசைமாவு, சட்னி அரைத்து ஃபிரிட்ஜில் வைத்துவிட்டுப் போவாள். இருந்தாலும் நாங்கள் கடையில் வாங்கிச் சாப்பிடுவோம். அதற்கெல்லாம் அம்மா எங்களைக் கோபித்துக்கொண்டதில்லை. இன்று காலைதான் ஃபிரிட்ஜை கழுவியிருப்பாள் போலும். இந்த வீடு போல அதுவும் காலியாக இருந்தது.

புக்கத்துறையிலிருக்கும் அம்மாச்சிக்கு சித்தார்த் அண்ணன் போன் செய்து எப்போது வருவாய் எனக் கேட்டான். சென்னை வருவதற்கு இ-பாஸ் கிடைத்த போதும் தன்னை அங்கு கொண்டு வந்துவிட ஆள் இல்லையே என வருந்தினாள். காலையில் மாமாவுடன் வருவதாகச் சொன்னாள். அம்மாச்சியிடம் கேட்டுக்கேட்டு சித்தார்த் அண்ணன் சமைத்தான். அவன் வைத்த குழம்பில் உப்பு, புளிப்பு, காரம் என ஒவ்வொன்றும் மற்றவற்றோடு கோர யுத்தத்திலிருந்தன. அண்ணனும் நானும் அதைச் சாப்பிடவில்லை.

வெண்ணெய் தடவிய பிரட்டை தோசைக்கல்லில் சுட்டு நானும் அண்ணனும் சாப்பிட்டோம். தினமும் காலையுணவாக அம்மா இதையே சாப்பிடுவதாகச் சொல்லியிருக்கிறாள். தாத்தாவும் அம்மாச்சியும் அக்கறையான பள்ளியாசியர்களாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள். பெற்றோரின் வழியிலேயே கல்லூரிப் பேராசியரான அம்மா நேரந்தவறுதலை விரும்பியதில்லை. குளியலறையிலேயே சேலையைச் சுற்றிக்கொண்டு வெளியேறி நேராக ஆட்டோவில் ஏறுவதே அம்மாவின் வழக்கம். கேசத்திலிருந்து நீர் சொட்டி அம்மாவின் முதுகும் மேல்சட்டையும் ஊறியபடியே இருக்கும். ஒருநாள் நானும் அம்மாவுடன் ஆபிஸுக்கு போயிருந்தபோது, அம்மாவின் மேசையில் வெண்ணெய் தடவிய சுட்ட ரொட்டி சாப்பிடத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. அம்மாவின் உதவியாளர் கேண்டீனிலிருந்து வாங்கி வந்திருந்தார். ஆனால் அம்மா அன்று நேராக வகுப்பெடுக்கச் சென்றுவிட்டாள். பத்தரை மணிக்கு முதல் வகுப்பை நடத்திவிட்டு மேசைக்கு வந்தாள். நாற்காலியில் உட்காரும்போதே ஃபிரெட்டை எடுத்துத்தின்ன ஆரம்பித்தாள். மேசையிலிருந்த டெலிபோன் ஒலித்தது. உதவியாளர் வந்து போனை எடுத்தார். இரண்டாவது கவளத்தை அப்போது அம்மா மென்று கொண்டிருந்தாள். தொலைபேசி அம்மாவிடம் கொடுக்கப்பட்டது. ஒ.கே மேடம் என்ற ஒற்றை வார்த்தையின் ஒலி எழுந்து அடங்குகையில் அம்மா எழுந்திருந்தாள். கண்ணாடிக் கோப்பையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரைக் குடித்து விட்டு அதிகாரியம்மாவை பார்க்கச் சென்றாள். பன்னிரெண்டு மணிக்கு திரும்பி வந்தாள்.

முன்னிரவில் விஷ்வா அண்ணன் வீட்டுக்கு வந்தான். அவனும் வெண்ணெய் ரொட்டிகளையே உண்டான். நாட்டின் பல நகரங்களுக்கு அம்மா அடிக்கடி சென்று வருவதால், அம்மா இல்லாமலும் உறங்கும் பழக்கம் எங்களுக்கு இருந்தது. ஆனாலும் எங்களுக்கு உறக்கம் வரவில்லை.

‘அம்மாவுக்கு கொரோனாவா’ என அண்ணனிடம் கேட்டேன்.

‘தெரியலை’

‘வளசரவாக்கத்துக்கு எதுக்கு கொண்டு போனீங்க?’

‘நெஞ்சு வலிக்குதுன்னுதான் காலைல அம்மா சொன்னாங்கலாம். கொஞ்ச நேரம் கழிச்சு டயரியா ஆகியிருக்கு. அதனால கொரோனாவா இருக்குமோங்குற சந்தேகத்துல வளசரவாக்கம் அனுப்பினாரு’.

‘மியாட்டுக்கோ, இராமச்சந்திரவுக்கோ போயிருக்கலாமே?’

‘நம்ம கையில இப்போதைக்கு காசு இல்ல. கொரோனா சிகிச்சை நம்ம மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில உள்ளடங்கல. ரெண்டொரு நாள்ல அரசாங்கம் அதுக்கு தக்க நடவடிக்கை எடுக்குமாம். அம்மாவோட ஆபீஸ்ல விசாரிச்சோம். இப்ப எந்த ஆஸ்பத்திரியோடவும் MOU (புரிந்துணர்வு ஒப்பந்தம்) இல்லயாம். செலவு பண்ணிட்டதுக்கு அப்பறமா CGHS (மத்திய அரசு மருத்துவ திட்டம்) பிரகாரம் திருப்பி வாங்கிக்கலாமாம். அதுனால அந்த டாக்டர் சொன்னபடி வளசரவாக்கத்துக்கு கொண்டு போனோம்.’

நாங்கள் வழக்கத்தைவிட மிக குறைவாகவே எங்களுக்குள் உரையாடிக் கொண்டோம். காரணமிருந்தும் எங்கள் கண்கள் ஈரமுறவேயில்லை. அழுவதற்கு அதெல்லாம் அனாவசியம்தான் போலும்.

*

காலை எட்டரை மணிக்கு விஷ்வா அண்ணனுக்கு அப்பாவிடமிருந்து போன் வந்தது. அவனை சென்னை சென்ட்ரலில் இருக்கும் இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வரச்சொன்னார். காரில் சென்றதால் நானும் அண்ணனுடன் சென்றேன். அம்மாச்சி வருவாளென்பதால் சித்தார்த் அண்ணன் வீட்டிலேயே இருந்தான். காரின் உள்முகப்பில் லூர்து மாதாவின் படம் நின்று கொண்டிருந்தது. தேவாலயம் செல்லும் போதெல்லாம் லூர்துமாதாவின் கெபிக்கு முன்னால்தான் அம்மா தன் செபமாலையை உருட்டுவாள். முக்காடிட்டு முழந்தாளில் நின்று செபிப்பாள்.

அண்ணாசாலையைக் கூட மக்கள் புறக்கணித்திருந்தார்கள். சாலையில் தெரிந்த வாகன ஓட்டிகள் அவசரங்களைச் சுமந்தோடினார்கள். ஒலி எழுப்பாமல் ஒரு ஆம்புலன்ஸ் எங்கள் காரை கடந்ததோடியது. சென்ட்ரல் ரயில் நிலையம் மனிதர்களால் கைவிடப்பட்டிருந்தது. சென்னை நகரையே கொரோனா துப்புரவாக கழுவித் துடைத்து கவிழ்த்து வைத்திருந்தது.

இராஜீவ்காந்தி மருத்துவ வளாகமுகப்பில் அப்பா நின்று கொண்டிருந்தார். அவர் கண்களில் புதிய இடுக்கமிருந்தது. அங்கிருந்தவர்கள் எல்லோரும் முகக்கவசம் அணிந்திருந்தார்கள். கண்களை மட்டுமே பார்த்து ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொண்டனர். ஒரு முகத்தை அடையாளம் காண அதுவே போதுமானது போல. கண்களைப் பார்த்துத்தான் பேசவேண்டும் என அம்மா அடிக்கடி சொல்வாள்.

எங்களையும் அம்மாவைப் பார்க்க விடவில்லை. எங்கள் தேவாலயத்தின் பங்குத்தந்தையான மரியலூயிஸ் வந்திருந்தார். கத்தோலிக்க மதவிவகாரங்கள் குறித்து அம்மா இவருடன் விவாதிப்பதுண்டு. அருட்தந்தை மரியலூயிஸ் எழுதும் செபங்களை அம்மாதான் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வாள். இயேசு தன் போதனைகளால் மனிதர்களை பாவிகளாகவே சித்தரிக்கிறார் என சொன்னதற்காக அருட்தந்தை அம்மாவை கோபித்துக் கொண்டார். பின்னொரு நாளில் அருட்தந்தை கொடுத்ததாக ஒரு புத்தர் சிலையை அம்மா கொண்டு வந்தாள். எங்கள் வீட்டு கணிப்பொறி மேசையில் புத்தர் போதித்தபடி இருக்கிறார். அம்மா அவரைப் பார்த்தபடி இணைய வகுப்புகளை நடத்துவாள்.

அப்பா அருட்தந்தையிடம் பேசிக்கொண்டிருந்தார். இன்று காலை ஐந்துமணி வாக்கில் அம்மாவுக்கு நெஞ்சுவலி அதிகமாக இருந்ததாம். வளசரவாக்கம் மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக இருந்ததால், மாரடைப்பு சிகிச்சையளிப்பதற்கான உயர் மருத்துவ உபகரணங்கள் அங்கில்லை. ஆகவே இந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்களாம். ஆம்புலன்ஸில் வரும்போதே அம்மாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாம். எதையும் பேச முயற்சிக்காமல் அம்மா, அப்பாவின் கைகளைப் பற்றிக் கொண்டாளாம். இங்கு வந்தவுடன் மருத்துவ சிகிச்சைகள் தொடங்கிவிட்டதாக அப்பா, அருட்தந்தையிடம் துயரத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார்.

அம்மா பணியாற்றும் கல்லூரியில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றும் சீனிவாசன் சார் வந்திருந்தார். அப்பாவும் அண்ணனும் அருட்தந்தையுடன் பேசிக் கொண்டிருந்தமையால் ‘அம்மாவுக்கு என்னவாயிற்று’ என என்னிடம் கேட்டார். நானும் சொன்னேன்.

அம்மா சிகிச்சை பெறும் வார்டை அருட்தந்தையவர்களுக்குக் காட்டுவதற்காக அப்பா அவரைக் கூட்டிச்சென்றார். விஷ்வா அண்ணன் அம்மாச்சிக்கு போன்செய்து சிகிச்சை நிலவரங்களை விவரித்துக் கொண்டிருந்தான். சீனிவாசன் சாரும் சற்று தள்ளிப்போய் போனில் பேசிக்கொண்டிருந்தார். தேவாலயத்தில் திருப்பலி பூசை தொடங்குமுன், பங்குத்தந்தையிடம் பாவமன்னிப்பு கேட்கும் பக்தனின் பாவனை அவரிலிருந்தது. ஓ.கே மேடம்.. ஓ.கே மேடம் என நெளிந்தார். கைபேசியை காதிலிருந்து எடுத்தபின், சில வினாடிகள் செல் திரையை பார்த்துக்கொண்டே இருந்தார். எதிர்முனையில் பேசியவர் இணைப்பைத் துண்டித்ததை உறுதிசெய்த பின் திரைமூடியை அழுத்தி கைப்பேசியை சட்டைப் பையிலிட்டார். நெடு நேரம் அழுத்திக் கொண்டிருந்த சிறுநீரை கழித்துவிட்ட ஆசுவாசம் போல் ‘ஷ் அப்பா’ என்றார். பின்னர் அக்கறையுடன் என் சேமநலங்களை விசாரித்தார். தைரியப்படச் சொன்னார்.

அலுவல் நிமித்தமாக முன்பொருநாள் அம்மாவுடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாராம் சீனிவாசன் சார். திருவான்மியூர் அருகே சாலையோரம் கூட்டமாக மனிதர்கள் நிற்பதைப் பார்த்து அம்மா ஆட்டோவை நிறுத்தச் சொன்னாராம். ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி விழுந்து கிடந்தாளாம். அப்பெண்ணின் காலில், வழிந்த குருதிக்கோடு இருந்ததாம். அம்மா அதனைத் தன் கைக்குட்டையால் துடைத்து விட்டாளாம். சுற்றி நின்றவர்களை ஆங்கிலக் கெட்டவார்த்தைகளால் திட்டினாளாம். தன்னுடைய கைப்பேசியிலிருந்து 108-க்கு போன் செய்து ஆம்புலன்ஸ் வந்தபின் அப்பெண்ணை அதில் ஏற்றிவிட்டாளாம். இதனால் அன்று வகுப்புக்கு தாமதமாக சென்றாளாம் அம்மா. அதற்காக சீனிவாசன் சார் முன்னாலேயே அம்மாவை அதிகாரியம்மா கடிந்து கொண்டாளாம். இப்போது அக்கறையாக விசாரிப்பதாக விதந்தார்.

நாங்கள் மருத்துவமனையில் காத்திருந்த அந்த இரண்டு மணிநேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக பல உடல்கள் வெளியேறிக் கொண்டே இருந்தன. கொரோனா அச்சம் காரணமாக, மூச்சிழந்தவர்கள் படுக்கையிலும், மூச்சுவிடுவோர் அப்படுக்கையைத் தள்ளுகிறவர்களுமாக எல்லோரும் முழுதும் மூடிய சீருடையிலிருந்தார்கள். அந்த உடல்களுக்காக அங்கிருந்தவர்கள் யாரும் அழவில்லை. அழுபவர்களை அங்கு அவர்கள் அனுமதிக்கவில்லை.

பகல் பன்னிரண்டு மணியானது. விஷ்வா அண்ணன், அப்பா, அருட்தந்தை ஆகிய மூவரும் பொசுங்கிய முகத்தோடு வெளியே வந்தார்கள். அம்மாவின் கைப்பேசி விஷ்வா அண்ணனின் கையிலிருந்தது. நான் சேலையைத் திணித்துக் கொடுத்த கட்டப்பை அப்பாவின் கைகளிலிருந்தது. அன்றைய பொழுதுக்கான அழுகை அந்த சூழலுக்கு அப்போது அறிமுகமாகியிருந்தது. அம்மா சர்வலோக வியாபியாக பெருகியிருந்தாள். உடலாக எஞ்சியிருந்தாள். ‘அம்மா’ என வீறிட்டேன். மருத்துவமனைப் பணியாலொருவர் சமூக இடைவெளி விட்டு அருட்தந்தையிடம் வந்து ஏதோ சொன்னார். பின்னர் அருட்தந்தை எங்களை எங்கள் காருக்கு அழைத்துச் சென்றார். காருக்குள் சென்றமர்ந்தோம். சர்வ வல்லமை பெற்ற துக்கம் எங்களைத் தழுவியிருந்தது. யாரும் யாரையும் தேற்றத் துணியாததால் தனித்தழுதோம். அப்போதும் எந்த அழுகைச் சத்தமும் அந்த பிரதேசத்திற்கு கேட்டிருக்காது.

அம்மாவின் பேர்சொல்லி ஒரு மருத்துவப் பணியாள் அழைத்துக் கொண்டிருந்தார். அப்பாவும், அருட்தந்தையும் மருத்துவமனைக்குள் சென்றார்கள். சில நிமிடங்களில் வெளியே வந்தனர். சீனிவாசன் சார் போனில் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேச்சில்தான் எத்தனை மேடம்கள், சார்கள்!

விஷ்வா காரை எடு என்றார் அருட்தந்தை. விஷ்வா அண்ணன் அவரை ஏறிட்டுப் பார்த்தான். வார்த்தையாக்கப்படாத அந்தக் கேள்வி புரிந்தது போல ‘அம்மாவுக்கு எடுத்த கொரோனா டெஸ்ட் ரிசல்ட் இன்னும் வரலையாம். அதனால நாளக்கித்தான் கிடைக்குமாம்’ என்றார் அருட்தந்தை மரியலூயிஸ்.

விஷ்வா அண்ணன் காரை முடுக்கினான். உலகிற்கு வருவோர், போவோர், வாழ்வோருக்காக அப்போதும் அந்த மருத்துவமனை வளாகத்தின் முன்கதவம் திறந்தே கிடந்தன. கார் வெளியேறும்போது நான் மருத்துவமனையைத் திரும்பிப் பார்த்தேன். சக்கரப்படுக்கையில் ஒரு உடலை இரு உடல்கள் தள்ளிக்கொண்டு போவது தெரிந்தது. அம்மாவும் இப்படித்தான் போவாளாயிருக்கும். அம்மா தன் பேரில் வங்கிக்கடன் மூலம் வாங்கிய காரின் சக்கரங்கள் அண்ணாசாலையில் ஊர்ந்து கொண்டிருந்தது. காரில் ஏ.சி போட்டிருக்கவில்லை. காரின் கண்ணாடிக் கதவுகளையும் திறந்து கொள்ளவில்லை. பாடல்கள் ஒலிக்கவும் இல்லை. எங்கள் மூச்சு அக்காரினுள் நிறைந்திருந்தது. எல்லோரின் மூச்சொலியையும் என்னால் தனித்தறிய முடிந்தது. எங்களைக் கண்காணித்தவாறு அருட்தந்தை தன் பைக்கில் பின்தொடர்ந்தார்.

அம்மாச்சி புக்கத்துறையிலிருந்து வந்திருந்தார். அம்மாச்சியிடம் யார் சொல்வது என்று எல்லோரும் சிந்தித்தோம். யாருக்கும் அத்துணிவு வரவேயில்லை. நாங்கள் வீட்டுக்குள் நுழைந்தபோது லூர்துமாதா படத்தின் முன் கண்களை மூடி ஜெபமாலையை நீவி உருட்டிக் கொண்டிருந்தாள். கன்னங்களில் வற்றிய நீர்த்தடமிருந்தது. நாங்கள் யாரும் அம்மாச்சியிடம் எதுவும் சொல்ல முனையவில்லை. அவள் கேட்கவும் முனையவில்லை. அதெல்லாம் அனாவசியம் என்பது போல அம்மாச்சியின் கைகளிலிருந்த செபமாலை சீராக உருண்டு கொண்டிருந்தது.

வீடு வெறும் கட்டிடமாகியிருந்தது. அம்மா உறங்கிவிட்டதால் எங்களில் யாருக்குமே உறக்கம் கூடவில்லை.

அம்மாவின் கைபேசியை அன்றிரவு நான்தான் வைத்திருந்தேன். அதற்காக யாரும் என்னுடன் சண்டை பிடிக்கவில்லை. அம்மாவின் கைபேசிக்கு அன்று எந்த அழைப்புகளும் வரவில்லை. வழக்கமாக உறவுக்காரர்கள் யாராவது அழைத்தால் அந்த அழைப்பையேற்று பேசச்சொல்வாள். அலுவல் நிமித்தமென்றால் அதை அம்மா மட்டுமே பேசுவாள். இப்போது யாரேனும் அழைப்பார்களோ என பயமாக இருந்தது. அழைத்தால் என் செய்வதெனத் தெரியவில்லை.

அம்மா செல்போனின் முகப்பு படமாக லூர்து மாதாவே இருந்தாள். மத்திய அரசின் ‘ஆரோக்ய சேது’ செயலி தரவிறக்கப்பட்டிருந்தது. தொடுமுன் திறந்தது. முகப்பில் ‘நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அம்மாவின் முகநூல் பக்கத்தில் அம்மாவின் பலநூறு முகங்கள் இருந்தன. பெரும்பாலும் அம்மாவின் பள்ளித்தோழிகள் மற்றும் அம்மா கற்பித்த மாணவர்களின் படங்கள். முதுகலை கட்டிடப் பொறியியல் படிக்கும் விஷ்வா அண்ணனின் வரைபடங்களை பெரும் பெருமிதங்களுடன் பகிர்ந்திருந்தாள். புத்தரின் படங்களும் போதனைகளும் அம்மாவால் அதிகம் பகிரப்பட்டிருந்தன. அம்மாவின் மடிக்கணியைத் திறந்தேன். அஜய் கே பாண்டே, ராபின் சர்மா, இராமச்சந்திர குஹா போன்றோரின் மின்புத்தகங்கள் நிறைய இருந்தன.

‘ஆன்மத் திளைப்பு’ என்றொரு தொகுப்பிருந்தது. அது முழுவதும் இளையராஜாவின் பாடல்களாகவே இருந்தன. அவர் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் அம்மா தன்னிலையில் திளைப்பாள். அதுவும் ‘அழகிய கண்ணே உறவுகள் நீயே’ என்ற பாடல் அம்மாவை ஊழ்கத்திலாழ்த்தும்.

இரவு ஒன்பது மணிக்கு அருட்தந்தை மரியலூயிஸ் வீட்டுக்கு வந்தார். அம்மாவுக்கு கொரோனா தொற்று இல்லையென்ற ஆய்வக முடிவு இணையதளத்தில் வெளிவந்திருப்பதாகச் சொன்னார். அம்மாச்சி உட்பட எல்லோருக்கும் ஒரு ஆசுவாசம் கிட்டியது. அருட்தந்தை ஒருமாதிரி நெளிந்தார். அந்த நெளிவில் அவர் கழுத்துச் சங்கிலியில் பிணைத்திருந்த சிலுவை ஊசலாடியது. அம்மாச்சிதான் ‘கர்த்தருக்கு நன்றி’ என அரற்றினாள்.

அம்மாவின் மேசையிலிருந்த இழுப்பறையைத் திறந்தேன். ஒரு பொதி தாள்கள் அதிலிருந்தன. அம்மா வாங்கிய வங்கிக்கடன்கள், திரும்பச் செலுத்திய விவரங்கள் அவை. வீட்டுக்கடனுக்கான தவணைக்காலத்தைப் பார்த்தேன். அக்கடன் தீர இன்னும் இருபதாண்டுகள் அம்மா சம்பாதிக்க வேண்டியிருந்தது. அப்பாவின் சொற்ப வருவாயை நம்பி வாங்கப்பட்டவையல்ல அக்கடன்கள். அவையெல்லாம் அம்மாவின் கனவுகள். விஷ்வா, சித்தார்த், அப்பா, நான் என எங்கள்மீது அம்மா கண்ட கனவுகள். அவள் பிணவறையிலிருக்கும் இவ்வேளையில் அவள் கடன்பட்டு வாங்கிய வீட்டில் படுத்திருக்க என் மனம் பிசைவுண்டது. இந்த தெய்வங்கள் மீதெல்லாம் தீச்சொல்லிட எனக்கேதோ உரிமை வந்துவிட்டது போல ஆவேசம் வந்தது. அந்தத் தாள்பொதியை இழுப்பறைக்குள் வீசினேன். குழந்தை யேசுவை நெஞ்சோடு அணைத்தபடியிருக்கும் மரியாளின் டிஜிட்டல் படமொன்று அப்பொதியிலிருந்து நழுவி விழுந்தது. அந்தப் படத்தை என்னால் நெடுநேரம் பார்க்க முடியவில்லை. அப்படத்தை இழுப்பறைக்குள் போட்டு தள்ளிச் சாத்தினேன். வீட்டைச் சுற்றிப் பார்த்தேன். இரவு போல அம்மா பெருகிக் கொண்டிருந்தாள்.

