Home Blog Page 64

தாமரை பாரதி கவிதைகள்

0

1) தேவதாவின் ஆனந்த நடனம்
*

உயிர்வளி யேற்றி
செஞ்சுடர் பிழம்பாய்
முழுதழலென
துளசி மாடந்தனில்
ஓரகலென
பிரகாசிக்கும்
சிற்றொளியா நீ

மெழுகிலை வழுக்கி
வற்றாத
குளத்துள் இறங்கும்
ஒற்றைத் திவலையின்
பரப்பு இழுவிசையா நீ

அடர் பொருள்
அண்டமொடுங்க
ஒற்றைக் கரும்பொருளில்
வெடித்துச் சிதறும்
குள்ளங் குறுகோளா நீ

தரையெங்கும் தலைகீழ்
மயிர் பரப்பி
நுண்புழைகளேறித்
ததும்பும்
பெருங்கானகமொன்றின்
பசுமையா நீ

கூகை ஆந்தை கோட்டான்
உடும்பு பூரான்
கடுந்தேள் நட்டுவாக்கிளி
நத்தை நாய் நரிகள் திரியுமோர்
இடுகாட்டிடை
மலரும் மலையரளியா நீ

***

2)

உன்
பெருந்தொடைகளிலேறி
ஊறும் மச்சப் பாம்புகளை
என்
பாடல் மகுடியினால்
மடியவைக்கத் தவறியதன்
விளைவால்
விடமேறி அலைகிறாய்
தலையெங்கும்

சிசு விழுந்த
பசுக்களின்
பிசுபிசுப்பு நினைவுகளை
வெண்சிறகேந்திய மயில்கள்
உதிர்த்த இறகுகளாய்
இறைத்துச் செல்கிறேன்
உஷா காலத்து
பிரளயத்தின் போது
ஓடமொன்றைச் செய்து வைத்தால்
நீயென்ன அதில் ஏறிவிடவா
போகிறாய்

சுதைமண் மூடிய
சாம்பல் மேடுகளில்
துளிர்த்திருக்கும்
ஊமத்தங்காயின்
முட்களாய்
எனை வருடிப் போகுமவை
என்றோ நீ தந்த முத்தங்கள்தான்

நீரெரியும் இரவுகளில்
பாழும் காமத்தின்
மனக் கதவங்களை
மறுப்பின் நுகங்களால்
மடைமாற்றியவள் தானே நீ

உழாத நிலமதனில்
பரிதிகளின் வெடிப்புகளால்
உலர்ந்த உதடுகளில்
உமிழ்நீரையிட்டு
தாகந் தீர்த்துவிட்டுப் போயேன்

உன்னிடம்தான் இருக்கிறதே நிறைய
உய்யவும் உயிர்ப்பிக்கவும்

***

3)

மறுபிறப்பிதனில்
மீண்டும்
முளைவிடும் மருத்தாம்பாக நானும்
பற்றியேற உதவும்
கொழுகொம்பாக நீயும்
இருப்பதாக
காற்றிலாடி அசையும்
ஆடிக் காற்றின்
முதிர் நெல்வயல்கள்
பரிகசிக்கின்றன

நீர்மம் திரவம் பால்மம் கூழ்மம்
எல்லாம் நெளிகின்ற பாய்மத்தின்
பல்வேறு பெயர்களேயன்றி
வடிவொன்றுதான்

அணங்கு பேய் பிடாரி பிசாசு
செஞ்சடைக்காட்டேரி
சடாமுனி எல்லாம் தீமையின்
பல்வேறு வடிவங்களின்றி
குணமொன்றுதான்
உன் போல

ஒரே ஆற்றின்
இரு கிளைகளால் உருப்பெறும்
ஆற்றுத் தீவென
உனது இறுக்கத்தால்
உன்னுள் திணறுகிறேன்

திணறுமென்னை நகைக்குமுன்
சிரிப்பலையைத்தான்
தாங்கவே முடியவேயில்லை

***

தாமரை பாரதி

கல்யாண ராசி

1

ரமேஷ் ரக்சன்

“செத்துரட்டா..”

என்று போகும் அளவிற்கு சின்னதுரை சொன்னதும் தான் கேள்வியாகக் கேட்டுத் துளைத்தெடுத்த ஓட்டுப்பழத்தை இடைமறித்தேன். எனக்கும் நிறைய கேள்விகள் இருந்தது. எனக்கும் சேர்த்துதான் அவனிடம் ஓட்டுப்பழம் கேட்டான். டிரைவரும் ஸ்டெல்லாவும் பேசிக்கொள்ளவோ, பேசி காதலை வளர்க்கவோ இருவரிடமும் செல்போன் கிடையாது. ஸ்டெல்லா வேலை செய்யும் இடத்திற்கு சென்றும் அவனால் பார்க்க முடியாது. வேலை முடிந்து ஊருக்குள் வந்து விட்டால் சுத்தம். அந்த வகையில் டிரைவர் ஒன்சைடாக காதலிக்கிறான் என்று சின்னதுரைக்கும் சேர்த்து நான் சமாதானம் அடைந்திருந்தேன். மாலையில் அவள் அதே வேனில் வருவதில்லை என்பது எங்களுக்கு கூடுதல் நிம்மதியாக இருந்தது. டிரைவர் காலேஜ்-க்கு பெண்களை ஏற்ற சென்றுவிடுவதாக சொன்னது நம்பும் தகவல்தான்.

ஸ்டெல்லாவின் ஊரில் இருந்து நாங்கள் கிளம்பி, இருவரும் வேன் வரும்வரை நிகழ்த்தி வந்த வாக்குவாதத்தை வைத்து வீட்டிற்கு போகிற வழியிலேயே அவளுடைய ஜாதகத்தைப் பார்த்துவிட்டுச் செல்வோம் என்று முடிவெடுத்திருந்த எண்ணத்தை தள்ளிப்போடத் தோன்றியது. ஆனால் மூவருக்குமே வாய் திறக்க விருப்பமில்லை. வேனில் எறிக்கொண்டோம்.

சின்னதுரையின் குதிரை மனது இப்போது எங்கு மேய்ந்து கொண்டிருக்கும்? எங்கள் ஊருக்கான துட்டை ‘கிளி’யிடம் கொடுத்துவிட்டு பேசாமல் இருந்தோம். நல்லநேரம் வேனில் பாட்டு எதுவும் ஓடவில்லை என்று நினைத்துக் கொண்டேன். வேனில் இருந்த நான்கு கிலோ மீட்டரும், நடுவில் எந்த ஊரிலும் ஆள் இறக்கம் இல்லாமல் எங்கள் ஊரில் வேன் நின்றது. ஆளுக்கொரு திசையில் மனம் போயிருந்தாலும் கால்கள், பொருத்தம் பார்க்க தெற்கு நோக்கியே நடந்தன.

ஜோசியக்காரரிடம் இளம்பெண் ஒருத்தியின் தகவலை மட்டும் சொல்லி கட்டம் பார்த்து எப்படி பொருத்தம் பார்க்கச்சொல்லி கேட்பது? சின்னதுரைக்கு எங்கிருந்தோ குற்றவுணர்ச்சி மேலெழுந்தது. நொண்டியார் கடையை சென்றடையும் முன் மூன்றுமுறை வீட்டிற்கு திரும்பிவிடலாம் என்றும் இரண்டுமுறை டிரைவரைக் கொன்று விடுவதாகவும் சொல்லிக் கொண்டே நடந்தான். “பேசாம அவளுக்கு வசியம் வச்சிடுவமா” என்றான் ஓட்டுப்பழம்.

“அவா ஒத்துக்கிடலனாலும் பரவால்ல நான் அவள ஒன் சைடா லவ் பண்ணிட்டு போறேன். நீ ஒன் வேலப் ..ண்டைய மட்டும் பாரு”

ஜோசியம் பார்க்க உள்ளே நுழையும் முன், பழக்கடையில் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் நிற காயின் பாக்ஸ் போனில் ஒரு ரூபாய் போட்டுவிட்டு சின்னதுரை எங்களைத் திரும்பிப் பார்த்தான். அவனுக்கு ஸ்டெல்லா வீட்டு லேண்ட்-லைன் எண் தெரியாது. கண்கலங்கி சிவந்து போயிருந்தது. கண் தட்டாமல் எங்களையே பார்த்து நின்றான். அவன் விரும்பி வரவைக்கப்பட்ட அழுகை. காதலின் வீரியத்தைக் காட்டுவதற்க்காக வெட்கத்தை விட்டு எடுத்த முடிவு. “குட்டி” அடிவாங்கும் போது பொங்கியதைவிட அதிகமாக பொங்கியது. “கிறுக்குப் ..ண்ட கொண்டா” ஓட்டுப்பழம் ரிஸீவரை பிடுங்கி வைத்தான். கண்ணாடி நிற நாக்கை விரலால் உள்ளே தள்ளி வந்து விழுந்த ஒரு ரூபாயை ஓட்டுப்பழம் எடுத்தான். எடுத்த கையோடு,

“இப்ப என்ன அவன கொன்னுருவமா?”

***

இது நான் அவனுக்கு எழுதிக் கொடுக்கும் நாலாவது காதல் கடிதம். சின்னதுரைக்கு ஒரு ராசி உண்டு. எனக்குத் தெரிந்த வரைக்கும் அவனுக்கு ஒருபக்க காதல் என்ற ஒன்றே கிடையாது. இவன் காதலைச் சொல்லி அந்தப் பெண்ணும் காதலை ஏற்றுக் கொண்டிருப்பாள். அதற்குச் சான்றாக அந்தப் பெண்ணிடமிருந்து, இன்னொரு நாள் காதலை ஏற்றுக் கொண்டதாக பதில் கடிதமும் வரும் அதோடு சரி, காதல் முடிவுக்கு வந்துவிடும். இவன் அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு பதில் கடிதம் எழுதுவான். எழுதி கொடுத்த கடிதத்தை கொடுத்தும் விடுவான். கடிதத்தைப் பெற்றுக்கொண்ட ஒரே வாரத்தில் பணியிடத்தில் சொல்லாமல் கொள்ளாமல் அந்தப் பெண் ஒருநாள் விடுப்பு எடுப்பாள். அன்று சாயங்காலமே பயமாக இருப்பதாக புலம்புவான். சொல்லி வைத்தது போலவே அந்தப் பெண்ணை ஒருவன் மாப்பிள்ளை பார்க்க வந்திருப்பான், பார்த்தவனும் வீட்டிற்குப்போய் பதில் சொல்கிறேன் என்கிற சம்பிரதாயம் எல்லாம் இல்லாமல் பெண் வீட்டில் வைத்தே சரி என்றிருப்பான். நகை குறைவாக கேட்கிறார்களே என்று பெண்ணின் அம்மாவும் சந்தோஷப்பட்டிருக்கும். அந்தப்பெண்ணும் மறுபேச்சின்றி ஒத்துக்கொள்வாள். மறுநாள் பணியிடத்திற்கு வந்து மாப்பிள்ளைப் பார்த்து விட்டார்கள் ‘இந்த’ மாதத்தில் “எனக்கும் அவருக்கும்” கல்யாணம் என்று ஒரு மாதத்தை சொல்லுவாள். சின்னதுரையிடமும் கண் கசக்கிவிட்டுச் செல்வாள். இதுவரை அவனுடைய ஏழு காதலுக்கு இப்படி நடந்திருக்கிறது.

மறுபடி இரண்டு மாதம் போல சும்மா இருப்பான். இதயம் கணப்பட்டுப்போன அந்த நாட்களில் “துள்ளாத மனமும் துள்ளும்” படத்தை டிவிடி தேயத்தேய பார்த்து கண்ணீர் சிந்துவான். சிடி கடைக்குச் சென்று இன்னொரு காபி வாங்கி வருவான். இது, தொடரும்…

புதிது புதிதாக பெண்கள் வேலைக்குச் சேர்ந்து கொண்டே இருப்பார்கள். அதில் ஒரு பெண்ணை பிடித்து விடும். மதிய சாப்பாட்டு நேரத்தில் பேசுவான், எடுத்த எடுப்பில் பலநாள் பழக்கம் போல உரிமை எடுத்துக் கொள்வான்.

“ஏட்ட, என்ன வேலைக்கு புதுசா? இன்னைக்கு தான் பாக்கேன்? – ஆமாணே.

நா ஒனக்கு அண்ணனாட்ட? எந்தூரு

அப்பா, கூடப்பிறந்தவர்கள் பற்றி எல்லாமே பேச ஆரம்பித்த ஒரேநாளில் தெரிந்து கொள்வான். ‘அவள்’ பற்றிய கதைகளை அவள் குணாதிசயங்களை, அவள் செய்கைகளை, அவள் ஜாதியை என, அவன் வேலை முடிந்து வந்ததும் தெருவின் ஓரத்தில் அடுக்கி வைத்திருக்கும் மூங்கில் பந்தல் கம்பில் அமர்ந்து பேசும்போது எங்களிடம் நீட்டி முழக்குவான். பிறகு ஒருநாள் “இன்னைக்கு ராத்திரி உங்ககூட ‘தீ’ போட சும்மா வாராம்ல என்பான்” எனக்கு மட்டும் விறகு சுமக்க உதவி செய்வான். பன்னிரெண்டு மணிவரை கண் விழித்திருப்பதாக உறுதியளிப்பான். அதன்படியே நடந்தும் கொள்வான். இரவு எட்டுமணி வாக்கில் எரிந்தவரை அடுப்பின் வாய் நிரம்ப விறகு ஏத்திவிட்டு நாங்கள் கிளம்புகையில் எங்களோடே வருவான். வந்து அவரவர் வீட்டில் சாப்பிட்டுப் போனவுடன் என்னிடம் பேசிப்பேசி ஒரு கடிதம் எழுதி வாங்கிவிட்டு தூங்கி விடுவான். காலையில் தீ போட்டு செங்கல் சூளை ஓனர் வந்து கல் பழுத்திருப்பதைப் பார்த்துவிட்டு ‘சரி அடைங்க’ என்பார். அடுப்பை ஓடு வைத்து அடைத்து மண்கொண்டு பூசி விட்டு அவனை எழுப்புவோம். கடிதத்தோடு வேலைக்குத் தயார் ஆவான்.

ஸ்டெல்லா ஊரிலிருந்து வேலைக்கு வரும் ஒருவனை சின்னதுரைக்கு தெரிந்திருந்தது. நான்கு கிலோ மீட்டர் தூரம். தினமும் சைக்கிளில் வந்து போவான். நாங்கள் ஊருக்குள் போகும்போது தெரு நல்லியில் ஸ்டெல்லா சில்வர் குடத்தை கழுவிக் கொண்டிருந்தாள். குடத்தினுள் கேட்கும் சலங்கைச் சத்தம் சின்னதுரையை ரொம்பவே சந்தோஷமாக மாற்றியிருந்தது. இன்னொரு ஊருக்கு வந்திருக்கிறோம் என்ற பயமே இல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். நடையின் வேகம் குறைந்திருந்தது. வேண்டுமென்றே திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டு வந்தான். ஷால் இல்லாத ஆமை ஓடு டிசைன் போல ஏதோ ஒரு நைட்டி அணிந்திருந்தாள். முன் பக்கம் ஜிப் வைத்திருந்தது. வெள்ளை நிற ஜிப் இழுவையைப் பார்த்துவிட்டு எங்களைப் பார்த்தான். நாங்கள் காணாதது போல நடந்து கொண்டோம். மூன்று ஜோடி கண்களுக்கும் ஒரே பார்வை.

மழைக்கு பறிக்கப்படாமல் அதன் மூட்டிலேயே உதிர்ந்து கிடந்தது பவழமல்லி பூ. மல்லியும் பிச்சி செடியுமே எங்கள் எல்லோர் வீட்டுமுன் நிற்க, அவள் வீட்டின் முன் பவழமல்லி நன்கு மரம் போல வளர்ந்து நின்றது. எங்கள் மூவருக்குமே அது “என்ன பூ-ல” என்பதுதான் கேள்வியாக இருந்தது. அதையொட்டியே வானுயர அசோக மரமும் நின்றிருந்தது. மஞ்சள் ரோஜா ஒன்று மலர்ந்திருந்தது. மதில் சுவருக்கு வெளியே செடி வைக்க இடம் ஒதுக்கி, ஒற்றைக்கல் செங்கல் கட்டில் ஒன்றரையடி கட்டப்பட்டிருந்தது. “கலர் பெயிண்ட் எல்லாம் அடிச்சிருக்கு; இவா எதுக்குல வளையல் கடைக்கு வேலைக்கு போறா?” – ஓட்டுப்பழம் கேட்டான்.

“நீ ஒம் சோலிய மட்டும் பாரு.”

***

வேனிற்குள் ஏறும்போதே கிளியிடம் (வேன் கிளினர்) நான்கு ரூபாய் கொடுத்து விடுவாள். எல்லா நாளும் சில்லறையை வேறு மாற்றி வைத்திருப்பாள். கடைசி இருக்கையை பார்த்தபடியேதான் ஏறுவாள். சின்னதுரை அதற்கு முந்தைய இருக்கையில் அவள் துப்பட்டா குறைந்தபட்சம் தோளிலாவது உரசி செல்லும்படி ஓரமாய் அமர்ந்திருப்பான்.

தினந்தோறும் பூ வைத்து பொட்டு வைக்கும் பழக்கம் அவளிடம் இருந்தது. அவளுக்கு அவள் ஊரில் “பான்ஸ்” என்ற பட்டப்பெயரும் இருந்தது. அவள் ஆர்.சி கிறிஸ்டியன். அவள் பெயர் “ஸ்டெல்லா” என்று தெரிந்த நாளில் வேனின் இரண்டாவது படிக்கட்டில் காதல் லேசாக நழுவியது. நல்லநேரம் காதலுக்கு அடிகிடி எதுவும் படவில்லை.

சின்னதுரை துணி தைக்கும் கம்பெனியில் அயர்ன் மேன். மதிய உணவு வேளையில் கேண்டினில் சாப்பிடக்கூட மனம் ஒட்டாமல் படிக்கட்டில் நழுவிய அன்றே வேப்பமரத்தையொட்டி இருக்கும் வளையல் கடைக்கு வந்து அவளைப் பார்த்தான். அனுதினமும் வேனில் ஏறும்போது கண்ணில் படாதவனை முதன்முறையாக ஸ்டெல்லா எதிர்கொண்டாள். வியர்வை வழிந்த அவன் கழுத்து, அவளை நோக்கி சிரிக்க விடவில்லை. கடைக்குள் செல்லாமலே திரும்பிவிட்டான்.

ஸ்டெல்லாவிடம் முகத்தை பதிவுசெய்த மறுநாளே சின்னதுரைக்கு காதலைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

வழக்கமான “இந்தாபிடி” வகையில் லெட்டரை திணிக்கக் கூடாது என்பதை முடிவு செய்தோம். மிகத்தீவிரமான யோசனைக்குப் பிறகு கிட்கேட் சாக்லேட் வாங்கிவிட்டு தெருவுக்குள் திரும்பினோம். பேசி காதலை வளர்க்கும் பொறுமை எல்லாம் இம்முறை காணாமல் போயிருந்தது. என்னுடைய கல்லூரி நோட்டிலிருந்து பேப்பரை மடித்து கிழித்தால், அதன் பிசிறு அசிங்கமாகத் தெரியுமென்று பிளேட் ஒன்றை வாங்கி (சலூன் கடையிலிருந்து எடுக்க ஒத்துக் கொள்ளவில்லை) நாலாபக்கமும் அடி ஸ்கேல் வைத்து கிழித்து எடுத்தோம். “இந்த புனிதப் ..ண்ட காதல் என்ன ஆவுதுன்னு நானும் பாக்கேன் என்றான் ஓட்டுப்பழம். சிகப்புக்கவர் கிழியாமல் சாக்லெட்டை விரலால் கொஞ்சம் கொஞ்சமாக முன்பக்கம் தள்ளி, உருவி எடுத்துவிட்டு ஒரு “சுமால் லவ் லெட்டர் எழுதி மடித்து சாக்லேட் மேலே வைத்து மறுபடியும் கவர் போட்டு சாக்லேட் கொடுப்பது போலவே கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் திட்டம். எழுத ஆரம்பிக்க தொடங்கும்போது ஒரேயொரு வரி மட்டும் போதும் என்று முடிவானது. அதையும் சின்னதுரையே சொன்னான். “டெய்லி உன் ஸால் என் மேல படுமே அது உனக்கு (ந்)யாவம் இருக்கான்னு கேட்டு அப்டியே முடி. பதினொன்னாம் கிளாஸ் பாதின்னு சொல்லிருக்கேன் கையெழுத்தும் நீயே போட்ரு. அப்பதான் படிச்சவன் போட்ட மாதிரி இருக்கும்”

“அது ஒனக்கு தெரியுமான்னு தானல கேக்கணும்? (ந்)யாவம் இருக்கான்னு கேக்குற அளவுக்கு முருகன் கோயில் பின்னாடி கெடக்க தெப்பக்குளம் படிக்கட்டுல ரெண்டு பேரும் உருண்டிய பாரு?”

ஆறு மணியிலிருந்து எட்டு மணிவரை நேயர் விருப்பப் பாடலை ஒளிபரப்பும் “இதயம்” சேனலுக்கு அழைத்து “மேகமாய் வந்து போகிறேன்” பாடலைப் போடச்சொல்லிக் கேட்டுக் கொண்டோம். ஊர் பெயரைக் கூட போடாமல், இன்னார் என்ற பெயர் மட்டுமே வந்து போகும் சேனலில், “அந்தோணியார் வேன் தேவதை” என்று சொன்னால் எப்படி போடுவான்? இனிமேல் போன் செய்து பாட்டே கேட்பதில்லை என்ற முடிவோடு துள்ளாத மனமும் துள்ளும் டிவிடி-ஐ டிவிடி கேசட்டுகள் அடுக்கி வைத்திருக்கும் அட்டைப்பெட்டியில தேடி எடுத்தோம். பிளேயருக்குள் கிடந்த WWF என்று எழுதியிருக்கும் கேசட்டை எடுத்து கவர் போட்டு ரகசியமாக ஓலைபிறையின் மூன்றாவது அடுக்கில் பதுக்கிவிட்டு யோசிக்கத் தொடங்கியிருந்தோம்.

ஒத்தைக்கொரு மகளாகிப் போன ஸ்டெல்லாவின் பிறந்த தேதி பிறந்த வருடம் பிறந்த நேரத்திற்கு எங்கே போவது? ஓட்டுப்பழம்தான் இந்த ஐடியாவை கொடுத்தது. இதற்குப்பிறகு காதல் தோல்வியே கூடாதென்று முடிவெடுத்துக் கொண்டோம். ஜாதகம் பார்த்து பொருத்தம் இருந்தால் காதலைச் சொல்வோம். இல்லையென்றால் இத்தோடு காதலை கைவிடுவதென ஒட்டுப்பழம் விடாமல் தொணதொணத்துக் கொண்டிருந்தான். சின்னதுரை ஒத்துக் கொள்வதாகவே இல்லை. ஜாதகம் பொருந்தினாலும் பொருந்தாவிட்டாலும் ஸ்டெல்லாவே கடைசி என்று சத்தியம் எல்லாம் செய்தான். ஸ்டெல்லா விஷயத்திலும் கல்யாண ராசி பழித்துவிட்டால் வீட்டில் பெண் பார்க்கச் சொல்லிவிடுறேன் என்றான்.

காதலின் புனிதத்தைக் காப்பாற்ற இன்றிலிருந்து, ஸ்டெல்லாவிடம் காதலைச் சொல்லி அவள் பதில் சொல்லும்வரை “மேட்டர் படம்” பார்ப்பதில்லை என்றும் மேற்படி ஏதும் நிகழ்த்தப் போவதில்லை என்றும் சபதம் எடுத்தான். கையோடு தட்டிக்குள் இருந்த கேசட்டையும் எங்களை எடுத்துப்போகச் சொன்னான். எங்களுக்கு இந்த அணுகுமுறை விசித்திரமாகவே பட்டது. “செருக்கியுள்ளைக்க லவ்வு என்னத்த எல்லாம் பேச வைக்கி பாரு” ஒட்டுப்பழம் விழுந்து விழுந்து சிரித்தான்.

“நொண்டியார்ட்ட பாப்போம்ல எங்க அக்காளுக்கு எங்க அம்ம அங்கதான் பாத்தா. அவரு சொன்ன மாதிரியேதான் எங்க அத்தான் அமைஞ்சாரு” – ‘ஸ்டெல்லா’விற்கு ஜாதகம் இருக்க வாய்ப்பில்லை என்றானதும், ஜாதகம் எழுத தேவையான தகவல்களை சேகரிப்பது என்று முடிவானது.

“மொதல்ல ஒனக்கு இருக்க கல்யாண ராசி எப்போ முடியும்னு கேப்போம்ல. பொறவு அவளுக்க ஜாதாகத்த நொட்டலாம். கடைசியா என்ன சொல்வாருன்னு நெனைக்கா? வாழ மரத்துக்கு தாலி கட்ட சொல்வாரு. எவன் தோப்புக்குள்ள போய் தாலி கட்டுவா நீ? அதும் மூக்கன் ஓட்ட போட்டு ஏறாத வாழ மரமா வேற இருக்கணும் பாத்துக்க.”

“நம்மூர்ல எந்த ஜோசியக்காரம்ல இப்டி சொல்லிட்டு அலைதானுவ? தூம நீ ஒங்க தாய்கூட சேந்து நாடகம் பாக்கத விடு?

சின்னதுரைக்கு முதல் காதல் போலவே உள்ளங்கை எல்லாம் வியர்த்திருந்தது. முக்கில் சாய்த்து வைத்திருந்த பாயை எடுத்துப் போட்டவன் போர்வையை விரித்து, அசையில் ஒருவழியாக சட்டையைக் கண்டுபிடித்து எடுத்தவன், கையை சாரத்தில் துடைத்து விட்டு, என்னிடம் “அயர்ன் பண்ணி தால” என்றான்.

கிடுவையை இழுத்து மறைக்காமல் பாசி ஏறிய சிமெண்ட் தொட்டியில் கிடந்த தண்ணியை வேக வேகமாக ஜட்டியோடு நின்று கோரிக்கோரி தலையில் ஊற்றினான். “ரொம்ப பயமா இருந்தா ஒரு தடவ கையடிச்சிக்க” என்றான் ஓட்டுப்பழம்.

குளித்துவிட்டு திருநீறை கையில் எடுத்தவன், கட்டியிருந்த டவலில் வேகவேகமாக துடைத்துக் கொண்டான். தரையை உரசிக்கொண்டே வரும் கதவை கொஞ்சம் மேலாக தூக்கிச் சாத்தினான். மூன்றாவது தட்டியில் யாருக்கும் தெரியாதவாறு டிவிடி-ஐ சொருகினோம். தார்ச்சாலை சூட்டையும் பொறுத்துக்கொண்டு, பஸ் ஸ்டாண்ட் எதிரிலிருந்த செருப்பு கடையில் லூனாரஸ் வாங்கினான் சின்னதுரை.

***

டிரைவர அண்ணன்னு கூப்ட்டான்னு தான் நெனைக்கேன்.

கேனக் … நேத்து சாயங்காலம் தான இதுவரைக்கும் அவா கொரலையே கேட்டதில்லன்னு சொன்னா நீ? சரி அதாவது போவட்டும்டா; மொதல்ல நீ நான் கேட்ட கேள்விக்கு பதில சொல்லு; நெதம் ஒரே வேன்ல அவா எதுக்கு ஏறனும்.

செத்த அறுதலி அவிய ஊர் வேன்ல அவா ஏறுதா இதுலாம் ஒரு கதையா?

சரி அத உடு. அதே டயத்துக்கு எப்படி அவன் வண்டிய கொண்டுட்டு வாரான்? அதும் கடைசி ஓரம் சீட்ட அவளுக்குன்னே எதுக்கு சும்மா போட்டுட்டு வரணும்? நம்மூருக்கு வண்டி வரும்போதே அந்த சீட் காலியாதான் வருதுன்னு நீ சொல்லுதா. ஆனா லவ்வு இல்லையாம். நம்புற மாதியால இருக்கு. அதும், அது என்ன பாட்டு? ஆங் அதே காடாத்து தான். அவன், அவிய ஊர் அம்மன் கோயிலுக்குதான வரி கொடுக்கான் பொறவு என்னப் ..ண்டைக்கு வேனுக்கு அந்தோணியார்னு ஸ்டிக்கர் ஒட்டிருக்கான்?

அது, அவளுக்க அக்கா மொவளுக்கு மொட்ட போட வேளாங்கண்ணி போவும்போது அவன் வேன்ல தொங்குத அந்த ஜெபமாலையும் ஸ்டிக்கரும் அடிச்சானாம் வேற ஒன்னும் இல்லையாம்.

அப்போ இன்னும் அவிய ரெண்டு பேருக்கும் ஒன்னும் இல்லனு நம்புதா? ஆனா அவளுக்க எல்லாத்தையும் அவன் தெரிஞ்சி வச்சிருக்கான்? அவா சொல்லாமயா?

நான் லெட்டர் குடுக்கதான் போறேன். அவா அவன லவ் பண்ணல. இதான் நெசமா இருக்கும்.

அப்போ நொண்டியார பாக்காண்டாம்லா? நேரா வீட்டுக்கு தான போறோம்?

இப்ப என்ன? வார வண்டில வுழுந்து

செத்துரட்டா..?

***

ரமேஷ் ரக்சன் – இது வரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள் ஒரு நாவல் வெளிவந்துள்ளது. நெல்லை மாவட்டம் பனகுடியைச் சேர்ந்த இவர், தற்போது வசிப்பது ஓசுரில். ஆசிரியர் தொடர்புக்கு – rameshrackson@gmail.com

வா.மு.கோமு கவிதைகள்

0

அவரின் மரணம்

செய்திச் சேனலில் உங்களின்
மரணத்தைப் பற்றி தகவல் சொன்னார்கள்!
திடுக்கிட்டு அம்மாவை அழைத்து
அவர் போய்ச் சேர்ந்து விட்டாரம்மா! என்றேன்.
அவர் யாரென அம்மாவுக்கு தெரியவில்லை.
எனக்கும் தெரியவில்லை!
திடுக்கிடலில் நான் எல்லாவற்றையும்
மறந்திருந்தேன்!

சரி நீங்கள் யாரோவாகவேனும் இருங்கள்!
மருத்துவமனையில் நீங்கள்
மிகவும் துன்பப்பட்டிருக்கலாம்.
மூச்சு வாங்க சிரமப்பட்டிருக்கலாம்.
மருத்துவர் உங்களுக்கு சுவாசக்கருவி
பொருத்தியிருந்திருக்கலாம்!

அவ்வப்போது கபசுர குடிநீர் அருந்தி
இரண்டு முட்டைகளும், கீரை சூப்பும்
குடித்திருக்கலாம்! சிலசமயம் இருமியிருக்கலாம்.
வயிற்றுப்போக்கும் இருந்திருக்கலாம்.
நீங்கள் மிகவும் பயந்து கடவுளரைப்
பார்ப்பது போன்று மருத்துவரை நோக்கி
மனதில் இறைஞ்சியிருக்கலாம்.

இந்தமுறை எப்படியேனும் பிழைத்து
வீடு சென்று விட்டால் உங்களது தீய
பழக்கவழக்கங்களை விட்டு விட்டு
புதுமனிதனாக வாழவேண்டுமென
சபதம் கூட எடுத்திருக்கலாம்.
படுக்கையில் மரண பயத்துடன்
படுத்திருக்கையில் தான் வாழ வேண்டுமென
ஆசையும் வருவதாய் எண்ணி அழுதிருக்கலாம்!

உங்களையறியாமல் நீங்கள் இறந்திருக்கிறீர்கள்.
அவ்வளவு தான்!
000

அதிசய விலங்கு

நெட் ஃப்ளிக்ஸில் புதிய திரைப்படங்கள்
வெளியாகத் துவங்கி விட்டன!

பேருந்துகளில் ஜன்னலோர சிறுமிகள்
கையசைத்துப் போகிறார்கள்!

கோவில்களிலிருந்து பக்தர்கள்
திருநீரு பூசிய நெற்றியுடன்
புன்னகைத்தபடி வெளிவருகிறார்கள்!

பெளர்ணமி பூஜையில் எல்லா
ராசிக்காரர்களுக்காகவும் யாகம்
நடத்துகிறார் பூசாரி!

கபசுரகுடிநீரென்று குடிவிரும்பிகள்
பாரில் அமர்ந்து குடித்து மகிழ்கிறார்கள்.

நான் மட்டும் புதிதாய் இப்போது தான்
வாங்கிய மாஸ்க், கையுறை, கண்ணாடி அணிந்து
ஸ்கூட்டரில் கிளம்பிச் சென்றேன்.

அதிசய விலங்கு செல்வதாய் ஆச்சரியமாய்
எல்லோரும் பார்த்து கையசைக்கிறார்கள்!
கோமாளியை பார்த்தது போன்று
சில பெண்கள் சிரித்தும் சென்றார்கள்!
000

பாதாள உலகம்

பாதாள உலகத்தை பேருந்து ஓட்டம்
துவங்கியதால் ஒருமுறை
பார்த்து வர பிரயாணித்தேன்.
எல்லையிலேயே பேருந்தை நிறுத்தி
’இறங்கிக் கொள்ளுங்கள்! உள்ளே
பேருந்து போகாது!’ என்றார் நடத்துனர்.
என்னோடு சேர்த்து பதினாறு பேரும்
இறங்கிக் கொண்டோம்!

பாதாளலோகம்
இருள் நிரம்பியது என்றென்றைக்குமே!
சுங்கச்சாவடி சோதனைக்குப் பிறகு
பாதாள லோகத்தினுள் சென்றோம் நாங்கள்.
முகப்பிலேயே நிலத்தினை குடைந்து
குழிகளாக்கி வைத்திருந்தார்கள்.
பாதாள உலகத்தினர்
சங்க காலத்தில் பாத்ரூம்
வசதியுடன் வாழ்ந்தார்கள் என்பதை
நிருபணம் செய்யும் ஆதாரங்களாம் குழிகள்!
பதினைந்து நபர்களும் பத்திரமாய்
பார்த்துக் கால்வைத்து இறங்க ஒருவன்
மட்டும் பழங்கால எலும்புக்கூடொன்றின்
மீது தவறி விழுந்தான்!
அவன் பிறகு எழவேயில்லை.

நான் என் தந்தையாரைத் தேடிப் பயணித்தேன்.
தந்தையாரை வீடியோ காலில் அழைத்தேன்.
அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

சற்று தூரத்தே ஒரு எலும்பு மனிதன் தன்
கைப்பேசி வெளிச்சத்தில் தன் முகத்திற்கு
அவசரமாய் மாஸ்க் அணிந்து கொண்டு
எங்களை எதிர்கொள்ள தயாரானான்.
000

கடவுள்

என் கடவுளைப் பார்த்து வர
சூடம் ஊதுபத்தி தீப்பெட்டியோடு
சென்றிருந்தேன்!
யாரோ என் கடவுளுக்கு
முகக்கவசத்தை அணிவித்து
போயிருக்கிறார்கள்!

மூச்சு வாங்க சிரம்மாய் இருப்பதாய்
என் கடவுள் குரல் கேட்டது சுவரெங்கிலும்!
’இதோ’ வென முயற்சித்தேன்.
உருவாஞ் சுருக்கிட்டிருந்தால் எளிதாக
பணியை முடித்திருப்பேன்.
ஏகப்பட்ட முடிச்சுகளோடு இருந்ததால்
முடிச்சவிழ்க்க முடியாமல் திணறினேன்.

‘என் கையில் வீணே இருக்கும் கத்தியை
எடுத்தேனும் முயற்சியேன்’ அசரீரி தான்.
கடவுளின் கையிலிருந்த கத்தியை உருவி
மாஸ்க் முடிச்சை அவிழ்த்தேன்!
புஸ்ஸென்று புகை மண்டலமாயிற்று
அந்த இடம்!

எல்லாம் சரியாகி கண்திறந்த போது
கையில் கத்தி பிடித்தபடி நான்
அவர் மேடையில் அமர்ந்திருந்தேன்.
கடவுள் இடத்தை காலி செய்திருந்தார்.
000

வியாபாரி

நீ ஏன் நாட்டு நாய்க்குட்டிகளை
ராஜபாளையம் சென்று வாங்கி வந்து
வீணாய்க்கிடக்கும் உன்
கோழிப்பண்ணைக்குள் விட்டு
வளர்க்கக் கூடாது? மக்கள்
பண்ணைக்கு தேடி வந்து
வாங்கிச் செல்வார்கள்! நாய் ஒன்றுக்கு
நூறிலிருந்து இருநூறுவரை லாபம்
வைத்து விற்றால் உனக்கு சந்தோசம்
தானே! என்றான் நண்பன்.

