Home Blog Page 60

ரமேஷ் பிரேதன் நேர்காணல் – பகுதி 3

0

உரையாடல் – சித்ரன், லஷ்மி சரவணக்குமார், முருகபூபதி, சபரிநாதன், சூர்யதேவ்
தொகுப்பு – சித்ரன்

முருகபூபதி: நாடகக் கலைவெளிக்குள் உடல், உணர்வு, பிரதி, வெளி, சமகாலம் இவற்றிற்கான தொடர்பாடல் பற்றி பேச முடியுமா?

இசையைத் தவிர  ஓவியம், சிற்பம், நடனம், நாடகம், திரைப்படம் என்பன யாவும் காட்சிக்கலைகள்தாம். இலக்கியம் என்பது மொழிக்கலை. இசை, நாடகம், இயல் என்று இம்மூன்றையும் இடம்மாற்றி வரிசைப்படுத்திக் கொள்ளலாம். இவற்றில் குருதியும் சதையுமாக உடம்பைப் பார்வையாளர் தொட்டுணரும் கலை வடிவமாக நாடகமே உயிர்க்கலைச் செயலாக இருக்கிறது. திரைக்கலை ஒளியாலும் இசைக்கலை ஒலியாலும் மொழிக்கலை எழுத்தாலும் நிலைபெறும்போது, நாடகம் மட்டுமே உடம்பைப் பொருண்மையாய்ப் பொருள்படுத்துகிறது. இசையைப் போல மெய்க்கலையும் மொழியைத் தவிர்த்து இயங்கவல்லது. தனியொரு உடம்பும் உணர்வும் பிரிந்த இருநிலைகளில் மனிதரால்  இயங்கவியலாததைப்போல உடம்பும் வெளியும் தனித்தனியாகப் பிரிந்த நிலையில் நாடக இயங்கியல் சாத்தியப்படாது. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்பது போல உடம்பை வளர்த்தேன் இயல்வெளி நிறைத்தேன் என்பதே நாடக இயங்கியற் பொருண்மை. இரும்பைத் தங்கமாக மாற்றுவதைப் போல உடம்பெனும் உயிர்ப்பொருளைக் கலைப்பொருளாக மாற்றும் ரசவாதமே நாடகம். இயல், இசை வளர்ந்த அளவிற்கு எல்லாம் இருந்தும் நாடகம் வளரவில்லை. உடம்பை நான்கு வர்ணங்களாகவும் நான்காம் வர்ணவுடம்பைச் சாதிகளாகவும் பிரித்துவைத்த சமூக அரசியலே இக்கலை வளராமல் போனதன் காரணி எனலாம். இயலும் இசையும் தனியொருவரால் உருப்பெறக்கூடியது; ஆனால், உடம்புகளாலான நிகழ்த்துக்கலையானது உடம்புகளாலான கூட்டுக் கலவையாலானது. வர்ணக்கலப்பு உண்டாகும்போது அதைத் தடுத்து நிறுத்தித் தூய்மைப் பேண பரம்பொருள் இம்மண்ணில் தோன்றும். வர்ணப் பாகுபாடும் பால் பாகுபாடும் உச்சத்திலுள்ள இந்தியத் தமிழ்ச்சமூகத்தில், இருபதாம் நூற்றாண்டுவரை இயல், இசை, நாடகக் கலைஞர்கள் யாவரும் பொதுச்சமூக விலக்கத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளானவர்களாகவே இருந்தனர். திரைப்படம் நடிப்புக்கலைத் தொழிலாளர்களை பொருளாதார முடக்கத்திலிருந்தும் அடைப்பட்ட வர்ண இறுக்கத்திலிருந்தும் சற்றே இளைப்பாற கதவுகளைத் திறந்தது. ஆம், புதிய புதிய அகிலம்சார் தொழில்நுட்ப வளர்ச்சியே சமூக விடுதலையையும் அதன்வழி கலை விடுதலையையும் சாத்தியமாக்கும். பார்ப்பனியத்தை அடிவேர் அறுக்கும் தலித் – சூத்திரப் பண்பாட்டுப் புரட்சியே பால், வர்க்கம் கடந்த கலை மலர்ச்சியைத் தமிழகத் தீபகற்பத்தில் உண்டாக்கும்; அதற்கு இயல் இசையைவிட நிகழ்த்துக்கலைகள் மேலதிக வலு சேர்க்கும். 

*  

சபரிநாதன்: உங்கள் கவிதைப் பரப்பில் உடல் என்பது முக்கியமான ஒன்றாக தொடர்ந்து வருகிறது. ஆன்மீகத்திற்கான, விடுதலைக்கான வழியாகவும்; அதேபோது மறைமுகமான வெறுப்பிற்கு ஆளாவதாகவும் தொனிக்கிறது. கவிதைத்தளத்தில் உடல் என்பதை என்னவாக எல்லாம் பாவிக்கிறீர்கள்? மேலும் நுகர்விய சந்தைப் பொருளாதாரம் கூட உடலையே மூலதனமாகவும் வழிபடு பொருளாகவும் ஆக்கியிருக்கிறதே?

தமிழறிவுத் தொகைமை என்பது உடம்பை வளர்த்து உயிர் வளர்ப்பதை முதன்மையாகக் கொண்ட இயங்கியல் பொருள் முதல் தன்மையது. சமூக அரசியல் தளத்திலும் இனம், சாதி, நிறம் இவை உடம்பை முன்வைத்தே அறுதியிடப்படுகிறது. கலை இலக்கிய அழகியல், அதிகாரப் போரியல் யாவும் உடம்பின் கட்டமைப்பை வைத்தே முதன்மைப் பெறுகிறது. உடம்பின் அறிவியலே மருத்துவமாகி வளர்ந்து மரணத்தைத் தள்ளிப்போடுகிறது. கடவுளென்ற எதிர் அறிவைக் கைவிடாத இறுதி மனிதர் உள்ளவரை உலக அறிவியல் துறை முழுமையடையாது. தனியொரு உடம்பின் போதாமையை உணரும் தன்னிலைக்குக் கடவுள் என்னும் கற்பிதம் தேவையாயிருக்கிறது. ஆம், உடம்பை முன்வைத்தே மனித அறிவு அமீபாவிலிருந்து அணுப்பிளவு வரை வளர்ந்து புவிக்கோளைவிடுத்து பரிதி மண்டலம் தாண்டி வளர்கிறது. இது இப்படியிருக்க, மொழிக்கலையான கவிதை, உடம்பைத் தவிர்த்து கடவுளை மட்டும் தழுவி நிற்கமுடியுமா? எளிமையாகச் சொன்னால் உம்பைப் பேணுவதே அறிவியல், உடம்பைப் பேணுவதே அரசியல், உடம்பைப் பேணுவதே அழகியல்; இந்த மூன்றின் அளவுக்கு மீறிய அழுத்தங்களிலிருந்து உடம்பை விடுவிப்பதே ஆன்மீக விடுதலையியல்; இதில், மதத்திற்கும் அதன் நடுப்புள்ளியான கடவுளுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை. ஃபாசிசம் படியாத உள்ளம் எந்தவொரு உடம்பையும் வெறுக்காது, ஒடுக்காது. உலக உயிரினங்களில் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் உயிரினம் மனிதரைத் தவிர வேறில்லை. அண்டவெளியில் உடுக்களை உற்று நோக்குவதைப்போல் சக மனிதரை நான் உட்குடைந்து போகிறேன். காதலும் கலவியுமே எனது கவிதையியல். சக உடம்பைக் கொண்டாடத் தெரியாத மனிதரால் உடலுறவில் சிறக்க முடியாது. குங்கிலியம் சுமக்கும் கழுதையாக ஒவ்வொரு மனிதவுடம்பையும் நுகர்வுப் பண்பாட்டுச் சந்தைப் பொருளாதாரம் ஆக்கி வைத்திருக்கிறது. நுகர்வுப் பண்பாடு கட்டமைக்கும் உடம்பின் கண்ணாடிப் பிம்பமாக போர்க்கருவிகளால் பூட்டப்பட்ட உடம்பு நிற்கிறது. நான் சக மனிதருக்கு எனது எழுத்துக்களால் அவரது உடம்பைப் புனைவுகள் படியாத உயிர் பொருளாய் மீட்டுத்தர எத்தனிக்கிறேன். என் கவிதையால் உன்னைக் கொல்ல முடியாது என்பதே அதன் ஆன்மீகப்பண்பு. இறைமைசெய் யோனியும் லிங்கமும் புணர்ந்தப் படிமத்தை வழிபடும் ஆறறிவு விலங்கினம் ஊரும் சேரியுமாகப் பிரிந்தியங்குவது எங்கனம்? இந்தத் துணைக்கண்டம் மனநலமற்றோரின் மருத்துவமனை.

*

சூர்யதேவ்: ஆண் / பெண் என்ற இரட்டை எதிர்நிலைகளால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த உலகத்தில் மையமற்ற பாலியலை முன்னிறுத்தும் உடல் அரசியல் பற்றி?

விலங்குகளை ஆண்பால், பெண்பால் என இரண்டாக உயிரியல் பகுத்துக் கொண்டுள்ளது. இயற்கை வகுத்த இனப்பெருக்கத் தொழில்நுட்ப இலக்கண வரையறையே இப்பகுப்பிற்கு அடிப்படை. இது உயிரியங்கியலின் அடிப்படை பண்பு; இனப்பெருக்கம் மட்டுமே இதன் விளைவு. பாலியல், பாலுறவு என்பன சமூகப் பண்பாட்டின் உடன் விளைவு; இது வெவ்வேறு நிலவியல், இனவியல் சார்ந்து வேறுபடும்; ஏன், தனியொரு உடம்பு சார்ந்தும் உள்ளம் சார்ந்தும் வேறுபடும். எனவே, பால் செயல்பாடுகளுக்கு பொது இலக்கண விதிமுறைகள் மற்றும் தொழில்நுட்பக் கையேட்டை உருவாக்க முடியாது. இடம்பெயரும் நாடோடி விலங்குக் கூட்டம் தம் மொழியை முதன்மையாய்க் கொண்டு ஒருநிலைச் சமூகமாகக் கட்டமையும்போது  அதன் முதல் அதிகார மையமாகக் கடவுளை முன்னிறுத்திய பூசனைச் சடங்கியல் கட்டமைகிறது. இதன் பெரிதுபடுத்தப்பட்ட வடிவமே மதம். உடலுறவே மனிதவுடம்பின் முதல் உழைப்பு; அதன் விளைவே இன விளைச்சல். உழவு என்பது இரண்டாம் உழைப்பாகிச் சமூக அடித்தளமாகிறது. கடவுளைக் கைப்பற்றிய ஒரு குழு அதிகார மையமாகி, சமூகத்தில் தனித்த ஓர் அங்கமாகிச் செயல்வடிவம் பெறுகிறது. இங்கு அரசின் தோற்றம் நிகழ்கிறது. பிறகு, அது கடவுளைக் கைவிட்டு உழைப்பைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக,  சமூக உற்பத்தியுறவின் மூல உழைப்பான இனப்பெருக்கத்தை தனது கட்டுக்குள் கொண்டுவந்து, பால் செயலை மேலதிகக் கண்காணிப்புக்கு உட்படுத்தியுள்ளது. அலைகுடி, உழுகுடி என வளர்ந்து இன்றைய பின் நவீனக்குடி மரபிலும், அதிகாரம் பால் செயலைக் கட்டுப்படுத்துகிறது. ஆண் – பெண் எதிர் இணையை மையப்படுத்திய குடும்பம் என்ற நுண்ணமைப்பு தனக்குள் மதம், அரசு என்னும் இரண்டு அதிகார அமைப்புகளைக் கொண்டுள்ளது. அணுவுக்குள் எலெக்ட்ரான், நியூட்ரான் போல குடும்ப நுண்மையுள் ஆண் – பெண் எதிர் பால் இணை இயங்குவிசைகள் செயல்படுகின்றன. ஆக, உடம்பின் பாலிலக்கண விதிகளை மாற்றியமைக்கும்போது குடும்பம் என்னும் நுண்ணதிகாரக் கட்டமைப்பு குலையும். நான் அறியாமலேயே எனது உடம்பு சமூக அதிகாரத்திற்கான இயங்கு விசையை உற்பத்தி செய்கிறது. எனவே, என்னுடம்பை அதிகாரத்திற்கு எதிரான ஆயுதமாக முன்னிறுத்த பாலடையாளம் மறுத்த உடம்பாக வளர்த்தெடுக்கிறேன். இதுவே எனது உடலரசியல் அல்லது பாலரசியல் பற்றிய வரைவு. இதில் திருவள்ளுவர் என்னுடன் மாறுபடலாம். குடும்ப விளக்கை ஏற்றும் பாரதிதாசன் என்னை விரட்டி விரட்டி உதைக்கலாம்; ஆனால், கண்ணகி, மாதவி, மணிமேகலை வழிவந்த மூதாய்கள் என்னைக் காப்பர். நண்பா, என்னை நீ மறுக்கும்போது என் அதிகார ஒழுங்கமைவைக் குலைக்கிறாய்.

*

லக்ஷ்மி சரவணகுமார்: இந்தியக் கலைமரபில் காமத்திற்கு மிக நீண்ட வரலாறும் உறவும் உண்டு. ஓவியம், சிற்பம், இலக்கியமென எல்லாவற்றிலும் காமத்தைச் சுதந்திரமாக பேசியவர்கள் நாம். ஆனால் கடந்த சில நூறாண்டுகளில் அந்தப் போக்கு முற்றாக மாறி இச்சை ஒரு பாவச்செயலாக பார்க்கப்படுவதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

நண்பா, இந்தியக் கலைமரபு என்பதை  இந்தியத் துணைக்கண்டத்தின் கலைமரபுகள் என பொருட்படுத்திக் கொள்கிறேன். இந்த பூமியில் எந்தவொரு சமூகமும் ஒருமையாலானது இல்லை; அது பன்மையின் ஒருங்கிணைவு. ஒற்றை அடையாளம் என்னும் வன்முறைக்குள் நாம் நமது பேச்சுவழக்கின் வழியில்கூட அடைபடக்கூடாது. ஒருமையாக்கம் என்பதன் மூலமே பேரரசுகள் உருவாகின்றன. மதத்தின் வழி, மொழியின் வழி, கலை இலக்கியப் பண்பாட்டு அசைவுகள்வழி அரசதிகாரம் உலகை ஒருமுகப்படுத்துகிறது. உடம்புக்கு உடம்பு வேறுபட்டு தனித்துவத்தோடு இயங்கும் பால் செயல்களும் ஒற்றை இலக்கண வரையறைக்குள் ஒருமுகப்படுத்தப்படுகிறது. காமசூத்திரப் பனுவலையும் கஜுராஹோ சிற்பங்களையும் கொண்டு இத்துணைக்கண்டத்தின் காமச்செயல்பாடுகளைக் கட்டற்றது எனக் கொண்டாடுகிறோம். வர்ணக்கலப்பு தடைசெய்யப்பட்ட பிரம்மனின் ஆண்குறி மையச்சமூகங்களில் விடுபட்ட பால்மனம் என்பது பிறழ்வாகவும் குற்றமாகவும் முன்னிறுத்தப்படுகிறது. காமசூத்திரம் ஓர் ஆண் மையப்பனுவல்; அதில் பெண்ணுடம்புக்கான சொல்லாடல் தவிர்க்கப்பட்டுள்ளது. அதில் பெண்ணுடம்பு ஓர் இனப்பெருக்க இயந்திரம் என்பதைத் தாண்டி வேறொன்றுமில்லை. அதிகார வர்க்கத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட சூத்திரப் பெண்ணுடம்புகள் யாவும் ஆண்குறிகள் சுரக்கும் விந்துக்குழைவை வெளியேற்றும் கழிப்பறைகளாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. உலகச்சமூக மொழிகளில் பெண் பாலடிமை உடம்புகளைச் சுகிப்பதற்கான தொழில்நுட்பக் கையேடுகள் இதுபோல பல உள்ளன. பாலறம் என்பதைச் செந்தமிழ் வள்ளுவ ஆசானிடமே காண்கிறேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனச் சொல்லும் சமூகமே பாலறம் பேணும். கருக்கலைப்பைத் தடுத்து இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கும் மதம் பாலிச்சையைத் தடைசெய்கிறது. பகல் புணர்ச்சி என்பது சமூக இழிவழக்கு. இரவில் இணையுடம்பு காணாது, தொட்டுத்தடவி குத்துமதிப்பாகப் புணருவதே இனப்பெருக்க முறைமை. இந்திய ஆண்களுக்குச் சுய இன்பக் கரமைதுனமே போதுமானது; பெண்களுக்கு அதுகூட இல்லை. விடுபட்ட காமம் இல்லாமல் விடுதலை இல்லை. பாலொடுக்கு முறையால் பட்டினி கிடக்கும் சமூகம் பொருளாதாரச் சுரண்டலுக்குத் தம்மை ஒப்புக்கொடுத்து விடும். உறக்க நடையாளர்களைக் கொண்டு சமூகப்புரட்சியை முன்னெடுக்க முடியாது. நான்கில் மூன்று பங்கு கடலாலான திரவப்பரப்பில் மீன்கள் உறங்குவதில்லை. உலக மத அடிமைச் சமூகங்களுக்குப் பால் கலை குறித்த தேடல் இல்லை. உலகப் பெண்ணடிமைச் சமூகங்களுக்குப் பாலின்பம் குறித்தத் தேடல் இல்லை. ஒரு பெண்ணுடம்பைத் தன்னுடம்புடன் தரிப்பதில் ஆணுடம்பும் ஓர் ஆணுடம்பைத் தன்னுடம்புடன் தரிப்பதில் பெண்ணுடம்பும் முழுமையடைகிறது. ஒரேயொருத்தியிடமோ ஒரேயொருவனிடமோ முழுமையாகத் தன்னை ஒப்புக்கொடுப்பதிலேயே பால் மேலாதிக்கம் அற்றுப்போகும். தனியோர் உள்ளம் ஆன்மீக உச்சத்தை அடைய வழித்துணையாகக் கடவுள் தேவையில்லை; எதிர் பாலுடம்போ இணை பாலுடம்போ போதும். காமத்தில் தன்னிறைவு அடையாத சமூகம் விட்டு விடுதலையாகி நிற்பதில்லை. ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே…

*

சூர்யதேவ் : தன்பால் புணர்ச்சி போன்ற மாற்றுவகை பாலியல் தேர்வுக்கான சுதந்திரம் என்பது  இயற்கைக்கு மாறானது என்ற பார்வை பொதுப்புத்தியில் நிறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. தங்கள் எழுத்தில் வெளிப்படும் மாற்று காமத்திற்கான அறவியல் பற்றி விளக்க முடியுமா?

அன்பு, காதல், காமக் கலைச்செயல் யாவும் சமூகக் கட்டமைப்பில் உருவான செயற்கை அடித்தளங்கள். இனப்பெருக்கத்திற்கான பாலுந்துதல் மட்டுமே இயற்கையான உயிரியல் விளைவு. உடம்பின் பாலவயங்களை மூடும் ஆடையிலிருந்து ஆணுறைவரை எல்லாம் சமூக விளைவின் செயற்கைத்தனங்கள். செயற்கையாக இனப்பெருக்கத் தடைகளைச் சமூக அரசியல் காரணிகள் உருவாக்கும்போது, இனப்பெருக்கச் சாத்தியமற்ற மாற்றுப் பாலுறவு நடைமுறைகளை ஊக்குவிப்பது எதிர்ச்சமூக உயிரியல் செயல்பாடாகாது. பாலியல் நடைமுறைகளை உற்று நோக்கும் மதம், இதைப் பிறழ்வாகவும் மீறலாகவும் கடவுளுக்கு எதிரான கலகமாகவும் சமூக / இயற்கை ஒழுங்கியல்பைக் குலைக்கும் நடவடிக்கையாகவும் பார்க்கிறது. விடுதலை என்பது சமூக இனவியல், மொழியியல், பொருளியல் சார்ந்தது மட்டுமில்லை; அது உடம்பியல், உளவியல் கட்டமைக்கும் மனித மெய்யியல் சார்ந்ததுமாகும். மெய்யே உலகியல் பொருள் முதன்மையாகும். சமூகவிடுதலையே மெய்வருத்தக் கூலியாகும்போது; உடம்பின் விடுதலையே பாலறமாகும். எனது இலக்கியப் பனுவல்களில் மிகு பாலுடம்புகளும் பால் கடந்த உடம்புகளும் பால் துறந்த உடம்புகளும் பால்நிலை மாறிய உடம்புகளும் முதன்மை பெறுவதே அவற்றின் இயலொழுங்காக இருக்கிறது. உடம்பில் செயற்கையான வலியையும் மரணத்தையும் விளைவிப்பதே  இயற்கைக்கு மாறான அற இழுக்கு. தனியொரு உடம்பு விழையும் பால் தேர்ந்தெடுப்பை ஒடுக்கும், கட்டுப்படுத்தும் சமூக எதேச்சதிகார இலக்கணத்தை மீறுவதே எனது பிரதியியல் கலகம். ஒற்றைப் பொருளுரைப்பு பனுவலின் விடுதலையை ஒடுக்குவதைப்போல் உடம்பின் ஒற்றைப் பொருளுரைப்பு சமூக விடுதலையை ஒடுக்கும். மனித இனக்குழுவின் சமூகமாதல் என்பது உடம்பைக் கொண்டாடுவதாக இருத்தல் வேண்டும். பால் விடுதலையே பாலறம்; ஃபாசிசம் அண்டாத உடம்பே ஆர்கச உச்சச் சிலிர்ப்பை எளிதில் அடையும். நண்பா, இழப்பதற்கும் பெறுவதற்கும் உன் உடம்பைத் தவிர உன்னிடம் வேறில்லை. உடம்பைக் கொண்டாடாதச் சமூகம், கிடத்தப்பட்ட உடல்களாலான இடுகாடு; அங்கு விடுதலை பற்றிய கேள்வியில்லை.

*

சூர்யதேவ் : உங்கள் படைப்புகளில் வெளிப்படும் காமம் என்பது அதீத இருண்மைகளின், குற்றவுணர்ச்சிகளின் வெடிப்பாக முன்வைக்கப்படுகிறதா?

லக்ஷ்மி சரவணகுமார்: உங்கள் புனைவுலகில் வெளிப்படும் அனேக கதாபாத்திரங்களின் வழியாய் நீங்கள் வைக்கும் முக்கியமானதொரு உரையாடல் உடல்களின் வாதை. மார்கி தெ சாத், ஜார்ஜ் பத்தாய் போன்றோரின் நாவல்களில் வெளிப்படும் வாதைக்கும் கவபத்தாவின் The House of the Sleeping Beauties நாவலில் வெளிப்படும் வாதைக்கும் நிறைய வேறுபாடுண்டு. மார்கி தெ சாத்தையும் பத்தாயின் Story of the Eye-யும் வாசிப்பது ஒருவரின் சமநிலையைக் குலைக்கக் கூடியது. கவபத்தாவின் கீழைத்தேய வாதையையும் சாத், பத்தாய் போன்றவர்களின் மேலைத்தேய வாதையையும் எவ்வாறு பார்க்கிறீர்கள்? உங்களது புனைவில் வெளிப்படும் வாதை  சாத் மற்றும் பத்தாயின் வெளிப்பாடாகத் தோன்றுகிறது.

உங்களுடைய இரு கேள்விகளுக்கும் சேர்த்தே பதிலளிக்க முயற்சிக்கிறேன். ஆம், நிலவியலும் அது சார்ந்து உருவாகும் சமூகப் பண்பாட்டுக் கருத்தியலும் மனித உடம்புகளை வெவ்வேறாக வளர்த்தெடுத்தாலும் அவற்றில் விளையும் இன்பமும் வலியும் ஒரே உணர்வாலானவையே. உடம்பு உணரும் இன்பமும் வலியும் நிலவியல் பண்பாடு சார்ந்து வேறுபடுவதில்லை. உணர்வின் உள்ளடக்கம் மட்டும் திட திரவ வாயு நிலைகளில் வேறுபட்டு நிற்கும். கீழைத்தேய, மேலைத்தேய நிலவியல் பண்பாட்டு வேறுபாடுகள் உடம்பையும் உள்ளத்தையும் வரையறுப்பதில் வேறுபடும்; ஆனால் அவை உணரும் வாதை உடம்பியல் சார்ந்து வேறுபடுவதில்லை. பிறப்பு, இன்பம், வாதை, இறப்பு இவை உலகு தழுவிய இயற்கை நியதி. பூமிக்கு வெளியே இந்த உடம்பின் இயற்பியல் தன்மை மாறுபடும்போது, அதன்வழி பெருகும் கலை இலக்கியத் தத்துவம்போல் – இன்பமும் வலியும் மாறுபடலாம். சமூக அமைப்பு உடம்பைக் கண்காணிக்கிறது, பிறழும்போது தண்டிக்கிறது. உடம்பானது பால், இனம், நிறம், சாதி, தேசியம், மொழி இவற்றால் வேறுபடுகிறது. இவற்றில் ஏதாவதொன்றில் வேறுபட்டு நிற்கும் இரண்டு உடம்புகள் ஏதாவதொன்றில் ஒன்றுபட்டு நிற்க பொதுக்கூறைத் தேடுகின்றன. இந்தத் தேடலின் நிமித்தம் வரலாற்றில் அலைவதை எழுத்தாக்குகிறேன். எனது சக கலைஞர்களான தெ சாத், பத்தெய், கவபத்தா, பாஸ்பைன்டர், ழெனே எனப்பலர் ஒவ்வொரு மொழியில், பண்பாட்டு அரசியல் வெளியில், பைத்தியர்களால் கட்டமையும் வரலாற்றில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். மனிதரை அரசியல் தத்துவங்கள் வடிவமைப்பதில்லை; மாறாக, அவர் சார்ந்த மதமே வெளித்தோற்றம், உள்ளடக்கம் அனைத்தையும் வடிவமைக்கிறது. நான் எந்தவொரு தத்துவக் கோட்பாட்டையோ அறிவு இயக்கத்தையோ தனிநபரையோ பின்தொடர்வதில்லை. கடவுளில்லாத வெற்றிடத்தில் என்னை நிரப்பிக் கொண்டிருக்கிறேன்; கடவுளென்பது காமத்தின் மாற்றீடு. கடவுளைப்போல காமமும் சமூகப் பங்கெடுப்பால் விளைவது. தனியருக்கு அங்கு வேலையில்லை. தொடர்ந்து பேச களைப்பாக இருக்கிறது. சுருங்கச் சொன்னால், வலியில்லாத மானுடமே எனது விழைவு. மரணம் என்னும் மாபெரும் தனிநபர் புதிர் விளையாட்டை குதூகலத்தோடு விளையாடுகிறேன். நான் இயற்கையின் விளைவு; இயற்கையோடு இயைந்த வாழ்வை சமூகமாதல் என்னும் ஃபாசிசக் கட்டமைப்பு குலைக்கிறது. மேலாதிக்கம் இயற்கை ஒழுங்கியலைக் குலைத்துவிடும். வரலாற்றில் இதுவரை நிகழ்ந்த எந்தவொரு விடுதலைக் கருத்தியலும் மெல்ல மெல்ல ஃபாசிசமாக உருத்திரிந்ததைப் பார்த்துவிட்டோம். வெள்ளை, பச்சை, காவி, சிவப்பு, கறுப்பு, நீலம் என வகைப்படும் ஆதிக்கம், எதிர் ஆதிக்கம், மேலாதிக்கம் யாவும் எளிய மனிதவுடம்பில் அரசியல்  வினையாற்றுகின்றன. சமூகத்தில் மனம் பிழன்ற பைத்தியங்களை ராணுவத்தில் சேர்ப்பதில்லை; ஏனெனில் ராணுவக்கட்டமைப்பே ஆகச்சிறந்த பைத்தியக்காரத்தனமல்லவா? பைத்திய உடம்பில் அரசியல் செயலிழந்துவிடும்; உலகப் பைத்தியக்காரர்களே ஒன்றுபடுங்கள் என்ற முழக்கமே எனது பனுவலரசியலாக இருக்கிறது.

*

லக்ஷ்மி சரவணகுமார்: புனைவில் வடிவ ரீதியிலான ஏராளமான சோதனை முயற்சிகளை மேற்கொண்டவர் நீங்கள், இதற்கான பயிற்சியை எங்கிருந்து எடுத்துக்கொண்டீர்கள்? வடிவரீதியிலான உங்களின் புனைவு முயற்சிகளுக்கு யாருடைய எழுத்துக்களை முன்மாதிரியாய் சொல்வீர்கள்?

எனது புனைவுகளின் வடிவரீதியான கட்டமைப்புகள் யாவும் சிம்ஃபோனி இசைக்கோர்வையின் ஒட்டுமொத்த இயங்கியலையும் தொழில்நுட்ப நேர்த்தியையும் பின்பற்றுபவை. நான் ஐரோப்பியக் கண்டத்தில் வளர்ந்திருந்தால் எனது முதல் தேர்ந்தெடுப்பாக திரைப்படமே இருந்திருக்கும். என்னைத் தமிழ்க்கவிதை மரபிலிருந்து வெளியேற்றி  புதிய இயங்குத் தளத்தை ஆக்கிக்கொடுத்தவர்கள் சர்ரியலிசக் கலைஞர்களேயாவர். தண்டனை இல்லை; உலகில் யாரையேனும் ஒருவரைக் கொன்றுவிடு எனச் சொன்னால், யோசிக்காமல் ஸல்வதோர் தலியைக் கலையின் போகச்சிலிர்ப்பால் சுட்டுக் கொன்றுவிடுவேன். பதின்பருவத்திலேயே எனது உள்ளடக்கம் அவனால் நிறைந்தது. அவனுடைய நண்பன் லூயி புனுயேலைத்தான் இன்றும் பின்தொடர்கிறேன். வெர்னர் ஃபாஸ்பைன்டரும் ழான் லுக் கோதாரும் என்னைக் கலைத்து அடுக்கியவர்கள். சத்யஜித்ரேவிடமும் அடூர் கோபாலக்கிருஷ்ணனிடமும் எளிமையாகவும் நிதானமாகவும் ஆழமாகவும் எழுதக் கற்றுக்கொண்டேன். பிதாமகன் லூயி போர்கஸ் வழி கட்டமையும் லத்தின் அமெரிக்கக் கண்டம் எனது விளைநிலம். இடாலோ கல்வினோவும் ழார்ழ் பெரெக்கும் உம்பர்தோ எக்கோவும் நான் கடக்க நினைக்கும் எல்லை இலக்குகள். இவர்கள் எனது தாய்மொழிக்கு வெளியில் நிற்கும் ஆசான்கள். இவர்கள் என் போக்கை மாற்றியவர்கள். திருக்குறளே எனது ஆணிவேர்; கிளைகள், திசைகள் எட்டும் பரவும் இயல்புடையவை. எல்லோரும் எழுத்தெண்ணிப் படிப்பார்கள்; நான் வள்ளுவனிடம் எழுத்தெண்ணி எழுதக் கற்றுக்கொண்டேன். புனிதவதியாரிடம் சரண் புகுவதே, ஃபாசிசவழி ஒழுகலுக்கு எதிரான பைத்திய இயங்கியல் என்ற கவிதையியலைப் புரிந்து கொண்டேன். பாரதியும் பாரதிதாசனும் உண்டாக்கிய போக்குவரத்து நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் பேராசான் புதுமைப்பித்தனிடம் தமிழ் நாவல்களுக்கான வகைமைகளின் மூலக்கதைகளைக் கற்றுத் தேர்ந்தேன். இன்று, கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் இவர்களின் கூட்ட நெரிசலில் என்னைத் தேடுகிறேன்.

*

சித்ரன் : 80 களிலும் 90 களிலும் தமிழ் எழுத்தாளர்கள் மரபான கதை சொல்லும் வடிவத்திலிருந்து புதிய வடிவங்களை நோக்கிய தேடலில் சற்று மிகையாகவே ஈடுபட்டுவிட்டார்களோ என்ற ஐயப்பாடு எனக்குள்ளது. உங்கள் புனைவுலகத்திற்கு நெருக்கமான கி.ராவின் அபாரமான ‘பேதை’ கதையோ எளிமையான வடிவத்தில் எழுதப்பட்டதுதானே?

மரபான கதை சொல்லும் வடிவமென்று எதுவுமில்லை; அது இசையைப் போல நிலத்திற்கேற்ப காலச்சூழலுக்கேற்ப மாறிக்கொண்டேயிருப்பது. அதை ஒன்றில் அறுதியிட்டு நிலைப்படுத்த முடியாது. நடந்ததைத் திரும்பச் சொல்வதும் நடக்கப்போவதை முன்கூட்டிச் சொல்வதும் ஒவ்வொரு வாய்க்கும் மாறுபடும். எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் ஒற்றை மெய்ப்பொருளாய் அமையாது. வாய்க்கேற்ப இடத்திற்கேற்ப காலத்திற்கேற்ப மாறுவதே சொல்கதை இயங்கியல். உலக அரசியல் மாற்றத்திற்கேற்ப இருபதாம் நூற்றாண்டின் இறுதி இருபது ஆண்டுகளில் தமிழ்ப்புனைவில் உளவியல், மெய்யியல் சொல்லாடல்கள் செறிந்து புதிய கவிதையியல் போக்குகளை வெளிப்படுத்தின. சமூகப் பொதுப்புத்தியில் தேய்வழக்காகிவிட்ட ஒன்றைப் புறமொதுக்கி புதியதை உட்புகுத்துவதே கலையின் அடிப்படை இயல்பு. இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபதில் கட்டமைந்து இறுதி இருபதில் கட்டுடைந்த சோவியத் ஒன்றியம் உலகு தழுவிய கலை இலக்கியச் செயல்பாடுகளை மாற்றியமைத்தது. ஆம், வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டில் முதன்முதலாக பூமி புரண்டு படுத்தது. எல்லாப் பொருளும் இடதுவலதாய் வலதுஇடதாய் இடம் மாறின. இப்புவியசைவு ஒருநாளில் நிகழ்ந்ததன்று; ஒரு நூற்றாண்டாக உள்ளுக்குள் சிறுசிறு நடுக்கங்கள் திரண்டு நிகழ்ந்தது. ஒரு நிலப்பகுதியின் அரசியல் நிகழ்வே அதன் கலை இலக்கியத்தை மாற்றியமைக்கிறது. கடந்த நூற்றாண்டின் இறுதிக்கால நிலநடுக்கம் தமிழ் நிலத்திலும் உணரப்பட்டது. நிறப்பிரிகை, மீட்சி, தமிழ் நேயம், கிரணம் போன்ற இதழ்கள் வழியே புதிய சொல்லாடல்கள் பெருக்கமடைந்தன. அரசியல் கட்சிகளும் மத அமைப்புகளும் கார்ப்பரேட் கம்பெனிகளாயின. கதையற்று அலைந்தோம்; புதிய கதைகளைத் தேடத்தொடங்கினோம். கனவுகளற்ற உறக்கத்தில் சூன்யத்தைக் கதைப் பொருளாகத் தொட்டுணரலானோம். எல்லாம் மறுவாசிப்புக்கும் பொருள்கோளுக்கும் உட்படுத்தப்பட்டன. கி.ராஜநாராயணனைப் பற்றி குறிப்பிட்டீர்கள். ஆம், மேல்நிலைப்பள்ளிப் பருவத்தில் வாசகர் வட்டம் வெளியிட்ட கோபல்ல கிராமம், அதுவரை வாசித்திருந்தப் பனுவல்களிலிருந்து வேறுபட்டு தனித்துத் திகழ்ந்தது. கி.ராவின் ஒட்டுமொத்த எழுத்தும் கரிசல் பூமியின் சமூக மானுடவியல் ஆவணத் திரட்டு. வெளியிலிருந்து வந்த ஓர் இனக்குழுவின் புலம்பெயர்க் கதையினூடாக மண்ணின் இனக்குழுக்களின் கதைகளையும் சேர்த்துச் சொல்லிச்செல்வது. ஆம், எளிய வாக்கியங்களாலானவர் கி.ரா. ஆனால், கதையின் உட்பொருள் எளிமையானதன்று. கி.ராவின் படைப்புகளில் சிலவற்றைத் தேர்ந்துத் தொகுத்து விரிவான கட்டுரையொன்றை எழுதி கி.ரா. எழுத்துலகம் என்ற நூலை கலைஞன் பதிப்பகம் மூலம்  பிரேமுடன் சேர்ந்து வெளியிட்டேன். தமிழ் இலக்கிய உலகில் உருவாக்கி வைக்கப்பட்டிருந்த கி.ரா. எனும் நாட்டார் கதைசொல்லி என்ற எளிய படிமத்தைச் சிதைவாக்கி அவரை ஒரு பின்நவீன / பின்நவீனத்துவ கதைசொல்லி என்று புதிய வாசிப்பின் வழி நிறுவப்பட்டது. மேற்சுட்டிய நூலில் பத்து சிறுகதைகள் தேர்ந்து முன்வைக்கப்பட்டன. அவை  பொதுவழக்கில் அதிகம் பேசப்படாதவை. அவற்றிலொன்றுதான் ‘பேதை’ நான் இந்த உரையாடலில் முன்வைத்துள்ள தாய்மை திரிந்த பேய்மை என்னும் கவிதையியல் பொருண்மையை, நான் பிறப்பதற்கு முன்பே கி.ரா. இக்கதை வழியே நிகழ்த்திக் காட்டியுள்ளார். வேட்டி, கதவு போன்ற கதைகளின் தேய்வழக்கால் முடக்கப்பட்டிருந்த கி.ராவின் கதைவெளியின் பிற பரிமாணங்கள் வாசகப் பார்வைக்குச் சுட்டப்பட்டன. இது, கி.ராவை வாசிப்பதில் புதிய நோக்கை முன்னெடுத்தது. இலக்கியப் பனுவல் ஒருபோதும் காலாவதியாவதில்லை; ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவர் வாசிப்பிலும் மாறுபடும் பொருளுரைப்பில் புதிது புதிதாய்ப் பல்கும்.

*

சபரிநாதன் : பொதுவாக உங்கள் கவிதைகளில் இசைமையும் கட்டமைப்பும் உண்டு. ஆனால் சமீபத்திய கவிதைகளில் நீங்கள் கிட்டத்தட்ட அகவற்பா, விருத்தம் போன்ற மரபார்ந்த வடிவங்களில் எழுதி வருகிறீர்கள். கட்டற்ற தன்மை இன்னும் மிகுந்திருக்கிறது. இத்தகைய புத்துருவவாத (neoformalism) கவிதைகளை நோக்கிய திருப்பத்திற்கான காரணம் என்ன?

பள்ளிப்பருவம் முதலாக எழுதுவதைப் போலவே பேசுவதற்கும் பயின்று வந்தவன். எல்லா வகை மரபு வடிவங்களிலும் பாப்புனையும் பயிற்சி பெற்றிருந்தேன். பழைய ஞாபகத்தில, எதுகை மோனையை விடுத்து விருத்தப்பா கட்டமைப்பில் ஐம்பது கவிதைகள் அடங்கிய தொகுப்பை நடுநிசி மதியம் என்ற பெயரில் உருவாக்கினேன். புது எழுத்து பதிப்பகம் வெளியிட்டது. வழக்கம் போல தமிழ் இலக்கியச்சூழல் அதைக் கடந்து சென்றுவிட்டது. அது எனது பதினான்காவது கவிதைத் தொகுப்பு. கட்சி அரசியல் விளைவிக்கும் ஃபாசிச அழுத்தம் தமிழ்ச் சமூகச் சூழமைவிற்குக் கேடு பயக்கும்; அதுபோல இலக்கிய அரசியல் விளைவிக்கும் ஃபாசிச அழுத்தம் தமிழ்க் கலையியலுக்குக் கேடு பயக்கும். தோழமை மனப்பாங்கு இச்சமூகத்திற்கு அந்நியமானது. சகமனித சாதிய வெறுப்பால் கட்டமைந்த உள்ளத்தில் கவிதை கருக்கொள்ளாது. உலக இலக்கியப் போக்கிலிருந்து தமிழிலக்கியம் பின்தங்கியுள்ளதற்கு இதுவே முதற்காரணம். கூட்டுப்புழுவைப் போல என்னைச் சுற்றி நானே கட்டமைத்துக் கொண்ட வெளிக்குள்ளிருந்து கற்பனையான இலக்கியச் சூழலை நிறுவிக்கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறேன். கண்ணாடியில் உற்றுப் பார்க்கும்போது முகத்தில் பைத்தியக்களைக் கூடிவருவதுத் துலங்குகிறது. ஒன்றில் தேங்கவிடாமல் என்னைக் கலைத்துக் கலைத்துப் புலன்களை மாற்றி மாற்றி கோர்த்துக்கொண்டே இருக்கிறேன். இப்பழக்கம் பனுவலாக்கத்திலும் பிரதிபலிக்கிறது. ஒற்றை வடிவத்தில் எனது உடம்பு நிலைக்கலாம்; ஆனால், எனது படைப்பு வெவ்வேறு வடிவங்களில் கூடுவிட்டுக் கூடு மாறிக்கொண்டே இருக்க வேண்டும். கைப்பிடிக்குள்ளிருந்தாலும் அதற்குள் ஒடுங்காமல் ஓயாமல் அலையடிக்க வேண்டும்; ஒவ்வொரு கணமும் வெவ்வேறு அலைகள். மொழி என்பது ஒலிகளின் தொகுப்பு; அதன் துணுக்குகள் எழுத்துக்களாகவும் வார்த்தைகளாகவும் வாக்கியங்களாகவும் வாய்வழி கட்டமையும் இசைக்கோலம். மொழிக் கட்டமைப்பே இனக்குழு உருவாக்கும் முதன்மையான இசைக் கட்டமைப்பு. ஒவ்வொரு மொழியும் ஓர் இசை வடிவம். நான் தமிழிலோ ஃப்ரெஞ்சிலோ பேசுகிறேன் என்றால் வாயொலி வழியாக பொருளுடைய இசைக்கோலத்தைப் பிறருடன் பகிர்கிறேன். மரபான பா வடிவங்கள் மட்டுமில்லை; ஒரே மொழியின் பேச்சு ஒலிவடிவம் நிலப்பகுதிக்குத் தக வேறுபடும்; இதையே வட்டார வழக்கு என்கிறோம். வேறுபடும் வட்டார வழக்கு என்பது வேறுபடும் பா வகைமையே. எளிமையாகச் சொன்னால், இசையால் நான் எழுதுகிறேன். எடுத்துக்காட்டாக, பாரதியின் கவிதைகள் தமிழின் ஒலிக் கட்டமைப்பாலேயே செழுமைப் பெறுகின்றன. பெயர்க்கப்பட்ட அவற்றை இரு ஐரோப்பிய மொழிகளில் படித்திருக்கிறேன்; மூலமொழியின் இசைத்தன்மை நீக்கப்பட்டு வெற்று பேச்சாகவே மீந்திருந்தன. எந்தவொரு மொழியிலிருந்தும் உரைநடை இலக்கியம் மொழி மாற்றமடையும் அளவிற்குக் கவிதை இலக்கியம் மொழி மாற்றம் செய்யப்படுவதில்லை. கவிதையோ கதையோ மொழிபெயர்ப்பின் வழி முழுமையடைவதில்லை. தமிழ்த் தொன்மையின் இசைவளத்தை என்னால் விலக்கி வைக்க முடியாது. ஆக, கவிதையிலும் கதையிலும் வகைவகையான இசைக்கட்டமைப்பை வார்த்தைப்படுத்துகிறேன்.

