Home Blog Page 61

நவீன் கவிதைகள்

0

01

ஆழக்கடலின்
ஆக்ரோச அலை
வந்தும் சென்றுவிடவில்லை.
கரையைச் சற்று முத்தமிட்டு
மெல்ல பின்வாங்குகிறது,
சூன்யம் வந்து இருளை கவ்வுகிறது
கடலைவிட்டு
கடல்
நகர்ந்து செல்வது இனிதே.

***

02

நிசப்தம் அணைத்துக் கொண்ட
பிறகு தான்
சூன்யம் இருளை ஆக்கிரமிக்கிறது.

***

03

வீட்டின் நடுவில் ஊசல் ஆடுகிறது
ஆச்சியின் உயிர்
உயிரின் ஊசல் இறப்பின்
அறிகுறிச்செய்தி
ஊசலுக்குப் பிறகு தான்
ஆன்மா பிரிவுக்கு
காற்றிடம் பேசிய பிறகு தான்
மண்ணை முத்தமிடுகிறது
உதிர்ந்த சருகு.

***

நவீன் – வேலூரைச் சேர்ந்த நவீன் அடிப்படையில் ஒரு பிஸியோதெரபி மருத்துவர். தற்போது நண்பர்களுடன் சேர்ந்து அவர் ஊரில் இலக்கிய அமைப்பை தொடங்கியிருக்கிறார்.

பட்டக்காடு (நாவல் பகுதி)

0

அமல்ராஜ் பிரான்சிஸ்

63

ங்கள் திருமணம் முடிந்து மன்னார் தீவுக்குத் தனியாகக் குடித்தனம் போன பின்னர் சுமார் ஆறு மாதங்களாக ஊர்ப்பக்கம் தலைகாட்டவே முடியவில்லை. வாரத்தில் ஆறு நாட்களும் வேலை என்பதே என் ஒட்டுமொத்த வாழ்க்கையாக மாறிவிட்டிருந்தது. சரி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறைதானே என்றால், அன்றுதான் வீட்டில் தலைக்குமேல் வேலைகள் மலைகட்டிக் கிடக்கும். தன் கையிலிருக்கும் அதிகாரத்தை மறந்துவிட்டு நீண்டதொரு பட்டியலுடன் நாய்க்குட்டி போல் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருப்பாள் நிவேதா.

சதா வேலையென்று சுற்றிக்கொண்டிருக்கும் என் போன்றவர்கள் நம்முடைய ஏழு நாட்களில் ஒன்றையாவது பரிபூரணமாக  மனைவியிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அதில் சொல்லொண்ணா சந்தோஷமும், திருப்தியும் உண்டு. ஆதலால் என்னுடைய ஞாயிறுக்கிழமை என்னுடையதல்ல. அது முற்றுமுழுவதுமாக அவளுடைய நாள். எப்படியென்றால், அவள் அமரச்சொன்னால் அமர்வேன். உறங்கச்சொன்னால் உறங்குவேன். காய்கறி வாங்கிவரச் சொன்னால் சந்திரிக்கா பையை சுமந்துகொண்டு காய்கறி வாங்கிவருவேன். தொல்லை பண்ணாமல் தொலைக்காட்சி பார் என்றால் சமர்த்தாக சன் டீவியைப் போட்டுக்கொண்டு தேமே என உட்கார்ந்திருப்பேன். தவிர, எப்போதாவது பெருந்தேவி மனமிற்கி “தம்” அடிக்க அனுமதி கொடுத்தால், ஹம்சாக் கடையில் போய் ஒரு தம்மும் ப்ளைன் டீயும் அடித்துவிட்டு வருவேன்.

இவ்வளவுதான் என்னுடைய ஞாயிறு! அல்லது அவளுக்காக வாழப் பழகிக்கொண்ட ஞாயிறு. ஓர் அழகான ஸ்திரியைத் திருமணம் செய்துகொண்டால் மட்டும் போதுமா என்ன, அவளை வைத்துக் கொண்டாடவுமல்லவா தெரிந்திருக்க வேண்டும்.

ந்த வருடத்தின் டிசம்பர் மாதத்தில் ஒருவார விடுமுறை எடுத்துக்கொண்டு நானும் நிவேதாவும் ஊருக்குப் போனோம். அப்பொழுதெல்லாம் ஊருக்குப் போதல் என்பது மாபெரும் கொண்டாட்டமாகவே மாறிப்போயிருந்தது எனக்கு. நகரத்தில் சுற்றிச்சுற்றி இயந்திர வாழ்க்கைக்குள்ளேயே உழலும் எனக்கு, ஊருக்குப் போதல் என்பது அக நிம்மதிக்கும், சுதந்திரத்திற்குமான அகன்ற கதவைத் திறந்துவிட்டது. தோள்களில் சுமந்து கொண்டிருக்கும் பளுவையும், கால்களில் கட்டியிருக்கும் சக்கரத்தையும் ஆசுவாசமாக இறக்கி வைக்கும் பெரும் பாக்கியத்தை அந்த நாட்கள் கொடுத்தன.

அந்தத்தடவை ஊருக்குப்போய் நான் அடித்த லூட்டிகள் கொஞ்சநஞ்சமல்ல. அதுவும் நீண்ட நாட்களுக்குப் பின்னர் வசமாகிய அந்தோனியுடனான அந்தக் கடல் பயணம் பிரமாதம்.

ன்று அந்தோனி அழைப்பதற்குள்ளாகவே நானாக ஓடிச்சென்று அவனுடைய படகில் தொற்றிக்கொண்டேன். “டேய், நிவே என்னயக் கொல்லப்போறாள்டா. நீ முதல்ல இறங்கு…” என தடுத்தவனை உதறித்தள்ளிவிட்டு குஜாலாக அணியத்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். என்னுடைய ஸ்தூலமான முடிவு பின்னர் அவனுக்கும் உவகையாய் மாறிப்போனது.

படகு உறுமிக்கொண்டு தண்ணீருக்குள் பாய்ந்தது.

நீலம் கண்களை நிறைத்துப் படர ஆரம்பித்தது. நீலம்தான் எத்தனை சுறுசுறுப்பான வர்ணம். தண்ணீர்தான் எத்தனை வினோதமான படைப்பு. தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கும் வானம் கரங்களை நீட்டியபடி முறுவலுற்றது. தொலைந்து போனவனின் தரிசனம் கண்டதாலோ என்னவோ அலைகளின் ஆர்ப்பரிப்பில் வீட்டுநாயின் மெல்லிய துள்ளல் தெரிந்தது. கடலே வானம் எனக்கிடக்கும் பறவைகள், காற்றின் சுவரில் ஏறி ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்தன. குட்டி மீன்களின் தண்ணீருக்கு மேலான பறத்தலின் பேரழகில் என்னுடைய இரு கண்களையும் கொண்டுபோய் ஒட்டிவிட்டிருந்தேன். கடலுக்குள்ளிருந்து எழுந்து வரும் வைகறையின் ஒளியில் ஈரம் ஒட்டியிருந்தது. அவ்வீரத்தை முகர்ந்த கண்கள் கசிய ஆரம்பித்தன.

“இதோ மீண்டும் வருகிறேன் அன்பே… உன்னைக் காண மறந்த அத்தனை பொழுதுகளின் வாஞ்சைகளையும் கைகளில் அள்ளிக்கொண்டு வருகிறேன். என்னை எடுத்துக்கொள். என்ன ஆனாலும் நான் கடலாலானவன். உன்னால் பிறந்தவன். உப்புத் துணிக்கைகளாலும் கரிக்கும்  ஜலத்தாலும் சிருஷ்டிக்கப்பட்ட கடல் ஜீவன்… இதோ என் அன்பே…”

“என்னடா கருவாட்டக் கண்ட பூன போல முளுசுறாய்?”

“இல்ல, அத்தனையும் இன்னும் அப்படியேதான் இருக்கு இல்ல. சைக், இப்படிப்பட்டதொரு அமர்க்களமான பிரபஞ்சத்த விட்டுப்போட்டா மன்னாரில போய் சீனி-மாவு நிறுத்துக்கொண்டிருக்கிறன்…?”

“உன்ட தலையெழுத்து அப்பிடி… முறப்பட்டுக்கொள்ளாம கிடச்சத அனுபவிக்க வேண்டியதுதான்…”

கடல் பயணங்கள் என்றுமே சலிப்பூட்டுபவையல்ல. அது இன்னும் இன்னும் வேண்டும் எனக் கேட்கும், உச்சி வெயிலில் கிரிக்கெட் ஆடும் சிறுவனின் தீராத்தாகத்தை ஒத்தது. போருக்கு முன்னரான காலத்தில் – அதாவது நான் தொழிலுக்குப் போய்க்கொண்டிருந்த காலத்தில் – கடல் எப்படியெல்லாம் என்னுடைய வாழ்க்கையோடு கலந்திருந்தது என்பதை வருடங்கள் கழித்து நினைத்துப் பார்த்தால் பெரும் பொறாமையுணர்வே மிஞ்சியது. இப்பொழுது மன்னாரும், அதன் அவசரச் சூழலும், ப்ரமிளா ஸ்டோரும், காசு பணமும் கொடுக்காத ஓர் உன்னதக் கொண்டாட்டத்தையல்லவா அப்பொழுது இந்தக் கடல் கொடுத்தது.

அந்தோனி படகின் பின்பக்கத்தில் அமர்ந்துகொண்டு இயந்திரப் பிடியைத் திருகத்திருக அது தலையை நிமிர்த்திக்கொண்டு கள்ளித்தீவுப் பக்கம் ஓடியது. கள்ளித்தீவு மன்னார் மாவட்ட மேற்குக் கடற்கரையோரமாக இருக்கும் தீவிர கடலோடிகள் வசிக்கும் கிராமம். மன்னார் மாவட்டத்தின் வடக்குப் பெருநிலப்பரப்பிற்கான அதிகமான கடலுணவுகள் இங்கிருந்துதான் வருகின்றன. எங்கள் ஊரிலிருந்து கள்ளித்தீவு தொலைவு என்றும் சொல்ல முடியாது. பட்டக்காடு கரையில் தாண்டால் வெறும் அரைமணித்தியாலத்தில் கள்ளித்தீவில் மிதக்கலாம்.

பத்து நிமிடங்கள் ஓடிய எங்கள் படகு கள்ளித்தீவின் மேற்குப் பக்கத்தில் இருக்கும் கண்டல் காடுகளின் நடுவே கிடக்கும் நீர்ப்பாதையில் இறங்கியது. 2008க்கு முன்னர் இக்கடல் பிராந்தியத்தில் நாங்கள் மீன் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் இப்போது நிலைமை அப்படியல்ல. சண்டை சச்சரவுகளின்றி அக்கடற்பிரதேசத்தைப் பகிர்ந்துகொள்ள பட்டக்காடு மீனவர்களுக்கும் இப்போது அனுமதியிருக்கிறது. இதன் பொருள், வருடங்கள் கடந்த பின்னர் பட்டக்காடு மீனவர்களுக்கான கடல் எல்லை விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான். கள்ளித்தீவு மீனவர்களின் பெருந்தன்மைக்கே தலைவணங்க வேண்டும்.

மன்னார்த்தீவின் இந்த வடபகுதிக் கடல் மிகவும் சுவாரசியமானது. கடலும் கடல் சார்ந்த அழகியலினதும் ஒட்டுமொத்தப் பெருவெளி அது. இந்த அழகியலின் முக்கிய ஆக்கக்கூறு என்றால், அக்கடலின் கரையோர சதுப்புநிலத்தில் ஊன்றி நிற்கும் கண்டல் காடுகள்தான். அதைப் பார்த்தால் தண்ணீரின் மீது பச்சைக் கூந்தல் மிதந்துகொண்டிருப்பது போலிருக்கும். தண்ணீரின் அடியில் வேர் பாய்ச்சி, நீர்மட்டத்துக்கு மேல் தலையை உயர்த்திப் புறஉலகைக் கவனிக்கும் இம்மரங்களின் பேரழகுக்குக் கடல் பிரபஞ்சத்தில் ஈடு இணையில்லை.

இவ்விடத்தில் கண்டல் காடுகள் (அல்லது அலையாத்திக் காடுகள்) பற்றிக் கொஞ்சம் மேலதிகமாக உரையாடுதல் அவசியம். கடலின் கரையோரப் பிரதேசங்களில் காணப்படும் சதுப்பு நிலங்களில் வளரும் ஒருவகைத் தாவர இனமே இந்தக் கண்டல் காடுகள். உவர் நீரிலும், மிகக்குறைந்த ஒக்சிஜனிலும் குறைபட்டுக்கொள்ளாமல் பெருமகிழ்வோடு வளரக்கூடிய தாவர இனம் இது. கடற்கரையிலிருந்து சுமார் இரண்டு-மூன்று கிலோ மீட்டர் வரையுள்ள ஆழம் குறைந்த சதுப்புநிலக் கடலில் இந்தக் கண்டல் காடுகள் பெரும் எண்ணிக்கையில் வளருகின்றன.

இலங்கையை எடுத்துக்கொண்டால் அதன் கரையோரப் பகுதிகளில் சுமார் 6’500 ஹெக்டயர் வரையான கடற்பரப்பை இந்தக் கண்டல் காடுகள் நிரப்பியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதில் முக்கியமானதொரு பகுதி மன்னார் மாவட்டத்தின் விடத்தல் தீவிற்குத் தெற்கே திருக்கேதீஸ்வரம் தொடங்கி வடக்கே இலுப்பைக்கடவை வரையான கரையோரப் பிரதேசத்தில் காணப்படுகிறது. அதுவும் இவற்றில் அதிகமான கண்டல் காடுகள் விடத்தல் தீவை அண்டிய கரையோரத்திலேயே செழித்துக் கிடக்கின்றன.

கடலரிப்பைத் தடுப்பதில் இந்தக் கண்டல் காடுகளின் பங்கு இன்றியமையாதது. கரையோர சதுப்பு நிலங்களில் ஆழமாக வேரூன்றி நம்முடைய ஒட்டுமொத்த நிலப்பகுதியும் பேரலைகளால் அரிக்கப்பட்டுப் போகாத வண்ணம் சுவர் எழுப்பிக் காக்கிறது இக்கண்டல் காடுகள். சுனாமி போன்ற பேரலைகளின் போதும் இந்தக் காட்டுப் பெருஞ்சுவரின் மகிமை கரையோர நிலங்களுக்கு மிகவும் தேவையாக இருக்கிறது.

கடலரிப்பிலிருந்து நம் மண்ணைக் காப்பாற்றுகிறது என்பதோடு இக்கண்டல் காடுகளின் மகிமை நின்றுவிடவில்லை. அதைவிட மிக முக்கியமான இன்னுமொரு சமாச்சாரமும் உண்டு.

மிகப்பெரிய கடல் வளமான மீன்களின் பிரதான இனப்பெருக்கம் நிகழும் இடமாக இக்கண்டல் காடுகளே காணப்படுகின்றன. ஆழிப்பகுதியின் பவளப் பாறைகளுக்குள் வாழும் மீன்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக கூட்டம் கூட்டமாகப் படையெடுத்து வந்துசேரும் இடம் இதுதான். மீன்களின் இனப்பெருக்கத்திற்குத் தேவையான மட்டுப்படுத்தப்பட்ட ஒளி, மிதக்கும் நிழல், சதுப்புத்தரை, பாதுகாப்பு என அத்தனையும் இக்காடுகளில் தாராளமாகக் கிடைக்கின்றன.

வந்த காரியம் நிறைவாக முடிந்து சரியான காலம் திரும்பியதும் தங்கள் குஞ்சு பரிவாரங்களை அழைத்துக்கொண்டு மீன்கள் மீண்டும் தங்கள் ஆழிப்பகுதிக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.

ஆனால் தற்போது, குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் கடுமையாகச் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் இயற்கை வளங்களில் இந்தக் கண்டல் காடுகள் பிரதானமானவை. கணவாய் வளைப்பதற்கும், கண்டல் காடுகளுக்குள் பெரும் கூட்டமாக நிற்கும் மீன்களை கஷ்டமில்லாமல் வளைத்துப் பிடிப்பதற்கும் மற்றும் இன்னபிற அற்ப தேவைகளுக்காகவும் இக்கண்டல் காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நம் கண் முன்னாலேயே நிகழ்ந்து கொண்டிருக்கும் இப்பேரழிவைப் பார்க்கும்போது மனம் பதைபதைக்கிறது. கால்நீட்டி ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் மரக்கிளையில் நாமே கோடாரி வைத்துவிட்ட பீதியைக் கொடுக்கிறது.

‘கண்டல் காடுகள் இல்லையென்றால் கடலரிப்பு அதிகரித்து கடல், நிலத்தை வேகமாக விழுங்கிவிடும். மீன்களின் இனப்பெருக்கம் பெருமளவில் குறைந்து கடல்வளம் அழிந்துவிடும்.’ இந்த விஸ்தாரம் எல்லாம் நம் பெருங்குடிகளுக்குத் தெரியாது என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. எல்லாம் நாமே முதன்மைப் படைப்பு என்கிற ஈனத்தனமிக்க மமதை. நான் கொடிகட்டி வாழ்ந்துவிட்டால் போதும் என்று நினைக்கிற வக்கிரப்புத்தி.

இதற்குள் கொஞ்சம்கூட மனசாட்சியில்லாமல் “முன்னரப் போல இப்ப மீன்பாடு இல்ல” என சமூகம் வடிக்கும் நீலிக்கண்ணீர்.

கண்டல் காடுகளின் நடுவில் வளைந்து வளைந்து போகும் நீர்ப்பாதையில் எங்கள் படகு அமைதியாக ஊர்ந்து கொண்டிருந்தது. எண்ணிக்கைக்குள் அடக்க முடியாத கண்டல் மரங்கள் இரு பக்கமும் எதேஷ்டமாக வளர்ந்து நின்றபடி எங்களை மிதகளிப்போடு வரவேற்றன. என்னுடைய முழு ஆன்மாவும் பட்சியாகி என்னை விட்டுப்போய் அந்தக் கண்டல்காடுகளின் மேல் குந்திக்கொண்டது. மரங்களின் மீதான பறவையின் வாழ்க்கைதான் எத்தனை அலாதியானது?

தண்ணீருக்கு மேலாகத் தெரியும் சுருள் சுருளான கண்டல் மரங்களின் வேர்கள், அவற்றின் நெருக்கமான இடைவெளிகளில் உலாத்தித் திரியும் நீண்ட கழுத்தையும் கால்களையும் கொண்ட பறவைகள், கிளைகளில் கீச்கீச் என சஞ்சரித்துத் திரியும் நீர்புறாக்கள், சிறு அலைகள் மோதமோத சீரிய தாளத்தில் தாளலயம் போடும் பச்சைநிறக் கூரை என அப்பிரதேசத்தில் விரியும் உன்னதக் காட்சியைப் பார்த்தால் பேசாமல் இங்கேயே கிடந்துவிடுவதே சுபம் எனத் தோன்றியது.

சுவாரசியத்தை மறக்கடித்து இவ்வியற்கையின் மீது நமக்கெழும் அத்தனை அதிருப்திகளும் அற்பத்தனமானவை. இயற்கை என்னும் அழகை ரசித்துக் கொண்டாடுவதற்கு இப்பொழுதெல்லாம் நமக்கு நேரம் கிடைப்பதில்லை. கடின வாழ்க்கையின் அத்தனை சௌகரியங்களையும் செயற்கை உலகுதான் சிருஷ்டிக்கும் என்கிற போலி நம்பிக்கையில்தான் மானுட சமூகம் தீர்க்கமாக இருக்கிறது. கடைசியில் நமக்குத் தெரியாமலேயே ஒரு மனநோய் பீடித்த சமூகம் நம் மத்தியில் முளைத்துக் கொண்டிருக்கிறது என்கிற பிரக்ஞை நமக்குக் கொஞ்சம்கூட இல்லை.

கண்டல் காட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த படகை முன்னாலிருந்த ஆழிப் பிரம்மாண்டம் வரவேற்றது. கண்ணெட்டிய தூரம்வரை நிகரற்ற நீலக்காடு வியாபித்துக் கிடந்தது. அதன் முடிவில் வானம் தண்ணீருக்குள் மூழ்கிக்கொண்டிருந்தது. தூரத்தில், பக்கத்தில் என எட்டும் இடமெல்லாம் குட்டிக்குட்டிப் படகுகள் அலைந்து கொண்டிருந்தன. திரும்பும் திசையெல்லாம் பத்துக்களின் எட்டுப்பத்து மடங்கில் மீன்பட்டிகள் தோன்றின.

மீன்பட்டி பற்றி முந்திய அத்தியாயம் ஒன்றிலும் சொல்லியிருக்கிறேன். பரவாயில்லை, மீண்டும் சொல்கிறேன். மீன்களை வளைத்துப் பிடிப்பதற்காக நம் மீனவர்கள் கண்டுபிடித்த ஒரு சூட்சுமமான முறைதான் இந்த மீன்பட்டி எனப்படுகின்ற பட்டி வலை. வலையை செங்குத்தாக ஒரு இடத்தில் கட்டி பின்னர் அதைக் குறித்த இடைவெளியில் வளையம் வளையமாக சுற்றி நடுவது. அச்சுருளின் வெளிமுனை வலை நீண்டு வேலியாக இருக்கும். இதுதான் அந்தச் சுருளுக்குள் செல்வதற்கான வாயில்.

மீன்களைப் பைத்தியமாக்கி அதல பாதாளத்தில் தள்ளிவிடும் தந்திரம் இது.

கூட்டம் கூட்டமாக வருகின்ற மீன்கள் முன்னால் நீண்டு கிடக்கும் வேலியில் முட்டித்திரும்பி அதைப் பிடித்துக்கொண்டே அந்தச் சுருள் பட்டியினுள் நுழைந்துவிடும். மேலும் மேலும் என நுழைந்து நுழைந்து கடைசி வட்டத்திற்குள் போய் சிக்கிக்கொள்ளும்போதுதான் அம்மீன்களுக்கு மனித ஜென்மத்தின் வஞ்சகப்புத்தி புரிய வரும். உள்ளே வந்த வழி சிக்கல் நிறைந்தது என்பதால் உள்ளே போனவர்கள் அத்தனை இலகுவாக மீண்டும் வெளியே வந்துவிட முடியாது. திக்குத்தெரியாமல், வந்த இடம் புரியாமல் அதனுள்ளேயே சுற்றிக்கொண்டு கிடப்பதைத் தவிர வேறு போக்கிடம் இல்லை.

சில நாட்கள் கழித்து அங்கு வரும் ‘புத்திசாலி’ மனிதன், சுருளின் கடைசி வளையத்துக்குள் இறங்கி அங்கிருக்கும் அத்தனை மீன்களையும் இன்னுமொரு வலையைப் போட்டு கபக் எனப் பிடித்துக்கொண்டு விடுவான்.  இதைத்தான் மீன்பட்டிகள் என்போம்.

இக்கடலின் இன்னுமொரு ஆச்சரியம் அங்கிருக்கும் பவளப்பாறைகள். கள்ளித்தீவுக்கரையிலிருந்து சுமார் இரண்டு-மூன்று கிலோ மீட்டருக்கு அப்பால் அந்த பவளப்பாறைத் திட்டுகள் காணப்படுகின்றன. அதிகமான கடல் உயிரினங்களின் வாழ்விடம் இந்தப் பவளப்பாறைகளாகத்தான் இருக்கிறது. கடல்வாழ் உயிரினங்களின் பெரும் சீவியம் இந்தப் பவளப்பாறைகள் அண்டிய பிரதேசத்தில்தான் நடக்கிறது. இதனால்தான் பவளப்பாறைகள் இருக்கும் இடங்கள் மீனவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கின்றன.

அந்தப் பவளப்பாறைத் திட்டுக்களுக்கும் கண்டல் காடுகளுக்கும் இடைப்பட்ட இரண்டு மூன்று கிலோமீட்டர் தூரத்தை சுமார் நூற்றுக்கணக்கான பட்டிகள் நிரப்பியிருந்தன. இவ்வளவு பெரிய கடலில் எதற்காக குறித்த இடத்தில் மட்டும் இத்தனை பட்டிகள் என்றால் அங்குதான் மனிதனின் வியூகத்திறன் வேலையைக் காட்டுகிறது.

பவளப்பாறைத் திட்டுக்களில் வாழும் மீன்கள் விசேடமாக மணலை, சிறையா போன்றவை தங்கள் இனப்பெருக்கத்திற்காக கண்டல் காடுகளை நோக்கிப் பெரும் கூட்டமாகப் படையெடுத்து வருகின்றன என்று சொன்னேனல்லவா, இதற்காகத்தான் இந்த பவளப்பாறைகளுக்கும் கண்டல் காடுகளுக்கும் இடையில் இத்தனை மீன்பட்டிகள். இப்பெரும் பயணத்தின் பொருட்டு இந்த வழியில் மீன்கள் எப்பொழுதும் செறிந்து கிடக்கும். இவ்விடத்தில் வலையைப் போட்டால் மீனவர்களுக்கு பெரும் லாபம் கிட்டும்.

ஆனால் இதிலிருக்கும் மிக முக்கியமான சிக்கல் ஒன்றைக் கவனிக்க வேண்டும். பவளப் பாறைகளுக்கும் கண்டல் காடுகளுக்கும் இடையில் நிகழும் போக்குவரத்தில் இரண்டு வகையான மீன்கள் உண்டு. ஒன்று, இனப்பெருக்கத்திற்காக கண்டல் காடுகளை நோக்கிச் செல்பவை. இரண்டு, இனப்பெருக்கம் முடிந்து பவளப்பாறையை நோக்கித் திரும்பும் மீன்களும், அவற்றின் குஞ்சுகளும்.

ஆக, இந்த இரண்டு பிரதேசத்தையும் குறுக்கறுத்து வலைகளைப் போட்டு வைத்தால் என்ன நடக்கும்? நீங்களே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

மனிதர்கள் குரூரமானவர்கள் என்று சொல்வதற்கு இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்? கர்ப்பிணி மீன்களையும், மீன் குஞ்சுகளையும் வலைபோட்டு வேட்டையாடும் மனிதர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

அதே கேள்வியோடுதான் நான் அந்தோனியைப் பார்த்தேன்.

“அடப்பாவி. இனப்பெருக்கத்துக்கு போற இடத்தில பட்டியப் போட்டு எல்லா மீனையும் புடிச்சிட்டா எப்பிடிடா கடல்ல மீன் பெருகும்? பெரிய அயோக்கியத்தனமால்லா கிடக்கு?”

“ம்… அது சனத்துக்குப் புரியணுமே. அவங்களுக்கு இண்டைய பாட்டுக்கு மீன் பட்டா போதும் எண்ட மனநில. கடலுக்குள்ள இறங்குறவனுக்கு இதத்தவிர வேற எதப்பத்தியும் யோசின இல்ல. ராஜா மாமா அடிக்கடி சொல்லுவார் ஞாபகமிருக்கா? அவங்கட காலத்தில 800, 1000 கிலோனு மீன்பாடு இருந்திச்சாம். அந்தக் காலம் முடிஞ்சு போச்சு மாப்ள. இப்ப ஒரு நாளைக்கு என்ன பாடுனு நினைக்கிறா? முக்கித்தக்கி ஒரு 50 கிலோ. அல்லது இப்பிடி குஞ்சு குருமானெல்லாம் சேத்துக்கொண்டுவந்தா ஒரு 100 கிலோ தேறுது. அவ்வளவுதான்.”

“குட்டிபோடப் போற மீனெல்லாம் பட்டி போட்டு புடிச்சுக்கொண்டிருந்தா மயிருனா மீன் பெருகும்?”

“அதத்தான் நானும் சொல்றன். அதப்பத்தி யாருக்குக் கவல? நமக்கெல்லாம் இண்டைய சீவியத்துக்கு மீன்பாடு இருந்தா சரியெண்டு இருக்கு. இண்டைக்கு அமோகமா வாழணும் எண்ட படபடப்பில எதிர்காலம் பத்தி யாரும் கவலப்படுறதில்ல. இண்டைக்குத் தின்ன ஒண்ணுமில்லாதவனுக்குத்தானே நாளைய பத்திய கவலயும் இருக்கும். மூக்கு முட்ட புடிச்சவனுக்கு?”

இன்னும் இருபது ஆண்டுகளில் சீனாவிலிருந்து தகர டப்பாக்களில் வரவிருக்கும் செயற்கை மீன்களை விழுங்க நாம் இப்பொழுதே தயாரிக்கொண்டால்தான் உண்டு.

“எம்பிமார வச்சாவது இந்த இடத்தில பட்டி வலைகளப் போடுறத உடனடியா தடைசெய்யலாம் இல்லையா மச்சான்?” என நான் ஆத்திரத்தை விழுங்கிச் சொன்னபோது “ஆமா ஆமா. சொன்ன உடனே தடபுடனு செய்துட்டுத்தா மறுவேல பாப்பானுங்க. த்தூ!” என காறித் துப்பிவிட்டு சிகரட்டை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டான் அந்தோனி.

எங்கள் கடல் எங்கள் கண்களுக்கு முன்னாலேயே அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்க இதயம் வலித்தது. கடலுணவுகளை லட்சங்கள் கொடுத்து நுகரப்போகும் ஒரு பாவப்பட்ட சந்ததியொன்றை உருவாக்குவதில்தான் நம் சமூகம் அக்கறையாயிருக்கிறது.

அன்று வானம் தெளிவாய் ஜொலித்தது. காற்று மிகையாக இல்லாததால் அலைகளில் விறைப்பிருக்கவில்லை. நீலம் பாலித்த ஜலம் சூரியக்கதிர்களில் பட்டு மின்னியது. ஆங்காங்கே தரித்து நிற்கும் படகுகளில் நின்ற மீனவர்கள் தத்தம் காரியங்களில் கருத்தாயிருந்தார்கள்.

எங்கள் படகு தூரத்திலிருந்த பவளப்பாறைத் தீவை நோக்கிப் பறந்துகொண்டிருந்தது. வேகமான காற்றில் சிகரட் புகையை இழுத்து சுருள் சுருளாக விட்டுக்கொண்டிருந்தான் அந்தோனி.

“டேய். கேக்கணும்னு நினச்சன். இது கள்ளித்தீவு ஆக்கள்ட பக்கம்லா. நம்ம ஆக்கள் எப்பிடி இதுக்குள்ள…?”

“ம்… எங்கட கஷ்டத்தப் பாத்து அவங்க கிழமயில ஒருநாள் இங்கால தொழில் செய்யலாம் எண்டுட்டாங்க.”

“அட சூப்பர்ல…”

“ஓமோம்… ஆனா என்ன நம்மள மாதிரி சின்ன மீனவங்களுக்கு பாவம் பாக்குற இவங்கட இரக்க குணம் அந்தப் பக்கம் இருக்கிற பெரிய மீனவங்களுக்குத்தா இல்லாமப்போச்சு…”

பேசிக்கொண்டிருக்கும் போதே அந்தோனியின் பிடிக்குள்ளிருந்த இயந்திரம் அணைந்தது. சலாரென நீரில் பாய்ந்து அருகிலிருந்த பட்டிக்குள் இறங்கினான். ஈயம் கட்டியிருந்த சுருக்கு வலையைப் பாய்ச்சினான்.

எனக்கோ படகிலிருந்து இறங்குவதற்கு பேய்பயம். வருடங்களுக்கு முன்னர் என்னை அந்த ஜெல்லிமீன் படுத்தி எடுத்ததற்குப் பிறகு கடலுக்குள் கால் வைப்பதென்றாலே நரம்புகளுக்குள் மின்னல் பாய ஆரம்பித்துவிடுகிறது. எத்தனை கனமான பாய்ச்சல் அது. இப்பொழுது நினைத்தாலும் சுருக்கென்று உடல் குறுகிக்கொண்டு விடுகிறது.

நம்மைக் கவ்விப்பிடிக்க வரும் ஆபத்துகள்தான் நம்மைப் பெரும் கோழைகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

படகில் இருந்தபடி தெளிந்த நீரினுள் வண்ணம் வண்ணமாகத் ஒளிர்ந்த பவளப்பாறைகளையும் அவற்றைச் சுற்றி வளையம் போடும் மீன்களையும் வெறித்துக் கொண்டிருந்தேன். மீன்களின் குதூகலத்துக்கு ஈடு இணையென்று இந்த சிருஷ்டியில் எதுவுமில்லை. அடுத்த கணம் நேரப்போகும் பேரிடர் பற்றிய பிரக்ஞையற்று கூடிக்குலாவி வாழும் திவ்ய உயிரிகள் அவை.

மன்னார்க்கடலில் கண்டல் காடுகளுக்கும் மீன்களுக்கும் நேரும் அதே ஆபத்துதான் இந்தப் பவளப் பாறைகளுக்கும். மனிதனின் சல்லித்தனத்துக்குப் பலியாகிக் கொண்டிருக்கும் இன்னுமொரு முக்கிய கடல்வளம் இந்தப் பவளப்பாறைகள்.

மனிதர்கள் மட்டும் இல்லையென்றால் இவ்வுலகு எவ்வளவு ஆரோக்கியமானதாக இருக்கும்?

பவளப்பாறைகளைத் தொலைக்காட்சியிலாவது நீங்கள் பார்த்திருப்பீர்கள். இயற்கையின் சிருஷ்டிப்பில் கடவுள் செய்த மற்றுமொரு உன்னத மாயாஜாலம் இந்தப் பவளப்பாறைகள். சொரசொரப்பான பாறைத்திட்டுக்களில் பல்வண்ண மைகளை சீரில்லாமல் தெளித்து, ஒழுங்கற்ற கோடுகளையும் நிறத்திட்டுக்களையும் அங்குமிங்கும் கலை நயத்தோடு குவித்து உருவாக்கிய படைப்பு. அதிலும் சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்களை கிள்ளி எடுத்து அளந்து வரைந்த சித்திரங்கள் அழகின் உச்சக்கட்டம். உண்மையில் கடவுள் ஒரு மகத்தான அழகியல் தேர்ந்த கலைஞன்தான் என்பதற்கு பவளப்பாறைகளை மிகச்சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.

