Home Blog Page 57

முகங்கள்

0

விஜய ராவணன்

“நாம மறைக்க தயங்குற முகத்த தான் இவன் முகமூடியா போட்டு விக்குறான்…”

உலர்ந்த ஆரஞ்சு பழத்தைப் போல் முகத்தில் சுருக்கங்கள் படர்ந்த பெரியவர் பேருந்து ஜன்னலினூடே சாலையின் மறுபுறத்தைக் காட்டி இப்படிச் சொன்ன போதுதான், பிரம்மநாயகம் அவனைக் கவனித்தார். பேருந்தை நோக்கி கையசைத்தபடி இருந்தான், மீசையும் தாடியும் இல்லாத சிரிப்பும் அழுகையும் தெரியாத முகமூடியை அணிந்தபடி… அது மெழுகு நிறத்தில் மொழுக்கென்று இருந்தது. துளை போட்ட கண்களும் கீறிய வாயும் அதற்கு.

தன் முகத்தையே விளம்பரப் பலகையாக்கி முகமூடிகள் விற்றுக் கொண்டிருந்தான். சாலையின் அழுக்கும் புழுதியும் படிந்த அவனது நிறம் மங்கிய சாக்குப்பையில் அணியப்படாத பல முகமூடிகள் மூச்சுமுட்ட அடைந்துக் கிடந்தன. கையில் காவல்காரனைப் போல் ஒரு நீண்ட குச்சி. அதன் கொக்கிகளில் தொங்கும் பலவித முகங்கள் இன்னும் விலைபோகவில்லை…

பேருந்து ஜன்னல்பக்கம் அமர்ந்திருந்த குழந்தைகளின் முகத்தில் திடீர் சிரிப்பு. துருவேறிய பேருந்து ஜன்னல் கம்பிகளில் தாடையை வைத்து அவனை நோக்கிக் கையசைத்தன… அழுகையை மறந்த குழந்தைகளின் வாயிலிருந்து எச்சில் வடிந்தது. முகநூல் சுவரொட்டிகளில் தான் தொலைத்த முகங்களைத் தேடிக்கொண்டிருந்த சிலர், நொடிப்பொழுது அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு “பைத்தியக்காரப் பய!” என்றபடி மீண்டும் கைபேசியை வெறிக்கத் தொடங்கினர்.

சாலையின் எதிர் மருங்கில் முகமூடி அணிந்து நிற்பவனுக்கு, பேருந்தின் முகங்கள் எதுவும் தெளிவாகத் தெரிய வாய்ப்பில்லை தான். இருந்தும் பந்துபோல் குதித்தும் இரு கைகளைத் தலைக்கு மேல் மாறிமாறி வீசியும் தலையை இடதும் வலதும் வேகமாய் அசைத்தும் கொண்டிருந்தான். நினைவுகளின் கிறுக்கல்களில் இறுகியிருந்த பிரம்மநாயகத்தின் முகம் லேசாய்த் தளர அது போதுமானதாய் இருந்தது. தன்னையே அறியாமல் பதிலுக்குக் கையசைத்தார். நிலைகொள்ளாத சிந்தனை ஓட்டத்துக்கு நடுவில் அவனைச் சிலநொடிகள் வேடிக்கை பார்ப்பது பிடித்திருந்தது.

வீட்டுக்குப் போனதும் முகமூடி மனிதனைப் பற்றி நிச்சயம் சிவகாமியிடம் சொல்ல வேண்டும்… அவள் என்ன சொல்வாள்? ம்ம்ம்…! என்பாள் இல்லை பெரிதாய் எந்தவொரு பதிலும் இருக்காது. அதற்கான காரணம் நினைவு வரவும் மீண்டும் முகம் இறுகியது.

பேருந்தில் சிவப்பு கவுன் அணிந்திருக்கும் குழந்தை, அம்மாவின் சேலையை இழுத்தபடி தனக்கும் முகமூடி வேண்டும் என்று அடம்பிடித்தது.

“சும்மா சும்மா அடம்பிடிச்சிட்டே இருந்த அந்தப் பூச்சாண்டிட்ட பிடிச்சுக் கொடுத்துருவேன்…”

அதே முகமூடி மனிதனைக் காட்டி கண்களை உருட்டி மிரட்டினாள். மிரண்ட கண்களோடு குழந்தை வெளியே எட்டிப் பார்த்தது. சிலநொடிகள் முன்பு பிடித்திருந்த முகமூடி இப்போது அச்சுறுத்தவும், தலையைத் திருப்பி அம்மாவின் சேலைக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டது.

“எல்லாரு முகத்துலையும் முகமூடி இருக்கு. என்ன அவன் போட்டுருக்கறது மட்டும் வெளிய தெரியுது! அவ்வளவு தான்…” என்று சொல்லிவிட்டு தன் சுருங்கிய முகத்தை மேலும் சுருக்கிக்கொண்டு பேருந்து இருக்கைக் கம்பியில் தலைசாய்ந்துக் கொண்ட பெரியவரின் குரல் கேட்டு, பிரம்மநாயகம் இன்னொரு முறை திரும்பிப் பார்த்தார். நகரத் தொடங்கிய பேருந்தின் கரும்புகையில் அவனது முகமூடி மட்டும் தனியொரு நிழலாய் ஆடிக்கொண்டிருந்தது.

பிரம்மநாயகம் மனைவியோடு புதிதாய்க் குடிவந்திருக்கும் ஓரடுக்கு வீடு பேருந்து நிறுத்தத்திலிருந்து பத்து நிமிடங்கள் நடக்கும் தொலைவில் தான் இருக்கிறது. வழியில் தள்ளுவண்டி சாப்பாட்டுக்கடை. தெரு முனையில் இரண்டு ஆட்டோக்கள். அதில் ஒரு ஆட்டோவின் பின்சீட்டில் இரண்டு ஓட்டுனர்களும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். புதுஊர் என்பதால், இந்த ஆட்டோக்கள் தான், தன் வீட்டிற்குப் போகும் குறுக்குத்தெருவிற்கு பிரம்மநாயகம் வைத்திருக்கும் அடையாளம்.

முக்கியச் சாலையிலிருந்து தன் தெருவுக்குள் நுழையும்போது ஆளரவமற்று இருந்தது. இரண்டு தெரு விளக்குகளில் ஒன்று எரியவில்லை. மற்றொன்று ‘கிர்’ என்ற சத்தத்தோடு எரிந்து கொண்டிருந்தது. சாலையில் பாதிதூரம் இருட்டும் மீதி தூரம் மஞ்சள் வெளிச்சமும் விரவிக்கிடக்க, என்றுமில்லாமல் புதிதாய் இருட்டிலும் வெளிச்சத்திலும் மாறிமாறி நடந்தார். அவரது சிந்தனையோட்டத்தில் முகமூடி மனிதனும் கூடவே வந்தான். தார்ச்சாலையில் ஒளி பின்வாங்கும் இடத்தில் நின்று குனிந்து பார்த்தார். முன்தலை வழுக்கையோ காதுமடலின் அடைசலான நரை முடிக்கற்றையோ இருபுருவங்கள் ஒட்டிய முகமோ இருள்பூசிய சாலையில் தெரியவில்லை.

கோரப்பற்களோடு கூடிய பேய் முகமூடி ஒன்று அணிந்து சத்தமில்லாமல் வீட்டுவாசல் கம்பி-கேட்டைத் திறக்க வேண்டும்! எப்போதும்போல் சிவகாமி தூங்கியிருக்க மாட்டாள். அடுப்படியில் பாத்திரம் கழுவிக்கொண்டோ இல்லை ஏதாவது சமைத்துக் கொண்டோ தான் இருப்பாள். விகார முகத்தோடு அவள் பின்னால் போய் நின்று திடீரென்று அச்சுறுத்த வேண்டும். சுதாகர் இப்படித்தான் செய்திருப்பான். அந்த நினைப்பு வந்ததும், முகம் தானாக தன் உண்மை வடிவத்துக்கு மாறியது.

வீட்டுவாசலில் குண்டு பல்ப் மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. வலுவற்ற கம்பிக்கதவு திறந்ததும் க்றீச்சிட்டது.

“வந்தாச்சா?” வழமையான சுரத்தற்ற குரல்…

உள்ளறையில் மின்விளக்கை அணைத்துவிட்டு இருட்டுக்குள் உட்கார்ந்திருந்தாள்.

“ம்ம்….” என்றபடியே உள்ளே நுழைந்ததும் படுக்கையறையின் மின்விளக்கைப் போட்டு ஆளுயர நிலைக்கண்ணாடி முன்னால் போய் நின்றார். கண்ணாடி உண்மையைக் காட்டியது. அரைக்கைச் சட்டை அணிந்திருக்கும் அறுபது வயது உணர்வு வறண்ட முகம்.

வழக்கமாய் அணியும் பார்வைக்குப் புலப்படாத முகமூடி ஒன்றை அணிந்து கண்ணாடியில் பார்த்தார், உதட்டோரம் லேசாகச் சிரிப்பு அரும்பியது. வேறொன்றை மாற்றிப் பார்த்தார், காற்றடைத்த பலூனாய் முகம் மலர்ந்தது. அதிலும் திருப்தியில்லை. மனம் அடுத்ததை அணிந்து பார்க்க ஆயத்தமான போது சிவகாமியின் குரல் தடுத்தது, “என்னங்க எவ்வளவு நேரமா கூப்டுட்டு இருக்கேன். சத்தத்தையே காணும்? கண்ணாடி முன்னாடி நின்னுட்டு என்ன பண்றீங்க?”

“ஒன்னுமில்ல சும்மா தான்…”

“என்ன குரல்ல சுரத்தே இல்ல?”

முகத்தை மறைப்பதைப் போல் குரலின் உண்மையை நெறிக்க முடிந்திருந்தால் வசதியாய் இருந்திருக்கும்.

“அதெல்லாம் ஒன்னுமில்ல…”

அவரது பதிலில் மனைவிக்கு நம்பிக்கையில்லை. வலதுகையிலிருந்து தடித்த வெள்ளைத் தூறலாய் தோசைமாவு சொட்டுச்சொட்டாய் தரையில் வடிந்து கொண்டிருப்பதைக் கவனிக்காமல், கணவனின் முகத்தை சந்தேகத்தோடு ஆராய்ந்தாள். அவளது கருவளையம் விழுந்த கண்களை எப்போதும் போல் இன்றும் சிரித்த முகத்திரையோடு பிரம்மநாயகம் எதிர்கொண்டார்.

“சரி கைகால் கழுவிட்டு சாப்பிட வாங்க…” என்று சொல்லிவிட்டு மீண்டும் சமையலறைக்குச் செல்லவும், அவளைப் பின்தொடரும் வெள்ளைமாவுத் தடங்களைப் பார்த்தபடியே நிற்பவரின் உதடுகள் சப்தமின்றி முணுமுணுத்தன, “பைத்தியக்காரி!!”

கடந்த பன்னிரெண்டு வருடங்களாய் இப்படித்தான் ஏமாந்து கொண்டிருக்கிறாள்.

*

பெண்குழந்தை பிறந்தால் ‘வடிவு’ என்ற பெயர்தான் வைக்கவேண்டும் என்று தன் பானை வயிற்றைத் தடவியபடி சிவகாமி சொன்ன அன்று பிரம்மநாயகம் மறுப்பேதும் சொல்லவில்லை. ஆச்சி பெயர்தானே என்றார் சிரித்தபடி. அந்தப் பெயரை விட பெண் குழந்தை… என்று மனைவி சொன்னதில் மனசு நிறைந்தது. திருமணமாகி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கடந்திருந்தது. வீட்டில் பெரியவர்களும் அக்கம் பக்கமும் எதுவும் விசேஷம் உண்டா என்று அடிக்கடி விசாரித்தபடி இருந்தனர். ஆச்சி நேரடியாகவே கேட்டுவிட்டாள் “உன் பொஞ்சாதி காய்ப்பாளா மாட்டாளா?”

சுற்றமும் உற்றமும் நரம்பில்லாத நாவால் சுழன்றடித்த சமயத்தில் தான் சிவகாமி கருவுற்றிருந்தாள். பெண்பிள்ளைதான் என்று நம்பினார் பிரம்மநாயகம். மனைவி விருப்பப்படும் ‘வடிவு’ பெயரே வைப்பது என்றும் முடிவாகிவிட்டது. வாயில் விரலை வைத்துச் சிரிக்கும், எச்சில் வடியத் தவழும், முட்டைக் கண்களை அகலத்திறந்து திருதிருவென விழிக்கும் குழந்தைகளின் பலவண்ணப் புகைப்படங்களை சுவரிலும் மனதிலும் இருவரும் ஒட்டினர்.

“பொண்ணு செக்கச்செவேல்னு பொறக்கணும்!” என்றபடி குங்குமப்பூ சேர்த்த பால் தம்ளரை மனைவியிடம் நீட்டுவார். அளவு தெரியாமல் முதல் ஆறு மாதங்களுக்கான உடைகளும் குழந்தையைக் கிடத்த ரோஜா நிறத்திலான மெத்தை ஒன்றும் வாங்கியாகிவிட்டது. பிரம்மநாயகம் எதிர்பார்த்ததைப் போல் பெண்பிள்ளை தான் பிறந்தது, ஆனால் உயிரற்ற பொம்மையாக!

“நான் மலடி இல்லன்னு ஊருக்குச் சொல்லத்தான் வந்துபொறந்தாளா…?” உதைக்காத பிஞ்சு கால்களை தன் மாரில் மோதி அழுதாள்.

துணிக்குள் சுற்றப்பட்ட அசைவற்ற சதைப்பிண்டத்தைப் பார்த்து ‘வடிவு…’ என்று வாய் அனிச்சையாய் முணுமுணுத்த போது பிரம்மநாயகம் கண்ணீர் விட்டு அழவில்லை. வாங்கி வைத்திருந்த ரோஜா நிற மெத்தையில் கிடத்திப் புதைத்தார். அவரது முகம் ஒரு பாறையைப் போல் இறுகியிருந்தது.
. . .

அலுவலகத்திலிருந்து கிளம்பும் போதே பிரம்மநாயகம் யூகித்துவிடுவார், இன்று அவனது அவதாரம் என்னவாய் இருக்கும் என்று. அவருக்கு இந்த அந்தரங்க முகவிளையாட்டு பிடித்திருந்தது.

அவனும் என்றுமே தன்னை ஒரே முகத்திற்குள் அடைத்ததில்லை. ஒருநாள் தலையில் இரண்டு கொம்புகளிருக்கும், நாக்கு வெளியே தொங்கும், பிறகொரு நாள் அரைவழுக்கைத் தலையோடு சிரித்துக் கொண்டிருப்பான் பற்கள் இருக்காது… மற்றொருநாள் மூக்கின் மீது பெரிய பலூன் போல் சிகப்பு வீக்கம்…

சிலசமயம் பிரம்மநாயகத்தின் யூகம் சரியாக அமைந்துவிடும். அப்போதெல்லாம் மனதுக்குள் ஒரு இனம் புரியாத துள்ளல். அவரது இருண்ட வானத்துக்கு இந்தச் சிலநிமிட வெளிச்சம் தேவைப்பட்டது.

கண்களை இறுகமூடி யோசித்தார். தினமும் அவன் கழற்றிமாட்டும் முகங்களில், பிறை நிலவைப் போல் வளைந்த இரண்டு கொம்புகளிருக்கும் நாக்கு வெளியே தொங்கும் பயங்கரமான முகமூடிதான் இன்று அணிந்திருக்க வேண்டும் என்று அழுத்தமாய்ச் சொன்னது உள்ளுணர்வு. வாரயிறுதி நாட்களில் அவன் அப்படிப்பட்ட முகத்தைத்தான் அணிவான்.

தினமும் அமரும் ஜன்னலோர இருக்கை இன்று கிடைக்கவில்லை. சாலையிலும் பேருந்துக்குள்ளும் ஒரே கூட்டம். பக்கவாட்டில் இருக்கும் கம்பியைப் பிடித்து நின்றுகொண்டு சாலையைக் குனிந்து பார்த்தபடியே வந்தார். கூட்ட நெரிசல் அவரது நேர்ப்பார்வையை மறைத்தது. எதிர்நோக்கியிருந்த பேருந்து நிறுத்தம் வந்ததும், கண்களை அகலத்திறந்து சாலையின் முகக்குவியலில் ஒற்றை முகமூடியைத் தேடினார்.

சாலையின் எதிர்புறம் கூட்டம் அதிகம் சேரும் துணிக்கடை வாசலில் நின்றிருந்தான். ஆனால் அவர் எதிர்பார்த்ததைப் போல் பேய் பிசாசு முகமூடி அணிந்திருக்கவில்லை. வாய் உப்பிய மூக்குச் சிறுத்த உருண்டை கண்கள் கொண்ட சாம்பல் நிறத்திலான குரங்கு முகமூடி அணிந்து, பத்து விரல்களையும் பாதி மடக்கி கால்கள் இரண்டும் பின்தொடையில் படும்படி இடைவெளிவிட்டுக் குதித்துக் கொண்டிருந்தான். பிரம்மநாயகத்தின் முகம் பொலிவிழந்து சுருங்கியது.

எட்டு வயதில் சுதாகர் நல்லூர் கொடையில் அடம்பிடித்துக் கேட்டபோது அவனுக்கும் குரங்கு முகமூடிதான் வாங்கித் தந்தார். ஆனால் இதைப்போல் மரத்திலோ நெகிழியிலோ துணியிலோ அது ஆனதல்ல, வெறும் நூலை வைத்துக் கட்டப்பட்ட காகித அட்டையில் வரைந்த குரங்கு முகமூடி! தன் முகத்தைவிடப் பெரிதாக இருக்கும் முகமூடியையே அடம்பிடித்து வாங்கிக்கொண்டான்.

அந்தக் குரங்கு முகமூடியை அணிந்ததிலிருந்து அவன் சேட்டை தாங்கவில்லை… தினமும் பள்ளிக்கூடத்தின் வாசல்வரை அந்த முகமூடியோடு தான் போவான். பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் முகமூடியை மீண்டும் அணிந்து கொண்டு குறுகிய கைப்பிடிச்சுவரில் ஏறி நடப்பான். பின் அங்கேயே உட்கார்ந்து தெருவை வேடிக்கை பார்த்தபடி இருப்பான், முகத்தில் அணிந்திருப்பதைக் கழற்றாமல்.

குரங்கு முகமூடி அவன் முகத்தில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. சிவகாமி ஊட்டும் சாப்பாட்டு உருண்டைகளையும் குரங்குதான் எதிர்கொள்ளும். கெஞ்சியும் கொஞ்சியும் முகத்திலிருக்கும் குரங்கை கொஞ்ச நேரம் தலைக்குமேல் தூக்கி வைத்துவிட்டு தான் ஊட்டுவாள். தூக்கத்திலும் அதை எடுக்கவிட மாட்டான். வாலில்லாக் குரங்கு தரையில் தூங்குவதைப் போலிருக்கும். அவனறியாமல் அயர்ந்து தூங்கிய பின்தான் கழற்ற முடியும். பின் அவனே ஒருநாள் அந்த முகமூடியை மறந்தும் போனான். காரணமற்ற அதன் காரணம், இன்றுவரை பிரம்மநாயகத்திற்கு விளங்கவில்லை.

இன்று அந்த முகமூடியைத் தேடி எடுக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. பரணில் தான் இருக்கும். விறுவிறுவென வீட்டுக்கு நடந்து வந்தவர் படுக்கையறையில் இடுப்பளவு உயரம் கொண்ட மேசையைத் தரையோடு உரசியபடியே இழுத்தார். வெள்ளை மார்பிள் தரையில் மேசையின் மரக்கால்கள் உராயும் சத்தத்தை அவர் பொருட்படுத்தவில்லை.

தன் வலதுகாலை படுக்கையின் மீது வைத்தும் இடதுகாலை மேசையின் மீது வைத்தும் மேலே ஏறினார். பரணிலிருக்கும் எல்லா அட்டைப்பெட்டிகளிலும் தூசி படர்ந்திருந்தது. ஒவ்வொன்றாய் இறக்கி வைத்து துழாவிக் கொண்டிருந்தபோது, “அங்க என்ன உருட்டிட்டு இருக்கீங்க?” அண்ணாந்து பார்த்தபடி மனைவி கேட்டாள். முகத்தை மறைத்தவர் வார்த்தையில் பிடி தவறிவிட்டார்…

“நம்ம சுதாகரு சின்ன வயசுல குரங்கு முகமூடி ஒன்னு எப்போவுமே மாட்டிட்டுத் திரிவானே, அது எங்கன்னு தெரியுமா?”

கட்டுப்பாடின்றி பேசிய வார்த்தைகளைத் தாமதமாகத்தான் உணர்ந்தார். முன்வரிசைப் பற்கள் இரண்டு நாக்கில் அழுத்தமாய்ப் பதிந்தன. தயக்கத்தோடு மனைவியின் முகத்தைப் பார்த்தபோது, அவளது இறுகிய பனிப்பாறை உருகத் தொடங்கியிருந்தது.
. . .
நிலவு தெரியாத கரிய இரவு ஒன்றில் கணவனின் காதில் சிவகாமி மெல்ல முணுமுணுத்தாள் “இந்த மாசம் தள்ளிப் போயிருச்சு. காலையில ஆஸ்பத்திரி போய்ப் பாப்போம்…”

முதல் குழந்தை இறந்து பிறந்து மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் கருவுற்றிருப்பவளின் முகத்தில் மகிழ்ச்சியை விட இனம் புரியாத பயத்தின் ரேகைகளே அதிகம் நெளிந்தன. மறந்து போயிருந்த இறந்த குழந்தை கனவில் மீண்டும் பிறந்துவந்து கைகால்களை அசைத்து அச்சுறுத்தியது. தனக்கு வாங்கி வைத்த பொருந்தாத ஆடைகளை உடுத்திப் பார்க்க வேண்டும் என்று அடம்பிடித்தது. தாயின் கருவறை இருட்டுக்குள் அது கண்ணாமூச்சி ஆடிய இரவுகளில் பதட்டத்தோடு தூக்கம் கலைந்து விழித்துக்கொள்வாள்.

“என்னங்க இந்தவாட்டி கொழந்த நல்லா பொறக்கும்ல…”

“கண்டத யோசிக்காம தூங்கு…”

உறங்காமல் இரவுவிளக்கு வெளிச்சத்தையே வெறித்துக் கொண்டிருப்பவளின் உச்சந்தலையை மெல்ல வருடிவிட்டார்.

இந்தமுறை பெயர் எதுவும் யோசித்திருக்கவில்லை. துணிமணிகளும் வாங்கவில்லை. சுவரில் எந்தப் புகைப்படமும் ஒட்டவில்லை. எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்ததும் திருச்செந்தூருக்கு நடந்து வருவதாக வேண்டியிருந்தார். மருத்துவமனையின் எதிரே இருக்கும் மின்கம்பத்தில் காகங்கள் விடாமல் கரைந்து கொண்டிருந்தன…

“எல்லாம் நல்லபடியா நடக்கும்…” பிரசவ விடுதியில் நடுங்கிய பிரம்மநாயகத்தின் கைகளை இறுகப்பற்றி ஆச்சி சொன்னாள். காகக்கூட்டத்தின் ஓயாத கரைதலைத் தாண்டி சப்தமாய் ஒலித்தது குழந்தையின் அழுகுரல்…

“புள்ள அப்படியே அச்சு அசலா ஒன்ன மாதிரி தான்டே இருக்கான்! பெயரு என்னடே யோசிச்சு வச்சுருக்க…” நெற்றியில் சுருக்கங்கள் படர ஆச்சி கேட்டாள்.

“சுதாகர்…” என்று சொன்னதும் வீலென்று விடாமல் குழந்தை அழுதபோது யார் முகத்திலும் முகமூடி இல்லை.
. . .
வழக்கத்துக்கு மாறாக இன்று ஆண்சிங்கத்தின் முகமூடி அணிந்திருந்தான்… அதன் பழுப்புநிறப் பிடரிமுடிகள் காற்றில் உதிரிஉதிரியாய் பறந்து கொண்டிருந்தன. முகவாய்க்கட்டை மஞ்சள் பற்களின் கூர்மை தெரியும்படி பசித்த சிங்கம் வாய் திறந்து வைத்திருந்தது. சாலையோரத்தில் சப்தமின்றி கர்ஜித்துக் கொண்டிருக்கும் சிங்கத்தை ஒன்றிரண்டு பொடிசுகளைத் தவிர பெரிதாய் யாரும் பொருட்படுத்தவில்லை. தன்னைக் கண்டும் காணாமல் கடக்கும் முகங்களைத் திசை திருப்ப, பிடரியை வேகமாய் இரண்டு மூன்றுமுறை சிலிர்ப்பி அடிவயிற்றை உள்ளிழுத்து மீண்டும் கர்ஜிக்க முயன்றது சிங்கமுகம்.

“என்ன சார் பாக்குறீங்க, இவங்க மோசமானவங்க சார், காலையில இப்படித்தான் மூஞ்சிய மறச்சுட்டு எதயாச்சும் விப்பாங்க… நல்லா வேவு பாத்துட்டு நைட்டு வீட்டுக்குள்ள பூந்துருவாங்க. இதான் இவங்க வேலயே!!”

பேருந்து இருக்கையில் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் இப்படிச் சொல்லி முடிக்கவும், உறுமிக் கொண்டிருக்கும் பேருந்தைவிட்டு பிரம்மநாயகம் பாதியில் இறங்கவும் சரியாய் இருந்தது.

பள்ளிச்சீருடை அணிந்திருந்த அரும்பு மீசை முகமொன்று “முகமூடி எவ்வளவு?” என்று கேட்கவும் நூறு என்று பத்துவிரல்களை மௌனமாய் விரித்துக் காட்டியது சிங்கமுகம். ஏதும் சொல்லாமல் பள்ளிமாணவன் திரும்பிப் போவதைப் பார்த்தபடியே, தன் வலிமையான சிங்கத்தாடையை அழுத்தி நெஞ்சுவரை நீண்டிருக்கும் பிடரிமுடியை வலதுகையால் நீவிக் கொண்டிருந்தபோது, சிங்கமுகத்தெதிரே அச்சமில்லாமல் போய் நின்றார் பிரம்மநாயகம். சிங்கமுகமூடிக்குப் பின்னால் இருக்கும் சதையால் தைத்த முகம் இளைஞனுடையதாக இருக்கலாம் என்ற யூகத்தில் ஏற இறங்கப் பார்த்தார்… ஆனால் அவனது மெலிந்த உடம்போடு சிங்கத்தலையின் கம்பீரம் ஒத்துப் போகவில்லை. வேட்டையாட வக்கற்ற பலவீனமான வயதேறிய சிங்கத்தைப் போலிருந்தான்.

ஆட்காட்டி விரலை அவன் அணிந்திருக்கும் முகமூடியை நோக்கி உயர்த்திக் கேட்டார் “முகமூடி போட்டுப் பாக்கலாமா?”

சாக்குப்பையிலிருந்து புதிதாய் ஒரு சிங்க முகமூடியை எடுத்து பிரம்மநாயகத்திடம் நீட்டினான். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு முகமூடி என்பது அவன் நிலைப்பாடு. அதில் ஒட்டியிருக்கும் விலையைச் சுட்டிக்காட்டி மீண்டும் பத்துவிரல்களை மடக்கிக் காட்டியது சிங்கமுகம்.

முதல்முறை பிரம்மநாயகத்தின் முகத்தில் மெய்யான முகமூடி. அதுவும் சிங்கமுகம்! அவருள் இருந்த வெறுமையும் சோகமும் பயந்து ஒதுங்க ஆணவமும் கம்பீரமும் அரியணை ஏறியது… திடீரென்று தலையில் கண்ணுக்குத் தெரியாத கிரீடம்! உடம்பில் இனம்புரியாத மிடுக்கு! விரல்களில் கூரிய நகங்கள்! வெளியுலகைப் பார்த்து ‘நான் ஒரு சிங்கம்’ என்று உரக்கக் கர்ஜிக்க வேண்டும் போல் தோன்றியது.

அவரின் புது அவதாரத்தைப் பார்த்து மேகங்களும் அச்சத்தில் மழை பொழியத் தொடங்கின… எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சாக்குப்பையில் தன் சாலையோரக் கடையை அடைத்து முதுகில் ஏற்றினான். இரண்டு சிங்கங்களும் அருகில் இருக்கும் பலசரக்குக்கடையின் தகரக்கூரையின் கீழ் ஒதுங்கின. தகரத்தின் ஓட்டை வழியே மழை சொட்டுச்சொட்டாய் இருவர் மீதும் வடிந்தது.

காட்டு ராஜாவுக்குப் பட்டாபிஷேகம் என்று பிரம்மநாயகம் மனதில் சிரித்துக் கொண்டார். சிங்கமுகமூடியாகவே இருந்தாலும் அதற்குள் நீண்டநேரம் அடைபட்டிருப்பதும் அதன் சிறிய ஓட்டை வழியே உலகைப் பார்ப்பதும் சிரமம் தான்.

முகமூடியின் கூண்டுக்குள் ரொம்பநேரம் சிறைபட்டிருக்க முடியாமல் முகம் விடுதலை கேட்கவும், பிரம்மநாயகம் சிங்கமுகமூடியை விலக்கினார். மழை நின்ற வானத்தை முகமூடி மனிதன் பார்த்தபடியிருந்தான். அவனது சிங்கப்பிடரி முடிகள் ஈரத்தில் ஒன்றோடொன்று ஒட்டியிருந்தன. முகமற்ற தனக்கு மொழியும் தேவையில்லை என மௌனமாய் நிற்பவனிடம், “இத போட்டுக்குட்டே இருந்தா உள்ள என்னமா வேர்த்து கொட்டுது…” என்று தன் முகமூடியைக் காட்டிச் சொன்னார். சிங்கம் வெறுமனே தலை அசைத்துவிட்டு வெறித்த வானத்தை அண்ணாந்து பார்த்தபடி மீண்டும் வீதிக்குப் போனது.

