Home Blog Page 67

வேதநாயக் கவிதைகள்

0

1) கவிழ்தும்பை (வெண்ணிற உள்ளொடுங்கலில் கரும்புள்ளிகள்)

‘தாமோதரம் மங்களம்’
‘சர்வம் ஜனார்த்தனம்’
‘பூரண ஜகந்நாதம்’
‘சிவாய நம!’
‘ஸதாஸிவ குடும்பின்யை நம!’
‘ப்ரத்யட்க்ஷ தேவீ!’
‘ஸகலாதிஷ்டான ரூபாயை நம!’
‘சத்யரூபாயை நம!’
‘ஹே அம்பிகே!’
‘ஹே மகாமாயே’
‘சங்கர காமதே’

வேண்டலொலிகளுக்கான
நாமகரணக் கூப்பாடுகள்
செவிகட்கு எட்டாவிடினும்..

அவ்வாறே மீண்டும் எழுப்புக..!
/ஸ்மைலிகள்/

முன்மதிய பார்வைக்கு
பொட்டொன்று எரிவதாய்
வடகிழக்கு மூலையில்
நக்ஷத்திரமொன்று
சுடராகி பின் அணைதலில்
கலிக்கமிட்ட* விழிகளுக்கும்
பங்குண்டு

என்னாலல்லாது எனக்காக கொல்லப்பட்ட
மானின் தசை புசிக்கும் மிருகமவன் என்பதனால்
மரணமெனும் கங்கினை
மொய்க்கும் ஈ
இறகு தீய்ந்த பின்
அந்திமத்தை இணைவுச்சரமாய்
பிணைத்துக்கொள்ளலாம் என்கையில்
அதற்கு முன்பே..
கடபூதம்** நிற்கும்
வரைகோட்டின் மீது கால்பரப்பி
அதி அட்டஹாச த்வனியில்
யார் நிற்பதங்கே..?

த னி த் த னி யா க
கிளைத்து பரவி
சாகாக்கால் கொண்டு
அருளமுதமாம்
போகாப்புனலில் நீராட
மயிர்பால ஊஞ்சலில்
நடக்கத் தடுமாறி
படுத்தபடி இறுகப்பற்றி
தவழ்ந்து நகரும் ‘மெய்’-யை
பொய்யெனலாமோ
இச்சொல்.?

அரனறி..வோ..ம்.

*கண்பார்வை கூர்மையடையும் மருந்து
**பிணத்தின் தலைப்பக்கம் உடைக்கின்ற குடத்தின் நீரினை அருந்தும் பூதம்

***

2) நாமொரு அழைப்பு

Elsa Henriquez_க்கு
சமர்ப்பிக்கப்பட்ட
Prévert-ன் To Paint the Portrait of a Bird
முடிவில் வரும் இறகுகளில் ஒன்றை
மிக மென்மையாகப் பிடுங்கி
ஓவியத்தின் மூலையில்
எழுதுக உன் பெயரை என்ற
சொற்றொடர் மேல்
அதி தீவிர கடும்
விவாதத்திலீடுபடுகையில்
கை நழுவிப்போன வண்ணங்கள்
வீழ்ந்தபடியேயிருக்கிறது
தரை மோதாமல் மிகக்கொஞ்சம்
மேலேயே..
அப்பறவைக்கு மிகு பாரமாம்
சொற்களின் பொதி.

பிறக்கவொன்று
அறுக்க ஒன்று
உட்புக மற்றொன்று
வெளியேற இன்னொன்று
அகப்பட ஒரு கன்னித்திரை
மாயை அகற்றப்பட ஒரு திரைச்சீலை
கீழ்திரை கிழிபடுமாம்-அம்மாயை
மேல்திரை விலக்கினால்-அச்சாயை
விலகினால், விலக்கினால்
நடந்தால், நடக்காமலிருந்தால்
நிகழ்த்தப்பெறும் ஆட்டத்தில்
கேளாமல், பேசாமல்
அனர்த்த பூமி மலர்ந்திருக்கிறது.

இருதயத்தின் சுடர் சிகப்புக்கமலம்
அடர் மென்மையை மாலைகளில்
வதங்க விடுகிறது.
மா விருக்‌ஷத்தை
வேரோடு பிடுங்க முனையும்
அசட்டு ஹெர்குலஸுக்கு
உன்மத்தத்தில் மலர் கிள்ளும் இலாவகம்
வெட்கத்தை உற்பவிக்கிறது.

இரு கைப்பிடிக்குள் அடங்கும்
தசைப்பொதியான மூளை
அது அதனுடைய
சலவையையோ, சாவையோ
நொதித்துத் துலங்கும்
பூஞ்சைகளின் நெடியால்
நாசிக்கமறும் தடுமாற்றமே
இஃது.

எதுவெழுதும் இனி
பருவடிவிலான துயரை..?

***

3) இதனின் கண் அனைத்தின் சார்பாக

விமோசனத்திற்கான பலவழிகளில்
சென்று சேரும் கதவுகளாயிருக்கின்றன
மன்னிப்பது மட்டுமே ஒரேவழி அல்ல.
எதிரிடைக் குறியீடுகளில்
ஒளிந்திருக்கும் மறைபுதிர்களில்
எப்போதுமே வசீகரத்தன்மைக்கு
மாற்று எதுவுமில்லாமலிருப்பது தான்.

சூழலின் அழகானது அதை
தெரிந்து கொள்ள வழி இல்லை என்பது
ஒளிக்கீற்றுகளை மறைக்கும்
நினைவின் அரக்கத்தனமான
கூரைகளாக இருப்பதாய்.

தன் உரோமக்கால்களில் பிசுபிசுப்பை
அடர்த்தியாக்கி வைத்துள்ளது
எண்ணெய் தடத்தைத் தொடரும்
தீயெனப் படர்ந்து வருதல் போலொரு நிஜம்.
உருகியோடிடும் தார் குழம்பு
தமது கற்பை பாதுகாத்திருக்கும்
பெண்ணொருவளின் கண்ணியத்தின்
ஒப்புமையாய்
இளஞ்சூட்டோடு ஆறாமல்  அடைகாத்திருக்கிறது.

பிரபஞ்சத்தை நிரப்புவதற்கு
வெளியே முடிவற்று பூத்துக் குலுங்குவதாய்
காதலொரு முடிவுறும் முழுமுற்றான
விளையாட்டல்ல..
பகிர்ந்துகொள்ள நிறைய
இருப்பதும் கூட அல்ல.
நமக்குத் தேவைப்படும்போது
இருதயமானது
முடிவுறா புடைப்புச் சிற்பத்தின்
சோக நெறியில் காலவெளியில்
கட்டளையிடாமல் கால்மாற்றி
நிற்கும் பாவனையில்
இருந்து விடுவது தான்.

வசீகரமற்ற தொழில்நுட்பவாதி
தன்னை விடுவித்துக்கொள்கிறான்
இனிமேலும் படைக்க நினைப்பதாய்
கொண்டிருந்த கருதுகோள்களின் மீது
கடுக்காய் கலந்த வெல்லப்பாகின்
கொதிநிலையை ஆறவிடாமல்
மேலள்ளி அவ்வெண்ணங்களின்
தடயங்கள் சிறிதும் புலப்படாதவாறு
மறைத்துக் கொள்கிறான்

தேவைகள் : நுட்பமும் நுணுக்கமும்.
மூர்க்கத்தனமும் எதன்மீதும் பிடிப்புமல்ல என்பதாகலின் படி,

ஆக.. திட்டமிடுகிறோம்..
கடவுள் முறுவலிப்பாராக.

***

வேதநாயக்

காமிக்ஸ் என்றால் என்ன?

0

கிங் விஷ்வா

வாழ்வியல் இயக்கங்களை வரலாறாகப் பதிவு செய்யும் பாணி தொன்றுதொட்டே இருந்து வருகிறது. எழுத்துருக்கள் தோற்றுவிக்கப்படும் முன்பே குகை ஓவியங்கள் மூலமாக அப்போதைய வரலாற்றை, சம்பவங்களை பதிவு செய்தனர். இதன் பின்னர் பேச்சு மொழி உருவாக, வாய்வழிக் கதைகளாகவும், பாடல்களாகவும் இவை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் எழுத்துருக்கள் மூலமாக எந்த ஒரு விஷயத்தையும் துல்லியமாகப் பதிவு செய்வது சுலபமாகிவிட்டது. இப்படியாக ஓவியங்கள் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் சம்பவங்களை பதிவு செய்யும் இரண்டு வழிமுறைகள் நம்மிடையே இருந்து வந்தது.

மனிதனின் முதல் தகவல் சேமிப்பு வழிமுறையான ஓவியங்கள் மூலமாக கதையைச் சொல்லும் பாணிக்கு பெயர்தான் காமிக்ஸ். காமிக்ஸ் ஜாம்பவானாகிய வில் ஐஸ்னர் காமிக்சை sequential Art என்று பெயரிட்டு இதற்கென்று ஒரு வரையறையை எழுதினார்: “ஓவியங்களையும், வார்த்தைகளையும் ஒரு முறைப்படி ஒழுங்கு செய்து, ஒரு கதையை சொல்வதே / ஒரு யோசனையை நாடகப்படுத்துவதே காமிக்ஸ்” என்பது அவரது கருத்து.

“பார்வையாளனிடமிருந்து ஒரு அழகியல் சார்-எதிர்வினையைத் தூண்டவோ அல்லது ஒரு தகவலை பரிமாறுவதற்காகவோ வேண்டுமென்றே ஒரு குறிப்பிட்ட வகையில் வரிசைப்படுத்தப்பட்ட சித்திரங்களின் தொகுப்பே காமிக்ஸ்” என்று ஸ்காட் மெக்ளவுட் கூறுவார்.

சித்திரக்கதைகளுக்கென்று ஒரு தனி வரையறை உண்டு. அவற்றை இங்கே காண்போம். ஒவ்வொரு காமிக்ஸ் கதையும் பேனல்கள் என்று அழைக்கப்படும் கட்டங்களால் உருவாக்கப்பட்டது. இந்த கட்டங்கள் பெரும்பாலும் எல்லைக்கோடுகளால் பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த பேனல்கள் தொடர்ச்சியான செயலின் ஒரு அங்கமாகும். ஒரு கதையை முக்கியமான சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, அந்த சிறு பகுதிகளை ஓவியங்களால் விளக்கி, வார்த்தைகளால் அலங்கரித்து உருவாக்கப்பட்டதே ஒவ்வொரு பேனலும்.

இந்தக் கட்டங்களை ஒன்று சேர்த்து படிக்கும்போது அவை தொடர்ச்சியாக ஒரு கதையின் இயக்கத்தை விவரிக்கின்றன. இதற்காக இரண்டு விதமான கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன:

Caption என்று அழைக்கப்படும் கதையின் இயக்கத்தை விவரிக்கும் வகையில் மூன்றாம் நபரின் பார்வையில் கதாசிரியரால் எழுதப்பட்டு இருக்கும்.

Speech Balloon என்றழைக்கப்படும் வளிக்கூண்டுகள். இவை உரிய கதாபாத்திரங்களின் உரையாடலை விவரிக்கும். இந்த பலூன்களின் முனை யாரை நோக்கி இருக்கிறதோ, அவரது கருத்தாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். இந்த பலூன்களில் மொத்தம் நான்கு வகை உண்டு.

I

i) கதாபாத்திரம் வழக்கம் போல, நடைமுறையாக பேசுவது

II

ii) இரகசியமாக, மெலிதான குரலில் பேசுவது

iii) எண்ணங்களாக மனதில் நினைப்பது

IV
III


iv) உரக்கப் பேசுவது / கத்துவது – அலறுவது

இதிலேயே கூட சில வரையறைகள் உண்டு. ஒன்று கதாபாத்திரங்கள் பேசாமல், மூன்றாவது நபர் விவரிப்பின் மூலமாகக் கதையைச் சொல்வது. இரண்டாவது முறையில் கதாபாத்திரங்கள் பேச உதவியாக வார்த்தை வளிக்கூண்டுகள் (பேச்சு பலூன்கள்) உருவாக்கப்பட்டு, கதைமாந்தர்கள் பேசுவதைக்கொண்டு கதையை இன்னமும் விளக்கமாக நடைமுறை பாணியில் சொல்வது.

வசனங்கள் இல்லாமல் சித்திரங்களால் மட்டுமே கதையை சொல்லும் முறைதான் ஆரம்பத்தில் இருந்தது. சென்ற நூற்றாண்டின் மிகச்சிறந்த காமிக்ஸ் தொடர்களாகக் கருதப்படும் ஆரம்ப கால ப்ரின்ஸ் வேலியண்ட், ஃப்ளாஷ் கார்டன் போன்றவை இந்த பாணியிலேயே உருவாக்கப்பட்டவை. இதற்கு பிறகு, வசனங்களையும் இணைத்து முழு வடிவம் பெற்றது காமிக்ஸ் என்ற இந்த தளம்.

(காமிக்ஸ் என்ற ஊடகத்தின் வழியாக) நாம் ஏன் படிக்க வேண்டும்?

கதைசொல்லியாக மாறுதல்: நாம் ஒரு காமிக்ஸ் புத்தகத்தைப் படிக்கும்போது, நாமே ஒரு கதை சொல்லியாக மாறுகிறோம்.

காமிக்ஸ் புத்தகங்கள் (பேனல்கள் Panels) கட்டங்களால் ஆனவை. ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு கதை நகரும்போது, இந்த இரு கட்டங்களுக்கு இடைப்பட்ட ஒரு பகுதியை நமது சிந்தனையின் கற்பனைக்கு என்று விட்டுவிடுகிறார்கள் படைப்பாளிகள். உதாரணமாக டார்ஜான் ஒரு மரத்தின் விழுதைப் பிடித்து தொங்குவதாக ஒரு கட்டத்தில் இருக்கும். ஆனால், அடுத்த கட்டத்தில் அவர் இன்னொரு மரத்தில் இருப்பார். ஆக, இந்த இரண்டு கட்டங்களுக்கு இடையே டார்ஜான் எப்படி சென்றிருப்பார் என்பதை நாம்தான் கற்பனை செய்து, யூகித்துக்கொள்ள வேண்டும்.

காமிக்ஸ் திறனாய்வாளர் ஸ்காட் மெக்ளவ்ட் தன்னுடைய Understanding Comics என்ற புத்தகத்தில் காமிக்ஸ் புத்தகங்கள் நமது மூளைக்கு புரிந்துகொள்ளும் பயிற்சியை அளிக்கிறது என்று சொல்கிறார். மேலும், காமிக்ஸ் புத்தகங்கள் மூலமாக படிப்பதுதான் ஆகச்சிறந்த பங்கேற்றல் வாசிப்பு முறை (Participatory Reading) என்கிறார். ஏனென்றால், காமிக்ஸ் என்பது வெறும் ஓவியங்கள், கட்டங்கள், வசனங்களை மட்டும் கொண்டதல்ல.

ஒரு காமிக்ஸ் நமக்கு என்ன சொல்ல வருகிறது? என்பதைப் புரிந்து கொள்வதோடில்லாமல், சில வேளைகளில், அந்த காமிக்ஸ் சொல்ல வரும் அரசியலையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆக, ஒரு குறிப்பிட்ட கதையை நாம் படிக்கும்போது அது சார்ந்த விஷயங்களையும் சேர்த்து உட்கொண்டு, ஒரு ஒட்டுமொத்த பேக்கேஜ் ஆகவே காமிக்ஸை நாம் படிக்க வேண்டியிருக்கிறது.

வாசிப்பை எளிமையாக்குதல்: ஒரு வரலாற்று புத்தகத்தையோ, அறிவியல் கோட்பாட்டையோ படிப்பது போரடிக்கும். ஆனால், அதுவே காமிக்ஸ் வடிவில் இருந்தால், எளிமையாக வாசித்து விடலாம்.

சில ஆய்வுகளின் முடிவில் வழக்கமாக படிப்பதையே சிரமமாக நினைப்பவர்களுக்கு, அந்த விஷயத்தை காமிக்ஸ் வடிவில் கொடுத்தால், வாசிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆக, படிப்பதையே வெறுப்பவர்கள் கூட காமிக்ஸ் மூலமாக அதே விஷயத்தைச் சொன்னால், அதைப் படிக்க ஆர்வம் காட்டுவார்கள்.

இதைத்தவிர, வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கூட அவர்களுக்கு போரடிக்கும் சப்ஜெக்ட் என்று வந்துவிட்டால், படிக்க மாட்டார்கள். வரலாறு, அறிவியல் கோட்பாடுகள் போன்றவற்றை போரடிக்கிறது என்று படிக்காமல் ‘ஸ்கிப்’ செய்து விடுவார்கள். அவர்களுக்கு அதே விஷயத்தை காமிக்ஸ் வடிவில் கொடுத்தால், தொடர்ச்சியாக அவற்றைப் படிப்பதில் நல்ல ஆர்வம் உருவாகிறது என்றும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தன்னம்பிக்கையை வளர்க்கும்: காமிக்ஸ் படிப்பது, அதில் ஈடுபடுத்திக் கொள்வது நமது குறைகளைக் கடந்து, நம்மை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தும்.

இயல்பிலேயே உள்முகச் சிந்தனையாளராக இருப்பவர்கள் (Introvert), கூச்ச சுபாவம் கொண்டவர்கள் என்று பல வகையினரும் தங்கள் குறைகளைக் கடக்க, காமிக்ஸை ஒரு பரிசலாகப் பயன்படுத்தி உள்ளனர். உலக அளவில் இதற்கு பல உதாரணங்கள் உள்ளன். டேன் ஹர்லி மிகவும் மந்தமானவர் என்று அழைக்கப்பட்டார். 8 வயது வரையில் The என்ற வார்த்தையையே அவரால் படிக்க முடியாது.

ஆனால், அவரது நண்பர் ஒருவர் ஸ்பைடர்மேன் காமிக்ஸை அவருக்குப் பரிசளித்தார். அதன்பிறகு, ஹர்லியின் வாழ்க்கை அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டில் ரஜினி முன்னேறுவதைப் போல மாறிவிட்டது. இப்போது அவர் உலகின் தலைசிறந்த அறிவியல் சார்-பத்திரிகையாளராக அறியப்படுகிறார்.

சிறுவயதிலேயே Dyslexia மற்றும் Attention deficit hyperactivity disorder (ADHD) கொண்டிருந்த டேவ் பில்க்கி, தொடர்ந்து காமிக்ஸ் மற்றும் ஓவியங்களின் மூலமாக தன்னுடைய பிரச்சனைகளைக் கடந்து, இன்று ஒரு படைப்பாளியாக மாறி இருக்கிறார். 30 மொழிகளில், 7 கோடி புத்தகங்கள் விற்பனை என்று பல சாதனைகளைப் படைத்து வருகிறார் டேவ்.

சிந்தனையைத் தூண்டுதல்: தொலைக்காட்சி பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது போலத்தான் படிப்பதும் ஒரு வகையான பொழுதுபோக்கு என்று நீங்கள் நினைத்தால், அந்த முடிவை மாற்றிக்கொள்ளுங்கள்.

யாராவது காமிக்ஸ் படித்துக் கொண்டிருந்தால், “பொம்மை போட்ட புத்தகத்தைப் பார்க்கிறான்” என்று இன்றும் தமிழகத்தில் கிண்டல் செய்பவர்கள் உண்டு. காமிக்ஸ் என்பது வெறும் பொம்மைப் புத்தகத்தைப் பார்ப்பது மட்டுமல்ல. காமிக்ஸ் படிப்பவர்கள் ஒரே நேரத்தில் காட்சிகள் வாயிலாக, இடம்-சார்ந்த மற்றும் கருத்து சார்ந்தவற்றை உள்வாங்கி, அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒரு கதையாக கிரகித்துக்கொள்பவர்கள்.

அந்தப் புரிதலுக்கு Multiple Modalities என்று பெயரிட்டு இருக்கிறார் ஆய்வாளர் டேல் ஜேக்கப்ஸ். ஆக, காமிக்ஸ் படிப்பதால் நமது சிந்தனை வலுப்படுகிறது. ஒருங்கிணைந்த புரிதலுக்கான திறன் கூடுகிறது.

மூளைக்கு நல்லது: விஞ்ஞானபூர்வமாக நிருபிக்கப்பட்ட உண்மை என்னவென்றால், படிப்பதனால் மூளையின் செயல்திறன் கூடுகிறது.

2013ஆம் ஆண்டு, அட்லாண்டாவின் இமோரி யுனிவர்சிடியின் Centre of NeuroPolicy-ஐச் சேர்ந்த நான்கு பேர், தீவிர ஆராய்ச்சியின் முடிவில், படிப்பதனால் மூளையின் நியூரான் நெட்வொர்க் எப்படி சிறப்பாகச் செயல்படுகிறது என்று விளக்கினார்கள். இந்த ஆராய்ச்சியின் முடிவில், ஒரு நாவலைப் படிக்கும்போது எப்படி மூளை சிறப்பாக செயல்படுகிறது என்பதை ஆதாரத்துடன் விளக்கினார்கள்.

அது மட்டுமல்ல, படித்து முடித்து, சில நாட்கள் கழித்தும் மூளையின் செயல்திறன் அடுத்த கட்ட லெவலிலேயே இருப்பதையும் நிரூபித்தார்கள். வழக்கமாக, தொடர்ச்சியாகப் படிப்பவர்களுக்கு இது ஓகே. ஆனால், படிக்கும் பழக்கம் அறவே இல்லாதவர்களுக்கு? அதுதான் காமிக்ஸ் இருக்கே, பாஸ்? உடனே இன்றே ஒரு காமிக்ஸ் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பியுங்கள்.

காமிக்ஸ் படிப்பது எப்படி? எந்த ஒரு படைப்பையும் போல, காமிக்ஸ் புத்தகங்களை படிப்பதற்கு என்று ஒரு முறை இருக்கிறது. வழக்கமாக புத்தகம், நாவல் படிப்பவர்கள் காமிக்ஸ் படிக்கும்போது, அதில் இருக்கும் எழுத்துகளை மட்டும் படித்துவிட்டு, கடந்து சென்று விடுவார்கள். ஆனால், அது சரியான படிக்கும் முறை அல்ல.

ஓவிய வாசிப்பு: எழுத்து சார் படைப்புகளில் இருந்து காமிக்ஸ் வேறுபடுவது, ஓவியங்களாலேயே. ஒரு காமிக்ஸ் புத்தகத்தில் 60 முதல் 75% வரை ஓவியங்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆகவே, ஓவியங்களைப் படிக்கும் பழக்கத்தை, ஆமாம் – படிக்கும் பழக்கத்தைத்தான் – வளர்த்துக்கொள்ள வேண்டும். ஓவியங்களைக் கூர்ந்து கவனித்து, நிதானமாகப் படிக்க வேண்டும்.

இலக்கணம்: நல்ல காமிக்ஸ் புத்தகங்களுக்கு என்று ஒரு இலக்கணம் இருக்கிறது. ஒரு கதாசிரியர், ஓவியர் வெறுமனே ஒரு ஓவியத்தை வரைந்து விடுவதில்லை. ஒரு குறிப்பிட்ட அமைப்பில் இருந்து திடீரென்று வேறு கோணத்தில் ஒரு ஓவியம் இருக்கிறதென்றால், அதற்குப் பின்னர் ஒரு காரணம் இருக்கும்.

