Home Blog Page 62

கல்மனம்

6

கார்த்திக் புகழேந்தி

ந்திராவுக்கு மூச்சு முட்டிக்கொண்டு வந்தது. பாத்திரம் பண்டங்களைக் கழுவிக் கவிழ்த்து, போர்வை, சீலை பிள்ளைகளின் துணிமணிகளை எல்லாம் அலசிப்போட்டுவிட்டு, வீட்டையும் ஒட்டடை அடித்துப் பெருக்கித் துடைத்து, வாசலில் ஊடுபுள்ளியில் தரதரவென நாலு கம்பிகளை இழுத்து முடித்து நிமிர்ந்தபோது, அக்கடாவென எங்காவது ஓடிப்போய்க் குறுக்கைச் சாய்க்கலாமென வலி விண்விண் என்றது.

சின்னக்குட்டிக்கும் பெரியவளுக்கும் பள்ளிக்கூடம் லீவு விட்டால் போதும் வீட்டுக்குள் கால் தரையில் நிக்காது. பரத்திக் கொண்டு பக்கத்து குடித்தனத்திற்கு டி.வி பாக்கப் பாய்ந்துவிடும். பனங்கிழங்கு தரைக்கடியிலே பருவம் கண்டது மாதிரி எப்போ விடைத்தது என்றே தெரியாமல் திம்மென வளர்ந்து நிற்கிறாள் பெரியவள் உமா. இந்த மார்கழி வந்தால் பதினாலு தொட்டுவிடும். சின்னக்குட்டியும் அவள் வேகத்துக்கு ஈடுகொடுத்து தானே வளர்கிறது. இத்தனைக்கும் ஆறு வருசம் இளமைதான் பெரியவளைவிட. பார்த்தால் அப்படி வித்தியாசம் பிரிக்க முடியாது. ரெண்டும் ஒரே சைஸ் பீஸ் பெனியனைத் தொள தொளவென மாட்டிக் கொண்டு அச்சில் காய்ச்சின வெல்லக்கட்டியாட்டம் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடக்கும். சமயத்தில், எது முன்ன உக்காரும் எது பின்ன உக்காரும் என்று சொல்ல முடியாத வாக்கில் தத்தளித்துக் கிடக்கிறது.

பெரியவளுக்கு எங்கே விஜய் படம் போட்டாலும் மூக்கு வேர்த்து விடுகிறது. சின்னதும் அது கழுத்தைப் பிடித்துக்கொண்டே விஜய் விஜய் என்று கூப்பாடு போட்டுக்கொண்டு பின்னாலே ஓடுகிறது. அப்போதெல்லாம் சந்திராவுக்கு விஜயகாந்தை இவ்வளவுக்குப் பிடிக்கும். ஆனாலும் ரகசியமாக வைத்துக் கொண்டாள். எப்போதோ குமுதத்தில் வந்த விஜயகாந்தின் அகண்டு சிரிக்கும் படத்தைத் தன் தையல் மெஷினின் நூல்கண்டு பெட்டிக்குள் ஒட்டி வைத்திருந்தாள். எங்க நேரிலேயேவா வந்துவிடப் போகிறான் என்கிற ஒரு தைரியத்தில் ஒன்றிரண்டு முறை முத்துக் கொடுத்துக் கொண்டதும் உண்டு. எப்படித்தான் மாரீஸ்வரிக்கு மூக்கு வேர்த்ததோ விசயத்தைக் கண்டுபிடித்து விட்டாள்.

மாரீஸ்வரி சந்திராவுக்கு நேர் மூத்தவள். ஆள் சிவப்பு முள்ளங்கிக்குப் பக்கத்து வைத்து ஒத்திக் கொள்ளும் நிறம். கன்னம் ரெண்டு பப்பாளியாட்டம் பழுத்து சிவந்து கிடக்கும். அதில் ஒன்றிரண்டு பரு எட்டிப் பார்த்துவிட்டால் குய்யோ முய்யோ என்று வீட்டையே ரெண்டு பண்ணிவிடுவாள். வட்டுக் கண்ணாடியைத் தூக்கிக் கொண்டு கன்னத்தைப் பிதுக்குவதற்கே நேரம் சரியாக இருக்கும். பிறக்கும்போது என்ன கவனிக்காமல் விட்டார்களோ தெரியவில்லை, காய்ச்சல் வந்து வலதுகால் மெலிதாகச் சூம்பிவிட்டது அவளுக்கு.  நடக்கும்போது காலைச் சரித்து சரிந்து அரைக்கோபுரமாகத் தெரிவாள். அதனாலே வெளியே தெருவுக்கு என்று எங்கேயும் அவள் போனதில்லை. காய் வாங்க கமருகட்டு வாங்க என்று எல்லாத்துக்கும் சந்திராதான்.

மாரீஸ்வரிக்கு ராம்கி என்றால் உயிர். ஏட்டிக்குப் போட்டியாய் எப்போதாச்சும் சந்திரா அவளோடு மல்லுக்கட்டுபோது, அவள் விஜயகாந்தும் சந்திராவைப் போலக் கட்டக் கருப்பு என்று வெருட்டுவாள். பதிலுக்கு இவள் ராம்கி மட்டும் என்னவாம், கருப்பா இருக்க நிரோசாவைத் தானே கட்டிக்கிட்டான் என்று சண்டை கட்டுவாள். ‘இனி ஒருதரம் நிரோசாவ கருப்புன்ன அவ்ளோதான்’ என்றபடியே செம்பை ஓங்கிக் கொண்டு அடிக்க வருவாள் மாரி.  ‘நீ மட்டும் என் ஆளச் சொல்லுற’ இவள் பதிலுக்குக் கடித்து வைக்க ரெண்டுபேரும் தலைமுடியைச் சிக்காக்கிக் கொண்டுதான் அடங்குவார்கள். இப்போது அதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது சந்திராவுக்குச் சிரிப்பாய் வந்தது.

அப்பவும் சரி இப்பவும் சரி வீட்டில் டீவி என்கிற ஒரு வஸ்து இருந்ததே இல்லை. வாரமானால் எட்டு ரூபாய்க்கு கல்கண்டு, குமுதம், ராணி முத்து, கண்மணி என்று வரும். ஆள்மாற்றி ஆள் சுற்றிச் சுற்றி வந்து பிடிங்கிக் கொண்டுபோய்தான் வாசிக்கணும். ஒளியும் ஒளியுமெல்லாம் பார்க்கணும் என்றால் பக்கத்து வீட்டுத் திரணையில்தான் ஒண்ட வேண்டும். காலனியில் சாந்தி அக்கா வீட்டில் மட்டும்தான் டீவி இருந்தது. மரக்கதவு போட்ட பெட்டிக்குள் அம்சமாய் இருந்துகொண்டு வசீகரிக்கும். எப்போது சாந்தி அக்கா கொழுந்தன் காலேஜ் படிப்பதற்காக அவர்கள் வீட்டில் வந்து தங்க ஆரம்பித்தானோ அப்பயிருந்து, ஜாக்கெட்களுக்கு ஊக் தைத்துக் கொண்டே அவர்கள் வீட்டில் போய் டீவி பார்ப்பதும் நின்று போனது.

காலனியில் ரொம்பக் காலமாக ஒரே குடித்தனத்தில் வாடகைக்கு இருந்தது சந்திரா குடும்பம்தான். எட்டுக்குப் பத்தில் ஓர் உள்ளறை, அதில் இடைமறுத்து சின்னதாக ஒரு நெத்தி உயரத் தடுப்பு, வாசலிலே அடுப்படியும், திர்ணையும். பீடி சுற்றவும், ஊர்க்கதை பேசவும் யாராவது ரெண்டு ஆள் அந்தத் திர்ணையே கதியாயக் கிடப்பார்கள். அவர்களை உட்கார வைத்துக் கதை பேசிக் கொண்டே வீட்டில் உள்ள நாலுபேருக்கும் சோறும் குழம்பும் பொங்கி ஆக்கி இறக்கிவிடுவாள் கோமு ஆச்சி.

மாரியையும் சந்திராவையும் ‘தாயில்லாப் பிள்ளைங்க’ என்றாலும் மண்டையில் கொட்டிக் கொட்டித்தான் வளர்த்தாள் கோமு ஆச்சி. தான் பெத்த ஐந்தில் ஒரே பெண் பிள்ளையான பரிமளத்துக்குக் காசநோய் வந்தபோது அவளைக் காப்பாற்றுவதற்காக கோமு ஆச்சி அலைந்து திரியாத வைத்தியம் இல்லை. எந்த புண்ணியமும் கைகொடுக்காமல் போக முப்பது வயது மகளைத் துள்ளத் துடிக்கத் தூக்கிக் கொடுக்திருந்தாள். அப்போதிருந்து மகன்கள் யார் வீட்டிலும் தங்காமல் தன் மகள்வழிப் பேத்திகளை வளர்ப்பதற்காகக் கிளம்பி வந்து விட்டாள்.

என்னதான் மாமியார் வந்து பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டாலும், அந்த சின்ன வீட்டில் தானும் கூட மாடப் படுத்துறங்குவதில் இருக்கும் சிக்கல்களைப் புரிந்துகொண்ட சுப்பிரமணியம் தான் மார்க்கெட்டில் துணி தைக்கும் கடையின் பெஞ்சையே தன் குடியிருப்பாக மாற்றிக் கொண்டார். நல்ல நாள் பொல்ல நாளுக்கு அவர் வீடுவந்தால் வாசல் திர்ணையில் உட்கார்ந்திருக்கும் பெண்கள் மடியில் சிதறியிருக்கும்  பீடித்தூளை சுளகில் உதறிவிட்டு, எழுந்து அவரவர் வீட்டை நோக்குக் கிளம்புவார்கள். பிறகு அது அவர் நிலைகொள்ளும் இடமாக அந்த நாள் முழுக்க மாறியிருக்கும்.

இப்படியே தீர்ந்தது வருசங்கள். அந்த ஏழு வீட்டுக் காம்பவுண்டில் வாடகைக்கு வந்தவர்கள் மட்டும் மாறிக் கொண்டே இருந்தார்கள் மற்றபடி இவர்கள் வாசலுக்குள் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. அக்கம்பக்கத்திலும் ஒருத்தரொருத்தர் பழகி பாசங்காட்டி, கோதத்த, செம்பகம் மைனி, விமலாக்கா என்று உறவு சொல்லி அழைத்தவர்கள் கூட திடும் திடுமெனப் புதுவீடு மாறிக் கிளம்பிவிடும்போது நெஞ்சை அள்ளிப் பிய்த்துப் போட்டது போல இருக்கும் மாரிக்கும் சந்திராவுக்கும். எதோ சொந்த பந்தம் பிழைப்பு பிழைக்க நாடுதாண்டிப் போவதுபோல நாலு நாளைக்கு அக்காளும் தங்கச்சியும் கண்ணீர் வடித்துக் கொண்டே உண்ணாமல் பரயாமல் கிடப்பார்கள். பிறகு பொங்கலுக்கு தீபாவளிக்கு கார்டு எழுதி அனுப்புவார்கள். அதுவும் கொஞ்ச காலத்துக்குள் நீர்த்துவிடும். பிறகு புதிய வருகை, புதுப் பழக்கம், புதிய சொந்தம் என்று அலையடிக்கத் துவங்கிவிடும்.

சந்திரா, கதிரவனைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு இந்தத் திருப்பூர் உப்புத் தண்ணிக்கு வாக்கப்பட்டு வந்தபோதும் கூட அப்படித்தான் அழுது வடிந்துகொண்டிருந்தாள். ஏழு வீட்டுக் காம்பவுண்டைத் தாண்டி வெளி உலகம் எதுவுமில்லை என்று இருந்தவளை, அடிவேரோடு பிடுங்கி இங்கே கொண்டு வந்து இங்கே போட்டுவிட்டார்களே என்று வாய்விட்டு அரற்றாதது தான் விட்டுவைத்த பாக்கி. எல்லாத்துக்கும் மேலே, அடியோ புடியோ அது மாரீஸ்வரி முகத்தில்தான் அவளுக்கு விடியணும். அப்படியாக வளர்ந்தவளை எக்கேடும் கெட்டுப் போ என்று விரட்டி விட்டது மாதிரி இங்கு தள்ளிவிட்டதால்  கோமு ஆச்சி மீதும்கூட தின்றுசெரிக்க முடியாத கோபம் ஒன்று அவள் கொதவளைக்குள்ளே முட்டிக் கொண்டு கிடந்தது.

சந்திரா கதிரேசனுக்கு வாழ்க்கைப்பட்டு வந்து இன்றோடு பதினாலு வருசம் பூர்த்தியாகிறது. முன்பு காங்கேயம் ரோட்டில் இருந்த வீடு இடம் பத்தவில்லை என்று வெள்ளியங்காட்டுக்கு குடிமாறி மூணு வருசம் தான் ஆகியிருக்கும். அதுவும் பிள்ளைகளுக்காகத் தனிக் கக்கூஸ் இருக்கும் வீடுதான் வேண்டும் என்று அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி சண்டைபோட்டுத்தான் மாறினாள். கதிரேசன் சந்திராவைப் பெண் பார்க்க வந்திருந்தபோது கூட, வரக்காப்பி போட்டுக் கொடுத்து, ஆள்மாற்றி ஆள் வாய் ஓயாமல் ஊர்ப்பேச்சுப் பேசிக் கொண்டிருக்க, இரும்பு ஸ்டூல் போட்டு அவர்களுக்கு நடுவாந்திரமாக உட்கார்ந்திருந்தவனை பொண்ணுகிட்ட பேசணும்னா போய் பேசிப்போட்டு வாப்பா என்று கூடத்திலிருந்து யாரோ சொன்னபோது, ’ஒங்க வீடு ஓட்டு வீடா மட்டப்பா போட்டதா, கக்கூஸ்க்கு கதவு போட்டதா’ என்றெல்லாம் தான் விசாரிக்க நினைத்தாள். ஆனால், வழக்கத்துக்கு மாறாக அன்றைக்கு கால்நடுங்கித் தொடை கிடுகிடுக்க ஒரு பேச்சும் பேசமுடியாமல் சுவரோடு ஒட்டின பல்லிபோல கடைசி வரைக்கும் நின்றுகொண்டாள்.

கதிரவனின் குடும்பத்தினர் தண்டுகாரன்பாளையத்தில் வீட்டோடு சேர்த்து பெட்டிக் கடை வைத்திருந்தார்கள். வளையோடு போட்ட பெரிய வீடுதான். பழைய தொழுவத்தில் மாடு மாடாய் வளர்த்து, மடி மடியாய் கறந்து, வண்டி வண்டியாய் சாணி அள்ளிப்போட்டு, உட்கார்ந்து தின்றிருக்கிறார்கள். இப்போது எருவுக்கு ஏழு வீதி நடக்கணும்.

”என்ன மாடு வச்சாங்களோ.. எல்லாமும் கொண்டா கொண்டானு வரக் காப்பியால்லா கேக்குதுங்க” என்று வெள்ளைச் சீலை ஆச்சி கல்யாணம் முடியுமட்டும் வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்க மாரீஸ்வரி வாய் பொத்திச் சிரித்துக் கொண்டாள்.

’அக்கா இருக்குமுன்ன தங்கச்சிக்குக் கலியாணமா” என்று கேட்காதவர்கள் யார்தான் ஏழு வீட்டுக் காம்பவுண்டைக் கடந்து போனார்கள். மாரீஸ்வரி எல்லாரின் வாய் ஒழுக்கையும் தையல் மிஷின் சத்தத்தில் மடித்துத் தைத்து விட்டாள். ஆளும் அமுக்குணிதானே. எனக்கு கல்யாணமே வேணாம் என்று தன் ஒற்றைக் காலில் உட்கார்ந்தே சாதித்துவிட்டாலே படுபாவி. கோமு ஆச்சி வடித்த கண்ணீரெல்லாம் அவள் கண்ணுக்கு ஒரு ஈரமாகவேபடவில்லை. அப்பாவும்தான் அவள் குரலுக்கு மேலே எந்திரித்துப் பேசிவிட்டாரா என்ன>

“ஒழுங்கா அவளுக்கு மாப்பிளை பாக்க வழியப்பாரு. சீட்டு கீட்டப் போட்டு அவளை இங்கருந்து அனுப்பு..” என்று அவரை அதட்டாத குறைதான்.

”நீ பண்ணலாட்டி போ, என்ன ஏன் வெரட்டப் பாக்க?” என்று சந்திரா எரிந்து விழுந்தபோது, “வந்தம்னா வாய் இருக்காது” என்று கத்தரிக்கோலை காண்பித்து உக்கார்ந்த மேனியில் அரட்டிவிட்டாள். சொல்லப்போனால், கதிரவனை, ”உனக்குச் சரியா வருவாருபில.. சரின்னு சொல்லு” என்று அவள்தான் தெரிந்தெடுத்தாள். சந்திராவுக்கு பொங்கல், தீபாவளிக்கெல்லாம் அளந்து அலங்கரித்து மாரீஸ்வரி தைத்துக் கொடுக்கும் பட்டுப் பாவாடைச் சட்டை மாதிரிதான் கதிரவனும் அவளுக்குக் கிடைத்திருந்தான்.

”ஒனக்குன்னு மனசுல கல்யாண ஆசையே இல்லயாபில..”

”ஏன்ட்டி கேக்க..”   

” சொல்லு…”

“என்னத்த ஆசப்படணும்ங்க..”

”கல்யாணம்லாம் பண்ணி, பிள்ளேல்லாம் வேணும்ட்டு..”

“அதுக்குத்தான் நீ இருக்க. நீ பெத்து என்ட கொடுத்துருவல்லா..”

“கேக்கதுக்கு ஒழுங்கா பதில் சொல்தாளா பாரு..”

“அந்தச் சிறுக்கி மனசுக்குள்ள ஊரயே ஒளிச்சி வச்சிருப்பா..”

“தெ.. நீ ஏன் சும்மா ஊடைல வார.. கெழவி.”

“ஏம்ட்டி நீங்க ரெண்டு கெழவிகளும் ஒண்ணா கழுத்தக் கட்டிக்கிடக்க என்ன கெழவிங்கியோ..”

“நீ சொல்லுங்கன்லா..”

“எனக்கென்னப்ல.. அதெல்லாம் தோணவே இல்ல. என் ஆளுதான் ஏற்கனவே என்ன விட்டுட்டு உன்ன மாதி ஒரு கருத்தவளக் கட்டிக்டாம்லா..”

“மூஞ்சி.. நீ பண்ணாட்டி எனக்கும் வேணாம்.”

“எடு வெளக்கமாத்த..”

சாலைக்குமரன் சன்னிதியில் தாலிகட்டு முடிந்ததும், காசி விநாயாகாவில் பதினோரு மணிக்கெல்லாம் மதியச் சாப்பாடு சொல்லியிருந்தார்கள்.  ஏழுவீட்டுக் காம்பவுண்டின் கடைசி வீட்டு ஆட்டோ டிரைவர் முத்து அண்ணன் தான் பெண் வீட்டு, மாப்பிள்ளைச் சொந்தங்களை முகச்சாடை நியாபகம் வைத்து டோக்கன் விநியோகித்துக் கொண்டிருந்தார். கல்யாணம் முடிந்த அன்றைக்குச் சாயங்காலமே ஜங்ஷனில் இருந்து திருப்பூருக்கு ட்ரெய்ன். மறுவீடு விருந்து எல்லாம் கனவு மாதிரி ஒரேநாளில் முடிந்துபோன ஊரிலில்லாத அதிசயக் கல்யாணம் சந்திராவுடையது.

”திருநல்வேலியில இருந்து எப்படி இங்க கல்யாணம் பண்ணி வந்தீங்க..”

பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே தனம் அக்கா, கேட்ட கேள்வி இதுதான்.

“ஏன் வரக்கூடாதா?” கருக்கென்று முகத்தில் அடித்தமாதிரிதான் பதில் கொடுத்தாள் சந்திரா. அன்றைக்கு அவள் இருந்த கொதிப்பு அப்படி. கல்யாணம் முடிந்த மரா வாரத்திலே மாமனார் வீட்டின் மூத்த மருமகள், ”உம்மவன் கல்யாணத்துக்கு செஞ்ச என் செலவுப் பைசாவை எடுத்து வை” என்று வாசலில் நின்று கொண்டாடி விட்டாள். காலையில் பேச்சாக ஆரம்பித்த சண்டை மதியத்தில் கைகலத்து, சாயங்காலத்தில் எல்லாம் சந்திராவுக்கு, மாரீஸ்வரி ஆசை ஆசையாக வாங்கிப் போட்டக் கம்மலையும், கழுத்துச் செயினையும் கழற்றிக் கொண்டுபோய் கில்டுக்கடையில் வைத்துவிட்டு, அத்தோடு அவர்கள் சங்காத்தமே வேண்டாம் என்று தண்டுகாரன்பாளையத்திலிருந்து, கதிரேசன் வேலைபார்த்து வந்த பனியன் கம்பனிக்குப் பக்கத்திலே குட்டியாக வீடு ஒன்று வாடகைக்குப் பார்த்து மாறி வந்திருந்தாள்.

அதே வாரத்தில் நட்டநிசியில் கழுத்துப்பக்கத்து முடியை விலக்கிவிட்டுக் கொண்டே, ”வீட்டில தனியாதானே இருக்க, கம்பெனில பீஸ் வெட்ட வந்தா…” என்று கதிரவன் இழுத்ததும், அன்றைக்குக் காலையிலே கொண்டையை முடிந்து கொண்டு வெறுங்கழுத்தோடு வேலைக்குக் கிளம்பி வந்துவிட்டாள்.

என்ன ஆங்காரங்கள் கொண்டிருந்தும் என்ன.. பொம்பளை மனசாச்சே நாள்பட நாள்பட ஒரு சுதாரிப்புக்கு வந்தாக வேண்டியிருக்கிறதே. வேலையும் சரி தனம் அக்காவும் சரி பழகவும் பேசிக்கொள்ளவும் எளிதான விஷயங்களாக இருந்தது சந்திராவுக்கு அந்த ஊரில் வாய்த்த ஒரே கொடுப்பனை. கதிரவன் காண்ட்ராக்டருக்கு கணக்கு வழக்கு முடித்து எழுதிக் கொடுப்பது வரைக் காத்திருக்க வேண்டாம் என மினிபஸ் பிடித்து வீடுவந்து சேர கூடமாட வேலைபார்க்கும் பெண்களோடும் பொருந்திக் கொண்டாள். பேச்சுப் பழக்கம் மெல்ல வளர்ந்தும் கேள்விகள் மாறவில்லை..

”திருநல்வேலியில இருந்து எப்படி இங்க கல்யாணம் பண்ணி வந்தீங்க..”

”எங்கப்பா டெய்லர் வேலை பார்த்தாங்க… நாங்க அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் அப்படியே வேலை பழகிட்டோம். டெய்லர் மாப்பிள்ளைக்கு டெய்லர் பொண்ணு பார்க்கப்போக அப்படி விசாரிச்சு வந்ததுதான் எங்க வீட்டுக்காரர் குடும்பம். அவங்க பூர்வீகமும் எங்க ஊர்ப்பக்கம் தானாம்.”

கதிரவன் கடும் உழைப்பாளிதான். என்ன நாலு காசை நறுவுசாகச் சேர்த்து வைக்கத் தெரிந்திருக்கவில்லை. அவன் கேட்டான் இவன் கேட்டான் என்று சம்பளக் காசைக் கடனுக்குக் கொடுத்துவிட்டு இவன் பெட்ரோல் இல்லாமல் வண்டியைத் தள்ளிக்கொண்டு பத்தரை மணிக்கு வீடுவந்து சேர்ந்தபோது எரிச்சல் அப்பிக்கொண்டு வந்தது சந்திராவுக்கு. கொண்டுவந்த பீரோலும் கட்டிலும், குத்து விளக்கும் எவர்சில்வர் பித்தாளைப் பாத்திரங்களும் மட்டும் நிறைந்துகிடந்த வீட்டிற்குள் வாரச் சம்பளத்தைக் கொண்டு ஒவ்வொரு பொருளாகச் சேர்ந்த்தது சந்திராதான். நோவு நொடியென்று அவன் படுத்துக் கொண்டபோது மட்டும் மாமியார் வந்து ஒரு எட்டு மகனைப் பார்த்துவிட்டுப் போவார். சொல்லச் சொல்லக் கேட்காமல் மகனும் மருமகளும் வீட்டை விட்டுப் புறப்பட்டுப் போனதில் ஏற்பட்ட கோபத்தால் மாமனார் மட்டும் தலைகாட்டவே இல்லை.

விருந்தாளிக் காக்கைகள் கத்தவே கத்தாத அந்த குடியிருப்பில், சந்திரா மாசமானது தெரிந்த மூன்றாவது கிழமையில், மாவிலங்கா, கல்கோணா, முந்திரிக்கொத்து என்று அவளுக்குப் பிடித்ததெல்லாம் ஒயர்கூடைகள் நிரம்பத் தூக்கிக் கொண்டு வந்துசேர்ந்தது கோமு ஆச்சி. அன்றைக்குச் சந்திராவின் முகமெல்லாம் வெளிச்சம் தீரவில்லை. மாரீஸ்வரி வரலையா ஆச்சி என்று ஆசை ஆசையாகக் கேட்டாள்.

”அது அங்க மெசினக் கட்டிகிட்டு அழுது. நீ லெட்டரு போட்டீல்லா. அததான் ராவும் பவலும் படிச்சுட்டு கெடக்கா. மனசே கேக்கலம்மா. நீ மாசமா இருக்கன்னு போலீஸ்காரரு வீட்டுக்குப் போன்போட்டுச் சொன்னாலுஞ் சொன்ன தையத் தக்கான்னு ஒரே குதியா குதிக்க ஆரம்பிச்சுட்டா..”

“ஏ ஆச்சி என்னையும் ஒங்கூட கூட்டிட்டுப் போயிரேன். எனக்கும் அவளத் தேடுது. கம்பனி போன் நம்பர்தான் லெட்டர்ல எழுதிருக்கம்லா. அவளா ஒருதடம் கூப்டா என்னவாம் கொறஞ்சா போயிருவா”

“ஒ..அக்காளப் பத்திப் புதுசா தெரிஞ்சவ மாதிரி கேக்கியம்மா.. சரி மாப்பிள எப்ப வருவாரு. பொங்கி ஆக்கி கொடுக்கியா.”

“இல்ல ஆச்சி. கடைல தான் வாங்கிச் சாப்பிடுதாரு. எனக்கு வாந்தி நிக்கல. படுத்தே கிடக்கேன். வேலைக்கும் போகல ஒரு வாரமா..”

அன்று மாலை நேரத்தோடு கதிரவன் வீடு வந்து சேர்ந்திருந்தான். மீன் கிடைக்காத ஊரா இது என்று வசை வைத்துக் கொண்டே ஆச்சி கறி சமைத்து வைத்திருந்தாள். ஆச்சியின் கைச் சமையல் ரொம்பவே பிடித்திருப்பதாகச் சொன்ன கதிரவன் இரவு நெடுநேரம் அவளோடு பேசியிருந்துவிட்டு இங்கயே கூட இருந்து சந்திராவைப் பார்த்துக் கொள்ளத்தானே என்று வாய்விட்டே கேட்டுக்கொண்டான். மாரீஸ்வரியை தனியாக விட்டுவிட்டு வந்திருப்பதை மனசில் வைத்து ஆச்சி நாசூகமாய் அவன் கோரிக்கையை மறுத்துவிட்டு இரண்டாவது கிழமையில் ஊர் திரும்பியிருந்தாள்.

சொன்னமாதிரியே ஐந்தாவது மாதத்தில் ஆச்சி திரும்ப வந்திருந்தாள். அன்றைக்குச் சாயங்கால ரயிலில் கதிரவனும் ஆச்சியும் மல்லுக்கட்டித்தான் ரயிலில் சீட் பிடிக்க முடிந்தது. வீங்கிவிடாமல் இருக்க ராத்திரி முழுதும் சந்திராவின் கால்களை அழுத்தி விட்டுக் கொண்டே இருந்தாள் கோமு ஆச்சி.

