Home Blog Page 58

தேநீர் நேரக் கதைகள் – 01

0

விக்ரமாதித்யர்களின் டொக்கு கத்தி

மணி எம்.கே மணி

ஜப்பானின் பழைய திரைப்பட இயக்குனர் ஓசுவின் பிரேம்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அதில் இருக்கக்கூடிய அப்பாவித்தன்மை எத்தனைத் தீவிரம் கொண்டது என்பதை வர்ணிக்கும்போது அது பூதாகரமாக வளர்ந்து வந்தது தான். ஆனால் எதிர்தரப்பு ஆள் வளைத்து வளைத்து விஷயங்களை ஓட்டியதில், அது தேய்ந்து கடைசியில் அந்நாட்டின் நீலப்படங்களில் கூட இருக்ககூடிய கதை அம்சத்தில் வந்து நின்றது. கத்ரீனா என்கிற புனை பெயரை வைத்துக் கொண்டிருக்கிற ஒரு நடிகையான, இளம் பெண்ணை அறிந்து கொள்ளுமாறு அவன் வற்புறுத்தினான். இறுதியாக அவனை சமாதானம் பண்ணி, செல்லை விட்டு வெளியேறி ரோட்டிலிருந்து வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் ஹாலில், நிரந்தரமாக ஒரு பாய் தலையணையுடன் படுத்திருக்கிற தம்பி எழுந்து என்னை அறைந்தான். அது எப்போதுமே வலுவான அறையாக தான் இருக்கும். அடிபட்ட கன்னத்தைப் பற்றிக் கொண்டு அவனையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டு நின்றேன். வழக்கம் போல ’ உள்ளம் ‘  நடுங்கிக் கொண்டிருந்தது. தன்னை தொகுத்துக் கொள்ள ஆகாத ஒரு மனநோயாளியை எதிர்கொள்ள முடியாத பீதி கனத்தது. இன்னொரு முறையும் அவன் அடிக்கலாம். பேசக் கூடாது.

“ இப்ப டைம் என்ன? டீ வாங்கிக் குடுக்க சொல்லாம போன் பேசப் போயிட்டே? வயித்துக்குள்ள எரியுதுடா ! ”

நான் அமைதியாக நின்றேன்.

“ ஏண்டா என்ன சித்ரவத பண்றீங்க? நேரத்துக்கு சோறு போட முடியலன்னா என்ன ஏண்டா உங்க கூட வெச்சுக்கிட்டுருக்கீங்க ? என் அம்மா மஹாலஷ்மி. தாய்லாந்துல இருக்கா. அவள தேடுங்கன்னு சொன்னனா இல்லையா? அவகிட்ட என்ன கொண்டு போயி விட்டுட்டா நான் அங்க சந்தோஷமா இருக்க மாட்டேன்? ”

மேலும் அமைதியாக நின்றேன். எல்லாவற்றிலிருந்தும் துண்டுபட்டு விட்டவனின் கற்பனை இப்படியெல்லாம் தான் இருக்கும். அம்மாவைக் கூட என்னை அறைந்தது போல அறைந்து எனது அம்மா எங்கே என்று அவளிடமே கேட்டிருக்கிறான்.

“ இங்க பார் ! இவன் சிரிக்கிறான் பார் ! ”

இரண்டு சுவர்கள் சேருகிற ஒரு மூலையைக் காட்டுகிறான். அவன் என்ன சொல்வான் என்று தெரியும். அவன் சுட்டிய திசையை வெறித்தவாறு கேட்டேன். “ யாரு ? ”

“உனக்கு தெரியாதா? ”

அடிக்க வந்தவன் எனது கண்களில் பார்த்தான். அசையாமல் தான் இப்போதும் நின்றேன். நான் அசைந்தால் அவனுக்கு பயம் வந்து விடும். பலமாக தாக்கத் துவங்கி விடுவான்.

“ கடவுள் இங்க தானடா இருக்கான்? அவன் ஏன் கூட தானே இந்த மூலைல இருக்கான்? எப்பவும் என்னப் பாத்து சிரிக்கறது தானே அவன் வேலை? ”

எனக்கு என்னவோ பண்ணியது. தலை சுற்றுவது போலவும் கூட.

“  நீ பொறுக்கி நாய். கெட்டவன். பிரெண்ட்ஸ் கூட சேந்து கூத்தடிப்பே. சிகரெட் புடிப்பே. பிராந்தி குடிப்பே. பொண்ணுங்க சூத்து பின்னால போவே. நான் அப்பிடியா? நான் நல்லவன்டா. யாருக்கும் தீங்கு பண்ணாதவன். இந்தக் கடவுள் என்னை காப்பாத்தறானா, பாத்தியா? உன்ன மாதிரி, இந்த ஒலகத்துல இருக்கற அத்தன ஆளுங்க மாதிரி இந்த மயிராண்டியும் ஒரு துஷ்டன். துஷ்டனக் கண்டா என்ன பண்ணனும்? தூரப் போவணும். ஆனா பாரு, இந்த துஷ்ட ஜந்து ஏன் பக்கத்திலேயே வந்து படுத்துகிட்டு இருக்கு! ”

“ சரி. நிறுத்தறியா? நான் காசு எடுத்து குடுத்தாதான் அவன் டீ வாங்கப் போவான்.”

“ போ. போ. கூட ரெண்டு பட்டர் பிஸ்கட் வாங்கிட்டு வர சொல்லு. நமுத்து போவாம இருக்கணும். டீ ல சக்கர கரெக்டா இருக்கணும். இல்லன்னா ரெண்டு பேர் மூஞ்சி மேலயும் ஊத்திருவேன்! ”

பல்லை நறநறத்துக் கொண்டு கழட்டிப் போட்டிருந்த பான்ட் பாக்கெட்டில் சில்லறைக்குத் துழாவினேன். நல்ல வேளையாக தேறியது. நண்பன் அப்போதுதான் கக்கூசிற்கு சென்றிருக்கவே, மற்றொரு தம்பி பாபு படுக்கையை சுருட்டி வைத்து விட்டு எழுந்து வந்தான். காசை வங்கிக் கொண்டு சட்டையை மாட்டிக்கொண்டு ஒரு செம்பை எடுத்தவாறு போனான். மிகவும் அயர்ச்சியுடன் உட்கார்ந்தேன். தம்பி  ஒரு நடிகையின் கிளிவேஜ் இடைவிடாமல் தெரிந்தவாறு இருக்கக் கூடிய ஒரு குடும்பப் படத்தின் பாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தது ஒரு விதமான வேதனையை உருவாக்கிக் கொண்டிருந்தது. அந்த மூலையில் இருக்கிற கடவுள் அவனுடைய மனதில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஒரு நிம்மதியாக மாறினால் என்ன?

பாபு வந்தான். தம்பியின் முன்னால் டீ செம்பை வைத்து விட்டு என்னை உள்ளே வருமாறு கண்களால் சொல்லிவிட்டு உள்ளே போனான்.

அதற்குள் நண்பனும் வந்து விட தன்னுடைய வயிற்றுப்பகுதி பக்கமாக சட்டையைக் கண்பித்தான். நாங்கள் இருவரும் அருவெறுப்பாகப் பார்த்தோம். பான்பராக் போட்டுத் துப்பப்பட்டது. டீ வாங்க கடைக்குள் ஏறும்போது சரேலென திரும்பிய ஒருத்தன் அகஸ்மாத்தாக செய்தது தான் இது. பாபு திடுக்கிட்டு தன்னை பார்த்துக் கொள்ளும்போது அவனும், கூட இருவருமாக சிரித்திருக்கிறார்கள். பாபு தாங்க முடியாமல் என்ன இது, ஆட்கள் வருகிற இடம்தானே? பார்த்து செய்திருக்கக் கூடாதா என்று கேட்கவும் செய்திருக்கிறான். அவனுடைய சட்டையைப் பிடித்திருக்கிறான் தடியன். அப்படித்தான் துப்புவோம், ஆட்டி விடுவாயா என்று கேட்டிருக்கிறார்கள். குடித்திருக்கிற அவர்களை எதிர்க்க முடியாது என்பதால் இவன் பாட்டுக்கு டீயை வாங்கிக் கொண்டு படியிறங்க அவனது முதுகைப் பிடித்து தள்ளியிருக்கிறார்கள். செம்பு கீழே விழாமல் சமாளித்துக் கொண்டு வந்தேன் என்றான் கலவரமான முகத்துடன். நானும் நண்பனும் போனோம். அவர்கள் இருந்தார்கள்.

எனக்கு அவர்களையும், அவர்களுக்கு என்னையும் தெரியாமல் இருக்காது. அது ஒரு ஏரியா. பரஸ்பரம் பார்த்துக் கொள்கிறவர்கள் தான்.

ஏன் இப்படி என்று கேட்க முயன்றோம். அதே ஜெர்க். தடியனைப் பார்த்தேன். அவன் எனது நண்பனின் சட்டையை அதற்குள் பிடித்து விட்டிருந்தான். ஒண்ணு போடுண்ணா என்கிற பாலகனையும், கடைக்காரர் பிடித்துக் கொள்ளத் திமிறுகிற நெட்டையனையும் புரிந்து கொள்ள முடிந்தது. இரவெல்லாம் குடித்திருக்கலாம். மிச்சமிருப்பதை காலையில் குடித்திருக்கலாம். நேரம் கெட்ட நேரத்தில் மப்பு திணறுகிறது. டீக்கடை ஒரு பொதுவெளி. பத்துபேர் பார்த்து நிற்கிறார்கள். ஒரு நாடகம் நடத்த விரும்புகிறார்கள். பார்க்கிற யாருமே இப்போது இவர்களுடைய துணிச்சலை மலைக்க வேண்டும். நான் மிகவும் பதமாக தடியனின் கரத்தை பிடித்து நண்பனின் சட்டையிலிருந்த பிடியை நாசூக்காக விலக்கினேன். அதற்காக நான் இதை சொல்ல வேண்டியிருந்தது. “ சரி ஜோ. நாங்க உங்கள கேக்க வந்தது தப்புதான். விட்ருங்க போயிர்றோம். உங்ககிட்ட சண்ட போடற அளவுக்கு எங்களுக்கு தெம்பே கிடையாது!”

“ இல்ல, போட்டுத்தான் பாருங்களேன்!”

“ சாரி. இல்ல. வேணா. கெளம்பறோம் ! ”

“ ஏண்டா, இப்டி பொட்ட கூ ங்களா இருக்கீங்க? போயி சாவக் கூடாது ? ”

 “ அதான் போறோம் ல்ல. அப்றம் எதுக்கு? விட்ருமா ! ”

நான் சற்று வேகமாகவே நண்பனைக் கூட்டிக் கொண்டு வந்து விட்டேன். வீட்டின் வாசலில் தனது வண்டியைக் கிளப்பிக் கொண்டிருந்தார் அவுஸ் ஓனர். வாடகை கழித்துக் கொள்ள ஆரம்பித்து இரண்டு மாத வாடகை பாக்கி. சினிமா ஆள், எதையோ எழுதுகிறேன், பணம் வந்து விடாதா என்று நம்பிக் கொண்டிருக்கிறவர். சற்றே பதுங்கி, அவர் போனதும் வீட்டுக்குள் வந்து கதவை சாத்திக் கொண்டோம். மிக சிறிய வீடு. நோஞ்சலான கதவுகள். சமையல் செய்து முடித்தோம். வைத்த சோற்றை தம்பி சாப்பிட்டு முடித்த பிறகு மற்றவர்கள் பகிர்ந்து உண்டோம். எம் ஜி எம் சானலில் டாக்டர் ஷிவாகோ ஓடிக் கொண்டிருந்தது. அதை இருபதாவது முறையாக பார்ப்பதால் சற்று சரிந்து கொண்டு மயங்கினேன். சற்று நேரத்தில் கதவுகள் தட்டப்பட்டன.

கதவைத் திறந்தேன்.

அவர்கள் தான். மூவரும் கதவை உந்திக் கொண்டு நான் பகுதியே திறந்த கதவின் இடைவெளியில் என்னுடைய மூஞ்சிக்குப் பக்கத்தில் இருந்தார்கள். சந்தேகமின்றி மேலும் குடித்திருந்தார்கள்.

“ நீ என்ன ஒரு மாதிரியா பேசிட்டு போன? பருப்பா? ”

“ ஜோ. இதெல்லாம் வேணான்னு நெனைக்கிறேன் ! ”

“ என்ன வேணான்னு நெனைக்கற? ”

“ எனக்கு நெறைய பிராப்ளம்பா. வீட்டு வாடக குடுக்கல. தம்பிக்கு ஒடம்பு சரி இல்ல. நான் உங்க கிட்ட சண்ட போட்டுக்கிட்டு இருக்க முடியுமா? அன்னாடம் இங்க சாப்பாட்டுப் பிரச்சின. அத சமாளிக்கவே எனக்கு நேரம் பத்தல. விட்ருங்களேன், ப்ளீஸ்? ”

“ இல்ல,  நீ வெளிய வா ! ”

“ சாரி. வேணா. நீங்க கெளம்புங்க. ”

“ அப்ப நீ பொட்ட தான்னு ஒத்துக்க ! ”

“ சரி, ஓகே, அதான் ! போங்க ! ”

சட்டென்று அந்த பாலகன் கத்தினான். “ டேய். எங்களுக்கு போவத் தெரியுண்டா. ஒத்தா, போ போ ன்ற? நீ சொன்னா நாங்க போவணுமா ? ” என்றவன் கதவை எட்டி உதைத்தான். இருவரும் என்னைக் கையைப் பிடித்து வெளியே இழுப்பதற்குள்ளேயே பல பயங்கள் எழும்பி வந்தது. இப்போதுமே நான் என்னை இழுத்துக் கொண்டு சமரசம் பேசுவதற்குள் எனக்குப் பின்னால் இருந்தான் ஏன் தம்பி. நான் பயந்தது அதைத்தான். அவன் எனக்கு ஒன்று என்றால் பொறுத்துக் கொள்ள மாட்டான்.

“ யார்ரா, இவனுங்க எல்லாம்? ஒத்தா, யார்றா நீங்க? ”

“ ஏய் ! “

ஓடிச் சென்று கத்தியை எடுக்க முயன்ற தம்பியை தடுத்து நிறுத்தி மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி கதவை மூடிக் கொண்டேன். மேலே வீட்டு உடைமையாளரின் வீட்டுப் பெண்கள் பால்கனியில் இருந்து எட்டிப் பார்ப்பது தெரிந்தது. விறுவிறுவென சந்திலிருந்து ரோட்டுக்கு நடந்தேன். அவர்கள் தொடர்ந்தார்கள். நின்ற என்னையே பார்த்தார்கள். நான் அவர்கள் யாரையும் ஏறிட்டுப் பாராமல், “ சாயந்திரம் ஒரு ஆறு மணிக்கு வரேன் ! ”

“ என்னாத்துக்கு? ”

“ அதான், வர சொல்றீங்களே? அதுக்கு தான் ! ”

“ ஓ . சர்தான். அண்ணன் வரேன்றாரு ! வந்து என்னா பண்ணுவ? சண்ட செய்வியா? ”

“ எனக்கு அதெல்லாம் வராது. இருந்தாலும் வரேன் ! ”

“ எங்க வருவ ? ”

“ std பூத்தாண்ட !”

“ மாசா? ”

“ மாஸ் ! ”

அந்தக் கொடுமையை என்னவென்று சொல்லுவது? ஆறு மணிக்கு முன்பே மறுபடியும் வந்தார்கள். நான் சொன்னதையே சொன்னேன். நீ வரவில்லை என்றால் நாங்கள் வருவோம், கத்தியை தூக்கின அந்த மென்டலை இழுத்துப் போட்டு அடிப்போம் என்றான் பாலகன். எனக்கு அப்புறம் வேறு வழியே இல்லாமல் போயிற்று. வீட்டுக்கு வந்த ஒரு சின்ன வயசுப் பையனிடம் நண்பர்களிடம் சொல்ல சொன்னேன். தம்பிக்கு மீண்டும் ஒரு சாயந்திர டீயை வாங்கிக் கொடுத்து விட்டு மிகவும் அமைதியாக சொன்ன ஸ்பாட்டுக்கு வந்தோம். ஆறு மணியாவற்குள் நண்பர்கள் வந்து விட்டனர். சதீஷிடம் இருந்த கத்தியை வேண்டாம் என்று சொல்லி அதைப் பதுக்கி வைத்தேன். நால்வர் வந்தனர்.

நான் அவர்களை இன்னார் என்று சொல்லாமல் அமைதியாகவே நின்றேன்.

நண்பன் தன்னையறியாமல் தடியனை நோக்கி பாய்ந்து, இடைவிடாமல் அவனுடைய கன்னத்தில் அடித்தான். காலால் எட்டி உதைத்து அவனை வீழ்த்துவதற்குள் மற்ற நண்பர்கள் புகுந்தனர். கையில் அடித்தே மூவருடைய வாயிலும் முகத்திலும் ரத்தம் வர வைத்தனர். அவர்களுக்கு திருப்பி அடிக்க கை எழவே இல்லை. மின்னல் நேரத்தில் அவர்கள் எதிர்பாராத ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. சரியான ஒரு பிடியில் முழி பிதுங்கிக் கொண்டிருந்த பாலகனை விடுவித்து தனியாய் நிறுத்தி விட்டு நம்முடைய பயல்களை முடிந்த வரையில் கட்டுப்படுத்தி முடித்தேன். நண்பர்கள், மூவரையும் ஓட சொன்னார்கள். ஒருவன் எதற்கும் ஆகாமல் பம்மிக் கொண்டிருந்தான். அவனை போக சொல்லிவிட்டு, தடியனை மற்றும் நெட்டையனைப் பார்த்தேன்.

“ உன் பேரு என்ன? “

“ கைலாஷ் ! ”

“ நீ? ”

“ சவுந்தரு ! ”

“ ரெண்டு பேருக்கும் சொல்றேன். எங்க கண்ல நீங்க தட்டுப்படவே கூடாது ! இப்ப நீங்க ஒரு எடத்துல நிக்கறீங்க. தற்செயலா நாங்க அங்க வரோம் . அப்ப நாங்க உங்கள பாக்கவே கூடாது. சட்டுனு பாஞ்சி நீங்க எங்கேயாவது ஓடிபோயி ஒளிஞ்சிரணும் ! ”

இருவரும் தலையாட்டினார்கள்.

“ சப்போஸ், அங்க ஒளியறதுக்கு எடம் இல்ல, என்ன பண்ணுவீங்க ? ”

அவர்கள் விழித்தார்கள்.

“ நின்ன இடத்துல அப்டியே மூஞ்சி மேல கட்சிப் போட்டுக்கணும் ! ”

சரி என்பதாக அதற்கும் தலையசைத்தார்கள்.

அவர்களை போக சொல்லி விட்டு நகர்ந்த பாலகனை தடுத்து நிறுத்தினேன். மூக்கு வழியே இறங்கிக் கொண்டிருந்த குருதியை துடைத்துக் கொள்ள சொல்லிவிட்டு, முதுகை தட்டிக் கொடுத்தேன்.

“ வீட்டுக்குப் போ. அம்மா மடில படுத்துக்கோ. பாலு குடி. அப்டியே தூங்கிரு. இது சண்ட. இதுக்கெல்லாம் சூத்தாட்டிகிட்டு நீ வரக்கூடாது, தெரியுதா? மறுபடியும் நான் உன்ன எங்கேயாது பாத்தேன்னு வெச்சுக்கோ, உன்னைக் கொண்டு போயி நர்சரி ஸ்கூல்ல சேத்து வுட்ருவேன். இல்லன்னா டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போயி ஊசி போட்டு வுட்ருவேன் ! ஓடு.

நண்பர்கள் சூழ, அவர்களின் காசில் வைன் ஷாப்பில் மிகுந்த தெறுப்பான போதையில் இருந்த போது அடிதடி சம்மந்தமாக பேச வியாபாரிகள் சங்கத்தின் ஆள் ஒருவர் வர, அவர்கள் மறுபடியும் அடிபடுவார்கள் என்று எச்சரிக்கை செய்தேன். ஒரு சினிமாவில் நிகழ்ந்தது போன்ற சம்பவத்தால், எனது குரலில் மிகுந்த மிரட்டல் இருக்கவே மறுநாள் எவரும் வரவில்லை. அப்புறம் வந்த நாட்களில் சந்தேகமில்லாமல், அடி வாங்கின இடியட்டுகள் எங்களைப் பார்த்ததும் ஒதுங்கிக் கொண்டார்கள். நண்பர்கள் ஒவ்வொருவருக்காக திருமணம் ஆயிற்று. என்னோடிருந்தவனுக்கும் பாபுவிற்கும் ஆயிற்று. நானும் தம்பியுமாக இருந்தோம். நிறைய பணம் தேவைப்பட்டவாறு இருந்தது. அதனால் காசு வராத சினிமாவை விட்டுவிட்டு ஒரு சாரமும் இல்லாத தொடர்களில் இருந்து காசு பொறுக்கி அவனைக் காப்பாற்றியவாறு நானுமே புத்தகங்கள் கேசட்டுகள் வாங்கி திரைப்பட விழாக்களுக்கு ஊர் சுற்றி ஐம்பது வயதில் ஒரு சம்சார வாழ்வைத் துவங்கினேன். அவனை பராமரிக்க எனக்கு ஒரு இடம் தேவைப்பட்டு, பணம் கட்டி அவனை அங்கே தள்ளி விட்ட போது, சொற்ப நாட்களில் தம்பி இறந்து போனான்.

எனது வாழ்வில் நான் அது போன்ற ஒரு நிம்மதியை அடைந்ததே கிடையாது.

ஒரே நேரத்தில் இருவரும் விடுதலை அடைந்திருக்கிறோம்.

ஒரு மரணம் நமக்கு அதிர்ஷ்டம் போல வந்ததை வியந்து சந்தோசம் கொள்ளும்போது அதைக் கொணர்ந்த இந்த வாழ்வைப் பற்றி சொல்ல என்ன உண்டு?

நான் எனது சினிமா வாழ்வை மீண்டும் அடைந்தேன்.

வழக்கம் போல அது என்னை சுழட்டிக் கொண்டிருகிறது.

இருந்தாலும், ஆற்றில் நீந்தியவாறு இருக்கிறேன். மூழ்கிப் போக வேண்டியதில்லை. எனது எழுத்து என்னை ஒரு இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. முடிந்த வரையில் எல்லோரும் எழுதுவதையே எழுதி இழவு எடுக்காமலிருக்கிறேன். பின்னொரு நாள் இதன் முக்கியத்துவம் எல்லோருக்கும் புரியும் என்கிற நம்பிக்கை எனக்கும் உண்டு. நான் மண்டையைப் போட்ட பிறகு அது எப்படி போனால் என்ன என்கிற அதிதீவிர வெறுப்பும் உண்டு.

என்னை வஞ்சகம் செய்த எவ்வளவோ பேர், அவர்களுடைய வஞ்சகங்களுடன் பிரம்மாதமாக இருக்கிறார்கள். அதனால் எந்த எதிர்பார்ப்புகளும் கூடாது என்பது படிந்து விட்டது. முக்கியமாக நான் எந்த திக்கிலாவது உத்தமனாக இருந்திருக்கிறேனா?

இன்று காலையில் கடைதெருவில் ஒரு சிகரெட் வாங்கித் திரும்பும்போது எனக்கு தெரிந்த அண்ணாச்சி ஒருவர் என்னை வெறித்துக் கொண்டு நின்றார். நான் அவரை நெருங்கி அவருடைய கைகளை பற்றிக் கொள்ள முந்தினேன். உதறினார். நான் சற்றே திடுக்கிட்டு அவருக்கு கொடுக்க வேண்டிய கொஞ்சம் தொகையை நினைவு கூர்ந்தேன். அது ஒரு பெருந்தொகையான கடனைக் கொடுத்து விட்டு மிஞ்சின சிறு தொகை. உண்மையில் அதை நான் கொஞ்சமேனும் ஏன் மனதில்  பொருட்படுத்தியிருக்கவில்லை. பணம் வரும்போது எல்லோருக்கும் செட்டில் செய்து விடலாம் என்கிற நம்பிக்கை தான். பேச்சு வாக்குவாதமாயிற்று. முடிவில் அவர் என்னை அறைய வருகையில், வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருக்கிறவர்களில் யாரோ ஒருவர் தடுக்க, பதிலுக்கு அவரை அறையாமல் நான் தப்பித்தேன். அப்படி அடி வாங்கியிருந்தால் இப்போதும் என்னால் ஆட்களைக் அழைக்க முடியும். அந்த மனிதனைப் பஞ்சு பஞ்சாக பறக்க விட்டிருக்க முடியும். தாஸ் அண்ணா, நீங்க போங்க என்று என்னைத் தெரிந்த ஒரு இளைஞன் என்னை அனுப்பி வைத்தான்.

“ நீயும் உன் குடும்பமும் கடன் வாங்கி, கடன் வாங்கி ஒத்துத் தின்னும்போது நல்லா இருந்திச்சா? ” என்று அண்ணாச்சி கூட்டத்துக்கு நடுவில் கூச்சலிட்டதை கேட்டுக் கொண்டிருந்தவாறு வீடு வந்து சேர்ந்தேன்.

எதையாவது ஒரு படத்தை பார்க்க முடியும் என்று தோன்றவில்லை.

ஒரு மனிதன் தன்னை சிதற விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவன் கடமையல்லவா? கத்ரீனா என்கிற பெயரை வைத்துக் கொண்டிருக்கிற அந்த ஜப்பானிய பெண் இப்போது பெண்மணியாகி விட்டாள். நான் இந்த மாதிரி தருணங்களில் அவளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். வித்தை தெரிந்தவள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். நமது முழு கவனத்தையும் அவளால் இழுத்துக் கொள்ள முடியும் என்றும் வைத்துக் கொள்ளலாம். கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு நான் என்னைக் குவிக்க முயலும்போது கத்ரீனாவின் வாழ்வு எப்படிப்பட்டதாக இருக்கலாம் என்பதை இம்முறையும் வேதாளம் ஏறுகிறேன்.

அவளை ஃபோகஸ் பண்ணிக் கொண்டு ஒரு சிறுகதை எழுத வேண்டும்.

*****  

மணி எம்.கே. மணி – தொடர்புக்கு mkmani1964@gmail.com

இணை

1

கார்த்திக்பாலசுப்ரமணியன்

ஞாயிற்றுக்கிழமை பின்மதியப் பொழுதுக்கே உரித்தான சோம்பல் அந்தச்சாலை முழுவதும் நிரம்பி வழிந்தது. பெரும்பாலான சாலையோரக் கடைகள் ஆளின்றி வெறிச்சோடியிருந்தன. சில கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பேருந்துக்குள் இருந்த ஓரிரு முகங்களிலும் படிந்திருந்த சோகை அப்பயணத்தை மேலும் அலுப்பூட்டியதாக்கியது. அத்தனை நீண்ட பயணம் ஒன்றுமில்லை. நாங்கள் வசிக்கும் ஹோம்புஷிலிருந்து பாரமட்டா வரை போக வேண்டும். இரண்டுமே சிட்னியின் புறநகர் பகுதிகள். ரிகார்டோ, வழியில் ஒலிம்பிக் பார்க்கில் ஏறிக்கொள்வதாகக் கூறியிருக்கிறான். எமிலி வராமல் இருக்க வேண்டும். வரமாட்டாள் என்று தான் நினைக்கிறேன். அவள் உடன் வருவதாக இருந்தால் என்னை ஏன் அழைக்கப் போகிறான்.

அவனுக்காகத்தான் இந்தப் பயணம். கூப்பிட்டுவிட்டானே என்று வேறுவழியின்றி தான் கிளம்பினேன். புத்தம் புதிய டி.வி ஒன்று பாதி விலைக்கு வருகிறது என்பதை கம்ட்ரியில் பார்த்தானாம். கடந்த பத்து நாட்களாக கம்ட்ரியே கதி என்று கிடக்கிறான். உபயோகப்படுத்தப்பட்ட பழைய பொருட்கள் விற்கும் தளம் அது. போன வாரம் இப்படித்தான் அலுவலகம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தோம். ஹோம்புஷ் ரயில் நிலையத்திலிருந்து பத்து நிமிட நடையில் நாங்கள் வசிக்கும் வீடு. போய்க்கொண்டிருந்த வழியில் மரத்தாலான சாப்பாட்டு மேசையை வீட்டுக்கு வெளியில் போட்டு வைத்திருந்தார்கள். அறைக்குச் சென்று முகம் கழுவி வரக்கூட அனுமதிக்கவில்லை. இப்போது விட்டால் வேறு யாரேனும் தூக்கிக்கொண்டு விடுவார்கள் என்றான். வீட்டை காலி செய்யும் பொருட்டோ, புதுப்பிக்கும் பொருட்டோ தங்களுக்குத் தேவையில்லை என்று நினைக்கும் பொருட்களை மாநகராட்சிக்கு தகவல் சொல்லிவிட்டு வீட்டுக்கு வெளியில் வைத்து விடுவார்கள். அப்படித்தான் அந்தச் சாப்பாட்டு மேசையும் வைக்கப்பட்டிருந்தது. நல்ல மரத்தில் செய்தது. பேய்க்கனம். இப்படி ஒவ்வொரு பொருளாக பார்த்துப் பார்த்து வாங்கிச் சேர்த்துக் கொண்டிருந்தான்.

இன்னும் இரண்டு வாரத்தில் எமிலியுடன் தனிவீடு செல்லப் போகிறான். அதன்பின் திருமணம் செய்து கொள்வதாகத் திட்டம். என்னையும் உடன் வந்து தங்குமாறு அழைத்தான். அது சரியாக வராது என்று மறுத்துவிட்டேன். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இதையே திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தான். எனக்கு அந்த எமிலியைப் பார்த்தாலே பிடிக்கவில்லை. சிலபேரைக் காரணமே இன்றி வெறுப்போம் இல்லியா? அவள் அந்தப் பட்டியலில் இருந்தாள்.

அன்று – சனிக்கிழமை மாலை – போதைகூட ஏறியதாகத் தெரியவில்லை. அப்போதுதான் ஆரம்பித்திருந்தான். என் கைகளை இழுத்து தன் கைகளுக்குள் பொதித்துக் கொண்டான்.

“நீ எனக்கு மூத்த சகோதரன் போல் அல்லவா? எங்களுடன் இருப்பதில் உனக்கு என்ன சங்கடம்?” என்றான்.

எப்படி விளக்கிச் சொன்னாலும் அது அபத்தமாய்த்தான் போய் முடியும். புன்னகைத்தபடி மெதுவாக என் கைகளை அவன் கைகளிலிருந்து விடுவித்துக் கொண்டேன்.

ஊற்றியிருந்த விஸ்கியை ஒரு மிடறு விழுங்கினான். காலையிலேயே மசாலா தடவி ஊற வைத்து, பின் ஓ.டி.ஜி-யில் சுட்டு எடுத்த கறித்துண்டுகளில் ஒன்றை நாக்கில் படாமல் பற்களுக்கிடையே கடித்து இழுத்தான். ‘உஸ்’ என்று சத்தமிட்டு அதன் காரத்தை உள்வாங்கிக் கொண்டபடியே ஒரக்கண்களால் என்னைப் பார்த்து, “அப்போ, என்னுடன் சேர்ந்து குடிக்கவாவது செய்யேன்” என்றான்.

நான் அங்கிருந்து எழுந்து விட்டேன். அவன் என்னை வம்புக்கு இழுப்பதானால் குடியைப் பற்றித்தான் ஆரம்பிப்பான். நான் குடிக்க மாட்டேன் என்பதை நம்புவதே அவனுக்கு முடியாத காரியமாய் இருந்தது. ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் இந்தக் கேள்வியைக் கேட்காமல் அவன் விடுவதில்லை. “அது எப்படி ஒருவன் வாழ்நாள் முழுவது குடிக்காமலே கழிக்க முடியும்?” என்பது அவன் தரப்பு.

“இதுவரை தொட்டதே இல்லையா?”

“இல்லை.”

“ஒரே ஒரு பெக் கூடவா இல்லை?”

“ஒரே ஒரு சொட்டு கூட இல்லை.”

போதை ஏறிய பிறகு நான் குடிக்காமல் இருப்பது குறித்து பாராட்டுவான். நான் ஒரு லட்சிய மனிதன் என்பான். உயிர் நண்பன் என்பான். தன்னுடைய மூத்த சகோதரன் என்பான். எனக்கும் அவனுக்கும் எட்டு வயது வித்தியாசம். அவனுக்கு இருபத்து ஆறு. எனக்கு முப்பத்து நான்கு.

ஒரு காலத்தில் நானும் குடித்திருக்கிறேன். இப்போது இல்லை அவ்வளவுதான். இதைச் சொன்னால் அவனுடைய வேலை இன்னும் எளிதாகிவிடும். எல்லாவற்றுக்கும் மேல், மனம் மிதக்கும் தருணங்களில் மட்டும் அதுவும் தனியாக குடிப்பதே எனக்குப் பிடிக்கும்.

*

உண்மையில் எனக்கும் அவனுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தன. அவனுடைய பெயர் ரிகார்டோ ஹென்ரிக். இருவரும் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து பிழைப்பின் பொருட்டு சிட்னிக்கு வந்து சேர்ந்திருந்தோம். ஆடை வடிவமைப்புத் துறை என்னுடையது. அதே நிறுவனத்தில் உற்பத்திப் பிரிவில் அவன். எனக்கு ஆறு மாதங்கள் முன்னர் தான் அவனும் சிட்னிக்கு வந்திருக்கிறான். அவன் தங்கியிருந்த விடுதியில்தான் நானும் தங்கியிருந்தேன். இரண்டு மாதங்கள் கழித்து திடீரென்று ஒருநாள் “நாம் இருவரும் சேர்ந்து வீடெடுத்து தங்குவோமா?” என்றான். மறுப்பதற்கு என்னிடம் பெரிதாக காரணங்கள் எதுவும் இருக்கவில்லை. சரி என்று ஒப்புக் கொண்டேன்.