*

சபரிநாதன் : உங்கள் கவிதைகளில் அறிவு நிலையிலோ உணர்ச்சிகரத்திலோ ஒருவித வன்தன்மை அல்லது ஒருவகை மூர்க்கம் இருப்பதாகத் தோன்றுவதுண்டு. அப்படியான தோற்றத்திற்கு வாய்ப்புள்ளதாகக் கருதுகிறீர்களா?

எனது எழுத்துச் செயல்பாடுகளின் அரசியல் என்னவென்றால், மேலாதிக்கத்திற்கு எதிராக சக மனிதரின் அறிவொழுங்கை மாற்றியமைப்பதேயாகும். நானொரு தமிழ் தேசியவாதி. மார்க்ஸ், அம்பேத்கர், அயோத்திதாசர், பெரியார் என்னும் நான்கு அறிவுத்திசைகளால் கட்டமைவதாகத் தமிழ் தேசியம் இருத்தல் வேண்டும். அம்பேத்கரின் அவைதீகம், மார்க்சின் பொதுவுடைமை, அயோத்தி தாசரின் தமிழ் பெளத்தம், பெரியாரின் சமூக நீதி என்னும் தொகுப்பறிவால், இத்துணைக்கண்டத்தில் ஒடுக்கப்பட்ட ஓர் இனம் தனது மொழி வழியே தனக்கான தேசத்தைக் கட்டமைத்துக் கொள்வதற்கு உடனிருந்து உழைப்பதே எனது எழுத்தின் அரசியல் அறிவுநிலை. திருக்குறளின் அறநெறிகளே எனது கவிதையியலின் உள்ளடக்கம். ஆண் பால், பெண் பால் கலந்துத் திரிந்த ஆபெண் பால்நிலைக் கட்டமைப்பை உருவக உடலரசியல் செயல்பாடாக முன்னெடுப்பதே எனது பனுவலரசியல். உடம்புகளின் போகத் திளைப்பினூடாக ஆன்மீக உச்சத்தை அடைவதே வாழ்வியல் எனச்சொல்லும் எனது படைப்புகள் மூர்க்கத்தையோ வன்முறையையோ கொண்டாடுவதில்லை. கருத்தியல் உருவகங்களான கடவுளுக்கும் சாத்தானுக்கும், நன்மைக்கும் தீமைக்கும் இடையே நிகழும் உரையாடலில் நான் கடவுளின் பக்கமே நிற்கிறேன். எல்லோரும் இன்புற்றிருப்பதே யல்லாமல் வேறொன்றறிந்திலேன் தோழர்களே…

***

தொடரும்

***.

சித்ரன் – கனாத்திரமுறைத்த காதை – சிறுகதைத் தொகுப்பு ஆசிரியர். vinocithran@gmail.com

கரோனா காலப் பயணம்

3

தங்க.ஜெய்சக்திவேல்

ழக்கமான பயணமாக இருக்கவில்லை அந்தப் பயணம். இப்பொழுது நினைத்தாலும் மனது நடுங்குகிறது. காரணம் கரோனா. ஊர் பேர் தெரியாத இடத்தில் மாட்டிக்கொண்டால் எப்படி இருக்கும். அப்படியான ஒரு அனுபவம் தான் அது. இந்த அனுபவத்தினை யாருக்கும் சொன்னால் புரியாது, அனுபவித்தால் தான் புரியும். இப்படியான அனுபவம் யாருக்கும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. காரணம் எனது அந்தப் பயணம் மிக நீண்டது. இந்தியாவில் கரோனா காய்ச்சல் தொடங்கும் முன்னரே நான் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டேன். அதுவும் 16,000 கி.மீ பயணம். நம்மூரில் டெல்லி, மும்பாய் என அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் கூலித் தொழிலாளர் முதல் ஐ.டி பணியாளர்கள் வரை அனைவரும் 144 தடையுத்தரவால், நடந்தே தங்களின் ஊர்களுக்கு சென்றால் போதும் என்ற எண்ணத்தில் இருந்த சமயம் அது. ஆனால் நானோ திக்குத் தெரியாத காட்டில். நீங்கள் கேட்கலாம், எதற்காக இந்த சமயத்தில் நீ இப்படியான பயணத்தினை மேற்கொள்ள வேண்டும் என்று? ஆனால், அதற்கான எனது பதில் உங்களுக்கு நகைப்பினை ஏற்படுத்தலாம். நான் ஒரு பயணி. அதுவும் தொலைதூர பயணங்களை ரசித்து அனுபவிக்கும் ஒரு பயணி. அப்படியானால் இதையும் நீ அனுபவித்துத் தான் ஆக வேண்டும் என்று நீங்கள் கூறலாம். பரவாயில்லை.

வெளிநாட்டு வானொலிகளை கேட்டு இருக்கிறீர்களா? நீங்கள் அனைவரும் வெளிநாட்டு தொலைக்காட்சிகளை பார்த்திருக்கலாம். ஆனால், நான் ஒரு வெளிநாட்டு வானொலிகளை கேட்கும் ரசிகன். இப்படி கேட்டுத்தான் எனக்கு பயணத்தின் மீதே பற்றுதல் வந்தது. உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான வானொலிகள் சிற்றலையில்* நம் இல்லத்திற்கே வருகின்றது. அவற்றை நம்மிடம் உள்ள சாதாரண வானொலிப் பெட்டியில் கேட்க முடியும். நீங்கள் யாரேனும் அவற்றைக் கேட்டுள்ளீர்களா? வாய்ப்பு மிக குறைவு. காரணம், இன்று அந்த வானொலிகளைக் எடுக்கக் கூடிய சிற்றலை வானொலிப் பெட்டிகள் மார்கெட்டில் கிடைப்பதில்லை. நமக்கு தெரிந்தது எல்லாம், வானொலி என்றால் ஒன்று மட்டுமே, அது எஃப்.எம் எனும் பண்பலை வானொலிகள். இன்று நாம் யாரும் ‘வானொலி’ என்று கூட அதைக் கூறுவதில்லை. ‘ரேடியோ’ என்றால் தான் தெரிகிறது. இப்படியான ஒரு வானொலிப் பிரியன் உலக நாடுகளை சுற்றுவது ஒன்றும் அதிசயம் இல்லை தானே.

கரோனா காலகட்டத்தில் வானொலி என்ன வேண்டி கிடக்கிறது? என்று நீங்கள் கேட்கலாம். இங்கே காலம் காலமாக அகில இந்திய வானொலி ஒலிபரப்பி வந்த 7.15 டெல்லி செய்தியையே கரோனா காரணமாக நிறுத்திவிட்டனர். அதற்கு ஏன் டெல்லி செய்தி என்று கேட்டால், நான் இன்னும் ஒரு கதை சொல்ல வேண்டும். இன்று அந்த செய்தி அறிக்கை சென்னையில் இருந்து தான் ஒலிபரப்பாகிறது, டெல்லியில் இருந்து அல்ல. தமிழகத்தில் உள்ள அனைத்து வானொலி நிலையங்களும் சென்னை வானொலியின் நிகழ்ச்சிகளை மட்டும் அஞ்சல் செய்தால் போதும் என்று கூறிவிட்டனர். மேலும் அனைத்து வெளிநாட்டு சேவைகளையும் ஆல் இண்டியா ரேடியோ (அகில இந்திய வானொலியைத் தான் ஆங்கிலத்தில் கூறினேன்) நிறுத்திவிட்டது. தூத்துக்குடி நிலையம் வெளிநாட்டு சேவை என்பதால் அதுவும் நிறுத்தப்பட்டது. இப்படி நம் நாட்டிலேயே கரோனா பாதிப்பு இருக்க நீ ஏன் 16,000 கி.மீ. பயணிக்க வேண்டும் என்று கேட்டால், அதற்கு என்னிடம் பதில் இல்லை.

நான் இந்த பயணத்தினை ஆறு மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு இருந்தேன். அதனால் இந்த பயண திட்டத்தினை மாற்ற விரும்பவில்லை. எனது திட்டமிடல் எதற்காக என்றால், ஒரு தொலைதூர நாட்டில் உள்ள பாலைவனத்தில் இருந்து சிற்றலை வானொலிகளைக் கேட்க வேண்டும் என்பதே அது. இதனை ஆங்கிலத்தில் ‘டிஎக்ஸ்பெடிசன்’ என்று கூறுவர். எக்ஸ்பெடிசன் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியும், டிஎக்ஸ்பெடிசன் பற்றி அவ்வளவாக நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். அதற்கு அர்த்தம், மக்கள் நடமாட்டம் இல்லாத, மின்சார வசதி, கைப்பேசி, இன்டர்நெட் என எந்த வசதியும் இல்லாத ஒரு இடத்தித்தினை தெரிவு செய்து, அந்த இடத்தில் இருந்து தொலைதூர சிற்றலை வானொலிகளை கேட்பதற்கு பெயர் தான் டிஎக்ஸ்பெடிசன். இந்தியாவில் வேதாரண்யம், இராமேஸ்வரம், ஒடிசா எனப் பல பகுதிகளில் இது போன்ற டிஎக்ஸ்பெடிசன்களைச் செய்துள்ளேன். இந்த இடங்களைத் தேர்வு செய்வதற்கு, இங்கெல்லாம் ஒரு சிறு தீவு இருப்பதுவும் ஒரு காரணம். இப்படியாக வானொலி கேட்பதில் இருக்கும் சுகமே தனி தான். வெளிநாடுகளிலும், குறிப்பாக இலங்கை (எக்கலா), சிங்கப்பூர் (கிரான்ஜி), மலேசியா (கஜாங்), மற்றும் பிலிப்பைன்ஸிலும் (பலாவி) பயணம் செய்துள்ளேன். ஆனால் எனது கனவு ஒரு தென்னமெரிக்க நாட்டில் போய் டிஎக்ஸ்பெடிசன் செய்வது தான். அந்த கனவினை கரோனாவால் தடுக்க முடியுமா என்ன? இப்படித்தான் அந்த பயணம் தொடங்கியது.

வட அமெரிக்க நாட்டினை தெரிவு செய்ததற்கு அதன் எழுத்தாளர்களும் ஒரு காரணம். மாய எதார்த்தவாதம் அவர்களின் எழுத்தில் மட்டுமல்ல, அவர்களின் வாழ்க்கையிலும் இருக்கும். சிலியில் உள்ள ஒரு பாலைவனம், இந்த டிஎக்ஸிங்கிற்கு உகந்தது. அந்த பாலைவனத்தின் பெயர் ’அட்டகாமா’. அது ஏன், அந்த பாலைவனத்திற்கு சென்று தான் வானொலியைக் கேட்க வேண்டுமா? என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. நம் வீட்டில் உட்கார்ந்தே திருகினால், அனைத்து வெளிநாட்டு வானொலிகளும் கிடைக்கப் போகிறது, இதற்கு ஏன் இவ்வளவு செலவு செய்து போக வேண்டும்? என்று கேட்டீர்களானால், அதற்கு நான் இரண்டு பதில்களை வைத்துள்ளேன். ஸ்பேஸ் ஸ்டேசன் எனும் விண்வெளி நிலையம் பற்றி அறிந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அந்த விண்வெளி நிலைய வீரர்கள் ஒவ்வொருவரும் ஹாம் ரேடியோ உபயோகிப்பாளர்கள். (ஹாம் ரேடியோ பற்றி விரிவாக பிறகு கூறுகிறேன்) அந்த விண்வெளி நிலையத்தில் இருந்து அதில் உள்ள விண்வெளி வீரர்கள் ஒரு குறிப்பிட்ட சிற்றலை வரிசையில் ஒலிபரப்புவார்கள். அதனை பூமியில் கேட்க ஒரு பெரும் கூட்டம் காத்திருக்கும். ஒரு தனியார் விண்வெளி நிறுவனம், அந்த விண்வெளி ஓடத்திற்கு பொது மக்களையும் அழைத்துச் செல்ல விளம்பரப்படுத்திய போது, அதில் செல்ல பெயர் பதிவு செய்தவர்களில் எண்பது சதவீதம் பேர், சிற்றலை வானொலி நேயர்கள். இன்னொரு சம்பவம், தென்துருவத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பொது மக்களையும் அழைத்துப் போக ஒரு சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்த போது அதில் பெயரைப் பதிவு செய்தவர்களில் எழுபது சதவீதம் பேர் சிற்றலை வானொலி நேயர்கள். இதில் இருந்து ஒரு உண்மை உங்களுக்கு புரிந்திருக்கும். சிற்றலை வானொலி நேயர்கள், பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் பயணிக்க தயங்கமாட்டார்கள். அதுவும் அவர்களின் வானொலிப்  பெட்டியோடு. அப்படித்தான் எனது இந்தப் பயணமும் அமைந்தது.

வானொலி ஒலிபரப்பில் பல வகைகள் உள்ளன. நாம் கேட்கும் எஃப்.எம். ஒலிபரப்பில் அப்படியொன்றும் சுவாரஸ்யம் இல்லை. மேலும் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலும் பெரிதாக ஒன்றும் விஷேசம் இல்லை. மத்திய அலை (மீடியம்வேவ்) ஒலிபரப்பு குறைந்த தொலைவே செல்வதால், அதிலும் எந்த ஒரு த்ரில்லிங்கும் கிடையாது. ஆனால் சிற்றலை (ஸார்ட்வேவ்) ஒலிபரப்பு என்பது தொலை தூரத்திற்கு செல்லவல்லது. அந்த ஒலிபரப்பை கேட்க அனைத்து டி.எக்ஸர்களும் விருப்பப்படுவர். (இது போன்று தொலைதூரத்தில் இருந்து வரும் ஒலிபரப்பினைக் கேட்பவர்களை டி.எக்ஸர் என்று கூறுவர். இதில் ‘டி’ என்பது டிஸ்டன்ஸ், ‘எக்ஸ்’ என்பது ஏதேனும் ஒரு தொலைதூர சிற்றலை வானொலி என்பதாகும்). நானும் ஒரு டி.எக்ஸர். அப்படியிருக்க நான் தொலைதூர நாடுகளுக்குச் சென்று சிற்றலை வானொலி கேட்பது என்பது நியாயமானதே.

நான் ஒரு டி.எக்ஸர் மட்டுமல்ல, உரிமம் பெற்ற ‘ஹாம்’ ரேடியோ ஆப்ரேட்டரும் கூட. ஆப்ரேட்டர் என்று சொன்னதும், வெயில் திரைப்படத்தில் வரும் பிலிம் மெஷின் ஆப்ரேட்டர் அல்ல. ஹாம் வானொலி என்பது, உங்கள் வீட்டில் வைத்தே இயக்கக் கூடிய ஒரு சிறிய வானொலி நிலையம் என்று வைத்துக்கொள்ளலாம். அதற்கும் ஒரு சில சட்டதிட்டங்கள் உள்ளன. அதற்கான தேர்வினை எழுதி உரிமம் பெற்ற பின்னரே ஹாம் வானொலியை நீங்கள் வாங்கவோ அல்லது ஒலிபரப்பவோ முடியும். இப்படியான சகல வித்தைகளையும் அறிந்த ஒருவனை எப்படி கரோனா தடுக்க முடியும். மேலும், இந்தப் பயணத்திற்கு நான் போட்ட முதலீடும் கொஞ்சம் அதிகம். அப்படித்தான் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டது.

திட்டத்தின் படி மார்ச் 7 சென்னையில் இருந்து எனது பயணம் தொடங்கியது. எனக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டேன். அதில் குறிப்பாக டெக்சன் பி.எல் 380 டிஜிட்டல் வானொலிப் பெட்டி, லாங் வயர் ஆண்டனா, டி.எக்ஸ் புத்தகங்கள்  எல்லாம் இவற்றில் அடக்கம். விமான நிலையத்தில் நுழையும் போதே ஒரு சிக்கல். எனது பேக்பேக்கை சோதனை செய்த அதிகாரி, ‘இது யாருடைய பை’ என்று கேட்டு, எனது பையைத் தூக்கி காட்டினார். ‘என்னுடையது’ என்று கூறி வேகமாக ஓடினேன். ‘இதில் என்ன உள்ளது?’ என்றார். ‘வானொலிப் பெட்டி’ என்றேன். ‘திறந்து காட்டுங்கள்’ என்றார். இன்னும் அரை மணி நேரமே விமானம் புறப்பட மீதியுள்ளது. வேக வேகமாக திறந்து காட்டினேன். டெக்சன் வானொலிப் பெட்டியை மட்டும் அவரே கையில் வாங்கி அதை அந்த லெதர் பவுச்சில் இருந்து வெளியே எடுத்துப் பார்க்க முற்பட்டார். ஆனால் அது அவ்வளவு எளிதாக வெளியே வரவில்லை. அதற்குள் இன்னும் இரண்டு மெஷின் கன் ஏந்திய இரண்டு போலீஸ்கள்  அவருக்கு உதவ முன்வந்தனர். அவர்களில் ஒருவர், பவுச்சை விட்டு வெளியே எடுக்கும் போது, அந்த ரேடியோவின் ஆன் பட்டனை அழுத்திவிட்டார், வால்யூமும் அதிமானதால் ‘டர்ர்ர் டர்ர்ர்’ என்று பயங்கர சத்தம். திடீரென்று அதிகமான சத்தம் கேட்டவுடன், அருகில் இருந்த இரண்டு மெஷின் கன் எமகாதகர்களும், என்னை நோக்கி அந்த மெஷின் கன்னை திருப்பி டிரிக்கரில் கையை வைத்தனர். ஒரு நொடியில் எனது உயிர் போவதாய் இருந்தது. நல்ல வேளை நானும் கொஞ்சம் சுதாரித்தேன். என்னை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு, அந்த வானொலிப்பெட்டியை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தார். சுதாரித்த இரண்டு பேரும் ஒரு சேர ‘என்ன இது?’ என்றனர். ‘ரேடியோ’ என்றேன். அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. காரணம், இது டிஜிட்டல் வானொலி பெட்டி என்பதால் நிறைய பட்டன்கள் இருக்கும். (சந்தேகம் இருப்பவர்கள் ‘டெக்சன் பி.எல். 660’ என்று கூகுள் ஸர்ச் செய்து பார்த்துக் கொள்ளலாம்). நல்ல வேளை எனது லக்கேஜில் உள்ள சோனி ஐ.சி.எஃப். 2010டி யை எடுக்கச் சொல்லவில்லை. அந்த டெக்சனில் டிஜிட்டல் டிஸ்பிளே இருப்பதால், அதில் டைம் ஓடிக்கொண்டு இருந்தது. அதுவும் அப்போதைய நேரம். அதனால் அந்த போலீஸ்காரருக்கு இது ஏதோ டைம் பாமோ என்ற சந்தேகத்தில் என்னைப் பார்த்தார். ‘எங்கே, வைத்துக் காட்டு’ என்றனர். எனது நேரம், அப்பொழுது பார்த்து அந்த ரேடியோ, வயர்லஸ் அலைவரிசையில் இருந்ததால், அந்த விமான நிலையத்தில் போலீஸ்காரர்கள் பேசும் பேச்சு அதில் கேட்டது, இதனால் இன்னும் என் மேல் சந்தேகம் வலுக்கொண்டது.

அந்த டெக்சனில் எப்படி அந்த போலீஸ்காரர்களின் பேச்சு கேட்டது என்று நீங்கள் கேட்கலாம். அந்த வானொலிப் பெட்டியானது காற்றலையில் பரவியிருக்கும் அனைத்து வித ஒலி அலைகளையும் எடுக்கக்கூடியது. சொல்லப்போனால், விமானத்தில் பைலட் பேசும் பேச்சு, கப்பலில் இருந்து கேப்டன் பேசும் பேச்சு, டைம் சிக்னல்கள் என அனைத்துவிதமான ஒலிபரப்புகளையும் கேட்கும் வசதி கொண்டது அந்த டெக்சன் டிஜிட்டல் வானொலி. அப்படித்தான் அன்றைய தினம் விமான நிலையத்தில் உள்ள போலீஸ் அலைவரிசை கேட்டது.

அந்த ஒலிபரப்பினைக் கேட்ட பிறகு அவர்களது கவனிப்பே வேறு மாதிரி இருந்தது. எனது அனைத்து உடமைகளையும் எடுத்துக்கொண்டு அவர்களின் உயர் அதிகாரியின் அறைக்கு சகலவித மரியாதைகளுடன் அழைத்துச் சென்றனர். அந்த உயர் அதிகாரி இன்னும் கொஞ்சம் பெரிய மீசை வைத்திருந்தார், என்பது அவரது மாஸ்க்கை எடுத்தபின் தான் தெரிந்தது. அவரிடம் நான் யார், எதற்காக செல்கிறேன், அந்த வானொலிப் பெட்டியில் ஏன் வயர்லெஸ் அலைவரிசை இருக்கிறது என்பதையெல்லாம் விளக்கியதோடு, எஃப்.எப். வானொலி ஒன்றினை வைத்துக் காட்டிய பின்னர் தான் அவர்களுக்கு கொஞ்சம் என் மீது நம்பிக்கை வந்தது.

‘தி இஸ் த லாஸ்ட் கால் ஃபார்…’ என்ற அறிவிப்பு எனது பெயரைக் கூறி ஒலித்துக்கொண்டு இருந்தது. துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஒரே ஓட்டம் தான், அப்பொழுது தொடங்கிய ஓட்டம் மார்ச் 27 வரை ஓடியது. மூச்சிரைக்க ஏறிய அந்த விமானத்தில் மும்பை சென்றேன். செல்வதற்கு முன்பே எனது டி.எக்ஸ் நண்பர்கள், எதற்கு இந்த விஷப்பரீட்சை என்றனர். நாம் பார்க்காத விஷப்பரீட்சையா என்று கூறி மார்தட்டி கிளம்பியது கரோனா சமயத்தில் எவ்வளவு சிக்கல் என்று அப்பொழுது எனக்குத் தெரியவில்லை. மும்பை விமான நிலையத்தில் செக்யூரிட்டி செக்கில் உள்ளவர்கள் அனைவரும் முகமூடி அணிந்து பீதியைக் கூட்டினர். அங்கேயும் இந்த டிஜிட்டல் ரேடியோ பிரச்சனை வரக்கூடாது என்று முடிவு செய்து, அதை லக்கேஜில் ஏற்கனவே உள்ள சோனியுடன் போட்டுவிட்டேன். இன்னும் நம் பயணமே தொடங்கவில்லை, இப்பொழுதே இப்படியா? அதற்கு காரணம், சீனாவின் வூகான் மாகாணத்தில் கரோனா கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டு இருந்தது. விமானத்தில் ஏறும் வரை இது போன்ற மாஸ்க் அணிந்தவர்களை தொடர்ந்து பார்த்தவண்ணம் சென்றேன். நாமும் மாஸ்க் வாங்கியிருக்கலாமோ என்று ஒரு எண்ணம்.

மார்ச் 7ல் எனது பயணம் தொடங்கினாலும், நான் சிலியின் தலைநகர் சான்டியாகோவிற்கு மார்ச் 15 தான் போய்ச் சேர்ந்தேன். ஒரே விமானம் கிடையாது என்பதால், எனது பயணத்திட்டத்தினை மும்பையில் இருந்து துபாய், பிரான்ஸ், அமெரிக்கா வழியாக சென்றேன். சிலியில் இருந்து திரும்பிவரும் பொழுது பிரேசில், எத்தியோப்பியா வழியாக மும்பை வர திட்டமிட்டு இருந்தேன். அதற்கு காரணம், ஒவ்வொரு நாட்டிலும் ஒரு நாள் தங்கல், கொஞ்சம் டி.எக்ஸிங் செய்யவும் வாய்ப்பாக இருக்கும்.

துபாய் விமான நிலையத்தில் அனைவரையும், சானிட்டைஸர்களால் கைகளை சுத்தம் செய்த பிறகே அனுமதித்தனர். ‘நாங்கள் அனைவரும் ஒரு வித பயத்தில் தான் இங்கே பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம்’ என்று விமான நிலையப் பணியாளர்கள் கூறியது கொஞ்சம் பயத்தினை கூட்டியது. அதன் பின் அங்கே இருந்து வெளியே வந்து ஒரு நாள் தங்குவது எனத் திட்டம். துபாயில் மக்கள் அனைவரும் வழக்கமான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். நான் கால் டேக்சியில் ஏறிய போது, அதில் உள்ளூர் பண்பலை வானொலி ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த வானொலியின் பெயர் ரேடியோ சலாம். 106.5 மெ.ஹெட்சில் ஒலித்துக் கொண்டு இருந்தது. ஆச்சர்யம் என்னவெனில் அது தமிழ் வானொலி. ஓட்டுனரின் முகத்தினை உற்றுப் பார்த்தேன், அவர் தமிழர் அல்ல, பின் எப்படி தமிழ் வானொலியைக் கேட்கிறார்? கேட்டே விட்டேன். ‘நீங்கள் ஏன் தமிழ் வானொலியைக் கேட்கிறீர்கள்?’ இது ஆங்கிலத்தில் நான் கேட்ட கேள்விக்கு அவரின் பதில், ‘இந்திய இசை எனக்குப் பிடிக்கும், குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான்’ என்றார். இப்பொழுது புரிந்தது. அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை. வானொலியில் பாடல்களுக்கு இடையில் கூறிய முகவரியைக் குறித்துக் கொண்டேன். ரேடியோ ஸ்பைஸ் புஜைராவில் தமிழ் ஒலிபரப்பினை செய்வதாக அவர் கூறினார். ‘தமிழ் எஃப்.எம்’ தெரியுமா? என்று கேட்டேன். கேட்ட மறுநொடி 89.4 மெ.ஹெட்சில் வைத்தேவிட்டார். துபாயில் 24 மணிநேரமும் ஒலிபரப்பாகும் ஒரே தமிழ் வானொலி இந்த ‘தமிழ் எஃப்.எம்.’ மட்டுமே.

வெளிநாட்டுப் பயணங்களில், நான் நகரின் வெளியே எந்தவித ஆரவாரமும் இல்லாத இடத்தில் தான் அறை எடுப்பது வழக்கம். அதற்கு காரணம் அப்படியான இடங்களில் தான் எந்த வித இடையூறும் இல்லாமல் வானொலிகளைக் கேட்க முடியும். அறைக்கு வந்தபின் கொஞ்சம் கூட ஓய்வு எடுக்கவில்லை. டெக்சனை ஸ்கேனிங் மோடில் போட்டுவிட்டு முகத்தினை கழுவியிருப்பேன், அழைப்பு மணி அடித்தது. யாராக இருக்கும் என்ற குழப்பத்தில் கதவைத் திறந்தேன். வந்திருந்த நண்பர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். தான் அல் தாபயாவில் இருந்து வருவதாகக் கூறினார். அல் தாபயா தான் ஐக்கிய அமீரகத்தில் உள்ள உயர் சக்தி சிற்றலை ஒலிபரப்பு நிலையம் உள்ள இடம். இங்கு இருந்து தான் பிபிசி உலக சேவை இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு ஒலிபரப்பு செய்கிறது. நான் இங்கே இருப்பது எப்படி அந்த அல் தாபயா பணியாளருக்கு தெரிந்தது? என்று குழம்பிய போது, அவரே சொன்னார், நான் வருவதை முன்கூட்டியே எனது துபாய் நண்பர் கூறியதாகவும், தானும் ஒரு டிஎக்ஸர் என்பதால், என்னை நலம் விசாரிக்க வந்ததாகவும் கூறினார். நான் துபாய் வருவதை இங்கே ஒரு பண்பலை வானொலியில் பணியாற்றும் எனது பால்ய நண்பரிடம் சொல்லியதன் விளைவு இது. எனது நண்பர் தான் இந்த ஹோட்டலை புக் செய்தது. எனக்கு பேசுவதற்கு கால அவகாசம் குறைவு என்பதை அறிந்து கொண்ட அந்த நண்பர், நான் விரும்பினால் என்னை அந்த அல் தாபயா உயர் சக்தி ஒலிபரப்பி தளத்திற்கு அழைத்து செல்வதாகக் கூறினார். ஆனால் நேரம் இன்மையால் நான் இன்னொரு முறை பார்க்கலாம் என்று கூறிவிட்டேன். இருப்பினும் அந்த ஒலிபரப்பு தளம் பற்றிய விபரங்களைக் கேட்டுக்கொண்டேன். தற்சமயம் அந்த ஒலிபரப்பு தளத்தில் நான்கு 500 கிலோ வாட் உயர் சக்தி கொண்ட சிற்றலை டிரான்ஸ்மீட்டர்களும், 800 கிலோவாட் சக்திகொண்ட ஒரு மத்தியலை டிரான்ஸ்மீட்டரும் இருப்பதாகவும், இவற்றை இங்கிலாந்தின் பாப்காக் மீடியா சர்வீசஸ் பராமரிப்பு செய்து வருவதாகவும் கூறினார். இதற்கு இடையில் டெக்சன் தனது ஸ்கேனிங்கை முடித்து இருந்தது.

ஐக்கிய அமீரக அரசு, சிற்றலை ஒலிபரப்புகளை நிறுத்திவிட்டது, வானொலிப் பெட்டியை ஸ்கேன் செய்த போது தான் அது நினைவுக்கு வந்தது. தற்சமயம் அங்கே எஃப்.எம். வானொலிகள் தான் அதிகம் என்று வந்திருந்த நண்பரும் கூறினார். அதனால் எனக்கு அன்று கிடைத்ததெல்லாம், ஒரு சில வெளிநாட்டு வானொலிகளின் சிற்றலை ஒலிபரப்புகள் மட்டுமே. ‘எப்பொழுது நீங்கள் துபாயை விட்டு கிளம்புகிறீர்கள்’ என்று கேட்டார். ‘நாளை நள்ளிரவு’ என்றேன். ‘அப்படியானால், நாளை முழுவதும் என்ன செய்வதாகத் திட்டம்’, ‘கொஞ்சம் ஓய்வு, கொஞ்சம் வானொலி’ என்றேன். ‘எனக்கும் ஓய்வு தான், வாய்ப்பு இருந்தால் ஒரு சில உள்ளூர் வானொலிகளைப் பார்க்கலாம்’ என்றார். ‘கண்டிப்பாக’ என்றேன். இன்னொரு முறை யோசியுங்கள், ‘இரண்டு மணி நேரத்தில் அல் தாபயா சென்றுவிடலாம். 188 கி.மீ தான். ரோடும் நன்றாக இருக்கும்’ என்று கூறி எனது ஆசையை மீண்டும் தூண்டிவிட்டார். டெக்சனை பார்த்தேன். அவரும் பார்த்தார். சார்ட்வேவ் இன்ஃபோ இணையதளத்தில் இருந்து அல் தாபயாவில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலிகளை தனியான குறிப்பேட்டில் வரிசைப்படுத்தினேன். பிபிசி, வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா, ரேடியோ இப்ராஹிம், டிரான்ஸ் உலக வானொலி, இப்ரா மீடியா, ஃபீபா ரேடியோ மற்றும் ரேடியோ தீவா ஆகிய வானொலிகள் இந்த ஒலிபரப்பு தளத்தில் இருந்து சிற்றலையில் ஒலிபரப்புவதாக அறிந்து கொண்டேன். நண்பர் கூறினார், ‘இவை அனைத்தினையும் நீங்கள் இங்கு கேட்க முடியாது’ என்றார். ‘ஓ, அப்படியா’ என்றேன். அது எனக்கு தெரியும் என்பது அவருக்கும் தெரியும். ‘சரி நாளை பார்ப்போம்’ என்று விடைபெற்றார். நான் ஏற்கனவே முடிவு செய்த படி அல் தாபயா பயணத்தினை இன்னொரு முறை பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்து கொண்டேன். இரவு பல புதிய வானொலிகளைக் கேட்க முடிந்தது. அனைத்தினையும் குறிப்பெடுத்துக் கொண்டேன். ஒரு சில வானொலிகளை ஒலிப்பதிவும் செய்து கொண்டேன். அவற்றை எனது ‘சர்வதேச வானொலி’ வலைப்பூவில் வெளியிட திட்டமிட்டிருந்தேன். எப்பொழுது தூங்கினேன் என்று தெரியாது. காலை நான்கு மணி அலாரம் அடித்ததும் எழுந்தேன். மீண்டும் டெக்சனில் பேண்ட் ஸ்கேனிங். அதன் பிறகு காலைக் கடன்கள். குளித்து முடித்து, உள்ளூர் வானொலி நிலையங்கள் ஒரு சிலவற்றைக் கேட்டேன். அவற்றை அன்றைய தினம் பார்க்கவும் திட்டம். குறிப்பாக ‘ஆட்டோ ரேடியோ (103.2), ரேடியோ மீ (100.3), ரேடியோ ஸாவா (90.5), துபாய் எஃப்.எம். (93.0), அரேபியன் ரேடியோ நெட்வொர்க் (92.0), ரேடியோ ஆசியா நெட்வொர்க், மீடியா சிட்டியில் உள்ள ஆசியாநெட் ரேடியோ மற்றும் கல்ஃப் நியூஸ் புராட்காஸ்டிங். இவை அனைத்தினையும் ஒரே நாளில் பார்ப்பது என்பது இயலாது. முடிந்தவரை பார்க்கலாம் என்று காலையிலேயே புறப்பட்டேன். வழியெங்கும் முகமூடி அணிந்த மனிதர்களைப் பார்த்ததால், நானும் ஒரு செட் என்95 முகமூடிகளை வாங்கிக் கொண்டேன். நாள் முழுதும் எவ்வளவு வேகத்தில் சென்றது என்றே தெரியவில்லை. நள்ளிரவு விமானத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பாகவே விமான நிலையம் சென்று சேர்ந்தேன்.

11.55க்கு புறப்பட்ட விமானம் பாரீஸ்க்கு அடுத்த நாள் காலை 8 மணிக்குப் போய் சேர்ந்தது. அங்கே ஒரு நாள் தங்கினேன். கலைகளின் நகரம் பாரீஸ், கலைஞர்களை அப்படி கொண்டாடுகிறது. என்னைப் போன்ற வானொலி நேயர்களையும் அந்த நாட்டின் பொதுத் துறை வானொலியான ‘ரேடியோ பிரான்ஸ் இண்டர்நேஷனல்’ கொண்டாடியுள்ளது. ‘கிளப் 9516’ என்ற புகழ்பெற்ற நிகழ்ச்சியில் எங்கள் பெயர் ஒலிக்காத நாட்கள் இல்லை என்று கூறலாம். பிரான்சில், இசோடன் என்னுமிடத்தில் உயர் சக்தி வாய்ந்த சிற்றலை ஒலிபரப்பிகளை ‘ரேடியோ பிரான்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவியுள்ளது. உலகிலேயே மிக அதிக சிற்றலை டிரான்ஸ்மீட்டர்களை கொண்ட ஒரு இடம் தான் இந்த இசோடன். இங்கு பதினேழு 500 கி.வா உயர்சக்தி கொண்ட சிற்றலை ஒலிபரப்பிகளுடன் கூடிய  ஆண்டனாக்கள் உள்ளன.

பாரீஸில் இருந்து 250 கி.மீ தொலைவில் உள்ள இசோடன் செல்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதுவும் இந்த கரோனா காலத்தில் என்னை அவ்வளவு தூரம் பிரான்ஸ் அரசாங்கம் அனுமதிக்காது. எனவே ‘ரேடியோ பிரான்ஸ் இண்டர்நேஷனலுக்கு’ முடிந்தால் போகலாம் என முடிவு செய்தேன். தலைநகர் பாரீஸின் செடக்ஸ் பகுதியில் அமைந்துள்ள அந்த நிலையத்திற்கு செல்ல முன் அனுமதி கேட்டேன். ஆனால், அன்றைய தினம் அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை. எனவே அறையில் தங்கி இசோடன் ஒலிபரப்பு தளத்தில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலிகளைக் கேட்டேன். ஆங்கிலம், பிரெஞ்சு, ஹவுஸா, மன்டின்கா, போர்ச்சுகீஸ், சுவாஹிளி மற்றும் வியட்னாமீஸ் ஆகிய மொழிகளின் ஒலிபரப்புகளை அறையில் தெளிவாகக் கேட்க முடிந்தது. அடுத்த நாள் காலை மீண்டும் எனது விமானப் பயணம் தொடங்கியது.

இரவு 8.40க்கு அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசிக்கு போய் சேர்ந்தேன். இந்தப் பயணம் தான் கரோனா உண்மையிலேயே பயங்கரமானது என உணர்த்தியது. உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் வெளிநாட்டினரை உள்ளே விட மறுத்துவந்த சமயம் அது. அதில் அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. ஆனால் என் அதிர்ஷ்டம், நான் தான் அமெரிக்காவில் நுழையும் கடைசி ஆள். அதன் பின் எந்த வெளிநாட்டு விமானங்களையும் அமெரிக்கா அனுமதிக்கவில்லை. ஆனால் வந்த விமானங்களும், ஒரு சில வெளிநாட்டு விமானங்களும் அன்றும் இயங்கிக்கொண்டுதான் இருந்தன.

தூக்கம் சரியாக இல்லாததால், உடலின் வெப்ப நிலை கொஞ்சம் அதிகமாக இருந்தது. ஆட்டோ பாடி ஸ்கேனிங்கில் அதைக் கண்டுபிடித்த அந்த விமான நிலைய அதிகாரி, ‘என்னை கரோனா சோதனைக்கு உட்படுத்த வேண்டும்’ என ஒரு குண்டை தூக்கிப் போட்டார். எனது பயண விபரத்தினை, பாஸ்போர்ட் துணைகொண்டு அறிந்து கொண்டார். இப்படியான சிக்கல் எல்லாம் ஏற்படும் என்று முதலிலேயே நினைத்திருந்தேன். அதனால் மனதளவில் தயாராகவே இருந்தேன். ஆனால் பயம் யாரை விட்டது. ஒரு வேளை நமக்கும் கரோனா ‘பாஸிட்டிவ்’ என்று வந்தால், எனது நிலையை யோசிக்க முடியவில்லை. காரணம் நோய் தொற்று குணமாகும் வரை என்னை எங்கும் வெளியே விடமாட்டார்கள். தொற்று தீவிரம் அடைந்துவிட்டால், என் கதி அதோ கதி தான். விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகள் பலரும் என்னை மட்டும் வந்து பார்ப்பதும், போவதுமாக இருந்தனர். இது ஏதோ, நான் ஒரு வேற்று கிரகவாசி போல என்னை உணர வைத்தது.

அவர்களில் ,உயர் அதிகாரி போன்று இருந்த ஒருவர் வந்து என்னை மீண்டும் விசாரித்தார். ‘எங்கே போகிறீர்கள்?’, ‘சிலி’ என்றேன். ‘தொழில் முறைப் பயணமா?’, ‘இல்லை’, ‘பிறகு எதற்காக அங்கே போகிறீர்கள்?’ வானொலி கேட்பதற்காக என்று கூறியிருந்தால், என்ன நடந்திருக்கும் என யூகிக்க முடிந்தது. எனவே நான், ‘உயர் கல்வி விடயமாக’ என்றேன். பிறகு சிறிது நேரம் காத்திருப்புக்குப் பின் வெளியே செல்ல அனுமதித்தார். அடுத்த நாள் ‘வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவுக்கு’ (வி.ஓ.ஏ) போக திட்டமிட்டிருந்தேன். எந்த மாதிரியான சூழ்நிலையில், எப்படியெல்லாம் எனக்கு மட்டும் யோசனை செல்கிறது பாருங்கள்.

சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் கட்டடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கே தான் ஒரு காலத்தில் தமிழ் ஒலிபரப்பானது தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. குறிப்பாக மனிதன் முதன் முதலில் நிலாவில் அடி எடுத்து வைத்த செய்தியை தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வெ.நல்லதம்பி நேரடியாக ஒலிபரப்பியதை சொல்லிக் கேட்டிருக்கிறேன். அங்கே உள்ள ‘ரேடியோ ஃப்ரீ ஆசியாவில்’ எனது நண்பர் பணியாற்றுகிறார். அவர் தான் என்னை அங்கு அழைத்துச் செல்வதாக திட்டம்.

காலையிலேயே எனது அறைக்கு வந்தார். ‘எப்படியுள்ளீர்கள்?’ என்றவாறே உள்ளே நுழைந்தார். ‘பயணம் எப்படி இருந்தது? கரோனா பீதி இல்லாமல் எப்படி உங்களால் பயணிக்க முடிந்தது?’ என்று அதிசயத்துடன் அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டார். அவரும் முகமூடியுடன் தான் வந்தார். எனக்கும் ஒன்று வாங்கி வந்திருந்தார். ‘நலமாக உள்ளேன், கொஞ்சம் பயம் தான், என்ன செய்ய, பயணத்திட்டம் முன்பே திட்டமிடப்பட்டது என்பதால், அதனை ஒத்தி வைக்க விரும்பவில்லை’ என்றேன். ‘அதுவும் சரிதான்’. ‘முதலில் வி.ஓ.ஏ.-விற்குள் வெளிநாட்டினரை அனுமதிக்க மாட்டார்கள் என்று தான் நினைத்தேன், பாருங்கள் உங்கள் அதிர்ஷ்டம், அனுமதி  கிடைத்துவிட்டது’ என்றார்.

காலை உணவினை முடித்து, அவரது அலுவலக காரிலேயே இருவரும் ‘வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவுக்கு’ சென்றோம். அந்த வானொலியின் சிறப்புகளில் ஒன்று, வெளிநாட்டில் இருந்து வருபவர்களை உள்ளேயே சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர். இதில் பல இடங்களை நேரடியாகப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. கரோனா காலகட்டத்தில் ஒரு வானொலி நிலையம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அங்கே தான் நான் நேரடியாகப் பார்த்து தெரிந்துகொண்டேன். எந்தவித பதட்டமும் இல்லாமல், மக்களுக்குத் தேவையான தகவல்களை மட்டுமே ஒலிபரப்பி வந்தனர். நிலையத்தினுள் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்திருந்தனர்.

அடுத்த நாள் வாஷிங்டன் டி.சி. அருகில் உள்ள ஒரே சிற்றலை டிரான்ஸ்மீட்டர் அமைந்துள்ள இடமான ‘ரெட் லயனுக்கு’ போக திட்டமிட்டிருந்தேன். 92 மைல்கள் தொலைவில் உள்ள அந்த இடத்திற்கு ஒரு மணி 45 நிமிடங்களில் சென்றுவிடலாம் என்று நண்பர் கூறியிருந்தார். ரெட் லயன் என்ற ஊரானது பென்சில்வேனியாவில் அமைந்துள்ளது. அந்த இடத்தில் இருந்து தான் ‘டபிள்யூ.ஐ.என்.பி’ எனும் வோல்ட் இண்டர்நேஷனல் புராட்காஸ்டிங்கின் வானொலி, சிற்றலையில் ஒலிபரப்பி வருவதாக அறிந்தேன். இந்த வானொலி நிலையத்தாரிடம் அனுமதி கேட்ட போது, ‘நீங்கள் எந்த நாட்டில் இருந்து வருகிறீர்கள்?’ என்று முதலில் கேட்டார்கள். ‘இந்தியா’ என்றேன். அடுத்த நொடி ‘அனுமதி கிடையாது’ என்று சொல்லிவிட்டனர். அதை எனது ரேடியோ ஃப்ரீ ஆசியா வானொலி நண்பரிடம் கூறினேன். ‘நீங்கள் ஏன் அவர்களை அழைத்தீர்கள்?’ என்று கோபித்துக் கொண்டார். ‘என்னிடம் கூறியிருந்தால் நானே அனுமதி வாங்கிக் கொடுத்திருப்பேனே’ என்றார். அதன் பின் அவர்களை அழைத்துப் பேசிவிட்டு என்னிடம் வந்தார். ‘அனுமதி கிடைத்துவிட்டது, ஆனால்…’ என்று ஒரு பீடிகை போட்டார். கரோனா தொற்று அதிகம் உள்ள பகுதி என ‘ரெட் லயன்’ பகுதியை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இந்த சமயத்தில் நான் அங்கே செல்வது என்பது, எனக்குப் பாதுகாப்பான ஒன்றல்ல என்று அந்த வானொலி நிலையத்தினர் நண்பரிடம் கூறியுள்ளனர். காரணம், அங்கே இருந்து நியூயார்க் அருகில் தான் உள்ளது, அமெரிக்காவில் மிக அதிகமானோர் கரோனா தொற்றால் இறந்ததும் நியூயார்க்கில் தான். ‘பரவாயில்லை, பாதுகாப்புடன் சென்று வருகிறேன்’ என்று கூறியும், அரை மனதுடன் சம்மதித்தார். இப்படியான ஒரு வானொலி பயணத்தினை என் வாழ்நாளில் இனியும் எதிர்கொள்வேனா என்பது சந்தேகம் தான். அடுத்த நாள் பயணம் படபடப்புடனேயே கழிந்தது.