கடைசிவீட்டு முத்து அண்ணன் அந்த அகாலத்தில் ஆட்டோவை எடுத்துக் கொண்டு ஜங்ஷன் ஸ்டேசன் வாசலில் காத்துக் கொண்டிருந்தார். ஆட்டோவை நெருங்கினபோதுதான் உள்ளுக்குள் மாரீஸ்வரி சரிந்து  உட்கார்திருப்பதே தெரிந்தது. அந்த இடத்திலே அவளைப் பார்த்துவிட்டதும் கண்ணெல்லாம் பொங்கி தாரை தாரையாக வடிய, ஏட்டீ.. என்று வாய்விட்டே கத்தி அழத் துவங்கி விட்டாள் சந்திரா.

“ஏப்ல.. ஏப்ல.. ச்சி ஆள்லாம் பாக்காங்க. ஏப்ல அழாதப்ல.. பிள்ளத்தாச்சி அழக்கூடாதுப்ல” என்று எவ்வளவுதான் தேற்ற.. 

”வாங்க.. எப்படி இருக்கீங்க.. நல்லா பாத்துக்குறாளா.. என் தங்கச்சி..”

கதிரவன் கன்னம் குழியச் சிரித்து, “அதெல்லாம் சொல்லவா வேணும்..” என்று மனப்பூர்வமாகச் சொன்னான்.

மூத்தது தலைப்பிரசவம் தாய் வீட்டில்தான் என்றாலும் தாய் இல்லாதது ஒரு  குறையே இல்லை என்கிறபடிக்கு ஆச்சியும், மாரியும் சந்திராவை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டார்கள். கை நிரம்ப வளையல் போட்டு, வயிறு பெருத்ததும் நாடாவை நீட்டிப் புதுப்பாவாடை தைத்துக் கொடுத்து,  நின்றால் நடந்தால் தண்ணி எடுத்துக் கொடுத்து, சூடு காணாமல், சுரம் பிடிக்காமல் தட்டில் வைத்துத் தாங்கினார்கள்.

பாளையங்கோட்டை வேளாங்கண்ணி ஆஸ்பத்திரி நர்ஸ் வந்து, ”சந்திரா வீட்ல இருந்து யாரும்மா.. உங்களுக்கு பொம்பளைப் பிள்ளை” என்று சொல்லிவிட்டுப் போனபோது மாரி குதியாட்டம் மட்டும் தான் போடவில்லை. கோமு ஆச்சி ஆம்பளைப் பிள்ளைக்கு ஆசைப்பட்டிருந்ததை வெளியில் காட்டாமல், ரெண்டு உசுரும் நல்லபடி வரணும் என்று திரிசூலி மாரியம்மனை மனசுக்குள் நேந்துகொண்டாள்.

கோலமாவு டப்பாவை சன்னல் கம்பியின் ஓரத்தில் சொருகிவிட்டு கடிகாரத்தில் மணி பார்த்தாள் சந்திரா. ஆறு அடிக்க இன்னும் இருபது நிமிஷந்தான் இருந்தது. இரண்டையும் காபி குடிக்கக்கூட வராமல் இன்னும் என்ன செத்த டிவி என்று வாய்விட்டுத் திட்டுக் கொண்டே பேங்க் மேனேஜர் வீட்டு வாசல் நோக்கி நடந்தாள்.

”ஏ ரேணு, உமா.. டீவி பார்த்தது போதும், ரெண்டு பேரும் வாங்கடீ..”

“ஏ அம்மா கூப்புட்றாங்க வா..” தோள்பட்டை வரைக்கும் இறங்கிக் கிடந்த பனியனைக் கழுத்தை ஒட்டித் தள்ளிக் கொண்டு சின்னக்குட்டி ரேணுகா முதல் ஆளாக ஓடி வந்து சந்திராவின் காலைக் கட்டிக் கொண்டாள்.

அவள் பின்னாலே உமா மெதுநடை போட்டு வந்த உமாவுக்குச் சுள்ளென்று ஒரு அடியோடு, “வெளக்கு வச்சா வீட்டுக்கு வரணும்னு தெரியாதா கழுத.. அப்படி என்ன டீவி கேக்கு ஒனக்கு..” என்ற திட்டும் விழுந்தது.

”ம்மா எப்பம்மா ஆச்சி ஊருக்குப் போவம்..”

“ஏண்டி..”

”விஜய் படத்துல நம்ம ஆச்சி ஊரல்லாம் காட்னாங்கம்மா..”

”ஆமாம்மா திருநெல்வேலின்னு பஸ்லாம் கூட வந்துச்சு..”

“நாம எப்பம்மா பஸ்ல ஊருக்குப் போவம்..”

“போலாம் போலாம்..”

“ம்மா அப்பா எப்பம்மா வருவாரு..”

“வருவாரு வருவாரு.. வாய மூடிட்டு புக்க எடுத்து வச்சிப் படிங்க.. காப்பிய சிந்தாம குடிக்கணும்”

சீக்கிரமாகவே தன் சொந்த ஊருக்குத் திரும்பும் எண்ணமும் ஆசையும் சந்திராவுக்கும் ஏற்பட்டிருந்தது என்னவோ வாஸ்தவம் தான்.. பெரியவள் பிறந்தபோதுதான் கடைசியாக ஊரில் அதிக காலம் இருந்தது. சின்னவளுக்கு கொடுத்து வைக்கவில்லை. அவள் பிறந்த வீட்டுக்குள்ளே காப்பர்டி வைத்துக் கொண்டதாலும், அது பனியன் ஆர்டர்கள் குவியும் காலமானதாலும் அடிவயிற்று வலியும், பாலூட்டாத மார் கடுப்புமாகச் சேர்த்து பெறாத வலியெல்லாம் சேர்த்து பேறுகால நோவாக இறங்கியிருந்தது. சந்திராவின் மாமனார்கூட அவள் பிறந்த மாசத்திலே தான் இறந்திருந்தார். எல்லாமுமாகச் சேர்த்து நாட்களை நகர்த்திக் கொண்டே போனதே தவிர ஊரோடு போய் எட்டிப் பார்க்கும் காலம் பழுக்க வேண்டுமே..

ஹ்ம்.. எல்லாம் நேற்று ஆரம்பித்த மாதிரி இருக்கிறது. போட்ட நகைகளைக் கழுத்தில் இருந்து கழற்றின வேகம்போல ஒவ்வொன்றும் நினைப்பில் மட்டுமே குடியிருக்கிறது. அதனதன் இடங்களை எதுவெதுவோ வந்து ஆக்கிரமித்துக் கொள்கிறது. சித்தாறு நனைத்த உடம்புக்குள் நொய்யலின் வாடை குடியேறின மாதிரி எல்லாமே பழகிவிட்டது.

ஆனாலும் ஏதேதோ விசயங்கள் கண்முன் வந்து எல்லாவற்றையும் கிளறிவிட்டுச் சென்று விடுகிறதே…

இன்றைக்கும் கூடக் கல்யாணநாள் என்பதின் ஞாபகமிருக்காமல் மூக்கு வியர்க்கக் குடித்துவிட்டு வீடு திரும்புகிறவன் வழக்கம்போல நடு ராத்திரியில், பிள்ளைகள் உறங்கியதும், சத்தம் எழாமல் கிட்டே வந்து, கன்னம், கழுத்து, கால்கள் முலைகளில் முத்தமிட்டு, மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க கலவி கொண்டு, வசமாகத் தன்மேல் கால்களைத் தூக்கிப் அவள் மேல் போட்டுக்கொண்டு உறங்கும்போது, இதேமாதிரி என்றைக்கோ ஓர்நாள் ராத்திரியில் சொன்ன அவனது வார்தைகளும் கூட அவள் ஞாபகக் குட்டைக்குளிருந்து மக்கி மருக்களித்து குமட்டுகிற வாடையோடு மேலெழுந்து வந்துவிடுகிறதே…

”காப்பியக் குடிச்சா டம்ளர அங்கயே வப்பியா.. எந்திரிச்சிப் போய் கழுவப் போடு..”

உமா தன் தங்கச்சியின் தம்ளரையும் சேர்த்து எடுத்துக்கொண்டு அடுப்படிக்குள் நுழைந்தாள். அதேநேரம் வாசலில் அதே பழைய டி.வி.எஸ்-50 ஒன்று இறுமிக் கொண்டே வந்து நின்ற சத்தம் கேட்டது. 

”ஆனாலும், உங்கக்கா நல்ல கலர்ல.. தப்பா எடுத்துக்கமாட்டன்னா ஒண்ணு சொல்றேன். கால் மட்டும் நல்லா இருந்தா அவங்களையே கட்டியிருப்பேன் தெரியுமா..”

வீட்டையும் மனசையும் என்ன கழுவிப் பெருக்கித் துடைத்து என்ன பலன், இவ்வளவு காலமும் மனசுக்குள் நட்டுவைத்திருக்கும் கல்லைப் பெயர்த்து வெளியில் தூக்கிப் போடவே அவளால் முடியவில்லையே.

***

கார்த்திக் புகழேந்தி

பூர்வீகம் நெல்லை. தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். மூன்று சிறுகதைத் தொகுதிகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. தொடர்புக்கு -writerpugal@gmail.com

நினைவோ ஒரு பறவை – 3

0

எல்.வி பிரசாத்

ஜா.தீபா

முந்தைய பகுதிகளை வாசிக்க

ல். வி பிரசாத் தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழி திரைப்படத்துறையிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். இது எந்தக் காலத்திலும் அரிதான நிகழ்வு.

ஆந்திராவில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த பிரசாத்தை எல்லாக் குழந்தைகளையும் போல படிப்பதற்கு பள்ளிக்கு அனுப்பினார்கள். அவர் பள்ளிக்கு செல்லவில்லை. பதிலாக, துண்டு துண்டான ரீலில் லைட்டினை அடித்து படம் பார்க்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். அடுத்ததாக தானே சினிமா படத்தினை உருவாக்கி விட வேண்டும் வேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டது. அந்தத் தகுதி தனக்கு இருப்பதாக அவர் நம்பினார். அவர் தகுதியாக நினைத்தது பேரார்வத்தை. நூறு ரூபாயினை வறுமையுடன் போராடி சேர்த்து வைத்திருந்த அவரது அப்பாவின் கடைசி  சேமிப்பில் இருந்து திருடி ரயிலேறி பம்பாய் போனார்.

அவருக்கிருந்த எண்ணம், நம்முடைய ஆர்வத்தைப் பார்த்து சினிமாவில் சேர்த்துக் கொள்வார்கள் என்பது. இவரையே பார்க்க மறுத்த இயக்குனர்கள், ஆர்வத்தை எப்படி கண்டு கொண்டிருப்பார்கள். ஸ்டுடியோவுக்குள் நுழைந்தால் போதும், மற்றதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தார். படப்பிடிப்பு அரங்கத்தை சுற்றி மூடியிருக்கும் திரையில் ஓட்டை போட்டு எப்படி படம்பிடிக்கிறார்கள் என்று நாள் முழுவதும் நின்று கொண்டு பார்த்தே திரைப்பட உருவாக்கத்தைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். ஸ்டுடியோவின் கடைநிலை ஊழியனாக சேர்ந்தார். சிறு வேடங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒன்று, தமிழ், தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளின் முதல் பேசும் படங்களிலும் பிரசாத் நடித்திருக்கிறார். அவை முறையே காளிதாஸ், பக்த பிரகலாதா ஆலம் ஆரா படங்கள். அவருக்கென நேர்த்தியாய் அமைந்த வாய்ப்பு அது. இந்த வாய்ப்பு சாதனையாகவும் மாறிப்போனது. பதினோரு வருடங்கள் இப்படி சிறு ஊழியங்கள் செய்த பின்னரே ‘க்ருஹபிரவேசம்’ என்ற படத்துக்கு உதவி இயக்குநர் ஆகிறார். இந்தப் படத்தின் ஒரு பகுதியை இயக்கம் வாய்ப்பும் கிடைக்கிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்கிறார்.

பிரசாத் சிறந்த இயக்குனர், நடிகர் என்பதோடு புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஆனது அவர் திரைப்படக் கலையின் அத்தனை நுட்பங்களையும் ஒரு மாணவ மனநிலையில் கற்றுக்கொண்டது தான். ஆங்கிலமும், இந்தியும் கொஞ்சமும் கைகூடாத நிலையில் தான் பம்பாயில் அவர் திரைப்பட வாய்ப்புக்காக அலைந்தார். இந்தி , ஆங்கில மொழிகளை அவர் தன் தேடலிலேயே கற்றுக்கொண்டார். திரைப்பட மொழியை தன்னுடைய அசாத்திய உழைப்பினால் புரிந்து கொண்டார்.

இவரது படங்களை இன்று பார்த்தாலும் சலிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு காரணம் இவருடைய கதை சொல்லலில் உள்ள நவீனத்துவம் தான்.

இவரது படங்களின் கதைகள் யாவும் எளிமையாய் ஒரே வரியில் சொல்லக்கூடியவை தான். ஆனால் அதற்குள் அவர் பல முடிச்சுகளை வைத்திருப்பார். அந்த முடிச்சுகளை அவர் திரைக்கதையின் சுவாரஸ்யத்துக்காக சேர்த்துக் கொண்டே போவார். ஒரு பொது அம்சத்தை இவரது கதைகளில் காண இயலும். ஒரு பொய்யினை ஒரு கதாபாத்திரத்துக்கு தெரியாமல் மற்றவர்கள் மறைப்பார்கள். அந்த பொய் என்னவென்று தெரிய வரும்போது படத்தின் முடிவு வந்துவிடும். அப்போது கதை மாந்தர்களுக்குள் இருக்கும் சிக்கலும் தெளிந்துவிடும். இப்படியான ஒரு அம்சம் தன்னுடைய படங்களில் தொடர்வதை நம்மால் உணர முடியாமல் செய்துவிடுவதே பிரசாத்தின் திரைக்கதை யுத்தி.

தெலுங்கில் படங்கள் இயக்கிய பிறகே தமிழுக்கு வருகிறார் பிரசாத். ‘கல்யாணம் பண்ணி பார்’ என்பது பிரசாத் தமிழில் இயக்கிய முதல் திரைப்படம். பிரசாத் ஒரே படத்தை தமிழ் தெழுங்கு இரு மொழியிலும் ஒரே நேரத்தில் எடுக்கக்கூடியவர்.. ‘கல்யாணம் பண்ணி பார்’ படத்தின் ஒரு சிறப்பம்சம் தமிழில் முதன்முறையாக கேவா கலரில் வெளிவந்த படம். சில காட்சிகளை மட்டும் கேவா கலரில் எடுத்திருப்பார்கள்.

வரதட்சணைக்கு எதிரான படம் என்பது அக்காலத்தில் இந்தப் படம் பேசப்பட்டதற்கு முக்கிய காரணம். அதை பிரச்சாரமாக சொல்லாமல் நகைச்சுவையோடு சுவாரஸ்யமாக சொன்னதாலேயே மக்களிடையே எடுபட்டது. பெற்றோர் வரதட்சணைக்காக பிடிவாதம் செய்தாலும் மணமகன்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்றது கதை. ஒரு தங்கையின் திருமணத்துக்காக அண்ணன் போராடும் கதையே ‘கல்யாணம் பண்ணி பார்’. கிட்டத்தட்ட இதே பாணியிலான கதை தான் பிரசாத் இயக்கிய மற்றொரு படமான ‘கடன் வாங்கி கல்யாணம்’. இதுவும் பண ஆசை உள்ளர்வர்களால் திருமணங்கள் எப்படிஎல்லாம் நிச்சயிக்கப்படுகின்றன என்பதை சொல்லும் கதை தான. இதிலும் ஒரு அண்ணன் தன்னுடைய தங்கையின் திருமண வாழ்க்கை சிறக்க போராடுவான். இரண்டு படங்களின் கதை மற்றும் காட்சிகளிலும் அதிகளவு ஒற்றுமை இருந்தது.

பிரசாத்தின் படங்களில் இரண்டினைக் குறிப்பிட வேண்டும். ஒன்று மனோகரா, மற்றொன்று மிஸியம்மா. மனோகரா படத்தின் கதை பம்மல் சம்பந்த முதலியாரின் ‘மனோகரா’ நாடகத்தில் இருந்து தழுவப்பட்டு திரைக்கதை வடிவம் பெற்றது. இதற்கு திரைக்கதை வடிவமும், வசனமும் எழுதியவர் கலைஞர் மு. கருணாநிதி. பிரசாத்தின் மற்ற படங்களில் இருந்து மனோகரா வித்தியாசப்பட்டதன் காரணம் இதன் திரைக்கதையிலும், கதையிலும் பிரசாத்தின் பங்கு இல்லை என்பது தான். சரித்திர கதை என்றபோதும் கூட பிரசாத் எழுதிய வசனமாக இருந்திருந்தால் அது இத்தனை அடர்த்தியாக இல்லாமல் யதார்த்தமாகவே அமைந்திருக்கும். ஆனால் மனோகரா படத்தின் பெரும் பலமே அதன் வசனங்கள் தான். ஒவ்வொரு காட்சிக்கும் கைத்தட்டல்களும் உணர்ச்சிக் கொனதளிப்பையும் ஏற்படுத்தும் தன்மை கொண்டிருந்தன வசனங்கள். தெலுங்கிலும், இந்தியிலும் மனோகரா வெளிவந்தபோதும் வெற்றி பெறவில்லை. காரணம் தமிழின் செறிவான வசனங்கள் போல் அவை அமையவில்லை என்பதே,

பிரசாத்தின் மற்றொரு குறிப்பிடத்தகுந்த படம் மிஸியம்மா. மிஸியம்மாவின் பெரும்வெற்றிக்கு பிறகு அதே நடிகர்களோடு பிரசாத் இயக்கிய படம் தான் ‘கடன் வாங்கி கல்யாணம்’.

மிஸியம்மா கதை பல்வேறு வடிவங்களில் இந்திய மொழிகளில் எடுக்கப்பட்டு விட்டன. இனியும் எடுக்கப்படும். ஆண், பெண் ஈகோ தான் கதையின் மையம். அதன் சுவாரஸ்யமான கதை சொல்லல் முறை, யதார்த்தமான வசனங்கள், கதாபாத்திரங்களின் தன்மை இப்படியாக..முக்கியமாக சாவித்திரியின் பாத்திர வடிவமைப்பை சொல்லலாம். அந்தப் படத்தில் சாவித்திரி அப்போதைய காலகட்டத்தில் முதல் தலைமுறை வேலைக்குப் போகும் பட்டதாரிப் பெண். ஆங்கிலோ இந்திய வீட்டின் பெண்ணாக வருவார். ஒருபக்கம் வேலைக்குச் செல்ல ஊக்கம் கொடுக்கும் நவீன பெற்றோர், இன்னொருபுறம் சமூக சிக்கல்களை எதிர்கொள்ளும் பெண் என இரண்டுக்கும் நடுவில் சிக்கும் ஒருவர் அவர். சமூகத்தை எதிர்கொள்ளும்போது இருக்கிற பாதுகாப்பு உணர்வற்ற ஒரு பெண் என்பதால் இயல்பாகவே அது அவருக்கு சிடுசிடுப்பைக் கொடுத்திருக்கும்.

பிரசாத்தின் முந்தைய படங்களிலும் நடித்திருந்தாலும் அவற்றை விட தன் நடிப்பை நிரூபிக்கும் கதாபாத்திரமாக சாவித்திரிக்கு அமைந்தது மிசியம்மா படத்தில் தான். இந்தக் கதாபாத்திரத்தை தற்செயலாக பிரசாத் வடிவமைத்திருக்க வாய்ப்பில்லை என்றே சொல்லலாம். ஒரு கதாநாயகியை இப்படிக் காட்டுவதற்கே முதலில் தைரியம் வேண்டும். படத்தின் இறுதி வரை சாவித்திரி சிடுசிடுவென , முன்கோபம் கொள்ளும் ஒரு பெண்ணாகத் தான் இருப்பார். இத்தனைக்கும் நகைச்சுவைப் படங்கள் வரிசையில் தான் இன்றும் மிஸியம்மா இருக்கிறது. ஆனாலும் ஒரு காட்சியில் கூட சாவித்திரி சிரித்த நினைவு இல்லை.

பிரசாத்தின் ஒரு பலமென்பது ஒவ்வொரு படங்களிலுமே முதல் காட்சியில் ஒரு கதாபாத்திரம் நம் மனதில் எப்படி பதிகிறார்களோ கடைசி வரை அவர்கள் அப்படியே தான் நூல் பிடித்தது போல் இருப்பார்கள். அவர்களின் குணாதிசயத்தினால் ஏற்படும் சிக்கல்களும், முரண்களும் தான் கதைகளை நகர்த்தும். ஓரிரு காட்சிகளில் வந்து போகும் கதாபாத்திரமாக இருந்தாலும் கூட அவர்களுக்கென தனித்த குணாதிசயத்தைக் கொண்டு வருவதில் பிரசாத் கவனமாக இருந்திருக்கிறார்.

ஒரு பெண் கதாபாத்திரம் இப்படித் தான இருக்க வேண்டும் என்கிற  எல்லைக் கோட்டினை சர்வசாதரணமாக கடந்து விடக்கூடிய இயக்குநராக எல்.வி பிரசாத் இருந்திருக்கிறார்.

இதனை அவரது ஒவ்வொரு படத்தையும் முன்னிறுத்தி சொல்ல முடியும். மனோகரா படத்தில் டி.ஆர் ராஜகுமாரியின் கதாபாத்திரம், மிக சாதுவாக இருந்து வெடிக்கும் கண்ணாம்பா, சிடுசிடுவென வலம் வரும் ‘மிஸியம்மா’ சாவித்திரி, ‘மங்கையர் திலகம்’ எம்.என் ராஜம் இப்படி.

இவர்கள் இயல்பானவர்களாக இருப்பார்கள். இயல்பு என்று சொல்லுவது பலவீனங்களையும் சேர்த்து கதாபாத்திரத்தை வடிவமைப்பதே.

பிரசாத். நாடகங்களின் மீது பெருங்காதல் கொண்டவர். சிறுவனாக இருந்தபோதே நாடகத்தில் சேர வேண்டும் என்கிற தீவிரம் இருந்திருக்கிறது.


இதன் விளைவு இரண்டு விஷயங்களில் இவரது படங்களில் வெளிப்படும்.

ஒன்று, இவரது படங்களில் பெரும்பாலும் ஒரு நாடகக்காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த நாடகத்தில் அந்தப் படத்தின் கதை என்ன என்பது சொல்லப்பட்டு விடும். மனோகரா படத்தில் வருகிற ஒரு நாடகக் காட்சியை படத்தின் ஃப்ளாஷ் பேக் கதை சொல்லுகிற யுத்தியாக பயன்படுத்தியிருப்பார்.

அதே போல் ‘கல்யாணம் பண்ணிப் பார்’ படத்தில் வருகிற நாடகக் காட்சியில் அந்தப் படம் சொல்லுகிற வரதட்சணை குறித்த நாடகம் இடம்பெற்றிருக்கும்.

இரண்டாவது, பல படங்களிலும் சிறுவன் ஒருவனின் கதாபாத்திரம் அமைந்திருக்கும். அந்த சிறுவன் துறுதுறுப்பானவனாக, எதையும் சுலபமாக கற்றுக் கொள்கிறவனாக, துடுக்கான பேச்சு கொண்டவனாக இருப்பான். ‘கல்யாணம் பண்ணி பார்’ படத்தில் அப்படியான ஒரு சிறுவனுக்காக ஒரு சிறுமி காதலியும் கிடைப்பாள். சிறுவயது முதல் காதல் பற்றி படத்தில் முதன்முதலாக சொன்னவர் அநேகமாக பிரசாத்தாகத் இருப்பார்.

இது அவரது சிறு வயது நினைவுகளின் பிரதிபலிப்பு என்றே கொள்ளலாம். அவரது வாழ்க்கைக் குறிப்பினை வாசிக்கிறபோது அப்படித் தான் நினைக்க வைக்கிறது.

மற்றொரு விஷயமாக குறிப்பிட விரும்புவது சில நவீன யுத்திகளை படங்களில் அவர் கையாண்ட விதம். கேமராவின் முன் வந்து நடிகர்கள் பேசிவிட்டுப் போவது என்பது தான் அப்போதைய இயல்பான திரைமொழியாக இருந்தது. பிரசாத் சில படங்களில் ஒலியின் மூலம் உணர்த்துவதை சிறப்பாக செய்து கொண்டிருந்தார்.

ஒரு கதாபாத்திரம் ஃபிரேமை விட்டு பேசிக்கொண்டே அகலும். தள்ளி நின்று பேசிவிட்டு மீண்டும் ஃபிரேமுக்குள் வருகிறபோது அவர் கை கால் கழுவி விட்டு வந்தார் என்பதை ஒலியின் மூலம் விளங்க வைத்திருப்பார்.

மிஸியம்மா படத்தில் இரு கதாபாத்திரங்கள் பள்ளிக்கூடம் அருகில் நின்று பேசுகிறார்கள் என்றால், பின்னணியில் குழந்தைகளின் கூச்சல் கேட்டபடி இருக்கும். மனோகரா படத்தில் காட்டினுடைய காற்று ஒலி கேட்டபடி இருக்கும். ‘பாக்கியவதி’ படத்தில் திருவிழா நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதை சொல்வதற்கு பின்னணி இசையை அப்படியே தொடர்ந்திருப்பார். இப்படி சூழல் ஒலியை அவர் கணக்கில் நேர்த்தியாக எடுத்துக் கொண்டிருந்தார்.

ஐம்பதுகளில் பாடல்களைக் குறைத்துக் கொண்டு கதையின் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாணி தொடங்க ஆரம்பித்தது. ஆனாலும் பிரசாத்தின் படங்களில் பத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பார்க்க இயலும். பாடல்களின் பிரியராக இருந்திருக்கிறார். மிஸியம்மா’ படத்தின் பாடல்கள் வெற்றி பெற்றதும் அதே சாயலில் சில் பாடல்களை அடுத்து வந்த கடன் வாங்கி கல்யாணம் படத்திலும் பயன்படுத்திருப்பார்.

கதையமைப்பைப் பொறுத்தவரை கதையின் சிக்கல் முதல் ஒருமணிநேரத்துக்குப் பிறகே சொல்லப்படும். அது வலுவான சிக்கலாக இருக்கும். அதன் பின் கதை அதை மட்டுமே தொடரும். இது இன்றைய வணீகரீதியான படங்களின் முன்மாதிரியாக சொல்லலாம். முதல் பாதி படங்கள் நகைச்சுவை, காதல் காட்சிகளாக போய்க் கொண்டிருக்கையில் கதையில் சிக்கல் வருகிற ஜனரஞ்சக சினிமாவின் ஃபார்முலா அது. அதனால் தான் இப்போதும் இவரது படங்களின் கதைகளும், திரைக்கதை யுத்தியும் இளம் தலைமுறை இயக்குனர்களால் கவனிக்கப்படுகிறது. முழுக் கதையையும் ப்ளாஸ்பேக்கில் சொல்லும் முறையை ஐம்பதுகளிலேயே கையாண்டிருக்கிறார். ‘மங்கையர் திலகம்’ படம் முழுக்கவுமே பிளாஸ்பேக் கதை தான்.

பிரசாத் உறவுகளுக்குள் இருக்கும் அன்பையும் கூட வெகு யதார்த்தமாக சொல்லக்கூடியவர். தாய்ப்பாசம், தங்கை பாசம் போன்றவைஎல்லாம் பிரசாத்தின் படங்களில் உருகும் அளவுக்கு அமைந்திருக்காது. அது ஒரு இயல்பான நிலையிலேயே நின்று கொண்டிருக்கும். சற்று இந்த இடத்தைக் கடந்தது என்றால் ‘மங்கையர் திலகம்’ படத்தினை சொல்ல இயலும். கதையே தாய்மைப் போராட்டம் எனும்போது அதன் எல்லைக்குள் நின்று கதை சொல்லியிருக்கிறார் பிரசாத்.

