Home Blog Page 59

மத்தி

0

திடுக்கிட்டுத் தூக்கத்திலிருந்து எழுந்தமர்ந்தாள் கேசி. அன்று அந்த மத்தியிடம் மாட்டிக் கொண்டதிலிருந்து அடிக்கடி இது மாதிரியான திடுக்கிடல்களும் விழிப்புகளும் வருகின்றன. அந்த மத்தியின் நிணம் வழியும் வாயும் கறுமை படிந்த பற்களும் கண்களில் தெரிந்த கொலைவெறியும் சகிக்க முடியாத துர்நாற்றமும் வெகு நாட்களாய் உணவு கிடைக்காத மிருகத்தைப் போன்ற உறுமலும் மீண்டும் மீண்டும் கனவுகளில் தோன்றிப் பீதியூட்டுவது வழக்கமாகியிருந்தது.

அதன் பிறகு இரவு முழுவதும் தூக்கம் வராமல் விடிவிளக்கின் ஒளியில் கலைந்துறங்கும் ஷீலாவின் முகத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருப்பாள். உயிர் பிழைத்திருப்பதற்கான சவால்களாய் பசி, வறுமை என்று ஏதேதோ இருக்க, அவற்றையெல்லாம் தாண்டி மத்திகளைப் பற்றிய பயமே மேலோங்கியிருந்தது.

அன்று அந்த சிறப்புக் காவலன் மத்திகளைத் தாக்கும் துப்பாக்கியுடன் வராவிடில் தானும் அதுபோல் எங்கேனும் அலைந்து கொண்டிருந்திருப்போம் என்று எண்ணுவாள். முன்பெல்லாம் இத்தனை ஊடுருவல்கள் இல்லை.

நகரப் பாதுகாப்புச்சுவர் எங்கிலும் கீழ்பகுதிகளில் ஏகப்பட்ட பழுதுகள். அரசாங்கம் அதைப்பற்றிக் கண்டுகொள்கிறாற் போலவே தெரியவில்லை.

உள்ளடங்கிய பகுதிகளில் விஞ்ஞான சாதனங்களின் உதவியுடன் தகுந்த பாதுகாப்புடன் இருக்கும் உயர்குடி மக்களுக்கு இதெல்லாம் வெறும் வடிகட்டப்பட்ட வெகுவாய் நீர்த்துப்போன உண்மைகள். மந்தகதியில் வெளியிடப்படும் அரசாங்கத் தொலைக்காட்சியின் செய்திகள் மட்டுமே.

இவளைப் போல் வறுமையில் மாட்டிக்கொண்டு வெளியேற வழி தெரியாத, ஏதேனும் பிரச்னையென்றால் கேட்பதற்கு யாருமில்லாத மக்களே மதில் சுவரை ஒட்டிக் குடியிருந்தார்கள்.

அவ்வப்போது ஜானுடன் நடந்த உரையாடல்களை நினைத்துக் கொள்வாள் கேசி. ஜான் ஷீலாவின் அப்பா. அரசாங்கத்தின் வரலாறு தொடர்பான ஏதோவொரு துறையில் ஆவணக் காப்பாளன்.

ஜானின் பிரிவிற்குப் பிறகு, ஷீலாவுக்கு விபரம் தெரியும் போது தன் அப்பாவைக் கேட்டால் என்ன சொல்வது என்ற கவலையும் ஏற்கனவே இருக்கும் கவலைகளோடு சேர்ந்து கொண்டது. இப்போதே யாரேனும் குழந்தைகளை அப்பாவுடன் கண்டால் அதைப்பற்றிக் கேள்விகள் கேட்கிறாள்.

அன்று அந்த மத்தியால் தாக்கப்பட்ட போதுகூட ஜானின் இல்லாமையை நினைத்து வெகுவாக வருந்தினாள்.

“ஜான்”
“ம்…”
“இந்த மத்திகள்லாம் யாரு? ஏன் அதுகள்லாம் இப்படி இருக்குதுக?”
“….”
“சொல்லு ஜான்”

விடாத நச்சரிப்புக்குப் பின் பெருமூச்சு விட்டவன் “சரி சொல்றேன். ஆனா இதெல்லாம் அரசாங்க ரகசியம். வெளிய வாய் திறக்கக் கூடாது” என்று கூறி அவள் கண்களை உற்றுப் பார்த்தான்.

“சரி” என்பது போல் மென்மையாகத் தலையாட்டினாள்.

“சுமார் இருநூறு வருஷம் முந்தி உலகம் முழுக்க ஒரு பெரிய வைரஸ் பரவிச்சு. மக்கள்லாம் அதுக்கு பயந்துகிட்டு வீட்டுக்குள்ளேயே இருந்தாங்க. எத்தனையோ நாட்டு அரசாங்கங்கள் எத்தனையோ விதமா போராடியும் அத ஒன்னும் பண்ண முடியல. ஏகப்பட்ட உயிரிழப்புகள். அப்புறம் ஒரு வழியா மூனு வருஷப் போராட்டத்துக்கப்புறம் அதுக்கு ஒரு மருந்து கண்டுபுடிச்சாங்க. அல்லது அப்படி நினைச்சுக்கிட்டாங்க “

ஷீலா திடீரென்று சிணுங்கிக் கொண்டு அழத் துவங்கியதும் நினைவிலிருந்து நிகழ்விற்குத் திரும்பினாள். அவளைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு மெல்லத்தட்டித் தூங்கச் செய்தாள். குழந்தைப் பொருட்கள் எல்லாம் தீர்ந்து விட்டன. இருக்கும் பொருட்கள் எத்தனை நாட்களுக்குத் தாங்குமெனத் தெரியவில்லை.

நாளை நகரின் உட்புறம் சென்று ஏதேனும் வேலை தேட வேண்டும். அப்படியே ஜான் பற்றி ஏதேனும் தகவல்கள் கிடைக்கிறதா என்றும் பார்க்க வேண்டுமென்றும் நினைத்துக் கொண்டாள்.

ஜானின் திடீர் மறைவு அவளைச் சற்றுக் கலைத்து தான் போட்டு விட்டது. எப்போதும் போல் மறுநாள் வருவதாகச் சொல்லி விடைபெற்றுச் சென்றவன் அடுத்த நாள் வரவில்லை. அவனுடைய தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. அவளால் முடிந்த, தெரிந்த இடங்களுக்குச் சென்று தேடினாள். எந்தத் தகவலுமில்லை. இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறாள்.

“சரி அந்த வைரசுக்கும் மத்திகளுக்கும் என்ன சம்பந்தம் ? “
“மூனு வருஷம் போராடி அந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிச்சிட்டதா நினைச்சு உலகமே கொண்டாடிச்சு. வைரசும் கட்டுக்குள்ள வந்துடுச்சு. ஒரு ரெண்டு வருஷம். அதுக்கப்புறம் அந்த வைரஸ் இப்படி ம்யூடேட் ஆகும்னு யாரும் எதிர்பார்க்கல”.

வாசலில் யாரோ நிற்பது போல் நிழலாடியது. இந்நேரத்தில் யார்? பயத்தில் குப்பென வியர்த்தது. தைரியத்தை வலிய வரவழைத்துக் கொண்டு எழுந்து சென்று மிக மெதுவாய்க் கதவைத் திறந்தவள் நிம்மதிப் பெருமூச்சொன்றை வெளியிட்டாள்.

அவளை மத்தியிடமிருந்து காப்பாற்றிய சிறப்புக் காவலன் நின்றிருந்தான். லிடோ. “இந்தப் பக்கம்தான் இன்னிக்கு டூட்டி. ரவுண்ட்ஸ் வந்தேன். அதான் அப்படியே… ஒன்னும் பிரச்னையில்லையே?” என்றபடி அவளைத் தாண்டி வீட்டுக்குள் பார்க்க முயன்று பார்வையைச் சுழற்றினான்”.

இல்லை என்பது போல் தலையாட்டினாள்.

“பாப்பா தூங்குதா?”

ஆமாம் என்ற தலையாட்டல்.

“நம்பர் குடுத்திருக்கேன்ல? எதுனா வேணும்னா கூப்புடு. என்னா?”

சரியென்ற தலையாட்டல்.

தயங்கி நின்றவன் கிளம்பினான். அவன் தெருமுனை சென்று மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தவள் உள்ளே திரும்பினாள். தூக்கம் காணாமல் போயிருந்தது. லிடோவின் எல்லை மீறாத ஆசை வெளிப்பாடு அவளுக்குள் யோசனைகளையும் அவன் நல்லவனா கெட்டவனா என்பது பற்றிய குழப்பங்களையும் தோற்றுவித்தது.

அதன் தொடர்ச்சியாய் அவனை முதன்முதலில் பார்த்த தினம் நினைவுக்கு வந்தது. மத்தியிடமிருந்து அவளை அவன் காப்பாற்றிய தினம். உடல் தானாக ஒருமுறை சிலிர்த்தடங்கியது.

உடல் மேல் இன்னும் அந்த மத்தியின் பர்ப்யூம் வாடை வீசுவதைப் போலிருந்தது. தன்மேல் விழுந்து கடிக்க முற்பட்ட போது வெகு அருகில் பார்த்த மத்தியின் முகமும் புருவங்களுக்கிடையே இருந்த இடையறாத துடிப்பும் நினைவுக்கு வந்து இம்சித்தது.

“ஜான். இந்த மத்திகள்லாம் மனுசங்க மாதிரியே இருக்குதே? எப்படி வித்தியாசம் கண்டுபுடிக்கறது?”

“இது மத்திகளோட பரிணாம வளர்ச்சி. நாம அவங்க கிட்டருந்து நம்மள பாதுகாத்துக்க மட்டும் போராடிட்டு இருந்த வரைக்கும் அவங்க ஜோம்பிகளாத்தான் சுத்திட்டு இருந்தாங்க. என்னிக்கு நாம அவங்கள வேட்டையாட ஆரம்பிச்சோமோ அன்னிக்கு ஆரம்பிச்சது அவங்களோட பரிணாம வளர்ச்சி.

கொஞ்சம் கொஞ்சமா தங்களோட urge-ஐ அடக்கியாளக் கத்துகிட்டு, மனுஷங்க மாதிரியே பேசக் கத்துகிட்டு, மனுஷங்களோட மனுஷங்களா கலக்க கத்துகிட்டு… இப்ப அவங்க நம்மள வேட்டையாடற நிலைமை வந்திருச்சு”

“மனுஷங்களோட மனுஷங்களா கலந்துட்டா மத்திகள எப்படி கண்டுபிடிக்கறது?”

“சிறப்புக் காவலர்கள்கிட்ட அதுக்கான ஸ்கேனர் இருக்கும். நகரத்தின் உள்ளே வாழற பணக்காரங்க தங்கள் வீடுகள மத்திகள் உள்ள வர முடியாத மாதிரி சேப்டி பண்ணி வச்சுகிட்டாங்க. சாதாரண மக்கள் மத்திய கண்டுபிடிக்க சில அறிகுறிகள் இருக்கு.”

*

“என்னதான் மனிதர்கள் மாதிரியே தங்களை மாத்திக்கிட்டாலும் மத்திகளால தங்கள் உடம்புல இருந்து வர்ற துர்வாடைய மறைக்க முடியல. இப்ப அவங்க பர்ப்யூம்கள் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டதா கேள்வி. ஆனா அதுவும் ஓரளவுக்கு மேல் கை கொடுக்காது. அதைத் தாண்டி, அவங்க விரல் முனைகள் எப்பவுமே கருப்பா இருக்கும். புருவங்களுக்கு மத்தியில எப்பவும் நாடி துடிச்சிட்டே இருக்கறது வெளிப்படையா தெரியும். அதை அவங்களால் கட்டுப்படுத்த முடியாது”.

யோசனைகளோடே எப்போது எனத் தெரியாமல் தூங்கிப் போனாள். மறுநாள் ஷீலாவையும் அழைத்துக் கொண்டு நகரத்தின் உட்புறத்துக்குச் சென்று வேலைக்காக அலைந்ததில் சில இடங்களில் அழைப்பதாகச் சொல்லியிருந்தனர்.

நம்பிக்கை கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமல் தளர்ந்த நடையுடன் மாலை வீட்டை நோக்கி நடக்கும் போது வழியில் பணக்காரர்களின் பாதுகாக்கப்பட்ட வீடுகளைப் பார்த்தவாறே வந்த ஷீலா “இதெல்லாம் என்னம்மா?” என்றாள்.

“மத்திகள் கிட்டருந்து பாதுகாத்துக்க வச்சிருக்கற பொறிகள்” என்றாள் ஷீலா.

“மத்திகள்லாம் எங்கருந்தும்மா வராங்க?”

*

“தடுப்பு மருந்து கண்டுபுடிச்சப்புறம் அடங்கியிருந்த வைரஸ் ரெண்டே வருஷத்துல பயங்கரமா ம்யூடேட் ஆகி மக்கள் எல்லாரையும் ஜாம்பிக்களா மாத்த ஆரம்பிச்சிடுச்சு. உலகத்துல பாதி நாடுகள்ல இப்ப மக்களே இல்ல. அந்த நாடுகள்லாம் உலகத்தோடயே சேர்த்தி இல்ல. நம்ம நாடு மாதிரி சில இடங்கள்லதான் தப்பிப் பிழைச்ச சொற்ப மக்கள் இருக்கோம். தினம் தினம் மத்திகளோட போராடிகிட்டு” என்றான் ஜான்.

“இதெல்லாம் நான் ஸ்கூல்ல ஹிஸ்டரி க்ளாஸ்ல படிச்சதே இல்லியே?”

“இதெல்லாம் மறைக்கப்பட்ட வரலாறு. அரசாங்கம் நாமெல்லாம் எதை வரலாறா படிக்கணும்னு நினைச்சதோ அதை மட்டும்தான் நாம படிச்சோம்” என்றான்.

“சொல்லும்மா” என்று உலுக்கிய ஷீலாவின் குரல் கேட்டுத் திரும்பியவள் அவள் தலையைத் தடவி “அவங்கள்லாம் ரொம்ப தூரத்துல இருந்து வராங்கம்மா” என்றாள்.

இரவு திடீரென்று பெருஞ்சப்தம் கேட்கவே எழுந்து ஓடிவந்து வெளியில் பார்த்தாள். இரண்டு வீடுகள் தள்ளி ஒரு மத்தி அகப்பட்டிருந்தது. இவளைத் தாக்க வந்த பெண் மத்தி போல் சுலபத்தில் அடங்கி விடாமல் அந்த ஆண் மத்தி காவலர்களையே கடிக்கப் பார்த்தது. அன்று லிடோ டூட்டியில் இல்லை. வேறு காவலர்கள் இருந்தனர்.

அடிவயிற்றில் திரண்ட கலக்கத்துடன் உள்ளே வந்தமர்ந்தாள். இந்தச் சிறுசுவர் அவளுக்கு என்ன பெரிய பாதுகாப்பை அளித்துவிடப் போகிறதென்று தோன்றியது.

“இந்த மாதிரி இங்கொன்னும் அங்கொன்னுமா மத்திகளோட தாக்குதல் அதிகரிச்சுட்டே போறது ஒரு சமிக்ஞை. ஒரு பெரிய தாக்குதல் நடக்கப் போகுதுங்கறதுக்கான சமிக்ஞை. அப்போ இந்தக் காவலர்களால எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. அதுக்குள்ள எப்படியாவது நகரத்துக்கு உள்பக்கம் போயிடுங்க” என்று தன்னை மத்தியிடமிருந்து காப்பாற்றிய அன்று லிடோ சொன்னது நினைவில் வந்து மேலும் பயத்தைக் கூட்டியது. சீக்கிரம் நகரத்துக்குள் எப்படியேனும் ஒரு இடத்தைக் கண்டுபிடித்துக் குடியேறிவிட வேண்டுமென்று எண்ணிக் கொண்டாள்.

அதற்குத் தேவையிருக்கவில்லை.

அடுத்த நாள் இரவு. முதலில் லேசாகக் கேட்கத் துவங்கிய புதர்களின் சலசலப்பு நேரமாக ஆக அதிகரிக்கத் துவங்கியது. வெளியில் வந்து பார்த்தவள் அதிர்ந்தாள். இருளோடு இருளாகப் புதர்களோடு புதர்களாக மதில் சுவரையொட்டிச் சாரை சாரையாய் நகர்ந்து கொண்டிருந்தன ஆண்களும் பெண்களுமாய்க் கலந்திருந்த மத்திகள்.

மெல்லச் சத்தம் கேட்டு அடுத்தடுத்த வீடுகளிலிருந்தும் மக்கள் வெளிவந்து பார்க்கத் துவங்கினர். அசௌகரியமான ஒரு அமைதி பரவத் துவங்கியது. சில நிமிடங்களில் சூழலுக்குத் தம்மைப் பழக்கப்படுத்திக்கொண்டு விட்ட மத்திகள் முதலில் சிறப்புக் காவலர்களைக் குறிவைத்துப் பாய்ந்தன. சொற்ப எண்ணிக்கையில் இருந்த காவலர்களால் பெருமளவில் குவிந்திருந்த மத்திகளை ஒன்றும் செய்ய முடியவில்லை.

சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்த கேசி கதவை இழுத்துச் சார்த்திக்கொண்டு உள்ளே ஓடினாள். அதைப் பார்த்துவிட்ட ஒரு மத்தி தான் கவ்விக் கொண்டிருந்த காவலனின் கழுத்தை விட்டுவிட்டு கேசியின் வீட்டை நோக்கி உறுமியபடி ஓடி வந்தது.

உள்ளே வந்த கேசி ஷீலாவை வாரியணைத்துக் கொண்டு மற்றொரு கதவு வழியே வெளியேறி ஓடிப் பிரதான சாலையின் நால்முனைச் சந்திப்பை அடைந்தாள். மெல்ல மெல்லப் பிரதான சாலையும் மத்திகளால் நிரம்பிக் கொண்டிருந்தது.

சட்டென்று ஓட முற்பட்ட கேசியின் கால்கள் பிடித்திழுக்கப்பட்டு தடாலென்று கீழே விழுந்தாள். அந்த மத்தி அவளைப் பிடித்துத் தன் வாயருகே இழுத்துக் கொண்டிருந்தது. சத்தம் கேட்டு சற்றுத் தொலைவிலிருந்த மேலும் இரு மத்திகள் கேசியை நோக்கி நகரத் துவங்கின.

போராடிக் கொண்டிருந்த கேசியின் கைகளிலிருந்த ஷீலா திடீரென்று இருளினின்றும் முளைத்த மற்றொரு மத்தியால் இழுக்கப்பட்டாள். ஷீலா பயந்து அலறத் துவங்கியிருந்தாள். தன் பலமனைத்தையும் ஒன்று திரட்டித் தன் கால்களைப் பிடித்திருந்த மத்தியை எட்டி உதைத்த கேசி மற்றொரு மத்தியின் கையிலிருந்து ஷீலாவைப் பிடுங்க முயற்சித்தாள். உக்கிரமாய் உறுமிக் கொண்டிருந்த மத்தி சட்டென்று துடிதுடித்துக் கீழே விழுந்தது. மத்தியின் கையிலிருந்து கீழே விழப் போன ஷீலாவைக் கேசி தாங்கிக் கொண்டாள்.

ரத்தம் சொட்டச்சொட்ட லிடோ நின்றிருந்தான். ஏற்கனவே அவன் உடலில் பல கீறல்களும் பற்தடங்களும் இருந்தன. மூச்சு வாங்கியபடியே கீழே விழுந்த லிடோ “சீக்கிரம் போ. பாலத்துக்கடியில போய் ஒளிஞ்சுக்கோ. பாலத்து மேல போலீசோட ஆரஞ்சு விளக்கு தெரியற வரைக்கும் வெளிய வராதே போ.” என்றான்.

நிலைமையை உணர்ந்த கேசி ஷீலாவை அள்ளியணைத்துக் கொண்டு ஓடத்துவங்கினாள். பயத்திலும் பதற்றத்திலும் கேசி மயங்கியிருந்தாள்.

தன் பின்னால் லிடோவின் மேல் மத்திகள் ஒன்றாய்ப் படர்வதும் அவன் குரல் பெரிதாய் மேலெழும்பிப் பின் கொஞ்சம் கொஞ்சமாய் அடங்குவதையும் கேட்டபடியே ஓடியவள் பாலத்தின் முனையை அடைந்தாள்.

சிரமப்பட்டு அவள் உயரமிருந்த பாலத்தின் அடிச்சுவரைத் தாண்டியவள் வெளிச்சமே விழாத பாலத்தூணடியைத் தேடிக் குனிந்தபடியே நடந்தாள். ஆங்காங்கே சிலர் ஏற்கனவே பாலத் தூண்களின் அடியில் ஒளிந்திருந்தனர்.

கடைசியாய் ஆளில்லாத் தூணொன்றைக் கண்டுபிடித்தவள் அதன் அடிப்பகுதியில் சென்று இருளோடு இருளாக அமர்ந்தாள். சாக்கடை நாற்றம் குப்பென்று நாசியை நிரப்பியது. மூச்சு வாங்கும் சப்தம் கூட வெளிவராமல் மூச்சு வாங்கிக் கொண்டவள் ஷீலாவைச் சுற்றியிருந்த போர்வையை லேசாக விலக்கி முகம் பார்த்தாள். ஷீலா இன்னும் மயக்கத்திலிருந்தாள். மெல்லக் ஷீலாவின் கன்னத்தைத் தட்டினாள் கேசி. ஷீலாவால் கண்களைத் திறக்க முடியவில்லை. மெல்ல “ம்மா” என்று முனகினாள்.

ஷீலாவைக் காப்பாற்றி விட்ட நிம்மதியுடன் பெருமூச்சொன்றை வெளியிட்ட கேசி பின்சுவற்றில் சாய்ந்து மெல்லக் கண்களை மூடினாள்.

அவள் கண்களை மூடிய அதே நொடியில் ஷீலாவின் புருவங்களுக்கிடையே நாடி துடிக்கத் துவங்கியிருந்தது.

***

ஹரீஷ்

கன்னிமார் சாமி

0

சுஜாதா செல்வராஜ்

ல்லம்மாள் தரையில் அமர்ந்து பூக்கட்டிக் கொண்டிருந்தாள். கொல்லைப்புறம் இருக்கும் ஒற்றை மல்லிகைச்செடி தான். பூத்துக்கொட்டித் தீர்க்கும். அவைகளை ஒன்றுவிடாமல் பறித்துத் தருவாள் அம்மா. பூக்களைக்கட்டி சாமிக்கு, அம்மாவுக்கு, தங்கைக்கு, தனக்கு என்று பிரித்துக் கொடுப்பது இவள்தான். நான்கு கண்ணி பூக்கள்தான் இவள் வைத்துக்கொள்வாள். அம்மாவும் அப்படித்தான். தங்கையும் சாமியும்தான் பூக்களில் திளைப்பவர்கள்.

அறையில் இருந்தபடியே கூடத்துப் பேச்சைக் கேட்க முடிந்தது. கல்யாணப்பேச்சு. அப்பா சத்தமாக பேசிக்கொண்டிருந்தார். பேச்சின் சாராம்சம் இதுதான், அப்பாவின் அக்காவுக்கு ஒரே மகன். பேர் ராசு. மிலிட்டரியில் சிறிது காலம் இருந்துவிட்டு தாக்குபிடிக்க முடியாமல் ஓடிவந்து விட்டவன். அதனால் எப்போது வேண்டுமானாலும் மிலிட்டரியில் இருந்து வந்து பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள் என்று பயந்து யாருமே அவனுக்கு பெண் தர முன்வரவில்லை. பயந்தது போலவே வெள்ளைக்காரர்கள் அவனைத் தேடிக்கொண்டு சிலமுறை வந்தும் இருக்கிறார்களாம். அப்பொழுதெல்லாம் ராசு அட்டாலியில் ஏறி ஒளிந்து கொள்வானாம். மறுநாளே அத்தை இங்கு வந்து அப்பாவிடம் ஒரு பாட்டம் அழுது தீர்த்துவிட்டு போவாள். பாவம் புருசனை இழந்து தனிமரமாய் பிள்ளையை வளர்த்து ஆளாக்கியவள். அப்பாதான் அக்கா மகனுக்காக பெண் தேடி அலைந்தார்.

தூரத்து சொந்தக்காரர் ஒருவர் நாளு கிராமம் தாண்டி இருக்கிறார். வண்டி கட்டித்தான் போகவேண்டும். அங்கு போய்விட்டு வந்துதான் அப்பா கோபமாக இறைந்து கொண்டிருக்கிறார். போன இடத்தில்,

“உன் வீட்லயே பொண்ண வச்சுக்கிட்டு, அக்கா மகனுக்கு பொண்ணு கேட்டு இங்க வந்துருக்கயே! உன் மவளயே கொடுக்கலாம்ல”னு சொல்லவும் அப்பா ரோசமாக, சரி என் மவளுக்கே கட்டி வைக்கிறேன்னு எழுந்து வந்துவிட்டார்.