பிரேசிலின் சால்வடார் நகரின் புறநகர்ப் பகுதியைச் சார்ந்தவன். அவனுடைய அப்பா ஹென்ரிக் இத்தாலியைப் பூர்வீகமாய்க் கொண்டவர். அவரின் முன்னோர்கள் இத்தாலியிலிருந்து இரண்டாம் உலகப்போரின் போது அங்கே இடம் பெயர்ந்திருக்கிறார்கள். பிரேசிலும் இந்தியாவைப் போல பல்வேறு இனங்கள், மதங்கள், மொழிகள் கொண்ட மக்கள் சேர்ந்து வாழும் பன்மைத்துவம் மிக்க நாடு. ரிகார்டோவின் அம்மா ஆப்பிரிக்க இனத்தவர். பெயர் ஆம்பர். ஹென்ரிக்கும் அவர் வேலை பார்த்த பேக்கரியினை நிர்வகித்து வந்த ஆம்பருக்கும் திருமணமான போது ரிகார்டோ ஆம்பரின் வயிற்றில் நான்குமாதக் குழந்தை. அதே நேரத்தில் தான் நான், அங்கிருந்து பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால், என்னுடைய அப்பாவினுடைய மரணத்தின் பொருட்டு சூழ்ந்த வறுமையினால் படித்துக் கொண்டிருந்த மெட்ரிக் பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டிருப்பேன்.

எனக்கு படிப்பு ஒருபோதும் பிரச்சினையாக இருந்ததில்லை. அரசுப்பள்ளி, கல்லூரி என அம்மாவுக்கு பைசா செலவு வைக்காமல் படித்தேன். பிறந்த வீடு, புகுந்த வீடு என்று சொந்தம் சொல்லிக்கொள்ள யாரொருவரும் இல்லாத அவளுக்கு என்னால் எந்தவித தொந்தரவும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தேன். இப்படி வந்த அதீத பொறுப்புணர்வின் காரணமாகவோ என்னவோ கல்லூரி காலங்களில் கூட அந்த வயதுக்கே உரிய கேளிக்கை, கொண்டாட்டம் என எல்லாவற்றிலுமிருந்து சற்று ஒதுங்கியே இருந்தேன். கல்லூரி முடிக்கும் முன்னரே ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை, நல்ல சம்பளம் என வாழ்க்கை கொஞ்சம் எங்கள் பக்கமும் வளைந்து கொடுக்க ஆரம்பித்தது. அதே காலத்தில்தான் ரிகார்டோ வீட்டுக்கு அடங்காத பிள்ளையாக ஊர் சுற்றிக் கொண்டிருந்திருக்கிறான். பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கிடைத்த வேலையைப் பார்த்துக்கொண்டு கால்பந்து மைதானமே கதியென்று கிடந்திருக்கிறான். பின்பு, பந்தை விட்டுவிட்டு பைக்கைப் பற்றியிருக்கிறான். தனது பதினெட்டு வயதில் அவனிருந்த வடகிழக்கு மாகாணத்திலிருந்து கிளம்பி பிரேசிலின் முழுவதையும் சுற்றியிருக்கிறான்.

என் இருபத்தி ஏழு வயது வரை எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அதன்பின் அம்மா எனக்குப் பெண் பார்க்க ஆரம்பித்தாள். முதல் இரண்டு வருடங்கள் எனக்கே அதில் பெரிதாக ஆர்வமிருக்கவில்லை. அப்போது ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு வரவே கெட்டியாக பற்றிக்கொன்டு கிளம்பி வந்துவிட்டேன். ஆறு மாதங்கள் என்று திட்டமிட்டு கிளம்பியவன் இங்கு வந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகிவிட்டன.

தன்னால் எனக்கு பொருத்தமாக ஒரு பெண்ணைக் கொண்டு நிறுத்த முடியவில்லை என்ற ஏக்கம் அம்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கத் தொடங்கியது. என் ஜாதகத்தில் தோஷம் என்றாள். கோவில் கோவிலாக ஏறி இறங்கினாள். விரதம் இருந்தாள். தோஷம் கழித்தாள். பூஜை, பொங்கல், பலி என்று எதையும் விட்டு வைக்கவில்லை. ஆனால், பலன் மட்டும் கூடவில்லை. சொந்தமாக வீடு இல்லாததுதான் பெண் கிடைக்காததற்குக் காரணம் என்றாள். நான் அனுப்பிச் சேர்த்திருந்த காசில் நிலம் வாங்கினாள். தனியொருத்தியாக நின்று வீட்டையும் கட்டி எழுப்பினாள். வீட்டுக்கு இப்போது மூன்று வயதாகிவிட்டது. எனக்குத்தான் எதுவும் தகையவில்லை.

நான் ஊருக்கு வந்து சென்றால் எல்லாம் சரியாக வரும் என்றாள். அவளின் திருப்திக்காக மூன்று மாதங்கள் விடுப்பெடுத்து ஊருக்கு வந்து தங்கிப் போனேன். அங்கிருந்த மூன்று மாதங்களில் நேரில் போய்ப்பார்த்த ஆறு பெண்களுக்கும் உரிய நேரத்தில் திருமணமாகியிருந்தால் இந்நேரம் அவர்களின் பிள்ளைகள் பள்ளி செல்ல ஆரம்பித்திருக்கும். என்னுடைய திருமணம் நடைபெறாமல் போனதுக்கு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற இன்னொரு திருமணமே காரணமாய் இருந்தது. இது அம்மாவுக்கும் நன்றாகத் தெரியும்.

என்னுடைய முப்பத்து மூன்றாவது பிறந்த நாளுக்கு மறுநாள் போனில் அழைத்திருந்த அம்மா வழக்கத்தை விட அதிகமாய் பேசிக்கொண்டிருந்தாள். எதையோ சொல்ல முயன்று, பயந்து வார்த்தைகளை விழுங்கிக் கொண்டிருந்தாள். “இங்கே எனக்குத் தோழிகள் யாராவது இருக்கிறார்களா?” என்று விசாரித்தாள். அவள் சொல்ல வருவது எனக்குப் புரிந்தது. அவளைக் கவலைப்படாமல் இருக்கச் சொல்லிவிட்டு, நானும் என் பங்கிற்கு திருமணம் பதிவு செய்யும் தளங்களில் என் பெயரைப் போட்டு சந்தா செலுத்த ஆரம்பித்தேன்.

முதலில் வயது, வேலை, சம்பளம் என்று தான் ஆரம்பிப்பார்கள். கடைசியில் எல்லோரும் ஓரிடத்தில் வந்து நிற்பார்கள். அதன்பின் ஒருவரும் திரும்பி வந்ததேயில்லை. சமீபத்தில் ஆகச்சுமாரான தோற்றத்தில் ஒரு பெண் சுயவிபரக் குறிப்பைப் பார்த்து விருப்பம் தெரிவித்து இருந்தாள். நானும் ஏற்றுக் கொண்டேன். தகவல்களைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தோம். அவளுக்கு முப்பத்தாறு வயது. என்னைவிட இரண்டு வயது மூத்தவள். அவள் ஒருவேளை சரியென்று சொன்னால் வேண்டாம் என்பதை அவள் மனம் புண்படாமல் எப்படிச் சொல்வது என்று பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நல்லவள். எனக்கு அந்தச் சிரமத்தைக்கூடத் தரவில்லை.

*

பேருந்து ஒலிம்பிக் பார்க் நிறுத்தத்தில் நின்றது. முதலில் ரிகார்டோ ஏறினான். பின்னாலே எமிலியும் ஏறி வந்தாள். எனக்கு எரிச்சலாக வந்தது. அவள் உடன் வருவதாய் இருந்தால் நான் ஏன் வர வேண்டும். மடையன். அவர்கள் இருவருமே சேர்ந்துபோய் பார்த்து வாங்கி வந்துவிடலாமே? நானும் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியத்தை வீணடித்திருக்க மாட்டேனே. ஏற்கனவே எரிச்சல் மண்டியிருந்த மனத்தில் இது சற்று ஆத்திரத்தைக் கிளப்பியது.

உள்ளே ஏறி வந்தவர்கள் இருவரும் ‘ஹாய்’ என்றார்கள். எனக்கு முன்னால் இருந்த இருக்கையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டனர். உட்கார்ந்ததிலிருந்து எதையோ இருவரும் முணுமுணுத்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் மூக்குகளிலிருந்து எழும்பிய விசேஷமான ‘அவ்’ ஒலியிலிருந்து அது போர்ச்சுகீஸ் என்பதைத் தெரிந்து கொண்டேன். எனக்கு ஒரு வார்த்தை புரியவில்லை. ஆனால், இருவர் சண்டை போடுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள பாஷை ஒன்றும் பெரிய தடையாக இருப்பதில்லை. அச்சண்டையைக் கவனிக்காதது போலவும் பெரிதாகப் பொருட்படுத்தாதது போலவும் நடிக்க பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தேன். ஜன்னல் கண்ணாடி வழியே தெரிந்த பரந்து விரிந்திருந்த புல்வெளி அந்நேரத்துக்குச் சற்று ஆசுவாசமளித்தாலும் அவர்களின் உரையாடலுக்கு இடையே வந்து விழும் ஒன்றிரண்டு ஆங்கிலச் சொற்களைக் கொண்டு எதையாவது விளங்கிக் கொள்ள முடியுமா என்பதிலேயே மனம் கிடந்து உழற்றிக் கொண்டிருந்தது.

அடுத்த பத்து நிமிடத்தில் பேருந்தை நிறுத்துவதற்கான பட்டனை எமிலி அழுத்தினாள். விறுவிறுவென்று கீழே இறங்கிச் சென்றுவிட்டாள். எங்கள் இருவரையும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. அதன் பின் ரிகார்டோ எழுந்து என் பக்கம் வந்து அமர்ந்து கொண்டான்.

சில நிமிடங்கள் எதையும் பேசாமல் வெளியே வெறித்துக் கொண்டிருந்தவன், “பிட்ச்” என்று திட்டினான். நான் இதுபோன்ற சமயங்களில் எப்படி முகத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.

பேச்சை மாற்றும் பொருட்டு, “நீ அனுப்பிய அந்த டி.வி மாடலைப் பார்த்தேன். அது வெளியாகியே ஆறு மாதங்கள்தான் ஆகிறன. அதை ஏன் அவன் விற்க வேண்டும்? அதுவும் இவ்வளவு குறைவான விலைக்கு?” என்றேன்.

“இங்கே மனிதர்களின் பைத்தியக்காரத்தனங்களுக்கு ஏதேனும் வரைமுறை இருக்கிறதா?” என்றான்.

“சரிதான்… இருந்தும் இது அதன் உச்சம். ஆளை நம்பலாம் தானே?”

“அவனை நாம் ஏன் நம்ப வேண்டும். டி.வி-யை கண்ணால் பார்க்கப் போகிறோம். எல்லாம் சரியாக இருந்தால் பணத்தைக் கொடுத்துவிட்டு தூக்கிவரப் போகிறோம். அவ்வளவுதான்.”

“சரிதான்”

“எல்லாம் நல்லபடியாக அமைந்தால் இன்று மாலை அதைக் கொண்டாட வேண்டும்” என்று சொல்லி கண் சிமிட்டினான். இது அவன் இயல்புநிலைக்குத் திரும்பியதற்கான குறியீடு. அவன் எதை மனதில் வைத்துச் சொல்கிறான் என்பது எனக்குத் தெரியாமல் இல்லை. அவனுக்கு குடிப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும் அவ்வளவுதான்.

“வேண்டாம் என்றால் மட்டும் விடவா போகிறாய்?” என்றேன். சிரித்தப்படி என்னைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.

*

பாரமட்டா பேருந்து நிலையத்தில் இறங்கிக் கொண்டோம். வழியில் மாக்ஸ் பிரன்னரில் ஆளுக்கு ஒரு காபி எடுத்துக் கொண்டோம். அங்கிருந்து செல்ல வேண்டிய இடத்துக்கு கூகிள் மேப் போட்டு நடக்க ஆரம்பித்தோம். மனம் முழுவதும் வெறுமை படர்ந்திருந்தது. அதை வெறுமை என்ற ஒற்றை வார்த்தையில் சுருக்கிவிட முடியுமா என்று தெரியவில்லை. அவன் ஒருபக்கம் பேசிக்கொண்டே வந்தான். ‘கொஞ்சம் வாயை மூடிக்கொண்டுதான் வாயேன்’ என்று சொல்ல வேண்டும்போல் இருந்தது. அவன் பேசிய எதுவும் காதில் விழவில்லை.

அந்த வீடு நல்ல விசாலமாக ஒரு பங்களாவைப்போல் இருந்தது. கார் நிறுத்துமிடத்தில் நின்று கொண்டிருந்த டெஸ்லாவும் மாஸ்தாவும் அவ்வீட்டின் செழுமையை எங்களுக்கு உணர்த்தப் போதுமாயிருந்தன. வீட்டின் முகப்பு பரந்து விரிந்திருந்தது. விளம்பரத்தைப் பார்க்கும்போது அது சீனராக இருக்கும் என்று நான் சிறிதும் யூகிக்கவில்லை. பெயரில் பிரத்தியேகச் சமிக்ஞை எதுவும் இல்லை. வந்து டி.வி-யைக் காட்டியவர் குள்ளமாக, வயதினை மதிப்பிட முடியாதபடியான தோற்றத்தில் இருந்தார். எங்களை ஒருநிமிடம் அங்கேயே காத்திருக்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார். ஓங்கி கையை வீசினால் காற்று கிழியும் சத்தம் கேட்கும்போல் இருந்த அவ்விடத்தின் அதீத அமைதி அச்சமூட்டியது.

டி.வி உண்மையிலேயே புத்தம் புதிதாக இருந்தது. அதற்கான வாரண்ட்டிகூட இன்னும் ஒன்றரை வருடங்கள் மிச்சம் இருந்தது. இதை ஏன் அவர் ஆறில் ஒரு பங்கு விலைக்குக் கொடுக்க வேண்டும்? எனக்கு அதைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.

“எனக்கு ஒரு பையன் இருக்கிறான். அவனுக்கு ஆறு வயது. இதில்தான் அவன் கார்ட்டூன்களைக் பார்ப்பது வழக்கம். பெப்பா பிக் தெரியுமா? அதுதான் அவனுக்கு விருப்பமான கார்ட்டூன். அதுவரையில் பிரச்சினை இல்லை. கடந்த சில நாட்களாக கார்ட்டூன்களை மியூட்டில் போட்டு சத்தம் இல்லாமல் பார்க்க ஆரம்பித்தான். பின்னர் ஒருநாள் தான் கவனித்தோம், அதில் வரும் கதாப்பாத்திரங்களுக்கு இவனே குரல் கொடுத்து பேசிக்கொண்டிருந்தான். முதலில் ஏதோ விளையாட்டாக அதைச் செய்வதாகத்தான் நானும் என் மனைவியும் நினைத்திருந்தோம். கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி அதில் வரும் அத்தனை கதாப்பாத்திரங்களையும் இவனே வேறு வேறு குரல்களில் பேச ஆரம்பித்தான். சிலசமயம் சத்தம் டி.வி-யிலிருந்து வருகிறதா இவன் கொடுக்கிறானா என்று பிரித்தறிய முடியாதபடி அத்தனைத் துல்லியமாக இருக்கும். எங்களிடம் அவன் பேசுவது குறைந்து போனது. ஒரு கட்டத்தில் இது எல்லை மீறவே எங்களுக்கு பயம் வந்துவிட்டது. அவனிடம் நாங்கள் போதிய கவனம் செலுத்தவில்லை என்பது மட்டும் புரிந்தது. எங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனைப்படி அவனை மெல்பர்னில் இருக்கும் அவனுடைய சித்தி வீட்டுக்கு என் மனைவி அழைத்துச் சென்றிருக்கிறாள். அவர்கள் இங்கு திரும்பி வருவதற்குள் இதை நான் இங்கிருந்து அப்புறப்படுத்தியாக வேண்டும். இந்த டி.வி எனக்கு ராசியில்லை. இது வந்து சேர்ந்ததிலிருந்து பிரச்சினைக்கு மேல் பிரச்சினை.” என்றார்.

நான் ரிகார்டோவைப் பார்த்தேன். அவன் சிரித்துக்கொண்டே தோள்களைக் குலுக்கினான். எங்கள் இருவருக்குமே இதுபோன்ற அசட்டு நம்பிக்கைகள் மேல் பெரிதாக அபிப்பிராயம் ஏதும் கிடையாது. அவன் இந்நேரத்துக்கு புதிய வீட்டின் பெரிய ஹாலில் இதை மாட்டி வைத்து கால்பந்து போட்டிகளைக் காண்பது குறித்தான கற்பனையில் இருந்திருப்பான்.

“ஒருவருக்கு ராசியில்லாத பொருள் இன்னொருவருக்கு அதிர்ஷ்டத்தின் சின்னமாக மாறலாம் என்பது எங்கள் நம்பிக்கை” என்றார் எங்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்தபடி.

இருந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கும் மனநிலைக்கும் இதற்கு மேல் இந்த டி.வி வந்து புதிதாகச் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றே தோன்றியது. மேலும், அது எங்கள் வீட்டில் இருக்க போவதும் இல்லை. அதனால் அதைப்பற்றி நான் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், அவ்வீட்டின் யூகிக்கவியலா அமைதியும் பிரம்மாண்டமும் மனதைவிட்டு நீங்க நீண்ட நாட்கள் பிடிக்கும் என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது.

*

புதிதாக வந்த டி.வி.யை வரவேற்பு அறையிலேயே வைத்திருந்தான். குட்டி ஃபேன்கள், புதிய ஹீட்டர், ரஜாய்கள், சில பீங்கான் பாத்திரங்கள், எமிலி பரிசளித்த தொட்டிச்செடி என்று அவனுடைய அறை முழுவதும் புதிதாகக் குடியேறப் போகும் வீட்டுக்காகச் சேகரித்த பொருட்களால் நிரம்பியிருந்தது. அவன் அறைக்குள் நுழையவே எனக்குப் பிடிக்கவில்லை. அவன் இங்கிருந்து சீக்கிரம் கிளம்பித் தொலைத்தால் தேவலை என்று தோன்றியது.

திடீரென்று இரண்டு நாட்கள் ரிகார்டோ அலுவலகத்துக்கு வரவில்லை. வீட்டுப்பக்கமும் பார்க்க முடியவில்லை. எப்போதாவது அவனுடைய நண்பர்கள் சிலரோடு பார்ட்டி செய்யும் போதோ, எமிலியின் இடத்தில் தங்கிவரும் நாட்களிலோ அவன் இப்படிச் செய்வது வழக்கம்தான் என்றாலும் ஒருமுறை கூட என்னிடம் இப்படிச் சொல்லாமல் சென்றதில்லை. என்னுடைய அழைப்புக்கு பதில் இல்லை. வாட்ஸ்-அப்பில் நான் அனுப்பிய செய்தியைப் பார்க்கக்கூட இல்லை.

மூன்றாவது நாள், பின்னிரவில் வீட்டுக்கு வந்தான். நன்றாகக் குடித்திருந்தான். மூன்று நாட்களையும் குடித்தே தீர்த்ததைப் போல அவ்வளவு களைத்திருந்தன அவனுடைய கண்கள்.

சோபாவில் அமர்ந்தபடி வெற்றுச்சுவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். மெல்லிய குரலில் “கொஞ்சம் தண்ணீர் கொண்டுவந்து தர முடியுமா பிரதர்?” என்றான்.

கிளாசை எடுக்க கிச்சன் கப்போர்டைத் திறந்ததும் பெரிய கண்ணாடி பாத்திரம் விழுந்து நொறுங்கும் சத்தம் கேட்டது.

வரவேற்பறையில் அழகுக்காக வைக்கப்பட்டிருந்த தொட்டிச்செடி கீழே விழுந்து கிடந்தது. பக்கத்தில் புதிதாக வாங்கி வைக்கப்பட்டிருந்த டி.வி-யின் திரை உடைபட்டு ஒரு பெரிய சிலந்தி வலை போல விரிசல் படர்ந்திருந்தது.

நான் அவனைப் பார்த்தேன். தலையைக் குனிந்தபடியே “நாங்கள் பிரிந்துவிட்டோம். எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டது.” என்று கூறி தன் முகத்தை சோபாவில் புதைத்துக் கொண்டான்.

ஒரு சீரான லயத்தில் குலுங்கிக் கொண்டிருந்த அவன் முதுகைப் பார்த்தபடி நின்றேன். எவ்வளவு நேரம் அப்படிக் கழிந்தது என்று தெரியவில்லை. மனதை அழுத்திக் கொண்டிருந்த இனம் புரியாத கனம் விலகி இலகுவானது போல் இருந்தது. கொஞ்ச நேரத்தில் அவன் அப்படியே சோபாவில் தூங்கிப் போனான். நான் ஒரு கிளாசில் விஸ்கியை எடுத்துக்கொண்டு பால்கனிக்குச் சென்றேன். அந்தப் பின்னிரவில் ஆளரவமற்று வெறிச்சோடிருந்த புறநகரின் சாலையைப் பார்த்தபடி குடிக்க ஆரம்பித்தேன்.

***

கார்த்திக் பாலசுப்ரமணியன் – மென்பொருள் துறையில் வேலை செய்யும் இவருடைய சிறுகதைத் தொகுப்பாக ‘டொரினா’வும் ‘நட்சத்திரவாசிகள்’ நாவலும் வெளிவந்துள்ளது. தொடர்புக்கு – karthikgurumuruganb@gmail.com

தொற்று

0

சித்துராஜ் பொன்ராஜ்

ன்று எப்படியாவது இணையதள வேலைகளை முடித்துவிட வேண்டும் என்று சபரீசன் நினைத்தார். படுக்கையின் மறுமுனையில் கலைந்து கிடந்த போர்வையிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த அவருடைய பாதங்களில் சன்னல் வழியாக அறைக்குள் பொழிந்து கொண்டிருந்த காலை நேரத்து வெயில் ஆழமான குளத்தில் மிதக்கும் மிகச்சிறிய வெள்ளைப் பூக்களாய் ஒட்டிக் கொண்டிருந்தது.

இந்தப் படுக்கையறை உயரமும் அகலமும் வாய்ந்த செவ்வகமான மீன் தொட்டி. காலைச் சூரியன் மூடிய கண்ணிமைகளுக்குப் பின்னால் இளஞ்சிவப்பாய்ச் சிரிக்க கறுப்பான தனது நீண்ட நெடிய மேனி முழுவதும் சிறிய வெள்ளை மலர்ச்சரங்கள் புரண்டு கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டு மெத்தையின் கதகதப்புக்குள் புதையப் போனவர் பெயரில்லாத ஏதோ ஒரு சிந்தனை குறுக்கிடப் பதறிக்கொண்டு எழுந்தார்.

இப்போது படுக்கையின் இடது புறமாய்த் தரையில் கசங்கிய போர்வை, படுக்கையுறை, சில்லறைத் தலையணைகளோடு தூக்கமும் கிடந்தது. அவை அனைத்தையும் ஒரே எட்டில் தாண்டிக் கொண்டு சபரீசன் மடிக்கணினி திறந்தே வைக்கப்பட்டிருக்கும் சிறிய மேசையில் போய் அமர்ந்தார்.

குளியலறையிலிருந்து மெல்லிய சோப்பு மணத்தோடு கோமதி வெளியில் வந்தாள். பளிச்சென்று சிவப்பு வண்ணம் பூசிய கனமான அதரங்களும், இடது தோள்பட்டையிலிருந்து சற்றே விலகி உள்ளாடையின் வெள்ளை நிறப் பட்டை கண்ணுக்குத் தெரியும் விதத்தில் நழுவியிருந்த ஆடையும், கழுத்தின் மேல்புறம்வரை கத்தரித்து இளம்பழுப்பு வண்ணம் பூசிய தலைமயிர்க் கற்றைகளில் நடுங்கும் நீர்த்துளிகளும், உடலைப் பிடித்தபடி இருந்த தொடைநீள ஆடையின் பின்பக்கத்தில் உடம்பின் கனத்தால் தூக்கி நிற்கும் பிருஷ்டச் சதையுமாக.

சபரீசன் கோமதியின் ஆடையின் பின்புறத்தில் பறவையின் விரிந்த சிறகுகளின் வடிவத்தில் பதிந்து கோமதி இப்படியும் அப்படியும் திரும்பும் போதெல்லாம் பட்டவர்த்தனமாகத் தெரிந்த அவளுடைய உள்ளாடையின் வடிவத்தை மிகுந்த சுவாரசியத்தோடு ஓரக்கண்ணால் பார்த்தபடியே மடிக்கணினியை விரல்களால் தட்டிக் கொண்டிருந்தார். இரண்டு மாதங்களாய்ச் சவரம் செய்யப்படாமல் விடப்பட்டிருந்த சாம்பலும் வெண்மையும் கலந்த நரைகள் நிறைந்த அவருடைய கன்னமேடுகளில் லேசான உஷ்ணம் ஏறி அடங்கியது. ஆனால் சபரீசன் அருகில் நின்றிருந்த தனது மனைவியை நோக்கி நாற்காலியிலிருந்து எழுந்து நகர முற்படவில்லை.

தரையில் விரித்து வைத்த சிறிய கைக்குட்டை போல முப்பது டிகிரி கோணத்தில் கிடந்த அந்த அறை முழுவதும் கோமதி நகர்ந்து கண்ணுக்கு மை எழுதும் பென்சில், டிஷ்யூ தாள்கள்,  தலைமயிரைக் கட்டும் ரப்பர் ஸ்கரஞ்சி என்று சின்னச்சின்னப் பொருள்களைப் பொறுக்கித் தோள் பைக்குள் போட்டாள். பின்பு படுக்கையறையின் இந்த ஓரமாய் சபரீசன் அமர்ந்திருந்த மேசைக்கு அருகே நின்று கொண்டாள். அணிந்திருந்த ஆடையின் இடுப்புப் பகுதியை இரண்டு பக்கமாகவும்  கைவிரல்களால் இழுத்துவிட்டபடியே அறையின் எதிர்பக்க மூலையில் சுவரோடு பதிக்கப்பட்டிருந்த ஆளுயர நிலைக்கண்ணாடியில் தெரிந்த அவள் உருவத்தை ஆவலோடு பார்த்தாள். இடுப்பில் ஆடை சரியாக அமராமல் சதை பிதுங்கி நிற்பதைக் கண்டு உதடு சுழித்தாள். கொஞ்சம் பின்னால் நகர்ந்து பார்த்தால் தனது உருவம் மெச்சப்படுமோ என்ற எண்ணத்தால் சற்றே பின்னால் நகர்ந்து போனாள். சபரீசன் கட்டிலை விட்டு இறங்கியபோது தரையில் விழுந்த தலையணை குதிகாலில் தட்டியது.

கோமதிக்கு வேலை இல்லாத நாள்களில் காலை வெகுநேரம் வரை போர்வைக்குள் புதைந்துபோகும் பெரும் தூக்கங்களும் தன்னைச் சுற்றிச் சிறுசிறு தலையணைகளும் மார்போடு கட்டிக்கொள்ள நீளமான திண்டும் பிடிக்கும். மெத்தை முழுவதும் பல்வேறு நிறங்களில் சின்னச்சின்னத் தலையணைகளைக் கோமதி சேகரித்து வைத்திருந்தாள்.

குதிகாலில் தலையணை தட்டுப்பட்டதும் அதைச் சிறிய வன்முறையோடு தூர எத்திவிட்டுக் கோமதி சொன்னாள்.

“இதையெல்லாம் அப்புறமா ஒழுங்கா எடுத்து வச்சிருங்க சொல்லிட்டேன்.”

கோமதி அப்படிப் பேசியபோது தட்டையான முனைகளை உடைய கத்திரிக்கோலால் வெகு ரசனையோடு பறிக்கப்பட்டிருந்த பிறை போன்ற அவளது மெல்லிய புருவங்கள் மேலும் வளைந்து மேலேறின. எதிரிலிருந்த நிலைக்கண்ணாடிக்கும் சபரீசனின் நரை பூத்திருந்த முகத்துக்கும் மாறி மாறிப் பார்த்ததில் அவள் கண்கள் பளபளத்தன. அவள் மூக்கின் விளிம்புகள் விடைத்து அடங்கின. கோமதிக்கு லேசாய் மூச்சு வாங்கியதாகச் சபரீசனுக்குத் தோன்றியது. வீடடங்குக் காலமான இந்தச் சில மாதங்களில் கோமதி நிறைய எடை போட்டிருந்தாள். மதர்த்த அவள் தேகம் படுக்கையறை, இந்த அடுக்குமாடி வீடு, இந்த வீடமைப்புப் பேட்டை, இந்தப் பெருநகரம், இந்தப் பிரபஞ்சம் அனைத்திலும் பரவி அவற்றை விழுங்கிவிடாதவாறு அவளது ஆடைகளின் கண்ணுக்குப் புலப்படாத கண்ணிகள் மிகுந்த சிரமத்தின் பேரில் இழுத்து வைத்துக் கொண்டிருந்தன.

சபரீசனின் முகத்தில் மீண்டும் அனல் பரவிக் குளிர்ந்தது.

கோமதி சின்னப் புட்டிக்குள் இருந்த வாசனைத் திரவத்தை விரல்களில் தட்டி அதை இரண்டு விரல்களால் அக்குளில்களில் தடவிக் கொண்டாள். பின்பு மீண்டும் திரவத்தை விரல்களில் கொட்டி மார்புகளின் இடையில் ஊதா நிழல்களாகப் பொங்கித் திரண்டு நிற்கும் பிளவுக்குள் பூசினாள். மேசையின் ஓரமாக கைப்பிடிகள் விறைத்தபடி வைக்கப்பட்டிருந்த தோள்பையை எடுக்கப்போனவள் சபரீசனை நிதானமாக உற்றுப் பார்த்தாள்.

“வேலைக்கு எழுதிப் போட்டிங்களா, இல்லையா?”

உயிர்ப்புப் பெற்றிருந்த கணினியைப் பார்த்தபடி அமர்ந்திருந்த சபரீசனின் முகத்தில் அதன் வெளிச்சம் தெறித்திருந்தது. இம்முறையும் அவர் முகத்தில் ஒருவிதமான வெப்பம் ஏறி அடங்கத்தான் செய்தது. ஆனால் இதற்கு அர்த்தம் வேறு.

சபரீசன் எந்தப் பதிலும் சொல்லாதது கண்டு கோமதி மீண்டும் மிருதுவான தொனியில் பேசினாள். ஆனால் வார்த்தைகள் மிகுந்த ஆழமும் வீரியமும் வாய்ந்த கோபத்திற்கு அணைபோடும் கரையின் திடத்தோடும் சீர்மையோடும் அமைந்திருந்தன.

“கேக்குற கேள்விக்குப் பதில் சொல்லாம இப்படி அலட்சியமா உட்கார்ந்திருந்தா என்ன அர்த்தம்? வேலைக்கு முயற்சி பண்ணுறிங்களா இல்லையா? இல்ல நாள் பூராப் பாட்டுப் பாடிகிட்டும் ஃபேஸ்புக்குல அரட்டையடிச்சுக்கிட்டே இருந்துரலாம்னு பார்க்குறிங்களா? வீட்டுச் செலவுக்கும் குழந்தை படிப்புக்கும் நானேதான் கெடந்து சாகணுமா?”

மனிதர்களின் உரையாடல்கள் அனைத்துமே மிகுந்த வன்முறைகள் நிறைந்தவை. அன்பாகப் பேசிக் கொள்கிறவர்கள்கூட பிரியத்தால் ஒருத்தரை ஒருத்தர் வெட்டிக்கொண்டு ஜெயித்து முன்னேறத்தான் பார்க்கிறார்கள். பேச்சு என்று வந்துவிட்டாலே மனிதர்களுக்கு இயல்பிலேயே ஒருவித மூர்க்கம் சேர்ந்துவிடுகிறது. பேச்சுக்கு மௌனம் உத்தமம். கொடுக்கலும் வாங்கலும் இல்லாத இடத்தில் மாத்திரம்தான் மனிதனால் வன்முறையைக் கழற்றி வைத்துக்கொள்ள முடிகிறது.

சபரீசனுக்குச் சினிமாப் பாடல்களைப் பாடப் பிடிக்கும். வேலை போனதிலிருந்து ஒவ்வொரு நாளும் ஏதேனும் இரண்டு மூன்று பாடல்களைப் பின்னணி இசையோடு பாடி இணையத்தில் பதிவேற்றி வந்தார். சமூக வலைதள நண்பர்களிடமிருந்து அப்பதிவுகளுக்கு மிகுந்த வரவேற்பும் விருப்பக் குறிகளும் கிடைத்துக் கொண்டிருந்தன. வீடடங்குக் காலக் கிழத்தோற்றத்தை மீறியும் பாடும்போது அவர் முகத்தில் வேலையில் இருந்த போது இல்லாத பொலிவும் சாந்தமும் ஞான தீட்சண்யமும் கூடியிருப்பதாகச் சபரீசனுக்குத் தோன்றியது. கோமதியும் குட்டியும் அலுவலகத்துக்கும் பாலர் பள்ளிக்கும் போன பிறகு  வரவேற்பறையில் வெளிச்சம் நிறைந்த இடத்தில் அமர்ந்து காதில் ஒலிப்பெருக்கியை மாட்டிக்கொண்டு முகத்துக்கு முன்னால் அரையடி தூரத்தில் சபரீசன் பாடல்களைப் பதிவு செய்வார்.

அப்போது அவர் தலைக்குப் பின்னாலிருந்த வெள்ளை வெளேர் என்ற சுவரிலிருந்து வெள்ளைக் சேலையுடுத்தி, வெள்ளைப் பனி பூண்டு, வெள்ளைக் கமலத்தில் வீற்றிருந்தபடியே சரஸ்வதி தேவி அருள் பாலிப்பதாகவே சபரீசன் உணர்ந்திருக்கிறார்.

அம்பிகையின் இந்த ஆசீர்வாதங்கள் இல்லாமல் என்றுமில்லாத அளவுக்கு முகநூலில் இத்தனை விருப்பக்குறிகள் கிடைப்பது அரிது என்று சபரீசனுக்குத் தெரிந்திருந்தது. பலபேர் அவர் பாடல் பதிவுகளைப் பகிரவும் செய்தார்கள். அவர் பதிவுகள் பகிரப்பட்டன என்று சமிக்ஞை வரும் போதெல்லாம் சபரீசனின் தோள்கள் பூரித்தன. பன்னிரண்டு ஆண்டுகளில் ஒருமுறை பூமியிலும் மனிதர்களின் ஜாதகத்திலும் பெரும் மாற்றங்கள் ஏற்படுமாம்.

நாற்பத்தெட்டாவது வயதில் வாழ்வில் புது வசந்தம் என்று சபரீசன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். இணைய நண்பர்கள் அவருக்குப் ‘பாடும் இணைய நிலா’ என்று பட்டம் தந்து பெருமைப்பட்டார்கள்.