‘டபிள்யூ.ஐ.என்.பி’ வானொலி ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் சிற்றலையில் ஒலிபரப்பி வருகிறது. அதற்காக அவர்களிடம் 50 கி.வா சக்தி கொண்ட ஒரு சிற்றலை ஒலிபரப்பி உள்ளது. 9265 கி.ஹெ இந்த ஒலிபரப்பினை வாஷிங்டன் டி.சியில் நன்றாகவே கேட்க முடிந்தது. எப்படியோ கரோனா பாதிப்பில்லாமல் வாஷிங்டன்னை விட்டு கிளம்பினேன். போகும் வழியெல்லாம் ஆம்புலன்ஸின் சைரன் ஒலி என்னவோ செய்தது. அது வழக்கமாக செல்லும் ஆம்புலன்ஸாக இருந்தாலும். அடுத்த நாள் இரவு, சிலிக்கு பயணம். விமான நிலையம் மீண்டும் ஒரு வகையான பீதியை ஏற்படுத்தியது. இந்த விமானத்தினை விட்டால், அடுத்து சிலிக்கு செல்ல எந்த விமானமும் இல்லை. விமானத்தில் பாதி சீட்கள் காலியாகவே இருந்தன. வந்தவர்களும் தவிர்க்க முடியாமலேயே அந்த பயணத்தினை மேற்கொள்ள வேண்டியதாக தெரிந்தது. நான் மட்டுமே, அதில் சுற்றுலா பயணியாக இருக்க வேண்டும்.

பத்து நாட்கள் சிலியில் இருப்பதாகத் திட்டம். காலை பத்து மணிக்கு சிலியின் தலைநகர் சான்டியேகோவிற்கு சென்று சேர்ந்தேன். விமான நிலையமே மயான அமைதியாக காட்சி கொடுத்தது. ‘ஏன் நீங்கள் எல்லாம் இந்த சமயத்தில் எங்களுக்கும் நோய் தொற்றினை கொண்டு வருகிறீர்கள்?’ என்ற எண்ணத்தில் அந்த விமானத்தில் வந்த எங்களைப் பார்த்தனர். அனைவரும் முகத்திற்கு மட்டுமின்றி, உடல் முழுவதும் கவச உடையை அணிந்திருந்தனர். அனைவரையும் உடல் வெப்ப சோதனைக்கு உட்படுத்தினர். அதன் பின்பே உள்ளே அனுமதித்தனர். இந்த முறை எனது உடல் வெப்பநிலை சராசரியாகவே இருந்ததால் தப்பித்தேன்.

நகரத்தின் வெளியில் வழக்கம் போல் எனது அறையை ஒரு சாதாரண ஹோட்டலில் எடுத்திருந்தேன். மக்கள் கொஞ்சம் பீதியுடன் தான் வெளிநாட்டினரைப் பார்த்தனர். நாமும் அப்படித்தானே. நம்மூரிலும் ஒரு வெளிநாட்டினரைப் பார்த்தால் என்ன செய்வோம் என்று நன்றாக தெரியும் தானே.

சிலியில் சிற்றலை வானொலிகள் எதுவும் இல்லை. அங்கே 90 சதவீத வானொலிகள் மத்திய அலையில் தான் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. இதனால் எனக்கு தொலைதூர சிற்றலை ஒலிபரப்புகளைக் கேட்க எந்த இடையூறும் இங்கே இருக்கப் போவது இல்லை. டிஎக்ஸ்பெடிசனுக்கு சிலியை தெரிவு செய்ய அதுவும் ஒரு காரணம்.

இந்த நாட்டின் மற்றுமொரு சிறப்பு, அர்ஜெண்டினாவுக்கு அடுத்து அண்டார்டிகாவை தொட்டுக் கொண்டிருக்கும் ஒரே நாடு சிலி. இது தெற்கு வடக்காக 4630 கி.மீ நீண்டும், கிழக்கு மேற்காக 430 கி.மீ அகலமும் கொண்ட நாடாகும். சிலியில் உள்ள இரண்டு வானொலி மன்றங்களை (டி.எக்ஸ் கிளப்) ஏற்கனவே தொடர்பு கொண்டு, அதன் தலைவர்களுக்கு நான் வருவதை கூறியிருந்தேன். அவர்களே எனக்கான தங்கும் விடுதிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

அடுத்த நாள் காலை இந்தியாவில் என்ன நிலவரம் என்று வாட்ஸப் மற்றும் இணைய தளத்தின் ஊடாக தெரிந்து கொண்ட போது கொஞ்சம் பயம் தொற்றிக் கொண்டது. சிற்றலை வானொலிப் பெட்டியில் அகில இந்திய வானொலியின் சிற்றலை ஒலிபரப்பினை டியூன் செய்து பார்த்தேன். ஒன்றும் கிடைக்கவில்லை. எனவே கையோடு கொண்டுவந்திருந்த  லாங்வயர் ஆண்டனாவை எடுத்து இணைத்தேன், கொஞ்சம் ஏதோ ஒரு சத்தம் கேட்டது. ஒரு வேளை வெளியே கொண்டு போய் இந்த ஆண்டனாவை கட்டினால், இன்னும் கொஞ்சம் தெளிவாகக் கிடைக்கலாம்.

நாளை அந்த வானொலி மன்றத்தினர் வந்த பின் தான், அந்த வேலையைச் செய்ய வேண்டும். அதே சமயத்தில் ’அட்டகாமா’ பாலைவனத்திற்கு செல்லவும் அவர்களோடு இணைந்து முடிவு செய்ய வேண்டும். 1625 கி.மீ. தூரத்தில் உள்ள ’அட்டகாமா’ பாலைவனத்திற்கு சான்டியேகோவிற்கு வடக்கே, அன்டபாஃகஸ்டா சென்று, அங்கே இருந்து மற்றொரு சஃபாரியை புக் செய்து தான் ’அட்டகாமா’ பாலைவனம் செல்ல வேண்டும். விமான வசதி இருந்தாலும், செலவைக் குறைக்க பேருந்தில் தான் அன்டபாஃகஸ்டா செல்ல திட்டமிட்டு இருந்தோம்.

காலை நண்பர்கள் வந்து சேர்ந்தனர். அதில் ஒருவர் இருமிக்கொண்டே இருந்தார். அவ்வப்போது தும்மல் வேறு. நான் அவரைப் பார்க்க, அவர் என்னைப் பார்க்க, கொஞ்சம் தர்மசங்கடமாக இருந்தது இருவருக்கும். இன்னொரு நண்பர் அவரைப் பார்த்து, ‘டாக்டரை எதுக்கும் பார்த்துரேன்’, ‘பார்த்துவிட்டேன், வழக்கமான சளி தான் என்று டாக்டர் கூறினார்’, என்ன தான் இருந்தாலும் எனக்கு மனதுக்கு கொஞ்சம் கிலி தான். ‘கிளப் டிஎக்ஸிட்டா டி சிலி’ எனும் டி.எக்ஸ் கிளப்பினைச் சேர்ந்தவர்கள் தான் வந்திருந்த நண்பர்கள். அவர்களது கிளப் டி.எக்ஸர்களுக்காக ‘ரேடியோகிராமா’ எனும் மாத இதழை வெளியிட்டு வருகிறது. அந்த இதழின் சமீபத்திய மாத இதழை எனக்கும் கொடுத்தனர். ஸ்பானிஷ் மொழியில் இருந்ததால் என்னால் படிக்க முடியவில்லை.

காலை உணவினை நண்பர்களுடன் அருகில் உள்ள கையேந்திபவனில் சாப்பிட்டேன். பெரும்பாலும் அனைத்து உணவுகளும் அசைவம் தான். நான் சாப்பிட்டது கேஜூல்லா. மக்காச்சோளம், உருளைக்கிழங்கு மற்றும் அரிசியினால் தயாரிக்கப்பட்ட உணவு அது. அதில் சிக்கன் சேர்த்தும் அசைவமாகவும் கொடுக்கிறார்கள். நம்மூர் பிரியாணி போன்று இருக்கிறது. ஆனால் அதில் நம்மூர் மசாலாக்கள் எதுவும் இல்லை.

காலை உணவுக்கு பின் ஒரு லாங் வயர் ஆண்டானாவை எனது அறைக்கு மேலே, மொட்டை மாடியில் அமைத்தோம். அதன் பின் கொஞ்ச நேரம் சிற்றலை வானொலிகளைக் கேட்டோம். மதியத்திற்குப் பின் உள்ளூர் வானொலி நிலையம் ஒன்றிற்குச்  செல்ல திட்டமிட்டோம். ஆனால் ‘அதற்கு முன் நீங்கள் பார்க்க வேண்டிய ஒரு முக்கிய இடம் இருக்கிறது’ என்று சொன்னார் டி.எக்ஸ் நண்பர். ‘எந்த இடம்’, ‘அசோசியேசன் டி ரேடியோ டிஃபியூசர்ஸ் டி சிலி’ என்றார். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த அமைப்பு தான் சிலியில் உள்ள வானொலி நிலையங்களை கட்டுப்படுத்தும் அரசு நிறுவனமாகும். நம்மூர் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் போல. அங்கே சென்றால், தற்பொழுது சிலியின் வானொலிகள் எத்தனை உள்ளன, அவற்றில் எத்தனை மத்தியலை மற்றும் பண்பலை நிலையங்கள் போன்றவை பற்றி அறிந்து கொள்ளலாம். புத்தகங்கள் ஏதேனும் வெளியிட்டிருந்தாலும் வாங்கி வரலாம் என்று திட்டமிட்டு இருந்தேன். ‘அதுவும் சரி தான், மூவரும் இணைந்தே செல்வோம்’ என்று சொன்னேன். கோர்ரீயோ பகுதியில் இருந்த அலுவலகத்திற்குச் சென்ற பின் தான் தெரிந்தது, கரோனா காரணமாக அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுவிட்டது என்று. இதுவே இப்படியென்றால், எப்படி வானொலி நிலையங்களுக்குப் போவது? நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு டி.எக்ஸிங் செய்வது தான். இந்தப் பயணமே அதற்குத் தானே.

வாய்ப்பிருந்தால் ’அன்டோஃபகஸ்டா’ அல்லது ’அட்டகாமா’ பகுதியில் உள்ள வானொலி நிலையங்களை அடுத்தடுத்து வரும் நாட்களில் பார்த்துக்கொள்ளலாம் என முடிவு செய்து கொண்டேன். மதிய உணவாக ‘பாஸ்டல் டி சாக்லோ’ எனும் உள்ளூர் உணவினை சாப்பிட்டேன். இது அந்த நாட்டில் மட்டுமே கிடைக்கும் தானியங்கள் மற்றும் மக்காச்சோளத்துடன் கறியை ஸ்டஃப் செய்து கொடுக்கின்றனர். சுவையான உணவு.

இரவு அன்டோஃபகஸ்டாவுக்கு எக்ஸ்பிரஸ் பேருந்தில் புறப்பட்டோம். நண்பருக்கு இருமல் அதிகமாகியிருந்தது. மாத்திரையை போட்டுக்கொண்டதாக நம்பிக்கை ஊட்டினார். தூசின் காரணமாக எனக்கு தும்மல் வந்துகொண்டே இருந்தது. நாம் தும்மக் கூடாது என நினைக்கும் போது தான், நமது மூக்கு நம நம என்று அரிக்கும். என்ன செய்ய, தும்மினேன். இப்பொழுது அவர் என்னை பார்க்க, நான் அவரைப் பார்க்க, தோள்களை குலுக்கி ஒன்றும் இல்லை என்றேன். வாழ்க்கை வட்டமானது.

அடுத்த நாள் காலையும் பேருந்து பயணம் தொடர்ந்தது. காலை உணவினை வழியிலேயே ஒரு மோட்டலில் நிறுத்தினர். அது மோட்டல் போல் இல்லை பார்ப்பதற்கு. ஏதோ ஒரு பெரிய மால் முன் நிறுத்தியது போல் இருந்தது. அவ்வளவு தூய்மையாக இருக்கும் மோட்டலை நான் பார்த்ததில்லை. நல்ல கூட்டம். ஆனால் அத்தனை கூட்டமும் அமர இடம் கொண்ட அந்த மோட்டலில் காலை உணவினை சாப்பிட்டோம்.

நான் சாப்பிட்டது ‘சம்பனடாஸ்’ என்னும் உள்ளூர் உணவு. வழக்கமாக, இது போன்ற பயணங்களில் எனக்கு உள்ளூர் உணவினை சாப்பிடுவது பிடிக்கும். என்ன ஒன்று கொஞ்சம் டேஸ்ட் வேறுவிதமாக இருக்கும். பாஸ்டரி வகையான உணவு அது. மேல்புறத்தில் இருந்த சீஸ் அந்த உணவின் சுவையைக் கூட்டியது. பஸ்ஸில் பசித்தால் சாப்பிட, கொஞ்சம் சிலியின் புகழ்பெற்ற ‘சாப்பள்ளே, நாச்சீ மற்றும் சோசோகா’ போன்ற தீனியையும் வாங்கிக் கொண்டேன்.

அன்றைய தினம் பிற்பகல் தான் அன்டோஃபகஸ்டா போய்ச் சேர்ந்தோம். சிலியின் ‘வடக்கின் முத்து’ என்று அறியப்பட்ட இந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகையே ஐந்து லட்சத்திற்கும் குறைவு தான். இது ஒரு துறைமுக நகரம். சுரங்கங்கள் நிறைந்த பகுதி. போலிவியாவின் ஒரு பகுதியாக 18ஆம் நூற்றாண்டில் இருந்தது. 1883 போருக்கு பின், சிலியின் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்துவருகிறது. அங்கேயும் ஒரு சில வானொலிகள் மத்தியலையில் மட்டுமே ஒலிபரப்பி வருகிறது. எங்களுக்குத் தான் வானொலி நிலையங்களுக்கு செல்ல நேரமே இல்லை.

இந்தியாவை விட பின்தங்கிய நாடாக இருப்பினும், மருத்துவத்தில் முன்னோக்கியே உள்ளது. கரோனா பாதுகாப்பு நடவடிக்கையை துரிதமாக எடுத்து வருவதை, பொது இடங்களில் பார்க்க முடிந்தது. அனைத்து மக்களும் முகமூடியை அணிந்தவாறே பொது இடங்களில் தென்பட்டனர். நாங்களும் கொஞ்சம் பாதுகாப்பாகவே இருந்தோம். நாங்கள் தங்கியிருந்த அறைக்கு அருகில் இருந்த மியூசியத்திற்கு சென்று வந்தோம். இரவு அந்தப் பகுதியில் உள்ள உள்ளூர் சந்தைக்கு சென்றோம். ‘இங்கே விற்கப்படும் வானொலிப் பெட்டிகள் அனைத்தும் சீனாவில் இருந்தே வருகின்றன’ என்றார் நண்பர். ‘எங்கள் நாட்டிலும் அப்படியே’ என்றேன். அங்கே இருந்த ஒரு கடையில் வானொலிப் பெட்டிகளை மட்டுமே விற்றுக்கொண்டு இருந்தார்கள். ஆச்சர்யம் என்னவெனில், நம்மூரிலாவது பிலிப்ஸ் போன்ற ஒரு சில உள்ளூர் தயாரிப்புகள் விற்பனைக்கு கிடைக்கும். அங்கு அது கூட இல்லை.

அங்கே கென்வுட், ஈட்டன், சங்கீயன், சோனி, ஐக்காம், ஜெ.ஆர்.சி, ஏ.ஓ.ஆர் போன்ற ஒரு சில சர்வதேச பிராண்ட்களையும் காண முடிந்தது. நம் நாட்டில் இந்த வானொலிப் பெட்டிகள் எல்லாம் கடைகளில் பார்க்க முடியாது. இணையத்தில் மட்டுமே ஆர்டர் செய்து வாங்க வேண்டும். இதில் இருந்தே, இங்கே இன்னும் வானொலி கேட்கும் நேயர்கள் அதிகம் உள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

இரவு கொஞ்ச நேரம் வானொலி (டி.எக்ஸிங்) கேட்டோம். அன்றைய இரவு பல வெளிநாட்டு வானொலிகள் தெளிவாகக் கிடைத்தன. இந்தப் பேரிடர் காலத்தில் கொஞ்சமாவது தைரியமாக இருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் வானொலி மட்டுமே. தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வானொலியைக் கேட்டு உலகம் முழுவதும் கரோனாவின் தீவிரத்தினையும், இந்தியாவில் அதன் நிலைமையையும் அறிந்து கொள்வது தான் அந்த தைரியத்திற்கு காரணம்.

இன்றைய இரவு டி.எக்ஸிங்கை பயனுள்ளதாக்கியது, டென்மார்க் சிற்றலை வானொலி நேயர் மன்றம் வெளியிட்ட ‘டொமஸ்டிக் புராட்காஸ்டிங் சர்வே’ (டி.பி.எஸ்) தான். அந்த கையேட்டை கூடுதலாக இரண்டு பிரதி எடுத்துக் கொண்டு போயிருந்தேன். அதனை அந்த நண்பர்களுக்கு கொடுத்த போது, அவர்களுக்கு அளவில்லாத சந்தோஷம். அவ்வளவு தகவல்கள் கொண்டது அந்த டி.பி.எஸ். ஆங்கர் பீட்டர்சன் 20 வருடங்களாக இந்தத் தொகுப்பை வெளியிட்டு வருகிறார். இதில் சிற்றலையில் ஒலிபரப்பும் அனைத்து உள்ளூர் வானொலிகளின் அலைவரிசை விபரங்கள் நேர வாரியாக கொடுத்திருப்பது இதன் சிறப்பு. அன்றைய தின இரவு, எப்படிப் போனது என்றே தெரியவில்லை.

அடுத்த நாள் அதிகாலையிலேயே அட்டகாமா பாலைவனம் கிளம்ப திட்டமிட்டிருந்தோம். அங்கே, மூன்று நாட்கள் தங்க திட்டமிட்டிருந்தோம். பாலைவனத்திற்கு அருகில் ஒரு கிராமத்தில் வீட்டினை வாடகைக்கு எடுத்திருந்தோம். 200 கி.மீ. தொலைவுள்ள அட்டகாமாவிற்கு மினா எஸ்கான்டிடா வழியாக சென்றோம். அட்டகாமாவில் ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பாலைவனத்தின் பல்வேறு இடங்களிலும் கூடாரமிட்டு இரவு முழுக்க தங்கி வானொலிகளைக் கேட்டோம். அந்தப் பகுதிகளில் எங்களைப் போலவே அமெரிக்கா, அர்ஜென்டினா, லாட்வியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கணிசமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். இது கொஞ்சம் பயத்தினைப் போக்கியது எனக்கு.

மூன்று நாள் இரவும் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்களாக கழிந்தது. அடுத்த நாள் அங்கே இருந்து 22 மணிநேர பயணத்தினைத் தொடங்கினோம். எக்ஸ்பிரஸ் பேருந்தில் சான்டியோகோ வந்து சேர்ந்தோம். நண்பர்கள் பிரியா விடை பெற்றுக்கொண்டனர். எனக்கு அன்றைய தினம் இரவு விமானம். பெரும்பாலான விமான நிறுவனங்கள் தனது வெளிநாட்டு சேவையை நிறுத்தியிருந்த சமயம் அது. எனக்கான விமானம் கிடைக்குமா என்று சந்தேகத்தின் ஊடாக அமர்ந்திருந்தேன். கடைசியில் நான் பயந்தது போலவே அந்த விமானமும் ரத்து செய்யப்பட்டது அறிந்து மனம் பதறியது. கொஞ்சம் கையில் இருந்த சாண்ட்விச்சை சாப்பிட்டு மூச்சினை இழுத்துவிட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.

அந்த சமயத்தில் அங்கே வந்த சுங்க அதிகாரிகளுக்கு என் மீது என்ன சந்தேகம் வந்ததோ தெரியவில்லை, என்னை சோதனை செய்ய வேண்டும் என்றனர். நான் ‘அனைத்து சோதனைகளையும் முடித்து தானே வந்தேன்?’ என்றேன். ‘எங்களுக்கு சந்தேகம் வந்தால், அவர்களை மீண்டும் நாங்கள் சோதனையிடுவோம்’ என்றனர். இது என்ன புது சோதனை. முதலிலேயே நான் கரோனா என்ற ஒரு பெரும் சோதனையில் இருக்கிறேன். மீண்டும் ஒரு சோதனை. எனது லக்கேஜ், கைப்பை மற்றும் பேக்பேக் என, அனைத்தினையும் சோதனையிட்டபின், ‘தங்களின் சிரமத்திற்கு மன்னிக்க வேண்டும்’ என்று கூறிச் சென்றனர். ஒரு பெருமூச்சு விட்டு நிமிர்ந்தேன். எனது நண்பர்கள் 16,000 கி.மீ அப்பால் இருந்தபடி மொபைலில் அழைத்தவண்ணம் இருந்தனர். ‘நிலைமை மோசமாகிறது, பாதுகாப்பாக இரு’ என்றனர். அப்பொழுது தான் தெரிந்தது கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் தனது விமான நிலையங்களை மூடி விட்டன என்று.

எனக்கு இருந்த ஒரே வழி, அந்த விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்த கடைசி விமானமான லத்தீன்-எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் மட்டுமே. சிறிதும் யோசிக்காமல் அந்த விமானத்திற்கான கவுண்டரில் விசாரித்து, இடம் இருந்ததால் டிக்கெட் எடுத்து, ஏறிக்கொண்டேன். நினைத்த நேரத்தில் செல்லும் பஸ் பயணம் போல் ஆகிவிட்டது. பணம் தான் தண்ணீராக செலவானது. விமானத்தில் அனைவரும் பீதியில் அமர்ந்திருந்தனர். நன்றாக மூச்சினை இழுத்து விட்டு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.

கடைசி நிமிடத்தில் விமானம் ஒரு நாள் பிரேசில் தலைநகர் சாவோ பவுலோவில் தங்கிச் செல்லும் என்று கூறிவிட்டனர். வேறு வழியில்லை, தங்கித்தான் ஆகவேண்டும். எப்படியாவது இந்த தென் அமெரிக்க கண்டத்தினை கடந்து விடலாம் என்றால் முடியாது போல் இருக்கிறது. மாலை ஐந்து மணிக்கு ஏறி இரவு ஒன்பது மணிக்கு தலைநகர் சாவோ பவுலோவுக்கு போய்ச் சேர்ந்தேன். ஒரு நாள் தங்குவதற்கான பொறுப்பினை விமான நிறுவனமே எடுத்துக்கொண்டது. விமான நிலையத்தின் அருகிலேயே தங்கினோம். இனி, அடுத்த புறப்பாடு நாளை இரவு தான் என்பதால் கொஞ்சம் ரேடியோவை டியூன் செய்தேன். பிரேசிலின் சிறப்பே மத்திய அலை வானொலிகள் தான். உலகிலேயே மிக அதிக மத்திய அலை வானொலிகள் உள்ள நாடுகளில் முதன்மையானது பிரேசில். சிற்றலை ஒலிபரப்புகளும் உண்டு. ஆனால், அது உள்நாடுகளுக்கு மட்டுமே செயல்பட்டு வருகிறது. சாவோ பவுலோவிலேயே ஒரு சிற்றலை டிரான்ஸ்மீட்டர் உள்ளது. ஆனால் வெளியே செல்ல அனுமதி இல்லை என்பதால், எங்கும் செல்ல முயற்சி செய்யவில்லை.

அடுத்த நாள் காலையே விமானம் புறப்பட்டது. நேராக எத்தியோப்பிய தலைநகர் அடிஸ்அபாபாவிற்கு சென்று சேர்ந்தேன். அங்கேயும் உடனடியாக மும்பைக்கு விமானம் கிடைக்கவில்லை. அடுத்த நாள் தான் அங்கிருந்து கிளம்ப வேண்டியதாக இருந்தது. அதனால் அருகில் உள்ள கடைவீதிக்குச் சென்று வந்தேன். கொஞ்ச நேரம் சிற்றலை வானொலிகளை கேட்டேன். அதில் குறிப்பாக ‘ரேடியோ எத்தியோப்பியா’ என்று அழைக்கப்பட்ட ‘எத்தியோப்பியன் புராட்காஸ்டிங் கார்பரேஷன்’ இன்றும் அஃபார், அரபிக், ஆங்கிலம், பிரெஞ்ச் மற்றும் சோமாலி ஆகிய மொழிகளில் சிற்றலையில் ஒலிபரப்பு செய்து வருகிறது. 7336 கி.ஹெ மட்டுமே அனைத்து மொழிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இடையில் அகில இந்திய வானொலியைக் கேட்டதும் திக் என்று இருந்தது. அனைத்து வெளிநாட்டு விமானங்களும் இந்தியாவில் இறங்கத் தடை என்ற செய்தி தான் அது. உள்ளூர் டிராவல் ஏஜென்டை அழைத்து ‘மும்பைக்கு அடுத்த விமானம் எப்போது?’ என்று கேட்டேன். ‘உங்களுக்குத் தெரியாதா? இங்கே இருந்து எந்த நாட்டிற்கும் வெளிநாட்டு விமான சேவை இப்பொழுது இல்லை’ என்று அடுத்த குண்டை தூக்கிப் போட்டார். ‘அடுத்த சேவை எப்பொழுது இருந்தாலும் எனக்கு அழைத்து கூற முடியுமா?’ என்றேன். ‘கண்டிப்பாக கூறுகிறேன், உங்களைப் போல், இங்கே இருந்து இந்தியாவிற்கு செல்ல பலரும் கேட்டுள்ளனர்’ என்று வயிற்றில் பாலை வார்த்தார். இரவு தூக்கம் இல்லை. வானொலி தான் கை கொடுத்தது.

இரண்டு நாள் கழித்து அடிஸ்அபாபாவிற்கு இந்திய அரசே சிறப்பு விமான சேவை ஒன்றை  ஏற்படுத்தியிருந்தது. காரோனா சிறப்பு விமானம் அது. நல்ல வேளையாக டிராவல் ஏஜன்டிடம் கூறியிருந்ததால், அவர் இந்த சிறப்பு விமானம் பற்றிய தகவலை உடனடியாக தெரிவித்து உதவினார். நானும் அடிஸ்அபாபாவின் கெபாலே பகுதியில் உள்ள இந்திய தூதரகத்திற்கு நேரடியாக சென்று உதவும் படி கூறினேன். நல்ல வேளை ஏற்கனவே பதிவு செய்த ஒருவர் வராததால் அந்த கரோனா சிறப்பு விமானத்தில் மும்பை நோக்கிய எனது பயணம் உறுதியானது. அடுத்த நாள் அதிகாலை அந்த கரோனா சிறப்பு விமானம் மும்பை நோக்கி பயணமானது. விமானத்தில் ஏறி உட்கார்ந்த பின்பே உயிர் வந்தது. இல்லையெனில் நிலைமை சீராகும் வரையில் இங்கேயே இருக்க வேண்டியது தான். கையில் காசில்லாமல் அந்த நிலையை நினைத்தாலே வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

எனக்குத் தெரிந்து எந்த ஒரு வானொலி நேயரின் பயணமும் இவ்வளவு திரில்லாக இருந்திருக்குமா என்றால் நிச்சயம் இல்லை. கரோனா காலத்திய இந்தப் பயணம் மனதிற்கு ஒவ்வொரு நொடியும் புது வித அனுபவத்தினை கொடுத்தது. இந்த 20 நாட்களில் சந்தித்த நண்பர்கள், கேட்ட வானொலிகள், உண்ட உணவுகள், தங்கிய விடுதிகள் என அனைத்தும் பசுமையான கரோனா நினைவுகளாக இருக்கும். மும்பையிலேயே 24 நான்கு நாட்கள் தனிமை படுத்திக் கொண்டேன். அதன் பின் இந்தியாவே ஒரு மாதம் தனிமைப்படுத்திக் கொள்ளும் என்று சற்றும் நினைக்கவில்லை.

***

** சிற்றலை வானொலிகள் 2000 கி.ஹெ. முதல் 30,000 கி.ஹெ வரையுள்ள அலைவரிசைகளில் மட்டுமே எடுக்கக் கூடியது ஆகும். மீட்டர்களில் சொல்வதானால் 120 மீட்டர் முதல் 11 மீட்டர்கள் வரையில் இருக்கும்.

  • தங்க.ஜெய்சக்திவேல் – சென்னை பல்கலைகழகத்தின் இதழியை துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். ஆகாஷ்வாணி, ஹாம் ரேடியோ வரிசை நூல்கள், பன்முகப்பார்வையில் சீன ரேடியோ, இலங்கை ரேடியோ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். வசிப்பது சென்னையில். தொடர்புக்கு – ardicdxclub@yahoo.co.in

அங்காளம் – 3

0

மாடவர் அல்குல்
*************

– கார்த்திக் புகழேந்தி

மிழக நாட்டார் கதைகளில், பெண்ணின் பாலுறுப்பைக் குறிப்பொருளாக உணர்த்திச் சொல்லப்பட்டக் கதைகள் எக்கச்சக்கம். அக்கதைகளில் இடம்பெறும் கதை மாந்தர்களின் அறிவுநிலை மற்றும் சூழ்நிலைகளுக்குத் தக்க, அப்பாலுறுப்புச் சொற்களை நாசூக்காக பல்வேறு உவமைகளுடன் புனைந்து சொல்லியிருப்பார்கள் நம்முடைய கதைசொல்லிகள். அப்படியான சொற்களைத் தொகுக்கும்போது, பெண்ணின் பாலுறுப்புக்கு இணையாக அகழி, அக்குள், இருள், உதடு, உரல், ஓட்டை, கதவு, கறி, கிண்ணம், கிளிஞ்சில், குகை, குய்யம், குழாய், குழி, கூடு, கூண்டு, கூதி, கோட்டை, கோடு, சந்து, சாமான், சாலை, சினை, சிறுநிலம், தாழ்நிலம், துவாரம், தேன்குடம், தோட்டம், நடுநிலம், பழம், பாத்திரம், பாதை, பானை, பிளவு, புண்டை, புழை, பூ, பூனைக்குட்டி, பெட்டி, பை, பொச்சி, பொந்து, மத்தளம், மல்லிகை மொட்டு, முகை, மூக்கு, மேடை, லாடம், வட்டம், வயல், வழி, வளையம், வாய்… என விதவிதமான உவமைகள் சிக்கின.

எழுத்தாளர் கு.அழகிரிசாமி, வயோதிக தேவதாசி ஒருவரைச் சந்தித்து, அவரிடம் ‘அசைவ’ ரக நாட்டிய பதங்கள் குறித்துக் கேட்டு எழுதினாராம். அதில், கிளிட்டோரியஸைப் பற்றிக் குறிப்பிடும்போது, “பண்டத்தின் மூக்கு” என்று குறிப்பிடுகிறார். நெல்லை வட்டாரத்தில் கதம்பமாகப் பேசும்போது, அதைப் ’பருப்பு’ என்பார்கள் பெருசுகள். கரிசல் வட்டார கி.ராஜநாராயணன் அதனைக் ‘கொள்ளு’ என்பார். “எலே கொள்ளு கடிச்சான்” என்பது அங்கத்தியில் வழங்கும் ருசிகரமான வசவுச் சொல். அந்த வட்டாரத்தில் இருந்து கிளம்பிவந்த பாரதி தன் கவிதைகளில் ”பரவை அல்குல்” என்று வருணிக்கிறான். நம் திரையிசைப் பாடலாசிரியர்களும் தங்கள் பங்குக்கு ‘மல்லிகை மொட்டு” என்றெல்லாம் கூடப் பாட வைத்திருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில், ஷேக்ஸ்பியர் தன்னுடைய படைப்புகளில் பெண்களின் இந்த அந்தரங்க உறுப்பினைக் குறிக்க, அதற்கிணையான 68 தனிச்சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார். அதேபோல ஆண்குறிக்கும் கூட 45 சொற்களைக் கையாண்டிருப்பார். ஷேக்‌ஷ்பியருக்கு நேர் வார்த்தையாக CUNT எனச் சொல்ல அவ்வளவு கூச்சம். அதனாலே பின்னாட்களில் அவர் பயன்படுத்திய இந்தச் சொற் பிரயோகங்களுக்குப் பொருள் தெரிந்து கொள்ள ஒரு தனி அகராதியை உண்டாக்கினார்கள்.

இந்த விஷயத்தில் ஷேக்ஸ்பியரைவிட விட அதிகமான மாற்றுச் சொற்களைப் பயன்படுத்தியவர் கிளிலேண்ட் என்கிற ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரி. இவர் தன்னுடைய ‘Memories of a woman of Pleasure’ என்ற நூலில் நினைத்த மாதிரியெல்லாம் பெண் பாலுறுப்புக்கு வேறு பெயர்களைச் சூட்டியிருக்கிறார். நாளடைவில், ‘எது எதைக் குறிக்கிறது; எது அதைக் குறிக்கிறது’ என்று கண்டுபிடிக்கவே முடியாமல் போனதாகச் சொல்லப் படுகிறது.

தற்காலத்தில் யோனி என்ற சொல் கவிதைகளில் அதிகம் புழங்குகிறதுண்டு. சங்கக் கவிதை புரிந்தவர்கள் ’அல்குல்’ என்ற தலைப்பைக் கண்டதுமே விசயம் பிடித்திருப்பார்கள். ஆனால், அல்குலின் பொருட் பதம் வேறு என்று வாயாடுபவர்கள் உண்டு. ஆக, இந்தக் கட்டுரை பெண் பாலுறுப்பைக் குறிக்கும் சொற்களில் இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்தததாகவும், பொருள் திரிந்து உரை செய்யப்பட்ட ‘அல்குல்’ என்ற சொல்லரசியலையும், அல்குல் வழிதோன்றிய உலகலாவிய வேர்ச்சொற்களையும், பெண் பாலுறுப்பு தொடர்புடைய நம்முடைய தமிழ் தொன்மங்கள், நாட்டார் நம்பகங்கள், தெய்வ வழிபாடுகள், வேளாண் விழாக்கள், இயன்முறைச் சடங்குகள், அதன் மீது கட்டமைக்கப்பட்டுவிட்ட உளவியல், பாலியல் நூற்குறிப்புகள், பிறகு, வழிபாட்டு அம்சத்திலிருந்து சிதைத்தொழிக்கும் நிலைக்கு ஓர் உடலுறுப்பு நகர்ந்து வந்திருக்கும் வரலாறும், அதன் மீதான பண்பாட்டுத் தாக்கங்ளையும் தயக்கங்கள் களைந்து உரையாட முயல்கிறது.

சொல் வேறு பொருள் வேறு

அல்குல் என்ற சொல்லைப் பிரித்துப் போட்டால், அல்=இருட்டு; குல்=குழிந்த என்றும் பொருள் தரும். ‘அல்கு’ என்ற சொல்லுக்குச் சுருங்குவது, குறுகுவது, நிலைப்பது, தங்குவது, சேர்வது, சேமிப்பது என்ற வினைகளைச் சுட்டிக் காட்டுகிறது. அல் என்ற சொல்லில் இருந்தே அலி என்ற சொல் பிறந்தது. அல்குல் இல்லாதவள் அலி. அல்+இ = அலி.  கூடவே, ‘ஆ’ என்ற சொல் தொடக்கத்தையும், பெண் பாலுறுப்பையும் ஒருசேரக் குறிக்கும் சொல். ஆ’லிங்கனம்- ஆ இலங்கும் (லிங்க) குறியில் காணப்படும் அடிப்பகுதி. உலை=வாயகன்ற கலம். பிறப்பின் தொடக்கம் (ஆ+உல்)

மதங்கள் நிறுவனமாகத் தலைதூக்கத் துவங்கிய காலகட்டத்தில், பாலியல் என்பது எதிர்மறை அம்சமாகக் கருதப்பட்டது. உடல், காமம் குறித்தான கொண்டாட்டங்கள் புறந்தள்ளப்பட்டன. உடலை வருத்தி தவமிருப்பதும், உடலைத் துறப்பதன் மூலமே வீடுபேறு அடைய முடியும் என்ற கருத்து உருவாக்கமும் பாலியல் சங்கதிகளைக் குறித்து அவலமான தோற்றத்தை ஏற்படுத்தின. இதில் பெண்ணுடல் மீது நிகழ்த்தப்பட்ட வன்மம் பால் உறுப்புச் சொற்களின் மீதும் வெளிப்பட்டது.

தமிழ்ச் சங்க இலக்கியங்களில், அகலெழில் அல்குல், அங்கரவு அல்குல், ஐதுஅகல் அல்குல், தொடலை அல்குல், திதிலை அல்குல், வரி அல்குல், மாவரி அல்குல், மடவார் அல்குல், பையரவு அல்குல் நிறை அல்குல், பசுங்கால் அல்குல், புரல்வரும் அல்குல் ஏந்துகோட்டு அல்குல் என இருபால் புலவர்களும் வெவ்வேறு விதவிதமாக அல்குலைப் பாடி இருக்கிறார்கள். பிற்காலத்தில் அவற்றைத் தொகுத்து, உரைபடுத்திப் பதிப்பித்தவர்கள், அவரவரது சமூக மதிப்பு, கலாச்சாரப் பாதுகாப்புணர்வு, கருத்தியல் ஆகிய வட்டங்களுக்குள் நின்று சொல்வேறு பொருள்வேறு என்று ஆக்கினர்.

இவைபோலவே சங்கப் பிரயோகங்களிலும், நாட்டுப்புறத்திலும் பெண் பாலுறுப்பு குறித்த வர்ணனைகள் ஏகபோகம். அவற்றை இன்னது இவற்றிற்கு என்று பொருள் என்று உரை படுத்துவது, அவற்றைத் தொகுத்தவர்கள் கொடுத்த விளக்கங்களை முன்வைத்தே உண்டானது.

உதாரணமாக, காலத்தால் மிகப்பழமையானது என்று பொழுதுக்கும் திரித்துச் சொல்லப்படும் ரிக்வேதத்தை எடுத்துக் கொள்ளலாம். ரிக் வேதத்தில் வரும் இந்திராணி, “புணர்ச்சியின்போது ‘தொடை’யைத் தூக்கித் தருபவள் என்னைவிட எவளும் இல்லை. எவன் உறுப்பு மயிர் அடர்ந்து, பெரிதாகி ஆற்றலை வெளிப்படுத்துகிறதோ அவனே என்னுடனான புணர்ச்சிக்குத் தகுதியானவன். அதன்படி, இவ்வுலகில் இந்திரனே பெரியவன்” என்கிறாள்.

கம்பராமாயணம் பாடிய கம்பர், ‘அவனே கொல் என்று அய்யம் நீங்கினாள். வாமமேகலை இற வளர்ந்தது அல்குலே’ என்று ராமனை அறிந்ததும் சீதையின் அல்குல் வளர்ந்தது என்கிறார். கூடவே, ‘தார் ஆழிக் கடல்சார் அல்குல், தேர் இவை பழிபடப் பரந்த பேர் அல்குல்’ என்று சீதையின் ‘இடையைக்’ கடலுக்கும், தேருக்கும் ஒப்பாக்கி எழுதுகிறார்.

சங்க இலக்கியங்கள் முதல் வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், பக்தி இலக்கியங்கள், பெரும், சிறுகாப்பியங்கள், கலம்பகம், நிகண்டுகள், சிற்றிலக்கியங்கள், சித்தர் பாடல்கள், உரைநடைகள் வரைக்கும் எழுதப்பட்ட ஆவணமாகக் கிடைக்கும் தமிழ்ப் படைப்புகள் யாவும் வேறுவேறு காலகட்டத்தில் வாழ்ந்த வெவ்வேறு புலவர்களால், ஆசிரியர்களால் இயற்றப் பட்டவை. குறிப்பாகச் சங்க இலக்கியங்களாகக் கருதப்படும் மொத்தமேயான 36 நூல்களில் 50 சதவிகிதமாக இருக்கும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் ஐந்து முதல் ஏழாம் நூற்றாண்டுகளில் சமணர் இயற்றியவை. இக் கீழ்கணக்கு நூல்களில் பல 19ஆம் நூற்றாண்டில் அச்சிப் பதிப்பில் வந்தன. அவற்றில் பெரும்பாலான நூல்களுக்கு உரைகள் இல்லை. அந்நூல்களின் பதிப்பாசிரியர்கள் வேறுவழியின்றி, தாங்கள் அறிந்த பண்டிதர்களைக் கொண்டு அவற்றுக்கு உரை செய்தனர்.

கீழ்கணக்கு நூல்களைப் போலல்லாமல் காலத்தால் முந்தைய (அல்லது காலம் கணிக்கப்படாத) எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றுப் பாடல்களைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகன் உருத்திரசன்மர். தொகுக்கச் செய்தவர் கடைச்சங்க பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதி. எட்டுத்தொகையின் ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் கூடலூர் கிழார், தொகுக்கச் செய்தவர் மாந்தரஞ்சேரல் இரும்பொறை எனும் சேரமன்னன். கலித்தொகையும் கூட நல்லாந்துவனார் மற்றும் பலரால் இயற்றப்பட்ட பாடல்களைக் கொண்டது என்றே ஓர் வாதமிருக்கிறது. இப்படி வெவ்வேறு நிலப்பரப்புகளில், மாறுபட்ட வாழ்க்கை முறையைக் கொண்ட மக்களின், மன்னனின் வாழ்க்கையைப் பாடிய புலவர்களின் பாக்கள் பலகாலங்கள் கழித்துச் சேகரிக்கப்பட்டு, அங்கும் இங்குமாக இடைச்சொருகலும் பண்ணப்பட்டு, நூலாகின.

அந்நாட்களிக் இந்தப் பதிப்பு விசாரங்கள் கொடுத்த பெருமிதங்களால் சிலபல போலிகளும் கூட தமிழ் இலக்கியத்துள் ஊடுருவினதுண்டு. உதாரணமாக, திருநெல்வேலி சுவர்ணம் பிள்ளை என்பவர் தனக்குக் கிடைத்த பழம்நூல் என்று ‘ஊசிமுறி’ என்ற நூலைத் பேராசிரியர் நமசிவாய முதலியாரிடம் தெரிவிக்கிறார். அவர் அதனைப் பொருள் கொடுத்து வாங்கி ஆராய்ந்தபோது, அது போலி என்று தெரிந்து கிழித்து எறிந்திருக்கிறார். நமச்சிவாய முதலியார் மாதிரியானவர்கள் போலிகளை சிலவேளைகளில் கிழித்தெறிந்தார்கள். அவ்வளவுதான் சொல்லமுடியும்.