ஒரு குடும்பக் கதை போல தோற்றம் கொண்டிருக்கும் படங்கள் தான் எனினும் அதில் சமூக சிக்கல்களையும், சமூகத்தில் ஏற்படுகிற பாதிப்பு   குடும்பத்தை எப்படி சிக்கலாக்குகிறது  என்பதையும் தொடர்ந்து படங்களில் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறார். வரதட்சனை பிரச்சனை குறித்து ‘கல்யாணம் பண்ணி பார்’ படத்திலும், வீண் கௌரவம் என்பது மனிதனை பைத்தியமாக்குகிறது என்பதை ‘கடன் வாங்கி கல்யணம்’ படத்திலும், ‘வேலையிலலத் திண்டாட்டம் குறித்து மிஸியம்மாவிலும், ‘குழந்தை இல்லாத ஒரு பெண் படும் துயரத்தை மங்கையர் திலகத்திலும், சமூகத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவனுடைய குடும்பம் எதிர்கொள்கிற அவலங்களை ‘பாக்கியவதியிலும்’ பேசியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களின் முன்னணி இயக்குநராக இருந்தவர் எல்.வி பிரசாத். இவரிடம் நான் வியப்பது, சினிமாவின் மீது கொண்ட மோகத்தினால் ஊரை விட்டு ஓடி வந்து சினிமாவின் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டு பின்னர் தயாரிப்பாளராகி, ஒரு ஸ்டுடியோவையும் நிர்வகித்து பெருவாழ்வினை வாழ்ந்ததன் பின்னணியில் உள்ள சினிமாவின் மீதுள்ள அவரது பேரார்வத்தைத் தான். அதனாலேயே தாதா சாகேப் பால்கே விருது உட்பட பல கௌரவமான விருதுகள் அவரைத் தேடி வந்தன.

சிலரை நினைக்கையில் நாம் பணியாற்றுகிற துறை மீது பெரிய மதிப்பு ஏற்படும் . அப்படியானவர்களில் ஒருவராக எல்.வி பிரசாத் எப்போதும் இருக்கிறார்.

***
தொடரும்
***

முந்தைய பகுதிகளை வாசிக்க –

***

ஜா.தீபா – deepaj82@gmail.com

யாவரும் செப்டம்பர் 2020 இதழ்

0

யாவரும் செப்டம்பர் இதழ் வெளியாகிவிட்டது.

கடந்த மாதம், நண்பர்களின் கூட்டு முயற்சியில் EIA தமிழ் மொழிபெயர்ப்பு செய்த பின்னர் கிடைத்த முக்கியத்துவம். நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய முடியும் என்கிற புரிதலுக்கான வெளியை உறுதிப்படுத்தியிருக்கிறது… ஆம் நீண்ட தூரம் தான். மெல்ல மெல்ல ஆரம்பித்துவிட்டோம். நண்பர் நந்தகுமாருக்கு நெஞ்சார்ந்த நன்றி. ஊக்கமளித்த விழியனுக்கும் நன்றி. தமிழக சட்டசபைத் தேர்தல் வேறு நெருங்குவதால், நிச்சயமாக அரசியலுக்கான இடம் நம் இதழில் விரிவடையும். கொரோனா தொற்று கற்றுக்கொடுத்த பாடமாகக் கூட எடுத்துகொள்ளலாம். எல்லா விழுமியங்களையும் மாற்றிப் போட்டுவிட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதாய் நம்பிக்கொண்டு இதை தட்டச்சு செய்வது எத்தனைப் பெரிய அப்பாவித்தனம்.

இந்த புதிய இயல்புத்தன்மை நம்மை எங்கே இட்டுச்செல்கிறதோ அங்கே பயணிப்போம். இலக்கு ஏதோ ஒரு புள்ளி என்றில்லை பயணிப்பது தான்.

***

கொரோனாவை அடிப்படையாக வைத்து நடத்திய க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி 2020ன் முதற்கட்ட தேர்வு முடிவுகள் நெடும்பட்டியலாக நாற்பது எழுத்தாளர்கள் அதில் உள்ளனர். அவர்களுக்கு எமது வாழ்த்துகள். விரைவில் இறுதி முடிவும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்

வழக்கம்போலவே சிறுகதைகள் குறிப்பிடும்படியான எண்ணிக்கையில் வந்துள்ளன – லாவண்யா சுந்தர்ராஜன், வேல்விழி முகில்நிலா, அகர முதல்வன், ரமேஷ் ரக்சன், சிவகுமார் முத்தய்யா, மணி எம்.கே மணி,, மௌனன் யாத்ரீகா, அருண்.மோ & ஆத்மார்த்தி என பங்களித்துள்ளார்கள்

கவிதைகள் வா.மு.கோமு, அமிர்தம் சூர்யா, தாமரை பாரதி, சுஜாதா செல்வராஜ், கௌரி ப்ரியா ஆகியோர் பங்களித்துள்ளார்கள்

நூல் விமர்சனமாக குட்டி ரேவதியின் விரல்கள் குறித்து தென்றல் சிவகுமாரும், ப்ளூமராங் பக்கங்கள் எனும் நூல் விமர்சனப்பகுதியில் சாரு நிவேதிதா குறித்தும் எழுதியுள்ளார்கள்

காத்திரமான சமகால அரசியல் விசயங்களை பாரதீ அவர்களும், கார்குழலி ஸ்ரீதர் அவர்களும் கட்டுரையாக வடித்துள்ளார்கள்
நாராயணி சுப்பிரமணியன் சூழல் பகுதியில் கட்டுரை வழங்கியிருக்கிறார். தொடர்ந்து அவர் நிறைய கட்டுரைகளை எழுத வேண்டும்.

ஜா. தீபா எழுதும் “நினைவோ ஒரு பறவை” தொடரில் ஏ.பி.நாகராஜன் குறித்து இந்த பகுதி வந்துள்ளது. திரும்பிப் பார்க்க வைக்கும் கட்டுரை

சென்ற மாதமே பெரிதும் கவனிக்கப்பட்ட எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுடனான கேள்வி பதில் பகுதியின் இரண்டாம் பாகம் இதிலும்.

டிராட்ஸ்கி மருதுவுடனான ஒரு சந்திப்பை ஆவணப்படுத்தியும் சில வருடங்களாகவே அதனை பதிவு செய்ய இயலாமல் போக, இப்போது கிடைத்த வாய்ப்பில் அவற்றை சரிபார்த்து வலையேற்றிவிட்டோம், ஒரு அசல் கலைஞனின் தீர்க்க தரிசனங்கள் நிறையவே இதில் தெரியும்.

அது போல, மொத்த இதழுக்கும் ஜாக்ஸன் போலாக்கின் ஓவியங்களை வைத்து அழகுப் படுத்தியிருக்கிறோம். மோசமான அரசியல் சூழலில் சிக்கியிருக்கும் நமக்கு கலை கொடுக்கின்ற கொஞ்சநஞ்ச ஆறுதல்களையும் அரசியல் செய்தே பிரித்து எல்லாவற்றையும் அதிகாரத்திற்கே இரையாகக் கொடுக்கும் போக்கு மலிந்து போன இக்காலத்தில், கலை இயல்பாகவே தன் மீது ஊற்றப்பட்ட சாயங்களைத் தோலுரித்துவிட்டுத் தொடர்ந்து இயங்கும் என்று தோன்றுகிறது. இன்றைய அரசியலுக்கு அன்றைய கலைஞர்களை பயன்படுத்தும் மோசமான முன்னுதாரணங்களை மறக்கடிக்கச் செய்யும் இந்த கலைஞனின் படைப்புகள் குழந்தமையை மீட்டுத் தரும் என்கிற நம்பிக்கை அது. அது எவ்வகையிலான படிநிலை என்றும் அதில் எத்தனை உறுதியானது என்றும் புரிந்துகொண்டவர்கள் நிசப்தமாகவே பயணிப்பார்கள். இதென்ன பிரமாதம் என்று இங்க் ஃபில்லரும் சார்ட் பேப்பரும் வாங்கிக் கொண்டு டேபிள்மேட்டை விரிக்கும் சுதந்திரம் எல்லோருக்குமானது அதை மறுப்பதற்கில்லை. அவரவர் தேர்வு. இது நம் தேர்வு —- >>> யாவரும் செப்டம்பர் இதழ்

இதழ் குறித்த அபிப்பிராயங்களை, குறைகளை editor@yaavarum.comற்கு அனுப்பி வையுங்கள்..

வேண்டுகோள் : – இணையதளத்தை தொடர்ந்து நடத்தவும், எங்கள் செயல்பாடுகளில் முன்னேற்றத்தை தொடர்ந்து எட்டவும் உங்கள் உதவியும் தேவைப்படுகிறது. அது எங்களை ஆதரிப்பது, விமர்சனங்களைத் தருவது, இதழினை மற்றோருக்குப் பகிர்வது ஆகியவற்றால் நிறைவேறும். (எங்கள் தாய் நிறுவனமான – யாவரும் பப்ளிஷர்ஸ் நூல்களை வாங்குவதும் கூட அவ்வாறனதே, எப்படி? <<<<—– இங்கே சொடுக்கவும்).

மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம்

மாறா அன்புடன்
ஜீவ கரிகாலன்


ஆசிரியர் குழு :

வேல் கண்ணன் லா-வோட்-ஸூ கவிதைக்காரன் இளங்கோ அகர முதல்வன்

ரமேஷ் பிரேதன் நேர்காணல் – பாகம் 2

1

உரையாடல் – சித்ரன், லஷ்மி சரவணக்குமார், முருகபூபதி, சபரிநாதன், சூர்யதேவ்

லக்ஷ்மி சரவணகுமார்: அதீதனின் இதிகாசம் கிரணத்தில் வந்தபோது அதை நீள்கவிதை என்றே நீங்கள் அறிவித்திருந்தாலும் நூலாய் வாசிக்கையில் அதையொரு நாவலாகவே உணரமுடிந்தது. அந்த வடிவத்திலான நாவல் எழுத்துமுறை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

அதீதனின் இதிகாசம் என்பது நானும் பிரேமும்  சேர்ந்து உருவாக்கிய அதி கதை மண்டலம். இதன் சொல்முறையில் உலகக் கலைஞர்கள், போராளிகள்   பலரின் மனச்சிதைவுற்ற வாழ்க்கை மற்றும் படைப்புகளின் தாக்கமுண்டு. குரூர அரங்கின் நிகழ்வுகளை எழுதிப்பார்க்கும் எத்தனம். இதில் பயின்று வரும் கவிதையியல் ஒழுங்கு, உள்நுழைந்த ஒருவரை வெளியேறவிடாமல் கதவை அடைத்துவிடும். அதிலிருந்து வெளியேற உயிர்ப்பலியிடவேண்டும். எனவே, அவ்வாழ்வியக்கப் படைப்பு வெளியிலிருந்து வெளியேற விரும்பிய சக படைப்பாளியான பிரேம் என்னைப் பலியிட்டார். காளியின் கழுத்தில் மாலையாகத் தொங்கும் கழுத்தறுபட்ட மண்டைகள் ஒன்றில் என் முகத்தை அடையாளம் காணலாம்.

சாருநிவேதிதாவும் அமரந்தாவும் கிரணம் இதழில் வெளியிட்ட அனைத்து ஆக்கங்களையும் ஒரே நூலாகத் தொகுக்கும்போது அதன் வடிவவொழுங்கை மாற்றியமைத்தேன். அவற்றின் மீது படிந்திருந்த பிற ஆளுமைகளின் செல்வாக்கை நீக்கினேன். சிலவற்றை நீக்கி, பலவற்றைப் புதியதாகச் சேர்த்து, சமகால பின்நவீனத்துவ வாசிப்புத் தொழில்நுட்ப முறைமையை உள்வாங்கி, அதை பிரதியாக்கத் தொழில்நுட்பத்திற்குப் பயன்படுத்தினேன். செவ்வகப் பாறையைத் தேர்ந்து சிலைவடிக்கும் வேலை. பிரேமின் ஒரு துளி விந்தை உள்வாங்கிக் கருத்தரித்து வளர்த்து ஈன்ற உயிர்த் தொழில்நுட்ப விளைவு. கிரணம் எழுத்துகள், அதீதனின் இதிகாசமாக உருமாற்றமடைந்த முப்பதாண்டுகளின் கதை இது. கவிதையை நாவலாக மாற்றிய ரசவாதம்.

கிரணம் எழுத்துகள் அதீதனின் இதிகாசமாக மாறியிருக்கிறது. இந்த அதீதனின் இதிகாசத்தை இன்று எழுதினால் கதை சொல்லும் முறையும் அதன் வீச்சும் வேறாக இருக்கும். அதுவொரு மூலச் செவ்வியல் பிரதி, அதைத் திருப்பித் திருப்பி எழுதி காலத்தையும் ஆற்றலையும் வீணடிக்க விருப்பமில்லை. ழான் ழெனே தனது முதல் படைப்பான கடுங்காவல் என்ற நாடகத்தைத் தன் வாழ்நாள் இறுதிவரை செப்பம் செய்தபடி இருந்தார். தனது முதல் படைப்பே உயிரோடு வாழ்ந்துபார்த்த இறுதிப் படைப்பாகவும் அமைந்துவிட்டது. அதுபோலவே நானும் பிரேமும் இணைந்து செய்த முதலும் முடிவுமான ஆக்கமாய் அதீதன் முடிந்துவிட்டான்.  இரட்டையரின் வலிநிறைந்த வாழ்க்கையில் விளைந்த இப்பனுவல், சவப்பேழை வடிவில் அமைந்த பனுவல், இது இப்படியாகவே இருக்கட்டும். ஒற்றைச் சவப்பெட்டிக்குள் இரண்டு பிணங்கள். இப்பனுவலின் எழுத்து முறையைத் தன்னியல்பாகச் சிலர் கவினுறப் பின்பற்றுகிறார்கள். படைப்பிலக்கியத்துறையில் அதீதன் செலுத்தும் தாக்கம் அதிகம். ஆனால், விமர்சன அறிவொழுங்கு இல்லாத தமிழில் எந்தவொரு கல்விப்புலமோ இலக்கியப்புலமோ இப்பனுவலைக் குறிப்பிடுவதில்லை. இது, இருவர் கண்ட கிரணம் எழுத்தியக்கம்; இது, இருள் மனவெளியில் நிகழும் மூன்றாமுலகப் பேரரசியல் செயல்பாடுகள் பற்றிய நுண்சொல்லாடல்கள் என்பதைக் கூரிய விமர்சகர்களே விரித்து விளக்கி எழுதவேண்டும்.

சபரிநாதன் : நீங்கள் எழுதவந்தபோது தமிழ் நவீனக்கவிதை மரபில் எவ்விடத்தில் தங்களை பொருத்திக்கொண்டீர்கள்? அது பற்றி எத்தகைய விமர்சனங்களைக் கொண்டிருந்தீர்கள்? எத்தகைய எதிர்பார்ப்புகள் இருந்தன உங்களிடம்?

பாரதி, பாரதிதாசன் வழியாகத்தான் தமிழின் நவீன இலக்கியத்துக்குள் நுழைந்தேன். இலக்கியம் என்றால் என்னவென்றே அறியாத தமிழ் பொதுப்புத்திக்குள்ளிருந்து வெளியேறி தமக்கான மாற்று வெளியைக் கட்டமைத்துக்கொண்ட சிறு பத்திரிகைத் தளம் என் முகத்தில் கதவை அறைந்து சாத்தியது. இத்தளத்தில் செயல்பட்ட படைப்பாளிகள், விமர்சகர்களின் வாசிப்பும் படைப்பும் வேறாகவும் மனம் என்பது வர்ணாசிரமத்துக்குள் புதைந்தும் இருந்தது. இங்கு சக இலக்கியவாதிகளின் வட்டார அணுக்கம் என்பதை, நுணுகிப் பார்த்தால் அது சாதிய அணுக்கமாக இருந்தது. இன்று சொல்கிறோம், தலித் இலக்கியத்தைச் சாதிய இலக்கியம் என்று; ஆனால், இங்கு தொடக்கம்முதல் எல்லாமே சாதிய இலக்கியம்தான். எடுத்துக்காட்டாக, மெளனி சூத்திரராக இருந்திருந்தால் முதலிடத்தில் வைக்கப்பட்டிருக்கமாட்டார். கால் வைத்து நடந்த இடமெல்லாம் நான்கு வர்ணப் பூணூலில் சிக்கித் தடுக்கிவிழுந்தேன். இங்கு இடதுசாரிகள் மட்டுமே ஒப்பீட்டளவில் சாதியிலிருந்து வெளியேறியவர்களாக இருந்தனர். சக இலக்கியவாதிகள் எனது சாதியைத் தெரிந்துகொள்ள திருட்டு ஆர்வம் கொண்டிருந்தனர். புதுச்சேரிக்காரன், வெளியிலிருந்து வந்தவன், என்னைத் தமிழ்க்கவியாக ஒரு நிலப்பகுதியின் வட்டத்துக்குள் அடைத்து வகைப்படுத்த இயலவில்லை. இப்படியிருக்க, அன்று முதல் இன்றுவரை அந்நியப்பட்டு வெளியில்தான் நின்றுகொண்டிருக்கிறேன். நான் வேளிர் தொல்குடியோன், நவீனத் தமிழிலக்கியன்; ஆனால், இந்தியத் தமிழ்ப் பண்பாட்டு அரசியலை வடிவமைக்கும் பிரம்மனின் உடம்பிலிருந்து வெளியேறியவன். எனக்கு ஐம்பத்தியைந்து வயதாகிறது; இதுவரை, தன் சாதியிலிருந்து வெளியேறிய ஒரு தன்னிலையைச் சந்தித்ததில்லை.

சங்கம் தொடங்கி திருக்குறள், திருமந்திரம் வழியாக வள்ளலாரில் வந்தடையும் சித்தர் மரபிலக்கியம், சமணமும் பெளத்தமும் வழங்கிய பேரிலக்கியங்களை உள்வாங்கி; துணைக்கண்டத்துக்கு வெளியிலிருந்து நவீன – பின்நவீன கலை இலக்கியங்களை எனக்கான அடித்தளமாக்கிக்கொண்டேன். இவற்றிலிருந்து நான் ஆக்கியது மிகக்குறைவானவை; காரணம், என்னை நான் நகலெடுப்பதில்லை. எதிர்பார்ப்புகள் என்று என்னிடம் எதுவும் இருந்ததில்லை. எதிர்பார்த்தல், சாதித்தல் என்பவை அரசியல்வாதிகளுக்கான சொல்லாடல்; இவை கலை இலக்கியவாதிகளுக்கானவை இல்லை. தொடக்கத்தில் மூத்த எழுத்தாளர் பலர் என்னிடம் வாழ்ந்து பெற்ற அனுபவமும் மண் வாசனையும் இல்லை என்றனர்.  நான் வாழ்ந்து பெற்ற அனுபவத்தை எழுதினால் பண்பாட்டுப் பாதுகாவலர்களால் கொல்லப்படுவேன் என்பதை அறிந்தே சொன்னார்கள். மேலும், மண்வாசனை என்பது இங்கு வர்ண வாசனைதானே.

சபரிநாதன் : நவீனக்கவிதை தனிமனித சுயம் சார்ந்த மையம் கொண்டே பெரும்பாலும் இயங்கி வந்துள்ள போது தமிழ், தமிழர் என ஒரு கூட்டுமையம் உங்கள் கவிதைகளில் உள்ளது. ’நான்’,’என்’ இருப்பது போலவே ’நாம்’’எம்’ போன்ற தன்னிலைகளும் உள்ளன. தனியொருவனின் வாழ்வனுபவம் என்பதைத் தாண்டி ஒரு கூட்டுவாழ்வே உங்களுக்கு முக்கியத்துவமுடையதாய்ப் படுகிறது எனலாமா?

ஆம், புவிக்கோளகையில் எந்தவோர் உயிரினமும் தனித்திருப்பதில்லை. தனித்திருப்பதற்கு இனப்பெருக்கம் எதற்கு? குடும்பம், குமுகம், உலகம் என்ற கூட்டமைப்பில் நான் என்பதற்கான இடம் பிறப்பிலும் இறப்பிலும் மட்டுமே ஓர் உடம்பில் பொருள்படுகிறது. எனது வயது என்பது குறைந்த அளவில் ஐயாயிரம் ஆண்டுகள் என்று அறுதியிடப்படுகிறது. இந்த மனிதவுலகின் வரலாறே எனது சொந்த உடம்பின் வரலாறாக இருக்கும்போது, இறப்பற்ற எனது மரபணுக்களின் மூலம் மரணமற்ற பெருவாழ்வில் நான் கட்டமைந்திருக்கிறேன். சுயம் என்ற இயங்கியல் மறுத்த அபெளதிகத்துக்குள் சுருக்கிக்கொள்ளும்போது பரிணாமமற்ற கவிதையியலைக் கண்டடைகிறோம். எழுத்து, சொல், பொருள். எழுத்து பலவாகும்போது சொல்லாகிறது, ஒவ்வொரு சொல்லும் பொருளுடையது என்னும்போது, சொற்களின் பெருக்கம் கவிதையாகிறது. ஒரு கவிதை இறப்பற்ற பனுவலாகிப் பெருகுவதற்கு ஓயாத பொருள்கூறலுக்கு வழிவைத்திருத்தல் வேண்டும். கவிதை என்பது கூட்டுப் பிரக்ஞையின் விளைவு; அது தனி ஒரு நசிவில் உருவாவதில்லை. சிறகிலிருந்து பிரிந்த இறகு காற்றின் தீராத பக்கங்களில் தன்னை உதிர்த்த பறவையின் வாழ்வோடு சேர்த்து தன்னையும் எழுதிச்செல்வதே பொருள் இயங்கியல். இப்படிமத்தை மொழியிலிருந்து ஒலி ஊடகத்திற்கு மாற்றி சிம்ஃபோனி இசைக்கோர்வையில் கட்டமைத்தால், பியானோவின் ஒலிக்கட்டைகள் மீது நடக்கும் புறாவைக் காணலாம். சொற்களின் பேரியக்கமே கவிதை முதலான மொழிக்கலை வடிவங்களைக் கட்டமைக்கிறது. காலந்தோறும் மாறி நின்று பொருளுரைப்பதே கவிதையின் இயங்கியல். விதைக்குள் காடு என்பதே உயிரியங்கியல். நான் என்பது ஒருமை எனச் சொல்வது மொழி இலக்கணம்; நான் என்பது ஒருமை இல்லை அது பன்மை எனச் சொல்வது சமூக இயங்கியல். வாழ்க்கை என்பது சமூகத்தால் கட்டமைக்கப்படும் தனிமனித இயங்கியல். இதுவரையான இந்தப் பூமியின் மொத்தக் காலமும் மனித மூளைக்குள் சேகரமாகி இயங்கிக்கொண்டிருக்கிறது; அது தனியுடம்பின் மண்டைக்குள் இருந்தாலும் உலகச் சமூகங்களின் தொகுக்கப்பட்ட அறிவுக் களஞ்சியமாக இருக்கிறது. மூளையால் உருவான எல்லாம் சமூக இயங்கியலின் கூட்டு விளைவே.

முருகபூபதி : நாடக நிலத்தில் நடிகனின் மன உடலும், அதற்கு வெளியே இயங்கும் பொது உடலும் ஒன்றையொன்று சந்தித்துகொள்ளும் இடத்தில் நிகழ்வதென்ன? இன்றைய நடிகனுள் சூல் கொள்ளும் நடிப்புக்கலையின் பாதைகள் எங்கெல்லாம் அலையுறுகின்றன, எங்கிருந்து எடுத்துக்கொள்ள முடியும்?

நாடக நிலத்தில் நடிகரின் உடம்பு ஒரு பிரதியாகிறது; அது குறியீடுகளாகவும் உருவகங்களாகவும் பொருள்கொள்ளப்படுகிறது. நடிகரின் உடம்பானது மேடையில் குவிந்திருக்கும் அரங்கப் பொருட்களில் உயிருள்ள ஒரு பொருள். ஒரு நடிகர் தன்னளவில் தன்னுடம்பிலிருந்து வெளியேறி நின்று அதன் அங்கங்களைத் தனித்தனியாகப் பிரித்துப்போட்டு வெவ்வேறு வடிவங்களில் கோர்த்து  அதன் இயல் ஒருமையைக் குலைக்கிறார். மேடைக்கு வெளியே ஒற்றைப் பொருள்கோளால் நிலைநிறுத்தப்பட்ட உடம்பு, மேடையில் தன்னை வெவ்வேறாகப் பொருள்கொள்ள அனுமதிக்கிறது. நிகழ்த்துப் பிரதிக்கேற்ப ஓர் உடம்பு ஒரு கலைப்பொருளாகிறது. நிகழ்கலை மேடையில் கலைப்பொருளாகும் உடம்பு, போர்க்களத்தில் ஒரு கொலைக்கருவியாகிறது. ஒரு சமூக உடம்பு தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளிலிருந்து வெளியேறி, தன்னை வேறாக பொருள்படுத்துவது நிகழ்த்துக்கலைகளில் மட்டுமே சாத்தியப்படுகிறது. நடிக்கும் உடம்பு சமூக அதிகாரத்துடன் கண்ணாமூச்சி விளையாடுகிறது. இயல்பில் ஒவ்வோர் உடம்பும் ஒரு புனைப்பனுவல். ஒவ்வொருவர் வாசிப்பிலும் வெவ்வேறாகப் பல்கிப்பெருகும் பனுவலுக்கு முற்றான ஒற்றை வாசிப்பு வரலாற்றில் ஒருபோதும் சாத்தியமில்லை. சமூக அதிகாரம் உடம்பின் வாசிப்பை நேர்ப்படுத்தி வகைப்படுத்தி தனது அறிதலின் எல்லைக்குள் அடக்கிக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. எனவே, நாடகமேடையில் இயங்கும் ஒரு பனுவல் ஒற்றைப் பொருள்கோளிலிருந்து நழுவி தனக்கான பன்மைத்துவத்தை ஆர்ப்பாட்டத்தோடு கத்திக் கதறித் தெரிவிக்கிறது. யாரொருவராலும் எந்தவோர் உடம்பையும் அறுதியிட்டு வாசித்துப் பொருள்கொள்ள முடியாது. தனியுடம்பின் விடுதலையே ஒரு நிலப்பகுதியின் விடுதலை; நாடகமேடை என்பது விடுதலையடைந்த ஒரு நிலம். இந்திய விடுதலைப் போராட்டக்காலத்தில் அதிகாரத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் தமிழ் நாடகவெளி ஒடுக்கப்பட்டது. முன்கூட்டியே தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நாடகப்பிரதி, மேடையில் நிகழ்த்தப்படும்போது நடிகர்களின் உடல்மொழி புதிய பரிமாணங்களைப் பல்கிப்பெருக்கி பார்வையாளர்களுக்கு அதை வேறொன்றாகப் பொருள்படுத்தியது. நிகழ்த்துக்கலைகள் பெரிதும் மொழியைச் சார்ந்து இயங்காமல் உடம்பைச் சார்ந்து இயங்குவதால்; அதிகாரத்தின் கண்காணிப்பு மொழிமேல் குவியும்போது நடிகரின் உடம்பு, பிரதியை வேறொரு தளத்திற்குக் கடத்திவிடுகிறது. ஓர் உடம்பு மொழியின் அதிகாரத்தைக்கூட ஏமாற்றி பிரதியை வேறொன்றாகப் பொருள்படுத்திவிடும் தன்னிச்சையான இயக்கம்கொண்டது. ஒரு நாடகத்தின் ஆசிரியர் பிரதி, இயக்குநர் பிரதி, நடிகர் பிரதி, இவை மூன்றும் வெவ்வேறாக இயங்கக்கூடிய சாத்தியமுள்ளவை. நாடகவெளி எதற்குள்ளும் அடைபடுவதில்லை; அதற்குள் எந்தவொன்றும் அடைபடுவதுமில்லை. ஆக்டோபஸ்களின் நடனத்தின் உட்பொருள், ஐம்புலன்களின் ஐம்புலங்களின் விடுதலை.

சூர்யதேவ் : ஆங்கில இலக்கியத்தில் மில்ட்டனின்   இழந்த சுவர்கத்தில்  கடவுளின் கையைவிட  சாத்தானின் கை ஓங்கியுள்ளதாக விமர்சனம் ஒன்று உண்டு. தாங்களோ பைசாசத்தைத் தேடி வரித்துக்கொண்டீர்கள். நன்மை என்று பேசுவதே தன்னை ஏமாற்றிக்கொள்ளும் தந்திரம் என்று உணர்ந்தீர்கள். மேலும் பைசாசத்தைத் தங்களின் படைப்பூக்க உத்தியாகவும் பயன்படுத்தினீர்கள். பைசாசத்தின் மீதுள்ள ஈர்ப்பே இனிவரும் தலைமுறையினருக்கும் உங்கள் படைப்பை நிலைத்திருக்கச் செய்யும் என்று நம்புகிறீர்களா?

