Home Blog Page 63

தனியொருத்தி

0

வேல்விழி முகில்நிலா

றுபடியும், என்னுடைய பெயர் ஒலிபெருக்கியில் ஏலம் விடப்படுகிறது. பதிவு, விளக்கமளிப்பு, ஒத்துழைப்பு, கிளியரிங், குழு விசாரணை, தனிப்பட்ட விசாரணை என என்னென்னவோ இழவுக்காரணங்களைச் சொல்லி ஒருநாள் தவறாமல் அரங்கேற்றப்படுகின்ற கூத்து தான். என்னோடு சேர்ந்து இன்னும் நூற்றியெழுபத்து ஒன்பது பேருக்கும் இந்த சாபம் நிச்சயிக்கப்பட்டது தான் என்றாலும் எப்போது அது முடியும் என்பதைத்தான் யாராலும் எதிர்வுகூறவே முடியவில்லை. கொதிக்கின்ற எண்ணெய்சட்டியிலிருந்து தப்பி எரிகின்ற அடுப்பிற்குள் விழுகிற கதையாய், மாதக்கணக்காக கிடந்து அழுந்திய அந்த நரகக்குழியில் இருந்து தப்பித்து வெளியில் போய் விழுந்து துலைப்பதற்கிடையில் ஆயிரம் எமகிராதகர்களை அவர்களின் குகைவாயிலிலேயே போய் வணக்கம் வைக்கவேண்டியிருந்தது.

அது பல்கலைக்கழக மாணவர்களிற்கான தனிப்பட்டவிசாரணை நாள். திங்கட்கிழமையானாலே எப்படா கூப்பிடுவார்கள் என்று எல்லோரும் ~லவுட்ஸ்பீக்கர்~ அறிவிப்புகளிலேயே காதை வைத்திருப்போம். “பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கின்ற மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்கு புதிதாக செல்ல தெரிவான மாணவர்கள் அனைவரும், முகாம் எல்லைப்பகுதியிலுள்ள புலனாய்வு விசாரணைக்கூடத்திற்கு முன்பாக உடனடியாக வரவும்” – அறிவிப்பு வரும். இந்த முறை அனுப்பப்படுகின்ற பெயர் பட்டியலில் எங்களது பெயர் வந்துவிடாதா, அடுத்தமுறை பட்டியலில் எங்களது பெயர் இருந்துவிடாதா என ஏங்கிக்கிடந்த எல்லோரும் அடுத்த நொடி விழுந்தடித்துக்கொண்டு விசாரணைக்கூடத்திற்கு ஓடுவோம்.

முகாம் எல்லைக்கு சற்று ஒதுக்குப்புறமாக தனித்திருக்கும் விசாரணைக்கூடத்திற்கு, ஜி8, 189 ஆம் இலக்க ‘ரென்ற்றிலிருக்கின்ற’ நான் என்னதான் ‘எக்ஸ்பிரஸ்’ வேகத்தில் வந்தால்க்கூட எப்படியும் அரைமணித்தியாலயமாவது கண்டிப்பாக ஆகும். எச் 11, 316 ஆம் ‘நம்பர் ரென்ற்றில’  இருக்கின்ற கலைமதி வருவதற்கு அதற்குமேல் இன்னும் இருபது இருபத்தைந்து நிமிடங்கள் எடுக்கும்.

வவுனியாவின் ஒதுக்குப்புறமாக இருக்கின்ற செட்டிக்குளம். நடுக்காட்டினை வெட்டி பல கிலோமீற்றர் பரப்பளவில் அமைக்கப்பட்ட தடுப்பு முகாம். இலங்கையின் உள்நாட்டுயுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இந்த நாட்களில் தமிழ் மக்களுக்காய் உலகம் வரையறுத்த மேய்ச்சல் பட்டி. ~யுனிசெப்~ என்ற பெயரைப்போத்திக்கொண்டு வெள்ளை தரப்பாளில் பல்லைக்காட்டியபடி லட்சக்கணக்கில் முளைத்திருக்கின்றன திடீர்க்குடில்கள். ஆங்கில எழுத்தில் ஏயில் தொடங்கி கே  வரைக்குமான நிரல்களில், கணித இலக்கம் ஒன்றில் தொடங்கி 21, 22 சிலவேளைகளில் 23 வரைக்குமான நிரைகள். அவை ஒவ்வொன்றும் குறுக்கறுத்து உருவாக்கும் சற்சதுரப்பெட்டிகளில் எழுநூறு எண்ணூறு குட்டிக்குட்டி ரென்ற்றுகள். அத்தனையையும் சுற்றி மூச்சுவராமல் இறுக்கி மூடிய முட்கம்பிவேலிகள்.

காலில் செருப்புக்கூட இல்லாமல் நடந்து, ஒவ்வொரு தடையாகக்கடந்து, இடையிடையே நிக்கின்ற ஒவ்வொரு பச்சைப்பிசாசுக்கும் பதில் சொல்லி விசாரணைக்கூடத்தை தொடுவதற்குள் எங்களது பெயர்களை ஆறேழு தடவை ஏலம் விட்டுவிடுவார் ஒலிபெருக்கியில் அறிவிப்பவர்.

“கலைமதி கோபால், ரமேஸ் கிருஸ்ணா, கோமதி ராசைய்யா, அமுதினி பாலசிங்கம், குயிலினி குமரேசன் ஆகியோர் உடனடியாக விசாரணைக்கூடத்திற்கு வரவும்”

மற்றைய முகாம்களைவிட நான் இருக்கும் இடத்திற்கு தனிச்சிறப்பு இருக்கிறது. கொள்ளளவிலும் சரி, பரப்பளவிலும் சரி, பாதுகாப்பு என்று சொல்லப்படுகின்ற பாசிச கெடுபிடிகளிலும் சரி, கொள்ளை நோய்களிலும் கொலை இறப்புகளிலும் சரி, கடத்தப்படுவதும் காணாமல் ஆக்கப்படுவதிலும் சரி வலயம் நான்கு முகாமென்றாலே பல்லை நெருமிக்கொண்டு கல்லைத்தூக்கும் அளவுக்கு கட்டறுந்து கிடக்கிறது காலம். காரணம், அவர்கள் கடைசிவரை முள்ளிவாய்க்காலில் காத்துக்கொண்டிருந்தவர்கள். ஆனால் அந்த வைராக்கியம், அது ஒன்று போதாதா அவர்களிற்கு..?

ஒவ்வொரு முறையும் அறிவிப்புக்கேட்ட அடுத்த செக்கனே காற்று வேகத்தில் புறப்பட்டு, அந்த காட்டுவெக்கையிலும் மனிச புழுக்கத்திலும் வெந்து சாம்பலாகி, சரியாக நான் விசாரணைக்கூடத்தின் வேலிக்கரையை நெருங்கும்நேரம் பார்த்து வெளியே வருவான் அந்த விசாரணை அதிகாரி. அன்று விசாரித்தவர்கள் போக மிச்சப்பேரைப்பார்த்து ”நான் பிஸி. அப்புறமா ஒங்கள கூப்பிடுறது’ என்று கொச்சைத்தமிழில் சொல்லி ஒரேதாக திருப்பி அனுப்பிவிடுவான். பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகிறது என்பது போல அவன் விளையாடும் இந்த விளையாட்டில் ஒவ்வொரு முறையும் என் கால்கள் தேய்ந்துகொண்டிருந்தன, கூடவே எதிர்காலம் பின்னுக்குத் தள்ளித்தள்ளி போய்க்கொண்டேயிருந்தது. என்னைப்போல இன்னும் எத்தனையோ பேர்க்கும்.

இன்று காலையிலிருந்து இப்போது நான் வந்திருப்பது இது நான்காவது முறை. இதற்கு முன்னைய மூன்று முறையும் ஓரிருவரை உள்ளே அழைத்து தனிப்பட்ட விசாரணையை முடித்துவிட்டு மற்றவர்களை வழமை போலவே ”ஒங்கள அப்புறம் கூப்பிடுறது” என்று பழைய பல்லவியையே பாடி திருப்பி அனுப்பிவிட்டிருந்தான். ஒவ்வொருமுறையும் திரும்பிப்போகும் போது கால் விண்விண்ணென்று வலித்தது. ஒரு வேளை திரும்பவும் கூப்பிடுவானோ தெரியாது படுபாவி. இங்கு எங்கேயாவது நின்று கொஞ்சம் காத்திருந்துபார்க்கலாமா என்று கூட தோன்றுவதுண்டு. ஆனால், நெருப்பெரிக்கும் சூரியனும், ஒரு நிழல் கூட இல்லாத சாபமும் சேர்ந்து வேர்த்து களைத்து மறுபடி திரும்ப நடக்கச்சொல்லும். பாவப்பழியாக வீட்டை நெருங்குகையில் ஈயத்தை கரைத்து காதில் ஊற்றியது போல மறுபடி காற்றோடு வந்து சேரும் அந்த கட்டளை. அது அறிவிப்போ அல்லது அழைப்போ அல்ல, அடாவடி தான். ஆதிக்கக்கட்டளை தான்.

அவனுக்கு மனநலக்குறைவு ஏதும் இருக்குமோ என்று கூட நான் பலதடவைகள் யோசித்துப்பாத்திருக்கிறேன். இல்லையென்றால் அப்படி  என்னத்தை தான் அவன் அதன் மூலம் சாதிக்கப்பார்க்கின்றான். அதிலென்ன மட்டமான ஒரு மகிழ்ச்சி. ஒருவேளை அவன் சொல்வதுபோல  உண்மையாகவே வேலையாகக்கூட இருக்கக்கூடுமோ..? ஆனால் இன்றைய நாளுக்கான அவனது பொறுப்பே எங்களைப்பற்றியது தானே. அதை சரியாக செய்யவில்லையென்றால் அதிகார துஸ்பிரயோகம் அல்லவா அது. இதையெல்லாம் விட, தனது அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டித்தான் இந்த திருவிளையாடல்களைச் செய்கிறானோ..?  என்று எனக்குத்தான் ஆயிரம் குழப்பங்கள் இருந்ததே தவிர, கலைமதி மிக தெளிவாக இருந்தாள். இப்போது மட்டுமல்ல, அவள் எப்போதுமே அப்படித்தான்.

 “ஒருவேளை அவனுக்கு தாழ்வுமனப்பான்மையா இருக்குமோ, கலை..?”

ஒரு நாள் அவன் ஆடிய அலைக்கழிப்பு நாடகம் தாங்காமல் நான் கேட்ட கேள்விக்கு அவளிடமிருந்து தெளிவாக வெளிவந்தது ஒரு பதில்.

“நீ நினைக்கிற மாதிரியெல்லாம் அவனுக்கு ஒண்டுமில்லை குயில். எல்லாம் திமிர். அவனென்ன செய்தாலும் நாங்கள் எங்கட வேலை முடியோணுமெண்டா அவனுக்கு அடங்கிப்போய்த்தான் ஆகவேணுமெண்டுற திமிர். என்ன சொன்னாலும் எதிர்த்து ஒரு கதை சொல்லாமல் தலையை தலையை ஆட்டிற்று வாயப்பொத்திக்  கொண்டிருக்கோணுமெண்டுற எதேச்சதிகாரம். இன்னும் வடிவா உனக்கு சொல்லுற எண்டால், அவன் ஆடுற ஆட்டத்தையெல்லாம் அமைதியா பாத்துக்கொண்டிருக்க வேண்டிய அடிமையள் நாங்களெண்டுறது தான் அவன்ர புத்தி. அதுக்கு தோதா எங்கட கழிசடையள் ரெண்டொண்டும் அவன்ர காலுக்கயே கிடக்குதுகள் எல்லோ. பிறகு அவன் என்ன செய்வான். வெண்ட புத்தி. அதுவும் இத்தினை சனத்தை சாக்கொண்டு வெண்ட புத்தியெல்லோ. சும்மாவே இருக்கும்.”

அவள் அமைதியாக தொடங்கி ஆத்திரமாக முடித்திருந்தாள். எத்தனை நாளாய் இறுக்கி இறுக்கி கட்டி வைத்திருந்தாளோ. மனதில் மறைத்து வைத்திருந்த கோப மூட்டையை ஒரே மூச்சில் படபடவென கொட்டித் தீர்த்தாள். அவள் சொன்னதில் கொஞ்சம் உண்மையிருப்பதாய் பட்டாலும் அவள் பேசிய வேகத்தை பார்த்த எனக்கு அடிவயிறு கலக்க ஆரம்பித்தது.

 “ஏய் கொஞ்சம் சத்தத்தை குறைச்சுக்கதை. அக்கம் பக்கத்தில நிக்கிறவங்களில ஆரவன் அவனின்ர ஆக்கள் எண்டு தெரியாது. பிறகு பெரிய பிரச்சினையாப்போயிடும்..”

நான் சொன்னது அவள் மனதில் ஒரு சின்ன குழப்பத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். பட்டென பேச்சை நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்தாள். அக்கம் பக்கத்தில் ஆண்கள் என்று யாரும் இல்லை. பெண்களையும் நம்ப முடியாதுதான் என்றாலும் இந்த விடயத்தில் ஆண்களின் விகிதம் தான் அதிகமாகவிருந்தது. விசாரணைக்கூட பின்வளவிலேயே எத்தனை தமிழ் ஆண்களைப்பார்க்கக்கூடியதாக இருந்திருக்கிறது. ஒரு சிகரெட்டுக்கும், சின்னதொரு சாராயப்போத்தலிற்கும், நானும் ரவுடிதான் ரானும் ரவுடிதான் என்று மற்றவரை மேய்க்கின்ற மவுசுக்காகவும் இளம்பெடியள் எல்லாம் அவன் காலுக்குள்ளே கிடந்து அரைபடுவதை எத்தனைமுறை கண்கூடாக சாட்சியாக்கமுடிந்தது. எது எப்படியிருந்தாலும் இப்போது அவள் பேசியது எவர் காதிலும் விழுந்திருக்கக்கூடாதென்று அன்று முழுவதிலும் அடுத்து வந்த நாட்களிலும் பயந்துகொண்டே இருந்தோம். கடவுள் புண்ணியத்தில் அபபடி எதுவும் நடக்கவில்லை.

மூன்று முறை இடைவழியில் முடிந்தும் கூட, இப்போது நான்காவது முறையாகவும் எங்கள் நகர்வலம் ஆரம்பித்திருந்தது. தனிப்பட்ட விசாரணைக்காக பிரத்தியேகமான இடத்திற்கு தான் அவன் கூட்டிப்போவான். அது இன்னஇடம் என்று எந்தவொரு முன்னறிவிப்பெல்லாம் இல்லை.  ஆனால், வழமையான இடத்தில் நடைபெறாது என்பது மட்டும் தான் இவ்வளவு நாள் அனுபவத்தில் எங்களுக்கு தெரிந்திருப்பது. அவன் இழுக்கின்ற இழுப்புக்கெல்லாம் நாங்கள் அசைய வேண்டியது மட்டும் தான் எங்களது வேலை. அவன் ஆட்டுவிப்பான், நாங்கள் ஆடவேண்டும். அவ்வளவு தான்.

மொத்தமாக நூற்றியெழுபத்தொன்பது பேர். முன்வரிசையில் ஏற்கனவே கம்பஸில் படித்துக்கொண்டிருந்த அண்ணாக்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். அது கூட ஆண்டு வாரியாகத்தான். கடைசி வருடம் படிப்பவர்கள் முதல். அவர்களிற்கு பின்னால் மூன்றாம் வருடத்தில் இருப்பவர்கள். இரண்டாம் வருடம் படிப்பவர்கள் அவர்களிற்கு பின்னால். ஏற்கனவே முதலாம் வருடத்தில் படித்துக்கொண்டிருப்பவர்கள் கடைசியில். அவர்களிற்கு கட்டாக்கடைசியாக நாங்கள் –  புதுமுக மாணவர்கள் போகவேண்டும். இந்த வரிசை ஒழுங்குகூட அவன் ஏற்படுத்தியது தான்.

என்னோடும் கலையோடும் சேர்த்து மொத்தம் நாற்பத்துமூன்று பேர் புகுமுக மாணவர்கள் நின்றிருந்தோம். வரிசையின் முன்பக்கத்தில் நிற்பவர்கள் திரும்புகின்ற பக்கங்களிற்கேற்ப கடைசியில் நின்றிருந்த நாங்கள் திரும்பவேண்டும். நன்கு தின்று கொழுத்துப்பருத்த மலைப்பாம்பொன்று அசைவது போல சென்றுகொண்டிருந்தது வரிசை. அந்தப்பாம்பின் பாவப்பட்ட வால் போல நாங்கள் அங்கும் இங்குமாக பின்னால் அரைந்துகொண்டிருந்தோம்.

“கலைமதி கோபால், ரமேஸ் கிருஸ்ணா, கோமதி ராசைய்யா, அமுதினி பாலசிங்கம், குயிலினி குமரேசன் ஆகியோர் உடனடியாக விசாரணைக்கூடத்திற்கு வரவும்”

ஒலிபெருக்கி மறுபடி அலறியது.

“என்னடி இவங்களுக்கு. நாளும் பொழுதும் எங்கட பேரை சொல்லிச்சொல்லியே பினாத்துறாங்கள்” வட்டக்கச்சிக்காரியொருத்தி அலுத்துக் கொண்டாள். அவள் பெயரும் அந்த பட்டியலில் இருந்தது.

“உன்ரெ பேர சொல்லுறாங்கள். சரி பரவாயில்லை. வழமையாவே நீ அங்கயிருந்து வர நேரம் செல்லுறது தானே. அது தான் வாய்ப்பாடு மாதிரி நெடுக சொல்லிச்சொல்லி பழகிட்டாங்கள் போல. ஆனா, இதில பி புளொக்கில இருக்கிற என்ர பேரயும் எல்லே போறபோக்கில எடுத்துவிடுறாங்கள்..”

அறிவிப்பு வந்ததும் பெரும்பாலும் முதல் ஆளாய் விசாரணைக்கூடத்துக்கு வந்து நிற்பவள் அமுதினி தான். எங்களது கூட்டத்திலேயே கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு தெரிவான ஒரேயொருத்தி. நல்ல நீளத்தலை முடியும் பூனைக்கண்களுமாக பார்க்க நல்லாய் கருகருவென்றிருப்பாள். அவளது குடில் இங்கிருந்து இரண்டாவது நிரலில் இருப்பதால் பெரிதாக நேரம் செல்லாது. ஆனாலும் ஏனோ அடிக்கடி அவள் பெயரும் காற்றில் அசைந்தாடி வரும்.

“அட அதுகூடப்பரவாயில்லை, ஒவ்வொருமுறையும் நான் வெளிக்கிட்டு இங்க வந்தாப்பிறகும் இவங்கள் லவுட்ஸ்பீக்கரில என்ர பேர சொல்லி தேவாரம்பாடித்துலைக்கிறாங்கள். நான் திரும்பி வீட்ட போக, இவ்வளவு நேரமும் எங்க போட்டு வாறாய்? அங்க அவங்கள் உன்ர பேர திரும்ப திரும்ப கூப்பிடுறாங்கள் எண்டு பாட்டி ஒரே பேச்சு. நான் இங்க வாறெண்டு கிழவிட்ட பொய் சொல்லிற்று ஆரோ பெட்டய பாத்திற்று வாறனாம் எண்டு புறுபுறுக்குது மனிசி. இப்ப பாரன், திரும்பி நான் வீட்ட போகவும் இதே கதையை பாடப்போகுது கிழவி. அதின்ர அவசரத்துக்கு நான் எந்தப்பெட்டய பிடிக்கிறது, ஆண்டவா”

ஆயிரத்தில் ஒருவன் போல எங்கள் புகுமுக மாணவர்குழுவில் இருக்கின்ற ஒரேயொரு ஆண் ரமேஸ், பாட்டியின் கதையை சொல்லி உண்மையாக கவலைப்படுவது போலவே நடிக்கவும் பின்னுக்கு நின்றிருந்த மொத்தக்கூட்டமும் கொல்லென்று சிரித்தது.

அந்த ராட்சத பூதத்தின் தலைமையில் அசைந்துகொண்டிருந்து பாம்பின் தலை சட்டென்று நின்றிருந்தது போல. அது தெரியாமல் சிரித்துக்களைத்து தன்பாட்டில் போய், முன்னுக்கு நின்றவர்கள் மேல் மோதி பொத்தென்று சிதறி விழுந்தது பின்னுக்கிருந்த வால்த்துண்டு. கை காலில் ஒட்டிய மண்துகளைத் துடைத்துக்கொண்டு ஒவ்வொருவராக எழுந்து மறுபடி ஒட்டிக்கொண்டோம். ஆனால், அந்த பாம்பு அசைய மறுத்தது. ஆணிவைத்து அடித்து இறுக்கியது போல அப்படியே நின்றது. போதாக்குறைக்கு முன்னுக்கிருந்தவர்களின் கண்கள் எல்லாம் இப்போ பின்பக்கமாய் திரும்பி எங்களின் மேல் குத்திட்டு மலங்க மலங்க முழித்தன. ஏதோ இசகுப்பிசகாக நடந்துவிட்டது என்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அல்லது அந்த வேதாளம் மறுபடி முருங்கைமரம் ஏறிவிட்டதோ என்னவோ.

என்னவென்றே தெரியாமல் குழப்பத்தில் ஊறியிருந்த எங்கள் கண்களை நார்நாராய் கிழித்தெறிந்தது அந்த ராட்சதக்குரல்.

“ஏ.. யாரு.. யாரு சிறிச்சது..?” – பதிலில்லை.

“பின்னாடி ஒங்களில யாறு என்ன பாத்து சிறிச்சது..?”

போச்சுடா. இன்று இன்னொரு கூத்து நடக்கப்போகிறது. ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறதே. ஆனாலும் இவனைப்பார்த்து யார் சிரித்தார்கள். நான் திரும்பி திரும்பி முன்னும் பின்னும் பார்த்தேன். யாரும் கண்ணிமைப்பதாகக்கூட இல்லை. எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.

“யாறு சிறிச்சது..? எதுக்கு சிறிச்சது..? சொள்ளலேன்னா யாறும் வெளிலே போமாட்டிங்கே. என்னோட சைன் இல்லாமே ஒறுத்தறுக்கும் கிளியறிங் றிப்போட் போகாதெ. கம்பஸ் ந. டிகிரி ந. யாறு சிறிச்சது..? சொல்லுறது..?”

அவன் கண்களில் நெருப்பெரித்துக்கொண்டு சொல்லால் வெடித்தான். சுட்டுவிரலை நீட்டி நீட்டி அச்சுறுத்தும் தோரணையில் சிங்களத்திலும் ஏதேதோ பேசித்துப்பினான். ”என்னை என்ன படிக்காதவன் எண்டு நினைச்சிங்களாடா..? நானும் கம்பஸில படிச்சவன் தன்டா” என்று என்னென்னவோ எல்லாம் சொல்லி இழவெடுத்துக்கொண்டிருந்தான். கறுப்புப்பேயொன்று கலவரம்பிடித்து தாம் தூம் என்று ஆடுவது போல இருந்தது அவனது தோற்றம்.

சிரிச்சது ஒரு குற்றமா..? அதுவும் ரமேஸ் சொன்ன கதைக்கு யாராக இருந்தாலும் சிரிக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம். அதுவும் அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஒலிபெருக்கி மறுபடி மறுபடி அவன் பேரை படித்துக்கொண்டிருக்க வேறு செய்ததே. எப்படி சிரிக்காமல் இருப்பதாம். ஆனாலும், இப்போது பிரச்சினை அதுவல்ல. அந்த கோடாலிக்காம்பு தன்னை இவர்கள் கேலிசெய்தார்கள் என்று முத்திரை குத்திவிட்டது. அந்த முடிந்த முடிவில் இருந்து இனி அது ஒரு துளியும் பின்வாங்கப்போவதில்லை. ஒருவேளை ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி திரும்பவும் விளையாட்டுக்காட்ட நினைத்தவனிற்கு இது ஒரு வாய்ப்பாக போய்விட்டதோ.

அவன் விடாப்பிடியாக கத்திக்கொண்டே இருந்தான். சிரித்தது யாரென்று சொல்லென்று வெருட்டிக்கொண்டிருந்தான். மொத்தமாக எல்லோரும் தான் சிரித்திருந்தோம். ஆனாலும், யாருக்கும் அவனுக்கு பதில் சொல்ல தெம்பிருக்கவில்லை. கொஞ்ச நேரம் கத்திவிட்டு கோபம் தணிந்ததும் விட்டுவிடுவான் என்று நினைத்தோம். நினைத்ததற்கு மாறாக அவன் இழவெடுத்துக் கொண்டிருந்தான். உச்சி வெயில் வேறு மண்டையில் குட்டிக்கொண்டிருந்தது. வேர்வை வழிந்து சட்டை நனைந்து கொண்டிருந்தது. இது எதையுமே சட்டை செய்யாமல் அவன் தான் பிடித்த முயலுக்கு ஒன்றே முக்கால் கால் என்று வியாக்கியானம் செய்து கொண்டிருந்தான். யாரும் வாய் திறக்காமல் இது இப்போதைக்கு முடிகின்ற பிரச்சினையில்லை என்பது எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சமாய் புரியத்தொடங்கியது.

“யாறு சிறிச்சது..? என்னேய பாத்து யாறு சிறிச்சது..?” அவன் அதே வரியை சுருதி பிசகாமல் உச்சஸ்தாயியில் உருட்டிக் கொண்டிருந்தான்.

“நாங்கள் உங்கள பாத்து சிரிக்கயில்லை. நாங்கள் இங்க நிக்கிறம். ஆனால், லவுட்ஸ்பீக்கரில எங்கட பேரக்கூப்பிடுறாங்கள். அதக்கேட்டு தான் கதைச்சுக் கொண்டிருந்தனாங்கள். உங்கள பாத்து சிரிக்கேல்லை.”

திடீரென என் பின்னிருந்து முளைத்தது ஒரு குரல். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. ஆரிந்த லூசு, நேரகாலம் தெரியாமல் அவனுக்கு பேச்சுக் கொடுப்பது..? பளாரென்று ஒரு அறை விட்டால் என்ன என்று அந்தரித்தது கை. அவசரமாய் திரும்பிப்பார்த்தேன். கலைமதி, இறுக்கமான முகமும் தெளிவான குரலுமாக நின்றிருந்தாள்.

”ஏய் உனக்கென்ன பைத்தியமே..? அவனே அம்மிக்கல்லில விழுந்த உப்புக்கல்லாட்டம் கரகரத்துக் கொண்டிருக்கிறான். நீ வேற அவனுக்கு எடுத்துக் குடுத்துக்கொண்டு.. பேசாம இரு”

நான் அவளைப்பார்த்து முணுமுணுத்து முடிப்பதற்குள் விசயம் கைமீறிப் போய்விட்டது. விபரீதமாகியும் விட்டது.

”நீ தான.. இப்ப பேசினது நீ தான.”

குரலிலும் பார்வையிலும் பாறாங்கல்லை கட்டிக்கொண்டு பாய்ந்து விழுந்து வந்து அவளை கடித்துக்குதறத் தொடங்கினான் அவன். உள்ளே, பயம் என் ஈரக்குலையை அறுத்து வறை செய்து கொண்டிருந்தது. முன்பின் தெரியாத முரட்டு ஆசாமிகளை காணும் போது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தாயின் இடுப்பில் தாவியேறும் பிள்ளையாய் நாக்கு மேலண்ணத்தில் போய் கெட்டியாக ஒட்டிக் கொண்டிருந்தது. மூச்சு விட அச்சமாக இருந்தது. சந்தம் தவறி பேயாடத் தொடங்கியது உள்ளிருந்த இதயம். அதன் உதைப்புச்சத்தமோ எந்த ஆற்றுப்படுத்தலுக்கும் அடங்காமல் வரவர உக்கிரமாகத்தொடங்கியது.

சிரித்தது அவள் மட்டுமல்ல, நாங்களும் கூடத்தான். ஆனால், அந்த நேரம் எங்கள் ஒருவரின் குரலும் அவளோடு கூட்டுச்சேர்ந்து நிக்கவில்லை. உண்மையைச் சொல்லப் போனால் யாருக்கும் அதற்கு தைரியமில்லை, எனக்கும் கூட. இவளொருத்தி இடக்குமடக்காக விழுந்துவிட்டாள் என்பதற்காக நாமும் அந்த முதலையின் வாயில் போய் கிடந்துகொண்டு ஏலுமானால் என்னை விழுங்கிப்பார் என்று அதை எரிச்சலூட்ட வேண்டுமா என்ன..? 

நட்ட நடு வீதியில் எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் அம்போ என்று விட்டுவிட்டோம். அவள் மட்டும் தனியொருத்தியாக அத்தனை வசவுகளையும் வாங்கிக் கொண்டிருந்தாள். அதற்காக அவள் வருந்தவும் இல்லை ; மற்றவர்களை காட்டிக் கொடுக்கவும் இல்லை. வேண்டுமென்றால் ஒருவரின் பெயர் தவறாமல் அவளால் எல்லோரையும் வரிசை கட்டி நிற்கவைத்து வடிவு பார்த்திருக்க முடியும். ஆனால், செய்யவில்லை.

காச்சு மூச்சென்று கத்தி, தலையால் தெறித்து விழுந்து, வார்த்தையில் எச்சில் நிரப்பி வகைதொகையின்றி ஊத்திக்கழுவி, இன்னும் பிறக்காத மொழியிலெல்லாம் அர்ச்சனை செய்து, அந்த உருப்படாத மனதை இறுக்கியிறுக்கி ஆத்திரக் குப்பையால் அமத்தி, அதன்பின்னும் குறையாத கோபத்தில் பற்களை நெறுமியபடியே அவளைப்பாத்து ”ஒன் பேர் யென்ன..?” என்றான் அவன்.

”கலைமதி” ஒற்றைச்சொல்லாய் நலிந்திருந்தது அவள் பதில்.

”பாத்துக்கிறன், நீ எப்படி கம்பசுக்கு போவாய்ன்னு பாத்துக்கிறன். கிளியறிங் றிப்போட் நானு தானெ எழுதணும். நா சொன்னாத்தா லிஸ்ட்ல ஒன் பேரே வறும். யாறு சொன்னாலும் ஒனக்கு கம்பஸ் இல்லே.”

அவன் வார்த்தையால் வெடித்து பார்வையால் வறுத்துக் கொண்டு எல்லோரையும் கலைத்து விட்டான். விசாரணை அரைவாசி வழியிலேயே உருக்குலைந்து போயிற்று. இது  ஒன்றும் புதிதில்லை, வழமையானது தான் என்றாலும் இன்று கலைமதியின் நிலை தான் எல்லோரையும் கலங்கடித்திருந்தது. உண்மையைச்  சொல்லப்போனால் அவளுக்காக கவலைப்படக்கூட எனக்குத் தகுதியில்லை. எங்களைக்காப்பாற்ற வெள்ளத்தில் கால் வைத்தவளை நயவஞ்சகமாய் நட்டாத்தில் வைத்து வெட்டிவிட்ட மாதிரியல்லவா நாங்கள் நடந்து கொண்டுவிட்டோம். சேர்ந்து செய்த ஒரு குற்றத்துக்காக, அது குற்றம் கூட இல்லை, அவளை தன்னந்தனியே அல்லவா அந்த குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நிற்க வைத்து அவளுக்கெதிராய் தண்டனையெழுதப்படவும் காரணமாயிருந்து விட்டோம். இவ்வளவு சுயநலத்தையும் காவிக்கொண்டா நான் இத்தனை நாளாக சுத்தித் திரிந்திருக்கிறேன். சுயநலமுமில்லை, சந்தர்ப்பவாதம். அவள் செய்த செயலில் எனக்கும் பங்கிருந்தும், அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லையென்பது மாதிரி எத்தனை அபாரமாய் நடித்திருக்கிறேன். நினைக்க நினைக்க குற்றவுணர்ச்சியில் நான் குறுகிக்கொண்டிருந்தேன்.

”நொய்” என்றபடி தற்காலிக மலக்கூடங்களை மொய்த்துக்கிடக்கும் இலையான்கள் போல எப்போதும் ஒருவித சத்தத்துடன் சனங்களால் பிசுபிசுத்துக் கிடக்கும் அந்த முகாம் முழுதும் திடீரென அந்நியமாகிவிட்டது போல தோன்றியது. அவளும் நானும் வெறும் அரையடி இடைவெளியில் நடந்து கொண்டிருந்தோமானாலும் அண்டம் முழுதும் விரியுமளவுக்கு மௌனத்தால் நிறைந்து வழிந்தது நேரம். மனசை மறைத்து பெரும்பாறையொன்று ஏறியிருந்தது. அவளோடு பேச வேண்டும் போல தோன்றியது. ஆனால், பேச்சு வரவில்லை. என்ன பேசுவதென்றும் தெரியவில்லை.

”இவனுக்கு அப்பிடி என்ன தான் வேணுமெண்டு தெரியேல்லை. முரடன்.”

கிட்டத்தட்ட பதினைந்து நிமிடநேரமாக உறைந்து போயிருந்த காலத்தை அவள் தான் கலைத்தாள்.

”கலை, சொறி கலை. நீ தனிய பேச்சு வேண்டவேண்டியதாப்போச்சு. நானும் தான் சிரிச்சது எண்டு சொல்லோணும் போலத்தான் இருந்தது. ஆனா, அவன் கத்துற கத்தை பாக்க பயமாயிருந்தது. அது தான்ரி சொல்லேல. கோபப்படாதை என..”

என் கேவலம் கெட்ட செயலுக்கு ஒரு விளக்கவுரை வேறு கொடுத்தேன் நான். அவள் அதைக் கண்டுகொள்ளவேயில்லை.

”அதில்லையடி. அவனுக்கு ஏன் இவ்வளவு கோபமெண்டு தான் யோசிக்கிறன். அவன் முதல் கத்தும்போதே இண்டைக்கு விசாரணையில்லை எண்டு எனக்கு தெரிஞ்சுபோச்சு. இத சாட்டா வைச்சு ஏதோ பிளான் பண்ணுறான் எண்டு கண்டுபிடிச்சிட்டன். எங்களால பாவம் முன்னுக்கு நிண்ட அண்ணாக்களும் பாதிக்கப்படப்போயினம் எண்டுட்டு தான், நான் தான் சிரிச்சது எண்டு சொன்னன். ஆனா, ஏனெண்டு சொன்னா விட்டுடுவான் எண்டு தான் நினைச்சன். பாத்தா, அவன் ஒரு பெரிய பிரகண்டமே எடுத்துப்போட்டான். விசரன்..”

அந்த அசாதாரண நேரத்தில் நாங்கள் அவளோடு கைகோர்க்கவில்லை என்பதைக்கூட அவள் கண்டுகொள்ளவில்லை. மாறாக, அவனது குணாதிசயம் மற்றும் அவன் நடந்துகொண்ட விதம் பற்றியே ஆராய்ந்துகொண்டிருந்தாள். பேசாமல் மருத்துவத்துறைக்கு பதிலாக அவள் மனவளத்துறையை தெரிவுசெய்திருக்கலாம் போல இருந்தது அவளது ஆராய்ச்சிகள். பேசிக்கொண்டே வந்ததில் வீடு வந்ததை கவனிக்கவில்லை.  “சரி, வீடு வந்திற்று நீ போ. நான் போட்டு வாறன்” என்றபடி அவள் தொடர்ந்து நடக்க, நான் குடில் பக்கமாக கால்களைத் திருப்பினேன்.

அடுத்தடுத்த நாட்களில் எந்த அறிவிப்பும் வரவில்லை. அவ்வளவு தானா..? அவன் சொன்னது போல எல்லாத்தையும் கிடப்பில் போட்டுவிட்டானா என்று மனம் அலைக்கழியத் தொடங்கியது. ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, மொத்தம் எட்டு நாட்கள் ஆகிவிட்டது. எந்தவொரு அசுமாத்தமும் இல்லை. ஒருவேளை மறந்து விட்டானோ. யாராவது போய் கேட்டுவந்தால் நல்லாயிருக்கும் போல தோன்றியது. ஆனால், யார் போவார்கள்…?

