Home Blog Page 66

ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு -3

0

ரூபன் சிவராஜா

கட்புலனாகா அரங்கு (Invisible Theatre)

***

இதற்கு முந்தைய / பிற பதிவுகளை வாசிக்க இங்கே அழுத்தவும்

வெற்றி தோல்விக்கான இடைவெளி சொற்பம்!

கட்புலனாகா அரங்கில், அதன் முதன்மைப் பாத்திரங்கள் பாதுகாப்புக் காரணங்களால் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் அவ்விடத்திலிருந்து வெளியேறி விடுவர். மீதமுள்ள பாத்திரங்களும், அவதானிகளும் எடுத்தாளப்பட்ட பேசுபொருளை மேற்கொண்டு விவாதித்துச் செயற்படுவர்.

கட்புலனாகா அரங்கு முற்றுமுழுதாக வெற்றியடையலாம் அல்லது படுதோல்வி அடையலாம். இரண்டுக்குமான இடைவெளி மிகக்சொற்பம். எந்தக் கட்டத்தில் மக்கள் தலையிட்டுக் கருத்துக்கூறுவர் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. அது நடைமுறைச் சாத்தியமில்லை. சில சம்பவங்களில் எவருமே தலையிட மாட்டார்கள். பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல், எதுவும் செய்யாமல் அப்படியே கடந்துபோகவும் கூடும்.

எனவே ஒரு எழுத்துரு தயாரிக்கப்பட்டு, ஒத்திகை பார்க்கப்பட்டால் மட்டும் ஒரு கட்புலனாகா தியேட்டர் நிகழ்த்துவதற்குத் தயார் என்று அர்த்தப்படமாட்டாது. முன்தயாரிக்கப்பட்ட நாடகம் நிகழ்த்தப்படும் போது, இடையில் ஏற்படக்கூடிய திருப்பங்கள் பிரதி எழுத்துருவின் போதும் ஒத்திகையின் போதும் கவனம் கொள்ளப்பட வேண்டும்.

மாற்றுக் காட்சிகளும் முன்தயாரிப்பும்

அதற்குரிய வகையில் மாற்றுத் திருப்புமுனைக் காட்சிகள், உரையாடல்கள் எழுதப்பட்டு, ஒத்திகை பார்க்கப்பட்டிருத்தல் அவசியம். அவ்வாறு மாற்றுக் காட்சிகள் ஒத்திகை பார்க்கப்பட்ட நிலையிலும் எதிர்பாராத திசையில் செல்லக்கூடும். ஆயினும் நிகழ்த்தலின் போது நேரக்கூடிய மாற்றங்களை நுணுக்கமாகப் பகுப்பாய்வு செய்யும் பட்சத்தில் நாடகத்தினை கட்டுப்பாடு மீறாமல் அதன் நோக்கத்தை அடைய முடியும். இங்குதான் முன்தயாரிப்பிற்குப் போதிய நேரமும் வளங்களும் செலவிடுவது இன்றியமையாததாகின்றது.

அதனை வெற்றிகரமாக நடாத்துவதற்கு அவசியமான மற்றுமொரு விடயம், இதன் பேசுபொருள் ஆற்றுகையாளர்களுக்கு பரிச்சயமானதாக  அமைதலாகும். அவர்கள் அனுபவித்த ஒடுக்குமுறையின் அம்சத்தினைத் தெரிவு செய்வது பொருத்தமிக்கது. அந்தச்சூழலில் கூடியுள்ள மக்கள் இது தமது சொந்தப் பிரச்சினை என்று உணரும் வகையில் பேசுபொருளின் மையப்புள்ளி இருத்தல் வேண்டும். அத்தகைய தெரிவென்பது தம்மைச் சுற்றி நடப்பவை தொடர்பான விழிப்புணர்வினை பார்வையாளர்களுக்கும் , ஆற்றுகையாளர்களுக்கும் வழங்குகின்றது.

பேசுபொருள் தெரிவு

பெரிய வடிவத்திலான ஒடுக்குமுறையாக இருக்க வேண்டுமென்ற அவசியம் கூட இல்லை. நாளாந்த வாழ்வின் சிறிய விடயங்களையும் முன்னெடுக்கலாம். இது கட்புலனாகா அரங்கத்திற்கு மட்டுமல்ல. Forum-தியேட்டர் உட்பட்ட ஒடுக்கப்பட்டடோருக்கான அரங்கின் ஏனைய கூறுகளுக்கும் பொருந்தும். உளவியல் ஒடுக்குமுறை, தனிமைப்படுத்தல் ஒடுக்குமுறை, குடும்ப வன்முறை, ஒருவரின் சுயமரியாதைக்கு எதிரான செயல், ஒருவரைப் பாரபட்சமாக நடாத்துதல், தனிநபர் சுதந்திரம் உட்பட்ட சுபிட்ச வாழ்வுக்கான தடைகள் என சிறிய விடயங்களையும் இதன் பேசுபொருளாக கையாளலாம்.

பாரிய அதிகார வன்முறைகள், சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்ப்பது போல், சமூகத்தின் அக-ஒடுக்கு முறைகளையும் தீவிரமாக எதிர்க்க வேண்டுமென்பது Boal-ன் உறுதியான நிலைப்பாடு. காலம்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் சம்பிரதாயங்கள் (பிற்போக்கான) மீது கேள்வியெழுப்புவது, அவற்றைத் தலைகீழாக மாற்றுவது என்ற நோக்கு நிலையில் அவர் சிந்தித்தார்.  அவ்வாறானதொரு தலைகீழ் உலகத்தை எதிர் கொள்வதன் மூலம் மூளையில் பதியப்பட்ட பிற்போக்கான சம்பிரதாயங்கள் தொடர்பான சிந்தனை மாற்றத்தினைத் தூண்டுகின்ற அரங்கியல் வடிவமாக இதனை முன்னிறுத்துகின்றார்.

சுயஒடுக்குதலுக்கு வழிகோலும் சடங்குபூர்வச் சிந்தனை

Boal-ன் கருத்தியல் நிலைப்பாட்டில், சடங்கு (Ritual) என்பது ஒரு எதிர்மறையான சொல். Ritual மற்றும் Rites இரண்டையும் வேறுபடுத்திப் புரிந்து கொண்டவர் அவர். Rituals என்பவை இறுக்கமானவை. இயந்திரத் தன்மையுடையவை. நம்மை நாமே ஒடுக்குகின்ற சுய-ஒடுக்குதலுக்கு வழிகோலுபவை என்பது அவரின் வாதம். சடங்குபூர்வமான சிந்தனையும் மனப்பான்மையுமே பழக்கப்பட்ட அந்தந்த விடயங்கள் அப்படியப்படியே இருக்க வேண்டும், பேணப்பட வேண்டுமென்று மனிதர்களை வழி நடத்துகின்றன. அவை பிரச்சினைகளுக்குரிய தீர்வினைக் கண்டடையத் தடையாகவுள்ளன.

காலப்பொருத்தம், தேவை, சூழல் பற்றிய மீளாய்வுகளின்றிக் காலங்காலமாகப் பின்பற்றி  வருவதைக் கேள்விகளின்றிப் பேணுவதையே இங்கு எதிர்மறையான அர்த்தத்தில் சடங்கு என்று குறிக்கப்படுகின்றது. பெரும்பாலானவை மதம் சார்ந்த நடைமுறைகளோடு தொடர்புடையவை. இன்னும் சில பண்பாட்டு வாழ்வியலோடு தொடர்புடையவையாகவும் உள்ளன.

சடங்குகள், சம்பிரதாய நடைமுறைகளிலுள்ள ஒடுக்குமுறை அம்சங்களை உடைப்பதும் கட்புலனாகா தியேட்டரின் நோக்கங்களில் ஒன்று.  அத்தகைய பிற்போக்குச் சடங்குபூர்வ சிந்தனைகளிலிருந்து விடுபடுவதற்கு அடிப்படை முதலில் அவை யாவென அடையாளம் காண்பதாகும்.

கட்புலனாகா அரங்கு: கொள்கை, தார்மீக ஆட்சேபனைகள்

கட்புலனாகா தியேட்டர் தொடர்பாக தார்மீக அடிப்படையிலான ஆட்சேபனைகள் சில மட்டங்களில் உள்ளன.  இதிலுள்ள இரகசியத்தன்மை தொடர்பான ஆட்சேபனைகள் அவை. அதாவது,

– இதனை நாடகமென எவருக்கும் தெரியாத வண்ணம் நிகழ்த்துவது

– இந்த வடிவத்தின் நிகழ்முறையில் ஒரு வெளிப்படைத்தன்மை இல்லாமை

– இதன் முரண்பாட்டுச் சூழ்நிலையில் நடித்த நடிகர்கள் நாடகம் முடிந்த பின்னாட்களில் ஒன்றாய் காணப்படுவதைத் தவிர்த்தல் அல்லது அது தொடர்பாகக் கவனமாக இருத்தல்

– நாடகம் முடிந்த பின்னர், நடிகர்கள் ஒருவகை அசவுகரியத்தை எதிர்கொள்ள நேர்தல்

கொள்கை நிலைப்பட்ட ஆட்சேபனைகளும் சில மட்டங்களில் இந்த அரங்க வடிவம் தொடர்பாக உள்ளது. அதாவது மக்கள் கூடும் ஒரு இடத்தில், தமது சுயத்திற்கு மாறாக இன்னொருவராக (வேறொரு பாத்திரமாக) மக்கள் கூடுமிடத்தில் நடந்து கொள்வதென்பது நடிகர்களுக்கு அசவுகரியத்தைக் கொடுக்கக் கூடியது.

மேடை நடிகர் – கட்புலனாகா ஆற்றுகை நடிகர்

மேடையில் ஒரு நடிகராகத் தோன்றும் போது இந்தச் சிக்கல் இல்லை. பார்வையாளருக்கும், நடிகருக்குமான உறவு நிலை என்பது முன்னறிவிக்கப்பட்ட ஒன்று. ஏற்றுக் கொள்ளப்பட்ட பாத்திரத்தை நடிகர் மேடையில் நிகழ்த்துகிறார் எனும் இயல்பான புரிந்துணர்வு பார்வையாளருக்கு இருக்கின்றது. தானாக இல்லாமல் இன்னொருவராக ‘முகமூடி’ அணிந்திருக்கிறேன் என்பதை நடிகரும் தன் பார்வையாளருக்கு தெளிவுபடுத்தி விடுகின்றார்.

4

கட்புலனாகா தியேட்டரில் இந்த நடிகர்-பார்வையாளர் உறவு முற்றிலும் தலைகீழானது. அங்கு வேறொரு பாத்திரத்தை நடிகர் ஏற்றிருக்கின்ற போதும், பார்வையாளர்களுக்கு அது தெரிந்திருப்பதில்லை. இந்த நிலை சில நடிகர்களுக்கு உணர்வுரீதியான, தார்மீக ரீதியான மற்றும் கொள்கை ரீதியான சங்கடத்தைக் கொடுக்கக் கூடியது. ஆகையினால் நாடகம் முடிந்த பின்னர், வெளிப்படையாக மக்களுக்கு அதனை நாடகமென அறிவிப்பது தார்மீக அடிப்படைக்கு வலுச்சேர்க்கும் என்ற வாதமும் உள்ளது.

ஒடுக்குமுறைக்கு உட்படுத்துபவராகப் பாத்திரமேற்பவர் பொதுத்தளத்தில் தொடர்ச்சியாக அப்படியான ஒரு சிந்தனையுடைய மனிதராகப் பார்க்கப்படுவதற்கும், அணுகப்படுவதற்குமுரிய சூழல் நடிகரைப் பொறுத்தமட்டில் அசவுகரியமானது.

சவால் நிறைந்த வடிவம்

ஏனைய நாடக வடிவங்களிலிருந்து இது முற்றிலும் வேறுபடுகின்றது. முன்னறிவிக்கப்பட்ட வடிவங்கள் போல் பாத்திரமென்ற ‘முகமூடி’க்குபின் ஒளிய முடியாது. இதில் நடைமுறை யதார்த்த ஒழுங்குக்கு அமைய நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

ஆகையினால் இது சவால் நிறைந்த வடிவம். அதனைக் கையாள்வோர், அதில் ஈடுபடுவோரிடமிருந்து மிகுந்த பொறுப்பு, நேர்மையைக் கோருகின்ற வடிவமாகும். அவ்வாறான பங்கேற்பாளர்களினால் தான் இந்த வடிவத்தின் தார்மீகப் பொறுப்பினைப் பேணமுடியும்.

முன்தயாரிப்பின் போது ஒரு புனைவு நிலையிலிருக்கும் கட்புலனாகா தியேட்டர் நிகழ்த்தப்படும்போது யதார்த்தத்திற்கு மாறுகின்றது. ஒடுக்குமுறைக்கெதிரான நிகழ்கலை வடிவமாகவும் மறுபுறத்தில் நாடக மரபை உடைக்கும் வடிவமாகவும் பார்க்கக்கூடியது.

கட்புலனாகா தியேட்டர் பிறந்த கதை

1971இல் பிரேசிலின் இராணுவ ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட Boal விடுதலைக்குப் பின்னர் அர்ஜென்டீனாவினைத் தளமாகக் கொண்ட 5 ஆண்டுகால புலப்பெயர்வு வாழ்வுக்குள் நிர்ப்பந்திக்கப்பட்டார். அர்ஜென்டீனாவிலும் அது இராணுவ ஆட்சிக்காலம். பிரேசிலைப் போலவே மக்கள் மீதான ஒடுக்கு முறைகளும், தடைகளும் நிலவிய ஒரு வாழ்வியல் சூழலே கட்புலனாகா தியேட்டரின் வடிவ உருவாக்கத்திற்கு வழிகோலியது. அதாவது ஒடுக்கப்பட்டோருக்கான தியேட்டரினை வெளிப்படையாக நடாத்துவதற்கு இராணுவ ஆட்சிச்சூழல் இடமளிக்காத புறநிலையில் நாடகமெனக் கண்ணுக்குப் புலப்படாத வகையில் புதிய நாடக வடிவத்தை கண்டடைய வேண்டியிருந்ததன் பெறுபேறாக கட்புலனாகா தியேட்டரினை Boal தோற்றுவித்தார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் நேரடியாக நாடக ஆற்றுகைகளில் பங்கேற்கவில்லை. நாடகம் நிகழ்த்தப்படும் இடத்திற்கு அருகில் ஒரு உணவகத்திலோ, அல்லது வேறொரு இடத்திலோ நின்றபடி அவர் நாடகத்தினையும் அதன் நகர்வையும் அவதானித்து வந்துள்ளார். கைது மற்றும் பிரேசில் ஆட்சியாளர்களிடம் கையளிக்கப்படக் கூடிய ஆபத்துகளை அவ்விதம் அவர் தவிர்த்தார்.

ஐரோப்பாவில் Boal-ன் அரங்கச் செயற்பாடுகள்

1970-களில் லத்தீன் அமெரிக்காவின் அரசியல் சூழல், Boal-ன் அரங்கச் செயற்பாடுகளுக்கு பெரும் நெருக்குவாரங்களை (ask author)ஏற்படுத்தியது. இப்புறநிலையில் 1976-ல் அவர் ஐரோப்பாவிற்கு தற்காலிகமாக புலம்பெயர்கிறார். முதல் ஓரிரு ஆண்டுகள் போர்ச்சுக்கல்லிலும் பின்னர் பாரிசிலுமாக மொத்தமாகப் பத்தாண்டுகள் ஐரோப்பிய வாழ்வு அமைகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கினை அறிமுகப்படுத்துவதிலும், அதனை அடுத்தடுத்த படிநிலையில் வடிவமாற்றத்திற்கு வளர்த்துச் செல்வதிலும் தனது சக்தியைச் செலவிட்டார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நிரந்தர அரங்கச் செயற்பாட்டுக் குழுவினை அமைத்து, ஐரோப்பாவில் ஸ்கன்டிநேவிய நாடுகள் உட்பட்ட பல்வேறு நாடுகளில் அரங்கவியல் பயிற்சிப் பட்டறைகள், கருத்தமர்வுகள், வகுப்புகள், அரங்கச் செயற்பாடுகளை முன்னெடுத்தார்.

ஐரோப்பிய சமூக, பண்பாட்டு, அரசியல் சூழலுக்கு ஏற்ப ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கினை அறிமுகம் செய்து பரவச் செய்தார். மக்கள் மத்தியில் அவதானித்த ஒடுக்குமுறை மூலங்களைக் கருத்தில் கொண்டு நுட்பமான வடிவத்தை அறிமுகம் செய்வதில் பிரக்ஞை கொண்டிருந்தார். லத்தீன் அமெரிக்கச் சூழலில் அவரது அரங்குகள் என்பது அரசியல், இராணுவ, பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பேசுபொருளை முக்கியப்படுத்தின.

ஐரோப்பியச் சூழலில் சுய-ஒடுக்குமுறைக்கு எதிரான விழிப்புணர்வு முதன்மைப் பேசுபொருளாக அவரால் உணரப்பட்டது. தனிநபர்கள் மற்றும் சமூகக் கூட்டுளவியலில் வேரோடியிருந்த சடங்குபூர்வமான குறுகிய சிந்தனைகள் தொடர்பான அம்சங்களை ஒடுக்குமுறைக் கூறுகளாக அடையாளம் கண்டார். சுய வெளிப்பாட்டிற்கும் சுதந்திரத்திற்குமான எல்லைக் குறுக்கத்தைத் தகர்ப்பதற்கான கருவியாக ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கச் செயற்பாடுகள் கையாளப்பட்டன.

***

தொடரின் முந்தைய பகுதிகளைப் பார்க்க இங்கே அழுத்தவும்

***

ரூபன் சிவராஜா

தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது.

ரவி குட்டன்

0

இன்று உலக யானை தினம்.. தன்னுடைய 11 பிள்ளைகளுடன் அப்பா வளர்த்திய ரவிகுட்டன் என்ற செல்ல யானையை நினைவுக்கூறுகிறார் டா. குஞ்ஞம்மா ஜார்ஜ்.

என் அப்பாவுக்கொரு யானை இருந்தது. அது சத்தியமாக, ‘பஷீர் காக்காவின்’ குழியானை மாதிரியல்ல. உற்சவங்களுக்குப் போவதற்கும் மரத்தடி இழுப்பதற்கும் மற்றுமாக ஒரு யானையை வாங்கத் திட்டமிட்ட அப்பா என் அண்ணனையும் அழைத்து யானைகளை ஏலமிட்டு விற்கும் இடத்திற்குச் சென்றார். இது 55 வருடங்களுக்கு முன்பு நடந்தது . அங்குத் தாயின் பால் குடித்து ஜோராகத் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குட்டி யானை ஒன்று இவர்களை வசியப்படுத்த பேரம்பேசி, சொன்னதுக்கு அதிகமான பணம் கொடுத்து வாங்கி அழைத்துவந்தார். ரவிக்குட்டன் என்ற செல்லப்பெயரில் எங்கள் பெற்றோர்களின் 12 வது மகனாக ரவீந்திரன் வீட்டு முற்றத்தில் லாரியில் வந்திறங்கினான். ஊர்க்காரர்கள் சாட்சியாக முற்றத்தில் இறங்கிய ரவி அன்று முதல் எங்கள் கிராமக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டான்.

அவனை நான் முதலில் பார்த்தப்போது உடல் முழுக்க ரோமம் நிறைந்து, கறுப்புக்கும் ப்ரவுனுக்குமிடையே ஆன நிறத்தில் இருந்தான். தந்தங்களின் இடத்தில் சிறு மல்லிகை மொட்டுகளைப்போல் வெளியே வர துடித்து நிற்கும் தந்தநுனிகள். எருமையை விடக் கொஞ்சம் பெரிய உருவம் . அதுதான் ஒன்றரை வயது ரவிக்குட்டன்.

யானையை வளர்த்துவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. நல்ல செலவுண்டு. நான்கோ ஐந்தோ பாகர்களுக்குச் சமைத்துப் போடணும். ரவிக்கு வயிற்று வலியோ வேறு ஏதாவது நோயோ வந்தால் அந்தக்காலத்திலேயே பத்தாயிரத்திற்கும் மேல் செலவாகும் . ஆனால் அப்பா அதையெல்லாம் கண்டுக்கவே இல்லை. எங்கள் குடும்பத்தின் அத்தனை செல்வ செழிப்புக்கும் காரணம் ரவிதான் என்று சொல்லுவார் எங்களையும் சொல்லவைத்தார். என்னுடைய மருத்துவப் படிப்புக்குமானச் செலவும் ரவியின் அக்கவுண்டிலிருந்துதான். கல்லூரியில் இவன் பெயரில் என்னை அதிகமாகவே ராகிங் செய்தார்கள் மட்டுமல்ல என் பெயருடன் யானை என்றும் சேர்த்துவிட்டார்கள்.. நல்ல விஷயம்

யானைகளின் ஞாபக சக்தியைப் பற்றிச் சொல்லித்தான் ஆகவேண்டும். பல மாதங்களுக்குப்பின் வீட்டுக்கு வந்தேன். முற்றத்தில் என் கண்முன்னே ரவி. உள்ளே போகவே விடவில்லை . அன்புடன் கொஞ்சி விளையாடுகிறான். பாகன் எவ்வளவு சொல்லியும் அசையவில்லை . ‘குட்டன் போ’ என்று சொன்னதும் புரிந்துவிட்டது. என் சகோதரர்கள் எல்லோரும் அனுபவித்திருக்கிறோம். அவனின் செல்லக் குறும்புகளை..

யானைகள் உணர்வுமிக்க உயிர்கள். என் அண்ணாவின் மூன்றரை வயது மகன் இறந்துவிட்டான். அவன் உடலை வைத்திருந்த அறையின் வெளியே நின்று, சிறுவனான ரவிக்குட்டன் அழுதான். அவனுக்குக் கொடுத்த சாதத்தை அவன் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. குழந்தைகளுடன் விளையாடுவது என்பது அவனுக்கு அவ்வளவு பிடிக்கும்

எங்களைவிட எங்கள் அப்பாவுக்கு ரவியைத்தான் பிடிக்குமோ என்று நான் சந்தேகித்ததுண்டு. சில திருவிழாக்கள் முடிந்து உறக்கமில்லாமல் வீட்டுக்கு வந்தால் அப்பாவின் கையை இறுகப் பிடித்து அவன் அயர்ந்து உறங்குவதைப் பார்த்திருக்கிறேன். அவனுக்கும் அப்பாவுக்கும் அப்படியான ஒரு பாச கெமிஸ்ட்ரி . அப்பா இறப்பதற்கு முந்தைய இரவு என்னிடம் சொன்னார். “நாளை காலையில் ‘மேலுகாவுக் கோவில்’ திருவிழாவில் பங்கேற்கும் ரவியைப் பார்த்துவிட்டு டாக்டரை பார்க்கப் போவோம்” என்று. ஆனால் அவரின் கடைசி ஆசை நிறைவேறவில்லை.

அப்பாவின் உடலைப் பார்த்துவிட்டு முற்றத்தில் வந்து அவர் உடலுக்கு ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து உச்சத்தில் கதறி அழுத்த ரவியைப்பார்த்து அங்குக் கூடியிருந்த அனைவரும் கதறி அழுதனர். பல நாட்கள் உண்ணாமல் இருந்த ரவி depression க்குள் போய்விட்டான். நாங்கள் பல லட்சங்கள் செலவு செய்து எப்படியோ காப்பாற்றிவிட்டோம். அதற்குப் பிறகு என் சகோதரர்கள் ரவியை, ‘கொல்லத்தில்’ உள்ள ஏதோ கோவிலுக்கு அனுப்பினர் . நான் பார்க்கவே போகவில்லை. என் பால்யகாலக் கூட்டுக்காரனாயிற்றே.. என் மனம் தாங்குமா.. தினமும் ஓர் உருண்டைச் சோறு அம்மா கொடுப்பாள். அம்மா அவன் பிரிவை எப்படித்தான் தாங்கினாளோ ..

யானைமீது அதீதப் பைத்தியமான என் மூன்றாவது அண்ணனின் மகன் ஜோஷி ரவியைப்பற்றியான தகவல் ஒன்றைச் சொன்னான், அவன் இப்போது திருவனந்தபுரத்திலுள்ள ஒருவரிடம் இருக்கிறான் என்று. பார்க்கவேண்டும் என்ற விருப்பத்தைச் சொன்னதும் ‘உடனே கிளம்புங்கள் ஆண்ட்டி’ என்கிறான். நடக்குமா என்று தெரியாது.

இன்று உலக யானை தினம். யானைகளின் உரிமைகளைப்பற்றியான விழிப்புணர்வு தினம். யானைகளைக் காட்டிலேயே வாழ விடுங்கள். பாகர்களின் அடி உதை , அங்குசத்தால் கிடைக்கும் குத்து போன்ற வதைகள் அவர்கள் ஏன் அனுபவிக்க வேண்டும். பட்டிணி போடுவது, நோய் வந்தால் அவர்களுக்குச் சுத்தமாக ஒவ்வாத nonveg சேர்த்த மருந்துகளைக்கொடுப்பது, ரொம்பத் தூரம் டார் சாலைகளில் நடையாகக் கொண்டு செல்வது, திருவிழாக்களில் உறக்கமில்லாமல் வேலைசெய்வது போன்ற கொடூரமானவற்றை ஏன் சகித்துக்கொள்ள வேண்டும். இதுதான் என் கருத்து.

யானையை வளர்த்துபவர்களில் ஒரு சிலர் நல்லவராக இருக்கலாம். சில பாகர்களும் . ரவிக்குட்டன் வந்ததினால் என் இளமைக்காலம் மிகவும் மகிழ்ச்சியாகவே கழிந்தது. ‘மாதங்க லீலா’ என்ற யானைகள் பற்றியான நூலைப் படித்திருக்கிறேன். யானைகளின் லட்சணங்களை வைத்து நல்ல யானைகளைக் கண்டுபிடிக்கத் தெரியும் . என் பெரியப்பாவின் வீட்டில் சுலோச்சனா என்ற பெண்ணானை இருந்தது . அவள் ஆடுவதைப் பார்த்திருக்கேன். நீலக்குறிஞ்சி மலர்வதைப்போன்ற ஒன்று பெண் யானைகளின் நடனம்.

யானைகள் மீது எனக்கு இப்போதும் அதீத நேசமுண்டு

அன்புடன் அனைத்து யானை நேசிகளுக்கும்

டா. குஞ்ஞம்மா ஜார்ஜ்

(மாத்ருபூமி இதழில் பெரிதும் கவனிக்கப்பட்ட யானைகள் தின பதிவு தமிழில்)

ரமேஷ் பிரேதன் நேர்காணல் – பகுதி – 01

0

உரையாடல் – சித்ரன், லஷ்மி சரவணக்குமார், முருகபூபதி, சபரிநாதன், சூர்யதேவ்

ஒருங்கிணைப்பு – சித்ரன்

சபரிநாதன் : நீங்கள் எந்த நூற்றாண்டில் வாழ்கிறீர்கள்? உங்கள் ஊர் எது?

மூளைக்குள் புறப்பொருள் அறிதல் சேகரமாகி, அதிலிருந்து மொழி முளைத்த காலந்தொட்டு என் இருத்தலைக் கணக்கிடுகிறேன். தொடக்கமும் முடிவுமில்லா இருப்பு என்பது மரபணு இயங்கியல் சார்ந்தது. அது எனக்கு முன்னின்று பின்தொடர்வது. நான் தனியன் அல்லன்; சங்கிலித் தொடரின் ஒரு கண்ணி. இன்று மொழிவழி பொருண்மைப்படும் என் உடம்பு மொழியைவிட மூத்தது. என் உடம்பு சமூகத்தின் ஓர் அங்கமாகி நிற்பதற்கு மொழியே அடித்தளமாக இருக்கிறது. மொழியே எனது தேசியம். நான் ஒரு மொழியுயிரி; என் உடம்பு அதன் ஒரு சொல். சொல்லின் தொன்மையால் என் இருப்பைக் கணக்கிடுகிறேன். மொழியியலாளரே என் காலத்தைக் கணக்கிட்டு வயதை அளவிடவேண்டும். நான் எந்த நூற்றாண்டில் வாழ்கிறேன் என்பதை அவர்களால்தான் சொல்லமுடியும். இந்தியத் துணைக்கண்டத்தின் தென்மூலைக் கிழக்குக் கடலோரம் ஒரு புள்ளியில் இருக்கிறேன். 

சபரிநாதன் :கவிதை உங்களை எப்படி வந்தடைந்தது?

பிறப்பும் இறப்பும் என்னை எப்படி வந்தடைந்தன என்று என்னால் அடிக்கோடிட்டுச் சுட்டமுடியும்; ஆனால், கவிதை எப்படி எங்கிருந்து எவ்வழி என்னை வந்தடைந்தது என்பதை அறுதியிடமுடியாது. கலையின் மாயயெதார்த்தம் கருக்கொள்ளும் புள்ளி இது. மொழியாலான எல்லாவற்றிலும் கவித்துவம் இருக்கிறது; அது கவிதைக்கானது மட்டுமில்லை. தாலாட்டு, ஒப்பாரி, பெருமூச்சு, வக்கனை, சொலவடை, பழமொழி எனப் பயின்றுவரும் நாட்டார் மரபு ஓரிடத்தில் நிலைப்படும்போது இலக்கியமாகிறது. நாட்டார் மரபே செவ்வியல் மரபிற்கு அடித்தளம். பிடி மண்ணில் ஊன்றப்பட்ட துளி விதைதான் அடர்ந்த ஆலமாகிறது. தமிழின் செவ்வியல் தொன்மையைச் சங்கம் தொட்டு அறுதியிடுகிறோம்; ஆனால், நாட்டார் மரபிற்குக் காலவரையறை இல்லை; அது உடம்போடும் மொழியோடும் பிறந்த தொடக்கமில்லாதது. தாய்மொழி மூளையில் ஊன்றி நாவில் துளிர்க்கும்போதே கவிதையின் இயங்கியல் தன்மையைத் தடங்காணமுடிகிறது. மொழியாலான கலைச்செயலிலிருந்தே அணியிலக்கணம் வரையறுக்கப்படுகிறது. படைப்பாளரை மட்டுமில்லை வாசகரையும் இப்படித்தான் கவிதை என்னும் மொழிக்கலை வந்தடைகிறது. 

முருகபூபதி : தொன்மரபு கொண்ட தமிழ் நாடகநிலத்தில் அதன் கலைமொழியை, தொடர்ச்சியை, சமகாலத்தின் இலக்கியவாதியாய் எப்படிப் பார்க்கிறீர்கள்?

வேட்டைச் சமூகத்து உழுகுடியின் தொழில்சார் போலச்செய்தலின் இலக்கண வடிவமே நாடகக்கலையாகப் பரிணமிக்கிறது. பாட்டும் கூத்தும் கலந்த நிகழ்த்துமுறையில் பேச்சு கலந்து, மொழி மற்றும் உடம்புடன் ஒளி ஊடுருவி மூன்றாம் பரிமாணம் துலங்கும்போது மரபுவழி நவீன நிகழ்த்துக்கலை வடிவம் பெறுகிறது. எடுத்துக்காட்டாக ஓர் எளிய சமன்பாடு இப்படி அமையலாம்: கண்ணப்பத் தம்பிரான் + நா. முத்துச்சாமி + சி. ரவீந்திரன் = நவீன நாடகம். ஒரு மரபுக்கலஞன், நவீன இலக்கியவாதி, நவீனத் தொழில்நுட்பன்; இந்தக் கூட்டுக் கலவை சமகாலத் தமிழ் நாடகத்தை வடிவமைக்கிறது. கண்ட கனவை மீண்டும் காணமுடியாது; அதுபோல ஒருமுறை நிகழ்த்தியதை மீண்டும் நிகழ்த்தும்போது அதில் பலவகை வளர்ச்சிதை மாற்றங்கள் நிகழ்ந்து அது வேறொன்றாகப் பரிணமிக்கும். இதுவே மேடை நிகழ்த்துக்கலையின் மாய இயங்கியல்பு. தமிழ்ச் சமூகத்தில் பெரும்பாலான இலக்கியவாதிகள் ஏழைகளாகவிருப்பதால் அவர்களால் நாடகத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க முடிவதில்லை. நானும் நாடகங்களை எழுதி இயக்கியிருக்கிறேன், மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறேன். கண்ட கனவைக் காட்சிப்படுத்தி சேகரித்துவைக்க இயலாதபோது உள்ளம் சோர்ந்து ஒடுங்கிவிட்டேன். பார்வையாளர்களே கூடாத அரங்கில் வெற்று நாற்காலிகளுக்காக என்னால் எழுதி இயக்கி உடனுழலும் நடிப்புக் கலைஞர்களைப் பட்டினிப்போட முடியாது. எனவே அங்கிருந்து வெளியேறிவிட்டேன்.

சூர்யதேவ் : மாற்று அரசியல், மாற்று இலக்கிய உத்தி எனத் தங்களின் இலக்கியப்படைப்புகள் மூலம் ஒரு புதிய பாய்ச்சலைத் தமிழ்ச்சூழலில் 90 களில் ஆரம்பித்து இன்றுவரை தொடரும் உங்கள் வாழ்க்கைப் பயணத்திலும் இலக்கியப் பயணத்திலும் தர்க்கம், தத்துவம், கோட்பாடு, அறம் ஆகியனவற்றின் தாக்கம் அல்லது அதன் பங்கு எனத் தாங்கள் கருதுவது என்ன?

செம்புலப் பெயல்நீர் போல படைக்கும் பனுவலில் வெளிப்படும் அறம் எனது வாழ்முறையில் வழுவாமலிருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். கூட்டுவாழ்க்கை, கூட்டு எழுத்து, பொதுவுடைமை, தன்னலம் ஒழுகா உள்ள ஒழுங்கு, சாதிய நெருக்கடி கடந்த அகன்ற இடதுசாரிய வெளி இவையே வாழ்க்கை நெறியாக இருந்தது. இப்படியான வலிநிரம்பிய சோதனை வாழ்க்கை முறை இருபத்தைந்தாண்டுகள் பேணப்பட்டது. ஆனால், ஆற்றின் அகலத்தைக் குறுக்காகத் தாண்டிக் கடந்தாலும் தனிமனிதத் தன்னல விருப்பு வெறுப்பைத் தாண்டமுடியாது. தனிவுடைமை என்பது தனியொரு உடம்பிலிருந்து உருப்பெருக்கமடைகிறது. எதிர்கால அறிவியல் வளர்ச்சி கூட்டு மனத்தையும் கூட்டு உடம்புகளின் வாழ்வியக்க முறைமைகளையும் கட்டமைக்க உதவலாம். பொதுவுடைமைத் தத்துவம் என்பது உடைமைகள் பற்றியது மட்டுமில்லை, உடம்புகள் பற்றியதுமாகும். தன் உடம்பையும் உள்ளத்தையும் அறிவையும் பொதுவில் வைக்காமல் உடைமைகளை மட்டும் பொதுமைப்படுத்துவது இறுதியில் கொலையிலும் தற்கொலையிலுமே முடியும். எனக்கோ பிறருக்கோ உடம்புவழி வலியை நான் தரவில்லை. தனியொருவரின் உள்ளம் மட்டுமே அவரொருவரால் உருவாவது, அத்தனியொருவரின் உடம்பு என்பது ஐம்பூதகங்களால் உருவானது, அதை வலிக்கச் செய்வதோ கொன்றழிப்பதோ அறமாகாது. நான் எழுதுகிறேன் அதனால் இருக்கிறேன். எழுத்துக்கு வெளியே நானில்லை.

லக்ஷ்மி சரவணகுமார்: கோட்பாட்டு ரீதியிலான காத்திரமான உரையாடல்களை உருவாக்கியதில் உங்களது பங்களிப்பு முக்கியமானது. எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும்  தமிழ்ப் புனைவுலகில் நிகழ்ந்த ஆரோக்கியமான மாற்றத்தில் இந்த உரையாடல்களின் பங்களிப்பு முக்கியமானதொன்று. ஆனால் கடந்த பத்து வருடங்களில் கோட்பாடு ரீதியாக நீங்கள் எழுதாதது ஏன்?

ஆம், கடந்த பதிமூன்று ஆண்டுகளாக கவிதை, நாவல்களில் மட்டுமே என்னால் தயக்கமின்றி தங்கு தடையின்றி பேசமுடிகிறது. என் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சரிவுகள் அரசியல் தத்துவ அறம்சார் சொல்லாடல்களை முன்னெடுப்பதில் அயற்சியை ஏற்படுத்துகின்றன. பேசும்போது நான் என்னை வேவுபார்க்கிறேன்; போலித்தனம் தெரிகிறது. மார்க்ஸ் — ஏங்கல்ஸ், மிஷேல் பக்குனின், காந்தியார், பெரியார், அம்பேத்கர் இவர்கள் ஊடாடாமல் ஒரு வாக்கியத்தை என்னால் எழுதமுடியாது. நான் எழுதிய அபுனைவுகளுக்கு என்னால் உண்மையாக இருக்கமுடியவில்லை. நான் பல்கலைக்கழகக் கல்வியாளன் இல்லை; ஓர் எளிய எழுத்துக் கலைஞன். குடிகாரர்கள் தத்துவவாதிகளாகவும் சோதிடர்கள் தீர்க்கதரிசிகளாகவும் தொழிலதிபர்கள் ஒரு குடியரசின் அதிபராகவும் கொலைகாரர்கள் சமூகப் போராளிகளாகவும் உருத்திரிந்திருக்கிறார்கள். முழுமையான வாக்கியத்தால் என்னால் சிந்திக்கமுடியவில்லை. நான் மூன்றாம் உலக எழுத்தாளன்; ஐரோப்பிய பின்நவீனத்துவச் சிந்தனையாளர்களின் அறவொழுங்கிற்குப் பின்னால் பதுங்கிக்கொள்ள வெட்கமாகயிருக்கிறது. அந்தோனின் அர்த்தோவும் ஃப்ரெதெரிக் நீட்ஷேவும் மது அருந்தும்போது அழையா விருந்தாளியாக வலியச்சென்று அமர ஏதோவொன்று தடுக்கிறது. ஆனால், எனது இக்காலப் புனைவுகள் எல்லாம் மாறுவேடமிட்ட நுண்ணரசியல் தத்துவச் சொல்லாடல்கள் என்பதைக் கூரிய வாசகரால் அறியமுடியும். நான் எந்தவொன்றையும் வெளிப்படையாகக் கேள்விக்குட்படுத்தத் தகுதியற்றவனாக இருக்கிறேன். மிஷேல் ஃபூக்கோ, ழான் ழெனே, அந்தோனின் அர்த்தோ, ழான் போல் சார்த்ர், சே குவேரா போஸ்டர்கள் ஒட்டப்பட்ட அறையில் ஈழ விடுதலையைப் பற்றி பேசிப்பேசி விடிந்த இரவுகளை அசைபோட்டபடி, இன்று ஊனமுற்ற உடம்பால் விளைந்த தனிமையில் உழல்கிறேன். மேலும், புனைவு, அபுனைவு என்ற பிரிவுகளைக் கடந்துவந்துவிட்டேன். இனியான எழுத்து அப்படியாகத்தான் அமையும். ஒவ்வொரு சொல்லும் பொருளுடையது மட்டுமில்லை அது புனைவாலுமானது. கட்டுரைக்கும் கட்டுக்கதைக்குமான இடைவெளியைச் சமன்படுத்த எத்தனிக்கிறேன்.

சூர்யதேவ் : தமிழ் இலக்கியத்தில் கோட்பாட்டுப் புரிதலில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதா? கோட்பாட்டுப் புரிதலின்மையால் ஏற்படும் நன்மை தீமை பற்றி…

ஆசான்கள் அளித்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முன்வைத்தோ, அந்த்ரே ப்ரெதோன் வரையறுத்த சர்ரியலிச அறிக்கையை முன்வைத்தோ எந்தவொரு கலைஞரும் கலை இலக்கியச் செயல்பாட்டில் ஈடுபடுவதில்லை.  சமூக அரசியல், கலை இலக்கியத்தில் இவ்விரு அறிக்கைகளே காத்திரமானவை. எனவே இவற்றைக் குறிப்பிட்டேன். இவ்விரு கோட்பாடுகளே இன்றளவும் சமூகக் கலை இலக்கிய அரசியல் களத்தில் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. ஆனால், இவற்றை மட்டுமே வழிகாட்டிக் கையேடாகக்கொண்டு யாரொருவரும் செயல்படுவதில்லை; இருப்பினும் இவ்விரு கோட்பாட்டுத் தளத்திலிருந்து விலகியும் உடன்பட்டும் முரண்பட்டும் தொட்டும்தொடாமலும் தாமரை இலை நீர் போல உருண்டுகொண்டிருக்கிறோம். தமிழகத்தின் திராவிடக் கலை இலக்கிய அரசியல் கோட்பாடுகளும் இந்தியத் தலித் கலை இலக்கிய அரசியல் கோட்பாடுகளும் பரந்த இடதுசாரிய அறிவொழுங்கில் முடிவற்ற சொல்லாடல்களை உருவாக்குகின்றன. அரசியல் அறிவொழுங்கிலிருந்து கலை இலக்கிய அறிவொழுங்கு வேறுபட்டது. ஆசான்கள் உள்வாங்கித் தமது புலனின்பமாக்கிக்கொண்ட கலை இலக்கியங்கள் வர்க்கம் கடந்தவை. ஐரோப்பிய அரசியல் மற்றும் கலை இலக்கிய அறிவை மட்டுமே அளவுகோலாகக்கொண்டு உலகின் மூலைமுடுக்கை எல்லாம் ஆய்ந்தறிந்து பொதுமைப்படுத்தலாகாது. இது தமிழுக்கும் பொருந்தும்.