“நடுநிசி மதியம்’’ என்ற கவிதையே உங்கள் கேள்விக்கான பதிலாக அமையலாம். தாய்மை திரிந்த பேய்மையின் கவிதையியலை நாட்டார் மரபு, காப்பிய மரபு, பக்தி மரபில் தொடர்ந்து வருவதைத் தடங்காணலாம். நாட்டார் கதைவெளியில் நடமாடும் நீலியின் நீட்சியைக் கண்ணகியிடம் காணலாம். வளர்த்தெடுக்கப்பட்ட கண்ணகியின் கதையாடலைப் புனிதவதியிடம் காணலாம். நல்லத்தங்காள் கதை ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஏதேனுமொரு தமிழ்க் குடும்பத்தில் நிகழ்ந்துவிடுகிறது. பேய் என்பது தமிழ் நிலத்தில் பெண்ணாலான மனப்பிறழ்வின் இருப்பு. எனது கவிதைகள், கதைகள், நாவல்களில் பேய்களின் நடமாட்டத்தைக் காணலாம். 

பெண்பேய் வாழும் தொல்தமிழ்க் கதைக்குள்
பேயைப் புணரும் இச்சையில் அலைந்து
பைத்தியம் பிடித்துத் தற்கொலை செய்த
எளிய கவிஞனைப் பற்றிய நினைவுகள்
வாழும் இன்றைய தலைமுறைக் கில்லை.

“பனுவல் வெளியே பேய்கள் இல்லை
புணர்ச்சியும் இல்லை கொலையு மில்லை
நீலி திரியும் ஆலங் காட்டில்
பேயைப் புணர்ந்த முக்கண் சடையன்
ஆட்டம் பார்த்தால் பித்தம் தெளியும்
போய்வா கவியே பேயின் யோனி
பெளர்ணமி இரவில் வான்தலை சுடரும்”.

ஆலங் காட்டில் நடுநிசி மதியம்
எலும்பும் தோலும் பேன்தலை விரிசடை
சடலம் எரியும் வாடை குமைந்திட
காரை பேய்மகள் எதிரில் வந்தாள்
தாய்மை பிசகிய பேய்மையின் தரிசனம்
புழுக்கள் நெளியும் சொற்களின் கவித்துவம்
மாயம் செய்யும் மந்திரம் மொழிந்தாள்
தலைகள் சுழற்றி விழுதுகள் விசிறி
ஆடும் ஆலம் ஓசை அடங்கிட
காட்டின் அமைதி இரவின் விளிம்பில்
ஒற்றை விழுதைக் கழுத்தில் சுற்றிய
கவிஞனின் சடலம் அந்தர நடனம்
கலைத்துவம் செறிந்த தற்கொலை மரணம்
காரை காற்பேய் கவிஞனைக் கொன்றது.

செம்மொழிப் பனுவலில் ஆண்பேய் வாழ்ந்திட
அனுமதி இல்லை; பெண்பேய் ஃபாசிசம்
புதுவைக் கவிஞன் செத்தும் தரிக்க
இடமற் றலைந்தான் பனுவல் வெளியே
பேயுடன் வாழ்பவன் கவிதை செய்வான்
பேயைப் புணர்ந்தவன் கடவுள் ஆவான்
செம்மொழி, கவிஞன், கடவுள், பெண்பேய்
சொற்களைத் தின்று தற்கொலை பட்டேன்.

(நடுநிசி மதியம் / புது எழுத்து / 2019.)

பைசாசம், பேய்மை யாவும் எதிர்ச்சமூகச் சொல்லாடலில் கட்டமைவது. பொதுவாக, சமூகத்திலிருந்து விலகிய தன்னிலையே பைத்தியம், பைசாசம் போன்ற மனப்பிறழ்வின் நாடகங்களை நிகழ்த்துகிறது. எனது இலக்கியம் யாவும் எதிர்ச்சமூகச் சொல்லாடல்களால் கட்டமைவது. பொதுச்சமூகம் தனது உள்ளடக்கமாகத் தாய்மையின் அரசியலைக் கொண்டியங்கும்போது; எதிர்ச்சமூகனான நான் பேய்மையின் அரசியலைக் கொண்டியங்குகிறேன். உலகப் பெருமதங்கள் பெண் அறிவாளிகளைப் பேயாக்கிவிடும்; புனிதவதியாரைப் போல. தமிழ் இலக்கியத்தில் பேய்க் கதையாடல்களைத் தொகுத்துப் பார்த்தால் இது துலங்கும். பேய்களாலானவன் பேய்களால் நினைவுகூரப்பட்டால் மகிழ்ச்சிதான். பேயைப் புணராத கவிஞன் முழுமையடைவதில்லை.

தாய்வழிச் சமூகம், தந்தைவழிச் சமூகமாகத் திரியும்போது கூட்டுச் சமூக மனத்தின் தாய்மையின் அரசியல் திரிந்து பேய்மையின் அரசியல் கட்டமைந்தது. சமூக உற்பத்தி உறவுகளில் தாய்மையின் அரசியலும் சமூக அதிகாரக் கட்டமைப்பில் போரியல்சார் பேய்மையின் அரசியலுமாக இனம் பிரிந்தன. தாய்மை, பேய்மை என்பவை ஆண் – பெண் என்ற பால்நிலை எதிரிடை இல்லை. ஆண் நிலை, பெண் நிலை என்ற தனித்த பால் நிலை அரசியல் திரிந்த ஆபெண் கவிதையியலை முன்னெடுப்பதாக எனது பனுவல்கள் கட்டமைகின்றன.

லக்ஷ்மி சரவணகுமார்: உங்கள் கதைகளில் மனநலம் பாதித்தோரின் அக உலகம் பற்றிய பாதிப்புகளை நிறைய காணமுடிகிறது. ஒரு கதையில் பொம்மையை வைத்து எல்லோரிடமும் பிள்ளைக்குப் பால் கொடுக்க வேண்டுமென பிச்சையெடுக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருநாள் நிஜமான குழந்தையுடன் அவ்வாறு பிச்சையெடுப்பாள். அந்தக் கதையில் அவள் மீதான கரிசனமே மிகுதியாய் வெளிப்பட்டிருக்கும்.  அதேபோல் சமீபத்திய நாவல்களிலும் மனப்பிறழ்வின் பதிவுகளை அனேகமாய்க் காணமுடிகிறது. மனப்பிறழ்வைக் குறித்தும் மனப்பிறழ்வு கொண்டவர்களைக் குறித்துமான உங்களது பார்வையென்ன? படைப்பாளிகளிடம் இருக்கும் எக்ஸன்றிக் தன்மைகளையும் நாம் பிறழ்வின் கூறுகளாய் எடுத்துக் கொள்ளலாமா?

மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞனிடம் கேட்கவேண்டிய கேள்விதான் இது. பொம்மை – குழந்தை என்ற சிறுகதையை முன்வைத்துத் தொடங்கும் இக்கேள்வி என்னுடைய அனைத்துவகைப் புனைவெழுத்துகளிலும் மனம் பிறழ்ந்த மனிதர்களின் இருப்பு பற்றி தொட்டுக்காட்டுகிறது. ஆம், பொம்மை – குழந்தை கதையில் இடம்பெறும் இயல்பு பிழன்ற மனிதர் அனைவரையும் தொட்டுப் பழகி நழுவியிருக்கிறேன். என் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் யாரேனுமொரு மனம் பிழன்றவரிடம் சிக்கிச் சின்னாபின்னமாகியிருக்கிறேன். கடவுள் என்ற உருவகமே மனிதமனத்தின் சிக்கலான பிறழ்வின் உச்சம்; அதிலிருந்து ஒருக்காலத்திலும் மனித இனம் தெளிவடையமுடியாது. எந்தவொரு மதத்திலும் எந்தவொரு நாட்டிலும் கடவுளை வழிபடும் தலம் என்பது மனநல மருத்துவமனையாகவே விளங்குகிறது. மனப்பிறழ்வு ஒவ்வொருவருக்குமுண்டு; அதன் விழுக்காடு மட்டுமே ஆளாளுக்கு வேறுபடும். போர்க்களத்தில் ஒருவரையொருவர் கொல்ல ஆயுதமுனையில் உறையும் இருவேறு தன்னிலைகளின் மனம் ஒரே புள்ளியில் திகைத்து நிற்கும் கணமே சூன்யம்; சூன்ய மனத்தின் விளைவே கொலையும் தற்கொலையும். மனிதயினத்தில் கடைசியாய் மீந்து நிற்கும் இருவரில் ஒருவர் மற்றவரைக் கொன்ற பிறகு தற்கொலை செய்துகொள்வார். உடம்பு மட்டுமே ஒருவருக்குச் சொந்தம்; அதில் வினையாற்றும் உள்ளம் என்பது சமூகக் கூட்டு வடிவம்; இரண்டாம் உலகப்போரைத் தொடங்கி முடிவுக்குக் கொண்டுவந்த அரசியல் மனமும் இயற்பியல் மனமும் கொலையின் இறையியல் தன்மைகொண்டவை. இறையியலே மனப்பிறழ்வின் உச்ச பாவனை. உயிரியல் உலகில் மனிதவிலங்கு இறுதியில் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும். அணு ஆயுதம் என்பது மனநோயின் ஆகப்பெரிய எதார்த்தம். சக படைப்பாளர்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது; நான் கொலையையும் தற்கொலையையும் தள்ளிப்போடவே கவிதைகளையும் கதைகளையும் எழுதுகிறேன். அற இலக்கியம், நீதி இலக்கியம் என்பவை; குறிப்பாக தமிழின் மூத்த பனுவலான திருக்குறளின் ஆகப்பெரிய சமூகப்பணி, கொலையையும் தற்கொலையையும் தள்ளிப்போடுவதே. கண்ணகிக்கு நேரெதிரிடை மணிமேகலை; பேய்மையின் அரசியலைத் தாய்மையின் அரசியல் எதிர்கொள்ளும் புள்ளி. பைத்திய உள்ளம் வெற்றில் ஒடுங்கும். வெறுமையின் கவிதையியலை எழுதிப்பார்க்கிறேன்

லக்ஷ்மி சரவணகுமார்: உங்கள் புனைவுலகின் தொன்மமானது புதுச்சேரியை அதன் மனிதர்களை மீண்டும் மீண்டும் சுற்றி வருகிறது. நிலத்தின் மீதான இந்தத் தொன்ம மீட்டுருவாக்கத்தை நீங்கள் திட்டமிட்டே உருவாக்குகிறீர்களா?

வர்ண, வர்க்கப் படிநிலையாலமைந்த எந்தவோர் இந்திய நிலப்பகுதியும், அதில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் காட்சியாகும். அதுபோலவே புதுச்சேரியும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையில் புலப்படும். எனக்குப் புதுச்சேரி என்பது கொடுங்கனவுகளாலான நகரம்; இங்கு கடலும் அதுசார்ந்த நிலமும் இடுகாடுகளும் சுடுகாடுகளும் தவிர, சிறுவயதிலிருந்த காடும் கழனியுமே நான் பயமற்று இளைப்பாறும் இடங்களாகும். நூலகத்தலங்கள், வழிபாட்டுத்தலங்கள், சாராயக்கடைகள் யாவும் விலங்குகளைக் கொன்று இறைச்சி பதனிடும் கூடங்களாகவே என்னுள் மனப்பதிவாகியுள்ளன. இன்று இந்நிலத்திலிருந்து சொந்தம்கொண்டாட மனிதர் ஒருவருமில்லை. என்னை நானே நினைவில் நிறுத்திய காலம் முதலாகக் கிழக்குக் கடல் மட்டுமே என்னுடன் இருக்கிறது; பிறந்த ஈரம் இன்னும் காயாத அம்மாவின் பனிக்குட நிணநீர் நெடிபோல இறுதிவரை உடனிருப்பது. புதுச்சேரியிலிருந்து நான் பெற்றுக்கொண்டது எதுவுமில்லை. எனது கவிதைகளிலும் கதைகளிலும் ஒரு பெயர்ச்சொல்லாக இடம்பெறுவதால் இந்த நிலத்திற்கு ஓர் அடையாளமும் மரியாதையும் கிடைக்கிறதே தவிர; இதனால் எனக்கு எதுவும் இன்றுவரை கிடைத்ததில்லை. சுப்ரமணிய பாரதி என்ற கவி இங்கு பத்தாண்டுகள் தலைமறைவாக வாழ்ந்தார், பெரும் படைப்புகளை யாத்தார் என்பதைத் தவிர, பெருமிதம்கொள்ள எனக்கு இங்கு எதுவுமில்லை. முன்னோடிகளான பாரதிதாசனையும் பிரபஞ்சனையும் என்னால் கொண்டாடமுடியவில்லை; அவர்கள் எனக்கானவர் அல்லர். எனது எழுத்துகளில் வரும் இந்நகரம் ஒரு பாசாங்கு. Pondichéry: trilogy of French India என்ற நாவல்களின் முத்தொகையைப் படித்தால் இது விளங்கும்; இந்தக் கேள்விக்கான பதிலும் கிடைக்கும். பொந்திஷேரி தனி நாடாக இருந்திருந்தால் நான் வேறாக இருந்திருப்பேன்; நான் பிறப்பதற்கு முன்பே இந்திய அரசியல்வாதிகள் என்னைக் கொன்றுவிட்டனர். எனது புனைவுகளில் வெளிப்படும் தவிப்பும் ஏக்கமும் இம்மண்ணின் மைந்தர்களின் ஆழ்மன வெளிப்பாடு. பிரேதன் ஓர் உயிருள்ள பிணம்.

பொந்திஷேரிக்கான தொன்மத்தை நான் மீட்டுருவாக்கவில்லை; முதன்முதலாக, புதிதாக உருவாக்கியிருக்கிறேன்; Oui, Pondichéry, c’est mon Macondo.

சபரிநாதன் : தமிழ் தொன்மவியல் உங்கள் கவிதைகளின் சூழமைவாகவே உள்ளது. உங்கள் சிந்தையும் கற்பனையும் அதனால் கட்டமைக்கப்பட்டது என்று சொல்லலாமா அல்லது அது ஒரு வரலாற்று நினைவேக்கம் மட்டும் தானா?

என்னை ஒருபோதும் ஒருமையாய் உணர்ந்ததில்லை; நான் பன்மையின் தொகுப்பு. சமூகம் என்பது தனிமனிதர்களின் தொகுப்பு. சமூக இயங்கியலின் பொருண்மைப் பொருளுரைப்பே வரலாறு. வார்த்தைகளையும் வாக்கியங்களையும் வரலாற்றிலிருந்தே தேர்ந்து தொகுத்து இலக்கியம் செய்கிறேன். இது என்னுடையது என்று நான் எழுதியதில் எந்தவொன்றையும் சொந்தம்கொள்ள முடியாது. கல் மண் சுண்ணாம்பு மனித உழைப்பு என்பதெல்லாம் பூமியிலிருப்பவை; வெளியிலிருந்து எந்தவொன்றையும் கொண்டுவந்து ஓர் இருப்பிடத்தை என்னால் கட்டிக்கொள்ள முடியாது. அதுபோலவே, சமூகத்துக்கு வெளியே கலை இலக்கியம் தத்துவம் கடவுள் என எதுவுமில்லை. எளிமையாகச் சொன்னால் தமிழ், தமிழர் இவற்றிற்கு வெளியே நான் இல்லை. இந்த மண்ணில் வேர் தைத்து வெளியில் திசையெட்டும் வழியெல்லாம் கிளைப்பரப்பி எனது தனித்துவத்தைக் கட்டமைத்துக்கொள்கிறேன். என்னுடைய நிலா தமிழ் நிலா. வங்காள விரிகுடாவிலிருந்து மேற்குத்தொடர்ச்சி மலைவரை எனது புனைவு வெளியைத் தோராயமாக வரையறுத்து எழுதுகிறேன். ஆப்ரிக்கப் பழங்குடிகள், ஆஸ்திரேலிய அபாரிஜின்கள், பப்புவா நியூகினி இனக்குழுக்கள், மாயன் தொல்குடிகள் என எங்கெல்லாம் என் மொழியுயிரிகள் பரவியிருக்கின்றனவோ அங்கெல்லாம் நான் பயணப்படுகிறேன். உலகின் எல்லா இனக்குழுக்களும் வரலாற்றில் ஓரிடத்தில் தேங்காமல் இடம்பெயர்ந்துகொண்டே இருக்கின்றன. எனக்கு வரலாற்றுக் காலம், இடம் சார்ந்த ஏக்கமில்லை. நான் செத்துவிட்ட பிறகும் இடம்பெயர்ந்துகொண்டேயிருப்பேன். கண்ணகி, புனிதவதி, நீலி, நல்லத்தங்காள், இதன் வழி தொடரும் ஒரு புனைவுச் சரடையே தமிழ்த் தொன்மம் எனத் தடம் காண்கிறேன். கொற்றவை, கண்ணகி, காளி என இதன் நீட்சியே இத்துணைக்கண்டத்தில் ஒரு தாய்வழிச் சமயத்தைக் கட்டமைக்கிறது. அதன் வழி, என் உள்ளக் கட்டமைப்பு சாக்தேயத்தாலானது. என்னுடைய ஆதியினத் தேவதைகளின் தலைமறைவுக் காலம் என்ற நெடும் புனைவின் வழி விளங்கும். தாய்மைத் திரிந்த பேய்மையே எனது கவிதையியல்.

லக்ஷ்மி சரவணகுமார்: தத்துவச்செயல்பாடுகள் ஒரு சமூகத்தில் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பாசிசம் முன்னெப்போதையும்விட பெருமளவில் ஆக்ரமித்திருப்பதாகத் தோன்றுகிறது. முக்கியமாக இந்தப் போக்கு அதிகமும் அச்சுறுத்துவது கலைஞர்களைத்தான். சுதந்திரமாகச் சிந்திக்க முடியாத செயல்பட முடியாத இந்தக் காலகட்டத்தை ஒரு கலைஞனாய் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

ஆரியம் இத்துணைக்கண்டத்துக்குள் ஊடுருவிய காலம் முதலாய் சனாதனம் என்ற பூதம் இம்மண்ணின் மக்களைக் கொன்று குருதி குடித்துக் கொழுத்துப் பெருத்து நிலையாக நிற்கிறது. இந்து சனாதனமே இந்தியப் பாசிசம். சமூக ஓட்டத்தில் ஒரு தத்துவம் நின்று நிலைபெற்று காலப்போக்கில் பொதுப்புத்தியை வடிவமைத்து அதிகாரமாய் உருத்திரளும்போது அது மெல்ல மெல்ல பாசிசமாக எழுகிறது. மாறாக, சனாதனம் திட்டமிட்டு வடிவமைத்த மனுநீதிச் சமூகம் பாசிசத்தையே மாறாத தத்துவமாக முன்வைத்தது. சனாதன் என்றால் மாறாதது, நிலையானது என்று பொருள். மாற்றம் ஒன்றே மாறாதது எனச் சொல்லும் இயங்கியல் பொருள்முதல் கருதுகோளுக்கு நேரெதிரானதே எதுவும் மாறாது என்னும் சனாதனம். இந்தியக் குடிமை அமைப்புகள் சனாதனத்தை அடிப்படையாகக்கொண்டே கட்டப்பட்டுள்ளன. இதைத் தகர்ப்பதற்கே சனாதன வைதீக மரபிற்கு மாற்றாக அவைதீக மரபில் புத்தர், அம்பேத்கர், அயோத்திதாசர், ஈ. வே. ரா. பெரியார், தொல். திருமாவளவன் போன்ற சமய தத்துவ அரசியல் மேதைகள் வரலாறு நெடுகிலும் எதிர்ச்சொல்லாடல்களை உருவாக்குகிறார்கள். இருபது நூற்றாண்டு ஆரியத்திற்கு எதிரான ஒரு நூற்றாண்டு திராவிடத்தின் சொல்லாடல்கள் பெளத்தம், மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம் இவற்றை உள்வாங்கி ஒன்று திரண்டு சனாதனப்பூதத்திற்கு எதிர் பூதமாய் நிற்கிறது. மொகலாய, ஐரோப்பிய காலனியாதிக்கத்திற்கு இத்துணைக்கண்டம் ஆட்பட்டிருந்தபோதும் சனாதனம் அதற்குத் தகத் தன்னை உருமாற்றி நிலைப்படுத்திக்கொள்ளும் அரசியற்றன்மை கொண்டிருந்தது. இன்று, இச்சூத்திரத் துணைக்கண்டத்தில் என்றும் காணாத ஆர்கச உச்சச் சிலிர்ப்பில் பார்ப்பனப் பாசிசம் உடம்பு சிலிர்த்துத் திளைக்கிறது. கொலை வாளினை எடடா – மிகு கொடியோர் செயல் அறவே என அன்று ஒலித்த அதே குரல் இன்னும் உரக்கக் கூட்டுக்குரலாக மீண்டும் ஒலிக்கிறது. ஆரியப் பாசிசத்தை எதிர்கொள்ளும்போது தவிர்க்கவே முடியாமல் திராவிடமும் பாசிசமாய் உருப்பெருகும். அறத்தின் மயானவெளியில் பிணத்தைத் தின்று உயிர்வாழும் கலைச் செயலை பின்நவீனத்துவத் தன்னிலை விலகி நின்று வேடிக்கை பார்க்கும்.

லக்ஷ்மி சரவணகுமார்: உங்கள் ஆரம்பகாலப் புனைவுகளான முன்பு ஒருகாலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன, கனவில் பெய்த மழைபற்றிய இசைக் குறிப்புகள் உள்ளிட்ட கதைகளிலும் சொல் என்றொரு சொல் நாவலிலும்  வெளிப்பட்ட மைக்ரோ பாலிடிக்ஸ் தற்போதைய நாவல்களான அவன் பெயர் சொல்,  ஐந்தவித்தான் போன்ற நாவல்களில் அதே போன்றில்லாமல் நேரடித்தன்மை வந்துவிட்டதாகத் தோன்றுகிறதே, இந்த மாற்றத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள் என்ற நூல் ஐந்து குறு நாவல்களையும், முன்பு ஒரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன என்ற நூல் பத்து சிறுகதைகளையும் கொண்டது.  சொல் என்றொரு சொல் என்ற நூல் மட்டுமே முழு நாவல். பொதுவாக எனது சிறுகதைகளெல்லாம் அவற்றின் உள்ளடக்கத்தில் நாவல் தன்மை கொண்டவை. வாழ்க்கைமுறை, அன்றிலிருந்து இன்றுவரை என்னைத் திறம்படச் செயல்பட அனுமதிக்கவில்லை, எனவே என்னால் எந்தவொன்றையும் விரித்து எழுத இயன்றதில்லை. சொல் என்றொரு சொல் என்ற நாவலே பல நாவல்களுக்கு எழுதப்பட்ட குறிப்புகளாகவே தொகுக்கப்பட்டுள்ளதைப்போல் இருக்கும். அதீதனின் இதிகாசம் தொடங்கி இறுதியாக வெளிவந்துள்ள ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து என்ற மீபுனைவுவரை தமிழிலக்கியப் பொதுப்புத்தியிலிருந்து விலகி, தம்மை வெளிப்படுத்திக்கொண்டவையே. என்னை நான் நகலெடுப்பதை அனுமதியேன். என்னைப் பிரிதொருவர் பின் தொடர்ந்தால் அப்பாதையிலிருந்து விலகி புதுப் பாதையொன்றை உருவாக்கிக்கொள்வதும் எனது கவிதையியல் இயல்பு. எனது பனுவல்கள் பேரரசியலை நுண் விவரணையாலும் நுண்ணரசியலைப் பெரு விவரணையாலும் எழுதிப்பார்த்தவை. குறுங்கதைகளின் குவியலால் மகாகாவியம் கட்டமைவதைப்போல் அதன் எதிர்ப் போக்கில் கதைகளின் குறுஞ்சொல்லாடல்களால் வரலாற்றின் பெருங்கதையாடல்களைக் கட்டுடைக்கிறேன். தனிமனித உளவியல் கட்டமைக்கும் வரலாறையும் வரலாறு கட்டமைக்கும் தனிமனித உளவியல் நாடகங்களையும் வெவ்வேறு பின்புலத்தில் வெவ்வேறு மொழிநடையில் எழுதிப் பார்க்கிறேன். கவிதையும் கட்டுரையும் கட்டுக்கதையும் கலந்த ஒன்றை எழுதித் தொகுத்ததுதான் ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து என்ற மீபுனைவு. பல நாவல்களையும் பல திரைப்பிரதிகளையும் அதில் கண்டெடுக்கலாம். உங்கள் கேள்விக்கு பதில் சொல்லும் சாக்கில் என்னை விளம்பரப்படுத்திக்கொள்ளும் அபத்தத்தைச் செய்துகொண்டிருக்கிறேன்.

நேர்காணல் அடுத்த இதழிலும் தொடரும், முந்தைய பகுதியை வாசிக்க இங்கே <<<<——— சொடுக்கவும்

***

சித்ரன் – கனாத்திரமுறைத்த காதை – சிறுகதைத் தொகுப்பு ஆசிரியர். vinocithran@gmail.com

இக்கட்டான அரசியல் சூழலில் வேலை செய்பவன்தான் மாற்றங்களை உருவாக்குகிறான் – டிராட்ஸ்கி மருது

0

(யாவரும் ஆசிரியர் குழு..)

ஒரு நன்பொழுதில் ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுடன் நடத்திய நேர்காணல்:

தமிழகத்தில் உள்ள ஓவியக்கல்லூரியில் பயிலும் மாணவனுக்கு, தான் எங்கெங்கெல்லாம் பயணிக்க முடியும் என்கிற ஐயமோ அல்லது யோசனையோ இருக்கிறதெனில் அங்கெல்லாம் மருது அவர்களின் கால்தடம் இருக்கும். ஓவியங்கள், விபரணப்படங்கள், நூல்அட்டை ஓவியங்கள், வடிவமைப்பு, விளம்பர படங்கள், நாடக அரங்குகள், திரைத்துறையில் பல்வேறு பொறுப்புகள் அதில் முக்கியமாக கலைஇயக்குநர், காமிக்ஸ், அனிமேஷன், லோகோ வடிவமைப்பு, இதர வடிமைப்புகள் என பல்வேறு துறைகளில் பரிணமித்தவர். அரசு வேலையைத் துறந்துவிட்டு ஒரு free lancerஆக பல்வேறு ஊடகங்கள் வழி தமது நவீன ஓவியங்கள் வாயிலாக மக்களைச் சென்றடைந்தவர். ஓர் இனத்தின் நீண்ட வரலாற்றில் அதன் நாயகர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்கிற ஆதாரமே இல்லாதபோது, “வாளோர் ஆடும் அமலை” நூல் மூலம் தமிழ் மக்களோடு பேசியவர் டிராட்ஸ்கி மருது. ஓவியம் மட்டுமின்றி தொழில்நுட்பம், இலக்கியம், சினிமா, பகுத்தறிவு, அரசியல் என பல்வேறு களத்தில் இவரது செயல்பாடுகள் உற்சாகம் குன்றாமல் இருந்துவருகிறது.

சிற்றிதழ், வெகுஜன இதழ் என ஒருசேரப் பயணித்து வருகிறார். பாப்புலர் கலை குறித்த டிராட்ஸ்கியின் மதிப்பீடுகள் மிக முக்கியமானவை, அதே சமயம் கலைப்போலிகள் (Art Snob) யார் என்கிற தெளிவும் அவருக்கு உண்டு. முப்பது வருடங்களுக்கும் மேலாக தமது நீண்ட பயணத்தில் நம் சமூகத்தோடு நிறையவே உரையாடியிருக்கிறபோதும், அவரிடம் பேசி ஆவணப்படுத்தப்பட வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கிறது. எப்போதும் தொழில்நுட்பங்கள் குறித்தும் அதன் அடுத்தக்கட்ட முன்னேற்றங்கள் பற்றியும் தெரிந்து வைத்திருப்பார். தமது கலை மற்றும் தொழில்நுட்ப அனுபவத்தின் வாயிலாக சமூகத்தில் நிகழ இருக்கும் மாற்றங்களை அவர் முன்கூட்டியே சொல்லிவருகிறார். அதன் தீர்க்கதரிசனங்களையும் அக்கறையையும் புரிந்துகொண்டாலே அவருடனான பல உரையாடல்கள் ஆவணப்படுத்தப்படாமல் இருந்துவிட்டதே என்கிற ஆதங்கங்கள் வந்துவிடும்.