ஒவ்வொரு படைப்பாளியும் தனது வாசகர்களுடன் ஒரு பகடி ஆட்டம் ஆடுகிறார். தனது படைப்புகளில் வெளிப்படையாகத் தெரியும் பேசுபொருளைக் கடந்து வேறொரு கருத்தை முன்வைப்பார். அதை Decode செய்யும் வாசகன், ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்து படைப்பாளிக்கு இன்னமும் நெருக்கமாகிறான்.

  1. Understanding Comics By Scott McCloud (1994) William Morrow Books
  1. Clare Snowball (2005) Thesis on Teenage Reluctant Readers & Graphic Novels
http://www.yalsa.ala.org/yals/yalsarchive/volume3/3n4_summer2005.pdf#page=45
  1. Mary Jane Heaney (2005) A Sure bet for your Library
http://www.valkyrie22.com/library/LIS%20763/Assignments%20-%20LIS%20763/Final%20Paper%20-%20Graphic%20Novels/new%20articles%20-%20not%20printed/graphic%20novels%20a%20sure%20bet%20for%20your%20library.pdf
  1. Dan Hurley – Award Winning Science Journalist http://danhurley.com/
  2. Dav Pilkey – Artist & Creator http://www.pilkey.com/
  3. Dale Jacobs (2007) Comics as Means of Teaching Multiple Literacies https://www.scribendi.com/advice/reasons_to_start_reading_comic_books.en.html
  4. Neuro Scientific Research By Berns, Blaine, Pye & Prietula Emory University, Atlanta (2013) http://online.liebertpub.com/doi/pdf/10.1089/brain.2013.0166

கிங் விஷ்வா – கிங் விஷ்வா தமிழ் மொழியில் காமிக்ஸ் பரவலை உருவாக்கும் கனவோடு நண்பர்களுடன் சேர்ந்து கிங் விஷ்வா எடுத்து வரும் முயற்சிகள் குறிப்பிடப்படவேண்டியவை. கணிசமான எண்ணிக்கையில் காமிக்ஸ், கிராஃபிக் நாவல், சிறார் இலக்கியம் குறித்து பல்வேறு ஊடகங்களில்

கண்டியம்மன் திருவிழா

5

முஹம்மது யூசுப்

கன்னிச்சாவு விழுவதை காண சகிக்காத கருத்த மேகக்கூட்டங்கள் வானில் கண்காணாத இடத்தில் ஓடி ஒளிந்து கொண்டன. அடர் இருட்டை நிலம் அள்ளி பூசி இருக்க, ராக்காலத்து நதியோர பூச்சிகளின் ரீங்காரமும், அதன் மெல்லிய காலடிபட்ட தொட்டாச்சிணுங்கி செடியின் வெட்கமும் நள்ளிரவு என்றும் பாராமல் சக்களத்தி சண்டையில் கூடி இருந்தன.

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பூத்த பூலாங்குடியிருப்பு ஊரில் இருந்து ஆடி அசைந்து தென்காசியைக் காண ஓடிவரும் அரிகர சிற்றாறு “வேணாம்டி பாதகத்தி, மனச மாத்திக்கோ.. நான் ஊர் போய் சேர ஒரு சாவு பத்தாதா..? காலத்துக்கும் இன்னொரு பாவத்தையும் என் தலையில ஏன் சுமத்துற“ என்று அவளைப் பார்த்து அழுது அரற்றியது.

ஈசல் இறகைவிட மிக மிருதுவான, இதுவரை புழு,பூச்சியே பார்த்திராத அவளின் மென்மையான கால்கள் இருட்டில் தர்ப்பை புற்களையும் ஆற்றின் மழுங்கிய கற்களையும் மிதித்து, தறிகெட்டு வளர்ந்து நிற்கும் அடர் செடிகொடிகளையும் தாண்டி அணைக்கு அருகே கொண்டு வந்து நிறுத்தி இருந்தது.

காட்டு குருக்கத்திப் பூவின் வாசம் சுழன்று வீச, அரிகர ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். கண்ணில் ஆற்றாமை சுடுநீராய் வழிந்தோடியது. உள்ளத்தின் துக்கம், ஆற்று நீரைவிட வேகமாக பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது அவளுக்குள்.

சாவின் ஈரம் அவ்விடத்தை சூழ்ந்திருக்க, ஊர் யாரும் அறியாது காடு தாண்டி இருட்டில் தன்னை அழைத்து வந்த, அலங்கரித்த வண்டி மாட்டை திரும்பிப் பார்த்து “நீ போ” என்றாள் சைகையில். மாடு அவளைப் பார்த்து அழுதபடி தலை குனிந்துகொள்ள, “அழாத, சொன்னா கேளு, போ” என்றபடி அணை நோக்கி நடந்தவள் “ம்மா” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்க மாடு அவளையே பார்த்தபடி நின்றிருந்தது. “சொல்லுறேன்ல.. போ” என்றவள் மனசு மாறிவிடக்கூடாது என்று தீர்க்கமான மனதுடன் திரும்பிப் பாராது அணையின் மேல்தளத்தை நோக்கி நடக்கத் துவங்கினாள்.

இருட்டில் தட்டுத்தடுமாறி மேலேறி வந்ததில் மூச்சு வாங்கியது. அணையில் எந்த இடத்தில் அவன் ஜீவசமாதி ஆனானோ அங்கு சென்றதும் அதைத் தொட்டபடி சற்று நேரம் நின்றிருந்தாள். அவன் கரம் பற்றியது போலவே மனதில் ஒரு ஊசலாட்டம். 

வானில் எரி நட்சத்திரம் பெரும் தணலாய் தீப்பிடித்து துயரத்தை சுமந்தபடி பூமிப்பந்தை நோக்கி வந்தது. மனதில் பதட்டம் அதிகரிக்க அணை ஒரத்திட்டில் ஏறி நின்றவள் தனது சேலையின் முந்தானையால் இரு கால்களையும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு “பகவதியம்மா என்னை ஏத்துக்கோ” என்றபடி கண்களை மூடி நீருக்குள் பாய்ந்தாள்.

 “சிறுக்கி மவனுங்களா, இளவரசிய கொன்னுட்டீங்களே” என்று கத்தியபடி நெஞ்சு படபடக்க மலை இருவாச்சி குருவி ஒன்று பந்தள ராஜாவின் கோட்டை இருக்கும் மேற்கு திசை நோக்கி வேகமாய்ப் பறந்தது.

ஆகாத பாவத்தை பெற்றெடுத்த பிள்ளையாய், அரிகர ஆறு “ஓ”வென கொந்தளித்துக் கதற, இளவரசி குதித்த இடத்தின் நீர் மட்டும் மஞ்சள் நிறமாக மாறி பெருத்த சுழி போல சாபத்தின் நிழலாய் சுற்றத் துவங்கியது.

எல்லா ஆறுகளுக்கும் எருக்கம் செடி மட்டும் நெருக்கமல்ல ஏதோ ஒரு பலிழி? பாவத்தையும் சளசளக்கும் ஓசையுடன் சுமந்தபடிதான் ஓடுகிறது.

‘ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்கா, இளம் புள்ளதாச்சிக்கு ஏழு கடுக்கா, ஆகாத மவ அரசன் மவளா இருந்தாளும் சாவுதான் துணை’ என்றபடி, பாவம் தீர வட காசி போவாங்க, அரிகர ஆறு அவளின் மனம் வெம்பிய ஆற்றாமையை சுமந்தபடி தென்காசி நோக்கி ஓடிக் கொண்டிருந்தது.  

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் இருக்கும் “கலங்காத கண்டி கிராமம்” என்றுமில்லா பொலிவுடன் புது மணப்பெண் போல காட்சியளித்தது. “கண்டியம்மன் கோயில் திருவிழா–ஸ்பெஷல்” என்ற பெயரில் தனியார் பேருந்துகள் அம்மீச்சிறு கிராமத்தை கடந்த இரண்டு தினங்களாக கழுகு போல வட்டமடித்து வந்தன.

வைகாசி மாதம் நான்காவது செவ்வாய்க்கிழமை, கலங்காத கண்டியம்மன் கோவில் திருவிழா. முதல் நாள் திங்கள் அன்று அரிஅர ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் நடைபெறும். மறுநாள் மாலை குற்றாலம் அருவியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து, பொது இடத்தில் முளைப்பாரி வைத்து கண்டியம்மனுக்கு பூஜைகள் நடைபெறும். புதன்கிழமை காலையில் சங்கிலிபூதத்தாருக்கு கிடா வெட்டு பூஜையும், அம்மனை குளிர்விக்க மதியம் மஞ்சள் நீராட்டுதலும் இரவில் சாமக்கொடையுடன் கூடிய வில்லுப்பாட்டுடன் நிறைவுறும் பக்தர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும் என்ற திருழா நோட்டிஸ்கள் திருநெல்வேலி டவுன்வரை கால் முளைத்து வந்திருந்தன.

“திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்டத்துக்காரங்களுக்கு சாஸ்தா, மதுரை, விருதுநகர், திருச்சி, சேலம், தஞ்சாவூர்காரங்களுக்கு ஐயனாரு. ராசா ஐயனாரையும் காவல் தெய்வம் சங்கிலிபூதத்தாரையும், சேனாதிபதி கருப்பன், கருப்பசாமியை சேவிக்கிற எல்லாரையும் கண்டியம்மன் கோயில் விழா கமிட்டி சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்” எனும் குரல் பெரும் குழாய் வழியாக கலங்காத கண்டியில் இரண்டு நாட்களாக காற்றில் தவழ்கிறது.

ஊரின் நுழைவில் தெற்கு எல்லையில் ஆலமரத்தடியில் இருக்கும் கலங்காத கண்டி அம்மன் கோயிலுக்குப் பின்னால் முன்னொரு காலத்தில் கோட்டை இருந்த பகுதி முழுக்க பந்தல்களாலும் பெரும் அலங்கார வளைவுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

ஆலயத்துக்கு வெளியே அம்மனின் 21 துணை தெய்வங்களின் நடுகற்களைச் சுற்றிலும் பூக்களின் பட்டைசாற்றி, அரிசி மாவு, மஞ்சள் பொடி, மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்த்துண்டாக்கிய பொடி, உமிக்கரி, மஞ்சாடி இலைகளை பொடியாக்கிய பச்சைப்பொடி ஆகிய பொடிகளை கொண்டு அலங்கரித்து, குன்னிமுத்து எனும் மஞ்சாடி விதைகளே ஆதிகுடிகளின் தங்கம் என்பதால், மஞ்சாடி விதைகளின் கழுத்தணிகள், கைம்மாலைகளும் 21 தெய்வங்களும் அணிந்திருந்தன.  

கருப்பண்ணன், கருப்பன் மற்றும் கருப்பசாமி ஆகிய சேனாதிபதிகளும் வெள்ளை அடித்து அலங்கரிக்கப்பட்டு புதிய வேல்கம்புடனும் பெரும் நெற்றித் திலகத்துடனும் காட்சியளித்தனர்.

பிரமாண்டமாக உருட்டும் விழியுடனும், முறுக்கிய மீசையுடனும் பெரும் தோற்றத்துடன் பயமுறுத்தும் காவல் தெய்வமாக சங்கலி பூதத்தாரின் சிலை அருகே வலதும் இடதுமாக நாயும், குதிரை சிலையும் கொண்டு ஆழி என்ற பெயரில் கோயில் முன்பு கம்பீரமாக நின்றிருந்தது காப்பு கொட்டாரம்.

 “அம்மனை குளிர்விக்க தீர்த்தம் எடுக்க, எல்லாத்துக்கும் ஆதி சாஸ்தாவான சொரிமுத்து ஐயனார் கோயில் இருக்கும் காரையார் பாண தீர்த்தம் போக    சாமியாடி கெளம்புறார் யாரும் குறுக்க போயிராதீங்க – இவன் விழாகுழு கமிட்டியார்” என்ற கணீர் குரல் சிறிய கிராமத்திற்குள் குழாய் மைக்கில் தொடர்ச்சியாய் அலறிக் கொண்டிருந்தது.

வல்லயம் எனும் வெண்கல மணிகள் பிணைக்கப்பட்டு பூண் இட்ட கூர் குத்தீட்டியுடன் கிளம்பும் சாமியாடி, அரிவாள்தட்டி ஓடையில் இருக்கும் கருப்பசாமி சிலைக்கு பிரதிஷ்டை செய்து அங்கிருந்து 21 காவல் தெய்வங்களின் கூட்டுறவுடன் சங்கிலி பூதத்தார் துணைகொண்டு பாண தீர்த்தம் கொண்டு வருவார். வேட்டையாடும் கொடிய மிருகங்கள் நிறைந்த காட்டில் தனிஆளாய் பாண தீர்த்தம் எடுக்க ஆடிவரும் சாமியாடியின் முன்பு எந்தவொரு மிருகமும் தென்பட்டதில்லை என்பது ஊர் ஐதீகம்.  

“கோவக்கார ஆழி முன்னால போகுது, குறுக்க வந்து யாரும் உசிர காவு கொடுத்துராதீங்க, இன்னைக்கு ராவு பனிரென்டு மணிக்கு சாமக்கொடையுடன் கண்டியம்மன் கதையை வில்லுப்பாட்டு நடக்கும் மறக்காம ஊர்காரங்க கலந்துக்கோங்க.” “உஸ்ஸூ பிடின்னு சொன்னா நீ பிடின்னுச்சாம் நாய்” குறுக்கால பாயாதன்னு சொன்னா இப்போதான் ஒருத்தன் ரோட்டுக்கு வாரான். யேம்ப்பா செல்லப்பாண்டி மவனே கொஞ்சம் தள்ளிப்போறது. எழச்சவன் பொண்டாட்டி எல்லாத்துக்கும் மச்சினியாம், சொன்னா கேளுடே தள்ளிப்போ” மைக் செட் தொடர்ந்து அலறிக்கொண்டே இருந்தது.  

கோட்டைவாசல் ஃபாரஸ்ட் செக் போஸ்ட் தாண்டி வருடத்திற்கு ஒருமுறை   மேற்கு தொடர்ச்சி மலை காட்டின் வாடையுடன் வளர்ந்த குளிர் கிராமம் பூலாங்குடியிருப்பிற்கு கேரள மக்கள் பகவதி அம்மனின் மண் கொண்டுவந்து தந்துவிட்டு பதிலுக்கு கண்டியம்மனின் வில்லுப்பாட்டை மலையாளம் கலந்த வாடையில் பாடுவதும் ஊர் வழக்கம். பாவக்கணக்கு என்று கடைசியில் பாடும்போது சாமியாடி வந்து குறி சொல்வதும் உண்டு.    

பத்தாம் நூற்றாண்டில், சோழ மன்னர்களால் துரத்தி அடிக்கப்பட்டு நிலம் இழந்து, உடடைமை இழந்து, உறவுகளை இழந்து, மிஞ்சிய உயிருடன் மேற்கு கரையோரம் மலையேறிய பாண்டிய நிலத்தின் மிச்ச வித்துகள், கோன்னி, ஆரியங்காவு, அரசடித்தாவு, குளத்துப்புழை, அச்சன்கோவில், தென்காசி, சபரிமலையின் மலைக்காட்டுப் பகுதிகளில் எல்லாம் சிறுசிறு வேடுவக் குழுக்களாக காடு காணி பார்த்து வளர்ந்தனர்.  

திருவனந்தபுரம் மகாராஜாவுக்கு எதிரான போரில் திருவாங்கூர் மன்னருக்கு உதவி செய்ய ஆள் தேவைபட்டதும், வாட்ட சாட்டமான மலைக்கூட்ட பாண்டி சனம் மன்னருக்கு உதவி செய்யச் சென்றது. அதற்கு பகரமாய் கிடைத்த பகுதியில் முளைத்த காட்டுச்செடி தான் பந்தள மன்னர் பரம்பரை. இவர்களின் வாரிசான கலங்காத கண்டி ராஜாவின் இரண்டாவது மகளான இளவரசியின் சாவு பேசும் கண்டியம்மன் கோவில் திருவிழாவிற்கு மலையாள ஆதி திராவிடர்களும் பங்குமுறை விருந்தாளிகளே.

கிராமத்தின் பறையர் சாதியினர் முரசுக்கான மூங்கில் பொருட்கள், தோல் மறைப்புகள் கொண்டு வரும். தண்டன் சாதி சாமியாடிக்கான முகமூடி, தலைக்கவசங்களுக்குத் தேவையான பாக்கு மட்டைகளைக் கொண்டு வரும். கணகா சமூகம் முகமூடிகளை வரையும். குருவன் சமூகம் தீப்பந்தங்களை எரிக்கவும்,   மரான் சாதி எண்ணெயுடன் வர அம்மனின் காப்புக்கட்டிகள் ஏழு பேரும், சாமியாடியும் என எல்லோரும் சேர்ந்து ஊர்கூடி இழுக்கும் விழா இது.  

அம்மையை அழைத்தல் என்று ஆரம்பிக்கும் கண்டியம்மன் பாட்டு பாவக்கணக்கு பாடும்போது உக்கிரமாக மாறும் என்பதால் அணைத்திரையன் சிலை அருகே நின்று சிலர் பால் ஊற்றுவதுண்டு. சிலர் அணையைச் சுற்றி பாதுகாப்பிற்காக வலம் வருவதும் உண்டு.

அன்றைய இரவு மட்டும் பூலாங்குடியிருப்பு ஊர் சூடாக இருக்கும். மறுநாள் மதியம் வரை “இன்னார் மவ, ஆத்துல விழுந்து செத்துட்டாடி” என்ற ஓலக்குரல் கேட்காதவரை சந்தோசம்தான் என்று முணுமுணுத்தபடியே முந்தைய இரவு சூரசம்ஹாரம் சாயலில் இருக்கும் நள்ளிரவு பனிரெண்டு மணி சாமக்கொடைக்கு ஊர் தயாரானது.

“எதுவும் ஆகாம பாத்துக்கோ தாயி, என் கணக்குல மூனு கல்லு எடுத்துப் போடுறேன், என் கணக்குல அஞ்சு கல்லெடுத்துப் போடுறேன்” என்ற வேண்டுதல் எல்லார் மனதிலும் ஓடிக்கொண்டிருக்க “ரொம்ப வேண்டாத, குறி சொல்லுற பல்லிதான் ஓடிப்போய் மொதல்ல காடிப்பானையில விழுமாம்” என்ற கேலியும் இடையில் ஓடியது.

சாமக்கொடை முடிந்ததும் நள்ளிரவு ஒரு மணிக்கு கண்டியம்மனின் வில்லுப்பாட்டு இனிதே ஆரம்பம் ஆனது.

முதலில் பந்தள ராஜாக்களின் குலப்பெருமை பாடினார்கள், கலங்காத கண்டி மன்னனின் ஆட்சி பெருமை பாடி முடித்தார்கள், அவர் மகளை கட்டிக்கொடுத்த தென்காசி பாண்டியர்களின் பெருமையை எல்லாம் மிதமான குரலில் பாடினார்கள்.

‘ஏண்டா, தென்ன மரத்துல ஏறுனன்னு கேட்டதுக்கு புல்லு பறிக்கன்னு சொன்னானாம், தென்ன மரத்துல ஏதுடா புல்லுன்னு கேட்டதுக்கு அதான் இறங்கிட்டேன்னானாம்’ என்று கேலியும் இடையில் ஒடிக் கொண்டிருந்தது.

திடீர் என அழுத்தமான குரலில் “உறியில கட்டி தூக்கினாலும் அழுகின பூசணிக்காய் அழுகினதுதான்,  மகளைக் காண வர்றேன்னு பந்தள மன்னர் தகவல் அனுப்பினாரா, மகளும் சந்தோசப்பட்டு தன்னோட புருசனான பராக்கிரமபாண்டியன் கிட்ட சொன்னாளா, உன் அப்பன் தாண்டி வாரான் ஓடைத்தண்ணியுமா சேர்ந்து வருதுன்னு புருசன் திட்டினாரா…

ஓடத்தண்ணி

ஏ…………….ஓடத்தண்ணி

ஏ………………ஓடத்தண்ணி என்று அழுதபடி சற்று நேரம் நின்றுவிட்டது பாட்டு.

ஆத்துக்கு குறுக்க ஓடை கட்ட ஆசைப்பட்டானே.. ஹே.. ஹே

அணை கட்டி ஓடைத்தண்ணி தர ஆசைப்பட்டானே.. ஹே.. ஹே

அணை கட்டியும் உடைஞ்சு பாவியானானே.. ஹே.. ஹே

கட்ட கட்ட அணையும் உடஞ்சு போனதே, ஹே.. ஹே

ஆலோசனை கேக்க என் மன்னன் நம்பி போனானே.. ஹே.. ஹே

நம்பி போன நம்பூதிரி கழுத்தறுத்தானே ஹே.. ஹே

என் தங்கம் செத்திட்டியடி என் தங்கம்.. என்று மாரில் அடித்து பாடிய கூட்டம் திடீர் என எழுந்து நின்று பாவ கணக்குப்பாடலைப் பாடத்துவங்கியதும், யார் உடம்பில் சாமியாடி ஏறும் என்று தெரியாத நிலையில் கூடி இருந்த மொத்த கூட்டமும் விறைத்து நின்று வேடிக்கைப் பார்த்தது.

ரகசிய உத்தரவு என்ற பெயரில் மன்னரைத்தேடி அரசவை நம்பூதிரி அரண்மனை வந்திருந்தார். ஊருகிற அட்டைக்கு கால் எத்தனை என்று அறிந்தவன் நம்பூதிரி மட்டுமே என்று இந்து வேதநூல் கூறுவதால் மன்னன் அவரை அழைத்திருந்தார்.

கட்டக்கட்ட அணையின் சுவர்கள் உடைய, அதுவே அரசவை நம்பூதிரியின் சதித்திட்டம்தான் என்று அறியாது மகளின் வேண்டுகோளை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்ற வருத்தத்தை நம்பூதிரியிடமே கூறி ஆலோசனை கேட்க ”அரண்மனையில் உள்ள மாவீரன் ஒருவனை, அணை கட்டும் பகுதியில் உயிரோடு பலி கொடுத்தால் பணிகளைத் தொடரலாம், நினைத்தது போல அணையையும் கட்டி முடிக்கலாம்” என்று சோழி போட்டு ஆருடம் கூறினான் வஞ்சகன் நம்பூதிரி.

“மாவீரன் என்றால் யாரை பலி கொடுப்பது” என்று மன்னர் கேட்டதும், தனக்கு பெரும் இடஞ்சலாக இருந்த படைத்தளபதி அணைத்திரையன் மன்னனின் இரண்டாம் மகளைக் காதலிப்பதை இதுதான் தருணம் என்று எடுத்துரைத்தான். ஆயிரம் கல நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும் என்பது போல மொத்த அரசவையை அழிக்க அந்த செய்தி அன்று போதுமானதாக இருந்தது.