ஒன்பதாம் நாள்… வந்துவிட்டது, அறிவிப்பு வந்துவிட்டது. இருந்த கடிதங்கள், விண்ணப்பப்படிவங்கள், அடையாள உறுதிப்படுத்தல்கள் எல்லாவற்றையும் பொறுக்கியெடுத்துக்கொண்டு விழுந்தடித்து ஓடினேன். கிட்டத்தட்ட எல்லோரும் வந்துவிட்டிருந்தார்கள், கலைமதி உட்பட. மறுபடி ஒரு வரிசை. மறுபடி ஒரு ஊர்வலம். மறுபடி கடைசியில் நாங்கள். இம்முறையும் யாரும் யாரையும் நிமிர்ந்து கூடப்பார்க்கவில்லை. கால்விரல் நகங்களின் வெள்ளைநுனியில் ஒட்டியிருந்தது கருவிழிகள்.

ஆறேழு நாளாக எல்லாம் கிடப்பில் கிடந்ததாலோ என்னவோ அவன் வேலையில் கொஞ்சம் பிஸியாய் இருந்தான். காலையில் தொடங்கிய விசாரணை மதியத்தை கடந்து மாலையை தொட்டிருந்தது. நூறு மீற்றர் இடைவெளியில் வரிசையை நிறுத்தி விட்டிருந்தான்.  அதற்கு அப்பாலுள்ள ஒரு சிறு கட்டடத்தில் தான் விசாரணையை நடந்து கொண்டிருந்தது. அங்கே விசாரணை முடிந்தவர்கள் இங்கிருப்பவர்களை தொடர்பு கொள்ளாமலேயே பின்பக்கமாக வெளியேற வேண்டும். அத்தனை இறுக்கமான பாதுகாப்பு.

ஒவ்வொருவாராக வெளியேற வெளியேற இங்கிருக்கின்ற எங்கள் வரிசையில் ஆட்கள் குறைந்துகொண்டு வந்தார்கள். பொழுதும் கருக்கலாகி இருளத்தொடங்கிவிட்டது. கடைசியாக நானும் கலைமதியும் குந்திக்கொண்டிருக்கிறோம்.

“கலை, பயப்படாதை. இவ்வளவு நாளில அவன் உன்ரை பேர மறந்து போயிருப்பான். அடுத்ததா நீ போ. பிறகு நான் போறன்”

அவள் என் ஆலோசனையை கேட்கவில்லை.

“இல்ல குயில். நீ போ. நான் கடைசியாப் போறன்..”ஒரு சின்னப் பயம் அவள் குரலில் இறங்கியிருந்தது. நாங்கள் பேசித்தீர்ப்பதற்கிடையில், எங்களிற்கு முன் போன ரமேஸ் விசாரணைக்கூடத்தின் பின்பக்க வழியாக வெளியேறுவது தெரிந்தது. அப்படியென்றால், இப்போது அடுத்த ஆள் போகவேண்டும் என்பது அர்த்தம்.

“குயில், நீ போ. எதுக்கும் நான் கடைசியாவே போறன், நீ போ.”

பயப்பட்டாளோ அல்லது தான் முதலில் போய் எல்லாக்காரியத்தையும் கெடுத்துவிடவேண்டாம் என்று நினைத்தாளோ தெரியாது. என்னை அனுப்பினாள்.

“சரி, அப்ப நான் போறன். ஆனா, விசாரணை முடிஞ்சதும் அந்த சாப்பாட்டு ரென்ற்றுக்கு பக்கதில வெயிட் பண்ணுறன் வா என..” என்றுவிட்டு எனது உடமைகளோடு எழும்பி போனேன்.

கதவை திறந்து மண்டபத்தின் உள்நுழைந்தேன். யாரையும் காணவில்லை. அறை வெறுமையாக இருந்தது. நான்கு பக்கமும் அடைத்து கட்டப்பட்டிருந்த அந்த சிறு கட்டடம் இருள் மண்டியிருந்தது. அதன் ஒரு பக்க சுவரோரமாக இன்னொரு கதவு தென்பட்டது. திறக்கலாமா வேண்டாமா என்று சந்தேகமாகவிருந்தது. சிங்கத்தின் குகையில் சிக்கிய ஆட்டுக்குட்டிபோல அலமலந்தது மனது. கையை வைத்து தள்ளப் போனேன், எதற்கும் அதற்கு முன் ஒரு முறை தட்டிப்பார் என்று எச்சரித்தது அறிவு. ஆனால், அதற்கு தேவையிருக்கவில்லை “உள்ள வாறது” கதவிற்கு அப்பாலிருந்து வெளியில் வந்தது ஒரு முரட்டுக்குரல்.

அந்த தகர கதவை தள்ளிக்கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தேன். ஒரு ஓரமாக மேசையொன்றின் பின்பக்கமாக சாய்ந்தபடி யாரோ இருப்பது மங்கலாகத் தெரிந்தது. யாரோ என்ன யாரோ, அவன் தான். இடமும் வலமுமாய் இரண்டு கொப்பிகள் கிடந்தன. மேசையின் முன்பக்கம் இன்னொரு கதிரை இருந்தது. தயங்கித்தயங்கி கிட்டப்போய் அமர்ந்தேன். சிகரெட் நாற்றம் முகத்தில் அறைந்தது.

என்னென்னவோ கேள்விகள் கேட்டான். பதிலென்ற பெயரில் நான் ஏதோ புசத்தியிருந்தேன், இப்போது சரியாக ஞாபகமில்லை. அவற்றை கறுப்பு பேனாவால் எழுதினான். முக்கியம் என்று அவனுக்கு தோன்றிய விடயங்களை அவ்வப்போது சிவப்பு பேனாவால் அடையாளமிட்டு வைத்தான். எல்லாம் முடிந்து பின்கதவைத் திறக்கும் போது ஒரு குண்டைத் தூக்கி தலையில் போட்டான். ”கம்பசுக்கு போனதுக்கு அப்புறமாவு ஆமிக்கு வேலை செய்து தறேலுமா”.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒரே முழுசாட்டமாக இருந்தது. என் முழியை பார்த்து இது சரிவராது என்று நினைத்தானோ அல்லது நேரம் போய்க் கொண்டிருக்கிறது என்பதாலோ ”ஒண்ணும் பிரச்சினையில்லே, வேணாம். இன்னுங் எத்தினை பேர் இருக்காங்க வெளீலே..” என்று கதையை மாற்றினான். எனக்கு தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் போல இருந்தது.”ஓராள் தான்” என்றபடி மூடியிருந்த கதவைத்திறந்து கொண்டு வெளியில் பாய்ந்தேன். ஒரு பெரும் சுழலில் இருந்து தப்பியது போல இருந்தது. நேரே நடந்து கலைமதிக்கு சொன்ன ‘சாப்பாட்டு ரென்ற்’ பக்கமாக காத்துக்கொண்டு நின்றேன்.

இனி கலைமதிக்கும் விசாரணை முடிந்துவிட்டால் போதும். இந்த பொல்லாத நரகத்திலிருந்து தப்பிவிடலாம். இப்போது அவள் உள்ளே போயிருப்பாள். இன்னும் சிறிது நேரத்தில் எல்லாம் முடிந்துவிடும். “என்ர அம்மாளாச்சி நான் மட்டும் இங்கயிருந்து வெளியில போட்டன் எண்டால் உனக்கு நாலு பெட்டி கற்பூரம் கொளுத்துவன். ”

இருபது இருபத்தைந்து நிமிடங்கள் கடந்துபோயிற்று. அவள் வருவதாய்க்காணோம். எனக்கெல்லாம் பத்து நிமிடத்தில் விசாரணை முடிந்துவிட்டது. சரி, அவளுக்கு ஐந்தாறு நிமிடங்கள் கூடக்குறைய எடுத்தாலும் கூட இத்தனைக்கு வந்திருக்கவேண்டுமே. ஏன் வரவில்லலை. அந்தரித்தது மனசு. மெத்தப்படித்த மூளை இதுதான் நேரமென்று ஏதேதோ எல்லாம் எச்சரிக்கத்தொடங்கியது.

அவள் வரவேண்டிய பக்கமாக திரும்பி திரும்பி பார்த்தேன். ம்கூம், ஆளைக்காணவில்லை. கருக்கல் மங்கி இருள் வேறு வந்துவிட்டிருந்தது. இருந்தும், அவள் வரவில்லை. ஒருவேளை வேறு பாதையால் போயிருப்பாளோ, ஆனால், எனக்கு சொல்லாமல் அப்படி போகமாட்டாளே. அடிவயிற்றில் பயம் நின்று தாம் தூம் என்று குதித்துக்கொண்டிருந்தது.

தூரத்தில் ஒரு உருவம் வருகிறது. பார்த்தால் அவள் போலத்தான் இருக்கிறது. இவ்வளவு நேரமும் கிடந்து அலைபாய்ந்து மனது அப்பாடா என பெருமூச்சு விட்டது. முன்னூறு வியாக்கியானம் சொல்லி முழுசிக்கொண்டிருந்த மூளை கூட, ஆயிற்று.. எல்லாம் ஆயிற்று என்று ஆறுதல்ப்பட்டது. சின்னதாக சிரிக்கக்கூட முடிந்தது என்னால்.

அது கலை தான். தள்ளாடித்தள்ளாடி நடந்து வந்து பக்கத்தில் நிற்கிறாள். வென்ற நிம்மதியோ தோற்ற பயமோ அவள் கண்களில் இல்லை. அது சுரத்தில்லாமல் சுருங்கிக்கிடந்தது.

“என்ன கலை. விசாரணை பிரச்சினையில்லாம முடிஞ்சுது தானே..”

நான் கேட்ட கேள்விக்கு ஒரு பதிலுமில்லை. மறுபடியும் கேட்டேன். ம்கூம், எந்த அசுமாத்தமும் இல்லை. “வாயில என்ன புட்டுக்கட்டியா வைச்சிருக்கிறாய்..? ஏதாவது சொல்லன்” என்றபடி அவள் தாடையை பிடித்து ஆட்டினேன். கையில் ஏதோ பிசுபிசுத்தது. எடுத்து கண்களிற்கு கிட்டவாக கொண்டுசென்று உற்றுப்பார்த்தேன். இரத்தம்.

“என்னதிது.. ” பதறியடித்துக் கொண்டு அவள் மேவாயைத்திருப்பி வடிவாகக் கவனித்தேன். உதட்டின் ஓரத்தில் இரத்தம் வழிந்து காய்ந்திருந்தது. அங்கங்கு காயம் பட்டு வீங்கியிருந்தது உதடு.

“கலை, உன்னத்தான். என்னதிது..” பதிலில்லை.

அவள் உதட்டு காயத்தை கைகளால் மெலிதாகத் தடவினேன்.

“ஆ.. வலிக்குது. கையை எடு” பட்டென்று திரும்பினாள் அவள்.

 “என்ன நடந்தது..? பயமா இருக்கு கலை. ஏதாவது சொல்லு” – நான் அழத்தொடங்கினேன்.

 “முதலில அழுகிறத நிப்பாட்டு. சும்மா சும்மா அழுது ஊரக்கூட்டாத. இப்ப என்ன உனக்கு சொல்லவேணும். நான் சொல்லி உனக்கு விழங்குறத விட உன்ர கேள்வியிலயே உனக்கு தெளிவா விளங்கிற்று எண்டு தெரியுது. அது தான். அதே தான். இத என்ர வாயால வேற நான் சொல்லவேணுமே..”

அவள் என்னதான் அழவேண்டாம் என்று சொன்னாலும் அதை தவிர வேறு என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை.

 “ஐயோ.. இப்ப என்னடி செய்யுறது..? அம்மாக்களிட்ட போய் என்னெண்டு சொல்லுறது..? எங்களால தான் எல்லாம் எண்டு தான் பேசப்போகுதுகள் சனமெல்லாம்..” மழையில் நனைந்த காக்காக்குருவி போல நடுங்கிக்கொண்டிருந்தேன் நான்.

நான் சொன்னதும் தான் தாமதம், என்னை எரித்துவிடுவது போல பார்த்தாள் அவள். பிறகு கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றாள். எங்களைக்சுற்றி இருள் அடர்ந்து செறிந்து கொண்டிருந்தது. திடீரென என்ன நினைத்தாளோ தெரியாது, கையிலிருந்து ஆவணங்களிலிருந்து பல்கலைக்கழக விண்ணப்பப் படிவத்தை தெரிந்து எடுத்தாள். அடுத்த கணம், அது ஆயிரம் துண்டுகளாகி காற்றில் அசைந்து ஆடியபடி நிலத்தை நோக்கி கீழிறங்கிக் கொண்டிருந்தது. ஒருவேளை அவளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று பயமாகவிருந்தது.

“ஏய் லூசாடி நீ. இருக்கிற பிரச்சினை காணாதெண்டு அதயும் ஏன்ரி கிழிச்சனி. இனி எப்பிடி யுனிவெசிற்றிக்கு போவாய்..? விசரி. உன்னத்தான்ரி, அதுகளை கிழிச்சிப்போட்டு பிறகென்னண்டு கம்பசுக்குப்போவாய்..?”

“கம்பஸ் முக்கியம் தான். ஆனால்,அதுக்கு முதல் எனக்கு இன்னொரு முக்கியமான வேலையிருக்கு.”

இப்போதும் தெளிவாக இறுக்கமாக வெளிவந்தது அவள் குரல். என்ன சொல்கிறாள் என்று ஒன்றுமே புரியவில்லை. குழப்பத்தோடு நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தேன். அவளது குட்டிக்கண்களில் இருபெரும் தணல்க் கிடங்குகள் இருளைக்கிழித்தபடி எரிந்து கொண்டிருந்தன.

***

வேல்விழி முகில்நிலா, ஈழத்தில் உள்ள மணலாறு ஊரைச் சேர்ந்த இவர், தற்பொழுது Sheffield Hallam பல்கலைகழகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். ‘பட்டது’ எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புக்கு – mugilnila8@gmail.com

ஆளும் ஆண்குறி

0

தமிழ் ஸ்டுடியோ அருண்

நான் என் தங்கையை விற்க முடிவு செய்துவிட்டேன். அவள் பெயரை உங்களிடம் சொல்லலாம்தான். ஆனால் சொல்லி என்ன பயன், சொல்லாமல் விட்டால் என்ன பயன் என்று கேட்டீர்களேயானால் கேட்டுக் கொள்ளுங்கள். நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். எங்கள் பெயர் உங்களுக்கு உதவப் போவதில்லை. என்னுடைய பெயரையும் உங்களிடம் சொல்லப் போவதில்லை. நான் ஆணா, பெண்ணா என்றும் கூட சொல்லப் போவதில்லை. நீங்கள் ஆணாக இருந்தால் நான் ஆண், பெண்ணாக இருந்தால் நான் பெண். இப்போதைய பிரச்னை பெயரோ, ஆணா, பெண்ணா என்பதோ இல்லை. என் தங்கையை விற்பதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும். இந்த, கொடுவெயிலின் சுடுமணலில் நடப்பது பெரும்பாடு. இன்று சூரியனின் சூடு புளியங்கொட்டையை தேய்த்து வைக்கும் சூடு போல இல்லை, வத்திக்குச்சியைக் கிழித்து உடலில் வைப்பது போல் இருக்கிறது, இத்தனை சூடு நிறைந்திருந்தாலும், வானில் சில பறவைகள் பறக்கத்தான் செய்கிறது. தெருவில் நாய்கள் எப்போதும் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறது. செடிகள் வளர்ந்துக் கொண்டேதான் இருக்கிறது. பூக்கள் பூத்துக் கொண்டேதான் இருக்கிறது. அவையெல்லாம் இப்படி புகார் சொல்லுமா தெரியவில்லை. ஆனால் புகார் சொல்லாமல் இருந்தால் நம்மையும் இப்படி செடி, கொடி, பூ போல ஜடம் என்று நினைத்து விடுவார்கள். இதே வழியில்தான் ஒருவாரமாக நடந்து செல்கிறேன், சில நாட்கள் அந்தப்பனையை ஒட்டி இருக்கிற கொடிமரத்தில் பஞ்சு போல மஞ்சள் நிறப்பூக்கள் பூத்திருக்கும். மறுநாள் அவை அப்படியே காய்ந்து கருகிப்போய் இருக்கும். இனி அவை வளராது என்று நினைத்தால் அடுத்த நாள் வேறுசில பூக்கள் பூத்திருக்கும். ஒருவாரமாக இந்த பூக்களை பார்த்துக் கொண்டுதான் நடக்கிறேன். அதில் சில பூக்களை பறித்து அதிகாரிக்கு கொடுத்தும் இருக்கிறேன். வேலை முடிந்தபாடில்லை. அரசு அனுமதி என்றால் சும்மாவா, அவர்களுக்கும் ஆயிரம் வேலைகள் இருக்கத்தானே செய்கிறது. இன்று எப்படியாவது வேலையை முடித்துக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறேன். அந்த அதிகாரி கனிவாகத்தான் பேசுவார். ஆனால் கனிவானவர் என்று நீங்கள் நினைத்துவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. உருண்டையான முகத்தில் அதே உருண்டை சிறியதானது போல் வாய், அந்த உருண்டையை அப்படியே பிரதியெடுத்து வைத்தது போல் கண்கள், சுருங்கிய நெற்றி, பருத்த உடல், மங்கிய ஒளியில் பார்த்தாலும் பிரகாசமாத்தான் தெரிவார். அவர் உத்தியோகம் அப்படி, கீழே ஒரு தாள் விழுந்தால் கூட அதை எடுத்துக்கொடுக்க இரண்டு பேர் பக்கத்திலேயே நிற்பார்கள். நம்மை போல் இந்தக் கொடுவெயிலில் அலைந்து திரிய வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை. அவர் அதிகாரியாக இருந்தார் என்பதை தாண்டியும் அவருக்கு ஆண்குறி இருந்தது. ஆம் சொல்ல மறந்து போனேன் எங்கள் ஊரின் பெயர் பட்டு பீதாம்பரம். இந்த ஊரில் ஆண்குறி இருப்பவர்களே அதிகாரிகள். அவர்களே அரசு, அவர்களே சட்டம். ஆண்குறியில்லாதவர்கள் எல்லாரும் அவர்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். என் தங்கைக்கு ஆண்குறி இல்லை, அவள் பெண்ணாய் பிறந்துவிட்டால் பிறகு எப்படி ஆண்குறி இருக்கும். அதனால் பெண்குறிதான் இருக்கிறது. ஆண்குறி இருப்பவர்கள் பெண்குறி இருப்பவர்களை சமமாக நடத்துவதில்லை. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் பெண்குறி இருப்பவர்களை படுக்கைக்கு அழைப்பார்கள். அவர்கள் வராவிட்டால் கட்டாயப்படுத்தி வல்லுறவு கொள்வார்கள். அப்படியும் பிடிக்கவில்லை எனில் அவர்களின் பெண்குறியை கிழித்து எறிவார்கள்.

எங்கள் ஊரின் வடக்கு பகுதியில் படுக்க அழைத்து, வர மறுத்த பெண் ஒருத்தியின் பெண்குறியில் அமிலம் வீசி அதனை சிதைத்தார்கள். இன்னொரு கும்பல் படுக்க வந்த பெண்ணை ருசித்துவிட்டு அவளது பெண்குறியில் கடப்பாரை போன்ற இரும்பு ஒன்றை உள்ளேவிட்டு அவள் புட்டத்தின் வழி வெளியே எடுத்தார்கள். பெண்குறி இருந்த ஒரே காரணத்தால் அவள் அன்று இறந்து போனாள். முன்பெல்லாம் பத்து வயதுக்கு மேல்தான் பெண்குறி இருப்பவர்களுக்கு பிரச்னை இருந்தது, இப்போதெல்லாம் பிறக்கும்போதே பெண்குறி இருந்தால் அவர்களை படுக்க அழைக்கிறார்கள். குழந்தைகள் வர மறுத்து அழுதால், கழுத்தை அறுத்து கொல்கிறார்கள். பெண்குறி உள்ளவர்கள் இன்னென்ன வேலைகள் செய்யலாம் என்று எங்கள் ஊரில் சட்டம் இயற்றி இருக்கிறார்கள். அவர்கள் சமைக்கலாம், ஆனால் சமையல் பொருட்களை ஆண்குறி கொண்டவர்களே வாங்கிக் கொடுக்க வேண்டும். அவர்கள் வீடுகளை சுத்தம் செய்ய வேண்டும், கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும், இறுதியாக ஆண்குறி கொண்டவர்களோடு படுக்க வேண்டும். பெண்குறியுள்ளவர்கள் பேசினால் அவர்கள் முகத்தில் அமிலத்தை வீசுவார்கள். படுக்க மறுத்தால் இரண்டாக கிழித்து எறிவார்கள். எங்கள் வீட்டிலும் என் இளைய தங்கையை அப்படிதான் இரண்டாக கிழித்தெறிந்தார்கள். இன்னொரு தங்கை இதற்கெல்லாம் பழக்கப்படுத்திக் கொண்டாள். பழக்கப்படுத்திக் கொண்டாள் என்றால், படுக்க என்று புரிந்து கொள்ளுங்கள். இப்படிப்பட்ட ஊரில் என் பத்து வயது தங்கையை வைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. அதைவிட முக்கியமாக அவளை விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டுதான், என் மூத்த தங்கைக்கு ஆண்குறி கொண்ட ஒருவனை பாதுகாப்பாக வைக்க முடியும். இந்த ஊரில் ஒன்று ஆண்குறி இருக்க வேண்டும், இல்லையேல் கொஞ்சம் கூடுதலாக பணம் இருக்க வேண்டும். பணமிருந்தால் அதனை ஆண்குறி கொண்ட ஒருவனிடம் கொடுத்து என் தங்கையை பாதுகாக்க சொல்லலாம். அதனால் அவளை பல கிலோ மீட்டர்கள் தள்ளியுள்ள திருநர் என்கிற ஊருக்கு விற்றுவிடலாம் என்றுதான் அதிகாரியிடம் மனு கொடுத்து காத்திருக்கிறேன். கொடு வெய்யில் இப்போது சோகை வெயிலாக மாறியிருக்கிறது.

2

சிவன் கோவிலைத் தாண்டி எங்கள் வீடு வரும் நான்காவது குடிசைதான் எங்கள் வீடு. ஓ, அப்படியே சொல்லிவிட்டேன். இல்லை.. இல்லை, நான்கு சிவன் கோவிலை தாண்டி ஐந்தாவதாக வரும் குடிசை எங்கள் வீடு. இங்கே வீடுகளை விட கோவில்கள் அதிகமாக இருந்தன. அன்று எதிர்பாராத அந்த சம்பவம் என் வீட்டில் நடந்துவிட்டது. காலையில் சேவல் சிவன் கோவில் மேலேறி கூவத்தொடங்கியது. நான் பொருட்கள் வாங்க வெளியில் சென்றிருந்தேன். பத்து வயது தங்கை தூங்கிக் கொண்டிருந்தாள். மூத்த தங்கை, வெளியில் சென்று பெரிய கழி ஒன்றை கொண்டு வந்தாள். கையில் இருந்த பெரிய கயிறு ஒன்றை உத்தரத்தில் உள்ள கொக்கி ஒன்றில் மாட்ட அந்த கழி போதுமானதாக இருந்தது. பெரிய கயிறு ஒன்றை கழியின் முனையில் நுழைத்து, கொக்கியில் மாட்ட முயன்றாள். உயரம் போதுமானதாக இல்லை, சிறிய கதிரை ஒன்றை எடுத்து அதன்மேல் ஏறி நின்று கழியை தூக்கி கொக்கி மேல் கயிறை மாட்ட எக்கினாள். அப்போதும் உயரம் போதவில்லை. மீண்டும் வெளியில் சென்று இன்னொரு கழியை எடுத்து வந்தாள், இரண்டு கழியையும் அவள் துப்பட்டா கொண்டு சேர்த்துக் கட்டினாள். வெளியில் வானம் பூத்திருந்தது. சூரியன் ஆரஞ்சு நிறத்தில் உதித்து வருவதை எங்கள் ஊரில் அப்படிதான் சொல்வார்கள். சூரியனில் இருந்து பறவைகள் பிறந்து வெளியே வருவது போல், அந்த வட்டச் சூரியனில் இருந்து பறவைக்கூட்டம் இன்னொரு விளிம்பை நோக்கி பறந்து கொண்டிருந்தன. வானில் அவை நடனமாடிக் கொண்டிருந்தன. வீட்டில் என் தங்கை நடனமாடிக் கொண்டிருந்தாள், இரண்டு கழியையும் சேர்த்துக் கட்டியதில் அவை சரியாக இணையாமல் ஆடிக்கொண்டே இருந்தது. ஒருவழியாக கொக்கியில் கயிறை மாட்டிவிட்டாள். அழுத்தி ஒரு முடிச்சுப் போட்டாள். இப்போது அதே கயிறை வட்ட வடிவமாக மாற்றி இன்னொரு முடிச்சு போட வேண்டும். அப்படி அவள் வட்ட வடிமாக கயிறை சுருட்டிக் கொண்டிருக்கும்போதே அதன் உள்ளே சில பூச்சிகள் பறந்து போயின, அவைகளும் சூரியனில் இருந்து பிரிந்த பறவைகள் போல, காற்றில் நடனமாடிக் கொண்டிருந்தன. வட்ட வடிவமாக மாற்றுவதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டாள். வெளியே சென்ற நான் எப்போதோ வந்துவிட்டேன், அவளும் அதனை பார்த்து விட்டாள், ஆனாலும் அவள் காரியத்தில் தடையேதும் இல்லை. நான் அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். இடையில் பத்து வயது தங்கையும் எழுந்து கண்களை கசக்கிக்கொண்டு அவளது அக்கா செய்யும் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள். இறுதியாக வட்ட வடிவமாக கயிறை மடித்து, அதை கொக்கி மேல் இருந்த கயிற்றோடு இணைத்து முடிச்சுப் போட்டாள். இரண்டு கதிரைகளை சேர்த்து அதன் மேல் ஏறி நின்று வட்ட வடிவ கயிறை தன் தலையில் சுற்றிக் கொண்டாள். கதிரையினை காலால் எட்டி உதைத்தாள். சூரியனில் இருந்து பறவைகளோ, வட்ட வடிவ கயிறில் இருந்து பிரிந்த பூச்சிகளோ இது எதையும் கவனிக்கவில்லை. அவரவருக்கு அவரவர் வேலை முக்கியம்.

கதிரை கீழே விழுந்ததும் தங்கை அந்தரத்தில் தொங்கினாள். அவள் கழுத்தை கயிறு இறுக்கியது. அடுத்த நொடியில் அது அறுந்து போனது, தங்கை கீழே விழுந்தாள், நானும் பத்து வயது தங்கையும் சிரித்துக் கொண்டிருந்தோம். பூச்சி ஒன்று என் வாயருகே சப்தமிட்டு சென்றது, மூத்த தங்கையை பரிகாசம் செய்ததை அந்த பூச்சி ரசிக்கவில்லை போலும். கீழே விழுந்த என் தங்கை கைகளை துடைத்துக் கொண்டே எழ முற்பட்டாள். இடுப்பெலுப்பில் லேசான அடி. நான் பொருட்களை அவளிடம் கொடுத்து விட்டு சொன்னேன், தூக்குமாட்டிக் கொள்ள வேண்டுமென்றால் கூட உனக்கு ஆண்குறி அவசியம்.

3

மஞ்சள் நிற பூவொன்றை அதிகாரியிடம் கொடுத்துவிட்டு அவரிடம் என் மனு என்ன ஆனது விசாரித்தேன். நாளைக்கு அனுமதி வந்து விடுவதற்கான வாய்ப்புண்டு, அந்த அனுமதி கடிதம் வந்ததும் எனக்கு ஐநூறு ஆண் கொடுக்க வேண்டும் என்றார், ஆண் என்றால் எங்கள் ஊர் பணத்தின் பெயர். அதில் இருந்துதான் ஜப்பானிய யென் வந்தது என்று கூட சொல்வார்கள். அவ்வளவு மதிப்பு வாய்ந்த பணம் எங்களுடையது. மறுநாள் அனுமதி கடிதம் வந்தது. திருநர் ஊரில் இருந்து ஆறடி உயரத்தில் ஒருவர் என் தங்கையை பார்க்க வந்திருந்தார். அருகில் இருக்கும் சிவன் கோவிலில் நின்று இது என்ன என்பதுபோல வினவினார். இது எங்கள் ஊர் சிவன் கோவில், உங்கள் ஊரில் கோவில்கள் இல்லையா என்றேன். அப்படி ஒரு வார்த்தையே எங்களுக்கு தெரியாது என்றார். இந்த ஊரில் ஆண்குறிகளால் நடக்கும் அத்துணை அராஜகங்களும், அதிகாரத் திமிரும் எங்கள் ஊரில் எப்போதும் விவாதிக்கப்படும் பொருளாகவே இருக்கிறது, என்று சொல்லிக் கொண்டே கோவிலை சுற்றிப் பார்த்தார். இது என்ன குச்சி ஒன்று வட்டவடிவ கல்லில் இருந்து மேலெழும்பி இருக்கிறது, ‘அய்யய்யோ அதை அப்படி சொல்லக்கூடாது, அதனை எங்கள் ஊரில் லிங்கம் என்பார்கள்’. மீண்டும் லிங்கத்தை உற்று நோக்கினார், ஓ இதுதான் ஆண்குறியா, அவர் ஆச்சர்யமாக அதனை உற்றுப் பார்த்தார். நீங்கள் ஏன் பெண்குறியில் இருந்து ஆண்குறி மேல் எழும்பி இருப்பது போல் வடித்து வைத்திருக்கிறீர்கள், அதனால்தான் ஆண்குறியுடையவர்கள் அதிகாரத்திலும், திமிரிலும் இருக்கிறார்கள். ஆண்குறியின் மையத்தில் அந்த உருண்டை வடிவ கல்லை வைத்தால் இரண்டும் சமமாக இருக்குமே என்றார். இன்னும் கொஞ்சம் நேரம் இங்கே இருந்தால், அவர் அப்படி பேசியதற்கு எனக்கு தூக்குத்தண்டனை கூட கிடைக்கலாம், அவர் கையை பிடித்து வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்து சென்றேன்.

தங்கையை பார்த்து சென்ற திருநர் ஊர்க்காரரிடம் இருந்து பதிலேதும் இல்லை. திண்ணையில் சம்மணம் இட்டு உட்கார்ந்திருந்த மூத்த தங்கை நீங்கள் ஏன் என்னையும் விற்றுவிடக்கூடாது என்று ஆசையோடு கேட்டுக் கொண்டிருந்தாள். என்னிடம் இருக்கும் பணத்தை வைத்து ஒருவரைத்தான் இப்போதைக்கு விற்க முடியும், சின்னவளை நல்லபடியாக விற்று முடித்த பின்னர் உன்னையும் விற்க ஏற்பாடு செய்கிறேன் என்றேன், அவள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காதில் வாங்கிக் கொள்ளாமல் உள்ளே எழுந்து சென்றாள். எதிர் வீட்டில் இப்போதுதான் ஆண்குறி கொண்ட குழந்தை பிறந்துள்ளது. எப்படியும் அரசு அதிகாரத்தில் அவர்களுக்கு பங்கு வந்துவிடும். மகிழ்ச்சியில் குழந்தையை கையில் ஏந்தி சூரியனை நோக்கி காட்டினார்கள். குழந்தை சூரியனை ஒன்னுக்கடித்தது. எனக்கென்னமோ அந்த ஆண்குறி சூரியனை நோக்கி நீண்டு வளர்வது போலவும், சூரியனை கூட தொட்டுவிடக் கூடிய அதிகாரம் அந்த ஆண்குறியிடம் இருப்பதை போலவும் தோன்றியது. இனி எதிர் வீட்டுக்கார்கள் எங்களிடம் பேச மாட்டார்கள். சட்டப்படி பேசக்கூடாது. இனி அவர்கள் பட்டு பீதாம்பரம் ஊரில் இருக்கும் அதிகாரம் என்கிற தெருவுக்கு இடம்பெயர்ந்து விடுவார்கள். நாளை அந்த ஆண்குறி கொண்ட குழந்தை வளர்ந்து என் பத்து வயது தங்கையை படுக்க அழைக்குமுன்னர் அவளை விற்றுவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

அதிகாரியிடம் இருந்து அழைப்பு வந்தது. கொடுவெயில் சூட்டில் மீண்டும் அதே பொட்டல்காட்டில் பூத்த மஞ்சள் நிறப்பூவை பறித்துக்கொண்டு அவரைக் காண நடந்து கொண்டிருக்கிறேன். பெண்குறி கொண்டவர்களின் சடலம் இரண்டு பனைமர கொடிக்கு அருகே கிடந்தது. பெண்குறியில் இருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. கோடியில் பூத்திருக்கும் மஞ்சள் நிறப்பூ எப்போது வேண்டுமானாலும் ரத்த சிவப்பு நிறத்திற்கு மாறிவிடலாம். அச்சத்தில் பதுங்கிப் பதுங்கி மலைப்பாம்பு நீண்டிருந்த அந்த சாலையில் நடந்து கொண்டிருக்கிறேன். காக்கையின் குரல் கூட அச்சுறுத்துகிறது. நாய் ஒன்று நடுரோட்டில் நின்று ஊளையிடுகிறது. கருமைநிற அதன் கண்களும், ஈட்டி போன்ற அதன் பற்களும் வானத்தை பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருக்கிறது. இறந்து கிடந்த இந்த இரண்டு பெண்குறிகளுக்காகத்தான் அது அழுகிறதோ என்னவோ.

மஞ்சள் நிறத்தில் உருளை வடிவ விளக்கொன்று அந்தரத்தில் இருந்து தொங்கிக் கொண்டிருந்தது. நீண்ட இரும்புக்கம்பியில் மின்விசிறி பொறுமையாக சுற்றிக் கொண்டிருந்தது. கடக், கடக், கடக்.. அந்த சப்தத்தைத் தாண்டி அதிகாரியின் அந்த அறையில் வேறெந்த சப்தமும் இல்லை. என்னைப் பார்த்ததும் எதுவும் பேசாமல் விரலை நீட்டினார். எதிரே இருந்த கதிரையில் உட்கார் என்பது அதன் அர்த்தம். அழுக்கு அப்பி, பழுப்பேறி கிடந்தது அந்த கதிரை. எதிரில் அரசு முத்திரையிட்ட கோப்புகள் இருந்த இடத்தை சுற்றிலும் எட்டுக்கால் பூச்சிகள் மேலும் கீழும் அசைந்து அதற்கென குடில் ஒன்றை கட்டிக் கொண்டிருந்தது. அதிகாரி கையில் இருந்த கோப்புகளை உற்று கவனித்துக் கொண்டிருந்தார். எட்டுக்கால் பூச்சிகள் அதன் வயிற்றில் இருந்து நூல்களை எடுத்து ஒரு கோப்புக்கும் இன்னொரு கோப்புக்கும் இடையே பின்னிக் கொண்டிருந்தன. உற்றுப் பார்த்தால் அதன் உருவம் அச்சமூட்டுவதாக இருந்தது. அதன் பருத்த உடலை, எப்படி அந்த மெல்லிய கால்கள் தாங்குகின்றன, அந்த கால்களுக்கிடையே ஆண்குறி இருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன், எட்டுக்கால் பூச்சிகளின் ஆண்குறி எப்படி இருக்கும் என்று தெரியாது, ஆனால் அங்கே இருந்த எல்லா எட்டுக்கால் பூச்சிகளும் தனித்தனியாக தங்களுக்கு உணவு குடிலை கட்டி எழுப்பிக் கொண்டே இருந்தன. சின்னஞ்சிறு பூச்சி ஒன்று கோப்புகளில் இருந்து தவறி விழுந்து, அருகில் இருந்த ரேக்குகளில் கூடுகட்டத் தொடங்கியது. மேலே இருந்த விழுந்த பயமோ, குடும்பத்தை விட்டு பிரிந்த உணர்வோ சிறிதும் இல்லாமல், அவை உணவை தேடத் தொடங்கி விட்டன.