இது 2017ன் இறுதியில் நான் செய்த இந்த நேர்காணல். சில காரணங்களால் வெளிவராமல் போக, இப்போது நமக்காக…

(அவரோடு தொடர்ந்து உரையாடல் செய்து அதனை ஆவணப்படுத்தும் எண்ணம் இருக்கிறது என்பதை முன்வைத்துதான் இந்த நேர்காணலை வெளியிட அவரிடம் ஒப்புதல் பெற்றோம் என்பது கூடுதல் தகவல்.)

-ஜீவ கரிகாலன்.

*

1. டிராட்ஸ்கி மருதுவின் படைப்புவெளியை நாங்கள் எங்கிருந்து அணுகுவது?

முதலில் நான் ஒரு சமகால ஓவியன். எனது வெளி ஏற்கனவே கற்பிக்கப்பட்ட வெளி கிடையாது. எனது செயல்பாட்டு எல்லை விரிவானது. பல ஊடகங்களின் கூறுகளைக் கொண்டது எனது படைப்புவெளி. சமகாலத்து படைப்புலக சாத்தியங்களை அறிந்து, அதில் நீந்தி மகிழ்பவன் நான்.

2. உலக அளவில், இன்றைய தமிழ் நிலத்தின் கலை என்று பார்ப்பதை நீங்கள் என்னவாக நினைக்கிறீர்கள்? ஒருபுறம் க்ளோபல் வில்லேஜ் என்று சொல்கிறோம், இவற்றை இப்படி பிரித்துப் பார்க்கவேண்டிய நிலம்சார் அரசியல் நிலைப்பாடுகள் கலைக்கு இப்போது அவசியமானதா?

அடிப்படையான அடையாளம் தேவை என்றுதான் சொல்வேன். ஆனால் அவையே பழமைவாதமாக மாறிவிடக்கூடாது. இப்பொழுது அடையாளத்தை சொல்கிறோம். அதேநேரம் அடையாளங்களை, எங்கையோ ஓர் இடத்தில் காட்சிப்படுத்தும் தன்மையை விட்டுவிட்டோம். அந்த நிலைக்கு நாம் உணர்ந்து திரும்ப வரவேண்டும்.

3. நம் நிலத்தில் கலை குறித்த புரிதல்களில் மக்களுக்கும் கலைஞர்களில் இடையே இருக்கும் தொலைவுக்கும் காரணம் என்ன?

பொதுமக்களுக்கும் படைப்பாளனுக்கும் இடையில் படிநிலைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இந்த கலை ஒருவருக்கு புரியாதென்று சொல்வதும், அதே நேரங்களில், பொதுமக்களைப் பார்க்கையில் இந்த கலைகளை முயற்சி செய்யச் சொல்கிற மாதிரியான நிறைய பொய்த்தனங்களை உருவாக்கியுள்ளது. பிறகு, எங்கோ ஓர் இடத்தில், இதைத் தொடர் சங்கிலியாக செய்யவேண்டும் என்கிற ஒரு பரந்த நோக்கம், சமகாலத்தில் உள்ள நிறைய பேருக்கு இல்லாமல் போய்விட்டது. எப்படி என்றால், நீங்கள் அமெரிக்காவிற்கு சென்றால் அங்கு ஹோவர்ட் பைலையும் (Howard Pyle)  நார்மன் ராக்வெல்லையும், ஃப்ரெட்ரிக் ரெமிங்டனையும், Rose O’Neillஐயும் கொண்டாடுவார்கள். அங்கு எல்லோருக்கும் ஓர் இடம் இருக்கிறது. முதலில் நூற்றி நாற்பது ஆண்டுகளுக்கு முன் அவர்கள் ஓவியர்கள்தான், அவர்களின் ஓவியங்கள் விளக்கப்படங்களாகப் பயன்படுத்தப்பட்டது.

பத்திரிகைத்துறையில் கூட மாதவனையும், கோபுலுவையும் பேசமாட்டார்கள். ஆனால் Off the record எல்லாருக்கும் அவர்கள் மீது நல்ல மரியாதை இருக்கிறது. எல்லோரும் நேரடியாக இயங்குபவர்கள், தளம் வேறாக இருப்பதால் தனித்தனியாகப் பேசவேண்டியதிருக்கிறது.

ஆனால் யாரும் யாரையும் குறைவாக மதிப்பிடுவது இல்லை. என்னைப் பொறுத்தவரை அடிப்படையிலேயே எனக்கு பாப்புலர் ஆர்ட் மேல் பிரியம் இருக்கிறது. நான் அதனாலும் வளர்க்கப்பட்டேன். இங்கு ‘அவன் கெட்டிக்காரன், இவன் கெட்டிக்காரன்’ என்று பேசுவதைவிட அந்தப் படைப்பாளன் எதற்காக வேலை பார்த்தான் என்பதைப் பேசவேண்டும்.  

4. ஒரு காலத்தில் தீவிர இலக்கியத்தோடு நவீன ஓவியங்களும் ஒன்றாக இயங்கியதால், ஓர் ஓவியக்கல்லூரி மாணவனை விட ஓர் இலக்கிய வாசகன் அன்றைய நாளில் நவீன படைப்பாளிகளோடு நெருக்கமாய் இருந்தார்கள். நீங்களும் நவீன கலைகளை விபரணப்படங்களாக கொண்டுவந்து அவற்றை அறிமுகப்படுத்தும் ஓர் இடத்தில் இருந்தீர்கள்? ஆர்ட் கேலரிகளைக் காட்டிலும் ஊடகங்கள் உங்களின் தேர்வாக இருந்ததன் காரணம் என்ன?

தீவிர இலக்கியத்திற்குள் இரண்டையும் இணைத்தது எங்கள் காலம்தான். ஒருபோதும் நாங்கள் பத்திரிகைகளின் சித்தாந்தத்திற்கு தகுந்தவாறு ஓவியங்கள் வரைந்து அந்த பத்திரிகைகளுக்கு டோலக் வாசித்தது இல்லை. படைப்புகளோடு சமமாக, சிற்றிதழ்கள் நவீன ஓவியங்களை மதித்ததும் ஒரு காரணம். அதனால் அப்போது ஒன்றாக இருந்தோம்.

அதே சமயம் ஆர்ட் கேலரி..? ஆம் வரைந்த ஓவியங்களை கேலரியில் வைத்தால் பணம் பண்ணமுடியும், ஆனால் அந்த நேரத்தைத்தான் நான் பத்திரிகைகளில் செலவு செய்தேன். ஆனால் பத்திரிகைகளில் என்ன கொடுப்பார்கள் என்று நினைத்திருந்தால் இதற்குள்ளே போயிருக்கவே முடியாது. என் தகுதிக்கான பணத்தை, பத்திரிகைகள் எனக்குத் தரவும் இல்லை. என் நோக்கம் அதுவும் அல்ல, என் நோக்கம் மக்களுக்கு பத்திரிகைகளின் வழியாகக் கொண்டுசேர்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஆதி (ஓவியர் ஆதிமூலம்) சொல்வார், ‘பத்திரிகைகளில் நான் இயங்குவதை நிறுத்தினாலும், நீங்கள் இயங்கிக்கொண்டே இருக்கவேண்டும் மருது’ என்று.  எண்பதுகளில் எங்கள் செயல்பாடுகளைப் பற்றி பேசிக்கொண்டே இருப்போம். 

5. நார்மன் ராக்வெல்லின் நேர்காணல்கள் சிலவற்றை வாசித்தால், விபரணப்பட ஓவியர்கள் கலைஞர்கள்தானா என்ற சச்சரவு உலகளவில் இருக்கிற விவாதங்கள்தான். இந்த விழுமியங்களை எப்படி புரிந்துகொள்வது? அல்லது இந்தப் பிரிவுகள் போலியானவையா?      

ஆம், இல்லை என்றால் எதுவும் இணையாது.

சேரன், சோழன், பாண்டியன், திருவள்ளுவர் இந்தப் பெயர்களை நான் சொன்னதும், நம்மால் உடனடியாக காட்சிப்படுத்தக் கூடிய முகம் திருவள்ளுவர் உடையது. சேரன், சோழன், பாண்டியன் இவர்களைத் தமிழ் அறிஞர்களால் வார்த்தையாக மட்டும்தான் சொல்ல முடிந்தது. உங்களுக்கும் எனக்கும் Common Image கிடையாது. நம் தமிழ்நாட்டில் இவற்றை இப்படியெல்லாம் கட்டமைக்கவும் இல்லை.

அப்படி செய்பவர்களையும் ஒரு கூட்டம் புறம் பேசிக்கொண்டுதான் இருக்கிறது. அதாவது காலத்தோட எல்லா சக்கரங்களையும் நீங்கள் ஒன்றாகத்தான் இழுத்து வரவேண்டும். ஒன்றை விட்டு ஒன்று தனித்தனியாக எல்லாம் போகமுடியாது. எல்லோரும் சேர்ந்து அவரவர் வேலைகளை அவரவர் செய்திடவேண்டும்.

6. வாளோர் ஆடும் அமலையை அதில் ஒரு சிறந்த உதாரணமாக இப்போது என்னால் உணர முடிகிறது.

புரிஞ்சா சரி கரிகாலன்.

7. நவீன ஓவியங்கள், தமிழின் வெகுஜன இதழ்களுக்குள் எப்படி நுழைந்தது?

இப்பொழுது அந்த நிலைமை அப்படியே பரிணமித்துவிடவில்லை என்பதும் வேறு விஷயம்.  

முதலில் நான் இதற்குள் செய்த காரியங்களைச் சொல்கிறேன். சுஜாதாவுடன் ஒரு வருடம் பணிபுரிந்திருக்கிறேன். அதற்கு பெரிய பணமெல்லாம் கொடுக்கவும் இல்லை. சுஜாதா கேட்டுக்கொண்டதால் அவருக்காக அதைப் பண்ணினேன். ஒன்பது வருடத்தில் அன்றைய நிலையில் மாதம் எழுபதினாயிரம் சம்பளம் கிடைத்த வேலையையே வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

நான் ஒரு freelancer.

நான் நினைத்த பாதையில்தான் நான் போகவேண்டுமென்று நினைத்தேன். நான் பணத்தை பெரிதாக கருதவும் இல்லை. பிறகு சுஜாதாவும் கூப்பிட்டார், இனி என்னால் ஒரு பணியாளராக வேலை பார்க்கமுடியாது என்றேன். பிறகு அவருக்காக ஓர் ஆலோசகராக ஒரு வருடமாக, வாரத்தில் ஒரு மூன்று மணிநேரம் மட்டும் அவர் குமுதம் அலுவகத்தில் இருக்கையில் அங்கு போவேன்.    

குமுதமில் அப்பொழுது புத்தகத்தை இரண்டாகப் பிரித்து வேலை பார்ப்போம். நீங்கள் பார்த்திருப்பீர்கள். அங்கு சீரியஸான மெட்டிரியல் எதையும் உடனே உள்ளே கொண்டு போகமுடியாது. அப்பொழுது இரண்டு குமுதமாக வந்தது. பிறகு கவரோட இணைந்து பைண்ட் ஆகி வந்தது. அதற்குப் பிறகு அந்த கவரை எடுத்துவிட்டோம். அப்படித்தான் வெகுஜன மற்றும் தீவிர இலக்கியங்களை ஃபிசிக்கலாக கனெக்ட் பண்ணினோம். இவை ஒரு வகையான பழக்கப்படுத்துதல்.     

அப்படி பழக்கப்படுத்தியதில், இரண்டாவது பிரசுரத்தில் மார்ஷல் அரிஸ்மனின் (marshall arisman) படைப்பு, அட்டையாக வந்தது. இப்படி எல்லாம்தான் அதைக் கொண்டுவந்தோம். அதன் பிறகு ஓவியக்கல்லூரி மாணவர்களின் ஓவியங்களை, அவர்கள் வைக்கும் ஓவியக் கண்காட்சிகளுக்கு சென்று பார்த்து, அந்த ஓவியங்களை வாங்கி, கவிதைகளோடு அந்த ஓவியங்களை இணைத்தோம்.

அதில் கவிதைக்கு ஓவியம் வரைந்தவர் என்று அந்த ஓவியர்களின் பெயர்களை இணைத்தார்கள். அவை புதுக்கவிதைகளுக்காக வரைந்த படங்கள் இல்லை, ஓவியம் என்றுதான் போடவேண்டும் என்று சொன்னேன். இரண்டு படைப்பையும் இணைக்கும் வேலையைத்தான் நாம் செய்யவேண்டும் என்று சொன்னேன். 

இப்படி செய்வதின் வழியாக ஓவியனும் அடையாளப்படுவான், பத்திரிகையும் புதிதாக ஓர் ஓவியத்தை பிரசுரம் பண்ணும். இந்த இரண்டையும் இணைக்கும் வேலையைத்தான் நான் முயற்சித்தேன்.

8. கலைக்கான தேவையைக் காட்டிலும், சமூக அரசியல் தேவைக்காகவாவது இந்த காலத்தில் மேலே நீங்கள் சொன்னது போன்ற ஒரு பொதுவான பிம்பம் தேவைப்படுகிறது என்று உணர முடிகிறது. ஆனால் இந்தச் சமூகத்தில் இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு ஓர் ஓவியன் உத்வேகத்துடன் எழுந்துவர முடியுமா? அதுவும் இத்தனை வேகமான காலமாற்றம், பொருளாதார நிர்பந்தங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு?

தமிழ்ச் சமூகம் அடிப்படையில் ஒரு Verbal சமூகம். இதை நான் பலகாலமாக சொல்லிக்கொண்டு இருக்கின்றேன். மேடைப்பேச்சால் தான் நீங்களும் நானும் உயிர்ப்பெற்றோம். ஒரு பெரிய கூட்டம் உங்களையும், என்னையும் அடக்கி வைத்திருந்தது. அதை, பெரியார் வந்து உடைத்து படிக்க வழி செய்தார். வேறுபக்கம் நடடா, இவர்கள் சொல்வது எல்லாம் ஒன்றுமே கிடையாது என்றார்.

இப்பொழுது மூன்றாவது, நான்காவது தலைமுறை படித்திருக்கிறது. படித்ததினால் எளிய வேலைகள் செய்ய தமிழ்நாட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லை. வடநாட்டுக்காரர்கள் இங்கு வருகிறார்கள். அதாவது நாம் எங்கு வந்துவிட்டோம் என்றால், விவசாயக்கூலி தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை, கட்டிடத் தொழிலாளி கிடைக்கவில்லை. வேலை பார்க்கக்கூடாது என்று இல்லை. அந்த இடத்தை நம் படிப்பு தாண்டிவிட்டது. அதற்காக வெளிமாநிலங்களில் இருந்து ஆட்கள் வருகிறார்கள்.

இப்படி படித்துவிட்டாலும் நீங்களும் நானும் கனெக்ட் ஆகவில்லை.

சர்வதேச சமூகம் காட்சிப்பூர்வமாக (Visual) கற்றுக்கொடுத்துக்கொண்டு இருக்கிறது.

இப்பொழுது எல்லோர் கையிலும் பேனா இருக்கிறது, கேமராவும் இருக்கிறது. இன்னுமொரு ஐந்து வருடத்தில், முகநூல் முழுவதும் வீடியோதான் இருக்கும் (நேர்காணல் செய்த வருடம் 2017) என்றும் இனி யாரும் டைப் பண்ணமாட்டார்கள் என்றும் நான் அதை சொல்லிக்கொண்டே இருக்கிறேன். அதாவது மொழிபெயர்ப்பாளர் என்பவர் செத்துவிடுவார் என்று சொல்லியிருக்கிறேன்.

நான் ஒரு 150 மொழிகளில் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தால், உங்களுடைய நண்பர்கள் இந்த உலகத்தில் வேற மொழி பேசுபவர்களாய் இருந்தாலும், நான் பேசுவதை அவர்கள் மொழிக்கு மாற்றி, குரல் வழியாக அதைக் கொடுப்பதற்கு மென்பொருள் உபகரணங்கள் வந்துவிட்டது. கிரியேட்டிவ் ஆட்களுக்குத்தான் என்றைக்கும் ஸ்பேஸ் இருக்கிறது. மற்ற வேலை பார்க்கின்ற மக்களுக்கு அவர்கள் வேலையை ரோபோட்டிக் டிவைஸ் காலி பண்ணிவிடும். அதற்கு நாம் ரொம்பதூரம் போகவேண்டும். நாற்பது வயதைத் தாண்டிவிட்டால் நாம் என்ன செய்யவேண்டும், அதற்கு முன்பு நாம் என்ன செய்திருக்கவேண்டும் என அதை யோசிக்கிற நிர்பந்தத்திற்கு உலக மக்கள் வந்தாச்சு.

செய்தித்தாள்கள் எல்லாம் இறந்துவிட்டது. அச்சுக்குப் போய் வருவதற்குள் எல்லாத் தகவல்களும், செய்திகளும், இணையம் வழியாக நம்மை வேகமாக வந்தடைகிறது. அப்போ செய்தித்தாள்களுக்கான பிரிவில் இருக்கின்ற அத்தனைப் பேரின் உழைப்பும் வீணாகிறது.

என்னுடைய அபிப்பிராயம் புத்தகம் அவசியம் வேண்டும் என்பதுதான். என் ஐபாட்டில் இருநூறு புத்தங்களை வைத்திருக்கிறேன். இதே எண்ணிக்கையில் புத்தகங்களை நினைத்த இடத்திற்கு எடுத்துச்செல்ல முடியுமா? புத்தகத்தில் படித்தால்தான் படித்த மாதிரி என்று சொல்வதெல்லாம் சென்டிமென்ட்.

கேலரிகள் மட்டுமில்லை, இனி வரும் ஓவியர்களுக்கு இங்கு வேறு நிறைய இடங்கள் வந்துவிட்டன.   

9. இந்த மாற்றங்களை எல்லாம் எப்படி எடுத்துக்கொள்வது?

காமிக்ஸ் புத்தகங்கள் எதுவும் வெளியாகவில்லை. காமிக்ஸ் புத்தகம் டிரான்சிஸ்ட் ஆகின்றது. கிராஃபிக் நாவல் என்று எண்பதுகளில் முன்னணியில் வருகின்றபோது, நான் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு அவற்றோடு நகர்ந்துகொண்டு இருக்கிறேன்.

நான் முதல்முதலாய் கணினியை பயன்படுத்தும்பொழுது, காமிக்ஸ் புத்தகங்களை வடிவமைக்க மேக்கிண்டோஷ் கணினியைப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தார்கள்.

Ashley Wood, Dave Mckean, Moebius ஆகியோரைத் தெரியுமா? அவ்ளோ இண்டென்சிவா அவர்கள் காமிக்ஸ் புத்தகத்திற்கு வொர்க்  பண்ணியிருக்கிறார்கள். இந்தமாதிரி காமிக்ஸ் புத்தக ஆர்டிஸ்ட்டோட வேலைகளை, நீங்கள் ஃபைன் ஆர்ட் என்றும் சொல்லிவிடமுடியாது, ரிட்டன் வொர்க் என்றும் சொல்லிவிடமுடியாது, ஏனென்றால் எல்லாமே இங்கு இணைந்துவிட்டது.

ஐந்து  பக்கங்கள் காமிக்ஸ் புத்தக வடிவிலும், ஐந்து பக்கம் எழுத்து வடிவமாகவும், ஐந்து பக்கம் ஓவியங்களாகவும் இருக்கிறது. எல்லா வடிவங்களும் கலந்துவிட்டது. பிகாஸோவின் நிறைவேறாத கனவாக காமிக்ஸ் இருந்தது எனச் சொல்வார்கள்.

ஜெயமோகன் மாதிரி ஒரு ஆள் 20000 பக்கம் அளவுல புத்தகம் எழுதுறாங்க இல்லையா, அது ஓர் அம்மிக்கொத்துவது தான். இதனை இப்போது எத்தனைப் பேர் படிப்பார்கள்?

குறும்படங்களே இப்பொழுது இன்னும் சுருக்கமாகிவிட்டது. Short film has to be short என்று சொல்கிறார்கள். அரைமணிநேரக் குறும்படத்தை யார் பார்க்கிறார்கள்? இரண்டு நிமிடங்கள்தான் அதற்கான ஐடியல் டைம். ஃபிலிமில் இருந்து க்ளிப்ஸ் ஆகிவிட்டது.  நான் அடிக்கடி சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

மீம்ஸ் நம் சமூகத்திற்கு வந்தது, Visual culture இங்கு பெரிதாக இல்லாததினால் தான்.

தற்பொழுது இங்கு யார் சர்வீஸ் பண்ணுகிறார்கள் என்று கேட்டால், வடிவேலுதான் இருக்கிறார். இங்கு Common Image ஆக வடிவேலுதான் இருக்கிறார்.

10. மீம்ஸை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மீம்ஸை நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், இனி நாம் காட்சிகள் வழியாகத்தான் பேசவேண்டும். ஒரு பத்துவருடங்களுக்கு முன் என்ன சொன்னார்கள் என்றால், animation is actually global art அதுதான் இனி மொழி.  இவற்றை எங்களை மாதிரி அனிமேஷன் பக்கம் ஆர்வமாக இருக்கிற ஆட்கள் ஏற்றுக்கொண்டோம்.

அறுபது, எழுதுபதுகளில் நான் மட்டும்தான் அனிமேஷன் பற்றிய பேச்சை எங்கள் ஓவியக்கல்லூரியில் பேசுகிறேன். எங்களுடைய ஆசிரியர்களுக்கும் அதன் மேல் ஆசை இருக்கிறது. ஆனாலும் அவர்களுக்கு பேசத்தெரியாது, பெருசா Exposure கிடையாது. அனிமேஷன் துறையை Art Form ஆக யாரும் யோசிக்கவில்லை. எனக்கு அப்படி இல்லை. நான் வளர்ந்துவந்த விதம் அப்படி. காமிக்ஸ் புத்தகம், அனிமேசன் ஃபிலிம், பெயிண்டிங், இந்த மூன்றையும் கலந்துதான் நான் பார்த்துக்கொண்டே வந்திருக்கின்றேன். ஆகையினால்தான் நான் சீக்கிரம் கணினியைத் தெரிந்துகொள்ள முடிந்தது. நான் அடுத்ததாக Virtual Realityயில் பெயிண்ட் பண்ணும் இடத்திற்கு வந்துவிட்டேன்.

நான் காலத்தோடு ஓடிக்கொண்டே இருக்கிறேன். இங்கு இருக்கிறவர்கள் இவற்றைப் பற்றியெல்லாம் பேசுவதும் இல்லை, அப்டேட்டும் ஆகவும் இல்லை. அப்படி ஆகாது இப்போதைக்கு, தான் இயங்குவதற்கு தன்னைச்சுற்றி இருக்கிற இளைஞர்களையும் கண்ணைக்கட்டிவைத்துக் கொண்டே இருக்க, முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். அதுதான் தவறு.

11. உலக அளவிலான கலை என்னவாக இருக்கிறதோ, அதை சமகாலத்தில் நீங்கள் முயற்சித்துக்கொண்டே இருக்கிறீர்கள். நாங்கள் இப்பொழுது செல்ல விரும்புகிற சர்வதேசக் கண்காட்சிகளையும், நீங்கள் இருபது வருடங்களுக்கு முன்னே போய் பார்த்ததாக சொல்கிறார்கள். ஒருபுறம் தமிழ்ச் சமூகத்தோட வளர்ச்சியை நாம் ஒத்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, ஆனால் இந்த உலக வளர்ச்சிக்கு இணையா அப்படிங்கற தொடர்பறுந்து போனதற்கு அரசியல்ரீதியான தாக்கங்கள் இருக்கிறது. இவற்றை எப்படி அணுகுகிறீர்கள்? 

எப்பொழுதும் ஓர் இயக்கம், உண்மையான இயக்கத்தை இயங்க, அரசியல் நிலைப்பாடு இங்கு விடவில்லை. ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட சமூகம் அதை அடைத்து வைத்திருந்தது, அவற்றை முதலில் உடைக்கிறது. பெரியார் வருகிறார் எல்லோரும் படிப்பதற்கான இடம் வருகிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடக்காத சமூகச் சீர்திருத்தம், தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. இப்பொழுது பேசுகிற அடிப்படைவாதிகள் அவற்றை மடைமாற்ற முயற்சிக்கிறார்கள். அதுவல்ல இது.    

பிறகு அரசு அவற்றைக் கையில் எடுக்கிறது. எப்பொழுதும் எல்லா நேரங்களிலும் வருகிற ஊழல். அதே நேரங்களில்தான் சோ மாதிரியான ஆள், திராவிட இயக்க வரலாற்றை முழுதும் ஊழல் ஊழல் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் ஏன் சொன்னார் என்றால், அவர் தன் அதிகாரத்தை இழந்துவிட்டார். யாரை எதிர்த்தாரோ அவர்களிடம் முழு அதிகாரமும் போய்விட்டது. சோ, சமூகநீதி பற்றி ஒருநாளும் பேசவில்லை. நாற்பத்தைந்து வருடம் பத்திரிகையாளராக இருந்து, ஒருநாளும் அவற்றை எழுதவில்லை. இவற்றுக்கு மாற்றுக்கருத்து சனாதனம் கிடையாது. எல்லா நெளிவுசுளிவுகளோடு கருணாநிதி தலைமை ஒன்று இருந்தது. எம்.ஜி.ஆர் நிகழ்த்தியது அல்லது அவர் நடந்துகொண்டது அதற்கு உதவியிருக்கிறது.

பெரியார் உங்களை ஒன்றுநடத்தியிருக்கிறார். இந்தத் தலைமைகளில் உங்களுக்கு கிடைக்காதது அல்லது அவர்கள் தவறவிட்டவைகளையோ, அடைந்தவைகளையோ தாண்டித்தான் அடுத்தத் தலைமையை நாம் கொண்டுவந்திருக்க வேண்டும். நாம் நடந்துவந்த பாதைக்கு மேல் ஏறிதான் தலைமையைத் தேடவேண்டுமே தவிர, பழையவை சரி என்றும் இன்று இருப்பது தவறு என்றும் கிடையாது. என்னுடைய அபிப்பிராயம் தமிழ்நாட்டில் இருக்கிற இளைஞர்கள் அவற்றைச் சரியாக புரிந்துகொள்ளவேண்டும்.

இந்தப் பயம் எனக்கு எப்படி வந்தது என்றால், there are people – பிளாஸ்டிக் ஆர்ட்டை  மதத்தோடு சேர்ந்துப் பார்க்க நிறையபேர் கிளம்பிட்டார்கள். அது அப்படி இல்லை. முதலில் கலையையும், மதத்தையும் தனியாக படிப்பதற்கு சொல்லிக்கொடுக்கவேண்டும். இங்கு திரும்ப அதை இணைக்கப் பார்க்கிறார்கள். அதாவது சில இடங்களில், சுற்றுலா மாதிரி அழைத்துக்கொண்டு போய், பண்டையகால இடங்களைக் காட்டுகிற மாதிரி. சில பேரையெல்லாம் கவனித்தேன். சில பேரெல்லாம் ஸ்தல புராணம்தான் பேசுகின்றான், வரலாற்றைப் பேசுவதில்லை. அவையெல்லாம் தவறு, கட்டுக்கதை. ஸ்தல புராணம் கட்டுக்கதை. ஒரே வள்ளி ஒவ்வொரு கோயிலிலும் முளித்திருப்பார் என்று எல்லாம் அந்த அந்த ஊருக்கு தகுந்தவாறு அவரவர் சொல்லுவார்கள், அவையெல்லாம் Myth. அதேமாதிரி விநாயகர் இங்குதான் குளித்துவிட்டு எடுத்திட்டு போனார் அது எல்லாம்தான் ஒன்பதானது, ஆயிரமானதென்று சொல்லுவார்கள். அதெல்லாம் கட்டுக்கதை. மக்கள் கட்டுக்கதைகளால இணைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்தக் கதைகள் தேவையாக இருக்கிறது, வாழ்வதற்கு அந்த நம்பிக்கைத் தேவையாக இருக்கிறது.