“பிள்ள இன்னும் வயசுக்கே வரல, ஒரு வருசம் போகட்டுமே” என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்தார். அப்பா இந்த மாசமே கல்யாணம் பண்ணியாக வேண்டுமென்று பிடிவாதமாக நிற்கிறார். நாளு ஊர் தாண்டி அவர் விட்டுவிட்டு வந்த மானத்தை இந்த மாசமே திருப்பி எடுத்துவிடத் தவித்துக் கொண்டிருந்தார்.

ஒன்னுவிட்ட சித்தப்பா, பக்கத்து வீட்டு பொன்னய்யா தாத்தா, அக்கம்பக்க உறவுகள் சிலர் என்று அதற்குள் கூடிவிட்டிருக்க, அம்மா முடிவாகச் சொன்னாள்,

“சரி, கட்டிக்கொடுக்கலாம் ஆனா நல்லம்மாளையும் சேர்த்துக் கட்டணும். அதுக்கு சம்மதமான்னு உங்க அக்கா மவன்கிட்ட கேட்டுடுங்க”.

அப்பா பேசாமல் யோசனையில் ஆழ்ந்தார். பூக்கட்டிக் கொண்டிருந்த நல்லம்மாளின் கைகள் தானாக நின்றன.

எறும்பு ஒன்று எங்கிருந்தோ இழுத்து வந்த ஒரு பருக்கைச் சோற்றை கவ்விக்கொண்டு வழியை மறித்தபடி கிடக்கும் நல்லம்மாளின் கால்களிடம் தடுமாறிக் கொண்டிருந்தது. தட்டில் உணவாகாமல் தவறி தரையில் விழுந்துவிட்ட ஒரு பருக்கை எறும்புக்கு உணவாகிறது.

ஒருமுறை அம்மாவுடன் கோயிலுக்குப் போனபோது அம்மா இவளை கருவறை முன் இறக்கி விட்டுவிட்டு பிரகாரத்தைச் சுற்றிவரச் சென்றிருந்தாள். கீழே அமர்ந்தபடி சாமியைப் பார்த்துக் கொண்டிருந்தவள். அர்ச்சனைக்கு மாலை, தேங்காய், எண்ணெயோடு வந்த ஒருத்தி தட்டை அர்ச்சகரிடம் கொடுத்தாள். மாலையிலிருந்து ஒற்றை மலர் மட்டும் உதிர்ந்து படியில் விழ அர்ச்சகர் தட்டோடு கர்ப்பக்கிரகத்திற்குள் நுழைந்தார். பார்த்துக் கொண்டிருந்த நல்லம்மாளுக்கு சொல்லவொண்ணாத் துயர் மிகுந்தது. விதையிலிருந்து முளைத்து, கிளைவிட்டு மொட்டாகி மலர்ந்து கடவுளுக்கென்று மாலையாகி கருவறை வாசல் வரை வந்து படியில் நழுவி விழுந்துவிட்ட அந்த மலரை ஒரு குழந்தையை ஏந்துவதைப் போல ஏந்திக்கொண்டாள். பின் மெல்ல நகர்ந்து முன்னால் அமர்ந்திருந்த நந்தியின் தலையில் அந்த மலரை வைத்துவிட்டு கையெடுத்துக் கும்பிட்டாள்.

நல்லம்மாள் எறும்பின் வழியை அடைத்துக் கொண்டிருந்த தன் சூம்பிய இரு கால்களையும் அள்ளி இடப்பக்கம் போட்டுவிட்டு நகர்ந்து அமர்ந்தாள். அப்பா கனைத்துக் கொண்டு “சரி ராசுக்கிட்ட பேசறேன்” என்று சொன்னது காதில் விழுந்தது. பிறகு என்னென்னவோ எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். நல்லம்மாள் விக்கித்துப்போய் அமர்ந்திருந்தாள். கல்யாணத்தை எல்லாம் அவள் கனவிலும் எண்ணியவளில்லை. தங்கையின் கணவனே தனக்கும் கணவனாவதா?! முடியாது என்று அம்மாவிடம் சொல்லலாமா? நினைக்கவே பயமாக இருந்தது. அம்மா பேயாட்டம் ஆடிவிடுவாள். நல்லம்மாளை காடுகரைக்கு, கோயிலுக்கு என்று சலிக்காமல் சுமந்து செல்பவள் அவள்தான். நல்லம்மாளும் ஒன்றும் சும்மாக் கிடப்பவள் இல்லை. உட்கார்ந்து கொண்டே காய் நறுக்குவது, அரிசி புடைப்பது, மாவரைப்பது, வெங்காயம் ஆய்வது, கடலை ஆய்வது, கொட்டமுத்து தட்டுவது என்று ஓயாமல் இயங்கிக் கொண்டிருப்பவள்தான். வேலைசெய்து சிறுவாடு கூட சேர்த்து வைத்திருக்கிறாள்.

அம்மா என்னைச் சுமையாக நினைக்கிறாளா? இல்லை. எனக்கும் இந்தச் சாக்கில் கல்யாணம் பண்ணி பார்த்துவிட நினைக்கிறாள். அவள் காலத்திற்குப் பின் எனக்கொரு நிழல் வேண்டுமென்று பார்க்கிறாள். ஆனால் இது சரியா? தங்கை ராமாயியை நினைத்துக் கொண்டாள். துறுதுறுவென்று இருப்பவள். தன் தோழிகளையெல்லாம் வீட்டுக்கு அழைத்து வந்து அக்காவிற்கும் சிநேகமாக்கியவள். தின்பதை எல்லாம் மறக்காமல் அக்காவுக்கு பங்கு வைப்பவள். ஆனால் இந்தக் கணவனைப் பங்கு வைக்கும் ஏற்பாட்டை ஏற்பாளா? முதலில் நான் ஏற்பேனா? துவண்ட அவள் கால்களைப் போலவே மனம் துவண்டு போனது. கட்டிய பூக்களை ஓரமாக வைத்துவிட்டு அப்படியே தரையில் சாய்ந்து படுத்தாள்.

மனக்கண்ணில் ராசு. அத்தை மகன்.

நல்ல கருவேல மரம் போன்ற தேகம்தான். மிலிட்டரி பழக்கத்தில் ஒட்ட வெட்டி, எண்ணை வைத்து, இடப்புறம் வாகெடுத்துப் படிய வாரிய தலைமுடி. அதிகம் இந்தப் பக்கம் வரமாட்டான். ஆனால் திருவிழாவுக்கு வருகையில் பை நிறைய தீனி வாங்கி வருவான். கடலை மிட்டாய், பொரி, ரவா உருண்டை, மாம்பழம் என்று வகையாகத் திங்கலாம். இத்தனை நாள் அவனுடன் அதிகமாகப் பேசியதே இல்லை என்று இன்றுதான் உறைத்தது. அவனை எனக்குப் பிடிக்குமா? மனதைக் கேட்டுப் பார்த்தாள். அவனுக்கு என்னைப் பிடிக்குமா? கேள்வி விழுந்தது. எதுவும் தோன்றாமல் கண்களை மூடிக்கொண்டாள்.

ஒரே வாரத்தில் எல்லாம் சுமூகமாக முடிந்தது. ராசு நல்லம்மாளைக் கட்டிக்க மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டான். தாலிலாம் கட்ட மாட்டேன். ராமாயிக்கு துணையா எங்க வீட்லயே வேணா இருக்கட்டும். கடைசிவரை அவள பாத்துக்கறது என் பொறுப்பு என்று கூறிவிட்டான். அப்பா அம்மாவுக்கு அவன் பதில் திருப்தியைத் தந்தது. மூஞ்சைத் தூக்கிக்கொண்டு திரிந்த ராமாயி கூட இயல்பாக சிரித்துப் பேசத் தொடங்கினாள்.

அந்த மாதமே ஒரு நல்ல நாளில் கோயிலில் வைத்து திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது. தங்கைக்கு கூரைச்சேலை வாங்குகையில் நல்லம்மாளுக்கும் பாவாடை, சட்டை (செவப்புல மஞ்ச பூ போட்டது) எடுத்துத் தைத்தார்கள். அன்று நல்லம்மாள் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாக பூ வைத்துக் கொண்டாள். தாலி கட்டிய கையோடு அக்காளும், தங்கையும் புகுந்த வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

கிராமத்தில் கிட்டத்தட்ட எல்லா வீடும் ஒன்றுதான். அதே திண்ணை, அதே கூடம், சமையலறை, வசதிக்கு ஏற்ப ஒன்றோ இரண்டோ அறைகள். அத்தை வீடும் அப்படித்தான் இருந்தது. ஆனால் மாடு, கன்னு கொஞ்சம் அதிகம் இருந்தது. வாசலில் சாணி போட்டு மெழுகிய பெரிய களம் இருந்தது. பக்கத்திலேயே வேப்பமரம் ஒன்று செழிக்கக் காய்த்துப் பழங்களை உதிர்த்துக் கொண்டிருந்தது. பொண்ணு மாப்பிள்ளையைக் காட்டிலும் சட்டைப் பாவாடை அணிந்த நல்லம்மாளின் மேல் அங்கிருந்த வாண்டுகளுக்கு ஆர்வம் அதிகமாய் இருந்தது. அவள் பெரிய மனுஷியா அல்லது தங்களைப் போலவே சட்டைப் பாவாடை அணிந்திருப்பதால் தங்களுடன் கூட்டு சேருவாளா என்று குழப்பத்தில் இருந்தார்கள் அவர்கள். மெல்ல நெருங்கி வந்து பேசி இரண்டொரு நாளிலேயே நல்லம்மாளுடன் சிநேகமானார்கள்.

நல்லம்மாள் இடம் மட்டும்தான் மாறி இருந்தாள். மற்றபடி தன் வழக்கமான வேலைகளை இங்கும் தொடங்கிவிட்டாள். கடலைத்தொலி உடைப்பது, உளுந்து அரைப்பதுடன் வாசலில் விழும் வேப்பம்பழங்களைப் பொறுக்குவதும் இப்போது கூட சேர்ந்திருந்தது. நெல் மூட்டைகளை ஓரமாக அடுக்கி ஒழுங்கு பண்ணி அந்த அறையை அக்காவும் தங்கையும் தங்கள் ட்ரங்குப்பெட்டியை வைத்துக் கொள்ளவும், படுத்து உறங்கவும் அத்தை தந்திருந்தாள். காலையில் எழுந்து மாடுகளை ஓட்டிக்கொண்டு ராசுவோடு ராமாயி தோட்டத்துக்கு வேலைக்குப் போனால் நல்லம்மாள், வீட்டில் அத்தைக்கு கூடமாட சமையலில் ஒத்தாசை செய்வாள். சோறாக்கி எடுத்துக்கொண்டு அத்தையும் தோட்டத்துக்கு போய்விட்டால் மூவருமாக வீடுவந்து சேர பொழுதாகிவிடும்.

தனித்துவிடப்படும் உச்சி வெயில் பொழுதுகளில் வேப்பமரத்துக் காக்கைகள் தான் அவளுக்கு துணை. திண்ணையில் அமர்ந்து கடலைத்தொலி உடைத்துக்கொண்டு கண் கூசும் வெயிலில் காக்கைகளைப் பார்த்தபடி இருப்பாள். ஓரிரு கடலைகளை உடைத்து வாசலில் வீசுவாள். வேப்பம்பழத்தை விட்டுவிட்டு கடலைக்கு வந்து அமரும் காகங்களிடம் ஆசையப் பாரு என்று செல்லக் கோபம் கொள்வாள். வெயிலுக்கு வீட்டில் அடைந்து உறங்கிவிடும் பிள்ளைகள் சாயங்காலம் இவளுடன் கதைபேச வருவார்கள். தலைசீவி விடவும், பேன் பார்க்கவும் என்று அவள் காலடியில் பிள்ளைகள் மொய்க்கும்.

இரவில் அருகில் படுத்திருக்கும் தங்கையிடம் ஏதாவது கதை பேசுவாள். அக்கம்பக்க பிள்ளைகள் சொன்ன ஊர் தகவல்கள், பிறந்த ஊரின் கதைகள் என்று பேச்சு போகும். நாளெல்லாம் தோட்டத்தில் வேலை செய்த களைப்பில் ராமாயி சீக்கிரமே உறங்கிப் போவாள்.

அசந்து உறங்கும் தங்கையின் சற்று பிளந்த வாயைப் பார்க்கும்போது குழந்தை போல தோன்றும். மனம் இளகிப்போகும். அம்மா என்ன செய்து கொண்டிருப்பாள்? அவளும் களைத்து உறங்கிக் கொண்டுதான் இருப்பாள். அம்மாவின் வெடித்த பாதங்களில் சரியாகக் கழுவாத களிமண் ஒட்டியிருக்கும். தங்கையின் பாதத்தை எழுந்து பார்த்தாள். நகங்களில் மண் சேர்ந்திருந்த்து.

ராமாயி அடுத்த நான்கு மாதங்களில் வயசுக்கு வந்தாள்.

பொறந்த வீட்டில் சீர் செய்து பத்துநாள் வைத்திருந்து பிறகு புகுந்த வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போனார்கள். அன்றிலிருந்து ராமாயி புருசனோடு தூங்கப் போனாள். நல்லம்மாள் மீண்டும் தனியானாள். அவளின் இரவுகள் மிக நீண்டதாக மாறின. முற்றிய நெல்மணிகளின் வாசனை அவள் அறையெங்கும் நிறைந்திருக்கும். மூச்சை நீண்டு உள்ளிழுத்து சுவாசிப்பாள். சோறு உண்டது போல நெஞ்சு நிறையும். சுவரில் சாய்ந்து அமர்ந்தபடி தன் கால்களை மேலே தூக்கிப் பின் விடுவாள். அது பொத்தென்று தரையில் விழும். எடுப்பாள், விடுவாள், எடுப்பாள், விடுவாள்.. பொத்.. பொத்..

ஒருமுறை காகம் கவ்விக்கொண்டு போன செத்த எலி இப்படித்தான் வாசலில் பொத்தென்று வந்து விழுந்தது.

ராமாயி அடுத்த வருடத்தில் குழந்தை பெற்றாள். அம்மா கையில் இருந்த குழந்தையை ராசுதான் வாங்கிக்கொண்டு வந்து நல்லம்மாள் கையில் தந்தான். அது கருத்த மேனியோடு பட்டு போன்ற உதட்டை சுழித்துக்கொண்டுக் கொண்டு சிணுங்கியது. அன்றிலிருந்து அது அவள் பொறுப்பில் விடப்பட்டது. பால் குடிக்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் குழந்தை இவள் காலடியில்தான் உதைத்துக் கொண்டு கிடந்தது. நல்லம்மாள் அவள் சிறுவாட்டுக் காசில் குழந்தைக்கு காப்பு செய்து போட்டாள். அடுத்த மூன்று வருடத்தில் அடுத்தக் குழந்தை பிறந்தது. ராமாயி சட்டென்று முதிர்ந்தவள் போல் ஆனாள். மாராப்பு சரிவதில் கவனமற்றவளாய் சரியாக வாராத தலையோடு அவள் தோட்டத்துக்கும் வீட்டுக்குமாக அலைந்து களைத்தாள். பேச்சில் பெரியமனுசியின் தோரணை வந்திருந்தது. காலம் வேகமாக ஓடிக்கொண்டிருக்க, நல்லம்மாள் தன் தளர்ந்த கால்களுடன் கால ஓட்டத்திடம் தோற்று தேங்கி நின்றாள். அவளிடம் சடைப்பின்னிக் கொள்ளவரும் வள்ளி ஒருநாள் தாவணியில் வந்து நின்றபோது இவள் மலைத்துப் போனாள். இன்னும் சட்டைப் பாவாடையிலேயே இருக்கும் தன்னை எண்ணி மருகினாள்.

அன்று களத்தில் மஞ்சள் வேக வைத்துக் கொண்டிருந்தார்கள். திண்ணையில் உட்கார்ந்திருந்த அத்தையுடன் கிழங்கு அவிக்க வந்த மரகதம் பேசிக்கொண்டிருந்தாள். பேச்சு ராமாயி பிள்ளைகள் பற்றி வந்தபோது, அத்தை சொன்னாள்,

“பெத்தவ எங்க பிள்ளைய பாக்குறா, அவளுக்கு காடு கரைல கெடந்து அல்லாடவே சரியா இருக்கு. பெரியவ கைலதான் பிள்ளைங்க வளருது. அவ கன்னிமார் சாமி மாதிரி. அவ வளக்கறது சாமியே வளக்கறாப்ல.”

வெந்து வரும் முற்றிய மஞ்சள் கிழங்கின் மணம் தெருவெங்கும் மணந்தது.

நல்லம்மாளுக்கு ஒவ்வாத நாட்கள் என்றால் அது வீட்டுக்கு விலக்காகும் நாட்கள்தான். கோவணமாக இழுத்துக் கட்டியிருக்கும் தீட்டுத்துணி அவள் தரையில் பிட்டத்தை இழுத்துக்கொண்டு நகர்கையில் எல்லாம் விலகி விடும். யாரும் அறியாமல் அதை இழுத்து இழுத்துச் சரிசெய்ய வேண்டும். அதனால் பெரும்பாலும் பின்கட்டுத் திண்ணையை விட்டு அவள் நகர மாட்டாள்.

நான்கு பக்கமும் மறைப்பு வைத்துக் கட்டப்பட்ட குளியல் அறைக்குள் இழுத்து இழுத்துப் போனாள் நல்லம்மாள். துணிகளைக் களைந்தாள். மேற்கூரை அற்ற மறைப்பினுள் பகல்நேர வெயில் மஞ்சள்நீர் போல் கொட்டியது. நல்லம்மாள் தன் ஆடையற்ற மேனியைப் புதிதாய் பார்ப்பவள் போல் தனித்தனியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். இடுப்புக்கு கீழே துவண்ட அந்த உடலில் தோள்கள் இறுகிப் படர்ந்திருந்தன. மொத்த வலிமையையும் காட்டிவிடத் துடிப்பது போல அவள் உறுதியான கைகள், திரண்ட மார்புகள், இறுகிய தோள்கள், படிந்த வயிறு என்று அங்கங்கள் அத்தனையும் திமிறிக்கொண்டு நின்றன. அவள் தன் மார்புகளைப் பார்த்தாள்.

ஒருமுறை அம்மா வீட்டில் தோழிகளுடன் திண்ணையில் தாயம் ஆடிக்கொண்டிருக்கையில் தோழி ஒருத்தி, விலகும் தன் மாராப்பை இழுத்து விட்டுக்கொள்வதைப் பார்த்த இன்னொருத்தி, அங்க என்ன இருக்குதுன்னு இழுத்து இழுத்து விடுற என்று கேலி செய்தாள். சுற்றி அமர்ந்திருந்த மொத்தப் பெண்களும் சத்தமாக சிரிக்கவும் அவமானப்பட்டவள் விடாமல், ஆமாம் பின்ன உனக்காட்டம் மூஞ்சில வந்து இடிக்கணுமா, கொஞ்சம் அடக்கி வைடி, விட்டா பறந்துடும் போல என்று எதிர்கேலி செய்ய கூட்டம் மொத்தமும் வயிறு வலிக்க சிரித்து, அவளுக்கு எப்படி, இவளுக்கு எப்படி என்று மாற்றி மாற்றி கிண்டல் செய்து விளையாடும்போது நல்லம்மாளை யாருமே கவனிக்கவோ, கேலி செய்யவோ மறந்து போனதை இப்போது நினைத்துக் கொண்டாள்.

சூம்பிய அந்த உடலில் திரண்டு நிற்கும் மார்புகள் மதிக்கப்படுவதில்லையா?! அவள் தீட்டுத்துணியைச் கழற்றி அலசத் தொடங்கினாள். உதிரம் தோய்ந்த அந்தத்துணி அப்பொழுதுதான் பிறந்த குழந்தை போல் இருந்தது. குளிர்ந்த நீரை ஊற்றித் தேய்த்துத் தேய்த்துக் கழுவினாள். பிள்ளை அழாமல் நீராடியது. இரும்பின் துரு வாசனை முகத்தில் மோதியது. அவள் மூச்சை நன்கு உள்ளிழுத்து விட்டுக்கொண்டு அலசிக்கொண்டே இருந்தாள்.

உதிரம் ஒரு குட்டி ஆறு போல அவள் காலடியில் இருந்து பிறப்பெடுத்து ஓடியது.

***

சுஜாதா செல்வராஜ்

தேவதா… உன் கோப்பை வழிகிறது..! – ஒரு பார்வை

0

சவீதா

கோப்பை வழிந்த பின்னும் நிறைத்தலென்பது பூரணத்துவத்தின் உச்சமும் போதாமையின் எழுச்சியும். இந்த முழுத்தொகுப்புமே அந்த இரண்டையும் நமக்குள் கடத்திக்கொண்டு போகும் பாவனையாய் நடாத்திச் செல்வது அதீதம். சிலசமயம் முடிந்து விட்ட ஆசுவாசத்தையும் தவிப்பையும் தருவதாக முற்றிலுமான வேறோர் திசையில் பயணி்க்கின்றன.

வேதநாயக்கின் கவிதைகள் எப்பொழுதுமே மிகமிகக் கூர்மையாய் அடுக்கப்பட்டவை. ஒரு புதிர் போல அடுக்கு பிரித்து அகம் மகிழ்தலில் வெகு சுகமான வாசிப்பனுபவத்தை உருவாக்குவதில் வித்தகர். இந்த நூலின் முழு கவிதைகளுமே வெவ்வேறு வகையான திசையில் நம்மை ஏற்றிக்கொண்டு பயணிப்பவை.

நடைமுறைக் காட்சிகளை வரிகளாக்குவதில் இருக்கும் தாத்பரியம் வியக்க வைக்கிறது. அன்றாடம் கவனித்தும் குறிப்பிடப்படாமல் கடந்து போகும் காட்சிகளை சற்றே நிறுத்தி ஸ்லோமோஷனில் கொண்டு போக எண்ணி ஆழமாய் அழுத்தி பின் மீளுருவாக்கம் செய்து விடுகின்றன.

அகக்கடலும் ஆன்மீகமும் தொக்கும் இடத்தில் சில கூர்மையான காமக்கத்திகளையும் அசாதாரணமாய் சொருகிவிட்டுப் போகிற சாமர்த்தியம் புருவ உயர்த்தலுக்கு வழிவகுக்கிறது. ஆன்மீகமும், ஆழ்ந்த தேடலும், சுயமறிதலும் மிகத்தேர்ந்த சொற்களில் மேன்மையான இரசனைகளைத் தாண்டி அடுக்கடுக்கான மடிப்புகளில் அமைத்திருக்கிறார். ஒவ்வொரு வார்த்தையும் காற்றுக்குமிழிகளின் ‘ப்ளக்’ சத்தத்துடன் ஆழ உள்வாங்கப்படும் போது மனம் விகசிக்கிறது.

குறிப்பிடவே முடியாத பல மன அவசங்களை படிக்க நேர்கையில் சந்திக்க நேர்கிறது. மேன்ஷனில் தவித்திருக்கும் ஆணின் அந்தரங்க மனதைப் படித்துக் கொண்டிருக்கும்போதே நம்மை நோக்கி அடைப்புக்குறிக்குள்ளேயிருந்து வீசப்படும் கூரிய அம்பின் முனைகள் நம் சமநிலையை அசைத்து சில்லு சில்லாய்த் தெறித்துப் போடுவதாய் அமைந்து விடுகிறது.

நாக்கில் ஒட்டிக்கொண்ட ஒரு துளியில் பிரபஞ்ச இனிப்பை ஒருசேர குவித்திருக்கும் தேனைப்போல சில சொட்டுகள் :

நெகிழாடைகள் மிகத் தயாரான முன் தயாரிப்போடு துருத்தாமல் தளர்வடைந்திருக்கிறது“…

-இப்படித் தொடங்குகிறது ‘சர்வாலங்கார பூஷிதே..’

உரூபிணி போதையேற்றும்
விதமாய் நின்றிருந்தாள்

நெகிழாடைகள் மிக தயாரான முன் தயாரிப்போடு
துருத்தாமல்
தளர்வடைந்திருக்கிறது

திருத்திய புருவத்தை
இடது சுண்டு விரலின் நீள்நகத்தால் இலேசாக சுரண்டி
கோடு முடிவடையுமிடத்தில்
லாகவமாக விலக்கி கொள்கிறாள்

உதடின் மேற்சாயமேற்றுவதற்கு முன்பு
பாதுகாப்பு களிம்பை பூசி
அனுமன் போல் உள்வாயில் காற்றுக்குமிழ் உருவாக்கி
அதரங்கள் ஒன்றோடொன்று நெருக்கி அணைத்தபடி
சிலவினாடிகள் இருத்தி
இடவலமாக அசைத்து பார்க்கிறாள்

நகப்பூச்சுக்கு தோதாக வளையணியை
இரு கரங்களிலும் மணிக்கட்டில் சேராமல்
சற்று
மேலேற்றி கொள்கிறாள்

முன் தனங்களையும்
பின்
பிருஷ்டங்களையும்
கண்ணாடியில் சரிபார்த்து தொட்டு நீவுகிறாள்

விரித்து நுனியில் சிறு முடிச்சிட்டு
தழைய விட்டிருக்கிறாள்
கார்குழலி

உக்கிரமான காதல் வெறியில்தான்
தன் நடையை பயில்கிறாள்
உள்ளறையில்

என் செய இறைவா..