சபரிநாதன் : பிரெஞ்சு இலக்கியமும் கோட்பாடுகளும் உங்கள் ஆளுமையில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தின? அவற்றில் இருந்து நீங்கள் பெற்றுக்கொண்டவை என எவற்றைச் சொல்வீர்கள்?

நான் கம்யூனிசத்திலிருந்து தொடங்கி சர்ரியலிசம் வழியாகத்தான் கலை இலக்கியங்களில் எனக்கு உடன்பாடானதைத் தேர்ந்துத் தொகுத்துக் கொண்டேன். பிரெஞ்சு சர்ரியலிஸ்டுகளின் வழிமுறையும் இப்படித்தான் இருந்தது. அமைப்பியல், பின் அமைப்பியல், பின்நவீனத்துவச் சிந்தனையாளர்களின் கல்விப்புலப் பின்னணி என்னை மருட்டியது. சார்த்ர், ஹெலேன் சிசுவைப் போல பிற சிந்தனையாளர்களுடன் இயல்பாக ஒழுகமுடியவில்லை. பிரெஞ்சுப் பெண்ணியவாதிகள் கோட்பாட்டாளர்களாகவும் இலக்கியப் படைப்பாளர்களாகவும் விளங்குவதால் அவர்கள் எழுத்துக்களில் என்னால் இயல்பாகப் புழங்கமுடிந்தது. நான் மொழிபெயர்த்த கிரிஸ்தேவாவின் கிழவனும் ஓநாயும் என்ற நாவலும் ஹெலேன் சிசுவால் அன்னா அக்மதோவாவின் வாழ்வின் ஒரு பகுதியை நாடகமாக்கிய பனுவல் வெள்ளைப் பாய்மரம் கறுப்புப் பாய்மரம், மார்கெரெத் துய்ராவின் என் அன்பே ஹீரோஷிமா என்ற திரைக்கதைப் பனுவல், ழார்ழ் பத்தாய்யின் கண்ணின் கதை யாவும் கூட்டு வாழ்க்கையைவிட்டு வெளியேற்றப்பட்டபோது அங்கேயே கைவிடப்பட்டன. எனது நூலகத்தின் பிரெஞ்சு சேகரிப்பு யாவும் முடக்கப்பட்டன. நான் முற்றாக இருட்டடிப்புக்கு ஆளானபோது; என்னை நானே நோவதைத் தவிர வேறு வழியற்றுப்போனேன். சொந்தக் கதையைப் பேசுவதற்கு மன்னிக்கவும். பிரெஞ்சு இலக்கியம், தத்துவம், திரைப்படம் யாவும் சோறும் தண்ணீருமாக உடம்பிலூறி என் ஆளுமையை வடித்தன. கல்வியாளர்களும் அரசியல்வாதிகளும் கலை இலக்கியச் சூழலை ஆக்கிரமிக்கும்போது அங்கே கலைஞர் மனச்சிதைவுக்கு ஆளாகிறார். பொதுவாக, இந்த இலக்கிய வாழ்க்கையிலிருந்து நான் பெற்றவை ஒரு கூடைப் புணர்ச்சிகள், நூறு கூடைக் காயங்கள்.

சூர்யதேவ் : பின்நவீனத்துவம் எவ்விதமான விடுதலையைச் சாத்தியப்படுத்துகிறது?

அறிவு அற்றம் காக்கும் கருவி, அறிவே அதிகாரம், அறிந்ததிலிருந்து விடுதலை; இப்படியான கண்டடைதலுக்கு நடுவிலிருந்து அறிவு ஓர்இடத்தில் தேங்கும்போது ஃபாசிசம் உருத்திரள்கிறது என்பதை வந்தடைந்தோம். அறிவைப் பொதுமைப்படுத்துவதை மறுக்கும் பண்பாட்டு மத அரசியல் ஒடுக்குமுறைக்கு ஆட்பட்ட சமூகத்தில் உருவாகி வளர்ந்த ஒரு தன்னிலைக்கு God is a Fascist என்ற தன்னறிவு இயல்பிலேயே உருப்பெற்றுவிடுகிறது. ஃபாசிசம் அண்டாத மனத்தையும் அறிவையும் இடதுசாரியப் பின்நவீனத்துவம் கட்டமைக்கிறது. ஒன்றை மேலாதிக்கம் செய்யும் அறிவொழுங்கைக் குலைப்பதிலேயே பின்நவீனத்துவ விடுதலை அரசியலும் அறவியலும் கட்டமைகிறது. இதையே  இடதுசாரியப் பின்நவீனத்துவ அரசியல் செயல்பாடு எனப் புரிந்துகொள்கிறேன். ஒட்டுமொத்த அழுத்தங்களிலிருந்து தன்னை விடுதலை செய்ய கடவுள் வரும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து, இயேசு கிறித்து ஏமாந்து சிலுவையில் தொங்கியபோதே இறையியல் செத்துவிட்டது.  மதத்தின் பொய்மை முகம் தோலுரிக்கப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. வலதைக் கடந்த இடது ஃபாசிசத்தை இருபதாம் நூற்றாண்டில் கண்டும் அனுபவித்தும் தெளிந்துவிட்டோம். மதம், வலது, இடது என அனைத்திலிருந்து வெளிப்படும் மேலாதிக்க அறிவொழுங்கைக் குலைப்பதே இனியான பின்நவீன விடுதலை அரசியல் என்ற புரிதலை வந்தடைந்திருக்கிறோம். கலை இலக்கியத்தில் இதை அடையாளம் காண்பதையும் வளர்த்தெடுப்பதையும் விழைகிறேன்.

லக்ஷ்மி சரவணகுமார்: பரதேசி சிறுகதையில் வரும் பேராசிரியரின் வாழ்வில் இந்திய பாகிஸ்தான் பிரிவினை ஒரு புள்ளியாகவும் அவர் ஜெர்மனிக்குப் பயணிக்கும்போது இரண்டாம் உலகப்போர் இன்னொரு புள்ளியாகவும் இணைந்து அந்தக் கதை கடந்த நூற்றாண்டின் வெவ்வேறு  குரூர முகங்களைக் காட்டுகிறது. வரலாற்றின் மீதான இந்தக் கதை சொல்லுதலை  எவ்வாறு திட்டமிட்டீர்கள்?

இந்திய துணைக்கண்டத்தின் தேசிய இனங்களின் விடுதலை இறையாண்மை கொண்ட மொழித்தேசிய அரசியல் சுயநிர்ணயச் சொல்லாடல்கள் மூடிப் புதைக்கப்பட்டு, மதத்தேசியம் பற்றிய சொல்லாடல்கள் முன்னெடுக்கப்பட்ட, வலி நிறைந்த வரலாற்று மோசடியை உள்ளீடாகக்கொண்டு எழுதப்பட்ட கதை. இந்துஸ்தான், பாகிஸ்தான் என மதவழி தேசங்கள் இரண்டின் வலிநிறைந்த உதயம் என்று சொல்லாமல் அதை வலிகொண்ட பிரிவு எனச் சொல்லிச்சொல்லி, இத்துணைக்கண்டத்தில் ஒரு நாட்டின் விடுதலை என்பதே பிரிவினை என்பதாகக் குடிகளின் மனங்களில் பதியப்பட்டுவிட்டன. இந்தியா, நேபாளம் என்ற இந்து நாடு,,,,,,,,,,,களும்; பாகிஸ்தான், வங்கதேசம் முதலான இஸ்லாமிய நாடுகளும்; இலங்கை, மியான்மர் முதலான புத்த நாடுகளும் மத அடிப்படையில் தோன்றி, மொழிவழி தேசிய இனங்களின் விடுதலைச் சொல்லாடல் தடைபட்டு மெளனமாக்கப்பட்டது. பெருமதங்களின் பெருந்தேசியச் சொல்லாடல் முன்னெடுக்கப்பட்டு மொழித்தேசியமான திராவிடநாடு, குறிப்பாக தனித்தமிழ்நாடு பற்றிய பேச்சு ஒலியிழந்துபோனது. இந்த விவாதத்தைப் பொந்திஷேரி (புதுச்சேரி)யிலிருந்து பாரிஸ் வழியாக பெர்லின் வரை கதைக்கான அரசியல் வரைபடம்  ஒன்றை உருவாக்கி Post Second World War அரசியல் கட்டமைப்பில் எழுதப்பட்ட நெடுங்கதை இது. இந்தப் பரதேசியின் ஊடுபிரதியாக ஸதத் அஸன் மண்டோவின் ஆக்கங்களும் அலேன் ரெஸ்னேவின் இரவும் பனியும் ஆவணப்படமும் முன்நிற்கின்றன. பொந்திஷேரியைச் சார்ந்த ஸொர்போன் பல்கலைக்கழக மாணவனும் புதுச்சேரி பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியர் பச்சியப்பனும் திருவண்ணாமலைக் குகைகளும் பெர்லின் நாசி வதைமுகாமும் பின்னிப் பிணைந்து பெருகி அகிலம்சார்  தற்கால அரசியல் புனைவெழுத்தாய்  உருவானது. மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொடராக வெளிவந்தது. திரைப்படமாக உருவாக்கினால், தமிழுக்கு ஒரு பன்னாட்டு இந்தியச் சினிமா கிடைக்கும். இக்கதை எழுதி இருபதாண்டுகள் கடந்த நிலையில் யாராலும் பேசப்படாமல் நானே முதலாவதாகப் பேசவேண்டிய அவலமும் அபத்தமும் நேர்ந்துவிட்டது. 

சித்ரன் : சொல் என்றொரு சொல்லில் ததாகதரின் இறுதி இரவுப் பகுதியும் அம்பிகை வசியவாலைப் பகுதியும் நான் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் வாசிப்பவை. ஆனால் எவ்வித மையச்சரடுமற்று புனைவுச் சிதறலாய் உள்ள அந்நூலை எப்படி நாவலாய் வகைபடுத்துகிறீர்கள்?

287

கதாபாத்திரங்களின் வழியே நிகழ்வுகளை வளர்த்தெடுத்து அனைத்தையும் ஒருசேரத் திரட்டி பெருங்கதையாடலைக் கட்டமைப்பதே பேரிலக்கியச் செய்முறையாக இருக்கிறது. அதற்கு மாறாக, சிறுசிறு கதைகளினூடாகப் பெருகும் சொல்லாடல்களைக்கொண்டு, ஏற்கெனவே வரலாறு கட்டமைத்த பெருங்கதையாடல்களைச் சிதைவாக்கம் (deconstruction) செய்து தொகுத்துக்கொள்வதே பின்நவீனப் பனுவலின் செய்முறையாக இருக்கிறது. இப்பனுவலை வாசிக்கும் தொழில்நுட்ப அறிவே  பின்நவீனத்துவப் பிரதியின்பமாகிறது. சொல் என்றொரு சொல் நாவலானது இரண்டாயிரமாண்டு தமிழ் நிலப்பரப்பில் பேசப்பட்ட பெருங்கதையாடல்களைத் தொகுத்துக்கொள்கிறது. சங்க காலத்திலிருந்து தமிழ்ச் சினிமாக் காலம்வரை சிதைவாக்கப்படுகிறது. புராண காலம், புத்த காலம், சங்க காலம், பக்தி காலம், மூவேந்தர் காலம், தமிழ் நிலத்தில் ஊடுருவிய உள்நாட்டு வெளிநாட்டுக் காலனிய காலம், விடுதலைப்போராட்டக் காலம், திராவிட அரசியல் காலம், ஈழவிடுதலைப்போர் காலம் என பரந்துபட்ட அரசியல் தளத்தில் நாவல் நகர்கிறது. நாவல் என்ற பெயரில் கதைசொல்லும் காலம் முடிந்துவிட்டது; இனியான நாவல் என்பது காலத்தைச் சிதைவாக்குவது. அடைபட்ட வெளி நடுவை மையம் எனக்கொண்டால் அதை சிதைப்பதில்தான் விளிம்புகள் விலகும். மையம் சிதைந்த உள்ளம் பைத்தியமானால், அதிலிருந்து வெளிப்படும் பைத்தியம் பீடித்த சொற்களால் நேர்க்கோட்டுக் கதைகளை வரையமுடியாது. காதை கேட்டால் காதைக் கடிப்பேன் என்று பைத்தியமாக நடிக்கும் எழுத்தாளரோ, எழுத்தாளராக நடிக்கும் பைத்தியமோ சொல்லும். சொல் என்றொரு சொல் ஒரு நாவல் இல்லை; Its a manual of understanding the  madness.

***

உரையாடல் தொடரும்…

சித்ரன் – கனாத்திரமுறைத்த காதை – சிறுகதைத் தொகுப்பு ஆசிரியர். vinocithran@gmail.com

மண் பாரம்

1

சித்துராஜ் பொன்ராஜ்

தூரத்துக் குடியிருப்புக்கள் இருந்த திசையிலிருந்து சாவிக்கொத்துகள் குலுங்கி அமைதியாவதைப்போல் நாய்கள் அவ்வப்போது குரைத்தன. அவற்றின் மெலிந்த உடல்களின் சிலிர்த்திருந்த ரோமங்களிலும், கரகரப்பான குரல்களிலும் பொங்கிவரும் ஆக்ரோஷமும், அலைதலும் எங்கும் பரவி வியாபித்து இருப்பதைப்போல் சுற்றிலும் அடர்த்தியான இரவு இறங்கியிருந்தது. அவர்கள் மூவரும் தோட்டத்தின் எல்லையில் போடப்பட்டிருந்த இரும்பு முட்கம்பி வேலிக்குப் பின்னால் பச்சைய வாசனையும் கோழிப்பீ நாற்றமும் கலந்து அடிக்கும் ஈரமான சேற்றின்மீது உடல்களைக் குறுக்கியபடி பதுங்கியிருந்தார்கள்.

முன்னால் தணிகாசலமும், பங்குனி நாயரும் செம்மண் தரையில் முழங்கால்கள் பதிய அமர்ந்திருந்தார்கள். சற்றுப் பின்னால் உயரமான லாலாங் புற்களினிடையே பதுங்கியிருந்த ஆ டெங் கையில் வைத்திருந்த நீண்ட டார்ச் லைட்டின் அடிப்பகுதியை உள்ளங்கையால் பலமாகத் தட்டிக் கொண்டிருந்தான். ஆகஸ்டு மாத இரவின் காற்றில்லாத வெக்கையில் அவனுடைய நெற்றி வியர்வையில் பளபளத்துக் கிடந்தது. ஆ டெங்கின் அடிக்குப் பயந்த மிகுந்த அசதியுள்ள கிழவனைப்போல் டார்ச் திக்கித்திணறி எரிய ஆரம்பித்தது. ஆனால் அது கக்கிய பலவீனமான மஞ்சள் வெளிச்சம் அதன் நுனியைச் சுற்றி அமைந்திருந்த வெள்ளி நிற மூடியை மட்டுமே ஒளியூட்டப் போதுமானதாக இருந்தது.

ஆ டெங் வெறுப்பில் டார்ச் லைட்டை சிலமுறை உதறினான்.

“சனியன்,” என்று மெல்லிய குரலில் சலித்துக் கொண்டான்.

“ப்ச்சு, போதும். பலா மரம் இருக்குற எடம் எல்லாருக்கும் நியாபகமிருக்கில்லையா?”

தணிகாசலம் இரும்பு முள்வேலியை விரல் நுனிகளால் மெல்ல தொட்டபடி அமர்ந்திருந்தான். வேலிக்கு அப்பால் வளர்ந்திருந்த டூரியான மரங்களின் மீது படிந்திருந்த கனமான கும்மிருட்டில் பார்த்திருந்த தனது பார்வையை விலக்காமலேயே பேசினான். அவன் குரல் தனக்குத்தானே பேசுகிறவனின் குரலைப்போல ஒலித்தது.  அவனுடைய விரல்நுனிகளின் அடியில் நீண்டு போன முட்கம்பியில் உணரக்கூடிய மெல்லிய அதிர்வைப் போலவே அவனுடைய குரலிலும் மெல்லிய நடுக்கமிருந்தது.

“வேலியைத் தாண்டுனா டூரியான் மரங்க. மரங்களுக்கு ஊடால போற மண்பாதையில கொஞ்சம் தொலைவு நடந்தா சின்ன பள்ளம். அங்க வலது பக்கமா திரும்பி மறுபடியும் ரம்புத்தான் மரங்களுக்கிடையில நடந்தா பழைய சர்வே கல் தூணும், மருத்துவன் கோவிலும் வரும். கோவில்னா கட்டடம் இல்ல. பூமியில நட்டு வச்சிருக்குற உருண்டையான தூண்மேல சின்ன அலமாரிப் பெட்டிய வச்சது மாதிரி ஒரு அமைப்பு. கதவுகள் வச்சிருக்குற பெட்டிக்குள்ள மருத்துவச் சாமியோட சிலை. மேல செவப்புக்கூரை. சர்வே கல்லுக்கும், மருத்துவன் கோவிலுக்கும் எதுத்தாப்புல மரம்.”

ஆ டெங் கையிலிருந்த டார்ச் லைட்டிலிருந்து தனது கண்களை விலக்காமல் அடிக்குரலில் பேசினான். சில சொற்களுக்கு ஒருமுறை அவனுடைய தொண்டைக்குழி அச்சத்தில் பூரித்து அடங்குவது தெளிவாகத் தெரிந்தது.

பௌஷெங் தா தீ பத்தாம் நூற்றாண்டில் ஊ தௌ அல்லது ஊ பென் என்ற இயற்பெயரோடு சீனாவில் வாழ்ந்த ஒரு பெரும் மருத்துவர். சீன வரலாற்றிலேயே மிகத்திறமை வாய்ந்த மருத்துவராகக் கருதப்படும் பௌஷெங் தா தீ கடல்நாகத்தின் கண்களில் மருந்து சொட்டுக்களை விட்டு அதன் பார்வைக் கோளாற்றினைத் தீர்த்ததாகவும் ஒரு புலியின் தொண்டையில் மாட்டியிருந்த முள்ளை மிகத்திறமையாக அகற்றியதாகவும் சீன மருத்துவ ஏடுகள் சொல்கின்றன. பௌஷெங் தா தீ 1036-ல் காலமான பிறகு அவரை மருத்துவக் கடவுளாக வணங்கும் வழக்கம் சீனாவில் உருவானது. பதினான்காம் நூற்றாண்டில் சீனாவை அரசாண்ட ஹொங் ஸீ பேரரசர் அதிகாரப்பூர்வமாகப் பௌஷெங் தா தீயைத் தா வோ மதக்கடவுளர்களின் பட்டியலில் சேர்த்துக் கொண்டார்.

ஜப்பான்காரன் சண்டைக்கு முன்பு இந்தப் பகுதி முழுவதும் ச்சான் என்ற சீனப் பெரும்பணக்காரனுக்குச் சொந்தமான மிளகுத்தோட்டமாக இருந்தன. தோட்டத்தில் வேலை பார்த்த ஏழைச் சீனத்தொழிலாளிகள் அவர்களுக்கு ஏற்படும் காய்ச்சல் ஜுரம், சுவாசக்கோளாறுகள், வயிற்றுப்போக்கு, பாம்புக்கடி மற்றும் தேள் கடி ஆகியவற்றுக்காக ஆங்கில மருத்துவர்களிடம் போக வசதியில்லாதவர்களாக இருந்தார்கள். இந்தக் காரணத்தால் பதினான்காம் நூற்றாண்டு சீன மருத்துவர்களின் வழக்கப்படிக்  கைகள், மடி, முழங்கால்கள் என்று தாண்டி வழியும் பச்சைப் பட்டாடையும் அட்டைப் பெட்டி வடிவத்தில் இருந்த கறுப்புத்தொப்பியும் அணிந்து அமர்ந்த கோலத்திருலிருந்த பௌஷெங் தா தீயின் உருவச்சிலையை அவர்கள் வேலை பார்த்த கடுமையான பூமிக்கு மத்தியில் ஒரு சிவப்பு அலமாரிப் பெட்டியில் வைத்து வணங்கினார்கள்,

மருத்துவச்சாமியின் கோவில் பீடத்துக்கு எதிர்த்தாற்போல் இருந்த பலா மரத்தில்தான் அவர்கள் மூன்று பேரும் தேடிப்போய்க் கொண்டிருக்கும் பலாப்பழம் இருந்தது. குறைந்தது இரண்டு பேராவது தூக்கிக்கொண்டு போக வேண்டிய அளவுக்கு நீளமும், அகலமும், கனமும் வாய்ந்த கனி. இப்போது ஆ லிம் என்ற கிழவனுக்குச் சொந்தமான பழத்தோட்டமாய் இருக்கும் இடத்திலிருந்து விளைந்த பழங்களையும், காய்கறிகளையும் சந்தைக்கு எடுத்துக்கொண்டு போக இரண்டு நாள்களுக்கு முன்னால் வழக்கம்போல் லாரி எடுத்து வந்திருந்த போதுதான் தணிகாசலமும், ஆ டெங்கும் பழத்தைப் பார்த்தார்கள்.

அன்றைக்கென்று பார்த்து நகரத்தில் இடதுசாரி தொழிற்சங்கங்கள் ஆரம்பித்திருந்த ஏதோ ஒரு கிளர்ச்சியில் கலந்துகொள்ளத் தோட்டத் தொழிலாளிகளில் சிலர் போயிருந்தார்கள். பெரிய வாய் அகன்ற ரோத்தான் கூடைகளின் மீது மறைப்புக்காகச் செய்தித்தாள்களை விரித்துக்கட்டி வைக்கப்பட்டிருந்த பழங்களைத் தோட்டத்தில் அந்தந்த இடத்திலிருந்து தணிகாசலமும், ஆ டெங்கும் தாங்களே எடுத்துக்கொண்டு போகும்படி ஆ லிம் சொல்லிவிட்டான்.

ரம்புத்தான் பழங்கள் நிறைந்திருந்த கூடையைத் தரையில் உருட்டிக் கைக்கு வாகாக்கிக் கொண்டு அதை முதுகின்மீது சுமந்தபடி தணிகாசலம் நிமிர்ந்தபோது பக்கத்தில் மற்றொரு கூடையைச் சுமந்தபடி நின்றிருந்த ஆ டெங் அவன் விலா எலும்பில் தனது முழங்கையால் இடித்தான்.

தணிகாசலத்தைவிட ஆ டெங் நல்ல குள்ளம். உபரிச்சதை ஏதுமின்றித் தசைகளையும், நரம்புகளையும் மாத்திரமே எலும்புக்கூட்டின்மேல் இழுத்துக் கட்டியது போன்ற உருவம். ஆ டெங்கைவிட உயரமாக இருந்த தணிகாசலம் சிரமத்துடன் ஆ டெங்கின் பார்வை போன திசையைத் தேடிப்பிடித்துப் பார்த்தபோது ஐம்பது தப்படித் தூரத்தில் சிறிய ஒரு மேட்டின் மீது செக்கச் செவேல் என்றிருந்த மண் குவியலில் வெளிச்சமிக்க மெலிந்த தண்டும், பல கிளைகளுமுடைய சற்றே உயரமான பலா மரம் தெரிந்தது. அதன் கிளைகளில் இளம்பச்சை நிறத்தில் பெரியதும் சிறியதுமாகப் பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. மற்ற எல்லாப் பழங்களையும் விட இரண்டு மடங்கு பெரிதாக அவர்கள் இருவரும் நின்றிருந்த திசைக்கு நேரெதிராய் நீட்டிக் கொண்டிருந்த கிளையில் ஓர் இளம்பெண்ணின் வசீகரமான வளைவுகளோடும், புதிதாய்ப் பிறந்த குழந்தையின் வடிவத்தில் அந்தப் பலாப்பழம் தொங்கியது. இன்னும் முற்றாகப் பழுக்காத அதன் தோலில் மைனாக்களும் பிற பறவைகளும் கொத்தித் துளைபோட முயன்றதற்கான அறிகுறிகள் தெரிந்தன.

“இன்னும் கொஞ்ச நாளு போனா பறவைங்க அந்தப் பழத்தை முழுசாக் கொத்தித் தின்னுடும்.”

தோள்பட்டையைத் தாண்டி முதுகின்மீது கைகளை முறுக்கி வளைத்து எடைகளைத் தூக்கிய பழக்கம் இல்லாததால் பழக்கூடையின் கனம் தாங்காமல் சற்றே தள்ளாடியபடி நடந்து வந்து கொண்டிருந்த ஆ டெங் மூச்சிரைத்தபடிப் பேசினான்.

“ஆனா டூரியான், ரம்புத்தான், மாம்பழம், மங்கூஸ்தீன் பழம்னு ஒவ்வொரு தடவையும் கூடை கூடையா அனுப்புற கிழவன் இந்தப் பலாமரத்தோட பழங்கள மட்டும் அனுப்புறதே இல்லையே அது ஏன்? இந்தத் தோட்டத்துல வேற எங்கயும் பலா மரத்தைப் பார்த்ததாவும் எனக்கு நினைவில்ல.”

ஆ டெங்கைப் போலவே தணிகாசலத்துக்கும் பலமாக மூச்சிரைக்கத்தான் செய்தது. முதுகில் பதிய கைகளை முறுக்கிப் பழக்கூடைகளைத் தூக்கியிருந்ததில் விரல்களில் பிரம்பம்பட்டைகளின் விளிம்புகள் அழுந்தி மோசமாய் எரிந்தது. அதிகாலை நேரத்தின் பனிகூட இன்னும் காயவில்லை. தனது காலடிகளுக்கு அடியில் தங்கச் சில்லறைகளாய்ப் பரவ ஆரம்பித்திருந்த சூரிய வெளிச்சத்தைத் தாண்டி நடந்து கொண்டிருந்த தணிகாசலம் தலையைக் குனிந்து வளைத்து முன்னங்கையின் மேற்புறத்தால் நெற்றியில் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டான்.

ஆ டெங் அடிக்குரலில் ஏதோ விநோதமான ஒலி எழுப்பிவிட்டுத் தோளைக்கொண்டு தன்னைப் பலமாக இடிப்பதை உணர்ந்த தணிகாசலம் திடுக்கிட்டுத் திரும்பினான். ஆ டெங் தணிகாசலத்தின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தபடித் தலையை ‘பேசாதே’ என்று சொல்வதுபோல் பலமாக அசைத்தான். ஆ டெங்கின் முகத்தில் பயம் நிறைந்திருந்தது. அவன் மீண்டும் பேச ஆரம்பித்தபோது பழத்தோட்டங்களின் நடுவே அவ்வப்போது காலடிகளுக்கடியில் தட்டுப்படும் மிகக்குறுகலான நீரோட்டங்களின் ஓடும் தண்ணீரின் சத்தமாய் அவனுடைய குரல் கம்மி ஒலித்தது.  சற்றுமுன் சுட்டிக்காட்டிய பலா மரத்தை மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்தபடியே அவன் பேசினான்.

“தண்ணி, நாசமாப் போற நாயே. சத்தமாப் பேசாத. தேவையில்லாத விஷயத்தைப் பேசினாச் செத்துப் போகணும்.”

ஆ டெங் தனது கூர்மையான சின்னக்கண்களை அகல விரித்து வைத்துக்கொண்டு தலையைத் தோளில் ஒரு பக்கமாய்ச் சாய்த்துக் காட்டினான். அப்படிச் செய்யும்போது வாயைப் பிளந்து தனது வாளிப்பான நாக்கை வாயின் ஓரமாக நீட்டி வைத்துக் கொண்டான். முதுகுக்குப் பின்னால் முறுக்கியிருந்த கரங்களில் ஒன்றைச் சிரமப்பட்டு விடுவித்துக்கொண்டு கட்டை விரலைக் கொண்டு தலையைச் சீவுவதைப்போல் பாவனை செய்தான்.

பத்தாண்டுகளுக்கு முன்னர் ஜப்பானியர்கள் நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஆ டெங்கும், தணிகாசலமும் பதின்ம வயதினராய் இருந்தார்கள். மேதகு ஜப்பானிய அரசாங்கத்தையும் அதன் அதிகாரிகளையும் பற்றி வதந்திகளைப் பரப்புவோருக்கும், விமர்சனம் செய்வோருக்கும் வழங்கப்பட்ட தண்டனையை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். தீவின் முக்கிய பகுதிகளில் உள்ள சாலைச் சந்திப்புக்களில் நீளமான மேசைகள் போடப்பட்டு அவற்றின்மீது வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் மனிதத் தலைகள் அவர்களுக்கு நினைவிலிருந்தன. சிலநேரங்களில் காவலுக்கு நின்றிருந்த காக்கி நிறச் சீருடையும், பின்புறத்திலிருந்து வெயிலுக்கெதிராய் சிறிய வால்போல் பட்டைத்துணி தொங்கும் தொப்பியும் அணிந்திருக்கும் ஜப்பானிய படைவீரன் தலைகளுக்கு அருகிலிருந்த மரச்சீப்பை எடுத்து நெடுநேரம் அலுப்புத்தீரத் தலைகளுக்கு விதவிதமாய்ச் சிகையலங்காரம் செய்து விடுவான். அல்லது போவோர் வருவோரிடமிருந்து சிகரெட்டுகளை மிரட்டி வாங்கி வெட்டி வைக்கப்பட்டிருக்கும் தலைகளின் வாயில் செருகி வைத்துத் தனக்குத்தானே வேடிக்கைக் காட்டிக் கொள்வான். ஒரு டின் நேவி கட் சிகரெட்டைக் கொண்டு அரை கட்டி அரிசி வாங்க முடிந்த காலம். ஜப்பான்காரனின் வாழைமர நோட்டின் மதிப்பைவிட அன்றைக்கு சிகரெட்டுகளின் மதிப்பு அதிகம்.

வெயிலிலும், ஈரப்பதம் நிறைந்த காற்றிலும் ஊறிச் சாம்பல் நிறம் பூத்திருந்த அந்தத் தலைகள் ஏற்படுத்திய அச்சம் இன்னமும் தீவில் வசித்த எளிய மக்களின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் கலந்திருக்கத்தான் செய்தது. ஆனால் ரகசியங்களை வற்புறுத்திக் கேட்காமல் இருக்கும் வயதோ, அதைச் சொல்லாமலிருக்கும் வயதோ இருவருக்கும் இன்னமும் வராததால் வழிநெடுகத் தணிகாசலத்தின் முணுமுணுப்பைக் கேட்டுப் பொறுமையிழந்த ஆ டெங் கத்திகளைப்போல் கூரிய கரும்பச்சை இலைகளை வீசிக்கொண்டு நின்றிருந்த சில அன்னாசிச் செடிகளின் அருகில் தனது முதுகிலிருந்த கூடையை இறக்கி வைத்துவிட்டு தணிகாசலத்துக்கு அவர்கள் சற்று முன்னர் பார்த்த பலா மரத்தின் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.

***

     ஆ டெங் சொன்ன கதை: இப்போது மனைவி, குழந்தைகள் என்று யாருமே இல்லாமல் ஒரு டஜன் வேலையாட்களை மட்டுமே வைத்துக்கொண்டு தோட்டத்தில் வாழ்ந்து வரும் ஆ லிம் கிழவனுக்கு ஒரு காலத்தில் மனைவியும் பெண் குழந்தையும் இருந்தார்களாம். ஜப்பான்கார யுத்தம் தொடங்கும் நேரத்தில் பதினேழு வயதாக இருந்த ஹூங் தங்கம் போன்ற உடல் நிறத்தோடும் அச்சடித்து வைத்தது போன்ற முக லட்சணத்தோடும் மிகப்பெரிய பேரழகியாக இருந்தாளாம். தீவை ஆக்கிரமித்த ஜப்பானியப் படைகளால் ஆயிரக்கணக்கான சீனப்பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாகியிருந்த நேரத்தில் ஹூங் மாத்திரம் பாதுகாப்பாக இருந்தாள். இதற்கு ஆ லிம் கிழவன் மலேசியாவிலிருந்து போருக்கு முன்னால் வந்து கொண்டிருந்த தனது ரப்பர் தோட்ட வருமானத்திலிருந்து சேமித்து வைத்திருந்த தொகையில் ஒரு பெரும் பகுதியை ஜப்பானிய உயரதிகாரிகளுக்கு லஞ்சமாய்த் தந்தது தான் காரணம் என்று தோட்டப்புறங்களில் இருந்த சீனர்கள் பேசிக் கொண்டார்கள்.

ஆனால் வேறொரு கதையும் அதே தோட்டத்துச் சீனர்களிடம் இதுவரை உலவி வரத்தான் செய்கிறது. ஜப்பான்காரனிடம் இல்லாத பணமா என்று கேட்கும் சில சீனர்கள் ஜப்பானிய உச்ச அதிகாரி ஒருவனுக்கு ஹூங் ஆசைநாயகியாகப் போனாள் என்றும், அதனால்தான் மற்ற ஜப்பான் படைவீரர்கள் அவளைத் தொடத் துணியவில்லை என்றும் சொல்கிறார்கள்.

மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் ஜப்பான் நேசப்படைகளிடம் தோற்று ஹூங்கின் காதலன் அவளிடம் சொல்லாமல் ஊர் திரும்பியதற்குப் பிறகு ஹூங் காதலனின் பிரிவைத் தாங்க முடியாமல் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடிப் பல்வேறு வழிகளில் காதலனைப் பற்றிய தகவல்களைத் தேடிப் போனாளாம். அவள் காதலன் ஜப்பானின் ஷிகானோ மாகாணத்தில் உள்ள நாகாஹாமா என்ற தனது சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டதாகவும் அங்கு ஏற்கனவே மனைவியும் வளர்ந்த குழந்தைகளும் இருப்பதாகவும், அவளை அவன் மறுபடியும் பார்க்கவே விரும்பவில்லை என்றும் அவளுக்குச் செஞ்சிலுவை சங்கத்தின் வழியாகச் செய்தி வந்தததாகவும் இவர்கள் சொல்கிறார்கள். இதுகேட்டு மனமுடைந்த ஹூங் ஒரு பௌர்ணமி நாளில் காதலன் எப்போதோ தனக்குப் பரிசளித்திருந்த ஜப்பானிய பட்டுக் கிமோனோ ஆடையை எடுத்து மாட்டியபடி ஜப்பானிய முறையில் சிகையலங்காரம் செய்துகொண்டு தனது தந்தையின் தோட்டத்தில் வளர்ந்திருந்த ஒற்றைப் பலா மரத்தில் தூக்கு மாட்டிக்கொண்டு செத்துப் போனாளாம்.

இன்றுவரைக்கும் ஆ லிம்மின் பழத்தோட்டத்துக்குள் பௌர்ணமி இரவுகளில் கிமோனோ ஆடையணிந்த இளம்பெண் ஒருத்தி பலா மரத்தைச் சுற்றி உலவுவதாகவும், அவள் அவ்வப்போது பாடும் ஜப்பானிய பாடலின் வார்த்தைகள் வெள்ளைச் சம்பங்கி மலர்களின் கனமான வாசனையோடு இரவின் அமைதியில் மிதந்து வருவதாகவும் அவர்கள் சொல்கிறார்கள்.

மற்றவர்களோ காதல் கத்தரிக்காய் எதுவும் இல்லை என்றும் ஜப்பானியர்களோடு வேசைத்தனம் செய்த பெண்களுக்குப் பொதுமக்கள் தரப்போகும் கொடூரமான தண்டனைக்கும், அவமானத்துக்கும் அஞ்சியே ஹூங் தூக்கு மாட்டிக்கொண்டு செத்துப் போனாள் என்கிறார்கள்.

ஆ லிம்மே தனது சுயலாபத்துக்காக மகளை ஜப்பானியர்களுக்குக் கூட்டிக் கொடுத்ததாகவும், அவனே முன்னாளில் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இருந்த மற்ற சீனர்களை ஜப்பானியரிடம் காட்டிக் கொடுக்கும் கைக்கூலியாகவும் இருந்தான் என்பதும் இவர்கள் வாதம்.

ஜப்பானியர்கள் தோற்றுப் போனார்கள் என்ற அறிந்தவுடன் தனது துரோகங்கள் யாருக்கும் தெரியாமலிருக்க அவற்றுக்கு ஒரே சாட்சியாக இருந்த தனது மகளையும் ஆ லிம் கொன்று பலா மரத்திற்கு அடியில் புதைத்து விட்டானாம். ஆ லிம் கிழவன் தனது சொந்த இன மக்களுக்கு எதிராகத் துரோகம் செய்தான் என்ற அவர்களுடைய கூற்றுக்குப் போர்க்காலத்திலும் அவன் பாதுகாப்பாக இருந்ததையும் நல்ல வசதியோடு இருந்ததை அவர்கள் சான்றாகக் காட்டுகிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் போர் முடியும் தறுவாயில் ஹூங் மர்மமாகக் காணாமல் போனாள் என்பதும் அவள் காணாமல் போன சிறிது காலத்திற்கெல்லாம் ஆ லிம்மின் தோட்டத்தில் இருக்கும் அந்த ஒற்றைப் பலா மரத்தில் மிக அதிகமாய்ப் பழங்கள் காய்க்க ஆரம்பித்தது என்பதும் மறுக்க முடியாத உண்மைகளாகவே இருக்கின்றன. தனது தோட்டத்தில் இருந்த மற்ற எல்லாப் பழங்களையும் பாரபட்சமில்லாமல் சந்தைக்கு விற்கும் ஆ லிம் பலா மரத்தில் இத்தனை அருமையான பழங்கள் காய்த்தும்கூட அவற்றைத் தொடாமல் பறவைகளுக்குத் தின்னத்தருவது விந்தையாகக் கருதப்பட்டது. போர் முடிந்த சில நாட்களிலேயே ஆ லிம்மின் மனைவி ரத்தம் கக்கிச் செத்துப்போனாள். செம்மண் நிலத்தில் ராட்சசப் பழங்களோடு நின்று கொண்டிருந்த மரத்தை தோட்டப்புறத்தில் வாழ்ந்து வந்த சீனர்கள் ‘பேய்ப்பலா’ என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

அந்த மரத்தின் பழங்களைத் தின்பது மனித மாமிசத்தைத் தின்பதற்கு ஒப்பாகும் என்றும், அப்படித் தின்பவர்களை ஹூங்கின் ஆவி பழிவாங்கிவிடும் என்றும் ஒரு நம்பிக்கை அந்தப் பகுதியில் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு பௌர்ணமி இரவில் செத்துப்போன அந்த அதிர்ஷ்டமில்லாத இளம்பெண் அந்த மரத்தின் அடியில் புதைக்கப்பட்டிருப்பதாகவும் அவள் உடம்பின் சாறே பலாப்பழங்களாக மரத்திலிருந்து பூரித்து நிற்பதாகவும் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கோப்பிக்கடை உரையாடலில் பகிரப்படும் சின்னஞ்சிறு செய்திகளாய், அந்தி நேரத்தின் பெரும் நிழல்களுக்கிடையே மண்ணெண்ணெய் விளக்குகளின் மங்கிய வெளிச்சத்தில் அமர்ந்தபடி இரவின் பெரும் கதைகளாய்ச் சொல்லிக் கொள்கிறார்கள்,

ஆ டெங் சொன்ன கதை தணிகாசலத்தின் முதுகுத்தண்டில் கூரிய முனையுடைய ஜில்லென்ற இரும்புக்கத்தியாய் மெல்ல இறங்கியது, அவன் அடிவயிறு உருகி வெதுவெதுப்பான நீராய் தொடைகளின் வழியாக வழிவதைப்போல் அவன் உணர்ந்தான்.

நின்ற இடத்திலிருந்தே தணிகாசலம் தூரத்தில் சலனமில்லாமல் நின்று கொண்டிருந்த பலா மரத்தைத் திரும்பிப் பார்த்தான். அதிகாலை நேரத்தில் காற்று முற்றிலும் விழுந்துபோய் சலசலக்கும் பழ மரங்களின் இலைகளினூடே விழும் வெயில் திடீரென்று படிகத்தாலான கண்ணாடிக் குழி வில்லைபோல் மாறியதாலோ என்னவோ தூரத்தில் நின்ற பலா மரம் இப்போது அவனுக்கு வெகு அருகில் நிற்பது போல் தோன்றியது. சிவப்பு நிற அலமாரி போன்ற பெட்டியில் அமர்ந்திருக்கும் பௌஷெங் தா தீயின் சாயம் போன சிலையின் கண்களில் பூசப்பட்டிருந்த கறுப்பு வட்டங்கள் மட்டும் தனித்து வெளியேறி பளபளக்கும் ஈய குண்டுகளாய்த் துளைப்பதுபோல் தணிகாசலத்துக்குத் தோன்றியது.