நீங்கள் துறவிகளை நினைத்துப்பாருங்கள். தமிழ்நாட்டில் பல்வேறுவிதமான அறிவியல், அதோடு நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார்கள். கொஞ்சம் நுணுக்கமாக பார்த்தால், ஊரைவிட்டு வெளியில் நாற்பது கிலோமீட்டர் வரையிலும் கூட போகாமல் இறந்து போனவர்கள் கூட, ஒரு காலத்தில் இருந்திருப்பார்கள். படைவீரர்கள் வெளியில் போயிருப்பார்கள், அதோடு அறிவைத் தேடிப் போகிறவர்களும் வெளியில் போயிருப்பார்கள். எனக்குத் தமிழ் புலமை இருக்கு, என் டிராவலே அவைத்தான் என்று, நான் போய் வந்து நடராஜர் இந்த காலைத் தூக்கி ஆடினார், பாடினார் என்று கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். அதெல்லாம் பயண அனுபவம்தான். அவற்றால் கலைக்கு ஒரு ப்ரயோஜனமும் இல்லை. நீங்கள் அவற்றை அப்படித்தான் பார்க்கவேண்டும். இங்கு நமக்கு அவற்றை வேறுமாதிரி பழக்கி வைத்திருக்கிறார்கள்.

அப்படியென்றால் முதலில் அந்தப் பிடியில் இருந்து வெளியில் வரவேண்டும், அப்பொழுதுதான் தமிழனோட மேன்மையை, தனியாகப் படிக்கமுடியும். இன்று தமிழை, நீங்கள் இந்தியாவில் இருக்கிற ஒரு எல்லையோடு அதைப் பார்க்கவேண்டியது இல்லை. இப்போது உலகம் முழுவதும், அதாவது நானூறு வருடங்களில் இங்கிருந்து வெளியில் போன தமிழர்களை, ஒருங்கிணைக்கும் பட்சத்தில் நீங்கள் தமிழைப் பேசுகிற உலக மக்களைக்கொண்டே அவர்களுக்குத் தேவையானதைக் கட்டியெழுப்ப முடியும்.

இங்கிருந்து புலம்பெயர்ந்து போன ஒரு குடும்பத்திலேயே, அண்ணன் லண்டனிலும், தங்கை கனடாவிலும், இன்னொருவர் ஜெர்மனியிலும் வாழ்கிறார்கள். ஆனாலும் கூட தமிழ் அவர்கள் அடையாளமாகவும் இருக்கிறது.

தமிழன் அந்தகாலத்திலேயே மொரிசியஸ் போயிருக்கிறான். அவன் வாழ்க்கையை எல்லாம் நாம் பேசவேண்டும். அந்த வலியை இப்போது இருக்கிற பிள்ளைகள் படிக்கவேண்டும். இவையெல்லாம் மறைக்கப்பட்ட ஒன்றுதான். அவற்றையெல்லாம் நாம் இணைக்கவேண்டும். கடவுள் நம்பிக்கை தனி, உலகம் முழுவதும் கிறிஸ்துவர் இருக்கிறார்கள். யாரும் கிறிஸ்துவர் என்று சொல்லிக்கொள்வது இல்லை.    

ஜெர்மானியன், ஜெர்மானியன் என்றுதான் சொல்கிறான். ஆனால் ஜெர்மானியனுக்குள் இருக்கிற கிறிஸ்துவம் வேறு, இயேசுநாதர் ஒன்றுதான். ஆப்பிரிக்காவில் இருக்கிற இயேசு கருப்பாக இருப்பார். அனுமான் நூறுகிலோமீட்டருக்கு ஓர் இடத்தில வேறுவேறாக இருக்கிறார். அவை என்னவென்றால், கதைகளோடு என் நற்பண்புகளையும் என்னுடைய கலாச்சாரத்தையும் நான் இணைத்துக்கொள்கிறேன்.  

இல்லையென்றால் சோழர்களின் வெங்கலத்தை (Chola bronze) அப்படித்தான் ட்ரீட் பண்ணவேண்டும்?

கல்யாணசுந்தரர் சிற்பத்தைப் பார்க்கும்பொழுது சிவனும் பார்வதியும்தான் தெரியும். அவற்றைத் தாண்டி பார்க்கும்பொழுது தான், சோழ சமூகம் தெரியும். அந்தச் சமூகம் எப்படி? ஒரு கலைஞன் எப்படி வந்தார்? எவற்றையெல்லாம் செய்தார்? அப்பொழுது அந்தச் சமூகம் அவரை எப்படி வழிநடத்தியது? அப்படி ஒரு சமூகம்தான் அந்தக் கலைஞனை அப்படி செய்வதற்கு தூண்டுகிறது. அவனுக்கு ஒரு மதம் சார்ந்த தாத்பரியம் இருக்கிறது. ஆனால், நான் இப்பொழுது சொல்வது, அதற்காக ஒரு நாடராஜர் சிற்பத்தை இப்பொழுது செய்யவேண்டும் என்று அல்ல.

அந்த இலக்கணம் நமக்கு வேண்டும் என்று பேசுகிறவன் முட்டாள். அது அயோக்கியத்தனமும் கூட.

வாழ்க்கையில் நமக்கு தேவையானவற்றை எல்லாம் நாம் அடாப்ட் பண்ணிக்கொள்கிறோம். அவன் வந்து நம்மை மடைமாற்றி, மத நம்பிக்கைகளோடு கொண்டுபோகிறான். அங்குதான் நீங்கள் பார்த்து, வரைந்துப் பழகவேண்டும். இயற்கையைப் பார்த்து வரையவேண்டும். வரைதல் பற்றி சொல்லவும்தான் ஞாபகம் வருகிறது. இங்கு அரூப ஓவியங்களை மட்டும் வரைபவர்கள், மற்றவர்களை ஏளனப்படுத்துகிற காட்சியும் இருக்கிறது. அது, Draftmenship-யே ஏற்றுக்கொள்ளாத தொனி தானே?

முட்டாள் மாதிரி பேசுகிறான். நகல் எடுப்பதென்றால், ஒரு பெண்ணைப் பார்த்துத்தான் பார்வதியை  செய்கிறான். ஆனால், அவனுக்கு அன்று ஓர்  இலக்கணம் வேண்டியதாக இருந்தது.  பெண்ணை வந்து உருவகப்படுத்துகிறான். பிறகு தத்துவங்கள் வழியாகவும், உள்ளிருந்து புறமாகவும், புறத்திலிருந்து உள்ளாகவும் இப்படி இரண்டு தன்மை இருக்கிறது இல்லையா? இந்தத் தன்மைகளை அன்று வரைக்கும், அதாவது கண்டங்கள் இணையாத வரையில்தான் அவையெல்லாம்.

ஆனால் இவையெல்லாம் எங்கோ எப்பொழுதோ கலந்துவிட்டது. நீங்களும் நானும் பயன்படுத்துவதை, அவன் பயன்படுத்துகிறான். அவன் பயன்படுத்துவதை நாம் பயன்படுத்துகிறோம். நாம் இப்பொழுது உலகப் பிரஜைகள். மதம் சார்ந்த அம்சங்கள் எதுவும் கிடையாது.

அப்போ உங்களுக்கென்ற அடையாளம் எதுவென்றால், மொழியியல் ஊடாகக் கூடி நம்முடைய வாழ்க்கை முறையும், அதில் இருக்கின்ற நெறிமுறையையும் பண்பையும் நாம் பதிவு செய்யவேண்டும். நான் எங்கு நெகிழ்கிறேன் தெரியுமா? சண்டை போடும்போது எதிராளியுடைய ஆடை அவிழ்ந்தால் சண்டை போடுவதை நிறுத்திடச் சொல்கிறது. அங்குதான் பண்பு இருக்கிறது. அதைத்தான் சொல்லவேண்டும். குறள் என்னவெல்லாம் சொல்கிறது! நான் குறளைப் படிக்கும்போதும் கேட்கும்போதும் நெகிழ்கிறேன்.

பிறகு நம் கட்டடக்கலைகள் எவற்றை முன்னிறுத்தி பேசுகிறது? திண்ணை கட்டியிருந்தான். எவ்வளவு பெரிய திண்ணை! அவை நமக்காக இல்லை. மற்றவங்களுக்காகக் கட்டியது. நாம் இதெல்லாம் சொல்லிக்கொடுப்பதை விட்டுவிட்டு,  மடைமாற்றி கோயிலுக்குள்ள கொண்டுபோய்… நடப்பது எல்லாமே தப்புதானே? கோயிலைக் காப்பாற்ற நாங்களும்தான் சொல்கிறோம். இதை மாற்றுகிறவர்களுக்கு பின் இருந்து போறவனும் இவன்தான், அதாவது மேலே போய் சுண்ணாம்பு அடிச்சவனுக்குப் பின்னாடி இருந்தவனும் இதே மடாதிபதி. இந்தச் சிற்பங்களை செய்ததும் நாம், இவற்றைக் காப்பாற்ற வேண்டுமென்று நினைப்பதும் நாம். இடையில், நீ திரும்பவும் எங்களை வேறுமாதிரி தவறாக வழிநடத்துகிறாய். இவற்றையெல்லாம் சொல்லவேண்டும். ஆக, இவற்றை எல்லாம் காட்சிப்படுத்த வேண்டியது மிகமிக அவசியம்.

இங்கிருக்கின்ற இந்தப் படிநிலைகள் எல்லாம் முட்டாள்தனம். இதுநாள்வரை நான் இவற்றுக்காக கேள்வி கேட்கின்றேன், இப்பொழுது இந்தப் பாடத்திட்டங்களை மாற்றவேண்டும் என்ற  முயற்சியோடு, அனந்த கிருஷ்ணன் மாதிரி குறிப்பிடத் தகுந்த ஆட்கள் வருகின்றபோது, அது வேறமாதிரி ஆகிறது. நாம் சொன்னா கேட்கிறார்கள், முக்கியமான அதிகாரிகள் தமிழ் மேல் ஒரு காதலோட இதைச் செய்யவேண்டும் என்ற அதிகாரிகளோட ஒரு கூட்டமும் வந்துவிட்டது.

அதேமாதிரி காமிக்ஸ் வடிவில், குழந்தைகளுக்கு நாலுமாடு இருக்கும், ஒரு நரி  போய் அவற்றைப் பிரிக்கும், இப்படி ஒரு நாலு, ஐந்து கதைகளைத் தவிர, காமிக்ஸ் புத்தகவடிவில் கடந்த ஐம்பது வருடத்தில் ஏதாவது வந்திருக்கிறதா நம் பாடப்புத்தகத்தில்?
 

12. பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களுக்கான புதிய பாடத்திட்ட உருவாக்கத்தில், இப்பொழுது ஓவியர்களுக்கு இடம் கொடுத்திருகிறார்கள், விபரணப் படங்களுக்கான முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் பயணிக்கவேண்டிய தூரங்கள் என்ன?

இடம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு பள்ளியிலும் ஓவிய ஆசிரியர்களை கடைநிலை ஆசிரியர்கள் போல் நடத்தப்படுவதை மாற்ற வேண்டும் என்று வலியுருத்தியிருக்கின்றேன். ஓவியமும், அறிவியல் போல் ஒரு பாடமாக வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஸ்டுடியோ, கிரியேட்டிவாக ஓர் இடம் இருக்கவேண்டும் என்று சொல்லி வலியுறுத்திக்கொண்டே இருக்கிறேன். அதே போல் பாடத்தில் தொழில்முறைக் கல்வி (Vocational) இருந்தது.

கல்வித்திட்டம் தொடர்பாக இப்பொழுதுதான் அதிகமாக விவாதத்திற்கே வந்திருக்கிறோம். அதுவே பெரிய மகிழ்ச்சி. இப்பொழுது இதைக் குறித்து பேசுவதற்கும் கேட்பதற்கும் காதுகள் இருக்கின்றன.  இவற்றை நாம் ஒரு முப்பது, நாற்பது வருடமாக சொல்லிகொண்டேதான் இருக்கிறோம். யார் காதிலும் விழவில்லை.

என்னைப் பொறுத்தவரை நிறைய தமிழ் அறிஞர்களுக்கு, காட்சியை எப்படி பார்க்கப்படணும் என்பதைப் பொறுத்தவரை, தீபாவளி மலர் அறிவைத் தவிர வேறு கிடையாது. அதாவது கல்கிக்கு பொன்னியன் செல்வனுக்கு ஓவியம் வரைந்தவர் மணியம். கல்கியோட இலக்கியம் எல்லாம் வாரப் பத்திரிகை என்று ஒன்று தோன்றி மக்களை வந்து அடைய, அவற்றை வாங்கிப் படிக்க மக்களைத் தூண்டுவதற்காக எழுதப்பட்ட கதைகள். வாரா வாரம் நீங்கள் வாங்கி படித்தே ஆகவேண்டும். அவருக்கு தஞ்சை மாவட்டத்தின் மேல் இருக்கிற இணக்கமும், அதேமாதிரி சரித்திரக்கால விஷயங்கள் மேல இருக்கிற பார்வையும், கூடவே அவர்களுக்கான திறமையை வெளிக்கொண்டு வந்ததும்தான்.

பிரிட்டிஷ்காரன் வந்து அதற்கு முன்னாடி செய்தவையெல்லாம், அவர்கள் பார்ப்பதற்கானது, வேறு சிலர் புத்தகங்களைப் பார்த்திருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அங்கு இருக்கிற வரலாறு, மன்னர்கள் பற்றிய விஷயங்கள் எல்லாம். பத்திரிகை என்று வரும்போது, அதற்கு முன் ஓவியர்கள் மட்டானி, பாலி, ஆர்தர் ரஹம் என்று இருந்தார்கள். இவர்கள் எல்லாம் உலக இலக்கியத்தை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பத்திரிகை ஓவியர்கள் மணியம், கோபுலு போன்றவர்களுக்கே இவர்கள்தான் வழிகாட்டி.

ரொம்ப சிலபேர்தான், எங்களுக்கு நாங்கள் பார்க்கத் தகுந்த விதத்தில் முன் இருந்தார்கள். அடுத்து வந்தவர்கள் எல்லாம் கீழ் இறக்கி இறக்கி, கொண்டுபோனார்கள். மக்களோடு தொடர்பு இல்லாத, தனக்கு கீரிடம் இருக்கிறது, அதெல்லாம் செய்யக்கூடாதென்று நினைத்துக்கொண்டு, அதோட செய்நேர்த்தி இல்லாதவர்கள் எல்லாம் சேர்ந்து அதற்குள் போய் உட்கார்ந்துகொண்டார்கள்.

13. செய்நேர்த்தியை இரண்டாம் தன்மையாக பகடி செய்யும் மேதமைகள் பற்றி?

Draftmenship-பை கேலி பண்ணுகிறவர்கள் போலிகள். அது ஒரு தவம் மாதிரி. ஒரு மொழியைப் படிப்பது போல. நீங்கள் அ, ஆ என்னவென்று தெரியாமல் தமிழை எப்படி எழுதுவீர்கள்? மொழிப் பாண்டித்தியம் வந்துதான், ரெண்டு வரியில் குறள் எழுத முடியும். அவை இல்லாமல், நீங்கள் எப்படி அதை செய்யமுடியும்? ரூபம் தெரியாமல் அரூபம் எப்படி வரைவது என்றால், உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். எனக்கு ரூபம் தெரியவேண்டும், அப்போதுதான், நான் அரூப நிலையில் பல அர்த்தங்களோடு கூடியதாக, நீங்கள் நினைக்கின்ற மாதிரி நான் பேசமுடியும். அப்போதுதான் அதில் Subtext இருக்கும்.

14. அப்போ போலிகள்?

தொண்ணூறு சதவீதம் போலிகள்தான். இந்த சமூகம் எதெல்லாம் போலி என்று எப்பொழுது கண்டுபிடிக்கும் என்றால், கோடும் வார்த்தையும் வேறு வேறு இல்லை என்பதை எப்பொழுது படிக்கிறதோ, அன்றைக்குத்தான் இது சாத்தியம். கோடு என்பது வார்த்தைத்தான். Line is a kind of an organized talk, when of an artist – Monologist.

என் கோட்டை நீங்கள் படிக்கத் தெரிந்துகொண்டால்,  அதுதான் முக்கியமான விஷயம். அப்பறம் எப்படி ஒரு கட்டத்தை நான் நிர்மாணிக்கிறேன், எப்படி மாஸ்டர்ஸ் ஒரு சட்டகத்தை எழுப்புகிறார்கள் என்று அந்த அறிவை, ஒரு படத்தை, எப்படி நீங்கள் படிப்பது, ஒரு திரைப்படத்தை எப்படி நீங்கள் படிப்பது? ஓவியத்தை எப்படி படிப்பது? புகைப்படத்தை எப்படி படிப்பது? இது மாதிரியான ஒரு படிப்பு பள்ளிக்கூடத்தில் கடந்த ஐம்பது வருடத்தில் இல்லை. வேலை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்று புரிகிறதா?

15. இன்றைய நம் அரசியல் நிலையில் கலைஞர்களுக்கு நிறையவே நெருக்கடிகள். ஆனால் இதுபோன்ற நெருக்கடிகளை கலையும், இலக்கியமும் எதிர்கொள்ள போதுமான ஆகிருதி இருக்கின்றதா?  

சமூகம் ஒரு நெருக்கடி கொடுக்கிறது. சமூகத்தை திசைத் திருப்ப, மடைமாற்ற, புத்திசாலிகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதை நேரடியாக அவர்கள் செய்வதில்லை. கலை உறங்கிய மாதிரி இருக்கும், ஆனால் வெடிக்கும். நாஸிசத்தை எதிர்த்து டாடாயிஸம் மொமண்ட் அப்படித்தான் வந்தது. இந்த மாதிரியான இக்கட்டான அரசியல் சூழலில் வேலை செய்பவன்தான் மாற்றங்களை உருவாக்குகிறான்.

ஜக்காடு (Jacquard) ஒருத்தர் கண்டுபிடிக்கிறார். இந்த ஜக்காடோட தன்மைதான், அடுத்த இடத்துக்கு பிரிண்டிங் டெக்னாலஜியைக் கொண்டுவருகிறது. ஒரே நேரத்தில் பிரிண்டிங்கில், ஆப்செட் பிரிண்டிங், லித்தோ பிரிண்டிங், கலர் பிரிண்டிங் என்றும் அதோட தொடர்ச்சியாக கலர் டிவி வரைக்கும் வந்திருக்கிறது. பின்னர் கணினி வரவும் அது உதவுகிறது.

16. இன்றைய அரசியல் சூழலில் கலைக்கான இடம், அதற்கான நம்பிக்கைகள் எப்படி இருக்கிறது?

உண்மையாக சொல்லவேண்டும் என்றால் நீர்த்துப் போகவில்லை, அதாவது கருகிப் போகவில்லை. ஆனால், ஓர் ஆபத்து இருக்கிறது. எல்லா நிலையிலும் விழித்துச் செயல்படவேண்டிய, மிகமிக முக்கியமான தருணத்தில் தமிழ்நாடு இருக்கிறது. இல்லையென்றால், அது தேடுகிற அடையாளத்தைக் கண்டிப்பாக இழக்கும்.

உலகில் வளர்ந்த நாடுகள் என்றால், ஃபிரஞ்சையும் ஜப்பானியர்களையும் சொல்கிறோம்.

ஆனால் இனிமேலும் மேடைப்பேச்சு மயக்கத்திலேயே  இருக்கவேண்டியது இல்லை. மேடைப்பேச்சு நம்மை உயிர்பித்தது. அவற்றைச் சொல்லாமல் தவிர்க்கமுடியாது. ஒருகாலத்தில் திராவிட இயக்கம் வந்து பண்ணிய பத்திரிகைகளில், நான் பார்த்த சித்திரங்கள், இதழ்கள் கடை முழுவதும் தொங்கும்.

நான் சொல்லறது 62-ல். நான் ஒரு மூன்றோ, நான்கோ படிக்கின்றேன். அப்போ கண்ணன் பத்திரிகை (சிறுவர் இதழ்*) வாங்கிப் பார்ப்பேன். அந்த ஆர்வம் அப்படி வந்தது, கண்ணன் வந்திருக்காவென்று கேட்பேன் கடையில் இருக்கிறவர்களிடம், நாளைக்குத்தான் வருமென்று சொல்லுவார்கள். அதாவது மதியம்வரை கூட பொறுக்கமாட்டேன். திரும்ப அந்த கடைக்குப் போவேன். நாளைக்கு ‘வா’யென்று திட்டுவார்கள். அடிக்கடி அந்த பத்திரிகை வந்துவிட்டதா என்று பார்த்துக்கொண்டே இருப்பேன். அப்போது கடையில் தொங்கும் பத்திரிகைகளில் நாற்பதுக்கும் மேற்பட்டவை திராவிட இயக்கத்தவர்களால் நடத்தப்பட்டவையாக இருக்கும்..

திராவிட இயக்கக் கட்சி நடத்திய, கட்சிக்காரர்கள் நடத்திய இதழ்கள் பெரும்பான்மை. அவற்றில் இருந்த பழைய வேலைப்பாடுகள், ரூசோ பற்றி, உலக நாடுகளில் இருக்கிற இலக்கியங்கள் பற்றி, அறிஞர்கள் பற்றி, அத்தனையான விளக்கங்களும், தகவல்களும், படங்களும் எனக்கு கண்ணன் இதழில்தான் தெரிந்துகொள்ள முடிந்தது. அப்போது இதழ்கள் எல்லாம் டேப்ளாய்ட் சைஸ் தான். அப்போது இதழ்கள் செய்துவந்த அந்த அற்பனிப்பான சேவையை, அந்தக் காரியங்களை ஒருபோதும் எழுபதுகளுக்குப் பிறகு பார்க்கமுடியவில்லை. 

நவீன ஓவியத்திற்கு போனோமே தவிர, கலந்துரையாடல்கள், விவாதங்கள் இதெல்லாம் விட்டுவிட்டது.

இப்போ நீங்க நன்றாக பார்த்தால் தெரியும், எனக்குத் தெரிஞ்சு ஒரு பதினைந்து வருடத்தில், நாங்கள் எல்லாம் இணைந்து வேலை பண்ணிட்டு இருந்தபோதும், அதன் பிறகும் வந்த எந்த பத்திரிகைகளிலும், எந்த பத்திரிகையோட பதிப்பகமும், ஓவியத்தை பொருட்டா நினைக்கவே இல்லை. அது முழுதும் நீர்த்துப் போயிடுச்சு. அவர்களை யாரும் போஷிக்கவும் இல்லை. சிறு பத்திரிகை முதலாளிகள், பெரும் பத்திரிகை முதலாளிகளாக மாறிவிட்டார்கள். ஆனால் கூட ஓவியர்களுக்கு கொஞ்சமாவது பணம் கொடுத்து போஷிக்க வேண்டும் என்று நினைக்கவே இல்லை. ஆனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், இப்போ சமகாலத்தில் கடினமாக வரையும் ஒருவரைக் கண்டுபிடிப்பது அரிதாக இருப்பதாக, அவர்களே குறையும் பேசுகிறார்கள்.

ஓவியர்களையும் அவர்களது குறுகிய மனப்பான்மை பிரித்து வைத்திருக்கிறது.

ஓவியர்களின் வளர்ச்சியில், அவர்களே குறுக்கிட்டார்கள். இவனைவிட நான், என்னைவிட அவன், ஐந்து கொம்பு அதிகமா முளைத்துவிட்டதாக நினைக்கிறார்கள். பொது மனநிலையில் அவர்கள் இல்லை.

அப்பறம் குழு சேர்ந்து ஒருவரை ஒருவர் பேசிக்கொள்வது, நோக்கமும் தவறாக போய்விட்டது.

இங்கு பரந்த மனப்பான்மை யாருக்கும் இல்லை. அவன் அவன் பிழைப்பதற்காக போனால் கதவை சாத்துவது, ஏன்னா அவன் பிழைக்கவேண்டியது இருக்கிறது. போட்டி வந்துவிட்டது. கார்டியலா இருக்க மனம் வரவில்லை. நீங்கள் செய்கிற கலைவடிவமே உங்களைப் பண்படுத்தவில்லை என்றால்.. உங்க கலைவடிவம் வேறு யாரைப் பண்படுத்தும்? ஓவியக்கலைக் கல்லூரிகள் இன்னும் அப்டேட் ஆகவில்லை. அனிமேஷன் என்று  சொன்னதும், அனிமேஷன் ரொம்பத்தான் பாடாப்படுத்துகிறது என்று ஒருகாலத்தில் என்னிடம் பகடி செய்தவர்கள் எல்லாம், அனிமேஷன் இன்ஸ்டிடியூட்டுக்குப் போய் ஓவியத்தை சொல்லிக்கொடுக்கிற இடத்துக்கும் போனார்கள். காலம் வந்து தள்ளுகிறது. முதலில் அவர்களுக்கு வேறமாதிரி தெரியுது. நான்  யூகித்துத்தான் நடக்கிறேன். என்னுடைய தளம், எனக்கான தளமாக இருக்கவேண்டும். என்னை யாரும் வழிநடத்தக்கூடாது. ‘நீ இதைச் செய், அதைச் செய்’ என்று. இதுவரை என்னை யாரும் சொல்லவும் இல்லை.

நான் அரசுக்கு செஞ்ச வேலையை, அரசு அதை ஏற்றுக்கொள்கிற இடத்தில், அந்த விதத்தில்தான் செய்திருக்கிறேன். இல்லை என்றால் எனக்கு வசதியான இடத்திற்குள் நான் வேலைப் பார்ப்பேன். ஏன் சினிமாவிலும் பெரிய நடிகர் அழைத்து வேலை கொடுக்கிறார் என்றாலும் நான் இயங்கும் முறைக்கு புறம்பானதாக இருந்தால் முடியாது என்றே சொல்லியிருக்கிறேன்.

17. ஏன் அந்த செயல்பாடு நின்றுபோய்விட்டது?

ஏன் என்றால் 80-களுக்கு பிறகு விஷுவல் கம்யுனிகேசன் என்றும், டிவி என்றும் வந்துவிட்டது. நம்மை தொடர்புகொள்வதற்கு வசதிகள் வந்த பிறகு, டிவி, இணையம் இவையெல்லாம் வந்துவிட்டது. இவை வந்ததும், இலங்கை பிரச்சனை உலகத்திற்கு தெரியவேண்டிய இடத்தை, இணையம் கொண்டுவந்தது. இங்கு தமிழ்நாட்டில் இருக்கின்ற மக்களுக்கே அந்தச் செய்திகள் வரவிடாம இருப்பதற்கு, சில கண்காணிகள் வேலை பார்த்தார்கள். அதையெல்லாம் உடைத்தது இணையம். இணையம் மூலமா வெளியில் நடப்பதை உள்ளே சொல்லவும், உள்ளே நடப்பதை வெளியில் சொல்லவும் இணையம் பயன்பட்டது.

அதன்பிறகு தொலைக்காட்சி அவசியமானதாக வந்தவிட்டது. இப்போது யூடியூப், இப்படி கிரியேட்டிவா இருக்கிறவர்களுக்கான நிறைய வாய்ப்புகள் வந்துவிட்டது. இதனுடைய அவசியம், அதைத் தெரிந்துகொள்ள  உங்களை நோக்கித் தள்ளுகிறது.

எல்லா கல்லூரிகளிலும் Visual communication-க்கான பாடத்தை வைக்கவேண்டிய இடம் வந்துவிட்டது. ஆனால் அந்தப் பாடத்தை, நானே பல கல்லூரிகளுக்கு வடிவமைத்துக் கொடுத்திருக்கிறேன். அங்கு எல்லாம் காமிக்ஸ் புத்தகத்துக்கான ஒரு படிப்பு வேண்டும். எல்லாருமே எப்படி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக போகமுடியும்? எல்லாருமே எப்படி கேமராமேனாக போகமுடியும்? பத்திரிகைத்துறை என்றால் ஜெர்னலிஸ்ட்டாக போவதற்கு ஓர் இடம் இருக்கிறது. அங்கும் எல்லாருக்கும் இடம் இல்லை. அப்படியென்றால் நீங்கள் சுதந்திரமான ஒருவராக வரவேண்டும்.

ஐந்து நபர் சேர்ந்து ஒரு புத்தகத்தை கொண்டுவரலாம். ஐந்து பேர் சேர்ந்து ஒரு கிராஃபிக்ஸ் நாவல் பண்ணலாம். ஏன் அதெல்லாம் செய்யமாட்டிங்கிறீங்க? அப்படின்னு பசங்ககிட்ட சொல்லுவேன். அப்படி ஒரு ஸ்பேஸ் இன்னைக்கு வந்துவிட்டது. அதை உணர்ந்து காலத்தோட, கலைக்கல்லூரிகளும் அப்டேட் ஆகணும். நான் அங்கு கணினி எல்லாம் வாங்கிப்போடுங்க என்று சொன்னேன். செய்தார்கள். என்னுடைய ஆசிரியரே கல்லூரி முதல்வராகவும் இருந்தார். அதெல்லாம் செய்தார்கள். ஆனால் அதற்கு தகுந்த ஆசிரியர்களோ, அங்கு மட்டும் இல்லை, பல கல்லூரிகளில் விஷுவல் கம்யூனிகேசன் பாடங்களை நடத்தினார்களே ஒழிய, அவனுக்கு இந்தப் பாடங்கள் என்னவென்று புரிவதற்குள், அந்தப் பாடங்களை முடித்து வெளியில் வந்துவிடுகிறான்.