நேற்றைய பொழுதின் இடை சம்பாஷணையில்
ஒரு சொல்லால் தைத்து முடித்ததும்
விலகிய எனது அகங்காரம்

அவளது வாயிலில் செருகப்பெற்றிருந்த
சிறுமலர் கொத்தை
நகர்த்தி

உள் நுழைய பலந்தருமோ..?

பெண்ணின் பெருமிதமான அலங்கரித்தலையும், ஊடே பயிலும் சிருங்கார பாவனைகளையும் நினைத்துப் பார்த்து கன்னத்தைக் குமிழ வைக்கக் கூடியது. உதட்டுச்சாயத்தைப் பூசுவதற்கு முன்பான வர்ணனை முழுமையான அவதானிப்பு. அவளது செயலின் அழகியலும் இவனின் பரிதவிப்பும் சந்திக்கும் புள்ளி வேறோர் பரிணாமம்.

அவளது வாயிலில் செருகப் பெற்றிருந்த சிறு மலர்கொத்தை நகர்த்தி உள் நுழைய பலந்தருமோ” என்கையில் இக்கவிதையின் முடிவிலான அதே மலைப்பு.

***

சமதளத்தில் புழங்குவதில்
என்ன நிகழ்ந்து விடப்போகிறது

சிறு சிராய்ப்பு ஒரு கீறல்
அல்லது விபத்து

அட அவ்வளவு ஏன்?
சுளுக்காவது..

சில சொற்களின் மேல் அழுத்தம்
எண்ணெய் குளியலுக்கு முன் நடக்கும்
தேகப்பிடிப்பு

பெருங் காரிருளில்

இரு உள்ளங்கைகளிடை
நசுக்காமல் காபந்து பண்ணும்
மின்மினியின் மினுக்காய்

பிழிந்து வைத்த ஈரத்துணியின் அடுக்கு
இடது கையில் மேலும் மேலும்
சேர்ந்த பின்
கம்பிக்கொடியில் காய வைக்க
எம்பி ஒன்றை போடுகையில்

தெரியாமல்
கனத்தால் நழுவும் துணியை
கனக்கச்சிதமாய் எப்படி வழுவாமல்
பிடித்தீர்களோ…

ஆங்…
அதே போல்

கனன்றுகொண்டிருக்கும் உள் நிர்வாணத்தை
கங்கின் சாம்பலாய்
போர்த்திக் கொண்டிருக்கும்
ஆடையை நெகிழ்த்துவது போலதாய்

இருப்பின் வெகு சிறப்பு

கொஞ்சம் பெண்ணியம் டிட்டோ ஆணியம்
இஸங்கள்
ப்ளா..ப்ளா-க்களை
ஒதுக்கி விட்டு

(நீங்கள் ‘ல்’ சேர்த்து
ஆணியத்தின் முன் வார்த்தையை
படித்தீர்கள் எனத் தோன்றுகிறது)

வழக்கொழிந்த காதைகளை காததூரம்
நகர்த்தி வைத்தபின்
சொல்லின் மூலக்கூறுகளும் முயக்கம் கொள்ள
கொஞ்சம் முன்விளையாட்டில்
ஈடுபடுத்திக் கொண்டால்

செய்கூலி சேதாரமின்றி
வார்த்தைக்கலவி சுகமென

உள்பட்சி கதறுவதை

கொஞ்சமேனும் செவிமெடுக்கலாம்

“சில சொற்களின் மேல் அழுத்தம் எண்ணெய் குளியலுக்கு முன் நடக்கும் தேகப்பிடிப்பு”
“கொஞ்சம் பெண்ணியம் டிட்டோ ஆணியம்
இஸங்கள்…”

நீண்டு குறுகிய வட்டப்பாதை’ எனப் பெயரிடப்பட்ட இக்கவிதையின் உள்ளே அடைப்புக்குறியில் நம் மனதை அவிழ்த்து எறியும் எள்ளலும் குதறிப்போடச் செய்யும் குரூரமும் நிரம்பி வழிகின்றன.

சற்றே யோசித்தால் சமநிலையிலேயே நிற்பதென்பது எத்துணை பதட்டத்தை தரக்கூடியது? மனிதனின் சமநிலை எங்கெங்கு சிதறக்கூடும் என ஆழ்மனம் தவித்துக் காத்திருக்கிறது. அதனை துணைக்கழைத்துக் கொள்ளும் இக்கவிதை என்னை மிகச் சலனமூட்டுகிறது. கம்பியில் காயப்போடும் துணியை சொல்லிவிட்டு பேசும் தொனியில் வம்புக்கிழுப்பது பிறகு நிர்வாணத்தை தரிசிப்பது என மேலுங்கீழுமான அலைவுறுதலாய்.

***

பெயரிலென்ன?
ஏதோ ஒரு மலர்

ஆம்
அப்படித்தான்

ஒவ்வொன்றினுக்கும்
குணமறிந்து இனமறிந்து
கொடி
தரு
புதர் வகையினங்களை வகை பிரித்து

உம்மிடம்
உலக நீதியை நிலை நாட்ட செங்கோல்
ஈந்ததாய்
இறுமாப்பு கொண்டு விதவிதமாய்
சூட்டுகிறாய்

அஃது ஒரு பூ தானே..?

ஆம் இப்படியும்தான் எனக்கொரு பெயருண்டு
அடையாளமும் கூட

இருந்ததற்கான சாட்சியம்
இருப்பில் மட்டுமே

பீநாறி மலராகினும்
நறுமண காந்தி விகசிப்பிலும்
மலர் மலரே தான்

ஊழ்கழிப்பல் மலரில்(களில்)
தனித்த ஒற்றை மலரும் கூட

கழிந்தபின் சுற்றிச் சுருண்டு
அடிப்புறம் மிதந்திறங்கி
பழுப்பின் காடுகளில் கலக்கும்
பாழுமாய்.

“பெயரிலென்ன? ஏதோ ஒரு மலர்”

கால நர்த்தனம்’ கவிதையில் வரும் காலம் தின்றுவிட்ட பல மலர்களில் ஒன்றாய் சுற்றிச்சுருண்டு அடிப்புறம் மிதந்திறங்கி பழுப்பின் கசடுகளில் கலக்கும் பாழாய் அவரையே உருவகப்படுத்தி இருக்கலாம் என்பதொரு யூகம்.

***

இறுதிச்சடங்கில்
விடமருந்தி நீலம் பாரித்து கன்னிமை காத்த
அவளது உடலத்தருகே

சூக்கும தேகத்தோடு
ஐந்தாவது கள்ளக்காதலியின்
கணவனால் கொல்லப்பட்ட அவனது
ஆவி

சுரக்கா உமிழ்நீரை நாவின் அடிப்புறமிருந்து
மேல்கிளப்பி கொண்டு வருவதாக

கற்பிதம் செய்தபடி

காம விவரணை செறிந்த நிசிப்பாடலை காற்றின்
இலயத்திற்கேற்றவாறு
முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது

தமது படுக்கை விரிப்பின்மேல்
உடல் மலர்த்தி உறங்கிக் கொண்டிருக்கும்
இள மாதின் மீது போர்வை மூடுகிறது
இரண்டாம் வீட்டின் மேல்மாடி அறையில்
ஓர் அரூபம்

இரண்டாம் தெருவில்
வரவேற்பறைக்கு அடுத்த அறையில்
பொருள்வயின் பிரிந்த தலைவனது இல்லத்தில்
ஒரு பக்கம் திறக்கப்பட்ட
தனத்தின்
கூரிய கரிய காம்பிலிருந்து உறிஞ்சிய

பால் சொட்டுத் தாரையை

காய்ந்து உலர்வதற்கு முன்னம்
அக்குழந்தையின் உறைந்த உறக்கத்தை
கலைக்க மனமின்றி
துடைத்து அழிக்கிறது மற்றோர் உருவிலி

அகோர நகங்களை கண்களுக்கு மிக நெருக்கமாய்
காட்டியபடி
விழிகள் இருக்க வேண்டிய இடங்களில்
விரற்கடை அளவாழத்திலிருந்து கசியும் குருதியை
ஒழுக்கியபடி மேலழுத்துவதாய்
வீதியோர பிச்சைக்காரனொருவன் அலறிப்
புடைத்தெழுகிறான்

ஓர் அகால மரணத்திற்கு பிறகான
அவ்விரவின் நகர்தலில்
அரவின் அசை மினுமினுப்பு
தொடர் கண்ணிகளாக இன்னும் மீதமிருப்பதை
குரல் பெயர்ப்பாளனொருவன்
சுட்டிக்காட்டுகிறான்

அவை
எவரது கனவில் மீண்டெழும் என
அறிவிக்கக் கூடாதவனாக
அல்லவா அறியப்பட்டிருக்கிறேன்..

-‘வசீகரத்தின் விரல் இரேகைத்தடம்’
“ஓர் அகால மரணத்திற்கு பிறகான”

இந்த கவிதையின் கடைசி வரிகளுக்கு முந்தைய வரிகளெல்லாம் அலறிப்புடைக்கச் செய்யும் ரகம். லேசாய் கைவிட்டு இதயத்தை கண்முன்னே கசக்கி எதுவும் நடவாதது போல் அயர்ன் செய்து மடித்து உள்ளே திரும்ப வைக்கும் இலாவகம். இதேபோல படிப்படியாய் நிகழ்த்தும் பரிணாமங்கள் பல கவிதைகள் இத்தொகுப்பிலுள்ளது. படித்துப் படித்துத் தீர்க்க முடியாத கவிதை தொகுப்பு.

‘தூய்மை ஒதுக்கிய ஒழுங்குகள்’ எல்லாம்

துயரிலிருந்து ஒரு சொல்
இலாகவமாக பிரித்தெடுக்கப்படுகிறது

அந்தோ..

அதுவோ இரத்தச் சேற்றிலிருந்து
உருவி எடுக்கப்பட்ட பிரதான நரம்பின் பெயராக
அல்லவா உருக்கொண்டிருக்கிறது..?

நரர்கள் சூழ் பேருந்து நிலையத்தில்
நிறைசூலி ஒருத்தி சிறுநீர் கழிக்க
எல்லோரையும் விலக்கி நகர்கிறாள்
ஆமையாக

மனமோ பேயாக

பூரணத்தின் இறுதி சூத்திரத்திற்கு
விளக்கமெழுதி ஆசுவாசப்படுகிறான்
பண்டிதனொருவன்

வாசலில் நின்றழுது

பள்ளிக்கட்டண இறுதி நாளின்று வென நிற்கிறான்
இளைய பிள்ளை

நாய்கள் அலையும் நள்ளிரவில்
குருதி தோய் கந்தைத்துணி அறியும்
பாடென்பது
விக்டர் ஹியூகோ* விட
தனக்கு அதிகம் தெரியுமென

பந்தம் என்பது
நாரதனின் தாகத்திற்கு நீர் முகந்து ஊற்றிய
இளையவளின் பின் சென்றானே
அவனைக் கேட்பதைவிட அவளுக்குத்தான்
முழுமையாகத் தெரியும்

பிணைத்தவள் அவள்தானே
நாராயணன் என் செய்வான்
சொல்

எங்கு சுற்றி என்னவாகப் போகிறது
தன் கூட்டில்
கதகதப்பிற்கு பஞ்சுப்பொதிகளை
மறுத்து

பதிக்கப்பெற்ற வைரத்துணுக்குகள்
குத்தி கிழிக்கத்தான் உள்ளம்

*Victor Marie Hugo -Les Misrables

தூய்மை விலக்கிய ஒழுங்குகள்

இனி வருங்காலங்களில் பேருந்து நிலையத்தின் கர்ப்பிணியையும் பள்ளிக்கட்டணம் மறந்த சிறுவனையும் பார்க்க நேர்ந்தால் வேதாவின் துணையன்றி கழித்திட சாத்தியமில்லை.

நாய்கள் அலையும் நள்ளிரவில் குருதி தோய் கந்தைத்துணி

எப்பேர்ப்பட்ட குறியீடு?

***

இரவெழுக

ஆகச்சிறந்த முறிந்த கிளையொன்றிலிருந்து
தொங்கும் பனையோலை
சிலாம்பு காய்த்து
பருத்த தண்டை உரசுகையில்
அடிவயிற்றிலிருந்து
பயம் மேலேறி கவ்வுகிறது

அடர் தருவிலிருந்து

சட்டென இருகை விரிக்குமளவு
சிறகை பரத்தியபடி கோட்டான் செவிக்கருகே
காற்றை புயல் போலெழுப்பி
இருதயத்தை ஸ்தம்பிக்க வைக்கிறது

நெளிநெளியாய் நழுவியபடி
உடல் மினுக்கி நகர்கிறது
நச்சரவம்

தோழியொருத்தியின் சிரிப்பை கொண்டே
பற்களை யூகித்து
முகத்தை உருவகஞ் செய்ய ஆகிறது

சிறுநீர் கொப்பளிக்கும் கணங்கள் தோறும்
இடாகினியின் நினைவில்
தாழ்வாரத்திலேயே
பெய்துவிட ஆசை முட்டுகிறது

தூரத்தே கரும்பு தோட்டங்களில்
ஊளையிடும் நரிகளால்
வயிற்றில் ஊறும் பசியை லிங்கத்திற்கு கடத்தி
சிருஷ்டியை
நினைவுக்கு அனுப்பி
துணையை அழைக்க தூண்டுகிறது

மரணத்தில் பெரிய மரணம்
பகலொதுக்கி இரவு கவிந்த பின்
பெரிதும் காத்திருந்து
நிசி தாண்டி தனியே தற்கொலை புரியாமல்
சக்கையாக பிழியப்பட்டு

பல்வேறு தருணங்களில் கொல்லப்பட்ட எனது
தனித்தலையும் பிணத்தின் சிரம் துண்டித்து
யாரிடமும் பகிராமல்
புதைத்து

மண்ணள்ளி மேல் போட்டு
மூடிவிடுதலாங்
காண்

-‘இயந்திர கதிக்கு அப்பால்

தோழியொருத்தியின் சிரிப்பைக் கொண்டே பற்களை யூகித்து முகத்தை உருவகஞ் செய்ய ஆகிறது …

“இரவெழுக..”

இவ்வரிகளின் துணிவில் ஒரு அகோரியின் அந்தரங்கத்தை தரிசித்த தருணம். அய்யோ எனப் பீதியிலோ, சர்ரியலிசமாகவோ ஒடுங்கும் மனதைத் தந்துவிட்டு கல்லறையின் பின்பக்கமாய் உறைந்து நிற்கிறது. நச்சரவத்தின் விடாய் தீரா நகர்தல்கள் மேனியெங்கும் சலசலப்பூட்டுகிறது.

***

மன அவசத்தை துண்டித்து
எறிவதற்காக Fidget spinner-ஐ
நடுவிரலுக்கும் பெருவிரலுக்குமிடை
வைத்து சுற்றியபடியிருக்கும்
மகா கோபம் ஏறியவன் அவன்

கிளிஞ்சல்களை மிக நிதானமாக சேகரித்து
நடுவீட்டில் ஒழுங்குபட கொட்டி
வெறுங்காலால் ஓங்கி மிதித்து
துகளுற செய்பவன்
வேறொருவன்

முழு இரவையும் செலவிட்டு அடிவானம் நீலம் இழந்து
வெயிலில் வெளுக்கும் உதயங்களில்
சட்டென எச்சில் துப்பி
விடுவிடுவென நடக்கின்றவன்
மற்றொருவன்

சந்தை கூடுமிடங்களில்
அழுகிய முட்டை
பழ காய்கனிகளை நடைபாதைகளில் ஓங்கியடித்து
சிதற விடுபவன் இன்னொருவன்

ஆங்காங்கே புள்ளிகளால் உறைந்திருக்கிறது
நடுஇரவில் மேலே
அந்தரம்

நிலமும் நீரும் இணைவதற்கு சங்கோஜமுறும்
நிறமேறிய ஜலசந்திக்கருகே
மச்ச வாடையும் நரமாமிச வாடையுமுடைய

ஒரு கனத்த உடலை

தொட்டுப்பார்க்கவா வேண்டாமா என்றொரு
கேள்வியுடன்

காளியை புறமொதுக்கிய
ஜெயங்கொண்டாரின்
கூளி
விழிகளை உருட்டிக்கொண்டிருக்கிறது

என் கனத்த இருதய சதைப்பொதிக்குள்
தாறுமாறாய் யாரோ ஒருத்தியின்
இரத்தம்

சீற்றமாய்

மோதி
கொண்டிருக்கிறது

-‘துகள்களில் உறையும் பொன்னிறம்’

கிளிஞ்சல்களைத் துகளுறச் செய்பவன் வேறொருவன். இவனை நாள்தோறும் சந்திக்கிறோம். நினைவுபடுத்திக் கொள்ள முடிவதில்லை. ஆழ்படிமங்களில் ஒட்டியிருக்கும் ஒவ்வொன்றையும் நேரே நெஞ்சிலே படீர் படீரென எடுத்து எறிவது போன்றதோர் பிரமை. இறுதியில் பக்கத்தை புரட்ட முடியாமற் போவதின் சாபம்.

***

யாதொரு துரோகம் இழைத்ததாக
நினைவில்லை

நினைவிருக்கும் அனைத்தும்

ஏதோ செய்த நிறைவில்
அது அதன் போக்கில் தளும்பியிருக்கிறது

விழிநீர் ஒழுக்குகளை
அதனிஷ்டம் போல் தழைய விடுகிறேன்

விளையாட்டாய் மாட்டுவிட்டு கழற்ற இயலா
மோதிரத்தை
எச்சிலூற்றி முயல்கிறேன்

பின் குளியல் அறையில்
சவர்க்காரத்தையும் உடற்கழுவியையும்
கொண்டு
எத்தனித்து தோற்கிறேன்

மென்மையாய் உதடின் மேல் உதட்டை பொருத்தி
அந்தரங்கத்தை கிளர்ச்சியுற செய்து

பின்

அவளால் வெடுக்கென
அம்மோதிரத்தை உருவப்பெற்றேன்

நீங்களானால் என்ன செய்கிறீர்கள்..?

மாமிசம் மறுக்கும் என்னை
ஏய்த்து
பசியோடிருக்கும் எனைப் பொருட்படுத்தாமல்
பக்கத்து வீட்டில் குடியேறி

நன்கு கொழுத்த மீன்களை
வாணலியில் இட்டு
பொரித்தெடுக்க முனைகிறீர்

உங்கள் வீட்டு பெண் குழந்தையிடம்
மாங்காயை அம்மியில் வைத்து நசுக்கி
மிளகாயையும் உப்பையும் தடவி
என் வாசலுக்கருகே நடமாட விடுகிறீர்

நகர்வதற்காகவே நாட்களை மூச்சைப் பிடித்து தள்ளும்
என்னையெல்லாம்
பொருட்டாய் மதித்து நடக்கும் உங்களிடம்
மீதமாய் விரல் கணுக்களை நெட்டி முறிக்கும்
நேரத்துள்

நான் இவ்வுலகிலிருந்து
விடைபெற்றபின்

யாரிடம் உங்களின் தீவிரத்தை பரிசோதிப்பீர் என
கேட்கலாமெனில்
நீங்கள் செவிகொடுப்பதே இல்லையே
எப்போதும்

-‘ஏன் நகர்வதில்லை நரகம்?

விடையுறாக் கேள்விகளால் கட்டுண்டு கிடக்க வைக்கிறது. நகர மயமாக்கலையோ, பெண்ணின் கடந்து போகும் தன்மையையோ இயலாமையில் இறைஞ்சும் உள்ளத்தை படியெடுக்கிறது. உள்முக வாட்களால் வீரம் தெறிக்க போராடுபவனால் மலர் கொய்ய முடியாது போன இயலாமை. எள்ளும் மனிதர்களை விரல்நீட்டிக் குற்றம் சாட்டும் நோக்கில் விழுந்த வரிகள்.

***

சுடும் பாறையினோரம் முன்பொரு நேரத்தின்
தழைத்திருந்த பெயரற்ற
மலைச் செடியானது
வெம்மையில் இலைகளுதிர்த்து குச்சிகுச்சியாய்
நீண்ட முனையில்
ஒரு தும்பி
இறக்கைகளை அதிர்த்தபடி
வந்தமரும் ஒரு துளி சொட்டு

வேளை தவறிய உணவில் வயிறு சுருங்கியபடி
முடை நாற்றம்
மிகும்
மேன்ஷன் நடுமத்தியில்
ஆங்கில எஸ் வடிவத்தில் படுத்திருக்கும்
வேலையற்றவனின் சுவரில்
வினாடி முள் நின்று மீளும் கணங்களுக்கு
இடை அதிரும்
நேரத்தின் ஒரு துளி சொட்டு

வெகு உள் வனத்தில் ஒரு பறவையின்
‘ட்வீக்’கிற்கும் மற்றொன்றிற்குமான
கார்வையிலிருந்து ஒரு சொட்டு

மகப்பேறுமனைகளில் பிறந்ததும்
அழாமலிருக்க
செவிலி இரு கால்களையும் தூக்கி
பிருஷ்டத்தில் தருமறையில் வீறிட்டழ ஆகும்
ஓலத்தின் நிறுத்த வினாடியில்
தேங்கும் உயிர் துளிர்ப்பு ஓசையின்
ஒரு துளி சொட்டு

எனச் சிலவை கசிகிறது

பக்கத்து இருக்கையில் கடவுளுடன்
பயணிக்கையில்
அவனது ஹெட்போனிலிருந்து

திவலைகளின் கதை…

வெகு உள் வனத்தின் ஒரு பறவையின் ட்வீக்…

பக்கத்து இருக்கையில் கடவுளுடன்
பயணிக்கையில்
அவனது ஹெட்போனிலிருந்து…

திவலைகளாகவே நாக்கில் ஒட்டிக்கொள்கிறது மிக அழுத்தமாய்..

மொத்தமாய் பிரித்து அடுக்கினாலும் கட்டுரை தாமாகவே அதிகப்படியாக எழுதிக்கொள்ள முற்படுகிறது. தனித்தனியாய் விரித்தெழுத காலம் கனிய வேண்டும். தொகுப்பை படிக்கையில் வெகு ஆசையாய் இருக்கும் விரைந்து செல்ல… ஆயினும் ஆமை வேகம் மட்டுமே சாத்தியம். நின்று அசை போட்டு செரித்து பின் உணரும் மனநிலை சாந்நித்யம். ஆழ்மனதின் படிமங்கள் அலைவுற்றவாறே இருக்கின்றன. அலையில் மாட்டிக் கொண்டியங்கும் துரும்பு போல உயரத்திற்கும் தாழ்வுக்குமான ரோலர்காஸ்டர் அடிவயிறு இழுபட்ட பயணமாய் அமைகிறது. ஆங்காங்கு தேங்கிக் கொள்கையில் பூக்குவியலும் பல சமயம் ரத்தமும் சதையுமான நிணக்குவியலும். எல்லா அனுபவங்களுக்கும் வாசகனைத் தேர்ந்தெடுத்தல் சிறந்த உத்தி.

தொகுப்பை படித்து முடித்த பின்னும் மனதில் நின்றுழலும் சில வரிகள் :

பேருந்து நிலைய நிறைசூலி …
தகரக்கம்பியில் விழும் சடசடக்கும் மழை …
செருப்பில் கால் உறுத்தும் மணல்துகள் …
பாவாடை நாடாவை தளர்த்தி உண்ணும் சிறுமி …

இப்படி அநேகம்.

மிக முக்கியமான தவறவிடக்கூடாத கவிதைத் தொகுப்பு எனவும் சில வரிகளில் கடக்க முடியாதொரு தொகுப்பு என்றும் ஏன் சொல்கிறேன் என்பதற்கு காரணங்கள் இருக்கின்றன. படித்து முடித்து விட்டேன் என யாரேனும் சொன்னால் அவர்களைப்பற்றி சற்று அதிகமாய் பெருமை கொள்ள சாத்தியம் இருக்கிறது. எப்பொழுதும் முடிவோ, முழுமையோ கொள்ள முடியாத மிகப்பல மடிப்புகளுடைய கவிதைகள் வேதநாயக்குடையது.

பல திடுக்கிடும் அசெளகர்யங்கள் வழி நெடுக உணர முடிகிறது. சில ஆச்சரியங்கள், மன பேதலிப்புகள், பகடிகள், அந்தரங்கத்தின் தரிசனம் காண நேர்ந்த அமர்வுகள், அத்யந்த நேசத்தின் பல்வேறு கூறுகள், தொன்மயமாக்கப்பட்ட பல கூறுகள், மேற்குலகின் பல நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில குறிப்புகள், ஆன்மீகத்தின் அடிநாதங்கள் எனப் பரந்து விரிவாக்கப்பட்ட கிளைகளின் வழியே ஊடுருவிச் செல்கிறது. முன்னெப்போதுமில்லாத கேதங்கள் கவிதையெங்கிலும் பரவிக்கொண்டே இருக்கிறது. பகிர முடியா காமத்தின் நெருக்கடி அலைகழிய வைக்கிறது. நசிகேதனின் விளக்கங்கள் கூட சில வரிகளுக்கு போதாமையைக் கொடுக்கிறது.