கிழக்கில் மஞ்சள் முறுகிக் கொண்டிருந்தது. எங்கள் குடியிருப்பு வளாகத்தின் முன்கதவம் நெடுநேரமாக திறந்தேயிருந்தது. வளாகத்தில் குடியிருக்கும் குடியிருப்புவாசிகளின் குரல்கள் வற்றியிருந்தன. அபாய ஒலியின்றி ஆம்புலன்ஸ் வளாகத்துக்குள் வந்தது. அதோடு நிறைய மனிதர்கள் மொதுமொதுவென வளாகத்திற்குள் வந்தார்கள். திறந்திருந்த போதும் இவர்கள் ஏன் இரும்புக்கிராதிக்கு வெளியே நின்றார்கள் எனத் தெரியவில்லை. அவர்கள் முகங்கள் பேதலித்திருந்தன. சங்கடமின்றி அழுதார்கள்.

மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில் போன அம்மா தன் சிரமத்தைக் கைவிட்டுத் திரும்பினாள். அம்மாவைக் கூடத்தில் கிடத்தினார்கள். புனித தோமையார் மலைக்கோயிலிலிருந்து அருட்தந்தை சந்தியாகு வந்திருந்தார். திருச்சபை சார்பில் செபம் செய்தார். உப்புக்கலந்த நீரை அம்மாவின் மீது தெளித்தார்.

ஜெகநாதன் அண்ணா ரோஜாப்பூ மாலை கொண்டுவந்து அம்மாவுக்கு போட்டார். அவரின் அம்மாவும் வந்திருந்தார். பள்ளியில் தனக்குப் போட்ட சத்துணவில் புழு இருந்ததைப் பார்த்துவிட்டு, அதைக் கொண்டுபோய் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஜெகநாதன் அண்ணா காட்டினாராம். ‘பறப்பயலுக்கு இம்மாந் திமிரா’ என அந்தத் தலைமையாசிரியர், ஜெகநாதன் அண்ணாவை அடித்ததுடன், அவரின் அம்மாவையும் அழைத்துக் கண்டித்தாராம். அம்மாதான் அந்த தலைமையாசிரியர் மீது மாவட்ட கல்வியதிகாரி மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகாரளித்தாராம். இனி அந்தப் பள்ளிக்கு போகமாட்டேன் என அடம்பிடித்த ஜெகநாதன் அண்ணாவை அம்மாதான் கான்வெண்ட்டில் சேர்த்துவிட்டாள்.

முன்பு எங்கள் வீட்டில் பாத்திரம் துலக்க வரும் பார்வதி பாட்டி வந்திருந்தாள். சொந்தவீடு கொஞ்சதூரம் தள்ளி அமைந்து விட்டதால் பார்வதி பாட்டி அடிக்கடி வருவதில்லை. ஆனால் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் எங்களுக்குக் கண்ணேறு கழிக்க வருவாள். அருட்தந்தை மரியலூயிஸ் கட்செவி அஞ்சலில் இதனை ஆட்சேபித்திருந்தார். கிறிஸ்துவிற்கு எதிரானது என்றார். அருட்தந்தை இவ்வாறு ஆட்சேபித்த பத்து நாட்களுக்குப் பின்னர் அம்மா இப்படி பதில் சொல்லியிருந்தாள்.

‘புத்தனைப் பெற மாயா என்ற பெண் கருவுற்றாள். இராமனைப் பெற கோசலை கருவுற்றாள். இயேசுவைப் பெற மரியாள் கருவுற்றாள். புத்தனும், இராமனும், இயேசுவும் தங்களைத் ஒருங்கு திரட்டிக்கொள்ளவில்லை. மாறாக ஒன்றன்மேல் ஒன்றாய் தங்களை அடுக்கிக் கொண்டார்கள். மரியாளில் எல்லா தாயாரும் திகழ்கிறார்கள். ஒரு கிறிஸ்துவ பெண்ணாக நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். மரியாளின் மைந்தனான கிறிஸ்துவும் என்னை ஏற்றுக்கொள்வார்.’

பார்வதி பாட்டி தான் கொண்டு வந்திருந்த செவ்வந்தி மாலையை அம்மாவின் காலடியில் வைக்க முயன்றாள். கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அருட்தந்தை மரியலூயிஸ் அந்த செவ்வந்தி மாலையை வாங்கி அம்மாவின் முகத்தருகே சாத்தினார்.

அம்மா பணியாற்றும் கல்லூரியில் துப்புரவு பணியாற்றும் ஊமைப்பெண் வந்திருந்தாள். அம்மாவின் அறையை வழக்கமாக இவள்தான் துப்புரவு செய்வாள். ஒருநாள் அம்மாவின் ஆபிஸிற்கு போயிருந்த போது நான் கேட்காமலே எனக்கு காசு கொடுத்து கேண்டீனிற்கு அனுப்பினாள் அம்மா. கேண்டினில் காபி பருகிக்கொண்டிருந்த போது அருகிலிருந்த எழுதுபொருளங்காடியில் இந்த ஊமைப்பெண் நின்று கொண்டிருந்தாள். கேண்டீனிலிருந்து திரும்பி வந்தபோது அம்மாவின் அறைக்கதவு உள்தாழ் போட்டியிருந்தது. சிறிது நேரம் வெளியிலேயே நின்றிருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து இந்த ஊமையம்மா அம்மாவின் அறைக்கதவைத் திறந்து வெளியே வந்தாள். நான் அறைக்குள் சென்றபோது அம்மா சேலையை இழுத்து விட்டபடியே தன் நாற்காலியை நோக்கி போய்க்கொண்டிருந்தாள். ஊமையம்மா துடைப்பத்தோடு மீண்டும் அறைக்குள் பிரவேசித்தாள். தன் பின்னிடுப்பில் இடது உள்ளங்கை வெளித்தெரியுமாறு வைத்து வலது கையால் தரையை பெருக்கிக்கொண்டிருந்தாள். அவளின் இடது உள்ளங்கையில் ‘விஸ்பர்’ என எழுதியிருந்தது. இந்த ஊமையம்மாவைப் அம்மாவிடம் விசாரிப்பேன். பணியாளர்களின் சொந்த வேலைகளை துப்புரவுப் பணியாளர்கள் செய்துகொடுக்கக் கூடாது எனச் சொல்லி ஊமையம்மாவை வேறு தளத்திற்கு மாற்றிவிட்டதாக அம்மா சொன்னாள்.

அக்கம்பக்கத்திலிருந்த உறவுக்காரர்கள் சிலர் வந்திருந்தனர். அலுவல் தொடங்கும் ஒன்பதரை மணிவாக்கில் அம்மாவுடன் பணியாற்றிய கல்லூரிப் பணியாளர்கள் ஒருவர்பின் ஒருவராக வந்து கொண்டிருந்தனர். மரபாகக் கைகூப்பி வாசலில் நின்றிருந்தார் அப்பா. கொரோனா விழிப்புணர்வின் பொருட்டு அரசு வலியுறுத்தியிருப்பதால் அவர்கள் யாரும் அப்பாவின் கைகளைத் தொடவேயில்லை. சிலர் மட்டும் துணிந்தார்கள். அவர்கள் கையுறை அணிந்திருந்தார்கள்.

அஞ்சலி செலுத்திய பணியாளர்கள் அணியணியாக நின்று அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். அணிக்கு ஒருநபர் அடுத்த அணியில் யார் என்ன பேசுகிறார்கள் என்பதை நோட்டமிட்டபடியே இருந்தனர். எந்த அணியிலும் இல்லாமல் ஓரிருவர் அம்மாவின் அருகில் கசிந்தழுதார்கள்.

ஆம்புலன்ஸ் மீண்டும் வளாகத்துக்குள் வந்தது. எங்கள் சொந்த ஊரான புக்கத்துறையில் அம்மாவை நல்லடக்கம் செய்வதாக முடிவு செய்திருந்தோம். ஆம்புலன்ஸ் வந்தவுடன் சில பணியாளர்கள் அப்பாவிடம் செவிச் சொற்களை அவிழ்த்தனர். சற்று தூரத்தில் ‘எஸ் மேடம்’, ‘கெட்டிங் ரெடி மேடம்’, ‘வி இன்பாம்டு வித் மேடம்ஸ் ஹஸ்பண்ட் மேடம்’, ‘ஷூர் மேடம்’ ‘டெஃபனட்லி மேடம்’ என செல்போனின் எதிர்க்குரலுக்கு தன்னை வளைத்து ஒப்புக்கொடுத்துக் கொண்டிருந்தார் ஒரு பணியாளர்.

ஒன்றரை நாழிகைக்குப் பின் ஒரு இன்னோவா கார் குடியிருப்பு வளாகத்துக்குள் வர முனைந்தது. ஆம்புலன்ஸ் தவிர புறவாகனங்கள் வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. பரபரப்புடன் காவலாளியிடம் அலுவலர்கள் அணியொன்று போனது. அவர்கள் பல்வேறு அணிகளிலிருந்தவர்கள். காவலாளி வருமுன் அவர்களே முன் கதவங்களை அகலத் திறந்தார்கள். இன்னோவா உள்ளே வந்தது. கார் கதவைத் திறப்பதற்காக மூன்றுபேர் ஓடினார்கள். அதிகாரியம்மா மிடுக்கோடு வெளியே வந்தார். நாளிதழில் சுற்றப்பட்டிருந்த சிறிய மலர்வளையத்தை ஐந்துபேர் சேர்ந்து பிரித்தார்கள். மலர்வளையம் வாங்குவதற்காக கூட அதிகாரியம்மாவை அவர்கள் திரும்பவிடவில்லை. மாலைகள் எல்லாவற்றுக்கும் முன்பாக மலர்வளையம் வைக்கப்பட்டது. சில கேமரா வெளிச்சங்கள் அதனை நிழலாவணமாக்கிக் கொண்டிருந்தன.

எதையோ குடைவது போல அதிகாரியம்மா அம்மாவை உற்றுப் பார்த்தாள். அலுவலர்கள் எல்லோரும் அதிகாரியம்மாவை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். அதிகாரியம்மா தன் கண்களை அந்தக் கூடம் முழுக்க சுழலவிட்டார். அந்தப் பார்வையில் அகப்படுவதற்காகவும், தப்புவதற்காகவுமாய் சமூக இடைவெளி பற்றிய அக்கறையைக் கைவிட்டு அலுவலர்கள் முண்டினார்கள். ஊமையம்மா அதிகாரியம்மாவை சட்டை செய்யாமல் நின்று கொண்டிருந்தாள்.

அதிகாரியம்மா வாசல் பக்கமாக திரும்பினார். அதனைக் கண்டுகொள்ளாதது போல அலுவலர்களும் திரும்பினார்கள். அதிகாரியம்மா வெளியேறினார். அலுவலர்கள் நழுவினார்கள்.

ஆம்புலன்ஸ் வீட்டு வாசலையொட்டி வந்து நின்றது. அம்மாவை ஏற்றினார்கள். அப்பாவும் ஆம்புலன்ஸில் ஏறிக்கொண்டார். முதல் முறையாக டாட்டா காட்டாமல் வீட்டைவிட்டு வெளியேறினாள்.

வீட்டுக்குள் சென்று புக்கத்துறை போவதற்கு தேவையான பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்தோம். மலர்செல்வி பூக்கள் சிதறிக் கிடக்கும் எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தாள். நாங்கள் யாரும் அவளிடம் பேசவில்லை. கட்டைப்பையுடன் வாசலுக்கு வந்தேன். விஷ்வா அண்ணன் காரை எடுத்துக் கொண்டிருந்தான். மலர்செல்வி என்னருகே வந்து நின்றாள்.

‘ஆன்ட்டிக்கு கொரோனாவா’

‘இல்ல’

‘அப்பறம்’

‘ஹார்ட் அட்டாக்’

‘அத யாரு ஆன்டிக்கு பரப்புனா’

பதிலுக்காக நான் தவித்துக் கொண்டிருந்தபோது விஷ்வா அண்ணன் என்னைக் காரில் ஏறச்சொன்னான். மலர்செல்வி எங்களுக்கு ‘டாட்டா’ காட்டினாள். வளாகக் கதவருகே காரை நிறுத்தி யாராவது தேடி வந்தால் புக்கத்துறையில் நடக்க இருக்கும் இறுதிச்சடங்கு பற்றிய விவரங்களை சொல்லுமாறு காவலாளிக்கு தகவல் சொல்லிக் கொண்டிருந்தான் விஷ்வா அண்ணன். காவலாளியின் அறையில் தொங்கிய நாட்காட்டியில் விவேகானந்தர் நெஞ்சு நிமிர்த்தி அத்துவானத்தை பார்த்துக் கொண்டிருந்தார். ‘எழுமின் விழுமின்’ என்ற அவரின் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. நான் திரும்பி மலர் செல்விக்கு டாடா காட்டினேன்.

சாலையில் கார் இறங்கியது. மலர்செல்வி அப்போதும் தன் கையசைப்பை நிறுத்தவில்லை. அழுவதற்கு அனாவசியமான கண்ணீர் என் கண்களில் திரண்டுருண்டு வழிந்தோடியது.

***

அ.மலைச்சாமி

ஆசிரியர் தொடர்புக்கு thayuran.26@gmail.com

தமிழ்ப்பண்பாட்டின் புத்தெழுச்சிக்காலம்: கிரியா ராமகிருஷ்ணனின் பங்களிப்பு

0

ப. சகதேவன்

தமிழ்த்தாய் எல்லாக் காலத்திலும் நவீனமாகத்தான் இருந்திருக்கிறாள். மட்டுமல்லாமல் அவளைப்போல தாராளவாதியையும் பார்க்க முடியாது. சங்க இலக்கியத்தைப் போல எல்லாச் சிந்தனைகளுக்கும் இடமளிக்கக் கூடிய, எல்லா வகைப்பட்ட மனிதர்களையும் அரவணைக்கக் கூடிய ஓர் இலக்கியம் உலக இலக்கியத்தில் காண்பதரிது. பரங்கியர் என்பதற்காக தத்துவ போதக சுவாமிகளையும், வீரமாமுனிவரையும் அவள் வாசலுக்கு வெளியே நிற்கச் சொல்லவில்லை. ஆனாலும் அவ்வப்போது தமிழ்த்தாயை முக்காடு போட்டு வீட்டுக்கு உள்ளே இருத்தி வைத்திருந்த சந்தர்ப்பங்களும் உண்டு. அது காலத்தின் நிர்ப்பந்தம். மத்திய காலத்திலிருந்து ஐரோப்பியர் காலம் வரை பரவியிருந்த காலனியாதிக்கம் தமிழ்ப்பண்பாட்டை ஒரு கூண்டுக்குள் அடைத்தது. தமிழ் மொழியும் பண்டிதர்களின் ஏட்டுச்சுவடிகளில் கூடுகட்டிக் கொண்டது. 1970-கள் வரை நிலவியிருந்த இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறத்தொடங்கியது. இந்தக் காலத்திற்கு ஒரு பெயர்கொடுத்துப் பார்க்கலாம்

நமது மொழி, நமது இலக்கியம் என்பவை போற்றப்பட வேண்டியவை தான். அதே சமயம் மொழி என்பது நமது வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு கருவியாகவும், இலக்கியம் என்பது நமது விமரிசிப்பதற்குரிய வடிவமாகவும் கருதப்பட வேண்டும். விடுதலைக்குப்பின் ‘எழுத்து’ ‘இலக்கிய வட்டம்’ என்கிற சிறுபத்திரிகைகள் இதற்கு அடித்தளமிட்டன. அதற்கு முன் ‘மணிக்கொடி’ பத்திரிகை முன்னோடியாக இருந்தது. 1970-க்குப்பின் இந்த அணுகுமுறையில் மேலும் ஒரு பாய்ச்சல் ஏற்பட்டது. இடதுசாரிச்சிந்தனைக்கு ஆட்பட்டிருந்த ஜெயகாந்தனிலிருந்து தொடங்கிய இந்த அணுகுமுறைக்கு பலர் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். இலக்கியம் என்பது பண்பாட்டின் பல அம்சங்களில் ஒன்று என்று எடுத்துக்கொண்டு அதனோடு நாடகம், திரைப்படம், ஓவியம், சிற்பம், இசை என்பவற்றையும் சேர்த்துப் பார்க்கும் இந்த முயற்சியில் ‘சிறுபத்திரிகை இயக்கம்’ ஈடுபட்டிருந்தது. இந்த இயக்கத்தில் தீவிரமாக இருந்த பலர் ஒவ்வொருவராக மறைந்து கொண்டிருக்கிறார்கள். சுந்தர ராமசாமி வெங்கட்சாமிநாதன், ஞானக்கூத்தன், நா.முத்துசாமி, சா.கந்தசாமி என்று வந்து இப்போது க்ரியா ராமகிருஷ்ணனையும் இந்த நூற்றாண்டில் இழந்திருக்கிறோம். போன நூற்றாண்டு க.நா.சு.வையும், சி.சு.செல்லப்பாவையும் எடுத்துக் கொண்டது. ஒரு வரலாற்றுப் பின்னோக்கில் இவர்களது பங்களிப்பை அறுதியிடலாம்.

1970 ஒரு முக்கிய பண்பாட்டு வரலாற்று மைல்கல். காங்கிரஸ் இயக்கத்தின் வீழ்ச்சி, திராவிட இயக்கத்தின் தட்டிக்கேட்க முடியாத செல்வாக்கு, வெகுசன வாசிப்பின் அசுரத்தனமான வளர்ச்சி, வணிக சினிமாவின் மாயத்தாக்கம் என்ற அம்சங்களோடு போராட முடியாமல் தமிழ் நாகரிகம் தடுமாறிய நேரம். காலம் காலமாக தமிழ் நாகரிகத்திற்கு கணிசமான பங்களிப்பைச் செய்து கொண்டிருந்த பிராமணர்களின் படைப்பாற்றல் முழுதும் வெளிப்பட முடியாமல் ஓரங்கட்டப்பட்ட நிலைமை. காலத்துக்குத் தகுந்த தேசீயவாதம் என்பதை பொதுவெளியில் விவாதிக்கக் கூட முடியாத சூழல் என்பவற்றைப் பார்த்து இதற்கு ஓர் இணைக்குரலை எழுப்ப வேண்டும் என்ற தேட்டம் தான் தனிமனிதர்கள், சிறுசிறு குழுக்கள் என்கிற வடிவங்களில் வெளிப்பட்டது. அப்படித் தோன்றிய குழுக்களில் ஒருவராகத்தான் ராமகிருஷ்ணன் வந்தார். இது தமிழ்ச்சூழலில் மட்டுமல்ல. கேரளம், கர்நாடகம் முதலிய சூழல்களிலும் எழுந்தது. ஐயப்பப் பணிக்கர், அடூர், அரவிந்தன், சங்கரப்பிள்ளை, பி.வி.காரந்த், கிரீஷ் கார்நாடு, கிரீஷ் காசரவள்ளி என்ற ஆளுமைகள் அவரவர் நாகரிகத்தை நவீனப்படுத்தின.

மக்களின் மலினமான ரசனக்குத் தீனிபோடுகிற வெகுசனப்பத்திரிகைகள் தங்களது படைப்புகளை வெளியிடாத போது பல எழுத்தாளர்கள் சிறுபத்திரிகைகளை நாடிப்போனார்கள். அல்லது அவர்களே ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார்கள். தரமான எழுத்துக்களை வெளியிட பதிப்பாளர்கள் முன்வராதபோது அவர்களது எழுத்துக்களை ஒரு பதிப்பகம் ஏற்படுத்தி இவர்கள் வெளியிட்டார்கள். இவர்களது பொறுப்பு பெரும் பொறுப்பாக இருந்தது. இவர்களது கதைகளை நாடகமாகவோ, படமாகவோ ஆக்குவதற்குரிய துணிச்சலுள்ளவர்கள் இருக்கவில்லை. எனவே இந்த எல்லாப் பொறுப்புகளையும் இவர்கள் தலைமேல் சுமந்தார்கள். ராமகிருஷ்ணன் பதிப்புத்துறையை எடுத்துக் கொண்டார். தனது படைப்பாற்றலை தியாகம் செய்துதான் இதை மேற்கொண்டார். இவர் பங்குகொண்ட பண்பாட்டுப் புத்தெழுச்சி அகண்ட தமிழ்நாட்டைச் சென்றடைந்ததா என்பது விவாதத்துக்குரியது தான். ஆனால் முயற்சியின் தணல் இன்னும் தணியாமல் இருக்கிறது என்பதோடு பரவிக்கொண்டும் இருக்கிறது என்பது ஓர் ஆறுதல்.

தமிழ்ப்பண்டித உலகத்தின் இறுக்கத்தை உடைத்தது இந்தக் குழுவின் சாதனை. கல்லூரித் தமிழ்த்துறையினை நோக்கிய சி.சு.செல்லப்பாவின் இடையறாத பயணம் இதைச் சாதித்தது. பேராசிரியர்கள் ஜேசுதாசன், முத்துச்சண்முகம், கனகசபாபதி போன்றோர் பண்டித இறுக்கம் உடைந்து வெளிப்பட்ட முதல் தலைமுறையினர். கல்விப்புலத்தில் இவர்களிலிருந்து தொடங்கிய பண்பாட்டுப் புத்தெழுச்சி முயற்சிகள் மீராவின் ’அன்னம்’, ‘அகரம்’ பதிப்பகங்களின் மூலமாகத் தொடர்ந்தது. தமிழ் வாத்தியார் ஒரு வேடிக்கைப் பொருள் என்ற நிலைமையை இது மாற்றியது. கூண்டில் சிறைப்பட்டிருந்த தமிழ்க்கவிதை ’வானம்பாடி’ யை விடுவித்தவர்களும் இவர்கள் தான். ஒரே வித்தியாசம்: ’க்ரியா’ வின் ‘சூப்பர் டிலக்ஸ்’ பதிப்புகளோடு ‘அன்னம்’ போட்டி போட முடியவில்லை. ஆனாலும் உண்மையான ‘தமிழ்க்குரல்’ ‘அன்னத்’தின் மூலமாகத்தான் வெளிப்பட்டது. இது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.