அவரது உருண்டைக் கண்கள் அவரது மேசையில் இருந்த தாள்களை பாதியும், என்னை பாதியுமாக பார்த்துக் கொண்டிருந்தது. சட்டென என்னை அழைத்தார். திரும்பிப் பார்த்தேன், பெரிய எட்டுக்கால் பூச்சி போல் அவர் உருவம் மாறியது. கண்களை சிமிட்டிக்கொண்டு மீண்டும் அவரை பார்த்தேன், கொல்லெனச் சிரித்தார். அருகில் இருந்த தாள்கள் பறந்து கீழே விழுந்தது. எப்படி இப்படி ஒரு மனிதரால் சிரிக்க முடியும், எவ்வளவு காற்று அவரது வாயில் இருந்திருக்கிறது, அந்த காற்று அவ்வளவு தூரம் தள்ளி உட்கார்ந்திருந்த என்மேல் படர்ந்தது.

‘நீ என், உன் தங்கச்சிய வாங்க வந்தவருக்கு ஆண்குறி இல்லன்னு எனக்கு சொல்லல’

இதென்ன அநியாயமா இருக்கு அதிகாரி, ஆண்குறிகளால் பிரச்னை வருகிறது என்றுதானே அவளை விற்கவே முடிவு செய்தேன், பின்னர் எப்படி ஆண்குறி இருப்பவர்களுக்கு விற்பனை செய்வேன், நான் ஆண்குறி இல்லாத ஊரில் இருந்துதானே அவளை விற்க விரும்பினேன்.

‘அதை நீ முன்கூட்டியே ஏன் உன் மனுவில் குறிப்பிடவில்லை?’,

அதைக் குறிப்பிட வேண்டும் என்று நீங்கள் சொல்லவே இல்லையே,

‘ நீ ஏன் கேட்கவில்லை, நீதான் கேட்டிருக்க வேண்டும்’

சரி, அதிகாரி இப்போது நான் என்ன செய்ய வேண்டும்,

‘பத்தாயிரம் ஆண் கொடுத்துவிட்டு நீ அவளை ஆண்குறி இல்லாத ஊரில் விற்றுக் கொள்ளலாம்’

பத்தாயிரம் ஆண் இருந்தால் நான் என் தங்கையை இந்த ஊரில் வைத்தே பாதுகாக்க முடியும், அவளுக்கும் என் மூத்த தங்கைக்கும் இரண்டு ஆண்குறிகளை வாடகைக்கு எடுத்து பாதுகாத்துக் கொள்வேனே

‘அதெல்லாம் எனக்கு தெரியாது, ஆண்குறி இருப்பவர்களுக்கு அவளை விற்றால் அதற்கு ஒரு தொகை, இல்லாதவர்களுக்கு விற்றால் அதற்கு ஒரு தொகை. இதுதான் அரசுக்கொள்கை’

அது ஏன் அப்படி அதிகாரி?

‘ஏன் உனக்கு இதெல்லாம் தெரிவதில்லை, ஆண்குறிகளில் சாதியிருக்கிறது, சாதியிருக்கும் ஆண்குறிகளுக்கு உன் தங்கையை விற்றால் அவளது பெண்குறிக்கும் ஒரு சாதி கிடைக்கும், ஆண்குறி இல்லாத ஒருவனுக்கு உன் தங்கையை விற்றால் அவனை என்ன சாதியில் சேர்க்க முடியும், உன் தங்கைக்கு என்ன சாதியைக் குறிக்க முடியும்’

ஓ, நம்மூரில் சாதி இல்லை என்றுதானே அரசு சொல்லியிருக்கிறது

‘அட என்னய்யா நீ பீதாம்பர ஊர்க்காரன் போலவே பேசமாட்டேன் என்கிறாய், இங்கே மனிதர்களுக்குத்தான் சாதியில்லை, ஆனால் ஆண்குறிகளுக்கு சாதி இருக்கிறது’ அவர் கோப்புகளை ஆய்ந்துக் கொண்டே பாதிக்கண்ணால் என்னை பார்த்து பேசிக்கொண்டிருந்தார். செந்நிற பாலாடைகள் அப்பிய கண்ணாடி கோப்பை ஒன்றில் தேநீர் வந்ததும், அதை எடுத்துப் பருகினார். மஞ்சள் நிற ஒளி மங்களானது. இருளில் மஞ்சள் ஒளியை நுழைத்து, அதில் பச்சை அப்பிய ஒரு புதுவித நிறத்தில் அவரது நிறம் மாறிக்கொண்டிருந்தது.

கோப்புகளை மூடிவைத்துவிட்டு, இருக்கையில் இருந்து எழுந்து வந்தார், வா வெளியில் போய் பேசுவோம், சொல்லிவிட்டு அவரது பருத்த உடலை மெதுவாக நகர்த்தி வெளியே சென்றார். பருத்த அவரது புட்டங்கள் இடதும் வலதும் மேலும் கீழும் ஆடிக்கொண்டே இருந்தது. அதற்கிடையில்தான் அவரது ஆண்குறி பாதுகாப்பாக இருக்கிறது.

ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார், பாதி சிவப்பும், பாதி கருத்துமாய் இருந்த அவரது உதடுகள் சிகரெட்டை லாவகமாக பற்றிக்கொண்டது.

‘உன்னிடம் எவ்வளவு ஆண் இருக்கிறது என்று சொல், நான் ஏதாவது வழி இருக்கிறதா என்று சொல்கிறேன்’

நீங்கள் முன்னமே கேட்டது போல் ஐநூறு ஆண் கொடுத்து விட்டேன். மீதம் என்னிடம் கூடுதலாக ஐநூறு ஆண் இருக்கலாம், அவ்வளவுதான் அதிகாரி.

‘உன் தங்கையை எவ்வளவு ஆணுக்கு அந்த திருநர் ஊர்க்காரன் கேட்டிருக்கிறான்’

அவரிடம் இருந்து பதிலேதும் வரவில்லை அதிகாரி. இரண்டு நாட்களில் வந்துவிடும் என்று நினைக்கிறேன்.

‘அதுவரை பொறுக்க முடியாது, நீ இப்போதே பத்தாயிரம் ஆண் காட்டினால் மட்டுமே அவனிடம் உன் தங்கையை விற்க முடியும்’

என்னிடம் அவ்வளவு ஆண் இல்லை, இப்போது நான் என்ன செய்யட்டும்,

‘நீ என்ன செய்ய வேண்டும் என்று சொல்வது ஏன் வேலையல்ல, பணமில்லை என்றால் உன் தங்கையை விற்க இயலாது’

‘சரி அப்படியெனில் நான் சென்று வருகிறேன்’

‘சரி, நீ கிளம்பலாம், ஆனால் அதற்கு முன்னர் திருநர் ஊர்க்காரன் ஒருவன் வந்து உன் தங்கையை பார்த்துவிட்டு சென்றதற்காக நீ பணம் கட்ட வேண்டும், அதனைக் கட்டிவிட்டு செல்லலாம்’

அதற்கு நான் பணம் கட்ட வேண்டுமா, இதை ஏன் நீங்கள் முன்னமே சொல்லவில்லை,

‘நீ ஏன் முன்னமே கேட்கவில்லை’

சரி இப்போது கேட்கிறேன், சொல்லுங்கள்,

‘அவன் ஆண்குறியில்லாத ஊரில் இருந்து வந்திருக்கிறான், உன் தங்கையை வாங்கிக் கொண்டாள்ல் பத்தாயிரம் ஆண், அவன் பார்த்துவிட்டுச் சென்றதற்காக ஐந்தாயிரம் ஆண் கட்ட வேண்டும்’

ஓ, என் தலையை அடகு வைத்தால் கூட அவ்வளவு பணம் எனக்கு கிடைக்காதே அதிகாரி.

‘அதுபற்றி எனக்கு அக்கறை இல்லை’, சொல்லிவிட்டு சிகரெட்டை வீசி எறிந்தார், இறுதியாக அதில் இருந்து அரைவட்ட வடிவில் ஒரு வெளிச்சம் புறப்பட்டு பின்னர் மறைந்தது.

அவர் உள்ளே சென்று சில நிமிடங்கள் ஆகிவிட்டது. நான் வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதும் சில பறவைகள் வானில் பறந்து கொண்டேதான் இருந்தன.

திடீரென என் தோள்மீது ஒருவர் கை பட்டது. அவர் அதிகாரியின் அலுவலகத்தில் கோப்புகளைத் துடைத்து வைக்கும் வேலைகளை பார்ப்பவர். எங்கள் ஊரில் ஆண்குறி பெரியதாக இருந்தால் பெரிய பதவிகள் கிடைக்கும், சிறியதாக இருந்தால், உதவியாளர் பணிகளே கிடைக்கும்.

‘என்ன, உங்களுக்கு ஒன்றும் தெரியாது அவர் அடிக்கடி சொல்வது சரியாகத்தான் இருக்கிறது, ஏன் பிரச்சனையை வளர்க்கிறீர்கள்’

நான் ஏன் பிரச்சனையை வளர்க்கப் போகிறேன், என்னிடம் அவ்வளவு பணமில்லையே நான் செய்வது, இந்த பணத்தைக் கட்டாவிட்டால் என்னை செய்துவிட முடியும் இவர்களால்

‘ஹ்ம்ம், உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது உண்மைதான் போல, நீங்கள் அதிகாரி கேட்கும் பணத்தை காட்டவில்லை என்றால், பத்து வருடங்கள் சிறைதண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது, நான் சொல்வதைக் கேளுங்கள், உங்களிடம் இருக்கும் ஐநூறு ஆணை அவரிடம் கொடுத்துவிடுங்கள்’

அது போதுமா, அவர் ஐந்தாயிரம் ஆண் அல்லவா கேட்கிறார்

‘நான் சொல்வதை முழுமையாகக் கேளுங்கள், உங்களிடம் இருக்கும் ஐநூறு ஆணை கொடுத்துவிட்டு, உங்கள் தங்கையை அவரிடம் விற்று விடுங்கள், அதற்கு அவர் நான்காயிரத்து ஐநூறு ஆண் கொடுப்பார். அதை வாங்கி அரசுக்கு கட்ட வேண்டிய பணத்தைக் கட்டி விடுங்கள். அவரது உதடுகள் பச் என்றன. கண்களில் அவ்வளவு நெளிவு சுளிவு இருந்தன. பழுக்கக் காய்ச்சிய எண்ணெயைத் தலையில் ஊற்றி அப்படியே பரப்பிவிட்டது போன்ற தலைமுடி, ரு போலல்லாமல் று போன்றிருந்த நீண்ட முகம், என்ன என்று கேட்டுவிட்டு கண்களை சிமிட்டினார். மங்கிய சிமிழ் விளக்கு ஒளி போல் என் பார்வை மாறியது.

உள்ளே வந்து பத்திரத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, நாளை வேலையை முடித்து விடுங்கள் என்று அழைத்துச் சென்றார். எட்டுக்கால் பூச்சிகள் கோப்புகள் முழுவதையும் சுற்றி சூழ்ந்து அதன் மேல் கூடு கட்டியிருந்தன. அதில் சில பூச்சிகள் அகப்பட்டு தப்பிக்க எக்கிக் கொண்டிருந்தன. சட்டென அந்த உதவியாளரிடம் கேட்டேன், இந்த எட்டுக்கால் பூச்சிகளுக்கு ஆண்குறி இருக்கிறதா?,

அவர் சிரித்துக் கொண்டே சொன்னார், உங்களுக்கு ஒன்னும் தெரியாது என்பது உண்மைதான் போலிருக்கிறது, அவரது சிரிப்பு சப்தம் ஓயவில்லை.

ஆம், எனக்கு ஒன்றும் தெரியாதுதான்.

***

நன்றி: ஜி.நாகராஜன், தற்கொலை விவரணை ஜி நாகராஜனிடம் இருந்து எடுத்தாளப்பட்டது.

***

தமிழ் ஸ்டுடியோ அருண் – தமிழ் ஸ்டூடியோ. பேசா மொழி இதழ். படிமை உள்ளிட்ட அமைப்புகளின் நிறுவனர்

ராஜாவிண்டே ஸ்வப்னம்

2

பெயர் தெரியாத திரைப்படம் ஒன்றின் இடைக்காட்சி போல் அந்தக் கணம் ஒழுகிக் கொண்டிருந்தது. பெரிய ஹாலில் தரையில் படுக்கை விரித்து சினிமா பார்த்தபடியே உறங்குவது அவனுக்குப் பிடித்தமானது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட பொழுது சொந்தமும் அன்னியமுமாக முதுகில் பனியன் ஒட்டிக் கொள்ளுமளவு வியர்வை. நவீனுக்கு எரிச்சல் வந்தது. கோபம் அடக்கும் போது அதன் எனர்ஜியே வேறு என அவனது மேலதிகாரி ரத்தன் சொல்லுவார். செய்ய ஏதுமில்லாத காரணத்தால் உறங்கத் தொடங்கியிருந்தான். இப்போது அந்த உறக்கம் கலைந்தது எரிச்சலின் காரணம். கண்களைத் திறந்து இருளைப் பழக முயன்றான். மிக மெல்லிய சிகரட் புகை எங்கிருந்து வருகிறது? இதென்னது, பூட்டிய அறைக்குள் யார் சிகரட் பிடிக்க முடியும் நவீன் நம்பாமல் தன் விரல்களைப் பார்த்துக் கொண்டான். “டாம் இட் நான் சிகரட்டை நிறுத்தி விட்டேனே, ஞாபகத்திலிருந்தா இத்தனை தாமதமாய்ப் புகைகிறது?” 

செறுமல் ஒலி கேட்டது. இவன் பயத்தை தனக்குள் அடக்கிக் கொண்டு “யாரு?” என்றான். இதென்ன கேள்வி எனச் சிரிப்பும் வந்தது. கதவைத் தட்டினால் யார் என்று கேட்பதில் அர்த்தம் உண்டு. இங்கே பூட்டிய வீட்டினுள் உறக்கத்திலிருந்து எழும் நேரம் யாரோ செறுமினால் அதை எப்படி எதிர் கொள்வது? வாழ்க்கை யதார்த்தப் படர்க்கையில் எதையோ திறந்திருக்கிறது.

‘இது இன்று என்கிற நேற்றின் அடுத்த நாள் தானா அல்லது வேறெங்கேயோ எழுந்திருக்கிறேனா நான்?’

“நவீன் பயப்படாதீங்க” குரல் வந்த திசையைப் புரிந்து கொள்ள முனைந்தான். வித்யாசமான வாசனை, தூசி மழை, எங்கிருந்து வருகிறது வெளிச்சம்? இருளோடு குறைந்த பட்ச சமரசம் செய்வது போல. மாபெரிய கூடத்தில் சின்னஞ்சிறு மெழுகுவர்த்தி போல ஒளிர்ந்தால் எப்படிப் போதும்? சன்னமாக ஒளிர்ந்தது. இவன் தொண்டையை ஈரம் செய்துகொள்ளச் சிரமப்பட்டு ‘யாருங்க?”, கையில் பிடிக்க எதாவது கழி மாதிரி கம்பெதாவது கிடைக்குமா என்று பார்வையில் தேடினான். மறுபடி அந்தக் குரல் “பயப்படாதீங்க. இங்க பாருங்க” சற்றே அதிகாரமாக ஒலித்தது. இந்தக் குரலை எங்கோ  கேட்டிருக்கிறான். யாருடையது என்று புரியவில்லை ஆனால் பரிச்சயமானது தான் நிச்சயமாக. அந்த ஒரு விசயம் ஆறுதலாக இருந்தது. இப்படி எதிர்பாராமல் ஏதாவது அபூர்வம் அல்லது அமானுஷ்யமாக நடக்கும் போது ஏதாவதோர் சாதகமான புள்ளி தேவைப்படுகிறது தானே?

அறையின் இருள் சித்திரம் நவீனுடைய கண்களுக்குப் புலப்படத் தொடங்கியது. அறை இடது மூலையில் பியானோ, அதன்முன் நாற்காலியில் கால்மேல் கால்போட்டு யாரோ அமர்ந்திருந்தது தெரிந்தது. சொடக்கிடுவது போல் வலது கையில் முனையில் சிகரட் தன் கடைசி ஒளிப்புகையைக் கமழ்ந்தது. அலட்சியமாகத் தன் காலைத் தரையில் சுரண்டிக் கொண்டு அமர்ந்திருப்பது யார்? அதை விட முதல் வினா எப்படி பூட்டிய அறைக்குள் நுழைய முடியும் என்றுதான் இருக்க வேண்டும். ஒரு அசாதாரணம் அடுத்த ஒன்றை முன்நிறுத்தித் தான் மங்கிப் போவதன் விசித்திரத்தை எண்ணும் போதே மின்சாரம் மறுபடி உயிர்த்தது. அறை முழுவதும் ஒளியின் பசிக்கு இரையானதில்  இருள் முழுமையாக அற்றுப்போய் குழந்தை சொன்ன விடுகதை  விடையறியும் கணம்  போல் சாதாரணமாக மாறத் தன் சொந்த அறை எனும் நிம்மதித் தொடர்ச்சியோடு பியானோ மூலையைப் பார்த்தான்.

சுந்தர்பாபு

“மைகாட்”

சுந்தர் பாபூ

நவீன் வார்த்தைகளைத் தேடினான்.

 பியானோவுக்கு சற்றே மேலே சுவரில் சுந்தர்பாபுவின் ப்ளாக் அண்ட் ஒயிட் படம் கண்களை மூடிய முகத்தின் எக்ஸ்ட்ரீம் க்ளோஸ் அப் உறைதல் ‘சகோதரன்’ படத்தில் அவரது தோற்றத்தின் ப்ளோ-அப்பை ஃப்ரேம் செய்து மாட்டி இருக்கிறான். வதனா இந்த அறைக்கு வரும்போதெல்லாம் சொல்வாள் “எதுக்குப்பா இவ்ளோவ் பெரிசா படம்? மூடிய கண்களால அந்தாள் நம்மளை நோட்டம் விட்டுக்கிட்டே இருக்கார்னு தோனுது. நம்ம கல்யாணத்துக்கப்பறம் இதே படத்தை சைஸ் சின்னதாக்கி வச்சிக்க. இவ்ளோ பெரிசு வேணாம் ப்ளீஸ்”. மூன்றரை வருடக் காதல் முடிவுக்கு வந்து வதனாவுடன் அவனுக்கு ப்ரேக்-அப் ஆகி 2 மாதமாகிறது. அவனாக எதையுமே  தேடியதில்லை. கால் கடுத்து காத்திருந்து கெஞ்சி மண்டியிட்டு மலர் நீட்டி யாசித்துப் பெறுவதற்கு காதல் பிச்சைப் பதார்த்தமா என்ன? அவனது உலகத்தில் பல வார்த்தைகளுக்கு வேலையில்லை. காதல் ஒப்பந்தம் ரத்தான அடுத்த இரண்டு தினங்கள் அவன் மொத்தம் முன்னூற்று நாற்பத்தேழு பாடல்கள் கேட்டான். மொழிகளின் முதுகில் உலாவித் திரும்பும் போது அவன் தலைக்குள் யாரோ சாதகம் செய்து கொண்டிருந்தார்கள். குளிர் ஷவரில் அரைமணி நேரத்திற்கு மேல் நின்றான். தலை துவட்டி முடித்து தன் கட்டிலில் சாய்ந்தவன் ம்யூசிக் சிஸ்டத்தில் சுந்தர்பாபுவின் பாடல் ஃபோல்டரைத்தான் திறந்தான். ஒவ்வொரு பாட்டாக அவர் குரலின் பொறுப்பில் தன் அன்றைய இரவை,  கனவை, உறக்கத்தின் துகள்களை ஒப்படைத்தவன் கொண்டதறியாமல் தூங்கிப் போனான்.

நம்ப முடியாத ஒன்று என்று புத்திக்குப் பட்ட ஒரு விசயத்தை எப்படி எதிர்கொள்வது, எப்படி எடுத்துக் கொள்வது?

எப்போதோ இறந்து போன ஒருவரால் இப்போது இங்கே எப்படித் தன்முன் அமர்ந்திருக்க முடிகிறது?  இதென்ன லாஜிக்?

தன் தொண்டையைச் செறுமிக் கொண்டவராய்..,

“லாஜிக்… நல்லதொரு வார்த்தை நவீன். இதிலிருந்து நமது உரையாடல் தொடங்கட்டும். உங்கள் மனதில் இப்போது கூட  பார்க்க முடியாத ஒருவனைப் பார்க்கிற சந்தோஷத்தை விட எப்படி அவன் இங்கே வர முடிந்தது என்கிற தர்க்கம்தான் அரிக்கிறதல்லவா..? உங்களை நான் பார்க்க வந்தது யதார்த்தமோ சுயநலமோ திட்டமோ சதியோ எதுவுமோ அல்ல நவீன். இதொரு ஏற்பாடு. இதனை யார் செய்கிறார்கள் இதனால் ஆய பயன் என்ன என்பதைப் பற்றி எல்லாம் கேட்டுப் பதில்கள் அறிவதெல்லாம் நடவாது. உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நான் என் ஞாபகத்திலிருந்து வந்திருக்கிறேன். எப்படி என் எப்போதோ பதிந்த குரலை நீங்கள் இந்தக் கணத்தில் ஒலிக்க விட்டு  அதை இன்னொரு முறை நிகழ்த்துகிறீர்களோ அப்படி  என் நினைவுகளின் மீவருகையாக நான் வந்திருக்கக்கூடும். உடல், உயிர் என்பனவற்றைத் தாண்டி மூன்றாம் ஒன்றாக ஆன்மா என்பதைச் சொல்லலாம். உங்கள் வசம்  உங்கள் உடல், உயிர், ஆன்மா மூன்றும் தற்போது இருக்கிறதல்லவா..? அப்படிப் பார்த்தால் என்வசம் தற்போது இருப்பது என் ஆன்மா மட்டும்தான். என் ஆன்மாவின் குரலும் உடலுமாக உங்கள் முன்னால் நிகழ்கிறேன். இந்த நமது சந்திப்பு சீக்கிரத்திலேயே உங்களுக்கு மறந்துவிடும். தற்கணம் ஒரு மழையின் பொழிதல் போல உங்களை நனைத்தாலும் இந்த மழையின் அனுபவம் தவிர உங்களுக்குள் ஒரு துளி ஈரம் கூடத் தேங்காது”.

அவரது குரலைக் கேட்க முடிவதன் அதிசய உட்புறம் இன்னும் இருந்து கொண்டிருந்தான் நவீன். எல்லாச் சொற்களுமே  எதோ நெடுந்தூரத்தின் சன்னத்துடன் ஒலித்தன.

“காலம் தனக்காகத் தான் பலவற்றை நிகழ்த்திக்குது. மனிதர்கள் அவற்றைத் தமக்காக என்றெண்ணுவது அவர்களுடைய வசதிக்கான பிசகு. என் தோன்றலைக் குறித்து யாதொரு பயமும் வேண்டியதில்லை நவீன். நான் கெடுதல் எதையும் செய்யப் போவதில்லை” அதே குரல். அரை நூற்றாண்டுக்கு முன்னால் இருந்த பல படங்களில் பார்த்துக் கேட்ட குரல். வித்யாசமான, எல்லோருக்கும் அவ்வளவு எளிதாக வாய்த்திராத குரல்.

சுந்தர் பாபு ஒரு பிரசங்கியின் சலனமற்ற தொனியில் பேசினார். நவீன் கண்களை இமைக்கத் தோன்றாமல் இருந்தான்

“நான் ஏன் உங்களைத் தேடி வந்தேன்? உங்களுக்கு என்னோட நடிப்பு மேல பெரும் ப்ரியம் இருக்கு. உங்களைச் சேர்ந்த யாருக்குமே என் மீதான உங்க அபிமானம்  தெரியாம இருக்காது. இந்த அறையில் என் எவ்ளோ பெரிய படம் இருக்குது..? நான் நடிச்ச படங்கள் எல்லாத்தையும் பார்த்திருக்கிறீங்க. என்னைப் பற்றிய செய்திகள், புத்தகங்கள், பேச்சு, தகவல்னு ஒன்னு விடாம சேகரிச்சு வச்சிருக்கிங்க. என் பாடல்கள் மேல உங்களுக்கு இருக்கிற மரியாதை அதான் விஷயமே.. நான் செத்தப்புறம் தான் நீங்க பொறந்தீங்க. என் பாட்டுதான் உங்களுக்கு உயிர். தன் காலத்ல ஒருமுறை கூட சந்திக்காத, தனக்கு முன்னாடி வாழ்ந்திட்டுப் போன ஒருத்தன் மேல நீங்க வச்சிருக்கிற பற்றுதல் அமேஸிங். இது ஒருவகையில எனக்குத் தீராக்கடன் தான். அதான் அசாத்தியம் சாத்தியம் இந்த மாதிரி பொது விதிகளை எல்லாம் உடைச்சிட்டு ஒரு தடவை உங்களை நேர்ல பார்த்துட்டுப் போயிடணும்னு தோணுச்சி. உங்க காதல் தோத்துப் போன பிறகு வந்த இரவுகளை நீங்க டீல் செய்த விதம்.. என் வாழ்க்கையை எக்ஸ்டெண்ட் செய்து இன்னொருத்தன் வாழ்றாப்ல ஒரு சந்ததித் தனம் தெரிஞ்சுது.. அதான் உங்களைப் பார்க்க வந்தேன் நவீன். உங்க அனுமதி இல்லாம உங்க அறைக்குள்ளே நுழைஞ்சிட்டதுக்கு என்னை நீங்க மன்னிக்கணும்”.

நவீன் தனக்கு முன்னால் காட்சியாக நிகழ்வதை நம்ப முடியாத உறைதலில் இருந்தான். அவனுக்கு அதை எப்படி பத்திரப்படுத்துவது, எப்படி நம்புவது, என்ன செய்து சந்தேகிப்பது, எதுவும் தோன்றவில்லை. அவனுக்கு இப்போது முப்பத்தைந்து வயது. பத்து வயதிலிருந்து சுந்தர்பாபுவைப் பிடிக்கும். “எனக்காக அன்பே எனக்காக இந்த உலகில் நீயும் பிறந்து வந்தது எனக்காக” என்ற பாடலை அவன் முதன்முதலில் ப்ளாக் அண்ட் ஒயிட் டெலிவிஷன் ஒன்றில் பார்த்தான். அதை நினைவில் வைத்திருந்து அப்புறம் எங்கெல்லாம் அதைக் கடக்க நேர்கிறதோ அப்போதெல்லாம் அதிலேயே லயிப்பான். ஒரு பெயராக சுந்தர்பாபு அவனுக்குள் மெல்லப் பதிந்தார். அவன் வயதுகள் ஏற ஏற அவனுக்கு மட்டும் சொந்தமான அவன் பார்த்துப் பார்த்து உருவாக்கிக் கொண்ட பிரத்யேகம் ஒன்றுக்குள் மிகுந்த செல்வாக்குடைய நபராக சுந்தர்பாபு மாறினார். அவனைச் சார்ந்த பலருக்கும் தற்கண ராஜாக்களாக நிகழ்காலத்தின் பல நடிகர்களைப் பிடித்த போதிலும் நவீன் குறையாமல் கொண்டிருந்த சுந்தர்பாபு மீதான அபிமானம் களங்கமற்றது.

என்னென்னமோ தோன்றியது. வார்த்தைகள் எழவேயில்லை. என்ன செய்தாவது தன்னைத் தேடி வந்திருக்கக் கூடிய நட்சத்திர மனிதனை கவுரவிக்க வேண்டுமே என்பதுதான் சிந்தனையில் ஓடிக் கொண்டிருந்தது. சுந்தர்பாபு அவன் மனதை முழுமையாக வாசித்துக் கொண்டிருந்தார் என்பதும் புரிந்தது.

“அதெல்லாம் எதுவும் தேவையில்லை நவீன். நான் சந்திக்க நம்பகமான ஆட்கள் வெகுசிலர்தான் இப்ப இருக்கிறாங்க. இது காலம் செய்ற விளையாட்டு. இந்தக் காலத்தைப் பொறுத்தவரைக்கும் நானெல்லாம்  நினைவாலயம் மாதிரி ஒருவிதமான ஞாபகச்சிற்பம் மாதிரிதான். செல்வாக்கான நன்மைகளை மட்டும் மேலெழுதிக்கிடறது மனிதனோட விருப்பம். எனக்கு மட்டுமா? எல்லோர் கதைக்குமே ஒரே முடிவுதான். மெல்லத் தேஞ்சுகிட்டே போய் எதுவுமில்லாம சில சொற்களா தரவுகளா குன்றிப் போறது. அவங்கவங்க அந்தந்தக் காலத்தோடயே அழிஞ்சிர்றது கூட நல்லது. இப்பிடிக் குறிப்பிட்ட பருவம் ஏகோபித்த உலாவல்கள் அசாத்திய சிகரத்தொடல்கள் எல்லாம் செய்திட்டு அப்புறமா எதுவுமே இல்லாமப் போறது எவ்ளோ பெரிய துன்பம்..?”

“என்னை விடுங்க நவீன். நான் கோமாளி. உதய்ஷங்கரோ ப்ரேம்குமாரோ பர்க்காத உயரமா? அடையாத பெருமையா? இன்னிக்கு என்னாச்சு? உதய் பின்னாடி போயிட்டிருந்த பெருங்கூட்டம் காலமாய்டிச்சி. இன்னிக்கு நேரடியா அவரைப் பார்த்துப் பழகினவங்களே அருகிட்டாங்கல்ல..? ப்ரேம் குமாரோட பேரன்கள் நடிக்க வந்து தன்னை நிறுத்திக்கவே போராடிட்டிருக்காங்கல்ல..? இதுதான் சினிமா. இங்கேதான் ஆள்ற ராஜாங்கத்தை அப்படியே வாரிசு கையில கொடுத்திட்டுப் போறதெல்லாம் நடக்காது. எவ்ளோ ப்ளான் செய்தாலும் கலை தன்னோட சொந்தப் ப்ளானைதான் நடைமுறைப்படுத்தும். எல்லாம் வாழ்றதோட பூர்த்தியாவுறது தானே”

அவர் உதடுகள் துடித்தன. மெல்லிய நீர்த்தாரை ஒன்றே ஒன்று நெற்றியிலிருந்து பக்கவாட்டில் கன்னம் வரை வந்ததை கேரம் போர்டில் வசமான காயினை சுண்டுகிற அதே லயிப்போடு சுண்டித் தள்ளினார். தன் கால்களை விடுவித்து சாதாரணமாக அமர்ந்து கொண்டார். தன் உடலை முன்பின்னாய் நகர்த்தியபடி ஏதோ சொல்ல முனைவது போல் தோன்றியது. நவீனுக்குத் தன் அறை முழுவதுமாக ஒருவித சாம்பல்தனத்தோடு புகையதிகம் அடர்ந்த படத்தின் பின்புல  அசாதாரணத்துடன் தெரிந்தது

“நானே பேசிக்கிட்டிருக்கேன் நவீன்” என்றார், முனகலுக்குத் தேவையான சப்தத்தோடு.

வெளியே எங்கோ டமடம என்று ட்ரம்களை உருட்டுகிற பேரோசை கேட்டது. நவீன் குடியிருக்கும் அபார்ட்மெண்ட் இன்னும் பாதி கட்டுமான வேலை மீதமிருப்பதால் எப்போதுமே எதாவது வேலையின் ஒலிகள் பெருகியபடிதான் இருக்கும். சின்னதோர் அமைதிக்கப்பால் நவீன் “உங்களைப் பற்றி எழுதப்பட்ட எல்லாத்தையும் படிச்சிருக்கேன். பட் என்ன கேட்குறது, பேசுறதுன்னு தெரிலை. எதுனா பெர்ஸனல் அல்லது ரகசியம்னு இருக்கறதை கேட்டாத்தானே உண்டு?” என்றான். இது சரியான தொடக்கமா என்பது தெரியாமற் போனாலும் ஓரளவு பெரிய பத்திகளுக்குப் பின்னதான அறிமுகக் கொள்முதலோடு ஒலித்ததை அவரும் உணர்ந்து கொண்டதாகவே தெரிந்தது. அவனது வலியைப் பெற்றுக்கொண்ட அவஸ்தையுடன்  புன்னகைத்தார்.

“நம்ம ரெண்டு பேருமே சரியான ஆட்கள்தான் நவீன். நீங்க எங்கிட்டே என்ன வேணும்னாலும் கேட்கலாம். பெர்ஸனல்,  ப்ரைவஸின்றதெல்லாம் எஞ்சாத பொது சூன்யத்துக்கு உள்ளே இருந்துதான் நான் பேசிட்டிருக்கேன். என்னால எதையும் அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியாது. பட் ஒன்னே ஒன்னு பண்ணலாம். எதாவது சரியற்று இருந்தா அதை சரி செய்யலாம். என்ன நடந்தது தெரியுமா அப்டின்னு உண்மையை சொல்ற ஸீன் மாதிரி தோனுதில்ல?” அவருடைய புன்னகை இந்த இடத்தில் இன்னும் ரசிக்கக் கூடியதாக விரிந்தது.

“என் உலகத்தோட கிட்டத்தட்ட அத்தனை பேரும் எனக்கு முன்பின்னா மரணமடைஞ்சிட்டாங்க. நான் வாழ்ந்த காலத்துல என்னை வந்து சந்திக்காத எத்தனையோ ரசிகர்களோட ஒரு உதாரணப் பிரதி நீங்க. இன்னைக்கு, நேத்துன்னு அர்த்தங்களுக்கு அப்பாலான உங்களோட அன்பு எனக்குக் கிடைச்சிருக்க வேண்டிய ஒரு பண்டம் தானே..? எனக்கு அப்புறம் நிகழ்ந்தாக் கூட இந்த அபிமானம் அத்தனையும் என்னோடது இல்லையா? அதுதான் மெஷின்ல ஏறிவந்து என்னோடதை வாங்கிட்டு போறாப்ல வந்திருக்கேன்னு வைங்க. எங்கிட்டே கேள்வின்னு என்ன பெரிசாக் கேட்டுறப் போறீங்க..?  சொல்லப்படாத நிஜங்கள்னு எதுனா எஞ்சி இருந்தா நிச்சயமா சொல்றேன்” என்றவர் தன் சட்டையின் மேற்பித்தானைக் கழற்றிக் கொண்டார்.

“உங்க குரல் நிச்சயமா ஒரு வரம்தான் இல்லே..?”