அந்த மகத்துவ படைப்பு மனிதனுக்கு மட்டும் சத்துராதியாய் தோன்றுகிறது. அல்லது, அதன் அருமை பெருமைகளையும், அவற்றின் சித்திர அழகியலையும் மனிதனால் புரிந்துகொள்ளவோ கொண்டாடவோ முடியவில்லை. மூளையை அடிவயிற்றில் புதைத்துக்கொண்டு சதா அலைந்து திரியும் ஒரு சிறுமைப்பட்ட குலமாக நாம் மாறிவிட்டதன் அடையாளம்தான் இது.

தண்ணீருக்குள் புதைத்திருந்த கண்களை அந்தோனி வரும்வரை நான் தேடவேயில்லை. பட்டியின் அடியில் கிடந்த கரைவலையை தூக்கி படகில் ஏற்றியபோது அந்தோனி களைத்துப் போயிருந்தான். தலையில் ஊறிய வியர்வை வழிந்து வந்து நுனிமூக்கில் துளி கட்டிக்கொண்டு நின்றது. இன்றும் எதிர்பார்த்த அளவு மீன்பாடு இல்லை என்று சொல்வதுபோல இருந்தது அவனுடைய முகபாவனை. வீணான கயிற்றைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறோமோ என அங்கலாய்த்தன கண்கள்.

“இந்த மயிர் வேலைய விட்டுப்போட்டு எங்கினயும் நாள் கூலிக்கு போனாக்கூட பிரயோசனமா இருக்கும்…”

வார்த்தைகளில் கடும் சோர்வு அப்பிக்கிடந்தது.

இப்போதெல்லாம் எங்கள் மாவட்டத்திலிருக்கும் அத்தனை சிறுதொழில் மீனவர்களுடைய முகங்களிலும் இதே வருத்தம்தான் கொட்டிக்கிடக்கிறது. வியர்வைக்கு ஈடுகட்ட முடியாத வாழ்வாதாரமாக இக்கடல் தொழில் மாறிப்போயிருக்கிறது.

“அதுசரி, இப்பவுமாடா கடல்ல டைனமைட் அடிக்கிறாங்க…?”

இயந்திரத்தை பட்டக்காடு நோக்கி வேகமாகச் செலுத்திக் கொண்டிருந்த அந்தோனியைப் பார்த்துக் கேட்டேன். வெடித்துப் பெருகிய பெருமூச்சைக் காற்றில் கரைத்துவிட்டு மௌனமானான்.

என் புருவங்கள் தடித்துத் திரண்டன. அங்கலாய்ப்பிற்குள் புழுங்கிக்கொண்டிருந்த என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு அந்தோனி சொன்னான்.

“போன கிழமையும் ஊருக்கு அந்தப் பக்கம் டைனமைட் அடிச்சதெண்டு சொல்லி ரெண்டு போட்ட நேவிக்காரங்க அள்ளிக்கொண்டு போயிருக்கிறாங்கள். கோட்ல கேஸ் நடக்குதாமெண்டு கேள்வி!”

“எங்க இருந்துடா இவங்களுக்கு டைனமைட் வருது…?”

“தெற்குல இருந்துதா வருதாமெண்டு சொல்றாங்க. மல உடைக்கிற கம்பனிகள்ல வேல பாக்குறவங்க அங்க இருந்து களவெடுத்துக்கொண்டு வந்து நம்ம ஆக்களுக்கு விக்குறாங்களாம்… அதோட இந்தியாப் பக்கமிருந்தும் சாமான் களவா வர்றதா சொல்லுறாங்க…”

மனிதகுலம் தவறானவற்றில்தான் அதிகம் ஈடுபாடு கொண்டிருக்கிறது. இதுவொரு களைய முடியாத பசி. நேர்மையானவற்றில் ஆசுவாசம் கொண்டு நிம்மதியாயிருந்த மனிதர்களைப் பேராசை பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது. நேர்மையின் ஏழ்மை மனிதர்கள் மேல் பெரும் பளுவாய் விழுகிறபோது கபடத்தனம் சௌகரியமாய்த் தோன்றுகிறது. சத்தியத்துக்கும் மனித குலத்துக்கும் இடையிலான இடைவெளியை இனி ஒருபோதும் நம்மால் அடைக்க முடியாது. அறம் எப்போதோ பல்லிளித்துவிட்டது.

இலங்கைக் கடல் பிராந்தியத்தில் சட்டரீதியாகத் தடை செய்யப்பட்ட ரோலர், தங்கூசி வலை, சுருக்கு வலை என்ற பட்டியலில் அடுத்திருப்பது இந்த டைனமைட்டுக்கள். பவளப்பாறைகளே பெரும்பாலும் மீன்களின் வாழ்விடமென்பதால் டைனமைட்களின் இலக்கு எப்போதும் இந்த பவளப்பாறைகளாகவே இருக்கிறது. அங்கு எறியப்படும் டைனமைட்டுக்கள் மாபெரும் வெடிப்பை உண்டுபண்ணி ஒரே நொடியில் அங்கிருக்கும் அத்தனை கடல் உயிரிகளையும் காவுகொண்டு விடுகிறது. இந்தப் பேரழிவுக்கு மீனவர்கள் வைத்த நாமம் “லாபம்”.

இங்கு நாம் அவதானிக்க வேண்டிய இரண்டு முக்கிய விடயங்கள் உண்டு. ஒன்று, இந்த வெடிப்பில் இனப்பெருக்கத்துக்குத் தயாராக இருக்கின்ற மீன்கள், மீன் குஞ்சுகள் என எதிர்கால வளம் அடியோடு அழிக்கப்படுகிறது.

இரண்டாவது, மீன்களின் “வீடு” என அழைக்கப்படும் பவளப்பாறைகள் அழிக்கப்படுகின்றன.

பவளப்பாறைகள் வெறும் 5 மில்லிமீட்டர் வளர்வதற்கு 365 நாட்கள் எடுத்துக்கொள்கின்றனவாம். அப்படியெனின் இன்று அழிக்கப்படும் பவளப்பாறைகளை மீண்டும் உருவாக்கி முடிக்க எத்தனை தலைமுறைகள் எடுக்கும் என்பதை நீங்களே கணக்குப் போட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.

மண்டையோடு உருகிவிடுமோ என்கிற அளவுக்குச் சூரியன் எரித்துக் கொண்டிருந்தான். பார்வை கூசியது.  படகுக்குள் பரவிக்கிடந்த உப்பு வாடையில் மனது உழன்றது. படகை கரையை நோக்கி செலுத்த ஆரம்பித்தான் அந்தோனி.

நாங்கள் அன்று கரை எட்டியபோது நிவேதா எனக்காகக் கரையில் காத்துக்கொண்டிருந்தாள். அவள் பளிங்குத் தோலில் சாரை சாரையாக விழுந்த வெயில் மினுமினுத்தது. நானும் அந்தோனியும் கீழே இறங்கி படகைக் கரைக்குத் தள்ளினோம். காலை கரையில் வைத்தபோது மணல் தழலாய்க் கொதித்தது. அருகில் போய் நிவேதாவின் கையைப் பற்றிக்கொண்டேன்.

“என்ன இங்க நிக்கிறா…?”

“உங்களப் பாத்துக்கொண்டுதான்!”

“ஓஹ். என்ன லவ்வா?”

“கடலளவு!”

“அப்ப கிஸ் ஒண்டு கிடைக்குமா?”

“கொஞ்சம் நேரமாகும்…”

“காரணம்?”

“ஏய் லூசு… அந்தோனி! கேக்கப்போது…”

“ரைட்டு…”

“மச்சான் அந்த போட் யார்ட?”

அந்தோனி பரபரப்பாய் திரும்பிக் கடலைப் பார்த்தான். வாடி மறைப்பும் சௌகரியமாயிருந்தது.

“பச்ச்ச்!”

அவ்வளவுதான். நிவேதா மருண்டு போனாள். அதே வேகத்தில் தலையைத் திருப்பி எங்களைப் பார்த்து பேந்தப் பேந்த முழித்தான் அந்தோனி.

“எங்கடா? அங்க ஒண்ணுமே இல்லையே…?”

“ஆமா, அங்க ஒண்டுமே இல்லையே…”

“நாசமாப் போக. கலியாணம் கட்டி மென்டல் ஆனதுதான் மிச்சம்!”

நானும் நிவேதாவும் வெடித்துச் சிரித்தோம்.

***

அமல்ராஜ் பிரான்சிஸ்

விம்லா

15

இளங்கோவன் முத்தையா

நானும் ராஜேந்திரன் சாரும் என்னுடைய இருசக்கர வாகனத்தில் இரவு பதினோரு மணிவாக்கில் அங்கு சென்று சேர்ந்தோம். மதுரையிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வலதுபுறம் கிளை பிரிந்து செல்லும் ஒற்றைச்சாலையின் மூன்றாவது கிலோமீட்டரில் இருந்தது அந்தச் சின்ன கிராமம். மாரியம்மன்கோவில் கொடைவிழாவின் உபயத்தில் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் என்று கலர்கலராக சீரியல் பல்புகளும், சவுக்குக்கம்பத்தில் நெட்டக்குத்தலாகக் கட்டி வைக்கப்பட்டு கலர் காகிதம் சுற்றப்பட்ட ட்யூப்லைட்டுகளும் கோயிலை நோக்கிச்செல்லும் தெருக்களின் மீது கோடைகால இரவின் வெக்கையை மேலும் அதிகப்படுத்தியபடி பளீரென வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டிருந்தன.

எளிதில் திரும்ப எடுப்பதற்கேற்றபடி வண்டியைத் தோது பார்த்து நிறுத்திவிட்டு, ராஜேந்திரன் சாருடன் மாரியம்மன் கோயில் வாசலுக்கு எதிரில், ஊரின் நடுமையத்திலிருந்த மந்தையை நோக்கி நடந்தோம். கோயில் கோபுரத்தின் உயரத்தை விட இருமடங்கு உயரமான கட்-அவுட்டிலிருந்த மாரியம்மன், பல்புகளின் உபயத்தில் தன் கைகளில் கரும்பு, வீச்சரிவாள், அபய முத்திரை போன்றவற்றை நொடிப்பொழுதில் மாற்றிக்கொண்டு பிரகாசமாக அருள் பாலித்துக் கொண்டிருந்தாள். முக்கிய தெருக்களில் இருந்து பிரிந்த சின்னச்சின்ன சந்துகளில் பெருசு, சிறுசு பேதமில்லாமல் நான்கைந்து நபர்களாகச் சேர்ந்து சரக்கடித்துக் கொண்டிருந்தார்கள். மதுவின் வீச்சம் ஊரெங்கும் மிதந்து கொண்டிருந்தது.

மந்தையின் மறுபுறத்தில் கோயிலுக்கு நேரெதிராக இல்லாமல் கொஞ்சம் விலகினாற்போல அந்தக் கலாமண்டபம் இருந்தது. விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக மேற்கூரையோடு கட்டப்பட்ட சிமிண்டுக்கட்டிடம் அது. மதுரையிலிருந்து வந்திருந்த நடன நாட்டியக்குழுவின் நடன நிகழ்ச்சியின் ஒரு பாடலுக்கும் அடுத்த பாடலுக்குமான இடைவேளை நேரத்தில் நானும் ராஜேந்திரன் சாரும் மேடைக்கு கீழே அமர்ந்து மைக்கில் அறிவிப்புகளைச் செய்து கொண்டிருந்த கந்தவேலை நெருங்கி நின்றபோது “ச்செக்க்க்… ச்செக்க்க்…. அடுத்த பாடல், இளைய தளபதி விஜய் நடித்த யூத் திரைப்படத்திலிருந்து ஆல் தோட்ட பூபதி நானடா பாடலுக்கு நடனமாடுபவர், உங்களது ஏகோபித்த ஆதரவைப் பெற்ற, தென்னகத்தின் சிம்ரன், உங்கள் அபிமான விம்லா” என்று நிறுத்தி, நிதானமாக அறிவித்தார் அவர். அவர் உச்சரித்த விம்லாவில் ’ம்’ என்ற எழுத்து மட்டும் அது ஒலிப்பதற்குத் தேவையான மாத்திரை அளவுக்கும் அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டது. கூட்டத்திலிருந்து கைதட்டல் ஒலிகளும், விசில்களும் காதைத் துளைத்தன. ஒருவன் எழுந்து ”தங்கத்தலைவி விம்லா வாழ்க” என்று கத்தியபடி தன் கையிலிருந்த கத்தையான காகிதங்களைக் கூட்டத்துக்குள் தூக்கி எறிந்தான். அதற்கும் நான்கு பேர் கைதட்டினார்கள்.

அறிவிப்பு முடிந்ததும் மேடைக்குக் கீழே அமர்ந்திருந்த கூட்டத்தின் முதலிரண்டு வரிசைகளுக்கு நடுவே மேடையை நோக்கி முழித்துக் கொண்டிருந்த பெரிய சைஸ் ஃபோகஸ் லைட்டுகளும், மேடையின் சுற்றுச் சுவர்களில் இருந்த லைட்டுகளும் பளீரென்று எரியத்தொடங்கின. அந்த இடத்திலிருந்து பளீரென எரிந்த ஃபோகஸ் லைட்டுகளைத் தாண்டி கூட்டமாகத் தரையில் உட்கார்ந்திருந்தவர்களையும், அவர்களைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்தவர்களையும் பார்க்க எனக்குக் கண்கூசியது. ராஜேந்திரன் சார் கைகளை நெற்றியில் வைத்து வெளிச்சத்தை மறைத்தபடி மறுபக்கம் திரும்பிக்கொண்டார்.

முதலில் நான்கைந்து இளைஞர்கள் ஒரேமாதிரியான உடையில் இடம் வலமாக இரண்டு வரிசைகளாக வந்து நின்றதும் ஸ்பீக்கர்கள் அதிர பாடல் ஒலிபரப்பப்பட்டது. அவர்களுக்குப் பின்னாலிருந்து அந்தத் திரைப்பாடலில் சிம்ரன் அணிந்திருந்தது போன்ற நீல நிற ஜீன்ஸும், அடிப்பகுதி லூஸான, கையில்லாத பனியன் போன்ற சிறிய டாப்ஸ் ஒன்றையும் அணிந்து, சிம்ரனைப் போலவே இருபுறமும் கைகளைத் தூக்கியபடி, இடுப்பை வெட்டி நடந்து மேடையின் மையத்துக்கு வந்தாள் விம்லா. மேக்கப்பா அல்லது இயல்பான நிறமா என்று தெரியவில்லை, வட இந்தியப் பெண் போன்ற கோதுமை நிறம், சராசரிக்கும் சற்று கூடுதலான உயரத்தோடு ’சிம்ரன்’ என்று அழைக்கப்படுவதற்கான எல்லாத் தகுதிகளோடும் இருந்தாள் விம்லா. நடிகர் விஜயாக ஆடிய இளைஞனுக்கென்று வித்தியாசமான உடைகள் என்று எதுவும் இல்லை. ஆனால் நடன அசைவுகளில் அப்படியே விஜயின் உடல்மொழியைப் பிரதிபலித்தான் அவன். சிம்ரனின் ஆட்டத்தை நகலெடுத்துக் கொண்டிருந்தாள் விம்லா. நடனத்தில் அவள் நெஞ்சை நிமிர்த்தி, இடுப்பை வெட்டும் போதெல்லாம் கூட்டத்திலிருந்து விசில்கள் பறந்து கொண்டிருந்தன. உண்மையில் நானே அவளுடைய ஆட்டத்தில் மெய்மறந்து போயிருந்தேன். இடையே ராஜேந்திரன் சாரைப் பார்த்தேன். நடக்கும் எதற்கும் சம்பந்தமில்லை என்பதைப்போல அவர் அவரது மொபைல் போனின் சின்னத்திரையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பாடல் முடிந்ததும் கந்தவேல் ராஜேந்திரன் சாருடைய தோள்களில் கைவைத்து அழைத்து ”நீங்க போய்ப் பாருங்க சார்” என்றார். ராஜேந்திரன் சார் என்னைப்பார்த்து “வாடா” என்றபடி மேடைக்குப் பின்புறமாக என்னை அழைத்துச் சென்றார். வெண்ணிற டாப்ஸ் மீது ஒரு டர்க்கி டவலைத் துப்பட்டா போலப் போர்த்தி தனது மார்புகளை மறைத்து தன் நெற்றி, கழுத்திலிருந்து ஆறாக வழிந்து கொண்டிருந்த வியர்வையைத் ஒற்றியபடி நின்று கொண்டிருந்தாள் விம்லா. ராஜேந்திரன் சாரைப் பார்த்ததும் ஆச்சரியத்தை முகத்தில் காட்டியபடி அவரருகே வந்து “சார் என்ன சார் இங்க, எப்ப வந்தீங்க, நான் கவனிக்கவே இல்லை” என்றாள். எனக்கு வெகு அருகில் வந்து நின்ற அவளிடமிருந்து எழுந்த ரோஸ் பவுடர், பெர்ஃபியூம், வியர்வை வாடை என எல்லாம் கலந்த கலவையான ஒரு மணத்தில் எனக்கு மூச்சு முட்டியது.

“இப்பதான்” என்ற ராஜேந்திரன் சார், என்னைச் சுட்டிக்காட்டி “சார்தான் நான் சொன்ன ஆளு, உன்னை நேர்ல அறிமுகப்படுத்தனும்னுதான் ரெண்டு பேரும் வந்தோம். என்ன இருந்தாலும் நீ ஒரு விஐபி பாத்தியா, நேர்ல வரலைன்னா மரியாதையா இருக்காதுல்ல?” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். விம்லாவின் ரோஸ் பவுடர் பூசிய கன்னங்கள் மேலும் வெட்கத்தில் சிவந்ததுபோல எனக்குத் தோன்றியது.

“போங்க சார்” என்றாள் விம்லா சிரித்துக் கொண்டே.

“சார் கிட்ட நம்பர் வாங்கிக்கோ, அவருக்கு போன் பண்ணி என்னைக்கு வரச்சொல்றாரோ அன்னைக்குப் போய் அவரோட ஆஃபிஸ்ல போய்ப்பாரு” என்றார்.

விம்லா ராஜேந்திரன் சாரைப் பார்த்த பார்வையில் அன்பும் என்னைப் பார்த்த பார்வையில் மரியாதை கலந்த பயமும் இருந்தது. அந்த மரியாதையை நான் உள்ளூர ரசித்தேன் என்றே நினைக்கிறேன். என்னுடைய மொபைல் நம்பரை ஒரு சின்னக் காகிதத்தில் எழுதி, அங்கே இருந்த ஒரு இளைஞனிடம் கொடுத்து “வச்சிரு, அப்புறம் வாங்கிக்கறேன்” என்றாள். அதற்குள் அடுத்த பாடல் முடிவடைந்து ஆடியவர்கள் மேடைக்குப் பின்புறம் வர ஆரம்பித்தார்கள். ஆடி முடித்து வந்த ஒருவன் ரொம்பவே இயல்பாக விம்லாவின் பின்புறத்தில் கையால் தட்டி “அடுத்து நீதான்” என்றான். விம்லா “ஷ்ஷ்” என்றபடி ராஜேந்திரன் சாரைக் கைகாட்டினாள். அவர் இது எதையுமே கவனிக்காதது போல என் பக்கம் திரும்பி ”போலாமா?” என்றார்.

அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது, திருவிழா சத்தங்கள் காதில் விழுவது குறைந்ததும் வண்டியின் பின்னாலிருந்தபடி “இங்க பாக்கறதையெல்லாம் வச்சு விமலாவ எடைபோடாத, ஷி இஷ் டிஃபரண்ட். ஆக்ட்சுவலி, ஷி டெஸ்பரேட்லி வாண்ட்ஸ் டு கம் அவுட் ஆஃப் ஆல் தீஸ் திங்ஸ்” என்றார். நான் மையமாகத் தலையை மட்டும் ஆட்டினேன். அவருடனான எனது பெரும்பாலான உரையாடல்கள் ஒருவழிப்பாதைதான். அவர் சொல்லுவார். நான் கேட்டுக்கொள்வேன்.

ராஜேந்திரன் சாரைப் பற்றி யாரிடமாவது சொல்லும்போது ”அவர் என்னுடைய மென்ட்டார்” என்றுதான் சொல்லுவேன். தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வில் வெளியே வந்தவர் அவர். ஆடிட்டிங் டிபார்ட்மெண்ட்டில் இருந்த அவரை “தொரத்தி விட்டுட்டாய்ங்க” என்று அவரது நண்பர்கள் கிண்டலாகச் சொல்லுவார்கள். அது உண்மையாகக்கூட இருக்கலாம். ”எதற்கும் வளைந்து கொடுக்காத நேரான கிளைகள்தான் முதலில் வெட்டப்படும்” என்பது சாணக்ய நீதி அல்லவா? ராஜேந்திரன் சாரும் எதற்கும் வளைந்து கொடுத்துப் போகும் குணம் கொண்டவர் இல்லை என்பதை அவருடன் பழகிய அந்த சில வருட காலத்திற்குள் புரிந்து வைத்திருந்தேன்.

விம்லாவை நாங்கள் பார்க்கப் போவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் நான் மதுரையிலிருந்த ஒரு தனியார் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியில் சேல்ஸ் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்திருந்தேன். ஏஜெண்டுகளைச் சேர்த்து, அவர்களுக்குப் பயிற்சியளித்து அவர்கள் மூலம் இன்ஷ்யூரன்ஸ் விற்பதுதான் என்னுடைய வேலை. நான் வேலைக்கு சேர்ந்த முதல் நாள் நான் போய் நின்ற இடம் ராஜேந்திரன் சாரின் அலுவலகம்தான். கம்ப்யூட்டர்களை அசெம்பிள் செய்து விற்கும் ஒரு சிறிய நிறுவனத்தை அப்போது பொழுதுபோக்கிற்காக நடத்திக் கொண்டிருந்தார் அவர். என்னிடம் ஏஜெண்டாகத் தகுதி உடையவர்களாக அவருக்குத் தோன்றிய நபர்கள் நான்கைந்து பேருக்கு போன் செய்து ”பையன் வருவான், பார்த்து செய்” என்று கட்டளையிடும் தொனியில் சொன்னார். அவர் பேசும் தொனியே அப்படித்தான் இருக்கும். ஒருநாள் “ஏஜெண்ட் வேலைக்கு இன்னோரு சூப்பர் ஆளு வச்சிருக்கேன், போன்ல வேண்டாம், நேர்ல ஒரு வித்தியாசமான இடத்துல அறிமுகப்படுத்தி வைக்கறேன், அதுதான் சரியா இருக்கும்” என்று சொல்லி, அறிமுகப்படுத்திய நபர்தான் விம்லா என்கிற விமலா.

ஒரு வாரம் கழித்து எனக்கு விமலாவிடமிருந்து அழைப்புவந்தது. “சார் நான் விமலா சார், ராஜேந்திரன் சார்” என்று ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே “தென்னகத்தின் சிம்ரன் விம்லாவா” என்றேன் விளையாட்டாக. எதிர்முனையில் இரண்டு நொடி மௌனம் நிலவியது. பிறகு என் கிண்டலுக்குப் பதிலளிக்காமல் “உங்க ஆஃபிஸுக்கு கீழதான் சார் நிக்கறேன்” என்றாள். அவள் வந்துவிட்டாள் என்றவுடன் எதற்காகவோ பரபரப்படைந்தேன்.

”ஆஃபிஸுக்கு வாங்க” என்று அவளை அழைத்துவிட்டு வேகமாக என்னுடைய கேபினை ஒழுங்குபடுத்தினேன்..

”விம்லா” என்று மைக்கில் அறிவித்தவுடன் ஃபோகஸ் லைட் வெளிச்சத்தில் விசில் சத்தங்கள் பறக்க இடுப்பை வெட்டி, துள்ளலாக மேடையேறிய பெண்ணுக்கும் என் முன்னால் உட்கார்ந்திருந்த விமலாவுக்கும் சம்மந்தமே இல்லாமல் இருந்தது எனக்கு ஒருவகையில் ஏமாற்றமாக இருந்தது. வெகு நேர்த்தியாகப் புடவை கட்டியிருந்தாள். முகத்தில் துளி மேக்கப் இல்லை. அது அவள்தானா என்றுகூட சந்தேகமாக இருந்தது. ”தென்னகத்தின் சிம்ரனா” என்று நான் விளையாட்டாகக் கேட்டது அவளை நேரில் பார்த்த பிறகு எனக்கே அபத்தமாக இருந்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், முகத்தை கொஞ்சம் தீவிரமான பாவனையில் வைத்துக்கொண்டு “பேப்பர்ஸ் கொண்டு வந்திருக்கீங்களா?” என்று கேட்டேன்.
”சார் சொன்னாங்க” என்றபடி அவளது போட்டோ, பிளஸ்-டூ சான்றிதழ்கள், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களை எடுத்து வைத்தாள். இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட் ஆவதற்கான விண்ணப்பப் படிவம் ஒன்றை எடுத்து அவளது விவரங்களை நிரப்பச் சொன்னபோது ’தந்தை பெயர்’ என்னும் இடத்திற்கு நேராக ஒரு சின்னக் கோடு போட்டாள். “அம்மா பேர் கூட எழுதலாம்” என்றேன். எனக்குப் பதிலளிக்காமல் அந்த இடத்தில் கேர் ஆஃப் என்று எழுதி ஒரு பெண்ணுடைய பெயரை எழுதினாள். பிறகு “சார் இப்பொ பாக்கற தொழில் பியூட்டி பார்லர்னு போட்ருக்கேன், டான்ஸர்னு வேண்டாம்” என்றாள். ’ஏன்’ என்று நான் கேட்டுக்கொள்ளவில்லை. அது ஏன் என்றால் “அவ பர்ஸனல் டீட்டெய்ல்ஸ ரொம்ப நோண்டாத” என்று ஏற்கனவே ராஜேந்திரன் சார் சொல்லியிருந்தார். விமலாவின் விண்ணப்பத்திற்கான பணத்தை ராஜேந்திரன் சார் ஏற்கனவே என்னிடம் கொடுத்துவிட்டிருந்தார்.

“ஒரு வாரம் ட்ரெய்னிங் க்ளாஸ் கண்டிப்பா அட்டண்ட் பண்ணனும் அதுக்கப்புறம் எக்ஸாம் பாஸ் பண்ணனும், சரியா?” என்று ஒரு கண்டிப்பான அதிகாரியின் தோரணையில் சொன்னேன்.

“இன்னும் கொஞ்ச நாளைக்கு சீசன் இல்ல சார், அதுனால அது ஒண்ணும் பிரச்சனை இல்லை” என்று தலைமை ஆசிரியர் முன்னால் நிற்கும் ஒரு மாணவியைப் போன்ற உடல்மொழியோடு பதிலளித்தாள் விமலா. ஏஜெண்டுகளைச் சேர்க்க நாயாய் அலைந்து கொண்டிருந்த எனக்கு இப்படியான அதிகாரத் தோரணையில் ஒரு பெண்ணிடம் பேசுவதே உள்ளுக்குள் ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தது. அப்போதே என் கேபினை சில தலைகள் எட்டிப்பார்த்தபடியே சென்றதை ஓரக்கண்ணில் கவனித்துக்கொண்டுதான் இருந்தேன். ரிடையர்டு ஆன மக்கள்தான் சிறந்த ஏஜெண்டுகள் என்று சொல்லிக் கொடுத்திருக்கும் இடத்தில் ஒரு இளம்பெண் வந்தமர்ந்தால் எப்படி இருக்கும் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.

மூன்று நாட்கள் கழித்து விமலாவுடன் சேர்த்து மேலும் பலருக்கு பயிற்சி ஆரம்பித்தது. பயிற்சியின் போது விமலா ஒருநாள் கூட விடுப்பு எடுக்கவில்லை. தினசரி வகுப்புக்குள் நுழையும்போது என்னைப் பார்த்து ஒரு வணக்கம் வைப்பதைத் தவறாமல் செய்தாள். மிக மெல்லிய மேக்கப், சிவந்த நிறம், வடிவான உடல், பாந்தமான உடைகள் காரணமாக ஆண், பெண் பேதமில்லாமல் எல்லாருடைய பார்வையும் அவள் மேல் திரும்புவதை அவள் என்னுடைய ஏஜெண்ட் என்கிற வெட்டிப் பெருமிதத்தில் நானும் ஒரு ஓரத்தில் ரசிக்கவே செய்தேன்.

பயிற்சி வகுப்புகளில் விமலா நன்றாகப் படிப்பதாக எங்களது பயிற்சியாளர் என்னிடம் ஒருநாள் சொன்னார். விமலாவும் வகுப்பில் புரியாத சந்தேகங்களை என்னை நேரில் பார்த்தால் கேட்க ஆரம்பித்திருந்தாள். “யார் மாப்ள அது, உன் ஏஜெண்டு, ஆளு ஒரு மார்க்கமா இருக்கே” என்கிற என் சக ஊழியர்களின் கேள்விகளை உள்ளுக்குள் ரசித்தாலும் சின்ன சிரிப்போடு கடக்கப் பழகியிருந்தேன். ஆனால், அவள் ராஜேந்திரன் சாருக்கு வேண்டப்பட்டவள் என்பதால் அவளுக்கும் எனக்குமிடையே கண்ணுக்குத் தெரியாத மெல்லிய திரை ஒன்று எப்போதுமிருந்தது. எனவே எனது மற்ற ஏஜெண்டுகளை ஒப்பிட கொஞ்சம் சிரமப்பட்டேனும் விமலாவைக் கொஞ்சம் தள்ளி வைத்தே பழகிக்கொண்டிருந்தேன். அவளும் அப்படியேதான் நடந்துகொண்டாள். கொஞ்ச நாள் கழித்து நன்றாகப் பழகிய பிறகு ராஜேந்திரன் சார் என்னைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை அவளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.

பயிற்சி முடிந்த முதல் சில வாரங்களுக்கு புதிய ஏஜெண்டுகளோடு களப்பணிக்குச் செல்வது என்னைப் போன்ற சேல்ஸ் மேனேஜர்களின் முக்கியக் கடமைகளில் ஒன்று. விமலாவிடம் ”டூ வீலர் இருக்கா?” என்று கேட்டதற்கு “இருக்கு சார், ஆனா லைசென்ஸ் இல்லை” என்றாள். “லைசென்ஸ் இல்லாம எப்படி?” என்று நான் என் கேள்வியை முடிப்பதற்குள் “போலீஸ் எங்களைப் பிடிக்க மாட்டாங்க சார்” என்று சிரித்தபடியே சொன்னாள். உண்மைதான்… ஆண்களைத் துரத்தித் துரத்திப் பிடிக்கும் போலீஸ்காரர்கள் லைசென்ஸே இல்லாமல் வண்டி ஓட்டும் பெண்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதைத்தான் பார்க்கிறோமே.

விமலாவிடம் லைசென்ஸ் இல்லை என்பது மட்டுமல்ல, அவளது வாகனமும் பியூட்டி பார்லர் நடத்திக் கொண்டிருந்த அவளுடைய அக்காவுடையது என்று தெரிந்ததும் வேறு வழியில்லாததால் அவளை எனது வாகனத்திலேயே ஏற்றிக்கொண்டு அவளது வாடிக்கையாளர்களைச் சந்திக்க ஆரம்பித்தேன். அலுவலகப் பணிகளுக்காகத்தான் என்றாலும் ஒரு இளம் பெண்ணோடு அப்படி பைக்கில் ஊர் முழுக்கச் சுற்றுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

விமலா முதன்முதலில் என்னை அழைத்துச் சென்றது ஒரு பெண் காவல்துறை அதிகாரியின் வீட்டிற்கு. அந்தப் பெண் அதிகாரி அப்போது மதுரையில் அல்லாமல் வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நாங்கள் உள்ளே நுழைந்ததும் சம்பிரதாயத்துக்கு சில வார்த்தைகள் பேசிய பின், அவரது செக் புக்கை எடுத்து நீட்டி “எவ்வளவு எழுதணும்?” என்று கேட்டார். விமலா “உங்க இஷ்டம் மேடம்” என்று சொன்னவுடன் சற்று யோசித்துவிட்டு ”வருஷத்துக்கு இருபத்தி ஐந்தாயிரம் போதுமா?” என்று கேட்டார். என்னுடைய அனுபவத்தில் ஒரு வார்த்தை கூட பாலிஸியைப் பற்றி விசாரிக்காமல் ஒரு வாடிக்கையாளர் செக்கில் கையெழுத்து போட்டது அதுவே முதல்முறை. வழக்கமாக வாடிக்கையாளர்களிடம் காசோலையை வாங்குவதற்குள் நாங்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டியதிருக்கும்.

காசோலையை விமலாவிடம் நீட்டிவிட்டு என்னிடம் “இது இவளுக்காகப் பண்றது. இதுல சேர்ந்திருக்கறதா என்கிட்ட சொன்னா, லைஃப்ல ரொம்ப கஷ்டப்பட்டுட்டா, பார்த்து ஏதாவது நிரந்தரமான வருமானத்துக்கு இவளுக்கு ஏற்பாடு பண்ணிவிடுங்க தம்பி, நல்ல பொண்ணு இவ” என்றார் அந்த அம்மா. விமலாவைத் திரும்பிப் பார்த்தேன். எந்தவித எதிர்வினையும் காட்டாது தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். வெளியே வரும்போது “கொஞ்ச நாள் புதுப்பட சிடி வித்துக்கிட்டு இருந்தேன் சார். அது இல்லீகல்னே எனக்குத் தெரியாது. போலீஸ்கிட்ட ஒருதடவை மாட்டிக்கிட்டேன். இந்த மேடம்தான் விசாரிச்சாங்க” என்றாள்.

“ஐயோ அப்புறம் என்ன ஆச்சு?” என்றேன்.