ராமகிருஷ்ணனும் அவரது கிளை நதியான திலீப்குமாரும் பாலமைப்புப் பணியில் ஈடுபட்டவர்கள்.. தமிழ்ப்புத்தகங்கள் உலகமெங்கும் சென்று சேர்வதற்குப் பல பத்தாண்டுகளாக உதவியவர்கள். மட்டுமல்லாமல் தமிழிலக்கியம் என்பதைத் தாண்டி தமிழர் வரலாறு, சமயம், நாட்டார் வழக்காறு முதலிய துறைகளில் ஈடுபாடு கொண்டிருக்கும் அயலகத்தைச் சார்ந்த தமிழர் மற்றும் தமிழரல்லாத ஆய்வாளர்களுக்கு ஒரு தகவல் மையமாகவும் இருந்தவர்கள். இது பொதுவாக பல்கலைக்கழகம் சார்ந்த வேலை.

‘க்ரியா’ வெளியிட்ட ஆங்கிலப்பு த்தகங்கள் இந்த பாலமைப்புப்பணியில் கணிசமான பங்களிப்பைத் தந்தவை. யூஜின் இர்ஷிக்கின் ‘1930-களில் தமிழ் மீட்புவாதம்’ (Tamil Revivalism in the 1930s (1986) ) தியடோர் பாஸ்கரனின் ‘செய்தி கொண்டு வந்தவர்கள்’ (The Message Bearers (1981) ஏலன் டண்டீஸின் ‘நாட்டாரியல் கட்டுரைகள்: கோட்பாடுகளும், பயிற்சிமுறைகளும்’ ( Essays in Folkore: Theory and Method-(1990) போன்ற புத்தகங்களோடு ஐராவதம் மகாதேவன் தொகுத்த ‘ஆரம்பகாலத் தமிழ்க்கல்வெட்டியல்’ (Early Tamil Epigraphy –(2003) போன்ற நூல்கள் தமிழ்ப்பண்பாட்டு வரலாற்று ஆய்வுக்குப் பெரிதும் உதவுபவை.

படைப்பிலக்கியத் துறையில் தனது வெளியீடுகள் மூலம் எழுத்தாளர்களுக்குப் பெருமை சேர்த்தது ‘க்ரியா’. சுந்தர ராமசாமி, சி.மணி, நா.முத்துசாமி, சா.கந்தசாமி, பூமணி, மு.தளையசிங்கம் என்று இது ஒரு நீளமான வரிசை.. இதில் இமயத்தையும் இழுத்துச் சேர்த்தது ராமகிருஷ்ணனின் ஜனநாயகப் பண்பு. அவரே சொன்ன மாதிரி இமயம் என்கிற வைரத்தைப் பட்டை தீட்டினார்.

பதிப்பகம் என்ற முறையில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி ஏமாற்றமடைய வைத்த முயற்சிகளும் உண்டு. அதில் முதலில் வருவது ‘தற்காலத்தமிழழ்அகராதி’ கொல்லன் பட்டறையில் ஊசி விற்க வந்த முயற்சி இது. தமிழர்களுக்கே தமிழ் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்கிற இந்த யோசனையை யார் ராமகிருஷ்ணனுக்குச் சொல்லிக் கொடுத்தார்களோ தெரியவில்லை. அகராதிக் குழுவிலிருந்த இ.அண்ணாமலை, பா.ரா. சுப்பிரமணியம் போன்றோர் சிறந்த கல்வியாளர்களாக இருக்கலாம். ஆனால் தமிழர்களுக்கு என்ன தேவை என்ற பெரும் உண்மையைப் பார்க்கத் தவறி விட்டார்கள். தமிழ்-தமிழ்-ஆங்கிலம் என்ற அகராதி தமிழறிந்தவர்கள் தங்களது ஆங்கிலப்புலமையை வளர்த்துக் கொள்ளுவதற்காகவும் பயன்பட வேண்டும். அப்படியானால் தமிழ் விளக்கங்களை விட ஆங்கில விளக்கங்கள் அதிகமாக இருக்க வேண்டும். இங்கே ஆங்கில விளக்கங்கள் ’பொசுக்’ கென்று முடிந்து விடுகின்றன. தமிழ் விளக்கங்கள் கூட கிராமத்து ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது போல இருக்கிறது.

‘ஆனந்தவிகடன்’ பத்திரிகை 1930-களில் சித்திரப்போட்டி என்ற ஒரு போட்டியை நடத்தியது. அதில் கலந்து கொள்பவர்களுக்கு உதவியாக ‘ஆனந்தவிகடன் சித்திரப்போட்டி அகராதி’ என்ற ஒரு அகராதியை 1935-ம் ஆண்டு வெளியிட்டது. 2040 பக்கங்கள் கொண்ட இந்த தமிழ்-தமிழ் அகராதி கிட்டத்தட்ட ஒரு லட்சம் சொற்களைக் கொண்டது. அவ்வளவு பெரிய முயற்சியில் அதைத் தொகுத்தவர் பெயர்கூட இல்லை.

இன்னொரு ஏமாற்றம் ‘க்ரியா’ முன்னிறுத்திய நூலாசிரியர்களில் ஒருவரான எஸ்.வி.ராஜதுரை. இவர் ஒரு சித்தாந்தவாதியா, செயல்பாட்டாளரா, கலாச்சார விமர்சகரா, மொழித் தேசீயவாதியா என்பது இதுவரை பிடிபடாத விஷயம். மேலைத் தத்துவத்தில் எந்த அறிமுகமும் இல்லாதிருந்த அந்தக்காலத்திய வாசகர் கூட்டத்திற்கு ‘எக்ஸிஸ்டென்ஷியலிசம்’ ‘அந்நியமாதல்’ போன்ற கருத்தாக்கங்கள் புதியவை தான். ஆனால் நமது வரலாற்றோடும், பண்பாட்டோடும் எந்தவிதமான ஒப்பீடும் செய்யப்படாமல் வெறும் தகவல் குவிப்புகளாகவே அவை இருந்தன. பண்பாட்டு விமர்சனத்திற்கு ஒரு அடிப்படை தரவாகவே அப்புத்தகங்கள் பயன்படக்கூடும். இன்றைய விரல் நுனித்தகவல் சூழலில் அதுகூடச் சந்தேகம் தான்.

எழுபதுகளின் மத்தியப்பகுதியில் அக்னிபுத்திரனுடன் ராயப்பேட்டை ’க்ரியா’ அலுவலகத்திற்கு நான் போயிருந்தேன். ‘ஜே ஜே:சில குறிப்புகள்’ நாவலின் அட்டை தயாராகிக் கொண்டிருந்தது. ஓர் அட்டை ஒரு கால்பந்தாட்டக்காரனின் காலையும், பந்தையும் காண்பிப்பதாக இருந்தது. அட்டை எப்படியிருக்கிறது என்று ராமகிருஷ்ணன் எங்களிடம் கேட்டார். நான் அந்த வயதுக்கே உரிய ஆணவத்துடன் ‘கேனத்தனமாக இருக்கிறது’ என்று சொன்னேன். சற்று அதிர்ச்சியடைந்த அவர் பிறகு சுதாரித்துக் கொண்டு ‘ஓ’ என்று மட்டும் சொன்னார். அவரது பெருந்தன்மைக்கு இது ஒரு சுட்டல். புத்தகம் வெளிவந்த போது அந்த அட்டை மாற்றப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் தற்போது கோலோச்சிக் கொண்டிருக்கும் இரண்டு பிரிவினருக்கு ராமகிருஷ்ணன் கொஞ்சம் தருமசங்கடத்தைக் கொடுக்கக் கூடும்.

ஒன்று சுத்தத் தமிழ்த் தேசீசியவாதிகள்.. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ராமகிருஷ்ணன் தமிழுக்கு இவ்வளவு செய்திருக்கிறாரே? தாங்கள் சொர்க்கத்துக்குப் போகும் புஷ்பக விமானத்தில் இவரைச் சேர்த்துக்கொள்வதா வேண்டாமா? என்று யோசிப்பார்கள்

இரண்டு: தமிழ்நாடு அரசு. முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருக்கும் இரங்கல் செய்தி… ராமகிருஷ்ணனது அளப்பரிய பணியை மிகத்துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கும் முதலமைச்சர் இப்போதாவது இவருக்கு ஏன் எந்த அரசு அங்கீகாரமும் தரப்படவில்லை என்று தனது ஐம்பெருங்குழுவையும், எண்பேராயத்தையும் கேட்பாரா?

***

ப.சகதேவன் (P.Krishnaswami)
Bangalore
Mobile: 9845165940

ஒற்றை இறகு (சிறுகதை)

0

ஹரீஷ் கணபதி

மூர்த்தி மெல்லக் கண்விழித்து திரும்பிப் படுக்காமலேயே தலையை உயர்த்தித் தலைமாட்டிலிருந்த அலாரக் கடிகாரத்தைப் பார்த்தார். இன்று விழிப்பு அரைமணி தாமதம். அவரைக் கேள்வி கேட்க யாருமில்லை என்றாலும் தாமதம் குறித்துச் சஞ்சலமாயிருந்தது.

காலையில் ஒரே ஒரு ஆளுக்குப் பாலைக் காய்ச்சி காபி கலந்து அதை ஆற அமரக் குடித்து முடிப்பதற்குத் தோராயமாக நாற்பது நிமிடங்கள் ஆகின்றன அவருக்கு. வேகமாக வேலைகளைச் செய்ய முடிவதில்லை என்பது ஒருபுறமிருந்தாலும் நிதானமாகச் செய்வதை அவர் மிக விரும்பினார் என்பதுதான் பிரதான காரணம்.

காபியைச் சொட்டுச் சொட்டாய் உறிஞ்சி அதன் அடிநாக்குக் கசப்புச் சுவையை அனுபவித்து மிடறு மிடறாக விழுங்குகையில் தனக்கு வாய்த்த அன்றைய முழுநாளுக்கானப் பரபரப்புகளேதுமற்ற தனிமையையும் சொட்டுச் சொட்டாய் அசைபோட்டு அதன் விளைவாக உள்ளே சுரக்கும் இனம் புரியாத நிதானத்தை உள்வாங்கி ரசித்தபடி தன்னை அந்நாளுக்குத் தயார்படுத்திக் கொள்வது அவர் வழக்கம். ஆனால் இன்றைக்கு அதற்கான நேரம் தாமதமாய் எழுந்ததில் கடந்து விட்டிருந்தது.

மெல்ல எழுந்து வாசலுக்கு வந்து கீழே கிடந்த நாளிதழை எடுத்தவர் கைகளில் ஈரம் பிசுபிசுத்தது. முந்தைய நாள் பெய்த மழையில் வாசலில் தேங்கியிருந்த நீரில் பேப்பரைப் போட்டுவிட்டுப் போயிருந்தான் பையன்.

கையில் எடுத்த பேப்பரை லேசாக நீவினார். கையோடு கிழிந்து வந்தது. அதை அப்படியே அலுங்காமல் எடுத்துக்கொண்டு போய் மேசையின் மீது விரித்து வைத்தார். அறைக்குள் சென்று அயர்ன் பாக்ஸை எடுத்து வந்தார். ப்ளக்கைச் செருகி ஸ்விட்ச்சைத் தட்டப் போனவர் சட்டென்று நின்றார். ஏதோ யோசனை வந்தவராக அயர்ன் பாக்ஸைப் பேப்பரின் நடுவே வைத்தார். மீண்டும் உள்ளே சென்று டேபிள் பேனை எடுத்து வந்து ப்ளக்கில் செருகி அதை ஓட விட்டார். ஈரமாகியிருந்த முனையில் காற்றுப் படுகிறதா என்று சில வினாடிகள் நின்று பார்த்து உறுதி செய்துகொண்ட பின் நகர்ந்தார்.

முகத்தைத் துடைத்தபடியே வந்தவர் பேப்பர் காய்ந்து விட்டதாவெனப் பார்த்தபடியே போனை எடுத்தார். பெயர்ப்பட்டியலில் சென்று பெயரைத் தெரிவு செய்யாமல் நம்பர்களை அழுத்தத் துவங்கினார். எல்லா எண்களும் மொபைலில் சேமித்து வைக்கப்பட்டிருந்தாலும் முக்கியமான எண்களை இப்படி நினைவிலிருந்து அவ்வப்போது எடுத்து உபயோகப்படுத்துவது மனதையும் மூளையையும் துருப்பிடிக்காமல் வைக்க உதவும் முயற்சிகளுள் ஒன்று என்பது அவர் நம்பிக்கை.

“ஹலோ…. நான் தான்…. ஆமா.. இன்னிக்கு கொஞ்சம் லேட்டாயிப் போச்சு. ச்செரி. இதுக்கு மேல நான் கெளம்பி வந்தா வேஸ்ட்டு. நாளைக்கி பாப்போம். இல்ல சாயந்திரம் ஸ்டேஷனுக்கு வந்தின்னா பாப்போம்… சரி வெக்கிறேன் என்றபடி போனை அமர்த்தினார்.

அப்போது தான் போன் திரையில் மணி பார்த்திருந்தாலும் அது மனதில் பதியாமல் கடிகாரத்தைப் பார்த்தார். தூங்கி எழும் நேரம் சற்றே தாமதமானாலும் இது ஒரு தொல்லை. வழக்கமாய் நடைப்பயிற்சிக்குக் கிளம்பும் நேரத்தைவிடத் தாமதம். நடைப்பயிற்சி முடிந்து வீட்டுக்குத் திரும்பி வரும் நேரத்தை விடவும் சற்றே முந்தைய நேரமென்பதால் இது அவருக்குச் சற்றே அசவுகரியமாயிருந்தது.

நாளையிலிருந்து நேரத்துடன் எழுந்திருக்க வேண்டும் என்று தனக்குத்தானே சொல்லியபடி குளிக்கப் போனார். காற்றில் பேப்பர் படபடத்தபடியிருந்தது.

*

வெயில் ஏறத் துவங்கியிருந்தது. அவருடைய கணக்குப்படி வியர்வை பெருகி கழுத்துப் பிசுபிசுப்பில் சட்டைக்காலர் நனையத் துவங்கும் முன் நெசவாளர் காலனி பிள்ளையார் கோவிலை அடைந்துவிட வேண்டும். அதற்கேற்றவாறு வேகத்தில் நடந்து கொண்டிருந்தார்.

வள்ளலார் பள்ளியின் நுழைவாயிலில் நட்டு வைக்கப்பட்டிருந்த கற்களின் நடுவே புகுந்து வெளியேற முயன்றவர் சட்டென்று நின்றார். ஆறுமுகத்தப்பா எதிரே வந்து கொண்டிருந்தார். இவரைப் பார்த்து விட்டிருந்தார். கையாட்டியபடியே மைதானத்தின் மற்றொரு முனையில் ஸ்டேட் வங்கியின் அருகிருந்து இவரை நோக்கி வரத்துவங்கினார். அவரோடு நின்று ஓரிரு வார்த்தைகளாவது பேச வேண்டும் என்று நினைக்கும் போதே மூர்த்திக்குச் சலிப்பாக இருந்தது.

தன் நேரம் வேறு லேசாகத் தப்பிப் போவதைத் தவிப்புடன் உணர்ந்தவாறே ஆறுமுகத்தப்பாவின் வருகையை எதிர்கொள்ளும் விதமாய் வேகத்தை மாற்றி நடக்கத் தொடங்கினார். ஆறுமுகத்தப்பா என்ற பெயர் அவர் பையன் ஆறுமுகம் என்பதால் அவருக்கு வாய்த்திருந்தது. அவருக்கு மேலும் இரு மகன்கள் இருந்தாலும் முதல் மகனின் பெயராலேயே அவர் அழைக்கப்பட்டார்.

வருடக்கணக்கில் அழைத்துப் பழக்கமானதால் அவரது உண்மையான பெயர் என்னவென்பது கூட சட்டென்று மூர்த்திக்கு ஞாபகத்தில் வர மறுத்தது. மகனிடம் போனில் பேசும்போது கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார் எத்தனையாவதோ முறையாக.

ஆறுமுகத்தப்பா அருகில் வந்து விட்டிருந்தார். “இன்னா சார்? இது வாக்கிங் டைமில்லையே? வெயில்ல எங்க போயினுருக்கீங்க?” என்றார் புன்னகைத்தபடி. அவர் கேள்வி எதார்த்தமாய் இருந்தாலும் மூர்த்திக்கு லேசாகக் குத்திக் காட்டுவது போலிருந்தது.

“ஆமா இன்னிக்கு கொஞ்சம் லேட்டாயிருச்சு எளுந்திருக்க. வாக்கிங்கு போவல. கோயிலுக்கு போயினுருக்கறேன்” என்றார் வலிய வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன். பேசிக் கொண்டிருக்கும் போதே சென்னையில் அத்தனை வருடங்கள் இருந்தபோது சுத்தமாய் மறந்து விட்டிருந்த ஊர் பாஷை எப்படி ஊருக்கு வந்தவுடன் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் அப்பாவைக் கண்டதும் ஓடிவந்து மேலேறிக் கொள்ளும் குழந்தை போலத் தன்மீது வந்து ஏறிக்கொண்டது என்னும் ஆச்சரியம் மனசுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

“பசங்க என்ன சொல்றானுக” என்றார் ஆறுமுகத்தப்பா. பேச்சை வளர்ப்பதில் துளியும் விருப்பமில்லை மூர்த்திக்கு. சங்கடமாய்ப் பார்த்தார். எதுவும் சொல்ல முடியவில்லை. “நல்லாகுறானுங்க.” என்றவர் மேலதிகமாகக் கிடைத்த இருநொடி இடைவெளியைப் பயன்படுத்தி “சரி வெயில் ஏறுறதுக்குள்ள நான் போயிட்டு வந்துர்றேன்” என்றுவிட்டு ஆறுமுகத்தப்பாவின் ஆமோதிப்புக்காக அவர் முகத்தைப் பார்த்தார்.

அவர் ஆமோதிப்பாய்த் தலையசைத்தபடி “வெயில் ஏறுதே கொடையாச்சும் எடுத்துனு வரலாமில்ல? சீக்கிரம் போயிட்டு வாங்க” என்றபடி தலையாட்டிக் கொண்டே நகர்ந்தார். சற்றுமுன் அவர் தன்னைக் குத்திக் காட்டுவதாக நினைத்துக் கொண்டதைப் பற்றித் தன்னையே கடிந்து கொண்டபடி நடையில் வேகத்தைக் கூட்டினார் மூர்த்தி.

சாலையைக் கடந்து நெசவாளர் காலனிக்குள் நுழைந்தவர் மேல் சட்டென்று குளிர்ச்சி மூடியது. அந்தச் சாலை எப்போதுமே இருபுறமும் சூழ்ந்த மரங்களால் குளிர்ச்சியாகவே இருக்கும். திரும்ப வரும்போது மரத்தடியில் சிறிது நேரம் நின்றுவிட்டுப் போகலாம் என்று எண்ணிக் கொண்டார்.

மேலும் இரண்டு நிமிடங்கள் நடந்ததும் பிள்ளையார் கோவிலை அடைந்தார். அவருக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்தே அந்தப் பிள்ளையார் கோவிலை அருகிலுள்ள காலியிடத்துடன் சேர்த்துப் பார்த்துப் பழகிவிட்டு திடீரென்று ஒருநாள் அந்தக் காலியிடத்தில் ஒரு சிவன் கோவில் முளைத்ததை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. அது நடந்து பல வருடங்களான பின்னும் இன்னமும் அவர் அந்தக் கோவிலினுள் ஒருமுறை கூட நுழைந்ததில்லை.

மெல்லப் பிள்ளையார் கோவிலில் நுழைந்ததும் கோவிலுக்கே உரிய வாசனை வந்து அவர் மீது கவிந்தது. கூட்டம் அவ்வளவாயில்லை. சற்றுநேரம் சுற்று முற்றும் வேடிக்கை பார்த்துவிட்டு சன்னிதிக்கு முன்நின்று கும்பிட்டு விட்டுத் திரும்பியவர், தன் தெருமுனையில் இருக்கும் பாலாஜி கோவிலுக்குள் நுழைவதைப் பார்த்தார். ஒருநொடி யோசித்தவர் சட்டென்று அங்கிருந்து அகன்று கோவிலின் பக்கவாட்டுக் கதவின் வழியே வெளியேறினார்.

மரத்தடியில் இளைப்பாறி விட்டுப்போகும் திட்டத்தை விடுத்து வேகமாகப் பிரதான சாலைக்கு வந்தார். வள்ளலார் பள்ளி மைதானத்தின் திசையில் சாலையைக் கடக்க எத்தனித்தவர் மனதை மாற்றிக் கொண்டவராக மறுபக்கம் திரும்பி காந்தி நகரை நோக்கி நடக்கத் துவங்கினார். எதிரில் தெரிந்தவர் யாரும் வந்து விடாமலிருக்க வேண்டுமென்ற யோசனையோடு.

*

பால்கனியின் சுவற்றுக் கட்டையில் முன்னோக்கிச் சாய்ந்து நின்று சற்றுத் தொலைவில் வாகனங்கள் பரபரப்பாக விரைந்து கொண்டிருந்த மேம்பாலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவரின் தோளை சுப்ரியா மெல்லத் தொட்டாள். திரும்பியவரிடம் “காபி” என்று கோப்பையை நீட்டிப் புன்னகைத்தாள். “எங்கம்மா அவன்?” என்றார் கோப்பையை வாங்கியபடியே.

“வெளிய போய்ட்டாருப்பா. கோவமா இருக்காரில்லையா? சொல்லல. கோவம் குறைஞ்சதும் வந்துடுவார்” என்றாள்.

“நீ அவனை ரொம்ப செல்லம் குடுத்து கெடுத்து வெச்சிருக்கம்மா”

சிரித்தாள். “அப்பா நான் ஒன்னு கேக்கவா?”