இப்போது எட்டாவது படிக்கும்பொழுதே, ஒருவன் தயாராகணும். ஒன்பதாவது படிக்கும்போது, மெதுவா வந்து சினிமா என்று சொன்னால் பயப்படுகிறான். சினிமா என்றால் என்ன என்றும், சினிமாவை எப்படிப் பார்க்கிறது என்றும். ஓவியத்தை எப்படி பார்க்கிறது, புகைப்படக்கலையை எப்படித் தெரிஞ்சுக்கிறது.

நூற்றி ஐம்பது ஆண்டுகளாக புகைப்படம் என்று நானும் நீங்களும் கருதி வேலை செய்தது, இனி புகைப்படம் கிடையாது. இனிமேல் அது டேட்டா தான் என்று சொல்லும்போது, அதைக்கேட்டு ஒருநாள் முழுவதும் யோசித்துக்கொண்டே இருந்தேன். இனிமேல் அப்ளிகேஷன், டேட்டா தான். அப்ளிகேஷன் நிறைய விசயங்களைக் கொடுக்கிறது  அதைத் தெரிந்து வைத்துக்கொள்வதன் வழியாகத்தான்.

இப்போது நான் வேற நாடுகள் போகும்போது, வெறும் ஐபோனைத்தான் கொண்டுபோகிறேன். பெரிய கேமராவை எல்லாம் எடுத்துகொண்டு போவது இல்லை. ஐபோனில் எடுத்த புகைப்படங்களைத் தொகுத்து ஒரு புத்தகமா கொண்டுவருகிறேன்.

ஐரோப்பாவில் பத்து ஓவியர்கள் இணைந்து கண்காட்சி வைக்கிறார்கள். எல்லோரும் எட்டுப் படம், பத்துப்படம், அன்றைக்கு ஒரு புத்தகம் விற்கிறார்கள். புகைப்படங்களை வாங்கக்கூடிய மனிதர்கள் வாங்குவார்கள், ஆனால் அதற்கு வேல்யு குறைந்துகொண்டே இருக்கிறது. யார் வேண்டுமென்றாலும் புகைப்படத்தை எடுக்கமுடியும். எல்லாம் தாண்டி, எதையும் நமக்கு பழக்கப்படுத்துறது இல்லை. ஒரு வலுவான கலைஞன் 50 வயது 60 வயது ஆனால்தான், யுரோப்பில் எஸ்டாபிளிஷ் ஆவான். அப்படி இல்லையென்றால் அவன் முக்கியமான ஆளாக இருக்கவேண்டும். அங்கீகாரம் என்பது இந்த அளவில் தானிருக்கிறது.

புகைப்படம் எல்லாம் மாறிகொண்டே வருகிறது. நான் படித்த சினிமா இப்போது கிடையாது. அன்று இருந்த கேமரா அசையவே அசையாது, அதை ஐந்துபேர் தூக்கி வைக்கவேண்டும். அதற்கு ஒரு கிராமர் இருந்தது. இன்று கேமராவின் அளவு மாறிவிட்டது.  பத்து கேமராவை வைத்து எடுத்து, ஒரே ஒரு தடவை சேர்த்தால் போதும், எனக்கு அரைமணி நேரக்காட்சி கிடைத்துவிடும்.  

இன்றைக்கு சினிமா அப்படி ஒரு இடத்திற்கு வந்துவிட்டது. நிறைய விஷயங்கள் மாறிவிட்டது. அது எப்படி நீங்கள் பேசவேண்டும் என்பதை மாற்றிவிட்டது. மொழியை மாற்றிவிட்டது. டெக்னாலஜி, மொழியை மாற்றுகிறது. அப்படியென்றால் டெக்னாலஜியை கற்றுக்கொண்டே வரவேண்டும். இங்கு அழகியலை சொல்லிக்கொடுப்பவர்கள் இல்லை. அவர்கள் தொலைந்தே போய்விட்டர்கள்.

அப்போ அழகியல்.

அதாவது காண்பியல் ரீதியாக படைப்புகளில் இயங்குகிற கலைஞர்களின் செயல் ஒன்றுதான். டெக்னிக் எப்போதும் ஒன்றுதான். டெக்னாலஜிதான் மாறிக்கொண்டிருக்கும்.

சமகாலத்தில் சமூகம் காண்பியல் ரீதியாகத்தான் பேசுகிறது. இதைப் புரிந்துகொள்ளாமல் சமகாலத்தில் ஒரு கலைஞன் வேலையைத் தொடங்கவே முடியாது.

****

சந்திப்பு – ஜீவ கரிகாலன்…

நினைவோ ஒரு பறவை – 02 ஏ.பி.நாகராஜன்

0

ஜா தீபா

முதல் பகுதியை வாசிக்க

மிழ் சினிமாவில் சில இயக்குநர்களின் பெயர்கள் காலங்கள் கடந்தாலும் நினைவில் கொள்ளப்படும். மீண்டும் மீண்டும் பேசப்படும். ஏ.பி நாகராஜன் அப்படியான இயக்குநர். பிரம்மாண்டப் படங்களின் காரணகர்த்தா.

இருபது வருட காலம் இவர் தொடர்ந்து இயக்கியப் படங்கள் அனேகமும் வெற்றிப் படங்கள். நவராத்திரி, திருவிளையாடல், திருவருட்செல்வர், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, தில்லானா மோகனாம்பாள், திருமலை தென்குமரி, ராஜராஜ சோழன், கண்காட்சி என்று இவரது படங்கள் ஒவ்வொன்றும் எப்போதும் வியப்பில் ஆழ்த்துபவை. ஏ.பி. நாகராஜன் பெயர் எப்போதும் புராணப்படங்களோடே தொடர்பு கொள்ளப்படுகிறது. பல பரீட்சார்த்த முயற்சிகளையும் திரைப்படங்களில் அவர் எடுத்திருக்கிறார். சொல்லப்போனால் அவர் எடுத்த அத்தனைப் புராணப்படங்களுமே பரீட்சார்த்த முயற்சிகள் தான்.

இவர் இயக்குவதற்கு முன்பும் இந்தியாவில் புராணப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. அவை எல்லாமே புராணங்களில் இருந்தும், இதிகாசங்களில் இருந்தும் அப்படியே எடுத்தாளப்பட்டு திரைவடிவமாக மாற்றப்பட்டவை. அவை யாவற்றிலும் இருந்து ஏ.பி நாகராஜன் தன்னுடைய பாணியை முற்றிலுமாக மாற்றிக் கொண்டார் என்பது தான் சிறப்பு. ஏபிஎன்னின் காலகட்டத்திற்கு முன்பு புராணப்படங்கள் பாடல்களால் நிரப்பப்பட்டிருந்தன. நாம் புராணத்தில் என்ன வாசிக்கிறோமோ அதையே காட்சி வடிவமாகத் தந்திருந்தனர். கடவுள்கள் மிக நேர்த்தியுடனும், அருளாசி தருபவர்களாவும், வரங்கள் அளிப்பவர்களாகவும் அரக்கர்களை வதம் செய்பவர்களாகவும் காட்டப்பட்டனர். ஏ.பி என் இவை எல்லாவற்றையும் கடந்து பல கோணங்களில் புராணங்களை அணுகுகிறார்.

1960 , 70கள் ஏபிஎன் இயக்கிய படங்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவை வெளிவந்த வருடங்கள். அந்தக் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் சமூகப் படங்களும், குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களை சொல்லும் திரைப்படங்களும் வெளிவந்து கொண்டிருந்தன. அவற்றில் இருந்து மாறுபட்டு ஏபிஎன் புராணத்தை நோக்கி தன் கவனத்தைத் திருப்பியிருந்தது அவரை தனித்துக் காட்டியது.

ஏபிஎன்னிடம் வியக்கவைக்கூடிய பல அம்சங்கள் உள்ளன. இராமாயணம், மகாபாரதம் போன்றவை கதைகளாக வந்து கொண்டிருந்த வேளையில் தமிழ் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த கடவுள்களையும் தமிழ் பக்தி இலக்கியத்தில் உள்ளவற்றையும் காட்சிபடுத்தினார் ஏபிஎன். உதாரணமாக திருவருட்செல்வர், கந்தன் கருணை, காரைக்கால் அம்மையார் போன்ற படங்களை சொல்லலாம்.

1965ஆம் ஆண்டு அவர் இயக்கிய திருவிளையாடல் இன்றளவும் புராணக் கதைகளின் முன்னோடி என்று சொல்ல இயலும். சிவனின் திருவிளையாடல்கள் என்பது தான் கதையின் மையம். இதில் அவர் எடுத்துக் கொண்ட கதைகள் யாவும் தமிழ்’ மக்கள் கேள்விப்பட்ட கதைகளும், செவிவழி வந்த கதைகளுமே. முருகன் தன் குடும்பத்திடம் கோபித்துக் கொண்டு போய் பழனிமலையில் அமருகிறார் என்பது இங்குள்ள அனைவரும் அறிந்த கதை. இதனைக் கதையின் முதல் பாகமாக மாற்றுகிறார். முருகனிடம் பார்வதி சிவனின் விளையாடல்களை சொல்கிறார் என்பதாகத் தொடங்கி வைக்கிறார் கதையை. அனைவருக்கும் தெரிந்த ஒரு கதையை சொல்லிவிட்டு பின்னர் செவிவழிக் கதைகளை இணைக்கிறார். இதற்கு காரணம் அவருக்குள் இருந்த அற்புதமான திரைக்கதையாசிரியர். மக்களுக்கு எது சுவாரஸ்யம் தரும் என்பதை அறிந்தவர் அவர். அதை சரியான கலவையில் சேர்க்கத் தெரிந்தவர்,

தனித்தனியாய் திருவிளையாடலில் காட்சிகளைப் பார்த்தாலும் நம்மால் ஒன்ற முடிவதற்கான காரணம் அவர் திரைக்கதையில் ஒவ்வொரு பகுதிக்கும் கொடுக்கிற முக்கியத்துவம்.

அவர் படத்தைத் தொடர்ந்து பார்த்தோமானால் நம்மால் ஒன்றை விளங்கிக் கொள்ள இயலும், ஒவ்வொரு காட்சித் தொடரையும் அவர் தனியான திரைப்படமாக கருதியிருப்பது தெரியும். அதில் ஒரு நகைச்சுவை காட்சி, மயக்கும் பாடல்கள், உணர்வுக் கொந்தளிப்பு அதற்கொரு முடிவு இப்படியான காட்சிகளை ஒன்றடக்கிய காட்சித் தொடர்கள் கொண்ட படத்தைத் தருவதற்கு அசாத்தியமான படைப்பூக்கம் வேண்டும்.

உதாரணமாக ‘திருவிளையாடல்’ தருமி காட்சித் தொடரை எடுத்துக் கொள்ளலாம். தருமியின் அப்பாவித்தனத்தில் நமக்குத் தரப்பட்டிருக்கும் நகைச்சுவை உணர்வு, ‘பொதிகை மலை உச்சியிலே’ பாடல், நக்கீரனுக்கும், சிவனுக்கு இடையிலான விவாதம், செண்பகபாண்டியன் சிவனிடம் மன்றாடுகிற உணர்வுக் கொந்தளிப்பு என்று இருபது நிமிடங்களில் நமக்குத் தந்திருக்கிற விருந்து இது. இதனை ஏபிஎன் தொடர்ந்து தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் தக்க வைத்துக் கொண்டிருந்தார்.

சிறு வயதிலேயே நாடக உலகில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஏபிஎன்னுக்கு மக்களின் ரசனை நாடி தெரிந்திருந்தது. எதற்கு கைத் தட்டுவார்கள் எதில் தன்னை மறப்பார்கள் என்பது அத்துபிடியாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு படத்தின் தொடக்கத்தையும் பாடலில் இருந்தே தொடங்குகிறார் அல்லது ஒரு இசைக்கோர்வையுடன். இது ரசிகர்களைத் தயார் செய்யும் யுத்தி. சிவன் வாழும் கைலாயம் எனும்போது அங்குள்ள பூத கணங்கள், நந்தி, ரிஷிகள் , அப்சரஸ்கள் என ஒரு பிரமாண்டக் காட்சியை நம்மிடம் காட்டுவதற்கு இசையுடன் சேர்ந்து சில நிமிடங்களை எடுத்துக் கொள்கிறார்.  ரசிகரை முழுவதுமாக அதோடு தன்னை ஒப்புக் கொள்ள வைக்கிறார்.. சரஸ்வதி வாழும் சத்தியலோகம் எனில் மென்மையான இசையுடன் கூடிய இசைக்கோர்வையை நமக்குத் தந்துவிட்டு ‘சரஸ்வதி சபதம்’ கதைக்குள் செல்கிறார். முருகனின் கதை சொல்லப்போகும் படமான ‘கந்தன் கருணை’யில் ஔவையின் பாடலோடு தொடங்குகிறார். இவர் இயக்கிய படங்கள் அல்லாமல் இவர் திரைக்கதையில் K. சோமு இயக்கத்தில் வெளியான ‘சம்பூர்ண இராமாயணம்’ படத்திலும் ராமாயணக் கதையின் முக்கிய கதாபாத்திரங்களை தொடக்கத்தில் வருகிற பாட்டில் அறிமுகப்படுத்தும் யுத்தியை செய்திருக்கிறார். இதனை அவர் மேடை நாடகத்தின் தாக்கத்தில் இருந்து பெற்றிருக்கக்கூடும்.

ஆயிரம் பக்கங்களுக்கு மேலான கொத்தமங்கலம் சுப்பு எழுதிய ஒரு பிரபலமான நாவலே ‘தில்லானா மோகனாம்பாள்’ ஆனது. சண்முகமும், மோகனாவும் எந்த மாதிரியான குணாதிசயம் கொண்டவர்கள் எனபதற்கு பல பக்கங்களை சுவாரஸ்யமாக ஒதுக்கியிருந்தார் சுப்பு. அதனை படத்தின் முதல் காட்சியிலேயே தொடங்கி விடுகிறார்  ஏபிஎன். தமிழ் சினிமா தொடக்கக் காலந்தொட்டே நாவல்களைத் திரைப்படமாகத் தந்திருக்கிறது. அதிலும் ‘தில்லானா மோகனாம்பாள்’ நாவலுக்கு இருந்த வரவேற்பு மிகப் பெரியது. அதனை இரண்டரை மணிநேர படமாகத் தருவதற்கு திரைக்கதை குறித்த நுண்ணுணர்வு தேவைப்படும். படங்கள் இயக்குவதற்கு முன்பே வெற்றிப்படங்களுக்கு திரைக்கதையாசிரியராக  பணி செய்த ஏபிஎன் தன்னுடைய பலத்தை நம்பினார். சண்முகத்துக்கும், மோகனாவுக்கும் மோதல், காதல், ஈகோ, பிரிவு, எதிர்ப்பு, திருமணம் அதன் பிறகான மனத்தாங்கல் என்று விரியும் நாவலில் எதைச் சொன்னால் கச்சிதமான திரைக்கதையாக அமையும் என்கிற தெளிவு ஏபிஎன்னுக்கு இருந்தது. சண்முகம் மோகனா திருமணம் வரை கதை சொன்னால் போதுமானது என்று முடிவெடுத்திருந்த அதே வேளையில் நாவலில் அவர்கள் திருமணத்துக்குப் பிறகு வரும் சம்பவங்களை படத்தில் சரியாக சேர்த்திருந்தார்.

நாவலில் ஒரு சவால் என்பது இரண்டு கலைஞர்களுக்குமான போட்டியைப் பற்றி எழுதிய பகுதி. பத்து பக்கங்கள் வருகிற பகுதி இது. நாதஸ்வரத்தின் இசையையும், நடனத்தின் வீச்சையையும் சரிசமமாக எழுத்தில் சொல்லிக் கொண்டே வந்து இறுதியில் போட்டி முடியும் இடம் வருகிறபோது வாசிக்கிற நமக்கு நாமே போட்டியில் கலந்து கொண்டது போன்ற உணர்வு ஏற்படும். இதனைக் காட்சியாகக் காட்டுவது எளிது. அதற்கும் தன் மெனக்கிடலை ஏபிஎன் தந்திருக்கிறார் என்பது  படத்தைப் பார்க்கிறபோது உணர்ந்து கொள்ள இயலும்.  

ஏபிஎன்னின் மற்றொரு பலம் அவரது வசனங்களாக இருக்கிறது. அவரது திரைப்பட வசனங்களை கோயில் திருவிழாக்களின்போது ஒலிபெருக்கியில் ஒலிக்கவிட்டிருக்கிறார்கள். அது திருவிழாவின் ஒரு அங்கமாகவே இருந்திருக்கிறது. வார்த்தை விளையாட்டுகளில் தேர்ந்தவராக இருந்திருக்கிறார். இதனை அவருடைய எல்லாப் படங்களிலும் பார்க்க இயலும். தருமிக்கும் சிவனுக்கும் இடையில் நடைபெறும் கேள்வி பதில் போன்றவை அவரது பல படங்களிலும் வெளிப்பட்டிருக்கிறது. இருவர் ஒரு விஷயத்தைக் குறித்து விவாதிக்கும்போது கேள்வி பதிலாக வருகிற காட்சியமைப்புகள் இவரது படங்களில் பிரபலம். நகைச்சுவைக் காட்சிக்கு முக்கியமானது அதன் ‘டைமிங்’. இதனை இவரது படங்களில் இயல்பாய் காண இயலும். கடவுள்களும் சாமானிய மொழி பேசுவார்கள். கடவுள்கள் மனித உரு கொண்டு வருகையில் அந்தக் கதாபாத்திரத்தன்மைக்கு ஏற்றாற்போல் வட்டார மொழி பேச வைத்திருப்பார். வட்டார மொழியைத் தமிழ்ப்படங்களுக்குள் கொண்டுவந்ததில் ஏபிஎன்னுக்கு பெரும்பங்கு உண்டு. இவரது கதை வசனத்தில் வெளிவந்த ‘மக்களைப் பெற்ற மகராசி’ படத்தில் கதாநாயகன் சிவாஜி கணேசன் முழுக்கவுமே கொங்குத் தமிழில் பேசி நடித்திருப்பார்.

மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக சொல்ல வேண்டியது இவரது படங்களின் பெண் கதாபாத்திரங்கள். கடவுளுக்கு இணையாக இருப்பினும் வாய் திறவாமல் வந்துபோகும் பெண் கடவுள்களையே திரைப்படங்கள் காட்டிக் கொண்டிருந்தன. புராணப்படங்கள் மட்டுமல்ல இவர் கதை வசனம் எழுதிய படங்களிலும் இயக்கிய மற்றப் படங்களிலும் கூட அப்பெண் கதாபாத்திரங்கள் கம்பீரமானவர்களாக தங்களுடைய உரிமையை விட்டுக் கொடுக்காதவர்களாக வருவார்கள். இதோடு பெண்களுக்கு உள்ள பிரச்சனைகளையும் வாய்ப்பு கிடைக்குந்தோறும் காட்சிகளில் சொல்லியிருக்கிறார். சிவனின் மனைவி சக்தியே ஆனாலும் தான் ஒரு பெண் என்பதால் சிவனுக்கு அடங்க வேண்டியதில்லை என்று வாதாடும் இடமும், அடிமை வேலை செய்பவரின் பெண் என்பதால் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கீழ்ப்படியும் அவசியம் இல்லை என்று ‘வடிவுக்கு வளைகாப்பு’ படத்தின் நாயகி பாத்திரமும், ராஜராஜ சோழனின் மகளாக குந்தவை வாதாடும் இடமும் என ஒவ்வொரு படங்களிலும் சுட்டிக் காட்ட இயலும்.

அவர் துணிந்து எடுத்த மற்றுமொரு முயற்சி ‘நவராத்திரி’ படம். இன்று அந்தப் படத்தைப் பார்க்கையில் கூட பிரமிப்பு தருகிறது. அந்தக் கதை சொல்லப்பட்ட விதமும், இறுதியில் அத்தனை சிவாஜி கணேசர்களையும் ஃபிரேமுக்குள் கொண்டு வந்த விதமும்…அருமை.

வருடத்திற்கு மூன்று படங்கள் வரை கூட ஏபிஎன் அவர்கள் இயக்கியிருக்கிறார். அனைத்துமே அதிக உழைப்பை எடுத்துக் கொள்ளக்கூடிய மாபெரும் அரங்கு நிர்மாணமும், நட்சத்திர நடிகர்களையும் கொண்டவை. இதனை சாத்தியப்படுத்தியிருக்க வேண்டுமென்றால் சரியான திட்டமிடுதலும், உழைப்பும் தான் காரணமாக இருந்திருக்க முடியும்.

கண்காட்சி என்றொரு படம். ஒரு கண்காட்சியில் தான் படம் தொடங்கி முடியும். நான்கு பிரதான கதாபாத்திரங்கள். இதற்கிடையில் திரில்லிங்கான சில விஷயங்கள். முழுதும் ‘செட்’ போடப்பட்டு எடுக்கப்பட்டவை. இந்தப் படம் நிச்சயம் புதிய முயற்சி என்று சொல்லலாம். அதே போல் நடிகர் குழுவினரை கொண்டு எடுக்கபப்ட்ட திருமலை தென்குமரி. படத்தின் பெரும்பகுதி வெளிப்புறக் காட்சிகள். ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு ஊர். இதெல்லாம் அப்போதைய காலகட்டத்தில் சவாலை ஏற்படுத்தியிருக்கும்.

ஒரு குடும்பம் போல் இணைந்து படங்களை இவர் இயக்கியிருக்க வேண்டும். அநேகமாய் இவரது படங்களில் சிவாஜி கணேசன் நடித்திருக்கிறார். நாயகிகளில் சாவித்திரி. இசை கே.வி மகாதேவன்,

ஒளிப்பதிவு கே.எஸ் பிரசாத் ஒலிப்பதிவு டி.எஸ் ரங்கசாமி

எடிட்டிங் ராஜன் கலை கங்கா – இவர்கள் தான் ஏபிஎன்னின் மாபெரும் பலமாக இருந்திருக்கிறார்கள். தான் கற்றுக்கொண்ட குருகுலமான சங்கரதாஸ் சுவாமிகளின் பெயரை பல டைட்டில்களில் பயன்படுத்தியிருக்கிறார். அவரது சில வசனங்களையோ, பாடல்களையோ பயன்படுத்துகையில் அதற்கான உரிய மரியாதையை தந்திருக்கிறார்ர். நவராத்திரி படத்தில் கூத்து மேடை பாடல் முழுக்கவுமே ஏபிஎன் தான் வளர்ந்த நாடகத் துறைக்கு செய்த பெருமைமிகு சமர்ப்பணம்.

நாகராஜன் அவர்களின் புராண, வரலாற்று நாயகர்களின் படங்களின் நம்மை ஈர்ப்பது அதன் வண்ணங்களும், அரங்க வடிவமைப்புமே. சிறு வயதிலேயே நாடகக் கம்பெனியில் சேர்ந்து அங்கேயே வளர்ந்ததால் ஒரு காட்சியில் வண்ணத்தை சேர்ப்பதின் இலாவகத்தை அவர் அறிந்திருந்தார்.

இதில் முக்கியமாக குறிப்பிடப்படபட வேண்டிய ஒன்று உண்டு.
நாடக மேடையின் திரைச்சீலைக்கு திரைக்கு ஓவியம் வரைபவர்கள் தான் காலண்டர் ஓவியங்களை நமக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.

அவர்கள் தான் கடவுளர்களை ஒவ்வொரு இல்லத்துக்கும் இயல்பாக அறிமுகம் செய்து வைத்தவர்கள். சிவன் சாம்பல் நிறத்திலும், பார்வதி எனும்போது பச்சை நிறத்திலும், கிருஷ்ணனின் உருவம் நீலமாகவும் நம்முடைய கற்பனையில் பதியக் காரணம் காலண்டர் ஓவியர்களால் தான்.

நாடக மேடையில் இருந்து காலண்டருக்கு இடம்பெயர்ந்த கடவுளர்களை மீண்டும் திரையில் பிரதி எடுத்தன ஏ.பி. நாகராஜன் அவர்களின் படங்கள்.

காலண்டர் கடவுள்களின் உருவ மாதிரியை வைத்தே ஒப்பனை செய்திருக்க வேண்டும். உதாரணத்துக்கு கந்தன் கருணை படத்தின் சிவகுமார் அவர்கள் முருகன் வேடம் ஏற்றிருந்தார். இந்த முருகனை நாம் அதிகமும் காலண்டரில் பார்த்திருப்போம். காலண்டர் ஓவிய மேதையான மு. ராமலிங்கம் அவர்களின் பாணியிலான ஒப்பனையே படத்துக்கும் பயன்படுத்தியிருக்கக்கூடும்.

ஏ.பி நாகராஜன் என்றதும் ‘சாமி படமெல்லாம் எடுப்பாரே அவர் தானே’ என்று இப்போதைய தலைமுறைக்கு பதிந்திருக்கிறது. சாமி படங்கள் தான் எடுத்தார் என்றாலும், ஒருபோதும் சாமி நேரடியாக வந்து கண்ணைக் குத்தும் என்றோ, பழிவாங்கும் என்றோ அவர் எடுக்கவில்லை.

கடவுளர்களை இயல்பானவர்களாக அவர் காட்டியிருக்கிறார். அவர்களுக்குள் இருக்கும் ‘ஈகோவினை’ அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அதை நாம் யோசிக்காத அளவுக்கு நேர்த்தியாக சொன்னதினாலேயே ஏ.பி நாகராஜன் எப்போதுமே பிரியமான இயக்குநராக இருக்கிறார். மக்களின் பெருந்தன்மையும் குறிப்பிட வேண்டும். கடவுள்கள் சக மனிதர்களைப் போலவே கோபம் கொள்வார்கள், குடும்ப சண்டையிடுவார்கள் என்றெல்லாம் ஏபிஎன் திரைப்படங்களில் காட்டியபோதும் அதற்காக தடை போடும் விதமாக வழக்குத் தொடுக்க வேண்டும் என்றெல்லாம் யோசித்தவர்களாக இல்லை. அத்தனை பக்குவமான ரசிகர்களாக இருந்திருக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் ஏபிஎன் படங்களை இயக்கியிருந்தால் படங்களை வெளியிடவே பெரும்போராட்டமாக இருந்திருக்கும். மக்கள் கடவுளை எப்போதும் தங்களுக்கு நெருக்கமானவர்களாகவே பார்க்கிறார்கள். அதனால் தான் ஏபி நாகராஜனின் படங்களின் கடவுளர்களை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். ஏபி நாகராஜன் அவர்களை கடவுள்களுக்கும் மனிதர்களுக்கும் பாலமாய் இருந்தவர் என்று சொல்ல முடியும். இதில் அத்தனை மிகையிருக்காது என்றே தோன்றுகிறது.

***

ஜா தீபா – எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், ஆவணப்பட இயக்குனர் என தொடர்ந்து எழுதி வரும் இவர் நெல்லையை சேர்ந்தவர். அயல் சினிமா இதழின் பொறுப்பாசிரியராக இருந்தார். “நீலம் பூக்கும் திருமடம்” எனும் இவரது சிறுகதைத் தொகுப்பு பரவலான கவனத்தைப் பெற்றது. இவரது மின்னஞ்சல் – deepaj82@gmail.com


க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி 2020 – முதற்கட்ட தேர்வு (நெடும்பட்டியல்)

7

வணக்கம்,

க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி 2020ல் கலந்து கொண்ட அத்தனை எழுத்தாளர்களுக்கும் ‘யாவரும்’ தமது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது. இதன்படி தேர்வுக்கான முதற்கட்ட நெடும்பட்டியல் இறுதிசெய்யப்பட்டு விட்டது. கீழ்கண்ட எழுத்தாளர்களது சிறுகதைகள் அடுத்த கட்ட தேர்வுகளுக்கு கலந்துகொள்கிறது. அவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துகள்.