ஒவ்வொரு கவிதையின் முடிவிலும் முழுமையுற்ற அல்லது முழுமை பெற முடியாத என இரு துருவங்களின் மத்தியில் நிற்பதான தோற்றம் வலிந்து உருவாக்கப்பட்டதா என ஐயம் மேலெழுகிறது. கடந்து போக முடியாத மரணம் சம்பவித்த வீட்டில் பிணம் தூக்கும் சமயம் வரும் மனவெழுச்சியை உண்டாக்குகிறது. ஒரு வரிக்கு பின் அடுத்த வரி உணர்வுகளில் நமது சமநிலைத்தன்மையை சற்றே அசைத்துப் பார்க்கிறது.

இதில் அடைய வேண்டிய தரிசனங்களை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பாழடைந்த வீட்டில் எழும் வீச்சமும் மனோரஞ்சிதத்தின் மணமும் ஒருங்கே கொண்ட கலவையான மணம். சிலசமயம் ஆங்காங்கே தேங்கி விட நேர்கிறது.

விடையறியா பல தோற்றங்களான வாழ்வு நமக்கென மறைத்திருக்கும் ஆச்சர்யங்களைக் கண்சிமிட்டும் நொடியில் வெளிப்படுத்தி சடுதியில் மறைந்து விடும் மின்னலைப்போல சிலநொடிகளுக்கொரு முறை இந்த கவிதைத் தொகுப்பில் சில வரிகள் இடறிக்கொண்டே இருக்கின்றன. சிலசமயம் மண்புழு நெளிதலும், பட்டாம்பூச்சியின் இறகு சிலிர்த்தலும் ஒரே தருணத்தில் உங்களுக்குள் நடக்க அநேக சாத்தியங்களுண்டு..

பல நூறு படிமங்கள், பல அடுக்கிலான வார்த்தைகள், விழுங்க முடியா அவதானிப்புகள், இது கிட்டத்தட்ட விளையாட்டாய் 10 புத்தகங்களுக்குண்டான கவிதைகளாய் தரப்பட்ட கிடங்கு. ஞான செளந்தர்யத்தைப் பிய்த்து ஒரு தாமரை இலையில் சுருட்டி கொடுத்தாற்போல.. மொத்தமாய் ஒரே சுருளில். இன்னும் முழுமையாக உள்வாங்க பலநாட்கள் தேவைப்படுமென நினைக்கிறேன். அடுத்த கவிதைத் தொகுப்பை தாமதப்படுத்தவும் வேதநாயக். தயை கூர்ந்து…

***

தேவதா… உன் கோப்பை வழிகிறது..! (கவிதைகள்)
வேதநாயக்
யாவரும் பப்ளிஷர்ஸ்
விலை – 200

-சவீதா

சேலத்தில் வசித்து வரும் இவர் ‘பிரிவின் நிமித்தம்’ என்னும் கவிதை நூலை வெளியிட்டுள்ளார். பல்வேறு பத்திரிக்கைகளில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எனத் தொடர்ந்து இயங்கி வருகிறார்.
மின்னஞ்சல் முகவரி – savithavenkatakrishnanv@gmail.com

எனில் – புத்தக விமர்சனம்

0

உன் கவிதைக்கான எரிபொருள்
நிற்கவும் தெரியாத
ஓடவும் தெரியாத
இந்தக் காலத்தை
நீயும்
நாலு கேள்வி கேளேன்

என்று தன் கவிதையில் சொல்வதைத் தானே தென்றல் சிவக்குமார் முயற்சித்த கணங்கள்தான் “எனில்”

ஒரு படைப்பை முழுவதுமாகப் படைப்பாளியின் அனுபவங்கள் மட்டுமே எனக்கருதி ஆளையே கேள்வி கேட்க முனையாதீர்கள் என்று பலமுறை பதில் சொல்லியிருக்கிறேன். அனுபவம், வாசிப்பு, கேள்விஞானம், சிந்தனை எல்லாவற்றையும் சேர்த்த வார்ப்பாகவே ஒரு படைப்பு இருக்கும்… இருக்க முடியும்.

ஆனால் இது நான்தான் என்று தென்றலோ, நானோ, இன்னொரு பெண்ணோ சொல்லிக் கொள்ளவும் முடியும். ஆயினும் இதைக்கூட ஒரு தகுதி அடிப்படையில் தான் சொல்ல முடியும். என்ன அது?

எழுத்தறிவோ, வெளி உலக அனுபவமோ அற்ற கூட்டுப்புழுக்களாக வாழ்ந்த பெண்கள் ஒருவகை என்றால், வாழ்வின் வரையறைகளை மாற்றி சிந்திக்கவும் செயல்படவும் கற்றுக்கொண்டு விட்ட பெண்கள் புதுவகை.
இவை இரண்டுமாக இல்லாமல், பழைய அடிப்படைகளையும், புதிய ஞானத்தையும் ஒன்றாகவே தரித்துக்கொண்டு வாழும் பெண்கள் பற்றித் தெரிந்தால் கூட அந்தத் தகுதி உண்டு. அவர்கள் கணினியின் உலகத்துக்குள் இருந்தபடியே கறிவேப்பிலைச் செடி ஏன் துளிர்க்கவில்லை எனக் கவலைப்படுவார்கள். வாகனங்களின் திருப்பான்களைப் போலவே உணர்வுகளை முறுக்குவதையும் பயணத்துக்கு என்று கடப்பார்கள். அவர்களாக இருக்கலாம் அல்லது அவர்களை அறிந்திருக்கலாம் அப்போதுதான் அவரவர் வாள் அவரவர்க்கு என்ற விதிமுறை புரியும்.

இது பெண்தான் என்றில்லை. ஆணுக்கும் பொருந்தும். எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட முடியாமல், சிறு வாஞ்சையோடு எடுத்துப் பார்த்துக் கொள்வதற்காகவேனும் ஒரு துண்டுத்துணியை, கிழிந்த பத்திரிகையை வைத்துக் கொள்ளும் இளமனது இருப்பவர்க்குப் பொருந்தும்.
அதுவும்
கிழக்குப் பார்த்த வீடுதானா?
“சாய்ந்து கொள்ளும் பொழுதில்
பின்னிருந்து அணைத்துக்கொள்ளும்
ஒரு சுவர்
அந்த வீட்டிலும் இருக்கும்
அவ்வளவுதான் தெரியும்”

நேரமும் தூரமும் துரத்தும் வாழ்க்கையில் ஆறுதலுக்கு எவ்வளவு கதியற்றுப் போயிருக்கிறோம் என்ற விம்மலை எழுப்புகிறவள் இந்தப் பிச்சி.

உடனடிகளாலான இவ்வுலகில்
பழசாயிருப்பதன்
அபாயத்தை முறிக்க விரும்புகிறாயா
என்ற கேள்வியை அவளன்றி யார் கேட்பார்கள்?
ஒரு
மித வியப்பைக்
கொண்டாடத் தெரியாது
அதி வியப்புக்குக்
காத்திருக்கத் தூண்டும்,
எதிர்பாராமையின்
அச்சு முறிக்க
முயன்று முயன்று
தோற்கும்
அறிவத்த மனசு.
வாசித்துக் கொண்டே வரும்போது ஏன் கடைசி வரியில் மட்டும் இலக்கிய நடை துறந்து வீட்டு முற்றத்தில் கவிதை இறங்கிவிட்டது என்று ஒருகணம் திடுக்கிடும். பிறகு இறங்க வேண்டிய தளம்தான் எனப் புரிகிறபோது ஆறுதல்.

சொல்லாத சொற்களின் கனம் என்னவென்பது புரியும் இடம் அவள் முடிவெடுக்கிறாள்
எனில்,
உரத்துச் சொல்லிப் பார்க்கலாம்
ஒருமுறை,
எதிர்முனைக்குக் கேட்குமளவிலேனும்
கொஞ்சம்
உரத்துச் சொல்லிப் பார்க்கலாம்.

ஓரிரு கவிதைகள் சற்றே வேறு மையம் கொண்டவை போலப்பட்டாலும் பெரும்பாலானவற்றின் கதாபாத்திரத் தன்மை நிழல்போல் அவற்றிலும் படிந்தே இருக்கும் தொகுப்பு.

விரைந்து நகர்ந்து
தளும்பும் கண்களுக்கு
மறைவிடம் தேடப் பணிக்கிறது
எனக்கு அருளப்பட்ட
நார்மல் வாழ்வு
எனில் சாரம் இதுவே. காவியத்தன்மை ஏற்றாது, சிடுக்கான மொழியைத் தொடாது ஒரு தலைமுறைக் குரலாக அமைந்த கவிதைகளின் தொகுப்பு. சந்தியா பதிப்பக வெளியீட்டில் வண்ணதாசனின் வாழ்த்துரையோடு வந்திருக்கும் நல்ல தொகுப்பு.

விலை ரூ.80
சந்தியா பதிப்பகம்

***

உமா மோகன் – இவர் பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார். இதுவரை ஏழு கவிதைத்தொகுப்புகள் மற்றும் ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.

மனு தர்மம்

0

பாரதீ

திருமாவளவன் மனு தர்மத்துக்கு எதிராக ஒரு பெரும் போரைத் தொடங்கியிருக்கிறார். இது எங்கே போய் முடியப்போகிறது என்று தெரியவில்லை. ஆனால் அது எங்கிருந்து தொடங்கியிருக்கும் என்கிற கேள்வியும் எழுகிறதே! வெளியில் என்ன காரணம் சொல்லப்படுகிறதோ தெரியவில்லை. ஆனால் அதுபற்றி நமக்குச் சில சந்தேகங்கள் இருக்கின்றன.

முஸ்லீம்கள் ஷரியாச் சட்டத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு இந்துக்களில் எவரும் மனு தர்மத்தின் அடிப்படையிலான சட்டத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்வதில்லை. இந்துக்கள் என்பது பார்ப்பன வைதீக மதம் மட்டும் அல்ல என்ற கணக்குப்படியோ பார்ப்பனர்கள் மட்டுமே இந்து மதம் என்ற கணக்குப்படியோ பார்த்தால் கூட, மத வெறி – சாதி வெறி பிடித்த பார்ப்பனர்கள் கூட நடைமுறைக்கு அதை ஏற்க மாட்டார்கள். நாளை முதல் இந்து என்று சொல்கிறவர்களுக்கெல்லாம் மனு தர்மத்தின் அடிப்படையிலான சட்டந்தான் என்று மட்டும் அறிவித்தால் இரவோடு இரவாக இந்து மதம் கூண்டோடு காணாமல் போய்விடும். மனு தர்மத்தின் பெருமையைப் பற்றி பெருமை பொங்கப் பேசுகிறவர்கள் அதன்மீது வைத்திருக்கும் மரியாதையோ நம்பிக்கையோ அவ்வளவுதான். எல்லாம் வெறும் பம்மாத்துக்கும் அதன்மூலம் தம்மை மேலே வைத்துக் கொள்வதற்கும் பேசப்படும் கடைந்தெடுத்த தன்னலப் பேச்சுக்கள் அவை. மதப்பற்றில் கூட மூடத்தனமான மதப்பற்றும் இருக்கிறது, காரியக்கார மதப்பற்றும் இருக்கிறது. காரியக்கார மதப்பற்று மற்றவர்களை மட்டும் மூடர்களாக வைத்துக்கொண்டு தான் விவரமாக இருந்து கொள்ளும்.

இப்படி வழக்கொழிந்து போய்விட்ட – எவரும் ஏறெடுத்துக்கூடப் பார்க்காத மனு தர்மத்தை ஏன் இந்தச் சூழ்நிலையில் திருமாவளவன் போன்ற ஒருவர் எதிர்க்க வேண்டும்? அதற்கான தேவை இப்போது திடீரென்று எங்கிருந்து வந்தது? அல்லது, உள்ளுக்குள் ஊறிக்கொண்டிருந்தது இப்போது முட்டிக்கொண்டு வெளியே வந்திருக்கிறதா?

திருமாவளவன் அனைத்து தரப்பு மக்களின் வாக்குகளை நம்பிப் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதி என்பதையும் மறந்து மிக நேர்மறையாகச் சிந்தித்தால், அவர் இந்த நேரத்தில் இந்த முடிவை எடுத்ததற்கான நியாயம் முற்றிலும் இயல்பானதே என்று தோன்றுகிறது. மொத்த இந்தியாவும் காவித் தீவிரவாதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதைக் கேள்வி கேட்பது ஒன்று உயிரைக் காவு வாங்குகிறது அல்லது பிழைப்பைக் காலி செய்கிறது. ஆள் அனுப்பிக் கொன்று போடுவார்கள் அல்லது ஆள் அனுப்பி மிரட்டி உள்ளதைப் பிடுங்கிக்கொண்டு விடுவார்கள். அதற்கெல்லாம் அஞ்சாமல் ஓரளவு இதை எதிர்த்து நிற்கும் மாநிலமாகத் தமிழ்நாடு மட்டுமே இருக்கிறது. தமிழகத்தின் அரசியல் ஆகக்கேடுகெட்ட ஒரு கட்டத்தில் இருக்கிறது என்ற போதும் பொதுமக்கள் மத்தியிலும் அறிஞர் சமூகத்தின் மத்தியிலும் அப்படியான வெளிப்படையான நிலை ஓரளவுக்கு இருக்கிறது. அதுதான் இந்த மண்ணின் இன்னும் மிச்சமிருக்கும் உயிர்.

தமிழகத்தின் அரசியல் ஏன் கேடுகெட்டதாக இருக்கிறது என்கிறோம்? பாஜக ஆளும் மாநிலங்களே செய்யத் தயங்கும் இழிவான வேலைகளைக் கூட எந்தத் தயக்கமும் இல்லாமல் இங்கிருக்கிற அடிமை அரசு செய்துமுடித்துக் காட்டிக் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்கிறது. ஒரு காலத்தில் இந்தியாவிலேயே எந்தப் பகுதியும் செய்யாத அளவுக்கு இந்து மதத்தைச் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்டது தமிழ்நாடு தான். அதுவும் குறிப்பாகத் திராவிட அரசியல்தான். பெரியாரின் திராவிடர் கழகம் அதை ஒரு சமூக இயக்கமாகச் செய்து கொண்டிருந்தது. அவரின் தம்பி அண்ணா அதிகாரத்துக்கு ஆசைப்பட்டோ அதிகாரத்தைக் கைப்பற்றுவது தான் தம் கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சரியான வழி என்று நம்பியோ திமுகவைத் தொடங்கினார். அவர் பெரியார் அளவுக்கு இந்து மறுப்பு – வெறுப்பெல்லாம் செய்யாமல், சுருதியைச் சிறிது குறைத்துக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றினார். அவரின் தம்பி கருணாநிதியும் அதே பாணியில் அரசியல் செய்து தம் கொள்கைகளையெல்லாம் பெரிதளவில் நிறைவேற்றிக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கருணாநிதியின் அரசியலில், வெளிப்பேச்சுக்கு எதிர்ப்பை நெருப்பாகக் கக்கிக்கொண்டு உள்ளுக்குள் ஓரளவு தடவிக்கொண்டு ஓட்டினார் என்றும் ஒரு குற்றச்சாட்டு உண்டு; வாக்கரசியல் கட்டாயங்களால் வெளியில் வெறுப்பைக் காட்டிக்கொள்ளா விட்டாலும் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் கமுக்கமாகச் செய்து கொண்டார் என்றும் ஒரு கருத்துண்டு. குறைந்தபட்சம் அவர் இருக்கும் வரை அவ்வப்போதாவது தன் கொள்கை அதுதான் என்பதை நினைவூட்டும் வகையில் ஏதேனும் செய்து கொண்டிருந்தார். அவருக்குப் பிந்தைய திமுக முற்றிலும் மாறுபட்டதாக உருவெடுத்திருக்கிறது.

“கொள்கைகளோடு அரசியலுக்கு வருகிறோம். அதிகாரம் சிறிது கெடுத்து விடுகிறது. அன்றாடக் கட்டாயங்கள் சிறிது கெடுத்து விடுகின்றன. தாக்குப்பிடிக்க வேண்டும் என்றால் அதெல்லாம் செய்துகொள்ளத்தான் வேண்டும்” என்கிற இடத்தில் இருந்து, அரசியலில் இருப்பதே அதிகாரத்துக்காகவும் அது கொடுக்கும் பணத்துக்காகவுமே என்கிற நிலைக்கு எல்லாக் கட்சிகளுமே போய்க்கொண்டிருக்கின்றன என்றாலும், அந்த வகையில் திமுகவின் வீழ்ச்சி அந்தக் கட்சியை நம்பியிருந்த பல குழுக்களுக்குப் பெரும் இழப்பு. ஒடுக்கப்பட்டவர்கள், சிறுபான்மையினர், தமிழ் உணர்வாளர்கள் ஆகியோர் அப்படிப் பெரும் இழப்புக்கு உள்ளாகியிருக்கும் குழுக்கள். எல்லாக் காலத்திலும் இவர்களுக்கெல்லாம் முழு உண்மையோடு திமுக இருந்ததா என்றால், அதற்கான விடை இன்றும் தனித்தனியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்டோர் அரசியல் கட்சிகளும் சிறுபான்மையினருக்கென்று இருக்கும் கட்சிகளும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுமே. அதே வேளையில், மற்ற மாநிலங்களைப் போலன்றி, பார்ப்பனியத்தையும் பெரும்பான்மை வாதத்தையும் (இந்து இந்தியா) ஒற்றை மொழி மேலாதிக்கத்தையும் (இந்தி இந்தியா) எதிர்க்க முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக்குள் கொடுத்தது இந்தத் திமுகவின் எழுச்சி தான். அவர்கள் எல்லோருமே இப்போது தெருவுக்கு வந்துவிட்டது போன்ற ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.

அம்பேத்கரின் படத்தை மட்டும் வைத்துக்கொண்டு பிழைப்பைப் பார்க்கும் அரசியல்வாதிகள் என்று தலித் கட்சிகளைச் சொல்வது போல், மார்க்ஸை மறந்துவிட்டவர்கள் என்று பொதுவுடைமைக்காரர்களைச் சொல்வது போல், பெயருக்கு மட்டும் பெரியாரை வைத்துக் கொண்டிருப்பவர்கள் என்று திராவிடக் கட்சிகளைச் சொல்லும் ஒரு கூட்டம் எப்போதுமே இருந்து கொண்டுதானிருக்கிறது. அதை உண்மையென்னும் விதத்தில்தான் அதிமுக என்கிற கட்சி தொடங்கிய நாள் முதல் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் எவருக்கும் எந்த வருத்தமுமில்லை. ஆனால் திமுக என்ற கட்சி மீது ஓரளவு எதிர்பார்ப்புகள் இருந்தன. அவை முற்றிலும் வீணாகிப் போகிற அச்சம் வருகிற போது, இனியும் இவர்களை நம்பிப் பயனில்லை; நாமே களமிறங்கிவிட வேண்டியதுதான் என்று முடிவுகட்டித் திருமாவளவன் இறங்கியிருக்கலாம்.

இது ஓரளவு அரசியலையும் திருமாவளவனையும் கவனித்திருப்பவர்களுக்கு முழுமையாகச் சரியென்று படாது. அவரும் பெரியாரின் தம்பி அண்ணா போலவே தேர்தல் அரசியலுக்கு வந்தபின் பல சமரசங்களைச் செய்து பழகிக் கொண்டவர். வீறுகொண்டு சீறிவிட்டுப் பின்னர் காலத்தின் தேவை கருதித் தன்னைச் சாந்தப்படுத்திக் கொண்டவர். அதுதான் இன்று அவரை இந்த அளவுக்கு மதிக்கத்தக்க தலைவராக உருவாக்கியிருக்கிறது என்பதையும் அறியாதவராக இருக்க மாட்டார் அவர். எனவே அவர் எல்லாவிதமான கூட்டல்-கழித்தல் கணக்குகளையும் போட்டுப் பார்த்துத்தான் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.

அப்படிப் பார்க்கையில், இன்னும் கொஞ்சம் இறங்கி யோசித்தால், இதுதான் தன் அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். எதிர்காலம் என்றால் நீண்டகாலக் கணக்காகவும் இருக்கலாம். குறுகியகாலக் கணக்காகவும் இருக்கலாம். இன்று அதிமுக எனும் பூமாலையைப் பிய்த்து உதறிக் கொண்டிருக்கும் பிறவிகளைப் போல நாளையைப் பற்றிய கவலையே இல்லாத – சுருட்டுவதை மட்டுமே கொள்கையாகக் கொண்ட குறுகலை நோக்கி அல்ல திருமாவளவன். தன் கொள்கைகள் ஒரு தலைமுறையைக் கடந்தேனும் நிற்க வேண்டும் என்கிற அளவுக்குச் சிந்திப்பவர் தான். அப்படியானால், இதுதான் தனக்கான பாதை என்று தேர்ந்தெடுத்துவிட்டார் என்றே நம்பலாம்.

திமுக ஆசை காட்டி மோசம் செய்துவிட்டாலும், அந்தக் கொள்கைகளையும் கனவுகளையும் கொண்ட ஓர் அறிவுக் கூட்டம் தமிழ்நாட்டில் இருந்து கொண்டுதானிருக்கிறது. அவர்களாலும் ஒரு குறிப்பிட்ட அளவிலான மக்கள் ஆதரவைத் திரட்ட முடியும். அப்படியானால், அவர்களுக்குப் பிடித்த மாதிரிப் பேச வேண்டும் – நடந்துகொள்ள வேண்டும். அல்லது, அப்படியான ஒரு கூட்டம் அவரைக் கையில் எடுத்திருக்கிறதோ என்றுகூடத் தோன்றுகிறது. இதுபோன்ற எழுச்சிகளைக் கண்டு எவ்வளவு புல்லரித்தாலும் தேர்தல் அரசியலில் இருப்பவர்களை எவ்வளவு காலத்துக்குத்தான் நம்ப முடியும் என்கிற அச்சமும் நியாயமானதே. ஆனால், ஸ்டாலினையோ முகமேயில்லாத அதிமுகவையோ ராமதாஸையோ நம்புவதைவிடத் திருமாவளவனை நம்புவது மேல் என்பதும் நியாயமாகவேப் படுகிறது.

கடைசியாக, அடுத்த தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் தலைவரும் ஒவ்வொரு கணக்குப் போட்டுத் தம் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகக் கொள்கை அடிப்படையில் இணைந்து இயங்குவது போல நடந்து கொண்டதெல்லாம் வெறும் விளையாட்டுக்கு என்பது போல், அதையெல்லாம் அப்படியே மறந்துவிட்டுத் தம் கீழ்மைகளை இறக்கிவிடத் தயாராகிக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தென்படத் தொடங்கியிருக்கின்றன. இதில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகப் போகிறவர் திருமாவளவன் தான் என்கிற கருத்து அவர் காதுகளுக்கும் போகாமலா இருந்திருக்கும்?

“எனக்கா விபூதி அடிக்கப் பார்க்கிறீர்கள்?” என்றும் இறங்கியிருக்கலாம். இப்படியொரு பெரிய போராட்டத்தைக் கையில் எடுக்கும்போது, அதுவும் இப்போதிருக்கும் அரசியல் சூழலில், அவருக்கு நினைத்துப் பார்த்திராத மாதிரியான பல பிரச்சனைகள் வரலாம். அதையும் மீறி இதில் ஓரளவுக்குக் கூட்டம் சேர்த்துவிட்டால் தமிழகத்தில் இன்னும் ‘இந்த’ அரசியலுக்கு இருக்கும் இடத்தை நினைவுபடுத்திக் காட்டுவது மட்டுமில்லாமல், இவரைக் கழற்றி விட்டுவிட்டு ஒரேயிரவில் கூட்டணி மாற்றிக்கொள்ளப் போகிறவர்களையும் அம்பலப்படுத்திவிடுவார். அது அத்தோடு முடியப் போவதில்லை. மூன்றாவது அணி ஒன்றைக் கட்டி, அடுத்த ஆட்சி யாருடையது (அல்லது யாருடையதாக இராது) என்கிற முடிவைத் தீர்மானிக்கும் பலமான இடத்தில் நின்று, சொடக்குப் போட்டுக் கூப்பிடலாம். இதெல்லாம் வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய சிக்கலான இடத்தில் நிற்கிறது திமுக இப்போது.