அல்லது தஞ்சாவூர் சென்று
ஒரு லோடு பொம்மைகளை
ஏற்றி வந்து உன் கோழிப்பண்ணைக்குள்
இருப்பு வைத்து ஊர் ஊராய்
ஆட்டோவில் போட்டுச் சென்று
பதிவு செய்யப்பட்ட சின்னக் கொடை
ரேடியோவில் விளம்பரம் செய்து
வியாபாரியாக ஏன் மாறக்கூடாது?

‘அண்ணே வாங்க! அக்கா வாங்க!
உங்க கொழந்தைகள் இந்த கொரனா
காலத்தில் மகிழ்ச்சியாக வீட்டில்
விளையாட தஞ்சை பொம்மைகள்!
கொறஞ்ச வெலையில விற்பனை செய்யுறோம்!
வாங்க! வாங்கக்கா!’ நாலு பொம்மைகள்
வெறும் நூறே ரூவா தான்!’

‘ஈபாஸ் எடுத்தாவது
பெங்களூர் கூட்டிச் சென்று
உன் ஒரு விரையை விற்று
காசாக்கி வந்து தொழிலை துவங்கி
விடுகிறேன்’ என்றேன்.

கொரனா காலமோ
வேறு என்ன காலமாகவோ
இருந்தாலும் அறிவுரைகளுக்கு
பஞ்சமே இருக்காது தான் போல!
000

உலகத்தின் அழகெல்லாம் ஒருங்கே பெற்றவள்

அந்தப் பெண்ணை சாலையில்
நான் பார்த்த போது மனதினுள்
எதுவோ அப்போது பூத்துவிட்டது!
இத்தனைக்கும் அந்தப்பெண்ணை
பின்புறமாகத்தான் நான் பார்த்தேன்.
உலகத்தின் அழகெல்லாம் ஒருசேர
அமையப்பெற்றவளாக இருக்கலாம்!

இருப்பது ஒரு வாழ்க்கை!
அதை இப்போது மகிழ்ச்சிப்படுத்த
அந்தப் பெண்ணைப் பின் தொடர்ந்தேன்.
நீலவர்ண சுடிதார் அவள் உடலுக்கு
ஏற்றதாக அமையப்பெற்றிருந்தது.
மிக உயர்ரக மிதியடி அணிந்திருந்தாள்.
அவளின் நடை ஒரு நாட்டியத்திற்கு
ஒப்பானதாக இருந்தது!
சாலையில் செல்வோர் அவரவர்
பாடுகளோடு சென்றார்கள்!

அவளின் எதிர்க்கே கோமாதா ஒன்று
சாலையில் வந்து கொண்டிருந்தது!
எனக்கோ சாலையில் வரும் அது
உலகத்தின் அழகையெல்லாம் ஒருசேர
பெற்றிருக்கும் அவளை முட்டி விட்டால்?
குடல் சரிந்து சாலை ஏக களேபாரமாகிடும்!
நான் நடையை விரைவு படுத்தினேன்.

நான் நல்ல மாடுபிடிக்காரனுமல்ல தான்.
கோமாதா அசைபோட்டபடி திடீரென நின்று
வாலை உயர்த்தி சிறுநீரை வெளியேற்றிற்று!
உலகத்தின் அழகெல்லாம் ஒருங்கே பெற்றவள்
வேகமாய் மாட்டைக் கடந்து
மாஸ்க்கை இறக்கிவிட்டு தன் உள்ளங் கைகளால்
சிறுநீரைப் பிடித்துக் குடித்தாள்! தலைக்கும் தீர்த்தம்
போல போட்டுக் கொண்டாள்!

பிறகு எனக்கு யாரோ தண்ணீரை முகத்திலடித்து
எழுப்பினார்கள்! யாரெனப் பார்த்தேன்!
உலகத்தின் அழகெல்லாம் ஒருங்கே பெற்றவள்!
000

வா.மு கோமு – இவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.சிறுகதைகள், கவிதைகள், நாவல், கட்டுரைகள் என 25க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன.நடுகல் இதழ் ஆசிரியர் – vaamukomu@gmail.com

ஒரு கிளை பல இலைகள்

0

மௌனன் யாத்ரிகா

*

1.
ரயில் நிலையத்தில் யாருமே இல்லை. நிலைய ஊழியர்களைக் கூட வெளியில் காண முடியவில்லை. சற்று நேரம் டிக்கெட் எடுக்கும் இடத்தில் அவன் நின்று கொண்டிருந்தான். ரொம்ப நாட்களாக திறக்கப்படாமல் மூடியிருக்கும் டிக்கெட் கௌண்டரின் சிறிய மூடு பலகையில் அட்டைப் பூச்சிகள் ஊர்ந்ததற்கான கோடுகள் இருந்தன. அவன் இங்கு எப்போது வந்தாலும் காத்திருக்கும் அந்த சிமெண்ட் கட்டை கறுத்து இறுகிப்போய் கிடந்தது. அந்த இடத்தில் போய் அமர்ந்து கொண்டான். அந்த இடத்துக்கும் அவனுக்கும் தொடர்பில்லாத காய்ந்த இலை ஒன்று அந்த சிமெண்ட் கட்டையில் அசைந்து கொண்டிருந்தது. அந்த இலையைக் காண்பது வித்தியாசமாக இருந்தது. எதையோ தன்னிடம் சொல்வதற்காக அது அங்கு காத்திருப்பதாக நினைத்தான். அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு படகு திரும்புவது போல் வடக்கும் தெற்குமாக இருந்த அது திடீரென மேற்குக்கும் கிழக்குக்குமாக திரும்பியது. அதன் அசைவுகளைப் பார்த்தபோது அவனே இலை வடிவில் அங்கு தத்தளிப்பது போல் இருந்தது. வெறிச்சோடி கிடக்கும் ரயில் நிலையம் ஒரு குகையைப்போல் மர்மப் பிரதேசமாக மாறிக் கொண்டிருப்பதாகவும் தோன்றியது. மாலைப்பொழுதின் வெயில் தணிந்து காற்றில் இதமான குளுமை பரவியபோது அந்த இடத்தை விட்டு எழுந்து மேற்கே தெரிந்த பாலத்தை நோக்கி நடந்தான்.

பாலத்துக்கு முன்னே ஒரு நான்கடி உயரத்தில் கருங்கல் ஒன்று நின்றிருந்தது. அதன் முகட்டில் பறவைகளின் எச்சம். அந்தக் கல்லில் நிழல் படிந்து குளுமையாக இருந்தது. அதில் சாய்ந்து நின்று கொண்டு எதிர்ப்புறத்தை வெறித்து, கண்கள் நிலைக்குத்த பார்த்துக் கொண்டிருந்தான். அந்த இடத்தைக் கடந்து கூட்டமாக காகங்கள் பறந்து போயின. எதிர்புறத்தில் ஒரு பெரிய பள்ளம் இருப்பது போல் தோன்றியது. அந்தப் பள்ளத்தில் யாராவது இருக்கலாம் என்று நினைத்தான். அதற்கும் பின்னால் அடர்ந்து விரிந்திருந்த தோப்பில் பறவைகள் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. பாலத்தின் மீது நடந்து தோப்புக்குள் போகலாம் என்பதுபோல் அவன் கால்கள் அவனை இழுத்தன. அங்கிருந்து ரயில் நிலையத்தின் எதிரே இருந்த நடைமேடைக்குப் போகும் கல் பாதையின் முகப்பில் முறிந்து பல நாட்களான ஒரு தூங்குமூஞ்சி மரம் கிடந்தது. அதன் கருமையேறிய வேர் பகுதிகளில் பூச்சிகள் ஊர்ந்து கொண்டிருந்தன.
நடைமேடை வழியே நடந்து பயணிகள் உட்காரும் கட்டையொன்றில் உட்கார்ந்திருக்கலாமா என்று நினைத்தான். மனம் அங்கு செல்ல ஒப்பவில்லை. இப்படியே பாலத்தின் வழியே நடந்து தண்டவாளத்தின் இடதுபுறமாக, கருங்கற்கள் விழுந்து கிடக்கும் ஒத்தயடிப்பாதை வழியாக போய்க் கொண்டிருக்கலாம் என்று தோன்றியது. அந்த கருங்கல் பாதை தூரத்தில் தெரிந்த ஓர் சிற்றூருக்கு போகக்கூடியது. ஒருவேளை அந்த ஊருக்குச் செல்ல விரும்புகின்றானோ. நிச்சயமாக இல்லை. அங்கு யாரையும் அவனுக்குத் தெரியாது. எங்கேயாவது போ என்று மனம் முதுகில் கை வைத்து உந்தித் தள்ளிக் கொண்டிருப்பதால் அவன் அப்படி ஒரு நடைபிணம் போல் நடந்து கொள்கிறான்.

அவன் கால்கள் தயங்கியபடியும் தடுமாறியபடியும் நின்று கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்து அந்த பாலத்தின் விளிம்பில் உட்கார்ந்த பறவைக்கு அலகு நீளமாக இருந்தது. இறகுகள் குட்டையாக வெண்மையும் கறுப்பும் கலந்தவையாக இருந்தன. தண்டவாளத்தில் கிடந்த கல் ஒன்று திடீரென சிறகு முளைத்து அங்கு வந்து உட்கார்ந்து கொண்டதோ என்று நினைக்கும்படி அதனுடைய உடல் தோற்றம் இருந்தது. அவனுக்கும் அந்தப் பறவைக்கும் இடையில் கோடு போல் விழுந்திருந்தது பாலத்தின் விளிம்பு. அவன் சில காலடிகள் எடுத்து வைத்தால் அது பறந்து விடும். அவனுடைய கால்கள் தரையிலிருந்து எழவில்லை. பறவைக்கு இவன் மீது கவனம் இல்லை. அது அங்கிருந்த எருக்குச் செடியில் ஊர்ந்து கொண்டிருந்த புழுவின் மீது கவனத்தைக் குவித்திருந்தது.

நீண்டுக் கிடந்த தண்டவாள இரும்புகளை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். அந்த இரும்பின் நடுவில் ஓர் ஒளிக்கீற்று ஓடிக்கொண்டிருந்தது. பறவையின் நீண்ட அலகுகள் திறந்து மூடுவதைப் பார்த்துவிட்டு அந்த எருக்கை கவனித்தான். அதிலிருந்த காய்ந்த இலைகள் ஆடிக் கொண்டிருந்தன. அந்தப் புழுவைக் காணவில்லை.

அவனுக்கு ஒரு புழுவைப் பிடித்து கை விரல்களுக்கிடையே வைத்து உருட்ட வேண்டும் போல் இருந்தது. அந்தச் செடியிடம் இன்னும் சில புழுக்கள் இருக்கலாம். ஒருமுறை அப்படி ஒரு புழுவை உருட்டிப் பார்த்திருக்கிறான். அந்தப் புழு எப்படி வந்ததென்று தெரியாத வண்ணம் அவனுடைய சட்டையில் ஒட்டிக் கொண்டிருந்தது. நன்கு கொழுத்த சிறிய புழு. பச்சை நிறத்தில், புள்ளி புள்ளியாய் விடைத்த உடலோடு இருந்தது. விரலில் வைத்து உருட்டும்போது அழுத்தம் கூடி அந்தப் புழுவை நசுக்கி விட்டதையும், அதனுடைய கரும்பச்சை நிற திரவம் விரலில் பிதுங்கி வழிந்ததையும் நினைவு கூர்ந்தான். யாரோ தன்னை ரத்தம் வழிய அடித்து விட்டதைப் போல் பதற்றமாக இருந்தது.

புழுவைப் பிடிக்கும் எண்ணத்தை கைவிட்டு பாலத்தின் விளிம்பில் அமர்ந்திருந்த பறவையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அது தன் குட்டை வாலை ஆட்டியபடி தலையை இருபுறமும் அசைத்து பார்த்துவிட்டு பாலத்தின் கீழிருக்கும் பள்ளத்தை நோக்கி விழுந்தது. அடுத்த கணம் அவன் பயங்கர பதற்றமடைந்தவனாக அந்த விளிம்பை நோக்கி ஓடினான். யாரோ தற்கொலைக்குப் பாய்வதைப்போல் அவனுக்குத் தோன்றியிருக்க வேண்டும். ஓடிச்சென்று குனிந்து பள்ளத்தை பார்த்தபோது அந்தப் பறவையை அங்கு காணவில்லை. பெரிய பெரிய கற்கள் மட்டுமே கிடந்தன. பாலம் கட்டுவதற்கு ஏற்றி வந்து மீந்துபோன கற்களை ரயில்வே துறையினர் அப்படியே பாலத்துக்குக் கீழே போட்டுவிட்டு போயிருந்தனர். பாலத்தின் மேற்பரப்பிலிருந்து கீழே குதித்தால் நிச்சயம் ஏதாவது ஒரு கல்லில் மண்டை மோதி உடைந்து உயிர் இழக்கக் கூடும். இருபது அடிக்கும் அதிகமான ஆழம். கற்களோ பாறாங்கற்கள். ஆழத்தையும் கற்களையும் கணக்கில் கொண்டால், ஒருவன் கீழே விழுந்தால் தப்பிப்பது கடினம். அவன் அங்கிருந்து விலகிச் செல்ல விரும்பினான். ரயில் நிலையத்திலிருந்து இறங்கி நகருக்குள் செல்லும் பாதையில் நடக்கத் தொடங்கிய போது இரவு அவன் முதுகுக்கு பின்னால் நெருங்கி வந்துக் கொண்டிருந்தது.

2.

குடியிருப்புக்கு திரும்பி வந்தபோது இரவு தொடங்கியிருந்தது. அந்த இரண்டு மாடி வீட்டை வெளியே நின்றபடி அவன் அண்ணாந்து பார்த்தான். அப்போது அவனுக்கு பரிதாபகரமான ஒரு முகம் வாய்த்திருந்தது. அவன் பார்வைகள் ஆறு வீடுகள் கொண்ட மாடியில் எட்டு என்று எழுதி வெள்ளை நிறத்தில் பெரிய வட்டமிட்டிருந்த கதவை வெறிக்கத் தொடங்கின. அதையே சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். கழுத்து வலியெடுத்தது. படிக்கட்டுகளில் ஏறி அவனுடைய அறைக்கதவின் முன் நின்றான். அறையைத் திறப்பதற்கு முன் எதிர்வீட்டை ஒருமுறை பார்த்துக் கொண்டான். அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கதவைத் திறந்த அந்த வீட்டுப் பெண், அவனைப் பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டு ‘‘வாசு சார்… ரொம்ப நேரமா ஆளையே காணும்… எங்க போயிருந்தீங்க? ஒங்கள தேடிக்கிட்டு ஒருத்தர் வந்திருந்தாரு. பேருகூட ஜெயராமன்னு சொன்னாப்ள” என்றாள். அவள் சொன்ன பெயரை அவன் கேள்விபட்டதில்லை. அவள் அப்படி ஏதாவது சொல்லி பேச்சு கொடுப்பாள். அவளுக்கு அவனிடம் பேச வேண்டும். பேசத் தோன்றியதென்றால் அவளுக்கு ஏதாவது காரணம் கிடைத்துவிடும். ‘ஒங்களுக்கு கொரியர் வந்துச்சி சார்’ என்பாள், அப்படி எதுவும் வந்திருக்காது. ‘ஒங்க சட்டை கீழே விழுந்து கெடந்துச்சி.. நாந்தான் எடுத்து கொடியில் போட்டேன்’ என்பாள். அவனுடைய வீட்டுக்கு வெளியே சுவர் ஓரமாகக் கட்டப்பட்டிருக்கும் கொடிக்கயிற்றில் அவளுடைய துணிகள்தான் காய்ந்து கொண்டிருக்கும். ‘ஒங்கள பார்க்க வந்த ஒருத்தர் ரொம்ப நேரம் எங்க வீட்டுலதான் உட்கார்ந்திருந்துட்டு போனார்’ என்பாள், அதுபோல ஒருவர் அவனைப் பார்க்க வந்திருக்கவே மாட்டார். அவனைச் சுற்றி இதுபோல் நிறைய காட்சிகளையும் சித்திரங்களையும் உருவாக்கி அவனிடம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அவளை கொஞ்சம் ஆழமாய் உற்றுப் பார்த்துவிட்டு கடந்து போய்க் கொண்டிருந்தான் அவன். அவள் விடுவதாயில்லை. அவனிடம் எதையாவது கேட்க வேண்டும்.

‘‘வாசு சார்… ஒங்களுக்கு உடம்புக்கு ஏதாவது பிரச்சினையா?” என்றாள். ‘‘ம்…” என்ற ஓரெழுத்துக்குப் பிறகு அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அந்தப் பெண் வாசுவை சற்றுநேரம் வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். அந்தப் பார்வையை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை. கதவில் தொங்கிய சில்வர் பூட்டின் துவாரத்தில் சாவியை நுழைக்க முடியாமல் கை நடுங்க கதவைத் திறந்து உள்ளே வந்த அடுத்த நொடியில் உள் பக்கமாக தாழிட்டுக் கொண்டான். அவனுடைய அந்தச் செயலை விநோதமாக பார்த்துக் கொண்டிருந்த அவள் கொஞ்ச நேரம் வாசலிலேயே நின்று உதடு சுழித்து புன்னகைத்துவிட்டு வீட்டுக்குள் சென்று அவளும் தாழிட்டுக் கொண்டாள். உள்ளிருந்த இன்னொரு பெண் அவனைப் பற்றி கேட்டாள். அந்தப் பெண் முப்பது வயது மதிக்கத்தக்கவளாக இருந்தாள். அவளுக்கு வாசுவின் மீது இனம்புரியாத ஓர் அன்பு சுரந்து கொண்டிருந்தது. அந்த அன்புக்கு என்ன பொருள் கொள்வது என்றெல்லாம் அவளுக்கு தெரியவில்லை. ஒருவேளை யாருக்காவது அதைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில், அந்த அன்பில் ஏதேனும் அசிங்கமோ கேவலமோ படிந்திருக்கவில்லை என்று மட்டும் சொல்ல வேண்டுமென இருக்கும். மற்றவர்கள் பார்க்கும்போது தப்பான புரிதலுக்கு வாய்ப்பளித்து விடக்கூடாது என்ற காரணத்துக்காகவே வாசுவிடம் அவள் சரியாகப் பேசிக்கொள்ள மாட்டாள். வாசுவின் மீதிருக்கும் அந்த அன்பை மனசுக்குள் வைத்து அசைபோட்டுக் கொள்வாள். பார்த்த மாத்திரத்தில் மனசுக்குள் ஆணி அடித்ததைப்போல் சிலருடைய முகம் பதிந்துவிடுமே, அப்படி ஒரு முகம் வாசுவுக்கு என்று அடிக்கடி ராஜியிடம் சொல்வாள். வாசுவின் தற்போதைய நிலையறிய அவளுக்கு ஆவல் பிறந்தது. ராஜியிடம் கேட்டாள்:

‘‘வாசுவா..?”

‘‘ஆமா…”

‘‘என்னாச்சு அவருக்கு… ஒரு மாதிரி பைத்தியம் புடிச்சாப்புல இருக்காரு?”

‘‘ப்ச்… தெரில. பேச்சுக் கொடுத்தாலும் பேச மாட்டேங்குதுக்கா”

வாசுவைப் பற்றி தெளிவாக புரிந்துகொள்ள முடியவில்லை என்ற குறிப்பை உணர்த்தும் விதமாக ராஜி தன் வாயைப் பிதுக்கிக் கொண்டாள். தொலைக்காட்சியின் வெளிச்சத்தை வீடெங்கும் பரவ விட்டுக்கொண்டு நெடுந்தொடர் பார்க்க அமர்ந்துவிட்டவளை வீட்டில் பரவிய பலவித வெளிச்சங்களுக்கு மத்தியில் அந்தப் பெண் பார்த்துக் கொண்டிருந்தாள். ராஜிக்கு பத்தொன்பது வயது முடியப் போகிறது. அவள் அணிந்திருந்த தளர்வான நைட்டியால் அவளுடைய வாளிப்பான உடலழகை மூடி மறைக்க முடியவில்லை. ராஜி இளமைக் கோலத்தில் தளும்பிக் கொண்டிருந்தாள். அவளுடைய இடையை ஒடித்து விடுவதுபோல் கனத்த மார்பகங்கள் நெஞ்சில் மலர்ந்திருந்தன.

கல்லூரியில் தமிழ் இலக்கியத்தை எடுத்துப் படித்த சாரதாவுக்கு சங்கப் பாடல்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் தலைவிகள் நினைவுக்கு வந்தார்கள். அப்படியொரு தலைவியாக தன்னுடைய தங்கை இருக்கிறாள் என்று நினைத்தாள். தன்னைவிட பிந்திப் பிறந்தவளுக்கு அம்மா தன் அழகை அப்படியே முழுமையாகப் பரிமாறிக் கொண்டிருக்கிறாள், அப்படியே துடைத்து வழித்துக் கொடுத்திருக்கிறாள். அதே இரண்டு நீலக்கண்கள், அதே பொன்னிறம், அதே வாளிப்பான உடல், திரண்ட மார்புகள், இடைதொடும் கனத்த கூந்தல், பூனாச்சி மயிர் நிறைந்த உலக்கைப் போன்ற கால்கள். அத்தனையும் அளவான எடுப்பில். அம்மாவை நினைத்தால் கோபமாக வந்தது. தன்னை மட்டும் கைவிட்டு விட்டாள் என்று தோன்றியது. அப்பாவின் மெலிந்த, கறுத்த உடல் தனக்கு. களையற்ற சோர்ந்த முகம், உடம்பில் எங்குமே சதையில்லை. மார்புகள் மட்டும் எப்படியிருக்கும்? இதற்கெல்லாம் அம்மாதான் காரணம். அவள்தான் வயிற்றில் போட்டு எட்டு மாதம் ஊற வைத்திருந்தாள். ஆமாம், அந்த எட்டு மாதம்தான் எல்லாவற்றுக்கும் காரணம். அவ்வளவு அவசரம் என்னை வெளியே தள்ளுவதில். அவளுக்கு என்னைச் சுமப்பதில் அவ்வளவு கஷ்டம். நினைக்க நினைக்க நெஞ்சில் வலி தோன்றியது. மார்புச்சதையை பிசைந்து கொள்வதுபோல் தன் மார்பகங்களைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். ராஜி கவலை ஏதும் இல்லாமல் தொலைக்காட்சித் தொடரில் லயித்து உட்கார்ந்திருந்தாள். அவளுடைய மனதிற்கு வாசு பற்றிய பழைய எண்ணங்கள் திரும்பின.

அவள் தன் அம்மாவுடனும் தங்கை ராஜியுடனும் இந்தக் குடியிருப்பில், ஆறாம் எண் கொண்ட வீட்டுக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது அதிலிருந்து பெயிண்ட் வாசனை மூக்கில் குப்பென்று ஏறியது. பன்னிரெண்டு வீடுகள் கொண்ட அந்த குடியிருப்பில் இரண்டு வீடுகளில் மட்டுமே ஆட்கள் குடியிருந்தார்கள். மீதமுள்ள பத்து வீடுகளும் காலியாகவே இருந்தன. நான்காம் எண் வீட்டில் வாசுவும், ஐந்தாம் எண் வீட்டில் நாராயணன் வாத்தியாரும் குடியிருந்தார்கள். இரண்டு பேருமே தனிக்கட்டை. கல்யாணமாகாதவர்கள். வாசுவுக்கு முப்பது வயதிருக்கும். நாராயணன் வாத்தியாருக்கு ஐம்பது வயதிருக்கும்.
தெருவைப் பார்த்தபடியிருந்த ஒன்று மற்றும் இரண்டாம் எண் வீடுகள் காலியாக இருந்தபோதும் சாரதா உள்ளே மூன்றாம் எண் வீட்டை பிடித்திருக்கிறது என்று தேர்வு செய்தாள். அந்த வீட்டின் எண் மீது சாரதாவுக்கு ஒரு ஈர்ப்பு. மூன்று என்கிற எண் மீது எப்போதும் ஒரு வாஞ்சை. அவளும் அம்மாவும் தங்கையும் என மூன்று பேர் மட்டுமே இருக்கும் வாழ்வில் அந்த எண்ணில் துளியும் குறைந்துவிடக் கூடாது என்று ஆசை. இந்தக் குடியிருப்புக்கு வீடு தேடி வந்தபோது அவள் தேடிச்சென்று பார்த்த வீடு மூன்றாம் எண் வீடு. அது காலியாக இருந்தது அவளை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. வீட்டில் கொஞ்சம் வேலையிருக்கிறது, வேறு வீட்டைப் பாருங்கள் என்று தரகர் சொன்னபோது சாரதா மறுத்துவிட்டாள். எந்த வசதியும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இந்த வீடுதான் வேண்டும் என்று சாவியை வாங்கிக் கொண்டாள். அவர்கள் குடிவந்த பிறகுதான் குளியலறையிலும் சமையல் கட்டிலும் மிச்சமிருந்த வேலைகளையெல்லாம் பார்த்து முடித்தார்கள். மூன்று என்ற எண் கொடுக்கப்பட்டால் போதும், கண்ணை மூடிக்கொண்டு அதை வாங்கிக் கொள்வாள்.

குட்டியானையில் ஏற்றிக்கொண்டு வந்த தங்கள் உடமைகளையெல்லாம் இறக்கி வீட்டுக்குக் கொண்டுவந்தபோது தன்னுடைய எதிர் வீடான நான்காம் எண் வீட்டிலிருந்து யாராவது எட்டிப் பார்ப்பார்கள் என்று சாரதா எதிர்பார்த்தாள். அப்படி யாரும் எட்டிப் பார்க்கவில்லை. அந்த வீட்டின் வாசலைப் பார்த்தாள். ஒரு ஜோடி செருப்பு மட்டுமே கிடந்தது. உள்ளே ஓர் ஆண் இருக்கிறான், இங்கே மூன்று பெண்கள் எதிர்வீட்டுக்குக் குடிவந்திருக்கிறோம் என்ற எந்த செய்தியும் தெரியாமல். மூன்று பெண்களில் எத்தனைப் பேர் இளம்பெண்கள் என்று இந்நேரம் தெரிந்துகொள்ள ஆவல் எழுந்திருக்க வேண்டாமா? என்ன மனிதன் அவன். ஒருவேளை கிழவனாக இருக்குமோ. உடமைகளை ஏற்றிக்கொண்டே இத்தனையும் மனதில் நினைத்துக் கொண்டாள் சாரதா. ராஜிக்கு அப்படி எதுவும் தோன்றியதில்லை. அவள் தன் கனத்த மார்புகள் பிதுங்கப் பிதுங்க சுமைகளை இறக்கி வீட்டுக்குள் வைத்துக் கொண்டிருந்தாள். குட்டியானையை ஓட்டி வந்தவன் நடுத்தர வயதுடையவனாக இருந்தபோதும் காசநோயால் பீடிக்கப்பட்டவனைப்போல் மெலிந்து காணப்பட்டான். அவனிடம் சுமைகளை இறக்கி வைக்கச் சொல்ல மனம் வரவில்லை. வண்டியை நிறுத்திவிட்டு கொஞ்சம் தூரத்தில் போய் நின்று ஒரு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு அவன் நின்று கொண்டான்.

சாரதாவும் ராஜியும் பொருட்களை இறக்கிக் கொண்டு வந்து வீட்டில் வைக்க அவளுடைய அம்மா வீட்டில் அவற்றை வைக்க வேண்டிய இடங்களை சீர் செய்து கொண்டிருந்தாள். பொருட்களை இறக்கிக்கொண்டு குட்டியானையை அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்த சாரதா, உள் பக்கம் தாழிட்ட நான்காம் எண் வீட்டையும், வெளியே கிடந்த செருப்பையும் வெறுப்புணர்ச்சியுடன் பார்த்துவிட்டு உள்ளே சென்றாள்.

வீட்டைக் கூட்டிப் பெருக்கி கழுவி, பொருட்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து முகம் கழுவிக்கொண்டு வந்து ஹாலில் உட்கார்ந்தபோது சாரதா தன் அம்மாவின் முகத்தையும் ராஜியின் முகத்தையும் பார்த்தாள். ராஜி முகத்தில் ஒன்றும் தெரியவில்லை. அவள் தொலைக்காட்சிக்கு கேபிள் இணைப்பு கொடுப்பது பற்றி பேசிக்கொண்டிருந்தாள். ஆனால், அம்மா சோர்ந்து போயிருந்தாள். அறுபது வயதுதான் இருக்கும். பார்ப்பதற்கு அதைவிட கூடுதலான வயதைக் கொண்டவளாகக் காணப்பட்டாள். இருபது வருடங்களாக வெறுமையான வாழ்க்கை. இரண்டு பெண் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி விடுவதைத் தவிர வேறு நோக்கமில்லை என்பது போல் ஒரு பிடிவாதமான வெறுமை. வெறுமையை அவளும் விடுவதாயில்லை. அவளை வெறுமையும் விடுவதாயில்லை. அப்படியோர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு வாழ்கிறாள். அழுத்தமும் சோர்வும் கடகடவென்று அவளது உடலைத் தளர்த்தி முதுமைக்கு நகர்த்திக் கொண்டு செல்வதை அறிந்திருந்தும் அந்த முதுமையை வேண்டி விரும்புபவளைப் போல் அதனுடன் ஒத்துழைத்து நடக்கிறாள்.

‘‘சாரதா…”

அம்மாவின் குரல் நினைவைக் கலைத்தது.

ராஜியையும் அம்மாவையும் நினைக்கத் தொடங்கியவுடன் நேரம் போனதே தெரியவில்லை. நேரம் கடகடவென்று ஓடி ஒன்பதில் நின்று கொண்டிருந்தது. ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு தொலைக்காட்சியில் ஓடும் நிழல்களை வெறிக்கத் தொடங்கினாள் சாரதா. அம்மா தன் இரண்டு மகள்களையும் மாறிமாறி பார்த்துவிட்டு ஓர் உறைந்த சித்திரத்தைப் போல் ஆகிவிட்டாள். உட்கார்ந்த இடத்திலேயே அப்படியே சரிந்து படுத்துக் கொண்டவளை எண்ணங்கள் ஏறி அழுத்திக் கொண்டன. முப்பது வயதில் தன் வாழ்க்கையில் எல்லாமே நடந்து முடிந்து போனதை நினைவுக்குக் கொண்டு வந்து ஆழ்ந்த துயரத்தில் அமிழ்ந்தவளை சாரதா சோர்ந்த கண்களால் பார்த்தாள். அம்மாவின் வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தையும் ஏற்படுத்தாமல் குடித்து அழிந்துபோன அப்பாவின் கறுத்த, மெல்லிய உருவம் நிழலாடியது. அந்த அறையில் எங்கோ படுத்துக்கொண்டு ஈரக்குலை அறுந்து விடுவதைப்போல் இருமிக்கொண்டு இந்த மூன்று பேதைகளின் முகத்தையும் ஒரு கேலியான தோரணையுடன் அவர் பார்த்துக் கொண்டிருக்கக் கூடும் என்று தோன்றியது. அந்த மனிதன் அப்படியொரு தாழ்வு மனப்பான்மைக்கு சொந்தக்காரர். அந்த மனநிலைக்கு அவரிடம் ஆயிரம் காரணங்கள் இருந்தன. அழகான மனைவி ஒரு காரணம், இரண்டு பெண் பிள்ளைகள் ஒரு காரணம், தான் உதவாக்கரை என்ற எண்ணம் ஒரு காரணம், தன் அவலட்சணம் ஒரு காரணம், தனது கறுப்பு நிறம் ஒரு காரணம், தனது நீடித்த நோய்மை ஒரு காரணம், மனைவியின் கட்டுக்குலையாத உடல் காரணம்… இப்படி ஆயிரம் காரணங்கள். கடைசிவரை அவர் நிம்மதியாய் இருக்கவில்லை. சாகும்போது கூட அம்மாவின் முகத்தில் கையில் படிந்திருந்த ஏதோவொரு கறுப்பு நிற டானிக்கை பூசிவிட்டுத்தான் இறந்துபோனார். அம்மாவின் மஞ்சள் நிறத்துக்கும் அவருடைய கறுப்பு நிறத்துக்கும் ஒரு பிரச்சினையுமில்லை. அப்பாவின் அந்த கறுப்பு நிறத்தைக் குழைத்து பூசித்தான் அம்மா எங்கள் இருவரையும் பெற்றெடுத்தாள். அம்மாவுக்கு அப்பாவோட கறுப்பும் சரி, மெலிவும் சரி, முகமும் சரி ஒரு பிரச்சினையுமில்லை. அவள் அதை மனப்பூர்வமாக கிரகித்துக் கொண்டிருந்தாள். அந்த மனிதர்தான் தன் நிறம், தோற்றம், உடல் வலு எல்லாவற்றையும் அம்மாவோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு தன்னைத் தாழ்த்திக்கொண்டு குடும்பத்தையே நிர்க்கதியான சூழலுக்கு ஆளாக்கினார். அவருடைய உழைப்பு அவருக்கே பெரிய இடராக மாறிக்கொண்டிருந்தது. மனைவியும் மகள்களும் தன் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்து தளுக்கித் திரிகிறார்கள் என்று கொச்சையாக நினைக்க ஆரம்பித்தார். தாழ்வு எண்ணம் உருவாகி உருவாகி அவரை குடியின் பக்கம் திசை திருப்பிக் கொண்டிருந்ததை நாங்கள் மூன்று பேரும் கலக்கத்தோடு கடந்து கொண்டிருந்தோம். குடிபோதையில் எத்தனையோ நாள் அவருடைய மனதில் இருக்கும் அந்த தாழ்வு எண்ணத்தில் விளைந்த குரலை எங்களிடம் உயர்த்திக் காட்டுவார். அதைக் கேட்கும் போதெல்லாம் அம்மா நொறுங்கிப் போவாள். மனதாலும் நினைவாலும் தன்னைத் தாழ்த்திக்கொண்ட அவர் தனது மரணத்தை அடிக்கடி உறுதிபடுத்திவிட்டு பிழைத்துக் கொண்டிருந்தார். எத்தனை நாள்தான் அந்த நாடகத்தை காலம் பார்த்துக் கொண்டிருக்கும். காலத்துக்கே பொறுக்கவில்லை. ஒருநாள் அம்மாவின் கண்களைப் பார்த்தபடியே அவர் உயிர் பிரிந்து போனது. வாழ்வின் இரண்டாம் அத்தியாயம் தொடங்கியபோது அம்மாவின் மங்கலத்தில் கை வைத்துவிட்டுப் போய்விட்டார்.

அம்மா சுவரை ஒட்டி நெருங்கி சுருண்டிருந்தாள். ஒரு போர்வையை எடுத்து வந்து அவளுடைய தளர்ந்த உடலை மூடினாள் சாரதா. இவை எதுவுமே தெரியாதவளாய் அறையில் நிரம்பியிருந்த வண்ணங்களின் ஒளியில் ராஜியின் முகம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அமர்ந்திருந்த இடத்திலேயே தன் உடலை சரித்துக் கொண்டாள் சாரதா. ஏனோ மனதில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து அப்பாவின் குழம்பிய முகமும், வாசுவின் சோர்ந்த முகமும் நினைவுக்கு வந்து கொண்டிருந்தன.

ராஜி என்ன நினைத்தாளோ தெரியவில்லை. தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு, சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். வாசுவின் வீட்டுக் கதவைத்தான் அவள் அப்படி அவசரமாய் பார்க்கிறாள். வராந்தாவின் முகப்பில் எரிந்த விளக்கொளியில் அரக்கு நிறத்திலிருக்கும் அந்த வீட்டுக்கதவு மௌனமாய் உறைந்திருந்தது. ஜன்னல் வழியே உள்ளே இன்னும் வெளிச்சம் இருக்கிறதென்று உறுதிபடுத்திக் கொண்டவள், அவன் கழற்றி விட்டிருந்த ரப்பர் செருப்புகள் அருகருகே இல்லாமல் ஒழுங்கற்று சிதறி கிடப்பதைப் பார்த்தாள். கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே வந்து படுத்துக் கொண்டவளை சாரதா ஓர் ஆழ்ந்த கவலையுடன் கவனித்தாள். மங்கலான ஸீரோ வாட்ஸ் வெளிச்சத்தில் ராஜி தன் வெம்பும் மார்புகளை போர்வைக்குள் அழுத்தி ஆற்றிக் கொண்டிருந்தாள்.

3.

