Home Blog Page 74

பெர்டோல்ட் ப்ரெஷ்ட் கவிதையும் சில எதிர் கவிதைகளும்..

0

தமிழில் : பிரஷாந்தி சேகரம்

20 ஆம் நூற்றாண்டு ஜேர்மன் இலக்கியத்தின் மிக முக்கிய கவிஞர், நாடக ஆசிரியர், நெறியாளர், தீவிர மார்க்சியவாதி பெர்டோல்ட் ப்ரெஷ்ட். Die Dreigroschenoper (The Threepenny Opera), Mutter Courage und ihre Kinder  (Mother Courage and Her Children), Der gute Mensch von Sezuan (The Good Person of Szechwan), Der kaukasische Kreidekreis (The Caucasian Chalk Circle) மற்றும் Trommeln in der Nacht (Drums in the Night) என்பன நாடகத் துறையிலும், படைப்பிலக்கியத்திலும் உச்சம் தொட்ட பிரதிகள். போர்க்கால இருண்ட வாழ்வியல், அதன் விரக்தி, வெறுப்பு, இயலாமை, இழப்பு எல்லாம் ப்ரெஷ்டின் அரங்கில் (Epic Theatre) புதிய உத்திகள் மூலம் புது வடிவம் பெற்றன. அவரின்  கவிதைகள் – அது தனி ஓர் உலகு. ஓர் அனிச்சப் பிறவியின் தனிமொழி.  

பெர்டோல்ட் ப்ரெஷ்ட்டின் “தொடரும் சந்ததியினருக்கு” 1934 – 1938 காலப்பகுதியில் எழுதப்பட்ட ஒரு முக்கியமான அரசியல் கவிதை. இந்தக் கவிதையில் வரும் “தொடரும் சந்ததியினர்” மற்றும் “மரங்கள் பற்றிய ஓர் உரையாடல் ஒரு குற்றச்செயலாவது” எனும் வரிகள் அதிகப்படியான சர்ச்சைகளை உருவாக்கின. அதன் காரணமாக அந்தக் கவிதைக்கு பல எதிர்க்கவிதைகள் அல்லது பதில்கவிதைகள் வெவ்வேறு காலகட்டங்களில் Hans Magnus Enzensberger, Paul Celan, Walter Helmut Fritz, Hans Christoph Buch மற்றும் Erich Fried எனும் கவிஞர்களால் எழுதப்பட்டன. அவற்றைத் தமிழில் தொகுக்கும் ஒரு சிறு முயற்சி இது.

கவிதைகளின் மூலம்: ஜேர்மன்

தொடரும் சந்ததியினருக்கு – பெர்டோல்ட் ப்ரெஷ்ட் (1934-1938)
An die Nachgeborenen – Bertolt Brecht

***

I

மெய்யாகவே, நான் கொடுங் காலத்தினுள் வாழ்கின்றேன்!

தீங்கற்ற அந்தச் சொல் அற்பத்தனமாகி. சுருக்கங்களற்ற நெற்றி
பற்றற்ற நிலையைக் குறித்து நிற்கின்றது. சிரித்துக் கொண்டிருப்பவனுக்கு
அந்தக் கொடுஞ் செய்தி
இன்னும் காதில் எட்டவில்லை போலும்.

என்ன காலம் இது,
மரங்கள் பற்றிய ஓர் உரையாடல் ஒரு குற்றச்செயலாவது
அது எண்ணற்ற குற்றங்களை மௌனமாகத் தனக்குள் அடக்கிவைப்பதால்!
அமைதியாகச் சாலையை கடந்து சென்றுகொண்டிருப்பவன்
பேரிடரில் தவிக்கும் அவனது நண்பர்களுக்கு எட்ட முடியாது போகின்றானே?

மெய் தான்: என் இருப்புக்கானதை இன்னும் என்னால் சம்பாதிக்க முடிகின்றது
ஆனால் நம்புங்கள்: இதெல்லாம் வெறும் தற்செயலே. எதுவும்
நான் செய்வதில் என் வயிறு நிரம்புவதற்கான நியாயத்தைத் தரவில்லை
தற்செயலாகவே நான் பிழைத்துப் போகிறேன். (என் அதிஷ்டம் கைவிடும் நொடி நான் தோற்றேன் என்றாகும்.)

உண், அருந்து! அதெல்லாம் கிடைத்திருக்க மகிழ்ந்திரு என்றெனக்கு சொல்கிறார்கள்.
எப்படி நான் உண்பேன், தாகம் தீர்ப்பேன்?
நான் உண்பது, பசியுற்றவரிடம் இருந்து பறித்த உணவு
நான் அருந்துவது, தாகம்கொண்டு தவிப்பவருக்கான நீர்.
இருந்தும், நான் உண்கிறேன், தாகம் தீர்க்கிறேன்.

சற்று விவேகமாக இருந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்
புராதான நூல்களில் விவேகம் என்னவென்று உள்ளது:
உலகத்துச் சச்சரவுகளில் இருந்து விலகி இருப்பதும், சிறிது காலம்
அச்சமின்றி வாழ்வைக் கழிப்பதும்
வன்முறையின்றி வாழ்வதுமாகும்
தீயதை நல்லதுகொண்டு சரிசெய்தலும்
ஆசைகளைத் தீர்ப்பதல்ல, மறப்பதும்
அதுவே விவேகம்.
இதெல்லாம் என்னால் முடியாது:
மெய்யாகவே, நான் கொடுங் காலத்தினுள் வாழ்கின்றேன்!

II

அழிவு காலத்தில் நான் நகரங்களுள் வந்தேன்
பசி பரவிக் கிடந்தது.
கலவரக் காலத்தில் மனிதர்களுள் நான் வந்தேன்
அவர்களுடன் இணைந்து எழுச்சி கொண்டேன்.
அவ்வாறே கரைந்து போனது
இந்தப் பூமியில் வாழ்வதற்கு எனக்கு வரையறுக்கப்பட்ட காலம்.

எனது உணவை நான் படுகொலைகளுக்கு நடுவே உண்டேன்
எனது தூக்கம் கொலைகாரர்களின் நடுவே நிகழ்ந்தது
காதல், தங்குதடையற்று என்னை அங்கு ஒப்புக்கொடுத்தேன்
இயற்கை, பொறுமையற்று அதனைக் கவனித்தேன்.
அவ்வாறே கரைந்து போனது
இந்தப் பூமியில் வாழ்வதற்கு எனக்கு வரையறுக்கப்பட்ட காலம்.

எனது காலத்தில், பாதைகள் எல்லாம் சேற்றில் முடிந்தன
மொழியோ என்னை வெட்டிக் கூறுபோடுபவர்களிடம் காட்டிக்கொடுத்தது
எதற்கும் வல்லமையற்றுப் போனேன் நான். ஆள்பவர்களோ
நானின்றி மிகத்திடமாக இருந்தார்கள், அவ்வாறு நான் நம்பினேன்.
அவ்வாறே கரைந்து போனது
இந்தப் பூமியில் வாழ்வதற்கு எனக்கு வரையறுக்கப்பட்ட காலம்.

சக்தியெல்லாம் சிறுத்துப் போனது. இலக்கு
வெகு தூரத்தில் இருந்தது
மிகத் தெளிவாகவும் தெரிந்தது, எனக்குத் தான்
என்றுமே அடையமுடியாமல் போனது.
அவ்வாறே கரைந்து போனது
இந்தப் பூமியில் வாழ்வதற்கு எனக்கு வரையறுக்கப்பட்ட காலம்.

III

நாம் மூழ்கிய வெள்ளப்பெருக்கில் மேலெழுந்து வருபவர்கள் நீங்கள்
நினைவுகொள்ளுங்கள்
எமது பலவீனங்கள் பற்றிப் பேசும் போது
நீங்கள் தப்பி வந்த கொடுங் காலம் பற்றியும் பேசுங்கள்.

நகர்ந்தோம் தான், காலணிகளை விட அதிகமாக நாடுகளை மாற்றி
பிரிவினைகளின் போரினூடாக, நம்பிக்கையிழந்து
அநீதி மட்டுமே, எந்த வித எதிர்ப்புமற்று இருக்க.

நாம் உணர்ந்தோம் தான்:
சிறுமையை வெறுப்பது கூட
தோற்றத்தை மாற்றிவிடும்.
அநீதியை எதிர்த்தால்
குரல் கட்டிக்கொள்ளும். அட,
நேசத்துக்கான விதையை இந்த நிலத்தில் விதைக்க விரும்பிய நாமே
நேசமாக இருக்கமுடியாது போனோம்.

ஆனால் நீங்கள், அந்தக் காலம் வரும் போது
ஒரு மனிதன் சகமனிதனுக்கு ஓர் ஆதரவாளனாகும் போது
எம்மை நினைவுகூருங்கள்
நெஞ்சிரக்கத்துடன்.

***

1)

இரண்டு தவறுகள் – ஹன்ஸ் மக்நுஸ் என்சென்ஸ்பேர்கர் (1955 – 1970)

Zwei Fehler – Hans Magnus Enzensberger

***

ஒப்புக்கொள்கிறேன், அவரின் காலத்தில்
நான் சிட்டுக்குருவிகளை வைத்து பீரங்கிகளைத் தாக்கினேன்.

அது இலக்குத் தவறாத அடியல்ல,
என்பது தெரிந்த விடயம் தான்.

அதனை நான் மறுக்கவில்லையே,
இனி முழுதாக மௌனிக்க வேண்டும் நான்.

உறங்குவது, சுவாசிப்பது, கவிபாடுவது:
அது ஏறத்தாழ ஒரு குற்றச் செயலாகி விடாது.

முற்றுமுழுதாக மௌனிப்பது
புகழ்பெற்ற மரங்கள் பற்றிய அந்த உரையாடல் தொடர்பாக பேசாது இருப்பது.

பீரங்கிகளை வைத்து சிட்டுக்குருவிகளைத் தாக்குவது, அதன் பொருள்
எதிர்மறையான தவறுகளில் விழுவது.

2)

ஓர் இலை, மரமின்றி – போல் செலான் (1968)

Ein Blatt, Baumlos – Paul Celan

***

ஓர் இலை, மரமின்றி
பெர்டோல்ட் ப்ரெஷ்ட்டுக்கு உரித்தாகுக:
என்ன காலம் இது,
ஓர் உரையாடலே ஏறத்தாழ பெருங் குற்றச்செயலாவது,
அது எண்ணற்ற கருத்துக்களை
தனக்குள் அடக்கிவைப்பதால்?

3)

மரங்கள் – வால்டர் ஹெல்மூட் ஃப்ரிட்ஸ் (1975)

Bäume – Walter Helmut Fritz

மீண்டும் நகரத்தில்,
தரிப்பிடங்கள் உருவாக,
மரங்கள் சாய்க்கப்பட்டன.

அவர்கள் நிறைய அறிவார்கள்.
நாம் அவர்களின் அருகில் இருந்தபோது,
தோழமையுடன் வரவேற்றனர்.

இப்போதெல்லாம் ஏறத்தாழ
ஒரு குற்றமாகி விட்டது,
மரங்கள் பற்றிப் பேசாது இருப்பது,
அதன் வேர்கள், காற்று, அங்கு கூடடையும்
பறவைகள்,
அவை நினைவூட்டும்
பேரமைதி.

இயற்கை அல்லது: ஏன் இன்று மரங்கள் பற்றிய ஓர் உரையாடல் பெருங் குற்றச்செயலேயல்ல? – ஹன்ஸ் க்றிஸ்டோப் பூஹ் (1977 )

Natur. Oder: Warum ein Gespräch über Bäume heute kein Verbrechen mehr ist? – Hans Christoph Buch

என்ன நிகழ்ந்தது?

“மரங்கள் பற்றிய ஓர் உரையாடல் பெருங் குற்றச்செயலாவது” எனும் வாக்கியம்
ஏன் இன்று அதுவே ஏறத்தாழ ஒரு குற்றச்செயலாகி நிற்கின்றது? ஏனென்றால்
இன்னும் தெளிவில்லை, அடுத்த 100 வருடங்களில் இந்தப் பூமியில்
மரங்களே இருக்குமா என்பது,
மரங்கள் பற்றிய மௌனம் எண்ணற்ற குற்றங்ககளின் மௌனமாவதால்
அங்கு மரங்கள் மட்டுமே பலியாவதில்லை.

சந்ததியினரின் காலம் – ஏறிஷ் ஃபரீட் (1981)

Zur Zeit der Nachgeborenen – Erich Fried

ப்ரெஷ்ட் இறந்து 25 வருடங்களுக்கு பின்

“நாம் உணர்ந்தோம் தான்”
என்று நீ கூறினாய்
“சிறுமையை வெறுப்பது கூட
தோற்றத்தை மாற்றிவிடும்.
அநீதியை எதிர்த்தால்
குரல் கட்டிக்கொள்ளும். அட,
நேசத்துக்கான விதையை இந்த நிலத்தில் விதைக்க விரும்பிய நாமே
நேசமாக இருக்கமுடியாது போனோம்”

இதனைத் தான் நீ உனைத் தொடர்ந்த சந்ததியினருக்குக் கூறிச்சென்றாய்.
இப்போது நீ மௌனித்துப் போகிறாய். அநீதியை எதிர்ப்பது கூட
ஒரு சிலரின் குரல்களை இன்னும் கட்டிகொள்ளச் செய்கிறது.
பெரும்பாலானவர்கள் இப்போது சீற்றம் கொண்டு எதிர்ப்பது கூட இல்லை
அவர்கள் பழகிவிட்டார்கள் அன்று நிலவிய, இன்றும் நிலவும் அநீதிக்கு
இங்கும், அங்கும், தொலைவிலும், தீங்கிழைப்போர் தமக்குள் பேசிக்கொள்ளும்
கடுமையான சட்டங்களுக்கும்

சிறுமையை வெறுத்ததனால் தோற்றம் மாறியவர்கள்
அங்கும் இங்கும் மதில்களுக்கு பின் அமர்ந்திருக்கிறார்கள்
யாரும் அவர்களைப் பார்க்காத வண்ணம், சிறுமையோ
பல நாடுகளில் அதிகார வல்லமை பெற்று ஆட்சியுரிமை புரிகின்றது
கீழ்வர்க்கம் குனிந்து கொள்கின்றது அல்லது தம்மை விடுவிக்க மேற்கொண்ட
தோல்வி முயற்சிகளால் ஏமாற்றமடைந்து
வெறுப்பை வெளிப்படுத்த சக்தியின்றி
சமயங்களில் அது நேசத்துக்குரிய அறிகுறியாகின்றது

“மெய்யாகவே, நான் கொடுங் காலத்தினுள் வாழ்கின்றேன்”
என்று நீ கூறினாய்.
காலங்கள் வேறுபோலத் தான் ஆகிவிட்டன, ஆனால், உனது வரிகளுக்குப்
பிறகு அவை வெளிச்சம் காணவில்லை
அன்று போலில்லை, ஆபத்து இன்று இன்னும் அதிகரித்து
ஆயுதங்கள் மட்டுமே பலம் பெற்று, அதனை ஏந்திய மனிதர்கள் பலமிழந்து
அவர்கள் பற்றி நீ கூறிய இன்னொன்றும் மெய் தான்:
“நினைத்துப் பார்க்கவேண்டும், அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்
எங்கு செல்கிறார்கள் என்றும், இனிமையான
அந்திகளில் சோர்வடைந்து போய்”

இதுவெல்லாம் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பதால், உனைத் தொடர்ந்த
சந்ததியினர் வெகு இலகுவாக உன்னை விளங்கிக் கொள்ளுவார், ஏன்,
இன்னும் உனக்குப் பிடித்தது போல, இருந்தும் நீ அத்தனை
புரிதல் காட்டினாய், ஆனால் நான் நினைக்கிறேன்
இறுதி வரை மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தாய்
எல்லாமே மாறுமென, புதிய காலத்தின் மனிதன்
இறந்த காலம் அறியாமல், உன்னைப் புரிய முடியாது தவிப்பான் என

உன்னை இன்னும் புரியமுடிவதால்
ஒரு சிலர் இன்னும் உன்னிடம் இருந்து கற்றுக்கொள்ளக் கூடும்
வாழ்வில் நம்பிக்கையை இறுகப் பிடிக்கவும், உன்னைப்போலவே
விவேகத்துடனும், பொறுமையுடனும், சீற்றத்துடனும் நேசத்துக்கான விதையை
இந்த நிலத்தில் தொடர்ந்து விதைக்க
ஒரு மனிதன் சகமனிதனுக்கு ஓர் ஆதரவாளனாகும் வரை

***

தேர்வும் தொகுப்பும் – பிரஷாந்தி சேகரம்

ந.பெரியசாமி கவிதைகள்

0

1. கள்ளினும் காமம் இனிது

புங்கை அளித்த நிழல் சுவை
நித்திரையை தருவித்தது.
மீன்கள் கால்களை மொய்க்க
விழித்தவன் விக்கித்தான்
தவளையால் விழுங்கப்பட்டிருப்பதை அறிந்து.
நீர் சூழ்ந்த பாறையில் அமர்ந்திருந்தவள்
அறிவேன் வருவாயென
நீர் தெளித்து விளையாடினாள்.
ஆடை கலப்பற்ற உடலாகி
மீன்களோடு மீன்களானோம்.
வெட்கத்தில் சூரியன்
தன்னை ஒளித்துக்கொண்டது.