ஆத்தோடு போனாலும் போவேன் தோணிக்காரனுக்கு கூலி கொடுக்க மாட்டேன்னு என்று அடம் பிடிக்கும் மன்னனுக்கு, மகளை மணமுடித்து கொடுத்த பகுதிக்கு தண்ணீரும் கொடுக்கலாம். தன் இரண்டாம் மகளை காதலித்தவனையும் சிரச்சேதமும் செய்யலாம் என்ற நம்பூதிரியின் ஆலோசனை சுளுவாகப் பட்டது.

திறமைமிக்க படைத்தளபதி அரசுக்கு துரோகியாகி விட்டதால் படை தளபதியை பலி கொடுக்கும் திட்டம் தயார் ஆனது.  யாருக்கும் ஆகாத கழுதை அம்பர்ல கெடந்தா என்ன அடுத்த திருமாகாளத்தில கெடந்தா என்ன அரசன் யோசிக்க, படை தளபதியை அணைத்திரயன் அவரசமாக அணை கட்டும் பகுதிக்கு அழைத்து வரப்பட்டான்.

மன்னர் கலாங்காத கண்டி ராஜாவும் அணைக்கட்டு பகுதிக்கு வந்தார். அங்கு படைத்தளபதி மீது ராஜதுரோகக் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டு அதற்கு தண்டனையாக உயிரோடு சமாதி வைக்க உத்தரவிடப்பட்டது.

“என்னால் ஒரு நாடு வளம் பெருகும் என்றால் அதற்காக நான் என் உயிரை இழக்கத் தயார், ஆனால் உங்கள் மகளை காதலித்த குற்றத்திற்காக எனக்கு உயிரோடு சாமதியாகும் மரண தண்டனை கொடுத்தால் இன்னொரு உயிரையும் நீங்கள் இழக்க நேரிடும்” என்றான் அணைத்திரையன்.   

“நீ இன்னாட்டின் படைதளபதி மட்டுமல்ல, என்னுடைய மெய்காப்பாளனும் நீ,     நாட்டின் இளவரசியை பாதுகாக்க வேண்டிய நீயே அவளைக் காதலித்தது ராஜ துரோகம்” என்று மன்னர் கூற, ஆறு போறது கெழக்கு அரசன் சொல்லு  வழக்கானது.

“என்னை யாரும் நெருங்க கூடாது, அப்படி நெருங்கினா உங்க உயிர் இங்கேயே போயிரும், எனக்கு கொடுத்த தண்டனையை நானே நிறைவேத்திக்கிறேன்” என்று கூறி நம்பூதிரி கூறிய அணைக்கட்ட போடப்பட்ட பெரும் குழியில் குதித்து தலைசாய்த்து தன்னை மறந்து தியானத்தில் படுத்த அவன் சமாதி நிலைக்கு மாற, ஆறு எல்லாம் கண்ணீரு, அடியில சிக்குனது அணைத்திரையன் உசிரானது.

அப்படியே உயிரோடு வைத்து அந்த அணையைக் கட்டி முடிக்க, அதுவரை கட்ட, கட்ட உடைந்த அணையின் சுவர்கள் மீண்டும் புத்துயிர் பெற்றது. அணையும் கட்டி முடிக்கப்பட்டது. மன்னர் கலங்காதகண்டி ராஜா அணை கட்டிய இடத்தில் படைத்தளபதி அணைத்திரையனுக்கு சிலை வைக்க உத்தரவிட்டார்.

அழுகி நாற்றமடித்த பூக்களை அத்தனை விருப்பத்துடன் பூ என அன்பொழுக மனம் விரும்பி யாரும் அழைப்பதில்லை. படைத்தளபதியை காதலித்ததை விரும்பாத மன்னன், இளைய மகளின் தற்கொலை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் அணையில் இருந்து கால்வாய் வெட்டி பராக்கிரம பாண்டியனாகிய தன் மருமகன் ஆட்சி செய்த தென்காசிக்கு விசுவநாதபுரம், அழக்கப்புரம், அய்யாபுரம் தென்காசி தெப்பகுளம் வரை தண்ணீர் கொண்டு சென்றான்.

ஊர்கோழியும் நாட்டுக்கோழியும் சேந்தா உரலில் இருக்கிற புழுங்கல் அரிசிக்கி சேதாரமாம்.  நம்பூதிரியின் சொல்லுக்கு இணங்க ஆற்காடு நவாப் கலங்காத கண்டிக்கு படையெடுத்து வந்தும் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை.  

கோட்டை உள் வாளகத்தில் சக்தி வாய்ந்த பகவதி அம்மன் ஆலயம் இருந்தது.

ஆலயத்தை அப்புறப்படுத்த எண்ணி, மன்னனைச் சந்தித்து நம்பூதிரி பகவதியம்மன் கோவிலை கோட்டையில் இருந்து வெளியே கொண்டுபோய் கட்டுவோம், கோட்டைக்குள் கோவில் இருப்பதால்தான் குடும்பத்தில் குழப்பங்களும், பிரச்சனைகளும் உண்டானது என்று சூழ்ச்சியோடு சோழி போட்டுச் சொன்னான்.

ஆலமரத்தைப் பிடித்த பேய் அத்தி மரத்துக்கும் ஆசைப்பட்டதாம் என்ற கதையாக கோட்டை கொத்தளத்துக்கு வெளியே உள்ள ஆலமரத்தடியை தேர்ந்தெடுத்து அங்கே சிறு ஆலயம் கட்டி கண்டியம்மன் இடம் மாற்றம் ஆன பின்பு ஒருநாள் கலங்காத கண்டிக்கு மன்னராகும் ஆசையில் நம்பூதிரியுடன் சேர்ந்து ராஜதந்திரத்துடன் மந்திரி செயல்பட்டதை அறிந்த மன்னன், அமைச்சரை கோட்டைக்குள்ளேயே ரகசிய அறையில் சிறை வைத்தான்.  

நம்பூதிரி உதவியுடன் மீண்டும் ஆற்காடு நவாப் கலங்காத கண்டிக்கு படை எடுத்து வர ராஜா தன் மனைவி மற்றும் படையோடு மலையகம் தப்பிச்செல்கிறார்.   

எல்லார் வீட்டுத் தோசையிலும் ஓட்டை இருக்கும், எல்லா நிலத்துக்கும் ஒரு அம்மன் கதை இருக்கும். எல்லாருக்கும் உண்டு இலையும் பழுப்பும். சளி பிடித்தவன் தும்முறது மாதிரி முகம் சுழிக்காம, மிஞ்சின மக்களும் பகவதிங்கிற கண்டியம்மனை வணங்க ஆரம்பிச்சாங்க.

ஏழு திசைய ஆளும் அம்மாவை கூப்பிடுவோமா, உடம்புல சாமியாடி வந்தா பாத்து பத்திரமா புடிச்சிக்கோங்க என்றபடி அணைத்திரையன் கதையைக்கூறி முடித்த கோட்ட வாசல் கேரள ஆதி திராவிடர்கள் பாவக்கணக்கைப் பாடுறோம் வா தாயி என்று தீச்சட்டியை கையில் ஏந்தி பாட ஆரம்பித்தனர். 

என் தாயே ஈஸ்வரியே
என் தாயி பெறந்த இடம் அந்த தங்க நல்ல மலையாளம்.
அங்க உளுந்து வெளையுமடி.. உளுந்து வெளையுமடி
எங்க பெத்தவளே ஈஸ்வரியே உசந்த நல்ல மலையாளம்
அங்க ஏலம் வெளையுமம்மா.. தேயிலை வெளையுமம்மா
எங்க ஆத்த ஈஸ்வரியே ஏவி வந்த மலையாளம்
எம்மா வடக்க ஒரு வட காசி
என் தாயே ஈஸ்வரியே தெக்க உன் தென்காசி
இந்த இலை குலுக்கா ராவினிலே தென்காசி உன் எல்லைக்கு
எல்லக்கல்லைத் தாண்டி வந்தோம் எல்லக்கல்லைத் தாண்டி வந்தோம்.

வடகரை கட்டி அரசாளும் வண்ண மயில் அழகி

வாருமம்மா எங்க பார்வைக்கி……வாருமம்மா எங்க பார்வைக்கி…

கோடாங்கி சத்தத்துடன் தொடர்ந்து பாடல் உச்சம் பெற, திடீரென கூட்டத்தில் இருந்து எழுந்த பெண் சாமி வந்து ஆட, அவளை மஞ்சள் சேலையால் போர்த்தி குங்குமமிட்டு சில பெண்கள் அணைக்க, “என்ன பிடிக்காத, என்ன பிடிக்காத, வடக்க ஒருத்தி அணைக்கரைய பாத்து போயிட்டிருக்கா சாவத்தேடி, ஓடுங்கடா ஓடுங்க” என்றதும் திமுதிமுவென ஆண்கள் கூட்டம் அணையின் வடதிசை நோக்கி இருட்டில் ஓடத்துவங்கியது.

***

முஹம்மது யூசுப் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தற்போது பணியின் நிமித்தம் அபுதாபியில் வசித்து வருகிறார். இவர் கனவுப் ப்ரியன் என்கிற பெயரில் இரு சிறுகதைத் தொகுப்புகள் கொண்டு வந்துள்ளார். (கூழாங்கற்கள், சுமையா). அதனைத் தொடர்ந்து இவரது மூன்று நாவல்கள் வரிசையில் முதலிரண்டு மணல் பூத்த காடு, கடற்காகம் ஆகியன வெளிவந்துள்ளன. மூன்றாவதாக ‘தட்டப்பாறை’ எனும் நாவல் வெளிவரயிருக்கிறது. தொடர்புக்கு – usooff@gmail.com

எட்டே முக்கால்

0

ரமேஷ் ரக்சன்

ருட்டுவதற்கு முன்பாகவே சாலையோரம் உள்ள மின்விளக்குகள் போடப் பட்டிருந்தன. வாழைக்காய் லோடு ஏற்றிச் சென்ற டெம்போவின் மேலிருந்து வாய்குளறியபடி ஆனால் புரிந்துகொள்ளக் கூடிய கெட்டவார்த்தை போட்டு மின்சார ஊழியர்களைத் திட்டிக்கொண்டு, வாழைக்குலை உதிரி ஒன்றை எடுத்து டியூப்லைட்டை நோக்கி எறிந்தான். அது டியூப்லைட்டில் படாமல் தக்காளி வயலுக்குள் விழுந்தது. வீரகாளியம்மன் கோயில் முன்பிருக்கும் வேகத்தடையில் டிரைவருக்கு சத்தம் கொடுத்துவிட்டு இறங்கிக் கொண்டான். வீரகாளியம்மன் கோயிலுக்குப் பின்புறம் செல்லும் தெருவில்தான் சாமிதுரைக்கு வீடு. மேய்ச்சலில் இருந்து திரும்பிய மாடுகள் பின்னாலேயே வந்தான். கறைகள் படிந்திருந்த சட்டையை தெரு வழியே பட்டன் போட்டுக்கொண்டு நடந்தான். எல்லாம் ப்ரெஸ் பட்டன். அவனுக்கு காஸா வைத்து பட்டன் போடுவதோ சட்டையைக் கழற்றவோ வராது.

சட்டையின் நடுவே கை நுழைத்து படபடவென அனுமார் நெஞ்சு போல இழுக்கப் பிடிக்கும் சட்டை கழட்டும் அந்த டப் டப் ஓசையைக் கேட்க அவனுக்குப் பிடிக்கும்.

கல்லூரியில் வாலிபால் விளையாடும் வீரர்கள் இருவர் தங்களுடைய கை பெலனை ஜம்ப்பிங் சர்வீஸ் போட இன்னும் கொஞ்சம் ஏத்திக்கொள்ள வேண்டி, வடங்கயிறுக்கான சொந்தக்காரரிடம் பொங்கல் முடிந்த பிறகும், அவிழ்க்க வேண்டாமெனக் கேட்டிருந்தனர். அவரும் கெடுபிடி காட்டாமல் சரி என்றதால் அங்கேயே தொங்கிக் கொண்டிருந்தது. இருவரும் ஏறி ஏறிப் பயிற்சி எடுத்து முடித்ததும் மரத்தின் மேலே தூக்கிப் போட்டுச் செல்வார்கள். மறுநாள் காலையிலும் மாலையிலும் ஏதாவது ஒரு கம்பின் துணை கொண்டு கீழே இழுத்துக் கொள்வார்கள். இந்த விளையாட்டு சாமிதுரைக்கும் பிடித்திருந்தது. அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சிரிப்பு யாருக்கானதென்று தெரியாது. ஆனால் அந்த திசை பார்த்துச் சிரித்தான்.

***

ஒன்பதாம் வகுப்பு காலாண்டுத் தேர்வு விடுமுறையோடு பள்ளி செல்வதை நிறுத்திக் கொண்டான். நிறுத்தச் சொல்லி கேட்டுக் கொண்டார்கள்.

அதற்கு ஒரு வருடம் முன்னதாகவே அவன் உடல் மொழியில், பார்க்கும் திசையில், பேச்சில் மாற்றம் தெரிந்தது. “அப்பன மாதிரியே மழுமட்டை பயலாலா ஆயிருவான் போலயே” இவனை பையன்கள் விளையாடுவதற்காக அழைக்க வரும் போதெல்லாம் மனதிற்குள் நொந்து கொள்வாள். ஒரு நேரம் கவலை கொள்வதாகவும், சில நேரம் ஆதங்கமாகவும் வெளிப்படும். அவளின் கோபமானது மடியில் வைத்து சுத்திக் கொண்டிருக்கும் சாணி மெழுகி காய வைத்த பீடித் தட்டில் வெளிப்படும். அந்த வட்டத் தட்டில் சொருகி வைத்திருக்கும் கம்பியில் தான் நூல்கண்டு பொருத்தப்பட்டு இருக்கும். அதை ஆத்திரத்தில் தூக்கி எறியும் பழக்கமும் அவளிடம் இருந்தது. பீடிக்கணக்கு கொடுப்பதிலும், பீடி மடக்கி வண்டல் போடுவதற்கும் தாமதம் ஆவதையும் உணர்ந்து நிறுத்திக் கொண்டாள். சில நேரம் கத்தரி முனை அவளைத் தூண்டும். ஒரேயொருமுறை தரையில் குத்தியிருக்கிறாள். தன் பயத்தில் சினுக்குவாரியலைத் தூக்கிப் போட்டிருக்கிறாள்.

மூன்று வேளை சாப்பிடுவதும், சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் உடங்காட்டிற்கு சென்று வருவதும், இடைப்பட்ட பகல் நேரத்தில் ஓட்டிற்கும் பனங்கம்பிற்கும் இடையே இருக்கும் ஓட்டடையையும், சிலந்திவலையையும் சன்னலோரத்தில் கிடக்கும் பூ போட்ட வொயர் கட்டிலில் படுத்தபடி பார்த்துக்கொண்டே இருப்பான். சன்னல் கம்பியில் இடதுகாலை நீட்டி கையை ‘அங்கேயே’ வைத்திருப்பான்

சாமிதுரை வாழைக்காய் லோடிற்கு செல்ல ஆரம்பித்ததிலிருந்து அவளுக்கு இந்தப் பிரச்சனையில்லை..

எந்தப் பட்டப் பெயர்களும் இல்லாமல் இருந்தவனுக்கு, அவனின் சிரிப்புச் சத்தம் விக்கலின் வேகத்தைக் குறைத்து, மூன்று நொடிகளுக்கு ஒருதடவை எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இழுத்து இழுத்து சிரிக்கத் தொடங்கியதிலிருந்து அவனை ‘எட்டேமுக்கால்’ என்றும், ‘செல்லக்கிறுக்கன்’ என்றும், ‘கோட்ட’ என்றும் அழைக்கத் தொடங்கியிருந்தனர். அவனோடு பள்ளியில் படித்த ஊர் நண்பர்கள் மட்டும் அவனை ‘மூணுகாலன்’ என்பார்கள். அவனுக்கு தன்னை திட்டுவதெல்லாம் தெரியாமலே போயிற்று. அவனுடைய விளையாட்டு மட்டும் அவனிடமிருந்து விடைபெறாமல் இருந்தது. பார்வைத்திறன் குறையாமல் இருந்தாலும் பார்க்கும் திசையிலிருந்து பார்வை தப்பியிருக்கும். அதனாலேயே கிரிக்கெட்டில் அவனுக்கு இடமில்லை. 

சொன்னது போலவே செய்யும் கிளிப்பிள்ளை ஆனதும் அவனது பள்ளிக்கூடத்தை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சாமிதுரையின் அம்மாவும் இவன் நடவடிக்கைகளை உணர்ந்திருந்ததால் மறுப்பேதும் சொல்லாமல் tc வாங்கிக் கொண்டாள். சிந்திக்கும் திறனற்றுப் போய்விட்டதை, மக்காச்சோளத் தட்டையை ‘பசங்க’ சொல்லி தன் மீது எறிந்தான் என சாட்சி சொல்ல நின்ற வாத்தியார் வாய்திறக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது.

சாமிதுரையிடம் கேள்விகளே இல்லாமல் ஆனது. யார் என்ன சொன்னாலும் செய்வான். மண்டையை ஆட்டுவான். மூன்று வேளையும் சாப்பிடுவான். அவனின் சாப்பாட்டு அளவு கூடிக்கொண்டே போனது. “பொங்கிப்போட்டு முடியல” என ரேஷன் கார்டை மாதாமாதம் தேடி எடுக்கும் போதெல்லாம் சொல்லிக்கொள்வாள். மகன் பாரமாகிப்போனது குறித்த அவளது வருத்தம் நாளடைவில் கொலைகிராதியாக மாற்றியிருந்தது. இதையும் அவளுக்கு அவளே சொல்லிக்கொள்வாள். அவளிடம் தாய்மையின் அச்சு முறிந்திருந்தது. “இடிவுழுவான் சீக்கிரம் போய் சேர்ந்தாமில்லையே” என்றே அனத்துவாள். சாமிதுரைக்கு அப்போதும் சிரிப்புதான். ஆனால் அந்த முக அசைவில் ஏதோ புரிந்தது போலிருக்கும். சிரிப்பின் தன்மை மாறுபடும்.

சாமிதுரையின் கைகள் நீளமானது. விரலும், விரல் நகங்களும்கூட நீளம் தான். வளர்ந்த நகத்தை வெட்டி ஒரு கத்தி போலப் பயன்படுத்தலாம். அவ்வளவு வலுவாக இருக்கும். பிடித்துத் தள்ளினால் போய் விழுவானே தவிர, திருப்பித் தாக்கத் தெரியாதவனாக கால் பிடியில் தரையில் ஊன்றி நிற்க முடியாதவனாக ஆகிவிட்டான். அவனின் உடல் திறன் அசாத்தியமானது. கோயிலில் கிடக்கும் மாப்பிள்ளைக்கல்லைத் தூக்கும் திறமை அவனிடம் இருந்தது. அதை வைத்தே வாழைக்காய் லோடு ஏத்திவிட சுமை தூக்கியாகவும், வண்டி ஓட்டுநராகவும் இருந்த எதிர் வீட்டு இசக்கி சேர்த்துக் கொண்டார். ஆளைப் போல குறைவில்லாத சம்பளம் சாமிதுரை அம்மாவின் கைக்குப் போய்விடும்.

பள்ளிப்படிப்பை நிறுத்தியபின் வரும் முதல் பொங்கல். ஊரெல்லாம் பாட்டுச் சத்தம் இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்தது. பையன்கள் தெருவில் ஓடிப்பிடித்து விளையாடுகையில் எழுப்பும் அலறல் சத்தம் சாமிதுரையின் புன்னகையை மாற்றியிருந்தது. தெருவெல்லாம் வண்ண வண்ணக் கோலங்கள் பார்த்து அவன் கண்கள் மிகவும் பிரகாசமாக இருந்தன. ‘இப்படி ஒரு பிள்ளைய பெத்துட்டமே என்று புலம்பியவள், சாமிதுரையை கூட்டிக்கொண்டு ஜவுளிக்கடைக்கு கிளம்பினாள். கொண்டியில் தொங்கிக்கொண்டிருந்த பூட்டைத் திறந்து கதவைப் பூட்டப் போனவள், அவசரவசரமாக வீட்டிற்குள் சென்று விளக்குப் போட்டாள். திருநீறு பூசி விட்டாள்.

செவ்வக வடிவிலான வரவேற்பறை அளவிற்கு இருந்த அந்த துணிக்கடையில் பொங்கல் கூட்டம் அலைமோதியது. கூச்சப்பட்டு நின்றாள். ஒருவழியாக “பையனுக்கு காலுக்கு நடுவுல கொஞ்சம் நல்லாவே கீழ இறக்கம் இருக்கற மாதிரி ஜட்டி குடுங்க; இவனுக்குத்தான்” கைகாட்டினாள். அவருக்கு கோக்குமாக்காகத் தெரிந்தான். புது வரவான Three by Forth மாதிரி எடுப்போமா என்றார் கடையில் நின்றவர். “முக்கா பேண்ட்மா முழங்காலுக்கு கீழ கெடக்கும்” என்றார். “நல்லதா போச்சு அதையே தாங்க”. முக்கால் பேண்ட் இரண்டும், அவசரத்திற்கு ஒரு டீ ஷர்ட்டும் எடுத்துக்கொடுத்தாள்.  

சாமிதுரைக்கு வேட்டி கட்ட வராது. உடலில் எல்லாமே அவனுக்கு அளவிற்கு மீறிய வளர்ச்சி. இதுவே அவளுக்கு அருவருப்பைத் தந்தது. சாரத்தைக் கட்டி பழகச்  சொன்னால்கூட கட்டமாட்டான். அவனுக்கு இடுப்பில் நிற்கும் உணர்வே இல்லையா என்றும் தோன்றியது உண்டு. இதனாலையே வெள்ளிக்கொடியை கழட்டிவிட்டு கருப்புக் கயிறு வாங்கிக் கட்டி விட்டிருந்தாள். பொங்கலுக்கு ஆறுமாதம் முன்பு டெய்லரிடம் சொல்லி டவுசரை இறக்கித் தைக்கச் சொல்லி வாங்கியது கூட பலனளிக்காமல் போயிருந்தது.

அவனுக்கு குரலென்று ஒன்று இருப்பதே எல்லோருக்கும் மறந்து போயிருந்தது. அதிசயமாகப் பேசுவான். பொங்கலன்று, பழைய சாமிதுரையின் குரல் இல்லாவிட்டாலும், திக்கித்திக்கி பதில் சொல்லும் அளவிற்குப் பேசினான். அவனைவிட வயது குறைந்த சின்னப் பசங்களோடு அவனையும் நிற்கவிட்டு, அவன் வாயிலும்  ஒரு ஸ்பூனைக் கொடுத்து எலுமிச்சைப் பழத்தை வைத்து விதிமுறையைச் சொன்னார் அந்த போட்டியை நடத்துபவர். கைதட்டல்களும், அவன் பெயர் திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படுவதும் ஒரே நாளில் எல்லாமே மாறிவிட்டதாக சாமிதுரையின் அம்மாவிற்குப்பட்டது. பரிசுக்கான பாத்திரங்களை வாங்க மேடையேறும் போது புது டீ ஷர்ட் அணிவித்து விட்டாள். அவனுக்கு கழுத்தை நெறிப்பது போல இருந்தது. இருந்தும் போட்டுக் கொண்டான். மறுநாள் பயல்களோடு அனுப்பி வைக்க முடிவு செய்தாள்.