அதிகாலை நேரத்துத் தூக்கமின்மையும் பசியும் தன்னை வாட்டுவதாகத் தணிகாசலம் தனது கைகளை உதறிக்கொண்டு பிரம்பங்கூடைகளை மீண்டும் தூக்கிக் கொண்டான். பின்பு, ஆ டெங்கும் தணிகாசலமும் வேறெதுவும் பேசாமல் லாரி இருந்த இடத்திற்கு நடந்து போனார்கள். அங்கு அவர்களுக்காகக் கையில் பெரிய நோட்டுப் புத்தகம் ஒன்றை வைத்துக் கொண்டு ஆ லிம் கிழவன் காத்திருந்தான்.

***   

“அட, இன்னைக்குப் பௌர்ணமியா?”

கனமான கருநீல மேகங்கள் விலக நிலவு தெரிவதைப் பார்த்த பங்குனி நாயர் முணுமுணுத்தான். தணிகாசலம் ஆ டெங்கைத் திரும்பிப் பார்த்தான். ஆ டெங் தலையை மெல்ல அசைத்துக் காட்டவே இரும்பு முள்வேலிக்கு நடுவில் பத்து பதினைந்து அடிக்கு ஒருமுறை வேலியைத் தூக்கிப் பிடிக்கும் விதமாக நடப்பட்டிருந்த உயரமான கல் தண்டின்மீது இரண்டு கைகளையும் வைத்து ஊன்றித் தோட்டத்திற்குள் தாவினான். மற்ற இருவரும் அவன் செய்ததைப் போலவே செய்து தோட்டத்திற்குள் தாண்டிக் குதித்தார்கள்.

மூவரும் அரைக்கால் சட்டை மாட்டியிருந்தார்கள். ஆ டெங்கும் தணிகாசலமும்  சணல் கயிற்றின் நிறத்திலிருந்த முரட்டுத் துணியால் தைத்த சட்டையை அணிந்திருந்தார்கள். பங்குனி மாத்திரம் சந்தன நிறத்தில் கொஞ்சம் விலையுயர்ந்த பருத்திச் சட்டையை அணிந்திருந்தான். அவர்கள் கால்களில் அணிந்திருந்த ரப்பர் செருப்புகளுக்கடியில் சிவப்பு நிலம் மனித மாமிசத்தின் கதகதப்போடு இருந்தது. அவர்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு காலடிக்கும் நெகிழ்ந்து மனிதச் சதையைப் போலவே வழிவிட்டு விலகுவதுபோல் மூவருக்கும் தோன்றியது.

நடைபாதையில் ஏற்பட்டிருந்த திடீர் சரிவில் தடுமாறி டூரியான் மரங்களுக்கு இடையில் விழப்போன ஆ டெங்கைத் தணிகாசலம் கை நீட்டிப் பிடித்துக் கொண்டான்.

பழங்களைக் கொண்டுவரப் போனபோது பார்த்த பலாப்பழத்தைத் திருட வேண்டும் என்ற எண்ணம் அவர்கள் இருவருக்கும் எப்போது தோன்றியது என்று அதன் பிறகு அவர்களால் எப்போதும் துல்லியமாய்ச் சொல்ல முடிந்ததே இல்லை. அன்று அதிகாலை தோட்ட வாசலில் கடகடவென்று அதிர்ந்து கொண்டிருந்த பழைய வாக்ஸ்ஹால் லாரியில் ஆ லிம்மின் மேற்பார்வையில் பழங்கள் நிறைந்த பிரம்பங்கூடைகளை ஏற்றிக் கொண்டிருந்த போதோ, லிம் ச்சூ காங்கிலிருந்து நகரத்தின் மையத்திலிருக்கும் அமோய் ஸ்தீரிட்டிலிருந்த சந்தைக்கு இருபது கல் தொலைவை வளைந்து வளைந்து போகும் ஒற்றைப் பாதையில் லாரியை ஓட்டிக்கொண்டு போகும்போதோ அந்த எண்ணம் தோன்றியிருக்கலாம்.

ஏன், அவர்கள் இருவரையும் சதா சோம்பேறி என்று கரித்துக் கொட்டிக்கொண்டபடியே இருக்கும் ஹாக் ச்சையின் கடையில் சுட்டெரிக்கும் ஆகஸ்டு வெயிலில் பழக்கூடைகளை இறக்கும் நேரத்திலும் அந்த யோசனை இருவருக்கும் தோன்றியிருக்கவும் கூடும்.

ஆனால் அந்த எண்ணம் தோன்றிய பிறகு அது உடனே செய்து முடிக்க வேண்டிய, மிகச்சரியான யோசனையாகவே அவர்கள் இருவருக்கும் பட்டது. பழத்தின் நீளத்தையும் கனத்தையும் பார்க்கும்போது முழுசாக விற்றால் பன்னிரண்டு வெள்ளியிலிருந்து பதினைந்து வெள்ளிவரை கிடைக்கும் என்று தோன்றியது. ஹாக் ச்சைகூட அதை வாங்கினாலும் வாங்குவான். கூறு போட்டு சைனா டவுனில் விற்றால் இருபதோ இருபத்திரண்டோ கிடைக்க வாய்ப்புண்டு. போர் முடிந்து பொருளாதாரம் இன்னும் தலைதூக்காத நிலையில் வாரத்தின் ஏழு நாளும் லாரி ஓட்டிச் சரக்குகளை ஏற்றியும், இறக்கியும் மாதம் எழுபத்தைந்து வெள்ளிக்கு மாரடிக்கும் பசி மிகுந்த இளையர்களுக்கு இது பெரிய காசு.

பணத்தை எடுத்துக் கொண்டு காலாங்கில் இருக்கும் ஹேப்பி வர்ல்ட்டுக்குப் போனால் வயிறு முட்டச் சீனர்களின் பாணியில் சமைத்த கடலுணவுகளைச் சாப்பிட்டுவிட்டுப் ஆளுக்கு இரண்டு பாட்டில் பீரும் குடிக்கலாம். அங்கேயே காபரே நடனங்களும் இருக்கும். காபரேயில் சீனாக்காரிகள், தாய்லாந்துகாரிகள், பிலிப்பினோகாரிகள் என்று விதவிதமாய்ப் பெண்கள் இருப்பார்கள்.

ஒரு வெள்ளி கொடுத்து ஒரு கூப்பன் வாங்கினால் அவர்களைத் தழுவியபடி மூன்று பாடல்களுக்கு நடனமாடலாம். வாடகைக்கு வருவதால் அந்தப் பெண்களுக்கு ‘டாக்ஸி நாட்டியக்காரிகள்’ என்று பெயர் இருந்தது.

மிஞ்சூட் முதலாளியின் கடையில் வெள்ளிக்கிழமை சாயந்திரம் லாரிச்சாவியைத் திருப்பித் தருவதைப்போல் திருப்பித் தந்துவிட்டுத் தணிகாசலம் எதையாவது நீளமாகப் பேசி அவர் கவனத்தைத் திருப்பும் நேரத்தில் மேசை இழுப்பறையிலிருந்து ஆ டெங் மீண்டும் லாரிச்சாவியைத் திருப்பித் தருவது என்று முடிவானது.

லாரிகளுக்குச் சொந்தக்காரரான மிஞ்சூட் டச்சுத் தந்தைக்கும் ஜாவா தாய்க்கும் பிறந்த சட்டைக்காரர் வெள்ளிக்கிழமை மாலை கடையைப் பூட்டிவிட்டுச் செலேத்தாரிலிருக்கும் அவருடைய பங்களாவுக்குப் போனார் என்றால் திங்கட்கிழமைதான் மீண்டும் நகரத்துக்குள் வருவார். திங்கள்கிழமை காலை கடை திறக்கும்போது அந்த வாரத்துக்கான வேலைகளைச் சரிபார்க்கும் மும்முரத்தில் மிஞ்சூட்டை மீண்டும் திசை திருப்பிச் சாவியை இழுப்பறைக்குள் வைத்துவிடுவது சுலபம்.

யாரும் சாப்பிடாமல் பறவைகளுக்கும், குரங்குகளுக்கும் இரையாகப் போகும் பழத்தைத் திருடுவதில் தவறே இல்லை என்று அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொண்டார்கள். அதற்கும் மேலாக ஆ டெங் வேறொரு காரணத்தையும் சொன்னான்.

“ஆ லிம் மாதிரியான கைக்காட்டித் தேவடியா மகனுங்க கொடுத்த தகவலை வச்சுத்தான் என் அப்பா, அண்ணன்கள், மாமான்னு எல்லாரையும் ஜப்பான்காரனுங்க நாற்பத்திரண்டுல சாங்கிக் கடற்கரைக்குக் கொண்டு போய் இயந்திரத் துப்பாக்கியை வச்சுக் கொத்துக் கொத்தா சுட்டுக் கொன்னானுங்க. அப்படிச் செத்து விழுந்த பல பேரோட பொணத்தையும் அப்படியே கடலுக்குள்ள தள்ளி விட்டுட்டானுங்க. சம்பவம் முடிஞ்சு ரொம்ப நாளைக்கப்புறமும் அந்தக் கடல்ல பிடிக்குற மீன்கள்ல மனுஷ விரலும் எலும்பும் இருக்குறத பார்த்து என் தோட்டத்துல வாழுற பல பேரு கடல் உணவைச் சாப்புடுறதையே விட்டுட்டாங்க. ஆ லிம் மாதிரி துரோகிங்க கிட்டயிருந்து திருடுறதுல தப்பே இல்ல.” 

தங்கள் திட்டத்தில் ஆ டெங்கும் தணிகாசலமும் பங்குனியையும் சேர்த்துக் கொண்டார்கள். அவனும் அவர்கள் இருவரையும் போலவே சிங்கப்பூரின் கிழக்குக் கடற்கரை கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன்தான். ஆனால் போர் தொடங்குவதற்கு ஒரு வருடத்துக்கு முன்பே சாங்கியிலுள்ள பிரிட்டிஷ் கடற்படை முகாமில் ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்துவந்த அவனுடைய தந்தை பங்குனியைப் படிக்க இந்தியாவுக்கு அனுப்பி விட்டார். போரின் வலியைப் பற்றியும் வன்முறையைப் பற்றியும் ஓர் எழவும் தெரியாதவனாய் பங்குனி படிப்பு முடிந்து சிங்கப்பூர் திரும்பியபோது அவனுக்கு சூலியா தெருவிலிருந்த ஏதோ ஒரு ஆங்கிலேய வர்த்தக நிறுவனத்தில் மாதம் இருநூறு வெள்ளிச் சம்பளத்தில் கிராணியாக வேலை கிடைத்தது. அந்த நிறுவனத்தில் ஆ டெங்கும், தணிகாசலமும் சரக்கு இறக்க அடிக்கடிப் போவார்கள். அப்போது ஏற்பட்ட பழக்கம்.

பங்குனிக்குப் படித்த திமிரும், வாயும் கொஞ்சம் ஜாஸ்திதான் என்றாலும் பலாப்பழம் திருடித் திரும்பும் நேரத்தில் பிடிபட்டால் பங்குனியின் படிப்பும் பணமும் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் அவனையும் சேர்த்துக் கொண்டார்கள்.

***

பொதுவாக மரத்திலிருந்து பலாப்பழங்களைப் பறிப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னமேயே அதிலிருக்கும் பிசுபிசுப்பான பால் வடிவதற்காக கத்தியால் அதன் தோல் மீது மூன்று கீறல்களைப் போட்டு வைத்துவிடுவார்கள். ஆனால் மைனாக்கள் பழத்தை ஏற்கனவே கொத்தியிருந்ததால் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்று ஆ டெங் சொல்லியிருந்தான். அவர்கள் மூவரும் பலா மரத்தின் அடியில் நின்றிருந்தார்கள். பழம் தொங்கிக்கொண்டிருந்த கிளை கொஞ்சம் உயரத்தில் இருந்ததால் ஆ டெங் தணிகாசலத்தின் தோளில் ஏறி அமர்ந்து கொண்டு பழத்தைப் பறிக்கலாம் என்று பேசி வைத்திருந்தார்கள்.

ஆனால் தணிகாசலம் தரையில் கை விரல்கள் பதிய முன்னால் குனிந்தபோது ஆ டெங்கிற்குப் பதிலாக பங்குனி தாவி ஏறிக் கொண்டான்.

ஆ டெங்கும் தணிகாசலமும் மெல்லிய குரலில் அவனைத் தடுத்துப் பார்த்தார்கள்.

“உனக்கு ஏன் இந்த வேலை, பங்குனி? விடு, ஆ டெங் ஏறட்டும்.”

“எனக்கு எல்லாம் தெரியும். முதல்ல அந்தக் கத்திய என்கிட்ட கொடுக்கச் சொல்லு. நாட்டுல ஞான் பார்க்காத பழமர, ஞான் பறிக்காத பழமா? நாட்டுல இதுக்கு என்ன பேரு தெரியுமா? சக்க, சக்க… நீங்களே பழத்தையும் பறிச்சு, அதை வித்துட்டா எனக்குச் சேர வேண்டிய சரி பங்கைக் கொடுக்காம நீங்களே எடுத்துக்கலாம்னு பார்க்குறிங்களா?”

பங்குனி தணிகாசலத்தின் கழுத்தைச் சுற்றித் தொடைகளை இறுக்கமாக வைத்து அமர்ந்திருந்தான். அவன் கைவிரல்கள் தணிகாசலத்தின் தலைமயிரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தன.

பங்குனியின் குரல் மெல்லிய ஓலமாக இரவின் நிசப்தத்தில் எழுவதைக் கவனித்த ஆ டெங் கவலையுடன் சுற்றும் முற்றும் பார்த்தான். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாகத் தனது கையிலிருந்த கத்தியைப் பங்குனியிடம் கொடுத்தான்.

“சரி, நீயே ஏறு.”

பழுக்காத பலாப்பழத்தை விரல்களால் தட்டினால் அதற்குள் துணி வைத்து அடைத்திருப்பதுபோல் ‘சொத் சொத்’ என்ற ஒலியெழும்பும். தணிகாசலத்தின் தோளில் அமர்ந்திருந்த பங்குனி பழத்தை எட்டியபோது அதை விரல்களால் தட்டக் கணீர் என்ற மணிநாதமாய் ஓசை எழுந்தது.

“பழம் நல்லா பழுத்திருக்கு” என்று தணிகாசலத்தின் அருகில் நின்றிருந்த ஆ டெங் அடிக்குரலில் சொன்னான். அவனிடமிருந்த பேரார்வம் அவன் உடம்பிலிருந்து எழுந்த மெல்லிய வியர்வை நாற்றமாய் வீசிக் கொண்டிருந்தது.

பங்குனி மார்பின்மீது பழத்தைச் சாய்த்தபடி கத்தியைக் கொண்டு அதன் காம்பைச் சரசரவென்று அறுப்பது இருவருக்கும் தெரிந்தது. பழம் கிளையிலிருந்து விடுபட்டதும் பங்குனி அதைக் கைக்குழந்தைபோல் மார்போடு ஏந்திப் பின்னர் அதை மூக்கிற்கு அருகே கொண்டு சென்று அதன் வாசனையை ஆழ முகர்ந்தான்.

தணிகாசலம் பங்குனியின் உடல் எடை தாங்காமல் கால் மாற்றி நின்றான்.

“ரசிச்சது போதும். சீக்கிரம் இறங்கிவாடா பன்னி” என்று தனக்குத்தானே தணிகாசலம் சொல்லிக் கொண்டான்.

பழத்தைப் பறித்த பிறகு அதைக் கீழே இருக்கும் ஆ டெங்கிடம் கொடுத்துவிட்டுப் பங்குனி இறங்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் திட்டம். ஆனால் பழத்தை அணைத்தபடி அமர்ந்திருந்த பங்குனி சிறிது நேரமாய் எந்தவித அசைவுமில்லாமல் கையிலிருந்த பழத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பின்பு என்ன நினைத்தானோ ‘எண்ட பகவதி’ என்று குரல் கொடுத்தவன் கைகளைப் பலமாக உதறிக் கொண்டு அசாதாரணமான சிலிர்ப்போடு பழத்தை வெகு தூரத்தில் வீசி எறிந்தான். பழம் தரையில் மோதும் ஓசை பெருஞ்சத்தமாக இரவின் அமைதியில் பிளந்து வந்தது. தணிகாசலத்தின் தோளிலிருந்து பங்குனி குதித்து இறங்க முயன்றதில் தணிகாசலம் நிலை தடுமாறி ஆ டெங் இருந்த திசையில் சாய மூவரும் தரையில் விழுந்தார்கள்.

கீழே விழுந்த பங்குனி கைகளை உடம்பில் படாதவாறு உயர்த்திப் பிடித்தபடியே ‘ரத்தம், கையெல்லாம் ரத்தம்’ என்று கத்திக்கொண்டு பித்துப் பிடித்தவனைப்போல் எழுந்து ஓடினான்.

சத்தம் கேட்டுச் சுற்று வட்டாரத்தில் இருந்த நாய்கள் அனைத்தும் மீண்டும் பெருங்குரலெடுத்துக் குரைக்க ஆரம்பித்தன.

“ரத்தம் இல்லடா. அது பலா மரத்தோட பாலுதாண்டா. காம்பை அறுக்கும்போது பால் வடியும்டா” என்று சொல்லிக்கொண்டே ஆ டெங்கும் தணிகாசலமும் பங்குனிக்குப் பின்னால் ஓடினார்கள். எப்படியோ வேலியை மீண்டும் தாண்டி தூரத்தில் நிறுத்தி வைத்திருந்த லாரியை வந்து சேர்ந்த போதுதான் பழத்தை மரத்திற்கு அருகிலேயே விட்டுவிட்டு வந்திருப்பது அவர்கள் இருவருக்கும் உறைத்தது.

ஆனால் அதற்குள் நாய்களின் ஓயாத குரைப்பு இருட்டில் மூழ்கிக்கிடந்த பழத்தோட்டத்தின் எல்லாத் திசைகளிலும் எதிரொலிக்க ஆரம்பித்திருந்தது. தோட்டமே ஆத்திரம் நிறைந்த கறுப்பு நாயாய் மாறி அவர்களைப் பார்த்துக் குரைப்பதாக அவர்களுக்குத் தோன்றியது. எங்கிருந்தோ எழுந்த வெப்பக்காற்றின் சுழற்சியில் சளசளக்க ஆரம்பித்திருந்த பழ மரங்களின் இலைகள் பௌர்ணமி நிலவின் வெளிச்சத்தில் மூடித் திறக்கும் கண்களாக மாறி அவர்களைப் பார்த்து முறைத்தன.

பங்குனி வரவே இல்லை. கொஞ்ச நேரம் காத்திருந்துவிட்டு ஆ டெங்கும், தணிகாசலமும் லாரியைக் கிளப்பி அந்த இடத்தைவிட்டு அகன்றார்கள்.

***

     இது நடந்து சில நாள்களுக்குப் பிறகுதான் பங்குனி அவர்கள் கண்ணில் அகப்பட்டான். சந்தையில் காய்கறிகளை இறக்கிவிட்டுத் தணிகாசலமும் ஆ டெங்கும் அமோய் தெருவின் முக்கில் இருந்த சீனன் கோப்பிக் கடையில் வறுத்த ரொட்டியும் முட்டையும் தின்று கொண்டிருந்தார்கள். தூரத்தில் பங்குனி நடந்து வருவது தெரிந்தது. தலை மயிர் கலைந்திருந்தது. கண்களுக்கடியில் ஆழமான கறுப்பு வளையங்கள் தோன்றி கண்கள் சிவப்பேறிப் பழுத்திருந்தன. கன்னம் ஒடுங்கியிருந்தது. வெள்ளை நிறச்சட்டை அழுக்கேறி அதன்மீது செம்மண் தீற்றல்களும் கறுப்புக் கோடுகளும் ஏற்பட்டிருந்தன.

பங்குனி தன் இரண்டு கைகளையும் தனது உடலுக்கு முன்னால் வெகுதூரத்தில் வைத்து விநோதமான முறையில் நடந்து போய்க்கொண்டிருந்தான். அவன் அலுவலகத்துக்குப் போனதாகத் தெரியவில்லை. தணிகாசலம் அவனை உரத்த குரலில் கூப்பிட அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு மந்திரத்தில் கட்டுண்டவன்போல் பங்குனி நடந்து வந்தான். அவன் கண்கள் ஜீவக்களையற்று வெறும் தட்டைகளாக இருந்தன. அவன் மீதிருந்து பலமான துர்நாற்றம் வீசியது.

“என்ன பங்குனி. மூனு நாளா உன்னைத் தேடிகிட்டு இருக்கோம். உன்னைத்தேடி உன் கிராமத்துக்குக் கூடப் போய்ப் பார்த்தோம். நீ வீட்டுக்கே வரலையாமே. என்ன ஆச்சு. உடம்புக்கு ஏதாவது கோளாறா?”

எதிரில் வந்து அமர்ந்தவனைத் தணிகாசலம் கேட்டான். ஆ டெங் எதுவும் சொல்லாமல் சீக்கிரம் ஆறுவதற்காகக் கோப்பையிலிருந்து பீங்கான் தட்டில் கவிழ்த்து ஊற்றியிருந்த சூடான காபியை உறிஞ்சிக் குடித்தபடியே பங்குனியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“பழத்துலர்ந்து ஊறுன ரத்தத்தைக் கழுவ முடியலடா. எவ்வளவுதான் தேச்சுக் கழுவுனாலும் ரத்தத்தோட பிசுபிசுப்பும், கவுச்சி நாத்தமும் போகாம இருக்கு. எல்லா எடத்துலயும் முயற்சி பண்ணிப் பார்த்துட்டேன். இந்தப் பக்கமா போனா ஆத்துல இறங்கி கழுவலாம்னு தோனுச்சு.”

கிழக்குத் திசையில் சிங்கப்பூர் ஆறு இருந்த பக்கமாய்ப் பங்குனி விரலை நீட்டிக் காட்டினான்.

“ப்ச்சு. அதெல்லாம் சும்மாடா. பலா மரத்துல காய் பறிக்குறப்ப இப்படி பிசுபிசுப்பா பால் வடியும். அதைப் பார்த்து என்னமோ ஏதோனு பயந்திருக்க. இங்க டேங் ரோடு தண்டாயுதபாணி கோவிலுக்குப் பக்கத்துல மந்திரிக்குறவரு ஒருத்தரு இருக்காரு. நம்மாளுதான். அவருகிட்டப் போயி விபூதி வாங்குனா எல்லாம் சரியாகிடும்.”

பங்குனி எந்தவிதமான பதிலும் சொல்லாமல் அமர்ந்திருந்தான். அவன் கண்களில் தெரிந்த வெறுமை தணிகாசலத்தை உலுக்கியது.

“தூங்கலையா?” என்று பங்குனியைத் தணிகாசலம் கேட்டான்.

“எங்கத் தூங்குறது? கண்ணை மூடுனாத்தான் அந்தப் பொண்ணு வந்து நிக்குறாளே.”

“பொண்ணா? யாரு?”

பங்குனி உதடுகளைப் பிதுக்கிக் கைகளை விரித்தும் ஆட்டியும் சைகை செய்தான்.

“யாருக்குத் தெரியும்? யாரோ சீனாக்காரி. இருபது வயசோ இருபத்தியொண்ணோதான் இருக்கும். ஆனா ஜப்பான்காரன் உடுப்புப் போட்டிருக்கா. ஜப்பான் பொம்பளைங்க மாதிரியே தலைய வாரிக் கொண்டை போட்டிருக்கா. அந்த ஊர்ப் பொம்பளைங்க மாதிரியே மூஞ்சியெல்லாம் பவுடர் அப்பியிருக்கா. கண் அசரும்போது மண்டைக்குள்ள தோணி ‘என் கதைய எளுது, என் கதைய எளுது’னு ஓயாமச் சிரிக்குறா. ஏந்திரிச்சு எழுத ஆரம்பிச்சா பைப்ப தொறந்த மாதிரி கதை கதையா வந்துகிட்டே இருக்கு. இந்த மூனு நாளாப் பக்கம் பக்கமா எளுதிகிட்டே இருக்கேன். ஒரு துளி தூக்கமில்ல. இதோ பாரு.”

பங்குனி தனது கால்சட்டைப் பைக்குள்ளிருந்து மடித்து வைக்கப்பட்டிருந்த தாள்களை எடுத்துக் கோப்பிக்கடை மேசை மீது போட்டான். தணிகாசலம் காகிதங்களை எடுத்துப் பிரித்துப் பார்த்தான். உள்ளே நுணுக்கி நுணுக்கிப் பச்சை மையில் பங்குனியின் கிறுக்கலான கையெழுத்து. சின்னச்சின்னச் சம்பவங்கள், ஒரு பெண் எழுதியதைப் போன்ற காதல் கவிதைகள், சின்னச்சின்னப் பூக்களைத் தொடுத்ததுபோல் சுய விளக்கங்கள். எல்லாவற்றிலும் தன்னையே வெளிப்படுத்திக் கொள்ளத் துடிக்கும் ஆழமான விம்மலோசை.

“சரி, இப்படியே எத்தனை நாள்தான் இருக்கப் போற?” என்று கேட்டான் தணிகாசலம்.

“தெரியல. என் கையில இருக்குற ரத்தக்கறை போகுற வரைக்கும் நான் இப்படி எழுதிகிட்டுத்தான் இருக்கணும்னு தோணுது. அதனாலதான் இந்த ரத்தத்தை எப்படியாவது கழுவிட முடியாதானு ஒவ்வொரு எடமா அலைஞ்சுகிட்டு இருக்கேன்.”

“போடா முட்டாள். அது ரத்தமே இல்லைனுதான நான் படிச்சுப் படிச்சுச் சொல்லிகிட்டு இருக்கேன்.”

ஆனால் தணிகாசலம் சொன்னதைப் பங்குனி கேட்டதாகத் தெரியவில்லை. அவன் எழுந்து கைகளைத் தன் உடம்புக்கு முன்னால் பிடித்தபடியே விநோதமான ஜந்துவைப் போல் உடம்பைச் சற்றே முன் தள்ளியபடி நடக்க ஆரம்பித்திருந்தான். என்ன நினைத்தானோ மீண்டும் ஆ டெங்கும் தணிகாசலமும் அமர்ந்திருந்த மேசைக்கும் மீண்டும் வந்து நின்று கொண்டான்.

“அவளோட கதைகள்லயும் கவிதைகள்லயும் தான் அவளோட சதையும் ரத்தமும் கலந்திருக்குறதா அவ சொல்லிச்சொல்லிச் சிரிக்குறாடா. வன்முறையில செத்துப்போன ஒருத்தரோட கதைகளைத் தொட்டவன் அதை மறுபடிக் கதையாவோ, பாட்டாவோ இறக்கி வைக்குற வரைக்கும் ரத்தக்கறை போகவே போகாதுன்னு என் திருவனந்தபுர சரித்திர வாத்தியார் ஒருநாள் பாடம் நடத்துறப்போ எதுக்காகவோ சொன்னாரு. என் கையில இருக்குற கறை போற வரைக்கும் நானும் இப்படியே அலைஞ்சுகிட்டே இருக்க வேண்டியது தான் இல்ல?”

அமோய் தெருவில் சிதறிக்கிடந்த வெயிலின் பிரகாசத்தில் தலையை உயரத்தூக்கி ஊளையிடுவதைப் போலவும் காற்றில் மிதந்து கொண்டிருக்கும் அரூபமான நதியிலிருந்து குளிர்ந்த தண்ணீரை உறிஞ்சி உறிஞ்சிக் குடிப்பது போலவும் பங்குனி பெருங்குரலெடுத்துச் சிரித்தான். ஆனால் அப்படிச் சிரித்தபோது அவன் முகத்தில் மலர்ச்சி ஏற்படவில்லை. மாறாக அந்தச் சிரிப்புச் சத்தம் அகாலமாய் நிகழ்ந்த பல்லாயிரக்கணக்கான கொடூர மரணங்களுக்காக எழுப்பப்பட்ட பெரும் ஓலமாகத்தான் தணிகாசலத்தின் காதுகளில் கேட்டது.

மீண்டும் இருமுறை அப்படிச் சிரித்துவிட்டு கைகளை உடம்புக்கு முன்னால் நீட்டியபடி சிங்கப்பூர் ஆறு இருந்த திசையில் பங்குனி ஓடினான். முன்னால் வருபவர்கள் யாரையும் சட்டை செய்யாமல் ஓடிக்கொண்டிருந்தவனின் பாதையிலிருந்து விலகியவர்கள் அவனைப் ‘பைத்தியம்’ என்று சொல்லிச் சபித்தார்கள்.

தணிகாசலம் பீங்கான் தட்டில் ஆறிப்போயிருந்த காபியின் மிச்சத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஆ டெங்கைப் பார்த்தான்.

“நாம ஹூங் பத்திப் பங்குனிகிட்ட எதையும் சொல்லல, இல்ல?”

ஆ டெங் சிந்தனையில் மூழ்கியிருந்தான். தணிகாசலத்தின் கேள்விக்கு லேசான தலையசைப்பை மட்டுமே பதிலாய்த் தந்தான்.

“பின்ன இது எப்படி?” என்று கேட்டான் தணிகாசலம்.

ஆ டெங் எதுவும் சொல்லவில்லை. தட்டில் ஆறிப்போயிருந்த காபியை உறிஞ்சிக் குடித்தான். காபியைக் குடித்து முடித்தவன் தணிகாசலத்தைத் தீர்க்கமாய் ஏறிட்டுப் பார்த்தான். அவன் கண்களில் நீர் தளும்பியிருந்தது.

“மூன்றரை வருஷக் கதை, தண்ணி. இந்த மூன்றரை வருஷத்துல எத்தனை பேரு ஏன்னு கேட்குறதுக்குக்கூட நாதியில்லாம சாட்சியே இல்லாமச் செத்துப் போயிருப்பாங்க? செத்துப்போன அத்தனை பேருக்கும் அவங்களோட கதைகளைச் சொல்லணும்னு ஆசையிருக்குமா, இருக்காதா? ஆனா, நாம இப்படிச் செத்தவங்களோட கதையில ஒரு கதையையாவது உருப்படியா எழுதி வச்சோமா? சண்டை முடிஞ்சு பத்து வருஷம்கூட ஆகல, நல்லா தின்னுட்டு, உடுத்திகிட்டுச் சுத்திகிட்டு இருக்கோம். ஆனா அதுக்குமேல அநியாயமா சிந்துன ரத்தத்தை மண்ணு மாத்திரம் எப்பவும் மறக்காதாம், தண்ணி. எப்படியாவது அநியாயமாச் செத்துப் போனவங்களோட கதையை அது வெளிப்படுத்தியே தீருமாம். அப்படி அநியாயமாச் செத்துப்போன ஒருத்தியோட கதையத்தான் அந்தத் தோட்டத்தில் வேதனை தாங்காம திரண்டு நின்னு சொல்லிருக்கு, பலா மரமா?”

ஆ டெங்கின் முகத்தில் சொல்லுக்குள் அடங்காத கசப்பு ஒட்டியிருந்தது. சட்டையில் ஒட்டியிருந்த வறுத்த ரொட்டித் துண்டுகளை கைகளால் தட்டிவிட்டபடி அவன் மேசையிலிருந்து எழுந்து போனான்.

ஆ டெங் போவதைத் தணிகாசலம் பார்த்துக் கொண்டிருந்தான். எங்கிருந்தோ இருந்து எழுந்த காற்றில் கோப்பிக்கடை மேசை மீது பங்குனி விட்டுவிட்டுப் போன காகிதங்கள் சிறிய வெள்ளைப் பூக்களாய்ச் சுழன்று அமோய் தெரு முழுவதும் இறைந்து கிடந்தன.

***

-சித்துராஜ் பொன்ராஜ் இவர் சிங்கப்பூரில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பு பணிகளுடன், படைப்புகள் (கதை, கவிதை, நாவல்), விமர்சனங்கள், இலக்கிய உரைகள் என பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறார். தமிழ், ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.

சங்குத்தவம்

கார்த்திக் புகழேந்தி

1

டற்கரையூரில் ஆச்சி ஒருத்தி இருந்தாள். ‘அயந்தவனுக்கு அயிப்பைக் கண்டாலும் பேய்தான்’ என்றவொரு சொலவடையை அவள்தான் எனக்குச் சொன்னாள். ஆச்சி நல்ல கதைசொல்லியும் கூட.

மக்களை நோய்நொடிகளில் இருந்து தெளிய வைக்க மருந்துக் குளிகைகள்  மட்டும் போதாது, கூடவே சில மந்திர மாயங்களும் வேண்டும் என்பது அவளது நியமம். அதன்படி, நிறைமாத சூலிகளுக்கு நாடி பார்க்க, பச்சிளம் பிள்ளைக்கு பாதல் இறக்க, தொண்டைக்கட்டு, வாய்க்கட்டு, கொதி, சாக்காடுகளைக் கண்டு பயந்துபோன சிறுசுகளுக்கு நீர் தெளிக்க, வள்ளம், வலை, யாத்தீனங்கள் வாங்கினவர்கள் அதற்கு துஷ்டம் கழிக்க என்று சகல மருத்துவ மாந்திரீக மந்திர காரியங்களுக்கும் ஆச்சியைத் தேடி சனங்களும் வந்தபடியே இருப்பார்கள்.

ஆச்சியின் விவகாரங்களில் பலது இப்போது நியாபகத்தில் இல்லை என்றாலும், என் சின்ன வயதில் அவள் சொன்ன, வலம்புரி இடம்புரிச் சங்குகள் குறித்த கதை ஒன்று இன்னமும் என் நினைப்பில் அச்சுமாறாமல் இருக்கிறது.

கதைப்படி, ஆணும் பெண்ணுமான வலம்புரி-இடம்புரி சங்குகள் தங்கள் வாழிடத்திலிருந்து பரதவர்களின் கரையை நோக்கி, கூனி மாதத்தில் நகர்ந்து வருகின்றன. கடலின் பரிவார தேவதைகளென அறியப்படும் இந்தச் ‘சங்கிணைகள்’ விடிகாலை நேரத்தில் அலைபுரளும் மணற்கரையில் புறப் புணர்ச்சியில் ஈடுபட்டு, கொண்டாடிக் கழித்து, சூரிய உதயம் எழுகிற நேரத்தில் தாங்கள் யாரை ஆசீர்வதிக்க நினைக்கிறார்களோ அந்தப் பரதவனுக்குக் கடலின் செல்வம் கொழிக்கிற திசைமுகத்தை அடையாளம் காட்டிவிட்டு மறுபடியும் தண்ணீருக்குள் முங்கிவிடுவார்களாம்.

அப்படியொரு சமயத்தில் பிள்ளையில்லாத முக்காப் பரதவன் ஒருத்தன் காலைக் கருக்கலில் சொளவுத் தட்டைப் பிடித்துக் கொண்டு கடற்கரை வெளியில் கரை ஒதுங்க வருகிறான். அன்றைக்கு நல்ல அடைமழை வேறு. சொளவைத் தலைக்கு மேலாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, வெளிக்கு போய்க் கொண்டிருந்தவன் கண்ணில் கடலுக்குள் திரும்பாத வலம்புரி-இடம்புரி சங்குச் சோடிகள் தென்படுகிறது. பேராசை பிடித்த அவன் அழுங்காமல் தன்னுடைய முண்டாத் துணியில் அவைகளைப் புரட்டி எடுத்து தன் குடிசையில் ஒளித்து வைத்துக் கொண்டான்.

வலம்புரிச் சங்கிற்கு கடலின் ஆழங்களும், மர்மங்களும் தெரியும். இடம்புரிச் சங்கிற்கு மீன்வளம் தங்கிக் கிடக்கும் இடங்களும், காற்றின் திசையும் தெரியும். இந்த இரண்டின் அருளாசி கிடைக்கிற பரதவன், பாண்டியபதி அரண்மனை கிட்டங்கியில் குவிந்து கிடக்கும் முத்துப் பண்டாரத்தைக் காட்டிலும் அளப்பரிய செல்வத்தைக் கடலுக்குள் கண்டடைவான் என்பது கடற்கரை நம்பிக்கை. ஏக காலத்தில் இந்த இரண்டு சங்குகளும் சோடியாய்க் கிடைத்த முக்காப் பரதவனுக்கு அடித்தது யோகம். அதன்பிறகு அவன் வலையெல்லாம் மீன். மரமெல்லாம் சிப்பி ஒட்டு என்றாகிவிட்டது..

மற்றவர் ஒருதிசைக்கு ஓடினால், இவன் வேறு திசைக்கு ஓடி கடலையே அள்ளிக்கொண்டு வந்ததுபோல மீன்களோடு திரும்பியிருக்கிறான். மறுநாள் அதே திசைக்குத் தேடிப் போனவர்களுக்கு வெறுங்கைதான் மிச்சம். இவன் நம்மையெல்லாம் ஏமாற்றி என்னம்மோ மந்திரம் பண்ணுகிறான் என்று மீனவசாரிகளுக்குள் முனுமுனுப்பு ஆரம்பித்துவிட்டது. அப்படிச் சந்தேகம் பிடித்த வெத்தலைக் காம்பு பரதவன் ஒருத்தன், முக்காப் பரதவனின் குடிலைச் சுற்றிச்சுற்றி வந்தானாம்.

ஆளில்லாத நேரம் பார்த்து, முக்காப்பரதவனின் குடிசைக்குள் புகுந்து, அவன் மண்பானைக்குள் முடிந்து வைத்திருந்த சங்கிணைகளைக் களவெடுத்துச் சென்றுவிட்டானாம். இந்த விவகாரம் ஊராளியான கோமரத்தாடிக்குத் தெரிய வந்துவிட, அவர் வெத்தலைக் காம்புப் பரதவனை மிரட்டி, ’வலம்புரி உனக்கு இடம்புரி எனக்கு’ என்று ஆளுக்கு ஒன்றாகப் பங்கு கேட்டாராம். வெத்திலைக் காம்பு பரதவனும் வேறு வழியில்லாமல் இந்த இணக்கத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டான். சங்குச் சோடிகள் ஒன்றை ஒன்று பிரிந்து இருவேறு கைகளில் சிக்கிக் கொண்டன.

பிரிவின் சோகத்தால் பீடிக்கப்பட்ட வலம்புரிச் சங்கு, கண்ணீராய் வடித்தது. ஊர்கேட்க ஓலமிட்டது. சத்தம்கேட்ட பரதவர்கள் அது என்ன என்ன என்று அலைபாய்ந்தார்களே ஒழிய சத்தம் வந்த திக்கு புலப்படவில்லை. சங்குச் சோடிகளைத் திருட்டுக்கொடுத்த முக்காப் பரதவன் மட்டும் கரையெல்லாம் தேடிக் கொண்டே திரிந்தான். 

ஒருநாள் பகலில், கடலின் மர்மங்களைத் தன்னிடம் காதுகொடுத்துக் கேட்ட வெத்தலைக்காம்பு பரதவனிடம், ’கடலடி ஆழத்தில் யாருக்கும் தெரியாமல் யானை தண்டியிலான தங்கப் பாறை ஒன்று இருக்கு.. நீ மொத்தமா அத எடுக்க முடியாது. ஆனா உளி எடுத்துட்டுப் போனீன்னா கொஞ்சங் கொஞ்சமா வெட்டி எடுத்துட்டு வந்துடலாம்..” என்று சொன்னது.

தாங்க முடியாத பேராசை வந்துவிட்ட அவன் முன்பின் யோசிக்காமல், உடனே சங்கையும் உளியையும் கையில் எடுத்துக்கொண்டு, ‘எங்கே அந்த இடத்தை எனக்குக் காட்டு’ என்று கட்டுமரத்தோடு கடலுக்குள் கிளம்பிப் போனான். இங்கே அங்கே என்று கசம் வரைக்கும் இழுத்துச் சென்ற வலம்புரிச் சங்கு,  பெரிய சுழியாகப் பார்த்து அவன் கட்டுமரத்தைச் சிக்கவைத்து அத்தோடு அவனையும் மூழ்கடித்துவிட்டதாம்.

தனித்துத் தப்பித்துக்கொண்ட வலம்புரிச் சங்கு, அதுமுதல் யார்கண்ணிலும் சிக்காமல் நள்ளிரவில் தன் இணையைத் தேடிக் கரையோரம் ஒதுங்கி, கூவல் ஓசை எழுப்புமாம். நம்பி யாராவது தேடிப் போனால் அவர்களையும் கடலுக்குள் இழுத்துச் சென்று சுழியில் தள்ளிவிடுமாம். அதனால் தான் ‘ராத்திரி நேரம் அரசனே அக்கரைக்கு வான்னு கூப்பிட்டனுப்பினாலும் எந்திரிச்சிப் போயிடாதே’ என்று திரும்பவும் ஒருமுறை அழுந்தச் சொல்வாள் ஆச்சி.

கடல்சார்ந்து கேட்டறிந்த பல நாட்டாரியல் கதைகளுக்குள் களவெடுத்தல், பேராசை, கடலின் மர்மம், பேய் விளிக்கும் நம்பிக்கை, பாலியல் புணர்ச்சி, இழப்பு, பிரிவு, தேடல் என்று பல்வேறு விசயங்கள் மரபாகப் படிந்து கிடக்கின்றன. கடற்கரைக்காரனாக இல்லாமல் போனாலும், இந்தக் கதைகளை அள்ளித் தெளிக்கிற மனிதர்களோடு நெருக்கமாக இருந்த்துண்டு. அவர்களிடம் இருந்தே சங்குகள் குறித்த விதவிதமான அனுபவங்களும் தேடல்களும் எனக்கு வாய்த்தது.