2. காமன் ஈந்த கனி

தான் விரும்புபவள்
தன்னையே விரும்புகிறாள்
அறிந்த கணத்தில்
அவன் அவனற்றவனாகி
தடையற்று சுவையை சுகித்திருக்க
இருவருக்குமாக
விதையில்லாக் கனி ஈந்த
காமனை மனம் துதித்து
காற்றில் நடனமிட்டான்
பூக்களின் மகரந்தமாகி.
வானுக்கும் பூமிக்கும்
மகிழ்வை விரிக்க மழையானான்.
தடுப்பில்லாது கொண்டாட
மீனாகி நீந்தித் திரிந்தான்.
கொண்டாட்டம் போதாமையோடிருக்க
பறவையாகி மிதந்தலைகிறான்.

3. கனவினான் உண்டாகும் காமம்

சிலையின் கண் திறக்கும் தச்சனாகி
சிறுக சிறுக செய்து முடித்தேன்
அழகிய கூடொன்றை.
வந்துபோக தோதான
இடம் கண்டு சூடினேன்.
பசியாற்ற வைக்கப்பட்ட
நீரோடும் உணவோடும்
தாய்மையை விட்டு வந்தேன்.
மறுநாளின் விடியலில்
ஆர்வம்கொண்டு மேகமானேன்
மழையற்று போனது
எக்குருவியும் இரை தீண்டாதிருக்க.
அடுத்தடுத்த நாட்களிலும்
அதே நிலை.
வானத்தை தோழனாக்கி
நம்பிக்கையை விதைத்து வந்தேன்.
குருவி கூடடையும் நாள்
கனவில் தினம் தோன்றி
உயிரை ஊட்டிக்கொண்டிருப்பவள்
நனவில் என்னுள் அடைவாள்.

4. மாயும் என் மாயா உயிர்

இருந்தேன் கடலாக
அவனை கண்ட நாளில்
அலையாக மாற்றம் கொண்டேன்
நம்பிக்கையூட்டும் காலையும்
ஏமாற்றமளிக்கும் மாலையும்
வந்தபடியேதான் இருக்கின்றன
வரவேண்டியவனை வரவழைக்காது
என் துயர்களை விதைகளாக்கியிருப்பின்
பெற்றிருக்கும் இவ்வூர்
பெரும் வனம் ஒன்றை
பறவையாகி மிதந்தலைகிறது
என்னுள் திரண்ட காமம்
சொல்லித் தொலையடி தோழி
கல்லிலிருந்து கயிற்றை
திரித்து வரச் சென்றானோ.

5. குடை

வானம் சிந்தத் துவங்கியது.
சட்டைப் பையின் கவிதையிலிருந்து
வெளியேறிய குடையால்
எரிச்சலடைந்தவன்
மடக்கி எறிந்தான்.
துளிகள் மீண்டும்
உடலுள் பூத்துக் கொண்டிருக்க
கவிதையின் இறுதி
வரியிலிருந்த பெண்
துப்பட்டாவை விரித்தாள்.
பிணைந்த வெப்பம்
ஈரத்தை உலர்த்திக் கொண்டிருந்தது.

***

நா. பெரியசாமி
மின்னஞ்சல்: na.periyasamy@gmail.co

சாத்தான்களின் விகிதம்

0

சிவசங்கர்.எஸ்.ஜே

“சுவரை சரி செய்யவோ
அல்லது தரையின் ஓட்டையை அடைக்கவோ
உங்களுக்கு ஒரு செங்கல் வேண்டுமென்றால்
நீங்கள் ஒரு செங்கலைப் பெற வேண்டும்,

செங்கல்:
மூன்று பரிமாணத்தில் வாழும் ஓர் திட ஜீவி,
எடை கூடியது, சொரசொரப்பாக அல்லது துளைகள் கொண்டதாக தன்னை உணரக் கூடியது
குவியலாக வாழ அனுமதிக்கப்பட்டால்
அட்டைப்பூச்சிகளுக்கோ, சிலந்திகளுக்கோ, சிறு வண்டுகளுக்கோ கூடாகவும் மாறக் கூடியது

உயிரோடிருக்கும் ஒரு செங்கலின் இருப்பு, சுத்தியலொன்றால் உடைபடுகையில்
ஒரே ஒருமுறை துணுக் என ஒலிக்கும்,
அழகிய ஒலி,
சுருக்கமான, ஓங்கிய ஒலி,
சுத்தமான செங்கல் ஒலி

ஒன்றின் மேல் ஒன்றாக அற்புதமாக ஓய்வெடுக்கும் ஒரு செங்கல்
அதை போலி செய்யும் வார்த்தைகளை விடவும் அதிசிறந்தது

இந்த கவிதைகளைக் கொண்டு நான் செங்கல்களையே உருவாக்க முனைகிறேன்”

  • -மஸ்ஸிமோ கெஸ்ஸி (இத்தாலி)

கவிதை அறிவு சார்ந்து இயங்குகிறதா உணர்வு சார்ந்து இயங்குகிறதா என்பது கொஞ்சம் மூத்த கேள்வி. முழுமை பெறாமல் போன விவாதத்தின் கேள்வியும் கூட. புத்தியா? மனமா? அகமா? புறமா? புலனா? சிந்தனையா? தர்க்கமா? தனிச்சையா? என்பவை கிளைக் கேள்விகள்.

ருஷ்ய திரைக்கலைஞன் தார்கோவஸ்கி ஒரு திரை அனுபவமானது முதன் நிலையில் உணர்வுகளையே தாக்கும், அறிவு அதன்பிறகுதான் செயல்படும் என்கிறார். இந்த இடத்தில் முதல் நிலை தாக்கம் இரண்டாம் நிலைத் தாக்கம் என்பது உருவாகிவிடுகிறது. கூடவே வாசகத்தளம் படைப்புத்தளம் என்ற இரண்டும் உருவாகிவிடுகிறது.

வாசகத்தளம் (readerly) என்பது உணர்வு ரீதியானது. அது வந்தடையும் தளம் (receiver’s end). கவிதையின் தொழிநுட்பமோ, பார்வை நுட்பமோ அங்கு செயல்படுவதில்லை. உணர்வின் தூண்டுதலே முதன்மையாகிறது.

படைப்புத்தளம்( writerly) என்பது அறிவு ரீதியானது. அது தருபவரின் தளம் (addressee). புலன்சார் அனுபவமோ, வாழ்வியல் அனுபவமோ அங்கு மொழித்தளத்துக்கு மாற்றபட்டு (shift) பிரதியாக்கம் நடைபெறுகிறது. அதற்கு மொழியறிவு தேவைப்படுகிறது.

அதிகாலையில் தேவலோகத்தை அங்காடித் தெருவெங்கும் தூவிச் செல்லும் சாம்பிராணி புகைக்காரருக்கு தான் உருவாக்கும் மாய உலகைக் குறித்த எந்த அறிதலும் இருப்பதில்லை . நனவிலி சொற்களில் சில வந்து விழுந்தாலும் படைப்பவர் அணைந்து போகும் நெருப்பை வீச மறப்பதில்லை. அது முற்றிலும் நனவுத் தளத்திலேயே செயல்படும். தன்னுணர்வு இன்றி மொழியில் இயங்குவது பெரும் சவால். அதனாலேயே மொழியுலகத்தில் பிரவேசிக்கும் எல்லாம் தவிர்க்க இயலாமல் அறிவுத் தளத்தில் இயங்குதல் ஆகிவிடுகிறது.

கவிதை இயங்குவது மொழித்தளத்தில். மொழி ஆயிராமாயிரம் உள்ளடுக்குகள் கொண்டது. கூட்டு நனவிலி, கலாச்சாரம் ,குறியீட்டு- தொடர்ச்சி எல்லாம் உள்ளடக்கியது. மொழி உணர்வு ரீதியானதாக மேல் தளத்தில் நின்றாலும் படைப்பாக்க தருணத்தில் மிகுந்த ஓர்மையோடு (ப்ரக்ஞாபூர்வம்) அறிவுத்தளத்தில் நின்றே தொழில்படும் சாத்தியம் கொண்டது. ஒருவரின் மொழியறிவு ,மொழிகிடங்கு, சொற்சேகரம், வாழ்வியல் அனுபவம், சுற்றுப்புறம், புழங்கு வாழ்வு எல்லாம் படைப்புத்தளத்தில் தாக்கத்தை செலுத்தும் கூறுகள்.

கவிதை மொழிச்செயல்பாடா அறிவுச்செயல்பாடா என்கிற விவாதம் மேற்கில் எலியட்டின் காலம் தொட்டே நீடிப்பது பால் வலேரி அதற்கு கோட்பாட்டுத் தெளிவை அளித்தார். Verse Donnes Verse Calculus என்கிற அவரது பகுப்பு தமிழ் சூழலில் தொண்ணூறுகளுக்குப் பிறகான Verse Liberale வகைமைக் கவிதைகளுக்கும் பொருத்திப் பேச வேண்டிய ஒன்று. உணர்வு ரீதியான கவிதைகள் என மேலோட்டமாக சொன்னாலும் சுய முயற்சியின்றி தேடலின்றி கிடைக்கும் கருப்பொருட்களை குறித்து அவரது பரிசோதனைகளும் அதை நிராகரித்து அறிவு சார் கவிதைகளை அவர் கொண்டாடியதும் தொடர்ந்து எடுத்து செல்ல வேண்டிய பயணம். சுயதேடலின் வழி கண்டடைகிற கவிதைகளையே வலேரி கவிதைகளாக கொண்டார்.

புலன்களின் வேலை உணரவைப்பது. அறிவின் வேலை தொடர்பு படுத்துவது. வாழ்வில் நடக்கும் ஒரு சம்பவத்தை நிகழ்வை உணர முடியும். அறிவு அதை பகுக்கும் மற்றொன்றோடு தொடர்பு படுத்தும். மொழியுலகில் உணர்வைக் கடத்த அதை கவிதையாக்கம் செய்ய அறிவே செயல்படும். மொழி என்பதே அறிவின், சிந்தனையின் இயங்குதளம். உணர்வை அழகியலோடு தொடர்புப் படுத்தி விவரிப்பது ஒரு மரபு. அழகியல் குறித்த பழைய வரையறைகள் எல்லாம் உணர்வு ரீதியான புலன்களின் பிரதிபலிப்பைக் குறித்தே பேசின .

அலெக்சாண்டர் பவும்கார்டன் ஐஸ்தநோமாய் என்கிற கிரேக்க சொல்லிலிருந்து உருவாக்கியதே இன்றைய அழகியல்என்கிற சொல்லாட்சி. இயற்கையின் எல்லா படைப்பும் புலன்களின் தொடர்பில் நல்ல உணர்வைக் கொடுப்பது அழகியல் என பொதுமைப் படுத்தப் பட்ட வரையறையே அழகியலின் அடிநாதம். பட்டாம்பூச்சி, பூக்கள் எல்லாம் தங்க விகித (Golden ratio) தெய்வீக விகித (Divine proportion) அளவுகோல்களில் அழகியலின் விதிகளை சமைத்தன. ஆனால் தனிநபர்கள்/ குழுக்கள்/ குழுக்களின் தனித்துவம் அவரவரது ரசனை கணக்கில் எடுக்கப்படாத இந்த வரையறைகள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படவில்லை. ஒருவருக்கு இனிப்பு பிடிக்கும் என்றால் மற்றவருக்கு காரம் பிடிக்கும் என்கிற யதார்த்தம் கவனமாக தவிர்க்கப்பட்டது. ரோஜாவின் நறுமணத்தை விரும்பாதவர்களும் உலகத்தில் இருப்பது சாத்தியம்தானே. பொதுமையின் அதிகாரம் மொழிக்குள்ளும் ஊடுருவியது. வாழ்க்கை சுகமானதாக இருந்தால் இனிப்பாகவும் சுமையானதாக இருந்தால் கசப்பானதாகவும் உணர்வேற்றம் செய்யப்பட்டது. எப்போதும் சாத்தான்களின் விகிதம் கணக்கில் எடுக்கப்படுவதில்லை.

இன்றுவரை தொடரும் இந்த உணர்வேற்ற உணர்ச்சியேற்ற மொழி அதிகாரத்தை மாற்றும் முகமாய் தோன்றியதே விடுதலை கவிதைகள்(Verse Liberale). விடுதலை கவிதைகள் என்பதை விரிவான பொருளில் சமூக விடுதலைக்கான கவிதைகள் என்றோ அல்லது பழைய கவிதை வரையறைகளிருந்து விடுதலையான கவிதைகள் என்றோ பொருள் கொள்ளலாம். உணர்சியேற்றம், அறிவேற்றம் போன்றவற்றின் அத்தனை பழம்பொருட்களையும் உருவ உள்ளடக்க ரீதியில் மறுகடந்தவை விடுதலைக் கவிதைகள். நவீனம் கடந்த கவிதைகள், பின்காலனியக் கவிதைகள், இனவரைவியல் கவிதைகள் எனப் பல பேர்களில் வழங்கப்படும் இக்கவிதைகளுக்கு சிறப்புப் பெயராய் Verse Liberale அமைகிறது. இவை அறிவும் உணர்வும் இணைந்த கலப்பினக் கவிதைகள். தரப்புகளுக்கு எப்போதுமே மூன்றாவது பக்கமொன்று உண்டுதானே?