காணும் பொங்கலன்று மலையடிவாரத்திற்கு சென்று வந்தவன் எட்டேமுக்கால் சாமிதுரையாக திரும்பி வந்தான். பரந்தவெளி அமைதியும், விழுங்குவது போல உயர்ந்து நின்ற மலையும் பயம் காட்டியிருந்தது. பனைமரங்களின் உயரமும், அதன் தலையும், காற்றில் உரசும் காவோலை ஓசையும் மிகுந்த கலவரத்தை உண்டு பண்ணியிருந்தது. வீட்டிற்கு வருவதற்கு வழி தெரியும். ஆனாலும் தேங்கி நின்றான். அவனுக்குள் கேட்கும் கட்டளையின் தொனி மாறியிருந்தது. அந்தக் குரலின் சீற்றம் பயமுறுத்தியது. பையன்களின் விளையாட்டு ஆர்வத்தில் அவர்களுக்கு அவன் நினைவில் இல்லாமல் போயிருந்தான்.

தேரி மணலையொத்த செம்மண் குவியலில் கபடி விளையாட சாமிதுரையையும் சேர்த்துக் கொண்டனர். கபடி பாடி வருபவர்களிடம் அடிபடும்போதெல்லாம், வாயில் வந்த பட்டப்பெயர்கள் எல்லாம் சொல்லித் திட்டு வாங்கினான். இரண்டு நாட்களாகக் காணாமல் போயிருந்த பழைய “கோம்ப” சிரிப்பு. அதே சிரிப்பு. சாமிதுரையைத் தொடுவதற்கே அதன் பிறகு பயமாக இருந்தது. அவனை கரையில் இருக்கச் சொன்னார்கள். பதில் பேசாமல் அமர்ந்து கொண்டான்.

சாமிதுரையின் கண்கள் மறுபடியும் அலைபாயத் தொடங்கியது. மேக்காற்று மண்ணள்ளித் தட்டியது. அவன் கண்ணிற்கு உறுத்தவில்லையா என்பதை அவனிடம்தான் கேட்க வேண்டும். சில நேரம் நிலைகுத்தி நின்றான். கழுத்து இறங்கி பார்வை மேல்நோக்கி நின்றது. சூரியன் இறங்க இறங்க அவன் மாறிக்கொண்டே இருந்தான்.

எல்லாரோடும் ஆளைப்போல நடந்து வீடு திரும்பியவன் குளித்தான். சாமிதுரையின் கண்களில் ஏதோ ஒன்று தென்பட்டது. அவ்வளவு இறுக்கமாக கட்டிக்கொண்டு அழுதாள். தடுமாறி விழுந்தவன் மேலே கிடந்து அழுதாள். அதே சிரிப்பு. மளமளவென அவனைக் கிளப்பி, கோயிலில் தண்ணீர்கோரி எறியலாமென கூட்டிச் சென்றாள். வழியிலேயே கோயில் பூசாரி தென்பட்டார். பொங்கலுக்கு வெள்ளையடித்தது. வீடு சுத்தமாக இருந்தது. தன் வீட்டில் வைத்தே தண்ணீர்கோரி எறிந்து திருநீறு போட்டுவிட சம்மதித்தார்.

பூசாரி தன் மனைவியிடம் “அந்தப் பய கண்ல ஒரு சாவுக்களை தெரியுது சீக்கிரம் போயிருவான் போலுக்கு” என்றார். சாமிதுரையின் கண்களில் யானைக்கு நீர் வடிவது போல வடியத் தொடங்கியது. அவன் முகத்தில் தென்பட்ட பொலிவுக்கும், கண்களுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது. பூசாரியின் மனைவி, சாமிதுரை அம்மாவிடம் சொல்ல முற்படும் போதெல்லாம் கண்ணீர் முட்டிக்கொண்டு வரும். அதைச் சொல்லும் தைரியம் அவளுக்கு ஒரு போதும் வாய்க்காதிருந்தது.

மறுநாளில் இருந்தே வாழைக்காய் லோடிற்கு சென்று கொண்டிருந்தான். எப்போதும் இரத்தவோட்டம் தென்படும் விரல் நகங்கள் வீட்டிற்கு வரும்போது வெளிர் நிறமாக மங்கித்தெரியும். வேலை நேரத்தில் இந்த வித்தியாசம் இருக்காது. பழக்கப்பட்ட நாய்கள் கண்டு ஒதுங்கிப் போனான். அம்மாவுக்கும்  மகனுக்கும் அதே மெளன உரையாடல். ஏதோ ஒருவகையில் தன்னை தயார்படுத்திக்கொண்டே வந்தாள். அழுகை வராமல் போனது. அவளையே சபித்துக் கொண்டாள்.

***

எதுவுமே சாப்பிடாமல், கறைபடிந்த சட்டையை மாற்றிவிட்டு பொங்கலுக்கு எடுத்த டீ ஷார்ட் முக்கால் பேண்ட்டை மாட்டிக் கொண்டு, அரசமரத்தடியில் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தான். பூவரச இலையில் கோயிலில் கொடுத்த வெண் பொங்கலை வாங்கிச் சாப்பிட்டான். கோயில் நடை சாத்தியதும், வீட்டிற்குக் கிளம்பாமல் அங்கேயே அமர்ந்திருந்தான்.

கட்டளைக்கு அடிபணியும் அந்த சாவுக்களை கொண்ட கண்கள், யாருக்காகவோ காத்திருந்தது. காதை இழுத்து இழுத்து விட்டுக் கொண்டிருந்தான். அவன் சுயத்தின் நினைவு தப்பி, உடலை இறக்கி வைப்பதற்கான இறுதிக்கட்டத்தை அரச இலைகள் காற்றில் சலசலத்து வரவேற்றுக் கொண்டிருந்தன. அடைவதற்குக் கடந்த காகம் தலையில் எச்சமிட்டுச் சென்றது. வெள்ளிக்கிழமை வெண்பொங்கல் வாங்கித் தின்னவந்த பிள்ளைகள் கயிற்றை இழுத்துப் போட்டு விளையாடி அப்படியே விட்டுச் சென்றிருந்தனர். அந்த அழைப்பிற்காக காத்திருந்து வடமேறினான் / இறங்கினான். அதே விளையாட்டு. அதே சிரிப்பு. பொங்கலன்று வடமேறி  ஜெயித்ததற்காகப் பரிசாகக் கிடைத்த தாம்பூலத்தட்டு அவன் கண்களில் மெல்ல மெல்லத் தெரிந்தது.

மேல்நோக்கிப் பார்த்து ஏறாமல் காட்சி தப்பி எங்கோ பார்த்து ஏறினான். அவனுக்கு உயரத்தின் அளவு எப்படியோ தெரிந்திருந்தது. கட்டளையின் சுவை எச்சிலாக கூடிக் கொண்டே போனது. கட்டளையின் மொழி ஹ்க் ஹ்க் ஹ்க் ஹ்க் ஹ்க்.

கயிறு கட்டியிருந்த கிளையை எட்டிப் பிடித்து இன்னும் ஒரு எட்டு மேலேறி கால்களால் கிளையைப் பின்னி, கைகளைத் தொங்கப்போட்டான். கருப்புக் கயிறு விலா எலும்பில் தட்டி நின்றது. டீ ஷர்ட் முகத்தை மூடியது.

கட்டளை வந்ததும் வெளவால்கள் பறந்தன..

***

ரமேஷ் ரக்சன் இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள் 16, ரகசியம் இருப்பதாய், பெர்ஃப்யூம் மற்றும் ஒரு நாவல் “நாக்குட்டி” வெளிவந்துள்ளன. ஆசிரியர் தொடர்புக்கு – rameshrackson@gmail.com /

சக்கரப் பற்களில் சிக்கிய வாழ்வு

0

ஸ்டாலின்சரவணனின் ‘ரொட்டிகளை விளைவிப்பவன்‘ கவிதைநூல்விமர்சனம்

நாராயணி.சுப்ரமணியன்

“பூமியில் ஒவ்வொரு புல்லும் மண்ணிலிருந்து தனக்கான உயிராற்றலைப் பெற்றுக்கொள்வதுபோல, மனிதனும் நிலத்தோடு வேர்விட்டு தனது வாழ்வையும் வாழ்வதற்கான நம்பிக்கையையும் பெற்றுக்கொள்கிறான்” என்கிறார் ஜோசப் கான்ராட். இயற்கைக்கும் மனிதனுக்குமான இழுபறி தன் உச்சத்தை எட்டியிருக்கும் இக்காலகட்டத்தில் இயற்கை / நிலம்சார் எழுத்து என்பதே ஒரு அரசியல் செயல்பாடு. நில வர்ணனை, எப்போதோ இருந்த நிலம் பற்றிய ஏக்கக்கனவு, இப்போதைய பிறழ்ந்த நிலம் பற்றிய கையறுநிலை ஒப்பாரி என நிலம் சார்ந்த எழுத்துக்கள் எல்லாமே சமகால வாழ்வியலின், அதன் மீதான அரசியல் கறைகளின் அழுத்தமான பதிவுகள்.

பூஞ்சை மனசுள்ள அமைதி நிறைந்த பொக்லைனாக இருக்கட்டும், சக்கரப் பற்களில் விரல்களைக் கடிக்கிற நில இயந்திரமாகட்டும், நெஞ்சிலறைந்து எத்தனை அழுதாலும் நிலத்தை விட்டு வெளியேறாமல் பிடிவாதம் பிடிக்கின்றன. ஸ்டாலின் சரவணனின் கவிதைத் தொகுப்பு இந்த ஆக்கிரமிப்பின் மௌன சாட்சியாக அதை ஆவணப்படுத்துகிறது. கால்களைப் பறத்தலுக்குத் தந்தவர்களையும் இழுத்து நிலத்தில் நிறுத்துகிறது.

அறம், பொருள், இன்பம் என்று இந்த நூலின் மூன்று பகுதிகளை மிகத்தளர்வான பகுப்புகளுக்குள் வைக்க முனைகிறேன். முதல் பாகம் யவனிகா ஶ்ரீராமுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. வயல் ஓரத்தில் மருதத்தின் மதியங்களில் சுழலும் தூக்கத்தோடும், கனவுகள் அறுந்த துயரோடும் பேசிக்கொண்டிருக்கும் ஒருவனை இது முன்வைக்கிறது. இயந்திரங்கள் மீதான மனிதர்களின் பார்வையையே ஒரு பெரிய வரலாறாக எழுதலாம். புதிய ஒரு கருவியைக் கண்டதும் வருகிற வெளியாரச்சம் (Xenophobia), பழகியபின் அது வேலைகளை முடிக்கும் அசுரவேகம் கண்டு வரும் பரிவும் இளைப்பாறுதலும், அது தன்னை மீறியும் செயல்படக்கூடும் என்று உணரும்போது வரும் மீள் அச்சம் ஆகியவை எல்லா பெரிய இயந்திரங்களுக்கும் பொருந்திப்போகும். “அது வெறும் இயந்திரம் : It is just a machine” என்பது எவ்வளவு ஒரு அடர்த்தியான வாக்கியம் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறது. அப்படி எளிதாகப் புறந்தள்ளப்பட்ட இயந்திரங்களைக் கழுத்தில் கட்டிக்கொண்டேதான் மெதுவாக முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். ருட்யார்ட் கிப்ளிங் (Rudyard Kipling) எழுதிய இயந்திரங்களின் ரகசியம் (The secret of the machines) கவிதை நினைவுக்கு வருகிறது. யோசித்து முடிக்குமுன் உணர்வுகளற்ற பொக்லைன் இன்னுமொரு சிற்றிலைச் சிதைக்கிறது.

நிலத்தால் கைவிடப்பட்டவர்களும் நிலத்தைக் கைவிட்டவர்களாலும் காகங்களை மட்டுமே தூது அனுப்ப முடிகிறது. திணை கடந்த உறவில் பாலைவனத்தில் முயங்குபவனைக் கண்டு சூரியனே திகைத்தோடுகிறது. பரோட்டாக் கடையில் வேலை செய்யும் விவசாயிக்காக நிலமே வெடித்துக் கதறுகிறது.. அதிகாரத்தாலோ இயற்கையின் கையறு நிலையாலோ நிலத்திலிருந்து துரத்தப்பட்டவர்களின் அலைகழிப்பு என்றும் தீர்வதேயில்லை. நினைவில் நிலமுள்ள மிருகங்களாக, வறிய நாவுகளோடே வாழ்வின் இறுதிவரைக்கும் திரிய விதிக்கப்படுகிறார்கள். இந்த அலைக்கழிப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கின்றன இந்தக் கவிதைகள். 

பச்சை நிறக்குழல் விளக்குகள் எரிகிற, ஆண்கள் நிறைய புழங்குகிற சாலையோர  பரோட்டாக் கடைகள் பல கேள்விகளை, தீராக்கவர்ச்சியை, கண்ணுக்குத் தெரியாத பயத்தைத் தந்தபடியே இருக்கின்றன. பொதுவாகப் பெண்கள் அதிகம் நுழையாத அவ்விடங்களில் என்ன பேசிக்கொள்வார்கள், ஏன் வெள்ளை நிறத்திலல்லாமல் இங்கே பச்சை நிற விளக்குகள் எரிகின்றன என்றெல்லாம் மாய்ந்து மாய்ந்து யோசித்திருக்கிறேன். குடிக்காதவனுக்குக்கூடக் காரம் தூக்கலாக மட்டுமே ஆம்லேட் கிடைக்கும் இடம் என்ற ஒரு புதிய புரிதலைத் திறந்துவிடுகிறது “காரம் நிமித்த இரவுகள்” கவிதை. மூன்றாவது வார்டில் செவிலியரிடம் இறைஞ்சுபவர்கள் இந்தக் கடைகளின் மிளகாய்ச் சீவலுக்குத் தன் மிச்சசொச்ச குடலையும் பொத்தலிடுவதற்கென்றே அர்ப்பணிக்கிறார்கள். குடிநோயாளியாக ஒருவனை மாற்றுகிற சமூகம் தனது இறுதி வன்முறையை மிளகாயின்வழி ஏவுகிறது.

ஒழுங்கற்றவனின் வாழ்க்கை ஒன்றைப் பேசும் கவிதையில் குக்கரின் விசில் சத்தமே கலவிக்கான சங்கீதமாகிறது. ஒழுங்கானவர்களைக் கொண்டாடித்தீர்க்கும் சமுதாயத்தில் நாம் எல்லாருமே ஒழுங்கற்றவர்களாகத்தான் இருக்கிறோம். ஒழுங்கை மீறுகிற எல்லாரும் ஒரு பெரும் புரட்சி மனநிலையில் அப்படிச் செய்வதில்லை……கோடுகளை மீறுகிற மனம் ஒரு ஆட்டுக்குட்டியின் உற்சாகத்தில் துள்ளும். காலம் / விதிகள் ஆகியவை சார்ந்த நீண்ட மஞ்சள் கோடுகள் நிறைந்த சாலையில் வளைத்து வளைத்து வண்டி ஓட்டிக்கொண்டிருப்பவர்களைப் பற்றியும் யாராவது பேசவேண்டும்தானே!

யூமா வாசுகிக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிற இரண்டாம் பாகத்தில் கூழாங்கற்கள் சிதறிக்கிடக்கின்றன. மலைகளின் நீட்சியென அவை திக்குபவனின் வாய்க்குள் உருள்கின்றன. கொஞ்சமாகத் தண்ணீர் சிதறினால் நனையலாம் என்று குளத்தின் மேல்படிகள் காத்துக்கிடக்கின்றன. மருதத்திலிருந்து குறிஞ்சிக்குப் போய்விட்ட இந்தக் கவிதைகள் மலைகளைக் கீழிருந்து அண்ணாந்து பார்ப்பவை, மலையேற எத்தனிப்பவை, குளிர் இரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கம்பளி போர்த்தியபடி வாழ்வை வாசிப்பவை. சென்ற பாகத்தில்  காலில் படிந்த ஈரமண்ணைக் குளக்கரையில் அலசச் செய்பவை. அதே மலையின் உச்சியில் தேவன் இசைக்கிற குறிப்புகளுக்கு மகுடிப் பாம்பென தலையசைக்க வைப்பவை. கவிதைகளைப் படிக்கும்போதே யூகலிப்டஸ் வாசம் எங்கிருந்தோ வருவது போலிருந்தது.

சமீபகாலமாகவே வெயிலோ மழையோ, விண்ணிலிருந்து கருணையென நம்மீது இறங்குவதில்லை. பருவகாலங்கள் ஒரு சாட்டையென நம் முதுகில் சொடுக்கப்படுவதைச் சொல்கிறது “வாளேந்திவரும் வேனிற்காலம்” என்ற வரி. நகரத்தின் கோடையும் கிராமத்துக் கோடையும் வேறு வேறானவை. நகரங்களின் கோடைகள் ஏனோ ஒரு கழிவிரக்கத்தையும், சுயவாதை மனப்பான்மையையும் கூடவே கொண்டு வருபவை. கோடைக்கும் அவனுக்கும் நிரந்தரமாய் நடக்கும் யுத்தத்தில் அவனது ஒரே ஆயுதம் ஒரு ஈரத்துண்டு. கோடை வென்றுவிடுகிறது என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா? எழுதுவதைப் பாதியில் நிறுத்திவிட்டு மின்விசிறியின் வேகத்தை அதிகரித்துக் கொள்கிறேன்.

ஒரு குவளை தனிமை” பேசும் தனிமை பற்றித் தனியாகக் கட்டுரையொன்று எழுதவேண்டியிருக்கும். “யாருமே எப்போதுமே வேண்டாம்” என்ற தனிமையைத்தான் மனநோய் என்கிறது மருத்துவ உலகம். ஆனால் தீங்கற்று, “அவ்வப்போது யாரேனும் இருந்தால் போதும், மற்றபடி விட்டுவிடுங்கள்” என்று கேட்கிறவனின் கையைப் பிடித்துத் திருகிக்கொண்டேயிருக்கிறது சமூகம். “எல்லாரும் எப்பவும் ஒன்னா இருந்தாதான் சந்தோஷம்” என்கிற வார்த்தைகளை நம் வீடுகளின் கொடிகளில் பதித்து வைத்திருக்கிறோம். தனிமையை வேண்டுபவனை அன்பை நிராகரிக்கிற குரூரன் என்று அழைக்கிறோம். விலகி விலகி வாழ்வுக்குள் இயல்பாய்த் திரும்ப விரும்புகிற மனிதனுக்கும், வாசற்படியை நோக்கிக் கால்கள் திரும்பினாலே அலறிப் பதறுகிற சமூகத்துக்கும் நடக்கிற இழுபறியை நினைவுபடுத்துகிறது இந்தக் கவிதை.

ரமேஷ்-ப்ரேமுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிற மூன்றாவது பாகம் பற்றியெரிகிற நெருப்பின் வேகத்துடனும், சிலசமயம் ரொட்டியின்மீது பூஞ்சை படரும் நிதானத்துடனும் வாழ்வைப் புணர நினைப்பது. அன்பு / காதல் என்பது பலவண்ணப் பட்டுநூல்களின் சிக்கல். காமமோ அளவுகோல் வைத்து வரையப்பட்ட வெள்ளைக்கோடு. இந்த இருமையையும் அதனால் வரும் இருண்மையின் அலைக்கழிப்புகளையும் எதிரொலிக்கின்றன இந்தக் கவிதைகள். கண்களைத் தாண்டாத பார்வை நட்புக்குத்தான் சரிவரும். காதலோ கண்களுக்குள்ளேயே தொலைந்துவிடுகிறது. கால் கட்டைவிரலின் உடைந்திருக்கும் நகத்தையும் பாவாடை கட்டி இறுகிய வளையத்தையும் ரசிக்கிற கண்கள் காமத்துக்கே வாய்க்கின்றன. ஈரம் சொட்டும் கூந்தல் நுனியோடுதான் காமத்தின் தாகம் முழுமையாகத் தீர்கிறது.

அருவருப்புகளைக் கட்டுடைக்கும் “சீழ் மணக்கும்” காதல்  காயங்களை விரல்நகத்தால் சுரண்டியபடி ஒற்றை முத்தத்துக்கெனக் காத்திருக்கிறது. சுமந்து செல்லவேண்டிய எடையை எண்ணி அலுத்துக்கொள்ளும் அதே காதல்தான் அவள் கையில் மீனென அறுபடவும், கொதிக்கும் குழம்பில் துள்ளி அவளிடம் பின்மண்டையில் அடிவாங்கவும், உயிர் உருகும் கோழியென அவளுக்கு பலியாகவும் தயாராக இருக்கிறது. மொத்த வாழ்வையும் ஒரு தட்டில் வைத்து ஒப்படைக்கும் பித்து நிலைக்கும் நினைவுகளை அறுக்கத் துடிக்கிற கத்திக்கும் இடையில் ஊசலாடுகின்றன இக்கவிதைகள்.

இரவாட்டம் கவிதையில் கூட்டுக்குடும்பங்களிலும் ஒண்டுக்குடித்தனங்களிலும் போர்வைக்குள் மகிழ்ந்திருப்பவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். பெய்கின்ற மழை, சரசரவென்று எரிகின்ற நெருப்பு, படர்கின்ற இருள், நீர்க்குமிழியிலிருந்து உடைந்து பூமிக்குள் விழும் யாக்க, என பலவிதமாக விளையாட்டு காட்டுகிறது காமம். நாக்கு நீளமான ஞாபகங்கள் பெருவெளியில் துரத்துகின்றன; காமம் கண்மூடி தியானித்திருக்கிறது. அருகில்போய்த் தொட்டு எழுப்பினால் கண்ணடித்துச் சிரிக்கிறது. பெரும் பயணம் ஒன்றுக்கு அழைக்கிறது. உடலைக் கொண்டாடுவதற்கும் விரசத்துக்கும் இடையிலான கண்ணுக்குத் தெரியாத ஒரு கோட்டில் பயணிக்கின்றன ஸ்டாலின் சரவணனின் வரிகள்.

சிறு குறிப்பு வரைக” பகுதி பற்றியும் கவிதைகளின் தலைப்பைப் பற்றியும் நிச்சயம் பேசியாகவேண்டும். உரைநடையின் வடிவத்தில், ஆனால் கவிதை நடையில் எழுதப்படுகிறவற்றை ஆங்கிலத்தில் Prose Poem  என்பார்கள். ஆங்கிலத்தில் நவீன கவிதைகளை எழுதுகிற எல்லோருடைய தொகுப்பிலும் இப்படிப்பட்ட நீண்ட பத்தி ஒன்றாவது உண்டு.