“பேசறதுக்கும் துட்டு கேட்பான் போலியே….” பக்கத்தில் நிற்கும் அரைக்கைச் சட்டைக்காரரிடம் பிரம்மநாயகம் அலுத்துக் கொண்டார்.

“இவங்களுக்கு எங்க சார் நம்ம பேசுறது எல்லாம் புரியப்போகுது? வடகத்தியப் பயலா இருக்கும். ஏதோ கொஞ்சநஞ்சம் நம்ம பேச்ச புரிஞ்சுகிட்டு எதையோ வித்து பொழப்ப ஓட்டிட்டு இருக்காங்க….” என்று அவர் சொன்னபோது, மீண்டும் சாக்குப்பையைப் பிரித்து ஈரமண்ணில் கடை விரித்திருந்தது சிங்கமுகம்…

ஆட்டோ ஸ்டாண்டைக் கடந்து தன் தெருவுக்குள் நுழையும்வரை பிரம்மநாயகம் காத்திருந்தார். வழக்கத்திற்கு மாறாய் இரண்டு தெருவிளக்குகளும் பிரகாசமாக எரியவும், சிங்கமுகத்துக்கான பிரத்யேக ஏற்பாடுதான் எனத் தோன்றியது. முகத்தின் வியர்வையைத் துடைத்தபடி சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு மொத்தத் தெருவும் வெறிச்சோடி இருக்கவும், தோள்பையில் அழுந்திக் கிடக்கும் சிங்கமுகமூடியை ஆசையாய் வெளியே எடுத்து வெளிச்சம் வட்டமாய் விழும் தெருவிளக்கின் கீழ்நின்று அணிந்து கொண்டார். எல்லா வீடுகளும் சிங்கத்துக்குப் பயந்து முன்னெச்சரிக்கையாக ஏற்கனவே கதவை சாத்தியிருந்தன.

தன்வீட்டு வாசல்கதவு மேல் கொண்டியை அலட்சியமாய்த் திறந்து வேகமாகத் தள்ளவும் சுவரில் போய் மோதியது. வீட்டுக்குள் போகவில்லை, உள் கதவையும் தட்டவில்லை. இருகைகளையும் பின்னால் கட்டிக்கொண்டு தலையை லேசாய் மேலே உயர்த்தியபடி வாசலிலேயே காத்திருந்தது சிங்கமுகம்.

“என்ன வந்தாச்சா…?”

பதிலேதும் பேசவில்லை. சிங்கம் பதில் சொல்லத் தேவையில்லை.

கலைந்திருக்கும் முடியைக் கொண்டை போட்டபடி வெளியே வந்த மனைவியின் கண்கள் சட்டென விரிந்தன.

“என்னங்க இது கோலம்? டக்குனு ஒரு நிமிஷம் பயந்துட்டேன்!!”

தலையில் அடித்தபடி லேசாய்ச் சிரித்தாள். சிங்கமுகமும் உள்ளே சிரித்துக் கொண்டது. சமீப காலமாய்ச் சிரிக்க மறந்திருந்த உதடுகளின் சில நொடிச்சிரிப்பு.

“சீக்கிரம் அத கழட்டிட்டு வாங்க…”

முகமூடியைக் கழற்றி ஆணியில் மாட்டினார். துருப்பிடித்த ஆணிக்கு சிங்கத்தின் ஆளுமையும் கம்பீரமும் குடிபெயர்ந்ததும் வெறும் பிரம்மநாயகமாய் சாப்பிட உட்கார்ந்தார். தட்டில் சூடாய் நான்கு இட்லிகள்.

“இன்னும் ரெண்டு சாப்புட வேண்டியது தானே..”

மனைவி சொல்வதை வயிறு ஆமோதித்தாலும் மனசு ஏனோ மறுத்தது.

“நீ சாப்பிட்டியா?”

“ம்ம்….” என்று மட்டும் வெறுமனே சொன்னாள்.
. . .
“புள்ளயவா வளக்கீய…” என்று கத்தியவர் காறி உமிழ்ந்தபோது பிரம்மநாயகத்தின் முகம் காரை பெயர்ந்த சுவரைப் போலிருந்தது. பதிலேதும் பேசாமல் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டாரே தவிர எந்த எதிர்வினையும் காட்டவில்லை. கணவனுக்குப் பின்னால் வாசல் நிலைப்படியில் நிற்கும் சிவகாமியின் முகமும் தரையைப் பார்த்தபடி இருந்தது. எதிரே நிற்பவர்களை ஏறிட்டுப் பார்க்கும் தைரியத்தை இருவரும் இழந்திருந்தனர்.

“புள்ளய வளக்கத் தெரியல, நீ கெட்ட கேடுக்கு மீச வேற. உன் மவன் வளந்து இன்னும் எத்தன பேரு குடிய கெடுக்கப் போறானோ… ”

அவரது வார்த்தைகள் வெட்ட வெட்ட கணவனும் மனைவியும் எதிர்ப்பற்ற மரங்களாய் நின்றிருந்தனர்.

சுதாகர் அப்போது பதின்ம வயதை எட்டியிருந்தான். “நம்ம கும்புடுத சாமி தான் உன் வவுத்துல ரெண்டாவதாட்டி பொறந்துருக்கு…” என்று பிரம்மநாயகம் அடிக்கடி மனைவியிடம் சொல்லுவார். அவளும் அப்படியே நினைத்தாள். சுதாகர் பிறந்தபின் நடுஇரவில் தூக்கம் கலைக்கும் பழைய கனவுகள் நின்றிருந்தது. முதல் குழந்தைக்கும் சேர்த்தே அவனை வளர்த்தாள். அந்தக் குழந்தைக்கு வாங்கி வைத்திருந்த உடைகளையும் சுதாகருக்குப் போட்டு அழகு பார்த்தாள்.

“ஊர்ல இல்லாத புள்ளய பெத்துட்டா. பண்ணுத அளப்பறைய பாரு…” யாருடைய கேலிப்பேச்சும் காதில் விழாது.

சுதாகர் வாய்திறந்து கேட்கும் முன் விரும்பிய பொருள் கையிலிருந்தது. ‘ஒரே புள்ள…’ என மகனின் சட்டைப்பையில் அப்பா காசு தாராளமாகப் புரளத் தொடங்கியது. மகன் வளர்ந்த பின்னும் சிவகாமி மாறவில்லை. மடியில் கிடத்தி சோறூட்டினாள். அம்மாவின் சேலை முகப்பே அவன் தன்னை மறைத்துக்கொள்ளும் முகத்திரையானது.

பால்கார கணேசன் பிரம்மநாயகத்திடம் சுதாகரை முச்சந்திக் கடையில் பார்த்ததாகச் சொன்னான். ‘முச்சந்திக்கடை’ வாலிபர்கள் திருட்டுப் புகைக்கும், தடம் புரள்வதற்குமானத் தளம்… சுதாகரிடம் அதட்டிக் கேட்டார். அவனது பார்வை முதல்முறை பம்பரம் போல் நிலையற்றுச் சுற்றியது. கை ஓங்கிய கணவனை குறுக்கே வந்து தடுத்தாள் சிவகாமி.

“பொண்ண பெத்துருந்தா தான்யா தெரியும், என் வவுத்தெரிச்சல்…” எதிரே உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தவரின் கண்களில் கோபம் கலந்த கண்ணீர் முட்டியது.

“உங்க பொண்ணும் தான…” பிரம்மநாயகத்தின் உதடு லேசாய் முணுமுணுத்தது.

“அவளுக்கு பதிமூனு வயசுயா! பதினைஞ்சு வயசு பையன் பண்ணுற வேலயாய்யா இது…” மீண்டும் கை ஓங்கியபோதும் பிரம்மநாயகம் அசைவற்று நின்றார்.

“நாசமா தான் போவான் உன் பையன்…” மண்ணை வாரித் தூற்றிவிட்டுப் போனார்கள்.

“இவனும் செத்தே பொறந்துருக்கலாம்…!” காதில் விழுந்த வார்த்தைகளை நம்பாமல் பேசிய மனைவியை உற்றுப் பார்த்தார். அவளின் வார்த்தைகளைப் போல் முகத்திலும் உயிரோட்டமில்லை. பயத்தில் சுதாகர் அன்று இரவு பதினோரு மணிக்குதான் வீட்டுக்கு வந்தான்.

“புளியமரத்துக்குப் பின்னால பொட்ட புள்ளயோட உனக்கு என்ன சோலி?”

பெல்ட்டை கழற்றி கோபம் தீர அடித்தார். வலியில் ‘அம்மா அம்மா’ என்று மகன் கதறும் சப்தம் காதில் விழாததைப் போல் இறுகிய முகமூடியோடு கல்லாய் நின்றாள்…
. . .
பேருந்திலிருந்தபடி எட்டிப் பார்த்தார். இன்றைய மாலைப்பொழுதும் மற்றைய தினங்களைப் போலவே இருந்தது. பேருந்தின் கரும்புகை, பாதையின் இருமருங்கிலும் பளிச்சிடும் மின்விளக்குகள், குறுக்கும் நெடுக்கும் நடமாடும் மனிதர்கள், சாலையின் குண்டு குழிகளில் தேங்கிய மழைநீர், அதில் நொடிப்பொழுது பிடிபடும் கலங்கிய முகங்கள், மழைபெய்து சகதியான கடைத்தெரு, அதைப் பொருட்படுத்தாத கூட்டம், ஆட்டோவின் ஹாரன் சத்தம், இருட்டத் தொடங்கும் வானம் எதுவும் மாறவில்லை, முகமூடி மனிதனைத் தவிர. இரண்டு வாரங்கள் கடந்து விட்டன. கடைசியாய் அவனைச் சிங்கத்தலையோடு பார்த்தது. அவன் இல்லாத கூட்டமான கடைத்தெருவும் வெறிச்சோடித் தெரிந்தது. ‘முகமூடி மனிதன்’ என்ற ஒற்றை அடையாளத்தைத் தவிர எதையும் அவன் விட்டுச்சென்றதாய்த் தெரியவில்லை. முகமும் முகவரியும் இல்லாதவன் எங்கு சென்றிருப்பான்? போட்ட வேஷங்கள் போதும் என்று கிளம்பி விட்டானா?

“இங்க ஒருத்தன் முகமூடி வித்துட்டு இருப்பானே…”

“வேற ஏதாவது ஊருல இந்நேரம் கடைய விரிச்சுருப்பான்… நாடோடி பொழப்பு… அவங்க வாங்கி வந்த வரம் அப்படி!”

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலிருக்கும். நாட்களின் ஓட்டத்தில் எதையோ தேடி அலையும் மக்களுக்கு முகமூடி மனிதன் எப்போதோ கடந்த காலமாகியிருந்தான். ஒருவேளை காலம் அவனது முகமூடியையும் பிடுங்கியிருக்கலாம். வாழ்க்கை முழுதும் அவன் முகத்தை மறைத்துதான் அலைய வேண்டுமா என்ன?

*
இருண்டவானில் அந்தரத்தில் பல முகமூடிகள்! இரவின் இருட்டில் அவை நட்சத்திரங்களாய் ஜொலிக்கின்றன. முகத்தை மறைத்தபடி ஒருவன் அந்தரத்தில் மிதந்து கொண்டிருக்கிறான். அவனைச் சுற்றி பலவித முகமூடிகள் இருண்ட வெளியெங்கும் சிதறிக் கிடக்கின்றன. அவனது முகம் காணவேண்டி நெருங்கும் பிரம்மநாயகத்தை முகமூடிகள் சூழ்ந்து சிரிக்கின்றன, அழுகின்றன, அஞ்சுகின்றன, அச்சுறுத்தின, கெஞ்சின… கண்ணுக்குத் தெரியாத நூலில் தொங்கும் முகங்களைப் பிடுங்கி எறிய கைகளை உயரே நீட்டவும் அவை கனவாய்க் கலைந்தன…
காலைக்கனவு இடிபாட்டிலிருந்து பிரம்மநாயகம் தப்பி விழித்தபோது உடல் வியர்த்திருந்தது. காலச்சுனாமியில் சுதாகரின் முகமும் அடித்துச் செல்லப்பட்டு பன்னிரெண்டு வருடங்கள் கடந்துவிட்டன.
அடிவாங்கிய இரவு வீட்டைவிட்டு ஓடிப்போன மகன் இன்னும் திரும்பவில்லை… போலீசிடம் புகார் செய்தும்… காசை வாரியிறைத்தும்… ஊர் ஊராய் வருடக்கணக்கில் தேடியும் பலனில்லை. வேகமாய்ச் சுழலும் வாழ்க்கையில் எங்கோ வீசி எறியப்பட்ட முகங்களில் அவனும் ஒன்றானான். மனைவி சிரிக்க மறந்து போனாள். பிறரது சிரிப்பும் சந்தோஷமும் காரணமற்ற கோபத்தைக் கிளறியது. தன்னைக் கடக்கும் எல்லா முகங்களும் அவளுக்கு மகனுடையதாய்த் தெரியவும் வீட்டைவிட்டு வெளியே போகவும் அஞ்சினாள். அப்படிச் செல்லும் அரிய நாட்களிலும் அவளது கண்கள் எதிர்ப்படும் முகங்களை மேய்ந்தபடி இருக்கும்…

“நானாச்சும் வேல விசயமா அங்க இங்கனு வெளிய போறேன். பாவம் வீட்லயே அடைஞ்சு கிடக்குற பொம்பள என்ன செய்வா? மவன நெனைச்சு அழுதுட்டே இருக்கா…“

“வீட்ட மாத்தி பாருங்க…”

வாடகை வீட்டை மாற்றிப் பார்த்தார். புது இடத்தில் அவர்களுக்கு முன்னால் இருண்மை குடிபெயரவும் வசிக்கும் ஊரை மாற்றினார். இதற்காகவே அடிக்கடி வேலையில் மாற்றல் வாங்குவார்.

சுதாகரின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும், அவனில்லாமல் உவப்பின்றி கடக்கும் பண்டிகைகளுக்கும் பிரம்மநாயகம் மகனுக்கு புதுச்சட்டை வாங்கி வைப்பார். “அவனுக்கு இது சரியா இருக்குமா…?” என்று மனைவியிடம் கேட்க நினைக்கும் போதெல்லாம் தொண்டைக்குழியிலேயே முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்.

விடியல் கனவின் பாரத்தால் இன்று வீட்டைவிட்டுத் தாமதமாய் அலுவலகம் கிளம்பிய பிரம்மநாயகத்தின் குறுக்கே காகம் ஒன்று இடைவிடாது கரைந்தபடியே பறந்து போனது… தெருமுனையில் வழக்கத்துக்கு மாறாய் ஒரே கூட்டம். கூட்டத்திலிருந்த ஆட்டோகாரர் சொன்னார்…

“யாருனு தெரில சார், முகத்த மறைச்சுட்டு கொஞ்ச நேரமா நம்ம தெருல இங்குட்டும் அங்குட்டும் அலைஞ்சுட்டே இருந்துருக்கான். கூப்ட்டு விசாரிச்சா சரியா பதிலும் சொல்லல. முகத்துல உள்ளதையும் கயட்டல… திருட்டுப்பயன்னு புடிச்சு அடிச்சுருக்காங்க. பாவம், அடி தாங்காம செத்துட்டான்!”

சாலையோரம் குப்புறக் கிடந்தான்… சுற்றிலும் வெறித்தபடி முணுமுணுத்தபடி நிற்கும் முகங்களில் முட்டிமோதி கூட்டத்தை ஒதுக்கி எட்டிப் பார்த்தார். தரையில் கிடப்பவனின் காகிதக்குரங்கு முகமூடி கிழிந்து விலகியிருப்பதை உற்றுப் பார்த்ததும் உடல் உதறலெடுத்தது. அலுவலகப்பையை வீசி எறிந்து ரத்தம் தோய்ந்த முகத்தை நடுக்கத்தோடு குனிந்து பார்த்தவர், வீதியே அதிர அலறினார். பல ஆண்டுகளாய் அடங்கிக் கிடந்த ஓலம்…

***

விஜய ராவணன்

பவித்ரா கவிதைகள்

0

வாழ்தலின் சில இரகசியக்குறிப்புகள்

ஊர் மூலையில்
படர்ந்திருக்கும்
அந்த குளத்தின்
தெற்கு நோக்கிய
படிகளின் விளிம்பில்,
இன்று வற்றிப்போக
காத்திருக்கும்
அச்சிறு குட்டையில்
மகிழ்ந்து கிடக்கும்
மச்சத்திடம்
கேள் அன்பே!

பூதாகரமாக
அல்லது
ஒரு ராட்சதனை போல
அல்லது
ஒரு நெடுந்தருவைப் போல
அல்லது
காட்டுச் செடிகளிடையே நெளிந்தோடும்
சர்ப்பத்தை போல
அல்லது
பச்சை இலைகளால் மூடிய
புதைகுழியை போல
அல்லது
ஒரு சிறிய கற்துண்டு
காட்சியை மறைப்பது போல
நம்முன் விரிந்து கிடக்கும்
இத்துளி வாழ்வின்
மகிழ்ந்திருத்தலின்
ரகசியத்தை

*

நீயற்ற ஒரு பாழும் இரவு

ஒருமுறையேனும்
விடியாத இரவில்
குதித்துவிட வேண்டும்.
ஆமாம்
அந்த இரவில்
மாமழையும்
சாம்பிராணி புகையாய் பனிமூட்டமும்
நதிக்கரையில் கண்மூடி தியானிக்கும் புத்தனும்
புல்தரையில் மதுரமான சிறுபூக்களும்
மூலிகை செடிகளின் நறுமணமும்
இருடளர்ந்த கானகத்தின் ராத்திரியை
கிழித்துக்கொண்டு வலம் வரும்
ஒற்றை முழுமதியும்
உடன் நீயுமற்ற,
மேருமலையென என்னைக் கடையும்
உன் நினைவுகளும்
ஓர் பாழும் நாளில்
விடியா இரவொன்றில்
தலைக்குப்புற
விழுந்துவிட வேண்டும்

*

விதைகள் வேர்கள் மலர்கள் காய்கள்

எங்கள் ஆதி நிலத்தின்
கொடியொன்றில்
பூத்த மலரை
யாரோ கொய்கிறார்கள்.
இலைகளிடையே
கொய்ய மறந்த
ஒரு பூவை
யாரும் அறியாது
பாதுகாக்கிறேன்.
ஏதுமறியா சிறு மலரது

ஆரஞ்சும் மஞ்சளும்
கலந்த ஒரு மகரந்த நிறத்தில் கவிழும்
ஒரு மாலை பனியில்
மலர் சுருங்கி பிஞ்சானது

பிறகு வந்த
இருள் நாட்களில்
பூரானை போலிருந்த பிஞ்சு
அம்மாவின் கர்ப்ப வயிற்றைப்போல்
சிறுகச்சிறுக தடித்து வீங்கி
காயானது

அம்மா சமையலுக்கு
காயைப் பறித்துவிடச் சொல்லி
நச்சரிக்கத் தொடங்கினாள்

தம்பி தங்கைகள்
வயிறு வற்றிப்போய்
பசியோடு உறங்கிய
நாட்களில்
அந்த காயிடம்
விரைந்து முற்றிவிடும்படி
கேட்டுக்கொண்டேன்

அடுத்து வந்த
சித்திரா பௌர்ணமி நன்நாளில்
எங்களிடம்
முப்பதுக்கும் மேல்
விதைகளும்
சில காய்களும்
இருந்தது.

*

அப்பா என்றொரு நம்பிக்கை நட்சத்திரம்

பால்யத்தில் ஒருமுறை
அப்பாவின் தோள்களில்
ஏறி எக்கி எக்கி
இந்த வானை
தொட்டிருக்கிறேன்

தொட்டதற்கு பின்னான களிப்பில்
அப்பா அசதியாகி இருந்தார்.
ஆர்ப்பரிப்புகள் அடங்கிய
ஒரு பின்னிரவில்
அப்பாவின் உடல்
சில்லிட்டு கிடந்தது

மறுநாளிலிருந்து அப்பா
போட்டோ பிரேமில்
சிரித்தபடியும்
நினைவுகளில்
என் பக்கத்திலும் இருந்தார்

சட்டை மாட்டும் கம்பிகளில்
அப்பாவின் வாசனை ஒட்டிக்கிடக்கும்
ஒரு நீலநிறச் சட்டையை
அணிந்து கொண்டேன்

முடிவில்லா
இந்த வானை
தொட வேண்டும் ப்பா.
என்று சொல்லியபடியே
எக்கி எக்கி பார்க்கிறேன்.

*

ஈமச்சடங்காய்

நீண்ட காலமாக
பூட்டிய அறையொன்றை
திறக்கிறார்கள்

சிலந்தி வலையால்
இழுத்து கட்டப்பட்டிருந்தது
அந்த அறை

சில விஷமில்லா பூச்சிகளும்
மழைநேரத்தில் வெளியேறிய வண்டுகளும்
இருட்டில் விழிக்கும் வௌவாலும்
பக்கத்துக் கொல்லையிலிருந்து சுரங்கம் அமைத்திருக்கும் பெருச்சாளிகளும்
எப்போதோ இறந்துவிட்ட சிறு உயிரினங்களும்
இன்னும் இன்னும் பெயர் தெரியாத
புழுக்களும்
அந்த அறையிலிருந்து
ஒவ்வொன்றாய் அகற்றுகிறார்கள்

இறுதியில்
பொத்தலை பழைய துணியால்
அடைக்கிறார்கள்

மிச்சமென இருக்கும்
அதனதன் வாசனையை ரூம்-ஸ்ப்ரேயில்
துரத்துகிறார்கள்

உறங்கிக் கொண்டிருக்கும்
என் படுக்கையின் மூலையில்
சர்பம் ஒன்று நெளிந்து கொண்டிருந்தது

அந்த அறை
என் சவப்பெட்டி என்கிற
நினைவும் அதன்மேல்
நான் எழுதச்சொன்ன
‘நான் உறங்கும் போது
என்னை தொந்தரவு செய்யாதீர்கள்’
என்ற வாசகமும் இலேசாய்
நினைவில் வருகிறது

*

கி… கி… கீ.

நான் வளர்க்கும்
கிளிகளுக்கு
பேசப் பழக்குகிறேன்

ஒருமுறை
கி கி யும்
மறுமுறை
கி கி-யும் சொல்லிற்று

அவைகளுக்கு பயிற்சியளிக்கும்
கிளியை
ஒருநாள் கூண்டில் அடைத்து
என் கிளியின் அருகாமையில் இருத்திவிட்டேன்

இப்போது அதுவும்
கி கி என்றே
பேசுகிறது

*

கண்ணம்மா

அந்த நிறம்
என்னை மிகவும்
பலஹீனமடையச் செய்யும்
நீ அறிந்திருக்கிறாய்

இருந்தாலும் நீயந்த
நிறத்தில்
பச்சை குத்தியிருக்கிறாய்

உன்னுடலோடு
அங்கமாகிவிட்ட
அந்த நிறங்களை
பயமுதிர்வோடு தழுவுகிறேன்

அந்த சிலுவைக்குறியிலிருக்கும்
ஏசுவின் கண்களில்
கருணை துளிர்க்கிறது

ஒருமுறை கூட நீயருந்தாத
தாய்ப்பாலைப் புகட்டும்
நான்
உன் கண்ணம்மா தான்
இல்லையா

*

சமிக்ஞை

எனக்கு ஜாதகத்தில்
நம்பிக்கை இல்லை என்று
ஜாதகக் கதைகளைப் பற்றி
அம்மா ஓர்நாள் கூறினாள்

ஆனால்
நான் கனவுகளில்
நம்பிக்கை வைத்திருந்தேன்

ஒரு விடியலில்
அம்மா இறந்துவிட்டதைப் போலும்
நான் மாரில் அறைந்துகொண்டு
அழுவதைப் போலும்
கனவு கண்டேன்

விடியலில் கண்ட கனவு
பலிக்குமென்றிருந்தாள் அம்மா

மறுநாளிலிருந்து
தினமும்
அம்மாவின்
தலையையும் முதுகையும் தடவி
அந்த கனவிற்காய்
மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தேன்

மருத்துவமனையில்
அம்மா கிடந்த
நாட்களில்
அம்மா இறந்துவிட்டாலும்
தேவலாம் என்று
நினைத்த மாத்திரத்தில்
கழிவறை கண்ணாடியில்
தெரிந்த என் முகத்தில்
நானே உமிழ்ந்திருந்தேன்

என்னை ஒருநாள்
மருத்துவமனையில்
கிடத்தி இருந்தார்கள்

என் மகள்
கழிவறையில்
தேம்பித் தேம்பி அழுது கொண்டிருப்பதாய்
பக்கத்து படுக்கையிலிருந்தவள்
சொன்னாள்

என் முகத்தில் காறி உமிழ்ந்த பிறகு
நானும் அன்று
தேம்பித்தேம்பி
அழுது கொண்டிருந்தேன்

***

பவித்ரா
pavithrapandiyaraju@gmail.com

க.ரகுநாதன் கவிதைகள்

2

பச்சை ஆப்பிளின் ஆதி ருசி

சாலையோர வியாபாரக் குரல்களினூடே
அரேபிய பேரீச்சைக் குரலில்
ஆப்பிள் வாங்க அழைத்தாள் ஓர் அழகி

ஆப்பிள் விதைகளின் நிறம் கொண்ட
அவள் உதடுகளிலிருந்து வெளியேறிய
சொற்களில் வீசியது தேன் நிற ஒளி

ஒரு கிலோவுக்கான விலையும்
அமைதியான பச்சை நிறத்தில்
மிளிர்ந்து கொண்டிருந்த
ஒற்றை ஆப்பிளின் விலையும் ஒன்றே
என்றாள் ரகசியக் குரலில்

இரண்டிற்கும் வித்தியாசம் கேட்டவனிடம்
ஒளிரும் ஆப்பிளின் தோலுக்கடியில்
அவன் தேடும் காதலியின் பெயரும்
மற்ற பழங்களில் கடவுளின் பெயரும் என்றாள்

ஒற்றை இறகாக அலைந்து கொண்டிருந்த அவன்
பச்சை ஒளி கொண்ட ஆப்பிளைக் கேட்டான்
காதலியைத் தொட தோலை அறுபடாமல்
சீவ வேண்டும் என்றவளின்
கட்டளையை அடிமை போல் ஏற்றான்

சீவி எடுக்க முடியாமல் நடுங்கிய அவன் கைகள்
ஆப்பிளை பற்களிடம் ஒப்படைத்தன

ஆதிகாலத்தின் நறுமணம் எழுந்த
அந்த ஆப்பிளில்
பிரபஞ்ச துவக்கமொன்றின்
துயரக்கதை மெலிதாக ஒலித்தது

ஒரு துண்டு ஆப்பிளின் ஆதி ருசியை
அவன் நாக்கு உணர்ந்தபோது
யுகங்கடந்த துயரமொன்றை மீண்டும்
நிகழ்த்திவிட்டதன் நிம்மதியில்
சாலையில் எழுந்த காற்றோடு
காணாமல் போயிருந்தாள்

திகைத்து நின்ற கடவுளின் கண்களில்
உருண்ட திவலையொன்று
பெரும் மழையென
கொட்டத் தொடங்கியது

*

மணல்

வெண்நுரை தவழும் அலையில்
விழுந்து மிதந்து அமிழ்ந்து எழுந்து
கரையேறி வீடு செல்லும்
சிறுவனின் மனதில்
சட்டைப் பையில்
எஞ்சியிருக்கிறது கடல்

*

அகம்போக்கு

காதல் என்பது வடிவழகில் இல்லை
கவிதை என்பதும் வரிகளில் இல்லை
காமம் என்பது குறிகளில் இல்லை
கவிதை என்பதும் சொற்களில் இல்லை
காலம் என்பது முள் நகர்வில் இல்லை
கவிதை என்பதும் எழுத்தில் இல்லை
காதல்
காமம்
காலம் எல்லாம் அகமெனில்
கவிதை மட்டும் புறம்போக்கா?

கவிதை ஓர் அகம்போக்கு

*

உப்பு

ருசியின் சாரம் உப்பில் இருக்கிறது

மிகை கொள்வதும் குறை கொள்வதும்
சக்கையை நினைவூட்டும்
உனக்கான காதலையும்
உப்பிட்டு வைக்கிறேன்
யுகங்கடந்த பின்பும்
சரியான பதத்தில் ருசித்திட

*

கடற்பறவை

வெண்ணிற நுரைகளை
பொதிகளாய் சுமந்து வந்து
ஒதுக்கும் கடற்கரையில்
இளைப்பாறுகின்றன
வெண்சாம்பல் இறகு கொண்ட
பெயரறியா கடற்பறவைகள்

நண்டுகள் ஓடி நகரும் அக்கரையில்
சிற்றலைக்குப் பயந்தபடியே
பறவைகளுடன் பேச ஓடுகிறாள்
கூந்தல் அலைபாய்ந்த சிறுமி

அவளின் சிற்றெழில் கரங்களுக்குள்
வேறுலகம் உள்ளதை
கண்டுகொண்ட பறவைகள்
சிறகு விரித்துப் பறந்தெழ
கூட்டத்திலொரு
கடற்பறவையாகி இருந்தாள் சிறுமி

*

நினைவு

மினுக்கும் நீலவானில்
ஒளிரும் நிலவின் அருகே
சிரிக்கும் ஒரு நட்சத்திரம்
நினைவூட்டுவதோ
உன் நகை பூத்த இதழோரம்

மென் வெண்முகில் கீற்றொன்று
காற்றில் அசைந்து நகர்ந்து
கிளர்த்துவதோ
உன் மெல்லாடை ஸ்பரிசம்

மாலை இள மழையின்
மண் வாசம் எழுப்புகிறது
தீரா உன் நினைவுகளின் நறுமணம்

***

க.ரகுநாதன்

“GDP- ம் தேச பக்தர்களும்”

2

பழனிக்குமார்

சில இணையங்களை உற்று நோக்கினால் ஒரு செய்தி பல மேதைகளால் பரப்பப்படுகிறது. 2021-2022-ம் ஆண்டில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாய் இருக்கும் என்று. இது எப்படி இருக்கிறது என்றால்,  நீங்கள் சராசரியாக மாதமாதம் நூறு ரூபாய் சம்பாதிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.  ஒரு மாதம் நீங்கள் வேலைக்குப் போகவில்லை. உங்களுக்கு வரவேண்டிய நூறு ரூபாய் கிடைக்கவில்லை. இப்படிப் பல மாதங்களாய் வேலைக்குப்போகாமல் சம்பளமற்று இருக்கிறீர்கள், திடீரென ஒரு மாதத்தில் வேலைக்குப் போகும்போது உங்களுக்கு ஐம்பது ரூபாய் சம்பளம் தருகிறார்கள், உடனே உங்கள் மனைவியோ/கணவனோ, பாருங்கள்.. போன மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த மாதம் எங்காளு அதிகமாய்ச் சம்பாதிக்கிறார் என்பது போல் இருக்கிறது இந்த ஒப்பீடு. இன்னும் தெளிவாகச் சொல்கிறேன். 