”இந்த மேடம் என்னை வார்ன் பண்ணிட்டு அனுப்பி விட்டுட்டாங்க”

“ஓ”

”ஆனா அதுக்கப்புறம் எல்லா போலீஸ்காரவுங்களும் எங்கிட்டதான் சிடி வாங்குனாங்க, நான்தான் மேடம் சொன்னதுக்கு அப்புறமும் ஒரு தப்ப செய்யக்கூடாதுன்னு அத விட்டுட்டேன், ரெண்டாவது ஒரே தொல்லை சார், போலீஸ்காரவுங்களைப் பகைச்சுக்கவும் முடியாது, நிறைய பேரு பணமும் தர மாட்டாங்க” என்றாள்.

அடுத்தடுத்து விமலா கூட்டிச்சென்ற சில இடங்களில் நான் சந்தித்த நபர்கள் வெவ்வேறு வகையானவர்களாக இருந்தார்கள். விமலாவாக அவள் எனக்கு அறிமுகப்படுத்திய நபர்கள் ஒருவிதமாகவும், விம்லாவாக அறிமுகப்படுத்திய நபர்கள் வேறுவிதமாகவும் இருந்தார்கள். அப்படி இருவேறு பெண்களின் உலகிற்குள் மாறிமாறி என்னை இழுத்துச் சென்ற அவள் எனக்கு அறிமுகப்படுத்திய நபர்கள் ’இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களா?’ என்று நாளும் எனக்கொரு ஆச்சரியத்தைத் தரக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அவர்களது நடனக்குழுவை நடத்தும் கந்தவேலின் வீட்டுக்கு ஒருமுறை சென்றோம். கந்தவேல் வீட்டின் உள்ளே இருந்தார். வாசலில் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். விமலாவைப் பார்த்ததும் “அடியே என் சக்களத்தி வாடி இங்க” என்று தன் தொடையைத் தட்டிக் காட்டினார். விமலா சிரித்தபடியே அவரருகே சென்று, அவர் கன்னத்தைக் கிள்ளி “என்ன தாத்தா எப்பிடி இருக்கீங்க?” என்று கேட்டாள்.

”தாத்தான்னு சொல்லாதடீ, மாமான்னு சொல்லு” என்றார் அந்தக் கிழவர். எனக்கு அவரது பேச்சே பிடிக்கவில்லை. கையில் மளிகைப்பொருட்கள் கொண்ட ஒரு கூடையோடு ஒரு பெண் வீட்டுக்குள் நுழைந்தாள். விமலாவைப் பார்த்ததும் “வாடி எப்ப வந்த?” என்று கேட்டுவிட்டு என்னைப் பார்த்து “சார்…” என்று இழுக்கவும், விமலா “சார்தான் என்னுடைய மேனேஜர்” என்று அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு ”கந்தவேல் அண்ணனோட வைஃப், ஒரு காலத்துல ரொம்ப ஃபேமஸான டான்ஸர் என்றாள். “ஏய் சும்மா இரு” என்று விமலாவைச் செல்லமாக அடித்துவிட்டு “வாங்க சார்” என்று என்னைப்பார்த்து சொன்னபடி அந்தப்பெண் வீட்டுக்குள் நுழைகையில் “கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தாதான் என்ன?” என்று கிழவனாரைப் பார்த்துக் கடிந்து சொல்லிவிட்டுப் போனாள்.

அந்தப் பெண்ணின் தலை மறையும்வரை காத்திருந்து விட்டு “எப்பிடி ஆட்டிக்கிட்டே போறா பாத்தியா?” என்று சொல்லிவிட்டு விமலாவைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்தார் அந்தப் பெரியவர். “ச்சீ மருமகளைப் பேசற பேச்சா இது, சும்மா இருங்க தாத்தா” என்று வெகு இயல்பாக அதைக் கடந்தாள் விமலா. எனக்குத்தான் தூக்கிவாரிப் போட்டது. பிறகு கந்தவேல் வெளியே வந்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவரது சார்பாக விமலாவிடம் நான்கைந்து பேர்களைக் குறிப்பிட்டு “இவுங்களையெல்லாம் போய்ப்பாரு, எல்லாம் கொஞ்சம் காசுள்ள பார்ட்டிங்க, பாலிஸி போட்டாலும் போடுவாங்க” என்று சொல்லி அனுப்பினார்.

வழியில் சிறிது நேரம் பேசாமல் வந்து கொண்டிருந்த விமலா “சார் எங்க ஆளுக இப்படித்தான் சார் பேசுவாங்க, எங்க ஃபீல்டுல இதெல்லாம் சகஜம் சார். அதுலையும் அந்த தாத்தா அந்தக்காலத்துல எம்ஜியாரா ஆக்ட் கொடுத்த ஆளு. நல்ல கலரா இருப்பாரா, ஏகப்பட்ட பொம்பளைங்க அந்தக் காலத்துல நீ, நான்னு போட்டி போட்டுட்டு அந்தாள் கூட சுத்துவாங்களாம், பெருசு எப்பவுமே அப்படித்தான் பேசும், நீங்க தப்பா எடுத்துக்காதீங்க” என்றாள். என்னை வைத்துக்கொண்டு கிழவர் அப்படிப் பேசியதுதான் அவளுக்கு பிடிக்கவில்லையே தவிர, அவர் பேசியதை அவள் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது அவளது பேச்சில் தெரிந்தது.

இன்னொரு முறை அவளது குழுவிலிருந்த பெண்கள் பாலிஸி எடுப்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று அவளை அழைத்திருப்பதாகச் சொன்னாள். ”உன் ஃபிரண்ட்ஸ்தான நீயே போய்ட்டு வா” என்று சொன்னதற்கு “இல்ல சார், அதுனாலதான் உங்களைக் கூப்பிடறேன். நான் சொன்னா நம்ப மாட்டாளுக, நீங்கன்னா கம்பெனி ஆளு, மேனேஜரே சொல்றாருன்னு நம்புவாளுக” என்றாள்.

அவள் அழைத்துச் சென்ற வீட்டில் ஒரு குடும்பம் குடியிருப்பதாகத் தெரியவில்லை. மாறாக பத்து பெண்கள் சேர்ந்து வாழ்ந்த ஹாஸ்டல் போலத்தான் அது இருந்தது. இருபதிலிருந்து நாற்பது வயது வரை ஏழெட்டு பெண்கள் அங்கே இருந்தார்கள். அணிந்திருந்த உடைகளிலும், அணியப்பட்ட முறைகளில் இருந்த அலட்சியமும், அதில் அவர்கள் வெளிப்படுத்திய சுதந்திரமும் எனக்குத்தான் சங்கடமாக இருந்தது. ஆனால் அவர்கள் இன்னொரு அன்னிய ஆண் தங்களுடன் இருப்பதைச் சட்டை செய்ததாகவே தெரியவில்லை.

அங்கிருந்தவர்களில் இரண்டு பேர் மட்டும் உண்மையான அக்கறையுடன் இன்ஷ்யூரன்ஸ் பாலிஸிகளைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் சும்மா வாய்பார்க்க வந்தவர்கள்தான் என்பதைப் அங்கே போன சில நிமிடங்களிலேயே கண்டுபிடித்துவிட்டேன். அவர்களது தாராளமான உடைகளின் மீதும், கூச்சப்படாமல் என்னருகே நெருங்கி அமர்ந்திருந்த அவர்களது உடலின் மீதும் என் கண்கள் அலைபாயாமலிருக்க நான் பெரும்பாடுபட வேண்டியிருந்தது.

ஒரு பெண் “சரி சார் நான் பாலிஸி போடறேன், இருபது வருஷம் உயிரோட இருந்தா எனக்கு பணம் தருவீங்க சரி, நடுவுல நான் போய் சேர்ந்துட்டா யாருக்கு தருவீங்க” என்று கேட்டாள்.

“அக்கா நீங்க யார நாமினியா போடறீங்களோ அவுங்களுக்குப் போய்ச் சேரும்” என்றாள் விமலா.

“நாமினினா அது யாரைப் போடணும்?” என்று கேட்டாள் அந்தப்பெண்.

“வழக்கமா பெண்கள் அவுங்க ஹஸ்பெண்ட் பேர நாமினியா கொடுப்பாங்க” என்று நான் இடையில் புகுந்து சொன்னேன்.

அப்படி நான் சொன்னதும் அந்தப் பெண் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு மற்ற பெண்களைப் பார்த்தார். ஒருவிதமான நக்கல் சிரிப்பு அறை முழுவதும் பரவியது. முப்பதுகளில் இருந்த ஒரு பெண் “ஹஸ்பெண்டெல்லாம் அக்காவுக்கு சீசனுக்கு சீசன் மாறுவானுகளே சார், ஒவ்வொரு வருஷமும் நாமினிய மாத்திக்கலாமா?” என்று சிரிக்காமல் கேட்டாள்.

என் காலுக்குக் கீழே தரை நழுவியது போல இருந்தது. நான் கையறு நிலையில் விமலாவைப் பார்த்தேன். அவளுக்கு உண்மையிலேயே கோபம் வந்துவிட்டது. “ஏங்க்கா யார்கிட்ட விளையாடறதுன்னு இல்ல, சார் நம்மளப் பத்தி என்ன நினைப்பாரு?” என்று கடிந்து கொண்டாள். நாங்கள் பேசியதையெல்லாம் கடைசிவரை இறுக்கமான முக பாவத்துடன் இடையில் ஒரு வார்த்தை கூட பேசாமல் கேட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்தான் முதல் ஆளாக புதிய பாலிஸி விண்ணப்பத்தில் கையெழுத்திட்டார். அதிலும் ”நாமினி யார்” என்று கேட்டதும் “அந்த சனியனாலதான் என் தலையெழுத்து இப்பிடி ஆச்சு, ஆனாலும் பரவால்ல எங்கம்மா பேரையே போடுங்க” என்றாள்.

இன்னொரு பெண் “சார் நான் நாமினி யார் பேரைப் போடறதுன்னு முடிவு பண்ணிட்டு விமலாகிட்ட சொல்றேன் சார். இப்ப இருக்கற நாய போட்டா, பணத்துக்காக அந்த நாய் என்னைப் போட்ரும்” என்றாள்.

“இப்ப மட்டும் அது என்ன பண்ணுது?” என்ற இன்னொரு பெண்ணின் கிண்டலோ, அதற்கு எதிர்வினையாக அவர்கள் சத்தமாகச் சிரித்ததோ என் காதில் விழுந்தது போலவே நான் காட்டிக்கொள்ளவில்லை. அங்கிருந்து வெளியேறும்போது ஒரு பெண் விமலாவிடம் தணிந்த குரலில் “என்னடி நீயும் எத்தனை நாளைக்கு சும்மா இருப்ப, உன் மேனேஜரைக் கரெக்ட் பண்ணி, சத்தம் போடாம செட்டிலாயிரு” என்றாள். விமலா “வாய மூடு” என்று சொல்வது கேட்டது. வண்டியில் ஏறி அமர்ந்ததும் விமலா அனிச்சையாக “சாரி சார்” என்றாள்.

“சேச்சே அதெல்லாம் ஒரு பிரச்சனையுமில்ல” என்று அவளுக்குப் பதில் சொன்னாலும் உள்ளுக்குள் ஒரு கலாச்சார அதிர்ச்சியில் இருந்தேன் என்பதுதான் உண்மை. ஆண், பெண் உறவுகளில் விமலாவைச் சுற்றியிருந்தவர்களிடம் எந்தவிதமான போலித்தனமும் இல்லை என்பது என் மூளைக்கு எட்டினாலும், அதை நடைமுறையில் அப்பட்டமாகப் பார்க்கும்போது அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எனக்குத்தான் இல்லை என்பது என் அலுவலகம் வந்து நிதானமாக யோசித்தபோதுதான் புரிந்தது.

எல்லோருடனும் ஒட்டிக்கொள்ளும் இயல்பினால், இரண்டு மூன்று மாதங்களில் விமலா என் அலுவலகம் முழுக்க அறிமுகமான ஆளாக மாறிப்போனாள். வாரத்திற்கு ஒரு பாலிஸியாவது எடுத்துவிடும் அவளது திறமையால் எனக்கும் அலுவலக அழுத்தங்களிலிருந்து கொஞ்சம் விடுதலை கிடைத்தது என்பதும் நிஜம்தான். “உனக்கென்னப்பா, ஓடுற குதிரைல சவாரி பண்ற” என்கிற என் சக பணியாளர்களின் வார்த்தைகளில் விமலாவின் திறமை மட்டுமல்ல, அவளது உடலும் சேர்த்தே பேசப்படுகிறது என்பது எனக்குத் தெரியும். அவள் எனது வாகனத்தில் ஏறி அமரும் ஒவ்வொரு முறையும் சில கண்கள் எங்களை உற்று நோக்குவது எனக்கும் புரியாமலில்லை. அலுவலக மேசைகளை விமலா கடந்து செல்லும் நேரங்களில் அவள் செல்லும் திசைகளிலெல்லாம் திரும்பும் தலைகளைப் பார்ப்பது எனக்கும் கொஞ்ச நாட்களில் பழகிப்போனது. ஆனால் இது எதையும் விமலா பொருட்படுத்தியதே கிடையாது.

எனக்கும் ஆரம்ப நாட்களில் அவள் மேல் இருந்த கிளர்ச்சியான உணர்வு குறைந்து அவளை எனது ஏஜெண்டாக மட்டும் நடத்தும் மனநிலை வந்திருந்தது.

சில மாதங்கள் கழித்து விமலாவுக்கு புதிய வாடிக்கையாளர்களைச் சந்திப்பதற்கு எனது உதவி என்பது அவசியமில்லாமல் போனது. நானும் வேறு புதிய ஏஜெண்டுகளை தேர்ந்தெடுப்பது, அவர்கள் மூலமாக இன்ஷ்யூரன்ஸ் பாலிஸிகளை விற்பது போன்ற எனது வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தேன். அதிக பணம் முதலீடு செய்யக்கூடிய பெரிய வாடிக்கையாளர் என்று விமலா நினைக்கும் நபர்கள், அல்லது நீண்ட நாட்களாக முடிவெடுக்காமல் இழுபறியில் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களைச் சந்தித்து அவற்றை முடித்துக்கொடுக்க மட்டுமே அவளுக்கு என் உதவி தேவைப்பட்டது.

சில நேரங்களில் விமலா அவளது சக ஏஜெண்டுகள் சிலருடன் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். சில ஆண் ஏஜெண்டுகளுடனும் கூட அப்படிச் செல்வாள். அவளுடைய இயல்பு அது என்பதால் நான் பெரும்பாலும் அவளது முகம் பார்க்கையில் புன்னகைத்தபடி கடந்துவிடுவேன். என்னைப்பார்த்த நொடியில் உடல் மொழியில் ஒருவித மரியாதையைக் காட்டுவதில் விமலா ஒருதடவை கூடத் தவறியதில்லை.

அலுவலகத்தில் மற்றவர்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும்போதுகூட என்னைக் கண்டதும் சிரிப்பைக் குறைத்து தலைகவிழ்ந்து கொள்வாள். அவள் எனக்குத் தரும் தனிப்பட்ட மரியாதை எனக்குப் பிடித்திருந்தது. ஒருவிதத்தில் என்னுடைய மற்ற ஏஜெண்டுகளிடமிருந்தும் எனக்கு அதே மரியாதை கிடைக்க விமலாவின் இந்தப் பழக்கம் எனக்கு உதவிகரமாக இருந்தது. விமலாவை முன்வைத்து “ஆனாலும் நீ ஒரு சாமியார்ப்பா” என்று என் சக ஊழியர்கள் கிண்டல் செய்யும்போது மட்டும் மனதுக்குள் சிரித்துக்கொள்வேன்.

என் சக சேல்ஸ் மேனேஜர் ஒருவரது ஏஜெண்டான இளைஞன் ஒருவனுடன் மிக நெருக்கமாகப் பழக ஆரம்பித்திருந்தாள் விமலா. அவன் நல்ல அழகான இளைஞன், வசதியான வீட்டுப்பையனும் கூட. நானே அவர்களைச் சேர்ந்தார்ப்போல ஊருக்குள் வேறுவேறு இடங்களில் வைத்து சிலமுறை பார்த்திருந்தேன். அது குறித்து அவளிடம் எதுவும் கேட்கவில்லை. அவனும் நல்ல திறன் படைத்த ஒரு ஏஜெண்டாக வளர்ந்து கொண்டிருந்தான். ஆனால் அவனோடு பழக ஆரம்பித்த ஒரு மாதத்திற்குள் விமலா மாதாமாதம் எனக்குக் கொடுத்துக்கொண்டிருந்த பாலிஸிக்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்த போதுதான் அதை ஒரு சிக்கலாக உணர ஆரம்பித்தேன்.

ஒருநாள் அவளை அழைத்து இது குறித்துக் கடிந்து கொண்டேன். அவள் கடந்த சில மாதங்களாக வாங்கிய கமிஷன் விவரங்களை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொண்டு, அவள் அடுத்த மாதத்தில் வாங்கக்கூடிய கமிஷனோடு ஒப்பிட்டு கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தேன். அவள் அடுத்து பார்க்கவிருக்கும் வாடிக்கையாளர்களின் பெயர், என்ன தொழில் செய்கிறார்கள் என்பதையும், அவர்களிடமிருந்து எந்தந்த தேதிகளில் பாலிஸியை எதிர்பார்க்கலாம் என்பதையும் எழுதித்தரச் சொன்னேன்.

அவளை இதுபோல நடத்திய விதம் அவளுக்குப் பிடிக்கவில்லை என அவளது முகபாவம் சொன்னது. “”பணம் சம்பாதிக்கற ஆசை போயிருச்சா மேடம்?” என்று நான் கேட்டபோது “பணம் இன்னைக்கு வரும் நாளைக்குப் போகும் சார்” என்று விட்டேத்தியாகப் பதில் சொன்னாள்.

”ஆனா உங்க பர்ஃபாமென்ஸ் குறைஞ்சா, கம்பெனில என்னோட உயிர எடுப்பாங்க மேடம்” என்று சற்று கடுமையான தொனியில் சொன்னேன். இது போன்ற கார்ப்பரேட் நடைமுறைகளை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை என்று நினைக்கிறேன்.


”இனிமே ஒழுங்கா இருக்கேன் சார்” என்று பள்ளி மாணவி போலப் பதிலளித்தாள். எனக்கே சிரிப்பு வந்துவிட்டது.

“சரி போய் வேலையைப் பாரு, ஏதாவது தேவைன்னா கூப்பிடு” என்று சொல்லி அனுப்பி வைத்தேன். அந்த உரையாடலில் அந்த இளைஞனைப் பற்றிய எந்த ஒரு வார்த்தையும் இடம்பெறாமல் கவனமாகத் தவிர்த்திருந்தேன். எனக்குத் தேவை என்னுடைய ஏஜெண்டுகளிடமிருந்து புதிய பாலிஸி விண்ணப்பங்கள், அவர்களது தனிப்பட்ட விஷயங்களில் தலையைக் கொடுக்கக்கூடாது என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தேன்.

நான் ஒருநாள் புதிய பாலிஸி விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் அலுவலரின் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தபோது, புதிதாக பாலிஸி எடுத்த ஒரு வாடிக்கையாளரின் பெயரை எங்கோ கேள்விப்பட்டது போல இருந்தது. ”இவரு யாரோட கஸ்டமர்?” என்று கேட்டேன். விமலாவின் புதிய நண்பனின் பெயரில் அந்த விண்ணப்பம் பரிசீலனைக்கு வந்திருந்தது.

அந்தக் குறிப்பிட்ட வாடிக்கையாளரைப் பற்றி விசார்த்தபோது “டயர் கடை வச்சிருக்கார்ல சார், அவர்தான்” என்று பதில் சொன்னார் அந்த அலுவலர். ஒரு சந்தேகத்தில் விமலா எழுதிக்கொடுத்த அவளது வாடிக்கையாளர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தேன். அதே வாடிக்கையாளர்தான். வருடத்திற்கு ஐம்பதினாயிரம் ரூபாய் பாலிஸி, அது வந்திருந்தால் அந்த மாதம் என்னுடைய டார்கெட்டை நெருங்கியிருந்திருப்பேன். விமலாவின் மேல் கோபமாக வந்தது.

மறுநாள் விமலா வந்ததும் அவளை எனது கேபினுக்கு அழைத்து அந்த வாடிக்கையாளரது பாலிஸி விண்ணப்பம் அவளது நண்பனான அந்த இளைஞனது பெயரில் எப்படி வந்தது என்று நேரடியாகக் கேட்டுவிட்டேன்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள் “சார், அவனோட மேனேஜர் புது பாலிஸி எடுக்கலைன்னு ரொம்பத் திட்டறாருன்னு சொன்னான் சார், ரொம்ப பாவமா இருந்தது, அதான் அவனுக்கு அத எடுத்துக்கொடுத்தேன், கமிஷன் வந்ததும் எனக்குக் குடுத்திருவான் சார்” என்றாள்.

“ஓ உங்களுக்கு கமிஷன் வந்திரும், அதுனால இப்ப உங்களுக்குப் பிரச்சனை இல்லை. அடுத்த வருஷம் ரெனிவல் கமிஷன் வருமே, அதையும் எடுத்து தருவாரா அவரு, சரி அதை விடுங்க, எனக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பிஸினஸ் போச்சே, அத யாரு மேடம் தருவாங்க, உங்க ஃபிரண்டு தருவாரா? இங்க என்ன சாரிட்டியா நடத்தறோம், உங்க இஷ்டத்துக்கு பாலிஸிய இன்னொரு டீம் ஏஜெண்டுக்குத் தானம் பண்றதுக்கு” என்று சத்தமாகக் கேட்டேன்.

அலுவலகத்தில் சில தலைகள் உயர்ந்து எங்களை நோக்கித் திரும்பியது. எல்லோருக்கும் கேட்கட்டும் என்பதற்காகத்தான் அப்படிச் சத்தமாகவும் பேசினேன்.

அவள் என்ன தவறு செய்திருக்கிறாள் என்பது அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது.

தலை குனிந்து அமர்ந்திருந்தாள். எனது ஆற்றாமை அடங்கவே இல்லை. “உங்க பர்ஸனல் ரிலேஷன்ஷிப்பெல்லாம் ஆஃபிஸுக்கு வெளிய வச்சுக்கணும், ஆஃபிஸுக்கு உள்ள இல்ல, இங்க நான் என்ன சொல்றனோ அதைச் செய்ங்க, இல்லைன்னா எனக்கு இந்த மேனேஜர் வேண்டாம்னு கம்ளெய்ண்ட் எழுதிக்கொடுத்துட்டு நீங்க இஷ்டப்படற டீம்ல போய் சேர்ந்துக்கோங்க, நான் உங்கள ரெக்ரூட் பண்ணி, ட்ரெய்னிங் கொடுத்து, உங்க கூட சேர்ந்து ரோடு, ரோடா அலைஞ்சு மேல கொண்டு வருவேன், மத்தவன் நோகாம நொங்கு திங்கணுமோ?” என்று அவளைக் கடிந்துவிட்டு எழுந்து சென்று விட்டேன்.

இரண்டு கேபின் தள்ளி அவளது நண்பனின் மேனேஜரும் அமர்ந்திருந்தான். ஆனால் நடப்பது எதுவும் காதில் விழாதது போல வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அதைப் பார்த்ததும் விமலாவின் மேல் இன்னும் கோபம் வந்தது.

அந்த சம்பவத்திற்குப் பிறகும் அவர்களது நட்பு குறையவில்லை. ஆனால் பழையபடி பாலிஸிகள் விமலா மூலமாக வருவது குறைவில்லாமல் நடந்தது. ஒருநாள் என்னிடம் வந்து “சார் அந்த டயர் கடைக்காரர் பாலிஸிக்கான பணத்த அவன் கரெக்டா கொடுத்துட்டான் சார்” என்று என்னிடம் தயங்கியபடியே சொன்னாள் விமலா.

“அத ஏன் எங்கிட்ட சொல்ற, வேணும்னா நீ அவனுக்குக் கொடுத்த மாதிரியே ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் பாலிஸிய உன் பேர்ல லாகின் பண்ண சொல்லு அப்ப சந்தோஷப்பட்டுக்கறேன்” என்றேன். அவள் முகம் உடனே வாடி விட்டது.

அதன் பிறகு ஒருவார காலத்திற்கு விமலாவைப் பார்க்கவே முடியவில்லை. ராஜேந்திரன் சாரிடம் சொன்னபோது அவரும் அவளைப் பார்க்கவில்லை என்றார். அவளிடம் அவருக்கு ஒரு வேலை இருக்கிறது என்றும், நான் அவளைப் பார்த்தால் சொல்லும்படியும் சொன்னார். எனக்கோ விமலா இந்த வாரம் எந்தெந்த வாடிக்கையாளர்களைச் சந்திக்கப் போகிறாள், அவள் மூலம் எத்தனை பாலிஸிகள் விற்பனை ஆகும் என்கிற தகவலை என்னுடைய மேனேஜருக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டிய அவசியம் இருந்தது.

விமலா அவளது அக்கா வீட்டில்தான் தங்கியிருக்கிறாள் என்று எனக்கு தெரியும். ஒருமுறை அந்த வீட்டை எனக்குக் காட்டியிருக்கிறாள். அவளது அக்காவையும் அறிமுகப்படுத்தியிருக்கிறாள். வேறு வழியில்லாததால் நேரில்போய்ப் பார்ப்போம் என்று அவளது அக்கா வீட்டுக்குக் கிளம்பிப் போனேன்.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள் இருந்த புறநகர்ப் பகுதியில் இருந்தது அந்த வீடு. நான் போய் வாசலில் நின்று பார்த்தபோது வீடே மயான அமைதியில் இருந்தது. ஆனால் வாசல் கதவு லேசாகத் திறந்திருப்பது தெரிந்ததும் “விமலா, விமலா என்று மெதுவாக அழைத்தபடியே நின்றேன். உள்ளிருந்து சத்தமே வராததால் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். நடு ஹாலில் யாரும் இருப்பது போலத் தெரியவில்லை. ஒரு படுக்கையறையின் உள்ளே மின்விசிறி ஓடும் சத்தம் கேட்டது. அந்த அறையும் லேசாகத் திறந்துதான் இருந்தது. ”விமலா” என்று மீண்டும் அழைத்தபடியே அந்தப் படுக்கை அறையைத் தயக்கத்தோடு மெதுவாகத் திறந்தேன்.

படுக்கையில் விமலாவின் அக்கா அரைகுறை உடையோடு படுத்திருந்தாள். அவள் மேல் காலைத்தூக்கிப் போட்டபடி டவுசர் மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண் குப்புறப் படுத்திருந்தான். அருகிலிருந்த சேரில் பாதி குடித்த மது பாட்டில்கள், டம்ளர்கள், மிக்ஸர் தட்டுகள், மென்று துப்பிய கோழி எலும்புகள், நசுக்கிப்போட்ட சிகரெட் துண்டுகள் என்று சகலமும் நிறைந்து கிடந்தன.

திறந்த வீட்டில் தேவையில்லாமல் நுழைந்துவிட்டோம் என்று புரிந்தது. கதவை மெல்லச் சாத்திவிட்டு மீண்டும் நடு ஹாலுக்கு வந்து விமலா என்று சத்தமாக அழைத்தேன். சமயலறைக்குப் பின்னால் இருந்து “சார் நான் இங்க இருக்கேன்” என்று விமலாவின் குரல் சன்னமாகக் கேட்டது. வேகமாக அங்கு சென்றபோது வெளிப்புறம் தாழிடப்பட்ட அறைக்குள்ளிருந்து விமலா “சார் கதவைத் திறந்து விடுங்க சார், ப்ளீஸ்” என்று குரல் கொடுத்தாள்.

அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று குழப்பமாக இருந்தது. கதவைத் திறந்தவுடன் வேகமாக வெளியே வந்தவள் “வீட்டுக்குள்ள எப்படி சார் வந்தீங்க?” என்று கேட்டாள்.

”கதவு திறந்துதான் இருந்தது” என்றேன்.

மெல்ல அடியெடுத்து படுக்கை அறையை எட்டிப் பார்த்தவள் உள்ளே இருவரும் போதையில் உறங்குவதைப் பார்த்ததும் “மட்டையாயிட்டாய்ங்களா, அப்பாடா” என்றாள்.

பிறகு அந்த அறையின் கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு இன்னொரு அறைக்குச் சென்று அவளது துணிமணிகள், சான்றிதழ்கள், பிற பொருட்கள் ஆகியவற்றை இரண்டு பெரிய பைகளில் அவசர அவசரமாகத் திணித்தாள். என் பக்கம் திரும்பி “சார், தயவுசெய்து என்னை ராஜேந்திரன் சார் ஆஃபிஸ்ல விட்ருங்க சார்” என்றாள். அவள் சொல்லாவிட்டாலும் நான் அதைத்தான் செய்திருப்பேன். வெளியே கிளம்பும்போது அவளது அக்கா படுத்திருந்த படுக்கையறையின் தாழ்ப்பாளை மிக மெதுவாக ஓசையெழுப்பாமல் திறந்து வைத்துவிட்டு, வாசல் கதவின் தாழ்ப்பாளை உள்கூடிப் பூட்டிவிட்டு வந்தாள்.

நேராக ராஜேந்திரன் சாருடைய அலுவலகத்திற்குச் சென்று விமலாவை இறக்கிவிட்டேன். “நீ கொஞ்ச நேரம் வெளிய இரு” என்று என்னை அனுப்பினார். நான் அவரது அறையை விட்டு வெளியேறுகையில் விமலா வெடித்து அழும் ஓசை கேட்டது. அருகில் இருந்த ஒரு டீக்கடைக்குச் சென்று ஒரு டீ சொல்லிவிட்டு ஒரு சிகரெட்டை வாங்கிப் புகைக்க ஆரம்பித்தேன். பத்துப் பதினைந்து நிமிடங்களில் நான் இரண்டாவது சிகரெட்டைப் பற்ற வைத்தபோது ராஜேந்திரன் சார் என்னை மொபைலில் அழைத்தார். நான் அவரது அலுவலகத்தை நெருங்கும்போது விமலா ஒரு ஆட்டோவில் ஏறிக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

ராஜேந்திரன் சார் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார். பிறகு “யாரையோ லவ் பண்றாளாம்ல, உனக்கும் தெரியும்ங்கறா, யார் அது?” என்று கேட்டார்.

“எனக்குத் தெரியலையே சார்…” என்று ஆரம்பித்தவன் பிறகு “என்னோட ஆஃபிஸ்லையா சார்?” என்று கேட்டேன்.

“அப்படித்தான் சொன்னா”

”இன்னொரு டீம்ல ஒரு ஏஜெண்ட் இருக்கான் சார், நல்ல பர்ஃபார்மர்தான். அவன் கூடத்தான் பழகிட்டு இருந்தாப்ல, ஆனா அந்தப் பையன்தானான்னு எனக்கு உறுதியா தெரியல”

“ஏன்டா உன் டீம்ல உள்ளவ ஆஃபிஸ்ல யார்கூட, எப்பிடிப் பழகறான்னு உனக்குத் தெரியலைன்னா அப்புறம் நீ என்ன மயிரு மேனேஜர்?”

”சார் பிஸினஸ் சம்பந்தமா நான் பேசலாம் சார், அந்தப் பொண்ணோட பர்ஸனல் ரிலேஷன்ஷிப் பத்தியெல்லாம் நான் எப்படி சார் கேட்க முடியும்” என்று ஆரம்பித்தவன் பிறகு, “ஆமா சார், கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் பாலிஸிய அந்தப் பையன் பேர்ல லாகின் பண்ணிட்டாப்ல சார், அப்ப கடிச்சு விட்டுட்டேன் சார், அந்தப்பையந்தான், ஆனா அதுக்கப்புறம் அந்த மாதிரி எதுவும் நடக்கல சார்” என்றேன்.

“லூஸா இவ” என்றவர், “ஐம்பதாயிரம் ரூபாய் பாலிஸிக்கு எவ்ளோ கமிஷன்?” என்று நேரடியாகப் பாயிண்டிற்கு வந்தார்.

“அதெல்லாம் அந்தப் பையன் கொடுத்துட்டான்னு சொன்னாப்ல”

“உனக்கு பிஸினஸ் போச்சேடா?”

”அதுனாலதான் சார் கடிச்சு விட்டேன்.”

“ஸீ… இந்தப் பொண்ணு கிட்ட என்ன தெரியுமா பிரச்சனை, ஒருத்தன் கொஞ்சம் அன்பா பேசிட்டா போதும், அவனுக்காக உயிரையே கொடுத்திருவா, ஏன்னா அம்மா, அப்பா யார்னே தெரியாம அனாதை ஆசிரமத்துல வளர்ந்தவ பார்த்தியா” என்றார்.

அப்ளிகேஷனில் அவள் தகப்பனார் பெயருக்கு எதிராக ஒரு கோடு போட்டது என் நினைவுக்கு வந்தது. “சார் அப்ப அவுங்க அக்கா?” என்று கேட்டேன்.

“அக்கான்னா சொந்த அக்காவெல்லாம் கிடையாது. எல்லாம் அதே டான்ஸ் ட்ரூப்ல உள்ள ஆளுகதான். தூத்துக்குடி பக்கத்துல ஒரு அனாதை ஆசிரமத்துல வளந்தவ இவ. அடி, உதை எல்லாம் சின்ன வயசுலையே அவளுக்கு பழகிப்போச்சு, இவள அங்க இன்சார்ஜா இருந்த ஒருத்தன் ரொம்ப நாளா ஹராஸ் பண்ணிக்கிட்டே இருந்திருக்கான், செக்‌ஷுவலாவும். கொடுமை தாங்காம ஒருநாள் அங்க இருந்து ஓடி வந்திருக்கா, இதெல்லாம் அவ சொன்னது, இன்னும் அவ சொல்லாம விட்ட கொடுமையெல்லாம் என்னென்ன இருக்கோ தெரியாது. அந்த சமயத்துல பக்கத்து ஊர்ல நடந்த திருவிழால கந்தவேலோட டான்ஸ் ப்ரொக்ராம் நடந்துக்கிட்டு இருந்திருக்கு.