“கேளும்மா. அவன் கேட்டதையே நீயும் கேக்காத. வேற ஏதாவது கேளு”

“இவ்ளோ கோவப்படறாரு. சத்தம் போடறாரு. நீங்க எப்படி இவ்ளோ கூலா இருக்கீங்க?”

சிரித்தார். சமீபத்துல அமேசான் ப்ரைம்ல “a beautiful day in the neighbourhood”-னு ஒரு படம் பாத்தேன்” என்றார்.

பதிலுக்குச் சிரித்தபடி முறைத்தாள். “I am not a perfect person. I have a temper.” சொல்லி நிறுத்தினார். “I choose how to respond to that anger” சுப்ரியா அந்த வாக்கியத்தை நிறைவு செய்ததும் இருவரின் புன்னகைகளும் உரசிக் கொண்டன.

சிறிய அமைதி. பின் சுப்ரியா கேட்டாள். ரியாக்ட் பண்றதும் பண்ணாததும் முழுக்க உங்க சுதந்திரம்ப்பா. பட் அவர் கேக்கறதுல நியாயமில்லன்னு நினைக்கிறீங்களா?”

அமைதியாக தேநீரை ஒரு மிடறு விழுங்கியவர் சொன்னார்.

“அவன் கோவத்துல நியாயம் இருக்கும்மா”

சில வினாடிகள் அமைதி நிலவியது.

“I don’t understand. இதுவரைக்கும் இந்த விஷயத்துல நான் தலையிட்டதில்ல. இப்ப நீங்க சொன்னதால கேக்கறேன். அவர் கோவத்துல நியாயம் இருக்குன்னு நீங்களே ஒத்துக்கறீங்க. அப்புறம் அவர் சொன்னதை செய்யறதுல என்னப்பா பிரச்னை? That ll solve all our problems. வந்துருங்களேம்ப்பா பேசாம இங்கேயே” என்றாள்.

பதில் சொல்லாமல் பார்வையை விலக்கித் தொலைவில் பார்த்தார்.

மீண்டும் அவர் தோளைத் தொட்ட சுப்ரியா திரும்பிய அவர் கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தாள்.

வறண்ட புன்னகை ஒன்றை உதிர்த்தவர் “I need my space” மா என்றார். அந்தக் குரலிலும் அவர் கண்களிலும் இதற்கு மேல் இதைப்பற்றிப் பேச வேண்டாமே” என்கிற கெஞ்சல் தொனித்தது. பெருமூச்சொன்றை விடுத்தவள் மௌனமாக அவர் கையிலிருந்த தேநீர்க் கோப்பையை வாங்கிக்கொண்டு அங்கிருந்து அகன்றாள்.

*

அதிகாலை மூன்றரை மணிக்குப் பார்க்கும் தெரு முற்றிலும் மாறுபட்டிருந்தது.

பகலின் துவேஷங்கள், வன்மங்கள், கோபங்கள் அனைத்தையும் துறந்து விட்டுத் தெரு ஒரு சிறுகுழந்தை போல் மலர்ந்த முகத்துடன் உறங்குவதாகத் தோன்றியது. இரவில் பெய்திருந்த லேசான மழையினால் நனைந்திருந்தது தெருவின் அழகை மேலும் கூட்டியது.

வீட்டைப் பூட்டிக்கொண்டார். தன் டிவிஎஸ் எக்ஸெல்லையும் சத்தம் வராமல் ஸ்டாண்டை விடுவித்து மெல்லத் தள்ளிக்கொண்டு தன் தெருவிலிருந்து பிரதான சாலைக்கு வந்தவர் வண்டியை உயிர்ப்பித்து ஏறி அமர்ந்தார்.

அரசு ஆஸ்பத்திரி பேருந்து நிறுத்தத்தை நோக்கி வண்டியைச் செலுத்தினார். “இங்கதான் நாங்க பஸ் ஏறுவோம் காலேஜுக்கு. முக்காவாசி புட் போர்டுதான். பதினெட்டு பத்தொம்பதுன்னு ரெண்டே பஸ் தான். பதினெட்டு ஒட்டப்பட்டி வழியாப் போவும் பத்தொம்பது வெண்ணாம்பட்டி வழியா போவும்.”

முதன்முதலில் சென்னையிலேயே பிறந்து வளர்ந்த சங்கரியை ஊருக்கு அழைத்துக் கொண்டு வந்து சுற்றிக் காட்டியது ஞாபகம் வந்தது. புன்னகைத்துக் கொண்டார். மெல்ல வண்டியை நகர்த்தி பாரதிபுரம் டெப்போ, செந்தில் நகர், என்று நகர நகர ஒவ்வொரு இடத்திலும் சங்கரியை நிறுத்தி நிறுத்தி விவரித்துக் கொண்டே வந்தது ஞாபக அடுக்குகளில் பூக்கப்பூக்க அவரின் புன்னகை பெரிதாகிக் கொண்டே போனது.

ரிட்டயர் ஆனதும் இந்த ஊரிலேயே வீடு கட்டிக்கொண்டோ வாங்கிக்கொண்டோ வந்து இருந்துவிட வேண்டும் என்று சங்கரியிடம் எத்தனையோ முறை பேசியிருக்கிறார். அதைச் செய்தும் காட்டி விட்டார். ஆனால் சங்கரி போன பின்தான் அதைச் செய்ய முடிந்தது என்பது குறித்துச் சின்ன சஞ்சலம் இருந்தாலும், இது மாதிரியான அதிகாலை உலாக்களில் ஊர் அவற்றையெல்லாம் துடைத்தெறிந்து விடும்.

யோசனைகளில் தொலைந்தவாறே அனிச்சை செயலாய்ச் சாலையில் கவனம் வைத்தபடி ஒட்டப்பட்டியை நெருங்கும் சமயம் பாக்கெட்டில் இருந்த மொபைல் அதிர்ந்தது. இந்த நேரத்துல யாரு? என்று புருவம் சுருக்கியபடி மொபைலை எடுத்துக் காதுக்குக் கொடுத்தவர், அடுத்த நிமிடம் முகம் மாற, வண்டியைத் திருப்பி, அரசு ஆஸ்பத்திரியை நோக்கி வண்டியைச் செலுத்தத் துவங்கினார்.

*

மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. வெயிலும் கூடவே இருந்ததால் கிரவுண்டில் மேட்ச் தடையின்றி நடந்து கொண்டிருந்தது.கேலரியில் அமர்ந்து மேட்சைப் பார்த்துக் கொண்டிருந்தார் மூர்த்தி. கிரவுண்டின் மறுமுனையில் மதில் சுவற்றையொட்டி வாக்கிங் போகிறவர்கள் ஆக்கிரமித்திருந்தனர்.

அருகில் வைத்த குடை இருக்கிறதா என்று திரும்பிப் பார்த்தவர் பார்வையில் சைக்கிள் ஸ்டாண்டில் தன்னுடைய எம்-80 யை நிறுத்திக் கொண்டிருந்த ரகு பட்டார். மொபைலில் அழைத்துக் கேட்கவில்லை. இருந்தும் தான் இங்கிருப்போம் என்று தெரிந்து தான் வந்திருக்கிறார் என்பது மூர்த்திக்குத் தெரிந்தது.

மெல்ல கேலரியின் படியேறி வந்தவர் மூர்த்தி அமர்ந்திருந்த படிக்கு அடுத்த படியில் அமர்ந்தார். எதுவும் பேசாமல் மேட்ச்சைப் பார்க்கத் துவங்கியவர், சற்று நேரம் சென்றதும், “அடச்சை. எப்படி கேட்ச் விடறான் பாரு. அந்த ஒசரமா இருக்கற பையன் நல்லாதான் போடறான். இப்டி பீல்டிங் பண்ணாக்கா அவுனும் இன்னாதான் பண்ணுவான்” என்றார்.

அதற்குள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் விழுந்து கொண்டிருந்த தூறல் வலுத்து மழை பெரிதாக, விளையாடிக் கொண்டிருந்தவர்கள் எல்லாரும் கேலரியை நோக்கி ஓடிவந்து இவர்கள் அமர்ந்திருந்த மூலைக்கு மறுமூலையில் தஞ்சமானார்கள்.

“மழை வராப்ல இருக்குதுனு தெரியுதில்ல? இன்னாத்துக்கு வண்டிய எடுத்துனு வந்த?” என்றார் ரகுவைப் பார்த்து.

“ப்ச்…” என்பதே பதிலாக வந்தது.

“உடம்பு இப்ப எப்படி இருக்கு? சோறு தின்ன முடியுதா?”

பதிலில்லை.

“ச்செரி… நான் கிளம்பறேன்”

“அட உக்கார்ரா. இவன் வேற இம்சைய கூட்டிகினு”

எழுந்த மூர்த்தி அமர்ந்தார்.

“இந்த வாட்டி ஊருக்கு போனப்பவும் உன் மருமவ உன்னைய அங்கயே வந்துர சொன்னாளாம்ல”

“ஆமா”

“இன்னா முடிவு பண்ணிருக்கற”

“உனுக்கு தெரியாதா?”

“அப்புடி இங்க இன்னாத்தக் கண்டுட்டன்னு இந்த ஊர விட்டு போவ மாட்டேன்னு அடம் புடிக்கிற?”

“………”

“அது சரி. நீ இன்னா என்னைய மாதிரியா”

“இன்னாடா உளர்ற”

“பொண்டாட்டி இல்லாம எப்புடி இருக்கறதுன்னு தெரியாம மருந்த குடிச்சிட்டு போய் சேந்துரலாம்னு நான் பாத்தா, நீ இன்னாடான்னா வாக்கிங் போறதென்ன, வாய்க்கு ருசியா விதவிதமா உனக்கு நீயே சமைச்சுக்கறதென்ன? மொபைல்ல படமா பாத்துத் தள்றதென்ன? புக்கா வாங்கிக் குவிக்கறதென்ன? எனுக்கு இன்னாவோ நீ உன் பொண்டாட்டி போறதுக்காகவே காத்துனு இருந்த மாதிரிதான் தெரிது”

பெருமழை ஓய்ந்து சிறு தூறல் விழுந்தபடி இருக்க, விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மேலும் தொடர முடியுமா என்று பார்ப்பதற்காக மைதானத்தில் இறங்கி பிட்ச்சை நோக்கிப் போய்க் கொண்டிருந்தனர்.

மெல்ல எழுந்தார் மூர்த்தி. “அதுசரி. உனக்கு இன்னா தோனுதோ நீ பண்ற. எனுக்கு இன்னா தோனுதோ நான் பண்றேன். மழ திரும்ப பெருசாவறதுக்கு முன்ன வூட்டுக்கு கெளம்பற வழியப்பாரு” என்று நிதானமான குரலில் அழுத்தமாய்ச் சொல்லிவிட்டு மெல்ல ஒவ்வொரு படியாய் இறங்கத் துவங்கினார்.

அவருடைய அமைதி ரகுவை மேலும் உசுப்பியது. “உன்ன மாதிரி மனசாட்சி இல்லாம என்னால எல்லாம் இருக்க முடியாது. உங்கிட்ட போய் கேட்டேன் பாரு. இனிமே வந்தன்னா ஏன்னு கேளு” என்று மூர்த்திக்குக் கேட்பது போல் சத்தமாய்க் கூறினார்.

இறங்கிக் கொண்டிருந்த மூர்த்தி இவர் சொன்னது காதில் விழுந்து விட்டதென்பதை ஆமோதிப்பதாய்த் திரும்பிப் பார்க்காமலே கையை உயர்த்திக் காட்டியபடி இறங்கினார்.

ரகு அங்கேயே அமர்ந்து மூர்த்தியின் உருவம் மெல்லப் படியிறங்கி மறைவதைப் பார்த்தபடி இருந்தார். மீண்டும் மழை வலுக்கத் துவங்கியிருந்தது.

*

காலையில் இந்நேரத்தில் யார்? வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டு இண்டக்ஷன் அடுப்பை நூறில் வைத்துவிட்டுச் சமையலறையிலிருந்து வெளிவந்து பார்த்த மூர்த்தி, மீண்டும் உள்ளே புகுந்து கொண்டார். நூறில் இருந்த அடுப்பைப் பெரிதாக்கி அந்த ஒரு டம்ளர் பாலைக் கொதிக்க விட்டு அணைத்தவர் பிரிட்ஜிலிருந்து இன்னொரு டம்ளர் பாலை எடுத்துக் கொதிக்க வைத்தார்.

இரண்டு டம்ளர்களில் காபியுடன் வெளிவந்தவர் டீபாயில் ஒரு டம்ளரை வைத்து விட்டு இன்னொரு டம்ளரை உறிஞ்சிக் குடிக்கத் துவங்கினார். மற்றொரு டம்ளரை ரகு எடுத்துக் கொண்டார். காபி தீர்ந்ததும் ரகு வாசலில் சென்று காத்திருக்க, மூர்த்தி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் வரவும், இருவரும் சேர்ந்து நடக்கத் துவங்கினர்.

ஒரு மணிநேரம் வார்த்தைகளற்ற நடை. முடிந்து லேசாக வியர்த்து இருவரும் ரயில் நிலைய பிளாட்பாரத்தின் முனையில் நுழைந்து வழக்கமாய் அமரும் பென்ச்சில் அமர்ந்ததும், இரண்டு நிமிடங்கள் தொடர்ந்த மௌனம். எழுந்து போன ரகு, கையில் இரண்டு பேப்பர் கப்புகளுடன் வந்தார். ரயில் நிலையத்தின் வி.எல்.ஆர் ஸ்டாலில் போடப்படும் ஏலக்காய்த் தேநீர். எப்போதெல்லாம் இந்தப் பக்கம் வாக்கிங் அமைகிறதோ அப்போதெல்லாம் பழக்கம்.

தேநீரை மெல்ல உறிஞ்சத் துவங்கிய ரகு “சாரிடா” என்றார்.

“அதெல்லாம் இன்னாத்துக்கு”

“அதுசரி அன்னிக்கி நான் மருந்தக் குடிச்சிட்டு ஆஸ்பத்திரில அட்மிட்டானப்ப என் புள்ள உனக்கு போன் பண்ணி முக்கா மணிநேரம் கழிச்சுதான் வந்தியாமா? உன் வூட்ல இருந்து ஆசுபத்திரிக்கி பத்து நிமிசம் கூட ஆவாதே? அவ்வள காலைல இன்னா பண்ணினு இருந்த?”

“சும்மா வண்டியெடுத்துகினு அப்புடியே ஒட்டப்பட்டி போயி காலேஜாண்ட போயிட்டு, வெண்ணாம்பட்டி வழியா திரும்பி வரலம்னு போனேன்.”

ரகு அமைதியாக இருந்தார். பின்தொடர்ந்தார்.

“சங்கரி ஞாவகம் வந்துருச்சாக்கும்”

இப்போது மூர்த்தி அமைதியாக இருந்தார்.

அவர்கள் இருவருக்கிடையே இருந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு அந்த ஸ்டேஷனில் நிற்காத ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் தடதடத்து மறைந்தது.

மேலும் சில நிமிடங்கள் அமைதிக்குப் பின் சொல்லி வைத்துக் கொண்டாற் போல் இருவரும் ஒன்றாக எழுந்து ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்தனர். மௌனத்தை மூர்த்தி கலைத்தார்.

“இன்னிக்கு பூண்டு குழம்பு வெக்கலாம்னு இருக்கேன். வரியா?”

“வேற என்ன பண்ண போற?”

“உனக்கு என்ன வேணும்?”

“உருளைக்கிழங்கு காரப்பொரியல் செஞ்சு வெய்யி. ஒரு ரெண்டு மணிக்கா வரேன்”

“சரி”.

ரகு மெல்ல ஸ்டேஷனின் பக்கவாட்டிலிருந்த ரயில்வே குடியிருப்புச் சாலையின் மங்கலான வெளிச்சத்தில் திரும்பி நடக்கத் துவங்கினார்.

அவரையே பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தி மெல்லக் குடையை விரித்தார்.

மழை மீண்டும் லேசாகத் தூறத் துவங்கியிருந்தது.

***

Inspired by : The Big Bang Theory Season 10 Episode 16 : The Allowance evaporation

ஹரீஷ் கணபதி

தொடர்புக்கு : harishganpat@gmail.com

புலன் (சிறுகதை)

0

கு. ஜெயப்பிரகாஷ்

பவித்ரா ஏன் இப்படிச் செய்தாள்? அவள் இப்படி செய்திருக்கக் கூடாது. ஒருவேளை அவளின் வலியை என்னால் முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறேனா!? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது. பயமாகவும் இருக்கிறது. அவள் இல்லாமல் இந்த வீதிகளில் நான் இன்னும் நடக்கப் பழகவில்லை. அவள் இருந்தால் தைரியமாக இருப்பேன். அவள் பயன்படுத்தும் ஜாஸ்மின் செண்ட்டின் வாசனை என் நினைவுகளை அழுத்துகிறது. அவளின் மிருதுவான கைகளும். கீச்கீச் என்று ஒலிக்கும் குரலும் என் மண்டைக்குள் சுற்றிக் கொண்டேயிருக்கிறது. ஏன் அவள் அப்படிச் செய்தாள்? பல நேரங்களில் பவித்ராவைப் போல் எனக்கும் கண்கள் தெரிந்திருந்தால் இந்த உலகை ரசித்திருப்பேன் என்று ஆசை ததும்ப அவள் சொல்லும் விஷயத்தைக் கண்கொண்டு பார்க்க ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்று எனக்கு கண் பார்வையில்லை என்பதை மிகுந்த பாக்கியமாகப் பார்க்கிறேன். இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது? இப்படி வக்கிரம் பிடித்த மனிதர்களின் மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?.

பவித்ரா நீ அப்படிச் செய்திருக்கக் கூடாது. என் பகலும் இரவும் உன் வருகையை வைத்தே அறிந்திருந்த எனக்கு இப்போது எந்த வித்தியாசமும் தெரியவில்லை. நிலைத்த தனிமைக்குள் சிக்கிக்கொண்டவளாய் நான் இருக்கிறேன். வண்ணங்களை எனக்கு நீ அறிமுகப்படுத்த முயற்சித்தாய். பாலின் சுவையும் வாசனையும் தான், வெண்மை என்ற சொல்லுக்குள் எனக்குப் புலப்படுகிறது. ஆனால் அதற்கு முன் ஒருநாளும் அந்த வெண்மையை நான் உணர்ந்ததில்லை. மஞ்சளின் சுவையை மாம்பழத்திலும் சிவப்பின் சுவையை ஸ்ட்ராபெர்ரி பழத்திலும் எனக்கு நீ மட்டும்தான் அறிமுகப்படுத்தினாய். ஒவ்வொரு வண்ணமும் எனக்குள் சுவையாகவும் வாசனையாகவுமே அறிய முடிகிறது. என்னுள் இப்படியான அறிதலை நீதானே நிகழ்த்தினாய். இனி யார் எனக்கு இப்படி எல்லாம் சொல்லித் தருவார்கள். இந்தப் புலப்படாத உலகை இனி யார் எனக்கு புலப்பட வைப்பார்கள். குழம்பியிருக்கிறேன். உன்னுடைய மரணம் இந்த உலகின் மீது எனக்கு மிகுந்த பயத்தை விதைத்திருக்கிறது.

என்னைச் சுற்றிப் புழங்கும் மனிதர்களின் வாசனைகளும், அவர்களின் பேச்சொலிகளும் சின்னச்சின்ன அசைவுகளின் சப்தங்களும் மட்டுமே அறிந்திட்ட என்னால் இப்படி அவர்களின் அகமனதின் குரூரத்தை அனுமானிக்க முடியாமல் போனதே! குரலை வைத்து ஆண் பெண் என்று அறிந்திடும் என்னால் எப்படி அவர்களுடன் சகஜமாகப் பழகி வாழ்ந்திட முடியும்? ஒருமுறை ஒரு ஆண் உன் கண்களைப் பார்த்துப் பேசாமல் உடலைப் பார்த்துப் பேசுகிறான் என்று சொன்னபோது அதனால் என்ன என்று நான் கேட்க நீ என்மீது கோபித்துக் கொண்டது நினைவுக்கு வருகிறது.

இப்போது யார் என்னை எந்தக் கோணத்தில் எங்கு பார்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. கண்கள் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கண்களை நான் தொட்டுப் பார்த்திருக்கிறேன். அது எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். கண்ணீர் வடிக்க அது தயாராகவேயிருக்கும். அப்படியான ஒரு உறுப்பு என்னைச் சுற்றி நிறைந்திருக்கிறது. அதன் கோணங்கள் அதன் உள் நோக்கங்கள் எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. மனிதக் கண்கள் போக செயற்கைக் கண்களைக் கொண்டு எல்லோரையும் படம் பிடிக்கிறார்கள்.

அது இன்னும் ஆபத்தானது. அப்படி என்னையும் படம் பிடித்திருக்கிறார்கள். ஆனால் அதில் எனக்கு பயமில்லை. என் உருவம் எனக்கே தெரியாது. அந்த அருவருக்கத்தக்க உடலை நான் பார்த்ததில்லை. ஆனால் உணர்ந்திருக்கிறேன். பசியின் போதும், மாதவிடாயின் போதும் நான் என் உடலை உணர்ந்திருக்கிறேன். அதன் வலிகள் என்னை இயங்க விடாமல் செய்திருந்தது. ஒருவேளை எனக்கு கண்பார்வை தெரிந்திருந்தால் என் உடல் தோற்றம் பெரும் சுமையாக இருந்திருக்கலாம்.

என் தோலின் வண்ணமும் என் உயரமும் என் மூக்கும் முழியும் தலைமுடியும் இப்படி இதுபோல அதுபோல இருந்திருக்கலாம் என்று ஏக்கப்பட்டிருக்கலாம். தோற்றம் குறித்த தாழ்வு மனப்பான்மையில் சிக்கித் தவித்திருக்கலாம். உடல் ஒரு சுமைதான். அதன் வடிவங்கள் அவளுக்குச் சுமையாக இருந்திருக்கிறதா அல்லது அவள் மனதுக்குள் எதையோ போட்டு குழப்பிக் கொண்டாளா..