திருச்செந்தூர் கோயில் வாசலில் ‘பண்ணாடி’ ஒருவர் அறிமுகமாகி இருந்தார். அவருடைய முன்னவர்களைப் பாண்டிப் பண்ணாடிகள் என்று அவர் குறிப்பிட்டார். பாணர்போல ஊரூராகப் போய் சங்கநாதம் முழங்கிப் ’பண் பாடி இரக்கிற’ பிழைப்பைச் செய்து வந்தவர் அவர். இரு கைகள் கொண்டு ஏந்தும் அளவுக்குப் பெரிதான வலம்புரியும்-இடம்புரியுமாக இரட்டைப் பால் சங்குகளை அவரிடம் தான் முதன்முதலில் பார்த்தேன். மூக்குகள் அறுத்து, பித்தளை பூண் பொருத்தி, முனையில் நாகலிங்கம் வைத்த அச்சங்குகளை ஒருசேர இசைக்கத் தெரிந்த அவர் கோயில் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். ஆச்சி சொன்ன கதையை மனதில் வைத்துக்கொண்டு, அவரிடம் கேட்டேன்.  

“இது ரெண்டும் ஒருத்தர்கிட்டே இருந்தால் ராசாவாட்டம் வாழமுடியுமாமே?”

“எனக்கென்ன குறை, இப்பவும் நான் ராசாவாட்டம் தானே வாழுறேன்” என்று சிரித்தார்.

வாய்வலிக்கப் பலதடவை முயன்ற பிறகு அவர்தான் எனக்குச் சங்கை முழக்கக் கற்றுக் கொடுத்தார். பிறகு சங்கு குறித்தான என் நெடிய தேடல்களுக்கு அவரும் ஓர் முக்கிய காரண கர்த்தாவானார்.

2

சங்கும் பண்பாடும்

சங்கிற்கும் தமிழர் பண்பாட்டிற்கும் ஒரு நீண்ட பாரம்பரியத் தொடர்பு உண்டு. பழங்காலத் தமிழர் வாழ்வில் முச்சங்கு முழங்கும் வழக்கம் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. பிள்ளை பிறப்பின்போது, பாலூட்டுவதற்கு முதலாவதும், ஆணும் பெண்ணும் மணம் முடிக்கும்போது இரண்டாவதும், மரணத்தின்போது மூன்றாவதுமாகச் சங்கினை வாழ்வின் மும்முறை முழங்குவதை கடனாகக் கொண்டிருக்கிறார்கள். ‘முதற் சங்கு அமுதூட்டும், இரண்டாவது நல்வழி காட்டும், கடைச் சங்கம் காதவழிபோம்’ என்பது வழக்கு.

பேறுகாலம் முடிந்து, தாய் பிள்ளையைப் பெற்றெடுத்ததும், தாயும் மகவும் நலம் என்பதை அறிவிக்க, செவிலிப் பணி செய்யும் பெண் சங்கை முழங்கி, உற்றாருக்குக் குறிப்பால் உணர்த்துவார். இக்குறிப்பு ஒலியின் எண்ணிக்கை அடிப்படையில் வேறுபடுத்தி அறியப்படும். பிள்ளையின் தாய்மாமன் சங்கிப் பாலாடையைத் தாய்க்கு அன்பளிப்பார். அதுவே, குழந்தைகளுக்குப் பாலூட்டவும், மருந்து புகட்டவும் பயன்படுத்தப்படும். சிந்துச் சமவெளி ஆய்வுகள் தொடங்கி, ஐம்பதாண்டுகள் முன்பு யாழ்ப்பாணப் பகுதிகளில் நடந்த ஆய்வுகள் வரை, தமிழ் மக்கள் பயன்படுத்திய இச்சிறிய பாலாடைச் சங்குகள் கணக்கற்று கிடைத்துள்ளன. உலோகப் பாலாடைகள் பயன்பாட்டுக்கு வந்த பிறகும், கிராமப்புறப் பகுதிகளில் இன்றும் சங்குப் பாலாடை பயன்பாட்டில் உள்ளது.

திருமணத்தில் சங்கு முழங்கும் பழக்கம்ம் நம்முடைய நீண்ட கால மரபு. இன்றளவில், நாவிதர், நாட்டுக்கோட்டைச் செட்டியார் குடும்பத்தவர்கள் தங்கள் திருமணங்களில் சங்கு ஊதும் பழக்கத்தைக் கடைபிடிக்கிறார்கள். கள்ளர் இனத்தில், தங்கள் வீட்டுத் திருமண நிகழ்வில், மணமகன் வீட்டுக்கு, மஞ்சள், மாலை, தேங்காய், நெல், பால், நெய், வெற்றிலை, பாக்குடன் ஊர்வலமாகச் செல்லும் பெண்கள் சங்கு ஊதும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் திருமணங்களில் குடிமகன், சங்கு ஊதப் பெண்கள் குலவை இட்டுத் தாலி கட்டு பழக்கம் 1980 வரை இருந்துவந்துள்ளதாக அவ்வூரைச் சேர்ந்த திருமுருகன் அவர்கள் தகவல் தெரிவித்தார். இரவு நேரங்களில் நடைபெறும் இத் திருமணத்தைத் திருப்பூட்டுதல் என்றே அழைத்து வந்திருக்கிறார்கள்.

ஆந்திரத்தில் தண்டாசி மற்றும் பௌரீஸ் ஆகிய இனக்குழு மக்கள் தங்களது திருமணங்களில் சடங்குகளில் சங்கின் உள்ளே மஞ்சள் கரைசலை ஊற்றி அதைக்கொண்டு மணமக்கள் கைகளில் நனைவிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். வங்காளம், ஒரிசா பகுதிகளில் பார்ப்பனர்கள் தங்கள் திருமணங்களில் சங்கொலி இசைக்கிறார்கள். ஆனால், தெலுங்கு மொழி பேசும் சில இனக்குழுவினரும், தமிழக பார்ப்பனர்களும் சங்கொலியினைத் தீய ஒலியாகக் கருதியதால் தங்கள் திருமண காரியங்களில் அவர்கள் சங்கினை இசைப்பதில்லை. நாச்சியார் திருமொழியில் ஆண்டாளின் திருமணக் கனவிலும், நளவெண்பாவில் தமயந்தியின் சுயம்வரத்திலும் சங்கம் முழங்கும் பாடல்கள் இலக்கியச் சான்றாக உள்ளன..

மூன்றாம் சங்கநாதமான, இறப்புச் சடங்கில் சங்கொலி எழுப்புவது தமிழகத்தில் பார்ப்பனர், வைணவர் அல்லாத அனைத்து சதியினரிடமும் இன்றளவும் காணப்படுகிறது. நெல்லை, மதுரை உள்ளிட்ட தெற்கத்திப் பகுதிகளில் நாவிதர்களும், கோவை, திருச்சி பகுதிகளில் பறையர்களும், தஞ்சை, சேலம், உள்ளிட்ட வடமேற்குப் பகுதிகளில் பணிசவர் சாதியினரும் பிற சாதியரின் இறப்புச் சடங்குகளில் இத்தொழிலைப் புரிகிறார்கள். இவர்களே இறப்புச் செய்தியை ஊருக்கு அறிவிப்பவராகவும் செயல்படுகிறார்கள்.

திருவிதாங்கூர் பகுதிகளில் சங்கூதும் பறையர் இறந்தால் அவரது சங்கையும் அவரோடு சேர்த்துப் புதைக்கும் பழக்கம் இருந்துவருகிறது. இச்சடங்குகளில், திருமணமான ஆண் இறந்தால் அவரது மனைவியின் தாலி  கழற்றப்படும்போது, உறவினர்கள் கோடித்துணி வீசும்போது, வீடுதாண்டு சடலம் புறப்படும்போது என ஒவ்வொரு சடங்கின் முடிவிலும் சாவுச் சங்கொலி எழுப்புகிறார்கள்.

பிற நம்பிக்கைகளில்..

பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியவை தவிர விழாக்களிலும், போர்களின் போதும், அறிவிப்பு செய்யவும், பிச்சை எடுக்கவும், பேயோட்டவும், அறுவடைக்கு முன்பும், பொங்கல் இடுகையிலும், பூப்புச் சடங்கிலும், வழிபாட்டிலும், விடியல் நிமித்தமும், நாட்டார் இசை, நடனங்களிலும், கோயில் வழிபாடுகளிலும் சங்கொலி முழங்குதல் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

தேவக்கோட்டை கள்ளர்கள் ஆடிப்பட்டத்தில் அவரை விதை நட்டு, அது முதல் பூ பூத்ததும் சங்கு ஊதி சாமி கும்பிடுகிறார்கள். வீட்டில் வைக்கும் தென்னை முதல்  பாளை தள்ளினால் பொங்கல் வைத்துச் சங்கு ஊதுவது வழக்கம். கொச்சி மலபார் பகுதிகளில் வேளாண் தொழில்செய்யும் செருமான்கள் இறந்தால், எட்டுநாள் சடங்கு செய்து, சங்கினை முழங்கி அவரைப் பேய் நிலையில் இருந்து தெய்வமாக மாற்றும் பழக்கத்தை மேற்கொள்கிறார்கள். இடையர் சாதியினர், இறந்த சடலத்தை பிள்ளைகள் மும்முறை சுற்றி வரும்போதும், சுற்றுக்கு ஒருமுறையெனச் சங்கு முழங்கி, அதன் முனையைக் கொண்டே பானையில் துளையிடுகிறார்கள். இஸ்லாமியர்களின் ’சுன்னத்’ சடங்கின்போது பிறமலைக் கள்ளர்கள் அச்சடங்கில் கலந்துகொண்டு சங்கு ஊதிப் பணம் பெறுவார்கள்.

பல்லவ மன்னர்கள் போர் புரியும்போது அவர்கள் எழுப்பிய சங்கின் ஒலி கடுவாய் ஒலிபோல எழுந்ததாக நந்திக்கலம்பகம் குறிப்பிடுகிறது. போர் வெற்றியின்போது பதினெடு மேளதாளங்களோடு சங்கு முழங்குவதை இடங்கை வலங்கை வரலாறு குறிப்பிடுகிறது. காலை விடியலை சங்கொலி எழுப்பி அறிவித்ததை சிலப்பதிகாரம் ஊர்க்காண் காதையின் 13ம் வரியில் காணமுடிகிறது. நன்னிமித்தச் சங்கு முழங்குவது சீவக சிந்தாமணி மற்றும் முத்தொள்ளாயிரப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. அதேபோல தீய நிமித்தங்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் சங்கு முழங்கப்பெற்றது. வங்காளத்தில் சூரிய, சந்திர கிரகண நேரத்தில் தொடர்ந்து சங்கினை முழங்கிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். 

தொழிற்சமூகம் உருவான காலத்தில் ஆலை திறக்கும் நேரத்தை அறிவிக்க சங்கு முழங்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் மீன்விற்பவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களைச் சங்கொலியின் மூலம் ஈர்த்து வியாபாரம் பார்த்துள்ளனர். ஐரோப்பியர்கள் வானிலை மோசமடையும் பெருமழைக் காலத்தில் சங்கொலியினைக் கொண்டு மக்களை எச்சரித்துள்ளனர். கண்மண் தெரியாதப் பனிக்காலத்தில் ஆழ்கடல் பயணங்களில் சங்கு முழக்கும்போது, கடல்த் தெய்வம் தங்களைக் காக்கும் என ஐரோப்பியர்கள் நம்பினார்கள்.

ஆண்டிகள் சங்கூதிப் பிச்சை எடுப்பது இன்றும் கிராமப் புறங்களில் காணமுடியும் செயல். வட ஆர்காடு பகுதியில் வாழும் தாசரி வைணவர்கள் சங்கு முழங்கி தமது வருகையை அறிவித்தார்கள். சங்கு அவர்களது குலச்சின்னமாகவும் ஏற்கப்பட்டிருந்தது.

3

குலச்சின்னம்

பண்டைக் காலம் முதலே சங்கினைத் தங்கள் குலச்சின்னமாகக் கொண்ட இனக்குழுக்கள் இந்நிலத்தில் வாழ்ந்து வருகின்றனர். தமிழகக் குறவர்களும், கலிஞர்களும், குறும்பர்களும், பணிச்சவர்களும், ஆந்திர வேலமாக்களும், மேலைச் சாளுக்கியர்களும், வங்காள குருமிகளும், சந்தால்களும், ஓரான்களும் தங்கள் இனக்குழுவினருள் சங்கினைக் குலமரபுச் சின்னமாக ஏற்றவர்களைக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு, சங்கவார், சுமுத்ர தாலா, சங்க், சங்கு, சங்கோ போன்ற கிளைப் பெயர்கள் வழங்கப் படுகின்றன.

இவர்கள் சங்குகளை அணிந்தோ, ஆபரணமாகவோ பயன்படுத்துவதில்லை. மாறாக அதனைத் தங்கள் பண்பாட்டு அடையாளமாகப் பெற்றவர்கள். மறுபுறத்தில், சங்கினைக் குலச்சின்னமாகக் கொண்டிராதபோதும், அதனைப் பயன்படு பொருளாகக் கொண்ட காரணத்தால் ‘அடையாளப் பெயர்’ பெற்ற இனக்குழுவினரும் பரவலாகக் காணப்படுகிறார்கள். கோவை, திருச்சி பகுதிகளில் சங்கூதும் தொழில் புரியும் பறையர் இன மக்கள் சங்குப் பறையர் என அழைக்கப்பட்டனர். வலங்கைப் பிரிவினரில் சங்கறு கவறையாரும், இடங்கைப் பிரிவினரில் சங்கு கட்டும் மாறமங் கொல்லியரும், கறையாளரும் சுட்டப்பெறுகிறார்கள்.

நாணயம்

குலச்சின்னமாக மட்டுமல்லாமல் தங்களது அரசு, மதம் நிர்வாகம், நாணயம் ஆகியவற்றிலும் சங்கு முத்திரைகளைப் பயன்படுத்திய மன்னர்கள் வரலாறு முழுக்கத் தென்படுகிறார்கள். கிமு 3ம் நூற்றாண்டுக்கு அண்மைக் காலத்தைச் சேர்ந்த பாண்டிய மன்னர் பெருவழுதியின் அரச நாணயங்களில் யானை, எருது, ஆமை, மலை முகடு ஆகியவற்றுடன் சங்குச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.

சங்க காலச் சோழர் காசுகளிலும் சங்கு நாணயம் இடம்பெற்றுள்ளது. பல்லவர் நாணயங்களில் ஒருபுறம் சங்கும், மறுபுறம் காளை, பிறை, நாகம் ஆகிய உருவங்கள் காணப்படுகிறது. ’மாமல்ல’ எனப் பெயர் குறிப்பிடப்பட்ட பல்லவ காசுகளில் சங்கு பிரதானமான சின்னமாக இடம்பெற்றுள்ளது. ஈழத்தில் கண்டெடுக்கப்பட்ட ‘லங்கவீர’ என்ற பேர் பொறிக்கப்பட்ட சங்குமுத்திரைக் காசு பிற்காலச் சோழர்களின் வெளியீடாகவே கருதப் பெறுகிறது.

விஜயநகர ஆட்சிகாலத்தில் மதுரை, தஞ்சை, நாயக்கர் நாணயங்களில் சங்கும் சக்கரமும் பொறிக்கும் வழக்கமிருந்தது. கொங்கு, ராமநாதபுரப் பகுதிகளிலும் இவ்விதமான காசுகள் சிற்றரசர்களால் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழகம் மட்டுமல்லாது, வட இந்திய அரச முத்திரைகளிலும் சங்கு தனித்துவம் வாய்ந்த முத்திரையாகக் கொள்ளப்பெற்றுள்ளது. திருவிதாங்கூட் சமஸ்தானத்தின் அரச முத்திரையாகவே சங்கு இடம்பெற்றிருந்தது. ஆங்கிலேய ஆட்சி காலத்திலே நாணயங்களில் சங்கு பொறிக்கும் வழக்கம் நிறுத்தப்பட்டது.

19ம் நூற்றாண்டின் இறுதிக் காலம் வரை திபெத் பழங்குடி மக்கள் சங்குத் துண்டுகளை காசுகளுக்குபதில் பயன்படுத்தியுள்ளார்கள். வடகிழக்கில் அஸ்ஸாம் நாகர் இன மக்களும் 1850 வரை சங்கு வட்டங்களை நாணயமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். அடிமை வாணிகமும், கால்நடை விற்பனையும் சங்கினை பணமாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்டது. ஒரு பசுவுக்கு பத்துச் சங்குகள்.  பன்றிக்கு இரண்டு சங்குகள். ஆடு காட்டுக்கோழிக்கு ஒரு பை உப்பு. வடகிழக்கினை ஆக்கிரமித்த காலத்தில் ஆங்கிலேயர் சங்குகளையே அங்குள்ள நாகரின மக்களிடம் வரியாகப் பெற்றனர்.

சங்கறுப்பதெங்கள் குலம்

இச்சங்குகளை வட்டமாக, நாணயங்களாக, மணிகளாக, முத்திரைகளாக, அணிகலன்களாக வடிவமைக்கும் தொழில்நுட்பம், தமிழகத்திலே மிகவும் சிறப்புற்று விளங்கியது. திருவிளையாடல் திரைப்படத்தில் தருமியிடம் கொடுத்தனுப்பிய பாட்டுக்காக  நக்கீரனும் சிவனும் சண்டையிடும்  காட்சியில் இடம்பெறும் தனிப்பாடல் திரட்டு வரிகள், நக்கீரன் சிவனைப் பார்த்து, “சங்கறுப்பது எங்கள் குலம்; சங்கரனார்க்கு ஏது குலம்” என்று கேட்பதாக இடம்பெறுகிறது. முன்னதாக, அங்கம் புழுதிபட அரிவாளை நெய்பூசி… எனும்பாடலால், உடம்பெல்லாம் புழுதிபட, அரிவாளில் என்ணெய் தடவி, உடல் அதிரச் சங்கை அறுக்கும் நக்கீரனா என் பாட்டில் குற்றம் சொல்லத்தக்கவன் என்றே சிவன் நக்கீரனைச் சீண்டுவதாக எழுதப்பட்டுள்ளது. இத் தனிப்பாடல் திரட்டு 12ம் நூற்றாண்டுக்கு முன்புவரை எழுதப்பட்ட பலரது தொகுப்பு நூல்.

பண்டைய தமிழ்ப் பெண்கள் சங்கினை அறுத்து உண்டாக்கின வளையள்களை அணிந்ததும், சங்கு மணிகளால் தங்களை அலங்கரித்துக் கொண்டதும் சங்க கால இலக்கியங்களில் பரவலாகவே காணப்படுகிறது. ஐங்குறுநூறு, நளவெண்பா, சீவேந்திர்ர் சரிதம், செழிதரையன் பிரபந்தங்கள் ஆகிய இலக்க்கியங்களில் மக்கள் அணிந்த சங்கணிகள் ஒவ்வொன்றும் விரிவாக இடம்பெற்றுள்ளன. 

பிரபலமான குறுந்தொகைப்பாடல் ஒன்று, தலைவன் பிரிவால் அணிந்த அவள் வளையல் நெகிழ்வதையும், அவன் வருகையால் வளையல் கைகளை நெருக்கியதையும் குறிப்பிடுகிறது. அவ்வாறு மகளிர் அணிந்த வளைகளுக்கு எல்வளை, எரிவளை, இலங்குவளை, வரிவளை, செறிவளை, சில்வளை, ஆய்வளை, நிரைவளை என்று அதன் வடிவம், ஒளி, நிறம் ஆகியவற்றைக் கொண்டு பெயரிடப்பட்டிருந்தன. இவ்வலையல்கள் பெரும்பாலும் சங்குகளால் உருவாக்கப்பட்டவை. பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை; வலம்புரி வளையோடு கடிகைநூல் யாத்து, எனப் பாண்டியன் மனைவி வலம்புரிச் சங்காலான வளையல் அணிந்திருப்பதை நெடுநெல்வாடையில் நக்கீரர் எழுதுகிறார்.

பாண்டியன் மனைவி மட்டுமல்ல, ஆண் பெண் பாகுபாடில்லாது பாண்டியனும் சங்கினால் செய்த வளையினை அணிந்திருந்தான் என்பது முத்தொள்ளாயிரப் பாடலின் மூலம் அறியலாம். மேலும், சின்னமனூர் செப்பேட்டில் இடம்பெறும் வரிகளால், இரண்டாம் ராஜசிம்மன் தன் கைகளில் வெண்நிறச் சங்கினால் ஆன வளையலை அணிந்தோன் எனக் கண்டறிய முடிகிறது. வளையல்கள் போலச் சங்குத் துண்டங்களில் செய்யப்படும் மணி, அக்குமணி என்று அழைக்கப்பட்ட்து. சங்குமணியை அக்கு, மனவு என்று நாமதீப நிகண்டு குறிப்பிடுகிறது. சங்கு மணியால் கோர்க்கப்பட்ட நல்ல நீண்ட கூந்தல் என்று அவ்வை குறுந்தொகையில் (23) எழுதியுள்ளார்.

அணிகலன்கள்

இடைக்காலத்தில் தமிழகப் பகுதிகளில் சங்கணிப் பயன்பாடுகள் மக்களிடையே மெல்லக் குறைந்தது. அதேநேரம் வங்காளத்தில் நாளுக்கு நாள் அதன் பெறுமதி அதிகரித்தது. அதன் தன்மை எப்படி என்றால், திருமண வரதட்சணையாக மணமகளின் தந்தை சங்கு அணிகளை மாப்பிள்ளைக்குக்  கொடுக்கும் அளவிற்கு. வங்காளம் மட்டுமல்லாமல், திபெத், பூட்டான், பர்மா, அஸ்ஸாம், ஒரிசா, பீகார் பகுதிகளிலும் சங்கணிகலன்களின் தேவை இருந்தது. சோட்டா நாக்பூரின் சந்தால் பெண்கள், சிட்டகாங்கின் மாக் பெண்கள், திபெத் பழங்குடிப் பெண்கள், அஸ்ஸாமின் கொன்யாக்(நாகர்) பெண்கள், சங்கு வளைகளைப் புனிதப் பொருளாகக் கருதினார்கள்.

இதன் காரணமாக, 10ம் நூற்றாண்டு காலகட்டத்தில் சங்கு அறுத்துக் கலைப்பொருட்கள் செய்யும் தொழில்நுட்பம் வங்காளத்தில் வெகு விரைவாகத் தொழில்மயப்பட்டது. அடுத்த ஐந்து நூற்றாண்டுகளில் தமிழக்க் கடலடியில் விளைந்த பெருமளவு சங்குகள் மூலப் பொருட்களாகவே வங்காளத்திற்குப் ஏற்றுமதி செய்யப்பட்டன. தேவைக்கு அதிகமான கொள்முதல் காரணமாக இலங்கைக் கடலில் விளைந்த சங்குகளை வங்கத்துத் தேங்காய்களுக்குப் பண்டமாற்று செய்து இறக்குமதியாகின. இந்தச் சூழலில்தான் கடல்வழி வாணிகத்தில் மும்முரமாக ஈடுபட்டவர்களாலே சங்கு வாணிகமும், இடம்விட்டு இடம்பெயர்ந்தது.

4

சங்கும் மதங்களும்

நெல்லை மாவட்டம் நாட்டார் தெய்வங்கள் பலரின் பிறப்பிடம் என்றாலும் அது சைவம் தழைத்து பிரசித்தி பெற்ற ஊராகவே அறியப்படுகிறது. நெல்லையப்பர் சன்னிதியில், தைப்பூச தீர்த்தவாரி அன்று நூற்றுக் கணக்கில் சங்குகளை அடுக்கிவைத்து, அதில் தாமிரபரணியை நிரப்பி, கோயில் கொடிமரத்திற்கு  சங்காபிஷேகம் நடைபெறும். இதேபோல மாசியில் சாலைக்குமரனுக்கும் ஆயிரத்தி எட்டுச் சங்காபிசேகம் உண்டு. பொதுவாகச் சங்குத் திருமுழுக்காடு என்பது சைவத்தில் ஒருவரை ஆச்சாரியனாக்குவதற்கு கடவுள் முன்பாகச் செய்யப்படும் வழிபாடாகவே கடைபிடிக்கப்படுகிறது.

ஏழாம் நூற்றாண்டின் சைவ சம்பந்த நாயனார், ‘விருப்போடு வெண்சங்கம் ஊதா ஊரும் அடவி காடு’ என்று ஊரையே பழிக்கிறார். தான்போகும் பாதையெங்கும் அவரே சங்கம் முழங்கிகொண்டு போனதாகவும் பாடல்கள் உண்டு. (சம்பந்த நாயனார் புராணம், 2099ம் பாடல்). வைணவத்தில் சங்கின் ஒலிக்குப் ‘பிரணவநாதம்’ என்று பெயர். வைணவத்தின் ‘வைகானஸ’ என்ற ஆகமம் தங்களின் ஒவ்வொரு கடவுளர் அவதாரம் ஒவ்வொன்றும் தனித்தனியே தங்களுக்கென ஒரு குறிப்பிட்ட வடிவலங்காரச் சங்குகளைப் பாவித்ததாகக் குறிப்பிடுகிறது.

அதில், மகாவிஷ்ணு கையில் பாஞ்சன்யமும், நாராயணனிடம் பூமாவும், ரங்கநாதன் கையில் துவரியும், அனந்த பத்மநாபன் கையில் பாருதமும், பார்த்தசாரதி கையில் வைபவமும், சவுரிராஜன் கையில் துயிலமும், திருமலை வேங்கடன் கையில் மணிச்சங்கும், சுதர்ஸன ஆழ்வார் கையில் பார் சங்கும், கலியபெருமாள் கையில் வெண் சங்கும் இருப்பதாக வரிசைபடுத்துகிறார்கள்.

‘வெள்ளிவிழிச் சங்கம் கேட்டிலையோ’ என்று பாடும் வைணவரைச் சீண்டும் தீவிர சைவர்கள், “சங்கை ஊதிக் கெடுத்தான்’ என்று குற்றப்படுத்துவதும் உண்டு. அதன் பிற்காரணம், பாரதப்போரில், அசுவத்தாமன் என்கிற யானை இறந்ததை செய்தியை, ‘அஸ்வத்தாமா அதஹ.. குஞ்சரஹ’’ என அறிவிக்கும் நேரத்தில் குறுக்கீடாகச் சங்கை முழங்கி, குஞ்சரஹ என்ற சொல்லை கண்ணன் அடக்கி விட்டார். விஷயம், போரில் அசுவத்தாமனே இறந்ததாக குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது என்பதுதான்.

மதம், வழிபாடு, பிறப்பும், இறப்பு, திருமணம் சண்டை ஆகிய சூழல்கள் எல்லாமும் சங்கின் நாதம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. அதிலும் மிக முக்கியத்துவமாக, தமிழகத்தில் எப்படி பெரும்பான்மையான இனக்குழுச் சமூகத்தின் திருமணச் சடங்கில் தாலி முக்கிய அடையாளமோ அப்படி வங்காளிகளுக்குச் சங்கில் அறுத்த வளையல்கள் மிக முக்கியமான மங்களப் பொருளாக இன்றும் இருக்கிறது.

தங்களது ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் அவர்கள் பழைய வளைகளைக் களைந்து, தாலிச்சரடு மாற்றுவதுபோல புதிய சங்கு வளையல்களை அணியும் வழக்கத்தைக் கடைபிடிக்கிறார்கள். அதேபோல பெண்ணின் கணவன் இறந்துபட்டால் மரணச் சடங்குகளுக்குப் பிறகு சங்கு வளையல்களையும் சேர்த்தே எரியூட்டுகிறார்கள்.

திபெத்திய பௌத்த மதத்திலும் சங்கு அவர்களது அஷ்ட மங்களத்தின் முதல் அடையாளச் சின்னம். பௌத்தம் சங்கினைத் தங்கள் அறிவிப்பின் அடையாளமாகக் கருதியது. மகாவம்சம் எட்டுப் புனிதப் பொருட்களில் ஒன்றாக சங்கினைக் குறிப்பிடுகிறது. சமண தீர்த்தங்கரர்களான ஆதிநாதர், நேமிநாதர் இருவரின் உடமைகளாகத் தர்மச்சக்கரமும் சங்கும் கருதப்பட்டன. 9ம் நூற்றாண்டு சமணச் சிற்பங்களில் இவ்விருவரது பீடங்களிலும் சங்குச் சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. தென் இலங்கையின் ‘மாத்தற’ மாவட்டத்தில் 1930ல் கண்டெடுக்கப்பட்ட சிறிய பலகை வடிவிலான பௌத்த கல்தூணில் தமிழ் கிரந்த எழுத்துகளோடு சங்கின் அடையாளமும் இடம்பெற்றிருந்தது.

சங்கு முத்திரை

தமிழகத்தில், வைணவர்கள் உபநயனம் செய்வித்து பூணூல் அணிக்கும்போது இடது வலது தோள்பட்டைகளில் முறையே சங்குச் சக்கர முத்திரைகளைச் செம்பு அச்சின் மூலம் சூடிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். இதற்கு சமாட்சரணம் என்று பேர். சைவர்கள் மற்றும் பிற சாதியினரில் இருந்து வைணவத்தை ஏற்பவர்கள் கட்டாயமாக இச்சடங்கைப் பின்பற்ற வேண்டியிருந்தது. சங்கு முத்திரை இடும் குருமார்கள் சமூகத்தில் மதிப்புள்ளவர்களாக இருந்தார்கள். எண்ணிக்கையில் குறைந்த இவர்கள் ஊர் ஊராகச் சுற்றியும், மடங்கள் அமைத்தும் இம்முத்திரையை இட்டு உபநயனம் செய்வித்தனர்.

ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு தொப்புள், தோள்பட்டை மற்றும் மார்பிலும், திருமணமான பெண்களுக்கு இடது முன் கையிலும், பெண் பிள்ளைகளுக்கு மேல் வயிற்றிலும் சங்கு முத்திரைகளை சூடிட்டிருக்கிறார்கள். வங்காள வைணவர்கள் தங்கம், வெள்ளி, செம்பு, வெண்கலம், துத்தநாகம், ஈயம், இரும்பு, வெள்ளீயம் ஆகிய எட்டு தாதுக்களால் (அஷ்ட தாதுக்கள்) உருவாக்கிய அச்சில் இவ்வாறு சங்கு முத்திரைகளை இட்டுக் கொண்டனர்.  பறையர் சாதியினரில் இருந்து வைணவத்தை ஏற்பவர்களுக்கு பார்ப்பனர் அல்லாத தாசரிகள் இம்முத்திரையை இட்டனர்.

தமிழகக் கோயில்களில் பொட்டுக்கட்டிய தேவதாசிப் பெண்களுக்கு சங்கு முத்திரை இடப்பட்டுள்ளது. தக்காணப் பகுதிகளைச் சேர்ந்த போயர் இனப் பெண்களும் கோயில்களுக்குத் தங்களை அர்பணிப்பதை அறிவிக்கும் விதமாக சங்கு முத்திரை இட்டுக் கொண்டனர். கர்நூல் பகுதிகளில் பாசவி எனும் நாட்டியப் பெண்களுக்கு வலது கையில் அன்னப் பாத்திரமும், இடது கையில் கரும்பும் அளித்து அவர்களுக்கு சங்கு சக்கர முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. கேரளத்தைச் சார்ந்த தண்டன் சாதியினர் தங்களது கைகளில் சங்கு முத்திரை குத்திக் கொண்டனர். 

கண்ணேறு

அக்காலங்கலில் வீடுகள் கட்டும்போது அடிவாரக் குழிகளில் முதன்மையான பொருளாக சங்குகள் புதைக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு செய்யும்போது சங்குகள் வளைமையை ஏற்படுத்தி, தீமையில் இருந்து காக்கும் என்பது நாட்டார் நம்பிக்கையாக இருந்துவந்துள்ளது.  இப்பழக்கம் ரோமன் கத்தோலிக்கப் பரதவர்களிடம் இன்றும் காணப்படுகிறது. தூத்துக்குடியில் வாழும் பறையர் சாதியினர் இதுபோல, சங்குடன் பவளப்பாறை, சுண்ணாம்பு ஆகியவை சேர்த்து அடிவாரமிடும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். பிற சாதியரில் கட்டப்பட்ட வீடுகளில் அவர்களது வளமையை அதிகரிக்க 45 நாட்கள் நீர் நிரம்பிய சங்குகளை வீட்டில் வைத்து பூசை செய்து அதைத் தரையில் புதைக்கிறார்கள். ராமநாதபுரம் பரதவர் வீடுகளின் நுழைவாயில் படியில் மேடு தெரியும் அளவுக்கு இவ்வாறு சங்குகள் புதைக்கப் பட்டிருக்கின்றன.

சங்கு கண்ணேறு தீர்க்கும் பொருளாகவும், மருத்துவப் பொருளாகவும் நாட்டுப்புறத்தில் இடம்பெறுகிறது. வளரிளம் சிறார்களைக் கண்ணேறுகளில் இருந்து காக்க, சங்குத் துண்டுகளில் செய்த வட்ட வடிவிலான ஐம்படைத் தாலியை அணிவிக்கிறார்கள். அவர்கள் இளையவரானதும் இத்தாலி கழற்றப் படுகிறது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் தன் ஐம்படைத் தாலியைக் கழற்றும் வயதுக்கு முன்பே தன் எதிரிகளை அழித்தான் என்கிறது புறநானூறு. சங்கின் முனைப் பகுதியை வட்டமாக அறுத்து மோதிரமாக அணியும் பழக்கம் இன்றும்கேரளப் பகுதிகளில் வாழும் முக்குவர்களிடமும், மொகயன், தியன் சாதியரிடம் காணப்படுகிறது. செருமார்களும், மலைவேடர்களும் சங்கினைத் தாயத்தாக அணிகிறார்கள்.   

பெண் பிள்ளைகளுக்கு முகப்பருக்கள் தென்பட்டதுமே, அவளுக்கு சங்குத் தாயத்து கட்டிவிடும் பழக்கம் பறையர், பள்ளர், வலையர், செட்டி, கொல்லர், ஆசாரி, தட்டார், நாயுடு, இடையர், சாளுவர் ஆகிய சாதியரிடம் இருந்துள்ளது. தூத்துக்குடி கத்தோலிகர்கள் சங்குப்பூவை குழந்தைகள் கையில் கட்டிவிட்டிருக்கிறார்கள். கால்நடைகளின் நெற்றி, கழுத்தில் சங்குகள் கட்டும்போது அவை கண்ணேறுகளில் இருந்து விடுபடும் என்பது நம்பிக்கையாக இன்றும் இருந்துவருகிறது. ஆந்திர மாநிலத்தில் சங்குகளை மாலையாக கால்நடைகளுக்கு அணியும் முறை உள்ளது. கேரளாவில் கொம்புகளில் சங்கு கட்டுகிறார்கள். இவ்வாறு சங்குமாலை, சங்குப்பாசி, ஐம்படைத்தாலி, சங்கு தாயத்து, மோதிரங்கள் அணிவிப்பது தீய சக்திகளிடம் இருந்து தங்கள் பிள்ளைகளைக், கால்நடைகளைக் காப்பாற்றும் என்பது பார்ப்பனரைத் தவிர்த்த அனைத்து தமிழ்ச் சாதியினரிடமும் வழக்கத்தில் இருந்துள்ளன.

5

கீழக்கரை பஜார்

சங்குகள் குறித்த என் தேடலைப் புரிந்துகொண்ட முக்குவர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான இஸ்லாமிய நண்பர் ஒருவர் மூலமாக, கீழக்கரையின் பழைய குத்பா பள்ளி தெருவின் அஞ்சு வாசல் கிட்டங்கி, முஸ்லீம் பஜார், ஜமாலியா சங்கு கொள்முதல் மண்டி, புது கிழக்குத் தெரு எனச் சங்கு வணிகம் நடைபெறும் இடங்கள் அறிமுகமாகின.

நண்பர் என்னை அவரது கிட்டங்கிக்கு அழைத்துச் சென்றார். அந்த அகலம் குறைந்த நீண்ட பாதையின் இருபக்கமும் தேங்காய் பருமனுள்ள விதவிதமான சங்குகளை சுரண்டியும் தேய்த்தும், அமிலத்தில் கழுவியும் வளவளப்பாக்கிக் கொண்டிருந்தார்கள் ஆண்கள். இன்னொரு புறம் பெண்கள் சிலர் பட்டி, ஜாதி என இரண்டு வகையான சங்குகளையும் (இடம்புரி) பாலீஷரில் தேய்த்து வழவழப்பேற்ற அந்தச் சூழல் முழுக்க சுண்ணம் படிந்த வெள்ளைப் புழுதியெனக் காட்சியளித்தது.

புறப்படும்போது, கரீபியன் கடற்கரையில் நானூறு வருடங்கள் முன்பாகக் கண்டெடுக்கப்பட்ட பழமை வாய்ந்த ராணிச்சங்கு (Queen Conch) ஒன்றை எடுத்து மேசையில் வைத்தார். இளஞ்சிவப்பும் மஞ்சளுமாக ஒரு சவளைக் குழந்தையின் தலை அளவுக்குப் பெரிதாக இருந்த அந்தச் சங்கினை விநோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் அன்றைய வணிக மதிப்பு சில லட்சங்களில் இருக்கலாம். பஹாமாஸ் போன்ற தீவு நாடுகளின் கடற்கரையில் ஆண்டுக்கு நூற்றுக் கணக்கான டன் எடையில் இந்த ராணிச் சங்குகளில் வியாபாரம் நடக்கிறது. பாரம்பரியமாக சங்கு வர்த்தகத் தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்கள் இதனைத் தங்கள் பெருமிதத்தின் அலகாகப் பராமரிக்கின்றனர் என்பதை அவர் பேச்சில் இருந்து புரிந்து கொண்டேன்.

கி.பி80ம் ஆண்டுகள் முதலே பெரிப்ளூசும், தாலமியும், இனிகோ பிளஸ்டாஸ் இந்தியக் கடற்கரைகளின் பக்கம் வந்தபோது, கீழக்கரையில் நடைபெற்ற சங்கு முத்து வணிகங்கள் குறித்து எழுதியிருக்கிறார்கள். கிபி.7ம் நூற்றாண்டளவில் மாலிக் இபுன் தீனார் குமரிக்கு வருகை புரிந்தபோது, அவரோடு வந்த அரபு வணிகர்கள் வழியாக மேலைக் கடலிலும் சங்கு வர்த்தகம் பெருகியது. குமரி, கோவளம், கீழக்கரை வேளாங்கண்ணி, சென்னை உள்ளிட்ட கடற்கரைப் பிராந்தியங்களில் கொள்முதல் செய்ப்படும் சங்குகள், கொல்கத்தா, அகர்தலா (திரிபுரா), வங்காளம் ஆகிய பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அங்கே இவை கைவினைப் பொருள்களாக மாற்றப்பட்டு உலகெங்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

2018ம் ஆண்டு அக்டோபரில் மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடைபெற்ற, அகில இந்திய இளம் எழுத்தாளர்கள் கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றபோது, மேற்குவங்கத்தில் உள்ள சங்கு வணிக்க் கலைக்கூடங்களை நேரே சென்று அறிந்துகொள்ள, தோழரும் வங்காளக் கவிஞருமான கவுசிகி தாஸ் குப்தா உதவி செய்திருந்தார். பத்துக்குப் பத்து சதுர அடி கொண்ட தனித்தனிக் கூடங்களில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இயந்திரங்கள் மூலம் சங்கு வளையல்கள் அறுத்துக் கொண்டிருந்தார்கள். அவை ஒவ்வொன்றின் பெயர்களையும் கேட்டறிந்து குறித்துக் கொண்டபோது, இச்சங்குகள் எந்தெந்த கடற்கரைப் பகுதியில் விளைகின்றனவோ அதைவைத்தே அவைகளுக்குப் பெயரிடப் படுகின்றன எனப்புரிந்து கொண்டேன்.

சங்கு வகைகள்

சங்குகள் பொதுவாகத் தாவர உண்ணி மற்றும் மாமிச உண்ணி என உண்பதில் தொடங்கிச் சங்குகளின் அமைப்பு, இயக்கம் ஆகியவற்றை வைத்து, லாம்பிஸ், ஒலிமா, டர்புனில்லா, டிபியா குர்டா, சைபேர் டிக்ரிஸ், சைபேர் மாரிடியஸ், பாலியும், டோனா, கானூஸ், பிபிலெக்ஸ், புர்ஷா, புசிகான், ஃபாஸியோலாரியா, அக்கர் என்று இந்தியக் கடலோரங்களில் கிடைக்கும் சங்குகளுக்கு பதினைந்து விதமான பெயர்கள் உண்டு. ஆனால் மக்கள் மொழியில் அதன் உருவ அமைப்பு நிறங்கள், கடினத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு பலவகைப் பெயர்கள் வழங்கப்படுகிறது.