எப்பிடியோ அங்க போனவ அந்தாள் கைல கால்ல விழுந்து அழுது அந்தாள் கூடவே கிளம்பி வந்திருக்கா. டான்ஸ் கத்துக்கிட்டு கந்தவேல் வீட்லயே கொஞ்ச நாள் இருந்திருக்கா, பிறகு க்ரூப்புக்குள்ளையே வேற மாதிரி பேச்சு அடிபடவும் இவ அக்கான்னு சொல்றாள்ல, அவளும் கந்தவேல் க்ரூப் டான்ஸர்தான். அவ வீட்ல போய் கந்தவேல் தங்க வச்சிருக்காப்ல, அவ அக்கா கந்தவேல் க்ரூப்ல இருந்துகிட்டே ஒரு ப்யூட்டி பார்லர் நடத்தறா, அவ போக்கு கொஞ்சம் சரியில்லைன்னு விமலா கொஞ்ச நாளா சொல்லிக்கிட்டு இருந்தா, நிறைய ஆம்பள சகவாசம், இவுங்க யாரையும் கண்ட்ரோல் பண்றதுக்கு ஆளில்ல பார்த்தியா, அதுதான் பிரச்சனை. அவ அக்காக்காரியோட இப்போ சுத்தறவன் ஒரு வேலைவெட்டி இல்லாதவன், டெய்லி தண்ணியப் போட்டுட்டு இவளை டார்ச்சர் பண்ணியிருக்கான்”

“எதுக்கு சார்?”

“வேற எதுக்கு, பணம் கொடுன்னுதான். இத்தனைக்கும் மாசா மாசம் அந்த வீட்ல இருக்கறதுக்கு இவ பணம் கொடுத்துக்கிட்டுதான் இருந்தா” என்றார்.

”அவ அக்கா கூட இப்ப இருக்கறவன் ஒரு கடை நடத்தி நட்டமாயிட்டான். இன்னொரு தொழில் ஆரம்பிக்கப் போறானாம். இவகிட்ட பணம் கொடுன்னு அரிச்சிருக்கான். இவ இல்லைன்னு சொன்னவுடன அடிச்சிருக்கான். இந்த தடவை அவ அக்காவும் சேர்ந்து திட்டி அடிச்சிருக்கா. அவ அக்காவுக்கும் இங்க தொழில் ஒண்ணும் சரியில்ல. இன்னொன்னு அந்த க்ரூப்ல விமலா மெய்ன் டான்ஸர், அவ அக்கா சைடு டான்ஸர்தான். அந்த ஈகோ பிரச்சனை வேற ரெண்டு பேருக்கும் ஏற்கனவே உண்டு. சொந்த அக்காவா இருந்தா அது ஒரு பிரச்சனையா இருந்திருக்காது. அடிச்ச அடி தாங்க முடியாம இவ ரூமுக்குள்ள போய் கதவ பூட்டிக்கிட்டு ஒளிஞ்சிருந்திருக்கா. நல்லவேளை நீ போன, மொத நாள் ராத்திரியில இருந்தே அவ அந்த ரூம்லதான் ஒளிஞ்சிருந்திருந்தாளாம்” என்றார்.

“இப்ப எங்க சார் அனுப்பியிருக்கீங்க விமலாவ?”

“கே.கே நகர்ல ஒரு வொர்கிங் வுமன் ஹாஸ்டல் இருக்கு, எனக்குத் தெரிஞ்ச இடம், அங்க அனுப்பியிருக்கேன்”

“சார், ஒரு கேள்வி, ரொம்ப நாளா கேட்கணும்னு இருந்தேன். விமலாவ உங்களுக்கு எப்பிடிப் பழக்கம்?”

“அவ அக்கான்னு சொல்றாள்ல, அந்தப் பொண்ணு மொதல்ல நம்ம ஆஃபிஸ் பக்கம்தான் பியூட்டி பார்லர் வச்சிருந்தது. என் பொண்ணு கல்யாணத்தப்போ இவுங்க ரெண்டு பேரும்தான் ப்யூட்டீஷியன் வேலை பார்த்தாங்க, அந்தப் பழக்கம்தான், அப்புறம் ஒருநாள் இவ கதைய கேட்டேன், ரொம்ப கஷ்டமா இருந்தது, விமலாவுக்கு இந்த டான்ஸ் ஃபீல்ட விட்டு வெளிய போகணும், இப்ப இருக்கற அவ அக்காவ விட்டும் வெளிய போகணும், டான்ஸ விட்டுட்டு வேற எதாவது தொழில் செய்யணும்னு ஆசை. ஏன்னா இதுவும் கிட்டத்தட்ட சினிமா ஹீரோயினோட லைஃப் மாதிரிதான். மார்க்கெட் இருக்கறதுக்குள்ள சம்பாதிச்சரணும், கொஞ்சம் வயசானாலும் அடுத்த ஆளை ரெடி பண்ணிடுவாங்க, புதுமுகங்களுக்குத்தான் வரவேற்பு அதிகம். இப்ப இவ ஃபேமஸா இருக்கா, நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியாதுல்ல, ஆனா இத்தனை நாள் அவள வச்சுப் பார்த்ததுக்கு அவ அக்கா பணம் கேட்கறாளாம், அதுக்குத்தான் உங்கிட்ட இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்டா சேர்ந்து சம்பாதிச்சுக்கிட்டு இருக்கா, இதுக்கு முன்னாடி கிடைச்ச வேலையெல்லாம் பார்த்திருக்கா” என்றார்.

எனக்கு விமலாவைப் பற்றிய சித்திரம் ஓரளவு தெளிவாகத் துலங்கத் தொடங்கியது. அதற்கு மேல் ஏதாவது விசாரித்தால் “என்னவாம் ரொம்ப அக்கறைப்படற” என்று எதையாவது கிண்டலாகக் கேட்டு வைப்பார் என்பதால் “சரிங்க சார், விமலாவுக்கு எல்லாம் சரி ஆகிருச்சுன்னா ஆஃபிஸ் பக்கம் வரச்சொல்லுங்க” என்று கிளம்பினேன்.

”சரி அந்தப் பையனைப் பத்தி கொஞ்சம் விசாரிச்சுச் சொல்லு” என்றார்.

”சார் அத நான் எப்பிடி சார் விசாரிக்கறது?”

”என்னமோ அவன லவ் பண்றாளாமே?”

“சீரியஸா அப்படித்தான் சொன்னாப்லையா சார்?”

”ஆமாமா, அவதான் சொல்றா, அவன் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லியிருக்கானாமே?” என்றார். அவர் கேட்ட தொனியிலேயே அவருக்கு அதில் நம்பிக்கை இல்லை என்பது புரிந்தது.

பதிலேதும் சொல்லாமல் நான் மெல்லச் சிரித்தேன். அவரும் சிரித்துவிட்டு “சரி கிளம்பு” என்றார்.

ஆச்சரியமாக விமலா மறுநாளே அலுவலகம் வந்திருந்தாள். எப்போதும் போல அவள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். விமலாவும் அந்த இளைஞனும் சேர்ந்து ஒரு ரெடிமேட் கடை ஆரம்பிக்கப் போகிறார்கள் என்றும், அதற்காக இடம் பார்ப்பது உள்ளிட்ட வேலைகளில் இருவரும் தீவிரமாக இருக்கிறார்கள் என்றும் எனக்கு என் சக ஊழியர்கள் மூலம் தகவல் வந்தது. அதை ராஜேந்திரன் சாரிடம் சொன்னபோது ”ஓஹோ அப்படியா?” என்றார். அவரது மனவோட்டம் என்னவாக இருந்தது என்பதை அவரது குரலை வைத்து என்னால் இனம்காண முடியவில்லை.
அதன் பிறகான சிறிது காலங்களில் விமலாவின் முகத்தில் ஒரு ப்ரத்யேகப் பூரிப்பு தெரிந்தது. ஏற்கனவே அழகான பெண்தான் அவள். இப்போது மேலும் அழகாக இருந்தாள். முன்பெல்லாம் அலுவலகம் வரும்போது சேலையை நேர்த்தியாகக் கட்டியிருந்தாலும் முகத்தில் மேக்கப்பெல்லாம் இருக்காது. ஆனால் கொஞ்ச நாட்களாக அலங்காரங்களில் கவனம் செலுத்தத் துவங்கியிருந்தாள். நடையிலேயே ஒருவித துள்ளல் இருந்தது. காதலின் உச்சகட்டப் பரவசத்தில் இருக்கிறாள் என்று எனக்குள் நானே நினைத்துக் கொண்டேன். இதை ராஜேந்திரன் சாரிடம் நேரில் சொன்னபோது “பருவத்துல பன்னிக்குட்டி கூட அழகாத்தான் இருக்கும்” என்று அந்த உரையாடலை உடனடியாக முறித்தார். ஆனால் அதைத்தாண்டி இந்த விஷயத்தை அவர் தீவிரமாக யோசித்தார் என்று அவரது முகபாவம் சொன்னது.
புதிதாக இன்ஷ்யூரன்ஸ் பாலிஸிகளை எடுப்பதிலும் விமலா மிகத்தீவிரமாக இருந்தாள். ஒருமுறை ஒரேநாளில் மூன்று புதிய பாலிஸிகளுக்கான விண்ணப்பங்களை அவள் கொண்டுவந்தபோது நானே அசந்துவிட்டேன். ”என்ன பிஸினஸ் பட்டையக் கிளப்புது?” என்று நான் கிண்டலாகக் கேட்டதற்கு “தெரியாத மாதிரியே கேட்காதீங்க சார், அக்காவுக்கு பணம் கொடுக்கறேன்னு சொல்லியிருக்கேன். அது ஒரு செட்டில்மெண்ட் மாதிரின்னு வைங்களேன், இன்னொன்னு… ஒரு ரெடிமேட் கடை போடலாம்னு ஒரு ஐடியா” என்றாள்.

”தனியாவா, பார்டன்ஷிப்பா?” என்று கேட்டேன். அந்தக் கேள்வி அர்த்தமற்ற ஒன்று என்று எனக்கும் தெரிந்தே இருந்தது. ஆனால் அதற்கான பதிலை அவள் வாயால் சொல்ல வைக்க வேண்டும் என்கிற உந்துதல் எனக்கு இருந்தது. எங்களுக்குப் பின்னால் சற்றுத் தொலைவில் உட்கார்ந்திருந்த அவளது காதலனைக் கண்களால் சுட்டி “அவரோடதான்” என்றாள். ‘அவன்’ எப்போது “அவர்’ ஆனார் என்கிற எனது ஆச்சரியத்தை “ஓ அவரு!!!” என்றபடி என் புருவங்களை உயர்த்தி அவளுக்குக் கடத்தினேன். “என்ன இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்க போற ஆளில்லையா சார்?” என்றாள்.

“உனக்குப் பிரச்சனையில்லன்னு தெரியும், அவுங்க வீட்ல சம்மதம் வாங்கிட்டீங்களா?”

“வீட்ல சொல்லீட்டேன், எதுவும் பிரச்சனை இல்லைன்னு சொல்றாப்ல சார், பிரச்சனை எதுவும் பண்ணமாட்டாங்கன்னு ஒரு நம்பிக்கைதான்” என்றாள்.

அதைச் சொல்லும்போது உண்மையிலேயே அவளது முகம் கொஞ்சம் அவநம்பிக்கையோடுதான் இருந்தது. முதல் தடவையாக உண்மையிலேயே மனதின் அடியாழத்திலிருந்து அவளது எதிர்காலம் குறித்துக் கவலைப்பட்டேன். ’விமலா பெற்றோர்கள் யாரெனத் தெரியாதவள், ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவள், நடன நாட்டியக் கலைக்குழுவில் முக்கியமான, அந்த வட்டாரத்தில் சற்றே பிரபலமான நடனக்கலைஞர் என்பதெல்லாம் அந்தப் பையனின் வீட்டில் உள்ளவர்களுக்கு, ஏன் அந்தப் பையனுக்கேகூடத் தெரியுமா, தெரியாதா?’ என்ற கேள்விகளெல்லாம் எனக்குள் எழுந்தபடியே இருந்தன. அதை அவளிடம் நேரடியாகக் கேட்கும் மனது எனக்கு இல்லை. திருமணம் வரை யோசித்தவள் நிச்சயம் அதையெல்லாம் அந்தப் பையனிடம் சொல்லியிருப்பாள் என எனக்கு நானே பதில் சொல்லியபடி சமாதானமாகிக் கொண்டேன். ஆனால் ஒரு சாதாரண, சராசரி குடும்பத்தில் மேடைகளில் நடனமாடும் ஒரு பெண்ணை மருமகளாக ஏற்றுக்கொள்வார்களா என்கிற கேள்வியெல்லாம் எனக்குள் எழாமலில்லை.

இதே விமலாவைப் போன்ற நடனமாடும் பெண் ஒருவரை நான் திருமணம் செய்யப்போகிறேன் என்று என் அம்மாவிடம் சொன்னால் என்ன நடக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். ஊரைக்கூட்டி ஒப்பாரி வைத்துவிட்டு, என்னை ஓடவிட்டு விளக்குமாற்றால் அடிக்கும் காட்சி என் கண் முன்னால் ஓடியது. என்னுடன் வேலை பார்த்த காயத்ரி மேடத்தை ஒருநாள் அறிமுகப்படுத்தியதற்கே “இப்பிடி ஊர் சுத்தற வேலை பாக்குதே இந்தப் பொம்பள, அவ புருசன் இதுக்கெல்லாம் ஒண்ணும் சொல்லமாட்டானா?” என்று கேட்ட ஆள்தான் என் அம்மா. அதனால் எனக்கு அந்தப் பையனை நினைத்துக் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அதன்பிறகு அந்தப் பையனை பார்க்கும்போது லேசாகப் புன்னகைக்கும் அளவுக்கு நான் அவர்களது காதலை எனக்குள் மெல்ல அங்கீகரிக்கவும் ஆரம்பித்திருந்தேன்.

ஒருநாள் இருவருமாக எனது கேபினுக்கு வந்தார்கள். நிமிர்ந்து பார்த்தவனிடம் “சார் ஒரு ரெண்டு மூணு நாள் வரமாட்டேன், வெளியூர் போறோம்” என்றாள்.

“ரெண்டு பேரும் சேர்ந்தா?”

“ஆமா சார்”

“என்ன எதுவும் பாலிஸி எடுக்கவா, எந்த ஊருக்கு?”

“பாலிஸிக்கு இல்ல சார், ரெடிமேட் கடை வைக்கலாம்னு ஒரு ஐடியா இருக்குன்னு சொன்னேன்ல சார், அதுக்காக திருப்பூர் போறோம், எங்கெங்க பர்ச்சேஸ் பண்ணலாம்னு ஒரு ஐடியாவுக்காக”

“ஓ… ஓக்கே ஆல் த பெஸ்ட்” என்று எழுந்து இருவருக்கும் கை கொடுத்தேன். நான் அந்தப் பையனுக்குக் கை கொடுத்தபோது விமலாவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம் தெரிந்தது.

“ராஜேந்திரன் சார் கிட்ட சொல்லீட்டியா?” என்று கேட்டேன்.

கொஞ்சம் தயங்கிவிட்டு “சொன்னேன் சார், அதுக்கு ராஜேந்திரன் சார் ‘கொஞ்சம் பொறுமையா இரு, நீ ரொம்ப அவசரப்படற’ அப்படீன்னு சொன்னாரு, ஆனா இவரு இப்பவே போகணும்னு சொல்றாரு” என்றாள்.

ராஜேந்திரன் சாரின் பேச்சை மீறித்தான் போகிறாள் என்பதை நான் ரசிக்கவில்லை. அதை அவளும் புரிந்துகொண்டாள். “சரிங்க சார், நாங்க கிளம்பறோம்” என்று உடனடியாக நகர்ந்துவிட்டாள். இதை ராஜேந்திரன் சாரிடம் சொல்ல வேண்டுமா, கூடாதா என்று எனக்குத்தான் குழப்பமாக இருந்தது. ஆனால் விமலா சம்பந்தப்பட்ட எதுவானாலும் ராஜேந்திரன் சாரிடம் சொல்லிவிடுவது என்கிற என்னுடைய அப்போதைய நிலைப்பாட்டின் படி அவள் அங்கிருந்து சென்றது ராஜேந்திரன் சாருக்கு அழைத்து விஷயத்தைச் சொல்லிவிட்டேன்.

ராஜேந்திரன் சார் அவளை அழைத்து விசாரித்தாரா இல்லையா என்பது குறித்தெல்லாம் அதன் பிறகு நான் யோசிக்கவில்லை. அடுத்த வாரம் முழுக்கவே விமலாவை நான் பார்க்கவும் இல்லை. அந்த நேரம் மார்ச் மாதக் கடைசி மற்றும் நிதி ஆண்டின் இறுதி என்பதால் என்னுடைய பிற ஏஜெண்டுகளை விரட்டி, புதிய பாலிஸிகளை எடுப்பதில் என் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்திருந்தேன். இடையில் ஒருநாள் விமலாவை அழைத்து அவள் திருப்பூரிலிருந்து திரும்பி விட்டாளா என்று விசாரித்துவிட்டு, நிதி ஆண்டுக்கடைசி ஆதலால் சீக்கிரமாக அலுவலகம் திரும்பி வந்து புதிய பாலிஸிகள் ஏதேனும் விற்றுத்தந்தால் எனக்கு உதவியாக இருக்கும் என்று கேட்டேன். உண்மையில் அந்த வருட இறுதியை அலுவலக ரீதியிலான, எந்தவித மேலிட அழுத்தங்களும் இல்லாமல் நான் கடந்ததற்கு விமலாவின் பங்களிப்பு பாதிக்கும் மேலாக இருந்தது என்பதும் உண்மைதான்.

மார்ச் முடிய இரண்டு வாரங்களே இருந்தது. எங்களது மொத்த அலுவலகமும் பரபரப்பாக இருந்தது. விமலாவும் அவளது பங்களிப்பாக இரண்டு மூன்று பாலிஸிக்களை விற்றுக்கொடுத்தாள். ஆனால் கொஞ்சக்கூடச் சுரத்தே இல்லாமல் வேலை பார்த்தாள். வருட இறுதியில் எனக்கு உதவியாக இருக்கும் என்கிற ஒரே காரணத்திற்காக மட்டுமே அதையும் செய்தாள் என்று எனக்குத் தோன்றியது. ஆனால் அவள் ஏன் அப்படி இருந்தாள் என்பதை அவளிடம் கேட்டுத் தெளிவு பெறுவதற்கு என்னுடைய அப்போதைய அலுவலகச் சூழ்நிலை இடம் தராமல் இருந்தது.

மார்ச் மாதப் பரபரப்புகள் முடிந்ததும், ஏப்ரல் மாதத்தின் முதல் பத்து நாட்கள் விடுமுறை அறிவித்தது போல அலுவலகமே வெறிச்சோடிப்போய் இருந்தது. விமலா அலுவலகத்திற்கு வரவே இல்லை. என்னுடைய மற்ற ஏஜெண்டுகளிலும் ஒரு சிலரைத்தவிர பெரும்பாலானோர் வராததால் நான் அவள் வராததைக் குறித்து யோசிக்கவும் இல்லை. ஏப்ரலின் இறுதியில் பாலிஸி விற்பனையில் என்னுடைய ஏஜெண்டுகளும் நானும் எங்களுடைய மதுரைக்கிளையின் இரண்டாமிடத்தைப் பிடித்திருந்தோம் என அறிவிக்கப்பட்டு எங்களுக்கு பாராட்டு விழாவெல்லாம் நடந்தது. ஏஜெண்டுகள் விற்ற பாலிஸி எண்ணிக்கையில் மிகக்குறைந்த காலத்திலேயே விமலா மூன்றாமிடம் பிடித்திருந்தாள். தனிப்பட்ட முறையில் விமலாவை நான் அழைத்திருந்தும் பாராட்டு விழா நிகழ்வுகள் எதிலும் அவள் கலந்துகொள்ளவில்லை. அவளுக்குக் கிடைத்த பரிசுகளை அவள் சார்பாக நான்தான் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

ஏப்ரல் மாதம் முழுவதுமே விமலா அலுவலகத்திற்கு வரவில்லை. மே மாத ஆரம்பத்தில் நான் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு தனியார் வங்கியிலிருந்து எனக்கு கூடுதல் சம்பளத்தில் ஒரு வேலைவாய்ப்பு கிடைத்தது. அதை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்று ஒரு குழப்பத்தில் ஆழ்ந்துபோனேன். நான் குழப்பத்திலிருக்கும்போது அழைக்கும் நபர் ராஜேந்திரன் சார்தான். எனவே எப்போதும் போல அவரை அழைத்து எனக்குக் கிடைத்திருக்கும் புதிய வேலை வாய்ப்பைப் பற்றிச் சொன்னபோது, எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, மறுநாள் என்னை அவரது வீட்டுக்கு வரச்சொன்னார்.

மறுநாள் அதிகாலையிலேயே எனக்கு விமலாவிடமிருந்து அழைப்பு வந்தது. அடுத்த முனையில் விசும்பும் சத்தம் மட்டுமே கேட்டது. நான் “ஹலோ விமலா” என்றவுடன் வெடித்த அழுகைக்குப் பிறகு “சார், ராஜேந்திரன் சார் இறந்துட்டாங்க சார்” என்று தேம்பியபடி சொன்னாள் விமலா. மற்ற விவரங்களை விசாரித்தபின் அழைப்பைத் துண்டித்துவிட்டு சிறிது நேரம் அமைதியாகப் படுத்திருந்தேன். திடீரென ஒரு சூனிய வெளிக்குள் யாரோ என்னைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டது போலிருந்தது. ராஜேந்திரன் சார் இறந்துபோனதை ஒரு நொடி மறந்து, இப்போது இந்த வேலை வாய்ப்பை ஏற்றுக்கொள்ளலாமா, வேண்டாமா என்று அவரைத்தவிர வேறு யாரிடம் போய்க் கேட்பது என்றேல்லாம் யோசிக்க ஆரம்பித்திருந்தேன்.

எட்டுமணி வாக்கில் ராஜேந்திரன் சார் வீட்டுக்குப் போனபோது தெரு முனையிலேயே கூட்டம் கூட ஆரம்பித்திருந்தது. அவரது மகள் என்னருகே வந்து கைகளைப் பிடித்துக்கொண்டாள். “என்ன ஆச்சு?” என்று கேட்டேன். “நைட்டு ஒரு ரெண்டு மணிக்கு நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னாரு, பக்கத்துல உள்ள ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போனோம். மாஸிவ் அட்டாக், ஏற்கனவே ஒரு அட்டாக் வந்த ஆள் வேற, வரும்போதே இறந்துட்டாருன்னு சொல்லிட்டாங்க” என்றாள். ராஜேந்திரன் சாரின் பேத்தியை விமலா தூக்கி வைத்துக்கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் எழுந்து வந்தவளது கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன. அமைதியாக என்னருகில் வந்து நின்று கொண்டிருந்தாள். அந்தக் கூட்டத்தில் இருந்த இரண்டு மூன்று பேரின் பார்வை எங்கள் மேல் திரும்ப ஆரம்பித்ததும் அங்கிருந்து மெல்ல விலகி உள்ளே சென்று ராஜேந்திரன் சாரின் உடலைப் பார்த்து அமைதியாக நின்றேன். எனக்கும் அவருக்குமிடையே இத்தனை வருடங்களில் நடந்த சம்பவங்கள் நினைவின் இடுக்குகளிலிருந்து அலையலையாய் எழுந்து வந்தது. அவரது உடல் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் வரை அங்கிருந்தேன். அதுவரை விமலா என்னருகிலேயே அமர்ந்திருந்தாள். பிறகு விமலாவிடம் ஒரு தலையசைப்பின் மூலம் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

புதிய நிறுவனத்தில் சேர்வதற்காக நான் எனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தபோது எனக்கு ஒரு மாதம் நோட்டீஸ் பீரியட் என்று அறிவிக்கப்பட்டது. ஒருநாள் விமலாவை அழைத்து நான் வேறு நிறுவனத்திற்குப் பணிபுரியப்போவதைப் பற்றிச் சொல்லிவிட்டு, நான் இங்கே பணியில் இல்லாவிட்டாலும் அவள் தொடர்ந்து இதே கம்பெனியில் ஏஜெண்டாகப் பணிபுரியலாம் என்று சொன்னேன். அவள் எதையும் சிரத்தை எடுத்துக் கவனித்ததாகத் தெரியவில்லை. “இல்ல சார் போதும், இனிமே இங்க எதுவும் பண்றதா இல்ல” என்றாள். ”ஏன் ரெடிமேட் கடைய டெவலப் பண்ணப் போறியா?” என்று கேட்டேன்.

”சார் அதைப்பத்திப் பேச வேண்டாம் சார் விட்ருங்க” என்றாள்.

“ஏன் என்னாச்சு எதுவும் செட் ஆகலியா”

“இல்ல சார், அதெல்லாம் நல்லாதான் செட்டாச்சு, நாந்தான் இப்போ வேணாம்னு நினைக்கிறேன்” என்றாள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. “ஏன் என்ன பிரச்சனைன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டபோது பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். பிறகு..

”நாந்தான் என் தகுதி என்னன்னு தெரியாம வாழ்க்கைல சில விஷயங்களுக்கு தேவையில்லாம ரொம்ப ஆசைப்பட்டுட்டேன் சார்”

”கடை வைக்கறதுக்கு என்னம்மா தகுதி, ஏன் உன் அக்கா கூட எதுவும் பிரச்சனையா, பணம் கேட்டு டார்ச்சர் பண்றாங்களா?”

“அவ மேல என்ன சார் தப்பு இருக்கு, இன்னொன்னு உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். இப்ப நான் ஹாஸ்டல காலி பண்ணிட்டு திரும்பவும் அக்கா கூடத்தான் இருக்கேன்”

“ஏன் என்ன ஆச்சு, உங்க அக்காவோட ஒரு ஆள் இருந்தானே, அவன் உன்னை அடிக்கவெல்லாம் செஞ்சானேமா, திரும்ப எப்படி அங்க போன?”

”அக்காவையும் அவன் அடிப்பான் சார், பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டு இப்போ அக்கா அவன கழட்டி விட்ருச்சு, அக்காவுக்கும் வேற ஆள் யாருமில்ல, எனக்கும் யாருமில்ல, திரும்ப வந்திருடின்னு கூப்பிட்டா, எனக்கும் அவள அப்படியே நட்டாத்துல விட இஷ்டமில்ல சார், நாங்க இப்பிடித்தான் சார், அடிச்சுக்குவோம், திரும்பி ஒண்ணா சேர்ந்துக்குவோம், அவளுக்கும் என்னை விட்டா ஆளில்லை, எனக்கும் அவள விட்டா வேற ஆளில்லை”

“சரி அப்ப உனக்கு கல்யாணமாயிருச்சுன்னா”

“அப்படி ஒண்ணு நடந்தா பார்க்கலாம் சார், அதுதான் நான் சொன்னேனே, நான் என் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டுட்டேன்னு, அதெல்லாம் எனக்கு ஒத்து வராது சார்”

“அந்தப் பையன்கூட எதாவது பிரச்சனையா”?

விமலா பதிலேதும் சொல்லவில்லை. சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தாள். பிறகு “இனிமே இங்க வரமாட்டேன்னு உங்க கிட்ட எப்பிடி சொல்றதுன்னுதான் சார் யோசிச்சுக்கிட்டே இருந்தேன். நல்ல வேளை நீங்களே வேற வேலைக்குப் போறீங்க. இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்டா வேலை பார்த்ததும் நல்லதுதான் சார், கொஞ்சம் கடன அடைச்சிருக்கேன். கொஞ்சம் பணம் சேர்த்திருக்கேன். போதும் சார்” என்றாள்.

“அடுத்து என்ன செய்யறதா ஐடியா?”

“இப்போதைக்கு எந்த யோசனையும் இல்ல சார், விதி போற போக்குல போக வேண்டியதுதான்”

எனக்கு அவள் எதிலோ மனதளவில் மிக மோசமாகக் காயமடைந்திருக்கிறாள் என்று உறுதியாகத் தெரிந்தது. முதலில் அது ராஜேந்திரன் சாருடைய திடீர் மரணமாக இருக்குமோ என்று நினைத்தேன். பிறகு நான் பல நேரங்களில் வேலை விஷயமாக அவளைக் கடிந்து பேசியதுண்டு, அதுதான் காரணமாக இருக்குமோ என்று நினைத்தேன். பின்பு அவளுக்கும் அவளது காதலனுக்கும் ஏதெனும் பிணக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு என்று யோசித்து, அது மட்டுமே காரணமாக இருக்க முடியும் என்று உறுதியாக நம்பினேன். ஆனால் அதை நேரடியாக அவளிடம் கேட்டுவிடும் அளவுக்கு அவள் எனக்கு நெருக்கமான ஒரு வெளியை ஏற்படுத்தித் தரவில்லை, அல்லது நான் அப்படி நினைத்துக் கொண்டேன். ஒரு விதத்தில் ஆரம்பத்திலிருந்தே அவளது தனிப்பட்ட விவகாரங்களில் நானாக தலையைக் கொடுக்காமல் இருந்ததும் என்னுடைய அப்போதைய மனநிலைக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

அதன் பிறகு நான் சேர்ந்திருந்த வேலைக்காக நான் திருநெல்வேலி செல்ல வேண்டியிருந்தது. புதிய அலுவலகம், புதிய ஊர். நான் அதில் என்னைத் தொலைத்துக் கொண்டிருந்தேன். இரண்டு வருடங்கள் உருண்டோடிப் போனதே தெரியவில்லை. இதற்கிடையே எனக்குத் திடீரெனத் திருமணம் நிச்சயமாகி, நடந்து ஒரு ஆண் மகவுக்குத் தகப்பனாகியிருந்தேன்.

கோவில்பட்டிக்கு அருகே இருந்த என் மாமனாரின் சொந்த ஊரான ஒரு சின்ன கிராமத்தில் வெகு விமர்சையாக வருடம் தோறும் நடக்கும் அய்யனார் கோவில் திருவிழாவிற்காக குடும்பத்தோடு சென்றிருந்தேன். முளைப்பாரியும், கெடாவெட்டும், முறைப்பெண்கள், முறைப்பையன்கள் மீது மஞ்சள் தண்ணீரை வாரியிறைத்தபடியான விளையாட்டுமாய் திருவிழா களை கட்டியிருந்தது. கெடாவெட்டி, பூசைகள் முடிந்து மதிய உணவே நான்கு மணிக்கு மேல் தயாராக, கழுத்துவரை தின்ற வெள்ளாட்டுக்கறி தந்த கிறக்கத்தில் உறங்கிப் போயிருந்தேன். நல்ல உறக்கத்தில் கனவைப்போல அந்த அறிவிப்பு கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். “உங்கள் விம்லா” கந்தவேலின் குரலேதான் அது.
இரவு பத்து மணி ஆகியிருந்தது. வேகமாக உடைகளை அணிந்து வெளியே வந்தபோது என் மாமனாரின் மொத்தக் குடும்பமும் வீட்டு வாசலில் நாற்காலிகளைப் போட்டு அமர்ந்தவாறு மதுரையிலிருந்து வந்திருந்த நடன நாட்டியக் குழுவின் நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் ஒரு சொந்தக்கார வாண்டு எழுந்து நின்று நான் அமர ஒரு நாற்காலியைக் காலி செய்து கொடுத்தது. “உக்காருங்க மாப்ள” என்றார் என் மாமனார். அது எதிலும் என் கவனம் செல்லவில்லை. கண்களை இடுக்கிக் கொண்டு ஏழெட்டு வீடுகள் தள்ளிப் போடப்பட்டிருந்த மேடையைக் கண்களை இடுக்கிக்கொண்டு பார்த்தேன். முதலில் சற்று குழப்பமாக இருந்தாலும் மேடையில் ஆடிக்கொண்டிருந்தது விமலாவேதான்.

”ஏங்க சாப்பிடறீங்களா?” என்று என் அருகில் வந்து கேட்ட என் மனைவியின் கேள்விக்கு ’வேண்டாம்’ என்று கைகளாலேயே பதில் சொல்லிவிட்டு நேராக விடுவிடுவென்று மேடையை நோக்கி நடந்தேன். அருகே செல்லச்செல்ல அது விமலாதான் என்று உறுதியாகத் தெரிந்தது. லேசாக உடல் பூசினாற்போல இருந்ததைத் தவிர அவளிடம் வேறு வித்தியாசமில்லை. மேடைக்குக் கீழே இருந்த கந்தவேலைப் பின்புறமாக நெருங்கி அவரது தோள்களைத் தொட்டேன். திரும்பியவருக்கு முதலில் என்னை அடையாளம் தெரியவில்லை. சின்னத் தடுமாற்றத்திற்குப் பிறகு “சார் நீங்களா?” என்று கேட்டுவிட்டு எழுந்து நின்று அவரது இருக்கையில் என்னை உட்காரச் சொன்னார். நான் கண்களால் விமலாவைச் சுட்டிக்காட்டினேன். “திரும்ப ஆட வந்து ரெண்டு வருஷம் ஆச்சு சார். நான் கூட வேண்டாம்னு சொன்னேன். பிடிவாதமா நான் ஆடறேன்னு வந்திருச்சு சார்” என்றார். அவரது உடல் மொழி ஏதோ குற்றத்தை ஒப்புக்கொள்ளும் ஒருவனின் உடல் மொழியோடு ஒத்திருந்தது.

“இந்தப் பாட்டு முடியட்டும் சார்” என்றார். நான் அமைதியாகத் தலையசைத்தேன்.
பாடல் முடிந்ததும் அங்கிருந்த ஒரு சிறுவனை மேடைக்குப் பின்புறம் அனுப்பி, விமலாவை அழைத்து வரச் சொன்னார்.