1

ஒருமுறை அதே செண்ட்டை இன்னொரு நபர் பூசியிருந்தார். ஆனால் அந்த வாசனை எனக்குப் பிடிக்கவில்லை. மிகவும் தூக்கலாக இருந்தது. ஒருகட்டத்தில் அந்த வாசனையால் எனக்கு மயக்கமே வந்துவிட்டது. பவித்ராவின் உடலோடு சேர்ந்து இழைந்து வீசும் அந்த மல்லிகை மணமே எனக்கு எப்போதும் விருப்பம். மல்லிகைப்பூவில் கூட அப்படியான மணத்தை என்னால் உணர முடியவில்லை.

அவளின் மென்மையான கைகளைத் தொடும்போது மல்லிகைப்பூவை தொடுவதைப் போன்ற ஓர் உணர்வை என்னால் கிரகிக்க முடிகிறது. அவளின் குரல் என் மண்டைக்குள் சுற்றிக் கொண்டேயிருக்கிறது. சொர்ணலதாவின் குரலை ஒத்திருக்கும் அவள் குரல் மயக்கமூட்டும் வஸ்துவைப் போன்றது.

என்னிடம் எல்லாவற்றையும் சொல்லும் அவள் இப்படிச் செய்யப் போகிறேன் என்று ஏன் என்னிடம் சொல்லாமல் இப்படிச் செய்துவிட்டாள். அவள் ஒருபோதும் இப்படியான காரியங்களில் ஈடுபட மாட்டாள். சின்னச்சின்ன விஷயத்தைக்கூட என்னிடம் கொட்டித் தீர்க்கும் அவள் இதை மட்டும் ஏன் சொல்லவில்லை?

கண்ணை மூடிக்கொண்டால் இருள் கவிழும் அதான் கருப்பு என்றாய். ஆனால் எனக்குத் தெரிந்தது தான் கருப்பு வண்ணம் என்று என்னால் எப்படிச் சொல்ல முடியும். என் முன்னே ஒன்றுமே இல்லை. சின்னச் சத்தங்களையும் வாசனைகளையும் என்னைத் தீண்டும் காற்றையும் தாண்டி என்னால் ஒன்றும் சொல்ல முடியாது. என்னால் உணர முடிந்தவற்றை தான் சொல்ல முடியும்.

ஆனால் நீயோ வடிவங்களைப் பற்றியும் வண்ணங்களைப் பற்றியும் அதிகம் பேசுவாய். அவை இரண்டும் என் புலன்களுக்கு அப்பால். ஆம்.. அவை எனக்குப் புலப்படுவதில்லை. ஆனால் உன்னைவிட தீர்க்கமாக வாசனையையும் ஒலியையும் என்னால் நுகரமுடியும். அதில் நீ என்னிடம் தோற்றிடுவாய்.

வடிவங்களைத் தொட்டு அனுமானிக்கவும் கற்றுக் கொண்டேன். அது உன்னால் தான் சாத்தியமானது. என்னுள் இப்படியான அறிதலை நீதானே நிகழ்த்தினாய். இனி யார் எனக்கு இப்படி எல்லாம் சொல்லித் தருவார்கள்.

2

என் அப்பா தன்னுடைய அக்காவின் மகளையே திருமணம் செய்து கொண்டார். நெருங்கிய சொந்தமாக இருந்ததாலும் மலடிப்பட்டம் எளிதில் கிடைத்து விட்டது. இரண்டு முறை கரு தங்கி ஒன்றிரண்டு மாதங்களில் கலைந்து விட்டது. ஐந்து வருடம் கழித்து அடுத்த குழந்தை பிறந்தது. இரண்டு வருடத்தில் அந்தக் குழந்தையும் இறந்து போனது. அதன் பிறகு மூன்று வருடம் கழித்தே நாங்கள் பிறந்தோம். பவித்ரா பிறந்து இருபது நிமிடம் கழித்து நான் பிறந்தேன். இருபது நிமிடம் இடைவெளியில் பிறந்தவளை அக்காவென்று சொல்லிக் கூப்பிட எனக்கு விருப்பம் இல்லை. மீறி அக்கா என்று கூப்பிட்டாலும் அது சங்கோஜமா இருந்தது எங்களுக்கு. பவித்ரா, பார்கவி என்று எங்களுக்குப் பேர் வைத்தார்கள். பவித்ரா ஐந்து வயது வரையில் பேசவேயில்லை. எதற்கெடுத்தாலும் சைகையிலே செய்வாளாம். எனக்கும் பார்வையில்லை. என் பாட்டி அம்மாவை ஏசுவதை காதுபடக் கேட்டிருக்கிறேன்.

“குறை ஒன்றுமில்லை
மறை மூர்த்திக் கண்ணா
குறை ஒன்றுமில்லை கண்ணா” என்ற பாடலை அம்மா எப்போதும் முணுமுணுத்தபடி இருப்பாள்.

அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் கண்ணனைத் திட்டித் தீர்க்கவேண்டும் போல் இருக்கும். ஆனால் அம்மாவின் குரல் மனதிற்கு களிம்பாகவே இருக்கும். அவளோடு சேர்ந்து பவித்ராவும் பாடக் கற்றுக் கொண்டாள்.

அம்மாவின் குரல் மங்கியபோது பவித்ராவின் குரல் ஓங்கியது. அவளின் குரல் ஒரு மருந்து.

கசப்பைக் கரைக்கும் இனிப்புத்துண்டு. அவளின் வடிகால் பாட்டுப் பாடுவது தான். தினமும் பாடல்களை பாடிக்காட்டுவது அவளது தினசரிகளில் ஒன்றாகியிருந்தது. புத்தகங்களைப் படிப்பதும் அதில் இருக்கும் கவிதைகளைப் பாடலாகப் பாடுவதுமாக இருப்பாள்.

3

சூரியஓளி கண்ணைக் கூசுகிறது. என்னால் சூரியனை நேருக்குநேர் பார்க்க முடியவில்லை. அதன் ஒளிக்கதிர்கள் என் கண்களைத் திறக்கவிடாமல் தடுக்கிறது. அதையும் மீறிப் பார்த்தால் கண்கள் மிசுமிசுவெனத் தெரிகிறது. சிறிதுநேரம் கண்பார்வைக்கு ஒரு தடுமாற்றம் ஏற்பட்டு விடுகிறது. இப்படி எதுவும் எனக்கில்லை. என் கண்களுக்குக் சூரியனே தெரியவில்லை. என் கண்களுக்குப் புலப்படும் ஆற்றல் அந்த சூரியனுக்கும் இல்லை. ஆனால் அவற்றை உணர முடிகிறது.

சூரியன் உமிழும் ஒளியைக் கொண்டு தான் எல்லாம் நிகழ்கிறது என்று பவித்ரா சொல்வாள். பகலைப் பிரசவிக்கும் ஆற்றல் சூரியனுக்கே இருக்கிறது. சூரியன், வெளிச்சம், ஒளி எல்லாம் வெறும் சொற்கள் தான் எனக்கு. அதை என்னால் உணர முடியவில்லை. ஆனால் ஒளியுடன் வெப்பம் இணைந்திருக்குமா? அல்லது ஒளியும் வெளிச்சமும் சூடானதா?

வெயில் என்னைத் தொடும்போது உடல் சுடுகிறது. என்னைப் பிழிந்து வியர்வை சுரக்கிறது. வெளிச்சம் தரும் லைட்டுகள் சூடாக இருக்கிறது. இது உண்மையானால் வெளிச்சத்தை, சூரிய ஒளியை என்னால் உணர முடியும். அந்தச் சூட்டை நான் அனுபவித்திருக்கிறேன்.

பவித்ராவிடம் இந்தப் பதிலை சொல்ல வேண்டும் அதற்கு முன் எனக்கு இன்னொரு கேள்வியும் எழுகிறது. மழைக்காலங்களில் வெளிச்சம் இல்லாமல் போய்விடுமா? ஏன் அப்போது உடல் குளிரில் நடுங்குகிறதே.

வெளிச்சம் இருந்திருந்தால் சூடாக இருந்திருக்குமே. வெளிச்சத்தின் அளவு அதிகமாக இருந்தால் சூடாகவும் அளவு குறைந்திருந்தால் குளிர்ந்தும் இருக்குமா!

பாலில் சர்க்கரையின் அளவு கூடும்போதும் குறையும்போதும் ஏற்படும் சுவையின் அளவைப்போல இதுவும் இருக்குமோ! அல்லது வெளிச்சம் கோபமாக இருக்கும்போது சூடாகவும் சந்தோஷமாக இருக்கும்போது குளிர்ந்தும் இருக்குமா?

என்னால் முழுவதுமாக இந்த வெளிச்சத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. புரிந்துகொள்ளாமல் எப்படி அதை நான் அனுபவிப்பது?

இப்படிக் குழப்பமானக் கேள்விகளை எல்லாம் பலமுறை அவளிடம் கேட்டிருக்கிறேன். இருவரும் ஒன்றாகவே வளர்ந்தோம். ஒவ்வொரு படிநிலையிலும் எனக்குத் தோன்றும் கேள்விகளை நான் அவளிடமே கேட்பேன். அவளும் சளைக்காமல் எனக்கு பதில் சொல்வாள்.

அவளா இப்படிச் செய்தாள்? என்னால் நம்ப முடியவில்லை.

4

நானும் அவளும் அன்று ஒன்றாகத்தான் குளித்தோம். எங்களைப் படம் பிடித்தவன் யார்..! அவனால் தானே பவித்ரா இறந்தாள். இல்லை பவித்ராவின் மனப்போராட்டமா!

ஆணைப்போல பெண்ணில்லை. பெண்ணைப் போல ஆணில்லை. ஆனால் இருவரின் உடலும் இரத்தமும் சதையும் தானே. ஒரு பெண்ணின் நிர்வாணத்தை அவன் எப்படி பகிரங்கப்படுத்தலாம்? உடலின் மீது கட்டமைக்கும் கௌரவமும் பெருமையும் ஏன் பெண்ணின் மீது வைக்கப்படுகிறது. பல சம்பவங்களைக் கேட்டிருக்கிறேன். செய்தியாகக் கடந்திருக்கிறேன். ஆனால் பவித்ரா என் உடன்பிறந்தவள். அவளின் இழப்பை என்னால் ஏற்க முடியவில்லை. தொலைதூரத்தில் எங்கோ அலைந்து கொண்டிருக்கிறாள். அவளும் இப்போது புலப்படாமல் சென்றுவிட்டாள். அவளின் நினைப்பும் வாசனையும் குரலும் என் நினைவில் அலையலையாய் எழுந்து ஆக்ரோஷம் கொள்கிறது.

5

பவித்ராவுடன் நானும் தான் குளித்தேன் அவன் என்னையும் தான் படமெடுத்தான்.

அவன் எப்படி இருப்பான் என்று எனக்குத் தெரியாது. அவனது ரத்தம் முழுக்க அழுக்கேறி இருந்திருக்கலாம். மர்மமான அவனுடைய பார்வைக்கு நான் எப்படித் தெரிந்திருப்பேன்?

என் உடலை நானே பார்த்ததில்லை. என் உடல் அருவருப்பாக இருந்திருக்குமோ? கண் குருட்டைப்போல என் உடலும் குருட்டுத்தன்மையில் இருந்திருக்குமோ? அவனை பிடித்துக் கேட்க வேண்டும். அவனைப்போல நானும் அருவருப்பாக இருந்தேனா, குருட்டில் சிக்கிக்கொண்டது நீயா நானா?

***

கு. ஜெயப்பிரகாஷ்

ஆசிரியரின் படைப்புகள் – “சா” குறுநாவல்

கனவின் வழியே (சிறுகதை)

1

R.நித்யாஹரி

தை ஒரு அடர்வனம் என்று கூறிவிட முடியாது. ஆனால் நான் பார்த்திராத ஒரு காட்டுப்பாதையாக அது இருந்தது. அங்கிருக்கும் ஒரு ரயில் தண்டவாளத்தினை ஒட்டி நான் நடந்து கொண்டிருக்கிறேன். என்கூடவே நீளமான அங்கி அணிந்த நபர் ஒருவர் கையில் ஒரு ஸ்டாப் க்ளாக்கை பிடித்துக்கொண்டு வருகிறார். பல சேதங்களுடன் இருக்கும் அந்த ரயில் பாதை ஒரு பெரும் பாறையைக் குடைந்து அதனுள் செல்கிறது. அதை நெருங்கியதும் நான் முடிந்த அளவு வேகமெடுத்து ஓடுகிறேன் அந்த டனல் அருகே ஒரு தொண்டுகிழவி ஒரு குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாள். நான் என் வேகத்தை சற்று குறைத்து இதற்குள் பாதை இருக்கிறதா? செல்லலாமா? என்று வினவுகிறேன். அதற்கு அவள் “இந்த பூமியே தொறந்து தான் கெடக்கு தாயீ போ… போ…” என்கிறாள். நான் திரும்ப வேகமெடுத்து அந்த டனலுக்குள் ஓடுகிறேன்.உள்ளே இருள் அப்பிக் கிடக்கிறது. கண்ணுக்கு எட்டிய வரைக்கும் கருக்கிருட்டு பரவி இருக்கிறது… சிறு பறவைகளின் கீச்..கீச் ஒலிகளும், பூச்சிகளின் ரீங்காரமும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது. என் வேகத்தைக் குறைக்காமல் நான் ஓட அந்த அங்கி அணிந்த நபரும் என்னுடனே ஓடி வந்து கொண்டிருக்கிறார். கூடவே டிக் டிக் சப்தமும். அது ஒரு கண்மூடித்தனமான ஓட்டம். சற்று நேரத்தில் தூரத்தில் சிறிய வெளிச்சம் தென்படுகிறது. அதை நோக்கி என் கால்கள் இன்னும் வேகமெடுத்து ஓடுகிறது. மெல்ல வெளிச்சக்கீற்றுக்குள் புகுந்து டனலை விட்டு நான் வெளியேறுகையில் அந்த அங்கி நபரைக் காணவில்லை. அங்கே ஒரு ஐஸ்க்ரீம் வியாபாரி ஒரு ஐசை கையில் நீட்டியபடி நிற்கிறார். நான் அதை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்கிறேன்.

காலையில் எழும்போது கனவு நன்றாக நினைவில் இருந்தது. ஒரு குச்சி ஐசுக்கா அப்படி ஒரு வெறித்தனமான ஓட்டம் என்று நினைத்து மெலிதாய் புன்னகைத்துக் கொண்டேன். அன்றுதான் எனக்கு பனிரெண்டாம் வகுப்பு தேர்வின் முதல்நாள். தேர்வுகள் அனைத்தும் முடிந்து நல்ல மதிப்பெண்களும் பெற்ற பின் அப்பாடா பரீட்சைக்கான ஓட்டம் முடிந்தது என்று நினைத்த நொடியே அந்தக் கனவில் ஓடியதுபோல பரீட்சைக்கு தொடர்ந்து படித்துவிட்டதாய் தோன்றியது. அடுத்த நொடியே, அப்படியானால் இந்த மதிப்பெண்கள் தான் நான் பெற்ற குச்சி ஐஸா என்று எழுந்த சிந்தனையில் நகைச்சுவையும் கூடவே கொஞ்சம் சுவாரஸ்யமும் இருந்ததாகப் பட்டது.

அதன் பிறகு அது கௌன்சலிங்குக்காக நான் காத்திருந்த காலம். அப்போது வந்த கனவொன்றில் நான் ஒரு பெரிய மாளிகையினுள் நிற்கிறேன். அந்த மாளிகை எங்கும் சிவப்புநிற பின்னணியில் தங்கநிற வண்ணத்தில் அழகழகான ஓவியங்கள் வரையப் பெற்றிருக்கிறது. என் அருகே அரேபியன் நைட்ஸ் டிராமாவில் வரும் ஒரு மந்திரவாதியின் தோற்றத்தில் நீளமான தாடியும் ஜிலுஜிலு ஜிப்பாவும் அணிந்த ஒருவன் நிற்கிறான்.

அந்த மாளிகையில் எங்கு நோக்கிலும் அறைகள். அனைத்தும் பூட்டப்பட்ட அறைகளாக இருக்கின்றன. அவன் என் கையில் ஒரு சாவியைத் தந்து உனக்கான அறையை கண்டுபிடித்து நீயே கதவை திற. உனக்கு மூன்று சந்தர்ப்பங்கள் என்று கூறுகிறான். அவ்வளவுதான் நான் விழித்துவிட்டேன்.

அந்த மந்திரவாதி தந்த சாவி இன்னும் கையில் இருப்பதாக ஒரு உணர்வு. நான் கைகளை விரித்துப் பார்த்துக் கொண்டேன். அந்த அளவுக்கு நிஜத்தில் நடந்தது போலவே இருந்தது அந்தக் கனவு.
அதுவரை காணாத காட்சியை கனவில் காண முடிகிறதென்றால் கற்பனையின் ஆற்றலை நினைக்க எனக்கு பிரம்மிப்பாய் இருந்தது. என் கையில் இருக்கும் சாவிதான் நான் பெற்ற மதிப்பெண்கள் என்றும் பூட்டிய அறைகள் தான் கல்லூரிகள். அந்த அறைகளில் ஒன்றுதான் நான் தேர்வு செய்யப்போகும் கல்லூரி என்று எனக்கு வந்தக் கனவை பொருத்திப் பார்க்கையில் இன்னும் சுவாரஸ்யம் கூடி போனது.

பிறகு சம்மந்தமே இல்லாத கனவுகளைக் கூட எப்படி நிஜத்துடன் சம்மந்தப்படுத்திப் பார்ப்பது என்று நான் சிந்திக்கத் தொடங்கினேன். ஆனால் பெரும்பாலும் கனவுகள் முழுதாக நினைவில் இருப்பதில்லை. அல்லது கனவுகள் வருவதே இல்லை. கனவெல்லாம் நிஜமாகிறது என நம்பவில்லை என்றாலும் நிஜத்திற்குத் தொடர்புபடுத்திக் கொள்வது பிடித்திருந்தது. நம் அனைவருக்குள்ளும் ஒரு குழந்தைத்தனம் ஒளிந்திருப்பது போல ஒரு கிழவியும் ஒளிந்திருக்கிறாள் போலும், அவள்தான் இரவில் கனவின் வழியாக நமக்குக் கதை சொல்கிறாள். கனவின் வழியே காட்சிகளை மட்டும் நாம் காண்பதில்லை நம்முடைய ஐம்புலன்களையும் கனவு ஆட்கொள்கிறது. அதில் வரும் டூலிப் மலர்களும், ரோஜாக்கூட்டமும் அதன் மணத்தை நிரப்பிவிட்டே செல்கிறது.

கல்லூரியில் சேர்ந்த சில மாதங்களில் வந்த கனவொன்றில் நான் ஒரு நீண்ட நெடுஞ்சாலையில் தனியாகப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். சாலையின் இருபுறமும் வெட்டவெளியாக இருக்கிறது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மரங்களே இல்லை. தரையெங்கும் பச்சைப்புற்கள் மண்டிக் கிடக்கிறது. வானம் மேகம் ஏதுமின்றி பளிச்சென்று நீலப்போர்வை போர்த்திக் கொண்டிருந்தது. நான் ஒரு சிவப்புநிற சுடிதார் அணிந்து என்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறேன். நான் யாரையோ தேடுவதாக ஒரு உணர்வு. சரியாக யூகிக்க முடியவில்லை. அந்த சாலையில் இருக்கும் என்னுடைய மாமாவின் கடை இருந்த இடத்தில் இப்போது சரக்கொன்றை மரம் ஒன்று மஞ்சள்நிறப் பூக்களை தரை எங்கும் உதிர்த்து உயர்ந்து நின்றிருந்தது.

இந்த கனவு வந்து சரியாக நான்கு நாட்களில் மாமா ஒரு சாலைவிபத்தில் உயிரிழந்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என்னை அழைத்துப் போக அப்பா வந்திருந்தார். பயணம் முழுவதும் மாமாவின் நினைவே நிரம்பி துக்கம் தாளாமல் இருந்தது.

சிறுவயதில் “என்ன வேலை செய்யிறீங்க மாமா?” என்றுக் கேட்டால்
“அதுவா… வெட்டி நிமித்துற வேலை” என்று நடித்துக் காட்டிக் கூறுவார்.
மாமா மரவேலை செய்பவர். மரக்கதவுகளில் அழகான வேலைப்பாடுகள் எல்லாம் செய்வார். எங்கள் ஊரில் இருந்த தேவாலயத்தின் கதவுகள் கூட மாமா வடிவமைத்தது தான். இறந்த மரத்திலும் பூ பூக்கிறது உங்கள் கைவண்ணத்தில் தான் மாமா என்று கூறுவோம். மனதில் மாமாவின் நினைவுகள் முழுதுமாகச் சூழ்ந்திருந்தது. கண்ணீர் கட்டுக்கடங்காமல் வழிந்தபடியே பயணம் முழுதும் கழிந்தது.

அன்று அங்கே மாமாவின் உடலுக்கு அருகே அமர்ந்து அவரின் தாடையைக் கையில் தாங்கியபடி பாட்டி அழுதது தாங்க முடியாத துயரமாக வெடித்தது. “நான் கல்லாட்டம் இருக்கையிலே உனக்கென்ன அவசரம்” என்று பாட்டி ஒரு நூறுமுறையாவது புலம்பி அழுது தீர்த்தார். மூன்று தினங்கள் கழித்து கல்லூரிக்கு திரும்பும் போதுதான் அப்பாவிடம் அந்த கனவை பற்றி கூறினேன்.
“இது ஒரு யதேச்சையாக வந்த கனவுதான். கனவெல்லாம் நிஜமாகாது. அப்படி எல்லாம் நீ என்னைக்கும் யோசிச்சுறாத” என்று அப்பா கூறியது சரியாகத்தான் இருக்கும் என எண்ணிக் கொண்டேன்.

அதன் பிறகு கனவு அச்சத்தை தரக்கூடிய விஷயமாக மாறி இருந்தது. அதன் பிறகான நாட்களில் கனவெதுவும் வராதது அல்லது நினைவில் தங்காதது சற்று ஆறுதலாக இருந்தது.