நான் வேலை பார்த்த மருந்து நிறுவனங்களில் ஒரு கூத்து நடக்கும். 

ஒரு மெடிக்கல் ரெப் வேலை  பார்க்கும் ஊரில் தொடர்ந்து அவர்க்கு வழங்கப்பட்டிருக்கும் டார்கெட் நடக்காது. மாதாந்திரக் கூட்டத்தில் அவரது விற்பனையை GRAPH PRESENTATION போட்டுப் பார்த்தால் முந்தைய வருடத்தைவிட நெகட்டிவாய் போய்க்கொண்டிருக்கும். அந்த நிதியாண்டு முடிந்ததும், அந்த ஊருக்கு முந்தைய வருடத்தின் டார்கெட்டையே தருவார்கள். அடுத்த வருடம் அந்த ஊர் விற்பனைப் பிரதிநிதி டார்கெட் செய்ய ஆரம்பிப்பார். அப்பொழுது அதே பாணியில் GRAPH போட்டால் முந்தைய ஆண்டு சேல்ஸ் குறைந்து இருக்கும், ஆதலால் பாசிட்டிவில் இருக்கிறார் என்று கூட்டத்தை மேலாளர் கை தட்டச் சொல்வார். 

எடுத்துக்காட்டாக, 

2018-ல் 100 ரூபாய்க்கு விற்றவனுக்கு 

2019-ல் 120 ரூபாய் டார்கெட் தந்தோம் என்றால், அந்த ரெப் 

2019-ல் 75    ரூபாய் தான் பண்ணிருப்பார். 

2020-ல் 100   ரூபாய் போதும் என டார்கெட் தருவார்கள்.

2020-ல் 100 ரூபாய் சேல்ஸ் நடக்கும். உடனே கூட்டம் கடந்த வருடத்தை விட அதிமாய் வளர்ச்சி என்று கைதட்டும். அந்த மேலாளர் அப்படித்தான் வித்தை காட்டுவார்.  அவன் 2020-ல் 100 ரூபாய் விற்பது ஒரு  வளர்ச்சி என்பது 2018-லேயே செய்து காட்டப்பட்ட ஒன்று. விழுந்து விட்டு எழுவது என்பது பழைய நிலையை அடைவதே தவிர வளர்ச்சி என்று ஆகாது. 

அதே கதை தான் இப்பொழுது பொருளாதார வளர்ச்சி 2021-22-ல் பிரகாசமாய் இருக்கும் என்று மேதைகள் கூறுவதும். 

மத்திய புள்ளியியல் துறையின் தரவுகள் படி நடப்பு நிதியாண்டு ( ஏப்ரல் 20 முதல் மார்ச் 21 முடிய உள்ள காலகட்டம் தான் நடப்பு நிதியாண்டு) க்கான முதல் காலாண்டு (ஒவ்வொரு மூன்று மாதங்களையும் காலாண்டாகப் பிரிப்பார்கள். ஏப்ரல் மே ஜூன் (முதல் காலாண்டு) ஜூலை, ஆக, செப்( 2ம் காலாண்டு) அக், நவ, டிச ( 3-ம் காலாண்டு) ஜன, பிப், மார்ச் (4-ம் காலாண்டு)) 

அதாவது ஏப்ரல் 20 முதல் ஜூன் 20 வரையிலான GDP  மைனஸ் 23.9 சதவீதம். அதாவது எதிர்மறையாய் விழுந்துள்ளது. 

உடனே நம் தேசபக்தர்கள் உலகம் பூராவும் கொரோனா வந்து ஆட்டிப்படைத்ததில் தான் இப்படி என்றும், இல்லாவிட்டால் அவர்களது ஜீ GDP-யை ஒட்டு மொத்தமாக நீட்டி நிமிர்த்தியிருப்பார் என்றும் முட்டு கொடுப்பார்கள். அவர்களுக்கானப் பதில் 

2016-2017 ஆண்டிற்கான GDP  8.3 சதவீதமாய் இருந்த வளர்ச்சி

2017-2018 ஆண்டில்  GDP 7  சதவீதமாய் குறைந்தது. (அப்பொழுது ஆட்சி யாருடையது) 2018-2019  ஆண்டில் அதே GDP 6.1 ஆகக் குறைந்தது.  

8.3, 7 பிறகு 6.1 என்று வரவர மாமியார் கழுதை போல் ஆனாராம் என்று எங்கூரில் சொலவடை உள்ளது போல் G D P  குறைந்த வளர்ச்சி ஆனதற்குக் காரணம் கொரோனா இல்லை. 

2019- 2020 ஆண்டில் கூட வளர்ச்சி 4.2 சதவீதமாகக் குறைந்தது. மார்ச் 24-க்குப் பிறகுதான் பொது முடக்கம். அந்த ஆறு நாட்களில் ஒட்டு மொத்த 361 நாட்களின் முடங்கிப்போன தேசத்தின் G D P-ஐ மறைக்கப் பார்க்கிறார்கள். ஆக, தேசத்தின் வளர்ச்சி 2016 ஆண்டின் தொட்டே அழிவு நிலைக்கு வந்திருக்கிறது . 

2019-20-ம் ஆண்டு நிதி நிலை மோசம் என்று எதிர்கட்சிகள் கூறியதற்கு நாம் பொருளாதார வளர்ச்சியில் சற்றே பின்தங்கியுள்ளோம், ஆனால் பொருளாதார மந்த நிலை இல்லை என்று கொக்கரித்தார் மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 

ஒரு பொருளாதார மாணவனிடம் பொருளாதார மந்த நிலை என்ன என்று இரண்டு மார்க் கேள்வியைக் கேட்டுப்பாருங்கள். எந்த நிறுவனத்தின் (இந்தியா தனியார்களின் நிறுவனம் தானே?!) தொடர்ச்சியான இரண்டு காலாண்டின் வளர்ச்சி விகிதம் எதிர்மறையாக ( நெகட்டிவ்) இருக்கிறதோ அதுவே பொருளாதார மந்த நிலை என்று பொருள்படும் என்று கூறுவான். 

அப்படிப் பார்த்தால் நடப்பு நிதியாண்டு (2020-2021) ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகள் நெகட்டிவாகத்தான் இருந்துள்ளன. அப்படியானால் நம் இந்திய தேசம் மேதகு பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் வளர்ச்சிப் பாதையை விட்டுவிட்டு எதிர்மறைக் குழிக்குள் விழுந்துள்ளது. 

கடந்த வருடம் அதாவது ( 2019-20) 4.2  சதவீதம் வளர்ச்சி என்பது அதற்கு முந்தைய 11 வருடங்களில் மோசமான வளர்ச்சி என்பதாகும். 

ஆசியாவில் மிக முக்கியமான பொருளாதார நாடு, உலகளவில் வேகமாய் வளரும் பொருளாதார நாடு என்று கொக்கரித்தத் தருணத்தில் மோடி தலைமையேற்று கடந்த வருடம் 11 வருடங்களுக்கு முந்தைய இந்தியாவாக மாற்றி விட்டார். இந்த வருடம் கொரோனா மேல் பழிபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான GDP ம் நெகட்டிவ் தான். ஆனால் அறிவார்ந்தவர்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான GDP-க்கு இது பரவாயில்லை. பாதிப்பு குறைவாயிருக்கிறது என்றிருக்கிறார்கள். அப்படி விழுந்த எல்லாத் துறைகளிலும் வேகமாய் எழுந்த முதல் துறை எது தெரியுமா நண்பர்களே.. விவசாயம் தான். ஆம், அது சார் விவசாயிகளைத்தான் மத்திய அரசு தடுத்தும், நீர்பாய்ச்சியும் அவர்களது மூலதனத்தைக் கொள்ளையடிக்கவும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கவும் முற்படுகிறது. 

RBI மூலமாக வட்டி விகிதங்களைக் குறைக்கும் வித்தை எல்லாம் போன வருடத்தில் செய்து பார்த்தாகி விட்டது. அப்படியும் GDP கீழே விழுவதை நிதியமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களாலோ மாண்புமிகு மேதகு பன்முக வித்தகர் மோடி ஜீ அவர்களாலோ காப்பாற்ற முடியாமல் வெறுமனே  வாய் மட்டுமே பார்க்க முடிந்தது. 

G D P என்பது ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி. உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் மதிப்பு, அதற்கானச் சேவைகளின் மதிப்பு, அதை வாங்கும் மக்களின் வாங்குதிறன், அரசு செலவீனங்கள், தேசத்திற்குள் நடக்கும் முதலீட்டு மதிப்பு, மற்றும் ஏற்றுமதி இறக்குமதி விகிதம் இவற்றைப் பொறுத்துத்தான் அமையும்.  

60 சதவிகிதம் உள் நாட்டிற்குள் நம் மக்களால் நுகரப்படும் விகிதத்தை வைத்துத்தான் G D P மாறுபடுகிறது. GDP குறைகிறது என்றால், மக்களின் வாங்குதிறன் குறைகிறது என்று பொருள். கார்ப்பரேட்டுகளுக்குக் கடன்சுமை குறைப்பவர்கள், எப்படி சாமான்யர்களின் கடனைத் தந்து பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்து பொருளாதாரத்தைச் சரி செய்வார்கள்.? 

இப்பொழுது இந்தக் கட்டுரையின் மூன்றாவது பத்தியை மறுபடியும் படியுங்கள். அப்படித்தான் அடுத்த வருடம் பிரகாசமாய் இருக்கும் என்கிறார்கள். உடனே தேச பக்தர்கள், மோடி ஜீ யிடம் ஒரு ப்ளான் இருக்கிறது அதைச் செயல்படுத்தினால் பிரகாசமாய் தேசம் ஒளிரும் என்பார்கள். இந்தப் பொருளாதார விஞ்ஞானிகள் சொல்லும் GDP எல்லாம் முறைப்படுத்தப்பட்ட தொழில்களை வைத்துத்தான். முறைசாரா அதாவது அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள சாதாரண சாமான்யனின் நிலை இதைவிட மோசமாகத்தான் இருக்கிறது. 

சொல்வதற்கு ஒன்று தான் இருக்கிறது. உலகப் பொருளாதாரத்தில் கொம்பனாக இருக்கும் G20 நாடுகளில் நாம்தாம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம். கொரோனா எல்லோருக்கும் தான் வந்தது. நாம் மட்டும் மோசமாக இருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. தேச பக்தர்கள் சொல்வது போல் கொரோனா கிருமி மட்டுமே தேசத்தின் பொருளாதாரத்தைச் சீரழித்தது என்றால் 2016-ம் வருடத்திலிருந்து தொடர்ந்து பொருளாதாரம் சீரழிய எந்தெந்தக் கிருமிகள் காரணம் என்று வர்ணிக்க அவர்களுக்குத் தார்மீகக் கடமை இருக்கிறது. 

ஆனால் இப்படிப் பொறுப்பாய் பேசுவதை விட ஆளும் பிஜேபிக்கு  மதங்களின் பெயரைச் சொல்லி யாத்திரை நடத்தவும், புழக்கத்தில் இல்லாத மொழிக்கு செய்திகள் வாசிக்க அனுமதி கோரவும் தான் நேரம் இருக்கிறது. அவர்களைச் சொல்லி என்ன ஆகப்போகிறது? ஆக்கப்பூர்வமாய் செயல்படத் தெரிந்தவர்களாய் இருந்தால் ஏன் இப்படி வித்தை காட்டப்போகிறார்கள். 

கட்டுரை எழுத உதவியாய் இருந்தவை :

 1)  மத்திய அரசின் புள்ளியியல் துறை தரவுகள்

 2)  பிபிசி இணையத்தில், ஹிந்து இணையத்தில் வந்த பொருளாதார நிபுணர்களின் தொடர் இரண்டு வருட அவதானிப்புகள், விமர்சனங்கள், புள்ளிவிவரங்கள்

மற்றும் 

 3) தேசத்தின் மீது இருந்த தேசபக்தி

ஜெய் ஹிந்த். 

***

பழனிக்குமார் – ஆசிரியர் தொடர்புக்கு – palanipk80@gmail.com

ஓர் இந்து இளவரசனின் தியானமும் பிரம்மாவும்

0

ஆங்கிலத்திலிருந்து தமிழில் – கனியமுது அமுதமொழி

ஓர் இந்து இளவரசனின் தியானம்” – சர் ஆல்ஃபிரட் கமின்ஸ் லையல்

இந்த உலகம் முழுவதிலும் நான் பயணிக்காத அல்லது
கால் பதிக்காத நிலத்திலும் மக்கள் இடையறாது ஒரு கடவுளின் அடையாளத்தையோ
காலடித் தடங்களையோ தேடிக் கொண்டிருக்கிறார்களா என்பது எனக்கு வியப்பாக உள்ளது

மேற்கு முகமாக பெருங்கடலை நோக்கியும்
வடக்கு முகமாக பனிமலைகளை நோக்கியும் அவர்கள் எல்லோரும் நின்று
எப்பொழுதும் உற்றுப் பார்க்கிறார்களா?

மேலும் ஞானம் மிகுந்த மனிதர்கள் எதை அறிந்திருக்கிறார்கள்

இங்கே இந்த மருளியலான இந்தியாவில் மரத்தின் உச்சியில் ரீங்கரிக்கும்
காட்டுத் தேனீக்களைப்போல் கடவுளர்கள் திரளாக வட்டமிடுகிறார்கள்

அல்லது ஒன்றுகூடி வீசும் புயலிலிருந்து கிளம்பும் தூசிகளைப் போல
வளிமண்டலத்தில் மக்கள் அவர்களின் குரலைக் கேட்கிறார்கள்

அவர்களின் பாதங்கள் பாறைகளில் காணப்படுகின்றன

இருந்தபோதிலும் இந்தச் செய்தி எங்கிருந்து வருகிறது
இந்த அற்புதங்களுக்கு என்ன பொருள் என்று நாம் அனைவரும் கேட்கிறோம்

ஒரு மில்லியன் ஆலயங்கள் திறந்திருக்கின்றன. எப்பொழுதும் கண்காணிப்பு ஊஞ்சலாடுகிறது
அவர்கள் புதிரான ஒரு அடையாளத்தின் முன்போ அல்லது
ஒரு பண்டைக்கால மன்னர்கள் முன்போ வணங்கி நிற்கும்பொழுது
ஊதுபத்தியின் மணம் எப்பொழுதும் மேலே எழுகிறது
அதுபோலவே துன்பங்களைச் சுமக்கும் மனிதர்களிடமிருந்தும் மற்றும்
இறப்பினைச் சந்திக்க அச்சமுற்ற கோழைகளிடமிருந்தும் எழும் முடிவில்லாத அழுகுரல் வானில் எழுகிறது

மலைகளின் துரத்தப்படும் மானைப் போல
விதி நம் அனைவரையும் ஒன்றாகத் துரத்துகிறது

மேலே வானம் இருக்கிறது நம்மைச் சுற்றி கொல்லும் வெடியின் சப்தம்…

நம்மால் பார்க்க முடியாத ஆற்றலினால் தள்ளப்பட்டு
தெரியாத கைகளினால் தாக்கப்பட்டு நாம் புகலிடத்திற்காக மரங்களை வணங்குகிறோம் கற்களை நம் இதழ்களால் முத்தமிடுகிறோம்

மரங்கள் ஒரு நிழலான பதிலை அளிக்கின்றன
மேலும் பாறைகள் வெறுமையுடன் கடுமையாக முகம் சுளிக்கின்றன

அந்தப் பாதை ஹா! யார் அதைக் காட்டியது..
யார் அந்த உண்மையான வழிகாட்டி
அந்த சொர்க்கம் ஹா ! அதை யார் அறிவார்..
மலையின் அருகில் அது செங்குத்தாக இருக்கிறது

எப்பொழுதும் அங்கே நிச்சயமாக வெடிகள் தாக்குகின்றன.
மேலும் எப்பொழுதும் வீணாக்கப்பட்ட சுவாசத்துடன்
பல்லாயிரக்கணக்கான மக்களின் பிரார்த்தனைகளும் சொர்க்கத்தினை நோக்கி மேலெழுகின்றன

அவற்றிற்கான பதில் நிச்சயம் மரணமாகத்தான் இருக்கும்

இங்கே என் உறவினர்களின் கல்லறைகள் உள்ளன. இவை பண்டைக்கால புகழின் பலன்
இவை போர்க்களத்தில் கொல்லப்பட்ட தலைவர்களுடையவை;
உடன்கட்டை ஏறி தீயில் விழுந்து இறந்த பெண்களுடையவை

அவர்கள் கடவுளர்கள், முற்காலத்தின் இந்த அரசர்கள். இவர்கள் எங்கள் இனத்தைக் காக்கும் ஆவிகள்.
நான் எப்பொழுதும் இவர்களைக் கவனிப்பதும் வழிபாடு செய்வதுமாக இருந்திருக்கிறேன்.
அவர்கள் பளிங்கு முகத்துடன் அமர்ந்திருக்கிறார்கள்.

என்னைச் சுற்றி இருக்கும் ஆயிரக்கணக்கான சிலைகள் மந்திரங்களை முணுமுணுக்கும்
பூசாரிகளின் படையணியும் அவர்களது புனிதமற்ற களியாட்டங்களும் சடங்குகளும்
வெளியே சொல்ல முடியாத இருண்ட விருந்துகளும் இவையெல்லாம் எதற்காக?
இந்தப் பேரமைதியிலிருந்து இவர்கள்
எதைக் கண்டடைந்தார்கள்?

இந்த இரகசியத்திலிருந்து ஒரு சிறிய செய்தியாவது வந்திருக்குமா.. எப்பொழுது? எங்கே?
ஓ.. இந்தக் கடவுளர்கள் ஊமைகள்
கடலிலிருந்து வரும்
ஆங்கிலேயர்களின் வார்த்தைகளை நான் பட்டியலிடட்டுமா

அந்த இரகசியம் அது உனக்கு சொல்லப்பட்டு விட்டதா !

மேலும் எனக்கு உன் செய்தி என்ன?

அது ஒன்றுமில்லை இந்த பூமியும் வானமும் துவங்கியது என்ற
பரந்த உலகக் கதை
கடவுளர்கள் எப்படி மகிழ்ந்தும் மற்றும் கோபமுற்றும் இருந்தார்கள்
அவர்களில் ஒரு தெய்வம் ஒரு காலத்தில் மனிதனாக இருந்தவன்
என்பதுதான் அது

நான் நினைத்தேன் ஒரு வேளை இந்தியாவின் ஆட்சியாளர்கள்
வசிக்கும் நகரங்களில்
யாருடைய கட்டளைகள் தூர தேசத்திலிருந்து மின்னலென அனுப்பப்படுகிறதோ
யார் ஒரு மந்திரத்தால் இந்த பூமியைக் கட்டுப்படுத்துகிறார்களோ
அவர்கள் நாம் உள் நுழைந்து அறியமுடியாமல் மிதக்கும் அடியாழத்தினை
புரிந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது அறியப்படாத பேருண்மையை அறிந்து கொண்டிருக்கிறார்கள்

அவர்கள் தங்கள் முயற்சிகளைக் கைவிட்டு துக்கத்துடன் திரும்புகிறார்கள் அவர்களது தேடல் பயனற்றது என்று சொல்கிறார்கள்
அப்படியானால் வாழ்க்கை என்பது ஒரு கனவுதானா ஏமாற்றும் பிம்பமா அப்படியானால் அந்தக் கனவாளர் எங்கே விழிப்பார்

இந்த உலகம் தண்ணீரில் தெரியும் நிழல் போல் பார்க்கப்படுகிறதா
அந்தக் கண்ணாடி உடைந்து விட்டால் என்ன ஆகும்

தற்காலிகமாக அடிக்கப்பட்டு கலைத்துச் சுருட்டி எடுத்துச்
செல்லப்பட்ட ஒரு கூடாரம் போல்…
மாலையில் பாலை மணலில் அடிக்கப்பட்டு விளக்கேற்றப்பட்டு காலையில் கழற்றி வைக்கப்பட்டு
தனிமையில் இருக்கும் கூடாரத்தைப் போல
இந்த உலகம் கடந்து போகட்டுமா
அப்படியானால் எங்கிருந்து இடியும் மின்னலும் ஆலங்கட்டி மழையும் பொழிகிறதோ
அந்த வானத்தில் எதுவும் இல்லையா?

ஆனால் உலகம் வேகமாக சுழல்வதால் நம்மைச் சுற்றிச் சூழ்ந்த அந்தக் காற்று?

அது
அந்தக் காற்று எனது சாம்பலைத் தூவிப்போகட்டும்
அழுகின்ற பெண்களின்
புலம்பல் பாடலுடனும் பிலாக்கணத்துடனும்
என்னை அமைதிக்கும் ஆழ்ந்த உறக்கத்திற்கும் அது என்னைத் தூக்கிச் செல்லட்டும்

(Meditations of a Hindu Prince)
-Sir Alfred Comyns Lyall

*

பிரம்மாரால்ஃப் வால்டோ எமர்சன்

சினத்தில் சிவந்த கொலையாளி தான் கொலை செய்ததாக நினைத்தால்
அல்லது கொலையுண்டவன் தான் கொல்லப்பட்டதாக நினைத்தால்
நான் எப்படி என்னதான் செய்வேன் அவற்றைக் கடந்துச் செல்கிறேன். மேலும் திரும்பி வருகிறேன் என்பது போன்ற நுட்பமான என் வழிகளை அவர்கள் அறியவில்லை

வெகு தொலைவில் உள்ளவையும்
அல்லது மறக்கப்பட்டவையும் எனக்கு அருகில் உள்ளன
மறைந்த கடவுளர்கள் எனக்குக் காட்சி தருகிறார்கள்
நிழலும் சூர்ய ஒளியும் எனக்கு ஒன்றே ஆவதுபோல புகழ்ச்சியும் இகழ்ச்சியும் கூட ஒன்றே ஆகிறது

என்னை விட்டு விலகுபவர்களை அவர்கள் நோயாளிகள் என்று கருதுகிறார்கள். அவர்கள் பறக்கும்பொழுது நான் அவர்களின் சிறகுகளாகிறேன்.
சந்தேகிப்பவனும் சந்தேகிக்கப்படும் பொருளும் நானே ஆகிறேன். மேலும்
நான் அந்தணர்கள் பாடும் ஒரு பாடலாகிறேன்.

எனது இருப்பிடத்தில் வசிக்க வலிமையான கடவுளர்களும் பேராசையுடன் ஏங்குகிறார்கள்.
எந்தப் பயனும் இல்லாமல் அந்தப் புனித ஏழும் கூட பேராசையுடன் என்னை விழைகிறது.
ஆனால் நீ நல்லவர்களின் மிகவும் பணிவான நேசன்.
நீ என்னைக் கண்டடைகிறாய் சொர்க்கத்திற்கு முதுகுகாட்டி அதை புறக்கணிக்கிறாய்.

*

(Brahma)
-Ralph Waldo Emerson

தமிழில் – கனியமுது அமுதமொழி
vazhkaipriya@gmail.com

யதிராஜ ஜீவா கவிதைகள்

0
henry: tallenge store collection

பாரதக்கோயிலின் முன்னே
அகன்ற வெறுமையை
சிறிய அசைவுகளால் நிரப்ப முயன்ற வில்வமரத்தில்
அப்போது இருந்தன எனது பட்சிகள்
செத்துப் போனவளைப் போலிருந்த அக்காவும்
செத்துக் கொண்டிருந்த பாட்டியும்
சாகப்போகும் அவனும் அவளும் நானும் நீயுமாய்
பூக்களால் ஆன தேரின் உள்ளே
முதல்முறை திடுமென பார்த்தோம் அவளை
தூண்சாய்ந்து நின்றபடி ஒவ்வொரு
பௌர்ணமியிலும் எதிர்கொள்வேன்
ஒளித்ததும்ப கதிர்வீசும் அவளது மந்தகாசம்..

பழுத்தச் சருகுகள் உதிர
தாயக்கட்டைகள் உருண்டபடி இருக்கும் மத்தியானங்களிலும்
மறக்கும்படி இல்லை அவள் ஒருபோதும்
வெறித்தாண்டவ ஜொலிப்பில் மனங்கசிய நின்றபடி
எண்ணெய் பிசுபிசுக்கும் கருவறையின் முன்னின்று
வீறிட்டு சொல்வேன்
வருவாயாக தேவி
கட்டைகளை நேர்த்தியாக உருட்டுவதை
பயின்று வருகின்றன எனது கைகள்
சாதுர்யமான எனது கணக்கிடல்களை
நீ சமாளிப்பாயா
ஜொலிக்கும் உன் கன்னங்களை
என் சகோதரியின் குழந்தையுடையதைப் போல
ஒருமுறை நான் நிமிண்டுவேன்
உன் சிறியப் பாதங்களை
என் நெஞ்சில் ஏந்துவேன்
தாய்ப்பாலின் மணம்வீசும் பிஞ்சு உதடுகளில் இருந்து
கசியட்டுமே அந்த இசை என் குரல்வளை நனைத்தபடி
பேரரவத்திலும் மீளமுடியா ஆழத்தில்
எல்லோரும் உறங்கும் ஓர் இரவை
எனக்கென நீ அளிக்கையில்
ஒரு கள்வனைப்போல உனைக் கவர்ந்து செல்வேன்
ஒரு தாயாக உனை வருடி
மழலையென மடிபுரண்டு
பேரொளியின் ஒரு துளியாய் உன்னுள் கசிந்து
பெருந்தவிப்பு உள்நிறைய நீயாக கரைப்பேன் என்னை
வெயிலேறிக் காய்ந்த கருவறையின் நேரெதிரே
இன்னும் இருக்கின்றன
எனது பட்சிகள்
சிறிய அசைவுகளை வில்வமரத்தில் நிறைத்தபடியும்
சிறகின் அசைவுகளால் வில்வமரமாய் நின்றபடியும்

*

எல்லாக் குரல்களும்
குதிரைகளின் இயல்பு கூடியவை
எல்லாக் குதிரைகளும்
கனைத்தபடி வருகின்றன
றெக்கையின்றி பறக்கும் அவைகளை
பார் பார் என்கிறாய்
குளம்புகள் ஆழப்பதிந்த தருணங்கள்
மறக்கத்தக்கவை என்கிறாய்
சுனைநீரின் ஜில்லிப்புடன்
வெறுமை அனல்வீசும் உன் தியானப் பெருவெளியில்
பூத்திருக்குதே இந்த யோனிமலர் என்கிறாய்
நிலவொளியால் ஆன கிண்ணத்திலிருந்து
இப்படி கசியும் உனது குரலும்
ஒரு குதிரையின் இயல்பு கூடியதே என்பதை அறியாமல்
தொடர்ந்து ஒலிக்குமாறு
உன்னிடம் கேட்கச் சொல்லி
முறையிட்டு மன்றாடுகிறது ஒரு குரல்
பிறகெப்போதும் கேட்கவியலா எனது கானங்களை
உன் பிரார்த்தனையின் திராவகத்தில்
கரைத்துவிடாதேயென
கதறியழுகிறது இன்னொரு குரல்
கனைப்பொலிகள் நிறைந்துக்கிடக்கும் வெம்பரப்பின் ஓரத்தில்
நிகழ்ந்துக் கொண்டிருக்கும்
நம் முயக்கம்
உதிர்ந்துக் கொண்டிருக்கும்
அந்த இலைகள்
ஒலித்துக் கொண்டிருக்கும்
ஒரு இசை
உறங்கிக் கொண்டிருக்கும் பேரலைகள்
வேறுபல குரல்களின்
வருகைக்கான முன்னறிவிப்பை செவிமடுத்தபடி
இம்மரத்தடிவெளியில் மாறத்தொடங்குகின்றன
நம் திசைகள்
ஒன்றையொன்று குரல்களென்றே அறிந்திருக்கும்
இரு குரல்களின் சந்திப்பு
இரு குதிரைகளின் உரையாடல்
ஒரு கவிதையாகவேனும்
அர்த்தப்பாடு உடையதாவெனும் கேள்வி
உன் மடியிலொரு கூழாங்கல்லென
உருண்டபடியிருக்கும் போதே
மண்ணின் சுவை மாறி
விண்ணின் நிறம் மாறி
புத்தம் புதிய குரல்களும்
நவீனரக குதிரைகளும்
வெளிநிறைக்கத் தொடங்கிவிட்டன
ஆயினும்
நிகழ்ந்தவண்ணமாக இருத்தலே சாத்தியம்
அதே மாதிரியான குதிரைகளின் உரையாடல்.