“என்னண்ணே கூப்பிட்டீங்களா?” என்று கேட்டபடியே வந்த விமலா முதலில் என்னைப் பார்த்ததும் தயங்கி நின்றாள்.

பிறகு “சார்” எனச் சத்தமாகக் குரலெழுப்பியபடியே என்னருகே வந்தவள் என் கைகளை இறுக்கப் பிடித்துக்கொண்டு “எப்பிடி இருக்கீங்க சார், நல்லாருக்கீங்களா சார், என்ன சார் இந்த ஊர்ல, என்ன சார் தொப்பையெல்லாம் போட்டுட்டீங்க” என்றபடி கலகலவெனப் பேச ஆரம்பித்தாள். அது என் மாமனார் ஊரென்பதாலும், எனக்கு அவ்வளவாக அறிமுகமில்லாத என் மனைவி வழி உறவினர்கள் நிறைந்த ஊர் என்பதாலும், அவள் நடன உடையோடு, அதீத மேக்கப்போடு என் கைகளைப் பிடித்துக்கொண்டு பேசியது எனக்குக் கூச்சமாக இருந்தது.

என் மாமனார் வீட்டைச் சுட்டிக்காட்டி, அதுதான் என் மாமனார் வீடு என்று அவளிடம் சொன்னேன். “பார்த்தீங்களா சார், உங்க கல்யாணத்துக்குகூட என்னைக் கூப்பிடல, நீங்களும் என்னை அப்படியே கழட்டி விட்டுட்டீங்க பார்த்தீங்களா?” என்று கோவப்படுவது போலவே சிரித்தபடி பேசினாள். இரண்டு வருடங்களுக்கு முன் அவள் என்னிடம் வலிந்து கடைபிடித்த ஒரு சிறு விலகல் காணாமல் போய் மிக இயல்பாக என்னைத் தொட்டுப் பேசிக்கொண்டிருந்தாள். நீண்ட நாள் கழித்து என்னைப் பார்த்ததில் உண்மையிலேயே அவள் மகிழ்சியடைந்திருந்தாள் என்பது புரிந்தது.

”சார் இன்னும் ரெண்டே பாட்டுதான். அதுக்கப்புறம் ஏதோ மொளப்பாரி தூக்கிட்டுப் போவாங்களாம். அரை மணிநேரம் ப்ரேக். இங்கேயே இருங்க, முடிச்சுட்டு வந்திடறேன்” என்று சொல்லிவிட்டு மேடையின் பின்புறமாகச் சென்றுவிட்டாள்.

நான் சிறிது நேரம் கந்தவேலுடன் பேசிக்கொண்டிருந்தேன். நிகழ்ச்சி முடிந்தவுடன் மாமனார் வீட்டுக்கு வரச்சொன்னேன். “அவசியம் சார்” என்றார். நான் என் மாமனார் வீட்டுக்கு வந்து வாசலில் அமர்ந்து கொண்டேன்.

ஆடல், பாடல் நிகழ்ச்சி சீக்கிரமே முடித்துக்கொள்ளப்பட்டதும் ஊரின் ஒரு முனையிலிருந்து கோவிலுக்கு முளைப்பாரி ஊர்வலம் துவங்கியது. என் மனைவியின் உறவினரான சில பெண்களும் அதில் கலந்துகொள்ளக் கிளம்பினார்கள்.

கந்தவேலும், விமலாவும் என் மாமனார் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். முழு மேக்கப்போடு சுடிதார் டாப்ஸ், ஜீன்ஸ் பேண்டில் இருந்த விமலாவின் மீது தெருவின் இருபுறமுமிருந்த நூற்றுக்கணக்கான கண்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அவர்கள் என் வீட்டு வாசலுக்கு வந்ததும் நான் என் மனைவியை அழைத்து அவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். என் மனைவி, மாமனார் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு ஆட்டக்காரி என்னைத்தேடி வீட்டுக்கு வந்தது அசூயையாக இருந்தது என்பது அவர்களது முக பாவத்திலேயே தெரிந்தது.

என் மனைவியின் கையில் தூங்கிக்கொண்டிருந்த என் ஒரு வயது மகனை விமலா மெதுவாக வாங்கிக் கையில் வைத்துக்கொண்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். கந்தவேல் என் மகனின் முகத்தைக் குனிந்து பார்த்துவிட்டு “சார் பையன் உங்கள மாதிரியே இருக்கான் சார்” என்றார். பின்பு அனிச்சையாக அவரது சட்டைப் பாக்கெட்டிலிருந்து நூறு ரூபாய்த்தாள் ஒன்றை எடுத்து என் மகனின் பிஞ்சுக்கைகளில் திணித்தார். விமலா “அண்ணே ஒரு ஐநூறு கொடுங்க, அப்புறம் தர்றேன்” என்று சொல்லி அவரிடம் வாங்கி நானும், என் மனைவியும் மறுத்தபோதும் விடாமல் என் மகனின் கையில் கொடுத்தாள்.

“சார் பையன் முகம் உங்கள மாதிரி, ஆனா கலரு நல்லவேளையா அண்ணி மாதிரி” என்றாள் விமலா. அவள் இதைச் சொன்னதும் என் மனைவி, மாமியார் முகங்களில் ஒரு தெளிவு ஏற்பட்டது. என் மாமியார் இருவரையும் ”வீட்டுக்குள்ள வாங்க, ஒரு வாய் காப்பி சாப்பிடுங்க” என்று அழைத்தார். விமலா என் மகனை “அத்தடா, அத்தடா நானு, அத்த சொல்லு, அத்த சொல்லு” என்று கொஞ்சிக்கொண்டிருந்தாள். வீட்டிலிருந்த நேரம் வரை தன் கைகளிலிருந்து அவள் என் மகனை இறக்கி வைக்கவே இல்லை. வழக்கமாக புது ஆள் கைக்கு மாறினால் விசும்பும் என் மகனும் அன்று என்னவோ அதிசயமாக அமைதியாக அவள் முகம் பார்த்தபடி, அவளது முகத்தை கைகளால் பற்றி இழுத்தபடி இருந்தான்.

என் வீட்டிலிருந்து அவர்கள் கிளம்பியதும் கந்தவேல் வேகவேகமாக மேடையை நோக்கி நடந்தார். நான் விமலாவோடு மெல்ல நடந்தேன். நாங்கள் இருந்த இடம் அமைதியாக இருக்க, ஊரின் மறுமுனையில் முளைப்பாரி கொண்டு போகும் மேளச்சத்தம் கேட்டது. எங்கள் இருவருடன் கூடவே வந்துகொண்டிருந்த மௌனத்தை நானே முதலில் உடைத்தேன்.
“உங்கிட்ட ரெண்டு கேள்வி கேட்கணும்” என்றேன்.

“எப்பிடியும் நீங்க கேப்பீங்கன்னு தெரியும் சார்” என்றாள் உடனடியாக, பின்பு சிரித்துக்கொண்டே சரி கேளுங்க என்றாள்.
“அந்தப் பையனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டியா, இல்லையா?”

“இல்லை சார்”

”ஏன்?”

”அது ஒத்து வரல சார், அவனுக்கு அப்பா இல்ல, அவனோட அம்மாவுக்கு அவ்ளோ விவரம் பத்தாது சார், இவன் என்ன சொன்னாலும் கேட்டுக்கும், ஆனா நிறைய சொந்தக்காரய்ங்க அவனுக்கு உண்டு சார், நான் டான்ஸர்ங்கறத அவய்ங்களால ஏத்துக்க முடியல போல, அவனோட அம்மாட்ட போய் டான்ஸர்னா கேரக்டர் மோசமாத்தான் இருக்கும்னு சொல்லி அந்தம்மா ரொம்ப குழம்பிப் போச்சு போல சார். இவனும் ஒரு நிலைல இல்ல, ஒருநாள் என் சொந்தக்காரனெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லைம்பான், இன்னொரு நாள் கல்யாணத்துக்கு அப்புறம் நீ டான்ஸ் ஆடப் போக மாட்டேன்னு என்ன நிச்சயம்னு கேட்பான். ஒரு தடவை உங்கக்காவுக்கு இனிமே நீ பணம் கொடுக்கக்கூடாதுன்னு சொன்னான், இப்பிடியே ரொம்ப குழப்பத்துல இருந்தான் சார்.”

”சரி அப்புறம்”

”ஒருநாள் கந்தவேல் அண்ணன் வீட்டுக்குப் போய் இனிமே விமலாவ எந்தப் ப்ரொக்ராமுக்கும் கூப்பிடக்கூடாதுன்னு சத்தம் போட்ருக்கான். அன்னைக்குன்னு பார்த்து எங்க ஆளுங்கெல்லாம் அவர் வீட்ல இருந்திருக்காங்க, அவுங்க ஏன்னு கேட்டதுக்கு இனிமே அவ இந்த மாதிரி கேவலமா டான்ஸ் ஆடமாட்டான்னு இவன் கத்த, டான்ஸ் ஆடுனா கேவலமாடான்னு அங்க ரெண்டு பேர் கத்தி பஞ்சாயத்து ஆக்கி விட்டுட்டான் சார்.

’எல்லாத்தையும் விட்டுட்டு நாமளும் கல்யாணம் பண்ணி ஒரு சாதாரணப் பொண்ணு மாதிரி புள்ளகுட்டி பெத்துக்கணும்னு ஆசைப்பட்டுதான அவன லவ் பண்ணினோம், அவனுக்கு பிடிக்கலைன்னா விட்றத்தான போறோம்’னு நினைச்சு ’சரிப்பா நான் இனிமே ஆடப் போக மாட்டேன்’னு சொன்னா நம்பித் தொலைக்க மாட்டேன்டான் சார். ராஜேந்திரன் சார் கூடச் சொன்னாரு ’அவன்கிட்ட, அவன் குடும்பத்துக்கிட்ட உன்னைப்பத்தி முழுசா சொல்லி, அவுங்க சம்மதிச்சா மட்டும் நீ கல்யாணம் பண்ற ஐடியாவுக்குப் போ’ அப்படீன்னு. அப்ப இருந்த மயக்கத்துல அவர் சொன்னது என் காதுலையே ஏறல. உங்களுக்குத் தெரியாம, ராஜேந்திரன் சாருக்குத் தெரியாம அவனுக்கு நிறையப் பணம் கொடுத்திருக்கேன் சார். நாம லவ் பண்றவன் என்ன கேட்டாலும் கொடுத்தரணும், அவனுக்கு இல்லாததான்னு நினைச்சு நிறைய செஞ்சிருக்கேன் சார். நான் இங்க எவ்வளவு செக்ஸியா ட்ரெஸ் போட்டுட்டு ஆடுனாலும், என்கூட இருக்கவங்க எங்கிட்ட இதுவரைக்கும் தப்பா நடந்துகிட்டதோ, பேசுனதோ இல்லை சார். ஆனா அந்த நாயி என்னை அசிங்கப்படுத்தீட்டான் சார். அவன் பேசுன பேச்சுக்கு ஆயிரம் பேருக்கு முன்னாடி அரைகுறையா ஆடுனா கூடத் தப்பில்லைன்னு தோணீருச்சு சார்”

”ஏன் என்ன சொன்னான்”

“திருப்பூருக்கு ரெடிமேட் ட்ரெஸ் பாக்கறதுக்காகப் போனோம்ல சார்”

“ஆமா”

“ராஜேந்திரன் சார் கூட “நீ போக வேண்டாம், அந்தப் பையன மட்டும் அனுப்புன்னு தலைதலையா அடிச்சுக்கிட்டாரு சார். என் மண்டைலதான் அது ஏறவே இல்ல. வாழ்க்கைல மொத தடவையா லவ்வரோட வெளியூர் போற சந்தோஷத்துல எனக்குத்தான் தலைகால் புரியல சார். திருப்பூர் போய் மொதல் நாளு மட்டும் ரெண்டு மூணு ரெடிமேட் ட்ரஸ் தயாரிக்கறவங்களைப் பார்த்தோம் சார். அன்னைக்கு சாயந்திரம் ரூமுக்கு வந்தவுடனேயே குடிக்கறதுக்கு பீர் வாங்கிட்டு வந்துட்டான் சார். குடிச்சுட்டு சும்மா என்னை நோண்டிக்கிட்டே இருந்தான் சார். எனக்கும் அப்ப அவன் பண்ணுனதெல்லாம் பிடிச்சுதான் இருந்தது. ரெண்டாவது நாளே எல்லாம் முடிஞ்சு போச்சு, எனக்கு அதெல்லாம் பிரச்சனையும் இல்ல வருத்தமும் இல்ல சார், அவனப் புடிச்சுப்போய்தான அவன் கூட இருந்தேன். இப்ப கூட அதப்பத்தி நான் தப்பா நினைக்கல சார்”

நான் மெல்லச் சிரித்தபடியே “எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் உன்ன கட் பண்ணி விடப் பார்த்தானா?” என்று கேட்டேன்.

“அவனுக்கு அந்த அளவுக்கெல்லாம் கூறு இல்ல சார், அப்ப அவனும் என் மேல மயக்கத்துலதான் இருந்தான்”

“பெறகு”

”சார், திருப்பூர்ல ஒரு ரெடிமேட் ட்ரெஸ் தயாரிக்கற ஆளைப் பார்த்தோம் சார். இவனுக்கு ஏற்கனவே தெரிஞ்ச ஆள்தான் சார் அவன். நல்ல பெரிய பணக்காரன் போல. அஞ்சு லட்ச ரூபா வரைக்குமான ட்ரெஸ் மெட்டீரியல் எடுத்துக்கோங்க, மெல்லமெல்லமா பணம் கொடுத்தா போதும்னு சொன்னான் சார். அது பத்தாதுன்னு இவன் அந்த ஆள்கிட்ட இன்ஷ்யூரன்ஸ் வேற கேட்ருக்கான் சார். அவனும் ஒரு லட்ச ரூபா பாலிஸி போடறேன். ட்ரெஸ் மெட்டீரியலுக்கு க்ரெடிட் தர்றேன், ஆனா நான் உன் ஆளு கூட படுக்கணும்னு கேட்ருக்கான சார்”

”இவன் அங்கயே அவன செருப்பக் கழட்டி அடிச்சிருக்க வேண்டாமா சார், அத செய்யாம அன்னைக்கு நைட்டு எங்கூட படுத்து எல்லாத்தையும் முடிச்சுட்டு, இந்த விஷயத்த எங்கிட்ட சொல்லி, நீ இனிமேலும் டான்ஸ் ஆடப் போனீன்னா இப்பிடித்தான் படுக்க வர்றியான்னு எவனாவது கேட்டுக்கிட்டே இருப்பான்னு ஆரம்பிச்சுட்டான் சார். அது பரவால்ல, இத்தனை நாள் மதுரைல அத்தன பாலிஸி இருபதாயிரம், ஐம்பதாயிரம்னு எடுத்தப்பகூட நம்ம ஆஃபீஸ்ல ஆம்பள, பொம்பளைன்ன அத்தனை பேரும் உன்னைப்பத்தி அப்படித்தான் பேசறாங்கன்னு சொன்னான் சார், அது உண்மையோ, பொய்யோ… எனக்கு மனசே விட்டுப்போச்சு சார், இத்தனைக்கும் அதுக்கு முன்னாடியெல்லாம் நான் டான்ஸ் ஆடறதப் பத்தி சொல்லும்போதெல்லாம் அதுவும் ஒரு தொழில்தானன்னு பொறுப்பா பேசுவான், அவனுக்குப் பைத்தியம் பிடிச்சுருச்சு சார், அப்பிடி சந்தேகப் புத்தி ஒருதடவை மண்டைக்குள்ள ஏறிடுச்சுன்னா அதுக்கப்புறம் இந்த ஆம்பளைகளைத் திருத்தவே முடியாது சார். எங்க டான்ஸ் ஃபீல்டுல ஏன் ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு சீசன்ல ஒவ்வொருத்தன் கூட திரியறாளுக தெரியுமா சார்? இவளுக நல்லாத்தான் இருப்பாளுக, அவனுகளுக்குத்தான் இவளுக சிரிச்சா எவனப் பாக்கறா, நடந்தா எவனப் பாக்கறான்னு மண்டைக்குள்ள கொடச்சலெடுக்க ஆரம்பிச்சிரும். அப்படிக் கொடைய ஆரம்பிச்சுட்டா அதுக்கப்புறம் நிம்மதியா இருக்க முடியாது, கடைசில அடி, உதை வரைக்கும் போயிரும், தப்பிச்சு ஓடி வந்திருவாளுக. நம்மாளு கல்யாணத்துக்கு முன்னாடியே அப்பிடி ஆகிட்டான், அவனை கல்யாணம் பண்ணி நான் நிம்மதியா வாழவா சார்” என்றாள். நமக்கு நம்மளப் பத்தித் தெரிஞ்ச, டான்ஸ் ஃபீல்டுல உள்ள ஆள்தான் சார் செட்டாகும் அல்லது நான் டான்ஸ் ஆடறத மொத்தமா நிறுத்தின பிறகு யாரையாவது லவ் பண்ணாத்தான் உண்டு” என்றாள்.

“சரி இன்ஷூரன்ஸ் பண்றத ஏன் நிறுத்துன?”

“நீங்க ரிஸைன் பண்ணிட்டீங்கள்ள சார், அதுக்கப்புறம் அங்க போக மனசில்ல”

“ஹா ஹா, இத நான் நம்பல, உண்மையைச் சொல்லு”

“இல்ல சார், அவன் நம்ம ஆஃபிஸ்ல எல்லாரும் நான் படுத்துதான் பாலிஸி எடுக்கறேன்னு பேசிக்கறாங்கன்னு சொன்னதுக்கு அப்புறம் எனக்கு நம்ம ஆஃபிஸ் பக்கம் வரவே பிடிக்கல சார். ச்சே என்ன மனுசங்கன்னு ஆகிப்போச்சு, இத்தனைக்கும் அங்க நான் நல்லா பிஸினஸ் பண்ணும்போதெல்லாம் ’உன்னை மாதிரி பிஸினஸ் பண்ண எங்களால முடியுமா?’ அப்படீன்னு அவுங்க என்னையப் பெருமையாத்தான் பேசறாங்கன்னு நினைச்சேன், ‘நீ கஸ்டமர்கிட்ட அட்ஜஸ்ட் பண்ற, நாங்கெல்லாம் நல்ல குடும்பத்துப் பொம்பளைங்க, நாங்க அப்படியெல்லாம் பிஸினஸ் பண்ண முடியாதுன்னு’ எங்கிட்ட மறைமுகமா சொல்லியிருக்காளுகன்னு எனக்கு அப்புறமாத்தான் தெரிஞ்சது சார். நம்ம பிராஞ்ச் மேனேஜர் கூட எங்கிட்ட ஒருதடவை ‘நமக்கு மார்க்கெட் இருக்கும்போதே எல்லோரையும் கவர் பண்ணிக்கணும் விமலா, அதுதான் புத்திசாலித்தனம்’ அப்படீன்னு ஒரு தடவை சொன்னாப்ல சார், ச்சீய்னு ஆயிருச்சு சார்.

என்னைச் சுற்றி இவ்வளவு நடந்திருப்பதே எனக்குத் தெரியாமலிருந்திருக்கிறது என்பதை யோசித்தபோது எனக்கு நெஞ்சடைப்பது போல ஆகிவிட்டது. ஏம்மா யாரோ ஒண்ணு ரெண்டு பேரு தப்பா பேசுனான்னா உனக்கென்னமா? அதுக்காக உனக்குப் பிடிக்காத ஸ்டேஜ் டான்ஸுக்கு நீ திரும்பிப் போகணுமா, அப்பவே எங்கிட்ட சொல்லியிருக்க வேண்டாமா?, டான்ஸ் ஆடக்கூடாதுன்னு தான வேற வேலை பார்க்க வந்த, நல்லாதான சம்பாதிச்ச, அப்புறம் ஏன் எல்லாத்தையும் விட்டுட்டு திரும்பவும் இதுக்கே வந்த?”

அதுக்கு அப்புறம் ஆஃபிஸ்ல யார் என்னையப் பார்த்தாலும் எனக்கு உடம்பெல்லாம் கூசற மாதிரி ஆயிருச்சு சார். என் முதுகுக்குப் பின்னாடி யாராவது சும்மா சிரிச்சாக்கூட எனக்கு என்னையப் பத்தி பேசித்தான் சிரிக்கறாங்கன்னு தோண ஆரம்பிச்சிருச்சு சார். அந்த மாதிரி தோண ஆரம்பிச்சதுக்கு அப்புறம் ஒருநாள் கூட என்னால அங்க இருக்க முடியல சார். இத உங்ககிட்ட எப்பிடி சொல்றதுன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். நல்லவேளை நீங்களும் அந்த நேரம் பார்த்து வேலையை விட்டுட்டு வேற வேலைக்குப் போறேன்னு சொன்னீங்களா, ரொம்ப நல்லதாப் போச்சுன்னு நினைச்சுக்கிட்டேன்.

அங்க இந்த மாதிரி செய்யாத தப்புக்கு கூனிக்குறுகி நிக்கறதுக்கு இங்க ஆயிரம் பேர் முன்னாடி செக்ஸியா டான்ஸ் ஆடறது ஒண்ணும் தப்பில்லைன்னுதான் திரும்பவும் இங்கேயே வந்து சேர்ந்துட்டேன், அங்க மாதிரி, நாம எவ்ளோதான் டீசண்டா ட்ரஸ் பண்ணிட்டு வந்தாலும் நம்மள ஓரக்கண்ல ரசிச்சுட்டு நம்மகிட்ட உத்தமன் வேஷம் போட மாட்டாய்ங்க சார், எவ்ளோ செக்ஸியா ஆடுறமோ அந்த அளவுக்கு நல்லா கை தட்டி ரசிச்சிப்பாய்ங்க சார், போன பாட்டுக்கு மட்டும் எனக்கு ஒரு ஆள் ரெண்டு ஐநூறு ரூபா கொடுத்திருக்கான்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

என் கைகளை இறுக்கக் கட்டியபடி நின்று “இது தான் உண்மையான காரணமா?” என்று கேட்டேன்.

“அதெல்லாம் காரணம்தான், ஆனா நான் வந்தபிறகு கந்தவேல் அண்ணன் கொஞ்சம் நொடிச்சுப் போயிட்டாருன்னு பிள்ளைக சொன்னாளுக சார். ஆனா அவர் திரும்பி வந்து நீ ஆடணும்னு ஒரு வார்த்தை கூட என்கிட்ட கேக்கல, அன்னைக்கு நான் அனாதை ஆசிரமத்துல இருந்து ஒரு வெறிபுடிச்ச நாய்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடி வந்தப்ப அவரு மட்டும் என்னையக் காப்பாத்தலைன்னு வைங்க, இன்னைக்கு நான் உயிரோடயே இருந்திருக்க மாட்டேன். இல்லைன்னா என்னை எங்கையாவது ப்ராத்தல்ல வித்திருப்பானுக. என்னைக் காப்பாத்தி விட்டவரு அவரு, அவருக்கு செய்ய வேண்டிய நன்றிக்கடன்னு ஒண்ணு இருக்கில்ல சார். இன்னொன்னு சார்… இதுக்கு முன்னால எனக்கு இது பிடிக்கலைதான். ஆனா இப்ப உண்மையிலேயே பிடிச்சுதான் செய்யறேன், இந்த வெளிச்சம், கைதட்டல் எல்லாம் ரொம்ப நாளைக்குக் கிடைக்காது சார், அதனால நீங்க இதுக்காக சங்கடப்படாதீங்க” என்றாள்.

ஊரின் மறுகோடியில் முளைப்பாரிகளை கோயிலில் இறக்கி வைத்ததற்கான அடையாளமாகப் பெண்கள் குலவையிடும் ஓசை சன்னமாகக் கேட்டது. ”ச்செக்க்..ச்செக்க்… இன்னும் சிறிது நேரத்தில் நடன நாட்டிய நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பிக்க இருக்கிறது. ரசிகப் பெருமக்கள் அனைவரும் மேடைக்கு முன்னே வரும்படி அன்புடன் அழைக்கிறோம்” என்ற கந்தவேலின் அறிவிப்பு ஒலிபெருக்கியின் வழியாக ஊரெங்கும் எதிரொலித்தது.

“சரிங்க சார் நான் கிளம்பறேன்” என்றபடி சட்டென்று பேச்சை முடித்தாள் விமலா. நான் கந்தவேலிடம் விடைபெற்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன்.

“யாருங்க அந்தப் பொண்ணு?” என்று கேட்ட என் மனைவியிடம் “என்னோட பழைய கம்பெனில எங்கிட்ட ஏஜெண்டா வேலை பார்த்த பொண்ணு” என்று சொல்லிவிட்டு, பின்பு ஒரு நொடி கழித்து “என் தங்கை மாதிரி” என்றேன்.

”அடுத்த பாடலுக்கு ஆடுபவர் உங்கள் விம்லா” என்ற அறிவிப்பு காதுகளில் விழுந்தது. வீட்டின் மாடி பால்கனியிலிருந்து நின்று பார்த்தேன். “நாட்டுச்சரக்கு நச்சுன்னுதான் இருக்கு” என்ற ஒரு பாடல் ஒலிபரப்பப்பட்டது, நீல நிற ஜீன்ஸுக்கு மேல் மஞ்சள் நிறப் புடவையைக் கட்டிக்கொண்டு, இடுப்பை வெட்டியபடி விமலாதான் ஆடிக்கொண்டிருந்தாள். இத்தனை வருடங்களில் அவள் ஆடுவதை முதன்முறையாக முழுவதுமாக நின்று பார்த்தேன். முழுக்க விம்லாவாக மாறிப்போயிருந்தாள் அவள்.

பின் மதியம் சாப்பிட்ட கறிச்சோறு நெஞ்சுவரை நிறைந்திருந்தது. ”நைட் சாப்பாடு வேண்டாம், பசிக்கல” என்று என் மனைவியிடம் சொல்லிவிட்டு, படுக்கையறைக் கதவை பாட்டுச்சத்தம் கேட்காமலிருக்க இறுகச் சாத்திவிட்டு படுக்கையில் விழுந்தேன்.

***

இளங்கோவன் முத்தையா

டிவைன் ஹார்ட் டிஸ்கோ ஓட்டல்

0

மணி எம்.கே மணி

கரத்தின் மத்தியில் இருக்கிற ஒரு நெருக்கடிப் பகுதி அது. இருந்தாலும் வரிசையாக இடைவிடாமல் நீண்டிருந்த கடைகளுக்கு முன்னால் காரை நிறுத்த முடியும். வாட்டம் பார்த்து நிறுத்தி விட்டு, காரை விட்டு இறங்குவதற்கு முன்னால் முன்பகுதி சீட்டுகளுக்கு நடுவே தொக்கான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டேன். எனது மனைவியையும், அவளுடைய நட்சத்திரனையும் கொல்லுவதற்காக வாங்கின சாமான். வயிற்றுப் பகுதிக்குள் செருகிக் கொண்டு நடந்தேன். இந்த பனிரெண்டு மணி நடு உச்சி வெய்யிலில் இடித்துக் கொண்டு செல்லுகிற ஜனங்களின் முட்டாள்தனமான பாடுகளை வெறுத்துக் கொண்டு சில் கிளாஸ் போட்டுக் கொண்டேன். எனக்கு யாரையும் பார்க்கப் பிடிப்பதில்லை.

அந்த உயர்நிலைப் பள்ளிக்குப் பக்கத்தில் செல்லுகிற மூத்திர சந்தின் கடைசிக்கு வந்தால் அந்தப் பள்ளியில் இருந்து வெளியேற ஒரு டொக்கு கதவு. உள்ளே நுழைந்தேன். பழைய கட்டிடத்தின் நாற்றம் தொட்டது. வாட்ச்மேன் ஒரு இழிவான சலாம் போட்டான். உள்ளே புகுந்து காரிடாருக்கு அப்பால் படிகளில் ஏறினேன். மீண்டும் மீண்டும் ஏற வேண்டும். மூன்று மாடிகளுக்கு அப்புறம் வருகிற வினோத வளைவைக் கடந்தால் மொட்டை மாடி. ஒரு ஜமாவே இருக்கிறது. ஒருத்தனும் நகம் கடிக்கவில்லை என்பதைப் பார்த்தேன், அத்தனை பேரும் அப்படித்தான் இருந்தான்கள். சலாம் அலெக்கும் என்றார் புகாரி பாய். அத்தனை பேரும் இருந்த இடத்தில் இருந்து நகர்ந்து வட்டம் போட்டு விட்டார்கள். நானும் எனக்கு ஒதுக்கப்பட்ட இடுக்கில் திணித்துக் கொண்டு குத்த வைத்து உட்கார்ந்தேன். துப்பாக்கியை அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டேன்.

வெங்கடேசன் சீட்டுக் கட்டைப் பிரித்தான்.

எல்லோரும் பார்த்துக் கொண்டோம்.

ஆட்டம் துவங்கியது. நான் பொதுவாக அவதானிப்பில் இருந்தேன். குடியிருப்புப் பகுதியில் ஒலாத்தும் கோழிக்குஞ்சைப் பார்த்திருக்கிற கருடன் தன் பாட்டுக்கு வட்டம் அடிப்பது போல. இன்றைய ஜூதுக்கு பிக்சிங் ஹை. அதனால் பேச்சு குறைவாக இருந்தது. எல்லோருமே பேச்சை விட்டிருந்தான்கள். கருணா குப்பி கொண்டு வந்திருந்தான். அதை ஊற்றித் தருவதற்கு ஒரு இளவட்டம். சம்பிரதாயத்துக்கு பெக்கு போடவா என்பதற்கு பதில் அவனே கூட ரொம்ப லேட்டா தான் ஒன்றை ஊற்றிக் கொண்டு ரவா லட்டை கடித்துக் கொண்டான். ஸ்டேஷனில் இருந்து ஒரு வத்தல் போலீசு வந்து மாமூலை வாங்கிக் கொண்டு போனபோது எனக்கு கெலிப்பு துவங்கியது. சுரத்தை துவங்கினேன். தம்பி,  ஒரு நாப்பத்தஞ்சு போடு. சோடா வேணா. அப்படியே இறக்கினேன். எரிந்து கொண்டு இறங்கியது. அநேகமாக எல்லோரும் எனது இன்றைய லக்கை புரிந்து கொண்டு விட்டார்கள். ஏசு என்னை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான். சாலை வியாபாரிகளிடம் பேசி அவர்கள் மூலம் மூணு லட்சம் தண்டல் வாங்கி வந்தது பூராவும் கோயிந்தா. அவனோடு மூன்று பேர் இருக்கிறார்கள். பணம் இல்லாமல் எப்படி திரும்புவது என்கிற கணக்கின்படி அவர்களிடம் ஆயுதங்கள் இருந்தாக வேண்டும். அதேதான், மொத்தப் பணத்தையும் நான் மூட்டை கட்டுவதற்கு முன் துப்பாக்கியை எடுத்து வாயில் கடித்துக் கொண்டேன். ஏசு மற்றும் அவனின் தடியன்களைத் தவிர அத்தனை பேரும் நழுவிச் சென்றார்கள்.

“ என்ன லவடா லுக்கு? பே, பே, எழுந்து பே ! “

என்னவோ, போய் விட்டார்கள். காருக்கு ஏறுவதற்குள் மடக்க முற்படவில்லை. இன்றைய எனது விருத்தம் அப்படி இருந்தது. மோதிப் பார்க்கிற லைட் டிம்மு போட்டிருக்கும். நெடுஞ்சாலை ஓட்டல் ஒன்றின் முன்னே காரைப் போட்டு விட்டு குடித்தேன். தயிர் சாதம் சாப்பிட்டேன். கொஞ்ச நேரம் தூங்க முடிந்தது. எழுந்த போது ஒரு அவசரம் தோன்றி காரை பறக்க செய்தேன். தடாவைத் தாண்டிய போது சின்ன நிதானம் வந்தது. நான் அவசரப்படக் கூடாது. அதற்கு ஒரு அவசியமும் இல்லை. ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்தவாறு வந்தேன். அந்த நேரத்தைய போக்குவரத்தும் மோசமாகவே தான் இருந்தது. அவ்வப்போது பார்த்த கோடை காலத்தின் மேகம் எவ்வளவோ நினைவுகளை மல்லுக்கட்ட முயலுவதாக இருந்தது. நான் எல்லாவற்றையும் தவிர்க்கவே விரும்புகிறேன்.

நான் தேடி வந்த ஊர் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

ஓரளவிற்கு தெரியும்.

மனம் கூர்மையாக இருக்கவே தனியாக இருந்த அந்த வீட்டை அடைத்து கொஞ்சம் பணத்தை பொதி செய்து  எடுத்துக் கொண்டேன். கதவைத் தட்டினேன். மஞ்சு என்னைப் பார்த்ததும் பின்னடைந்து ஓடினாள். எனக்கு சட்டென வந்த மூச்சிரைப்பில் திணற வேண்டி வந்த போது , அவள் எழுப்பின ஒரு விதமான சப்தம் பிடிக்கவில்லை. உள்ளே சென்று மறைந்தாள். ஆத்திரத்துடன் சோபாவில் அமர்ந்தேன். கொண்டு வந்த பணத்தை சோபாவின் மீது வைத்தேன். அது குவிந்து கிடந்தது. காத்திருந்தேன். உள்ளே பல்வேறு குரல்கள். என்னுடைய எண்ணங்களைக் கண்டுபிடிக்க தர்க்கம் செய்து கொண்டிருந்தன. முதலில் எனது மனைவியின் தற்போதைய கணவன் வந்து எட்டிப் பார்த்தான். முன்னேறி வந்து ஆழமாகப் பார்த்து நின்றான். நான் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தேன். அவளும் வந்தாள். அதற்கு அப்புறம் வந்தது அவனுடைய தங்கையும் அம்மாவுமாக இருக்க வேண்டும். வந்து வேடிக்கை பார்த்த குழந்தை அவனது தங்கையினுடையது.

மஞ்சு வரவில்லை.