இந்தச் சூழலில் சங்க நூல்களுக்கு உரை எழுதி பதிப்பித்தவர்களில் குறுந்தொகையை பதிப்பித்த திருக்கண்ணபுரம் சௌரி பெருமாள் அரங்கனார் தன் கலாசாரக் கருத்தின்படி, ’அல்குல்’ என்ற சொல்லை அறவொழித்து, மருங்குல் எனப் பதிப்பித்ததாகப் பெருமையே பட்டிருக்கிறார். இன்னும் ஒருபடி மேலாகப் போய், அகராதி செய்வோர், இச்சொற்களுக்கு மக்களுக்கே அர்த்தம் தெரியும் என்பதால் விட்டுவிட்டோம் என்கிற ரீதியில் சொல் தூய்மை கடைபிடித்தனர். வேறு சிலர் அல்குல் என்பதற்கான அர்த்தத்தை மாற்றிச் சொன்னால் ஆகிறது என்று அருஞ்சொற்பொருளில் கைவைத்தார்கள். ஆக, இப்பண்டித உரையாசிரியர்களின் அடிப்படைவாதக் கருத்துகள், நூல் பரிச்சயமின்மை, அன்றைய கலாசாரச் சூழல், அரசு, மதம், மற்றும் சமூக வாழ்நிலை ஆகிய காரணங்களினால் இலக்கியங்களில் சொல்லொன்று பொருளொன்று என்று கதைகட்டினார்கள். இதற்கு ஸ்மார்த்த வேதங்களும் தப்பவில்லை.

ரிக் வேதத்தில், இந்திராணி புணர்ச்சியின்போது, தூக்கித் தருவதாகச் சொல்லுவது ‘தொடை’ என்று அதன் ஆங்கில மொழிப் பெயர்ப்புக்கான உரையில் இடம்பெற்றிருக்கிறது. கம்பன் பாடல்களில் வரும் சீதையின் அல்குல் வர்ணனை அவளின் இடையைக் குறிப்பதாகச் சமயவாதிகள் வாதிட்டார்கள். ஆனால், கம்பனும், இந்திராணியும் குறிப்பிட்டுச் சொல்லும் அல்குல் சொற்பதம் தொடையுமல்ல இடையுமல்ல அது ‘பெண்ணின் பாலுறுப்பு’ தான். இதனை உலக மொழிகளின் வேர்ச் சொற்களைக் கொண்டே புரிந்துகொள்ள முடியும்.

வேர்சொற்கள்

கிறிஸ்து பிறந்த காலக் கட்டம் முதல் இன்றுவரை பயன்பாட்டில் உள்ள அல்லது வழக்கொழிந்த உலக மொழிகளின் பல சொற்கள் நேரடியாத் தமிழ்தன்மை உடையவை. அவற்றுள் பெண்ணின் ‘அந்த’ உறுப்புச் சம்பந்தமானச் சொற்களுக்கு லத்தீனில் வல்வா, புடேர் (Pudere) என்றும், ஆங்கிலத்தில் கண்ட், வெஜினா, புடண்டா, புடெண்சி, புடெண்டா என்றும், ஜெர்மனியில் குண்டே, டட்சில் குண்டே, எபிரேயம் காட் என்றும் பேர் சொல்லப்படுகின்றன. இவற்றில் ஒலி மற்றும் அர்த்தப்பூர்வமாகப் பகுக்கும்போது, லத்தீனின் வல்வா, ‘உல்வா’-க்குத் தொடர்புடையது எனலாம்.

உல்வா என்பது பெண் பாலுறுப்பு. லத்தீன் வல்வாவும், கிரந்த உல்வாவும் அல்குலின் இணைப்பிறவிகள். ஆங்கிலச் சொற்களான ‘Cwithe’, ‘Pudenta’, ‘Pudendum’, ‘Cunt’, ‘Vegina’ ஆகிய சொற்கள் தமிழின் புண்டை, கூதி, யோனி ஆகியச் சொற்களின் ஒலி உறவோடு கிளம்பியவை. இதில் கூதி என்ற சொல் கூர்மை, ஆழம் எனப் பொருள் கொண்டது. புண்டை என்பது விடாய் காலங்களில் பெண்ணுறுப்பில் ஏற்படும் ரத்தக் கசிவை புண் காயங்களின் ரத்தக் கசிவோடு தொடர்புபடுத்தி உண்டான சொல். பெண், பெண்டு, புண்டை, புணர் என்ற தொடர்புகளும் அதற்குண்டு. யோனி அல்குலின் ஆழத்தைக் குறித்து உருவான சொல். அதற்கு உறை என்றும் பாதை என்றும் இருவேறு பொருள்கள் உள்ளன.

“தாயாகப் போகிறவளே உன் யோனியைப் பிளந்து, விரித்துத் தாயையும் சேயையும் பிரிப்பேன். உன் கருப்பைக் கீழிறங்கும்” என்று பிறப்பைக் குறிப்பிடும் பாடல் ஒன்று அதர்வ வேதத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், வழக்கில் உள்ள ஆங்கில மொழிபெயர்ப்புகள் இச்சொற்களை வேதப் புனிதம் கருதி அகற்றவே விரும்பினர்.

பெண் உறுப்பின் மேல்ப் பாகத்தின் பெயர் அல்குல், அதன் பாதைக்குப் பேர் யோனி, அதன் உட்பகுதி யோனி சுவர், அதன் சுரப்புக்கு சோணிதம் (ஆண் சுரப்புக்கு விந்து, இந்திரியம், இரேதஸ் என்று பெயர்களுள்ளது போல் பெண்ணுக்கும் உண்டு). இந்த யோனியின் வெளி மற்றும் உள் தசை மடிப்புகளையே வடிவ அலங்காரங்களைக் கருதி மாவரி அல்குல், மடவார் அல்குல், திதிலை அல்குல், கோடேந்து அல்குல், பையரவு அல்குல், பசுங்கால் அல்குல் என உவமை பாடினர் கவிஞர்கள்.

மாறாக அல்குல் என்ற சொல் பாலுறுப்பை அல்லாமல், ஆண் பெண் இருபாலரின் புட்டம் என்றும், மடி என்றும், கண் இமை என்றும் வேறு உடல் உறுப்புகளைச் சுட்டுவதாகக் குறிப்பிடுவது பண்டைய பண்டிதமணிகளின் இலக்கியத் தூய்மைவாதத்திற்கு வேண்டுமானால் உதவக் கூடும். 

பெண் பாலுறுப்பு: உளவியல் பார்வைகள் & நம்பிக்கைகள்

தமிழில் வழங்கப்படும் வசைச் சொற்களைச் சேகரிக்கும் முயற்சிகளை நானும் என்பங்குக்கு ஒருசமயம் மேற்கொண்துண்டு. அப்போது, அவற்றில் பெண் பாலுறுப்பையும், பெண்ணுடன் மேற்கொள்ளும் உடல் மற்றும் உறவு வழக்கங்களையும், அதன் பிறப்பு விளைவுகளைக் குறித்துமே பெரும்பாலான சொற்கள் புழங்குவதை அறிந்துகொண்டேன். மானுடவியல் ஆய்வாளர்களும், இனக்குழு ரீதியில் வாழ்க்கை ஒழுக்காறுகளைக் கவனிக்கும்போது, இந்தப் பாலியல் ஒழுங்கு பற்றிய கீழ்மையான எண்ணங்களை வெளிப்படுத்தத் தவறுவதில்லை. இந்த உளவியல் எங்கிருந்து துவங்கியது? நேரடி பதிலில்லை.

அடிப்படையில் நானும் எதிர்பாலினமான பெண்ணின் உடல் குறித்தும், பருவம் எய்துதல், பூப்பு, வளர்ச்சி மாற்றங்கள், ருது நாட்கள், சூல், பேறு குறித்த அறியாமைகளோடு வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவனே. ஆனால், காலத்தே சென்றுசேர்ந்த நாட்டுப்புறவியல் ஆய்வுக் களங்களும், கதைசொல்லிகளும் மானுட உடல் மற்றும் உறவு குறித்த அறிவைப் பெறுவதற்கும், அதில் பால் வித்தியாசங்களைப் புரிந்துகொள்வதற்குமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தார்கள். ஒருகட்டத்தில் கதை சொல்வதை விட்டுவிட்டு, அந்தக் கதைகளுக்கும் அதில்வரும் பொருள்களுக்கும் இடைப்பட்ட குறியீட்டுத் தன்மைகளைப் பாலியல் விளக்கங்களோடு சொல்ல ஆரம்பித்தார்கள்.

உதாரணமாக, மின்னலில் இருந்து பழங்கால மனிதன் நெருப்பைக் கண்டுபிடித்தான் என்பதற்குப் பதிலாக ஒரு குச்சியினால் வட்டவடிவ மரக் கட்டையைக் குடைந்து குடைந்து அதிலிருந்தே நெருப்பை உருவாக்கினான் என்பர். இங்கே குச்சியும் குழிக்கட்டையும் ஆண் பெண் பால் உறுப்புகளின் குறியீடுகள். இதுபோல, குச்சி, மரம், குடை, கத்தி, பென்சில், சம்மட்டி இதெல்லாம் ஆணின் குறி உருவகங்கள். குகை, நிலம், கதவு, பூக்கள் இதெல்லாம் பெண்பால் உருவகங்கள். இதனூடாகத்தான் மறைவாய்ச் சொல்லப்பட்ட கதைகளில் இடம்பெறும் ஆணி அடித்தல், குதிரைச் சவாரி, மலையேற்றம் போன்ற வினைகள் பாலுறவை மேற்கொள்வதன் அடையாளமாக மக்கள் மொழிக்குள் புழங்குவதை உள்வாங்க முடிந்தது.

வயற்கழனிகளில் முன்பெல்லாம் பெண் பொம்மைகள்தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இப்போது தான் பேண்டு சொக்காய் போட்ட ஆண் பொம்மைகள் மட்டும் நிற்கின்றன என்றார் என்னுடைய ஓர் கதைசொல்லி. பிறகு, அவரே பெண் பொம்மைகள் நிறுத்தப்பட்டதற்கான காரணத்தைச் சொல்லத் தொடங்கினார். அதாவது, பெண்ணின் காலடியில், அவளது பாலுறுப்பைக் கண்டு வளரக்கூடிய பயிர்கள் அனைத்தும் தன்னை வித்துள்ள ஆணாக அவளுக்குக் காட்டிக்கொள்ள வேண்டுமென்று விரைந்து செழித்து விடைக்கும் என்றும், பெண் பாலுறுப்பு வேளாண்மையில் செழிப்பிற்கான அடையாளம் என்றும் ஒரு கதையினூடாகச் சொல்லி முடித்தார்.

தஞ்சையை ஒட்டிய புனல்வாசல் பகுதிகளில் வயல்நாற்றங்காலை மறுநடுவு செய்யும்போது, கன்னிப்பெண் ஒருத்தரின் கையில் அவற்றைக் கொடுத்துக் கழனியில் நடச் செய்வதும், பயிர்செழிக்கத் துவங்கும் காலத்தில் தம் பெண்டிரை வரப்பைச் சுற்றி நடந்துவரச் செய்யும் சடங்கினை நடத்துவதையும் என் நேரடி கள அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

கொடிநிலை மற்றும் கந்தழி

இயற்கையைப் பொறுத்தவரை பெண்ணின் பாலுறுப்பு ஆற்றல் கருவி. சந்ததிகளை அதுவே பெருக்கித் தந்தது என்ற நம்பிக்கை வேளான் மரபில் இன்றும் பட்டும்படாமலும் நிலைத்திருக்கிறது. மேலும் இந்தத் தொன்மம் மதரீதியிலான சடங்குகளுக்குள்ளும் மறைந்து தொடர்கின்றன.

’கொடிநிலை’ என்பது தந்திர வழிபாட்டிற்குறிய ஒருவகை புணர்ச்சிச் சடங்கு. கந்தழியும் அவ்வாறான சடங்கே. கொடிநிலை பெண்ணின் பிறப்புறுப்பையும், கந்தழி ஆணின் பிறப்புறுப்பையும் மையப்படுத்தி நடத்தப்பெறும் தந்திர வழிபாடுகள். இவ்வகைச் சடங்குகளில் ஆண்குறி வழிபாடு பின்னாளில் கந்த வழிபாடானதை சங்க இலக்கியத்தின் எட்டுத்தொகை நூலான பரிபாடலில் தொடைநலம் துள்ளிவிளையாடும் 18-19ம் பாடல்களில் அறியலாம்.

பெண் பாலுறுப்பு வழிபாடு தமிழ் நிலத்தில் தாய் தெய்வத்தைத் தலைமையாகக் கொண்ட இனக்குழு அமைப்பில், கொற்றவையின் மகனான முருகு போர்த் தெய்வமாக வழிபடத் துவங்கும் காலத்திற்கு முன்பே இருந்து வந்துள்ளது. தன் இனக்குழுவின் ‘கொடிநிலை’ காக்கும் வளமைச் சடங்கில் பெண் பாலுறுப்பு வழிபாடு முக்கிய நிகழ்வாக இருந்து வந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள சிவன், திருமால் ஆலய கோபுரங்கள், தூண்கள், சுற்றுச்சுவர்கள், தேர்கள் ஆகியவற்றில், ஆடையின்றி நிற்கும் பெண்ணின் (மோகினி) பாலுறுப்பை வணங்கி நிற்கும் நிர்வாணத் துறவர்களின் சிற்பங்களைக் காண முடியும். குடுமியான்மலை சிகரகிரீஸ்வரர் ஆலயப் பிரகாரத்தின் இடபுறத் தூணில் காணப்படும் ஆடையற்ற மோகினிச் சிற்பம் இதற்குச் ஓர் சிறந்த உதாரணம்.

துறவர்கள் பெண்ணின் பிறப்புறுப்பை வணங்கும் மந்திரச் சடங்கினை மகோததி தந்திரம் எனும் நூல், இவ்வாறு விவரிக்கிறது. ”ஓர் அழகிய இளம்பெண்ணின் பாலுறுப்பைக் கண்டு பத்தாயிரம் மந்திரங்களைச் செபிப்பவன் தேவகுருவுக்கு நிகரானவன். தூரமான பெண்ணின் குருதியோடு கூடிய பெண்ணுறுப்பைத் தியானித்துக் கொண்டு பதினாயிரம் முறை உருப்போடுகிறவன் மதுரமான பாடல்களால் இவ்வுலகினை மயக்குவான்” – மகோததி தந்திரம்: பாடல் 57 மற்றும் 60.

இத்தகைய சடங்குகளை ஆசீவகர்களும் மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதை மற்கலி கோசர் உயிர்நீத்ததாகக் கருதப்படும் சித்தன்னவாசல் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அறப்பெயர் சாத்தன் கோயில் சுதைச் சிற்பத்திலும், மதுரை அரிட்டாப்பட்டி ஐயனார் கோவிலிலும் நேர்சென்று கண்டதுண்டு.

பெண்ணின் சூல் பொருளில் தான் உலகமே தோன்றியதாகச் சொல்கின்றன உலக நாட்டுப்புறக் கதைகள். அதிலிருந்தே அவள் நெருப்பையும் கொண்டு வந்தாள். அதைக் கொண்டே மழையையும் வருஷிக்கச் செய்தாள் என்பன போன்ற பூமியின் கதைகள் ஆப்பிரிக்கப் பழங்குடிகளிடம் விளங்குகின்றன.

நாற்பதாண்டுகள் முன்புவரைக்கும்கூட, மழைபெய்யாத கிராமங்களில் ஆடை அணியாத பெண்ணை ஊரை வலம்வரச் செய்யும் வழக்கத்தைக் கைக் கொண்டிருந்தார்கள். சேலம் சேர்வராயன் மலையைச் சேர்ந்த பழங்குடிப் மக்களிடமும் இந்தப்பழக்கம் இருந்து வந்தது. ஆண்கள் அனைவரும் மலையைவிட்டு இறங்க, பெண்கள் மண்ணால் செய்த உருவங்களைக் கொண்டு அந்த விழாவை நடத்தினார்கள். தருமபுரி மாவட்டத்தில் இச்சடங்குகளின்போது பாடப்படும் பாடலுக்கு சூந்துப்பாடல்கள் என்று பேர். இவ்வகைச் சடங்குகளினால் மழைபெய்விக்க முடியும் எனவும், இயற்கை சக்திகள் பெண்ணிற்குக் கட்டுப்படும் என்பதாகவும் நம்பப்பட்டு வருகிறது. நாளடைவில் அவை பெண்ணுக்கு எதிரான ஆயுதமாகவும் வக்கிரமான மாற்றமடைந்திருந்தது.

சக்தி பீடம்

புராணத்தின்படி, தட்சனைக் கொன்றபிறகு அயனின் தாண்டவம் நிகழ்கிறது. ஆடவல்லானின் கொந்தளிப்பை நிறுத்துவதற்காக திருமால், அயன் கையில் ஏந்தி ஆடும் சக்தியின் உடலைத் துண்டு துண்டாக்குகிறார். ஆயினும் திக்கனைத்தும் சடைவீசிய ஆட்டம் நின்றபாடில்லை. ஆட்ட வேகத்தில் சக்தியின் உடல் திசையெங்கும் சிதறுகிறது. அவளது உடல்பாகம் சிதறிய இடமெல்லாம் சக்திக்கு ஆலயங்கள் உருவாகின்றன. அப்படி உருவான பீடங்களில் அவளது அல்குல் (பாலுறுப்பு) விழுந்த இடமாக அசாமின் நீலாச்சல் மலைச் சிகரம் (கவுஹாத்தி) அடையாளங் கொள்ளப்படுகிறது. அதன் இன்றைய பெயரே காமாக்யா.

படகுகள் மூலமே செல்லமுடிகிற இந்த காமாக்யா கோயிலின் உள்ளே பாறையில் வடித்த அல்குல் வடிவ குழி பீடத்தைத் தவிர வேறு வழிபாட்டுச் சின்னம் எதுவும் அங்கு கிடையாது. குகை வடிவில் கட்டப்படுள்ள அந்தக் கோயிலின் நடுவே நெற்றிக்கண் தோற்றத்தில் அல்குலும், அதன் மையத்தில் வட்டவடிவ கருவிழித் தோற்றமும், அதன் கூரான கீழ் முனையிலிருந்து நீர் சுரந்துகொண்டே இருக்கிறது, அதற்கு யோனி தீர்த்தம் என்று பெயர்.

2018ம் ஆண்டு அஸ்ஸாம் சென்றிருந்தபோது, காமாக்யா கோயிலின் அமைவிடம் மற்றும் வரலாற்றைத் தெரிந்துகொண்டேன். காமாக்யா யோனி ஊற்றின் மீது கூச் பீகார் மன்னரால் பின்னாளில், தேவியின் அவதாரங்களாக திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலா ஆகிய புடைப்புச் சிற்பங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. காளி, தாரா, தமுவாட்டி, பாகலாமுகி, பைரவி, சின்னமஸ்தா, புவனேஸ்வரி மற்றும் ஆகிய ஏழு அவதாரங்களின் கோயில்கள் வெளியே அமைக்கப்பட்டுள்ளன.

பிறப்பின் முதன்மை அடையாளமான அல்குல் வழிபாட்டுக்கு மாதத்தில் ‘மூன்றுநாட்கள்’ நோன்பு நாட்களாக அனுஷ்டிக்கப்படுகிறது. அல்குலைச் சுற்றி மஞ்சளிட்டு, தென்னங்காய்களைப் படைத்து வழிபடுபவர்களுக்கு, காமாக்யா ஊற்றின் யோனி தீர்த்தமும், செந்நிறப் பூக்களும், குங்குமமும் பிரசாதமாகவும் கையகல சிவப்புத் துணியில் வழங்கப்படுகின்றன. காமாக்யா கோயிலில் கண்ணில் படும் இடமெல்லாம் சிவப்பு நிறம்.

இறைவனிடம் தனக்குரியதென இறைவி மொழிந்த பீடங்களான 51 சக்தி பீடங்களில் காமாக்யாவே முதன்மையான பீடம் என்று தந்திர சூடாமணி நூல் குறிப்பிடுகிறது. தவிர, சக்தி வழிபாட்டின் முதன்மை யோனி வழிபாடு என்றாகிறபோது, அதன் இரு மார்க்கங்களான தட்சண, வாம மார்க்கங்களில் இடதுகைப் பிரிவினரான வாம மார்க்கத்தினரின் தந்திரிக வழிபாடு அதில் முக்கியத்துவம் பெறுகிறது. இதன்படி பஞ்சபூதங்களையும் மனதில் கொண்டு அவர்கள் நிகழ்த்தும் மத்யம், மாமிசம், மத்சியம், முத்திரை, மைதுனம் என்ற ஐந்தும் மது அருந்தி, கறியும், மீனும் உண்டு, உடல்மொழியினால் ஆடவரைக் கவர்ந்து உறவு கொள்வதைக் குறிக்கிறது.

பேதமின்றி வட்டமாய் அமர்ந்து பெண்ணுடலோடு கூடுகிற இந்த வழிபாட்டுப் பழக்கம் ஹரப்பா, மொஹஞ்சதரோ காலத்திலே உண்டு என்கிறார் ஆஸ்திரிய ஆய்வாளர் ஸ்டெல்லா கிராம்ரிச். இந்த வழக்கம் நாட்டுப்புறங்களில் வேறு வடிவமெடுத்து, பாலியல் பேச்சுக்களோடு நின்றுபோவதும், அவ்வையார் நோன்பு போல பெண்கள் மட்டும் கலந்துகொள்வதுமாக பிற வடிவங்களை அடைந்ததும் உண்டு.

பெண்கள் மட்டுமே கொண்டாடுகிற அவ்வையார் நோன்பு பற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் கி.ரா., அது பெண்கள் மட்டுமே ஒன்றுகூடி நடத்தும் பாலியல் பூசை என்கிறார். பூசைக்காக அவிக்கும் கொழுக்கட்டையைக் கூட ஆணின் கண்பார்வைக்குக் காட்டாமல் இளம்பிராயப் பெண் பிள்ளைகளுக்குத் தின்னக் கொடுப்பார்களாம். பெண்ணின் உடல் அறிவியல் குறித்து அவர்களுக்கே உணர்த்தும் விதத்தில் அமைகிறது இந்த நோன்புச் சடங்கு. 

லஜ்ஜா கவுரி

காமாக்யா போல அல்குல் வழிபாட்டுத் தெய்வங்கள் இந்தியாவில் பல பகுதிகளில் காணப்படுகின்றன அவற்றில் தலையாயது லஜ்ஜா கவுரி (Lajja Gouri). தலை இல்லாத, தலைக்குப் பதிலாகத் தாமைரைப் பூவை அணிந்த, புணர்ச்சிக்குத் தயார் நிலையில் கால்களை உயர்த்தியபடி, உடல் உறுப்பைத் திறந்துகாட்டிக் கொண்டு இருக்கும் இந்த லஜ்ஜா கவுரிகள் வழிபாட்டுக்கு உரிய பிறப்பின் தெய்வங்களாக வழிபடப்படுகின்றன. பிள்ளைவரம் வேண்டுபவர்கள் கங்கைச் சமவெளி, தக்கான பீடபூமி, மற்றும் தென் இந்தியாவின் சில பிரதேசங்களில் லஜ்ஜா கவுரிகளை வழிபடுகிறார்கள். (கவுரி; கவுஹாத்தி, காத்மாண்டு, ஆகியவை அல்குலின் வேர்ச்சொற்களோடு தொடர்புடையவை என்பது இங்கே கவனிக்கத் தக்கது.)

இந்த லஜ்ஜா கவுரிக்கு ஆனந்த தேவி, நாக்னமாதா, கும்கனா, அதிதி, இலபா, நாக்ன காபந்தா, ஜகுலாம்பா, யமை, மகாகுண்டலினி என்று பலபெயர்கள் வழக்கத்தில் உள்ளன. இந்தப் பெயர்கள் அனைத்தும் உடல் தோற்றத்தைக் குறிக்கும் சொற்கள். நாக்ன காபந்தா என்பதற்கு நிர்வாணம் மற்றும் தலையற்ற உடல் என்று பெயர். தலையில்லாத உடல்கொண்ட பெண் தெய்வங்களும், நின்ற நிலையில் உடலைத் திறந்து, அல்குலைக் காண்பிக்கும் தெய்வங்கள் தமிழகத்திலும் உண்டு. (வட ஆற்காடு கோயில் சிற்பங்கள்)

லஜ்ஜா கௌரியின் பாலுறுப்பில் கிளிட்டோரிஸ் ஒரு மாங்கொட்டை போல துருத்தித் தெரியும். பூசை செய்பவர்கள் அதில் வெண்ணை பூச்சு செய்து, அதில் குங்குமத்தை இட்டு, அதன் மீது மஞ்சள் தடவி, பூக்களைச் சொறுகி வைக்கிறார்கள். இது புணர்ச்சிக்கான அசைவியக்கச் செயல்களைக் குறிக்கிறது. மலர் என்பது இனப்பெருக்கத்தின் குறியீடாகக் கொள்ளப் படுகிறது.

பிற்காலத்தில் இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகச் சிவனின் மனைவியர் ஆக்கப்பட்டனர். பிறகு, தாய் தெய்வ வடிவேற்றதும் உடலை மறைக்கும் ஆடைகள் அணிவிக்கப்பட்டனர். பெண் தெய்வக் கோயில்களில் இடம்பெறும் ‘புடவை சாற்றும்’ பழக்கத்தின் வேர் இங்கிருந்து புறப்பட்டதே.

என் நீண்ட தேடலின்போது, சீன ஓவியம் ஒன்றில் லஜ்ஜா கவுரியின் உருவம் இடம்பெற்றுள்ளது. அதே போலான சிற்பம் ஒன்றும் செர்பியாவில் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து, எகிப்து, ஈரான், மெசபடோமியா என பாலுறுப்பு வழிபாட்டைக் கொண்ட பெண் தெய்வங்களின் பட்டியல் நீண்டு கொண்டேபோனது. அவை அனைத்தும் ஒன்றை மட்டும் எனக்குப் புரிய வைத்துக் கொண்டே இருந்தது. உலகெங்கும் பரவியிருந்தது பிறப்பு உறுப்பின் வேர்ச்சொல் மட்டுமில்லை; உலகின் நாகரிகத் தோற்றங்களுக்கு முந்தைய காலகட்டத்தின் மானுடத் தொடர்புகளும் தானென…

பாலுறுப்பு பராமரிப்பு

இந்த விஷயங்களை எழுதும்போது கி.ரா பெயர் அடிக்கடி வந்துவிடும். தவிர்க்க முடியாது. தாத்தா ஸ்தானத்தில் உட்கார்ந்து கொண்டு அவரே பலதையும் அக்குசுக்காய் எழுதியும் சொல்லியும் வழிநடத்தியிருக்கிறார். கதைக்கும் கதை சொல்கிற மனிதரவர். அவரும், கழனியூரனும் சேர்ந்து தொகுத்த மறைவாய் சொல்லப்படும் பெண் பாலுறுப்பு சம்பந்தமான கதைகளில் அவர் சில பராமரிப்பு விசயங்களைக் குறிப்பிடுகிறார். அதாவது மேல் குடிமட்டப் பெண்கள் மாதமிருமுறை அம்பட்டர் வீட்டுப் பெண்களை ரகசியமாக அழைத்துவந்து, அவர்களைக் கொண்டு தங்கள் அல்குல் மயிர்களைச் சிரைத்துக் கொள்வார்களாம். அதற்கு வசதியற்ற வீட்டுப் பெண்கள் சிவப்பு ஆதாளைச் செடியின் இலைகளைப் பறித்து, அதன் நீர்மத்தை பாலுறுப்பின் மேலே தடவி, வெளித்தோல் மரத்துப் போனதும், அந்தரங்கமாகத் தங்கள் கைகளினாலே அல்குல் மயிர்களைப் பிடுங்கியிருக்கிறார்கள். (ஆதாளை என்பது நில ஆமணக்கு என்றும் அறியப்படுகிறது.)

அக்காலத்திலே தன் அல்குலைத் தான் பார்ப்பதே தவறென்று கருத்திருந்தது. கன்னியாஸ்திரிகளும்கூட ஆடையோடு தான் குளிக்கவேண்டும் என்பது மதக் கட்டளை. கதவு சாத்தப்பட்ட அறைகளுக்குள்ளும் ஆடை எதற்கு என்று கேட்டால் கடவுள் பார்ப்பாரே என்று பதில் வந்ததாக பெர்ட்ரண்டு ரசல் குறிப்பிடுகிறார். இடைக்கால வரலாற்றின் பெண் தன் உறுப்பு குறித்து அறியாதவளாக வளர்ந்தாள். வளர வளர உடலில் நிகழும் மாற்றத்தால் தன் அல்குலைப் பார்க்கவும் தொட்டு அறியவும் முடிந்தாலும், பூஞ்சை முடிகள் முளைக்கும் தருணத்தில் அச்சம் கூடிப்போனவர்கள் ஆனார்கள். அவர்களது மூத்த பெண்களும், பாட்டிமார்களுமே அவர்களின் அச்சம் களைந்தார்கள்.

அல்குல் இல்லையெனில் உயிர்ப்பெருக்கம் இல்லை. உடலின் சிறுநீர், உதிரப்போக்கு, பேறுகாலக் கழிவு, பிள்ளைபிறப்பு ஆகியவற்றின் ஆதார உறுப்பாக அல்குலே விளங்குகிறது. இருந்தும் இவற்றைக் குறித்து பேசுவது பாவம் என்ற கருத்து உண்டானது. தாய் தன் மகள் பூப்படையும்போது அதைக் காணுவது தரித்திரம் என ஒரு சில இனக்குழுக்களில் இன்றும் அதனைத் தீவிரமாகக் கடைபிடித்து வருகின்றனர். பெண்ணுக்கே இந்த நிலை தொடர்ந்தபோது, எதிர்பாலினத்தின் அறிவீனம் பற்றிச் சொல்லவேண்டி இராது.

பெண் தன் வாழ்நாளில் 400 முறை மாதவிடாய் ஆகக்கூடும். பூப்படைவது முதல் ஏறத்தாழ 34 ஆண்டுகள். தற்போது, பொருளாதாரமய காலகட்டத்தில், புரெஜஸ்டின், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கலவைகளினாலான சீசனல் மாத்திரைகளின் மூலம் இந்த எண்ணிக்கையை 150 ஆகக் குறைக்க முடிகிறது. சரியாகச் சொன்னால் விடாய் கால உடல் பராமரிப்பு வர்த்தகம் பல்லாயிரம் கோடி லாபத்தில் இயக்கிக் கொண்டிருக்கிறது. அந்த வீச்சுக்கு  உடல் பற்றின விழிப்புணர்வைப் பெறவோ உடலைப் பேணவோ இங்கு வழிகள் கிடையாது.

உடற்கூறு சம்பந்தப்பட்ட விவரங்களை உள்ளடக்கியதாகவும், அறிவியல் பூர்வமான உண்மைகளைச் சொல்வதாகவும், மானுட நல்வாழ்விற்குப் பொருந்தக் கூடியதாகவும், மனித உரிமை, பாலியல் சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும் நம்முடைய பாலியல் கல்வி ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், இங்கு என்ன நடந்தது?

பாலியல் நூல்கள்

கொக்கோகம், வாத்ஸ்யாயணம் உள்ளிட்ட இந்தியப் பாலியல் நூல்கள். அல்குலை, பத்மினி, சித்தினி, சங்கினி, ஹஸ்தினி என்று நான்கு விதமாகப் பகுக்கின்றன. அதில் பத்மினி என்பது தாமரை வடிவத்திலும், சைலம் சுரக்கும்போது பூவின் மணம் வீசும் என்றும், சித்தினி தேன்கூட்டை ஒத்த வட்ட வடிவிலான அல்குல் எனவும், அதன் சைலம் தேனின் மணத்தோடு இருக்குமென்றும், சங்கினி அல்குல் சுழலுற்ற யோனியோடு, உப்பின் மணத்தில் சைலம் சுரக்கும் என்றும், ஹஸ்தினி களிறுபோன்று பருத்த அதீத சைலம் சுரக்கிற அல்குல் என்றும் கொக்கோகம் விவரிக்கிறது.

வாத்ஸாயணம், கொக்கோகம் போலவே, புத்தத்துறவி பத்மஸ்ரீ எழுதிய நகர சர்வஸ்வம், கவிசேகரா எழுதிய பஞ்ச சயகா, பிரௌத தேவராஜா எழுதிய, “ரதி ரத்ன பிரதிபிகா. ஜெதேவா எழுதிய ரதி மஞ்சரி, கல்யாணமாலா எழுதிய, “அனங்க ரங்கா, ஆகிய நேரடி நூல்களும், கிபி 10ம் நூற்றாண்டில் யசோதாரா எழுதிய ஜெய மங்களா, கிபி 1800ல் நரசிங்க சாஸ்திரி எழுதியம் சுக்ரவிருத்தி போன்ற வாத்ஸாயணத்தின் விளக்க நூல்களும் பாலியல் உடலுறுப்பு, உறவுமுறைகள், மருத்துவம், காமம், காதலுரைத்தல், எதிர் பாலினரை ஈர்த்தல் ஆகியவற்றை எடுத்துரைக்கின்றன.

அவற்றின்படி, மான்சாதி, குதிரைசாதி, யானை சாதி என பெண் பாலுறுப்பின் ஆழத்தை நீட்டலளவையின் மூலம் குறிப்பிட்டுள்ளனர். மான் சாதி – நான்கரை அங்குலம், குதிரை சாதி – ஆறேமுக்கால் அங்குலம், யானை சாதி ஒன்பது அங்குலம். இந்நூல்களின் உடலளவு குறித்து ஆய்வுசெய்த, இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் சார்லஸ் ஒயிட் மனித உடல் அளவுகள் குறித்த கணக்கு என்ற நூலினை 1799ல் எழுதினார். இவைகளில் மிகப்பெரும்பாலான நூல்கள் உடல் உறவு குறித்த விசாரங்களையும், ஆணின் பார்வையில் பெண் உடலைக் குறித்த கிளர்ச்சியையும், புலன் விருப்பத்தையும் மருத்துவம் என்கிற ரீதியில் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே வந்திருக்கின்றன. அனைத்திற்கும் மேலாக அந்நாளைய ஆதிக்க சமூகங்களின் மனப்போக்கோடே இந்நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. சார்லஸ் ஒயிட் எழுதிய நூலில் கூட ஆசிய ஆப்பிரிக்கப் பெண்களை, ஐரோப்பிய பெண்களுக்குக் கீழான நிலையில் வைத்து தன் இனவிலக்கத்தைக் காட்டியிருந்தார்.

சிதைவின் கதை

ஆண்களுக்கு சுன்னத் எனப்படும் பாலுறுப்பின் மேல்தோல் அகற்றப்படுவது போலவே, சில பழங்குடிச் சமூகங்களில் பெண் பாலுறுப்பு சிதைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. ஹேரம் பெண்களின் பாலுணர்வைக் கட்டுப் படுத்த அவர்களது அல்குலின் மேற்பகுதி சிதைக்கப்பட்டது. கிளிட்டோரிசின் முனை துண்டிக்கப்பட்டது. ஆப்பிரிக்க பழங்குடிகளும், பாலனீசிய மக்களும் பனிரெண்டு வயது நிரம்பிய பெண்பிள்ளைகளுக்கு இக்கொடுமைகளை நம்பிக்கை எனும் பேரில் செய்தனர். ஸ்காப்ட்ஸ் எனும் ரஷ்யாவைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பினர் தக்கள் களவொழுக்கை காப்பாற்ற பாலுறுப்புகளைச் சிதைக்க வலியுறுத்தப்பட்டனர். ஒரு பெண் திருமணம் ஆகும் வரையில் கற்புள்ளவளாக இருக்கவேண்டுமென அவள் பாலுறுப்பு தொடர்ந்து சிதைக்கப்பட்டு வந்தது. சூடான் நூபியா பகுதிகளில் பண்டைய கிறிஸ்தவமே இவ்வழக்கத்தைத் திணித்தது.

அடிமைப் பெண்களை விற்பதற்காகவும், மகப்பேற்றைத் தடுக்கவும் அல்குலை வதைப்பதும், வாரிசுரிமைப் போட்டிகளுக்காக அரசனின் ஆசை நாயகியர் உறுப்பு சிதைக்கப்படுவதும் ரத்தக்கறை படிந்த செய்திகளாக பண்டைய மன்னராட்சி வரலாறு முழுக்க விரவிக்கிடக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக உலகைப் புரட்டிய பெரும்போர்களில் அல்குலும் ஓர் ஆயுதமாக உருவெடுத்தது. இனப்படுகொலை நிகழ்வுகளில் பெண்களே முதலில் வன்கொடுமை செய்யப்பட்டனர். போஸ்னிய இஸ்லாம் பெண்கள், செர்பிய கிறிஸ்துவ ராணுவத்தால் சிதைக்கப்பட்டனர். பௌத்த சிங்களர்கள், ஈழப் பெண்களைச் சிதைத்தழித்தனர். 1947ல் இந்தியப் பிரிவினையின்போது, இஸ்லாமியர் சீக்கியர்களைக் கொன்று சிந்து நதியில் வீசினார்கள், சீக்கிய முஸ்லீம் பெண்களை நிர்வாணமாக்கி தெருவில் நடக்கவிட்டு பின் வன்புணர்ந்து அவர்களைக் கொன்றனர்.  எங்கிருந்து திரள்கிறது இத்தனை வன்மம்!

இரண்டாம் உலகப்போரில் கிராமம் கிராமமாக அடிமையாக்கப்பட்ட பெண்களை, அவர்களது உடல்களைச் சித்திரவதைக் களமாகத் தான் கருதியது வல்லரசுகள். வியட்நாம் யுத்தத்தில் ஈடுபட்ட பெண்களின் அல்குலை அறுத்தெடுத்து அதை நினைவுச் சின்னமாக அமெரிக்காவுக்கு கொண்டு சென்ற குறிப்புகள் உண்டு. வங்காளத்தில் யாஹியாகான் படை, ஈழத்தில் இந்தியப்படை, யுகோஸ்லாவியா, ஈராக், குவைத், ருவாண்டா என்று கணக்கிலடங்கா போர்களில் கோரமாகச் சிதைக்கப்பட்ட உறுப்பாக அல்குல் மாறிப்போனது. ருவாண்டாவில்டுட்சி இனப் பெண்களை வரிசையாக ஆடையற்று நிற்கச் செய்து அவர்கள் பாலுறுப்பைக் குறி பார்த்துச் சுட்டார்கள். குண்டு துளைத்த இடங்களில் மரத்துண்டுகள், கூழாங்கற்களை நிரப்பி அவர்களைக் கொன்றொழித்தார்கள்.

வளமையின் குறியீடாக, செழிப்பின் குறியீடாக, இனப்பெருக்கத்தின் அடையாளமாக, வழிபாட்டியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக என்று நீண்ட நெடிய பட்டியல் போட்டுப் பின் செல்ல முடிகிற ஓர் சம மானுட உயிரின் உடலுறுப்பு எங்கிருந்து எப்படி அழித்தொழிப்பின் அடையாளமாக மாறியது? பதிலாகச் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் புனிதமெனவும், தூய்மையெனவும் ஒன்றில்லை உலகத்தில்.

*****

(அங்காளம் தொடரும்..)

புவியின் நிகழ்காலமும் எதிர்காலமும் – இரு அறிக்கைகள்

0

நாராயணி சுப்ரமணியன்

நமது புவியில் உள்ள ஒட்டுமொத்த பல்லுயிர்ப் பெருக்கத்தின் நிலைமை (Status of Biodiversity) எப்படி இருக்கிறது என்று அலசும் இரு முக்கியமான அறிக்கைகள் இந்த மாதத்தில் வெளியாகியிருக்கின்றன. இரு அறிக்கைகளும் சொல்லும் கருத்தை ஒருவரியில் விவரித்துவிடலாம் : “நாம் உடனடியாகக் குறுக்கிட்டு சில தீர்வுகளை முன்னெடுக்காவிட்டால் மிகப்பெரிய ஆபத்துகளைச் சந்திக்க நேரிடும்”.

வாழும் புவிக்கான அறிக்கை

முதலாவது அறிக்கை லண்டனின் விலங்கியல் கூட்டமைப்பும் (Zoological Society of London) இயற்கைக்கான உலகளாவிய நிதியமும் (World Wildlife Fund) இணைந்து வெளியிட்டிருக்கும் வாழும் புவிக்கான அறிக்கை (Living Planet Report). இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. ஒட்டுமொத்த உலகின் பல்லுயிரியத்தின் நிலை எப்படி இருக்கிறது என்பதை விளக்கும் அறிக்கை இது. 2020 செப்டம்பர் 10ம் தேதி வெளியிடப்பட்டிருக்கும் இந்த முக்கியமான அறிக்கை, “இயற்கைக்கும் நமக்குமான உறவு முறிந்து போயிருக்கிறது” என்கிறது.

வழக்கமாக ஆராயப்படும் சூழலியல் கூறுகளோடு இந்த முறை புதிதாக மண்ணுக்குள் இருக்கும் பல்லுயிரியம், வண்ணத்துப்பூச்சிகளின் பல்லுயிரியம் என்று சில புதிய தரவுகளையும் சேர்த்திருக்கிறார்கள். பெரிய விலங்குகள் மட்டுமன்றி, எல்லா விலங்குகளையும் கணக்கிலெடுத்துக் கொள்வதற்கான முன்னெடுப்பு இது. மொத்தம் 4392 தாவர, விலங்கினங்களின் எண்ணிக்கை, சூழல் ஆகியவற்றை ஆராய்ந்து பெறப்பட்ட தரவுகளிலிருந்து இந்த அறிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் முன்வைக்கப்படும் முக்கியமான முடிவுகள் இவை:

• 1970ல் தொடங்கி 2016 வரை, முதுகெலும்புள்ள உயிரினங்களின் மொத்த எண்ணிக்கை 68% குறைந்திருக்கிறது. மீன்கள், நீர்-நில வாழ்விகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் என்று எல்லாமே இதில் அடங்கும்.
• 1970ல் தொடங்கி 2016 வரை, 84% நன்னீர் இனங்கள் அழிந்திருக்கின்றன.
• பனியால் சூழப்படாத நிலப்பகுதியை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இப்போதுவரை 75% நிலப்பகுதிகள் சீரழிக்கப்பட்டிருக்கின்றன.
• நன்னீரில் இருக்கும் விலங்குகளில் (Freshwater species) மூன்றில் ஒரு பங்கு விலங்குகள் அழியும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கின்றன.
• தற்போது உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டுவரும் விவசாய முறைகள் பலவும் சூழலை சீர்குலைப்பவையாக இருக்கின்றன. பல்லுயிரியம் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
• மனிதர்களின் நுகர்வு (Consumerism and Consumption) அதிகமாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் நுகர்வு அதிகரித்துக்கொண்டே போகிறது. 1.56 பூமியில் எந்த அளவுக்கு வளம் இருக்குமோ, அந்த அளவுக்கு வளத்தை மனிதர்கள் ஒவ்வொரு வருடமும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதாவது, புவியால் மனிதர்களுக்குத் தரக்கூடிய வளத்தின் அளவை விட, ஒன்றரை மடங்கு கூடுதலான வளம் மனிதர்களுக்குத் தேவைப்படுகிறது! இது புவியின் மீது கடுமையான அழுத்தத்தை உருவாக்குகிறது, அதனால் சமநிலை பாதிக்கப்படுகிறது.
• அளவும் உடல் எடையும் அதிகமாக இருக்கும் நன்னீர் இனங்களால் சூழல் சீர்கேட்டுக்கும் அதனால் ஏற்படும் மாற்றங்களுக்கும் எளிதில் ஈடுகொடுக்க முடிவதில்லை. ஒரு நன்னீர் வாழிடம் பாதிக்கப்படும்போது இவைதான் முதலில் அழிகின்றன. குறிப்பாக 30 கிலோவுக்கு மேல் உடல் எடை இருக்கும் நன்னீர் இனங்கள் எல்லாமே ஆபத்தில் இருக்கின்றன.
• இடத்துக்கு இடம் பல்லுயிரிய பாதிப்பு மாறுபடுகிறது. லத்தீன் அமெரிக்கா/கரீபியன் தீவுகளின் வெப்பமண்டல வாழிடங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
• இந்தியாவைப் பொறுத்தவரை மூன்றில் ஒருபங்கு ஈரநிலங்கள் (Wetlands) பல்வேறு சூழலியல் சீர்கேடுகளால் அழிந்துள்ளன.