*
ஒரு மழைநாள் நள்ளிரவில்
நம் சித்திரங்கள் துடிதுடித்தன
அறிந்திராத வண்ணங்களின்
ரகஸிய சேர்க்கையில்
ஒளிர்ந்தது நம் வானம்
வேட்கை மீதூறி
தாகித்த பாய்ச்சலில்
செருக்குடன் கைப்பற்றினாய்
ராகங்களின் வனத்தை
நம் காலம் அப்படியாக இருந்தது
நம் ரத்தம் அப்படியாக இருந்தது
நம் பாடல் அப்படியாக இருந்தது
நாம் அப்படியாக இருந்தோம்
எல்லாம் நிறைவுற்று தளும்பின
கரியச் சித்திரமாய் காற்றிலாடிய
சந்தனமரத்தின் மீதிருந்து
சதாயெனை உன்னித்துக் கிடந்த
யட்சிணி ஒருத்தி அன்புடன் சொல்கிறாள்
அந்தக் கோப்பை நிறைதலாயிற்று நண்பனே
பரவசத்தின் ஓர் அற்புத கணம்
ஆலிலைகளின் மீதேறி அருகில் வருகையில்
உள்ளங்கைகளில் தன் முகத்தை பதித்தபடி
மோகினி ஒருத்தி மிருதுவாய் சொல்கிறாள்
அது நல்லதாயிற்று என் இனிய நண்பனே
அந்த மரங்கள் அசையவில்லை
அந்த சருகுகள் சப்திக்கவில்லை
அந்த ஆந்தை அலறவில்லை
செத்துப் போய்விட்ட யாருக்காகவோ
எழும்பிவரும் அந்த பறையொலியும்
நம் செவிகளை வந்தடையவில்லை
தூறலின் மெல்லிய சலனங்கள்
நிசப்தத்தின் திட்டுக்களை மேவி
கூடிக் களித்தபடி இருக்க
கற்கள் அப்படியாக உருண்டன
முகில்கள் அப்படியாக திரண்டன
சாரல்கள் அப்படியாக விழுந்தன
நாம் அப்படியாக கரைந்தோம்
இதே மழைநாள் நள்ளிரவை
வேறுசில வண்ணங்களுடன்
நீ எதிர்கொள்ளக் கூடும் பின்பொருகாலம்
இசைநெய்யப் பிறந்தவன்
இன்னும் வரவில்லையேயென
சந்தனமர யட்சிணி வழிபார்த்திருக்க
அடர்ந்த இருளின் உள்ளிருந்து
பீறிட்டு வருமா அவ்வொளியென
சிள்வண்டுகளின் இறைஞ்சுதல் நிகழ
இதயத்தின் குவிமுனையில்
பிரியத்தின் பால் கசிய
காத்திருப்பாய் நீ
மழையாலும் கவிதையாலும்
நெய்யப்படும் அந்த நள்ளிரவு
நீண்டுகொண்டே இருக்கும்
ஆனால்
இசைநெய்யப் பிறந்தவன் வரப்போவதில்லை
இனியெப்போதும்
அந்த மழை முடிந்துவிட்டதென
அந்தச் சக்கரம் நின்றுவிட்டதென
அந்தக் கவிதை நிறைந்துவிட்டதென
கண்களில் நீர்க்கசிய யாரேனும் வந்து
உன்னிடம் சொல்கையில்
சற்றே நினைவு கொள் பேரழகே
நிலவொளியில் பயணித்த
நம் உதடுகளின் நீச்சலை
ஒரு நீரூற்றென பீறிட்ட
நம் பரவசத் ததும்பலை
விடைபெறுகையில் உணர்ந்த
நம் உள்ளங்கைகளின் ஸ்பரிசத்தை

*

நீ முன்வைத்தாய்
ரத்தத்தின் வெதுமையாலானதை
உயிரணுக்களின் ஸ்பரிசத்தாலானதை
கண்ணீரின் நிறத்தாலானதை
தாய்ப்பாலின் மணத்தாலானதை

நீ வரவேற்றாய்
ஏமாற்றத்தின் முத்துக்கள் தெறிப்பதை
கனவுகளின் சிறகுகள் கூடியதை
கருணையின் போலிமை படிந்ததை

நீ காட்டினாய்
வெறுமையை கனிகளாக தரக்கூடிய மரத்தை
பயத்தால் உரமூட்டப்பட்ட பூச்செடியை
மரணத்தின் குதிரைகள் மேயும் புல்வெளியை

நீ இருந்தாய்
நிறமாக வாசமாக தூண்டலாக
கிளர்ச்சிகளின் மணியோசையாக
பயங்களின் நீரூற்றாக
குதூகலிப்பின் மழையாக
பேதமையின் பனிப்பொழிவாக
யாவும் கூடிய பெரும் வசீகர நீர்ச்சுழியாக

நானோ வானத்தின் பேரமைதியில்
என் கண்களைப் புதைத்து வைத்தேன்
நஞ்சை கதிர்வீசும் கவிதைகளையும்
அவற்றின் முடிவற்ற சுழற்சிகளையும்
தொலைக்கும் பொருட்டு
அடர்ந்த வனாந்திரங்களின் மௌனத்தில்
வெறிகொண்டு அலைந்தேன்

பெருந்துணிச்சலான வரிகளை
இதயத்தின் நரம்புகளில் அதிரவிட்டபடி
நட்சத்திரங்களின் பாலருந்தி
சூன்யத்தின் பேரிருளை
அடர் கருமையின் பெருங்கருணையை
மேனிமுழுக்க பூசிக்கொண்டு
முற்றும் எரிந்த சாம்பலின் வாசம் சூழ
பாடித்திரிகிறேன் பித்தின் பரவசம்

*

நட்சத்திரங்களின் இருள்
தூதுவளை பாவநிலை
அவுரி இலை மோகனம்
ஸ்தம்பனம் அஸ்தமனம்
கருநொச்சி திருநீறு
கிளிகள் புறாக்கள்
கிச்சிலிச் செடிகள்
முடக்கற்றான் முசுமுசுக்கை
முடிந்த இரவுகள்
முடியாத பாடல்கள்
வல்லாரை தீபம்
கற்றாழை சாபம்
சொற்பிறழ்ச்சிகளின் நடனம்
மிதக்கும் படிமங்களின் ஊஞ்சல்
அ ஆ
இ ஈ

*

சாலையோரப் பாத்திகளில்
தக்காளிச்செடி கொத்தும்
விவசாயி.
மாங்கூழ் தொழிற்சாலையின் மணமேந்தி
வீடுதிரும்பும் பெண்களின் பேச்சுடன்
உதிரும் உணிமுள் பூக்கள்.

பள்ளி வாகனத்தின் உள்ளிருந்து
குதூகலம் கொப்பளிக்க
கையசைக்கும் சிறார்கள்

பூஞ்சித்திரங்கள் வெளிரிய பாவாடைகளுடன்
புளியமரக் கிளைகளில்
டயர் ஊஞ்சலாடும் சிறுமிகள்

நுங்குகளாக சிரிக்கும் பனைகண்டு
அலட்டலுடன் தலைசிலுப்பும் தென்னை

வீசும் காற்றில்
சலிப்பின் மாசு கரைய நடக்கையில்
சற்றே சோர்வுற்றக் கால்களை
தனிமையின் பிரகாசத்துடன்
எதிர்கொண்டழைக்கிறது
காரைத்திண்ணையின் குளிர்ச்சி சூழ்ந்ததாயிருக்கும்
இந்த அரசமரம்.

*

ஏதோவொரு செடியில் பூத்த
மலர்கள்தான் மயிலிறகுகள் என்றே
நான் நினைத்திருந்தேன் நெடுகாலம்

பிறகொரு சபிக்கப்பட்ட
பங்குனி மாதத்தின் மாலை நேரத்தில்
ஒரு பறவை போன்ற உருவத்தின் பின்னேகி
அவை காட்சியளித்த போது
ஒரு முற்றிய பித்தனின்
கற்பனை என்றே அதை நம்ப விரும்பினேன்…

தொலைதூரம் சென்று
நான் தங்க நேர்ந்த
ஒரு வயலிடை வீட்டின்
ஜன்னல் வழியே
இரு திமிர் பிடித்த பறவைகள்
நடந்துச் சென்ற போது
ரசனையின் விஷமேறி
இருதயத்தின் நரம்புகளில் நீலம் பாரித்த ஒருவன்
எனக்கேயுரிய அப்பூக்களை
இப்படி இவற்றின் பின்னே
வைத்துவிட்டானே என
எதிர்ப்படும் எல்லோரிடமும்
பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தேன்

உன் நினைவு ஒரு பெருமழையென ஸ்பரிசிக்க
இத்தியான மண்டபத்தின் பின்புற மரத்தடியில்
நான் தலை சாய்ந்து படுத்திருக்கும் அந்திவேளையில்
மயிலெனும் இப்பறவைகள்
என் கண்முன் ஆடும் நடனம் கண்டு
உளம் சகியாது உடைந்தழுகிறேன் அன்பே…

மஹா கர்விகளாய் திரியும்
இந்த மயில்களை எல்லாம்
பூஞ்செடிகளாய் எனக்காக
மாற்ற மாட்டாயா அன்பே..

அப்படிச் செய்வாய் எனில் அக்கணமே
தலைக்கேறி வழியும்
மனமோக ஓடையின் கரைகளில்
உன்னை பழிவாங்குவதற்காக நிகழ்த்தப்படும்
என் சம்போகங்களை
அப்படியே நிறுத்தி விடுகிறேன்…

அப்படிச் செய்வாய் எனில் அக்கணமே
நச்சுப் பாம்புகள் நெளியும்
என் மொழியின் கூடாரங்களை
தீயிட்டுக் கொளுத்தி விடுகிறேன்…

அப்படிச் செய்வாய் எனில் அக்கணமே
இப்பூமியெனும் கிரகத்தில் நிகழ்ந்து வரும்
எல்லா வன்கொடுமைகளுக்கும்
நானே காரணம் என பொறுப்பேற்று
அழிவறியா என் தனிமையின் வனத்தில்
மொழிப்புற்று ஒன்றிலேகி
தன்னந்தனியனாய் மரித்துப் போகிறேன்…

அப்படிச் செய்வாய் எனில் அக்கணமே
உன் வல்லமைக்கு நிகரென
நீ பொறாமை கொள்ளும்
என் எல்லாக் கவிதைகளையும்
இப்பெருமழைக்காற்றில் கைவிட்டுவிட்டு
நான் அறைக்குத் திரும்பி விடுகிறேன்
பிறகு நான் நிம்மதியாகப் புன்னகைப்பேன்
பிறகு நீயும் நிம்மதியாகத் தூங்குவாய்

***

யதிராஜ ஜீவா
jeevan.jeemail.@gmail.com

தாவோ சரவணன் கவிதைகள்

0

சிறியதொரு பிரகாசத்திலும்
தைல மரத்தின் நிழலுணர்கிறேன்
மூட்டுவலிக்கான எண்ணையை சற்றுமுன் திறந்தவர்கள்
அன்பளித்திருக்கிறார்கள்

நெடியதொன்றின் நிழலை பிரியத்துடன்

மருந்து வாசனையோடிருக்கும்
சாயல் தோற்றத்தில்
இறக்கைகள் உதறிக் கொள்வதையும்
இப்போது உணர
அதே வீட்டில் இன்னொருவரும்
கொஞ்சம் எண்ணையை
இரவலாகப் பெற்றுக்கொள்வதின் பொருட்டு
பேசிக் கொள்கிறார்

பார்க்க ஆவலாயிருப்பவனின்
கண்களுக்காக
இரவில் பறக்கும் கிளைகள் மெலிதாக அசைய
மரத்திற்கும் பறவைக்கும் வித்தியாசங்களழித்த மணம் மட்டும்
நீண்டு கமழ்கிறது.

*

யாசிப்பவன் வீதியாக
இது ஆன பின்பு வலிய கரங்கள் தள்ளுகின்றன
அந்நிய தன்மைக்குள்

இருப்பிடம் சார்ந்த உரிமையில்
பூமியை
சொந்தங் கொண்டாடும் வெள்ளொளியின்
தேர்ந்த அடிமை இன்னும் தூங்காமலிருக்கின்றாள்
இரவுக்கும் நிலவுக்குமிடையில்

சரணத்திலிருந்து
பாடலைக் கேட்பவள் முதலிரண்டு வரிகளுக்குள் வடிக்கிறாள்
எதிர்கால இரவின் கருப்பு உருவத்தை

தூர இருந்து கையசைக்கும்
வருங்காலம் தலையில்
மங்கிய குழல் விளக்கை வினோதமாகப் பொருத்தி
யாசிப்பவனின் தூரத்து உறவாக தூக்க கலக்கத்தில்
மீண்டும் ஒருமுறை
பார்த்துக் கொள்கிறது
குறைவுற்ற என் கனவின் கண்கள்
தன்னைக் கசக்கி கசக்கி..

*

வாதத்திற்கிடமானவற்றை நீக்கி உருவாகிய அறையிலிருப்பது
பதினாறு சலவைக்கற்களின் பரப்பு
முக்கியப் பொது வழக்குச்சொற்கள்
கடவுள்
நான்
நீ
ஒத்த உருமாதிரிகள்
விடியுமுன்பே நீக்கப்படுபவை அங்கு

மெல்லரவமுமின்றி வசிக்கும்
நிறைவுறு வளி
காக்கும் யட்சனாக வேடமணியும் அவ்வப்போது

புதுப்பாணியில் வசிக்கிறவன்
உறங்குவது
சாய்வு நாற்காலியில்

விலக்கப்பட்ட தத்துவங்களும்
நன்கு கால்நீட்டித் தூங்குமிடத்தில்
அடுத்தபொழுது உண்ணப்போகும்
ஊன் உணவில் இறைமை தவிர்த்தேதுமில்லை

கழுத்து நீண்ட வல்லூறாகி
ஆசை தளும்ப புசிக்கலாமதை

*

சிரமங்களிற் சிரமம்
முட்டைக்கோசுகள் விளைவிப்பவனை சரசத்திற்கழைப்பது
சற்றேனும் மாறுபடுவதில்லையவன்
காதலுக்கான காலம் கோடையென்பதிலிருந்து

கோசுகள் செழிக்கும் பனிக்காலத்தை
எதிர்நோக்கும் கண்களில் பருத்தவாறிருப்பது
கொத்திலைக்குள் மூடப்பட்ட
உருண்டைக் கனவுகள்

மூன்றாம் உழவை முடித்த அவன்
நிலத்தில் குளிர் நடக்க
எருப்புழுதியெழுந்து
நீண்ட கரை மேட்டிலிருந்து காணும்
காமத்தின் முகமப்பும்

நடுப்பட்டத்திலிருந்து பின்வரும்
இருகண் வேட்கையைக் காணாதவனின்
சொந்த பூமியோரம் வண்டலின் அமிலத்தன்மை
கூடிப் போகிறது
யாரும் காணாதவாறு

மெல்லிய காமத்தினை அறியாது
தவிர்க்கிறவனின் எண்ணமும்
பச்சை

அது அறுவடைக்கு நிற்கும்
அடுக்கு வரிசை இலைகள் மூடிய
பயிர் போலவே இருக்கும்

*

வரும் குறுஞ்செய்திகளில்
வளப்ப நிலத்தின்
சுவையும் மணமும் தெரியும்..

அருந்தும்
தேநீரின் மிடறில் வார்த்தைகளின் அர்த்தங்கள்
தொனிக்கும்
இடையிலிருக்கும் நானென்ற சுவாரஸ்யத்தை
அதிகம் பெரிதாக்குபவனை மன்னிக்கலாம்
நாய் மறியென நினைத்து யாரும்

நடுவே
உடலற்ற சமயம்
தேநீரோடு உரையாடும் சொற்களின்
நீண்ட புள்ளிகளோடான
கோட்டு அடையாளத்தில்
கடந்து போகும் பானத்தின்
ஆவி தவிரவும் மீதி ஏதிருக்கும்..?

*

ஆறும் செய்திகளில் தவறும் ருசி

நண்பகல் நெருங்கும்
பதினொன்றரை
வாசிப்பாளருக்காக காத்திருக்கும் செய்தித்தாள் பேரபத்தம்

போகன் வில்லாவின் சருகுகள்
மூடத்தொடங்க
எடுக்கப்படாத செய்தித்தாள்கள்
அமானுடம்

சீமானும் சீமாட்டியும் இல்லாத நாளிது
என யாரும் நினைக்கலாம்

யாதொரு அமைதிக்கும் பங்கமின்றி இருப்பவை
வளர்ப்புப் பிராணிகள் இல்லாத சூழல்

பற்களால் நகங்களால் குதறப்படாமல்
காற்றிற்கு ஐந்தாம் பக்கத்தை திறக்கிறது ஒரு பகுதி
காற்றிற்கும் மெல்லிய நகங்கள்
முளைக்கிறது
இரண்டு தேநீரோடு வழக்கமாக சுவைபடும் செய்திகள்
பகலைக் கடிகின்றன

அன்றைக்கான ருசி அன்றைக்கானது

நீண்ட தூக்கம் அல்லது நீண்ட பயணம் கொண்ட வீடுகள்
பழைய செய்திகளோடு தவறிய
புதிய தேநீரைக் குடிக்க வேண்டுமென்பது ஏலாது

*

மூடாக்கினை விலக்கிக்கொள்ளும்
தளர்ந்த உள் தேவாலயத்தின் மேற்புற சரளைக் கற்களில் நகரும்
முதுகின் ஓட்டுக்குள்
தலை இழுத்துக் கொள்ளும்
பழைய புன்னகைகள்

இரு தென்னைக்கருகில் கரையொதுங்கிய படகை
ஏறெடுக்க
கவிழ்ந்த பொழுதில் மிச்ச ஒளி

ஒன்றின் உருவ அளவை
ஒப்பிட்டுக் காண்பவர் ஏமாறுகிறார்
உருள் வடிவ
சிப்பி நண்டை நினைத்து

உப்பு நீரில் முகம் கழுவும் தளர்வு
சொட்டளவு நீரருந்த
இல்லாத தாகத்தினை ருசிக்கும்
கடலின் கிளைமொழியில்
நனையும்
தற்போது உமணர்களின்
பல இணை கால்கள்

*

முடக்கு வாதமுடைய சொற்களை
என்மீது இறக்கிய பின்
அவனுடைய
தளர்வடைந்த முகம் சற்று ஒளி கூடுகிறது

இனி ஊனமுற்ற வார்த்தைகளை
அவனிலிருந்து
மாறுபட்ட நானே தூக்கியலைய
வேண்டுமென்பது அவனெண்ணம்

கிடைத்தற்கரிய
பொருளென
அதை நான் வைத்துக் கொண்டாடி
அனைவரிடமும்
காண்பிக்கத் துவங்க

தகா சொற்கள் இம்மெய்க்குள் கூடடைந்து
பெரிய சுவாசப் பைகளில் காற்று
நசிந்து வெளியேறும்

காலச்சக்கரம் ஒரு சொல்லால் மட்டுமே
அமைந்த மனிதனை
யாருக்கேனும் அறிமுகம் செய்தால்
அழைக்கும் பெயர்ச்சொல்
ஒன்று அவனுடையது

இல்லை என்னுடையது

*

தாவோ சரவணன்
Rstao78@gmail.com

வெற்றிடம்

0

ஐ.கிருத்திகா.

வெயில் தங்கப்பாளமாய் தரையில் அடர்ந்து கிடந்தபோதே மழையடிக்கத் தொடங்கிவிட்டது. ராதை நடுமுற்றத்தில் ஒரு குவளையை வைத்தாள். ச்சட், ச்சட் சத்தத்தோடு கனமாக விழுந்த துளிகள் பாத்திரத்தை நிறைக்கையில் பாட்டி அறையிலிருந்து மெல்ல எட்டிப்பார்த்தாள்.

“வேற வேலையே இல்ல இதுக்கு. சும்மா நசநசன்னுட்டு..”
முகத்தை கடுகாக்கி முணுமுணுத்துவிட்டு தலையை உள்ளிழுத்துக்கொண்டாள்.

வெயிலடித்தால்,
“பிராணனை வாங்குது” என்பாள்.

ராதை முற்றத்திலிறங்கி குவளையை எடுத்துக்கொண்டு சடுதியில் மேலேறினாள். கால்படியளவு குவளைக்குள் முக்கால்வாசி நீர் நிரம்பியிருந்தது. நீரின் குளுமை கையில் சில்லிட்டது. ராதை குவளையை கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.

குளுமைத்துளிகள் தளும்பின. கூடல்வாய் நிறைந்து முற்றத்தில் கொட்டியது. மொத்தமாய் கொட்டிய நீரின் வெளியில் பளிங்கு கற்களாய் சில உருண்டன. ராதை குவளையைப் பருகினாள்.

பருகப்பருக தாகம் அடர்ந்து கிளைத்தது. அடுத்த ஐந்து நிமிடத்தில் இன்னொரு கால்படியில் நீர்ம மேகம் நிறைந்திருந்தது.

“மழைத்தண்ணி குடிக்காதே. சளி பிடிச்சிக்கும்.”
பாட்டி அறைக்குள் இருந்தபடியே குரல் கொடுத்தாள்.

“சரி பாட்டி..”

அவள் இரண்டாவது குவளையையும் மொத்தமாக குடித்து முடித்தாள். தொண்டையில் சரிந்த நீர் மார்பு சேலையை நனைத்தது. கூடல்வாயில் வழிந்த நீரை அவள் உள்ளங்கையைக் குழித்து ஏந்தி விளையாடினாள். கைக்குள் கண்ணாடிப்பாளம்.

கொஞ்சம் நீரைப் பிடித்து முகம் கழுவினாள். துடைக்கத் தோன்றவில்லை. அப்படியே நின்றிருந்தாள். தூறலில் நனைந்த காற்று சேலைக்குள் சிலுசிலுத்தது. மயிர்க்கால்களில் குளிர் ஏறிற்று.

அன்றொருநாள் குளத்தில் ஒற்றைத் தாமரைப்பூ தனித்து பூத்திருந்ததைக் கண்டது ஞாபகத்துக்கு வந்தது. மலர்ந்த இதழ்களில் சூரிய ஒளியைத் தாங்கி அது தண்ணீருக்குள் வெம்மையடைந்து கிடந்ததாய் ராதை நினைத்துக் கொண்டாள். அவளின் மனதுக்கு அது கொஞ்சம் ஆறுதல் தருவதாயிருந்தது.

இரவின் விளிம்பில் நீலவானம் நின்றிருந்தபோது மணி ஆறாகியிருந்தது.
ராதை பித்தளை பில்டரில் காபிபொடி இட்டு கொதிக்கும் நீரூற்றி டிகாஷன் இறக்கி வைத்தாள். வெண்கல உருளியை அடுப்பிலேற்றி நுரைத்துத் ததும்பும் பாலை ஊற்றினாள்.

இரண்டு தம்ளர்களில் சர்க்கரைப் போட்டாள். சர்க்கரை வைரத்துணுக்குகளாய் மின்னிற்று. அதில் மணக்கும் டிகாஷனைச் சேர்த்தாள். பொங்கிவந்த பாலை தம்ளர்களில் ஊற்றியபோது பாட்டி குளித்துவிட்டு வந்திருந்தாள்.

அவள் கண்களில் காபிக்கான ஆவல் மிதந்தது. அவசரமாய் நரம்போடிய கையால் தன்னுடைய தம்ளரை எடுத்துக் கொண்டாள். ராதை தம்ளரோடு கொல்லைப்புறம் வந்தாள். துணி துவைக்கும் கருங்கல் குளிர்ந்து கிடந்தது.

மகிழமரத்தின் சில பூக்கள் அதில் உதிர்ந்திருந்தன. ராதை பூக்களை ஒதுக்கிவிட்டு கல்லில் அமர்ந்தாள். காதோரப் பொன்முடிகள் கழுத்தில் உரசிய போது மாறனின் தொடுகை ஞாபகம் வந்தது. நினைவுகளைப் புனருத்தாரணம் செய்து கன்னம் சிவந்தவள் காபியை ரசித்துப் பருகினாள்.

“பூப்பறிச்சு தர்றியா ராதை..?”

பாட்டி உள்ளிருந்து கேட்டாள். ஈரம் சொட்டிய வெண் கூந்தல் காய்வதற்குள் பூஜையை முடித்தாக வேண்டும் அவளுக்கு. நிமிடம் தள்ளினாலும் பொறுக்காது. ராதை அடுத்த அரைமணி நேரத்தில் துவைத்து, குளித்து வந்துவிட்டாள்.

ஆரஞ்சு கோளம் மேலெழுந்து அதில் வெயில் பூக்கத் தொடங்கியிருந்தது. கொட்டுக்கூடையில் செம்பருத்தியும், அரளியும், கொஞ்சம் வெண்சங்கும், நீல சங்கும்.. பார்த்ததும் பாட்டிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அன்றைய பூஜை ஒருமணி நேரம் நீடித்தது.

பூஜை முடிந்தபோது பாட்டியின் கூந்தலில் சொட்டிய துளிகள் புடவையை நினைத்திருந்தன. சாமி படங்களில் பளபளத்த கண்ணாடி பிரேமில் சூடச்சுடர் திகுதிகுத்தது. சாம்பிராணி புகை சூழ்ந்திருந்த அறையை சாத்திவிட்டு பாட்டி கேட்டாள்.

“மாறன் பேசினானா..?”

“உம்..”

ராதை ஒற்றை வார்த்தையோடு தட்டெடுத்து வைத்தாள். பேரனுடன் பேசுவதற்கு பாட்டிக்கு வார்த்தைகளைத் தேட வேண்டியிருந்தது.

‘நல்லா சாப்பிடு’, ‘உடம்பை கவனிச்சுக்கோ’ போன்ற வார்த்தைகள் காலாவதியாகிவிட்டன. பேரன் மனைவியிடம் அவனைப் பற்றி விசாரித்து திருப்திப்பட்டுக் கொண்டாள்.

காலை வெயில் முற்றத்தில் இறங்கத் தொடங்கியிருந்தது. சூரியக்கதிர்களின் அடர்த்தியான பரவலில் தூசுகளும், மாசுகளும் தொடர்பில்லாத அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தன.

வீடு பெருக்கி, பாத்திரம் கழுவி வேலைக்காரப்பெண் சென்றபின் வீட்டுக்குள் நிலவும் மௌனத்தின் அடர்த்தி கூடிப்போனது. நார்த்த மரத்தின் முட்களை சட்டை செய்யாது கல்லுக்குருவிகள் விளையாடிக் கொண்டிருந்தன. கொல்லையில் துணி உலர்த்த சென்ற ராதை ஓட்டுச்சரிவின் நிழலில் ஒதுங்கி அதை கவனித்தாள்.

அடுப்பு மேடையை அழுந்தத் துடைத்து, அலமாரியில், சமையல் அவசரத்தில் இடம் மாற்றி வைத்த சம்படங்களை சீராக அடுக்கி, வெங்காயக்கூடையில் உலர்ந்து கிடக்கும் சருகுகளை சேகரித்து அப்படி, இப்படி கொஞ்ச நேரத்தை கடத்தியாயிற்று.

குருவிகளின் வெயில் பொழுது அட்டகாசத்தை பார்ப்பதும், செல்போனில் படம்பிடித்து மாறனுக்கு அனுப்புவதும் பொழுதுபோக்கு பட்டியலில் இடம்பிடித்துக் கொண்டது.

“சீக்கிரமே தேர்ந்த போட்டோகிராபர் ஆயிடுவேன்னு நினைக்கிறேன் “என்று மாறன் அனுப்பும் பதிலிகளுக்கு அவள் ஸ்மைலியும், ஹார்ட்டும் அனுப்புவாள்.

ஊரின் தெருக்களில் வெயில் மட்டுமே நடமாடும் பகல் பொழுதில் ராதை திண்ணையிலமர்ந்து வேலியோரம் நின்றிருக்கும் கிளேரியா மரத்தைப் பார்த்தவாறிருப்பாள்.

வெயிலின் பகலைவிட மழையின் பகல் சுவாரசியமானதாக அவளுக்குத் தோன்றும். திண்ணையின் தரைகள் வழுவழுப்பானவை. ரெட் ஆக்சைடு பூசப்பட்டவை. அதில் அமர்ந்து ஈரம் தொடும்வரை மழையை ரசிக்க அவளுக்குப் பிடிக்கும். எஃம் ரேடியோவில்
‘அந்திமழை பொழிகிறது’ கட்டாயம் போடுவார்கள். ராதையும் சேர்ந்து பாடுவாள்.

மருதாணிச்செடி முடிவெட்டாத குழந்தையின் தலை போல பம்மலாக அடர்ந்து கிடந்தது.

“மருதாணி போட்டுக்க பிடிக்கும்னா செண்பகத்துகிட்ட சொல்லு. பறிச்சு மையா அரைச்சுத் தருவா. போட்ட ஒருமணி நேரத்துல செவப்பு அப்பிக்கும்.”

பாட்டி சொன்னது போல விரல்கள் தீப்பாளங்களாய்ச் சிவந்து கிடந்தன. உள்ளங்கைகள் மாணிக்கப் பதக்கங்களாக மின்னின. ராதை கைகளை போட்டோ எடுத்து மாறனுக்கு அனுப்பினாள்.

ஆறு மணிக்கு பெரியகோவிலில் சாயரட்சைக்கான மணி அடிக்கும். காற்றில் இழைந்து வரும் மணியோசை கேட்டதும் பாட்டி அறை உள்ளிருந்து குரல் கொடுப்பாள்.

“கொல்லைக் கதவு தாழ் போடு ராதை.. “

ராதை கதவுகளைச் சேர்த்து மூடும்பொழுது இடுக்கின் வழியே மெல்லிழையாய் காற்று வீசும். சில நிமிடங்கள் நின்று காற்றின் தழுவலை மாறனின் ஸ்பரிசம் போல் எண்ணிச் சுகித்திருப்பாள்.