தனக்கேயான அரசியல் தனக்கேயான அழகியல் அதை எதிர் அழகியல், விடுதலை அழகியல், மாற்று அழகியல், சமத்துவ அழகியல் என்று முன்வைத்தது. மானுட அறவியலும் சகோதரத்துவமும் அதன் மௌன முழக்கங்கள். பழைய அழகியலின் பூடகமான தெய்வீக இடம் இங்கு சமூக இடமாக சாத்தான்களின் இடமாக இடமாற்றம் அடைந்தது.

“உண்மையே கடவுள் கடவுளே அழகு” என்கிறது “சத்யம் சிவம் சுந்தரம்” எனும் தொடர். சரண்குமார் லிம்பாலே அழகியல் எப்படி தெய்வீகமாக்கப்படுகிறது என்பதை இத்தொடரை விமர்சித்து சுட்டுவார். படைப்பை தரிசனம் உள்ளொளி என்கிற தெய்வீக சொற்களுக்குள் அடைத்தலை விடுதலைக் கவிதைகள் தகர்ப்புக்கு உள்ளாக்கின. தனிமனித அழகியலிலிருந்து சமூக அழகியலுக்கு; சமத்துவ அழகியலுக்கான பாதையை விடுதலைக் கவிதைகள் திறந்து விட்டன.

இந்திரனின் அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம், சுகுமாரனின் பாப்லோ நெருதா, எம்.ஏ.நுஃமானின் பலஸ்தீனக் கவிதைகள்.. ஏராளம் சிற்றிதழ்களின் பங்களிப்பு மாற்று அழகியலுக்கான முன்னெடுப்புகளில் கரம் கோர்த்தன. அறிவுப்பெருக்கமும் தகவல் பெருக்கமும் கவிதைகளையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தின. துறைசார் விரிவும் தேச எல்லைகளின் விரிவும் கவிதைகளின் பரப்பை விஸ்தீரித்தன. சாத்தான்களின் உலகம் விரிவடைந்தது.

இப்போது முக்கியமான கேள்வி வருகிறது. விடுதலைக் கவிதைகள் வெறும் அறிவு கவிதைகளா? (போதம் கொண்டதா) இல்லை வெற்று உணர்வுக் கவிதைகளா? (எதிர்ப்புணர்வு) இதற்கான பதிலை எளிதாய் சொல்லிவிட முடியாது. அழகியலை ஒழுங்கியல் என்கிற சட்டகத்திற்குள் பூட்டிய பண்டைய வரையறைகளைக் கலைத்து ஒருமை என்கிற தளத்துக்கு மாற்றம் செய்தவை விடுதலைக் கவிதைகள். தனி நான்களிருந்து கூட்டு நான்களை நோக்கிய நகர்வு அது. விடுதலை எழுத்துக்களின் செயல்தளம் உணர்வா அறிவா என்பதை பிரித்தறிய முடியாது. அது கூட்டுணர்வையும் கூட்டு அறிவையும் சார்ந்தது.

செய்யப்படுவது செய்யுள் படைக்கப்படுவது கவிதை என்ற பழைய வரையறை செல்லாததாகிவிடுகிறது. ஒரு கவிதை உணர்வு சார்ந்து இயங்குகுகிறது என்பதற்காக அதை நிராகரிக்க முடியாது. ஒரு கவிதை அறிவு சார்ந்து இயங்குகுகிறது என்பதற்காக அதை நிராகரிக்க முடியாது. கவிதையாக இயங்குகிறதா என்பதே கேள்வி.

கட்டுரையின் தொடக்கக் கவிதையான “செங்கல்கள் “ உணர்வுக் கவிதையா? அறிவுக் கவிதையா? இல்லை கவிதை வரையறையிலிருந்து விலகிய கவிதையா? உணர்வு என்றால் யாருடைய உணர்வு? அறிவென்றால் யாருடைய அறிவு? அது கவிதையாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறதா? கேள்விகள் தொடரட்டும்.

செங்கல்களை செய்வதைப் போலவே ஒவ்வொருவரும் கவிதைகளை செய்கிறோம் கவிதைகளைக் கொண்டு செங்கல் செய்யும் வாய்ப்பு இங்குண்டு…
செங்கலுக்கு உயிர்கொடுக்கும் போது அது கவிதையாகிறது….
செங்கல்கள் சாகும்போது எழுப்பும் அலறலை கேட்பவன் கவிஞனாகிறான்….
செங்கல் கவிதையாய் மாறி நிற்கிறது என்றென்றைக்குமாய்…..

பி.கு: I agree that two and two make four is an excellent thing; but to give everything its due, two and two make five is also a very fine thing.
Fyodor Dostoevsky  
— Notes from Underground

***

சிவசங்கர்.எஸ்.ஜே

புனைவெழுத்தாளர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கியச் செயல்பாட்டாளர். இடதுசாரி இலக்கிய அமைப்பான கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொருளாளராகப் பணியாற்றியவர். அம்பேத்கர் கடிதங்கள் போன்ற மொழியாக்கங்களைச் செய்தவர். குமரிமாவட்ட பண்பாட்டாய்விலும் ஈடுபட்டு வருகிறார். யாவரும் பதிப்பகம் வாயிலாக யா-ஓ மறைக்கப்பட்ட மார்க்கம் 1&2 வெளிவந்திருக்கிறது. மின்னஞ்சல்: prismshiva@gmail.com

பறவைகள் இல்லாத வானத்தை சுட்டு வீழ்த்துங்கள்

0

அருண்.மோ

மாலைக்கருக்கல் அலையலையாய் உடலைத் தழுவிச் செல்லும் மென்காற்று, மெல்லிய சாரல், ஒரு ரயில் நிலையத்தில் நுழைய இதைவிட வேறென்ன பெரிய காலநிலை வேண்டும். ஊரின் பெரிய, அழகிய ரயில் நிலையம் அது. சிதிலமடைந்த மஞ்சள் போலொரு நிறத்தில் இருந்த காரை பெயர்ந்த அந்த சுவற்றில் ஒரு காகம் நீண்ட நேரமாக உட்கார்ந்திருந்தது. அதன் அலகில் பழுப்பு நிறத்திலொரு பூச்சு. தலையைத் திருப்பி, இடதும் வலதும் பார்த்து மெதுவாக தலையைத் தாழ்த்தி, அதன் அலகை  சுவற்றின் விளிம்பில் தேய்த்தது. சட்டென பறந்து தண்டவாளத்தில் தேங்கியிருந்த நீரில் அலகை இருத்தி கொஞ்சம் நேரம் அப்படியே இருந்தது. அதன் தலை அசையும் அசைவில் அது சுற்றுப்புறத்தை உற்றுநோக்குகிறதா அல்லது உதவிக்கு யாரையும் அழைக்கிறதா என்பது அங்கிருந்த மனிதர்களுக்கு விளங்கவில்லை. ஆனால் இரண்டு காகங்கள் அதன் அருகே வந்தமர்ந்தது. வலதுபக்கம் இருந்த காக்கா பெருங்குரல் எடுத்து கத்த, இடதுபக்கம் இருந்த காகம், அதன் அலகால் பழுப்பு நிற அலகு கொண்ட காகத்தின் அலகைக் கொத்தியது. பழுப்பு நிறம் அகன்றபாடில்லை. இன்னொருபக்கம் மாடப்புறாக்கள் பிளாட்ஃபார்மில் அமர்ந்து க்குரு.. க்கரு என்று சப்தமிட்டது. இரண்டு மாடப்புறாக்கள் காதல் கீதம் பாடிக்கொண்டிருந்தது. ஆண்  புறாவின் அலகு பெண் புறாவின் அலகோடு இணைந்து, அதன் உடல் இரண்டும் சேர்வதும், பிரிவதுமாக இருந்தது. காகம் இன்னமும், பழுப்பு நிறம் கொண்ட அதன் அலகை தண்டவாள விளிம்பில் உரசிக் கொண்டிருந்தது. பச்சைக்கிளிகள் றெக்கைகளை விரித்து கூட்டமாக  அந்திவானத்தை நோக்கி பறந்துகொண்டிருந்தது. குயில்களின் ஓசை ரீங்காரமாக மாறி மாறி ஒலித்தது. பறவைகள் சிறகை மடித்து தரையில் உட்கார்வதும், சிறகை விரித்து வானை நோக்கி பறப்பதுமாக இருந்தது. செந்நிற பூக்கள் தரையிலும் தண்டவாளத்தில் விழுந்து அந்த இடத்தையே அழகுபடுத்திக் கொண்டிருந்தது. செந்நிற பூக்களைக் கொண்ட மரம் அங்கே ஒன்று கூட இல்லை. ஆனாலும் பூக்கள் கீழே கொட்டிக்கிடந்தது. ரயில் நிலையமே ஏதோ ஒரு பாதுகாக்கப்பட்ட காடு போல மாறியிருந்தது.

ரயில் நிலையத்தில் இருந்த காவலர் ஒருவர், ‘இந்த மாதிரியெல்லாம் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சுல்ல,, எவ்ளோ ரம்யமா இருக்கு பாரு, மனுசப்பயலுங்க ரொம்ப மோசம், மொத்தமா இயற்கையை அழிக்க பாத்தானுக, ஆனா என்ன நடந்தது பாத்தியா, ஒரு பயலும் வீட்டை விட்டு வெளியில வர முடியாம தவிக்கிறானுங்க, ஆனால் காக்கா குருவி, எல்லாம் இந்த நகரத்தையே ஏதோ காடு மாதிரில்ல மாத்திடுச்சு’, என்று சாரலோடு கூடிய அந்த மாலைப்பொழுதில் ஏகாந்தத்தை அனுபவித்துக் கொண்டே அருகில் இருந்த இன்னொரு காவலரிடம் சூழலை  வர்ணித்துக் கொண்டிருந்தார். ரயில் நிலையத்தின் கடைசி பெஞ்சில் இருந்து, சிறு புள்ளியை போல அசைந்து ஒரு உருவம் முன்னோக்கி வந்துகொண்டிருந்தது. ஆங்காங்கே காதல் கீதம் பாடிக்கொண்டிருந்த புறாக்கள் சட்டென பறந்ததில் சடசடவென ஓசை எழுந்தன. சிறு புள்ளி ஒன்று கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மனித உருவமாகத் தெரிய ஆரம்பித்தது. காவலர்கள் இருவரும் அந்த மனித உருவத்தை நோக்கி நகர்ந்தார்கள்.

‘ஏய் இந்தாம்மா, நில்லு எங்க போற’

‘ஹ்ம்ம், டீ விக்கத்தான்’

‘டீ, விக்கவா, அறிவிருக்கா உனக்கு, யாரும் வீட்ல இருந்து வெளிய வரக்கூடாதுன்னு அரசாங்கம் சட்டம் போட்டிருக்குல்ல, உடனே இந்த இடத்தை விட்டு கிளம்பு, இல்லன்னா உன் மேல கேசு போட்டு ஜெயில்ல போட்டுடுவாங்க’

‘அட என்ன சார், எப்ப பார்த்தாலும் இதையே சொல்லிக்கிட்டு இருக்கீங்க, எத்தனை நாளுக்குத்தான் நாங்களும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறது, ஒரு நாளைக்கு நூறு இருநூறு ரூபாய்க்கு டீ வித்தாதான், எங்க புள்ளக்குட்டிங்க கஞ்சி குடிக்க முடியும், வீட்டுக்குள்ளேயே இரு வீட்டுக்குள்ளையே இருன்னு சொன்னா மட்டும் போதுமா, எங்க வயித்துப்பாட்டுக்கு யார் பொறுப்பு’

‘அய்யய்யோ இது என்ன வம்பா போச்சு, ஏம்மா.. அதெல்லாம் இங்க பேசாத, மொதல்ல வாய குறை, வீட்டை விட்டு வெளியில வரணும்னா இ பாஸ் வாங்கிட்டுதான் வரணும், மொதல்ல கிளம்பு இங்க இருந்து, போறதுக்கு முன்னாடி ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ஒரு கப் ல டீ கொடுத்துட்டு போ’,

அமைதியாக நின்று அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த பெண்மணி,

‘என்னம்மா, ரெண்டு டீ கொடுக்க சொன்னேன் ல’,

‘அது இல்ல, காசு’ என தயங்கித் தயங்கிக் கேட்டாள்.

‘நீ இ பாஸ் இல்லாம வீட்ட விட்டு வெளிய வந்ததுக்கே உனக்கு நூறு ரூபாய் அபராதம் போடணும், ஒழுங்கா ரெண்டு டீ கொடுத்துட்டு வீடு போய் சேர்’

‘அய்யய்யோ கொடுத்துட்றேன் ஏட்டய்யா, கோபத்துல ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் அடிச்சி கொன்னு போடாதீங்க’, என்று சொல்லிவிட்டு, காலியான இரண்டு டீ கப்களை எடுத்து கொடுத்தாள். இரண்டு காவலர்களும் அவளது முகத்தை வெறித்துப் பார்க்கவே, அவள் சிரிக்கத் தொடங்கினாள்.  

அவளை பார்த்துக் கொண்டே இன்னொரு காவலர், ‘என்ன திமிர் பாத்தியா இவளுக்கு’, என்று சத்தம் போட்டுக்கொண்டே லத்தியால் அவள் கொண்டு வந்த டீ கேனை தட்டிவிட்டார். கீழே விழுந்த அந்த பாத்திரத்தில் ஒன்றுமே இல்லாமல் காலியாக இருந்தது. காவலர்கள் அவளை திரும்பிப் பார்த்தனர், வயிற்றுக்கும், நெஞ்சாங்கூட்டிற்கும் இடையே இருந்து எழுந்த பெரும் சப்தம் ஒன்று அவள் சிரிப்பொலி போல  கேட்டுக்கொண்டே இருந்தது. இரண்டு கைகளையும் அவர்களை நோக்கி ஒழுங்கு காட்டி சிரிப்பது போல் சிரித்துக்கொண்டே இருந்தாள். காவலர் ஒருவர், அவளை நோக்கி லத்தியை ஓங்கினார். அதற்குள் தள்ளுவண்டியில் உணவு விற்பனை செய்யும் பெரியவர் ஒருவர் தள்ளுவண்டியோடு வந்து கொண்டிருந்தார்.

‘யோவ் இதென்னய்யா வம்பா இருக்கு, யோவ் பெரியவரே, எதுக்கு இப்ப இங்க வர, இங்கல்லாம் வரக்கூடாது, உடனே கிளம்பு’

‘ஐயா என்கிட்டே இ பாஸ் இருக்குதுங்கய்யா’

‘என்னய்யா சொல்ற, எங்க கொண்டா பார்க்கலாம்’, பெரியவரிடம் இருந்த காகிதத்தை காவலர் வாங்கிப்பார்த்துக்  கொண்டிருக்கும்போதே ரயில் நிலையத்தில் இன்னும் பலர் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர்.

காவலர்கள் இருவரும் மேலதிகாரிக்கு அழைப்பு விடுத்தனர். பறவைகள் எல்லாம் அலறியடித்து பறந்தன. பழுப்பு நிற அலகு கொண்ட காகம் மட்டும் மஞ்சள் நிறம் போலிருந்த சுவற்றின் விளிம்பில் உட்கார்ந்திருந்தது.