இந்தப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்வதில் திமுகவுக்கு இருக்கும் பிரச்சனைகள் பல :

  1. “நான் பேச வேண்டியது என்று மக்கள் நம்பிக் கொண்டிருந்ததை நானே பேசாமல் – பேச முடியாமல் – பேசப் பயந்துகொண்டு இருக்கும் போது, நீ வந்து பேசுகிறாயே!” என்கிற ஆத்திரம்.
  2. “நான் பெரிய ஆளா? நீ பெரிய ஆளா? நான் கூப்பிட்டா வர்றவன் நீ. நீ கூப்பிடுற இடத்துக்கு நான் வரணும்னு எதிர்பார்க்கிறாயா?” என்கிற ஆணவம்.
  3. “நானே முக்கு முக்குன்னு முக்கி ‘நாங்களும் இந்துக்களின் நண்பர்களே’-ன்னு ஒரு படத்தைப் போட்டுக்கிட்டு இருக்கேன். இந்த நேரத்தில் நீ வேற வந்து ஆட்டையைக் கலைக்கப் பாக்குறியே! ஏன்யா உனக்கு நான் நல்லா இருக்கிறது பிடிக்கலையா?” என்னும் அச்சம்.
  4. ‘இப்போது போய் திருமாவளவனோடு கைகோர்த்து நின்றுவிட்டால், நாளை அவரைக் கழற்றி விட்டுவிட்டுக் கூட்டணியை மாற்றும் போது மக்கள் நம்மை எப்படிப் பார்ப்பார்கள்!’ என்கிற கூச்சம்.
  5. “நீ இப்படிப் பேசுவது கூட எங்களுக்கு நல்லதுதான். 80% இந்துக்களின் கோபமும் உன் பக்கம் திரும்பிவிட்டால் அப்படியே அவர்களின் வாக்குகளை எல்லாம் நாங்கள் அள்ளிக்கொண்டு வந்துவிடலாம்” என்கிற நப்பாசை.

கடைசியாக, ‘அரசியலுக்குள் வந்துவிட்டால் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். சேற்றை வாரி அடிப்போம். சாணியை வாரி அடிப்போம். எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ள வேண்டும். தெம்பிருந்தால் பதிலுக்கு நீயும் யார் மீது வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் அடித்துக்கொள்’ என்கிற ரீதியில் பல கதைகள் வலம் வரப்போகின்றன. அதற்கென்றே கொள்ளையடித்த காசில் தொடங்கப்பட்ட இருபெரும் இணையப் பிரிவுகள் இருக்கின்றன.

அப்படி இவ்விஷயத்தில் திருமாவளவன் மீது அடிக்கப்படப் போகும் சேறுகள் இவைதான்:

  1. “தம் மீதான 80% இந்துக்களின் கோபத்தைக் குறைத்துக் கொள்வதற்காக திமுகவே அவரை இப்படி ஆட்டுவிக்கிறது. இவருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் அவரே ஒதுங்கிக் கொள்வார். இந்துக்களே! இதையெல்லாம் புரிந்து கொள்ளுங்கள். இவர்கள் இருவருமே நம் எதிரிகள்!”
  2. “மக்களாட்சியில் கொடுங்கோலர்கள் தம் எதிரி யார் என்பதையும் அவர்களே தீர்மானிப்பார்கள். அப்படித்தான் பாஜக கொஞ்சநஞ்ச இந்து வெறுப்பையும் திமுகவுக்குச் சாதகமாகி விடாமல் பார்த்துக் கொள்வதற்காக இவரை இறக்கி விட்டிருக்கிறது. இவர் டெல்லியில் போய் யாருக்கு நண்பனாகி இருக்கிறார் பாருங்கள். எனவே இவரைக் கழற்றி விட்டுவிட்டு மருத்துவர் ஐயாவோடு சேர்ந்து சமூக நீதியை நிலைநிறுத்துவோம் வாருங்கள்!”

இதில் எந்தப் பிரிவு அடுத்த சில மாதங்களுக்கு ஒழுங்காக ஊதியம் பெறுகிறதோ – எந்தப் பிரிவு நம்பத்தக்க வகையில் பொய்களைப் பரப்புகிறதோ அந்தப் பிரிவின் உண்மையே இறுதியில் வெல்லும். ஒருவேளை இரு பிரிவினருமே சொதப்பிவிட்டால் அல்லது இரு பிரிவினருமே சமமாகக் குழப்பினால், மக்கள் வெறுத்துப் போய் திருமாவளவனையே தம் தலைவனாகத் தேர்ந்தெடுத்துவிடும் ‘அபாயமும்’ இருக்கிறது.

***

பாரதீ

கார்குழலி கவிதைகள்

0

பாசக்கார அக்கா அவள்…

தங்கையின் பெயரையே
பேத்திக்கும் பிரியமாகச் சூட்டி
மனதில் நேசமும்
கனிந்த பொக்கை வாயின் ஓரத்தில்
பெருமை கலந்த வெட்கமும் கசியச் சிரித்தாள்.
வைரம் பாய்ந்த மரத்தின் வட்டங்களாய்ச்
சுருக்கம் தேங்கிய கைகளில் சிசுவை ஏந்தி
பிஞ்சு உடம்பு நோகாமல்
கனிவு சொட்டும் குரலில்
பெயரைத் தழுதழுத்தாள்

தலைமுறை தாண்டியும்
தங்கையின் பெயர் நிலைப்பதில்
ஆசை கொண்டவள்
வளைத்து வளைத்துக் கேட்டாலும்
தவறியும் தன் பெயரைத்
தூக்கத்தில்கூட உளற மாட்டாள்,
சாமியாகி ஐம்பது வருடமாகிவிட்ட
மாமியாரான சொந்தப் பாட்டியின்
பெயரும் அதுவே என்பதால்.

கரிசல் மண்நிற மேனிகொண்டவளின்
மனமோ கொல்லென்று பூத்த முல்லையின்
மணமும் நிறமும் கமழ்ந்தது

தாய்மாமனுக்கே வாழ்க்கைப்பட்டுப்
பெற்ற நான்கையும் பின் அவனையும்
விஷக் காய்ச்சலுக்கு வாரிக் கொடுத்து
இளம் வயதிலேயே தனிமரமாக நின்றவள்

தீயாய் எரிக்கும்
பறிகொடுத்த வாழ்வின் ஏக்கத்தைக்
கருணை ததும்பும் நெஞ்சுக்குள் மறைத்து
அகல் தீபமாக ஒளிர்ந்தாள்

தங்கையின் பிள்ளைகள் மேல்
தேனூறும் பாசம் என்றால்
அவர்கள் பெற்ற பிள்ளைகள்
தேனிலூறிய நெல்லிக்கனிகள்

சுட்டெரிக்கும் கோடை விடுமுறைகளில்
அவர்களின் வருகை
தோட்டத்துப் பன்னீர் மரத்தின்
குளுமையைத் தெளித்தது அவள் மனதில்

பேத்தியைத் தூங்க வைக்கக்
கதைசொல்லியாக மாறிய இரவுகளில்
தான் முதலில் கண் உறங்கி
மழலையாகப் பிதற்றுவாள்

நீண்ட கூடத்திலும்
குளுமையான கருங்கல் திண்ணையிலும்
சீட்டுக்கட்டு, சொப்பு, பல்லாங்குழி
அஞ்சாங்கல் விளையாட்டெனத்
தூணுக்குத் தூண் ஓடி ஒளியும் சிறுமியாகி
ஒற்றைக் கரத்தைக் குவித்து
பொக்கை வாயை மூடி
சிரித்துக் குதூகலிப்பாள்

சமையல் அறையில்
மெலிந்த நடுங்கும் விரல்களால்
இலாவகமாய் சுற்றும் கைமுறுக்கில்
கொஞ்சம் வெண்ணெய்யோடு
அளவு கடந்த பாசத்தையும்
சேர்த்துப் பிசைந்தாள்
கணவன் வீட்டில் சொத்துபத்து
நகைநட்டு என ஜொலித்த சீமாட்டி
தங்கை வீட்டில் கந்தையில் உறங்கிப்
பசி எனக் கேட்காமல் இட்டதை உண்டு
பாசம் இழைய உழைத்துக் கொட்டினாள்

தான் பெயர் வைத்த தங்கையின் பேத்தி
தன் ஊருக்கே வாழ்க்கைப்பட்ட மகிழ்ச்சியில்
மங்கிய கண்கள் வைரமாய் ஜொலித்து
ஒளிக்கீற்றைப் பாய்ச்சியது

இரண்டு மாதத்துக்கு ஒருமுறை
காலை பலகாரத்துக்கும் மதிய உணவுக்கும்
இடைப்பட்ட நேரத்தில் போய்
பேத்தியை நலம் விசாரித்துக்
காப்பித் தண்ணி மட்டும் குடித்து
பசியே இல்லை என்றபடி
சம்பந்தி மரியாதையைக்
காப்பாற்றிக்கொண்டு வீடு திரும்புவாள்

படுக்கையில் விழுந்த கடைசி வருடம்
வயிற்றில் மூண்ட பசி நெருப்பு
என்ன தின்றும் மாளாமல் கனன்றது

பார்ப்பவரிடத்தில் எல்லாம்
‘சாப்பிடத் தா தா’ என்றாள்

வாழ்க்கை முழுதும் நெஞ்சில் ஒளித்த
தனிமையின் ஏக்க நெருப்பு
திகுதிகுவென்று வயிற்றில் எரிந்தது போல

அவள் மரித்த நாளன்று
எரிகாட்டில் தங்கையின் மகன் ஏற்றிய
கொள்ளி நெருப்புப் பற்றிய நொடியில்தான்
வயிற்று நெருப்பு அணைந்து தணிந்தது

*

அன்பெனப் பெய்த மழை

ஒரு பின்மதிய நேரத்தில்
இளஞ்சிவப்பு இதயங்களாகப்
பொழிகிறது மழை

கூடவே தனக்கான துளியைக்
கண்டுணர்ந்த முகங்களில்
வெள்ளிப் புன்னகைகளை
இலவசமாக ஒட்டிச் செல்கிறது

மரக்கிளைகளில் சிக்கிய பட்டங்களென
பிரியமானவர்களின் கண்களில் சிக்கி
படபடக்கும் இதயங்களை ஒன்று சேர்க்க
ஒளி ஊடுருவும் ஏணியில்
கால் பதிக்கிறான் காதலின் இரட்சகன்

நனையப் பிரியப்பட்ட சிறுவர்களின் முகங்களை
செல்ல நாய்க்குட்டியாகி நக்குகிறது மழை

கொள்ள யாருமின்றி தேங்கிய நீரில்
மிதக்கும் இதயங்களை
கதம்ப மாலையில் தொடுக்கும் பூக்காரக்கிழவி
ஒரு கிள்ளைக் கொண்டையில் சொருகியதும்
தெருவோர அம்மனாக ஒளிர்கிறாள்

சொட்டுச் சொட்டாகப் பெய்து
பார வண்டியின் இடுக்குகளை நிறைத்து
இலேசாக்கிய இளஞ்சிவப்பு இதயங்கள்
வண்டிக்காரனின் வறண்ட களைப்புற்ற பாதங்களில்
இரண்டு துடிப்புமிக்க இறக்கைகளை ஒட்டுகின்றன

நகர முழுவதும் குளம் கட்டிய மழைநீர்
மனம் மயக்கும் பாடலைப் பாடும் இதயங்களை
வீடுகளின் ஜன்னலில் சொருகி வைத்தது

ஒரு கூடை நிறைய இதயத்தை அள்ளி வந்து
குளிர்பதனப் பெட்டியில் உறைய வைக்கிறேன்

மழை நின்ற பொழுதில் அன்பின் இனிமையைச்
சுவைப்பதற்காக என

***

நேர்த்திக் கடன்

தசாப்தங்களாக நீளும் வாழ்க்கையில்
தினந்தோறும் தீ மிதிக்கிறாள்.
பூக்குழியின் நீளம் என்ன
சில அடிகள் தானே.

பொறுப்பற்ற கணவனின்
கடமையையும் சேர்த்தே
காலமுழுவதும் சுமக்கிறாள்.
பால் காவடியைக்
கோவிலுக்குப் போனதும்
இறக்கி வைக்கலாம் அல்லவா.

சக்கையாகப் பிழிந்தெறியும்
வாழ்க்கையில் விடிவு பிறக்க
எலுமிச்சையில் தீபம்,
கொஞ்ச நேரமாவது
இருண்ட வாழ்வில் ஒளிவீசட்டும்.

முடிவில்லாமல் நீளும் நாட்களில்
வியர்வையும் கண்ணீருமே
பெருகிக் களைத்துவிட்டாள்.
அபிஷேகப் பாலும் தேனும் இளநீரும்
கொஞ்சமாவது இனிப்பைச் சேர்க்கட்டும்.

ஈர நாராக இறுகி
மூச்சு முட்ட வைத்த வாழ்க்கையில்
நறுமணம் வீசிய மலர்கள் உதிர்ந்து
சருகு மட்டுமே இப்போது மிச்சம்.

குருதி கொப்பளிக்கும்
பலியைமட்டும் கேட்டு விடாதே.
கொடுப்பதற்கான தலைகளை எண்ணவே
பல நாட்கள் ஆகிவிடும்.

***
கார்குழலி –

மொழிபெயர்ப்புகள், கவிதைகள், கட்டுரைகள் என அச்சு ஊடகம், மின்னிதழ்களில் இவரது படைப்புகள் தொடர்ந்து வெளிவருகின்றன. ஆசிரியர் தொடர்புக்கு – karkuzhali.sreedhar@gmail.com

ஜீவன் பென்னி கவிதைகள்

0

கண்ணீர்த் துளிகள்

பிரபஞ்சத்தின் கடைசி இலையும் விழுகிறது
அத்துயரத்தை அனுபவிப்பதற்கென அங்கு யாருமில்லை
பிறகு
அதன் அர்த்தம் பகிர்ந்து கொள்ளவே முடியாததாக மாறிவிடுகிறது

*
பரிசுத்தமானவைகளின் இதயங்கள் வெளியே கிடக்கின்றன

ஒரு மூடிய வீட்டிலுள்ள அழுகையைத் திறந்து விடுவது
போல
இந்தத் துன்பம் மிகப்பெரியது

*
இந்த உலகின் குறுகலான பாதைகளைக் கடந்து
சிறிது தூரத்தில் துவங்கும் பாடலுக்குள் நுழைந்து விடுகிறோம்

பிறகு
எங்கு சென்று கொண்டிருந்தோமென்பதையே மறந்து போகிறோம்

*
எல்லாவற்றின் சாயலிலும் இருக்கிறது இந்தப் பாரங்களின் வலி

ஒவ்வொரு அடுக்காக இறக்கி வைக்கும் போது
தவறுதலாக என்னையும் கழற்றி வைத்து விட்டேன்

*
ஒரு ஆயுதத்தின் கூர்மை முழுவதுமாக இறங்கிக்கொண்டிருக்கும்
போதுதான்
மன்னிப்புகளுக்கான பாடல்கள் எழுதி முடிக்கப்பட்டன…

வெகுநேரம் மண்டியிட்டு சரிந்த உயிரின் வலியை
உலகம் பொருட்படுத்துவதில்லை

*
நீண்ட காத்திருப்பின் தடத்தை மெதுவாக உணர்ந்த போது
ஒரு கீறலின் காய்ந்திடாத வடுவை தடவிப்பார்த்துக் கொண்டேன்

காட்டு விலங்கின் நகம் போலிருக்கிறது இவ்விரவு

*
இந்த நதி தனக்குள் மூழ்கி எழுந்திருக்கும் யாரையும்
ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை
வெறுமனே ஓடிக்கொண்டிருப்பதுவே அதன் சந்தோசம்
மேலும்
அதன் அழுக்கு அதற்கு நன்றாகவேத் தெரியும்
*
ஒரு சிறு குறியீட்டில் மொத்த அன்பையும் பகிர்ந்து கொள்ளும்
உலகத்தில் நீ வந்து சேர்ந்து விட்டாய்

பிறகு
நீ வைத்திருக்கும் ஒவ்வொரு கண்ணீருக்குமான பிரிவுகளையும்
ஒரு பருவத்திற்குள் வளர்த்தெடுக்க வேண்டும்


  • காயங்களின் ஆழத்திலிருக்கும் ஒரு நரம்பு தான்
    சின்னஞ்சிறு மனதிற்குள் எஞ்சியிருக்கும் ரணத்தை உணரச் செய்கிறது
    துன்புறுத்தும் இந்த பாதி வெளிச்சத்திலிருந்து
    அதை மறைக்க வேண்டும்.

*
தொட்டிச் செடிகளில் சிறிய பூக்கள் பூப்பதற்கு முன்பு
நாம் இவ்வளவு நேசங்கள் கொண்ட மனிதர்களாக யில்லை

அதன் இதழ்கள் மிருதுவானவற்றை நம்புவதற்கு பழக்கியிருக்கின்றன

*
நிறைய தூரத்திற்கான ஒரு மனதை இங்கிருந்து
பத்திரப்படுத்துவேன்

முடிவற்ற பாதைகளின் பிரம்மாண்டங்களுக்குள்ளிருந்து
வெளியேறும் மிகச்சிறிய வழிகளை
அதுவே கண்டுபிடித்துக் கொள்ளும்

*
தன் காலத்திலிருந்து நகர்ந்து வரும் நத்தை
இப்பிரபஞ்சத்தை மிக மெதுவாக அளந்து கொண்டிருக்கிறது

கடைசி ஒரு அடியில் தன் கால்களை வைப்பதற்கு இடமற்ற
வெறுமையில்
அப்பிரபஞ்சத்தை விட்டேச் சற்று வெளியில் நிற்கிறது


  • தன் பளபளப்பை இழந்து விட்டிருந்த அக்கல்
    கைகளிலெடுக்கப்படும் ஒருநாளில்
    தன்னர்த்தத்திலிருக்கும் சொரசொரப்பைப் பகிர்ந்து கொள்கிறது

அது இந்த உலகின் மிகப்பழைய மனிதனின்
துயரத்தைச் சொல்வது போலவேயிருக்கிறது

*
தவறிய வழியொன்றில் கைவிடப்பட்ட வொரு பாதத்தடத்தை
பார்க்க முடிந்தது

எல்லாத் தேவைகளுக்குமான ஒரு சின்னப் பொருளை
கொடுத்து விட்டு அது மறைந்து போய்விட்டது
ஓரிடத்தில் சிறிய பூ தோன்றி மறைவதைப் போல

*
பசியிலிருக்கும் ஒரு உயிர் குதிப்பதற்கென ஒரு முனையும்
உடனடியாகக் கிடைப்பதில்லை

இந்நிலம் எல்லாவகையிலும் மிகவும் தட்டையானது
போலவே திரும்பத் திரும்ப தோன்றிக் கொண்டிருக்கிறது

*
வெகு காலத்திற்கு முன்பே உதிர்ந்த இலைகளை
அடுக்கிக்கொண்டிருந்தவன்
தன் காலத்தில் ஏன் அவைகளெல்லாம் விழவில்லை யென்று
அக்கறை கொள்கிறான்

அவனை மூடிக்கிடக்கும் மணல் மேட்டில்
விழுந்த முதல் இலை
இன்னும் நன்கு பழுத்திருக்கவில்லை

***

ஜீவன் பென்னி

பொதுப்பசி

1

க.வசந்த்பிரபு

தூக்கத்தின் நேரம் மாறுவதைப் போலொரு கொடுங்கொடுமை எதுவுமிருக்காது. சதாசிவம் போஸ்டர் ஒட்டும் வேலை பார்ப்பதால் இரவில் முழித்து பகலில் தூங்கிப் பழகியவன். மூன்று மாதமாக எந்தப் படமும் ரிலீஸ் ஆகவில்லை. யாரும் பிறந்தநாளோ, கல்யாணமோ கூட போஸ்டர் ஒட்டிக் கொண்டாடும்படியான நிலை இல்லை. முதல் மாசம் மட்டும் தியேட்டர் ஓனரு பையன் சம்பளம் முழுசா தந்துட்டாரு. அப்பயே இனிமே படம் ரிலீஸ் ஆனாதான் சம்பளமுன்னு சொல்லிட்டாரு. பகல் தூக்கத்திற்கு 10 நாளாகத்தான் பழகியிருந்தான். தூங்கிக் கொண்டிருந்தவனை அவனது மனைவி எழுப்பிக் கொண்டிருந்தாள். பதில் குரல் மட்டும் கொடுத்துக் கொண்டு எழாமல் இருந்தவனை பேத்தி ஒரே உலுக்கில் எழுப்பினாள்.

கடைக்குபோய் பத்துரூபா எண்ணெய் பாக்கெட்டும், தக்காளியும் வெங்காயமும் வாங்கிட்டு வரசொல்லி அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் அவனது மனைவி. கூடவே பைக்ல போலீஸ்காரனுங்க வர்றதுக்குள்ள போய்வந்துருங்க. அப்புறம் கடைய சாத்திருவாங்க என்று புலம்பி கொண்டிருந்தாள். பின்தெருவில் இரண்டு வீட்டில் கொரோனா தொற்று இருப்பதால், இங்கு கடைகள் திறக்க அனுமதி இல்லை. சட்டென எழுந்து கடைக்கு கிளம்பினான் சதாசிவம்.

1950, 51-ல் காலராவால தமிழ்நாட்டுல மட்டுமே 25000 பேருக்கு மேல செத்துப்போனப்ப சதாசிவத்தோட அப்பா மெட்ராஸ்ல ஒரு பிரஸ்-ல வேலை பாத்தாரு. அப்ப அவருக்கு கல்யாணம் ஆகல. அந்த காலராவ பாத்து பயப்படாத அவரு, 1964-ல சதாசிவம் பொறந்தப்ப, நாலஞ்சி வருஷமா கொறஞ்சி போயிருந்த காலரா திருப்பி ஆயிரக்கணக்கா அதிகமானதும் இந்த ஊருக்கு வந்துட்டாரு. இந்த ஊர்ல பெரிய பிரஸ் எதுவும் இல்லாததால, அப்பதான் ஊருக்கு நடுவுல புதுசா ஆரம்பிச்ச தியேட்டர்ல மாட்டுவண்டில போய் விளம்பரம் பண்ணிட்டு வர வேலைல சேர்ந்துட்டாரு. மாட்டுவண்டி போய், போஸ்டர் ஒட்டற வேலை, சிலநேரம் டிக்கட் கிழிக்கற வேலைன்னு அங்கேயேதான் சாகற வரைக்கும் இருந்தாரு. சதாசிவத்துக்கு ஒரு தம்பி இருந்தான். ராமன்னு பேரு 15 வயசு இருக்கும்போது சினிமால நடிக்கபோறன்னு சண்ட போட்டுகிட்டு வீட்ட விட்டு ஓடி போயிட்டான். திரும்பி வரவே இல்ல.. சதாசிவம் படிப்புல ஒன்னுத்துக்கும் லாயக்கில்லனு தெரிஞ்சதும் கூடவே கூட்டிட்டுப்போய் ஓனர்ட்ட பேசி தியேட்டர்லயே வச்சிக்கிட்டாரு. இப்ப தியேட்டர்ல சதாசிவம் தான் போஸ்டர் ஒட்டுறது, சிலநேரம் கேண்டீன்ல நிக்கறதுனு வேலை. சதாசிவத்துக்கு ஒரு பொண்ணு மட்டும் தான். அதையும் விழுப்புரம் பக்கத்துல பரிக்கல்-ல கட்டி கொடுத்துட்டான். அவளோட பொண்ணு தான் நேத்ரா. இப்ப இவன எழுப்பி கடைக்கு அனுப்புனதும் நேத்ரா தான்.

கடையிலிருந்து திரும்பும் போது நேத்ரா செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விளையாடிக் கொண்டிருந்தாள், சதாசிவத்தை பார்த்ததும் அருகில் ஓடி வந்தாள், அவன் அவள் வாயைத் திறக்கச் சொல்லி வாங்கி வந்திருந்த தேன்மிட்டாயைக் கொடுத்தான். ஸ்கூல் லீவுக்கு வந்த நேத்ராவுக்கு கொரானோ லீவு ஜாக்பாட். ஆனால் சதாசிவம் கையில் பணமில்லாமல் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தார். இவ்வளவு வருடத்தில் யாரிடமும் கடன்வாங்கிப் பழக்கமில்லை. எதுவென்றாலும் தியேட்டர் ஓனரிடம் மட்டும் தான். அங்கேயும் படம் ரிலீஸ் ஆனாதான்னு சொல்லிட்டாங்க. இரவு, அட்டைப்பூச்சியாய் வலியோடு நகர்ந்தது. வீட்டில் ரேஷன் அரிசி மட்டும்தான் இருக்கு, பேத்தி சாப்பிடும் அரிசி இன்னும் இரண்டு நாளைக்கு தான் இருக்கிறது என்று சதாசிவத்தின் மனைவி சொல்லிய இரவு, அவன் தூக்கத்தை உண்டுவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தது. காலையில் போய் ஓனரைப் பார்த்து பணம் கேட்பது என முடிவெடுத்தான்.

காலையில் மாஸ்கை மாட்டிக்கொண்டு சைக்கிளில் கிளம்பினான். காலை பத்தரை மணி ஆகியும் கூட ரோட்டில் ஒன்றும் கூட்டமில்லை. இரவு போஸ்டர் ஒட்டப்போவதை போல் இருந்தது ஊர். என்ன, சைக்கிளில் ஏணியும் போஸ்டரும் பசை வாளியும் இல்லை. ஊரில் இருள் இல்லை அவ்வளவே. மற்றபடி பின்இரவைப் போலவே தான் இருந்தது ரோடு. ஓனரின் வீடு தியேட்டருக்கு அருகிலிருந்து மூன்றாவது தெருவில் தான் இருக்கிறது. இவன் தியேட்டரைக் கடந்துதான் அங்கு போகவேண்டும். தியேட்டருக்கு அருகில் சைக்கிளை நிறுத்திவிட்டுப் பார்த்தான். தாராள பிரபு பட போஸ்டர் கிழிந்துபோய் இருந்தது. பெரிய பேனரிலும் தாராள பிரபு கலர் மங்கிப்போய் இருந்தது. தியேட்டர் பூட்டியிருந்தது.