நிலவின் பொழிச்சலில் நனைந்து கிடந்த தென்னை ஓலைகள் முற்றத்தில் நிழலுருவமாய் விழுந்து கிடந்தன. வரிவரியான ஓலைகளிலிருந்து ஈர்க்குகளைப் பிரித்தெடுக்க பாட்டி சொல்லித் தந்திருந்தாள். ஒரு துடைப்பத்திற்கு தேவையான அளவு ஈர்க்குச்சிகளை ராதை சேகரித்து விட்டாள்.

நிலவு முழு வட்டமாய் தகதகத்தது. சில மேகங்கள் அதை உரசி விலகின. நட்சத்திரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பூத்திருந்தன. மதியம் கிளாசிக் மூவி வரிசையில் சபாபதி படம் ஒளிபரப்பினார்கள்.

அதன் காட்சிகள் மனத்திரையில் ஓட ராதை தன்னை மறந்து சிரித்தபடி நிலவை வெறித்துக் கொண்டிருந்தாள். பாட்டி கந்த சஷ்டி கவசத்தை முடித்துக்கொண்டு அறையிலிருந்து வெளிப்பட்டாள்.

“இன்னைக்கு என்னமோ மதியம் சாப்பிட்டதே செரிக்கலை. எனக்கு ஒரு டம்ளர் பால் மட்டும் கொடுத்துடு. அது போதும்” சொல்லிவிட்டு திரும்பியவள் நின்று,

“நேரத்தோட சாப்பிட்டு படுத்துக்கோ” என்றாள். ராதையின் தலை தன்னிச்சையாக அசைந்தது.

ராதை பூனைக்குட்டித் தலையணையை இறுக அணைத்துக் கொண்டாள். மாறன் அரைமணி நேரம் அவளை அலைபேசி வழியே கொஞ்சிவிட்டு அப்போதுதான் தொடர்பை துண்டித்திருந்தான். ராதை எழுந்து விடிவிளக்கை ஒளிரவிட்டு விளக்கணைத்தாள்.

கை இருட்டில் பூனைக்குட்டித் தலையணையைத் துழாவியது. எழுந்த வேகத்தில் அது கட்டிலிலிருந்து நழுவி விழுந்திருந்தது. தட்டுத்தடுமாறி அதைக் கைப்பற்றி அவள் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

தூக்கம் ஒரு பந்து போல அவளிடமிருந்து நழுவியோடியது. அதை எட்டிப்பிடிக்க முயன்று அவள் தோற்றாள். வெகுவாக முயற்சித்து கண்கள் மூடினால் விழிமணிகள் உருண்டு கலகம் செய்தன. பூனைக்குட்டித் தலையணையை அவள் பற்றுக்கோடாய் பற்றிக்கொண்டு வெகுபிரயாசையுடன் உறங்க முயற்சித்தாள்.

பூனைக்குட்டித் தலையணை அவள் மார்பில் பொதிந்து மாறனின் ஸ்பரிசத்தை ஞாபகமூட்டியது. அவன் விட்டுப் பிரிந்துசென்று ஆறு மாதங்களிருக்கும். கல்யாண மருதாணியின் சிவப்பு கலையும்முன்பே விடுமுறை முடிந்து போயிருந்தது. இமைகளில் நீர்ச்சரங்கள் கோர்த்துக்கொண்டு நின்றவளை மாறன் கன்னம் தட்டி விடைபெற்றான்.
வேலை வடநாட்டின் கடைக்கோடி ஊரில். புது இடத்தில் காலூன்றிக் கொண்டானபிறகு பாட்டியையும், அவளையும் அழைத்துக் கொள்வதாக கூறியிருந்தான். அவன் கூறியிருந்ததன் பேரில் அவளுக்கு ஆசுவாசம் ஏற்பட்டிருந்தது.

இடையில் ஒருமுறை அவன் வருவதாயிருந்தது. எதிர்பார்ப்பு நாட்கள் ஏகாந்தத்தைப் பூசிக்கொண்டன. ஒவ்வொருநாளும் அனிச்சம் போலும், செங்காந்தள் போலும், குவளை மலர் போலும் அவ்வளவு மென்மையாக எப்படி மலருமென்று ராதைக்கே ஆச்சர்யமாயிருந்தது.

“மாறனுக்குப் பயத்த உருண்டை ரொம்பப் பிடிக்கும். சாயந்தரம் செஞ்சு வச்சிடலாம்” என்றாள் பாட்டி. ராதை குஷியாக தலையாட்டினாள்.

“வறுத்த பயத்தமாவுல பொடிச்ச சர்க்கரை சேர்த்து நெய்யுருக்கி ஊத்தி உடைச்ச முந்திரி கலந்து சூட்டோட பிடிக்கணும்..”

பாட்டி பக்குவம் சொன்னாள். ராதை அன்பையும், காதலையும் கலந்து பிடித்தாள். பாட்டி சொல்லவில்லை. அவளாக சேர்த்துக் கொண்டாள். நாட்கள் நெருங்க, நெருங்க ராதைக்கு இருக்கத் தரிக்கவில்லை.

பூசினாற்போன்ற தன் உடலைக் கண்டு அவன் அதிசயமாகக்கூடும் என்ற எண்ணம் எழுந்த வினாடி வயிறு குழைந்தது. களிம்பேறாத கால்கொலுசை அவள் அவிழ்த்து பூந்திக்கொட்டையில் ஊறவைத்து தேய்த்துக்கழுவி அணிந்து கொண்டாள். மஞ்சள் இழைத்த தாலிச்சரடு சரக்கொன்றை மலர்போல மினுமினுத்தது. குளியலறையில் கிழங்குமஞ்சள் கரைந்து கிடந்தது. பாட்டிக்கும் பேரனைக் காணாது கண்கள் பூத்திருந்தன. ஒற்றையாளாக அவனை வளர்த்தவள்.

மாறன் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், கொடுக்கப்பட்டிருந்த விடுமுறை மேலதிகாரியின் குறுக்கீட்டால் நிர்தாட்சண்யமாக நிராகரிக்கப்பட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்தான்.

“ரொம்ப ஏமாற்றமா இருக்கு..”

மாறனின் குரல் அலைபேசியில் மங்கி ஒலித்தது. ராதை பாட்டிக்குத் தெரியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டாள். பாட்டி எதுவும் சொல்லவில்லை.

பதினோரு மணிக்கு ஊரைக் கடக்கும் விரைவு ரயில் காற்றைக் கிழித்துப் போனது மெலிதான சத்தமாகக் கேட்டது. கூடத்தில் இருந்த கடிகாரம் பதினொன்றடித்து ஓய்ந்தது. ராதை புரண்டு படுத்தாள்.

“ராத்திரி ஒழுங்கா தூங்கறியா..?”

பாட்டி எப்படிக் கண்டுபிடித்தாளென்று தெரியவில்லை. அவளிடம் புருவம் நெரித்து, தலையசைத்து,

“நல்லாத் தூங்கறேனே பாட்டி” என்று ராதை இயல்பாகச் சொல்லி வைத்தாள்.

மதியம் தூணில் சாய்ந்தமர்ந்தபடியே கண்ணயரும் போது பாட்டி அந்தப்பக்கமாக வந்திருப்பாளோ என்னவோ. இரவு விழிப்புக்குப் பயந்தே ராதை மதியம் தலை சாய்ப்பதில்லை. கால்நீட்டி தூணில் சாய்ந்தபடி டீவியை வெறித்திருப்பாள். எப்போதாவது தன்னையும் மீறி கண்கள் சொருகிவிடும்.

இரவு குளிர்ந்து கிடந்தது. மார்கழியின் இரவுகள் ஆயிரம் ஊசிகள் வைத்திருந்தன போலும். உடம்பெங்கும் நறுக், நறுக்கென்று குத்தின.

“ஓட்டு வழியா பனி இறங்கும். விஷப்பனி.. ஸ்வெட்டர் வச்சிருந்தா போட்டுக்கோ” என்றாள் பாட்டி.

முழுக்கை ஸ்வெட்டர் அணிந்து, கால்களைக் குறுக்கி தலையணையை இறுக அணைத்தபடி ராதை படுத்துக் கிடந்தாள்.

இரவுப்பனியை விட அதிகாலைப்பனிக்கு அதிக வீரியமிருப்பதாக அவளுக்குப் பட்டது. செடிகளின் இலைகள் நீரைச் சொட்டின. பூக்களில் கூடுதல் மினுமினுப்பு. கிணற்றுச் சகடையிலும் நீர்முத்துகள்.

“பேருக்கு நாலு பூ பறிச்சிட்டு வா, போதும்..”
பாட்டிக்கு அவளின் வெடவெடப்பு புரிந்தது.

“மார்கழி ரொம்ப குளிருது” என்று ராதை மாறனிடம் அங்கலாய்த்தாள்.

இடுப்பை வருடும் பனிக்கு உன் கையின் சாயலிருப்பதாகச் சொல்ல அவளுக்கு வெட்கமாக இருந்தது.

வேலை நேரம் போக மற்ற நேரங்களில் ராதை கொல்லை வெயிலில் குளிர் காய்ந்தபடி நின்றிருந்தாள். பக்கத்துக் கொல்லையில் ஆட்கள் வேலைசெய்து கொண்டிருந்தனர். விறகுகள் படீர், படீர் சத்தத்தோடு பிளக்கப்பட்டன.

செடிகள் கழிக்கப்பட்டு வேலிக்கு அந்தப்பக்கம் பளீரென்று தெரிந்தது. வெயில் உடம்பில் ஊர்ந்தபோது ராதைக்கு இதமாயிருந்தது. இடுப்பில் ஊர்ந்து, முதுகில் படர்ந்து, மார்பில் குவிந்து, கைகளைத் தழுவி வெயில் ஆலிங்கனம் செய்தது.

கால் வலித்தபோது ராதை துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து கொண்டாள். காலை உணவுக்கும், மதிய சமையலுக்கும் இடைப்பட்ட நேரத்தில் கொல்லையே கதியென்று கிடந்தாள்.

சாக்கடையோரம் ஊரும் ரயில் பூச்சிகளையும், குட்டைத் தென்னை மரங்களில் காய்த்திருந்த குடுக்கைகளையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“பாவம், குளிர் தாங்காம ரொம்ப சிரமப்படறா..”
பாட்டி அடிக்கடி தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.

ராதை வெகுநாட்களுக்குப் பிறகு திண்ணையில் அமர்ந்திருந்தாள். மஞ்சள் வெயில் தெருவில் விரிந்து படர்ந்திருந்தது. குளிருடனான வெயில் காற்றைத் தழுவியதில் காற்று வெதுவெதுப்பாய் வீசியது.

“பாப்பா, நல்லா இருக்கீங்களா..?”

ஆடுகளோட்டிச் சென்ற பூவரசி கேட்டுவிட்டுப் போனாள். ராதை தலையசைத்து விட்டு நழுவிச்சரிந்த முந்தானையை சரிசெய்து கொண்டாள். ரெட் ஆக்சைட் தரையில் கட்டங்கள் விரிந்து கிடந்தன. மொத்தம் ஒன்பது கட்டங்கள்.

ராதை விரல் நீட்டி கட்டங்களை எண்ணினாள். ஏற்கனவே தெரிந்ததுதான். இருந்தும் எண்ணுவது சுவாரசியமானதாய் இருந்தது.

முதலில் மூன்று, ஆறு, ஒன்பது என்று கிடைமட்ட வாக்கில் எண்ணினாள். பின்பு செங்குத்துவாக்கில். எதிர்த்திண்ணையில் இருந்த ஒன்பது கட்டங்களையும் இப்போது சேர்த்து எண்ணினாள். பதினெட்டு கட்டங்களை மும்மூன்று கட்டங்களாக வகுத்தாள். ஆறு சரியானதா என்று கட்டங்களை எண்ணிப்பார்த்து திருப்திப்பட்டுக் கொண்டாள். கால்களைச் சம்மணமிட்டு வெகு தீவிரமாக கட்டங்களிலிருந்த கோடுகளை விரல் நீட்டி எண்ணத் துவங்கினாள். கொலுசு காலோடு அழுந்தி வலித்தபோது அதை தளர்த்திவிட்டுக் கொண்டாள்.

கட்டங்களில் கோடுகள் அதிகமிருந்தன. இரண்டுமுறை எண்ணிப் பார்த்து விடை சரியாக வந்ததில் கைகளை சேர்த்து குலுக்கிக் கொண்டாள். வெயிலின் நிறம் மங்கத் தொடங்கிற்று. வழக்கமாக ஐந்து மணிக்கு கூவும் குயில் தன் கடமை போல கூவியது.

உள்ளிருந்து மல்லிகையின் வாசம் காற்றில் மிதந்து வந்தது. பூக்காரனிடம் வாங்கிய பூவை பாட்டி சாமிப்படங்களுக்குச் சாற்றிக் கொண்டிருந்தாள். ராதை மெல்லக் கையூன்றி எழுந்தாள். வெகுநேரம் அமர்ந்திருந்ததில் வலது கால் மரத்துப் போயிருந்தது. லேசாய் உதறி சரிசெய்து கொண்டவள் தெருவிளக்கைப் போட்டுவிட்டு உள்ளே போனாள்.


ஐ.கிருத்திகா – தொடர்புக்கு – kiruthigaiyyappan@gmail.com

பன்னீர் ரோஜா

0

அகராதி

“ஒத்த தம்பிடி கிடையாது வெளிய போடா, சொத்து வேணுமோ சொத்து.. வந்துட்டான்”

ஸ்வாதி தன்மேலே சரிந்திருக்கையில் அவனுக்குத் தன் சிறுவயதில் தாத்தா பேசப்பேச, வெள்ளைக்கோடு போட்ட சட்டை, பாசிப்பச்சைக் கலர் அரைடவுசரில் அம்மா கையைப் பிடித்துக்கொண்டு அப்பாவின் பின் தாத்தா வீட்டைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு வீதியில் நடந்தது நினைவிற்கு வந்தது. ச்சே என்ன மனசு இது. ‘பத்து நிமிஷம்.. வந்திடறேன்’ என்று லுங்கியைச் சுற்றிக்கொண்டு நகர்ந்து அறையின் ஜன்னல் ஸ்க்ரீனை விலக்கிவிட்டு சிகரெட் பற்ற வைத்தான். நீளமாக இழுத்து ஒரு தம், இரண்டு, மூன்று, நான்கு அதற்குள் சிகரெட் தன் ஆயுளின் தொன்னூறு சதவீதத்தை இழந்து விட்டது. பெரிதாக மூச்சுவிட்டு கட்டிலைப் பார்க்கிறான். சிங்கிள் டாப்புடன் அருகே வந்து நின்றவளை இடுப்போடு அணைக்க கைக்கொண்டு போகையில் என்னாச்சு என்கிறாள். ஒன்றுமில்லை என்பதாகத் தலையசைத்து, இழுத்து அவள் நெற்றியில் முத்தமிடுகிறான்.

“வித்தியாசமான ஆளா இருக்க”

இந்த மாதிரி நேரத்துல எழுந்து வந்தது குறித்து குறிப்பிடுகிறாளோ… ஏமாற்றம், இயலாமை, அவமானம் எல்லாம் துரத்துவது போல் இருக்கிறது கூடலைக்கூட நிகழ்த்த இயலாதுப் போன நேரங்கள் எதற்கு எனக்களிக்கப்பட்டிருக்கிறது? என நினைத்துக் கொண்டிருக்கையிலேயே ஸ்வாதியின் தோளில் சாய்ந்து அழத்தோன்றியது.

“பணம்தான் எல்லாத்தையும் விட முக்கியம். இல்ல?”

“இல்ல”

இது என்ன குறும்பான பதிலா, சின்சியரான பதிலா, என்ன சொல்லப்போறா..? அன்பு பண்புனு எதுவும் ஏதாவது உளறப் போறாளா? என்று நினைத்து ‘அப்புறம்?’ எனும் குரலில் கிண்டல் அமர்ந்து கொள்கிறது. வாரத்திற்கு இரு ஆண்களை மட்டுமே அனுமதிப்பதாகவும் மற்ற நாட்களில் தான் விருப்பமுறும் இடங்களுக்கும் படங்களுக்கும் சென்று வருவதாகவும் கூறினாள். அந்த இருவரும் கூட தன்னை மதிக்கும் பட்சத்தில்தான் என்றவள் எல்லோரிலும் அவனுக்குத் தனி இடம்தான், ஏனெனில் தன்னையும் அறியாமல் அவன் தன்னைக் காதலிப்பதை உணர்ந்ததால் என்று கூறிக்கொண்டிருக்கும் ஸ்வாதியை ‘ரிடிகுலஸ்’ என்றவாறு வினோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் ரகு .

ஸ்வாதியின் தொழில் வேண்டுமானால் விமர்சனத்திற்குட்பட்டதாக இருக்கலாம். ஆனால் அவளுக்கு எந்தப் புகாரும் யார் மீதும் இல்லை. ஏனென்று கேட்டால், முடிந்ததைப் பேசி என்னவாகப் போகிறதென்பாள். மகன் மட்டுமே நம்பிக்கை. மனித நேயமுள்ள, மற்றவரின் உரிமையில் தலையிடாத பிள்ளையாய் வளர்வான் என்பாள். எல்லோரிடமும் சரளமாகப் பேசும் பழக்கம் இல்லை. சந்திக்கும் ஆண்களில் மற்றவர்கள் மனதை மதிக்கக் கூடியவர்களாயிருந்தால் எண்ணத்தில் உதிப்பதைப் பகிர்வாள். எங்கிருந்து சமுதாயச் சிந்தனை வளர்ந்ததோ தெரியவில்லை. பேசுவதைப் பார்த்தால் பிறக்கும்போதே தோன்றியது போலிருக்கும். நடப்பு நிகழ்வுகள் குறித்து அவ்வளவு டீடெயிலிங் ஒப்பிப்பாள். கால் நீட்டி உடல் தளர்த்தியப் பொழுதுக்கு வாயார, மனமாற அவன் இதயம் தேடும் உறவு அவள் என்பதை அவனை விட அவளே உணர்ந்து இருந்தாள். அவனுக்கு பணத்திற்குப் பின்தான் எதுவும்.

அவனுக்கு இந்த உலகமே பணத்தால் ஆனது. அன்று தாத்தாவின் கோபத்தை மட்டும் வாங்கிவந்த பிறகு அவர்கள் ஒருநாளும் அந்த ஊருக்குப் போகவே இல்லை. எப்போதும் நிறைய நண்பர்களுடன் சுற்றிக் கொண்டிருந்த அப்பா, வயலில் வேலைக்கு வந்திருந்த அம்மாவை தாத்தாவின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார் என்று அம்மா கூறக் கேட்டிருக்கிறான். கடனை வாங்கி வைத்த எலக்ட்ரானிக்ஸ் கடை நஷ்டத்தில் போகவும் கடன் கொடுத்தவர்களைச் சமாளிக்கத்தான் தாத்தாவின் உதவியை நாடினார். தாத்தா வெளியே அனுப்பியப் பிறகு, அம்மாவின் அப்பா கொடுத்த சீட்டுப்பணம், அம்மாவிடம் இருந்த நகை எல்லாம் கடன்காரர்களைச் சமாளித்தது. அதே ஊரில் இருக்கப் பிடிக்காமல் வேறு ஊருக்கு வந்து எலக்ட்ரீசிஷியனாக வேலைப் பார்த்தார்.

*

லஷ்மி அக்கா பாவாடையை முழங்காலுக்கு மேல் சுருட்டிவிட்டு ஒருகால் மடக்கி ஒருகால் நீட்டி தலையை முன்பின்னாய் அசைத்து, அசைத்து அம்மி அரைத்துக் கொண்டிருந்தாள். மேலேறிய துணியின் பலனாய் அவளது வெள்ளைநிறக் கால் வீதிவரை பளீரென்று தெரிந்தது. அம்மிக்குழவியில் ஒரே மாதிரியான இடைவெளியில் கோடு கோடாய் மசாலா திரண்டிருந்தது.

“டேய் ஒரு டம்ளர் தண்ணிய எடுத்துட்டு வா”

ஓடிப்போய் எங்கள் வீட்டிலிருந்து எடுத்துவந்து கொடுத்தேன் வாங்கிப் பக்கத்தில் வைத்திருந்த கிண்ணத்தில் ஊற்றி டம்ளரைக் கொடுத்துவிட்டு சரக்கென குழவியைத் தொன்னூறு டிகிரியில் நிறுத்தி, விரல்களில் மசாலாவின் ஒவ்வொரு கோடாய் வழித்து அம்மியில் சேர்த்தாள். பிறகு அம்மியிலிருந்தும் குழவியிலிருந்தும் மசாலாவை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி மற்றொரு கிண்ணத்தில் இருந்த தண்ணீரால் இரண்டையும் சுத்தம் செய்து வைத்துவிட்டு, எழுந்து பாவாடையை உதறி தாவணியை இழுத்துவிட்டு அவளது வீட்டிற்குள் போனாள். ஆனாலும் ஒருபக்கம் மார்பும் இடுப்பும் தெரியத்தான் செய்தது. அவள் இழுத்து விட்டதே நன்றாகத் தெரியட்டும் என்றுதான் இழுத்து விட்டது போலிருந்தது. நான் பெரியவனானதும் லஷ்மியக்கா மாதிரி தலையை அசைத்து அசைத்து அம்மி அரைக்கும் பெண்ணைத்தான் கட்டிக்க வேண்டும். சிவப்பு கலர் மிக்ஸி அவங்க வீட்டில் நீளமான மரபெஞ்சில் இருக்கிறது. நான் பார்த்திருக்கிறேன். ஆனாலும் அக்கா நாலு குடித்தனத்திற்குப் பொதுவான இந்த அம்மியில்தான் அரைப்பாள். எங்கள் வீடுதான் எதிர்வீடு அப்புறம் ரெண்டு வீடு எதிரெதிரில் இருக்கு இருக்கிறது ஒரே வாசலுக்குள்.. அக்கா அம்மி அரைக்கும்போது அம்மா வெளியே வந்தால் முறைத்துவிட்டு கதவைச் சாத்தி விடுவாள்.

ஆனால் அக்கா எப்போது தண்ணீர் கேட்பாளென்று நான் வெளியே உட்கார்ந்திருப்பேன். மாதத்திற்கு மூன்று நான்கு நாள் உலக்கையை பார்டர் போல போட்டு நான் இப்பொழுது உட்கார்ந்திருக்கும் இடத்தில்தான் அக்கா உட்கார்ந்திருப்பாள் . அந்த நேரத்தில் என்னைத்தான் இழுத்து துணைக்கு வைத்துக் கொள்வாள். என் அம்மாவிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, மேல் சட்டையைக் கழட்டிவிட்டுப் போகச் சொல்வார் அக்காவின் அம்மா. மேல் சட்டையைக் கழட்டிவிட்டால் தீட்டு இல்லையாம். திரும்ப வீட்டிற்குள் வரும் போது டிராயரைக் கழற்றி நனைத்து காயப்போட்டு விடுவாள் அம்மா.

அக்காவுடன் பல்லாங்குழி, தாயம் விளையாடுவேன். அவளிடம் இருக்கும் பழைய புத்தகங்கள் ஏதாவது இரண்டு எடுத்து அதில் உள்ள ஜோக்கையெல்லாம் சத்தமாகப் படிக்கச் சொல்வாள். நான் இப்போது ஐந்தாம் வகுப்பு. அக்கா ரொம்ப நாள் முன்பே எட்டாவது பரீட்சை எழுதிவிட்டு இனிமேல் ஸ்கூலிற்கு போகமாட்டேன் எனச் சொல்லிட்டாளாம். என்னைக் கட்டிப்பிடித்து மடியில் உட்கார வைத்துதான் கீழே உட்கார விடுவாள். அவளை விட்டுத்தள்ளி உட்கார்ந்த பிறகும் மஞ்சளும் பான்ட்ஸ் பவுடரும் கலந்த வாசம் அடித்துக் கொண்டிருக்கும். வெளியே எங்கயாவது போகும்போது மட்டும்தான் மஞ்சளுக்கு மேல் ஃபேர் அன்ட் லவ்லி போட்டுக் கொள்வாள்.

அக்கா வீட்டில் அவங்க அம்மா, அக்கா இரண்டு பேர்தான். இன்னொரு அக்கா கல்யாணம் செய்து தூரமாக ஒரு ஊரில் இருக்கிறாள். நாங்கள் இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து பார்க்கிறேன், முழுப்பரிட்சை லீவிற்குதான் வருவாள். இந்தத் தடவையும் முழுப்பரிட்சை லீவிற்குத்தான் வருவாளென அக்கா சொன்னாள். இன்று ஸ்கூல் விட்டு வரும்போது உலக்கையை பார்டர் போல போட்டு அக்கா உட்காரவில்லை. இன்று என்னுடன் விளையாட மாட்டாள். வீட்டில் அம்மா பாத்திரம் துலக்கி வைத்துக் கொண்டிருந்தாள். பையை வைத்துவிட்டு கைகால், முகம் கழுவித் துடைத்து அம்மா வைத்திருந்த பருப்பு போளியைச் சாப்பிட எடுத்தேன். லக்ஷ்மி அக்கா வீட்டில் இருந்து புதிய குரல்கள்.

“யாரும்மா லஷ்மிக்கா வீட்ல?”

“லஷ்மியோட அக்கா குடும்பம் வந்துருக்கு”

போளியை தரையில் வைத்துவிட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தேன். அம்மா முதலில் சாப்பிட்டு விட்டு வெளியே போ என்று கத்தினாள். போளியும் உள்ளே இழுக்க, வந்து சம்மணமிட்டு இனிப்பு பூரணத்தின் மேல் போர்த்திருந்த வெள்ளைப் பரப்பை பிய்த்தெடுத்து தனியே வைத்துவிட்டு, உதிரும் இனிப்பு பூரணத்தை விரல்களால் சிறிய சைஸ் கோபுரம் கோபுரமாகப் பிடித்து தட்டில் தேய்த்து, தேய்த்து சாப்பிட்டேன். பிய்த்து வைத்திருந்ததையும் கீழே பூரணத்தைத் தங்கியிருந்த வெள்ளைப் பரப்பையும் குழலாகச் சுருட்டி கையில் எடுத்து ஒட்டியிருக்கும் பூரணத்தின் இனிப்புச் சுவையோடு கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டுவிட்டுத் தட்டை எடுத்துக் கழுவும் இடத்தில் வைத்து கை கழுவி தண்ணீர் குடிக்கும்போது லஷ்மி அக்கா நினைவு வர வெளியே ஓடிவந்து அவள் உலக்கை போட்டு உட்காரும் இடத்திற்கு அருகே டிராயரில் இருந்த சாக்பீஸை வைத்து கப்பல் வீடு வரைந்து கொடி பறக்க விட்டேன்.

அக்கா வீட்டிலிருந்து அவங்க அம்மா, புது அக்கா, ரெண்டு பாப்பாக்கள் வெளியேறினார்கள். அவங்க அம்மா என்னைக் காட்டி புது அக்காவிடம் ஏதோ சொல்லிக்கொண்டே போனார். நான் அக்காவைத் தேடிக்கொண்டு அவள் வீட்டிற்குள் சென்றேன்.

“என்னடா ஸ்கூல் விட்ருச்சா”

அக்காதான் சமையல் ரூமிலிருந்து கேட்டாள். வாசமாகக் காப்பி கலந்து எடுத்து வந்து மொத்தமாக தடியாக மீசை வைத்துக்கொண்டு உள்ரூமில் சேரில் இருந்த புது மாமாவிற்கு கொடுத்தாள். அந்த மாமா என்னைப் பார்த்துவிட்டு பேசவே இல்லை. காப்பியை மட்டும் வாங்கி உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தார். எனக்கு அக்கா இப்பொழுது வெளியில் வந்து கப்பல் வீட்டைப் பார்க்க வேண்டும். வருவாளா, மாட்டாளா ? திரும்பவும் சமையலறைக்குப் போன அக்காவின் முதுகைப் பார்த்துக்கொண்டே வெளியே வந்து கப்பல் வீடு கலையாமல் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தது அலுப்பாக இருக்க, எங்கள் வீட்டிற்குள் போனேன். சிறிது நேரம் கழித்து அக்கா வெளியே வரவும், அவசரமாக வெளியில் வந்து பார்க்க அக்கா தொப்பென்று தரையில் விழுந்து கவிழ்ந்து படுத்துக் கொண்டாள். பக்கத்தில் போய் நின்றவுடன் என்னை ஏறிட்டுப் பார்த்துவிட்டுத் திரும்பவும் படுத்துக் கொண்டாள். அவள் முதுகில் நோட் பென்சிலில் கோடு இழுத்தது மாதிரி சின்ன ரத்தக்கோடு. உட்கார்ந்து அதைத் தொட்டுப் பார்த்தேன்.

“என்கிட்ட காசு இல்லடா அப்பு”

“அதுக்கு?”

“இந்த உலகத்துல எல்லாத்தையும் விட காசுதான்டா முக்கியம்.”

சொல்லிவிட்டுக் கவிழ்ந்து கண்மூடிப் படுத்துக்கொண்டாள். அக்காவின் பச்சைக்கலர் பாவாடையெல்லாம் சாக்பீஸ் அப்பியிருக்க கப்பல் வீடு கலைந்து உருவமற்றுப் போயிருந்தது.

*

ஸ்வாதியிடம் இருந்து அவனுக்கு போன். அவசரமாய் வரச்சொன்னாள். கடந்த மூன்று மாதமாக இருவரிடையேயும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்நிலையில் ரெடி-கேஷ் ஐம்பதாயிரம் கேட்டிருக்கிறாள். அவனிடம் மட்டுமல்ல வேறு யாரிடமும் பணம் கேட்டு வாங்கியதில்லை. கடன், உடன் என்ற பேச்சுக்கே இடமில்லை. “லட்டு மாதிரி ஒரு பையன். நான் சம்பாதிக்கறதே அதிகம்” என்பவள், குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணத்தை வைத்து என்ன செய்வது, பயந்து பாதுகாத்தே லைஃப் போய்விடும் என்பாள். மகன் படித்து முடித்து விட்டால் அவன் பார்த்துக் கொள்வான் என்பது அவளது திடமான நம்பிக்கை. எங்கு வரவேண்டும் என்று கேட்காமல் நேராக அவள் வீட்டிற்குச் சென்று விட்டான். வீடு இருக்கும் இடம் தெரியுமே தவிர, இதுவரை வீட்டிற்குப் போனதில்லை.