கல்லூரியின் இரண்டாம் ஆண்டின் ஈவன் செமஸ்டர் தொடங்கியிருந்தது. வகுப்பில் வழக்கம் போல பாடம் நடந்து கொண்டிருந்த ஒருநாள் யாரோ என்னைக் கவனிப்பது போன்ற உணர்வில் திரும்பி ஜன்னலுக்கு வெளியே நான் பார்க்க அவன் என்னையேப் பார்த்தபடியிருந்தான். முதலில் அவன் என்னைத்தான் பார்க்கிறானா என்ற சந்தேகம் எழவே என் பின்னால் திரும்பி வேறு யாரையும் பார்க்கிறானா என்று பார்த்துவிட்டு மீண்டும் அவனைப் பார்த்தேன். என் சந்தேகத்தைப் புரிந்து கொண்டவன் போல நீதான் என்று சுட்டுவிரலால் என்னைக் காட்டி ஒரு புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

விழித்தபடியே கண்ட கனவை போல் இருந்தது அந்த காட்சி. நிஜமாகவே இப்போது ஒருவன் இங்கே நின்று என்னைப் பார்த்தானா என்று நான் குழம்பிக் கொண்டிருக்கையில் அவன் மீண்டும் என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி அந்த ஜன்னலைக் கடந்து பைனல் இயர் வகுப்பிற்குள் சென்றான்.

அவன் விழியில் ஒரு ஈர்ப்பும் அந்த புன்னகையில் குறும்பும் நிறைந்திருந்தது. இதென்ன சில நொடிகளிலேயே ஒருவன் நம்மை ஈர்த்துவிட்டானா என்ற சிந்தனையை ஒத்திப்போட்டு பாடத்தை கவனிக்க முயற்சித்துத் தோற்றுக் கொண்டிருந்தேன்.

மறுநாளும் அதே கதை, நான் கவனிக்கவில்லை என்றால் சத்தம்போட்டு பக்கத்தில் இருப்பவனிடம் பேசி என்னை ஈர்ப்பதற்காக அவன் செய்து கொண்டிருந்த அனைத்துமே அதன் வேலையை கச்சிதமாகச் செய்து கொண்டிருந்தது.

அன்று என் கனவில் ஒரு பெரிய யானை வந்தது. இருட்டில் நின்றிருக்கும் யானையை தூரத்திலிருந்து பார்க்கையில் கணிக்க முடியாத ஒரு பெரிய உருவமாகத் தெரிந்தது. அதை விளங்கிக் கொள்ள நெருங்க நெருங்கத்தான் அதன் விஸ்வரூபம் புரிந்தது. அப்படியும் அது கண்களுக்குள் அடங்காத ஒன்றாகவே இருந்தது.
சில வருடங்களுக்கு முன்பு வந்த குதிரை கனவிற்கு அடுத்த சில நாட்களில் தான் எனக்கு ஒரு புது டூ வீலர் கிடைத்தது. அப்படியானால் இப்பொழுது அதனினும் பெரிய வண்டி ஓட்டுவதற்கு வாய்க்க போகிறதா? யானையை நினைத்தபடியே காலையில் நான் வகுப்பிற்குள் நுழையும்போது அவன் என் இருக்கையில் அமர்ந்து, தாடையை இருகைகளாலும் தாங்கியபடி என்னைப் பார்த்ததும் புருவங்களை உயர்த்திப் புன்னகைத்தான். அதே புன்னகை… மந்தகாசப் புன்னகை. அவனை எதிர்பார்க்காத அதிர்ச்சியில் ஸ்லோ மோஷனில் நடந்துபோய் அவன் அருகே நின்று புன்னகையைக் கட்டுப்படுத்தி சீரியஸாக முகபாவம் காட்டி,

“இது உங்க க்ளாஸா?” என்றேன்.

இல்லை என்பது போல் தோளைக் குலுக்கி “ஆனா அப்படியும் சொல்லலாம்” என்றவன் பக்கத்து இருக்கையைக் காட்டி உக்காரு என்பது போல சைகை செய்துவிட்டு என் கையிலிருந்த நோட்டை வாங்கி கடைசி பக்கத்தில் என் பெயரையும் அருகே ஜாவீத் என்று அவன் பெயரையம் இணைத்து “மீராஜாவீத்” என்று எழுதி குறும்புடன் என்னைப் பார்த்து புருவங்களை உயர்த்தி புன்னகைத்து விட்டு எழுந்து அவன் கிளாஸிற்குச் சென்றான்.

பெரிதாக ஏதும் பேசாத போதும் பார்வை பரிமாற்றங்களுடனே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு வெள்ளியும் எங்களுக்கு இருக்கும் ஆப்டிடியூட் க்ளாஸை சீனியர் மாணவர்களில் யாராவது வாலன்டியராக வந்து ஹேண்டில் செய்வார்கள். நான் எதிர்பார்த்தது போல ஜாவீத் தான் அன்று வந்திருந்தான். வழக்கமான அந்தப் புன்னகையுடன் வகுப்பின் முன் நின்று முதல் பசிலை விளக்க ஆரம்பித்தான். A மற்றும் B ஒரு செயலை தனித்தனியாகச் செய்தால் இவ்வளவு காலம் ஆகும் இதுவே அவர்கள் இனைந்து செய்தால் எவ்வளவு காலத்தில் முடிக்கலாம் போன்ற பசில்களில் எல்லாம் அவன் “இப்போ எக்ஜாம்பில்க்கு நானும் மீராவும் ஒரு வேலைய தனித்தனியா செய்றோம், இதுவே நாங்க சேர்ந்து செஞ்சா எவ்வளவு நேரத்தில் முடியும்” என்று அவன் அந்த பசிலை விளக்க வகுப்பே ஆர்ப்பரித்துச் சிரித்தது.

மனம் சுத்தமாக அந்த பஸிலில் லயிக்கவில்லை. அவனோ அதைச் சர் சாதாரணமாக போர்டில் சால்வ் செய்து கொண்டிருந்தான். அடுத்து வந்த பசிலும் அவன் அதே ரகத்தில் விளக்க ஆரம்பிக்க நான் வகுப்பை விட்டு வெளியேறினேன்.

பின்னாலேயே வந்தவன் “கொஞ்சம் சொல்றத கேட்டுட்டு போலாமே” என்றான்.

“சொல்லு. பஸில்ல வார்த்தைகளை ஏன் மாத்திப் போட்ட? ஏன் இப்படி பண்ணின?”

“என்னோட கனவை நனவாக்குறதுக்காக தான்”

“கனவா??” ஆச்சர்யமாக அவனை பார்த்து “என்ன கனவு?” என்றேன்.

அவன் தன்னுடைய ஆள்காட்டி விரலால் என் முகத்தை வட்டமிட்டுக் காண்பித்து “மை ட்ரீம்” என்று கூறி சற்று இடைவெளி விட்டு “என்னை பிடிச்சிருக்கு தான” என்று கேட்டே விட்டான்.

இந்தக் கேள்வியை எதிர்கொள்ள எனக்கு சிலநொடிகள் தேவைப்பட்டது. அம்மாவின் முகம் கண்முன்னே வந்து போனது. எனக்கு என்ன பதில் சொல்வதென்று குழப்பமாக இருந்தது.

“இவன் இன்னும் நாலு மாசத்துல காலேஜ் விட்டு போயிருவான் அப்புறம் நம்மலையா நெனச்சுட்டு இருக்க போறான்னு நெனைக்கிறியா?”

“அப்படி இல்ல. நமக்குள்ள என்ன புரிதல் இருக்குனு நெனைக்கிற இவ்ளோ பெரிய முடிவெடுக்க?”

புரிந்து கொண்டவனாய் தலையை ஆட்டிப் புன்னகைத்துவிட்டு,

“கரெக்ட்டு தான். இப்படி கேட்கணும்னு திட்டமிட்டு கேட்கல பேசும்போது அப்படியே வார்த்தைகள் வந்துடுச்சு. ஆனா என் எண்ணம் உனக்கு நல்லா புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்.”

“ம்ம்.” என்றவாறே அருகிலிருக்கும் மாடிப்படியில் நான் அமர அவன் என் எதிரே சுவரில் சாய்ந்து நின்று கொண்டான்.

“ஜாவீத்”

“ம்ம்”

“சின்ன வயசுல படிச்சிருக்கோமே ஓ ஹென்றி கதை, அதுல காதலனுக்கு பரிசா தன் தலைமுடியை விற்று காசாக்கி அவனோட பிய்ந்து போன கை கடிகாரத்துக்கு காதலி செயின் வாங்கி வருவா, அவனோ அந்த கடிகாரத்த விற்று அவளின் நீளமான கேசத்தை வார அழகான சீப்பு வாங்கி வருவானே அப்படி ஒரு விலைமதிக்க இயலா அன்பை கொண்டதொரு காதல் செய்யறது தான் என்னோட ட்ரீம். அன்பிற்காக எதையும் துறக்கும் வல்லமையை அந்த அன்பே தரும். அப்படியான அன்பாக இது அமையுமானு எனக்கு தெரியல, எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்” என்றேன்.

“கண்டிப்பா மீரா. உன்கிட்ட ரொம்ப பிடிச்சதே இந்த நிதானம் தான். நல்லா யோசி. அவகாசம் முடிந்து இந்த இளவரசி வந்து தொட்டதும் இளவரசனாக மாறுவேனென்றால் அதுவரை அந்த மிருக இளவரசனாக இருக்கவும் தயார். காத்திருக்கேன்” என்றவனின் முகத்தில் புன்னகை இல்லை. எப்போதும் குறும்புடனும் புன்னகையுடனும் இருக்கும் அவன் பார்வை அன்று தீர்க்கமாக இருந்தது.

இளவரசி தொட்டவுடன் மிருக இளவரசன் இளங்குமரனாக மாறிவிடும் கதை சிறுவயதில் படித்தது நினைவுக்கு வந்து போனது. அன்று முழுவதும் இந்தச் சிந்தனையே என்னை ஆட்கொண்டது. அவனைப் பற்றிச் சிந்திப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது என்னை அதிகமாக ஈர்த்தது.

மனம் யானையை போல அடங்க மறுத்தது அதை அடக்குவது எளிதல்ல என்று புரிந்த கணம் அந்த யானைக் கனவிற்கு அர்த்தம் கிடைத்து விட்டது.

அந்த மாத இறுதியில் வந்த என் பிறந்தநாளின் போது எங்கள் லேபில் இருந்த கனிணி ஒன்றில் ஜாவீத் எங்கள் பெயரை இணைத்து எழுதி ஒரு பர்த்டே கார்ட் டிசைன் செய்திருந்தான். ஆர்ட்டின் சிம்பல் எல்லாம் எல்லா மூலைக்கும் பறக்கவிட்டு அந்தக் கார்டை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து சாஃப்ட் காப்பியை டெலிட் செய்யும் முன் அந்த வழியாகச் சென்ற எங்கள் எச்.ஓ.டி மேம் பார்த்து விட்டார். மேம் மிகவும் கண்டிப்பானவர். எங்கள் இருவரையும் அவரின் அறைக்கு அழைத்து விட்டிருந்தார்.

“என்ன பண்ணி வச்சிருக்க நீ… மொதல்ல க்ளாஸ்ல எல்லாருக்கும் சொல்லியாச்சு. இப்போ டிபார்மெண்ட்ல எல்லாருக்கும் தெரியப் போகுது. அதுவும் எச்.ஓ.டி”

“லவ் பண்ணினா தெரியத்தான் செய்யும்…”

“நான் உன்ன லவ் பண்றேன்னு சொல்லவே இல்லையே”

“நீ என்னை லவ் பண்றன்னு நானும் யார்கிட்டயும் சொல்லலையே”

“கோவம் கோவமா வருது உன்மேல…”

சட்டென்று நின்றவன் நிதானமாக “தப்புதான் சாரி… ரொம்ப சாரி… சுத்தமா எதிர்பாக்கல அவங்க வந்து இப்படி பாப்பாங்கன்னு” என்றவன் முகம் முழுவதும் ப்ளீஸ் என்றது.

ஜாவீத் தொடக்கத்திலேயே இதற்கும் மீராவுக்கும் எந்த சம்மந்தம் இல்லை என்று மேமிடம் தெளிவாகக் கூறிவிட அவரும் என் முகத்தைப் பார்த்து இரக்கப்பட்டு அவனுடைய தந்தையை மட்டும் அழைத்துவரக் கூறிவிட்டார். மறுநாள் மதியம் லஞ்ச் டைமில் ஜாவீதின் அப்பா வந்திருந்தார். எச்.ஓ.டியைப் பார்த்துப் பேசிவிட்டு கிளம்பப் போனவரை நிற்கச் சொல்லிவிட்டு என்னிடம் வந்தான்.

“வாப்பா வந்திருக்காங்க. வா உன்ன இண்டரடியூஸ் பண்ணனும்”

“எ..ன்..னா..து… ஐயோ ஆள விடு. என்னால வரமுடியாது.”

“ப்ளீஸ் வா… அவரை நிற்க சொல்லிட்டு உன்ன கூட்டிட்டு வரதா சொல்லிட்டு வந்திருக்கேன்.”

“ஜாவீத்னா புயல் இல்ல சுனாமினு ஏதும் அர்த்தம் இருக்கா?”

“இல்ல மாயம் செய்பவன்னு அர்த்தம் இருக்கு. இந்த ஆராய்ச்சி அப்பறம் வச்சுக்கலாம் என்கூட வா” என்று அழைத்து போய் அறிமுகம் செய்து வைத்தான்.

“உள்ள மேம் சொல்லிருப்பாங்களே, இந்த பொண்ணு தான்” என்றான்
எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் அவர் மெல்லக் கிளம்பிப்போக
என் அருகே வந்து நின்று என் கையை அவன் கையுடன் கோர்த்துக் கொண்டான். அப்படியே இமைகள் ஒன்றுடன் ஒன்று பொருந்திக் கொள்வது போல என் கைகள் பொருந்திக் கொண்டது. என் நுரையீரல் ஆக்ஸிஜனுக்காகத் தவிக்க ஆரம்பித்தது.

“நீ ரொம்ப வேகமா போற ஜாவித், எங்க இருந்து வந்தது உனக்கு இவ்ளோ தைரியம்?”

“அவர்கிட்ட இருந்துதான்… இப்படிதான் அம்மாவோட கைய பிடிச்சுக்கிட்டு வந்து தாத்தா முன்னாடி நின்னு கல்யாணமும் பண்ணிருக்கார்… பயப்படாத… கோவப்படமாட்டார் புரிஞ்சுப்பார்” என்று என் கைகளை இன்னும் இறுக்கமாக பற்றிக் கொண்டான்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நாட்களும் நொடி நொடியாய்க் கடந்து செல்கிறது. அவ்வாறான மணிப்பொழுதுகளின் சுழற்சியில் சில பொழுதுகள் தான் நம் கவனம் ஈர்க்கும், மனதில் தடங்கள் பதிக்கும், முழுதாய் நம்மை புரட்டிப்போடும். உண்மையில் அவையே நாம் வாழும் தருணங்கள், அப்படி ஒரு தருணத்தில் நான் இருப்பதாக உணர்ந்தேன்.

எங்கள் அன்பின் அடர்த்தி கூடிக்கொண்டே சென்றது. நாட்கள் வேகமாக உருண்டோடி ஜாவீதின் கல்லூரி வாழ்வின் இறுதிநாள் என்று ஒன்று வந்தே விட்டது. எலெக்ட்ரானிக்ஸ் லேபில் இருந்த என்னிடம் வந்து நான் உட்கார்ந்திருந்த சுழல் நாற்காலியை சுழலவிட்டு அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தான். அது இரண்டுதரம் சுற்றிவிட்டு அவன் முன்னால் வந்து நின்றது.

‘பார்த்தியா, எனக்கு பிரைஸ் விழுந்திருக்கு. நீ என்னோட அப்படியே கிளம்பி வந்துடு” என்றான்.

“எங்க”

“நான் எங்க இருக்கேனோ அங்க… என்கூடயே இரு”

நான் அமைதியாக அமர்ந்திருந்தேன். சில நிமிடங்கள் அப்படியே கரைந்தது.

பேச எங்களிடையே வார்த்தைகளே இல்லை. அன்றைய நாளின் நொடிகள் சூறாவளிக் காற்றைப் போலப் பறந்தது. ஏன் இப்படி நேரம் இவ்வளவு வேகமெடுத்து ஓடுகிறது. தென்றலை போலத் தவழக் கூடாதா? இந்த காலமும் நேரமும்தான் கொஞ்சம் தூங்கக் கூடாதா என்றிருந்தது.

ஏதேதோ பேசிச்சிரிக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தோம். சிந்தனை முழுதும் பிரிவைப் பற்றியே இருந்ததைக் கண்கள் காட்டிக் கொண்டே இருந்தது. வாரம் ஒரு ஈ மெயிலாவது அனுப்ப வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டோம். அவனை அழைத்துப் போக அன்று மாலை அவனுடைய அப்பா வந்திருந்தார். ஹாஸ்டல் வக்கேட் செய்து அவனுடைய உடமைகள் அனைத்தையும் வண்டியில் ஏற்றிப் புறப்பட்டு அவனுடைய வண்டி ஒரு புள்ளியாக மறையும் வரை பார்த்துக் கொண்டே நின்றேன்.
கனவில் வந்த யானையின் உருவத்தை நெருங்க நெருங்க ஏற்பட்ட உணர்வு போல ஜாவீதில்லாத அந்த வெறுமை விஸ்வரூபமெடுத்தது. அவன் இல்லாததும் உடன் யாருமே இல்லாததும் ஒன்றுதான் என்று தோன்றியது. எது ஒன்றும் அவனை எளிதில் ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது.

இரண்டு மாதத்தில் பணி கிடைத்து அவன் சவுதி கிளம்புவதாக ஈ மெயில் அனுப்பியிருந்தான். “வான் எனும் கூரையின் கீழ் இருக்கும் இந்த உலகம் மிகவும் சிறியது” என்று அந்த மெய்லை முடித்திருந்தான்.

அடுத்து அவனிடமிருந்து வந்த மெயில்களில் எல்லாம் என்னை ஹபிபி (அரபி மொழியில் அன்பே) என்று குறிப்பிட்டு எழுதியிருந்தான். அரபியில் அவன் கற்ற முதல் வார்த்தை அது.

நான் படிப்பை முடித்த பிறகு பெங்களூரில் பணியில் சேர்ந்தேன். தொடக்கத்தில் வேலை சற்று அதிகமாகவே இருந்தது. உறங்குவதற்கு மட்டுமே அறைக்கு வருவதாக நாட்கள் சென்று கொண்டிருந்தது. வாழ்க்கை நேற்றை போலவே இன்றும், இன்று போலவே நாளையுமாக நகர்ந்து கொண்டிருந்தது.

ல மாதங்களில் நல்ல பணி கிடைத்தால் கனடா அல்லது அமெரிக்கா செல்ல இருப்பதாகக் குறிப்பிட்டு ஜாவீத் அன்று எனக்கொரு ஈமெயில் அனுப்பியிருந்தான். அவன் இந்தியா வந்துவிட மாட்டானா என்று நான் எதிர்பார்த்திருக்கும் வேளையில் அவன் இன்னும் தூரமான தேசம் செல்வது எனக்கு சற்று கவலையாய் இருப்பதாக பதில் அனுப்பினேன்.

‘ஒரு மேகத்தின் மேல் இருந்து பார்த்தால் நாடுகளுக்கிடையே இருக்கும் எல்லைகள் தெரியாது.
நீ வடக்கில் இருந்தாலும்
நான் தெற்கில் இருந்தாலும்
நாம் திசைகளாய் இருப்போம்’ என்று அவன் பதிலளித்திருந்தான்.

அத்தனையும் வெறும் வார்த்தைகள் அல்ல மனதில் நிறையும் உணர்வுகள்.

ஜாவீதிற்கு வெள்ளி மட்டுமே விடுமுறை எனக்கோ ஞாயிறு மட்டும். கால இடைவெளியும் இரண்டரை மணிநேரம் அவனுக்கு பிந்தி இருப்பதால் ஒரே சமயத்தில் ஆன்லைனில் பேசும் சந்தர்ப்பங்கள் கூட எங்களுக்கு வெகு சொற்பமாக இருந்தது. ஆனால் அவ்வப்போது “ஐ யம் திங்கிங் ஆஃப் யூ” “இடது கண் துடித்து உன்னை காண ஏங்குவதை உரக்க அறிவிக்கிறது” “காணும் அனைத்தும் உன்னையே ஞாபகப்படுத்துகிறது வேறு யாரையும் சைட் அடிப்பது கூட இல்லை” “இன்று திங்கள் கிழமை நீ விரதம் இருப்பாய் இனி இருவரும் இணைந்தே” “எனக்கு தனிமை என்பது யாருமில்லாத போது அல்ல நீ இல்லாத போது” “இன்று உன் பெயரை எழுதி ஒரு விதை நட்டிருக்கிறேன், உன் முகம் போல பூ பூப்பதாக அது என்னிடம் தெரிவித்துவிட்டு மண்ணுக்குள் சென்றிருக்கிறது” போன்ற ஒற்றை வாக்கிய மெயில்களால் எங்கள் போல்டர் நிரம்பி வழிந்து அன்பை உயிர்ப்புடன் வைத்திருந்தது.

சில மாதங்கள் கழித்து பணி நிமித்தமாக எனக்கு அமெரிக்கா செல்வதற்கான வாய்ப்பு வந்தது. ஜாவீதிற்கு இந்தச் செய்தியும் அவனுடைய பயண ஏற்பாடு எந்த நிலையில் இருக்கிறது என்றும் கேட்டு மெயில் அனுப்பியிருந்தேன். உடனே நான் கிளம்பியாக வேண்டிய அவசரமான பணி என்பதால் விசா ப்ராசஸ் முடிந்த அந்த வாரமே நான் பயணப்பட்டேன். நான் கிளம்பும் வரையிலும் அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லாதது ஏமாற்றமாக இருந்தது.

நீண்ட காலத்துக்கு பிறகு அன்று வந்த அந்த கனவு என் நினைவில் நிறைந்திருந்தது. அதில் ஒரு பெரிய வெள்ளைச்சுவர், வானுக்கும் பூமிக்கும் இடையே அந்த சுவர் தடுப்பு ஒன்றை ஏற்படுத்தியிருப்பது போல ஒரு தோற்றத்தில் இருக்கிறது. அதன் கீழே ஒரு ஏணி இருக்கிறது. நான் அதில் ஏறிச் செல்லச்செல்ல அது இன்னும் மேலே மேலே உயர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தது. எதைத் தேடியோ அந்த ஏணிப்படிகளில் சுற்றி அலைகிறேன். அந்த வெள்ளைச்சுவரில் ஆங்காங்கே தொட்டிச்செடிகள் மாட்டப்பட்டு பூக்கள் பூத்திருக்கின்றன.