மணி பன்னிரெண்டு. அந்த இரண்டு மாடி குடியிருப்பு ஒரு சத்தமும் இல்லாமல் ஆழ்ந்த அமைதியில் இருந்தது. தரையில் உட்கார்ந்து தன் முன்னாலிருந்த விஸ்கியை க்ளாஸில் ஊற்றிக் கொண்டிருந்தான் வாசு. அவனுடைய தலை ஏற்கெனவே குடித்திருந்த விஸ்கியால் தொங்கிக் கொண்டிருந்தது. நறுக்கி வைத்த கொய்யாப் பழத்துண்டுகள் ஒரு சிறிய சில்வர் தட்டில் உலர்ந்து கொண்டிருந்தன.

எதையோ பேசுவதுபோல் அவன் பாவனை செய்தபோது ஒரு வறட்டு இருமல் வெளியேறி கண்களை கலங்கடித்தது. அவனுடைய உடல் பம்பரத்தைப்போல் சுற்றத் தொடங்கியது. அந்த பம்பரத்தை கையில் ஏந்தி ஆட்டுவிக்கும் பெண்ணின் பெயரை அவன் வாய் குழறியபடி சொன்னான்.

‘‘சுகுணா…”
சுகுணாவின் அழைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பவனைப்போல் தனக்கு அருகில் கிடந்த ஆண்ட்ராய்டு போனை அந்த மயக்கத்திலும் தன் துவண்ட தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான். ரிங்டோன் ஒலியைத் துண்டித்து போனை அதிர்வில் போட்டிருந்தான். அது ஒளிர்ந்து, அதிலிருந்து ஒரு நீலவெளிச்சம் வெளியேறி அறையெங்கும் பரவும் அந்த அபாயமான நொடிப்பொழுது அவனை அச்சப்படுத்திக் கொண்டிருந்தது. அவள் நிச்சயம் உறங்கியிருக்க மாட்டாள் என்று அவனுக்குத் தெரியும். இன்று வருவதாகச் சொல்லியிருந்தான். பொழுதுக்கும் ஆக்ரமித்துக் கொண்ட மன அழுத்தம் அவனை அங்குப் போகவிடவில்லை. அவளிடம் கொண்டுள்ள உறவுக்கு என்ன அர்த்தம் என்று மனம் யோசிக்கத் தொடங்கியதிலிருந்து அவளைத் தேடிப்போவதை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ளத் தொடங்கி விட்டான். ஆனால், இந்தக் கருமம் பிடித்த காம உணர்வு தலைக்கேறும் போதெல்லாம் அவனுடைய கால்கள் எல்லா கட்டுப்பாடுகளையும் உடைத்துக்கொண்டு அவளை நோக்கி நடந்து கொண்டிருந்தன. இன்று அந்தக் கருமம் பிடித்த காமம் கூட உதவவில்லை. இந்தத் திடீர் விலகல் சுகுணாவை சித்திரவதை செய்து கொண்டிருந்தது. அவளால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நேரம் குதிரையைப்போல் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நேரம் போனை கையில் வைத்துக்கொண்டு அந்தக் குறுந்திரையில் தெரியும் தன் பெயரை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருப்பாள் என்று வாசு நினைத்தான். இவ்வளவு நேரமாகியும் அவள் இன்னும் அழைக்காமல் இருப்பது இன்னும் அச்சத்தைக் கொடுத்தது. போதை கலைவதைப்போல் இருந்தது. இன்னும் கொஞ்சம் விஸ்கியை ஊற்றிக் கொண்டான். வாய் கசப்பதுபோல் இருந்தது. சுகுணா அந்த அறையின் ஏதோவொரு மூலையில் உட்கார்ந்து தன்னை வைத்தக் கண் வாங்காமல் பார்ப்பதுபோல் இருந்தது. ‘நீ இப்ப வருவியா மாட்டியா?’ என்று கெஞ்சிக் கேட்பதுபோல் இருந்தது. அந்த போதையிலும் அவன் உடல் நடுங்கியது. மிச்சமிருந்த விஸ்கியை பாட்டிலோடு வாயில் ஊற்றிக்கொண்டான். வாசுவின் தலை குத்திட்டுக் கொண்டது. அந்த அறையில் நிரம்பியிருக்கும் சுகுணாவின் எண்ண அலைகளுக்கு முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டான். அவள் தன் கால்களை உதறி அவனை தள்ளிவிட்டாள். வாசு வாய் குழறியபடி அவளிடம் இறைஞ்சினான்.

‘‘மன்னிச்சிடு சுகுணா…”

அவள் மன்னிக்கத் தயாராயில்லை. கால்களை இழுத்துக் கொண்டாள். ஓவென்று குரலெடுத்து அழுதாள். அந்த அழுகைச் சத்தம் குடியிருப்பில் யாருக்கும் கேட்டுவிடக் கூடாது என்கிற பயத்தில் அவளை இறுக்கி அணைத்து வாயைப் பொத்தினான். ஆனால், அவளுடைய குரல் இந்த நகரையே எழுப்பி விடும் அளவுக்கு ஓங்கி ஒலித்தது. வாசு அச்சத்தில் அழத் தொடங்கினான். சுகுணாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டே தரையில் சாய்ந்து விட்டான். அவனிடமிருந்து பிசிறாக சுகுணாவின் பெயர் கேட்டுக் கொண்டிருந்தது. சுகுணாவின் நினைவு அந்த அறையின் உள்ளே கடும் வெப்பமாக அலைந்து கொண்டிருந்தது.

4.

தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அருகில் போட்டு உறங்கடித்துவிட்டு வாசல் கதவிலேயே கண்களை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் சுகுணா. புதிதாய் வளர்ந்து கொண்டிருக்கும் அந்த நகரின் வீடுகள் ஆழ்ந்த அமைதியில் இருந்தன. தெருவிளக்கு வெளிச்சத்திலும், ஒவ்வொரு வீட்டின் வெளி வராந்தா விளக்கொளியிலும், ஒவ்வொரு வீட்டு முகப்பிலும் வளர்ந்திருக்கும் பூச்செடிகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. சுகுணா வீட்டின் முகப்பில் மஞ்சள் அலரி தழைத்து வளர்ந்திருந்தது. வாசு இரவில்தான் வருவான் என்பதால் எப்போதும் வராந்தா விளக்கை சுகுணா அணைத்தே வைத்திருப்பாள். அவன் வருகை தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் கொடுத்த மரண அவஸ்தையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இன்று சற்று நேரத்துக்கு முன்பு விளக்கைப் போட்டுவிட்டு, அது உமிழும் குறைந்த ஒளியில் ஒரு பூனையைப்போல் ஒடுங்கி உட்கார்ந்திருந்தாள். ஒரு போந்தா கோழி குஞ்சைப்போல் உள்ளங்கையில் வைத்து மூடிக்கொள்ளும் அளவுக்கு மஞ்சளாய், சிறியதாய் அந்த ஸீரோ வாட்ஸ் பல்ப் எரிந்து கொண்டிருந்தது.

அவசர அவசரமாக நான்கு திசைகளிலும் வளர்ந்து கொண்டிருந்தது அந்த நகரம். பெட்ரோல் பங்குகள், பைக் ஷோ-ரூம்கள், மளிகைக் கடைகள், ஓட்டல்கள், பட்டறைகள், கல்யாண மண்டபங்கள், பல்பொருள் அங்காடிகள், சூப்பு கடைகள் என்று அதனுடைய திடீர் வளர்ச்சி அந்த நகரத்தின் நில மதிப்பை நாளுக்குநாள் உயர்த்திக்கொண்டே இருக்கிறது. கிழக்கு முகமாகப் போகும் நெடுஞ்சாலையின் இரண்டு ஓரங்களிலும் புதிய ஷோ-ரூம்கள் முளைத்துவிட்ட அந்த ஏரியாவில், செம்மண் கொட்டிய வீதியைப் பார்த்தபடி சுகுணா அந்த குறைந்த ஒளியில் மோகமும் கோபமும் ஒரே நேரத்தில் ஆட்கொண்டவளாக உட்கார்ந்திருந்தாள்.

மூன்று வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் அடிபட்ட சிவராஜனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனது முதல், காப்பாற்ற முடியாமல் போன பிறகு அவன் உடலை போஸ்ட்மார்ட்டம் முடித்து, வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்து பிறகு அவனை எரிக்கும் வரை கூடவே இருந்த வாசு, உறவுகள் ஏதுமின்றி இரண்டு குழந்தைகளோடு தனித்து நின்ற சுகுணாவுக்கு கிடைத்த ஒரே பெரிய உறவாகத் தெரிந்தான்.

வாசுவின் இருப்பும் நினைவும் பாதுகாப்பானதாக மாறுவதற்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன. வாசுவுடன் தன்னைப் பகிர்ந்து கொள்வதற்கு தலைப்பட்ட அந்த மழைநாளை சுகுணா ஒருபோதும் மறக்க முடியாதவளாக இருந்தாள். அந்த மழைநாள் ஒரு கொடுமையான துயரத்தை வழங்கியிருந்தது. அது செப்டம்பர் மாதம். ஆகஸ்ட் பிற்பாதியிலிருந்தே மழை பெய்து கொண்டிருந்தது. செப்டம்பரில் விடாமல் ஒருவார காலம் பெய்த தீவிர மழையில் முதலில் அவளுக்கு வைரஸ் காய்ச்சல் வந்தது. அவளைப் காப்பாற்றுவதற்கே வாசு அவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருந்தது. அடுத்து அவளுடைய குழந்தைகள் ஒருவர் மாற்றி ஒருவர் நோயால் தாக்கப்பட்டபோது அவள் நிலைகுலைந்து போனாள். அவர்களைக் காப்பாற்றி அவளுடைய கைகளில் விட்டுவிட்டுப் போனவன் நோய் தாக்கி படுக்கையில் விழுந்ததை அவள் அறியவில்லை. நான்கு நாட்கள் தொடர்ச்சியாக அவனுடைய முகத்தை அவன் காட்டாமல் இருந்ததில்லை. ஒருநாளின் ஒருபொழுதாவது சுகுணாவையும் அவளுடைய குழந்தைகளையும் எப்படியாவது வந்து பார்த்துவிட்டுப் போய்விடுவான். ஆனால், நான்கு நாட்களாக வரவில்லை. அவன் வரவில்லை என்பதும், அவன் முகத்தைப் பார்க்கவில்லை என்பதும் ஒருவிதமான தவிப்பைத் தரும் என்ற உணர்வு சுகுணாவுக்கே புதிதாக இருந்தது. அந்த உணர்வுக்கு என்ன அர்த்தம்? அவளுக்கு விடை தெரியவில்லை. ஆனால், வாசுவை கண்களும் மனமும் தேடத் தொடங்கின. அவனுக்கு என்ன ஆயிற்று? அவன் இந்த நகரத்தில் எங்கு தங்கியிருக்கிறான்? இதுநாள் வரை அவனுடைய வீடு இந்த ஊரின் எந்த நகரில், எந்தத் தெருவில் இருக்கிறதென்று அவள் கேட்டுக்கொண்டதே இல்லை. வாசுவை சிவராஜின் நெருங்கிய நண்பன் என்ற வகையில் மட்டுமே தெரியும். நல்லவன், சிவராஜுடன் அடிக்கடி வீட்டுக்கு வருவான் போவான். சிவராஜ் இறந்த பிறகு சில உதவிகள் செய்து கொடுக்கிறான். அவ்வளவுதான் வாசுவுக்கும் தனக்கும் இருக்கும் உறவு என்று நினைத்திருந்தவளுக்கு நான்கு நாட்கள் அவனைப் பார்க்காமல் இருந்ததில் இவ்வளவு குழப்பமும் கேள்விகளும் வந்தது வியப்பையும் நடுக்கத்தையும் கொடுத்தது. அவனுடைய இருப்புக்கும் இன்மைக்கும் நடுவில் அவள் மனம் தடுமாறிக் கொண்டிருந்தது. பெரிய மனப்போராட்டத்துக்குப் பிறகு, கடைசியில் அவளுக்கு அவனுடைய இருப்பு தேவையாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தாள். வாசுவை பற்றி யாரிடம் விசாரித்து அறிவது என்று தவித்துக் கொண்டிருந்தவளுக்கு பக்கத்து வீட்டு கோமதிதான் சொன்னாள்,

‘‘சுகுணா… சிவராஜோட ஒங்க வீட்டுக்கு ஒரு தம்பி வருவாப்ளியே… ரொம்ப முடியாம கெடக்காப்ளயாம். பொழைக்க மாட்டாப்ளன்னு கூட சொல்றாங்க… போயி ஒருதாட்டி என்னான்னு பாத்தியா?”

அந்தச் செய்தி சுகுணாவை சுக்கு நூறாய் உடைத்துப் போட்டுவிட்டது.

‘‘ஐயோ… எனக்கு தெரியாதேக்கா… அவரு ஊடு எங்கிருக்குன்னு கூட கேட்டுக்கிலியே…”

‘‘அடி… என்ன இப்பிடி இருக்கவ… சிவராஜி போனப்பறம் அந்த தம்பிதானே வந்து அப்பப்ப உதவி செஞ்சிட்டு போவுது… பாவம்.. நல்ல பையன். அதக்கூட தெரிஞ்சிக்காம இருக்கியே… என்ன மனுசிடி நீ.. போ… போயி மொதல்ல ஒருதாட்டி பாத்துட்டு வா”

கோமதி சொன்ன முகவரியைத் தேடி அவள் போனபோது வாசுவை ஆம்புலன்ஸ் வந்து ஏற்றிக்கொண்டு போய்விட்டது என்று சொன்னார்கள். முதன்முறை வாசுவின் வீட்டுக்கு வந்திருக்கிறாள். ஆனால், அவனை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு போய்விட்டார்கள். என்ன மாதிரியான சகுனம் இது? நல்லதா கெட்டதா? சுகுணாவுக்கு புரியவில்லை. அவனுடைய வீட்டுக்கு வெளியே சிலநிமிடம் உறைந்துபோய் நின்றவளைக் குறித்து அங்கிருந்தவர்கள் மெதுவான குரலில் ஏதேதோ பேசிக்கொண்டார்கள். அந்தப் பேச்சின் சாரம்சம் என்னவென்று சுகுணாவுக்கு தெரியும்.

அவள் அங்கிருந்து அரசு மருத்துவமனை சென்றபோது வாசுவை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுபோய் விட்டார்கள் என்றாள் ஒரு மெலிந்த தேகம் கொண்ட செவிலி. எந்தக் குறிப்புமின்றி கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவள் வீட்டுக்கு வந்தபோது வானம் இருட்டிக்கொண்டு வந்தது. அன்று இரவு நீண்ட நேரம் விடாமல் கனத்த மழைப் பெய்தது. இடியும் மின்னலும் அதிகரித்த அந்த இரவில் வாசுவின் முகத்தை நினைவு கூர்ந்து விம்மி அழுதாள் சுகுணா. மின்சாரம் இல்லாத அந்த இரவையும், விடாமல் பெய்த மழையையும், துயரம் தாளாமல் சிந்திய கண்ணீரையும் இதற்கு முன்பு ஒருநாளும் ஒருபோதும் சந்தித்ததே இல்லை.

மறுநாள்… பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று வாசுவைப் பார்த்தபோது அவளுக்கு அவனைக் கட்டிக்கொண்டு அழவேண்டும் போலிருந்தது. வாசு, சுய நினைவில்லாமல் மயங்கிய நிலையிலிருந்தான். யாரோ ஒருவன் அவனுடன் துணைக்கு இருந்தான். சிவராஜிக்கு வாசுவைப்போல், வாசுவுக்கென்று கிடைத்த ஒரு நல்ல நண்பன்.

சிவராஜ் அடிபட்டு கிடக்கிறான் என்று செய்தி அறிந்தபோது எப்படி துடித்ததோ அதே மாதிரி இப்போதும் சுகுணாவின் மனம் துடியாய் துடித்தது. அவளது கண்களில் தளும்பி வெளியே இறங்காத கண்ணீரைப் பார்த்ததும் வாசுவின் நண்பன் எதுவும் பேசாமல் வெளியே சென்றபோது வாசுவின் அருகில் தன் குழந்தைகளோடு அமர்ந்து அவனை வெறுமையாக அவள் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஒரு வேண்டுதல் இருந்தது. நீ திரும்பி வந்துவிடு, இனிமேல் தனியாக இருக்க வேண்டாம், எங்களோடு தங்கிவிடு, ஆம், என்னோடும் என் குழந்தைகளோடும் தங்கிவிடு, என் தனிமை கூட உன் தனிமையோடு சேர்ந்து தொலையட்டும் என்பதாக இருந்தது.

வாசு குணமாகி வீடு வந்தபோது சுகுணாவின் அந்த பார்வைக்கு ஒரு பொருள் கிடைத்ததுபோல் வாசு போன் செய்து பேசினான். சுகுணா அமைதியாக இருந்தாள். நீண்ட மௌனத்திற்கு பிறகு,

‘‘வாசு… நீ வீட்டுக்கு வந்திடு, இனிமே நீ அங்க தனியா இருக்க வேணாம்” என்றாள். அந்தக் குரலுக்கு காத்திருந்தவன் போல் வாசு ஒரு வார்த்தையும் பேசவில்லை. அன்று மாலைப்பொழுதே அறையைக் காலி செய்துவிட்டு அவள் வீட்டுக்கு வந்துவிட்டான். அன்று இரவு திரும்பவும் நல்ல மழை பெய்தது. குழந்தைகள் நெடுநேரம் வாசுவிடம் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். வராந்தாவை ஒட்டிய சிறிய அறையில் வாசு படுத்துக் கொண்டான். உள் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு குழந்தைகளை அணைத்துப் படுத்துக்கொண்ட சுகுணாவுக்கு, குழந்தைகள் இன்று ஆழ்ந்து உறங்குவதாகத் தோன்றியது. பின்னிரவுக்குப் பிறகும் மழையின் தீவிரம் குறையவில்லை. ஜன்னல் கதவுகளைத் தட்டிக் கொண்டிருந்த குளிர்ந்த காற்று சுகுணாவை உறங்க விடவில்லை.

சுகுணா, மெல்ல கதவைத் திறந்து, வெளிச்சுவரில் இருந்த ஸீரோ வாட்ஸ் பல்புக்கான ஸ்விட்சை அணைத்துவிட்டு வராந்தாவில் வந்து நின்றபோது தெரு விளக்குகள் ஈரத்தால் மங்கியவைப் போல் தெரிந்தன. வாசுவிடமிருந்து தூங்குவதற்கான அறிகுறிகள் கேட்கிறதா என்று கூர்ந்து கேட்டாள். தவளைகளின் சத்தம் தவிர அவளால் ஒன்றையும் அறிய முடியவில்லை. கொஞ்ச நேரம் அந்த இருளோடு இருளாய் நின்றிருந்துவிட்டு போய் கதவைத் தொட்டவளை வாசுவின் மெல்லிய குரல் நிறுத்தியது. கதவை ஒரு மெல்லிய கோடு அளவு திறந்து வைத்துக்கொண்டு வாசல் திண்டில் நின்றிருந்தான் வாசு. அவனிடமிருந்து மாத்திரைகளின் வாசனையடித்தது. கரிய அவனுடைய உருவத்தை அவளால் பார்க்க முடிந்தது.

திறந்த கதவை மெதுவாக மூடிவிட்டு அவனையே பார்த்தபடி நின்றாள் சுகுணா. சற்று சீராகப் பெய்து கொண்டிருந்த மழை அதற்குப் பிறகு வளைத்து வளைத்து சாரலும் தூவானமுமாகப் பெய்தது. சுகுணா தன் குழந்தைகளோடு போய் மீண்டும் படுத்தபோது அந்த அறை முழுக்க மாத்திரை வாசனையடித்தது. தவளைகள் ஓயாமல் கத்திக் கொண்டிருந்தன.
சுகுணா தன் வீட்டின் வராந்தாவில் எரிந்து கொண்டிருக்கும் ஸீரோ வாட்ஸ் பல்பை அணைத்துவிட்டுப் போய் படுத்துக் கொண்டாள்.

5.

மணி இரண்டு, நடு இரவு. தன் அறையில், தன்னுடைய செல்போனில் நீல வெளிச்சம் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான் வாசு. ஒரு மின்மினி அளவுக்குக்கூட அவன் அறையில் வெளிச்சம் சுற்றவில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் அறையெங்கும் இருள் நிறைந்திருந்தது. வாசுவின் மூளையில் ஏறியிருந்த போதையை சுகுணாவின் நினைவு குறைத்துக் கொண்டே இருந்தது. மனதில் ஏறி அழுத்திக் கொண்டிருந்த குழப்பங்கள் மெதுவாக விலகத் தொடங்கின. யாரோ அவனை தொடர்ந்து கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தார்கள். அவன் எங்கு போனாலும் அந்தக்குரல் அவனைப் பின்தொடர்ந்து கொண்டே இருந்தது.

‘சுகுணாவோட வாழ்க்கையை ஏன் கேள்விக்குறி ஆக்குற?’

‘உனக்குன்னு ஒரு வாழ்க்கையை ஏன் விரும்ப மாட்டேங்குற?’
‘சுகுணாவோட மானம் உன்னால போகுதே, அது உனக்குத் தெரியுமா? அதுக்கு நீ என்ன செய்யப் போற?’

‘ஒன்னு… அவளை ஊரறிய கல்யாணம் பண்ணிக்க, இல்லேன்னா… விட்டு விலகிப் போயிடு’

இப்படியான கேள்விகள். யார் கேட்கிறார்கள்? அந்தக் குரல் எங்கிருந்து வருகிறது? நான் என்ன செய்ய வேண்டும்? வாசுவுக்கு எதுவுமே புரியவில்லை. அந்தக் குரல் அவனுக்குள் இருந்து வருகிறதா? இல்லை… அவனை ஒருவிதமாகப் பார்ப்பவர்களிடமிருந்து வருகிறதா? இல்லை… சுகுணாவின் எண்ண அலைகள் அப்படி கேள்விகளாக மாறி தன்னைச் சுற்றுகிறதா?

இந்தக் கேள்விகள் ஒரு பூச்சியைப்போல் மனதைச் சுரண்ட ஆரம்பித்த பிறகு சுகுணாவைப் பார்க்க அவன் போகவில்லை. ஏற்கெனவே அவனுக்கு ரொம்ப பரிச்சயமான தனிமையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு கூடவே குடிப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான். அது கொஞ்சம் ஆறுதலாக இருந்ததே தவிர, தீர்வாக அமையவில்லை.

அறையில் மீண்டும் விளக்கு ஒளிர்ந்த போது தலை வலிப்பது போல் இருந்தது. போதை சற்றேறக்குறைய பாதிக்கும் கீழே குறைந்துவிட்டிருந்தது. ஒரு சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டு வெளியே வந்து புகையை இழுத்து இருளில் ஊதிவிட்டான்.

அந்தப் புகை புதிய ஷோரூம்கள் அதிகரித்துவிட்ட, புதிய வீடுகள் முளைக்கத் தொடங்கிவிட்ட சுகுணாவின் வீடு இருக்கும் திசை பார்த்து நீந்திக் கொண்டிருந்தது. வாசு பாதி வரை எரிந்திருந்த சிகரெட் துண்டை கீழே போட்டு காலால் நசுக்கிவிட்டு, பன்னிரெண்டு வீடுகள் கொண்ட அந்தக் குடியிருப்பை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தான். அடுத்தத் தெருவில் கூர்க்காவின் விசில் சத்தம் கேட்கத் தொடங்கியபோது அவனுடைய கால்கள் கதவு எண் 4, பொன்னூஞ்சல் நகர், ஜெயங்கொண்டம் சாலை நோக்கி நடக்கத் தொடங்கின.


மௌனன் யாத்ரீகா – மௌனன் யாத்ரீகா – இதுவரை ஏழு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வெளியான நூல் “பாணர் வகையறா”. தொடர்புக்கு mounanyathriga@gmail.com

சுயம்பாகி

0

லாவண்யா சுந்தர்ராஜன்

1

குளியலறையை டெட்டால் போட்டு கழுவிக் கொண்டிருந்தான் தினகரன். கொடியபேல் கொட்ரோலி பகவதி கோவில் மணியோசை ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. காலை நேர மங்கல ஆரத்திக்கு போக வேண்டுமென்று தினகரனுக்கு ஆசை. ஆனால் அந்த நேரத்தில்தான் எல்லோரும் சாப்பிட வருவார்கள். அவர்களுக்கு தட்டு எடுத்து வைக்க, தண்ணீர் ஊற்றி வைக்க என்று அரக்கப் பறக்க வேலையிருக்கும். அடுப்பில் எதையாவது கிண்டிக் கொண்டோ அல்லது வருபவர்க்கு பரிமாறும் வேலையையோ சந்திரகாந்த் பார்ப்பார். பூஜையின் மணியோசை கேட்கும் நேரத்தில் அது போன்ற வேலைகளை, சின்ன வேலைகளைப் பார்க்க அமைந்தால் கூட பரவாயில்லை, காலை பரபரப்பு முடிவதற்கு முன்னரே மூன்றாம் எண் அறையில் இருக்கும் ரஞ்சன் சாருக்கு தினம் குளியலறையைக் கழுவ வேண்டும். அதுவும் அவர் இருக்கும் போதே செய்ய வேண்டும். அவர் இல்லாத சமயம் அவரது அறைக்குள் நுழைந்தாலே அவருக்கு பிடிக்காது. குளியலறை கழிவறை சுத்தம் செய்யும் போதுதான் தினமும் மங்கல ஆரத்தி நடக்கிறது.

நல்லவேளை மற்ற அலுவலர்கள் எல்லோரும் தங்கள் அறையை எப்போது சுத்தம் செய்ய வேண்டுமென்று எந்த கட்டுப்பாடும் வைப்பதில்லை. சத்யா இருக்கும் நாட்களில் அறைகள் சுத்தம் செய்வதில் தினகரனோடு அவனும் கொஞ்சம் பங்கெடுப்பான். முன்பெல்லாம் காலையில் எல்லா வேலைகளையும் முடித்த பின்னரே அறைகளை சுத்தம் செய்வதும், மாளிகையின் வரவேற்பறை, பிற இடங்களை சுத்தம் செய்வதையும் இருவரும் செய்வார்கள். மூன்றாம் எண் அறைக்கு ரஞ்சன் சார் வந்த பின்னர் சுத்தம் செய்யும் வேலையை காலையிலேயே தொடங்க வேண்டியிருந்தது. ஒரு அறையை மட்டும் சுத்தம் செய்துவிட்டு குளிக்க முடியாது. அதனால் எல்லா இடங்களையும் அப்போதே சுத்தம் செய்ய வேண்டிருக்கும். காலை வேளையென்பதால் சமையலறையில் சத்யா அவனுடைய அப்பா சந்திரகாந்துக்கு உதவுவது போல பாசாங்கு செய்து கொண்டு தரை துடைக்கும், படுக்கைகளை தட்டி போடும் வேலைகளை தினகரன் தலையில் கட்டிவிடுவான். சில நாட்கள் முன்பு ஒருமுறை சத்யா குளியலறையைக் கழுவியிருப்பான். அன்று தினகரனுக்கு உடல்நிலை சரியில்லை. அடுத்த நாளே தினகரனிடம் “பாத்ரூமெல்லாம் சத்யா கிட்ட க்ளீன் பண்ண விடாத அவன் சின்னவன் இதெல்லாம் ஒழுங்கா பண்ணாம விட்டான்னா ஆபிஸர் யாரும் கம்பிளைண்ட் பண்ணிட்டா நமக்கு ரொம்ப சிக்கலாயிடும். உனக்கு ஏன் அடிக்கடி உடம்பு சரியில்லாம போகுது” என்றார் சந்திரகாந்த்.

இத்தனைக்கும் சத்யா கல்லூரியில் தினகரனுக்கு ஒருவருடம் ஜூனியர். தினகரன் அவனை எவ்வளவு காபந்து பண்ணியிருப்பேன். சத்யா தினகரனுக்கு ஒருவிதத்தில் தூரத்து சொந்தம். சத்யாவின் தாத்தாவும் தினகரனின் தாத்தாவும் ஒன்றுவிட்ட சகோதரர்கள். முடுபத்ரி பகவதி கோவிலில் அன்னம் சமைப்பவர்கள். தினகரன் உணவக மேலாண்மை படிப்பு முடிந்து வேறு நல்ல வேலை கிடைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தான். ஒரு விருந்தினர் மாளிகையை மறைமுக ஒப்பந்த அடிப்படையில் பராமரிக்கும் சந்திரகாந்த் தனக்கு உதவி செய்ய ஆள் தேடிக் கொண்டிருப்பதை கேட்டு தினகரனின் அப்பா அவனை சந்திரகாந்திடம் பேசி வேலைக்கு சேர்த்து விட்டார்.

KLYஅது பெரிய எண்ணெய் நிறுவனத்தின் ஊழியர்கள் மாற்றலாகி தங்களது குடும்பத்தைப் பிரிந்து மங்களூர் வரும்போது அவர்கள் தற்காலிகமாகத் தங்குவதற்கென கட்டப்பட்ட விருந்தினர் மாளிகை. அந்த மாளிகையில் தங்குபவர்களுக்கு உணவு அளிப்பது முதல் அவர்களது உள்ளாடைகள் துவைத்து கொடுப்பது வரை செய்யும் எல்லா வேலைகளுக்கும் சந்திரகாந்துக்கு நல்ல ஒப்பந்தத் தொகையை அந்த நிறுவனம் அளிக்கிறது. மாளிகையை பராமரிக்க, சமையல் உதவி செய்ய என்று கணக்கு காட்டி நான்கு ஆட்கள் சம்பளத்தை நிறுவனத்திடமிருந்து அவரால் பெற முடியும். அதில் கணிசமான தொகை தினகரனுக்கு கிடைக்கும் என்றும் அது மட்டுமல்லாமல் அலுவலர்கள் அங்கே கொடுக்கப்பட்ட உணவு பட்டியல் தவிர வேறு பிரத்தியேக உணவுகளை தயாரிக்கச் சொல்லி தனியாக பணம் கொடுப்பதிலும் மேற்படி வருமானமும் இருக்குமென்றும் சொல்லி தினகரனை அழைத்துக் கொண்டு வந்தார் சந்திரகாந்த். தினகரன் படித்த படிப்புக்கு அங்கே சமையலும் செய்ய வாய்ப்புண்டு என்று சொல்லித்தான் தினகரனின் அப்பா அவனை சம்மதிக்க வைத்தார்.

மங்களூர் கொடியபேல் பகுதியில் பெரிய தோட்டத்தின் நடுவில் அமைத்திருந்த அந்த மாளிகை வந்த புதிதில் தினகரனுக்கு மாபெரும் கனவுலகத்தில் நுழைந்த உணர்வைக் கொடுத்தது உண்மைதான். தோட்டத்தில் ஸ்கேல் வைத்து கோடு போட்டது போல நிற்கும் பாக்கு மரங்களும், எண்ணெய் பூசி பளபளக்கச் செய்த போல முரட்டு பச்சை நிறத்தைக் கொண்ட இலைகள் பளபளக்கும் பலா மரங்களும் நிறைய இருந்தன. விதவிதமான பூக்களும் மருதாணி மலர்களும் கும்மென்று மணம் பரப்பிக் கொண்டிருந்தின. அதில் அதிகாலை நேரத்தில் பலவிதமான பட்சிகள் சத்தம் செய்துகொண்டே இருக்கும். அங்கே நடக்கும் கச்சேரியில் தினகரனால் கண்டுபிடிக்க முடிந்த ஒரிண்டு குரல்களில் கிளியும், குயிலும் அடக்கம். வல்லூறுகள் கூட வந்து சிலசமயம் அமர்திருக்கும். கண்ணுக்கு குளிர்ச்சியாக தெரியும் நந்தியாவட்டையும், சந்தன நிறத்தில் பூக்கும் செம்பருத்தைகளும் இருந்தன. தோட்டத்தில் பரந்த கிளைகளோடு இருந்த பாதாம் மரத்தடியில் இருந்த கல்மேடை நான்கைந்து பேர் அமர போதுமானது. மாளிகையின் வரவேற்பறையிலும் பெரிய பெரிய ஷோபாகளும் பெரிய தொலைகாட்சியும் உண்டு. அதில் அமர்ந்து இளைப்பார தினகரனுக்கும், சத்யாவுக்கும் மிகவும் பிடிக்கும். அங்கே தங்கியிருக்கும் அலுவலர்கள் யாரும் இல்லாத சமயத்தில் கொஞ்ச நேரம் ஷோபாவிலோ பூங்காவின் கல்மேடையிலோ அமர்ந்திருப்பார்கள். எப்போது வேண்டுமானாலும் ரஞ்சன் சார் வருவார். அப்போது விரைந்து எழுந்து ஓடினாலும் அவர் இழிவான பார்வையை எப்படியாவது தினகரன் மீதோ சத்யா மீதோ பதிவு செய்துவிடுவார். மறுநாள் கண்டிப்பாக நேரடி ஒப்பந்தங்காரர் கணேஷ் வந்து சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் கத்திவிட்டு போவார்.

படித்த படிப்புக்கு பெரிய நட்சத்திர விடுதியிலோ, கப்பலிலோ வேலைக்கு சென்று நிறைய சம்பாதிக்கலாம் என்று நினைத்தது எல்லாம் கனவாகிப் போனது தினகரனுக்கு. வந்த புதிதில் காய்கறி வெட்ட, சமையல் உதவி வேலைகள் என்றே நினைத்திருந்தான். போகப்போக அது வெறும் எடுபிடி வேலை என்றே புரிந்தது. ஆனாலும் இங்கே கிடைக்கும் வருமானத்தை நம்பிதான் அவன் குடும்பமே இருந்தது.

2

“எங்க வீடு மங்களூர் லால்பாக்ல இருக்கு. அங்க தான் மங்களூர் கார்போரேசன் ஆபீஸ் கூட இருக்கு. அது தான் எம் ஜி ரோட்ல மிகப் பெரிய பில்டிங். அதுக்கு அடுத்தது எங்க வீடு இருக்க கார்டன் என்களேவ் தான் பெருசு. அதுல முதல்மாடில தான் எங்க வீடு இருக்கு. என் அம்மா மிகவும் சுறுசுறுப்பானவர். ஆனால் என்னால் எங்க அம்மா கீழ விழுந்துட்டாங்க. டாக்டர் அங்கிள் கிட்ட அப்பா கூட்டி கிட்டு போயிருக்காங்க”

“அம்மா கீழ விழந்தது எல்லாம் சொல்ல வேண்டாம். நேத்து வரை இருந்த அம்மாவை சொன்னா போதும்”

சத்யா அர்ஜுனுக்கு நாளை அவன் பள்ளியில் “என் வீடும் என் அம்மாவும்” என்ற தலைப்பில் பேச வேண்டி பயிற்சி அளித்துக் கொண்டிருந்தேன். அர்ஜுனுக்கு குடிக்க தினகரன் பால் கொண்டு வந்து கொடுத்தான். பால் வாங்கி ஓரு வாய் வைத்தவன்.

“அங்கிள் பால் கசக்குது”

“ஸ்ஸ்.. சக்கரை போட மறந்துட்டேன். ஆனந்த் சார் சக்கரையே போட்டுக்க மாட்டார்ல்ல.. அந்த நியாபகத்தில்” என்று தலையைச் சொறிந்து கொண்டு நின்றான் தினகரன்

“போய் சக்கரை போட்டு எடுத்துட்டு வா” என்றார் சந்திரகாந்த்.

சாயங்காலம் ஆறு மணியிருக்கும் வேகவேகமாய் விருந்தினர் மாளிகைக்கு வந்த வந்த ஆனந்த் “மஞ்சுளா கீழே விழுந்து அடிபட்டுட்டா.. நான் அவளை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போறேன். இவன் இங்கே இருக்கட்டும். சத்யா கொஞ்சம் அவனுக்கு ஸ்பீச் பிரிப்பேர் பண்ணி விட்டுரு” என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்றவர் இன்னும் திரும்பி வரவில்லை.

பாலை வாங்கிக் கொடுத்தவன் “சாயுங்காலம் நீச்சல் குளத்தில விளையாடிட்டே இருந்தேன். அப்ப விளையாட்டு ஜோர்ல நான் கால் வழுக்கி தண்ணீல விழப்போவது போல குளத்துக்கு பக்கத்துல நகந்துட்டேனா, அம்மா நான் விழுந்துற போறேன்னு நினைச்சி வேகமா ஓடி வந்தாங்கல, அப்ப கால் வழுக்கி கீழே விழுந்துட்டாங்க”

“சரி நீ பாலை குடி”

“உடனே சமாளிச்சி எந்திரிச்சிட்டாங்க. ஆனா அப்படியே முதுக பிடிச்சிட்டு உட்கார்ந்துட்டாங்க. என்னாச்சும்மா நான் அழுதேன். ஒன்னுமில்லை லேசா வலிக்கிதுன்னு சொனனாங்க. ஆனா அவங்களுக்கு ரொம்ப வலிச்சிருக்கும் போல, எப்போவும் படிக்கட்டுல தான் ஏறிப்போவாங்க அம்மா, நொண்டி நொண்டி வந்து லிஃப்ட்ல போனாங்க. அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சி அவங்களால நிக்கக் கூட முடியல. ஒக்காரவும் முடியல. எனக்கு எதுவும் சாப்பிடக்கூட குடுக்கல. அப்பாவை போனில் கூப்பிட்டாங்க.”