தெய்வானுக்கிரகம் நிறைந்த அமிர்த மயமான அந்தப் பாடல்கள் பிறந்த அதே இடத்திலிருந்து இப்போது மிக லேசான எரிச்சலோடும் அதைவிட பல மடங்கு தயக்கத்தோடும் சபரீசனுக்குள்ளிருந்து சின்ன ஆரோகணங்களாக வார்த்தைகள் பிறந்தன.

“வேலைக்குப் போகலனு யார் சொன்னா? நானும் பல விதமான வேலைகளுக்கு அப்ளிகேஷன் போட்டுகிட்டுத்தான் இருக்கேன். அதே சமயம் இணையத்துலயும் ஏதாவது வியாபாரம் தொடங்கலாமானு பார்க்குறேன்.”

“இணையத்துல வியாபாரம்னா?”

கண்களைக் குறுக்கியபடிக் கோமதி கேட்டாள்.

“எதாவது உபயோகமான பொருள்கள வாங்கி இணையத்துலேயே விக்குறது. சீனாவுலேர்ந்து மலிவான விலையில உடுப்பு, சப்பாத்து, முகத்துக்குப் போடுற ஒப்பனை பொருள்னு வாங்கி இங்க சப்ளை செஞ்சா நல்ல லாபம் வருது தெரியுமா? இப்ப லாக்டவுன்ல எல்லாரும் இணையத்துலதான திங்கறது, உடுத்துறது எல்லாத்தையும் வாங்கிறாங்க. ஒரு புடி புடிச்சா லாபம் பார்க்கலாமாம். இல்லைனா இணையத்துலேயே யோகா, டியூஷன், வியாபார நுணுக்கங்கள்னு எதையாவது சொல்லித் தந்து காசு பார்க்கலாம். அதுக்கும் நல்ல மவுசு.*

சொல்லும்போதே தனது வார்த்தைகள் வேகமாகி நெஞ்சு படபடவென்று துடிப்பதைச் சபரீசன் உணர்ந்தார். வலுக்கட்டாயமாகத் தனது பதற்றத்தைக் கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் முடியவில்லை. மடிக்கணினியைச் சுற்றி பத்தொன்பது நாட்களுக்கு முன்னால் இணைய தள அமைப்பு பற்றியும் இணைய வர்த்தகம் பற்றியும் நூலகத்திலிருந்து அவர் இரவல் வாங்கி வந்திருந்த கனமான புத்தகங்கள் பளபளப்பான அட்டைகளோடு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இதுவரை அவற்றைச் சபரீசன் பிரித்துக் கூடப் பார்க்கவில்லை. நாளை பார்க்கலாம் என்று நாள்களைக் கடத்தி வந்தார். இப்போது அவற்றைப் பார்க்கின்ற நேரத்தில் கசப்பான திரவம் ஒன்று அடிவயிற்றிலிருந்து மேலேறி அவர் நாக்கின் அடி வேரில் வழவழப்பான இதழ்களையுடைய கறுப்புத் தாமரைப் பூவாக மலர்ந்து நின்றது.

சபரீசன் சொன்னதைக் கேட்டுக் கோமதி உள்ளுக்குள் ஏளனமாகச் சிரித்திருக்க வேண்டும். அவளுடைய கண்களிலும், பளபளக்கும் செழுமையான கன்ன மேடுகளிலும், சிவப்பாய்ப் பூரித்து நிற்கும் உதடுகளிலும், உள்ளாடைப் பட்டை தெரியச் சரிந்திருக்கும் பழுப்பு நிறத் தோள் சரிவிலும் கனமான மார்பகங்களின் குலுங்கலிலும் சிரிப்பே தொற்றியிருப்பதாய்ச் சபரீசனுக்குத் தோன்றியது.

கண்ணிமைகளில் ஒட்டியிருந்த நீளமான போலி மயிரில் மாட்டியிருந்த தூசை விரல்களால் பிடுங்கி காற்றில் விசிறிவிட்டுக் கொண்டே கோமதி பேசினாள்.

“இந்த இரண்டையும் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?”

கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் பிரசித்தி வாய்ந்த பன்னாட்டு நிறுவனத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளனாகச் சபரீசன் வேலை பார்த்து வந்த காலங்களில் கோமதியை அடிக்கடி ‘மக்கு முண்டம்’ என்றே அழைப்பார். கோமதி கப்பல் நிறுவனத்தில் சாதாரண எழுத்தர் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். தொற்று நோய்க்கு முன்னால் இந்த நகரம் கண்காட்சிகளின் அனைத்துலக மையமாக இருந்தது. கண்காட்சிகளில் பங்கு கொள்ளூம் பிரதமர்கள், அமைச்சர்கள், தொழில் பிரமுகர்கள், நடிகர்கள், பாடகர்கள் என்று சபரீசனுக்கு அடிக்கடி தொடர்பு ஏற்பட்டு வந்தது. தொலைக்காட்சியில் அடிக்கடி பார்க்கும் மனிதர்களின் அருகில் நின்று பேசும் வாய்ப்பு என்பது யாருக்கும் அதிக போதையை வழங்கக் கூடிய காரியம்.

தொற்று நோயால் கண்காட்சிகள் வற்றிப் போய் முடங்கும் நிலையிலிருந்த நிறுவனம் சபரீசனுக்கு இளஞ்சிவப்பு நோட்டீஸைத் தரும் நாள்வரை அவருக்கு என்ன தெரியும் என்று கோமதி கேட்டது இல்லை.

கப்பல் நிறுவன வேலை அத்தியாவசியம் என்று கருதப்பட்டதால்  கோமதிக்கு மட்டும் வீடடங்கு காலம் முழுவதும் வேலைக்குப் போய் வர அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

வீட்டுக்கு வெளியே இருந்த சாலையில் பேருந்து ஒன்று இருமிக்கொண்டு முன்னேறியது. படுக்கையறை கதவின்மீது மத்தளத்தில் விழும் பிரட்டலைப் போன்ற சத்தம். பதிலுக்குக் காத்திருக்காமலேயே கதவைத் திறந்து ஆறு வயது தினேஷ் பள்ளிச் சீருடையில் உள்ளே வந்து கோமதியின் வயிற்றை முடிந்தமட்டும் கைகளால் பின்னிக் கொண்டான்.

ஆடை அலுங்காமல் இருக்கக் கோமதி தினேஷைத் தன்னிடமிருந்து தள்ளி வைத்துப் பிடித்துக் கொண்டாள்.

“என்ன இது கண்ட நேரத்துல வந்து கட்டிகிட்டு,” என்று அடிக்குரலில் கோமதி உறுமினாள்.

தினேஷுக்குப் பின்னால் வந்திருந்த குருப்ரீத் திறந்திருந்த படுக்கையறைக் கதவின் நிழலில் நின்றிருந்தாள். வீட்டு வேலைக்காகவும், சபரீசன் கோமதி இருவரும் வேலைக்குப் போன பிறகு தினேஷைப் பார்த்துக் கொள்ளவும் மூன்று வருடங்களுக்கு முன்னால் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த சீக்கியப் பணிப்பெண். சாயம் போன டீ சட்டையிலும் மெதுவோட்டம் பயிலப் பயன்படுத்தும் இடுப்பிலிருந்து பாதங்கள்வரை இரட்டைக் கோடுகள் போட்டிருக்கும் பழைய நீலநிற முழுக்கால் சட்டையிலும்கூட உடம்பு முழுவதும் பொங்கி நிற்கும் செந்நிறமாய் மதர்த்து திரண்ட உயரமும் அகலமும் வாய்ந்த உடம்போடு அழகிய போர்க்குதிரையின் வாளிப்போடு குருப்ரீத் இருந்தாள்.

முதுகுவரை வளர்ந்திருக்கும் கருநீல நிறமான அவள் கூந்தலிலும் அவள் காதுகளின் பின்னாலும் சதா வீசும் பச்சை டின்னிலடைத்த பழுத்த வனஸ்பதி நெய் வாசம் சபரீசனுக்கு நினைவுக்கு வந்தது.

உள்ளாடை அணியாமல் ஒற்றை லுங்கியோடு மார்பில் மயிர் புரள அந்த இளம்பெண்ணின் பார்வை படும்படி அமர்ந்திருப்பது சபரீசனுக்கு தொப்புளுக்குக் கீழே இனம்புரியாத குறுகுறுப்பை ஏற்படுத்தியது. தோள்களை நன்றாகப் பின்னுக்கிழுத்து மார்பை முன்னால் வீசிக்கொண்டு சபரீசன் மடிக்கணினியின் கட்டைகளைத் தட்டிக் கொண்டிருந்தார். அவரது ஓரக்கண் பார்வை மொத்தமும் குருப்ரீத், தினேஷ், கோமதி என்று மாறி மாறி வந்தது. ஆனால் இருபத்திரண்டு வயது குருப்ரீத் சபரீசனைச் சட்டை செய்யவில்லை.

அவள் கண்கள் கோமதியின் முகத்தில் மட்டுமே பதிந்திருந்தன.

தன்னைத் தூரமாய் வைத்தபடி பிடித்திருந்த கோமதியை எம்பிப் பிடிக்கப் போவதுபோல் கைகளை உயரத் தூக்கித் தாவிக் கொண்டே ‘கூல், கூல்’ என்றான் தினேஷ்.

கோமதியிடமிருந்து ஆழமான பெருமூச்சு.

“சரி, நானே வேலைக்குப் போற வழியில இவனப் பள்ளிக்கூடத்துல விட்டுடுறேன். அப்புறமா அவனைக் கூட்டிகிட்டு வந்திருங்க, என்ன? மூனு டஜன் முகக்கவசமும் வாங்கிட்டு வந்திருங்க. எனக்கும் குழந்தைக்கும் துணியால செஞ்ச முகக்கவசம் ஒத்துக்கல.”

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்தபோது வாசல் மணிச்சத்தம் கேட்டது. தினேஷை அறையிலிருந்து துரத்திக் கொண்டிருந்த கோமதி அப்படியே நின்றாள். இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு உட்கூரைப் பார்த்துத் தலையை நன்றாகப் பின்னுக்குச் சாய்த்தபடி மீண்டும் பெருமூச்சு விட்டாள்.

“மறந்தே போச்சு. ஏர் கான் சர்வீஸுக்காக சர்வீஸ்காரனை வரச் சொல்லியிருந்தேன். வந்துட்டான் போலிருக்கு. ராத்திரி ஒரே புழுக்கம். தூங்கவே முடியல.”

தலையை நன்றாகப் பின்னுக்குச் சாய்த்தபடி நெற்றி, கண்ணிமை, தாடை, கழுத்து என்று வியர்வையும் வெளிச்சமும் பளபளக்க நிற்கும் கோமதி இப்போது வாளிப்பான சவாரிக் குதிரையல்ல. பல குட்டிகளை ஈன்று அவற்றையும் அதன் கூட்டத்தையும் சிங்கங்களிமிருந்தும் செந்நாய்களிடமிருந்தும் பாதுகாக்கும் மூர்க்கமும் பெருவலிவுமுடைய சினமுள்ள காண்டாமிருகம். நல்ல தீனியின் மீதும் அடித்துப் போட்டாற்போன்ற தூக்கத்தின் மீதும் பெரும் விருப்பமுள்ளவள்.  வேலைக்குப் போய் வரும் குடும்ப மனுஷி.

“சர்வீஸ் முடிஞ்சதும் கொடுக்க வேண்டிய பணத்த சாமிப்படத்துக்கு முன்னால வச்சிட்டுப் போறேன். மறக்காம ரசீது வாங்கிடுங்க.”

பைகள், சரசரக்கும் ஆடைகள், சின்னச்சின்னக் காலைநேரக் கலவரங்கள் என்று கோமதியும், தினேஷும், குருப்ரீத்தும் படுக்கையறைக் கதவைச் சாத்திவிட்டுக் கடந்து போனார்கள்.

வரவேற்பறையில் குளிரூட்டும் சாதனங்களைப் பராமரிக்க வந்திருந்த பணியாளனிடம் கோமதி ஏதேதோ பேசுவது கேட்டது.

மனித சம்பாஷணைகள் பல்வேறு வாத்தியங்கள் சேர்ந்து இசைக்கும் இசைக்கச்சேரிக்கு ஒப்பானவை. அவற்றிற்கு என்று தாள கதியும், ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் அடிநாதமும் உண்டு. வரவேற்பறையிலிருந்து வந்து கொண்டிருந்த பேச்சுக் குரல்கள் தீடீரென்று கால அளவைகளுக்கு மீறியும் அடங்கிப் போகவே மடியில் நிற்காமல் வழிந்து போன லுங்கியை கொத்தாய்க் கையில் பிடித்தபடியே சபரீசன் படுக்கையறைக் கதவை சத்தம் போடாமல் ஒரு கீற்றளவே திறந்து எட்டிப் பார்த்தார்.

தினேஷும் குருப்ரீத்தும் வாசல் கதவுக்கு வெளியே நின்றிருந்தார்கள். தினேஷ் கைகளை ஆட்டிக் குருப்ரீத்திடம் எதையோ சொல்லிக் கொண்டிருந்தான்.  

வரவேற்பறையின் நடுவில் கோமதி குளிர்சாதனங்ளைப் பராமரிக்க வந்தவனிடம் தாழ்ந்த குரலில் எதையோ பேசிக் கொண்டிருந்தாள். வந்திருந்தவன் இளைஞன். நல்ல கட்டான உடலும் உயரமும்  உடையவன். தோற்றத்தில் மலாய்க்காரனைப் போல இருந்தான். ஆனால் செழித்து வளர்ந்திருந்த சுருட்டை தலைமயிரிலும் மூக்கின் கூர்மையிலும் இந்தியத்தனம் தெரிந்தது. கையில் தொழிலும் திறமையும் இருந்த நிறைவும் கர்வமும் அவன் முகத்தில் வெளிச்சமாகப் பரவியிருந்தன. அதன் பலனாகக் கோமதி சொன்னதெற்கெல்லாம் அடிக்கடிச் சிரித்தான். புன்னகைத்தான். இறுக்கமான உடையில் இருந்த கோமதியின் உடலை அவன் கண்கள் விழுங்கிக் கொண்டிருந்தன.

கோமதியும் தன்னைவிட உயரமாக இருந்த இளைஞனை ஏறிட்டுப் பார்த்து உடம்பின் இருபுறமும் கைகளை உயர்த்தி விரித்து வைத்துச் சிரித்தபடியே பேசிக்கொண்டிருந்தாள். கோமதிக்கு அன்றிலிருந்து இன்றுவரை அழகான வெள்ளை நிறப் பல்வரிசை.

சபரீசன் ஓசையெழாமல் படுக்கையறைக் கதவைச் சாத்திவிட்டு மீண்டும் கணினிக்கு முன்னால் வந்து அமர்ந்து கொண்டார். அவர் மடியில் லுங்கி குளிர்ந்த நீராய் வழிந்து கொண்டிருந்தது.

கணினிக்குப் பக்கத்திலிருந்த புத்தகங்களைப் புரட்டிவிட்டுச் சபரீசன் கணினியில் சில கட்டளைகளைப் புகுத்தினார். அவர் எதிர்பார்த்த எதிர்வினைகள் உருவாகாமல் கணினித் திரையில் வாசகங்கள் அவர் கைக்குள் சிக்காமல் நழுவிப் போயின.

வெளியே கோமதி கிளம்பும் சத்தம் கேட்டது. வீட்டின் ஒரு மூலையில் மடித்து வைத்த ஏணி விரிக்கப்பட்டு நேராக நிறுத்தி வைக்கப்படும் சப்தம் கேட்டது.

சபரீசன் ஏதேனும் பாடலைப் பாடிப் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அது சர்வீஸ் செய்ய வந்தவன் வேலை முடித்துக் கிளம்பிய பின்னால்தான் சாத்தியமாகும். அதுவரை சபரீசன் காத்திருக்க வேண்டும்.

சபரீசன் சித்திரங்கள் மாறி மாறித் தோன்றும் கணினித் திரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். ஏதோ ஒரு மாய விசையின் உந்துதலால் திரையில் மாறி மாறி விழுந்து கொண்டிருந்த கோடுகளைக் கண் கொட்டாமல் சபரீசன் பார்த்துக் கொண்டிருந்தார்.

சிறியதும் பெரியதுமாக முன்னூற்று இருபது அடுக்குமாடிகள் ஒன்றோடொன்று உரசிக் கொண்டிருந்த இந்தப் பன்னிரண்டு மாடிக்கட்டிடத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இப்படி ஏதேனும் கதை நிகழ்ந்து கொண்டுதான் இருக்க வேண்டும்.

“இது இப்படித்தான்,” என்று தனக்குத்தானே சபரீசன் முணுமுணுத்துக் கொண்டார். “இப்படி நடப்பது இயற்கைதானே. யாரும் இதைத் தடுத்துவிட முடியாது.”

இப்போது அவர் உடல் அரையிருட்டில் மூழ்கியிருந்த படுக்கையறையைப் போலவே குளிர்ந்து போயிருந்தது.

***

சித்துராஜ் பொன்ராஜ்  சிங்கப்பூரில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பு பணிகளுடன், படைப்புகள் (கதை, கவிதை, நாவல்), விமர்சனங்கள், இலக்கிய உரைகள் என பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறார். தமிழ், ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.

நிழலுலகம்

1

காலத்துகள்

“எவற்றின் நடமாடும் நிழல்கள் நாமன்னு ஆரம்பிக்காத” என்ற குரலைக் கேட்டு அபார்ட்மெண்ட் மாடியை சுற்றிப் பார்த்தேன், யாருமில்லை. அன்று முன்மாலை மாடியில் நின்றுகொண்டு, தெருக்களில் அதிகரிக்க ஆரம்பித்திருந்த மக்கள் நடமாட்டத்தை கவனித்துக் கொண்டிருந்தேன். பெரும்பாலானோர் மாஸ்க் அணிந்து கொண்டிருந்தார்கள். நேர்த்தியான உடையணிந்து, முகக்கவசமின்றி தெருவில் நடந்து கொண்டிருந்தவரைப் புகைப்படம் எடுத்து – நண்பர்கள் வாட்ஸாப் குழுவில் பகிர்ந்து அறச்சீற்றம் கொள்ளத் தான் – திரும்பியவன் அபார்ட்மெண்ட் தண்ணீர் தொட்டியின் சுவற்றின் என் நிழலைப் பார்த்து, அதை புகைப்படம் எடுக்க நினைத்தேன். நானும் நிழலும் ஒருவரையொருவர் புகைப்படம் எடுப்பது போல் நின்றிருந்த கணத்தில், நான் என்னை போட்டோ எடுக்கிறேனா அல்லது என் நிழலையா, ஒருவேளை என் நிழல் என்னை புகைப்படம் எடுக்கிறதோ என்று யோசிக்க ஆரம்பித்த போதுதான் அந்தக் குரல் கேட்டது.

நானே எனக்குள் உரத்த குரலில் பேசியிருக்கக் கூடும், அப்படிச் செய்யக்கூடியவன் தான் நான். மீண்டும் என்னை அல்லது என் நிழலை புகைப்படம் எடுக்க முயன்றபோது, “முடிவுக்கு வந்துட்டியா” என்ற குரல் கேட்கும் போது என் நிழலின் வாயசைவைப் பார்த்தேன். நான் பேசவில்லையே. வாயை இறுக மூடிக்கொண்டேன். எங்கிருந்து வருகிறது இந்தக் குரல்? “உன்கிட்டேந்து தான்”, நிழல் மீண்டும் பேசியது. இந்த முறை நிச்சயமாக என் வாய் அசையவில்லை. “நீ யாரு” என்று கேட்டுவிட்டு நான் சிரிக்க ஆரம்பித்த நொடியிலேயே நிழலும் சேர்ந்து கொண்டது. சுவற்றின் அருகில் சென்று என் கையை நீட்டினேன், நிழலிடம் அசைவில்லை. தோளைத் தொடும்போது சுவற்றை தான் உணர்ந்தேன். என் கையை நீட்ட, நிழலின் கரமும் என்னை நோக்கி வந்து, கைகுலுக்கிக் கொண்டோம்.

என் மனநிலையை குறித்த சந்தேகம் இந்நேரம் என்னுள் எழுந்திருக்க வேண்டும், ஆனால் நான் என் நிழலின் வருகையை இயல்பாக ஏற்றுக் கொண்டேன். இந்த அசாதாரண ஆண்டில் எதுவும் நடக்கும் என்ற திடீர் ஞானத்தினால் அல்ல. ‘வாழ்வை பற்றி கற்று கொடுத்த ஆண்டு’ என்று இந்த வருடத்தைப் பற்றி பலர் சொல்கிறார்கள். நான் எப்போதுமே யதார்த்தம் குறித்த கேள்விகளும், சந்தேகமும் கொண்டவனாகத் தான் இருந்திருக்கிறேன், மீமெய்யியம், மாற்று மெய்ம்மை போன்றவை எனக்கு அணுக்கமான, நான் நம்பக் கூடிய உணர்வு நிலைகளாகவே இருந்துள்ளன.

‘எப்படி திடீர்னு உனக்கு உயிர் வந்தது’ என்று மட்டும் மட்டுமே கேட்டேன். என் வயதைச் சொல்லி அத்தனை வருடங்களாக வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறேன் என்று சொன்னது நிழல். (என் நிழலை, ‘அது’, ‘சொன்னது’ என்று குறிப்பிடுவது சரியா, ‘அவன்’, ‘சொன்னான்’ என்று மாற்றலாமா, நான் தானே அவன்? போன்ற கேள்விகள் இதை எழுதும் போது குழப்பின. என் பிம்பம், மறுபடிவம் என்று சொல்லலாமா என்று யோசிக்க ஆரம்பித்தேன். பதில் கிடைக்க காத்திருந்தால் எழுதி முடிக்க மாட்டேன் என்று உணர்ந்ததாலும், என் நிழல் கோபம் கொள்ளாது என்ற நம்பிக்கையாலும் இந்த புனைவில் அஃறிணையிலேயே குறிப்பிடலாம் என்ற முடிவுக்கு வந்தேன்). ‘அப்ப ஏன் இவ்ளோ நாள் பேசலை’ என்று கேட்டதற்கு ‘யூ டின்ட் லிசன்’ என்ற பதில் வந்தது. தொடர்ந்து ‘நான் எங்கேயிருந்து வந்தேன், எப்படி இங்கிலீஷ் பேசறேன்னு யோசிச்சிட்டிருந்தேன்னா, என்கூட பழகும் அனுபவம் உனக்கு கிடைக்காது, புனைவு தருணத்தை மிஸ் பண்ணிடுவ… கோ வித் தி ப்ளோ’ என்று நிழல் சொன்னது சரியன்று தோன்றியதால் ஒப்புக்கொண்டேன். (இதைப் புனைவாக எழுத வேண்டும் என்று நான் ஆழ்மனதில் அப்போதே எடுத்திருந்திருக்கக் கூடிய முடிவையும், கதையை எழுத நான் படும் பாட்டையும் என் நிழல் அறிந்திருக்க வேண்டும்)

‘கீழ போறேன் வரியா’ என்றதற்கு தலையாட்டியது நிழல். ‘மத்தவங்க உன்னை எப்படி பார்ப்பாங்க’

‘எப்பவும் போலத்தான், உனக்கு மட்டும் தான் நான் பேசறது கேட்கும்’
‘அப்ப ஜாக்கிரதையா இருக்கணும், இல்லைனா தனியா பேசிட்டிருக்கான்னு சொல்லிடுவாங்க’

‘இப்பவே உன்னை பத்தி அப்படி…’ என்று நிழல் முணுமுணுத்ததை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாததற்கு காரணம், அடுத்து என்ன செய்வது என்று நான் யோசிக்க ஆரம்பித்திருந்தது தான். ‘என் நிழலும் என்னை கைவிட்டது’ என்று எனக்கு மிகவும் பிடித்தமான குரு தத்தின் பாடலில் வரியொன்று உண்டு. எனக்கோ உயிர் பெற்ற நிழல் கிடைத்துள்ளது. ஒருவருக்கு அவருடைய நிழல் உதவவில்லை என்றால் வேறு யார்தான் உதவுவார்கள். சரியான முறையில் இனி உபயோகப்படுத்த வேண்டும். கடைக்கு அதை அனுப்பி எந்த செலவும் இல்லாமல் பொருட்களை கொண்டுவரச் செய்யலாம், ஏடிஎமுக்கு அனுப்பி பணம் எடுத்துவரச் சொல்லலாம். மாய மனிதனாக மற்றவர்களை அவர்களறியாமல் கவனிக்க வேண்டும் என்பது என் சிறுவயது கனவுகளில் ஒன்று.

‘நீ என்ன கிரிமினல் ஆக்கிடுவே போலிருக்கே’ என்றது நிழல்.

‘ஏன்’

‘என்னால மத்தவங்க பெட்ரூம்ல எட்டி பார்க்க முடியாது’

‘பொய் சொல்லாத, என்னோட எல்லா ஆசைகளும் உனக்கும் இருந்து தானே ஆகணும். ப்ளஸ் நான் எங்க பெட்ரூம் பத்தி யோசிச்சேன், நீயே தானே அதை சொல்றே’ என்று நான் கூறியதற்கு நிழலிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இந்த விஷயத்தை பிறகு பார்த்து கொள்ளலாம், சிறியதாக ஆரம்பிப்போம் என்று முடிவு செய்தேன்.

ஒரு மாதமாக கடைகளுக்கு செல்ல ஆரம்பித்திருந்தாலும், என் ‘பரனோயா’ என்னை விட்டு முழுதும் நீங்கவில்லை. எனவே நிழலை அனுப்பினேன். அது ரெண்டு மூன்று முறை சென்று வந்தபின், பரனோயா புதிய சந்தேகத்தை எழுப்பியது. ‘நீ பாதிக்கப்பட சான்ஸ் இருக்கா, அப்படி ஆச்சுனா எனக்கும் தொத்திக்குமா’ என்ற கேட்டதற்கு ‘தெரியலை, நீ சொல்ற மாதிரி கூட நடக்கலாம். ரிஸ்க் எடுக்க வேண்டாம்’ என்று விட்டு மாஸ்கை வெளிச்சத்தில் வைத்து அதன் நிழலைக்கொண்டு தன் முகத்தை மூடிக்கொண்டது என் நிழல். நிழல் எப்படி என் உருவம் கொள்கிறது, நிழல் நானாக கடைக்கு செல்லும் போது நேரத்தில் நான் யாராக இருக்கிறேன், அப்போது நிழலில்லாமல் இருக்கும் ‘என்னை’ என் குடும்பத்தினர் கவனிப்பதில்லையா போன்றவற்றை குறித்தெல்லாம் நான் யோசிக்க விரும்பவில்லை.

இவை அனைத்தும் இப்போது நிஜத்தில் நடப்பவை, இவற்றை அப்படியே நினைவில் பதிவு செய்வதை மட்டுமே செய்ய விரும்பினேன், அப்போது தானே யதார்த்தம் குறையாத இந்தப் புனைவை எழுத முடியும்.

பிரச்சனைகளும் இல்லாமல் இல்லை. மேகங்கள் சூழ்ந்தாலோ, மழை பெய்தாலோ நிழல் வலுவிழந்து விடும், அதை உற்சாகப்படுத்தி வேலை வாங்க வேண்டும். இது சிறிய விஷயம் தான், பூதாகரமான சிக்கல் விரைவில் எழுந்தது. இருள் குறித்து எந்த நேர்மறை/எதிர்மறை அபிப்பிராயங்களும் இல்லாதவன் நான். அதை தவிர்க்க முடியாத, ஒன்றாக எண்ணி வந்திருந்தேன். இப்போது இருளிலும் என் படுக்கையறையில் என் நிழல் அங்கு நடப்பதை கவனித்துக் கொண்டிருக்கிறது என்ற உணர்வு முதலில் கிளர்ச்சியை தந்து பின்பு ஒவ்வாமையாக மாற ஆரம்பித்து, முயக்கத்தில் என் ஈடுபாட்டை குறைத்தது. சீக்கிரமே தூங்கிவிடுவதாக எத்தனை நாள் நடிக்க முடியும், என் மனைவிக்கு என்னை குறித்த சந்தேகம் எழுவதாக எனக்கு தோன்ற ஆரம்பித்தது. இதை இனி இப்படியே விட முடியாது. தீர்வு எளிதான ஒன்றாக இருந்தது. என் மனைவியின் நிழலை கவருமாறு என் நிழலுக்கு அறிவுரை தந்தேன். உண்மையைச் சொல்லப்போனால், என் பள்ளி நாட்கள் முழுதும் ஒரு வார்த்தை கூட பேசாத உமா மீது பதின் பருவ ஆசைகளை உருவாக்கி, அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத என்னை விட, என் நிழல் என்னை விட மிக ஆளுமை மிக்கதாக விளங்கியது, இப்படியெல்லாம் பெண்கள் மகிழுமாறு பேச முடியும், நட்பு கொள்ள முடியும் என்பது தெரிந்தது. நிழலை நான் எதுவாக ஆக முடியாதோ, அவற்றின் மறுபடிவமாக உணர ஆரம்பித்தேன். விரைவில் என் வீட்டில் இன்னொரு ஜோடி உருவாகியது. (நானே உமாவை ஒத்த நிழலொன்றை உருவாக்கி இணைத்து விடலாம் என்று நினைத்து பின் அதன் சாத்தியமின்மையை உணர்ந்தேன்)

இரண்டு வாரத்திற்குப் பின், இன்னும் சில நிழல்களை தன் குழுவில் இணைத்துக் கொண்டுள்ளதாகவும், ஆனால் அதனால் எனக்கு எந்த பிரச்சனையும் வராது என்றும் எல்லா நிழல்களும் அவரர் வீட்டிலேயே வசிக்கும் என்றும், இருவரும் மட்டுமே இருப்பதால் உருவாகும் சலிப்பை தவிர்க்கவே இந்த ஏற்பாடு என்றும் நிழல் என்னிடம் கூறியது. ஒப்புக்கொண்டவன், ஓரிரு நாட்களுக்குப் பின்தான் என்ன நடக்கிறது என்று கவனிக்க ஆரம்பித்தேன். நிழல் சொன்னது பொய். இரண்டாம் தளத்தின் ரமேஷின் நிழலும், என் தளத்தில் வசிக்கும் ரேவதியின் நிழலும் குலவும் காட்சிகள், கையறு நிலையில் அவர்களை பார்த்தபடி இருக்கும் அவற்றின் கணவன்/மனைவி நிழல்கள். (அவர்களிருவரையும் ஒன்றிணையச் சொல்லலாமே என்று என் நிழலிடம் நான் சொன்னதற்கான பதில் அதன் பார்வையிலேயே கிடைத்தது). சில நாட்கள் கடந்த பின் முதல் தள வனிதாவின் நிழல் தன்னுணர்வு கொண்டுவிட்டதா என்று கேட்டேன். என் தந்திரத்தை புரிந்துகொண்ட நிழல்

‘ரமேஷ், ரேவதி நிழல்கள் செய்வது அதுங்களோட விருப்பம், அதுக்காக நானும் அப்படியே இருக்க முடியாது’, என்றது.

‘இல்ல வனிதாக்கு என்ன…’

‘ஐ ஆம் நாட் நாட் இன்ட்ரஸ்ட்டட்’

‘சரி வேற யாரையுமே புடிக்கலையா’ பதில் எதுவும் சொல்லவில்லை.

நிழலைக் குற்றம் சொல்ல முடியாது, என்னுடைய தைரியமின்மை மற்றும் கையாலாகாத்தனம் அப்படியே அதற்கும் வாய்த்துள்ளது. அபார்ட்மெண்ட்டில் இந்த வருடப் புத்தாண்டு விருந்தின் போது, வனிதா என்னிடம் பேசியதில் சமிக்கை உள்ளதாக உணர்ந்தவன், அதை குறித்து எதுவும் செய்யாமல் தானே இருக்கிறேன். எல்லா விஷயத்திலும் நிழல் என் மறுபடிவமாக இருக்காது என்பது எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

என் அபார்ட்மெண்ட்டிலிருந்து தெருவிற்கும் நிழல்களின் ராஜ்ஜியம் பரவ ஆரம்பித்தது. தெருவில் செல்லும் போது நிழல் இணை உலகொன்று இயங்கிக் கொண்டிருப்பதை பார்ப்பேன். அருகிலிருக்கும் வீட்டில் சங்கரின் நிழல் பேசிக்கொண்டிருக்க, அவர் என் அபார்ட்மெண்ட் மாடியில் மாஸ்க் அணிந்து கொண்டு நிழலில்லாமல் நடை பயிற்சி செய்து கொண்டிருப்பார். ரமேஷ், ரேவதியின் நிழல்கள் தழுவிக்கொண்டிருக்க, அவற்றின் நிஜங்கள் தங்கள் இணைகளுடன் பேசிக்கொண்டிருக்கும். பொது வெளியில் எந்த கூச்சமுமின்றி நிழல்கள் முயங்கித் திரிவது எனக்கு வியப்பைத் தரவில்லை, ஏனென்றால் தாங்கள் நிழல்களை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை என்னைத் தவிர யாருமே அறிந்து கொண்டது போல் தெரியவில்லை. (தனித்து உயிர் பெற்ற அனைத்து நிழல்களும் பெரியவர்களுடையது, குழந்தைகளின் உயிர்பெற்ற ஒரு நிழலைக் கூட காணவில்லையே என்று என் நிழலிடம் கேட்டதற்கு அதனிடம் பதிலில்லை)

முன்பு, இயந்திரங்கள் உலகை இன்னும் சில காலத்தில் ஆளப்போகும், ‘ஏ.ஐ’ வளர்ந்து கொண்டே இருக்கிறது போன்ற செய்திகளை படிக்கும் போது அவற்றை எளிதாக கடந்து விடுவேன். ஆனால் இப்போது நிழல்கள் உலகை ஆள தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆள ஆரம்பிக்குமோ என்று பயப்பட ஆரம்பித்தேன். இதுவரை நிழலுலகில் ரெண்டு மூன்று தெருக்கள் மட்டுமே உள்ளன, இனி நான் வசிக்கும் ‘நகர்’, அடுத்து இத்தகைய நகரங்களின் இணைப்பான ‘தொகுதி’, பின் நான் வசிக்கும் ஊர்/நகரம்/மாநிலம் (எனக்கு மூன்றுமே ஒன்றுதான்) இவையெல்லாம் நிழலுலகினுள் வருவதற்கு இன்னும் பலகாலம் பிடிக்கும் என சமாதானம் செய்து கொள்வேன்.