வீட்டிற்குச் சென்றபோது வெளியில் நிற்கச்சொல்லி, போய் ஹேண்ட்-பேக் எடுத்து வந்தாள். ‘போன் பண்ணு, வீட்டுக்கு வராத’ என்ற உத்தரவிட்டு முன்னே நடந்தாள். கறுப்புக் கலரில் வெள்ளை வட்டம் போட்ட புடவை ஆங்காங்கே பீட்ஸாவில் தெரியும் கலர் போல இரண்டு, மூன்று கலர் பூக்கள். அதே டிசைனில் ஜாக்கெட். ரவுண்ட் நெக். நடக்கும்போது வலது தோள்பட்டையின் நாலு இஞ்ச்-க்கு கீழ் சிறுகுழி தோன்றும். கார் நிற்கும் இடம்வரை அதைப் பார்த்துக்கொண்டே நடந்து வந்தான்.

நாட்டில் கொலை, கொள்ளை, வன்முறை, வன்புணர்வு என்று எது நடந்தாலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது அவளுக்கு. பறவைப் பார்வை என சொல்வார்களே மேலிருந்து கவர் செய்யும் போட்டோ ஷூட் போல ஒவ்வொரு செயலுக்கும் எல்லா திசைகளிலும் பார்த்து டிஸ்கஸ் செய்வாள். அதுபோன்ற நேரங்களில் ‘கீழே வா கழுகே’ என்று அவன் கிண்டல் செய்திருக்கிறான். ஐந்து வயது மகன் இருக்கிறான். வளர்ந்த பிறகு ஹாஸ்டலில் சேர்த்து விடுவேன், படித்து முடித்ததும் வெளிநாட்டில் போய் செட்டிலாவோம். ஒரு செயல் எந்த அளவிற்கு நீட்சி பெற்று நல்லதையும் தீயதையும் விளைவிக்கும், பரவச்செய்யும் என்பதெல்லாம் சிந்திக்காத அதிகாரங்கள். அடிப்படைத் தேவைகள் பற்றிய அறிவின்மையோடு எப்பொழுதும் ஏதேனும் சிக்கலுக்குள் வாழ வைக்கும் ஊரிது. இந்த ஊர் கொடுக்கும் அழுத்தம் என் மகனால் தாங்க முடியாதென்பாள். எரிச்சல்படுவான். இந்த ஊரில் இருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா என்று கேட்பான். எனினும், ‘விடு ரகு’ என்ற தவிர்த்தல் இருக்குமே தவிர அவள் பேச்சில் எந்த மாற்றமுமிருக்காது.

“ஏன் ரகு சின்னக் குழந்தைகளுக்கு இத்தனைப் பாடம் வேணுமா? வீட்டில், அக்கம்பக்கத்தில் நாம எத்தனை மொழிகள் பேசுகிறோமோ அவ்வளவும் குழந்தை பேசும் எவ்வித தனித்த சிரத்தையுமின்றி. அதேபோல பள்ளியில் பேசினாலும் கற்றுக்கொள்ளும். முதலில் கம்யூனிகேட் செய்யட்டும். பேச நினைத்ததை எல்லாம் சொல்லக் கத்துக்கட்டும் என்பாள். தனக்குத் தெரிந்த பெண் பிள்ளை எட்டாம் வகுப்பில் வார்த்தைகளை உச்சரிக்கத் தெரியாமல், அர்த்தம் தெரியாமல் எழுத்துகளை அப்படி அப்படியே படம்போல் மனப்பாடம் செய்து எழுதி நூறு தொண்ணூறு என மதிப்பெண்கள் பெற்றதைக் கூறி, அறிவு வளர உதவாமல், தூண்டி விடாமல், மார்க் வாங்க வலியுறுத்துவது ஏன்..? அப்படி எதற்கு கஷ்டபடுத்தணும்? ஐந்தாம் வகுப்பு வரை அ ஆ, வாய்ப்பாடு, எ பி சி போதும். கூடவே மேப். அவ்வளவுதான். இதைப் பரீட்சை இல்லாமல் விளையாட்டாவே கற்றுக் கொடுக்க முடியும். அழகா மனனம் செய்து கொள்வார்கள். கட்டாயம் இல்லை என்பதால் மனதும் அழுத்தத்திற்கு உள்ளாகாது. ஆறிலிருந்து வாக்கியம், கிராமர், கூட்டல், கழித்தல்-ன்னு ஆரம்பிக்கலாம். மெதுவாகத் தேர்வு குறித்து அறிமுகம் கொடுத்து அவர்களையே கேள்விகள் உருவாக்கி பதில்களை அளிக்கச் செய்யலாம். அப்புறம் வழமையான முறைக்குள் போகலாம் என்று சொல்லிக்காட்டி வருந்தி இருக்கிறாள். குழந்தைமை என்று ஒன்றிருக்கிறது அதை அவர்கள் இழந்துவிடக் கூடாது. எதற்கு புத்தகப்பை, எதற்கு ஹோம்-வொர்க்? பத்து வயது தாண்டிய பிறகு இதெல்லாம் ஆரம்பிக்கலாம். பாவ மூட்டையைச் சுமப்பது போல முதுகில் ஒரு மூட்டை. அது நிறைய அச்சடிக்கப்பட்ட காகிதங்கள்… உடலைத் தூய்மைப்படுத்திக்கிட்டு உடுத்தி சாப்பிட்டு ஸ்கூலுக்கு வந்தால் போதுமே.. ஏன் குழந்தைகளுக்காக யோசிக்க மாட்டேங்கறாங்க. எல்லாக் குழந்தைகளையும் ஒன்னு போலவே நினைத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு வேகத்தில் கற்றுக்கொள்ளும். சிலபேருக்கு அல்ஃபபெடிக் தெரிஞ்சிக்க வருஷமே ஆகலாம். சிலபேருக்கு இரண்டு நாட்கள். யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை. ஒவ்வொரு பிள்ளையும் தனி. தனித்தனி திறமைகளை கொண்டது. இப்படி எல்லாரையும் கற்றுக்கொள்ள வைக்க ஆர்வப்படுத்த கட்டுதிட்டமும், பயமுறுத்தலும் இல்லாமல் இருக்க வேண்டும்.

பத்து வயது வரைக்கும் இந்த இம்சைகள் இல்லாமல் சந்தோஷமா கத்துக்கிட்டு கதை பாட்டு ஆட்டம்னு இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்? ஆனால் எல்லோருக்கும் புத்தி தெளிந்த ஒருநாள் வரும் அன்று குழந்தைகளுக்குத் தேர்வு இருக்காது. பாடம் இருக்கும். அதற்கு தாமதமாகலாம் நிச்சயம் நடக்கும்” என்று சபதமேற்பவள் போல அவள் சொல்லக் கேட்கையில் எதற்கு இவ்வளவு யோசிக்கிறாள் என்று நினைத்துக் கொள்வான். தூங்குவாளா மாட்டாளா!! இவளுக்கு நான்-ஸ்டாப்பாக மனது இப்படியே ஓடிக்கொண்டிருக்கும் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டே,

*எத்தனை மணிநேரம் தூங்குவ” என்றவனிடம் பதில் சொல்லாமல், “டாபிக் முடிச்சாச்சு” என்பாள்.

எமகாதகி! ஆர்வம் இல்லையென்பதைப் புரிந்து, தலையில் கொட்டு வைப்பது போல் க்ரிஸ்பியாக பேச்சை நிறுத்தியிருக்கிறாள் என்று எண்ணிக்கொள்வான்.

ஸ்வாதி பக்கத்தில் இருந்தாலே அவனுக்கு இனம் தெரியாத ஒரு உறுதித்தன்மை உள்ளுக்குள் வேர்பிடிக்கும். ஏனென்று தெரியாது. அத்தனை ஆத்மார்த்தமான அணைப்பை அவளைத் தவிர வேறு எங்குமே, எவரிடமுமே பெற்றதில்லை. அவன் மனைவியுடன் முதல் சந்திப்பில் கூட! மற்றவர்கள் இப்படி உணர்ந்து இருப்பார்களா அல்லது இவளே சொல்வதுபோல இவளைக் காதலித்துக் கொண்டிருக்கிறானா என்பதும் தெரியவில்லை. இவளிடம் நண்பனிடம் பேசுவது போன்ற மிக நீண்ட உரையாடலை நிகழ்த்தி இருக்கிறான் முற்றிலும் கலவி தவிர்த்து. அப்படியான உரையாடல்களை நிகழ்த்த இவளால் முடியும்.

கருணைமாக்கடல், மதர் தெரசா என்று கிண்டல் செய்து இருக்கிறான் . டாக்ஸியில் சென்று கொண்டிருந்த போது சாலையில் மயங்கி விழுந்திருந்த முகம் தெரியாத மூதாட்டி ஒருவரை அழைத்துப் போய் பல மாதங்கள் பராமரித்து வந்தாள். யாருமே இல்லை என்றாராம். உடல்நலம் தேறியபின் அந்தப் பாட்டி வீட்டிலிருந்த பணம் பொருட்களை எடுத்துக்கொண்டு போய்விட, எவ்வித எதிர்வினையும் காட்டாது அமைதியாக இருந்துவிட்டாள். செய்தி அறிந்து ஏரியா இன்ஸ்பெக்டர் கம்ப்ளைன்ட் கொடுக்கச் சொல்லியும் வேண்டாமென்றாள். கொஞ்சம் பணம்தானே என்று பிடிவாதமாகப் புகார் அளிக்க மறுத்தாள். தனியே இவனைச் சந்தித்து இருபது நிமிடங்கள் மடியில் படுத்திருந்து போனாள். அந்தப் பாட்டியைப் பற்றிய எந்தப் புகாரும் இல்லை.

காரை நெருங்கி அவனைத் திரும்பிப் பார்க்கிறாள். ஒருமுறை ஹக் செய்யலாம் போலிருந்தது. எதுவும் பேசாமல் காருக்குள் சென்று கவர் எடுக்கிறான். உள்ளே வந்து ஐம்பதாயிரம் வாங்கிக்கொண்டு அப்புறம் போனில் பேசுகிறேன் என்று இறங்கினாள். இதனூடே அவனுக்குப் பணம் திரும்ப வந்து சேருமா என்ற கவலை முகத்தில் ரேகைகளாக முளைத்து அழிந்தது. நீர்த்துளி நீருக்குள் விழுவது போல் ஓர் ஒற்றை ஒலித்துணுக்கு ஒலித்தது. போனை எடுத்துப் பார்த்தான் மெசேஜ் ஃபிரம் ஸ்வாதி என்றது. ஸ்வாதியின் பழக்கம் இது. எத்தனை ஆப்ஸ் இருந்தாலும் பழைய ஸ்டைல் டெக்ஸ்ட் மெசேஜ்தான் செய்வாள். நம்பர் லாக் ரிலீஸ் செய்து டெக்ஸ்ட் மெசேஜ் ஓப்பன் செய்தான். “டோண்ட் கெட் ஃபியர். ஐ வில் ரிடர்ன் யுவர் மணி அஸ் சூன் அஸ் பாஸிபிள்” என்றது மெசேஜ். ஒரு மாதிரியாயிருந்தது .நினைத்ததை முகத்தில் படித்து விட்டாள். எதுவும் ரிப்ளை செய்யாது மொபைலை பாக்கெட்டில் வைத்தான். எதற்கு, ஏன், இந்தப் பணம் போதுமா, இன்னும் வேண்டுமா? கால்செய்து கேட்கலாமா என்று தோன்றிய எண்ணத்தை வலுக்கட்டாயமாக நிறுத்திக் காரை எடுத்தான்.

*

அறையிலிருந்து புறப்பட்ட இருள் சரசரவென வீதி, கூரை என நிரப்பி திரும்பவந்து மேல் அழுத்தியது மூச்சுத் திணறுவது போலிருந்தது. கைகள் பிடிமானத்திற்காய் தத்தளிக்கிறது. லஷ்மி அக்கா தூரமாகத் தெரிகிறாள். அருகில் போய் பார்த்தால் காணவில்லை. வெறுமனே மஞ்சள் பச்சை இலைகள் மட்டும் அசைந்தன. என்ன மரம் அது அடியில் மண்ணோடு ஒட்டாமல் தனியே நிற்கிறது. மஞ்சள் செந்நிறமென கண்களுக்குள் ஒளி. விழி மூடிமூடித் திறக்க முயற்சித்து தோற்கிறது. டேய்.. என அம்மாவின் குரல். இவள் இங்கு எதற்கு வந்தாள்? தூறல் போடுகிறது. பிடிமானத்திற்காய் தத்தளித்த கைக்கு எதுவோ அகப்பட பிடித்து இழுக்கிறேன்.

“டேய் அப்பு எழுந்துக்காம புடவையை வச்சிக்கிட்டு என்ன பண்ணற”

கண்விழித்துப் பார்க்கிறேன். தரையிலிருந்து அம்மா நீளமாகத் தெரிகிறாள். தண்ணீரில் நனைத்து வந்த ஈரக்கையை இவன் முகத்தில் தெளித்தவாறு எழுந்துகொள்ளச் சொல்லி கை நீட்டுகிறாள்.

முன்பு இருந்த வீட்டை விட இது பெரிய வீடு. பக்கத்தில் கிரவுண்ட் இருக்கிறது. சினிமா தியேட்டர் கூட பக்கமாம். ஸ்கூலுக்கு இங்கிருந்து போக வர சீக்கிரமே சைக்கிள் வாங்கித் தருவதாக அப்பா சொன்னார். என்ன இருந்து என்ன, லஷ்மி அக்கா இந்த வீட்டுக்கு எதிர்வீட்டில் இல்லை. அக்கா முதுகில் இருக்கும் அந்தக்காயம் ஆறியிருக்குமா. எப்படிப் போனால் அக்கா வீட்டிற்குப் போகலாம்? ரொம்ப தூரமா? அப்பா சைக்கிள் வாங்கித்தந்த உடனே அக்காவைக் கூப்பிட்டு உட்கார வைத்து ஓட்ட வேண்டும். அப்பா எப்போது சைக்கிள் வாங்கித் தருவார் .

அவ்வப்போது தாத்தா கத்தியது, ஊரிலிருந்து வந்து, அன்று இரவு சாப்பிடாமல் அம்மா அழுதுகொண்டே தூங்கியது எல்லாம் பாதித் தூக்கத்தில் நினைவில் வரும். புதிதாக வந்த வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த கிரவுண்டில் பையன்களோடு நாடக விளையாட்டு விளையாடுகையில் ‘ஒரு தம்பிடி கிடையாது வெளியே போ’ என்று தாத்தா கேரக்டருக்கு வசனம் பேச, மற்றப் பையன்கள் எல்லாம் கிகிகி என்று சிரித்தார்கள். தம்பிடினா என்னடா என்றார்கள். அம்மாவிடம் கேட்டு, காசுடா என்று அவர்களிடம் பதில் சொன்னேன். ‘தம்பிடி, தம்பிடி, தம்பிடி’ என்று கோரஸாகக் கத்திக்கொண்டு ஓடினார்கள்.

எங்கேயும் சுற்றாமல் நேராக ஸ்கூல், வீடு என்றிருக்க வேண்டும் என்று அம்மா எப்போதும் போல் சொன்னாள். ஆனால் அக்காவைப் பார்க்க வேண்டுமே. அன்று பெரிய கிளாஸ் அக்கா, அண்ணனுக்கெல்லாம் விளையாட்டுப் போட்டி நடக்க இருந்ததால் எங்களுக்கு மதியத்திற்கு மேல் யாரும் டீச்சர் வரவில்லை. சிவனேசு புத்தகப்பையை எடுத்துக்கொண்டு நைசாகக் கிளம்பினான். அவனுடைய தாத்தா வந்து இருக்கிறாராம். கடைவீதிக்கு கூட்டிப் போவாராம். ‘நைட் வரைக்கும் சுத்துவோம்’ என்றான். எவ்வளவு நல்ல தாத்தா. ஏன் நம் தாத்தா அப்படி இல்லை. ஒரு தாத்தா போ..போ என்று சொல்லி விட்டார். இன்னொரு தாத்தா இப்போ சாமியாகிட்டார். யாருக்கும் தெரியாமல் அவன் கூடவே வெளியே வந்து பழைய வீட்டிற்குப் போனேன். இதற்கு வழியும் சிவனேசுதான் சொன்னான். அவனுக்கு எல்லாமே தெரியும்.

வெயிலில் சுற்றிவந்து வீட்டு முன்பு நின்று ‘க்கா’ என்று கத்தினேன். முன்பு நாங்கள் இருந்த வீட்டில் இருந்து ஒரு அண்ணன் எட்டிப்பார்த்து லஷ்மி அக்கா வீட்டிற்குப் போய் என்னவோ சொல்லி வந்தார். நான் நாலு வீட்டிற்கும் பொதுவான வெளிவாசலில் நின்று கொண்டிருந்தேன். அக்கா வெளியில் போயிருக்கிறதாக அவள் அம்மா வந்து சொன்னார். உள்ளே வந்து அக்கா வந்தவுடன் பார்த்துவிட்டுப் போ என்று அவர் சொல்வார் என்று நினைத்தேன் . தாகமாக இருக்கிறது. வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரெல்லாம் தீர்ந்து போய்விட்டது. கண்களில் கண்ணீர் முட்டியது. வழியும் மறந்து போயிருந்தது. மாட்டாஸ்பத்திரி பக்கம்தான் எங்கள் வீடு. சிவனேசு சொன்னது மாதிரி கண்ணாடிக்கடை வரிசையிலேயே போய் அதே பக்கம் திரும்பி நடந்து வீட்டிற்கு வந்து அம்மாவிற்குத் தெரியாமல் கண்ணைத் துடைத்துக் கழுவிக் கொண்டேன். அடுத்த நாள் ஸ்கூலுக்குப் போகவில்லை. பாதி ராத்திரிக்கு மேல் உடம்பு கொதித்து தூக்கத்தில் உளறினதாக அம்மா பக்கத்து வீட்டில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

*

பைக்கில் சென்று அந்த வீட்டிற்கு முன் நிறுத்தி விசாரிக்கையில் கவனித்தான் நான்கு போர்ஷன் இரண்டாகியிருந்து. வெளியே இருந்த திண்ணை சாலை சீரமைப்பில் அடிபட்டுப் போயிருந்தது. அம்மி இருந்த இடத்தில் ரோஸ் கலர் திருகலைக் கொண்ட தண்ணீர் பைப் இருந்தது. லஷ்மி அக்காவிற்கு புளூ கலர்தான் பிடிக்கும். அதுவும் வெளிர் ஊதா என்றால் ரொம்பப் பிரியம். தேவதைக் கலரென்பாள். எப்போதும் தாவணியே கட்டியிருந்த அக்கா கார்த்திகை தீபம் அன்று வெளிர் ஊதாக்கலரில் புடவை கட்டியிருந்தாள். என்னை அழைத்துக் கொண்டு மாரியம்மன் கோவிலுக்குப் போனாள். அம்மன் சிவப்பு பட்டு உடுத்தியிருந்தாள். ஏன் அம்மன் வெளிர் ஊதாக்கலர் உடுத்துவதிலலை. அம்மனும் வெளிர் ஊதாவே உடுத்தி இருக்கலாம். அப்படி உடுத்தாததினால் அம்மனை விட அக்காதான் அழகாக இருந்தாள்.

உள்ளிருந்து யாரோ எட்டிப் பார்க்கிறார்கள். உயரமாய் பேலஸோ குர்தியில் ஒரு பெண் புருவங்களை நெளியவிட்டபடி கையில் மொபைல் போனோடு வந்தாள்.

“யாரு?”

“லஷ்மி?”

மொபைலில் அழைத்தாள் – ‘ஈஷ்வர் வெளியே வா’.

வந்த ஈஷ்வர் உயரமான பெண்ணிற்கு மேலும் உயரமாயிருந்தான். மீசையை முற்றிலும் எடுத்திருந்தான். இருவரும் சேர்ந்து நாற்பது கிலோ இருப்பார்கள் போலிருந்தது. லஷ்மி என்ற பெயரில் யாரையும் தெரியாது என்று அம்மாவிடம் கேட்டு வருவதாக உள்ளே சென்றான். பின்னாலேயே அந்தப் பெண்ணும் சென்றாள். ஐந்து நிமிடங்கள் கழித்து வந்தவன் கையில் ஒரு துண்டுச்சீட்டு.

நா வறட்சியாய் இருந்தது. தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் கேட்கத் தோன்றவில்ஸை. அழாமல் வழியில் வாங்கிக் குடித்துக் கொள்ளலாம். மெதுவாகச் சிரித்துக் கொண்டான். நன்றி சொல்லி பாலக்கரையை நான்குமுறை சுற்றிவந்து பெட்டிக்கடையில் கோல்ட் ஃபிளேக் வாங்கிவிட்டு நாலு இடத்தில் விசாரிக்கையில் தெரிந்தது. பாலக்கரையைச் சுற்றி மட்டுமே நாற்பத்து மூன்று லஷ்மி இருக்கிறார்கள். போன் நம்பர் வாங்கி வைத்துக்கொள்ளாத மடமையை, விசாரித்த புத்திசாலிகள் எல்லோரும் தவறாமல் கேள்விக்குட்படுத்தினர். அரைகுறையாகத் துண்டுச்சீட்டில் இருந்த விலாசம் அலைச்சல் கொடுத்தது. பக்கத்தில் இருந்த ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு இன்னும் இரண்டு தெருக்களில் சுற்றினான். இன்னொரு நாள் வருவோம் என்று வீட்டிற்குக் கிளம்ப வைத்தது மனதின் அயர்ச்சி.

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் பாலக்கரைப் பகுதியில் சுற்றி வந்தான். இப்போது தெருக்கள் பழக்கமாயிருந்தது. பார்த்த இடங்களை விட்டு, பார்க்காத இடமாகப் போக ஆரம்பித்தான்.

இந்த இடத்தை எப்படி விட்டேன் என்று மெதுவாகக் கூறிக் கொள்கிறான். மெயின் ரோடுக்கு மிக அருகில், பத்தடி அகலத்தில் எப்போதோ தார்ச்சாலை போட்ட அடையாளத்தைக் காட்டியபடி மேடு பள்ளங்களுடன் ஒரு பாதை இருந்தது. சிறிது தூரம் சென்று இதுதானே என்று உறுதிப்படுத்தியபடி முன்னேறினான். அதிலிருந்து வலதுகை பக்கம் ஒரு சாலை பிரிந்தது. இடதுகை பக்கம் பாதையை அடைத்தபடி ஒரு வீட்டின் முதுகுபக்கம் தெரிந்தது. பாதையில்லை. வலதுபுறம் பிரிந்த சாலை, மேடு பள்ளங்களற்று சமதளத்தில் செப்பனிடப்பட்டு இருந்தது. மேடுபள்ளங்களில் செலுத்திய பிறகு நல்ல சாலையில் வண்டியைத் திருப்பியவுடன் வேகமெடுத்தது. நிதானப்படுத்திச் செலுத்தியபடி நினைத்துக் கொண்டான். இரண்டு சாலைகளும் வேறுவேறு வார்டின் கீழ் வந்து இருக்குமோ! நம் நாட்டிற்கு மட்டுமே உள்ள சிறப்புத் தகுதிகளில்?! இதுபோன்ற எல்லைக்கோடுகளும் ஒன்று. குற்றச்செயல்கள் குறித்த புகார்களிலும், ஒரே பாதையில் ரோடு போட்டு பாதியில் நிறுத்தப்படும் வேலைகளிலும் எல்லைகள் கண்டிப்புடன் கோடு போட்டுக் கொள்கின்றன. எல்லைகள் வகுப்பவர்களும் புளுட்டோ, யுரேனஸ் என்று போய் இதற்கெனப் படித்து வந்திருப்பார்கள் போல.. நினைத்துக் கொண்டே பைக்கைச் செலுத்தியவன் இருபுறமும் வரிசையாய் இருந்த வீடுகளைக் கவனித்துக் கொண்டே வாசலில் நின்று எவர் வருகையோ எதிர்பார்த்தபடியிருந்த ஆரஞ்ச் கலர் சுடிதார் பெண்ணிடம் விசாரித்தான். யோசிப்பாள், உம்மென்று கைநீட்டுவாள், எஸ் தட் வே என்பாள் என்ற அவனது அனுமானங்களை மாற்றி மலர்ச்சியாய் உள்ளே பார்த்து “ஹேய் அம்மு” என்று குரல் கொடுத்தாள்.

லைட் வயலட் கலரில் கையில்லாத சட்டையும் கறுப்புக்கலரில் முழங்கால் வரை ஸ்கர்ட்டும் அணிந்திருந்த அம்மு கைகளை விரித்து ஓடிவந்தது பட்டாம்பூச்சி போல இருந்தது. அவனைக் கண்டதும் முழித்து அவள் பக்கம் திரும்பியது. ‘அத்தை வீட்டுக்கு கூட்டிப்போ’ என்றாள். உடன் அவளின் மலர்ச்சி அம்முவிற்கும் தாவியது. என் பின்னாடி வாங்க என்று அதேபோல் கைகளை விரித்து ஓடி மூன்றாவது வீட்டில் நின்றது. அவனுக்குத்தான் சந்தேகமாயிருந்தது. இந்த ஆறேழு வயது பட்டாம்பூச்சி அம்முவின் அத்தைதான் நாம் தேடிவந்த லஷ்மியா என்று.. அம்மு வராமல் கைநீட்டி காட்டியிருந்தாலே போதும். ஆனால் வீடு வந்து திரும்புவதில் பட்டாம்பூச்சிக்கும் அதன் அம்மாவிற்கும் ஒரு மகிழ்வு இருந்தது தெரிந்தது. வீட்டிற்கு உள்ளே போய்வந்து என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு அதன் வீட்டை நோக்கி ஓடியது.

வாசலில் நட்சத்திரக் கோலம். படிக்கட்டின் இரண்டு ஓரங்களிலும் நெளிக்கோடுகள். அந்த வீ்ட்டில் இருக்கும் வரை அக்கா கோலம் போட்டது இல்லை என்ற நினைவு அவனுக்குள் ஓடுகிறது. இடதுகை பக்கம் சிறிய பூவரச மரம். பைக்கை ஸ்டேண்டிட்டு திறந்திருந்த கதவைத் தட்டினான். உள்ளிருந்து வந்தவள் வாடிய பன்னீர் ரோஜா போன்று இருந்தாள்.

அறிமுகத்திற்கு பின் “அப்புக்குட்டி நீயா! எப்படி வளந்துட்ட” லஷ்மி அக்கா அதே கலரில், அதே வடிவத்தில், அதே புருவ தீட்டலில் வாடிப்போன பன்னீர் ரோஜாவாக நின்றிருந்தாள். காலம் ரோஜாவை வாடச் செய்திருந்தது. வயதின் முதிர்வு பயந்து பயந்துதான் அவளைத் தீண்டியிருந்தது. இளமை விடாப்பிடியாக முழுதும் உதிர மனதின்றி ஒட்டிக் கொண்டிருந்தது. உள்ளே அழைத்து உட்காரச் சொல்லிட்டு தண்ணீர் எடுத்துவரச் சென்றாள். அனிச்சையாய் முதுகின் காயத்தை அவன் கண்கள் தேடியது.

அக்காவின் அம்மா உயிருடன் இருக்கும் வரை அந்த வீட்டில் இருந்திருக்கிறாள். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் முன்பு இந்த வீட்டிற்கு வந்திருக்கிறாள். முன்பு பக்கத்து ஹோட்டல் ஒன்றுக்கு போய்வந்ததாகக் கூறினாள். அவ்வப்போது அவளின் அக்கா கணவர் வந்து போயிருக்கிறார். இப்போது? யாரும் இல்லாமல் தனித்து இருக்கிறாளா? வீட்டைப் பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லை. எப்படிக் கேட்பது? கல்யாணம் செய்து கொண்டாளா? பிள்ளைகள் இருக்கின்றனவா? மனதில் கேள்விகளுடன் வீட்டைச் சுற்றுகிறது கண்கள். ஷோகேஷாக மாற்றியிருந்த செல்ஃபில் லேமினேடட் குரூப் போட்டோவில் அக்காவின் அம்மா, இரண்டு பெண் குழந்தைகள், அக்காவின் அக்கா, மொத்தமா தடியா மீசை வைத்திருந்த மாமா நின்றிருந்தனர். அக்கா இல்லை. வேறு எந்தப் போட்டோவும் தென்படவில்லை.

திரும்ப உள்ளே பிளாக் காஃபி எடுத்து வருவதாகப் போனாள். இன்னும் நினைவு வைத்திருக்கிறாள் அவன் பிளாக் காஃபி மட்டுமே குடிப்பான் என்பதை! நீண்ட நேரமாக வரவில்லை. தொல்லை செய்ய வேண்டாமென வெளியில் வந்து நின்றான். நான்கைந்து பிள்ளைகள் அந்த அம்முவுடன் அழகழகான சிரிப்போடு வந்தார்கள். ‘அத்தே’ எனக் கூக்குரலிட்டு அவனைக் கண்டுகொள்ளாது உள்ளே ஓடினார்கள். அம்மு மட்டும் தெரிந்த முகபாவனைக் காட்டிச் சிரித்தது.