“சினிமா சரித்திரத்துல என் குரலோட தொடர்புகொண்ட சம்பவங்கள் அதிகம்தான். ஒரு உதாரணம் சொல்றேன். ஒரு ரசிகை பேர் ரீத்து. மாகாணத்லயே மிகப்பெரிய செல்வந்தம் அவளோடது. பேரழகி. என்மேல் பைத்தியமா அன்பு அவளுக்கு. அவளோட பங்ளாவுக்கு என்னை இன்வைட் செய்தா, அவளோட பர்த்டே செலிப்ரேட் செய்ய. அந்த ஃபங்க்ஷனுக்கு நான் மட்டும்தான் கெஸ்ட். ரெட் கார்பெட்ல நடக்க வச்சி பூமழை தூவி வரவேற்பெல்லாம் பலம்மா இருந்தது. எங்கிட்டே அவ கேட்ட பர்த்டே பரிசு என்ன தெரியுமா நவீன்..? யார் முன்னாடியும் நான் பாடியதுல ஒரே ஒரு பாட்டை மட்டும் பாடக்கூடாது. மேடை நிகழ்ச்சிகள் தனிப்பட்ட கூட்டம் எதுவா இருந்தாலும் அந்த ஒரு பாட்டு அவளோடதா மாத்திக்க விரும்பினா. இதை வாய்விட்டுக் கேட்டா. எனக்கு மட்டும் பாடு. என் காதுக்குள்ளே மட்டும் ஒலிக்கட்டும் உன் குரல். உனக்கு வேண்டியதெல்லாத்தையும் செய்றேன். எனக்குன்னு இந்த ஒரு பாட்டை தந்திடு அப்டின்னு கெஞ்சுறா. இண்டர்நேஷனல் பிஸினஸ், அவங்களுக்கு இல்லாத செல்வாக்கில்லை. அவ கேட்ட ஒரே விஷயம் என் பாட்டு ஒன்னை அடகு வச்சிடச் சொல்றா. பதிலுக்கு நான் கேட்டா இந்த உலகத்தையே தருவேங்குறா.. இந்த உலகத்லயே மதிப்புக்குரிய விலைக்குத் தரவியலாத பண்டங்கள்ல  ஒன்னு தான் சுதந்திரம். அதை இழந்துட்டு எதை அடைஞ்சும் என்ன? I SAID NO. SIMPLY NO. அவ என்னை வெறுமையா ஒரு பார்வை பார்த்தா. அந்தப் பார்வை ஒரு லாங்க்வேஜ். அதுல பல சொற்களோட வெறுப்பு தொனிச்சதைப் பார்த்தேன். ஒருவேளை அவளோட நான் ஒத்திசைந்து போயிருந்தா டாப் நடிகர்கள் எல்லாரையும் தாண்டிய இடத்துக்கு போயிருப்பேனோ என்னவோ. இது நடந்திருந்தா அது நடந்திருந்தா அப்டின்னெல்லாம் எதுவுமே கிடையாது நவீன். நடக்க வேண்டியதோட சத்தியம் அதோட கச்சிதம். அது மட்டும்தானே நிகழும்..”

நவீன் உன்னிப்பாக அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். நவீன் மனவோட்டத்தை அவர் படித்து விடுவதால் பெரிதாகக் கேள்விகளை எழுப்ப வேண்டியிராமல் போனது. ஒன்றைப் பற்றி அதன் திரிகளைப் பிரித்து அடுத்தடுத்து சுந்தர்பாபு பேசிச்செல்வது புரிந்தது.

“உலகம் பலவிதம் நவீன். நீங்க விழணும்னு ஏற்பாடு செய்றவங்க ஒருவிதம். விழுறதுக்காகக் காத்திட்டிருக்கறவங்க, விழுந்தா சந்தோசம் கொள்றவங்க, அதுக்காக மவுனமா பிரார்த்தனை செய்றவங்க, இப்படிப் பலரும் இருப்பாங்க. இவங்களுக்கெல்லாம் பேர் வைக்கிறதோ, பேச்சுவார்த்தை செய்றதோ அர்த்தமற்றது. பாராமுகத்தோட போய்டுறதுதான் உத்தமம். நான் அதைத்தான் செய்தேன். அதை என் திமிர்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. பணிவுன்றது ஒரு போலி. கடமையை செய் பலனை எதிர்பாராதே அப்டின்றதெல்லாம் ஒத்துவராத உபதேசங்கள். நான் என் தனிமையில என் அகத்துக்குள்ளேதான் பணிவா இருக்கணும். பொதுவில மௌனமா இருந்தாப் போதும். வேணும்னு சீண்டுறவங்க கிட்டே அடிமைப்பட்டுப் போறதுக்குப் பேர் பணிவுன்னா என் முதுகு யாரும் படம் வரையுறதுக்கு இல்லை என் நண்பா.. நான் திமிராவே இருந்திட்டுப் போறேன்னு இருந்திட்டேன்.”

“நீங்க ஏன் ஹீரோவா தொடர்றதுக்கு முயற்சிக்கவே இல்லை ஸார்? எனக்கெல்லாம் பெரிய ஆதங்கமே உண்டு.”

“ஹூம்… ஹீரோன்றது வெறும் வெயிட் லிஃப்டிங் மட்டும்தான் நவீன். என்னைப் பொறுத்தவரைக்கும் கோமாளி வேஷம்தான் பெருசு. இருக்கிறதே கடினம் அப்டின்ற வாழ்க்கையோட நியதி யாரை வேணா கோமாளியாக்கிடும். இந்த உலகத்ல எல்லாருக்குமே தங்களை மகிழ்ச்சிப்படுத்துறவங்களை ரொம்ப பிடிக்கும். கோமாளியின் புன்னகையை அறிஞ்சுக்க எல்லாருமே தயாரா இருப்பாங்க. அவனுக்குக் கண்ணீரே கிடையாதுன்னு நம்புவாங்க. ஆனா கோமாளியோட சாபம் அவனால புன்னகையைப் பொதுவாகவும் கண்ணீரைத் தனிமையிலுமா மட்டும்தான் நிகழ்த்த முடியும். அவனோட வாழ்க்கை ரெண்டாக் கிழிஞ்ச காட்சிகளால் செய்யப்பட்டது நண்பனே. ஆனாலும் நான் திட்டமிட்டுத்தான் காமெடியனா மாறினேன். அந்தரங்கமே இல்லாத பொதுவெளிதான் கோமாளியோட மொத்த வாழ்க்கையும். நிரந்தரமா சிரிக்கிறாப்ல அவனோட முகத்தை மாத்தி வரைஞ்சுக்கிடுறது உலகத்தோட வழக்கம். ஆனாலும் நாயகனை விட வில்லனை விட கோமாளியா இருக்கிறதுதான் கடினம். என் கண்ணுக்கு  உயரமான சிகரம் கோமாளியோட இடமாத்தான் தெரிஞ்சுது. நான் விரும்பித்தான் காமெடியனா ஆனேன். நான் விதைச்சதை விட அதிகமா அறுவடை செய்ய முடிஞ்சது நவீன்.

“உதய்ஷங்கர் ப்ரேம் குமார் இந்த ரெண்டு பேருக்கும் நீங்க ஒரு பொதுவான தொந்தரவாகத்தான் இருந்தீங்களா?”

சத்தமின்றி சிரித்துக் கொண்டவர், “பாம்புல வகைகள் இருக்கலாம். விஷம் கொள்றது பொதுத்தன்மை தானே..? அந்த ரெண்டு பேருக்கும் ஊரறிஞ்ச பகை. ஆனா  அபரிமிதமான ரகசியப் புரிதலும் உண்டு. நான் நடிக்க வந்தப்ப உதய்ஷங்கர் சின்னச்சின்ன ரோல்ஸ் நடிச்சிட்டிருந்தாப்ள. ப்ரேம் நாடகங்கள்ல இயங்கின காலம். எனக்கு பாடுறதுக்கும் காமிக் ரோல்ஸூக்கும் அப்பப்ப சான்ஸ் வரும். அப்ப வேறொருத்தருக்கு நான் பாடின ஒரு பாட்டு சூப்பர் ஹிட் ஆச்சுது. நான் ஏறவேண்டிய ஏணிகள் அங்க ஸ்டார்ட் ஆச்சு. நல்லாத்தான் ஏறி வந்தேன். என்னோட சம ட்ராக்ஸ்லதான் அந்த ரெண்டு பேரும் வந்தாங்கன்னாலும் ரெண்டு பேருமே ஹீரோஸ்.. என்னிக்குமே சினிமான்றது ஹீரோ செண்டிரிக்தான் நவீன். சில இடங்கள்ல யார் ஹீரோ அப்டின்றது மாறலாம். ஆனால் நாயகன்தான் தலைவன். சொந்தக் குரல்ல பாடின தலைமுறை முடிஞ்சப்புறம் உதிச்ச முதல் இரண்டு நட்சத்திர உச்சங்கள் உதய்யும் ப்ரேமும். இந்த ரெண்டு பேருக்குமே பேச வரும் பாடவராது. அந்தக் காலத்துல பாடியும் பேசியும் நடிச்ச நடிகனா நான் மட்டும்தான் இருந்தேன். ப்ரேம்குமாரும் உதய்ஷங்கரும் 25000-35000 வாங்கிட்டிருந்த காலத்ல நான் ஒரு லட்சம் வாங்குனேன் நவீன். இது எதுவுமே எனக்குத் தெரியாது. நான் என்னோட விலையைத் தீர்மானிக்கிற உரிமை இருக்கு தானே..? அதைத்தான் நான் செய்தேன். அவங்க ஹீரோஸ். அவங்களே தொடாத சம்பளத்தை நான் தொட்டிட்டேன் அப்டின்றதே எனக்குத் தெரியாது. நீ எவ்ளோ வாங்குறே அவன் எவ்ளோ கேட்குறான் அப்டின்றதெல்லாம் எனக்கு தேவையில்லாத தகவல்கள்னு நினைச்சவன் நான். நான் லட்சம் கேட்டு அதை குடுக்குறாங்கன்னு தெரிஞ்சப்ப என்னை அந்த ரெண்டு பேருமே வெறுக்குறதுக்கான நல்ல காரணமாக் கூட அதுவே ஆகியிருக்கலாம் இல்லியா?

‘பெர்ஸனலாவும் நிறைய நடந்ததில்லையா?’  நவீனின் குரலை லேசான மறுதலிப்போடு “நான் அந்த ரெண்டு பேரையும் என் கதையோட ஒட்டுமொத்த வில்லன்களா ஆக்க ட்ரை பண்ணலை நவீன். பெர்ஸனலுக்கும் பொதுவுக்கும் யதார்த்தத்தோட வெளிச்சமும் ரகசியத்தோட இருட்டும் ஒன்னு தானே..? என்னல்லாம் எனக்கு நடந்ததுன்ற நினைவுபடுத்துதல்ல இதெல்லாம் வருதே ஒழிய என் கதையில திருப்பங்களுக்கும் அர்த்தமில்லை முடிவுக்கும் நியாயமில்லை.” மீண்டும் ஒரு சிகரட்டை பற்ற வைத்துக் கொண்டார். நவீனிடம் தன் கையிலிருக்கும் பாக்கெட்டை நீட்ட முனைந்து “நீங்க விட்டுட்டீங்கள்ல இட்ஸ் குட் ஆக்சுவல்லி” என்றபடி  வாட்டர் பாட்டிலின் நீரைப் பாதி காலி செய்தார்.

“உங்க ஸ்டைலே தனிதான் ஸார்” என்ற நவீனின் குரல் அறியாமையின் இதத்தோடு ஒலித்தது.

“எல்லாத்தையுமே நான் ஸ்டைலா அணுகினேன் நவீன். சொல்லிக்கற மாதிரி ஒரு பெர்ஸனல் விஷயம் உண்டு. நான் சொல்லப் போறது ப்ரேம் உதய் ரெண்டு பேர்ல ஒருத்தரைப் பற்றி. யாருன்னு கேட்காதீங்க. விஷயம் மட்டும் சொல்றேன். அந்த நடிகரும் அவர் மேல அன்பு கொண்ட ஒரு தோழியும் அவுட்டோர் ஷூட்டிங்ல சந்திச்சு அளவளாவிட்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் என்னைப் பற்றியும் பேச்சு வந்திருக்கு. யதார்த்தமா அந்தத் தோழி ‘அடடா சுந்தர் பாபு என்னா ஹேண்ட்ஸம், ஸ்டைல். அவரோட குரல் அமேஸிங்’ அப்டின்னெல்லாம் சொல்லிட்டு ‘அர்ப்பணம்ங்குற படத்துல நிலைக்கண்ணாடி முன்னாடி நின்னுட்டு ஒரு கைல வைன் க்ளாஸ் இன்னொரு கைல சிகரெட் ரெண்டையும் ஏந்திக்கிட்டு நெடிய வசனத்தை அனாயாசமாப் பேசுவாரே.. அவரை மாதிரி நடிக்க உலகத்லயே ஆளில்லை’ அப்டின்னு புகழ்ந்திருக்கா. அவரும் ‘செண்ட் பெர்ஸண்ட் நீ சொல்றதெல்லாம் கரெக்ட்’ அப்டின்னு அப்பத்திக்கி சொல்லிட்டு வந்துட்டார். இதுக்கப்புறம் ஒரு ஸீன் வருதில்லே நவீன்.. அங்க ட்விஸ்ட். நம்ம நண்பர் அந்த இன்னொரு நண்பரை சந்திக்கிறப்ப இதைச் சொல்லி ‘ஏம்பா மிஸ்டர் நீயா நானான்றது அப்பறம்.. இவனை கோமாளியாக் காட்டுறோம். இருந்தாலும் நெஜத்ல ஹீரோவா இருக்கான் போல’ அப்டின்னு பொலம்பித் தள்ள ‘விடுப்பா நான் பார்த்துக்கிறேன்’னு அவரும் சொல்லியிருக்கார். அதுக்கப்புறம்தான் என் ஏணிகளோட நம்பர்ஸ் குறைஞ்சி பாம்புகள் பெருகிச்சி. என் ஸ்டோரி முன்பின்னா மாறிட்டுது” சலனமற்ற குரலில் நுட்பமாக சொல்லி முடித்தார். அவர் முகம் எதையும் யூகிப்பதற்கு இடமற்ற இறுக்கத்தோடு தெரிந்தது.

நவீன் ஹா என்று காற்றை வாய் வழியே உள்ளிழுத்தான்.

“இதான் நிஜம். அந்த நிகழ்ச்சி நடந்திருக்கத் தேவையில்லாதது. இதைத் தவிர்த்துட்டு பார்த்தா ரெண்டு பேருமே என் நண்பர்கள்தான். இருவருமே என்னைத் தங்களோட படங்கள்ல நெறைய நடிக்க செய்திருக்காங்க. என் திறமைகளை ஊக்குவிச்சிருக்காங்க. எல்லாம் சரியாத்தானே இருந்தது. அந்தத் தோழி செய்ததும் தப்பில்லை. ரசனை, பலூனுக்குள் நிரம்பிய காற்று. நேரம் கடக்கும் போது வெடிக்கிறாப்ல நிகழும்போது கட்டுப்படாது. இதெதுவும் திட்டமிட்டு நடக்கலை ஆனா நிகழாம இருந்திருக்கலாம்.” எங்கோ பார்வையை மாற்றியவர் உதடுகளை ஒன்றை மற்றொன்றால் வருடியபடி லேசாக சிரிக்கத் தொடங்கி அப்படியே நிறுத்திக் கொண்டு சட் சட்டென்று முகபாவங்களை மாற்றிக் கொண்டவாறே,

“நவீன்.. மை டியர் யங் மேன்.. நாம ராஜாவோட கனவுல வர்றதே தப்புத்தான். அந்தக் கனவில் என்னவா வந்தோம், என்ன பண்ணோம் அப்டின்றதெல்லாமே கூடுதல் விபரங்கள்தான். நம்மால மாற்றமுடியாத ஒன்னா அந்தக் கனவில் இடம்பெற்ற பிழை ஆயிடுது. எந்தப் பெரிய கூட்டத்திலும் எத்தனை நெடிய காலத்திலும் நம்மைச் சட்டுன்னு வெறுக்கிற வாய்ப்பை அந்த ஒற்றைக்கனவு ராஜாவுக்கு உண்டாக்கித் தந்துட்டே இருக்கும். நான் செய்த பிழை வேறொருத்தர் என்மீது கொண்ட ப்ரியம். எனக்கு நடந்த எதன் பின்னாலும் மறைஞ்சிருந்த ராஜவிருப்பத்தை எதிர்த்து வழக்காட என் தரப்புக்கு வலுவில்லை”

 உதடுகளை ஈரம் செய்துகொண்டே  “ராஜாவிண்ட ஸ்வப்னம். நான் டைரக்ட் செய்த படம். தமிழ் மலையாளம் ரெண்டுலயும் உதய் நடிக்க வேண்டியது. முதல்ல சம்மதிச்சு, அப்பறம் வெலகி, நானே நடிச்சு நல்லாத்தான் ரிஸீவ் ஆச்சு. அதுக்கப்பறம் நடந்ததெல்லாம்தான் எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே..?”

 “நான் பரபரப்பா இருந்த காலத்ல தூக்கத்துக்காக ஏங்கியிருக்கேன். வீட்ல போயி பெட்ரூம்ல இறங்கி அப்பிடியே படுக்கையில சாய்ஞ்சுக்கிற அந்த கணத்தை நான் மிகவும் விரும்பினேன் நவீன். படுக்கை அறை வரைக்கும் ஒருத்தன் ஏன் கார்ல போக ட்ரை பண்றான்னு யாருமே புரிஞ்சுக்க முயற்சி பண்ணலை. என் சமகாலத்ல யாருமே என் மனசுக்கு அருகே வந்து சேரவே இல்லை. அந்த மனவெறுமை என் வாழ்க்கையில பெரிய தனிமையா உருவாச்சு நவீன். அத்யந்தத்துக்காக ரொம்பவே ஏங்குனேன். நிறைய சந்தர்ப்பங்கள்ல தற்கொலை செய்துக்கலாமான்னு தோனிருக்கு. நடிக்க சான்ஸ் கிடைக்கலைன்றதுக்கே நான் தற்கொலை செய்துக்க முயற்சி பண்ணிருக்கேன். ஜெயிச்சதுக்கப்பறம் வந்த எந்தத் தோல்விக்கும் மறுபடி உயிரை மாய்ச்சுக்க முயலவே இல்லை. அதுக்குக் காரணமும் நான் முன்னாடி இருந்த இன்னொசென்ஸை இழந்ததுதான். கருவறைக்குத் திரும்பிட மாட்டோமான்னு கர்ப்ப நீச்சலை எண்ணி ஏங்காத யாருமே இந்த உலகத்ல கிடையாது நவீன். என்ன ஒன்னு, தான் அப்டி ஏங்குறதே தெரியாம நிகழ்றதுதான் அந்த ஏக்கத்தோட ஜாலம். வாழ்க்கை வெளிய போனப்புறம்தான் புரியத் தொடங்கும். எல்லா முட்டாத்தனமும் அறிவு ஜீவிதமும் சமமாகுற ஒற்றை மவுன வெடிப்புல எல்லாம் முடிஞ்சுரும்”.

“மேரேஜ் நான் பண்ண இன்னொரு பிசகு. என் குணாம்சத்தின் நேர்க்கோட்ல விலகாம நடக்கிறது என் சுபாவம். என் கல்யாணம்கிற விஷயம் துன்பமும் இன்பமும் அற்ற ந்யூட்ரல் சம்பவம்தான். எல்லாரும் பெரிசா பேசின அளவுக்கு என் கல்யாணத் தோல்வியினால நான் உருகி என்னையே சிதைச்சிக்கிட்டேன்றதெல்லாம் நிசமில்லை. ஒரு தோல்வியை நான் செலிப்ரேட் செய்திருக்கலாம். பட் என் மேரேஜூம் அதை ஒட்டி நான் நடந்துகிட்டதெதுவும் என் மனவிரோதமா கிடையாது. என்னைக் கல்யாணம் செய்துக்கிட்ட பெண் வேற ஒரு அன்பை மறக்க முடியலைன்னு சொன்னா. நான் ‘கோ அஹெட்’னு சொன்னேன். அவ அதை நம்ப முடியாம திகைச்சா. அப்பறம் புரிஞ்சுகிட்டா. நம் மூலமா பிறருக்கு ஒரு அதிர்ஷ்டம்-அற்புதம் நடக்கணும்னு இருந்தா பின்புலத்துல நாம இழக்க வேண்டியதும் இருந்தே தீரும் நவீன்”.

காலிங்பெல் அடிக்கவே ஆன்லைனில் மாதாந்திரத்துக்கு என ஆர்டர் செய்திருந்ததன் அன்றைய பார்ஸலை வாங்கிக் கொண்டு திரும்பினான் நவீன்.

‘நீங்க சாப்டலாம் நவீன்’ குரலில் உபசாரம் தொனித்தது.

“இல்லை ஸார் எனக்கு நேரமாவும்” என்றவாறே தலையை அசைத்தான்

“நடிப்புன்றதே கொடுமையான கலைதான் நவீன். உண்மை அப்டின்ற ஒற்றை நிசத்தை பல துண்டங்களா அறுத்து பல திசைகள்ல வீசுறதுக்கான சம்மதம்தான் நடிப்புன்றது. எந்த ஒரு நடிகனுமே தன் வாழ்க்கையோட உண்மையான கணங்களை ஒவ்வொன்னா இழந்துகிட்டே இருப்பான். தனக்கு நிசமா நடக்குற எந்த ஒரு விசயத்தையுமே இது நிசமா அல்லது நிசம் மாதிரி நடிக்கணுமான்ற விலகல் இருந்தே தீரும். சாவும்போது கூட தான் சாவுற மாதிரி நடிச்ச காட்சிகளோட நினைவு வந்தே தீரும், அது எளியதல்ல நவீன். சதா குறுகியும் பெருகியும் உண்மைன்ற ஒன்னை நிரந்தரமா இழந்துட்டு கிடைக்கிற எல்லாமே வெறுமையா மாறும்ல..?”

அவர் எழுந்து சின்னதாக அறைக்குள்ளேயே நடந்து திரும்பினார். மறுபடியும் சப்தமெழுப்பாமல் அமர்ந்தார்.

“என்னடா வாழ்க்கை இது எப்டியாச்சும் தப்பிச்சுரணும்னு தோனிருக்குதா உங்களுக்கு?” இதைக் கேட்டதும் அவர் முகத்தில் முன்பில்லாத புன்முறுவல்.

“வாழ்க்கைங்குறதே தனக்குள்ளேருந்து தப்பியோடுற ஓட்டம்தான். அந்தச் சொல்நிகரா வேட்டைன்னு ஒரே ஒரு வார்த்தையை சொல்லலாம். எல்லாமே வேட்டை பலிகள். இழக்கிற ஒவ்வொரு கணமும் பலிப்பொருள். வாழ்ந்துட்டுப் போற ஒவ்வொரு நபருமே காலத்தின் பலிகள். புகழோட விலை ரொம்பப் பெருசு. எதை நோக்கி ஓடுறமோ அதுவே நம்மை வெறியோட துரத்துற சீன் வரும். அப்ப அதுகிட்டேருந்து தப்பிச்சிக்க ஓடிட்டிருப்போம். எந்தக் குறிக்கோளுமே நமக்குப் பலியாகுற பாவனையில் நம்மை விழுங்கப் பார்க்கும் மிருகத்தின் பசிதான். இதை சரியா உள்வாங்கிக்கிறவனுக்கு சின்னதொரு நிழல் அகப்படும். புரியாதவனுக்கு ஓய்வு, தனிமை, முதுமை, தோல்வி, நிராகரிப்பு இதுகள்ல எதாவது ஒன்னு மத்ததை ஆக்டிவேட் செய்தவண்ணம் நிகழ்ந்துரும்”.

அவர்  தூரத்து மூங்கில்களைக் காற்று முறிப்பதன் மினியேச்சர் சப்தத்தோடு விரல்களை சொடக்கிட்டுக் கொண்டார்.

“நவீன் முதுமையை புரிஞ்சுக்கிறது சுலபம். சாவைப் புரிஞ்சுக்கிடுறதுதான் கஷ்டம். வாழ்க்கைன்றது கொஞ்சூண்டு சந்தோஷத்தைச் சுத்தி நிறைய யோசனை மட்டும்தான். அழக்கூடாதுன்னு முடிவெடுத்திட்டா அதை செய்து காண்பிக்கிறதுக்கு நிறைய சந்தர்ப்பங்கள் வரவர லைஃப் அழகாய்டும். சவாலா பந்தயத்தோட கணங்களா மாறிடும். எனக்கு வாழ்க்கை மேல விருப்பு வெறுப்பற்ற அன்னியம்தான் இருந்தது. பருவப்படி வர்றது, இருக்கிறது, போறது, எதுவுமில்லாம எஞ்சுறதுன்னு எல்லாம் ஏற்பாடுகள்தான். நாம் என்பதும் நமதென்பதும் நமக்கு முன்னும் பின்னும் என ஆயிரம் ஏற்பாடுகள் “

எழுந்து கொண்டார். நவீனுக்கு லேசாக அப்போதுதான் பசிக்க ஆரம்பித்தது. அந்த அறையை அதன் உள் அமைப்பை அங்கே இருக்கும் யாவற்றையும் ஆர்வ-நிதானத்தோடு பார்த்தவர் ஃப்ரிட்ஜ் மேல் இருக்கும் கடிகாரத்தைக் கண்களால் கடந்து லேசாக செறுமினார். சின்னதோர் அறிமுகம் தருகிற குரலில் “இந்தப் பாட்டை அதுக்கப்புறம் யார் முன்னாடியும் பாடவேயில்லை. வாழ்வோட தன்மையும் பாடுறாப்ல இல்லை. பல காரணங்களுக்கு மத்தியில இந்தப் பாட்டும் எனக்குள்ளே கசங்கிட்டது. நம் சந்திப்போட ஞாபகமா இந்தப் பாட்டு இருக்கட்டும்” என்றவர் விரல்களை சொடக்கிட்டவாறே பாடினார்.

அழுதபடியே பிறக்கின்றாய்

அழுதபடியே இறக்கின்றாய்

இன்றொரு தினம் மட்டும்

துயரமில்லாமல்

சிரிப்பாய்  நீயும் சினேகிதனே

அழுதபடியே பிறக்கின்றாய்

அழுதபடியே இறக்கின்றாய்

தன்னை மறந்தவனாய் “சாவே கிடையாது ஸார் உங்க குரலுக்கு” என்று சற்றே உயர்ந்த குரலில் சொல்லி நாக்கைக் கடித்துக் கொள்வது போல் பாவனை செய்தான் நவீன். சுந்தர்பாபு சிரித்தார். மெல்ல நடந்தார். வாசல் கதவைத் திறக்கவும் அந்தப் பொழுதின் புறவொளி முழுவதுமாய் அறைக்குள் பொழியத் தொடங்க, அதீத ஒளிர்தலுக்கு நடுவே அவர் நிற்பதன் நிழலும் இருளும் சேர்ந்து கொள்ள, லேசான இகழ்தலுடன் தொனித்த அவரது சிரிப்பு வசீகரித்தது. நவீன் அவரையே இமைக்காமல் பார்த்தான். “இங்கே விட்டுட்டு போன என் குரலை மறுபடி நான் சந்திக்கிறதுக்கு இன்றைய தினம் உதவிச்சி. வாழக்கிடைக்கிற வாய்ப்பு ரொம்ப அழகானது. எல்லாமே ஏற்பாடுகள்தான். மகிழ்ச்சியா இருங்க! குட்பை” என்றபடியே கதவைத் தாண்டிச் சென்று ஓங்கிச் சாத்தினார்.

***

ஆத்மார்த்தி

மதுரையைச் சேர்ந்த முழுநேர எழுத்தாளரான இவர் இதுவரை கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரைகள் என 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். – aathmaarthi@gmail.com

மூன்றாம் பாகம்

1

சிவகுமார் முத்தய்யா

உடம்பெங்கும் வலி கூடி அழுந்தினாலும் இதனை விடவும் பதினாறு வயது சிறுவனிடம் சிக்கிக்கொண்டது குறித்தே பெரும் அவமானமாக உணர்ந்தான் முத்துசாமி. இரவு முழுக்க நல்ல கவனிப்பு. இது நாள் வரை சந்தேக வழக்குகளில் மட்டுமே சிக்கிக்கொள்வது- ஓரிரு வாரங்களில் அல்லது சில மாதங்களில் சிறையில் இருந்து வக்கீல் முருகேசன் மூலம்  பிணையில்  வெளிவருவதும் வாடிக்கை. இதில் பெரிய சிக்கலில்லை.அதுவும் தனது வட்டார எல்லைக்குள் நடக்கும் சம்பவங்களுக்காக மட்டும் தான் பிடித்துச் செல்வார்கள். தனக்கு அதில் சம்பந்தமில்லை என்று தெரிய வந்தால் விட்டுவிடுவார்கள்.  சமயங்களில ஆள் கிடைக்கவில்லை என்றால் எளிதான பிரிவுகளில் வழக்குப்போட்டு அனுப்பி வைப்பார்கள். சில தினங்கள் இருந்துவிட்டு வெளியே வந்துவிடுவான். ஆனால் வெளியூரில் வந்து இது போன்ற சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிக்கொண்டது இது தான் முதல் தடவை.

பத்து வயதில் தொடங்கியது போன மாதத்துடன் வயது முப்பது பூர்த்தியாகிவிட்டது. இருபதாண்டு கால தொழிலில் அப்படியொரு நேர்த்தி நெளிவு சுளிவு. இது போல் சொதப்பியது இல்லை. சிக்கியதும் இல்லை.மற்ற வேலைக்காரர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் டுபான்ஸ் என்று நினைக்கமாட்டார்களா.

நேற்று காலையில் வயிற்றுக்கு எதாவது போட்டிருக்க வேண்டும். அப்படி போட்டிருந்தால் தொடர் ஒட்டத்தில் அவ்வளவு சீக்கிரம் சோர்வு ஏற்பட்டிருக்காது. உடலில் பலம் இருந்திருந்தால் ஓட்டத்தின் வேகம் கூட்டியிருக்கலாம். ஆனால் உடல் பலம் இப்படிக் குறைந்து போகும் என்று நினைக்கவில்லை. ஓட முடியாமல் துவண்டு போனது மட்டுமல்ல, அந்த சிறுவனிடம் மல்லுக்கு நிற்க முடியவில்லை. இது போன்ற இடங்களில் கை வைக்கும்போது ஒரு தடவைக்கு பல தடவை யோசித்திருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த சம்பவத்தை தவிர்த்திருக்க வேண்டும். அல்லது தொழிலில் புதிய நுட்பத்தைக் கூட்டியிருக்க வேண்டும். அவசரம், அதீத ஆர்வம் இப்படி சிக்கிக்கொள்ளச் செய்துவிட்டது.

இரவு முழுக்க உறங்கவே விடவில்லை அவர்கள். ராத்திரி ரவுண்ட்ஸ் சென்று திரும்பிய காவலர் ஒருவர், ”என் மனைவியின் செயினையும் நீ தானேடா அறுத்தே” என்று சொல்லி நடுமுதுகில் குத்தினார். பிறகு வந்த சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டர், நல்ல போதையில் இருந்தார். அவர் அடித்த அடி மட்டுமே சற்று தேவலாம் போல் இருந்தது.

இரண்டு கைகளையும் நல்ல அழுத்தமான நைலான் கயிறால் பிணைத்து கட்டிவிட்டனர். பிறகு குப்புறக் கிடத்தி ஒரு நீண்ட பெஞ்ச்சோடு சேர்த்து இணைத்தனர். நீண்ட நேரத்துக்குப் பிறகு இரவு வந்திருப்பதை அறைக்குள் வந்த இருளை வைத்து தான் அறிந்து கொண்டான்.

க்ரைம் இஸ்பெக்டர் சுதர்சனம் வந்தார். முத்துசாமியை உற்று நோக்கினார்   “இவன இனிமே அடிக்காதீங்க உண்மையை வர வைக்கிறது எப்படின்னு  எனக்கு தெரியும்” என்றார்.

அப்போது செல்போனில் அவருக்கு அழைப்பு வந்தது எடுத்துப் பேசினார். மீண்டும் இவனைப் பார்த்து, “ஏட்டய்யா, பயலுக்கு சிக்கன் குருமாவும் ரோஸ்ட்டும் வாங்கி கொடுங்க” என்று நூறு ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டுப் போனார். வலியையும் மீறி சிக்கன் குருமாவுக்கு நாக்கில் எச்சில் சுரந்தது. அது வரும் என்று பசியோடு படுத்துக்கிடந்தான். ஆனால் சாப்பாடு வாங்கப் போன ஏட்டய்யாவைக் காணவில்லை. பசியில் அயர்ந்து உறங்கிப் போயிருந்தான். திடீரென்று ரணம் ஏறிப்போயிருந்த வெற்று உடம்பில் சுளீரென்று விரல்கள் பதிந்தன. திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான். அவன் முன்பு  சாப்பாடு பொட்டலம் இருந்தது. பாலிதீன் பையில் குருமா கட்டப்பட்டு இருந்தது.

ஆர்வத்துடன் பொட்டலத்தைப் பிரித்தான். இருந்தது என்னவோ இரண்டு காய்ந்த பரோட்டா தான். அதனை பிய்த்து சால்னாவில் குழைத்து வாயில் வைத்தபோது காரம் சுரீர் என்று உள்நாக்கு வரை பரவியது. குருமாவை ஒரம் கட்டி வைத்துவிட்டு வெறும் பரோட்டாவை மட்டும் மென்று தின்னத் தொடங்கினான். மழைக்காலத்தில் வைக்கோல் தின்னும் மாடு போல. கழிவறைக்குப் போய் கையை கழுவிக்கொண்டு வந்து குளிர்மை நிரம்பி வழிந்த தரையில் ஒருக்களித்துப் படுத்தான்.

2

முத்துசாமிக்கு உள்ளுக்குள் தகிப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. பத்தாண்டுகள் இந்த ஸ்டேசனில் நிலுவையில் உள்ள 30க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் அனைத்தையும் இவன் தலையில் கட்டிவிடலாம் என்று முடிவெடுத்திருப்பதை போலீசார் பேச்சில் உணரமுடிந்தது. இப்படிப் போட்டால் வாழ்நாள் முழுமையும் சிறையில் தான்  இருக்க வேண்டி வரும். இதனை ஆழமாக உணரத் தொடங்கிய போது பெரும் துயரமாக உணர்ந்தான். ஒருவன் மேல் குறைந்தது ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிந்துவிட்டாலே ”மிசா” போடுவார்கள் அல்லது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும். இது போன்ற பிரிவுகளில் சிறையில் அடைக்கப்பட்டால் ஒரு ஆண்டுக்குப் பிணையே கிடைக்காது. இத்தனை வழக்குள் ஒருவன் தலையில் விழுந்தால்…வெளியில் வர வாய்ப்பே இல்லை.

பெரிய பின்னணி கொண்டவர்கள் மட்டும் தான் இதிலிருந்து மீள முடியும். இப்போது தாம் செய்தது சாதாரண பெண்ணிடம் அல்ல. அவர் ஒரு மருத்துவர் அவரது கணவர் மருத்துவக்கல்லூரி டீன் என்கிறார்கள். இதனை விடவும் அந்தப் பெண் கழுத்தில் இருந்து செயினைப் பறித்தபோது அவரது தொண்டையில் பலமான காயம் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள்…. முத்துசாமிக்கு குழப்பம் கலந்த பயம் பீறிட்டது. இரண்டு கால்களையும் தரையில் போட்டு வேதனையுடன்  உதைத்துக் கொண்டான்.

வலது புற அறையில் படுத்த நிலையில் இருந்து தலையை உயர்த்திப் பார்த்தான். ஒர் இரவு முடிந்து பகல் வந்திருந்தது. காலை நேரம் என்பதால் பெரும்பாலான காவலர்கள் பணி முடிந்து தங்களது வீடுகளுக்குச் சென்று விட்டனர். பாரா பார்க்கும் போலீஸ்காரர் மற்றும் இரண்டு முதுநிலை காவலர்கள் மற்றும் ஒரு தலைமை காவலரும் பணியில் இருந்தனர்.

பொழுது விடிந்த பிறகு மீண்டும் பழையபடியே கட்டிவிட்டனர். கையில் போட்டிருந்த கட்டு படிமுடிச்சாக இருந்தது. அழுத்தி அழுத்தி அந்த இடத்தில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. சிறிய கொசுக்கள் உட்கார்ந்து குடித்துக்கொண்டிருந்தன குருதியை. இந்த நிலையில் இருந்து  இதனை அறுத்துக்கொண்டு தப்பியோட முடியாது. அதற்கான பலமில்லை என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தான்.

”ஒரு மாத காலமாக சரியான வருமானம் இல்லை.”நல்ல சம்பவம்” அமையவில்லை. கிடைத்த ஆயிரம், ரெண்டாயிரத்தில் ஒரு வாரத்தை கழிப்பதே சிரமமாக இருந்தது. தியாகராஜர் சுவாமி தேரோட்டத்தில் குழந்தைகளிடமிருந்து சில கொலுசுகளை மட்டுமே கழற்ற முடிந்தது. திருட்டுப்பொருள் என்றால் ”படிக்குப் பாதி” பணம் தான் நகைக்கடை சேட்டுகள் தருவார்கள்.