பல்லுயிரிய அழிவும் பொருளாதார பாதிப்பும்:

பல்லுயிரியம் அழிவதற்கு முக்கியக் காரணங்கள் எவை என்றும் இந்த அறிக்கை பட்டியலிட்டிருக்கிறது:

  1. நிலத்தையும் கடற்பகுதிகளையும் நாம் பயன்படுத்தும் விதம் பெரிதும் மாறியிருக்கிறது. இதனால் வாழிடங்கள் அழிகின்றன, சீர்குலைக்கப்படுகின்றன.
  2. உயிரினங்கள் அளவுக்கு அதிகமாக சுரண்டப்படுவது (Species over exploitation) – வேட்டையாடுதல் தொடங்கி அளவுக்கு அதிகமான மீன்பிடித்தல் வரை எல்லாமே இதில் அடங்கும்.
  3. அயல் ஊடுருவி இனங்களும் நோய்களும் (Invasive species and disease)
  4. மாசு
  5. காலநிலை மாற்றம்

ஒவ்வொரு வருடமும் உலகப் பொருளாதார மன்றம் (World Economic forum), அந்தந்த வருடத்துக்கான “உலக அச்சுறுத்தல்/ஆபத்து” (Global risks) பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிடும். அதாவது ஒரு நிகழ்வோ அல்லது ஒரு நிலையோ, உலக அளவில் நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் எதிர்மறையான ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் அது ஒட்டுமொத்த உலகத்துக்கான அச்சுறுத்தல் என்று சொல்லப்படுகிறது. 2020 அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள உலக அளவிலான அச்சுறுத்தல்களில், முதல் ஐந்து இடங்களைப் பிடித்திருப்பவை சூழலியல் பிரச்சனைகள்தான்! பல்லுயிர்ப் பெருக்கத்துக்கான தங்கள் அறிக்கையில் இதைக் குறிப்பிடும் ஆராய்ச்சியாளர்கள், சூழலியல் பிரச்சனைகளின் உலகளாவிய முக்கியத்துவத்தை விரிவாக அலசுகிறார்கள். “ஒரு நிலையான சூழலும் ஆரோக்கியமான புவியும்தான் மனித நாகரிகத்துக்கும் செழுமைக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படை. இவை எல்லாமே ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. பொருளாதாரம் சார்ந்த எல்லா செயல்பாடுகளுமே நேரடியாகவோ மறைமுகமாகவோ இயற்கையை நம்பி இருப்பவைதான்” என்கிறார்கள்.

அழிவுகளின் காலம்” :

உயிரினங்கள் அழிவது இயற்கை சுழற்சியின் ஒரு பகுதி. ஏற்கனவே டைனோசர்கள் உட்பட பல விலங்குகளை முற்றிலுமாகத் துடைத்தெடுத்த பேரழிவு நிகழ்வுகள் (Mass extinction events) புவியின் வரலாற்றில் உண்டு. பொதுவாக இந்த அழிவின் விகிதம் என்பது பத்துலட்சம் இனங்களுக்கு 0.1 என்ற அளவில் இருக்கும். அதாவது, ஒரு கோடி இனங்களுக்கு ஒரு இனம் என்ற விகிதத்தில் சராசரி அழிவு இருக்கும்.

மனிதர்கள் சூழல் சீர்கேடுகளை ஏற்படுத்துவதற்கு முந்தைய கணக்கு இது.

இப்போது அழிவின் விகிதம் 1000 மடங்கு அதிகரித்திருக்கிறது!

அதாவது, ஒவ்வொரு வருடமும், பத்துலட்சம் இனங்களுக்கு 100 இனங்கள் அழிகின்றன! நாம் புதிய இனங்களைக் கண்டுபிடிக்கும் வேகத்தோடு ஒப்பிட்டால் இது மிகவும் அதிகம். ஆக, நாம் கண்டுபிடிக்குமுன்னே பல இனங்கள் அழிந்துவிடுகின்றன – பிரிக்கப்படாமலேயே எரிக்கப்பட்ட ஒரு பரிசுப்பொருளைப் போல!

2014ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கடந்த நூற்றாண்டில் மட்டும் 200 உயிரினங்கள் அழிந்துவிட்டன என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தரவுகள் எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் சூழலியலாளர்கள், நாம் இப்போது ஆறாவது பேரழிவுக் காலத்தில் இருக்கிறோம் என்று எச்சரிக்கிறார்கள் (Sixth Mass Extinction). இது பெரும்பாலும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அழிவுதான் என்பதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ஹோலோசீன், ப்ளீஸ்டோசீன் என்று புவியின் காலகட்டங்களுக்குப் பெயர் இருப்பதைப் போல, இந்த காலகட்டத்துக்கு Anthropocene என்று பெயரிட்டிருக்கிறார்கள். அதாவது மனிதர்களின் காலகட்டம். இந்த ஆந்த்ரோபோசீனில் கிட்டத்தட்ட 10 லட்சம் விலங்குகள் அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருப்பதாக உலகளாவிய ஆய்வுகள் சொல்கின்றன. “புவியின் வரலாற்றில், நிலவியலையே மாற்றியமைக்கும் ஒரு சக்தியாக மாறியிருக்கும் ஒரே இனம் மனித இனம்தான்” என்கிறார் அறிஞர் ஈ.ஓ.வில்சன்.

ஐக்கிய நாடுகள் சபையின் உலகப் பல்லுயிரிய அறிக்கை:

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் பிரிவு நடத்தும் பல்லுயிரியம் பற்றிய மாநாட்டின் (Convention on Biodiversity) அறிக்கையான Global Biodiversity Outlook 2020 செப்டம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட்டிருக்கிறது.

2010-ல் ஜப்பானில் ஐச்சி என்ற ஊரில் ஒரு சர்வதேச பல்லுயிரிய மாநாடு நடத்தப்பட்டது. உலக நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த மாநாட்டில், பல்லுயிரியத்தையும் சுற்றுச்சூழலையும் காப்பதற்காக, 2011-2020 காலகட்டத்துக்குள் எட்டவேண்டிய இலக்குகளாக 20 இலக்குகள் முன்வைக்கப்பட்டன. இவை Aichi targets என்று அழைக்கப்படுகின்றன. பாதுகாக்கப்பட்ட நில/கடல் பரப்புகளின் அளவை அதிகப்படுத்துவது, சூழலியல் சார்ந்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவது, அரசு மற்றும் சமூகத்தளங்களில் பல்லுயிரியம் சார்ந்த விவாதங்களையும் முன்னெடுப்புகளையும் இணைத்துக்கொள்வது, மாசுபாட்டைக் குறைப்பது, பவளத்திட்டுக்களைப் பாதுகாப்பது, வாழிடங்கள் அழிவதைப் பாதியாகக் குறைப்பது, தற்சார்பு சார்ந்த முன்னெடுப்புகள் என்று சூழல் பாதுகாப்பு மற்றும் பல்லுயிரியம் சார்ந்து பல்வேறு கோணங்களில் இந்த இலக்குகள் அமைக்கப்படிருந்தன.

2020ல் இந்த இலக்குகளுக்கான கால அவகாசம் முடிவடைந்திருக்கிறது என்பதால் ஐ.நா சபையின் தற்போதைய அறிக்கை, இந்த இலக்கை உலக நாடுகள் அடைந்திருக்கின்றனவா என்பதை ஆராய்கிறது.

20 இலக்குகளில் ஒன்றைக்கூட உலக நாடுகள் முழுமையாக எட்டவில்லை என்பதுதான் அறிக்கை தரும் செய்தி! இருபது ஆண்டுகளில் ஆங்காங்கே ஆறு இலக்குகள் அரைகுறையாக செய்து முடிக்கப்பட்டிருக்கின்றன, மற்றபடி பெரும்பாலும் தோல்விதான்!

செயல்பாட்டுக்கான நேரம்:

“பல இரவுகளில்
அழிவுக்கு எதிர்ப்புறத்தில் இருக்கும்
“ஆபத்தில்லை” என்ற பட்டியலிலுள்ள விலங்குகளை
ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தி
என் பதட்டத்தைத் தணித்துக்கொள்வேன்…..
“ஊழி” என்ற சொல்லை நான் இதுவரை எழுதியதில்லைதான்
ஆனால் வேறு எதுவும் இந்த சூழலுக்குப் பொருந்தவில்லை”

என்ற பெய்ஜ் லூயிஸின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன. காலநிலை மாற்றம் ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக நம் முன்னே நின்று கொண்டிருக்கிறது. பல்லுயிர்ப் பெருக்கம் வேகமாக அழிந்து வருகிறது. நிலமும் கடலும் சீர்குலையும் விகிதத்தை ஆராயும் பலரும், எதிர்காலத்தில் நம் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்று எச்சரிக்கிறார்கள். தற்போது இருக்கும் சமூகப் பொருளாதார அரசியல் சிக்கல்களோடு இவை இணையும்போது எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை நாம் யூகித்துக் கொள்ளலாம்.

“உங்களது நம்பிக்கை எனக்கு வேண்டாம். நீங்கள் பீதியடைய வேண்டும். என்னைப் போலவே நீங்களும் பயப்பட வேண்டும். உடனடியாக செயல்பட வேண்டும். வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தால் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்களோ அப்படி நீங்கள் அவசரத்துடன் செயல்பட வேண்டும். ஏனென்றால் வீடு தீப்பற்றித்தான் எரிந்து கொண்டிருக்கிறது” என்று காலநிலை மாற்றத்துக்கெதிரான செயற்பாட்டாளர் க்ரெட்டா துன்பர்க் பேசியபோது பலரும் விமர்சித்தார்கள். “உணர்ச்சிவசப்பட்ட சொற்கள்” என்று அவற்றை ஒதுக்கித் தள்ளினார்கள். உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு, தரவுகளும் வரைபடங்களுமாக இரு உலகளாவிய அறிக்கைகள், நாம் எந்த அளவுக்குத் தோல்வியுற்றிருக்கிறோம் என்பதை நிரூபித்திருக்கின்றன.

செயல்படுவதற்கும் சூழல்பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை போர்க்கால அவசரத்துடன் முன்னெடுப்பதற்குமான நேரம் இது.


தரவுகள் : WWF (2020) Living Planet Report 2020 – Bending the curve of biodiversity loss. Almond, R.E.A., Grooten M. and Petersen, T. (Eds). WWF, Gland, Switzerland.

World Economic Forum. (2020). The global risks report 2020, 15th edition.
World Economic Forum in partnership with Marsh & McLennan and Zurich
Insurance Group.

Pimm et al (2014) The biodiversity of species and their rates of extinction, distribution and protection. Science 344(6187).

Secretariat of the Convention on Biological Diversity (2020) Global Biodiversity Outlook 5. Montreal.

***

நாராயணி சுப்ரமணியன்

கடல்வாழ் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.”நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” என்ற உயிரியல் நூலை எழுதியுள்ளார். தமிழில் கடல்சார், அறிவியல் பொருண்மைகளைக் கவிதைகளில் எழுதி வருபவர். விகடன் தடம், வாசகசாலை, அரூ இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. Email: nans.mythila@gmail.com

மனுஷி கவிதைகள்

1

1)

மிச்சமிருக்கும் வாழ்வனைத்தையும்
காதலால் நிரப்பிக் கொள்வதென
கடவுளோடு நானோர் ஒப்பந்தம்
செய்து கொண்டேன் மாயா

கடவுளுக்கும் மனுஷிக்கும் இடையில்
ரகசியங்கள் ஏதுமற்ற
முடிவிலி முத்த மொழியில்
காதல் கதைகளைப் பேசிக் களிப்பதெனவும் தான்.
கடந்த காலத்தின் வடுக்களை
முத்தங்கள் கொண்டு
ஆற்றிவிடுவதாய்ச் சொல்லி
உள்ளங்கையில் முத்தமிட்டார் கடவுள்.
அன்றைய இரவில்
காதல் என்பது கடவுளின் அண்மையை
அடைவதற்கான வழி என
எழுதி வைத்தேன்.

ஆனால் மாயா,
கடவுளுக்கு வேறு நிறைய வேலைகள்
இருக்கின்றன என்பதை
மறந்தே போனேன்.
உள்ளங்கை முத்தத்தின் போதையில்
கடவுளை அணைத்துக்கொள்ள நினைத்தபோது
மதுக்கோப்பையைக் காலி செய்துவிட்டு
நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த இரவிலும் பொம்மையை

அணைத்துக் கொண்டுதான் உறங்குகிறேன்

***

2)

தனக்கான உணவை ரசித்துண்ணும்
பூனைகுட்டியைப் போல
இந்த வாழ்வை
ருசித்து உண்ணக் கற்றுக் கொண்டேன்.

இப்போதெல்லாம் இந்த உடலை விட்டு
வெளியேறி
பூனையாக அடியெடுத்து வைக்கிறேன்.
அன்பின் நிமித்தம் காலுரசி நடப்பதைப் போல
இந்த வாழ்வின் பாதங்களை
உரசுகிறேன்.
சொரசொரப்பான நாவினால்
வருடிக் கொடுப்பது போல
என் துயரங்களை வருடிக் கொடுக்கிறேன்.
எந்த இடத்திலும் எந்த நிலையிலும்
ஆழ்ந்துறங்குவதைப் போல
எனது துரோகங்களை அணைத்தபடி
உறங்குகிறேன்.
வேட்டையாடிய உணவை
மிகுந்த பெருமிதத்தோடு
வீட்டிற்குக் கொண்டு வருவதைப் போல
எனது மகிழ்ச்சியைத் தூக்கிச் சுமக்கிறேன்.
வாழ்வின் ஜன்னல் வழி வெளியேறி
உள்நுழைய கற்றுக் கொண்டபின்
மரணத்தின் நுழைவாயில்கூட
வீட்டின் சாயலைப் போல்தான் இருக்கிறது.

நான் யாசிப்பதெல்லாம்
ஏதோவொரு மலைமுகட்டின் மடியில்
அல்லது
யாருமற்ற தீவின் அரவணைப்பில்
பூனைக்குட்டியைப் போல
படுத்துறங்குவதைத்தான்.

பூனைக்குட்டிகளோடு வாழப் பழகியபின்
நானொரு பூனைக்குட்டியாக
மாறிப் போனேன்.

இந்தப் பூனையை மன்னித்துவிடு மாயா.

***

3)


மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன் மாயா.

அந்தப் பெரிய மலையில் நாம் சேர்ந்து நடப்போம்.

அது மிக உயரமான மலை.
குழந்தைகளின் ஓவியங்களில்
நீண்டு வளர்ந்து நிற்கும்
மலையைப் போல
மிகப் பிரம்மாண்டமான மலை.
இன்னும் சொல்லப் போனால்
மாயாஜாலக் கதைகளில் வரும்
ஏழுகடல் தாண்டி இருக்கும்
ஏழு மலை அது.

நாம் அங்கே நடந்து செல்வோம்.
ஒவ்வொரு மலையாக ஏறி
அடுத்த மலைக்குச் செல்வோம்.
முடியுமெனில் ஒரு பறவையைப் போல
பறப்போம்.
மேலும்,
மேகங்கள் தோள் உரசிச்செல்ல
கொஞ்சமாய் வெயில் குடித்து
நாம் மேலேறிச் செல்வோம்.

நமது பயணத்தில் கொஞ்சமாய் இளைப்பாற
அங்கே மலைமுகடுகள் இருக்கின்றன.
வானத்திற்கும் பூமிக்கும் இடையில்
ஒரு பற்றுக்கோடென அங்கே
கால்நீட்டி அமர்ந்து கொள்வோம்.
அதுவரையிலான பயணத்தின் கதைகளை,
பயணத்தின் களைப்பைப் பேசித் தீர்ப்போம்
அந்த மலைகளிடம்.

மலையின் மேலே செல்லச்செல்ல
மூச்சுத் திணறும் என்று சொல்கிறார்கள்.
ஒன்றும் பயமில்லை.
நாம் காற்றுக்குப் பதிலாக
மலையைச் சுவாசிப்போம்.
நமது நெடும்பயணத்திலெல்லாம்
நமக்கான உணவைச் சேமித்து வைத்துக் கொண்டு
அழைக்கும் நிலம் போல
இந்த மலையும்
நமக்கான உணவை
நமக்கான நீரை
நமக்கான காற்றை
நமக்கான பாதையை உண்டாக்கித் தரும்.

மேலும்
அன்றொரு நாள்
நாம் கனவில் நடந்து சென்ற மலைதான்.
அத்தனை ஒன்றும் கடினமாக இருக்காது.

***

மனுஷி – புதுச்சேரியைச் சேர்ந்த இவர் சாகித்திய அகாதமியின் யுவபுரஸ்கார் பெற்றவர் (2017ம் ஆண்டு).

குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்-மித்ரா பதிப்பகம் (2013), முத்தங்களின் கடவுள்-உயிர்மை பதிப்பகம் (2014), ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள்-உயிர்மை பதிப்பகம் (2015)

பொதுச்சுடர்

0

ப. தெய்வீகன்

விமானம் தரைதட்டியபோது உயிர்நாடியில் அலாரம் சொட்டியது. காலம் என்னை புதியதோர் நிலத்தில் பிரசவித்தது.

விமான நிலையங்களில் ஒருவன் கழுத்தில் இரண்டு தலைகளோடு வந்திறங்கினால்கூட புதினமில்லை. கடவுச்சீட்டிற்குள் இரண்டு தலைகளிருந்தால்தான் அதகளப்படுவார்கள். இங்கு எல்லோருமே கடவுச்சீட்டுகள்தான். தடித்த இரண்டு அட்டைகளாலான அந்த சிறிய புத்தகத்துக்குத்தான் மரியாதை. இலங்கையிலிருந்து ஏறும்போதும் சரி, மலேசியாவில் மாறும்போதும் சரி, இப்போதும்கூட மானிடத்தின் இந்த அட்டை வாழ்வு எவ்வளவு அஜீரணமானது என்பதை எண்ணியபடியே நடந்தேன்.

எனக்கு முன்னும் பின்னுமாக தடித்த கடவுச்சீட்டுக்கள் வேகமாக ஓடியபடியிருந்தன. என்னை முந்திக்கொண்டும் இடித்துத் தள்ளிக்கொண்டும் சில கடவுச்சீட்டுக்கள் பறந்தன. அவர்களது கைகளிலுள்ள தள்ளுவண்டிகள் குட்டி விமானங்கள் போல சிலிக்கான் தரையில் வழுக்கியபடி சென்றன.

நான் பரபரக்கவில்லை. பத்தோடு பதினொன்றாக முட்டிமோதிக்கொள்ளவும் விரும்பவில்லை. எல்லா திசைகளிலும் பார்த்துவிட்டு, என்னைப்போல அவசரப்படாத அப்பாவிகள் நின்று கொண்டிருந்த வரிசையில் ஒருவனாக போய் சேர்ந்து கொண்டேன்.

எனது தோளில் ஒற்றைப்பை. தள்ளி வந்த வண்டிலில் ஒரே ஒரு உடுப்புப்பெட்டி. அவ்வளவுதான். அதிக சோதனைகள் இல்லை. நாய்கூட என்னை கணக்கெடுக்கவில்லை.

வெளியில் வந்து “மெல்பேர்ன் வரவேற்கிறது” என்ற மின்மினிப்பலகையை பார்ப்பதற்கு முன்னரே, தயானி பெருங்கூட்டத்துக்குள் நின்று என் பெயர் சொல்லிக் கூவினாள். அவளைப்பார்த்தபடி வேகமாக நடக்கத் தொடங்கியதில் முன்னே சென்று கொண்டிருந்தவரின் கால்களில் வண்டியால் இடித்துவிட்டேன். ஆஸ்திரேலிய மண்ணில் எனது முதலாவது வன்முறைச்சம்பவம் இனிதே நடந்தேறியது. உடனடியாவே மன்னிப்பைக்கேட்டு சிரித்து சமன் செய்தேன்.

தயானி கையில் பூங்கொத்தோடு சிரித்தபடி ஓடிவந்து அணைத்துக் கொண்டாள். திருமணமான பதினொரு மாதங்களில் ஒரு சுற்று பெருந்திருந்தாள். அணைத்து முடியும்வரைக்கும் தயானியின் அப்பா வைத்தீஸ்வரன் சிரித்தபடி காத்திருந்தார். இன்னும் நால்வரும்கூட அவருடன் சிரித்துக்கொண்டே நின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிரம் தாழ்த்தி, கைகொடுத்து “ஹலோ” சொன்ன பிறகு, தயானி அவர்களை அறிமுகம் செய்து வைத்தாள். அனைவரும் அவளது நெருங்கிய உறவினர்கள் என்பதுதான் பெருமகிழ்வின் சாராம்சம்.

வைத்தீஸ்வரன் தனது அகன்ற அதிகாரம் நிறைந்த தொப்பையோடு கார் தரிப்பிடத்தை நோக்கி முன்னே நடந்தார். எல்லோரும் அவரைத் தொடர்ந்தோம். தயானி என் கைகளை விடவில்லை. எனது ஒற்றைப்பையையும் உடுப்புப்பெட்டியையும் தூக்கிக்கொண்டும் தள்ளிக்கொண்டும் அவளது உறவினர்கள் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். அது எனக்கு சற்று சிரமமாக இருந்தது. ஆனால், தயானி என்னை தகப்பனுக்கு பின்னால் இழுத்துச் சென்று கொண்டிருந்ததால் திரும்பிப் பார்க்கவும் முடியவில்லை. அவளது உடல் முழுவதும் பிரகாசித்திருந்த குதூகலம் விரல்களில் சுடர் விட்டபடியிருந்தது.

புத்தம் புதிய டொயாட்டா “க்ளுகர்” வாளிப்பான அதிவேக நெடுஞ்சாலையில் சத்தமின்றி பறந்து கொண்டிருந்தது. மெல்பேர்ன் ‘டலமறீன்’ விமான நிலையத்தில் வெளிநாட்டு விமானங்கள் வந்திறங்கும் பகல் நேரப்பொழுதென்ற காரணத்தினால், விடுமுறை நாளென்ற போதும் சீரான போக்குவரத்து வீதியில் தெரிந்தது.

எனது பெட்டியை தள்ளிக்கொண்டு வந்த தயானியின் உறவினர் இப்போது வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார். தயானியின் அப்பா அருகிலிருந்தார். மீதி மூவரும் எங்களுக்கு முன்பாக இருந்தார்கள். நானும் தயானியும் வாகனத்தின் ஆகப்பின்னாலிருந்த இருக்கையில் சொகுசாக சரிந்திருந்தோம். வாகனத்தின் நடுவிலிருந்த சிறிய கண்ணாடியில் கட்டித் தொங்கவிடப்பட்ட மஞ்சள்நிற பிள்ளையார் எல்லோரையும் பார்த்தபடியிருந்தார். அவருக்கு கீழிருந்த தொடுதிரை வானொலிக்கு சற்று மேலாக காணப்பட்ட பகுதி திருநீறு – சந்தனம் – குங்குமம் அனைத்தும் குழைத்து பூசி மெழுகப்பட்டிருந்தது.

அப்போது, பிள்ளையார் உட்பட அனைவரும் அடைகாத்துக் கொண்டிருந்த அமைதியை கிழித்தபடி உரையாடல் தொடங்கியது.

“செக்கிங் ஒண்டும் இல்லைத்தானே” – இது வைத்தீஸ்வரன்.

“பாஸ்போட்டை பாத்திட்டு ஏதாவது முறைச்சவனோ” – இது இன்னொரு உறவினர்.

“நீர் அவங்கள பாத்து முறைச்சனீரோ” – இது எனது பையை தூக்கிக்கொண்டு வந்தவர்.

“ஹி ஹி ஹி” – இது அவரோடு வந்த இன்னொரு உறவினர்.

“பகல் நேரம், அவ்வளவு சிக்கல் இருந்திருக்காது” – அப்படித்தானே என்று ஆசனத்துக்கு மேல் விளிம்பினால் தலையை எறிந்து அடுத்த கேள்வியையும் கேட்டுமுடித்தனர்.

நான் தயானியை பார்த்தேன். அவள் விரல்களால் மெல்லிதாக சொறிந்தாள்.

“சீ..…ஓம்…” – என்றபடி இரண்டும் குழைந்த பதிலோடு உதடுகளையும் ஈரப்படுத்திக் கொண்டேன்.

கடைசியாக கேள்விகேட்டவர் முன்னுக்கு திரும்பும்வரைக்கும் நான் அவரைப் பார்த்து சிரித்தது, அவருக்கு திருப்தியாக இருந்திருக்கவேணும். முகத்தில் நல்ல புளுகம் தெரிந்தது.

“இவன் றோயிண்ட மருமகன் வரேக்க, அவனை அரை மணித்தியாலம் மறிச்சு விசாரிச்சவங்களாம் என்ன”

“யார் ஜெனீட்டாண்ட மருகன்….?”

“பின்ன….”

“அந்தப்பெடியனும் இயக்கமோ அண்ணே?”

“டேய், அவனும் கடைசிநேரத்தோடதானே வெளியில வந்தவன்”

“என்ன சொல்லுறியள்….?”

“பின்ன….”

நான் நினைத்தது போலவே கதை சுழன்றடித்து மீண்டும் என்னிடம் வந்தது.

“உமக்கு தெரியுமே, ரெஜியெண்டு…. இயக்கப்பெயர் என்னெண்டு தெரியேல்ல… நல்ல வளர்த்தி… சிவலை….”

முதல் பின்னுக்கு திரும்பிய அவரேதான் இப்போதும்.

கேள்வி முடியும்முதலே நான், “தெரியவில்லை” – என்று உதட்டை பிதுக்கியது அவருக்கு சுத்தமாக திருப்தியில்லை. முகத்தில் வாட்டம் தெரிந்தது.

வைத்தீஸ்வரன் இயன்றளவு இந்தக்கதைகளில் ஈடுபடாமல் தெருவைப் பார்த்தபடியிருந்தார்.

நெடுஞ்சாலை முடிந்து சிறுவீதி வழியாக வாகனம் வேகத்தை குறைத்து ஓடியபடியிருந்தது. ஒளிமரங்களுக்கு அடியில் அவ்வப்போது வரிசையில் நின்றது. அருகில் போகும் வாகனங்களில் பார்வையை படரவிட்டேன். உள்ளே அடர்ந்திருந்த அழுத்ததிற்கு வெளிக்காட்சிகள் வசதியாக இருந்தது.

எவ்வளவுதூரம் கடந்து போனாலும் ஆச்சரியங்களை ஒழித்து வைத்திருக்கும் பெருந்தெருக்கள், பெய்த மழை போதுமென்று ஓங்கிநிற்கும் நெடுமரங்கள், கத்தரித்துவிட்டதுபோல் தார்சாலை ஓரங்கள், பிள்ளையார் எறும்புகள்போல வரிசையிலோடும் கறுப்பு கார்கள். எதைப் பார்த்தாலும் அழகாகவே தெரிந்தது.

அப்போது, அருகில் வந்து நின்ற வாகனத்தின் முன் இருக்கையில் சடைத்த நாயொன்று வெளியில் தலையை நீட்டி என்னைப் பார்த்தது. அதன் தொங்கிய சிவப்பு நாக்கு ஆடியபடியிருந்தது. பளபளக்கும் வெள்ளைமுடி வெயிலில் மினுங்கியது. கண்களில் தவழ்ந்த சுதந்திரமும் தனது எஜமானிற்கு அருகிலிருந்து வருகின்ற குதூகலமும் தன் வாழ்வில் பெற்றுக்கொண்ட பெரும்பேறும்போல அதன் கண்களில் ஒளிர்ந்தது.

என்னை புதியதொரு நிலம் தாங்கி ஓடிக்கொண்டிருந்தது.

ஆறு அறைகளுடன் சடைத்திருந்த மாடி வீடு, நான் பறந்துவந்த விமானமே தரித்து நிற்பதுபோல உணர்வை தந்தது. போய் இறங்கியவுடன் வாசலில் இருந்தே பயங்கர வரவேற்பு. என்னை பார்ப்பதற்கு யார் யாரோவெல்லாம் வந்திருந்தார்கள். உள்ளே சென்றவுடன் கை தந்தார்கள்.

“களைத்திருப்பீர் என்ன” – என்று கேட்டபடி கட்டியணைத்தார்கள்.

“அம்மா, அவரைக்கூட்டிக்கொண்டு போவன், குளிச்சிட்டு சாப்பிடுவம்” – என்று தயானியின் தயார் சொல்வதற்கும் அங்கிருந்தவர்கள் அதற்கு ஆமோதிப்பதற்கும் போயிறங்கி கிட்டத்தட்ட இரண்டு மணிநேரமாகியிருந்தது.

அன்று மாலையே இன்னும் பலர் வரிசைகட்டி வரத்தொடங்கினார்கள்.

“இப்பதான் வந்தவர்” – என்று தொப்பையை வருடிக்கொண்டு வாசலில் இருந்து ஒவ்வொருத்தவராக அழைத்துவந்த வைத்தீஸ்வரன், பெருமையோடு என்னை அறிமுகம் செய்துவைத்தார். நேரம் போகப்போக ஒரு கட்டத்தில், எனக்கு எல்லோர் முகங்களும் ஒரே மாதிரியாகவே தெரிந்தன. முதலில் வந்தவர்களே திரும்ப வருவதுபோலவுமிருந்தது.

கிட்டத்தட்ட இரவு ஏழு மணிக்கு வந்த வைத்தீஸ்வரனின் சகவயது சொல்லக்கூடிய வயதானவர்தான் அந்தக்கேள்வியை கேட்டார்.

“அப்ப, நீங்கள் இம்ரான் பாண்டியன் படையணியோ….” – என்று இழுத்தார்.

அதுவரைக்குமானவர்களின் வருகையும் எனக்கான அறிமுகங்களும் அணைப்புக்களும் எனக்குள் குமிழ்களாக எழுப்பியபடியிருந்த மொத்த சந்தேகத்துக்கும் விடைபோல அந்த கேள்வி அவர் வாயால் வந்து விழுந்தது. கேள்வியோடு என்மீது எய்த அவரது பார்வை எனது கண்களிலேயே குந்தியிருந்தது. போர் நினைவுச்சின்னம் போல உணர்வற்றுக்கிடந்த என்மீது, அவர் மிகுந்த உணர்ச்சியோடு பதிலைத் தேடியபடியிருந்தார்.

அந்தக்கேள்வியும் அந்தப்பார்வையும் எவ்வளவு ஏமாற்றத்தை – இயலாமையை – தோல்வியை – எரிச்சலை – ஆத்திரத்தை என்னுள் ஏற்படுத்தும் என்பதில் அவருக்கு எந்தக்கரிசனையும் தெரியவில்லை. எனக்குள் நெடுநாள் காயமொன்றின் காய்ந்த விளிம்புகள் திடீரென்று வெடித்தது போலிருந்தது.

“இல்லை, நான் வேற…” – என்று உதடுகள் தானாக ஏதோ ஒரு பதிலை பிதுக்கி விழுத்தியது.

இரவுணவு ஆயத்தமானது. அதற்குப் பிறகும் கூட்டம் கலைய இரண்டு மணிநேரமானது.

தூக்கம் விழிகளை சரித்து விழுத்தியபடியிருந்தது. மெல்பேர்னில் விமானம் வந்து தரை தட்டும்போதிருந்த வெறுமை அகன்று, மீண்டும் பாரத்தை உணர்வுபோல மனது கனத்தது. வந்துபோனவர் கேட்ட கேள்வி நெஞ்சை துளையிடுவதுபோல அந்தரமாயிருந்தது. ஆனால், களைப்பு அதைவிட அதிகமாயிருந்தது.

படுக்கையில் சாய்ந்ததுதான் தெரியும். நிறைதுயிலில் உறைந்துவிட்டேன்.

என் மீது பெரும் பாரமொன்று சரிந்ததுபோல உணர்ந்தேன். கண்களை மெல்லத் திறந்தபோது நிச்சயமாக அது கனவில்லை எனத்தெரிந்தது. தனது பருத்த மார்பினை என்மீது வைத்தபடி தயானி, என்னை முத்தமிட்டபடியிருந்தாள். காலை வெளிச்சம் ஒரளவுக்கு அறையினுள்ளேயும் படரத் தொடங்கியிருந்தது. பறவையொலிகள் வெளியே கேட்டன. பிசுபிசுத்த உதடுகளால் கழுத்தில் முத்தமிட்டு உரசியபடி முகத்தை வந்தடைந்தாள்.

சிக்கெடுக்காத அவள் கேசம் முகத்தில் விழ, அதனை ஆவேசமாக பின்னுக்கு உதறித்தள்ளினாள். அவளோடு கூடுவது இது புதிதில்ல. அவள் வேகமானவள். அது நான் அறியாததும் அல்ல. ஆனால், இப்படிக்கூடுவதுதான் நவீனமாயிருந்தது. இரவுக்கு மாத்திரமான உறவென்று நான் எப்போதும் எண்ணியிருந்ததை இந்த காலைக்கானதாக தயானி வேகமாக வரைந்தபடியிருந்தாள். இதற்காக அவள் காத்திருந்திருக்கிறாள். காலம் அவள் முதுகிலிருந்து அழுத்தி தள்ளியது, அவள் என்னை மெல்ல மெல்ல விழுங்குவதில் தீவிரமாயிருந்தாள்.

விமானநிலையத்தில் கண்டதிலும் பார்க்க இப்போது இன்னும் பருத்திருந்தாள். அல்லது நான் சிறுத்திருந்தேன். முத்தமிட்டபடி என்னைச்சரித்து மேலே கொண்டுவந்தாள். அது அவளுக்கு இலகுவாக இருந்தது. நான் திமிறுவது போலிருந்ததை அவள் உணர்ந்திருக்க வேண்டும். அதை ரசித்தாள். அவளது கடைவாய் நீரினால் என் முகம் நனைந்திருந்தது. அவளது வாய் நாற்றம் தொடர்ந்து முகத்திலறைந்தபடியிருந்தது. அவளுக்கு நான் உரிமையானவன்தான். ஆனால், இந்தப்புதுநிலத்தின் முதல்காலை எனக்கு இப்படி விடிந்திருக்க வேண்டியதில்லை. ஆனாலும் எனக்கு வேறு தெரிவிருக்கவில்லை.

இரண்டு வாரங்களாக என்னை பார்ப்பதற்காக தொடர்ந்தும் பலர் வந்துபோனார்கள். வைத்தீஸ்வரனின் மாப்பிள்ளை வந்துவிட்டார் என்ற தகவல் கிட்டத்தட்ட மெல்பேர்ன் முழுவதும் பரவியிருந்தது.

அன்று தயானி வேலைக்குப் போவதற்கு முன்னர், நான் புதிதாக வேலையொன்றில் சேருவதற்கான உதவியை, தனது நண்பியின் கணவரிடம் கேட்டிருந்ததாக சொல்லியிருந்தாள். அவரது அலுவலகத்தில் என்னை காலையிலேயே கொண்டுபோய் இறக்கிவிட்டுப் போயிருந்தாள். நான் மெல்பேர்னுக்கு வந்திறங்கிய நாளிலேயே என்னைப்பற்றி கேள்வியுற்றிருந்த அவர், நான் போய் இறங்கியதும் இருகரங்களினால் தழுவி உள்ளே அழைத்துச் சென்றார். அவர் சேர்ட்டிலிருந்து வந்த வாசத்தை இதுவரை நுகர்ந்ததே இல்லை. ஓடிக்கலோனைவிடவும் நன்றாக இருந்தது.

கேள்விகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கத் தொடங்கினார். இறுதிச்சமர் நடைபெற்றுக் கொண்டிருந்த நாட்களில் வன்னியிலிருந்த தனக்கு தெரிந்த முக்கிய புலி உறுப்பினர்களை தொடர்புகொண்ட போது, தொலைபேசியில் தனக்கு கேட்ட போர் சத்தங்களை பெரிதாக ஒலியெழுப்பி செய்துகாட்டினார். அவை எனக்கு எப்படி கேட்டது என்று கேட்டார். இப்படி பல சந்தேகங்கள் அவருக்கிருந்தன. புலிகளின் பெருந்தளபதிகள் எங்கெங்கெல்லாம் முன்னணி போர் அரண்களை அமைத்திருந்தார்கள் என்று ஒரு ஒற்றையை எடுத்து அதில் ஆள்கூறுகள் குறித்து விளங்கப்படுத்தினார்.

“எல்லாம் இந்தியாவிண்ட வேலை” – என்று அலுத்துக்கொண்டு ஒற்றையில் ஊன்றிக் குத்தினார். கதையினால் கவலையடைந்துபோன அவரது விரல்களுக்கு இடையிலிருந்த பேனா மெதுவாக சரிந்து ஒற்றையில் விழுந்தது.

வெளியில் திடீரென்று மழையொன்று இறங்கியதும் மெல்பேர்ன் வானிலை பற்றிய சிறு விளக்கம் தந்தார். அதில் அவருக்கு எந்த சந்தேகங்களும் இருக்கவில்லை. அலுவலகத்திற்குள் வெப்பநிலையை சற்று அதிகரித்துவிட்டார். பின்னர், தேனீரை வரவழைத்து தந்தார்.

“பல காலமாக எல்லோரையும் கேட்டுக்கேட்டு அலுத்துப்போன ஒன்றுதான். வேலை கேட்டு வந்த இடத்தில் கேட்கிறன் என்று மனச்சஞ்சலப்படாதேயுங்கோ. பழசுகளை மறக்கிறது கஸ்டம். அதுவும் பல காலமாக ஒரே இடத்தில இருந்தனியள் எண்டளவில, உங்கட பிரச்சினையளை இஞ்ச இருந்துகொண்டு நாங்கள் புரிஞ்சுகொள்ளயில்ல எண்டு நினைக்காதேங்கோ. அங்க இருக்கிற சனத்தைவிட எங்களுக்கு நல்லாவே தெரியம்….” – என்று இழுந்துவந்து –

“அவர் உயிரோடு இருக்கிறாரோ” – என்றார்.

அப்போது அவரது தலைமாத்திரம் கழுத்தைவிட்டு மேசையின் அரைவாசிக்கு எனை நோக்கி வந்திருந்தது. அந்தக் கேள்வியை தான் இரகசியமாகத்தான் கேட்பதாகவும் நான் சொல்லப்போகும் பதிலைக்கூட தான் இரகசியமாகவே பேணப்போவதாகவும் தனது மொத்த சரீரத்தாலும் உத்தரவாதம் தந்தார்.

அப்போது மழை மெதுமெதுவாக குறைந்து வெளித்தாழ்வாரத்தினால் நீர் வடிந்து கொண்டிருந்தது. ஆனால், வெளியில் வானம் கறுத்தே கிடந்தது. தீடீரென்று சிறு மின்னல் கீலமொன்று பாளமாக வெளியில் தெரிந்து மறைந்தது.

அவருடனான சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியே வந்தபோது, “ஊபர்” வாடகைக்கார் ஒன்றை பிடித்து ஏற்றிவிட்டார். போய் வருவதாக நான் தலையசைத்தபோது, அவரது கையசைப்பு மிகவும் தளர்ந்திருந்தது.

நேரம் மதியம் தாண்டியிருந்து. பாடசாலை முடிவடைந்த நேர போக்குவரத்து நெரிசலால் பெரும்பாலான வீதிகளில் அமைதியான பயணங்களே சாத்தியமாகவிருந்தன. வாகனங்கள் ஊர்ந்தபடியிருந்தன.

புதுநிலத்தின் முதல் மழைக்காலத்தை ஆச்சரியத்தோடு ரசிக்கத் தொடங்கினேன். கார் கண்ணாடிகளில் விழுந்து உடையும் மழைத்துளிகளும் நான் முன்பு பார்த்த அழகிய மரங்களின் நீராடலும் என் விழிகளில் புதிய ரேகைகளை வரைந்தன.

பாடசாலை சிறுவர்களும் சிறுமிகளும் சிரித்தபடி ஓடிச்சென்று பெற்றோரின் வாகனத்தில் ஏறுவதும் சிலர் தமக்கிடையில் வம்பிழுத்து போலியாக அடித்துக்கொள்வதும் கொஞ்சிக் கொள்வதுமாக வசதியான குறும்புகளோடு வீதியோரங்களில் நின்று கும்மியடிப்பதும் மழையைவிட பரவசத்தை தந்தன. அவர்களது கண்கள் மிகவும் அழகானவை. வண்ணங்கள் நிறைந்த மாபிள்கள்போல அவற்றின் வசீகரம் நான் இதுவரை அறியாத ஒளியால் மிளிர்ந்தன. அந்தக்கண்களுக்கு சிரிக்க தெரிந்திருந்தன. அவர்களது உதடுகள் சிரிக்காத நேரத்திலும் அவர்களது கண்கள் சிரித்தபடியிருந்தன. வெளியில் கண்ட காட்சிகளால் எனக்குள் ஆச்சரியங்கள் பல சுடர்களாய் துள்ளித்துள்ளி எரிந்தன. இறங்கி நின்று நனைந்துவிடலாம் போலிருந்தது.

அன்றிரவு என்னையும் தயானியையும் வைத்தீஸ்வரனின் நண்பவர் ஒருவர் விருந்துக்கு அழைத்திருந்தார். வைத்தீஸ்வரனும் மனைவியும் கூடவே வந்திருந்தார்கள். புதிதாக திருமணமானவர்களுக்கான விருந்தென்பதால் எங்களது குடும்பத்துக்கு மாத்திரம் மிக எளிமையாக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் என்றெண்ணினேன். விருந்துக்கு எந்த சேர்ட் போடவேண்டும் என்பதைத்தவிர தயானி எதையும் சொல்லவில்லை.

ஆனால், அங்கு போய் இறங்கியபோது ஐந்தாறு குடும்பங்களை சேர்ந்த இருபது முப்பது பேர் வீடுமுழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தனர். படலைக்கு வெளியே ஏராளம் கார்கள். உள்ளே பலவர்ண பூங்கொடிகள். அவற்றின் மீது ஒளிச்செடிகள்.

வீட்டுக்குள் காலடி எடுத்துவைப்பதற்கு முன்னர் –

“சிலிப்பரை வெளியில கழட்டவா” – என்று தயானியை பார்த்து மெதுவாகத்தான் கேட்டேன்.

அதிர்ந்து போனாள்.

“அதை ‘தொங்க்ஸ்’ எண்டு சொல்லிப் பழகுங்கோ…” – என்று என்னை அருகில் இழுத்து செவியினுள் அழுத்திச் சொன்னாள். பிறகு, தனது ஷல்வாரை சரிபார்த்துக்கொண்டு உள்ளே நடந்தாள்.