“சரி நீ பாலை குடிச்சிட்டு வேற என்ன பேசப்போறேன்னு சொல்லு நாளைக்கு அம்மா வந்துடுவாங்க” என்றான் தினகரன்.

“கானா லாகவ்” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டான் தினகரன்.

“ஏன் அங்கிள் பயந்துட்டீங்க” என்று சிரித்தான் அர்ஜுன்.

சந்திரகாந்தும், தினகரனும் வேகமாய் எழுந்து சென்று சாப்பாத்தி செய்ய ஆரம்பித்தனர்.

ள்“லாக்பாக் ரோட்டில் மிகப்பெரியது எங்க வீடு.”

“இல்லை முன்னாடி சொல்லி குடுத்தேன்ல அதுபோல சொல்லு அர்ஜுன்” என்றான் சத்யா.

அர்ஜுன் சிணுங்கி அழ ஆரம்பித்தான். உடனடியாக அவனை தூக்கிக் கொண்டு வெளியே பூங்காவில் இருக்கும் கல்மேடைக்கு அழைத்து சென்று ஏதோ விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தான் சத்யா.

ஆனந்த் சார் இரவு பத்து மணிக்கு வந்தார். அர்ஜுன் அதற்குள் தூங்கியிருந்தான் “மஞ்சுளாவுக்கு ஸ்பைனல் கார்ட்டில் அடிப்பட்டிருக்காம். இன்னும் கொஞ்சம் டெஸ்ட் எல்லாம் எடுக்க வேண்டி ஆஸ்பத்திரியிலேயே இருக்க சொல்லிட்டாங்க. எங்க கம்பெனி ஐடி பார்த்துட்டாலே இவனுங்க இப்படித்தான் போட்டு தாக்கிடுவாங்க”

“அதனால என்ன சார், கம்பெனி தானே காசு குடுக்குது. மேடம் சரியாகி வீட்டுக்கு வந்துட்டா போதும்” என்றான் சந்திரகாந்த்.

“சரி நான் வீட்டுக்கு போய் அர்ஜுன் ஸ்கூல் பேக், ட்ரஸ் எல்லாம் எடுத்துட்டு வந்து தந்துடறேன். நீங்க காலையில ரெடி பண்ணி அனுப்பிடுங்க. நான் மறுபடி ஹாஸ்பிடல் போகணும் எப்ப வருவேன்னு தெரியாது”

“சரி சார் நான் பார்த்துக்கிறேன். இன்னும் சாப்பிட்டு கூட இருக்க மாட்டீங்க சாப்பிட்டு கிளம்புங்க” என்றார் சந்திரகாந்த்.

மஞ்சுளாவை மூன்று வாரம் படுத்த படுக்கையை விட்டு எழக்கூடாது என்று சொல்லி விட்டார்களாம் அதனால் அர்ஜுனும் ஆனந்த் சாரும் சந்திரகாந்த் பங்களாவில் தான் சாப்பிட்டார்கள். அதுமட்டுமல்லாமல் தினமும் அர்ஜுனை பள்ளிக்குக் கிளம்பும் பொறுப்பு தினகரனுடையாகி விட்டது. சத்யா அர்ஜுனின் வீட்டுப்பாடங்களை கவனித்தான். சந்திரகாந்த் அவனை காலையில் லாக்பாக் மெயின் ரோட்டுக்கு பைக்கில் கொண்டு வந்து பள்ளிக்கூட வேனுக்கு அனுப்பி வைப்பார். மறுபடி சாயுங்காலம் போய் கூட்டிட்டுக் கொண்டு வருவார்.

மூன்று வாரம் இந்த அதிகப்படியான வேலையால் விருந்தினர் மாளிகையிலிருந்த பிற அலுவர்கள் கொஞ்சம் அசௌகரியபட்டிருக்கலாம். ரஞ்சன் சாரைத் தவிர வேறு யாரும் எதுவும் நேரடியாகச் சொல்லவில்லை.

மூனு வாரங்கள் கழித்து மஞ்சுளாவை வீட்டுக்கு அழைத்து வந்தபோது அவள் முன்னர் இருந்த எழில் கொஞ்சும் நிலையில் இல்லை. ஏதோ அரை மயக்கத்திலேயே இருந்தாள். பேசுவதும் குழம்பிப் பேசுவது போலிருந்தது. அவள் பேசுவது எதுவுமே யாருக்கும் புரியவில்லை.

ஆனந்த சார் “அவ இப்ப இருக்க நிலையில் சமைக்க, மத்த வேலை எல்லாம் பாக்க முடியாது சந்திரா. கொஞ்ச நாளைக்கு வீட்டுல சமையலுக்கு தினகரனை அனுப்பி வைக்க முடியுமா” என்றார்.

“சார் இதெல்லாம் கேட்கணுமா. அனுப்பி வைன்னு ஆடர் போடலாம் சார் நீங்க”

3

காலை ஐந்து மணிக்கு எழுந்து வெளியே வந்தான் தினகரன். ஐந்து மணிக்கு எழுந்தால் தான் இப்போதெல்லாம் சமாளிக்க முடிகிறது. முன் முற்றத்தில் நின்று கொடியபேல் பகவதி கோவில் கோபுரத்தை தரிசனம் செய்தான். விருந்தினர் மாளிகையை விட சற்றே மேடான பகுதியில் கிட்டதட்ட ஐந்து ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டிருந்த கோவிலின் முகப்புத்தோரண வாயிலில் மையமாக அமர்ந்திருந்த சிம்ம வாகினியைப் போலொரு அழகியை வேறெங்கும் பார்த்ததில்லை. அவள் சிவப்புப் புடவை மடிப்புகள் கண்பதற்கு நிஜமாய் அசைவது போலிருக்கிறது. சிம்மத்தை பார்த்தால் அது கர்ஜிப்பது போலிருந்தது. அன்னையின் பளிங்கு முகம் இருபுறமும் எரிந்த மின்சார விளக்கொளியில் பளீரென்றிருந்தது. தேவியின் முகம் குங்குமப்பூ கலந்த பால் நிறத்திலிருந்தது. மஞ்சுளா மேடம் மேனியின் நிறம் அதே போலவே இருக்கும் என்று நினைத்தான் தினகரன். தோரண வாயிலில் கிழக்கு நோக்கி பறந்து கொண்டிருந்த ஆரஞ்சு வர்ண கொடி தினகரனை போலவே படபடத்துக் கொண்டிருந்தது. காலையில் கோவிலிருந்து பகவதி சரணங்கள் மெல்லக் கசிந்து காற்றில் வந்து கொண்டிருந்தது. தவிட்டுக் குருவிகள் ஓயாமல் ஒலியெழுப்பி அதற்கு பின்னணி இசை அமைத்தது. மனம் அமைதியடைந்தது.

விருந்தினர் மாளிகைக்கு எதிர்புறமிருந்த அடுக்கத்தின் உட்பரப்பிலிருந்த மகிழம் பூ மரத்திலிருந்து எழுத வாசனை மனதை மயக்கியது. வண்ணாத்தி குருவி, கருங்குருவிகளின் ஓயாத ஒசை அந்த நேரத்தின் ஏகாந்தத்தின் இனிமையை இன்னும் கூட்டியது. கோவிலை நோக்கி மீண்டும் திரும்பினான் தினகரன். பூரண பொலிவுடன் திகழ்ந்த தேவியின் முகம் அவனைப் பார்த்து வசீகரமாய் புன்னகைப்பது போலத் தோன்றியது. தேவியின் முகம் பார்க்கப் பார்க்க மஞ்சுளா மேடம் முகமே நினைவுக்கு வந்தது. அந்த நொடியே வீட்டுக்கு போய் மனைவியை கட்டிக்கொள்ள தவித்தது மனம். ஆனால் அவள் இருப்பதோ மூடுபத்திரியில் சமணர் கோவில்களுக்கு மத்தியில் இருக்கும் சற்றே பெரிய குடிலில். ஆனந்த் சார் வீட்டுக்கு போக ஆரம்பித்தலிருந்து வீட்டுக்கு போகவும் வழியில்லை. இங்கேயே வேலை அதிகம் இருக்கிறது.

சொந்தக்காரன் என்று சந்திரகாந்திடம் வேலைக்கு சேர்ந்தால் இரண்டாம் பட்சமாகவே நடத்துகிறார். காலையில் எழுந்து மஞ்சுளா மேடம் வீட்டுக்கு போய்விட்டு அங்கே வேலைகளை முடித்துவிட்டு வந்து பார்த்தால் இங்கே மேல் வேலைகள் எதுவுமே முடிந்திருக்காது. உடனே அரக்கப் பறக்க மேல் வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது ரஞ்சன் சார் கடுக்கிறார். இப்போதாவது சத்யா கொஞ்சம் கூட மாட உதவி செய் என்று சொல்ல மாட்டார் சந்திரகாந்த். அவருக்கு பிள்ளை என்ற பாசம் வருகிற அளவு சித்தப்பா மகன் தானே என்ற பாசம் வரவில்லை. முன்பெல்லாம் எல்லோரும் ஆறு மணிக்கு தான் எழுந்து கொள்வோம். ஆனால் இப்போது ஆனந்த் சார் வீட்டிலிருந்து வரும்போதே ஏழு ஆகி விடும். மாளிகையில் அலுவலர்கள் எல்லோருமே எட்டு மணிக்கு பத்து நிமிடம் இருக்கும் போதே சாப்பிட வரத்தொடங்கி விடுவார்கள். நல்லவேளை ரஞ்சன் சாரிடம் சந்திரகாந்த் ஏதோ சொல்லி அவர் போன பின்னர் அறையை சுத்தம் செய்தால் போதுமென்று வாய் வாக்கு வாங்கி வைத்திருக்கிறார்.

இந்த விருந்தினர் மாளிகையின் ஒப்பத்தம் கிடைக்க ஆனந்த் சார் ஒரு காரணம் என்று சந்திரகாந்த் அடிக்கடி சொல்வார். ஆறு வருடங்களுக்கு முன்னர் சந்திரகாந்த் துபாயில் தனது வேலை ஒப்பத்தம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மங்களூர் வரும் விமானம் எட்டு மணி நேரம் தாமதமானது. அதே விமானத்தில் தான் ஆனந்த் சார் குடும்பத்தோடு துபாய் சுற்றுலா பயணம் முடித்து திரும்பி வர வேண்டியிருந்தது. மஞ்சுளா மேடம் பார்க்க வெண்ணையில் கொஞ்சம் போல இளம்சிவப்பு வண்ணம் சேர்த்து செய்த சிலை போல அப்படியொரு பளபளப்பு. கொங்கணி தேசத்து நிறம். மலையாளப் பெண்ணின் உடல்வாகு சேர்த்து செய்த அற்புதப் படைப்பு. அர்ஜுனுக்கு அப்போது இரண்டு வயதுக்குள் இருக்கும். துருதுருவென்று விமான நிலையம் முழுவதும் ஓடிக் கொண்டிருந்தானாம். அவனுக்கு போக்கு காட்டி விளையாட வைத்து அவனோடு பொழுது போக்கியது ஆனந்த் சார்க்கு மிகவும் பிடித்து விட்டது. சந்திரகாந்தின் வேலை விபரங்களை கேட்டபோது நட்சத்திர உணவுவிடுதியில் ஒப்பந்தம் முடிந்து ஊர் திரும்புவதாக சொல்லியிருக்கிறார். இனி மறுபடி வேலை தேடிதான் போக வேண்டும் என்பதையும் சொன்னாராம். அதை நினைவில் வைத்துக்கொண்டு எண்ணெய் நிறுவனத்திற்கு விருந்தினர் மாளிகைக்கு ஒப்பந்தக்காரரிடம் சிபாரிசு செய்திருக்கிறார் ஆனந்த சார். அந்த ஒப்பந்தக்காரர் மேற்பார்வையிலிருந்த இரண்டு மூன்று விருந்தனர் மாளிகையில் ஒன்றான கொடியபேல் பகவதி அம்மன் ஆலயத்தின் அருகிலிருந்த மாளிகையில் சந்திரகார்ந்தை பணியமர்த்தினார். “அஞ்சி வருஷமா இந்த இடத்த முழுசா கட்டுக்கு கொண்டு வர எவ்ளோ உழைப்பு, எவ்ளோ நெளிவு சுழிவு? அதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?” என்று தினகரனிடம் ஒருமுறை சொன்னார்.

மஞ்சுளா மேடத்துக்கு எப்போது சரியாகுமென்று தெரியவில்லை. ரஞ்சன் சாருக்கு அர்ஜூன் அங்கே வந்திருந்த நாள் முதலே பிடிக்கவில்லை. ஆனந்த் சாரிடம் சொல்ல முடியாது சந்திரகார்ந்திடமும் எதுவும் சொல்ல மாட்டார் தினகரனிடம் தான் கடிந்து கொள்வார்.

4

கார்டென் என்களேவ் அடுக்கத்தில் முதல் தளத்திலிருந்த அந்த வீட்டு தென்மேற்கு பகுதியில் இருந்த படுக்கையறையை ஒட்டி மேற்குபுறம் அமைந்திருந்த பால்கனியில் மாலை வெயில் முழுமையாக படர்ந்திருந்தது. முதல் தளத்தை எட்டிவிட வேண்டுமென்று பேராசையோடு வளர்ந்திருந்த தீக்கொன்றை மரம் அடர் சிவம்புத்தில் பூத்திருந்தது.

அந்தப் பூக்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் மஞ்சுளா. அங்கிருந்து ஓடி வந்தவள் தினகரிடன் “அய்யோ மரம் முழுக்க நெருப்பு” அவள் உடல் நடுங்கியது.

“இல்லை மேடம் அது நெருப்பில்லை. பூங்கொன்றை”

“இல்லை எனக்கு ஓங்கி அலறணும் போலிருக்கு. நீங்க யாருமே நான் சொல்றத ஏன் நம்பமாட்டேங்கிறீங்க”

“சரி மேடம் அது நம்மை ஒன்றும் செய்யாது”

“அப்படித்தான் நேத்து சாயங்காலம் காலார காத்து வாங்க நடந்து போயிட்டுயிருந்தப்ப ஒரு பாம்போட தலை மட்டும் வெட்டுபட்டுக் கிடந்தது. ஆனாலும் அது சீறிக்கிட்டே புரண்டு புரண்டு என்னைத்தான் கொத்த வந்தது. அப்ப நடுமுதுகில் சுரீர்ன்னு பயம் பரவுச்சு. ஆனந்திடம் சொன்னேன் அவரு நம்பல.”

“ம் சொல்லுங்க மேடம்”

‘மேல பாரு’ ன்னார். நான் மேலே பார்த்தேன் கொத்தா அஞ்சாறு இல்ல பத்து பாம்பு, அவ்வளவு அகலமா படமெடுத்து பாக்கவே பயங்கரமா இருந்துச்சி. உத்து பார்த்தா பிளவுண்டு அதோட நாக்கு நீண்டு என் பக்கத்தில வருது. பயமாக இருக்குன்னா ‘வலிக்கிதா வீட்டுக்கு போலாமா’ என்று பொருத்தமில்லாமல் சொல்றார்.”

“..”

“அவரும் அர்ஜுனும் என்னவோ ரகசியமாக பேசிக்கிறாங்க. இவங்க எல்லோரும் சேர்ந்து என்னை என்னவோ செய்யப் போறாங்க. ஆனந்த் கூட இப்படி எனக்கு துரோகம் செய்வார்ன்னு நான் கனவில் கூட நினைக்கவில்லை.”

“இல்லை மேடம் யாரும் உங்களுக்கு கெடுதல் எதுவும் செய்யல. நர்ஸ் வந்துடுவாங்க. ஊசி போடுவாங்க. நீங்க தூங்குங்க”

“அய்யோ நீலகவுன் போட்ட அந்த பிசாசு வந்தா, அவள் வந்து ஊசி போட்ட உடனே இந்த மெத்தை கடல் மேல மிதக்குது. அவள் அந்த ஊசில என்ன மருந்து ஏத்துறா?. ஆனந்த் கிட்ட கேட்டா ‘நடக்கும் போது முதுகு வலிக்கிதுல்ல அதுக்காகன்னு’ சொல்கிறாரு. எனக்கு முதுகில் வலியில்ல. அது பயம். இவங்களுக்கு எல்லாம் ஏன் சொன்னா புரியறதில்ல.”

“சரி மேடம் இனி நர்ஸ் கிட்ட ஊசி போட வேண்டாம்ன்னு சொல்றேன். மாத்திரையும் சாப்பிட மாட்டேன்கிறீங்களே”

“அன்னிக்கி ஹாஸ்பிடல்ல இருந்தப்ப பாத்ரூம் போகக்கூட உன்னால முடியலன்னு மாத்திரங்க எல்லாம் சிரிச்சிச்சி. அதனால் தானே அதை எல்லாம் தூக்கி எறிஞ்சேன். அப்போதிலிருந்து தானே நீலகவுன் போட்டவள் ஊசி போட ஆரம்பித்தாள். அப்ப இருந்து நான் உதவாக்கர ஆயிட்டேன்”

“இல்ல மேடம் அப்படியில்ல”

“அப்ப நீ ஏன் வர? நீ வந்தா கூட ஓகே. அந்த சந்திரகாந்த் அப்பப்ப ஏன் வரான்? நீ பேசறது போல அவன் நான் சொல்றதை கேட்கறதும் இல்லை. உத்து உத்து பார்க்கிறான். அவன் சரியில்ல. அவனை இங்கே வரவிடாதே. நீயே வா.”

“சரி மேடம் நானே வரேன்”

“என் வேலை எல்லாம் நீங்களே செய்றீங்க. எனக்கு இனிமே இந்த வீட்டில் எந்த இடமும் இல்லயா? நான் இந்த ரூம்லயே முடங்கிப்போய் விடுவேனா?”

“இல்ல மேடம் உங்களுக்கு உடம்பு சரியானதும் செய்வீங்க”

“எனக்கு உடம்புக்கு ஒன்னுமில்ல. என்னால எல்லா வேலையும் செய்ய முடியும். நர்ஸ் போடும் ஊசில தான் இப்படி ஆயிட்டேன். இனிமே நானே சமையல் செஞ்சுப்பேன். நாளையிலிருந்து நீ வரக்கூடாது” என்று மஞ்சுளா கத்தினாள்.

“சரி மேடம் செய்யலாம்”

இட்லிகளை எடுத்து அதன் வெப்பம் குறையாமல் இருக்கும் பாத்திர அடுக்கில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். சாப்பாட்டு மேசை மீது இட்லி தட்டுகளையும், அந்த பாத்திரத்தையும் வைத்துவிட்டு உள்ளே சென்று அவன் பரபரப்பாக எதையோ எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது “நீ ஏன் இப்படி சத்தம் செய்ற” என்று கேட்டுக்கொண்டே சாப்பிடும் மேசையருகே வந்தாள் மஞ்சுளா.

“பார் தினகரன் நீள்வட்ட கிணறு. அழகா இருக்குல. தண்ணீர் தேன் நிறத்தில் இருக்கு. என் முகம் எவ்வளவு தெளிவாக அழகாக தெரியுது இதுல. தண்ணி மேல மயிலிறகு அசையுது. ஆனா அது ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு? “

“மேடம் கொஞ்ச அங்கே பாருங்க. அது தென்னை மரம்.”

“ஜன்னல் வழியா காத்து. அதான் பச்ச கீத்த அசைக்குது. இங்க தண்ணில அதன் பிம்பங்கள். மயில் இறகு அல்ல. இது சாப்பாட்டு மேசைல. இல்ல நான் ஆசையா வாங்கிப் போட்ட முட்டை வடிவ சாப்பாட்டு மேசை. என்னை குழப்பாத.. இது பழுப்பு நிற தண்ணி. இது தண்ணீர் மேசை. ஏன் உன் முகம் என் முகத்துகிட்ட தெரியுது. நீ என்னை என்ன செய்யப் பார்க்கிற”

இட்லி இருந்த தட்டை வீசி எறிந்தாள் மஞ்சுளா. சாப்பாட்டு மேசை உடைந்து. அதிலிருந்து தெறித்த ஒரு கண்ணாடித்துண்டு தினகரன் நெற்றியில் பட்டு காயம் ஆனது. அர்ஜுன் பயந்தபடி பார்க்கிறான்.

5

சுல்தான் பெட்டரி கோட்டையருகே இருக்கும் பூங்காவின் வண்டி நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு பெருமூச்செறிந்தார் ஆனந்த். விருந்தினர் மாளிகைக்கு வந்து தினகரனை அழைத்துக் கொண்டு தண்ணீர் பாவி கடற்கரைக்குச் செல்லலாம் என்றார். தினகரன் அன்று மஞ்சுளா மேடம் இட்லி தட்டை வீசி எறிந்த போது இரவுப்பணி முடிந்து வீட்டுக்குள் நுழைந்த ஆனந்த் நெற்றியில் பட்ட காயத்தை டெட்டால் வைத்து கட்டிவிட்டார். அதன் பிறகு ஓரிரு நாள் சந்திரகாந்த் ஆனந்த் சார் வீட்டுக்கு சென்றார். பிறகு என்ன ஆனதோ அவரும் போகவில்லை.

அந்தப் பூங்காவில் ஒரு பெரிய மீன் சிலையை கணவனும் மனைவியுமாக இரண்டு பேர் தூக்கிக்கொண்டு நடப்பது போல ஒரு சிலையிருந்தது. அவ்வளவு பெரிய சுறா மீன். ஆனால் அது நிஜ மீன் போலவே இல்லை. அந்த இரண்டு மனிதர்களும் குட்டையாகச் செயற்கையாகத் தெரிந்தனர். பூங்காவில் இருந்த பூக்கள் எல்லாம் கடற்காற்றுக்கு தலையசைத்துக் கொண்டிருந்தது. பெரிய கஜலஷ்மி சிலை இருபக்கமும் இரண்டு சிறிய யானைகளோடு பிரம்மாண்டமாய் இருந்தது. ஆனால் எதிலும் இயற்கைத்தனமில்லை. தண்ணீர் பாவி கடற்கரைக்கு அங்கிருந்து படகு செல்லும். கடற்கன்னிகள் போலிருந்த சிலை நடுவே அமர்ந்திருந்தவர் ஒருகாலத்தில் தேசத்தின் ராஜாவாக இருந்திருக்கலாம்.

“மஞ்சுளாவுக்கு இந்த இடம் ரொம்ப பிடிக்கும். அவளோடு வரப்ப இந்த விளக்குங்க அதோட ஒளி, இங்க உலவற காத்து எல்லாமே ஒரு அபூர்வ உணர்வ தரும். அவளோட இனி எப்போ இங்க வரமுடியுன்னு தெரியல. அவகூட இல்லாத இந்த இடம் ‘பச்’.. எந்த சுவாரஸ்யத்தையும் தராது.”

“சார் வருத்தபடாதீங்க.. மேடம் சீக்கிரமா சரியாடுவாங்க”

“நிமிஷ நேரம் சும்மா இருக்க மாட்டா மஞ்சுளா. வீட்ட இன்ச் இன்சாக சுத்தம் பண்ணுவா. விதவிதமா சமையல் செய்வா. யார் கண்ணு பட்டதோ? அவ வழக்கமான வேலயெல்லாம் செஞ்சி மூனு மாசமாச்சி. இனி அப்படி அவளால வேல செய்ய முடியுமான்னு கூட தெரியல. என்னன்னு தெரியாத பூதமொன்னு அவளோட இருக்கு.”

“ஆமாங்க சார் முன்னே எல்லாம் மஞ்சுளா மேடத்த பார்த்தா கொடியபேல் பகவதியை பார்த்தது போலவே இருக்கும். என்னவோ கெட்ட நேரம்”

“அவள் இப்பதான் மெல்ல மெல்ல தேறி வந்தாள். சந்திரகாந்த் வரது அவளுக்கு பிடிக்கலன்னு தான் முதலில் நினைச்சேன். அவன் வரும் போதெல்லாம் பெட்ரூம் விட்டு வரமாட்டா. இன்னும் தன்னை முழுசா போர்த்திக்கிட்டு நடுங்கிக்கிட்டே இருப்பா. கால் விரல் தெரிஞ்சா கூட இழுத்து இழுத்து மூடிக்குவா.”

“ஒன்னும் பிரச்சனையில்ல சார். நீங்க கவலபடாதீங்க”

“அவள் அடிப்பட்ட அன்னிக்கி மாடிவரை அவளே தானே நடந்து போயிருக்கா. அன்னிக்கி கொஞ்ச நேரம் நின்னு சமைக்கக் கூட செய்தாளாம். அப்பறம் ஹாஸ்பிடலுக்கு கொண்டு போகிற வழியிலோ, பல டெஸ்ட் எடுக்க படுக்கைல இருந்து ஏத்தி இறக்கி முதுகெலும்பில என்ன பிரச்சனன்னு கண்டுபிடிக்கிறேன் பேர்வழின்னு மயிரிழை அளவே விட்டிருந்த விரிசலை பெரிசாக்கி விட்டானுங்க. அப்பறம் சர்ஜரி, பெயின் கில்லர், உடல் பயிற்சின்னு அவளுக்கு கிட்டத்தட்ட பைத்தியம் பிடிக்க நானே காரணமாயிட்டேன்.”

“சார் ஏன் கவலைபடறீங்க இதில் உங்க தப்பு என்ன இருக்கு. டிரீட்மென்ட்க்கு தானே அழைச்சிட்டு போனீங்க.”

“மருத்துவமே பிரச்சனையை பெரிதாக்கி விட்டதோ. அவள் காய்சல், ஜலதோஷம் எதற்குமே மருந்து சாப்பிட மாட்டா. இதயும் அப்படியே விட்டிருந்தா அவளாகவே சரியாகியிருப்பாளோ?

“…”

“இன்னிக்கி நைட் டியூட்டி முடிஞ்சி காலையில எட்டரை மணிக்கு வந்தப்ப மஞ்சுளா இட்லி உடைந்து விட்டது என்று அழுது கொண்டே இருந்தாள். அர்ஜூன் பள்ளிக்கு கிளம்பாமல் விழித்தபடி அமர்ந்திருந்தான். அர்ஜூன் என்னிடம் ‘அம்மா அவர் மேல தட்டை தூக்கி எறியப் போனாங்க. அம்மா தட்டை எறிய விடாம கைய பிடிக்க வந்தாரு. அம்மா அடிச்சிட்டாங்க’ என்றான். இருக்கின்ற பிரச்சனைகள் போதென்று இந்த சந்திரகாந்த் வேற. அவனுக்கு கிறுக்கு தான் பிடித்திருக்கிறது. இப்பதான் அவள் கொஞ்சம் பழைய நிலைக்கு வர்றாப்புல இருந்துச்சி. அதற்குள்ள இவனே அவள பழையபடி ஆக்கிட்டான்.”

“..”

“துபாய் ஏர்போர்ட்டில் ஒன்றுமே தெரியாதவன் போல இருந்தான். குழந்தைக்கு அந்த ஐஞ்சாறு மணிநேரத்துல காட்டிய அன்புக்கு ஏதாவது செய்ய நினைச்சி அவனுக்கு நான் இந்த வழிகாட்டினேன். நான் அவனுக்கு அதிகம் சலுகை காட்டறேன்னு கணேஷ் வேறு என்னிடம் அடிக்கடி புகார் சொல்கிறான். கம்பெனில சந்திரகாந்துக்கு டைரக்ட் காண்ட்ராக்ட் கொடுக்க நான் சொன்னதுல அவனுக்கு கொஞ்சம் கூட உடன்பாடில்ல. ஏன் ரஞ்சனுக்கும் கொஞ்சம் கூட அதில் பிடித்தமில்லை. சப் காண்ட்ராக்ட்ல இருக்கப்பவே சந்திரகாந்த் மதிப்பதில்லன்னு சொல்வாரு.”

“சந்திரகாந்த் மேல தப்பெதுவும் இருக்காது சார்”

“சந்திரகாந்த் நல்லவன் தான் ஆனால் கொஞ்சம் சாதுர்யமானவன்னு அவன் வந்த புதிசுலேயே தெரிஞ்சது. நல்ல பெயர் வாங்கணுமின்னு தெரியாதத கூட தெரிஞ்சது போல சாமர்த்தியமா பேசுவான். மற்றபடி விஷமம் இல்லை. அதான் கொஞ்சம் விலகி மரியாதைக்கான இடைவெளிலயே வைத்திருந்தேன். ஆனா?”

“அவருக்கு இங்க பிரச்சன சார். ரஞ்சன் சார் மட்டுமில்லை எல்லோருமே சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க”

“எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு தானே. உங்களுக்கு எல்லாம் தெரியும் தானே எனக்கு ட்ரான்ஸ்பர் ஆகப் போகுதுன்னு”

“இடம் மாறினாலாவது மஞ்சுளா மேடத்துக்கு சரியாடலாம் இல்லையா?”

“நானும் அப்படித்தான் நம்பறேன்”

6

மதிய சமையலுக்கு தேவையான காய்கறிகளை வாங்க பையை எடுத்துக்கொண்டு ஹம்பனெஹெட்டே மார்க்கெட்க்கு கிளம்பினான் தினகரன். ஹம்பனெஹட்டே மணிக்கூடு. இதைப் பார்த்து பெருமூச்செறிய மட்டுமே முடிகிறது. அவனுக்கு அதுதான் ஈபில் டவர். பத்துக்கு பத்து அகலமுள்ள நான்கு சுவர் சூழ்ந்த தூண் வடிவம். முதல் தளத்தில் நாலுகட்டு வீட்டு படிப்புறா அமைப்பில் அலங்கார கோபுரமும் இருக்கும். அதற்கு மேல் ஒருவரிருவர் இணைந்து வலம் வருவதற்கு தேவையான அளவு இடம் விட்டு மற்றொரு சதுர வடிவ எழுப்பப்பட்டிருந்து. அந்த நான்கு சுவரின் உச்சியில் தென்னம் தொன்னையை கவிழ்த்து வைத்தது போல நான்கு புறமும் மழை வடிய அட்சி ஓடு வேயப்பட்டு ஒற்றை கும்பம் வைக்கப்பட்டிருக்கும். நான்கு முனைகளில் பாம்பு வடிவமில்லை அது மட்டுமே அதற்கும் கோவில் கோபுரத்துக்குமான வேறுபாடு கோபுரத்துக்கு கீழே நான்குபுறமும் சுவர் அகலத்துக்கு இணையான கடிகாரங்கள் இருக்கின்றது. ஆனால் அதில் மணி பார்ப்பவர் தான் யாருமில்லை.

வீட்டில் அண்ணனும், அப்பாவும் உணவக மேலாண்மை படித்த மாதிரியே தான் தினகரனும் படித்தான். அவன் அரபிக்கடல் காற்றை எவ்வளவு காலம் தான் குடிப்பது. ஐரோப்பா பனியில் நனையலாம் என்று நினைத்த கனவுகள் கனவுகளேவே இருக்கின்றன. சத்யா பாடு பரவாயில்லை அவனுக்காவது அப்பா நேரடி ஒப்பந்தம் முயற்சி செய்து கொண்டிருகிறார். தினகரன் குடும்பத்துக்கு இந்த வேலையை விட்டால் எந்த வருமானமும் இல்லை. வேலை எவ்வளவு செய்தாலும் தினகரனின் அப்பா சந்திரகாந்த்கிடம் ஒவ்வொரு மாதமும் வந்து தினகரனின் சம்பளத்தை வாங்கிக் கொண்டு போய்விடுவார். செலவுக்கு மட்டும் தான் கொஞ்சம் காசு கொடுத்துவிட்டு போவார். கேட்டால் சாப்பாடு, தங்க இடம் இலவசம் உனக்கு எதுக்கு காசு என்பார். அவர் சொல்லும் கதைகளில் வீட்டுபடும் பாடு தினகரன் வாயை அடைக்கும்.

தினகரன் அப்பாவின் அப்பா கோவிலில் சிறு சிறு நேவேத்தியம் செய்து தரும் வேலையில் இருந்தார். அவர் தொடங்கிய அன்னமிடும் தொழில் தான் என் வரையிலும் தொடர்கிறது. தனது ஒரே மகனை போஷிக்க போதுமான அளவு வருமானம் தினகரன் தாத்தாவுக்கு கிடைத்தது. தினகரனின் பாட்டி அவன் அப்பாவின் சிறுவயதிலேயே இறந்துவிட தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் பெரும்பாலும் பூஜை முடிந்து தரப்படும் பிரசாதமே போதுமானதாக இருந்தது. அவன் அப்பாவும் அதிகம் எதிர்பார்ப்பில்லாமல் வளர்ந்து விட்டார். பிரச்சினை திருமணத்திற்கு பின்னர் தொடங்கியது. சிறிய சீரியல் லைட் போன்று சிவந்த ஆவாரம் பூக்கள் நிறைந்த அவர்கள் வீடு அம்மாவுக்கு போதவில்லை. தோரண வாயில் கொண்ட பெரிய மாளிகை வேண்டும் என்ற அம்மா கனவு அப்பாவை சீனா, துபாய் என்று உலகின் பல்வேறு நகரங்களுக்குத் துரத்தியது. அண்ணனையும் ஐரோப்பிய நாடுகளில் வேலைக்கு அனுப்பியது.

தினகரன் விருப்பம் அண்ணனோடு ஐரோப்பாவிற்குச் செல்வது. அண்ணனைப் போலவே நானும் அங்கேயே ஒரு பெண்ணைப் பார்த்து மணந்து கொள்வேன் என்று அம்மாவுக்கு பயம். அப்பாவுக்கும் அது பயமாக இருக்கலாம். விரைவிலேயே திருமணத்தை முடித்து வெளிநாடு செல்லும் ஆசையை மாற்றி விட்டார். அவன் பத்தினிக்கு அதிக ஆசைகள் இல்லை. அப்படிப்பட்ட பெண்ணை தான் தினகரன் அம்மா அவனுக்கு பார்த்திருந்தாள். குடும்பத்திற்கு உழைக்க இங்கேயே வேலை செய்தால் போதுமென்று தினகரன் மனைவி சொல்லி விட்டாள். உழைப்பிருந்தால் போதும் அங்கே போய் சேமிப்பதை விட மிக அதிகம் சேமிக்கலாம் என்றும் அவளை விட்டே சொல்லியிருந்தனர். எங்கே போனாலும் நம்ம ஊர் போல வராது என்று எல்லா சமாதானமும் சொல்கிறாள். தினகரனின் அப்பா சத்யாவுக்கு சந்திரகாந்த் நேரடி ஒப்பந்தம் எடுத்துக் கொடுத்த கையோடு அவனுக்கும் ஒன்று ஏற்பாடு செய்வார் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்.

நேரடி ஒப்பந்தம் கிடைப்பது இருக்கட்டும் பின்னர் தினகரன் நிறைய சம்பாதிக்க வாய்ப்பு இருந்தாலும் இப்போது இங்கே எச்சில் தட்டு தான் கழுவ வேண்டியிருக்கிறது. அதுவும் ரஞ்சன் சார் சாப்பிட்டு கை கழுவ எழுந்து சென்று திரும்பும் முன்னரே தட்டை எடுத்து அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டுமென்பார். கை கழுவி விட்டு வந்து அமர்ந்து காபி குடிக்கும் போது எச்சில் தட்டு இருக்கக் கூடாதாம். ஒரு நிமிட நேரம் வேறு வேலையாக இருந்தால் கூட ஒப்பந்தக்காரர் கணேஷிடம் போய் சொல்லிவிடுவார். அவர் வந்து திட்டிவிட்டு போவார்.

அப்போதெல்லாம் தினகரனுக்கு ஏன் இந்த இடத்தில் இவ்வளவு கூழை கும்பிடு போட்டுக்கொண்டு இருக்க வேண்டுமென்று தோன்றும். ஆனால் தாத்தா சொல்வது தான் நினைவுக்கு வரும். “விருந்தினர் விருந்துண்ட புண்ணியம் அவர் சாப்பிட்ட இடத்தை எச்சிலிட்டு துடைக்கும் போதுதான் கிடைக்கிறது” அவர் தொடங்கி வைத்த உண்டி தொழிலில் இதுவும் நியாயம் தானே.