இன்றைய நிலையில் ஆயிரம் ரூபாய் என்பது ஒருநாளின் அன்றாட செலவுக்குப்  போதவில்லை. முனியாண்டி விலாஸ் ஒட்டல்களில் ஒரு கப் ஆட்டுக்கறியின் விலை ரூ.100 ஆக்கிவிட்டார்கள். குவார்ட்டர் பிராந்தி       ரூ.200க்கு மேல் வாங்கினால் தான் வயிற்றுக்குத் தொல்லை தராமல் உள்ளது. இதனை தவிர மூன்று வேளை உணவு வேறு உள்ளது. இப்படி கணக்குப் போட்டுப் பார்த்தால் தான் இந்த திருடனின் நிலை மக்களுக்கு புரியும். போலீசாரும் இதனை அறிய வேண்டும். திருடனைப் பிடித்து வழக்கை முடிப்பதில் மட்டுமே குறியாக இருக்கக்கூடாது. இதனையும் அறிய வேண்டும். கடந்த சில  மாதங்கள் கூடப் பரவாயில்லை. இந்த மாதம் ரொம்ப மோசம்.”

3

நேற்று முன்தினம், விஜயபுரம் பெருமாள் கோவில் தெருவில் நடந்து போகும்போது டாக்டர் சுந்தரவள்ளி கிளினிக்கைப் பார்த்தான்.  இந்தத் தெருவில் சில மாதங்களுக்கு முன்பு நாலைந்து முறை நடந்து சென்று இருக்கிறான். ஆனால் நேற்று முன் தினம் தான் அந்தப் பெண் டாக்டரைப்  பார்த்தான். நல்ல சிவந்த நிறத்தில் வட்டமான முகத்தில் உடல் சற்று பருமனாக இருந்தார். உயரம் நான்கு அடிக்குள் இருந்தார். இவன் கண்கள் அவரை விட அவர் கழுத்தில் மின்னிய தங்கச் செயினைப் பார்த்தது. அது  நல்ல தடிமனாக பத்து சவரனுக்கும் அதிகமாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. அப்போதே ஒடிச்சென்று அறுக்க வேண்டும் என்று கை பரபரத்தது. பேண்ட் பாக்கெட்டில் இடது கையை விட்டு அழுத்திக்கொண்டான். ஆனால் மனம் மட்டும் சமாதானம் ஆகவில்லை.

கொஞ்ச தூரம் நடந்து வந்தான். தெரு கடைசியில் இருந்த நரசிங்கப் பெருமாள் கோவிலில் அபிஷேகம் முடிந்து புளியோதரை பிரசாதம் வினியோகம் செய்து கொண்டிருந்தார்கள். வரிசையில் நின்று வாங்கித் தின்றான்.

கோவில் திண்டில் அமர்ந்து கண்களை முடினான். நிம்மதியாக அமர முடியவில்லை. செயின் பறிப்புக்கான திட்டங்கள், வியூகங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. ஒவ்வொன்றையும் மனதுக்குள் நிகழ்த்தி காட்சிப்படுத்திப் பார்த்துக் கொண்டான். நீண்ட நேரம் அந்த கிளினிக்கையே பார்த்தபடியே அமர்ந்துவிட்டு இறுதியில் ஒரு திட்டத்துடன் தனது அறை இருந்த நெம்மேலிக்கு மினி பஸ்சில் கிளம்பினான்.

படுக்கையில் நிம்மதியாக உறங்க முடியவில்லை. அடிக்கடி விழிப்பு வந்தது. காலையில் கிளம்பி முனீஸ்வரனை வணங்கி விட்டு விஜயபுரத்துக்கு கிளம்பிவிட்டான். மெயின்ரோட்டில் இருந்த அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய் இட்லி சாப்பிடலாம் என்று நினைத்தான். பாக்கெட்டை துழாவியபோது பரம்பைசா இல்லை என்பதை மீண்டும் உணர்ந்தான். இந்த சம்பவத்தை திறம்பட செய்துவிட்டால் இந்த மழைக்காலத்தை ஓட்டிவிடலாம். தினமும் இரண்டு வேளை நல்ல சரக்கு வாங்கிக் குடிக்கலாம். அசைவ ஒட்டல்களில் வயிறு நிறைய சாப்பிடலாம். ஏசி தியேட்டர்களில் போய் புது சினிமா படங்கள் பார்க்கலாம்..வேளாங்கண்ணி சென்று கேரளா அயிட்டங்களோடு உல்லாசமாக இருக்கலாம். கொண்டித்தோப்பு ஜெயாவை வரச்சொல்லி நாக்கு ருசியாக  நல்ல கறி ஆக்கிப்  போடச் சொல்லி சாப்பிட்டு விட்டு நாலு நாள் அவளோடு குடித்தனம் நடத்தலாம். இன்னும் எத்தனையோ செய்யலாம் இப்படி தினமும்…”சொக்கு..சொக்கு” தான்  என்று மனம் குத்தாட்டம் போட்டது.

காலை நேரம். பொழுது மந்தகதியில் இருந்தது. வெயில் உள்குத்தலாக மங்கி ஒளிர்ந்தது. அந்தத் தெருவே மிக அமைதியாக ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போலத் தோன்றியது. எல்லா வீடுகளின் கதவுகளும் தாழிடப்பட்டு இருந்தன. ஆனால் க்ளினிக் எதிரேயிருந்த இருசக்கர பழுது நீக்கும் கடையில் மட்டும் பதினாறு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் பழுதான வண்டிகளைச் சரிசெய்து கொண்டிருந்தான். அவன் பார்ப்பதற்கு கொடும் வறுமையில் சிக்கியவன் போல வாடி வதங்கிக் காணப்பட்டான். முகத்தில் பொலிவு இல்லை. ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு உண்பவன் போலிருந்தது அவனது உடம்பு. கொம்பேறி மூக்கன் பாம்பு போல் அவன் உடல்வாகு அமைந்திருந்தது. காதுகள் இரண்டும் விடைத்துக்  கொண்டிருந்தன. அந்த சிறுவனைப் பார்த்ததும் முத்துசாமிக்கு  அடக்க முடியாத சிரிப்பு வந்தது.  தனது சிரிப்பை அடக்கிக்கொண்டு தாடியுடன் கூடிய மீசையை தடவி விட்டுக்கொண்டு ” இவன் கெடக்குறான் சுண்டைக்காய் பய” என்று முணுமுணுத்தான்.

தனது செயல் திட்டத்தை வரையறுத்துப் பார்த்துக் கொண்டான்.  காலைப் பொழுது.. அதிக ஆட்கள் நடமாட்டமற்ற. ஒரே ஒரு சிறுவனைக் கொண்ட தெரு. இதுவே காரியத்தை எளிதாக  நிறைவேற்ற சரியான தருணம் என்று முடிவுக்கு வர வைத்தது. உடனே பரபரப்பு ஆனான். தீர்க்கமான முடிவோடு சில நிமிடங்களில் க்ளினிக்குள் ஒரு நோயாளி போல் புகுந்தான். ஒரு இளம்பெண் வெள்ளை நிற சுடிதார் அணிந்து ஸ்டூலில் அமர்ந்து டோக்கன் வழங்கிக் கொண்டிருந்தாள். அறையின் முகப்பில் மருத்துவர் சுந்தரவள்ளி எம்.டி என்று எழுதப்பட்டு இருந்தது.  உள்ளே இருந்த வராண்டாவில்   எழுபது  வயதுக்கு உட்பட்ட  ஆண் நோயாளிகள் நாலைந்து பேரும், ஒரு பெண் நோயாளியும் அமர்ந்திருந்தனர். இதனைக் கண்டதும், சரியான நேரம் என்று முணுமுணுத்துக் கொண்டான்.” உங்களுக்கு என்ன செய்கிறது” என்று கேட்டுவிட்டு சில நிமிடங்களிலேயே இவன் பெயரை எழுதி டோக்கன் கொடுத்த அந்தப் பெண், இரண்டு ஆண் நோயாளிகளை அழைத்த பிறகு மூன்றாவது ஆளாக முத்துசாமியை  அழைத்தாள். அவர்கள் மருத்துவரைப் பார்த்த பிறகு இவனை அறைக்கதவை திறந்து அழைத்துக் கொண்டு போனாள். டாக்டர் சுந்தரவள்ளி இவனை எதிரே இருந்த ஸ்டூலில்  அமரச்சொல்லி சைகை செய்தாள்.  அந்த இளம்பெண், இவன்  பெயர் எழுதிய சீட்டை டாக்டரிடம் கொடுத்து விட்டு அறையை விட்டு சில நொடிகளில் வெளியே போனாள்.

டாக்டர் சுந்தரவள்ளி இவனைப் பார்த்தாள். இவன் ”நெஞ்சு வலிக்குது டாக்டர்” என்று இடது மார்பு பகுதியை சுட்டிக் காட்டினான். அப்போது டெதஸ்கோப்பை எடுத்து இவனது நெஞ்சில் வைத்து இதயத்துடிப்பை கணக்கிடத் தொடங்கினாள். அந்த சூழலே இவனுக்குப் போதுமானதாக இருந்தது. சட்டென்று ஒரு கணத்தில் பாய்ந்து மருத்துவர் கழுத்திலிருந்த செயினைப் பற்றினான். ஏதோ தவறு நடக்கப்போகிறது என்று சுதாரித்துக் கொள்வதற்குள் கீழே விழுந்து அலறினாள். அதற்குள் செயினை பேண்ட் பாக்கெட்க்குள் திணித்துக்கொண்டு கதவைத் திறந்து கொண்டு ஒடத் தொடங்கினான். கழுத்தில் குருதி வழிய காயத்துடன்  அலறிக்கொண்டே வெளியே ஒடி வந்த டாக்டர், ”செயினை அறுத்துக்கிட்டு ஒடுறான் அவன பிடியுங்கள்” என்று கத்தினாள்.  வேகமாக தெருவுக்கு ஒடி வந்த செவிலிப் பெண், மெக்கானிக் சிறுவனைப் பார்த்து ”சேது,.டாக்டர் செயினை திருடன் அறுத்துக்கிட்டு ஒடுறான் பாரு அவன பிடி” என்றாள் சத்தமான குரலில்.

இருசக்கர பழுது நீக்கும் கடையில் இருந்த சேது  திருடன் முத்துசாமியை துரத்தத் தொடங்கினான். சில அடி தூரத்திலேயே தன்னைப் பிடிக்க சிறுவன் ஒருவன்  பின் தொடர்ந்து ஓடிவருகின்றான் என்பதைத் திரும்பிப் பார்த்து அறிந்து கொண்ட முத்துசாமி, ”வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்” என்று நினைப்பிலேயே ஓடிக்கொண்டிருந்தான்.  ஓட்டத்தில் இரண்டு  தெருவைக்  கடந்திருந்தார்கள், அதற்கடுத்து நெடுஞ்சாலைக்கு செல்லும் ரோட்டில் முத்துசாமியைப் பிடித்துவிடும் தூரத்தில் சிறுவன் முன்னேறிக்கொண்டிருந்தான். அப்போது தெருவில் நின்ற சிலர் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு சிறுவன்..திருடன்… என்று கத்தினான். அதே நேரத்தில் முத்துசாமியும் திருடன் என்று பல முறை சொல்லியபடி ஒடினான். இதில் குழப்பமடைந்த பாதசாரிகள் ஒன்றும் புரியாமல் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது ஒருவர், ”திருடன்.. போலீஸ் விளையாட்டு” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டு போனார்.

சாலையில்… இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் அவர்கள் போக்கில் போய்க்கொண்டிருந்தார்கள். ஓரிரு கார்களும் கடந்து போயின. முத்துசாமி திரும்பிப் பார்த்தான். சிறுவன் சில அடி தூரத்தில் இருந்தான். ஓட்டத்தை நிறுத்தி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம் என்றால் சிறுவன் பின் தொடர்வது அச்சமாக இருந்தது. ஒரு கட்டத்தில் முச்சிரைப்பு அதிகமாகியது. இரண்டு கால்களும் அதிக வலி கொண்டன. கொஞ்சம் கொஞ்சமாக பின் வாங்கிக்கொண்டிருந்தான். உடலில் வெப்பம் அதிகமாகி வியர்வை பெருகி வழிந்தது. பஸ் நிறுத்தம், சில பெண்கள் குழந்தைகள் அங்கு நின்றனர். அதற்கு மேல் முத்துசாமியால் ஓட முடியவில்லை. ஓட்டத்தை நடையாக மாற்றினான். அப்போது தான் பின்னால் வந்து  கழுத்தைப் பற்றினான் சிறுவன். அங்குமிங்கும்  திரும்ப முடியாத அழுத்தமான பிடி. பெண்கள் இதனைப் பார்த்து பயத்தில் அலறினார்கள். இதனை சற்றும்  எதிர்பார்க்காத முத்துசாமி கடும் சீற்றத்துடன்  சிறுவனை தாக்கத் தொடங்கினான். சிறுவன், ”இவன்…திருடன். டாக்டர் செயினை அறுத்திட்டான்.” என்று கத்தியபடி தரையில் அமர்ந்து முத்துசாமியின் இரண்டு கால்களையும் கோர்த்துப் பிடித்தான். அவனை உதைத்து விலக்கி விட முயன்றான் முத்துசாமி.. சாலையில், கடைப்பகுதியில் இருந்தவர்கள் இதனை சினிமாக் காட்சி போல  வேடிக்கை பார்த்தனர். இது தெம்பாக இருந்தது முத்துசாமிக்கு. ஆனால் சிறுவன் இரண்டு கால்களையும் அழுத்திப் பிடித்து மலைப்பாம்பு ஆட்டை  இறுக்கி முறிப்பதைப் போல் முறித்துக் கொண்டிருந்தான். அப்போது பைக்கில் சென்ற இருவர் சிறுவனைப் பார்த்ததும், ”நம்ம சேதுடா” என்று பைக்கை நிறுத்திவிட்டு ஒடி வந்து, முத்துசாமி கையைப்பிடித்து, என்னடா பிரச்சனை. என்னடா அடிக்கிற”  என்றார்கள். அப்போது சிறுவன், ”அண்ணே. சுந்தரவள்ளி டாக்டர் செயினை அறுத்துகிட்டு ஓடியாந்துட்டான்” என்று சொல்லிக் கொண்டே பிடி நழுவி விடாமல் பிடித்துக் கொண்டிருந்தான். முத்துசாமி, ”இல்ல..இல்ல..”என்றான். இளைஞர்கள் இருவரும் சுதாரித்துக்கொண்டனர். சிறிய கூட்டம் கூடிவிட்டது. அப்போது ஏட்டய்யா மாணிக்கம் வந்துவிட்டிருந்தார். சிறுவனை முறைத்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் முத்துசாமி. இளைஞர்கள் தாக்கத் தொடங்கினர். பொதுமக்களும் பாய்ந்தனர். ”கொஞ்சம் பொறுமையா இருங்க” என்று  ஏட்டய்யா கூட்டத்தை அடக்கினார். சில நிமிடங்களில் போலீஸ் வாகனம் வந்தது. இவன் கண் முன்பாகவே சிறுவனை பொதுமக்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள்.

4

குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். அவரது மென்மையான குரல் கேட்டது. அவர் வேறு சில வழிப்பறி கொள்ளை விவரம் குறித்து ஏட்டய்யாவிடம் விவரம் கேட்டார். நிலுவையில் உள்ள எல்லா வழக்குகளிலும் தன்னை சேர்த்து அப்ரூவராக மாறி குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வார்கள் என்று நினைத்தான் முத்துசாமி. கை கட்டை அவிழ்த்து விட்டு அழைத்து சென்று இன்ஸ்பெக்டர் முன்பு  நிறுத்தினார் ஏட்டய்யா மாணிக்கம். பவ்வியமாக தரையில் அமர்ந்தான். பேசத்  தொடங்கினார் இன்ஸ்பெக்டர்.

”உன்னைப் பத்தி எல்லாமும் விசாரிச்சுட்டேன். ஆமா..உன் ஆதியில் இருந்து அந்தம் வரை. நீ மறைக்காம என்கிட்டே உண்மையை சொல்லிட்டன்னு வை உன்ன காவந்து பண்ணிவிட விடவும் முடியும் என்னால. இல்லாட்டி..எல்லா கேசுகளையும் உன் தலையில கட்டி..நிரந்தமான உன்னை காலி பண்ணவும் முடியும் ” என்றார் கடுமையை முகத்தில் காட்டி.

அப்போது குறுக்கிட்ட ஏட்டய்யா மாணிக்கம், ”நம்ம டிவிசன்ல இவன் மேல ஏகப்பட்ட வழக்கு இருக்கு சார் ஆனா இன்னக்கித்தான் கையும் களவுமா மாட்டியிருக்கான் சார்  ” என்றார்.

முத்துசாமிக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. உள்ளுக்குள் நடுக்கம். பதட்டமாக இன்ஸ்பெக்டரைப் பார்த்தான்.

”ரொம்ப துணிச்சலான பய. பட்டப்பகலிலேயே பெரிய இடத்துலேயே போய் கை வெச்சிருக்கான். அப்ப இருட்டுல என்னா செய்வான். எப்படி செய்வான்” சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டர் வாய்விட்டு சிரித்தார்.

”சொல்லுடா அய்யா கேட்குறாருல்ல” ஏட்டய்யா ஊக்கினார்.

”சார், என்னைப் பத்தி என்ன எங்கப்பன், பாட்டன்னு எல்லாரையும் பத்தி ஒன்னு விடாம சொல்லிடுறேன்ங்கய்யா… என்னை எப்பிடியாச்சும் காவந்து பண்ணுங்க“ என்று சொல்லிவிட்டு முத்துசாமி நிமிர்ந்து அமர்ந்தான். தாத்தாவைப் பற்றி அப்பா சொல்லியிருந்தது எல்லாம் மெல்ல நினைவுக்கு வரத்தொடங்கின.

5

பங்குனி  மாதத்தின் முதல் வாரம், சம்பா அறுவடை முடிந்து மூன்றாவது போகமான தாளடி வேலைகளில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். காளிமுத்து உள்ளிக்கோட்டையில் இருந்து கிளம்பியிருந்தார். பஸ் பிடித்தும் கால்நடையாகவும் கடம்பனூர் பண்ணைக்கு  வந்து சேர்ந்திருந்தார். பண்ணை காரியக்காரனை அழைத்து கோமரத்தான் வந்திருப்பதாக சொல்லச் சொன்னார். பதறிப்போய் பெரிய பண்ணை மோகனசுந்தரத்திடம் தகவலை சொன்னான். காரியக்காரனை எற இறங்கப் பார்த்தவர் “என்னய்யா அவனுக்கு கொம்பா முளைச்சிருக்கு. முடிஞ்சா என் கொட்டில்ல இருக்குற மாட்டை அவுக்கச் சொல்லுய்யா பார்க்கலாம். இவனுக்கெல்லாம் பயந்துகிட்டு பைசா கொடுக்குற ஆளு நானில்ல. இப்படி பயப்படுர்றியே போய்யா…” என்று திட்டி அனுப்பினார்.

பண்ணை வாசலில் காளிமுத்து நின்று கொண்டிருந்தார். காரியக்காரன் முகம் வாடிப்போய் வந்து நின்றான். மேற்கொண்டு அவனிடம் விளக்கம் கேட்கவில்லை. நடக்கத் தொடங்கினார்.

கடம்பனூரில் இருந்து பிரிந்து செல்லும் மண் சாலையில் பொருக்குகள் சிதறிக்கிடந்தன. இருபுறமும் பரந்து விரிந்து கிடக்கும் வயல்வெளிகளில் பாதிக்கு மேல் அறுவடை முடிந்திருந்தது. குறுவைக்குப் பிறகு நடவு செய்திருந்த வயல்களில் மட்டும் செம்பழுப்பு நிறத்தில் நெல் மணிகள் சிவந்து கொண்டிருந்தன. எதிரே நடந்து வந்த ஆட்களிடம், இட்லி எங்கே கிடைக்கும் என்று விசாரித்தார். ”அதோ கதிராமங்கலத்துக்கு போங்கள்” என்று சொன்னார்கள்.

தன்னை யார் என்று கூட கடம்பனூர் பண்ணை பார்க்கவில்லையே என்ற வருத்தம் இப்போது அவமானமாக ரூபம் கொண்டிருந்தது. இன்னும் ஒரு வாரத்துக்குள் அவர் மாட்டை பத்திச் சென்று விட வேண்டும் என்று கருவிக்கொண்டார். கதிராமங்கலத்தில் ராவுத்தர் கடையில் பசியாறிவிட்டு கிளம்பியபோது  தரவு  சின்னையன் எதிர்ப்பட்டான்.  இவரைக் கண்டதும் வாயெல்லாம் பல்லாகச் சிரித்தான். நடந்தவற்றை சொன்னார். இப்போது இருவரும் சேர்ந்து நடக்கத் தொடங்கினார்கள்.  மதியமாகிவிட்டிருந்தது. நல்ல வெயில். சாலையில் இருந்த ஆலமர நிழலில் அமர்ந்து இருவரும் ஒய்வு எடுத்தனர். கேக்கரை ஐயர் பண்ணையைப் பார்க்கலாம் என்று சின்னையன் ஜடியா கொடுத்தான். மூன்று மைல் தூரத்தை வேகமாகக் கடந்து போனார்கள். அக்ரஹாரத்தில் இருந்து பெரிய சுற்றுக்கட்டு ஓட்டு வீட்டை அடைந்தபோது காரியக்கார பெருமாள் கூலியாட்களுடன் நின்று கொண்டிருந்தார்.

இவர்களைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட பெருமாள், ”பெரியவங்க  சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு போயிருக்காங்க வர நாலு நாள் ஆகும்” என்று தலையைச் சொறிந்தார்.

”அப்படிய்யா இவ்வளவு தொலைவு வந்துட்டேன். செலவுக்கு எதாவது கொடுங்க காரியம்” என்றார் காளிமுத்து.

சரி என்று கிடங்குக்கு அழைத்துக் கொண்டு போய் பத்தாயத்தை திறந்து ஒரு கலம் நெல்லைக் கொடுத்தார் பெருமாள்.

இருவரும் மாற்று மூட்டைப் போட்டு தூக்கி வந்து அரவை மில்லில் ரூ 40க்கு விற்றார்கள். பொழுது ஏறியிருந்தது சின்னையனுக்கு செலவுக்கு பணத்தைக் கொடுத்து விட்டு, நாளை மறுநாள் இதே இடத்தில் இதே நேரத்தில் வந்து நில்” என்று சொல்லிவிட்டு கிளம்பி போனார் காளிமுத்து.

மறுநாள் தியாகராஜபுரம் பனந்தோப்பில் காளிமுத்துவும் சின்னையனும் வந்து நின்றபோது நள்ளிரவு. அடர்ந்த இருள். அவர்கள் கையில் கோணிப்பை இருந்தது. அதில் நிறைய சாமான்கள். உயிர்க்கோழி  முனகிக் கொண்டிருந்தது. அதனை  பிடித்திருந்தான் சின்னையன். பனங்கொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்த நாடாரை எழுப்பினார் காளிமுத்து.

திடுக்கிட்டு எழுந்த நாடார் தூக்கம் கலையாமல் இருளில் யார் என்று உற்றுப் பார்த்தார். தீக்குச்சியை ஏற்றி முகம் பார்த்து ’கோமரத்தான்’ என்று முணுமுணுத்தார்.  ”நாடாரே..மொத கோழி கூவிட்டு, கள்ளு வேணும் எவ்வளவு ரூவா வேணாலும் தர்றேன்” என்று கண்டிப்பான குரலில் கூறினார் காளிமுத்து. நாடார் அசந்து தூங்கிக் கொண்டிருந்த மற்ற ஆட்களை எழுப்பி,, இவனுங்கள பகைச்சிக்கிட்டு தொழில் பண்ண முடியாது. பாளையை வெட்டிவிட்டுருவானுங்க. உங்க கால்ல விழுறேன். நாலு மரத்து கள்ளை இறக்கி கொடுங்க” என்று அரை உறக்கத்தில்  கெஞ்சினார்.

கொட்டகையில் இருந்து கண்டா விளக்கை ஏற்றினார் நாடார். சின்னையன் தன்னிடம் உயிரோடு இருந்த பெட்டைக்கோழியை கழுத்தறுத்து சுத்தம் செய்தான். நாடார் அன்னசட்டியை எடுத்து வந்து கொடுத்தார். காளிமுத்து மசாலாக்களை இடித்து தயார் செய்தார். சில நிமிடங்களில் அடுப்பு கட்டப்பட்டு தீ மூட்டப்பட்டது. சட்டியில் கொதிக்கத் தொடங்கியிருந்த இறைச்சியின் மணம் பின்பனி இரவின் குளிர் காற்றோடு பரவத் தொடங்கியது. ஒரு பெரிய சால் பாணையில் கள்ளை ஊற்றி வைத்தார் நாடார். பனம் ஒலையில் தொன்னை பிடித்து இறைச்சியை நாடாருக்கு கொடுத்தார் காளிமுத்து. சற்று தொலைவில் நாலைந்து நரிகள் கும்பலாக ஊளையிட்டன. இருவரும் வயிறு முட்டக் குடித்துவிட்டு ஏப்பம் விட்டனர். பொழுது விடியத் தொடங்கியது. கடம்பனூரை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.

பொழுது விடிந்து கொண்டிருந்தது. கறவைக்கு சென்ற மாட்டுக்காரன் சன்னாசி. மாடுகள் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்த கொட்டிலைப் பார்த்துவிட்டு அலறிக்கொண்டு பண்ணை வீட்டின் முகப்பு வாசலில் நின்று கத்தினான். திடுக்கிட்டு எழுந்து வந்த மோகனசுந்தரத்திடம் “ஒரு மாட்டையும் காணோம் ஆண்ட” என்றான். மிரட்சியுடன் கொல்லை முழுவதும் நாலாப்பக்கமும் தேடிப் பார்த்தனர். மாடுகளைக் காணாது  தலையில் கை வைத்துக்கொண்டு திண்ணையில் அமர்ந்துவிட்டார் மோகனசுந்தரம். பண்ணையாட்களையும் காரியக்காரனையும் அழைத்து வரச்சொன்னார். நாலு கறவை மாடுகள் இரண்டு ஜோடி காளைகள், நான்கு பால் குடிக்கும் கன்றுகள். இரண்டு இளம் காளைகள் என்று ஆக மொத்தம் பதினான்கு உருப்படிகள் காணமல் போயிருந்தன. நான்கு பக்கம் மதில் சுவர் அதனை தாண்டி எப்படி மாடுகளை ஓட்டியிருப்பார்கள் என்று பார்த்தபோது கொல்லைக்கு நடுவில் இருந்த குளத்தில் வைக்கோல் கட்டுகளை அடுக்கிப் பாலம்  அமைத்து அதன் வழியே பத்திக் கொண்டு போயிருந்தார்கள். அதனை பார்த்து பிரமித்து போனார் மோகனசுந்தரம். இருபது ஆட்கள் சேர்ந்து இரண்டு நாள் செய்ய வேண்டிய வேலையை இரண்டு மணி நேரத்துக்குள் செய்து மாடுகளை கடத்தியிருந்தார்கள். இதனைப் பார்த்து நடுங்கிப் போனது ஊர்.

ஊரே பரபரப்பாகிவிட்டது. காரியக்காரர் வந்து நின்றார். “உன் பேச்சை தெரியாத்தனமாக கேட்காமல் போயிட்டேன். எப்படியாவது என் மாடுகளை மீட்டுகிட்டு வாய்யா.” கெஞ்சும் தோரணையில் மோகனசுந்தரம் காரியக்காரரிடம் சொன்னார். ஆட்களை வைத்து சுற்று வட்டாரத்தில் தேடினார்கள். எங்கும் துப்பு துலக்க முடியவில்லை. ஒரு வாரம் கழித்து தஞ்சாவூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்த கடம்பனூர் கண்ணாயிரத்திடம் செய்தி சொல்லி அனுப்பியிருந்தார்கள். பெரிய பண்ணையின் மாடுகள் தங்களிடம் பத்திரமாக இருப்பதாகவும், தாங்கள் அனுப்பும் ஆளிடம் ரூ. ஐந்தாயிரம் பணத்தைக் கொடுத்தால் மாடுங்க வீட்டுக்கு வரும் என்று தெரிவித்திருந்தனர். அதன்படியே பணம் கொடுக்கப்பட்ட மறு இரவு உருப்படிகள் பண்ணையின் கொட்டிலில் நின்றதைப் பார்த்து வியந்து போன பண்ணையார் மோகனசுந்தரம் ”இனி எக்காலத்திலும் கோமரத்தானுங்க கிட்ட மட்டும் வெச்சிக்க கூடாது” என்று உறுதிபடச் சொன்னார்.

6

”பய அருமையா கதை சொல்றான் ஏட்டய்யா…” என்று சேரில் அமர்ந்தவாக்கில் இருந்தவாறே வயிறு குலுங்கச் சிரித்தார் இன்ஸ்பெக்டர்.

ஒரு கணம் யோசித்த ஏட்டய்யா மாணிக்கம் ”இருக்கலாம் சார். நானும் கேள்விப்பட்டிருக்கேன்.  அந்தக் காலத்துல தஞ்சாவூர் ஜில்லா முழுமைக்கும் கோமரத்தான் என்கிற பேரில மாடு திருடனுங்க ஆதிக்கம் செலுத்தி வந்திருக்காங்க. அவுங்களுக்கு மாடு வளர்த்த அத்தனை பேரும் ஏன் பெரிய ஜமீன்ங்க, பண்ணைங்க  கூட பயந்து அவுங்க கேட்கிற பணத்தை கொடுத்து இருக்காங்க….”

”என்ன ஏட்டய்யா நீ சொல்றது நம்பற மாதிரி இல்லிய்யே”

என்று மாணிக்கத்தைப் பார்த்தார்.

”ஆமாங்கய்யா, மாடு திருட்டுல அவுங்கள யாரும் மிஞ்ச முடியாது. கண்ணுல விளக்கெண்ணையை ஊற்றிக்கிட்டு விழிச்சிக்கிட்டு இருந்தாலும், கண்ணை கட்டிப்புட்டு மாட்டைக் கொண்டுக்கிட்டே போய்விடுவாங்க. அந்தளவுக்கு கில்லாடிங்க. ஒரு கட்டத்துல அது முடிவுக்கு வந்துட்டு”

என்று சொல்லிவிட்டு முத்துசாமியை பார்த்தார் மாணிக்கம்.

”இவுனுங்க ரெத்ததுல திருட்டுங்குறது ஊறிப்போய் கெடக்கு. அவ்வளவு சீக்கிரம் இவனுங்கள திருத்த முடியாதுங்கய்யா”

7

தாத்தாவுக்குப் பிறகு அப்பா கஷ்டப்பட்டு இரண்டு அத்தைகளையும் திருமணம் செய்து வைத்தார். தாத்தா பெரிய கோமரத்தானாக இருந்தாலும் பெரிய அளவில் சொத்துக்களை சேர்த்து வைக்கவில்லை. ஐந்து ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருந்தார். அதனை விற்று தான் தனது சகோதரிகளை திருமணம் செய்து வைத்தார். தனது தந்தையைப் போல் கோமரத்தான் ஆக விரும்பவில்லை. மாட்டுக்கு இருந்த மவுசு குறைந்து போயிருந்தது. அத்தைகளுக்கு சீர் செய்தது போக மீதியிருந்த நிலத்தில் சாகுபடி செய்து கொண்டு ஆட்டுப்பண்ணை அமைக்கலாம் என்று முடிவுக்கு வந்தார். கையில் இருந்த கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு சந்தைக்குப் போன போது தான் ஆட்டின் விலை அவ்வளவு ஏறியிருப்பது அப்பாவுக்கு வியப்பை ஏற்படுத்தியது. கொண்டு சென்ற பணத்தில் இரண்டு குராலையும் ஒரு இளம் கிடாவையும் மட்டுமே வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அம்மா வயிற்றில் நான் இருந்தாக அப்பா அடிக்கடி சொல்வார். ஒரு நாள் மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிச் சென்று மேய்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது ஒரு கருப்பு ஆட்டுக்குட்டி கத்திக்கொண்டு தனிமையில் நின்றது. அப்பா அதனைப் பார்த்தார். அந்தக் குட்டி கத்திக்கொண்டே அப்பா ஓட்டிக்கொண்டு வந்த ஆடுகளைப் பின் தொடர்ந்தது. விரட்டியடிக்க மனமின்றி விட்டு விட்டார். யாரும் தேடிக்கொண்டும் வரவில்லை. இந்த ஆடுகளுடன் சேர்ந்து கொண்டது.

அதன் பிறகு அப்பா தனது ஆடு வளர்ப்புக்கு ஆடு வாங்குவதில்லை என்று முடிவு செய்தார். ஆனால் இரவுகளில் சைக்கிளில் பெட்டியைக் கட்டிக்கொண்டு கிளம்பிப் போனார். வாரத்துக்கு நான்கு ஆடுகள் வீதம் பண்ணையில் சேர்ந்து கொண்டிருந்தன.

அந்த சனிக்கிழமையின் காலையில் நானும் அம்மாவும் ஆடுகளை நிலத்தில் வைத்து மேய்த்துக் கொண்டிருந்தோம். நாலைந்துக்கும் மேல் தஞ்சை ஆட்கள் திடலுக்கு வந்தனர். அவர்கள், ” நம்ப கொட்டில்ல திருடு போன ஆடுங்க இந்தா மேஞ்சுகிட்டு இருக்கு பாருங்க” என்று பேசிக்கொண்டு  அம்மாவிடம் விசாரித்தனர். அப்பா எங்கேயிருந்தோ வளர்ப்புக்கு வாங்கிக் கொண்டு வந்தாகச் சொன்னாள். ”என்னடி பொய் சொல்றே திருட்டு சிறுக்கி” என்று அம்மாவை தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டேயிருந்தனர். அம்மா அவர்களிடம் திருட்டு ஆடு இல்லை. உறவினர்களிடம் வளர்ப்புக்கு வாங்கி வந்ததாக விளக்கமளித்தாள் அவர்கள் எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை .மதிய பொழுதில் அப்பா வந்தார். அவர்கள் அப்பாவை பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்தனர். பிறகு ஆடுகளை ஓட்டிக்கொண்டு போயினர். அவமானம் தாங்காத அம்மா அன்றிரவே தூக்கில் தொங்கி இறந்து போனாள். நான் அம்மா இல்லாது அனாதை பிள்ளையாக  ஆனேன். அப்பா ஆடு திருட்டில் வெறி கொண்டார். பண்ணைக்கு இரவில் ஆடுகள் வருவதும் பகலில் சந்தைக்குப் போவதுமாக இருந்தது. சமயங்களில் குடித்துவிட்டு வந்து தனது  திருட்டின் சாகசங்களை, திருடிக் கொண்டு வந்த ஆடுகளிடமே சொல்லிக்கொண்டிருந்தார். எப்போதாவது ”முத்துசாமி சாப்பிட்டிய்யா” என்று கேட்பார். சில நேரங்களில் உச்சகட்ட போதையில், ”மவனே, அப்பனை விட தாத்தனை விட பெரிய திருடனா வாழனும். சூதனமா செய்யனும்..என்னை மாதிரி இருந்திடக் கூடாது. ரொம்ப கவனமா இருக்கணும்” என்று பிதற்றுவார்.

பதினைந்து வயதில் ஒரு நாள் பட்டியில் ஆடுகள் மிரண்டு போய் நின்றதை பார்த்தேன். அருகில் சென்று பார்த்தேன். அப்பா நுரை தள்ளி இறந்து போயிருந்தார். ஊரில் சென்று விஷயத்தைச் சொல்லி அப்பாவின் இறுதிக்காரியத்தை முடித்துவிட்டு அந்த ஊரிலிருந்து அன்றே  கிளம்பிவிட்டேன்.