“தொங்ஸ்…தொங்ஸ்…தொங்ஸ்….” – என்று மனப்பாடம் செய்துகொண்டு உள்ளே நுழைந்த என்னை வழக்கம்போல தனது நண்பர்களிடம் அறிமுகம் செய்யத் தொடங்கினார் வைத்தீஸ்வரன். எல்லோரும் என்னை நேரடியாக பார்த்து உரையாடக்கூடிய ஒரு கதிரையில் அமரச்சொன்னார். எனக்கு அருகிலிருந்த மேசையில் பலவகையான போத்தல்கள். அவற்றுக்கு அருகில் பொரித்த – வறுத்த இறைச்சித்துண்டுகள் கறிவேப்பிலைகளுக்குள் விரவிக்கிடந்தன. அவற்றை அவர்கள் கொறித்துக்கொள்ளாத இடைவெளியில், யாராவது ஒருவரிடம் எனக்கான கேள்வி தயாராக இருந்தது. கேள்விகளுக்கு இப்போது நான் பழக்கப்பட்டிருந்தேன். எதை முதலில் கேட்பார்கள், அதைத்தொடர்ந்து எந்தக்கேள்வி முளைக்கும். அது எதில் வந்து முடியும் என்பவற்றையெல்லாம் முழுமையாகத் தெரிந்திருந்தேன்.

அப்போது அங்கே வந்த தயானி “ஒருக்கா வாறீங்களா” – என்றாள். அந்த அழைப்பு எனக்கு பெரும் விடுதலைக்கான ஒலியாக கேட்டது. பாய்ந்து எழுந்து அவள் பின்னால் ஓடினேன்.

வீட்டின் நடுவில் அகலமான மரவேலைப்பாடுகளுடைய கதிரைகளில் ஒருதொகை பெண்கள் வட்டமாக புதைந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் வெளியிலிருப்பவர்களின் துணையினர் என்பதை ஓரளவுக்கு ஊகிக்கக்கூடியதாயிருந்தது. ஒவ்வொருவரது கையிலும் ஏதோ ஒரு நொறுக்குத்தீனியிருந்தது.

“வாரும் வாரும்…வெல்கம் டு மெல்பேர்ன்” – என்று ஒரு பெண்மணி உதட்டுச்சாயம் வெடிக்க சிரித்தபடி அழைத்தார்.

“உமக்கு வயிற்றிலையா காயம் பட்டது. தயானி சொன்னா, காட்டும் பாப்பம்” – என்று இன்னொரு பெண்மணி சொல்லவும், அவர் கேட்டு முடிப்பதற்குள், தயானி எனது சேர்ட்டை முக்கால்வாசியை கழற்றிக் கொண்டிருந்தாள்.

மின்னல் ஊர்ந்ததுபோல எனக்கு உடம்பு ஒருகணம் உதறியது.

நான் இப்போது என்ன செய்வது, தயானி ஏற்கனவே களையத்தொடங்கிய சேர்ட்டை எப்படித் தடுப்பது? தடுக்கலாமா? காதுகள் சூடாகின. உதடுகள் இறுகிவிட்டன. எச்சிலை விழுங்க முயற்சித்தபோது அது தொண்டைக்குழியினில் இறங்கவில்லை. தயானி முழுதாகவே சேர்ட்டைக் கழற்றி கைகளில் வைத்துக்கொண்டு, எனது இடப்பக்க வயிற்றிலிருக்கும் நீண்ட காயத்தை கேள்விகேட்ட பெண்ணுக்கு காண்பித்துக் கொண்டிருந்தாள். அத்தனை பெண்களும் தங்கள் கழுத்துகளை என் வயிற்றை நோக்கி நீட்டி உற்றுப் பார்த்தார்கள். சிறுவர் – சிறுமிகளும்கூட அங்கே ஓடிவந்தனர். தங்கள் மாபிள் கண்கள் விரிய ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். போதையிலிருந்த வைத்தீஸ்வரனின் நண்பர்களும் வாய்ப்பை தவறவிட விரும்பவில்லை, கோப்பைகளுடன் அங்கு விரைந்து வந்தார்கள்.

நானும் என் காயமும் நட்டவடுவில் எந்த உணர்ச்சியுமின்றி நின்று கொண்டிருந்தோம்.

அந்தக்காயம் ஏன் எனக்கு மரணத்தை தரவில்லை என்ற கோபம் முதன்முதலாக நெஞ்சில் வெடித்துப் பாய்ந்தது. எப்போது எனது சேர்ட்டை நான் மீண்டும் அணிவது என்றுகூட எனக்கு தெரியவில்லை. என்னை தயானி திரும்பிப் பார்க்கவே இல்லை. நான் அந்த இடத்தில் அரைநிர்வாணமாக நிற்பதற்கு தகுதியானவன் என்ற பரிபூரண நம்பிக்கையோடு, தாயின் தோழிகளுக்கு காய விளக்கம் கொடுப்பதில் ஆர்வத்தோடிருந்தாள். காட்சிநேரம் நிறைவடைந்த பிறகு, சேர்ட்டை திருப்பித் தந்தாள்.

அந்தக்காயம் வெடித்து இரத்த அருவியாக கீழ் விழுந்து, சகதிக்குள் நின்று கொண்டிருப்பது போலிருந்தது எனக்கு.

அது என் காயம் மாத்திரமல்ல. ஒரு தேசத்தின் காயம். வலியடங்கியபோதும் நரம்பின் முனைகள் அனைத்திலும் கூடுபற்றாத விளக்குப்போல சுவாலையைக் கொளுத்தி வைத்திருக்கும் காயம். சொல்லப்போனால், இப்போது அது ஒரு அவமானத்தின் தடயம். அந்த துயரத்தின் சாட்சியத்தை என்னையே நான் நிர்வாணமாக்கி நின்று காண்பித்தேன் என்பதை என்னால் நம்பமுடியவில்லை.

யாரிடமும் பகிரமுடியாத பெருவனத்தீயின் வெக்கை என்னுள் படர்ந்து படர்ந்து புகைந்தது. அழுது விடலாமா என்று நினைத்தேன். ஆனால், அந்த வீதியோர குழந்தைகளின் சிரிப்பு அப்போது நினைவில் புரையேறியது. அந்த வாழ்வுக்கும் இந்த நிலம் இடம்கொடுக்கும் என்ற நம்பிக்கை, நெஞ்சில் சிறு பிடிப்பைத் தந்தது.

அன்றிரவு தூக்கம் வரவில்லை. இரண்டு காரணங்கள். ஒன்று தயானியின் குறட்டை. இரண்டாவது விருந்தில் நானடைந்த நிர்வாணம். தயானியுடன் சிலதை மனம்விட்டுப் பேசவேண்டும். அவளுடன்தான் பேசவேண்டும். ஆனால், பேசலாமா? எப்போது பேசுவது? அப்படிப் பேசக்கூடியவனாக என்னை அவளும், அவளை நானும் உணர்கிறோமா? குறட்டை ஆரோகணித்துக்கொண்டு போனது.

பேசிச்செய்கின்ற திருமணத்தில் மாப்பிள்ளைக்கான உரிமைகள் என்ன என்று எந்த தரகரும் பட்டியலிடுவதில்லை. பேசிச்செய்கின்ற வெளிநாட்டு திருமணத்தில் எதை எதையெல்லாம் எப்போது எதிர்பார்க்கலாம் என்றுகூட யாரும் முன்கூட்டியே சொல்லிக் கொடுப்பதில்லை. பேசிச் செய்கின்ற ஒரு முன்னாள் போராளியின் திருமணத்தில் எதைத்தான் உரிமையாக நினைப்பது என்றும் எந்த தரகரும் சொல்லித் தருவதில்லை. இவ்வளவும் ஏன், பேசிச் செய்கின்ற திருமணத்தில் குறட்டையைக்கூட ஒரு பொருட்டாக யாரும் மதிப்பதில்லை.

இந்த வீட்டில் நான் இன்னமும் வைத்தீஸ்வரனின் மருமகனாகவும் தயானி அவர்களது மகளாகவும்தான் இருந்து கொண்டிருக்கிறோமே தவிர, நான் என்றொருவன் எங்கே வசிக்கிறேன் என்பது வரவர எனக்கே சந்தேகம் பூசத்தொடங்கிவிட்டது.

தயானிக்கு என் மீது அன்பில்லை என்றில்லை. ஆனால், அது ஒரு கணவன் மீதான அன்பாக இன்னும் கனியவில்லை. தனது பெற்றொரின் மருமகனுக்கு கொடுக்கும் மதிப்பாக மாத்திரமே என்னில் படர்ந்திருக்கிறது. கட்டில் மாத்திரம் அவளுக்குள் திடீர் விபத்துக்கள் போல என்னை கணவனாக காட்டிக்கொடுத்து விடுகிறது.

வந்தும் வராததுமாக எதிர்பார்ப்புக்களையும் குழப்பங்களையும் நான் அதிகம் மனதில் அடுக்கிக்கொள்வதாக எனக்கு பட்டது. டொய்லெட்டுக்கு போய்வந்து தூங்கிவிடலாம் போலிருந்தது. “அது டொய்லெட் இல்லை, வோஷ்ரூம்” – என்று தயானி இரண்டு நாட்களுக்கு முன்னர் அழுத்தி ச்சொன்னது ‘சுளீர்’ என்று நினைவில் வந்து விழுந்தது. “வோஷ் ரூம்…வோஷ் ரூம்….வோஷ் ரூம்…..” – என்று மனதுக்குள் சொல்லியபடி புரண்டு படுத்து நித்திரையாகிவிட்டேன்.

வெளியே எட்டிப் பார்த்தேன். மண்டபத்திற்கு வெளியே நீண்ட வரிசையில் ஆட்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். உள்ளே தனித்தனி கண்ணாடிப் பெட்டிகளுக்குள் இருபது முப்பதுபேர் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். பெட்டிகளுக்குள் நிற்பவர்கள் எல்லோரும் என்னைப் போலவே உள்ளாடைகள் மாத்திரம் அணிந்திருக்கிறார்கள். வரிசையில் மண்டபத்திற்குள் வருகின்றவர்கள் ஒவ்வொரு பெட்டிக்கு முன்பாகவும் நின்று எங்களை உற்றுப் பார்க்கிறார்கள். மண்டபத்துக்குள் வருபவர்களுக்கான வரிசையை, எனக்கு வேலை தருவதற்கென்று அழைத்துப் பேசியவர்தான் ஒழுங்கு செய்து கொண்டிருக்கிறார். எங்களை பார்ப்பவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசுகிறார்கள். எனக்கு அருகிலிருந்த பெட்டியில் நின்று கொண்டிருந்த பெண்போராளிக்கு முன்பாக வரிசை நகராமல் நின்றுவிடுகிறது. அவளது வலது தொடையில் கிழிந்திருக்கும் நீண்ட காயத்தழும்பை வரிசையில் வந்தவர்கள் எல்லோரும் புருவத்தைச் சுருக்கிப் பார்க்கிறார்கள். குனிந்து கொள்ள இயலாத இறுக்கமான அந்தக் கண்ணாடிப்பெட்டிக்குள் அவள் தன் உடலை மறைத்துக்கொள்ள முடியாமல் ஒரு புழுபோல நெளிகிறாள்.

அப்போது குரல்வளை அறுக்கப்பட்ட பலமான மிருகமொன்றின் கடைசியொலிபோல பெருஞ்சத்தமொன்று மண்டபத்தின் எல்லா சுவர்களிலும் மோதித் தெறிக்கிறது.

வரிசையில் நகர்ந்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஒருகணம் அச்சத்தில் உடல் அதிர்கிறார்கள்.

எனக்கு மிகத்தொலைவிலுள்ள பெட்டியில் நின்று கொண்டிருந்தவன் கண்ணாடியில் தனது தலையினால் அடித்து அடித்து குழறுகிறான். அவன் எழுப்பிய சத்தத்தினால் கண்ணாடிப்பெட்டியில் உட்பக்கமாக புகார் படர்ந்திருக்கிறது. அவன் தன் உள்ளாடையுடன் சிறுநீர் கழித்துவிட்டிருந்தான். ஆட்கள் அதிகம் உள்ளே வந்து கொண்டிருப்பதால் பெட்டியை இப்போதைக்கு திறக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். அவனது சத்தம் தொடர்ந்து மண்டபத்தை நிறைத்து அதிர்ந்து கொண்டிருக்கிறது. வரிசையில் நின்றவர்கள் அனைவரும் அவனை தங்கள் தொலைபேசியினால் படம் பிடிக்கிறார்கள்.

அப்போது நான் பலம் திரட்டி இடித்த எனது கண்ணாடிப்பெட்டி என்னோடு சேர்ந்து நிலத்தில் சரிந்து தெறிக்கிறது. குழறித் துடித்தவனின் கண்ணாடிப்பெட்டியை நோக்கி நான் ஓடுகிறேன். வரிசையில் நின்றவர்கள் அனைவரும் சிதறியோடுகிறார்கள்.

நெற்றி வெடித்து வழிந்த இரத்த வாசம் எனக்குள் பரவி தலை சுற்றுகிறது. வாந்தியெடுப்பதற்கு துள்ளியெழுகிறேன்.

வேகமாக மூச்சு வாங்கியபடியிருந்தது. உடல் வியர்த்திருந்தது.

தயானியின் குறட்டையொலி சீராகக் கேட்டுக் கொண்டிருந்தது.

டொய்லெட்டுக்கு போய்வந்து படுத்தேன்.

காலையில் தயானி வழக்கம்போல வேலைக்கு சென்றிருந்தாள். வைத்தீஸ்வரனும் மனைவியும் வேறேதோ வேலைக்காக வெளியில் போயிருந்தார்கள். இறால் போட்ட முருங்கைக்காய் குழம்பும் கத்தரிக்காய் பால்கறியும் குசினிலியிருப்பதாக தயானியின் அம்மா சொல்லிவிட்டுப் போயிருந்தார்.

முதல்நாள் கனவு காலையில் ஞாபகம் வரவில்லை. ஆனால், மனம் ஏதோவொரு பாரத்தை உணர்ந்தபடியிருந்தது. எல்லோரும் வெளியில் சென்றபிறகு நினைவிலிருந்து மேலெழுந்துவந்த இரவின் துண்டங்கள், கரிய மகரந்தங்களாக கண்முன்னால் கனவை வரைந்து காட்டியது. மனசுக்கு வெளிச்சம் தேவைப்படுவது போலிருந்தது. வீட்டுப் பூந்தோட்டத்திற்குள் நடக்கப் போனேன்.

சிவப்பு மஞ்சள் நிற மணிப்பூக்கள் நிறைந்த சாடிகள் வரிசையாக வைக்கப்பட்டு, பாத்தி வெட்டிப்பிரித்த தோட்டத்தின் விளிம்புகள் நேர்த்தியாக கட்டப்பட்டிருந்தன. அரிந்து வெட்டப்பட்ட புற்கள் அழகாக பதிக்கப்பட்டு, நடுவில் பெண்ணொருத்தி சரிந்த பானையை இடுப்பில் இருத்தியபடி சிறப்பான சிற்பமாக நின்று கொண்டிருந்தாள். அந்தப் பானைக்குள் நுழைத்துவிடப்பட்டிருந்த குழாயினால் நீர் பாய்ந்து, சிற்பத்துக்கு கீழிருந்த வட்டத்தொட்டிக்குள் விழுந்து கொண்டிருந்துது. பார்த்த இடங்களில் எல்லாம் பெயர் தெரியாத வண்ண வண்ண பூக்கள் காற்றுக்கு குனிந்து நிமிர்ந்தபடியிருந்தன. ‘மணிப்பிளாண்ட்’ போல பசுமையான மரங்கள் வீட்டிற்கு பக்கத்து வேலியோரமாக வரிசையாக வளர்ந்திருந்தன. அதனைத் தொடர்ந்து வீட்டின் பின்புறம் வரைக்கும் சென்றபோதுதான், அடிவளவில் சடைத்திருந்த கற்பூரவள்ளி கண்களில் பட்டது. அருகில் போவதற்கு முன்னரே அந்த வாசம் நினைவிலே ஓங்கி அறைந்தது. இரண்டு இலைகளை உடைத்தேன். அதே வாசம்! காடுகளில் கண்டால் பாய்ந்து சென்று முறித்து கைகளில் பிழிந்து தேய்த்துக்கொள்ளும் அதே வாசம்! முகத்தை அருகில் கொண்டு செல்வதற்கு முன்னரே, வாசம் இதயம்வரை சென்று உடலெங்கும் பரவியது.

எனது நேசத்துக்குரியவற்றையும் இந்த மண் தன்மீது எங்கேயோ ஒளித்து வைத்துக்கொண்டுதானிருக்கிறது என்பதை எண்ணியபோது மனதில் ஒரு நிறைவு பிரவாகித்தது.

அடுத்தநாள் பத்து பத்தரை மணி முதல் வீடு ஒரே சத்தமாக இருந்தது. எங்களது அறையில் கொம்ப்யூட்டரில் நான் ட்ரைவிங் சோதனைக்காக படித்துக் கொண்டிருந்தேன்.

நடைபெறவிருந்த மாவீரர் தின நிகழ்வுகளில் வருடா வருடம் பொதுச்சுடரேற்றும் பொறுப்பிலிருந்து வைத்தீஸ்வரன் விலக்கப்பட்டிருப்பதாக தொலைபேசியில் தகவல் வந்திருந்தது. முன்னறையில் சேகுவரா படத்துக்கு கீழிருந்த தொலைபேசி ஒலித்தபடியேயிருந்தது. வைத்தீஸ்வரன் தனது அறைக்குள் போவதும் வருவதுமாக அலைகழிந்தபடியிருந்தார்.

ஆஸ்திரேலிய தமிழ் தேசியக்கழகங்களின் சம்மேளன பொறுப்பாளர் இராவணனோடு தொடர்ச்சியாக தொடர்பெடுத்து கேட்டதில், விடுதலைப்புலிகளின் தலைவர் இறுதிப்போரில் இறந்துவிட்டதாக நான் சொன்ன தகவல், மாவீரர் நாள் நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவின் காதுகளுக்கு பெருஞ்சாட்சியமாக சென்றடைந்ததுதான் வைத்தீஸ்வரனை சடங்கிலிருந்து நீக்கியதற்கு காரணமாக கூறப்பட்டது.

விட்டு விட்டுக் கேட்ட தகவல்கள் அனைத்தையும் தொகுத்துக் கொண்டதில் சிக்கலின் முழுவடிவம் எனக்கு புரிந்து விட்டது.

தயானியை வேலையிலிருந்து வேளைக்கு வரும்படி வைத்தீஸ்வரன் அழைத்திருந்தார். சாப்பிடாமலேயே வயிற்றைத் தடவியபடி முன்னறையில் காத்திருந்தார். தயானியின் கார் சத்தம் கேட்டவுடன் ஓடிச்சென்று கதவை திறந்தார். வாசலில் மகளோடு பேசிய இரகசியம் மேல்வீட்டிலிருந்த எனக்கு அவரது குரலின் வழக்கமான ஏற்ற இறக்கங்களோடு நன்றாகவே கேட்டது.

தயானி அழைப்பதற்கு முதலே நான் கீழே சென்றேன். விருந்தினர்கள் வந்தால் வரவேற்று இருத்துகின்ற படகுபோன்ற கதிரையின் நுனியில் இருந்துகொண்டு என்னையும் தயானியையும் எதிரே அமரும்படி சைகை செய்தார் வைத்தீஸ்வரன். தண்ணீர் கொண்டுவருமாறு மனுசிக்கு உத்தரவிட்ட பின்னர் இப்படி தொடங்கினார்.

“தம்பி, நாங்கள் இந்த நாட்டில மரியாதையோடு வாழுற குடும்பம். எங்கட குடும்பத்துக்கென்று ஒரு பெயர்…. கௌரவம்…. இருக்கு. போராட்டமும் சொந்த மக்களிண்ட வாழ்க்கையும் எங்கட இரத்தத்தில் கலந்தது. தயானி சொன்னவவோ தெரியேல்ல. தயானியிண்ட அம்மாண்ட மச்சான் நாட்டுப்பற்றாளராக வீரமரணமானவர். இப்படி போராட்டத்துக்காக நாங்கள் இழந்தது கொஞ்ச நஞ்சமில்ல.

“போராட்டத்தைப்பற்றி ஒரு சொல்லு கொச்சையா கதைக்கத் தெரியாத குடும்பம் இது தம்பி”

தயானியையையும் தண்ணியோடு வந்த மனுசியையும் ஒருதடவை திரும்பி பார்த்துவிட்டு தொடர்ந்தார் –

“அதுக்காக நீங்கள் செய்த தியாகத்தையும் பட்ட துன்பத்தையும் நான் குறைச்சு சொல்லயில்ல.

நீங்கள் அண்டைக்கு வேலை கேட்கப்போன இடத்தில, கதைச்ச தேவையில்லாத விசயம், ஏதேதோ மாதிரி கதைபட்டு, இப்ப அது என்ர மடியில வந்து கை வச்சிருக்குது.”

“தயானி நிக்கட்டும், நீங்கள் மாத்திரம் என்னோட வந்து ஒருக்கா நான் சொல்லுறவரிட்ட மன்னிப்பு கேட்டுவிடுங்கோ. மிச்சத்த நான் பாத்துக்கொள்ளுறன்”

மனுசி நீட்டிய தண்ணியை அண்ணாந்து தொண்டையில் ஊற்றினார். ஓரிரு துளிகள் வாயினால் வழிந்து வண்டிவரைக்கும் வளைந்தோடியது.

தயானி என்னைப் பார்த்தாள். முதல்நாள் அவள் வெட்டச்சொன்ன விரல் நகங்களை வருடியபடி அவளை பார்த்தேன். நான் நகம் வெட்டியதற்கு குறைந்தபட்ச அங்கீகாரமாவது அவளது கண்களில் தெரியும் என்று தேடினேன். பிரம்பு போலிருந்தது அவள் பார்வை.

ஒரு உலேகப்பறவை போல எனதுடல் அசையாமலிருந்தது. ஒரு கடவுச்சீட்டும் திருமணமும் எனக்குள் பரிபாலித்த வாழ்வு உள்ளே சுவாசிப்பது எனக்கு மாத்திரம் கேட்டது.

போர்நிலத்தில் ஓய்வெடுக்கும் துப்பாக்கியின் மீது அமர்ந்து இறகுலர்த்தி தங்களை அழகு பார்த்த பறவைகள் இவர்கள். தூரத்தில் வேட்டொலி கேட்டாலே பறந்துவிடும் சாவின் பயம் நிறைந்த சம்பிரதாயக்குருவிகள். இன்று இவர்கள் ஓய்வெடுப்பதற்கு துப்பாக்கிகள் இல்லை. துப்பாக்கிகளைச் சுமந்தவர்களின் மீதமர்ந்து குரல் எழுப்பி குதூகலிக்கிறார்கள். அது துப்பாக்கிச் சத்தமாகவே எதிலொலிக்கும் என்று தங்கள் குரல்வளைகளில் ஒப்பனையிட்டுப் பார்க்கிறார்கள்.

நிலமெங்கும் கந்தக விதைகளைத் தூவிய போரின் ஒப்பாரியைவிட இவர்களின் சிரிப்பொலிகள் பதற வைக்கிறது. 

‘டொயாட்டா க்ளுகர்’ மெதுவாக சென்று கொண்டிருந்தது. நான் வைத்தீஸ்வரனின் பக்கத்திலிருந்தேன். காருக்குள்ளேயும் தொடர்ந்து தொலைபேசி அழைப்புக்கள் அவருக்கு வந்து கொண்டிருந்தன.

“நான் அவரோட வந்து கொண்டிருக்கிறன் தம்பி, வாறன்…வாறன்…இன்னும் அரைமணித் தியாலத்தில நான் அங்க நிப்பன்” – என்று தனியான ஒரு அழைப்புக்கு அதிக பணிவோடு பதிலளித்தார்.

பாடசாலை முடிந்தநேரம். வழக்கம்போல போக்குவரத்து நெரிசலாக இருந்தது. வெளியில் பார்த்தேன். பல நூற்றுக்கணக்கான சிறுவர்கள் சிறுமியர்கள் வரிசையில் நின்று என்னைப் பார்த்து கையசைத்தார்கள். புன்னகைத்தார்கள். மாபிள் கண்கள் சுருங்கத் சிரித்தார்கள்.

***

ப. தெய்வீகன் – இவர் தற்போது வசிப்பது அவுஸ்திரேலியாவில். இதுவரை மூன்று நூல்கள் வெளியாகியுள்ளன, “அமீலா” எனும் சிறுகதைத் தொகுப்பு அண்மையில் வெளியானது

தெப்பம்

1

தனா

”கழுகு மல உச்சில ஒரு எடம் இருக்காம். அங்க ஒரு பொந்து. அதுக்குள்ளகூடி ஒரு எலுமிச்சம்பழத்த போட்டா கீழ கொகக்குள்ள இருக்க முருகன் காலடில வந்து விழுகுமாம்” என்று செல்லத்திற்கு அந்தக் கருவறையைப் பற்றிச் சொன்னவள் அவன் அம்மாதான். செல்லம் முருகனின் காலடியை எக்கிப் பார்த்தான். எலுமிச்சம் பழம் எதுவுமில்லை. 

“வள்ளி தெய்வானை சமேத முருகன். கழுகுமலை குகைக்குள் வீற்றிருப்பதால் கழுகாசல மூர்த்தியார் என்று நாமகரணம்” கருவறை இருட்டிற்குள் அர்ச்சகர் மிக வேகமாக ஆரத்தி தட்டை மூன்று முறை முருகன் சிலை முன் சுற்றிவிட்டு முருகன் முகத்தருகேயும் வள்ளி தெய்வானை முகத்தருகேயும் காட்டிவிட்டு ஒருஆள் உயரத்தில் இருந்த கருவறையின் கற்படிகளில் இறங்கி வந்தார். செல்லம் திரும்பிப் பார்த்தான். அவன் அம்மா அங்கு இல்லை. பிரகாரத்திற்குள் வரும்போது பின்னால்தான் வந்து கொண்டிருந்தாள். செல்லம் அங்கிருக்கும் சிலைகளையும் தூண்களையும் தொட்டு பார்த்துக்கொண்டே வந்தான். அம்மா சிலைகளை நின்று பார்க்கவில்லை. எதையோ யோசித்தபடி வந்தவளை இப்பொழுது காணவில்லை.

அவள் வெளியே போயிருப்பாள். அங்கே பெரிய தெப்பத்திற்கு அருகே இருக்கும் மண்டபத்தில் மற்ற உறவுக்காரர்களுடன் சேர்ந்து அமர்ந்திருப்பாள்.

செல்லம் வெளியே ஓடி வந்து பார்த்தான். மண்டபத்தில் குடும்பம் குடும்பமாக ஐம்பது பேருக்கு மேல் இருந்தார்கள். ராசுக்காளை ஒரு ஐஸ் வாங்கி தின்று கொண்டிருந்தான். செல்லம் அவனிடம் ஓடிச்சென்றான்

“எங்கம்மாவ பாத்தியாடா?”

“இல்ல. நான் ஐஸ் வாங்க எங்கப்பா கூட வெளிய போய்ட்டேன்” என்றான் ராசு.

“எங்காம்மாவும் ஐஸ் வாங்க காசு தர்றேன்னு சொல்லுச்சு. காணோம். ஒரு கடி தார்றியா”

ராசு குச்சி ஐஸை நீட்ட செல்லம் அதை பெரிய கடியாக கடித்தான். வாய் முழுவதும் ஐஸ் நிறைந்து சில்லிட்டது. துப்பிவிடுவோம் என்று பயந்து செல்லம் வாயை கைகளால் பொத்திக் கொண்டான்.

ராசு “வென்ன. எதுக்குடா இம்புட்டு கடிச்ச?” என்றான்.

செல்லம் வாய்பொத்தி சிரித்தான். உள்ளே ஐஸ் பற்களை கூசச்செய்தது.

வேகவேகமாக ஐஸைக் கடித்து விழுங்கினான். “தெப்பக்கொளத்த பாத்தியா? என்றான் ராசு

இருவரும் மண்டபத்தைக் கடந்து இடுப்பளவுள்ள தடுப்புச்சுவரைக் கடந்து தெப்பக்குளத்தின் சுற்று மேடை மேல் நின்றனர். மிகப்பெரிய தெப்பக்குளம் கழுகுமலை அடிவாரத்தை தொட்டுக்கொண்டு நின்றது.

“கருங்கட்டாங்குளத்த விட பெருசுடி” என்றான் ராசு

குளத்தின் நடுவில் சிறு மண்டபம் இருந்தது.

“இங்கருந்து நீச்சலடிச்சுப் போயி அந்த மண்டபத்த தொட முடியுமா?” என்றான் செல்லம்.

“முத்துக்காளண்ணே அடிச்சு போயிரும். எங்க கிணத்தில மேல இருந்து கல்லப் போட்டம்னு வையி. அது முங்கு நீச்ச அடிச்சுப் போயி எடுத்துட்டு வந்திரும்”

தெப்பத்தின் இரண்டு பக்கமும் படிகள் இருந்தன. நிறைய பெண்கள் கூட்டமாக படிகளில் இறங்கிச்சென்று நீர் மொண்டு கொண்டிருந்தனர். செல்லம் தெப்பத்தின் பின்னால் இருந்த கழுகுமலையைப் பார்த்தான். ஒற்றைப் பெரும்பாறையாக நின்றிருந்தது. மரங்களோ செடிகளோ இல்லாமல் பெரும் கல்லாக நின்றது.தெப்பத்தில் இருந்து வெளியே வந்து அந்த மலையைச் சுற்றி மறுபக்கம் சென்றால் மலை மேல ஏறிச்செல்ல பாதை உண்டு. அதில் ஏறிச்சென்றால் மலையின் நடுபாதியில் பெரிய அரசமரம். அம்மலையில் இருக்கும் ஒரே மரம். அங்குதான் சன்னாசிக்கும் ராக்காயிக்கும் கோயில் இருக்கிறது.

நாளைக்காலை விடியலில் கிளம்பி கூட்டமாக எல்லோரும் மலையேறுவார்கள். சன்னாசிக்கும் ராக்காயிக்கும் பூசை வைப்பார்கள். அணத்தலை தாத்தனக்கு சாமி வரும். அவர் ஆணி வைத்த செருப்பை காலில் மாட்டிக்கொண்டு ஒரு பிரம்பை கையில் பிடித்தபடி சாமியாடுவார். அவர் வாயிலிருந்து தட்பட்தட் தட்பட் புட் என்றுதான் வார்த்தை வரும். அதை வேகமாக வேறு வேறு “ட்டு”களில் சொல்வார்.

ஊரில் சன்னாசிக்கு பெட்டி வைத்து சாமி கும்பிடும் போது அணத்தலை தட்புட் என்று சாமியாடியதை செல்லம் பார்த்திருக்கிறான். அதை பட்டாணி பாஷை என்று அம்மா சொன்னாள்.

“சன்னாசியும் ராக்காயியும் தட்டுபுட்டுன்னுதேன் பேசிக்கிருவாங்களா? என்று செல்லம் கேட்டதற்கு “மனுசனுக்கு புரியாத பாசைலதான சாமி பேசிக்கிரும்” என்றாள் அம்மா.

கழுகுமலையில் இருக்கும் அந்த ஒற்றை அரசமரத்தின் விழுதுகளில் கிடாயை வெட்டி காலில் கயிறு கட்டி தலைகீழாகத் தொங்க விட்டு உறிரிப்பார்கள். அந்த இடமே ரத்தம் சிந்தி நொசநொசவென்று இருக்கும். அங்கேயே ஒரு பகுதியில் சமையல் செய்து படையல் வைத்து பூசை செய்து கறிச்சோறு சாப்பிட்டுவிட்டு கீழே இறங்க மாலையாகி விடும்.

குலசாமியைக் கும்பிட வருடா வருடம் சிவராத்திரிக்கு சின்னமனூரில் இருந்து பங்காளி குடும்பத்தார்கள் எல்லாம் சேர்ந்து லாரி அமர்த்திகொண்டு கழுகுமலைக்கு வருவார்கள். மாலையில் வந்துசேரும் அவர்களுக்காக கழுகாசல மூர்த்தி கோவிலின் உள்ளே இருக்கும் மண்டபம் திறந்துவிடப்படும். எட்டயாபுரம் ஜமீன் அதற்கு அனுமதி அளித்திருந்தார். அந்தப் பழங்கால நடைமுறை இன்றும் தொடர்கிறது.

பங்காளிக் கூட்டம் மண்டபத்தில் இருந்து கொண்டு பூசைக்கும் சமையலுக்கும் தேவையான சில்லறைப் பொருட்களை கழுகுமலை கடைவீதியில் வாங்கி சேர்த்து வைப்பார்கள். இரவு இட்டிலியோ பொங்கலோ அனைவருக்குமாகச் சேர்த்து சமைத்து சாப்பிட்டு விட்டு மறுநாள் அதிகாலை மலையேறுவார்கள்.

“போன வாட்டி வந்தப்ப இந்த மேட அளவுக்கு தண்ணி இருந்துச்சு. இப்ப கீழ போயிருச்சு” என்றான் ராசு.

செல்லம் கீழே எட்டிப் பார்த்தான். மேடையிலிருந்து நான்கு ஆள் மட்டத்திற்கு கீழே தண்ணீர் கிடந்தது. தண்ணீருக்கு அடியில் பாறைகள் இருளுக்குள் கிடந்தன. 

“நான் சின்னபிள்ளையா இருக்கப்ப மொட்டடிச்சு காது குத்த என்னய கூட்டி வந்திருக்காங்க. அதுக்கப்பறம் இப்பத்தேன் வர்றேன்” என்றான் செல்லம்.

“எலேய். அங்கிட்டு எங்கடா போயி நிக்கிறீங்க. அகராதி புடிச்சவங்யளா இங்கிட்டு வாங்கடா” என்று மண்டபத்தில் இருந்து அணத்தலை தாத்தா கத்தினார்.

ராசுவும் செல்லமும் தடுப்புச்சுவர் ஏறி குதித்து மண்டபத்திற்கு வந்தனர்.

“தெப்பக்கொளம் என்ன தாத்தா இத்தாம் பெருசாருக்கு” என்றான் ராசு.

அணத்தலை “அதுக்குள்ளதாண்டா தேவான முருகெ கூட சண்ட போட்டு வந்து ஒக்காந்திருந்தா”என்றார். என்னத்துக்காம் சண்ட? என்றான் செல்லம்.

தாத்தா இடுப்பில் இருந்து பொடி மட்டையை உருவி அதைப் பதமாகப் பிரித்து கட்டை விரல் மற்றும் நடுவிரல் கொண்டு ஒரு சிட்டிகை எடுத்து கையை உதறி ஆள்காட்டி விரலை உடுக்கை அடிப்பதுபோல் நடுவிரலில் இருமுறை அடித்துவிட்டு மூக்கில் வைத்து உறிஞ்சினார். பின்னர் தோளில் இருக்கும் துண்டை மண்டபப் படிகளில் விரித்து “யப்பேய்” என்று  அனத்தியவாறு உட்கார்ந்தார்.

செல்லம் மறுபடியும் “எதுக்கு சண்ட போட்டாங்களாம்?” என்றான்..

“அவுக குடும்ப பெரச்சன. அந்தாளு வள்ளி பொச்சு பின்னாடியே திரிஞ்சிருப்பியான். என்ன இருந்தாலும் காட்டுச்சிறுக்கி ஒடம்புல.. தேவானைக்கு கோவம் வந்திருக்கும். நான் எங்கிட்டாவது போறேன்னு சொல்லி கெளம்பிட்டா”

“அப்பறம்?” என்றான் ராசு

தாத்தா “அப்பறம் என்ன அப்பறம்… நம்மாளுக்கு ரெண்டு பக்கமும் கால போட்டு படுத்து பழக்கம்ல.. எப்டி தூக்கம் வரும்? பொண்டாட்டியத் தேடி கெளம்பிட்டியான்”என்றார்.

“நான் எங்கம்மா மேல கால் போட்டுதேன் தூங்குவேன்” என்றான் செல்லம்.

தாத்தா “தேவான நேரா அவுகப்பன் வீட்டுக்கு போனாளாம். இந்திரெ சொல்லிட்டானாம். இங்காவாரு மகளே. அடிச்சாலும் புடிச்சாலும் புருசன்
வீட்லதேன் கெடக்கனும். இங்கிட்டெல்லாம் வரக்கூடாது பாத்துக்கன்னு”

செல்லமும் ராசுவும் அணத்தைலயின் காலடியில் அமர்ந்து கொண்டார்கள்.

“ச்சீய்யின்னு ஆகிப்போச்சு தேவானைக்கு. அவுசாரி மகென் நூறு கூத்தியாள வச்சிகிட்டு பெத்த மகளுக்கு ஒரு மூல எடம் இல்லம்ட்டானே.. இப்டி போக்கெடம் இல்லாம போய்டட்டோமேன்னு ஒரே அழுவ. எங்கிட்டு போறதுன்னு தெரியாம இந்த தெப்பத்துக்குள்ள வந்து உக்காந்துகிட்டா”

செல்லம் “தண்ணிக்குள்ளயா?” என்றான்.

“ம்கூம். அப்ப இது பெரிய பொடவு. உள்ள ஆயிரம் அடி கொக. அதுக்குள்ள போயி ஒக்காந்துகிட்டா. முருகென் தேடுறியான் தேடுறியான். ஒலகம் புல்லா தேடுறியான் மயிலுமேல ஏறி. எங்கயும் தேவான ஆப்படல”.

‘ஓலகம் சுத்தி வந்தது மாம்பழத்துக்குல” என்றான் ராசு

“அது வேற கத. இது வேற கத. நீ போயி உங்கப்பங் கிட்ட தாத்தாக்குன்னு சொல்லி ரெண்டு வாழப்பழம் வாங்கிட்டு வா” என்றார் அணத்தைல. ராசு எழுந்து மண்டபத்துக்கு மறுபக்கம் ஓடினான்.

“முருகென் சாமில்ல? தேவானைய யானக்கண்ணால பாத்து கண்டுபுடிச்சிருவார்ல” என்றான் செல்லம்

“தேவானையும் சாமில்ல.. அதுவும் பொம்பள சாமில்ல.. அவுகப்பென் பரமசிவன் வந்தாலும் கண்டுபிடிக்க முடியுமா?

ராசு ரெண்டு வாழப்பழத்தை கொண்டு வந்து தாத்தாவிடம் குடுத்துவிட்டு மூச்சு வாங்கியபடிகியபடி “கத அங்கனக்குள்ளேயேதான நிக்கிது?  நான் போனதுமே இவன்கிட்ட சொல்லலைல? என்றான்.

“அங்கனக்குள்ளதேன் அங்கனக்குள்ளதேன்” என்றார் தாத்தா.

“எங்கிட்றா போனா இவன்னு முருகென் தேடிட்டு திரியும் போது ஒரு கழுகு வந்து சொல்லுச்சாம். அவ இங்க பொடகுக்குள்ள இருக்கான்னு. நேரா முருகென் பொடகுக்கு வண்டிய விட்டியான். பொடகு மேல நின்னுகிட்டு தேவான தேவானன்னு கூப்டுறியான். அவ மசிஞ்சி குடுக்கல. நீ அந்த காட்டு சிறிக்கியவே கட்டிகிட்டு திரி. ஒனக்கென்னத்துக்கு நானுங்குற மாதிரி உம்முன்னு உள்ளுக்குள்ளவே உக்காந்துகிட்டா”

ராசு “பொடவு இருட்டா வேற இருக்கும்” என்றான்

“அப்றம் முருகென் உள்ள எறங்கிப் போயி கெஞ்சி கதறி வாடின்னானாம். அவ வரமாட்டேம்னுட்டா. நீ வரலாட்டினா நானும் போக மாட்டேன் இங்கனக்குள்ளயே இருந்துக்குறேன்னு அவ கூடவே இருந்துகிட்டானாம்”

“ரெண்டு பேரும் உள்ளயா இருக்காங்க” என்றான் செல்லம்

“ஆமா உள்ள புள்ள குட்டி பெத்து வளக்குறாக. கதயக்கேள்றா” என்றார் தாத்தா.

“அம்பது நூறு வருசமா உள்ளயே பேச்சு வார்த்த இல்லாம கெடக்காக ரெண்டு பேரும். அப்பறம் கையக்கால ஆட்டி சைகைல பேசிக்கிட்டாக.. அப்பறம் ஒத்த வார்த்த ரெண்டு வார்த்த.. பொறவு ஒரு சிரிப்பு.. கைபட்டா கால்பட்டா சிணுங்கலு. அப்பறம் ஒண்ணு கூடிட்டாக”

செல்லம் “பழம் விட்டிக்கிட்டாக” என்று சிரித்தான்.

“கொஞ்ச நாள்ளயே ரெண்டு பேத்தையும் தேடிகிட்டு வள்ளி வந்துட்டா. எங்க எம்புருசென் எங்க என் சக்களத்தின்னு அவ கழுகு கிட்ட கேக்க கழுகு பொடக காட்டி றெக்கைய  ஆட்டுச்சு.

“இப்டி இப்டி” என்று ராசு தன் கையை சிறகு போல ஆட்டினான்.

“வள்ளியும் பொடகுக்குள்ள போய்ட்டா. அங்க புருசனும் பொண்டாட்டியும் ஒத்துமையா இருக்கத பாத்ததும் இவளுக்கு ஏறிகிருச்சு. அப்பறம் ஒரே சண்டக்காடு.. முருகென் கோமணத்த அவ ஒரு பக்கம் இழுக்க தேவான ஒரு பக்கம் இழுக்க பெரிய ரவுசா போச்சு. பொறவு கழுகு வந்து சொல்லிச்சாம்.. மறுபடியும் முருகன ஆண்டியாக்கி பழனிக்கு பத்தி விட்டிறாதீகன்னு. முருகனும் ஆமாமா நான் இந்தா கெளம்பிட்டேன்னு எந்திரிச்சிட்டியான். அப்றம்தேன் சக்களத்திக சமாதானமானது” என்று கதையை முடித்தார் அணத்தலை.

“அந்த பொடகுதேன் மழ பேஞ்சு தண்ணி எறங்கி இப்டி தெப்பமாச்சு”

அணத்தலை வாழைப்பழத்தை உரித்துத் திங்க ஆரம்பித்தார். பின்னால் ஆட்களின் கரைசலான பேச்சொலிகள் இரைந்தது. சிலர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். சரசு சித்தி குழந்தை லட்சுமிக்கு பால் ஆற்றிக்கொண்டிருந்தாள். செல்லம் தாத்தாவையும் ராசுவையும் விட்டு விட்டு அம்மாவை தேடிச்சென்றான். அவள் எங்கும் தட்டுப்படவில்லை. கழுகுமலை கடை வீதி கொஞ்சம் பெரியதாகவே இருந்தது. இரவில் எல்லா கடைகளிலும் மஞ்சள் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. நிறைய விளையாட்டு சாமான் கடைகள் இருந்தன. செல்லத்திற்கு தண்ணி துப்பாக்கி வாங்க வேண்டும் என்று ஆசையாய் இருந்தது. வீதியில் பெரும்பாலும் அவன் சொந்தக்காரர்களே இருந்தனர். குடும்பம் குடும்பமாக ஏதோ ஒரு கடையில் எதையோ வாங்கிக் கொண்டிருந்தனர்.

சர்பத் கடையில் பாப்பாத்தி பெரியம்மா குடும்பம் நின்றிருந்திருந்தது. ரத்தச்சிவப்பில் சர்பத்தை வாங்கி குடித்துக் கொண்டிருந்தனர்.

“எங்கடா உங்கம்மா? என்றாள் பாப்பாத்தி.