7

ஆனந்த் சார் மாற்றலாகிப் போன பின்னர் எல்லாமே தலைகீழாகி விட்டது. தினமும் ஏதேனும் காரணம் சொல்லிக்கொண்டு தினமும் கணேஷ் வந்து விடுகிறான். சின்னச் சின்ன குறைகளைக் கண்டுபிடித்து திட்டிக் கொண்டிருக்கிறான். தினகரன் ஆனந்த் சார் வீட்டில் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது ரஞ்சன் சார் ஒருநாள் கணேஷிடம் வந்து “ஆனந்த் சாரிடம் சொல்ல முடியால அவங்க வீட்டுக்கு சந்திராவை வேணும்னா அனுப்பேன் தினகரன் போயிட்டா, சத்யாவுக்கு அடுப்படி வேலையே சரியா இருக்கு, ரூம் சுத்தம் பண்ண நான் ஆபீஸ் வந்தப்பறம் வரும்போது, அதை தூக்கி இங்க, இதை தூக்கி அங்கன்னு வைச்சிடறீங்க. எனக்கு தேடவே சரியா இருக்கு. பாத்ரூம் கூட நான் இருக்கும் போது சுத்தம் செய்றப்புல சுத்தமா செய்றது இல்லை” என்றார். இப்போது ஒப்பத்தம் ரஞ்சன் சார் கையில் தான். கொடியபேல் கொட்ரோலி ஶ்ரீ பகவதி கணேஷை ஏமாற்றவில்லை, ஆனந்த் சார் கிளம்பிய உடனேயே ரஞ்சன் சார் வேறு சந்திரகாந்த் மேல் புகார் கொடுத்து இருக்கார். அதனால் சந்திரகாந்த் கதை அவ்வளவு தான் என்று நினைத்தான் கணேஷ்.

“என்ன சந்திரா பேராசை பட்டா இப்படித்தான். உள்ளதும் போச்சா.”

“கான்டிராக்ட் ஆனந்த் சார் வற்புறுத்தினதுனால தான் அப்ளை பண்ணேன் கணேஷ் அண்ணா. இப்ப இருக்க மாதிரியே இருந்துடறேன்”

“விட்டா என் தலை மேலயே ஏற பார்த்தல்ல, இப்போ இன்னும் இரண்டு மாசத்துல மூட்டை கட்டிக்கிட்டு கிளம்ப வேண்டியது தான். ரெடியா இரு”

இவ்வளவும் சொல்லும் போது சந்திரகாந்த் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தார். கிட்டத்தட்ட அழுது விடுவான் போலிருந்தது. சத்யா தன் அப்பாவைச் செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தான். கொடியபேல் பகவதி கோவில் மணி சந்தியாகால மங்கல ஆரத்திக்காக ஒலித்துக் கொண்டிருந்தது கொண்டிருந்தது. தினகரன் கைகளை குவித்து கண்களை மூடியபடி நின்றான். அவன் மனமார தேவியை தரிசித்திருக்க வேண்டும். அதுதான் அவன் முகம் மலர்ந்து அழகாய் புன்னகைக்கிறான். வெளியே வந்து கல்மேடையில் சாவகாசமாய் அமர்கிறான்.

ரஞ்சன் சார் அறையிலிருந்து வெளியே வந்தார். “கணேஷ் பங்களாவில் எல்லோரும் காண்ட்ராக்டை சந்திரகாந்துக்கு கொடுக்கச் சொல்லி மெயில் போட்டுட்டாங்க. அவனுக்கு ஆர்டர் நிச்சயம். அவனுக்கு இங்கே வைக்கலைன்னா உன்னையே மாத்த சொல்றாங்க. நீ இனிமே இங்கே வந்து தொந்தரவு செய்ய வேண்டாம்” என்றார். தினகரன் முகம் இருண்டு போனது. கூடவே அவன் மனைவி நினைவு வந்து முகத்தில் நிம்மதி படர்ந்தது. அதுவரை நிமிர்ந்து கல்மேடை மேல் அமர்ந்திருந்தவன் பணிவோடு எழுந்து உள்ளே சென்று இரவு உணவுக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தான்.

***

லாவண்யா சுந்தர்ராஜன் – நீர்க்கோல வாழ்வை நச்சி, அறிதலின் தீ எனும் கவிதைத் தொகுப்புகளும் புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை எனும் சிறுகதைத் தொகுப்பு. ஆசிரியர் தொடர்புக்கு – lavanya.sundararajan@gmail.com

கேள்விகளின் விரல்கள்

0

தென்றல் சிவக்குமார்

விரல்கள் (சிறுகதைத் தொகுப்பு)
குட்டி ரேவதி
ஜீரோ டிகிரி பதிப்பக்கம்
விலை – ரூ.150/-

விரல்கள் நீளும் திசைதோறும் கால் தரையில் பாவாமல் ஏதோ ஒரு கதை மிதந்தெழுகிறது. விரல்களின் எதிர்ப்புறக் கதைகள் மட்டுமல்லாமல் அவற்றின் உட்புறக் கதைகளும் இந்தத் தொகுப்பில் உள்ளன. எந்தவொரு கதையை வாசித்து முடிக்கையிலும் நம்மைச் சுற்றிலும் கேள்விகள் விசிறப்பட்டுக் கிடப்பதை உணரலாம். அவற்றுக்குப் பதில் தேடுவது ஒரு பக்கம். கேள்விகளை அங்கீகரிப்பதையே இந்தத் தொகுப்பின் வெற்றியாக முன்வைக்கலாம்.

‘ஒருபொழுதும் விழிப்பில் உடல் திறக்காமல் கனவுகளில் மட்டுமே உடல் திறக்கும் விரல்களைக் கடுமையாக’ வெறுப்பவள், கண்ணாடி பார்ப்பதைத் தவிர்ப்பவள், குழந்தைப் பருவத்தில் அம்மாவின் கன்னத்து மச்சத்தை விரல்களால் வருடியபடி உறங்குபவளாக இருந்திருக்கிறாள். தன் உடலை ஆடை அரண்களிட்டுப் பூட்டிக் கொண்டு சுவர்களும் கூரையுமாக உள்ளுறைபவளுக்கு ஏணி மேலேறி வண்ணம் தீட்டும் அந்தரத்தின் விரல்களைப் பற்றிக்கொள்ளப் பிடித்திருக்கிறது. பூத்துத் திறந்தது விழிப்பிலா கனவிலா? பெற்றதும் இழந்ததும் என்னென்ன?

பெண்களை விதவிதமான பறவைகளாகப் பார்ப்பது பிடித்திருக்கும் ஒருவனுக்கு மண்டைக்குள் ஆணிகள் உறுத்திக் கொண்டே இருக்கின்றன. அம்மாவின் கண்களுக்குள் மருளும் கோழியைக் காண்பவன், அவள் புறாவாக மாறும் நாளில் இதுகாறும் பருந்தாயிருந்தவனை ‘அரிசி நீங்கிய உமி’யாகக் காண்கிறான் எனில், யார் யாருடைய இரை? வாழ்க்கையின் இருளுக்கு இருக்கும் விரல்கள் எத்தனை? அவை ஆணிகளைத் திருகி அகற்றுகின்றனவா, அறைகின்றனவா? கோழியும், மயிலும், புறாவும் வெறும் பறவைகளா?

திடீரென விரல்கள் மீது அருவெறுப்புக் கொள்ளும் ஒருத்தி அதைக் குணப்படுத்திக் கொள்ளவே விரும்புகிறாள். ‘பெண்ணியக் கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்’ என்கிறார் மருத்துவர்! கணவனே கண்கண்ட என்று தொடங்கும் மிகப் புராதனமான சொற்களைக் கடும் ஆங்கிலத்தில் உச்சரிப்புப் பிறழாமல் மனநலம் மீள உதவி தேவைப்படும் மகளிடம் அனாயாசமாகச் சொல்கிறாள் ஓர் அம்மா. ஆங்கிலமும், அறிவும், கல்வியும், முன்னேற்றமும் எவற்றின் விரல்களாக இருக்கின்றன?

நல்ல தோழியின் எச்சரிக்கைச் சொற்களைச் சந்தேகத்தின் விரல்களால் புறக்கணித்த ஒருத்திக்கு துரோகத்தின், பொறாமையின் விரல்கள் பரிசாகக் கிடைக்கின்றன. கூந்தல் நீளம் மொத்தமும் நீவிப் புரண்ட விரல்கள் எல்லாமும் ஆதுரத்தின் பாற்பட்டவையல்ல என்றுணரும்போது காட்சிப்பொருளாகக் குவளைக்குள் செருகப்படுவது கூந்தல் இழைகள் மட்டும்தானா?

அறிவும் மனமும் நிரம்பி வாழும் ஒருத்தியைப் பச்சைக்கல் பதித்த சங்கிலியைக் கொடுத்து, தன் பக்கமாக நெம்பியெடுத்துப் பச்சை ஒளியை மூளைக்குள் வீசும் நச்சுத்துளிகளைக் காதுக்குள் விடுபவள் மனம் என்ன சொல்லும்? எந்த நிலம் திரிந்தாலும் பாலை என்கிறது தமிழ். வழிபாட்டுத்தலம் திரிந்த பாலையைத் தொல்லியல் ஆய்வுக்குட்படுத்திக் காதலைக் கண்டெடுத்தவள் பனி மலையிலிருப்பவனை அழைத்துப் பேசும்போது தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளுவது கேமரா மட்டும்தானா?

கனவெல்லாம் கைகூடுதல் நல்லூழ்தானா? கனவுகளைக் கட்டியிருந்தவற்றை இமைகள் என்பதா, அல்லது சந்திக்க வேண்டிய உயிர்களுக்கு இடம் கொடுத்துவிட்டு பனிமலைகளைப் பார்த்துக்கொண்டு நீண்ட நேரம் நின்றிருப்பவனை இமையென்பதா?

மொட்டை மாடியின் திறந்தவெளியும், இன்னும் பல அறைகளும் இருந்தாலும் சிறையாகவே இருக்கும் பெரிய வீட்டில் தனித்திருப்பவள், கண்ணாடி பார்க்க விரும்பாதவள், கவிதைகளை எழுதிக்கொண்டே இருப்பவள், வேட்டியின் குறுக்கப்பட்ட நடைவெளிக்குள் லாகவமாகத் தடுக்காமல் நடைபயிலும் ஒருவனை ரசிக்கிறாள். தன் இருளை மறைக்க அவள் மனநலத்தைக் கேள்விக்குட்படுத்தியவன் எளிதாகக் காணாமல் போகிறான். அவனைத் தொடர்ந்து எல்லாருக்குமே காணாமல் போவது எளிதாகவே இருக்கிறது. தன்னை நெருங்க யாரும் அஞ்சுவது வசதியாக இருப்பதாக நினைக்கிறாளே, அது உண்மையில் ஒரு வசதிதானா? வீட்டுக்குள் தனித்திருந்தபடி வெளியாட்களின் உதவியை நாடும் ஒருத்தியின் வாழ்க்கைக்கதை இன்றைய சூழலுக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது? பெரிய வீடு என்பது வீடுதானா, அதனினும் பெரிய உலகமா?

பத்து சிறுகதைகள் கொண்ட இந்தத் தொகுப்பு நம்முன் விரிக்கும் உலகங்களுக்குப் பெரிய பூச்சுகள் இல்லை, ஆனால் நிரந்தரக் கொதிப்புகள் இருக்கின்றன.

“மஞ்சள் நிறப் புடவையில் வயலட் பூக்கள் எம்பிராய்டரியாய் ஆங்காங்கே பூத்திருக்கும். தனிமையும் ஏக்கமும் நிறைந்த புடவை அது”

“இடது கண்ணில் இருவிழி நீரும் சேர்ந்து தலையணையை ஈரமாக்கியது”
இப்படியான சொற்கட்டுகள் ஏற்படுத்தும் கனம் மிகப் பெரியதாக இருக்கிறது,

இந்தக் கதைகள் உடலுக்கும் மனத்துக்குமான தொடர்பை அழுத்திச் சொல்லுகின்றன. தீண்டலும் சீண்டலும் திறந்துதரும் பதட்டத்தையும், மூடித்தரும் மனங்களையும், ஒன்றைத்தொட்டு ஒன்றென வளரும் சிக்கல்களையும் நீண்ட சொற்றொடர்களோ, கனத்த சொல்லாடல்களோ இன்றி, ஆனால் தவிர்க்க முடியாத நிரடல்களாகப் படைக்கின்றார் குட்டி ரேவதி. அதனாலேயே இந்தக் கதைகள் தனித்துவம் பெறுகின்றன, தனிக்கவனமும் கோருகின்றன. பலமுறை கடந்து சென்றும் நம் கவனத்தைப் பெறாத, நம் வீட்டிலேயே இருக்கும் ஒரு மூலையை, அன்றாடம் எதிர்கொள்ளும் மனிதர்களில் நாம் காணத் தவறும் கண்களில் ததும்பும் வெறுமையை, நமக்குள்ளேயும் எங்கோ எப்போதோ எதன் பொருட்டோ இட்டுவைத்து மறந்து விட்டதாக நம்பிக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு நெருடலை, எழுத்தின் வெளிச்சத்துக்கு உட்படுத்தியிருக்கும் குட்டி ரேவதிக்கு வாழ்த்துகளும் நன்றிகளும். வாழ்தல் இனிது.

***

தென்றல் சிவக்குமார் – “எனில்”கவிதைத் தொகுப்பின் ஆசிரியர். ஆசிரியர் தொடர்புக்கு – thendralsivakumar@gmail.com

ஆயிரம் தசைகள்

1

விஜயலட்சுமி

வீட்டை நெருங்க நெருங்க சாலையின் இருமருங்கிலும் விரிந்து வளர்ந்திருந்த செம்பனை மரங்களின் குடை நிழல்கள் விலகி வெளிச்சம் கண்ணாடியைத் துளைத்து கண்களைக் கூசியது. அதன் நேரெதிர் திசையில் வசந்தி மனதின் மிக இருண்ட அறையினுள் திசை வழி பொருட்டில்லாமல் ஓடிக் கொண்டிருந்தாள். மூச்சு வாங்குவது போல் இருந்தது அவளுக்கு. வளைவதற்கான சமிக்ஞையைப் போடாமல் விருட்டென சாலையை விட்டு விலகி ஓரமாக காரை நிறுத்தினாள். காலை ஏழு மணிக்கு மூளையுள் நுழைந்த கைப்பேசியின் சத்தம் போல மீண்டும் கேட்டது. பின்னொற்றி வந்த வாகனம் ஆரன் அடித்து எண்ணெயை முறுக்கி கடந்து சென்றது.

புறப்படுவதற்கு முன் சிலமுறை செய்து பார்த்த ஒத்திகைகள் அத்தனையும் நொடிபொழுதில் அர்த்தமற்று போனதில் வசந்திக்கு என்னவோபோல் இருந்தது. செல்லய்யா இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதிலிருந்து அதுவரை உடலைப் பிழிந்து உருக்குலைத்துக் கொண்டிருந்த நோவு மனதின்மீது இடறி அடைத்துக் கொண்டதுபோல் கனத்து வலித்தது. அம்மாவை நினைக்க நினைக்க மனம் கனத்தது. வசந்தி அம்மாவிடம் பேசி ஆறு மாதங்களாக விட்டது. அறுவைச் சிகிச்சை செய்யவிருந்த நாட்களில் செய்தி காதுக்கு எட்டி அம்மாகவே அழைத்துப் பேசியது நினைவுக்குத் தட்டுபட்டது. சுருக்கமாக வயிற்றில் கட்டி எனச்சொல்லி அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

அதற்கு முன் அத்தனை மாதங்கள் வசந்தி அழைக்காதது பற்றி அம்மாவுக்குக் கேள்வி ஒன்றும் இருக்கவில்லை. பதிலாக, அறுவை சிகிச்சை செய்தபின் உடன்வந்து அவள் வீட்டிலேயே தங்கியிருந்து உடல் தேறும்வரை பார்த்துக் கொள்வதாக அம்மா சொன்னபோது வசந்திக்கு கொஞ்சம் எரிச்சலாகக் கூட வந்தது. இப்போது சரி தவறு ஆராயும் தர்க்கங்களுக்கு இடம் விடாமல் வசந்தியின் மனம் முழுவதும் குமுறி குமுறி அழும் அம்மாவின் முகம் நீள்திரை காட்சிகளாய் ஓடி வருத்திக் கொண்டிருந்தது. இருப்புக் கொள்ளாமல் சுயமாகவே காரை ஓட்டிக்கொண்டு வந்துவிட்டாள்.

சற்று நேரம் கார் இருக்கையில் தலைசாய்த்துக் கொண்டாள். மூச்சு வாங்குவது ஓயவில்லை. மனதின் இருண்ட அறைகள் ஒவ்வொன்றாய் திறந்து கொள்ள, அதில் தனக்குத் தெரிந்த செல்லய்யாவை அறையின் இண்டு இடுக்குகளிலெல்லாம் தேட ஆரம்பித்தாள். மெலிந்த உடல், விறைத்தேயிருக்கும் முடிக்கற்றைகள், மெல்லிய மீசை, சிறிய கண்கள், உருவத்துடன் பொருந்தாத கனத்த குரல், நடப்பதற்கும் ஓடுவதற்கும் இடையேயான பரபரப்பில் சுழலும் கால்கள், எல்லாவித கூட்டங்களிலும் காணாமல் போய்விடக்கூடிய தனித்துவமற்ற உருவம். பார்த்தவுடனே பிடித்துப் போகும் அளவுக்கு தோற்றத்திலோ பேச்சிலோ வசீகரம் இல்லாத ஆள். தனது தந்தையின் மரணத்துக்குப் பின் வாய்ப்பிருந்தும் சொத்துகளைத் தனக்குப் பெயர் மாற்ற மறுத்தவர். பணியோய்வு பெறும்வரை தேயிலைத் தொழிற்சாலையிலும் பின்னர் அப்பா விட்டுப்போன வெற்றிலை தோட்டத்திலும் உழைத்துக் கொண்டே இருந்தவர், ஊடே உதட்டில் எப்போதும் புன்னகையைத் தேக்கி வைத்திருந்தவர்.

‘இந்நேரம் டூசுன் டுரியான் தோட்டமே அவர் வீட்டில் குவிந்திருக்கும்’, வசந்தி நினைத்துக் கொண்டாள். அவருடைய கொடுக்கும் மனமும் எளிய தோற்றமும் ஊரில் நல்லப்பெயரை வஞ்சகமில்லாமல் சேர்த்து வைத்திருந்தது. தோட்டத்தில் வெற்றிலைக் கிள்ளும் மியன்மார்க்காரர்கள்கூட அவரை ‘பாப்பாக்’ (அப்பா) என்றுதான் அழைத்தார்கள். ரொக்கமாகவும் தேங்காய், வாழை, வெற்றிலை என விளைச்சல்களாகவும் செல்லய்யா தோட்டத்திலிருந்து கோயில்கள், பள்ளிகள், ஊர்த்தேவைகளுக்கு இலவசமாகவே போகும். கைச்செலவுக்கும் இதர தேவைகளுக்கும் வந்து நிற்பவர்களுக்கு உதவுவது எதையும் வரவு செலவு கணக்கில் சேர்க்க மாட்டார்.

செல்லய்யாவின் நேரெதிராளி அவர் மனைவி பஞ்சவர்ணம். சாடை பேச்சும் எல்லாவற்றிலும் கணக்குப் பார்க்கும் சிறுபுத்தியும் அவர் தோட்டத்தில் வேலை பார்த்தவர்களுக்கு நன்கு பழக்கம். அம்மாவும் அங்குதான் வீட்டு வேலை பார்த்தார். கொழுத்த பணச்சேர்க்கையால் தோலிலேயே ஒட்டிக்கொண்ட அகங்காரமும் அதிகாரமும் தோய பவனிவரும் பஞ்சவர்ணத்தைச் செல்லய்யா கையாளும் விதமே வினோதமானது. முட்டிக்கொண்டு முரண்டு பிடிக்கும் மனைவியிடம் “போடி மயிரு,” என்று அசட்டையாய் சொல்லிவிட்டு மோட்டாரை எடுத்து கிளம்பிவிடுவார்.

பொதுவாக எல்லாருக்கும் தெரிந்ததைவிட தனக்கு மட்டும் அறிமுகமான செல்லய்யாவை வசந்தியின் மனம் நினைவுகளாக மீட்டெடுக்கத் தொடங்கியது. வார இறுதி நாள்களில் அம்மாவுக்குத் துணையாக வசந்தி அவ்வப்போது வீட்டுவேலைக்குப் போவது வழக்கமாக இருந்தாலும் செல்லய்யா வீட்டில் இருந்தால் வசந்தி வேலை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.

“உங்கம்மா செத்து மண்ணா போகும்போது அவ வாழ்ந்த வாழ்க்கையும் போவட்டும். அது உனக்கு வேணாம்,” என்பார்.

அப்படியான சொற்களை அவரால் உதிர்க்க முடிவது வசந்திக்கு ஆச்சரியமாக இருக்கும். அம்மாவுக்குச் சார்பெடுப்பதாக நினைத்துக்கொண்டு குடிபோதையில் அடாவடித்தனம் செய்யும் அப்பாவைத் திட்டுவது, பொதுவெளியில் அவரை அவமானப்படுத்துவது, விரட்டுவது, அவரவர் வீடுகளில் மிஞ்சும் உணவையும், சேராமல் போன துணிமணிகளையும் நேர, இட வகையல்லாமல் அம்மாவைக் கூப்பிட்டு கொடுப்பது எனத் தோட்டம் அதுவரை செய்து வந்தவைகளைப் போல் அல்லாமல் அவர் வித்தியாசமாக ஏதோ செய்வதுபோல் தோன்றும். கொஞ்சமாகவே பேசுவார் என்றாலும் அவர் பேசும் ஓரிரு வார்த்தைகள் கூட மனதுக்கு மிக அண்மையில் நின்று உரசிச்செல்பவையாக இருக்கும். வெந்து வெந்து கொப்பளித்துப்போன அம்மாவின் வாழ்க்கை மீது பாட்டிக்கே கூட அப்படியான பார்வை இருந்ததில்லை என நினைத்துக் கொண்டாள்.

அவர் அருகாமையில் அம்மாவின் வேலைகளில்கூட பல சமயம் இலகுவாவதையும் வசந்தி பார்த்திருக்கிறாள். வாளியில் நீர் மொண்டு கொடுப்பது, கனமான பொருட்களை நகர்த்தி சுத்தம் செய்ய வழிவிடுவது போக வசந்தியின் அப்பா மயங்கி விழுந்த தினம் அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தது, அவசர நேரத்தில் வந்து நின்றது, அப்பாவின் மரணத்துக்குப் பின் கொல்லையில் அறுத்துவரும் காய்கறிகளில் கொஞ்சத்தை யாரிடமாவது கொடுத்தனுப்புவது, வீட்டுக்கு வாங்கிய பட்சணங்களில் பங்கு கொடுப்பது என செல்லய்யாவின் இருப்பு பல இடங்களில், பல தருணங்களில் காண முடிவதாக இருந்தது.

வீட்டு வேலைக்கு வந்தவளுக்கு வீட்டு முதலாளியே ஓடியோடி சேவகம் செய்வது எந்தக் கணக்கில் சேரும் என்பதாக சாடை பேசத் தொடங்கிய பஞ்சவர்ணம் ஒருமுறை நேரடியாகவே வசந்தியின் அம்மாவிடம் “சேவகம் மட்டுந்தானா, இல்ல எம்புருசன் தனியா ‘கிம்பளம்’ ஏதும் தர்றானா,” என்று பொரிந்துவிட, வெற்றிலைக் கொடி கம்பத்தை உடைத்துக்கொண்டு புசுபுசுவென சேற்றுக்காலுடன் வீட்டுக்குள் நுழைந்து நையப் புடைத்து விட்டார் செல்லய்யா. கூடுதலாக, “சோத்துக்கு வர்றவங்க சோரம் போவாங்கனு நினைக்கும் பீ புத்திய செருப்பால அடிக்கணும்,” என்று கூறிவிட்டு மோட்டாரை எடுத்துக் கிளம்பி விட்டார். அம்மாவின் தலையணை மந்திரங்கள் ஏக காலத்தில் வேலை செய்யத் துவங்கியிருப்பதாக பஞ்சவர்ணம் தெருமுனையில் மண்ணள்ளி வீசி தூற்றினாள்.

போகும் வழி நடைபாதையில் காத்திருந்த செல்லய்யா வசந்தியைப் பொருட்படுத்தி, “ஏம்மா… நீ ஒன்னும் மனசுல வச்சிக்காத,” என சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தாலும் அவளது மனம் அந்தப் பலிக்கூறலை ஏற்க மறுத்தது.

கார் இஞ்சினை முடுக்கிவிட்டபடி வசந்தி அந்தத் தருணத்தில் அம்மாவின் எதிர்வினை என்னவாக இருந்தது என்பதை நினைவு சேகரத்திலிருந்து துருவினாள். உண்மையில் அம்மாவிடம் பெரிதாய் எதிர்வினை இருந்ததற்கான தடயமே இல்லை.

“இவ்ளோ நாள் அப்பா மாதிரி ஆள்கூட கஷ்டப்பட்டு வாழ்ந்துட்டு வயசான காலத்துல ஏன் இப்படி ஆளுங்க வாயில உழுறீங்க. பேசாம வீட்டுலயே இருக்க வேண்டியதுதான,” என்று வசந்தி சொல்லும்போது அம்மாவின் பதில் அப்போதும் மௌனம் மட்டும்தான்.

மௌனத்தை அடுத்து அம்மாவிடம் தன்னியல்பாய் வெளிப்படுவது கண்ணீர். சுணங்கி, சுருண்டு அழுவது அவர் வழக்கமல்ல. முன்னறிவிப்பே இல்லாமல் எவ்விதக் குறிப்பறியும் வழியும் கொடுக்காமல் வேலை செய்து கொண்டே அழுவார். அதை எவராலும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. காலம் கடந்தே வசந்தி இதை அறிந்து கொண்டாள். அப்போதெல்லாம் சமாதானம் சொல்லவோ அணைத்துக் கொள்ளவோ தோன்றினாலும் அதற்கெல்லாம் அவசியம் இல்லாமல் அம்மாவே சமாதானம் ஆகிவிடுவார்.

வசந்தி எவ்வளவோ மன்றாடியும் அங்கு வேலைக்குப் போவதை அம்மா நிறுத்தவேயில்லை. கடைசியில் அவள்தான் அம்மாவுக்கு துணையாகப் போவதை தவிர்த்தாள். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அம்மாவையும் தடுக்க முயன்றாள். திருமணமான பின் அதற்கும் வழியில்லாமல் போனது. முன்பைப்போல துணிக்கடையில் வேலை செய்து கொண்டிருந்தால் இன்னும்கூட பிடிவாதமாய் தடுத்திருக்க முடியும். மறுவீடு சென்று எல்லாவற்றுக்கும் கணவனை நம்பி வாழ வேண்டியிருந்த சூழலில் வசந்தியின் கையாலாகாத்தனம் அவள் வாய்க்கும் பூட்டு போட்டுவிட்டிருந்தது.

அவ்வளவு நேரம் அழுதது போலவே தோன்றவில்லை. இருப்பு நிலைக்கு மீண்டபோது இமைகளின் ஓரம் பிசுபிசுத்தது. நெஞ்சுக்குழியில் குத்துக்கல்லாய் வேதனை அப்படியே இறுக்கிக் கொண்டு கிடந்தது. கார் கதவைத் திறந்து வெளியே வர உடலை எம்பியபோது விண்ணென்று வலி அடிவயிற்றைக் கிழித்து நிதானத்தைச் சிதைத்தது. அசைவு அத்தனையையும் சட்டென நிறுத்திக் கொண்டு சட்டைக்குள் கைவிட்டு அடிவயிற்றில் தடவினாள். தையல் பிரிந்ததற்கான தடயம் இல்லை. விரல்களைப் பார்த்தாள், ரத்தமும் கசிந்திருக்கவில்லை. மெதுவாக இறங்கி புட்டி நீரில் முகத்தைக் கழுவிக் கொண்டாள். சிமிழைத் திறந்து குங்குமத்தை விரலில் அள்ளி நெற்றியில் அழுத்திவிட்டு, கைகளால் கோதி முடியைக் கலைத்து, வாகெடுத்து விரல்களாலே தலைவாரிக் கொண்டாள். இரவெல்லாம் பெய்து அடங்கிய மழையில் புழுதி படிந்து செம்மண் வாசம் மேலெழுந்து செம்பனை மரங்களுக்கு மத்தியில் வளர்ந்திருந்த எலுமிச்சை செடிகளின் பச்சை வாசத்தையும் சேர்த்து காற்றில் கலந்திருந்தது. வாசத்துடன் இணைந்து சில்லிட்டு வீசிய காற்றில் அன்றைய பொழுது புதுப்பூவாய் அலன்றிருந்தது. ஆனால் வினாடி தோறும் புழுக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதாய் வசந்திக்குத் தோன்றியது. இன்னொருமுறை மழை பெய்தால் தேவலாம் போலிருந்தது.

ஒருவழியாக செல்லய்யாவின் வீட்டு வளாகத்தில் காரை நிறுத்தினாள். கெட்டியாகப் பிடித்து வைத்திருந்த மௌனத்தை சட்டென பூமியில் போட்டுடைத்ததுபோல் இறப்பு வீட்டுக்கே உரிய ஒப்பாரியும் ஓலமும் காற்றுவெளியெங்கும் நிரம்பி கனத்து வசந்தியின் காருக்குள்ளும் நுழைந்தது. உச்சந்தலையில் வியர்த்து வழிந்த நீர் நெற்றியில் முட்டி நின்ற வியர்வையுடன் கோர்த்து அவளது குங்குமப்பொட்டை உருக்கி, வடிவத்தைச் சிதைத்துக் கொண்டிருந்தது. அம்மாவின் நிலையை அவளால் கற்பனை செய்ய முடியவில்லை. அம்மா உள்ளூர புழுங்கி அழுதாலோ அல்லது அதற்கு மாற்றாக இயல்பாய் இருந்தாலோ, எது நடந்தாலும் அவர் முகத்தைப் பார்க்கும்போது தான் முழுவதும் உடைந்து விழக்கூடும் என நடுங்கினாள்.

சிறிது நேரம் கூட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கவனத்தை பஞ்சவர்ணத்தின் அலறல் குலைத்தது. காலையிலிருந்து அழுததில் சட்டென்று மூர்ச்சையாகி விட்டிருந்தார். பதறிப்போன சிலர் தண்ணீரை முகத்தில் அடித்து வாயிலும் ஊற்றி அவரை ஓர் ஓரமாக உட்கார வைத்தார்கள். முகம் தொங்கிப்போய்க் கிடந்தது. சட்டென அம்மாவின் முகம் நெஞ்சை உலுக்க, காரை விட்டு இறங்கி, வலியை மறைத்து, இயன்றவரை சகஜமாக நடக்க முயன்றாள். கூட்டத்துள் ஊடுருவிச் சென்று அம்மாவைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதில்லை எனத் தோன்றியது. முதலில் எதிர்பட்ட பேண்ட் வாத்தியக்காரர்களின் வெள்ளைச் சீருடை அணுவகுப்பைக் கடந்து கூடாரத்தை அடைந்தபோது முன்வாசலில் நின்றபடி பாட்டி ஊர்க்கிழவிகளுடன் அங்கலாய்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள். முன்வாசலில் நுழையாமல் பின்வாசல் வழியாகச் சென்று தேடினாள். அம்மாவைக் காணவில்லை.

வீட்டைப் பிதுக்கிக் கொண்டு ஆட்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி முன்வாசல் கூடாரத்தை நெருக்கிக் கொண்டிருந்தார்கள். இறுதிச்சடங்கு தொடங்குவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்துக் கொண்டிருந்தது தெரிந்தது. செல்லய்யாவின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வெற்றுக்கால்களுடன் காலி குடங்களை ஏந்தி எதிர்விட்டு குழாயடிக்கு வரிசை பிடித்து போய்க்கொண்டிருந்தார்கள். அம்மாவைப் பார்க்கும்வரை படபடப்பு குறைவதாக இல்லை. முன்வாசலில் நுழைந்தபோது எவரோ சட்டென கைகளைப் பற்ற, திரும்பிப் பார்த்தாள்.

“அங்கள தொட்டுக் கும்புட்டு போ,” கையைப் பலமாக இழுத்தபடி பாட்டி கூறினார்.

“கையெ விடு,” மணிக்கட்டில் இறுக்கிக் கொண்டிருந்த பாட்டியின் விரல்களைப் பிரித்து விடுவிக்க முயன்றபடி முனகினாள்.

அப்பாவைக்கூட மன்னித்து விடலாம். நோய் முற்றி, பீ மூத்திரத்துக்குப் போக கைத்தாங்கலாக ஆள் தேவைப்பட நேர்ந்தபோதுதான் அம்மாவை வேறுமாதிரியாக வசைக்க ஆரம்பித்தார்; அதுவும் வீட்டுக்குள் மட்டும்தான். ஆனால், செம்பனைக் காட்டுக்குள் மறைவாய் போய் சாராயத்தை இறக்கிவிட்டு ஊரெல்லாம் பாட்டி பேசியவை கொஞ்ச நஞ்சமல்ல. நினைக்கும் போதெல்லாம் வசந்திக்கு இருப்பு கொள்ளாமல் ரத்தம் கொதிக்கும். குடித்து குடித்து குடல் வெந்து சாகும்வரை தடுக்காமல் காத்திருந்து, பின் செல்லய்யாவுடன் கும்மாளம் போடுவதாக முடிச்சிபோட்டு பேசினார். ஊர் வாய்க்குத் தூபம் போட்டு ஊதிவிடுவது போதாமல், “ஊமச்சியாட்டம் இருந்து இருந்தே உங்காத்தா காரியம் சாதிக்கிறதுல கெட்டிக்காரி. உங்கப்பனையே தூக்கி முழுங்கனவளாச்சே,” என்று வசந்தியிடமே பலமுறை சொல்லியிருக்கிறார். அப்போதுகூட அம்மா எவரிடமும் எதையுமே விளக்க முயலவில்லை.

முரடு பிடித்து இழுத்த பாட்டியின் சிறுத்த கைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்குள் செல்லய்யாவின் மனைவி மீண்டும் கதறி அழ ஆரம்பித்தார்.

“என் ஐயா… ஊரே வந்து ஒன்னைய கும்புடுதே. அதுகுள்ள அவசரமா போயிட்டியே, என்னைய தனியா பொளம்ப வுட்டுட்டியே..”

அவரது குரல் சோர்ந்திருந்தது. கைகளைக் குவித்து தலையில் அடித்துக் கொண்டதில் கண்ணாடி வளையல்களில் சில உடைந்து விழுந்தன. கூடியிருந்தவர்களின் புலம்பல்களும் உடனிணைந்து ஓங்கி ஒலிக்கத் துவங்கின. மஞ்சள் பூசி அகலமாய் கும்குமம் வைத்து பட்டுப்புடவை உடுத்தி பூ வைத்து கைகள் நிறைய கண்ணாடி வளையல்களுடன் செல்லய்யாவின் மனைவி இறுதிச் சடங்கின்போது நடத்தப்படும் கட்டாய மாங்கல்ய நீக்கத்துக்கு முன்பதான மங்கள அடையாளங்களை உடல் முழுக்கப் போர்த்தியிருந்தார். சவப்பெட்டியின் மேல்முனையில் சாய்ந்து கொண்டு செல்லய்யாவின் தலைமுடியைக் கோதியபடி ஏதேதோ முனகிக் கொண்டே இருந்தார்.

வசந்தியால் சவப்பெட்டியினுள் பார்க்க முடியவில்லை. பெட்டியைச் சுற்றி ஒருகணம் பார்வையை அலையவிட்டாள். அம்மா அங்கும் இல்லை. எதிர்பட்ட அறைக்குப் போய் பார்க்க நினைத்தபோது, “சாமி ரூம்புல இருக்காங்க,” என்று கூட்டத்திலிருந்து குரல் வர சட்டென திரும்பியவள் கால்பின்னி தடுக்கி விழப் பார்த்தாள்.

அது வசுந்திரா அத்தையின் குரல்.

“விருட்டு விருட்டுனு புருசன குழியில கெடத்திட்டு, மினுக்கிக்கிட்டு ஊர்மேய போறா..,” என பாட்டி தூற்றும்போது வாசற்படியை மறைத்துக் கொண்டு வேலைக்குப் போக விடாமல் அம்மாவைத் திட்டித் தீர்த்தவர். வசந்தியின் நெற்றி முழுவதும் பூத்திருந்த வியர்வைத் துளிகள் புருவங்களைப் பிழிந்து சொட்டியது; ஊடே கண்ணீரும் பொத்துக் கொண்டு வந்தது.