மேலதிகாரி இன்னும் நான்கைந்து பேருடன் உற்சவர் உலா வருவது போல் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தார். ரயில் நிலையம் முழுக்க, டீ விற்போர், தள்ளு வண்டியில் உணவு விற்போர் போல் இன்னும் பல அன்றாடங்காய்ச்சிகளுமாக பெருங்கூட்டம் கூடியிருந்தது. எல்லார் கைகளிலும் இ-பாஸ் என்கிற காகிதம் இருந்தது. அதிகாரி ஒவ்வொருவரின் கையிலும் இருந்த காகிதத்தை வாங்கிப் பார்த்தார். அதற்குள்  தூரத்தில் ஒரு ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அதிகாரி நிலைகொள்ளாமல், ரயிலையே வெறித்துப் பார்த்தார், ரயில் நிலையத்தை மூடி நாலு மாசம் ஆச்சு, ரயில் எல்லாம் ஓடுறது இல்ல, திடீர்னு எப்படி ஒரு ரயில் வருது, எந்த அறிவிப்பும் இல்லாமல் ரயில் வேகமாக வருவதைப் பார்த்து அதிகாரி விக்கித்து நின்றார். ரயில் வேகம் குறையாமல் ஸ்டேஷனை  நெருங்கியது. அதிகாரி கையில் இருந்த காகிதங்களை படிக்க ஆரம்பித்தார். ரயிலில் பாய்ந்து சாவதற்கான இ-பாஸ் என்று பெரிய எழுத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. திடுக்கிட்ட அதிகாரி, நிமிர்ந்து பார்ப்பதற்குள்ளாக டீ விற்க வந்த பெண்மணி ரயிலின் முன்னே பாய்ந்தார். விடாமல் கேட்டுக்கொண்டிருந்த சிரிப்பொலி சட்டென நின்றது. ச்சக் ச்சக் என்று சப்தம் கேட்டது. நசுங்கிய உடலில் இருந்து ரத்தம் பீய்ச்சியடித்தது. அதிகாரியின் கையில் இருந்த காகிதத்தில் பட்டு, அவரது முகத்தில் தெறித்தது அவளது ரத்தம். என்ன நடக்கிறது என்று அதிகாரியும், காவலர்களும் சுதாரிப்பதற்குள் ஒவ்வொருவராக ரயிலின் முன்னே பாய்ந்தனர். பழுப்பு நிற அலகைக் கொண்ட காக்கையின் மீது தற்கொலை செய்துகொண்ட எல்லாருடைய ரத்தமும் தெறிக்கவே, காக்கையின் அலகில் இருந்த பழுப்பு நிறம் மாறி இப்போது காகம் மொத்தமாக சிகப்பாக மாறியது. மொத்த மனித ரத்தத்தையும் குடித்தது போல் பருத்த அந்த காகம் சிறு குன்று போல் பெருத்தது. ஹெலிகாப்டர் ஒன்றின் றெக்கை போல் காக்கையின் சிறகுகள் கனத்திருந்தன. மெதுவாக சிறகை விரித்து பறக்க ஆரம்பித்தது அந்த காகம், எழுந்த பெரும் சப்தத்தில் நகரமே அதிர்ந்தது.

தூக்கத்தில் இருந்து அலறியடித்து எழுந்தான் ரியாஸ். மேல் மூச்சு  வாங்க, உடல் முழுக்க வியர்த்திருந்தது. அவன் கண்கள் இமைக்கவே  மறந்திருந்தன. மங்கிய இரவின் முற்சாம நேரமது, அவன் அருகில் இருந்த பெரியவர், ‘என்ன தம்பி, ஏதாவது கெட்டக்கனவு  கண்டியா; என்றார். ‘நீ கொடுத்து வச்சவன் தம்பி, தூங்கறது நடுரோட்ல, அவன் அவன் வீடு போய் சேர்வோமானு தெரியாம, தூக்கமே வராம ராக்கோழி மாதிரி முழிச்சிட்டு கெடக்கான், நீ கனா காண்ற அளவுக்கு தூங்கியிருக்க, நல்லது’ என்று சொல்லிவிட்டு குடிக்க கொஞ்சமாக தண்ணீர் கொடுத்தார்.

சூரியன் வானில் இருந்து பூமியை எட்டிப்பார்க்க இன்னும் சில நிமிடங்கள் இருக்கிறது. வானில் மேகங்கள் திட்டு திட்டாக விரவிக்கிடந்தன. சப்தமிடாத பறவைகள் வானில் கூட்டம் கூட்டமாக பறக்கத் தொடங்கின. பின்னர் அவற்றை தொடர்ந்து சப்தமிடும் பறவைகள் ஜோடிகளாக, கூட்டமாக எல்லா திசையை நோக்கியும் பறக்கத் தொடங்கின. ரியாஸ் எழுந்து இருந்த கொஞ்சம் நீரில் வாயை கொப்பளித்துவிட்டு விரல்களால் பற்களை தேய்த்து, தண்டவாளத்தில் காறித்துப்பினான். அருகே பெரியவரும் அவரது குடும்பமும் குத்துக்காலிட்டு கூட்டாக அமர்ந்து வானில் பறக்கும் பறவைகளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ரியாஸ் அவர்கள் அருகே வந்தமர்ந்தான்.

‘என்ன தம்பி, நேத்து ராவைக்கி என்ன கனா கண்டீரோ’,

‘அட ஒன்னும் இல்லைங்க, கொஞ்சமா நெனப்புல இருக்கு, ஆனா நிறைய மறந்துபோச்சு, நெனப்புல இருக்கிறது வரைக்கும் யோசிச்சி பார்த்தா, அது கெட்டக்கனா தான். அதுவும் இந்த மாதிரி எடத்துல அத பத்தி பேச வேண்டாம், விடுங்க’ என்று சொல்லிவிட்டு கனத்திருந்த ஒரு பையை முதுகிலும், லேசான ஒரு பையை கையிலும் பிடித்துக்கொண்டு நடக்க ஆயத்தமானான். பெரியவர் அப்படியே வானத்தை பார்த்துக்கொண்டு ‘பறவை போல் பறக்கும் சக்தி எனக்கிருந்தால் என் மொத்த குடும்பத்தையும் றெக்கைகளில் சுமந்து கொண்டு பறப்பேன்’ என்று சொல்லிக் கொண்டே தன் பேத்தியின் தலையைக் கோதினார்.

‘தம்பி, இன்னும் ஒரு ஐநூறு கிலோ மீட்டர் இருக்குமா உன் ஊருக்கு போய் சேர’,

‘தெரியல தாத்தா, தோ, நமக்கு முன்னாடிதான் இவ்ளோ ஆயிரம் பேர் போறாங்களே, அதுல யாராவது என் ஊருக்கு போற வழியிலதான் நிச்சயம் போவாங்க’,

பெரியவர் முன்னாடி நின்று கொண்டிருந்த ரியாஸிடம் கண்களை அகற்றி, சற்றே உடலை சாய்த்து முன்னாடி நடந்து சென்று கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்தார். தண்டவாளத்தில் கிடக்கும் கற்களை விட அங்கே விரவிக்கிடந்த மனிதர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. குழந்தைகளை தலையில் சுமந்தும், சிறுவர்களை கைகளில் ஏந்தியும், பெரியவர்கள் சூதானமாகவும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். பறந்து விரிந்த பரப்பில் எங்கு காணினும் மனிதக்கூட்டம் தான். ஒரு பக்கம் தண்டவாளம், இன்னொரு பக்கம் அடர்காடு, கண்ணுக்கெட்டிய தூரம் வரை வீடுகள் இல்லை, மனிதர்கள் வாழாத இந்த பகுதியை பெரும் மனித கூட்டம் ஒன்று கடந்தாக வேண்டும். இருபது  நாட்களைத் தாண்டியும் அவர்களது பாதங்கள் பூமியை அளந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் வீடு வந்து சேர்ந்த பாடில்லை. சிலரது வீடுகள் நூறு கிலோ மீட்டரில், சிலரது வீடுகள் ஐநூறு கிலோ மீட்டரில், சிலரது வீடுகள் இரண்டாயிரம் கிலோ மீட்டரில், இன்னும் சிலரின் வீடுகள் எத்தனை ஆயிரம் கிலோ மீட்டர்கள் கழித்து வரும் என்பதே தெரியாமல் அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். கையில் காசில்லை, காசிருந்தாலும் உண்ண உணவில்லை. தண்டவாளத்தை ஒட்டியும், காடுகளைக் கடந்தும், மணல்பரப்புகளை தாண்டியும், மலைகளை பார்த்தவாறும், மழையில் நனைந்தும் நடக்கும் இந்த நடை பயணம் அவர்கள் வாழ்வில் இதுவரை கண்டிராதது. இடை இடையே இஸ்லாமியர்களும், தொண்டு நிறுவனங்களும் அவர்களால் இயன்ற அளவுக்கு உணவுகளை வழங்குவார்கள். ஆனாலும் பெரும்பாலான நேரம் பசியோடு, கூடடைந்துவிட மாட்டோமா என்கிற ஏக்கத்தில் அவர்களின் பயணம் தொடர்ந்தது.

‘சரி தாத்தா, நான் கிளம்புறேன்’ என்று சொல்லிவிட்டு ரியாஸ் பைகளை எடுத்துக்கொண்டு தயாரானான்.

‘அட, கொஞ்ச நேரம் இருந்து ஆற பேசிட்டு போனாதான் என்ன தம்பி, சீக்கிரம் போய் என்ன ஃபிளைட் பிடிக்கவா போறீங்க’, என்றார் தாத்தா.

அவரது பேரப்பிள்ளைகள் வலிகளை மறந்து சிரித்தனர். ரியாஸுக்கு சட்டென கோபம் வந்தாலும், பிள்ளைகளின் சிரிப்பில் அதனை மறந்து, ‘அப்படி இல்ல தாத்தா, எவ்ளோ சீக்கிரம் வீட்டுக்கு போய் சேர முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் போயிடணுமுனு பாக்கறேன், சாப்பாட்டுக்கு கையில காசும் இல்லை, பொணமா போனாலும், ஊரு பக்கத்துல போயிட்டா எடுத்து போடுற செலவாவது குடும்பத்துக்கு மிச்சம்ல’, வாட்டமான குரலில் சன்னமாக பேசினான் ரியாஸ்.

‘அட என்னப்பா நீயி நாங்கல்லாம் இருக்கிறோம் ல, ஆளுக்கு ரெண்டு கிலோ மீட்டர் தோள்ல தூக்கிட்டு போயாவது உன் வீட்டுல  சேர்த்துடுறோம், அதுக்கு போய் சின்ன புள்ள கணக்கா வெசனப்பட்டுட்டு கெடைக்குறையே நீயி. நல்ல ஆளுப்பா, சின்ன புள்ளைங்கள பாரு, எவ்ளோ சிரிச்சிட்டு சும்மா கலகலன்னு அருவி மாதிரி புதுசா இருக்குதுங்க. உக்காரு, ரெண்டு வாய் சாப்பிட்டுட்டு எல்லாரும் ஒன்னா போகலாம்’ என்று சொல்லிவிட்டு அவன் பதிலையே விருப்பத்தையோ எதிர்பார்க்காமல் அவன் கையைப் பிடித்து உட்கார வைத்து சாப்பாடும் கொடுத்தார்.

‘பதினைஞ்சு பேர் தம்பி, நாங்க மொத்தம், ஒவ்வொருத்தரா, மாத்தி மாத்தி பொழப்பு தேடி வேற வேற ஊருக்கு வந்து, ஆளுக்கொரு ஊர்ல ஜீவனம் நடத்தி, கடேசியில இப்படி ஊர் ஊரா நடக்கும்போதுதான் எல்லாரும் ஒன்னு சேர்ந்திருக்கோம், அதான் பேர புள்ளைங்கள பாத்த உடனே உடம்புல தெம்பு வந்திருக்கு’ நகரத்துல தள்ளு வண்டியில சாப்பாட்டுக்கடை நடத்திட்டு இருந்தேன் தம்பி, திடுதிப்புன்னு கடையை மூடுன்னு சொல்லிப்புட்டாங்க, பத்து நாள் தாங்கும், இருபது  நாள் தாங்கும், ஆனால் எப்ப முடியுமுன்னே தெரியாமல் வயித்துக்கு ஒன்னுமில்லாம எப்படி தம்பி பட்டணத்துல வாழ முடியும், ஒழுங்கா சாப்பிட்டு மாசக்கணக்குல ஆச்சு தம்பி, அதான் போற உசுரு ஊர்ல போகட்டும், குடும்பத்தோட ஒன்னா இருக்கலாம்னு ஊர தேடி கிளம்பிட்டோம், சாப்பிட்டுக்கொண்டே ரியாஸிடம் குடும்பக்கதையை சொல்லிக் கொண்டிருந்தார் பெரியவர்.

***

‘அய்யய்யோ என் சாமி’ நெஞ்சை பிளக்கும் அலறல் கேட்டு, நடந்துகொண்டிருந்த பல ஆயிரம் பேரில் சிலர் மட்டும் திரும்பிப் பார்த்தனர். எழுபது வயது பெரியவர் நடக்கும்போதே மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட, அவரது மனைவி அலறிக் கொண்டிருந்தார். நடந்து செல்வது ஆயிரக்கணக்கான பேராக இருந்தாலும், எல்லாருக்கும் அவரவர் வீடு போய் சேர்வதே முதன்மையாக இருந்தது. இடையில் பசியில் இறப்போரையும், வலியில் துடிப்போரையும், வலிதாங்காமல் உட்கார்ந்து கிடப்போரையும் பற்றி கவலைப்பட யாருக்கும் நேரமில்லை, உடலில் தெம்புமில்லை. ஆனாலும் குழு குழுவாக இணைந்து அவரவர் வேதனையை பகிர்ந்து கொண்ட கூட்டங்கள் சில இருக்கவே செய்தன.

பெரியவர் கொடுத்த சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு, கீழே விழுந்து கிடந்த தாத்தாவை நோக்கி ஓடினேன். கீழே விழுந்த பெரியவரை தூக்கி வாரி அருகில் இருந்த திண்டில் அமர்த்தி தண்ணீர் தெளித்து பார்த்தோம், அவர் எழவில்லை, உதட்டை சுருக்கிக்கொண்டு அவர் உயிருடன் இல்லை என்பதாக சொல்லிவிட்டு ஒரு கூட்டம் நகர்ந்தது. இன்னொரு கூட்டம் அருகில் வந்து துக்கம் விசாரித்துவிட்டு கொஞ்ச நேரம் அந்த பாட்டியுடன் இருந்து ஆறுதல்படுத்தியது. நடந்து நடந்து உடலில் சத்தில்லாமல், குரல் எழுப்பி அழ முடியாத நிலையில் அந்த பாட்டியும், நோஞ்சான் குருவி போல விக்கி விக்கி சத்தமே இல்லாமல் அழுது கொண்டிருந்தார். வானில் பறவைகள் கூட்டமாக இந்த காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தன. அப்படிதான் நாங்கள் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் வானில் வலசை போகும் பறவைகள் திடீரென ஓரிடத்தில் கூட்டமாகக் கூடி அந்த இடத்தை விட்டு நகரவில்லை என்றால் அங்கே கழுகு வருகிறது என்று பொருளாம். கழுகு வருகிறது என்றால் அங்கே மற்ற உயிர்களுக்கு ஆபத்திருக்கிறது என்று அர்த்தமாம். வாழ்வில் எப்போதும் கற்காத இந்த பாடத்தை அன்றுதான் நாங்கள் கற்றுக்கொண்டோம்.