நான் பொதுவாக கண்களால் அந்தப் பணத்தைக் காட்டினேன்.

அனைவருக்கும் அப்போதுதான் அப்பொதியின் மீது கண்கள் போயிற்று.

எழுந்து கொண்டேன்.

திரும்பி வருகையில் மஞ்சுவை சரியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்பதை மட்டும் கவனமாக சொல்லி விட்டு வந்தேன்.

காரைக் கிளப்பி நகர்த்தும் போது திரும்பிப் பார்த்தால் வீட்டின் கதவை அடைத்திருந்தார்கள்.

எங்கே செல்லுவது என்பதை முடிவு செய்யவில்லை. அது, கார் சென்னைக்கு செல்ல வேண்டிய சாலையில் செல்லாமல் அதற்கு எதிர்புறமாக சென்று கொண்டிருப்பதில் புரிந்து கொண்டேன். நான் எங்கே செல்லுவேன் என்பதை நானே வேடிக்கை பார்க்கிற மாதிரி இருக்கிறது. அப்படித்தான் கொஞ்ச நாட்கள்  முன்பு எனது வீடு செதிலடைவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெள்ளப்பகுதியில் குடித்தனங்கள் அடித்துச் செல்லுவதைப் போலிருந்தது அது. அப்படியே தான் நான் சந்தோஷமாக நேர்கொண்டிருந்த வணிகமும். பலமுறை மூழ்கியும் எழுந்து வந்து பார்க்கும்போது பலவும் கண்ணில் இருந்து மறைந்து போயிருக்கும். எதை தானம் கொடுத்தேன், எதையெல்லாம் விற்றேன் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது. பல லாட்ஜ்களில் தொடர்ச்சியாக குடித்துத் தூங்கி ஒருநாள் திடுக்கிட்டெழுந்து மீசை தாடியை மழித்து குளித்திருக்கிறேன். நல்ல ஆடைகளை அணிந்து எனது தன்னம்பிக்கையை துழாவி இருந்திருக்கிறேன். அது ஒரு பாவனை மட்டுமே. அந்த நாட்களை முடித்துக் கொண்டு இப்போது இப்படி துவங்கி இருக்கிறேன்.

பெட்ரோல் போட்டவாறு இருப்பதில் ஒரு உவகை.

ஒன்றுமே இல்லை.

இலக்கு கூட இல்லை.

ஆனால் எங்கோ சென்று கொண்டிருக்கிறோம். நன்றாகத் தானே இருக்கிறது? தத்துவார்த்தமாக? குச்சி மிட்டாய், மூக்குப் பொடி, பாங்கு, பாசந்தி என்று எதயும் விடவில்லை. தத்துவம் என்றெல்லாம் பீத்தல் நினைப்பில் பல்டி போடுவதைக் காட்டிலும் இப்படி ஜிலோவாக சோக்கு பண்ணுவதில் ஒரு ஆனந்தம் இருக்கிறது. ஏன், பலதடவை எனக்கு தயிர் சாதம் கிடைக்கவில்லை, வற்றி வறண்டு பூமியெங்கும் வகிடு போட்டிருந்த அப்படி ஒரு ஊரில், அப்படி ஒரு வெயில் நாளில் பெருச்சாளிக் கறி தின்னக் கிடைத்து சாப்பிட்டேன். இது கூடப் பரவாயில்லை. வெறும் சாராயம் குடித்துக் கொண்டு தூங்கி எழுந்து சாப்பிட மறந்து, அப்புறம் சாப்பிடக் கிடைக்காமல் துளி நிழலுக்கு ஏங்கி மேலே முடியாமல் காரிலேயே ஒருமுறை மலைத்துக் கிடந்தேன். கனவுகள் அப்படியே வானிலிருந்து பொழிகிற ஜிகினாக்களாக என்னைச் சுற்றி பறந்து கொண்டிருந்தது. எனது செல்லக் குட்டி, எனது ராஜாத்தி, எனது உயிரின் உயிர் , எனது மகள் மஞ்சு செவன்த் std இல் இருந்து டபுள் பிரமோஷன் ஆகி நயன்த் std க்கு போகிற வழியில் எனக்கு வாய்க்கரிசி போட்டு ஒரு சொம்பில் பாலும் ஊட்டிச் சென்ற சந்தோஷத்தில் திடுக்கிட்டு எழுந்த போது அவர்களைப் பார்த்தேன். ஒரு அப்பனும் அவனது மகளும். சற்றுத்தள்ளி உட்கார்ந்து ஒரு அழுக்கு மூட்டையைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். எனது பசித்த வயிற்றிற்கு அந்த மணம் எட்டியாக வேண்டுமே? அது ரொட்டியே தான். எனது திறந்த வாயிலிருந்து உமிழ்நீர் வழிந்து விட்டது. ஒரு பிச்சைக்காரனைப் போல  இரந்து விட்ட கண்களில் இருந்த பரிதாபத்தை அவன் அடையாளம் கண்டு கொண்டு ஓடி வந்தவன் அதைப் பிய்த்துக் கொடுத்தான். கடித்துக் கொள்ள பச்சை மிளகாய். அந்தக் குழந்தை தண்ணீர் பாட்டிலை நீட்டியது. மூளை சொல்லுவதை கேட்கிறதா வயிறு, வாரித்தின்று விக்கல் வந்து கண்ணீர் விட்டு எனது பசி தணிந்த போது சாய்ந்தேன். ஒன்றும் பேச முடியாமல் கொஞ்ச நேரம் படுத்துக் கிடந்தேன். அவர்கள் பேசுகிற பாஷையை அறிந்து கொள்ள முடியவில்லை. மேலும் அந்தக் குழந்தையைப் பார்க்க பார்க்க மனம் முட்டியது. காரை எடுத்தேன். பார்த்துக் கொண்டு நின்றிருந்த அந்த ஆளிடம் நூறோ, இரு நூறோ எடுத்துக் கொடுத்து கொண்டு நகர்ந்து வேகமெடுத்து சற்று தூரம் போன பிறகு திரும்பிப் பார்த்தபோது திடுக்கிட்டேன்.

இரண்டு பேரும் கையெடுத்துக் கும்பிட்டவாறு ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.

நிதானமாக இருந்து, இன்னும் கொஞ்சம் பணம் எடுத்துக் கொடுத்திருக்கலாமே என்கிற எண்ணம் புரண்டபோது வெறுமையும் வெறுப்பும் தட்டியது. இவர்கள் இரண்டு பேரில்லை. உண்மையில் இதுதான் இந்த நாடு. அவ்வளவு வேகத்தில் நான் காரை ஒட்டியது கிடையாது. எல்லாவற்றிலும் இருந்து தப்பிப்பது போலவே ஓடினேன். ’டிவைன் ஹார்ட் டிஸ்கோ’ ஹோட்டலில் கேட்டதைக் கொடுத்துவிட்டு ஒருநாள் முழுவதும் தூங்கினேன். எழுந்தபோது கடைசியாக கண்ணுக்குள் நின்றிருந்தது எனது மனைவியின் முகம் தான். மஞ்சுவின் படிப்பு பற்றி புகார் சொல்லிக் கொண்டிருந்தாள். நீ அவளை விரட்டக்கூடாது என்று மன்றாடிக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரம் இந்தப் பிரமையை எப்படி கலைப்பது என்று தெரியாமல் விழித்து, அப்புறம் முகத்தின் மீது தண்ணீர் அடித்துத் துரத்தி தெருவில் இறங்கி நடந்தேன். எனக்கே நான் எதையோ தேடுவது போலிருந்தது. என்னவோ ஒன்றை வாங்க வேண்டும். அக்கம்பக்கம் பார்த்துக் கொண்டு நடந்தேன். மதுக்கடையைப் பார்த்ததும் விறுவிறுப்படைந்து ரம் மற்றும் பியர் பாட்டில்களை வாங்கிக் கொண்டு வரும்போது குடித்துக் கொண்டு முடிவதற்கு விஷம் போல எதுவும் கிடைக்குமா என்று கிளம்பிப் புறப்பட்டது ஞாபகம் வந்தது.

அதற்கெல்லாம் அவசியமில்லை.

யாரிடமும் தப்பில்லை.

நாங்கள் ரொம்ப லவ்வு கொண்டாடி, ரொம்ப சீன் போட்டு வாழ்ந்ததில் ஒருவருக்கு ஒருவர் சலித்துப் போனோம். வாழ்வில் பிளஷர் தேடாத ஆம்பள பொம்பள இருக்க முடியுமா? எல்லாத்துக்கும் ஒரே போல டப்பா தட்டுகிற கொஞ்சம் முட்டா பசங்க ஒருத்தர ஒருத்தர் அன்பா வெச்சுக்கோங்க, பண்பா வெச்சுக்கோங்க என்பார்கள். திருப்தியா செஞ்சியா என்று ஓரக்கண்ணால் உள்ள பூந்து பேசுவதாக நினைத்துக் கொள்வார்கள். சலிப்பைப் பற்றி, அதன் வீரியம் பற்றி வாயைத் திறக்க மாட்டார்கள். பிரியாணி தின்று சலித்து நான் இன்று தயிர் சாதத்துக்கு அலைவது என்ன? பெருச்சாளிக் கறியைக் கூட இனிமேல் தேடுவேன். தனது காதலன் என்று ஒருவனைத் தேர்ந்து அவனை கண்ணீர் விட்டுக் காதலித்து முருகன் என்கிற பெயரைக் கொண்டவனுக்கு நட்சத்திரன் என்கிற பெயர் சூட்டி எனது மனைவி அவனுடனே ஓடிப் போனதற்குக் காரணம் சலிப்பு தான். சமீபமாக எனக்குக் கூட அவளது மூஞ்சியைப் பார்க்கும்போது மிகவும் வெறுப்பாக இருந்தது. ஏதாவது தீர்வு இருக்குமா என்று தேடிய போது காலையில் மனைவி எழும் முன் எழுந்து காப்பி போட்டு அவளை முத்தமிட்டு எழுப்பி கொடுத்து குட்மார்னிங் சொன்னால் பொண்டாட்டியை கைக்குள் போட்டுக் கொள்ளலாம் போன்ற உபதேசங்கள் கிடைத்தன. இந்த மாதிரி சர்க்கஸ்களை செய்ய நேர்ந்தால் நான் மூர்ச்சை போடவேண்டி வரலாம்.

எனது வலி மஞ்சு மட்டும் தான்.

ஹோட்டல் வாசலில் யாரோ இரண்டு பெண்கள் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் இருந்து இறக்கிய பெண் மஞ்சு போலவே இருந்தாள்.

அவர்களைத் தாண்டிக் கொண்டு வந்தேன்.

இருட்டும் வரை குடித்தாலும் சோர்வு குறைவாக இருந்தது. அது போல குடிப்பதை நல்லபடியாக குடிக்கவும், சாப்பிடுவதை நல்லபடி சாப்பிடவும் முடிந்தது. முக்கியமாக ஒரே சீற்றத்தில் கும்பலான யோசனைகள் நெருக்கடி கொடுக்கவில்லை. எதற்கு இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் என்பது  இப்போது உறுத்தல் போல உருமாறிக் கொண்டது பாருங்கள்.  புத்தி நன்றாக இருந்தாலே பிரச்சினை தான் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். ஆமாம், அவர்கள் அந்தப் பெண்ணை இந்த ஹோட்டலுக்கு எதற்கு கொண்டு வர வேண்டும்? என்ன காரணத்தினால் அந்த பலவந்தம்?

சன்னலில் எட்டிப் பார்த்தேன்.

இப்போது அந்தப் பெண் டிஸ்கோ டிரெஸ் போல கலர் கலர் ஆடை உடுத்தியிருந்தாள். சகல அயிட்டம்களும் வைத்து சிங்காரம் பண்ணியிருக்கிறார்கள். ஆட்டோவிற்கு பதில் ஒரு படகுக் கார் நின்றிருந்தது. பெண்களுக்கு பதில் ஆண்கள். அவள் காரில் ஏற மறுக்க, காரில் இருந்து இறங்கி வந்த ஒரு சோன் பப்டி அவளைக் காலால் உதைத்தான். இவர்களும் அவளை இழுத்து வைத்து அறைய ஆரம்பித்தார்கள்.

காரின் உள்ளே இருந்து இறங்கிய சேட்டு தலையை சொறிந்தான்.

கீழே இறங்கிப் போனேன். துப்பாக்கியால் நான்கு பேரையும் சுட்டுவிட்டு சந்தோஷமாக சிரித்துக் கொண்டு நின்றேன் . 

***

மணி எம்.கே மணி

ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு பகுதி – 6

0

வானவில்அரங்கு : Rainbow of Desire

ரூபன் சிவராஜா

இதற்கு முந்தைய / பிற பதிவுகளை வாசிக்க இங்கே அழுத்தவும்

‘ஒடுக்கப்பட்டவர்களுக்கான’ அரங்க வடிவங்களில் ஒன்று ‘Rainbow of Desire – விருப்புகளின் வானவில்’. கவித்துவம் மிக்க பெயரைக் கொண்ட இந்த வடிவ உத்தியானது, ‘அரங்கத்தினையும் மனித உறவுச் சிக்கல்களுக்கான தீர்வுகளையும்’ ஒரு தளத்தில் இணைப்பதற்கான ஆற்றுகைச் செயற்பாட்டினைக் கொண்டிருக்கின்றது. சிக்கலான, நுணுக்கமான பல்பரிமாண வேறுபாடுகளைக் கொண்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கண்டடையவும் சிந்திக்கவும் இந்த உத்தி பயன்படுத்தப்படக்கூடியது. (‘Rainbow of Desire’ அரங்கினை விளிப்பதற்கு ‘வானவில் அரங்கு’ எனும் சொல்லாடலை இக்கட்டுரையில் பயன்படுத்துகிறேன்)

வாழ்வியல் சூழலுக்கேற்ற வடிவ, உத்தி மாற்றம்


இந்த வடிவத்தை Boal உருவாக்கிய பின்னணி அவர் ஐரோப்பாவில் வாழ்ந்த கால அனுபவங்களோடு தொடர்புபட்டது. 1976 காலப்பகுதியில் அவர் இலத்தீன் அமெரிக்காவிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதையடுத்து, பிரான்ஸ்சினைத் தளமாகக் கொண்டு ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அரங்கப் பயிற்சிப்பட்டறைகள், ஆற்றுகைச் செயற்பாடுகளை முன்னெடுத்தமை பற்றி உருவக அரங்கம் (Image Theatre) பற்றிய கட்டுரையில் பார்த்திருந்தோம். ஐரோப்பிய சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுப் புறநிலைகளும் லத்தீன் அமெரிக்க புறநிலைகளும் வேறுபட்டவை. பேசுபொருள் தெரிவில் மட்டுமல்ல அரங்க வடிவத்திலும் ஐரோப்பிய சூழல் மாறுதல்களைக் கோரிநின்றதை Boal உணர்ந்தார்.

அக்காலத்தின் லத்தீன் அமெரிக்கப் புறச்சுழல்களுக்கும் அதனையொத்த இராணுவ-சர்வாதிகார ஆட்சிகள் – அவற்றின் சமூக பொருளாதார அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தோற்றம்பெற்ற அரங்க வடிவங்களை ஒப்பீட்டளவில் அரசியல் சமத்துவமுடைய சமூகங்களில் மாற்றங்களின்றி பிரயோகிக்க முடியாது. மக்கள் அரங்கு (Forum Theatre), கட்புலனாகா அரங்கு ((Invisible Theatre), உருவக அரங்கு (Image Theatre) ஆகிய முன்னைய வடிவங்களைக்கூட சமூக-அரசியல்-வாழ்வியல்-புவியியல் புறநிலைகளுக்கும் தேவைகளுக்குமேற்ப மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுவதையும் புதிய உத்திகளை இணைத்துக் கொள்வதையும் Boal ஊக்குவித்தார், விரும்பினார் என்பதை அவ்வடிவங்கள் பற்றிய முன்னைய கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தேன். உருவக அரங்கும் வானவில் அரங்கும் ஐரோப்பிய புறச்சூழல்களின் தேவைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.

ஒடுக்குவோர் – ஒடுக்கப்படுவோர்


இராணுவ ஆக்கிரமிப்பு, அரசியல் ஒடுக்குமுறை, இனவாதம், பாலியல் சுரண்டல், தொழிற்தளங்களில் பாரபட்சம் என்பதாக ஒடுக்குமுறை வடிவங்கள் லத்தீன் அமெரிக்கச் சூழலில் வெளிப்படையாகக் கண்ணுக்குத் தெரிவனவாக இருந்தன. ஐரோப்பிய சூழலில் பொருளாதார, சமூக, அரசியல் ஒடுக்குமுறைகளுக்கும் அப்பால் ஏனைய ஒடுக்குமுறைகள், குறிப்பாக அக-ஒடுக்குமுறைகள் பற்றிப் பேசுவதற்கு பங்கேற்பாளர்கள் அதிகம் விரும்பினர். இராணுவ மயப்படுத்தலுக்கு உள்ளான நாட்டின் சூழலுக்குரிய அரங்க ஆற்றுகைகளும் ஐரோப்பிய நாடுகளின் சூழல்களுக்கும் முற்றிலும் மாறுபட்ட தேவைகள் உணரப்பட்டன.

அக-ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அரங்கு


வானவில் அரங்கு அக-ஒடுக்குமுறைகளைக் கையாள்வதற்கான நோக்கினை முதன்மையாகக் கொண்டுள்ளது. அக-ஒடுக்குமுறைகள் என்பது தனி மனிதர்கள் அக மற்றும் புறச்சூழல்களின் தாக்கங்களினால் மனதளவில் தமக்குள் கட்டியெழுப்பியிருக்கும் தடைகள், தயக்கங்களைக் குறிக்கின்றது. மட்டுமல்லாது இன்னொரு மனிதருடனான, தொடர்பாடல் உறவில், வெளிப்பாட்டில், ஊடாட்டத்தில் கொண்டிருக்கக்கூடிய தடங்கல்கள், சமூக விலகல் என்பனவற்றையும் அக-ஒடுக்குமுறை சார்ந்தவைகளாக வகைப்படுத்தலாம். இருப்பியல் வெறுமை, தனிமை, சுயம் பற்றிய கேள்விகள், தொடர்பாடல் சார்ந்த சிக்கல்கள் என்பன தனிமனிதர்களின் அக-ஒடுக்குமுறை அம்சங்களாக வகைப்படுவன.

ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கின் முன்னைய பிரதான வடிவங்களான மக்கள் அரங்கு, கட்புலனாக அரங்கு, உருவக அரங்கு ஆகியன சில முன்னேறிய சமூக மட்டங்களில் பயன்பாட்டுச் சாத்தியம் குறைந்தவை. ஒடுக்குபவர் யார் ஒடுக்கப்படுபவர் யார் எனத் திட்டவட்டமாக வேறுபடுத்த முடியாத சூழ்நிலைகளில் அவற்றைப் பயன்படுத்துவது கடினம். மற்றும் விளைவுத்தாக்கம் பலவீனமானதாகவும் அமைந்துவிடும். முன்னைய அவ்வடிவங்கள் சில இடங்களில் ஒடுக்குமுறைகளைக் கூர்மைப்படுத்தவும், மீள் உருவாக்கவும் பயன்பட்டுவிடுவதான விமர்சனங்களும் உள்ளன. புற-ஒடுக்குதல்களுக்கு வெளியேயான வேறுவகை ஒடுக்குதல் சூழ்நிலைகளுக்குப் பொருந்தக்கூடிய புதிய மாற்று உத்திகளைக் கொண்ட வடிவத்தினைக் கண்டடைய வேண்டிய தேவையின் உந்துதலே வானவில் அரங்கினை வடிவமைக்க வழிகோலியது.

ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கின் முன்னைய வடிவங்களுக்கு இணையாகவும் அல்லது அவற்றுக்கு துணைநிற்கும் அரங்கப் பேசுபொருள் சார்ந்த சூழ்நிலைகளுக்கும் வானவில் அரங்கின் உத்திகளைப் பயன்படுத்த முடியும். கூர்மையான ஒடுக்குமுறை மற்றும் முரண்பாட்டுச் சூழல்களை பகுப்பாய்வு செய்வதற்கும் பயன்தரக்கூடிய வடிவம் இது.

முதன்மைப்பாத்திரம் – எதிர்ப்பாத்திரம்


வானவில் அரங்கின் முதன்மைப்பாத்திரம் Protagonist என அழைக்கப்படுகிறது. ஏனைய ஆற்றுகையாளர்கள், பங்கேற்பாளர்கள் முறையே Actors, Spect-actors எனப்படுவர் ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கின் ஆற்றுகையாளர்கள் (Actors), பார்வையாளர்கள் / பங்கேற்பாளர்கள் (Actors, Spect-actors ) இவ்வாறு அழைக்கப்படுகின்றமை பற்றி முன்னர் பார்த்திருந்தோம்.

வானவில் அரங்கின் நிகழ்த்துகையில் Protagonist மற்றும் Antagonist ஆகிய பாத்திரங்களைச் சுட்டும் சொல்லாடல்கள் முக்கியமானவை. Protagonist என்ற சொல்லின் மூலம்(root) கிரேக்கத்திலிருந்து வந்தது. கிரேக்க நாடகங்களின் முதன்மைப்பாத்திரம் / கதையின் நாயகனை அவ்வாறு அழைக்கும் மரபிருக்கிறது. அந்தச் சொல்லைத்தான் Augusto Boal வானவில் அரங்கின் முதன்மைப்பாத்திரத்திற்கு உள்வாங்கிக் கொண்டார். சமகால வழக்கில் தீவிர போராட்ட குணத்தோடு ஒரு காரியத்தில் ஈடுபடும் ஒருவரை protagonist என சுட்டுவதுண்டு.

முரண்பாடும் மோதுகையும் நாடகத்தின் மையம்
‘Antagonist’ என்பது எதிர்ப்பாத்திரத்தைக் குறிப்பது. தனது இலக்கினை அடைவதற்காக முதன்மைப்பாத்திரத்திற்கு எதிராகச் செயற்படும் பாத்திரம் அது சமகால வழக்கில் வில்லன் எனலாம். அரங்கினை முரண்பாட்டின் உச்சத்திற்குக் கொண்டு செல்ல உறுதுணையாய் செயற்படுவது எதிராளிப்பாத்திரம். எந்தவொரு நாடக, அரங்க செயற்பாட்டிற்கும் எதிராளிப்பாத்திரம் முக்கியமானது. முரண்பாட்டுச் சூழல் என்பது நாடகத்தி;ற்கு முக்கியமானது. நாடகத்தினைச் சுவாரஸ்யமாகவும் மோதுகையாகவும் வளர்த்துச் செல்வது பார்வையாளர்களின் கவனக் குவிப்பினையும் உணர்வுரீதியிலான ஒன்றிப்போதலையும் அதிகரிக்கும்.

நாடகத்தில் முரண்பாடு வளர்த்துச் செல்லப்பட வேண்டிய முக்கியத்துவம் தொடர்பாக 2019 நடுப்பகுதியில் பேராசிரியர் மௌனகுரு அவர்களிடம் கலாநிதி சிதம்பரநாதன் மேற்கொண்ட ஒரு காணொளி உரையாடலிலிருந்து ஒரு விடயத்தைப் பகிர்வது பொருத்தமென எண்ணுகிறேன்.

‘நாடகத்தில் முக்கிய அம்சம் ‘முரண்பாடு’. முரண்பாடு வளரவேணும். இரண்டு பாத்திரங்கள் மோதும் போதுதான் முரண்பாடு வளரும். ஒவ்வொரு நிலைகளிலும் அது படிப்படியாக வளர்ந்து வளர்ந்து உச்சத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். அதைத்தான் பேரவலம் என்பது….

என இராமாயணத்தின் யுத்தகாண்டத்தைத் தனக்குக் கற்பிக்கும் போது பேராசிரியர் சிவத்தம்பி மேற்கொண்டவாறு கூறியதை அந்த உரையாடலில் நினைவுபடுத்துகிறார் பேராசிரியர் மௌனகுரு. ஈழத்து நாடக மற்றும் கூத்தில் மரபு, மரபு மீறல் இரண்டுக்குமிடையிலான சமநிலையைப் பேணும் முனைப்பு பற்றியும் பேசப்படுகின்றது. வட்டக்களரி ஆற்றுகை வடிவம் எவ்வாறு படச்சட்ட மேடை வடிவத்திற்கு மாற்றம் கண்டது என்பதும் அந்த மாற்றத்தின் தேவை பற்றிய பயனுள்ள தகவல்களும் அதில் பகிரப்பட்டிருந்தன. (படச்சட்ட மேடையில், முன்னால் மட்டுமே பார்வையாளர்கள் அமர்ந்திருப்பர்.) 1960 களில் ஈழத்தில் நிலவிய அரங்கியல் போக்குகளும் – பிற்பட்ட காலங்களில் அவற்றில் ஏற்பட்ட மாற்றங்களும் தொடர்பாக அந்தத்துறையில் இயங்கிய மூத்த அரங்கியலாளரின் அனுபவப் பார்வையில் அந்தக் காணொளி ஒரு முக்கிய ஆவணப்பதிவு அது.

எதிர்ப்பாத்திரம் எதுவாக இருக்கலாம்?


வானவில் அரங்கில் எதிர்ப்பாத்திரம் என்பது ஒரு நபராக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. சமூகம், அச்சம், மனத்தளை, ஒரு நிறுவனம் அல்லது அதனையொத்த வேறுவகை அம்சங்கள் எதிர்ப்பாத்திரமாக உருவகிக்க முடியும், குறியீடாகக் காட்சிப்படுத்தவும் முடியும். இருப்பினும் பெரும்பாலான நாடகங்களில் எதிர்ப்பாத்திரம் நபர்கள் வழியாகவே சித்தரிக்கப்படுகின்றன.

முதன்மைப் பாத்திரத்தின் கதைசொல்லல் மற்றும் காட்சியமைப்பு ஆகியவற்றினூடு கட்டமைக்கப்பட்டு வளர்த்துச் செல்லப்படும். அதற்கூடான மெருகூட்டல் இதன் அடிப்படை. தொடர்ந்து முதன்மைப்பாத்திரத்தினால் அகநிலைப்பட்ட படிமங்கள், உருவகங்கள் வடிவமைக்கப்படும்.

தொடரும்..

***

முந்தைய பதிவுகளை வாசிக்க

ரூபன் சிவராஜா – தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது.

யாவரும் பப்ளிஷர்ஸ் வழங்கும் “க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி – 2020” – வெற்றியாளர்கள்

2

மிழ் எழுத்தாளுமைகளில் முக்கியமானவரான க.நா.சு அவர்களின் நினைவாக சிறுகதைப் போட்டியினை, இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதியன்று அறிவிப்பு செய்திருந்தோம். கொரோனா தொற்று என்கிற கரு கதைகளுக்கான அடிப்படை விதியாக வைக்கப்பட்டது. அதன்படி நல்லதொரு எண்ணிக்கையில் (விதிமுறைக்கு உட்படாத கதைகள் போக) 278 கதைகள் போட்டிக்குத் தேர்வாகின. வந்திருந்த கதைகளிலிருந்து 40 கதைகளாக எமது தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் அடுத்தக் கட்டத்திற்கு சென்றது.

பரிசுக்கான இறுதி பத்து கதைகளை எழுத்தாளர் ஜீ.முருகன் தேர்வு செய்தார். அவருக்கு எங்களது நன்றி.

எழுத்தாளர் ஜீ.முருகன் அவர்களின் தேர்வின்படி க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி – 2020-ன் இறுதிப்பட்டியல் இத்துடன் வெளியாகிறது.

இதன்படி – க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி – 2020ல் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் பின்வருமாறு: (பெயர் வரிசை : ஆங்கில எழுத்துப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளது)

  • கார்த்திக் பாலசுப்ரமணியன்
  • எம்.கே.குமார்
  • சுனீல் கிருஷ்ணன்
  • சுஷில்குமார்
  • பரிவை சே. குமார்
  • சு. சரவணன்
  • வ. கீரா
  • வால்டர் ராபின்சன்
  • வேல்விழி
  • விஜய ராவணன்

வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு எமது பாராட்டுகள். இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் விழாவில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பரிசுத்தொகையும் சான்றிதழும் வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட கதைகள் நூலாகத் தொகுக்கப்பட்டு விரைவில் வெளிவரும்.

போட்டியில் பங்குபெற்ற மற்ற எழுத்தாளர்களையும் யாவரும் பப்ளிஷர்ஸ் வாழ்த்துகிறது

அன்புடன்

ஜீவ கரிகாலன்
யாவரும் பப்ளிஷர்ஸ்

நினைவோ ஒரு பறவை – 5 / எஸ். பாலசந்தர்

0

ஜா.தீபா

(தொடரின் முந்தைய பகுதிகளை வாசிக்க…)

மிழ் சினிமாவின் வரலாற்றில் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய ஒருவர் இயக்குநர் எஸ்.பாலசந்தர். எல்லோரும் ஒருவழிப்பாதையில் சென்று கொண்டிருக்கும்போது தனக்கென ஒன்றினை உருவாக்கிக் கொண்ட முதல் இயக்குநர் என்று சொல்லலாம். இப்படிச் சொல்லக் காரணமுண்டு. தமிழ் சினிமா இன்றும்கூட காட்சிரீதியிலான கதை சொல்லலை முழுமையாகக் காட்டிக்கொள்ளவில்லை. அறுபது வருடங்களுக்கு முன்பு படங்களை இயக்கத் தொடங்கிய எஸ்.பாலசந்தர், ஒளியில் நம்மை வசியப்படுத்தியிருக்கிறார். அதைக்கொண்டு மிரட்டியிருக்கிறார், திடுக்கிடச் செய்திருக்கிறார், கதையும் சொல்லியிருக்கிறார்.

எஸ்.பாலச்சந்தரின் இயல்பே எதையும் வேறு கோணத்தில் பார்ப்பது தான். அவர் பெரும் ஆளுமையைப் பெற்றிருந்த சங்கீதத்திலும் அவர் பரிட்சார்த்த முயற்சியினை மேற்கொண்டிருக்கிறார். அந்த புதுமைகளை அவர் தன் முன் அமர்ந்திருக்கும் ரசிகர்கள் முன்பாக மேடையில் தான் பரிசோதித்திருக்கிறார் என்பதுதான் பாலசந்தரின் மேல் வைக்கப்படும் ஆராதனையும், விமர்சனமும். மரபான சங்கீதத்தில் தொழில்நுட்பத்தின் நுணுக்கத்தைப் புகுத்துவதில் அவர் மோகம் கொண்டிருந்தார். இவருடைய கச்சேரி இப்படித்தான் இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்து வருவதில்லை. எந்தவித முன்தீர்மானங்களையும் ஓரங்கட்டிவிட்டு புதுப்புது யுத்திகளைத் தன் கச்சேரி சபையில் வெளிப்படுத்துகிற ஒரு சக்கரவர்த்தி போல இருந்தார் பாலசந்தர்.

இதைத்தான் அவர் திரைப்படங்களிலும் செய்து காட்டியிருக்கிறார். பார்வையாளர்களுக்கு இது பிடிக்கும் என்று படமெடுப்பதைக் காட்டிலும், எதைத் திரையில் காட்டினாலும் பார்வையாளர்களுக்கு பிடிக்கும்படி செய்துவிடலாம் என்று நினைத்த அவரது தன்னம்பிக்கை சினிமாவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.

சினிமாவுக்குள் ஒரு நடிகராக அறிமுகமாகி, திரைக்கதைகள் எழுதி பின்னர் நடிகரானவர் எஸ்.பாலசந்தர். ஆங்கிலப் படங்கள், புதினங்கள் மீது இவர் கொண்ட ஈர்ப்பே இவரது படங்களில் வெளிப்பட்டன. 1948-ல் ‘இது நிஜமா’ படத்துக்கு திரைக்கதை எழுதுகிறார். இந்தப்படம் ஆங்கிலத்தில் வெளிவந்த ‘WONDER MAN’ படத்தின் தழுவல். இரட்டை சகோதரர்களைப் பற்றிய கதை. லண்டனில் மாதவன் என்கிற ஒருவன் கொலை செய்யப்படுகிறான். அவனுடைய ஆவி இந்தியாவிலிருக்கும் அவனுடைய சகோதரன் கோபாலின் உடலுக்குள் புகுந்து விடுகிறது. கோபால் இசைக்கருவிகள் விற்பனை செய்பவன். ஆவியும் உள்ளே புகுந்து கொண்டால் கேட்கவே வேண்டாம், கோபால் விதவிதமான இசை முயற்சிகளை தன்னுடைய இசைக்கருவிகள் மூலம் செய்து காட்டுகிறான். தன்னுடைய இசைத்திறமைக்கு ஏற்ற கதையாய் உருவாக்கி அதில் இரட்டையர்களாக நடிக்கவும் செய்திருக்கிறார்.

எஸ்.பாலச்சந்தருக்கு எல்லா விதமான இசைக்கருவிகளோடும் பரிச்சயம் உண்டு என்பது படத்தின் கதைக்கு பெரும் பலம் சேர்த்தது. இந்தப்படத்தின் பாடல்கள் கேட்கக் கிடைக்கின்றன. 72 வருடங்களுக்கு முன்பு தமிழ் இசையில் இப்படியானதொரு முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை நினைத்து பெருமையடையாமல் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு பாடல்களின் தரம் அமைந்திருந்தது. லண்டன் ஆங்கிலத்தை சரளமாகப் பேசும் ஒருவன் இசை தெரிந்த ஒருவன் உடலுக்குள் புகுந்தால் பாடல்கள் எப்படியெல்லாம் வெளிப்படுமோ அப்படி அமைத்திருந்தார். இந்துஸ்தானியும், கர்னாடக சங்கீதமும், மேற்கத்திய இசையும் பாடலுக்குள் புகுந்து வெளிப்படுவதை ரசிகர்கள் கொண்டாடினர்கள்.. இந்தப் படத்தின் தழுவல் தான் பின்னாட்களில் கமல்ஹாசன் அவர்கள் நடித்து ‘ஜப்பானில் கல்யாணராமனாக’ வெளிவந்தது.