8

இன்ஸ்பெக்டர் பெருமூச்சு விட்டார். முத்துசாமியின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ”ஏட்டய்யா டீ வாங்கிட்டு வரச்சொல்லு” என்றார். இவனைப் பார்த்து, ”அழுதது போதும்டா முத்துசாமி சொல்லுடா வேற ஏதாச்சும் கதை இருக்காடா” பொய் சிரிப்பு சிரித்தபடி.

”சார், என் தாத்தா மாட்டு திருடன், அப்பன் ஆடு திருடன் நான் எப்படி யோக்கியனா இருக்க முடியும் சொல்லுங்க. அதை விட நானும் உழைச்சு வாழனும்னு நெனைச்சு எத்தனையோ பேர்கிட்டே வேலை கேட்டேன் ஒருத்தரும் கொடுக்கல… அப்படி கொடுத்தாலும்…ஒரு நாளைக்கு ரெண்டு நாளைக்கு மேல நீடிக்கல.  நான் என்ன செய்யுறது சார்” என்றான்,

”ஏட்டய்யா அந்த டாக்டரம்மா எப்படி இருக்காங்க..இனிமே இவனை இங்க வைக்ககூடாது. எப்.ஐ.ஆர் போட்டு உள்ளே போட்டுர்வோம். அப்புறம் கஸ்டடியில எடுத்து விசாரிப்போம்”

”சரிங்க சார்” ஏட்டய்யா முதல் தகவல் அறிக்கையை எழுத்தொடங்கினார். கோர்ட்டுல நாங்க சொல்றதை மட்டும் அப்படியே சொல்லு. உன்னை காவந்து பண்ணி விடுறேன்” என்றார் ஏட்டய்யா. சரியென்று தலையாட்டினான் முத்துசாமி.

அடுத்த அறையில் அமர வைத்தனர். பத்து வயதிருக்கும் பையன் டீ கொண்டு வந்து கொடுத்தான். அவன் முகத்தைப் பார்த்தவுடன் தன்னைப் பிடித்துக் கொடுத்த சிறுவனின் முகம் நினைவுக்கு வந்தது. இவர்கள் எப்படி இப்படி வாழ்கிறார்கள். நான் ஏன் இப்படி ஆனேன்..முதன் முதலாக தன் மீது அருவெறுப்பு உண்டானது முத்துசாமிக்கு. வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டான்.

ஒரு பெண் குரல் கேட்டது. அது லெட்சுமியின் குரலை ஒத்திருந்தது. சில மாதங்களுக்கு முன்பு அவளை நாகப்பட்டினம் கோர்ட்டில் பார்த்தபோது இவனிடம் நீண்ட நேரம் பேசினாள். பிக்பாக்கெட் தொழிலை விட்டுவிட்டதாகவும் தற்போது கடலுக்கு சென்று மீன் வாங்கி வியாபாரம் பார்ப்பதாகவும் சொன்னாள். பழைய வழக்கு ஒன்றுக்கு இப்போது வாய்தா வாங்க வந்திருப்பதாகவும் சொன்னாள். இனிமே உயிரே போனாலும் திருட மாட்டேன் என்றாள். அவள் சொன்னபோது இவனுக்கு சிரிப்பு வந்தது. இவன் சிரிப்பதைப் பார்த்த அவள் ஒரே வார்த்தையில்  சொன்னாள். காலம் உனக்கு பதில் சொல்லும் என்று. அன்றைய  இரவு தான் சாலையில் தனியே  நடந்து போன ஒரு கர்ப்பிணி பெண்ணின் செயினை அறுத்தான்.

மாணிக்கம் வந்து நாலைந்து பேப்பர்களில் கையெழுத்து வாங்கினார். அங்க அடையாளம் பார்த்து ரேகை பதித்து வாங்கி கொண்டார். புதுச்சட்டையும், கைலியும் கொடுத்தார்கள். அணிந்து கொண்டான். அனைவரின் முகத்தில் ஏதோ மாற்றம் தெரிந்தது. இன்ஸ்பெக்டர் செல்போனில் சன்னமான குரலில் பேசிக்கொண்டிருந்தார். மாணிக்கம் கோர்ட்க்கு போவுணும் என்றவர். ஏண்டா இப்படி வீணாப்போறீங்க என்றார்.

டாடா சுமோவில் ஏற்றினார்கள். கார் வேகம் .எடுத்தது. சிறிது தூரம் போனதும் கார் நின்றது. மாற்று உடையில் ஒரு போலீஸ்காரர் வந்தார் ஏற்கனவே காரில் நான்கு பேர் இருந்தனர்.

இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டய்யா மாணிக்கம் வருவார்கள் என்று நினைத்தான் முத்துசாமி. ஆனால் அவர்கள் வரவில்லை.

மெயின்ரோட்டில் செல்லாமல் கார் சந்துபொந்தில் புகுந்து போனது. ஒரு மணி நேர பயணத்துக்கு பிறகு மண் சாலையில் போய் அடர்ந்த புதர்ப்பகுதியில் காரை நிறுத்தினார்கள்.

”டேய் முத்துசாமி இங்கிருந்து தப்பிச்சு ஒடிடுடா” என்றார் காரில் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த பருமனாக இருந்த போலீஸ்காரர் ஒருவர்.

”வேணாம் சார் இனிமே திருட மாட்டேன். நேர்மையா வாழப்போறேன் சார். என்னை கோர்ட்டுல விட்டுருங்க…” என்றான்.

”உன்னை விட சொல்லிட்டார்டா இன்ஸ்பெக்டர்” என்றார் இடையில் காரில் வந்து மாற்று உடையில் ஏறியவர்.

இவன் தயங்கினான். கீழே இறக்கினார்கள். ”இந்த ரோட்டைக் கடந்து போனாக்கா மெயின் ரோடு வரும். அங்கேயிருந்து லாரியை பிடிச்சு கேரளா போயிடு” என்றார்கள்.

குழப்பத்துடன் அவர்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டான். சற்று தூரத்தில் வயலில் களை பிடிங்கிக் கொண்டிருந்த பெண்கள் துப்பாக்கி சத்தம் வந்த திசையை மிரட்சியுடன் பார்த்தனர். ஒரு பெண் ”குருவி சுடுறாங்க” என்றாள்.

***

சிவகுமார் முத்தய்யா
நெற்களஞ்சியமான கீழ தஞ்சை திருவாரூர்- தண்டலை சேர்ந்தவர். விவசாயம் சார்ந்த மக்களின் வாழ்வியலை நுட்பமாக எழுதி வருகிறார். மருத நிலம் குறித்த கதையாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கதை,கவிதை, கட்டுரை என இது வரை ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. Contact – muthaiyasivakumar@gmail.com

குடும்ப வன்முறை பணி விடுப்புச் சட்டம் – ஒரு பார்வை

0

கார்குழலி

ன்று காலை தோழியொருவர் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடும்ப வன்முறை பணி விடுப்புச் சட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது என்ற துணுக்கைப் பகிர்ந்துகொண்டபோது அது குறித்து மேலும் சில தகவல்களைத் தேட முற்பட்டேன். பெண்கள் நலனுக்கு வலுசேர்க்கும் நிகழ்வு என்பதோடு 2017-ஆம் ஆண்டு நியூசிலாந்தின் பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்ற நாற்பது வயது இளைஞரான ஜெசிண்டா ஆர்டர்ன் இயங்கும் விதமும் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி மேற்கொண்டுவரும் முயற்சிகளும் ஏற்கனவே மனதுக்கு நெருக்கமாக இருந்ததும் ஒரு காரணம்.

வெளிப்படையாகப் பேசினாலும் மூடிமறைத்து வைத்தாலும் குடும்ப வன்முறை என்பது யாராலும் மறுக்கமுடியாத அன்றாட நிகழ்வாகவே பெரும்பாலான குடும்பங்களில் இருந்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 30 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் குடும்ப வன்முறைக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று தேசிய குடும்ப நல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் நான்கில் ஒரு பெண் தன்னுடைய வாழ்நாளில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகிறார் என்றும் குடும்ப வன்முறையால் ஆண்களும் பாதிக்கப்பட்டாலும் அதில் 85 சதவீதத்தினர் பெண்கள்தான் என்றும் அமெரிக்க நாட்டின் தொழிலாளர் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், கிட்டத்தட்ட 65 சதவீத அலுவலகம் மற்றும் பணியிடங்களில் குடும்ப வன்முறையைத் தடுப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று பன்னாட்டு மனித வள மேம்பாட்டுச் சங்கமான (SHRM) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல், உள்ளம், பாலியல் எனப் பல வழிகளில் ஒருவர் வன்முறைக்கு ஆளாகலாம் என்றாலும் எந்தச் செயலெல்லாம் வன்முறை என்ற வரையறைக்குள் அடங்கும் என்பது குறித்த தெளிவு பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கும் பொதுமக்களுக்கும் இருப்பதில்லை என்பதும் உண்மை. தொடர்ந்து வன்முறை குறித்த விவாதங்களும் அறிவுறுத்தலும் பொதுவெளியில் நிகழ்ந்தால் மட்டுமே இந்தத் தெளிவு பிறக்கும். இப்படிக் குடும்ப வன்முறை குறித்த விழிப்புணர்வும் தெளிவும் இல்லாத ஒரு உலகில் பாதிக்கப்படும் பெண்களுக்காகச் சட்டம் இயற்றும் அரசாங்கங்கள் ஜான் எஃப் கென்னெடி சொன்னதுபோல  உண்மையிலேயே ‘மக்களுக்காக மக்களால் ஆன அரசு’ என்பதில் சந்தேகமில்லை.

முதலாவதாக, கிட்டத்தட்ட 60 சதவீதப் பெண்கள் குடும்ப வன்முறையைச் சமாளிப்பதற்காக எடுக்கும் விடுப்பினால் வேலையை இழக்கிறார்கள் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. பொதுவாகவே அலுவல் அதிகமாக இருக்கும் சமயத்தில் எந்த நிறுவனத்திலும் ஆண் பெண் என யாரொருவரும் விடுப்பு எடுக்க எளிதில் அனுமதி கிடைப்பதில்லை. சொல்லப்போனால், குடும்பச் சூழ்நிலையினால் வேறு வழியின்றி சில நாட்களுக்கு விடுப்பை எடுக்கும் பெண்கள் பணிக்குத் திரும்பிவரும்போது அவர்களின் வேலை பறிபோயிருக்கும் பரிதாபமான சூழல்தான் பல முன்னேறிய நாடுகளிலும் இருக்கிறது. இப்படிக் குடும்பத்தில் வன்முறைக்கு ஆளான பெண்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமின்றிப் பணியிடத்திலும் பெருத்த நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்.

அது மட்டுமில்லாமல், பெண்களை வன்முறைக்கு ஆளாக்கும் கணவர்களோ வேறு நெருங்கிய உறவினர்களோ அவர்கள் தங்களைவிட்டு விலகாமல் இருப்பதற்குப் பல்வேறு உத்திகளைக் கையாள்கிறார்கள்; அவற்றுள் முதன்மையானது அவர்கள் அலுவலக வேலையில் இருந்து நீக்கப்படவேண்டும் என்பதாகும். இதற்காகப் பணியிடத்திற்குச் சென்று ரகளை செய்வது, இரவு முழுவதும் தூங்கவிடாமல் சண்டைபோடுவது மூலம் பகல்நேரத்தில் வேலையில் கவனச் சிதறல் ஏற்படவைப்பது, வேலைக்குப் போகும் நேரத்தில் குழந்தைகளைப் பராமரிக்கும் ஆதரவு வட்டத்தைக் குலைப்பது போன்ற நெருக்கடிக்கு இந்தப் பெண்களை திட்டமிட்டு உட்படுத்துவதாகக் கூறுகிறார் ஜோன் மெயர் என்ற அமெரிக்கக் குடும்ப நல வழக்கறிஞர் . குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளவாவது தன் உதவியை இந்தப் பெண்கள் நாடவேண்டும் என்று குடும்ப வன்முறையாளர்கள் நினைக்கிறார்கள். தன்னைச் சார்ந்து இருக்கவேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தினால் இந்தப் பெண்கள் தங்களைவிட்டு விலகமாட்டார்கள் என்பதே இவர்களின் கணிப்பு.

கூடவே, பெரும்பாலான திருமணங்களிலும் ஆண்-பெண் உறவுகளிலும் உடல், உளவியல் கொடுமைகளோடு கூடவே பொருளாதார சிக்கல்களுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள் பெண்கள். இவர்கள் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் கணவர்களோ உறவினர்களோ சுருட்டிக்கொள்வதோடு இருவருக்கும் பொதுவான வங்கிக் கணக்கு இருந்தால் அதை முடக்கி விடுகிறார்கள் குடும்ப வன்முறையாளர்கள். இதனால் வன்முறை நிறைந்த உறவில் இருந்து விலகும்போது பெண்களின் கையில் எந்தச் செலவுக்கும் பணமின்றி நிர்க்கதியாக நிற்கிறார்கள். குழந்தைகளுக்கான அடுத்த வேளை உணவை வாங்கக் கையில் காசில்லை என்றால் வீட்டைவிட்டு வெளியேறும் முடிவு தவிடுபொடியாகிவிடும் அல்லவா. வன்முறை நிறைந்த மணவாழ்வைவிட்டு விலகுவதற்குப் பொருளாதாரத் தற்சார்பு வலுசேர்க்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆகவே இந்தப் பெண்கள் வேலையைத் தக்கவைத்துக் கொள்வது என்பது இன்றியமையாததாகிறது.

அடுத்ததாக, எப்பொழுது வேண்டுமானாலும் வேலை பறிபோகலாம் என்ற சூழ்நிலையில் இருக்கும் பெண்களுக்குக் குடும்ப உறவில் சிக்கல் இருப்பதைப் பற்றி மேலதிகாரியிடம் பேசத் தயக்கம் இருக்கும். பல நேரங்களில் தனக்கு ஏற்பட்ட இந்த நிலைமைக்கு தானே காரணம் என்ற குற்றவுணர்வு மேலோங்கி இருப்பதால் பணியிடத்தில் அவர்களுக்கு ஆதரவான விதிமுறைகள் இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சங்கடங்கள் குறித்து மேலதிகாரியிடம் பேசத் தயக்கம் இருக்கும். ஆனால், பாதிக்கப்படும் எல்லாப் பெண்களுக்குமான சட்டமாக ஒரு நாட்டின் அரசாங்கத்தால் இயற்றப்படும்போது தங்கள்மீது அக்கறை காட்டுவதோடு தாங்கள் படும் வலி உண்மையானது என்று மற்றவர்கள் நம்புகிறார்கள் என்ற உணர்வு நம்பிக்கையைத் துளிர்விடச் செய்கிறது; கூடவே வன்முறையாளர்களின் மனதிலும் சின்ன பயம் ஒன்று ஏற்படுகிறது.

ஆகவே இப்படியொரு விடுப்பைச் சட்டமாக இயற்றுவதால் மட்டுமே நடைமுறைப்படுத்தும் கட்டாயத்தை நிறுவனங்களுக்கும் அதே சமயத்தில், பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் சாதகமான பணிச் சூழலையும் ஏற்படுத்தித் தர முடியும். உலகிலேயே முதன்முதலில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பணியிலிருந்து சுமார் பத்து நாட்கள் விடுப்பு வழங்கும் சட்டத்தை 2004-ஆம் ஆண்டில் இயற்றியது பிலிப்பைன்ஸ் நாட்டுப் பாராளுமன்றம். அதற்கு அடுத்தபடியாக, குடும்ப வன்முறைக்கு ஆளான பெண்களுக்குக் குறைந்தபட்சம் பத்து நாட்கள் பணியிலிருந்து விடுப்பு வழங்கும் சட்டத்தை 2018-ஆம் ஆண்டில் இயற்றியது நியூசிலாந்து பாராளுமன்றம். 2018-ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற வாக்கெடுப்பில் 63க்கு 57 என சாதகமான வாக்குகள் பெற்று இந்தச் சட்டம் வெற்றிபெற்றது. இந்த இரு நாடுகளைப் போலவே, ஆஸ்திரேலியாவும் கனடா மற்றும் அமெரிக்காவில் சில மாகாணங்களும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணி விடுப்பு வழங்கும் சட்டத்தை இயற்றி இருக்கின்றன. விடுப்பு எடுத்தால் வேலை என்னாகும், மேலதிகாரியிடமும் மனித வள மேம்பாட்டு அலுவலரிடமும் என்ன காரணத்தைச் சொல்வது என மனஉளைச்சல்படாமல் வன்முறையிலிருந்து விலகிச் செல்லத் தேவையான அவகாசத்தைப் பெண்களுக்குக் கொடுக்கிறது இந்தப் பணி விடுப்புச் சட்டம்.

நியூசிலாந்தில், வன்முறை செய்யும் துணைவர்களிடமிருந்து விலகிச் சென்று தானும் குழந்தைகளும் பாதுகாப்பாகத் தங்கப் புதிய வசிப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கவும் காவல் துறை மற்றும் நீதிமன்றத்தின் உதவியைப் பெறவும் வன்முறை செய்யும் துணைவரைவிட்டு விலகும் வழக்கை நீதிமன்றத்தில் நடத்தவும் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த விடுப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தேவையென்றால் தகுந்த ஆதாரத்தோடு இன்னும் அதிகமான நாட்களுக்கும் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். வழக்கமாக எல்லாப் பணியாளர்களுக்கும் வழங்கப்படும் விடுப்பு நாட்களுடன் கூடுதலாக இந்தப் பத்து நாட்கள் வழங்கப்படுகின்றன. கூடவே இரண்டு மாத காலத்துக்குப் இவர்களின் பணிநேரத்தையும் மாற்றியமைத்துக் கொள்ள இந்தச் சட்டம் வசதியளிக்கிறது. 

பணி நேரத்தில் நெகிழ்வு என்பது ஏற்கனவே ஒரு சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் BPO-க்களிலும் நடைமுறையில் இருக்கும் தற்காலிக ஏற்பாடு. இது என்ன ஏற்பாடு என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்தால் இதன் முக்கியத்துவம் நமக்குப் புரியவரும். இந்த ஏற்பாட்டின்படி, பணியாளர்கள் அவர்கள் பங்குபெற வேண்டிய கூட்டங்களில் கலந்துகொள்வதோடு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளையும் குறித்த நேரத்தில் முடித்துவிட்டால் போதும், ஒரு நாளின் எந்த 8 அல்லது 9 மணி நேரம் வேண்டுமானாலும் அலுவலகத்துக்குச் சென்றோ வீட்டில் இருந்தபடியோ வேலை செய்யலாம். அதிலும் சில சமயம், கூட்டம் நடக்கும் நேரத்தில் வேறு அதிமுக்கியமான சொந்த அலுவல் இருக்கிறதென்றால் கூட்டத்தை வேறு நேரத்தில் நடத்துமாறும் தங்கள் குழுவினரிடம் கேட்டுக்கொள்ளலாம். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட்டம் நடைபெற்றே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தால் கூட்டத்தை வீடியோ பதிவு செய்துவிட்டால், அதைப் பார்த்துக் கூட்டத்தில் நடந்த விவாதத்தின் சாராம்சத்தைப் புரிந்துகொண்டு தனக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைக் குறித்த நேரத்தில் செய்துவிடுகிறேன் என்று கேட்டுக்கொள்ளலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் நெருக்கடியைச் சந்திக்கும் நேரத்தில் பணிநேரத்தில் நெகிழ்வு என்பது தனிப்பட்ட மற்றும் அலுவலகப் பணி இரண்டையும் சமாளிக்கப் பெருமளவில் உதவுகிறது. குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் கூடுதலான உதவியாக இருக்கும் ஏன், பெருங்கொடையாகக் கூடத் தோன்றும்  என்பதில் சந்தேகமில்லை.

நியூசிலாந்தின் இணையதளத்தைப் பார்க்கும்போது, குடும்ப வன்முறை பணி விடுப்பை நடைமுறைப்படுத்துவது குறித்துத் தெளிவான வரையறைகளை அந்த நாட்டு அரசு வகுத்திருக்கிறது என்பது தெரியவருகிறது. பணியிடங்களில் மனித வள மேம்பாட்டு அதிகாரிகளுக்குக் குடும்ப வன்முறை பற்றிய புரிதலும் நிறுவனங்கள் இந்தப் பிரிச்சனையை எதிர்கொள்ளும் பணியாளர்கள் அதைச் சமாளிக்க உதவும் விடுப்பு குறித்த கொள்கைகளையும் தெளிவாக வரையறுக்கவேண்டும் என்கிறது இந்தச் சட்டம். மேலதிகாரிகளிடமும் மனித வள மேம்பாட்டு சக பணியாளர்களிடமும் தன்னுடைய பிரிச்சினையை எடுத்துக்கூறவும் தேவையான ஆதரவையும் பெற பாதிக்கப்பட்டவர்கள் அவமானமும் குற்றவுணர்ச்சியும் இன்றி அவர்களை அணுகவும் ஏற்ற வகையில் சூழல் ஏற்படுத்தவேண்டும். குடும்ப வன்முறையை தனிப்பட்ட பிரச்சினை என்றோ சட்ட ஒழுங்குப் பிரச்சினை என்றோ ஒதுக்காமல் பாதிக்கப்பட்டவருக்கு உதவும் கொள்கைகளை நிறுவனங்கள் வகுக்கவேண்டும்.

நம் நாட்டில், பெண்கள் சொத்துரிமைச் சட்டம், இந்து வாரிசுரிமைச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், இந்து விதவைகள் மறுமணச் சட்டம், உடன்கட்டை ஏறுவதைத் தடுக்கும் சட்டம், குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டம், மகப்பேறு நலச் சட்டம் என்று பெண்களின் நலனைக் காக்கவும் உரிமையைப் பேணவும் பல சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் இந்தச் சட்டம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? இந்தியா போன்ற பெரிய நாட்டில் குடும்ப வன்முறைக்கு ஆளானவர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் அதற்குச் சட்ட ரீதியான தீர்வைத் தாங்கள் தேடவில்லை என்றும் கூறியுள்ளனர். சொல்லப்போனால் யாரிடமும் இதுகுறித்துப் பேசக்கூட இல்லை என்பது தெரியவருகிறது. அதையும் மீறி குடும்பத்தாரிடமும் நெருங்கிய உறவுகளிடமும் இதுகுறித்துப் பேசினாலும் குடும்பப் பிரச்சினையைப் பேசித்தீர்த்துக் கொள்ளலாம் என்றும் சட்ட நடவடிக்கை எடுத்தால் வெளியே தெரிந்து குடும்ப மானம் போய்விடும் என்ற அவமானவுணர்வு தான் மேலிடுகிறது என்றும் தெரிய வருகிறது. இதுபோன்ற தனிநபரின் எண்ணம் சார்ந்த மனத் தடைகளையும் சமுதாயத் தடைகளையும் ஓரளவுக்காவது களைவதற்குக் குடும்ப வன்முறையைச் சமாளிக்கப் பணியிடத்தில் கூடுதல் விடுப்பு போன்ற சட்டங்கள் பயன்படுகின்றன. தான் பணிபுரியும் இடத்தில் கிடைக்கும் இந்த சௌகரியமானது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எவ்வளவு பெரிய தைரியத்தை ஊட்டும்.

பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என்று விரல்விட்டு எண்ணக்கூடிய நாடுகளில் அரசாங்கங்கள் தற்போது கொண்டுவந்திருக்கும் குடும்ப வன்முறை பணி விடுப்புச் சட்டம் மட்டுமின்றி அதுபோன்ற மனிதநேயம்மிக்க, பெண்களைப் பரிவுடன் அணுகும் முன்னெடுப்புகளும் சட்டங்களும் பரவலாக எல்லா நாடுகளிலும் கொண்டுவரப்பட வேண்டும். அதற்கு, உண்மையான அதிகாரம் பெண்களிடம் இருக்கவேண்டும். அப்போதுதான் பெண்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயல்படும் அரசுகள் அமையும், ஒட்டுமொத்த மானுடத்தையும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும்.

நிச்சலனத்திற்கான தவம் – சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரி நாவலை முன்வைத்து.

0

ப்ளூமராங் பக்கங்கள் – 01

ஜீரோ டிகிரியை எப்படி மதிப்பிடுவது? 1998 ஆம் ஆண்டு இந்நாவல் முதல் பதிப்பு கண்டுள்ளது. ஏறத்தாழ இருபத்தியிரண்டு வருடங்களுக்கு பிறகு அதாவது இந்நாவலுக்கு மூன்றாம் தலைமுறை வாசகனாக இதை நான் அணுகுகிறேன்.

சாருவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எனக்கு  எதுவுமே தெரியாது. பெரும்பாலான எழுத்தாளர்களின் வாழ்வு குறித்து நமக்கு என்ன தெரியும்? வாசித்து முடித்தபிறகு சிலரைப் பற்றி தேடி ஆர்வத்துடன் தெரிந்து கொள்வோம். மேலும் இலக்கிய பிரதியில் எழுத்தாளரின் வாழ்க்கை அந்தரங்கத்தை தேடுவது வீண் வேலை. எழுத்தாளர் இப்படிப்பட்டவர் என கண்டடைய இலக்கியப்பிரதி வாசிக்கப்படுவதில்லை. மகாமுனியோ, குள்ள சித்தனோ, உத்தம தமிழ் எழுத்தாளனோ, ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளையோ முனியாண்டியோ அவந்திகாவோ பிரதிக்கு வெளியே யாரைக் குறிக்கிறது என்பது எனக்கு ஒரு மேலதிக ஆர்வமாக மட்டுமே இருக்க முடியும். இந்நாவலை மதிப்பிடவும் ஆழ்ந்து புரிந்துகொள்ளவும் அவை உதவப்போவதில்லை. எழுத்தாளரின் புனைவற்ற எழுத்துக்கள் உதவும். அவற்றில் எழுத்தாளரின் அக்கறைகள், கேள்விகள், ஆர்வங்கள், ஆளுமை வெளிப்படும். அவற்றின் நீட்சியாகவோ அல்லது அவற்றை மறுத்தோ உரையாடும் களம் என புனைவை புரிந்துகொள்ள முடியும். கலைஞன் கட்டற்றவன். கலைஞனுக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவு என்ன? இதுவே சாருவின் மிக முக்கியமான கேள்வி என புரிந்து கொள்கிறேன். பழுப்பு நிற பக்கங்கள் போன்ற ஒன்றை எழுத இதுவே அவரை தூண்டியிருக்க வேண்டும். 

ஜீரோ டிகிரியை எழுத்தாளரின் ஆளுமையை துண்டித்துவிட்டு பிரதியாக மட்டும் அணுக முடியுமா? எந்த ஒரு பிரதியும் எழுத்தாளரின் ஆளுமையின் தொடர்ச்சியும் பிறழ்வும்தான். பாரதியின் கவிதைகள் பாரதி எனும் ஆளுமையுடன் இணையும்போதே பெரும் எழுச்சியை அளிக்கவல்லவையாக உள்ளன. ஜெயகாந்தன் எனும் ஆளுமையுடன் சேர்த்தே அவருடைய கதைகளும் பொருள் கொள்ளப்படுகின்றன. எழுத்தாளர் ஒரு கட்டமைப்பாக உருவாகும்போது அவர் வழி வெளியாகும் படைப்புக்கு அவருடைய ஆளுமையுடன் சேர்த்தே மதிபபிடுவது வழக்கம். அதிலும் குறிப்பாக கலக எழுத்தாளர்கள், பித்து நிலையை வெளிப்படுத்துபவர்கள், கட்டற்ற எழுத்துமுறை கொண்டவர்கள்-  ஆன்மீக ஞானி- இது போன்ற  ஆளுமைகளை முன்வைப்பவர்களின் ஆக்கங்கள் அதன் நீட்சியாகவே மதிப்பிடப்படும். சொல்லப்போனால் அவர்களுடைய புனைவு  எழுத்தாளரின்  வாழ்க்கைமுறை அறியாத வாசகர்களால் அவர்கள் வாசிக்கப்படும்போது எப்படி பொருள் கொள்ளப்படுவார்கள்? சாரு எனும் ஆளுமையை இயன்றவரை இப்பிரதியை மதிப்பிட நான் கணக்கில் கொள்வதை தவிர்க்கிறேன். அதேப்போல் பின் நவீனத்துவத்தின் உதாரண நூல் என கோட்பாட்டு ரீதியாக என இந்நாவல் குறித்து சொல்லப்படுவது உண்டு. பின் நவீனத்துவ வரையறையை விளக்குவதும் என் நோக்கம் அல்ல. ஆகவே அழகியல் விமர்சகனாக, ரசனை மதிப்பீட்டை கொண்டே இந்த நாவலை அணுகுகிறேன்.

ஜீரோ டிகிரி தமிழ் இலக்கிய வரலாற்றில் இரு தளங்களில் ஒரு முன்னோடி படைப்பு. என்றே கருதுகிறேன். மொழியிலும் வடிவத்திலும் பெரும் உடைவை ஜீரோ டிகிரி ஏற்படுத்தி இருக்கிறது. அகவயமான இறுகிய மொழியிலிருந்து முற்றிலும் இலகுவான ஆற்றோட்டமாக ஒழுகிசெல்லும் துள்ளல் நடை. ஜீரோ டிகிரியின் முதன்மை பலம் என்பது அது அளிக்கும் வாசிப்பின்பம்.  பொதுவாகவே வாசிப்பின்பம் அளிக்கும் ஒன்று நவீன இலக்கியமாக கருதப்படக் கூடாது என்றொரு வரையறை உண்டு. இது சிற்றிதழ் வெகுஜன இதழ் என இருவேறு துருவங்களாக இலக்கிய ஊடகம் பிரிந்து செயல்பட்டபோது தனது தனித்துவத்தை பேணுவதற்காக எடுத்துக்கொண்ட நிலைப்பாடு என்றவகையில் சரி.  இது ஒரு கறாரான அளவுகோலாக ஆகும்போது படைப்பூக்கத்திற்கே எதிரானதாகவும் ஆகிவிடுகிறது. . 

இரண்டாயிரத்தின் மத்தியிலிருந்து நவீன இலக்கியத்தின் இணைய யுகம் தொடங்குகிறது.  சிற்றிதழ் வெகுஜன இதழ் எனும் ஊடக பாகுபாடு பொருளற்று போகிறது. பெரும் ஜனநாயகமயமாக்கம் நிகழ்கிறது. பல புதிய வாசகர்கள் புதிய எழுத்தாளர்கள் உருவாகி எழும்போது அவர்களுக்கான முதன்மை ஆதர்சங்களில் ஒருவராக சாரு ‘ஜீரோ டிகிரி’ வழியாக ஒரு பாதையை வகுத்து அளிக்கிறார். இலக்கிய எழுத்தின் வரையறையை நெகிழ்த்தி பல்வேறு சாத்தியக்கூறுகளை நிகழ்த்திக் காட்டியது அவருடைய முக்கியமான பங்களிப்பு. ஒருதலைமுறை எழுத்தாளர்கள் உருவாக்கத்தில் ஜீரோ டிகிரி முக்கிய பங்களிப்பு ஆற்றியுள்ளது. மற்றொரு கோணத்தில், இது சில சிக்கல்களையும் உருவாக்குகிறது.  மொழி நடை மட்டுமே இலக்கியம் என நம்பும் ஒருதரப்பு  உள்ளீடற்ற கதைகளை உருவாக்குகிறார்கள்  எனச்சொல்லப்படுவது  ஒரு முக்கியமான விமர்சனம்தான். ஆகவே இப்போது எழுதப்படும் உள்ளீடற்ற  எழுத்துக்களுக்கும், இதற்கு முன்னர் வெகுஜன பரப்பில் எழுதப்பட்டவற்றுக்கும் சாருவின் எழுத்துக்களுக்கும் உள்ள வேற்றுமை என்ன?  சாரு நவீன இலக்கியவாதி ஆகவே அவர் எழுதுவது நவீன இலக்கியம் என்றொரு பதிலை சொல்ல முடியாது. இரண்டு பதில்களை சொல்லலாம். சாருவின் கதைகளில் வெளிப்படும் புனைவு நேர்மை மற்றும் துணிவு. புனைவு நேர்மை என்றால் என்ன? வாசகருக்கும் எழுத்தாளருக்குமான நம்பிக்கை அடிப்படையிலான ஒப்பந்தம் என இதை சொல்லலாம். இதை புறவயமாக வகுத்துக்கூற எனக்கு தெரியவில்லை. ஆனால் ஜீரோ டிகிரி நாவலில் இருந்து ஒரு இடத்தை சுட்ட முடியும். முனியாண்டியின் ‘டெலிபோன்’ நாவலின் சரச உரையாடல்கள் ஒருபக்கம் உள்ளன. இதில் மறுபக்கம் முனியாண்டியை அறிந்துகொண்ட வாசுகி அவனுடன் அதே விளையாட்டை இயைந்து விளையாடுகிறாள். அவளுடைய கூற்றாக வரும் ஒரு அத்தியாயம் வழியாக மொத்த நாவலும் தலைகீழாக்கம் பெறுகிறது. ‘உண்மையில் பார்த்தால் எந்தச் சமூக மதிப்பீடுகளை அவன் மறுக்கிறானோ அதே சமூக மதிப்பீடுகளைத்தான் அவன் ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறான்… அவன் பேசும் எதிர்க் கலாச்சாரத்தையும் கலாச்சாரமானது உப கலாச்சாரமாக உள்வாங்கிக்கொண்டுவிடவில்லையா. இது ஏன் அவனுக்கு தெரியவில்லை.’ என கேட்கிறாள் வாசுகி. பாவனைகளை கிழித்து எறியும் இந்தக் கூர்மையையே மற்றொரு உதாரணத்தை சுட்டலாம் என்றால் தாயுமானவன் விசாரணையில் தமிழ்செல்வனுடன் பங்கேற்கும் முனியாண்டியின் பகுதி. புனைந்துகொள்ளும் ஆளுமையை தலைகீழாக்கி கேள்விக்குட்படுத்துவது. இந்தத் தன்மை சாருவை அவருடைய சமகால, அல்லது அவருக்கு முற்கால வெகுஜன எழுத்துக்களிடம் இருந்தும், உள்ளீடற்ற எழுத்துக்களிடம் இருந்தும் தனித்து நிறுத்துபவை. 

ஜீரோ டிகிரியின் வடிவம் மற்றுமொரு மிக முக்கியமான பங்களிப்பு. பொதுவாக வடிவ சோதனை எழுத்துக்களை நோக்கி, பெரும்போக்கு யதார்த்தவாத வெளிப்பாடு கொண்ட தமிழ் இலக்கிய சூழலில் ‘ஆனால், ஏன்? (but why?)’ என்றொரு கேள்வி மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது. இதை நேர்கோட்டில் சொல்லியிருக்கலாமே. தனித்தனியாக சொல்லியிருக்கலாமே. தனித்தனி சிறுகதைகளாக எழுதி இருக்கலாமே. இத்தனை விதமான மொழிபுகள் தேவையா? இந்த பகுதியை கட்டுரையாக்கி இருக்கலாமே. இப்படி பல ‘லாமே’க்கள். உண்மையில் இந்த ‘but, why?’ கேள்விக்கு விடையே இல்லை. செய்திருக்கலாம் தான்.  ஒரேயொரு பதில் கேள்வியை மட்டுமே but, why? க்கு பதிலாக படைப்பாளி திரும்பி கேட்க முடியும். ‘why not?” என் கூடாது?  