வாசலில் இருந்த போலீஸ்காரன், அவனுக்கு தெரிந்தவர் என்பதால், “தியேட்டர் பத்தரமா இருக்கும், பயப்புடாம கிளம்பு சதாசிவம், வெளில சுத்தாத கிளம்பு கிளம்பு” என்றார். காதுக்கருகில் விலகுவது போலிருந்த மாஸ்கை சரிசெய்து கொண்டு சைக்கிளை கிளம்பினான்.

ஓனர்வீட்டுத் தெருவில் வளைந்தவன் சட்டெனச் சைக்கிளை நிறுத்தினான். தெரு முழுவதும் தகடு வைத்து அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும் நடுங்கிப் போனான். பக்கத்தில் கும்பலாக நின்றிருந்தவர்களை போலீஸ்காரன் திட்டி கலைந்து போகச் சொன்னான். அதில் ஒருவன் சதாசிவத்தைக் கடந்தபோது அவனை மடக்கி, தன் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து அவனிடம் கொடுத்து, ஓனர் செந்தில்-னு இருக்கும் அந்த நம்பருக்கு கால் பண்ணித் தரச்சொல்லிக் கேட்டான். அவனிடமிருந்து போனை வாங்கிக் காதில் வைத்துக் கொண்டான் சதாசிவம். டிஎம்எஸ்-ன் உள்ளம் உருகுதையா பாடல் ரிங்காக போய்க்கொண்டே இருந்தது. பதட்டமாகவே இருந்தான். எதிர்முனையில் ஹலோ என்ற போது, “தம்பி, நம்ம வீட்டுல யாருக்கும் இல்லல” .. என்றான். ஓனரின் மகன் “அதெல்லாம் இல்லண்ணா, எதிர் வீட்டுலதான் இரண்டு பேருக்கு பாசிட்டிவ்” என்றவனிடம், “தம்பி பத்தரமா இருங்க தம்பி, அப்பாவயும் அம்மாவயும் பார்த்துக்குங்க… வெளிய எதுவும் வராதீங்க… எதுவும் வாங்கனும்னா என்ன கூப்பிடுங்க” என்று முடித்தபோது சதாசிவத்தின் குரல் மாறியிருந்தது. ஓனரின் மகன், சரிண்ணா.. சரிண்ணா நீ பத்தரமா வீட்டுல இரு என்றான். அதற்குள் அங்கிருந்த போலீஸ்காரன் சதாசிவத்தை கிளம்பச் சொன்னான். போனை இரண்டு மூன்று முறை அழுத்தி நிறுத்தி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு சைக்கிளை வீட்டுக்கு திருப்பினான்.

பணம் கேட்கலாம் எனச் சென்றவனால், அதைக் கேட்கவே முடியாமல் வீட்டிற்கு போய் கொண்டிருந்தான். மகளை கட்டிக் கொடுத்து, 50 வயதுக்கும் மேலாகியும் எப்போதாவது இப்படி ஓடிப்போன தம்பி குறித்த கவலை தொற்றும். 1990-க்கு பிறகு வந்த ரஜினியின் பாண்டியன் படத்தில் ஒரு சண்டைக்கு, அடுத்து வரும் காட்சியில் போலீஸ் ரஜினியைக் கைது செய்யப்போவதாய் சொல்லும்போது, பாண்டியனை கைது செய்யாதே… பாண்டியனை கைது செய்யாதே… எனச் சொல்லும் இருபது பேரில் ஒருவனாக, கோடுபோட்ட சட்டை போட்டு சுருட்டை முடியோடிருந்த ராமனைப் பாரத்துவிட்டு அப்பா, தியேட்டரிலேயே அழ ஆரம்பித்து விட்டார். ஓனரிடம் பேசி, ஓனரு மெட்ராஸ்ல டிரை பண்ணிப் பார்த்தாரு, ஆனா அவன கண்டுபுடிக்க முடியல. மறுநாள் சதாசிவத்தோட அம்மாவ தியேட்டருக்குக் கூட்டி வந்து படத்தில் தம்பியைக் காட்டினார்கள், அவள் தியேட்டருக்குள்ளேயே கத்தி அழுததைப் பார்த்து படம் பார்க்க வந்தவர்கள் சிலர் விவரம் தெரியாமல் சிரித்தனர். அதன் பின் அந்தப்படம் ஓடிய எல்லா நாளும் அவனுடைய அம்மா இரவுக்காட்சிக்கு வந்துவிடுவாள். அந்த இருபது பேரின் குரலிலிருந்து மகனின் குரலைப் பிரித்துக் கேட்கும் முயற்சியில் தினமும் தோற்றுப் போனாள். மகன் வருகிற காட்சி முடிந்ததும், தியேட்டருக்கு அருகிலிருந்த பெரிய கோயில் வாசலில் போய் அமர்ந்து விடுவாள். சதாசிவமும் அவன் அப்பாவும் படம் முடிந்தோ, இல்லை போஸ்டர் ஒட்ட வேண்டிய வேலை இருந்தால் அதை முடித்தோ திரும்பும் போது அவளை கூட்டிக்கொண்டு போய்விடுவார்கள். சதாசிவத்தின் அம்மாவின் மரணத்திற்கான நாட்கள் அந்தத் திரைக்காட்சிகளின் ஒளி, ஒலியிலிருந்தே துவங்கியது. சதாசிவத்தின் அப்பாவும், அவன் வேறு படங்களில் வருகிறானா என சாகும் வரை எதிர்பார்த்து ஏமாந்து போனார்.

வீட்டிற்கு வந்த சதாசிவம், மனைவியிடம் “ஓனர் வீட்டுத்தெருவ மூடிட்டாங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தான். சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிட்டான். நாளைக்குப்பின் தேவைப்படுகிற பொருளுக்கும், பணத்திற்கும் என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தான். தேவைகள், தேவையற்ற வேலைகள் குறித்த எண்ணங்களையே அவனுக்குள் உண்டாக்கி முடித்திருந்தன. எங்காவது திருடுவது என முடிவெடுத்தான். எங்கு போய் எப்படித் திருடுவது என யோசித்தபடியே உறங்கியிருந்தான்.

காலையில் எழுந்தவன் மாஸ்கைப் போட்டுக்கொண்டு சைக்கிளில் கிளம்பி ஓனர் வீட்டுப்பக்கம் போனான். போகிற வழியில் தியேட்டருக்கு முன் வளைவிலுள்ள, தாமிர மணி வீட்டுக்காரர் வீட்ட சுத்தி மருந்து அடிச்சுக்கிட்டு இருந்தாங்க. தாமிர மணி வீட்டின் முன்வாசல் ஒரு தெருவிலும், பின்வாசல் ஒரு தெருவிலும் என நீண்ட வீடு அது. இப்போது இருக்கும் பின்வாசல்தான் முதலில் முன்வாசலாக இருந்தது. உயரமான அந்தச்சுவர் கூம்பாக முடியுமிடத்தில் ஒரு வட்டத்துளையில் பெரிய கோயில்களில் இருக்கும் பித்தளை மணியைப் போல தாமிரத்தால் ஆன பெரிய மணி இருந்தது. 10 வருடத்திற்கு முன் கோயில் கலசத் திருட்டுகள் அதிகமாக இருந்த போது, அவர்களே அதை கழற்றி வீட்டுக்குள் வைத்துக் கொண்டார்கள். பகலெல்லாம் வேலை பார்த்து இறக்கி முடித்தார்கள். அந்தவீட்டுப் பிள்ளைகள் எல்லாம் அமெரிக்காவோ, லண்டனோ போய்விட்டார்கள். அவ்வளவு பெரிய வீட்டில் இப்போது ஒரு பாட்டி மட்டும்தான் இருக்கு. தாத்தா அடிக்கடி பிளைட் ஏறி பிள்ளைங்க கிட்ட போயிடுவாரு. அந்த வாசலை மூடிய பின், மணி இருந்த சுவரின் உச்சிவரை சதாசிவம் பலமுறை ஏறி போஸ்டர் ஒட்டியிருக்கிறான். அந்த பாட்டிக்கு எப்படிக் கொரானா வந்திருக்கும் என்ற யோசனையோடு அந்த வீட்டைக் கடந்தான் சதாசிவம். ஓனர் வீட்டுத் தெருவில் நேற்றைவிட கூடுதலாக ஒரு போலீஸ் இருந்தான்.

ஆம்புலன்ஸ் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதில் மூன்று பேரை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். நின்று பார்ப்பவர்களை எல்லாம் போலீஸ் விரட்டிக் கொண்டிருந்தது. சதாசிவம் திரும்பி வீட்டுற்கு போய்விட்டான்.

இரவு ஆனதும் தாமிர மணி இருந்த வட்டத்துளை வழியாக வீட்டுக்குள் இறங்கி ஏதாவது எடுத்து வரலாம் என கிளம்பினான். ஏணியை எடுத்து சைக்கிளில் கட்டிக் கொண்டவனுக்கு, புதிதாய் ஒரு தயக்கம், வீட்டுக்குள்ள போய் நமக்கு கொரோனா வந்தா என்ன பண்றது என யோசித்தவன், மாஸ்க் போட்டிருப்பதால் ஒன்றும் ஆகாது என தேற்றிக்கொண்டு, கொடியில் காய்ந்து கொண்டிருந்த இன்னொரு மாஸ்கை எடுத்து மாஸ்கின் மேலேயே போட்டுக் கொண்டு கிளம்பினான். தாமிர மணி வீட்டின் முன்வாசலைத் தாண்டிப் போனான். முன்வாசலில் ஒரு போலீஸ்காரர் சேரில் உக்காந்தபடியே தூங்கிக் கொண்டிருந்தார். பின்வாசலில் யாருமில்லை. சைக்கிளை நிறுத்திவிட்டு, போஸ்டர் ஒட்டுகிற நினைப்பிலேயே, ஏணியை எடுத்து சுவற்றில் சாய்த்துவிட்டு, சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு ஏணியில் ஏறினான். வட்டத்துளை வழியாக எட்டிப் பார்த்தவனுக்கு புதிதாய் ஒரு குழப்பம். எப்படி உள்ளே இறங்குவது, அப்படியே இறங்கினாலும் எப்படித் திரும்பி ஏறுவது. ஒருவேளை இறங்கி ஏறி வருவதற்குள் சைக்கிளையும் ஏணியையும் யாராவது எடுத்துக் கொண்டு போய் விட்டால் என்ன செய்வது என யோசித்தவன், மொத்த திட்டத்தையும் கைவிட்டுவிட்டு, இறங்கி ஏணியை சைக்கிளில் கட்டிக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பினான். வழியில் நின்றிருந்த போலீஸ்காரர்கள் மடக்கி நிறுத்தினர்.

இரவில் எத்தனையோ முறை எத்தனையோ போலீஸ்காரர்களை பார்த்திருந்தாலும், முதல் முறையாக பயந்து போய் நின்றான். எங்க போய் வர.., ஏணி எதுக்கு.. என்று மிரட்டிய அதிகாரிக்காக வீட்டிற்கு போய் டீ போட்டு பிளாஸ்கில் எடுத்து வந்த போலீஸ்காரன், சதாசிவத்துக்கு தெரிந்தவன் என்பதால், அதிகாரியிடம், போஸ்டர் ஒட்டுறவன் தான் சார், என்று சொன்ன பின்னும் அதிகாரி, சதாசிவத்திடம் இப்ப எங்க போய் வர என, தூக்கம் வர மாட்டுது சார், இந்த மாசத்தோட எல்லாம் சரி ஆயிடும், அடுத்த மாசம் படம்லாம் வந்துடும்னு வீட்டாண்ட பேசிக்கிட்டாங்க. பழைய போஸ்டர்லாம் கிழிச்சி செவுத்த கிளீன் பண்ணலாம்னு… என்றவனுக்கு, டீ கொடுக்க சொன்னான் அதிகாரி. மறுப்பேதும் சொல்லாமல் வாங்கி குடித்தான். அதிகாரி போன் நம்பர வாங்கிட்டு அனுப்பிவிடச் சொல்லிவிட்டு வண்டிக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டார்.

இரவின் இருளை விழுங்கிக் கொண்டிருந்தது நிலவொளி. அதை எதிர்த்து இருளின் பக்கம் நின்று வழியெங்கும் எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தன சுவர்கோழிப் பூச்சிகள். வீட்டிற்கு திரும்பும் வளைவில் இருக்கும் வீட்டிலிருக்கும் தோட்டத்தில் மாமரம், தென்னை மரம், சப்போட்டா, முருங்கை மரங்களும், அவரை, பாகற்காய் கொடிகளும், தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய் என இன்னும் காய்கறிச் செடிகளுடன் கூடிய தோட்டம் அது. அந்த வீட்டு சுவற்றின் மீது ஏணியை சாய்த்து உள்ளே இறங்கினான் சதாசிவம், தாமிர மணி வீட்டுக்கு எடுத்துப்போனப் பையை எடுத்து மாங்காய், சப்போட்டா, பாகற்காய், தக்காளி, கத்தரி, வெண்டைக்காய்களை மட்டும் பையில் நிரப்பிக் கொண்டான். ஏணியை இழுத்து உள்பக்கமாக வைத்து சுவரில் சாய்த்து விட்டு, ஏணியில் ஏறி கீழே இறங்கிக் கொண்டான். பையை எடுத்து சைக்கிளில் மாட்டிவிட்டு, ஏணியை எடுத்து சைக்கிளில் கட்டிக் கொண்டு திட்டமிடாத இந்த வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு போனான்.

சதாசிவம் சுவற்றில் ஏணியை சாய்த்து ஏறியதிலிருந்து, இறங்கி செல்வது வரை அனைத்தையும் அந்த வீட்டின் பெண் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவளுக்கு அவனை நன்றாகத் தெரிந்தது. மாமரத்திலிருந்து காய்களை பறித்துக் கொண்டு சப்போட்டா பறிக்கப் போகும் போது, அந்த வீட்டிலிருந்த ஆண் சிறுநீர் கழிக்க எழுந்து வெளியே வந்தபோது, அந்த பெண் அவனை தடுத்து, இருவருமாக சதாசிவத்தின் அறுவடையை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் முருங்கையும், அவரையையும், மிளகாயையும் அறுவடை செய்யாமல் கிளம்பியது உட்பட அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த ஆண் சிறுநீர் கழித்துவிட்டு உள்ளே வந்த போது, அவள் அவனிடம், அவருக்கு ஐம்பது வயசுக்கு மேல இருக்கும், அவர போய் இப்படி திருட வச்சிட்டமே நாம, நாமலே பறிச்சு முன்னாடியே குடுத்து இருந்தா, சாப்பிடறத்துக்காக திருடுற நெலம அவருக்கு இந்த வயசுல வந்திருக்காதுல என்றாள். அவன் அவளிடம், இனிமே எப்ப பறிச்சாலும் நமக்கு எடுத்துகிட்டு மீதிய சுத்தி இருக்க வீட்டுக்கெல்லாம் நீயே போய் குடுத்துட்டு வந்துடு என்று சொல்லிவிட்டு படுத்துவிட்டான்.

காலையில் வாசலில் படுத்திருந்த சதாசிவத்தை தேடி இரண்டு போலீஸ்காரர்கள் வந்து எழுப்பிய போது சதாசிவம் முகம் இயல்பிலில்லை. வந்திருந்தவர்களில் ஒருவன், “போன எடுத்து தொலைக்க வேண்டியது தான” என்ற போது, எழுந்துபோய் காய்களைக் கீழே கொட்டிவிட்டு பையின் அடியிலிருந்த போனை எடுத்தான். அதற்குள் இன்னொருவன் போனில், “இருக்கிறான் சார், செல்-ல உள்ள வச்சிட்டு வெளியில படுத்து இருக்கான் அதான் சார் எடுக்க காணோம். இதோ குடுக்கறன்” என்றபடியே போனை அவனிடம் கொடுத்தான். சதாசிவம் வாங்கி “சொல்லுங்க சார்” என்றான். போனில் பேசியவன் நேற்றிரவு டீ கொடுத்த போலீஸ்காரன் என்றதும் ஆறுதலடைந்தான். கொரோனா தடுப்பு பற்றிய ஐநூறு போஸ்டர்கள் கொடுத்து அனுப்பி இருப்பதாகவும், அவர்களிருவரும் கூடவே வருவார்கள், சொல்லுமிடங்களில் எல்லாம் ஒட்டிவிட்டு காசு வாங்கிக்கோ என்றதும், மனைவியிடம் ஐநூறு போஸ்டருக்கு பசைய காச்ச சொல்லிட்டு, வந்திருந்தவர்களிடம் இருந்த போஸ்டர் கட்டை வாங்கி பிரித்து ஐந்து ஐந்தாக பிரித்து மடித்து அடுக்கிகொண்டே அவர்களிடம், “அரை மணிநேரம் தான்., பசை ரெடியாயிடும் போயிடலாம்” என்றான்.

இரவு பேசியபடி அந்த வீட்டு பெண் கொஞ்சம் காய்கறிகளையும், பழங்களையும் எடுத்துகொண்டு சதாசிவத்தின் வீட்டுக்கு வந்தாள், சதாசிவத்திற்கு அவளை யாரெனத் தெரியாததால் எந்தத் தயக்கமும் இல்லை. வெளி அடுப்பில் பசைக்கு தண்ணீரைக் கொதிவைத்து விட்டு, உள்ளேபோய் காய்களைப் பிரித்து அடுக்கிக் கொண்டிருந்த சதாசிவத்தின் மனைவி வந்து சிரித்தபடி வரவேற்றாள். அவள் கையிலிருந்த பையைப் பார்த்துவிட்டு அவளிடம், நேத்து தான் அவரு எல்லாமே வாங்கிட்டு வந்தாரு என்றதும், அவள், “அவரக்காய் மிளகாய்” என்ற போது, நேத்ரா “தாத்தா, தாத்தா..” என அழைத்து சீக்கிரம் வரச்சொன்னாள். சதாசிவம் போஸ்டரை மடித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தான். பாட்டியும் அந்தப் பெண்ணும் நேத்ராவிடம் சென்ற போது, அவரைக்கொடிக்கும், மிளகாய் செடிகளுக்கும் அருகில், நேத்ரா புதைத்து வைத்திருந்த மாங்கொட்டை மண்ணைப் பிளந்து பச்சைக்காட்டி துளிர்த்து இருந்தது.

சதாசிவத்தின் மனைவி அந்த பெண்ணிடம், “இப்போ வேற யாருக்குன்னா குடுங்க. அடுத்தமுறை நான் வாங்கிக்கிறன்” என்றாள். அவள் “இனிமே நீங்க எப்போ வேணும்னாலும் வீட்டுக்கே வந்து பறிச்சுக்குங்கமா” என்றாள். சதாசிவத்திடம் “வரன்பா”, என்றாள். மடித்த போஸ்டர் கட்டை எடுத்து சைக்கிளில் வைத்து கட்டிவிட்டு, லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு, மரத்திலிருந்து முருங்கைக்காயைப் பறிக்கப்பறிக்க நேத்ரா ஓடிஓடிப் பொறுக்கி அடுக்கினாள், வீட்டுக்கு நாலு காய் எடுத்து வைத்துவிட்டு மீதியை இரண்டு கட்டாகக் கட்டி போலீஸ்காரர்களிடம் கொடுத்தான், அவர்கள் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டனர். சதாசிவம் சட்டையை மாட்டிக்கொண்டு பசைக்காகக் காத்திருந்தான்.

***

க.வசந்த்பிரபு – atchayaads@gmail.com

லூயிஸ் க்ளிக் – மென்மையும் வலிமையும் நிறைந்த ஆன்மாவின் கவிதைக் குரல்

8

கார்குழலி

லக்கியத்துக்கான 2020-ஆம் ஆண்டின் நோபெல் பரிசை வென்றிருக்கிறார் அமெரிக்கக் கவிஞர் லூயிஸ் எலிசபெத் க்ளிக்*1.  பலரும் தயாரித்திருந்த எதிர்பார்ப்புப் பட்டியலில் பெரிதும் எதிர்பாராத பெயராகக்கூட இவர் இடம்பெறவில்லை என்பதால் பரிசு குறித்த அறிவிப்பு நம் சூழலில் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. லூயிஸ் க்ளிக் நோபெல் பரிசு பெற்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன் இணையத்தில் அவரின் கவிதைகளைத் தேடிப் படித்தேன். ஆனால் அவற்றை மொழியாக்கம் செய்வதற்கு முன்னர் க்ளிக்கின் தனிப்பட்ட வாழ்க்கையையும் புறச் சூழலையும் மேலோட்டமாகவாவது தெரிந்துகொள்வது அவசியம் என்று நினைத்தேன். இவற்றோடு பொருத்திப் பார்த்தால் மட்டுமே அவருடைய கவிதைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்று நம்பினேன். எல்லா எழுத்துகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் இது தேவையில்லை என்றாலும் இவரளவில் அவசியமாக இருந்தது. ஏனெனில் அவருடைய கவிதைகள் பற்றிய பலவிதமான விமர்சனங்களை இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் படிக்க நேர்ந்த சமயத்தில் அவர் குறித்த எனக்கான பார்வை ஒன்றை வரித்துக்கொள்வது அவசியம் என்று நினைத்தேன்.

1943-ஆம் ஆண்டில் பிறந்த லூயிஸ் க்ளிக் ஒரு தன்வாழ்க்கைக் கவிஞராகவும் கட்டுரையாளராகவும் அறியப்படுகிறார். யூத இனத்தைச் சேர்ந்த பெற்றோருக்கு நியூ யார்க் நகரில் பிறந்து லாங்க் ஐலாண்ட் என்ற தீவில் வளர்ந்தவர் க்ளிக். எழுத்தாளர் ஆகவேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டிருந்த அவருடைய தந்தை சந்தர்ப்பவசத்தால் மளிகைக்கடையை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தாய் கல்லூரிப் பட்டதாரி. சிறு வயதில் கிரேக்கப் புராணங்களையும் தேவதைக் கதைகளையும் செவ்விலக்கியங்களையும் இவர்களிடம் கேட்டு வளர்ந்தார். பதின்வயதில் அனோரெக்சியா நெர்வோஸா என்ற பசியிழப்பு உளவியல் கோளாறுக்கு ஆளானார். இந்தக் கோளாறுக்கு உளவியல் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டி பள்ளியில் இருந்து விலகினார் என்றாலும் தனிப்பட்ட முறையில் பள்ளிக் கல்வியையும் பயின்றுமுடித்தார். தான் எடுத்துக்கொண்ட சிகிச்சை உளவியல் சிக்கலைத் தீர்த்துவைத்ததோடு எப்படிச் சிந்திக்கவேண்டும் என்றும் கற்றுக்கொடுத்தது என்கிறார்.

வழக்கமான பட்டப் படிப்புக்காகக் கல்லூரிக்குப் போகாமல் கவிதை வகுப்பில் சேர்ந்தார்; பல கவிதைப் பட்டறைகளில் கலந்துகொண்டார். வெவ்வேறு காலகட்டங்களில் அமெரிக்க நாட்டின் அரசு கவியாகத் திகழ்ந்த பெருங்கவிஞர்களான லியோனி ஆடம்ஸ், ஸ்டான்லி குனிட்ஸ் ஆகியோரைப் பேராசிரியராகப் பெற்றதும் கவிதை பற்றிய நுணுக்கங்களை அவர்களிடம் பயின்றதும் இவரின் இலக்கியவாழ்வின் முக்கிய நிகழ்வுகள். இரண்டு முறை திருமணம் செய்து மணமுறிவும் பெற்றார். இந்த இரண்டு மணமுறிவு ஏற்பட்ட சமயத்திலும் தான் எதிர்கொண்ட துயரங்களையும் எண்ணற்ற கவிதைகளாக எழுதித் தள்ளினார்.

கடந்த 25 வருடங்களில் அமெரிக்கக் கவிதைச் சூழலில் வெளியான சோகத்தையும் கொடுமையையும் சித்தரிக்கும் கவிதைத் தொகுப்புகளின் வரிசையில் இவருடைய அரரத் (1990) என்ற தொகுப்புதான் முதலிடம் பெறும் என்று இலக்கிய விமர்சகர்கள் கருதுகிறார்கள். ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தைப் போலவும் எந்தக் கட்டுப்பாட்டுக்கும் அடங்காததாகவும் அதே நேரத்தில் வலிமையும் அறிவுத்திறம் வாய்ந்ததாகவும் இருக்கிறது இந்தத் தொகுதி. இதையடுத்து வெளியான அவருடைய இரண்டு கவிதைத் தொகுப்புகள் தி வைல்ட் ஐரிஸ் (1992), மெடோலாண்ட்ஸ் (1996). இந்த மூன்றையும் இணைத்து திறம்வாய்ந்த நாடகவியலாளர் ஒருவர் சிறந்த நாடகம் ஒன்றைப் புனைந்துவிட முடியும் என்பது விமர்சகர்களின் கருத்து. ஐம்பது வருடங்களில் பதினான்கு கவிதைத் தொகுப்புகளையும் இரண்டு கட்டுரைத் தொகுப்புகளையும் இரண்டு சாப் புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார். 2003-4-ஆம் ஆண்டில் அமெரிக்க நாட்டின் அரசு கவியாக அலங்கரிக்கப்பட்டார். பல்வேறு விருதுகளும் பதவிகளும் இவரைத் தேடி வந்தது இவரது கவித்திறத்துக்குச் சான்று.