சிறுகுறிப்பு வரைக பகுதியில் இருக்கும் வரிகளை அப்படி ஒரு Prose Poem இடத்தில் வைக்கலாம்தான். ஆனால் அப்படிச் செய்தால் அவற்றின் புதுமை கொஞ்சம் மட்டுப்பட்டுவிடும். அதனாலேயே அவற்றை வேறு பெயரிட்டு அழைக்க நினைக்கிறேன். இவற்றுக்குக் கவிதைத் தெறிப்புகள் என்று பெயரிடலாம். இரண்டு மூன்று வரிகளில், வடிவங்கள் பற்றிய கவலையின்றி ஏதோ ஒரு கவிதை மலரென அவிழ்கிற தருணத்தை ஒரு ஸ்க்ரீன்ஷாட் (Screenshot) போன்று பதிவு செய்திருப்பவை அவை. தோளில் ஏறிக்கொள்கிற “எக்ஸ்”ஸின் மகளிடம் அவளது அக்குள் வாசனையை உணர்வது தொடங்கி ஆரஞ்சுப்பழமென வாழ்க்கையைக் கவிதையில் உரித்து வைக்காதீர்களேன் என்று கெஞ்சுவது வரை சிறுகுறிப்புகள் எல்லாவற்றையும் எழுதிப்பார்க்கின்றன. கவிதையின் வடிவம் பற்றிய நம் முன்முடிவுகளை ஒதுக்கிவிட்டு இவற்றை அணுக வேண்டும்.

கவிதைகளுக்கும் தலைப்புகளுக்குமிடையே சிற்பத்தின் கால் பாதத்துக்கும் பீடத்துக்குமிடையே இருக்கிற சின்ன ஈர்க்குச்சி நுழையும் இடைவெளியொன்று. எழுதப்படாத வரிகள் அதற்குள் தாமாகவே வந்து அமர்ந்து கொள்கின்றன.  தலைப்புகளே கவிதைகளாக மாறத்தயங்கி நின்று கொண்டிருக்கும் சொற்கள்தான். மனதுக்குப் பிடித்த ஒருவர் பிடித்த நிறத்தில் ஆடையையும் அணிந்து வருவதுபோன்ற ஒரு கூடுதல் அழகியலை அவை தோற்றுவிக்கின்றன. செம்புலத்து மாயோன் பொக்லைன் தேரில் பவனி, “கட்டமிட்ட சட்டையில் பூ அலர்ந்த வாழ்வு, “உன் ஞாபகத்துக்கு நாக்கு கொஞ்சம் நீளம்தான்ஆகியவை சில உதாரணங்கள்.

ஒரு கவிதையில் “நீங்கள் மட்டும் உச் கொட்டி ‘வாழ்க்கையென்பது’ என்று ஆரம்பிக்காதிருந்தால் போதுமானது” என்ற ஒரு வரி வருகிறது. “வாழ்க்கையென்பது” என்று பிரச்சாரம் செய்யாத, முன்முடிவுகளை உடைக்கிற, இறுதி முடிவுகளை நம்மிடமே விட்டுவிடுகிற கவிதைகள் இவை. அட்டைப்பட ஓவியம் கஸ்டாவ் க்ளிம்ப்ட்டின் தனித்துவமான, பாராட்டுகள் குவிந்த Golden Phaseன் போது வரையப்பட்டதாம். இந்தத் தொகுப்பின்மூலம் தனக்கான தங்கத்துகள் மிதக்கிற பாதைக்குள் ஸ்டாலின் சரவணன்  பயணிக்கத் தொடங்கிவிட்டார் என்றே தோன்றுகிறது.

‘ரொட்டிகளை விளைவிப்பவன்’
உயிர்மை வெளியீடு
விலை: ரூ.80/-

***

நாராயணி சுப்ரமணியன்:கடல்வாழ் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.”நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” என்ற உயிரியல் நூலை எழுதியுள்ளார். தமிழில் கடல்சார், அறிவியல் பொருண்மைகளைக் கவிதைகளில் எழுதி வருபவர். விகடன் தடம், வாசகசாலை, அரூ இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. Email: nans.mythila@gmail.com

“கடலெனும் வசீகர மீன் தொட்டி”யும் சொற்களைப் பற்றியிருக்கும் திரவத்தன்மையும்

0

சுபா செந்தில்குமாரின் கவிதைத் தொகுப்பை முன்வைத்து குட்டி ரேவதி சிங்கப்பூரில் நூல்வெளியீட்டின் போது வழங்கிய கட்டுரை

2020 – இல் தமிழில் கவிதை எழுத வரும் ஒருவர் முதலில் தமிழின் மரபை மூர்க்கமாக எதிர்கொள்ளவேண்டியிருக்கும். பின், அங்கே தன் நவீன வாழ்வின் பின்னல் முறைகளை மொழி மயப்படுத்தவேண்டியிருக்கும். எல்லாவற்றினூடும் நம் முன்னே கடந்து சென்ற பல கவிஞர்களின் மொழியாக்கப் பிரதிகளின் சாயல்களை உதறித்தள்ள வேண்டியிருக்கும்.

இன்றைய மொழியரசியலின் நிலையில், இதையெல்லாம் விவரித்து நாமெல்லோரும் விளங்கிக் கொள்ளவே ஊடகமும் போதாது, காலமும் இல்லை. ஆக, எப்படி நவீனக் கவிதையின் நடையை அதில் பெண்ணியப் போக்கை நம் தடமறிந்து கொள்வது. இந்நிலையில், நமக்கு உதவியாக இருப்பவை சுபா செந்தில்குமாரின் தொகுப்பைப் போன்று நம் முன்னே வந்து நிற்கும் நவீனக் கவிதைப் பிரதிகள் தாம்.

தமிழ்ப்பெண் கவிதை வெளியில்,  ஒளவை, ஆண்டாள், வெள்ளிவீதியார் என்ற பெயரெல்லாம் கோலோச்சிய மொழியின் கருத்தியல் வெளியில்,

தமிழ்க் கவிதையின் வேரும் மரபும் நவீனமும் அறிந்து எழுதும் நுண்மாண் நுழைபுலமே கவிதைக்குத் தேவையாக இருக்கிறது. நாங்கள் எழுத வந்த காலத்தில், எங்கள் மீது எழுந்த சர்ச்சையால், தொடர்ந்து எழுத வந்த பெண்கள் எல்லோரும், ‘நாங்கள் அவர்களைப்போன்ற கவிஞர் இல்லை’, என்று அறிவிப்புச் செய்துவிட்டே எழுத வேண்டியதாக இருந்தது. எங்களுக்குப் பின் இரண்டு தலைமுறைகள் எப்படியெப்படியோ எழுதி அழுத்தமான பதிவுகள் எதுவும் இல்லாமல் ஆனால், கடல் அலை போல உருவாகிக்கொண்டிருந்த பெண் கவிஞர்களையும் கண்டுகொண்டுதானிருந்தது.

ஏனெனில், பெண்ணின் மொழியாற்றலும் அறிவாற்றலும் முழுமையாக வெளிப்பட, வாய்ப்பாக அமைவது கவிதையே. அல்லது, பெண்கள் அதை வெளிப்படுத்துவதற்கான தம் முழுவாய்ப்பையும் தேடிக் கவிதையில் தாம் கண்டடைகின்றனர். உச்சபட்சமான மனித அறிவாற்றல் கவிதையில் தான் வெளிப்படும் என்பது என் அழுத்தம் திருத்தமான  கருத்து. நான் முன்பு சொன்ன பெண்ணியம் என்ற இணைப்பு கூட இதை அடிப்படையாகக் கொண்டதே. ஒரு இண்டெலெக்சுவல் பணியை, கவிதை என்னும் மொழியியல் பணி வழியாக ஒரு பெண் எப்படி செய்து முடிக்கிறாள் என்பதே, இன்றைய நவீனக்கவிதையின் வடிவம்.

நவீனக் கவிதையின் முழுமையை அல்லது உச்சத்தை அல்லது அதிநவீனத்தைத் தொட, மொழியின் மரபுணர்வைப் பெற வேண்டியிருக்கிறது. மரபுணர்வு என்பது படைப்பியக்கத்தின் செழுமைக்கு விளைநிலமான மனப்பின்னணியே என்று பிரமிள் கூறுவார்.

இந்த மரபுணர்வப் பெறாமல், தமிழ் படைப்பியக்கத்தின் சங்கிலியில் ஒருவர் தன்னை இணைத்துக் கொள்ள முடியாது.

தனித்தமிழ்க் கவிதை இயக்கத்தின் கூறுகளான, நவீனம், கையாளப்படும் உணர்வுலகம், அகத்துறை புறத்துறையில் கவிஞர் முன்வைக்கும்  கருப்பொருட்கள், தேர்வுகள், இரண்டையும் இணைக்குமிடத்து அவரின் உத்வேகம் (ஓட்டப்பந்தயத்தில் ஓடத்தொடங்கும் முன் கொள்வோமே மனவெழுச்சி, அதைப் போல), தன் முன்னே அமர்ந்திருக்கும் எல்லா தலைகளையும் மீறி உயரே, தாண்டி எதிர்கால வாழ்வைக் கணித்துவிடும் தனித்த சிந்தனை முறை, சுயத்தன்மை, தெறிப்பான படிமங்கள், ஆற்றொழுக்க நடை, மனமுதிர்ச்சி, தன் வயதிற்குள் காலத்திற்குள் அடங்காத மானுடப் பரவசம் எல்லாமே கவிதையின் கூறுகளாகித் தொடர்ந்து இயங்கினால் மட்டுமே ஒரு கவிதையை எழுத முடிகிறது நம்மால். அப்பொழுது தன் கவிதையும் நிறைவு அடைகிறது.

*

கடலெனும் வசீகர மீன்தொட்டிக்கு வருவோம்.

இயன்றவரை, இக்கவிதைகளில் சுபா செந்தில்குமார் கையாண்டிருக்கும் கவித்துவக்கட்டமைப்பில நான் புரிந்துகொண்டவற்றையெல்லாம் எளிதாக, நேரடியாக உங்களுக்குப் புரியவைத்திட முயல்கிறேன். முக்கியமான அம்சங்களைச் சுட்டிக்காட்டிவிட்டால் அவர் கவிதைத் தொகுப்பையும் கவிதைகளையும் உள்வாங்கிக் கொள்ள முடியும் என்ற எளிய வழியை இங்கே பின்பற்ற விரும்புகிறேன். இதற்கு முக்கியமான காரணம், அவரின் கவிதைகள் எல்லாம் மனித வாழ்வின், மனத்தின், அகத்தின் நுட்பமான தளத்தில் நின்று இயங்குவதே.

கவிதையின் வழியாகத் தன் வாழ்வின் பார்வையை முழுவதும் வெளிப்படுத்தும் மூர்க்கமான சொல்வெளியைத் (அதாவது, நிறைய அகப்பொருட்கள் ஒன்று சேர்ந்த வெளியைத்) தன் கவிதையாகக் கண்டுள்ளார், சுபா. இந்த ஒரு வரி தான் அவருடைய மொத்த கவிதைகளையும் பற்றி நான் சொல்லவிரும்புவது. ஆனால், இது சாதாரணமன்று. மீண்டும் சொல்கிறேன். “கவிதையின் வழியாகத் தன் வாழ்வின் பார்வையை முழுவதும் வெளிப்படுத்தும் மூர்க்கமான சொல்வெளியைத் தன் கவிதையாகக் கண்டுள்ளார்.”

அரவமற்று வெளியேறிய பூனை (கவிதை)

கால்கள் விளங்காமல் கிடந்தவளையும்
கருவுற்றிருந்த கறுப்புப்பூனையையும்
வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டுத்தான்
இரவுக்காட்சிக்குச் செல்லமுடிகிறது
ஒவ்வொரு முறையும் வீடு திரும்பும் வரை
நகர இயலாத மனதை
உருட்டிக் கொண்டே இருக்கிறது பூனை
வெறும் பொழுதைப் படுத்தே கிடக்கப்
பழக்கப்படுத்தப்பட்ட பூனைக்கு
என்ன விருப்பம் இருந்துவிடப்போகிறது
நேரம் கடத்தும் கேளிக்கைகளில்
அவள் அப்படித்தான்
பூனை இல்லாத நாட்களிலும் கூட
ஃப்ளாஸ்கைத் திறக்கும் போதெல்லாம்
அந்த சனியன் கத்திக்கிட்டே இருக்கு
அதுக்கும் கொஞ்சம் பாலை ஊத்து என
அக்கறையையாய்ச் சலித்துக் கொள்வாள்
முழுநீளப்படம் முடித்த மறுநாள்
தலைமாட்டில் வைக்கப்பட்ட பாலுடன்
சுருண்ட பூனை போல்
சலனமற்றுக் கிடத்தப்பட்டிருந்தாள்
இதுவரை திரும்பவே இல்லை
சப்தங்களை வீட்டுக்குள் பதுக்கிவிட்டு
கதவு திறந்ததும்
அரவமற்று வெளியேறிய அந்தக் குரல்

கவிதை தன் ஓட்டத்தில் பூனையிலிருந்து அவளுக்கு இடம்பெயர்கிறது. மீண்டும் பூனைக்கு நகர்கிறது என்பது முதல் தன்மை. அதாவது, கவிதையின் அரூப உலகிலிருந்து தூல உலகிற்கே எப்பொழுதும் தன்னை அழைத்துச் செல்கிறார். இது ஒரு சீரிய கவித்துவம். சில நேரங்களில், ஒரு சிறுகதையைப் போல கவிதையை முதல் வாக்கியத்தில் தொடக்கிக் கடைசிவாக்கியத்தில் கவிதையை முடித்துவிடும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடும்  இலக்கிய வெளியில், கவிதையின் பரப்பில் எல்லா நகர்வுகளையும் தனிப்பட்ட அதனதன் மனவெளியிலேயே நகர்த்திச் செல்கிறார். பெரியவரோ, யானையோ, பூனையோ, பெண்ணோ, மீனோ தனியான உலகில் அவர்கள் மட்டுமே இருக்கின்றனர். முற்றிலும் தனித்துவிடப்படுகின்றனர்.

தவம் (கவிதை)

நிசப்தமாக நீந்தியது மீன்
நானும் படகும்
பார்த்துக்கொண்டே இருந்தோம்
தண்ணீரின் தவம் கலைக்க
எவருக்கும் விருப்பமில்லை

இப்படி தனித்துவிடப்பட்டவர்களின் கண்ணுக்குப்புலனாகும் உலகில், உருவமின்மையான விடயங்களை எல்லாம் கண்டறிந்து பதிவு செய்கிறார்.  இவர் கவிதைகளில் எங்கும் இப்படியாகத் தனித்துவிடப்பட்ட தன்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது கழிவிரக்கமோ, தன் மீது தானே பரிவு கொள்ளும் ஓர் அபலையின் தனிமையோ அன்று. அறிவியல் வெளிகளுக்கு அப்பால் கடந்து சென்று புலனறிவுகளைப் பயன்படுத்தும் ஓர் உணர்வு ஊடகமாகக் கவிதையை மாற்றும் ஆற்றல்.

இரண்டாவது தன்மை, சுபாவின் கவிதைகளில் நுண் உணர்வுகளைச் சொற்களாக்கும் ஓர் எளிய வித்தையும் அசுரத்தனமும் ஒன்று சேர்கிறது. சொற்களை இறைக்காமல் அவற்றிற்கு ஓர் அடர்ந்த அர்த்தம் கொடுத்து கவிதை மொழியின் போக்கை ஒரு குறிப்பிட்ட இடத்தில் சட்டென்று திருப்புகிறார். அந்த இடத்திலிருந்து அக உலகின் உண்மைகள், நொய்மைகள், கண்டறிதல்கள், பரிணாம வளர்ச்சி என எந்த வகையான தன்மையும் பளீரிடும் ஓர் ஒளிக்கற்றை போல நமக்கு வெளிப்படும். ஆனால், எல்லாவற்றிற்கும் மையமாய் கருத்தொன்று இருக்கிறது. அது உணர்ச்சியுடன் கலக்கும் இடத்தினை கடலெனும் வசீகர மீன் தொட்டி, ஊற்றுக்கண்ணில் வழியும் ஈரம், நிறைந்து வழியும் நிலவு, கருநீல உரையாடல் ஆகிய கவிதைகளில் உணரலாம். உணர்ச்சியும் கருத்தும் தனித்து இருந்து கவிதையாவதில்லை. எங்கேயோ கருத்தை முன்னொட்டி அதன் மீதான உணர்ச்சிக்கு அழைத்துச் செல்லும் சொற்களை நாம் கண்டறியும் சிறிய கால, மிகக் குறுகிய கால உத்வேகத்தில் கவித்துவத்தின் மேல்நிலையையும் உச்சத்தையும் தொடும் முயற்சி தான் கவிதை.  கவிஞர் தன் அனைத்துக் கவிதைகளிலும் இந்த முயற்சியை ஒவ்வொரு முறையும் புதியதாக ஒரே சீராக அணுகியிருப்பது ஆச்சரியமூட்டியது. ஒரு முழுமையை, அர்த்தத்தின் விளைவைத் தொட்டுவிடுகின்றது ஒவ்வொரு கவிதையும்.

மூன்றாவது, இவர் கவிதைகளில் மட்டுமே காணப்படும் சிறப்புத்தன்மை என்று நான் அறிவது, கருப்பொருளின் திடத்தன்மையோ திரவத்தன்மையோ அவர் கவிதைகளில் ஆளும் சொற்களை விடாது பற்றியிருத்தல். இதைப் புரியும் படி, இன்னும் நுணுகி விளக்குவது அவசியம் என்று நினைக்கிறேன். ஒரு காலத்தில் அதாவது, நான் கவிதை எழுத வந்த தொடக்கக் காலத்தில் எனக்கு ஒரு கவி அறிவுரை வழங்கினார். ஒரு கவிதையை எழுதும் ஒரு பொருள் சம்பந்தப்பட்ட இனச்சொற்கள் மட்டுமே அக்கவிதையில் இருக்கவேண்டும் என்று. அந்தக் கவி சொன்னது ஒரு பழமை வாதம்  என்பது போல், சுபாவின் கவிதையில்  ஒரு பொருளுக்குப் பயன்படுத்தும் சொல் திரவத்தின் உணர்வைப்பெற்று கரைந்து ஓடி, அதன் நிறத்துடன் திடத்துடன்  சம்பந்தமில்லாத இன்னொரு ஒரு பொருளுக்கும் ஆகி நிற்கும். இதில் அவர் கவனமாக இருப்பது இரண்டுக்கும் பொதுவான உணர்வின் தன்மையையும் கண்டறிவதில் தான். அதாவது, பொருண்மையான உலகத்தையும் கருத்து உலகத்தையும் இணைத்துவிடும் கவிதை மொழியை இயற்றுவதில் தான்.

அவ்வப்பொழுது நான் முகநூலில் கவிதைகளைத் தேடி வாசிப்பதுண்டு. புதிதாக எழுத வருபவர்கள் இப்படியான குறிப்பிட்ட பரிசோதனை முறையை முயற்சிசெய்வார்கள். ஆனால், அதைக் கவித்துவமாக்கும் முயற்சியில் அந்தக்கவித்துவ எழுச்சியற்று,  இணைப்புகளுமற்று எங்கெங்கேயோ அது அறுந்து தொங்கிவிடும். கவிதையின் விறைப்பும் நீட்சியும் தொய்வடையாத ஒருநிலையை சுபா தன் மனவெளிக்குள் திரித்துவிடுகிறார். இந்தச் சொற்களின் திரவத்தன்மையைக் கருத்தில் கொண்டு, நவீன மொழியில் சொல் கரைந்து பட்ட இந்த நிலை எங்கெங்கும் சமூகப்புழக்கத்தில் இருந்தாலும்தொங்கி, இதை ஒரு கவிமொழியாக மாற்றியதால், நவீன நடையின் போக்கை நிர்ணயிப்பவராகிறார். நிறைந்து வழியும் நிலவு கவிதையும் கடலெனும் வசீகர மீன் தொட்டி கவிதையும் சிறந்த உதாரணங்கள்.

நான் சொன்னது போல், கவிதையை அணுகுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் கடலெனும் வசீகர மீன் தொட்டி கவிதையையே எடுத்துக்கொள்ளலாம்.  இப்பொழுது இந்தக் கவிதையை வாசித்துப்பாருங்கள்.

கடலெனும் வசீகர மீன் தொட்டி (கவிதை)

ஈரச்சந்தையில் மீன் வெட்டுபவன்
கையளவு நீரள்ளித் தெளித்து
வாய்பிளந்து துடித்துக் கொண்டிருக்கும்
ஞாயிற்றுக்கிழமைகளை எழுப்புகிறான்
தனித்திருக்கும் தன்னுடல் சிலுப்பி
நிறைந்திருக்கும் வெற்றுக்காற்றை
பெருங்காமத்தில் தவிப்பனின் அவசரத்தோடு
அள்ளி அள்ளி விழுங்குகிறது
சுவாசித்தலுக்குக் காத்திருக்கும் ஆண் மீன்
உலர்ந்து போன இன்னொரு தேசத்தில்
தாம்பத்யத் தொட்டியில் நீந்திக்கொண்டிருக்கும்
பெண் மீனுக்கு அலைபேசியில் வந்து சேர்கிறது
பளபளப்பானதொரு தூண்டில் முள்ளில்
ஆண் வாசனையைச் சுமந்து வரும் இரை
நீர்த்துளிகள் உருண்டோடும் வாழை இலையில்
மீன் துண்டுகளைப் பரிமாறிவிட்டு
காத்திருக்கத் தொடங்கும் அவள் கரங்களில்
ரகசியமாய் உதடுகள் குவிந்து நீந்துகின்றன
ஈரமில்லாமல் வந்து சேர்ந்த முத்தங்கள்
சிலிர்த்தடங்கும் உடல் வளைத்து
செதில்களின் நுனிகளில் வியர்வை அரும்ப
வலதும் இடதுமாய் அலைந்து திரும்புகிறது
பகிர்ந்து கொள்ளப்படாத காமம்
இரு தேசங்களுக்கு இடையில்
வசீகர மீன்தொட்டியாய்
விரிந்து கிடக்கிறது கடல்

சுபா செந்தில்குமாரின் கவிதைத் தொகுப்பை வாசித்ததும் எனக்கு நானே ஓர் இலட்சியத்தை வடிவமைத்துக் கொண்டேன். அது, இன்றைய நவீனக்கவிதை இயக்கத்தின் நோக்கம் என்னவாக இருக்கிறது என்று சுபா செந்தில்குமாரின் கவிதைகளினூடாகக் கண்டறிவதே. கலையின் நோக்கம், கவிதை எத்தகைய கலைப்பணியை இன்று செய்யவேண்டியிருக்கிறது, அதன் திருகுமொழியில் கவிதை வடிவத்தின் நவீனத்தன்மை முழுமை பெறுகிறதா, பெண் கவிதை இயக்கத்தின் முனைப்பையும் விசையையும் கொண்டிருக்கின்றனவா என்பவை எல்லாம் என் கேள்விகள்.