  1. வ.கீரா
  2. அய்யப்பன் மகாராஜன்
  3. எஸ்.ராஜகுமாரன்
  4. அண்டனூர் சுரா
  5. எம் கே குமார்
  6. ஹரீஷ்
  7. கார்த்திக் பாலசுப்ரமணியன்
  8. வேல்விழி
  9. மயிலன் ஜி சின்னப்பன்
  10. சரவணன் சு
  11. ஜெ.அன்பு
  12. இந்துமதி மனோகரன்
  13. அ.வால்டர் ராபின்சன்
  14. விஜய ராவணன்
  15. ஸ்ரீ கங்கைபிரியா
  16. இரா வசந்த குமார்
  17. கோவர்தனா
  18. விஜய் பிரசாத்
  19. சுனில் கிருஷ்ணன்
  20. அனுசத்யா
  21. சுஷில் குமார்
  22. சக.முத்துக்கண்ணன்
  23. ‘பரிவை’ சே.குமார்
  24. புதுவைப் பிரபா
  25. க.இராஜசேகரன்
  26. மதி
  27. அரவிந்த் சச்சிதானந்தம்
  28. தென்றல் சிவக்குமார்
  29. பாலகுமார் விஜயராமன்
  30. மௌனன் யாத்ரிகா
  31. அ.நாகராசன்
  32. ஜெகநாத் நடராஜன்
  33. அருண் மோ
  34. பாவெல் சக்தி
  35. A.வினோத்குமார்
  36. ஞா.கலையரசி
  37. பிரபு தர்மராஜ்
  38. வைத்தி சோமசுந்தரம்
  39. விமல் பரம்
  40. அனந்த். ரவி

யாவரும் பப்ளிஷர்ஸ் – சிறப்புத் தள்ளுபடி

0

கடந்த மாதம் அறிவித்த யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியிட்ட நூல்களுக்கான சிறப்புத்தள்ளுபடிக்கு வாசகர்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. வாசகர்கள் வசதிக்காக மீண்டும் செப்டம்பர் 06 முதல் செப்டம்பர் 30 வரை எமது நூல்களுக்கு சிறப்புத்தள்ளுபடி அறிவிக்க்கப்படுகிறது.

இதன்படி
யாவரும் பப்ளிஷர்ஸ் சிறப்புத் தள்ளுபடி

₹100 முதல் ₹500 வரை 15% தள்ளுபடி
₹501 முதல் ₹1500 வரை 20% தள்ளுபடி
₹1501 முதல் ₹2500 வரை 25% தள்ளுபடி
₹2501 மேல் எல்லா நூல்களுக்கும் 30% தள்ளுபடி
*( இவையனைத்தும் தள்ளுபடி போக மொத்தத் தொகை)

தமிழ்நாடு, புதுச்சேரிக்குள் தபால் இலவசம், மற்ற மாநிலங்களுக்கு ₹120 முதல் ₹180 வரை

Gpay : 9841643380

(உறுதிப்படுத்த 9042461472 என்கிற எண்ணிற்கு பணம் செலுத்திய விவரத்தை குறுஞ்செய்தியாக அல்லது வாட்ஸப்பில் அனுப்பவும்)

வங்கியில் பணம் செலுத்த :

A/c no.34804520231
Yaavarum Publishers
SBI, Chinmaya nagar branch
IFSC code.SBIN0007990
(உறுதிப்படுத்த 9042461472 என்கிற எண்ணிற்கு பணம் செலுத்திய விவரத்தை குறுஞ்செய்தியாக அல்லது வாட்ஸப்பில் அனுப்பவும்)

மேலும் புத்தகங்களை ஆன்லைன் வழி பெற்றிட – be4books.com-ஐ அணுகவும்

நூலகங்களுக்கு, கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிட வேண்டுமெனில், கூடுதல் சலுகைகளும் உண்டு * ,

குறிப்பிட்ட ஆர்டர்களுக்கு அன்பளிப்பு நூல்களும் உண்டு…

அமிர்தம் சூர்யா கவிதைகள்

3

அமிர்தம் சூர்யா

1. வானிலை அறிக்கை
*

பசுவின் மடியை முத்தமிட துடித்து தோற்கிறது
நேராக பெய்யும் மழை

கருப்பு மரவட்டையை நனையாமல் காக்கிறது
அந்த வெள்ளை காளான் குடை
சிலிர்க்கும் குளிரை பூசிக்கொள்ளவே
உரிக்க தொடங்குகிறது அரவம் தன் சட்டையை
ஒரு போதும் நனைவதில்லை – தொப்பலான பின்னும்
காக்கை அடைக்காக்கும் முட்டை
குட்டிகுட்டி சமுத்திரத்தால் மூழ்குகிறது
கீற்று குடிசையில் தலையணை தீவு
நனைந்தபடி தலை துவட்ட யசோதரையின்
கதவை தட்டுகிறான் கடைசி புன்னகையோடு புத்தன்
மழை இப்போது தான் நிற்க தொடங்குகிறது

***

2. — போல–என்று இருப்பதால் இது கவிதை அல்ல
*

அருங்காட்சியகத்தில் கண்ணாடி பேழைக்குள்ளிருக்கும்
எலும்புகளை வேடிக்கை பார்க்கும் சபிக்கப்பட்ட நாயை போல்

புரூப் ரீடரின் எல்லா கனவிலும் ஓடும்
ஒற்று எழுத்துக்களை போல்

பெருக்க வைக்க விரை நசுக்கி திணிக்கப்பட்ட சாம்பலின்
எரிச்சலை மொழிபெயர்க்கும் பன்றியின் ஓலம் போல்

என் பிரதியை எனக்கு எதிராக அர்த்தப்படுத்துகையில்
வரிகளை சிலுவையாக்கி அறையப்படுவதை போல்

கொட்டாங்கச்சி மார்பகத்துக்கும் வக்கில்லாமல்
தரையை புணரும் பிரம்மசாரிகளை போல்

போகன்வில்லா மலர்களுக்கு தினந்தோறும்
வாசனை திரவியம் அடிக்கும் ஊழியன் போல்

நான் முடிக்க முடியாமல் கடைசி வரிக்கு திணறும் போது

…அடப்பாவிகளா இருக்கும் துயரை இருப்பது போல் சொல்லமுடியாம

இலக்கியத்தை இப்பட்டி நாசமாக்கீட்டீங்களே…
என்றபடி கடக்கிறான் சாமத்து கோடாங்கி.

***

3. அழுகை குறித்தான அறிக்கை
*

எப்போதும் சிரித்தபடியே இருக்குமெனக்கு
வாய்விட்டு அழவேண்டும் என்பது நெடுநாளைய ஆசை

அன்பே சிவம் என்ற பெயர் தாங்கிய அந்த வீட்டில் தான்
என் தைரியமான தோழி தூக்கிட்டுக் கொண்டாள்.

ஓடிப்போய் நின்றேன் வாசலில்
நின்று கொண்டிருக்கும் கூட்டத்தில் நடுவே
படுத்துக்கிடந்தாள் அழகி.
நாகரிக மெளனத்தை அந்தச் சூழலின் மீது
லேமினேஷன் போல யாரோ போர்த்தியிருந்தனர்.

என் ஆசை நிராசையானதாய்
நினைக்கும் போது
இறந்தவளின் செல்ல மகள்….

அம்மா நான் உன்னைப் பாத்திரமா பாத்துப்பேன்
ப்ளீஸ் போகாதம்மா- என்று அழுதபோது…

அரசின் உத்தரவுக்குக் காத்திருந்து
கிடைக்காத நீர்
மதகுகளை உடைத்துக்கொண்டு
பேரிரைச்சலோடு வெளியேறியதைப் போல்
கூட்டத்தோடு நானும் ஓ வென கதற…

சடலத்தின் அருகே இருந்த வள்ளுவன்
தம் சங்கை எடுத்து ஊதத் தொடங்கினான்
அந்தச் சங்கின் பேரோசையில்
மூழ்கிச் செத்து மிதந்தன அழுகையின் கூக்குரல்கள்.

4. அப்பாவின் ரத்தக் காட்டேரி
*

மணிக்கணக்கில் பெளத்தம் பேசும் அப்பா
வார்த்தைக்கு வலிக்காதபடி கடிந்து கொண்டாலும்
ரத்தக் காட்டேரிக்கு பூசையிடாமல் தொடங்கியது இல்லை

எந்த நற்காரியத்தையும்

பூசையின் போது
மதகு உடைத்த நீராக
அவர் அதரத்திலிருந்து அவரை மீறி
வழியும் சந்திரா சந்திரா என்ற வினைசொல்

அப்பாவின் காதலி ரத்தக்காட்டேரியானதா?
ரத்தக்காட்டேரிக்கு காதலி பெயர் சூட்டினாரா?

குழப்பத்தை தெளிவிக்க
ஒருபோதும் விரும்பியது இல்லை.

குழப்பம் – கடிகாரத்தின் சாவி
குழப்பம்- வாழ்வின் சுருக்கு பை
குழப்பம் – விழ வைக்காத மயக்கம்
குழப்பம்- குதிரைக்கு முன்பான புல்

பூசை முடிந்து வெளியேறுகையில்..
தோளில் கை போட்டப்படி
காதலிக்கிறவளை சாமியாக்காம பாத்துக்கோ
என்றபடி ஓங்கி அடித்தார்
திருஷ்டி தேங்காய் சில்லு சில்லாய் சிதறும்படி

***

அமிர்தம் சூர்யா – அமிர்தம் சூர்யா கல்கி இதழின் தலைமை துணை ஆசிரியர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், பேச்சாளர். இது வரை ஐந்து கவிதைத்தொகுப்புகளும், ஒரு சிறுகதைத் தொகுப்பும், இவரது உரைகளின் எழுத்து வடிவத்தொகுப்பும் வெளி வந்துள்ளன. இளையவர்களை, புதியவர்களின் படைப்புகளை உற்சாகப்படுத்தி வெளியிடுவது, அறிமுகப்படுத்தி வருவது இவரது சிறப்புகளில் ஒன்று. ஆசிரியர் தொடர்புக்கு – suryakalki@gmail.com

பொன்னுலகம்

0

மணி எம் கே மணி

செல்லை எடுத்தேன். தங்கை எதுவும் பேசாமல் விசும்பிக் கொண்டிருந்தாள். எனக்கு விஷயம் புரிந்து விட்டது. ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணப்பட்டிருந்த அம்மா இறந்து விட்டாள். அவ்வளவுதான், அது முடிந்து விட்டது. இரண்டு அல்லது மூன்று மணிநேரத்துக்குள் நான் அங்கே வந்துவிடுதாகக் கூறி சென்னையில் இருக்கின்ற முக்கியமான நண்பர்களுக்கு விஷயத்தை அறிவித்தேன். கேரளாவில் அம்மாவிற்கு கணக்கற்ற சொந்தங்கள் உள்ளன. அவர்களுக்கு விஷயம் சொல்லுவதை தம்பி ஏற்றுக்கொண்டான். எனக்கு மலையாளம் சரியாக வராது, சொந்த பந்தங்களுடன் பேசுவதும் வரவே வராது. நான் ECR-இல் ஒரு ரெசார்ட்டில் நடந்து கொண்டிருந்த கதை விவாதத்தை நிறுத்திவிட்டு டாக்சி வந்ததும் புறப்பட்டேன்.

என் அம்மாவின் அம்மாவுடைய சாவிற்கு கேரளா போன நினைவு எதற்கோ முட்டி மோதுகிறது. எண்பத்தி எட்டாக இருக்கலாம். டிசம்பர் மாதம். சீரியஸ் என்று தந்தி வந்ததும் அப்பா இந்த முறை தவறாது, கிளம்புங்கள் என்று என்னையும் அம்மாவையும் அனுப்பி வைத்தார். அதிகாலையில் கிளம்பி இரவு மூடுவதற்குள் அங்கு போய் சேர்ந்து விட்டோம். ஆண்கள் யாரும் இல்லாத வீட்டில் தன்னை ஒரு ஆணாகவே வைத்துக்கொண்டு ஓடியாடி உழைத்து ஐந்து பெண்களை கரையேற்றின வீராங்கனை அது. ஸ்கூல் விடுமுறைக்கு ஒருமுறை ஊருக்கு வந்திருந்தபோது பல இரவுகளிலும் பல கதைகள் கேட்டு அவளது முலைகளில் தூங்கியிருக்கிறேன். அம்மா சில தருணங்களில் சொல்ல வேண்டி வந்த வாழ்வுத் தருணங்களில் எனது அம்மம்மாவைப் பற்றின விவரணை எனக்குள் ஊடுருவியிருந்தது என்றே சொல்ல வேண்டும். ஒருவேளை பசியைக் கடந்து போக அக்குடும்பம் செய்த சாகசங்கள் அவை. மனிதர் தமது உயிர் வளர்ப்பதை கற்று அறிந்ததில் அம்மம்மாவை நான் ஒரு நெகிழ்வாக, குழையாமல் இருக்க முடியாது. இறந்து விட்டிருந்தார்கள். தோட்டத்தில் இறுதி சடங்குகள் நடக்கும்போது அவ்வப்போது பல வாழைமரங்களுக்குப் பின்னால் ஒதுங்கி கண்களைத் துடைத்து விட்டு வந்தேன். மற்ற ஆண்பிள்ளைகளைப் போலவே நடந்து கொண்டேன்.

பதினாறு நாட்களுக்கு அப்புறம்தான் சென்னைக்குக் கிளம்புவதை நினைக்கலாம்.

சாவு வீட்டின் சம்பிரதாயங்கள் மூச்சைத் திணற வைப்பவை.

மூன்றாவது நாள் நானும் உண்ணியும் அவனது வீட்டுக்குப் புறப்பட்டோம். எனது பெரியம்மாவின் மகன் அவன். திருமணமானவன். பக்கத்து வீட்டில் கொடுக்கப்பட்டிருந்த சாவியை வாங்கிக்கொண்டு வந்து பூட்டைத் திறந்தான். எங்கு பார்த்தாலும் அவனது குழந்தையின் விளையாட்டுச் சாமான்கள் இறைந்து கிடந்தன. அவனது மனைவியின் உடைகள் கூடத்தான். செய்தி வந்ததும் எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டுக் கிளம்பியிருக்க வேண்டும். உண்ணி எல்லாவற்றையும் அடித்துப் பெருக்கி சீராக்குவதற்குள் அவனது நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். சமைப்பது பற்றி பேச்சு வந்து அதற்கான வேலைகள் தொடங்கின. அடுத்த வீட்டுக்காரரான அன்வர் மாஷ், நொண்டியவாறே வந்து ஒரு சட்டி நிறைய மீன்களைக் கொடுத்துவிட்டுப் போனார். நான் கொஞ்சம் நடந்தேன். அந்தி கூடிக் கொண்டிருந்தது. ஆனைக்குழி தோட்டில் மீன்கள் துள்ளுவதை பொன் வர்ண வெயிலோடு பார்க்க ஒரு கவிதை மனநிலை கிறங்கியது. சென்னையில் நான் விரும்பக்கூடிய பெண்ணுடன் அக்காட்சியைப் பார்ப்பதாக நினைத்துக் கொள்ளும்போது ஒன்று பிடிபட்ட மாதிரியும் இருந்தது. சற்று உல்லாசமாகவேதான் திரும்பினேன். இரவு எட்டி விட்டது. குப்பிகள் வந்து விட்டிருந்தன.

நிறையப் பையன்களுக்கு நன்றாகப் பாட வந்தது.

பலரும் அப்படிப் பாடி, கடைசியாக பாடத் தெரியாதவர்கள் கத்த ஆரம்பிக்கவே அன்வர் மாஷ் கையெடுத்துக் கும்பிட்டு பாட்டு புரோக்ராமை நிறுத்தினார்.

முந்திரிச் சாராயம். அதை விழுங்கின மறுநிமிடம் அது ஓடுகிற வழியெல்லாம் தெரியும். வயிற்றில் குளம் கட்டிக் கொப்பளித்த பிறகு பூக்கள் மலர்த்துவது தெரியும். அவர்களைப் போல குடிக்க முடியாதென்றாலும் நம்பிக் குடிக்க முடிகிற சரக்கு. மாட்டிறைச்சியை விட அன்று பாலன் வீட்டுக் கிணற்றில் பிடித்த பச்சைத் தவளையைப் பொறித்திருந்தார்கள். அது அவ்வளவு ருசி. அது போலவே இந்த மாதிரி சபைகளுக்குப் பொருத்தமான பச்சை காஜா. நடுநடுவே அணைந்து போகிற பிஸ்னசே கிடையாது. நாலு புகை ஏறினதும் கொஞ்சம் நஞ்சமிருந்த வெட்கத்தை விட்டு நான் பேச ஆரம்பித்தேன். என் மீது பெரிய பெருமிதம் வைத்திருந்த அவர்கள் அதற்கு நிறைய இடம் கொடுப்பார்கள்.

முதலில் புழை ஓர் அழகுள்ள பெண்ணு பாட்டை ஒன்ஸ்மோர் கேட்டேன்.

உண்ணியுமே அற்புதமாக பாடினான்.

ஆலுவா நதி என்கிற பெண் ஒரு பால்காரியாம். வயலிலுள்ள நெல்லுக்கும் கரைகளிலுள்ள மரங்களுக்கும் பாலை எடுத்துக் கொண்டு ஓடுகிறாளாம். அவளுக்கு தனக்குள் அடங்காத பைத்தியமும் இருக்கிறது. அவளை வந்து பார்க்கிறவர்கள் சொல்கிறார்கள். அது கேட்டு நெஞ்சு பிசஞ்சி, கால் கொலுசெல்லாம் ஊறி எறிஞ்சு அத்தனை துயர்களையும் நெஞ்சில் அடக்கிக்கொண்டு ஆலுவா நதி ஆழிக்குப் பாய்ந்த கதை அது ! கேட்கக் கேட்க அழுகை வரும். தொடர்ந்து கேரளாவின் பொருளாதாரம் பற்றின சந்தேகங்களைப் பற்றி கேட்க ஆரம்பித்தேன். நாட்டின் பாதி ஆண்கள் வளைகுடா நாடுகளில் அல்லவா இருக்கிறார்கள்?

இக்காலத்தைய பையன்கள் டைனிங் டேபிளில் உட்கார்ந்து புல்சாய் சாப்பிடுவது பற்றி பேச்சு வந்ததும் நான் கிழங்குகள் சாப்பிட்டு வயிற்றை அடக்கின காலம் பற்றி என் அம்மா சொன்னதைச் சொல்லும்போது அன்வர் மேலும் அதைத் தொடர்ந்தார். அவர் கம்யுனிஸ்டாக மட்டுமல்ல, நக்ஸலைட்டாகவும் இருந்தவர். பலகாலம் பல வழக்குகளுக்காக தூக்கில் தொங்க இருந்தவர். ஒரு பொது மன்னிப்பில் இன்று உயிரோடு இருக்கிறார். குந்தப் பறம்பில் மேனன் குடும்பத்தினர் போலீசில் காசைக் கொடுத்து அவருடைய காலை உடைத்தார்கள். அன்வரும் அவரது இயக்கத்தினரும் தான் மக்களின் ரத்தம் குடித்திருந்த வல்லிய மேனனை குத்திக் கொன்றிருந்தார்கள். எவ்வளவு பயங்கரமான கதைகள்? இறந்து போன மேனனின் தலையை கரகரவென அறுத்து எடுத்துக்கொண்டு ஜங்ஷனில் இருந்த பஸ் ஸ்டாண்ட் சுவரில் வைத்து விட்டுப் போகும்போது அன்வரின் நண்பன் அந்த முண்டத்தின் தலையை வாரி வைத்து விட்டு வந்தானாம். அவன் பிடிபட்ட அன்றே என்கவுண்டரில் தீர்த்துக் கட்டப்பட்டான். என்னையும் கூட பிடிபட்ட அன்று காலை உடைத்ததுடன் பூட்ஸ் காலால் தொடர்ந்து எனது ஆணுறுப்பில் மிதித்து சிதைத்தனர், அதனால்தான் பின்வந்த காலங்களில் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றார் அன்வர். புரட்சி செய்யப் புறப்படும்போது எவ்வளவு ஆர்வக்கோளாறாக இருந்தேனோ காதல் செய்வதிலும் பெரும் பதட்டம் கொண்டவனாக இருந்தேன் என்றார் அவர்.

அவரது சிரிப்பு, சிரிப்பா அது, அதை சென்னை பாஷையில் மட்டும்தான் கூற முடியும். அது அவ்வளவு பேஜாராக இருந்தது.

“உங்க ஆள் ரொம்ப அழகா மாஷ்?”

“ஹா ஹா ஹா ஹா !”

“செமத்தியான லவ்வோ?”

“அவள நான் என்னன்னு உன்கிட்ட சொல்றது? மரத்தடி கிளாஸ்ல இருந்து தொடங்கறதாச்சே, அத எப்படி சொல்ல முடியும்? அம்மு என்ன பாத்துகிட்டே இருப்பா. அவள பாக்கும் போதும், பாக்காத போதும். அந்த ஊர்ல இருந்தாலும், வேற ஊர்ல இருந்தாலும். ஏழு கிலோமீட்டர் நடந்து யாருக்காகவோ, அவங்க தர்ற பிச்சைக்காசுக்காக அங்காடில பாக்கு மூட்டையை எறக்கி அதை எல்லாம் வித்துட்டு திரும்பி வரும்போது கூட எனக்கு களைப்பே தெரியாது. அவ பார்வை என் கண்ணு முன்னால இருக்கும். இத எல்லாம் லவ்வுன்னு எல்லாம் சொல்ல முடியாதுடா. அதுக்கெல்லாம் மேலே. இங்க பார். ஒரு உயிரு இன்னொரு உயிரு மேல இப்படி ஓட்டிகிட்டு இருந்திச்சு ! அதான். அவ்வளவு தான் !”

“அப்புறம் என்ன மயிருக்கு லவ்வ விட்டுட்டு புரட்சி பண்ண ஓடிப் போனீங்க மாஷ்?”

“பசி !”

விழுந்து விட்ட அமைதியை நாங்கள் குடியை ஊற்றுவதற்கும் விநியோகிப்பதற்கும் பயன்படுத்திக் கொண்டோம். நான் இப்போது குடியின் சுகத்தை மெச்சிக் கொண்டேன்.

“டேய், நீ இளங்காட்டு ராஜா. உன் வயசுக்கு லவ் ஸ்டோரி கேக்குது. நான் நல்லா இருந்தா மட்டும் அந்த பொண்ண கட்டிக்க ஏன் வீட்டில விட்ருப்பான்களா? இல்ல, அவ வீட்டில தான் சம்மதிச்சிருப்பாங்களா? துஷ்டர்களோட ஊருடா இது. வெட்டிகிட்டு குத்திகிட்டு செத்துருக்க மாட்டோம்? வாழ்ந்துருக்க முடியுமா?”

எல்லோரும் ஒரு கட்டத்துக்கு அப்புறம் நிலைகுலைந்த பிறகு அன்வர் ஒரு பாட்டு பாடினார். அம்முவிற்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன். ஒருமுறை இருவருமே சேர்ந்து பாடினோம் என்றார், மிகவும் சோர்ந்திருந்தார். முழுவதுமான உச்சரிப்பு வராமல் தழுதழுத்துக்கொண்டு இழுவையாக பாடினார்.

“அநீதி போகும்
அல்லல்கள் போகும்
அன்று நம் தோட்டங்களில்
பூங்குருவி பாட வரும்
அநீதி போகும்
அல்லல்கள் போகும்
அன்று நம் நீர்வயலில்
நமக்கான மீன்கள் துள்ளும்
அநீதி போகும்
அல்லல்கள் போகும்
அன்று நாம் மகிழ்ந்திருக்க
பொன்னுலகம் வந்து விடும் !

எனக்கு தெரிந்த பாட்டுதான் இது. ஏற்கனவே அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஊரில் இருந்து திரும்பிக் கொண்டிருக்கையில், உட்கார்ந்து தூங்கியவாறு வந்த அம்மாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஊருக்கு உழைக்கப் போய் ஒன்றுக்கும் பயன்படாமல் மிஞ்சிய அன்வர் மாஷ் விரும்பிய அம்மு இவள்தான் ! அதைக் கண்டுபிடிக்க எனக்குப் பெரிய சிரமங்கள் ஒன்றும் உண்டாகவில்லை. அம்மாவே தனது கதைகளில் பெரும் வீரனாக சித்தரித்த இவரது பெயரை பலமுறை கேட்டிருக்கிறேன். அம்மம்மா உள்ளிட்ட நான்கு மகள்களும் கூலிவேலைக்குப் போகும்போது அம்மாவை பெரியம்மா வீட்டில் தான் இருக்க வைத்திருந்தார்கள். பள்ளி படிக்கப் போவதாக ஐந்து வரை படித்ததும் எனது அம்மா மட்டும்தான்.
இதெல்லாம் எதற்கு? என்னை வருடியவாறே இருந்த மாஷின் கண்களில் இருந்த வாத்சல்யத்தைப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள் கிடையாது நான்.

இதெல்லாம் முடிந்து கொஞ்ச காலத்துக்கு அப்புறம் அம்மா ஒருமுறை பெரிய உள சோர்வும், அதனால் கொஞ்சம் உடல் பலவீனமும் அடைந்தாள். மருத்துவத்தை மிஞ்சி நோய்கள் பெருகுவது போல தோன்றியது. எனக்கு எனது பிரச்சினைகள் என்று அவளது முகம் பார்க்காத காலமாக இருந்த போதிலும், அன்று நேரத்தைக் கண்டடைந்து கொண்டு அவள் பக்கத்தில் அமர்ந்து பலவும் பேசினேன். வெகு சாதாரணமாக சொல்லுவது போல உனக்கு இந்தப் பாட்டு நினைவில் இருக்கிறதா என்று கேட்டபோது எழுந்து உட்கார்ந்து கொண்டு விட்டாள். சிறு வயதில் பலமுறையும் எனக்குச் சொன்ன கதைகளை முதலில் இருந்து சொல்ல ஆரம்பித்து அப்புறம் அதை அவளுக்கு முடிக்கவே மனசில்லை. ஒரு சந்தேகமுமில்லை. அன்வரின் பெயரைச் சொல்லும்போதெல்லாம் இடுங்கியிருந்த அந்தக் கண்களில் ஒளி எழுந்தவாறிருந்தது. நான் என் புன்னகையை அடக்க படாத பாடுபட்டேன். அந்த படுக்கை காண்டம் அன்றுடன் முடிந்து விட்டது என்பதே வாஸ்தவம்.

வாய் திறந்திருக்கிறது.

சடலமாகக் கிடக்கும்போது கூட எனது அம்மா அழகிதான் என்று நினைக்க வந்தது. சந்தேகமில்லை, ஆளுமையுடன் கூடிய வாழக்கைதான். ஆனால் மறுபக்கத்தில் இந்த சம்சார பந்தம், சூத்துக்கழுவும் புள்ளக்குட்டி வளர்ப்பு போன்றவைகள் எல்லாம் என்ன என்கிற கேள்வியெல்லாம் வந்து போயிற்று. அன்வரைக் கட்டியிருந்தாலும் இதெல்லாம்தானே? நான் வாழ்வை யோசித்துப் பிதுங்கி முடியாமல் வெளிவந்தேன். அவளை எரிக்கும்போது பொன்னுலகத்தை எதிர்பார்த்த அந்தப் பாட்டு மனதில் வந்து போயிற்று என்றாலும் கடலில் சென்று விழுகிற நதியைப் பற்றின பாடல்தான் திரும்பத் திரும்ப எழுந்து கொண்டிருந்தது.

எனக்கும் உண்ணிக்கும் மட்டுமே பிடித்த பாடல் அல்லவே அது, அன்வர் மாஷிற்கும் பிடித்த பாடல்.

***

மணி எம்.கே.மணி திரைத்துறையில் பணியாற்றிவரும் இவரது மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் எனும் சிறுகதைத்தொகுப்பு, வேறுசிலஆட்கள், எழும்சிறுபொறி – திரைப்படங்கள் குறித்த கட்டுரைத்தொகுப்பும் அண்மையில் மதுரவிசாரம் எனும் நாவலும் வெளியாகி நல்ல கவனம் பெற்றது. – தொடர்புக்கு – mkmani1964@gmail.com