நிழலுலகின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும்-யாராலும் தேர்ந்தெடுக்கப்படாத – தலைவராக என் நிழல் இயங்க ஆரம்பித்ததை வியப்புடன் பார்த்தேன். எதையும் தானாக முன்சென்று நடத்தும் குணம் எனக்கில்லையே? நிழலுலகின் சட்டங்களை இயற்றும் போது நம்முலகை அப்படியே பின்பற்ற வேண்டாம் என்று மட்டும் நிழலிடம் சொல்லி வைத்தேன். (நிழலுலகு என்பது குற்றம் புரிபவர்களின் உலகை சுட்ட உபயோகப்படுத்தப்படுவது என்பதால் அதைத் தவிர்க்க எண்ணினாலும், உருவாகிக் கொண்டிருக்கும் இந்த உலகமும் அதன் பரிணாம வளர்ச்சியில், குற்றங்களுக்கான விளைநிலமாக மாறிவிடும் என்பதால் அது பொருத்தமான வார்த்தை தான் என்ற முடிவுக்கு வந்தேன்)

நிழலுலகம் பெரிதாக பெரிதாக, என் நிழல் வீட்டில் செலவிடும் நேரம் குறைய ஆரம்பித்தது. வெளியே என்ன செய்கிறாய் என்று கேட்பது அநாகரீகம் என்று நான் முதலில் நினைத்தாலும், என் நிழலின் அந்தரங்கம் என்னுடையதும் தானே, எனக்குத் தெரியாத என்னுடைய அந்தரங்கம் என்று ஒன்று எப்படியிருக்க முடியும் என்று எனக்கான காரணத்தை உருவாக்கி என் நிழலிடம், அது எல்லாவற்றையும் என்னிடம் சொல்ல வேண்டும் என்று வற்புறுத்த ஆரம்பித்தேன். என் உலகிற்கு எதிராக சதித் திட்டம் தீட்டுவதற்காகத் தான் தனியாக செல்கிறது என்று எனக்குத் தோன்ற, அது வெளியே செல்லும்போது நானும் பின்தொடர்வேன், ஆனால் லிப்டில் இறங்கி முடிப்பதற்குள் நிழல் என்னை தவிர்த்துவிட்டு தப்பிவிட, என் சந்தேகம் ஊர்ஜிதமாகும்.

அபார்ட்மெண்ட் குடியிருப்புவாசிகளைப் பார்க்கும் போது, இவர் நிஜமா அல்லது நிழலா என்ற கேள்வி எழும், தங்கள் நிஜங்களின் இடத்தில் தங்களை பொருத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டனவா நிழல்கள்? நானே கூட என் நிழலாக இருப்பேனோ, என்று எனக்குத் தோன்றிய அன்று நிலைமை விபரீதமாக ஆகிக் கொண்டிருப்பதை உணர்தேன். நிழலை ஒழித்து விடுவதாகவும் அதற்காக என்னையே அழிக்கத் தயாராக இருப்பதாக அதனிடம் கூறினேன். நான் உனக்கு எதிராக எப்படி செயல்படுவேன், உனக்கு தீங்கு ஏற்பட்டால் அது எனக்கும் தானே பாதிப்பு, நான் தனியாக செல்வது ஏனென்றால் நாமிருவரும் ஒரே வார்ப்பு தானென்றாலும், எனக்கான உலகத்தில் தானே நான் இயல்பாக இருக்க முடியும் என்று என் நிழல் என்னிடம் அன்று பலமுறை இறைஞ்சிக் கூறிய பின்தான் மனதளவில் சமநிலையை அடைந்தேன்.

அதுவும் சில நாட்களுக்குத் தான். எனக்கு வாய்க்காத, நான் அறிந்திராத இன்பங்களை என் நிழல் நுகர்ந்து வருவதாக உறுதியாக நம்ப ஆரம்பித்தேன். நிழலுலகின் களியாட்டங்கள் என்று நானே உருவாக்கும் கற்பனைகளில் திளைத்து, பின் அதிலிருந்து மீண்ட பின் என் இயலாமை குறித்த கழிவுணர்ச்சி கொள்வேன். நம்முலகம் எந்தச் சுவையோ, சுவாரஸ்யமோ அற்றதாக மாறியது. இங்கு வாழ்வதற்காக என்னையே வெறுக்க ஆரம்பித்தேன்.

மற்றொரு முன்மாலை பொழுது. காலையிலிருந்து பெய்து கொண்டிருந்த மழை நின்றிருந்தது. மாடிக்குச் சென்றவன், என் நிழல் என்னுடனில்லை என்பதைக் கவனித்தேன். மழைக்குப் பின்னான அடர் மஞ்சள் நிற சூரிய ஒளியில் யாருமில்லாத தெருவைப் கண்கள் கூசப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கும் படர்ந்திருந்த பொன்னிறம் கருமை கொள்ள ஆரம்பித்தது. அருகிலிருக்கும் எல்லா வீடுகளின் சுவற்றிலிருந்து நெளிந்து இறங்கும் நிழல்கள். தனி உடல்களாகக் குழைபவை ஒன்றுடன் ஒன்று இணைகின்றன. களிப்பின் பேரோசை, முயக்கத்தின் மணம். இந்த உலகும் என்னுடையது தானே? சங்கமித்த நிழல்கள், சாலையில் தார் போல் உருகி வழிகின்றன. தளும்பும் கார்கடல். அதில் கடையப்பட்டுக் கொண்டிருக்கும் அமுதமும் எனக்காகத் தானே? மாடிச்சுவற்றின் மீதேறினேன்.

***

காலத்துகள்

தொடர்ந்து கதைகளை சொல்வனம், பதாகை ஆகிய இதழ்களில் கதைகள் எழுதி வரும் இவரது முதல் நூல் “இயர் ஜீரோ” நாவலாக வெளிவந்துள்ளது. ஆசிரியர் தொடர்புக்கு – ajay.78.r@gmail.com

ஸ்டேட்யூ ஆஃப் லிபர்டி

0

கன்னடத்தில்: கனகராஜ் பாலசுப்பிரமணியம்                                   

தமிழில்: கே.நல்லதம்பி

(Bronze Medal in short story competition – By Gulbarga University, Karnataka)

எம்பைர் பில்டிங் திரும்பத் திரும்ப கண்முன் வருவது ஏனென்று தெரியாமல் ஸ்மிதா எழுந்து உட்கார்ந்தாள். நான்காம் மாடியின் சன்னலிலிருந்து வீசிய நியூயார்க்கின் குளிர்காற்று அவள் முகத்தைத் தீண்டிக் கடந்துபோனது. ஒருநொடி கண்மூடி வெகுநாளைய தன் கனவுகளை நினைத்துக் கொண்டாள். ஆம்… என்ன என்று நினைத்தேன்…? அமெரிக்கா சென்றடைந்ததும் “நூறு ஜன்மத்திற்கும்…” என்ற சினிமாப் பாடலைப் பாடவேண்டுமன்றல்லவா – என்று மெல்லப் பாடத் தொடங்கினாள்.

அது ஒரு காதல் கீதம். இந்தப் பாட்டில் வருவது போலத்தானே அவன் சொன்னது…. திருமணத்திற்கு முன்பு!

திருமணம் முடிந்ததும் அனைத்தும் கரைந்து விட்டதா? அன்பு – காதல் என்று அவன் எவ்வளவு கதை அளந்தான் அப்போது!? ஆனால் இன்று…!? எப்படிப்பட்ட சிரமங்களைக் கொடுக்கிறான்! இல்லை… இனி என்றும் அவனோடு வாழமுடியாது… டிவோர்ஸ் ஒன்றுதான் தீர்வு. என்மீது அன்பு செலுத்துபவர்கள் உலகில் யாருமில்லையா!? கிஷோரி அமோன்கர் இருக்கிறாரே… அவர் பாடல்களைக் கேட்டுக்கொண்டே வாழ்ந்து விடுவோம்….. பிள்ளைகள்!? அவனே வளர்க்கட்டும், நான் எதற்காக வளர்க்க வேண்டும்? வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் பாழாய்ப் போனவர்கள் என் பெயரையா சொல்வார்கள்!? கண்டிப்பாக இல்லை… பிறகு நான் எதற்கு அவர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும்? அப்படிப் பார்க்கப் போனால் இந்த உலகத்தில் யாரும் யார்மீதும் அன்பு செலுத்துவதில்லை…. தங்கள் மீது தாங்களே அன்பு செலுத்திக் கொள்கிறார்கள்! ஆம் நான் சுதந்திரமாக இருக்க வேண்டும்…. நான் விரும்பியபடி வாழவேண்டும்…. யாரோ விரும்புகிறார்கள் என்று நான் எதற்கு அவர்களது ஆசை விருப்பங்களுக்கு பலியாக வேண்டும்….!?

ஸ்மிதா கைபேசியை எடுத்தாள். அவளுடன் வேலை செய்யும் அம்ருதாவின் அழைப்பு அது. அன்று சனிக்கிழமையானலால் மார்க்கெட்டிற்குப் போகத் தேவையில்லை. ஸ்மிதா வேலை செய்யும் டி.கே.எஸ். சாஃப்ட்வேர் சல்யூஷன்ஸ் கம்பனி பத்துப்பேர் குழுவை அமெரிக்காவுக்கு இரண்டு வாரங்களுக்கு மட்டும் அனுப்பியிருந்தது. நியூஜெர்சியில் தங்கியிருந்த ஸ்மிதாவுடன் பணி செய்பவர்கள் எல்லோரும் அன்று நியூயார்க்கைச் சுற்றிப் பார்க்கப் போவதாக இருந்தது. அவர்களுடன் தங்காமல் தனியாக லியாட்டின்னோக்கள் வசிக்கும் நியூயார்க்கின் பிராங்க்ஸ் பகுதியில் தங்கியிருந்த ஸ்மிதாவுக்கு அவர்களுடன் போக விருப்பமில்லை. அலுவலகம் கொடுத்த பணத்தை மிச்சம் பிடிக்கவும் இந்திய உணவகங்களுக்காகவும் அவர்கள் நியூஜெர்சியில் தங்கினால் இவள் மார்டின் ஸ்கார்செஸியின் சினிமாக்களில் வரும் பகுதியிலேயே தங்கவேண்டுமென்று லிட்டில் இத்தாலியில் தங்க முயன்று தோற்றுப்போய் முடிவில் ஸ்பானிஷ் மொழியைக் கேட்கும் ஈர்ப்பில் பெங்களூரில் இருக்கும்போதே ஏர்பியென் இல் அறையொன்றை பதிவு செய்திருந்தாள். அவளுடன் வேலை செய்பவர்களுக்கு இருந்த நியூயார்க்கின் புகழ்பெற்ற இடங்களைப் பார்க்கும் இச்சை இவளுக்கு இல்லை. மாறாக, நியூயார்க்கின் வெளிப்புறக் காடுகளையும், நகரத்தின் வெளிபகுதியில் ஓடும் நதியின் நிலப்பகுதியையும், முக்கியமாக மார்டின் ஸ்கார்செஸி காட்டும் உண்மையான நியூயார்க்கைப் பார்க்கவேண்டும் என்பதே இவளின்  தீவிரத் துடிப்பு.

“ஐ ஹேவ் ஸம் அதர் பிளான்ஸ் மிஸ் அம்ருதா… யூ கைஸ் கேரி ஆன்” என்று கைபேசி அழைப்பைத் துண்டித்து குளிக்க எழுந்தாள். எழும்போது ஏனோ மனம் குழம்பியது. எங்கே போவது என்ற உறுதியான திட்டங்கள் எதுவும் இவளுக்கு இருக்கவில்லை. எங்கே போவது என்று கூகுள் செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. இந்த வீட்டு எசமானி லியாட்டினோ; அவளைக் கேட்கலாமா என்று தோன்றியது. அமெரிக்கர்களைப் போல அல்ல அவள், தன்னுடைய எல்லா விஷயங்களைப் பற்றியும் அக்கறையுடன் கேட்கிறாள். இந்த நான்கு நாட்களிலேயே அவள் எனக்கு நெருங்கிய தோழியானாள். ஏர்பியென் இல் பதிவு செய்யும்போது ஸ்மிதா மிகவும் எச்சரிக்கையுடன் ஹோஸ்ட்டைத் தேர்ந்தெடுத்திருந்தாள். அந்த லியாட்டினோ திட்டவட்டமாகச் சொல்லியிருந்தாள் பெண்களுக்கு மட்டுமே அறையை வாடகைக்குக் கொடுப்பது என்று. அதனால்தான் இவளுடைய இந்த அபார்ட்மென்டைத் தேர்ந்தெடுத்தது. எவ்வளவு அன்புடன் கவனித்துக் கொள்கிறாள்….. அவளே காலையில் பலகாரம் செய்து கொடுக்கிறாள்….. அது ஏதோ ல்யாட்டின் உணவு…. இரவு சோறு சமைத்து வைக்கிறாள்….. ல்யாட்டினியர்கள் சோறு உண்பார்கள் என்பது தனக்குத் தெரிந்ததே இங்கே வந்த பிறகுதான்! கஞ்சிபோல இருந்தாலும் ஒரு மாதிரி நன்றாக இருக்கும். ஆம் இவள் திருமணம் செய்து கொள்ளவில்லையா!? கேட்க வேண்டும்….. அல்லது லெஸ்பியனா!? அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கை, திருமணங்களுக்கு தடை இல்லையே…. ச்சே… அது எப்படி பெண்ணும் பெண்ணும் படுப்பது…. ஓ…. எத்தனை ஸ்பானிஷ் படங்களில் பார்த்ததில்லை….. பெண்ணும் பெண்ணும் இணைவது, வினோதமான இன்பத்தில் திளைப்பது! ச்சீ அதுவும் ஒரு வாழ்க்கையா! ஆனாலும் இவள் தனியாகத்தானே இருக்கிறாள்! அல்லது டிவோர்சியா? நான் ஏன் இவளைப் போல வாழக்கூடாது…. தனியாக?!

கிஷோரி ஆமோன்கரின் இந்துஸ்தானி வீடியோ ஒன்றை யூ-ட்யூப் போட்டுக் குளிக்கப் போனாள். கிஷோரி தோடி ராகத்தில் பாடிக்கொண்டிருந்தார். கைபேசிக்குள்….. ஸ்மிதாவின் மெய் மனதைக் குளிரவைத்துக் கொண்டிருந்த பாட்டு அது. தங்கள் மகள் பெரிய இந்துஸ்தானி சங்கீதக்காரியாக வேண்டுமென்று ஸ்மிதாவின் தாய் தந்தையர் அவளை இசைப்பள்ளியில் சேர்த்து இருந்தார்கள். தாரவாடத்து அந்த இசை ஆசிரியருக்கு இந்துஸ்தானி இசை என்றால் உயிர். அதிலும் மராட்டாவாடா இசைக் கலைஞர்கள் என்றால் மிகவும் விருப்பம். அவர் வழியாகவே ஸ்மிதாவுக்கு கிஷோரியின் பாட்டுக்கள் அறிமுகமானது. கல்லூரிக்கு வந்த பிறகு இசையை முறைப்படிக் கற்பதை விட்டிருந்தாலும் அவளுக்கு இசை என்றால் ஏதோ ஈர்ப்பு! அதிலும் கிஷோரி அமோன்கர் பாட்டுக்களைக் கேட்பதென்றால் அபரிமிதமான உற்சாகம்; அவர் வாழ்க்கையைப் பற்றி கேட்டு, படித்து தெரிந்துகொண்ட பிறகு ஸ்மிதாவுக்கு அவர் என்றால் உயிரானது. இந்திய மரபு இசை, நாட்டியம் தேவதாசியர்களின் பங்களிப்புத்தானே என்று தோன்றியிருந்தது. அதைக் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற அவள் விருப்பம் இ அண்ட் இ பொறியியல் முடித்து எம்.பி.ஏ படிப்பில் முடிந்தது. அப்படி இருந்தும் கிஷோரியின் குரல் அவளை விட்டுப்போகவில்லை. வருத்தத்தில் இருக்கும்போதோ அல்லது சும்மா இருக்கும்போதோ அவர் பாட்டுக்களைக் கேட்டுக் கொண்டிருப்பாள். மகிழ்ச்சியாக இருக்கும்போது மட்டும் ஹாலிவுட் சினிமாக்கள்! அந்த சினிமாவில் வரும் “சீன்” களால் ஊக்கமடைந்து சிலசமயம் கணவனைக் கீழே தள்ளி ஏறி உட்கார்ந்ததும் உண்டு. அவன் “என்னால் முடியாது எழுந்திரிடி” எனனும் அளவுக்கு உணர்ச்சிகரமாக ஈடுபடுவாள். ஆனால் தற்போது அவள் அவனைத் தொட்டு வருடமாயிருக்க கூடும்! அந்த இச்சையும் இப்போது வருவதில்லை. திருமணமாகி பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. மூன்று பிள்ளைகள்…. இந்த ஒன்றரை ஆண்டில் இதுதான் முதல்முறை, இப்படி நாங்கள் இருவரும் சேராமல் மாதங்களைக் கடந்தது. தகராறுகள் வாரத்தில் மூன்று நான்கு நாட்கள் இருக்கும். ஆனால் அவை ஒரு நல்ல மதியம் அல்லது இனிமையான மாலை நேரத்தின் ஒரு அழகான சேர்க்கையில் முடிவு காணும். அந்த சேர்க்கை எப்படி இருக்குமென்றால், இவ்வளவு தீவிரமாக இதுதான் முதல்முறை” என்று இருவரும் மல்லாக்காகப் படுத்து பெருமூச்சு விடுமளவுக்கு!

ஸ்மிதா மெட்ரோவில் உட்கார்ந்திருந்தாள். லிட்டில் இத்தாலியின் :”காட் ஃபாதர்” ரெஸ்டாரண்டுக்குப் போய் ஒரு காஃபி அருந்தி பிறகு யோசிக்கலாம். எங்கே போவதென்று பிறகு யோசிக்கலாம் என்று மெட்ரோ ஏறினாள். உட்கார்ந்த முதல் கண்ணுக்குள் எம்பையர் கட்டிடம் மீள மீள வந்தது….. எதற்கு இப்படி!? புதியதாக நியூயார்க் வருபவர்கள் பார்க்க விரும்பும் அந்த மாபெரும் கட்டிடத்தைப் பார்க்க என் உள்மனது விரும்புகிறதா!? போய் விடலாமா….. நம் நாட்டைப் போலவே இங்கேயும் ரயிலுக்குள் பிச்சை கேட்டு வருகிறார்கள். யார் சொன்னது அமெரிக்காவில் பிச்சை எடுப்பவர்களே இல்லையென்று! அமெரிக்காவைப் பற்றி நமக்கு எத்தனை பிரமைகள்! ஸ்பீக்கரில் பாட்டைப்போட்டு ஆடிக்கொண்டே காசு கேட்பவர்களும் இருக்கிறார்களே இங்கேயும் என்று நினைத்து வியப்படைந்தாள். கருப்பு இனத்தவர்களே அதில் அதிகம். ஏன் இப்படி! அமெரிக்கா ஒரு பணக்கார நாடல்லவா! வானுயரக் கட்டிடங்கள், அலறும் கார்கள்…. ஹாலிவுட் படங்களைப் பார்த்து நாம் எவ்வளவு ஏமாந்து போயிருக்கிறோம்…. மார்டின் ஸ்காரெஸ்ஸியின் படங்கள் காட்டுவது இந்தவகை மனிதர்களைத்தானே!? அவனுடைய அதிகப் படங்களில் பக்கா லோகல் மக்களின் இன்ப துன்பங்கள்….. ஆனால் எத்தனை பொய்யான கதைகள் ஹாலிவுட் முழுதும்! அந்தக் காரணகளுக்காவே தனக்கு ஸ்கார்ஸேஸ்ஸி விருப்பமாகிறானோ….   ஸ்கார்ஸேஸியை எனக்கு அறிமுகப் படுத்தியது ரஷ்மி. அவன் படங்கள் என்றால் அவளுக்கு உயிர். சினிமா டைரக்டர் ஆகவேண்டும் என்று நினைத்தாள்….. பாவம்! திருமணமாகி தன்னைப் போலவே ஏதோ கம்பனியில் குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறாள். அட, இந்தக் கிழவனைப் பாருங்கள்….. அச்சுப்போல நம் நாட்டு பிச்சைக்காரக் கிழவனைப் போலவே தெரிகிறான்! அட, இவன் வெள்ளை அமெரிக்கன்! என்ன சிரமமோ என்னமோ! பிள்ளைகள் யாரும் இவனைப் பார்த்துக் கொள்வதில்லையா! சுமார் 70 வயதிருக்கலாமோ!? சுருக்கம் விழுந்த முகம். ஆங்கிலத்தில் பாட்டொன்றைப் பாடுவதைப் போலவே எதையோ சொல்லிப் பிச்சை எடுக்கிறானே! கிஷோரி அம்மையின் ஒரு ராகத்தைப் போலவே கேட்கிறது… எதைக் கேட்டாலும் எனக்கு அவர் பாடுவதைப் போலவே தோன்றுகிறது… ஆங்கிலத்தை இப்படி ஸ்ருதியில் கேட்பது இது தான் முதன்முறை…   என்ன சொல்கிறான் இந்த வெள்ளைக் கிழவன் ?

“என் மனைவியை  மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன். அவளுக்கு பிரெஸ்ட் கியான்சர். எங்களுக்குப் பிள்ளைகள் இல்லை. நான் ஒரு ஏழை பிளம்பர். வேலை செய்ய முடியவில்லை….. எனக்கு உதவுங்கள். என் மனைவியைக் காப்பாற்ற உதவி செய்யுங்கள், தயவு செய்து”

ஸ்மிதா பத்து டாலர் நோட் ஒன்றை எடுத்துக் அவனிடம் கொடுத்தாள். அவன் ஸ்மிதாவின் தலையைக் கோதி ”காட் ப்லஸ் யூ மை சைல்ட்” என சொல்லி முன்னே சென்றான். அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள் ஸ்மிதா. அங்கிருந்தவர்களைத் தள்ளிக் கொண்டு முன்னால் நுழைந்து கொண்டிருந்தான். மனைவி மீது எத்தனை அன்பு இந்தக் கிழவனுக்கு?! பிச்சை எடுத்தாவது தன் மனைவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற தீவிரமான தவிப்பு அவனுக்கு…… ஆஹா!

அவனது இன்னிசைக் குரல் ஸ்மிதாவின் மனதில் ஆழமாகப் பதிந்தது போல இருந்தது. அவனுடைய துயரக்குரலுக்கு இளகியவர்களில் ஸ்மிதாவையும் சேர்த்து அங்கு நான்கு பேர் அவ்வளவுதான்! ஸ்மிதாவுக்குக் கோபம், வருத்தம் எல்லாம் மொத்தமாக வந்து பல்லைக் கடித்துக்கொண்டு தொடைகளை இறுக்கி அமர்ந்தாள். அப்படி அமர்ந்ததும் இன்றைக்குத் தேதி என்ன என்ற ஆதங்கம் தொற்றி கைபேசியை எடுத்துப் பார்த்தாள். நவம்பர் 13…. மூன்று நாள் இருக்கிறது….. ஆனால் இந்த மாதம் விரைவில் ஆகிவிட்டால்! ஷிட்… நியாப்கின் போட்டுக்கொண்டு வந்திருக்க வேண்டும். இறங்கியதும் மருந்து கடைக்குப் போய் நியாப்கின் வாங்கி ஸ்டேஷன் வாஷ் ரூமுக்குப் போய் போட்டுக்கொள்ள வேண்டும். வெள்ளை ஜீன்ஸ் வேற போட்டிருக்கிறேன்……

கிராண்ட் சென்ட்ரல் டெர்மினலில் இறங்கி மருந்து கடையைத் தேடி நியாப்கின் வாங்கி வாஷ் ரூமுக்குப் போய் அதைப் போட்டுக்கொண்டு வந்தாள். டெர்மினல் நிறையக் கூட்டம்! அற்புதமான கட்டிடம். கலைநயமான டெர்மினல்! சுவர்களில் ஆங்காங்கே ஓவியங்கள்! அற்புதமான ஓவியங்கள்…. அவளுக்கு அங்கேயே இருந்து விடலாம் என்று தோன்றியது. லிட்டில் இத்தாலி, எம்பையர் கட்டிடம் மறைந்து இப்போது அவள் கண்களில் கிராண்ட் சென்ட்ரல் ஜ்வலிக்கிறது! அங்கே வகைவகையான மக்கள்! அவர்களுடைய சிறிய பெரிய நடைகள், பூட்ஸ் சத்தங்கள், சிரிப்புப் பேச்சுகள், மணம்….. நியூயார்க் நகரமே அங்கே மிதக்கிறதோ…. உறங்காத நகரமாம் இந்த நியூயார்க்…. ஏ…யெஸ்… இரவு முழுவதும் இந்த நகரத்தை மனம்போன போக்கில் சுற்ற வேண்டும்…. மெட்ரோ ஏறி இறங்கித் திரிய வேண்டும்…. இரவின் நியூயார்க்கைப் காண வேண்டும்! எப்படி இருந்தாலும் நாளை ஞாயிற்றுக்கிழமை! நாளை மறுநாள்தானே எக்ஸ்போ போகவேண்டும்…. அங்கே போய் என்னதான் செய்வது?  நம் கம்பனி ஆஃபர்களை அமெரிக்கக் கம்பனிகளுக்குச் சேர்க்க ஏதேதோ சர்க்கஸ் செய்ய வேண்டும்…. அந்தக் கம்பனி பிரதிநிதிகள் திருப்பும் நாக்கு தோல்களைப் பார்த்துக்கொண்டு வணிகம் செய்ய வேண்டும். அதே அலுவலகம், அதே வேலை…. அதே வீடு, அதே பிள்ளைகள்! இவைகளைப் பற்றி எல்லாம் வெறுப்பு ஏற்படக் காரணமான கணவன்! எவ்வளவு கட்டினாலும் முடியாத வங்கிக்கடன், திருமணங்கள், பண்டிகை, திதிகள்…. இவைகளுக்குத்தான் வாழ்க்கை கரைந்து போகிறது. இது போதாதென்று கணவனின் சொகுசு வாழ்க்கை…. போதும்போதும் என்றாகி விட்டது…… இந்தியாவுக்குத் திரும்பாமல் இங்கேயே தங்கிவிட்டால்….? பத்து ஆண்டுகளுக்கான பி 1 விசா இருக்கிறதே! ஆறு மாதத்திற்கொரு முறை இந்தியா போய்வந்தால் போதும்….. அல்லது திருட்டுத்தனமாக இங்கேயே தங்கிவிடலாமா…!? தன் படிப்பிற்கு கண்டிப்பாக இங்கே வேலை கிடைக்கும்….. சட்டத்திற்கு உட்பட்ட பணி கிடைக்காமல் போனால் என்னவாம், சட்டத்திற்கு புறம்பாக நியூஜெர்சியில் இந்தியர்களுடன் தலைமறைவாக வாழ்ந்துகொண்டு இருந்து விடலாமா…!? இந்தியா ஒரு அழுக்கு பிடித்த நாடு, அங்கே போகவே கூடாது!

வாஹ்! எவ்வளவு அழகு இந்த அமெரிக்கா….. இரவிலும் இந்த நாடு எப்படி ஜொலிக்கிறது. குளிர்காலம் இப்போதுதான் தொடங்குகிறது. டிசம்பரில் பனி கொட்டுமாம்! உடம்பைக் குடையும் குளிராம்! இருந்து பார்த்து விடுவோமா!?

மெட்ரோவில் தனக்குத் பிடிக்கும் நிலையங்களில் இறங்கி வெளியே போய் சுற்றிய ஸ்மிதா கே.எஃப்.சி-யில் ஃபிரைட் சிக்கன் தின்று கோலா குடித்து நியூயார்க்கை மனம்போல ரசித்தாள். இந்த இருளில் எம்பையர் கட்டிடத்தின் 63 வது மாடியில் நின்று பார்க்கும்போது இருட்டில் இந்த நகரம் எப்படித் தெரியும் என்று அங்கே போனவள் வாடிய முகத்துடன் டைம் ஸ்கௌயருக்குப் போய் அங்கே ஜொலிஜொலிக்கும் ஒளித்திரைகளைப் பார்த்து அசந்து போனாள். டிசம்பர் 31 ஆம் இரவு இந்த இடம் பூமியின் மீதான சொர்க்கம் என்று அவளுக்கு எங்கேயோ படித்த நினைவு! இப்போது நேரம் என்ன என்று பார்த்தாள். 12.45 நடு இரவு! வாஹ்…. எவ்வளவு இதமாக இருக்கிறது இந்த நேரம்! இந்தியாவில் இப்படித் தனியாக ஒரு பெண் நடுஇரவில் விருப்பம்போல கண்ட இடத்தில் அலைய முடியுமா!? அப்படித் திரிந்தால் அவளை நாம் வேறு  பெயரில் அழைப்போம். பெண்களுக்கு ஆசையே இருக்கக் கூடாதா!? குளிர்ச்சியான மௌன இருளில் ஊரைப் பார்க்க வேண்டுமென்று நம் பெண் ஒருத்தி வெளியே சென்றால் என்னவாகும்? பெண் தேகம் இருப்பதே அனுபவிக்க என்று நினைக்கும் நம் இந்திய ஆண்களுக்கு இப்படி நடுஇரவில்  பெண்ணொருத்தி தனியாகக் கிடைத்தால், முடிந்தது கதை….. “வர்றயா?” என்று கேட்டு சும்மாவா இருப்பார்கள்?! இழுத்துக்கொண்டு போய் கொன்றே விடுவார்கள்!

எந்தத் துணிச்சலில் விலைமாதுகள் நடுஇரவில் தெருவில் நிற்கிறார்களோ? பாவம்… பணத்திற்காக உடம்பை விற்கும் இழிவு நிலையில் வாழ்கிறார்கள்! ஆண்களின் காமவெறிக்கு தங்கள் மெய் மனங்களைக் கிடத்தும் அவர்கள் நம்மைப் போன்ற பெண்களை அபாயத்திலிருந்து காப்பாற்றுகிறார்கள்! அவர்களும் இல்லாமல் போனால் இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் பத்துக் கற்பழிப்புகள் வாடிக்கையாகிவிடுமோ! விலைமாதுகள் இல்லாத இந்திய வரலாறு உண்டோ!? தேவதாசி வழக்கம் பிறந்ததே ஆண்களின் விருப்பங்களைத் தணிக்கத்தானே!? ஆண்டவன் பெயரில் பெண்களை நியமித்து தேவைப்படும் போதெல்லாம் அவர்களை அனுபவித்த பணக்காரக்கள், கோயில் பூசாரிகள், ஊரின் காமுகர்கள் அந்தப் பெண்களுக்கு எத்தனை சிரமத்தைக் கொடுத்திருக்கலாம்! ஆண்கள் முன் தேவதாசியர்கள் பாடவேண்டும், நாட்டியமாட வேண்டும்…. அவர்கள் ஆடல்தானே இன்றைய பரத நாட்டியம்! தமிழ்நாட்டின் ஏதோ ஒரு கோவிலில் தேவதாசியர்கள் நடனமாடிய நாட்டியத்தை சிலர் ஹைஜாக் செய்து “பரதநாட்டியம்” என்று முறைப்படுத்தினார்களாம்….. இசையும் அப்படித்தானே இல்லையா…. ஓ! கிஷோரி அமோன்கர் அம்மையைப் பற்றி எத்தனை ஏளனச் சிரிப்பு, கதைகள்…. புல்ஷிட் இண்டியன் கல்சர்….. சீப் மிடில் கிளாஸ் வேல்யூஸ்! கிஷோரி அமோன்கர் எப்படிப்பட்ட அற்புதமான பாடகி!  இந்திய இந்துஸ்தானி இசையில் அழிக்க முடியாத பெயர்! அவருடைய மூலமும் தேவதாசி என்றுதானே சிலர் பேசிக்கொள்கிறார்கள்….. ச்சே, இருக்காது…. சரி, அப்படி இருந்தால்தான் என்னவாம்!?  

வாஹ்… உண்மையாகவும் டைம்ஸ்கௌயர் ஒரு சொர்க்கம்தான்! இரவையே வெட்கப்பட வைக்கும் மினுக்கு அவளுக்கு…. இதுதான் நியூயார்க் விலைமாதுகளின் மைய இடம் என்று எங்கேயோ படித்திருந்தேன்!? மார்டின் ஸ்காரஸ்ஸியின் “டேக்ஸி டிரைவர்” சினிமாவில் ராபர்ட் டி நீரோ இங்கேதானே செக்ஸ் வர்கர்ஸ்களை பிக்கப் செய்வது….. இவ்விடத்தில் தானே ஒருவன் பிராஸ்டிட்யூட் ஒருத்தியை தூக்கிப் போட்டுக்கொண்டு டெக்ஸிக்குள் தாவுவது…!? இந்த நேரத்தில் அந்த ராபர்ட் டீ நீரோ ஏன் வரக்கூடாது? வந்து என்னை அழைத்துக்கொண்டு போகக்கூடாது? நியூயார்க் முழுவதையும் தன் டேக்ஸியில் சுற்றிக்காட்டக் கூடாது!? வாடா ராபர்ட்…. ப்ளீஸ்….. உன் கதாநாயகியை ஏதோ “டர்டி சினிமா”வொன்றுக்கு அழைத்துப் போனாயே, அப்படி என்னையும் அழைத்துப்போ…… வா ராபர்ட்….. பிராட்வே தியேட்டர் ஒன்றுக்குப் போகலாம் வா….

ச்சே….. இதென்ன தவறான சிந்தனை!? நான் குடும்பப் பெண்! இப்படி தவறான பெண்களைப்போல யோசிக்கலாமா!? நோ, நெவர்…..