முன்பே குறிப்பிட்டது போல, கவிதையே அறிவுசெறிந்த பணியின் உச்சமும் அதிமேல் நிலையாகவும் இருக்கிறது. கவிதை இந்த உயர்ந்த இலட்சியத்தை அடையவில்லையென்றால், அக்கவிதை வெறும் சொற்களாய்ச் சரிந்து விழுகின்றது. கடலெனும் வசீகர மீன் தொட்டி, நான் மேலே குறிப்பிட்ட எல்லா விடயங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. சமூக வாழ்வில் பாலியல், தனிமை, நிலக்காட்சியின் தத்துவம், அழகியல், நுண் அரசியல், மானுட குலம் பிரிந்து கிடக்கும் எல்லைகள் எல்லாவற்றையும் கூட்டியிணைத்து, ‘கடலெனும் வசீகர மீன் தொட்டி’ என்று ஆக்கிவிடுகிறார். ஒட்டுமொத்த சமூக அரசியலின் குறியீடு இதுவென ஆக்குவதை நாம் பெரிய பரிமாணத்தில் இங்கே உணரமுடிகிறது.

சம்பவங்களை நிகழ்வுகளை அடுக்கி எழுதுவது கவிதையன்று. அது சிறுகதை. அகவெளி உலகையும்  புறவெளி உலகையும் சொல்லிச் சொல்லி இரண்டு வெளியிலும் இயங்கும் உணர்ச்ச்சிகளை தகுந்த சொல் கொண்டு கோர்த்துக் குறைந்தபட்ச அவகாசத்தில் மனதில் தங்கிவிடும் “நவீனச் சுயஉணர்வு” தான் இன்றைய முக்கியமான கவிப்பொருள். ஆனால், இதை எவ்வளவு அகலமாக விரித்து உலகிற்கான விழிப்புணர்வுப் பொருளாக மாற்றித்தருகிறோம் என்பதில் தான் கவித்தரமும் கவித்துவமும்  துலங்குகின்றன.

அடிப்படையில், கவிதை என்பது தனிப்பட்ட திறன். நாளுக்கு நாள் அதனுடன் நாம் நெருக்கமாகி, நம் அந்தரங்கத்தை முற்றுமாக கவிதைக்கு மட்டுமே விட்டுக்கொடுத்து, தன் வாழ்வை முழுவதுமாகக் கபளீகரம் செய்ய அனுமதித்துவிடுவது ஒன்று மட்டுமே அத்திறனை வளர்க்கும். என்னைப்பொறுத்தவரை, அடுத்தடுத்த கவிஞர்களின் கவிதைகளுக்கும் தன் கவிதைகளுக்கும்  எந்த உறவோ நெருக்கமோ தொடர்போ இல்லை. முழுவதும் சுயம் ஒளிரும் இடம் கவிதை தான். இது அடிப்படையில் தனிப்பட்ட முழு அறிவு பலமும் வெளிப்படும் திறன் தான். இந்தத்திறனைத் தேர்ந்தெடுத்த தன் இலட்சியத்திற்காக மட்டுமே பயன்படுத்துவது நெடிய பயணத்தில் தனக்கு விளக்காகவும் கிழக்காகவும் இருக்கும்.

ஆனால், இவையெல்லாம் தாண்டிக் கவிஞருக்கான சவால்கள் எங்கே இருக்கின்றன என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

அடுத்தடுத்து கவிஞர் எழுதும் தொகுப்புகள் இந்தப்பாதையின் அடுத்த புள்ளிக்கு அவர் தன்னைத்தானே அழைத்துச்செல்வதில் இருக்கிறது.

கவிதையும் கவிஞரும் புறக்கணிக்கப்படும் இடங்களில் எல்லாம், அது எந்தக் கவிதை என்றாலும் எந்தக்கவிஞர் என்றாலும் தன்னையே தன் கவிதையையே புறக்கணிக்கப்பட்டதாய் உணரும் இடங்களில் எல்லாம் அதைப்பொருட்படுத்தாமல் மேற்சென்று எழுதும், இயங்கும் திறத்தில் இருக்கிறது.

ஓர் இயக்கத்தின் முன் சக்கரம் போல் எதையும் கண்டுகொள்ளாமல், சமகால வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடுவதில் இருக்கிறது.

கலெக்டிவ் கான்ஷியஸ்னஸ், தான் வாழும் சமூகத்தின் கூட்டு விழிப்புணர்வின் குரலாக, சாட்சியாக, தனித்த ஒரு மனிதராகத் தன் வாழ்வையும் எழுத்தையும் ஒப்படைப்பதில் தான் ஒரு கவிஞராக மாறமுடிகிறது.

சுபா செந்தில்குமார், அந்த ஒரு புள்ளியிலிருந்து தான் தன் கவிதை இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார் என்பதால், மேற்கண்ட சவால்களையும் எதிர்கொள்ளும் ஆற்றலுடையவராய் இருப்பார் என்று நம்புகிறேன். வாழ்த்துகள்!

கவிதை குறித்த ஒரு நிகழ்வில் வாசிக்கப்படும் ஓர் உரையை, வெறும் உரைநடையாக முடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்பதால் இத்தொகுப்பில் எனக்குப் பிடித்தமான சில கவிதைகளை வாசித்துவிட்டு உங்கள் வாசிப்பிற்கும் திறந்து வைத்து முடிக்கிறேன்.

முதலில் மிகவும் அழகான ஒரு காதல் கவிதை.

பசி

கண்ணில் தெரியும் பசியை
மெதுவாய்த் தின்னத் தொடங்குகிறது
இன்னொரு பசி.
தின்னத் தின்னத் தீராத பசி
கொஞ்சம் கொஞ்சமாய்
விழுங்கத் தொடங்குகிறது இலையை.
மொத்த வனத்தையும்
விழுங்க எத்தனிக்கும் பசியை
நெளிந்தும் நெகிழ்ந்தும்
சிந்தாமல் செரிக்கிறது இலை.
மிச்சம் வைத்துப் பசியடங்கிய போது
காணாமல் போயிருந்தது இலை.
இலைக்குள் நீ.

நீருடல்

என் நினைவுகளை
இரண்டாய்
நான்காய்
எட்டாய் மடித்து
உன் பரந்த நீர்நிலையினில்
மிதக்க விடுகிறேன்
அடிவயிறு நனைந்த படகாய்
மெதுவாய் நெகிழ்ந்து
நீருடல் பற்றி எழும்புகின்றன
நம் அலைகள்

தகிக்கும் பாலை

ஒரு மணற்புள்ளியில்
நீயும் நானும் எழுதத் துவங்குகிறோம்.
நெளிந்தூறும் சர்ப்பங்களாய்
வளைவெழுத்துகளின் தடம்பதித்தபடி
அலைகிறது நம் அனல்மூச்சு.
எழுத எழுதத் தீராமல் தகிக்கிறது சந்தனப்பாலை.
விளிம்பென்று சமரசம் செய்து கொண்ட
ஒரு கானல்நீர் சுனையில் நின்று
இருவருமாய்த் திரும்பிப் பார்க்கிறோம்.
இருவரின் கையெழுத்திலும்
நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது
ஒரு மணற்கவிதை.
முடிவில்லா அம்மணற்பரப்பில்
உன்னைத் தடுக்க விழையும்
கோட்டெழுத்துக்கள் பற்றிய கவலை
இனியும் எனக்கில்லை.
இதோ தோல்வியுறும் என் கரங்களையும் பற்றி
இனி நீயே அம்முடிவிலியைத் தொடர்ந்து போ.
இப்பொழுதென்பது கட்டுடைதலுக்கானது.

இத்துடன் என் உரையை நிறைவு செய்கிறேன். கவிஞருக்கு வாழ்த்துகள். நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

***

குட்டி ரேவதி

தூர முகங்களின் புறப்பாடு

0

அய்யப்பன் மகாராஜன்

மேல்வானம் திறந்தமேனியாய் கிடந்தது. மேகங்கள் பாறைத்திட்டுகளைப் போல உறைந்து தெரிந்தன.மாலை நேரமாயினும் வெக்கை குறையாத அதன் கசப்பினை பொறுக்க இயலாது செல்லாத்தாள் திண்ணையில் எழுந்து உட்கார்ந்தாள். சூடுமறைப்பிற்காக தொங்க விடப்பட்டிருந்த சாக்கினை உயர்த்திப் பிடித்து வெளியே பார்த்தாள். காற்றற்ற வெளி சலிப்பை உண்டாக்கியது.

“வெயிலு எறங்குனப் பொறவும் என்ன எழவுக்காக்கும்னு இப்படி அவியிது?. மழைக்கானக் கோளு ஒண்ணுத்தையும் காணலையே?”

தலைமாட்டில் யாரோ பூவும், மஞ்ஞணையும் வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். இசக்கிக்கு சாற்ற வேண்டும். கையில் தந்தால் சாற்றுகிறவளுக்கு ஏதாவது கைக்கூலி கொடுக்கவேண்டும். வைத்துவிட்டுப் போய்விட்டால் எதுவும் தரவேண்டாம். தான் இசக்கிக்கு வேலை பார்க்கிறோமா? அல்லது மக்களுக்கு வேலை பார்க்கிறோமா? என்ற சந்தேகம் செல்லாத்தாளுக்கு அடிக்கடி பொருமியபடி வரும். ஒரு தாளை எடுத்துத் தருவதற்கு அத்தனை மடி இந்த எரப்பாளிகளுக்கு என்று திட்டிக் கொள்வாள் இப்போது போல. ஒருபுட்டமது வைத்தால் கூட அவளுக்கு எஞ்சாது. அவளுக்குக் கிடைத்ததா என்று கூடக் கேட்காது விரல் நக்கிக் கொண்டு போகும் கொதிப் பிடித்த சனங்கள் என்று அவள் முனங்குவது பதிவு.

ஒருமுறை ஊர்க்காரர்களிடம் சொன்னாள்.

“யே யப்பா… இனிமே என்னால முடியாது. வேற ஆளைப் பாத்துக்கிடுங்கோ… நா இப்பவோ அப்பவோன்னு கெடக்கேன்… கழியல்ல…பூசை கீசை எல்லாம் நம்மளால முடியாது. முடியலேன்னா ஏதாவது அய்யரப் பாத்துக்கிடுங்கோ…”

ஊர்க்காரர்கள் திகைத்து விட்டார்கள். வேற ஆளுக்கு எங்கே போவது? ஒருவரும் ஒத்துக் கொள்ளவில்லை. அய்யரைக் கூப்பிட்டால் அதற்கு என்று ஒரு செலவு வரும்.

சில பேருக்கு வேறு ஒரு அச்சமும் இருந்தது. “எவனாவது வீட்டில் சுகக்கேடு என்று நேர்ந்து எதையாவது தலையைச் சுற்றிக் கொண்டு வருவான். இதுபோன்று பூசை வைப்பவனுக்குத் தலைமாட்டிலோ வீட்டு இடைநடையிலோ வைத்து விட்டுப் போவான் பிணத்திற்கு வைப்பது போல. அவன் வீட்டுக் கழிப்புகள் நமக்கு ஏறி விட்டால் என்ன செய்வது? எதற்கு இந்த வேலையத்த வேலை?” என்று ஒதுங்கிக்கொண்டார்கள்.

“நீ செய்தா வருக்கத்தா செய்வே ஆத்தா…”என்று செல்லாத்தாளையே பூசை செய்யும் படி பணித்தார்கள். இன்னொரு காரணம் இருந்தது. “சாமி காரியம்!.நாம அப்படி இப்படி இருப்போம். அங்ஙன இங்ஙனப் போவோம். சவம் சரிப்பட்டு வராது.” ஆளாளுக்கு கழன்று கொண்டார்கள்.

அடுத்த மாதம் கொடை வருகிறது. நிறைய வசூலிப்பார்கள். அப்போது மட்டும் பூசாரியை மாற்றி விடுவார்கள். ஆனால் என்ன செய்வது. இதை வைத்து நாலு பேரிடம் கைநீட்டலாம். யார் வீட்டுத் திண்ணையையும் கிடக்க உபயோகித்துக் கொள்ளலாம்.

செல்லாத்தாள் விலாப்புறம் வழிந்த வியர்வையினை கையால் துடைத்தாள். பத்தாது என்று தனது சேலைத் தலைப்பாலும் துடைத்தபோது ஒரு பிடித்தமில்லாத வாடை வந்தது. கையைப் பரத்தி தனது ஊன்றுகோலினைத் தேடி எடுத்துக் கொண்டாள். அதைத் தரையில் ஊன்ற தலைப்பட்டபோது மண்ணில் கோல் சறுக்கிவிட, அவள் சாக்கினைப் பிடித்து கொண்டாள். சுமை தாங்காத சாக்கு ஒருபுறமாக கிழித்துக் கொண்டு போனது. பிடிவிட்ட செல்லாத்தாள் திண்ணையில் குண்டியடிக்க விழுந்தாள்.

அச்சத்தில் அவளுக்குத் தொண்டை வறண்டது. தன் வயிற்றை எக்கிக் கொண்டு மீண்டும் எழ முயன்றாள். மூச்சடக்கியபோது விழுந்த இடத்தின் வலி உறைத்தது.

“சும்மச்சும்ம விழுந்து வலியெடுக்கதுக்கு கொண்டு போவக்கூடாதா?” இசக்கியைத் திட்டிக் கொண்டே நகர்ந்தாள். சிமென்ட் தொட்டியின் பலகையை நீக்கிவிட்டு வாய்வைத்து முடிந்த மட்டும் தண்ணீரை உறிஞ்சிக் குடித்தாள். நீர் தொண்டையில் இறங்குகையில் கமறியது. தண்ணீரில் ரத்த வாடை வந்தது. உடனே சத்தத்துடன் தண்ணீரை துப்பினாள். இசக்கியை மீண்டும் திட்டிக் கொண்டாள்.

தணுப்பு சுகமாக இருந்தது. எனினும் மீண்டும் வேர்த்தது. இசக்கிக்கான துணியை எடுத்து வைத்த போது வழக்கமாக தேடிவரும் நாயினைக் காணவில்லை. மனிதர்களுடன் சேர்ந்து அதுவும் வர வரக் கெட்டுப் போய் விட்டது என ஏசினாள்.

அந்நேரத்தில் தூரமுகமாக ஆட்கள் சிலபேர் ஒரு கூட்டம் போல ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் வேகத்தைக் கணித்தால் ஊரைத் தாண்டி வெகுதூரம் செல்பவர்களாக இருக்க வேண்டும். நடுவில் ஒருவனின் தலையில் ஒரு பெட்டி இருந்தது. அதை அவன் தனது கைகளால் அழுத்தமாக பிடித்திருந்தான். அவனுக்கு இருபுறத்திலும் தனியாக இரண்டுபேர் காவலுக்கு வைத்தது போல வந்து கொண்டிருந்தார்கள்.

கூட்டத்தில் சிறுவர்களும் குழந்தைகளும் கூட காணப்பட்டார்கள். இளைஞர்கள் தங்கள் கைகளில் தடிகளையும் வயதானவர்கள் பூண் வைத்த பிரம்புகளையும் வைத்திருந்தார்கள். அக்கூட்டத்தில் பெண்கள் என்று யாருமே இல்லை. கவனித்தால் அனைவரின் முகங்களிலும் ஒருசேர துயரத்தைக் காண முடியுமாக இருந்தது.

ஊரின் மையத்தை வந்து சேர்ந்து விட்ட அவர்களை அவ்வூர்க்காரர்கள் தடுத்தார்கள். கருக்கல் சமயம் ஊருக்குள் வருவதோ ஊரின் வழியாக செல்வதோ குற்றம் என்றும், அதை அனுமதிக்க முடியாது என்றும் நிர்பந்தம் செய்தார்கள்.

கூட்டத்தினர் முன்பே தெரிந்து வைத்திருந்தது தான். தாங்கள் அறிந்த உலகத்தில் மிக மோசமான திருடர்களைக் கொண்ட ஊர் இது என்பதும், இந்த ஊர்க்காரர்கள் சர்க்காரின் மையத்தில் பாம்புகளை நுழைய விட்டு அதிகாரம் செலுத்துபவர்கள் என்பதும்.

வயது முதிர்ந்த கிழவர் தனது பூண் பிரம்பு நடுங்க முன்னே வந்தார்.

“உங்க ஊர்மேல வெகுமானம் உண்டு. ஆனா நீங்க சொன்ன சட்டதிட்டம் எதுவும் எங்களுக்குத் தெரியாது. இப்போ நாங்க அவசரமாப் போயிட்டு இருக்கோம்…சமயம் தப்பினா,வேளைக்குப் போயி சேர முடியாது. பெரிய மனசக் காட்டி எங்களப் போக அனுமதிக்கணும்”

“அதெப்படி?” அவர்கள் மறுக்க, ஊர்க்கூட்டம் சேர்ந்தது. இவர்கள் சற்றுக் கலவரமானார்கள்.

“மொத்தம் எத்தன பேரு?”

“நூத்தி நாப்பத்தி நாலு”

“அது சரி!”

அந்த ஊர்க்காரர்கள் ஒருவரை ஒருவர் சந்கேதத்துடன் பார்த்துக் கொண்டார்கள்.

கிழவர் நடக்கப் போக, மற்றவர்கள் பின் தொடர, ஊர்க்காரர்கள் சுற்றி வளைத்தார்கள். அவர்களின் கண்கள் பூ விழுந்திருப்பதைப் போல ஒரு அறிகுறியுடன் தென்பட்டதை கூட்டத்தினர் பார்க்கத் தவறவில்லை.

அதே நேரம் ஊர்க்காரர்களின் பார்வை கூட்டத்தினரின் பெட்டியின் மீதே இருந்ததை கிழவர் கவனித்தார்.

“பெட்டிக்குள்ள என்ன இருக்கு?”

ஊர்த்தலைவர் கேட்க, அச்சத்தில் கூட்டத்தினர் நெருங்கி இணைந்து கொண்டார்கள். அதன் இளைஞர்கள் தடிகளை இறுக்கிக் கொண்டார்கள். அதை கண்ட ஊர்த்தலைவர்,

“ஊரை அடையுங்க” என்றார்.

ஊரில் தடுக்குகள் போடப்பட்டன. வழிகள் அடைப்புகள் கொண்டு மறிக்கப்பட்டன. எந்த வழியிலும் தப்பிக்க முடியாதவாறு அவர்கள் அந்தத் திருடர்களின் ஊரில் சிக்கிக் கொண்டார்கள்.

கிழவரும் அவரது ஆட்களும் தங்களுக்குள் கூடிப் பேசினார்கள். “நடக்கக் கூடாதது என நினைத்திருந்தது எதுவேனும் நடக்க நேரிட்டால், நிகழ விருப்பதில் நல்லது எதுவோ அதில் மட்டுமே நமது நோக்கம் இருக்க வேண்டும். கண்டறிந்து அதை மட்டுமே வசப்படுத்த வேண்டும். மற்றபடி அல்லாதவைகளுக்காக முடிந்த வரையில் போராடக்கூடாது” என்பதை நினைவுப்படுத்திக் கொண்டார்கள்.

“ஐயா! நாங்க உங்க கூட விவகாரம் பண்ண வரல. சீக்கிரம் போய்ச் சேர வேண்டி, அவசரத்துல உங்க ஊரு வழியா வந்துட்டோம். அதுக்காக வருத்தம் தெரிவிச்சிக்கிறோம். எங்க அவசரத்தைப் புரிஞ்சிக்கிட்டு நீங்க வழி விடணும்”

“நூத்தி நாப்பத்தி நாலு எங்களை எச்சரிக்கிற எண்ணம். அது தெரியாதா உங்களுக்கு? அது ஒரு கெட்ட குறி. அந்த எண்ணிக்கையோட வர்றவங்க எங்க சந்தோஷத்த அழிச்சி போட்டுட்டு துயரத்த தான் தந்துட்டுப் போவாங்க… பெட்டியில எங்களுக்குண்டானது என்ன இருக்கு?”

“அப்படி எதுவும் இல்லையே அய்யா…”

ஊர்த்தலைவர் சாடைக் காட்ட சட்டென இரண்டு பேர் பெட்டியை நோக்கி விரைந்தார்கள். வேறு சிலர் கூட்டத்தினரை தாக்கத் தயாராக அவர்களுக்குள்ளே  ஊடுருவினார்கள்.

பெட்டியை வைத்திருந்தவன் ஆவேசமாக அதைத் தூக்கிக் கொண்டு ஓடினான். அவனுடன் இருந்தவர்கள் பறிக்க வந்தவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். கூட்டத்தினரில் சிலபேர் பெட்டியைக் காத்துக் கொள்ள அதன்பிறகே ஓடினார்கள்.

சூழல் கூட்டத்தினருக்கு கைகொடுக்க மறுத்தது. பெட்டியை வைத்திருந்தவனை இசக்கியின் கோயிலருகே வைத்து கல்லால் அடித்து நிறுத்தினார்கள் ஊரார். இசக்கி மஞ்ஞணையோடு கலந்த ரத்தம் பூத்து நின்றாள். ஊர்க்காரர்களின் கூட்டமும் வன்மமும் அதிகமானதால் வந்தவர்களால் எதிர்க்க முடியாது திகைத்தார்கள். கிழவர் நடப்பதில் நல்லது எதுவென சிந்தித்துக் கொண்டிருந்தார்.

செல்லாத்தாள் இலையில் வைத்திருந்த மஞ்ஞணையில் தவறி விழுந்த பூச்சரத்தினை எடுக்கப் போகையில் அது முற்றிலும் மஞ்ஞணையோடு ஒட்டிக் கொண்டு விட்டது. இளக்கி எடுத்த சரம் முழுக்கவும் ரத்தத்தோடு வந்தது கண்டு மன வேதனை கொண்டாள். அவள் இசக்கியைத் திட்டினாள்.

கூட்டத்தினர் கயிற்றினால் கட்டப்பட்டார்கள். பெட்டி அவர்களுக்கு முன்பாக சற்றுத் தள்ளி வைக்கப்பட்டது.

“கருக்கல் எறங்கற நேரத்துல பெட்டியத் தொறக்கக் கூடாது… அதுல எங்களோட விதைகள போட்டு வச்சிருக்கோம். அதுக மேலே மொதக்கருக்கல் பட்டா ஆவாது. அப்படிப் பட்டா அது சர்வ நாசத்த உண்டாக்கும். அது எங்க நம்பிக்கை….”

ஊர்த்தலைவர் பெட்டியைத் திறப்பதில் மட்டுமே விருப்பம் கொண்டு அருகில் போய் கை வைத்தார்.

செல்லாத்தாள் ரத்தத்திலிருந்து விலக்க முடியாத மஞ்ஞணையை இலையோடு மண்ணில் கவிழ்த்தாள். கழுவியும் போகாத பூவின் சிவப்பினையும் இசக்கியின் சிவந்த முகத்தினையும் மாறிமாறிப் பார்த்தாள்.

“கடைசியா ஒங்க நல்லதுக்காவையும் சொல்லுதேன்… நாங்க யாரு? எங்களுக்கு என்ன நடந்ததுங்கறதையாவது கேப்பீங்களா?” கிழவர் சபிப்பது போலக் கேட்டார்.

ஊர்த்தலைவர் திரும்பி வந்தார்.

கிழவர் தனது பிரம்பினை ஒருமுறை ஓங்கிக் கீழேத் தட்டினார். உடனே பெட்டியை வைத்திருந்தவன் குத்துக் காலில் அமர்ந்து வாயிலிருந்து வடிந்த ரத்தத்தினை மண்ணில் வடித்து மலை நோக்கி குலவையிட்டான். அது நாற்புறத்திற்குமாக எதிரொலிப்போடு சென்று விட்டுத் திரும்பி வந்து ஊர்க்காதுகளை சன்னமாக அடைந்தது.