அவை, மணிச்சங்கு, துவரிச் சங்கு, பாருதச் சங்கு, வைபவச் சங்கு, பார் சங்கு, துயிலாச் சங்கு, வெண்சங்கு, பூமா சங்கு ஆகிய எட்டு வகைகளும், கரைச் சங்கு, காரைச் சங்கு, கோழிச் சங்கு, புறாச்சங்கு, நத்தைச் சங்கு, தேள் சங்கு, ஊதிச் சங்கு, பஞ்சு சங்கு, தாழஞ்சங்கு, முள்ளஞ்சங்கு, கிளாச்சங்கு, குழாய் சங்கு, குருவிச் சங்கு, சொறிச் சங்கு, பலகறை, பால், முள்ளி, யானை முள்ளி, குதிரை முள்ளி, வேம்பூ, வாழைப்பூ, வெண்பூண்டு, முண்டஞ்சங்கு, ஈட்டிச் சங்கு, பேய்ச்சங்கு, பெருமாள் சங்கு, கோபுரச் சங்கு, கொட்டைக்காய் சங்கு, இராவணன் சங்கு, வெள்ளைவாயன், வெள்ளை விரிஞ்சான், செவ்வாயன், ஓலை வாயன், ஆறுவிரல், ஏழுவிரல், சிலந்தி, நரித்தலை, மாட்டுத்தலை என்று மனம்போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது.

விடுதலைக்கு முன்பு வரை இச்சங்குகளை இலங்கைக் கடல்வரைக்கும் சென்று குளித்தெடுக்கும் தொழிலாளர்களாக இந்திய மீனவர்களே இருந்துவந்தார்கள். இலங்கை தனிநாடாக ஆனபிறகு அப்பகுதியில் சங்குக் குளிப்பு நின்றுபோனது. தற்காலத்தில் தமிழகம், கேரளா, குஜராத் பகுதிகளிலே சங்கு குளிப்பு குறைந்த அளவில் நடைபெற்று வருகிறது. 

வலம்புரிக் கடத்தல்

பத்திரிகையில் செய்தியாளராகப் பணிபுரிந்த காலகட்டத்தில், காஞ்சிபுரம் பகுதியிலுள்ள பழமைவாய்ந்த கோவிலில் இருந்து, வலம்புரிச் சங்கு ஒன்றை தூத்துக்குடி வழியாகக் கடத்த முற்பட்ட இருவரைக் குறித்து பத்திரிகை நண்பர் ஒருவர் மூலம் தகவல் தெரிய வந்தது. கோயில் திருவிழாக்களில் பூசைகளுக்குப் பயன்படுத்தி வந்த 5.103கி.கி எடைகொண்ட அந்த வலம்புரிச் சங்கினை 50 ஆயிரத்துக்கு விற்றவர் அந்தக் கோயிலின் அர்ச்சகர். வாங்கியவர் திருச்சியைச் சேர்ந்த இஸ்லாமியர். கடத்தப்படவிருந்த இடம் தாய்லாந்து.

தகவல் அளித்த நண்பர் மூலம் இன்னும் சில விபரங்கள் சிக்கியது. அந்த விபரங்கள் ரகசியத் தன்மை காக்கப்படும் என்ற நம்பிக்கையின் பேரில் பகிரப் பட்டதால் அது இங்கு முக்கியமில்லை என்றாலும், இலங்கையில் போலியாகத் தயாராகும் வலம்புரிச் சங்குகள் போன்ற போலியான மெல்லுடலிகள் குறித்து நண்பர் சொன்ன விஷயம் சுவாரசியமாக இருந்தது.

கிராமுக்கு 10ஆயிரத்திலிருந்து 15ஆயிரம் வரைக்கும் விலை நிர்ணயிக்கப்படும் அசல் இந்திய வலம்புரிகளைப் போலவே தோற்றத்தில் ஒத்திருக்கும் ஆப்ரிக்க எதிர்சுழற்சிச் சங்குகளையும், சுண்ணாம்பு உடலிகளையும் வலம்புரிச் சங்குகள் போலவே வடிவமைத்து, உண்மையான வலம்புரிச் சங்கின் வீடியோவைக் கண்ணில் காட்டிவிட்டு, காசு கைமாறியதும் போலியை வாங்கியவர் தலையில் போலியைத் தலையில் கட்டும் வேலைகள் இலங்கைத் தீவில் ஜரூராக நடந்துவருகிறது. தாங்கள் ஏமாந்தது தெரியாமல் கிழக்கிந்திய நாடுகளில் பலப்பேர் அதனைப் வீட்டில் வைத்து பூஜித்தும் வருகிறார்கள்.

சங்குக் குளித்துறை

 1960களுக்குப் பிறகு மன்னார் கடலில் முத்துக் குளித்தல் நின்று போனது. அதே காலகட்டத்தில் தூத்துக்குடியில் மட்டும் 30ஆயிரம் சங்கு குளிப்பவர்கள் இருந்தார்கள். வன உயிரின சட்டம் 1972ன் கீழ் 52 அரிய வகைக் கடல் வாழ் உயிரினங்களைப் பிடிக்க விதிக்கப்பட்ட தடையில் குறிப்பிட்ட சில சங்கு வகைகளும் அடங்கியபிறகு, சங்கு குளிப்பு குற்றத் தொழிலாக மாறியது. மேலும் ஆபத்தான உடலுழைப்பு, பாதுகாப்புக் கருவிகளின்மை, ஆழ்கடல் இறப்பு மற்றும் வலம்புரிச் சங்குகளுக்கான சட்டவிரோத கடத்தலும் சேர்ந்துகொள்ள சங்குக்குளிப்பு கைவிடப்படும் தொழிலாக மாறத் துவங்கியது.

உண்மையைச் சொன்னால், சங்குகள் பற்றி உலவும் நொடிக்கதைகள் பலவும் அறிவியல் ஏற்றுக்கொண்டதில்லை. கடவுள்போல வலம்புரிச் சங்குகளின் வாய்முழக்கமும் நிருபிக்கப்படாத ஒன்று. இருந்தும் அவைத் தமிழ் பண்பாட்டின் தொன்மத்தில் ஆழ வேரூன்றி இருந்த கடலுயிர். இருந்தும் அவை நம்முடைய கரைகளைத் தேடி வராமல் போனால், தங்கப் பாறை தேடி தண்ணீரில் குதிக்கும் மனிதர்களின் கதைகளை அவை அறிந்திருக்கின்றன என்பதுதானே அர்த்தம்! எந்தக் காலத்திலும் எந்தக் கடற்கரையூரின் திசை வாயில்களிலும் இச்சங்கிணைகள் கரையொதுங்கிக் காமம் புணராமலே போகட்டும். ஆனால் நம்முடைய கடலை, நமது கரையை, உயிர்ப்போடு வைத்திருக்க இத்தொன்மங்களும், தொழில்களும் எப்போதும் நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.

கார்த்திக் புகழேந்தி

பூர்வீகம் நெல்லை. தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். மூன்று சிறுகதைத் தொகுதிகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. தொடர்புக்கு -writerpugal@gmail.com

பொலியோ பொலி!

நாஞ்சில்நாடன்

ழைய சினிமாக்களில், கதைகளில், பெற்ற தாய் அடம்பிடிக்கிற, சேட்டை செய்கிற மகனைப் பார்த்துப் “பொலி போட்டிருவேன்” எனச் சினந்து உரைப்பதைக் கேட்டிருப்போம். அந்தச் சொற்றொடர் எம்மண்ணின் பிறப்பு அல்ல. மாறாக, “வெட்டிக் கூறு போட்டிருவேன்” அல்லது “கொண்ணே போட்டுருவேன்” என்பார்கள். முரண்டு பிடிக்கும் சொந்தப் பிள்ளைகளை வெருட்டும்போது இந்தப் பொலி போடுதல், வெட்டிக் கூறு போடுதல், கொன்று போடுதல் என்பதற்கு சினந்து கண்டிக்கும் பொருளேயன்றி அகராதிப் பொருள் கொளல் ஆகா. அண்மையில் நாம் செவிப்பட்ட சொற்றொடர், “சோலியை முடிச்சிருவேன்” என்பதுவும் அத்தன்மையதே!

ஆனால் தீவிரமான அர்த்தத்தில் பொலி போடுதல் என்றால் கொன்று போடுதல் என மனதில் குறித்துக் கொண்டேன். ஒருவேளை பலி போட்டு விடுவேன் என்பதைத்தான் பொலி போட்டு விடுவேன் என்று சொன்னார்களோ என்று யோசித்துப் பார்க்கும் அளவுக்கு நமக்குத் தமிழின் வேர்ச்சொல் அறிவும் இல்லை, படிப்பும் இல்லை, கேள்வி ஞானமும் இல்லை. சபை நடுவே நீட்டோலை வாசிக்கத் தெரிந்தவன் எல்லாம் இங்கு தமிழறிஞர் எனும் விருதுக்குத் தகுதியானவனே!
பொலி எனும் சொல்லெனக்கு ஐந்தாறு வயதில் அறிமுகம் ஆகியிருக்கும். 1977-ம் ஆண்டு நானெழுதிய பதினைந்தாம் சிறுகதை ‘வாய் கசந்தது’. அதில் பொலி எனும் சொல்லைப் பலமுறை பயன்படுத்தி இருக்கிறேன். எண்பது கதைகள் கொண்ட ‘நாஞ்சில் நாடன் கதைகள்’ தொகுப்பில் அந்தக்கதை கிடக்கும். தமிழினி வெளியீடு.

பொலி வீசுதல், பொலி கூட்டுதல், பொலி அளத்தல், பொலி எத்தனை மேனி கண்டது, மாடு பொலியில் வாய் வைக்கிறது என்றெல்லாம் பிரயோகங்கள் உண்டு. ஆறேழு வயதிருக்கும் போதே நமக்கு விவசாயம் தொடர்பான விடயங்கள் அறிமுகமாகத் தொடங்கி விட்டன. கிழமேற்காகத் தெற்குப்பார்த்த நீண்ட மாட்டுத் தொழுவத்தில் ஒரு எருமை, ஒரு கிழட்டுக்கடா, ஒரு கிடாக்கன்று கிடக்கும். கிழட்டுக் கடாவும் கிடாக்கன்றும் கலப்பை இழுக்கும், மரமடிக்கும். எருமை ஈன்றுயீன்று பால்கறக்கும். பெரும்பாலும் எருமைக் கன்றுகள் தங்குவது பராமரிப்பைப் பொறுத்தது. அப்படித் தங்கினாலும், கிடேரி என்றால், பால்குடி மாறிய பிறகு, ஏதேனும் தேவைக்குக் கிடேரியை அப்பா விற்று விடுவார்.

மூன்று உருப்படிகள் கிடந்த தொழுவில் மேற்கு மூலையில் கலப்பை, நுகம், மரம், வள்ளக்கை என சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். தேங்காய்ச் சவுரி நாரில் முறுக்கிய உழவுக்கயிறும், எருமை மாட்டின் சந்துப் பகுதி நீளத்தோலில் செய்த தொடைக்கயிறும் தொங்கிக்கிடக்கும். வள்ளக்கையையும் மரத்தையும் பிணைக்கும் குறுங்கா வளையம் நான்று கிடக்கும். தொழுவத்தின் கூடைக்கும் அதன் கீழ் கல்தூண்களின் மீது பொருத்தப்பட்டிருக்கும் செவ்வகச் சட்டகத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் பொழித்தட்டுப் பலகை, இறைவட்டி, பனைநார்ப் பெட்டி, பனையோலைக் கடவம், பிரம்புக்கூடை கிடக்கும்.

கூரைவீடு தென்வடலானது. வாசல் மேற்குப் பார்த்து. நடுவில் சிறியதோர் முற்றமும் முற்றத்தின் மேற்றிசையில் ஒட்டுப் படிப்புரையும். ஒட்டுப் படிப்புரையின் வடக்கு மூலையில் இரண்டு வெட்டுக்குத்தியும் புல்லறுக்கும் – கதிர் அறுக்கும் பன்னரிவாள் மூன்றும் கூரையின் நெடிய பனங்கம்பில் மாட்டிய வளையத்தில் தொங்கும். மூலைச்சுவரோடு சார்த்தப்பட்ட கோடி மண்வெட்டி, கட்டை மண்வெட்டி, ஊடு மண்வெட்டி, களை பறண்டி எனக் கிடக்கும். கூரையின் பனங்கையில் இருந்து உமிக்கரிப்பட்டை தொங்கும். சற்று நீங்கி திருநீற்றுப்பட்டை தொங்கும். ஒரு வேறுபாடு – பல் துலக்கும் உமிக்கரிப்பட்டை பனையோலையில் முடைந்தது. திருநீற்றுப்பட்டை கமுகம் பாளையில் செய்தது. கமுகம்பாளை என நான் சொல்வது பாக்குமட்டை. சில வீடுகளில் திருநீறு போட்டு வைக்க என பெரிய ஆண்முறிச் சிரட்டையில் எதிரெதிரே விளிம்பில் தமிர் போட்டு மணிக்கொச்சக் கயிற்றில் கட்டி எரவாணத்தில் தொங்க விட்டிருப்பார்கள். திருநீற்றுப் பட்டையை விபூதிப்பட்டை எனவும் சொல்வார்.

நடுவில் முற்றம் கொண்ட, இரு பகுதிகளிலான தென்னை ஓலைக் கூரை வீடே ஆனாலும் அரங்கு எனப்படும் முறியொன்று உண்டு. முறி என்றால் என்னவென்று கேட்டால் மேலும் சில சொல்வேன் கிடைமுறி, பேற்று முறி, அடுக்களை முறி, குளிமுறி என. அரங்கு முறியில்தான் அரிசிப்பானை, புளிப்பானை, உப்புப்பானை, கருப்பட்டிப் பானை, ஊறுகாய்ப் பானை, அவல் பானை, வத்தல்மிளகாய், உளுந்து, பயிறு, பருப்பு, வற்றல், வடகம் எனப் போட்டு அடைந்து வைக்கும் மண்பானைகள் வெவ்வேறு தரத்தில் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும். பால், தயிர், வெண்ணெய்க் கலயங்கள் அடுக்களை முறியில் உறியில் தொங்கிக் கிடக்கும். அரங்கில் இரண்டு பெரிய மண்பானைகளில் தனித்தனியாக ஆடவர் பெண்டிரின் துவைத்துக் காயவைத்த துணிகள் மடித்துத் திணிக்கப்பட்டிருக்கும். இரண்டடி நீளத்தில் ஒன்றரையடி அகலத்தில் இரண்டரையடி உயரத்தில் கால் வைத்த மரப்பெட்டி ஒன்றும் நின்றிருக்கும். தாத்தா காலத்துப் பெட்டகம். தோதகத்தி மரப்பணி.

அந்தப் பெட்டியினுள் மூன்றரை சென்ட் நிலத்தின் பிரமாணம் கிடக்கும். மூன்றரை சென்ட் நிலத்தினுள் மாட்டுத் தொழுவம், கூரை வீடு, இரண்டு தென்னை மரங்கள், ஒரு முருங்கை, ஒரு கறிவேப்பிலை, மாடுகள் தண்ணீர் குடிக்கும் மூன்றடி விட்டமும் மூன்றடி உயரமும் கொண்ட வட்டமான கல்தொட்டியும் மூன்று எருமை மாடுகளுமான தாவர சங்கம சொத்துக்கள். வீட்டுப் பிரமாணம் என்ற மனைப்பத்திரம் மலையாளத்தில் எழுதிப் பதியப்பெற்றவை. அதல்லாமல் பனையோலையில் எழுதப்பெற்ற சாதக நறுக்குகள். மேலும் திருவிதாங்கூர் சமஸ்தானத்து மன்னர் தலையும் சங்கு முத்திரையும் இருபுறமும் கொண்ட ஒரு சக்கரம், அரைச்சக்கரம், கால் சக்கரம், செப்புக்காசு நாணயங்கள். செல்லாமற்போன செப்புக் காலணா, ஓட்டைக் காலணா, பித்தளை அரையணா நாணயங்கள். இவை யாவும் கொண்ட அப்பாவின் சொத்தான பெட்டகத்தை அம்மை ஒழுக்கறைப் பெட்டி எனக் கேலி பேசுவாள்.

கோட்டைக் கடன் வாங்கும், முன்னறுப்புக்கு நெல்வாங்கும், ரூபாய்க்கு ஓரணாப் பலிசைக்கு கடன் வாங்கும் ஓர்நேர் சம்சாரி வீட்டில் என்ன முதல் இருக்கும் வேறு? அம்மா கையில் கண்ணாடி வளையல்கள் அன்றி தங்கக்காப்பு கண்ட ஓர்மை இல்லை எனக்கு. காது மூளியாகாமல் கல் வைத்த கம்மல்கள் நிரந்தரம். தாலி கோர்த்திருந்த நான்கு கழஞ்சு பொற்கொடி கிடக்கும் கழுத்தில். அது எல்லாப் பூவிலும் உரம்போடக் களைபறிக்க என்று பணயம் போய் மீளும். இருபத்தாறாம் வயதில் அப்பாவும் பதினெட்டு வயதில் அம்மாவும் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்த இருபத்தொன்பது ஆண்டு காலத்தில் ஐம்பத்தெட்டு பருவப் பூக்கள் பயிர் செய்திருப்பார்கள். அப்பா ஐம்பதுக்கும் குறையாத தவணைகள் அம்மாவின் தாலிக்கொடியைப் பணயம் வைத்திருப்பார்.

பணயம் பிடிக்க என உள்ளூரில் ஆட்கள் இருந்தனர். நம்பிக்கையின் அடிப்படையில் சங்கிலியின் மாற்றுப் பார்க்க அவர்கள் உரைத்துப் பார்ப்பதில்லை. வங்கிகளில் அடமானம் வைத்திருந்தால், ஐம்பதுக்கும் குறையாத முறை உரைத்துப் பார்த்திருந்தால் தங்கச் சங்கிலியில் ஒரு கழஞ்சு தேய்ந்திருக்கும்.

எதற்குச் சொல்ல வந்தேன் என்றால் – உழவன் கணக்குப் பார்த்தால் உழவு கம்புதான் மிஞ்சும் என்பதற்காக.

சரி! நெடுந்தூரம் விலகி நடந்துவிட்டுப் பொலிக்குத் திரும்புகிறோம் இப்போது! அரங்கில் அப்பாவின் பெட்டகத்தின் பக்கம் இரண்டு மரக்கால்கள் கிடக்கும். அதன் உள்ளே பக்கா, நாழி, உரி, உழக்கு, ஆழாக்கு முகத்தல் அளவுக் கருவிகள். இரும்புத் தகட்டில் செய்தவை. இரு விளிம்புகளிலும் பித்தளைத் தகட்டுப் பூண் போடப்பட்டிருக்கும். முகத்தல் அளவு என்பது அன்று கூம்பாரமாகக் கோரி அளப்பது. உடனே எண்ணெய் எப்படி அளப்பீர்கள் என்று கேளாதீர்! மலையாளத்தில் நெல்லளக்கும் உபகரணம் பறை. நாழி, இடங்கழி சிறு அளவைகள். நாஞ்சில் நாட்டில் நெல்லின் அளவைக் கோட்டை, பதக்கு, குறுணி எனும்போது, மலையாளத்தில் பறை. பறை என்ற தாள வாத்தியக் கருவி வேறு. பறையை இன்றைய லிட்டர் போல் அளப்பார்கள். மரக்காலைக் கூம்பாரமாகவும்.

எனக்குப் பன்னிரண்டு வயதிருக்கும். நாங்கள் பாட்டம் பயிர்செய்த நான்கு வயல்களில் ஒன்றான நந்தவனத்தடி வயல் அறுத்துக்கட்டி, சூடடித்து, படப்புக் கட்டி, முதற்பொலி விட்டு, இரண்டாம் பொலியும் தூற்றி, களத்தின் நடுவில் கூம்பாரமாக – இராட்சத அளவிலான கூம்பு போன்று – கிடந்தது பொலி. நந்தவனத்தடி வயல் பதினெட்டு மரக்கால் விதைப்பாடு. முழுமேனி காணும் பொலி. அப்பா பொலியளக்க, என்னிடம் ‘‘வீட்டுக்கு ஓடிப்போயி மரக்கால் எடுத்துக்கிட்டு வா மக்கா” என்றார். ஒன்பது பேரில் வைசூரிக்கு வாரிக் கொடுத்த இருவர் நீங்கலாக, ஏழு பேரில் நான் மூத்தவன். அப்பாவின் அப்பா பெயர்தான் எனக்கு. இன்றும் துலங்குகிறது. நான் மரக்காலைத் தூக்கிக்கொண்டு களத்துக்கு வந்தேன். எட்டாக மடித்த கோணிச்சாக்கை குண்டிக்குத் தாங்கல் கொடுத்து, வேட்டியைத் தார்பாய்ச்சிக் கட்டி, ஈரிழை வடசேரித் துவர்த்தைத் தலையில் வட்டக் கட்டாகக் கட்டி, அப்பா பொலியளக்க அமர்ந்திருந்தார்.

மரக்காலைக் கொண்டு நீட்டினேன். கையில் வாங்காமலேயே, “எலே! கிறுக்குப் பயலே! இது கொத்து மரக்கால்லா! இதை அங்கிண ஓரமா வச்சுக்கிட்டு, பொலியளவு மரக்கா இருக்கும், அதை எடுத்துக்கிட்டு ஓடியா” என்றார். எனக்கு ஒன்றும் அர்த்தமாகவில்லை அன்று. என்றாலும் மறுக்கவும் வீட்டுக்கு ஓடினேன்.

பொலியளவு மரக்கால் என்றால் என்ன, கொத்து மரக்கால் என்றால் என்னவென்று அறிய, நான் முன்பு பேசிய ‘வாய் கசந்தது’ சிறுகதை வாசியுங்கள். அல்லது மார்க்சீய அறிஞர், பேரறிஞர் எவரிடமேனும் கேளுங்கள். பொலியளவு மரக்காலால் பொலியளக்கத் துவங்கிய அப்பா, கை கூப்பிப் பொலியைத் தொழுது, முதல் மரக்கால் அள்ளிக் கோரித் தூக்கி, நார்ப்பெட்டியைச் சாய்த்துப் பிடித்தபடி நின்ற கூறுவடி பெட்டியில் ‘லாபம்’ என்று சொல்லிக் கவிழ்த்தார். இரண்டாம் மரக்காலைக் கவிழ்க்கும்போது இரண்டு என்றார்.

art by Jeeva

அன்றைய கணக்கு, இருபத்தோரு மரக்கால் ஒரு கோட்டை. இருபத்தோரு மரக்கால் விதை நெல் விதைக்கப்படும் நிலத்தை ஒரு கோட்டை விதைப்பாடு என்றனர். உத்தேசமாக ஒரு கோட்டை விதைப்பாடு என்பது ஒரு ஏக்கர் பரப்பளவு, அதாவது 100 சென்ட். ஒரு கோட்டை விதைப்பாடு நிலத்தில் இருபத்தோரு கோட்டை நெல் விளைந்தால் பொலி, முழுமேனி. பொலி அரைமேனி, முக்கால்மேனி, அரையே அரைக்கால் மேனி என்றால் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். நெல் அளவுக்குக் கலம் எனும் கணக்கு என்றுமே நாஞ்சில் நாட்டில் இருந்ததில்லை.

பொலியளக்கும்போது, பொலி அளப்பவரை நோக்கி ஒருவர் குத்தவைத்து அமர்ந்து நெல்லைத் தள்ளிக் கொடுப்பார். அவர் பொலி தள்ளுபவர். அறுத்தடிப்புக் களத்தில், சூடடித்த நெற்குவியலை சண்டு சாவி போகக் காற்றில் தூற்றுவார்கள், இரண்டு முறை. முதற் பொலி விடுதல், இரண்டாம் பொலி விடுதல் என்பார்கள். நெல் அல்லாதவற்றை நாங்கள் சண்டு என்போம். சண்டு சாவி என்பர். பதர் என்பர். செட்டி நாட்டில் ஒரு ஊரின் பெயர் ‘நெற்குப்பை’.

பாரதி பாடல்களில் ‘மழை’ என்ற தலைப்பில் பாடல் ஒன்றுண்டு. 12.07.1917-ல் சுதேசமித்திரனில் வெளியானது. காளிதாசன் எனும் புனைபெயரில் பாரதி எழுதிய பாடல் அது. அந்தப் பாடலில் மூன்றாம் பத்தியில் பாரதி பாடுகிறார் –

‘அண்டங் குலுங்குது தம்பி – தலை
ஆயிரம் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான் – திசை
வெற்புக் குதிக்குது வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடுகின்றார்’


என்று சில வரிகள். இந்தப்பாடல் முழுவதையும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் காவிய முகாமில், 2013-ல் நான் எனது கம்பன் ஆசிரியர் ரா.பத்மநாபன் பாடுவதுபோல் பாடிக் காண்பித்தேன். இதில் ‘வானத்துத் தேவர் செண்டு புடைத்திடுகின்றார்’ எனும் வரியிலுள்ள ‘செண்டு’ எனும் சொல்லை நான் ‘சண்டு’ எனப் பொருள் கொண்டேன்.

அறுவடை முடித்த களத்தில், பொலி வீசியபின் தலைவனை வாழ்த்தும் உழவர் பாட்டுக்குப் பொலிப்பாட்டு என்று பெயர். கடும் நிந்தனை எனும் பொருளில் பொலிப்பாட்டு என்ற சொல்லை விறலிவிடு தூது ஆள்கிறது. களத்தில் நெற்கதிர்களைச் சூடடிக்கும்போது உழவர் பாடும் பாட்டு பொலி பாடுதல் என வழக்கம் பெற்றிருக்கிறது. சூடடிக்கும்போது, பிணையல் மாடுகளை ஓட்டும் உழவர் ‘பொலி, பொலி’ என ஒலியெழுப்புவார்களாம்.

பதினான்கு வயதில் அரையாள் கொத்துக்கு பிணையல் அடிக்கும் பையனாக என்னை இரவு இரண்டு மணிக்கு எழுப்பிக் கொண்டுபோய் ஒரு பிணையலின் பின்னால் வட்டத்தில் நிறுத்தினார்கள். அன்று நான் உழவர் பாட்டு, ‘பொலி, பொலி’ ஓசை, ‘பொலியோ பொலி, பொலியோ பொலி’ எனும் வாழ்த்தொலி எதுவும் கேட்டதில்லை. அது 1960 காலகட்டம். என்றாலும் பொலி எனும் சொல் மனதில் வேர்விட்டு அறுபதாண்டுகள் ஆயின.

கொத்துக்குப் பொலி அளந்து தருகிறவர்கள் இருந்தனர். ‘சொள்ளையாண்டி களத்திலே பொலியளந்து குடுத்திட்டு, வீட்டிலே போயிக் கஞ்சி குடிச்சிட்டு இப்பம் கொரங்கு சுப்பையா களத்துக்குப் பொலியளக்கப் போறேன்” என்பார்கள். விலைக்கு நெல் அளக்கவரும் நெல் வியாபாரிகள் அவர்களே மரக்கால் கொண்டு வருவார்கள். நெல்லளந்து கட்ட சுமட்டுக்காரனும், வண்டிமாடும், நெல் அளக்கிறவருமாக வருவார்கள். அது நெல்லளவு, பொலியளவு அல்ல.
நல்ல காரியங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, தற்குத்தறமாக எவனும் குறுக்குச்சால் ஓட்டுவான். உடனே பெரியவர்கள் சொல்வார்கள், “யாருலே இவன்? நிறை பொலியிலே மாடு வாய்வெச்ச மாதிரி!” என்று.

பொலி எனும் சொல்லுக்குப் பேரகராதி தரும் பொருள்கள் தூற்றா நெற்குவியல், தூற்றிய நெல், விளைச்சலின் அளவு, தானியமாகக் கொடுக்கும் வட்டி, களத்தில் நெல்லளக்கும்போது முதல் மரக்காலுக்கு மங்கலமாக வழங்கும் பெயர், கொங்கு வேளாளரில் இறந்தவர் எலும்பை மூன்றாம் நாள் நீரில் இட்டபின் பசுமரத்தில் பால் வார்க்கும்போது நாவிதன் வழங்கும் நற்சொல், Covering as of animals – அதாவது விலங்குகளின் புணர்ச்சி.

நாவிதர் ஒரு குலத்தவருக்குச் செய்யும் ஈமச்சடங்கின்போது, பொலி எனும் சொல்லை நற்சொல்லாக வழங்கினர் என்பதோர் செய்தி, முப்பதாண்டு காலமாகக் கொங்கு நாட்டில் வாழும் எனக்கு. பெரிய காரியம் என்று வழங்கப்படுகிற மரணச் சடங்குகளுக்குப் பிறகு ‘நல்ல வார்த்தை பேசுதல்’ என்றொரு முறை உண்டு என்பது அறிவேன். பொலி எனும் சொல்லின் பொருள் தேடியபோது இரண்டாவது ஆச்சரியமான தகவல் பசு, எருமை, குதிரை, ஆடு போன்ற விலங்கினத்தின் புணர்ச்சி, பொலி என வழங்கப்பட்டது என்பது. Covering of animals எனும் சொற்றொடரே புதியதாக அறிமுகம் ஆயிற்று.
சென்னைப் பல்கலைக்கழகம் 1963-ல் ஆங்கிலம் – தமிழ் சொற்களஞ்சியம் ஒன்று வெளியிட்டது. பல்கலைக்கழகங்கள் ஊழல்மயப்படாதிருந்த காலம். கல்விக்கும் தமிழுக்கும் அருஞ்சேவை ஆற்றிய காலம். சொற்களஞ்சியம் Dr. அ. சிதம்பரநாதன் செட்டியார் தொகுத்தது. அதில் Covering எனும் ஆங்கிலச் சொல்லுக்குப் பொருள் தேடிப் போனேன். நமக்கு Sexual intercourse, Copulation தெரியும். Covering கேள்விப்பட்டதில்லை. ‘பொலி குதிரை வகையில் குதிரைப் பெடையுடன் கூடி இணைதல்’ என்று பொருள் தரப்பட்டுள்ளது Covering என்ற சொல்லுக்கு. சென்னைப் பல்கலைக்கழகத்துப் பேரகராதி (1922), பொலிச்சல் எனும் சொல்லுக்கு – Covering especially among animals, புணர்ச்சி என்று பொருள் தந்துள்ளது.

எனவே பொலி எனும் சொல்லுக்கு விலங்குகள் தம்மிலான புணர்ச்சி என்பது பொருள் தமிழில். ஆங்கிலம் அதனைக் Covering என்கிறது என்பது நம் தெளிவு. வழக்கமாக நமது உரையாடலில் ‘பொலி கடா’ எனும் சொல் புதியதல்ல. மனம் போல் திரியும் தடியனைப் பொலிகடா என்பார்கள். ஆனால் பொலி கடா எனும் சொல்லின் நேரான பொருள் அதுவல்ல. பொலி கடா, பொலி காளை, பொலி எருது, பொலிச்சக்காளை எனும் சொற்கள் குறிப்பது Animals kept for covering என்பதாகும். அதாவது பசுமாட்டைச் சினையாக்க வளர்க்கப்படும் காளை. வித்துக்காளை என்பர் நாஞ்சில் நாட்டில். அதாவது விந்துக்காளை.

பொலிகடா செய்த வேலையை இன்று அரசு கால்நடை மருத்துவமனைகளில் கால்நடை மருத்துவ உதவியாளர் செய்கிறார். நீங்கள் குதர்க்கமாகப் புரிந்துகொண்டால் நாமதற்குப் பொறுப்பில்லை. மாவட்டக் கால்நடை மருத்துவமனைகளில் இருந்து வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் தெர்மாஸ் பிளாஸ்க்குகளில் கொண்டுவரப்படும் காளையின் அல்லது எருமைக்கடாவின் விந்தினை பசு அல்லது எருமைக்கு நாம் மேற்சொன்ன உதவியாளரே ஏற்றுவார். முன்னும் பின்னும் தடுப்பு உருளைக் கம்பிகள் போட்டுப் பசுமாட்டைக் கூண்டினுள் ஏற்றியபிறகு, மாட்டு உரிமையாளர் வாலை ஒதுக்கிப் பிடிப்பார்.

கூம்பு போல் முனையுள்ள உபகரணம் ஒன்றினை பசுவின் அறையினுள் இடது கையால் நுழைத்து, உபகரணத்தின் கைப்பிடியில் இருக்கும் லிவரை அழுத்தினால், பசுவின் குறியினுள் நுழைத்த கூம்பு வடிவக் கருவி வாய் திறந்து கொள்ளும். அடுத்து அவருடைய உதவியாளர் பழைய காலத்து இங்க் ஃபில்லர் போன்ற அமைப்பில் – ஓரடி நீளமிருக்கும் – காளையின் விந்து எடுத்து, ஏற்கனவே செருகப்பட்டிருக்கும் உபகரணம் வழியாகப் பசுவின் கருப்பையினுள் நேரடியாகச் செலுத்துவார். முடிந்தது சோலி. இன்றைய செயற்கைக் கருத்தரிப்பு மையங்களும் அதைத்தான் செய்யும் போலும்.

கொண்டுவந்த பசுவை வீட்டுக்குப் பத்திரமாகக் கொண்டு போவார் உரிமையாளர். அந்தப் பசுக்களை எருமைகளை எண்ண இரக்கமாக இருக்கிறது இன்று. கிராமத்தில் நாங்கள் பொலிகாளை ஏறுவதையும் பார்த்திருக்கிறோம், விந்து ஊசி போடுவதையும் பார்த்திருக்கிறோம். இன்று எந்தக் கிராமத்திலேனும் பொலிகாளை உண்டா எனத் தெரியவில்லை. எல்லாம் ஆன்-லைன் புணர்ச்சியாகி விட்டது.

மந்தைக்கு இரண்டு மூன்று என வளர்க்கப்படும் செம்மறி அல்லது வெள்ளாட்டுக் கிடாக்களின் காயடிக்காத விதைப்பைகள் கனத்துத் தொங்கி ஆண்வாசனை வீசத் தெம்புடன் நடக்கும் அவை. அவையும் பொலி கடாதான். பொலிகடா எனும் சொல்லை நாம் பலிகடா எனும் சொல்லுடன் குழப்பிக் கொள்ளலாகாது.
பொலிப்புக் கடா எனும் சொல்லைப் பொலிகடா என்ற பொருளில் விறலிவிடு தூது பயன்படுத்துகிறது. பொலிப்பு என்றொரு சொல் காணக் கிடைக்கிறது அகராதிகளில். பொருள் புணர்ச்சி, Act of covering, especially by a bull என்பார்கள். அதாவது Intercourse, copulation எனும் ஆங்கிலச் சொற்களால் குறிக்கப்படும் வினையை நாம் கலவி, முயக்கம், புணர்ச்சி, உவப்பு என்கிறோம். உடலுறவு எனும் சொல்லை நான் அறிந்தே தவிர்க்கிறேன். ஏனெனில் அச்சொல் செயற்கையானது. யாந்திரீகத்தனமானது என்பது என் எண்ணம். சம்போகம் என்பது வடசொல். கலவி என்பது உடல் மட்டுமே சம்மந்தப்பட்டதல்ல. மனமும் ஈடுபடுவது. மேலும் பேரகராதியில் உடலுறவு என்ற சொல்லே இல்லை. அது நூறாண்டு காலத்திற்குள் எவரோ தமிழறிஞர், பேராசிரியர் உருவாக்கிய சொல்லாக இருத்தல் வேண்டும். அல்லது கற்பழிப்பு எனும் சொல்லைப்போல பிரபல நாளிதழ் எதுவும் உருவாக்கி உலவ விட்டிருக்கலாம்.

எனவே நாம் இவ்வாறு கொள்ளலாம்! மாடு, ஆடு, குதிரை போன்ற விலங்குகளின் புணர்ச்சிக்கான சொல் பொலி என. பொலிகாளை எனும் பொருளில் பொலி நடையன் என்ற சொல்லும் புழங்கி இருக்கிறது. பொலி என்ற சொல்லுக்கு ஏழு பொருள்கள் சொன்ன பேரகராதி, பொலிதல் எனும் சொல்லுக்கு எட்டுப் பொருள் தருகிறது. எவையெனக் காணலாம்!


பொலிதல் –

1. To flourish, prosper, thrive, செழித்தல்.

  1. To be enlarged, to appear grand as form of dress, to swell in size as rice in
    boiling, to grow full, பெருகுதல்.
  2. To abound, increase, மிகுதல்.
    தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடுகிறார் மாங்குடி மருதனார், மதுரைக்காஞ்சி எனும் நூலில். ‘கழுநீர் பொலிந்த கண்ணகன் பொய்கை’ எனும் ஓர் வரி ஆங்கு.
    செங்கழுநீர் மலர்களால் பொலிந்திருந்த இடம் அகன்ற நீர்நிலை என்று பொருள். இங்கு பொலிந்த எனும் சொல் மிகுந்திருந்த எனும் பொருளில் ஆளப்பெற்றுள்ளது.
  3. To bloom as the countenance, to shine, விளங்குதல்.
    பதிற்றுப் பத்தில் ஒன்பதாம் பத்து பாடும் புலவர் பெருங்குன்றூர்க்கிழார், ‘புகன்ற மாண்பொறிப் பொலிந்த சாந்தமொடு’ என்பார். இங்கு பொலிந்த எனும் சொல்லுக்கு விளங்கும் என்று பொருள் சொல்கிறார்கள்.
  4. To be high, great or celebrated, சிறத்தல்.
    சங்க இலக்கியம் புறநானூற்றின் முதற்பாடல், கடவுள் வாழ்த்து, பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியது. பதின்மூன்று அடிகள் கொண்ட பாடலின் கடைசி அடி, ‘தாழ் சடைப் பொலிந்த அருந்தவத்தோற்கே’ என்பது. தாழ்ந்து சிறந்த சடையைக் கொண்டவன், அருந்தவம் உடையவன் என்பது பொருள். இங்கு ‘அருந்தவத்தோற்கே’ என்பது சொற்றொடர். அண்மையில் இளைய பாடகர் ஒருவர் ‘நற்றவத்தவர்’ என்ற சொல்லை உச்சரிக்கப்பட்ட பாடு நம்மை அச்சுறுத்தியது.
  5. To be auspicious or fortunate, மங்கலமாதல்.
  6. To live long and prosperously used as a benedication, நீடு வாழ்தல்.
    தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில், புறநிலை வாழ்த்தாக
    ‘வழிபடு தெய்வம் நின்புறம் காப்பப்
    பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து
    பொலிமின்’

    என்றொரு நூற்பா. வழிபடு தெய்வம் உன்னைக் காக்கட்டும். குற்றமிலாச் செல்வத்துடன் வழிவழியாகச் சிறந்து நீடு வாழ்க என்பது பொருள்.
  7. To occur, சம்பவித்தல்.
    கம்பன் யுத்த காண்டத்தில் இராவணன் வானரத்தானை காண் படலத்தின் இரண்டாவது பாடலில், பொலிந்ததாம் இனிது போர் எனலோடும்’ எனும் பாடல் வரியில் பொலிந்ததாம் எனும் சொல்லை சம்பவித்ததாம் எனும் பொருளில் ஆள்கிறார்.
  8. To cover, as bull or ram. To copulate, புணர்தல். எடுத்துக்காட்டு –
    பொலிகாளை.

    ஆக பொலிதல் என்றால் செழித்தல், பெருகுதல், மிகுதல், விளங்குதல், சிறத்தல், மங்கலமாதல், நீடுவாழ்தல், சம்பவித்தல், புணர்தல் என்பன. இந்த மொழியைத்தான் தமிழ் சினிமா, ‘வச்சு செய்கிறது’.
    மேற்சொன்ன பொருள்களில் மங்கலமாதல் எனும் பொருளில் ‘பொலிக பொலிக பொலிக’ என்று வாழ்த்தினர். ‘பொலி பொலி பொலி’ என வாழ்த்தியதைப் போன்று.

    நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியில் ஐந்தாம் பத்தின் இரண்டாம் பகுதி ‘பொலிக’ என்பது. அடியார் திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்துவது. சீகாமரப்பண், இடையொத்து தாளம். அல்லது கல்யாணி இராகம், திரிபுடை தாளம். திருமாலின் அடியாரை நம்மாழ்வார் கடல்வண்ணன் பூதங்கள் என்பார். நமக்கு இந்திய சினிமாக்கள் பூதம் எனும் சொல்லை அர்த்தப்படுத்திய விதம் வேறு. ஆனால் நம்மிடமும் சிலப்பதிகாரத்தில் சதுக்கப் பூதம் உண்டு. இன்று சதுக்கங்களில் பூதங்கள் சிலையாக நிற்கின்றன. இனி நம்மாழ்வாரின் முழுப்பாடல்.

    ‘பொலிக! பொலிக! பொலிக!
    போயிற்று வல்லுயிர்ச் சாபம்
    நலியும் நரகமும் நைந்த;
    நமனுக்கிங்கு யாதொன்றும் இல்லை;
    கலியும் கெடும் கண்டு கொண்மின்;
    கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல்
    மலியப் புகுந்து இசைபாடி
    ஆடி உழிதரக் கண்டோம்’


    என்பது இசையும் மொழிச்செறிவும் கொண்ட பாடல்.
    ‘மங்கலம் உண்டாகட்டும்! மங்கலம் உண்டாகட்டும்! மங்கலம் உண்டாகட்டும்! வல்லுயிர்ச் சாபங்கள் யாவும் போயின! நலியும்படியான நரகம் எய்துவோம் என்பதும் நைந்து போயிற்று! நமக்கு இனி இங்கு எந்தத் தீங்கும் இல்லை. கலியும் கெடும் எனக் கண்டுகொள்வீர்! கடல்வண்ணனின் அடியார் மண்மேல் நிறையப் புகுந்து இசை பாடி ஆடி அலைந்து திரிதல் கண்டோம்’ என்பது பாடலின் பொருள்.