இப்போது இங்கிருந்து வேறொரு கேள்விக்கு செல்லலாம். படைப்பின் வடிவம் சார்ந்த நம்பிக்கை எழுத்தாளருக்கு எங்கிருந்து உருபெறுகிறது? எழுத்தாளர் எழுத்திற்கு அந்தரங்கமாக என்ன நோக்கத்தை கற்பிக்கிறார் என்பதில் இருந்தே. நோக்கமற்ற களியாட்டின் வெளிப்பாடே தன் எழுத்து என ஒருவர் நம்புவார் எனில், வாழ்வையும், பிரபஞ்சத்தையும், அதன் இயக்கத்தையும் அப்படியாகவே காண்கிறார் எனில், அதுவே அவருடைய வாழ்க்கை பார்வையாக இருக்கும் எனில், அவருடைய படைப்பின் வடிவ வெளிப்பாடும் இந்த நம்பிக்கையையே பிரதிபலிக்கும். இந்த ஓர்மை ஜீரோ டிகிரியில் கூடி வருகிறது. இதற்கு முரணாக படைப்பிற்கு சில நோக்கங்கள், இலக்குகள் இருக்கும்போது பிற நோக்கங்களுடன் முரண்கொள்ள கூடும். இவற்றில் ஒரு நோக்கம் சிறந்தது அல்லது இழிந்தது என சொல்வதற்கில்லை.

 ஒரு பகவத் கீதை வரியிலிருந்து   ஜீரோ டிகிரி தொடங்குகிறது. ‘புத்தி, ஞானம், அறிவு, சகிப்புத்தன்மை, சத்யம், உணர்வுகளையும் மனத்தையும் கட்டுப்படுத்துதல், சுகம், துக்கம், பரிணாமம், அழிவு, பயம், பயமின்மை, அஹிம்சை, சமத்துவம், திருப்தி, துறவு, தானம், புகழ்ச்சி, இகழ்ச்சி- உயிர்களின் இப்படியான பல்வேறு குணங்களும் என்னிடமிருந்தே தோன்றுகின்றன.’ இந்த வரிகளின் வழியாகவே நாவலின் கட்டற்ற வடிவம் கோடிட்டு காட்டப்படுகிறது. நன்மையையும் –தீமையும், மேன்மையும் கீழ்மையும் குரூரமும் பேரன்பும் என எதிரெதிர் துருவங்கள் ஒன்றின் வெவ்வேறு முகங்களாகின்றன. ஒரு பெண்டுலத்தின் விசையை போல். சமநிலையை நோக்கி வர அது மறுபக்கம் செல்கிறது. இப்படி ஆடி ஆடி அசைவின்மையில் அடங்குகிறது. இந்த ஊசலாட்டம் சூனியத்தில் முடிவதே இந்நாவல். சுழியத்தில் உருவாகி முரண்பட்டு சுழியத்தில் கரைத்து கொள்கின்றன. ஜீரோ டிகிரி என்பது முன்னூற்றி அறுபது டிகிரி சுழன்ற பின் வருவது. அதுவே சுழற்சியின் தொடக்கமும் கூட. மற்றொரு கோணத்தில் குளிர்ந்தால் திடப்பொருளாகவும் இளகினால் நீராகவும் மாறும் இரண்டுக்கும் இடைப்பட்ட புள்ளி என்பதே ஜீரோ டிகிரி. யாவும் சங்கமிக்கும், யாவும் பிரியும் புள்ளி. சுழியம் எல்லாவற்றையும் பிறப்பிக்கும் யோனியாகவும் நாவலில் உருவகப்படுத்தப்படுகிறது. ‘அதே பொருள் சூன்யமாகவும் சிருஷ்டியின் குறியீடாகவும் இருப்பது எப்படி?’ என்றொரு வரி நாவலிலேயே வருகிறது.  பிரபஞ்ச சூனியம் என்றால் என்ன என்றொரு கேள்விக்கு அளிக்கப்படும் பதிலை இங்கே பொருத்திக்கொள்ள முடியும்.    

பறவைகளை தேடி செல்லும் பறவையியலாளன் அரிய சைபீரிய பறவையையே உண்கிறான். முனியாண்டி எழுதும் டெலிபோன் நாவலின் பகுதிகள் என விவரிக்கப்படும் சரச உரையாடல்கள் அவந்திகாவின் வாழ்க்கை கதையுடன் சமன் ஆகிறது. நாவலின் தொடக்க பகுதிகளில் தாயுமானவன் எனும் காவல் அதிகாரியின் விதவிதமான இம்சை முறைகளும், டூட்சி ஹூத்தூ வன்முறை வரலாறும்,ஃபக்ருன்னிஷா நீனா ஷிரின் ஆகியோரின் வன்முறையும் அவலமும் நிறைந்த வாழ்க்கை கதைகள் நாவலின் இறுதி பகுதியில் இறந்து பிறந்த மகளின் பொருட்டு எழுதப்படும் உணர்வெழுச்சி கொண்ட கவிதை வரிகளில் சமன் அடைகின்றன. பெருவெடிப்பு, நட்சத்திர மண்டலங்கள் பற்றிய விவரணைகள் கூட முற்பகுதியின் குரூரங்களுக்கு எதிர்வினையான அத்தியாயங்கள் தான். ஜெனீக்கு எழுதும் கடிதங்களில் ஓரிடத்தில் ‘மொத்த மனித வர்க்கமே காதலையும் அன்பையும் புறக்கணித்துவிட்டு பேரழிவில் ஈடுப்பட்டிருப்பதாக தோன்றுகிறது.’ என்றொரு வரி வருகிறது. இந்த ஒருவருக்கு சாட்சியமே நாவலின் முந்தைய பகுதிகள். முனியாண்டி ஒரு பெண்ணை கொன்று வீசுகிறான், அவந்திகாவின் அண்ணன் சாலை விபத்தில் கூழாகி கிடக்கும் மனைவியின் காதிலிருந்து ஜிமிக்கியை வெட்டி எடுக்கிறான்.  

சாருவின் மொழியில் சில அபாரமான இருண்ட நகைச்சுவைகள், கிண்டல்கள் தெறிக்கின்றன. குறிப்பாக நாவலின் தொடக்க பகுதிகளில் இவை நிறைய உள்ளன. ஆர்த்தி, அவந்திகா, ஜெனிசிஸ் கடிதங்களுக்கு வரும்போது முற்பகுதியின் துடுக்குத்தனங்களும் சமன் செய்யப்படுகின்றன. ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளை அத்தியாயம், சொர்ணமுத்து பிள்ளை, wendy, விவசாயி – கன்றுகுட்டி கதை. போன்ற பாலியல் துணுக்குகள், மொழிபெயர்ப்பு ஆசான் கோட்டிக்குப்பனை நினைவுகூரும் பகுதி, எகிப்தாலங்கானத்து மண்கொண்ட லெமூரியன்- ஆப்கானத்துக் கல்வென்ற வேஞ்சிணன் கதைகளை இட்டுக்கட்டி சொல்லும் பகுதி, போன்றவை சட்டென நினைவுக்கு வருகின்றன. செத்த மூளை எழுதிய விமர்சனத்தில் ஒருவரி ‘குஷ்ட ரோகிகளையும் விபச்சாரிகளையும் கண்டு மூக்கைச் சிந்தி சிந்தி அந்த மூக்குச் சளியையே முற்போக்கு எழுத்தாக வெளிக்காட்டி பிரபல்யம் பெற்றுவரும் முனியாண்டி’. இதன் தொடர்ச்சியாக சாலிக்கிராமத்தில் ஒரு வேசியிடம் ந. பிச்சமூர்த்தி படித்திருக்கிறாயா  என கேட்டு அவள் முனியாண்டியின் கைப்பிரதிகள் மீது மூத்திரம் பெய்கிற இடமும் கூட அவருடைய துடுக்குத்தனம் மிளிரும் இடம்தான். பிளாக் மிர்ரரின் முதல் பகுதியில் ஆங்கிலேய பிரதமரை பொதுவெளியில் பன்றியை புணர சொல்லி மிரட்டும் ஒரு கதை வரும். இந்நாவலில் காவல்துறை அதிகாரி தாயுமானவன் அவனுடைய வதையின் ஒருபகுதியாக பன்றியை புணர சொல்லிவிட்டு கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொல்லுதடி என அதைக் கட்டிப்பிடித்து பாட சொல்வது இருண்ட நகைச்சுவையின் உச்சம்.  

நாவலுக்குள் சில விமர்சனங்களுக்கும் பதில் சொல்லப்படுகிறது. அவையும் துடுக்குத்தனம் நிறைந்தவைதான். ஒருவகையில் இந்த இயல்பே சாருவின் எழுத்திற்கு ஒரு தனித்த நிறத்தையும் குரலையும் அளிக்கிறது. ‘உங்கள் கதைகள் ஆபாசமாக இருப்பதாக சொல்லப்படும் குற்றசாட்டுக்கு உங்கள் பதில்- மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியத்தைப் பார்த்த ஒருவன் சொன்னான்னாம்..ஏன்யா இவ்வளவு வரையத் தெரிந்த அந்த ஆளுக்கு கோமணமோ ஜட்டியோ வரையத் தெரியாம போச்சு. புடுக்கெல்லாம் தெரியுதே.’  வேரற்ற எழுத்து என்று சொல்லப்படுவதற்கும் நாவல் பதில் அளிக்கிறது. தான்சானியாவில் ஆதிமனிதனின் எச்சங்கள் கிடைத்துள்ளது. உண்மையில் வேர் ஆராய்ச்சி செய்பவர் இங்குதான் வரவேண்டும் என்றொரு வாதம் வைக்கப்படுகிறது. மற்றொரு இடத்தில் கடவுளற்ற உலகில் வாழ்வதால் கதாப்பாத்திரங்களை உருவாக்க முடியவில்லை என்று சொல்கிறது.

சாமுண்டியின் வயிற்றில் பெரிய தேள் இருப்பதை காணும்போது கோடிக்கணக்கான பெண்களின் வரலாற்றை சொல்வது போல் இருக்கிறது என எழுதுகிறார். ஜீரோ டிகிரி ஒருவகையில் ஃபக்ருன்னிஷா, நீனா, ஆர்த்தி, அவந்திகா, ஜெனிசிஸ் என பெண்களின் கதை என சொல்லலாம். நாவலின் கதை பகுதியை உருவாக்குபவர்கள் இந்த கதை மாந்தர்கள்தான். ஆர்த்தி- அவந்திகா கதை கிட்டத்தட்ட இமையம், பூமணி கதைகளின் பாணியில் முழுக்க யதார்த்த தளத்தில் சொல்லப்படுகிறது. நாவலின் பலவீனமான பகுதியும் இதுதான் எனத் தோன்றியது. முக்கியகாரணம் யதார்த்த சித்தரிப்புகளில் உள்ள ஒற்றைப்படைத்தன்மை, மிகைகூறுகள் ஏதோ ஒருவகையில் கதையின் அமைப்பை குலைக்கிறது. எனினும் கதைகூறும் தன்மையில் உள்ள இந்த மிகையும் அது உருவாக்கும் குலைவும் நாவல் எடுத்துக்கொண்ட அழகியலுக்கு நியாயம் செய்வதாக உள்ளது.

கசர்மீனியர் கார்மேனியர் கதை யூத நாஜி தொடர்பை நினைவுறுத்தின. ஒரு செய்தி இதழில் வடிவத்தில் உள்ள இவ்வத்தியாயம் நடிகை வளர்க்கும் பன்றி பற்றிய செய்தியும் நக்சல் போராளிகள் கொல்லப்படும் அரச வன்முறையின் சித்திரமும் இணையான முக்கியத்துவடன் வெளியிடப்படுகிறது. பின்னர் மற்றொரு அத்தியாயத்தில் இரண்டு செய்திகளும் ஊடுகலந்து வருகின்றன. முக்கியமான சமூக விமர்சனம். முந்தைய அத்தியாயம் ஊடகம் இரண்டையும் சமமான நுகர்வு பொருளாக பாவித்து வாசகனுக்கு பரிமாறுவதை குறிக்கிறது. இது காரணம் எனில் காரியம் என்ன? நுகர்பவன் எந்தவொரு செய்தியையும் ஆழ அறிய முடியாத, யாவற்றையும் அள்ளி புசிப்பவனாக இருக்கிறான். இந்த இரண்டு பார்வை கோணங்கள் வழியாக இவ்விரு அத்தியாயங்களையும் புரிந்துகொள்ள முடியும்.

நாவலின் சிக்கல்கள் என இதிலுள்ள மிகையான வன்முறை, மிகையான நெகிழ்ச்சி போன்றவற்றை சுட்டலாம் என்றால் நாவலின் வடிவம் அதற்குரிய நியாயத்தை வழங்குகிறது. வெறும் பெயருதிர்ப்புகள் என்று சொன்னால் அதுவும் ஒரு புனைவு உத்தியாக கையாளப்பட்டுள்ளது என்பதை விளங்கிக்கொள்ள முடியும். முனியாண்டி- மிஸ்ரா- சூரியா- என கதைசொல்லிகள், கதை மாந்தர்கள் வரையறுக்கப் படவில்லை, கதை மாந்தர்களாக நம்முள் வளரவில்லை என்றால் நாவல் அத்தகைய கலைவையே உத்தேசிக்கிறது என்பதே சரியான பதில். ஆக நாவலின் மீதான விமர்சனம் என்பது பின் நவீனத்துவ அழகியலின் மீதான விமர்சனமாகவே இருக்க முடியும். பெரும்பாலும் அவ்வழகியல் வாசகருக்கு பரிச்சயமில்லை என்பதால் எழும் விமர்சனங்களும் கூட. நாவலின் எல்லை என்பதும் பின் நவீனத்துவ அழகியலின் எல்லை தான். அவை தனியே விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை. இந்த நாவலை பற்றிய வாசிப்பு கட்டுரை எனும் வரம்பிற்குள் நிறுத்த முடியாதது.  

நாவலில் ஆங்காங்கு பல தொன்மக்கதைகள், நாட்டார் சாயல் கண்ட கதைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சாருவின் மொழியில் அவற்றை வாசிக்க சுகமாக உள்ளது. கும்பகர்ணனின் கதை, வால்மீகியின் கதை,  அசுவம்-விருச்சிக கதை,  சீயஸ் மனிதர்களை பாதியாக ஆக்கி தொப்புழில் முடிச்சிட்ட கதை  கல்யாண வீட்டிற்கு செல்லும் யமன் அங்கே எலியை கண்டு குழம்புவதும், அதை கவனித்த எலி ஒரு பருந்தின் உதவியுடன் தொலைதூரத்திற்கு தப்பிச் செல்வதும், அங்கு யமன் அதன் உயிரை எடுப்பதும் கச்சிதமான நாட்டுபுற கதையின் வடிவம். முனியாண்டியின் பாத்திர வார்ப்பே ஏறத்தாழ ஒரு சுடலைமாடனை போல ஒரு நாட்டார் வார்ப்பு கொண்டதுதான் என எனக்கு தோன்றுகிறது. அங்கே எல்லா மிகை கூறுகளும் சாகசங்களும் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான். அவனுடைய பாலியல் கூற்றுகள், வீர சாகசங்கள், பயண சாகசங்கள் என இவை யாவும் துடியான மாடனுக்கு சொல்லப்படும் நாட்டார் புராண கதை மொழிபை கொண்டுள்ளது. நூற்றாண்டுகாலத்தனிமை போன்ற நாவலில் இருந்து ஒரு கதை சொல்லப்படுகிறது, வெவ்வேறு எழுத்தாளர்களின் மேற்கோள்கள், ஆங்கில பத்திகள் என கலவையான வடிவம் நாவலுக்கு வலுசேர்க்கிறது. திலோத்தமைக்கு பெயர் விளக்கம் அளிக்கும் இடமும் அதை  ஜெனீயுடன் பொருத்தி பார்க்கும் இடமும் மிக முக்கியமானது. திலோத்தமையை போல் உன்னதங்களால் உருவாக்கப்பட்டவளே ஜெனீயும். எனக்கு தாஸ்தாவெஸ்கியின் ஒரு மேற்கோள் நினைவுக்கு வந்தது. ‘மானுடகுலத்தை மொத்தமாக நேசிக்க நேசிக்க தனிமனிதனின் மீதான நேசம் குறைந்தபடி இருக்கிறது.’ இந்த முரண் கலைஞர்களின், தீர்க்கதரிசிகளின், மாபெரும் மக்கள் தலைவர்களின் முரண். இந்த முரணை புரிந்துகொள்வதே ஜீரோ டிகிரியை புரிந்துகொள்வதும் கூட. ஜெனீ ஒரு உண்மையான ஒரு மனிதராக இருந்திருந்தால் அவளால் இத்தனை அன்பை தாங்கிக்கொள்ள முடியுமா?  ஜீரோ டிகிரியை கடவுளற்ற நாவல் என சொல்லலாம் ஆனால் தத்துவமற்ற  நாவல் அல்ல.  

ஒருவகையில் இந்த கவிதை அந்த தத்துவ கேள்வியின் சாரத்தை வெளிப்படுத்துவது என சொல்லலாம்.

இந்த நட்சத்திரம் 
இந்தக் கணத்தில் இருக்கிறதா 
இல்லையா 
இது இறந்து எத்தனை காலமிருக்கும் 
இருப்பதும் இல்லாததுமான 
முரணில் 
நீ இருக்கிறாயா 
புனைவுச் சுடரின் 
நிஜ நிழலில் 
சிக்கித் தவிக்கும் 
எனதுயிரின் துடிப்பைக் 
கேட்கிறாயா 

-ப்ளூமராங்

எம்பாவாய்

0

அகரமுதல்வன்

இளமஞ்சள் நிறத்தில் சீலை உடுத்தியிருந்தாள். அணையாத காதலின் வாசனை அவளுடலில் இருந்து உபரியாய் கசிந்தது. மெருகேறிய பிருஸ்டத்தின் சிறியதான அசைவு குகை ஓவியம் வண்ணமாய் நகர்வதைப் போலிருந்தது. விரல்கள் ரகசிய வீரர்களைப் போல கூந்தலுக்குள் ஊடுருவி ஈரத்தை உலர்த்துகின்றன. மது சுரக்கும் கூந்தல் அவளுடையது. அதிரகசியமாக வடிவு தழுவும் இந்தப்பெண்ணின் பேர் என்ன என்று அறிய ஆவல் தோன்றிற்று. மூச்சின் குமிழ்களில் காமம் கொதித்தது. களிப்பின் ஜன்னலில் இருந்து ஏகாந்தம் வேகம் கொண்டிருந்தது. இவனால் தாமதிக்கமுடியவில்லை. எழுந்து அவளைப் பின்தொடர்ந்து நடந்தான். அவள் அமர்ந்த கதிரைக்கு பக்கத்தில் இருந்தான். மணவறையில் ஐயர் மந்திரங்களை ஓதிக்கொண்டிருக்கிறார். மணமக்கள் மாலை மாற்றுகின்றனர். திருமணத்திற்கு வந்தவர்கள் அந்த அரங்கில் நிறைந்திருந்தனர். இவன் எந்தத் தயக்கமும் இல்லாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். இடையிடையே தன்னை யாரேனும் பார்க்கிறார்களா என்று இயல்புக்கு திரும்புவான். உடலினுள்ளே பிசுபிசுக்கும் அரூபத்திற்குள் நீலக்கடல் எழுந்தடித்தது. அவள் எழுந்து சென்று நடக்கையில் அவளுக்குப் பின்னால் ஓடிப்போனான். அப்போது அவளை நேருக்கு நேராக பார்த்துக் கதைக்கும் வாய்ப்புக்கிடைத்தது. சாப்பிட்டுக்கொண்டே மெதுவாக கதைக்கத் தொடங்கினான். அவள் இவனின் கண்களில் தன்னுடலை  பார்த்தபடியிருந்தாள். அவளுக்குள் வடிவின் மமதை மூங்கில் காட்டைப் போல உயர்ந்து அசைந்தது. அவளுடைய பேர் டிலானி என்றும் இவனுடைய பேர் ராகுலன் என்றும் இருவரும் தெரிந்துகொண்டு திருமண நிகழ்வில் இருந்து வெளிக்கிட்டனர். டிலானியின் போன் நம்பரைக் கேட்டதும் கொடுத்தாள். இனி எப்போது சந்திக்கலாம் என்று கேட்டதும்,நேரம் கிடைக்கேக்க எப்பவெண்டாலும் சந்திக்கலாம் என்றாள்.

வளசரவாக்கத்தில் அகதிகளாக வசித்து வரும் நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்களில் ராகுலனும் ஒருவன். மூன்று சகோதரர்கள் ஐரோப்பாவில் இருக்கின்றனர். ராகுலனும் வெளிநாட்டிற்கு செல்வதற்காக காத்திருந்தான். மூன்று சகோதரர்களும் மாதச்செலவிற்கு அனுப்பிவைக்கும் பணம் அவனுடைய சந்தோசத்திற்கு போதுமானதாயிருந்தது. அவ்வளவு சொகுசான வாழ்க்கையை ஒரு அகதி வாழக்கூடுமென விதியால்கூட நினைத்துப்பார்க்க முடியாது. அத்தனை சொகுசுக்கும் பரிச்சயப்பட்டவன். யாரேனும் நால்வர் கூடிநின்று கதைக்கும் போது போராட்டம் பற்றி உரையாடல் தொடங்கினால் அந்தக் கூட்டத்திலிருந்து விடைபெற்றுவிடுவான். ராகுலனுக்கு மட்டுமல்ல அவனின் குடும்பமும் அப்படித்தான். போராட்டத்தை சவக்கிடங்கு உற்பத்தி செய்யும் வேலை என்று சொல்லுகிறவர்கள். மூன்று சகோதரர்களும் வெளிநாட்டிற்கு போனதும் ராகுலன் தாய் தந்தையோடு கொழும்பில் வசித்துவந்தான்.

ராகுலனுக்கு இலங்கைத்தீவே பிடிப்பில்லாமல் போயிற்று. இப்போதும் அவனுக்குள் ஒரு தனிமை இருட்டிக்கிடக்கிறது. அவன் தனிமையின் துருவுக்குள் தன்னைப் புதைத்து திமிறுகையில் மனம் ஒரு பெண்ணை அணைத்துக்கொள்ள விரும்புகிறது. பிசுபிசுப்பான குற்றமற்ற ஈரத்தை அவன் தனக்கருகில் வைத்துக்கொள்ள ஏங்கினான். கள்ளப்பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டிற்கு சென்று இறங்கும் வரை ஒரு மிருதுவான வெப்பத்தை பரவவிடும் குளிர்மையை கொப்பளிக்கும் பெண்ணுடலை ராகுலன் தேடிக்கொண்டிருக்கிறான். தனக்குள் எக்கியபடியிருக்கும் இச்சையின் கன்றுக்குட்டிக்காய் முலைக்காம்பு தேடுகிறேன் என்பான் ராகுலன்.

டிலானியை நீங்கள் பார்த்திருக்கமுடியும். தமிழ் திரைப்படங்களில் சிறிய பாத்திரங்களில் நடித்திருக்கிறாள். யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய ஊரான தெல்லிப்பழையைச் சேர்ந்தவள். தமிழகத்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமொன்றில் படிக்கவந்திருந்த போது, உதவிப் பேராசிரியர் திருலோகத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டாள். திருமணம் செய்துகொண்டதை இருவரும் தமது வீட்டில் மறைத்து வைத்திருந்தனர். நான்கு வருடமாக ஒன்றாக வாழ்ந்துவந்த திருலோகம் – டிலானி தம்பதிகள் தமது விவாகரத்து குறித்து கதைக்கவும் – பேசவும் தொடங்கினர். டிலானி விவகாரத்து பெற்றுக்கொண்டு சென்னையில் தனியாக வசித்துவருகிறாள். திருலோகத்திற்கு இப்போது இரண்டு பெண் குழந்தைகள். டிலானிக்கு தனிமை பலிபீடம். சருகின் மீது நெளியும் சர்ப்பத்தின் அச்சமும் வேகமும் பதற்றமும் அவளுடன் கூடிக்கிடந்தன. நாட்டிற்கு திரும்பிச்செல்ல வேண்டுமென்று அவளுக்கும் விருப்பமில்லாதிருந்தது.

கே.கே நகரிலுள்ள அம்மன் கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் சென்று கும்பிட்டுவிட்டு தனது தினக்கருமங்களை செய்யத்தொடங்குவாள். அவள் வாடகைக்கு வசித்துவரும் வீட்டின் உரிமையாளர் ஒரு வங்கியில் முகாமையாளராக இருக்கிறார். அவளிடம் சிலோன்காரவுங்க நல்ல மனுஷங்க,ஆனா உங்க ஆளுங்களுக்குள்ள ஒற்றுமைதான் இல்ல என்பார். டிலானிக்கு அது பிடிப்பதில்லை. ஒவ்வொரு மாசமும் வாடகை வாங்குவதற்கு முன்பாக இதைச் சொல்லும் அந்த உரிமையாளரை அவள் சந்திப்பதை தவிர்த்து,வங்கிக்கணக்கில் பணத்தை போட்டுவிடுவாள். டிலானியை அதிகமாக எரிச்சல் படுத்தும் வார்த்தை “சிலோன்காரி”. அவள் இங்குவாழும் மற்றைய ஈழத்தமிழர்களோடு பழகுவது கிடையாது. ஏதாவது கொண்டாட்டங்களுக்கு மட்டும் சென்றுவருவதுண்டு. அங்கும் தன்னையொரு சென்னைப்பெண்ணாகவே நிலைநாட்டும் எத்தனங்களை செய்துகொண்டிருப்பாள் அல்லது திருலோகத்துடன் நடத்திய இல்லறத்தில் கற்றுக்கொண்ட தமிழை ஆள் பார்த்து பேசுவாள். ஓம் என்று தலையசைப்பதற்கு பதிலாக ஆமாம் என்று மட்டும் சொல்லுவாள்.

ஆனால் ராகுலன் கதைக்கத்தொடங்கியதும் கனிந்து பதில் சொன்னாள். அவளின் அணுக்களில் கட்டித்து நின்ற திரட்சியின் பெருக்கு உடைப்பெடுத்தது போலும். தான் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படமொன்றின் படப்பிடிப்பு கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள கேரளத்து வீட்டில் நடந்துகொண்டிருப்பதாகவும் அது முடித்துவிட்டு வந்துவிடுவதாகவும் டிலானி ராகுலனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். அவன் கே.கே நகரிலுள்ள காப்பி டே கடையில் டிலானிக்காக காத்துக்கொண்டிருந்தான்.

புலன்கள் முழுதும் டிலானியின் மீதே பொதியாகி மிதந்தன. ராகுலன் விழுங்கி ருசிக்கும் ஒரு பொழுதிற்காய் காத்திருந்தான். காற்றின் உள்ளே நுழைந்து பிராணமாய் அவனுக்குள் திரும்பும் மூச்சில் அவ்வளவு சூடு தடவப்பட்டிருந்தது. மார்பின் விறைப்பு எழுச்சியுற்று,அவள் இதழ்களில் ஊர்ந்து செல்லும் கற்பனையின் கண்கள் திறக்கத்தொடங்கின. பீறிக்கிளம்பும் ஸ்பரிசத்தின் வேட்கையை அவனால் எதுவும் செய்யமுடியாமலிருந்தது. தனிமை பூமியில் ராகுலனையும் டிலானியையும் சந்திக்க விதித்திருந்தது. உடல்களின் சஞ்சாரத்தை இந்தநாள் வேண்டிக்கொண்டிருந்ததது போல அவனுக்குள் பிரமை. டிலானி படப்பிடிப்பு முடிந்து கிளம்பிவிட்டதாக தொடர்புகொண்டு சொன்னாள்.

வாகனநெரிசல்களைக் கடந்து கே.கே நகரை அண்மிப்பதற்கு இரண்டு மணித்தியாலங்கள் ஆகிவிடும். ஆனாலும் அவன் காத்திருக்கிறேன் என பதில் சொன்னான். அப்படியொரு வீச்சமான வாசம் அவனுடலில் இருந்து வந்தது. அவனால் என்னென்று விளங்கிக்கொள்ள முடியவில்லை. இப்போது அவனுக்குள் ஒரு எரிமலை பொங்கி வழிகிறது. காமத்தை அவன் தனிமையில் உருவேற்றி உணர்கிறான். பிரிந்து வந்த நிலத்தின் கனவுகளுக்குள் அவனொரு பெண் பித்தனைப் போல அலறி ஓடுகிறான். அவனின் கோழைத்தனங்களை ஒரு வேசியிடம் மண்டியிட்டு முன்வைக்கிறான். வேசியின் கடவுள்தனம் அவனை மன்னிக்கிறது. ராகுலனுக்கு அடிக்கடி வரும்கனவில் இந்தக்காட்சிகளே மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருக்கிறது. அப்போது நுகரும் வாசனையே இது.

சின்னஞ்சிறு மீன்கள் நீந்திக்கொண்டிருக்கும் இரண்டு மீன் தொட்டிகள் வீட்டின் முகப்பில் இருந்தன. ராகுலன் அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தான். கறுப்பு நிறத் தங்கமீனொன்று தொட்டியின் வலது முனையில் நீண்டநேரம் நீச்சலற்று மிதந்திருந்தது. மயில் தோகைகள் கொண்டு சுவரில் உருவாக்கப்பட்டிருந்த உருவங்களை அவனால் உணரமுடியாதிருந்தது. தனது இருக்கைக்கு பின்னால் இருக்கும் மேசையில் நடனமிடும் நடராஜர் சிலையைப் பார்த்தான். டிலானி  ஷோபாவில் வந்து அமர்ந்துகொண்டே ராகுலனிடம் கதைக்கத் தொடங்கினாள்.

நீங்கள் இந்தியாவிற்கு வந்து எத்தினை வருஷம் ஆகுது?

பத்து வருஷமாச்சு.. நீங்கள்?

நான் பதினாறு வருஷமாச்சு. அம்மா அப்பா வெளிநாட்டில இருக்கினம். நீங்கள் ஊரில எவடம்?

நாங்கள் யாழ்ப்பாணம்,மானிப்பாய். ஆனால் கொழும்பில தான் படிச்சது வளர்ந்ததெல்லாம் ராகுலன் சொன்னான்.

டிலானி தன்னுடைய கடந்தகாலத்தின் சில சம்பவங்களை சொல்லத்தொடங்கினாள். ராகுலன் கேட்டுக்கொண்டிருந்தான். திருலோகத்துடனான தனது மணவாழ்க்கை குறித்து அவள் சொல்லத்தொடங்கி கண்கள் கலங்கி அழுதாள். ராகுலன் அப்படியே அமர்ந்திருந்து கேட்டுக்கொண்டே இருந்தான். விரதமிருக்கும் பக்தன் கடவுளைப் பார்த்துக்கொண்டிருப்பதைப் போல டிலானியை விட்டு கண்களை அசைக்கவில்லை. அக்கம் பக்கத்தில் உள்ள சிலர் தம்மைக் குறித்து கொண்டிருக்கும் தப்பான எண்ணங்களை நினைத்து அவமானப்படுவதாக சொன்னாள். அன்றைக்கு திருமணத்திற்கு வந்திருந்த பொழுது எங்கள் ஆக்களில் ஒருவனான கருவாடு,என்னை கலியாணம் செய்துகொள்ளப் போவதாக சொல்கிறான். கருவாடு பற்றி ராகுலனும் அறிந்திருந்தான். இயக்க காசை சுருட்டிக்கொண்டு தமிழகத்திற்கு ஓடிவந்தவன். இன்றைக்கு அவனுக்கு இங்கிருக்கும் சொத்தே கோடிக்கணக்கானது என்று நிறையைப் பேர் சொல்லக்கேட்டிருக்கிறான். பொதுவெளியில் கருவாடு அப்படி நடந்துகொண்டதை இப்போது கேட்கும் போது ராகுலனுக்கு எரிச்சலாகவும் கட்டி அடிக்கவேண்டுமெனவும் தோன்றியது.

டிலானி அழுதுகொண்டே சொன்னாள்,நான் தனியாக இருக்கிற பெம்பிளை. அகதியாக இருக்கிறத விட அது கஷ்டம். என் வாழ்க்கை உன்னதமானது என்று யாரும் எண்ணிவிடக்கூடாது. அவ்வளவு கோழைத்தனமும் வன்முறையும் கொண்ட ஒரு கடவுளைப் போல தனிமை என்னை ஆக்கிவிட்டது. அவ்வளவு வலியின் பெருக்கு என்னுடல். நீங்கள் என்னுடைய போன் நம்பரை வாங்கிக்கொண்டு புன்னகைத்தபடி நன்றி என்று சொன்னபொழுதில் பாறையின் மீது ஊரும் ஈரநண்டின் புத்துணர்ச்சியைக் கண்டேன். என்னுடைய பிருஸ்டத்தை பார்த்துக்கொண்டிருந்த உங்கள் கண்களில் திமிர்கொண்ட ஆணின் ஆன்மாவைப் பார்த்தேன். அது அத்தனை வெளிப்படையாக இருந்தது. போலியற்று புனிதப்பார்வையை என் மீது போர்த்தாமல்  ஆணாக என்னை வெறித்துநின்றதை நான் கண்காணித்துக்கொண்டே இருந்தேன். உனது உடலின் பிரார்த்தனையை நீ எனக்கு முன்னால் கிடத்தி இறைஞ்சி நிற்கிறாய் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இப்போதும் உனது அமெரிக்கன் டூரிஸ்டர் பையின் சிறிய அறையில் ஸ்டோபரி வாசம் வீசும் ஆணுறைகள் இருக்கின்றன. எதற்காக இவ்வளவு நேரமாய் காத்துக்கொண்டிருந்தாய். நீ பயங்கரமானவன். நிலமில்லாத நம்மை நாமே அணைத்து கூடிக்கொள்ளவேண்டும். தனிமையின் புழுதி மூடி நம் திசைகளை புயல் முறித்துப்போட்டுவிட்டதை நான் உணர்ந்திருக்கிறேன்.

கண்கள் செருகி அடிபட்டு கிடக்கும் தெருநாயின் அழுகிய உடலைக் கடந்து செல்லும் இந்த நகரத்தில் அகதியாக அடைக்கலமான நாம் வேறு யாருமில்லை. அந்தத் தெருநாய் தான் என்று நீயும் அறிந்திருப்பாய்.

இப்போது உனது தேவை என்னைப் புணரவேண்டும். என்னுடைய கூந்தலால் உன் நிர்வாணத்தைப் போர்த்தவேண்டும். எனது மேனியை மேலிருந்து பார்க்கவேண்டும். உனது உடலில் கருடன் எழுந்து நிற்கிறான். அவனை எனக்குள் இறக்கி போகம் கொள்ளவேண்டும். அதுதானே உனது தேவை என்று டிலானி கேட்டதும் ராகுலன் அதிர்ந்து இல்லையென்று சொல்லவில்லை. ஆமாம் அதுதான் தேவை என்று விநோதமான குரலில் சொன்னான். பொழுது மூச்சுத்திணறியது. டிலானி அவனை தனது அறைக்குள் கூட்டிச்சென்று கட்டிலில் கிடத்தினாள்.

மஞ்சள் மின்குமிழ் வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்த அறையின் ஜன்னல்கள் சாத்தப்பட்டிருந்தன. ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் காற்றில், கட்டிலில் கிடந்த வாரப்பத்திரிக்கையின் பக்கங்கள் நெளிந்தன. சுகந்தத்தின் ஈர வாசனையில் முங்கியபடி அந்த அறையிலேயே சமாதியாகிவிட வேண்டுமென்று ராகுலன் நினைத்தான். மெத்தையின் மீது விரிக்கப்பட்டிருந்த புதிய துணியில் நிறைய முயல்குட்டிகள் சோடிகளாய் வரையப்பட்டிருந்தன.

குளியலறையின் கதைவைத் திறந்து துவாயை எடுத்துத் தருமாறு குரல் கொடுத்தாள் டிலானி. கதை வாசிப்பதை நிறுத்திவிட்டு அவளின் வெள்ளைநிறத் துவாயை எடுத்துக்கொடுத்தான். குளியலறைக் கதவின் திறந்த மெல்லிய இடைவெளியால் தனது கைகளை நீட்டி அவனின் கைகளிலிருந்து துவாயைப் பறித்த அவள் அப்படியே கட்டிலில் வந்தமர்ந்தாள். அவளின் மார்பைமூடியிருந்த அந்தத் துவாயை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உதடுகளோடு உதடுகள் நீந்த முத்தங்களை தொடங்கினாள். ராகுலனுக்கு அவளின் கீழ் உதட்டின் உள்புறத்தில் ஊறும் மினுக்கமான வேகத்தைப்பிடித்திருந்தது. அவளைக் கட்டிக்கொண்டு அவன் வேகம்கொண்டான். அவள்  தனது தலையை பின்நோக்கிச் சரித்து முயக்கமுற்றாள். அவளின் கூந்தல் மின்விசிறிக் காற்றில் முகம்தழுவிக்கொண்டிருந்தது. மலரினும் மெலிதான காமத்தின் கிளைகளில் இருவரும்  லாவகமாக ஏறிக்கொண்டிருந்தனர்.