பாலச்சந்தரின் வருகைக்குப் பிறகுதான் கர்னாடக இசை மேடைகளில் பிரபலமாக இருந்த பாடகர்கள் சினிமாவிலும் நடிக்கலாம் என்று விருப்பம் கொண்டனர். இதில் பெண் பாடகிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அவர்களும் சிறப்பாகவே திரையை ஆண்டனர், ஆனால் ஆண் பாடகர்களுக்கு கேமரா முன் நிற்பதன் பயிற்சியும் பக்குவமும் இல்லாததன் விளைவு, அவர்கள் திரும்பவும் மேடைக்கேத் திரும்பும்படி ஆனது. எஸ்.பாலசந்தர் இதில் வித்தியாசப்படுகிறார். எதை நோக்கி அடியெடுத்து வைத்தாலும் அதன் ஆழம் கண்டு உணர்ந்த பின்பே அதில் ஈடுபடுவார். நடிப்பில் அவருக்கென ஒரு பாணி இப்படித்தான் உருவாகியிருந்தது. அதனால் எதைக் கையாள முயுமோ அந்தக் கதாபத்திரங்களைத் தனக்காக வடிவமைத்துக் கொண்டார். அலட்டல் இல்லாத நடிப்புக்கு ஏற்ற பாத்திரம் அதே நேரம் அது சவாலானதாகவும் அமைந்திருக்கும்.

இவரது படங்களின் மாஸ்டர் பீஸ் என்று ‘கைதி’ படத்தைத் தான் அக்காலத்து விமர்சகர்கள் சொல்கிறார்கள். அதன் திரைக்கதை நேர்த்தியைப் பற்றி வியக்காத விமர்சர்கள் இல்லை. முதல் காட்சியிலேயே கிண்டி குதிரைப் பந்தயத்தினை கண்முன் காட்டியதில் பாலசந்தர் எல்லோரையும் ரசிக்க வைத்திருக்கிறார். இந்தப் படத்தின் கதை பின்னாட்களில் தமிழ் சினிமாவுக்கு பெருமளவு பயன்பட்டது. குற்றமே செய்யாத ஒருவன் கொலைக்குற்றத்துக்கு சிறைக்கு செல்கிறான். அவன் தன்னை நிரபராதி என்று நிரூபிப்பதுதான் கதை. இந்தப் படங்களின் பாடல்களும் பெரும் வெற்றி. உலகத்தின் எந்த மூலையில் உள்ள நாடாக இருந்தாலும் அங்குள்ள இசைத்தன்மையைக் கேட்பதில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார். அதனால்தான் அவரது படங்களின் பாடல்கள் நவீனத்தின் உச்சமாய் இருந்தது. ‘கைதி’ படத்தில் சிறைச்சாலையில் இடம்பெற்ற ஒரு பாடல் பால் ராப்சனின் ஆப்ரிக்க கருப்பினத்தவரின் பக்திப் பாடல்களின் பாதிப்பில் வெளிவந்திருந்தது. இதனை அவர் அப்போது தந்த பத்திரிகை நேர்காணலில் பேசியிருந்தார்.

இப்படி தன்னுடைய பாடல்களினாலும் பிரபலமடைந்திருந்த எஸ்.பாலசந்தர் அடுத்து எடுத்த முயற்சி யாரும் அத்தனை எளிதில் செய்துவிட முடியாதது. இந்தியத் திரைப்படங்களில் பாடல்களுக்கு நடுவில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வசனங்கள் பேசிக்கொண்டிருந்த காலகட்டத்தில் இருந்து வெகுவேகமாய் ஐந்து பாடல்கள் ஒரு படத்துக்கு என்று மாறியது. ஆனால் பாடல்களே இல்லாமல் படம் வெளிவரும் என்று யாரும் எதிர்பார்த்திருந்திருக்க முடியாது. எஸ்.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘அந்த நாள்’ படத்தில் பாடல்களே இல்லை. அந்தகக் குறையும் படத்தில் தெரிவதில்லை. “THE WOMEN IN QUESTION” என்கிற ஹாலிவுட் படத்தின் தாக்கத்தில் ஜாவர் சீதாராமன் அவர்களால் எழுதப்பட்ட கதைக்கு திரைக்கதை வடிவம் தந்திருந்தார் எஸ்.பாலச்சந்தர். படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை ஒவ்வொன்றையும் குறித்து பேச எத்தனையோ இருக்கின்றன.

கதாநாயகன் ஒரு ரேடியோ எஞ்சினியர். இப்படி சொல்வதற்கே முதலில் ஒரு தைரியம் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் ரேடியோ இன்ஜினியரிங் என்பது எந்த மாதிரியான வேலை என்று முதலில் விளக்க வேண்டும். அதற்கொரு காட்சி படத்தில் இருக்கிறது. ஏனெனில் கதையே நாயகனின் வேலை தொடர்பானதுதான். அதனால் தொழில்நுட்பத் தகவல்களுக்குள் போகாமல் அதேநேரம் எதை பார்வையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை மட்டும் விளக்கிவிட்டு திரைக்கதையின் அடுத்த நகர்வுக்குள் சென்று விடுகிறார் பாலசந்தர். கதையின் ஒவ்வொரு காட்சியும் அது முடியும்போது அடுத்தடுத்தக் காட்சியைப்  பார்க்கத் தூண்டியது. தமிழில் தொலைகாட்சித் தொடர்களிலும், திரைப்படங்களிலும் பாக்கெட் நாவல்களை திரைக்கதையாக்கும் முயற்சி நடைபெற்று பெரும்பாலும் தோல்வியையே கண்டிருக்கிறது. ஆனால் ஒரு கதையை பாக்கெட் நாவல் போன்றதான அத்தனை சுவாரஸ்யங்களோடும் காட்டி வெற்றி பெற்றிருந்தது 1954ல் வெளிவந்த ‘அந்த நாள்’.

தமிழ்த் திரைப்படங்களில் சிறந்த பெண் கதாபத்திரங்கள் என்று சொல்லுகிறபோது ‘அந்த நாள்’ பண்டரிபாயை நாம் மறுத்துவிட முடியாது. ஒரு தெளிவான பெண் கதாபாத்திர வடிவமைப்பு. உலக அரசியல், இந்திய சிந்தனைகளை பேசுகிற ஒரு பெண்ணை அறுபது வருடங்களுக்கு முன்பு திரையில் பார்த்திருப்பது தமிழ் சினிமாவின் ஒரு சாதனையாகவே சொல்ல வேண்டும். அதேபோல் ‘அந்த நாள்’ படத்தில் சென்னையில் ஜப்பானியர் குண்டு வீசும் அந்தக்காட்சி. காட்சியின் கோரத்தை சொல்ல விமானத்தைக்கூட பேருக்குக் காட்டவில்லை. வெறும் ஒளி, விமானத்தின் ஏறிக்கொண்டே போகும் ஒலி மட்டுமே. இவற்றோடு சிவாஜி என்கிற அசுர கலைஞனின் பாவனைகள். இவற்றை வைத்து மட்டும் ஒரு மாபெரும் சம்பவத்தை சொல்லிவிட முடியும் என்று நம்பியது ஒரு இயக்குநரின் பேராற்றல். இதப் படத்திற்கு ஜனாதிபதி விருது கிடைத்தது.

‘நடு இரவில்’ படம் பாலசந்தரின் மற்றுமொரு சிறந்த படம். முழுவதும் பெரும்பாலும் இரவில் நடைபெறும் காட்சிகள். குறைந்த ஒளியின் அழகும், விசாலமும் படம் முழுக்க நம்மை வசீகரிக்கும். இதன் பெருமை ஒளிப்பதிவாளருக்கு சேரும், என்றாலும் எஸ்.பாலசந்தரின் கற்பனையும், நேர்த்தியுமே ஒளிப்பதிவாளர் மாருதி ராவ் வழியே நமக்குக் கிடைத்திருக்கிறது.

‘நடு இரவில்’ படத்தில் ஒரு காட்சி. கஜானா அறைக்குள் இரவில் நுழையும் இருவர் திருடுவதற்காக ஒவ்வொரு அலமாரிகளையும் திறந்து பார்ப்பார்கள். டார்ச் லைட் மட்டுமே ஒரே வெளிச்சம். அங்குள்ள நகைகள், பணம் இவற்றைக் காட்டிக்கொண்டே அதைப் பார்ப்பவர்களின் பேராசை கொண்ட முகத்தையும் ஒளி காட்டும். அப்படியே ஒவ்வொன்றாய்க் காட்டிக்கொண்டே வந்து ஒரு அலமாரியைத் திறக்கும்போது அங்கே நிறுத்தப்பட்டிருக்கும் சடலத்தின்முன் நிற்கும் வெளிச்சம்.

அப்போதெல்லாம் இப்படியான ஒரு காட்சியை இருளில் மட்டுமே எடுக்க யோசிப்பதற்கே தனி துணிச்சல் வேண்டும். அதைத் திரையில் கொண்டுவர பெரும் நம்பிக்கை தேவை. அது பாலசந்தருக்கு ஏராளம் இருந்தது.

‘நடு இரவில்’ அகதா கிறிஸ்டியின் ஒரு நாவல். இந்தப் படத்தின் பாதிப்பில்தான் ‘அதே கண்கள்’, ‘நாளை உனது நாள்’ போன்ற படங்கள் பின்னாட்களில் தமிழில் வெளிவந்திருக்க வேண்டும்.

கச்சிதமான திரைக்கதை வடிவம் இவருடையது. இதனை அத்தனைப் படங்களிலும் பார்க்க இயலும். மிகவும் வியந்தது ‘அவனா இவன்’ மற்றும் ‘அந்த நாள்’ படங்களில்.

‘அவனா இவன்’ படம் கத்தி மேல் நடக்கும் வித்தையைக் கொண்டது. இரு குழந்தைகள் ஒரு கொலையைப் பார்த்து விடுகிறார்கள். அது கொலை என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. ஆனால் ஏதோ தப்பு என்று புரிகிறது. அந்தக் கொலையாளி தங்கள் வீட்டுக்கு மாப்பிள்ளையாக வரப்போகிறார் என்று தெரிந்ததும் ஒவ்வொருவர் இடத்திலும் உண்மையைச் சொல்ல முயல்வதும் அது சரிப்படாமல் தாங்களே அதனை புலனாய்வு செய்வதுமான கதை. குழந்தைகள் தங்களுக்குள் மனிதர்களைப் பற்றிப் பேசிக்கொள்வதும், அப்பாவித்தனமான முடிவுகளை எடுப்பதுமென நேர்த்தியான கதை அது. குழந்தைகளை இதுபோன்ற படத்தின் கதைக்கு பயன்படுத்திக் கொள்ளும்போது அதன் எல்லைகளை உணர்ந்திருக்க வேண்டும். அதை சரியாக பாலச்சந்தர் செய்திருப்பார். பெரிய மனிதத் தோரணையோடு நடந்துகொள்ளாத குழந்தைகள் அதேநேரம் பெரியவர்களுக்கு பாடம் எடுக்கிற குழந்தைகளும் கூட.

ஒரு காட்சியின் தொடர்பு மற்றொன்றில் நம்மால் தொடர்புபடுத்த இயலும். எந்தக் கதாபாத்திரம் பற்றியும் ஒரே காட்சியில் மூச்சு விடாமல் சொல்லி விடுவதென்பதை இவர் எப்போதுமே செய்ததில்லை. ஒரு கதாபாத்திரம் போலீஸ் என்றால் அவரைப் பற்றி அறிமுகம் செய்கிறபோதே போலீஸ் என்று சொல்லிவிட மாட்டார். எப்போது தேவையோ அப்போதுதான் அவர் யாரென்று தெரிய வரும். ஒன்றை உள்ளங்கையில் மறைத்து விரலிடுக்கு வழியே கசியவிட்டே முழுத் திரைக்கதையையும் வடிவமைத்திருக்கிறார்.

திகில் அல்லது மர்மப்படத்துக்கான அடிப்படை விதியே, ஒரு ஆபத்தின் வீரியத்தை சொல்லிவிட்டு அது எப்படியெல்லாம் கிளை பரப்புகிறது என்பதுதான். இதனை ‘பொம்மை’ படத்தில் உணர முடியும். ஒரு பொம்மைக்குள் எப்போது வேண்டுமானலும் வெடித்துவிடும் அபாயமுள்ள வெடிகுண்டு இருக்கிறது. அது பலரின் கைகளுக்கு செல்கிறது. காட்சி ஒவ்வொன்றிலும் மானசீகமாய் நாம் வெடிகுண்டின் சத்தத்தை மனதுக்குள் பலமுறை ஒத்திகை பார்த்துவிடுவோம். அப்படியான திரைக்கதை அது.

இசையின் மேதமையைப் பின்னணி இசையில் காட்டுவதற்கு திகில் படங்கள் நல்ல களம். பாலசந்தர் படங்களின் பின்னணி இசைகூட கதை சொல்லும். ‘நடு இரவில்’ படத்தில் மாடியிலிருந்து பண்டரிபாய் எதையோ ரசித்துக் கொண்டிருப்பார். அவரை யாரோ பின்பக்கமாக நெருங்குகிறார்கள். நீளமான ஷாட். அந்த நபர் நின்று நிதானித்து வருகிறார் என்பதை கேமராவின் நகர்வு சொல்லிவிடும். சிலஅடிகள் நடப்பது, பின் நிற்பது.. பின் சிலஅடிகள்.. இப்படி. அதன் முடிவாக பண்டரிபாய் மேலிருந்து தள்ளி விடப்படுவார். இதற்கு இசையையும் அப்படியே அதே லயத்தில் பயன்படுத்தியதுதான் மேதமை.

இவரது படங்களைப் பற்றி எழுத வேண்டுமெனில் வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது. ஆனால் ஒன்றை சொல்லாமல் இருக்கவும் இயலாது. டைட்டில் கார்டுகளில் இவர் கையாண்ட யுத்தி. டைட்டில் கார்டு என்பதையும் கதையோடு பொருத்திவிடுகிறார். டைட்டில் கார்டோடு இவரது எந்தப்படமும் நான் பார்த்த வரையில் தொடங்கியதே இல்லை.

‘அந்த நாள்’ டைட்டில் நினைவிருக்கிறதா! பட்டென்று பாயும் வெளிச்சத்தில் ஒருவர் புகுந்து புறப்பட்டு வருவது. ஓடுவது. இதிலிருந்தே கதை தொடங்கிவிடும்.

‘அவனா நீ’ படத்தின் டைட்டில் கார்டு நாம் யூகிக்க முடிந்திராத ஒரு காட்சியில் அதுவும் அப்போதைய எந்தப் படங்களிலும் பார்த்திருக்க முடியாத யுத்தியில்.

‘பொம்மை’ படத்தில் டைட்டில் கார்டே இல்லை. பெயர்களுக்கு பதிலாக மனிதர்களே நம்முன் அவர்கள் பேர் சொல்லி நிற்பார்கள்.

‘நடு இரவில்’ டைரக்டர் கார்டு வரும் இடம் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி ஒன்றில். அதிலும் நாம் திடுக்கிட்டு உறைந்து அமர்ந்திருக்கும் காட்சியில். ‘இதுதான் நான்’ என்று எஸ்.பாலசந்தர் நமக்கு விடுக்கும் சொடக்கு அது.

அகிரா குரோசவா, ஹிட்ச்காக் தாக்கத்தில் படம் எடுத்தார் என்று சொல்வதுண்டு. அப்படித்தான் என்று பாலசந்தரும் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த மாஸ்டர்களை அவர் எங்கும் போலியாய் உரசவில்லை. நகல் எடுப்பதற்கும், உள்வாங்குவதற்குமான வித்தியாசம் கண்டிருந்தார்.

கற்பனையின் உச்சம் தொடுபவர்களே மற்றவர்களைக் காட்டிலும் படைப்பினை பல அடி தூரத்துக்கு உயர்த்த இயலும். அந்தக் கற்பனையை காட்சிக்கு கொண்டு வருவதில் சமரசம் செய்து கொண்டதில்லை பாலசந்தர். தமிழ் சினிமாவுக்கு இவருடைய பங்களிப்பு என்பது தரமான திரைப்படங்களைத் தந்ததில் மட்டுமல்ல, அடுத்தடுத்து சினிமாவை நோக்கிவரும் தலைமுறையினருக்கு தன் படங்கள் மூலமாக துணிச்சலையும் தான்.

(தொடரும்…. )

***

ஜா.தீபா – எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், ஆவணப்பட இயக்குனர் என தொடர்ந்து எழுதி வரும் இவர் நெல்லையை சேர்ந்தவர். அயல் சினிமா இதழின் பொறுப்பாசிரியராக இருந்தார். “நீலம் பூக்கும் திருமடம்” எனும் இவரது சிறுகதைத் தொகுப்பு பரவலான கவனத்தைப் பெற்றது. இவரது மின்னஞ்சல் – deepaj82@gmail.com

நினைவோ ஒரு பறவை – 4 / ஏ. சி திருலோகசந்தர். M.A

0

ஜா.தீபா

ரு இயக்குநரைப் பற்றிய குறிப்பு எழுதுகிறபோது அவரது உயரத்தின் அளவையும் விக்கிபீடியா எழுதியது ஏ.சி திருலோகசந்தருக்காகத் தான் இருக்கும். மனிதர், ஆறடி, மூன்று அங்குலம்.

பழைய திரைப்படங்கள் எனும்போது அது குறித்து  நமக்குள் இருக்கிற பிம்பத்தை மாற்றியமைக்கும் இயக்குநர்களில் ஒருவர் திருலோகசந்தர். இவருடைய படங்கள் நம்மை ஏமாற்றாதவை. ஒரு படத்தின் கதை போல் அவர் மற்றொன்றைக் கையாண்டதில்லை. எல்லாப் படங்களிலும் நாம் எதிர்பார்க்காத பலவற்றை வைத்திருப்பார்.

படம் பார்க்க வருபவர்கள் ஒவ்வொருவரும் திருப்தியுடன் திரும்ப வேண்டும் என்று நினைத்து ஒருவர் படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி அமைந்த படங்கள் இவருடையவை. இவர் படம் இயக்க வந்த காலகட்டத்தில் தமிழ் சினிமா பல்வேறு தரப்பட்ட இயக்குநர்களால் இயங்கிக் கொண்டிருந்தது. குடும்பத்தை மையமிட்ட கதைகள், சமூகப்புரட்சி செய்பவை, ராஜா ராணி கதைகள் என ஒவ்வொரு ரகம். இவற்றில் திருலோகச்சந்தரின் பாணி முற்றிலும் வேறானது. அவர் எது மாதிரியான கதையை சொல்லப்போகிறார் என்பதை யாரும் எதிர்பார்த்து விட முடியாது.

இதற்கு காரணம் இவரது வாசிப்புப் பழக்கமும், தேடலும் தான். அந்தக் காலகட்டத்தில் படித்தவர்கள் சினிமாத்துறைக்கு வருவது என்பது அபூர்வமான நிகழ்வாக இருந்தது. திருலோகசந்தர் எம்.ஏ படித்தவர். இதுவே அவருக்கு பெரும் அடையாளத்தைத் தந்திருந்தது. அதோடு அவருக்கிருந்த ஆங்கில அறிவும், உலக இலக்கியங்கள் குறித்தப் பார்வையும் வெகு விரைவில் அவரை பிரபலப்படுத்திவிட்டது. ஆங்கிலத்திலும், உலக மொழிகளிலும் வெளிவரும் இலக்கியங்கள் மேல் அவருக்கு பெரும் ஈடுபாடு இருந்தது. வெவ்வேறு விதமான உளவியல் கொண்ட மனிதர்களை கதை மாந்தர்களாக திருலோகசந்தர் இலக்கியங்களில் கண்டார். இதன் தாக்கம் இவருடைய படங்களில் வெகுவாக வெளிப்பட்டன.

திருலோகசந்தர் இயக்கியதில் ‘இரு மலர்கள்’ திரைப்படம் தமிழில் வெளிவந்த முக்கியத் திரைப்படம். இது மாதிரியான கதையைக் கையாள முதிர்ச்சி வேண்டும். சற்றுப் பிசகினாலும் சறுக்கி விடக்கூடிய அபாயம் உள்ள கதை. தீவிரமாகக் காதலித்த இருவர் பிரிகிறார்கள். நாயகனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆகிறது. மிக மகிழ்ச்சியான வாழ்க்கை. காதலி ஒருநாள் நாயகன் கண்ணில் பட்டுவிடுகிறாள். என்ன நடக்கிறது என்பது கதை. இந்தக் கதையை எப்படி வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம். முதிர்ச்சி என்பது, ஒரு எட்டு வயது பெண் குழந்தை தன்னுடைய அப்பா தடம் மாறுவதைக் கண்டுபிடிக்கிறாள் என்பதைக் கையாண்டதில் இருக்கிறது.

இன்று இந்தப் படத்தை எடுத்தாலும் நமக்கு பல சந்தேகங்கள் வரும். குழப்பங்கள் ஏற்படும். இவை எதுவும் இந்தப் படத்தை தீண்டவில்லை என்பது இதன் திரைக்கதையாசிரியரும், இயக்குநருமான திரிலோகசந்தரின் திறமை.

திருலோகசந்தரின் படங்களின் கதையை கொஞ்சம் திருப்பினால் அது மென்சோக காவியமாகிவிடும். ஆனால் அந்தக் கதைகளைத் தான் மிக ஜனரஞ்சகமாகத் தந்திருப்பார். அடுத்து என்ன காட்சி என்று யூகிக்க முடியாத திரைக்கதையைத் தந்திருக்கிறார்.

‘தெய்வ மகன்’ படமெல்லாம் எவ்வளவு பெரிய சாதனை!! ஆஸ்கர் பரிந்துரைக்கு சென்ற முதல் தமிழ்த் திரைப்படம். உணர்வுகளின் குவியல் இந்தப் படம். வங்காளத்தில் புகபெற்ற எழுத்தாளரான நிகர் ரஞ்சன் குப்தா எழுதிய ‘உல்கா’ நாவலின் தழுவலே தெய்வ மகன். இந்தியிலும் வங்காளத்திலும் இந்த நாவல் படமாக்கப்பபட்டன. எதுவுமே தெய்வ மகன் படத்துக்கு இணையான வெற்றியைப் பெறவில்லை. மூன்று முறை இந்த நாவலைப் பாடமாக்கி வெற்றிப் பெறவில்லை என்றபோதிலும் திருலோகசந்தர் இந்தப் படத்தை எடுத்ததன் காரணம் அவர் தன்னுடைய திரைக்கதையையும், சிவாஜி கணேசன் எனும் கலைஞனையும் நம்பியது தான்.

நாவலின் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு அதனை அபப்டியே காட்சிப்படுத்தாமல் எந்த இடங்களில் எல்லாம் உணர்ச்சிகளைக் கொண்டு வர சாத்தியமுள்ளது என்பதை தெரிந்து திரைக்கதை எழுதியதாலேயே தெய்வ மகன் எப்போதும் மறுக்க முடியாத ஒரு படமாக இடம்பெற்றிருக்கிறது. நாவலின்படி விகாரமாக பிறந்த குழந்தையை பணக்காரன் ஒருவன் இஸ்லாமியத் தம்பதி ஒருவரிடம் தந்துவிடுவார். அவர்கள் தங்களின் குழந்தை போல வளர்ப்பார்கள்.   குழந்தை இளைஞன் ஆனதும் அவனிடம் பிறப்பின் இரகசியத்தை சொல்லிவிடுவார்கள். அந்த இளைஞன் தன்னுடைய அம்மா அப்பாவைத் தேடித் போவான் என்பதாக இருக்கும் கதை. இந்தியிலும், வங்காளத்திலும் நாவலின்படியே படமாக்கினார்கள். இஸ்லாமியப் பின்னணியில் வளரும் இந்துக் குழந்தை என்பது கூடுதல் உணர்ச்சியினை நாவலுக்குத் தந்திருந்தது. திருலோகசந்தர் இதனை மாற்றுகிறார். இந்து முஸ்லிம் என்பது தமிழ் படங்களுக்கு அத்தனை வலு சேர்க்காது என்பதால் அந்தப் பின்னணிக்குள் திருலோகசந்தர் செல்லவில்லை. பணக்கார தகப்பனால் கைவிடப்பட்ட குழந்தை ஒரு அநாதை விடுதியில் வளருகிறது. இளைஞன் ஆனதும் தன்னை விடுதியில் சேர்த்த மருத்துவர் ஒருவருக்குத் தன் பிறப்பின் இரகசியம் தெரியும் என்பது தெரிந்து அவரைத் தேடி வருகிறான் இளைஞன். பின்பு தன் தாய் தந்தையை அறிந்து கொள்கிறான். தன் முன்னே தன் குடும்பத்தைப் பார்த்து ஏக்கமும், ஆசையும், நிராசையும், பரிதவிப்பும் கொள்கிறான். இப்படியான உணர்வினைக் கதைக்குள் கொண்டு வந்ததாலேயே படம் தன்னை மேம்படுத்திக் கொண்டது. நாவலை எழுதிய நிகர் ரஞ்சன் குப்தா சரும நோய் மருத்துவர். தன்னுடைய நாவல்களிலும், கதைகளிலும் அவர் சரும நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் உளவியல் மாற்றத்தை சொல்லிக் கொண்டே இருந்தார். மிகச் சரியாக எழுத்தாளரின் மற்ற நாவல்களையும் உள்வாங்கி சிவாஜி அவர்களின் பாத்திரப்படைப்பை வடிவமைத்திருப்பார் திருலோகசந்தர்.

சிவாஜி கணேசன் தன்னுடைய மூத்த மகன் உயிரோடு இருக்கிறான் என்பது தெரிந்து மேஜர் சுந்தர்ராஜனிடம் பேச வருகிற காட்சி இன்றளவும் தமிழ் சினிமாவின் மகத்தான காட்சிகளுள் ஒன்று. கோபத்தில் வரும் ஒருவர் தன் நிலை தாழ்ந்து குற்ற உணர்வுக்கு உட்பட்டு சரணாகதி அடைந்து உற்சாகம் கொண்டு, நெகிழ்ந்து பின் உணர்வுவயப்பட்டு நிற்கிற அந்தக் காட்சி, ஒரு தேர்ந்த எழுத்தாளர், இயக்குநர், நடிகர்களின் அருமையான சேர்க்கைக்கு எடுத்துக்காட்டு.  இந்தக் காட்சியின் வடிவமைப்பைத் தான் திருலோகசந்தரின் அத்தனைத்  திரைக்கதைகளும் கொண்டிருந்தன. அடுத்த கணம் என்ன நிகழும் என்று யூகிக்க முடியாத திரைக்கதைகள்.

உருவத்தைக் கொண்டு ஒருவரை மதிப்பீடு செய்வதில் உள்ள உளவியலை இவர் ‘நானும் ஒரு பெண்’ படத்திலும் பேசியிருக்கிறார். இதுவும் கூட ‘போது’ என்கிற ஒரு வங்காள மேடை நாடகத்தின் தழுவலே. கருப்பு நிறம் கொண்ட, அதிகம் படித்திராத ஒரு பெண் எதிர்கொள்ளும் சிக்கலே படம். இன்றளவும் இப்படியானாதொரு கதை என்பது இந்திய சினிமாவுக்கே அரிது. கதாநாயகி அழகாக இருக்க வேண்டும் என்றே எழுதப்படாத இலக்கணமாக உள்ள இடத்தில் நாயகியின் பாத்திரத்தை இதற்கு நேர்மாறானதாக வடிவமைத்து  அதை மக்களிடயே சரியாய்க் கொண்டு சேர்ந்திருந்தார். படம் குறிப்பாய் பெண்களிடையே அமோகமாக வரவேற்பைப் பெற்றிருந்தது.

திருலோகசந்தரின் திரைக்கதை இயக்கத்தின் வெற்றிக்கு மற்றொரு உதாரணம் எஸ்.எஸ்.இராஜேந்திரன் நடித்திருந்த ‘காக்கும் கரங்கள்’. இந்தப் படம் பிரபலமான நாவலாசிரியர் சாமர்சட் மாமின் the painted veil படத்தின் கதையை ஒத்தது. நாவலின் நாயகி ஒருவித மனவெழுச்சியில் மருத்துவர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வாள். திருமணத்துக்கு பின்பு அவளுக்கு கணவரின் நண்பனுடன் காதல் ஏற்படும். இது தெரிந்த கணவன் அவளை பிரிட்டனில் இருந்து சீனாவுக்கு அழைத்துப் போவான். அங்கு ஊரெல்லாம் காலரா பரவியிருக்கும். சுற்றிலும் மரண ஓலம். நாயகிக்கு கடும் மன அழுத்தம் ஏற்படும். கணவன் அங்கேயே இறந்து போவான். மீண்டும் பிரிட்டனுக்கு தன் காதலனைத் தேடி வருவாள் நாயகி. இது தான் the painted veil நாவலின் கதை.

இந்த நாவலின் கதை தமிழ் சினிமாவுக்கு களத்துக்கு ஏற்றது அல்ல. இங்கு இந்தக் கதையை யாரும் யோசித்துப் பார்த்திருக்கக்கூட மாட்டார்கள். இந்தப் படத்தை ஆங்கிலத்தில் மூன்று முறை தழுவி எடுத்து, நான்காவது முறை தான் வெற்றி கண்டது, அதிலும் பத்து வருடங்களுக்கு முன்பு. இப்படி இருக்க, இதைத் தமிழில் எடுக்கலாம் என்று திருலோகசந்தருக்குத் தோன்றிய காரணம், நாவலின் உணர்வுப்பூர்வமான இடங்கள். அவர் நாயகியின் கதாபாத்திர வடிவமைப்பத் தவிர்த்து, நாயகனுக்கும், நாயகிக்கும் மனபிணக்கு இருந்ததையும் நாயகன் தன்னலம் பார்க்காத மருத்துவன் என்கிற சாரத்தை மட்டும் எடுத்துக்கொண்டார். நாவலில் அந்தப் பகுதியில் விவரிக்கபப்ட்ட அத்தனை உணர்வுகளையும் தன் திரைக்கதையில் கொண்டு வந்துவிட்டார். திருலோகசந்தரின் பலமே இது தான். எந்தக்கதையின் தழுவலாக இருந்தாலும் தமிழுக்காக சுவாரஸ்யப்படுத்தி விடுவார்.

அடுத்து ‘அன்பே வா’. இந்தக் கதையை எப்படி எம்ஜிஆர் ஏற்றுக் கொண்டார் என்பது வியப்பு. கதை கேட்டவுடனேயே சம்மதித்துவிட்டார் என்று திருலோகசந்தர் தனது நேர்காணல்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு ஏழை பங்காளனாக, தொழிலாளியாக மட்டுமே தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த எம்ஜிஆருக்கு முற்றிலும் புதுமையான பாத்திரம். “ஒரு மனுஷன் ஏழையாக் கூட இருக்கலாம்..ஆனா எந்திரமா மட்டும் இருக்கவே கூடாது’ என்று சோர்ந்து போய் அழுத்தத்தில் உள்ள கதாபாத்திரம். மற்றொரு ஆச்சரியமாக ஒரு பெண்ணைக் காதலிக்க வைப்பதையே தனது குறிக்கோளாக கொண்ட ஒருவராக வேறு நடித்திருந்தார்.

இவையெல்லாம் எம்ஜிஆர் என்கிற இமேஜுக்கு மாற்றானது. படமோ மாபெரும் வெற்றி. காரணம் படம் எடுக்கப்பட்ட விதம் தான். அதோடு எம்ஜிஆரை ரசிகர்கள் விரும்புவது போல ஒரு ராஜகுமாரனாகக் காட்டிய படமும் கூட. இதனை ரீமேக் செய்ய வேண்டிய அவசியமொன்றுமில்லை. துண்டு துண்டாய் பல படங்களில் செய்துவிட்டார்கள் என்றாலும் முழு படத்தையும் எப்போது வேண்டுமானாலும் ரசிக்கலாம். அசலான கமர்ஷியல் பேக்கேஜ்.

1968ஆம் ஆண்டு கீழ்வெண்மணி கிராமத்தில் தலித் சமூகத்தினரை தீயிட்டு கொளுத்திய துர்சம்பவம் திருலோகசந்தரைக் கடுமையாக பாதித்திருந்தது. அவரைப் பொறுத்தவரை பிரிட்டிஷ் நம்மை ஆண்டபோது தேச விடுதலை என்பதற்காக இந்தியா போராடியது. அவர்கள் நாட்டை விட்டு சென்றதும், சொந்த மக்களை சொந்த நாட்டினரே கொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். சாதி, மதம், இனம் எப்படி ஒரு நாட்டுக்குள் பிரிவினை ஏற்படுத்துகிறது என்பதை அவர் யோசித்ததன் விளைவே பாரத விலாஸ் திரைப்படம். ஒரு பெரிய வீட்டுக்குள் வெவ்வேறு மாநிலத்தவர்கள் வாழ்கிறபோது ஏற்படும் சிக்கல்களும், ஒற்றுமையே பலம் என்பதும் திருலோகசந்தர் எடுக்க நினைத்தார். இந்தப் படத்தை தயாரிப்பதற்கு அவருக்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்பது ஒரு பக்கம், இது போன்ற கதையினை எடுக்க வேண்டாம் என்று அவரை பின்னுக்கு இழுத்தவர்கள் மறுபுறம். இத்தனைக்கும் எந்த ஒரு குறிப்பிட்ட பிரச்சனையையும் இந்தப் படம் பேசவில்லை. நகைச்சுவைத்தன்மையும், பொழுதுபோக்கு அம்சங்களும் கொண்ட படம் அது. இந்தப் படத்தின் மூலம் ஒரு இயக்குநராகவும், திரை எழுத்தாளராகவும் திருலோகசந்தரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று உள்ளது. அது, எந்தக் கதைக் கருவையும் எடுத்துக் கொண்டு சுவாரஸ்யமாகக் கதை சொல்லிவிட முடியும் என்பது தான்.