“வயசான காலத்துல அப்படியென்ன கட்டுப்படுத்த முடியாத ஆச உனக்கு அண்ணி? எங்கண்ண இப்பவோ அப்பவோன்னு இழுத்துக்குட்டு இருக்குறப்பதான் மஞ்சள் குங்குமத்த கொறச்சலில்லாம அப்பிக்குவ. என்னம்மோ புருசங்கார உயிர தாலியில இழுத்துப் புடிக்க வந்த பத்தினினுல்ல நெனச்சேன். இப்பவும்ல தளதளன்னு புதுப்பொண்ணாட்டம் மினுக்குற. காலயிலயும் ரவ்வுலயும் போன்ல வேற குசுகுசுனு பேச்சு ஓடுதாமே,” என்று வீட்டையே இரண்டாக்கி விடுவதுப்போல் வசுந்திரா அத்தை கத்திக் கொண்டிருந்த தினம், அம்மா சற்று கூடுதலான நேரம் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். எதிர்வினையற்றிருக்கும் அம்மாவின் சுபாவம் பலசமயம் வசந்தியைக்கூட பொறுமையிழக்க வைத்துள்ளது. அம்மாவின் மௌனத்தை எதிர்த்து பேச முடியாத அவரது இயலாமை என்று ஊகித்துக் கொண்ட வசுந்திரா அத்தை அன்றைய தினம் சகட்டு மேனிக்கு வார்த்தைகளை இறைத்துத் தீர்த்தார்.

இன்று நேற்றல்ல, வயதுக்கு வந்தபின் வெள்ளைக்கார துரை வீட்டில் வேலைக்குச் சேர்ந்த காலத்திலிருந்தே அம்மா மழையில் நனைந்து, சிலிர்த்துக் குலுங்கும் பூப்போலதான் இருந்தார். துரை வீட்டு விருந்தில் பிடித்ததாகச் சொன்ன கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றில் பணிபெண்கள் வரிசையில் நேர்த்தியான உடை, அலங்காரத்துடன் தனித்து தெரிந்தார். நடுவாகெடுத்து சீவி, கட்டி மஞ்சள் தேய்த்து பூசி, கோபுர திலகமிட்டு, காதோரங்களில் கொத்து முடிகளை சுழலவிட்டு அம்மா அணியும் உடம்போடு ஒட்டிய ரவிக்கையும் தரைவரை உரசி நிற்கும் மெக்சியும் காலாகாலமாய் அவர் பெயர் சொல்லும் அடையாளங்கள்.

வசந்திக்கு அம்மாவின் மீதிருந்த நம்பிக்கை அரிக்கத் தொடங்கியது வசுந்திரா அத்தை அமர்க்களப்படுத்திய தனித்ததொரு நிகழ்வால் அல்ல. அது வெறுமனே பஞ்சவர்ணம், பாட்டி உள்ளிட்டவர்களின் வசையிலிருந்து நங்கூரம் பாய்ச்சியிருக்கவுமில்லை. தாலி பிரித்துப்போட அம்மா வீட்டுக்கு வந்திருந்தபோதுதான் வசந்திக்கு அம்மாவின் தனித்த உலகம் தெரிய ஆரம்பித்தது. சில விடியற்காலைகளிலும் உலகமே தூங்கிவிட்ட பின்னிரவிலும் அம்மா பின்வாசல் கதவை ஒருக்களித்து வைத்துவிட்டு வெளிப்புறம் சன்னலோரம் நின்று தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். ஒட்டுக்கேட்டத்தில் அது தொழிலாளி முதலாளிக்கு மத்தியில் நிகழும் உரையாடல்போல் இல்லை எனத் தெரிந்தது ஒருபுறம் என்றால், அம்மா அத்தனை வார்த்தைகளைக் கோர்வையாகப் பேசக்கூடியவரா என்ற அதிர்ச்சி வசந்தியை நடுங்க வைத்தது. தனக்கு தெரிந்த அம்மா எவரிடமுமே அதிகம் பேசாதவர். வாய் செத்தவள் என்றுதான் அப்பாகூட திட்டுவார். அங்ஙனமே வளைத்துப் பிடித்து விசாரிக்க மனமில்லாமல் அம்மாவைப் போகவிட்டு, பின் அவரது கைபேசியை ஆராய்ந்தாள். பெயர் சேமித்து வைக்காவிட்டாலும் ஒரு எண்ணிலிருந்து மட்டும் வந்து கொண்டிருந்த அழைப்புகள்; அவை செல்லையாவுடையது. மூர்ச்சையாகிப் போனவள் அம்மாவிடம் எதையும் கேட்கவில்லை. சடங்கு முடிந்து கணவன் வீட்டுக்குத் திரும்பி, அதற்குப்பின் கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதையும் நிறுத்தியிருந்தாள்.

இப்போது அதெதுவுமே வசந்திக்கு பொருட்டாகத் தோன்றவில்லை. இப்போது அவற்றையெல்லாம் அசைபோடவும் மனம் திராணியற்றிருந்தது. அம்மாவைப் பார்க்க வேண்டும். அது மட்டும்தான் சோர்ந்திருந்த உடலை உலுக்கி இயக்கிக் கொண்டிருந்தது. செல்லய்யாவின் மரணத்தைக் காட்டிலும் இந்தத் தருணத்தில் இங்கு இவர்களது இருப்புதான் அம்மாவை கூடுதலாக பாதித்திருக்கும் எனத் தோன்றியதும் கால்கள் சுயமாக சாமி அறையை நோக்கி நகர்ந்தன.

முக்கால்வாசி மூடியிருந்த கதவை மெதுவாகத் தள்ளி தலையை மட்டும் விட்டு எட்டிப் பார்த்தாள். சிலர் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். “இப்பதான் வந்தியா… உள்ள வா… அங்கிள பார்த்தியா? தூங்குற மாதிரி இல்ல?” அம்மா சலனமற்ற தொனியில் சாதாரணமாகக் கேட்க, அதைச் சற்றும் எதிர்பார்க்காத வசந்தி திகைத்தாள். அறையினுள் நுழைந்ததும் சட்டென எதையும் பேச அவகாசம் கொடுக்காமல் நெகிழிப்பையை நீட்டி “இந்த இலைய முள்ளில்லாம பிச்சி தாம்பள தட்டுல போடு,” என்றார்.

பையை வாங்கும்போது அம்மாவின் முகத்தை கவனித்தாள். விழியோரம் இலேசாகக் கண்ணீர் முட்டிக் கொண்டிருந்தது. முகம் தொங்கியிருந்தது. இறப்பு வீடுகளுக்கு வருபவர்கள் பெரும்பாலும் கொஞ்சமேனும் அழுவதும், அவர்களது முகம் இலேசாய் சோகத்தை கௌவி நிற்பதும் வழக்கம்தான். அதைக் கடந்து அம்மாவிடம் வேறெந்த சலனமும் தென்படாதது வசந்திக்கு மேலும் மேலும் வியப்பை உண்டாக்கியது. எப்போதும்போல் முகம் கழுத்தேல்லாம் மஞ்சள் பூசி, புருவங்களில் மை வரைந்து, கூம்பு வடிவில் பர்கண்டி நிற பொட்டு வைத்திருந்தார். செல்லய்யாவின் மறைவு உண்டாக்கியிருக்கும் இழப்பின் தடயத்தை அம்மாவின் உடல் அசைவுகள், குரலில் தென்படக்கூடிய மெல்லிய மாற்றம் என ஒவ்வொன்றிலும் தேடித்தேடி வசந்தி களைத்துப் போனாள். அம்மாவின் இயல்பான அலங்காரமும் வசந்தியை என்னவோ செய்தது.

அம்மா சிரிக்கவில்லை, ஆனாலும் உதட்டோரம் மென்சிரிப்பிருந்தது. கூரான முகத்தின் முடிவில் சற்றே விரிந்திருக்கும் தாடையின் இருபக்கமும் விழும் சிறுகுழியும் எப்போதும் மேல்நோக்கி வளைந்திருக்கும் உதட்டின் இருபக்க விளிம்பும் அவரை எப்போதும் சிரித்த முகமாய்க் காட்டும். எவ்வித உணர்வையும் மிஞ்சி வெளிபடும் அல்லது மறைத்து பதுக்கி வைக்கும் முக அமைப்பு அம்மாவுக்கு. வசந்தி அலுத்துக் கொண்டாள்.

வில்வம் இலைகளைப் பிய்த்துக் கொண்டே அடிக்கடி அம்மாவைப் பார்த்தாள். இறுதிச் சடங்குக்கான சீர்வரிசை சாமான்களை தட்டுகளில் பிரித்து வைத்துக் கொண்டிருந்தார். வசந்தி வில்வ இலை ஒன்றை எடுத்து முகர்ந்தாள். கரும்பச்சை நிறத்தில் செழிப்புடன் காட்சியளித்தாலும் வாசமற்றிருந்தது. அப்பாவுக்கு இரத்தக் கோளாறு இருந்த காலங்களில் மருந்தாகும் என்று சொல்லி அம்மா வீட்டின் பின்பக்க தூணில் கொடிவிட செய்திருந்தது நினைவுக்கு வந்தது.

“அப்படியே மோந்தா வாசமிருக்காது. கசக்கிட்டு மோந்து பாரு,” அம்மாதான் பேசினார். வாசம் தன்னியல்பில் வர வேண்டும்தானே. வதைத்தா பிடுங்குவது… நெஞ்சில் கனம் அப்படியே இறுகி இருந்ததை அவளால் உணர முடிந்தது. கசக்க மனமில்லாமல் தட்டில் போட்டுவிட்டாள். புறவாசலிலும் நடுவீட்டிலும் அவ்வப்போது ஓங்கி, ஓய்ந்துக் கொண்டிருந்த அழுகைச் சத்தங்கள் மனதை உலுக்கி உலுக்கி வசந்திக்கு அழுகையை முட்டச்செய்தன. அம்மா தட்டுகளைச் சன்னல் வழியாக கூடாரத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.

ஈமச்சடங்கு செய்ய வந்த பூசாரி காற்றில் குரலை இழையவிட்டு அடுத்த ஒரு மணிநேரம் ஓதப்போகும் மந்திரங்களை மனதில் வரிசைப்படுத்திக் கொண்டிருந்தார். செல்லய்யா இறந்த நேரம் சரியில்லை என்பதால் மறுநாள்வரை காத்திராமல் அன்றைய தினமே அடக்கம் செய்ய ஏற்பாடாகியிருந்தது. பூசாரியின் கரகரத்த குரல் உள்ளும் புறமும் குழுமியிருந்தவர்களின் பரபரப்பு, பால்குடி மறக்காத குழந்தைகளின் அழுகைக்கு மத்தியில் செல்லய்யாவின் மனைவி சோர்ந்து அழும் சத்தம் ஈனமாய் கேட்டது. பெட்டியை வெளியில் கொண்டுவரும்வரை பேண்ட் வாத்திய இசை ஓலங்களை மிஞ்சி கேட்டது. வசந்தி மீண்டும் அம்மாவைப் பார்த்தாள். சுடுகாட்டுக்குப் போய் காரியம் முடித்து வருவதற்குள் வீடு கழுவி, படையல் போடுவதற்குத் தோதான வேலைகளை முடித்துவிட்டு சமையலறைக்குச் சென்றார். பின் தொடர்ந்து சென்றவளிடம் தேநீர் குவளையை நீட்டி,

“போய் பாட்டிக்கு குடு,” என்றார்.

பாட்டிக்குச் சேவகம் செய்ய பிடிக்கவில்லை என்றாலும் அப்போதைக்கு அம்மாவின் ஏவல்களை மறுக்க மனம் வரவில்லை. பின்வாசலில் நின்றிருந்த பாட்டியிடம் குவளையை நீட்டியபோது, “ஏண்டி… உம்புருசங்காரன் வரலியா?” என்றார். இல்லையென தலையசைத்துவிட்டு திரும்பிப் பார்த்தாள். அம்மா அப்போதும் வேலைதான் செய்து கொண்டிருந்தார். பேசனில் குவிந்திருந்த குவளைகளைக் கழுவி அடுக்கிக் கொண்டிருந்தார்.

அம்மா தேறிவிட்டாரா? வசந்தியால் நம்ப முடியவில்லை. முப்பது வருடங்களுக்கு முன்பு டெங்கில் குப்பைமேட்டில் டேக்சியோடு எரியுண்டு மடிந்த தன் அண்ணனைப் பற்றி பேசும்போதெல்லாம் அழுதுவிடும் அம்மாவால் நிச்சயம் செல்லய்யாவின் இறப்பை அவ்வளவு இயல்பாக கடந்து செல்ல முடியாதென தோன்றியது. இன்னொரு பக்கம் அம்மாவின் இயல்பான அன்பை தான் அதிகப்படுத்தி யோசித்து விட்டேனோ என்ற எண்ணம் வந்தபோது மனமெல்லாம் குத்தியது. சோர்ந்து விழும் பஞ்சவர்ணத்தைத் தாங்கிப் பிடிப்பது, சீர் சாமான்களை எடுத்துக் கொடுப்பது, பூசாரி ஏவும் சில்லறை வேலைகளில் மும்முரம் காட்டுவது, பேசுவது, நடப்பது, பம்பரமாய் சுழல்வது எல்லாமுமே அம்மா அவ்வீட்டில் பணிபுரியும் வேலையாளுக்கே உரிய பாவனையில் இயல்பாக இருப்பதைக் காட்டிக் கொண்டே இருந்தது. ஓரிடத்தில் நிலைகொள்ளாமல் அரற்றியலையும் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் வசந்தி தலைசுற்றிப் போனாள்.

அம்மா கையைக் காட்டி கூப்பிடுவது தெரிந்தது. அறை ஒன்றுக்குள் நுழைந்து, “எங்க… காட்டு,” என்றவரை வசந்தி ஆச்சரியமாகப் பார்த்தாள்.

திருமணமாகி விட்ட பின் நிர்வாணத்தைக் காட்டுவது அப்படியொன்றும் வெட்கத்துக்குரியதாக இல்லாவிட்டாலும் இந்தச் சூழலில் அம்மா கேட்பார் என்று அவள் கற்பனையும் செய்திருக்கவில்லை. வெளியே ஈமச்சடங்கு தொடங்கியிருந்தது. பூசாரி மந்திரங்களினூடே பெட்டியைச் சுற்றி எறிந்து, பொசுங்கிக் கொண்டிருந்த நெய்பந்த சுள்ளிகள் கரும்புகையைக் கக்கிக் கொண்டிருந்தன. பெரும்பாலும் எல்லோரும் கண்களைக் கசக்குவதில் மும்முரமாக இருந்தது தெரிந்தது.

“சின்ன வெட்டுதாம்மா. ஆனா தொப்புளுக்குள்ள…”
அம்மா வசந்தியின் அடிவயிற்றில் விரல்களை உலாவவிட்டு அறுவை செய்யப்பட்ட தோல்பகுதி தட்டுப்பட்டதும் வருடிக் கொடுத்தாள். கைகளெல்லாம் ரேகையாகி விட்டதைபோல் அவ்வளவு சுருக்கங்கள். மஞ்சள் காய்ந்து, கை சுருக்கங்கள் மேலும் அடர்த்தியாகத் தெரிந்தன.
கைகளில் ஓரளவு தசைப்பற்று இருந்தது. நெருங்கி வந்ததில் வியர்வையில் கலந்த மஞ்சள் வாசம் மூக்கின் மிக அண்மையில் காற்றில் ஊடுருவி கரைந்து கொண்டிருந்தது. வசந்தி அம்மாவை நிமிர்ந்து பார்த்தாள். குட்டையானவர்களுக்கே உரிய இளமை அம்மாவை இன்னமும் நீங்காமல் இருந்தது.

சங்கடத்துடன், “ம்மா” என்றவளிடம்,

“ரொம்பவா வலிக்கிது?” கேட்டுக்கொண்டே மண்டியிட்டு உட்கார்ந்து தொப்புளைக் கூர்ந்து பார்த்தபடி கவனத்தை மூக்கின் நுனியில் வைத்தவர்போல் நெருங்கி வந்து முகர்ந்து, பின் சிறுவிரலை விட்டு இலேசாய் அழுத்தினார்.

“மேல தோலுதான் காஞ்சிருக்கு. அப்படியே அசட்டையா கெடந்துடாத. உள்ள தசமடிப்பு ஆயிரம் கெடக்கு… எங்க எது ரணமாயிருக்குன்னு தெரியாது. காய ரொம்ப நாளாவும். எல்லாத்தையும் மெல்லமா நிதானமா செய்யப் பழகு. பாரம் தூக்காத. ஒறவு வேணாம். ஒருநேரம் போல காணாது. எப்பவும் கர்ணபுறா தைலத்த கொதகொதன்னு பூசி வையி,” என்றபடி எழுந்து நின்றார்.

“அதுக்கில்ல ம்மா..”

சொல்லி முடிப்பதற்குள் உடல் குலுங்கி வெதும்பியது. பிறகு பேசலாம் என சொல்லிவிட்டு, சாமி மேடையிலிருந்து திருநீறை இரு கைவிரல்களால் அள்ளி வயிற்றை சற்று அழுத்தி தடவியவாறு வட்டமிட்டு அடிவயிற்றில் கொண்டு வந்து நிறுத்தி பூமியில் இறக்கித் தட்டினார். இப்படியே மூன்றுமுறை செய்து, மூன்றாம்முறை ‘உஷ்’ என ஓசையெழுப்பி கைகளை பூமியில் வேகமாகத் தட்டி “நல்லா போயிரும், நல்லா போயிரும்,” என்றார்.

வெளியில் எவரோ கூப்பிடும் குரல் கேட்க, பஞ்சவர்ணத்திற்கு மாற்றுப்புடவையை எடுத்துக் கொண்டு அம்மா ஓட்டமும் நடையுமாக அறையை விட்டு வெளியேறினார்.

“யப்பா… பெட்டிய தூக்குங்க. நேரமாகுதுல. தலைய வடக்காலே தூக்கிட்டு வாங்கப்பா.”

அறைக்கதவு இலேசாக அசைந்து நின்றது. உள்ளிழுத்த மூச்சு வெளிவராமல் அடைத்துக் கொண்டு அடிவயிற்றில் பெரும் கனமாய் உருண்டு கொதிப்பது போலானது. புருவங்கள் நெற்றிப்பொட்டை நெருக்கி, கண்கள் சொருகி, உடம்பெல்லாம் வெடவெடத்து மருள் வந்தது போலானது. அடிவயிற்றில் திரண்டிருந்த காற்று பெருங்குரலெடுத்து வெடித்து தீக்குழம்பாய் பீய்த்தடித்தது. நெஞ்சுடைந்த வலியில் வசந்தியின் சொற்கள் அத்தனையும் கரைந்துபோன கணம் “ஐயோ…” என பஞ்சவர்ணத்தின் ஓலம் காற்றை இறுக்கி நிரப்பியது. சுதாரித்துக் கொண்டு வெளியில் வந்த வசந்தி கூட்டத்தில் இல்லாத அம்மாவை நாலாபுறமும் தேடினாள்.

***

விஜயலட்சுமி – மலேசியாவைச் சேர்ந்த இவரது கே.எஸ். மணியம் சிறுகதைகள் எனும் மொழிபெயர்ப்பு கதைகள் தொகுப்பு 2018ஆம் ஆண்டு வெளியானது. மலேசியாவில் நூலகராகப் பணிபுரிந்து வருகிறார். வல்லினம் இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு viijay45@gmail.com

வெறி வெட்கமறியாது

0

பாரதீ

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கத் தேர்தலில் எவரும் எண்ணிப் பார்த்திராத அளவுக்கு எத்தனையோ கேலிக்கூத்துகள் நடந்தேறின. அவற்றில் ஒன்று, ‘ட்ரம்புக்காக இந்துக்கள்’ (‘Hindus for Trump’) என்ற பெயரில் ஒரு கூட்டம் சாமியாடிக்கொண்டிருந்தது. தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் முன்பு ட்ரம்பையே வரவழைத்து ஒரு கூட்டம் போட்டு, “உங்களையெல்லாம் தீவிரவாதத் தாக்குதல் செய்து கொல்லப் போகிறார்கள் பாருங்கள்” என்று பயமுறுத்தும் விதமான மேடை நாடகமெல்லாம் போட்டுக் காட்டி, “அவர்களை அழிக்க வேண்டும், அதற்கு நாம் சேர்ந்து செயல்பட வேண்டும்” என்று படங்காட்டி, களேபரம் செய்தார்கள். இதெல்லாம் எப்படி இவர்களுக்குத் தோன்றியது என்று வரலாற்றைச் சற்று புரட்டிப் பார்த்தால் எவ்வளவோ வியப்புகள் குவிந்து கிடக்கின்றன.

அமெரிக்காவில் உள்ள சராசரி யூதர்கள் பெரும்பாலும் மக்களாட்சிக் கட்சிக்கே (Democratic Party) வாக்களிப்பவர்கள். மக்களாட்சிக் கட்சி ஓரளவுக்கு இடதுசாயும், அடித்தட்டு மக்களின் – சிறுபான்மையினரின் – வந்தேறியவர்களின்  நலன் பற்றிப் பேசும் கட்சி. அதனால் அதுதான் இயல்பாக நடக்க வேண்டியது. அப்படியே போய்க் கொண்டிருந்த கதையில், எண்பதுகளில் ஒரு திருப்பம் நேர்ந்தது. சில விவரமான பணக்கார யூதர்கள் ஒன்று கூடி, குடியரசுக் கட்சிக்கு (Republican Party) ஆதரவாகக் களம் இறங்கினர். இது பல உள்நோக்கங்களோடு செய்யப்பட்ட வேலை. தம்மை வெறுப்பவர்கள் – வேற்றாராக நடத்துபவர்களிடமே போய், தம்மை ஆதரித்து நிற்பவர்களையே குறை கூறிக்கொண்டு, “நீங்கள் சொல்வதுதான் சரி, நீங்கள் சொல்கிற பெரும்பாலான விஷயங்களில் உங்களோடு ஒத்துப் போகிறோம், எங்கள் மக்களும் கொஞ்சம் மாற வேண்டும், உங்களைத்தான் எங்களுக்குப் பிடித்திருக்கிறது, எங்கள் மக்களிடம் உங்கள் பெருமைகளை எடுத்துச் சொல்லும் வேலையைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்” என்று சொல்லிக்கொண்டு நெருங்க முயல்வது எம்மாம் பெரிய தந்திர வேலையாக இருக்க வேண்டும்! இது எல்லோருக்கும் கைவரும் கலையல்ல. இதற்குப் பல தலைமுறைப் பயிற்சி வேண்டும்.

அப்படியே மெதுவாக அவர்களின் தோளில் கையைப் போட்டு, “நீங்கள் எங்களில் சிலரை வெறுப்பது சரிதான், எங்களவர்களும் கொஞ்சம் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும், ஆனால் எங்களைவிட நீங்கள் அதிகம் வெறுக்க வேண்டிய இன்னொரு கூட்டம் இருக்கிறது” என்று வேறொரு பக்கம் அவர்களின் கவனத்தைத் திருப்பி, அதன் மூலம் தம் மீதான வெறுப்பைக் குறைத்துக்கொள்வது லேசுப்பட்ட வேலையா? அதன் விளைபயனாக தம் எதிரியையே தம்மைப் பிடிக்காதவர்களுக்கும் எதிரியாக்கிவிடுவது எவ்வளவு பெரிய சாதனை! அப்படித்தான் அமெரிக்கர்களுக்கு முஸ்லீம் வெறுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இது சிறிய அளவில் தொடங்கியதுதான். அதன் பிறகு அரபு நாடுகளோடு அமெரிக்காவுக்கு நடந்த பல நிகழ்வுகள் அதை மேலும் பல மடங்கு பெரிதாக்கிவிட்டன. இது இஸ்ரேல் நாட்டின் வெளியுறவுத் தந்திரங்களில் ஒன்றாகக் கூட இருக்கலாம். இப்போதும் பெரும்பான்மை யூதர்கள் மக்களாட்சிக் கட்சியில்தான் இருக்கிறார்கள் என்றாலும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிதாகப் பெருமளவிலான யூதர்கள் குடியரசுக் கட்சியின் பக்கம் சாய்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒரே காரணம், ‘மக்களாட்சிக் கட்சி நம்மைப் போலவே முஸ்லீம்களையும் இன்னொரு சிறுபான்மை இனமாகப் பார்க்கும் கட்சி. அவ்வளவுதான். ஆனால் குடியரசுக் கட்சி நம்மைப் போலவே அவர்களை வெறுக்கும் கட்சி. நமக்குப் பிடிக்காத நாடுகளைத் தேடித் தேடி அடித்து நொறுக்கிக் குதூகலம் அடையும் கட்சி’ என்கிற எண்ணந்தான். அது மட்டுமில்லை. ‘குடியரசுக் கட்சி தேசியவாதம் பேசும் கட்சி. அவர்களோடு சேர்ந்தால்தான் நாமும் வேகமாகவே மண்ணின் மைந்தர்கள் போலக் காட்டிக்கொள்ள முடியும்’ என்பதும். வெளியூர்க்காரன் வெளியூர்க்காரர்களோடே சுற்றிக்கொண்டிருந்தால் என்று உள்ளூர்க்காரன் ஆவது!

இந்தத் தந்திரத்தை அப்படியே காப்பியடித்த பஞ்சாபி இந்துத் தொழிலதிபர் ஒருவர், எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் அதே பாணியில் குடியரசுக் கட்சிக்கு ஆதரவாகக் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியர்களை – குறிப்பாக இந்துக்களை – ஒன்று திரட்டியதில் தொடங்கியதுதான், 2016-இல் ‘ட்ரம்புக்காக இந்துக்கள்’ என்பதில் வந்து நின்றது. ஒரு தொழிலதிபர் இப்படியான சோலிகளில் ஏன் இறங்குவார் என்பது எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதுதான். ட்ரம்பே சென்ற தேர்தலுக்கு முந்தைய தேர்தல் வரை ஒவ்வொரு தேர்தலிலும் இன்று அவர் எதிரி என்று சொல்லிக்கொண்டிருக்கும் மக்களாட்சிக் கட்சிக்கு அள்ளி அள்ளி நிதியளித்தவர்தான். அப்படித்தான் தொழில் செய்பவர்கள் நடந்துகொள்வார்கள். ஊர் விட்டு ஊர் போய்த் தொழில் செய்கிற அண்ணாச்சி கூடக் கடைபிடிக்கிற நடைமுறைதான் இது. ‘அவர்கள் கொள்கை என்னவாக இருந்தால் என்ன! சித்தாந்தம் என்னவாக இருந்தால் என்ன! நம் தொழிலுக்குத் தொல்லை கொடுக்காத இடத்தில் அவர்களை வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு அவ்வப்போது அவர்களுக்குச் சிறியதாக ஏதோ நன்கொடை என்று கொடுத்து வைத்தால், நாளை நமக்கு ஏதாவது என்றால் அவர்கள் நன்றியோடு உதவிக்கு வருவார்கள்; குறைந்தபட்சம் தொல்லையாவது செய்யாமல் இருப்பார்கள்’ என்கிற சிந்தனைதான். ஆனால் அதை நம்பிக்கொண்டு கூலி வேலை பார்க்க வந்திருக்கும் பொறியாளர்களும் இதர தொழிலாளர்களும் அவர்களின் பின்னால் அணி திரண்டு போவதுதான் எல்லாக் காலத்திலும் இவர்களின் சாபக்கேடு. ஆனால் இவர்களை நம்ப வைக்கிற ஏதோவொரு கதையைச் சொல்லித்தானே இந்தத் தொழிலதிபர்கள் ஏமாற்றுகிறார்கள். அது என்ன என்பதையும் பார்த்துவிடுவோம்.

பொதுவாகவே எல்லா நாடுகளிலுமே வலதுசாரிக் கட்சிகள் உள்ளூர் மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டுப் பிழைப்பு நடத்துபவைதான். உள்ளூர் மக்கள் என்று சொல்வது கூடத் தவறுதான். பெரும்பான்மை எனலாம். பெரும்பான்மை ஆகிவிட்டால்தான் நான்தான் உண்மையான உள்ளூர் என்று கதையை மாற்றிக்கொள்ளலாமே! இவர்களைப் பெரும்பான்மை என்பதும் கூடச் சில இடங்களில் தவறுதான். வெவ்வேறான மனிதர்களை ஏதோவொரு பெயரின் கீழ் ஒன்று திரட்டி அவர்களைப் பெரும்பான்மை என்று நம்பவைத்து ஏமாற்றும் வேலையையும் அவர்கள்தான் செய்கிறார்கள். அதனால் சிறுபான்மையாக இருப்பவர்களுக்கும் வந்தேறுபவர்களுக்கும் வலதுசாரி அரசியல் எப்போதுமே எதிராகத்தான் இருக்கும். அவர்களுக்கு எதிரான வெறுப்பை விதைத்தும் கூச்சல்களைப் போட்டுமே வலதுசாரிகள் தம்மைத் தக்கவைத்துக் கொள்வர். இதனால் இயல்பாகவே வந்தேறுபவர்களும் சிறுபான்மையினரும் இடதுசாரிக் கட்சிகளையோ வலதுசாரிகளை எதிர்ப்பவர்களையோதான் ஆதரிப்பார்கள். இதற்குப் புறம்பான போக்கை எப்போதெல்லாம் காண முடியும் என்றால், அதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும்.

வந்தேறுபவர் வந்தேறிய மண்ணில் இருக்கும் ஏதொவொன்றோடு தொடர்புடையவராக இருக்கும் போது இது எளிதில் நடந்துவிடும். எடுத்துக்காட்டுக்கு, இந்தியாவில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு வருகிற ஒரு கிறிஸ்தவர் தன் பெயரையும் மதத்தையும் பயன்படுத்தி தானும் அவர்களில் ஒருவராகக் காட்டிக்கொள்ள முயல்வது, இந்தியாவிலிருந்து மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் ஒரு முஸ்லீம் அங்கேயுள்ள தீவிர மதவாத அமைப்புகளில் தன்னை இணைத்துக்கொள்ள முயல்வது, வீட்டில் மராத்தி பேசுகிற வேற்று மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மஹாராஷ்டிரா சென்றவுடன் சிவ சேனாவில் சேர்வது, தமிழ்நாட்டுக் கோனார் வடநாட்டில் போய் யாதவர் சங்கத்தில் சேர்வது போன்றவை எல்லாம் இந்த வகையில் சேரும். இதுவல்ல நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் கூட்டம்.

இப்படி ஒட்ட வைக்க ஏதுவாக எதுவுமே இல்லாவிட்டாலும் கூட, வந்தேறுபவர்களோ சிறுபான்மையினரோ ஏதோவொரு வகையில் தம்மையும் பெரும்பான்மைக் கூட்டத்தோடு இணைத்துக்கொள்வதோ அல்லது அப்படிக் காட்டிக்கொள்வதோ தமக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணும் போது, அப்படியான நடிப்பு வேலையைச் செய்வார்கள். “அவர்கள் சொல்வதும் சரிதானே! இது அவர்கள் மண்தானே! அவர்களுக்குப் பிறகுதானே நமக்கு!” என்று அவர்களுக்குப் பிடித்த மாதிரிப் பேசித் தப்பித்துக்கொள்ளப் பார்ப்பார்கள். தப்பித்துக்கொள்ளப் பார்க்குமளவுக்குப் போவது எல்லா உயிர்களுக்கும் இருப்பது போன்ற பாதுகாப்பு உணர்வுதானே என்று விட்டுவிடலாம். அதற்காக இறங்கி வேலை செய்யும் போது, அந்தப் பரப்புரையில் பங்கெடுத்து, அதற்கு ஆதரவாகத் தம் மக்களிடமே விவாதிக்கும் அளவுக்கு முற்றிப் போகும் போது, அதை நாம் சந்தேகக் கண் கொண்டு பார்க்கத்தானே வேண்டும்! இவ்வுயிர்கள் எல்லா உயிர்களையும் போன்ற பாதுகாப்பு உணர்வு மட்டும் கொண்டவையாக இருக்க முடியாது. அதற்கும் மேலே ஏதோவொன்று உடையவையாக இருக்க வேண்டும். இல்லையா?

இன்னொன்று, பொதுவாகவே இடதுசாரிக் கொள்கைகள் மீது ஈடுபாடில்லாதவராக இருந்தால், இருக்கிற இரண்டில் தனக்கு ஓரளவு ஒத்து வருவது எது என்று பார்க்கையில், வலதுசாரிக் கட்சியே பரவாயில்லை என்று முடிவு செய்வதும் ஓரளவு – மிகச் சிறிய அளவில் – இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இதுவும் பட்டும் படாமல் இருக்கிற உறவாகத்தான் இருக்கும். இறங்கி வேலை செய்யும் அளவுக்கு இருக்காது. எடுத்துக்காட்டுக்கு, இந்தியாவில் தீவிர இடதுசாரி வெறுப்பாளராக இருக்கும் ஒருவர், இந்திய வலதுசாரியாக இருப்பார். அதற்காக இந்திய வலதுசாரிக்கு மேற்கத்திய வலதுசாரிகளையோ மத்தியக் கிழக்கு வலதுசாரிகளையோ அவ்வளவு எளிதாகப் பிடித்துவிடாது. இரு நாட்டு இடதுசாரிகளைப் போல இரு நாட்டு வலதுசாரிகள் எளிதில் ஒத்துப் போய்விட முடியாது. “என் மதமே அல்லது பண்பாடே உண்மை, மற்றதெல்லாம் பொய்” என்பவன் போய் எப்படி அதையே சொல்லும் வேறொரு மதவாதியிடம் – பண்பாட்டுப் பம்மாத்துக்காரனிடம் கூட்டணி வைக்க முடியும்!

அடுத்த வகை என்று பார்த்தால், தன் சொந்த நாட்டில் மேல் வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தால், வந்த இடத்திலும் தாம் அங்குள்ள மேல் வகுப்போடுதான் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்கிற சிந்தனையோடு வலதுசாரிக் கட்சிகளை ஆதரிப்போரும் உண்டு. இதில் மேல் வகுப்பு, கீழ் வகுப்பு எங்கே இருந்து வந்தது என்ற கேள்வி வருகிறதா? உலகெங்கிலுமே வலதுசாரிகள் என்பவர்கள் முதலாளிகளின் நலன்களுக்கு உழைப்பவர்களாகவும் இடதுசாரிகள் அல்லது இடதுசாயும் ‘மையர்கள்’ என்பவர்கள் உழைக்கும் மக்களின் பக்கம் நிற்பவர்களாகவுமே இருக்கிறார்கள், அல்லது அப்படிக் காட்டிக்கொள்ளவாவது செய்கிறார்கள். இப்படி இருக்கையில், இந்தியாவில் வளமான வாழ்க்கை வாழ்ந்த ஒருவர், அமெரிக்காவோ பிரிட்டனோ சென்று அங்கும் ஒரு முதலாளியாகவோ பெரும் பணக்காரராகவோ வாழும் புண்ணியம் பெற்றவராக இருந்தால், இயல்பாகவே அவருக்கு அங்கிருக்கும் வலதுசாரிக் கட்சிப் பக்கம்தான் மனம் சாயும். “நாங்கள்லாம் இவனுகளைக் காலுக்குள் போட்டு மிதித்த கூட்டமாக்கும்!” என்று சொல்கிறவர்களிடம் போய், “நாங்களும் எங்கள் ஊரில் அப்படித்தான். இதே போல அங்கேயொரு கூட்டம் இருக்கிறது. அவர்களைக் காலுக்குள் போட்டு மிதிப்பதுதான் எங்கள் வேலையே!” என்று பேசுவதுதானே பெருமை!