“தெரியல. அம்மாவத்தேன் தேடிட்டு இருக்கேன்”

அப்பொழுது அப்பா சிறு தோள் பையுடன் நடந்து வருவதை செல்லம் பார்த்தான். சென்னையிலிருந்து நேராக கழுமலைக்கு வந்துவிடுவார் என்று அம்மா நேற்று சொன்னாள். செல்லம் அப்பாவை பார்த்து ஆறு மாதங்களுக்கு மேலாக இருக்கும். அப்பா சென்னையில் வாழைக்காய் வியாபாரம் செய்கிறார். வருடத்திற்கு ஆறுமுறை சின்னமனூர் வருபவர் இந்த வருடத்தில் ஒருமுறை மட்டுமே வந்திருந்தார். ஆனால் மூன்று நாட்களில் கிளம்பி விட்டார். அதில் ஒருநாள் காப்பியை சூடு தாங்காமல் கீழே கொட்டியதற்கு செல்லத்தை தேங்காயைக் கொண்டு முட்டிக்கு கீழே அடித்தார். ஒரு வாரம் வீக்கமிருந்தது.

“என்னா பால்சாமி இப்பத்தேன் வர்றியா?” என்றாள் பெரியம்மா.

அப்பா “ஆமாம் மதினி. வெள்ளன பஸ்ஸேருனேன். கோயில்பட்டி வந்து மாறி வர்றேன்” என்றார்

செல்லம் அப்பாவையே பார்த்தபடி நின்றான். அப்பா “உங்காத்தா எங்கடா?” என்றார்

செல்லம் என்ன சொல்வதென்று தெரியாமல் மெல்ல மண்டபத்தை நோக்கி கைகாட்டினான. அப்பா அவனைக் கடந்து சென்றார். செல்லம் கடைவீதியை ஏக்கத்துடன் சுற்றிவிட்டு மண்டபத்திற்கு வரும் பொழுது அங்கே கூட்டமும் சலசலப்புமாக இருந்தது. பரசிவம் சித்தப்பா அப்பாவைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார். அப்பாவின் கையில் தலைமுடி சிக்க அம்மா தரையில் விழுந்து கிடந்தாள். அப்பா சித்தப்பாவைத் தள்ளிவிட்டு அம்மாவை ஓங்கி உதைத்தார்.

“ஒன்னய கொண்ணு இங்கயே பொதச்சிட்டு போறனா இல்லையா பாரு” என்று அம்மாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து கழுத்திலேயே அறைந்தார்.

“லே மயிராண்டி சாமி கும்புட வந்து எடத்தில வந்து சண்டய போட்டுக்கிருக்க.. பித்தும் பீக்கொடலும் இல்லாத பயலே” என்று அப்பாவை அரட்டினார் அணத்தலை தாத்தா.

“கேள்வி மயிரா கேக்குறா எங்கிட்ட” அப்பா கத்தியபடி அம்மாவை அடிக்கத் திமிறிக்கொண்டு வந்தார். இரண்டு மூன்று ஆண்கள் அவரை பிடித்து இழுத்து தள்ளிக்கொண்டு போனார்கள். அம்மா தரையில் குப்புற விழுந்து கிடந்தாள். அப்பாவை அமுக்கிப் பிடித்து மண்டபத்தில் உக்கார வைத்தார்கள். அவர் மூச்சிரைத்துக் கொண்டிருந்தார். சட்டை பட்டன்களெல்லாம் தெறித்துப் போயிருந்தது. சட்டை பாக்கெட் முழுதும் கிழிந்து தொங்கியது. நெஞ்சில் அம்மாவின் நகக்கீறல் ரத்தத்திட்டுகளாய் தெரிந்தது. அப்பா அம்மாவைக் காறி உமிழ்ந்து உட்கார்ந்தவாறே கைநீட்டி கெட்ட வார்த்தையால் ஏசினார்.

தரையில் கிடந்த அம்மா அலங்கோலமாக எழுந்து உட்கார்ந்தாள். சரசு சித்தி கீழே கிடந்த அம்மாவின் சீலை முந்தானையை எடுத்து அம்மாவின் தோளில் போட்டு விட்டாள். கூட்டத்தில் சலசலப்பாக பேசிக்கொண்டார்கள். யாரும் எதிர்பாராத சமயத்தில் அப்பா விருட்டென எழுந்து வந்து அம்மாவின் வயிற்றில் ஓங்கி மிதித்தார். அம்மா அப்படியே மல்லாக்க விழுந்தாள். ஆனால் உறுமியபடி எழுந்து வந்து அப்பாவின் சட்டயைப் பிடித்து இழுத்து அடித்தாள். கூட்டம் அவர்களைப் பிடித்து விலக்கி இழுத்து சென்றது.

“அந்த முண்டைய வெட்டிக் கொள்ளாம விடமாட்டேன்.. நீ வெலகுடா வெண்ணமகனே” என்று அவரை பிடித்திருந்த பரமசிவம் சித்தப்பாவை அப்பா அறைந்தார். ஆனாலும் அவரை இழுத்து தள்ளிக்கொண்டு போனார்கள். அம்மா அப்பாவையே மூச்சிரைத்தபடி கண்ணீர் பொங்கும் விழிகளால் பார்த்துக்கொண்டு நின்றாள். செல்லம் மண்டபத்தின் தூணில் ஒட்டி நின்று அம்மாவை பார்த்தான். அழுகையாக வந்தது அவனுக்கு. அங்கு நிற்க முடியவில்லை. கோவிலுக்குள் ஓடிச்சென்றான்.

முனிவர் தவம் செய்யும் சிலை வடிக்கப்பட்ட தூணின் கீழே போய் உட்கார்ந்து கொண்டான். அழுகையை அடக்க முடியவில்லை. சுற்றிலும் நிறைய பேர் நடந்து கொண்டிருந்தார்கள். செல்லம் கண்ணீர் வழிய வழிய துடைத்துக்கொண்டே இருந்தான். ஒரு பெண் வந்து அவனுக்கு தேங்காயையும் மாவிளக்கு ஏற்றிய மாவுருண்டையும் நீட்டினாள். செல்லம் அதை வாங்காமல் அங்கிருந்து எழுந்து மண்டபத்திற்கு ஓடி வந்தான். அங்கே இட்டிலி சுட்டு எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். செல்லம் அம்மாவைத் தேடினான். அம்மா எங்கும் தட்டுப்படவில்லை. சரசு சித்தியிடம் போய் நின்றான்.

சித்தி “இட்டிலி வைக்கவாடா?” என்றாள். “அம்மா எங்க சித்தி?”

சரசு சுற்றிலும் பார்த்தாள். “இங்கதே உக்காந்திருந்தா. எங்க போனான்னு தெரியல” என்றாள்.

செல்லம் தயங்கியபடி “அப்பா?” என்றான். சரசு சித்தி தண்ணீரைத் தொட்டுக்கொண்டு இட்டிலியை விரலால் குத்தி எடுத்து சட்டியில் போட்டபடி “ஒரு நாள்தேன் டயம் குடுத்து அனுப்பிச்சிருப்பா போல சக்காளத்தி. அதேன் வந்ததும் அடிச்சமா முடிச்சமான்னு கெளம்பிட்டாப்ல. இந்நேரம் கோயில்பட்டில இருந்து பஸ்ஸேறிப்பாப்ல மெட்ராசுக்கு” என்றாள்

செல்லம் மண்டபத்தையே சுற்றி சுற்றி வந்தான். எங்கும் அம்மா தென்படவில்லை. அவனுக்கு மீண்டும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் அருகே நின்று இருட்டில் கிடந்த தெப்பத்தைப் பார்த்தான். இடதுபக்கம் மேடையில் தெப்பத்தைப் பார்த்தபடி சாய்ந்து உட்கார்ந்திருந்தாள் அம்மா. செல்லம் தடுப்புச்சுவரை ஏறிக்குதித்து அம்மாவிடம் போனான். அவள் கால் நீட்டி அமர்ந்திருந்தாள். செல்லம் அவள் பக்கத்தில் உட்கார்ந்து அவள் மடியில் படுத்துக் கொண்டான். அவர்களுக்கு பின்னே மண்டபத்தில் எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்த சத்தம் கேட்டது. முன்னால் தெப்பம் கனத்த அமைதியுடன் உறைந்திருந்தது. செல்லம் அப்படியே உறங்கிப் போனான்.

கனவில் ஒரு கழுகு அவனை ஒரு பொடகுக்குள் தூக்கிச் சென்றது. இருட்டில் பாறை விளிம்புகள் மட்டும் தெரிந்தன. கழுகு எதிலும் இடிபடாமல் வளைந்து வளைந்து பறந்தது. குகை முடிவடையாமல் நீண்டு நீண்டு சென்றது. முற்றிலும் இருட்டிற்குள் அவன் நுழைகையில் விழித்துக் கொண்டான். அம்மா மெதுவாக அவனையும் இழுத்துக்கொண்டு சுற்றுமேடையின் முனைக்கு வந்து மேடை விளிம்பில் காலைத்  தொங்கப்போட்டு உட்கார்ந்திருந்தாள். செல்லம் அவள் இடுப்பை இறுக்கிக் கட்டிக்கொண்டான். அம்மா இன்னும் கொஞ்சம் முன்னால் நகர்ந்தாள். செல்லம் கண் திறந்து பார்த்தான். கீழே தண்ணீர் தெரிந்தது.

செல்லம் “ம்மா. வேண்டாம்மா” என்று விக்கினான். அம்மா செல்லத்தின் தலையை இருமுறை தடவிக் கொடுத்தாள். பின் தன் உடலை அவனோடு சேர்த்து முன்னே உந்தினாள்.

  • ***

தனா – இவர் ஒரு திரைப்பட இயக்குனர். தொடர்ந்து நல்ல சிறுகதைகளை எழுதி வருகிறார்.

க.சி.அம்பிகாவர்ஷினி கவிதைகள்

0

1. சுண்ணாம்பு பூசிய தளத்தில் குத்திட்டு நிற்கும் கூர்கள்…

பருவ நிலை மழைபொழியக் கூடாரமிடும்
வனத்தில் இலையுதிர்வுகள் பழுத்து உழல்கின்றன

மயில்கள் நடமாடும் தடங்கள் மறைந்து
வேலியோரங்களில் புதர்களின் வனப்பு
முட்டுயர்ந்திருப்பது காற்றாடக் காண இளமைதான்

உழுது வாரப்பட்ட நிலத்திலிருந்து
நெடுங்கூதல்களை ஊடுருவும் நெற்றியில்
தோல் பதனிட்டு உட்கார்ந்திருக்கிறது
உதடுகள் காயும் வறட்சி

மாறுதலுக்காக இடம் மாறி
உட்கார்ந்திருக்கிறேன்

உடல் மொத்தமும் சுருங்கிய நிலையில்
வெள்ளை பூத்த
ஓர் பழுத்த இலையுதிர்வில்
தலைப்பாகத்தில் கிழிந்திருக்கிறது….

*

2. ஒரு சிறிய கோலத்தை வரைந்து முடித்தவள்

மினாரைப் போன்ற கோபுரமொன்றினை எழுப்புகிறாள்
செதில்களாக முளைக்கின்றன
உடையாத நெல்மணிகளையொத்த
டேபிள்ரோஸ் இலைகள்
கோபுரத்தின் உச்சியில்
பெருநாளைப்போன்ற பண்டிகைக்கோலத்தில்
ஒட்டிக்கொள்கிறது பௌர்ணமி
முழுக்கச் சிவந்துவிட்ட ஒளிப்பிலிருந்து
பிரிகிறது
வேம்பிலையைப் போன்ற
சிறகொன்று
மேலும் அங்கிருந்து கொடியாக நீளும்
கிளைத்துண்டுகளும்
முற்றுப்புள்ளிகளும்
*
இரவு நீள நீள உதிர்கின்ற
மெஹந்திக் கோடுகள்
உளுத்த மரத்தூள்களைப் போல
படுக்கை விரிப்பெங்கும் சிதறிக்கிடக்கின்றன
பொழுது புலரும் வரையும்
உறங்காத விழிகளில் நெளிந்து கொண்டிருக்கிறது
குருட்டுப் பாம்பொன்று…
*
ஒரு சிறிய கோலத்தை வரைந்து முடித்தவள்
அதற்கு வண்ணமிடுகிறாள்
முற்றிலும் சிவப்பு
பண்டிகை வாசல்படிகளில்
ஓரமாக இழுத்துவிட்டிருக்கும்
இரட்டைக்கோடுகளைப் போல
உள்ளங்கை நரம்புகள்…
*
எத்தனை கூறுகளாக்க முடியுமோ
அவ்வளவு கோடுகள்
குறுக்காக மேலும் குறுக்காக
வரையத்தெரியாதவள் கைக்கு
மெஹந்தி கோணல்.

*

3. ஆண்/பெண் முகமூடி

ஆண்/பெண் முகமூடி

உடுத்தும் அத்தனையோடும் முகமூடியொன்று
தவறிப்போயிருப்பது
மறக்கக் கூடாததை மறந்தது போல
போகிற வழியில் வாங்கிக் கொள்ளலாம்
முதலில் வாங்கியது போலவே
அதே நிறமிருந்தால் நல்லது
இல்லாவிட்டாலும்
முகமூடி ஸ்டேண்டில்
முதலாவதாக தொங்கும் கண்ணாடிப் பைக்குள்
முன்பு வாங்கியது போன்ற
மாஸ்க்கின் காதுகள்
அதே நிறமில்லை
விலைகொடுப்பதற்குள்
தட்டுப்பட்டுவிட்ட
முகமூடியின் மையத்தில்
மூக்குவரை இருபக்கங்களையும்
இணைத்துக் கோடு
மூக்கு மட்டும் பிடித்தவாறு
தாடைவரை ஆடுகின்ற பிடிப்பில்லாத இடைவெளி
பழைய மாஸ்க்
உதடுகள் பிதுங்கும் வரை
பிடித்தம்
மையத்தில் கோடு இல்லை.

***

க.சி.அம்பிகாவர்ஷினி – மதுரையில் வசிக்கிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு – தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகக்கூட்டம் எனும் கவிதை நூல் வெளியாகியுள்ளது.

கார்னர் சீட்

1

பிரவீன்குமார்

ன்னும் சற்று நேரத்தில் திரைப்படம் துவங்க இருப்பதை அவன் கைகடிகாரம் நினைவுப்படுத்தியது. அனுமதி சீட்டை அடையாளப்படுத்திக் கொண்டு சிற்றெறும்பின் வரிசையை பழகியவர்களாக பார்வையாளர்கள் திரையரங்கிற்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். பாதி கிழித்து கையில் திணிக்கப்பட்ட அனுமதிச் சீட்டுகள் இருளின் இருப்பிடத்தை உறுதிபடுத்தின. விடுமுறை தவிர்த்த நாட்கள் பெருமளவில் திரையரங்கு இருக்கைகள் ஆக்கிரமக்கப்படுவதில்லை. இரைச்சல், முன்பதிவு, கூட்டம் என்று எவ்வித இடர்பாடுகளுக்குள்ளும் சிக்கிக்கொள்ள விரும்பாத பலர் தாங்கள் விரும்பும் நாட்களில்தான் திரையரங்கை தேர்வு செய்கிறார்கள். வெறுமனே கழியும் நேரத்தை செலவழிப்பதற்கும், மனதை அரித்துக் கொண்டிருக்கும் துயரங்களிலிருந்து கொஞ்சமேனும் விடுபடுவதற்கும், தனது அந்தரங்க தேவையை நிவர்த்தி செய்வதற்கும் இப்படி காரணங்கள் பல திரையரங்கிற்குள் நுழைந்து கொண்டிருந்தவர்களிடம் இருந்தன. அவர்களுக்கும் ஓர் காரணம் இருந்தது. தங்கள் வாழ்வின் முக்கியமெனக் கருதும் விஷயங்களைக் குறித்து மனம்விட்டு பேசவும் அதைச் சார்ந்து முடிவுகளை எடுக்கவும்.

பின்தொடரும் கண்கள் பல அவர்களின் வாழ்தடத்தில் எந்நேரமும் முழித்துக் கொண்டிருந்தன. அதனிடமிருந்து தப்புவிப்பதற்கும், விடுபடுவதற்கும் இரண்டரை மணிநேர இருளின் இருக்கை ஓரம் தேவைப்பட்டது. அவர்கள் தேர்வு செய்த நாள், நேரம், திரையரங்கு, காட்சி என்று அனைத்தும் அவர்களுக்கு பொருந்துவதாக இருந்தன. திட்டமிட்டது போல் தங்களுக்கான கார்னர் சீட்டுகளை ஆன்லைன் வழி கொண்டு தக்கவைத்தனர்.

தனது ஸ்கூட்டியை பார்க் செய்துவிட்டு திரையரங்கை நெருங்கியவள் அவன் காத்திருப்பதைப் பார்த்ததும் கண்களின் அசைவைக் கொண்டு முன்செல்லும்படி செய்கை கொடுத்தாள். கைப்பேசிக்குள் தேடி எடுத்த குறுஞ்செய்தி F 24 & F 25 எனும் விவரங்களோடு அவர்களுக்கான இருப்பிடத்தை உறுதிபடுத்தியது.

அவனது கரத்தை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு நடப்பதுதான் அவன் வழக்கம். அவனும்கூட அதையேதான் விரும்புவான். ஆனால் ஆட்கள் யாரும் அடையாளம் தெரிந்துகொள்ள முடியாத அவ்விருளிலும் அவன் கரம் பிடிக்கத் தயங்கினான். F 1 & F 2 என்று முன்னமே பதிவு செய்திருந்த கார்னர் சீட்டின் இருப்பிடம் தேடி விரைந்தான். அவன் நடையின் பாதம் தேடி அவனை பின்தொடர்ந்து கொண்டிருந்தவனுக்கு ஓர் பிடிமானம் தேவைப்பட்டது. சட்டென்று அவன் மணிக்கட்டை பற்றிக்கொண்டான். நீண்டநேர தேடுதலுக்கு பிறகு கைபேசியின் டார்ச் லைட் வெளிச்சத்தின் மூலம் இருப்பிடத்தைக் கண்டடைய முடிந்தது. எவ்வித சமிக்ஞையும் இல்லாமல் அமர்ந்தவனைப் பார்த்து இவனும் பக்கத்து இருக்கையில் அமர்ந்தான். கொஞ்ச நேரத்திற்கு இருவரும் திரையில் தோன்றும் விளம்பரங்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தன் இருக்கைக்கு அருகில் எவரேனும் வந்து அமரக்கூடுமோ எனும் பயம் நீண்ட நேரமாக அவனை நச்சரித்துக் கொண்டிருந்தது. அவள் சமூக வலைதளத்திற்குள் உள்நுழைவதும் வெளியேறுவதுமாக தன்போக்கில் செயல்பட்டுக் கொண்டிருந்தாள். திரையரங்கை அலங்கரித்த மின்விளக்குகள் அவன் அணிந்திருந்த வெள்ளை நிறச்சுடிதாரை பலவண்ண தோற்றத்தில் காட்சிப்படுத்தியது. அவனுக்குள் வெதும்பிக் கொண்டிருந்த நடுக்கம் அவனை நிலைகொள்ளாமல் அவ்விருளிலும் பரிச்சயமான முகங்களை தேடி அலைந்து கொண்டிருந்தது. தன் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள தான் பதிவு செய்திருந்த J 24 & J 25 இருக்கைகளுக்கு அருகில் ஏதேனும் இருக்கைகள் பதிவு செய்யப்படுள்ளதா என்று அத்திரையரங்கின் வலைதளத்திற்குள் சென்று துவங்க இருக்கும் காட்சியின் இருக்கைகளை சோதித்தான். தன் இருக்கைகளுக்கு அருகில் எந்த ஒரு இருக்கையும் பதிவு செய்யப்படவில்லை என்பதை அறிந்ததும் அவனுள் இருந்த பயமும் நடுக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக அவ்விருளில் இருந்து மறைந்தது. அவனது நடவடிக்கைகளைப் பார்த்து அவள் எரிச்சலடைந்தாள்.

“இப்போ எதுக்கு தேவ இல்லாம பயந்துட்டு இருக்க. நீ சொல்லி தானே இந்த தியேட்டருக்கு வந்தேன். இப்போ நீயே பயப்படுற”

“இல்ல… என் வீடு பக்கம்தான். தெரிஞ்சவங்க யாராவது வந்துடுவாங்களோனு பயமா இருக்கு. அதுவுமில்லாம எந்த பொண்ணு கூடவும் நான் இதுவரைக்கும் தனியா படம் பார்த்ததே இல்ல”

“ஏன்டா… நாம என்ன இங்க மேட்டர் போடவா வந்தோம். நீ கூப்புட்டேனு ஆபிஸ் லீவு போட்டு வந்தா.. இப்படி பேசுற. உனக்கு தெரிஞ்சவங்க யாராவது பார்த்தா கூட ஒன்னும் பிரச்சன இல்ல. தேவ இல்லாம பயந்துட்டு இருக்காத”

தொடுதிரையில் தோன்றிய வெளிச்சத்தில் மிருதுவாகப் புலப்படும் அவளது முகத்தையே ஒருவித கிறக்க நிலையில் பார்த்துக் கொண்டிருந்தான். அவளுடனான இந்நெருக்கம் இதுவரை அவன் அனுபவித்திராத ஒன்று. தொடுதலற்ற ஓர் ஸ்பரிசத்தை அவள் உடலின் வாசத்தால் உணர முடிந்தது. குளிரூட்டப்பட்ட அத்திரையரங்கம் இருவருக்குமான வேறு தேசத்தில் தனித்து சஞ்சரிப்பதாய் அவன் உணர்ந்தான்.

திரையரங்கிற்குள் அந்த அளவிற்கு கூட்டம் இல்லை. ஒருவழியாக C 24 & C 25 இருக்கையைக் கண்டடைந்து இருவரும் சௌகர்யமாக அமர்ந்தார்கள். நகரும் நிழல்களாக மனித உருவங்கள் அவரவரது இருக்கையைத் தேடி அலைந்து கொண்டிருந்தன. கல்லூரி காலத்தின் போது காதல் திரைப்படங்களின் மீது இருந்த மோகம் நரை படிந்த பின்னும் கூட இருவர் மனதிலும் நீடித்திருந்தது. சொல்லப்போனால் திரையரங்கில் அவர்கள் ரசித்த காட்சிகள்தான் அவர்களின் இளமை பருவக் காதலை வளர்த்துக் கொண்டிருந்தது. சரியாக முப்பத்தி எட்டு வருடங்கள் கழித்து இன்றுதான் இருவரும் ஒருசேர திரையரங்கிற்குள் நுழைந்தார்கள். அப்போதிருந்த டூரிங் டாக்கிஸ் நினைவுகள் எதிரில் தோன்றிய திரையில் காட்சிகளாக விரிந்தன. கைகள் இரண்டையும் குறுக்காகக் கட்டிக்கொண்டு மூச்சை உள்ளிழுத்து தனக்குத்தானே சிரித்தபடி பழைய நினைவுகளில் கரைந்து கொண்டிருந்தான்.

“என்ன சிரிப்பு…?”

“இல்ல… நம்ம காலேஜ் டேஸ்ல சினிமாக்கு போகும் போது நடந்த விஷயங்கள் எல்லாம் ஞாபகம் வந்துச்சு அதான் சிரிச்சுட்டு இருந்தேன்”

“ஆமா பிளாக்ல டிக்கெட் வித்தது… மத்த காலேஜ் பசங்க கூட சண்ட போட்டது… இது எல்லாம் ஞாபகம் வராமையா இருக்கும்”

திரையை பார்த்துப் புன்னகைத்தபடியே தன் மூக்குக்கண்ணாடியை சரிசெய்து மீண்டும் அணிந்து கொண்டான். திரைப்படத்திற்கான சான்றிதழ் திரையில் தோன்றியதும் இருளின் பல திசைகளிலிருந்து கூக்குரல்கள் எழுந்தன.

“நமக்கு ஏன் இப்படி ஓரமா சீட் கொடுத்து இருக்காங்க… பக்கத்துல ஒருத்தரையும் காணோம். நாம இந்த சீட்லதான் உட்காரணுமா? ஓரமா இல்லாம கொஞ்சம் முன்னாடி போய் நடுவுல எங்கனா சீட் பார்த்து மாறி உட்காரலாமே”

“நாம சினிமா பார்த்த காலம் இல்ல இது. வேற சீட் மாறி உட்கார்ந்தா… அங்கேயும் யாராவது வந்து அந்த நம்பர் சீட் டிக்கெட் காட்டி பாதிலேயே எழுந்துக்க சொல்லுவாங்க. நமக்கு எதுக்கு வம்பு. இங்கேயே உட்காருவோம்”

மனித வாழ்வில் காலத்தின் தண்டனையாய் பலருக்கும் கிடைப்பதென்னவோ பிரிவு ஒன்றுதான். அதை ஏற்றுக்கொள்ள விரும்பாத பலரும் காலப்போக்கில் அதையே தன் வாழ்வென பழகிக்கொள்கிறார்கள். பிரிவும் தனிமையும் மட்டுமே நிலைத்திருந்த தன் வாழ்வில் காலம் இப்படியான ஒரு சந்திப்பை அமைத்துக் கொடுக்குமென்று சற்றும் அவன் எதிர்பார்க்கவில்லை. அவளுடன் கழித்த காதலின் நினைவுகளே இத்தனை வருட வாழ்வை கடக்க வைத்தது. அந்நினைவுகளை அவன் பரிசோதிக்க விரும்பினான். திரையில் ஓடிக்கொண்டிருக்கும் நாயகனின் அறிமுகக்காட்சியை பார்த்துக்கொண்டே.

“நாம கடைசியா பார்த்த படம் எதுன்னு ஞாபகம் இருக்கா?”

“புதுக்கவிதை. அந்த படமும் ஞாபகம் இருக்கு அந்த படத்த பார்த்து நீ அழுததும் ஞாபகம் இருக்கு”

பாடலும் நடனங்களுமாக திரையில் காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தாலும் அவள் கடந்தகால வாழ்வின் சிந்தனைகளிலேயே மூழ்கிக்கிடந்தாள்.

எதுவும் பேசாமல் தன் போக்கில் மெளனமாக அமர்ந்து கொண்டிருந்தவளைப் பார்க்கும்போது மேலும் அவன் எரிச்சலடைந்தான்.

“எதுவும் பேசாம இப்படி அமைதியா உட்கார்ந்துனு இருக்கத்தான் என்னப் பார்க்க வந்தியா?”

“ப்ளீஸ்…! நீ என்கிட்ட சிரிச்சு பேசலனா கூட பரவால… ஆனா இப்படி எரிஞ்சு மட்டும் விழாத”

நாயகனின் நடனத்தை உள்ளுக்குள் ரசித்துக் கொண்டிருப்பதை அவள் உதடுகளின் அசைவு வழியே தெரிந்துகொள்ள முடிந்தது. அவள் உதட்டின் சிவப்பும் தேகத்தின் நறுமணமும் அவன் கவனம் ஈர்த்தது. அதிலிருந்து விடுபட எத்தனிக்கவும் அதனுடன் லயித்து ஊடல் கொள்ளவும் ஒருசேர அவன் மனம் விரும்பியது. திரையைப் பார்ப்பதும், திரையில் தோன்றும் வெளிச்சத்தில் அவளது முகத்தை பார்ப்பதுமாக அவதிபட்டுக் கொண்டிருந்தான்.

“டேய் என்னடா உன் பிரச்சன… எதுக்கு இப்போ நெளிஞ்சுட்டு இருக்க. என்ன கிஸ் பண்ணனுமா?”

“எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லனா கூட நீயே வரவெச்சுடுவ போல”

சொல்லி முடித்ததும் முகத்தை பாவமாக கீழே தொங்கவைத்துக் கொண்டான். அவள் விழி அகலாது திரையில் தோன்றும் காட்சியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அப்போ எதுக்கு என்னையே பார்த்துட்டு இருக்க”

“ம்.. இத்தன நாளா ஆபிஸ்ல உன்ன தொலைவா நின்னே பார்த்துட்டேன். இவ்ளோ கிட்ட உன்ன பார்த்ததே இல்ல. ரொம்ப அழகா வேற இருக்க. அதான் பார்த்துட்டே இருக்கேன்”

அவளிடம் நட்பு பாராட்டுவதற்கென்று அலுவலகத்தில் பலரும் அவளை ஆராதனை செய்யும் வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் சூட்சமங்களையும் அவர்கள் சிரிப்பின் வழியே வெளிப்படும் தேவையையும் அவள் அறிந்திருந்தாள். பாசாங்கு இல்லாத இவனது முகஸ்துதி அவளுக்கு பிடித்திருந்தது. உதட்டின் வழியே தனது வெட்கம் மேலிடுவதை அவளால் உணர முடிந்தது. உதட்டை கடித்துக்கொண்டு திரையை பார்த்து லேசாக சிரித்துக் கொண்டிருந்தாள்.

“நம்மள யாரும் வாழவிட மாட்டாங்கடா…”

தன் சுய துக்கங்களை பகிர்ந்து கொள்ளவும் தன் மனதின் பாரத்தை இறக்கி வைக்கவும் அவனுக்கு ஒரு மடி தேவையாய் இருந்தது. அவன் கரத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு அவன் தோளின் மீது சாயும் தருணங்களில் உள்ளார்ந்து அனுபவிக்கும் ஓர் அன்னையின் மடியை போலவே அவன் உணர்ந்தான். திரையின் மீது பதிந்துள்ள பார்வை சிறிதும் விலகாமல் அவன் தோளின்மீது சாய்ந்து கொண்டான்.

“நீ ஒன்னும் கவலப்படாதடா. என்கிட்ட இருந்து யாரும் உன்ன பிரிக்க முடியாது. நான் எப்போவும் உன்கூட தான் இருப்பேன்”

வலதுகரத்தால் அவனது தோளை தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் இடதுகரம் கொண்டு தன் கண்ணீரை துடைத்துக் கொண்டான்.

“அதுக்கு அப்புறமும் நான் நிறைய நாட்கள் அழுது இருக்கேன். நாம சேர முடியாம போனத நினைச்சு”

சோகம் படிந்த அவனது முகத்தில் காலத்தின் சாட்சியாக வெண் மயிர்கள் இருபக்க கன்னங்களிலும் தலையிலும் அங்கங்கே முளைத்திருந்தன.

“ம்.. நாம பிரிஞ்சதுக்கு அப்புறம் அழுகைதான் என் வாழ்க்கைல நிரந்தரம்னு ஆய்டுச்சு… ஆனா அழுதுட்டு இருக்கும் போதே சட்டுன்னு கண்ண துடைச்சுட்டு சிரிக்க யாரு கத்து கொடுத்தாங்கனுதான் தெரில. கல்யாணம் ஆகி கொழந்த பொறந்து ஏன்… பேரன பார்த்ததுக்கு அப்புறமும் கூட இந்த வயசுலேயும் இதையேதான் பண்ணிட்டு இருக்கேன்”

திரைப்படத்தின் நாயகனும் நாயகியும் பின்னணி இசையோடு சந்தித்துக்கொள்ளும் காட்சியை திரைக்கு முன் அமர்ந்திருந்தவர்கள் ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

கடந்து வந்த பிரிவின் துயரங்கள் ஓய்ந்து நின்ற மழையின் தூறலென அவள் மனதிற்குள் ஓர் நீரோடையை தோற்றுவித்தது. சேற்றுக்கடியில் சிக்கி மெல்ல அதிலிருந்து விடுவித்துக்கொள்ளும் பாதச்சுவடுகளைப் போல் பிரிவின் கடைசி உரையாடல்களும் கண்ணீரின் ஆற்றாமைகளும் அவள் மனதிற்குள் தோன்றி தோன்றி மறைந்தன. சட்டென்று அவன் பக்கம் திரும்பினாள்.

“ஒரு வகைல பார்த்தா திரைக்கு முன்னாடி உட்கார்ந்துட்டு இருக்க நாம எல்லாருமே நடிகர்கள் தான்ல”

அவள் குரலின் திசை பக்கம் அவன் திரும்பியபொழுது கண்கள் கலங்கிய நிலையில் சிரித்த முகத்தோடு காட்சியளித்தாள்.

“சரி முடிவா உங்க அப்பா என்ன சொல்லுறாரு…?”

அவள் தயங்கிக்கொண்டே அவன் கரத்தின் மீது தன் கரத்தை வைத்தாள்.

“கோவப்படாத… லட்சியத்து பின்னாடி போரவனால காலத்த மட்டும்தான் வீணடிக்க முடியும்னு சொல்லுறாரு. படிப்ப முடிச்சு நாலு வருஷம் ஆச்சு மாத சம்பளம்னு இதுவரைக்கும் அவன் எவ்வளவு சம்பாதிச்சு இருக்கான்னு கேட்குறாரு. நான் என்ன சொல்லி அவர சமாதானப்படுத்துறது”

அவளது கரங்களிலிருந்து தன் கரத்தை மெல்ல விடுவித்துக்கொண்டே தொடர்ந்தான்.

“வெளிப்படையாவே சொல்லலாமே இது உன்னோட கேள்வினு. எந்த ஒரு லட்சியத்தையும் நேரம் காலம் தீர்மானிக்குறது இல்ல. உண்மையான உழைப்புதான் தீர்மானிக்கும். நான் உழைச்சுட்டு இருக்கேன். கண்டிப்பா என் லட்சியத்த அடைஞ்சுடுவேன்… எத்தன வருஷமானாலும் சரி என் லட்சியத்துல இருந்து பின்வாங்கப் போறது இல்ல”

“கொஞ்சமாச்சு பிராக்டிகலா இரு… நம்ம வாழ்க்கைய தீர்மானிக்குறதே நமக்கு கிடைக்குற வாய்ப்புகள்தான். நீயேதான சொன்ன.. உண்மையா உழைச்சுட்டு இருக்கேன்னு. உன் உழைப்புக்கு இதுவரைக்கும் ஏதாவது வாய்ப்பு கிடைச்சிருக்கா சொல்லு…? உனக்கு முன்னாடி எவ்ளோ பேரு இருக்காங்கனு பாரு. இப்போ நாம உட்கார்ந்துட்டு இருக்க சீட்டையே உதாரணத்துக்கு எடுத்துக்க. இந்த இருட்ட கடந்து, உனக்கு முன்னாடி வரிசைல இருக்க ஆட்கள கடந்து போனா மட்டும்தான் அந்த மேடைய தொட முடியும். உன்னோட அனுபவங்களும் நீ சந்திச்ச புறகணிப்பு கூடவா உன்ன யோசிக்க வைக்கல..? எந்த காலத்துல இருக்க நீ. சும்மா சும்மா உழைப்பு லட்சியம்னு பேசிட்டு இருக்க. எல்லாருக்குமே பொருந்துற விஷயம் என்ன தெரியுமா…! இந்த உலகம் நமக்கு கொடுக்குற வாழ்க்கைய ஏத்துட்டு அதுக்கூட வாழுறது தான்… அத புரிஞ்சுக்க”

அவனது லட்சியத்திற்காகவும், ஆசைகளுக்காவும் எப்போதும் அவனுக்கு ஆறுதலாய் இருந்தவள் எதிர்கால பற்றிய பயத்தால் இப்போது அவன் வாழ்வின் லட்சியங்களை துச்சமென நினைத்து பேசும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாள். அவளைப் பொறுத்தவரை அவளது லட்சியமென்பது அவன் மட்டும்தான். அவனுடைய உலகம் மட்டும்தான் அவள் வாழ்க்கையாக இருந்து வந்தது. தான் நேசிக்கும் உலகத்திலிருந்து அவன் விலகி வந்தால் மட்டுமே தன் எதிர்கால உலகத்தில் அவனை ஐக்கியப்படுத்திக்கொள்ள முடியும் எனும் முடிவிற்கு வந்திருந்தாள். அவரவர் வாழ்வின் தேவையை நிவர்த்தி செய்ய முனையும் தேடலில் ஆதரவிற்கும் காத்திருப்பிற்கும் அங்கு இடமிருப்பதில்லை. எதன் வழியிலாவது அவனை தன்னிடம் தக்கவைத்துக் கொள்ளவே அவள் விரும்பினாள்.

“கொஞ்சம் நிறுத்துறியா…! இந்த உலகம் கொடுக்குற வாழ்க்கைய எல்லாம் என்னால வாழ முடியாது. நான் எதை விரும்புறேனோ அதைத்தான் செய்வேன். எப்படி இருக்கணும்னு தோணுதோ அப்படித்தான் இருப்பேன்”

நாயகன் தன் காதலை நாயகியிடம் தெரிவிக்கும் காட்சி திரையில் ஓடிக்கொண்டிருந்தது. பெரும்பாலானோரின் எண்ண ஓட்டங்களில் அக்காட்சி வலை கொண்டு இழுப்பது போல் காதலின் நினைவலைகளை வெளிக்கொணரச் செய்தது. அந்நினைவுகளில் கிடைத்த சந்தோஷ தருணங்களை சிலர் மனதிற்குள் ரசித்தும் அந்நினைவுகளினால் கிடைத்த துயரங்களை மறக்க நினைத்தும் சிலர் தன் காதலின் நினைவு பக்கங்களை பின்னோக்கி புரட்டிக் கொண்டிருந்தார்கள்.

தன் காதலைத் தெரிவிக்கவும் இதுதான் தக்க சமயமென்று அவனுக்குத் தோன்றியது. தன் நெஞ்சின் படபடப்பையும், தயக்கத்தையும் சமநிலைக்கு கொண்டுவர எத்தனித்தான். சட்டென்று அவள்,

“நீ என்னைய லவ் பண்ணுரியாடா…?”

திரையரங்கின் சத்தத்தில் அவளது வார்த்தைகளை சரிவர கேட்க முடியவில்லை என்றாலும் தன் செவிகளுக்கு கேட்ட வார்த்தையை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள காதருகே அவளை நெருங்கினான்.

“என்ன கேட்ட சரியா விழல”

அவனுக்கு நன்கு கேட்கும்படி சத்தமாக “நீ என்னைய லவ் பண்ணுறியானு கேட்டேன்”

தான் சொல்ல நினைத்த விஷயத்தை அவள் கேள்வியாக முன்வைப்பாள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பதிலேதும் சொல்லாமல் தலையை கீழே தொங்கவைத்துக்கொண்டு அமைதியாக இருந்தான்.

“சும்மா சொல்லுடா. எனக்கு எல்லாம் தெரியும். ரெண்டு வருஷம் ஒரே ஆபிஸ்ல வேலை செய்யுறோம் இதகூட தெரிஞ்சுக்க முடியாமலா இருப்பேன். நீயும் உன் லவ்வ சொல்லனும்னு தானே வெளிய கூட்டிட்டு வந்த. தயங்காம சொல்லு”

“பொறுமையா சொல்லலாம்னு தான் இருந்தேன். நீயும் வேற ஆபிஸ் மாறிட்ட. முன்ன மாதிரி சந்திக்கவும் முடியல. அதான் இப்போவே சொல்லிடலாம்னு…”

“இப்போ கூட நீ எங்கடா சொன்ன. நானா தானே கேட்டு தெரிஞ்சுகிட்டேன்”

சொல்லி முடித்ததும் அவள் போக்கில் சிரித்துக் கொண்டிருந்தாள்.

“சரி இப்போ சொல்லு நாம லவ் பண்ணலாமா…?”

வெட்கத்தினூடே தனக்குள் சிரித்துக்கொண்டு அவன் காதருகில் சென்றாள்.

“நாம இப்போ கிஸ் பண்ணலாமா?

“ம்… அது எல்லாம் தப்பு. நீ என்ன லவ் பண்ணுறேனு சொல்லு அப்புறம் கிஸ் பண்ணலாம்”

தலையில் அடித்துக்கொண்டு “போடா ட்யூப்லைட்” என்று சொல்லி சத்தமாக சிரித்தாள். அவள் சிரிப்பிற்கு அர்த்தம் விளங்கிக்கொள்ள முடியாமல் அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இடைவேளை நேரத்தை உணர்த்தும் வகையில் மேற்பரப்பு சுவற்றில் பொருத்தப்பட்ட பல மஞ்சள் மின்விளக்குகள் எரிய ஆரம்பித்தன. நேரத்தை மறந்து அவனது தோளில் சாய்ந்து கொண்டிருந்தவன் சட்டென்று சுதாரித்து எழுந்துக் கொண்டான்.

“டேய் சாப்பிட எதனா வாங்கிட்டு வரேன். உனக்கு என்ன வேணும்..?”

“எனக்கு எதுவும் வேணாம் நீ கொஞ்ச நேரம் இங்கியே இரு”

இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் வண்ணங்களற்று இருக்கும் வெள்ளை திரையையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

தன் வரிசைக்கு எதிர்வரிசை ஓரத்தில் ஒரு இளம் காதல் ஜோடி வளைத்து வளைத்து செல்பி எடுத்துக் கொண்டிருப்பதையே அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் கையில் பார்ப்கானும் கோக் பாட்டிலுடன் அவள் அருகில் அமர்ந்ததும் அவளது கவனம் முழுவதுமாக கலைந்தது.

தான் பாத்ரூம் வரை சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு தன் இருக்கையில் இருந்து எழுந்துச் சென்றாள். அவள் சென்ற சிறிது நேரத்தில் அவன் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு சற்று தள்ளி எதிர்வரிசையில் ஒரு இளம் காதல் ஜோடி கைகோர்த்துக்கொண்டு சிரித்துக்கொண்டே செல்வதை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

பெரிய அளவிலான பாப்கார்ன் ஒன்றையும் கோக் பாட்டில் ஒன்றையும் வாங்கிவிட்டு சிரித்துக்கொண்டே அவளை நெருங்கினான்.

“என்னடா ஆசைதீர செல்பி எடுத்துக்கிட்டியா… இப்போ உடனே ஐ யம் கமிட்டட்னு போஸ்ட் போட தோணுமே”

“அதுக்கு என்ன இப்போ அவசரம்… மேரேஜ் ஆகுற வரைக்கும் நம்ம சீக்ரேட்ஸ் எல்லாம் யாருக்கும் தெரியாம பார்த்துக்கனும்”

“ஓ.. அப்பிடியா…! சரி உன்னோட சீக்ரேட்ஸ் எல்லாம் நீ யாருக்கும் தெரியாம பார்த்துக்க. நான் உன்ன டாக் பண்ணி போஸ்ட் போட்டுட்டேன்”

இருவரும் சிரித்துக்கொண்டே தங்கள் இருக்கையை தேடி நகரத் தொடங்கினர்.

“ஏன்டா எதுவும் பேச மாட்டேங்குற. இப்படி அமைதியா இருந்தா எப்படி? அடுத்து என்ன பண்ணலாம் ஏதாவது சொல்லு”

“நம்மளால என்ன பண்ணமுடியும்னு நினைக்குற… அங்க பாரு ஜாலியா சிரிச்சுகிட்டே ஒரு லவ்வர்ஸ் வராங்களே அவங்களோட காதலுக்கு மட்டும் தான் இந்த உலகம் ஆதரவா இருக்கும். பெத்தவங்க எங்களோட காதலுக்கு தடையா இருக்காங்கனு அவங்களால நாளைக்கு கமிஷ்னர் ஆபிஸ் முன்னாடி போய் நிக்க முடியும், அவங்களுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வைக்க எங்கெங்க இருந்தோ பிரண்ட்ஸ் வருவாங்க, ஏன் அவங்களுக்கு அறிமுகம் இல்லாதவன் கூட அவங்க காதலுக்கு உதவி செய்வான். நமக்கு அப்படியா… நம்மள மனுஷனாவே மதிக்காத இந்த உலகம் நம்ம உணர்ச்சிகள மட்டும் எங்க புரிஞ்சுக்க போகுது..”

பின்பக்கமாக சீட்டின் மீது சாய்ந்துகொண்டு நீண்டு வளர்ந்திருந்த தன் சிகையை கோதிக்கொண்டிருந்தான். இடைவேளை முடிய இருக்கும் ஒருசில நிமிடத்திற்குள் மீண்டும் இருக்கைகளைத் தேடி பார்வையாளர்கள் அலைந்து கொண்டிருந்தார்கள்.