பெரும்பாலான கூட்டம் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்ட நிலையில், விக்கித்து வேறு கதியற்று கிடந்த பாட்டியுடன் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு போகலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் என் கண்கள் அயர்ந்தன. ஒரு இளம்பெண் கையில் கைக்குழந்தையுடன் பாட்டியை நோக்கி வந்து கொண்டிருந்தார், என் கண்கள் மூடிக்கொண்டே இருந்தன. அரைமயக்கத்தில் கிடந்தேன். அந்தப்பெண் பாட்டியின் கைகளைப் பிடித்து ஏதோ பேசிக்கொண்டிருப்பதை மங்கலான காட்சியாக பார்த்தது வரைதான் எனக்கு நினைவிருக்கிறது.

சலசலவென சிறுத்து பெருத்த சப்தம் என் காதுகளில் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருந்தது. பறவைகள் அலறிக்கொண்டே வானில் நாலாபக்கமும் சிதறின. முன்னேறிச் சென்ற கூட்டத்தில் சிலர் மட்டுமே மீண்டும் நாங்கள் இருக்கும் இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். பாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டிருந்த அந்த இளம்பெண் தண்டவாளத்தின் அருகில் நெஞ்சிலும், தலையிலும் அடித்துக்கொண்டு பெருங்குரலெடுத்து அழுது கொண்டிருந்தார். இடது கை முஷ்டியை உயர்த்தி, ஐயோ ஐயோ என்று நெஞ்சாங்கூட்டின் இடையில் வைத்து குத்திக்கொண்டே வானை நோக்கி கற்களை அள்ளி வீசினார். சுற்றி இருந்த மொத்த கூட்டமும் வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. அரை மயக்கத்தில் எழுந்து சென்று பார்த்தேன், கழுகு ஒன்று அந்த பெண்ணின் கைக்குழந்தையை தூக்கிச் சென்றுவிட்டது என்று அருகில் இருந்தவர் சொல்லிக் கொண்டிருந்தார். குத்துக்காலிட்டு உட்கார்ந்து தலையில் கைவைத்து விம்மி விம்மி அழுதேன். தேற்றுவார் யாரும் இல்லை என்றாலும், அழுவதை விட வேறு வழியில்லை எனக்கு. துக்கம் விசாரிக்க வந்த பெண், எல்லாரும் கிளம்பி சென்றுவிட்ட நிலையில் பாட்டியின் கைபிடித்து அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த வேளையில் குழந்தை தவழ்ந்து, தண்டவாளத்தின் அடுத்த பகுதிக்கு சென்றதை யாருமே பார்க்கவில்லை. பெரிய பறவை ஒன்று பூமியை நெருங்கவே தூரத்தில் இருந்த பார்த்த ஒருவர் ஓடி வந்திருக்கிறார், அவர் வருவதற்குள் குழந்தை கழுகின் கால்களில் பறந்து கொண்டிருந்தது. அந்த குழந்தையை சரியாகக்கூட நான் பார்க்கவில்லை, ஆனால் உள்ளத்தில் எழுந்த கனம் ஒருபோதும் குறையாது. இன்னும் எத்தனை மரணங்களைப் பார்க்க வேண்டுமோ என்று மனம் பரிதவித்தது. நெஞ்சில் அடித்துக்கொண்டே அழுது தீர்த்த அந்த இளம்பெண் தண்டவாளத்திலேயே மயங்கி வீழ்ந்தார். தண்ணீர் தெளித்து எழுப்பினோம், எழுந்தார், ஆனால் எழுந்தும் பிணம் போலத்தான் கிடந்தார்.

இறந்து கிடந்த பெரியவரை பிரேத பரிசோதனை செய்துதான் அடக்கம் செய்ய வேண்டும் என்று அங்கு வந்த அதிகாரிகள் கறாராக சொல்லிக் கொண்டிருந்தனர். அவர் இறந்ததே உங்களால்தான், அவரை நாங்களே இங்கே குழித்தோண்டி அடக்கம் செய்துக் கொள்கிறோம் என்று வாதாடினேன். ‘டேய், இன்னும் ஒரு வார்த்தை நீ பேசின, இந்த பெரியவரை நீதான் கொல பண்ணின, அவர்கிட்ட இருந்த ரெண்டு சவரன் சங்கிலியை திருடிக்கிட்டு அவரை கொலை செய்திருக்கேன்னு கேஸ் ஃபைல் பண்ணுவேன் பரவால்லையா’ என்றார். பாட்டி வாய்மேல் கைவைத்துக்கொண்டு அழுது கொண்டிருந்தார். காலையில் எனக்கு உணவு கொடுத்த பெரியவரும் அவரது குடும்பமும் அதிகாரி அருகே வந்து ‘நல்லா இருக்குதுயா உங்க நியாயம், இத்தனை லட்சம் பேர் ராத்திரி  பகலா, மாசக்கணக்கா, வெயில், மழை பார்க்காம, நடந்து போய்ட்டிருக்கோம், வந்து என்னானு கேக்க நாதியில்லை, ஆனா செத்துப்போன கிழவனை மட்டும் போஸ்ட் மார்ட்டம் பண்ணனும் உங்களுக்கு, தோ அந்தா இருக்கே அந்த புள்ள, அவளோட கைக்குழந்தையை காலையில கழுகு ஒன்னு தூக்கிட்டு போச்சி, போய் மொதல்ல அந்த புள்ளைய மீட்டு வந்து அதுக்கு பிரேத பரிசோதனை பண்ணிட்டு கழுகுதான் தூக்கிட்டு போய் கொன்னுச்சா, இல்ல உங்க அரசாங்கம் கொன்னுச்சானு சொல்லுங்க, பிறகு பெரியவரை தூக்கிட்டு போகலாம்’, அவர் பேசி முடிப்பதற்குள் அங்கு மேலும் பலர் கூடினர். ஆயிரக்கணக்கான கூட்டத்தைப் பார்த்த காவல்துறையினர் செய்வதறியாது திகைத்து நின்றனர். பிறகு அவர்களே அருகில் இருந்த காட்டில் குழிதோண்டி பெரியவரை புதைத்தனர். எல்லாம் முடித்த பின்னர் அவர்களிடம் கேட்டேன்,

‘இவ்வளவு நடந்தும் கூட அந்த தாத்தாவோட பொணத்தையும், அந்த பாட்டியையும் ஒரு வண்டி வச்சி கொண்டு போய் அவங்க ஊர்ல விடணும்னு உங்களுக்கு தோணலையா’

‘ஏண்டா நாயே நீங்க ஊர் விட்டு ஊர் வந்து சம்பாதிப்பீங்க, ஆனால் உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்னை நா நாங்க ஓடிவந்து உதவணுமா, சம்பாதிக்கிற காசையெல்லாம் எங்கக்கிட்டயா கொடுத்தீங்க’ என்று கையை ஓங்கினார். தாத்தாவை பறிகொடுத்த பாட்டி நேராக வந்து அதிகாரியை நோக்கி ‘அட த்தூ ‘ என காறி உமிழ்ந்துவிட்டு என் கைகளைப் பிடித்து அழைத்து சென்றார். அதிகாரியுடன் வந்திருந்த இன்னொரு காவலர் நேராக என்னருகே வந்தார். ‘தம்பிக்கு கோபம் அதிகம் வரும் போல’, என்று கைகளை பிடித்துக் கொண்டே கனிவாக பேசினார். இந்த நாட்டுல எதுவும் சரியில்ல தம்பி, எல்லாமும் கெட்டுப்போய்க் கிடக்கு, அவ்வளவு சீக்கிரம் இதையெல்லாம் சரிப்பண்ணிட முடியாது, இவ்ளோ லட்சம் மக்கள் ஊர் ஊரா நடந்துபோறத பார்த்து பல நாள் சோறு திங்க முடியாம தவிச்சிருக்கேன், ஆனா என்ன  பண்றது, இதையெல்லாம் சகிச்சிக்கிட்டுதான் வாழ வேண்டிக்கிடக்கு, இந்த ஆத்தாளையும், அந்த புள்ளையையும் பத்திரமா கூட்டிட்டுப்போய் அவங்க ஊர்ல விட்டுடுப்பா, ரெண்டு பேரும் துணையில்லாம நிக்கிறாங்க, கொஞ்சம் உதவி பண்ணுப்பா’, என்று பேசிக்கொண்டே என் கைகளை அழுத்தினார். பிறகு எழுந்து சென்றுவிட்டார். அவர் சென்றதும் என் கைகளை திறந்து பார்த்தேன். நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுகளை கையில் திணித்திருந்தார். இந்நேரம் பல கிலோ மீட்டர்கள் நடந்து சென்றிருக்கலாம், ஆனால் இன்றைய இரவையும் இங்கேயே கடத்த வேண்டிய நிலை நேர்ந்துவிட்டது. காலையில் உணவு கொடுத்த பெரியவரின் குடும்பம், பாட்டி, இளம்பெண், நான் என சிலர் மட்டுமே அன்று இரவு அந்த ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் நேரம் ஆக ஆக கூட்டம் எங்கிருந்தோ வந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் அந்த வழியாக கூட்டம் வந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டோம்.

எல்லாரும் நடந்து வந்த களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தனர். இளம்பெண்ணும், பாட்டியும் உறவுகளை பறிகொடுத்துவிட்டு செய்வதறியாது பித்துப்பிடித்தது போல் வெறித்து பார்த்துக்கொண்டே  இருந்தனர். அவர்களையும் அறியாமல் தூக்கம் அவர்களை  தழுவிக்கொண்டது. பெரியவரும் அவரது குடும்பமும் இரவு முழுக்க பேசிக்கொண்டே இருந்தனர். இனி பேசவே போவதில்லை என்பது போல, அன்று இரவு அவர்கள் அவ்வளவு பேசிக் கொண்டிருந்தார்கள். இடை இடையே எழுந்து பார்த்தபோதும் அவர்கள் தூங்கவில்லை. நள்ளிரவைத் தாண்டி அதிகாலையிலும் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். தண்டவாளத்திற்கு அந்த பக்கம் சென்று ஒன்னுக்கடித்துவிட்டு மீண்டும் வந்து படுத்தேன். ‘என்ன தாத்தா, இப்படியே தூங்காம இருந்தா நாளைக்கு எப்படி நடக்க முடியும், கொஞ்ச நேரமாவது தூங்குங்க’ என்றேன், நாளைய பத்தி இன்னைக்கு என்னப்பா கவலை வேண்டி கிடக்கு, அத நாளைக்கு பாத்துக்கலாம்’, மெதுவாக பேசிக்கொண்டே, சிரிக்கவும் செய்தார். வேறு ஏதும் பேசாமல் என்னை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கண்களில் வழக்கத்திற்கு மாறாக அவ்வளவு ஒளி தெரிந்தது. தீர்க்கமாக என்னை பார்த்தார். ‘நீ தூங்கு கண்ணு’ என்றார்.

அதிகாலையில் தூங்குவது எப்போதுமே தனிசுகம், அதுவும் நடந்த களைப்பில் இந்த அதிகாலை தூக்கம் இன்னமும் சுகமாகவே இருந்தது. கண்கள் அயர்ந்தபோது தூரத்தில் ஏதோ ஒளி தெரிந்தது. ஆனாலும் களைப்பில் தூங்கிவிட்டேன்.

சிறிது நேரத்தில் ஓ வென ஓசை எழுப்பிக்கொண்டே ரயில் ஒன்று தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்தது. மற்ற ஊர்களுக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் கூட்ஸ் வண்டிகளை இப்படி அவ்வப்போது பார்ப்போம். சிலர் அதில் தொற்றிக்கொண்டும் கொஞ்ச தூரம் செல்வார்கள். ரயில் முழுமையாக அந்த இடத்தை கடக்குமுன்னரே திடீரென பெரும் கூச்சல் எழுந்தது. திடுக்கிட்டு எழுந்தேன், இளஞ்சூட்டில் என் மீது ஏதோ தெறித்தது. சிறு குழந்தையின் கை ஒன்று துண்டாகி என் மேல் விழுந்தது. கூட்டம் கதறிக்கொண்டே ரயிலை நோக்கி ஓடி வந்தது.