    அடுத்த பாடலும் அற்புதமானது.
    ‘கண்டோம், கண்டோம், கண்டோம்;
    கண்ணுக் கினியன கண்டோம்;
    தொண்டீர்! எல்லீரும் வாரீர்;
    தொழுது தொழுது நின்றார்த்தும்
    வண்டார் தண்ணத் துழாயன்
    மாதவன் பூதங்கள் மண்மேல்
    பண்தான் பாடி நின்றாடிப்
    பரந்து திரிகின் றனவே!’


    என்பதந்தப்பாடல். பொலிக, பொலிக, பொலிக என்றது போல, கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் என்கிறார் நம்மாழ்வார். தொண்டர்களே எல்லோரும் வாருங்கள்! வண்டுகள் ஆர்க்கின்ற குளிர்ச்சியான துளசிமாலை அணிந்த மாதவனுடைய திருவடிகளைத் தொழுது தொழுது நின்று ஆரவாரிக்கும் அடியார்கள் மண்மேல் பண்கள் பாடி நின்று ஆடிப்பரந்து திரிகின்றனர் என்பது பொருள். மராத்திய அடியார்கள் கூட்டம் கூட்டமாக நாம்தேவ், துக்காராம், தியானேஷ்வர் அபங்க் பாடல்களைப் பாடிக்கொண்டு பண்டர்பூர் நோக்கி விட்டல, விட்டல, விட்டல எனப் பயணமாவது நினைவுக்கு வருகிறது.

    சமகால அரசியல் கட்சிகளின் கூலித் தொழிலாளர்கள் ‘வாள்க, வாள்க, வாள்க’ என்று கொடி தாங்கிக் கூக்குரல் இட்டு நடப்பதையும் விருந்துண்ணும் நேரத்தில் மலம் நினைவுக்கு வருவதைப்போல மனம் கொண்டு நிறுத்துகிறது.

    பொலிகை என்றொரு சொல்லும் அகராதிகளில் உண்டு. பொலிதல் என்பதுதான் பொருள். பொலிப்பாய் என்றொரு சொல் தரும் பொருள் Gently, மெதுவாக என்பதாகும்.

    இன்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொல் பொலிவு. அதுவும் பொலி, பொலிதல் எனும் சொற்களுடன் தொடர்புடையதே! ‘அவ மொகம் நல்ல பொலிவாட்டு இருக்கு என்னா!’ என்பர் மகளிர். ‘பொன்னெனப் பொலிந்த பூவை’ என்று எங்கோ வாசித்ததும் ஓர்மையில் உண்டு. பேரகராதி பொலிவு என்ற சொல்லுக்கும் பல பொருள் தருகிறது. முகமலர்ச்சி, தோற்றப் பொலிவு, அழகு, செழிப்பு, பருமை (Largeness), மிகுதி (Abeundance), எழுச்சி (Height, Loftiness), பொன், வெளித் தோற்றம், புணர்ச்சி (Covering among animals).

    இவற்றுள் பொலிவுக்குப் பொன் என்றும் ஒரு பொருள் உண்டென அறிய மகிழ்ச்சி ஏற்படுகிறது. மற்றுமோர் வியப்பு, பொலி – பொலிதல் – பொலிவு எனும் மூன்று சொற்களின் இறுதிப்பொருள் விலங்குகளின் புணர்ச்சி என்பது.

    தோற்றப் பொலிவு என்ற பொருளில் திருவாசகம் பொலிவு எனும் சொல்லைப் பயன்படுத்துகிறது. கீர்த்தித் திருஅகவல் பாடும்போது மாணிக்கவாசகர், ‘கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்’ என்பார். இங்கு பொலிவு எனும் சொல் தரும் பொருள் தோற்றப்பொலிவே!

    கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில், நகர் நீங்கு படலத்தில், வனம் புகுவான் வேண்டி இராமன் வசிட்ட மாமுனிவரிடம் யாத்திரை பறையான் போகும்பொழுது, இராமனின் தோற்றம் கண்ட வசிட்டரின் கூற்றாகக் கம்பன் மொழிவது, ‘பொன்னரைச் சீரையின் பொலிவு நோக்கினான்’ என்று. சீரை எனில் சீலை, இங்கு மரவுரி. இராமன் பொன்போலத் துலங்கும் மரவுரியை இடையில் சுற்றியதன் அழகையும் நோக்கினான் வசிட்டன் என்று பொருள் எழுதுகிறார்கள். எனவே இங்கு பொலிவு என்றால் அழகு.

    பொலி எனும் சொல்லை, பொலிக எனும் சொல்லை, பொலி தந்து, பொலிந்த, பொலியும், பொலிபு, பொலிய, பொலியர், பொலியா, பொலிவன, பொலிந்து, பொலிவு, பொலிவோடு எனும் சொற்களை சங்க இலக்கியங்கள் நெடுக ஆண்டுள்ளன. மேற்கோள் காட்டப் போனால் கட்டுரை மேலும் வளர்ந்துவிடும் அபாயம் உள்ளது.

    பெருமிதமாக இருக்கிறது! எத்தனை பொலிவான மொழி! எத்தனை பொலிதல் சொற்களில்! எத்தனை அனுபவப் பொலி! பொலிக, பொலிக, பொலிக என நம்மாழ்வாரைப் போல உரத்து ஒலிக்கத் தோன்றுகிறது.
    ‘விதச்சது கொய்யும்’ என்பார்கள் மலையாளிகள். ‘விதைத்ததை அறுப்பான்’ என்பர் தமிழில். இத்தனை சொற்களை மொழிப்புலத்தில் விதைத்துள்ளனர் முன்னவர்கள். அறுவடை செய்வது நம் பணி! சோம்பிக் கிடப்பவரை, அறியாமையில் முடங்கியவரை, கற்க மறுப்பவரை அவரவர் தெய்வம் காக்கட்டும்!

    புறநானூற்றில் கோப்பெருஞ்சோழன் பாடல் வரி,
    யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
    குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே;’
    என்று நீளும். யானை வேட்டைக்குப் போனவன் யானையை எளிதாகப் பெற்றுவிடக் கூடும். சிறு பறவைகளை வேட்டையாடச் செல்கின்றவன் வெறுங்கையுடன் வரவும் கூடும்!

    நாம் யானை வேட்டைக்குத்தான் போவேமே!’

நாஞ்சில் நாடன்
28.06.2020

மேகமலை

0

மணி எம்.கே.மணி

மலை ஏறிக்கொண்டே வந்தபோது வறண்ட பகுதிகள் முடிந்து ஒரு வளைவில் எல்லாம் பச்சையாகி விட்ட மாயத்தை கவனிக்கவே செய்தான் என்றாலும் ராகுலின் அடிமனதில் அந்த தடதடப்பு போயிருக்கவில்லை. இத்தனைக்கும்  மழை வந்து விடுகிற அறிகுறியில் கருமை தொடர்ந்து கொண்டு வந்தது. ஆங்காங்கே மழைத்துளிகள் விசிறக்கூட செய்தன. நீர்நிலைகளைக் கடக்கும்போது சடங்கு போல அவைகளைப் பார்த்தான். ஓரிரு நெடிய எஸ்டேட்டுகளைக் கடந்து விருந்தினர் மாளிகைக்கு வந்து தான் இன்னாருடைய மகன் என்ற போதும் அறைகள் இல்லை என்று கைவிரித்தார்கள். உறவில் பட்ட அமைச்சரின் அந்தரங்கக் காரியதரிசியைப் போனில் பேச வைத்த போதும் ஒன்றும் நகரவில்லை. பண்டிகைக்காலம், வேண்டுமோ வேண்டாமோ வி.ஐ.பி.க்கள் புக் செய்து விடுவார்கள். ராகுலுக்குத் தெரியும், பல கும்பல்கள் குடித்து விட்டு ஆடுவதைப் பார்த்திருக்கிறான். என்ன செய்வது இப்போது? ஐந்து மணி கூட ஆகவில்லை. இருட்டி விட்டது.  நிச்சயம் மழையும் உண்டு. மிருகங்கள் இறங்கக் கூடும். திரும்பிப் போக முடியாது. காரை எடுத்துக் கொண்டு வந்து பக்கவாட்டில் இடமிருந்த வளவில் நிறுத்திக் கொண்டு தூளை கசக்கி லோட் செய்தான். முகர்ந்து கொண்டான். பாக்கெட்டில் பத்திரமாக அதை வைத்துக் கொண்டு காரை விட்டிறங்கி நின்றான். பற்ற வைத்து பூஜையில் இறங்குவதற்கு முன்னால் பத்து நிமிடம் பொறுமை காப்பது என்பது ஒரு விதமான அனுபவம். ஆனால் இன்றைய நாள் அப்படிப்பட்டதல்ல. பழக்கப்பட்ட எந்த பொழுதுபோக்குகளும் இன்று வசப்படாதோ?

தேனியில் வைத்து கல்யாணம். மணப்பெண் எமிலி இரண்டு நாள் முன்னமே கூட எல்லோரையும் வரச் சொல்லி அழைத்திருந்தாள். ஒவ்வொருவராக வந்துகொண்டும் இருந்திருக்கிறார்கள். லீலாவிடம் நீ வருகிறாயா என்பதைக் கேட்டு உறுதி பண்ணிக் கொண்டு, அப்பாவின் வேலையாக கொச்சினில் இருந்தாலும் அதை அரக்க பறக்க முடித்துக் கொண்டு அவள் வந்து விடுகிற நேரத்துக்கு இவனும் வந்து சேர்ந்தான். நிறைய பெண்களுக்கு நடுவிலிருந்து அடித்துக் கொண்டிருந்த அரட்டையை விட்டுவிட்டு ஓடி வந்து பேசினாள். ராகுலுக்கு அவளிடம் தனது காதலை சொல்ல வேண்டியிருந்தது என்றாலும், கல்லுரி முடிந்த பிறகு ஓரிரு முறை மட்டுமே அதற்கு உவக்காத இடங்களில் மட்டுமே சந்தித்துக் கொள்ள முடிந்தது. இவனுக்கு என்றில்லை, எங்கோ மிச்சமிருக்கிற ஒருவிதமான ஈர்ப்புகள் முடியாமல் தத்தளிக்கிற நட்பின் ஆர்வம் ஒன்று அவர்கள் எல்லோருக்குள்ளிலும் துடித்துக் கொண்டுதான் இருந்தது. மணப்பெண் அவ்வப்போது வந்து எல்லோரையும் குசலம் விசாரித்தாலும் அகமதுவிடம் மட்டும் ஒன்றும் பேசவில்லை என்பதை உதாரணமாக சொல்லலாம்.

நான் உன்னிடம் முக்கியமான ஒரு விஷயம் பேச வேண்டும் என்பதை மட்டும் எப்படியோ லீலாவிடம் சொல்லி விட்டு பெருமூச்சு விடுவற்குள் அவள் கூடவே இருந்த மூன்று வருடத்தில் சொல்லாததை இப்போது என்ன சொல்லி விடப் போகிறாய் என்று கேட்டது எரிய ஆரம்பித்தது. அவள் அப்போதெல்லாம் விஜி என்கிற சீனியர் பையனோடு கை கோர்த்து நடை போட்டிருந்தாள் என்பது யாருக்குதான் தெரியாது? அவனுக்கு கல்யாணமாகி விட்டது என்றார்கள். ஒரு வழியாக வேறொரு சித்திரம் தெளிந்து வந்தது அப்போதுதான். பழசை கனவு போல வீசியடித்து விட்டு இன்று நான் உனக்காகவே காதல் சொல்ல வந்தேன் என்கிற உண்மையைச் சொல்ல அவளைத் தேடிப் போனால் சாட்சாத் விஜியுடனே நின்று பேசிக் கொண்டிருந்தாள். எங்கோ கான்பூரில் இருக்கிறான் என்றார்களே ?

பூஜையைப் போடுவோம் என்று அந்த சிகரெட்டை எடுத்து முகரும்போது ஒரு எஸ்டேட் கூலியாள் அவனைக் கடந்தார். தடுத்து நிறுத்தி அவரிடம் இரவு தங்க வேண்டும் என்று சொல்லி விசாரித்தான்.  இறக்கம் துவங்குகிற இடத்தில், சரிவிற்கு முன்னதாக ஒரு கிளப்பு கடை இருக்குமென்றும் அங்கே விசாரித்துப் பாருங்கள் என்றும் சொன்னார். கல்லாவில் இருந்த ஆளும், மற்றொருவரும் உட்காருங்கள் பார்க்கலாம் என்பது போல சொன்னார்கள். இவன் ஒரு பரோட்டா சிக்கன் சாப்பிட்டான். நல்ல காப்பி போட்டுக் கொடுத்தார்கள். மெல்ல காரை தாண்டி வந்து ஒரு மேட்டுக்கு ஏறி சிகரெட்டைப் பற்ற வைத்தான். புகையை விடும்போது குளிர் பட்டது. எங்கிருந்தோ தூரத்தில் இடியின் ஒலி கேட்ட திசையில் பார்த்தான். கண்டிப்பாக தேடிக் கொண்டிருப்பார்கள். என்ன இந்த நாட் ரீச்சபிள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாது. ஒருவர் மற்றவரைக் கேட்டு மற்றவர் மற்றவரைக் கேட்டு கடைசியாக ராகுல் என்பவன் எங்கே போனான் என்று ஒருத்தனுக்கும் தெரியாது.

புகை அசல்.

ஜிலோவாக இருந்தது.

சின்ன உற்சாகம் குட்டி சுவரைப் போல ஒன்றைப் பற்றிக் கொண்டு மேலேறி வருகிறதோ? ராகுல் விசிலடிக்க முயன்றான்.  ஆனால் கன்னங்கள் மரத்திருந்தன. உதட்டை குவிக்க மறந்து போனான். ஒரு பாட்டை வெகு காலத்துக்கு பாடிக் கொண்டிருப்பது போல இருந்ததைக் கலைத்து பிடிவாதமாக நடந்ததுக்கு வந்தான். லீலாவிடம் ராகுல் எத்தனயோ தரம் பேசியிருக்க முடியும். ஆனால் விஜி அவளுடைய பக்கத்தில் இருக்கிறவரை அவனால் அங்கே போக முடியவில்லை. தன்னுடைய கோணல் முகத்தை சரி செய்து கொள்ள முடியாது என்பதைத் தெரிந்து கொண்டிருந்ததில் உள்ள நம்பிக்கைகள் எல்லாம் உதிர்ந்து கொண்டிருந்தது. எவ்வளவு உரிமைகள் இருக்கின்றன அவளிடம்? நிறைய பரிசுகள் கொடுத்திருக்கிறான். நிறைய விஷயங்களை அவள் கேட்டு வாங்கியிருக்கிறாள். ஒருமுறை முப்பதாயிரம் ரூபாய் கூட புரட்டிக் கொடுத்திருக்கிறான். இன்று வரை அதற்குப் பதிலில்லை. ஏய், கொஞ்சம் எழுந்து வா ! கூப்பிட முடியாதா? அந்த விஜி சிறுநீர் கழிக்கக் கூட போகாமல் அடக்கி வைத்துக் கொண்டு அவளுடன் ஆவலுடன் பேசிக் கொண்டிருக்கிறான் என்று ராகுல் நினைத்தது சரிதான். ஒருகட்டத்தில் அவன் கழிவறையை நோக்கி ஓடுவது தெரிந்தது. அந்த இடைவெளியில் லீலாவிடம் நான் உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்பதை சொல்வதற்கு பதிலாக, விஜி உன்னை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போகிறானா என்று கேட்டுவிட்டு வந்தான். அவள் திகைத்துக் கொண்டிருக்க, இவனுக்கும் தலையில் பொறி பறந்து கொண்டிருந்தது. பக்கத்தில் அகமதுவிடம் ஒரு கோஷ்டி நீ எமிலியிடம் பேசித்தான் ஆக வேண்டும் என்று அப்படி ஒரு பஞ்சாயத்து. அவள் இவனால் பாத்ரூமிற்கு சென்று, சென்று, சென்று அழுதுவிட்டு வருகிறாளாம் !

கடைக்காரர்கள் கூப்பிட்டார்கள்.

அவர்களுக்கு ராகுல் சினிமா ஆளா என்று ஒரு சந்தேகம். அவன் மறுக்கவில்லை. படித்தது இன்ஜினீயரிங் தான் என்றாலும் லட்சியம் சினிமாவே. சொந்தமாகவே எடுக்க இருக்கிறேன் என்பதை சொன்னான். அவனுடைய பிரில்லியன்ட் சினிமா பற்றி அவர்கள் அறிய வேண்டியிருக்கவில்லை. சர்ச்சுக்கு சொந்தமான ஒரு ஸ்டோர் ரூம் இருக்கிறது. அதில் இரண்டு பேரை நாங்கள் இரவு தங்க வைத்திருக்கிறோம், உன்னால் அங்கு தங்கிக் கொள்ள முடியுமா என்று கேட்டார்கள். மற்றும் இரவு சாப்பாட்டுக்கு , மற்றும் காலை சிற்றுண்டிக்கு எல்லாம் ஒரு தொகையை பேசவும் செய்தார்கள்.

“ சினிமால இருக்கீங்களே? சிவதாசன்னு ஒருத்தரைத் தெரியுமா? “

சிவதாசன் சொன்னார்.

“ இலேசான இருட்டு. மழ சத்தம். தூங்காம படுத்திருக்கிற சங்கர் தன்னை பாத்து ஒருக்களிச்சுப் படுத்திருக்கிற பொண்டாட்டியோட மொகத்த பாத்துகிட்டே அவளோட வயித்தை தடவுறான். மேலே போற கை அப்புறம் கீழேயும் போவுது. அவளுக்கு கண்ணு இறங்குது. மூடிக்குது. என்ன நடக்குதுன்னு அவ அனுபவிக்கிறா. அதைத் தாங்கவே தாங்காம அடுத்த கட்டத்துக்கு போறதுக்காக மெதுவா மல்லாந்துக்கறா. அது வா ன்னு அர்த்தம். அவ தன்னை வாகு பண்ணிக்கறதுக்குள்ள அவன் அவ மேல படர்ந்து தன்னை நொழைக்கறதுக்கான தேடலும் நடக்க, செட் ஆவறாங்க. அது ஒரு புழக்கம். ஈசி. அவ கண்ணுக்குள்ள தன்னோட சிரிப்பை பாத்துக்கிட்டு அவங்க மெதுவா கொஞ்ச தூரத்துக்கு போறதுக்குள்ள அவங்க ரெண்டு பேர் மொகத்து மேலயும் வீல்னு ஒரு சத்தம் !

பச்சக் கொழந்த அது, சீறி அழுவற சத்தம்.

பொண்டாட்டி தள்ளி விட்டதுல அப்டி போயி விழறான் சங்கர். அவ பாஞ்சி போயி கொழந்தைய தூக்கறா. ஜோ ஜோ ஜோ ஜோ மா . ஜோ ஜோ ஜோ ஜோ ம்மா. அதை சமாதானம் பண்றதுக்கு பாக்கறா. அதுக்கு பசி.  மழைக் காலமில்லையா, வழக்கமா பத்து மணிக்கு குடிக்கிற பால அது ஏழு மணிக்கே குடிச்சிட்டு தூங்கிருச்சி. இப்ப அதுக்கு பால் வேணும். அவ கொழந்தைய இவன்கிட்ட குடுத்துட்டு கொஞ்சம் சுடுதண்ணி வைக்கறா. அப்புறம் அந்தத் தண்ணில கொஞ்சம் சக்கரையை கலக்கறா. ஆத்தி ஆத்தி ரெண்டு பேருமா சேந்து அதக் கொழந்தைக்குக் குடுக்கறாங்க. பசி முடிஞ்ச உடனேயே ஒண்ணு ரெண்டு தடவ தன்னோட அப்பா அம்மாவ பாத்து சிரிச்சு காமிச்சுட்டு அந்தக் கொழந்த தூங்கிடுச்சு.

சக்கரை தண்ணி இருக்கே, அது ஒரு மணி நேரம் தாங்கலாம்.

எப்ப கொழந்த அழப்போவுதோன்னு பயம்.

சங்கரால தூங்கவே முடியல.

அவஸ்தை தாங்காம குடிசைக் கதவைத் திறந்து எழுந்து வெளியே வந்தா நாலு நாள் மழையில் ஓடாமல் விட்டு வைத்திருந்த ஆட்டோவை சேட்டுவின் ஆளுங்க அப்படியே பதமா சத்தம் வராம நகர்த்திகிட்டு இருக்காங்க. இவன் பேசினா அடிக்கறதுக்கு அவங்க ரெடி. பாத்துகிட்டே நிக்கறான். அவங்க அவன வாச் பண்ணிகிட்டே நகர்ரானுங்க. அவன் மனசில இப்ப இருக்கறதெல்லாம் ஒண்ணுதான். கொழந்தை முழிச்சுக்கக் கூடாதே கடவுளே !

மழை கொட்டிகிட்டு இருக்கு.

அஞ்சு மணி. பாங்கு சத்தம் கேட்டுக்கிட்டு இருக்கு.

தூரத்தில அண்ணாச்சி கடை தெறக்கிறார்.

மொத ஆளா போயி கடன் கேக்க முடியாது.

மழயில நனைஞ்சுகிட்டு நிக்கறான்.

ஒரு பைக்கு. அவன் ஒரு போலீஸ்காரன். அண்ணாச்சிக்கு பிரெண்டு. கஸ்டமர் இல்ல. சும்மா பேசிகிட்டு நிப்பான். இவன் தவிப்பா நிக்க நிக்க, அப்பறமா ஒரு பொம்பள வராங்க. வேற ஒரு சின்ன பொண்ணு வருது. ரெண்டு பேரும் எதையோ வாங்கிட்டு போனதுக்கு அப்புறம் கடை பக்கத்தில போயி பேலன்ஸ் தரேன் அண்ணாச்சி, ஒரு பாலை எடுத்துக்கறேன்னு அவர் மொகத்த பாக்காம சொல்லி விருட்டுன்னு அத எடுத்துகிட்டு அவர் கூப்பிட கூப்பிட இவன் நடக்கறான். நடந்து வந்துகிட்டே இருக்கான். வரான், வாரான், வரான், அவன் பின்னாலேயே வந்து யாரோ எட்டி ஒதைக்கறாங்க. கீழே விழறவன் வயித்திலேயும் அந்த ஒத. அவன்தான், அந்த போலீஸ்காரன் ! திருட்டுத் தேவடியா மவனேன்னு அந்தப் பால் பாக்கெட்டாலயே சங்கர் மொகத்து மேலேயே அடிச்சி அடிச்சி அந்தப் பாக்கெட் கிழிஞ்சு அவன் மொகம் ஒடம்பு கை கால் எல்லாத்திலேயும் பால் !  போலீஸ் திரும்பிப் போறான். சங்கர் வீட்டு வாசல்ல வந்து உக்கார்றான். பால் கூட ரத்தமும் மழத் தண்ணியோட சேந்து போயிகிட்டிருக்கு.

துக்கம் னு சொல்றதா, தூக்கம் னு சொல்றதா?

அவன் அப்பிடியே இருக்கான்.

இப்ப கீச்சுது அந்தக் கொழந்த.

மழ இடி எல்லாத்தையும் தாண்டி அது அப்படியே சீறுது.

ஒரு ஓட்டம் தான். அதை அவ்வளவு தான் சொல்ல முடியும். வில்லுல இருந்து அம்பு பொறப்பட்ட மாதிரி. அண்ணாச்சி மொகத்தை ஒரே மாதிரி நூறு தடவை அடிச்சி அவரை ரத்தக் களறியாக்கி மறுபடியும் அந்தப் பாலை எடுத்துக்கறான். ஒரு மாசத்துக்கு மளிகை சாமானைப் போடுன்னு கூச்சல் போட்டுட்டு பாலை கொண்டு போயி வீட்ல போட்டுட்டு சேட்டு வீட்டுக்கு ஓடறான். அவனோட பொண்டாட்டி கழுத்துல கத்தியை வெச்சு ஆட்டோவை திருப்பிக் கொண்டு வரான் ! கறிக்கடைல கறி வாங்கறான். வீட்டுல அதையும் போட்டுட்டு கத்தியோட அந்தப் போலீஸ்காரனை குத்தறதுக்குப் போறான். அவன் இவன் கிட்ட துப்பாக்கியை காட்டிகிட்டே வந்து சுடல.

கொஞ்சம் வேலைங்க இருக்கு. அத எடுத்து செய்றியா ன்னு கேக்கறான்.

அங்க தான் பின்னால அவ்ளோ பேரை கொலை செஞ்சு சாராயம் வித்து விபச்சாரம் பெருக்கி மந்திரிகளை போலீச எல்லாம் தன் ராஜாங்கத்துல இருந்து இத்தனை எபிசோடுகளில் ஆட்டிப் படைச்ச ஆட்டோ சங்கர் பொறக்கிறான்.

இப்ப சைலன்ட்ல அந்த சங்கர் தான் இதோ தொங்க விடப்படறான்.

தி எண்ட், ரோலிங் டைட்டில்ஸ்.

படத்தோட லாஸ்ட் எபிசொட் இதுதான். “

சிவதாசனும் அவருடைய நண்பரும் குடித்தார்கள். ராகுல் அவர்களிடம் இதோ வருவதாகக் கூறிவிட்டு வெளியே வந்தான். நள்ளிரவு.  அடர்ந்து பரவியிருந்த பனியில் மழை விழுவது விசித்திரமாக இருந்தது. அதிலும் அந்த மஞ்சள் விளக்குகளின் வெளிச்சம். சற்று ஒதுக்குப்புறமாக சென்று சிறுநீர் கழிக்கும்போது குளிரால் உடல் நடுங்கியது. ஏதாவது மறைவில் இருந்து கரடி ஏதாவது பாயுமா என்று அச்சப்பட்டான். ஒரு பாதுகாப்பான இடத்துக்கு வந்து கஞ்சாவைப் பற்றவைத்து இழுத்தான். கல்யாண மண்டபத்தில் சரக்கு பார்ட்டிக்கு யார் பொறுப்பென்று பார்த்தால் விஜி. மதியம் சாப்பாட்டுக்கு அப்புறம் போட ஆரம்பித்து விட்டார்கள். ராகுல் குடிப்பது கிடையாது. ஒரு சந்தர்ப்பத்தில் செல் பேசிவிட்டு விஜி நழுவுவது போலிருக்கவே இவனும் அவனைத் தொடர்ந்தான். ஒரு கட்டத்தில் அவனைக் காணவில்லை. ராகுல் யாரோ தனது நெஞ்சுக்குள் எட்டி உதைப்பது போல உணர்ந்து, பெண்கள் மருதாணி போட்டுக் கொண்டிருந்த இடத்திற்குப் பாய்ந்து சென்று லீலாவைத் தேடினான். இல்லை. எங்குமில்லை. அந்தப் பிரதேசம் முழுக்க சல்லடை போட்டு சலித்து மூச்சு வாங்கினான். எங்கே போயிருக்க முடியும்? விஜியும் அவளோடு இருக்கிறான் ! முழுவதுமாக சோர்ந்து ஒரு முழு லோடை அடித்துவிட்டு திரும்பிய பிறகு பார்த்தால் அகமது கதறி அழுது கொண்டிருக்க அவனை அணைத்துக் கொண்டு லீலா. பக்கத்தில் விஜி. மற்ற பையன்கள். பெண்கள். எல்லோரும்.

எங்கே போயிருந்தாய் என்று முடியுமான வரையில் புன்னகை செய்து லீலாவின் கண்களைப் பார்த்துக் கொண்டு கேட்க அவள் சீற்றத்துடன் ஒரு நண்பனுக்கு காதல் தோல்வி, அதைப் பார்க்காமல் நீ எங்கே கஞ்சா போட்டு சுற்றிக் கொண்டிருந்தாய் என்று கூச்சலிட்டாள்.

எல்லோரும் என்னடா என்பது போல தலையிலடித்துக் கொண்டதும் நடந்தது.

ராகுல் அவர்கள் இருவரும் எந்த அறையில் உடலுறவு கொண்டிருக்க முடியும் என்பதைக் கணக்கு போட்டுப் பார்த்துக் கொண்டு அதை விஸ்தரித்துப் பார்த்துக் கொண்டிருக்கையில் அகமது வந்து பக்கத்தில் அமர்ந்தான். உண்மையாகவே எனது மனதின் வலியைக் கண்டறிந்து, பேன்டு பாக்கெட்டில் இருந்த பூச்சி மருந்தையும் பிடுங்கிப் போட்டு ஒரு நிம்மதியைக் கொடுத்தவள் லீலா தான் என்று சொல்லிக் கொண்டிருந்தான் அவன். இவன் எதற்கோ சும்மா தலையாட்டிக் கொண்டிருந்தான். இறுதியில் அவளிடம் நான் எனது காதலை எப்படி சொல்லுவது என்று அகமது கேட்டபோது தான் மேற்கொண்டு உட்கார முடியாமல் இவன் அங்கிருந்து வெளியேறி, செல்லை அணைத்துவிட்டு காரை எடுத்தான்.

படுத்துக்கொண்டபோது மிதப்பது போலிருந்தது.

தான் அறிந்தவரையில் இதுவரை லீலாவிற்கு எத்தனை காதலர்கள் இருப்பார்கள் என்று கணக்கு போடும்போது சிரிப்பு வந்துவிட்டது.

அவர்கள் தப்பாக நினைத்து விடுவார்களோ என்கிற எண்ணம் உருவாகி விடவே, எதற்கும் இருக்கட்டும் என்று சிவதாசனைப் பார்த்து ஒருமுறை சிரித்து வைத்தான். அவர்கள் இருவரும் இப்போது கூட எதையோ பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். கலவையாகப் பார்த்தால் அவர் பேசுவது கேட்பது போலவும், கேட்காமலிருப்பது போலவும் இருக்கிறது.

யாரோ ஒரு ஆட்டோக்காரர் கதை சொல்லிக் கொண்டிருந்தார் இல்லையா?

சிவதாசன் சொல்கிறார்.

“ நான் சொல்றது கொஞ்சம் முன்ன. ஒரு பெரிய காலேஜ். அங்க எப்பப் பாத்தாலும் ஸ்ட்ரைக். ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், மாநில சுயாட்சி போராட்டம் இதெல்லாம் முடிஞ்சு அந்த ருசி போவாம சின்னச்சின்ன துண்டு துக்கடா பிரச்சினைக்கு எல்லாம் ரோட்டுக்கு வந்துடறது. பஸ் மேல கல்ல விட்டு அடிக்கறது. எவ்ளோ பேருக்கு அடி. எவ்ளோ ரத்தம். அப்புறம் அந்த ரோட்ல மூணு நாளைக்கு பஸ்சு வராது. ஒரு தடவ ஒரு பஸ்ஸை பிடிச்சி நிறுத்தி கொளுத்திட்டாங்க. அந்தப் பக்கத்துக்கு ஒரு வாரம் வண்டி போவல.  அந்த காலேஜ் இருக்கற ஏரியாவோட ஒட்டி ஒரு ஸ்லம். கொஞ்சம் கூட அவங்களை யாருமே மனுஷங்களா பாக்காத காலம். இந்த ரகளையில பாதிக்கப்பட்டது பூரா அவங்க தான். ஆஸ்பிட்டலுக்கு, ரயில்வே ஸ்டேஷனுக்கு, பிரதான மார்க்கெட்டுக்கு போயி, அன்னைக்கு சோத்துக்கு வேல பாக்க முடியாம பல நாள் அவஸ்தைப்படுவாங்க.  கூட்டம் கூட்டமா மூணு மைல் நாலு மைல் நடந்து வேற எங்கயாவது இருந்து வண்டி புடிச்சி ஓடியாவணும். ஒருதடவை கல்லுவீச்சு நடந்துகிட்டிருக்கு. போலீசை வெரட்டி விட்டுட்டாங்க. அந்தக் காலேஜ்க்கு எதிர்ல ஒரு கான்வெண்டு. ஊர்மக்கள் கூட்டம் கூட்டமா அந்த ஸ்கூல்குள்ள சேந்து இவங்க பதிலுக்கு கல்லு வீச ஆரம்பிச்சாங்க. பெரிய யுத்தம் அது. சரியா மாட்டிக்கிற தோதில இருந்ததால அதில அடி இந்த மக்களுக்கு தான். பெரிய கூட்டமா போலீசு வந்து, இருட்டற நேரத்துல எல்லாம் முடிஞ்சது. பசங்க ரொம்ப ஆடிட்டாங்கன்னு நான் சொன்னனா இல்லையா? ஏழு மணிக்கு அப்புறம் கோதண்டம்னு ஒரு பையன், காலேஜ் சைடு கேட்டு வழியா வெளிய வரான், ரோட்டில நடக்கறான், அவனுக்கு எதிர்ல ஸ்கூல் உள்ள அவன வாச் பண்ணிகிட்டே நாலு பேரு அவனுக்கு இணையா நடந்து வராங்க. கூட்டத்துல கூச்சல் போட்டு டான்ஸ் ஆடி கெட்ட வார்த்த பேசி துள்ளிகிட்டே இருந்தவனா அவன்?

இல்லவே இல்லை.

அப்படியே அவனை நவுத்திகிட்டு நான் வேல கத்துகிட்டிருந்த போட்டோ ஸ்டுடியோவாண்ட தான் கூட்டிட்டு வந்தாங்க. பையன் கண்ல மாலை மாலையா கண்ணீர். டேய், நாங்க உன்ன என்ன செஞ்சுட்டோம், எதுக்கு அழற என்று ஒருத்தன் சமாதானம் செய்தான். நாங்கள் எல்லாம் சிறுநீர் கழிக்கிற அந்த படிக்கட்டுக்கு கீழே இருக்கிற இடுக்குக்கு கூட்டிப் போனார்கள். அங்கே தூங்கிக் கொண்டிருந்த தனபாலை எழுப்பினார்கள். அவனது பேன்டு பட்டனை அவிழ்க்க சொல்லி குறியை வெளியே எடுக்க சொன்னார்கள்.

கோதண்டத்தை மண்டி போட வைத்து ஊம்புடா என்றார்கள்.

தனபால் ஒரு குஷ்டரோகி.

பையன் கதறி அழுதான்.

ஸ்லம் பிள்ளைங்க எனக்குப் பழக்கமானவங்க.  அவங்க கிட்ட பேசி பேசி கடைசியாக உனக்காக விடறோம் பாத்துக்க என்று அவனை என்கிட்டே தள்ளி விட்டப்போ சரி போ ன்னு  அனுப்பினேன். அவன் ஓடின ஓட்டம், கடவுளே, ஒருத்தனால அப்பிடி ஓடவே முடியாது ! இன்னைக்கு கூட நான் மறக்கலியே? மறக்க முடியாது. இத நான் எதுக்கு சொல்றேன்னா வாழ்க்க இப்பிடி ஒரு முட்டு சந்துல மூத்திர சந்துல நிறுத்தி என்ன மண்டி போட வெச்சுருக்கு. வாய் விட்டு கதறி கோ ன்னு அழ வெச்சிருக்கு. ஓடிப்போ நாயேன்னு என்ன வெரட்டி விட்டுருக்கு. என்ன மாதிரி, உன்ன மாதிரி, அவன மாதிரி ஆயிரம் பேரை கசக்கிப் பிழிஞ்சி இல்லடா இந்த பூமிக்கு நீங்க அனுபவங்கள எடுத்துக்கறீங்க? எங்கள விட்டுரு, எங்க குடும்பத்தையாவது நாங்க பட்டினி போடாம வெச்சுக்கக் கூடாதா?  “

சிவதாசனின் வளவளப்பு எப்போது ஓய்ந்தது தெரியாது.

காலையில் எழுந்தபோது மழை இல்லை. மேக மூட்டம் அதிகம். ராகுல் இடியாப்பமும் பாயாவும் சாப்பிட்டான். கேட்ட காசுக்கு அதிகமாகவே கொடுத்து விட்டு காரை எடுத்தான். யாரோ யானைகளைப் பற்றி எச்சரித்தார்கள். மெதுவாக பதட்டமில்லாமல் இறங்கினான். இனி என்ன, இரவெல்லாம் கனவு. விஜியும் லீலாவும் அறுபத்தி நான்கு கலைகளையும் ஓட்டிக் காண்பித்து விட்டார்கள். கல்யாண மண்டபத்தில் நிச்சயமாக அதற்கான சௌகரியங்கள் இருக்கின்றன. எல்லாம் முடிந்திருக்கும். மிகவும் தெளிவு. இனி அவள் பக்கம் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. போனை ஆன் செய்தான். ஐந்து நிமிடத்தில் இசை எழுந்தது. அவளே தான், என்ன இது?

அவள் முதலில் கொஞ்ச நேரம் அழுதாள்.

அவள் தேனிக்கு வந்தது அவனுக்காகத்தானாம். எப்போது அந்தக் காதலை சொல்லப் போகிறாய் என்று விழி வைத்துக் காத்திருந்தாளாம். என்னை நீ பழி வாங்கி விட்டாய் என்றாள். உனக்கு இவ்வளவு வன்மம் வருகிற அளவில் நான் என்னதான் பாவம் செய்தேன் என்றாள். மேற்கொண்டு அவளுக்கு பேச்சு வரவில்லை. தேம்பிக் கொண்டிருந்தாள்.

காரை நிறுத்தி விட்டு அவளைத் தேற்றினான்.

உடனே எனது அப்பாவிடம் பேசி உனது வீட்டுக்கு வருகிறேன் என்று வாக்கு கொடுத்தான்.

யா, யா, யா என்று முழங்கிக் கொண்டு வண்டியை சந்தோஷமாக முடுக்கி வண்டியை எல்லா வளைவுகளிலும் பறக்க வைத்தான்.

சில்லிடுகிற மழை, பச்சை பசேலென்ற உலகு. ஆஹா !

சட்டென பிரேக் போட்டான். எதுவோ ஒன்று இடறி, மின்னலாக மறைந்து போயிற்றே, அது என்ன? ஒரு காட்சி அது ! என்ன காட்சி? ஆம், அவள் இவனிடம் பேசும்போது பக்கத்தில் நின்று விஜி அவள் பேச வேண்டியதை சொல்லிக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறான். இருவரும் சிரித்தவாறு இவனை முட்டாளாக அடிக்கிறார்கள். நெஞ்சம் கீழே விழுந்தது போல இருந்தது. போனில் மெசேஜ். லீலா வெட்ஸ் ராகுல். ராகுல் வெட்ஸ் லீலா. மேட் பார் ஈச் அதர்.மேட் பார் ஈச் அதர்.

மூத்திர சந்தில் மண்டி போட்டு நின்று கொண்டிருப்பது போலிருந்தது.

உடல் அழுகின ஒருவன் ஜிப் அவிழ்க்கிற சப்தம் கேட்டது.

***

மணி எம்.கே.மணி திரைத்துறையில் பணியாற்றி வரும் இவருக்கு மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் எனும் சிறுகதைத் தொகுப்பு, வேறு சில ஆட்கள், எழும் சிறு பொறி – திரைப்படங்கள் குறித்த கட்டுரைத் தொகுப்பு அண்மையில் மதுர விசாரம் எனும் நாவல் வெளியாகி நல்ல கவனம் பெற்றது. – தொடர்புக்கு – mkmani1964@gmail.com

சாத்தானின் மடி

14

ஷான் கருப்பசாமி

***

திடீரென்று வெட்டிய மின்னலில் நனைந்த மரங்கள் மின்னி மறைந்தன. காரின் கூரையில் உரத்துப் பெய்து கொண்டிருந்தது பெருமழை. மற்றபடி முகப்பு விளக்கின் வெளிச்சத்தில் தெரிந்த சாலையைத் தவிர அடர்ந்த இருள்தான். பொட்டு வெளிச்சமில்லை. கௌதமுக்கு இப்போது தாம் எங்கே இருக்கிறோமென்று தெரியவில்லை. குப்பனூர் தாண்டிவிட்டது நினைவிருந்தது. அதன் பிறகு மனித நடமாட்டமோ வாகனங்களோ இல்லை. சரியான வழியில்தான் போகிறோமா என்று அவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. மொபைல் போனை எடுத்து கூகுள் மேப்பைப் பார்த்தால் ஏதாவது புரியும். ஆனால் அது இருண்ட திரையுடன் பக்கத்து இருக்கையில் கடந்த எட்டு மணி நேரமாகக் கிடக்கிறது. கூட்டல் கழித்தல் திறனோடு மனிதனின் திசையறியும் திறனையும் இப்போது இயந்திரங்கள் எடுத்துக் கொண்டு விட்டன. நான் எங்கே இருக்கிறேன் என்று கேட்டுக் கொள்ளும் மனிதர்கள் இப்போது அதிகரித்துவிட்டார்கள். அவருக்கு பூமியில் மட்டுமல்ல, வாழ்க்கையில் எங்கே இருக்கிறோமென்றும் புரியவில்லை.காலையில் அவருடைய வழக்கறிஞர் ராமுடன் பேசியதுதான் கடைசி. அதன் பிறகு சற்று நேரம் அலையலையாக வந்த அழைப்புகளை எல்லாம் தொடர்ந்து துண்டித்துப் பார்த்தார். ஆனால் அவை நிற்பதாக இல்லை. ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்து போனை அணைத்து வைத்துவிட்டார். அவருடைய பென்ஸ் காரை சென்னையிலேயே விட்டுவிட்டு அலுவலக வேலைகளுக்காக இருக்கும் இன்னோவாவை எடுத்துக் கொண்டு வந்திருந்தார். ஏனென்றால் பென்ஸ் காரில் உள்ளே ஒரு ஜிபிஎஸ் பொதிந்திருக்கும். அவர் செல்லுமிடத்தை எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள்.