அதைப் பார்த்து நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பாம்புகள் ஏதுமற்று ஏணி மட்டும் அங்கு இருந்ததால் கூட இருக்கலாம். சட்டென்று கனவின் காட்சி மாறி இப்போது ஒரு பெரிய கடல் பரப்பு கண்களின் முன் விரிந்து கிடக்கிறது. நான் ஒரு கப்பலில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

அது ஒரு அழகான கடல் பயணம். காணும் திசை எங்கும் நீலநிறம் வியாபித்திருந்தது. ஒளிக்கீற்றுகள் நீரில் பட்டு மினுங்கிக் கொண்டிருந்தது நீரின் பரப்பு. கப்பல் நிறைய மனித முகங்கள். சற்று தூரத்தில் ஒரு தீவு தென்படுகிறது. கப்பல் அருகே செல்லச்செல்ல அந்தத் தீவே ஒரு சாலையாக விரிகிறது. நான் கீழிறங்கி நடக்கத் துவங்குகிறேன். அந்தப் பாதையின் காட்சிகள் மனதை நிறைக்கின்றன.

கனவில் ஏணியில் ஏறியதையும் நிஜத்தில் நிகழ்ந்த இடமாற்றத்தையும் பொருத்திப் பார்த்து புன்னகைத்தபடியே கண் விழிக்கையில் நான் அமெரிக்காவுக்கு வந்து பனிரெண்டு மணிநேரம் ஆகிவிட்டிருந்தது. கைக்கடிகாரம் இன்னும் இந்திய நேரத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. அறையில் இருந்த கடிகாரத்தை பார்த்து காலை ஒன்பது மணி என்று நேரத்தை மாற்றிவிட்டு படுக்கையை விட்டு எழச் சரியாக காலிங் பெல் அடித்தது. ஜானாக தான் இருக்கும் என்று கதவை திறக்க அவனே தான்

“ஹே மீரா நாங்க இங்க பக்கத்துல இருக்க ஒரு மால் போறோம். நீ எங்க கூட ஜாயின் பண்ணிக்கிறியா? திரும்ப ரிட்டன் வரும்போது உனக்கு புது நம்பரும் போனும் வாங்கிடலாம். இல்ல உனக்கு டயர்டா இருந்தா தூங்கு” என்றான்.

“நிச்சயம் வரேன். இன்னைக்கு நம்பர் வாங்கிடுறது பெட்டெர். எனக்கு ஒரு பிப்டீன் மினிட்ஸ் குடு.”

“நாங்க பக்கத்துல கேண்டில்வுட் கார் பார்க்கிங்க்ல வெய்ட் பண்றோம் வந்துடு ஓகே வா” என்று கூறிச் சென்றான்.

ஜான் பெங்களூரிலிருந்த டீமில் என்னுடன் பணிபுரிந்தவன். இந்த ஊரில் எனக்குத் தெரிந்த ஒரே முகம் ஜான் தான். விமான நிலையத்திலிருந்து என்னை அழைத்து வந்து அறை வரை வந்து பெட்டியை எல்லாம் அடுக்கித் தந்து டின்னர் ஆர்டர் செய்து என்று புது இடத்தில் எனக்கு எல்லா உதவியும் செய்யும் நண்பன் அவன்.
பதினைந்து நிமிடங்களில் கிளம்பிப் பார்க்கிங் செல்ல அங்கே எனக்காக ஐந்து பேர் காத்திருந்தார்கள். சுருக்கமான அறிமுகப் படலம் முடிந்ததும் நாங்கள் மால் புறப்பட்டோம்.

“ஜான் எனக்கு ஒரு தோசை வாங்கி குடு நல்ல சாப்பாடு சாப்ட்டு ரெண்டு நாள் ஆச்சு. எந்நேரமும் பசியில இருக்க மாதிரியே இருக்கு” வந்து ஒருநாள் கூட ஆகல அதுக்குள்ள இந்த நிலைமைக்கு வந்துட்டியே என்பது போல என்னை பார்த்து “ஈவ்னிங் நிச்சயம் வாங்கி தரேன் இப்போ மார்னிங் ப்ரேக்பாஸ்ட் மால் போனதும்” என்றான்.

சரி என்று தலையசைத்து வைத்தேன்..

மால் அருகே எதிர்பார்த்ததை விடவும் கூட்டமாக இருந்தது. உடன் வந்திருந்த அனைவரும் காலை உணவை முடித்துவிட்டே கிளம்பியதால் ஒரு ரெஸ்டாரண்டின் முன் நானும் ஜானும் மட்டும் இறங்கிக் கொள்ள மற்றவர்கள் மாலுக்குச் சென்றார்கள்.

ஜனத்திரள் அதிகமாக இருந்த அந்த இடத்தில் நிறைய உணவகங்கள் தான் கண்ணுக்குத் தென்பட்டன. வாகனங்களின் சத்தமும் மக்களின் குரலும் காதுகளை நிறைத்தபடி இருந்தது.

முதல்ல நீ சாப்பிடு என்று ஒரு பரீட்டோ வாங்கித் தந்துவிட்டு “மீரா சாப்டுட்டு இரு, நான் காஃபி வாங்கிட்டு வரேன்” என்று சற்று தள்ளியிருந்த ஸ்டார்பக்ஸ் நோக்கி சென்றான் ஜான்.

ஓகே என்று தலையாட்டி விட்டு நான் வேடிக்கை பார்த்துக்கொண்டே மீதமிருந்த பரீட்டோவை உள்ளே தள்ளினேன்.

பக்கத்தில் ஒரு கடை முழுவதும் கண்ணாடி தொட்டிகளும் அதனுள் வண்ணமயமான மீன்களும் கண்களைக் கவர்ந்தன. அப்படியே பார்வையைச் சுழலவிட தூரத்தில் ஒரு கடையின் முகப்பில் DOSA (தோசா) என்ற எழுத்துக்கள் என் கவனத்தை ஈர்க்க அப்படியே மெல்ல எழுந்து ஜனத்திரளுடன் ஒட்டிக்கொண்டு ஒரு ஒடுக்கமான பாதையில் நடந்து அருகே போனதும் தான் புரிந்தது அது NADOSAMMA (நாதோசமா) என்றொரு இத்தாலியன் உணவகம். அந்தப் பெயரின் ஒருபகுதி மட்டும் தூரத்தில் இருந்த என் கண்களுக்கு தெரிந்திருக்கிறது.

அடச்சே இப்படி ஏமாந்து போனோமே என்று யோசித்துத் திரும்புகையில் தான் நான் வந்த வழியை தொலைத்து விட்டது சட்டென உறைத்தது. உறைத்த நொடி வியர்த்தது. ஒரு யூகத்தில் நான் திரும்பி நடக்க, சிறிது நேரத்திலேயே அனைத்தும் புதிய காட்சிகளாக கண்களுக்கு இருந்தது.

அம்மா கூறியது நினைவுக்கு வந்தது. மீரா புதுதேசம் காணப் போகிறாய். அங்கே நீ ஒரு பறவையை போல உன் கூட்டத்துடனேயே இரு என்று. நான் வழியைத் தவறவிட்ட பறவையாய் திரிகிறேன் அம்மா என்று மனதிற்குள் கூறிக்கொண்டேன்.

டுத்து நடக்கப் போவது என்ன என்பது தெரியாததால் ஒரு பயம் தானாய் மனதை கவ்விக் கொண்டது. இப்போது நான் ஏன் பயப்படுகிறேன்? மீரா நீ குழந்தையல்ல, இது வேற்று கிரகமும் அல்ல யோசி.. யோசி. நான் சாப்பிட்டது சிபோட்டில் என்றொரு மெக்சிகன் ரெஸ்டாரண்ட் என்பது நினைவுக்கு வர, அருகே இருந்த ஒரு நபரிடம் விசாரித்து அவர் காட்டிய திசையில் நடக்க ஆரம்பித்தேன். கனவில் வந்த ஏணியில் சுற்றி அலைந்து எதையோ தேடியது நினைவுக்கு வந்தது.

நான் அதிகம் போனால் மூன்று நிமிடத்திற்கு மேல் நடந்து இங்கே வந்திருக்க வாய்ப்பில்லை. அந்த அனுமானத்தைக் கொண்டு நடக்கையில் இன்னும் தொலைந்துபோய் விட்டதாகத் தோன்றியது. இது ஒரு கனவுக்காட்சியாக இருந்து இப்பொழுது கண்விழித்து இயல்பு நிலைக்கு வந்துவிடக் கூடாதா என மனம் தவித்தது. தொண்டை வறண்டது. ஏதோ ஒரு மால்க்கு தானே அனைவரும் வந்தோம். அருகிலிருக்கும் மால் எது என்று விசாரித்தால் நிச்சயம் வழியைக் கண்டுபிடித்து விடலாம். இது சரியான யோசனை. மால் எங்கே இருக்கிறது என்று நிச்சயம் இங்கிருப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும். யாரிடமாவது கேட்டுப் பார்க்கலாம் என்று பார்க்கையில் என்ன அதிசயம் என் கண்களுக்கு அந்த மால் தென்பட்டுவிட்டது. அந்த மாலை விட்டுக் கண்ணெடுக்காமல் அதை நோக்கி வேகமெடுத்து நடக்க எத்தனிக்கையில் ஒரு ஆஜானுபாகுவான ஆள் என் எதிரே வந்து நின்றார்.

பார்த்த மாத்திரத்தில் தெரிந்தது அவர் ஒரு அமெரிக்கன் காப் என்று.
என்னை உற்று நோக்கிய அவர் சில நிமிடங்களாக என்னை கவனிப்பதாகவும் நான் இங்கும் அங்கும் அலைவதைப் பார்த்து எனக்கு ஏதோ உதவி தேவைப்படுவதாக தோன்றியதால் வந்ததாகவும் குறிப்பிட்டார்.

நான் நடந்த அனைத்தையும் கூற என்னை அங்கே அருகிலிருந்த காவலர் சோதனை அறைக்கு வரவேண்டி கேட்டுக் கொண்டார்.
ஐயோ என்று நினைத்தபடியே அவரை பின்தொடர்ந்து கொண்டிருந்தேன்.

அந்த அறையை அடைந்ததும் என்னை ஒரு நாற்காலியில் அமரச் சொன்னார். என்னை உற்று பார்த்து அவதானிப்பது எனக்கு தெளிவாய் புலப்பட்டது.

நான் மீண்டும் ஒருமுறை என்னைப் பற்றியும் என் பணி, என்னுடைய நிறுவனத்தின் பெயர், நேற்று தான் அமெரிக்காவுக்கு நான் வந்திறங்கியதையும் அவரிடம் கூற அலட்டிக் கொள்ளாமல் அழுத்தமாக ஒரு கேள்வியை முன்வைத்தார்.

“உங்கள் பாஸ்போர்டை காண்பிக்க முடியுமா?”

கடவுளே என்ன இது? நான் அதெல்லாம் கொண்டு வரவில்லையே. அது என் அறையில் இருப்பதாகக் கூறினேன்.

அவர் என் கைப்பையை சோதிக்க விரும்புவதாக கூறவும் என் ஹாண்ட் பாக்கில் இருந்த அனைத்தையும் மேஜை மீது பரப்பி வைத்தேன். என் கைப்பையை வாங்கி உப்மா கிண்டுவது போல கிண்டிக் கிளறிப் பார்த்துக் கொண்டிருந்தார். எப்போதோ டவுன் பஸ்ஸில் சென்ற டிக்கெட்டெல்லாம் வெளியே வந்து விழுந்தது.

ஒரு சின்ன காகித புத்தகம் அந்தக் கடவுச்சீட்டு இல்லாமல் எது இருந்து என்ன பிரயோஜனம்?

அடுத்ததாக அந்த அதிகாரி ஒரு கேள்வியை முன்வைத்தார். “எங்கே தங்கி இருக்கிறீர்கள்?”

ஆங்… எனக்கு தெரியுமே அந்த பெயர்… அது… அது ஒரு சீன பெயராயிற்றே… ஐயோ கடவுளே என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய்? நான் தங்கியிருக்கும் ஹோட்டல் பெயர் என்ன? ஜான் தங்கியிருப்பது கேண்டில்வுட் அது ஒரு ஆங்கில பெயர் என்பதால் நன்றாக நினைவில் இருந்தது. நான் தங்கியிருக்கும் ஹோட்டலின் பெயர் ஏதோ ஷான் என்று தொடங்கும். சட்டென ஞாபகம் வரவில்லையே.

சிறு வயதில் நான் ஆறாவது படிக்கும்போது கன்யாகுமரி சென்றபோது தங்கிய ஹோட்டலின் பெயர் ஸ்ரீ நிவாஸ் அதன் பிறகு சில வருடங்கள் கழித்து தஞ்சாவூரில் தங்கிய ஹோட்டலின் பெயர் ராஜ் ரெசிடென்சி, தாஜ்மஹால் சென்றபோது தங்கிய ஹோட்டலின் பெயர் தாஜ்விலாஸ்.பெங்களூரு வந்து பணிக்கு சேர்ந்ததும் தங்கிய ஹோட்டலின் பெயர் மேக்னா இன்டர்நஷனல் இப்படி என் வாழ்க்கையில் இன்னும் எத்தனை ஹோட்டல்களில் தாங்கினேனோ அத்தனையும் நினைவுக்கு வர இப்போது தங்கியிருக்கும் அந்த ஹோட்டலின் பெயர் என் நினைவில் எப்படி நில்லாமல் போனது?
அதிகாரி இப்போது என்னை சர்வநிச்சயமான சந்தேக வலையில் வைத்து நோக்க ஆரம்பித்தது அவர் பார்வையிலேயே புரிந்தது.

நான் என் ஈ மெயில் திறந்து பார்த்து கூறுவதாக கேட்டுக்கொண்டேன்.
எனக்கு அஃபீசியலாக இந்த பயணத்தை பற்றிய குறிப்பிருக்கும் மெயில், நான் ஜாவீதுக்கு அனுப்பியிருந்த மெயில் என்று இரண்டு இடங்களில் அந்த ஹோட்டலின் பெயர் இருக்கும். ஆனால் அதிகாரி மறுத்துவிட்டார்.

பதிலுக்கு அவருடைய கைபேசியைத் தந்து எனக்கு இங்கே தெரிந்த யாராவது ஒருவரை அழைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
போச்சு மூன்றாவது ஆப்ஷனும் பிளாப். எனக்கு எந்த எண்ணும் நினைவில் இல்லை. சிறுவயதில் அப்பாவின் நடமாடும் டெலிபோன் டைரக்டரியாக நான் இருந்தது நினைவுக்கு வந்தது.

அப்போதெல்லாம் எப்படியும் ஒரு முப்பது லேண்ட்லைன் நம்பர்களாவது நினைவில் வைத்திருப்பேன். இப்போது தேவைப்படும் ஒருவர் எண்ணும் என் நினைவில் இல்லை.
எங்கிருந்தாவது இப்போது ஜான் ஓடிவந்து என்னை காப்பாற்றக் கூடாதா என்றிருந்தது. இதென்ன தமிழ் சினிமாவா? நான்தான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், எனக்காக நான்தான் வாதாட வேண்டும். அவரின் சந்தேகத்தை போக்கி என்னை நிரூபிக்க வேண்டும். தயாராகு மீரா, தயாராகு… யோசி… யோசி, உன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஏதாவது செய். வழியில்லாமல் போகாது. நீ ஒன்றும் குற்றவாளி இல்லையே என்று கூவிக்கொண்டே இருந்தது மனம்.

நான் யாராக இருந்தால் என்ன? என்ன பெயரோ எந்த ஊரோ இப்போதைக்குத் தேவை என்னுடைய கடவுச்சீட்டு. புத்திக்கு சட்டென ஒரு யோசனை வந்தது. அதிகாரியை அழைத்து என்னுடைய பாஸ்போர்ட் எண் எனக்கு நன்றாக நினைவிருப்பதாகக் கூறி ஒரு காகிதத்தில் எழுதி தந்தேன்.

அதிகாரி அதைப் பெற்றுக்கொண்டு யாரையோ அழைத்து பேசினார். என் பாஸ்போட்ர் எண்ணைத் தந்து சோதித்து பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார். தகவல் தொழில்நுட்பத்தின் உதவியால் சீக்கிரமே என்னைப் பற்றிய விபரங்களை அறிந்து உறுதிசெய்து கொண்டார்.

நான் தங்கியிருந்த ஹோட்டலின் பெயர் ஷான் டாங்ஷெங் லமாய் என்ற தகவலையும் எனக்குக்கூறி புன்னகைத்தார். என் வாழ்வில் இனி நான் மறக்க முடியாத பெயராக அந்த நொடியே அது மாறிவிட்டது.
கடவுளுக்கு மனதினுள் நன்றி கூறியபடியே, “முதலில் மால் சென்று உடன் வந்த நண்பர்களைப் பார்க்க வேண்டும். அவர்கள் என்னைக் காணாமல் தேடிக் கொண்டிருப்பார்கள்” என்று நான் கூறியதும் அந்த அதிகாரி என்னை மாலிற்கே அழைத்துச் சென்றார்.அங்கே பார்க்கிங்கில் அனைவரும் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். ஜான் மட்டும் என்னை எங்கோ தேடிக்கொண்டிருப்பதாகக் கூறி அவனை போனில் அழைத்து தெரியப்படுத்த அவனும் ஐந்து நிமிடத்தில் மூச்சிரைக்க வந்து சேர்ந்தான்.

“நிஜமாகவே ரொம்ப பயந்து போய்ட்டேன்” என்றவனின் குரலில் அத்தனை அக்கறை இருந்தது. எனக்கு அனைவரையும் சிரமப்படுத்தியது சங்கடமாக இருந்தது.

அதிகாரி விடைபெற்றுக் கொண்டு இனி எங்கு சென்றாலும் பாஸ்போர்ட் நிச்சயம் கைவசம் வைத்திருங்கள் என அறிவுறுத்திவிட்டு சென்றார். நாங்களும் அந்த இடம்விட்டுக் கிளம்பினோம்.

நான் ஜானை நோக்கி “ரொம்ப சாரி ஜான்… எப்படி இப்படி தொலைஞ்சு போனேன்னு எனக்கே புரியல.” என்று தோசைக்காக நான் புறப்பட்டுப் போனதை விவரிக்க சரியாக வண்டி அந்த NADOSAMMA-வை கடந்தது. அதைப் பார்த்த அனைவருக்கும் குபீரென்று சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

ஜான் மட்டும் சிரிக்காமல் “காலைலயே உன்ன தோசை சாப்பிட கூட்டிட்டு போயிருக்கணும்” என்றான்

வரும் வழியில் தோசை சாப்பிட்டு விட்டு, புது போனும் வாங்கிக் கொண்டு கிளம்பினோம். போன் கைக்கு வந்த அடுத்த நிமிடமே மெயில் பாக்ஸை திறந்தேன். அப்போதும் ஜாவீதிடமிருந்து எந்த பதிலும் இல்லாதது ஏமாற்றமாக இருந்தது. மாலை ஷான் டாங்ஷெங் லமாய் ஹோட்டல் அறைக்கு வந்ததும் பாஸ்போர்ட்டை எடுத்து கைப்பையில் வைத்துக் கொண்டேன்.

இரு தினங்கள் கழித்து அலுவலகத்தின் ரிஸப்ஷனைக் கடக்கையில் ரிசிப்ஷனிஸ்ட் என்னை அழைத்து எனக்கொரு நோட் இருப்பதாகக் கூறி ஒரு சின்ன தாளை கையில் திணித்தார். அதில் “உனக்கு மேலே இருக்கும் கூரையின் கீழ் தான் நானும் இருக்கிறேன்” என்று எழுதியிருந்தது. அது ஜாவீதின் கையெழுத்து என்று அறிந்து என் கண்கள் விரிந்து சுற்றித் துழாவித் திரும்பிப் பார்க்கையில் அங்கிருக்கும் நாற்காலியிலிருந்து எழுந்து வருவது ஆம்.. ஜாவீத்தான் அது. ஒரு பயணம் தனது பாதையைக் கண்டுகொண்ட மகிழ்ச்சி மனதை நிறைத்தது.

***

நித்யாஹரி

ஆசிரியர் தொடர்புக்கு nithya.ramadoss@gmail.com

கார்குழலி கவிதைகள் (கவிதை)

3

எழுத்துக்களை மேய்ப்பவள்

நாளெல்லாம் ஆட்டு மந்தையாய்
சிதறித் திரியும் எழுத்துக்களை
கட்டி மேய்த்து
சில நேரம் கவிதை
சில நேரம் கதை, கட்டுரை என
நீலவானம் கவிந்த
புல்வெளிகளில் உலவ விடுவேன்.

இருள் சூழ்கையில்
பட்டியில் அடைத்த பின் எழும்
சந்தடியையும் கனைப்புகளையும்
விடிந்ததும் கிறுக்கல்களாக
கனிணியில் பதிந்துகொள்வேன்.

சில நேரம்
புற்குன்றின் மேல் ஏறி
இறங்கத் தெரியாமல் தவிக்கும்
துறுதுறுத்த குட்டியாகும்
சிந்தனைக்குச் சிக்காத
அந்த ஒற்றைச் சொல்.

ஆட்டின் அடர்ந்த தும்மலாக
அவ்வப்போது
மண்டைக்குள் கலகமூட்டும்
புதிதாக உதித்த
அந்த ஒற்றைக் கருத்து

சில நாள்
ஓடும் நீரைக் கண்டு
தயங்கிப் பின்,
மேய்ப்பவளின் குரலுக்குச் செவிசாய்த்து
கால் நனைப்பது போல
மனதின் ஆணைக்குக் கட்டுப்பட்டு
தட்டச்சும் விரல் நுனிகள்.

ஒன்றையொன்று முட்டித் தள்ளி
சொற்களின் மந்தைக் கூட்டத்தில்
தன் இடத்தை நிலைநாட்டும்
வலிமையான பொருத்தமான
சொல் ஒன்று.

சில நாள்
மந்தையிலிருந்து விலகிய
ஒற்றை ஆடாக
குறுகுறுத்த பார்வை வீசி
புது விஷயங்களை
தேடிக் கோர்ப்பேன்.

பின்னர் வயிறு நிறைய
மேய்ந்த நாளொன்றில்
நிலத்தில் கால்பரத்தி அமர்ந்து
பழைய புனைவுகளின்
பசும்புல்லை அசைபோட்டபடி
நிறைவோடு கண் அயர்வேன்.