ஒரு பெண்ணின் பார்வை வழியே அவளையும் அவள் வாழும் சூழலையும் அவளைச் சுற்றி இருக்கும் உறவையும் உலகையும் காண்பதும் அவள் மொழியில் படிப்பதும் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு சூழலையும் மனிதர்களையும் புரிந்துகொள்ள புதிய சாளரங்களைத் திறந்துவிடும். ஏனெனில் தொடக்கமுதல் ஆணின் பார்வையும் மொழியுமே இங்கு பரவலாக்கப்பட்டும் அங்கீகரிக்கப்பட்டும் இருக்கக்கூடிய ஒரு சூழலில் அரிதாகத்தான் திறந்த மனதுடன் தன்னுடைய உள்ளார்ந்த எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறாள் பெண். பல நேரங்களில் ஆண்களால் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை மனதளவில் அவள் தாண்டுவதற்குக் கூடப் பெருமுயற்சி தேவைப்படுகிறது. அதை அவள் வெற்றிகொண்டுவிட்டால் எழுத்தில் வடித்து உலகின் பார்வைக்கு வைப்பது என்பது இன்னும் அதிகமான தைரியமும் தூண்டுதலும் தேவைப்படும் செயலாகிறது. தன்னையும் தன் உடலையும் மனதையும் அதில் அலைமோதும் எண்ணற்ற ஆசாபாசங்களையும் உணர்வுகளையும் தேவைகளையும் வடிகட்டாமல் வெளிக்காட்டும் தைரியம் எத்தனை பெண்களுக்கு இருக்கிறது? அவள் அமரும் படுக்கும் இடத்தைக்கூடக் குறுக்கிக் கொள்ளச் சொல்லும் உலகில், கனமான குரலில் தெறிக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் சொற்களை மென்மையும் இனிமையும் தடவியபிறகே வெளியிட முடிகிறது. அப்படி எந்தப் பாசாங்கும் தேன்தடவலும் இல்லாத வீரியமிக்க கவிதைகளின் வழியாகத் தன் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமின்றி தான் வாழும் புற உலகின் அரசியல், புலனுணர்வு ஆகியவற்றையும் விசாரணைக்கு உட்படுத்துகிறார் க்ளிக்.

காலங்காலமாக ஆண்களின் இச்சை, ஆற்றாமை, கோபம், சோகம் இவற்றின் வடிகாலாகப் பெண் மாற்றப்படுவதை உண்மை வாழ்க்கை, புராணம், புனை கதை, இசை, நாடகம், திரைப்படம் இவற்றின் வழியாகப் பார்த்தும் கேட்டும் படித்தும் வந்திருக்கிறோம். உலகளாவிய பொதுச் சமூகத்தில் பெண்களின்மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடப் பெரிய காரணங்கள் எதுவும் தேவைப்படுவதில்லை. ஆண்களுக்கிடையே ஏற்பட்ட தன்முனைப்பு சார்ந்த சச்சரவுகளும் குடும்பப் பகையையும் பழிதீர்த்துக்கொள்ளப் பெண்ணின் உடலே வடிகாலாக மாறுகிறது. சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் நடைபெற்ற நிகழ்வும் இதை ஒட்டியதுதானே. பிறந்த வீடுகளில் பெண்களின் நிலை என்ன என்பதையும் கண்கூடாகப் பார்த்தும் கேட்டும் வந்திருந்தாலும் குடும்பம் என்ற அமைப்பின்மீது இன்னமும் ஒரு துளி நம்பிக்கையை தக்கவைத்தபடித்தான் பெரும்பாலான பெண்கள் வாழ்க்கை நடத்திவருகிறார்கள். தங்களுக்கென வரித்துக் கொண்ட உறவுகளிலும் மணவாழ்க்கை என்ற அமைப்பிலாவது பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய அவசியமே இல்லை. இப்படிப்பட்டச் சூழலில் ஒலிக்கும் பெண்குரல் முக்கியத்துவம் பெறுகிறது. அப்படியொரு குரல்தான் க்ளிக்கினுடையது. அவருடைய குரல் மென்மையானதாக இருந்தாலும் தெளிவும் அறிவாற்றலும் உடையதாக இருக்கிறது. புறச் சூழலையும் அகப் போராட்டத்தையும் நுணுக்கமாக கவனித்தும் உணர்ந்தும் தன்மீது அவை ஏற்படுத்தும் தாக்கத்தை எளிமையான கவிதை மொழியில் வடிக்கிறார். செறிவான ஒழுக்கம்சார்ந்த கேள்விகளைத் தன் கவிதைகளின் வழியாக படிப்பவர்களின் முன் வைக்கிறார்.

தன்னைப் பீடித்த அனோரெக்சியா நெர்வோஸா பற்றி அவர் ஒருபோதும் நேரிடையாகப் பேசவில்லை என்றாலும் “பசிக்குச் சமர்ப்பணம்” என்ற கவிதையின் ஒரு பத்தியில் தொட்டுச் செல்கிறார்.

அது மெல்லத் துவங்குகிறது
குறிப்பிட்ட பெண் குழந்தைகளிடம் மட்டும்:
இறப்பைப் பற்றிய பயம், அதன் வடிவாக
பசிக்குத் தன்னைச் சமர்ப்பிக்கிறது,
ஏனென்றால் பெண்ணின் உடல்
ஒரு கல்லறை; எதையும் ஏற்றுக்கொள்ளும்.

***

அவருடைய பெற்றோருக்கிடையேயான உறவைச் சொல்லும் கவிதை ஒன்று:

நான் பார்த்த வரையில்,
என் அம்மாவின் வாழ்க்கை முழுவதும், என் அப்பா
அவளைக் கீழேயே அழுத்தி வைத்திருந்தார்,
அவள் கால்களில் கட்டப்பட்ட சங்கிலியைப் போல.
அவளோ மகிழ்ச்சிமிக்க தன்மையுடையவள்;
பயணம் செய்ய ஆசைப்பட்டாள்,
நாடகத்துக்குப் போகவும் மியூசியத்துக்கும் போகவும்கூட.
அவருக்குப் பிடித்தது
ஓய்விருக்கையில் படுத்துக்கொண்டு
டைம்ஸை முகத்தின்மீது
வைத்துக் கொள்வது,
ஒரு வேளை இறப்பு, அது எப்போது வந்தாலும்,
அதில் பெரியதொரு மாற்றம் எதுவும் தெரியாமல் இருக்குமல்லவா.

***

கிரேக்கப் புராணக் கதைகளுக்குப் புதிய விளக்கங்களைத் தரும் க்ளிக்கின் சில கவிதைகள் பெண்ணுக்கு எதிராகக் குடும்பங்களிலும் புறச்சூழலிலும் இன்றளவும் நடக்கும் அநீதியையும் அரசியலையும் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றன. அதுவும் பெர்சிபோனேயின் (Persephone) கதையை இரு வேறு கவிதைகளில் வடித்திருக்கிறார். கடவுளர்களின் தலைவனின் மகளாகவே இருந்தாலும் பெண் என்பதால் அநீதிகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது பெர்சிபோனே. குடும்பச் சூழலில் பாதுகாப்பு கிடைக்கும் என்ற அவளின் நம்பிக்கையை தந்தை மற்றும் உறவினர்களின் செயல்கள் தகர்த்தெறிகின்றன. கிரேக்கப் பெண் தெய்வமான பெர்சிபோனேயின் கதையின் மூலம் பெண்ணின் அவலநிலை, அவளுக்கு மறுக்கப்படும் உரிமை, ஒரு பந்தைப்போல நாலாபக்கமும் உதைபடும் வாழ்க்கை, இவற்றை எல்லாம் பற்றிய தத்துவார்த்தமான கேள்விகளை வெகு இயல்பாக முன்வைத்து நம்மைச் சிந்திக்க வைக்கிறார் க்ளிக்.

பெர்சிபோனே ஒரு கிரேக்கப் பெண் கடவுள். அவள் தாய் டெமீட்டர் பூமியின் செழுமை அறுவடை ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் கடவுள். புனிதச் சட்டம், பிறப்பு இறப்பு சுழற்சி ஆகியவற்றுக்கும் அவள்தான் கடவுள் என்றும் சொல்லப்படுகிறது. நரகத்தில் வசிக்கும் இறப்பின் கடவுளான ஹேடிஸ் ஒரு நாள் புல்வெளியில் டெய்ஸி மலரைப் பறித்துக்கொண்டிருந்த பெர்சிபோனேயின் அழகில் மயங்குகிறான். யாரும் பார்க்காத நேரத்தில் அவளைக் கவர்ந்து சென்றுவிடுகிறான். ஆனாலும் இரண்டு பேர் இந்த நிகழ்வைப் பார்த்துவிடுகிறார்கள். ஒருவர், பெர்சிபோனேயின் தந்தையும் கடவுளர்களின் தலைவனுமான ஜீயஸ்; மற்றவர் சூரியக் கடவுளான ஹீலியோஸ். இருவரும் ஹேடிஸை எதிர்த்துக் குரல் எழுப்புவதில்லை. தன்னுடைய விருப்பத்துக்கு மாறாக ஹேடிஸின் மனைவியாக இருக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறாள் பெர்சிபோனே. அவள் தாயோ அவளை மீட்டுச் செல்ல முயற்சிக்கிறாள். கடைசியில் பெர்சிபோனே நரகத்தில் ஆறு மாதமும் பூமியில் ஆறு மாதமும் வாழவேண்டும் என்று சமரசம் செய்துகொள்கிறார்கள் அவளுடைய தாயும் கணவனும். இந்தக் கதையை ஒரு பெண்ணின் கோணத்தில் இருந்து கேள்வி கேட்கிறார் க்ளிக்

பெர்சிபோனே ஒரு நாடோடி

இந்த முதல் வடிவுருவில், பெர்சிபோனே
அவளுடைய தாயிடமிருந்து எடுத்துச் செல்லப்பட்டாள்
பூமியின் பெண் தெய்வம்
பூமியைத் தண்டிக்கிறாள்–இது
நாமறிந்த மனித நடத்தைகளோடு ஒத்துப்போவதாக இருக்கிறது,

மனிதர்கள் மிகுந்த மனநிறைவு கொள்கிறார்கள்
தீங்கு இழைப்பதில், குறிப்பாகத்
தன்னுணர்வற்ற தீங்கு இழைப்பதில்:

நாம் இதை இப்படி அழைக்கலாம்
எதிர்மறை படைத்தல் என்று.

நரகத்தில் பெர்சிபோனேயின்
துவக்ககாலத் தங்கலை
இன்னமும் அலசும் அறிஞர்கள்
கன்னியின் உணர்வுகள் பற்றிய முடிவுக்கு வரவில்லை:

வன்புணர்வுக்கு ஒத்துழைத்தாளா,
இல்லை மயக்கமருந்து கொடுக்கப்பட்டதா,
அவளின் விருப்பத்துக்கு எதிராக ஆக்கிரமிக்கப்பட்டாளா,
நாகரிகப் பெண்களுக்கு இன்று நடப்பது போலவே.

நன்றாகத் தெரிந்ததுதான், அன்பிற்குரியவரின் திரும்புதல்
அன்புக்குரியவரின் இழப்பை
நேர்செய்வதில்லை: பெர்சிபோனே

வீடு திரும்புகிறாள்
சிவப்பு ரசத்தின் கறையுடன்
ஹாதோர்னின் கதைமாந்தரைப் போலவே —

இந்தச் சொல்லை வைத்துக் கொள்வேனா
என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை: இந்தப் பூமி
பெர்சிபோனேயின் ‘வீடா’? அவள் வீடாக உணர்வது, ஒருவேளை,
கடவுளின் படுக்கையையா? அவள்
எதையுமே வீடாக நினைக்க முடியவில்லையா? அவள்
பிறவியிலேயே நாடோடியா, வேறு சொற்களில் சொல்வதென்றால்,
காரண காரியத் தொடர்பால் முடக்கப்படாத
அவள் தாயின் இருப்பின் நகலா?

உனக்கு யாரையும் பிடிக்க
வேண்டியது இல்லை, உனக்குத் தெரியும். கதைமாந்தர்கள்
மனிதர்கள் இல்லை.
அவர்கள் முரண் அல்லது குழப்பத்தின் தோற்றங்கள்.

மூன்று பகுதிகள்: பிரிக்கப்பட்ட ஆன்மாவைப் போல
அகம், அதியகம், அது. அதேபோல

தெரிந்த உலகின் மூன்று நிலைகள்
ஒருவித வரையுருவால் பிரிக்கப்படுகின்றன 
வானுலகில் இருந்து பூமியும் அதில் இருந்து நரகமும்

உன்னையே நீ கேட்டுக்கொள்ள வேண்டும்:
எங்கே பனி பொழிகிறது?

வெண்மை, மறதியினுடையதும்
தூய்மைக் கேட்டினுடையதும் —

பூமியில் பனி பொழிகிறது; குளிர்ந்த காற்று சொல்கிறது
பெர்சிபோனே நரகத்தில் உடலுறவு கொள்கிறாள் என்று.
நம்மைப் போல அவளுக்குத் தெரியாது
பனிக்காலம் என்றால் என்னவென்று,
ஒன்று மட்டும் தெரியும்
அவள்தான் அதற்குக் காரணம் என்பது.

ஹேடிஸின் படுக்கையில் கிடக்கிறாள்.
அவள் மனதில் இருப்பது என்ன?
அவளுக்கு அச்சமாக இருக்கிறதா? ஏதோ ஒன்று
மனதின் எண்ணத்தையே இல்லாமல் செய்துவிட்டதா?

அவளுக்குத் தெரியும் பூமி
அன்னையர்களால் நடத்தப்படுகிறது என்று, அது நிச்சயமாகத்
தெரியும். இன்னொன்றும் தெரியும்
அவள் இனியும் சின்னப் பெண் என்று சொல்வார்களே
அது இல்லை என்பது.
சிறைப்பட்டது குறித்து,
அவளுக்குத் தெரியும்

அவள் கைதியாகத்தான் இருக்கிறாள், மகளாக இருந்தது முதலே.

அவளுக்காகக் காத்திருக்கும்
அச்சமூட்டும் மறு கூடுதல்கள் 
அவளின் மீதமிருக்கும் வாழ்க்கையை எடுத்துக்கொள்ளும்.

ஈடு செய்வதற்கான பேரார்வம்
நீடித்ததாகவும் கடுமையாகவும் இருக்கையில்,
எப்படி வாழவேண்டும் என்பதை
நீ தேர்ந்தெடுக்க முடியாது. நீ வாழ்வதே இல்லை;
உன்னைச் சாகவும் விடமாட்டார்கள்.

நீ பூமிக்கும் இறப்புக்கும் இடையே அலைவாய்
முடிவில், அவை ஒன்றுபோலவே இருக்கும்,
ஆச்சரியமூட்டும் வகையில். அறிஞர்கள் சொல்கிறார்கள்

உனக்கு என்ன வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதில் பயனே இல்லை
உனக்காகப் போட்டி போடும் விசைகள்
உன்னையே கொன்றுவிடலாம் என்கிறபோது.

வெண்மை மறதியினுடையதும்
வெண்மை பாதுகாப்பினுடையதும்–

இப்படிச் சொல்கிறார்கள்
மனித ஆன்மாவில் ஒரு பிளவு இருக்கிறது,
முழுவதும் வாழ்க்கையின் சொந்தமாக இருப்பதற்காக
அது உருவாக்கப் படவில்லை. பூமி

இந்தப் பிளவை மறுக்கச் சொல்வது,
பரிந்துரை என்ற போர்வையில் விடுக்கப்படும் மிரட்டல்–
நாம் ஏற்கனவே பார்த்த
பெர்சிபோனேயின் கதையில் வந்ததுபோல
அதை இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும்

தாய்க்கும் காதலனுக்கும் இடையே நடக்கும்
வாக்குவாதம் என்று–
மகள் வெறும் ஊன் தான்.

இறப்பு அவளை எதிர்கொண்டபோது, அவள் பார்த்ததே இல்லை
டெய்ஸிப் பூக்கள் இல்லாத புல்வெளியை.
திடீரென முன்னைப்போல
அவளுடைய தாயின்
அழகையும் விளைவளத்தையும் பற்றிய
கன்னிப்பருவப் பாடல்களைப் பாடுவதில்லை. எங்கே
பிளவு இருக்கிறதோ அங்கே பிரிவும் இருக்கிறது.

பூமியின் பாடல்
முடிவில்லாத வாழ்க்கை பற்றிய புராணக் காட்சியின் பாடல்–

என் ஆன்மா
பூமியோடு தொடர்பு கொள்ளும்
கடுமுயற்சியால் தூள்தூளானது–

நீ என்ன செய்வாய்
கடவுளோடு புல்வெளியில் இருக்க வேண்டியது உன் முறை எனும்போது.

***

விதவைகளின் வாழ்வைப் பற்றிய அவருடைய கவிதை உணர்வுகளைப் படம்பிடித்துக் காட்டி நெகிழ்ச்சி ஊட்டுவதோடு நடைமுறை இடர்ப்பாடுகளையும் எடுத்துச் சொல்கிறது. நாடும் கலாசாரமும் மாறினாலும் விதவைகளின் நிலைமை ஏதும் மாறியதாகத் தெரியவில்லை. கவிதையின் மாந்தர்கள் அனைவருமே விதவைகள், ஒரே கூரையின் கீழ் வசிக்கும் சகோதரிகளாக இருந்தாலும் எல்லா விஷயத்திலும் விட்டுக்கொடுத்துப் போகமுடியாது; தாய் மகள்களாக ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும் துணையாகவும் இருந்தாலும் சுட்டெரிக்கும் வெயிலின் உக்கிரத்தை ஒவ்வொருவரும் எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயம்.

விதவைகள்

என் அம்மா பெரியம்மாவுடன்*2 சீட்டு விளையாடுகிறாள்,
வன்மமும் உள்வினையும், குடும்பப் பொழுதுபோக்கு, அந்த ஆட்டத்தைத்
தன்னுடைய எல்லா மகள்களுக்கும் கற்றுக்கொடுத்தார் பாட்டி.

கடுங்கோடை: வெளியே செல்ல முடியாத அளவு உஷ்ணம்.
இன்று, பெரியம்மா முன்னிலையில் இருக்கிறாள்; நல்ல சீட்டுகள் எல்லாம் அவளுக்குக் கிடைக்கிறது.
அம்மா பின்னால் இருக்கிறாள், ஒருமுகப்படுத்தச் சிரமப்படுகிறாள் .
இந்தக் கோடையில் தன்னுடைய படுக்கையில் படுத்துப் பழகுவதற்குச் சிரமப்படுகிறாள்.
கடந்த கோடையில் இந்தத் தொல்லை இல்லை,
தரையில் படுத்துப் பழகுவதில். அங்கே தூங்கப் பழகினாள்,
அப்பாவின் பக்கத்தில் இருப்பதற்காக.
அவர் இறந்துகொண்டிருந்தார்; அவருக்குச் சிறப்பான படுக்கை கிடைத்தது.

பெரியம்மா இம்மியளவுகூட விட்டுக்கொடுக்க மாட்டாள்,
அம்மாவின் களைப்பைக் கணக்கில் கொள்ளமாட்டாள்.
அப்படித்தான் வளர்க்கப்பட்டனர்: சண்டைபோட்டுத்தான் மரியாதையைக் காட்டவேண்டும்.
எதிராளி அவமதிப்பதை விட்டுவிட வேண்டும்.

ஒவ்வொரு ஆட்டக்காரரின் இடது பக்கத்திலும் ஒரு குவியல் இருக்கிறது, கையில் ஐந்து சீட்டுகள்.
இதுபோன்ற நாட்களில் உள்ளே இருப்பது நல்லது,
குளுமையான இடத்தில் தங்குவது.
மற்ற ஆட்டங்களை விடவும் இது மேலானது, சாலிட்டேரை*3 விடவும்.

முன்கூட்டியே யோசித்திருந்தார் பாட்டி; மகள்களைத் தயார்ப்படுத்தினார்.
அவர்களிடம் சீட்டுக்கட்டு இருக்கிறது; ஒருவருக்கொருவர் இருக்கிறார்கள்.
இதற்கு மேல் துணை ஏதும் தேவையில்லை அவர்களுக்கு.

மதியம் முழுவதும் ஆட்டம் நடந்தாலும் சூரியன் நகரவில்லை.
கீழே அடித்துத் தள்ளியபடி இருக்கிறது, புல்லை மஞ்சளாக மாற்றுகிறது.
அம்மாவுக்கு அப்படித்தான் தோன்றியிருக்க வேண்டும்.
பிறகு, திடீரென, ஏதோ ஒன்று முடிந்து போகிறது.

இதில் நீண்ட அனுபவம் பெற்றவர் பெரியம்மா; நன்றாக ஆடுவதும் அதனால்தானோ என்னவோ.
அவள் சீட்டுகள் ஆவியாகின்றன: அதுதான் உனக்கு வேண்டும், அதுதான் குறிக்கோள்: இறுதியில்,
எதுவுமற்றவர்தான் வெற்றி பெறுகிறார்.

***

குறிப்புகள்:
*1 – Glück என்ற ஆங்கிலச் சொல்லை ‘க்ளிக்’ என்று உச்சரிப்பதுதான் சரி.
*2 – அம்மாவைக் காட்டிலும் நீண்ட அனுபவம் பெற்றவர் என்பதால் ‘aunt’ என்ற ஆங்கிலச் சொல் பெரியம்மா என மொழியாக்கம் செய்யப்பட்டது.
*3 – சீட்டுக்கட்டில் ஒருவர் மட்டும் விளையாடும் ஆட்டம். சாட்டை வீடு ஆட்டம் என்றும் இதைச் சொல்வது உண்டு.

***

கார்குழலி – சென்னையில் வசித்து வருகிறார். இணையவழிக் கற்றல் துறையில் பணிபுரிந்து வருகிறார். கவிதைகள் எழுதுவதுடன் தொடர்ந்து மொழிபெயர்ப்பு ஆக்கங்களைச் செய்து வருகிறார். அத்துடன் தமது துறை சார்ந்த கட்டுரைகளோடு வெவ்வேறு கட்டுரைகளை பல்வேறு இதழில் எழுதி வருகிறார்.

லதா அருணாச்சலம் – நேர்காணல்

2

கேள்விகள் – அகரமுதல்வன்

சொந்தப் புனைவுக்கேற்ற படைப்பூக்க மனநிலைக்குக் காத்திருக்கிறேன் – லதா அருணாச்சலம்

நீங்கள் மொழிபெயர்ப்பு செய்த நைஜீரிய நாவலான “தீக்கொன்றை மலரும் பருவம்” தமிழ்வாசகப் பரப்பில் அதிக கவனத்தைப் பெற்றது. தற்போது சிறப்பான மொழிபெயர்ப்பாளராக அறியப்படும் உங்களின் மொழிபெயர்ப்புக் கோட்பாடு என்ன ?