அவர்களை வரவேற்று உள்ளே அமர வைத்துவிட்டு அவனிடம் காஃபி தந்து படிக்க வந்திருக்கிறார்கள் என்று கூறும் அக்கா அவனை ஆச்சர்யப்படுத்துகிறாள். இவளுக்கும் வாசிப்பிற்கும் பத்து கிலோமீட்டர் தூரம். பிறகெப்படி என்னும் அவனது முகக் கேள்விக்கு பதிலளிப்பது போல “‘எனக்கென்னத் தெரியும் அவங்களே படிச்சுக்குவாங்க” என்னும் அக்காவின் முகத்தில் சந்தோஷம் இழையோடுகிறது.

*

தினமும் ஹமாம் சோப்பு மட்டுமே பயன்படுத்தி இருந்தாலும் என்னவோ லக்ஷ்மி அக்காவிற்கு அவள் வீட்டிற்கு சூடம் மடித்து வந்த குமுதம் புத்தகத்தில் ஒரு பக்கத்திற்கு வெளிர் ரோஸில் வந்திருந்த லக்ஸ் சோப்பின் விளம்பரத்தைப் பார்த்ததிலிருந்து அதைப்போட்டுக் குளித்துப் பார்க்க வேண்டும் என்ற தீரா ஆசை வந்தது. அவள் அம்மா திட்டுவாளோ என்னமோ தொடர்ந்து நாலு நாளைப் போல என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

எந்தப் புத்தகம் பார்த்தாலும் லக்ஸ் விளம்பரத்தைத் தேடிப்பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த வாசம் எப்படி இருக்கும் என்று அக்காவும் நானும் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம். அப்படிப் பேசிக் கொண்டிருக்கையில், அக்காவைப் பார்த்தால் பன்னீர் ரோஜா மேல் சின்னதாகக் காற்று வீசுவது போல் இருக்கும்.. யாருக்கும் தெரியாமல் வாங்கி வந்த சோப்பை முகர்ந்து பார்த்துக்கொண்டே எடுத்துச்சென்று குளித்துவிட்டு வந்து என்னவோ ஹமாம் வாசம்தான் பிடித்து செட்டாகி விட்டதாகக் கூறினாள்.

கண்ணாடி வளையல் வாங்குவதாக இருந்தாலும் பத்து இருபது வளையலாவது பார்த்து வாங்கக்கூடியவள் இப்படி சோப்பைக் குளித்துப் பார்த்து வேண்டாம் என்று சொல்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அப்படி அவளுக்குப் பிடித்த ஹேர்-பின் வாங்க ஒருநாள் ஸ்கூல் விட்டுவந்த கையோடு கடை கடையாய் ஏறி இறங்கியதிலும் கடைசி பீரியட் பி.டி என்பதாலும் கால் வலித்தது. “உங்க அம்மா எங்கூட வெளியே விடறதே பெரிசு இப்படிப் பாதில போனா திரும்ப இதுக்காக வர முடியாது. பேசாம வா” என்று இழுத்துக் கொண்டு இன்னும் நான்கு கடைகள் ஏறி இறங்கினாள்.

அவளுடன் நடக்கப் பிடித்திருந்தாலும் கால்வலியில் எதற்கு இப்படி இத்தனைக் கடை ஏறி இறங்கணும் அம்மா இப்படி அலைகழிக்க மாட்டாளே.. ஒரு கடையின் வாசல் படியில் உட்கார்ந்து கொண்டு கேட்டதற்கு சரிவா என வீட்டிற்கு உம்மென்று நடக்க ஆரம்பித்தாள். ஒன்றுமே சொல்லாமல் நடக்கிறாளே என முகத்தைப் பார்க்க, “இதெல்லாமாச்சும் பிடிச்ச மாறி இருக்கட்டுமேனுதான்டா’’ என்று கூறிவிட்டுக் குனிந்தபடியே நடந்து கொண்டிருந்தாள். அக்கா அழுது நான் பார்த்ததே இல்லை. ஆனால் அழாமலேயே அழுவது போல அவள் முகம் அப்படி இருந்தது எனக்குப் பிடிக்கவில்லை.

அம்மா அழுது பார்த்திருக்கிறேன். அக்கா மட்டும் அழவே மாட்டாள். நான் மார்க் கம்மியாக வாங்கியதற்காக அம்மா திட்டித் தீர்த்து வைக்க, அழுத என்னைப் பார்த்துச் சிரித்தாள். இரண்டு நாட்கள் அவள் கண்ணில் படாமலேயே இருந்தேன். அப்புறம்தான் சொன்னாள் இது எல்லாம் ஒன்றுமே இல்லையாம். திட்டும் போது மட்டும் அவங்க முன்னாடி தலைகுனிஞ்சு அமைதியாக இருந்து விட்டு, திட்டி முடித்த பிறகு நைசாக அந்த இடத்தை விட்டு வந்துவிட வேண்டுமாம். தேவையில்லாமல் எதற்கு அழ வேண்டும் என்றாள். அதற்குப் பிறகு நான் யார் திட்டினாலும் அப்படித்தான் செய்தேன். அழவே மாட்டேன். அம்மா திட்டும்போது ஒரு தடவையும் எங்கள் கிளாஸ் ஸார் வராது இருக்கும் போது பேசி விளையாடினேன் என்று பக்கத்து கிளாஸ் டீச்சர் திட்டும்போது ஒரு தடவையும் சிரிப்புகூட வந்தது.

ஒருநாள் தாத்தா இறந்ததாகச் செய்தி எடுத்து வந்திருந்தவர் கூடவே சொத்து எதுவும் அப்பாவிற்கு இல்லை எனவும், எல்லாம் அவர் உயிருடன் இருந்தபோதே எழுதி வாங்கி விட்டார்கள் எனவும் கூறினார். கேட்டுக் கொண்டிருந்து விட்டு எப்போதும் போல் அப்பா வேலைக்குக் கிளம்பினார். அம்மாதான் வந்தவருக்கு எலுமிச்சை சாறு பிழிந்து சர்க்கரை போட்டுக் கொடுத்தாள். நான்தான் அவருக்கு எடுத்துப்போய் கொடுத்தேன். ஜூஸில் ரெண்டு சாமி எறும்பு மிதந்து கொண்டிருந்தது. அவர் எதையும் பார்க்காமல் அப்படியே எடுத்து ஒரே மடக்கில் வாயில் கவிழ்த்துக்கொண்டு போய்விட்டார். வாங்கி டம்பளரைப் பார்த்தேன் ஓரமாய் ஒரு எலுமிச்சை விதை இருந்தது. சாமி எறும்பு இரண்டையும் காணவில்லை. அறிவியல் ஸார் எறும்பு சாப்பிட்டால் கண் பார்வை தெரியுமெனில் எறும்பு பண்ணையை வளர்த்து பாட்டிலில் எறும்புகளை அடைத்து விற்றிருப்பார்கள். ஊரில் கண்ணாஸ்பத்திரி எதுவும் இருக்காது என்றதை நினைத்துக் கொண்டேன். அரிந்து மீதி வைத்திருந்த பாதி எலுமிச்சம் பழத்தில் சாறு எடுத்து அப்பா வந்ததும் கொடுப்பாள். அப்போ எனக்குக் கிடையாதா? ஆனால், அப்பா வந்ததும் அவருக்கு சுக்கு காப்பியும் எனக்கு ஜூஸூம் கிடைத்தது. ஆப்பிள் ஜூஸெல்லாம் குடித்தால் கலரா அழகாகிடுவ என்று சிவனேசு கூறினான். அம்மா கணக்கு நோட்டுகூட கேட்டவுடன் புதிதாக வாங்கித் தரவில்லை. எப்போது ஆப்பிள் ஜூஸ் போட்டுக் கொடுப்பாளோ..? கேட்டதற்கு அப்பா பாவம் கஷ்டப்பட்டு வேலை செய்கிறார், அப்புக்குட்டி பெரியவனானதும் தினமும் தருவேன் என்கிறாள். இந்த அம்மாவிற்கு ஒன்றுமே தெரியவில்லை. நான் பெரியவனானதும் நானே வாங்கிக்கொள்ள மாட்டேனா?

கணக்கு சார் வீட்டுப்பாடத்திற்கு என்று தனிநோட்டு போடச் சொன்னார். அம்மா ஒரே நோட்டை நடுவில் ஒரு பேப்பரை முக்கோணமாக்கி ரெண்டாகப் பிரித்து வகுப்பு பாடம், வீட்டுப் பாடம் என்று எழுதித் தந்தாள். சிவனேசு எல்லா நோட்டும் புதிதாக தனித்தனியாக வைத்திருப்பான். கண்ணாடி ஸ்கேல் கூட வைத்திருந்தான். வாங்கி இருபது கோடு போட்டேன் நேர் நேராக விழுந்தது. அப்பாவிடம் அழுது புரண்டாவது எப்படியாவது ஒரு கண்ணாடி அடி-ஸ்கேல் வாங்கிக் கோடு போட வேண்டும். பென்சில் சீவற மிஷினும் வாங்க வேண்டும். நெளிநெளியா சுருண்டு சுருண்டு சீவல் வருவது பார்க்கவே அழகாக இருக்கும். லஷ்மி அக்காவிடம் ஒரு மை-பென்சில் இருக்கிறது. பிளேடு வைத்து பெஞ்சில் சாய்த்துப் பிடித்துச் சீவுவாள். கண்ணாடி பார்த்து புருவம் வரைந்து கொள்கிற பென்சில் அது. அதில் எனக்கு மீசை வரைந்து கண்ணாடியில் காண்பித்து இருக்கிறாள்.

ஒருநாள் ராத்திரி பதினோரு மணிக்கு அப்பா வேலை செய்த மேஸ்திரி வீட்டில் இருந்து நான்கைந்து பேர் வந்து அப்பாவைக் கூட்டிப் போனார்கள். திரும்ப அப்பா வரும்வரை அம்மா தூங்கவே இல்லை. உட்கார்ந்தே இருந்தாள். உட்கார்ந்து கொண்டே கொஞ்ச நேரம் தூங்கி, பிறகு பாயில் படுத்துத் தூங்கினேன். விடிந்து அம்மா காலையில் எதுவும் சமைக்காமல், மதியம் சமைத்ததால் ஸ்கூலுக்கு போகவில்லை. அப்பா வேலைக்குப் போன வீட்டில் நகை காணாமல் போய் விட்டதாம் அதனால் அப்பாவை விசாரிக்க கூப்பிட்டு போனதாக அம்மா சொன்னாள். அப்பாதான் எடுக்கவேயில்லையே என்றேன்.

“இல்லாதவங்கனா அப்படித்தான் “என்றாள்.

திரும்பவும் புதுவீடு போனோம் இந்த முறை ரொம்ப தூரம். புது ஊரு, புதுவீடு. அம்மா எவ்வளவோ சொல்லியும் அப்பா பிடிவாதமாக வேறு ஊருக்குப் போக வேண்டும் என்று வண்டி கூப்பிட்டு வந்து விட்டார். குட்டி லாரி அது. மேலே சாமான்களுடன் உட்கார்ந்து போவதற்கு ஜாலியாக இருந்தது. அம்மாதான் உம்மென்று வந்தாள். மேஸ்திரி வீட்டு நகை மூன்றாவது நாள் அவர் வீட்டு பீரோ சந்திலேயே கிடைத்து விட்டதாகச் சேதி வந்தது என அப்பா சொன்னதும்தான் அம்மா இயல்பானாள். இல்லை என்றால் நகையைத் தூக்கிக்கொண்டு போவதாகப் பேசிக் கொள்வார்களாம்.

அக்காவிடம் சொல்லிவிட்டு வரலாம். அம்மா விடுவாளா? அந்த வழியாகத்தான் வண்டி போகிறது. இன்னும் ஒரு சந்து இருக்கிறது உள்ளே போய் இடது கைப்பக்கம் திரும்பினால் வீடு. எதுவும் வாங்க வேண்டும் என்றால் எங்கள் வண்டி போகும் ரோட்டுப்பக்கம் தான் வரவேண்டும். ஏதேனும் வாங்குவதற்கு கடைக்கு ஏதும் வருகிறாளா என்று பார்த்துக்கொண்டே வந்தேன். வந்தால், பார்த்தவுடன் எப்படிக் கத்தி சத்தமாகக் கூப்பிட வேண்டும் என வாய்க்குள் சொல்லிப் பார்த்தேன். இப்பொழுதுதான் இந்த வண்டி வேகமாகப் போக வேண்டுமா, திரும்பிப் பார்த்துக்கொண்டே வந்ததில் கழுத்து வலித்தது .

*

ஊரை விட்டுப் போனது தெரியாதென்றாள். கழுத்தை தடவிப் பார்த்துக் கொண்டான். அதற்குப் பிறகு இரண்டு குடும்பங்கள் வசித்து விட்டன. இரண்டாவதாக வந்த குடும்பம்தான் நீண்ட காலமாக இருந்திருக்கிறது. அவனிடம் பேசியது போல யாரிடமும் பழகவில்லை என்றாள். அவன் வீடு காலி செய்து இரண்டு மாதங்கள் வரை யாரும் வரவில்லையாம். காலியான வீட்டைப் பார்க்கையில் அவன் சுவரில் வரைந்து வைத்திருந்த படங்களைப் பார்த்து அக்காவும் அவள் அம்மாவும் சிரித்திருக்கிறார்கள். ‘அவ்வளவு பெரிய பல்லியாடா வரைவ!’

அவன் வீட்டிற்கு வந்து அவள் அம்மாவைப் பார்த்து தண்ணீர் கூட குடிக்காமல் திரும்பியது தெரிந்திருக்கவில்லை .

அவள் அம்மா இறந்தவுடன் சேமிப்பில் இருந்த பணம், நகை, இன்ஷூரன்ஸ் பணம் எல்லாவற்றையும் வைத்து இந்த வீட்டை ஒத்திக்கு எடுத்து மிச்சமீதியை வங்கியில் போட்டு இருக்கிறாள். பின்வந்த நாட்களில் வங்கியின் இருப்பு சிறிது உயர, வட்டியை செலவுசெய்து கொள்கிறாள். அவள் அக்காவின் மூத்தப் பெண்ணிற்கு திருமணமாகிக் குழந்தைகள் உள்ளனர். அவள் கணவனுக்கு இந்தப்பக்கம் தொழில் அமைவது போல இருக்கிறதாம். எல்லோரும் சேர்ந்து இருந்து கொள்ளலாம் என்று முடிவாகி இருக்கிறது. அக்கம் பக்கம் இருக்கும் பிள்ளைகள் எல்லாம் மாலைநேரத்தில் இரண்டு மணிநேரம் இங்கு வந்து படித்து, அவரவர் ஸ்கூல் ஹோம்-வொர்க் செய்துவிட்டுப் போகிறார்கள். விடுமுறை நாட்களில் அவர்களுக்கு இவள் பின்னல் போட்டு விடுவது, மெஹந்தி இடுவது, விளையாட்டுகள் கற்றுக்கொடுப்பது என்றிருக்கிறாள். அவர்களும் கிண்டர் ஜாயிலிருந்து கடலை மிட்டாய் வரை பகிர்ந்து கொடுக்கிறார்கள். நான்கைந்து நாள் கழித்து வருகிறேன் என்று அக்காவிடம் சொல்லி விடைபெற்றான். “எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்க்கை இருக்கிறது” காந்தி சொன்னதாகப் படித்தது அவன் நினைவிற்கு வருகிறது.

*

ஐம்பதாயிரம் திருப்பித் தரும் முன்னரே அடுத்த ஐம்பதாயிரம் வாங்கினாள் ஸ்வாதி. என்னதான் நடக்கிறது என்று அறியும் ஆவல் அவனுக்கு அதிகரித்து இருந்தது. நேரில் சந்திக்க அழைப்பு விடுத்தான். வந்தாள். உடலில் ஒரு களைப்பும் முகத்தில் ஒளியும் தெரிந்தது. இந்த முறை கறாராக காசை வாங்கினாள். இவனுடைய கடனை விரைவில் அடைக்க இருப்பதாகக் கூறினாள். இந்தக் கேள்விக்கேனும் பதில் தெரிந்தாக வேண்டும். என்னிடம் இப்படிக் காசை வாங்கியதே இல்லையே ஏன் என்று கேட்கும் அவனை ஒருமுறை பார்த்து, வெளியேறுவதற்காக எடுத்த ஹேண்ட்-பேகை கட்டிலில் வைத்துவிட்டு இரு கைகளையும் பிடித்து எதிரில் அமர வைக்கிறாள். ஆளுக்கொரு குஷனில் எதிரெதிரில் அமர்ந்து இருக்கிறார்கள் சிந்தனை மட்டும் இருபக்கமும் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஐந்து நிமிடங்கள் கழித்து பொதுவான எல்லா பிரச்சினைகளுக்கும் இரண்டே தீர்வுதான். ஒன்று அதனை விட்டு ஒதுங்கிப் போவது. இன்னொன்று எதிர்கொள்வது என்றாள். என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாமல் பார்க்கிறான். இந்த நாடு, சூழல், சில சகிக்க முடியாதச் செயல்கள் பற்றி மூன்று மாதங்களுக்கு முன்பு தன்னைச் சந்திக்க வந்தவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறாள். இவளின் அக்கறையும் கவலையும் கண்டு அவர் நண்பராகியிருக்கிறார். நிறையப் பேசியிருக்கிறார்கள், பையனுக்கு விடுமுறை விட்டிருந்ததைப் பயன்படுத்தி அவருடன் வெஸ்ட் பெங்கால் சென்று வந்ததை, அங்கிருக்கும் சில இயக்கத்தினரைச் சந்தித்ததை எல்லாம் கூறிக்கொண்டிருந்தாள். பின்னர் விடாமல் யோசித்ததில் தனக்குத்தானே சில டெஸ்ட்களை வைத்துப் பார்த்துக் கொண்டதைக் கூறி “என்ன நினைக்கிற?” என்று கண்களுக்கு நேராகக் கண்களை வைத்துக் கேட்டாள்.

கதை கேட்பவனைப் போல் ஆரம்பத்தில் உட்கார்ந்து இருந்தவன் அவள் பேசப்பேச த்ரில்லர் மூவி பார்ப்பவனாக மாறி திகைத்து, திகைத்து கேட்டுக் கொண்டிருந்தான். இந்த நேரத்தில் இவள் கேள்வி எழுப்பவும் பதிலுக்கு, “என்ன நினைக்கட்டும்” என்றான். மயிலின் இறகைப் பிடுங்குவது நமக்குப் பிடிக்காது. ஏதாவது செய்யணும் என்ற எண்ணத்தை என்னுடன் வந்தவரிடம் கூறினேன் என்றாள். அவருக்கும் அதே எண்ணமிருக்க, நானும் அவரும் சேர்ந்து ‘இயன்றதைச் செய்வோம்’ என்று ஒரு அமைப்பு உருவாக்கினோம். இப்போது ஆறு பேர் இருக்கிறோம்.

பேப்பர், நியூஸ் சேனல் என்று மட்டும் இல்லை, ஏதேனும் பாதிப்புகள் குறித்து சக மனிதர்கள் மூலம் கேள்விப்பட்டாலும் நேரில் சென்று உண்மை அறிந்து அதற்கேற்ப எங்களால் முடிந்த உதவிகளைச் செய்கிறோம். அரசு அதிகாரத்திற்கு எடுத்துச் செல்கிறோம். ‘அண்டர் லைன் தட் வேர்ட் – அகிம்சை வழியில்’ என்றவள், எஸ் எல்லாவற்றிற்கும் பணம் முக்கியம் என்று கூறி கண்ணடித்துச் சிரிக்கிறாள். சட்டென பன்னீர் ரோஜா ஒன்று கன்னத்தில் வந்து உரசுவது போலிருக்கிறது.

இந்தப் பெண் மனதில் இவ்வளவு பெரிய எண்ணங்களை வளர்த்துக்கொண்டு வழி கிடைக்காமல் தடுமாறி இருந்திருக்கிறாள். அவனிடம் செய்தித்தாள் செய்திகளை, சிந்தனைகளை என்று பேசும்போது எல்லாம் ஏனோதானோவென்று கேட்டுக் கொண்டிருந்தான். பணம் சம்பாதிக்கும், சேமிக்கும் வழியைத் தவிர்த்து எதையுமே ஒரு பொருட்டாகக் கண்டோ கேட்டோ லயித்ததில்லை. அதனாலேயே இந்த விவாத முன்னெடுப்பு, ஆற்றாமை, நியாய அநியாயங்கள், அட்டூழியங்கள் என்று எதையும் கண்டுகொண்டதில்லை. இவளானால் என்ன செய்வது, ஏது செய்வது என்ற ஆதங்கத்தில் வெஸ்ட் பெங்கால் வரை சென்று அவதானித்து, தெரிவு செய்து வாமன அவதாரம் போல உசந்துட்டா என்று மனதில் நினைத்துக்கொண்டே ‘வாமனீ ‘ என்கிறான். அவளோ இது அணில் செய்ததாகச் சொல்கிறார்களே அதையும் விட சிறிய முயற்சி அவ்வளவுதான் என்று கூறி, மகன் வளர்ந்து விட்டால் ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு இன்னும் கொஞ்சம் அதிகமாக முயற்சி செய்யலாம் என்கிறாள்.

*

பத்து பதினைந்து முறை சென்றிருப்பான். அதில் நான்கைந்து முறை குழந்தைகள் இருந்த நேரமாகையால் அவர்களும் நட்பாகினர். ‘பைக் அங்கிள்’. இப்போது மூன்று வாரம் ஆயிற்று இன்னும் போகவில்லை. வேலை விஷயமாக வெளியூர் போய் வந்ததில் இந்தத் தாமதம். வீட்டிற்குள் நுழையும் முன்பே புதுப்புதுக் குரல்கள் ஒலித்தன. உள்ளே ஹாலில் லைட்டாக அக்காவின் ஜாடையோடு ஒரு பெண் நின்றிருந்தாள். இவள்தான் அவள் சொன்ன பெண்ணாக இருக்க வேண்டும். பூக்கள் போட்ட உள்ளங்கை நீள கோலமாவு உருளை வைத்து பத்து, எட்டு வயதுகளில் இரு பெண் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் பேசி விளையாடிக் கொண்டிருப்பதிலிருந்து அந்த உருளையை இப்போதுதான் முதன்முறையாகப் பார்க்கிறார்கள் என்பது தெரிந்தது. அக்கா சமையலறையில் இருந்தாள். அவன் வந்தச் செய்தியை அந்தப் பெண் எடுத்துச் சென்றதும் எட்டிப்பார்த்து ‘பிளாக் காஃபி?’ எனக்கேட்டு பதிலுக்கு காத்திராது தயாரித்து எடுத்து வந்தாள். ஏற்பாட்டின்படி அந்தப் பெண் குடும்பம் இங்கு வந்துவிட்டார்களோ என்று மகிழ்ச்சியுடன் மெல்லியக் குரலில் அக்காவிடம் கேட்டான். அதுதான் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றாள். இந்தப் பெண்ணிற்கு பெயர் கூட சுஜாவோ தேஜாவோ, ஸ்கார்ஃப் பின்னி அந்தப் பின்னலிலேயே இந்த சுஜா அல்லது தேஜா பெயர் எழுத நிறைய நேரம் முயற்சித்து எழுதி அனுப்பி இருக்கிறாள் அக்கா. நடக்கும் பொம்மை, டூத்-பிரஷ், குட்மார்னிங் சொல்லும் கடிகாரம், ரோபோ நாய் என எதெதுவோ வாங்கிவைத்து அனுப்புவாள். ஒருமுறை ஊருக்குச் சென்று இந்தப் பெண் வரைந்திருந்த கூரை வீடு, யானை என்று நினைத்து வரைந்திருந்த பல்லி இரண்டையும் எடுத்து வந்து ஃபிரேம் செய்து வீட்டில் மாட்டினாள். பேங்க் டெபாசிட்டில் முதிர்ந்த தொகையில் ஒரு பகுதியை எடுத்து போன மாதம் அளித்ததாகக் கூறினாள். அந்தப் பெண் எதுவோ ஆரம்பித்து அவனைப் பார்த்துவிட்டு முழித்துக் கொண்டு நிற்க, “அப்பு நம்ம வீட்டு மனுஷன்தான்” என்று கூறி பேசுமாறு சைகை செய்கிறாள். அவன் ஒரு நண்பனைப் பார்க்க வேண்டுமென பைக்கை எடுத்துக்கொண்டு பெட்டிக்கடைக்குச் சென்றான்.

ஒன்று இரண்டு மூன்று நான்காவது தம்மில் சிகரெட்டை தூக்கி எறிந்துவிட்டு பைக்கில் ஏறி வேகத்தை முப்பதில் குறைத்து இலக்கில்லாமல் போய்க் கொண்டிருந்தான். “ஒத்த தம்பிடி கிடையாது” என்ற தாத்தாவின் வார்த்தை திரும்பவும் அவன் நினைவில் மோதியது. எத்தனை முயற்சித்தும் நிறுத்த முடியவில்லை. எங்கேயாவது நிழலாக அமர்ந்தால் தேவலை என்று நினைத்தான். பூங்கா ஒன்று கண்களில் தட்டுப்பட, ஒன்றிரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். மஞ்சள் கலர் பூக்களாய் பூத்துக் கொண்டிருந்த மரத்தின் அடியில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தான். அவ்வப்போது வீசும் காற்றுக்கு ஒன்றிரண்டு மஞ்சள் மலர்கள் மேல் விழுவது நன்றாக இருந்தது. ஹீரோ ஃபீல். எல்லோருக்கும் அப்பாதானே ஹீரோ. அப்படி பெரிய ப்ரியத்திற்குரிய பிம்பம் “ஒத்த தம்பிடி கூட கிடையாது” என்ற தாத்தா வார்த்தைக்குப் பிறகு அப்படித் தலைகுனிந்து நடந்து வந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அன்று குனிந்த தலை நிமிர வெகு காலமாயிற்று.

எல்லாவற்றுக்கும் காரணம் பணம் என ஆழமாய் மனதில் பதிய வைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறின. பண்டிகைக் காலங்களிலும் யூனிஃபார்மே புது-ட்ரெஸ், திருட்டுப்பழி, அலட்சிய ஏவல், அரிதாகப் பள்ளியில் அழைத்துச் செல்லும் திரைப்படம், பிக்னிக், டூர் எல்லாவற்றிற்கும் போகாது சாக்குப்போக்காக வரவழைக்கப்பட்ட ஃபீவர் லீவ் லெட்டர், செருப்பு இல்லாத கால், சாமி படம் கூட பார்க்க முடியாத பட்ஜெட், பிடித்த உணவும் நினைத்த படிப்பும் கிடைக்காத பதின்மம், தாத்தா மட்டும் அன்று உதவியிருந்தால் எல்லாமே மாறிப்போயிருக்கும் என்ற எண்ணம் அவனுக்கு வலுத்துப் போனது. போனவாரம் ஷாப்பிங் மாலில் சந்தித்த சித்தப்பாவின் சகலை சொன்னார். தாத்தா கடைசி காலத்தில் அப்பாவைப் பார்க்க ஆசைப்பட்டதாகவும் சித்தப்பாவின் மேல் எழுதி வைத்திருக்கும் சொத்தில் “அவன் பங்க கொடுத்திட்ரா” என்று சொன்னதாகவும். சிரிப்புதான் வந்தது.

எல்லாம் நினைத்துப் பார்த்தால் சிறிய விஷயமாக இருக்கிறது. இலகுவாகக் கடந்து இருக்கலாம். மனதை இறுக்கமாக்கி பணம் பணம் என்று அலைந்து தீவிரமாகச் சம்பாதிக்க ஆரம்பித்து பணம் தவிர எல்லாமும் இரண்டாம் பட்சமானது. நினைவுச் சுழலில் ஆழ்ந்தவன் அந்தப் பக்கத்து மசூதியின் தொழுகைச் சத்தம் கேட்டு நேரமாகிக் கொண்டிருக்கிறதை உணர்ந்தவனாய் லஷ்மி அக்காவைப் பார்த்துவிட்டுக் கிளம்புவோம் என எழுந்து கொண்டான்.

வந்த வழியே திரும்பி வருகையில் பல வருடங்களுக்கு முன் சிவனேசு அக்கா வீட்டிற்கு வழி சொன்னதை நினைத்துப் பார்க்கிறான். அவ்வளவு சிறிய வயதில் அழகாக மேப் போடுவது போல் வழிசொல்லி அனுப்பினான். அவரவருக்கான வழி இங்கேயேதான் இருக்கிறது. தேடிப்பிடித்து, தேடாமல் கிடைத்ததை என்று எப்படியெப்படியோ நடக்கிறோம்.

வீட்டிற்கு வந்து பார்த்தால் லஷ்மி அக்கா முகம் குழப்பமாக இருக்கிறது. அந்தப் பெண் குழந்தைகளுடன் அறையில் தூங்குகிறாள் என்றாள். இந்த நிலையில் என்ன பேசிவிட முடியும். சரி போய் வருகிறேன் என்றேன். அந்தப் பெண்ணின் அறைக்குச் சென்று சொல்லிவிட்டு வந்து, வெளிக்கதவை சத்தமின்றி வெறுமனே சாற்றிய பிறகு என்னுடன் வந்தாள். பைக் ஓட்ட வேண்டாம், தள்ளிக்கொண்டு வா என்று உடன் நடந்தாள்.