இப்போது ஊர்க்காரர்களின் கண்களில் திகிலும் குழப்பமுமான கலப்படம் தெரிந்தது. கிழவர் கை காட்ட பெட்டி வைத்திருந்தவன் சொல்லத் துவங்கினான்.

“ஆதியில நாங்க தெம்மலைக்கு மேட்டுலேருந்து வந்தவங்க… காலங்காலமா நன்மைக் கூட்டு மேல ஒரே சனமா வாழ்ந்துக்கிட்டு வந்தோம்.. எங்க சாமி ஆதியாபதி. எங்க சாமியக் கும்பிட எங்கேருந்தெல்லாமோ சனங்க வந்தும் போயிட்டும் இருந்தாங்க.

ஒரு எடவாடு காரணமா ஒண்ணா இருந்த எங்க மக்களுக்குள்ள பிரிவு வந்து போச்சி. ஒரு கூட்டம் மேக்கேப் போயிக் குடியிருந்து மேக்கேப்புற மக்களாவும் நாங்க கெழக்கேயே இருந்ததால கெழக்கேப்புற மக்களாவும் ஆனோம்.

எங்க தெய்வம் ரெண்டு ஊருக்கும் நடுக்கால இருந்துச்சி. ஊரு ரெண்டா இருந்ததால படப்பு, சிறப்பு,கொட எல்லாமே ரெண்டாப் பிரிஞ்சிது. ஆறுமாசம் மண்ணும் நீரும் வச்சி நாங்க கும்பிடுவோம். ஆறுமாசம் மலரும் நீரும் வச்சி அவங்க கும்பிடுவாங்க… இடையில ஒரு கொட. அது பொதுக்கொடையா இருக்கும்.

ஒரு நாளு மேக்கேப்புற ஆளுங்க புதூசாக் கொஞ்ச பேரக் கூட்டிட்டு வந்தாங்க. அவங்கக் கையில பட்டய முத்திர குத்தியிருந்திச்சி. அவங்க ஊரு பூராக்  கொர்னாக்கேடு போலயாம். அது சாவுக்கேடாம். வந்தா கொண்டுட்டுத்தான் போவுமாம். எல்லா எடத்துக்கும் பரவுதும்னும் சொன்னாங்க.

சரி, அதுக்கு நாங்க என்னச் செய்யிதுன்னு கேட்டோம். வந்த அவங்க சோவியக் குலுக்கிப் போட்டுப் பாத்துட்டு அந்த தீனத்துக்குக் காரணமே எங்க சாமிதான்னு சொன்னங்க.எங்க தெய்வம் நிலைக்கு நிக்கிறது சரியில்லயாம். உடனே அத எடம் மாத்தணும்னு சொன்னாங்க.

அது நாங்க வச்ச சாமி இல்ல. எங்க தாத்தாதி தாத்தனுக்க தாத்தன் வச்ச சாமி. அதுக்க வேரப் புடுங்கச் சொல்லுதேளே… சம்மதிக்க ஏலாது…வாரது வரட்டும்னோம்…

அவங்கக் கேக்கல. நாங்களும் விடல. அப்படீனா எங்களுக்கில்ல மொதல்ல சோக்கேடு வந்திருக்கணும்? இத்தர வருசமா சாமி நின்ன நிலைக்கு எங்களுக்கு எதுவும் ஆகலயே. இல்லாத்தசோலியெல்லாம் பாக்காதியோன்னு சொன்னோம். அவங்கப் போயிட்டாங்க…

ஆனா சும்மப் போவாம மேக்கேப்புறத்து மக்களை எளக்கி விட்டுட்டுப் போனாங்க.நாங்க எவ்வளவோ சமாதானமும் வெளக்கமும் சொல்லியும் அவங்க பயம் தீரல. அவங்க தீனம் வரும்னு உறுதியா நம்பிட்டாங்க…

கடைசியா பட்டய முத்திரைக்காரங்களோட மேக்கேப்புறத்து ஆளுங்களும் சேந்துக்கிட்டு எங்க சாமியத் தூக்கி மாத்தி வச்சிட்டாங்க…

அது மட்டுமில்லாம இனி மேலாட்டுசாமிக்கு ஒங்க இஸ்டம் போல கொடையெல்லாம் குடுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு கல்லு எழுப்பி கதவும் வேற போட்டு பூட்டிட்டாங்க.

தாங்க முடியாத நொம்பரத்துல ஒருநா கதவ எடுத்துச்சாடி உள்ள நொழஞ்சிட்டோம். பூட்டயும் ஒடச்சி எங்க சாமிய பாத்தோமா….”

கிழவர் சற்று நிறுத்தச் சொல்ல கதை சொன்னவன் நிறுத்தினான். அதுவரையில் கேவிக் கொண்டிருந்த கூட்டத்தினர் உடனே வாய்விட்டு அழுதார்கள். அந்த அவகாசத்திற்குப் பிறகு மீண்டும் தொடரும்படி கையசைக்க வேறொருவன் உட்புகுந்து,

“எம்மூத்தோனே… ஒனக்கு எம்ம மீச இல்ல…

எந்தாத்தோனே  ஒனக்கு எம்ம நெறத்த இல்ல…

எம்மகத்தோனே ஒனக்கு எம்மக் கொடியுமில்ல…

எம்மாசானே…. எம்பாட்டாவே…

நீ எமக்க சாமியுமில்ல….!”

அவர்கள் மீண்டும் அழுதார்கள்.

கதை சொன்னவன் மீண்டும் தொடர்ந்தான்.

“கண்ணவிஞ்சுப் போவதுக்கா, நெலையழிஞ்சுப் போவதுக்கா நாங்க எங்க சாமிய விட்டுக் குடுத்துட்டோம்…?

தொண்டும் மூடும் அழிஞ்சத் தெங்கப்போல பாண்டும் பீச்சலும் அழிச்ச தேசம் போல கொலமழிஞ்ச மனியனாயிட்டோம்…!…”

அழுது தொழுது பாத்தும் பட்டயக்காரங்க விடல. அவங்க எங்க சனங்களுக்குள்ள கொலைக்களத்த உண்டாக்கிப் புட்டாங்க. ஒரே சண்ட… ரத்தக் காவு…

எல்லாத்தையும் விட … “

கிழக்கேப்புற கூட்டத்தினர் தங்கள் தலைகளைக் கைகளாலும் கம்பாலும் கற்களாலும் மாறிமாறி அடித்துக் கொண்டார்கள். சிலர் தரைமீது தலையாலடித்தும் அரற்றினார்கள்.

இப்போது மற்றவர்களால் பேச முடியாமல் போக, கிழவர் பேசினார்.

‘எங்க சனத்துல பொண்ணுங்கதான் துலாக்கோல்னு, ஒருபொட்டுப் பொடிசுன்னு விடாம அத்தன பொம்பளைகளையும் தூக்கிட்டுப் போயிட்டாங்க…

காடுகளுக்குள்ளேருந்தும்… புதர்களுக்குள்ளே சப்புசவருக்குள்ளேருந்தும் தான் துண்டுதுண்டா துண்டுதுண்டா எங்க பெண்கள நாங்க கண்டுபிச்சோம்…

எல்லாம் போயிருச்சு…! இப்போ நாங்க எங்கேருந்து வந்தோமோ அதே தெம்மலைக்கேப் போறோம். அங்கதானே போக முடியும்? திரும்ப மொதல்லேருந்து தான் எல்லாம் ஆரம்பிக்கப் போவுது. திங்கிற ஆகாரம், குடிக்கிறத் தண்ணி, வாசிக்கிற காத்து எல்லாத்துலயும் இயற்கையோட உளவு இருக்கு… யாரும் இதுக்கு மேலயும் தப்பிக்க முடியாது… எங்கள விட்டிருங்கோ..”

கிழவர் நம்பிக்கையோடு எழுந்தார். கூட்டத்தினர் பொருமலுக்கிடையில் தங்கள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்கள்.

ஊர்த்தலைவர் மீண்டும் பெட்டியினருகில் சென்றார்.

“நீ சொன்ன கதையெல்லாம்.. எங்கூரு செல்லாத்தாளுக்கு… எங்களுக்கு வேண்டியது இல்ல. பெட்டியத் தொறங்கடா…”

என்று அவர் சத்தமிட முன்னே நின்ற ஊர்க்காரர்கள் இரண்டுபேர் பெட்டியில் கைவைத்தார்கள். மறுநிமிடம் கிழவரின் பிரம்பு நீண்டது. அது இழுத்து வீசப்பட்ட விசைபோல அவர்களின் பின்புறத்தை சாத்த அதன் பூண் பட்டு இருவரும் தீப்பட்டதைப் போல துள்ளி விழுந்தார்கள். கூட்டத்தார் தங்கள் தடிகளைச் சுழற்றினார்கள். பூண் வைத்த பிரம்புகள் பறந்தன. ஊர்க்காரர்கள் தெறித்துப்போய் விழுந்தார்கள். சிலர் ஓடி ஒதுங்கினார்கள்.

ஊர்த்தலைவர் இசக்கி இருந்த இடத்தின் பின்புறக் கிடுகில் எரவாணத்தில் செருகி வைத்திருந்த திருக்கைவாலை எடுத்தார். செல்லாத்தாள் அது கூடாது எனத் தடுக்க வேண்டி வந்தும் தடுக்காது எடுத்துக் கொடுத்தாள்.

கிழவர் அதிர்ச்சியடைந்தார். திருக்கையின் வாலை வாங்கி பல தவணைகளாக ஊறப்போட்டும் காயப்போட்டும் பதப்படுத்தி வைக்கப்பட்ட இறுகிய ஆயுதம். அது ஒன்று போதும். அதன் முனைகளால் பதம்பார்க்கபட்ட ஒருவன் ஆயுளுக்கும் மீந்த மாட்டான். தலைவர் எடுப்பதைக்கண்டதும், சரகப்பிரதிகள் அனைவருமே ஆளுக்கொரு வாலை எடுத்துக் கொண்டு வந்தனர்.

வெகு நாட்களாகப் போராடி சீவனைக் களைத்திருந்த கிழக்கேப்புறக் கூட்டத்தினர் தங்கள் கடைசி முயற்சியாக திருக்கையின் முன்னாள் உயிர் கொடுத்துப் போராடியும் தோற்றுப் போனார்கள்.

கட்டிக் கிடத்தப்பட்ட அவர்களின் முன்பாக ஊர்க்காரர்கள் அப்பெட்டியினைத் திறந்தார்கள். உட்புறம் வெண்பட்டு போன்ற நிறத்தில் ஒரு துணியால், மூடப்பட்டிருந்தது. அதனைக் களைந்தார்கள். உள்ளே ஒரு பை போன்று தெரிந்தது. அதனுள்ளே அசைவதும் பிதுங்குவதுமாக ஏதோ தெரிய அதனை வெளியே எடுத்துப் பிரித்தார்கள். கிழக்கேப்புறத்தார் தாங்க இயலாது தங்கள் கண்களை மூடிக் கொண்டார்கள். கிழவர் மட்டும் பார்த்துக் கொண்டேயிருந்தார் அசைவற்று.

பிஞ்சு உடல்களைப் போல பலவிதமான பெண் மார்பகங்கள் திறந்த பையின் உள்ளிருந்து துடித்துக் கீழே விழுந்தன. அந்நிய கைச்சூடு பட்டு தன் உயிர்விடும் முயற்சியாக தப்பித்து விழுந்த அவைகளைக் கண்டதும் ஊர்க்காரர்கள் மகிழ்ச்சியால் மிகவும் ஆர்ப்பரித்தார்கள். ஆடினார்கள். பாடினார்கள்.

உடனே ஆளுக்கொரு முலையாய்ப் பார்த்து எடுத்துக் கொண்டார்கள். ஊர்த்தலைவர் தனது விரல்களால் நன்றாகத் துள்ளுவதாகப் பார்த்து ஓரிரண்டினைப் பற்றித் தனியாக எடுத்து வைத்துக் கொண்டார். புடைப்பும் திண்மையுமாக வேண்டி இளைஞர்கள் தங்களுக்குள் சண்டையிட்டார்கள். கிடைக்காத சிலர் அடித்துக் கொண்டார்கள். அதன் நிமித்தம் சொல்லத் தகாத தாக்குதல்கள் நடைபெற்றன. அது பற்றிய எந்தக் கவலையுமில்லாமல் விரும்பியது கிடைத்தவர்கள் தங்கள் கையிலிருப்பவைகளுடன் திருப்தியாக ஒதுங்கிக் கொண்டார்கள்.

ஒரு முலை பிதுக்கப்பட்டதில் பால் நிறைந்தது. அதை வைத்திருந்தவன் கைகளை விரித்துக் கொண்டு ஓட, கட்டப்பட்டிருந்த நிலையில் ஒரு குழந்தை தன் அம்மாவை அழைத்து அழுதது.

அதைக் கண்டு, ஓடியவன் அருகில் வந்து குழந்தையிடம் அதனை நீட்டினான். அது வாய் குவித்துக் கதறியது. அவன் குழந்தையை அவிழ்த்து விட்டு மீண்டும் ஓடினான். அவன் பிறகில் அந்தக் குழந்தை அழுதபடி சென்றது. காணாமல் போயிருந்த நாய் அக் குழந்தையை விரட்டத் துரத்தியது.

இது அத்தனையையும் கண்டுகொண்டிருந்த செல்லாத்தாள் அச்சப்பட்டு சேலைத் தடுப்பினால் தனது முலையினை மூடிக்கொண்டாள்.

சிலர் தங்கள் வீடுகளுக்குக் கொண்டு சென்று மனைவிமார்களிடம் அவர்கள் முலைகளுடன் சேர்த்து பத்திரப்படுத்தி வைக்கும்படி கட்டளையிட்டார்கள். கடந்து போன இரவுகளின் சலிப்பு மேவியிருந்த பெண்கள் இரவுச் சள்ளைகளில் இருந்து விடுபடும் பொருட்டு அதனைத் தங்கள் படுக்கையின் இடையில் வைத்துக் கொண்டார்கள். சில பெண்கள் கொண்டு வந்தவர்களை துரத்தியடித்தார்கள். முலையிழந்த பெண்களில் சிலர் அவற்றைத் தங்களுடன் ஒற்றுப் பார்த்து விட்டு வெறுப்புடன் நகர்ந்தார்கள். சில முலைகள் தூக்கி வீசப்பட்டன.

இரவு கிழக்கேப்புறத்துக் கூட்டத்தினரைப் போர்த்தியது. கை மீறிய நாளின் மீது அவர்கள் கொதிப்புடன் இருந்தார்கள்.

“சாவும் சவமும் எங்கே? சாமி எங்கே?…

கொல்லக் கொண்டு போயே…!”

கிழவர் வானம் பார்த்து விசும்பினார்.

“தாத்தாதித் தாத்தனுக்கத் தாத்தா….”

ஒருவன் கத்தினான். மறுகணம் அவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூக்குரலிட்டார்கள். அச்சமயம் அவர்களின் குரல்கள் மேல்நிலையில் ஒலிக்கும் சத்தம் போன்று ஒன்றாக அதிரக் கேட்டன. அவர்கள் தொடர்ந்து சத்தமிட்டார்கள். அது ஒரு முடிவில்லாத ஊளையாக மாறி இரவு முழுக்க பெருக்கெடுத்து நீண்டது. அது அச்சமூட்டுவதாகவும் எண்ணங்களைக் குலைப்பதாகவும் இருந்தது. அதனைக் கேட்ட விலங்குகள் காடுகளுக்குள்ளிருந்து எதிர்த்து ஒலியெழுப்பத் துவங்கின. அன்றைய இரவைக் கழிக்க முடியாமல் ஊரார் மிகவும் துன்பப்பட்டார்கள். செல்லாத்தாள் இசக்கியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு முதல் முறையாக அழுதாள்.

இரவின் விடுப்பின் போது முந்தைய நாள் ஊரிலில்லாமல் தொழிலுக்கு சென்றிருந்த ஒரு திருடன் தனக்கு மட்டும் யாதொரு முலையும் கிடைக்கவில்லையென்ற அங்கலாய்ப்புடன் வந்து கிழவரின் கட்டினை அவிழ்த்துக் கேட்டான்.

கிழவர் அவனைப் பார்த்து புன்னகைத்தபடி வானத்தை உற்று நோக்கினார். வானம் வெளுப்பில் மீண்டிருந்தது. மேலே சில காகங்கள் பறந்தவாறு தென்பட்டன. கூட்டத்தினர் கிழவரையே தளர்வாக கவனித்தனர்.

கிழவர் தனது பிரம்பினை காற்றுவாக்கில் ஒருமுறை வீசிப் பார்த்துக் கொண்டார். பின்பாக தனது உடுப்பைத் தூக்கி தனது மடியினை அவிழ்த்தார். அதனுள்ளே இருந்தது ஒரு காய்ந்த முலை. அவர் அதனைத் தனது விரல்களால் நுள்ளி எடுத்துச் சற்றுத் தூரே எறிந்தார். அதன்பிறகு சில கட்டளைகளை முனங்கி அதனை நோக்கி ஊதினார். மறுகணம் காய்ந்து போயிருந்த அந்த முலை சட்டென சுருக்கம் நீங்க ஊதிப் பெருகியது.

திருடன் உடனே அதனை எடுக்கப் போக, அந்நேரம் வேகமாய்ப் பறந்து வந்த ஒரு காகம் இடையே போய் அதனைக் கொத்தியது. ஆவேசமான திருடன் அதன் மீது பாய்ந்து பிடுங்கப் பார்க்க, புரண்டதில் காகம் சத்தம் போட்டபடி செத்துப் போனது. கிழவர் குரூரமாக சிரித்தார்.

செத்த காகத்தின் கரைதலை உணர்ந்த மற்ற காகங்கள் ஒன்றன்பின் ஒன்றென   இடையறாத சத்தத்துடன் பறந்து வந்தன. செத்த காக்கையோடிருந்த திருடனைக் கண்டன. வேகமாகச் சென்ற அக்காகங்களில் ஒன்று அவன் தலையில் ஓங்கிக் கொத்தியது.

அவன் அக்காகத்தினை அடித்துத் துரத்த முற்பட்டான். உடனே மற்ற காகங்கள் அனைத்தும் அவனைச் சுற்றிவந்து கொத்தத் துவங்கின.அவன் வலி தாங்காமல் அலறிக் கொண்டு ஓடினான். காக்கைகள் அவனை விடாது துரத்தின.

வீட்டினுள்ளே இருந்தவர்கள் வெளியே ஓடிவந்தார்கள். ஒத்த மாமிசத்தின் வாடையை அறிந்த காக்கைகள் மேலும் மேலும் சத்தமிட்டு பிற காக்கைகளைக் கூட்டின. வீடுகளுக்குள் புகுந்து கொத்தின. படுக்கையறைகளில் கிடந்தவர்கள் கொத்துப்பட்ட திறந்தமேனியோடு இறங்கி ஓடினார்கள். ஆண்கள் பெண்கள் என அனைவரின் உடல்களும் ரத்தம் கண்டது. ஒருவரையொருவர் முண்டியடித்துக் கீழே விழுந்து கொத்துப்பட்டார்கள். மண்டைகள் உடைந்தன. ஊர் பிணக்காடு போலக் கிடந்தது.

கிழவரை நனைத்துக் கொண்டு ஊருக்குள் மழை பெய்தது. தெருவில் ரத்தம் பெருக்கெடுத்தது.

இசக்கியின் முகத்தில் இன்னமும் காயாதிருந்த மஞ்ஞணை மழை நீரில் கரைந்து போக, அவளுடைய உடமையான முகம் துலங்கித் தெரிந்தது. செல்லாத்தாள் கீழே கிடந்தாள்.

காக்கையிடமிருந்து எடுத்த முலையினை கிழவர் எடுத்து கையில் பத்திரப்படுத்திக் கொண்டார். பெட்டியினை எடுத்தார். அதன் அடிப்பகுதியில் ஒரு இடைவெளி இருந்தது. அதனுள்ளே கைவிட்டுப் பார்த்தார். ஆதிபதியின் மீசையும், கண்களும் அவரது கொடியும் பத்திரமாக இருந்தன. அதைக் கண்டதும் அதன் பாதுகாவலுக்கு தனது கையிலிருந்த காய்ந்த முலையினை பதமாக வைத்து மூடினார்.

குழந்தையைத் தூக்கித் தோளில் அமர்த்தினார். அவர்கள் தங்கள் திசை நோக்கிப் பயணிக்க, காக்கைகளின் ஓயாமை தொடர்ந்து கேட்டது.

***

அய்யப்பன் மகாராஜன்

நாகர்கோயிலைச் சேர்ந்த இவர் தற்போது திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். சிறுகதை, கவிதை, கட்டுரைகள், தொடர், என பல்வேறு படைப்புகள் இதழ்களில் வெளியாகி வந்துள்ளன. – imaharajan@gmail.com

இலட்சத்தில் ஒரு காதல் கதை

0

பிரபாகரன் சண்முகநாதன்

கதாபதிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. துக்கத்தினாலோ துயரத்தினாலோ பொது அங்காடியில் வரிசையில் காத்திருந்தும் கோதுமை கிடைக்காததாலோ வந்த அழுகை அல்ல இது. குளிர்ந்த நுரைத்திரவம் கிட்டவில்லை என்று கூட அழுதிருக்கிறான். ஆனால் இது அப்படியான அழுகை அல்ல. புதுவிதமாக இந்த அழுகையின் உணர்வு தோன்றவும், அம்மா செய்து வைத்திருந்த கேசரியை அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு, அவசரமாகத்தானே ஒழிய அளவாக இல்லை. சப்பாத்திக்கும் குருமாவுக்கும் என்ன பொருத்தம் என புறங்கையை நக்கி முடிக்கும் வரை யோசித்திருந்ததை மறந்துவிட்டு வெளியே புறப்பட்டு சென்றான்.

காத்திருக்கச் சொல்லிய இடத்திற்கு இருபது நிமிடங்கள் முன்பே வந்து விட்டான். நகரின் பொதுவான இடம் தான் என்றாலும் அன்றைக்கு கூட்டமில்லை. இளநீர் வெட்டிக் கொண்டிருந்த அண்ணனும், கண்களை இறுக்க மூடிப் படுத்திருந்த வயதானவரையும் தவிர்த்து விட்டால் அவன் மட்டுமே அந்த  இடத்தில் நின்றான். பேருந்து நிலைய வளாகத்தைச் சுற்றி செல்லும் அந்த நடைபாதை ஒன்றோடு ஒன்று பொருந்திக் கொள்ளும்  வண்ணக் கற்களினால் கட்டப்பட்டிருந்தது. அதன் மையத்தில் நிற்பது ஒரு மாதிரியாக தோன்றியபடியால் மரத்தின் அருகே தன்னையும் ஒரு மரமாக நினைத்துக் கொண்டு நின்றுவிட்டான்.