***

இடமாறும் திசைகள்

சூரியனின் ஒளிவீசாத நாளொன்று
சாளரத்தின் வழியே
நுழையப் பார்க்கிறது.
பனியின் குளிர்ச்சியைப் பூசிய
கதகதப்பற்ற இரவோ
ஆழ்கடலின் திமிங்கலமாகி
விழுங்கத் துவங்குகிறது.
துடுப்பிலாத படகில் ஏறி
சலனமற்ற அலைகளின் வழியே
பயணம் செய்கிறேன்.
தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும்
கீழ்வானின் மஞ்சள் கீற்றை
எட்டிப் பிடிக்கையில்
புரண்டு படுக்கிறது பூமிப்பந்து.
குலுக்கலில் இடமாறிய திசைகள்
மீண்டும் என்னை
விடியலற்ற வெறுமையின் கைகளில்
தவிக்கவிட்டுச் செல்கிறது.

புயலாடிய மனம்

சோவென்று மழை பெய்த
அந்தப் பின்மதிய நேரத்தில்
சுட்டெரிக்கும் சொற்களை
அவள்மீது வீசிவிட்டு
வெகுவேகமாக வெளியேறினான்.

முறுக்கிப் பிழிந்த துணியாக
மனம் துவண்டதும்
வலுத்த காற்றின் சீற்றத்தில்
பின்முற்றத்து முருங்கை
அலைபாய்ந்து ஆடித் தீர்த்ததும்
அதே நாளில்தான்.

மணமுடித்து புதிய வாழ்க்கையில்
காலூன்றிய சமயத்தில் நடப்பட்ட
முருங்கைப் பதியனும்
சோகையான அவள் மணவாழ்க்கையின்
சாயலை ஒத்தே வளர்ந்தது.

மூன்றாம் வருட துவக்கத்தில்
மலடியென்ற பட்டம் சூட்டிச்சாடி
அவளைவிட்டு பிரியும் எண்ணத்தை
வெறுப்புமிழும் சொல்லும்
மிரட்டலான தொனியும் கலந்து
அவன் சொன்ன பொழுதில்
அவள் உகுத்த கண்ணீர்
முருங்கையின் வேரை நனைத்ததை
அவள் அறியவில்லை.

அவளின் சக உதிரத் துணையாகி
தானும் மொட்டுவிடாமல் காய்க்காமல்
முருங்கை நின்றதை
சோகத்தில் உழன்றவள்
அப்போது கவனிக்கவில்லை.
பழுத்த இலைகளை
தங்க நாணயங்களாக
அவள்மீது சொரிந்து
ஆறுதல்படுத்தியதும்
ஏனோ அவளுக்குப் புரியவில்லை.

விருட்டென அவன்
வெளியேறிய மழைநாளில்
ஏற்கனவே பலமுறை
சொல்லி இருந்ததை நிறைவேற்ற
விட்டுப்போயே விட்டான் என
பிளவுபட்ட இதயத்தின் பாளம்
வறண்ட தொண்டைக்குழியில் பிதுங்க
அந்த இரவையும் தொடர்ந்த பகலையும்
அழுதும் புரண்டும் கடத்தினாள்.

வெளியே புயல் ஓயவில்லை;
கருமேகம் சூழ்ந்த அவள் மனமும்
பேய்க்காற்றில் அலைகழிந்தது.
மறுநாள் இரவு தாழ்ந்த பின்
பால் பானையை உருட்டும்
கள்ளப்பூனையாக
உள்ளே நுழைந்தவன்
படுக்கையின் ஓரத்தில்
துவண்டு கிடந்த மேனியில்
உணர்வுகளைக் கிளர்த்த முயன்றான்.

சடசடவென்ற ஒலிகேட்டு
பின்வாசல் முருங்கையைப் பார்க்க
பதைபதைத்தபடி ஓடினாள்.
ஊசலாடி களைத்து
சட்டென முறிந்து போனது
அவள் மனமும் தான்

***

கார்குழலி

நிறமிழக்கும் பவளங்கள் : ஒர் எச்சரிக்கை அறிக்கை (கட்டுரை)

0

நாராயணி சுப்ரமணியன்

பவள வாய்ச்சி” என்று கண்ணகியை வர்ணிக்கிறது சிலப்பதிகாரம். மருதாணி இட்ட பெண்ணின் விரல் நகங்களில் ஊடுருவும் அழகிய செந்நிறத்தை, “விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்” என்று பாடுகிறார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். பவளம்/பவளப்பாறை என்ற உடனேயே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருகிற அந்தச் சிவப்பு வெறும் நிறமல்ல. ஒரு பவள உயிரி நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்கான குறியீடு. அந்த நிறத்துக்கும் நலத்துக்கும் ஆபத்துகள் அதிகரித்தபடியே இருக்கின்றன. இதுபற்றி பல தசாப்தங்களாகவே அறிவியலாளர்கள் எச்சரித்துக் கொண்டிருக்கின்றனர் என்றாலும் சமீபத்திய அறிக்கை ஒன்று கணினியில் உருவாக்கப்பட்ட கணித மாதிரிகள் மூலமாக இந்த ஆபத்தின் தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று உலகளாவிய தரவுகளை முன்வைத்திருக்கிறது.

நுண்பாசிகளும் பவள உயிரிகளும்

பவளப்பாறைகளின் நிறம் எத்தனை முக்கியமானது என்பதை அறிந்துகொள்ள வேண்டுமானால் பவளங்களின் உடல் அமைப்பு பற்றிய அடிப்படை அறிவியல் பற்றிய புரிதல் அவசியம்.

பவளப்பாறை என்று நாம் பொதுவாகச் சொல்லும் ஒரு அமைப்பு பவள உயிரிகளால் ஆனது. நாம் வெளியில் பார்ப்பது பவள உயிரிகளின் கூடு. ஒவ்வொரு பவளப்பாறைக்குள்ளும் நூற்றுக்கணக்கான சிறு பவள உயிரிகள் வசிக்கின்றன. பல்வேறு பவளப்பாறைகள் சேர்ந்து பவளத்திட்டுக்களை (Coral reefs) உருவாக்குகின்றன.

ஒவ்வொரு பவள உயிரியும் சூசாந்தலே (Zooxanthellae) என்ற ஒருவகை நுண்பாசியுடன் கூட்டுவாழ்வையே வாழ்கிறது. நுண்பாசிகள் தாவர உயிர்கள் என்பதால் ஒளிச்சேர்க்கை மூலமாக இவை உணவு தயாரிக்கின்றன. பவள உயிரிகளின் உணவுத் தேவையை, கிட்டத்தட்ட 90% வரை இந்த நுண்பாசிகள் தான் பூர்த்தி செய்கின்றன. ஆகவே பவள உயிரிகள் உயிர் வாழவும் உணவு உண்ணவும் இந்த நுண்பாசிகள் இன்றியமையாதவை.

நிறமிழக்கும் பவளப்பாறைகள்

சுற்றியுள்ள கடல்நீரின் வெப்பம் மாறும்போதோ கடல்நீரின் வேதிநிலை மாறும்போதோ, கிருமிகள் தாக்கும்போதோ, இந்தப் பவள உயிரிகள் உள்ளே வசிக்கும் நுண்பாசிகளைத் துப்பி வெளியேற்றி விடுகின்றன. குறிப்பாக கடல்நீரின் வெப்பத்தன்மையும் அமிலத்தன்மையும் அதிகரிக்கும்போது நுண்பாசிகள் உடனடியாக வெளியேறும்.

இவ்வாறு நுண்பாசிகள் வெளியேறிவிட்டால், பவளப்பாறைகள் நிறமிழந்து, வெளிறிய நிலையில் காணப்படும். இந்த நிகழ்வு Coral Bleaching என்று அழைக்கப்படுகிறது. நிறமிழந்த பவள உயிரிகள் பசியால் வாடத்தொடங்கும்.

பொதுவாக இந்த நிறமிழத்தல் தற்காலிகமானதுதான். சூழல் மாறும்போது நுண்பாசிகள் மீண்டும் பவளங்களோடு கூட்டு வாழ்க்கை வாழ உள்ளே புகுந்துவிடும். போன நிறமும் கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பி வரும். ஆனால் நிறமிழத்தலுக்குக் காரணமாக இருந்த சூழல் தொடர்ந்தபடியே இருந்தால் பாசிகள் திரும்ப வருவதற்கான கால அவகாசம் கடந்து விடும். அப்போது பட்டினியால் பவள உயிரிகள் மொத்தமாக இறக்கும்.

காலப்போக்கில் பவளப்பாறைகள் பாசி இலைகளால் மூடப்பட்டு அந்த பவளத்திட்டே பாசித்திட்டாக மாறிவிடும். ஒரு பவளப்பாறை நிறமிழப்பது என்பது அதன் அழிவுக்கான முதல் அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. நிறமிழந்த பவளப்பாறைகளை மனித முயற்சியால் மட்டுமே மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது.

நிறமிழத்தல் நிகழ்வுகள்

உலகின் மிகப்பெரிய பவளத்திட்டான பெரும்தடுப்புப் பவளத்திட்டு (Great Barrier Reef) கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறது என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்தப் பவளத்திட்டு மூன்று லட்சத்து நாற்பதாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது! விண்வெளியில் இருந்துகூட இதைப் பார்க்க முடியும்!

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்தப் பவளத்திட்டில் மூன்று பெரிய நிறமிழத்தல் நிகழ்வுகள் (Mass Bleaching events) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்திய நிறமிழத்தல் ஏப்ரல் 2020-ல் நடந்தது. இதுவரை வந்த நிறமிழத்தல்களிலேயே அதிக பரப்பளவில் பவளப்பாறைகளை பாதித்த நிகழ்வு இது. 1036 தனிப் பவளத்திட்டுக்கள் மொத்தமாக நிறமிழந்தன. இது மொத்த பவளத்திட்டுக்களில் 25 சதவிகிதம்! அதாவது, ஒவ்வொரு பவளத்திட்டிலும் கிட்டத்தட்ட 60% பவள உயிரிகள் நிறமிழந்து அழிந்தன. இவற்றில் சில பவளத்திட்டுக்களாவது மீண்டும் உயிர்பெறுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் உலகளாவிய பவளத்திட்டுக்களில் 50% திட்டுக்களை நாம் இழந்திருக்கிறோம். 2050-ம் ஆண்டோடு மொத்த பவளத்திட்டுக்களில் 90% முற்றிலுமாகவே அழிந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நிறமிழத்தல் நிகழ்வுகள் அவ்வப்போது வருகின்ற நிலை மாறி வருடாவருடம் தீவிரமாக ஏற்பட்டு பவளப்பாறைகள் அழியும். தங்களைக் காத்துக் கொள்ளவும் வலுப்படுத்திக் கொள்ளவும் பவள உயிரிகளுக்கு அவகாசமே இல்லாத அளவுக்கு குறுகியகால இடைவெளியில் இந்த நிகழ்வுகள் நடக்கும்.

லா நினாவும் நிறமிழத்தலும்

சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு மேலும் ஒரு அச்சமூட்டும் தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறது. பொதுவாக இயற்கைச் சுழற்சியில் எல் நினோ – லா நினா (El Nino – La Nina) நிகழ்வுகள் அடுத்தடுத்து வருவது இயல்பு. எல் நினோ நிகழ்வின்போது சராசரிக் கடல் வெப்பநிலை அதிகமாகவும் லா நினாவின் போது சராசரிக் கடல் வெப்பநிலை குறைவாகவும் இருக்கும். செப்டம்பர் 2020-ம் ஆண்டில் லா நினா நிகழ்வு தொடங்கியுள்ளது. ஆனாலும் குறைந்த வெப்பநிலையையும் மீறி அடுத்து வரப்போகிற கோடைக்காலத்தில் பவளங்கள் நிறமிழக்கும் நிகழ்வு நடக்கத்தான் போகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

லா நினா – குளிர் – நிறமிழத்தல் நடக்காது என்று புரிந்து கொள்கிற அளவுக்குக் காலநிலை எளிமையாக இல்லை என்பது அவர்களது வாதம். காலநிலை மாற்றத்தால் எல்லாமே சிக்கலாகிவிட்டது என்பதால் லா நினா சுழற்சியால் மட்டும் நிறமிழத்தலைத் தடுக்க முடியாது என்கிறார்கள் அவர்கள்.

காலநிலை மாற்றத்தால் அவ்வப்போது வரும் புயல்கள் கூட பவளப்பாறைகளை பாதிக்கின்றன. அவை கடல் வெப்பத்தைக் குறைக்கும் என்றாலும் புயல்களின் தீவிரத்தன்மை அதிகரித்துக் கொண்டே வருவதால் அடிக்கும் காற்றிலும் அலைகளின் வேகத்தாலும் பவளப்பாறைகள் சுக்குநூறாக உடைகின்றன. அதீத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது கடலுக்குள் வருகிற சேறும் மாசுபட்ட நீரும் பவளப்பாறைகளுக்கு ஆபத்தாக முடிகிறது.

உலகளாவிய அறிவியலாளர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான 2014 அறிக்கையில் காலநிலை மாற்றத்தால் கடல்நீரின் வெப்பநிலையும் அமிலத் தன்மையும் அதிகரிக்கும் எனவும் எளிதில் பாதிக்கப்படுகிற வாழிடங்களான பவளத்திட்டுக்கள் இதனால் பெரும் பாதிப்பை சந்திக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்துக்கான அறிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் (United Nations Environment Programme) பவளப்பாறைகள் நிறமிழத்தல் பற்றிய ஒரு முக்கிய அறிக்கையை நவம்பர் 2020-ல் வெளியிட்டுள்ளது. காலநிலை தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தின் பின்னணியில் இந்த அறிக்கை சில தரவுகளை ஆராய்கிறது. பாரீஸ் ஒப்பந்தம் எந்த அளவுக்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது என்பதை முன்வைத்து நிறமிழத்தல் நிகழ்வுகள் கணிக்கப்பட்டுள்ளன. அறிக்கை முன்வைக்கும் முக்கியமான முடிவுகள் இவை:

பாரீஸ் ஒப்பந்தம் முற்றிலுமாக செயல்படுத்தப்படாவிட்டால் உலகின் எல்லா பவளத்திட்டுக்களிலும் வருடாந்திர தீவிர நிகழ்வுகள் வரத்தொடங்கும். 2034-ம் ஆண்டுக்குப் பிறகு எல்லா பவளத்திட்டுக்களுமே வருடாவருடம் நிறமிழக்கும்.

பாரீஸ் ஒப்பந்தம் பாதியாவது செயல்படுத்தப்பட்டால் இது 2045-ம் ஆண்டுக்குத் தள்ளிப்போகும். அதாவது பாரீஸ் ஒப்பந்தம் பாதியளவு செயல்படுத்தப்பட்டால், 2045-ம் ஆண்டுக்குப் பின்னர் வருடாந்திர தீவிர நிறமிழத்தல் நிகழ்வுகள் எல்லா பவளத்திட்டுக்களிலும் வரத்தொடங்கும்.

உலகின் சராசரி வெப்பநிலைக்கும் இந்த நிறமிழத்தல் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டு. நாம் வெப்பநிலையை எந்த அளவுக்குக் குறைக்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. நாம் குறைக்கிற ஒவ்வொரு கால் டிகிரி வெப்பத்துக்கும் (0.25 டிகிரி செல்சியஸ்) இந்தக் கணிப்பு வருடத்தில் ஏழு ஆண்டுகள் கூடும்! அதாவது, குறைக்கப்படுகிற ஒவ்வொரு கால் டிகிரி செல்சியஸுக்கும் நிறமிழத்தல் நிகழ்வு ஏழு வருடங்கள் தள்ளிப்போகும்!
இந்தியாவைப் பொறுத்தவரை இது 2046-ம் ஆண்டு நிகழக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2046-ம் ஆண்டுக்குப் பிறகு, வருடாவருடம் பவளப்பாறைகள் நிறமிழக்கலாம்.

நிறமிழக்கும் ஒவ்வொரு பவளத்திட்டும் உயிரிழக்கும் என்றோ மீண்டு வந்துவிடும் என்றோ நிச்சயமாக சொல்லிவிட முடியாது. அது அந்தந்த கடற்பகுதிகளின் சூழலைப் பொறுத்து மாறுபடலாம். ஆனால் வருடாவருடம் நிறமிழப்பு ஏற்பட்டால் பவள உயிரிகளுக்குத் தங்களைக் காத்துக்கொள்ளும் அவகாசம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
எல்லா பவளத்திட்டுக்களுமே அழிந்துவிட்டால் என்ன ஆகும்?

கொஞ்சம் பதறவைக்கிற சூழலியலாளர்கள் யோசிக்க பயப்படுகிற கேள்வி இது. ஆனால், காலம் இந்தக் கேள்வியையும் நேருக்குநேர் சந்திக்க வைத்துவிடுகிறது. ஒருவேளை உலகிலுள்ள எல்லாக் கடல்களிலும் எல்லா பவளத்திட்டுக்களும் மொத்தமாக அழிந்து விட்டால் என்ன ஆகும்?

சுருக்கமான பதில் – “துல்லியமாக என்ன நடக்கும் என்பது தெரியாது, ஆனால் நாம் அறிந்த உலகம் பல விதங்களில் கண்ணுக்குத் தெரியாமல் பாதிக்கப்படும். பல கண்ணிகள் அறுபடும்”

இவற்றில் நாம் ஏற்கனவே புரிந்து வைத்திருக்கிற உயிர்க்கண்ணிகள் என்ன ஆகும் என்பதைப் பார்க்கலாம்:

பல பவளத்திட்டுக்கள் பெரு மீன்களின் குஞ்சுகளுக்கு நர்சரிகளைப் போல செயல்படுகின்றன. நம் உணவுக்கு ஆதாரமாக இருக்கிற பல ஆழ்கடல் மீன்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குவதே பவளத்திட்டுக்களிலிருந்து தான். பவளத்திட்டுக்கள் இல்லாவிட்டால் இந்த மீன் இனங்கள் எல்லாமே அழியலாம்.

மீன்பிடித் தொழில், சுற்றுலா, வாழ்வாதாரம் என்று பவளத்திட்டுக்களிலிருந்து மட்டும் உலக அளவில் 375 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் வருகிறது! அது எல்லாமே அழியும். பல தீவு நாடுகளுக்கு இந்தப் பவளத்திட்டுக்கள் தான் வாழ்வாதாரமாக இருக்கின்றன. அந்த நாடுகளின் பொருளாதாரம் முற்றிலுமாக சீர்குலையும்.

பவளத்திட்டுக்களிலிருந்து பெறப்படும் வேதி மூலக்கூறுகள், மருந்துகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தொழில்கள் அழியும். பவளத்திட்டுக்கள் கடலோரப் பகுதிகளுக்கு ஒரு அரணாக இருக்கின்றன. பவளத்திட்டுக்கள் அழிந்துவிட்டால் சுனாமி, புயல், கடல்சீற்றம் போன்ற நிகழ்வுகள் வந்தால் கடலோரப் பகுதிகளுக்கு எந்தப் பாதுகாப்பும் இருக்காது.

பவளத்திட்டுக்கள் தொன்மமான உயிரிகள். ஒரு சராசரி பவளத்திட்டின் வயது 500 ஆண்டுகள். ஆஸ்திரேலியாவில் உள்ள பெருந்தடுப்புப் பவளத்திட்டின் வயது 20,000 ஆண்டுகள்! மனிதனோடு பல வரலாறுகளைக் கடந்து பயணித்துவரும் பவளத்திட்டுக்கள் அழியும்போது, காலத்தின் புத்தகத்தில் சில முக்கிய பக்கங்களும் கிழித்து வீசப்படும்.

காலப் பிரபஞ்சத்தின் ஓவியம்

பல்வேறு வண்ணங்களில் உயிர்ப்பும் சந்தடியுமாக இருந்த பவளத்திட்டுக்கள் கண்ணுக்கு நேரே நிறமிழந்து, பாசி படிந்து அழிவதைப் பார்ப்பது ஒரு குரூரமான அனுபவம். சில சிறு பவளத்திட்டுக்கள் இவ்வாறு அழிவதை நானே பார்த்திருக்கிறேன்.

கடலும் நிலமும் சந்தித்துக்கொள்ளும் இடத்தில்
காலப் பிரபஞ்சத்தின் ஓவியங்களைப் போல
மாயக் கம்பளங்களைப் போல
புனிதமான மொசைக் கற்களைப் போல
கனவுலகின் அற்புதத் தோட்டங்களாக
இந்தப் பவளத் திட்டுக்கள்

என்ற யாஹியா லபாபிடியின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன. “மனிதனுக்குக் காலம் என்றால் பயம், ஆனால் அந்தக் காலமே பிரமிடுகளைப் பார்த்து பயப்படுகிறது” என்று ஒரு சொலவடை உண்டு. அது பவளப்பாறைகளுக்கும் பொருந்தும். காலத்தையும் மீறி நின்று கொண்டிருக்கும் இந்தப் பவளத்திட்டுக்களை மனித இனத்தின் செயல்பாடுகள் அழித்துக் கொண்டிருக்கின்றன என்பது பெரிய முரண்.

நிறமிழந்த பவளப்பாறைகளுக்குள் செல்வது என்பது சிலந்தி வலைகள் நிரம்பிய யாரோ வாழ்ந்து கெட்ட வீட்டின் மாய விசும்பல்களுக்கு இடையே நடந்து செல்வதைப் போன்ற ஒரு துயர்மிகு அனுபவம். “நாம் குறைக்கிற ஒவ்வொரு கால் டிகிரி செல்சியஸுக்கும் ஒரு தாக்கம் உண்டு” என்ற தரவு மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. அந்த நம்பிக்கை செயல்வடிவம் பெற்றால் ஒருவேளை பவளத்திட்டுக்கள் காப்பாற்றப்படலாம்.

தரவுகள்:
Report from ARC Center of Excellence for Coral Reef Studies, Australia, April 2020.
Climate modelling maps from NOAA and Australian Bureau of Meteorology, 2020.
Climate Change 2014: Fifth Assessment Report of the Intergovernmental Panel on Climate Change, 2014.
Projections of future coral bleaching conditions using IPCC CMIP6 models. United Nations Environment Programme, November 2020.

***

நாராயணி சுப்ரமணியன்

ஆசிரியர் தொடர்புக்கு :nans.mythila@gmail.com