பீதியில் உறைந்து நின்றான் ரியாஸ், துண்டான கைகளைப் பார்த்து பேச்சு வராமல் திக்கித் திணறினான். ரயில் அவர்களை கடந்தது, கூட்டம் மொத்தமாக கைகளில் அலைபேசி ஒளியைக் கொண்டு எதையோ தேடிக்கொண்டே இருந்தது. கைகளும், தலையும், கால்களும் ஆங்காங்கே துண்டு துண்டுகளாக தெறித்துக் கிடந்தன. ரத்த வாடை வீசியது. நிறைய பேர் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று கூட்டத்தில் சலசலப்பு கேட்டது. ரியாஸுக்கு மூச்சடைத்து கைகால்கள் உதறின. அச்சத்தில் தண்டவாளத்தை விட்டு தத்தித்தத்தி நகர்ந்து சென்றான். சூரியன் வருமுன்னே எழும் சிறு ஒளி எழுந்தது. சுற்றிலும் பெருங்கூட்டம், கூட்டத்தில் சிலர் மயங்கி விழுந்தனர். சிறு குழந்தை, பெண்கள், ஆண்கள், வயதானவர் என பலரது சடலங்கள் துண்டு துண்டாக சிதறிக்கிடந்தன. இளம்பெண்ணும், பாட்டியும் துடித்து எழுந்தனர். வெடித்து அழுதனர். வாந்தி எடுத்தனர். அழுகுரல்கள் கேட்டுக்கொண்டே இருந்தன. வானில் பெரிய பெரிய பறவைகள் சுற்றிக்கொண்டே இருந்தன. நூற்றுக்கணக்கான காகங்கள் அந்த இடத்தை வட்டமடித்து பறந்துகொண்டே இருந்தன. அருகில் இருந்த காட்டுக்குள் இருந்த காட்டு நாய்கள் குரைத்துக்கொண்டு சிதறிக்கிடந்த கைகளையும், கால்களையும் தேடி கோரைப்பற்களை காட்டி வந்து கொண்டே இருந்தன. கொஞ்சம் நேரம் கழித்து பாட்டி அழக்கூட சக்தியில்லாத சிறுகுரலில் ரியாஸிடம் கேட்டார், ‘தம்பி அந்த பெரியவரோட குடும்பம் எங்கப்பா’, சட்டென பெரியவரின் நினைவு வந்து அவரை தேடிக்கொண்டிருந்தான் ரியாஸ், தனித்த தலை ஒன்றில் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. ‘அய்யய்யோ அய்யய்யோ, விழுந்து புரண்டு அழுதான், பலம் கொண்ட மட்டும் அழுதான், அவன் சட்டையில் தெறித்த ரத்தம் அந்த பெரியவரின் குடும்ப ரத்தம்தான். ‘விடியும் வரை பேசிக்கொண்டே இருந்தார்கள், என் தூக்கத்தை கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் அந்த குடும்பம் இப்படி சிதறியிருக்காது’ என்று அவன் மனம் குற்ற உணர்ச்சியால் துடித்தது. ‘அரை மணிநேரத்துக்கு முன்னாடி கூட அவங்கள பாத்தேன் பாட்டி, பேசிக்கிட்டே இருந்தாங்க, கொஞ்ச நேரமாவது தூங்குங்கன்னு சொன்னேன், நீ தூங்கு தம்பி னு சொன்னாரே அந்த பெரியவர், கடைசியில அவர் சாவறத நான் பாக்க கூடாதுன்னுதான் அப்படி சொல்லியிருக்காரு பாட்டி’ ரியாஸ் துடித்து அழுது கொண்டிருந்தான். அவன் கைகளைப் பிடித்து தலையை அனைத்து அவனை தேற்றினார் பாட்டி. மனித வாழ்வின் குதூகலம் கனவுகளில் காணும் காட்சிகளை நேரில் காணும்போது நிலைகுலைந்து போகிறது. அன்றொரு நாள் இ-பாஸ் பெற்றுக்கொண்டு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் பெரியவரை கனவில் பார்த்ததை, என்ன தம்பி கனவா என்று கேட்டவர் இன்று அதே போன்றதொரு சம்பவத்தை நிஜமாக்கி சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் அதிகாரியின் வாகனம் வந்தது, அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஒன்றும் வந்தது, சிதறிக்கிடந்த உறுப்புகளை தேடி எடுத்து வெள்ளைத் துணியில் வைத்து மடித்து எடுத்து சென்றனர். அதிகாரி சிலரை பார்த்து பேசிக்கொண்டிருந்தார். ‘என்னப்பா தூங்கும்போது தள்ளிப்படுக்க வேணாமா, இப்ப பாரு, தண்டவாளத்துல படுத்துக்கிடந்தவங்க மேல ரயில் ஏறி, ச்ச ச்ச பாவம், இனிமேலாவது ஒழுங்கா பார்த்து நடந்து போங்கப்பா’ என்று கூறிவிட்டு அதிகாரி நகர்ந்து சென்றார். பாட்டி சட்டென எழுந்து, புடவையை மடித்து, கையில் இருந்த கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு தண்டவாளத்தில் அப்பிக்கிடந்த ரத்தத்தை கழுவி துடைத்தார். ஒட்டிக்கொண்டிருந்த சதைகளை பிய்த்தெடுத்து அருகில் இருந்த காட்டுக்குள் குழி தோண்டி புதைத்தார். மண்ணை மூடிவிட்டு தண்ணீர் தெளித்து, கண்களை மூடிக்கொண்டார். என் புருஷன அறுக்காம, நல்லடக்கம் பண்ண வச்ச மவராசன், நல்லபடியா போய் வாய்யா’, என்று கூறிக்கொண்டே கண்களைத் திறந்தார். கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.

ரியாஸ் இன்னமும் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தான். பாட்டி என்ன சொல்லியும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அவன் கைகளைப் பிடித்து அழுத்திவிட்டுக் கொண்டே அவனைத் தேற்றினார் பாட்டி. இளம்பெண் அருகில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். ரியாஸ் அடக்க முடியாமல் வெடித்து அழுதான். பாட்டி மடியில் படுத்து அழுதான். எழுந்தான், முடியவில்லை, பாட்டி அவனை அணைத்துக் கொண்டு தேற்றினாள். இளம்பெண்ணும் பாட்டியோடு சேர்த்து அவனை அணைத்து தேற்றிக் கொண்டிருந்தாள். பெருமூச்செடுத்து, கண்ணீரை அடக்கி, குரலை மடக்கி, வாங்க பாட்டி நாம போகலாம் என்று மூவரும் கிளம்பினார்கள். வானில் பறவைகள் வட்டமிட்டுக் கொண்டே இருந்தன. அவைகளுக்கு இன்னும் நிறைய இரை இங்கே இருப்பதாகவே தோன்றியது.

தண்டவாளம் தாண்டி பெரும் நிலப்பரப்பில் அகன்று விரிந்த காடு வந்தது. எறும்புக்கூட்டம் போல மனிதர்கள் சாரை சாரையாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். காட்டுப்பகுதி என்பதால், மனிதர்கள் கூட்டத்தின் தேவையை புரிந்து வைத்திருந்தார்கள். வானளவுக்கு ஓங்கி நெடிந்து உயர்ந்து வளர்ந்திருந்த மரத்தின் உச்சியில் இருந்து, சிகப்பு நிற, பருத்து பெருத்த பறவை ஒன்று இவர்களை பார்த்துக் கொண்டே இருந்தது. காட்டுச்செடிகளின் வாசம் வீசியது. சிறு சிறு பூச்சிகள் மனிதர்களை உரசிச்சென்றது, வண்டுகளின் ரீங்காரம் ஓயாமல் கேட்டது. மாலைக்கருக்கல் துவங்குவதற்குள் இந்த காட்டை கடந்தாக வேண்டும் என்று வேகமாக நடந்து கொண்டிருந்தார்கள். ரியாஸ், ஒரு கையில் பாட்டியையும், இன்னொரு கையில் இளம்பெண்ணையும் பிடித்துக்கொண்டு வேகமாக நடந்தான். இளம்பெண் அவன் கைகளை இறுகப்பற்றிக் கொண்டாள்.

அடர்ந்த காடு முடிந்து, சூரிய ஒளி அவர்கள் மேல் பட்டதும், அருகில் இருந்த ஆற்றங்கரையில் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டார்கள். ரியாஸ் அருகில் இருந்த செடியில் இருந்து கொஞ்சம் இலைகளை பறித்து கருங்கல் ஒன்றினை எடுத்து, அதனை கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கினான். இலையில் இருந்து எழுந்த வாசம் புத்துணர்ச்சி கொடுப்பதாக இருந்தது. இன்னும் சில இலைகளை எடுத்து நசுக்கினான். இளம்பெண் ரியாசுடன் சேர்ந்து இலைகளை சேகரித்து வந்தாள். ரியாஸ் கற்களால் இலைகளை நசுக்க நசுக்க அவள் இலைகளை கொடுத்துக் கொண்டிருந்தாள். இலைகளில் இருந்து எழுந்த வாசம் அவளுக்கு பிடித்துப்போனது. அந்தப் பசையை எடுத்து பாட்டியம்மா பாதத்தில் தடவிவிட்டான் ரியாஸ். இளம்பெண் பாதத்திலும் தடவிவிட்டு, தன் பாதத்திலும் தடவிக்கொண்டான். ‘இந்த ஊருக்கு போய் என்ன பா பண்றது, காட்டுக்குள்ளேயே கிடந்து வாழ்ந்துடலாம் போலிருக்கு, உடம்புல மட்டும் இல்லப்பா, மனசுல அடிபட்டாலும் அத ஆத்துற சக்தி இந்த இயற்கைக்கு மட்டும்தான்பா இருக்கு’, என்றார் பாட்டி.

பலநூறு கிலோமீட்டர் கடந்து, வேறொரு மாநிலத்தின் புறநகர் பகுதியை அடைந்தது பெருங்கூட்டம் ஒன்று. ஆனால் எல்லைகளை மூடி, காவலுக்கு பல நூறு போலீசாரை வைத்திருந்தது அரசு. ‘இங்க பாருங்க, உங்க யாரையும் ஊருக்குள் அனுப்ப முடியாது, அரசு அதிகாரிங்ககிட்ட மறு உத்தரவு வரும் வரை நீங்க இங்கேதான் நிக்கணும். அதனால எல்லாரும் இங்கேயே தள்ளி சோசியல் டிஸ்டன்ச ஃபாலோ பண்ணுங்க” ஒலிபெருக்கியில் ஓயாமல் கேட்டுக்கொண்டிருந்தது அதிகாரியின் குரல்.

‘ஐயா சாமி, பல நாள், பல நூறு கிலோமீட்டர் நடந்து வந்திருக்கோம், இன்னமும் நூத்துக்கும் அதிகமான கிலோ மீட்டர் நடந்தாதான் எங்க ஊருக்கு போய் சேர முடியும், செத்தாலும் சொந்த ஊர்ல சாகலாம்னுதான் வந்தோம், இனி தாங்காது, இந்த இடத்துல ஒன்னும் நாங்க குடியிருக்க வரல, இந்த இடத்தை கடந்து போனாதான், எங்க ஊருக்கு போக முடியும்’ கூட்டத்தில் பலரது குரல் எழுந்தது.

 ‘நிச்சயமா உங்கள் எல்லாரையும் உங்க ஊருக்கு அனுப்பிடுவோம், ஆனா இது ஒரு மாநிலத்தோட எல்லை, நோய் வேகமாக பரவிட்டு இருக்கும்போது இவ்வளவு பேர கூட்டமா நடந்து போக அனுமதிக்க முடியாது. எங்களுக்கு கொஞ்சம் கோ ஆப்பரேட் பண்ணுங்க’

கூட்டம் அதிமாகிக் கொண்டே சென்றது. கொடுவெயிலில், தண்ணீர் கூட இல்லாமல், எல்லாரும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் சில இளைஞர்கள், ‘இங்கேயே காத்திட்டு இருந்தா, சரிப்பட்டு வராது, வாங்கய்யா நாம வேற வழியில போகலாம் என்று பேசிக்கொண்டிருந்தனர். கொஞ்சம் பேர் அந்த இளைஞரோடு சேர்ந்தனர். ரியாசும் அந்த கூட்டத்தில் சேர்ந்து கொண்டு நடந்தான். காடுகளிலும், பொட்டல்காடுகளிலும் நடந்தபோது கூட இப்படி வலியை உணர்ந்ததில்லை, ஆனால் தார்சாலைகள் நடப்பதற்கு அருகதையற்றவை, அவை மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது என்று கூட்டத்தில் எல்லாரும் பேசிக்கொண்டு வந்தார்கள். சாலையில் ஆங்காங்கே கார்களும், அரசு வாகனங்களும், ஆம்புலன்சும் ஓடிக்கொண்டிருந்தன. ரியாசுடன் பல ஆயிரம் பேர் கூட்டமாக மாற்று வழியில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். திடீரென சாலையை மறித்து காவலர்கள் அவர்களை  தடுத்தனர். ‘ஒழுங்கு மரியாதையா எல்லாரும் திரும்பிப்போங்க, இந்த பகுதியில இதுக்கு மேல யாரும் போகக்கூடாது, இ-பாஸ் இல்லாத யாருக்கும் இந்த இடத்தில அனுமதி கிடையாது. எல்லாரும் திரும்பிப்போய் எல்லைக்கு போங்க’, ஒலிபெருக்கியில் அதிகாரி எச்சரித்தார். இளைஞர்கள் குரல் எழுப்பினர். ‘அதெல்லாம் முடியாதுங்க, நாங்க எதுக்கு எல்லைக்கு போகணும், எங்க ஊருக்கு இந்த வழியாதான் போகணும், இங்கேயே நிறுத்தி வச்சா நாங்க எப்படி போறது, தண்ணி இல்ல, சாப்பாடு இல்ல, ஆனால் நீங்க சொல்றத மட்டுமே கேளுநா அதெப்படிங்க, பல நாளா பல நூறு கிலோ மீட்டர் நடந்தே வந்திருக்கோம், இன்னமும் நாங்க என்னதான் பண்றது’ கூட்டத்தின் குரல் உயர்ந்தது.

‘உங்களுக்காக அரசாங்கம் வண்டி தயார் பண்ணிக்கிட்டிருக்கு, அதுவரைக்கும் அமைதியா இருங்க’

‘யோவ் இவ்ளோ நாளா எங்கய்யா போய் இருந்தது அரசாங்கம், உசுரைப் பிடிச்சிக்கிட்டு, கொல்லப்பட்டினியில அவன் அவன் நடந்து வந்திட்டிருக்கான், இப்ப வந்து அரசாங்கம் வண்டி தயார் பண்ணுது, அது இது னு பேசிட்டு இருக்கீங்க, வர வழியிலேயே எவ்ளோ பேர் செத்துப்போயிருக்காங்கனு உங்க யாருக்காவது தெரியுமாயா, சும்மா, லத்தியும் துப்பாக்கியும் கையில வச்சிக்கிட்டு எங்களை மிரட்ட மட்டும்தான் தெரியுது, எங்களை பாதுகாக்கத்தான் உங்களுக்கு துப்பாக்கியும், லத்தியும்’ கூட்டத்தில் போர்க்குரல் எழுப்பினான் இன்னொரு இளைஞன்.

‘தம்பி மரியாதையா பேசு, உனக்கு வாய் ரொம்ப நீளுது’ என்று காவலர் எச்சரித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மேலே டிரோன் கேமரா பறந்து, கூட்டத்தை படம்பிடித்துக் கொண்டிருந்தது. ரியாஸ் எட்டி அதனைப் பிடிக்க முயன்றான். அது மேலே பறந்தது. உடனே நான்கு இளைஞர்கள் ஒருவர் மேல் ஒருவர் ஏறி அந்த கேமராவை பிடித்து தரையில் தட்டி சுக்குநூறாக உடைத்து எறிந்தனர். பெருங்கூட்டம் காவலரைத் தாண்டி, தடுப்புகளை உடைத்துக் கொண்டு முன்னேறியது. அதிகாரி மிரட்டிக் கொண்டிருந்தார். ‘இங்க பாருங்க, இதுக்கு மேல யாராவது நகர்ந்தா துப்பாக்கியால் சுட வேண்டியிருக்கும், உசுரு மேல பயமிருந்தா அப்படியே நில்லுங்க’, ரியாசுடன் வந்த இளம்பெண் அதிகாரியின் முன்னே நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சுடுய்யா பாக்கலாம் என்றாள். வானில் பறவைகள் பெருங்கூட்டமாக சுற்றிக் கொண்டிருந்தன. பறவைகளின் சப்தம் காதைப் பிளந்தன. அதிகாரி துப்பாக்கியை இளம்பெண்ணை நோக்கி நீட்டினார். வானில் இருந்து பெரும்பறவை ஒன்று இறங்கியது, குன்று போல் பெருத்திருந்த அந்த சிகப்பு நிற பறவை அதிகாரியின் துப்பாக்கியை பறித்துக் கொண்டு பறந்தது. அதன் அலகில் பழுப்பு நிறம் அப்பிக்கொண்டிருந்தது. தடுப்புகளை உடைத்து, எதிர்ப்படும் அதிகாரிகளின் வண்டிகளை நொறுக்கி, அதிகாரிகளை ஓடவிட்டு பெருங்கூட்டம் தங்கள் ஊரை நோக்கி முன்னேறிச் சென்றது. எல்லையில் காத்துக் கொண்டிருந்தவர்களும் புதிய பாதை நோக்கி புறப்பட்டனர். வானில் பறவைகள் கூட்டம் கூட்டமாக வலசைக்கு சென்று கொண்டிருந்தன. மஞ்சள் நிற சுவரொன்றில் காகம் ஒன்று அமர்ந்திருந்தது. அதன் அலகில் பழுப்பு நிறத்தில் ஏதோ அப்பியிருந்தது. சுவற்றில் தேய்த்து தேய்த்து பழுப்பு நிற கறையை அகற்றியது. கத்திக்கொண்டே வானில் சுதந்திரமாக பறந்தது.