தீக்கொன்றை மலரும் பருவம் மொழிபெயர்ப்பு நூல் பரவலான வாசகப் பரப்பைச் சென்றடைந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கவிதைகளும் பத்திகளும் எழுதிக் கொண்டிருந்த போது சில சிறுகதைகளைத்  தற்செயலாக மொழிபெயர்ப்பு செய்து பார்த்த பின் எனக்கு இயல்பான ஆர்வமும் தன்னம்பிக்கையும் ஏற்பட்டது. பின் எழுத்து பிரசுரம் இந்த நல்வாய்ப்பை வழங்கினார்கள். ஆரம்பகாலத் தயக்கங்கள் வடிந்தபின்  நைஜீரிய நாட்டுப் புத்தகம் என்பதால் அதனுடன் என்னால் எந்தவிதச் சிக்கல்களுமின்றி ஒன்ற முடிந்தது. அதன் கதை மாந்தர்கள் நான் பழகியவர்கள் போலவும் கதைக்களம் என்முன்  சித்திரமாகவும் தன்னிச்சையாக விரிந்தன. அதனால் இதனை மொழிபெயர்ப்பு என்பதையும் கடந்து மூலக்கதையையும் கலாச்சாரத்தையும் நமது மொழிக்குக் கடத்துவது போலவே உணர்ந்தேன். ஆனால் எப்போதுமே இதுபோன்ற சாதகமான சூழல் அமையாது. எந்த மூலக்கதையை மொழி பெயர்க்கிறோமோ அதன் களம், சமூகக் கலாச்சாரப் பின்னணி மற்றும், மூலப்படைப்பின் ஆசிரியர் பிரதியை எவ்வாறு அணுகியிருக்கிறார் என்பது பற்றியும் ஆய்வு மேற்கொள்வது அவசியம். ஒரு சிறுகதையை மொழிபெயர்ப்பதென்றாலும் கூட அந்த உழைப்பை அது கோருகிறது. நான் பல இடங்களில் குறிப்பிட்டது போல, வார்த்தைக்கு வார்த்தை மொழிமாற்றம் என்னும் Literal Translation இல்லாமல், மூலப்படைப்பின் மையக் கருவையும் அதன் ஆன்மாவையும் சிதைக்காமல் ஆற்றல் மிகு மொழிபெயர்ப்பாக (Dynamic translation) இருக்க வேண்டும் என்பதையே பல மொழிபெயர்ப்பாளர்களும் கடைபிடிக்கிறார்கள். நானும் அவ்வாறே செய்கிறேன். ஆனால் இப்படிச் செய்கையில் படைப்பின் பூர்வ நிலத்தன்மை, படைப்பாளரின் மொழிப்புலமை, அவர் உவமைகளைக் கையாளும் விதம், ஆழ்மன உணர்வுகளை தனது வலிமையான வரிகளால் விவரிப்பது போன்ற மூலப்பிரதியின் அடையாளங்களை அதிகம் மாற்றாமலும் அதேவேளை வாசிப்பவர்களுக்குக் கனமான வார்த்தைகளின் சுமையை ஏற்றி அகராதி போலக் கையில் தராமலும் இடைப்பட்ட ஒரு மொழியைத் தேர்ந்தெடுப்பதில் நான் கவனம் கொள்கிறேன். மொழிபெயர்ப்பை நோக்கி வாசகர்களை ஈர்க்க வேண்டியதும், வாசிக்கையில் எதன் பொருட்டும் அயற்சி ஏற்பட்டு பிரதியிலிருந்து விலகாமல் இருக்குமாறும் பார்த்துக் கொள்வதிலுமே மொழிபெயர்ப்பாளரின் திறனும் அதற்கு அவர் தேர்வு கொள்ளும் மொழியும் உள்ளது என்பதை நம்புகிறேன்.

தமிழ் மொழிபெயர்ப்புத்தளத்தில்  ஐரோப்பிய இலக்கியங்கள் தான் இன்றும்  பெருமளவில் ஆதிக்கம்  செலுத்துகின்றன. ஒப்பீட்டளவில் ஆப்பிரிக்க இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்படுவது மிகமிக குறைவு. சமகால ஆப்பிரிக்க இலக்கியத்தில் நைஜீரிய படைப்புக்களின் பங்களிப்பு  குறித்து கூறுங்களேன்?

பிற நாட்டுப் படைப்புகளின் மொழிபெயர்ப்பை ஒப்பீடு செய்கையில் ஆப்பிரிக்க இலக்கியங்கள் மிகக்குறைவான அளவே மொழிபெயர்க்கப்படுகின்றது என்பது உண்மைதான். குறைவு என்பதை விட சொற்பமான எண்ணிக்கை என்றே சொல்லாம். ஆப்பிரிக்க நாடுகளில் பெரும்பாலான நூல்கள் ஆங்கிலத்திலும், சில நூல்கள் அந்தந்த நாட்டுப் பிரதான மொழியிலும் எழுதப்படுகின்றன. சில நூல்கள், காலனியாதிக்கத்தின் விளைவாக பிரெஞ்சு மொழியிலும் எழுதப்பட்டு பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உலக இலக்கிய அரங்கிலும் நைஜீரியாவின் பல படைப்பாளர்களின் புத்தகங்கள் பேசப்படுகின்றன. ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தை எனக் கூறப்படுபவர் சீனுவா அச்பே அவர்களின்  Things fall apart என்னும் நாவல் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் நைஜீரிய புனைவிலக்கியத்தின் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவின் தொல்குடி மரபுகள், காலனி ஆதிக்கத்தின் வரவால் மாறிப்போன வாழ்வு முறைகள் பற்றி இவர் எழுதியது ஆப்பிரிக்க இலக்கியத்தில் இன்றுவரை உயரத்தில் இருக்கிறது. வோலே சோயின்கா எழுத்தாளர், நாடக ஆசிரியர், கவிஞர், செயற்பாட்டாளர் எனப் பன்முகத்தன்மை வாய்ந்தவர். இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற கறுப்பின எழுத்தாளர் இவர் ஒருவரே. இவர் தனது படைப்புகளை நைஜீரியாவுடையது மட்டுமன்றி, ஆப்பிரிக்காவிற்குமான பொதுக்குரலாக முன்வைக்கிறார். ஆப்பிரிக்காவின் அரசியல், சமூகச் சிக்கல்களைத் தன் புத்தகங்களில் பிரதிபலிக்கிறார். மற்றும் இன்று உலகளவில் பேசப்படும் நைஜீரிய எழுத்தாளர் சிமாமந்தா அடிச்சி. இனப்பாகுபாடு பற்றியும், பெண்ணியத்தின் புத்திளம் கருத்தாகவும் ஒலிக்கும் இவரது காத்திரம் மிகுந்த எழுத்துகள் இன்றைய நவீன இலக்கிய உலகத்தையே இவர் புறம் திரும்பப் பார்க்க வைத்தது என்றால் மிகையல்ல, பென் ஓக்ரி மிகச்சிறந்த கவிஞர் மற்றும் புனைவெழுத்தாளர்.  நைஜீரியாவின் உள்நாட்டுப் போர் பற்றிய நேரடிப் பார்வையாக இவர் எழுதிய புத்தகம் மிகவும் முக்கியமானது. புக்கர் பரிசு பெற்றவர். இவர்களுடன் தேஜு கோலே, ஹெலோன் ஹபீலா, அபூபக்கர் ஆடம் இப்ராஹிம் அக்வைக்கே எமெஸி ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். இவர்களது கதைக்களம் நைஜீரியாவாக இருப்பினும் அதன் அரசியல் களம், சமூக அவலங்கள், பொருளாதார வீழ்ச்சி, இனக்கலவரம், உள்நாட்டுப் போர், பெண்களின் துயர வாழ்வு, காலனியாதிக்கத்தின் விளைவுகள், சிதைந்து போன தொல்குடி மரபுகள், அடிமை வாழ்வின் துயரம் ஆகிய ஆப்பிரிக்காவின் பொதுப் பிரச்சினைகளையே பேசுகின்றன. இவையெல்லாம் ஆப்பிரிக்க இலக்கியத்திற்கு நைஜீரியா அளித்த கொடை எனலாம்.  

தீவிர வாசிப்புடைய உங்களுக்கு சொந்த புனைவுகளை வெளியிடும் ஆவல் இல்லையா?

வாசிப்பிலிருந்து முற்றும் விலகியிருந்த புலம்பெயர் வாழ்க்கையிலிருந்தும், பணிச்சூழலிலிருந்தும்  மீண்டும் தாயகம் திரும்பியதும் வாசிப்பே எனது முதல் ஆவலாக இருந்தது. இன்றும் தீவிர வாசிப்பு என்னும் தளத்திற்குள் நான் செல்லவில்லையென்றே கருதுகிறேன். இங்கு வந்தபின், பத்திரிகைகளிலும், முகநூலிலும் பத்திகள், கவிதைகள், கட்டுரைகள் என எழுதி வந்தேன். இப்போது மொழிபெயர்ப்பு செய்கிறேன். அது நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. நிச்சயமாக சொந்தப் புனைவை நோக்கி நகர்வேன். இதுவரை திட்டமிடாமலேயேதான்  எதுவும் நிகழ்கிறது. அதனால்  சொந்தப் புனைவுக்கேற்ற படைப்பூக்க மனநிலைக்குக் காத்திருக்கிறேன்.

நைஜீரியாவிற்கு பணிநிமித்தம் புலம்பெயர்ந்திருக்கிறவர் நீங்கள். அந்த நிலத்தில் எப்போதும் ஒருவித பதற்றம் நிலைத்திருக்கும். பல்வேறு அரசியல் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தவண்ணமிருக்கும். இப்படியான சூழலை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?

ஆம், நாங்கள் இங்கு புலம்பெயர்ந்த கால கட்டத்தில் நாட்டில் மிகவும் பதட்டமான சூழல் நிலவியது. மக்களாட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைச் சிறையிலடைத்து விட்டு ராணுவம் ஆட்சியைக் கையிலெடுத்திருந்த காலம். நாடெங்கும் வேலை நிறுத்தமும், கண்டனப் போராட்டங்களும், அதை ஒடுக்கும் பொருட்டு மக்களைச்  சிறையிலடைப்பது, புரட்சியாளர்களுக்கு மரண தண்டனை அளிப்பது, பல எழுத்தாளர்களை, அரசியல் செயல்பாட்டாளர்களை நாடு கடத்துவது போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருந்த காலம். ஆயுதமேந்திய கொள்ளைக்காரர்கள் வீடு புகுந்து  திருடும் அச்சமான சூழ்நிலையும் இருந்தது. அதை நாங்களே எதிர்கொள்ள நேர்ந்தது.  மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சியை நோக்கி நாடு சென்று கொண்டிருந்தது. இத்தகைய காலகட்டத்தில் பொருளீட்டும் பொருட்டும் தேவைகளின் பொருட்டும் விளையும் நிர்ப்பந்தங்கள் மட்டுமே நாங்கள் சூழலை எதிர்கொள்வதற்கான காரணம் என்று சொல்ல முடியாது. நிறைவான பணி அனுபவமும், இம்மக்கள் நம்மீது வைக்கும் நம்பிக்கையும், மரியாதையும் கூட காரணங்களாக அமைந்தன. இங்கு வாழ வந்தபிறகு அந்தந்த நாட்டின் அருமைகளோடு அதன் சில சிறுமைகளையும் எந்த மதிப்பீடுகளுமின்றி ஏற்றுக்கொள்ள மனம் பக்குவமடைகிறது. நாட்டில் ஜனநாயக ஆட்சி மலருகையில் நாங்களும் மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் கொண்டோம். கச்சா எண்ணெய் வீழ்ச்சியடைகையில் நாட்டின் வளர்ச்சி மீது கவலையுறுகிறோம்.  உண்மையில் சில வருடங்கள் இங்கு கழித்த பின்  இந்நாட்டின் சூழலுக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றியமைத்து வாழப் பழகுகிறோம். இரவில் அதிகம் வெளியில் செல்லாமல் இருத்தல், வீட்டைப் பூட்டிப் பாதுகாப்புடன் இருப்பது போன்ற முன்னேற்பாடுகளுடன் இருப்போம். ஆனால், நாட்டின் மீதும், மக்களின் மீதும் ஒரு பற்றுதல் மனநிலை ஏற்பட்டவுடன் அந்த சூழலில் இயைந்து வாழத் துணிவும், சாதுர்யமும் தன்னிச்சையாக ஏற்பட்டு விடுகின்றன. தவிர்க்க இயலாத நிர்பந்தங்கள், பொறுப்புகள், அல்லது பணி நிறைவு இருந்தாலொழிய இங்குள்ள புலம்பெயர் மக்கள் நாட்டைவிட்டுச் செல்வதில்லை. இப்போது நிலைமை ஓரளவு சீராக உள்ளதென்பதையும் குறிப்பிட வேண்டும். மற்றும் தற்காலச் சூழலில் தகவல் தொடர்பு தொழில் நுட்பம் எந்த இன்மையையும் நிறைவேற்றுவதாகவும் உள்ளது.

சிமாந்தோ எங்கோசி அடிச்சி போன்ற வியப்புக்குரிய எழுத்தாளுமைகளின் நூல்களை மொழிபெயர்ப்புச் செய்யும் எண்ணம் உண்டா? 

சிமாமந்தா அடிச்சி வியப்புக்குரிய ஆளுமை என்பதில் ஐயமே இல்லை. புனைவு மட்டுமன்றி, கட்டுரைகள், பெண்ணியப் பார்வை பற்றிய புதுமையான கருத்துகள் கொண்ட அபுனைவு நூல், சிறந்த பேச்சாளர், செயல்பாட்டாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். இன்று உலகளவில் தனக்கெனவும், நைஜீரிய இலக்கியத்துக்கெனவும் மிக அழுத்தமான இடத்தைப் பெற்றவர். குறிப்பாக  இன்றைய தலைமுறையையும், கீழை நாட்டு மக்களையும் நைஜீரிய இலக்கியத்தை நோக்கி வரவழைத்தவர். அவருடைய சிறுகதைத் தொகுப்பும், நாவல் ஒன்றும் ஏற்கெனவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வாய்ப்பு கிடைத்தால்  அவரது மற்ற படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்யும் ஆவல் நிச்சயமாக உள்ளது. அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளேன். ஆனால், நம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய மற்ற எழுத்தாளர்களின் நூல்களும் ஆப்பிரிக்க இலக்கியத்தில் உள்ளனர் எனக் கூறவும் விழைகிறேன்.

நீங்கள் கூறுவது போல சிமாந்தோ எடிச்சியை விடவும் அவதானிக்கப்பட வேண்டிய எழுத்தாளர்களாக யாரை குறிப்பிடுவீர்கள்? அவர்கள் எந்த வகையில் முக்கியமானவர்கள்?

சிமாமந்தா அடிச்சியை விடவும் என ஒப்பு நோக்க வேண்டாம். அவருடன் மற்றவர்களும் பேசப்பட வேண்டுமென்று சொல்கிறேன்.  மூத்த இலக்கிய ஆளுமைகளான சீணுவா அச்பே, வோலே சோயின்கா, மற்றும் சம காலத்தில் சகாரா துணை கண்டத்தின் பல எழுத்தாளர்கள் நாம் அறியப்பட வேண்டியவர்கள். உள்நாட்டுப்போரின் அவலங்களைத் தனது புத்தகங்களில் தொடர்ந்து எழுதி வரும் பென் ஓக்ரி இவர்களில் முக்கியமானவர். பின்-நவீனத்துவ எழுத்து வகைமையிலேயே இவரது பிரதிகள் இருப்பினும் அவற்றில்  மாயத்தன்மை, தொன்மச் சம்பிரதாயங்கள், மற்றும் ஆவியுலகச் சித்தரிப்புகளை இணைத்து எழுதுவதால் இவரது படைப்புகள் சற்றே மாறுபட்ட வாசிப்பனுபவத்தை அளிக்கும்.  செஃபி ஆட்டா, ஹெலோன் ஹபீலா, அக்வைக்கா எமிஸி, அபூபக்கர் ஆடம் இப்ராஹிம், தேஜு கோலே, சிக்கோஸி ஒபியோமா , ஃபெமி ஒஸோஃஃபிஸோன் , நேடி ஒகொரஃபோர் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். இவர்களின் புத்தகங்கள் புக்கர் பரிசுகளின் குறுகிய பட்டியலுக்குள் இடம்பெற்றவைகளாகவும், சர்வதேச அளவில் சிறந்த ஆப்பிரிக்க நூலுக்கான பரிசையும் பெற்றவைகளாகவும் உள்ளன. இவர்களில் பெரும்பாலோனோர் நைஜீரியாவுக்கு வெளியே இருந்துதான் எழுதுகிறார்கள். ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் இவர்கள் அறியப்பட்ட அளவு கீழை நாடுகளில் அறியப்படவில்லை என்பது எனது கருத்து. இதில் நான் நைஜீரியாவை மட்டுமல்ல, ஒட்டு மொத்த ஆப்பிரிக்க இலக்கியத்தைப் பற்றியும் சொல்கிறேன்.

பொதுவாக புலம்பெயர்வு என்பது ஆப்பிரிக்க இலக்கியத்திற்கு ஒரு கொடையென நம்புகிறேன். பல எழுத்தாளர்கள் புலம்பெயர்ந்து எழுதுகிறவர்கள் அல்லவா, அவர்களின் எழுத்துலகம் தாயகத்தின் நினைவுகளை மட்டும்தான் பேசுகின்றனவா?

புலம்பெயர்வு என்பது முதலில் கல்வியின் பொருட்டே பெரும்பாலும் நிகழ்ந்தன. சில எழுத்தாளர்கள், குறிப்பாக, அரசியல் காரணங்களுக்காக நாட்டை விட்டு நீங்கியிருந்த வோலே சோயின்கா புலம்பெயர் வாழ்வில் தன் படைப்பூக்க மனநிலை அமையவில்லை எனக் கூறுவார். தற்போது அவர் நைஜீரியாவில் வசிக்கிறார். பியாஃப்ரா உள்நாட்டு யுத்தத்திற்குப் பின் வீழ்ந்த பொருளாதார நிலையும், சீரழிவுற்ற உட்கட்டமைப்பும், நிர்வாகக்கேடுகளும் இளைய தலைமுறையினரிடையே எதிர்காலத்தைப் பற்றிய நம்பகத்தன்மையைக் குலைத்தது. கல்வி சார்ந்தும், கலைப்புலத்திலிருந்தும் எழுபதுகளுக்குப் பின்னரே அதிகமானோர் நாட்டை விட்டு நீங்கினர் எனக் கூறலாம். அயல்நாட்டிலிருந்து எழுதுபவர்கள் எவ்வித அச்சுறுத்தலுமின்றி தாயகத்தின் நிலையை மிகவும் அப்பட்டமாகத் தங்கள் படைப்புகளில் வெளிக்கொண்டு வருகின்றனர். பழமைவாதம் மலிந்த மதச்சூழலில், ஆளும் அரசியலமைப்பில் எழுத்துச் சுதந்திரம் கேள்விக்குள்ளாகிறது. அதனால் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களுக்கு அது ஒரு சாதகமான சூழலைத் தருகிறது என்பதை மறுக்க முடியாது. தாயகத்தின் நினைவுகளை மட்டும் அவர்கள் எழுதுவதில்லை. புலம்பெயர் வாழ்வின் அவலங்களையும், கலாச்சாரச் சிக்கல்களையும், அங்கும் இனப்பிரிவினையால் நேரும் துயரங்களையும் எழுதுகிறார்கள். சிமாமந்தா தனது அமெரிக்கானா என்னும் புத்தகத்தில் கறுப்பர்களுக்கு நேரும் இன்னல்களைப் பற்றியும், ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் எவ்வாறு இனப்பாகுபாட்டுக்கு உள்ளாகிறார்கள் என்பதை மிக விரிவாக எழுதியிருப்பார். மேலும், அவர்கள் இளம் எழுத்தாளர்களுக்காகத் தாயகத்தில் கோடைக்கால எழுத்துப் பட்டறை நடத்துகிறார்கள். இது அவர்களுக்கும், வளரும் எழுத்தாளர்களுக்கும் இடையே ஒரு இணைப்பாகவும், தங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் நடைமுறையாகவும் அவர்களிடையே உள்ளது.

இன்றைக்கு தமிழ் இலக்கியப்பரப்பில் ஈழத்தமிழ் இலக்கியம் போர் – அழிவு – யுத்த வன்முறை – மானுட அவலம் போன்றவற்றை முன்வைக்கிறது. அது தமிழ் இலக்கிய வெளியில் புதியது. அதுபோன்ற ஒரு சூழல் நைஜீரியாவில் இருக்கிறது. அது இலக்கியத்தில் பிரதிபலிக்கிறதா?

நிச்சயமாக.. பிரித்தானிய காலனி ஆட்சி முறை, பின் காலனியத்துவம், போருக்குப் பின் நிகழ்ந்த பொருளாதார வீழ்ச்சி, வறுமை, பன்னாட்டு நிறுவனங்களால் ஆற்றங்கரைகளில் உருவாக்கப்பட்ட எண்ணெய்க் கிணறுகளால் அழிந்து போன வாழ்வாதரம், சூழல் கேடு, ஊழல், நாட்டின் வளர்ச்சியில் நாட்டமில்லாத அரசியல் தலைவர்கள், தொலைநோக்குப் பார்வையற்ற இளம் தலைமுறையினர், ஆயுதக் கலாச்சாரம், மதத்தின் பெயரால் நிகழும் வன்முறைகள், ஆள் கடத்தல், விபச்சாரம், புறக்கணிக்கப்பட்ட பெண் இனம், ஒடுக்கப்பட்ட தனி மனித சுதந்திரம், இவை யாவும் ஒரு மூன்றாம் தர உலக நாட்டின் அவலங்கள்  தானே.. அவற்றைத்தான் இன்றைய இலக்கியங்களில் நவீன இலக்கியத்தின் பேசுபொருளாக முன் வைக்கின்றனர். நைஜீரிய இலக்கியங்கள் பெரும்பாலும் வாழ்வியலையும், அரசியல் சூழலையும், புலம்பெயர் வாழ்வின் சாதக, பாதகங்களையுமே அதிகம் ஆய்வு செய்கின்றன. சில நூல்கள் நாட்டின் உட்சிக்கல்களையும், அதன் பல்வேறு விளைவுகளையும் பேசுவதால் இலக்கியத்தன்மையிலிருந்து சற்றே நீங்கியிருப்பதாக உணரக்கூடும். ஆனால் அது நாடகீயமாக இல்லாமல் அங்கு நடக்கும் உண்மையான நிகழ்வுகளையும், மக்களின் உணர்வுகளையும்  மேற்பூச்சுகள் ஏதுமின்றி உலகுக்கு அறியத்தருகின்றன என்பதே  பொருத்தமானதாக இருக்கும். நல்ல மொழிப்புலமை கொண்டவர்களாக இருப்பதும், எங்கு வசித்தாலும் தங்கள் மரபில் தொடர்பு துண்டித்துக் கொள்ளாமலும் இருப்பதால் இவர்கள் எழுத்தில் மண்வாசம் இருந்து கொண்டே இருக்கும். 

நிறைய சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்து வருகிறீர்கள், அதற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?

சிறுகதைகள் எனக்கு எப்போதும் மனதுக்கு நெருக்கமான வடிவம். சொல்லப் போனால் மொழிபெயர்ப்பை சிறுகதைகளில்தான் தான் துவங்கினேன். இப்போது அதற்கும் நல்ல வரவேற்பு உள்ளது.  அதிலும் சமகால ஆப்பிரிக்கச் சிறுகதைகளுக்கும் லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளுக்கும் அதிக வரவேற்பும் எதிர்பார்ப்பும் உள்ளது. வாசகர்களின், நண்பர்களின் உற்சாகமான சொற்கள் மேலும் சிறப்பாகச் செயல்பட மிகுந்த ஊக்கம் அளிக்கின்றன.

தொடர்ச்சியாக வாசிப்பில் இயங்கி வருபவர் நீங்கள், சமீபத்தில் வாசித்த நூல்களில் குறிப்ப்பிடத்தகுந்தவையாக கருதுவது?

கடந்த ஏழு மாதங்களாக நைஜீரியாவில் இருப்பதால், வாங்கி அடுக்கி வைத்த புத்தகங்கள் சென்னையில் அப்படியே உள்ளன. ஆனால் இந்தக் கொரோனா அடைவுக் காலத்தில் இணைய இதழ்களில் வெளியாகும் படைப்புகள் அனைத்தும் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவற்றுடன் கிண்டிலில் கிடைக்கும் புத்தகங்கள் மற்றும் ஆப்பிரிக்க இலக்கியம் தமிழ் மற்றும்  உலகச் சிறுகதைகளையும் வாசிக்கிறேன். அண்மையில், நீண்ட காத்திருப்பிற்குப் பின் கிண்டிலில் வாசித்த ஆரோக்கிய நிகேதனம், கூகி வா தியாங்கோவின் Grains of Wheat, சிமாமந்தாவின் Americanah, டோனி மாரிசனின் ”sula‘ ஆகியவை நிறைவான வாசிப்பனுபவத்தை அளித்தன.

நீங்கள் அடிப்படையில் ஒரு கவிஞராக இருப்பது உங்கள் மொழிபெயர்ப்பு செயற்பாட்டிற்கு உதவியாக இருக்கிறதா?

கவிதைகள் வாசிப்பது எனக்குப் பிடிக்கும். எனது ரசனை சார்ந்த உணர்வுகளின் மற்றும்  மொழியின் அழகியல் குறித்த ஆர்வத்தின் வெளிப்பாடாகவும் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். அவற்றை ஆவணப்படுத்தும் நோக்கத்துடனேயே உடலாடும் நதி என்னும் கவிதை தொகுப்பை வெளியிட்டேன். அதுவும் எழுத்துப் பிரசுரமாக வெளியானது. எனது முயற்சிகளுக்கு ஊக்கமளித்த எனது பதிப்பாளர்கள் காயத்ரி, ராம்ஜி நரசிம்மன் இருவருக்கும் நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன். கவிதை மொழியின் தாக்கம் எனது மொழிபெயர்ப்பு நடையில் இருப்பதாகக் கூறுவார்கள். அது இதுவரை சாதகமாகவே உள்ளது என நம்புகிறேன்.

***

  • லதா அருணாச்சலம் – சென்னையைச் சேர்ந்த இவர் தற்பொழுது வசிப்பது நைஜீரியாவில். இவரது முதல் நூல் “உடலாடும் நதி” கவிதைத் தொகுப்பு (எழுத்து பிரசுரம்), இரண்டாவது நூல்(மொழிபெயர்ப்பு) தீக்கொன்றை மலரும் பருவம் (எழுத்து பிரசுரம்). பல்வேறு இணைய இதழ்களில் இவரது மொழிபெயர்ப்பு சிறுகதைகள் வெளியாகியுள்ளன