அது மட்டுமில்லை. பெரிதளவில் வரி கட்ட நேரும் எவருக்குமே இடதுசாரி அரசியலைப் பிடிக்காது. அவர்களின் அரசியலைப் பிடுங்கித் தின்னும் அரசியல் என்றே பார்க்கத் தோன்றும் – பழிக்கத் தோன்றும். ஏனென்றால் அது இவர்களை நேரடியாக பாதிப்பது. அதே வேளையில், வலதுசாரி அரசியலின் எந்தக் கீழ்மையும் இவர்களைப் பாதிப்பதில்லை. அவர்கள் இவர்களின் ஆட்களாகவே இருப்பார்கள். மாறாக, இடதுசாரிகளுக்கோ இவர்கள்தான் பெரும் பிரச்சனையே; இவர்கள்தான் சுரண்டல்காரர்கள்; இவர்களின் சுரண்டல்தான் ஏழ்மைக்கும் துன்பங்களுக்கும் குற்றங்களுக்கும் சமூகத்தின் அனைத்துச் சிறுமைகளுக்கும் காரணம் என்பார்கள். இவர்களைக் கேட்டால், இடதுசாரிகள் என்பவர்கள் தம் உடைமைகளைப் பிடுங்கிச் சோம்பேறிகளுக்குப் பங்கு போட்டுக் கொடுப்பவர்கள் என்பார்கள். பின் முதலாளிகளுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் வலதுசாரிகளுடன் ஏற்படுவதுதானே இயல்பான கூட்டணியாக இருக்க முடியும்!

ஆனால், ட்ரம்புக்காக உழைத்த இந்துக் கூட்டம் மேலே சொன்ன இவற்றுள் ஒன்றைச் சேர்ந்ததா? அதைத் தொடங்கி வைத்ததும் அதற்குள் ஒரு மிகச் சிறிய எண்ணிக்கையும் மேலே சொன்ன ஏதோ ஒரு வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம். அல்லது இவற்றில் ஒன்றும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள், வேறு சில காரணங்களின் அடிப்படையில் ஒன்று கூடியவர்கள். அது என்ன?

‘நம்மூரில் நம் தலைவன் செய்வதை இந்த ஊரில் இந்த ஆள் செய்கிறான்; இவனுடைய கூட்டமும் நம்மைப் போலவே உணர்ச்சிபூர்வமானதாக (அதற்கு நாம் வேறு பெயர் வைத்திருக்கிறோம்) இருக்கிறது. நம்மூரில் இருக்கும் நமக்குப் பிடிக்காத கூட்டம் ஒன்று இவர்கள் இருவரையும் ஒரே மாதிரியானவர்கள் என்று ஒப்பிடுகிறது; நம் தலைவனும் இவனும் கொஞ்சிக் கொஞ்சி வேறு குலாவுகிறார்கள்; எனவே இவன் நம் ஆள்தான்’ என்று எண்ணி இறங்கிய கூட்டம், அப்படியே சிறிது சிறிதாக உள்வாங்கப்பட்டு இப்போது மீளவே முடியாத அளவுக்குக் காதலில் விழுந்துவிட்டது. சிலருக்கு ஒருவரின் பேச்சோ – செயல்பாடோ அவரை நோக்கி இழுக்கும் அல்லது அவரைவிட்டு விலகிச் செல்ல வைக்கும். சிலருக்கு ஒருவர் நமக்கானவரா அல்லது நமக்கு எதிரானவரா என்பதை முடிவு செய்துகொண்டு, அதன் பின்பு அவர் செய்வதையெல்லாம் கண்டு புல்லரித்துக்கொள்வதும் கோளாறு சொல்வதும் என்று போய்விடுகிறது. தலைவனைப் போலவே இவர்களுக்கும் அறிஞர்களைப் பிடிக்காது. தலைவன் ஒருவனே இந்த உலகம் கண்ட ஒரே அறிஞன். தலைவனைப் போலவே இவர்களுக்கும் அறிவியலைப் பிடிக்காது. தலைவனின் உளறல்கள் மட்டுமே ஆகப் பெரும் அறிவியல்.

இந்தப் பைத்தியத்தின் உச்சத்தில், அமெரிக்கத் தலைவனின் கூட்டம் வெறித்தனமாக வெறுக்கும் கூட்டத்தில் தாமும் இருக்கிறோம் என்பதை இவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள், அல்லது இப்படியெல்லாம் இறங்கி வேலை செய்வதால் தம்மை மட்டும் ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்று நம்புகிறார்களா என்று தெரியவில்லை.

சொந்த மண்ணில் கிறிஸ்தவர்களை அரிசிப் பை என்று இழிவுபடுத்திக்கொண்டு, சின்னஞ்சிறு பையன்கள் உட்பட பாதிரியாரின் குடும்பத்தையே எரித்ததைக் கூட நியாயப்படுத்திக்கொண்டு, வெட்கமில்லாமல் இவர்களை இங்கேயுள்ள கிறிஸ்தவ மத வெறியர்களோடு கூட்டணி வைக்கத் தூண்டுவது எது? அது, அவர்களும் தம்மைப் போலவே முஸ்லீம்களை வெறுக்கிறார்கள் என்ற எண்ணம்.

அவர்களின் வெறுப்பை மேலும் தூண்டிவிட்டால் தம் மீது அவர்கள் அன்பு செலுத்திவிடுவார்கள் என்னும் நப்பாசை. வெறுப்பும் வெறுப்பும் கூட்டணியமைத்து எவ்வளவு தொலைவு சென்றுவிட முடியும்! ஒன்றை முடித்துவிட்டு இன்னொன்றுக்கு வந்துதானே ஆக வேண்டும். வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்கிற குறுநோக்கு! அல்லது, இப்போதைக்கு இந்த இடத்தில் பிழைப்பை ஓட்ட என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்துகொள்ளும் நரித்தனம்!

கால் கடுக்க அமெரிக்கத் தூதரக வாசலில் நின்று விசா வாங்கி, இங்கு வந்து என்னென்ன குரங்காட்டம் ஆட வேண்டுமோ அத்தனையும் ஆடி, பச்சை அட்டை வாங்கி, குடிமகன் ஆனதும், தான் அமெரிக்கனாகவே மாறிவிட்டது போல எண்ணிக்கொண்டு, “ஆமா, அவர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது! வெளியார் வருவதைத் தடுப்பதுதானே இந்த நாட்டுக்கு நல்லது!” என்று பேசுவதற்கு ஓர் உயிரினம் எவ்வளவு கேவலமானதாக இருக்க வேண்டும்!

இது ஒரு புறமென்றால், இன்னொரு கூட்டம் இருக்கிறது. ஓரளவுக்கு இடதுசாய்வோராகப் பார்க்கப்படும் மக்களாட்சிக் கட்சியை ஆதரிக்கும் இந்தியர்களில் எவ்வளவு பேர் யோக்கியர்கள் என்று பார்த்தால், அதுவும் தலையைச் சுற்ற வைக்கிறது. சிறுபான்மையினருக்காகவும் வந்தேறியவர்களுக்காகவும் கறுப்பின மக்களுக்காகவும் நரம்பு புடைக்கக் கத்தும் இந்த முற்போக்காளர்களிடம் இந்தியாவைப் பற்றிப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் அருவருப்பில் நமக்கு வாந்தி வந்துவிடுகிறது.

இந்தியாவில் மட்டும் சிறுபான்மையினரும் ஒடுக்கப்பட்டோரும் அடித்து நொறுக்கப்பட வேண்டும், அதைப் பற்றிக் கேள்விப்பட்டுக் குதூகலிக்க வேண்டும், குடும்ப வாட்சாப் குழுக்களில் வெறுப்பு பரப்ப வேண்டும், இந்தியா வல்லரசாகிவிட்டது என்று பொய் பரப்ப வேண்டும். ஆனால் அப்படியே இந்தப் பக்கம் திரும்பினால், அமெரிக்காவில் தான் எந்த வகையிலும் இரண்டாம் தரக் குடிமகனாகப் பார்க்கக் கூடப் பட்டுவிடக் கூடாது, அமெரிக்காவின் பெரும்பான்மை தன்னிடம் நாகரிக சமூகத்தைப் போல நடந்துகொள்ள வேண்டும், தலைவர்கள் பரந்த மனம் படைத்தவர்களாக இருக்க வேண்டும். இது எவ்வளவு பச்சையான பச்சோந்தித்தனம்!

நம்மைப் போலவே இருக்கும் மூடர்களோடுதான் நாம் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணும் வலதுசாரி ஆதரவுக் கூட்டத்தைவிட இந்தக் கூட்டம் வெட்கம் கெட்ட கூட்டம். இவர்கள் இப்படி இருப்பதுதான் அமெரிக்காவுக்கும் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களுக்கும் நல்லது. ஆனால் இவர்கள் துளி கூட இந்தியாவுக்கு நல்லதில்லை. நாளை இந்தியாவில் தேர்தல் வரும் போது அப்படியே வேறொரு நிறத்துக்கு மாறி மூடர் கூட்டத்துக்குத் தீனி போடும் முன்னணிப் பரப்பர்களாகிவிடுவார்கள். இதுதான் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் மிகப்பெரிய வேறுபாடு. அமெரிக்காவில் முதலாளிகளும் மூடர்களும் மேற்தட்டினரும் மட்டுமே வலதுசாரி ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அரசைத் தவிர்த்த அனைத்து நிறுவனங்களும் பெரும்பாலான இதழியர்களும் பெரும்பாலான படித்த உயர்நடுத்தர வர்க்கத்தினரும் தம் நாட்டுக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தையும் இழிவையும் எண்ணிக் கூச்சத்தில் கூனிக் குறுகிப் போய்க் கிடக்கிறார்கள்; வரும் தேர்தலில் இந்தக் கோமாளி அரசை எப்பாடு பட்டேனும் தூக்கி வீசிவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலோ அத்தனை நிறுவனங்களும் பெரும்பாலான இதழியர்களும் அரசுக்கு முன்னே சுருண்டு படுத்துவிட்டனர். படித்த உயர்நடுத்தர வர்க்கத்தினர் தமிழ் நாட்டைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலுமே பொய்ப் பிரச்சாரத்துக்கு ஏமாந்த கூமுட்டைகளாகவோ உண்மை தெரிந்தும் கூச்சமில்லாமல் பொய் பேசும் மோசடியாளர்களாகவோ இருக்கிறார்கள்.

இந்திய வல்லரசுக்கு ஒரு நியாயமும் அமெரிக்க வல்லரசுக்கு ஒரு நியாயமும் வைத்திருக்கும் இந்தக் கூட்டத்தினர் விடும் கதைகள் தினுசு தினுசானவை.

“அமெரிக்கத் தலைவன் கோமாளி; ஆனால் இந்தியத் தலைவன் கடவுளுக்குச் சமமானவர்; உண்மையில் இவர்கள் இருவரையும் ஒப்பிடுவதே தவறு”, “உண்மையில் இந்தியத் தலைவன் அமெரிக்கத் தலைவனை இந்தியாவின் நன்மைக்காக சாதுர்யமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார், இதில் நமக்குத்தான் ஆதாயம், அவர்கள் ஏமாளிகள்”, “இந்தியாவில் உள்ள வெறுப்பர்கள் வெறுப்பர்களே அல்லர், அவர்கள் பெருந்தன்மையானவர்கள், நாம் கேள்விப்படுவதெல்லாம் ஊதிப் பெரிதாக்கப்படும் பொய்ப் பரப்புரைகள்!”, “இங்கிருக்கும் நிறையப் பேர் எங்களுக்கும் இப்படியொரு தலைவன் இல்லையே என்று ஏங்கிப் போய்க் கிடக்கிறார்கள்; நம்மை வையத் தலைமை கொள்ள வேண்டி வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள்”… என்று பல தினுசுகளில் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இதில் உச்சபச்சமாக நம்மைத் திணறடிக்கும் வாதம் இதுதான் – “நம்மூரில் நாம் வைத்ததுதான் சட்டமாக இருக்க வேண்டும். அது நம்மூர். நாம் நல்லவர்கள். நம் கையில் அதிகாரம் இருப்பதுதான் நமக்கு நல்லது. அது போல வந்த இடத்தில் நமக்குப் பாதுகாப்பான முறையில்தானே எல்லாம் இருக்க வேண்டும்! நாம் நல்லவர்கள். நம் கைக்குப் போதிய அதிகாரம் வந்தால்தான் நமக்கு நல்லது. அங்கு நமக்கு எது வசதியோ அதை ஆதரிக்கிறோம். அதே போல் இங்கு நமக்கு எது வசதியோ அதை ஆதரிக்கிறோம். இதுதானங்க மனித இயற்கை!”

எப்படி கதை!

இப்போது, இந்தக் கதைக்குச் சற்றும் எதிர்பாராத திருப்பம் ஒன்றைக் கொண்டுவந்து இறங்கியிருக்கிறார் கமலா ஹாரிஸ். ட்ரம்புக்கு உழைக்கிறோம் என்று கிளம்பிய கூட்டத்தில் ஒரு சிறு குழு இம்முறை, “என்ன இருந்தாலும் நம் வீட்டுப் பிள்ளை இல்லையா!” என்று மெதுவாக ஓரங்கட்டுகிறது – கமலாவை ஆதரித்துப் பேசுகிறது – மக்களாட்சிக் கட்சியையே விரும்பத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவில் இருக்கிற தீவிர பாஜக ஆதரவாளர் ஒருவர் ஒரே நாளில் காங்கிரஸ் ஆதரவாளராக மாறுவது போன்ற சந்தர்ப்பவாதம். 69% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திய திராவிடக் கட்சித் தலைவியையே ஆதரித்த ‘மெரிட்’ பேர்வழிகளையும் தேசியவாதிகளையும் பார்த்த நமக்கு இதெல்லாமா அதிர்ச்சி ஆகிவிடப் போகிறது! வாழ்வெல்லாம் மெரிட்டுக்காகப் பேசிவிட்டு இப்போது எடப்பாடியின் மெரிட்டை எப்படி முட்டுக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையுந்தானே பார்க்கிறோம்!

ட்ரம்ப் அதிபராகவும் கமலா துணை அதிபராகவும் வர முடியாது என்பதால் வேறு வழியில்லாமல் கண் பிதுங்கி நிற்கிறது இந்தக் கூட்டம். சுப்பிரமணியசாமி வழக்கில் ஜெயலலிதா மாட்டிக்கொண்ட போது முழித்த அதே முழி.  ‘அதுதான் நம் கட்சி, இப்படி விவரமில்லாமல் இருக்கிறீர்களே!’ என்று முடிந்தால் ட்ரம்ப் கட்சிக்கு மாறச் சொல்லிக் கூட சித்தி மூலம் தூது அனுப்பினாலும் அனுப்புவார்கள்.

அவரோ தான் இந்தியர்-தமிழர் என்பதைவிடக் கறுப்பர் என்பதையே தன் அடையாளமாகக் காட்டி நிற்கிறார். “இந்தியரான அம்மாவோடே வளர்ந்தவர் ஏன் தன் இந்திய அடையாளத்தைவிட கறுப்பர் அடையாளத்தையே அதிகம் முன்வைக்கிறார்?” என்று அவரின் எதிர் முகாம் அவரைக் கேள்வி கேட்கிறது. ஆனாலும் பிடிவாதமாக ஒரு கூட்டம், “பாரு… பாரு… அவங்க சித்திஸ்னு சொல்றாங்க… அதுதான் எங்கள் பண்பாட்டின் சிறப்பு… நாங்க எல்லாருமே இப்பிடித்தான்!” என்று ரீல் விட்டுக்கொண்டு இருக்கிறது.

cartoon by Alok Nirantar – Twitter

“என்னங்க இவங்க! ஒரு சித்திஸோட விட்டுட்டாங்க! நம்மளைவிட அவங்க அந்தப் பக்கந்தாங்க அதிகமா ஒட்டுறாங்க!” என்றால், “அப்பிடித்தாங்க காட்டிக்குவாங்க! அதுதானே அவங்க அரசியலுக்கு வசதியாக இருக்கும்! ஆனா, அவங்க அப்பா பிள்ளை இல்லை; அம்மா பிள்ளை; மனசளவுல நம்மூர்ப் பெண். வேணாப் பாருங்க, அவங்க வேலையெல்லாம் முடிஞ்ச பிறகு நம்ம பக்கந்தான் சாய்வாங்க. அவங்க வந்தா நமக்குத்தானங்க பெருமை – நல்லது! எல்லா இடத்திலும் அதிகாரத்தைக் கைப்பற்றணுங்க! அதுதாங்க நமக்குப் பாதுகாப்பு! நாமதானங்க வையத் தலைமை கொள்ளப் பிறந்தவங்க!” என்றும் சுழற்றி அடிக்கிறார்கள்.

வலைகளுக்குள் அறுக்கப்படும் சுறாமீன் மரபணுக்கள்

0

நாராயணிசுப்ரமணியன்

“சுறாமீன்களே இல்லாத கடல் எப்படி இருக்கும்?” – இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடி தனியாக ஆராய்ச்சிகள் நடத்த வேண்டியதில்லை. சில தசாப்தங்கள் கழித்து உலகின் பல கடற்பகுதிகளின் நிதர்சனம் இதுவாகத்தான் இருக்கும்.

தற்போது நடந்து முடிந்த ஒரு ஆய்வு, “ஏற்கனவே பல பவளத்திட்டுகள் இந்த நிலையில்தான் இருக்கின்றன” என்று அதிர்ச்சியூட்டுகிறது. உலக அளவில் 121 அறிவியலாளர்கள், 731 தன்னார்வலர்கள் பங்குபெற்ற பிரம்மாண்டமான ஆய்வு இது. நான்கு ஆண்டுகள் நடத்தப்பட்ட கள ஆய்வில் 58 நாடுகளைச் சேர்ந்த 371 பவளப்பாறைத் திட்டுகள் (Coral Reefs) ஆராயப்பட்டன.கள ஆய்வுகளின் காணொலிப் பதிவு மட்டுமே 15,000 மணிநேரம் ஓடக்கூடியது!

நீண்ட இந்த ஆய்வின் முக்கியமான முடிவுகள் இவை:

  1. ஆய்வு செய்யப்பட்ட 58 நாடுகளில், 34 நாடுகளின் பவளத்திட்டுகளில் சுறாக்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவில் பாதி மட்டுமே இருந்தது. ஆகவே உலக அளவில் பவளத்திட்டுக்களின் சுறாமீன்கள் பரவலாக அழிந்துவருவது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
  2. சுறாமீன் சரணாலயம், முற்றிலும் மீன்பிடித்தடை உள்ள இடங்கள், மீன்பிடித் தொழில் தொடர்பான சரியான அறிவியல் ரீதியான வரையறைகள், சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய செயல்பாடுகளின்மீதான கட்டுப்பாடு ஆகியவை அமலில் உள்ள கடற்பகுதிகளில் எல்லாம் சுறாமீன்களின் எண்ணிக்கை ஆரோக்கியமாக இருந்தது. ஆகவே சரியான முறையில் கடற்பகுதிகளை மேலாண்மை செய்தாலே சுறாமீன்களை எளிதில் காப்பாற்றலாம் என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இது நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது.
  3. கிட்டத்தட்ட 20% பவளத்திட்டுக்களில் சுறாமீன்கள் செயல்பாட்டு ரீதியாக அழிந்துவிட்டன என்று கண்டறியப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்தில் “Functionally extinct”  என்று குறிப்பிடப்படுகிறது.

செயல்பாட்டு ரீதியான அழிவு என்றால் என்ன?

“அழிவு” (Extinction)  என்பது ஒரு இனத்தில் ஒரு விலங்கு கூட உலகில் எங்குமே உயிரோடு இல்லை என்பதைக் குறிக்கிறது. தொல்லுயிர் எச்சங்கள், ஓவியங்கள், பாடம் செய்யப்பட்ட உடல் ஆகியவற்றில் மட்டுமே இவற்றைப் பார்க்க முடியும். டைனோசர், சடை யானை என இதற்குப் பல உதாரணங்கள் உண்டு.

செயல்பாட்டு ரீதியான அழிவு என்பது அப்படிப்பட்டதல்ல. ஒரு இனத்தில் இன்னும் சில விலங்குகள் மீதம் இருக்கலாம். ஆனால் இங்கே எண்ணிக்கை முக்கியமல்ல:

  1. மீதமிருக்கிற விலங்குகளால் இரை விலங்குகளின் எண்ணிக்கையைப் பெரிதும் பாதிக்க முடியாது. அவற்றால் வாழிடத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.
  2. இனப்பெருக்கம் செய்யவே முடியாத அளவுக்குக் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே விலங்குகள் மீதம் இருக்கின்றன.
  3. ஒருவேளைஇனப்பெருக்கம் செய்தால்கூட, தொடர்ச்சியாக ஒரு சிறு இனக்குழுவுக்குள்ளேயே இனப்பெருக்கம் செய்வதால் மரபணு பாதிப்பு அதிகமாகும் என்ற அச்சுறுத்தல் இருக்கிறது, ஆகவே இரண்டொரு தலைமுறைக்குள் மரபணுக்கள் வலுவிழந்து விலங்குகளின் எண்ணிக்கை இன்னும் குறையும்.

வாழ்வியல் ரீதியாக இவற்றில் எது நிகழ்ந்தாலும் அது “செயல்பாட்டு ரீதியான அழிவு” என்று சொல்லப்படுகிறது:.அதாவது மீதமிருக்கும் விலங்குகளால் செயல்பாட்டு ரீதியாக அந்த வாழிடத்தின்மீதோ இனத்தின்மீதோ எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. பொதுவாக  இந்த நிலைக்கு ஒரு இனம் தள்ளப்பட்டுவிட்டால்  வெகுவிரைவில் அது முற்றிலுமாக அழிந்துவிடும்.

 உலகின் பல கடல்களில் சுறாக்கள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. பவளப்பாறைத் திட்டுக்களில் செயல்பாட்டு ரீதியாக சுறாக்கள் அழிந்துவிட்டன. சுறாமீன்களே இல்லாத வாழிடங்களாகப் பல கடற்பகுதிகள் மாறிக்கொண்டிருக்கின்றன.

சுறாக்கள் ஏன் எளிதில் பாதிக்கப்படுகின்றன?

 துடுப்புக்களுக்காக, உணவுக்காக, கல்லீரல் எண்ணெய்க்காக சுறாமீன்கள் அதிக அளவில் பிடிக்கப்படுகின்றன. சராசரியாக ஒரு வருடத்துக்கு 100 மில்லியன் சுறாக்கள் பிடிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றன அறிவியல் தரவுகள். நேரடியாகப் பிடிக்கப்படும் சுறாக்கள் தவிர, செவுள் வலைகள் போன்ற சில வகை வலைகளில் தற்செயலாக மாட்டி இறக்கின்ற சுறாக்களின் எண்ணிக்கையும் வருடாவருடம் கூடிக்கொண்டே போகிறது. எல்லாவகை மீன்களையும் துடைத்து எடுக்கக்கூடிய  இழுவலைகளில், தேவையோ தேவையில்லையோ சுறாக்களும் பிடிபடுகின்றன.

ஆனால் மீன்பிடி அழுத்தம் (Fishing pressure) என்பது உணவுக்காகப் பிடிக்கப்படும் எல்லா மீன்களையும் ஒருசேரத்தான் பாதிக்கிறது. சுறாக்கள் மட்டும் ஏன் வேகமாக அழிவின் விளிம்புக்குத் தள்ளப்படுகின்றன?

சுறாக்களின் வாழ்வியல் சுழற்சியால் வந்த சிக்கல் இது.

சூழலியலில் R species, K species என்று விலங்குகள் இரு பகுப்புகளாகப் பிரிக்கப்படுகின்றன. பரிணாம வளர்ச்சியின்படி தங்கள் இனத்தை நிலைநிறுத்திக்கொள்ள இரண்டு வகையான இனப்பெருக்க யுத்திகளை விலங்குகள் கடைபிடிக்கின்றன என்ற அடிப்படையில் வந்த கருத்தாக்கம் இது. காலபோக்கில் Life history theory என்று அழைக்கப்பட்டது.

தவளை, சுண்டெலி போன்ற சிறு விலங்குகளை எடுத்துக்கொள்வோம். இவற்றின் வாழ்நாள் குறைவு. இவை விரைவாக இனப்பெருக்க வயதை எட்டிவிடும், ஒரு முறை இனப்பெருக்கம் செய்தால் அதிக எண்ணிக்கையில் முட்டையிடக்கூடியவை/குட்டிகளை ஈனக்கூடியவை இந்த விலங்குகள். இவற்றை R species என்று அழைக்கிறார்கள்.

இவற்றுக்கு நேரெதிரான வாழ்க்கை வரலாறைக் கொண்டவை K species இனங்கள். இவற்றின் வாழ்நாள் அதிகம், பொதுவாக இவற்றின் உடலின் அளவும் பெரியதாக இருக்கும். இனப்பெருக்க வயதை எட்டுவதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்ளக்கூடியவை. பாலூட்டிகளாக இருக்கும் பட்சத்தில் இவற்றின் பேறுகாலமும் நீளமாக இருக்கும். ஒரு முறை இவை ஈனும் குட்டிகளின் எண்ணிக்கையும் குறைவு. யானை, மனிதக் குரங்குகள் போன்றவை சில உதாரணங்கள்.

சுறாக்களும் K species என்ற பகுப்பின்கீழ் வருபவைதான். முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் சுறா இனங்கள், முட்டையை உடலுக்குள்ளேயே பொரித்து குட்டிகளை ஈனும் இனங்கள், நேரடியாகக் குட்டிகளை ஈனும் சுறாக்கள் என்று சுறாக்களிலேயே பல வகை உண்டு. இவை எல்லாமே குறைவான இனப்பெருக்க வேகம் கொண்டவை. ஆகவே மீன்பிடி அழுத்தம் அதிகமாகும்போது அந்த வேகத்துக்கு ஈடுகொடுத்து சுறாக்களால் தங்களது எண்ணிக்கையை சமன் செய்துகொள்ள முடிவதில்லை.

ஆச்சரியம் என்னவென்றால், மரபுசார் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பலருக்கு இது பற்றிய புரிதல் இருக்கிறது. சுறாக்களைப் பற்றிய ஒரு உரையாடலில் “இது குட்டி போடுற இனம், அதனால் நாம பிடிக்க பிடிக்க சீக்கிரம் அழியும்” என்று வடதமிழகத்தின் முதிய மீனவர் ஒருவர் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.

சுறாக்கள் அழிந்தால் என்ன ஆகும்?

சுறாக்கள் பல மில்லியன் ஆண்டுகால நீண்ட பரிணாம வரலாறு கொண்டவை. 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொன்மமான இனங்கள் இவை.ஒவ்வொரு முறை ஒரு சுறா இனம் அழியும்போதும் 26 மில்லியன் ஆண்டுகால வரலாறு ஒன்று அழிக்கப்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!  ஒரு பறவையின் சராசரி வரலாற்றை விடவும் இது ஐந்து மடங்கு அதிகம்!

சுறாக்களின் பரிணாம வரலாறும் மரபணுவின் தொன்மமும் வியப்பூட்டக்கூடியவை. அவற்றின் மரபணுவில் இருக்கும் பல உயிரியல் ரகசியங்களை இன்னும்கூட நாம் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் உண்மை. சுறாக்களை அழிப்பது என்பது ஒரு மரபணு நூலகத்தைத் தீயிட்டுக் கொளுத்துவதுபோன்றது.

கடலின் வாழிடங்கள் பலவற்றுக்கும் சுறாக்களுக்கும் ஒரு நுணுக்கமான பிணைப்பு உண்டு. ஒரு காலத்தில் சுறாக்கள் எல்லாமே உச்ச வேட்டையாடிகள் (Apex Predators) என்ற கருத்தாக்கம் நிலவியது. சமீபத்திய ஆய்வுகள் இந்தக் கருதுகோளை மாற்றியமைத்துள்ளன. சுறாக்கள் பல இடங்களில் நடுத்தர  வேட்டையாடிகளாகவும் (Mesopredators) செயல்படுகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“இரை விலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைப்பது” என்ற ஒற்றைப் படையான பங்களிப்பைத் தாண்டி, உணவுப்பின்னலின் பல அடுக்குகளில் சுறாக்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு பவளத்திட்டில் அவ்வப்போது வந்துபோகும் சுறாக்கள்கூட பல்வேறு வழிகளில் அந்த வாழிடத்தோடு வினையாற்றுகின்றன. உயிர்ச்சத்துக்களின் சுழற்சி, இரைவிலங்குகளின் வாழ்வியல் வழக்கங்களை மாற்றியமைப்பது, வலுவிழந்த/நோயுற்ற விலங்குகளை அழிப்பதன்மூலம் இரைவிலங்குகளின் கூட்டத்திற்கு வலு சேர்ப்பது, அயல் ஊடுருவி இனங்களை அழிப்பதன்மூலம் வாழிடத்தைக் காப்பாற்றுவது என சுறாக்களின் சூழல் பங்களிப்பு ஒரு பெரிய பட்டியல். சுறாக்கள் அழியும்போது  உணவுச்சங்கிலியின் பல கண்ணிகள் அறுக்கப்படுகின்றன, சூழல் பாதிக்கப்படுகிறது, வாழிடத்தின் சமநிலை சீர்குலைகிறது.

சுறாமீன்களைப் பாதுகாத்தல்

சுறாமீன்களைப் பாதுகாப்பதற்கான செயல்திட்டங்களை வகுப்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. வளரும் நாடுகளில் சுறாமீன்களின் தசை உணவுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற மீன்களோடு ஒப்பிடும்போது சுறாமீன்களின் தசை குறைவான விலைக்கே விற்கப்படுகிறது. ஆகவே குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய புரத உணவாக இது மாறியிருக்கிறது. உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம் என்று பல சிக்கலான சமூகவியல் கூறுகளோடும் சுறாக்கள் பிணைக்கப்பட்டிருக்கின்றன. தடை இருக்கும் நாடுகளில்கூட சட்டவிரோதமாக சுறாமீன்கள் பிடிக்கப்படுவதற்கு இதே சமூகவியல் கூறுகள்தான் காரணம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

பன்முகத்தன்மைக் கொண்ட மீன்பிடித் தொழில்கள் இருக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், சுறாமீன்களின் நிலவரம் இன்னும் சிக்கலானது. இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் “சுறாமீன்களைப் பிடிப்பவர்கள்” என்று ஆராய்ந்தால், குறைந்தது ஏழு வகையான குழுக்களைப் பார்க்கமுடியும் என்கிறது ஒரு ஆய்வு. காலத்தைப் பொறுத்தும் இடத்தைப் பொறுத்தும் இது மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு மீன்பிடி கிராமத்துக்குள்ளேயே இருவகையான மீன்பிடி முறைகள் இருக்கலாம். ஒன்று சூழலை பாதிக்கக்கூடியதாகவும் இன்னொன்று தற்சார்பை மையமாகக் கொண்டதாகவும் இருக்கலாம். ஆகவே உலகளாவிய பாதுகாப்பு வரையறைகளை இங்கு அப்படியே செயல்படுத்த முடியாது.

சுறாமீன் பற்றிய பொது விழிப்புணர்வு, எந்தெந்த சுறாமீன்கள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன, சுறாக்கள் பற்றிய மீனவர்களின் கருத்துக்கள்/நம்பிக்கைகள், மீன்பிடி வகைமைகள்,  சுறாமீன் வகைகளின் தற்போதைய நிலை, வாழ்வாதாரச் சிக்கல்கள், பிடிக்கப்படும் ஒரு சுறாமீன் எங்கெங்கெல்லாம் போகிறது (Shark supply chain) போன்ற எல்லா விவரங்களையும் கருத்தில்கொண்டே நாம் பாதுகாப்புக்கான வழிமுறைகளை விவாதிக்கவேண்டும். அது அறிவியல்ரீதியாகவும் சரியானதாக இருக்கவேண்டும். அப்போதுதான் அமலாக்கத்தின்போது எதிர்ப்பார்த்த விளைவுகள் கிடைக்கும்.

சுறாக்களின் பாதுகாப்பு பற்றிய செயல்பாடுகள் எதுவாயினும் அவற்றை உடனடியாக முன்னெடுக்க வேண்டியது அவசியம். 400 மில்லியன் ஆண்டுகளாகக் கடலில் கோலோச்சிக்கொண்டிருந்த சுறாக்களை 3 மில்லியன் ஆண்டுகள் மட்டுமே பழையதான மனித இனம் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.  அதை உணர்ந்து நம் வலைகளிலிருந்து சுறாக்களின் மரபணுக்களை விடுவிப்பது நம் கடமை!

தரவுகள்

  1. Global Status and Conservation Potential of Reef sharks, MacNeil et al,July 2020.
  2. Global Prirotities for Conserving the Evolutionary history of sharks, rays and chimaeras. William Stein et al, 2018.
  3. The ecological role of sharks on Coral reefs. Roff et al, 2016.
  4. An Ill thought Ban. Vivekanandan E. 2001.

***

நாராயணி சுப்ரமணியன்:கடல்வாழ் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.”நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” என்ற உயிரியல் நூலை எழுதியுள்ளார். தமிழில் கடல்சார், அறிவியல் பொருண்மைகளைக் கவிதைகளில் எழுதி வருபவர். விகடன் தடம், வாசகசாலை, அரூ இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. Email: nans.mythila@gmail.com

விதை

1

சுஷில்குமார்

வழக்கம்போல கோயில் தெப்பக்குளப் படிக்கட்டில் நண்பர்களுடன் அரட்டையில் இருந்தேன். அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது.

“நடுச்சாமம் ஆனாலும் வீட்டுக்கு வர முடியல்ல, என்னா? பொழுது முச்சூடும் அங்கணயே கெட?”

“இன்னா வாரேம்மா.. தாத்தா ஒறங்கிட்டாளா?”

“தெரில.. ஆச்சி கூட ஒரே சண்ட.. சாப்பிடாம திண்ணைல போயி இருந்தா.. பொறவு ஆளக் காணோம்..”

“இந்த ஆச்சிக்கு வாய வெச்சிட்டுச் சும்மாக் கெடக்க முடியாதா? இன்னா வாரேன்..”

“ஆமா, இன்னா வாரேன்னு சொல்லிட்டு ராவு மூனு மணிக்கு வந்து கதவ தட்டுவ.. நா இன்னா கதவ அடைக்கப்போறேன்.. வரதா இருந்தா இப்ப வரணும் பாத்துக்கோ..” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.

எங்கள் கிராமத்தின் நுழைவாயில் போன்ற இரயில்வே கேட்டைத் தாண்டும்போது எனது என்ஃபீல்ட் திடீரென நின்றது. ஆறு மாதத்திற்கு முன்பு என் பிறந்த நாளுக்கு தாத்தா வாங்கிக் கொடுத்தது. பலமுறை முயற்சி செய்தும் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. திடீரென, என் காதருகில் யாரோ கிசுகிசுப்பதைப் போன்ற சத்தம் கேட்டு ஒரு நொடி வெலவெலத்துப் போனேன். எதோ பிரம்மையாக இருக்குமென நினைத்து வண்டியைத் தள்ளிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.

சிறுவனாக இருந்தபோது இப்பாதையை ஒட்டியிருந்த வாய்க்காலில் என்னைத் தூக்கி எறிந்து விடுவார் தாத்தா. “கைய கால அடி மக்ளே.. நாலு நாள் தண்ணி குடிச்சேன்னா நீச்சல் தானா வந்துரப் போகு..” என்பார். நீண்டு செல்லும் குறுகிய பாதையின் இணையாக பத்து நிமிட நடையளவிற்கு நீண்டு சென்ற அந்த வாய்க்காலும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை போர்த்தியிருந்த வயல்வெளிகளுமென, எப்படியிருந்த ஊர்! இப்போது லட்சங்களிலும், கோடிகளிலும் கைமாறிக் கொண்டிருக்கிறது.

தாத்தா பற்றிய நினைவுகளாக வந்து கொண்டிருந்தன. விபத்தில் படுத்த படுக்கையாகிவிட்ட அப்பாவுடன் என் குடும்பமும் முடங்கிப் போய்க் கிடந்த காலம். வாழ்க்கை முழுதும் அப்பாவால் எழுந்து நடக்கவே முடியாத நிலை. எனக்கு அப்போது பத்து வயதிருக்கும். தங்கை கைக்குழந்தையாக இருந்தாள்.

குடும்பச் சொத்து விவகாரத்தில் தாய்மாமா குடும்பம் எங்களை ஒதுக்கி வைக்க, அப்பாவும் வீம்புடன் தனித்து மேலே வந்து விடலாமென இருந்தார். அந்த விபத்தில் எல்லா கனவுகளும் சிதைந்துபோக, மாமாவிற்குப் பயந்து உதவிக்கு எந்த நெருங்கிய சொந்தமும் வராமல் அடுத்தது என்னவென நாங்கள் திக்கற்று நின்றோம்.