கணவனைத் தவிர யாரும் என் மனதில் வந்து போனதில்லையா!? அப்படி நடந்திருந்தால்தான் என்ன!? சமுதாயம் சொல்லும் எல்லைகளுக்குள் தான் ஒரு பெண் வாழ வேண்டுமா? தம் மனதுக்குப் பிடித்தவர்களுடன் போனால் என்ன தவறு? ஆண்கள் போவதில்லையா!? இந்த ஆண்கள் கோவாவுக்கு அடிக்கடி போவது எதற்கு என்று எங்களுக்குத் தெரியாதா என்ன!? பெண்களுக்கும் ஆசை, மனம் என்பது இருக்கின்றன…… பெண்களின் இச்சைகளுக்கு மட்டும் கடிவானம் போடும் இந்த சமுதாயம் ஆண்களுக்குப் போடுவதில்லை….. ஆண்களின் விருப்பங்களுக்கு எங்கே வேண்டுமென்றாலும் அங்கே பிராஸ்டிட்யூட்கள் கிடைக்கிறார்கள்…. புஷ்பா செய்வதுதான் சரி…. சலிப்பாக இருக்கும் போதெல்லாம் ஃபோன் போட்டு மசாஜ் செய்யும் பையன்களை வரவழைத்துக் கொள்கிறாள். ஸ்யாண்ட்விச் மசாஜ்களை எல்லாம் செய்துகொள்கிறாளாம்….. த்தூ…. அசிங்கமானவள்! எவ்வளவு நாள்தான் வீட்டுச் சாப்பாட்டையே சாப்பிடுவது….. சில நேரம் ரெஸ்டாரண்டுக்குப் போவதில்லையா. அப்படித்தான் என்கிறாள்…. பாழாப்போனவ….

“கென் யு டேக் மீ டு எல்லீஸ் ஐலேண்ட்?”

“தேர் வோண்ட் பி எனி ஷிப்ஸ் பை திஸ் டைம், மேம்….”

”ஐ ஜஸ்ட் வாண்ட் டு கோ தேர் அண்ட் வெயிட் தேர் டில் தே ஸ்டார்ட் ஷிப்ஸ்…”

”ஓகே… கெட் இன் தென்”

டேக்ஸி போய்க்கொண்டிருந்தது. எல்லீஸ் தீவுப் பக்கமாக… அந்தத் தீவில்தான் உலகப்புகழ் பெற்ற லிபர்ட்டி ஸ்டேட்யூ இருப்பது! கையில் தீப்பந்தத்தைப் பிடித்துக் கொண்டு நின்றிருக்கும் துணிவான பெண்! சுதந்திர ஆதிதேவதை! ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரமடைய நடத்திய போரில் அமெரிக்கா வென்று, சுதந்திர நாடான பேரடையாளத்திற்காக ஃபிரான்ஸ் அளித்த அன்பளிப்பு! அதன் முழு வரலாறையும் அங்கே போய்த்தான் தெரிந்துகொள்ள வேண்டும்…. விகிபீடியாவில் பார்க்கக் கூடாது….

ஸ்மிதாவுக்கு களை கூடியது! டேக்ஸிக்காரனைப் பார்த்தாள்….. மீண்டும் அவன் ஸ்காரஸ்ஸி யின் டீ நீரோவைப்போலவே தெரிந்தான். அவனைக் கேட்டுவிடலாமா!? இந்த நகரம் முழுவதையும் உன் டேக்ஸியில் சுற்றிக் காட்டுவாயா? உன் தோள் மீது தலைவைத்து நான் ஒரு நொடி கண் மூடலாமா!?

அவன் “ஐ ஆம் சாரி மேம்” என்று திரும்பிப் பார்க்காமலேயே போய்விட்டான். அப்படி நான் என்னதான் கேட்டு விட்டேன்!? விடியும்வரை என்னுடன் இங்கேயே இருக்க முடியுமா என்றல்லவா!? காலை படகுகள் தொடங்கும்வரை என்னுடன் இங்கே இருப்பாயா, மணிக்கணக்குப் பார்த்து டேக்ஸி பணத்தைத் கொடுக்கிறேன் என்றுதானே சொன்னேன்!? இதற்கு அவன் சம்மதிக்கவில்லையே….. ச்சே……. இந்தியாவாக இருந்தால் யாருக்காவது ஃபோன் செய்திருக்கலாம். இங்கே யாரை அழைப்பது…? என்னுடன் அமெரிக்காவுக்கு வந்திருக்கும் அலுவலக்காரர்களை அழைக்க விருப்பமில்லை…. டைம் பார்த்தாள்….. மூன்றே முக்கால்!

தொலைவில் தெரியும் சுதந்திர தேவதையை பார்த்துக்கொண்டே நின்றாள்…. மிகச்சிறப்பாகத் தெரிகிறாள்! அவளைச் சுற்றி மெல்லப் பறக்கத் தொடங்கிய பறவைகள்…. இரவு – பகல், குளிர் – வெயில்  பாராமல் துணிவாக நின்றிருக்கும் இவள் தன்னைப்போல எண்ணற்ற பெண்களுக்கு எவ்வளவு நம்பிக்கையையும் , துணிவையும் அளித்திருப்பாளோ!  அமெரிக்காவின் முழு ஸ்பிரிட் இவள்…. இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் எதை விரும்புகிறார்களோ அதைச்செய்ய முழுமையான சுதந்திரம் உள்ளவர்கள்! அறுபது வயதுக் கிழவனும் இங்கே கல்லூரியில் சேரலாம், குடும்பம், பிள்ளை குட்டிகள் என்ற பொறுப்புகள் இல்லாமல் நாம் விரும்பும்படி வாழலாம்… இந்த ஸ்டேட்யூ ஆஃப் லிபர்ட்டிக்குக் குளிராதா!? தன்னைப்போல ஆயிரமாயிரம் மக்களின் ஆசை விருப்பங்களை சுமந்து நின்றிருக்கும் அவளுக்குள் ஜீவன் ஒன்று கண்டிப்பாக இருக்கக்கூடும்! கண் சிமிட்டாமல், தலை அசைக்காமல் அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்மிதா! சுதந்திரப் பெண்ணின் கண்களைப் பார்க்க தவித்துத் திண்டாடிக் கொண்டிருந்தாள்.

கதிரவன் சிகப்பைச் சிந்தி வானம் முழுதும் சுதந்திர தேவதையை பரப்பிக்கொண்டிருக்கும் தருணத்தில் அவளுடைய நியாப்கினும் சிவப்பாவது அவள் அறிவுக்கு எட்டியது. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வயிறு கலங்கியது. காலையில் கிராண்ட் சென்ட்ரலில் நியாப்கின் போடாமல் இருந்திருந்தால்!?…. ஒரு நொடி நடுங்கினாள்.

தூங்கியே ஞாயிற்றுக் கிழமையைக் கழித்து மறுநாள் “எக்ஸ்போ” வுக்குப் போய் உட்கார்ந்திருந்தாள். தன்னுடன் வேலை செய்பவர்கள் கேட்ட, சொல்லிய கேள்வி பதில்களுக்கு சுவராக இருந்தவள் உடனே எழுந்து நின்று சன்னலைப் பார்த்தாள். எதிரிலிருந்த ஏழுமாடிக் கட்டிடத்தின் மேல் ஒருவன் நின்றுகொண்டு கீழே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் சாகத் தயாராகிக் கொண்டிருந்ததுபோலத் தோன்றியது. உன்னிப்பாக அவன் பக்கம் ஸ்மிதா பார்வையை நட்டாள். அது அவன்தான்! விழுந்தான்…. விழுந்தான்…. அட விழுந்துவிட்டான். ஸ்மிதா குனிந்து பார்த்தாள். தெருவில் அவன் உடல் விழுந்திருந்தது. போலீஸ்கார்கள் வேகமாக வந்து  மக்களை விலக்கி ஆம்புலன்சில் அவன் உடலை எடுத்துச் சென்றார்கள். நெஞ்சம் படபட என்று அடித்துக்கொள்ளத் தொடங்கியது ஸ்மிதாவுக்கு. அங்கே இருந்தவர்கள் எல்லாம் ஒருநொடி சன்னலில் நின்று பார்த்துவிட்டு திரும்பி வேலைக்குப் போனார்கள். ஆனால் ஸ்மிதாவுக்கு அவன் முகம் கண்முன் வந்துகொண்டே இருந்தது. தான் ஒருமுறை தற்கொலை செய்துகொள்ள முயன்றது நினைவுக்கு வந்தது. பயத்தால் உள்ளுக்குள்ளேயே கதறி அதிலிருந்து தப்பித்துக்கொள்ள பணிக்குள் கவனம் செலுத்தினாள். எந்த அளவுக்கென்றால், எதிர் கட்டிடத்திலிருந்து ஒருவன் விழுந்த நிகழ்வு நடக்கவே இல்லை என்பது போல்!

அப் டௌனிலிருந்து டௌன்க்குப் போகும் மெட்ரோ ஏறும்போதே அவன் நினைவுக்கு வந்திருந்தான். பிராங்க்ஸ் போக 25 நிமிடம் தேவை….. என்ன செய்வது! அந்த நினைவிலிருந்து தப்பித்துக் கொள்வது எப்படி! அந்த நிகழ்வை விடவும் அது சுமந்துகொண்டு வரும் நினைவுகளை நினைத்தாலே பயம்! கணவனின் கூரிய பேச்சு, அசிங்கமான நடத்தை, நோயால் அவதிப்படும் அத்தையின் முகம்…. பிள்ளைகளின் கத்தல்…. நிறைவேறாத தன் இசைக்கனவு….. தான் வாழ்க்கையில் தோற்றுவிட்டேனோ!? தன் வாழ்க்கையை பாதுகாக்கும் இசையின் பின்னால் போயிருக்கவேண்டுமா!? எவ்வளவு சிரமமாக இருந்தாலும் தனக்கு விருப்பமானதின் பின்னால் போயிருந்தால் கண்டிப்பாக இந்நேரம் சாதித்திருப்பேன். கிஷோரி அம்மா சாதிக்கவில்லையா?! தனிப்பெண்ணாக முன்னேறவில்லையா?! அதிகார சக்திகளுக்கு எதிர்  நின்று  இந்துஸ்தானி இசையின் அரசியாகவில்லையா!? விருப்பமில்லாமல் இருந்தாலும் இப்படி பணத்திற்காக வாழவேண்டுமா? யாருடையதோ தயாரிப்புகளை விற்க இப்படி நாடுகளைச் சுற்ற வேண்டுமா!? நானும் வாழ்ந்தேன் என்று பிள்ளைகளை உதிர்த்து நகை அணிந்து திரிந்து முடிவில் ஒன்றும் இல்லாமல் மண் சேரவேண்டுமா!? விருப்பமில்லாத வாழக்கையொன்றை வாழ்ந்து முடிவில் எல்லோரைப்போல இறந்து என்ன பலன்!? தனக்கு விருப்பமானதுபோல வாழ முடியவே முடியாதா?

மீண்டும் அதே இன்னிசை ஆங்கில சத்தம் கேட்கிறது…….. அதே கிழவன்?!

“என் பிள்ளைகளுக்கு பிரைன் ட்யூமர்…. இருவர் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். என் மனைவி இறந்து மூன்று ஆண்டுகளானது…. எனக்கு யாருமில்லை….. தயைகூர்ந்து உதவுங்கள்…… ஜஸ்ட் ஒன் டாலர்….. ப்ளீஸ்”

ஆம், அந்தக் குரல் கிழவனுடையதுதான்….. முந்தாநாள் என்ன சொன்னாய்?! என் மனைவிக்கு மார்ப்பு கியான்சர் என்று தானே!? இப்போது பார்த்தால் மனைவி இறந்து மூன்று ஆண்டுகள் ஆனது, தன் பிள்ளைகளுக்கு பிரைன் ட்யூமர் என்கிறாய், திருட்டுக் கிழவனே…. வா… நான் பத்து டாலர் கொடுத்தேனே… வரட்டும் கேட்டு விடுகிறேன்… வருகிறான்…  வருகிறான்…… அட…! இன்று காலையில்தான் அந்தக் கட்டிடத்தின் மேலிருந்து இந்தக் கிழவன் விழுந்து இறந்ததை பார்த்தேனே!? இப்பொழுது இங்கு வரும் ஆள் யார்? இறந்த கிழவன் வேரொருவனோ!? பார்த்தே விடுவோம்… டிரைன் நிற்கிறது….. ஏதோ ஸ்டாப் வந்தது…. இறங்கப் போகிறான், விடக்கூடாது….. திருட்டுக்கிழவன்! பத்து டாலரை திரும்பப் பெறவேண்டும்…. இப்படிபட்ட ஒரு கில்லாடிக் கிழவன் இந்தியாவில் போன மாதம் தன்னை ஏமாற்றியிருந்தான். வாழ்க்கையில் ஏமாந்தது போதும். இனி ரொம்பவும் உசாராயிருக்க வேண்டும்… டிவோர்ஸ் எடுத்து தனியாக வாழ நேர்ந்தால்…!?

டிரைன் கதவு மூடப்போகிறது அப்போது ஸ்மிதா வெளியே குதித்தாள். கிழவனின் சட்டையைப் பிடித்துத் தள்ளினாள். அவன் குப்புற விழுந்தான்.  விழுந்ததும் அவன் முதுகு மீது ஏறி ஸ்மிதா உட்கார்ந்தாள். எழுந்து அவனைத் திருப்பி மீண்டும் அவன் மேல் உட்கார்ந்தாள். அவன் முகத்தைப் பார்த்தாள், அதே கிழவன்! அட அதே முகம்…. இன்று அந்த ஏழுமாடிக் கட்டிடத்திலிருந்து விழுந்த அதே மனிதன்! சாகவில்லையா இவன்! அல்லது இது என் பிரமையா? கிழவனின் பிரேதமா!? சுற்றிலும் பார்த்தாள். மக்கள் இவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஓ! இது உண்மை! அவன் முகத்தை மற்றொரு முறை பார்த்து தன்னைக் கவனித்தாள்.

அவன் இடுப்பின் மீது உட்கார்ந்திருக்கிறேன்! அசல் இங்கிலீஷ் படங்களின் அந்த “சீன்”களைப் போல. உடம்பு சில்லிட்டது. அடிவயிறு இறுக்கியது. நியாப்கின் ஈரமானதுபோலத் தோன்றுகிறது.

அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு எழுந்தாள். வெட்கப்பட்டாள்.

ஒரு அமெரிக்க ஆணின் இடுப்புக்கு மேல் கால்களை அகட்டி உட்கார்ந்து விட்டேனே….. ச்சீ…..

“மன்னித்து விடுங்கள்” என்று கூறி ஸ்மிதா அவனுக்கு கைநீட்டினாள். அவன் படுத்துக்கொண்டே இவளைப் பார்த்தான்; இவள் உதவியால் அவன் எழுந்து நின்றான்.

ஸ்மிதாவைப் பார்த்து “ஆர் யூ அன் இண்டியன்?” கேட்டான்.

ஸ்மிதா ஆம் என்பதைப்போல தலையசைத்தாள்.

அவன் உதட்டை விரித்து “உங்களுக்கு கிஷோரி அமௌன்க தெரியுமா?” ஆங்கிலத்தில் கேட்டான்.

ஸ்மிதா ஸ்தம்பித்து நின்றாள்.

சிறிது நொடிகளே தேவைப்பட்டது, அந்த அதிர்ச்சியிலிருந்து அவள் வெளிய வர.

அந்த அமெரிக்க கிழவன் மௌண்ட் ஏடன் மெட்ரோ நிலையத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தான். ஸ்மிதா அவனிடம் ஓடினாள்.

அவன் படிகளில் ஏறிக்கொண்டிருந்தான்.

”இக்ஸ்க்யூஸ்மி, கிஷோரி அமௌன்கர் உங்களுக்கு எப்படித் தெரியும்?” மூன்றாம் படியில் நின்றிருந்தாள் ஸ்மிதா, இதை கேட்கும் பொழுது.

ஆறாம் படியில் நின்றிருந்த அந்தக் கிழவன் புன்னகைத்தப்படி “அவர் என்னுடைய சொந்தக்காரர்” என்றான்.

ஸ்மிதா பல்லிளித்தாள்.

அந்த அமெரிக்கக் கிழவனுக்கு சற்று கோபம் வந்தது. ஸ்மிதாவை முறைத்தபபடி “ஆம்… அவர் என் சொந்தக்காரர்தான். என் தாய் ஒரு அமெரிக்கா டேவ்டாசி” என்று கூறி திரும்பி படிகளை மிதித்து மேல் செல்லத் தொடங்கினான்.

ஸ்மிதா கல்லாய் நின்றாள்.  

***

கனகராஜ் பாலசுப்பிரமணியம்

சாம்பல் புள்ளி

1

கவிதைக்காரன் இளங்கோ

யானம்.

அதன் ஒற்றைப் பெரிய காம்பவுண்டுக்குள் இடுகாடும் சுடுகாடும் இடது வலதாகப் பிரிந்திருந்தது. வலது பக்கம் சற்றே உயரமான இடத்தில் சிமெண்ட் கூரை பாவிய ஐந்து எரிமேடைகள், நீளவாக்காக அடுத்தடுத்து வரிசை கணக்கில் சுடலையாக அமைக்கப்பட்டிருந்தன. இடது பக்கமாக கல்லறைகளும், அவற்றுக்கிடையே வளர்ந்து மண்டிக்கிடந்த செடிகளும் தென்பட்டன. ஆடுகள் சில அவற்றை மென்றுகொண்டு நின்றிருந்தன. காம்பௌண்ட் கேட்டிலிருந்து ஐம்பதாவது மீட்டரில் பாதையை ஒட்டியபடியே சிறிய அறையுள்ள கட்டிடம் ஒன்று அலுவலகமாக இயங்கியது. இறந்தவர்களின் விபரங்களைக் கொடுத்துப் பணம் கட்டி முன்னதாக பதிந்துகொள்ள வேண்டும். புதைப்பது, எரிப்பது என்பதைப் பொருத்து நேரம் ஒதுக்கப்படும். பொதுவாகவே, சுடுகாட்டுக்குள் தேர் நுழைந்ததும் எக்காரணம் கொண்டும் பிணம் வந்து காத்து நிற்கக்கூடாது என்பதில் கவனமாய் இருப்பார்கள்.

வசதி படைத்தவர்களுக்குத்தான் கல்லறைகள் கட்டியெழுப்பப்பட்டிருந்தன. அவர்கள் மண்ணுக்குள் போன பிறகும் அந்த இடத்தைப் பிடித்துவைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிறர் அடக்கம் செய்யப்பட்டால், உடன் பாலோடு முடிந்து போகும் கதை. உடல் புதைந்த மண்மேட்டில் புல் முளைத்து அவற்றை ஆடுகள் மேய்ந்து, பிறகு அவ்வப்போது விழுகிற ஃபுட்-பால் உதைகளோடு மண்மேடு சமன் ஆகி அது தரையாகி அதில் செடிகள் முளைத்து இடத்தின் அடையாளம் தொலைந்து போகும்.

இடப்பக்கக் கல்லறைகளின் ஊடே வண்டிப்பாதை ஒன்று வளைந்தும் நீண்டும் படுத்துக் கிடந்தது. அதையும் தாண்டி சிறிய மணல் பரப்பு விரிந்திருந்தது. அங்கே பையன்கள் ஃபுட்-பால் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த மணல் பரப்பை ஒட்டின காம்பௌண்ட் சுவரின் ஒரு பகுதியில் பெரிய துளை செய்யப்பட்டிருந்தது. இடித்து உடைத்து கற்களைப் பெயர்த்து போட்ட ஒழுங்கற்ற துளை. அதன் வழியே அந்தப்பக்கத் தெருவும் அதிலுள்ள டீ-கடைகளும் பெட்டிக்கடைகளும் பார்வைக்குத் தென்பட்டன.

ஃபுட்-பால் விளையாடும் பையன்களுக்கு இடையூறு செய்யாமல் அவர்களினும் சிறிய வயதுள்ள பெண்பிள்ளைகள் மற்றும் ஒத்தாசை செய்யும் பொடியன்கள் சிறு கும்பலாக செடிகளின் ஓரமாய் வேறொரு பக்கமாக உட்கார்ந்து சொப்பு சாமான்கள் அடுக்கி சோறாக்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள். சோறு என்றால், காய்ந்த இலைகள், மரப்பட்டைகள், சிறிய கற்கள் என வகை பிரித்துவைத்துக் கொண்டார்கள். அதில் ஏதோ ஒன்று சோறு. மற்றவை பொரியல் பதார்த்தங்கள். மற்றும் ஓர் அரைவட்டக் குடுவையில் முக்கால்வாசி நிரம்பிய தண்ணீர். அதுதான் குழம்பாகப் போகிறது.

“இன்னிக்கு என்னா கொயம்பு பண்லாம்?”

“கறிக் கொயம்பு”

கேள்வி கேட்ட சசிக்கு பெரிய ஒற்றை ஜடை பின்னல் இருந்தது. அதன் முடிவில் முடிச்சிட்டிருந்த ஊதாநிறப் பட்டாம்பூச்சி ரிப்பன் முன்பக்க தோள் வழியே நழுவி ஸ்டைலாக ஆடியது. அதைப் பார்த்தபடியே பதில் சொன்ன பொடியனுக்கு கறிக்குழம்பின் நினைவில் வாயில் எச்சில் ஊறியது. மற்ற பொடிசுகள் ஆர்வத்தோடு வேடிக்கைப் பார்த்தனர். அவள் தன்னுடைய பாவாடை பாக்கெட்டில் இருந்து கற்றையாக மடித்து வைத்திருந்த காகிதங்களை எடுத்து துண்டு துண்டாகக் கிழித்து அதில் பாதியை அவனிடம் நீட்டினாள்.

“இந்தாடா திமிங்கலம் கறியை நல்லா தண்ணில அல்சி எட்த்தா”

சசி தன் வயதொத்த இன்னொருத்தியிடம் திரும்பினாள். மீதிக் காகிதங்களை அவளிடம் நீட்டினாள்.

“ஏய் புவி! இத்த வர்த்தெடுக்கணும். நல்லா மசாலால பொரட்டி குடு”

அந்த புவியும் திமிங்கலமும் இருந்த இடத்திலிருந்து எழுந்து ஆளுக்கு ஒருபக்கமாக சற்றுத் தள்ளிப்போய் குந்திக்கொண்டார்கள். இவள் கேட்டதைப் போல அவற்றை தயார் செய்து எடுத்து வருகின்ற பாவ்லா இதுமாதிரியான விளையாட்டுக்களில் மிக முக்கியமானவை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். மற்றவர்களுக்கும் வேலைகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. எல்லோருமே பிஸியாக இருந்தார்கள்.

திமிங்கலம் அந்தத் துண்டுக்காகிதங்களை கொண்டுவந்து அவளிடம் நீட்டினான். அவற்றை அவன் நன்கு கசக்கி கொண்டு வந்திருந்தான். இவன் வந்துவிட்டதைப் பார்த்துவிட்ட புவியும் எழுந்து வந்துவிட்டாள். அவளிடமிருந்த துண்டுக்காகிதங்கள் ஓரிடத்தில் வைக்கப்பட்டன.

“நல்லா அல்சிட்டேன்கா”

“சூப்பர்டா திமிங்கலம். புவி! அவன்ட்ட வாங்கி கொயம்பு தண்ணில முக்கி நல்லா கெளரி வுட்றி. டேய்! அந்த செடியாண்ட ஒரு குச்சி கீது பார். அத்த எடு”

“எதுக்குக்கா?”

“கொயம்ப ஒங்க ஆயாவா கிண்டுவாங்க?”

மற்ற பொடிசுகள் கொல்லென்று சிரித்தன. அதில் ஒருத்தி தன் சிரிப்பையே ‘ப்ப்ப்ர்ர்ர்ர்ர்..’ எனச் சத்தமாக எழுப்பினாள். ‘ம்ம்’ என அதட்டினாள் சசி. கப்சிப் என்று அடங்கினார்கள். வேலையில் மும்முரம் கூடியது.

புவி, திமிங்கலத்திடமிருந்து வாங்கிய துண்டு காகிதங்களை அந்த அரைவட்டக் குடுவைத் தண்ணீருக்குள் முக்கினாள். திமிங்கலம் செடிப்பக்கமிருந்து எடுத்து நீட்டிய சிறிய குச்சியையும் வாங்கிக்கொண்டு இப்போது குடுவை நீருக்குள் முக்கிய காகிதத்துண்டுகளை மெல்ல பதமாகக் கிண்டத் தொடங்கினாள். மற்ற பொடிசுகள் ஆர்வத்துடன் எழுந்து நின்று தத்தம் உடலைப் பாதியாகக் குறுக்கி, முழங்காலில் கைகளை ஊன்றி குனிந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். தொலைவில் இருந்து பார்க்கும்போது கூடி நின்று ரகசியம் பேசுவது போலவே இருந்தது.

புவி, தண்ணீர் சிந்திவிடாமல் கிண்டக்கிண்ட அந்த அரைவட்டக் குடுவை இடவலமாய் அசைந்தது. அது எப்போதோ மண்ணுக்குள்ளிருந்து மேலே வந்துவிட்ட எவரோ ஒருவரின் மண்டை ஓட்டின் ஒரு பகுதி என்பது அந்தக் குழந்தைகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கிண்டுவதற்கு பயன்பட்ட குச்சியும் ஏதோ ஒரு எலும்புத்துண்டு தான் என்பதைக்கூட அவர்கள் தெரிந்து என்ன ஆகப் போகிறது?

உச்சி நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த சூரியன் பாரபட்சமின்றி அந்த ஒட்டுமொத்த சுடுகாட்டின் மீதும் பரவியிருந்தது.

*

சித்திரை மாதத்தின் மதிய நேரம் என்பதால் உச்சி வெயிலில் மொத்தமும் வெளுத்துப் போய் தோற்றமளித்தது.

உயிருள்ள கோழிகளை விற்பனை செய்யும் கோழி மார்கெட்டின் அவ்விடம் பெரிய கிட்டங்கி போல இருந்தது. வகிடு எடுத்தது மாதிரியான அகன்ற சிமெண்ட் பாதையின் இரண்டு பக்கங்களிலிருந்தும் வலைக்கூண்டுகளுக்குள் அடைப்பட்டிருக்கும் கோழிகளின் ‘கொக்.. கொக்..’ எனக் கொக்கரிக்கும் சப்தம் சன்னமாய் ஒலித்தபடியே இருந்தது. நாட்டுக்கோழிகள் குறைவாக இருந்தன. சிவப்புநிறக் கொண்டைகள் பருத்திருந்த சேவல்கள் தனித்தனி கூண்டுகளுக்குள் அச்சமற்று திமிரோடு நின்றிருந்தன. ‘கறிக்கோழி’ என்றழைக்கப்படும் பிராய்லர் கோழிகள் ஊட்டமான எடையுடன், நீண்ட ஒற்றை கூண்டுக்குள் நெருக்கியடித்து அடைக்கப்பட்டிருந்தன.

கோழிகளை ஏற்றி டெலிவரிக்கு எடுத்துப் போகும் பெரிய டெம்போ வண்டிகள் ஒன்றிரண்டு சற்றுத்தள்ளி காம்பௌண்டு சுவரோரம் வரிசையாக நின்றிருந்தன. மெல்லிய கம்பிகளால் ஆன இரும்பு வலைக்கூண்டுகள் அவற்றில் அடுக்கடுக்காகப் பொருத்தப்பட்டிருந்தன. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த மதிய நேரம் இங்கே சற்று வெறிச்சோடி கிடக்கிறது.

காற்றில் கவுச்சி வாடை பலமாக வீசிக்கொண்டிருந்தது.

ஒருவன் சைக்கிள் ஹாண்டில்-பாரின் இரண்டு பக்கமும் கோழிகளைக் கயிற்றில் கட்டி தலைகீழாய் தொங்கவிட்டுக் கொண்டிருந்தான். அவற்றின் கால்கள் மொத்தமும் சேர்த்து பிளாஸ்டிக் டேக் போடப்பட்டிருந்தன. விலைபேசி வியாபாரம் முடித்ததுமே அவை உணவுக்கானப் பண்டமாக பாவிக்கப்பட்டு விடுகின்றன. தழைகீழாய் தொங்குவதால் அவற்றின் கொக்கரிக்கும் ஒலி பலகீனப்பட்டு வித்தியாசமாய் இருந்தது. அடுத்தடுத்து விசேஷங்களைக் கொண்டாடும் மனிதப் பழக்கம் ஆதார உணவை விருப்ப உணவுக்கான காரணங்களோடு பிணைத்துக் கொள்கிறது.

எது எப்படி இருந்தால் என்ன! உயிர் என்றால் ஒருமுறை விட்டுத்தான் ஆக வேண்டும்.

“சாவு வூடா?”

“ஆமாண்ணே. கருப்பு கோழி ஒன்னு”

“கருப்புக்குத்தான்பா எப்பவும் டிமாண்டே. சாம்ப புள்ளி போட்டது ஒன்னு இருக்குது. வோணுமா?”

வந்திருந்த இரண்டு பையன்களும் சற்று தயங்கினார்கள்.

“ரோசனை பண்ணாத தம்பி. அதெல்லாம் முன்னோ. இப்போ, நாட்டுக்கோயி கெடைக்கறதே பெருசு. அல்லாருக்கும் தெரியும். சாங்கியம் பண்றவங்கோ அட்ஜஸ்ட் பண்ணிக்கினு சடங்கு பண்ணுவாங்கோ. வோணும்னா போனு போட்டு கேட்டுப்பாரு”

“ஒங்களுக்கு தெரியாததா. கொடுங்கண்ணே”

அவன், எழுந்து பின்பக்கமிருந்த கூண்டுகளைக் கடந்து உள்ளே நகர்ந்தான். இப்போது அவன் நின்ற இடத்திலிருந்து ஒரு கொக்கரிப்புச் சத்தம் ஓங்கி ஒலித்தது. சிறகுகளை படபடவென அடித்துத் துடித்த சாம்பல் புள்ளி போட்ட நாட்டுக்கோழி ஒன்றை கொண்டு வந்தான். அதன் கால்களை ஒன்றிணைத்து ஒரு சிறிய சணல் துண்டைக் கொண்டு சுற்றி முடிச்சிட்டான். அதன் மருண்ட விழிகள் கருமை நிறத்தில் பளபளத்தன. அதன் கொண்டை சிகப்பு அடர்த்தியாக இருந்தது. தடித்த மனித காதின் பருமனுக்கு இருந்த அக்கொண்டை, வேறொரு சேவலின் தலையிலிருந்து பிய்த்து ஒட்ட வைத்தது போல இருந்தது.

“சேவல் மாதிரியே இருக்குண்ணே”

“சிலது அப்டிதான்பா எப்பவாச்சும் ஊர் நாட்லருந்து வர்ற லோடு மேல கும்பல்ல வந்துரும். எம்புள்ள காத்தால இத்த பாத்துட்டு வளக்கலாம்பான்னு ஒரே அழ. வளத்துத்தான கறிகோயிக்குன்னு அனுப்ச்சு வுட்ருக்காங்கோ. சின்ன பையனுக்கு எப்டி புரிய வக்கறது? ஒவ்வொன்னா வளக்க ஆரம்பிச்சா பொழப்ப எப்டி ஓட்றது?”

பணம் கை மாறியது. கோழியை வாங்கிக் கொண்டார்கள்.

“செத்தது ஆம்பள ஆளா பொம்பள ஆளா தம்பி?” அவன் பரிவுடன் கேட்டான்.

“என் அத்தை”

“வயசானவங்களா?”

“இல்லண்ணே”

“அச்சச்சோ! மாமா இருக்குறாரா?”

“ஆமாண்ணே”

“அச்சச்சோ. அந்தம்மா ஆத்மா நிம்மதியா இருக்கும் தம்பி. சனி பொணம் . தனிப்பொணமா அனுப்பி வைக்கக் கூடாது. அவங்களுக்காகவே இந்த சாம்ப கோயி வந்திருக்கு போல. அடக்கமா? எரிப்பா?”

“எரிப்புண்ணே”

“போய் நல்லபடியா அனுப்பி வையிங்கோ”

அவன் கோழியை மடியில் வைத்துக்கொள்ள, மற்றவன் பைக்கை கிளப்பினான்.

*

லமான சங்கு சத்தம் ஒன்று நீண்டு முழங்கியது. வெயில் இறங்கத் தொடங்கிய பொழுது. பாலத்தின் மீது தேர் ஏறும்போதே கீழே இதன் கடைசி வளைவில் சாவு மேளம் நன்றாக கேட்டது. தாளத்துக்கு ஏற்றார் போல இளவட்டங்கள் சிலர் ஆடிக்கொண்டு வந்தார்கள். பத்தடிக்கு ஒரு பட்டாசு கொளுத்தப்பட்டது. வந்த பாதைதோறும் உதிரி மலர்கள் வாரி இறைக்கப்பட்டன.

டீ-கடையை ஒட்டிய பெட்டிக்கடையில் தீப்பெட்டி வாங்க வந்திருந்த திமிங்கலம் ஆவலோடு பாலத்தை நோக்கி தன் பார்வையைத் திருப்பினான். அணிந்திருந்த கால்-டவுசர் இடுப்பிலிருந்து இறங்காமல் இருக்க இறுக்கிப் பிடித்திருந்த அரைஞாண்கயிறு பெல்ட் போல பயன்பட்டிருந்தது. ஒருகையில் தீப்பெட்டியை வைத்துக்கொண்டு இங்கு சன்னமாகக் கேட்ட தாளத்திற்கு இடுப்பை அசைத்து அசைத்து ஆட்டம் காட்டினான். பெட்டிக்கடைக்கு அடுத்ததாக இருந்த சைக்கிள் கடை காதர், ஒரு சைக்கிள் டியூப்புக்கு பஞ்சர் ஒட்டி மரக்கட்டையில் வைத்து அழுந்தத் தேய்த்தபடியே..

“டேய் திமிங்கலம்.. வத்திப்பட்டிதான வாங்க வந்த. ஒங்கம்மா தூக்கிப்போட்டு மெரிக்க போறா பாரு. சாவு டான்ஸு ஆடுற”

திரும்பி காதரைப் பார்த்து வெட்கமாகச் சிரித்த திமிங்கலத்துக்கு அஞ்சரை வயதுதான் ஆகிறது. பொடி உருவம் கொண்டிருந்தான். நாலு வயசுதான் சொல்லலாம் போல இருந்தான். அவனுடைய இயற்பெயர் சுந்தரம். எப்படியோ திமிங்கலம் என்ற பட்டப்பெயர் வந்து ஒட்டிக்கொண்டது. வெறுங்கையை காற்றில் ஆக்சிலேட்டர் கொடுத்து திருகி அங்கிருந்து வண்டியைக் கிளப்பி ‘ட்டுர்ர்ர்ர்ர்..’ என்றபடி எடுத்தான் ஓட்டம். தன் குடிசையை நெருங்கும்போதே..

“யம்மோவ்..! யம்மோவ்..!” என்று அலறினான்.

மீனாட்சி, அம்மியில் துவையல் அரைத்துக் கொண்டிருந்தவள் கடுப்பாகிவிட்டாள்.