ராகுலன் வெள்ளைத்துவாயை அவிழ்க்கும் நொடியில் உதடுகள் கழன்று விலகின. அவள் ஒரு நிமிசம் ஒரு நிமிசம் என்று கெஞ்சினாள். முகம்பற்றி மூண்டிருக்கும் இத்தீயை உன் மார்பொத்தி அணைக்கவேண்டும் டிலானி என்றான். சரி அப்படியே இருங்கோ ஒரு நிமிசம், நான் வெளிக்கிட்டிட்டு வாறன், விடுங்கோ என்று கொஞ்சலோடு எழுந்தாள். நீண்ட நேரம் இருவரும் கதைத்துக்கொண்டிருந்தார்கள். இவனின் கண்கள் அவளின் மார்பின் மீதே நங்கூரமிட்டு அசைந்தபடியிருந்தது. தொட்டிமீன்கள் மேலிருந்து வீழ்த்தப்படும் இரைக்காக மேல் நோக்கி நீந்துவதாய் ராகுலனை ஏதோவொரு அலை,ஏதோவொரு உச்சியில் ஏற்றிவிட்டது. அந்த அறையில் பரவி நிற்கும் மங்கலான மஞ்சள் ஒளியின் ஒழுக்கு அவளின் கண்களில் நிரம்பி நின்றிற்று. உடைகள் களையப்பட்ட டிலானியின் தாபஉடலில் எடையற்ற தன்னுடலை கிடத்தினான். பேரமைதி நிலவிய அந்த அறையில் இருவரின் உடலும் ஒலித்தன. வழுக்கும் கிணற்றடிப்பாசியின் மெதுமை உடலில் பரவியது. குகையின் உள்ளிருந்து வெளியேறும் கடலின் சிருஷ்டியாய் இருவுடலும் பெருங்களி கொண்டு இசைவுற்று இசைவுற்று அசைந்தன. பாஷையின் சந்தம் போல் கூடல் வேகம் குறைந்துகூடி கூடிக்குறைந்து குறைந்து கூடி.. கூடிக் கூடி நிகழ்ந்த வண்ணமிருந்தது.

டிலானியின் கண்கள் பனித்திருந்தன. ராகுலனை தனது நெஞ்சோடு அனைத்துக்கொண்டு குழந்தை என்று அவள் சொன்னதும் திகைக்காமல் இயங்கிக்கொண்டிருந்தான். பேரொளி வீசும் ஒரு நாளைப் போல தன்னுடலை புகுத்தியிருந்தான். நீண்ட நேரம் நீடித்த இந்தக் கூடலை டிலானி வேடிக்கையோடு ருசித்தாள். குழந்தை களைத்துப்போய்விட்டது என்று மீண்டும் சொன்னாள். அதியுச்ச ஷணத்தில் தன் மார்புகளை மேலிருந்து இயங்கும் ராகுலனுக்கு தருவித்தாள். சிசுவுக்கு அமுதூட்டும் அந்தத்தாய்மையை ராகுலன் காதலோடு ஏற்றுக்கொண்டான். அவளின் திளைத்த மார்புகளில் அந்த அறையின் மஞ்சள் ஒளி மினுக்கமடைந்து தவளைகளைப் போல குதித்தோடிய படியேயிருந்தது.

என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா ராகுலன்?

உங்களைப் பிடிக்காமல் உங்களோடு ஒன்றாக இருப்பேனா?

சும்மா பொய்சொல்ல வேண்டாம்.

நான் சொல்வதை நீங்கள் பொய் என்று நம்புகிறீர்கள்

உங்களுக்கு கலியாணம் எண்டால் என்னை விட்டிட்டு போயிடுவிங்கள் தானே?

ஓம், உங்களுக்கு நடந்தாலும் நீங்களும் போகத்தானே வேணும்.

நான் இனிமேல் கலியாணம் செய்யமாட்டேன்

நான் இனிமேல் தான் கலியாணம் செய்யவேணும்

அவள் சிரித்தாள். நல்லாய் கதைக்கமட்டும் தெரியுது.

தீவின் நடுவேயிருக்கும் அழகிய வனத்தில் வந்தமரும் வலசைப்பறவைகள் மாதிரி அவளுடலில் அவளுக்கே இதம்           தருகிற இடங்களிலெல்லாம் தனது தீண்டல்களின் சிறகுளை விரித்தான். மண்ணுள்ளே தயாராகும் விதையின் பசுஞ்சுடர் போல அவ்வளவு ஈரமாகி குளிரத்தொடங்கினாள். அவன் தீண்டவே ருசியாகும் தனது எச்சிலை ஊற ஊற விழுங்கிக் கொண்டேயிருந்தாள். காலம் சுமந்துசெல்லுகிற பாரமற்ற போதையின் நிழல்களாக இருவரும் இயங்கத்தொடங்கினர். நீர்ப்பாத்தியின் உள்ளே ஒன்றையொன்று பிடிப்பதைப் போல ஓடிக்கொண்டிருக்கும் பாசிக்கு நிகராக ஒருவரை ஒருவர் உடல்களுக்குள் திரத்தியபடியிருந்தனர். ஒவ்வொரு துளியும்  பிரமாண்டமாய் விழும் பெருமழை காலத்தின் கனிவான ஒலி அந்த அறையில்  அதிரத்தொடங்கியது. ரத்தம் பிளிறுகிற இவ்விரு உடல்களுக்கும் இடையில் சிறிதாய் இருக்கும் இடைவெளியில் ஈரவொளி ஈக்கில் போல ஏறியது. ஓய்தலின்றி கங்குவளையத்தினுள் காற்றுப்புகுவது மாதிரி ராகுலனுக்குள் தன்னைச்செலுத்திக்கொண்டிருந்தாள். தனிமையில் கரைந்த இருவரும் தாபத்தில் எழுந்து வல்லபம் பெற்றனர். இப்படியொரு கூடலை தான் இதுவரைக்கும் அனுபவித்ததில்லை என்று ராகுலன் குளித்தபடிக்கு சொன்னான். டிலானி எனக்கு கூட ஸ்டோபரி பிடிக்காது. ஆனால் இன்று அந்த வாசனைக்கு என்னை அனுப்பி வைத்துவிட்டேன் என்றாள்.

“வன்முறை பொதிந்த உனது மனத்தை நீயே தகர்த்து எறி.காமம் உன்னை ஆசீர்வதித்து ஒரு மனுஷனாக்கட்டும். உன் குழந்தமையை நீ விட்டுவிடாதே, பிறகு கொடியதான கற்பனைகளுக்கு தனிமை இட்டுச்செல்லும். அதனைத் தவிர்”  என்று சொல்லி ராகுலனை வழியனுப்பி வைத்தாள் டிலானி. கே.கே நகர் பிரதான சாலை வழியாக வளசரவாக்கம் நோக்கி நடக்கலானான். இரவும் பலமடைந்திருந்தது. அவனுக்குள் இதுவே நித்யம் ஆகவேண்டுமென்ற பிரார்த்தனை மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது.

பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளவும் கூடிக்கொள்ளவும் செய்தனர். ஒரு பெளர்ணமி நாளில் திருவண்ணாமலைக்கு சேர்ந்து சென்றனர். கிரிவலப்பாதையில் அவளுடைய கைகளை பிடித்துக்கொண்டு நடந்து வந்தான். திருவாசகங்களையும் தேவாரங்களையும் ஓதிக்கொண்டு சிவனடியார்கள் நடந்து சென்றனர். டிலானி அவ்வளவு நெருக்கமாக அவனோடு அந்தப் பாதைமுழுக்கவும் நடந்தாள். பெளர்ணமியின் ஆனந்தமயமான நிழல் அவர்கள் இருவரின் மீதும் பாலித்துக்கொண்டிருந்தது. பச்சிளங்குழந்தையின் உற்சாகத்தோடு அவ்வளவு இலேசாக இந்தப் பூமியில் இரண்டு அகதிகள் நடந்தபடியிருந்தனர்.

இந்தப் பெளர்ணமியின் ஒளியை பூமி எப்போதும் மிச்சம் வைத்திருக்கட்டும் எம்பாவாய்!

***

அகரமுதல்வன் – நான்கு விதைத்தொகுப்புகள், ஒரு நேர்காணல் தொகுப்பு, மூன்று சிறுகதைத்தொகுப்புகள், ஒரு குறுநாவல் தொகுப்பு, தொகுப்பாசிரியராக இரண்டு தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. ஈழத்தில் உள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.

கௌரி ப்ரியா கவிதைகள்

0

1) ஆழியின் மகரந்தம்

பூக்களை மட்டுமே
புகைப்படம் பிடிப்பவன்
கடல் பார்த்துத் திரும்புகிறான்
ஒற்றை அலையின் படத்துடன்

மலர்ந்த நாகலிங்கத்தின்
மகரந்த முக்காடு போல்
ஒயிலாய் வளையும் ஒற்றை அலை

கடலினுள் இறங்கும் கதிரவனின்
செம்மஞ்சள் பூசிச் சிதறும்
மகரந்தத் துகள்களென
நீர்த்துளிகள்

ஆழியை மடித்து மடித்து
அல்லிவட்ட இதழ்கள் செய்யும்
ஓரிகாமி அறிந்த
சிறுமி இக்கவிதை

*

2) இணை கோடுகள்

அரைநொடி மின்னலுக் கிணையென
நகராது நகர்ந்தெழுதும்
நத்தை தனது மினுங்கும் கோட்டை

நேர்க்கோட்டில் நீந்தும்
திமிங்கிலத்தின் பெருமூச்சை
வெகுநீட்டி விரையும்
விமானத்தின் வெண்புகை

ஈறறியாப் பேரண்டத்தில்
எவர் வகுக்கக் கூடும்
இலக்கங்கள்
இலக்கணங்கள்
இணைகோட்டுச் சூத்திரங்கள்?

எல்லாம் கிடக்கட்டும்

இல்லாதிருக்கும்
இருப்புப் பாதையில் பார்
சின்னஞ்சிறு மஞ்சள் பொதிகளில்
கவிதைகள் சுமந்து வரும்
இரயில் பூச்சி

*

3) ஆதிச்சுடர்

இருகை இணைந்து
இலை போலாகிட
முதிர்ந்த ரேகை தழுவி
மூலம் சேரும்
பித்தன் அள்ளியள்ளி
பெருநதியில் உகுக்கும் நீர்

செரித்த சூரியனை
செம்மஞ்சள் சுடர்களாக்கி
வான் நோக்கி மீண்டும்
வார்த்திட முனையும்
கரையினின்று கண்டிருக்கும்
கல்வாழை

*

4) வேனிலின் சுடர்கள்

கங்கு சட்டியில் வாடும்
கதிர் சோளக் கூம்பினின்று
கடற்கரை வெளியேகும்
தகிக்கும் தங்கச் சுடர்கள்

கொன்றை மஞ்சரிக் கூம்பு நீங்கி
கொதிகானலில் நெளிந்தாடி
தரைநோக்கி பயணிக்கும்
தணிந்த தங்கச் சுடர்கள்

இரவோடும் பகலோடும்
கடலோடும் கானலினூடும்
தகித்திருக்கையில் தணிந்ததையும்
தணிந்திருக்கையில் தகிப்பதையும்
சடசடப்பதையும் சப்தமற்றதையும்
ஒன்றே போலத் தழுவித் திரிகிறான்
காற்றெனும் மாய முதுகிழவன்

*

5) சிறுமாயம்

மினுங்கும் இளஞ்சிவப்பில்
மென்தகடுகள் தைத்த
தேவதையின் ஆடையை
சன்னல் வழியேகி தழுவும்
சிதறும் பேரண்டத்தின்
சின்னஞ்சிறு கற்றை கதிர்

எதிரொளிக்கும்
சுவரெங்கும் சுழன்றொளிரும்
குங்குமப்பூ குழைத்த
குட்டிப் பால்வீதி

***

கௌரி ப்ரியா – சென்னையில் வசிக்கும் இவர் அடிப்படையில் ஒரு மருத்துவரும் கூட. மின்னஞ்சல் – ggowripriya07@yahoo.co.in

சுஜாதா செல்வராஜ் கவிதைகள்

1
  1. துயில் எழுப்புதல்

அறுவை சிகிச்சைக்கு பின்னான துயில் எழுப்புதலில்
அவர்கள் கன்னத்தைத் தட்டுகிறார்கள்
கைகளில் கிள்ளுகிறார்கள்
பெயர் சொல்லி உலுக்குகிறார்கள்

வலி மின்னி வெட்டுகிறது
பின்னிரவுக் கலவிப் பொழுதொன்றை
ஒத்ததாய் இருக்கிறது
அது

பிரிக்க முடியா இமைகளுக்குள்ளே
கருவிழி இறைஞ்சுகிறது
இன்னும் கொஞ்சம் உறங்கட்டுமா

நான் அசையாமல் கிடக்கிறேன்
அவர்கள் தட்டிக்கொண்டே இருக்கிறார்கள்
கிள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்

2. நிதானித்திருக்கும் ஆயுதம்

என் உள்ளங்கைக்குள் இருப்பது
உனக்கெதிரான ஆயுதம் தான்
என்பதில் அத்தனை உறுதியுடன்
இருக்கிறாய்

நான் சில நேரம் பூக்களை வைத்திருக்கிறேன்
சில நேரம் பனிக்கட்டிகளை
சில நேரம் நறுமணத் தைலத்தை
சில நேரம் பளபளக்கும் ஆயுதத்தை

போர்க்களத்தில் நிற்பவனுக்கு
உறக்கம் வருவதில்லை

நீ விழிப்புடன் விழித்திருக்கிறாய்
நான் உறங்கிக்கொண்டிருக்கிறேன்
நீராடிக்கொண்டிருக்கிறேன்
சோலையில் உலாப்போகிறேன்

எதிரியை களத்தில் இறக்கிவிட்டு
உப்பரிகையில் ஆப்பிள் சீவிக்கொண்டிருப்பது
அலாதி சுகம்

என் உள்ளங்கைக்குள் நிதானித்திருக்கிறது
உனை வீழ்த்தும்
அந்த ஒரு நிமிடம்

நீ
விழிப்புடன் விழித்திருக்கிறாய்
நான்
ஆப்பிள் தின்று கொண்டிருக்கிறேன்

3. மௌனத்தின் ஒலி

மண்டியிட்டு அமர்ந்து
நிலம் நோக்கித் தலை பணிகிறேன்

மடை உடைந்த வெள்ளமென
ரத்தம் தலை நோக்கிப் பாய்கிறது

என் இரவுகளை
ஓலங்களால் உண்டவர்கள்
கூடாரம்
இந்த மண்டையோடு

இவர்கள் குரல்வளையை
என் உதிரத்தால் நிரப்ப வேண்டும்

மடை உடைந்த பெருவெள்ளம்

திணறும் கானகம்
குய்யோ முய்யோ என்று
எழுந்து பறக்கிறது

கதறலின் முகங்களில்
ரத்தத்தைப் பீய்ச்சியடித்துச் சாய்க்கிறேன்

மெல்ல மெல்ல அடங்குகிறது வனம்

எழுந்து அமர்கிறேன்
குப் குப் என்று ஒரு ரயில்
சத்தமின்றி
நழுவி வெளியேறுகிறது

மௌனத்தின் ஒலி கேட்க
ஆனந்தமாய் தான் இருக்கிறது

4. சடலம்

நான் மலர் என்கிறேன்
நீ இருள் என்கிறாய்
நான் நுகரத் தருகிறேன்
நீ இருள் என்கிறாய்

நான் கனி என்கிறேன்
நீ இருள் என்கிறாய்
நான் புசிக்கத் தருகிறேன்
நீ இருள் என்கிறாய்

நான் சிலை என்கிறேன்
நீ இருள் என்கிறாய்
நான் வருடத் தருகிறேன்
நீ இருள் எனகிறாய்

நான் வீணை என்கிறேன்
நீ இருள் என்கிறாய்
நான் மீட்டத் தருகிறேன்
நீ இருள் எனகிறாய்

நான் அன்பென்கிறேன்
நீ இருள் என்கிறாய்
நான் முத்தமிடுகிறேன்
நீ புணரத் தொடங்குகிறாய்
நான் இருள் என்கிறேன்

***

சுஜாதா செல்வராஜ் – தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். “காலங்களைக் கடந்து வருபவன்” இவரது முதல் கவிதைத் தொகுப்பு .

புனைவெழுத்து

0

காலத்துகள்

‘காந்தி ரொம்ப மோசமான ஆளுடா, அவருக்கு தான் நெனச்சது மட்டும்தான் நடக்கணும். காங்கிரஸ் தலைவர் எலக்க்ஷன்ல அவர் நிறுத்தின ஆளு தோத்து, நேதாஜி ஜெயிச்சவுடனே கட்சிலேந்து தான் விலகிடறதா சொல்லி பிளாக்மெயில் பண்ணார். உடனே நேதாஜியும் விட்டுக் கொடுத்துட்டார்” என்று சுதந்திரம் அடைந்த பொன் விழா ஆண்டின் ஆகஸ்ட் பதினைந்து காலை என் வீட்டில் ப்ரெடியிடம் கூறிக் கொண்டிருந்தபோது, அறையில் ரஹ்மான் உச்ச ஸ்தாயியில் தாய் மண்ணிற்கு வணக்கம் செலுத்திக் கொண்டிருந்தார்.

எழுதிக் கொண்டிருந்ததை நிறுத்தி, ‘வந்தே மாதரம்’ இசைத்தொகுப்பு அந்த வருடம் எப்போது வெளியானது என்று கூகிளில் தேடினேன். ஆகஸ்ட் பன்னிரெண்டாம் தேதி. மூன்று நாட்களில் கேசட் செங்கல்பட்டிற்கு வருவதற்கோ, அப்படி வந்திருந்தாலும் நான் அதை உடனடியாக வாங்கியிருப்பதற்கோ சாத்தியம் இல்லை. மேலும், நான் குடியிருந்த வீட்டில் எனக்கென்று தனியாக அறை கிடையாது. நண்பர்கள் வந்தால் போர்ஷனின் பின்புறத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். எனவே நான் குறிப்பிட்டுள்ளபடி பாடல் ஒலித்திருக்க சாத்தியம் இல்லை. ஆனால் என் நினைவில் அப்படித்தான் பதிந்துள்ளது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை கூட என் ஞாபக சக்தி மீது எனக்கு அதீத நம்பிக்கையிருந்தது. ஆனால், நடந்த நிகழ்வுகள் என என்னுள் பதிந்துள்ளவை, கடந்து வந்த கணங்கள் என நான் நினைவு கூறுபவற்றைக் குறித்த சந்தேகங்கள் இப்போதெல்லாம் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. நிஜத்தை அப்படியே புனைவாக்க வேண்டுமென்று என்று நான் கருதவில்லை என்றாலும் – (அப்படியிருந்தால் எதற்கு புனைவு) – இந்தக் கதை நான் செய்த மிக இழிவான காரியத்தைப் பற்றிய வாக்குமூலம் என்பதால் நடந்ததை அப்படியே எழுதவேண்டும் என்பதிலும் அதில் எந்த தவறும் நேரக்கூடாது என்பதிலும் இந்த முறை மட்டும் உறுதியாக இருக்கிறேன். குறைந்த பட்சம் சரிபார்க்கக் கூடிய தகவல்களில் துல்லியமாக இருக்க வேண்டும்.

பாடல் ஒலித்தது குறித்த பிழையை வைத்து நான் விவரிக்கப் போகும் நிஜத்தை சந்தேகிக்க தேவையில்லை. இந்தச் சிறு தவறு அதை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும், நான் கூறப்போகும் மற்ற விஷயங்கள் முற்றிலும் உண்மை என்றும் உறுதியளிக்கிறேன். உதாரணமாக, காந்தி குறித்து நான் கூறியது நடந்த ஒன்றுதான். நான் அப்போது அவர் மீது மிகுந்த வெறுப்பிலிருந்தேன். காரணம் எதுவுமில்லை, உண்மையில் அவர் எழுதியதையோ, அவரைப் பற்றிய விரிவான விமர்சனங்களையோ கூட அந்த காலகட்டத்தில் நான் படித்திருக்கவில்லை. அவர் ஆதரித்து காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தோற்றவரின் பெயரைக்கூட அப்போது எனக்குத் தெரியாது. காந்தியைப் பற்றி அவ்வப்போது கேட்க நேர்ந்த விஷயங்களை, படித்த துணுக்குகளை மட்டுமே கொண்டு நான் இது போன்ற கருத்துக்களை உதிர்த்துக் கொண்டிருந்தேன். (சில ஆண்டுகள் கழித்து நான் காந்தியை வாசிக்க ஆரம்பித்ததும், என் எண்ணங்கள் மாறியதும் இன்னொரு வாக்குமூலமாக – அசோகமித்திரனின் காந்தியைப் போல்- வரக்கூடும்)

நான் உளறிக் கொண்டிருந்ததற்கு ப்ரெடி ‘கரெக்ட் டா’ போன்ற அமோதித்தல்களை அளித்துக் கொண்டிருந்தாலும் அவன் சலிப்படைவது எனக்குத் தெரிந்தது. பள்ளிகால நெருங்கிய நண்பர்களின் பிரிவு, சிறிதும் விருப்பமில்லாத பொறியியல் படிப்பு என தனிமையும் மனச்சோர்வுமாக கல்லூரி முதலாமாண்டைக் கடந்தேன். அந்தக் கல்வியாண்டின் இறுதியில் ப்ரெடி சின்ன மணிக்காரத் தெருவிற்கு குடி வந்தான். ஓரே கல்லூரியில் படித்தாலும் அதன் பின்தான் அவனுடன் பழக்கம் ஏற்பட்டது. ஒன்றரை வருடங்களில் தினமும் ஒன்றாகக் கல்லூரிக்குச் சென்று வருவது, விடுமுறை நாட்களில் நடை பயணமாக செங்கல்பட்டை சுற்றுவது என அவனுடன் நட்பு இறுகியிருந்தது. அதை நான் இழக்க விரும்பவில்லை. வசைபாடலை நிறுத்தினேன். ‘வாக் போலாமாடா’ என்றான் ப்ரெடி. நாடார் கடைக்குச் சென்று சோடா குடித்து விட்டு நடக்க ஆரம்பித்த போது ‘நான் சொன்னேனே, என்னாச்சு’ என்றான் ப்ரெடி. ‘வீட்ல கேக்கணும்’,

‘இந்த செமஸ்டரே க்ளோஸ் பண்ணறது தான்டா பெஸ்ட், தள்ளிப் போடாத’

முதல் வருட பொறியியலில் எஞ்சினீரிங் டிராயிங் பாடம் உண்டு. அதில் உபயோகப்படுத்தும் ட்ராஃப்டரைப் பார்த்தாலே பதட்டமாவேன். முதலாண்டு தேர்வில் அந்த பாடத்தில் ஆறு மதிப்பெண். மீண்டும் நான்காம் செமஸ்டரில் அரியர் தேர்வெழுதி பதினொன்று மதிப்பெண்கள் பெற்ற போது, ‘என்னடா உனக்கு கூட அரியர் இருக்கா’ என்று கேட்ட ப்ரெடியிடம் எஞ்சினீரிங் டிராயிங் குறித்து எனக்குள்ள ஒவ்வாமையை விளக்கினேன். அதற்கு சிலநாட்கள் கழித்து ப்ரெடி தனக்குத் தெரிந்தவர் பல்கலைக்கழகத்தில் வேலை செய்கிறார் என்றும் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் தேர்ச்சி பெற வைத்து விடுவார் என்றும் கூறினான். இப்படிச் செய்து பாஸாக வேண்டுமா, அம்மாவிடம் இது குறித்து எப்படி பேசுவது என்ற தயக்கத்தில் நாட்களை கடத்திக் கொண்டிருந்தேன்.
‘பிப்த் செம் டேட்ஸ் அனௌன்ஸ் பண்ணிட்டாங்கல்ல.. சீக்கிரம் டிஸைட் பண்ணி அரியர் எக்ஸாமுக்கு அப்பளை பண்ணு. அவர் ஏமாத்தலாம் மாட்டார்டா’

‘அதுக்கில்லைடா. இன்னிக்கு பேசிடறேன்’

வீடு திரும்பினேன்.

விடுமுறை நாட்களில் ப்ரெடி காலையிலும் என் வீட்டிற்கு வருவது உண்டென்பதால் என் நினைவிலுள்ளது போல் அன்று காலையில் தான் அவனுடன் உரையாடியிருப்பேன். ஆனால் நாங்கள் வெளியே செல்வது மாலை நான்கு, நாலரை வாக்கில் தான். முன்மதிய நேர வெயிலில், ப்ரெடி அழைத்தது நடந்திருக்கக் கூடிய ஒன்றாக இப்போது எனக்குத் தோன்றவில்லை. தவிர என் போர்ஷனின் பின்புறத்திலேயே இந்த விஷயத்தை அவன் பேசியிருக்கக் கூடும், அவனுக்கு அதில் எந்தச் சங்கடமும் இருந்திருக்கப் போவதில்லை, நான் தான் அசௌகர்யமாக உணர்ந்திருப்பேன்.

மதிய உணவிற்குப் பின் அம்மா படுத்துவிட்டாள். அவளிடம் எப்படி ஆரம்பிக்க? இந்த முறை மட்டும் சுயமாக முயற்சி செய்து பார்ப்போமா, ப்ரெடி மெக்கானிகல் படிப்பதால் அவனிடம் ஈ.டி குறித்து கற்றுக்கொள்ளலாம். பணம் கொடுப்பது கேவலம். புத்தகம் வைக்குமிடத்திலிருந்த ட்ராஃப்டரைப் பார்த்தேன். தேர்ச்சியடைந்து விட்டால் சனியனை தூக்கியெறிந்து விடலாம். அது கண்ணில் படும் போதெல்லாம் அதை எடுத்து யார் தலையையாவது பிளக்க வேண்டுமென்று வெறி கொள்கிறேன். இந்த மனநிலையில் எப்படிப் பாஸாக முடியும். மற்றப் பாடங்களில் ஏமாற்றாமல் தானே தேர்ச்சி அடைகிறேன், இதற்கு மட்டும் பணம் கொடுத்தால் மிகப்பெரிய குற்றமா என்ன?

லாப் அல்லது எக்ஸாம் பீஸ் என்று சொல்லலாம், ஆனால் அதற்கு இரண்டாயிரம் ரூபாய் என்பது மிக அதிகம் என்று அம்மாவிற்கு தெரியும். கல்லூரியில் திடீரென எந்த காரணமுமின்றி கேட்கிறார்கள் என்று கூறிப் பார்க்கலாம். அதற்கும் மறுத்து விட்டால் அதன்பின் உண்மையைச் சொல்ல முடியாது. தன்னுடைய மெடிக்கல் பில்களுக்கான தொகை வந்துள்ளது என்று நேற்று அம்மா கூறினாள், எவ்வளவு என்று சொல்லவில்லை. மணி இரண்டு இருபது. மூன்று மணி வாக்கில் அம்மா எழுந்து விடுவாள். அவளுடைய பர்ஸை ஷெல்பில் வைத்திருப்பாள். அருகே சென்று திரும்பி வந்தமர்ந்தேன். மீண்டும் ஷெல்பை நெருங்கி பர்ஸை எடுத்தவன் வைத்து விட்டேன்.

உண்மையான காரணத்தை கூறினால் ஒப்புக் கொள்வாளா? இரண்டைம்பது. எப்போது வேண்டுமானாலும் விழித்துக் கொள்வாள். இரண்டாயிரம் ரூபாய் இருக்குமா என்று மட்டும் பார்த்துவிட்டு அம்மாவிடம் கேட்டுப் பார்க்கலாம். பர்ஸை எடுத்தேன்.

அந்த மதிய நேரத்தை துல்லியமாக ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றேன். நான் எழுதியுள்ளதைப் போல் பணம் கொடுத்து தேர்ச்சி பெற வேண்டுமா என்ற அறச்சிக்கலில் நானிருந்ததாக இப்போது எனக்குத் தோன்றவில்லை . ப்ரெடி தன் யோசனையைச் சொல்வதற்கு முன்பே சுயமாக படித்து பாஸாக பெற முடியாது என்ற முடிவிற்கு வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.

எனக்குத் தேவையான தொகையை மட்டும் எடுத்து மீதியை உள்ளே வைத்தேன். பணத்தை சட்டைப்பையில் வைக்கக் கூடாது பாடப்புத்தகத்தில் வைத்தால், அதை எடுக்கும் போது அம்மா கவனிக்கக் கூடும். அடுத்த ஒன்றரை மணி நேரத்திற்கு பதட்டம், அம்மா பர்ஸை திறக்கக் கூடாது. ப்ரெடி வீட்டிற்கு வந்தவுடன் உடனேயே கிளம்பியவன் .
‘ராமர் கோவிலுக்கு’ போலாண்டா என்றேன். அன்று சென்று மண்டபத்தில் அமர்ந்தோம்.

‘அம்மா கிட்ட கேட்டேன்டா, பணம் தந்துட்டாங்க’

‘எதுவும் சொல்லலையா’

‘இல்லடா. இந்த பேப்பர் எனக்கு டஃப்பா இருக்குன்னேன், அவங்களுக்கும் தெரியும். ஸோ குடுத்துட்டாங்க’

இப்போது நினைவுப்படுத்திப் பார்க்கும் போது நான்தான் ப்ரெடி வீட்டிற்கு சென்றேன் என்பது தெரிகிறது. அவன் வீட்டிற்கு நாலைந்து முறைதான் சென்றிருப்பேன் என்பதால் எப்படி இத்தனை வருடங்களாக தவறாக நினைவில் கொண்டிருந்திருக்கிறேன் என்று புரியவில்லை. மேலும், காந்தியை வசைபாடியது, பின் வீட்டில் திருடியது, அந்த பணத்தை ராமர் கோவிலில் ப்ரெடிக்கு கொடுத்தது, மூன்றையும் இணைத்து, அந்த ஆகஸ்ட் பதினைந்தை, அபத்தமான நாளாக இதுவரை எண்ணிக் கொண்டிருந்தேன். இப்போது யோசித்தால், அவை தனித்தனி நிகழ்வுகள் மட்டுமே என்றும் குறியீடோ, அபத்தமோ எல்லாம் நானாக உருவாக்கியது என்றும், நான் மிகக் கீழ்மையானவாக நடந்து கொண்டது மட்டுமே அன்றைய தினத்தின் உண்மை என்றும் தோன்றுகிறது.

நான் வீட்டிற்கு திரும்பிய போது மளிகைக் கடைக்காரர் உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார். கடையில் வேலை செய்யும் பையன் சாமான்களைக் கொண்டு வருவான், நானோ அம்மாவோ கடைக்குச் சென்று மளிகை பணத்தை தருவோம். எப்போதும் வீட்டிற்கு வந்திராத அவர் இன்று ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

‘அன்னிக்கு தரேன், இன்னிக்கு தரேன்னு ரெண்டு மாசமாச்சு. பதினஞ்சாம் தேதி கண்டிப்பா தரேன்னு சொன்னதால வெயிட் பண்ணினேன். சாங்காலம் ஆச்சு, வரலை. அதான் நானே வந்தேன். இப்ப திருப்பி பணம் இல்லேன்னு சொல்றீங்க’

‘பில் க்ளியர் ஆயிடும்னு நெனச்சேன்..’ அம்மா மெல்லிய குரலில் கூறினாள்.

‘ஏதோ காரணம் சொல்லிட்டேயிருக்கீங்க, எப்பத்தான் தருவீங்க’

‘அடுத்த வாரம் கண்டிப்பா நானே கடைக்கு வந்து தரேன்’

‘இதேதான், வாங்கும் போது மட்டும்…’ என்ற பின் ஏதோ முணுமுணுத்தபடி கடைக்காரர் சென்றார்.

மளிகைக்கான பணம் என்று தெரிந்திருந்தால் எடுத்திருக்க மாட்டேன். அன்றிரவு சாப்பிடாமல் அம்மா அழுததும், அதனால் அவளுக்கு மூச்சிரைப்பு மிகவும் அதிகமானதும், இரண்டு மணியளவில், தெரு நாய்களின் குரைப்பொலி மட்டும் நிறைந்திருக்கும் தெருவில் அவளை அழைத்துக் கொண்டு, டாக்டர் குமார் வீட்டிற்கு சென்றதும், அவர் ‘அஸ்தலின்’ இன்ஜெக்க்ஷன் போட்டதும் எனக்கு மிகத் துல்லியமாக ஞாபகம் உள்ளது.

ப்ரெடிக்கு தெரிந்தவர் ஏமாற்றவில்லை. நாற்பத்தியாறு மதிப்பெண்கள் பெற்று பாஸானேன். இது நடந்து பதினைந்து இருபது வருடங்களுக்குப் பின் பல்கலைகழகத்தில் பணம் பெற்றுக்கொண்டு தேர்ச்சி பெற வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்து அங்கு பணிபுரியும் சிலர் சிக்கியது குறித்த செய்திகளை படித்த போது பீதியடைந்தேன். பல ஆண்டுகளுக்கு முந்தைய விஷயங்களையும் விசாரித்து என்னைப் பிடித்து விடுவார்களோ, வேலை போய்விடுமோ என்ற பயம் நீங்க சில வாரங்கள் ஆனது.

அடுத்த வாரம் அம்மா மளிகை பாக்கியை எப்படி கொடுத்தாள் என்பது எனக்கு நினைவிலில்லை. வெளிப்படையாகக் கேட்காவிட்டாலும் பணத்தை என் அப்பன்தான் திருடியிருப்பான் என்று அவள் உறுதியாக நம்பியிருப்பாள். என்னிடம் ஒருமுறை கூட இது குறித்து அவள் பேசியதில்லை.

முந்தைய பத்தியுடன் இந்த இழி நிகழ்வு குறித்தான என் வாக்குமூலம் முடிந்திருக்க வேண்டும். ஆனால் நான் எழுதியதில் உள்ள சில தர்க்கப்பிழைகள் இப்போது பிடிபடுவதோடு மேலும் சில புதிய நினைவுகளும் குறிக்கிடுகின்றன. எனக்குத் தேவையானதை மட்டும் எடுத்து மீதியை வைத்தேன் என்று எழுதியிருக்கிறேன், இன்றுவரை என்னளவில் அது உண்மையான ஒன்றாகத்தான் இருந்தது. ஆனால் மிச்சமிருந்திருக்க வேண்டிய ஆயிரம் ரூபாயையாவது அம்மா கடைக்காரருக்கு தந்திருக்க முடியுமே, அவரும் அந்தளவிற்கு கோபமாக பேசியிருக்க மாட்டாரே என்ற கேள்வியோடு நான் அங்கீகரிக்க விரும்பாத சந்தேகமொன்றும் முதல் முறையாக எழுகிறது. ஏனென்றால் முந்தையை நாள் மாலை, மெடிக்கல் பில் தொகை மூவாயிரத்தி இருநூறு ரூபாய் வந்துள்ளதையும், மறுநாள் மளிகை பாக்கியை கொடுக்கப் போவதையும் அம்மா என் அப்பனிடம் கூறியதாக இப்போது தான் நினைவு கூர்கிறேன்.

***

காலத்துகள் – தொடர்ந்து நல்ல கதைகளை சொல்வனம், பதாகை ஆகிய இதழ்களில் எழுதி வரும் இவரது முதல் நூல் “இயர் ஜீரோ” நாவலாக வெளிவந்தது. ஆசிரியர் தொடர்புக்கு – ajay.78.r@gmail.com