கதாபதிக்கு இளநீர் குடிக்க ஆசை வந்தது. ஆசை என்றில்லை தாகம். வேண்டாம் என்று சட்டென்று முடிவு எடுத்தான். குடித்துக் கொண்டிருக்கும் போதே அவள் வந்துவிட்டால் தன்னை ஏதாவது நினைத்துவிடுவாள் என்று பயந்து அந்த முடிவுக்கு வந்தான். அவனுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது தன்னால் இவ்வளவு விரைவாக முடிவு எடுக்க முடியுமா என்று. முதல் முறை தன்னை ஒரு பெண் பார்க்க வருகிறாளே என்பதற்குத்தான் அந்த அழுகை. இந்த வாய்ப்பைத் தவறவே விடக்கூடாது என எண்ணிக் கொண்டான்.

மணியைப் பார்த்தான். இந்த நேரத்திற்கு என அவள் சொல்லிய நேரம் வருவதற்கு இன்னும் ஏழு நிமிடங்கள் இருந்தன. அவள் என்ன பல்லவன் விரைவு வண்டியா சொன்ன நேரத்திற்குச் சரியாக வர. இருப்பினும் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது அவனுக்கு. பெண்கள் சொன்ன வாக்கைக் காப்பார்கள் என்று.

டியோ விநா_ ய்க்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவன் தான் பேஸ்புக் இல் அக்கௌன்ட் திறந்து கொடுத்தது. பேஸ்புக் இல்லையென்றால் இந்த சந்திப்பு இல்லை.

விநாயகமூர்த்தி இந்தப் பேர் தான் அந்த நிலைக்கு ஆளாகி இருந்தது. அதே வளவில் குடியிருக்கும், அவன் அக்கா என்று வாஞ்சையாக அழைக்கும் அழகம்மையின்  பையன். பத்தாவது தேற மாட்டான் என்று இருந்தவனை கொரோனா வந்து பாஸாக்கி விட்டது. அது என்னடா டியோ என்றால் அந்த வண்டியைத்தான் ஒருநாள் வாங்கப் போவதாகவும் அந்த ஆசையிலேயே இந்தப் பெயரை வைத்துக்கொண்டு சுற்றுவதாகவும் சொல்லிக்கொண்டு திரிந்தான் டிவிஎஸ் எக்ஸெலில். தான் கூட தன் பெயரை ஆடி கதாபதி என மாற்றிக் கொள்ளலாமா என தீவிரமாக யோசித்தான் கதாபதி.

வேலைக்குச் செல்லும் நிறுவனம் மூடியிருந்த காலத்துல, அழகம்மையின் வேண்டுகோளுக்காக விநா_ய்க்கை மாலை நேரங்களில் தன் வீட்டுக்கு அழைத்து கதைகள் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். பழைய ராமாயணம் தான். ராமாயணம் அவன் அப்பத்தா இருக்கும் வரை அவனுக்கு சொல்லிக் கொடுத்தது. இந்த பெயரைக் கூட அப்பத்தா தான் வைத்தது. என்னவோ கதாபதிக்கு கதை சொல்ல மட்டும் அழகாக வந்தது. பள்ளிக்கூடத்தில் தாமதமாக சென்று ஆசிரியரிடம் திட்டு வாங்காமல் தப்பிப்பதற்காக கதை சொல்லத் தொடங்கியது. அதற்காக செல்லப்பன் வாத்தியாருக்கு இப்போதும் கடமைப்பட்டு இருக்கான் கதாபதி.

விநா_ய், “மாமா நீ இவ்வளவு அழகா கதை சொல்றீல. இப்படி என் கிட்ட சொல்லி அறுக்காம அதை பேஸ்புக்கில் சொன்னால் இலட்சக்கணக்கான பேர் கேப்பாங்க”. நட்சத்திரம் ஆகும் கனவு அப்போது தான் அவனுக்கு எட்டிப்பார்க்கத் தொடங்கியது.

அவனுடைய பெயரில் ஒரு எழுத்து ஆதாரில் தப்பாக இருப்பது, பேஸ்புக்கில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதுல என்பதை ஒருமுறை கேட்டு உறுதி செய்துகொண்டே பேஸ்புக் கணக்கு திறப்பதற்கு சம்மதித்தான்.

ஒரு வாரத்தில் கேட்பவர்களின் எண்ணிக்கை பதினேழு என்பதில் இருந்து அறுபத்து ஆறு வரை வளர்ந்தது இன்னும் நம்பிக்கையை அளித்தது. அப்போது தான் அவளிடமிருந்து குறுஞ்செய்திகள் வரத் தொடங்கியது.

பேன் கேர்ள் என்பதில் தொடங்கிய அறிமுகம் இன்னும் ஆழமாக வளர்ந்து கொண்டே சென்றது. ஆழமாக என்றால் அவள் டல்கோனா காபிக்காக பால் கொதிக்க வைக்கும் போது கையில் சுட்டுக் கொண்டது என்பதையெல்லாம் பரிமாறிக் கொள்ளுமளவுக்கு ஆழமாகத் தொடங்கியது. இவன் தன்னுடைய எல்லா அறிவையும் பயன்படுத்தி கோல்கேட் பேஸ்ட் இருந்தா சுட்ட இடத்தில் போட்டுக் கொள்ளவும் என்கிற மருத்துவக் குறிப்பில் இருந்து அவள் இவனை நேசிக்கத் தொடங்கிவிட்டதாக இவன் கற்பனை செய்துக் கொண்டான். ஆனால் பிடியே கொடுக்காமல் அவள் பேசுவதாகத் தோன்றவும் என்ன செய்யலாம் என்று யோசனை கேட்க பழனியப்பனைக் கூப்பிட்டான். யோசனைக்குக் கூலியாக மீன்கொத்தி இரண்டு போத்தல்களும், சுட்ட கோழி அரை கிலோவுக்கும் செலவு செய்ய வேண்டி இருந்தது.

“நேரில் பார்க்க கூப்பிடு மச்சா. பொம்பளைப் பிள்ளைகளுக்கு ஒருத்தன பிடிச்சுருச்சுன்னா அவங்க உடனே சொல்லிட மாட்டாங்க. நாம சொல்லணும்னு நினைக்கும்க” அதன் பிறகு அவன் பேசிய எதுவும் இந்த கதைக்கு தேவையில்லை என கதாபதியே கேட்டுக்கொண்டதால் நானும் தவிர்த்து விடுகிறேன். பழனியப்பன் மினி பேருந்தில் நடத்துனர். கண்ணன் பஸாரில் காலையில் வதவதவென இறங்கும் பிள்ளைகளின் கூட்டத்தில் அவனும் தென்படுவதால் நண்பர்கள் மத்தியில் அவனுக்கு விளையாட்டுப்பையன் என்கிற தோற்றம் உருக்கொண்டு விட்டது. அவனுக்கு மட்டுமே தெரியும் அதே பேருந்தில் அவன் வாங்கிய காலணிகளின் வீச்சுகள்.

நேரில் பார்க்க அவள் வருவதை யோசிக்கும் போதே மனசு மேலே பறந்தது. பேஸ்புக்கில் இனி கதைகளோடு கவிதைகளையும் சொல்ல வேண்டும் என எண்ணிக்கொண்டான். கானாடுகாத்தானில் இருந்து கருத்துகளை இடும் சோனா கானா அண்ணாமலை அய்யா ‘அருமை! நல்ல கருத்துரை! என்றும் வாழ்க வளமுடன்’ என்பதை தான் யோசிக்கும் போதே தட்டச்சு செய்ய தொடங்கிவிடுவார் என இவன் நினைத்துக் கொள்வான். 

இன்னும் அவளைக் காணவில்லை. ஏதும் நிகழ்ந்திருக்குமோ வரும் வழியில். இப்படித் தப்பா யோசிக்கிற வேளையில் முத்துமாரியம்மனை மனதால் வேண்டிக் கொள்வான் கதாபதி.

நேரம் போய்க்கொண்டே இருந்தது. அவளது உள்பெட்டிக்கு சென்று கடைசியாக உள்நுழைந்த நேரத்தைப் பார்த்தான். நேற்று இரவு பன்னிரண்டு பத்து என்று இருந்தது.

கிளம்பியிருப்பாளா இல்லையா யோசிக்க யோசிக்க களைப்பாகியது. யோசிக்காமலேயே இளநீர் வெட்டச் சொன்னான். அவள் இன்னும் வந்திருக்கவில்லை. இல்லை தன்னை சோதனையிடுகிறாளா. முன்னப்பின்ன பெண்களிடம் பேசியிருந்தால் தெரியும்.

இப்போது அனிச்சையாக அவள் இந்த இடத்திற்கு வந்துவிட்டாள் என்று தோன்றவும் திரும்பிப் பார்த்தான். ஒரு ஸ்கூட்டியில் இருந்து அழகான ஒரு பெண் இறங்கி இளநீர்க் கடைக்கு வந்தாள். ரோஸ் நிற சுடிதார். கொஞ்சம் உயரம் குறைவு. அழகான முகம். மூக்குத்தி கண்ணைப் பறித்தது. ஒல்லியா இருந்திருந்தா ஸ்ரீதிவ்யாவை தோற்கடித்து விடக் கூடிய அழகு. அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதை வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்த இளநீர் கடைக்காரர் அவள் குரல் கேட்டுத் திரும்பினார்.

‘அண்ணே, இளநீ எவ்வளவு’

கதாபதிக்கு ஏமாற்றமாக இருந்தது. இளநீர் கடைக்காரர் நமட்டு சிரிப்பு சிரிப்பதாக தோன்றவும் அங்கிருந்து நகர்ந்தான்.

முதுகில் யாரோ கை வைப்பதாகத் தோன்றவும் திடுக்கிட்டுத் திரும்பிய கதாபதியைப் பார்த்தவாறே நின்று கொண்டிருந்தார் டிஷர்ட் அணிந்திருந்த வாலிபர். கதாபதியை விட அவர்  பதட்டமாக இருந்ததால் கதாபதி ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிந்தது. தன்னை கதாபதியின் விசிறி என அறிமுகம் செய்து கொண்டவருக்கு பெருந்தன்மையாக ஏதாவது வாங்கித் தர நினைத்தவன் இளநீர் கடைக்காரர் சிரிப்பு நினைவுக்கு வரவும் அந்த ஆசையைக் கைவிட்டான்.

டிஷர்ட்டை வழியனுப்பி வைக்கும் போது, அவனுடன் எடுத்துக் கொண்ட செல்பியைத் தனக்கும் அனுப்புமாறு கேட்டுக் கொண்டான். பெயர் என்னவென்று கேட்கவில்லை. தானும் பிரபலம் தான் போல எனக் கண்ணீர் சிந்த நினைத்தவன் அவள் வராததற்கும் கண்ணீர் உகுக்க வேண்டும் என்பதால், எதற்கு கண்ணீரை செலவழிப்பது என குழம்பியதால் சிக்கனம் செய்யும் முடிவுக்கு சென்றுவிட்டான்.

காத்திருப்பது பலனளிக்காது என்று வீட்டுக்குப் புறப்பட்டான். எலும்பு குழம்பும் மட்டன் தெறக்கலும் பிற்பகல் திண்ணையில் சாய்வை வேண்டியது. எழுந்த போது செல்பேசியைக் கையில் எடுத்தான். அவள் ஏதாவது அனுப்பியிருக்க கூடும் என்ற ஆசையில் உள்பெட்டிக்கு சென்ற போது அந்த வாலிபருடன் எடுத்த செல்பி வந்திருந்தது. அவனுக்கும் இவளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா. தன்னுடைய குணத்தை தெரிந்துக் கொள்வதற்காக வேவு பார்க்கச் சொல்லி அனுப்பி இருப்பாளோ.

“மகிழ்ச்சியான சந்திப்பு. என்னுடைய புகைப்படத்தை இப்போது தான் முதல்முறையாக பகிர்கிறேன். அன்புகள் கதாபதி ப்ரோ”

அவளுடைய நிலைத்தகவலை சென்று பார்த்த பின் அவள் கிடையாது அவன் என்கிற முடிவுக்கு வந்தான் கதாபதி. இவ்வளவு நாளா ஒரு பையன் கிட்டயா பொண்ணுன்னு நினைச்சு வழிஞ்சுட்டு இருந்தோம் என யோசிக்கும் போதே கதாபதிக்கு மண்டை வலிப்பதைப் போல் இருந்தது.

மனசைக் குடைந்துக் கொண்டிருந்த விஷயத்தைத் தீர்க்கும் பொருட்டு குபேரமூர்த்தியை அழைத்து, குபேரமூர்த்தி விநாயகமூர்த்தியின் தம்பி. இவன் ஆறாவது தான் படிக்கிறான். பின்னாடி காலத்துல டியோவையோ, ஏரோப்ளேனையோ பேருக்கு முன்னாடி சேர்த்துக்குவான் போல.

“டேய், இந்த ப்ரோ-னா என்னடா அர்த்தம்”

“இது கூட தெரியாமல் இருக்கீங்களே அண்ணே. அண்ணனையோ தம்பியையோ இங்கிலீஷ்ல ப்ரோனு தான் கூப்பிடுவாங்க”

கதாபதிக்கு தூக்கிவாரி போட்டது. ப்ரோனா என்னனு முதல்தடவை கேட்டதுக்கு விநா_ய் சொன்ன பதிலை நினைத்துப் பார்த்தான்.

“லவ் பண்றவங்க ப்ரோனு கூப்பிடுவாங்க அண்ணே. ராஜா ராணி படம் பார்த்ததில்லை. அதுல கூட நஸ்ரியா ஆர்யாவைப் ப்ரோனு தான்னு கூப்பிடுவாங்க”

கதாபதிக்கு அந்தப் படம் பார்த்த நியாபகம் இருந்தது. குண்டுப்பய ஒரு வார்த்தைல கவுத்துவிட்டுட்டுப் போயிட்டானே. அது கூடப் பரவாயில்லை. அத்தனை ஆசையோடு பதிலுக்கு பதில் தானும் ப்ரோ என அனுப்பியதை யோசித்தால் விநா_ய் மேல கொலைவெறி… (மன்னிக்கவும் கதாபதி இடையிட்டு நாய் என்று மட்டும் எழுத சொல்கிறார்) வருது கதாபதிக்கு. ஆனா அந்த படத்துல நஸ்ரியா ஏன் ஆர்யாவைப் ப்ரோனு கூப்பிடணும் என்கிற சந்தேகம் தீராத கேள்வியாக மனசுல பதிந்துவிட்டது. யாரிடமும் இனி சந்தேகம் கேட்கப் போவதில்லை என மூன்றாவது முறையாக சட்டென்று முடிவு எடுத்துவிட்டான்.

வெந்த இட்லியும் மதியம் மிஞ்சுன எலும்பு குழம்பும் வளவுக்குள் தன்னை அழைப்பதாக தோன்றவும் கதாபதி கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு வெறும் மேலைத் தடவிக் கொடுத்தவாறே உள்ளே எழுந்து சென்றார். கதாபதிக்கு அழுகை வருவது போல இருந்தது.

***

பிரபாகரன் சண்முகநாதன் காரைக்குடியைச் சேர்ந்த இவர். விகடன் மாணவர் பத்திரிக்கையாளராக பணியாற்றியுள்ளார். இவரது மின்னஞ்சல் முகவரி – arivar1999@gmail.com

அய்யப்ப மாதவன் கவிதைகள்

0

காற்றும் சிற்சிறு இலைகளும்

1

படுக்கும் அறைக்குள் சிற்சிறு இலைகள்
மரத்தில் உயிர்த்திருந்தவை பயங்கர காற்றில் மூச்சிழந்து
உயிர் துறந்து
இறுதி யாத்திரையில் என்னிடம் வந்துவிட்டன
சுற்றிலும் வெற்றுடல்களில் சுவாசித்துக் கிடக்கும் என்னுடல் இதற்கு முன் கண்டிருந்த சடலங்களின் நினைவில் கலக்கமுற்றது
இறந்துபோனவர்கள் என்னருகில் இருப்பது போன்ற மாயை வேறு
உதிர்ந்தவை யாவும் மாண்ட உடலங்களை நினைவூட்டதாகவே இருப்பது இந்த தனித்த இரவின்
துயரை
கனக்கச் செய்துவிடும் போலும்
வரவிருக்கும் நித்திரை மீது
இந்தச் சருகுகள் சாவுமேளத்தை இசைக்காமலிருக்க வேண்டும்.

***

2

பெருங்காற்று மரங்களுக்கு போதை ஊட்டி கிறுகிறுக்க செய்து அதன் உயிரான இலைகளைச்
சிதைத்து
என் வீட்டினுள் தூக்கியெறிந்தது
பரிதாபத்தில் என்னருகில் இருத்திக்கொண்டேன்
மரத்திலிருந்தால் சப்தமிட்டுக்கொண்டிருக்கும்
இப்போது அதற்கு எந்த வாய்ப்புமில்லை
உயிர்ப்பான காலத்தைக் காற்று
பறித்துவிட்டது
நான் துடிக்கும் என்னிதயத்துடன்
துடிப்படங்கிய உடல்களைத் தரிசித்தேன்
மரணம் தரிசனத்துக்குரியது
துக்கப்படவோ வேதனைப்படவோ ஒன்றுமில்லை
அருகிலிருந்த அவற்றின் நிச்சலனத்தின் மீது
என்னுறக்கம் ஊர்ந்தது போலிருந்தது.

***

3

காற்று எங்கோ ஒளிந்து கொள்ள
மரத்தின் அசைவுகள் ஸ்தம்பித்திருந்தன
பாவம் இலைகள் தான் பிரிந்துவிட்டன
அதற்கு பெரும் ஆறுதலாய் நான்
என் வீட்டில் இடம் கொடுத்தேன்
ஆயினும் இறந்துவிட்டவை
அமைதியில் தோய்ந்து இருந்தன
படுக்கையின் மீதிருந்த அவற்றை
கொஞ்சம் ஓரமாய் பெருக்கி வைத்தேன்
இந்த இரவு இலைச் சடலங்களுடன்
கழிவதை நினைக்கையில் ஒரு இலைபோல இதே காற்று உலகிலிருந்து என்னை
உதிர்த்துவிடுமென்று நினைத்துக்கொண்டேன்
உயிர்களை இயக்கும் காற்று புதிரானது
யாரும் அறியாத ரகசியத் தன்மையில்
அது எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது.

***

4

இந்த நாள் முழுக்கவே காற்றின் தாண்டவம் முழுவீச்சில் இருந்தது
மரங்களை பேய் பிடித்த பெண்களின் தலையை போல சுழற்றி அடித்தது
எதிர்க்கத் திராணியற்ற மரங்கள்
நிலத்தில் விழுந்து மடிவது போல் இருந்தன
பலகீனமான அவற்றின் உடலில் இருந்து
மிக மெலிதான உடல்களால் ஆன இலைகள்
எதிர்த்துப் போர் புரிய முடியாமல்
கூட்டம் கூட்டமாய் சரிந்து வீழ்ந்தன
அப்படித்தான் இன்று காற்றின் கைகள்
என் அறைக்குள் அவற்றை எறிந்துவிட்டு போனது
இப்போது என் வீடு இலைகளால் ஆன
மரம் போன்று இருப்பதாய்த் தோன்றியது.

***

அய்யப்ப மாதவன்

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

0

லும்பர்கள்

லும்பன்-1

*

பார்வையை உடைத்துவிட்டு மண்டைக்குள்
புகுந்து அழிச்சாட்டியம் பண்ணுகிறது
கண்முன் கிட்டிடாத எல்லையற்ற
பொழுது

சம்பாதித்துக்கொள்ளத் தவிக்கும்
ரொட்டித் துண்டை
கைப்பற்றி எக்காளமிடுகிற அரச யந்திரம்
முடுக்கிவிடுகிறது பசியை
அனுதினம்

வக்கு வழியற்று நோக்கும் திக்கில்
சூப்பர் மார்க்கெட் முன்னே
நீண்ட வரிசையில்

முகமூடி அணிந்த சமூக விற்பன்னர்கள்
இடைவெளி தரித்த கோடுகளுக்கு
ஊடே
நிற்கின்றனர்

காயும் வெயிலைச் சலித்தபடி

அய்யா
பசி

காசு வேண்டாம்
ஒரு ரொட்டி பாக்கெட்?


லும்பன்-2

*
நடுங்கும் கைவிரல்களில் உயிர் நரம்புத்
துடித்துத் துடித்து
மண்டைக்குள் பிசாசு ஒன்று வெடிக்கிறது

சத்தம் கேட்குதா

ரத்தவாடையை கவுச்சி என்கிறாயே
என்னருகே வந்து மோந்து பார்த்திடாத
பசியை

எங்காவது விற்றுத் தொலைத்து

நாலு முட்டைகளையாவது வாங்கி வாயேன்
சனியனே


லும்பன்-3

*

எழவு விழுந்த கட்டடத்திலருந்து ஏன்யா
வெளியே வர்றீங்க
எங்க தாலிய அறுக்கவா

ஸார்
கார்பரேஷன் எஸ்.ஐ லெட்டர் இல்லாம
கலக்டரே வந்தாலும் பரிசோதனை கிடையாது
கிளம்புங்க

ரிசல்ட் பாசிட்டிவ்னா நாங்களே வந்துருவோம்
சும்மா நொய் நொய்யின்னு டார்ச்சர் பண்ணாத
படிச்சவன் தானே நீ
மூளைய யூஸ் பண்ண மாட்டியா

சமூகப் பொறுப்பு இருந்தா
இப்படி கடையத் தொறந்து வைப்பியா
மூட்ரா நாயி

எங்கே போயி ஊர மேய்ஞ்சிட்டு வர்ற
எறங்கு வண்டிய வுட்டு

மச்சி ஈ-பாஸ் ட்ரை பண்ணு
பேசாம ஊருக்கே பறந்துடலாம்
இது வேலைக்கு ஆவாது

ஒரு குவாட்டருக்கு வக்கில்லாட்டி
என்ன பொழப்புடா
ச்சே ஊரா இது

தூத்தேறி

ஊரடங்கு
ஊரடங்கு
ஊரடங்கு

6 டூ 6
ஊரடங்கின மண்டைக்குள் பிளக்கிறது
மானங்கெட்ட உலகம்

டுடும் டுடும் டுடும் ட்டுட்டுடும்
டுடும் டுடும்

பாதுகாப்பான பால்கனிகளில் முளைக்கின்றன
முகமூடி அணிந்த முகங்கள்

தலைவன் இல்லாத கழைக்கூத்தாடி குடும்பமொன்றின்
தாயும் இரண்டு மகவும்

அப்படி
தினம் பகல் பொழுதில் ஆளற்ற தெருவில்
மர நிழலில் ஒண்டியபடி
அடிக்கிற

மேளத்தின் தாளத்துக்கு

இடுப்பசைத்து வளைத்து ஆடியபடி
அம்மாவின் திட்டு வாங்கி கண்ணீர் மல்க
ஆடுகிறதுகள்

பெருசும் சிறிசும்

டுடும் டுடும் டுடும் ட்டுட்டுடும்
டுடும் டுடும்


கவிதைக்காரன் இளங்கோ
சென்னை
kavithaikarandiary@gmail.com