“அட்ச்சீ சனியனே! ஏன் கத்தற? ஜவ்வு கீயிது”

அவனுக்கு அவளிடத்தில் பயமெல்லாம் கிடையாது. இரண்டு மாதங்களுக்கு முன்னால் கிரிக்கெட் விளையாடி சகாக்களோடு சண்டையாகி மூக்கை உடைத்துக்கொண்டு வந்தவனுக்கு ஸ்பூனைத் திருப்பி வைத்து நெருப்பில் வாட்டி தொடையில் ஓர் இழுப்பு இழுத்து வைத்திருந்தாள். ஒரு அலறு அலறினான். அதோடு சரி. பிறகு அசரவேயில்லை. அடிவாங்கி வாங்கி, அச்சம் கொஞ்சம் கொஞ்சமாக அவனைவிட்டு விலகிக் கொண்டிருந்தது. அந்தப்பகுதி ஜனங்களுக்கு அவன் மீனாட்சியிடம் வாங்குகிற அடி என்பது பிரபலம்.

‘அடிய வாங்கிக்கினு கோட்டான் மாறி நிக்கிது பாரு. ஆளாக்கு சைஸ்ல இருந்துக்கினு இன்னா அடம்பாத்தியா இதுக்கு!?’

டுர்ர்ர்ர்ர்… வண்டி அவளருகில் நெருங்கி வந்து நின்றது. அணைந்தது. தீப்பெட்டியை உள்ளே அடுப்பு பக்கத்தில் வைத்துவிட்டு ஓடி வந்தவன் அவளைப் பின்னாலிருந்து எக்கி கட்டிக்கொண்டான். அவள் காதருகே குனிந்து ரகசிய குரலில் சொன்னான்.

“தேரு வருதும்மா. இந்த ஒருவாட்டி மட்டும் வளத்துக்கவா?”

நன்கு அரைப்பட்டிருந்த துவையலில் இருந்து கொஞ்சம் வழித்தெடுத்து அவனுக்கு ஊட்டிவிட்டாள். பாசத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.

“நீ முதல்ல கெட்டிக்காரனா புட்ச்சா. அப்பாலே பாக்கலாம்”

“ஊஹும்… நீ இப்ப சொல்லு. சொன்னாதான்”

“என்னாடா கொஞ்சுற? எனுக்கு உனுக்குன்னு அல்லாரும்தான் பறப்பானுங்கோ. எவன்கிட்டயாவது அடிகிடி வாங்கின்னு வந்து நின்னியோ.. அவ்ளோதான்… தொலச்சி கட்ருவேன்”

“இந்த தபா நான் வளக்கத்தான் போறேன் பாரு”

ஓடிவிட்டான். எதற்கெடுத்தாலும் ஓட்டம்தான். அவனுடைய அந்த ஆவேசமான ஓட்டம் குறித்து முன்பிருந்த பெருமிதம் இப்போது மீனாட்சியிடம் இருப்பதில்லை. பக்கத்தில் ரயில்வே டிராக் எல்லாம் இருக்கிறது. திமிங்கலம் தன் அம்மாவுக்கு பயத்தை உண்டு பண்ணவும் தவறுவதில்லை.

மீண்டும் அதே டீ-கடை முன்னே மூச்சிரைக்க வந்து நின்று கொண்டான். இப்போது, தேர் உள்ரோட்டின் வளைவில் திரும்பிக் கொண்டிருந்தது. டீ-கடையை கடக்கும்போது முழுமையாக மஞ்சள் பூசிய முகமும் அதன் நெற்றியில் இடப்பட்டிருந்த வட்டமான குங்குமத் திலகமும் பளிச்சென தெரிந்தது. மாடிப் பால்கனியில் நின்றபடி, சுடுகாட்டுக்கு போகும் அந்தச்சாவை வேடிக்கைப் பார்த்தவர்கள் ‘உச்’ கொட்டினார்கள்.

பாடை கட்டிய மூங்கில் கழியின் ஒரு மூலையில் கோழியொன்று தலைகீழாய் கட்டித் தொங்கவிடப்பட்டிருப்பதை பார்த்தான் திமிங்கலம். உடல் முழுவதும் சாம்பல் புள்ளிகள் போட்டிருக்கும் அக்கோழியின் சிகப்பு நிறக்கொண்டை சாதாரண அளவை விடப் பெரியதாக இருந்ததும் அவனைக் கவர்ந்து விட்டது. கோழியும் நல்ல ஊட்டமாக இருந்தது. அதன் மருண்ட விழிகளை அருகில் சென்று பார்க்க விரும்பினான். கூட்டத்தோடு கூட்டமாக கலந்து கொண்டான். சாவைப் பின்தொடர்ந்தான். அவனைப் போலவே வேறுசில பொடியன்களும் ஊடே ஆங்காங்கே வந்து சேர்ந்து கொண்டார்கள். அருகருகே இல்லாமல், கலந்து கிடந்தார்கள். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கறிக்குழம்புக்கு ஒவ்வொருவனும் ஐடியா பண்ணிக் கொண்டு வந்திருக்கிறான்கள்.

ஆனால், திமிங்கலத்துக்கோ அதைப் பிடித்து வளர்க்க வேண்டும் என்ற ஆசை மட்டுமே இரட்டிப்பானது. போட்டியும் பலமாக இருந்ததை நினைத்து அவனுக்குள் லேசாக ஒரு கலக்கமும் உண்டாயிற்று. போன மாதம் அரும்பாடுபட்டு பிடித்துவந்த ஒரு கோழியை, ஐந்தே நாளில் அவனுடைய அம்மா, அத்திப்பட்டிலிருந்து வந்திருந்த அவனுடைய மாமாவுக்கு விருந்தாக்கிவிட்டிருந்தாள். திமிங்கலம் ஒருவாய் கூட சாப்பிட மாட்டேன் என்றுவிட்டான். அழுகையோடு அடியும் மிதியும் சேர்ந்தே கிடைத்தது.

இம்முறை எப்படியாவது வளர்த்துவிட வேண்டும்.

*

தேர் சுடுகாட்டுக்குள் நுழையும்போதே மேளதாளம் அடங்கிப் போய்.. சங்கு ஊதப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடிமகனின் பாடும் குரல் மட்டுமே காடெங்கும் கணீரென ஒலித்தது. பட்டினத்தாரின் செய்யுள் வரிகள் ஒரு ராக இழுவையோடு பாடப்பாட ஊர்வலமாய் வந்தவர்களின் கனத்த நெஞ்சு இன்னும் கனம் கூடிப் போயிற்று.

உற்றார் அழுது அலுத்தார், உறன் முறையார் சுட்டலுத்தார்;
பெற்று அலுத்தார் தாயார்; பிறந்து அலுத்தேன்
பூரணமே…

எரிமேடை அருகே பாடை இறக்கப்படும் முன்பே, பாடையில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த சாவுக்கோழி கட்டவிழ்த்து விடப்பட்டது. அது பயந்து அலறிப் பறந்து போய் இடப்பக்க கல்லறை ஒன்றின் மீதிறங்கி இறக்கைகளை படபடவென அடித்துக் கொண்டு நின்றது. நம்ப முடியாமல், தன்னைச் சுமந்து வந்த மனிதர்களைச் சற்றுநேரம் பார்த்துவிட்டு சாவகாசமாய் செடிகளுக்குள் இறங்கி மேயத் தொடங்கியது. அப்போது ஒரு கல்லறையின் மறைவில் இருந்து சட்டென வெளிப்பட்ட திமிங்கலம் அதை அமுக்கிப் பிடித்தான். அடித்தது லக்கி ப்ரைஸ். மற்ற சிறுவர்கள் ஏமாந்து போனார்கள். இன்றைய அதிர்ஷ்டம் திமிங்கலத்துக்கு என்று முடிவுசெய்து கொண்டார்கள். அவனருகில் மெல்ல வந்து அந்தக் கோழியைத் தொட்டுத்தடவிக் கொடுத்தார்கள். அது திமிறியது. பறந்துவிட வேண்டும் என்கிற எத்தனிப்பில் சிறகைப் படபடவென விசிறி பார்த்தது. முடியவில்லை.

“என்னாடா? இந்தவாட்டியாச்சும் வளக்க வுடுமா ஒங்கம்மா?”

“அதெல்லாம் வுடும்”

பேசிக்கொண்டே செடிகளுக்கு ஊடே நடந்து கொண்டிருந்தார்கள். கீழே கிடந்த நீளமான ஒரு சணலை எடுத்துப் பிரித்துக் கொடுத்தான் ஒருவன். திமிங்கலம் அதன் கால்களில் ஒன்றை வாகாக உயர்த்திப் பிடித்தான். இன்னொருவன் அதில் முடிச்சிட்டுக் கட்டினான். இனி கையை விட்டு நழுவி ஓடினாலும் கயிறைப் பிடித்துவிடலாம்.

“டேய் திமிங்கலம்! சப்போஸ் கொயம்பு வச்சிட்டாங்கன்னா.. நீ திங்காட்டியும் எங்களையாவது கூப்புட்றா. சனி பொணத்தோட வந்த கோயி செம்ம ருசியா இருக்குன்டா”

இன்னொருவன் வெறுப்பேற்றினான். கோபத்தில் அவனை எத்திவிடத் துரத்தினான் திமிங்கலம். கோழி கை நழுவியது. சட்டென விடுதலை பெற்ற கோழி செடிகளுக்கு மேலாகச் சிறகை விசிறி பறந்தது. சிறிய சணல் கயிறு என்பதால் சுதாரித்துப் பிடிப்பதற்குள் தூரப்போயிற்று. பதட்டத்தோடு அதைத் துரத்திப் போனான் திமிங்கலம். மற்ற பையன்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. அவர்கள் எட்ட நின்றுகொண்டு கைதட்டி உற்சாகத்தில் கொட்டமடித்தார்கள்.

“ஹோ.. ஹோ.. தோத்தா கோழி.. போறான் பாரு.. தோத்தா கோழி..”

*
“மாமே! மாட்டிக்கிச்சிறா.. தேடிவந்த மவராசி” என்றபடி இளித்தான் தாஸ். சற்று தொலைவில் வேறொரு கல்லறையில் உட்கார்ந்தபடி தம்மடித்துக் கொண்டிருந்த மருது பதிலுக்கு சிரித்து வைத்தான்.

“ஏய் மச்சி! இன்னொரு குவாட்டரு இல்ல.. ஆஃப்பு தேத்து.. செம்ம நாட்டுக்கோயி.. வேற ஒர்த்தனும் வரக்கூடாது.. சுட்டு வறுக்கறோம். மஜா பண்றோம். இன்னிக்கி நம்ப ஒன்டித்தான்” என்று தாஸ் சொல்லி முடிக்கும்போது..

மூச்சிரைக்க ஓடி வந்திருந்தான் திமிங்கலம்.

“இன்னாடா?”

“ண்ணா.. ண்ணா..! என் கோயிண்ணா எனுக்கு வோணும்ணா.. குட்த்துருண்ணா”

“ஏய்! குஸ்மி திமிங்கலம். ஒன் பேர சொல்லச் சொல்லுடா. இந்த கோயி கண்டி ஒன் பேர கரெக்டா சொல்லிச்சின்னு வையேன்.. பட்டா இது உன் கோயிதான். இல்லாட்டி என்னுது” என்றுவிட்டு பான்பராக் பற்களைக் காட்டி பகபகவெனச் சிரித்தான். பிராந்தி வாடை குப்பென்று அடித்தது.

“ண்ணா.. இத்த வளக்கப் போறண்ணா. எங்கம்மா கூட ஒத்துக்கிச்சிண்ணா ப்ளீஸ்ண்ணா குட்த்துருண்ணா”

“இந்த தபா கறி அண்ணனுக்கு. ஒங்கம்மாவுக்கு கெடையாது. ஓகே? நீ கெளம்பு?”

அவன் அழத் தொடங்குபவனைப் போல முகம் கோணினான். தொலைவில் இருந்த மருது இந்தக் கூத்தைப் பார்த்தபடி இன்னும் சிரித்துக் கொண்டிருந்தான்.

“தேரு சந்துமொனை திரும்போசரமே பார்த்துட்டேண்ணா.. இது என் கோயிண்ணா.. குட்த்துருண்ணா. கஷ்டப்பட்டு புட்ச்சேண்ணா”

“டேய்! சொன்னா புரியாதா ஒனக்கு? சனி பொணத்தோட வந்த கோயிடா. உன்னிய மாறி சின்ன புள்ளிங்கோ இத்த தின்னவும் கூடாது, வளக்கவும் கூடாது. பெரியவங்க சொல்றம்ல கேட்டுக்கோ.. ஓடு ஓடே.. குட் பாய்ல ஓடு? நாளைக்கு கிரிக்கெட்ல என் டீம்ல உன்னிய சேத்துக்கறேன். ஓகே? இப்ப கெளம்பே”

இப்போது அழுதுவிட்டான். உடைத்துக்கொண்டு ஓவென குரல் உயர்ந்தது.

“திமிங்கலம்.. காண்டாக்குற நீ. மவனே!”

மருது இப்போது இறங்கி இவர்களிடத்தில் வந்தான். தாஸின் கையில் இருந்த கோழியை பட்டென்று பிடுங்கினான்.

“அட்ச்சீ குடு.. சின்ன புள்ளிய அய வக்கிற? ஓசி காஜி. டோமரு பையா”

“டேய் டாபரு.. இன்னிக்கும் கட சால்னாவத்தான் நக்கணுமா நானு?”

“சர்தான் மூடு. இந்தாடா திமிங்கலம், ஒன் கோயி.. நல்லா சூப்பரா வளக்கணும் சரியா? இது சண்ட செய்யும் போலடா.. பாத்தாலே டக்கரா கீது. உஷாரா பாத்துக்கோ.. குப்பத்தொட்டில மேய வுடு. கூடயே நில்லு. வூட்ல கட்டிப்போடு. சுடுகாட்ல வுட்ராத. இந்த டாபர் மாமா சுட்டு தின்றுவான்.. இல்ல மாமே?”

தாஸ் கடுப்பாகி மருதுவை முறைத்தான். பிறகு திமிங்கலத்தைப் பார்த்தான். அவன் கையில் இருந்த அந்தக் கோழியைப் பார்த்தான். அதற்கு மேல் திமிங்கலம் அங்கே நிற்கவில்லை. அனுமதி கிடைத்துவிட்டது. ஓட்டமெடுத்தான். அவனுடைய கூட்டாளிகளோடு இணைந்து கொண்டான். அவர்கள், அவனோடு கதையளந்து கொண்டே நடந்தார்கள்.

சாம்பல் புள்ளி போட்ட அந்தக் கோழியின் கருவிழி மணிகளில் வெயில்பட்டு மினுங்க மினுங்க, அதன் சிவந்த கொண்டை திமிங்கலத்தின் நடைத்துள்ளலின் தாளகதியோடு சேர்ந்து கொண்டது.

எரிமேடையில் எரிந்து கொண்டிருந்த சிதையிலிருந்து கிளம்பிய கரும்புகை அதன் கூரையில் மோதி வழிந்து வான் நோக்கி சுருண்டு கொண்டிருந்தது. சாவுக்கு வந்தவர்கள் முற்றிலும் போய்விட்டிருந்தார்கள். வெட்டியான், கையில் பெரிய கழியைப் பிடித்துக்கொண்டு சிதையையே சற்று நேரம் பார்த்துக்கொண்டு நின்றிருந்தவர் நீர்தொட்டி இருந்த இடம் நோக்கி மெல்ல இறங்கிப் போனார்.

அந்தப் பெண்பிணம் தனியாகவே வெந்து கொண்டிருந்தது.

***

கவிதைக்காரன் இளங்கோ – மூன்று கவிதைத்தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு சினிமா கட்டுரை நூல் ஆகியன வெளிவந்துள்ளன. அண்மையில் ஏழு பூட்டுக்கள் எனும் நாவல் வெளிவந்துள்ளது

பூமி என்கிற டைட்டானிக் கப்பல்

1

நாராயணி சுப்ரமணியன்


ஆகஸ்ட் 2019ல் ஐஸ்லாந்தில் ஒரு இரங்கல் கூட்டம் நடந்தது. சுமார் 100 பேர் பங்கேற்ற இந்த நிகழ்வில் ஐஸ்லாந்தின் பிரதமரும் கலந்துகொண்டார். “அடுத்த இருநூறு வருடங்களில் இது அடிக்கடி நிகழக்கூடும்…..” என்ற எச்சரிக்கை வாசகத்தைத் தாங்கிய கல்வெட்டு ஒன்று அப்போது நிறுவப்பட்டது.

இரங்கல்கூட்டம் நடத்தப்பட்டது ஓகேஜாகுல் என்கிற பனிப்பாறைக்காக.

காலநிலை மாற்றத்தால் அழிந்த ஐஸ்லாந்தின் முதல் பனிப்பாறை இது. 2014 முதலே உருகிக்கொண்டிருந்த ஒகேஜாகுல், 2019 ஜூலை மாதம் அதீதமாக வெப்பநிலை அதிகரித்ததால் முற்றிலும் உருகி அழிந்தது. இந்த நிகழ்வை ஆவணப்படுத்தவும் எதிர்காலத்துக்கான ஒரு எச்சரிக்கையாகவும் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.

“என்ன நடக்கிறது என்பதும் இதைத் தடுக்க என்ன செய்யவேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும். அதற்காகவே இந்த நினைவிடத்தை அமைத்திருக்கிறோம். ஆனால் நாங்கள் அதை செய்தோமா இல்லையா என்பது உங்களுக்குத்தான் தெரியும்” என்று எதிர்காலத்தை நோக்கி வீசப்பட்ட அழுத்தமான சொற்களைத் தாங்கியபடி மேற்கு ஐஸ்லாந்தில் இந்தக் கல்வெட்டு மௌனசாட்சியாக நின்றுகொண்டிருக்கிறது.

ஆர்ட்டிக் பனிப்பாறைகள்

“அமேசான் காடு என்பது புவியின் நுரையீரல் என்று சொல்லப்படுகிறது. அந்த உருவகத்தோடு ஒப்பிட்டால் ஆர்ட்டிக் பகுதியை புவியின் சுற்றோட்ட அமைப்பு (Circulatory system) என்று சொல்லலாம்” என்கிறார் அறிவியலாளர் கெயில் வைட்மேன். காற்றின் சுழற்சி, கடல் நீரோட்டம், வெப்ப சுழற்சி போன்ற பல கூறுகளோடு ஆர்ட்டிக் பகுதி அழுத்தமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது. ஆர்ட்டிக் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் புவியின் காலநிலையையே மாற்றியமைக்கும் ஆற்றல் மிக்கவை.

2020 செப்டம்பரில் வெளியிடப்பட்ட ஒரு முக்கியமான ஆய்வுக்கட்டுரையில், “கடந்த 12,000 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேகத்தோடு ஆர்ட்டிக் க்ரீன்லாந்து பகுதியில் பனி உருகிக்கொண்டிருக்கிறது” என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கடைசியாக நிகழ்ந்த ஐஸ் ஏஜின் முடிவில் எந்த வேகத்தில் பனி உருகியதோ, அதே வேகத்தில் பனி உருகிக்கொண்டிருக்கிறது என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள். க்ரீன்லாந்து பகுதியில் உள்ள 234 பனிப்பாறைகளை முழுவதுமாக ஆராய்ந்து, கணிப்பொறியின் மூலமாக கணித மாதிரிகளை உருவாக்கி, இந்த பனிப்பாறைகளின் ஒட்டுமொத்த வரலாற்றைப் பிசிறில்லாமல் மீள் உருவாக்கம் செய்திருக்கிறார்கள்.

கடந்த 30 ஆண்டுகளாகவே உலகின் மற்ற பகுதிகளோடு ஒப்பிடும்போது ஆர்ட்டிக் பகுதியின் பனிப்பாறைகள் இருமடங்கு அதிக வேகத்தில் அழிந்துவருகின்றன.பனிப்பாறைகள் உருகும் வேகம் 2100ம் ஆண்டு வரை குறையாது என்று ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள்.

சாதாரணமாக கோடைகாலத்தில் பனிப்பாறைகள் கொஞ்சம் உருகுவதும் அடுத்தடுத்த மழைக்காலம்/குளிர்காலம் வரும்போது அது ஈடு செய்யப்படுவதும் இயல்பு. ஆனால் இப்போது ஈடு செய்ய முடியாத அளவுக்கு வேகத்தில் பனிப்பாறைகள் உருகிக்கொண்டிருக்கின்றன என்பது உறுதியாகியிருக்கிறது.

அதிலும் குறிப்பாக Greenland Ice Sheet (GIS) என்ற ஒரு பனிப்பாறை அதிவேகத்தில் உருகிக்கொண்டிருக்கிறது. உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பனிப்பாறை இது. இந்த பனிப்பாறையை “பனியாலான ஒரு ஆவண நூலகம்” என்று அழைக்கலாம். ஒரு லட்சம் வருடங்களாக உறைந்தபடியே உறங்கிக்கொண்டிருக்கும் பனி இது என்பதால், கடந்தகாலத்தைச் சேர்ந்த காலநிலை நிகழ்வுகள் எல்லாவற்றுக்கும் இதற்குள் ஆதாரங்கள் புதைந்துகிடக்கின்றன. பல கோடி டன் எடையுள்ள இந்த பனிப்பாறை முழுவதுமாக உருகினால் உலகளாவிய கடல்நீரின் மட்டம் 6 மீட்டர் உயரும்! இதனால் எத்தனை கடலோர நகரங்கள் முற்றிலுமாக மூழ்க வாய்ப்பிருக்கிறது என்பதை நாமே கணக்கிட்டுக்கொள்ளலாம்.

பனிபாறைகள் உருகுவதிலும் அவை திரும்ப உறைவதிலும் Hysteresis என்கிற ஒரு அறிவியல் கருத்தாக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. வெப்பநிலை அதிகரிப்பதால் ஒரு பனிப்பாறை உருகுகிறது என்று வைத்துக்கொள்வோம். அடுத்த முறை வெப்பநிலை குறைந்து, உறைபனிக்கான வெப்பநிலை வந்துவிட்டது என்பதாலேயே உருகிய பனியெல்லாம் மறுபடியும் பாறையாக உறைந்துவிடாது. உருகுகிற வேகத்தோடு ஒப்பிடும்போது உறையும் வேகம் குறைவாகவே இருக்கும். ஆகவே குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவதால் மட்டுமே இந்த மாற்றத்தை நாம் சரி செய்துவிட முடியாது.


இன்னும் சொல்லப்போனால், ஏதோ ஒரு நிகழ்வால் ஒரு பனிப்பாறை உருகத் தொடங்கிவிட்டது என்றால், பெரிய அளவில் ஏதும் தடைகள் இல்லாவிட்டால் அது தொடர்ந்து உருகிக்கொண்டேதான் இருக்கும். இப்போது கிரீன்லாந்திலும் அதேதான் நடந்துகொண்டிருக்கிறது.

அண்டார்டிக் பனிப்பாறைகள்

ஜுலை 2017ல் உலகம் முழுவதும் உள்ள காலநிலை அறிவியலாளர்களால் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் A-68. அண்டார்ட்டிகாவில் லார்சன் சி பனிதொகுதியைச் சேர்ந்த ஒரு பனிப்பாறையின் பெயர் இது. ஒரு ட்ரில்லியன் டன் எடையுள்ள இந்த பனிப்பாறை, பனித்தொகுதியிலிருந்து பிரிந்து, உடைந்து கடலில் மிதக்கத் தொடங்கியது. பனித்தொகுதிகளிலிருந்து பனிப்பாறைகள் இவ்வாறு உடைந்து பிரிவது Ice calving என்று அழைக்கப்படுகிறது. சாட்டிலைட் மூலமாக மேலிருந்து பனித்தொகுதிகளை கவனித்தால், பல பனிப்பாறைகளில் விரிசல்கள் காணப்படுகின்றன எனவும், இதுபோன்ற பனிப்பிளவுகள் இனிமேல் அதிகமாக நடக்கும் என்றும் அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

பொதுவாக இதுபோன்ற பனிப்பிளவுகள் நடந்தால் அதன் பின்விளைவு என்னவாக இருக்கும், சுற்றியுள்ள சூழலை அது எவ்வாறு பாதிக்கும் என்பதெல்லாம் தெளிவாகத் தெரியாமல் இருந்தது. செப்டம்பர் 2020ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கை, பனிப்பாறைகள் உடையும்போது என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படும் என்பதைப் பட்டியலிடுகிறது.

பனிப்பாறைகள் உடையும்போது, அந்த இடத்தில் கடற்படுகைகள் பாதிக்கப்படும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அண்டார்ட்டிகாவில் உள்ள பனித்தொகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் தெற்கு கடல் பகுதிகளில் உள்ள நீரோட்டங்களையும் காலநிலை சார்ந்த சுழற்சிகளையும் பாதிக்கும் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஒருவேளை அண்டார்டிக் பனித்தொகுதி முற்றிலுமாக உருகிவிட்டால், உலகிலுள்ள எல்லா கடல்களிலும் சராசரி நீர்மட்டம் 2.5 மீட்டர்கள் உயரும்! இதில் துயரம் என்னவென்றால், தற்போதையை பாரீஸ் ஒப்பந்தத்தை எல்லா நாடுகளும் பின்பற்றினால்கூட இந்த நிகழ்வைத் தடுக்க முடியாது என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் Hysteresis விளைவு இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

பாரீஸ் ஒப்பந்தத்தைப் பின்பற்றுவதிலேயே முக்கியமான பல நாடுகள் சுணக்கம் காட்டிவரும் நிலையில் இந்த ஆய்வு முடிவுகளை உலக நாடுகள் பொருட்படுத்துமா என்பது தெரியவில்லை.

சில கேள்விகள்

“எங்கேயோ இருக்கிற ஆர்ட்டிக் கடலிலும் அண்டார்டிக் கடலிலும் பனிப்பாறைகள் மூழ்குவதால் எனக்கு என்ன பாதிப்பு வந்துவிடப்போகிறது?” – பனிப்பாறைகள் மூழ்குவதைப் பற்றிய விவாதங்கள் முன்னெடுக்கப்படும்போதெல்லாம் எழுப்பப்படும் கேள்வி இது. அதிலும் குறிப்பாக வெப்பமண்டல நாடுகளில் இந்தக் கேள்வி அதிகம்.

“எங்கேயோ இருக்கிற ஆர்ட்டிக்” என்பது தூரத்தைப் பொறுத்தவரை வேண்டுமானால் சரியானதாக இருக்கலாம். ஆனால் ஆர்ட்டிக் பனிப்பாறைகளுக்கும் உலகின் காலநிலை சுழற்சிகளுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அண்டார்டிக் பனிப்பாறைகளும் அவ்வாறே இந்த உலகத்தோடு பிணைக்கப்பட்டிருக்கின்றன.

கடலுக்குக் குறுக்கே நமக்கு இலகுவாக இருக்கவேண்டும் என்பதற்காக மட்டுமே நாம் எல்லைகள் வகுத்திருக்கிறோம். ஆனால் எல்லா கடல்களும் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். பனிப்பாறைகள் உருகி கடலின் நீர்மட்டம் அதிகரித்தால் அது எல்லா நாடுகளையுமே பாதிக்கும். பல்லாயிரக்கணக்கான மைல்கள் தள்ளி நாம் வசித்தாலும், அண்டார்டிக் கடலில் உடைகிற பனிப்பாறையின் பாதிப்பு நம்வீட்டுக் கதவையும் ஒருநாள் தட்டும்.

“கடலின் நீர்மட்டம் அதிகரித்தால் கடலோர நகரங்களுக்கு மட்டும்தானே பாதிப்பு ஏற்படும். நான் கடலிலிருந்து வெகு தொலைவில் வசிக்கிறேன். எனக்கு என்ன ஆபத்து வந்துவிடும்?” – இது மற்றொரு முக்கியமான கேள்வி. கடலின் நீர்மட்டம் அதிகரிப்பது என்பது ஒரு பாதிப்பு மட்டுமே. புயல், வெள்ளம், அதீத வெப்பநிலை, வறட்சி ஆகியவையும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள்தான். கடலிலிருந்து வெகு தொலைவில் வசித்தாலும் இந்த பாதிப்புகளிலிருந்து நாம் தப்ப முடியாது. தவிர, காலநிலை சுழற்சியின் சீரழிவால் விவசாயமும் மீன்பிடித்தொழிலும் கால்நடை வளர்ப்பும் கடுமையாக பாதிக்கப்படும். ஆகவே நேரடியான பாதிப்புகளோடு மறைமுக பாதிப்புகளையும் நாம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.

ஐஸ்லாந்தில் நடந்த இரங்கல்கூட்டம் ஒரு அடையாள நிகழ்வு மட்டுமே. நம் கண்ணுக்குத் தெரியாமல் தினசரி பனிப்பாறைகள் அழிவை நோக்கி மிதந்துகொண்டிருக்கின்றன. கடைசி வரை தனது கப்பல் மூழ்குவதையே ஒப்புக்கொள்ளாத டைட்டானிக் கேப்டனைப் போல பிடிவாதம் பிடிக்கின்றன உலக நாடுகள்.
ஜேம்ஸ் ஃப்ராங்கோவின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன…

  1. ப்ளேட் ரன்னர்.
    ஆர்மகெடான். த ரோட்.
    நான் வாழவிரும்புகிற ஒரு எதிர்காலத்தை முன்னிறுத்தி
    ஒரு திரைப்படத்தைக் கூட பார்க்கவில்லை நான்.
    ஒரு புத்தகத்தைக் கூட இதுவரை படிக்கவில்லை.

அதிர்ஷ்டவசமாக,
பூமி இறப்பதற்குள் நான் இறந்துவிடுவேன்.
ஆனாலும்கூட
கம்ப்யூட்டர் சிப்பில் சேகரிக்கப்பட்ட என் எதிர்கால சுயம்
விநோதமாக ஒலியெழுப்பி வாழ்வதற்கு
பிரகாசமான, சுத்தமான, மகிழ்ச்சியான ஒரு இடம் தேவை.

தரவுகள்:

  1. Iceland holds funeral for first glacier lost to Climate Change – The guardian, August 2019.
  2. Rate of mass loss from the Greenland Ice shsst will exceed Holocence values this century. Jason Briner et al, Nature, September 2020.
  3. Antarctic ecosystem responses following ice-shelf collapse and iceberg calving: Science review and future research. Jeroen Ingels et al, WIREs Climate Change, September 2020.
  4. The hysteresis of the Antarctic Ice sheet. Julius Garbe et al, Nature, September 2020.

***

நாராயணி சுப்ரமணியன்: கடல்வாழ் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.”நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” என்ற உயிரியல் நூலை எழுதியுள்ளார். தமிழில் கடல்சார், அறிவியல் பொருண்மைகளைக் கவிதைகளில் எழுதி வருபவர். விகடன் தடம், வாசகசாலை, அரூ இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. Email: nans.mythila@gmail.com

சீனா: பொருளாதார அரசியலும் மேலாதிக்க விஸ்தரிப்பும்!

0

கொரோனா நெருக்கடி என்பது இந்த நூற்றாண்டின் முதலாவது உலகளாவிய பேரிடர். இதற்கு முந்தைய உலகளாவிய நெருக்கடிகள் என இரண்டு உலகப்போர்களும் கணிப்பிடப்படக்கூடியவை. இன்னொரு வகையில் சொல்வதானால் சற்றேறக்குறைய நூறு ஆண்டுகளுக்குள் மூன்று நெருக்கடிகள் உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. உயிரழிவுகள், பொருளாதார வீழ்ச்சி சார்ந்தவற்றைப் பொதுவான பாதிப்புகளாகச் சுட்டமுடியும். தவிர உலகமயமாக்கலின் தன்மைகள், உலக அமைதிக்குப் பங்கம், நாடுகளுக்கிடையிலான உறவுகளில் இந்நெருக்கடிகள் விளைவுகளை ஏற்படுத்தின.

புதிய இயல்பு அல்லது புதிய வழமை’

கொரோனா நெருக்கடியின் விளைவுகள் உலகளாவிய மாற்றத்திற்குரிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன. ‘New Normal‘ எனப்படும் ‘புதிய இயல்பு அல்லது புதிய வழமை’ கொரோனாவால் ஏற்பட்டு வருகின்றது. அதன் அர்த்தம் தனிநபரிலிருந்து சமூகம், நாடு, நாடுகடந்த உலகம் என அனைத்தும் முன்னரைப் போல் இருக்கப்போவதில்லை. பல முனைகளிலும் பல்வேறு இயல்பு மாற்றங்களுக்கும் நடைமுறை மாற்றங்களுக்குமான தவிர்க்க முடியாத நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டுவருகின்றன. இந்தப் புதிய இயல்பு ஒருபுறமும், மறுபுறம் அரசியல் பொருளாதார, அதிகாரம் சார்ந்த அர்த்தத்திலும் ‘புதிய உலக ஒழுங்கு’ பற்றிய விவாதங்களும் இடம்பெற்றுவருகின்றன.

ஒரு பாரிய பூகோள அரசியல் ஆச்சரியம் காத்திருக்கிறது என்ற வகையிலான விவாதங்கள் சர்வதேச அரசியல் சார்ந்து இடம்பெற்றுவருகின்றன.

தொடர்ந்தும் உலக மேலாதிக்க அரசு என்ற நிலையை அமெரிக்கா தக்கவைக்குமா? அல்லது வேகமாக வளர்ந்துவரும் சீனா அந்த இடத்தினைத் தனதாக்கிக் கொள்ளுமா என்பதே சமகால அரசியலின் பேசுபொருட்களில் முதன்மையானதாக உள்ளது. அந்த நிலையைச் சீனா தனதாக்கிக் கொள்ளும் புறநிலைகள் கூடுதலாக இருப்பதாக நம்பப்படுகிறது. கொரோனாவுக்கு முன்னரே அமெரிக்க சீன அதிகாரப்போட்டி துருத்திக்கொண்டு தெளிவாகத் தெரிந்த விடயம்தான். கொரோனா நெருக்கடி சீனாவிற்குச் சாதகமான வாய்ப்புகளை வழங்கியுள்ளதான கருத்து வலுப்பெற்றுள்ளது.