அவர் இனி யாரையும் பார்க்க விரும்பவில்லை. அவர் முடிவு செய்துவிட்டார். இது அவருடைய இறுதிப் பயணம்.

சாலையில் இடதுபுறம் ஒரு பிரிவு முகப்பு விளக்கில் தெரிந்தது. அது எங்கே செல்கிறதென்று எந்த வழிகாட்டிப் பலகையும் இல்லை. ஆனால் அந்தப் பிரிவை ஒட்டி உயர்ந்து நின்ற பெரிய மரம் பழகிய  சாயலைக் கொண்டிருந்தது. பார்க்கர் எஸ்டேட் செல்ல வேண்டிய வழி அதுவாக இருக்கலாம் என்று அவருக்குத் தோன்றியது.

காரை ஓரங்கட்டி நிறுத்தினார். உள் விளக்கைப் போட்டார். பக்கத்து இருக்கையில் அன்றைய செய்தித்தாள்கள் கிடந்தன. விழுப்புரத்தில் ஒரு பெட்டிக்கடையில் முகத்தை மறைத்துக் கொண்டு தண்ணீர் வாங்க நிறுத்தியபோது வாங்கியிருந்தார். ஒன்று விடாமல் எல்லா செய்தித்தாள்களிலும் அவரைப் பற்றிய செய்தி வந்திருந்தது.

‘காஃபி பீன்ஸ்’ நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம் – நீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி’

‘தொழிலதிபர் கௌதம் உடனடியாக வங்கிக் கடன்களை செலுத்த நீதிமன்றம் உத்தரவு’

‘Coffee Beanz share prices at all-time low’

கண்களை இறுக மூடி அமர்ந்தார். அந்த இருளும் மழை உரத்துப் பெய்யும் தனிமையும் ஒரு வகையில் நிம்மதியாகக் கூட இருந்தது. கடைசியாக இங்கு வந்து இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும். அவருடைய அப்பா வேணுபிரசாத்துடன் வந்தது. அவர் தாத்தா கிருஷ்ணன் இங்கு பதினெட்டு வயதில் வேலை செய்ய ஆரம்பித்து பிறகு அந்த எஸ்டேட்டையே வாங்குமளவு உயர்ந்தார். பிறகு தேர்ந்தெடுத்த உயர் ரக காபிக் கொட்டைகளை ஏற்றுமதி செய்யத் தொடங்கினார். பணம் கொட்டியது. தன்னுடைய மகனைத் தான் உயிருடன் இருந்தபோதே தொழிலில் நுழைத்தார். கௌதமின் அப்பா வேணுபிரசாத்தும் ஒரு கூர்மையான அறிவுள்ள வியாபாரி. அவர்தான் காஃபி பீன்ஸ் (கடைசியில் இசட்) நிறுவனத்தை உருவாக்கியவர். தொழிலை வளர்த்தெடுக்க சென்னையில் குடியேறினார். தன்னுடைய காலத்தில் ஏற்றுமதியைப் பல மடங்கு அதிகரித்த அவர் தொடர்ந்து பல காபி எஸ்டேட்டுகளை வாங்கிப் போட்டார். தாத்தா உயிருடன் இருந்த வரை இங்கு குடும்பத்தோடு எப்போதாவது வருவார்கள். வழக்கமான சொகுசுகள் குறைவு என்பதால் கௌதமுக்கு இந்த இடம் அவ்வளவு பிடிக்காது. தாத்தா இறந்த பிறகு பார்க்கர் எஸ்டேட் அவர்களுடைய நினைவிலிருந்து மெல்ல மறைந்து விட்டிருந்தது. ஏனெனில் இந்தியா முழுவதும் அவருடைய காஃபி பீன்ஸ் நிறுவனம் இருநூறு எஸ்டேட்டுகளை வைத்திருந்தது. ஒவ்வொரு மாதமும் ஒன்றாகப் பார்த்தாலே வருடங்கள் ஆகிவிடும். இந்த எஸ்டேட் அவற்றோடு ஒப்பிடுகையில் மிகவும் சிறியது. ஒரு எக்செல் ஆவணத்தின் பட்டியலில் ஒரு வரியாக மட்டுமே அது இருந்தது. அங்கே என்ன நடக்கிறதென்று கூட கௌதம் கேட்டுக் கொண்டதில்லை.  

கௌதம் பிறந்தது முதலே எந்த சிரமமும் தெரியாமல் வளர்க்கப்பட்டார். வீட்டுக்கு வர நேரமில்லாமல் அவர் தந்தை உழைத்தார். உலகெங்கும் பறந்தார். பணம் கொட்டியது. கேட்டது எல்லாம் கிடைத்தது. மும்பையில் கல்லூரி, திருமணம் என்று எல்லாமே அவர் விருப்பப்படி. தான் பயணம் செய்த விமானத்தில் பணிப்பெண்ணாக வந்த சரிகாவை ஒரு வருடம் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஒரே மகள் சாருமதி இப்போது எட்டாம் வகுப்பில் படிக்கிறாள். அப்பா கொடுத்த முதலீட்டில் பங்குச்சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு பெரிய அழுத்தங்களுக்கு ஆளாகாமல் வாழ்ந்து கொண்டிருந்தார்.

எட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் அவர் தந்தை வேணுபிரசாத் இறந்து போன நொடியில் கௌதமின் உலகம் தலைகீழாக மாறியது. அப்பாவின் வலது கரமாக இருந்த ஜான் அதே விபத்தில் அவரோடு இறந்து போனதால் கௌதம் திண்டாடிப் போனார். அடுத்த இரண்டு வருடங்களின் நாட்கள் போர்டு மீட்டிங், இன்வெஸ்டர் மீட்டிங், ஆடிட்டர்களுடன் சந்திப்பு என்று ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலைப் போலக் கடந்து போயின. அடுத்து எப்போது சாப்பிடுவோம் எப்போது தூங்குவோம் என்றே தெரியாது. ஆனால் மெல்ல சுதாரித்துக் கொண்டார். அவர் அப்பா கட்டி வைத்திருந்த சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரம் வலுவாக இருந்தது.  நிறுவனம் மீண்டும் நிமிர்ந்தது.

ஒரு நாள் காலையில் திடீரென்று வளர்ந்து நிற்கும் மகளைப் பார்த்துக் கண் கலங்கிவிட்டார். அவளுடைய வளர்ச்சியின் ஒவ்வொரு படியையும் நின்று ரசிக்க அவருக்கு நேரமில்லை. ஏனெனில் அவரை நம்பி பத்தாயிரம் குடும்பங்கள் இருந்தன. அவர்கள் வீட்டிலும் இது போலப் பிள்ளைகள் இருப்பார்கள். அவர் ஓடிக் கொண்டே இருந்தார்.

தொழில் ஓரளவு பிடிபட்டதும் ஏற்றுமதித்தரம் வாய்ந்த உயர் ரக காபியை இந்தியர்களுக்கும் அறிமுகம் செய்ய முடிவு செய்தார் கௌதம். இந்தியாவெங்கும் காபி பார்களைத் திறந்தார். ஒரு காபியின் விலை முந்நூறு என்று வைத்தபோது பத்திரிகைகள் கிண்டல் செய்து எழுதின. ஆனந்த விகடனில் முழுப்பக்க ஜோக்குகள் வந்தன. ஆனால் விலை காபிக்கு அல்ல, அதைப் பருகும் அனுபவத்துக்கு என்றார் கௌதம்.

அவர் தந்தை அளவுக்கு அவருக்கு வியாபார நுணுக்கம் தெரியவில்லை என்றார்கள் பொருளாதார மேதைகள்.

ஆனால் பலருடைய கணிப்பையும் பொய்யாக்கி காஃபி பீன்ஸ் கடைகள் இளைஞர்களின் புதிய கலாச்சார அடையாளமாகிப் போயின. தொழில் முறை சந்திப்புகளுக்கும் புதிய தலைமுறையின் அவசரக் காதலர்களுக்கும் உகந்த இடமாக அது மாறியது. இந்தியாவின் மிகப்பெரிய காபி நிறுவனமாக அவருடைய நிறுவனம் வளர்ந்தது. கௌதம் விருதுகளை வாங்கிக் குவித்தார். கடந்த ஆண்டு வரை அவரது நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையை ஆட்சி செய்தன.

எல்லாம் ஏறுமுகமாகப் போய்க் கொண்டிருந்த காலத்தில் அவரை சந்திக்க மத்திய இணை அமைச்சர் புனீத் மிஸ்ராவின் உதவியாளர் வந்திருந்தார். அவரது நிறுவனத்தில் அமைச்சர் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் அவரிடமிருக்கும் பங்குகளில் ஒரு பகுதியை விற்கும்படியும் கேட்டார். அதுவும் சந்தை விலையில் பாதிக்கு. தனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை என்றார் கௌதம். அவராகவே விற்றுவிட்டால் அவருக்கு நல்லது என்று மிரட்டல் தொனியில் பேசினார் அந்த உதவியாளர். கௌதம் உதவியாளரை அழைத்து அவரை வெளியே கூட்டிச் செல்லும்படி சொல்லிவிட்டார். மறுநாள் அமைச்சரிடம் இருந்து நேரடியாக போன் வந்தது.

“என்ன மிஸ்டர் கௌதம், முரண்டு பிடிக்கறீங்க. வேணும்னா மார்க்கெட் ப்ரைஸ் வாங்கிக்கங்க.”

“இல்லை சார்.. எனக்கு என்னோட ஷேர்ஸ் விக்கணும்னு அவசியமே இல்லை. அப்படியே விக்கறதா இருந்தாலும் அதுக்குன்னு ப்ராசஸ் இருக்கு”

“எனக்கு எல்லாம் தெரியும் கௌதம். ப்ராசஸ் எல்லாம் விடுங்க. உங்களால விக்க முடியுமா முடியாதா?”

‘ஐ அம் சாரி சார்…“

“அச்சா… என்கிட்டே நோ சொல்றவங்களை எனக்குப் பிடிக்காது கௌதம். அப்புறம்..இது என்னோட பர்சனல் நம்பர். சேவ் பண்ணி வெச்சுக்கோங்க. தேவைப்படும்”

“எதுக்கு சார்?”

“நான்தான் சொல்றேன்ல மிஸ்டர் கௌதம். தேவைப்படும்”

சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார் புனீத் மிஸ்ரா.

அலுவலகத்தின் ஆடிட்டர் குருவில்லா அவர் அப்பாவின் நெருங்கிய நண்பர். அவரை அழைத்தார் கௌதம்.

“அந்த ஆளு கொஞ்சம் மோசம்தான்.  நேராவே யோசிக்க மாட்டான். நாம எதுக்கும் ஜாக்கிரதையா இருக்கணும்”

“நாம எல்லாத்தையும் சட்டப்படி செஞ்சுட்டு இருக்கோம் அங்கிள். இவங்களுக்கு எதுக்கு பயப்படணும்?”

“அவனுங்க எதையும் சட்டப்படி செய்ய மாட்டானுங்க கௌதம். அதான்”

அவர் சொன்னது சரிதான். அடுத்த நான்காவது நாள் அவர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்தது. வீட்டைப் புரட்டிப் போட்டார்கள். நாடெங்கிலும் அவரது அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன. ஃபேக்டரிகளில் வேலை முடக்கப்பட்டது. தேவையற்ற வதந்திகள் கிளம்பின. அவருடைய கடையில் கோல்ட் காஃபி பாட்டிலில்  பல்லி கிடந்ததாக வாட்ஸ் ஆப் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. அவருடைய காபித் தோட்டங்கள் சுற்றுச் சூழலை பாதிப்பதாக திடீர் போராட்டங்கள் நடந்தன. தினமும் ஏதோ ஒன்று. தொடர்ந்து வந்த எதிர்மறையான செய்திகளால் பங்குகளின் விலை குறையத் தொடங்கியது.

குருவில்லா அவரை அழைத்தார்.

“அந்த நாய் கேட்டதை கொடுத்துத் தொலைச்சுருப்பா. ஹார்வர்டுல படிச்சுட்டு வந்திருக்கான். பெரிய பெரிய ஃப்ராடுங்க இவனுக்கு க்ளாஸ் எடுத்திருப்பாங்க. வேறு சில பெரிய மினிஸ்டர்ஸ் பணமும் அவன் மூலமாத்தான் வெளுப்பாகுது. சட்டத்தால தொட முடியாத மாதிரி சேஃப் பண்ணித் தரானாம். அதான் ஒருத்தனும் அவனுக்கு எதிரா மூச்சு விடறதில்லை.”

வேறு வழியே இல்லாத ஒரு நாளில் கௌதம் புனீத் மிஸ்ராவை அழைத்தார். இப்போதுதான் புதிதாகப் பேசுவது போல் ஆரம்பித்தார் அந்த மந்திரி.

“சொல்லுங்க மிஸ்டர் கௌதம். உங்க கூட பேசறதுல எனக்குப் பெருமையா இருக்கு. எப்பேர்ப்பட்ட ஆந்த்ரப்ரனர் நீங்க… ”

“சார்… அந்த டீலிங் நாம முடிச்சுக்கலாம்”

“புரியலை.. எந்த டீலிங் மிஸ்டர் கௌதம்?”

“சார்..என்னோட ஷேர்ஸ்ல பத்து பர்சண்ட் எடுத்துக்கங்க. எனக்கு இந்த ரெய்டு வரதெல்லாம் நின்னா போதும்”

“அதாவது எனக்கு உங்களோட பத்து பர்சன்ட் ஷேர்ஸ் கொடுத்து ப்ரைப் பண்றீங்க. இந்த ரெய்டுகளை நான் நிறுத்தணும். அப்படித்தானே?”

“ஆமாம்”

“சாரி மிஸ்டர் கௌதம். நீங்க நினைக்கற மாதிரி ஆள் நான் இல்லை. உங்களோட ரெக்கார்ட்ஸ் எல்லாம் சரியா இருந்தா இந்த ரெய்டுக்கெல்லாம் நீங்க பயப்படத் தேவையில்லை. இந்த மாதிரி லஞ்சம் கொடுக்கற வேலையெல்லாம் வேற யார் கிட்டேயாவது வெச்சுக்கங்க”

கோபமாக சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார் புனீத். கௌதமுக்கு எதுவும் புரியவில்லை.

இரண்டு நாட்களில் புரிந்தது. அவருடைய வாட்ஸ் ஆப்பில் ஒரு ஆடியோ வந்து விழுந்தது. அவரும் அமைச்சரும் பேசிய ஆடியோ. குருவில்லா பதறிக்கொண்டு அழைத்திருந்தார்.

“கௌதம்… நீ இதுக்கெல்லாம் கவலைப்படாதே. இது உன் குரல் இல்லைன்னு ஒரு அறிவிப்பு மட்டும் கொடுத்துடலாம். கொஞ்ச நாள் மீடியாகிட்ட சிக்காம இரு…  சமாளிச்சுடலாம்” ஆனால் அவர் குரலில் பெரிய நம்பிக்கை இல்லை.

அந்த ஆடியோ உலக அளவில் டிரெண்டிங் ஆனது. எல்லா செய்தி சேனல்களிலும் பேசப்பட்டது. அது எப்படி வெளியானதென்று தனக்குத் தெரியாது எனப் பேட்டி கொடுத்தார் புனீத் மிஸ்ரா. அது உண்மையா பொய்யா என்ற கேள்விக்கு பதில் தராமல் புன்னகைத்து மழுப்பினார். பணத்துக்கு மயங்காத அமைச்சர் என்று அவருக்கு ஒரு பெயரும் வந்தது. இப்போது காஃபி பீன்ஸ் பங்குகள் தொண்ணூறு சதவீதம் விலை குறைந்து விட்டன. அதை வெளிச்சந்தையிலேயே வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தார். ஒரே கல்லில் மாங்காய்த் தோப்பு.

அதனைத் தொடர்ந்த மாதங்களில் நீதிமன்ற வழக்குகளுக்கே கௌதமுக்கு நேரம் சரியாக இருந்தது. வங்கிகள் தங்கள் கடன்களைக் கேட்டு திடீரென்று நெருக்க ஆரம்பித்தன. புதிய கடன்களைத் தர மறுத்தன. நிறுவனத்தின் வரலாற்றில் முதல் முறையாக சம்பளம் தருவதில் தாமதம் ஏற்பட்டது. அவரது ஊழியர்கள் முடிந்த அளவு சமாளித்தார்கள். பிறகு அவர்களும் கொடி பிடித்தார்கள். ட்விட்டரில் திட்டி எழுதினார்கள். 

இறுதியில் அவருடைய நிறுவனத்தின் அசையும், அசையா சொத்துகள் அனைத்தையும் சீல் வைக்கும்படி நீதிமன்ற உத்தரவு வந்தது. குடியிருக்கும் வீடு மட்டும் கருணையின் பேரில் தப்பியது.

கௌதம் இடிந்து போனார். ஒரு தொழிலை நடத்துவதற்குத் தேவையான சிறிய தில்லுமுல்லுகளை அவரும் செய்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் சட்டத்துக்கு உட்பட்டே அனைத்தையும் செய்து வந்தார். இந்த மாதிரி அடாவடி எல்லாம் அவருக்குப் புதிது. அவர் பரம்பரையாக உழைத்துக் கட்டி எழுப்பிய சாம்ராஜ்யம் அவர் கண் முன்பாக சரிந்து விழுந்ததை விடவும் ஒரு ஊழல்வாதியாக மக்கள் முன் நிறுத்தப்பட்டது அவரை உலுக்கி விட்டது.

தீர்ப்பு வந்ததும் குருவில்லா அவருடைய தோளில் ஆதரவாகத் தட்டினார்.

“பாத்துக்கலாம் கௌதம். ஒரு பத்து நாள் பொறுத்துக்கோ. இந்த ஆர்டருக்கு ஸ்டே வாங்கிடலாம்னு லாயர் சொல்லியிருக்கார். கோர்ட் ஆர்டர் மெயில்ல அனுப்பியிருக்கேன். ஒரு தடவை டீடெயிலா படிச்சிரு”

வீட்டுக்கு வந்து விஸ்கி பாட்டிலைத் திறந்து அமர்ந்துவிட்டார். சரிகா அவர் தலையைத் தடவி ஏதோ சொல்லிவிட்டுப் போனது அவர் காதில் விழவில்லை. தீர்ப்பு நகலை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தார். சீல் வைக்கப்பட்ட சொத்துகளின் விவரம் பட்டியலிடப்பட்டிருந்தது. இனி ஒன்றும் மிச்சமில்லை.

புரட்டிக் கொண்டே வந்தவரின் கண்கள் சுருங்கின. ஒரே ஒரு சொத்து மட்டும் நீதிமன்றத்தால் முடக்கப்படவில்லை. சீல் வைக்கப்படவில்லை. அது பார்க்கர் எஸ்டேட். வக்கீல் ராமுக்கு போன் அடித்தார்.

“ஓ.. அதுவா… அது இன்னும் உங்க தாத்தா பேர்லதான் இருக்கு கௌதம். அதனால கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை. உங்க அப்பாகிட்டே கேட்டப்போ மாத்த மனசு வரலைன்னு சொன்னார். அது இப்போ யூஸ் ஆகுது. உங்க தாத்தா இன்னும் உங்க கூட இருக்கார். கவலைப் படாதீங்க.”

லேசான போதையோடு அமர்ந்திருந்த போது டென்னிஸ் வகுப்பிலிருந்து வந்து வீட்டுக்குள் நுழைந்தாள் சாருமதி.

“சாரு…” என்றபடி எழுந்தார் கௌதம்.

வழக்கமாக இவரை வீட்டில் பார்த்தால் டாடி என்று அழைத்தபடி ஓடி வருவாள். அவர் கேட்கிறாரோ இல்லையோ பள்ளியில் நடந்தது, வீட்டில் நடந்தது என்று அவளுக்குச் சொல்ல ஆயிரம் கதைகள் இருக்கும். ஆனால் இன்று முகத்தைத் திருப்பிக் கொண்டு வேகமாக மாடிக்குப் போனாள். கௌதம் அவளைத் தொடர்ந்து போனார். கதவை அறைந்து சாத்தினாள்.

“சாரு… ப்ளீஸ் ஓபன் தி டோர்… என்ன ஆச்சு உனக்கு? கம் ஆன்… நீயும் இப்படிப் பண்ணாதடா.. ப்ளீஸ்”

அவள் திறக்கவில்லை. எல்லாக் கதவுகளையும் போல இந்தக் கதவும் அடைத்துக் கொண்டது அவருக்கு. அவர் கதவு தட்டும் சத்தம் கேட்டு சரிகா ஓடி வந்தாள்.  அவரை சமாதானப்படுத்தினாள்.

“அவ க்ளாஸ்ல உங்களைப் பத்தி பேசியிருக்காங்க. ரொம்ப கிண்டல் பண்ணிட்டாங்க போல. கொஞ்சம் அப்செட்டா இருக்கா. கொஞ்சம் டைம் கொடுங்க கௌதம்.. சரியாகிடுவா… குழந்தைதானே..”

என்ன நடந்தாலும் விடாது போராடிக் கொண்டிருந்த கௌதமுக்கு அந்த நொடியில்தான் இழை அறுந்தது. இனி யாருக்காகப் போராட வேண்டும்?

தட்டுவதை நிறுத்திவிட்டுத் தளர்வாகத் திரும்பி வந்தார். முழு பாட்டிலையும் குடித்துக் கொண்டு இரவு முழுக்க விழித்திருந்தார். அதிகாலையில் இன்னோவாவை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். யாரிடமும் சொல்லவில்லை. பென்ஸ் அதன் இடத்தில் இருந்ததால் நீண்ட நேரம் யாரும் தேடவில்லை. மதியத்துக்கு மேல்தான் சரமாரியாக அழைப்புகள் வர ஆரம்பித்தன. குறிப்பாக சரிகாவிடமிருந்து. யாரிடமாவது பேசினால் மனது மாறிவிடும் என்று தோன்றியது. போனை அணைத்து வைத்துவிட்டார்.

ஒரு பெருமூச்சுக்குப் பிறகு அந்தக் குறுகிய சாலையில் இன்னோவாவைத் திருப்பினார். அவர் கடைசியாக வந்த காலத்தில் அது மண் பாதையாக இருந்தது. இப்போது தார் போட்டிருந்தார்கள். கொஞ்ச தூரம்தான். பிறகு மொத்தமாக சாலையை மழை நீர் அரித்திருந்தது. தார் இங்கொன்றும் அங்கொன்றுமாக சிறு திட்டுகளாக மட்டுமே மீதமிருந்தது. ஒரு சிற்றோடை போல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. எது மேடு எது பள்ளம் என்று தெரியாமல் வளைத்து வளைத்து ஓட்டிக் கொண்டிருந்தார். ஒரே ஒரு வண்டி செல்லும் அளவுக்குத்தான் அந்தத் தடத்தின் அகலம் இருந்தது.

இரண்டு பக்கங்களிலும் காபி மரங்கள். ஆம் அவை மரங்கள்தான். செடிகள் அல்ல.

கால் மணி நேரம் அந்தச் சாலையில் தட்டுத் தடுமாறிச் சென்ற பிறகு அவருக்குக் கொஞ்சம் வழி பிடிபடத் தொடங்கிவிட்டது. பல பெரிய பழகிய மரங்கள் தட்டுப்படத் தொடங்கின. உரத்து ஓடிக் கொண்டிருந்த ஒரு காட்டாற்றைக் கடந்ததும் பார்க்கர் எஸ்டேட்டின் எல்லை தொடங்கியிருந்தது. இந்த இடம் மட்டும் காடு போல அடர்ந்திருந்தது.

முகப்பு விளக்கின் வெளிச்சத்தில் துருப்பிடித்த அந்தப் பலகை தென்பட்டது. பார்க்கர் எஸ்டேட்ஸ். அவர் தாத்தா காலத்தில் வேலைப்பாடுகளுடன் செய்து வைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இப்போது பாதி சாய்ந்திருந்தது. சுற்றிலும் செடிகள் அடர்த்தியாக வளர்ந்து பெருமளவு மறைத்திருந்தன. உயரமான கேட் சாத்தியிருந்தது. அதன் சட்டமும் கம்பிகளும் முழுமையாகத் துருப்பிடித்திருந்தன.

அவருக்கு இப்போது ஒரு பயம் வந்தது. இதை இப்போது யார் பராமரித்து வருகிறார்கள் என்று யாரிடமும் கேட்டுக் கொள்ள வாய்ப்பில்லை. யாராவது இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் கிளம்பிவிட்டார். இங்கே யாருமே இல்லையென்றால் என்ன செய்வது? பிறகு தலையில் அடித்துக் கொண்டார். அவர் வந்திருக்கும் வேலைக்கு இங்கு யார் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? உண்மையில் யாருமே இல்லாவிட்டால் கூட நிம்மதிதான்.

ஏனெனில் அவர் வந்திருப்பது சாத்தானின் மடியைத் தேடி.

பார்க்கர் எஸ்டேட்டின் பங்களாவிலிருந்து கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் தூரம் அடர்ந்த புதர்களையும் உயர்ந்த மரங்களையும் கடந்து சென்றால் மலையின் விளிம்பில் ஒரு தட்டையான பாறை இருக்கும். அது சிறிதளவு மலைச் சரிவிலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும். இருபது பேர் வட்டமாக அமர்ந்து பேசலாம். அந்த இடம் பார்க்கர் எஸ்டேட்டுக்கு சொந்தமானது. அதற்கு டெவில்ஸ் லேப் என்று பெயர். தமிழில் அதை சாத்தானின் மடி என்று அவன் தாத்தா மொழிபெயர்த்து அதை ஒரு கல்வெட்டிலும் பொறித்து வைத்திருந்தார். உள்ளுர் மக்கள் சாத்தா மடி என்பார்கள். சிலர் சாஸ்தா மடி என்று அதன் பொருளையே மாற்றிவிடுவார்கள். சாத்தானின் மடியிலிருந்து வெளியே ஒரு அடி வைத்தால் கிடுகிடு பள்ளம். தரை தெரியாது. சாத்தானின் மடிக்கு ஒரு கதை இருந்தது. உள்ளத்தை உருக்கும் கதை. 

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அந்த எஸ்டேட்டில் மேனேஜராக இருந்தவரின் மனைவி லாரா. அயர்லாந்துக்காரி. அவள் கணவனைப் பாம்பு கடித்துவிட்டது. மருத்துவமனைக்குச் செல்ல மலையிறங்க வேண்டும். பேச்சு மூச்சில்லை. அவன் இறந்துவிட்டானென்று யாரோ சொல்ல அழுது அரற்றிக் கொண்டு ஓடிச்சென்று குதித்து விட்டாள். பிணம் கிடைக்கவில்லை. இரண்டு வாரங்கள் தேடிய பிறகு துணிகள் மட்டும் கிடைத்தன. சில எலும்புகளும். ஆனால் உள்ளூர் வைத்தியத்தில் கணவன் பிழைத்துவிட்டான். விஷயம் தெரிந்ததும் பித்துப் பிடித்தது போல் அலைந்து கொண்டிருந்த அவன் ஒரு இரவில் இதே இடத்தில் வந்து குதித்துவிட்டான். அதிலிருந்து இந்த இடத்துக்கு உள்ளூர் ஆட்கள் வர அஞ்சுவார்கள். அங்கே சென்றால் லாரா காதுக்குள் வந்து பேசுவாள் என்றும் குதிக்க வேண்டுமென்ற ஆசையைக் கிளப்புவாள் என்றும் கதைகள் உலவுகின்றன. அப்படி ஒரு இடம் இருப்பதே அந்த ஊரைத் தாண்டி யாருக்கும் தெரியாது. இந்த நிகழ்வுக்குப் பிறகு அதற்கு டெவில்ஸ் லேப் என்று பெயரிட்டவர் பார்க்கர்தான். இந்தக் கதை அந்தப் பகுதியில் பிரசித்தம் என்பதால் அந்த எஸ்டேட்டையும் யாரும் விலைக்குக் கேட்க அஞ்சுவார்கள்.

அவன் தாத்தாவுக்கு பேய் பிசாசு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. அந்த இடத்தை அவர் அத்தனை நேசித்தார். அங்கே ஒரு இரும்பு பெஞ்ச் செய்து பாறையில் பதித்து வைத்திருந்தார். மாலை நேரத்தில் அங்கே அமர்ந்து சூரியன் மறைவதைப் பார்ப்பது அவருக்குப் பிடிக்கும். கௌதம் அங்கே வரும்போதெல்லாம் அழைத்துச் சென்றுவிடுவார். இருட்டிய பிறகு திரும்புவார்கள். பங்களாவுக்குத் திரும்பும்வரை கௌதமுக்கு நடுக்கமாகத்தான் இருக்கும்.

சாத்தானின் மடிதான் கௌதமின் இறுதி இலக்கு. ஆனால் அதற்கு முன் அவருக்கு சில வேலைகள் மிச்சம் இருந்தன. அதற்கு ஒரு இடம் தேவைப்பட்டது.

மூடியிருந்த கேட்டின் முன்பாக காரிலிருந்து இறங்கினார். காவலர்கள் யாருமில்லை. வீர் வீரென்ற ராக்கோழிகளின் சத்தம் காதைக் கிழித்தது. சென்னையில் அவர் இந்த சத்தத்தைக் கேட்டதே இல்லை. கேட்டைத் தள்ளிப்பார்த்தார். திறந்து கொண்டது. முழுதாகத் திறந்து வைத்துவிட்டுத் திரும்பி வந்து  காரில் ஏறி அதை உள்ளே செலுத்தினார். இந்த எஸ்டேட்டை உருவாக்கிய காலத்தில் கட்டப்பட்ட பங்களா சற்றுத் தொலைவில் வந்தது. இரண்டு மாடிகள். கற்களாலான வளைவுகள். உயரமான மரச் சன்னல்கள் என்று மிக அழகான வீடு அது. விளக்குகள் எதுவும் எரியவில்லை. அவருக்கு சிறு வயது நினைவுகள் அலை போல் எழுந்து வந்தன. பங்களாவுக்கும் கேட்டுக்கும் இடையே சைக்கிள் ஓட்டி விளையாடியிருக்கிறார்.

காரை போர்ட்டிகோவில் கொண்டு சென்று நிறுத்தினார். கருங்கற்களால் ஆன படிகளில் ஏறித்தான் உள்ளே செல்ல வேண்டும். ஆனால் முதல் படியில் யாரோ தடியோடு நின்றார்கள். கையில் ஒரு டார்ச் லைட்.

“யாரு அது? யாரு வேணும்?”

பயமோ முதுமையோ குரலில் சிறிது நடுக்கம் தெரிந்தது.

“நீங்க யாருன்னு சொல்லுங்க?” என்றார் கௌதம் பதிலுக்கு.

அதிகாரம் மிக்க அந்தக் குரலைக் கேட்டதும் டார்ச் லைட் பளிச்சென்று அவர் முகத்தில் அடித்தது.

“சின்னவரே…” என்ற குரல் எழுந்தது. அதைத் தொடர்ந்து அந்த முதிய உருவம் எங்கோ தேடி ஒரு விளக்கைப் போட்டது. சோகையாக எரிந்த ஒரு குண்டு பல்பு அந்த இருளில் அதீத வெளிச்சத்தைத் தந்தது.

“என்னைத் தெரியலையா சாமி.. உங்க மருதையன்”

மருதையனின் உருவம் விளக்கு வெளிச்சத்துக்குள் வந்தது. சில விநாடிகள் திகைப்புக்குப் பிறகு மெல்ல கௌதமுக்கு நினைவுகளில் அந்த உருவம் நிழலாடியது. நண்பன், வேலைக்காரன், அடியாள், காவலன் என்று எல்லாவிதத்திலும் மருதையன் இல்லாமல் அவன் தாத்தாவை சிந்திக்க முடியாது. பாட்டி இறந்த பிறகு சமைப்பது, துவைப்பது அவருக்கு சவரம் செய்து விடுவது என்று அவர் தாத்தாவுக்கு மருதையன்தான் எல்லாமே. தேர்ந்த வேட்டைக்காரர். காட்டுக்குள் போனால் ஏதாவது ஒரு பறவையோ மிருகமோ அடித்து எடுத்து வருவார். சிறுனாக இருந்தபோது தன்னைத் தோள்களில் தூக்கித் திரிந்த மெல்லிய உயர்ந்த ஆனால் இரும்பு போல் உறுதியான அந்த தேகம் உருவம் இப்போது தளர்ந்து சுருங்கியிருந்தது. பொருந்தாத சட்டை ஒன்றை தொளதொளவென்று அணிந்திருந்தார். கையிலிருந்த தடியை ஊன்றி நின்றிருந்தார். முகத்தில் ஏற்கனவே இருந்த சுருக்கங்கள் மூன்று மடங்காகியிருந்தன. இலவச கண் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தரப்படும் தடித்த கண்ணாடி அணிந்திருந்தார். அகலச் சிரித்த வாயில் சில பற்கள் தவறியிருந்தன. ஆனால் அதே புன்னகை. தொண்ணூறு வயதாவது இருக்கும். அதற்கு மேலும் இருக்கலாம். அவர் இன்னும் உயிரோடு இருப்பார் என்றெல்லாம் கௌதம் எதிர்பார்த்திருக்கவில்லை.

“மருதையனா…” ஆச்சரியத்தை மறைக்க முடியவில்லை.

“மண்டையப் போட்டிருப்பேன்னு நினைச்சீங்களா சாமீ” புன்னகை மாறாமல் கேட்டுவிட்டு இறங்கி காருக்கு அருகில் வந்தார். கௌதமை அவர் சாமி என்றுதான் அழைப்பார்.

“பாத்தவுடனே என்னைக் கண்டுபிடிச்சுட்டே”

“அய்யாவ நீங்க சின்னவயசுல பாத்ததில்லை. நான் பாத்திருக்கேன். அதான். இத்தன வருசமாச்சா சாமி உனக்கு இந்தக் கெழவனை வந்து பாக்க… பொட்டிய எடுத்துக்கவா?”

“பொட்டி எதுவும் இல்லை”

கௌதம் அவரது கண்களைத் தவிர்த்தார்.

“அப்புறம் நான் வந்தது இங்கே யாருக்கும் தெரியவேணாம். சரியா?”

அவரையே ஊடுருவுவதுபோல் உற்றுப் பார்த்தார் மருதையன்.

“சாப்பிட்டியா சாமீ… ”

“ம்ம்…” கௌதம் ப்ரீப்கேசை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு இறங்கினார். .

“இருபத்து நாலு வருசம் கழிச்சு எஞ்சாமி வந்திருக்கே. சொல்லிட்டு வந்திருந்தா விருந்தே ஏற்பாடு பண்ணியிருப்பேனே சாமி. சித்த இரு  நாம் போயி உனக்கு சாப்பிட ஏதாவது கொண்டாறேன். ”

அத்தனை வருடங்கள் ஓடிப் போனதை அவராலேயே நம்ப முடியவில்லை.

“நான் சாப்பிட்டாச்சு…”

“சாமீ… பசிக்குன்னு ஒரு குரல் இருக்கு. உன்னவிட எனக்கு அது நல்லாக் கேக்கும். நீ உள்ள வா மொதல்ல”

கௌதமை அழைத்துக்கொண்டு சென்று படுக்கை அறையைக் காட்டினார். அது அவர் தாத்தாவின் அறை. எப்படி இருந்ததோ அச்சுப் பிசகாமல் அப்படியே இருந்தது. எந்தப் பொருளும் இருந்த இடத்தை விட்டு அசைந்திருக்கவில்லை. காலச்சக்கரத்தில் பின்னோக்கிப் போனது போலிருந்தது. தாத்தாவின் சாய்வு நாற்காலியைத் தொட்டுப் பார்த்தார். அதில் அமர்ந்து சாய்ந்து கொண்டார். தாத்தாவின் மடியில் மீண்டும் அமர்வது போலிருந்தது. அந்த நாற்காலி இப்போது சிறுத்துப் போனதாகத் தோன்றியது. இல்லை அவர்தான் பெருத்துவிட்டார்.

ஒரு கூஜாவில் தண்ணீரும் கண்ணாடிக் குவளையும் கொண்டு வந்து வைத்தார் மருதையன். எங்கிருந்தோ தேடி அவசரமாகக் கழுவி எடுத்து வந்திருந்தார்.

“சாமி நீ துணி மாத்திட்டு சித்த உக்காரு… அந்தப் பொட்டில அப்பாவோடது துணி எதாவது இருக்கும். நான் போனதியும் வந்தர்றேன்.”

“எங்க போறீங்க மருதையன்? பேசாம உள்ளே வாங்க”

“இதோ.. வந்துடறேன்… உனக்கு சாப்பிட ஏதாவது ஏற்பாடு பண்ணிட்டு வரேன்” அவர் படபடத்தார். அவசரமாக செருப்பை மாட்டிக்கொண்டு ஒரு துப்பட்டியைச் சுற்றிக் கொண்டார். தலையைச்சுற்றி உருமாலை கட்டிக் கொண்டு ஒரு பீடியைப் பற்ற வைத்தார். எவ்வளவு தடுத்தும் அவர் கேட்கவில்லை. அவர் கௌதமை இன்னும் அடம் பிடிக்கும் சிறுவனாகத்தான் பார்த்தார். கௌதமுக்கு எரிச்சலாக வந்தது.

“மருதையன்…  இப்ப உள்ளே போறீங்களா இல்லையா? ஒரு தடவ சொன்னா புரியாது?”

திடீரென்று எழுந்த கோபமான குரலில் அவர் கொஞ்சம் மிரண்டு போனார். இது முதலாளியின் குரல். தலையசைத்தார்.

“ஆகட்டுஞ்சாமி.. உம்பட இஷ்டம்..”

குச்சியை ஓரமாக சாய்த்து வைத்தார். காயப்பட்டது போல் அவர் முகம் தொய்ந்து போயிருந்தது. படியிலேயே அமர்ந்து கொண்டு மிச்சமிருந்த பீடியை இழுக்கத் தொடங்கினார்.

கௌதம் தனது அறைக்கு வந்து சாத்திக் கொண்டார். வரும் வழியிலேயே விஸ்கி வாங்கி வந்திருந்தார். அதை எடுத்து வைத்தார். கடைசி பாட்டில். தண்ணீர் கலந்து வைத்துக் கொண்டு அமர்ந்தார்.

ப்ரீஃப் கேஸில் இருந்து ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்தார். ஒரு கடிதம் எழுதவேண்டும். எல்லாப் பழிகளையும் கடன்களையும் ஏற்றுக் கொள்ளும் கடிதம். அவரிடம் வேலை செய்பவர்களுக்கு, அவர் மனைவிக்கு, மகளுக்கு, நண்பர்களுக்கு இந்த முடிவை விளக்கவேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. முக்கியமாக இது பலவித சட்ட சிக்கல்களிலிருந்து அவர்களைக் காக்கும்.

எழுதும்போதே பலமுறை கண்களைக் கண்ணீர் மறைத்தது. சில சொட்டுகள் கடிதத்தின் மீதும் விழுந்தன. மனைவிக்கும் மகளுக்கும் தனியாக ஒரு கடிதம் எழுத எண்ணியிருந்தார். ஆனால் அதற்கான சக்தி அவரிடம் இல்லை.

பாதிக் கடித்த்தில் கதவு தட்டப்பட்டது. எழுந்து சென்று திறந்தார்.

மருதையன்தான். கையில் ஒரு தட்டோடு நின்றார். வாசனை உயிரைத் துளைத்தது.

“ என்ன இது?”

ஏதும் பதில் சொல்லாமல் தட்டை அவரிடம் தந்துவிட்டுச் சென்றார் மருதையன். அவர் கோபமாக இருக்கிறார் என்று புரிந்தது. அது ஒரு பறவையின் மாமிசம். கோழி இல்லை. இந்த நேரத்தில் எங்கே எப்படிப் பிடித்து வந்து சமைத்தார் என்று கௌதமுக்குத் தெரியவில்லை. ஆனால் சுட்ட கறியின் வாசனையும் காலையிலிருந்து சாப்பிடாத வயிறும் ஏற்கனவே ஒன்றோடொன்று காதல் செய்யத் தொடங்கியிருந்தன. கதவைத் தாளிட்டுவிட்டு வந்து காகிதங்களை எடுத்து வைத்து விட்டு விஸ்கியோடு அமர்ந்தார்.

எப்போது தூங்கினார் என்று நினைவில்லை. எழுந்த போது வெளிச்சம் வந்திருந்தது. டீப்பாயின் மீதிருந்த புட்டியில் கால்பாகம் விஸ்கி மீதம் இருந்தது. தட்டில் பறவையின் எலும்புகள் மட்டும் கிடந்தன. தலையை லேசாக வலித்தது.