“அப்போ சினிமா பார்க்கும் போது சாப்ட சமோசா கோன் ஐஸ் எல்லாம் இப்போ இல்ல. பார்ப்கார்ன் தான் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோ”

தான் வாங்கி வந்திருந்த பார்கார்னை சிரித்துக்கொண்டே அவளிடம் நீட்டினான். அதில் ஒன்றை எடுத்து சாப்பிட்டவள் அசைபோட்டுக்கொண்டே அவனை ஒருவிதமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நாம இதுவரைக்கும் ஒன்னா சேர்ந்து ஒரு போட்டோ கூட எடுத்தது இல்லல”

“நாம காதலிக்குற காலத்துல இப்போ இருக்க செல்போன் எல்லாம் இருந்திருந்தா இந்த உலகத்துலேயே நாமதான் அதிகமா போட்டோ எடுத்திருப்போம்”

“இப்போ எடுக்கலாமே…”

நிராசைகளால் மட்டுமே சூழப்பட்ட அவனது வாழ்வில் விருப்பம் எனும் கதவு மட்டும் பல வருடங்களாக அடைபட்டுக் கொண்டிருந்தது. அதை தகர்த்தெறியும் வலிமையும், பொறுமையும் எப்போதோ அவன் இழந்திருந்தான். அவ்வெக்கையில் வாழ பழகியவனால் சட்டென்று எதிலும் தன்னை இணைத்துக்கொள்ள மனம் வரவில்லை. அவளுக்கு என்ன பதில் சொல்லவதென்று தெரியாமல் அமைதியாக இருந்தான்.

“இத்தன வருஷத்துக்கு அப்புறம் ஒரு போட்டோ மூலமா நாம சேர முடிஞ்சதா இருக்கட்டுமே”

அவன் பதில் சொல்லவதற்கு முன் தன் பையில் வைத்திருந்த செல்போனை எடுத்து காமிராவை ஆன் செய்து அவனிடம் கொடுத்தாள். செல்பி எடுப்பதற்கு ஏதுவாய் இன்னும் அருகில் வந்து சிரித்துக்கொண்டே காமிராவை பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் கிளிக் செய்ய தயாராகும் அந்நொடியில் சட்டென்று விளக்குகள் அனைத்தும் அணைந்து இடைவேளைக்கு பிறகான காட்சி திரையில் ஓடத்தொடங்கியது. ஏமாற்றத்துடன் செல்போனை அவளிடம் கொடுத்தவன்.

“நாம கடைசியா சேர்ந்து படம் பார்த்தது இந்த கார்னர் சீட்டா இருந்துட்டு போகட்டும்… போட்டோ எல்லாம் வேண்டாம்”

நாயகனும் நாயகியும் ஒருவர் மீது வைத்துள்ள காதலின் நன்மதிப்பை வரிகளைக்கொண்டும் முகபாவனைகளைக் கொண்டும் டூயட் பாடலின் வழியே பார்வையாளர்களுக்கு கடத்திச் சென்றார்கள். தன் காதலின் முடிவு என்னவென்பதை யூகிக்க முடியாமல் விருப்பமற்று இருவரும் அமர்ந்திருந்தார்கள். கொஞ்ச நேரத்திற்கு பிறகு அவனே பேச்சைத் தொடங்கினான்.

“எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியல. எல்லாம் தெரிஞ்சு தானே என்ன லவ் பண்ண ஆனா மேரேஜ்னு வரும்போது எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு உன்ன கல்யாணம் பண்ணனும்னு எதிர் பார்க்குற. இது எந்த வகைல நியாயம்”

“என்ன பத்தி கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா…? சாதி, குடும்பம்னு எல்லாத்தையும் தாண்டி எங்க வீட்ல இருக்குறவங்ககிட்ட சம்மதம் வாங்கி இருக்கேன். ஆனா உன்னோட வேலைன்னு எத சொல்லி அவங்கள சமாதனப்படுத்துறது. உன் லட்சியத்துக்கு பின்னாடி நானும் திரிஞ்சுட்டு இருக்கணும்னு நினைக்குறியா?”

“என்னோட லட்சியத்தைதையும் காதலையும் மதிக்காத காதல் காதலே இல்ல. அது ஒரு சுயநலம்”

சட்டென்று கோபமாக அவன் பக்கம் திரும்பினாள்

“அப்படியே வெச்சுக்க. உனக்கு உன் லட்சியம் முக்கியம்னா எனக்கு என் காதல் முக்கியம். உன்ன இழக்க கூடாதுன்னு நினைக்குறேன்ல என்னோட காதல் சுயநலக் காதல்தான்”

“காதலுக்காக நானும் என் லட்சியத்த இழக்க விரும்பல”

எந்த ஒரு விவாதத்தின் முடிவிலும் இதுவரை அவளிடம் அவன் சரணடைந்தது கிடையாது. விளங்கிக்கொள்வதற்கும் விளக்குவதற்கும் இனி எதுவும் இல்லை எனும் நிலை வரும்பொழுது மௌனம் மட்டுமே அவளிடத்தில் நிலைத்து நின்றது. எதுவும் பேசிக்கொள்ளாமல் கண்கள் இரண்டும் துடிக்க மெளனமாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எனக்கும் வீட்ல பொண்ணு பார்க்க வர ஆரம்பிச்சுட்டாங்கடா. நம்ம விஷயத்த வீட்ல எப்படி சொல்லுறது… யாருகிட்ட சொல்லுறதுனு… ஒன்னும் புரியல”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன… உன்கிட்ட இருந்து யாரும் என்ன பிரிக்க முடியாதுனு”

“இப்போவும் சொல்லுறேன் யாருக்காகவும் உன்ன இழக்க மாட்டேன்… ஆனா நம்ம பெத்தவங்களையும் சுற்றி இருக்குறவங்களையும் எப்படி சமாளிக்குறதுனு தான் தெரில”

“அவசியம் இல்ல… நாம என்ன சொன்னாலும் யாரும் புரிஞ்சுக்க மாட்டாங்க. நம்மள சேர்த்துக்கவும் மாட்டாங்க. நாம அவங்ககிட்ட இருந்து விலகி இருக்குறது தான் நமக்கு நல்லது”

இறுக்கமாக அவனது கரத்திற்குள் தனது கரத்தை புதைத்துக்கொண்டே அவ்விருளில் அவனது விழிகளை கண்டடையும் முனைப்போடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“புரியலையா..? நாம இங்க இருக்க வேணாம். எங்கையாவது போய்டலாம். நமக்கான உலகத்த நாம தேடிப்போம்”

அவன் சொல்வது நல்ல யோசனையாக அவனுக்குத் தோன்றினாலும் சட்டென்று அதை ஏற்றுக்கொள்ள அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. எந்த பதிலும் சொல்லாமல் நீண்ட நேரமாக அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான்.

“சொன்னா நம்புவியானு தெரியல… கல்யாணம் ஆன இத்தன வருஷத்துல நான் தியேட்டருக்கு வந்து பாக்குற முதல் படம் இதுதான். புருஷன், குழந்தைகள்னு அமைஞ்சுட்டாலும் ஒருசில நினைவுகள் நாம விரும்புறவங்களுக்கு மட்டும்தான் சொந்தம். ஏதேதோ காரணம் சொல்லி அப்படியே சமாளிச்சுட்டேன். இப்போ இத்தன வருஷம் கழிச்சு உன்கூட தியேட்டருக்கு வரேன்”

“நானும் ஒரு ஒரு விசயம் சொல்லுறேன். நம்புவியானு தெரியல… நாம பிரிஞ்ச இத்தன வருஷத்துல யார் கூடவும் சேர்ந்து இதுவரைக்கும் தியேட்டருக்கு வந்தது கிடையாது. ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் இன்னைக்கு தான் தனிமைல இருந்து வெளிய வந்த மாதிரி இருக்கு”

நாயகனும் நாயகியும் தீவிரமாக வாக்குவாதம் செய்து தங்கள் காதலை முறித்துக்கொள்ளும் காட்சி திரையில் ஓடிக்கொண்டிருந்தது. தங்களின் நிலைதான் திரையில் ஓடிக்கொண்டிருப்பதாக அவளுக்கு தோன்றியது. நீண்ட நேரம் மெளனமாக அமர்ந்திருந்தவள் ஒரு முடிவிற்கு வந்தவளாய் பேசத் துணிந்தாள்.

“அப்போ என்ன பத்தி எல்லாம் நீ யோசிக்க மாட்ட. உனக்கு உன் ஆசை லட்சியம்தான் முக்கியம்ல”

“உன்ன பத்தி யோசிக்காம எல்லாம் இல்ல… ஆனா உன்னவிட என் லட்சியத்த பத்திதான் அதிகமா யோசிச்சுட்டு இருக்கேன்”

இதற்கு மேலும் வார்த்தைகள் பயனற்றுப் போக அவள் விரும்பவில்லை. விழியோரம் தேங்கி நிற்கும் கண்ணீரை துடைத்துக்கொண்டு மௌனமாக திரையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஒரே ஆபிஸ்ல ரெண்டு வருஷம் வேல செஞ்சுருக்கோம். என்ன பத்தி நானே உனக்கு சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்ல. உன் ஃலைப்க்கு நான் செட் ஆவேனான்னு நல்லா யோசிச்சியா…?”

“உன்கிட்ட எப்படி லவ்வ சொல்லணும்னு தான் அதிகமா யோசிச்சு இருக்கேனே தவிர இத பத்தி எல்லாம் யோசிச்சதே இல்ல… ஒருத்தங்கள பத்தி நல்லா தெரிஞ்சதுக்கு அப்புறம்தான் அவங்கள காதலிக்கணும்னு எதனா இருக்கா என்ன?”

“அப்படி இல்லடா… லவ் பண்ணுறது வெறும் டைம் பாஸ்னு இருக்க கூடாதுல. எனக்கு புடிக்குற விஷயம் உனக்கு புடிக்காம போகலாம், நீ விரும்பாத விஷயத்த நான் நேசிக்கலாம், நான் செய்யுறது தான் சரினு ரெண்டு பெரும் அடிக்கடி விவாதம் பண்ணிக்கலாம். இப்படி நிறைய இருக்கு. இது எல்லாம் கடைசில ப்ரேக்கப்ல கொண்டு போய்தான் நிறுத்தும். அதான் கேட்குறேன்.”

“நமக்குள்ள எது செட் ஆகுது ஆகல… இத பத்தி எல்லாம் நான் யோசிக்க மாட்டேன். நீ எப்படி இருப்பியோ எனக்கு தெரியாது. ஆனா நான் எந்த காரணத்துக்காகவும் என் காதல இழக்க கூடாதுனு தான் இருப்பேன்”

அவனை ஆரத் தழுவிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. அவனது தோளின் மீது சாய்ந்துகொண்டே தனது இரண்டு கைகளாலும் சிசுவை அரவணைப்பது போல் அவன் கரத்தை பிடித்துக் கொண்டாள்.

காட்சி நிறைவடைந்ததும் திரையரங்கின் விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. படத்தின் முடிவை ஆதரித்தும் இது இப்படி முடிந்திருக்கக் கூடாது என்று புலம்பிக்கொண்டும் கூட்டம் மெல்ல கலையத் தொடங்கியது. அவர்களும் ஓர் முடிவிற்கு வந்திருந்தார்கள்.

“சரிடா… நீ சொல்லுறது நல்ல யோசனையாதான் இருக்கு. நமக்கு யாரும் வேணாம். இன்னைக்கு நைட்டே நாம கிளம்புவோம்”

இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக்கொண்டே இருக்கையில் இருந்து எழுந்தார்கள்.

“கல்யாணம் பண்ணிக்காமலே நீ இத்தன வருஷம் தனியா இருந்துட்ட… அந்த குற்ற உணர்ச்சி இனிமேல் என்ன தூங்க விடாது. நம்மளோட கடைசி சந்திப்பு இதுவா இருக்கட்டும்”

பிரிவின் கடைசி நிமிடங்களை எண்ணிக்கொண்டு இருவரும் வெளிக்கதவை நோக்கி நடந்தார்கள்.

“டேய்… இப்போ நாம பிரிய கூடாதுனு இருக்கோம். ஆனா பிரிவு எந்த ரூபத்துல வேணும்னாலும் வரும். அதனால சீக்கிரம் வீட்டுக்கு வந்து பொண்ணு கேளு”

செல்லமாக அவன் தோள்களை தட்டிகொடுத்து அவனைப் பார்த்து சிரித்தாள். ஒருவரின் கரத்தை ஒருவர் பிடித்துக்கொண்டே நடந்து சென்றார்கள்.

“வாழ்க்கைல ஜெயிச்சி பெரிய ஆளா வானு இப்போ என்னால வாழ்த்துகள் மட்டும்தான் சொல்ல முடியும். நீ சாதிக்குற வரைக்கும் எல்லாம் என்னால காத்துட்டு இருக்க முடியாது. பாய்…”

அவள் அவனை கடந்தும் பிரிந்தும் சென்றாள். அவள் முடிவை ஏற்றுக்கொண்டவனாக அவள் சென்ற பின்பும் இருக்கையிலேயே சிறிது நேரம் அமர்ந்துவிட்டு கடைசி ஆளாய் திரையரங்கில் இருந்து வெளியேறினான்.

அடுத்த காட்சியைப் பார்ப்பதற்கு பார்வையாளர்கள் தயாராய் இருந்தார்கள். கார்னர் சீட்டுகள் பல அடுத்த காட்சிக்காக காத்திருக்க தொடங்கின.

***

பிரவீன்குமார்

கலைமாமணி

1

பாக்கியராஜ் கோதை

*

இன்று

“மாமா

மா.. மா…

மா ன்னா பெரியன்னு பொருள், மாநகரம் – பெரிய நகரம், மாநிலம் – பெரிய நிலப்பரப்புன்னு புரியுது, அது போல

மாமா-ன்னா மிகப்பெரியவன்னுதானே பொருள்,

அப்ப மாமான்னா எல்லாத்துக்கும் மேலானவன், பெரிய ஆளு அப்படித்தான. இந்தத் திராவிட கல்சர்ல, அதான் ‘மாமா’ முக்கிய ஆளா இருக்காங்களா” என்று தன் சொல் விளக்க ஐயத்தை, ஐயா ஆறுமுகத்திடம் கேட்டார் மெய்க்கண்டார்.

கேட்டதும் குபுக்கென வெடித்துச் சிரித்துவிட்டார் ஆறுமுகம்.

#

நேற்று..

கலைவாணர் அரங்கின் வெளியே பெரிய தொலைக்காட்சித் திரையின் முன்னே கூட்டம் அலைமோதியது. தன் விருப்பத் திரைநாயக நாயகியர்களைப் பார்க்க மக்கள் கூட்டம் அரங்கைத் தாண்டி அலைமோதி முண்டி அடித்தது. கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் திணறினர்.

முதல்வர் பங்கேற்றிருக்கும் கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. மஞ்சள் பச்சை வண்ணங்கள் ஒளிரும் மாபெரும் மேடையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு தாளில் எழுதப்பட்ட செய்தியினைப் பார்த்து முதலைமைச்சர் பேசிக் கொண்டு இருக்கின்றார்.

‘’எங்கள் திராவிடப் பொன்னாடே

கலைவாழும் தென்னாடே

இயல் இசை நாடகம், அறம், பொருள், இன்பம் இயங்கும் செந்தமிழ் நாடே..

என்று கவியரசு கண்ணதாசன் அவர்கள் கூறி இருக்கிறார்கள்”.. என்று பார்வையாளர்களைப் பார்த்தார் முதல்வர். மேடையின் கீழ் அமர்ந்திருக்கும் சிலர் சிலநொடிகள் கழித்து தன் கைகளைத் தட்டினர். எப்படா விருது கொடுப்பார்கள், எழுந்து சென்றுவிடலாம் எனக் கொட்டாவி விட்டுக்கொண்டு இருந்தனர் விருதாளர்களும் பார்வையாளர்களும்.

எட்டு நாள்களுக்கு முன்பு.

“நம்மவீட்டு ஹால்ல சி.எம் கையால வாங்குன போட்டோவ மாட்டித் தொங்கவிடணும். அந்த விருதுனால சுத்தி இருக்கிறவங்க நம்பளப் பாத்து எந்திரிச்சு நடுங்கணும். நாம செத்தா தேசியக் கொடி போத்தி துப்பாக்கி குண்டு தெறிக்க மண்ணுக்குள்ள பொதைக்கணும். எல்லாத்துக்கும் இந்த மாதிரி விருதுதான் ஸ்டார்ட்டிங் காமு” என்று கையை அகல ஆட்டி ஆட்டி டபுள் டக்கர் விளக்கிக் கொண்டு இருந்ததைத் தலைவலித் தைலத்தை மோந்து பார்த்தபடியே ஊமத்தம் பூ சீரியல் புகழ் நடிகை காமு கேட்டுக்கொண்டிருந்தார்.

“உனக்கு இந்த விருது மேலல்லாம் ஆச இல்லையா” என்று உரக்கக் கேட்டார் டபுள் டக்கர்.

ஏழு நாள்களுக்கு முன்பு..

“யாரு சார் அந்த ஆறுமுகம்?” என்றார் மாண்புமிகு அமைச்சரின் உதவியாளர்.

கலைமாமணி விருது பெறப்போகும் பட்டியல் இறுதி செய்யப்பட வேண்டிய கடைசிப் பொழுதில் செய்தி மற்றும் விளம்பரத் துறை மூழ்கி இருந்தது. மாண்புமிகு அமைச்சரின் வருகைக்காக அதிகாரிகள் அவர் அறையில் காத்திருந்தனர்.     புகழ்பெற்ற பெரிய கதாநாயகர்களும் தமிழறியா நாயகியர்களும், நகைச்சுவை நடிகர்களும் வழக்கம் போல முதல் ஆறேழு இடங்களை நிரப்பி இருந்தனர். ஆளும் கட்சிக்கு விசுவாசியாகவும், உறுப்பினர்களாவும் இருக்கிற துணை நடிகர்கள் அடுத்தடுத்து வரிசையாக இடம் பிடித்து இருந்தனர். மற்ற மற்ற சிபாரிசு ஆட்கள் நடுவே, ஆங்காங்கு நாட்டுப்புற இசைக்கலைஞர்கள், சிற்பிகள், பாடகர்கள், இடம் பிடித்து இருந்தனர். 30 பேரை இறுதி செய்தாக வேண்டும். 29 பெயர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டது. மீதமிருக்கும் ஒன்றிற்கு 37  பெயர்கள் சிபாரிசுக்கு வந்து இருந்தன.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரின் முடிவே இறுதி. தமிழ் வளர்ச்சித்துறையும் மாண்புமிகு அன்னாரின் கையில்தான் தங்கியிருந்தது.

முப்பதாவது பெயராகச் சொல்லாய்வு அறிஞர் ஆறுமுகத்தை இணைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் ஏக்கமாக நின்றார் செய்திப் பண்பாட்டுத் துறை இணைச் செயலாளர் மெய்க்கண்டார். அமைச்சரின் உதவியாரிடம் நேற்றில் இருந்தே நான்கைந்து முறை நினைவுபடுத்தி இருந்தார்.

மெய்க்கண்டாருக்கு அமைச்சர் அலுவலகத்திலும் அமைச்சரிடமும் நல்ல பெயர் இருந்தது. அமைச்சருக்கும் பல அறிக்கைகள், மேடைப்பேச்சுகள் எழுதிக்கொடுத்து இருக்கிறார். அந்த அறிக்கைகளுக்கெல்லாம் நல்ல பெயர் கிடைத்திருந்தது. அமைச்சர் புன்னகையோடுதான் எப்பொழுதும் தன்னிடம் பேசுவார். தோள்மீது கைபோட்டுப் பேசும் அளவு இணக்கம். கண்டிப்பாக இந்தச் சிபாரிசினை மறுக்க மாட்டார் என்று உறுதியோடு நம்பி இருந்தார் மெய்க்கண்டார்.

வந்து நுழைந்தும் தன் மேசையில் இருக்கும் தெய்வத்தின் படத்திற்கு மாலையிட்டு மரியாதை செய்து முதல் வார்த்தையாக – “யாருங்க இந்த ஆறுமுகம்” என்று விளித்தார் மாண்புமிகு அமைச்சர். “ரைட்டர்ங்கியா” என்றார் உதவியாளர். “எந்த ஸ்டேசன்ல  என்றார். “ஐயா புக்கெல்லாம் எழுதுவாங்கல்ல.. அந்த ரைட்டர்.. தமிழ் ரைட்டர்” என்ற பதில் அமைச்சருக்குக் கிடைத்தது.  

“எப்பா இது நடிக்கிறவங்க, பாடுறங்க, ஆடுறவங்கன்னு ஆர்ட்டிஸ்ட்டுங்களுக்குக் குடுக்கிற விருதுல்லா.. இத எப்படிய்யா இவருக்குக் குடுக்க முடியும். ? என்றார் அமைச்சர்.

“குடுக்கலாங்கய்யா” அதிகாரிகள் அவர் வினாக்களுக்கு உடனுக்குடன் பதிலுரைத்தனர்.

“எப்படி?”

“இதுக்கு முன்னாடி தி.ஜான்னு ஒருத்தருக்குக் குடுத்திருக்கு..

“யாரு அந்த தி.ஜா ?” என்றார் அமைச்சர்.

“ஐயா தி.ஜாங்கிற, தி.ஜானகிராமன் தமிழ்நாட்டுல ஒரு பெரிய எழுத்தாளர்”.

“எங்க இருக்காரு, நான் கேள்விப்பட்டதில்லையே ?” என்றார் அமைச்சர்.

“ஐயா அவரு தஞ்சாவூரு பக்கம். இப்ப இல்ல, செத்துட்டாரு. போன புத்தகக் கண்காட்சி திறப்பு விழாவுலகூட நீங்க பேசும்போது, அவரப்பத்தி பேசுனீங்க, மெய்க்கண்டார்தான் நோட்ஸ் கொடுத்தாரு”

“அப்படியா” தலையாட்டியபடி பல் தெரியச் சிரித்தார் மாண்புமிகு.

மெய்க்கண்டார் உரையாடலில் நுழைந்தார்.

“ஆனா நான் சொல்ற ஆறுமுகம் ஐயா, தமிழறிஞரு.. தமிழ் பத்தி நிறைய எழுதி இருக்காரு.. தமிழ் மொழிக்கும் உலகத்துல இருக்கூற வேற வேற மொழிகளுக்கும் நடுவுல இருக்கிற தொடர்ப, எப்படி அந்த மொழி சொற்களெல்லாம் தமிழ்ல இருந்து வந்தது அப்படின்னாலும் எழுதி இருக்காரு. பேரறிஞரு.. அமெரிக்கா, லண்டன்ல இருக்குற மொழியியல் துறை அறிஞர்களெல்லாம் இவரோட ஆய்வுகளப் பாராட்டி எழுதிருக்காங்க. பெரிய பெரிய வெளிநாட்டுப் பத்திரிக்கைலலெல்லாம் இவரோட ஆய்வுக்கட்டுரை வந்துருக்கு. ஆனா தமிழ்நாட்டுல இவரு மேல அதிக வெளிச்சம் விழல.. “

மீசையைச் சொறிந்து கொண்டார் அமைச்சர். “இந்த மாதிரி எழுதுறவங்களுக்கெல்லாம் மத்தில இருந்துல.. அது, சாகித்தியா அகாடமி அந்த விருதுதான.. கொடுப்பாங்க, ஸ்டேட்டுல கொடுப்போமா ?”  

உடனே அலுவலக இன்னொரு அதிகாரி, “மெய் சார் சொல்றது சரிதாங்க, தி.ஜானகிராமனுக்குக் இந்தக் கலைமாமணி விருது கொடுத்திருக்காங்க, ஆனா எழுத்தாளர்ன்னு போடல.. நாடக ஆசிரியர்ன்னு போட்டு இருக்கு..

“என்னங்க மெய்யி.. ட்ராமா ஆளாம்.. நீங்க சொல்ற தி.சா வேறயா..” என்ற அமைச்சரின் வினாவிற்கு, மெய்க்கண்டார் “இல்லங்கய்யா.. அவர் நாடகமும் எழுதி இருக்காரு.. ரேடியோ ஸ்டேசன்ல வேலை பாத்தவரு”.

“பின்ன எப்படி எழுத்தாளர்ன்னு கொடுக்குறதாம். பத்திரிக்கைகாரங்க நம்மளக் காரித் துப்பிறப் போறாங்க மெய்யி..”

“ஐயா கலைஞரு, அண்ணாக்கெல்லாம் கொடுத்திருக்காங்க..”

“இவரு.. நீங்க சொல்ற இந்த ஆறுமுகம் சினிமாக்கு வசனம் எழுதிருக்காரா?”

“இல்லங்கங்யா”

“கண்ணதாசன், வைரமுத்து மாறி சாங்கு கீங்கு எதாவது”

“இல்லங்க..”

“பின்ன எப்படிங்க கொடுக்குறது..”

“ஐயா, தி.ஜாங்கிற, ஒரு எழுத்தாளருக்கு மட்டுமில்ல, இப்ப பிரபலமா இருக்குற நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி மாறி நாலஞ்சு எழுத்தாளருக்கும் இந்த விருது கொடுக்கப்பட்டுருக்கு..”

“நீதான்யா எழுத்தாளர்ன்னா பிரபலம்ன்னு சொல்ற.. வெளில்ல ஒரு நாய்க்கும் அவங்களத் தெரியாது. எனக்கே தெரில.  நீங்க சொல்ற கந்தசாமி, மாடசாமில்லாம் எதாவது படத்துக்கு வசனம் கிசனம் எழுதிருப்பாங்க.. அதுக்காகக் கொடுத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்”

மெய்க்கண்டார் முட்டாள்தனமான பேச்சிற்கு எப்படி மறுமொழி கொடுப்பதென விழித்தார்.

அமைச்சர் விருதாளர்கள் வரிசையைப் பார்த்து “இதப்பாருங்க மெய்யி.. அடுத்தவாட்டி பாப்போம்.. உங்க ஐயாவ அதுக்குள்ள எதாவது டிவி நாடகத்துக்காவது ஒரு பாட்டு எழுதச் சொல்லுங்க. கலைஞனா மாற்ன பின்ன தூக்கிவிட்டு தமிழ வாழவைப்போம்”

அதிகாரிகள் அனைவரும் அமைதியாக இருக்க மெய்க்கண்டார் மெதுவாக “ஐயா, எழுத்தாளர்க்கும் கலைமாமணி கொடுக்கலாங்கய்யா.. இயற்றழிழ் கலைஞர்ங்கிற பேர்ல கொடுக்குறாங்க. இயல் இசை நாடகத்துல…. ‘இயல்’ன்னா எழுத்தாளர்களும் சேப்புதாங்க. எழுத்தாளர்ன்னு இல்லைங்கய்யா.. தெ.பொ.மீனாட்சி சுந்தம், வெள்ளைவாரணனார், அப்பாதுரையார், தமிழண்ணல் மாதிரியானவங்களுக்கும் கொடுத்துருக்காங்க..

“யாரு இவங்க?” என்றார் மாண்புமிகு.

உதவியாளர் பதறி “ஐயா.. தெ.பொ.மீனாட்சி சுந்தரம் நம்ப நிகழ்ச்சி எல்லாத்துலயும் ஓப்பனிங் சாங்கா இருக்குற தமிழ்த்தாய் வாழ்த்து எழுதுனவரு..”

“உனக்கெப்படிப்பாத் தெரியும்”

“நீங்க பிக்பாஸ் பாக்குறதில்லங்கய்யா.. அதான் தெரில.. அப்ப அப்ப சீரியல் மட்டும்தான் பாக்குறீங்க.. அவரு பிக்பாஸ வச்சு மக்களோட பல்ஸ பிடிச்சு ஆட்சிய புடிக்கலான்னு பாக்குறாரு, என்னங்கய்யா நீங்க, உலகம் புரியாம இருக்கீங்க, இதே போன ஆட்சில எல்லா மினிஸ்டரும் அப் டூ டேட்ல இருப்பாங்க”, “அவங்க தலைவரே நாடகத்துல இன்னிக்கு என்னென்ன நடந்துச்சுன்னு கேள்வி கேப்பாராம்?”

தமிழ்த்தாய் வாழ்த்து தெ.பொ.மீனாட்சி சுந்தரமில்ல இல்ல.. அது மானோன்மணியம் சுந்தரம்.. என்று பொறுமையாகச் சொன்னார் மெய்க்கண்டார்.

இரண்டுமே சுந்தரம்ங்கிறதுல கொஞ்சம் குழம்பிட்டேன்ங்யா, என்றார் உதவியாளர். அமைச்சர் முறைக்க உதவியாளர் வாயை அடைத்துக் கொண்டார்.

“இப்ப என்ன மெய்யி பண்ணலாம்” இறுதியாகக் கேட்பது போலக் கேட்டார் அமைச்சர்.

“அய்யா.. அவரு தமிழுக்காகத் தன்னோட வாழ்க்கையே தொலைச்சவரு.. 17 மொழி தெரியும். 43 புக்கு எழுதிருக்காரு. லத்தீன், கிரேக்கம், பிரஞ்ச், செர்மன், இங்கிலீஷ்ன்னு பல ஐரோப்பிய மொழி வார்த்தைக்கே தமிழ்தான் மூலம்ன்னு பாவாணர் வழில கண்டுபிடிச்சவரு.. உலகத்துல இருக்கிற மற்ற பெரிய பெரிய மொழியறிஞர்களோட வச்சு ஒப்பிடத்தக்க அளவுக்கு அறிஞரு“

பாவாணர் யார் என்று அமைச்சருக்குத் தெரியுமா, என்ற ஐயம் வந்தது இடை நிறுத்தினார் மெய்க்கண்டார். இனி இப்படிப்பட்ட பெயர்களைச் சொல்லக்கூடாது என்று முடிவு செய்தார்.  அமைச்சர் நம்மை அதிக அறிவாளி என்றும் நினைத்துவிடக் கூடாது. அது ஆபத்து. எந்த நேரத்திலும் பணி மாற்றம் வரலாம். அதனால் அவ்வப்பொழுது முட்டாள் போலவும் நடந்துகொள்ள வேண்டும், என்ற விதி மெய்க்கண்டாருக்குத் தெரிந்திருந்தது.

அமைச்சர் மீசையைத் தடவ,

“நம்ம பேசுற மீட்டிங் பலதும் சிறப்பா வர்றதுக்கு ஆறுமுக ஐயாவோட ஆய்வும் ஒரு காரணம். அவர் எழுதின புக்குல இருந்து பல குறிப்பு எடுத்திருக்கோம்” பொறுமையாகச் சொன்னார் மெய்கண்டார்.

“ஓ.. பஞ்சு.. ஸ்பாஞ்ச்.. தாக்கு .. அட்டாக்-ன்னு இந்தக்கை உசத்திப் பேசுற ஆளுக்கு எதிரா ஒரு கூட்டம் போட்டு.. கண்.. ஞான்.. க்னொ.. நோ[KNOW].. நாலட்ஜ்[KNOWLEDGE].. நாலட்ஜ்ங்கிற சொல்லே கண்ணுங்கிற தமிழ்ல இருந்துதான் வந்ததுன்னு பேசி – முதல்வர்க்கிட்ட கூட பாராட்டு வாங்குனமே.. அத எழுதினவரா இவரு.. ம்ம்..” என்று கூறி உற்சாகமானார் அமைச்சர்.

அமைச்சரின் அரிய நினைவாற்றலுக்கு நன்றி தெரிவித்து, ஆமாம் என்று தலையாட்டினார் மெய்க்கண்டார். அமைச்சர் தன் பையில் இருக்கும் பச்சை வண்ணத் தூவலின் மூடியை எடுத்து எழுதுவதற்கு முன்பு..  

“எந்த கேட்டகிரில பேரப் போடுறது..” என்று கேட்டார்.

“இயற்றமிழ் கலைஞர்” என்று அருகிருக்கும் அதிகாரிகள் முடிவு செய்து சொன்னார்கள்.

விருதாளர்களில் முப்பதாவது பெயராகச் ‘சாத்தனூர்.மு.ஆறுமுகம் – இயற்றமிழ் கலைஞர்” என்ற பெயரை அமைச்சரே தன் கைப்பட எழுதினார்.

கண் கலங்கிய மெய்க்கண்டார் அமைச்சரிடம் மெதுவாக, “மனைவி மக்கள்ன்னு வசதியா யாருமில்லங்க அவருக்கு… எழுதுனத புத்தகமாப் போடக்கூட வசதியில்ல.. சொல் ஆராட்சி பண்ணி.. பண்ணி.. கண்ணுகூடச் சரியாத் தெரில.. விருதும், கேடயமும்  கொடுக்குறதோட – இலச்ச ரூபா பொற்கிழியும் கொடுத்தா தமிழுக்கு நன்றி கடன் செஞ்ச மாதிரி இருக்கும். அதுக்கு உங்களுக்கு அதிகாரமிருக்குங்கய்யா. நிறைய பேருக்கு இந்தப் பொற்கிழி கொடுத்திருக்காங்க”

உற்றுப் பார்த்து … “பாப்போம்”  என்று நடுவமாகத் தலையாட்டினார் அமைச்சர்.

மெய்க்கண்டார் அகன்ற பிறகு, “அந்தாளுகிட்ட ஏதும் காசு கீசு கமிசன் கேட்டு இருப்பானோ.” என்றார் அமைச்சர். “மெய்யி கறைபடியாத கையி” என்றார் மோனையாக உதவியாளர்.

அமைச்சர் அறையின் வெளியே காத்திருந்தார் டபுள் டக்கர்.

ஆறு நாள்களுக்கு முன்பு

அந்த வீட்டில் வறுமை வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று எங்கும் காணக் கிடைத்தது. சட்டையில்லாத மேனியோடு தான் அணிந்திருக்கும் சோடாபுட்டி கண்ணாடி வழியாகப் பெரிய பூதக்கண்ணாடியை வைத்துக் கொண்டு ஸ்பானிஷ் மொழி அகராதியில் மூழ்கி இருந்தார் ஆறுமுகம். அவர் தன்னைப் பார்ப்பதற்காகப் பொறுமையாக ஓரமாக நின்று கொண்டிருந்தார் மெய்க்கண்டார்.  

நேற்று

மேடையில் முதலமைச்சரின் உரை…

“மக்களை மகிழ்விக்கும் கலைஞர்கள் வறுமை அடைந்துவிடக் கூடாது, அவர்கள் மென்மேலும் வளர்ந்து சிறக்க வேண்டும், மன மகிழ்வோடு இருந்து மேலும் மேலும் கலைகளை வளர்த்து எடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே மாண்புமிகு தெய்வத்தின் அரசு ஆயிரத்தி தொள்ளாராயிரத்தி….”

எட்டு நாள்களுக்கு முன்பு

“பேருக்கு முன்னாடி ஊமத்தம் பூ புகழ் அப்படிங்கிற பட்டம் நல்லா இருக்கா.. இல்ல, கலைமாமணி அப்படிங்கிறது நல்லா இருக்கா” ஏற்ற இறக்கத்தோடு பேசினார் டபுள் டக்கர்.

நண்டு பிடித்திருப்பது போலத் தன் தலையில் பிடித்திருக்கும் இரண்டு கூலிங்கிளாஸினை மாற்றிப் போட்டப்படி,  அவள் சொல்லப் போகும் பதிலுக்காகக் காமுவை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரே நேரத்தில் போட்டிருக்கும் இந்த இரண்டு கூலிங்கிளாஸினாலேயே இவருக்கு டபுள் டக்கர் என்ற சிறப்புப் பெயர் தங்கிப் போனது.

ஆறு நாள்களுக்கு முன்பு

“துளி கூட உங்களுக்கு விருப்பமில்லைன்னு எனக்குத் தெரியுங்கய்யா.. இருந்தாலும் விருது இவங்களுக்குக் கொடுக்கலான்னு முடிவு பண்ற இடத்துல  நானும் இருக்கேன். ஒரு இலச்ச ரூபா சும்மா காசா, கடேசி காலத்துலயாவது அத வச்சி தேவைய செய்திகிடலாம்ல. ஒரு நல்ல கண் டாக்டரப் பார்த்து கண்ணு சரி பண்ணலாம். நீங்க கேக்குற டிக்ஸனரி எல்லாம் யாருடா அனுப்பி வைப்பாங்கன்னு எதிர்பாக்காம நீங்களே வாங்கிக்கலாம்.”

ஆறுமுகம் மெல்லிய புன்னகையோடு பார்க்க, மெய்க்கண்டார் தொடர்ந்தார்.

“நீங்க மரியாதைக்கு வாங்க போதுங்கய்யா. மத்தத எல்லாம் நான் பாத்துகிடுறேன்”. பிடிவாதமாகச் சொன்னார் மெய்க்கண்டார்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும். நினைக்கப்படுன்னுதான் சொல்லிருக்கான் வள்ளுவன்.. நினைச்சிப் பாக்கணும்ல..

“எனக்கு எந்த வருத்தமுல்ல.. கேடுமில்ல. எனக்கு நடமுற தெரியும், இந்தத் தமிழ் ஒன்ன வச்சிக்கிட்டு இன்னும் ஆயிரம் உகத்துக்கு என்னால மகிழ்ச்சியா வாழ்ந்துட முடியும். எனக்கு அது போதும். இந்த விருது, பகட்டு எல்லாம் போலிகள் எதிர்பாக்குறது. எனக்கு அது தேவையில்ல “ என்றார் ஐயா ஆறுமுகம்.

“நான் ஒருத்தன் இருக்கும் போது இப்படி உங்கள விட்டுற முடியுமாங்கய்யா ?”

“மெய்யி.. உங்கள மாதிரி ரெண்டு பேர் என் மேல காட்டுற அன்பே போதும், அதுவும் நான் எதிர்பாக்கல, நீங்களா கொடுக்குறது,  உங்க முதல்வர் கையால விருது வாங்குனா அது தமிழ அவமானப்படுத்தின மாதிரி. நான் ஆணவத்துலப் பேசல, உண்மையச் சொல்றேன், உங்களுக்கே புரியும்” .

விருதுக்கு ஐயா மகிழ்வார் என்று எண்ணி இருந்தால் இப்படிக் குண்டைத் தூக்கிப் போடுகிறாரே என்ற எண்ணம் மெய்க்கண்டாருக்கு. எப்படி இவரை நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்வதென்று குழம்பிப் போனார்.

ஐந்து நாள்களுக்கு முன்பு

“சீரியல்ல போட்ட அதே கெட்டப்புல போனா மின்ஸ்டருக்கு ரொம்பப் பிடிக்கும். ஊமத்தம் பூவோட பேன் அவரு” என்றார் டபுள் டக்கர்.

நான்கு நாள்களுக்கு முன்பு..

கையோடு வாங்கிச் சென்று இருந்த புதிய வேட்டி சட்டையினை ஐயாவிற்குக் கொடுத்தார். தன்னுடைய வற்புறுத்தலினால் ஐயா விருதுக்கு இசைவளித்துவிட்டாரே என எண்ணி உளம் மகிழ்ந்தார் மெய்க்கண்டார்.

நேற்று..

முதலமைச்சர் உரை..

“இயல், இசை, நாடகம், சிற்பம், ஓவியம், திரைப்படம், சின்னத்திரை, விகடம், கிராமியக்கலை மற்றும் அவற்றின் உள் பிரிவுகள் என்று மட்டுமில்லாமல் இந்த ஆண்டிலிருந்து பண்பாட்டுக் கலைப்பரப்புனர்கள் எனச் சிலருக்கும் விருதுகள் வழங்கி கலைத்தாயின் மணிமகுடத்திற்கு மாண்புமிகு தெய்வத்தின் அரசு மேலும் ஒளி சேர்க்கும் என்பதைப் பெருமையோடும் மகிழ்ச்சியோடும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான்கு நாள்களுக்கு முன்பு..

அந்தத் தொலைக்காட்சித் தொடர் அலங்காரத்தினைச் சூடியபடியே பம்மல் பண்ணைத் தோப்புக்குச் சென்றாள் ஊமத்தம் பூ காமு. 

நேற்று..

நிகழ்ச்சிக்காகப் பட்டுப்புடவை அணிந்த பெண், வரிசையாக விருதாளர் பெயரைப் படித்துக் கொண்டிருக்கிறார்.  முதலமைச்சர் எழுந்து வரிசையாக வரும் விருதாளர்களுக்குத் தங்கப்பதக்கமும், சான்றிதழும் வழங்கி வணக்கம் வைக்கிறார்.

மூன்று நாள்களுக்கு முன்பு..

மெய்க்கண்டார் கலைமாமணி இறுதி செய்யப்பட்ட கலைஞர்களின் வரிசையினைப் பார்த்து அதிர்ந்தார். அதில் சாத்தனூர் மு. ஆறுமுகம் – இயற்றமிழ் கலைஞர் என்ற இடம், அதே பச்சை வண்ண மையால் அடிக்கப்பட்டு  வேறு பெயர் எழுதப்பட்டு இருந்தது, அருகே அமைச்சரின் கையொப்பமும் இருந்தது.

நேற்று

“அடுத்ததாக கலைமாமணி விருது பெறுகிறவர் – திரு .மா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.  – பண்பாட்டுக் கலை பரப்புச் சேவைகளுக்காக இந்த விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறது.”

டபுள் டக்கர் எனும் மா.கிருஷ்ணமூர்த்தி பளீர் என வெள்ளைவேட்டி சட்டையில் எழுந்து மேடை சென்று விருதினை வாங்கி ஒளிப்படங்களுக்கு புன்னகை செய்தார்.

இன்று

சிரிப்பை அடக்க முடியாமல் ஆறுமுகம்

“அது அப்படியில்லங்க மெய்யி, உலகத்துல இருக்கிற முகமையான ஒலிகள்ல இந்த ‘மா’ங்கிற ஒலியும் ஒன்னு, ஆவினம் இருக்குதுல்ல.. இந்த மாடுங்க கத்துற ஒலி ‘மா’. அந்த ‘மா’ ஒலிதான் மனுசங்க மாதிரி பெத்தவங்களக் குறிக்கிறச் சொல்லாவும் மாறி வந்திருக்கு. நமக்கும் இயல்பா வாயத் தொறக்கும் போது ‘அ’ – ங்கிற ஒலி பிறக்கும். அந்த அ+மா தான் அம்மா. அம்மாங்கிற சொல்ல இப்படித்தான் தமிழ் தந்திருக்கு”

“இந்த அம்மா உடன் பிறந்தவந்தான் அம்மான், இந்த அம்மான்தான் காலப்போக்குல திரிந்து அம்மான், அம்மான்னு மாமாவாகிருக்கு. தமிழ்நாட்டுல சில இடங்கள்ல இன்னமும் தாய்மாமன அம்மான்னுதான் சொல்வாங்க.. “

“நீங்க சொல்ற மாதிரி.. மாமான்னா பெரிய ஆளுங்கிற பொருளெல்லாமில்ல” என்று விளக்கினார் ஆறுமுகம் புன்னகை மாறாமல்.

“இல்லங்கயா ‘மாமா’ன்னா மிகப் பெரிய ஆளுன்னுதான் பொருள், எனக்குத் தெரியும், உங்களுக்குத் தெரியாது, என்று ஆதங்கத்தோடு முடித்துக் கொண்டார் மெய்க்கண்டார்.

***

பாக்கியராஜ் கோதை – சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். தற்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் பணிபுரிந்து வரும் இவருக்கு சில கதைகள் வெளியாகியுள்ளன.