இன்றும் தமிழின் திரில்லர் வகைப் படங்களின் முன்னணியில் இருக்கும் ‘அதே கண்கள்’. சஸ்பென்ஸ் வகைப் படங்களின் முன்மாதிரி இந்தப் படம். அதே கண்களின் களம் வேறு ‘பத்ரகாளி’யின் களம் வேறு. ஆனால் இரண்டும் குரிப்பிடத்தக்க இடங்களைப் பெற்றுள்ளன,

பெரும்பாலும் சிவாஜி கணேசனே இவரது இயக்கத்தில் நடித்திருக்கிறார். நடிகர் தேர்விலும் கவனமாக இருந்திருக்கிறார். ஜெயலலிதாவை ‘எங்க மாமா’ படத்தைத் தவிர வேறு எதிலும் அப்படிக் கண்டதில்லை. நடு ஹாலில் இலையை விரித்து சோற்றை அள்ளி உண்பதும், கட்லெட்டில் கெட்சப்பை பிசைந்து உருட்டி சாப்பிடுவதாகட்டும்…மனுஷி அசத்தியிருப்பார்.

அதன் பின், முக்கியமாக லொகேஷனை இவர் தேர்ந்தெடுக்கிற விதம்.

பாரத விலாஸ் வீடு, அன்பே வா கெஸ்ட் ஹவுஸ், டாக்டர் சிவாவின் மலைப் பாங்கான இடங்கள், அதே கண்கள் அரண்மனை, பைலட் பிரேம்நாத்தின் இலங்கைக் காட்சிகள் என கதைக் களத்திற்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பதில் ரசனையோடு இருந்திருக்கிறார்.

அந்த ரசனை எல்லாவற்றிலும் வெளிப்பட்டிருக்கிறது. அதனால் தான இன்றும் இவரது படங்கள் நம்மை ரசிக்க வைக்கின்றன.

தொடரும்…

தொடரின் முந்தைய பதிவுகளை வாசிக்க இங்கே அழுத்தவும்..

***

ஜா.தீபா – deepaj82@gmail.com

வா !

0

மணி எம்.கே மணி

துப்பறியும் வேலை எல்லாம் பார்க்கவில்லை என்றாலுமே நான் கொஞ்சம் ஜேம்ஸ் பாண்ட் தான். மனித மனங்களுக்குள் புகுந்து வெளியே வருவது எனது சுபாவம். பணத்தை உண்டாக்குவது தொடங்கி இப்ப மும்முரம் காட்டுகிற அவஸ்தை உட்பட. ரமணியை வேவு பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதன் போக்கில் போகிற பல காரியங்கள் பற்றி எனக்கு முழுமையாக தெரிய வந்து கொண்டிருக்கின்றன. எனது மனைவியான அவள் காதலில் விழுந்திருக்கிறாள். கள்ளக்காதல் என்றாலும் முகம் பொலிவு பெறத் தவறுமா? ‘இன்று நான் சந்தோஷமாக இருக்கிறேன் சந்தோஷ்’ என்பதற்கு எனக்கு அருமையாக புன்னகைக்க முடிகிறது. புலி பதுங்குவது போல இருந்து அவளை சிக்க வைத்து அந்த நிமிடத்தில் வெல்லப் போகிற பொன் தருணம் வந்து கொண்டே இருப்பதை சொல்லவும் வேண்டுமா?

ஊர்மிளாவும்  அவளது குட்டி மகனும் ரமணியுடன் ஆர்டரில் வந்த இறால் பிரியாணியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கும் ஒரு பொதி இருந்தது. அலுவலகம் பக்கத்தில் இருந்ததால் மதியம் நான் வீட்டுக்கு வருவது வழக்கம்.

ரமணியுடன் சில சம்பிரதாயங்களை பேசிக்கொண்டு இருந்த போதிலும் ஓரக்கண்களால் அவ்வப்போது என்னைப் பார்த்துக் கொண்டு இருந்த ஊர்மிளாவிற்கு மதிப்பளிக்கத் தவறவில்லை. அதிலும் இளம்வயதில் கணவனையிழந்து பூவிழந்து பொட்டிழந்து வேறு கர்மாந்திரங்களை இழந்து நிற்கிறவளுக்கு நமது அனுதாபத்தை செலுத்தியவாறு இருக்க வேண்டும். இப்போதைக்கு ஈரல் துண்டுகளில் இருந்து இரண்டு துண்டுகளை எடுத்து வைத்தேன். ஐயோ போதும், போதும் என்று அவள் வெட்கப்பட்டது எழுச்சியை உண்டாக்குவதாக இருந்தது.

ரமணி ஜோக் அடிப்பதில் இறங்கினாள். ஆட்டு ஈரலை பெண்கள் சாப்பிடுவதில் என்ன இருக்கிறது என்று துவங்கி குடிகாரனான நீதான் அதை விழுங்க வேண்டும் என்று விட்டு, ரிப்பேர் ஆகிவிட்ட ஈரல் எல்லாம் குணமாகி விடும் என்கிற வாட்சப் மருத்துவ துணுக்குக்கு வந்தாள். அலுவலகத்தில் திலீப்புக்கு இறால் பிரியாணி வந்ததைப் பார்த்துதான் புறப்பட்டேன். அவனும் குடிக்கிறவன். என்னைப் போலவே அவனுக்கு ஈரல் கெட்டுப் போயிருக்க வாய்ப்புண்டு. பிரியாணியுடன் ஈரல் பொரியல் அவனுக்குமே வந்திருக்க அவனது முதுகைத் தட்டிக் கொடுத்து விட்டுதான் வந்தேன்.

நாளை ஆபீஸ் டூர்.

மதியம் இரண்டு மணிக்குப் புறப்பாடு.

பாவம் திலீப். என்னை மட்டும் அனுப்புவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தான். அவனுடைய கடவுள் குறும்புக்காரர். கடைசி நேரத்தில் அவனும் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டான். மறுப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை. பிராஜக்ட் டிசைன் அப்படி. ஒருவேளை நான் தனியாகக் கிளம்பிப் போயிருந்தால் குறைந்தது பத்துநாள் வெட்ட வெளி. ஆட்டமாக ஆடி ஓரளவிற்கு பிரஷரைக் குறைத்துக் கொண்டிருப்பார்கள். எனக்கே வருத்தமாக இருக்கிறது என்றால் பாருங்களேன். ஆனால் நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக அலுவலகத்தில் ஒரு வேலையை எடுத்துப் போட்டுக்கொண்டு இன்று நைட் டியூட்டி என்று விட வேண்டும். என்ன செய்றது டாலு, பெண்டிங் வெச்சுட்டு நாளைக்கு கெளம்ப முடியாதும்மா. பயணம் பிரிப்பதற்கு முன் இந்தா பிடி ஒரு சான்ஸ். ரமணி அவனிடம் அதை உறுதி செய்து கொள்வாள்.

அவன் நான் மும்முரமாக வேலை செய்வதைப் பார்த்த பின்னர்தான் கிளம்பிச் செல்வான். மனதில் அவனுக்கு அவள் மீது என்ன மதிப்பு இருக்குமோ தெரியாது. காண்டம் வாங்குவானா என்பதை யூகிக்கும் அளவிற்கு எனக்கு மன சாஸ்திரம் தெரியவில்லை என்பதும் வேதனையே.

ரமணி எப்படி நடந்து கொள்வாள் என்பது அநேகமாக எனக்குத் தெரியும்.

உங்களுக்கு இருக்கக் கூடிய ஆர்வத்தை மதித்து அதை லைவ் கமெண்ட்ரியாகச் சொல்ல ஆசைப்படுகிறேன்.

இரவு வீட்டில் இருந்து கிளம்பி வரும்போது ரமணியின் உச்சந்தலையில் முத்தம் கொடுத்து விட்டு வர மறக்கவில்லை. 

இந்தக்கதையில் நான் ரமணியை காதலிப்பது பற்றி சொன்னால் உங்களுக்கு அதை நம்பச் சிரமமாக இருக்கலாம். நினைத்தால் இனிக்கும் ஒரு அனுபவமாக அவளை அடைகாத்து வைத்திருந்ததில், எந்த நேரத்துக்கும் என்னோடிருக்கின்ற பெருமிதமாக இருந்தாள் அவள். முதல்முறை அலுவலகத்தில் அவள் கால்பட்டதும் அத்தனை ஆண்களையும் தாண்டிக் கொண்டு சென்று திடுக்கிட்டு முற்றுகையைத் துவங்கி விட்டேன். அப்புறம் திலீப் உட்பட அத்தனை நண்பர்களும் எனக்கு சிபாரிசு செய்யும் தோரணையில் நடந்து கொண்டார்கள். அவள் கண்கள் கனிந்தவாறு வந்து ஒருநாள் எனது மனைவியானாள். நாங்கள் ஒருவரையொருவர் மிட்டாய் சுவைப்பது போல அறிந்து கொண்டோம். பரஸ்பரம் கண்களுக்குள் வைத்துக்கொண்டு உலகைக்கூட நிராகரித்துக் கொண்டிருந்த நாட்கள் இருந்தன. எதற்கு இப்படியெல்லாம் நடக்கிறது என்பதைக்கூட யோசிக்க முடியாமல் மனம் மரத்து விட்டது. நான் இப்போது உலகின் பெரிய துக்கத்தை பார்த்து முடித்து எதோ ஒரு தினுசான வெற்றி வீரனாகி விட்டேன். ஒரு சிரிப்பு நுரைத்துக் கொண்டேயிருக்கிறது.

திலீப் வீட்டிற்கு சென்று குளித்து தலைவாரி ஷாட்ஸ் டி-சர்ட் போட்டுக்கொண்டு காரைக் கிளப்பியிருக்கலாம். தவறு. ஒரு ஆட்டோ பிடித்து இருக்கலாம். அபார்ட்மெண்டில் இரவு நேரத்தில் வெளி வண்டிகளை நிறுத்தும்போது கேள்விகள் வருமே? பொதுவாக யாரும் யாரையும் கவனிக்காத அளவில் விரிந்து கிடக்கக்கூடிய இடம்தான் என்றாலும் திருட்டு ஆட்டம் ஆடக் கிளம்பும்போது எச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நானேகூட அதை கவனமாக மேற்கொண்டாக வேண்டும். ஒரு சில்லிப்பு தட்டுவதை உணர்ந்தேன். ஜாலியாக இருப்பது போலதான் இருக்கிறது. மனிதனில் இருக்கிற விசித்திரங்களைப் பற்றியெல்லாம் அப்புறம்தான் ஒருநாள் சாவகாசமாக யோசிக்க வேண்டும். இப்போதைக்கு ஒரு பர்கரை வாங்கிக் கடித்துக்கொண்டே காரை ஓட்டியவாறு வந்து கொண்டிருக்க, மொபைல் இசைத்தது.

“யாரு?”

“தெரியலையா?”

“இல்ல. யாரு?”

“ரொம்பதான். நான் ஊர்மி.”

ஒரு கணம், எச்சில் விழுங்க முடியவில்லை.  என்ன சொல்லுவது என்று திகைப்பதற்குள் அவளே பேசினாள்.

“மதியம் பிரியாணி சாப்பிட்டு ரமணி தூங்கிட்டா. அவ போன்ல உங்க நம்பர பாத்தேன். எப்பவாவது ஒரு ஹலோ சொல்லலாம்னு எடுத்து வெச்சுகிட்டேன்.”

“ம்”

“ஹலோ”

“ஹலோ?”

“சரி. வெச்சுரவா?”

நான் எனது அடைப்பில் இருந்து என்னை இழுத்துப் போட்டுக் கொண்டேன். முகமெல்லாம் சிவந்து கொண்டிருப்பது கூட எனக்கு தெரிந்து கொண்டிருந்தது. கொப்புளித்துக்கொண்டு வந்த அவசரத்தை நிறுத்தி விட்டு சற்று நிதானத்துடன் “அவ்ளோ தானா?” என்றேன்.

“அவ்ளோ தானான்னா?”

“நீ இப்டி என்கிட்டே பேசறது நான் செஞ்ச பாக்கியம் ஊர்மி.”

“மை காட். இதெல்லாம் ஒரு பாக்கியமா?”

“இல்லதான். இந்த நேரத்தில் என்ன வேல, வீட்டுக்கு வா கட்டிக்கிட்டு படுத்துக்கலாம்னு சொல்லு. கண்டிப்பா அது ஒரு பெரிய பாக்கியம் !”  

“……”

“ஊர்மி !”

“…..”

“ஊர்மி, தப்பா ஏதாவது சொல்லிட்டனா? ஏதாவது சொல்லு”

“…..”

அடி வயிற்றில் இருந்து அந்த பயம் புறப்பட்டு கண்கள் ஒருமுறை கிறங்கிக் கொண்டு விட்டது. என்ன பைத்தியக்காரத்தனம் இது?

செல் கட் பண்ணப்பட்டு விட்டது.

காரை ஒரு ஓரமாக நிறுத்தி திகைத்திருந்தேன்.

வியர்த்து வழிந்தேன். மறுபடி போன் அடிக்கிறது. பதட்டத்துடன் பார்த்தேன். இல்லை, இந்தமுறை வருகிற போன் ரமணியுடையது. ஊர்மி சொல்லி விட்டாளா? இதற்குள்ளாகவேவா? என்னவெல்லாம் நடந்திருக்க முடியும் என்பதை மனதினால் பறந்து கொண்டு யோசிக்க முயன்றேன். அதை விட்டுவிட்டு யதார்த்தமான ஒரு கோணம் என்ன? திலீப் வந்து சேர்ந்த பிறகு நான் அலுவலகத்தில்தான் இருக்கிறேனா என்பதை செக் செய்வதாகக்கூட இருக்கலாம். எடுப்பதா வேண்டாமா என்று யோசிக்கும்போதே அதன் விஷயம் முடிந்தது. இப்போது நான் மறுபடியும் போன் பண்ணுவதா, வேண்டாமா என்கிற அடுத்த சிந்தனைக்கு போகும்போது ஒரு மெசேஜ். ஊர்மிளாவுடையதுதான். அவளது வீட்டுக்கு வருவதற்கான மேப்பை அனுப்பி வைத்திருக்கிறாள்.

முதல் முறை முடியும்போதே அடுத்தது கிச்சனில் நின்று கொண்டு செய்யலாம் என்றாள்.

அது முடியும்போதே அப்படியே பாத்ரூமில் குளித்துக் கொண்டே செய்யலாம் என்றாள்.

அவள் வாயைத் திறந்து கொண்டு சத்தமிட்டவாறு தூங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். முதுகெல்லாம் அப்படி ஒரு கொடுமையான வலி. கள்ளக்காதல் செய்கிற பொண்டாட்டியை கையும் களவுமாகக்கூட பிடிப்பதற்கு வக்கில்லாமல் பே என்று மல்லாந்து கொண்டிருந்தேன். எழுந்து போக முடியும் என்பதை நம்பவே முடியவில்லை. அந்த ஜோடிகள் இதுவரை எத்தனை ஆட்டம் முடித்திருப்பார்கள் என்பதை யோசிக்கும்போது எனக்கே அவமானமாக இருந்தது. ரமணி அவன் தன்னை ஆளுவதற்கு அனுமதி கொடுத்திருக்க மாட்டாள். சும்மா படு என்று சொல்லியிருப்பாள்.

செல்லக்குட்டி, செல்லக்குட்டி என்று அவனை முத்தமிட்டுக் கொஞ்சியவாறு அவளே அவனை நிதானமாக ஆண்டு அனுபவித்து தன்னை ஒருமுறைக்கு இருமுறை பொங்கிப் பெருகி முடித்து அவனையும் புல்லரிக்க செய்திருப்பாள். விடியும் வரை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கச் சொல்லி ஆணையிடவும் அவளால் முடியும். நறநறத்துக் கொண்டு எப்படி தூங்கிப் போனேன் என்பது தெரியாது.

விடியலில் செல்லை ஆன் செய்தவாறு வீட்டுக்குப் போனேன்.

ரமணி ஹாஸ்பிட்டலில் இருந்தாள். அவளுடைய அம்மாவிற்கு டிரெண்டு வியாதிகள் நிறைய. ஒரு நோயாளியாகவே அடையாளத்தை எடுத்துக் கொண்டு அதில் திருப்தி கொண்டிருக்கிறவர்கள். இரண்டு மாதத்துக்கு ஒரு முறையாவது ஏதாவது ஒன்று வரும். அதன்படி நேற்று மூர்ச்சை அடைந்து மயங்கி  விட்டிருக்கிறார்கள். வழக்கத்தின்படி அவளைக் கொண்டு வந்து சேர்த்து ரமணியும் அவளுடைய சகோதரர்களும் அங்கேயேதான் இருந்திருக்கிறார்கள். நானும் என்னுடைய வழக்கத்தை மேற்கொண்டு குசலம் விசாரிக்கிற சடங்கு முடிந்ததும் அலுவலகத்துக்கு வந்து பயணத்துக்கு கிளம்பியும் விட்டோம். ஆக, நேற்று எதுவும் நடக்கவில்லை.

விமானத்தில் இருந்து இறங்கி, காரில் டில்லியை விட்டு தாண்டும்போதுதான் திலீப்பும் அவனது நண்பர்களும் இரவுப்பார்ட்டி ஒன்றை வெகு விமரிசையாக நடத்தியிருப்பது தெரிய வந்தது. வீடியோக்களை எனக்கே கூட அனுப்பி வைத்து இருந்திருக்கிறார்கள். ரமணியிடம் மூஞ்சியைக் கண்டுபிடிக்காத லெவலில் மன்னிப்பு மாதிரி எதையாவது ஒன்றைக் கேட்டு வைப்போமா என்று தயக்கத்தில் தூக்கத்துடன் பல ஊர்களைக் கடந்து விட்டேன். பல முறையும் சிக்னல் வேறு கிடைக்கவில்லை. பார்த்தால், அவளே செய்த போன் வந்து விட்டது.

அவள் அழுவது கேட்டது.

அடடா, அவளுடைய அம்மா விடைபெற்றுக் கொண்டு விட்டாளா?

ஒழிந்தது சனியன் என்று முதலில் வந்ததை ஒதுக்கி என்னம்மா என்று கேட்டேன்.  

முதலில் மன்னிக்கச் சொல்லி கேட்டாள்.

எதுவோ ஒரு முட்டு சந்துக்குள் சிக்கிக்கொண்டு அவளுக்கு திலீப் மீது ஒரு காதல் வந்துவிட்டதாம். அவனை அவமானம் இல்லாமல் சுற்றிக்கூட வந்தாளாம். ஆனால் அவனிடம் நான் உன்னைக் காதலிப்பது போலிருக்கிறது என்று திலீப்பிடம் சொல்ல துவங்கியதுமே, அவன்  சந்தோஷைப் போன்ற ஒரு உத்தமனுக்கு துரோகம் செய்ய நான் தயாரில்லை என்று சொல்லி விட்டிருக்கிறான். ரமணிக்கும் அறிவுக்கண் திறந்து விட்டிருக்கிறது.

சாமியிடம் நான் செய்ததெல்லாம் தப்பு என்று மண்டி போட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும்போது அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்கிற செய்தி வந்தால், ஒருத்தி நடுங்கிப் போகாமல் இருப்பாளா சொல்லு?

மருத்துவமனையில் இருந்து வந்து படுக்கையில் வீழ்ந்ததும் வரிசை வரிசையாக கெட்ட கெட்ட கனவுகள். உனக்கு எதுவோ நடந்து விடுவதைப் போலவே பார்த்திருந்து அந்த தூக்கம் முடிகிற வரையில் தொடர்ந்து அழுதிருக்கிறேன் என்றாள். பத்திரம், பத்திரம் என்று சொல்லுகிற அந்த மனசின் குரலே எனக்கு கேட்டது. எத்தனை முறை ஆசைப்பட்டுக் கேட்டிருக்கிறாய், நீ வந்ததும் நாம் கிச்சனில் வைத்து செய்து கொள்ளலாம் என் செல்லக்குட்டியே என்று ஒருவிதாக சூடேற்றி முடித்து விட்டு போனை முடித்தாள்.

நாங்கள் சாய் குடிக்க நின்ற இடமெல்லாம் வழுக்கியது.

மூன்று நாட்களாக இப்படியே சொட்டிக் கொண்டிருக்கிறதாம் மழை.

நான் ஒருமுறை திலீப்பை தழுவிக்கொள்ள விரும்பினேன். அல்லது குறைந்தபட்ஷம் தோளில் கை போட்டுக்கொள்ள ஆசை வந்தது. சாய் குடிக்க வராத அவன்,  சற்று தள்ளி நிறுத்தப்பட்ட காரில்தான் இருந்தான். நான் போனதும் தூக்கத்துடன் எழுந்து வெளியேறி வந்து நீ இந்தக் காரில் இருந்து கொள் என்றான். அதற்கும் முன்னால் நின்றிருந்த காரைக்காட்டி நீ இருந்த சீட்டில் தூங்கிக் கொண்டு வருகிறேன் என்றான். அநேகமாக நான் அவனை அணைக்க கரங்களை விரித்ததை அவன் கவனிக்கவேயில்லை. நான் பின்னால் புறப்பட்ட காரின் முன்பகுதியில் டிரைவருக்கு அருகே உட்கார்ந்து கொண்டேன். எல்லோரும் ஏறிக்கொள்ள இரண்டு கார்களும் புறப்பட்டன.

இம்முறை தூங்காமல் கொள்ளாமல் முன்னால் உட்கார்ந்து கொண்டு வந்ததால் எங்களுக்கு முன்னால் சென்ற கார் ஒரு காரணமும் இல்லாமல் அந்தப் பாலத்தில் இருந்து சற்றே திரும்பி, அப்புறம் அதைத் திருத்திக்கொள்ள முடியாமல் கடல் போல பிரவாகித்துக் கொண்டு புகையெழுப்பி சென்றிருந்த அந்த நதியில் விழுந்து நகர்ந்து ஓரிரு முறை தென்பட்டு அப்படியே மறைந்து போயிற்று என்பதை நான் எனது கண்களால் பார்த்தேன்.

அப்படி நடந்த ஒன்றிற்கு ஒரு சிறு தடயம் கூட வைக்காமல் தனது பாட்டிற்கு அது மறைந்து போனதை கண்டுபிடிக்க ஆகாது என்று இராணுவமே கை விரித்து விட்டதை செய்திகளில் எல்லாம் கூட சொன்னார்கள்.

நானும் ரமணியும் எங்களை ஆற்றிக் கொள்ள பல நாட்கள் தேவைப்பட்டன.

இது ஏதாவது தண்டனையா என்கிற ஆராய்ச்சியின் முடிவிற்கு செல்லவே முடியவில்லை. கடவுள் எப்படிப்பட்ட ஆளாக இருப்பான் என்பதை தீர்க்கமாக சொல்ல முடியாததைப் போல, அப்படி ஒருவன் இருக்கிறானா என்பதற்கும் இல்லை என்பதற்கும் ஆதாரம் கிடைக்கவில்லை. அவனவன் தங்களுடைய வெறிக்கு மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கடைசியில் அதற்கு ஒரு விடை கிடைத்தது.

நான் ஒரு பொறியில் மாட்டிக் கொண்டிருந்தேன், எனக்கான தண்டனை அதில் இருந்தது.

“என்ன போனடித்தால் எடுக்காமல் இருக்கிறாய்? உன் மூலம் நான் ஒரு பிள்ளை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்பதை சொன்னேனா இல்லையா? இன்று இரவும் உன்னால் வர முடியாமல் போயிற்றென்றால் அத்தனை விஷயங்களையும் நான் ரமணியிடம் சொல்லுவேன் ! நீ என்னை மோசடி செய்து விட்டாய் என்று போலீசில் புகார் அளிப்பேன் !”

விக்கித்து நின்றேன்.

ஊர்மிளா சிரித்தாள்.

“நைட் ஆனா ஒரு ஈ காக்கா இருக்காது ! பால்கனில வெச்சு செய்யலாம் வா !”

***

மணி எம்.கே.மணி திரைத்துறையில் பணியாற்றி வரும் இவருக்கு மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் எனும் சிறுகதைத் தொகுப்பு, வேறு சில ஆட்கள், எழும் சிறு பொறி – திரைப்படங்கள் குறித்த கட்டுரைத் தொகுப்பு அண்மையில் மதுர விசாரம் எனும் நாவல் வெளியாகி நல்ல கவனம் பெற்றது. – தொடர்புக்கு – mkmani1964@gmail.com 

ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு பகுதி-5

0

உருவக அரங்கின் மூலகர்த்தா Paolo Frere

ரூபன் சிவராஜா

இதற்கு முந்தைய / பிற பதிவுகளை வாசிக்க இங்கே அழுத்தவும்

அகுஸ்ரூ போல் பரீட்சித்து, வளர்த்தெடுத்த இந்த உத்தியின் மூலச்சிந்தனை Paolo Frere (1921 – 1997) என்ற பிரேசில் நாட்டைச் சேர்ந்த மற்றுமொரு அறிஞரிடமிருந்து உந்தப்பெற்றதாகும்.

Paolo Frere இதனை ஒடுக்கப்பட்டவர்களுக்கான கற்பித்தல் முறைமை (Pedagogy of the oppressed) என்ற அடிப்படையில் வடிவமைத்திருந்தார்.

இம்முறைமையின் அடிப்படை ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமிடையிலான இடைவெளியைக் குறைக்கும் திறந்த உரையாடல்களை மையப்படுத்திய தொடர்பாடல் என்பதாகும். அறியாமை, செயல் மந்தமுடைய, ஒடுக்கப்பட்ட சூழலைச் சேர்ந்த மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை வளர்ப்பதும் அவர்களைக் கேள்வி எழுப்பும் செயலூக்க மனிதர்களாக மாற்றுவதும் அவற்றுக்குத் தூண்டுவதும் இந்தக் கற்பித்தல் முறைமையின் அடிப்படை. 19ம் நூற்றாண்டின் கற்பித்தல் முறைமையில் (Pedegogy) அதிகம் செல்வாக்குச் செலுத்திய அறிஞர் அவர்.

பார்வையாளருக்கும் ஆற்றுகையாளருக்குமிடையில் நெருக்கம்

மக்கள் அரங்கு, உருவக அரங்கு, கட்புலனாகா அரங்கு ஆகிய Boal-இன் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கின் முதன்மை இலக்கு பார்வையாளர்களை அரங்கில் ஈடுபாடு மிக்க அங்கமாக்கிப் பங்கேற்கச் செய்தலாகும். பங்கேற்பு மூலம் மாற்றம் நோக்கி உரையாடவும் தீர்வுகள் சார்ந்து சிந்திக்கவும் செயற்படவும் வைத்தலாகும்.

பார்வையாளர்களுக்கு நெருக்கமான பேசுபெருள் கையாளப்படுதல் வேண்டும் என்பது நிபந்தனை. அவை தனிமனித – குடும்ப – சமூக வாழ்வியல் சிக்கல்களை மையப்படுத்தியிருக்கும். அதன் பேசுபொருள் பார்வையாளர்கள் நேரடியாக அனுபவித்த சம்பவங்களாக இருக்க வேண்டுமென்பதல்ல. ஆயினும் அவர்களின் பங்கேற்பினைத் தூண்டுவதாக அமையும்.

கையாளப்படும் சம்பவங்கள், பேசப்படும் சிக்கல்களைப் பார்வையாளர்கள் தமக்கும் தாம் சார்ந்த சமூகத்திற்கும் நெருக்கமானதாக – காலப்பொருத்தமும் சமூகப்பிரதிபலிப்பும் உடையதாக உணரும் வகையில் அரங்கு அமையும். அதாவது இவ்வகை அரங்க ஆற்றுகையில் பங்கேற்கும் கதை மாந்தர்களை, பேசப்படும் விடயங்களைப் பார்வையாளர்கள் தம்முடன் அடையாளப்படுத்தும் வகையில் – தொடர்பினை உணரும் வகையில் இவ்வகை அரங்கங்கள் அமையும்.

பேசுபொருள்

தனி மனிதர்கள், குடும்பம், சமூகம்,  பொதுநிறுவனம் தொழில் நிறுவனத்தின் முரண்பாட்டுச் சூழல்களை, சிக்கல்களை அடையாளம் காண்பதற்கும் இந்த உத்தி கையாளப்படக் கூடியது.

உருவக அரங்கம் வார்த்தைகளற்ற குறியீட்டுத்தளத்தில் இயங்குவது. ‘Forum Theatre – மக்கள் அரங்கு’ யதார்த்த அரங்கின் உத்திகளை அதிகம் உள்ளடக்கியதாக அமையும். மரபார்ந்த நாடக, யதார்த்த நாடகக் காட்சிகளோடு (Realistic play) உருவக அரங்கின் உத்தியை உள்ளடக்கும் வாய்ப்புகளும் உள்ளன. குறியீட்டு மற்றும் உறைநிலைக் உருவகங்களைக் காட்சிபூர்வ உத்திகளாகப் பொருத்தமான இடங்களில் உள்ளீடு செய்ய முடியும்.

ஐரோப்பிய சூழலில் பயன்பாடு

ஐரோப்பிய சூழலில் சமூக ரீதியான ஒடுக்கு முறைகள், புறக்கணிப்புகளிலும் பார்க்க, உறவுகளுக்கிடையிலான அக முரண்பாடுகள் பற்றிய அரங்க வெளிப்பாடுகளுக்கு உருவக அரங்கம் கூடுதல் பொருத்தப்பாடு மிக்கதாக Boal உணர்ந்தார்.

‘மக்கள் அரங்கு’ எல்லா வகையான புற முரண்பாடுகளுக்கும் பொருத்தமானதும் விண்ணப்பிக்கக் கூடியதுமான அரங்கச் செயலாக்க வடிவம். அதேவேளை உருவக அரங்கம் அக முரண்பாடுகளுக்கான உரையாடல், மாற்றம், தீர்வு நோக்கிய செயலாக்க வடிவமாகக் காணப்படுகின்றது. முரண்பாடுகளை அடையாளம் காண்பது – அது சார்ந்து உரையாடுவது – விவாதிப்பது – தீர்வினைக் கண்டடைவது என்பது ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கின் அடிப்படையான படிமுறைகள்.

தனிமனிதர்கள் எதிர்கொள்ளும் மனரீதியானதும் நடைமுறை வாழ்வியல் சிக்கல்கள், சவால்கள், ஒடுக்குமுறைகள், குடும்ப உறவுச் சிக்கல்கள் குறித்து மனம் திறந்து உரையாடுவதன் மூலம் மாற்றங்களையும் தீர்வுகளையும் நோக்கிய உந்துதலைப் பெற முடியும்.

குடும்ப உறவுச் சிக்கல்களை, குறிப்பாக இருவருக்கிடையிலான உறவு முரண்பாடுகளை உருவக அரங்க வடிவத்தின் சாத்தியப்பாடுகள் ஊடாக அணுகுவதன் மூலம், அதனை வேறு கண்ணோட்டத்தோடு, முரண்பாட்டுச் சூழலை அனுபவித்த, அதனுடன் சம்மந்தப்பட்ட இருவரின் அனுபவக் கண்ணோட்டத்திற்கு மாறான இன்னொரு பரிமாணத்தில் பார்ப்பதற்கு வழிகோலும். இந்த உத்தி, திருமண பந்த உறவுகளுக்கிடையிலான முரண்பாட்டுச் சூழலில் அதிகம் கையாளப்படக் கூடியது.

புதிய மாற்றங்களை உள்வாங்குகின்ற ஆற்றுகை வடிவம்

ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்க வடிவம் என்பது இறுக்கமான நிரந்தர விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்பட்ட வடிவம் அல்ல. அடிப்படையில் பாரம்பரிய அரங்கியல் சட்டகங்களைத் தகர்க்கின்றதும் புதிய வடிவ, உத்தி மாற்றங்களையும் உள்வாங்குகின்ற ஆற்றுகை வடிவம். புதிய புதிய பரீட்சார்த்த முயற்சிகளுக்கும் மாற்றங்களுக்கும் இடமளிக்கின்றது. அப்படிக் கட்டுப்படுத்துவதென்பது ஆற்றுகையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மீதான ஒரு வகை ஒடுக்குமுறை என்பது Boal-இன் கருத்து. ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கம் அதன் வடிவத்திலும் உத்திகளிலும்கூட ஒடுக்குமுறையற்றதாக இருவழித் தொடர்பாடலுக்குரிய போதிய வெளிகளைக் கொண்டிருக்க வேண்டுமென்பது அவரது நிலைப்பாடு.

இந்த அரங்கியல் வடிவங்களின் கூறுகளும், உத்திகளும் வரையறைகளும் நடைமுறையில் நிகழ்த்திப் பார்க்கப்பட்ட பரிந்துரைகள் மட்டுமே. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வெற்றியளித்திருக்கின்றன. சமூக மாற்றம் நோக்கிய அரங்க முன்னெடுப்புகளுக்குரிய உந்துதல் வழிகாட்டியாக கொள்ளக் கூடியவை. விதிமுறைகள், வரையறைகள், உத்திகளில் கால, சூழல், தேவைகளுக்கேற்ற மாற்றங்களை உள்வாங்கி முன்னெடுப்பதற்குரிய வெளி இவ்வடிவங்களுக்குள் உள்ளன. நடைமுறையிலும் வெவ்வேறு அரங்கியல் நெறியாளர்கள், அரங்க செயற்பாட்டுக் குழுக்கள் Boal-இன் இவ்வடிவங்களைத் தழுவி பல்வேறு முயற்சிகளை முன்னெடுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வடிவ மாற்றங்கள், புதிய உத்திகள் மேலதிகமாக இணைப்பதையும் நீக்குவவதையும் மேம்படுத்துவதையும் விரும்பி ஊக்குவித்திருக்கின்றார்.

***

ரூபன் சிவராஜா

தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது. தற்பொழுது வசிப்பது நார்வேயில்.