ஜன்னல் வழியே பார்த்தார். அடர்ந்த புதர்களும் மரங்களும் தாண்டி எதுவும் தெரியவில்லை. இடைவிடாத பூச்சிகளின் ரீங்காரம். சற்று நேரத்தில் அது பழகிவிட்டது. அவர் இதுவரை கேட்டறியாத பறவைகளின் ஓசை. கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்தார். காலை பத்து மணி.

அறையின் கதவைத் திறந்தார். பங்களா அமைதியாக இருந்தது. பகல் நேரத்தில் அது இன்னும் பழமையாகத் தெரிந்தது. புராதன சுவர் கடிகாரம் ஓடுவதை நிறுத்திப் பல ஆண்டுகளாகியிருக்கும். டைனிங் டேபிள் மீது ஃபளாஸ்க்கும் அதன் அருகே கோப்பைகளும் இருந்தன. ஃப்ளாஸ்க்கைத் தூக்கிப் பார்த்தார். கனமாக இருந்தது. காபி தேவைப்படும் போலிருந்தது. ஊற்றிக் கொண்டு வெளியே வந்தார்.

மருதையன் எங்கே போனாரென்று தெரியவில்லை. பங்களாவை ஒட்டி ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த சிறு குடில் இருந்தது. சட்டையும் லுங்கியும்  வெளியே காய்ந்தது. கதவு பூட்டி இருந்தது. பல நாட்களுக்குப் பிறகு அந்தத் தனிமை கௌதமுக்கு ஒருவித நிம்மதியை அளித்தது.

காபியை உறிஞ்சியபடி சுற்றிலும் பார்த்தார். பங்களாவின் போர்ட்டிகோவிலிருந்து ஓரளவு எஸ்டேட் முழுவதையும் பார்க்க முடியும். அப்படித்தான் அமைத்துக் கட்டியிருந்தார்கள். இந்த எஸ்டேட் பற்றி மொத்தமாக அவர் மறந்து போய் விட்டிருந்தது இப்போதுதான் உறைத்தது. காபிச் செடிகள் எல்லாம் அழிந்து வேறு காட்டு மரங்களும் கொடிகளும் வளர ஆரம்பித்திருந்தன. மனிதனிடம் தற்காலிகமாக இருந்த இடத்தை இயற்கை மீண்டும் திருப்பி எடுத்துக் கொள்ளத் தொடங்கியிருந்தது. ஆனால் பங்களா மட்டும் இன்னும் பராமரிப்பில் இருந்தது. சுத்தமாகவும் பயன்படுத்தும்படியாகவும் இருந்தது. சில பகுதிகளில் விரிசல்கள் விட்டிருந்தன. செடிகள் முளைக்கத் தொடங்கியிருந்தன.

போர்ட்டிகோ அருகே இருந்த ஒரு கொய்யா மரம் அவருக்கு நினைவிருந்தது. வெளியே வந்து பார்த்தார். இப்போதும் அது காய்த்துக் குலுங்கியது. ஒன்றைப் பறித்துக் கடித்தார். அதே ருசி. இன்னொன்று இன்னும் ஒன்று எனப் பறித்துக் கடித்தார். அப்போதுதான் அது பசி என்று புரிந்தது.

அவர் நினைத்தால் இப்போதே கூட டெவில்ஸ் லேப் சென்று குதித்துவிட முடியும். ஆனால் கடிதம் இன்னும் முடியவில்லை.  அது தவிர ஏனோ ஒரு நாளின் இறுதியில் இறந்து போவது அவருக்கு சரியான முடிவாகப்பட்டது. இறுதியாக ஒரு தினத்தை வாழ்ந்து பார்த்துவிடுவோம் என்று நினைத்தபடியே அடுத்த கொய்யாவைக் கடித்தார்.

கீழே இருந்து புதர்களின் வழியாக மருதையன் பங்களாவை நோக்கி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவருடன் ஒரு இளம் பெண். திருத்தமான முகம். சுருள் சுருளான முடியை ஒரு ஜடைக்குள் கட்டுப்படுத்த முயன்று தோற்றிருந்தாள். சுடிதார் அணிந்து அதன் மீது ஒரு முழுக்கை ஸ்வெட்டர் அணிந்திருந்தாள். கௌதமின் முகம் மாறியது. அவர் இங்கிருப்பதை வேறு யாரும் அறிவதை அவர் விரும்பவில்லை. குறைந்தது அன்று இரவு வரையிலாவது.

மருதையன் ஒரு மூட்டையை சுமந்தபடி வந்தார். அந்தப் பெண்ணின் கையில் ஒரு ஒயர் கூடை. அதில் காய்கறிகள், கீரைக்கட்டு என்று நிரம்பியிருந்தது.

மருதையன் அவர் எதிரே வந்து நின்றார். அந்தப் பெண்ணும் வந்து நின்றாள்.

“என்ன மருதையன்.. உங்களுக்கு சொன்னா புரியாதா? நான் வந்திருக்கறதை இப்போ ஊர் முழுக்க டமாரம் அடிச்சாச்சா?”

அவர் குரலில் கோபம். மருதையன் அவரிடம் எதுவும் பேசாமல் அவளைப் பார்த்தார். அந்தப் பெண்தான் பேசினாள்.

“நான் செல்வி.. அவரோட பேத்தி… என்னைத் தவிர தாத்தா யாருக்கும்  எதுவும் சொல்லல சார்”

மருதையன் மூட்டையைத் தூக்கிக் கொண்டு அவரைக் கடந்து போனார்.

“அவருக்குக் கண்ணு கொஞ்சம் மந்தமாயிடுச்சு. உங்களுக்குச் சமைச்சுப் போட முடியாது. அதான் ஊருக்கு வந்து என்னைக் கூப்பிட்டுச்சு. நான் ஒரு மருந்துக்கடைல வேல பாக்கறேன். கொஞ்சம் நல்லா சமைப்பேன். நீங்க எத்தனை நாள் இருப்பீங்கன்னு சொன்னீங்கன்னா அது வரைக்கும் லீவு சொல்லிடுவேன்..”

அந்தக் கேள்வி பகீரென்று இருந்தது அவருக்கு.

“நான் இன்னைக்கு ஒரு நாள்தான் இருப்பேன்” என்றார் கௌதம் இறுக்கமாக.

“இப்ப சாப்பிட ஏதாவது வேணுமா சார்?”

அவருக்கு இது எதுவும் பிடிக்கவில்லை. அவரைத் தனியாக விட்டால் போதும்.

“எதுவும் வேணாம்”

அவள் வற்புறுத்தவில்லை.

“அப்ப நான் நேரா லஞ்சுக்கே ரெடி பண்ணிடறேன். ராத்திரிக்கு தாத்தா முயல் அடிச்சுட்டு வரேன்னு சொல்லியிருக்கு. உங்களுக்குப் பிடிக்குமாமே?”

அவருக்கு நினைவில்லை. அவர் சொல்வதை யாரும் கேட்பதாகவும் இல்லை. கௌதம் மீண்டும் அறைக்குள் சென்று சாத்திக் கொண்டார். பல அடித்தல் திருத்தல் கிழித்தல்களுக்குப் பிறகு தன் இறுதிக் கடிதத்தை எழுதி முடித்தார். மறக்காமல் புனீத் மிஸ்ராவையும் அதில் குறிப்பிட்டார். கடிதத்தை எங்கே வைத்தால் எளிதில் கண்ணில் படுமென்று அறையைச் சுற்றி வந்து யோசித்தார். இறுதியில் ப்ரீஃப் கேஸில் வைத்து அதைப் படுக்கை மீது வைத்து விடுவதென்று முடிவு செய்தார்.

செல்வியின் சமையல் மிகவும் சுவையாக இருந்தது. கடைசியாக அவருக்கு உணவளித்த அன்னபூரணி அவள். சொல்லிப் பாராட்டினார்.

“தாத்தா இதைவிட அருமையா செய்யும் சார். நிறைய சமைக்க சொல்லிக் கொடுத்துச்சு சார். நான் இப்போ பாதி மறந்துட்டேன்.” செல்வி வெட்கப்பட்டாள்.

“மருதையன் எங்கே?”

“வேட்டைக்குப் போயிருக்கு”

“எஸ்டேட்டை இப்ப அவர்தான் பாத்துக்கறாரா?”

“ஆமா சார். அது  மட்டும்தான் இங்கே கெடக்குது”

“ஏன் வேற யாரும் இங்கே ஸ்டாஃப் இல்லையா?”

செல்வி ஏதோ சொல்ல முயன்று சற்றுத் தயங்கித் தயங்கி கால் மாற்றி நின்றாள்.  கௌதம் சாப்பிடுவதை நிறுத்தி அவளை நிமிர்ந்து பார்த்தார். அவள் தன்னோடு போராடிக் கொண்டிருந்தாள். பிறகு ஏதோ முடிவுக்கு வந்தவளாக சொன்னாள்.

“கம்பெனில இருந்து எஸ்டேட்டுக்கு பணம் எதுவும் வரதே இல்லை சார்”

கௌதம் முகத்தில் அதிர்ச்சி.

“வாட்?”

“ஆமா சார்.. கடைசியா பணம் வந்து இருவது வருசம் இருக்கும்.”

“மருதையன் எப்படி சமாளிக்கறார்?” இதைக் கேட்கவே அவருக்கு வெட்கமாக இருந்தது.

“தெம்பா இருந்த வரைக்கும் வெளி எஸ்டேட்டுக்கு கூலி வேலைக்குப் போவார். இப்ப அதுவும் முடியறதில்லை. இப்ப கூட என் அம்மாகிட்ட கடன் வாங்கித்தான் மளிகை சாமான் வாங்கிட்டு வந்துச்சு”

கௌதமுக்கு சாப்பாடு அப்படியே தொண்டையில் நின்றுவிட்டது. செல்விக்கு அவர் சங்கடம் புரிந்தது. ஆனால் இதை இன்று சொல்லியாக வேண்டும் என்று அவள் முடிவு செய்துவிட்டிருந்தாள்.

“தாத்தாவுக்கு இது கோவில் மாதிரி சார். சம்பளம் எல்லாம் அவருக்கு தூசு. நீங்க என்னிக்காவது ஒரு நாள் வருவீங்கன்னு சொல்லிட்டே ஒவ்வொரு நாளும் இதையெல்லாம் சுத்தமா துடைச்சு வெச்சிருக்கார். நீங்க வர இருவது வருசமாயிருச்சு. ஆனா பூரிச்சுப் போயிட்டார். இத்தன சந்தோசமா அவரைப் பாத்ததே இல்லை நான்.”

“எனக்கு யாருமே சொல்லலை. மருதையன் எனக்கு போன் பண்ணியிருக்கலாம்” அவருக்கு நிஜமாகவே வருத்தமாக இருந்தது.

“நானே பல தடவை பண்ணித் தரேன்னு சொன்னேன் சார். எனக்கு ஒரு வேலை, அவருக்கு ஆயிரம் வேலை இருக்கும், ஒரு நாளு எஞ்சாமி வரும். அப்ப பேசிக்கலாம். அது வரைக்கும் எனக்குக் குடுத்த வேலைய நாம் பாக்கறேன்னு சொல்லிடுச்சு. இப்ப கூட நானாத்தான் பணத்தைப் பத்தியெல்லாம் உங்ககிட்டே பேசறேன். தாத்தாகிட்டே சொல்லிடாதீங்க. கெட்ட வார்த்தைல திட்டும்”

என்ன மாதிரியான பிறவி இவர். இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? கௌதமுக்குக் கோபம் வந்தது. தன் மீதா அவர் மீதா என்று புரியவில்லை. ஆனால் இப்போது அவரால் எதுவும் செய்ய முடியாது. அவருக்கும் மருதையனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் மருதையனுக்குப் பணமில்லாமல் வாழும் கலை தெரிந்திருந்தது. இப்போது அவர்தான் செல்வந்தர்.

எழுந்து எஸ்டேட் உள்ளே நடக்கத் தொடங்கிவிட்டார். நேற்றுப் பெய்த மழையில் தரை சேறும் சகதியுமாக இருந்தது. ஆனால் நனைந்த மரங்கள் ஒருவிதத் துள்ளலுடன் இருந்தன. பாதைகள் அனைத்தும் பராமரிப்பில்லாமல் புதர் மண்டியிருந்தன.  கையால் விலக்கிக் கொண்டு நடக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு அடியாக அவர் கால்கள் அவரை சாத்தானின் மடியை நோக்கி இழுத்துப் போயின. வழியை கவனமாகப் பார்த்துக் கொண்டார். இரவு மறுபடி வரவேண்டுமல்லவா?

அந்த இடம் கொஞ்சமும் மாறாமல் அப்படியே இருந்தது. புதர்கள் மட்டும் கூடுதலாக மண்டியிருந்தன. அவர் தாத்தா கட்டி வைத்திருந்த பெஞ்ச் எந்த சேதமும் இல்லாமல் இருந்தது. அதனடியில் ஈரமான நத்தைகள் ஊறிக் கொண்டிருந்தன. மெல்ல அதில் அமர்ந்து எதிரே தெரிந்த சமவெளியையும் மலைகளையும் பார்த்தார். ஆனால் சிறுவயதில் ஏற்பட்ட அதே அச்சம் அந்த இடத்தைப் பார்க்கும்போது இப்போதும் எழுந்தது. மிகுந்த யோசனைக்குப் பின் விளிம்பில் சென்று எட்டிப் பார்த்தார். வயிற்றுக்குள் குய்யென்று ஏதோ சுருண்டது. அவசரமாகப் பின்வாங்கினார். ஆனால் இரவில் எதுவும் தெரியாது. கண்ணை மூடிக் கொண்டு குதிக்க வேண்டியதுதான் என்று சமாதானப்படுத்திக் கொண்டார்.

வந்ததி விட வேகமாகத் திரும்பி வந்து தனது அறைக்குச் சென்றார். தாத்தாவின் ஈசி சேரில் அமர்ந்தவர் அப்படியே உறங்கிப் போனார். திடீரென்று விழித்தபோது மாலை நேரம் ஆகியிருந்தது. ஒளி மங்கி மீண்டும் குளிர் அடிக்கத் தொடங்கியிருந்தது.

மீதமிருந்த விஸ்கியைக் குடித்து முடித்தார். செல்வி சமைத்திருந்த முயல் கறி அத்தனை சுவையாக இருந்தது. அரிசி அவர் வழக்கமாகச் சாப்பிடுவது போல் இல்லை. ஆனால் செல்வியுடன் நடந்த உரையாடலுக்குப் பின் அந்த உணவே தனக்கு அளிக்கப்பட்ட பிச்சை என்பதை அவர் புரிந்துகொண்டார். குற்ற உணர்வு தாளாமல் மருதையனிடம் பேச்சுக் கொடுக்க முயன்றார். ஆனால் அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றார். கிழவர் ஏனோ இப்போது இன்னும் கோபமாக இருந்தார்.

அதற்குள் இரவு வந்துவிட்டது. ஒரு வகையில் அந்த நாள் அத்தனை வேகமாக ஓடிப் போனது அவருக்கு சற்று ஏமாற்றமாகக் கூட இருந்தது. ஆனால் அவர் முடிவில் மாற்றமில்லை. மருதையனும் செல்வியும் உறங்கட்டுமென்று காத்திருந்தார். போனை ஆன் செய்து சரிகாவை அழைக்கலாமா என்று தோன்றியது. இறுதியாக சாருவுடன் பேசவேண்டுமென்று மனது அடித்துக் கொண்டது. ஆனால் அவர்களின் குரலைக் கேட்க அவருக்குத் துணிவில்லை.

அரவங்கள் அடங்கிய பிறகு மெல்ல எழுந்தார். கார் சாவி, மொபைல் போன், பர்ஸ் என்று பாக்கெட்டில் இருந்த அனைத்தையும் எடுத்துக் கட்டில் மீது வைத்தார். ப்ரீஃப் கேசை எடுத்து அவற்றின் அருகில் வைத்தார். முட்டிக் கொண்டு அழுகை வந்தது. சில நிமிடங்கள் வாய்விட்டு அழுதார்.

வெளியே பார்த்தார் கும்மிருட்டாக இருந்தது. திரும்பவும் அறைக்கு வந்து செல்போனை எடுத்துக் கொண்டார். அதை ஆன் செய்து சிம் கார்டை செயல்படாமல் அணைத்து வைத்தார். பிறகு சத்தமில்லாமல் படுக்கையறைக் கதவைப் பூட்டிவிட்டு வந்தார். வெளிக்கதவைத் திறந்து வெளியேறி ஓசையில்லாமல் சாத்தினார்.

செருப்பைத் தேடி அணிந்து கொண்டு செல்போன் வெளிச்சத்தில் நடக்கத் தொடங்கினார். ஏற்கனவே பகலில் வந்த பாதைதான் என்றாலும் இப்போது முற்றிலும் வேறாக இருந்தது.

சாத்தானின் மடி தெரிந்தது. மரங்களுக்கிடையே இருந்து வெளியே வந்து அதன் பாறையில் ஏறினார். செல்போன் வெளிச்சத்தைப் பார்த்தபடியே நடந்து வந்தவர் நிமிர்ந்து பார்த்தார்.

ஒரு வினாடி அவர் இதயம் வாய்க்கு வந்துவிட்டது.

அந்த பெஞ்சில் சமவெளியைப் பார்த்தபடி ஏற்கனவே யாரோ அசைவின்றி அமர்ந்திருந்தார்கள். அது அவர் தாத்தாவைப் போலிருந்தது. மரண பயத்தால் தனக்கு சித்தம் கலங்கிவிட்டதோ என்று கௌதம் சந்தேகப்பட்டார். ஆனால் அங்கே ஒரு உருவம் அமர்ந்திருப்பது உண்மை. இரண்டடி அருகே சென்றார். இப்போது அதன் கையிலிருந்த குச்சி தென்பட்டது. இன்னும் நெருங்கினார். அது மருதையன்.

“இங்க வந்து உக்காரு சாமி”  என்றார். அது நேற்றுப் பார்த்த ஒரு ஊழியனின் குரல் இல்லை. அது ஒரு கட்டளை. கௌதம் எதுவும் பேசாமல் கீழ்ப்படிந்தார்.

மெல்ல அவர் அருகே அமர்ந்தார் கௌதம்.

“நீ எதுக்காக இந்த நேரத்துல இங்கே வந்திருக்கேன்னு எனக்குத் தெரியும் சாமி”

சில்லென்று ஒரு அலை போல் குளிர்ந்த காற்று வந்து மோதியது. கௌதம் தனது இதயத் துடிப்பு அதிகரிப்பதை உணர்ந்தார்.

“எம்பேத்திகிட்ட நீ வந்திருக்கறதா சொன்னப்பவே அவ பேப்பர்ல படிச்சது டிவில பாத்ததெல்லாம் சொன்னா. நீயும் மாத்துத் துணி கூட எடுத்துக்காம வந்துருக்கே. கூட்டிக் கழிச்சுப் பாத்தேன். நீ மத்தியானம் இங்கே வந்திருந்தப்போ செல்வி உன் லெட்டரப் படிச்சுட்டு நீ என்ன செய்யறதுக்கு இங்க வந்திருக்கேன்னு சொன்னா. எனக்கு உசுரே நடுங்கிப் போச்சு. அதுல இருந்து உன்ன நான் என் கண் பார்வைய விட்டு அக்கட்ட இக்கட்ட உடாம பாத்துக்கிட்டுதான் இருக்கேன்”

கௌதம் கண்களில் கண்ணீர் கட்டுப்பாடில்லாமல் வழிந்தது. வெடித்துப் பேசினார். 

“இனி எனக்கு எல்லாமே முடிஞ்சு போச்சு மருதையன்.. எம் பொண்ணு கூட என்னை வெறுக்கறா.. என்னை நம்பி என் கைல குடுத்த கம்பெனிய சரியா நடத்த முடியலை. பல பேர் குடும்பம் நடுத் தெருவுல நிக்குது. இனி நான் யாருக்காக இருக்கணும்?”

“யாரும் யாரையும் எதுக்காகவும் வாழவும் சொல்றதில்லை, சாகவும் சொல்றதில்லை. அது அவனவன் முடிவுதான்”

குச்சியை அருகில் சாய்த்து வைத்துவிட்டு மடியில் கை வைத்து அமர்ந்து கொண்டார் மருதையன்.

“நான் இந்த மலைலதான் பொறந்தேன், வளந்தேன். இங்கயேதான் சாவேன். தொண்ணூத்து அஞ்சு வயசுக்கு மேல ஆவுது. கணக்கு வெச்சுக்கலை. என்னால யாருக்கும் ஒரு பிரயோசனமும் இல்லை. மூணு புள்ளைங்க. அதுல ரெண்டு உசுரோட இல்லை. நான் செத்துக் கெடந்தாக் கூட யாருக்கும் தெரியாது. நானா நாறிப் போனா எம் பேத்தி வந்து எடுத்துப் போடுவா. நான் யாருக்காக இருக்கணும் சாமி? எட்டிக் குதிக்க எனக்கு எத்தனை நேரமாவும்?”

கௌதம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்.

“ஒரு கொல கேசுல ஆறு வருசம் ஜெயில்ல இருந்தேன். அதுக்கப்புறம் உள்ளூர் ஆளுங்க யாரும் வேலை குடுக்கலை. சோத்துக்கு வழியில்லாம அல்லாடிக்கிட்டு இருந்தேன். உன் தாத்தா அசலூர்க்காரர். இங்க மேனேஜரா இருந்தப்போ என்னை வேலைக்கு எடுத்துக்கிட்டாரு. பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வெச்சாரு. அதுல இருந்து எனக்கு எல்லாமே அவர்தான். திடீர்னு ஒரு நாள் தொரை வேற யாருக்கோ எஸ்டேட்ட வெல பேசிட்டாரு. எங்க எல்லோருக்கும் வேலை போயிருச்சு. தொர கூப்பிட்டு சொல்லிட்டாரு. அவர் நல்லவருதான். ஆனா மொத்தமா இங்கிலாந்துக்கே போக முடிவு பண்ணிட்டாரு. பேய் எஸ்டேட்டுக்கு வெல வரதே அதிசயம். வாங்கப் போறவன் எங்களை வேணாம்னு சொல்லிட்டான். கொஞ்சம் எல்லாருக்கும் பணம் தரேன். நீங்க எல்லாம் வேற வேலை பாத்துக்கங்கன்னு சொல்லிட்டாரு. அந்த ராத்திரி உன் தாத்தாவும் வேலை போன எஸ்டேட் ஆளுங்களும் இதே மாதிரிதான் இங்க வந்து பாறைல உக்காந்திருந்தோம். அப்ப இந்த பெஞ்சு இல்லை. அவர் கையில பத்து காசு இல்லை. நீ இப்ப இருக்கியே அதே நெலமதான் அவருக்கும் எங்க எல்லாருக்கும்”

அடுத்த அலையாக அடித்த குளிர் காற்றில் மீண்டும் உடல் சிலிர்த்தது கௌதமுக்கு. கண்களில் இன்னும் நீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.

“ஆனா உன்கிட்டே இல்லாத ஒண்ணு உன் தாத்தாகிட்ட இருந்துச்சு. நெஞ்சு நெறய நம்பிக்கை. வாங்கடா பாத்துக்கலாம்னு போனார். நேரா எஸ்டேட்ல வேலை செய்யற எல்லாத்தையும் கூட்டிக்கிட்டு அந்த தொரகிட்டப் போயி நானே இந்த எஸ்டேட்ட வாங்கிக்கறேன்னு சொல்லிட்டாரு. வாங்கப் போறவரை விட ரெண்டு மடங்கு வெல தரதா சொன்னாரு. நாங்க ஆடிப்போயிட்டோம். அந்த தொரையும்தான். எனக்குத் திறமை இருக்கு. எங்கூட உழைக்க இவங்க இருக்காங்க. அஞ்சு வருசம் இந்த எஸ்டேட்டைக் குடுங்க. அஞ்சு வருசத்துல கொஞ்சம் கொஞ்சமா சம்பாரிச்சு கெரயத் தொகைய கட்டிடறேன்னு சொன்னார். அந்த தொரை பெருசா சிரிச்சார். என்ன நெனைச்சாரோ ஒத்துக்கிட்டார். ஊருக்குப் போயி இருந்த நிலம் நீச்செல்லம் வித்துட்டு மொத தவணையக் குடுத்தார் உங்க தாத்தா. நாங்க எல்லாம் உசுரக் குடுத்து உழைச்சோம். நாலே வருசத்துல உங்க தாத்தா மொதப் பணத்தையும் கட்டினார். இந்த மலையே அசந்து போச்சு. இந்த மலையில மொத மொதலா  தொழிலாளியா இருந்து மொதலாளியா ஆனது உங்க அப்பாருதான். அவரைக் கேட்டா லாராதான் காரணம்னு சொல்லுவாரு”

“லாராவா?”

“இங்க இருந்து குதிச்சு செத்துப் போனவ… மத்தவங்களுக்கு அவ பேய். அவருக்கு அவ சாமின்னு சொல்லுவாரு.”

“பேய் எப்படி சாமியாக முடியும்? அதுவும் வெள்ளைக்காரி”

“அகாலமா செத்துப் போன பத்தினிகளை சாமியாக் கும்புடுறதுதான் இந்த மண்ணுல காலங்காலமா வழக்கம். அவ வெள்ளைக்காரின்னா சாமியா இல்லாம போயிடுவாளா. மனசு சங்கடமா இருந்தா உன் தாத்தா இங்க வந்து உக்காருவார். பொறுத்துக்கோ காலம் எல்லாத்தையும் மாத்தும்னு லாரா காதுல சொல்றதா சொல்லுவார். நீயே பாரேன். உன்னையும் ஏதோ ஒரு சக்தி ஒரு இக்கட்டுல இங்கதான் கொண்டு வந்து நிறுத்தியிருக்கு”

கௌதம் சலித்துக் கொண்டார்.

“மருதையா… நீங்க வேற ஒரு காலம். வேற மனுஷங்க. உங்களுக்கு நான் இருக்கற கார்ப்பரேட் உலகத்தைப் பத்தி தெரியாது. நாங்க எல்லாம் குதிரைங்க. ஜெயிச்சுக்கிட்டே இருக்கணும். ஒரு தடவை விழுந்து கால் உடைஞ்சா சுட்டுத் தள்ளிட்டு அடுத்த குதிரை மேல பணத்தைக் கட்டிட்டுப் போயிட்டே இருப்பாங்க. உங்களை மாதிரி சம்பளம் இல்லாமல் இருபது வருசமெல்லாம் வேலை பாக்கறவங்க எங்கிட்ட இல்லை. ஒரு மாசம் சம்பளம் வரலைன்னு என்னோட ப்ரஸ் மீட்ல செருப்ப வீசி எறிஞ்சுட்டாங்க. நான் போறதுன்னு முடிவு பண்ணிட்டுதான் வீட்டை விட்டு வந்திருக்கேன். இங்கே முடியலைன்னா இன்னொரு இடத்துல”

“போ சாமி..  நீ தாராளமாப் போ. உன் தாத்தாவும் அப்பாவும், ஏன் அந்த லாராவும் கூடத்தான் போயிட்டாங்க. சீக்கிரமே நானும் போயிருவேன். ஆனா போனதுக்கப்புறம் வாழறவங்களுக்கு என்ன உட்டுட்டுப் போகப் போறோம்?”

“எனக்குதான் இருந்ததெல்லாம் போயிருச்சே? விட்டுட்டுப் போக என்ன இருக்கு?”

“இப்பவும் நீ பணத்தைத்தான் புடிச்சுத் தொங்கற பாத்தியா… அதான்.. பணம் பறி போனதும் புத்தி பாதாளத்தைத் தேடுது”

ஏதோ ஒரு பறவை தலைக்கு மேல் பெருந்த ஓசையுடன் பறந்து போனது. மங்கிய நிலவொளியில் அந்த இடம் இன்னும் அமானுஷ்யமாகத் தெரிந்தது.

“இங்க செத்துப் போனாளே லாரா. அவ ஒரு கதைய உட்டுட்டுப் போயிருக்கா. இன்னும் நூறு வருசமானாலும் சொல்லி சொல்லி மாளாத காதல் கதை. அதுதான் அவளை உன் தாத்தாவுக்கு சாமியாக்குச்சு. உன் தாத்தா தனக்குன்னு ஒரு கதைய உட்டுட்டுப் போயிருக்காரு. அந்தக் கதைதான் என்னையும் மத்த வேலையாளுங்களையும் சாகற வரைக்கும் அவருக்கு விசுவாசமா இருக்கச் சொல்லுது. நீ சம்பளம் குடுத்தாலும் குடுக்காட்டியும் என்னை இந்த பங்களாவைத் தொடச்சுத் தொடச்சு வெக்கச் சொல்லுது. என் உசுரு போற வரைக்கும் நான் அந்த வேலையச் செய்வேன். ஏன்னா…  அதுதான் நான் உட்டுட்டுப் போற கதை.”

அவருக்கு மூச்சிறைத்தது. சில நொடிகளுக்குப் பிறகு கேட்டார்.

“இப்ப சொல்லு சாமி.. நீ என்ன கதைய உட்டுட்டுப் போவப் போறே? உம்மவ இருக்காளே… அவ உன்னப் பத்தி என்ன கதைய அவளோட புள்ளகிட்ட சொல்லுவா?”

இந்தக் கேள்வியோடு மருதையன் எழுந்து கொண்டார். இப்போது இன்னும் உயரமாகத் தெரிந்தார்.

பூச்சிகளின் இடைவிடாத ரீங்காரம் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. மருதையன் எதுவும் பேசாமல் சமவெளியைப் பார்த்தபடி நின்றார். ஏதோ ஒரு நகரத்தின் விளக்குகள் வைரங்களை இறைத்தது போல் கிடந்தன.

“நேரமாச்சு நான் தூங்கப் போறேன் சாமி.. நீ குதிக்கறதா இருந்தா அதா அந்த ஊரு மினுக்கிட்டுத் தெரியுதுல்ல, அந்தப் பக்கமாக் குதி. இந்தப் பக்கமெல்லாம் குதிச்சா நெறய மரம் நீட்டிட்டு இருக்குது. அரை உசுரா மாட்டிக்கிட்டுத் தொங்காதே”

மருதையன் குச்சியை எடுத்துக் கொண்டு நடந்து போனார். அந்தக் குச்சியை அவர் ஊன்றி நடக்கவில்லை. ஒரு துணையாகக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்று புரிந்தது. கௌதம் அவர் மரங்களுக்குள் மறைவதையே பார்த்தபடி அசையாமல் அமர்ந்திருந்தார். எவ்வளவு நேரம் ஆனதென்று தெரியவில்லை. குளிர்ந்த காற்று முன்பு போல் அறையாமல் இப்போது மென்மையாக வீசியது.

பிறகு ஒரு பெருமூச்சை வெளியிட்டபடி தன்னுடைய மொபைலை எடுத்தார். சிம்கார்டை ஆன் செய்தார். உள்ளே நுழைந்தார். நூற்றுக் கணக்கில் மிஸ்டு கால்கள். சரிகாவிடமிருந்தும் சாருவிடமிருந்தும் குரல் பதிவுகள் வந்திருந்தன.

“டாடி.. ப்ளீஸ் டாடி… கால் அஸ் பேக். இனிமேல் நான் உங்களோட கோபிச்சுக்கவே மாட்டேன். காட் ப்ராமிஸ். பயமா இருக்கு டாடி.. ப்ளீஸ்” சாருவின் அழுகைக் குரலைக் கேட்டதும் அடக்க மாட்டாமல் கண்ணீர் வந்தது அவருக்கு. அடுத்த நொடியே போன் அடித்தது. அது சரிகா. உடனே எடுத்தார்.

“ஹலோ..” அவள் குரலில் நடுக்கம்.

“சரிகா.. டியர்.. நான்தான்” மறுமுனையில் அப்படி ஒரு அழுகை. அவளை அழ விட்டார்.

“ஹேய்.. டோண்ட் வொர்ரி.. நான் ஏற்காட்டுல தாத்தாவோட பழைய எஸ்டேட்ல இருக்கேன். கொஞ்சம் நிம்மதி வேணும்னு வந்தேன். தொல்லை தாங்காம போனை ஆஃப் பண்ணி இருந்தேன். உன்கிட்டே சொல்லாததுக்கு சாரி… பைத்தியம்.. நான் திரும்பி வரேன்.. சீக்கிரமே.. சாருகிட்டே கொடு”

பிறகு சிறிது நேரம் சாருவிடம் பேசிவிட்டு குருவில்லாவை அழைத்தார். அவர் கூச்சலிட்டார்.

“தேங்க் காட்.. யூ இடியட்.. ப்ளடி கேவ் மீ எ ஹார்ட் அட்டாக்”

அவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

“காலையில் நம்ம லாயரைக் கூட்டிட்டு ஏற்காட்டுல பார்க்கர் எஸ்டேட் வந்துடுங்க. அப்பீல் பத்தி பேசலாம். அதோட இந்த எஸ்டேட்டை ஒரு புது ஓனருக்கு மாத்தணும். அதுக்கும் பேப்பர்ஸ் ரெடி பன்ணிட்டு வரச் சொல்லுங்க. இன்னும் கொஞ்ச நாள் நான் இங்கே இருந்துதான் வேலை செய்யப் போறேன். ஹெட் ஆஃபீஸ் அட்ரஸை உடனே இங்கே மாத்திடுங்க. நான் காலைல விவரமாப் பேசறேன்”

கௌதம் போனை வைத்தார். அதற்குள் சாருவிடமிருந்து “லவ் யூ டாடி” என்ற செய்தி வந்திருந்தது.

நிலவொளி பல மடங்கு அதிகரித்திருந்தது. சாத்தானின் மடி இப்போது அவருக்கு அச்சமூட்டுவதாக இல்லை.

                                                            ******

ஷான்– வெட்டாட்டம், பொன்னி நாவலாசிரியர், கவிஞர், திரைக்கதை எழுத்தாளர். சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

சோழன் வாலறிவன் கவிதைகள்

0

1) கஞ்சி உப்பு பாதாம் ஏகபோக போதை

*

நான்
கொஞ்சம் தவறில் இருக்கும்போது
கஞ்சிக்கு உப்பு இருப்பதில்லை
கொஞ்சம் சரியில் இருக்கும்போது
உப்புக்கு கஞ்சி இருப்பதில்லை
முழு உண்மைக்கான பம்மாத்திலிருக்கும்போது
பாயாசத்திற்கு பாதாம் இருப்பதில்லை
என்
கொஞ்சம் சரிக்கு
எல்லாவற்றின் மீதும் ஏக்கம்
கொஞ்சம் தவறுக்கு
எல்லாவற்றின் மீதும் பேராசை
முழு உண்மைக்கு
ஏக போகத்தின் அகோரப் பசி
முழுதான பொய்யிற்கோ
பிழைப்பை ஆட்டி ஆட்டி
போட்டுடைக்கும் டாஸ்மாக் போதை

*** 

2) டாலரின் சாணக்கியம்

*

என் பேச்சில் நானில்லை
என் எழுத்தில் நானில்லை
என் செயலில் நானில்லை
என் பசியில் நானில்லை
என் காதலில் நானில்லை
என் காமத்தில் நானில்லை
என் முலையின் பால் பாலாயில்லை
சந்தையின் நானில்
நானிருக்க விருப்பமில்லை
நானின் விருப்பத்திற்கு
சந்தை விடுவதாயில்லை
நானில்லாத நானில்
நிரப்புகின்ற நானும்
நிரம்புகின்ற நானும்
என்னுடைய நானும்
தனி
தனி
தனி
ஒவ்வொரு தனியும்
ஒவ்வொரு தனிச்சந்தை
கூடுகையே டாலருக்குக் கேடு
யார் நானையும் யார் நானும்
என் நானை நானேயும்
அறியாமல் இருப்பதே
டாலருக்குச் சந்தை

***

3) ஒரு கொலையின் கதை

*

உழைப்பாலான எங்களுக்கு
கூழாங்கல் வாழ்வு
இருப்பின் சங்கடநிலை இல்லை
எதற்குமே மதிப்பில்லாத போது
எல்லாமே சரிதானே
என்றாள் தோழி
விதியின் போக்கை எதிர்க்கும் கணமும்
மதியின் போக்கில் மிதக்கும் கணமும்
ஒன்றேதான் என்றன
காலையில் முன்னே செல்லும் நிழலும்
மாலையில் பின்தொடரும் நிழலும்
படுக்கைக்கு இடையில் நட்சத்திரம் முளைத்தது
பூ மலர்வது போல அதற்க்கு பல் முளைத்தது
பூசனம் படிந்த கனவுகள் இல்லை
புழுவைத்த நம்பிக்கைகள் இல்லை
புளித்த துக்கங்களும் இல்லை
புனிதப் பெருமிதங்களும் இல்லை
விருப்பம் போல உழைப்பில் ஒளிர்ந்தோம்
சின்னஞ்சிறு துயரங்களின் கர்ப்ப இருளில்
கண்ணாமூச்சி ஆடினோம்
கால ஓட்டத்தில் சிறு வெடிப்பு
நூற்றி இருபது நாட்களாக
சந்தையில்லை உழைப்பில்லை உணவில்லை
அன்றைய உழைப்பை விற்று
அன்றைய உயிர் வளர்த்தவர்களுக்கு
பிழைக்க வழியில்லை
வேறு கதியும் திக்கும் தெரியவில்லை
யாருக்கும் யாருமே இல்லாத
சந்தைக் கூட்டத்தின் ஓலத்தில்
யார் யாரை நோவது யாரையெல்லாம் கொல்வது
நிதானத்து நின்று நியாயம் கேட்டால்
பட்டப்பகலில் கைது செய்கிறார்கள்
நடு வீதியில் நிற்க வைத்து படம் பிடிக்கிறார்கள்
தாயுக்கு முன் மகளையும்
தந்தைக்கு முன் மகனையும்
உயிரில் தீ மூட்டி  மூட்டி காய்கிறார்கள்
தினமும் சந்தையில் விற்க
ஒன்றுமில்லாதவர்கள்  சாகட்டுமென்கிற
டாலரின் தனிப்பெருங் கருணைக்கு வணங்கி
சேலையின் ஒரு முனையில் தந்தை
சேலையின் மறு முனையில் தாய்
சேலையின் நடுச்சுருக்கில் பால்பற்கள் மலர்ந்த
குட்டி நட்சத்திரம்.

சோழன் வாலறிவன்

(கூத்துப்பட்டறைக் கலைஞரான இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். “நடிப்பு இதழின் ஆசிரியர்”. நடிப்பு பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார்)

T.கண்ணன் கவிதைகள்

0

பறந்து  சென்ற  பறவைகள்  இன்னும்  திரும்பவில்லை
காத்திருந்தது  கனவு
புரண்டு  புரண்டு  படுத்தது  விழிப்பு
விடியக்  காத்திருந்தது  இருள்
கனவு  மூடக்  காத்திருந்தது  விடியல்
இருள்  அந்தியின்  தத்தளிப்பு
நரை  வானத்தில்  உற்சாகமாய்
சிலம்பிக்  கொண்டிருந்தன
பறவைகள்

***

ஓடாத  கைக்கடியாரத்தை
அறிந்தே  பரிசாய்  அளித்து  விட்டுச்  சென்றான்
நண்பன்  சாயல்  கொண்ட  நண்பன்
வெகு  காலத்திற்கு  பிறகு
அது  துடிக்கத்  தொடங்கியது
அந்த  நண்பன்  இறந்து  விட்டதாய்
நான்  அனுமானித்துக்  கொண்டேன்
ஆம் …
அவன்  இறந்துதான்  விட்டான்

***

தென்னங்கீற்றீல்  ஆடிக்  கொண்டிருந்தது  கிளி
அவன்  மனம்  கொண்ட  வில்லால்
அதனைக்  அடித்துக்  கொண்டிருந்தான்
தப்பிப்  பறக்கவில்லை
அதே  இடத்தில்  அமர்ந்து  கொண்டிருந்தது  கிளி
அம்புகள்தான்  விலகி  விலகிச் சென்று  கொண்டிருந்தன

***

அப்பா  கிணற்றில்  தண்ணீர்
இரைத்துக்  கொண்டிருந்தார்
தேங்காய்  துருவிக்  கொண்டிருந்தது  ஒரு குழந்தை
வாசலை  பெருக்கிக்  கொண்டிருந்தது  இன்னொன்று
விளக்கை  தேய்த்துக்  கொண்டிருந்தாள்  அக்கா
அவரைக்காய்  ஆய்ந்து  கொண்டிருந்தது  கடைக்குட்டி
அவர்கள்  அம்மாவிற்கு
இன்று   சுபம்

***

T.கண்ணன், பிரம்மாக்ஷஸ் சிற்றிதழை நடத்தியவர். ஸ்ரீரங்கத்தில் வசித்துவருகிறார். “என் நினைவிற்கும் உன் மறதிக்கும்” கவிதைத் தொகுப்பு 2019ல் வெளியானது, “கல்வெட்டுச் சோழன்” எனும் இவரது சிறுகதைத் தொகுப்பும் அண்மையில் மறுபதிப்பு கண்டது