மேலாதிக்க சக்தியும் வரலாற்று மாற்றமும்

இறுதி நூறாண்டு கால வரலாற்றில் முதலாம் உலகப் போருக்கு முன்னர் பிரித்தானிய ஏகாதிபத்தியம் உலகின் பொருளாதார, படைத்துறை மேலாதிக்கத்தைக் கொண்டிருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அமெரிக்கா அந்த நிலையைத் தன்னகப்படுத்தியிருந்தது. சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மேலாதிக்கம் என்பதைத் தாண்டி உலகின் ஒற்றை வல்லரசு என்ற நிலையை அமெரிக்கா எட்டியது. இருந்தபோதும் செப்ரெம்பர் 11 இன் பின்னான தன்னிச்சையான அமெரிக்காவின் அணுகுமுறைகள், தளம் அமைத்தலுக்கான ஆக்கிரமிப்புப் போர்கள் அமெரிக்கா தொடர்பான உலகளாவிய விம்பத்தைப் பலவீனப்படுத்தியுள்ளன. அதிலும் குறிப்பாக டொனால்ட் டிரம்ப் பதவிக்காலம் அமெரிக்காவின் அரசியலில் உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. ஒற்றை வல்லரசு என்ற தகமையை இழக்கவும் செய்துவருகின்றன.

அமெரிக்கா பலவீனமடைந்து வருகின்ற நிலையில், சீனா நிதானமாகவும் தொலைநோக்கு மூலோபாய அணுகுமுறையுடனும் தனது பொருளாதாரவலுவினை அதிகரிப்பதன் மூலம், மேலாதிக்க எல்லைகளை விரிவுபடுத்தி வருகின்றது. ஐரோப்பிய மட்டத்தில் வணிக உறவுகள் மூலமும், ஆபிரிக்கக் கண்டம், மற்றும் ஆசியப் பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளில் பெரும் முதலீடுகள், துறைமுகங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல், உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் தனது மேலாதிக்கத்தை வலுப்படுத்திவருகின்றது.

பொருளாதார வளர்ச்சியில் மேலோங்கிவரும் சீனா அமெரிக்காவிற்குப் போட்டியாக மட்டுமல்ல, பெரும் சவாலாகவும் பார்க்கப்படுகிறது. கொரோனா நெருக்கடி ஏற்படுத்தி வரும் விளைவுகளும், அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், உள்நாட்டிலும் உலகம்தழுவிய கூட்டுச்செயற்பாடுகளிலும் அமெரிக்கா உலக வல்லரசாகத் தனது பொறுப்புகளைச் சரிவரச் செய்யத் தவறிவிட்டது என்பது உலகளாவிய விமர்சனம்.

அமெரிக்கா: தோற்றுப்போன வல்லரசு

அமெரிக்க சமூகத்தைப் பிளவுபடுத்தும் டிரம்பின் அணுகுமுறை பற்றிய விசனங்கள் அதிகரித்துள்ளன. காவல்துறையினரால் கறுப்பினத்தைச் சேர்ந்த புநழசபந குடழலன படுகொலை செய்யப்பட்டதை அடுத்து எழுந்த மக்கள் போராட்டங்களை வன்முறையாகச் சித்தரித்து காவல்துறை, இராணுவத்தினரைக் கட்டவிழத்துவிட்டமை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நேர்த்தியான திட்டமிடலின்மை, செயற்திறனின்மை என டிரம்ப் மீதான அதிருப்திகளின் பட்டியல் நீளமானவை. டிரம்பின் கொரோனா பேரிடர் கையாள்கை என்பது உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பலத்த விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. இன்னொரு வகையில் அமெரிக்காவின் சர்வதேச விம்பத்தை கொரோனா நெருக்கடி உடைத்துள்ளது. அந்த உடைவை ஒட்டவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அரிதானவை. அமெரிக்கா ஒரு தோற்றுப்போன வல்லரசு என்ற கருத்தும் வலுப்பெற்றுவருகின்றது

உலக ஒழுங்கு என்பது, உலகளாவிய தீர்மான சக்தி யார் என்பதைப் பற்றியது. அரசியல், பொருளாதார, இராணுவ, தொழில்நுட்ப மேலாதிக்கத்தைக் குறிக்கின்றது. அது அதிகார நலன் சார்ந்தது. சர்வதேச ரீதியில் மேலாதிக்கம் செலுத்துவதும், சார்பான அணிகளைக் கட்டியமைப்பதும் பேணுவதுமான வெளிவிவகார உறவு சார்ந்தது. அந்த அணி என்பது பூகோள அரசியல் நலன்கள் மற்றும் பொருளாதார நலன்களை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படுவன. இந்த நலன்களைப் பேணும் முனைப்பிற்காக பலம்பொருந்திய நாடுகள் போர்களில் இறங்குவதற்கும் தயங்குவதில்லை என்பதை வரலாறு நெடுகிலும் காணலாம். செப்ரெம்பர் 11 இற்குப் பின்னான அமெரிக்காவின் அனைத்துப் போர்களின் பின்னணியிலும் இத்தகைய நலன்கள் இருந்திருக்கின்றன. ஈராக் முதல் ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் அண்மைய சிரியா ஈறான அனைத்துப் போர்களும் அதற்கான உதாரணங்கள்.

இந்தோ-பசுபிக் மூலோபாயம்

அமெரிக்கா சோவியத்திற்கிடையிலான பனிப்போர் கால மேலாதிக்கப் போட்டியிலும் பெரியதாக அமெரிக்க – சீன மேலாதிக்கப்போட்டி பார்க்கப்படுகின்றது. இவ்விரு பலம்பொருந்திய நாடுகளுக்குமிடையிலான போட்டி என்பது கடற்பிராந்தியத்தை மையப்படுத்தியது. வணிகப் போக்குவரத்திற்கான கடற்பாதை சார்ந்தது. சீனாவின் எழுச்சியைத் தடுப்பதற்கான மூலோபாயம் ஒன்றினை அமெரிக்கா வகுத்துச் செயற்படுகின்றது. அது இந்தோ-பசுபிக் மூலோபாயம் (Indo-Pacific strategy).

இந்தோ-பசுபிக் மூலோபாயம் என்பது கடந்த இரண்டு தசாப்தங்களாக பிராந்திய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சொல்லாடலாக இருந்து வருகின்றது. இது இந்தியப் பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடல் பிராந்தியங்களை உள்ளடக்கிய ஒரு கருத்தியல். இதன் அடிப்படை யாதெனில் தெற்காசியப் பிராந்திய நாடுகளை அமெரிக்காவுடன் அணிசேர்ப்பது. அந்த அணியென்பது பிராந்தியத்தில் சீனாவின் எழுச்சியைத் தடுப்பதற்கான இலக்கினைக் கொண்டதாகவே இந்த ஆசிய-பசுபிக் மூலோபாயம் வகுக்கப்பட்டுள்ளது. நாடுகளென நோக்குமிடத்து பிராந்தியத்தின் பெரும் ஜனநாயக நாடுகளாகக் கருதப்படும் இந்தியா, ஜப்பான், அவுஸ்ரேலியா ஆகியவற்றை அணிதிரட்டி சீனாவைக் கட்டுப்படுத்துவதென்பதே அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் மூலோபாயம். இந்தியா, ஜப்பான், அவுஸ்ரேலியாவை இணைப்பதென்பது அந்நாடுகளின் செல்வாக்கின் கீழுள்ள பல்வேறு நாடுகளை இணைப்பதையும் குறிக்கின்றது.

டிரம்ப் ஆட்சிக்காலம் என்பது குறுகிய நலன்களின் பாற்பட்ட முடிவுகளால் தீர்மானிக்கப்படுவதாகவும் சீனா தொலைநோக்கு அடிப்படையிலான காய்நகர்த்தல்களோடு தன்னைப் பலப்படுத்திவருகின்றதென்ற கருத்து மேலோங்கியுள்ளது.

ஐரோப்பிய நிலைப்பாடு

அமெரிக்க – சீன மேலாதிக்கப் போட்டிக்கும் செல்வாக்குச் செலுத்தல் காய்நகர்த்தல்களுக்கும் மத்தியில் – இந்த இரண்டு பூகோள அரசியல் அதிகார சக்திகளுக்கிடையில் நிலைப்பாடு எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் அதுசார்ந்த நாடுகளும் உள்ளன. சீனா தலைமையிலான ஒரு உலக ஒழுங்கு ஏற்படும் பட்சத்தில் ஐரோப்பா தனக்கான பொருளாதார, அரசியல் களங்களை இழக்க நேரிடும் என்ற அச்சம் ஐரோப்பிய மட்டத்தில் நிலவுகின்றது.

சீனா ஒரு சர்வாதிகார ஒற்றைக்கட்சி அரசு என்ற விம்பத்தைக் கொண்டிருக்கின்றது ஐரோப்பா. அரசியல் அர்த்தத்தில் அதற்கு எதிரான போக்கினையும் ஐனநாயகத்தை முதன்மையாகக் கொண்ட செயல்வலுமிக்க அரசாங்கங்களையும் பெரும்பான்மை ஐரோப்பிய நாடுகள் கொண்டிருக்கின்றன. இந்த அடிப்படையில் சீனாவைத் தமது உண்மையான பங்காளியாக ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக்கொள்ள மாட்டாது. ஜனநாயகம், மனித உரிமை, சூழலியல், ஊடகச் சுதந்திரம் என்பன ஐரோப்பிய ஆட்சிமுறை விழுமியங்களாக ஒப்பீட்டளவில் நடைமுறையில் சிறப்பாகவும் இயங்குகின்றன. இந்நிலையில் சீனாவை விட அமெரிக்கா தலைமையிலான உலகையே ஐரோப்பிய நாடுகள் விரும்புகின்றன. ஒருவித கவுழ்த்துக் கொட்டல் அணுகுமுறையைக் கைக்கொள்ளும் டிரம்ம் ஆட்சியின் நான்கு ஆண்டுகளின் பின்னர்கூட அமெரிக்க – ஐரோப்பிய உறவு வலுவானதாகவே உள்ளது.

உலகமயமாக்கல்: சீனாவின் வெற்றிகரமான வளர்ச்சி

இருந்தபோதும் உலகமயமாக்கல் சூழலில் சீனாவின் வெற்றிகரமான வளர்ச்சியைக் குறைமதிப்பீடு செய்யமுடியாது. உலகமயமாக்கல் என்பது பாரிய வணிக, உற்பத்தி, நுகர்வு உறவுகளால் இறுகவும் பல்வேறு நுண் இழைகளாலும் பல அடுக்குகளாலுமான சங்கிலிப் பிணைப்பினைக் கொண்டிருக்கின்றது. உலகமயமாக்கலின் பரந்த வெளியில் சீனாவுடன் ஐரோப்பிய நாடுகள் உறவைப் பேணவேண்டியதென்பது நிராகரிக்க முடியாத யதார்த்தம்.

சீனாவுடனான உறவு சார்ந்து ஐரோப்பிய நாடுகள் சீன நலன்களுக்கு முற்றுமுழுதாக அடிபணியாத, அதேவேளை ஒரு பொருத்தமான மூலோபாய அணுகுமுறையை கூட்டாக வகுக்க வேண்டும் என்ற கருத்துகளும் ஐரோப்பிய ஆய்வாளர்களால் பிரஸ்தாபிக்கப்படுகின்றது. அதாவது பொருளாதார மற்றும் தொழில்நுட்பத்தில் சீனாவில் தங்கியிருக்காத ஒரு மூலோபாயம் பற்றிய பிரஸ்தாபிப்பு அது.

ஆபிரிக்காவில் சீன மேலாதிக்க மூலோபாயம்

ஆபிரிக்க நாடுகள் மட்டத்தில், அதாவது ஆபிரிக்க பிராந்தியத்தில் சீனா கைக்கொள்ளும் அரசியல் மூலோபாயங்கள் தொடர்பாக நோக்குவது அவசியம். ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் தனது முதலீடுகளை சீனா 1990களில் தொடங்கி, கடந்த முப்பது ஆண்டுகளில் கணிசமாக விரிவுபடுத்திவந்துள்ளது. 2000ஆம் ஆண்டு வுhந கழசரஅ ழn ஊhiயெ-யுகசiஉய உழழிநசயவழைnஇ குழுஊயுஊ சீன – ஆபிரிக்க ஒத்துழைப்பிற்கான மையம் உருவாக்கம்பெற்றது. இது வணிக உறவுகளை வலுப்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ மையம்.

ஆபிரிக்காவில் சீனாவின் செல்வாக்கு விரிவுபடுத்தல் மூலோபாயம் மூன்று வகைப்படும். விவசாயத் துறை, வெவ்வேறு வகைப்பட்ட தனியார் சேவை நிறுவனங்கள், போக்குவரத்துத்துறை, உட்கட்டுமான அபிவிருத்தி, நிலக் கொள்வனவு உட்பட்ட வணிகத் திட்டங்கள் முதலாவது வகை. எண்ணெய் மற்றும் இயற்கை வளங்கள், கனிம வளங்கள் சார்ந்த முதலீடுகள் இரண்டாவது. அபிவிருத்தித் திட்டங்கள் மூன்றாவது வகையாகும்.

உலக வங்கியின் தரவுகளின் படி, சீனாவின் ஆபிரிக்க நாடுகளின் உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்களுக்கு 2001 – 2003 காலப்பகுதிகளில் ஒரு பில்லியன் டொலர் செலவிட்டது. 2006 காலப்பகுதியில் ஏழு பில்லியன் டொலர்களாக அதிகரித்தது. அத்தோடு அபிவிருத்திக் கடன் பெருமளவில் வழங்கப்படுகின்றது. ‘பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் வளரும் நாடுகளில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்’ எனும் திட்டத்தின் கீழ் இக்கடன்கள் வழங்கப்புடுகின்றன. நெடுஞ்சாலைத் திட்டங்கள், சக்தி உற்பத்தி மற்றும் தொடரூந்துத்துறை அபிவிருத்தி என்பன ஆபிரிக்க நாடுகளில் சீனா மேற்கொள்ளும் உட்கட்டுமானத் திட்டங்கள். சீனாவின் அதிகரித்த செல்வாக்குக் காரணமாக ஆபிரிக்க நாடுகளின் இத்தகைய திட்டங்களிலிருந்து மேற்கு நாடுகளும் அவற்றின் அபிவிருத்தி நிறுவனங்களும் கணிசமாக வெளியேறியுள்ளன.

மேற்கின் அச்சம்

ஆபிரிக்கக் கண்டத்தில் அதிகரித்துவரும் சீனாவின் பொருளாதார, அரசியல், இராணுவ வகிபாகம் தொடர்பில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அச்சம் கொண்டுள்ளன. ஆபிரிக்கக் கண்டத்தில் மேற்குக்கும் சீனாவிற்குமிடையிலான செல்வாக்குச் செலுத்தல் வலுச்சமநிலை குழம்பிவருவதாக மேற்கு உணர்கிறது. ஆபிரிக்க நாடுகளின் மிகப்பெரிய வணிகப் பங்காளியும் நிதிவழங்கும் நாடாகவும் சீனா விளங்குகின்றது. சீனா கைக்கொள்ளும அணுகுமுறை அல்லது அது கொண்டிருக்கும் அபிவிருத்தி மாதிரி ஆபிரிக்க நலன்களுக்குச் சேவை செய்கின்றதா என்பது மேற்கின் கேள்வி. ஆபிரிக்க நாடுகளின் பொருளாதாரம் நிலைகொள் வளர்ச்சிக்கு இட்டுச்செல்லப்படுவதைவிட சீன அரச நலன்களே அதிகம் முதன்மைப்படுத்தப்படுகின்றன என்பது மேற்கின் குற்றச்சாட்டாகும்.

ஆனால் பல ஆபிரிக்க நாடுகள் மேற்கை விட சீனாவை விரும்புகின்றன. ஆபிரிக்க நாடுகளின் தேவைகளை குறைந்த விலையில் சீனா நிவர்த்தி செய்கின்றது, குறைந்தளவு அதிகாரத்துவ நடைமுறைகளுக்கூடான அபிவிருத்தி, வேகமான உட்கட்டுமானத் திட்ட நிறைவேற்றல் என்பன அதற்கான காரணிகள்.

கடன் மீளளிப்பு என்பது பல வடிவங்களில் கோரப்படுகின்றன. கடனுக்கு மாற்றீடாக எண்ணெய், கனிமங்கள் உட்பட்ட இயற்கை வளங்களை அந்நாடுகளிலிருந்து சீனா பெறுகின்றது. துறைமுகங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றது.  சக்தி மற்றும் தொடரூந்துக் கட்டுமானப் பணிகளிலிருந்து பெறப்படும் வருமானம், சீன நிறுவனங்கள் அபிவிருத்தித் திட்டங்களை ஒப்பந்த அடிப்படையில் செய்வதோடு, சீனாவிடமிருந்து கட்டுமான மூலப்பொருட்கள் பெறப்படுகின்றன. நேரடியாக சீனாவிலிருந்து தொழிலாளர்களாகக் கொண்டுசெல்லப்படுவதன் மூலம் சீனர்களுக்குத் தொழில்வாய்ப்பு வழங்கப்படுகின்றது. சீனா தனது சொந்த நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களை ஆபிரிக்க நாடுகளில் தான் முன்னெடுக்கும் அபிவிருத்தி மற்றும் முதலீட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தியும் வருகின்றது.

***
ரூபன் சிவராஜா – தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது.

சீன பட்டுப்பாதைத் திட்டமும் கடலாதிக்கமும்

0

ரூபன் சிவராஜா

சீனாவின் வெளியுறவு அரசியல் இலக்குகள் பற்றிச் சமகாலத்தில் நிறையவே எழுதப்பட்டும் பேசப்பட்டும் வருகின்றன. தென்சீனக் கடற்பிராந்தியத்தில் செயற்கைத் தீவுகளை உருவாக்குதல், ஆசிய, ஆபிரிக்க மற்றும் ஐரோப்பிய துறைமுகங்களைக் கையகப்படுத்துதல், ஆப்பிரிக்க நாடுகளின் கனிமவளங்கள் மீது கட்டுப்பாட்டினைக் கொண்டிருத்தல், சூடானிலும் அங்கோலாவிலும் எண்ணெய் அகழ்வு, மத்திய ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் உட்கட்டுமான மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள், முதலீடுகள் என சீனாவின் உலகளாவிய தளம் அமைத்தல் செயற்பாடுகள் விரிவாக்கம் கண்டுவருகின்றன.

இவற்றைத் தாண்டிய பாரியதொரு திட்டத்தினை 2018-ல் சீனா தொடங்கியிருந்தது. அது பட்டுப்பாதை என அழைக்கப்படுகின்றது. சீனாவிற்கும் ஐரோப்பாவிற்குமிடையிலான வர்த்தகப் போக்குவரத்திற்குரிய கடல் மற்றும் தரைப் பாதைகளுக்குரிய உட்கட்டுமானங்களை அமைப்பது பட்டுப்பாதைத் திட்டமாகும். சீன மேலாதிக்கத்தை விரிவுபடுத்தும் இந்தத் திட்டம் கடல் மற்றும் தரை வழியாக 68 நாடுகளை இணைக்கின்ற பாரிய திட்டமாகும். இதற்காக பாரிய நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (4000-8000 பில்லியன் டொலர்கள் எனப்படுகிறது.)

‘புதிய பட்டுப்பாதை’ 2013-ல் அறிவிக்கப்பட்ட பாரிய திட்டம். மூன்று கண்டங்களை உள்ளடக்கிய இத்திட்டமானது கடல்வழிப் பாதையுடன் துறைமுகக் கட்டுமானங்களையும் உள்ளடக்கியதாகும். பழைய பட்டுப்பாதை என்பது பல கிளைகளைக் கொண்ட ஐரோப்பாவிற்கும் சீனாவிற்குமிடையிலான வரலாற்றுப் பாதை. முதலாம் நூற்றாண்டு காலப்பகுதியில் தொடங்கப்பட்டதாகும். மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடலிலிருந்து காஸ்பியன் கடலின் தெற்கு மற்றும் வடக்காக இப்பாதை அமைந்திருந்தது. அக்கால நாடுகடந்த வணிகப் போக்குவரத்துப் பாதையாக விளங்கிய போதும், சீனப்பட்டுகள் முதன்மையாகக் கொண்டு செல்லப்பட்டமையால் பட்டுப்பாதை எனப் பெயர்பெற்றது. வணிகப்பாதை என்பதைத் தாண்டி, மேற்கிற்கும் கிழக்கிற்குமிடையிலான சிந்தனை, தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்திற்கான வழியாகவும் அது இருந்திருக்கின்றது.

பூகோள அரசியல் விளைவுகள்

சீனாவின் புதிய பட்டுப்பாதை பூகோள அரசியல் விளைவுகளை ஏற்படுத்துமென்றும் கருதப்படுகின்றது. அதாவது சீன ஆதிக்கத்திற்கு எதிரான  மற்றும் சீனாவில் தங்கி நிற்பதை விரும்பாத நாடுகள் மத்தியில் இத்திட்டம் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் இத்திட்டம் அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தை பலவீனப்படுத்துவதாகவும் அச்சுறுத்தக்கூடியதுமாகக் கருதவும் கணிக்கவும்படுகின்றது. எனவே அமெரிக்காவிற்கு இதில் உவப்பிருக்கப் போவதில்லை. ஐரோப்பாவின்  மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களை சீன கையகப்படுத்துதல் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அச்சம் கொண்டுள்ளது. சீனாவின் வல்லரசுக் கனவின் முக்கிய அம்சம் இன்றைய புதிய பட்டுப்பாதைத் திட்டம். மேற்கு நாடுகள் இந்தத்திட்டத்தினை சீன விரிவாக்கத்தின் அங்கமாகப் பார்க்கின்றன.

அவுஸ்திரேலியா சீனாவின் இத்திட்டத்துடன் இணைய மறுத்துள்ளது. சீன நிதியுதவியுடன் – காஷ்மீர் ஊடாக சீனாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான போக்குவரத்துப் பாதையமைப்புத் திட்டத்தினை இந்தியா எதிர்த்துள்ளது. சீன முதலீடுகளுக்காகத் தம் நாடுகளைத் திறந்துவிட்டுள்ள நாடுகள் பட்டுப்பாதை தமக்கான பொருளாதார நல்விளைவுகளுக்கான கதவுகளைத் திறக்குமென நம்புகின்றன. அதேவேளை வணிக மற்றும் முதலீட்டுத்திட்டங்கள் சீனத் தொழிற்சக்திகளைக் கொண்டு முன்னெடுக்கின்ற நடைமுறையிருப்பதால், அவை சம்மந்தப்பட்ட உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதாகப் பங்களிக்காது என்ற கருத்துகளும் நிலவுகின்றன.

ஐரோப்பாவுடனான வணிக உறவை விஸ்தரிக்கும் நோக்கிலான இத்திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம், குறிப்பாக ஜேர்மன் சந்தேகத்துடனேயே பார்க்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக நலன்களுக்குச் சேவை செய்யாத, சீன அரச நலன்களை முதன்மைப்படுத்தி, சீன மேலாதிக்கத்திற்கு இட்டுச்செல்லும் திட்டம் இதுவென்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பான்மை நாடுகளின் கருத்து.

சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தில் சிறிலங்கா உட்பட 68 நாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.  இவற்றில் 23 வரையான நாடுகள் சீனாவிடம் பாரிய கடனுதவியைப் பெற்று, அதனை திரும்ப அளிப்பதற்கு திண்டாடும் நிலையிலுள்ளவை. பாகிஸ்தான், டியுபூதி, மாலைதீவுகள், மொங்கோலியா, கிர்சிஸ்தான், லாவோஸ் போன்ற நாடுகளின் நிலைமை மிகக் கவலைக்கிடமானவை. அந்நாடுகள் மிகப்பெரும் கடன்தொகையைச் சீனாவிடமிருந்து பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

புதிய பட்டுப்பாதை

துறைமுகங்களைக் கட்டுப்படுத்தல் – கேந்திர முக்கியத்துவம்

இத்திட்டத்தின் குவிமைய நோக்கம் சீனாவிற்கும் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா, ஐரோப்பாவிற்குமிடையிலான கேந்திர முக்கித்துவம் வாய்ந்த துறைமுகங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாகும்.

இலங்கைக்கும் அதன் பூகோள அமைவிடத்திற்கும் இத்திட்டத்தில்; முக்கிய வகிபாகம் உள்ளது. இந்துமா கடலின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்துப் பாதையை அமைவிடமாகக் கொண்டுள்ள இலங்கைத் தீவினூடாக வருடாந்தம் 60 000 வரையான வணிகக்கப்பல்கள் கடந்து செல்கின்றன என்கிறது ஒரு தகவல்.

இலங்கையைப் பொறுத்தவரை பெரிய அளவில் சீனா தனது செல்வாக்கினை விரிவுபடுத்தியுள்ளது. கொழும்பு துறைமுக நகர அமைப்பு திட்டத்திற்காக 99 வருட குத்தகைக்கு சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது – இது காலி முகத்திடலை அண்மித்து கொழும்பு துறைமுக விரிவாக்க செயற்றிட்டதின் கட்டுமான வளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றது.

துபாய், சிங்கப்பூருக்கு ஈடான வணிகப் பெருநகரமாக அமைக்கப்படவுள்ளது. உலகளவில் பெரு நிறுவனங்களையும் முதலீட்டாளர்களையும் கவரும் வகையிலான இத்திட்டம் சிறிலங்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடியது என்றபோதும் சீனாவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. 99 வருடக் குத்தகை என்பது சீனாவிடம் சிறிலங்கா பெற்ற பெருவாரியான கடன் மீளளிப்பிற்கான மாற்றீடு என்பது ஒருபுறமிருக்க, இதுவொரு நிரந்தர தாரைவார்ப்பு என்பது இதன் மறுபக்கமாகும். 99 வருடங்கள் முடிய மீண்டும் குத்தகைக் காலம் புதுப்பிக்கப்படும். எனவே நடைமுறை அர்த்தத்தில் இதுவொரு நிரந்தரத் தாரைவார்ப்பு.

அதேபோல் ஹம்பாந்தோட்ட துறைமுகமும் 99 வருட குத்தகை ஒப்பந்த அடிப்படையில் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. துறைமுக அபிவிருத்தித் திட்டத்தோடு சமாந்தரமபக அப்பிரதேசத்திற்கான விமான நிலையம், மாநாட்டு மண்டபம், கிறிக்கெற் மைதானம் என்பன சீனாவின் கடனுதவியோடு கட்டப்பட்டன. கடனை மீளளளிக்க முடியாத நிலையில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்ட துறைமுக மற்றம் அதனை அண்டிய பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்குமாக 2018-ல் உடன்பாடு எட்டப்பட்டது. சீனாவிற்கான எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்புக் கருதிய இடைத்தங்கல் துறைமுகமாக இவற்றின் பாவனை இருக்குமென சீனா கூறியிருக்கின்றது.

இந்தியாவின் தெற்கு மூலையின் ஆழ்கடலில் (இந்தியாவின் எதிர்ப்பினை மீறி) சீனாவின் ஆதிக்கத்திற்கு இடமளித்துள்ளது சிறிலங்கா. போருக்குப் பின்னான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்களின் பெயரிலும் பாரிய கடனை சிறிலங்கா சீனாவிடமிருந்து பெற்றுள்ளது.

இராணுவ ரீதியிலான தளம் அமைத்தலிலும் சீனா முனைப்பு

பொருளாதார விரிவாக்கம் மட்டுமல்ல. ஏனைய நாடுகளில் தனது படைத்துறை இருப்பிலும் சீனா கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.  மியான்மார், தாய்லாந்த், சிங்கப்பூர், இந்தோனேசியா, சிறிலங்கா, கென்யா, தன்சானியா, அங்கோலா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீசெல்ஸ், தஜிகிஸ்தான் போன்ற நாடுகளில் தனது இராணுவ ரீதியிலான தளம் அமைத்தலுக்குச் சாதகமானவையாக சீனா பரிசீலித்து வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகத் தகவல்களை மேற்கோள் காட்டிய தகவல்கள் அண்மையில் வெளிவந்திருந்தன.

ஆபிரிக்காவின் நிலப்பரப்பில் பெரிய நாடான சூடான் மற்றும் ஏனைய தென் ஆப்பிரிக்க நாடுகளில் சீனா தனது வாணிபச் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தி வருகின்றது. கம்பியா, சிம்பாவே, மொசாம்பிக் போன்ற நாடுகள் அந்தப்பட்டியலில் அடங்குகின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் அபிவிருத்தி என்ற பெயரில் சீனாவின் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துகின்ற மூலோபாயம் கையாளப்பட்டு சீனாவின் பொருளாதாரம் வளர்க்கப்படுகின்றது.  மேற்கின் எண்ணை அபிவிருத்தி நிறுவனங்கள் ஆபிரிக்காவில் குறைந்தளவு செல்வாக்கினைக் கொண்டுள்ளன. சீனா அந்த இடத்தை நிரப்பியும் விரிவுபடுத்தியும் வருகின்றது. 1990-களிலிருந்து சீன உயர்மட்டத் தலைவர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு விஜயங்களை மேற்கொண்டு அவற்றுடனான வணிக, அபிவிருத்தி, கடன் சார் உறவுகளை வலுப்படுத்தி வந்துள்ளனர்.

2017-ல் சீனா தனது தேச ஆள்புலத்திற்கு வெளியில் தனது முதலாவது படைத்தளத்தினை ஆபிரிக்க நாடான டிஜிபூதியில் (Djibouti) திறந்ததாக ஆபிரிக்க பாதுகாப்பு கற்கை மையமும் (Institute for Security Studies) அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமும் (Pentagon) தகவல் வெளியிட்டிருந்தன. நீண்டகால அடிப்படையில் வணிக மேலாதிக்கத்தைத் தாண்டி இராணுவ ரீதியிலும் சீனா தனது விஸ்தரிப்புகளை மேற்கொள்ளவும் சீனா தயங்காது என்ற அச்சம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மட்டத்தில் நிலவுகின்றது. அமெரிக்காவிற்கு எதிரான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உளவு நடவடிக்கைகளை பாரிய அளவில் சீனா செய்து வருகின்றது. தவிர சர்வதேச வணிக விதிமுறைகளை சீனா சரிவரப் பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

கடற்பாதையைக் கட்டுப்படுத்தலில் போட்டி

கிழக்காசியப் பிராந்தியத்தைப் பொறுத்தவரை தரைப்படைகளுக்கான முக்கியத்துவம் குறைவு. கடல், ஆகாயம், சைபர் சார்ந்த படைத்துறை ஆளணிகளும் தொழில்நுட்பங்களும் முக்கியமானவை. ஏனெனில் வணிக மேலாதிக்கத்தைப் பேணுவதற்குரிய கடற்பாதையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதென்பதே இங்கு முக்கியமானது. கடற்பாதையைக் கட்டுப்படுத்தலில்; அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமிடையில் முறுகலும் போட்டியும் நிலவுகின்றது. காலப்போக்கில் மத்தியக் கிழக்கில் தமது படைத்துறைப் பிரசன்னத்தைக் குறைத்து அல்லது அங்கிருந்து கணிசமாக வெளியேறி கிழக்காசியப் பிராந்தியத்திற்கு நகர்த்தும் முடிவிற்கு அமெரிக்கா வரக்கூடும். அதேபோல ரஸ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பினைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய பிராந்தியங்களில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகளையும் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா ஆசியப் பிராந்தியத்திற்கு நகர்த்தும் வாய்ப்புள்ளதாகவும் நோர்வேஜிய படைத்துறைக் கல்லூரிப் பேராசிரியரும் ஆய்வாளருமான Øystein Tunsjø அண்மையில் கூறியிருந்தார்.

ஆரம்பத்தில் சீனாவுடனான மேற்கின் வணிக உறவு பரஸ்பரமானதாக நோக்கப்பட்டது. அதனால் ஒருவருக்கொருவர் இலாபமும் நன்மையுமென்று கருதிய மேற்கு தற்பொழுது சீனாவின் அபார வளர்ச்சியைக் கண்டு அஞ்சுகிறது. சீனாவின் வளர்ச்சி உலகின் ஏனைய பிராந்தியங்களின் மேலாதிக்க வலுச்சமநிலையைப் பாதிக்கின்ற அம்சமாகவும் மேற்கினால் பார்க்கப்படுகின்றது. சீனாவில் தங்கியிருக்கும் நிலையும் சீனா மேலாதிக்கம் செலுத்துகின்ற நிலைக்கும் இட்டுச் சென்றுவிடக் கூடாது. குறைந்தபட்சம் அதிலொரு மேலாதிக்கம் இல்லாத சமநிலையைப் பேணவேண்டுமென்ற முனைப்பு மேற்கிற்குண்டு.

மறுசீராக்க மூலோபாயம்

ஓபாமா ஆட்சியின் போது சீனாவின் வணிக மேலாதிக்க விரிவாக்கத்தையும் செல்வாக்கினையும் மட்டுப்படுத்தும் நோக்கில் மறுசீராக்க மூலோபாயம் (Strategic Rebalancing) வகுக்கப்பட்டது. அதன் விளைவாக பிராந்திய அளவில பல நாடுகளைக் கூட்டிணைத்து Trans-Pacific Partnership (TPP) og Transatlantic Trade and Investment Partnership (TTIP)  போன்ற வணிக உடன்பாட்டுக் கூட்டமைப்புகளும் உருவாக்கக்பட்டன. டொனால்ட் டிரம்ப் வருகையின் பின் இக்கூட்டமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகியது. ஓபாமாவின் மறுசீராக்கத் திட்டத்தின் தொடர்ச்சியாகத்தான் இந்தியா, ஜப்பான், அவுஸ்ரேலியா இணைத்து உருவாக்கப்பட்ட இந்தோ-பசுபிக் மூலோபாயத்தை (Indo-Pacific Strategy) நோக்க வேண்டும்.

சீன வெளியுறவு மூலோபாயங்கள்

சீனாவின் வெளியுறவுக் கொள்கை என்று நோக்குமிடத்து அவற்றை மூன்று மூலோபாய நோக்கங்களாக வரையறுக்க முடியும். இயற்கை வளங்கள், கனிமவளங்கள் மற்றும் மூலப்பொருட்களைக் பெற்றுக் கொள்ளுதல் என்பது முதலாவது அடிப்படையாக உள்ளது. இதில் எண்ணெய்ச் சந்தையை தனதாக்குதல் என்ற மூலோபாயம் முதலிடம் பெறுகின்றது.

இரண்டாவது சீன உற்பத்திப் பொருட்களுக்குரிய சந்தை வாய்ப்பினை விரிவாக்கம் செய்தல் என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்ற மூலோபாயம் ஆகும். அது ஏற்றுமதி விரிவாக்கம் சார்ந்த மூலோபாயம் ஆகும். தமக்குப் பொருளாதார நோக்கங்கள் மட்டுமே உள்ளன என்றும், ஏனைய நாடுகளின் உள்ளக விவகாரங்களில் சீனா தலையிடாது என்றும் சீனா தொடர்ந்து கூறி வருகின்றது. ஆயினும் பல்வேறு நாடுகளில், சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வருகின்றமை, பொருளாதார நலன்களுக்கு அப்பாற்பட்ட விளைவுகளுக்கு இயல்பாகவே இட்டுச்செல்லும்.