***

அருண் மோ

மாற்று திரைப்படங்கள் மட்டும் திரைத்துறை சார்ந்த முன்னெடுப்புகளை தமிழ் ஸ்டூடியோ என்கிற பெயரிலும், பேசாமொழி என்கிற துறை சார்ந்த இதழையும் நடத்தும் அருண். தற்போது சிறுகதைகளும் எழுதி வருகிறார். தொடர்புக்கு – thamizhstudio@gmail.com

சாகிப்கிரான் கவிதைகள்

0

நிகழ்

ஒரு காட்சித் திரைச்சீலை விழுந்ததைப்போல்
நாடகத்தின் மறுகணம் பெரும் கடலாகத் ததும்புகிறது.
ஆளுக்கு ஆள் அதன் உடைப்புப் புள்ளியைக் கையகப்படுத்த
நான் கிழிந்த உடையை மறைப்பவனாகப் போராடுகிறேன்.
அழிவை எதிர்கொள்வதில்தான் எல்லோருக்கும்
அப்படி ஒரு தேட்டம்.
திரைச்சீலையின் கயிறு எனக்கு எட்டாத உயரத்தில் நின்று அவர்களை வசீகரப்படுத்தும் உயரமாவது முரணானாலும்
கடலுக்கு நடுவே அசையாத பாறையாக நானே அவர்களைத் தாங்கி நிற்கும் தளமாக இருப்பதாக நாடகத்தில் வரும் ஒரு குழந்தை சிரிக்கிறது. அதற்கு இன்னும் பல்கூட முளைக்கவில்லை.
அது சரி ஒரு பாறையால் எப்படி திரைச்சீலையை மாற்றிவிட முடியும்.
இப்படி வேண்டுமானால் செய்யலாம். தன் மேல் வழுக்கும் பாசியைப் படரவிட்டுக் கொள்ளலாம்.
ததும்பலில் இதற்கான சாத்தியம்
மிக அதிகம்.
தவிரவும் கடல் சறுக்கி விழும் இடமே அதன் நிகழ்.

***

த்வனி

தூக்க ஊஞ்சலில்
கீழிறங்கும்போது
அணைத்திருந்தேன்.
உள் விழிப்பு
மீட்டாதே என்றது
ஒலியாகவும் சந்தூராகவும் பிரிந்திருந்தக் கணங்களை
எப்படித் தனித்தனியாகக் கையாள்வது?
நான் ஒரே சமயத்தில் இரண்டையும் செய்தேன்.
உயர்ந்தெழுந்தது ஊஞ்சல்.

***

அவரவர் வீடு

உன் வீட்டில் நுழையும் அந்நியனொருவன் அதன் மணத்தைச் சொல்கிறான்.
உனக்கு மணமற்றதான
உனது வீட்டின் ரகசியம் நம்பமுடியாததாகத்தானிருக்கும்.
யாரையும் இங்கே நம்பவைக்க முடிவதில்லை.
நம்பிக்கை என்பதே ஒரு தொடரோட்டமான பிறகு பந்தயத்தில் புறாக்களை
ருசி பார்ப்பதே அதன் புதிர்தான்.
கடல் கரையை நெருங்கும்போதுதான் பொங்கி ஆர்ப்பரிக்கிறது. ஆனால் பாருங்கள் யார் வீட்டின் கரையும் எனக்கு வெகு தொலைவுதான். மின்மினிக்களை இரவில்தான் அடையாளம் காணமுடியும். அது அணுக்கத்தின் தீட்சை.

***

வியாபாரம்

கடவுள் தனது தோட்டத்தின் பழக்கூடையில் சேகரிக்கும்போது தவறி விழுந்த ஒன்றை சாவகாசமாகத் துடைத்தெடுத்து சேர்த்துவிடுகிறார்.
அது உண்ணத் தக்கவாறு இருப்பது
கூடையைச் சார்ந்தது.
கூடையும் கடவுளும் தேர்ந்த வியாபாரிகள்.
மிக பெலஹீனமான இருதயத்திடம் கிரயம் செய்யப்பட்ட வியாபாரம்
ஏமாற்றலுக்கு அப்பாற்பட்டு
ஒரு வாஞ்சையணிவித்த நெகிழ்வாகத் தேம்புகிறது.
துரோகத்தின் கூர்மையை அன்பின் தடிமனே வளமையாக்குகிறது.
சன்னமான எதுவுமே வலிமையானது
இதை நம்பித்தான் ஆகவேண்டும்
மிகச் சன்னமாக அன்புடன்.
பழக் கூடையிலிருந்து
அந்தப் பழத்தை அகற்றுவது
முன்னமே ஒத்திகைப் பார்க்கப்பட்டுவிட்டது.
ஆனால் யாருக்கும் அது
அப்படி என்று தெரியாது.

***

சாகிப்கிரான்

கண்டராதித்தன் கவிதை

2

***

இருந்த சுப்புவும் இறந்த சுப்புவும்

நண்பர் சுப்பு சில குறைகளுடன்
இருந்திருக்கிறார் என்பது குற்றச்சாட்டு
இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம்

நாட்பட நாட்பட
நண்பர் சுப்பு தன்னிடம் சில குறைகள்
இருந்ததை அறிந்திருந்தார் என்பதும்
குற்றச்சாட்டானது

சரிதான் அதுவும்
இருக்கலாம் அல்லது
இல்லாமலும் இருக்கலாம்

சுப்புவின் இறந்த தினத்திற்குப் பிறகு
நண்பர் சுப்பு சில குறைகளுடன்
இறந்திருக்கிறார் என்பது குற்றச்சாட்டாகிறது
இருக்கலாம் அல்லது இல்லாமலிருக்கலாம்

நாட்பட நாட்பட
சுப்பு இறந்திருக்கிறார்
என்பதே குற்றச்சாட்டாகிறது

சுப்பு இறந்துபோன நாட்களில் நாங்கள்
இறந்த சுப்புவின் அன்பிற்காக அழுதோம்
இறந்த சுப்புவிற்காக அஞ்சலி செலுத்தினோம்
அவர் இருப்பதுபோலவே நினைவுகூர்ந்தோம்

இருக்கலாம் இருக்கலாம்.

***

கண்டராதித்தன்

விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா & வென்டி கோப் கவிதைகள்

0

தமிழில் : மிருணா

மூன்று வினோதமான வார்த்தைகள்

விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா

வருங்காலம் என்ற வார்த்தையை நான் உச்சரிக்கும்போது
அதன் முதல் அசை ஏற்கனவே இறந்தகாலத்திற்கு உரியதாகிவிடுகிறது
அமைதி என்ற வார்த்தையை நான் உச்சரிக்கும்போது
அதை நான் அழிக்கிறேன்
ஏதுமில்லை என்ற வார்த்தையை நான் உச்சரிக்கும்போது
எந்த உயிரிலியாலும் ஏந்திக்கொள்ள இயலாத ஒன்றை நான் உருவாக்குகிறேன்.

***

அந்த ஆரஞ்சு

வென்டி கோப்

மதிய உணவுவேளையில் நான் ஒரு பெரிய ஆரஞ்சை வாங்கினேன் —
அதன் உருவளவு எங்கள் எல்லாரையும் சிரிப்பிலாழ்த்தியது
அதை நான் உரித்து ராபர்ட்டிடமும், டேவிடமும் பகிர்ந்து கொண்டேன் –-
கால்பங்குகள் அவர்களுக்குக் கிடைத்தன நான் பாதியை உண்டேன்

அந்த ஆரஞ்சு, அது என்னை மிக மகிழ்ச்சியாக உணர வைத்தது,
சாதாரண விஷயங்கள் அப்படி அடிக்கடி செய்வது போல
இப்படி கொஞ்சநாட்களாகத்தான். கடைகளுக்குச் செல்வது. பூங்காவில் நடப்பது.
இதுதான் நிம்மதியும், நிறைவும். இது புதிது.

நாளின் எஞ்சிய பகுதி சுலபமாகவே இருந்தது.
நான் என் நிரலில் உள்ள எல்லா வேலைகளையும் செய்தேன்
அவற்றை ரசித்தேன், உபரி நேரம் கூட எனக்கு இருந்தது
நான் உன்னை நேசிக்கிறேன். நான் உயிருடனிருப்பது குறித்து மகிழ்கிறேன்.

***

தேர்வும் & மொழியாக்கமும் : மிருணா

சரோ லாமா கவிதைகள்

0

ஜான் ஆப்ரஹாம், அம்ம அறியான் மற்றும் ஒரு கழுதை

1]
கடவுள் ஒரு கழுதைக்கு கொடுத்த சாபம்
என்னை மிக தாமதமாய் வந்தடைந்தது
அதற்குள் நான் என் கழுதையை மறந்து விட்டிருந்தேன்
கழுதையும் என்னை மறந்து விட்டிருந்தது
தன் மரணத்துக்குப் பிறகும்
ஜான் ஆப்ரஹாம் ‘சாலமோனின் உன்னத சங்கீத’த்தை வாசிப்பதை நிறுத்தவில்லை
கழுதை ஜானுக்கு நெருங்கிய நண்பனாக இருந்தது
தன் பிறவியின் குறைவான ஆசீர்வாதங்களை
ஜானுக்கு கொடுத்து விட்டிருந்தது
ஜானோ தன் நாடோடித் தன்மையை கழுதைக்கு
கொடுத்துவிட்டிருந்தார்
ஜானின் சாராய நெடியை
சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அறவே வெறுத்தன

ஆனால் கழுதைக்கு அதுபற்றிய கவலை
கொஞ்சமும் இல்லை
ஒரு மின்னலை வெறித்துப் பார்க்கும் ஆசையை
கழுதை ஜானிடம் சொன்னது
ஜான் தான் பயன்படுத்தாத ஒளி விளக்குகளை
கழுதையை நோக்கி திருப்பினார்
கழுதைக்கு சவுந்தர்யக் கூச்சம் பெருகியது

அதன் மந்தகாசம் முகில்களின் பயணத்தை
இன்னும் விரைவாக்கியது
ஜானுக்கும் கழுதைக்குமான உறவை கடவுள்
இன்னும் அங்கீகரிக்கவில்லை
ஜானுக்கு அது பற்றியெல்லாம் கவலை இல்லை
ஜானுக்கு தன் கழுதையை பிரிந்து போனதுதான்
பெருந்துக்கமாயிருந்தது

கடவுள் கழுதைக்கு கொடுத்த சாபத்தை
நான் யாரிடம் கொண்டுசேர்ப்பது?

நான் யாரிடம் கொண்டுசேர்ப்பது?

***

2]

வயநாட்டில்
நல்ல ஒரிஜினல் சாராயமும்
மீன்கறியும்
நத்தைக் கறியும் கிடைத்தவுடன்
ஜான் தன் பயணத்தை இரண்டு நாட்கள்
தள்ளிப் போட்டார்.
முடிந்துவிட்ட பயணத்தின் களைப்பு
ஜானின் வார்த்தைகளில்
தெறித்தது
தன் கழுதைக்கு
கண்ணகி பயணம்போன
வழித்தடத்தை
அவர் சொல்லியிருந்தார்.
கழுதையின் ஞாபகத்தில்
வழித்தடத்தின் வரைபடம் விரிந்தது.

கொடுங்கல்லூரில் ஜானும் கழுதையும்
சந்திப்பது என்பது தான் திட்டம்
ஃபோர்ட் கொச்சியில்
வாஸ்கோடகாமா கல்லறையில்
தலை வைத்து தூங்கிக் கொண்டிருந்த
கழுதையை அவர் தடவிக் கொடுத்து
கழுதை வீட்டுக்கு திரும்பப் போக வேண்டும்
என்றார்.

கழுதை ஜான் கூற்றை மறுக்கவில்லை
அது கனைத்துக்கொண்டே
தனக்கு பழக்கப்பட்ட வீதியில்
நடந்து போனது
ஆங்காங்கே சில சிறுவர்கள்
கல்லெறிந்து விளையாடினாலும்
கழுத்தைக்கென்று ஒரு புகாருமில்லை.

ஜான் கள் மயக்கம் தீர்ந்தவுடன்
தன் சொந்த ஆன்மாவை சுமந்து திரியும்
கழுதையை தேடிப் போனார்.
அவர் அலைவுறும் கண்களில்
சொல்லப்படாத கதைகளின் மிச்சம்.
அம்ம அறியானின் ஆன்ம தரிசனம்
ஜானை தேடிப் போனவர்கள் பலர்
ஜானைக் கண்டடைந்தவர்கள் சிலரே.

***

3]

ஜானின் பயணத்தை யாராலும்
கணிக்க இயலாது
சில சமயங்களில் அது
இத்தாலியின் வயதான மரமாக இருந்தது
சில சமயங்களில் அது
சுந்தர ராமசாமியின் ஆசார முற்றமாயிருந்தது
சில சமயங்களில் அது
கழுதைகள் முனகிக்கொண்டே
ஓய்வெடுக்கும் ஆற்றங்கரையாயிருந்தது.
சில சமயங்களில் அது
போர்ட் கொச்சியில்
போர்த்துகீசிய கல்லறையாயிருந்தது
சில சமயங்களில் அது
நாற்றமெடுக்கும் பேருந்து நிலைய
பொதுக் கழிப்பறையாயிருந்தது
எது எப்படி இருந்தாலும்
ஜானின் பயணத்தை கணிப்பது
அத்தனை சுலபமல்ல
ஒடேஸாவின் ஒளிக்கீற்றுகள்
இன்னும் அணைந்து போகவில்லை.

ஜான் ஒரு சலன சித்திர தேசாந்திரி

ஜானின் சட்டகங்கள்
விதியின் கோணலோடு பொருந்திப் போனவை
ஜான் ஒரு கலைஞனின் மரணத்தை
விசாரிக்கப் போனான்
கடைசியில் ஜானே ஒரு மறக்கவியலாத
மரணமாக மாறிப் போனான்
ஜானின் ஒளிசட்டகங்களில் இன்றும்
நீங்கள் காணமுடியும்
ஒரு இடையறாது சுடர்விடும்
விண்மீனை.

***

சரோ லாமா

கே.ஸ்டாலின் கவிதைகள்

0

1.

பகலில் உறங்கி
இரவில் விழித்திருப்பவனைக் கண்டு குழம்பி நிற்கிறது
அவனது காலடியில்
நாயெனக் காலம்.

கிழமைகள் மறந்து போன
காலமொன்றில்
உறங்கி விழிக்கிறான்
வாரத்தின் எட்டாவது நாளில்.

குலைந்த ஒழுங்குகளுக்கிடையே
சரியாக பதினைந்தாவது நாளில்
தேய்ந்து வளரும் நிலவைக்
காண இயலாமல்
தவித்து நிற்கிறார்
மூடிய கதவுகளுக்குப் பின்
கடவுள்.

கடைகளை அடைக்கச்சொல்லி
விரைந்து வருகிறார்
தூரத்தில் காவலர்.
வாடாத பூக்களை யாரேனும்
வாங்கிவிட மாட்டார்களாவென
வாடிய முகத்துடன் மூதாட்டி.