அப்பா என்கிற ஓர் உயிர் எங்கள் வீட்டில் குரலற்று, அசைவற்று நாங்கள் அனுபவிக்கும் எல்லாவற்றையும் பார்த்துக் கிடந்தது. குடும்பத்தின் ஒரே வருமானமும் தடைபட்டுப் போனது. அம்மாவும் பெரிதாகப் படிக்கவில்லை, எந்த வேலைக்கும் சென்றதில்லை. பதினேழு வயதில் திருமண வாழ்க்கைக்குள் வந்துவிட்டவளுக்கு அப்பாவின் முடக்கத்தைத் தாண்டி வர கதியற்று நின்றாள். கையிருப்பெல்லாம் காலியாகிவிட்ட ஓர் இரவில், அம்மா, “எதையாம் குடிச்சி செத்துருவோமா மக்கா?” என்று என்னைக் கேட்க நானும் தலையாட்டினேன். சிறிது நேரத்தில் அம்மா ஒரு தம்ளரில் ஏதோ ஒரு கசாயத்தைக் கொண்டுவந்து எங்கள் கைகளில் தந்தாள். நான் கட்டிலில் கிடந்த அப்பாவின் முகத்தையே பார்த்து நின்றேன். ‘ஏதாவது நடந்து என் அப்பா எழுந்து வந்து எங்களைக் காப்பாற்றி விட மாட்டாரா? நான் வேகவேகமாக பெரியவனாக வளர்ந்துவிட மாட்டேனா? வீடு, கார் என அம்மாவை சந்தோசமாக வைத்திருப்பேன்.. தாத்தாவையும் என்னுடன் கூட்டிக் கொண்டு இருக்க வைப்பேன்..’

“குடிச்சிரு மக்ளே.. அம்மக்கி வேற என்ன செய்யன்னு தெரில மக்ளே..” என்று சொல்லி தன் மார்பில் ஓங்கி ஓங்கி அடிக்க ஆரம்பித்தாள். தங்கையும் நானும் ஓவென அழுது அம்மாவைக் கட்டிக் கொண்டோம். கதவு தட்டும் சத்தம் கேட்டு அம்மா எங்களை அமைதிப்படுத்த சைகை செய்துவிட்டுக் கதவருகே சென்றாள். எங்களைப் பார்க்கத்தான் யாரும் வருவதில்லையே! யாராக இருக்கும்?

சென்று கதவைத் திறந்த அம்மா, “எப்பா.. எப்பா.. வந்துட்டியாப்பா? பிள்ளய கடைசியா பாக்க வந்துட்டியாப்பா?” என்று  கதறி அழுது தரையில் விழுந்தாள்.

அதிர்ச்சியடைந்து நின்ற தாத்தா, “மக்ளே. .எம்பிள்ள என்ன காரியம் பண்ண நெனச்ச மக்ளே? நா மனசுல எதோ தோனில்லா கெளம்பி வந்தேன்.. அப்பா இருக்கம்லா மக்ளே.. கெளம்பு மொதல்ல நீ.. பிள்ளைல தூக்கு..” என்றார்.

நீண்ட நாட்களாக நெல் மூட்டைகளையும் உர மூட்டைகளையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் போட்டு வைத்திருத்த தாத்தாவின் கிராமத்து வீட்டில் அப்படியாக எங்களைக் குடிவைத்தார் தாத்தா. அவரும் ஆச்சியும் எங்களோடு தங்க ஆரம்பித்தார்கள்.

***

பத்து நிமிடங்கள் வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்ததிலேயே எனக்கு நன்றாக வேர்த்து விட்டது. இதயம் ஏனோ படபடவென துடித்தது. சம்பந்தமேயில்லாமல் ஒரு மருத்துவமனையில் நான் இருப்பது போல எண்ணம் வந்தது. ஊர் முகப்பில் இருந்த முத்தாரம்மன் கோயில் வாசலில் ஒரு நிமிடம் நின்று வணங்கினேன்.

நல்லா நொறுங்கத் தின்னு மக்ளே..” என்று நள்ளி எலும்புகளை என் இலையில் குவித்து வைப்பார் தாத்தா. “ஒடம்ப நல்லா பலமா வைக்கணும் மக்ளே.. தாத்தா கூட வயலுக்கு வா.. ஒன்னொன்னா சொல்லித் தாரேன் என்னா?”

தினசரி அதிகாலையில் என்னை எழுப்பி ஆற்றிற்கு குளிக்க அழைத்துச் செல்வார். முதலில் தூங்கி வழிந்து சலிப்பாகச் செல்ல ஆரம்பித்த நான் நீச்சலடிக்கக் கற்றுக் கொண்டதில் இருந்து ஆர்வமாகச் செல்ல ஆரம்பித்தேன். பின், பொடிநடையாக நடந்து ஊரெல்லையில் இருந்த பெரிய வயலுக்குப் போவோம். வரப்புகளில் தாத்தா வேகமாகச் செல்ல, நான் பார்த்துப் பார்த்து பின்தொடர்வேன்.

“தாத்தா எப்பிடிச் செய்யேன்னு நல்லா பாத்துக்கோ மக்ளே.. நாளக்கி நீதான் செய்யணும் பாத்துக்க…”

வரப்பில் நடப்பதில் ஆரம்பித்து, உழுதல், விதைப்பு, உரம் போடுதல், பூச்சிக்கொல்லி தெளித்தல், களை பிடுங்குதல், அறுவடை, கதிரடிப்பு என எல்லா விசயங்களையும் தாத்தா செய்வதையோ இல்லை ஆட்களை வைத்து அவர் வேலை வாங்குவதையோ பார்த்துக் கொண்டே இருப்பேன். அவ்வப்போது என்னையும் சேற்றில் தள்ளிவிட்டு, “சும்மாக் கெடந்து உருளு மக்ளே.. ஒடம்புக்கு நல்லதாக்கும்..” என்பார். பத்தாவது முடிக்கும்போது விவசாயம் சார்ந்த எல்லா விசயங்களும் எனக்கு அத்துப்படி ஆகியிருந்தன.

இப்போது தாத்தாவிற்கு வலதுகை நான்தான். பெரும்பாலும் எல்லா வேலைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு அவர் ஊர் சுற்ற ஆரம்பித்திருக்கிறார். அதிகாலையில் ஆட்டோ வரவைத்து மீனாட்சிபுரம் சென்று அவல் வைத்த பழம்பொரி சாப்பிட்டு விட்டு, புத்தளத்திலோ, கணேசபுரத்திலோ இருந்து நல்ல விளமீனாகப் பார்த்து வாங்கி வருவார். தினசரி மீன் இல்லாவிடில் தாத்தாவிற்குச் சாப்பாடு இறங்காது. வெள்ளியும் செவ்வாயும் பிறகுதான். சனிக்கிழமை இரவுகளில் ஆச்சிக்குத் தெரியாமல் ஒரு குவார்ட்டரும் வறுத்த கடலையும் வாங்கிக் கொடுக்கும்போது கட்டியணைத்து ஒரு முத்தம் தருவார்.

விவசாயமோ, மற்ற பிரச்சினைகளோ, தாத்தாவிடம்தான் போய் நிற்பேன். பொறுமையாகக் கேட்டு மிகச்சிக்கலான விசயங்களையும் எளிதாக எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பார்.

“மக்ளே.. அப்பாவியா இருந்தா மொளகா அரச்சுப்புடுவானுகோ கேட்டியா? கொஞ்சம் கண் மறஞ்சா தாத்தாவையே அவிச்சிருவானுகோ.. எவன்னாலும் செரிதான்.. கணக்குன்னா கணக்கா இருக்கணும்.. என்னா?”

நான் எல்லாவற்றிற்கும் தலையாட்டி நிற்பேன்.

“நீ என்னடே, சமஞ்சப் பிள்ள மாறில்லா நிக்க.. வாயத் தொறந்து பேசாண்டாமா டேய்? பொறவு என்னத்தச் சமாளிக்கப் போற? ஒம் மாமங்காரன்ட்ட எவனாம் வாயக் காட்ட முடியுமா? அவன் என்னயே என்னான்னுலா கேக்கான்? பின்ன, எல்லாருக்கும் நம்ம பைசாதான் வேணும், நாம வேண்டாம் பாத்துக்கோ… ஒம் மாமனும் செரி, ஒன் சித்திமாரும் செரி.. எல்லாம் ஒரே குட்டைல ஊறுன மட்டைலா? ஒங்கம்மைக்கி மாத்ரந்தான் ஆளுகோ வேணும்.. அதான் கெடந்து கஷ்டப்படுகா.. அவள விட்ரக் கூடாது மக்ளே..”

***

வண்டியை நிறுத்தி விட்டு, வீட்டுக் கதவைத் தட்டினேன்.

“கருமத்த மாடு.. வீட்டுக்கு வர நேரம்..” என்று சொல்லிக் கொண்டே கதவைத் திறந்து விட்டார் அம்மா.

“ஆங்.. அது ஒங்க அண்ணன்லா.. அண்ணன் பாசம் ஒனக்குப் போக மாட்டுக்கு என்னா?” என்று சொல்லி அவளைக் கட்டிப் பிடித்தேன்.

“தள்ளிப் போ நாய.. போய்க் கைகால கழுவிட்டு வந்து சாப்டு..”

புறவாசலுக்குச் சென்று கிணற்றில் நீர் இறைக்கப் போகும்போது கிணற்றடியில் ஆச்சி உட்கார்ந்திருப்பதைப் பார்த்து ஒரு நொடி பயந்து விட்டேன்.

“ஏய் ஆச்சி.. ஒரு செகண்டு வயித்தக் கலக்கிட்டு எனக்கு.. பேய் மாறில்லா ஒக்காந்திருக்கா..”

ஆச்சி எதுவும் பேசாமல் அசைவற்று இருந்தாள்.

கைகால் கழுவியவாறே, “ஒன்ட்ட எத்தன தடவ சொல்லிருக்கேன், தாத்தாட்ட சும்மா எசலிட்டு இருக்காதன்னு? வாய வெச்சிட்டு சும்மாக் கெடக்க முடியாது என்னா?” என்று கேட்டேன்.

ஆச்சி இப்போதும் பதில் சொல்லவில்லை. தாத்தா மீது கோவத்தில் இருக்கிறாள் என்று நினைத்து, “செரி செரி, போய்ப் படு ஆச்சி.. தாத்தாட்ட நாம் பேசுகேன்..” என்றேன்.

***

அடுத்தநாள் தாமதமாக எழுந்து தாத்தாவிற்குத் தெரியாமல் ஆற்றிற்குச் சென்று குளித்துவிட்டு வீட்டில் நுழைந்தேன். பத்தயப்பிறையிலிருந்து வெளியே வந்த தாத்தா, “மக்ளே, இங்க வா..” என்று அழைத்தார்.

“என்ன தாத்தா?” என்று அவர் அருகே சென்றேன்.

என் கையைப் பிடித்து வெளியே அழைத்துச் சென்று திண்ணையில் உட்கார்ந்தார். என்னவென்று புரியாமல் நானும் அவர் முகத்தைப் பார்த்து உட்கார்ந்தேன்.

“மக்ளே.. மேக்குப் பக்க வயல்ல நெறைய கள வரும் பாத்துக்கோ. .பொறவு.. அந்த புதுத்தெங்கு நாலையும் நல்ல வளத்துரணும் என்னா?.. பின்ன, நம்ம முருகம் பயலுக்கு ஒரு பத்தோ இருவதோ அப்பப்போ கேப்பான்.. குடுக்கணும் செரியா? நம்ம கூடவே கெடக்காம்லா? நல்ல பயலாக்கும்..” என்று சொன்னவர் சிறிது நேரம் அமைதியாக நின்றார்.

“மக்ளே, போயி விளக்கு கிட்ட கொஞ்சம் பைசா வச்சிருக்கேன்..எடுத்துக்கோ, செலவுக்கு ஆகும்..” என்றார்.

“எதுக்கு தாத்தா? இப்ப என்ன செலவு?”

“மக்ளே.. தாத்தாக்குப் போறும் மக்ளே.. நீ எல்லாத்தயும் பாத்துக்கோ..” என்று சொல்லித் தழுதழுத்தார்.

“தாத்தா.. சும்மாக் கெட.. ஒனக்கு ஆச்சிட்ட நோண்டாம இருக்க முடியாது.. அவளும் பின்ன செரியான ஆளுதான? அவளுக்கும் ஒன்ட்ட எசலாமத் தூக்கம் வராத..”

நான் பேசியதை அவர் கவனித்ததாகத் தெரியவில்லை.

“மக்ளே.. வயல நல்லாப் பாக்கணும் மக்ளே.. விட்ரக்கூடாது பாத்துக்கோ.. ஒங்க ஆச்சியில்ல, எவன் வந்தாலும் விட்ரக்கூடாது.. என்னா? அது எனக்க ரத்தமாக்கும்.. நாப்பது அம்பது வேர வெச்சி வேல வாங்கதும், பருவத்துக்குப் பருவம் கோட்ட கோட்டயா நெல்லு வந்து குமியதும், தாத்தா பக்கரைல சக்கரம் சேரதும் தான் இவ்வொளுக்குத் தெரிஞ்ச வெவசாயம் பாத்துக்கோ..அது அப்பிடி லேசுப்பட்ட காரியம் இல்லல்லா டே? துண்டு நெலமா இருந்தாலும் அது நம்ம அம்மைல்லா மக்கா? நெல்லு பூக்கும்போ ஒரு வாசம் உண்டுல்லா, அது என்னன்னு நெனச்ச? பிள்ளப்பாலு நெறஞ்ச அம்மைக்க மாரு வாசமாக்கும்.. சக்கரத்துக்கா வேண்டி அத விட்டுற முடியுமா டே? தாத்தாக்கா வேண்டி இத ஒன்ன செய்யி போறும்.. நீ கெதியா இருக்க வரக்கிம் நம்ம வயல்ல  நெல்லு வெளஞ்சிட்டே இருக்கணும் என்னா?”

எனக்கு பிரச்சினை என்னவென்று புரிய சிறிது படபடப்பாக, “தாத்தா.. நீ ஒன்னும் யோசிக்காத.. இந்த ஆச்சிக்கி வேற வேலையில்ல.. மாமா எதாம் கேட்ருப்பான்.. அதாம், எல்லாருக்கும் தேவையான அளவுக்குச் செஞ்சாச்சில்லா, பொறவு என்ன?” என்றேன்.

தாத்தா கண்கள் செருக, “மக்ளே, கண்ணு இருட்டிட்டு கேட்டியா? தாத்தா மருந்தடிச்சிட்டேன் மக்ளே.. போறும்னு தோணிட்டு பாத்துக்கோ..” என்று சொல்லி சுவற்றில் சாய்ந்தார்.

திடுக்கிட்டு எழுந்து, “தாத்தா.. தாத்தா.. எந்திரி தாத்தா, ஆஸ்பத்திரிக்கிப் போவம்.. தாத்தா எந்திரி..” என்று நான் கத்த, அம்மா ஓடிவந்து என்னருகே பதறி நின்று, “என்னாச்சி மக்கா? தாத்தாக்கு என்னாச்சி?” என்றாள்.

“தாத்தா மருந்தடிச்சிட்டாம்மா.. நீ சட்டுன்னு ஒரு ஆட்டோ புடி..”

அம்மா அழுதுகொண்டே ஓட, நான் பத்தயப்பிறைக்குள் சென்று பார்த்தேன். ஒரு பாட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை நீரில் கலந்து குடித்திருக்கிறார் தாத்தா.

***

“கண்டிசன் ரொம்ப கிரிட்டிக்கல் தான் தம்பி.. பாய்சன நல்லா டைல்யூட் பண்ணிக் குடிச்சிருக்காரு.. இரத்தம் பூரா வெசம்.. முயற்சி பண்ணிப் பாப்போம்.. ப்ரே பண்ணிக்கோங்க..” என்றார் மருத்துவர். தாய்மாமா குடும்பம், சித்திமார் குடும்பம் என எல்லாரும் வந்து ஒப்பாரி வைத்து நிற்க, அம்மா ஒரு நாற்காலியில் மயங்கிக் கிடந்தாள்.

நேற்றிரவு தாத்தா வந்து சாப்பாடு போடச் சொன்னபோது, “ஆமா.. சோறு போட மட்டும் நா வேணும்.. போய்ப் போட்டுத் தின்னும்..” என்றிருக்கிறாள் ஆச்சி.

“பல்லடிச்சி ஒடச்சிருவம் பாத்துக்க.. மரியாத கெட்டுப் போவும் பொறவு..”

“ஆமாமா.. ஒடப்பீரு.. ஒடப்பீரு..”

“என்னட்டி.. வாயி நீளுகு? பேய் புடிச்சிட்டா இன்னைக்கும்?”

“எதாங் கேட்டுட்டுப் போயிராதீரும்.. பெத்த பிள்ளேளுக்கு ஒன்னுஞ் செய்ய வக்கில்ல, என்ட்ட மட்டும் நல்லா வாயி காட்டும்..”

“என்னது? ஒன்னுஞ் செய்யல்லியா? இந்த ஊருல எவம்ட்டி என்ன மாறி செஞ்சிருப்பான்? சொல்லட்டும் ஒம் மக்கமாரு, செய்யலியாம்லா! ஒத்தச்சீல உண்டுமாட்டி ஒனட்ட? இப்ப எத்தன பவுனு ஒளிச்சி ஒளிச்சிக் குடுக்க அவ்வொளுக்கு? ஒம்மவன் ஏதாம் பத்திப் போட்டானோ?”

“அவன் என்னத்துக்குப் பத்திப் போடுகான்? நானே கேக்கேன்.. இப்பவோ எப்பவோன்னு இருக்க ஒமக்கு எதுக்கு இத்தன வயலுன்னு கேக்கேன்? எல்லாத்தயும் வித்து அவ்வொளுக்குக் குடுக்க வேண்டியான? போகும்போ கொண்டுட்டுப் போகவாப் போறீரு..”

“ஓ..அப்பிடி வாம்மோ, வா.. எல்லாரும் ப்ளான் போட்டு இப்ப வயலுக்கு வெல பேசுகேளாக்கும்? வயலுன்னா சும்மா வானத்துலருந்து வந்துரும்னு நெனச்சியோ? ஒவ்வொரு துண்டும் நா ஒழச்சி உண்டாக்குனதாக்கும்.. நா இருக்க வர நடக்காதுமவள.. விக்கப் போறாளாம்லா விக்க.. செறுக்கிவுள்ள.. கொன்னு பொதச்சிப்போடுவம் பாத்துக்கோ.. ஒரு மாறி வேலயெல்லாம் என்ட்ட காட்டிட்டுக் கெடக்கப்படாது..”

அம்மா இடையில் புகுந்து சமாதானம் செய்ய முயல தாத்தா கொஞ்சம் அமைதியடைந்தாராம்.

“ஒனக்குத் தெரியாது மக்ளே.. இவாளுக்கு எவ்ளோ செஞ்சாலும் நெறயாது பாத்துக்கோ.. எல்லாம் பேராச புடிச்சக் கூய்வுள்ளயோ.. நைஸா ஒன்னையும் ஒதுக்கி வச்சவோதான.. இப்ப என் வயலு கண்ண உறுத்துகு.. அம்மக்காரிட்ட தூது விட்ருக்கா.. எப்படிப்பட்ட நெலம் இது.. இவாளுக்கு என்ன மக்ளே தெரியும்? நல்ல சொகுசா வளத்து விட்டுட்டேன்லா? அதான்… ஒரு நாளாவது ஒங்கண்ணன் வந்து நம்ம வயல்ல கால வச்சிருப்பானா சொல்லு.. எல்லாம் இவ கொடுத்த செல்லந்தான… பயல படிக்க வைப்போம்ன்னா… செஞ்சாச்சி…. அவன் ஊருல போறவ வாரவ கையப் புடிச்சி இழுத்தான்… பொறவு கண்ட தொட்டிப்பயக்க கூடச் சேந்து ரவுடித்தனம் காட்டுனான்… பெரிய மைனர் மயிருல்லா இவன்… இவனுக்கா வேண்டி எத்தன நாளக்கிப் போலீஸ் ஸ்டேசன் ஏறிருப்பேன் மக்ளே? எம் மூஞ்சிக்கா வேண்டி விட்டான்… பின்ன, நல்லாக் குடிச்சிட்டுத் தெருவுல வுழுந்து கெடக்கணும்… சொத்து எப்படி நிக்கும்னு கேக்கேன்? பொம்பளப் புள்ளயோ அதுக்கும் மேல.. என்னத்தச் சொல்ல?”

அம்மா தாத்தாவிற்கு சாப்பாடு எடுத்து வைத்திருக்கிறாள். ஆச்சியின் புலம்பல் அடங்கவில்லை.

“நல்லா முழுங்கும்… பிள்ளையோ சந்தோசத்த விட சாப்பாடு தான முக்கியம்… எப்டித்தான் எறங்குதோ? வயலு வயலுன்னு தலைல தூக்கி வச்சிட்டுத் சுத்தும்.. இப்பிடித்தான் அந்த கெழக்கு வயல பைபாசு ரோட்டுக்குக் கொண்டு போனான்… நாப்பது செண்டுல்லா, ஒன்னுல்லாமப் போச்ச… தானும் படுக்க மாட்டேன், தள்ளியும் படுக்க மாட்டேன்னா, என்ன செய்ய?”

“எட்டி, பேசாமக் கெட பாத்துக்கோ… பொறுமைக்கும் ஒரு எல்லதான்…”

“நா ஒமட்ட ஒன்னும் பேசல.. நீரு ஒம்மச் சோலியப் பாரும்… எம்பிள்ளேளுக்கு நா செய்வேன். .யார் தடுக்கான்னு பாப்போம்… ரெண்டு வயல் எம்பேர்லயாக்கும் இருக்கு… நாளைக்கே போயி எழுதி வப்பேன்… தடுத்துப் பாக்கட்டும்.. வெசத்த வச்சிக் கொன்னு போடுவேன்…”

தாத்தாவிற்கு அப்போதுதான் நினைவிற்கு வந்திருக்கிறது. சட்டென கண் கலங்கியவராக, “மக்ளே… ஏமாந்துட்டேனே மக்ளே… அப்போ இவா முன்னாடியே ப்ளான் போட்டுத்தான் அவ பேர்ல எழுதி வாங்கிருக்கா மக்ளே.. கெட்டுன பொண்டாட்டியக் கூட நம்ப முடியல்லியே மக்ளே..” என்று அம்மாவிடம் புலம்பியிருக்கிறார்.

“எப்பா. .விடுப்பா… போனா போட்டும்பா… ஒங்க ரத்தத்துல வாங்குன பூமின்னு இவாளுக்குப் புரியலல்லா? மீதி வயல்ல நம்ம வெவசாயம் பண்ணுவம்ப்பா…. போறவோ போட்டும்.. நல்லா இருக்கட்டும்…”

“வெசம் வச்சிருவாளாம்லா மக்ளே.. மனசு நல்லா நெறஞ்சு போச்சு பாத்துக்கோ…” என்று சொல்லி சாப்பிடாமல் எழுந்து திண்ணையில் சென்று படுத்திருக்கிறார்.

***

ஸ்ரீ இந்திரம் எனும் எங்கள் ஊர் நாஞ்சில் நாட்டின் நிர்வாகத் தலைமையிடமாக இருந்திருக்கிறது. மையக்கோயிலும் அதைச்சுற்றி கண்ணுக்கெட்டும் தூரம் வரை பச்சைப் பசேலென நெற்பயிர் வயல்களும் ஊடாக நீண்டு ஓடும் பழையாறுமாக செழித்திருந்த பகுதி. இன்று வண்ண வண்ண வீடுகளும் மின்கம்பங்களும் தொலைபேசி கோபுரங்களுமாக பச்சையைப் புறந்தள்ளி விரிந்து கொண்டே இருக்கிறது. ஒரே ஆறுதலாக எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் கோயில் கோபுரம்.

பூர்வீகம் தொட்டே ஸ்ரீ இந்திரத்தின் நெல் உற்பத்தியில் பிரதான பங்களிப்பு எங்கள் குடும்பத்தால்தான் என்று தாத்தா அடிக்கடி பெருமையாகச் சொல்வார். வகை வகையான நெல்விதைகளைப் பாரம்பரியம் விட்டுப் போகாமல் இன்றும் சேமித்து வைத்திருக்கிறார் தாத்தா. நிமிடத்திற்கு ஒருமுறை அவரது பேச்சில் மண்வாசம் வந்து போவதே ஒரு அழகுதான்.

“காலகாலமா சமஸ்தானத்துக்கு நம்ம வயல் அரிசிதான் போகும் தெரியுமா டே? ஸ்ரீ இந்திரக்கோயில் மூலவருக்கும் நம்ம நெல்லுதான் இஷ்டம்… சும்மா இல்ல கேட்டியா? இன்னிக்கும் மடப்பள்ளிக்கி ஒரு பங்கு எடுத்து வெச்சிட்டுதான் மத்த எடத்துக்கு அனுப்புகது… மார்கழி மாசத் தேரோட்டத்துல எவ்ளோ சனம் அன்னதானம் சாப்பிடுவான்னு நெனைக்க? எல்லாம் நம்ம நெல்லாக்கும்… இதொன்னும் புண்ணியத்துக்காச்சுட்டி செய்யதில்ல மக்ளே… நம்ம அம்ம கொடுக்கத எல்லாருக்கும் குடுத்துச் சாப்பிடுக சொகம்லா… அது குடுக்கும்போதான் புரியும்… எல்லாத்தயும் பொட்டிக்குள்ளப் பூட்டி வச்சி என்ன செய்யப் போறானுகளோ? ஒங்க மாமங்கிட்ட மட்டும் நம்ம வயல குடுத்தேன்னு வையி, சவத்துப்பய நெலத்தத் தேரியாக்கிருவாம் பாத்துக்கோ…”

தாத்தா அந்தக்கால ஓட்டுநர் உரிமம் எடுத்து சிலகாலம் அரசுப்பேருந்து ஓட்டுநராக இருந்திருக்கிறார். அது அவருக்கான நிறைவைக் கொடுத்து விடவில்லை. சேற்றில் கால்வைத்துக் கஞ்சி குடித்துக் குளத்தங்கரையில் கண்மூடும் சுகம் வேறெதில் கிடைத்துவிட முடியும்? ஆச்சி வந்து சேர்ந்ததும் எடுத்துச் சொல்லி முழுமையாக விவசாயத்தில் இறங்கியிருக்கிறார். கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் பக்குவப்படுத்திய நிலம்.

தாத்தா ஸ்ரீ இந்திர வீதிகளில் நடந்து செல்லும்போது ஒவ்வொரு வீட்டிலுமிருந்து அழைத்து உட்கார வைத்துப் பேசுவார்கள். இவரும் ஒவ்வொரு குடும்பத்தின் கதைகளைக் கேட்டு ஆலோசனைகளைச் சொல்லுவார்.

“ஏந் தாத்தா.. எதுக்கு எல்லா வீட்லயும் ஒன்னக் கூப்புடுகா? எனக்கே போரடிக்கி…ம்எத்தன கடுங்காப்பி தான் குடிக்கது?”

“மக்ளே..ம்.அது எங்கப்பன் பழக்கி விட்டதாக்கும்… இன்னா நீ எங்கூட வாரேல்லா, அப்பிடித்தான் நானும் சுத்துவேன்… இந்த ஊரு முச்சூடும் நம்ம சொந்தம்லா மக்கா… எல்லாம் ஒன்னும் மண்ணா இருந்து பழகிட்டோம்… பொறவு, நம்ம வயல்ல வெளஞ்சதத்தான் நெறைய வீட்ல சாப்பிடுகா… நம்ம என்ன யாவாரமா செய்யோம்? யாவாரம்லாம் டவுன்ல தான டேய்? நாளக்கி என்ட்ட இல்லன்னா, பத்து வீட்ல ஒக்காந்து ‘சோத்தப் போடு’ன்னு சொல்லுவேன்… நீ பொறக்கதுக்கு முந்தி நம்ம பாலத்துல ஒரு பெரிய கலகம் நடந்து தெரியுமா? எல்லாம் வயல் வேல செய்ய ஆளுகோதான்… லீடர் யாரு தெரியும்லா? தாத்தாவாக்கும்… அப்போ சும்மா ஜம்முன்னு பீமன் மாதி இருப்பேன்.. போலீஸ்காரன் வந்து கொன்னு போடுவேன்னு மிரட்டுகான்… அவனால நெருங்க முடியுமா மக்ளே? இந்த மக்கதான கூட நின்னா! ஒரு சவடால் போலீஸ்காரன் தாத்தாட்ட கைய ஓங்கிட்டான்… நம்ம பயக்க அவனத் தூக்கி ஆத்துல போட்டு ஒரே பெகளம்… அதெல்லாம் ஒரு காலம்…”

எல்லாம் தாத்தாவின் பூர்விகச் சொத்தான நான்கு மரக்கா வகைப்பாடு நிலத்தில் ஆரம்பித்தது. இன்று நான்கு சித்திகளுக்கும் ஆளுக்கொரு வீடு, தோப்பு, மாமாவுக்கு ஸ்ரீ இந்திரத்து சந்நிதித் தெருவில் ஊரிலேயே பெரிய வீடு, பழையாற்றங்கரையில் இரண்டு தென்னந்தோப்புகள், இது போக தங்கம், வெள்ளி, லட்சக்கணக்கில் பணம் என இத்தனையும் செய்ய இந்த ஒரு மனிதனால் எப்படி முடிந்தது?

ஒருநாள், “மக்கா, எல்லா பேரன், பேத்தி பேர்லயும் கொஞ்சங்கொஞ்சம் பேங்க்ல போட்ருக்கேன்… அவ்வோ படிப்புச் செலவுக்குப் பொறவு எடுத்துக்கட்டும்… பின்ன, இவன் என் செல்லக்குட்டில்லா? இவனுக்கு ஒன்னு ஸ்பெசலா உண்டும்… அது.. ஒரு நாளு சொல்லுவேன் என்ன….” என்று அம்மாவிடம் சொன்னார் தாத்தா.

நான் பலமுறை என்னெவென்று கேட்டும் தாத்தா பதில் சொன்னதேயில்லை. இப்போது நான் யாரிடம் போய்க் கேட்பது?

‘எனக்குத் தர வேண்டிய பரிசத் தராம போயிரலாம்னு பாத்தியா தாத்தா? நீ சொன்னேன்னு தான வெளிநாட்டுக்குப் போகாம இங்கயே இருந்தேன்? என் ஃபிரண்ட்ஸ்லாம் எவ்ளோ ஓட்டுகானுகோ தெரியுமா? பொழைக்கத் தெரியாத பய, இவ்ளோ படிச்சிட்டு வெவசாயம் பண்ண வந்துட்டான்னு… நீ பாட்டுக்கு மருந்தடிச்சிட்ட? ஆச்சிக்கி நாளு அறைய வுட்டா சும்மாக் கெடந்துருப்பால்லா தாத்தா? நாளைக்கி பிரபு ஹோட்டல் பிரியாணி வாங்கித் தா மக்ளேன்னு கேட்டேல்லா? இப்பிடி கிறுக்குத்தனம் பண்ணிட்டியே தாத்தா…’

***

“ஒங்க தாத்தா என்ன வேல செஞ்சாரு தம்பி?” என்று கேட்டார் மருத்துவர்.

“வெவசாயந்தான் டாக்டர்… ஏன் டாக்டர்?”

“இல்லப்பா, அவரு குடிச்ச பாய்சனுக்கு ஒருநாள் கூட தாங்காது… இந்த மனுசன் பத்து நாளா போராடிட்டு இருக்காரே! தப்பான முடிவு எடுத்துட்டோம்னு அவருக்கே தோணிட்டோ என்னமோ! செரி, பாப்பம்… கடவுள் விட்ட வழி…”

***

மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டுக் கட்டிலில் சற்று சாய்ந்தேன். அம்மா பரபரப்பாக என்னருகே வந்தாள்.

“மக்ளே, ஃபோன் வந்துட்டே இருந்து.. யாருன்னு பாரு…” என்று என் ஃபோனை நீட்டினாள். இந்த அழைப்பைத் தவிர்க்க எவ்வளவு வேண்டிக் கொண்டேன்.

“எத்தான்…முடிஞ்சிட்டு…” என்று சொன்னான் மாமா மகன்.

‘பாவிகளா? எந் தாத்தாவக் கொன்னுட்டேங்களே! முடிஞ்சிட்டு என்ன டே? நீங்கள்ளாம் நல்லாவே இருக்க மாட்டியோ… சாப்பாட்டுக்கு வழியில்லாமத் தெருவுல வந்து நிப்பியோ பாருங்கல… பிச்சக்காரப் பயக்களா… முடிஞ்சிட்டுன்னுல்லா சொல்லுகான்…’

அம்மா ஓவென அலறிக் கீழேவிழ தாத்தாவை அழைத்து வர ஓடினேன்.

***

அவர் செய்த ஒரு நல்ல விசயத்தைக் கூட கண்டுகொள்ளாத ஊடகங்கள் ‘முதியவர் தற்கொலை.. விவசாயத் தற்கொலையா?’ என்று செய்தி பரப்பினார்கள். பிரேதப்பரிசோதனை செய்தே தீர வேண்டும் என போலீஸ்காரர்கள் மல்லுக்கட்ட, என்னால் சகிக்க முடியாமல் மருத்துவமனையை விட்டு ஓடினேன்.

அன்று மாலை, வீட்டு முற்றத்தில் இறுதிச்சடங்கிற்காக என் தாத்தாவை ஒரு வெள்ளைத் துணியில் சுற்றி ஒரு பொட்டலமாகக் கிடத்தியிருந்தார்கள். என்னால் அழ முடியவில்லை. கையில் கிடைப்பதை வைத்து இவர்களையெல்லாம் துண்டம் துண்டமாக வெட்டி விடலாம் எனத் தோன்றியது.

ஆச்சி வந்து தலைவிரிகோலமாய் தாத்தாவின் மீது விழுந்து அழுது புரண்டாள். என்னால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை. ஓடிச்சென்று அவளது தலைமுடியைப் பிடித்துத் தூக்கி, “எந்தாத்தாவக் கொன்னுட்டேல்லா  நாய.. நாய… நீ சாக வேண்டிய தானட்டீ பிச்சக்காரி…” என்று கத்தி அவள் முகத்தில் மாறி மாறி அடித்தேன். மாமா வந்து இடையில் விழுந்து தடுக்க, அவனது கன்னத்தில் அறைந்து தள்ளி விட்டேன்.

“ராஸ்கல்… கொன்னுருவேன்… ஓடிரு.. எம் மூஞ்சில முழிச்சிராத… நீயெல்லாம் ஒரு மனுசனா ல? பெத்த அப்பன விட ஒனக்குப் பணந்தா முக்கியமாப் போச்சி.. என்ன ல? வயல்ல எவனாம் கைய வச்சிப் பாருங்க ல… கண்ட துண்டமா வெட்டிப் போடுவம்… எவம்னாலும் செரிதான்…. மாமன்… மண்ணாங்கட்டி… தூ…”

நண்பர்களும் அம்மாவும் வந்து என்னைப் பிடித்து விலக்கிக் கொண்டுபோக, நெருப்பில் வெந்து கரைந்தார் என் தாத்தா.

***

அடுத்த நாள் சுடுகாட்டிற்குச் சென்று தாத்தாவின் எலும்புகளைப் பாலும் தேனும் விட்டுக் கழுவி, கூடவே கொஞ்சம் சாம்பலையும் எடுத்தேன். அஸ்தியைக் கன்னியாகுமரிக் கடலில் கரைப்பது வழக்கம். என் தாத்தா அப்படிக் கரைய வேண்டியவரல்ல. ஊரெல்லைக்குச் சென்று அவரது பெயரிலிருந்த வயல் முழுதும் அவரது அஸ்தியைத் தூவி விட்டேன்.

எல்லாம் முடிந்து விட்டது. என் என்ஃபீல்ட்டில் பின்னிருக்கையில் உட்கார்ந்து ‘மெதுவாப் போ டே… பெரிய மத்தவம் மாறி போகாத…’ என்று சொல்ல இனி யார் இருக்கிறார்கள்? தாத்தாவின் போட்டோவிற்கு பூச்சரத்தைப் போட்டு வணங்கி நின்றேன்.

அம்மா வந்து கண்கலங்கி நின்றாள்.

“மக்ளே, தாத்தா என்ன செஞ்சிருக்கா பாரு..” என்று சொல்லிக் கண்கலங்கி என் கையில் அந்தக் காகிதங்களை வைத்தாள்.

அவர் பெயரிலிருந்த அத்தனை வயல்களையும் என் பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என உயில் எழுதி வைத்திருந்தார் தாத்தா.

***

சுஷில்குமார் நாகர்கோயிலைச்சேர்ந்தஇவர்.கிராமப்புறமாணவர்களின்மாற்றுக்கல்விசார்ந்தஆசிரியப்பயிற்சிமற்றும்பள்ளிகள்மேலாண்மைப்பணிகளைகோவையில்இருந்துசெய்துவருகிறார்.தொடர்புக்கு -sushilkumarbharathi2020@gmail.com