மேற்குறிப்பிட்ட இரண்டு மூலோபாயங்களின் அடிப்படையில் ஏற்படுத்துகின்ற திறக்கப்படுகின்ற தளங்கள் மூலம் தொலைநோக்கில் செல்வாக்குச் செலுத்துதல் பொருளாதாரத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல் என்பது சீனாவின் வெளியுறவுக் கொள்கையின் 3-வதும் முதன்மையானதுமான வெளியுறவு அரசியல் மூலோபாயமாக விளங்குகின்றது. சீனாவின் இந்தவகை மூலோபாயக் காய்நகர்த்தல்கள் அதன் அதிகார நலன்களுக்கும் தளம் அமைப்பு விரிவுபடுத்தல் சார்ந்த புவியியல் நலன்களுக்கும் உதவுகின்றன. சீனாவின் அதிகார விரிவுபடுத்தல் மறுவளத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் செல்வாக்கு வெளியைச் சுருக்கியும் வருகின்றது.

பொருளாதார அதிகாரம் என்பது அரசியல் அதிகாரத்திற்கான திறவுகோல். சீனாவிடமிருந்து கடன்பெறும் நாடுகள், தமது நாட்டு அபிவிருத்தி, உட்கட்டுமான, முதலீட்டுத் திட்டங்களில் சீன முதலீடுகளை அனுமதித்துள்ள நாடுகள் தமக்கான அரசியல் தீர்மானமெடுக்கும் வெளியையும் சுயாதீனத்தையும் இழக்கின்றன. இன்னொரு வகையில் சொல்வதானால் அந்நாடுகளைச் சீனாவுக்குக் கடன் அடிமைகளாக்கும் மூலோபாயம் இது. மட்டுமல்லாமல் அந்நாடுகள் மீது அரசியல் மேலாதிக்கத்தைச் செலுத்துவதற்கும் வழிகோலுகின்றது.

***

ரூபன் சிவராஜா – தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது.

இரு கோடுகள்

1

சுஷில் குமார்

“ஹலோ… வர லேட்டாகுமா? எப்போ வருவியோ?” சரசுவின் படபடப்பு ஒருநாளும் தீரப்போவதில்லை.

“என்னத்துக்கு சும்மா கால் பண்ணிட்டுக் கெடக்கட்டி? மனுசன் வேலயப் பாக்காண்டாமா?”

“எரிச்சல் படாதீயோ… இந்தப் பய ஒரே அழுக…சொன்னா கேக்கமாட்டுக்கான்…”

“அவன சும்மா கொடஞ்சிட்டே கெட… ஒனக்கு வேற வேல இல்ல.. எதுக்கு அழுகான்?”

“எல்லாம் ஒங்களாலத்தான்.. சின்ன பிள்ளேட்ட என்ன சொல்லன்னு கெடயாதா? தாத்தாக்கு மட்டும் வயித்துல கோடு கெடக்கு.. எனக்கு இல்லன்னு ஒரே கூப்பாடு… கத்திய எடுத்து கோடு போடதுக்கு நிக்கான்… அவன் அம்ம நாலு போடு போட்டா… பிள்ள ஏங்கிட்டான்… நீங்க ஒண்ணு பேசுங்க அவன்ட்ட…” என்று சூர்யாவிடம் அலைபேசியைக் கொடுத்தாள்.
என் குரல் கேட்டதும் சூர்யா அலற ஆரம்பித்தான். “தாத்தா… தாத்தா… அம்ம அடிச்சிட்டா… தாத்தா, கோடு… எனக்கு… கோடு…. நீ வா தாத்தா….”

“இந்நா வாறேன் மக்ளே.. பிள்ள அழாத… தாத்தா வந்து அம்மக்கி அடி குடுக்கேன் செரியா? நல்ல பிள்ளல்லா? பிள்ளக்கி என்ன வாங்கிட்டு வரணும்? ஜெம்ஸ் முட்டாய் வாங்கட்டா?”

“தாத்தா..தாத்தா… கோடு.. எனக்கு கோடுதான் வேணும்…”

*

சில தினங்களுக்கு முன் ஒருநாள் இரவு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது சூர்யா வழக்கம்போல் ஓடிவந்து என் வயிற்றில் துள்ளி உட்கார்ந்தான். அப்படியே மார்பில் சாய்ந்து கொண்டவன் விரலால் என் மார்பில் எதையோ வரைய ஆரம்பித்தான். மெல்ல மார்பின் மத்தியிலிருந்து கீழாகத் தடித்திருந்த தழும்பின் மீது விரலை வைத்து வருடியவன், “தாத்தா, ஏன் தாத்தா இப்பிடி இருக்கு?” என்று கேட்டான்.
“அதுவா மக்ளே? அது தாத்தாக்கு சாமி தந்த கிஃப்ட்டாக்கும்..”

ஒரு நிமிடம் அதை உற்றுப் பார்த்தவன் பின் தன் வயிற்றைத் தடவிப் பார்த்தான். “தாத்தா… அப்போ சாமி எனக்கு கிஃப்ட் தரல?”

“அது… இந்த கிஃப்ட்டெல்லாம் சின்ன பிள்ளேளுக்கு சாமி தராது மக்ளே…”
கண்களை இடுக்கிக்கொண்டு என் முகத்தைப் பார்த்தவன் மீண்டும் அந்தத் தழும்பைத் தடவிக் கொடுத்தான். அவனுக்கே உரிய மொழியில் தனக்குத்தானே ஏதோ பேசிக்கொண்டே உறங்கிவிட்டான். அதற்கடுத்த நாட்களிலும் அதைப் போலவே என் மீது படுத்துக்கொண்டு அந்தத் தழும்போடு பேசி விளையாடினான். நானும் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஒருநாள் ஓடிவந்து ஒரு காகிதத்தை என்னிடம் நீட்டி, “தாத்தா, இங்கப் பாரு, ஒன்ன வரஞ்சிட்டேன்..” என்று சிரித்தான்.

தாத்தாவின் சட்டையற்ற மேலுடல், மடித்துக் கட்டிய வேட்டி, காதிடுக்கில் சொருகியிருக்கும் சிகரெட், அதோடு தாத்தாவின் வயிற்றைப் பிளந்தவாறு ஒரு கோடு. அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டிப் பார்த்தேன். ஒரு பெரிய மீனும் ஒரு குட்டி மீனும், பெரிய மீனின் வயிற்றில் ஒரு கோடு. அதே போல, யானை, நாய், மரம், வீடு, நிலா என எல்லாவும் வயிற்றுக் கோட்டோடு இருந்தன.

*

பதினைந்து வயதில் அம்மாவிடம் சண்டை போட்ட வீம்பில் பெரியப்பா தந்த முப்பது ரூபாயை மனதில்லாமல் வாங்கிக்கொண்டு பம்பாய்க்கு இரயிலேறினேன். திருச்செந்தூரில் இருந்து மார்த்தாண்டம் வரை இரண்டு இரவுகள் தொடர்ந்து மிதிவண்டி மிதித்து அரிசி மூடை கடத்தியதிலும், மளிகைக் கடையில் எடுபிடி பையனாக இருந்ததிலும், கையில் அட்டைப்பெட்டியை வைத்துக்கொண்டு அரைகுறை ஆங்கிலத்திலும் இந்தியிலும் பாசிமணிகளையும் வண்ண வண்ண கடல் மணலையும் விற்றதிலும் இந்த உலகில் பிழைத்துக் கொள்ளத் தேவையான ஓரளவு அனுபவ அறிவு எனக்கிருந்தது.

“போறதெல்லாம் செரி, ஆனா திரும்பி வந்தா ராஜா மாரி வரணும் பாத்துக்கோ… சும்மா சள்ளத்தனம் பண்ணிரப்புடாது, என்ன?” என்று அதட்டி வழியனுப்பினார் பெரியப்பா.

காலையில் இரண்டு வடா பாவும் ஒரு கோப்பை தேநீரும், மதியம் நண்பர்களுடன் இரண்டு சப்பாத்தி அல்லது மோரிஸ் வாழைப்பழங்கள், இரவில் சிலநாட்கள் அரிசிக்கஞ்சி, சிலநாட்கள் கோயில் பிரசாதத்துடன் இரண்டு லிட்டர் தண்ணீர். பம்பாயில் வாழ்வது பெரிய கஷ்டமொன்றுமில்லை. ஊரில் செய்த பல வேலைகளின் அனுபவத்தால் அங்கே வேலை கிடைப்பதில் சிக்கல் ஏதும் இருக்கவில்லை. கடின உழைப்பும் விசுவாசமும் தான் அங்கே முதலீடு. அத்துடன் தயக்கமின்றி எல்லோருடனும் பேச சரியான மொழியும் தைரியமும் இருந்தால் சீக்கிரத்தில் மேலேறி வந்துவிடலாம். முதல் ஐந்து வருடங்களில் பல்வேறு வேலைகளைச் செய்து வாழ்க்கை ஓடியது. கிடைத்த நண்பர்களின் மூலம் துறைமுகத்தில் ஒரு கப்பல் நிறுவனத்தில் ஒரு நேர்முகத் தேர்வுக்கான வாய்ப்பு கிடைத்தது. சர்வதேச எண்ணெய் ஏற்றுமதி நிறுவனத்தின் கப்பல். அதன் முக்கிய மேலாளர்களில் ஒருவரான அந்தப் பெண்மணிக்கு தனிச்செயலாளர் வேலை.

வேலை ஒன்றும் அவ்வளவு கடினமானதாக இல்லை. ஆனால், நேரக் கணக்கற்ற வேலை, சிலநாட்கள் பத்து மணிநேரம், பல நாட்கள் பதினைந்து மணிநேரம். இன்னும் சில நாட்கள் அலுவலகத்திலேயே கிடையாய் கிடக்க வேண்டியும் வரும். மேலாளர் அழைக்கும் போது அங்கு இருந்தாக வேண்டும்.

“எனது ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு கோடி என்பதை மனதில் வைத்துக்கொள், என்ன? எனது மட்டுமல்ல, உனது ஒவ்வொரு நிமிடமும் தான், சரியா?” என்று அடிக்கடி சொல்வார் என் மேலாளர்.

நிறுவனத்திற்கு கோடிகளை ஈட்டிக் கொடுத்ததில் என் வாழ்க்கையில் எனக்கான நேரம் என்பது இல்லாமல் போனது. வடா பாவும் வாழைப் பழங்களும் நேரம் கிடைத்தால் மட்டும்தான்.

நாட்கள் செல்லச்செல்ல மார்பின் அடிப்பகுதியில் ஒருவித எரிச்சல் தோன்ற ஆரம்பித்தது. அதைப்பற்றி கவலைப்பட நேரமின்றி குளிர்ந்த நீரைக் குடித்துக் கடந்து சென்றேன். எரிச்சல் மெல்ல மெல்ல வலியாக மாறி வயிற்றுப்பகுதி முழுதும் பரவியது. காலை பத்து மணிக்கு ஆரம்பித்தால் மதியம் சாப்பிடும் வரை பயங்கர வலி. கை முட்டியால் மார்பிலிருந்து மேல் கீழாக வயிற்றில் குத்திக்கொண்டே இருப்பேன். வலி லேசாகக் குறைந்தது மாதிரி இருக்கும்.

நான் வாடிப்போய் இருந்ததைக் கண்ட மேலாளர் அவரது நண்பரின் மருத்துவமனையில் எனக்குப் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். தீவிர வயிற்றுப்புண் இருப்பதாகவும் முறையான உணவுப் பழக்கத்தோடு சில மாதங்களுக்கு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டுமெனவும் சொன்னார்கள்.

இந்த நாட்களில்தான் பெரியப்பாவின் தந்தி வந்தது.

‘முக்கிய விசயம். உடனே வரவும்’

நேரில் சென்றால், “கிறுக்குப் பய மவன, கெட்டு டே தாலிய” என்று சரசுவுடன் மணமுடித்து வைத்தார். அடுத்த ஒரு வாரத்தில் கூடுதல் பொறுப்புடன் மீண்டும் பம்பாய் பயணம்.

சரசு தன் ஊரைவிட்டு வெளியே வந்தது அதுதான் முதல்முறை. சேரியின் ஓரறை வீட்டில் எனக்காகக் காத்திருப்பதில் அவளுக்கு என்ன சுகம் கிடைத்துவிடப் போகிறது? வந்த வருமானம் ஊருக்கு அனுப்பியது போக எனக்கும் அவளுக்கும் சரியாக இருந்தது. என்ன, எந்த ஒரு ஆடம்பரத்திற்கும் கேளிக்கைக்கும் வாய்ப்போ வசதியோ இல்லை. எனது வலி வேறு நின்றபாடில்லை.

தொடர்ந்து எடுத்து வந்த மருந்துகளின் மீது எனக்கு வெறுப்பாயிற்று. எந்த உணவைக் கையில் எடுத்தாலும் மருந்து வாடை. தண்ணீரிலும் மருந்து வாடை. உடுத்தும் உடைகளிலும் அதே வாடை ஏறிப்போய், போகப்போக அறை முழுவதும் அந்த வாடை நிறைய, மூச்சுத்திணறிக் கிடந்தேன். அந்த வலியிலிருந்தும் வாடையிலிருந்தும் தொலை தூரத்திற்கு ஓடிவிட வேண்டும். வலியின் இறுதி மரணம் தான் இல்லையா? அந்த வலியிலிருந்து மீண்டு செல்ல ஒரே வழியும் அதே மரணம் தானோ? தற்கொலை செய்துகொள்ளலாமா? என்றெல்லாம் ஏதேதோ யோசனைகள்.
வலியின் உச்சத்தில் ஒருநாள் மருந்துகளை எடுத்து சாக்கடையில் வீசியெறிந்து விட்டேன். அடுத்த இரண்டு நாட்கள் அலுவலகத்திற்குச் செல்ல முடியாமல் நான் சுருண்டு கிடக்க, நண்பர்கள் என்னைத் தூக்கிச் சென்று அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். வயிற்றுப்புண் மிகத் தீவிரமாகியிருந்தது. மருந்துகள் மேலும் கூடின. விடுப்பு நாட்கள் கூடியதால் அலுவலகத்திலிருந்து உடனே பணியில் சேருமாறும் இல்லையென்றால் வேலை நீக்கம் செய்யப்படுவேன் எனவும் தகவல் வந்தது.

அடுத்த நாள், தலை துவட்டும் துண்டு ஒன்றை வயிற்றில் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு அலுவலகத்திற்குச் சென்றேன். மேலாளர் அறிவுரைகளை அடுக்கிக் கொண்டேயிருக்க அங்கேயே நிலைகுலைந்து விழுந்தேன். மீண்டும் மருத்துவமனை. பரிசோதனைகள், அறிக்கைகள், நரம்புகளைத் தேடிய செவிலியர்கள், அழுகையில் உறைந்து போன சரசுவின் முகம். நீண்ட ஓய்விலிருக்க வேண்டிய நிலைமை. சில வாரங்களிலேயே கையிலிருந்த சொற்ப பணமும் காலியாக, நண்பர்கள் சிலர் மளிகைப் பொருட்களை வாங்கிப் போட, சரசு தினமும் வெளியில் சென்று மருந்துகளோடு திரும்பி வந்தாள். சில மருத்துவமனைகளின் வாசலில் நின்று போவோர் வருவோரிடம் அழுது தனக்குத் தெரிந்த மொழியில் எனக்கான மருந்துகளைப் பிச்சையெடுத்து வந்திருக்கிறாள்.
வலி மனிதனுக்குத் தன் கடந்த காலத்தை சட்டகங்களில் மாட்டிக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. கூடவே, எதிர்காலத்தில் என்ன நிகழுமோ என்கிற பயமும் எதிர்மறை எண்ணங்களும். வலியின் உச்சத்தில் சப்பாத்திக் கட்டையை எடுத்து அதன் ஒரு முனையை வயிற்றில் வைத்து மறுமுனையைச் சுவற்றில் வைத்து முட்டுக்கொடுத்து பல்லைக் கடித்துக்கொண்டு அழுத்தி நிற்பேன். கொதிக்கும் வெந்நீர்ப் பாத்திரத்தை எடுத்து வயிற்றின் மீது வைத்துக் கிடப்பேன். ஒருசில நொடிகள் நிம்மதி.

ஒருநாள் தயங்கித் தயங்கி என்னருகே வந்து நின்றாள் சரசு.
அவள் முகத்தைப் பார்த்து, “என்னட்டி? எதுக்கு ஒரு மாரி இருக்க?” என்றேன்.

கேட்டதும் கேவிக்கேவி அழ ஆரம்பித்தாள். நான் அவள் கையை இறுக்கமாகப் பிடித்து, “எட்டி, அழாத… செரி ஆயிரும்… நீ வேண்ணா ஊருக்குப் போயி இருக்கியா?” என்று அவள் முகத்தைப் பார்த்தேன்.
அழுகையோடு எரிச்சலும் சேர்ந்துகொள்ள, “இப்பப் போயா இப்பிடி ஆகணும்? எல்லாம் எந் தலையெழுத்து…” என்றவாறு தன் தலையில் அடித்தாள்.

அவளது கையைப் பிடித்து இழுத்து, “எட்டி… சும்மாக் கெட… என்ன ஆச்சி? மனுசன டென்சன் ஆக்கப் படாது…” என்றேன்.

அவளது அழுகை மேலும் மேலும் கூடிக்கொண்டே போனது. நான் அமைதியாக அவளது கையைப் பிடித்துக் கிடந்தேன். ஒருவேளை, நான் நினைப்பது போலத்தான் இருக்குமோ? அப்படியென்றால் நான் என்ன செய்யப் போகிறேன்? என்னால் எனது இந்தப் புழுத்த உடலைத் தூக்கிக்கொண்டு நடக்கவே முடியவில்லையே!

சட்டென கையை விலக்கி எழுந்தவள் சாமிப்படத்தின் முன் சென்று நின்றாள். கண்மூடி வேண்டி பெருமூச்சு விட்டவளாக திருநீற்றை எடுத்து வந்து என் நெற்றியில் பூசி விட்டாள். கண்ணீரின் ஊடே, “நம்ம பிள்ள வந்த நேரம் ஒங்களுக்குச் செரியாயிரும்ப்பா…” என்று சொல்லி என் காலைத் தொட்டு வணங்கினாள்.

அடுத்த நாள் ஒரு சாக்கை எடுத்துக்கொண்டு வெளியே சென்றேன். பக்கத்துத் தெருவிலிருந்த அரசு நியாயவிலைக் கடைக்குச் சென்று அங்கிருந்த என் நண்பன் ஒருவனிடம் என் வேண்டுதலைக் கூறினேன். என்னை ஏற இறங்கப் பார்த்தவன் என் கைகளைப் பிடித்துச் சமாதானம் சொல்லி, பொருட்கள் விநியோகம் செய்யும் பகுதியில் என்னை அனுமதித்தான். அந்தத் தராசின் அடியில் எனது சாக்கை விரித்து அதன் பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பேன். ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் போடப்படும் பங்கிலிருந்து சிதறி விழுந்த தானியங்கள் என் குடும்பத்திற்கு ஒருவேளை உணவுக்குப் போதுமானதாக இருந்தன. எத்தனைக் குடும்பங்களின் கருணை அது! அந்தப் பலதானியக் கஞ்சியில் எனது மனைவியும் அவளுள்ளே எனது மகனும் உயிர்த்துக் கிடந்தார்கள்.

ஒருநாள் அந்த நியாயவிலைக் கடைக்கு எங்கள் பக்கத்து வீட்டு மாமி வந்திருந்தாள். அவளைப் பார்த்ததும் நான் மறைவாகத் திரும்பி உட்கார்ந்து கொண்டேன். அவளும் கவனித்த மாதிரி தெரியவில்லை. பம்பாயில் சரசுவிற்குத் தெரிந்த ஒரே பெண் அந்த மாமிதான். இந்தியும் தமிழுமாக அவர்களுக்குள் ஒரு நட்பு எப்படியோ உருவாகியிருந்தது.

அன்று மாலை நான் அறைக்குத் திரும்பிய போது உள்ளே மாமியின் குரல் கேட்டது. என்னைப் பார்த்ததும், “இப்படிப் பண்ணிட்டியே சோட்டு… நா ஒனக்கு ஒரு அக்கா மாதிரிதான? நா சோறுபோட மாட்டனா ஒனக்கு?” என்று கோவத்தில் குரல் தழுதழுக்கக் கேட்டார்.

நான் பதிலற்று நின்றேன்.

“சரி விடு. இன்ஷா அல்லா, எங்க முறைப்படி நாங்க சம்பாதிக்கதுல பத்துல ஒரு பங்கு மத்தவங்களுக்கு குடுக்கணும். நீ தப்பா நெனைக்காம வாங்கிக்கணும் தம்பி… ஒன்னோட சொந்த அக்காவா நெனச்சுக்கோப்பா…”
நான் சரசுவின் முகத்தைப் பார்த்து ஒன்றும் சொல்லாமல் நிற்க, அவள் மாமி கொண்டு வந்திருந்த மளிகைப் பொருட்களைச் சுட்டிக் காட்டினாள்.
அன்றிலிருந்து நாங்கள் ஊருக்குத் திரும்பிவரும் நாள்வரை மாமியின் கருணையில்தான் எங்கள் குடும்பம் பசியாறியது.

சரசு ஆறுமாத கர்ப்பிணியாக இருந்த சமயம். ஒருநாள் துர்க்கை அம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தாள். ஏதோ விசேஷ பூஜை, திரும்பி வர தாமதமாகும் எனக்கூறி எனக்கான உணவு, மருந்துகள் எல்லாம் எடுத்து வைத்துச் சென்றிருந்தாள். அன்று எனக்குக் கொடூர வலி. மருந்து எடுத்தும் வலி குறையவில்லை. எனது அத்தனை வலி-கட்டுப்பாட்டு முறைகளையும் முயற்சி செய்து பார்த்தும் பலனில்லை. என்ன செய்வதெனத் தெரியாமல் முனகிக் கொண்டே வீட்டை விட்டு வெளியே வந்தவன், பல்லைக் கடித்துக்கொண்டு வேகமாக ஓட ஆரம்பித்தேன். எங்கு, எதை நோக்கி ஓடுகிறேன் என எதுவும் தெரியாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தேன். அந்தச் சேரியின் அத்தனைத் தெருக்களையும் நிற்காமல் ஓடிக்கடந்து கடற்கரை வரை வந்துவிட்டேன். திரும்பி ஓடத் தொடங்கியவன் தளர்ந்து விழுந்து அந்தக் கடற்கரை மணல் சூட்டில் அப்படியே கிடந்தேன். வலி மீண்டும் என் உயிரைப் பற்றி வெளியே இழுக்க முயன்றது. எழுந்து வயிற்றில் கைமுட்டியால் குத்திக்கொண்டு திரும்பி ஓட ஆரம்பித்தேன். முதன்முதலில் வந்திறங்கிய இரயில் நிலையம், வேலை செய்த பழைய பொருள் கடை, மளிகைக்கடை, ஆங்கில நாவல்களை மலிவு விலையில் கொடுத்த நடைபாதைக் கடைகள், அமிதாப் சாகிபின் பங்களா, ராமர் கோயில், திருநெல்வேலி அல்வாக்கடை, செட்டியாரின் அடகுக்கடை, இரவு சீட்டாடும் கிளப், சீண்டும் பெண்களின் சிவப்புவிளக்குப் பகுதி, முதலில் கிடந்த வில்சன் மருத்துவமனை, பின் கிடந்த அரசு மருத்துவமனை, அப்படியே வந்து எங்கள் சேரியின் பத்து குறுக்குத் தெருக்கள் தாண்டி என் அறைக்குள் வந்து நின்றேன். கைகள் பதற என்ன செய்வதெனத் தெரியாமல் அறையில் இருந்த பொருட்களைத் தூக்கிப்போட்டு உடைத்தேன். அடுப்பில் இருந்த பாத்திரத்தைத் தூக்கி வெளியே எறிந்தேன். அப்போது என் கண்ணில் பட்டது அந்த கண்ணாடிக் குப்பி.

‘ஓமத்திரம், ஓமத்திரம்..’ என்று புலம்பியவாறு அதைப் பாய்ந்தெடுத்து கடகடவென குடித்தேன். அவ்வளவுதான். வாய், நெஞ்சு, வயிறு முழுதும் பற்றியெரியும் வலி. உடல் முழுதும் ஒரே மண்ணெண்ணெய் வாடை. சற்று நேரத்தில் நினைவிழந்து விழுந்தவன் கண்விழித்த போது மூன்று நாட்கள் கடந்திருந்தன. மார்பிலிருந்து தொப்புள் வரை வயிற்றைச் சுற்றி பெரிய கட்டு போட்டிருந்தார்கள். அசைய முடியாத வலி. டியோடினம் என்கிற குடல் பகுதி முழுவதும் புண்ணால் அழுகியிருந்திருக்கிறது. அதை வெட்டி நீக்கி மற்ற குடற்பகுதிகளை இணைத்து ஒருவாறாக எனை மீட்டெடுத்திருக்கிறார்கள்.

அடுத்த சிலநாட்கள் மருத்துவமனைப் படுக்கையில் வாழ்வின் அடுத்த சவால்களை நினைத்துக் குழம்பிக் கிடந்தேன். என் பக்கத்துப் படுக்கையில் ஓர் இருபது வயது இளைஞன் இருந்தான். பெரும்பாலான நேரங்களில் அவன் உறங்கிக் கிடந்தான். கண் விழித்ததும் திரும்பி என்னையே உற்றுப் பார்ப்பான், எதற்காக என்னைப் பார்க்கிறான் என்று எனக்குப் புரியவேயில்லை. அவன் என்னிடம் ஏதும் பேசவும் முயற்சிக்கவில்லை. மூன்று நாட்கள் கழித்து, எங்கள் படுக்கைகளைச் சுற்றி ஒரே பரபரப்பு. அவனது குடும்பத்தினர் பதற்றமாக அழுதுகொண்டு அங்குமிங்கும் அலைந்தனர். மருத்துவர்களிடம் ஏதோ கெஞ்சிக் கொண்டிருந்தனர்.
ஒரு முதிய மருத்துவர் அந்த இளைஞனின் தந்தையிடம், “மன்னிக்க வேண்டும் ஐயா, இன்று இரவு பன்னிரண்டு மணி வரை தான்… எங்களால் முடிந்த எல்லாம் செய்துவிட்டோம்..” என்று சொல்வது என் காதில் விழுந்தது. அந்த இளைஞன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அவனது கை நரம்பில் குத்தியிருந்த குளுக்கோஸ் சொட்டுச்சொட்டாக இறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கிடந்தேன். அவனை எழுப்பி அவனோடு ஏதாவது பேச வேண்டும், அவனுக்கு ஆறுதலாக எதாவது சொல்ல வேண்டும் என என் மனம் கிடந்து அடித்தது. அவனது மார்பு ஏறி இறங்குகிறதா என கவனமாகப் பார்த்தேன்.

மணி பன்னிரண்டை நெருங்கியது. இன்னும் சில நிமிடங்களில் என் பக்கத்துப் படுக்கையிலிருந்து ஓர் உயிர் பிரிந்து செல்லப் போகிறது. அதன் ஒரே சாட்சி நான் தான். எட்டி அவனது கையைப் பற்றி அவனுக்கு ஒரு விடை கொடுத்தல் கூட செய்ய முடியாத வாழ்க்கை என்ன வாழ்க்கை? திடீரென அவன் உடல் நடுங்கி அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. தூக்கித்தூக்கிப் போட்டது. பன்னிரண்டாக இன்னும் இரண்டு நிமிடங்கள் தான். உடல் அசைவற்று விழ அவன் கண் திறந்து என்னைப் பார்த்தான். அதே பார்வை. சரியாக பன்னிரண்டு மணிக்கு குளுக்கோஸ் கடைசி சொட்டு உள்ளிறங்க அவன் புறப்பட்டு விட்டான் என ஒரு செவிலி எளிதாக அறிவித்துச் சென்றாள். எனது வயிற்றுத் தையலின் இரு முனைகளையும் யாரோ பிடித்து இழுத்தது போலிருந்தது, கைகால்கள் வெட்டியிழுக்க என்னுடல் படபடவென தூக்கிப் போட்டது. குடல் முழுதும் வெளியே வந்து விழுமாறு வாந்தியெடுக்க ஆரம்பித்தேன். அடுத்த நாள் கண்விழித்த போது பக்கத்திலிருந்த அந்த வெற்றுப் படுக்கையில் புதிதாக விரிப்பும் தலையணையும் போட்டிருந்தார்கள். அந்த முகம் மட்டும் இந்த நாள்வரை என் கண்ணிலிருந்து நீங்காமல் நிற்கிறது. கண்ணாடி முன் நின்று என் தழும்பைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அந்த இளைஞனின் பார்வையும், தொட்டிராத அவனது கைகளின் வெதுவெதுப்பும் எனக்குள் சட்டென ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.
என்னென்ன ஆட்டங்கள் போட்டு என்ன? வஞ்சம், பொறாமை, பகை, வெற்றுக் கௌரவம், ஆடம்பரம்… என்னென்ன ஆட்டங்கள் போட்டுத்தான் என்ன ஆகிவிடப் போகிறது? ஒரு நொடியில் எல்லாமே மாறிப் போய்விடக் கூடும் இல்லையா? எந்த நம்பிக்கையில் பம்பாய்க்கு இரயிலேறினேன்? எந்த நம்பிக்கையில் அந்த இருள் நிறைந்த நீண்ட குகைப்பயணத்தில் சரசு என்னுடன் வந்துவிடத் துணிந்தாள்? நிச்சயமற்ற இந்த வாழ்க்கையில் எந்த நம்பிக்கையில் இன்னோர் உயிரை உருவாக்கி விட்டேன்?

பம்பாயிலிருந்து ஊருக்குத் திரும்ப இரயிலேறும்போது நான் வெறும் முப்பத்தி இரண்டு கிலோதான் இருந்தேன். அந்த எலும்பும் தோலும் இத்தனை வருடங்களில் ஒரு தாத்தாவாக மாறி நிற்பதே ஒரு ஆச்சரியம் தான். வேலையற்று, பணமற்று கையில் ஒரு வயதுக் குழந்தையுடன் சரசுவின் கண்களில் மிச்சமிருந்த சிறுதுளி உயிர்த்துடிப்பை நீட்டிக்க வேண்டி ஒரு நீண்ட பயணம். அந்த இரயிலில் என்னுடன் பயணித்த ஒவ்வொரு முகமும் இன்னும் என் நினைவில் இருக்கிறது. இத்தனை நீண்ட இந்தத் தண்டவாளத்தில் ஒருபோதும் நிற்காத ஓய்வற்ற எத்தனை இரயில்கள்! எத்தனை சீழ்க்கை சத்தங்கள்!

*

வீட்டில் நுழைந்தபோது சரசுவின் பாட்டுச் சத்தம் கேட்டது. சூர்யாவை உறங்க வைத்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் சென்று நின்று அவனது தலையைத் தடவிக் கொடுத்தேன். சட்டெனக் கண்விழித்தவன், “தாத்தா… தாத்தா…” என வெப்ராளப்பட்டு என் மீது துள்ளி ஏறினான்.

“சரி மக்ளே.. போட்டு.. போட்டு… அம்மைக்கு அடி குடுப்போம் செரியா?”

சற்று நேரம் ஏங்கியவாறு என் தோளில் சாய்ந்து கிடந்தவன் மெதுவாகக் கீழே இறங்கி நின்றான். என் கையிலிருந்த ஜெம்ஸ் மிட்டாயைப் பிடுங்கித் தன் சட்டைப்பையில் திணித்தவன் ஏதோ ஞாபகம் வந்தவனாக தன் சட்டைப் பொத்தான்களை அவிழ்த்தான்.

சரசு என்னைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொள்ள, சூர்யா சட்டையைத் திறந்து தன் வயிற்றைக் காட்டினான்.

“தாத்தா.. இங்கப் பாத்தியா? எனக்கும் ஒன்ன மாதி கோடு வந்துட்டே… எப்புடி டோய்!..”

இத்தனை நேரம் நினைவில் மீண்டு வாழ்ந்திருந்த எனக்கு சட்டென என்ன செய்வதெனத் தெரியாமல் நின்றேன்.

என் கையைப் பிடித்து வளைத்து, “சாமி கிஃப்ட் தந்துன்னு பொய் சொல்லிருக்க, என்னா?” என்று கேட்டான்.

நான் சரசுவின் முகத்தைப் பார்க்க அவள் ஏதும் பேசாமல் திரும்பிச் சென்றாள்.

“அப்பா என்ட்ட சொன்னாளே… நீ பொய்த் தாத்தா… பேட் பாய்…” என்று சொல்லியவாறு ஓடியவன் சற்று நேரத்தில் திரும்பி வந்தான். கையில் காயத்திருமேனி எண்ணெய் குப்பி.

“தாத்தா, சட்டையக் கழத்து… சட்டையக் கழத்து…” என்று அவனே என் சட்டைப் பொத்தான்களை அவிழ்த்தான்.

ஏதோ யோசித்தவனாக என் வயிற்றுத் தழும்பை தடவிக் கொடுத்தான். அந்த எண்ணெயை எடுத்து என் தழும்பின் மீது தடவி விட்டான்.

“ரொம்ப வலிக்கா தாத்தா? நம்ம மேஜிக் பண்ணி இத மாத்திருவோம், செரியா?”

பின்னால் நின்றிருந்த சரசு, “என்ன? தாத்தாவும் பேரனும் பாசத்துல உருகிட்டேளா?” என்று சிரித்தாள்.

பிரசவ அறைக்குள் செல்லும் முன் சரசு தன் வயிற்றை என்னிடம் காட்டி, “எப்பா, இங்கப் பாருங்கோ, எனக்கும் ஒங்கள மாதியே கோடு இருக்கு.. இப்பிடி தொப்புளுக்கு நேரா கோடு இருந்தா பொம்பளப் புள்ளயாம், தெரியுமா?” என்று சொல்லிச் சிரித்ததை நான் எப்படி மறக்க முடியும்?

***

சுஷில் குமார் – 20க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியாகியுள்ள நிலையில், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு விரைவில் யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வரயிருக்கிறது.