ஒரே காட்டின் மூங்கில்கள்தான்
அன்று வெள்ளத்தில் படகென
நம்மைச் சுமந்ததும்
இன்று அதிகாரத்தின் கைகளால்
ஆசனவாய்களை சுவைத்ததும்.

***

2. விடுமுறையின் போது இறந்து போனவள்…..

காலியாக உள்ளது
விடுமுறையின்போது
இறந்து போனவளின்
தேர்வறை இருக்கை.

அவளது பெயருக்கும்
அவளுக்கென பிரத்யேகமாக
அளிக்கப்பட்டுள்ள
தேர்வெண்ணிற்கும்
இடையேயான
மாத்திரை அளவின்
வித்தியாசமே
நிகழ்காலத்திற்கும்
இறந்தகாலத்திற்குமான
வித்தியாசமென்பது.

காற்றில்
படபடத்துக் கொண்டிருக்கும்
நுழைவுச் சீட்டில்
புன்னகைத்தபடியிருக்கும்
அதே முகம்தான்
அவளது இறுதியஞ்சலி
பதாகையை அலங்கரித்ததும்.

பின்னிருக்கை தோழி
பதற்றத்துடன்
நிமிர்ந்து நோக்கும்
கணந்தோறும்
தோன்றி மறைகிறது
இல்லாதவளின்
இரட்டைப் பின்னல்.

நெற்றியைத்தொட்டால்
விடை அ
மூக்கைத் தொட்டால்
விடை ஆ
உதட்டிற்கு விடை இ
முகவாய்க்கு ஈ
என ஆண்டு முழுக்க
தேர்வறையில் ஜாடையில்
பேசிக்கொண்ட
முன்னிருக்கைத் தோழிக்கு
ஒரு மதிப்பெண் வினா முழுக்க
வியாபித்திருப்பது அவள் முகமே.

கால்கடுக்க நின்று கொண்டிருக்கும்
கண்காணிப்பாளருக்கு
தனது காலியிடத்தை
அமரத் தந்து
ஆசுவாசப்படுத்துவதும் அவளே.

இறுதியாக
தேர்வு முடிந்து வெளியேறும்
தோழிகளின் வியர்வை கசிந்த
முகங்களை
சில்லென அரவணைக்கும்
காற்றிற்கு என்ன
பெயரென்று நினைக்கிறீர்கள்

விடுமுறையின்போது
இறந்துபோனவளின்
அதே பெயர்தான்.
(கொளுத்தப்பட்ட மாணவி ஜெயஸ்ரீ க்கு)

***

கே.ஸ்டாலின்

சம்பு கவிதைகள்

0

உபரிகளை ஒழிக்கும் துப்பாக்கி குண்டு…

அந்த சோற்றுக் கவளத்தை
விழுங்குகையில்
கண்கள் இருட்டிக்கொண்டு
நெஞ்சுக்குழாய் அடைக்குமுன்
பொங்கிய உப்புநீர்
அவர்களின் வாய் வடிந்து கரிக்கிறது

ஏதிலிகளின் வாழ்வு
இத் தேசத்துக்கே பெருஞ்சுமையாய்
கனத்து கிடக்குமிந்த
துர்வேளையில்
(அரசின் நெஞ்சிலடிக்கப்பட்ட
கையாலாகாத்தனத்தின்
கூர் ஆணிகள்)
எறும்பு கூட்டங்களைப்போல்
இந்த ஆற்றுப்பாலத்தினடியில்
அவர்கள் போக்கிடமற்றுக்
குழுமிக் கிடக்கின்றனர்

அடுத்த விநாடி நழுவப்போகும்
உயிரை கையில் பிடித்துக்கொண்டு
அலையும் வாழ்வுக்குச் சபிக்கப்பட்ட
அவர்களின் முன்பாக
எப்போதும்
பொன்னொளி வீசி மினுங்குவதெல்லாம்
ஒரு கவளச் சோறுதானேயன்றி
வேறு
பெரும் இலக்குகளேதுமில்லை

இந்த அகண்ட தேசத்தின்
ராணுவ வல்லமைகள்
ராச தந்திரங்கள்
போர்த் தளவாடங்களின்
மகிமை குறித்து
பெருமிதத்தில் குடிகளின் நெஞ்சு தானே
புடைக்கவில்லையெனில் அது
கழுவிலேற்றப்பட வேண்டிய
குற்றமெனக் கருதும்
ஓர் ராஜாங்கத்தின் முன்புதான்
வற்றிக்கிடக்கும்
அந்த நதிப்படுகையோரத்தில்
பழந்துணிகளைப்போல் அவர்கள்
சுருண்டு படுத்திருக்கின்றனர்

அவர்களின் கடவுள்
அந்த நதியின் தீரத்திலே புனலாடி
மகிழ்ந்ததையெல்லாம்
துகில் களவாடி சிறுபிள்ளையென
ஓடித் திரிந்ததையெல்லாம்
இப்போது
பொருமியபடி உறுமும்
கும்பியைத் தாண்டியும் நினைந்து
நமஸ்கரித்தலே
இந்த தேசப்பிரஜைகள் உய்வதற்கு
ஒரே வழியென்கிறார்கள்
ராஜ்ய பரிபாலன கர்த்தாக்கள்

எனினும்
நிர்க்கதியற்ற துயரங்களை
சதா சுமந்தலையும்
உபரிகளும் சேர்ந்தேதான்
இந்த வெளி
ஒளிர்ந்து கொண்டிருக்கிறது

கொடுங்காலத்தின் முன்பாக
வரிசையாகப் படுத்துக்கிடப்பவர்களுக்கு
காதுகள்
பஞ்சடைந்துபோனால்கூட
விதிமீறலாய் கருதும் தேசமிது

ஜனநாயகம் வாழையிலைமீது
வைத்து நீட்டப்படும்
எல்லோருக்குமான பதார்த்தமெனில்
அதனடியில்
குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியையும்
மறைத்தபடியேதானிருக்கின்றன
கொடூரக்கரங்கள்
ஆயினும்
அறுதியிடப்பட்ட மீப்பெரு உண்மை
தேச வரலாற்றின் பக்கங்களிருந்து
ஒருபோதும்
பிரித்தெடுக்கவே முடியாத உபரிகளின்
இருப்பை
துப்புரவாக இல்லாதொழிக்கும்
துப்பாக்கிக் குண்டுகளை
இனிவரும்
எந் நூற்றாண்டிலுமே
எவராலும்
கண்டுபிடித்துவிட முடியாது…

***

2.கடவுளின் ரயில் வண்டி…

கோழிக் கழிவுகளின் துர்வாசனை சூழ்ந்து கிடந்த
அவர்களின் கூடாரங்களில்
விளக்குகள் ஒருபோதும் எரிந்ததில்லை

இரும்புகளை வார்த்தெடுக்கும்
கொடூர வெப்பத்தில்
கனன்று கனன்று
துருவேறிக்கிடந்தன் அவர்களின்
முகங்கள்

நெசவுக்கூடங்களின் பஞ்சுப்பொதிகள்
அவர்களின் நுரையீரலுக்குள்
அப்பிக்கிடப்பதை எவருமறிந்திலர்

இருபத்துநான்கு மணி நேரமும்
சக்கையெனப் பிழியும்
ஏற்றுமதியாலைகளின் கொடுங்கரங்களுக்குச்
சவால்விட்டு நின்றன
அவர்களின்
தசை நார்கள்

ஒருநாளின் பொழுதை
வெறும் பதினைந்து ரூபாயில் வாழ்ந்துவிடும்
அருந்திறனுக்கு முன்பாக
இதுவரையிலும்
பெருந்திறனுடன் விண்ணேகிய
ராக்கெட்டுகளும் விண்கலங்களும்
கதறியபடி
தலைகுப்புற வீழ்கின்றன

எனினும்
புலம்பெயர்ந்து நடமாடும்
இந்த மண்ணில்
அவர்களுக்கு
இனி ஜீவிதமில்லை
ஓர் தீநுண்மியின் கரங்கள்
தம் பிஞ்சுகளின் குரல்வளையை
இறுக்கிவிடுமென்ற பதட்டமும்
இதற்குமேல்
அச்சிறுகுடலைக் கருகவிட்டால்
சுருண்டுவிழுந்து மடிந்துபோகுமென்ற
அச்சமும்தான்
பூர்வீகம் நோக்கி
கூவிக்கொண்டு நிற்கும்
அந்த
ரயிலில் அவர்களை ஏறவைத்தது

இரு கால்தட அளவுகொண்ட இடத்திலேயே
குறுக்கியமர்ந்தபடி
இரண்டாயிரம் கிலோமீட்டர்கள்
அணுவளவும் அசையாத
அவர்களின் பயண சாகசத்தை
பன்னூறு தடவைகள்
பார்த்திருந்தன அந்த ரயில்கள்

தவிர
இம்முறை
அவர்களின் கடவுளே
சிரித்தமேனிக்கு
அந்த எஞ்சினை இயக்குகிறார்
கடவுளின் ரயில்களுக்கு
நிலையங்களுமில்லை
நிறுத்தங்களில்லை

சகலத்தாலும்
நிர்கதியாக்கப்பட்ட
அவர்களைச் சுமந்துகொண்டு
நகரும்போது
கடவுளின் கடைவாயில் மினுங்குகிறது சிறு குருதித்துளி

பிறகு
எந்த யோசனையும் துளியுமின்றி
நரகத்திலிருந்து
இன்னொரு நரகத்தை
நோக்கிப் பாய்கிறது
அந்த
அதிவிரைவு வண்டி…

***

3.காற்றில் கரைந்த சாபம்…

செருப்புகளற்ற பாதங்களுடன்
அந்த நீள்பயணம் துவங்கியபோதே
அதன் பிறகான வாழ்வு
அவர்களின்
கைவிட்டு ஓடியொளிந்து கொண்டது
இத்தேசத்தின் தலையின்மீது
விரிந்து கிடக்குமந்த மலைச்சிகரத்தை
கண்ணை மூடிக்கொண்டு
ஏழுமுறை ஏறியிறங்கும் நெஞ்சுரம் அது

தோளிலும் இடுப்பிலும்
தம் மக்களைச் சுமந்த
அவர்கள்
எத்தனை காத தூரத்தினை
கடந்திருக்கமுடியும்
தொள்ளாயிரம் கிலோமீட்டரை
தாண்டத் துணிந்த
கால்களுக்குத் தெரியவில்லை
இப்பயணம்
தன் பூர்வீகத்தின் எல்லைக்கோடு தொடுகையில்
இவ்வுடல்
ரத்தவாந்தியெடுத்தபடி
இப்பூமியில் சரிந்து விழுமென்று

தொண்டை வறண்டுபோன
அநாதிக்காட்டில்
பச்சைமரத்தின் பட்டைகளை
கடித்துத் துப்பியதெல்லாம்
ஒரு துளி திரவமிந்த
உள்நாக்கை நனைத்துவிடாதா
என்ற பதைபதைப்பில்தானே

இவ்வளவு
குரூரமான நிராதரவினை
இந்த நூற்றாண்டு
தொடங்கி வைக்குமென்று
அப்படியப்படியே
தூக்கியெறியப்பட்ட
அல்லது
அரையுங்குறையுமாய்
புதைக்கப்பட்ட
குழந்தைகளின் உடலங்கள்
அழுகி நாறி மக்கிய பின்னர்
ஒருபோதுமே
உணரப்போவதில்லைதானே

தமது கடவுள்கள் கைவிட்டதாய்
சாலையின் குறுக்கு மறுக்கில்
ஓயாது அக்கால்கள்
நடந்தரற்றியபோது
அந்த இதயம் மட்டுமென்ன
லயத்திலா துடித்துக் கொண்டிருந்தது
சகலத்தையும் எரித்தடங்கும்
வெப்பத்தின் அனல்
அதில் அலையாடி தகித்ததுதானே

ஒரு சாபத்தில் இந்நிலம்
சாம்பலாகும் எனுஞ்சொல்
மட்டும்
அணுகுண்டிற்கிணையான வல்லமை
கொண்டதெனின்

எத்தனை இலட்சம் முறைகள்
அவர்களின் கடவுளர்களே
இத்தேசத்தை
வெடி வெடித்துத் தகர்த்து
ஓய்ந்து போயிருக்க வேண்டும்.

***

4.கோவணத்துண்டின் கிழிசல்…

கடவுளின் பெயரால் உருளும்
இந்த சக்கரத்தை
பரிபூரண நீதியின் கரங்களால்
ஒருகணமும் நிறுத்த முடியவில்லை

இந்தக் குடையின் கீழ்
நடமாடும்
சகலமானவருக்கும் ஏற்கெனவே
திட்டமிடப்பட்ட நீதியினை
அவர்கள் கடவுளின் பெயரால் எழுதிவிட முனைகையில்
திசைகளெங்கும்
சிதறியோடும் குடிகளுக்கு
மேல்மூச்சு வாங்கி நாக்குத் தள்ளுகிறது

குடிகளின் துயர்காலத்தில்
மாட்சிமை கொண்ட ராஜ்யாதிபதி
தன்
ஹம்ஸதூளிகா மஞ்சத்தில்
தூக்கச் சடவுடன்
புரண்டு புரண்டு படுக்கிறார்
ஓயாமல் சுற்றித்திரிந்த
புஷ்பக விமானம் நிறுத்தப்பட்ட இடத்தில்
புற்கள் முளைத்துக் கிடக்கிறது
திக்கெட்டும்
பறந்த அதன் ஞாபகங்களில்
வெறும் ஏக்கம் மட்டுமே
படிந்திருக்கிறது

பன்னூற்றாயிரம் தலைகள் சூழ்
வெட்டவெளியில்
நெஞ்சுவிரிய
தொண்டை புடைத்துக் கூவியே
அதுவோர்
லஜ்ஜையற்ற விளம்பரப் படத்திற்கான
தீராத ஒத்திகையாய் மாறிப்போனது
கல்யாணம் இழவு கருமாதியென
பாரபட்சமின்றி
இதுவரை
முஸ்தீபு காட்டியே பிழைப்பும் ஓடியது

ராஜ்ஜியமே அரண்டுபோகும்
மாயப்பிசாசு
வலுவந்தமாய் சிலிர்த்துக்கொண்டு
பட்டாசாலில் வந்து
இப்போது அமர்ந்திருக்கிறது
பாணங்கள் தீர்ந்த அம்பறாத் துணியை
சும்மாடுகூட்டி தலைக்கு வைத்து
தூங்குவது
எவருக்குத் தெரியப் போகிறதென்ற கித்தாப்பில்
புஜங்கள் தட்டியபடி
கோதாவில் இறங்கியாயிற்று
தார்ப்பாய்ச்சி மேலேற்றிக் கட்டி இறுக்கும்போதுதான்
அந்தக் கோவணத் துண்டின்
கிழிசலை
உலகம் பார்த்தது

கின்னர கிம்புருடர்கள்
மலர்மாரி தூவி வாழ்த்தியருளும்
கண்கொள்ளாக் காட்சி
பிறகு
இருபத்து நான்கு மணித்தியாலங்களும்
நேரலை ஒளிபரப்புதான்
கடைவாய் பற்கள்
புறத்துக்கு நான்கு
கழன்று விழுந்தாலும்
சோடிப்புக்கு ஒன்றும் குறையேயில்லை

ஹர ஹர ஹர மஹாதேவ்…

***

சம்பு