“கோவில் வரைக்கும் வரேன் அப்பு” மாறுபட்ட வேகம் ஒவ்வொருவரின் நடைக்கும், அத்தகைய மாறுபாட்டை மட்டுப்படுத்தி அல்லது வேகப்படுத்தி, ஒரே வேக அளவினதாக்கி இணைந்து பிடித்தவருடன் நடக்கையில் கிடைக்கும் வசதியான இருப்பு ஒருவகை மகிழ்ச்சி. அதுவே லஷ்மி அக்காவுடன் என்கையில் மகிழ்ச்சியுடன் அவன் மனதைக் குழந்தையாக்கியது அந்த நடை. அவளது குழப்ப முகத்தைப் பார்த்துக்கொண்டே எப்போது அந்தப் பெண்ணின் குடும்பம் இங்கு வர இருக்கிறார்கள் எனக் கேட்டான். அதுதான் சொல்ல வருகிறேன்.. வந்து கோவில் உள்ளே கொஞ்சம் உட்காரெனக் கூறினாள். வரசித்தி விநாயகர் கோவில் என்று போர்ட் இருந்தாலும் நவக்கிரகங்களும் ஸ்தாபித்திருந்தார்கள். அவன் படிக்கட்டில் உட்கார்ந்து கொள்ள, அக்கா நவக்கிரகங்களை வேகமாய் ஒன்பது சுற்று சுற்றி விழுந்து வணங்கி விட்டு வந்து படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டாள்.

“ஒருவரின் காலடியில் விழுவதை விட எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல்” என சே குவேரா சொன்னதை அக்காவிடம் சொல்லலாமா வேண்டாமா என்று நினைத்து முடிவாகச் சொல்வோமெனச் சொல்லி விடுகிறான். கேட்டதும் சீரியஸான முகபாவனைக்குப் போனவள் சில நிமிடங்களுக்குப் பிறகு “அது யாரு வீராவா.. சரியாத்தான் சொல்லியிருக்காரில்ல?” என்று கேள்வி கேட்டாள். புரிந்தால் சரி என்று நினைத்துக் கொண்டான். காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதைப் பற்றி அவர் சொல்லவில்லையே எனக் கேட்டுக்கொண்டாள். பகடி செய்கிறாளாம்.

அக்காவின் உறவுப்பெண், தனது கணவனுக்கு இந்த ஊரில் இருப்பதைக் காட்டிலும் இருநூறு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஊரில் தொழில் வாய்ப்பு, வசதி இங்கு வந்தால் வருவதைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாகவும் அதனால் அவ்வப்போது வந்து போவதாகவும் எடுத்துச் சொல்லியிருக்கிறது. உறுதியில்லாத ஒன்றை வைத்து அவ்வளவு தூரம் போவானேன் என்றிருக்கிறாள் அக்கா. இங்கு இருந்தால் பேங்க் வட்டி உங்களுக்குதானே அது அந்தக்கூடுதல் வருவாயை ஈடுகட்டும் என்று வாதாடி கடைசியில் கெஞ்சி இருக்கிறாள் லஷ்மி அக்கா. அந்தப் பெண், ‘போனால் போகிறதென்று’ நாங்கள் எல்லாம் வேறு ஊருக்கே போகிறோம் ஆனால் அவளது பிள்ளைகளின் பள்ளிக்கட்டணத்தை மட்டும்தான் வந்து வாங்கிப் போவதாகக் கூறியிருக்கிறது. இப்போது கோவிலுக்குப் போய் வருவதாகக் கூறியவுடன், அரைமணி நேரத்தில் தனக்கு டாக்ஸி வந்துவிடும் கிளம்புகிறோம் மெதுவா வாங்க என்றதாம். அப்படி என்றால் கோவிலுக்கு அப்புறம் போய்க்கொள்கிறேன் என்று கூடவே இருக்கும் இயல்புதான் அக்காவிற்கு. இன்று என்னவோ.. சரி கதவைச் சும்மா சாத்தி தாழிட்டு விட்டு பத்திரமாகப் போங்க என்று கூறி மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பிப்போய் கோவிலுக்கு நேரமாயிற்று என்று அவனுடன் வந்து விட்டாள். அதற்குதான் சேகுவேரா வரியைக் கூறினால் வீராவா என்கிறாள்.

*

அவனுக்கு வேலை நிமித்தம் வர இருக்கும் ட்ரான்ஸ்ஃபரை நிறுத்தி வைக்க எடுத்த முயற்சி பலனளிக்காமல் போனது. இந்த முறை வேறு மாநிலம். இன்று குழந்தைகள் வரும்நேரம் உத்தேசித்து இனிப்புகளும் அக்காவிற்கு ஒற்றை நபர் அமரும் மூங்கில் ஊஞ்சலும் வாங்கிக்கொண்டு சென்றான். அக்காவின் ஊஞ்சலாசை என்பது சினிமாக்களில் கண்டு, ஆரம்பமாகி, பரவசமாக, பூதாகரமாக மனதை ஆக்ரமித்திருந்த ஒன்று. அப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த படத்தின் நாயகி மூங்கில் ஊஞ்சலில் உட்கார்ந்து இருக்கும் போது பின்னால் மறைந்து வந்து கதாநாயகன் ஒரு பொம்மையை மடியில் தவழ விடுவான். அவள் ஷாக்காகிப் பின்னர் சிரித்து ஸ்லோ-மோஷனில் ஊஞ்சலிலேயே திரும்புவாள். இந்த மிகச்சாதாரண காட்சியை அக்கா விவரிக்கையில் அது ஊஞ்சல் இல்லை. சொர்க்கம்! என்ன ஒரு துரதிருஷ்டம் இன்றுவரை அக்காவைத் தாங்கிக்கொள்ள எந்த ஊஞ்சலும் கொடுத்து வைக்கவில்லை என்பதை அவளின் பேச்சினூடாக அறிந்துகொண்டு அவள் வீட்டில் இடமும் பார்த்துவிட்டு வாங்கி வந்திருக்கிறான்.

வாடிய பன்னீர் ரோஜா சிரிக்கும் போது ஃபிரஷ் பன்னீர் ரோஜாவாவதை உணர்ந்தான். இன்று ரோஜாவில் பனித்துளி போல வெட்கம் வேறு துளிர்த்துக் கிடந்தது. ஒரு ஊஞ்சல் இத்தனையும் நடத்தி வீட்டின் ஒரு இடத்தில் இடம் பிடித்தது. இத்தனை நாட்களாக ஊஞ்சலும் அக்காவும் எங்கெங்கோ தனித்திருந்தனர். பிறகு சேர்ந்து இருக்கும் பொழுதைக் கலைக்காது, சிறிதுநேரம் கழித்து வருவதாக வெளியேறினான் .

சிகரெட் பிடிக்கும் மனநிலை சுத்தமாக இல்லை. இப்போதெல்லாம் சிகரெட் மேல் விருப்பமே வருவதில்லை. பழக்க தோஷத்தில் கை அனிச்சையாய் சிகரெட்டைத் துழாவுவதும் லைட்டரை எடுப்பதுமென இருக்கிறதே ஒழிய, தானாக விருப்பம் முளை விடுவதில்லை. முன்பு சென்ற அதே பூங்காவிற்குச் சென்றான். ஸ்வாதியின் நினைவு வந்தது. இப்போது பழைய தொடர்புகளை ஒதுக்கிவிட்டு அவளது அமைப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாள். நண்பனொருவன் இவளின் மனதையும் ஆர்வத்தையும் கவனித்து தனது ஏற்றுமதி நிறுவனத்தில் பங்குதாரராகவும் மேலாளராகவும் நியமித்தான். அதற்கு நியாயமான உழைப்பையும் நேர்மையையும் கோரினான். இவள், அதற்கு தேவையான கோர்ஸை முடித்து விடுகிறேன் என பார்ட்-டைமில் படித்துக் கொண்டிருக்கிறாள். இவனிடம் கூறியபோது, உன் மதிப்பை அறிந்து இருக்கிறான். நான்தான் எதுவும் கவனத்தில் கொள்ளாமல் இருந்திருக்கிறேன். சும்மா பங்குதாரராக வேண்டாம் நான் பணம் தருகிறேன் கொடுத்து ஜாயினாகிக்கொள் என்றான். நம்ப முடியாமல் பார்த்தாள். பணம் பணம் என்று அலைபவனா என்ற எண்ணம் இருந்திருக்கலாம். முடியும்போது மெதுவாகக் கொடு என்று உடனடியாக அவள் அக்கவுண்டிற்கு டிரான்ஸ்பர் செய்தான். ‘இயன்றதைச் செய்வோம்’ அமைப்பு பதிவு பெற்ற சேவை அமைப்பாகி விட்டது. தொடர்ந்து சேவை, வேலை என்று பிஸியாகி விட்டாள்.

அக்கா கெஞ்சிக் கேட்டதைக் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை அவனுக்கு. அவள் உறவுப்பெண் பிடிக்கொடுக்காமல் பேசியதாகத்தான் தெரிகிறது. அக்கா எல்லாம் சரியாகும் பார்த்துக் கொள்ளலாம் என்கிறாள். இந்த நேரத்தில் பணியிட மாறுதல் வேறு இம்சைப்படுத்துகிறது. பிரதிபலன் பாராத அன்பைத்தான் அவள் உறவுகளுக்கு அளித்தாள். என்றாலும், அவளின் நலனையும் கருத்தில் கொள்வது நியாயமான ஒன்றுதானே, அதுவும் அவளால் முடிந்த பண உதவி, வீட்டு வேலை என்று அனுசரணையாகச் செல்பவளிடத்து இவர்களுக்கு என்ன முரண்! நியாயம் அநியாயம் என்பது என்ன, மனிதம் என்பது என்ன, கடமை, அன்பு, உரிமை என்பது என்ன என்று அவனின் எண்ண மழைக்கு கேள்விக் காளான்கள் தோன்றிக் கொண்டிருந்தன. போனை எடுத்து டிஸ்ப்ளேயில் ஆப்ஸ்களை நகர்த்தி நகர்த்திப் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது எல்லாம் செயலிகள்தான். வங்கி, ஷாப்பிங், பயணம், சாப்பாடு, நிறுவனம் என எல்லாவற்றிற்கும் செயலி என நினைத்துக் கொண்டிருந்தான்.

ஆமாம் மனதில் உறவுக்கு ஒரு செயலி, நட்புக்கு ஒரு செயலி, தெரிந்தவர்களுக்கு ஒரு செயலி, தெருக்காரர்களுக்கு ஒரு செயலி.. செய்துவிக்கப்பட்ட புரோகிராம்கள் படி செயல்படும். என்ன என்னென்ன செயல்பாடு எவ்வப்போது நடைபெறும் என்பது அறியத்தான் நாட்கள் பிடிக்கிறது. எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்க ஸ்வாதியின் நினைவு வருகிறது. சந்திக்க வேண்டும். இப்போது ஃப்ரீயாக இருப்பாளா என்று தெரியவில்லை.

போன் எடுத்து லொகேஷன் ஷேர் செய்து ஃப்ரீயாக இருந்தால் வாவென அழைப்பு விடுத்தான். இப்போது ஃப்ரீதான் வருகிறேன் என அரைமணி நேரம் கழித்து வந்தாள். அழைத்துக் கொண்டு லஷ்மி அக்கா வீட்டிற்குச் சென்றான். அக்கா ஸோஃபாவில் அமர்ந்து இருந்தாள். ஊஞ்சல் மெலிதாக ஆடிக்கொண்டிருந்தது. பைக் சத்தம் கேட்டு எழுந்து ஸோஃபாவில் உட்கார்ந்து இருக்கிறாள். “யாரு அப்பு இது?” என ஸ்வாதியைப் பார்த்து கேட்க, விழித்த ஸ்வாதியிடம், சின்னப்பிள்ளையில் வீட்டில் செல்லமாகக் கூப்பிட்ட பெயர் அப்பு, வெளியில் ரகு.. இப்பொழுதும் வீட்டில் அப்புதான் என்றான். சிரித்து சரி சரி என்றாள். மனதிற்குள் யானையை நினைத்திருப்பாள் போலும். சிறிதாய் மேடிட்டு வளர்ந்திருந்த தொப்பையைத் தடவிக் கொண்டான். ஜிம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன்.

இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்வித்து, ஸ்வாதியின் வேலை, ஆர்வம் குறித்து விளக்கிவிட்டு, பேசிக் கொண்டிருங்கள் என வெளியில் வந்து மூவருக்கும் உணவு வாங்கிப்போனான். சாப்பிட்டார்கள். இப்படி ஒருவருக்கொருவர் பரிமாறி இணக்கமாகச் சாப்பிட்டு நீண்ட நாட்களாகி விட்டது என்ற அக்கா, காசு நம் அவசியத்தேவைக்குதான்… காசை விட முக்கியமானது நிறைய இருக்கிறது என்று அவனைப் பார்க்கிறாள். ம்ம் என்கிறான் . கூடவே தலையசைத்து, மகன் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பான் கிளம்ப வேண்டும் என்றாள் ஸ்வாதி.

ஸ்வாதியிடம் எங்கிருக்கிறாள், பிள்ளை என்னப் படிக்கிறான் என்று விசாரித்துக் கொண்டிருந்தாள் லஷ்மி. பிள்ளைக்கு என்னென்ன பிடிக்கும் என்று கேட்டு சமையல் அறைக்குச் சென்று சீடையும் தேங்காய் பர்பியும் ஒரு டப்பாவில் போட்டு எடுத்துவந்து கொடுத்தாள். கூடவே நீளநீளமான கலர் பென்சில்கள் அடங்கிய பாக்ஸ் ஒன்றையும் கொடுத்தாள். லஷ்மி இரண்டு முறை குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்து விட்டு, இப்படி உடனே போகத்தான் வந்தீங்களா என்று முணுமுணுத்தாள். பின்னர், பாத்திரங்களை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

ஸ்வாதி அவனைப் பார்த்து முதன்முறையாக மகனுக்காக இப்படி ஒரு விசாரணையையும் அன்பையும் எதிர்கொள்வதாகக் கூறியது அவனுக்குள் வலித்தது. அவனும் கூட இதுவரை அந்தக் குழந்தைக்கு இப்படி ஒரு மிருதுவான அக்கறையையோ அன்பையோ கொடுத்ததில்லை. மன்னிப்பு கேட்கும் விதமாய் அவள் விரல்களைப் பிடித்துக் கொண்டிருந்தான். முகம் படித்தவள் பதிலுக்கு அவன் விரல்களைப் பரிவாகத் தீண்டி ‘லீவ் இட் யா’ என்று புன்னகைக்கிறாள். அறையிலிருந்து வந்த லஷ்மி அடுத்தமுறை பிள்ளையை அழைத்து வரவேண்டும் என கூறுகிறாள். “கிளம்பவே மனசில்ல ரகு” என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி கூறும் ஸ்வாதி சத்தமாக, ‘டைமாச்சு’ என்று எழுந்து நின்று அவள் கைப்பையை எடுத்துக் கொள்கிறாள். அவன் பைக்-கீயை எடுத்துக்கொண்டு அக்காவைப் பார்த்து வருகிறோம் என்று சொல்லி நெருங்குகிறான்.

ஸ்வாதி இந்த மிருதுவான அக்கறையிலிருந்தும் சொல்லத்தெரியா மனநெருக்கத்திலும் நனைந்தவளாக அப்படியே நின்று கொண்டிருக்கிறாள். லஷ்மியிடம் நெருங்கி அவள் கைகளைப் பிடித்துக்கொண்ட ரகு “க்கா நீ ஸ்வாதியை உன் சொந்தமா நினச்சிக்கோயேன்” என்கிறான். நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தவள் கண்களில் பொலபொலவென கண்ணீர் கொட்டுகிறது. தோளில் சாய்ந்து அழுகிறாள். “உன்னை சின்னப் பிள்ளைனே நினச்சேன் அப்பு” அவன் முகத்தைத் திருப்பிக் கண்களைத் துடைத்துக் கொள்கையில் பார்த்தான். ஸ்வாதியின் கண்களும் கலங்கிக் கொண்டிருந்தது.

*

வட இந்திய மாநிலமொன்றில் பணியில் இருக்கும் ரகுவிற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஸ்வாதியிடமிருந்து போன். மகனுடன் லஷ்மி அக்கா வீட்டில் செளகரியமாக இருப்பதாக, அவனுக்கு நிறைவாயிருந்தது. அக்காவின் உறவுப்பெண் ஒருநாள் வந்து ஸ்வாதியை விரோதியாக பாவித்து நடக்க, ஸ்வாதி உறவுப்பெண்ணின் பண அக்கறையைப் புரிந்துகொண்டு அக்காவிடம் சொல்லி அவளுக்கு உங்கள் பணத்தைக் கொடுத்து விடுங்கள் என்றிருக்கிறாள். அக்காள்தான் குறிப்பிட்ட அளவு தொகையை வங்கியிலிருந்து எடுத்து கொடுத்துவிட்டு, போய் வா என்று அனுப்பி விட்டாளாம்.

அக்காவும் பையனும் நெருக்கமாகி விட்டனர். தான் எந்த நேரத்திற்கும் வந்துபோக முடிகிறது. வேலை, சர்வீஸ் என்று செய்யும் உழைப்பெல்லாம் மகிழ்ச்சியளிக்கிறது. மகன் மற்ற பிள்ளைகளைப் போன்றே அத்தை என்று அழைக்கிறான். அக்காவும் மகனும்தான் அந்த வீடு. அவனது பெறாத தாயாகி சகலமுமான அக்கா வரமாகக் கிடைத்த தேவதை என்று கசிகிறாள். பங்களிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி அவளின் ‘இயன்றதைச் செய்வோம்’ அமைப்பு வளர்ச்சி பெற்று வருகிறதாம். மனதிற்குள் எப்போதும் உனக்கு நன்றி கூறிக்கொண்டிருக்கிறேன். நன்றி ரகு என்றாள். நன்றி? யார் யாருக்குச் சொல்வது. மகாசக்தி அம்மனை வெளிர் ஊதா புடவையிலும் கறுப்பில் வெள்ளை வட்டமிட்ட புடவையிலும் கண்ட நானல்லவா நன்றி சொல்ல வேண்டும் !

***

அகராதி
aharathi26@gmail.com

ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு – 7

0

ரூபன் சிவராஜா

(இதன் முந்தைய பதிவுகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்)

தனிமனித அனுபவங்களைக் ‘கூட்டு அக்கறை’க்குரியவை ஆக்குதல்:

கநிலைப்பட்ட சிக்கல்களை மையப்படுத்திய அரங்கம் என்பதால் தனிமனித அனுபவங்கள் இதற்கான அடிப்படையாக உள்ளன. அதேவேளை அந்தத் தனிப்பட்ட அனுபவம் என்பது கதைசொல்லலாக-பகிர்வாக அமையும். ஏனைய பங்கேற்பாளர்கள் அதனுடன் தம்மை அடையாளப்படுத்தும் வகையில் கதைத் தெரிவு அமைதல் வேண்டும். ஆகையினால் ஆற்றுகையின் போது மூன்று அல்லது நான்கு பங்கேற்பாளர்கள் வெவ்வேறு கதைகளைப் பகிர்ந்துகொள்வது பயனுடையதென Boal பரிந்துரைக்கின்றார். இதன் நோக்கம் அவற்றிலிருந்து சிறந்த கதைகளைத் தெரிவுசெய்வதன்று. மாறாக அவற்றில் எந்தக்கதை கூடுதலானவர்களால் தமக்கான அனுபவமாக அல்லது தாம் அறிந்த கதையாக அடையாளப்படுத்துகின்றது என்பதற்கானது.

எளிமையாகச் சொல்வதானால் ‘இது எனக்கும் நடந்திருக்கலாம்’ என அரங்கிலிருப்பவர்களில் அதிகமானவர்கள் உணரக்கூடிய கதையைத் தெரிவுசெய்தல் இந்த உத்தியின் நோக்கம்.

ஆகவே கதை/சம்பவம்/அனுபவம் தனிமய நீக்கம் செய்யப்படுகிறது. பொதுஅனுபவமாக மாற்றப்படுகிறது. தன்னிலை ஒருமையிலிருந்து தன்னிலை பன்மைக்கு கவனக்குவிப்பு மாற்றப்படுகின்றது. அதாவது முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் கொண்டிருக்கும் அனுபவம் அல்லது சூழ்நிலை கூட்டு அக்கறைக்குரியதாக மாற்றம் பெறுகின்றது.

‘Protagonist’ வானவில் அரங்கச் செயற்பாட்டில் முக்கிய ஆற்றுகையாளர். Protagonistன் முதல்வேலை ஆற்றுகைக்குரிய ஒரு அத்தியாயத்தை/பகுதியைக் காட்சிப்படுத்துவதாகும். அதாவது முரண்பாட்டினை உருவகப்படுத்திப் பிரதிபலிக்கும் ஒரு சூழ்நிலையை/அனுபவத்தை காட்சிப்படுத்த வேண்டும்.

மக்கள் அரங்கு, கட்புலனாகா அரங்கு, உருவக அரங்கின் கணிசமான உத்திகள் ஒடுக்குவோர் யார், ஒடுக்கப்படுவோர் யார் என்பதை இலகுவாக வேறுபடுத்தி அறியும் வடிவ உத்திகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன. ஒடுக்குவோர் எனும்போது அரசு, இராணுவம், காவல்துறை, நிலப்பிரபு, முதலாளி என மேலதிக அதிகாரங்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் அடங்குவர். இவர்களால் பாதிக்கப்படுபவர்களாகவும் இவர்களின் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்வோராகவும், ஒடுக்குமுறைக்கு எதிரான செயற்பாடுகளின் மூலம் அதனைத் தகர்த்து மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாகவும் ஒடுக்கப்படுவோரின் பாத்திரங்கள் கட்டமைக்கப்படும்.

ஒடுக்குவோர் – ஒடுக்கப்படுவோர் சார்ந்த சிந்தனை மரபு

ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் ‘ஒடுக்குவோர் – ஒடுக்கப்படுவோர்’ எனும் சிந்தனை மரபிற்கு அதிகம் பழக்கப்படாதவர்கள். மக்களில் பெரும்பாலானோர் தம்மை ஒடுக்கப்படுவோராய் அடையாளப்படுத்துவதில்லை, உணர்வதில்லை. இந்தச் சிந்தனை முறையில் நிலவுகின்ற இடைவெளியை சரியான மொழிப்பயன்பாட்டின்; மூலம் இட்டுநிரப்பலாம் என Boal நம்பினார். வறிய மக்களுக்கும் இத்தகைய உணர்வு சார்ந்த, உளவியல் சார்ந்த அகவயப்பட்ட ஒடுக்குமுறைகள் உள்ளன. ஆயினும் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாடு சார்ந்த புற-ஒடுக்குமுறைகள் மோசமானவையாக அவர்களை நெருக்கும் போது புற-ஒடுக்குமுறைகளிலிருந்து வெளிவருதல் என்பது முன்னுரிமை பெறுகிறது.

கலையின் அழகியல் வெளி

மேற்கு வாழ்வியல் சூழலில் அகவயப்பட்ட ஒடுக்குமுறைப் பிரச்சினைகள் அதிகம். ஐரோப்பாவில் மக்கள் அதிகம் இறப்பது பட்டினியால் அல்ல. தற்கொலைகள், அதீத போதையால் இறப்பவர்கள் அதிகம். அகவயப்பட்ட நிலையில் மனிதர்கள் தமது நினைவுகளையும் அனுபவங்களையும் அழகியல் சார்ந்த பரிமாணத்தில் வெளிப்படுத்த முடியும். கடந்தகால அல்லது தன்னுணர்வற்ற நிலையில் நேர்ந்த அனுபவங்களை நிகழ்காலத்திற்கு நெருக்கமாக எடுத்துவருவதற்கு கலைகளின் அழகியல்வெளி துணைநிற்கக்கூடியது.
அநேக அரங்குகள் அக மோதல்களை அழகியல் வெளியில் முன்வைக்க விளைகின்றன. அதனூடாக பரந்த பரிமாணத்தை வெளிப்படுத்தவும் முடியும்.

‘வானவில்’ கருத்துருவாக்கம்
வானவில் அரங்கக் கருத்துருவாக்கம் என்பது விருப்பங்களை அவற்றின் வண்ணங்களாகக் பிரித்துக் கலைத்துப்போட்டுப் புதியதாக – விரும்பிய வழிகளில் அவற்றை மீண்டும் இணைப்பதைக் குறிக்கின்றது. உணர்ச்சிகள் தூய்மையான நிலையில் இருப்பலையல்ல. ஆனால் பல்வேறு விகிதாச்சாரங்களில், பொதுவாக ஒருவகை உணர்ச்சி ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கும். அக-ஒடுக்குமுறைகள் சிக்கலான பரிமாணங்களைக் கொண்டிருப்பவை. உதாரணமாகச் சொல்வதானால் வேதனையையும் அடக்குமுறையையும் நிறைந்த சூழ்நிலைகளுக்கிடையிலும் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்ற நிலைமைகளும் உள்ளன. ஆந்த வகையில் கண்ணுக்குப் புலப்படாத மற்றும் தன்னுணர்வற்ற அடக்குமுறைகளை வெளிக்கொணரவும் முகம்கொடுக்கவுமான உத்தி முறைமைகளை வானவில் அரங்கம் கொண்டிருக்கின்றது.

The cop in the head
புற அடக்குமுறைகளின் அதே செயற்பாட்டைச் செய்யும் அக ஒடுக்குமுறைகளைக் குறியீடாக ‘The cop in the head’ என Boal குறியீட்டு உருவம் கொடுக்கின்றார். அதன் பொருள் ‘மூளைக்குள் காவல்துறை உட்புகுந்து’ மனிதர்களின் விருப்பத்திற்குரிய செயல்களைத் தடுக்கின்றன அல்லது விருப்பத்திற்கு எதிரான செயல்களைச் செய்வதை வலிந்து கடப்பாடுடையதாக்குகின்றன.

Cop in the head

Boalஇன் கூற்றுப்படி, மனிதர்கள் சமூக ஒடுக்குமுறைகளை உள்வாங்கி சவ்வூடுபரவலுக்கு ஆளாகுகின்றனர். சவ்வூடுபரவல் என்பது ஒரு வகையான சமூக இடையூடுருவல். கருத்துகள் விழுமியங்கள், சுவைகளை சமூகத்திலிருந்து சுவீகரித்துக்கொள்ளுதல். இந்தச் செயற்பாடானது புற-ஒடுக்குமுறைச் சக்தியின் வெற்றிகரமான உள்நீடிப்பு எனச் சொல்லும் Boal, காவல்துறை எமது தலைகளுக்குள்ளும், அதன் தலைமைப்பீடம் வெளியிலும் இருப்பதாக கருத்தியல் ரீதியான உருவகத்தினைக் கொடுக்கிறார்.

அரங்க இயங்குநிலை
ஒடுக்குபவர்/ஒடுக்குகின்ற அம்சம், ஒடுக்கப்படுபவர் எனும் உறவுநிலையில் இந்த அரங்க வடிவமும் இயங்குகின்றது. ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட நபரும் அக மற்றும் புற அழுத்தங்களால் தம்மை ஒப்புக்கொடுத்தலுக்கும் இழத்தலுக்கும் பணிந்துபோதலுக்கும் ஆளாகுகின்றனர். அடிபணிவுக்குள்ளானதை இல்லாமல் செய்து – இழந்ததை மீட்டெடுப்பது இந்த அரங்கச் செயல்முறையில் முக்கியமானது.

ஒடுக்கப்பட்டவர் தனது அக மற்றும் புற யதார்த்தத்தை உருவகங்களாக மாற்றி வெளிப்படுத்துகிறார். தனித்துவமான உருவகங்களாலான உலகத்தை வடிவமைப்பதன் மூலமும் சாத்தியமான விடுதலையைக் கற்பனை செய்வதன் மூலமும் உண்மை யதார்த்தத்தில் விடுதலை எப்படி நிகழும் என்பதைக் கண்டறிய முடியும். அதனை நோக்கிய மாற்றங்களை அடையவும் ஏற்படுத்தவும் முடியும்.

தனிநபர் சிந்தனை, உணர்வுகளை மீளுருவாக்கம் செய்வதில் வானவில் அரங்கம் கவனம் செலுத்துகிறது. அதனூடு தனிநபர் ஒருவர் வாழ்வில் தனக்கு ஒத்திசைவான விருப்பங்களைக் கண்டடைவதற்கான உந்துதலை வழங்குகின்றது.

பேசுபொருள்

தனிநபர் அனுபவங்கள், உணர்வுகள், நிகழ்வுகளை மையப்படுத்தியிருப்பினும் இந்த ஆற்றுகைச் செயன்முறை சமூக நோக்கினையும் உள்ளடக்கியுள்ளது. தனிநபரிருடன் தொடர்புபட்ட அனுபவங்கள், சம்பவங்களின் பொதுமைப்படுத்தல் தன்மையே அத்தகையை விளைவுக்கு இட்டுச்செல்கின்றது. ஆற்றுகைக்கு உட்படுகின்ற கதைகள் ஒற்றைத்தன்மையுடன் முற்றுமுழுதாகத் தனிப்பட்டவையாக அடையாளப்படாமல் குறியீட்டுத் தன்மைகளுடன் பொதுமைப்படுத்தல் தன்மையைப் பெறுகின்றன. அத்துடன் பார்வையாளர்களின் அனுதாபத்தை வேண்டி நிற்கக்கூடிய அனுபவங்களும் முக்கிய இடம்பெறுகின்றன.

ஒடுக்கப்படும் உணர்வுகளிலிருந்து விடுதலைபெறுதல் இதன் இலக்கு. ஆசை/விருப்பங்களை அகற்றுவதற்குப் பதிலாக – ஆசைகள் விருப்பங்களுக்குத் தடையாக நிற்கும் அக மற்றும் புறத் தடைகளை அகற்றுவது. இன்னொரு வகையில் சொல்வதானால் சுய-வெளிப்படுத்தலில் மாற்றத்தை ஊக்குவிப்பது. அதாவது எல்லா வகையான ஒடுக்கப்படும் உணர்வுகளும் இடையூறு விளைவிக்கும் அம்சத்தை நீக்குகிறது என்ற அடிப்படையில் இந்த வடிவத்தின் உள்ளடக்கமும் நோக்கமும் விளைவுத்தாக்கமும் கையாளப்பட வேண்டும். புரிந்து கொள்ளப்படவேண்டும்.

***

ரூபன் சிவராஜா – தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது.