Home Blog Page 76

பிலாக்கணம் பூக்கும்  தாழி

0

அகர முதல்வன்

ஓவியம்: வல்லபாய்

பிலா இலை ஆச்சிக்கு தலைமுழுக்க பேன், ஆனா பார்க்க விடுகுதில்லையண்ணே” என்று கோள்மூட்டிக் கொண்டிருந்தாள் மாலா. அப்பா சுருட்டின் அடிப்பக்கத்தை எச்சிலால் பதப்படுத்தியபடி “ஏனணை அவளைப் பேன் பாக்கவிடன், அது தலைமுழுக்க பெருகிப் புழுத்தால் பிறகு மலத்தியோன் வைச்சுத்தான் முழுக வேண்டி வரும்” ஆச்சியின் கொட்டிலுக்கு கேட்குமளவிற்கு குரல் கொடுத்தார்.

“உந்தக் கொண்டோடி வேசய இஞ்சவரச் சொல்லு” என்று ஆச்சி கத்தினாள். “என்ன சொல்லுங்கோ” என்று இருந்தவிடத்திலிருந்து பதிலுக்கு கேட்ட மாலாவை பொருட்படுத்தாமல் ஓலைப்பெட்டியில் இருந்த குறைச்சுருட்டை எடுத்து மூட்டினாள் ஆச்சி. வாங்கின அடியில் கிடந்த மூத்திரவாளியின் வீச்சத்தை தணிக்கும் வகையில் சுருட்டின் வாசம் கமழ்ந்து அலைந்தது. ஆச்சி செருமிமுடித்து மீண்டும் புகைத்தாள். அப்பா சுருட்டை பாதியில் காணுமென்று நூத்துவிட்டு தன்னுடைய போணியில் பத்திரப்படுத்தினார். மாலாவிற்கு அப்பா நூறுரூபாய் காசைக் கொடுத்து இதை வைத்துக்கொள் என்றார். அவளுக்கு மறுப்பதற்கு மனமுமில்லை இடமுமில்லை.  வாங்கினாள். அப்பா சைக்கிளை எடுத்து தோட்டம் நோக்கி உழக்கலானார்.

மாலா என்னுடைய உடுப்புக்களையும் அப்பாவின் உடுப்புக்களையும் தோய்ப்பதற்கு எடுத்துக்கொண்டு கிணற்றடி நோக்கி நடக்கலானாள். பிலா இலை  ஆச்சியின் கொட்டிலைத் தாண்டுகையில் சுருட்டும் மூத்திரமும் கலந்தெழுந்து வயிற்றைக் குமட்டியது.

“ஆச்சி இரன, உடுப்புத்தோய்ச்சுப் போட்டு வாறன்”

என்று சொல்லியபடி  அந்தக் குமட்டலை பாய்ந்து கடந்தாள். “கொண்டோடி வேசை என்ர தலையில இருக்கிற பேன் உன்ர கவட்டுமயிரிலா ஊரப்போகுது” கோபம் தழல்விட ஆச்சி கேட்டாள். மாலா பதிலுக்கு “ஓமணை ஆச்சி, இவர் வேற தங்குவேலைக்கு போயிட்டார், அப்பிடி எதுவும் நடந்தால் நான் ஆர வைச்சு பேன் பார்க்க ஏலும் சொல்லுங்கோ” என்று அந்தரங்கமாய் தொனித்தாள். இலை ஆச்சியும் மாலாவும் இப்படித்தான் வாக்குவாதப்படுவார்கள். பயன்படுத்தும் வசவுகளும் பதில்களும் கனிந்து பகிடியாய் எஞ்சி இருவருக்குள்ளும் அன்பாய் விரிந்தெழும்.

“மோளே மாலா, நீ என்னை கோபிக்கப்பிடாது, உன்னுடைய கையில மீன்வெடுக்கு அடிக்குது, சாப்பாட்டுக் கோப்பையை இதில வைச்சிட்டு, அந்த மஞ்சள் கட்டி சவுக்காரத்த போட்டு கழுவு. இல்லாட்டி நீ தீத்துகிற இந்தச் சாப்பாடும் குமட்டி சத்தி வரும்”

ஆச்சி இண்டைக்கு என்ர வீட்டில மரக்கறிதான் சமைச்சனான். உங்களுக்கு மனப்பிரமை. எப்ப பார்த்தாலும் மீன் வாங்கிக்காய்ச்ச என்ர புருஷன் என்ன அரசாங்க உத்தியோகமே?

மாலா சன்லையிட் சவுக்காரத்தை எடுத்து கையைக்கழுவுவாள். ஆச்சியின் மூக்கிலேய இரண்டு கையையும் வைத்து இப்ப மீன் மணக்குதோ? மான் மணக்குதோ? என்று கேட்பாள்.

ஆச்சி எதுவும்  சொல்லாமல் சோற்றுக் குழையலுக்காய் ஆவென்று வாயைத் திறப்பாள். சாப்பாடு முடித்ததும் ஒரு சுருட்டு. அதைப் புகைத்து முடித்தால் கனாச்சுரக்கும் நித்திரைச்சுழல் ஆச்சியைத் தாக்கும். பரிதாபகரமான இரையைப் போல பகல் நித்திரைக்கு தன்னை ஒப்புக்கொடுப்பாள். நித்திரையிலிருக்கும் ஆச்சிக்கு பேன் பார்க்கத் தொடங்குவாள் மாலா. அவ்வளவும் மொளியன் பேன். தன் இரண்டு பெருவிரல் நகங்களும் இரத்தப் பசைமேடாகும் வரை மாலா பேன் பார்ப்பாள். ஆச்சி செருமிக்கொண்டு நெஞ்சைத்தடவி புரண்டு படுப்பாள். மாலா தனது பாவாடையை  உதறி சட்டையைத் தட்டிக்கொண்டு  ஆச்சியின் கொட்டிலை விட்டு வெளியேறுவாள். தனது வீட்டிற்கு போய் குளித்து முடித்துவிட்டு கூந்தலை ஈர்கோலி கொண்டு இழுத்து நெரிப்பாள். ஈர்க்கும்பல் பொரிந்து வெடிக்கும். வேப்பிலையையும் கருவேப்பிலையையும் மஞ்சளோடு அரைத்து அவசரகதியில் தலையில் பூசுவாள்.

ப்பா கொஞ்சம் வெள்ளனவே வீட்டிற்கு வந்தார். மனித ரத்தம் உறிஞ்சும் நுளம்புகள் பறந்தபடியிருந்தன. ஆச்சி பின்னுக்கு எழும்பி மெல்ல நடமாடிக் கொண்டிருந்தாள். அப்பாவிற்கு இரவுச்சாப்பாட்டை பரிமாறும் பொறுப்பு எனக்கிருந்தது. குளித்துமுடித்த நேராக குசினிக்குள் நுழைவதைக் கண்டேன். வெளியே கிடந்த அப்பாவின் கோப்பையைக் கழுவிக்கொண்டு குசினிக்குள் போனேன். பெரிய பலகைக் கட்டையில் ஈரச்சாறத்தோடு அமர்ந்திருந்தார்.  மூடிக்கிடந்த பெரியசட்டியைத் திறந்து புட்டை அள்ளிப்போட்டேன். நான்காவது அகப்பை விழுந்ததும் “காணும்…காணும்” என்றார். கடலைக்குழம்பும் நொச்சி மிளகாய் சம்பலும், சேலன் மாங்காய் சொதியும் இருந்தது. அப்பாவிற்கு அளவளவாக பரிமாறினேன். அப்பா காணும் என்று சொன்னதும் எல்லாவற்றையும் எடுத்து வைத்தேன். அப்பா சாப்பிட்டு முடித்து வாயைக்கொப்பளித்து குசினிக்கு இடப்பக்கமாக இருக்கும் வேலியடியில் துப்புவது கேட்டது. பின்னர் குடத்தைச் சரித்து தண்ணீர் நிரப்பி மூன்று செம்பு தண்ணீர் குடிப்பார். அதுமுடிந்ததும் சாய்மனைக் கதிரையில் இருந்து சுருட்டைப் பத்தவைத்து இழுத்து ஊதியபடி மகத்தான மனிதத்தோரணையில் வானத்திலுள்ள நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருப்பார்.அப்போது அவரின் முகத்தில் வடிவு பொலிவதைக் காண்பேன். “உன்ர கொப்பன் மிடுக்கான ஆளல்லோ” என்று எனக்குள்ளே நான் பெருமை பொங்கி வழிவேன். அப்பா அப்படியே கதிரையிலேயே படுத்துவிடுவார். அதிலொரு உறக்கம் கண்டு மூத்திரத்திற்கு விழிப்புற்று பின்னர் வீட்டிற்குள் நுழைந்து பாயில் படுப்பார்.

தொள தொளப்பான சட்டையணிந்த ஒரு வயோதிகனைப் போல இரவு இறுகி அசைய, பிலா இலை ஆச்சி உறக்கமில்லாது வாங்கில் முழித்திருந்தாள். திடீரென கூரையில் செருகப்பட்டிருந்த பிலா இலைக்கம்பியை எடுத்துக்கொண்டு கொட்டில் முற்றத்தில் இறங்கினாள். நடுங்கும் கைகளும் பொருக்கடைந்து சுருங்கிய சரீரத்தோடும் வானத்தை பார்த்துக் கொண்டே பிலா இலைகளை மிகவேகமாக குத்தத்தொடங்கினாள். தொள தொளப்பான சட்டையணிந்த ஒரு வயோதிகன் பூமியை விட்டு அகலும் நொடிவரைக்கும் அவள் குத்திக்கொண்டே நின்றாள். முற்றமெங்கும் பிலாக்கம்பியின் கூர்த்தடம். ஆச்சியின் கால்தடம்.

அப்பா எழுந்ததும் உமிக்கரியை வாயில் போட்டு பல்லை விளக்கியபடி கிணத்தடிக்கு போகையில் இரண்டு தடங்களையும் கண்டார். கொட்டிலை எட்டிப் பார்த்தார். ஆச்சி சுருட்டு குடித்துக் கொண்டிருந்தாள். நிலமிறங்கிய பிலாக்கம்பி கூரையில் செருகப்பட்டிருந்தது. கூர்முனையில் மண். அப்பா பல்லைத் தீட்டி கிணற்றுப்பாத்தியில் நான்குதரம் துப்பி குளித்துமுடித்தார். எழும்படா நித்திரை காணுமென்று என்னை வந்து தட்டியெழுப்பினார். ஆச்சியின் கொட்டில் முற்றத்தில் அத்தனை சிறுபொட்டு குழிகள் கண்டேன். அவ்வளவு வடிவாக இருந்தது. பிரக்ஞையற்ற அகமனத்தின் மேய்ச்சல் போலிருந்தது. ஆச்சியை எட்டிப்பார்த்தேன். அவள் வாங்கில் நீட்டி நிமிர்ந்து படுத்துக்கிடந்தாள். அவளின் இரண்டு பாதங்களிலும் மண் ஒட்டிக்கிடந்தது. இன்னும் கொஞ்சம் பக்கமாக போய் நின்று பார்த்தேன். இந்தநொடியில் அரும்பிய பிலா இலை போலிருந்தது அவளின் முகப்பசுமை.

எங்களுடைய  சொந்தக்கிராமத்தில்  ஆச்சிக்கிருந்த  நான்கு ஏக்கர் காணியில் பிலாமரங்கள் நிறைந்திருந்தன. “பிலாவளவுக்காரர்” என்றால் அறியாதார் இல்லை. நான் சின்னஞ்சிறு குழந்தையாக இருந்த நாளொன்றில் அங்கிருந்து இடம் பெயர்ந்து இந்தவூருக்கு வந்தே சரியாக இருபத்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. அம்மா மலேரியா காய்ச்சலினால் உயிரிழந்திருக்கிறாள். அப்போது எனக்கு ஒருவயது கூட பூர்த்தியாகவில்லையாம். அம்மா எனும் பொருண்மை அருவவுணர்வெனக்கு. ஆச்சிதான் எல்லாமுமாக இருந்தாள். ஆனால் அவளுக்கு இந்தக்கிராமத்தோடு ஒன்ற முடியாதிருந்தது. சகிக்க முடியாதிருந்தாள். எத்தனை வருஷமானாலும் பிலாவளவு கிணற்றில் தண்ணி அள்ளி குடிச்சால்தான் களைதீருமென்று மந்திரமாய் சொல்லிக்கொள்வாள்.

ஆனால் ஆச்சியின் சொந்தக் கிராமத்தின் தலைவாசலில் “இந்த நிலம் இராணுவத்திற்கு சொந்தமானது” என்ற அறிவிப்புப்பலகை கால் நூற்றாண்டாக தொங்குகிறது. “ என்ர இராசா நான் இஞ்சனேக்கே செத்துப்போனா என்னை எரிச்சு கடலில காடாத்தாத, அந்தச் சாம்பலைக் கொண்டு என்ர பிலா வளவுக்குள்ள ஒரு கிடங்கு வெட்டி தாக்கவேணும். அப்பதான் என்ர ஆத்மாவுக்கு களைப்பு அடங்கும். விளங்குதே மோனே ” என்பாள் ஆச்சி. அப்போது அவளின் கண்களில் தவிப்பின் உக்கிரம் மிழங்கும்.

“ ஓமண, ஓமண ஆமிக்காறன் காணிகளை விட்டுப்போனால் முதல் வேலையாய்  உன்ர சாம்பலைக் கொண்டே பிலாவளவுக்குள்ள புதைப்பன் நீ யோசியாத ” என்பேன்.

ஆச்சியின் உடலுக்குள் இருந்து கண்ணீரின் பெருக்கு நிகழும். அவள் என்னுடைய கன்னங்களை அளைந்து நெற்றியால் முட்டி கொஞ்சுவாள். அவளின் உள்ளங்கைகளில் குளிர்மையாக  வலுத்துநிற்கும்  திகைப்பு ரேகைகளாக ஓடிக் கொண்டிருந்தது.

பிலா இலை ஆச்சிக்கு மாறாட்டம் கூடிப்போயிற்று. தலையில் புழுத்து உடம்பில் பேன் விழுந்தது. இரவும் பகலும் கொட்டில் முற்றத்தில் பிலாக்கம்பியை  வைத்து குத்தினாள். வேம்படி பரியாரியிடம் மருந்து வாங்கி வந்து மாலாவிடம் அப்பா கொடுத்தார். சாப்பாட்டில் கலந்து கொடுத்தும் ஆச்சியை உறக்கம் தொடவில்லை. மாலாவைப் பார்த்து சின்னக்கிளி வாடி, எப்பிடி சுகமென்று கேட்டாள்.

“ நான் சின்னக்கிளி இல்லெ, பெரிய கிளியெனெ ” மாலா சிரித்தபடி சொன்னாள். சின்னக்கிளி யாரென்று அப்பாவுக்கும் தெரியவில்லை. ஆச்சிக்கு எந்த வைத்தியமும் கேட்கவில்லை. அவள் பிலாக் கம்பியோடு ஓயாமல் நடந்து கொண்டே இருந்தாள். பகலுக்குள் நடந்தாள். இரவுக்குள் நடந்தாள். அவளின் சொந்தக் கிராமத்தை நோக்கி கற்பனையில் நடந்தாள்.

ஆனால் மாலா ஆச்சியை தூக்கிக்கொண்டு போய் கிணற்றடியில் இருத்தி வைத்து முழுக வார்ப்பாள். கையாலாகாத குழந்தை திமிறி அழுவதைப் போல ஆச்சி அழுவாள். “ இந்தா முடிஞ்சுது, இந்தா முடிஞ்சுது ” என்று சொல்லி ஆற்றுப் படுத்துவாள். உடைமாற்றி, தலைதுடைத்து ஆச்சிக்கு சோறு தீத்திவிடுவாள்.

“சின்னக்கிளி நீ சாப்பிடு,நான் திடகாத்திரமாய் தான் இருக்கிறேன். நீ சாப்பிடு”

“ஓமண நான் சாப்பிட்டேன். நீங்கள் சாப்பிடுங்கோ” – மாலா சொல்லுவாள்.

ஆச்சி விசுக்கென எழுந்து கூரையில் செருகப்பட்டிருக்கும் பிலாக்கம்பியை எடுத்து முற்றத்துக்கு ஓடிப்போய் குத்தத் தொடங்குவாள். மாலா சோற்றுக் கோப்பையோடு அவள் பின்னே ஓடிவந்து ஆச்சி இந்த வாயை மட்டும் வாங்குங்கோ என்று இரந்து கேட்பாள். ஆச்சிக்கு எதுவும் கேட்காது.

மாலாவின் புருஷன் பத்துநாட்கள் கழித்து வீட்டிற்கு திரும்பியிருந்தான். அன்றைக்கிரவு தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் நுளம்பு வலைக்குள் நித்திரையாக்கிவிட்டு வீட்டின் முன்னே நின்ற பாலைமரத்தின் கீழே போய்க் கிடந்தாள். புருஷன் குளத்தில் குளித்துவிட்டு அப்போதுதான் வந்தான். பிள்ளைகள் எழும்பிவிடாதபடி அரவம் எழுப்பாது சாப்பாடு பரிமாறினாள்.

இரவின் கன்னம் உப்பியிருந்தது. வீசுங்காற்றில் ஈரச்செதில்களோடு தாபம் நீந்தின. மாலாவின் அதரங்கள் கனிந்து தொங்கின. புருஷன் வெளவால். அவனுக்கு கிளைகள் தோறும் அசையும் கனிகள். உடல்களின்  குறுணிச்சப்தம். மாலாவின் கண்கள் மடலுக்குள் போயின. ஓங்கியெழுந்த வேகம். இனிப்பு, துவர்ப்பு, புளிப்பெனும் உருசைகளின் அணிவகுப்பு. மாலா பாலைமரத்தின் நுனிக்கொம்பு உச்சியிலிருந்து சிறகடித்து எழுகையில் புருஷன் அசையாமல் கிடந்தான். வேர்வையின் வாசத்தை இரவின் போர்வையால் மூடிக்கொண்டாள். புருஷன் மூச்சு இயல்புக்கு வந்தது. கனிந்தவைகள் களைப்புற்று மின்னின. அவனுக்கு காணாது போலும். இருள்வெளியில் அவனுடல் தீயுருவாய் கனன்றது. ஆனால் மாலா எழுந்து குடத்துநீரால் உடல் கழுவினாள்.

“நாளைக்கு காலம வெள்ளென போகவேணும். ஆச்சியை பரியாரியார் பார்க்க வாறார்”

“ஏன் ஆச்சிக்கு என்ன நடந்தது? நல்லாய்த் தானே இருந்தவா”.

“ஓமோம் ஆனால் இப்ப கொஞ்சம் மாறாட்டம், நித்திரையில்லை, கோபமும் பிடிவாதமும் கூடிப்போயிற்று. பாவம். தலைமுழுக்க பேன் வேற”.

“பார்த்து உனக்கும் பேன் தொத்தப்போகுது”.

“மாலாவிற்கு ஆச்சி அன்றைக்கு ஏசியது ஞாபத்தில் வந்ததும், சிரித்துக்கொண்டு “ஏன் இப்ப எங்கையாவது பேனை கண்டனியளா” என்று கேட்டாள்.

அவளின் அந்தரங்க  முசுப்பாத்தி புருஷனுக்கு விளங்கவில்லை. எழும்பிப் போய் குடத்துநீரை எடுத்து உடல் கழுவினான். நீரில் இரவு தளும்பியது.

வேம்படிப் பரியாரியார் ஆச்சியைப்பார்த்து கதைத்துவிட்டு சில மருந்து  உருண்டைகளை தந்தார். அப்பாவும் நானும் மாலாவும் அவர் சொல்லுவதைக் கேட்டுக்கொண்டோம். மாறாட்டமும் மனப்பிறழ்வும் சரியாகிவிடுமென்று நாங்கள் நம்பினோம். ஆனால் எதுவும் மாறவில்லை.ஆச்சிக்கு பேன்கூடி தலையை ஒட்ட வெட்ட தீர்மானித்தோம். அப்பாவின் துணையோடு மாலா வெட்டினாள். அப்போது ஆச்சி தன்னுடைய உலர்ந்த கன்னங்களில் கண்ணீர் சொரிந்தபடி சொன்னாள்.

“மோளே சின்னக்கிளி  நான் இஞ்சனேக்க  செத்துப்போனால் என்ர சாம்பலை எடுத்து இஞ்ச காடாத்த வேண்டாம். என்ர சொந்த வளவில புதையுங்கோ”

“ஓமண ஓமண, அதுக்கு உன்ர சின்னக்கிளி ஆகிய நான் பொறுப்பு” என்றாள் மாலா.

“சின்னக்கிளி என்னை நீ ஏமாத்தக்கூடாது, இரட்டைக் கேணி அம்மன் மேல சத்தியம் பண்ணு”

“இரட்டைக்கேணி அம்மன் மேல சத்தியம், உங்கட சாம்பல எத்தினை காலம் சென்றாலும் பிலாவளவுக்கு தாழ்ப்பம், காணுமே”ஆச்சியை எழுப்பிக்கொண்டு கிணற்றடிக்கு போய் தோயவாத்தாள். நீர் முழுக்க பேன் நீச்சல்.

ருநாள் நடுச்சாமத்தில் மாலாவின் வீட்டிற்குள்ளிருந்து அலறல் சத்தம் கேட்டது. ஊரே போர்வையோடு அச்சத்துடன் ஓடிவந்து மாலாவின் வீட்டின் முன்னால் கூடிநின்றது. ஆச்சி கொட்டிலுக்கு முன்  பிலாக்கம்பியோடு நடமாடிக் கொண்டிருந்தாள் அப்பா மாலாவின் வீட்டிற்கு போய்வந்தார். என்ன ஆயிற்று என்று கேட்டதும் ஆச்சி சாவதைப் போல கனவு கண்டிருக்கிறாள். கனவிலேயே  பயந்துபோய் அழுத்திருக்கிறாள் என்றார். காலையில் மாலா வந்ததும் கனவு குறித்து கேட்கவேண்டுமென நினைத்துக் கொண்டேன். அப்பா தோட்டத்திற்கு போக ஆயத்தமானார். மாலா பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தாள். உங்கட கனவும் கத்தலும் தான் இண்டைக்கு தலைப்புச் செய்தி. மாலா சிரித்துக் கொண்டு என்னைப் பார்த்து “ஆச்சி செத்துப்போற மாதிரி கனவு.”

அதுக்கு ஏன் இப்பிடி கதறினியள்?

“ஆச்சியோட உடம்பு சவப்பெட்டிக்குள்ள இருக்கு. இரண்டு கால் பெருவிரலும் வேட்டித்துணியால கட்டிக்கிடக்கு. ஆனா ஆச்சியோட அடிவயிற்றில இருந்து ஒரு சின்னஞ்சிறு பிலாச்செடி புழுவைப் போல எழும்பி வருகுது”என்றாள்.

கேட்டுக்கொண்டிருந்த எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்துவிட்டது போலும். நடுங்கி நின்றேன். ஆச்சி தன்னுடைய கொட்டிலுக்கு முன்னால் நடந்துகொண்டிருப்பது தெரிந்தது. அவளின் கையில் பிலாக்கம்பி மின்னிக்கொண்டிருந்தது.

மாலா மதியச்சாப்பாட்டை ஆச்சிக்கு தீத்திவிடுவதற்காக கொட்டிலுக்குள் நுழைந்தாள். ஆச்சி கொஞ்சம் நாட்டம் காட்டினாள். மாலாவிற்கு அந்தக்கொட்டிலுக்குள் ஆயிரம் பிலாச்செடிகள் நிற்பதை போன்ற தோற்ற மயக்கம்.

ஆச்சி ஒருபிடி குழையலை விழுங்கிமுடித்துக் கேட்டாள்.

”மோளே மாலா உன்னுடைய கனவில் செத்துப்போன என்னை எரித்து முடித்து சாம்பலை காடாத்தாமல் வைத்திருக்கிறார்களா? அல்லது கடலில் எறிந்தார்களா?”

மாலா பயந்தடித்து வெளியே ஓடிவந்தாள். அந்தக்கொட்டிலை திரும்பிப்பார்த்தாள். எல்லாமே பிலா இலைகள்.

ஆச்சி கொஞ்சம் பெலத்தாக குரல்கொடுத்தாள். “அடி வேசை இஞ்ச வாடி, நான் என்ன பேயோ, பிசாசோ என்னைக் கண்டு ஓடுறாய்”

மாலா மீண்டும் அந்தக்கொட்டிலுக்கு போகவில்லை. அவளின் கால்களில் சூடு கோடாகி இறங்கியது. அப்படியொரு நாற்றம் மூத்திரமாய கழன்றது. அவள் தன்னுடைய வீட்டிற்கு போய் அணிந்திருந்த ஆடைகளை அவிழ்த்தாள். அவளின் வெள்ளைநிற உள்ளாடையில் ஒரு பசிய பிலா இலை துளிர்த்திருந்தது. அவள் அதனைக்கண்டதும் வேகம்கொண்டு வீறிட்டு அழுதாள். சத்தம் எழவில்லை. காதடைத்தது. கண்கள் இருட்டியது. மயக்கமுற்று விழுந்தாள். நல்லவேளை பிள்ளைகள் அழுதுசத்தமிட சனங்கள் சூழ்ந்தனர். மாலாவிற்குள் சிசுச்சூல் உருவாகியிற்று என்று நாடிபிடித்து உறுதிசெய்தனர். மாலா வேலைக்கு வருவதை நிறுத்திக்கொண்டாள். அப்பா அவளுடைய  வீட்டிற்கு சென்று இரண்டுமாத சம்பளத்தொகையை வழங்கி “என்ன உதவி வேணுமெண்டாலும் என்னெட்ட கேள் பிள்ளை” என்று சொல்லிவிட்டு வந்தார்.

ச்சியைப் பார்த்துக் கொள்வதற்காக இன்னொரு வேலையாளை வேறொரு இடத்திலிருந்து அப்பா கூட்டிவந்தார். வந்தவளுக்கும் ஆச்சிக்கும் ஒத்துப் போகவில்லை. ஆச்சி அவளை குப்பை வேசை என்று திட்டிக்கொண்டே இருந்தாள். இரவுகளில் ஆச்சி பிலாக்கம்பியோடு நடமாடுவதை விசித்திர புதினமாக விழித்திருந்து பார்த்தாள் புதிய வேலைக்காரி. ஆச்சி தன்னுடைய கையொன்றால் மண்ணையள்ளி அப்படியே வாயில் போட்டு இது என்ர முத்தமில்லை என்ர முத்தமில்லை என்று பினாத்தியதை பார்த்த வேலைக்காரிக்கு எல்லாமே வினோத நாடகம்போல தோன்றிற்று.

பஞ்சமித் திதி நாளொன்றின் அதிகாலையில் விக்கெலெடுத்து ஆச்சி துடியாய்த் துடித்தாள். வேலைக்காரி ஒரு சில்வரில் பால்மா கரைத்துவந்தாள். அப்பா ஆச்சியின் வாயில் கரண்டியால் பாலூட்டினார். பால் உள்ளிறங்கி வெளித்தள்ளியது. அப்பா மீண்டும் மீண்டும் ஊற்றினார். ஒரு சின்ன விக்கலோடு கண்கள் மேலே போய் கூரையில் செருகிக்கிடந்த பிலாக்கம்பியில் குத்திட்டு நின்றது.

ஓவியம் : வல்லபாய்

பிலா இலை ஆச்சி செத்துப்போனாள் என்ற செய்தி அதிகாலையில் ஊரிலுள்ள எல்லோருக்கும் தெரிந்தது. பறையொலித்தது. அதே வாங்கில் கிடத்தப்பட்டிருந்த ஆச்சியின் உடலத்தை தூக்கி சவப்பெட்டியில் வைத்தோம். அதிகவிலையும் அலங்காரமும் கொண்ட அந்தச்சவப்பெட்டி பிலாமரத்தினால் செய்யப்பட்டிருந்தால் ஆச்சிக்கு சந்தோசமாயிருக்கும். நிறையப்பேர் வெவ்வேறு ஊர்களில் இருந்து வரமுடியாத சூழல். மாலா, ஆச்சியின் காலடியில் அமர்ந்திருந்தாள். அவளின் அடிவயிறு மேடாக உயர்ந்திருந்தது..

ஆச்சியை குளிப்பாட்ட போகையில் மாலா எழுந்து போனாள். வாளியில் நீர்நிரப்பி வந்து நானே குளிப்பாட்டுகிறேன் என்று சொன்னபோது “ வாயும் வயிறுமாக இருக்கிற நீ உதுகள செய்யக்கூடாது ” என்றனர். அப்பாவே வேண்டாமென மறுத்தும் மாலா அடம்பிடித்து அழுதுதீர்த்து குளிப்பாட்டினாள்.

ஆச்சியின் தலையில் பேன் கூட்டம் ஊர்ந்தபடியிருந்தது. புதிய சீலையை உடுத்து ஆண்களைக் கூப்பிட்டு ஆச்சியைத் தூக்கிப்போகுமாறு சொன்னாள்.  கிரிகைகள் முடிந்தது. பஞ்சமியில் செத்த ஆச்சியின் கால்மாட்டில் ஒரு விறாத்தல் பருவக் கோழியையும் மூன்று முட்டைகளையும்  வைத்து பெட்டியை மூடினார். வீட்டின் படலையை பெட்டியின் முன்முனையால் இடித்துக்கொண்டு ஆச்சி ஊர்வலமாய் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டாள். அப்பா கொல்லிக் குடத்தை  தூக்கியபடி நடந்துபோனார். மாலாவும் சில பெண்களும் வீட்டைக்கூட்டி நீர் தெளித்து சுத்தப்படுத்தினர்.

ஆச்சி மிளாசி எரிந்தாள்.

பஞ்சமித் திதியில்  செத்துப்போனதால்  உடனடியாக காடாத்த வேண்டுமென  சிலர் அப்பாவிடம் சொல்லினர். அப்பா ஓமென்று தலையசைத்தார்.

அப்படி காடாத்தினால் ஆச்சி ஆத்மா சாந்தியடையாதப்பா என்றேன். ஆச்சியோட ஆசையை நாங்கள் நிறைவேற்ற வேணுமென்று சொன்னேன். அப்பா எனக்கு ஓமென்று தலையசைக்கவில்லை.

ஆச்சி மிளாசி எரிந்தாள். தீயின் அடவுகள் அந்தரத்தில் எழுந்து வான் நோக்கி பாய்ந்தன. ஆச்சி மிளாசி எரிந்தாள்.

ஆச்சியின் சாம்பலை சுடச்சுட ஒரு மண்பானையில் அள்ளிவந்து மிகப் பாதுகாப்பான இடத்தில் யாருக்கும் தெரியாமல் வைத்தேன். காடாத்திவிட்டு அப்பா கடலிலேயே குளித்துவிட்டு வந்திருந்தார். கடலின் இரைச்சல் என் காதுகளுக்கு கேட்டபடி இருந்தது. ஆச்சிதான் சீற்ற அலையாய்  எழுகிறாள். அந்த இரைச்சலில் அவள் அப்பாவை தூசணங்களால் ஏசுவது போலிருந்தது.

மாலாவிற்கு பிறந்த பெண்குழந்தையில் பிலாப்பழ பால்  வாசம் வந்ததாம்.  தாதியொருத்தி பிள்ளையின் கால்களை முத்தமிட்டு சின்னப்பிலா இலை போன்றது  என்றாளாம். அவளுக்கு இப்போது ஐந்து வயசு எங்கள் வீட்டிற்கு வந்தால் கதைத்துக்கொண்டே இருப்பாள். அப்பாவுக்கு செல்லம். ஒருமுறை என்னோடு கதைத்துக் கொண்டிருந்தாள்.

“உங்கட ஆச்சியை ஏன்  எல்லாரும்  பிலா இலை  ஆச்சி என்று சொல்லினம்” கேட்டாள்.

“எங்கட ஆச்சிக்கு பிலா மரமென்றால் பிடிக்கும்,அவாவுக்கு ஆசை அதுதான்” என்றேன்.

மாலாவின் மகள் மந்தகாசத்தோடு என்னைத் தழுவி முத்தமிட்டாள். அப்போதென் தண்டுவடத்தில் ஓடிச் சிலிர்த்தது  பெயரற்ற ஓருணர்வு. பின்னர் அவள் என்  காதினில் ரகசியக்குரலில் “ என்ர இராசா அந்தச் சாம்பலைக் கொண்டு என்ர பிலாவளவுக்குள்ள ஒரு கிடங்கு வெட்டி தாக்கவேணும். அப்பதான் என்ர ஆத்மாவுக்கு களைப்பு அடங்கும். நீ பக்குவமாய் அதே இடத்திலேயே வைச்சிரு மோனே ” – என்று சொன்னாள்.

விசுக்கென யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்த ஆச்சியின் சாம்பல் பானை இருக்கும் திக்கு நோக்கி ஓடினேன். சாம்பல் பானையில் முளைத்து நின்று அசைகிறது சின்னஞ்சிறு பிலாக்கன்று.

அக்கணம் காற்றில் குளிர் வீசியது. அது ஆச்சியின் உள்ளங்கைக் குளிர்மையோடு இருந்தது.

***

( அகர முதல்வன், ஈழ எழுத்தாளர். இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு குறுநாவல் தொகுப்பு வெளிவந்துள்ளன. யாவரும் இணையத்தின் அந்தகம் இதழின் ஆசிரியரின் தொடர்புக்கு akaramuthalvan01@gmail.com )

பிரார்த்தனை

2

நசீமா

ந்த காம்பவுண்டுக்குள் இருந்த முதிர்ந்த ஆலமரத்தின் பக்கவாட்டில், நடந்து முடிந்த ஒரு பெருங்கலவரத்தில் சிந்திய இரத்தம்போல செந்நிறத்தில் உறைந்து நின்று கொண்டிருந்தது அந்தக் காவல் நிலையம். மக்கள் அழும் சத்தமும், கதறல்களும் எங்கு திரும்பினாலும் கேட்டுக் கொண்டிருந்தது. வெளியே வந்த கான்ஸ்டபிள், அந்த மரத்திற்கு கீழே உட்கார்ந்துக் கொண்டு இருக்கும் ஒரு நபரை நோக்கி வந்தார்.

“ஏம்பா! உன் பெயர் என்ன சொன்ன??”

“பஷீர் சார்…”

“சரி, உன் பையன் நீலநிற சட்டை தானே போட்டு இருந்தான்.”

“ஆமா! சார்..”

“கொஞ்ச நேரம் ஆகும், நானே வந்து உன்னை கூப்பிடுறேன்” என்று சொல்லி அந்த காவல் நிலையத்திற்குள் கரைந்து போனார்.

பஷீர் கண்கள் இருண்டுக் கொண்டு இருந்தது. அந்த மரம் தாங்கிக் கொள்ள, அப்படியே சாய்ந்து உட்கார்ந்தார். அவர் நினைவலைகள் சென்ற வாரத்திற்கு இழுத்துக்கொண்டு சென்றது. என்றைக்கும் போலவே அன்றும் விடிந்தது. சூரியனுக்கு முன்கூட்டியே தெரிந்து இருந்தால்…

பஷீர் வசிக்கும் மொஹல்லாவுக்கு பக்கத்தில், ஒரு பஜார் இருக்கிறது. காலையில் காய்கறி வாங்க மக்கள் கூட்டம் எப்போதும் போலவே இருந்தது. பள்ளிச் செல்லும் வண்டி, மஞ்ச நிறத்தில் வந்து நிற்க, மகன் சாபுவை பேருந்தில் ஏற்றிவிட்டு வந்த பஷீரின் மனைவி சல்மா, சூடாக ஒரு காபி போட்டுக் கொண்டு வந்து பஷீரிடம் கொடுத்தார். காபியை கையில் வாங்கிக் கொண்டபடி தொலைக்காட்சியை இயக்கினார்.

தொலைக்காட்சியில் முக்கிய செய்தியாக அவர்கள் ஊரில் தீவிரவாதிகளின் தாக்குதல் என்று காட்டிக் கொண்டிருந்தார்கள்.

“என்னங்க இது, பாவம் எவ்வளவு அப்பாவிங்க மௌத்தானாங்களோ? அல்லா தான் லேசாக்கி வைக்கணும்” என்று முடிப்பதற்குள், இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று கொட்டை எழுத்தில் இருந்ததைப் பார்த்து சல்மாவுக்கும் கோபமும் கண்ணீரும் ஒன்றாய் வந்தது. மேலும் இசுலாமியர்கள் வாழும் பகுதியில் அவர்கள் இன்னும் தங்கியிருக்கலாம் என்று ஒளிபரப்பினார்கள்

“இந்த டிவிக்காரங்களுக்கு புத்தி இருக்கா?, இல்லையா?” என்று கோபமானவளைப் பார்த்து, “கொஞ்சம் இரு என்னன்னு கேட்கலாம்” என்று கூறினார்.

ஆனால் அவள் மனமோ ஏதோ ஒன்றை முன்கூட்டியே உணர்ந்ததாய் புலம்ப வைத்தது.

“தீவிரவாதி பெயரை, இப்பெல்லாம் இஸ்லாமிய தீவிரவாதி என்று சொல்கிறார்கள். அவன் வீட்டுக்கு வந்தா எந்த இஸ்லாமியனும் கட்டிப்புடிச்சி பிரியாணி போட மாட்டாங்க,. செருப்பாலே அடிச்சி, ஒரு வழி பண்ணிருவாங்க ஏன் இவனுங்களுக்கு இதெல்லாம் புரிய மாட்டேங்குது.”

“இப்ப நீ சொல்லி இவனுங்களுக்கு கேட்கவா போகுது. பைத்தியக்காரி! அல்லா இருக்கான் நீ போய் என் சட்டையையும் சாவியும் கொண்டு வா.. சவாரிக்கு போகணும் நேரம் ஆகிவிட்டது.”

“அது சரி ஆனா, இவனுங்க எப்ப பார்த்தாலும் இஸ்லாமிய தீவிரவாதம்ன்னு சொல்றத பார்த்தா, ஏதோ நம்மள பத்தியும் இப்படி நினைச்சிடுவாங்களோன்னு பயமாக இருக்கு”

“பக்கத்து வீட்டு கோபால் எப்பவாவது அப்படி பார்த்து இருக்காரா?” என்று பஷீர் கேட்க

“இல்லை..”

“இது போதும், விடு கழுதையை எவனோ சொன்னான்னு எங்கையோ நடந்ததை வச்சி, உன் நாளை வீணாக்கிக்காத..!”

ம்ம்ம்.. என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே, பஷீரின் காக்கிச்சட்டையையும், ஆட்டோ சாவியையும் எடுத்துக் கொடுத்து “அஸ்லாம் அலைக்கும்” என்று சொல்லி வழியனுப்பி வைத்தாள். ஆனாலும் பதட்டம் குறையாதவளாகவே தென்பட்டாள்.
சல்மாவும் வீட்டு வேலையில் பரபரப்பாகிப் போக, அங்கே இருந்து வெளியே வந்த பஷீர், தெருவின் இருபுறமும் குடைகளுக்கு கீழ் விரிந்து கிடந்த பஜாரைப் பார்த்தார். எப்போதும் இருப்பதைவிட கூடுதலான பதட்டம் அப்பிக்கொண்டு இருந்தது. அவருக்கும் ஏதோ மனதில் பட்டாலும் அவ்வாறெல்லாம் இருக்காது என்று தொடர்ந்தார்.

அறுபது வயதான பேகம் பீ, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை போன்ற பச்சைநிறக் கீரைகளை விற்றுக்கொண்டு இருந்தாள். பஷீரைப் பார்த்தவுடன், “பசீர், டிவில என்னன்னவோ சொல்றாங்களாமே, ஒன்னும் புரியல, நீயாவது சொல்லிட்டு போ” என்றாள் .

“டிவிக்காரங்க அப்படிதான் பயங்காட்டுவானுங்க, பயப்படற மாதிரி ஒன்னுமில்ல, நீ வியாபாரத்த பாரு” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, பக்கத்து தெரு லட்சுமி அக்கா, “பீ, பசலக்கீர ரெண்டு கட்டு கொடுங்க” என்றார் .

“புதினா இன்னைக்கு தான் வந்துச்சி, ரெண்டு கட்டு போடட்டுமா?” என்று கேட்டுக்கொண்டே ஒரு கட்டு கறிவேப்பிலையும், கொத்தமல்லியையும் பைக்குள் வைத்தாள்.

“சரி பீ, நான் கிளம்பறேன்” என்று ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி சென்றவருக்கு ஒரு அலைபேசி வந்தது..

“அஸ்லாம் அலைக்கும், பஷீர் பாயா?”

“ஆமா.. அலைக்கும் சலாம்! சொல்லுங்க”.

“பாய், பஜாருக்கு முனையில இருக்கற பிஸ்மில்லா கறிகடைக்கு சீக்கிரம் வாங்க” என்று சொல்லியவாறு படப்படப்புடன் அந்த கால் துண்டிக்கப்பட்டது.

“சவாரிக்கு ரொம்ப அவசரம் போல, ஆட்டோ ஸ்டாண்டுக்கு பக்கத்துல இருந்தது நல்லதா போச்சி” என்று எண்ணிக்கொண்டு ஆக்ஸிலேட்டரை வேகமாகத் திருக வண்டி பறந்தது.

கடைக்கு வெளியில் ஒரே கூட்டம், என்னவாக இருக்கும் என்று நினைத்து முடிப்பதற்குள் “கறிக்கடை அஸ்லாம் பாயை யாரோ மாட்டுக்கறி விற்பனை செய்றாருனு சொல்லி இரும்பு கம்பியால் அடிச்சிருக்கானுங்க” என்று அங்கு கூடியிருந்த மக்கள் கிசுகிசுத்துக் கொண்டார்கள்.

பஷீர் வண்டியில், அஸ்லாம் பாயை ஏற்றிக்கொண்டு சிலர் மருத்துவமனையை அடைந்தார்கள். .

ஆட்டோவுக்கு பின்சீட்டில் எல்லாம் இரத்தக்கறை. பஷீருக்கு பதற்றம் அதிகரித்தது. சீக்கிரமாக வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

“சல்மா…. சல்மா” என்று அவரின் சத்தம் பயத்தின் அலறலாக இருந்தது.

“என்னங்க இவ்வளவு பதட்டத்தோட இருக்கீங்க?? என்னங்க சட்டையில ரெத்த கற??”

“ஒன்னுமில்ல, அங்க ஒருத்தருக்கு அடிபட்டுடிச்சி, நம்ம வண்டில தான் ஹாஸ்பட்டலுக்கு கூட்டிக்கிட்டு போயிருந்தேன்” என்று சமாளித்தார்

“அல்லாவே! யாரு புருஷனோ! பிள்ளையோ பிழைக்கணும்” என்று வேண்டிக் கொண்டாள். சல்மாவுக்கு இப்படித் தான் ஒன்று புலம்பனும் இல்லை வேண்டிக் கொள்ளனும் என தனக்குத் தானே சொல்லிக்கொண்டார் பஷீர்

“காய் பஜார்ல யாரும் காணோம்” என்று குழப்பத்துடன் கேட்டவனுக்கு..

அது சரி மணி பதினொன்னு ஆயிடுச்சி, பத்தரை மணிக்கே எப்பயும் போல கட சாத்திட்டாங்க” என்றாள்.

“சாபு ஸ்கூலில் இருந்து எப்போ வருவான்”.

“இன்னும் அரை மணிநேரத்தில் வண்டி வரும்” என்று பதில் அளித்தாள்.

மகன் வரும் வரை இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தார் பஷீர். பாம்… பாம்.. என்று வண்டி சத்தத்தை கேட்டவுடன் ஓடிப்போய் சாபுவை அழைத்துக் கொண்டு, வீடு வந்த பின்பே மனசு லேசானது.

“அப்பா சவாரிக்கு போகலையா? எப்பவும் நைட்டுக்கு தானே வீட்டுக்கு வருவீங்க” என்ற சாபுவின் கேள்விகளுக்கு, “இன்னைக்கு உன் ஞாபகமா இருந்துச்சி அதான் சீக்கிரம் வந்துட்டேன்” என்று சாபுவை அணைத்து உச்சி முகர்ந்தார்.

டிவியை ஆன் செய்ய வேண்டாம் என்ற முடிவோடு இருந்தாலும் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளாமல் மனது இறுக்கமாக இருந்தது.

அன்றைக்கு சாபுவுக்கு பிடித்த சிக்கன் 65, சிக்கன் சாலன் ஆகியவற்றை தயாரித்திருந்தார் சல்மா. அந்த வாசனையை இழுத்துக்கொண்டு “மம்மி எனக்கு பிடித்ததை செஞ்சிருக்காங்க” என்ற குஷியோட அப்பாவையும் கூட்டிக்கொண்டு சீக்கிரம் சாப்பிட உட்கார்ந்தான்.

நிலநடுக்கத்தால் அதிரும் பூமி போல, கதவை யரோ வேகமாக தட்டும் சத்தம் வர, சல்மா கதவை திறக்க எழுந்திருக்கும் முன் பஷீர் “இரு.. இரு” என்று கையால் காட்டி விட்டு கதவை திறந்தான். “கோபால் நீங்களா? வாங்க! வாங்க!.. என்றான்.

கோபால் மிகவும் படபடப்புடன் பஷீரை வாசலுக்கு இழுத்து “பஷீர் சிக்கிரம் இங்கிருந்து போயிருங்க” என்றார்.

“என்னாச்சி கோபால்! ஏன்? இப்படி சொல்ரீங்க?”

“பஜாருக்குள் ஒரே கலவரமாக இருக்கு. யாரும் நம்ம ஊரு ஆளுங்க போல தெரியல. என்னை இழுத்து பேண்டை கழட்டி பார்த்துட்டானுங்க.. பரதேசி பயலுக.. சீக்கிரம் பாபியையும், சாபுவையும் கூட்டிக்கிட்டு இங்கிருந்து போங்க” என்றான்.

“எங்க போவேன் கோபால், எனக்கு ஒன்னும் புரியல. இது தான் என் ஊரு. அப்போ நீங்க என்னைய காப்பாத்த மாட்டிங்களா”

“அதற்காக தான் நான் சொல்றேன் இங்க இருந்து போயிருங்க பாய்”என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, பெட்ரோல் நிறைந்த தீ வைத்த பாட்டில் ஒன்று இருவருக்கும் இடையில் வந்து விழுந்தது.

பஷீர் சாபுவையும், சல்மாவையும் இழுத்துக்கொண்டு ஓடினார். அந்த மொஹல்லா மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடிக்கொண்டிருந்தார்கள். நெரிசலும் புகையும் ஒன்றும் தெரியவில்லை. திடீரென்று சாபுவின் கை, மெல்ல மெல்ல நழுவியது, திரும்பி பார்த்தால் சாபுவின் “பப்பா… பப்பா..” என்று சத்தம் தூரமாகிப் போனது. மக்கள் அலை பஷீரையும் சல்மாவையும் எங்கோ இழுத்துக் கொண்டு சென்றிருந்தது. பஷீர் மயங்கிக் கொண்டிருந்தார்.

கண் விழித்துப் பார்த்தால் மொஹல்லாவே அங்கங்கே நெருப்பில், எரிந்து கொண்டிருந்தது. “அல்லாஹ்வே.. என் சாபு” என்று கதறி இருவரும் தேடிக்கொண்டு இருக்கும் போது , ரத்தத்தில் தோய்ந்து போய் கிடந்தாள் பேகம் பீ, அவள் கண்களை மூடிவிட்டு திரும்பும் திசையெல்லாம், இதுபோல பல சடலங்கள், சிதறிக் கிடந்ததைக் கடக்க முடியாமல் தேடினான். சாபுவை எங்கு தேடியும் பயனில்லை. ஒரு வாரமாக பல இடங்கள், முகாம்கள் என்று தேடியும் விடையில்லாமல் ஒரே இடத்தில் கரைந்துபோய் நின்று கொண்டிருந்தார்.

நேற்று போலீஸ் ஸ்டேசனில் இருந்து போன் வந்தது. இங்கே ஒரு நீலநிற சட்டை போட்டப் பையனின் சடலம் கிடைத்துள்ளது என்று.. அதை உறுதி செய்ய காத்துக் கொண்டிருந்த கணங்களில் மீண்டும் ஒருமுறை எல்லாமும் நடந்தது போல் இருந்தது

“பஷீர்..பஷீர்” என்று அழைத்த கான்ஸ்டபிளின் குரல் அவரை மீண்டும் அந்த இறுக்கமான இடத்திற்கு கொண்டு வந்தது…

வாங்க, நீங்க சொன்ன வயசுல, புளு கலர் சட்ட போட்ட பையன் சடலம் என்று அவர் சொல்லும்போதே, அவன் நுரையீரலும், இதயமும் பதட்டத்தில் இடத்தை மாற்றிக்கொண்டது போல், அவன் உடம்பும் மனதும் இயல்புக்கு மாறாக நடந்து கொண்டது.. அவன் கால்களின் ரத்த ஓட்டம் உறைந்துப் போனது…
எப்படியோ அவரை, உடல் இழுத்துக்கொண்டு சடலத்தை நோக்கிச் சென்றது, மூடி இருந்த உடலுக்கு வெளியே சட்டையின் நிறமும் மங்கலாகவே தெரிந்தது.

அவனுடன் வந்த கான்ஸ்டபிள் மூடியிருந்த துணியை எடுக்க.. அதைப் பார்த்ததும், “அல்லாஹ்வே” என்ற கதறினார்.. பின்னர் மெதுவாக முகம் சிதைந்திருந்த அப்பிணத்தின் கைகளைத் தொட்டுப் பார்த்தவர். இறுதியாக தன்னை பற்றியிருந்த சாபுவின் கைகள் ஞாபகம் வந்தது

“என் புள்ள இல்ல சார்.., ஐயோ இது என் புள்ள இல்ல சார்.. அல்லாஹ்வே சாபுவை பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.

“பாய் சரியா பார்த்து சொல்லு, இல்லன்னா நாங்க பாடிய அநாத பொணம்னு எரிச்சுடுவோம்”

“அல்லாஹ்!! என் புள்ள கைய வச்சே சொல்லிடுவேனே சார். அந்த கைய தான் பிடிக்காம விட்டுட்டேன் ” அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை தரையில் விழுந்து அழ ஆரம்பித்தார்.

உடன் சென்றவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

“என் புள்ள இல்லல்ல..” என்று சல்மா அவனைப் பார்த்தவுடன், அவன் சட்டையை பிடித்து அழ ஆரம்பிக்க..

“இல்ல மா, நம்ம புள்ள இல்ல” என்று பெருமூச்சுவிட்டது அவன் நுரையீரல்கள்.

“என் புள்ள எங்கயோ இருக்கான், கண்டிப்பா ஒருநாள் நம்மள தேடி வருவாங்க” என்று விம்மினாள் ..

அவளின் ஆசைக்கு ஆறுதல் சொல்வதுப் போல், சுவற்றில் இருந்த அந்தச் சின்ன பல்லி “உச் உச்” என்ற சத்தமிட்டுக் கொண்டிருந்தது.

இன்ஷா அல்லா என்று சொல்லிவிட்டு, தொழுதுட்டு வரேன் என்று வுளூஉ செய்யப் போனவருக்கு பின்னாடியே சாபுவின் அம்மாவும் தயாரானாள்.

நமாஸ் செய்ய விரிப்புகளை எடுத்து தனித்தனியாக இருவரும் தொழுது கொண்டிருந்தார்கள்.

பஷீர் துஆ கேட்கும் போது கண்களிலிருந்து சொட்டுச் சொட்டாக கண்ணீர் சட்டையை நனைத்துக் கொண்டிருந்தது. “யா அல்லாஹ், சாபு இல்லை என்று என் மனதுக்கு ஆறுதல் தந்தாய் அல்ஹம்துலில்லாஹ் ஆனால் சாபுவின் வயதுடைய அந்தப் பிள்ளையை அனாதை பிணமாக விட்டு வந்துட்டேனே என்று என் மனம் பதைக்கிறதே என்னை மன்னித்துவிடு”

“இறைவா, தன் மகன் இல்லை என்று விட்டு வந்த பிள்ளைக்கு, சொர்கத்தில் மேலான இடத்தைக் கொடு, அவனைப் பெற்ற அந்த தாய்க்கு, இதைக் கடந்து செல்ல தைரியத்தைக் கொடு” சல்மாவும் அழுது கொண்டிருந்தாள்.

ஒரு தாயின் பிரார்த்தனையை நிறைவேற்றுவேன் என்று இறைவன் கூறியுள்ளான் என்பதை அவர்கள் இருவர்களும் உணர்ந்தபோது இன்னொருமுறை உறுதி செய்ய முடியுமா என்று அழைப்பு வந்திருந்தது பஷீருக்கு.

***

நசீமா – துபாயில் வசிக்கும் இவர் ஒரு மெந்திறன் பயிற்சியாளர். சமீபத்தில் என்னைத் தேடி என்கிற குறுநாவல் வெளியானது. மனநலம் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். ஆசிரியர் தொடர்புக்கு – nase81@gmail.com

ஸ்பரிசம்

3

மா.க.பாரதி

1

பாலத்தில் ஆற்றைப் பார்த்துக்கொண்டே நடந்து சென்ற சீனுவுக்குப் பேரெழில் மிக்கதொரு ஒலி தன்னுள் மட்டுமே ஒலித்துக் கொண்டிருப்பதாகப்பட்டது.  அவ்விடம் யாருமற்றிருப்பதை உறுதி செய்த பின்னர் வழக்கமாக அவன் அமரும் இடத்தருகே வந்து சப்பணமிட்டமர்ந்து பாலத்தின் இடை ஓட்டைவழி ஆற்றை வெறித்த வண்ணமிருந்தான்.  அவன் உறுதி செய்யத் தேவையில்லைதான்.  இரவு ஒன்றரை மணிக்கு இப்பாலத்தருகே யார்தான் இருப்பார்கள்?  அவன் உதடுகள் ஏதோ ஒரு பெயரை மந்திர உச்சாடனம் செய்வதுபோல் உச்சரித்துக் கொண்டேயிருந்தன. மேலே முக்கால் நிலவு ஒளிர்ந்து கொண்டிருந்தது.  அதைப் பார்க்கும் கணந்தோறும் அந்தக் குரல் அவன் செவியை அறைந்த வண்ணமிருந்தது. நிலவைப் பார்த்துவிட்டு ஆற்றை ஆசையுடன் பார்த்தான்.  நீரின் இன்மை நிலவை எதிரொலிக்கவில்லை.  

தூரத்தில் ஒரு லாரி பாலைவனச் சுழல்போல் அமைதியைக் குலைத்தவண்ணம் முன்னேறி வந்தது.  காவிரிக்கும் பாலைவனத்துக்கும் இனியென்ன புதிதாய் வித்தியாசம் தோன்றிவிடப் போகிறது?  KRY என்ற பதம் கொட்டைவடிவில் முன் தெரிந்தது.  அப்பாவின் வண்டி.  சிறு வயதில் இதே காவிரியில் கதை சொல்லிக் கொண்டே குளிப்பாட்டிவிடும் அப்பாவின் கைகள் கண்முன் வந்து போனது.  லாரி ஸ்டியரிங் பிடித்த அந்த முரட்டுக் கைகளின் வாஞ்சையான ஸ்பரிசத்தைத் தன் முதுகில் உணர்ந்தான்.

சீனுவுக்குப் பதின்மூன்று அல்லது பதினான்கு வயது இருக்கும்.  காவிரியில் அப்பாவும் சீனுவும் குளித்துக் கொண்டிருந்தார்கள்.  இவர்கள் பேசுவதைப் பார்த்தவண்ணமே ராகினி நீந்திக் கொண்டிருந்தாள்.  வங்காளம் வரை தான் சென்று வந்த பயணம் பற்றிப் பேசிக்கொண்டே காளிங்கன் சீனுவின் முதுகைத் தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தார்.  

‘பா.  எனக்கும் உன்கூட வரணும் போலிருக்கு’ என்றான் சீனு.

’அதுக்கென்ன கண்ணு’ என்று காளிங்கனும் சிரித்துக்கொண்டே தொடர்ந்தார். இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும்.  கடைசி ஒரு வாரமாக அம்மாவுடன் தினமும் சண்டை.  அதிர்ந்து பேசாத அப்பா சண்டை போடுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.  சண்டை நீடிக்கும் ஒவ்வொரு கணமும் அம்மா வாலி போல் தனது எதிராளியின் பலத்தை எடுத்துக்கொண்டு இன்னும் சத்தமாகக் கத்தத் தொடங்கிவிடுவாள்.  இவை எல்லாவற்றையும் கடந்து காளிங்கன் திக்கித் திணறிச் சண்டை போடுவார்.  அக்கா ஒரு ஓரமாக நின்று அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள்.

அன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்புகையில் லாரி அதிசயமாக வீட்டருகே நின்றுகொண்டிருந்தது.  ஒரு டிரங்குப் பெட்டியும் முன்னிருந்தது.

‘ஒரு மாசம் கழியட்டுமப்பு.  படிச்சுக்குவியல்லோ?  கூட வாறியா?’ என்று லாரியில் பொருட்களை நிரப்பிக் கொண்டே கேட்டார்.  புத்தகப்பையை விசிறி எறிந்துவிட்டு அப்பாவைக் கட்டிக் கொண்டான்.  காப்புக் காய்த்த அந்த முரட்டுக் கைகள் அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தபோது உணர்ந்த பாதுகாப்புணர்வைப் பிற்காலத்தில் நினைத்துப் பார்ப்பதற்கெனத் தன் நினைவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டான்.  பஞ்சாப் வரை பயணம்.  ஊரின் பெயர்கள் எவையும் அவன் மனத்தில் தங்கவில்லை.  அந்த ஊர்கள் பற்றி அப்பா கதைகதையாக சொன்னவை மட்டும் மனத்தில் தங்கியது.  அப்பா வண்டியோட்டிக் கொண்டே இருக்க சீனி தங்கவேலு அண்ணனிடமும் அப்பாவிடமும் மாறி மாறிக் கதையடித்துக்கொண்டே வந்தான்.  வழியில் இல்லையென்றாலும் மைசூரில் நிறுத்தினார்.  முப்பத்தைந்திலிருந்து நாற்பதுக்குள் இருக்கும் அந்தப் பெண்ணின் வயது. அப்பாவையும் தங்கவேலு அண்ணனையும் மாறிமாறிக் கட்டிக் கொண்டாள்.  சீனுவை அறிமுகம் செய்தவுடன் அவனையும் கட்டிப்பிடித்து முத்தம் தந்தாள்.  அவள் பேசியது எதுவும் சீனுவுக்குப் புரியவில்லை.  கோகுல் சாண்டல் பவுடரின் மணம் ஊருக்கே வீச, அவள் தன் கன்னத்தைக் கிள்ளிக் கிள்ளிக் கன்னடத்தில் பேசியதை சீனு வெகுவாக இரசித்தான்.  ஒரு நாள் பயணம் கழிந்திருக்கும்.  தங்கவேலு அண்ணனும் அந்த மைசூர்க்கார அக்காவும் எங்கோ போயினர்.  அப்பா இதுதான் சமயம் என்று கடைக்குச் சென்று லைட்ஸ் வாங்கி வந்தார்.  சீனு ஆச்சரியமாகப் பார்த்தான்.  

‘என்ன கண்ணு பாக்குற.  நமக்கு என்னிக்குமே லைட்ஸ்தான்.  கூட எவனாச்சும் இருந்தா கம்மனாட்டிங்க பங்கு கேப்பானுங்க.  அவனுங்களுக்காகத்தான் பீடி புடிக்குறது’ என்று சிகரெட் இழுத்துக் கொண்டே சிரித்தார்.  மீண்டும் தங்கவேலு வந்ததும் பயணம் தொடர்ந்தது.

‘அந்த அக்காவக் காணோம்?’ என்று சீனு கேட்டபோது

‘இனி அத மறந்துடு’ என்று தங்கவேலு அவன் கன்னத்தைக் கிள்ளியபடியே சொன்னார்.  அவரிடமிருந்துதான் இப்போது கோகுல் சாண்டல் மணம் வந்தது.  

இதுவரை பார்த்திராத பகுதிகள், கேட்டிராத மொழி, சந்தித்திராத மனிதர்கள் என அவன் செல்லும் வழியெங்கும் புதுமையான அனுபவங்களால் நிரம்பி வழிந்தன. இரவு தங்குவதற்குப் பெரிதாக மெனக்கெடவில்லை.  சில சமயங்களில் ஏதேனும் சத்திரம்.  சில சமயங்களில் நண்பர்களின் வீட்டுத் திண்ணை.  அப்போதுதான் சந்தித்து நண்பர்களாகியிருக்கும் யாரேனும் ஒருவரது வீடு.  இவ்வளவு பயணம் போனபோதும் காளிங்கன் கடலுக்குப் போக அதிகம் விருப்பம் காட்டியதேயில்லை.  ‘என்ன பெரிய மயிரு கடலு.  தண்ணியா அது.  தூ’ என்று சலித்துக்கொள்வார்.  இப்படிப்போன பயணம் ஒரு மாதத்தில் நிறைவுற்றது.  கரூருக்குத் திரும்புகையில் ‘வீட்டுக்குப் போறோம்’ என்ற உற்சாகம் இருந்தாலும், மீண்டும் இதேபோன்ற ஒரு லாரி பயணம் வாய்க்குமா என்ற ஏக்கம் நிறைந்த கேள்வியுடனேயே அவனது பொழுது கழிந்தது.  வீட்டுக்கு வந்தபின் அம்மா நெற்றியில் முத்தமிட்டாள்.  அவளது உதடுகள் குளிர்ச்சியாக இருந்தன.  

அதே வருடத்தில் இது போன்று மூன்று பயணங்கள்.  மீண்டும் எட்டாம் வகுப்பில் உட்கார வைத்தார்கள்.  ‘லாரி டிரைவர் காளிங்கன் மகன்’ என்று பள்ளியில் யாரேனும் அவனை அடையாளப்படுத்தினால் பெருமையில் அவனது நெஞ்சம் விம்மிப் புடைக்கும்.  பள்ளியில் ராகினிக்கு அடுத்தபடி பிரசித்தி பெற்ற மாணவன் இவனாகத்தான் இருப்பான்.  ஒவ்வொரு முறை பாடம் நடத்தும்போது வரும் ஊர்களில் இவனுக்குத் தெரிந்த ஏதாவது ஒரு ஊர் வந்துவிட்டால் போதும்.  பிரலாபிக்க ஆரம்பித்துவிடுவான்.  

காளிங்கன் மற்றும் அவர் போன்ற பல லாரி டிரைவர்களின் அகில இந்திய பர்மிட் திடீரென ஒருநாள் பறிக்கப்பட்டது.  காளிங்கன் உடைந்து போனார்.  மீண்டெழ முடியாதவண்ணம் அப்பா உடைந்துபோயிருப்பதை உணர்ந்த சீனு இயலாமையின் பிடியில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக்கிடந்தான். மார்த்தாண்டம்தான் காளிங்கன் வீட்டுக்கு வந்து சமாதானம் சொல்லி அவரைப் போராட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.  அன்றிலிருந்து சில மாதங்கள் வரை மார்த்தாண்டத்தின் வீடுதான் காளிங்கனுக்குப் புகலிடமாயிற்று.  பல கட்டங்களில் போராட்டம் நடத்தினர்.  போராட்டம் வெகுமக்களிடம் அதிகம் சென்று சேரவில்லை.  அதிகாரிகள் கண்டு கொள்ளவேயில்லை.  இதை உணர்ந்த காளிங்கன் நம்பிக்கை இழந்து வேறு வேலை தேடத் தொடங்கினார்.  கரூரில் வேலைக்கா பஞ்சம்?  டெக்ஸ்டைலில் கூலி வேலைக்குச் சேர்ந்தார்.  அக்காவும் டெக்ஸ்டைலில் கணக்கராக வேலைக்குச் சேர்ந்தாள்.  அந்த வருடத்தில் உலகச் சந்தையில் ஏற்பட்ட சரிவாலும் தமிழகத்தில் ஏற்பட்ட மின்வெட்டாலும் பல டெக்ஸ்டைல்கள் இழுத்து மூடப்பட்டன.  அப்பா வேலை பார்த்த கடை தன் ஆயுளை அத்துடன் முடித்துக்கொண்டது.  அக்காவின் வேலை மட்டும் தப்பித்தது.  சீனு தானும் வேலைக்குப் போவதாகச் சொன்னான்.  எப்போதும் கத்தாத அப்பா அப்போது உச்சிவெறியில் கத்தினார்.  

காளிங்கன் அதிகமாகக் குடிக்கத் தொடங்கினார்.  வீட்டிலேயே காசிருப்பதில்லை என்று அம்மா உச்சஸ்தாயில் கத்தும்போது அப்பா பொறுமையாகக் கேட்பார்.  கேட்டு முடித்தபின் சிகரெட்டை இரண்டு இழுப்பு இழுத்துவிட்டுப் பேசாமல் சென்று படுத்துவிடுவார்.  ‘தண்ணியடிச்சா அப்பனை மாதிரி தண்ணியடிக்கணும்’ என்று சீனு தன் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பான்.  அப்போது ஊரில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்துகொண்டிருந்த KRY குழுமத்தார் லாரி டிரைவர்களை வேலைக்கு வலைவீசித் தேடிக்கொண்டிருந்த செய்தி காளிங்கனுக்கு எட்டியது.  

’உங்கொப்பன் லாரியெடுத்தான்னா சுத்துவட்டாரத்துல ஒரு பய கிட்ட நெருங்க முடியாது’ என்று போதையில் வீறாப்பு பேசியபடி அன்றிரவு இருந்தார்.  கொஞ்ச நாட்களிலேயே லாரி டிரைவராக காளிங்கனுக்கு வேலை கிடைத்தது.  முதல் நாள் வேலைக்குச் சென்றவரை அன்று இரவு நெடுநேரம் ஆகியும் காணவில்லை.  உள்ளூரில் இருந்தால் இரவு 9 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து கதையடித்துவிட்டுத் தூங்கிவிடும் காளிங்கன் அன்று இரவு முழுக்கக் காணவில்லை.  ‘நெம்ப நாள் கழிச்சு ஸ்டீரிங்க கைல புடிச்சிருக்குல்ல.  எங்ஙனயாச்சும் சுத்திட்டு வரும்.  நீ படுத்துத் தூங்கப்பு’ என்று அம்மா தன்னையும் சீனுவையும் சமாதானம் செய்ய முயன்றாள்.  எத்தனை முறை ஃபோனடித்தும் எடுக்கவேயில்லை.  அடுத்த நாளும் கழிந்தது.  இரவு பதினொன்றரைக்கு அதீத போதையில் வீடு வந்து சேர்ந்தார். சீனுவைக் கூப்பிட்டு கையில் ஐம்பது ரூபாயைத் திணித்து ‘போய் சிகரெட் வாங்கியா’ என்று அனுப்பினார்.

இரவு பதினொரு மணிக்கு மேல் டீயும் சிகரெட்டும் கிடைக்கும் ஒரே இடம் வ.உ.சி தெரு மைதானம் அருகேயுள்ள கணேசனின் சைக்கிள் கடையில்தான்.  மூன்று கிலோமீட்டர் நடந்து போய் வாங்கி வந்து கொடுத்தான்.  திண்ணையில் சாய்ந்த மேனிக்கு உட்கார்ந்திருந்த காளிங்கன் ‘அப்பூ. வா சாமி’ என்று கம்மிய குரலில் கெஞ்சுவதுபோல் அழைத்தார்.  குழி வெட்டிய பின் விரைந்து இடம் நிரப்பும் நீரின் வேகத்துடன் அப்பாவுக்கருகில் சென்று அமர்ந்தான் சீனு.  பௌர்ணமிக்கு இன்னும் குறைந்து ஐந்து நாட்களாவது இருக்கும்.  அந்த முக்கால் நிலவின் பக்கம் இருவரது பார்வையும் திரும்பியது.  அப்பா சிகரெட் புகையை இழுக்கும்போது அந்நெருப்பு மேலும் சில புகையிலைத் துகள்களைத் தழுவிப் பரவும் சப்தம் அவன் செவிகளில் ஒலித்தது.  பேரமைதியாக இருக்கும் என்று நம்பப்பட்ட இரவின் நிசப்தத்துடன் மின் காற்றாடியின் சப்தம் இணைந்து கொண்டது.  நிசப்தத்தின் புதிய சப்தக்கூறு!  வாயினின்று வெளிவந்த புகை வடிவமற்று மேலெழுவதைக் கண்டு சீனு துணுக்குற்றான்.  நெருப்பு தான் தீண்டும் ஒவ்வொரு பொருளையும் திருமித் தழுவி அதுவே தானாக, தானே அதுவாக மாறும் வரை நிலைகொள்ளாது தத்தளிக்கிறது.  நெருப்பு ‘பற்றுகிறது’ என்று சொல்வதற்கும் அதுதான் காரணமாக இருக்கக்கூடும்.  அதீதமாக இழுத்ததால் உதடுகளையும் விரல்களையும் காளிங்கன் புண்ணாக்கிக் கொண்டார்.

’எங்கப்பன் வவுத்தக் கிழிச்சு கொடலத் தோண்டி என் வவுத்த நெரப்புனாப்புல இருக்குய்யா’ என்றார்.  சீனுவுக்குத் தாத்தாவின் நினைவு வந்தது.  அதிகம் பேசாத தமிழ் வாத்தியார்.  காளிங்கன் லாரி டிரைவரானதில் பெரிய வருத்தமுண்டு.

‘எங்கப்பனக் கரச்ச எடத்துலயே கை வெச்சுட்டனே’ என்று மெல்லக் குலுங்கியபடியே புலம்பினார். ஆறுதல் சொல்லலாம் என்றால் தயக்கம் அவனைப் பிடுங்கித் தின்றது.  முழு வளர்ச்சி பெறாத நிலவை நிதானித்துப் பார்த்தபடி இருந்தான்.  திரும்பிப் பார்த்து அப்பாவைக் கட்டிக்கொண்டான்.  பிராந்தியும் சிகரெட்டும் கலந்த வாடை குப்பென்று வீசியது.  சீனுவைத் தள்ளிவிட்டு அன்றைய நாளின் கடைசிச் சிகரெட்டைப் பற்ற வைத்தார்.

காவிரியில் மணலள்ளும் வேலை காளிங்கனுக்கு.  பாதி சிகரெட்டைப் புகைத்த பின்னர் தன் விரல்களிலிருந்து அதை விட்டெறிந்தார்.  அருகில் குழியில் தேங்கி நின்ற நீரில் விழுந்தது.  தன் இறுதி மூச்சை அது விட்டொழிந்தது.  நிலவைக் கடந்து மேகங்கள் புகையாய்ச் சென்றன.

2

பாலத்தின் நடுவில் வண்டியை நிறுத்திவிட்டு காளிங்கன் இறங்கிவந்தார்.  

’அப்பூ.  இங்கென்னாய்யா?  வீட்டுக்குப் போலாமல்லோ?’ என்று அவன் தோள்மீது கை வைத்து அழைத்தார்.

’நீ போப்பா.  நான் வர்றேன்’ என்று தன்மீது வைக்கப்பட்ட அந்தக் கையை உதறிவிட்டுச் சொன்னான் சீனு.  

’அம்மா கேட்டான்னா கண்ணப்பமூட்டுல தங்கிட்டேன்னு சொல்லிடு’ என்று கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டான்.  தளர்ந்த நடையுடன் காளிங்கன் வண்டியெடுத்துக் கிளம்பினார்.  அவர் செல்லும்வரை சீனு திரும்பவேயில்லை. பனிக்காற்றின் இருப்பும் நீரின் இன்மையும் மட்டுமே அவனை அணைக்க அவ்விடம் இருந்தது.  சீரான ஓசையுடன் காலடிச் சப்தங்கள் அவனை நோக்கி வருவதாகப்பட்டது.  மார்த்தாண்டம்!  அவரைப் பார்த்தவுடன் வேகமாக அவ்விடம் விட்டகன்று பாலத்தின் பெரிய தூணுக்குப் பின் சென்று மறைந்து கொண்டான்.  சற்றுமுன் அவன் அமர்ந்து நோக்கிய அதே இடத்துக்கு வந்த மார்த்தாண்டம் கைகளைப் பாலத்தின் மீது ஊன்றிக் கண்களை இடுக்கிக்கொண்டு காவிரியைப் பார்த்தார்.  நிமிடத்துக்கொருமுறை ஆழ்ந்த பெருமூச்சு அவர் நாசியினின்று வெளிப்பட்டது.  

ஊரிலேயே பேரழகான தென்னைமரம் அவர் வீட்டில்தான் இருக்கும்.  கார்த்திகை மாத இரவுக் குளிரில் நடுங்கியபடி அம்மரத்தடியில் ராகினியுடன் உரையாடியது நினைவுக்குமிழாக மேலெழுந்தது.  மடீரென்று அவன் தலையில் இளநீர் நான்கு விழ அவன் மயங்கியும் விழுந்தான்.  அன்று இரவு முழுக்க அவள் வீட்டிலேயே மார்த்தாண்டம் வைத்தியம் பார்க்கத் தங்கிவிட்டான்.  

ராகினியின் அப்பாவும் அம்மாவும் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்து சென்றபோது அவளுக்கு வயது ஒன்பது இருக்கும்.  மார்த்தாண்டம்தான் தன் மகளிடம் சென்று சண்டைபோட்டு ராகினியைக் கரூருக்கு இழுத்து வந்தார்.  இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அவள் அப்பா மதுரையிலிருந்தும் அம்மா கோவையிலிருந்தும் அவளைப் பார்ப்பதற்காக வந்து இரண்டு நாட்கள் தங்கிச்செல்வர்.  மார்த்தாண்டம் கூடவே இருந்ததாலோ என்னவோ அவரது பல குணங்கள் ராகினியிடம் தென்பட்டன.  சக மனிதர்களின் மன ஆழம்வரை சென்று அவர்களைப் புரிந்துகொள்வது, விஷயங்களை முதிர்ச்சியுடன் அணுகுவது எனத் தொடங்கி அவளது உலகப்பார்வை வரை தாத்தாவின் தாக்கம் தொடர்ந்தது.  

காளிங்கனின் அகில இந்திய பர்மிட் ரத்து செய்யப்பட்டபோது அவர் மார்த்தாண்டத்தின் வீட்டிலேயேதான் கிடந்தார்.  மார்த்தாண்டத்தின் வீடு அப்படி.  ஊரில் எந்த ஒரு பொதுக்காரியமாக இருக்கட்டும், பிரச்சனையாக இருக்கட்டும் அவரது வீடுதான் முதல் புகலிடம்.  காளிங்கன் அங்கிருக்கும் சாக்கில் சீனு ராகினியுடன் பேசுவதற்காகவே கிளம்பி வந்துவிடுவான்.  பள்ளிக்காலம் ஒருவழியாக முடிந்தது.  கல்லூரி தேடும் படலம் சிக்கலானது.  சென்னையில் சேரலாம் என்று ராகினி முடிவெடுத்துத் தன் தாத்தாவிடம் சொல்ல அவரது முகம் வாடியது.  இருந்தாலும் சரி என்று தலையாட்டினார்.  ராகினி திருச்சியில் சேர்வதென்று முடிவு செய்தாள்.  சீனுவும் திருச்சியில்தான் சேரப்போகிறான் என்பதை அறிந்ததும் ராகினிக்கு ஒரே மகிழ்ச்சி.  இருவருக்கும் ஒரே கல்லூரியில் சீட் கிடைத்தது.  அவளுக்கு ஆங்கில இலக்கியம்.  இவனுக்கு வணிகவியல்.  தினமும் காலை ஆறரைக்கெல்லாம் சீனு தென்னையின் கீழ் வந்து நின்றுவிடுவான்.  பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குள் ராகினி கதவைத் திறந்து வெளிவருவாள்.  இருவரும் கைகோத்துக் கொண்டு காந்திகிராமம் பேருந்து நிலையம் வரை நடப்பார்கள்.  அங்கிருந்து திருச்சி செல்லும் பேருந்தில் ஏறிக் கல்லூரி செல்வார்கள்.  ‘

இருவருக்கும் பேருந்துப் பயணம் மிகவும் பிடித்த விஷயம்.  கரூரிலிருந்து திருச்சி செல்லும் வழி தென்னந்தோப்புகளும் வாழைத்தோட்டங்களும் பனந்தோப்புகளும் நிறைந்து காணப்படும்.  புலர்ந்தவண்ணமிருக்கும் பொழுதை சூரியகாந்தி மலர்கள் சுட்டியவண்ணமிருக்கும்.  ஜன்னல் சீட்டுக்கு எப்போதும்போல் இருவரும் சண்டைபோடுவார்கள்.  அமர்ந்த பின்னர் அவள் பேசத்தொடங்குவாள்.  இவன் அவ்வப்போது பேசினாலும் அவள் பேச்சில் மூழ்கிக் கிடப்பதையே விரும்புவான்.  ஆங்கிலமும் ஆங்கில இலக்கியமும் இப்படித்தான் அவனுக்குப் பரிச்சயமாயிற்று.  வார இறுதிகள் பெரும் தொந்தரவாக மாறத் தொடங்கிற்று.  பார்க்காமல் இருக்கமுடியவில்லை என்று சீனு ராகினியிடம் சொல்ல ‘எனக்கும் அப்படித்தான்’ என்று அவள் சொல்லிப் புன்னகைத்தாள்.  சீனு ஒரு வழி கண்டுபிடித்தான். வாங்கலுக்கு அருகே ஒரு சிறு தோட்டம் உள்ளது.  கருப்பண்ணசாமி கோயிலும் அருகே ஒரு சிறு குளமும்கூட.  சனி ஞாயிறு மாலை வேளையில் கண்ணப்பனிடமிருந்து டிவிஎஸ் வாங்கி ராகினியை ஏற்றிக்கொண்டு கோயிலின் குளத்துப் படிக்கட்டுக்கு அழைத்துச் செல்வான்.  கோயிலுக்கு வெளியே இருசிறு மின்விளக்குகள் எரிந்தவண்ணமிருக்கும்.  பூசாரிக்கு மார்த்தாண்டத்தையும் காளிங்கனையும் நன்றாகத் தெரியுமாதலால் எவ்வளவு நேரமானாலும் இவர்களை ஒன்றும் சொல்வதில்லை.  

அன்றைய தினம் கீட்ஸின் Endymion தொகுப்பிலிருந்து கவிதையை வாசித்துக்கொண்டிருந்தாள்.  குளத்து நீரில் வாகைமரத்தின் இலைகள் விழத் தொடங்கியிருந்தன.  மெல்லிய அதிர்வுகளைத் தோற்றுவித்த இலைகளின் வீழ்தல் பேரியக்கச் செயலூக்கியென நீர்ப்பரப்பை இசைமயப்படுத்திக்கொண்டிருந்தன.  அவள் படித்தாள்:

“A thing of beauty is a joy for ever;

Its loveliness increases; it will never

Pass into nothingness”

மரத்தின் இலைகள் நிரப்பாத பகுதி வழியே நுழைந்த நிலவொளி கீற்றுகளாக அவ்விடத்தை நிரப்பியது.

’காதல் அனுபவம் எத்தன பேருமேல ஏற்பட்டிருக்கு?’ என்று அவன் கேட்டான்.  

’அப்போ நீ கவிதய கவனிக்கல?’ என்று அவள் புருவமுயர்த்தி அதட்டினாள்.  

’ஏய்.  சொல்றா’ என்று சீனு கொஞ்சினான்.

’ஏழு பேரு மேல ஈர்ப்பு உண்டாகியிருக்கு.  ஆனா அந்த ஏழும் வளரவேயில்ல’ என்றாள்.

ஏழில் ஒன்றாகத் தன் பெயரும் இருக்கும் என்ற நம்பிக்கையில் அந்த எழுவரைப் பற்றி விசாரித்தான்.  ஏழும் முடிந்தது.  சீனுவின் பெயர் இல்லை.  அவனது நண்பர்கள் சிலர் உட்பட அவ்வரிசையில் இருந்தனர்.  சீனுவின் முகம் வாடியது.  நேரம் பார்த்தான்.

’வா ராகினி.  கெளம்பலாம்’ என்று சன்னமான குரலில் சொல்லிவிட்டுச் சீனு எழுந்தான்.

வண்டி நிறுத்திய இடத்துக்கு வந்து சேர்ந்தனர்.  மரங்களைக் கடந்தவுடன் முக்கால் நிலவு ஒளிர்ந்தது.

’முழு நெலாவவிட எனக்கு முக்கால் நெலாதான் புடிக்கும்’ என்றாள்.

’அது ஏன் அப்படி?’ என்றான் சீனு.

’யோசிச்சுப் பாரேன். முழு நெலாவப் பாக்கும்போதெல்லாம் ஒரு முழுமைய எதிர்பாக்குறோம்.  அது அந்த நிறைவத் தர மாட்டேங்குது.  உடனே ஏகப்பட்ட சமாதானத்தை சொல்லி அதையும் அழகுன்னு சொல்ல ஆரம்பிக்குறோம்.  ஆனா இந்த அரைகுறையான நிலவுகிட்ட நமக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்ல. அதனாலயே என்னால இத முழுசாப் பருக முடியுது.  முழுசா உணர முடியுது’ என்று சொல்லி அவனது கைகளை எடுத்துத் தன் கைகளைப் பொருத்திக் கொண்டாள்.

வண்டியை அவள் வீட்டருகே கொண்டுவந்து நிறுத்தினான்.  மணி நள்ளிரவைக் கடந்திருக்கும்.  

’இன்னைக்கு ரொம்ப அழகான ராத்திரியா இருக்குல்ல’ என்று ராகினி தனது வாக்கியத்தை நிறுத்தினாள்.

என்ன சொல்வதென்று தெரியாததால் பேந்தப் பேந்த விழித்துவிட்டு ‘எனக்கும்தான்’ என்று வழிந்தான்.

’அந்த ஏழுகூட இன்னொரு பேரையும் சேத்துக்கோ!’

’ஆனா அது எம் பேரா மட்டுந்தான் இருக்கும் பரவால்லியா?’ என்றான்.

வீட்டுக்குள் செல்ல எத்தனித்தவள் அவன் கைகளைப் பற்றி தென்னையருகே இழுத்துச் சென்றாள்.  அவனை முழுமையாக அணைத்தாள்.  நீங்காத ஸ்பரிசமாக அவன் நினைவில் அந்தத் தீண்டல் படர்ந்தது.  பரிமாறப்பட்ட முதல் முத்தமும் அம்மரத்தின் கீழ்தான்.  

’ஒரு கவித படிக்கட்டுமா?’ என்றாள்.

மீண்டும் அதேபோல் முழித்துவிட்டு ‘இப்பத்தான் படிக்கணுமா?’ என்றான் சீனு.

அவள் சத்தம்போட்டு சிரித்தபடியே ‘ஆமாம்’ என்றாள்.’

தென்னையில் சாய்ந்தபடியே ‘ம்ம்.  சரி படி!’ என்றான்.

‘Bright Star!  Would I were steadfast as thou art!’ என்று அவள் தொடங்கினாள்.  

இளநீர்க்குலை தலையில் விழுந்ததில் சீனு மயங்கிச் சாய்ந்தான்.

3

ராகினி பின்னமர்ந்துவர சீனு வண்டியை வாங்கல் பாலம்வழி விட்டான். பாலத்தடியில் நீரென்று ஏதுமில்லை. மழைக்காலத்திலும் தற்போதெல்லாம் அதிகமாக நீர் நிற்பதில்லை. மக்கள் பலரும் பாலத்தைப் பயன்படுத்தாது முன்னாள் ஆற்றின் வழியாகவே நடந்து சென்றனர்.  பாலம் தன் இருப்புக்கான காரணத்தை இழந்து வெறும்வெளியில் பொருளற்று நின்றது.  சிறு வயதில் அப்பாவும் அவனும் சேர்ந்து குளித்ததை எண்ணியபடி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். பாலத்தடியில் ஏதோ தகராறுபோல் பட்டது.  சீனு வண்டியை நிறுத்தி பாலத்திலிருந்து கீழே எட்டிப் பார்த்தான்.  ஒரு லாரியைச் சுற்றி மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர்.  கூச்சலாக இருந்தது.  சற்று உற்றுப் பார்த்தபோது KRY என்று அந்த லாரியில் எழுத்துகள் பெரிதாகத் தெரிவதைக் கவனித்தான். திடுக்கிட்டு பாலத்திலிருந்து இறங்கி ஓடினான்.  நான்கு தடியன்கள் காளிங்கனை அடித்து மிதித்துக் கொண்டிருந்தார்கள். சீனு அவர்களைத் தள்ளிவிட்டு அப்பாவைக் கட்டிப்பிடித்துத் தூக்கினான். அவர்களை முறைத்துப் பார்த்தான்.  ‘என்னடா மொறக்குற?’ என்று இருவர் அவனை அடிக்க வந்தனர்.  ராகினி வருவது கண்டதும் கிட்டத்தட்ட மொத்த இடமும் அமைதியானது.  

அவள் கண்ணீர் மல்க அவர்களனைவரையும் பார்த்து ‘தாத்தாவுக்குத் தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாரு’ என்று சொல்லிவிட்டுக் காளிங்கனைப் பிடிக்கச் சென்றாள்.  காளிங்கனை ராகினியிடம் ஒப்படைத்துவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு பக்கத்திலிருந்த ஆட்டோ ஸ்டாண்டுக்கு ஓட்டிச்சென்று ஆட்டோ பிடித்து வந்தான்.  அவன் அப்பாவோடு ஆட்டோவில் ஏற, ராகினி டிவிஎஸ்ஸில் அவர்களைப் பின்தொடர்ந்தாள்.  வீட்டுக்கு வந்தபோது அம்மா இதைப்பார்த்துப் பெருங்குரலெடுத்து அழ எத்தனித்தாள்.  ராகினியைக் கண்டவுடன் அவளைக் கட்டிக்கொண்டு மெல்லிய விசும்பல்களை மட்டுமே உதிர்த்தாள்.  காயங்களுக்கு மருந்திடும்வரை ராகினி வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தாள்.  சீனு தன்னிலைக்குத் திரும்பியபின் வெளியே வந்தான்.  அவளுக்குப் பின்வந்து அவள் தோள்களை அணைத்தவண்ணம்

’விட்றா.  அப்பாவுக்கு ஒண்ணுமில்ல.  ஆனா அடிச்சவிங்கதான் யாருன்னு தெரில’ என்றான்.

மரத்துப்போன குரலில் ராகினி ‘எனக்குத் தெரியும்’ என்றாள்.

சீனு எதுவும் பேசாமல் அவளுக்கு அருகில் வந்தமர்ந்தான்.  

’தாத்தா தலைமையிலான போராட்டக்குழு அது.  காவிரில மணலள்ளும் லாரிங்களுக்கும் அதோட உரிமையாளர்களுக்கும் எதிரா லாரி சிறைபிடிக்கும் போராட்டம்.  தாத்தாவுக்கு ஒடம்பு சரியில்ல.  அதனால தொரசாமிய அனுப்பி வெச்சாப்டி.  இப்பிடி ஆகும்ணு நான் நெனச்சுக்கூடப் பாக்கல’

அவன் சற்றுக் குரலுயர்த்தி ‘எங்கப்பன் வண்டிதான் கெடச்சுதா?  ஊர்ல வேற எவனும் வண்டியே ஓட்டலியா?  மண்ணே அள்ளலியா?’ என்றான்.

’சீனு.  புரிஞ்சுக்கடா.  உங்கப்பா வேல பாக்குறது ஒரு மணல் மாஃபியா கும்பலுக்குக் கீழ.  வருங்கால எம்.எல்.ஏ-க்குக் கீழ.  இன்னிக்குன்னு பாத்து உங்கப்பாதான் அங்க மண்ணள்ளிட்டு இருந்தாரு’

’அதுக்கு ஏன் அப்பன அடிச்சீங்க?’ என்று கலங்கிப்போய் கத்தினான்.

’தாத்தாவோட கைமீறி நடந்த விஷயம் இது.  அதுக்கு ஏன் என்கிட்ட கொரல ஒசத்துற?’ என்று கண்களில் நீர்வழியக் கேட்டாள்.

’நான் போறேன்’ என்று எழுந்த ராகினியை ‘ஒரு நிமிஷம்’ என்று சீனு நிறுத்தினான்.  வண்டி சாவியை அவளிடம் வீசி ‘வண்டிய எடுத்துட்டுப் போ.  கண்ணப்பன்கிட்ட நான் பேசிக்குறேன்’ என்றான். அவள் புன்னகையை உதிர்த்துவிட்டுக் கிளம்பினாள்.

KRY குழுமத்தாரின் மேனேஜர் வீட்டுக்கு வந்து சென்றார்.  அவர் வருவது தெரிந்து சீனு வெளிச்சென்றுவிட்டான். இந்த வேலையை அப்பா விட்டுவிடலாம்தான். ஆனால் அக்காவின் திருமணத்திற்கென்று முதலாளியிடமிருந்து கடன் வாங்கிய மூன்று லட்சம் ரூபாய் கழுத்தின் மீதேறி மூச்சை இறுக்கியது.  மேனேஜர் மார்த்தாண்டத்தின் மீது புகார் கொடுக்குமாறு காளிங்கனைத் தூண்டினார். காளிங்கன் முதலில் மரியாதையாக மறுத்துப் பார்த்தார்.  மேனேஜர் மசிவதாகத் தெரியவில்லை.  ஆதலால் காளிங்கன் அவரை மரியாதையாக வீட்டைவிட்டு அனுப்பி வைத்தார்.  இதற்கிடையில் காவிரியில் மணலள்ள இடைக்காலத்தடை விதித்தது கரூர் நீதிமன்றம்.  மார்த்தாண்டம்தான் வழக்குத் தொடுத்தார்.  காளிங்கன் இரண்டு மாதங்கள் வேலையின்றி இருந்தார்.  இக்காலத்தில் மாதம் மூவாயிரம் KRY குழுமத்தாரிடமிருந்து வீடுவந்து சேர்ந்தது.  நீதிமன்றத்தின் தீர்ப்புகளை நமது இஷ்டப்படியும் வசதிக்கேற்பவும் புரிந்து கொள்ளலாமாதலால் இடைக்காலத்தை இரண்டு மாதங்கள் என்று இண்டர்பிரட் செய்தாயிற்று. பிறகு மீண்டும் மணலள்ளும் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருந்தது.  காளிங்கனும் போய்க்கொண்டுதானிருந்தார்.  

சீனுவும் ராகினியும் அதற்குப்பின்னும் சந்தித்துக்கொண்டுதான் இருந்தார்கள். இருப்பினும் முன்பிருந்த நெருக்கம் குறைந்துவருவதை இருவரும் உணரத் தொடங்கினர்.  பிரிவது உசிதம் என ராகினி எண்ணத் தலைப்பட்டாள்.  சீனுவிடம் தன் எண்ணத்தை வெளிப்படுத்தியபோது அவன் பெரிதாக எந்த உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் புருவம் சுருக்கிச் சற்றுநேரம் சிந்தித்துவிட்டு ‘சரி’ என்றான். ராகினிக்கு ஏமாற்றமாக இருந்தது. பின்னர் கல்லூரியில் அவ்வப்போது சந்தித்துக்கொள்வதோடு சரி.

கல்லூரியில் அந்த வருடம் அதிசயமாக ஆடிப் பதினெட்டுக்கு விடுமுறை அறிவித்தனர்.  அணை திறந்துவிட்டமையால் காவிரியில் ஓரளவு நீர்வரத்து அதிகரித்தது.  ராகினி நச்சரித்தபடியால் மார்த்தாண்டம் அவளுடன் காவிரி வர ஒப்புக்கொண்டார்.  பாலத்திலிருந்து ஆட்டோ கீழிறங்கி நின்றது.  வெகுகாலம் கழித்து ஆற்றில் நீரைக் கண்டவுடன் ராகினிக்கு அளவிட முடியாத மகிழ்ச்சியில் கண்களில் நீர் தளும்பியது.  பல குழந்தைகளை அன்று அவர்களது பெற்றோர் ஆற்றுக்கு அழைத்து வந்திருந்தனர்.  அநேகமாக அக்குழந்தைகள் ஆற்றைப் பார்ப்பது இதுதான் முதல்முறையாக இருக்கும்.  கூட்டம் கூட்டமாகக் குளியல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆழமற்ற நீரில் நீச்சலடிக்கும் வீண் எத்தனங்களைத் தவிர்த்து சப்பணமிட்டு அமர்ந்தாள்.  அமர்ந்தபின்னும் நீரளவு அவள் கழுத்துவரை மட்டுமே இருந்தது.  குடகிலிருந்து கிளம்பும் காவிரி கரூருக்கு வருமுன் எத்தனையோ ஊரின் சாக்கடைகள், ஆலைக்கழிவுகள், சாயப்பட்டறைக் கழிவுகள் எனப் பலவற்றைச் சுமந்துகொண்டுதானே வரவேண்டும்.  எனவே ஆற்றின் தூய்மைபற்றி அவள் கவலைப்படவில்லை.  

ஆங்காங்கு அப்பாக்களும் அம்மாக்களும் குழந்தைகளுக்கு நீச்சலடிக்கக் கற்றுக்கொடுத்தும் குளிப்பாட்டிவிட்டும் இருந்தனர். இளசுகள் தூரத்தில் சத்தம்போட்டு ‘டைவ்’ அடித்தபடி குளித்துக்கொண்டிருந்தனர். கரையில் மார்த்தாண்டம் இவற்றையெல்லாம் பெருமூச்சுடன் பார்த்துக்கொண்டிருப்பதை ராகினி உணர்ந்தாள். அவர் மூச்சின் வெப்பம்தான் இந்நீரை இவ்வளவு சூடாக்கியிருக்கக்கூடும். பக்கத்தில் மேனியில் சட்டை அணிந்திராத ஒரு சிறுவனும் அவனது அப்பாவும் உரையாடியபடியே குளித்துக்கொண்டிருந்தார்கள்.  அச்சிறுவனைப் பார்க்கையில் சீனுவின் நினைவு வந்தது ராகினிக்கு. அவள் காவிரியில் நீச்சலடித்துப் பயிற்சி பெறும்போது சீனுவும் காளிங்கனும் லாரிக் கதைகளைப் பேசுவதை ஏக்கத்துடன் பார்த்திருக்கிறாள்.  அப்போதெல்லாம் சீனு ராகினியைப் பார்க்க நேர்கையில் பற்கள் அனைத்தும் தெரிய விரிந்து சிரிப்பான். அவளுக்கு அச்சிரிப்பு இதமாக இருக்கும்.  இந்தச் சிறுவனும் கைகால்களை ஒரு நிலையில் வைக்காமல் ஆட்டியாட்டிப் பேசுவதுகூட சீனுவை நினைவுறுத்துவதாகவே இருந்தது.  ராகினி தன்னைப் பார்ப்பதைக் கண்ட சிறுவன் அப்பாவுக்குப் பின் மறைந்துகொண்டு ‘அப்பா. அந்தக்கா என்னையே பாக்குதுப்பா’ என்றான்.

’மம்மதக்குஞ்சல்லோ நீயி. பாக்கத்தான் செய்வாய்ங்க’ என்று பாதி வசவாகவும் பாதி கொஞ்சலாகவும் சொல்லி அவனை அதட்டினார்.  ‘நீயி இங்கனயே இரு.  அம்மாள உள்ளார கூட்டியாரேன்’ என்று சொல்லிவிட்டு அவன் அப்பா அவ்விடம் விட்டு நகர்ந்தார்.

அச்சிறுவன் ராகினியையே பார்த்துக்கொண்டிருந்தான். என்ன தோன்றியதோ தெரியவில்லை.  சட்டென்று வாய் நிறைய ஒரு சிரிப்பு!  பேரிதமும் பெருவலியும் கலந்த ஒரு மனமுயக்கத்தில் ‘சீனு’ என்று கண்மூடி வாய்திறந்து சொன்னாள்.  கண் திறந்தபோது அவனை அவ்விடம் காணவில்லை. இரு கைகள் அவலக்குரலெடுத்து ஓதுவதுபோல் நீரில் அளைந்தாடிக்கொண்டிருந்தது.  ராகினி தன் இடம் விட்டெழுந்தாள். இருப்பின் முடிவைக் குமிழிகளின் வெடிப்பு அறிவித்தது.  

இருவரது சடலமும் நள்ளிரவுக்கு மேல்தான் கண்டுபிடிக்கப்பட்டது.  ராகினியின் கைகள் அச்சிறுவனின் தோள்பட்டையையும் முடியையும் இறுகப் பற்றியிருந்தது. மார்த்தாண்டம் காளிங்கன் சீனு மூவரும் சடலத்தைப் பெற்றுக்கொண்டனர். போலீசார் கேட்ட இடத்திலெல்லாம் மார்த்தாண்டம் கையெழுத்திட்டார்.  நீச்சல் தெரியாமல் ஆழத்துக்குப் போனதால் மரணம் என்று முடித்துவிட்டார்கள். ஆற்று மணல் அள்ளியதால் உண்டான புதைகுழி பற்றி அதிகாரிகள் யாரும் வாய்திறக்கவில்லை.  ஏன் திறப்பார்கள்?  மார்த்தாண்டம் நடத்திய போராட்டம் பல இந்த அதிகாரிகளுக்கும் எதிரானதுதானே?  அவர்களுக்குத் தெரியவா போகிறது ராகினியின் மரணம் அவளுடையது மட்டுமல்ல, அது காவிரியின் மரணப் பேரோலம் என்று?

மார்த்தாண்டத்திடம் வழக்கமாகக் காணப்படும் தீவிரமான போராட்ட மனநிலையின் ஒரு துளிகூட இப்போது காணமுடியவில்லை.  ஊரில் யாருக்கு இது நடந்திருந்தாலும் அவர் கலங்கிப் போயிருப்பார்.  கலங்கினாலும் அவர்கள் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறிப் பெற்றொரை நண்பர்களை அடுத்தகட்டப் போராட்டத்துக்குத் தயார்படுத்தியிருப்பார்.  மார்த்தாண்டம் வீட்டுக்கும் மிகப்பலர் வந்தனர்.  எனினும் துக்கம் விசாரிப்பதற்கும் ஆறுதல் கூறுவதற்கும் பாரதூரமான வேறுபாடுகள் உண்டு.  தன் வாழ்க்கைக்கான பொருளைத் தன் வாழ்முறை மூலம் உருவாக்கிக் கொண்டவர் மார்த்தாண்டம். மக்களுக்காக எத்தனையோ போராட்டங்கள். உடனடி விளைவுகளை அளவுகோலாக வைத்துப் பார்த்தால் பெரும்பான்மைப் போராட்டங்கள் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன.  அவர் நம்பும் தத்துவம் அவரைத் தொடர்ந்து இயங்கச் செய்தது.  ஆனால் அறுபதாவது வயது தொடங்கி தன் வாழ்வின் ஆதாரக் குவிமையம் என இருபது வருடங்களாகக் கருதிவந்த ஓர் உயிர் ஒரு கணத்தே மறைந்த அந்த அதிர்ச்சியைப் புரிந்துகொள்ளவும் கிரகித்துக் கொள்ளவும் அந்த மனம் மறுத்தது. மனப்பிறழ்வு உண்டாயிற்றோ என்று பலர் கருதும்வண்ணம்தான் அவரது நடவடிக்கைகள் அமைந்தன. அவர் அநேகமாகத் தன்னையே அவளில் கண்டிருக்கக்கூடும்.  அவளது மறைவுக்குப் பிறகு தன்னையே படர்க்கையில் கண்டாரோ என்னவோ?

சில சமயங்களில் இரவு நேரத்தில் இரண்டு மணிநேரம் நடந்து பாலம்வரை சென்று அவளது சடலம் கிடைத்த இடத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்.  அவ்விடம் மார்த்தாண்டம் வரும் சமயங்களிலெல்லாம் யாரோ ஒருவர் இவர் கண் பார்வையினின்று தப்பிக்கும்பொருட்டு ஓடி ஒளிந்து கொள்வது போன்ற தோற்றம் அடிக்கடி ஏற்படும். இன்றும் யாரோ தூணுக்குப் பின் சென்று ஒளிந்தது போல் இருந்தது.  திடீரென்று மழை பெய்யத் தொடங்கிற்று.  மார்த்தாண்டம் வேகமாகப் பாலத்தடியில் சென்று நின்றுகொண்டார். மழை ஆற்றின் சிறு பள்ளங்களை ஆங்காங்கு நிரப்பின. மழையின் திடீர் வரவால் சமநிலையிழந்த பல உயிரினங்கள் தங்கள் வளைகளுக்குள் சென்று அடைந்துகொண்டன. தேங்கி நின்ற நீரிலிருந்து குமிழிகள் எழத்தொடங்கின, இருப்பின் சாட்சியத்துக்குக் கட்டியங் கூறுவதுபோல.  

மார்த்தாண்டத்தின் அசைவுகளையும் பெருமூச்சையும் தூணில் வழிந்த நீரில் நனைந்தபடியே சீனு பார்த்துக்கொண்டிருந்தான்.  கட்டியணைத்துச் சற்று அழவேண்டும் போலிருந்தது. குற்றவுணர்ச்சியின் பிடியில் அவன் சுருண்டு தவித்தான். அச்சிறுவனின் தோள்களில் அவள் பிடியின் இறுக்கம் தளர்த்தியது சீனுதான்.  தனது இயல்பை இழந்து இறுகிக்கிடந்த அந்தக் கைகளில் முத்தமிட்ட கணத்திலிருந்து அவளது மரணத்துக்குத் தானும் காரணம் என்றே எண்ணத் தொடங்கினான். அன்றிலிருந்து அவன் யாரிடமும் சரியாகப் பேசவில்லை.  காளிங்கன் ஒவ்வொரு கணமும் ஆறுதலான வார்த்தையை எதிர்பார்த்துச் சீனுவிடம் வரும்போதெல்லாம் ஒன்றிரண்டு சொற்களில் அவரை விரட்டிவிட்டு அவன் எங்காவது சென்றுவிடுவான். லாரியின் மீது ஒட்டிக்கொண்டிருந்த துளிப்பிரியமும் இந்த நிகழ்வால் குலைந்துபோனது. அவர் லாரியை வெறுக்கத்தொடங்கினார்.  எனினும் வேலையை அவரால் விடமுடியவில்லை.  

காளிங்கனைப் போராட்டக் குழுவைச் சார்ந்தவர்கள் தாக்கியபோது வீட்டுக்கு வந்த மார்த்தாண்டத்தைக் காளிங்கன் மரியாதையாக நடத்தினார்.  சீனு அவரிடம் முகம் கொடுத்தும் பேசவில்லை. இப்போது அவரிடம் சென்று பேசுவதற்கே உடல் கூசியது. அவர் மட்டும் பழைய நிலைமையில் இருந்திருந்தால் அவர் பின்னாலேயே தான் போயிருக்கலாம் என்று எண்ணினான்.  குற்றவுணர்ச்சிக்குத் தீனி போடுவதன் மூலம் தனது இயலாமையை மறக்கத் தொடங்கினான்.  ஊரில் பலரும் மார்த்தாண்டத்தைப் பரிகசித்துப் பேசும்போதெல்லாம் சீனு உள்ளே ததும்பி வழியும் நீரை விழுங்கியபடி கடந்து செல்வான். பத்தடி தூரத்தில்தான் மார்த்தாண்டம் நின்றுகொண்டிருந்தார்.  சென்று பேசிவிடலாம் என்ற உந்துதல் அவனை அலைக்கழித்தது. மழைவிட்டபின்னர் மார்த்தாண்டம் தன் வீட்டுக்கு நடையைக் கட்டினார். அவன் அவ்விடமே அமர்ந்தான். சற்றுநேரத்தில் கண்களைச் சுழற்றியபடியே தூங்கிப் போனான்.  தோள்களில் சாய்ந்த வண்ணம் அவள் கைகள் முதுகை ஸ்பரிசிப்பதை உணர்ந்தான்.  அச்சிறுவனின் தோள்களைப் பற்றியிருந்த அக்கைகளின் பிடியின் இறுக்கத்தை அவன் தோள்கள் வலிக்க உணர்ந்தான். காலை சூரியன் உதிக்கும்முன்பே அவ்விடம் விட்டெழுந்து உடலில் ஒட்டியிருந்த சேற்றுநீரைத் துடைத்தபடி வீட்டுக்கு வந்து சேர்ந்தான். காளிங்கன் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. நெற்றியில் முத்தமிட்டு எதையோ முணுமுணுத்துவிட்டு நகர்ந்தான்.

அதிகாலைச் சூரியனின் கீற்றுகள் இரவு பெய்த மழையின் சிறு பள்ளத் தேக்கங்களில் எதிரொலித்த வண்ணம் விரவிக் கிடந்தது. தென்னை மரம் தன் பொலிவை இழந்துவிட்டதாக சீனுவுக்குப் பட்டது.

***

மா.க.பாரதி – கரூரைச் சேர்ந்தவர். தற்போது ஐதராபாதில் இருக்கிறார். வெவ்வேறு இதழ்களில் இவரது கதைகள் வெளியாகியுள்ளன. தொடர்புக்கு – barathyganesan96@gmail.com

சூனியம்

0

ஹரிஷ் குணசேகரன்

வாழ்க்கை குறித்த கவலை பீடித்து, வாழும் சூழல் வறண்டு மூச்சு முட்டி செத்து விடுவது போல அடிக்கடி மனக்காட்சி தோன்றி மறைகிறது. இப்படி அவநம்பிக்கையின் கூடாரமாய், மரண பயம் மேலிட்டு அடுத்த கட்ட நகர்வு பற்றிய பிரக்ஞை இல்லாமல் வீட்டிலேயே முடங்கிப் போகும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டதை நினைத்து விம்மியபோது பத்தரை மணி பதற்றம் தொற்றி ஆஃபிஸ் மடிக்கணினியை எடுத்தேன்.

அரைமணி நேரத்தில் ஸ்கைப்பில் கூடுகை தொடங்கியதும் மேனேஜர் ஒவ்வொருவரிடமும் ஆங்கிலத்தில், “வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதை எப்படி உணர்கிறீர்கள்?” என்று கேட்டார். ஹாலில் உச்சஸ்தாயில் அலறிக்கொண்டிருந்த டிவியில், ரயில் மோதி லாரி மோதி பசிப்பிணி மோதி செத்த புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையை நிர்வாக ஆசிரியர் விவரித்துக் கொண்டிருந்தார். டைனிங் டேபிளில் கிடந்த ரிமோட்டை எடுத்து சத்தம் குறைத்தபடி, “ஆஃபிஸ் கால் இருக்கும்மா.. மெதுவா வெச்சி கேளு” என்றேன் அவளிடம். அதற்குள் என் இருத்தலை கேள்வி கேட்கும் விதமாக மேனேஜர் என் பெயரை இரண்டு மூன்று முறை அழைத்தார்.

கொரோனா குறித்த அச்சம், பீதியைப் போக்கி தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, எங்கள் நிறுவனம் உருவாக்கிய செயலியை கிளைண்ட் ஒருவருக்கு காட்டி விளக்கிக் கொண்டிருந்தேன். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க புளூடூத்தை எப்போதும் ‘ஆன்’ செய்ய வேண்டும் என்றேன். அவருக்கு எங்கள் செயலி மிகவும் பிடித்துப்போக, அடுத்தகட்டமாக அவருடைய பாஸை டீம்ஸ் மீட்டிங்கிற்கு அழைத்து வருவதாக சொல்லிச் சென்றார். முன்பே பல கிளைண்டுகளுக்கு அனுப்பிய வெவ்வேறு பிரப்போஸல்கள் கிணற்றில் போட்ட கல்லாய் கிடப்பதை நினைத்து, “ஹஹ் ஹஹ்ஹா..” சிரித்துக் கொண்டேன்.

காஃபியோ பிரெட் சாண்ட்விச்சோ எடுத்துக் கொண்டு அவள் அறை நோக்கி வருகிறாள். கொலுசு சத்தத்தை வைத்துதான் சொல்கிறேன். ஆம், அவளே தான்! பெரிய கண்டுபிடிப்பு.. நானும் அவளும் தானே இருக்கிறோம் பெரிய ஃப்ளாட்டில். அப்பாவும் அம்மாவும் நல்லவேளையாக போன வாரம் தான் சென்னையை விட்டுக் கிளம்பினார்கள். ஆஹா.. இப்போதுதான் ஞாபகம் வருகிறது. வீட்டு வாடகை மெயிண்டெனென்ஸும் சேர்த்து பதினைந்தாயிரத்தி ஐந்நூறை உரிமையாளருக்கு செலுத்த வேண்டுமே!

“ஹே.. எப்டி போகுது” தோளை சுற்றிக் கை போட்டுக் கேட்டாள்.


“ஹ்ம்ம்.. கொஞ்சம் டென்ஷனா இருக்கு”


“ஏன், என்னாச்சு. நான் இருக்கேன்ல..” இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.

நிலவொளி தோற்று மர்ம நிழல்கள் தேங்கிய இருள் படர்ந்த இரவில் இறையொளியாய் என் வாழ்க்கை வல்லத்தை செலுத்தும் இவள், இலக்கியா. காஃபி கோப்பையை நீட்டியதும் பதறிப்போய், “பாக்கெட் பால் இல்லையே?” என்றேன்.

“கொழுப்பு தான்.. ஏதோ ஒண்ணு, குடிய்யா” என்றாள்.

“பேபி.. காஃபி குடிச்சிட்டு முத்தம் தந்தா கசப்பா இருக்குமா?”

“ஓ.. நீ எதுக்கு அடிபோடுறன்னு தெரிது. ஒழுங்கா வேலை செய்யு மேன், பிச்சி பிச்சி” என்று பழுப்பு நிற காஃபி ஆடையை உதட்டில் கலைத்தாள்.

தன்னால் இயன்றளவு வீட்டிலிருந்தபடி பெண்கள், குழந்தைகள், வறியவர்களுக்கு உதவும் சமூகசேவை முன்னெடுப்புகளை ஒருங்கிணைத்து வருகிறாள். குழந்தை கொஞ்ச நாளைக்குத் தேவையில்லை என்று தள்ளிப்போட்டு இரண்டு வருடங்கள் ஆகின்றன!

“மாம்ஸ்.. ட்ரெய்ன்ல போற மைக்ரண்ட் வொர்க்கர்ஸ் சாப்பாடு, தண்ணி இல்லாம தவிக்றாங்க. இங்க பாரேன்..” என்று தனக்கு வந்த காணொளியைக் காட்டினாள். அதில் நடைமேடையில் நிறுத்தாமல் தொடர்வண்டி வேகமெடுக்க தன்னார்வலர்கள் பயணிகள் பெட்டிக்குள் உணவு பொட்டலம், குடிநீர் போத்தல்களை எறிந்தனர்.  அதைப் பார்த்ததும் உள்ளுக்குள் என்னவோ செய்ய, தலைகுனிந்து லேப்டாப் பார்த்தேன். கொரோனா தாக்கத்தால் முப்பது சதவீத சம்பளம் குறைக்கப்பட்டதாய் மின்னஞ்சல் வந்தது! அதை அவளிடம் காட்டாமல் மறைத்துவிட்டு வேலையைப் பார்த்தேன்.

“யோ மாமா.. நான் சொல்ற அக்கவுண்டுக்கு உன்னால முடிஞ்ச காசு போட்றியா? மைக்ரண்ட் வொர்க்கர்ஸுக்கு டீயாச்சும் தர அரேஞ்ச் பண்ணிட்டு இருக்கோம்” என்றாள்.

முதுகுவலி வேலையைக் காட்ட அண்ணாந்து படுத்து ஃபேனை வெறித்தேன். சனி, ஞாயிறும் சேர்த்து வேலை பார்ப்பது எதற்காக? சம்பளத்தைப் பறிகொடுக்கும் நிலை, கம்பெனிக்கு வருமானம் அறுபடும் நிலை வரக்கூடாது என்பதற்காகத்தானே!

வரக்கூடிய தகவல்கள் பதட்டம் விளைவிப்பதாய், மாநகரின் மீட்சி குறித்த சந்தேகங்களை எழுப்புவதாய், குற்றவுணர்ச்சியைக் கிண்டுவதாய் இருக்கின்றன. கொரோனா சிகிச்சை தந்த மருத்துவ ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாய், அதிலும் குறிப்பாக சென்னையை சேர்ந்த தலைமை செவிலியர் இறந்து போனதாகவும் ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டு அதற்கு சாட்சியாய் கேஸ் ஷீட்டை காட்டியது. கேஸ் ஷீட்டில் தவறு நடந்திருக்கலாம் என்றும், அவருக்கு முன்பே கடுமையான சர்க்கரை வியாதி இருந்ததாகவும் டீன் விளக்கமளித்தார். பிரபல தமிழ்ப் பத்திரிகை குழுமம் சென்னையில் இருபத்தைந்து லட்சம் கொரோனா பாஸிட்டிவ்கள் இருப்பதாகவும், அரசு கொரோனா மரணங்களை திட்டமிட்டு மூடி மறைப்பதாகவும் சந்தேகங்களை எழுப்பியது.

விழித்திருக்க விலகியிருக்க வீட்டிலிருக்க சொன்னவர்கள் கோயம்பேட்டில் கழுதை வாயைப் பார்த்து கொரோனாவிடம் கோட்டை விட்டு கடைசியில் மக்கள் சரியாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை என்றனர். இன்னும் முத்தாய்ப்பாக தமிழ்நாட்டில் கொரோனா சமூகப் பரவல் கட்டத்தைத் தொடவில்லை என்றனர்.

தமிழ் இலக்கியாவிடம் கலந்தாலோசித்து ஸொமேட்டோ மூலம் காய்கறிகளை ஆர்டர் செய்தேன். சாப்பிடப் போவதாய் வாட்ஸாப் குழுவில் அறிவித்துவிட்டு ஹாலுக்கு வந்தேன். பின்கழுத்து தெரிய லேப்டாப் முன்பு அமர்ந்திருந்தவளின் ஜிலேபி  கொண்டையை ரசிக்கும்போது, குக்கர் விஸில் எழும்பியது. சமையலறையின் கதவு திறந்திருக்க, எதிர்வீட்டு ஒன்றரை வயது குழந்தை யூ-ட்யூப் ரைம்ஸ் பாடுவது கேட்டது.

மதுரையில் கறிக்கடை திறந்து வைத்த இஸ்லாமியரை காட்டுமிராண்டித்தனமாய் தாக்கியதில் அவர் மரணம் தழுவ, தந்தை பற்றிய ஞாபகங்களை தோழர் உருக்கமாகப் பகிர்ந்து இருந்தார். கொஞ்ச நாட்களுக்கு ஃபேஸ்புக், நியூஸ் பார்க்கக் கூடாதென்று சங்கல்பம் செய்து கொண்டேன். மீண்டும் லேப்டாப், ஸ்கைப், கிளைண்ட் கால், பிஸினஸ் பிரப்போஸல், வாட்ஸாப் குழு.. நாள் நத்தையாய் நகர்ந்திருக்க வியர்வை கசிந்த அறைக்குள் நல்ல சுகந்தத்தை சுமந்துகொண்டு இலக்கியா வந்தாள்.

“என்னடா பண்ற.. வேலை முடிஞ்சதா?” என்றாள்.

“ஹ்ம்ம்.. இப்ப தான்”, அவளை மணிக்கட்டோடு இழுத்து மடியில் உட்கார வைத்தேன்.

“ஓய்.. நான் முடி வெட்டி விட்றேன்பா. கரடி மாதிரியே இருக்க பாக்க. ஹா ஹா..”

“ம்.. ஹே.. எனக்குப் பாப்பா வேணும்”

“சரிதான்.. இருடா கொரோனா முடியட்டும்” என்று திரும்பி கண்களைப் பார்த்தாள். அதனுள் ஆழ ஊடுருவி, “உனக்கு என்னடா கொறை வெச்சேன்.. திடீர்னு பாப்பா கேக்ற” என்றாள்.

“அடப் போடி..”

“நான் இன்னும் அதுக்கு ரெடி ஆகலை..”

ஆடைகளைக் கலைந்து கட்டிலில் உடல் பின்னி, முத்தங்கள் சொரிந்து, ஹிக்கி பதித்து முனகல் கேட்டதும் இயங்க ஆரம்பித்தேன். பாதி மயக்கத்தில் தொட்டு உணர்ந்து, “நீ காண்டம் போடலையா?” என்று அதிர்ந்தாள். நீடித்த மவுனம் கண்டு கோபம் கொண்டு நெஞ்சில் அடித்துவிட்டு ரெஸ்ட் ரூமுக்கு ஓடினாள்.

அவள் திரும்பி வந்தபோது, “சாரி டி.. தெரியாம” என்று இழுத்தேன்.

“யு ஆர் எ மேல் சாவ்னிஸ்ட்.. ஈகோயிஸ்ட்.. என் அனுமதி இல்லாம இப்படியா பண்ணுவ?” கத்திக்கொண்டே கதவை அடித்து சாத்திவிட்டுப் போனாள்.

என் தவறுதானே.. அலமாரியில் துழாவி மனநல மருத்துவர் முன்பு பரிந்துரைத்த ஆண்டி சைக்காட்டிக்ஸ் மாத்திரை ஒன்றை விழுங்கி மிடறு தண்ணீர் குடித்தேன். அவர் போதுமென்று நிறுத்தச் சொன்னதை அலட்டிக் கொள்ளாமல் வேண்டிய போதெல்லாம் உட்கொள்கிறேன். உடலும் உள்ளமும் அழுக்குப் படிந்து நாற்றம் வீசுவதை உணர்ந்து ஷவர் திறந்து சருமத்தை குளிர்வித்ததும் மோகம் பற்றிக் கொள்ள, முந்தைய தினம் போலவே அன்றும் சுயமைதுனம் அனுபவித்தேன். மனம் லேசாகி சஞ்சலங்கள் அடங்கி வெளியே வந்து, இல்லம் முழுக்க அவளைத் தேடினேன். இந்த அடுக்குமாடி குடியிருப்பு தாண்டி அவளால் சென்றிருக்க முடியாதே.. சீல் செய்யப்பட்ட பகுதி ஆயிற்றே இது!

ஆஃபிஸ் மேனேஜர் அழைத்து ரிப்போர்ட் ஒன்றை கேட்டார். அடுத்த இரண்டு மணிநேரத்திற்குள் அனுப்பச் சொல்லி தொடர்பைத் துண்டித்தார்.

“டொக்.. டொக்..” கதவு தட்டப்பட, அதைத் திறப்பதற்குள் காலிங் பெல்லும் அடிக்கப்பட்டது.

“வரேன்.. வரேன்”

முகக்கவசம், கையுறை சகிதம் பாதுகாப்பாய் நின்ற சுகாதாரத் துறை அதிகாரிகள், கொரோனா பரிசோதனைக்கு அழைத்தனர். மாஸ்க் அணிந்து, “இருங்க மேம்.. வைஃப் கீழ போய்ருக்காங்க. தோ கூப்பிட்றேன்” என்று அவளுடைய அலைபேசியை அழைத்தேன்.

“ஜஸ்ட் மூவ் ஆன்.. ஒரு மாசம் ஆச்சு நாம பிரிஞ்சு. மறுபடியும் மறுபடியும் கூப்டின்னா போலீஸ் கிட்ட போவேன்” தொடர்பைத் துண்டித்தாள்.

அதிர்ந்து போய் சோஃபாவில் உட்கார்ந்து தண்ணீர் பருகினேன். தாய் பசியில் செத்தது தெரியாமல் போர்வையைப் பிடித்து இழுத்து எழுப்ப முயன்ற குழந்தை பற்றி உருக்கமாக ஆங்கில செய்தி ஊடகத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். ஏழைகளுக்கு, விவசாயிகளுக்கு, நடுத்தர மக்களுக்கு இருபது லட்சம் கோடி ஒதுக்கியிருப்பதாக சொன்னார்களே. கிறுகிறுப்பு இன்னும் அடங்கவில்லை.

“சார்.. உங்க அப்பார்ட்மெண்ட்ல ஆல்ரெடி கொரோனா பாஸிட்டிவ் கேஸ் இருக்கு. சீக்கிரம் வாங்க..” அதிகாரி எச்சரித்தார்.

அவர் வாயையே பார்த்தேன். முகம் சுருங்கி உடலெலாம் தோல் கரைந்து சாம்பலாகி காற்றில் பறந்து கலந்து கதவு படாரென்று அடித்தது.

மறுபடியும் மேனேஜர் கூப்பிட்டு, “ரிப்போர்ட் நல்லா வந்துருக்கு. நான் சில இன்ஃபர்மேஷன் தரேன், சேத்து தரியா” என்று கேட்டார்.

“கண்டிப்பா.. வொய் நாட்”

எங்கள் சம்பாஷணை சத்தமாக இருந்திருக்க வேண்டும். தூக்கம் கலைந்து தமிழ் இலக்கியா என் முன்னால் கிடந்த மெத்தையில் படுத்து கொசுவலைக்குள் கை-கால்களை ஆட்டிக் கொண்டிருந்த ஆறு மாதக் குழத்தையைக் கொஞ்சினாள்.

“ஹே.. சாரி. என்கிட்ட பேச மாட்டியா” என்றேன்.

“நீ பண்ணதால தான இப்படி..” உப்பிய வயிற்றைத் தடவிக் காட்டினாள்.

“அப்ப அந்தக் குழந்தை..?”

“எந்தக் குழந்தை.. யு ஆர் கிரேஸி!”

அவள் பக்கத்தில் குழந்தையும் இல்லை கொசுவலையும் இல்லை. அவளருகே அமர்ந்து சில வாரம் பின்னப்படாமல் சிக்கு பிடித்த தலையைக் கோதினேன். ஸ்கைப் காலில் மீண்டும் ஆஃபிஸ் கூடுகை தொடங்கியது. மடிக்கணினியை எடுத்துக் கொண்டு அறைக்குள் விரைந்தேன். கட்டிலில் படுத்திருந்தவள், “வா.. டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். இப்டி உக்காரு” என்று வழி விட்டாள். அவள் வயிற்றைத் தடவி, தொப்பை மட்டுமிருப்பதை அறிந்து ஆறுதலானேன்.

“என்னடா.. பாப்பா வேணுமா?” என்றாள்.

*கிரிஷ்.. கிரிஷ்..*

விளிக்கப்பட்டதும் புதிதாக எடுத்த டாஸ்கின் ஸ்டேட்டஸை சொல்லி முடித்தேன். இந்த டீலாவது ஓகே ஆனால் நன்றாக இருக்குமென்று மேனேஜர் பெருமூச்சு விட்டார்.

ஓடிக் கொண்டிருக்கும் ஃப்ளாஷ் நியூஸ் பார்த்து  உள்ளே அடித்துக் கொள்ள, ஹெச்.ஆரை இரண்டு முறை தொடர்பு கொண்டேன். திரும்ப அவரே கூப்பிட்டு, “சொல்லுங்க க்ரிஷ்.. வாட் கேன் ஐ டு ஃபார் யு?” என்றார்.

“நம்ம இன்ஷுரன்ஸ் பாலிஸில கொரோனா கவர் ஆகுமா? ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனா, எவ்ளோ வரைக்கும் கவர் ஆகும்?”, படபடப்போடு கேட்டுக் கொண்டே போனேன்.

“க்ரிஷ், கூல் டவுன்.. உங்களுக்கு கொரோனா வராது. நல்லதையே திங்க் பண்ணுவோம். மூணு லட்சம் வரைக்கும் கவர் ஆகும்னு நெனைக்றேன். ஏஜெண்ட் நம்பரை அனுப்பி வெக்றேன், அவர் நம்பரை எமெர்ஜென்ஸிக்கு வெச்சுக்கோங்க”

“ஓ.. மூணு லட்சம் தானா. அப்ப லேசான கொரோனா வந்தா பெட்டர்”. பேசி முடித்ததும் மீண்டும் கடமை அழைத்துக் கொண்டது.

வேலை எதிர்பார்த்ததற்கு முன்பே முடிந்ததால் பால்கனி சென்று தூர நீலவானத்தை வெறித்தேன். காஃபி கோப்பையை நீட்டி உரசிக் கொண்டு நின்றவளின் நெடிய கால்கள் மீது கவனம் சென்றதும் காதல் என்னுள் பற்றிக் கொண்டது. நீண்டதொரு நா தழுவிய முத்தத்திற்குப் பின் அவளைக் கட்டிலில் உட்காரச் செய்தேன். இந்த முறை உஷாராக நிரோத்தை முன்கூட்டியே மாட்டி முயங்கியதும் அவள் மீது விழுந்தேன்.

“லெட்ஸ் நாட் டிலே.. வில் யு மேரி மீ?” என்றாள். தென்னை மரத்து அணில் எழுப்பிய சத்தத்தை ஒத்திருந்தது அவளது கீச்சு குரல்.

***

ஹரிஷ் குணசேகரன், தற்போது சென்னையில் வசிக்கிறார். காக்டெயில் இரவு, கேப்புச்சினோ என இரண்டு நூல்கள் வெளியாகியுள்ளது. ஆசிரியர் தொடர்புக்கு – hkrishnan21@gmail.com

சனிப்பொணமும், அம்மணியின் சல்லியங்களும்

0

பிரபு தர்மராஜ்

பூயானுக்கு வில்லுக்குறி பக்கம் அம்மணி என்று ஒரு நங்கையோடு சொல்லவொண்ணாக் காதல் இருந்தது. அதை மறைமுகக் காதல் அல்லது கபடக்காதல் என்று ஏனையோர் சொல்வதை விரும்பாமல் அவளை ஒரு தனி வீடு எடுத்தமர்த்தி காதல் செய்து வந்தான். ஏற்கனவே நான்கு பிள்ளைகள் இவனுக்கும், மூன்று பிள்ளைகள் அம்மணிக்கும் இருந்தார்கள். தன்னுடைய மனைவி தில்லையம்மாளையும், பிள்ளைகளையும் விரட்டி ஒருசில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் அதற்கடுத்ததாக ஏழெட்டு கூம்புகளைக் கடந்து அம்மணியிடம் வந்து தஞ்சம் புகுந்திருந்தான்.

திடீரென்று ஒருநாள் நடுச்சாமத்து தீராக்காதலின் முடிவில் அவள் வாயிலிருந்து நுரை தள்ளியதைக் கண்ட பூயானுக்கு ஒரே வியப்பு.

‘செவத்துமுடிவா எதுக்கு இப்புடி கெடந்து துடிக்கா? வாயிலேர்ந்து என்னத்த வருகு?’ என்று எண்ணிக் கொண்டே,

“எட்டீ அம்முணி? எளா! என்னட்டீ கெடந்து துள்ளுக?’ என்று கேட்கும் போதே அம்மணியின் கண்கள் நிலைகுத்தின. ‘ஸ்கலிதம் கொடுத்த இன்பமாயிருக்கும்’ என்று எண்ணிக் கொண்ட பூயானுக்கு அவள் சன்னி கண்டு மரித்த காரியம் சற்று நேரங்கழித்து உறைத்தது. துடித்துப் போனான்.

ஐய்யோ! செத்துப் போயிட்டியா எங்கண்மணி! வெப்ராளம் தாங்காமல் அழுதான். இப்படியொரு சூழலை அவன் கற்பனை செய்து கூடப் பார்த்ததில்லையாதலால் அவனுக்கு அந்த நிகழ்வு பேரதிர்ச்சியாய் அமைந்து போனது. அந்த சமயத்தில் அவள் அணிந்திராத அவளின் உள்ளுடைகள் மற்றும் இறுதியாய் அவள் அணிந்திருந்த கனகாம்பரப்பூ, அவளது முடிக்கற்றை மற்றும் அவளது இன்னபிற சாதனங்களை மூட்டையில் கட்டி எடுத்துக் கொண்டு தன்னுடைய மனைவி தில்லையம்மாளின் வீட்டிற்குக் கொண்டு வந்து வைத்து விட்டு மறுபடியும் அம்மணியின் உயிரற்ற உடல் இருந்த இடத்திற்கு வந்து கதறி அழுதான். அவளது உடலில் உடைகளை அணிவித்து விட்டு வீட்டின் கதவைத் திறந்து வைத்து விட்டு மறுபடியும் வெளியே போய் விட்டான்.

பக்கத்து வீட்டாரின் உபயத்தால் அவளின் சாவு அறியப்பட்டு போலீஸ் வந்தது. விசாரித்தார்கள். அம்மணியை விசாரிக்க முடியாத காரணத்தால் அவளின் சட்டரீதியான கணவன் பாலையனை விசாரித்தார்கள். அவன் பூயான் குறித்து சொல்லவே பூயானைப் போலீஸ் தூக்கியது.

விசாரணையிலும், உடற்கூறு பரிசோதனையிலும் ‘அம்மணியின் மரணம் இயற்கையானது’ என்ற காரணத்தால் பூயான் விடுதலையானான். போலீஸ் அவனை விட்டுவிட்டாலும்கூட அம்மணி பூயானை விட்டுவிடவில்லை. தூக்கத்தில் வந்தாள், விழிப்பில் வந்தாள், கனவில் வந்தாள், கக்கூசிலும் வந்தாள். பூயான் மிரண்டு போனான்.

ஆனாலும் அம்மணி மீதிருந்த மையலும்,அம்மணி அளித்த அபாரமான காதலும் அவள் மீதான காதலை அதிகப்படுத்தி, அவளது பிரிவின் மீதான துயரத்தை அதிகப்படுத்தியவண்ணம் இருந்தன. ‘குடிகுடி’ என குடித்துத் தொலைத்தான்.

நள்ளிரவுகளில் அம்மணியின் வரவு ஆரம்பத்தில் பயமுறுத்தினாலும், அவள் மீதிருந்த எண்ணங்கள் அவளது வரவையே விரும்பியது. முதல்நாள் அம்மணி வந்து பூயானிடம் கேட்டாள்.

அன்னிக்கி ராத்திரி மட்டும் நீரு ஒரு கம்பிய எடுத்து எங்கையில குடுத்திருந்தீருனா நாஞ்செத்துருக்க மாட்டம்லா ஓய் ?

பூயான் சிரித்துக் கொண்டே, கம்பி ஓங்கையிலத் தானட்டீ இருந்து?

அம்மணிக்கு வெட்கம் தாங்காமல், அந்தக் கம்பி இல்ல மச்சாய்ன்! இரும்பிக் கம்பி!

பூயான் அவளைக் கட்டியணைத்துக் கொண்டான். கார்த்திகை மாசத்துக் குளிருக்கு அம்மணி ஒரு பெரும் கணப்பாக மூண்டு அவனைக் குளிர் காய வைத்து விட்டு விடியற்காலையில் விடைபெற்றாள். பூயானுக்கு ஒருவிதமான அச்சம்.

‘இவதான் செத்துப் போய்ட்டாளே? இவ எப்புடி இங்க வந்தா? நம்ம வூடுதான் இவளுக்குத் தெரியாதே? உயிரோட இருக்கும்போதே இவ்ளோ சொகமா இருந்ததில்லியே? எப்புடி இது ருசுப் பட்டிச்சி?’ என்றெல்லாம் கேள்விகள் மண்டையை குடைந்தது.

விடியற்காலை மூன்றரை மணிக்கு வயலுக்குப் போன செங்குட்டுவன், தனக்கு முன்பாக பெண்ணொருத்தி வயல்வரப்பில் நடந்து செல்வதை நிலா வெளிச்சத்தில் கண்டு திகைத்தான். தன் கையிலிருந்த லாந்தர் விளக்கை உயர்த்தியபடியே சத்தம் போட்டான்,

‘யம்மாளு யார்ம்மோ அது ?’

அந்தப் பெண் நிற்கவில்லை. செங்குட்டுவனுக்கு கோபம் வந்து விட்டது,

‘தள்…..ளே…..! யாருன்னு கேக்கியம்லா புள்ளே ! செவி கேக்காதோ? யாரது ?’

அவள் நடந்து போய்க் கொண்டேயிருந்தாள். செங்குவும் வேகமாக நடக்க ஆரம்பித்தான். இவனது வேகத்துக்கு இருமடங்கு வேகத்தைக் கூட்டி அவள் போய்க் கொண்டேயிருந்ததைக் கண்ட செங்கு அவளை துரத்த ஆரம்பித்தான். அவள் போன வேகம் செங்குவுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்தாலும் அவனால் நம்ப முடியவில்லை. ‘ஒரு பெண்ணால் இந்த ஈர வரப்பில் இத்தனை வேகமாக ஓட எப்படி முடிகிறது?’

மறுபடியும் கத்தினான், எட்டீ ! கையில மாட்டுனேன்னு வச்சிக்கா வெளுத்துப்புடுவேன் ஆமா !

சடாரென அந்தப் பெண்ணைக் காணவில்லை. செங்கு நின்றுவிட்டான். எங்கே போனாள் ? என்று நினைத்துக் கொண்டவனின் முதுகில் எதுவோ தட்டுப்படவே திரும்பியவன் மிரண்டு போனான். அவனது மூக்கின் நுனியில் அவளது மூக்கு உரச அவள் கேட்ட கேள்வியில் அவனது மூச்சு நின்று போனது.

இந்தாத்தானே நிக்கேன்? எங்க வெளு பாப்போம் ?

செங்குட்டுவன் ஒரு குட்டுவத்தைப் போல வயலுக்குள் உருண்டு விழுந்தான். விடியற்காலையில் வயலுக்குப் போனவர்கள் தூக்கிக் கொண்டுபோய் புலிதடவி வைத்தியரிடம் கொண்டு போனார்கள். அவர் சொன்னார்,

“எவகிட்டயோ வம்பிழுத்துருக்கான்! சின்ன வயிசுக்காரி பாத்த பார்வ கொஞ்சம் அதிகப்படியாயிட்டு! நல்ல காலம் பொழச்சி வந்ததே பெரிய காரியோம்! இனிமேலால் கெழக்கு வெளுக்கதுக்கு முன்னால வீட்டுநடையத் தாண்டிராத! செத்த!”

செங்குட்டுவனின் மனைவி சூடாமணிக்குக் கடுங்கோபத்தில். “எவகிட்ட  வம்பிழுத்தாரு வைத்தியரய்யா? அதுவும் அந்த ஆவாத நேரத்துல?”

வைத்தியர் சிரித்தவாறே சொன்னார், “அது பிரேதம் மக்கா ! ஆளு இப்போ சீவனோட இல்ல ! ஒங்கூர்க்காரன் எவனோ கூட்டியாந்து கூட வச்சிருக்கான் ! அவனுக்க முச்சூட்டு ரெத்தத்தையும் குடிக்காம அவ போமாட்டா! இவன் வேற வலிஞ்சி போயி அவ காலுக்க வுழுந்துருக்காம் பாரேன்! என்று சொல்லிக் கொண்டே படுத்துக் கிடந்த செங்குவிடம் கேட்டார்,“எவ எங்க போனா ஒனக்கென்னடே? கழுதைக்கி சீலைய கெட்டி வுட்டாலும் ரெண்டு வட்டம் போட்டு ஒய்த்தி பாக்காம போவப்புடாது! அப்புடித்தானே?”

சூடாமணி சூடானாள், “இன்னிக்கி வீட்டுக்கு வாரும் ஒமக்கு! நல்ல கை வைத்தியம் பாத்தாத்தான் சோக்கேடு கொணமாவும்… நா ஒருத்தி பத்தாது இல்லியா ஒமக்கு? ஊருல போரவ, வாரவ பின்னால போய்கிட்டு, இங்க வந்து கவுட்டைக்கெடையில கையக் குடுத்துக்கிட்டு படுத்துக்கெடக்கியா மனுசா?”

வைத்தியர் சொன்னார்,“எம்மாளு கையக் கிய்ய நீட்டிப் புடாத ! மத்தவ உள்ளயாக்கும் இருக்கான்னு நெனைக்கேன்… ரெட்ட நாடி அடிக்கி !”

சூடாமணி பயந்து போனாள், “என்னய்யா சொல்லுரிய ? ரெட்ட நாடியா? கெர்ப்பமாவா இருக்காரு ?”

வைத்தியர், “பொம்பளக்கி ரெட்ட நாடி அடிச்சா கெப்பனக்காரி, ஆம்பளைக்கி ரெட்டநாடி அடிச்சா இன்னொரு ஆத்துமா அவனுக்க சரீரத்துக்குள்ளார இருக்குனு அர்த்தம் !”

செங்குவும், சூடாமணியும் பயந்து போனார்கள். “பயப்படத்தேவையில்லை!” எனச் சொல்லி தாயத்து ஒன்றைக் கட்டி இருவரையும் அனுப்பி வைத்தார் புலிதடவி வைத்தியர்.

செங்குவை மாதிரியே பலரும் அம்மணியால் மணி வீங்கித் திரிந்தார்கள். பலரும் அம்மணியின் அருவத்தைக் கண்டதாகச் சொன்ன சேதிகள் பூயானின் காதுகளை வந்தடைந்தது. இளைஞர்கள் பலருக்கும் சொப்பனஸ்கலிதம் ஏற்பட்டு துரும்பாய் இளைத்துப் போகவே ஊருக்குள் கொஞ்சம் சாமியார்களின் நடமாட்டம் உருவானது. விபூதியும் கையுமாக அலைந்தார்கள். பூயானும் எலும்பும் தோலுமாய் ஆகி நோயில் விழுந்தான். ஊரிலுள்ள ஆட்களும் மாலை ஆறுமணிக்கு மேல் தங்களுடைய நடமாட்டத்தை நிறுத்திக் கொண்டார்கள்.

இரவு ஏழுமணி இருக்கும். நல்லமழை பெய்து கொண்டிருந்தது. வயலுக்குள் மேய்ந்த மாடுகளைப் பத்திக் கொண்டு, தலையில் கோணிச்சாக்கு ஒன்றைப் போர்த்தியபடி நடந்து வந்து கொண்டிருந்தார்‘அடாசு நடேசன்’. நாட்டு அடவுகளில் சிறந்து விளங்கியதால் ‘அடாசு’ என்ற புனைப்பெயர் ஒட்டிக் கொண்டது.

நடேசன் திடகாத்திரமான ஆள். ஒரே கையில் இரண்டு காளைகளை ஓட்டிக் கொண்டு வருவார். அன்றும் அப்படித்தான். ஊரே ஆழ்ந்த அமைதியில் இருக்க ஆட்கள் நடமாட்டமில்லாமல் இருந்த தெருவில் அரையிருட்டில் பயமில்லாமல் வந்து கொண்டிருந்தவர் தெருவின் முடிவில் இருந்த பெரிய படிக்கட்டுகளில் இறங்க எத்தனித்தபோது, மாடுகள் இரண்டும் எதையோ கண்டு மிரண்டு அசாத்திய பலங்கொண்டு இழுத்ததில் படிக்கட்டுகளில் உருண்டு விழுந்தார். காலிலும், தலையிலும் அடிபட்டு மயங்கிக் கிடந்தவரை மீட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு போனபோதுதான் அது அம்மணியின் கைங்கர்யம் என்பது தெரிந்தது.

அன்றிரவு அம்மணி பூயானைப் பார்க்க வந்திருந்தாள். பூயான் அவளைப் பார்க்கவே பயந்தான். அவள் பக்கம் முகத்தைத் திருப்பாமலே சொன்னான்,

“இனிமேலும் நீ இங்க வராதட்டீ! செத்துப் போனதுக்கப்புறமும் நீ எதுக்கு வந்து எனக்க உயிர வாங்குக ? எல்லுந்தோலுந்தான் எனக்கிட்ட மிச்சமிருக்கு!

அம்மணி சத்தமாகச் சிரித்தாள், யாம்மச்சாய்ன் ! ஒன்னிய பாக்க வரப்புடாதுன்னி நீ யாஞ்சொல்லுக? ஒம்பொண்டாட்டி புள்ளையள ஒதுக்கி வச்சிக்கிட்டு, என்னைய தேடி வந்தவன் நீ! ஒன்னைய இங்கேர்ந்து கொண்டு போகாம நாம்போவ மாட்டேன்… நீ எனக்க உயிருல்லா ? நீ இல்லாம நா எப்புடி இருக்க? சொல்லு பாப்போம்!

பூயானுக்குக் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. “அடிப்பாவி செறுக்கி ! இதுக்குப் பேருதாம் பேய்ப்பாசமா ? அடியே தில்லையம்மா ஒன்னிய தவிக்க வுட்டுட்டு இந்த சண்டாளி முண்டைக்க முந்தியில படுத்துக் கெடந்தனே ! எனக்கு இது தேவதாண்டியேய்… இவ என்னைய கொண்டு போவாம வுட மாட்டாளம்மா!” பூயான் மனதுக்குள் அழுதான்.

தில்லையம்மாள் ஒரு பாவம். புள்ளைப்பூச்சி. பூயானைக் கட்டிக் கொண்டதைத் தவிர்த்து அவள் வேறு எந்த பாவமும் செய்யவில்லை. வேண்டும் நேரமெல்லாம் மரம் போலக் கிடந்து நான்கு பிள்ளைகளைப் பெற்றுவிட்டு, செலவுக்குக் காசு கேட்கும் நேரம் பூயான் மரம்போல இருப்பது கண்டு கண்ணீர் மட்டுமே வடிக்கும் ஒரு மரப்பாச்சி அவள்.

பூயானின் கண்களில் நீர் வடிந்தது. அம்மணி எப்போது போனாளென்றே தெரியவில்லை. பூயானுக்கு அசூயையாகிப்போனது,

செவத்து செத்தமூதி! பக்கத்து வீட்டுக்காரி மாதிரி வந்துட்டு வந்துட்டு போறாளே கடவுளே? மனுசஞ் செத்தா சொர்க்கத்துக்கோ, நரகத்துக்கோ போயிருவாம்னு சொல்லிட்டுத் திரியானுவளே இந்த வெங்கங் காவடிப் பயக்க ? இவ செத்தப்பொறமும் இங்கன கெடந்து லாத்திட்டு திரியா? எடுப்பு எடுத்துப் போயி தொடுப்பு வச்சா இப்புடித்தான் இடுப்பு செத்து அடுப்புக்க கெடக்கணும்! மனம் வெதும்பியது.

அடுத்தநாள் மாலையில் அடாசு நடேசனை வைத்தியசாலையில் இருந்து கூட்டிக் கொண்டு வந்தார்கள். வந்ததிலிருந்து புலம்பிக் கொண்டேயிருந்தார்.

அத்துட்டு ஓடுன மாடுவ எங்க போயி நிக்கோ ! இந்தப் பூயாம்பயலுக்க வூட்டுல போயி பாத்துக்கிட்டு வரணும்! என்ன எழவ இழுத்து வச்சிக்கிட்டு படுக்கையில கெடக்கானோ தெரியலையே ?

அவரது மனைவி செல்லம் நடேசனிடம் சொன்னாள்,“நேத்திக்கி வாங்குனது போறாதா ஓய் ஒமக்கு? இந்தக் கருக்கல் நேரத்துல அந்த இருளடஞ்சி கெடக்கிய வூட்டுக்குப் போவலைன்னா யாரடிச்சா ? பேசாம கெடையும்!”

நடேசன்,“இல்லட்டீ ! அந்தப் பெயலுக்கு என்னவோ பெருசா நடந்துருக்கு ! வெளிய சொல்ல மாட்டங்கான்! மூணே மாசத்துல நரி மாதிரி ஒணந்துட்டானே பாத்தியா? வுட்டா செத்துப் போயிருவாம் போலுக்கு! நாளைக்கி நாம்போயி கீரிப்பாறையில முள்ளங்காணி மந்திரவாதிய கூட்டிட்டு வந்து ஒண்ணு என்னன்னு பாக்கட்டு!”

வீட்டின் பின்னாலிருந்த சன்னலின் வழியாக நின்று கொண்டிருந்த ஒரு நிழல் இவர்கள் இருவரது சம்பாஷணைகளையும் கேட்டுக் கொண்டிருந்தது. இதை உணர்ந்த செல்லம் சன்னல் பக்கம் திரும்பவே அந்த உருவம் சட்டென விலகியது.

நடேசன் வேறு யாருமல்ல. பூயானின் ஒன்றுவிட்ட தாய்மாமாதான்.  எப்போதும் கிராளியாகவே நக்கல் பேச்சு பேசி எரிச்சலை மூட்டுவானாதலால் அவர் பூயானோடு பேசமாட்டார்.நடேசனின் வீட்டின் நேரே பின்பக்கம்தான் பூயானின் வீடு இருந்தது.

அன்று இரவு முழுவதும் மழை அடித்துப் பெய்தது. அது ஒரு சனிக்கிழமை.  வீட்டுக்குள் நீர் புகுந்து நடேசன் படுத்துக் கிடந்த பாயை நனைத்தது. தூக்கம் கலைந்து எழுந்த நடேசன் மணியைப் பார்த்தார். மணி அதிகாலை மூன்று. ஒரு முறத்தை எடுத்து தலைக்குமேல் பிடித்துக் கொண்டு வாசலில் இருந்து இறங்கி, வீட்டின் பின்பக்கம் நோக்கி நடந்தார்.

அங்கே பூயான் அம்மணியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான், “பாவம்ட்டீ எங்க மாமன்! ஒனக்க நேருக்கு அவன் எதுக்கு வந்தாஞ் சொல்லு! அவன ஒண்ணுஞ்  செஞ்சிறாத! ஒன்னய கையெடுத்துக் கும்புடுகென்!”

அம்மணி அதிர அதிரச் சிரித்தாள், “ஒம்மாமன் என்னைய தொறத்துகதுக்கு யாரோ ஒரு மந்திரவாதியக் கூட்டியாரானாமே? நேத்து அவம்பொண்டாட்டிக்கிட்ட பேசிக்கிட்டிருந்தத நா கேட்டேன்!”

பூயானுக்குப் புரிந்து போனது,‘இந்த நடேசங் கோணையன் ஏதோ வாய உட்டுருக்கான்?’ தொட்டிப்பயல்கள் சாகுங்காலத்துலயும் வாயள வச்சிக்கிட்டு சும்மா கெடக்க மாட்டனுவோ! ஏற்கனவே நேத்துதான் படிக்கட்டுல உருண்டு வாங்குனான்! இன்னிக்கி இவகிட்ட வாங்கப் போறான்! பூயானின் மனம் துக்கமுற்றதில் மீண்டும் அம்மணியிடம் கெஞ்சத் தூங்கினான்,

“எட்டீ அம்முணி!நடேசம்மாமன் அப்புடித்தான்! ஏதாவது சொல்லுவாம்! ஒரு மயித்தாயுஞ் செய்யமாட்டான்! மந்திரவாதியக் கூப்புடப் போறேம்னு சொன்னாம்லா ! இப்போ போயிக் கேட்டா கீறிப்பாற வரைக்கும்போயி மந்திரவாதியக் கூப்டணும்னா வண்டிக்கூலி ஆரு தருவான்னு கேப்பான்! கஞ்சத் தாயோளி! அவென் ஒரு வெத்துப்பொட்டாசி! சளம்புவான் ஆனா வெடிக்க மாட்டான்”

அம்மணி அசையவேயில்லை, அவளது முகத்தில் அப்படியொரு இறுக்கம். அங்கே நடேசன் படிக்கட்டில் ஏறி தன்னுடைய வீட்டின் பின்பக்கத்தில் வந்து நீர்க்கசிவை அடைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். குனிந்து நின்று கொண்டே மண்ணை அள்ளி சுவற்றின் வெப்புகளில் வைத்து பூசிக் கொண்டிருந்தார். மழை வெளுத்துக் கொண்டிருந்தது. பூசப்பூச மண் நீரில் கரைந்து போனதால் நடேசனுக்குக் கோபம் வந்தது.

“இந்த மழ மயிருக்கு ஒரு நேரங்காலங் கெடையாது! ராத்திரி பூரா பெஞ்சில்லா! காலத்த நின்னு தொலைய வேண்டியதானே? சை!”

என்று சலித்துக் கொண்டே நிமிர்ந்தவரின் எதிரில் ஒரு ஜோடி அழகான கால்பாதங்கள் தென்பட்டது.

“இது யாருக்க காலும்மோ இது? அழவோல இருக்கே? கண்டிப்பா செல்லத்துக்க காலா இருக்காது! அவளுக்க காலு கரி புடிச்சி சூப்பாஞ்சிப் போயில்லா இருக்கும்!” என்று குழப்பத்தில் நிமிர்ந்தவர் அங்கே நின்று கொண்டிருந்த அம்மணியின் வனப்பைக் கண்டு மதிமயங்கிக் கேட்டார்,

“யாருடே இது? வசந்தாதானே! இந்த நேரத்துல இங்க வந்து நிக்க? மச்சான் நெனப்பு வந்துட்டோ? வாயாம் தோப்புப் பக்கத்துல மோட்ரூ ரூம்புக்குள்ளப் போயி பேசுவோம்! மழ வேற கொதுகொது’ன்னு அடிக்கி!” என்று வாயெல்லாம் பல்லான நடேசனைக் கண்ட அம்மணிக்கு ஆத்திரம் வந்தது,

“கொல்ல வந்தவளைக் கொஞ்சவா கூப்புடுக! இந்தா வாங்கிக்கா தாயளி! என்று ஒற்றை அரையில் நடேசனைத் தரையில் கிடத்தினாள். நீர்க் கசிவைத் தடுக்கப் போன நடேசனின் பின்மண்டையில் ரத்தம் கசிந்து மழைநீரோடு கலந்து வீட்டின் முன்பக்கம் ஓடிக்கொண்டிருந்தது.

‘தன்னுடைய காதலி வசந்தாதான் தன்னைத் தேடி வந்திருக்கிறாள்! இன்று ஒரு பிடிபிடித்து விடவேண்டும்! என்று எண்ணி மனப்பால் அருந்திய நடேசன் பேச்சு மூச்சற்று மல்லார்ந்து கிடந்தார். இவையெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த பூயானின் கண்களில் நீர் வடிந்து கொண்டிருந்தது. ஆனாலும் தன்னுடைய மாமன் நடேசன் இந்த வயதிலும் காமக் கண்ணனாய் இருந்ததைக் கண்ட பூயானுக்கு ஆச்சர்யம் தாளவில்லை.

‘கெழவன் ஒண்ணும் லேசுப்பட்டவனில்லை! இந்த வயசுலயும் கொப்பனுக்க மொவனுக்கு தூக்குகே?’

அதிகாலையில் விடிந்து விட்டது. நடேசனின் மனைவி செல்லம் பாத்திரம் துலக்குவதற்காக உமிக்கரியை எடுத்துக் கொண்டே வாசலுக்கு வந்தவள், தெருவில் ஒருவிதமான நிறத்தில் மழைநீர் ஓடுவதைக்கண்டு குழம்பினாள். நடேசனின் ரத்தமும், புழக்கடையில் கிடந்த சாணியும் கலந்து தண்ணீர் கரும்பச்சை நிறத்தில் காட்சியளித்ததைக் கண்ட செல்லம் நடந்த அபாயத்தை உணர்ந்தாள்,

“எவனோ பூவரச பதம் பாத்துட்டான்!”

என்று தங்களது வீட்டின் பக்கவாட்டில் நின்றுகொண்டிருந்த பூவரச மரத்தை யாரோ வெட்டி விட்டதாக எண்ணினாள். பூவரச மரத்தின் தடியில் நீர் பட்டால் அந்த நீரானது ஒருவித எருமைச் சாணி நிறத்தில் மாறிவிடும். ஓடிப்போய் மரத்தைப் பார்த்தாள். பூவரசு குத்துக்கல் போல நின்றுகொண்டிருந்தது. அப்போதுதான் கவனித்தாள். வீட்டுப் பின்னாலிருந்து ரத்தம் வடிந்ததைக் கண்டு திகைத்து ஓடிச்சென்று பார்க்கவே அங்கே நடேசன் எவ்வளவு நேரம் கிடந்தார் என்பது தெரியவில்லை,நீருக்குள் ஊறிக் கிடந்தார். அவரது முகத்தில் ஒருவித காதல் மயக்கம் இருந்ததைக் கண்டு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.

டாக்டர் நாடி பிடித்துப் பார்த்துவிட்டு இப்படிச் சொன்னார், “ஹீ இஸ் நோ மோர்!”

இதைக்கேட்ட செல்லத்துக்குக் குழப்பம்,‘தண்ணீல கெடந்து சாவக் கெடக்கவனுக்கு மோரு எதுக்குக் குடுக்கச் சொல்லுதான் கோணப்பெய டாக்டரு?’ என்று எண்ணியவாறே டாக்டரிடம் சொன்னாள்,

“மோரா! இன்னிக்கிக் காலம்பறதானே ஒரைல ஊத்தி வச்சேன்! புளிச்சிருக்காதே வைத்தியரைய்யா!”

டாக்டர் சோர்வடைந்தார். பக்கத்திலிருந்த நர்சு சொன்னாள்,“பாட்டி! தாத்தா செத்துப் போயிட்டாரு! அதத்தான் டாட்டரு இங்கிலீசுல சொல்லுதாரு! தூக்கீட்டு போயி அடக்கத்துக்கு ஏற்பாடு பண்ணு!”

என்று சொன்னதுதான் தாமதம், செல்லம் ஒப்பாரி வைத்தாள். “ஏ அய்யா ! என்னய ஒத்தையில உட்டுட்டு போயிட்டியா?”

டெட்பாடி ஊருக்குள் கொண்டு வரப்பட்டு நடேசனின் வீட்டின் முன்பாகக் கிடத்தப் பட்டது. ஊர்த்தலைவர் கோவிந்தன் வந்தார். ஊர்மக்கள் கூட்டமாக நிறந்து நின்று கொண்டிருந்தார்கள். நடேசன் சில ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் தனது குடும்பத்தைக் கிறிஸ்தவ மதத்தோடு இணைத்துக் கொண்டிருந்த படியால் பாஸ்டரின் வரவுக்காகக் காத்திருந்தார்கள். பாஸ்டர் வந்து ஜெபித்து நடேசனின் பூத உடல் விண்ணை நோக்கிப் பயணிக்கவிருந்த நேரத்தில் ஒரு குரல் சத்தமாகக் கேட்டது,

“சனிப்பொணம் தனியாப்போவாதுடே!” இது கீழத்தெரு மரகதத்தின் குரல்,

“யாங்கொம்மய…ளி நீ கூடப் போவப் போறியா ? இது மேலத்தெரு குப்பானின் குரல்.

செத்த வீடோ, பெத்த வீடோ? கல்யாண வீடோ, சடங்கு வீடோ? சம்பந்தமே இல்லாமல் ஊர் அழைப்பை ஏற்று வருகை தந்து, சாராயத்தை குடித்துவிட்டு வாளேந்தி போர் புரியும் படைத்தளபதிகள் ஊர் ஊருக்கு உண்டல்லவா? அது போலவே தங்கள் பழைய சண்டையைக் காரணம் காட்டி மரகதமும், குப்பானும் அடிபிடிக்குத் தயாரானார்கள்.    

நீ போல தள்ளயக் கொல்லி! நா எதுக்குல சாவணும்? என்றான் மரகதம்.

நீதானே சனிப்பொணம் தனியாப் போப்புடாதுன்னு சொன்ன? தொணைக்கி வேணும்னா நீ போ’ன்னு சொன்னேன் என்று மறுமொழியளித்தான் குப்பான்.

ஊரான் வீட்டு ஒறவே! என் வீட்டு எழவே! என்பது போல நடேசன் வீட்டுக்காரர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாஸ்டர் போய்த் தடுத்து,

“என்னடே இது? துட்டி வூட்டுல வந்து நின்னுக்கிட்டு பெகளம் வக்கீதீய? எடே மரகதம்! என்ன காரியம்? சனிப் பொணம் தனியாப் போவாதுன்னா என்னடே அர்த்தம்? என்று விசாரித்தார்.

அதற்கு மரகதம்,“சாமியாராய்யா! ஒங்களுக்குத் தெரியாதது ஒண்ணுமில்ல! சனிப் பெருக்கும்’னு சொல்லுவாவள்ளா? சனிக்கெழம யாராச்சி செத்தா அந்தப் பொணம் தனியாப் போவாது… கூட ரெண்டண்ணத்தக் கூட்டிக்கிட்டுத்தாம் போவும்!”

“என்னடே சொல்லுக வினோதமா இருக்கே?” பாஸ்டர் பதறினார்.

“நாஞ் சொல்லுகது நெசந்தாம் பாஸ்டர் சாமி!” மரகதத்தின் குரலில் ஒருவித பயம் இருந்ததைக் கண்ட பாஸ்டர் கேட்டார்,

“சரி செத்தது செத்தாச்சி! சாவு எதிர்பாராதது! சனிக்கெழம’ன்னு தெரிஞ்சா நடேசன் செத்தாரு? இப்ப ஆவ வேண்டிய காரியம் என்னானு சொல்லு?

மரகதம் பாஸ்டரிடம்,“பொட்டியில ஒரு நாட்டுக் கோழிய உயிரோட கெட்டி அனுப்புனா பிரச்சின வராது!” என்று சொல்லி முடிக்கவும்,

“பாத்தியா குள்ள தா…ளி! கோழி சூப்பு நக்குகதுக்கு திட்டம் போடுகான்!” என்று ஒரு குரல் கூட்டத்திலிருந்து கேட்டது. குப்பான்தான் என்று மரகதத்திற்குத் தெரியும். பாஸ்டர் கூட்டத்தினைக் கையமர்த்திவிட்டு,

“மரகதம் சொன்னது சரிதாம்’னா ஒடனடியா ஒரு நாட்டுக் கோழிய யார் வீட்டுலயாவது புடிச்சிட்டு வாங்க!” என்று சொல்ல, சபைத்தலைவர் அங்கமுத்து பாஸ்டரிடம் சொன்னார்.

“பாஸ்டர்! நாமல்லாம் கிறிஸ்துவின் பிள்ளைகள்! இந்த சடங்கெல்லாஞ் செய்யப்புடாது! தெய்வ குத்தமாயிரும்!”

பாஸ்டர் குழம்பிப் போய்,‘மரகதத்தின் எச்சரிக்கையா? மத நம்பிக்கையா? எதை நம்ப? சரி நடக்கது நடக்கட்டும்!’ என்று சொல்லி நாட்டுக்கோழியின் துணையில்லாமலேயே நடேசனின் சவப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு போய் புதைத்தார்கள்.

பதினாறு நாட்கள் கழிந்தன. அன்று நடேசனின் அடியந்திரம். இலை போட்டு மூலைக்கு சோறு வைத்து, அதைத் தின்ன விடாமல் நடேசனை  சட்டத்துக்குள் புகைப்படமாக அடைத்து வைத்து மாலையைப் போட்டிருந்தார்கள். நடேசன் சிரித்த முகமாக இருந்தார்.

மறுநாள் பாஸ்டர் வீட்டிலிருந்து கூச்சல் கேட்டது, “அந்தா நிக்கான் நடேசன்! என்னையக் கூப்புடுகான்! அய்யோ நடேசனுக்க ஆத்துமா அந்தா நிக்கி ! என்னையக் கூப்புடுகு! யம்மோ! என்று கதறியவாறே தரையில் சாய்ந்தாள் பாஸ்டரின் தாய் பவுலி.

“வாராவினை வந்தாலும் சோராதே மனமே!” என்ற பாடலோடு, ஜெபிக்கப் பட்ட பவுலியின் வெற்று உடல் குழிக்குள் புதைக்கப்பட்டு பரமண்டலத்தை நோக்கி வீசப்பட்டது.

அன்று மாலையில் மரகதம் குடித்துவிட்டு கரகம் எடுத்து ஆடினான்,

“நாஞ் சொன்னம்லா தாயோளியளா? ஒரு நாட்டுக் கோழிய குடுக்கதுக்கு மாச்சப் பட்டு அநியாயமா ஒரு உயிரு நஷ்டமாப் போச்சே! இனி அடுத்தது யாரு தெரியுமா? நம்ம மேலத்தெரு குப்பான் கூயாந்தான்!”

இதை வீட்டுக்குள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த பாஸ்டரின் மனைவி லதாவுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. நல்ல வேளை அன்னிக்கி மாத்திரம் நாட்டுக்கோழிய நடேசனுக்க பாடி கூட அனுப்பியிருந்தா இந்த கெழவி இன்னும் இங்கன கெடந்து லாந்திக்கிட்டு நமக்க சீவன வாங்கீருப்பா!

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட குப்பானுக்கு குளிர் தூக்கித் தூக்கி அடித்தது,

‘இன்னும் பதினஞ்சி நாளைக்கிதான் நம்ம நடமாட்டம்! அதுக்குப் பொறவு நம்மளையும் குண்டு வெட்டி மூடிருவானுவோ!’

உயிர் பயம் வாட்டவே குப்பான் தளர்ந்து போனான். ஊருக்குள்ளும் துக்கம் குடி கொண்டது. தினமும் குப்பானின் வீட்டுக்குள் சென்று ஆட்கள் துஷ்டி விசாரித்தபடி இருந்தார்கள். உலகிலேயே ஒரு மனிதன் சாவதற்கு முன்பாக அவனைக் குறித்து துக்கம் அனுசரித்த நிகழ்வு அங்கே அரங்கேறியது. குப்பானுக்கு கோபம் தாங்கவில்லை. ஆனாலும் படுக்கையை விட்டு எழ முயற்சிக்கவில்லை.

“இன்னும் ரெண்டு நாளுதானே! படுத்தே கெடந்து செத்துருவோம்” என்று பிடிவாதமாகப் படுத்துக் கிடந்தான்.

ஊரே இவ்வாறு இருக்க பூயானின் வீட்டின் அன்றிரவு கடுமையான ரத்த வாடையும், மல்லிகைப் பூ வாடையும் சூழ்ந்து அந்த இரவையே கலங்க வைப்பதாக இருந்தது.பூயான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். ஒரு மிகப்பெரிய புகைமூட்டத்தினுள் இருந்து பலத்த சத்தத்தோடு கோரமாகச் சிரித்த படியே தோன்றினாள் அம்மணி. மிகுந்த கவர்ச்சியான தோற்றத்தோடு அவள் நின்றதைக் கண்ட பூயான் களைப்படைந்தான்.

“மூத்திரம் அடிக்கக் கூட வக்கில்லாமக் கெடக்கேன்! இந்த லெச்சணத்துல சரோஜாதேவி மாதிரி சேலையக் கெட்டிட்டு வந்து நிக்காளே நாசமுத்துப் போனவ? போட்டீ அந்தால!” பூயானுக்குக் கோபம் வந்துவிட்டது.

‘ஊருக்குள் மூன்றாவது சாவு யாருடையது?’ என்ற மிகப்பெரிய கேள்வி நடமாடும் சூழலில் பூயானுக்கும் அந்தக் கேள்வி எழாமல் இல்லை. ‘பட்டியலில் நம் பெயர் இருந்து விடக்கூடாதே?’ என்ற அச்சத்தில் கிழவிகள் யாரும் வெளியே நடமாடவில்லை. கிழவர்களும் அப்படியே திரிந்தார்கள். மரண பயம் யாரை விட்டது?

பூயானுக்குத் தன் வாழ்வின் மீதான நிலைப்பாடு ஒன்றுமில்லாததாய் ஆகிப் போனது. மரணப் படுக்கையில் கூட எதிரில் மப்பும் மந்தாரமுமாய் நிற்கும் அம்மணியை எழுந்து போய் ஒரு முத்தமாவது கொடுத்து விடலாம் என்றால் அதற்கும் வழியில்லை.

எழவே வழியில்லை! எழவு முத்தம் ஒண்ணுதானா குறைச்சல்? என்று தோன்றியது. மனைவி, மக்களைத் தெருவில் விட்டேன்! வம்படியாய் மாமன் நடேசன் செத்தான்! அவனால் பாஸ்டரின் தாய் பவுலி செத்தாள்! அடுத்த மூன்றாவது பலி யார் என்பது தெரியாமல் ஊரே உருக்குலைந்து கிடக்கிறது! பூயான் சுற்றிமுற்றிப் பார்த்தான். அம்மணி ஒரு ஓரமாய் அமர்ந்து தலையைத் தன் மடிக்குள் புதைத்துக் கொண்டு உறுமிக் கொண்டிருந்தாள். அவளது அந்த உறுமல் சத்தம் கொடூரமாய் இருந்தது, பூயான் சன்னமின்றி அவளிடம் கேட்டான்,

எட்டீ அம்முணி! மூணாவதா யாருக்க ஈரக்கொலைய உருவப் போற ?

அம்மணியிடம் அரவமே இல்லை. அந்த அறை அத்தனை நிசப்தமாக இருந்தது. களபம் மணந்து கொண்டிருந்தது. வீட்டைச் சுற்றிலும் வினோதமான ஒலிகள் எழுந்த வண்ணமிருந்தது. அம்மணியின் மவுனமும், அந்த ஆழ்ந்த அமைதியான சூழலும் படுக்கையில் கிடந்த பூயானுக்குக் கலவரத்தை உருவாக்கியிருந்தது.

அம்மணியிடம் சத்தமாகக் கத்தினான்,“எதுக்கு என்னய இந்தப்பாடு படுத்துக! ஒங்கூட படுத்தது ஒரு குத்தமாட்டீ படுக்காளி முண்ட!”

இதைக்கேட்டு ரவுத்திரமானாள் அம்மணி. இருந்த இடத்திலிருந்து அப்படியே அந்தரத்தில் எழும்பி அந்த அறையின் மையத்தில் காற்றில் மிதந்து கொண்டிருந்தாள் அம்மணி. அவளது முகம் அத்தனை விகாரமாக இருந்தது. பூயானை உயரத்தில் இருந்து பார்த்துக்கொண்டே அகோரமாகச் சிரித்தவள் “நீதாம்லே மூணாவது சாவப்போறவன்!” என்று ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டே பறந்து வந்து பூயானின் சங்கைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சினாள். பூயான் பெருங்குரலெடுத்து அலறிக்கொண்டே கட்டிலில் இருந்து கீழே விழுந்தான்.

கீழே இருந்த ஒரு ஜோடிக் கால்களைப் பிடித்துக் கொண்டு கதறினான். “என்னய உட்டுரு தாயே!” என்று கதறி அழுதான். அந்தக் கால்கள் மிகவும் சிறியதாக இருந்தது கண்டு குழம்பி நிமிர்ந்து பார்த்தான். அது பூயானின் மூன்றாவது மகள் குட்டியம்மாள்.

பூயானுக்கு மீண்டும் துக்கம் பீறிட்டது,“நீயா மக்கா அப்பாக்க சங்கக் கடிச்சி ரெத்தங் குடிக்கப் போற?”

குட்டியம்மாள் சொன்னாள்,“எப்போய்! பள்ளியோடத்துக்குப் போறேன்! முட்டாயி வாங்கப் பைசா தா!”

மகளின் காலைப்பிடித்துக் கொண்டு கதறும் சத்தம் கேட்டு வந்த தில்லையம்மாள் பூயான் தரையில் கிடந்த கிடையைக் கண்டு சிரித்து உருண்டாள்.

“மான ரோசம் இருக்கா ஓய் ஒமக்கு? புள்ளைக்க கால்ல உழுந்து கும்புடுகீறே?ப்த்தூ! ஊர்ல உள்ள ஒருத்தியையும் உடுகது கெடையாது! தோவாள லெச்சிமி! தேரூரு பாமா! களக்காட்டு ருக்குமணி! அடையாமட ராதா! அறுக்கத் தெரியாதவங் கோமணத்துல அறுவத்தோறு அருவாங்குற மாதிரி! வூட்டுல அள்ளித் திங்காதவன் தெருவுல கிள்ளி நக்குனானாம்! கண்டவ வீட்டுல போய்ப் படுத்துக் கெடந்துகிட்டு, நடுச்சாமத்துல பூளலு முட்டக் குடிச்சிப்பூட்டு வந்து கெடக்கணும்! வாற வழியில கண்டதையுங் கூட்டியாந்துகிட்டு ராத்திரில கெடந்து பேயி! நாயின்னு ஊளையிடணும்! இதே பொழப்பாப் போச்சி அறுதக் கூயானுக்கு! போவும்… போயி பல்லத் தேச்சிக்கிட்டு வந்து கஞ்சியக் குடியும்! அப்பொத்தானே ஊரானுக்க தெங்குல தெம்பா ஏற முடியும்?” என்று மானங்கெட்ட கேள்விகளைக் கேட்டுவிட்டு அடுப்படிக்குள் நுழைந்தாள் பூயானின் மனைவி தில்லையம்மாள்.

பூயானுக்கு வியர்த்து விட்டிருந்தது. ஒரே ஒரு ஆசுவாசம்,தில்லையம்மாள் வாசித்த பெயர்ப் பட்டியலில் வில்லுக்குறி அம்மணியின் பெயர் இல்லாமலிருந்தது.

“இத்தன நேரமு நாங் கண்டது சொப்பனமா? இத்தாந்தண்டியா நீண்டுருக்கு கடவுளே?‘ஆயிரந்தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ படம் கணக்கா எவ்ளோ பெருசு எம்மா?

பூயானுக்குத் தலைசுற்றியது. புழக்கடையில் நின்றிருந்த மரத்திலிருந்து வேப்பங்குச்சியை ஒடித்துப் பல்லைத் தேய்த்தபடியே பார்த்தால்,  தொழுவத்திலிருந்து மாடுகளை அவிழ்த்துக் கொண்டு வயலுக்குப் போய்க் கொண்டிருந்தார் அடாசு நடேசன். அவரைக்கண்டதுதான் தாமதம், பூயானுக்கு சிரிப்பு அள்ளிக் கொண்டு வந்தது,

“என்னடே இது! சனிப் பொணம் ரெண்டு மாடுவள பத்திக்கிட்டு போகு! நாட்டுக் கோழியாக் காணலியே?”

என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே வாய்விட்டு சத்தமாகச் சிரித்தான். இதைக்கண்ட நடேசன் கேட்டார்,

“என்னலே பூயான்! விடியக்காலைல பல்லு மயித்தக் காட்டிட்டு நிக்க தொட்டிப்பெயல! ஒரண்டையும் கோழி புடிக்கப் போவல்லியா?”

பூயான் மீண்டும் சிரிப்பை அடக்க முடியாமல் அவரிடம் கேட்டான்,

“வேய் நடேசம்மாமோவ்! நீரு இன்னுஞ் சாவல்லியா வோய்?”

***

கையெட்டும் தூரம்

2

அய்யப்பன் மகாராஜன்

டுத்த பசியால் விழிப்புத் தட்டியபோது மீனாவிற்கு உடல் நடுங்கியது. எழுந்திருக்கும்போது இயக்கம் சற்றுக் குறைந்து பலகீனமாக இருப்பது தெரிந்தது. விளக்கைப் போட்டதும் வெளிச்சத்தைத் தாங்கிக் கொள்ள இயலாமல் கழன்று போவதுபோல தலை உள்ளுக்குள் சுழல, அச்சம் ஒரு தக்கையைப் போன்று இலக்கற்று ஊடுருவியது. சட்டென நினைவு வந்து சுவிட்சிலிருந்து கையை விடுவித்தாள்.

மணி பார்க்க விழைந்த போது பார்வை சற்று ஒளிர்ந்தது. மணி இரண்டு என்பது சிரமமாக தெரிந்தது. இந்த நிசியில் சோற்றுப் பானைக்கு முன் தவம் இருக்கும் ஒரே சீவன் தானாகத்தான் இருக்க முடியும் என்று எண்ணிக் கொண்டாள்.

தாணு மரம் சறுக்கும் பாவனையில் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் நன்றாக சாப்பிட்டிருக்கிறான் என்பது சோற்றுப் பானையில் தெரிந்தது.

சோற்றைப் பிசையும்போதுதான் தரையைக் கவனித்தாள். விநோதமாக இருந்தது. சிறுசிறு புள்ளிகள் என நிறைய கரும்புள்ளிகள் ஒழுங்கற்று நகர்வது போலத் தெரிந்தன. இப்படித்தான் சமீப காலங்களாக பார்வைக்குள் ஏதாவது அகப்பட்டு வருகின்றன. வெகுநேரம் சுவற்றினைப் பார்க்க நேர்ந்தாலும் இதுமாதிரி ஆகிவிடுகிறது. அவள் புள்ளிகளை கவனித்தாள். அதில் சற்றுப் பெரியதாக இருந்த ஒன்று நீந்துவது போல் செல்வதை கவனித்தாள். அது கவிழ்த்து வைத்திருந்த அரைமூடித் தேங்காயின் இடைவெளிக்குள்ளாக சென்றது. அவள் தேங்காய் மூடியைத் திருப்பினாள். உள்ளே அதுபோல நிறைய இருந்தன. அத்தனையும் கரப்பான்கள். வெளிச்சத்திற்கு அஞ்சி தன்னைச் சுற்றிலும் புள்ளிகளாக அவை ஓடுவதை அவள் கவனித்தாள். பிசைந்த சோற்றுக் கவளம் அப்படியே நின்றது. தலையை வெட்டினால் கூட பலநாள் உயிர்வாழும் பூச்சிகள். வெள்ளை ரத்தம் கொண்ட இருண்ட நிறமுடைய கரப்பான்கள். அவளது வயிறு அடைத்துக் கொண்டது.

“சாப்பிடையில அத நினைக்கக் கூடாது..” முன்பு தாணு பலமுறை அவளைக் கண்டித்திருக்கிறான். காணுவதை நினைக்காதிருப்பது எளிதல்ல என்பதைப் புரிய வைக்க அவளுக்குக் கைவரவில்லை. இவைகளில் தன் வயிற்றிற்குள் சென்றவை எத்தனையிருக்கும்?. இதுபோன்ற யோசனைகளின் மூலம் உணவுமுறை தவறத் துவங்கி பல வருடங்கள் ஆகிவிட்டன. சுவிட்சை அணைக்கப் போகையில் தடுமாறி தான் எதன்மீதோ விழுகிறோம் என்கிற உணர்வினை அடையவே அவள் சுயபோதம் இழந்தாள்.

அக்காவிற்காக பலமுறை அவன் அந்த மருத்துவமனைக்கு வந்திருந்த போதிலும் தங்குவதும் தவிப்பதுமான நிலை இந்தமுறை தான் நேர்ந்தது. ஒரு மருத்துவர் என்றில்லாமல் ஆளுக்காள் படையுடன் வந்து சூழ்வதும், சோதிப்பதும், கேள்விகள் கேட்பதும், மர்மமான தலையாட்டுதல்களுமாக இருந்தார்கள். ஒவ்வொரு தடவையும் அவர்கள் நீளநீள சீட்டுகளில் கையெழுத்திட்டார்கள். மருந்துக் கடையிலும் நீளநீள பில்களை அச்சடித்துத் தந்தார்கள். அவனுக்கு அக்காள் உயிர் தப்பினால் போதுமாக இருந்தது. அக்காளின் கண்விழிப்பிற்காக கால்மாடு தலைமாடு என மாறிமாறிக் காத்திருந்தான்.

அந்த வார்டுப் பகுதி மிக நீளமாகவும் நெரிசலின் காரணமாக திறந்திருந்தும் கூட அடைத்தலாகவும் காணப்பட்டது. வெளியே போய்வர ஒரு “பாஸ்” கொடுத்தார்கள். தாணு “பாஸ்” ஆன ஒரே இடம் மருத்துவமனை தான். ஒருசமயம் அவன் உள்நுழையும்போது பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் அவனை நிறுத்தி “பாஸ்” என அழைக்க அவனுக்குப் பெருமையாக இருந்தது.

ஒருபுற படுக்கையில் மூதாட்டி ஒருத்தி அனுமதிக்கப்பட்டிருந்தாள். அவள் சதா சிரித்தபடி போவோர் வருவோரை ஏதாவது பெயரைச் சொல்லி அழைத்த வண்ணமிருப்பாள். செல்வச் செழிப்பு மிகுந்தவள் எனக் கேள்விப்பட்டான். ஆனால் வார்டில் எவரேனும் சாப்பிடும் வாயசைப்பைக் கண்டால் போதும். உடனே போய் விடுவாள். வரும்போது கையில் ஏதாவது தின்ன இருக்கும்.

“இவளுக்கு வயிறு எங்கதான் இருக்கோ….?” என தலையிலடித்து சங்கடப்படுவாள் அவள் மகள்.

மறுபுறத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண் இருந்தாள். அவளால் தனியாக இயங்க  இயலாது. தானே ஒரு சுமை ஆனது போல் இருந்தாள். கடந்து செல்பவர்களிடம் கருணைக்கு ஏங்கும் அவளது ஆமையோடு விழிகள். தாணுவை உட்காரவைக்கும் பொருட்டு தனது படுக்கை ஓரத்தினை அவள் தட்டிக் கொடுக்கையில் ஒரு நேர்த்தியும் அக்கறையும் அவளிடம் தென்படும்.       

எதிர்ப்புற படுக்கையில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு வெகுநாட்களாக சிகிச்சை எடுத்து வரும் ஐந்து வயது சிறுமி இருந்தாள். அந்தச் சிறுமியின் நோய்க் கடுமையால் அவளது தாய் தான் அதிகமும் சிரமப்பட்டாள். நீண்ட நாசியும் நிறைந்த கண்களுமாக திகைந்த அவளது சுழிந்த நெற்றி மீது எப்போதும் ஒரு மயிர்ச்சுழல் கிடக்கும். இசைக்குறிப்பின் எழுத்தினைப் போல. செவிலிகளையும் மருத்துவர்களையும் தேடி அழைத்து வருவதற்கே விதிக்கப்பட்டவளாக இருந்தாள் அந்தப் பெண். மிகுந்த அசதியில் சுவற்றோடு ஒட்டி அவள் தூங்கும் தருணங்களில் அசோகவனத்து மரத்தடியில் உட்கார்ந்து தூங்கும் தன் வீட்டு சீதையின் ஓவியம் நினைவுக்கு வரும் தாணுவிற்கு.      

அம்மா சாகும்போது தாணுவிற்கு மெலிதான நினைவுகளே இருந்தன. “பயல நல்லாப் பாத்துக்கோ…” அக்காளின் மடியில் கிடந்து சொன்னது போன்று சில்லறையாக சில அவனுக்கு நினைவில் இருந்தன. உண்மையில் மீனா அவனை நன்றாக வளர்த்தாள். நன்றாகப் படிக்க வைக்க விரும்பினாள். அவன்தான் படிக்காமல் வந்து நின்றான். அதேசமயம் அவனது நுணுக்கமான வேலைகளைக் கண்டு அப்பாவின் நண்பர் முருகன் மேஸ்திரி அவனை தச்சுப் பணிக்கு அழைத்தார். அப்பாவின் கைராசியாக இருக்கவேண்டும் அல்லது அம்மாவின் உயிரேக்கமாக இருந்திருக்க வேண்டும். “சரியான தச்சுக்காரன்” என்று பெயரெடுத்தான்.

இரட்டைச் சடையுடன் நெசவுக்கு செல்லும் அக்காளின் பின்னே நிக்கரோடு தூக்குவாளியுடன் ஒரு பொடியனாக தானும் சென்றது அவனுக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. அக்கா மிகவும் சந்தோசமான பெண்ணாக இருந்திருக்கிறாள் என்பதே இப்போது நம்ப முடியாததாகி விட்டது.

சிறுவயதில் அவள் நிறைய ஆசைகளைச் சொல்லுவாள். அவளுக்குள் நிறைய கனவுகள் இருந்தன.

“நீலக் கலரு ஆகாசத்தைப் பாரு. நாம அங்கப் போயி வாழணும்” என்று நிறைந்த வானத்தைக் காட்டுவாள்.

“சரிவராது. ஒனக்கு முத்திப் போச்சி”. முறைப்பான் தாணு.  

“நெறத்தச் சொல்லலடா…. அது மாறிக்கிட்டே இருக்கும். அந்த நீலத்தைப் பாத்ததும் பளிச்சுன்னு நமக்குள்ள ஒரு பிடித்தம் தோணுதுல்ல… அதுமாதிரி….”.

“போட்டீ அந்தப் பக்கம்” என்று சிரித்துத் தலையில் தட்டு வாங்குவான் தாணு.

அவன் ஒரு மர நாடி. அவனை ஒவ்வொரு நாளும் சுதா தனது மன உளியால் செதுக்கினாள். ஒரு வேலையைச் செய்வதற்கும் கையாள்வதற்கும் இடையில் ஒரு பாங்கு ஒரு ரசனை இருக்கிறது. ஒரு தச்சனிடம் அந்த ரசனையை கண்டெடுப்பதற்கு ஒரு கொடுப்பினை வேண்டும். வெந்தது வேகாதது போலல்ல அது. தாணு இனம் கண்டு கொள்ளப்பட்டான்.

நகரத்தின் மிகப்பெரிய ஓட்டலின் மரவேலைகளை அவன் தான் செய்து கொடுத்தான் மேஸ்திரி முருகன் என்றாலும். ஒருமுறை ஓட்டல் மண்டபத்தில் ஒழுகுகிறது என்று அவனைக் கூப்பிட்டார்கள். முதலாளியோடு அவன் பிணக்கத்தில் இருந்த சமயம். அவனை அழைக்க விரும்பாது முருகனே போனார். வேலைப்பாடு அதிகமுள்ள தூண்கள் கொண்ட மண்டபம். ஒழுகலைக் கண்டுபிடித்து ஒருவழியாகப் பூசி முடித்தபின் மீண்டும் ஒழுகியது. பிறகு அந்த ஒழுகுமிடத்தைக் கண்டுபிடிக்க அவரால் இயலவில்லை. இருட்டிவிட்டது.

“என்னவோய்  ஒழுக்க நெறுத்தலையே… முதலமைச்சர் வாராரு. நாளில்ல பாத்துக்கிடும்…. தாணுப்பயல எங்கே? அவனக் கூப்புடும்!” என்று மேஸ்திரியிடம் சொன்னார் ஓட்டல் உரிமையாளர்.

கிடக்க விடாத நச்சரிப்பினால் அந்த நேரமே வந்தான் தாணு. எந்தத் தயக்கமும் இல்லாமல் சகஜமாக தனது மேஸ்திரியை அழைத்துக் கொண்டு மண்டபத்தினுள் போனவன் ஒரு சுற்றுப் பார்வையால் அளந்தான். பிறகு மண்டபத்தின் மேல போய் பார்த்து விட்டு வந்து ஓட்டல்காரர்களை வெளியேற்றிக் கதவைப் பூட்டினான்.

“தூணுக்கு நடுவுல ஒழுக்கு இருக்குண்ணே… மேலே இடிச்சிக் கட்டிருக்கானுங்க…”

“என்ன செய்யணும்ங்க… விட்டா நீ துணையே இடிக்கச் சொல்லுவே போலருக்கே..?”

“ஆமா”

“என்னடே ஆமாங்க?..”

“நீங்க பேசாமக் கொஞ்சம் தள்ளுங்க” என்றவன் தூணின் மையத்தில் வெளித் தெரியாதபடிக்கு கையால் போடுவது போலவே கைக்குள்ளிருந்த அரைப் பென்சிலால் லாவகமாக கோடிட்டான். பிறகு அதற்கு சில கிளைக்கோடுகளை வரைந்தான். பம்பரம் பற்றுவது போல உளியை வைத்துத் தட்டிச் சென்றுவிட்டு பிறகு அதே வழியில் சுத்தியலால் அடித்து இறக்கினான். மறுகணம் பாளையாக அதனைக் கீறிக்கீறி  வெளியே எடுத்துப் போட்டான்.

மேஸ்திரிக்கு பொறி கலங்கி விட்டது. பயத்தில் தாளிட்டக் கதவை அடிக்கடிப் பார்த்துக் கொண்டார். அலங்காரப் பூக்கள், பொம்மைகள் பெயர்ந்து காலடியில் கிடந்தன.  மொத்தக் கட்டிடத்தையுமே தகர்த்து விடுவானோ என்கிற பீதி வந்தது. இதுபோன்ற பய சந்தர்ப்பங்களில் அடிக்கடி கொல்லைக்குப் போகிறவர்தான் எனினும் அவனை விட்டுப் போக இயலாமல் வியர்த்தார்.

தாணு ஒழுகலுக்கான பாதையைக் கண்டு அதை அடைத்து நிவர்த்தி செய்தான். பிறகு கீறிய அலங்காரத் துண்டுகளை பசையிட்டு வாகான நேரம் வரை  காத்திருந்து கோடிட்ட இடத்தில் சரியாக வைத்துப் பொருத்தி அடித்தான்.

சற்று நேரத்தில் அனைத்தும் முடிய, கதவைப் போய் திறந்து காற்று வாங்கினான். மேஸ்திரி தூணைப் பார்த்தார். அவன் வெட்டிய இடமும் கொத்திய இடமும் காணவில்லை. கோடுகளோ, சிறு பிசிறுகளோ கூட இல்லை. அதன் பிறகுதான் கழிவறைக்கு ஓடினார்.

“கை படாம. நாளைக்குப் பாக்கலாம்…” என்று ஊழியர்களிடம் சொல்லியவாறு நடந்தவனை எட்டித்தான் பிடிக்க முடிந்தது மேஸ்திரியால்.

“என்னடே? ஆப்பரேசன் மாதிரி வெட்டிப் போட்டுட்டே…. கண்டிருந்தாம்னா கதறிருப்பான்..தெரியுமா?”

“மூடு வச்சவனுக்குக் தலப்பு வக்கத் தெரியாதா?” அவன் சொன்னது சரி. அவன் வெட்டிய இடம் இன்று வரைக்கும் யாருக்கும் தெரியாது.

சும்மாவே குரளிக்காரி என்று பெயரெடுத்தவள் குறி கேட்ட பிறகு சும்மா இருப்பாளா என்ற கதையாய் தாணுவைப் பற்றி முருகன் சொன்ன கதைகள்  அவரது மகள் திலகாவின் மனதில் பல வர்ணங்களை விரித்தன. அவன் வரப் போகிற சமங்களில் பார்த்து அவனது ரோசத்தை சீண்டி விட்டாள். ஒருசமயம் அவள் அவனது பையை எடுத்து மறைத்துக் கொண்டாள். கடுப்பில் அவன் மேஸ்திரியின் பையை எடுத்துக் கொண்டு போய்விட்டான். பட்டறைக்கு வந்து சேர்ந்த நிமிடம் மாற்றி எடுத்து வந்து விட்டதாக மேஸ்திரியே பையைக் கொண்டு வந்து கொடுத்தார். அவர் வீட்டை விட்டுப் போன பிறகு அவனைத் தேடிக் கொண்டு பட்டறைக்குக் கிளம்பியவள் போக முடியாமல்  திரும்பினாள். அவளது செருப்பில் “கள்ளி” என்று சிற்றுளியால் கீறி வைக்கப்பட்டிருந்தது.  

உடல் சரியில்லாமல் கிடந்த ஒரு நாளில் அப்பாவுடன் சண்டையிட்டுக் கொண்டானோ என சம்சயத்தை கிளப்பி அவனைத் தேடி வந்தாள். திராணியற்றுக் கிடந்த அவனால் அவளுக்கு ஒப்ப பேச இயலவில்லை. பேச்சுகளை அவள் வளர்த்துக் கொண்டே போகையில் அவளை மடக்க எண்ணி அவன் அவளது கைகளைப் பிடித்து இழுத்தான். அவள் காற்றுப்பொதி போல வந்து விழுந்தாள். ஒரு இளம்பெண்ணின் முழு சுமையை உணர்ந்த நேரம். மனம் ஒருங்கிணைந்து இளமையின் மமதையை இதழ்கள் மூலம் அறியவிருந்த கணம். மீனாவின் சத்தம் கேட்டு குலைந்து காவு போனது.

தெருவிற்கே கூவி சொன்னது போலாகிவிட்டது. முதல் தடவையாக தாணு ஏங்கி முடங்கிப் போய் விட்டிருந்தான். மீனாவின் ஆவேசம் கட்டுப்படுத்த இயலாததாகி விட்டது. தெரிந்த விதத்தில் எல்லாம் தன்னை மன்னிக்கும்படி கோரினான். அவள் ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல, மேஸ்திரியின் வீட்டிற்கே சென்று திலகாவைப் பற்றி குற்றவரிசைகளை அடுக்க, முற்றுப் புள்ளி இறுகியது.

அதன் பிறகு மீனாவின் கண்கொத்திப் பார்வை தாணுவை எந்தப் பெண்ணிடத்தும் நெருங்க விடவில்லை. அந்த துயரப்பாலத்தின் மீது பார மனதுடன் அவன் வயதினைக் கழிய விட்டான்.

கண்விழித்த பிறகு மீனா சகஜமாகப் பேசியது தாணுவிற்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் மீனாவிற்கு மருத்துவமனை தங்குவதற்கான இடமாகப் படவில்லை. உடலின் அன்றாட வழக்கங்கள் தயவுகளின் பால் நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் வீடு திரும்புவதற்குண்டான எண்ணத்தில் இருந்தாள்.  

“யாரு அடைச்சிருப்பா…?”

“எத?”

“கோழிய?”

“சொல்லிட்டு வந்திருக்கேன்… நாகம்ம ஆச்சி பாத்துக்குவா…”

“நீ போனியா?”

“இல்ல. போணும்.”

“தண்ணி வந்திருக்கும். பைப்பு நம்ம வீட்டுல கெடக்குது…”

“புறவாசக் கதவத் தொறந்து விட்டிருக்கேன்… சாந்தி வீட்டுல வந்து பிடிச்சுக்குவாங்க…”.

“என்னைப் போட்டு ஏன் இந்த மாதிரி கஷ்டப்படுத்தணும். வந்து கூட்டிட்டுப் போவக்கூடாதா?”

“யாரு கூப்புடுவா?”

“அம்ம தான்!” திருப்தி வராமல் சொன்னதையே சொல்லிக் கொண்டு இருந்தாள். அவளை சமாதானப் படுத்த தாணு பிரயாசைப்பட்டான்.

ஒரு வேலைக்காரன் எங்கு ஒரு இடம் போனாலும் வேலைக்கான கண்களை இழக்கமாட்டான் என்பது போல தாணு அந்த மருத்துவமனையின் கட்டிட நேர்த்தி அறிய சமயம் வாய்த்த போதெல்லாம் சுற்றியலைந்தான்.

தரைத்தளம் போனபோது  அங்கு நீண்ட நாசியினைக் கொண்ட அந்தப் பெண் ஸ்கேன் அறை முன்பாக தவித்த நிலையில் நின்று கொண்டிருந்தைக் கண்டான். உள்ளே பரிசோதனையில் துவண்டு போயிருந்த அவளது மகளை பார்க்கையில் பாவமாக இருந்தது. ஒரு பார்வையாளனைப் போல அவன் தயங்கியபடியே நின்றான்.

படிக்கட்டுகளின் மாற்றுப்பாதையின் ஏற்றத்தில் அவளே தள்ளிக் கொண்டு போக வேண்டியிருந்ததால் அபாயத்தைத் தவிர்க்கும் பொருட்டு அவனே உதவிக்கு வந்தான். சிறுமியை படுக்கையில் நோகாது கிடத்திய பொழுதில் அவளது நீண்ட நாசி முனையிலிருந்து வியர்வையைப்  போல கண்ணீர் விழுந்ததை அவன் கவனிக்கவில்லை.

மதிய உணவிற்குப் பிறகு மருந்துகளின் சடவில் மீனா தூங்கிக் கொண்டிருந்தாள். சிரிப்பாணி மூதாட்டி தனக்கு நேந்திரன் வற்றல் வாங்கித்தரும்படி தாணுவின் பிராணனை வாங்கிக் கொண்டிருந்தாள். “கண்டதையெல்லாம் தின்னா நா பீ எடுக்க மாட்டேன்…” என்று தீர்மானமாக சொல்லிவிட்டாள் மகள். மனதின் இலகு வெளிக்காக தாணு தளத்தில் நடக்க எண்ணிச் சென்றபோது அந்தப்பெண் நீண்ட நாசியினைக் கொண்டவள் அவனிடம் வந்தாள்.

“சொந்தக்காரங்க ரெண்டு பேரு வந்திருக்காங்க… ஒங்க பாஸ கொஞ்சம் தரமுடியுமா?” என்று கேட்டாள். அவன் உடனே தனது பாஸினை எடுத்துக் கொடுத்தான். வாங்கிக் கொண்டு போனவள் இன்னொருவரிடமும் இது போல் உதவி கேட்டு நின்றாள். மேலும் ஒன்று கிடைத்து விட்டால் அவள் உள்ளே நின்றபடியே இருவரையும் அழைத்து வந்து விடலாம். இல்லையெனில் அவர்களை உள்ளே அனுப்பி வைத்து விட்டு அவர்கள் வரும் வரையிலும் வெளியே காத்திருக்கவேண்டும். பார்வையாளர் நேரம் தவிர மற்ற நேரங்களில் பாஸ் இல்லாமல் வெளியேறலாம். உள்ளே அனுமதிக்கவே மாட்டார்கள்.

அந்தப் பெண்ணிற்கு கூடுதலாக ஒன்று கிடைக்கவே இல்லை. வேறு வழியில்லாமல் மகளை அருகில் இருந்தவர்களிடம் பார்த்துக் கொள்ள சொல்லி விட்டுக் கீழே போனாள். சற்று நேரத்தில் குடைவண்டி வயிறுடன் ஒரு தளர்ந்த பெண்ணும் பருத்த தலையுடன் ஒரு ஆணும் அங்கு வந்தார்கள். வந்த பெண் சிறுமியின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விடவும் தேம்பவும் செய்ய, சிறுமி அபயத்திற்காக அம்மாவைத் தேடத் துவங்கினாள். அவள் தாணுவை நோக்கிய போது தாணு அவளை அழாதிருக்கும்படி சைகை செய்தான்.

பிரதான வாயிலின் எதிரிலேயே அந்தப் பெண் நின்று கொண்டிருந்தாள். சிறுமி அவளைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் தன்னுடன் வந்தால் அழைத்துச் செல்வதாகவும் தாணு அவளிடம் கூற, தன் சேலைத் தலைப்பினைப் போர்த்தியபடி பின்னால் வந்தாள்.

தாணு புற நோயாளிகளின் பிரிவு வழியாக அவளை அழைத்துப் போனான். அதன் பின்புற படிக்கட்டுகள் வழியே மேலேறி அதன் தடுப்புக் கதவினைத் தாண்டினால் போதும்.

தாணு கதவை நெக்கிய நேரம், அந்த இருளின் புலப்படாத பக்கத்திலிருந்து “பாஸ்” என்றொரு குரல் கேட்க, சீருடை கொண்ட நபர் ஒருவர் வந்து கை நீட்டினார். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மனிதர் ஒரே வார்த்தையாக “நோ” சொன்னார்.  அவன் அடைபடாத கோழி போல சி.டி.ஸ்கேன் பகுதிக்கு கூட்டிச் சென்றான். அங்கும் வித்தை செல்லுபடியாகவில்லை.

கடைசி முயற்சியாக பரிசோதனை முடிவுகள் தருமிடத்திற்கு அழைத்துச் சென்றான். சிறிய சிறிய அறைகள் கொண்ட அந்தப் பகுதி மிகவும் பிரகாசமாகவும் சுத்தமாகவும் காணப்பட்டது. அதன் படிக்கட்டுகள் மேலே செல்லும்போது வெளிச்சம் குறைந்து கொண்டே வந்து முடிவில் இருண்டு காணப்பட்டது.

அவர்கள் ஒரு புதிய தளத்தினை அடைந்த போது நடை சத்தத்தினை தவிர வேறெதுவும் கேட்காத அமைதி கிடந்தது. முடிவில் தளம் இரண்டாகப் பிரிய முன்பு தடுத்தனுப்பியவன் நின்று கொண்டிருந்தான். தாணு சட்டென வலது பக்கம் திரும்ப அவன் எதிர்பார்த்தபடி அவர்களது வார்டின் தளம் வந்தது.

சிறுமி ஏங்கிப் போய் இருந்திருக்கவேண்டும். தாய் கட்டி அணைத்ததும் அழத் துவங்கினாள். பருத்த தலை மனிதன் தாணுவை சிநேகபூர்வமுடன் கவனித்தான்.

“ஸ்டூல எங்கே?” என்று மீனா கேட்டபோது தாணு திலகாவின் நினைவில் இருந்தான். மீனா செய்த காரியத்தால் மனமுடைந்து போயிருந்தாள் திலகா. மேஸ்திரியும் கூட. எனினும் அவர் வேலைக்கு அழைப்பதை நிறுத்தவில்லை. அவருக்கு தாணுவின் தந்தையைப் போல அவனையும் மிகவும் பிடிக்கும்.

“நீ போறதானா போலாம்… ஆனா என் வீட்டுக் கதவு எப்பவும் உனக்கு தொறந்திருக்கும்” என்றார். தனியாக எடுத்து நடத்தச் சொல்லி தாணுவிற்கு நிறைய வேலைகள் வந்தன. ஆனால் தாணு முருகன் வீடு தேடியே வந்தான். வரும் சமயங்களில் தாணு திலகாவைத் தேடினான். அவள் அகப்படவில்லை. ஆனால் அவன் கிளம்பும் சமயங்களில் மட்டும் சன்னல் ஓங்கி சாத்தப்படும் சத்தம் ஒவ்வொரு தடவையும் கேட்டது. ஒரு வன்மத்துடன் வந்த அந்த சத்தத்தினை அவன் தினந்தோறும் கேட்டான். மேற்புற சன்னலில் எட்டிப் பார்க்கவும் முடியாது.

ஒரு நாள் சத்தம் கேட்டும் அவன் போகாமல் நின்று விட்டான். சில நொடிகளில் சன்னலை அழுத்திக் கொண்டு வந்து நிற்கும் திலகாவின் முகம் தெரிந்தது. வலிய மூர்க்கம் கொண்ட ஒற்றைப் பெருமூச்சினை விடுத்து விட்டு அவள் விலகிப் போனாள். துண்டாடப்பட்ட பல்லியின் வாலைப் போல இருந்தது அவன் நிலைமை.

வெள்ளிக்கிழமை கருக்கலுக்குப் பிறகு ஆற்றங்கரைப் பக்கமாக இருந்த கோயிலுக்கு அவள் எண்ணெய் கொடுத்து விட்டு வருவது வரையில் காத்திருந்து அவளை எதிர்கொண்டான்.

“இது ஆறாது தாணப்பா…  ஒங்கக்கா செஞ்சத ஒருக்காலமும் மறக்க முடியாது.

அவ இருக்கற வீட்டுக்குள்ள ரகசியமா குடும்பம் நடத்த என்னைக் கூப்பிடாதே…

அவள விட்டுட்டு வாரதானா வா!.”

அதன்பிறகு அவள் சன்னல் கதவினை அடைக்கவில்லை.

“ஏன் நின்னுக்கிட்டு இருக்கே. நம்ம ஸ்டூல எங்கே?” மீனா மீண்டும் கேட்டாள். அவன் எதிர்ப்புறம் கையைக் காட்டினான். நீண்ட நாசியுடைய பெண்ணின் உறவினர்கள் இரண்டு ஸ்டூல்களில் உட்கார்ந்திருந்தார்கள்.

“அந்தப் பிள்ளைக்கு எப்படி இருக்காம்?”

“தெரீல”

“பாவம்!” மீனா எதையோ நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். தலையாட்டிக் கொண்டாள்.

பிறகு வந்த நாட்களில் தாணு வீட்டிற்குப் போவதும் சில சில்லறை வேலைகளை ஏற்பதுமாகக் கழித்தான். நாளின் பல நேரங்களை திலகா ஆக்கிரமித்துக் கொள்வாள். அந்நேரங்களில் மனம் கப்பிப் போய்விடும். விடுபட முடியாது என்றாலும் விடுபடவே முடியாது என்றாகிவிடக் கூடாது என தீவிரத்தோடு வேலைகளை செய்தான்.

மீண்டும் அவன் மருத்துவமனையில் தங்க நேர்ந்த போது தளத்தின் படிக்கட்டினை ஒட்டி அந்தப் பெண் உட்கார்ந்திருப்பதைக் கண்டான். முகத்தினை அவளது சேலைத் தலைப்பு மூடியிருந்தது. அதன் வெண்மையினுள் பவ்யமான விளக்கொளியில் துயரத்தோடு அழுது கொண்டிருந்தது அவளுடைய நீண்ட நாசி. எழுந்து கொள்ள அவன் அசைந்த போது அவள் துணியை விலக்கி அவனைப் பார்த்தாள்.

“ஒங்க குழந்தைக்கு சரியாயிரும்”

அது மேலும் உடைப்பெடுத்து விட்டது போலும். அவள் தலையாட்டினாள். பிறகு அழுதாள்.

“பாருங்க… இங்கேருந்து போகும்போது உங்க குழந்தையோட சந்தோசமா போவீங்க”

“நிம்மதியா போனாப் போதும்” நாசியினை இடதும் வலதுமாக சுழித்துக் கொண்டாள்.

சற்று நேரம் அமைதியாகக் கழிய, நினைவு போதாமையினால் அவன் சிரித்து விட்டான். இருந்தும் அதை மறைக்க முற்பட்டான்.

“ஏன் சிரிக்கிறீங்க?”

“வேற. சும்மதான்”

“சும்மலாம் சிரிப்பீங்களா?”

“செல சமயம்” அவளுக்கு ஆர்வம் தாங்கவில்லை.

“நீங்க சொல்லித்தான் ஆவணும்…”

“இல்ல… உங்க மூக்குக்கும் உங்களை மாதிரியே ஒசரம்!”

“நீளம்”

“ம்கூம். ஒசரம்…”

அவளும் சிரித்தாள். நாசியிலிருந்து பூத்தது அந்த சிரிப்பு. நெற்றி மலர்ந்தது.

“உங்க பேரு என்ன?”

“பேரு சொல்லிக் கூப்பிடணுமோ?”

“கூப்பிடக் கூடாதா?”

வேண்டாம்”

“ஏன்?”

“வேண்டாம்னா வேண்டாம்.”

“அவங்கப்பா வரதில்லையா?”

“அவரால வர முடியாது. பாவம். கடினமான வேலை”

“அப்பக் கஷ்டந்தானே…!”

“அவரு ஒரு ஞானிப்பா!. அவருக்கு வலி கெடையாது. நிரந்தரமான சந்தோசத்தத் தேடுறவரு.”

“இமயமலையில இருப்பாரோ?”

“சவூதி அரேபியாவுல.”

“ஆங்? புள்ளையப் பாக்க வரல?”

“அடுத்த ஜென்மத்துல பாத்துக்கலாம்னுட்டாரு. இந்த ஜென்மத்துல விதி இல்லையாம். நா காத்திருக்கணுமாம். அஷ்டமா சித்தி!.”

”ஞானின்னீங்க?”

“அப்படித்தான் சொல்லுவாரு. ஆனா போகும்போது எனக்குத் தெரியாம ரெண்டு பொண்ணுங்கள கூடக் கூட்டிக்கிட்டுப் போயிருக்காரு. இப்ப அவங்க அவரோட இக்குல ஏறி உக்காந்திருக்காங்க. இனிமே அவங்க விடமாட்டாங்களாம்”

“குழந்தை கிட்ட ஃபோன்லயாவது பேசுறாரா?”

“ப்ச்”

அதன்பிறகு வெகுநேரம் பேசாமல் இருந்தார்கள். ஒன்று விட்டு விளக்குகள் அணைக்கப்பட, இருளும் ஒளியுமென பப்பாதியாக இரவு கடந்து போனது.  வலித்த தன் கால்களை அவள் நீட்டியபோது இடம் விட்டு  விலகி அமர்ந்தான். மேற்படியில் அவளது தலை சாய்ந்த போது தான் கவனித்தான். அவள் உறங்கிப் போயிருந்தாள். அவன் தனது போர்வையினைக் கொண்டு அவள் கால்களை மூடினான். இருந்தும் உடைந்த பலூன் துண்டில் ஊதிப் பெருகிய குமிழ் போல இருந்த அவளது விரல் முனைகளை மூட இயலவில்லை.

காலையில் மீனா விழித்த போது தாணு எதிர்ப் படுக்கையில் சிறுமியின் அருகில் இருப்பதைக் கண்டாள்.

“ஏதாவது வேணுமாக்கா?” என்று உடனே வந்தான்.

“நீ கேக்கறியா, நா கேக்கட்டுமா?”

“என்னத்தைய?”

“வீட்டுக்குப் போறத!”

“சரியாக வேண்டாமா?”

“போனாத்தான் சரியாகும்”

மீனா அவன் பேச்சினைக் கை விட்டுவிட்டு எதிர்ப் படுக்கையினை கவனித்தாள். சிறுமி தூங்கிக் கொண்டிருந்தாள். தொண்டையில் ஒரு மிடறு கசப்பு இறங்கியது. அருகிலிருந்த சுவற்றில் அழிபடும் கோடுகளாக கறுத்த புள்ளிகள் நீந்தத் துவங்குவதைக் கண்டாள்.  

அன்று ஞாயிற்றுக் கிழமை. மருத்துவர்கள் வரமாட்டார்கள் என்பதால் தலைமை மருத்துவரைக் காண அவரது வீட்டிற்குக் கிளம்பினான் தாணு. அதற்கு முன்பாக சிறுமியிடம் சிறிது நேரத்தை செலவிட்டான்.  நம்பிக்கையூட்டும்படி பேசினான். அவளது கையைத் தொட்டுத் தூக்கிய போது அது பஞ்சு போல வந்தது. மருந்துகளிறங்கிய பகுதியினை அவன் நீவிக் கொடுத்த போது அவள் பிடிக்க முயல்வதை உணர்ந்தான்.

தலைமை மருத்துவர் மீனா படுக்கை சிகிச்சையில் மேலும் இருக்க வேண்டும் எனவும், அவளது தலையில் காசநோய் பீடித்திருப்பதாகவும் சொல்லி  அபாயத்தை விளக்கியபோது அவன் நாடி தளர்ந்து வெளியேறினான்.

பரம்பரையின்  பலத்த கதை தகர்ந்து தற்போது தான் மட்டும் விளிம்பில் நிற்பதாக தெரிந்தது. ஒரு குற்றுச்செடியான தானும் பெயர்ந்து விட்டால் ஒரு பரம்பரையின் சுவடே இல்லாது போகுமே என நினைத்த போது வெப்புறாளமாக வந்தது.       

முன்தளத்தில் வெளியிலிருந்து நீண்டு வந்திருந்த மரக்கிளை ஒரு இறந்த மனிதனின் எலும்பினைப் போல துருத்திக் கொண்டிருக்க, அதன் முனையில் யாரோ விட்டுச் சென்றிருந்த பழந்துணி பறந்து கொண்டிருந்தது.

மனப்புலம்பலை தவிர்க்க தரைத்தளத்தின் அமைதி நோக்கிச் செல்லுகையில், யாரோ அழைப்பது கேட்டது. நீண்ட நாசி உடைய பெண் அவனை நோக்கி வேகமாக வந்தாள். ஒரு குழந்தை தன் இரு கைகளையும் உயர்த்தி பறப்பதற்கு செய்வது போல தாவிக் கொண்டு.

“நீ எம்பொண்ணுக் கிட்ட பேசினியாமே…!”

“சரியாயிரும் பயப்படாதேன்னு சொன்னியாமே…!”

“அவக் கொஞ்சம் சாப்பிட்டாடா….”

“எம்பொண்ணு கேட்டு வாங்கி சாப்பிட்டாடா…!”

அதிசயம் போல மகிழ்ச்சியில் அவள் பாதங்கள் தரையில் தாவிக் கொண்டிருந்தன.

ஒரு வேத பாடசாலை அறை போல நீண்டு கிடந்த அந்த அறையின் தனிமையில் ஒரே சமயத்தில் அவள் மகிழ்ச்சியின் பாலும் அவன் துயரத்தின் பக்கமும் நிற்கும் படியாக அமைந்தது.    

“ஸ்வீட் சாப்பிடறியா?”

“வேண்டாம்”

“என்ன வேணும்?”

வேர் அற்றுப் போகும் துயர மிகுதியில் அவனால் எதுவும் கேட்க இயலவில்லை. அவளது நீண்ட நாசியின் மேல் கண்கள் ஒளிர்வதை கண்டான்.

“ஒரு சிகரெட்டு…?”

“செத்தே….”

“முத்தம்?”

அவள் சட்டென விலகினாள். அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். சந்தோசத்தை விசிறி விட்டு வந்த வேகத்தில் போனாள்.

தாணு பொறி கலங்கிப் போய், தரையில் தாழ்ந்து விடாதபடி சுவற்றோடு மடிந்து கொண்டான். சலசலப்புடன் ஓவிலிருந்து பெய்த நீர் நின்ற அமைதிக்கு மனம் இற்றுப் போன பின் அவன் வார்டுக்குள் வந்தபோது மீனா அவனைத் தேடிக் கொண்டிருந்தாள்.

“டாக்டர் என்னடா சொன்னாரு?”

அவன் அவளது கைகளுக்குள் தன் முகத்தினை அடக்கிக் கொண்டு கவிழ்ந்து கொண்டான். அவள் வானம் பார்த்தும் அவன் பூமி பார்க்கவுமாய் நீண்ட நேரமாகக் கிடந்தார்கள். இரவு நீண்டு போய்க் கொண்டிருந்தது.

தன் சட்டை இழுக்கப்படுவதை உணர்ந்து தாணு எழுந்து பார்த்தான். அந்தப் பெண் அவன் பிறகே நின்று கொண்டிருந்தாள். தன்னுடன் வருமாறு சைகையால் அழைத்தாள். அவன் எழுந்து அவளோடு செல்ல, மருந்துகளின் கட்டுப்பாட்டில் தூக்கத்தில் உழன்று கொண்டிருந்த மீனா தனது அரை ஓர்மை கொண்டு அதனை கவனித்தாள்.

“என்னக் கேட்டே…?”

தாழ்ந்த பிரிவின் மூலையில் அவள் நின்று கொண்டு கேட்க, தனது சிவந்த கண்களால் அவளை ஏறிட்டான். அவனது தலையினை மயிர்க் கொத்தாக பற்றிய அவள், அவன் திளைத்துத் தளும்பித் திணறும் வரையிலும் முத்தமிட்டாள். அவளது நாசி அவன் முகமெங்கிலும் கோலமிட்டது. அவன் உடல் கிடுகிடுத்து கண்கள் பொங்க கண்ணீரால் கரைந்தான்.

“கல்யாணம் பண்ணிக்கலாமா?”

“என்னை விட ரெண்டு வயசு சின்னப்பய நீ…. “

“வயசுல சின்னப் பொண்ணா நெனச்சிக்கறேன்…”

“நெனச்சா…. ஆயிருமா?”

“நெனச்சாத்தானே ஆவும்..”

“என்ன தைரியம் ஒனக்கு?”

“குழந்தைய நல்லாப் பாத்துக்குவேன்…”

“பொடிப்பயலே…!”

அவள் போன பிறகும் அவனது உடம்பினுள் வெப்பமாய் அவள் இணைந்தாள். வாசனையாய் பரவினாள். அவன் வியர்த்து வியர்த்து அடங்கினான்.

அதிகாலை தேநீர்க் கடை முன்பாக நின்று கொண்டிருக்கும் போது அவள் சொன்னாள்.

“ஒன்ன எனக்கு ரொம்பப் பிடிக்கும்டா… அதுமட்டும் போதும்னு நெனச்சா போதும்தான். ஆனா எம்மனசு தயாரா இல்லடா. தயாரா ஆகுமான்னு கேட்டியானாத் தெரியாது… என்னப் பேசுனாலும் பேசியும் தீராத விசயம் எனக்குள்ள இருந்துக்கிட்டே தான் இருக்கும். ”

“நா ஒன்னும் செத்துப் போயிற மாட்டேன்… கொஞ்ச நாள் போகட்டும்… “

“ரெண்டு தீவாளி?”

“ஆங் பாக்கலாம். ராணித் தோட்டம் தெரியுமா?. பஸ் டிப்போ முன்னாடி ஒரு திருப்பம் வரும்… திரும்பி உள்ள வந்து நாகேஸ்வரி வீடு எதுன்னு கேளு…”

“ஒங்க பேரு நாகேஸ்வரியா?”

“பின்னே?”

“நோஸ்மம்மினு நெனச்சேன்”

“ஆங்?”

“மூக்கம்மா…” என்றான். அவள் தன் நாசியினைத் தட்டிப் பார்த்துக் கொண்டாள்.

“நா ஒண்ணுக் கேக்கட்டுமா? என்னை ஏன் அடிச்சீங்க?”.

அவள் தலையைத் தாழ்த்திக் கொண்டு சமாதானத்திற்கு இறங்குவது போல பார்த்தாள்.

“ஆத்தரம்”

“எம்மேலயா?”

“என் வீட்டுக்காரரு மேல”.

அவர்கள் உள்ளே வந்த சமயம் மீனா மூச்சிரைக்க பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அவன் தடுக்க முயற்சித்த போது,

“ஒன் ஆசைக்காகத் தானே என்னை இங்கப் போட்டுக் கொல்லுதே? நா எதுக்காக உயிர் வாழனும்?” என்று கேட்டாள்.

அவள் வீம்பினை மருத்துவர்களாலும் கூட தடுக்க இயலவில்லை. வீட்டிற்கு வந்த பிறகும் கூட விசாரிக்க வந்தவர்கள் யாருடனும் அவள் ஒத்துப் போக வில்லை. மருந்துகளை எடுத்துக் கொள்ளும்படி வேண்டிய போதும் மறுத்து விட்டாள். நலிவுக்கிடையே கூட அவள் சதா சத்தமிட்டுக் கொண்டிருந்தது அவனைத் தாழ்வுறச் செய்தது. வேலைக்குப் போகும்போதும் வரும்போதும்  அவளுடைய சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. சிலநேரங்களில் அவள் உறங்கிக் கொண்டிருக்கும் சமயங்களிலும் கேட்பது போலிருந்தது.

ஆறுதலுக்காக மறுநாள் வேலை முடித்து விட்டு நாகேஸ்வரியினைப் பார்க்கப் போக வேண்டும் என நினைவில் வைத்துக் கொண்டான். காலை செய்தித்தாளைப் புரட்டினான். அதன் ஒருபக்கத்தில் சிறுமியின் புகைப்படம் வந்திருப்பதைக் கண்டான். நடுக்கமுடன் அவன் அதையே பார்த்தான். அது அவளது மரணத்தினை கட்டமிட்டு சொன்னது. அவன் தனக்குள்ளே நேர்கீழாக விழுவதை உணர்ந்தான். விதியின் அகங்காரத்தின் முன்னே பைத்தியமாக பலியாகப் போகிறோமோ என அச்சம் வந்தது.

ராணித்தோட்டம் போய் வீட்டினைக் கண்டு பிடிப்பது சிரமமாக இருக்கவில்லை. மருத்துவமனையில் கிடந்தது போலவே சிறுமி வைக்கப்பட்டிருந்தாள். பூத்திருக்கும் மெலிந்த அந்தப் புன்னகை கூட மாறவில்லை. அதன் கைகளைத் தொட்டுப் பேச ஆசைப்பட்டான். நாகேஸ்வரி உடலெல்லாம் கலைந்து உருவிழந்து கதறிக் கொண்டிருந்தாள். சடலத்தின் புகையுடன் கடைசி வாயு பொட்டிக் கொண்டு வரும் வரையில் இருந்து விட்டு தாணு கிளம்பினான்.

தனித்து வரும்பொழுது மனம் கொஞ்சம் பிசகியது. தனக்குத்தானே தைரியம் சொல்லிக் கொண்டான். அது கைகொடுக்கவில்லை. எதிர்பாராமல் மின்சாரமும் நின்றுவிட்டது. சாலை பூராவும் இருள். பாயும் கனத்த கருமை. எதிரில் யார் வந்தாலும் தெரியாது. நடையில் அச்சுத் தவறியது. முரட்டிருட்டில் ஒரு அடி வைக்கவும் பயம் வந்தது. மரணத்தை நெருங்குவது போல நெஞ்சை அழுத்த மூச்சு அசவுகரியமானது.

மரணம் இப்படித்தான் வருமா? அம்மாவை நினைத்துப் பார்த்தான். அம்மாவும் இப்படித்தான் வலிக்க செத்திருப்பாளா? அக்காள் இப்படித்தான் சாகப் போகிறாளா? சிறுமி சாவுகையில் வலித்து துடித்திருப்பாளா? வலிக்காத சாவே இல்லையா? சிறிய பூச்சியொன்று கண்ணில் அடிக்க அதன் சத்தம் திகிலூட்டியது. ஊசியாக ஊடுருவிய வலி கண்ட வேகத்தில் பரவியது. இருளினுள் இருளாக புள்ளிகள் பறந்தன. திசை எதுவென்று அறிய முடியவில்லை. சத்தம் போடலாமா? அக்காள் எந்நேரமும் சத்தம் போடுவது வலியினால் தானா? அழலாமா? அழுதால் தீருமா? என்ன சொல்லி அழுவது?

காலில் கல் இடறியது. பெருவிரல் நுனியில் அதிர்வு பாய்ந்து தலைக்குப் போனது.

“அக்கா…அக்கா….” என்று அழைத்தழுதான். “ஓ!” என்று யாரோ எங்கிருந்தோ அதற்கு பதில் குரல் கொடுத்தார்கள்.

அம்மா சாகும்போது என்னைப் பார்த்துக் கொள்ளும்படி அவளிடம் சொன்னாளே. அவளை பார்த்துக் கொள்ளும்படி யாரிடமும் சொல்லவில்லையே?.

சட்டென நின்று விட்டான். “நா எதுக்காக உயிர் வாழணும்?” அவள் ஏன் அப்படிக் கேட்டாள்.

இந்த வாழ்க்கையில் அவளுக்கு என்ன கிடைத்திருக்கும்?. அக்காள் இதுவரை எதற்காக வாழ்ந்தாள்?.

பாதுகாப்பாய் நான்கு வார்த்தை சொல்லியிருக்க வேண்டுமோ?. சொல்லாமல் புரியாதா?.

“நான் மாறும்போது, என் குணம், பழக்கங்கள் மாறும்போது என்மீதான நம்பிக்கைகளும் மாறுகிறதா?”

வெளிச்சம் வந்தபோது அவன் சாலை மத்தியில் சரிந்திருந்தான். அக்காளிடம் மனம் விட்டுப் பேசினால் சரி செய்ய முடியுமென நம்பிக் கொண்டான். தெம்பு வந்தது.

அம்மாவின் நினைவு தினம் வந்த அன்று மீனா அவனுக்குப் பிடித்த மாதிரி சமையல் செய்து கொடுத்தாள். அவனுக்கு எதுவும் இறங்கவில்லை. அன்று நாகேஸ்வரியைக் காண வேண்டுமெனத் தோன்ற மீண்டும் அவன் ராணித் தோட்டம் போனான்.

கதவு சாத்தப்பட்டிருந்தது. அவன் தட்டியபோது கதவைத் திறந்து கொண்டு குடைவண்டி வயிறு கொண்ட பெண்மணி வந்து “யாருப்போ?” என்றாள்.

அவன் “நாகேஸ்வரி…” என்றான்.

“அப்படிலாம் யாரும் இல்ல” என்று கதவை அடைத்தாள். சற்றுநேரம் நின்றான். பின்புறம் பேச்சு சத்தம் கேட்டது.

அவன் ஏமாற்றத்தோடு நடக்கத் துவங்கினான். யாரோ வேகமாக வருவது தெரிந்தது. பருத்த தலை கொண்டவன் அவனருகே வந்து தோளில் கை இட்டான்.

“நல்லவிதமா சொல்லுதேன் கேட்டுக்கோ. நாகேஸ்வரி எங்க வீட்டுப் பொண்ணு.  அவள நாங்க பாத்துக்குவோம்…

“சாவன்னைக்கு நீ வந்திருந்தல்ல…. பாத்தேன். அப்ப எதுவும் சொல்ல வேண்டாமேனு விட்டுட்டேன். அதான்!”

“இனிமே இங்க வாறது வேண்டாம். எனக்கது பிடிக்கல”

“அவங்கள ஒரே ஒரு தடவ பாத்துட்டுப் போயிர்றனே…”

“ஆம்பளைங்க இருக்கோம். நாங்க பாத்துக்குவோம்…“

தோளைத் தட்டிக் கொடுத்து விட்டுப் போனான்.

வரும்போது மருத்துவமனையைக் கடக்கையில் ஏனோ உள்ளே செல்லத் தோன்றியது.

மீனா இருந்த படுக்கையைச் சுற்றி துணி கட்டியிருந்தார்கள். சிறுமியின் படுக்கையில் வேறொரு சிறுமி இருந்தாள். தாழ்ந்த தளத்தின் அருகே சென்றான். நீண்ட நாசியினைக் கொண்ட பெண் அவனைப் பிடித்து முத்தமிட்ட இடத்தை மனம் சுற்றியது. எலும்புக் கிளையின் துணி இன்னமும் ஆடிக் கொண்டிருந்தது. வானம் அக்காளுக்குப் பிடித்த நீல வண்ணத்தில் தூறியது.

“யாருப்பா நீ?…ஏன் சத்தம் போட்டே?” சீருடை ஆள் அவனிடம் வந்து கேட்டபோது அவனுக்கு எதுவும் புரியவில்லை.    

வீட்டிற்கு வந்தபோது மீனாவைக் காணவில்லை. அவளது மருந்து மாத்திரைகள் அப்படியே இருந்தன, வெகுநேரம் காத்திருந்தும் அவள் வரவில்லை. இரவிலும் வரவில்லை. அறைகளில் பூச்சிகள் பறப்பதாக தோன்ற, அவளை நினைத்து மருந்திட்டு நன்றாகத் துடைத்தான்.    

காலையில் தச்சு சாமான்களைக் கொண்ட தனது பையினைத் தோளில் போட்டான். “சொல்லியும் தீராத விஷயம் என்னவாக இருக்கும்?”. நடக்க சிரமமாக இருந்தது. “நடக்க வேண்டும்” என தனக்குள் ஒருமுறை சொல்லிக் கொண்டான். அதன்பிறகே நடக்க முடிந்தது.

அய்யப்பன் மகாராஜன் – நாகர்கோயிலைச் சேர்ந்த இவர் தற்போது திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். சிறுகதை, கவிதை, கட்டுரைகள், தொடர், என பல்வேறு படைப்புகள் இதழ்களில் வெளியாகி வந்துள்ளன. – imaharajan@gmail.com

மனித மூளை மிருதுவானது, ஆனால் சுவையற்றது

1

அருண்.மோ

து ஒரு பேரிடர் காலம் என்றார்கள். சிலர் பெருந்தொற்று காலம் என்றார்கள், எந்த காலமாக இருந்தால் என்ன, ஏழைகளுக்கு எல்லா காலமும் ஒன்றுதான். பெரிய மலை ஒன்றின் நிழல் போல் நீண்டிருந்த அந்த வரிசையில் காலையில் இருந்து நின்று கொண்டிருக்கிறேன். இடுப்பில் இளையவன், வலதுபுறம் மூத்தவள், இடதுபுறம் இரண்டாமவன், மூன்று பேருக்கும் எந்த ஒரு பெயருமில்லை. தம்பி, அக்கா, சின்னவன் என்று அவர்களாகவே ஒருவரையொருவர் பெயரிட்டு அழைத்துக்கொண்டார்கள். அவர்களைப் போலவே எனக்கும் பெயர் இல்லை. முகவரியும் இல்லை. பிள்ளைகளை இழுத்துக்கொண்டு மூன்று நாட்களாக கொடுவெய்யில் காலம் ஒன்றில் நீண்டதூரம் நடந்து வந்திருக்கிறேன். காய்ந்த சருகுகள் வழியே நடக்கும் சப்தம் போல, பிள்ளைகளின் அழுகுரல் சப்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. என் பருத்த மார்புகளில் சதை கொஞ்சம் ஒட்டியிருக்கிறது, ஆனால் பால் சுரக்காத கிண்ணம் போல் கவிழ்த்துவைக்கப்பட்டிருந்த அந்த மார்பகங்களால் எந்தவொரு பயனும் இல்லை. இளையவன் பிறந்து எட்டு மாதங்களே ஆகிறது. அவனை இடுப்பில் வைத்துதான் நடக்க வேண்டும், பல நேரங்களில் தூக்கி எறிந்துவிடலாம் போல இருக்கும், அவன் எலும்புகள் சதா என் இடுப்பெலும்பை குத்திக்கொண்டே இருந்தது, மார்புகளில் சுரக்காத பாலை அவன் விரல்களில் தேடி அலைந்து, விரல்களை சப்பி இப்போது அதுவும் கரைந்து போனது போல் சுருங்கிற்று. இளையவள் பாதி உடல் இளைத்து, மஞ்சள் நிறமாகி, கன்னங்கள் சுருங்கி, கண்கள் ஏதோ குழிக்குள் இருப்பது போன்று இருக்கிறது. தலையில் போர்த்திக்கொள்ளும் சால்வையை கொண்டு உடலை மறைத்திருக்கிறாள். இரண்டாமவனுக்கு இன்னொரு பெயர் குச்சி. எலும்புகளின் நீட்சியாய் அவனுக்கு சதைகள் மட்டும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்தது. அந்த நீண்ட வரிசையில் நிற்பதால், ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டும், மஞ்சள் நிறம் அப்பிய சோற்றுப்பருக்கைகளை ஒரு பொட்டலத்தில் கொடுப்பார்கள். எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் பொட்டலம் ஒன்றுதான். ஆனால் இதை வாங்கவே காலையில் இருந்து சூரியன் மண்டையில் படும் மதியம் வரை வரிசையில் நிற்க வேண்டும். இந்த வரிசையை கடக்குமுன்னே பலர் மயக்கம் போட்டு விழலாம், சிலர் இறந்தும் போகலாம், யாராவது மயக்கம் போட்டு விழுந்தாலோ, இறந்தாலோ வரிசையில் அடுத்து இருப்பவர்களுக்கு கொண்டாட்டம்தான். அவர்கள் வரிசையில் முன்னோக்கி வந்து விடுவார்கள். அதிகாரிக்கு என்றாவது மனமிருந்தால் ஒரு பொட்டலம் கூடுதலாக கிடைக்கும். அங்கே தலையில் விளிம்புடன் கூடிய தொப்பி ஒன்றை அணிந்திருக்கும் நபர்தான் அதிகாரி. விளிம்பில்லாத வட்ட வடிவ தொப்பியுடையவர்கள் அவர் சொல்வதை அப்படியே கேட்பார்கள். இறப்பவர்களை, மயக்கம் போட்டு விழுபவர்களை தரதரவென இழுத்துச் செல்வார்கள். பசியால் யாரேனும் வரிசையில் இருந்து விலகி முன்னோக்கி வந்தால் லத்தி கொண்டு அடிப்பார்கள். அதிகாரியிடம் இருந்து உத்தரவு வரும், செய்வார்கள். அவர்கள் சாப்பிடுவதற்கு கூட அதிகாரிதான் அனுமதி கொடுப்பார். 

இந்த உணவு வழங்கும் கூடாரத்திற்கு அருகே அதிகாரியின் வீடு இருக்கிறது. அவர் அங்கேதான் பத்திருபது பேர் சூழ, சுழல் நாற்காலியில் உட்கார்ந்துக்கொண்டு முன்மேசையில் வகைவகையான உணவுகளை சாப்பிட்டுக்கொண்டிருப்பார். அவ்வகையான உணவுகளை தொலைவில் இருந்து கூட நாங்கள் பார்க்க முடியாது. இந்த மஞ்சள் அப்பிய சோற்றில் பல நேரங்களில் எந்த சுவையும் இருக்காது. இப்படி ஒரு உணவை எப்படி சமைக்க முடியும் என்று வரிசையில் பலரும் வியந்து பேசியதை கேட்டிருக்கிறேன். இப்போது என்னுடைய முறை. வட்டதொப்பிக்காரர் எனக்கு உணவை கொடுக்க கைகளை நீட்டியிருக்கிறார். அதிகாரி அவரை நிறுத்த சொல்லி, பொறுமையாக நடந்து வருகிறார். சில நேரங்களில் அதிகாரி கைகளால் உணவு கொடுப்பது வழக்கம். கொடுத்துவிட்டு அதனை புகைப்படம் எடுத்துக்கொள்வார். பின்னர் மீண்டும் தன் வீட்டுக்குள் சென்றுவிடுவார். கையில் புதிய சிகரெட் ஒன்றினை பற்றவைத்து உதட்டின் விளிம்பில் வைத்து மேல்நோக்கி புகையை விட்டுக்கொண்டே என்னை பார்த்து மெதுவாக சிரித்தார். எனக்குப் பெருமைதான். மானங்கெட்ட பெருமை, இப்போதாவது இரண்டு பொட்டலம் உணவு கிடைத்துவிடாதா என்கிற ஏக்கம் கொடுத்த பெருமை, அதிகாரி தன்கையால் ஒரு பொட்டலம் உணவை எடுத்தார், அவர் கண்கள் என் கண்களைப் பார்க்கவில்லை. அந்தக் கண்கள் பால் சுரக்காத என் மார்பகங்களை உற்று நோக்கியது, பின்னர் என்னிடம் ஒரு பொட்டலத்தை கொடுத்து நகர சொன்னார். நான் இன்னொரு பொட்டலத்திற்காக காத்திருந்தேன். வட்டதொப்பிக்காரர் ஓடிவந்து விரட்டினார். அதிகாரி தூரத்தில் இருந்து பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தார். அது விஷ சிரிப்பு. 

ஆற்றங்கரையின் எதிரே அமைந்த பெரிய மேற்கூரையிடப்பட்ட அந்த இடத்தில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கிறது. அங்கே யாருக்கும் பெயரில்லை, பெயர் வைக்கும் அளவுக்கு அங்கே யாரும் வசதியாக இல்லை. அதிகாரிக்கு மட்டும் அதிகாரி என்று பெயர் வைத்திருந்தார்கள். நீண்ட அந்த மேற்கூரையில் இருந்து பக்கவாட்டில் நான்கு தகரங்கள் கயிறுகளால் பிணைக்கப்பட்டிருக்கும். இரண்டு பேர் நெருங்கி படுத்துக்கொள்ள கூடிய அளவில் இருந்த அதுதான் அங்கே எல்லாருக்கும் வீடு. அதில் ஒரு வீடுதான் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வீடுகள் எங்கும் பசியின் சப்தம் ஓலங்களாக இருந்து கொண்டே இருக்கும். குழந்தைகளின் சப்தம், வண்டுகளின் ரீங்காரம் போல ஓயாமல் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கும். சோற்றுப்பொட்டலங்கள் கொடுக்கும் இடங்களில் ஊர்ந்து செல்லும் எறும்புகளைப் பிடித்து தின்ன குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. ஆனால் அவரவர் வீடுகளில் ஊர்ந்து செல்லும் எறும்புகளைப் பிடித்து தின்ன கட்டுப்பாடுகள் இல்லை. எல்லா வீடுகளிலும் இரண்டு உருண்டைகளை ஒட்ட வைத்தது போன்று இருந்த கட்டெறும்புகளைப் பிடித்து அவற்றை நெருப்பில் சுட்டுத் தின்பதை மாலை நேர வழக்கமாக வைத்திருந்தார்கள். உயிருக்குப் பயந்து எறும்புகளும் கூட அங்கே வருவதை குறைத்துக் கொண்டன. எதிரில் இருக்கும் ஆற்றங்கரையில் பள்ளங்களும் மேடுகளும், கற்களும் மட்டுமே எஞ்சி இருந்தன. மழை வரும் காலத்தில் அங்கே நீர் வழிந்தோடும், அதில்தான் இறப்பவர்களை தூக்கி எறிவோம் என்று வட்டதொப்பிக்காரர்கள் கூட்டமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதை கேட்டிருக்கிறோம். 

அன்று ஏனோ இரவு அவ்வளவு நீண்டிருந்தது. காலையில் அந்த நீண்ட வரிசையில் நின்றும் பலருக்கு உணவு கிடைக்காமல் போனது. பிள்ளைகள் பசியில் தாய்மார்களின் மார்பகங்களை கடித்து வைத்தது. சில வளர்ந்த பிள்ளைகள் வெறி கொண்டு பெரியவர்களைத் தாக்கியது. வட்டதொப்பிக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் வளர்ந்த பிள்ளைகள் ஆற்றங்கரையோரத்தை நோக்கி ஓடினர். ரத்தம் வழிய வீடுகளில் படுத்துக்கிடந்தவர்களின் அலறல், மங்கிய இரவின் குரல் போல கேட்டுக்கொண்டே இருந்தது. இரண்டாமவன் ‘ம்மா, அந்த பாப்பா சும்மாதானே இருக்கு, எப்ப பாத்தாலும் அழுதுகிட்டு, கட்டெறும்பு மாதிரி பாப்பாவோட தலையை திருகி ரெண்டா பிரிச்சி நெருப்புல வாட்டி சாப்ட்டா என்ன’ என்பது போலப் பேசத்தொடங்கி இருந்தான். மூத்தவள் அவனை ஆமோதிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள். பிள்ளையை இடுப்பில் தூக்கிக்கொண்டு வெளியில் ஓடிவந்து இரவைக் கடத்தினேன். மறுநாளும் விடிந்தது, அதிகாரியின் வீட்டில் காலை உணவு நடந்து கொண்டிருந்தது. நீண்ட குவளை ஒன்றில் சிவப்பு நிறத்தில் எதையோ பருகிக் கொண்டிருந்தார். அதன் சுவை அவருக்கு மிக பிடித்திருக்கும் போல, அருகில் இருந்தவர்களிடம் ஏதோ பேசிக்கொண்டே அந்த பானத்தை சிறுகச்சிறுக பருகினார். நேற்று பிள்ளைகள் தாக்கிய பெரியவர்களின் ரத்தத்தை பிடித்துத்தான் இப்படி பருகிக்கொண்டிருக்கிறார் என்றுகூட எண்ணத்தோன்றியது. ஆனால் ரத்தத்தைப் பருக வேண்டிய அளவுக்கு அவர் பசியில் இருப்பவர் அல்ல என்று நினைத்துக்கொண்டேன். இன்றும் உணவு வரவில்லை, நாளை வந்தால் வரலாம், என்று வட்டதொப்பிக்காரர் வீடுகளில் வந்து அறிவித்து சென்றார். 

நிலவு இல்லாத அந்த நாளில் வானம் எது, பூமி எது என்று பெரிதாக உணரமுடியாமல் இருந்தது. எப்போதாவது நட்சத்திரங்கள் கண்சிமிட்டினால் அதை வைத்து வானத்தை உணர முடிந்தது. கண்களை மூடினாலும், திறந்தாலும் ஒரே மாதிரியான உணர்வுதான் இருந்தது. அவ்வளவும் இருட்டு. அன்று இரண்டாமவனும், மூத்தவளும் சின்னவனைப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். நாளை எப்படியும் உணவு வந்துவிடும், எனக்கு ஒரு பருக்கை கூட வேண்டாம், உங்கள் இருவருக்கு மட்டுமே பிரித்துக்கொடுக்கிறேன் என்று சொல்லி அவர்களை சமாதானப்படுத்தி இருந்தேன். இரண்டாமவன் வீட்டுக்குள் குழி தோண்டி கட்டெறும்போ வண்டுகளோ கிடைக்கிறதா என்று தேடிக்கொண்டிருந்தான். திடீரென அந்த இடம் முழுக்க பெரும் சப்தம் வெடித்தெழுந்தது. அவரவர் கையில் கிடைத்த தீக்குச்சியை ஏந்தி வெளியே எதையோ விரட்டிக்கொண்டிருந்தார்கள். காட்டுப்பன்றி ஒன்று வேகமாக துள்ளி ஓடிக்கொண்டிருப்பதாக அதனை முதலில் பார்த்த மூன்றாவது வீட்டின் இரண்டாமவன் சொல்லிக்கொண்டே ஓடினான். கற்களை உடைத்து எறியும் சப்தங்களும், கால்கள் ஒன்றையொன்று உரசிக்கொள்ளும் சப்தங்களும், பிள்ளைகளின் அழுகுரல் சப்தங்களும் மாறி மாறிக் கேட்டுக்கொண்டிருந்தது. நான் இளையவனை உள்ளே விட்டுவிட்டு இரண்டாமவனையும், மூத்தவளையும் கையில் பிடித்துக்கொண்டேன். இரண்டாமவன் காட்டுப்பன்றியைப் பிடித்து நானொரு பங்கு எடுத்து வருகிறேன் என்று சொல்லி கைகளை மீறித் திமிறினான். திமு திமு வென கூட்டம் எல்லாப் பக்கங்களிலும் ஓடிக்கொண்டே இருந்தது. யார் பன்றியை பார்த்தார்கள், யார் அதை முதலில் விரட்டியது என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. மூன்று மணி நேரமாகியும் கால்கள் பூமியைப் பிளந்து ஓடும் சப்தங்கள் நின்றபாடில்லை. அதிகாரி வீட்டின் விளக்குகள் சட்டென ஒளிர்ந்தன. வட்டதொப்பிக்காரர்கள் சுடும் சப்தம் கேட்டது. கால்கள் ஓடும் சப்தங்கள் மெல்ல குறைந்தன. வெளியே ஆவென கூக்குரல் கேட்டது. எல்லா வீடுகளிலும் இருந்து பேச்சுக்குரல் கேட்க ஆரம்பித்தது. வட்டதொப்பிக்காரர்கள் கைகளில் பெரிய ஒளியுருளைகளை வைத்துக்கொண்டு எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தனர். 

அன்றைய விடியல் பலருக்கும் பேரிடியாக இருந்தது. காட்டுப்பன்றி, அதை விரட்டி சென்ற பலரையும் தாக்கி காயங்கள் ஏற்படுத்தி இருந்தது. வீடுகளில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒருவர் அடிபட்டுக்கிடந்தார். சிலர் இறந்து கிடந்தார்கள். 

இனியும் பசியால் பிள்ளைகளை இழக்க வேண்டாமென்று என் பிள்ளைகளை யாருக்காவது விற்றுவிடலாம் என்றும் அதற்கு உரிய அனுமதி வேண்டும் என்றும், அதிகாரியிடம் மனு அளித்திருந்தேன். அரசுக்கு மனுவை அனுப்பியிருப்பதாகவும் அரசிடம் இருந்து உத்தரவு வந்ததும் சொல்கிறேன் என்று சொல்லிச்சென்றார் அதிகாரி. அன்று என் வீட்டின் வாசலில் நான்கு வட்டதொப்பிக்காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களின் பின்னால் இருந்து அதிகாரி நடந்து வந்தார். ‘உன் பிள்ளைகளை விற்க அனுமதி அளிக்கச் சொல்லி அரசிடம் இருந்து ஆணை வந்திருக்கிறது, ஆனால் அதனை மாற்றவும், ஏற்கவும் எனக்கு உரிமை இருக்கிறது, நான் உன் பிள்ளைகளை விற்க அனுமதி அளித்தால் எனக்கு என்ன செய்வாய்’ என்று கேட்டு என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். வெளியே இருந்த நான்கு வட்டதொப்பிக்காரர்களும் எதிர்பக்கமாக திரும்பி நின்றார்கள். சிறிது நேரத்தில் நான் மயங்கிக்கிடந்தேன். சின்னவன் உள்ளே மீண்டும் அழும் குரல் கேட்டு முழிப்பு வந்தது, கால் இடுக்குகளில் வலி அதிகமாக இருந்தது. உடலில் பசபசப்பு இன்னும் நீங்கவில்லை. கையில் அதிகாரி ஒரு கடிதத்தை திணித்திருந்தார். 

ஊரின் மற்ற பகுதிகளில் இருந்து மனிதர்கள் வந்து என் குழந்தைகளைப் பார்த்தார்கள். சிவப்பு நிறத்தில் நீண்ட அங்கி அணிந்திருந்த ஒருவர் சின்னவனைப் பார்த்து, ‘இவன் ஏன் எலும்பு போல் இருக்கிறான், எடுத்துச் செல்லும் வழியிலேயே செத்துவிடுவான் போல் இருக்கிறதே’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். இது போன்று அரசின் அனுமதி பெற்று பிள்ளைகளை விற்க தனியாகக் கூடாரம் ஒன்று அமைத்திருந்தார்கள். அங்கே சென்று அனுமதிக்கடிதத்தைக் காட்டிவிட்டு என் பிள்ளைகளை வரிசையாக நிற்க வைத்திருந்தேன். அங்கே வந்திருந்த எல்லாரும் நல்ல உடை அணிந்திருந்தார்கள். இந்தப் பிள்ளைகளை அவரவர் வீட்டில் வேலைக்கு அமர்த்துவதற்காகப் பணம் கொடுத்து வாங்கிச் செல்வார்கள், ஆனால் இரண்டு வேளையாவது உணவு கிடைக்கும் என்று உத்திரவாதம் அளித்தார்கள். என் பிள்ளைகள் எங்களை எப்போது வாங்குவார்கள் என்று என்னிடம் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். சின்னவன் அழுவதை நிறுத்திவிட்டு என்னைப் பார்க்கும்போது, என்னை முதலில் விற்றுவிடு என்று என்னிடம் சொல்வதைப் போல் இருந்தது. நான்கு நாட்கள் ஆகியும் பிள்ளைகளை ஒருவரும் வாங்கவில்லை. அன்று மீண்டும் எங்கள் வீட்டுக்குள் நுழைந்தோம். வட்டதொப்பிக்கார்கள் நாளை இரவு எல்லாரும் அவரவர் வீடுகளில் விளக்கேற்றி வையுங்கள் என்று அறிவிப்பு செய்தபடி சென்று கொண்டிருந்தனர். எங்கள் வீட்டில் தீக்குச்சி மட்டுமே இருக்கிறது, நாங்கள் எப்படி விளக்கேத்த முடியும் என்று கேட்டதற்கு அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது, விளக்கேத்த வேண்டும் என்பது உத்தரவு, கைகளால் அடிக்கடி தொப்பியை சரி செய்து கொண்டே, சொன்னதைச் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு அவர் நடந்து சென்றார். அவர் சொல்லிச் சென்றது போலவே அன்று இரவு அவரவர் வீட்டில் இருந்து தீக்குச்சி ஒன்றை ஏற்றிக் காட்டிக்கொண்டிருந்தோம். ஆனால் அதன் ஒளி போதவில்லை என்று துப்பாக்கியால் சுட்டார்கள். அதன் அர்த்தம், ஒளி இன்னும் அதிகமாகவேண்டும் என்பது. அக்கம்பக்கத்து வீட்டில் இருந்த பெரியவர்கள், அருகே கிடைத்த பிளாஸ்டிக் பைகள், சோற்றுப்பொட்டலம் வாங்கிவந்த பேப்பர்களை சேர்த்து வைத்துக் கொளுத்தினார்கள். தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த நேரத்தில் நான் கண்களை மூடிக்கொண்டு என் பிள்ளையை கைகளில் இறுகப் பற்றிக் கொண்டேன். கண்கள் திறந்து பார்த்தால் எல்லா அம்மாக்களும் அப்படியே அவரவர் பிள்ளைகளை கைகளில் இறுகப்பற்றி இருந்தார்கள். இல்லையேல் அந்தத் தீயில் பிள்ளைகளை வாட்டிச் சாப்பிடும் அளவுக்கு எல்லாருக்கும் பசியிருந்தது. 

பிள்ளைகளை விற்பது சாத்தியமற்ற ஒன்றாக இருந்தது. கொஞ்சமாவது வலுவுள்ள பிள்ளைகளை மட்டுமே வந்தவர்கள் வாங்கிச் சென்றார்கள். வலுவற்ற பிள்ளைகளைக் கொன்று விடலாம் என்றும் அதற்கும் அரசின் அனுமதி கிடைக்கும் என்றும் கூடாரத்தில் இருந்த வட்டதொப்பிக்காரர் எல்லா வலுவற்ற பிள்ளைகளைப் பெற்றவர்களிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். நானும் பிள்ளைகளைக் கொன்றுவிட மனு அளித்தேன். அதிகாரி வீடு வரை வந்து சென்றார். வட்டதொப்பிக்காரர்கள் நான்கு பேர் எதிர்பக்கமாக திரும்பி நின்றார்கள். அதிகாரி என் கைகளில் பிள்ளைகளைக் கொல்வதற்கான அனுமதி கடிதத்தை கொடுத்துவிட்டுச் சென்றார். 

ஆற்றங்கரையில் தண்ணீர் இருந்தால் பிள்ளைகளை அதில் தூக்கி எறிந்து விடலாம், ஆனால் ஆற்றங்கரையில் மணல்கூட இல்லாமல் வெறும் திட்டுக்களாக மட்டுமே இருந்தன. மொத்தப் பிள்ளைகளையும் ஒரு பெரிய நீண்ட துணியில் சுருட்டி அவர்களை மூன்று நாட்கள் ஆற்றங்கரையோரம் வைத்துவிட்டால் மூச்சடைத்து அவர்கள் இறந்துவிடுவார்கள் என்றும் வட்டதொப்பிக்காரர்கள் ஆலோசனை சொன்னார்கள். மனிதர்களை மனிதர்கள் கொன்று தின்னக்கூடாது என்கிற சட்டம் இருப்பதால், பசித்தவர்களுக்கு இவர்களைக் கொன்று உணவாகவும் கொடுக்க முடியாது என்று அதிகாரி முன்னமே சொல்லியிருக்கிறார். இறந்தவர்களை அப்படியே ஆற்றங்கரையோரம் தூக்கி எறிந்துவிடுவார்கள். மொத்தமாக நூற்று சொச்சம் குடும்பத்தில் இருந்து அவரவர் பிள்ளைகளைக் கொல்ல அனுமதிக் கடிதம் வைத்திருந்தார்கள். 

அன்று வானம் முழுக்க மேகங்கள் கருத்திருந்தன. உணவைப் பெற வரிசையில் நிற்கும்போதே இருட்டிவிட்டது போன்று இருந்தது. எங்கிருந்தோ காகங்கள் கத்திக்கொண்டே எங்கள் வானில் பறக்கத்தொடங்கியது. நாங்கள் காகங்களை அங்கே பார்ப்பது அதுவே முதல்முறை. வானில் நீண்ட பஞ்சுபோன்ற மேகங்கள் மெதுவாக நகர்ந்து கொண்டே இருந்தன. கொஞ்சமாக துருத்திக்கொண்டிருந்த சூரியனையும் அந்த மேகங்கள் மறைத்து நின்றன. ஒரு சொட்டு நீர் என் கைகளில் விழுந்தது. சின்னவன் அதனை அவன் மொட்டு பற்களால் உறிஞ்சி எடுத்தான். மழை ஓவென பெய்யத் தொடங்கியது. ஊரெங்கும் மழை மட்டுமே நிறைந்திருந்தது. குழந்தைகள் ஆட்டம்போட்டனர். பெரியவர்கள் வானை நோக்கி வாயைவைத்து மழைநீரைப் பருகினார்கள். கொண்டாட்ட சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. வட்டதொப்பிக்காரர்கள் வானை நோக்கி சுட்டனர். எல்லாரும் அமைதியாக இருக்கும்படி உத்தரவிட்டனர். அதிகாரி கையில் பெரிய சுத்தியலுடன் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார். மண்டை வெடிக்கும் அளவுக்கு அவருக்கு தலைவலிக்கிறது என்றும், இன்னொரு நொடி இங்கே யாராவது கூச்சல் எழுப்பினால் சுத்தியலால் மண்டையை உடைத்துவிடுவேன் என்றும் மிரட்டிக்கொண்டிருந்தார். இரண்டாமவன் அந்த சுத்தியலை பார்த்துக்கொண்டிருந்தான். பின்னர் என்னை திரும்பிப்பார்த்தான். பசி வெறியில் பாய்ந்து அந்த சுத்தியலைப் பிடித்தான். சுத்தியல் கீழே விழுந்தது. வட்டதொப்பிக்காரர்கள் துப்பாக்கியால் இரண்டாமவனை சுட்டார்கள். மழைநீரோடு அவன் ரத்தத் துளியும் சேர்ந்து என் மீது தெறித்தது. எப்படி நடந்தது என்று தெரியுமுன்னரே சுத்தியலை எடுத்து அதிகாரியின் மண்டையை உடைத்தேன். வழிந்தோடிய ரத்தத்தை மூச்சுமுட்டப் பருகினேன். அதிகாரியின் மண்டை உடைந்து வெளியே தொங்கிக்கொண்டிருந்த மூளையை எடுத்துப் பிள்ளைகளுக்கு கொடுத்தேன். மூத்தவள் சொன்னாள் எவ்வளவு மிருதுவாக இருக்கிறது இந்த உணவு. ஆனால் கொஞ்சம்  கூட சுவையாக இல்லை என்றாள். ஆம் மனித மூளை உண்பதற்கு அத்துணை மிருதுவானதுதான். துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டது. என் கண்கள் வழியே எந்த காட்சியும் மூளைக்குள் முழுவதுமாக பதிவாகவில்லை. தூரத்தில் தெளிவற்று தெரிந்த அந்தக் காட்சியில் வட்டதொப்பிக்காரர்களைப் பெருங்கூட்டம் சூழ்ந்திருந்தது. 


***

நன்றி: டெடுயூஸ் பரோவ்ஸ்கி (பொலிஷ் எழுத்தாளர்

அருண் மோ – மாற்று திரைப்படங்கள் மட்டும் திரைத்துறை சார்ந்த முன்னெடுப்புகளை தமிழ் ஸ்டூடியோ என்கிற பெயரிலும், பேசாமொழி என்கிற துறை சார்ந்த இதழையும் நடத்தும் அருண். தற்போது சிறுகதைகளும் எழுதி வருகிறார். தொடர்புக்கு – thamizhstudio@gmail.com

பிரித்துத் தைத்தவை

0

அனில் குற்றிச்சிறா (மலையாளத்திலிருந்து தமிழில்: மீரா மீனாட்சி)

இறந்த பின்
புதியதும் பழையதுமான
அவனின் உடைகள்
எனக்குக் கிடைத்தன

புத்தம்புது ஏடுகள் கிடைத்த
சிறுவனின் வெகுளித்தனத்துடன்
ஒவ்வொன்றையும் அணிந்து
கண்ணாடி முன் சரிபார்த்தேன்
எதுவுமே பொருந்தி வரவில்லை

எனக்குப் பிடித்த கரும்நீலம்
திருமண ஆல்பத்தில் அவனை
பளிச்சென்று நிறைத்த தீ-மஞ்சள்
அவனுடைய பிறந்தநாளில்
அவள் பரிசளித்த பச்சை
இப்படி இறுக்கமானதும்
தளர்வானதுமாக

இறப்பதற்கு முன்
அவனுடன் பகிர்ந்துகொண்ட
தேநீர் வாயில் கசக்கிறது
அப்போதும் அவன்
தீவிரமாக வாழ்க்கை
வாழ்க்கையென்றபடி இருந்தான்

1 A முதல் 4 A வரை
5 C முதல் 7 D வரை
இருவரும் ஒரே வகுப்பறையில்

பள்ளி விட்டதும்
ஒன்றாக விசிலடித்து
சூதாட்டத்தில் திளைத்து
கிடைத்ததெல்லாம்
பணயம் வைத்தோம்

பிரித்துத் தைத்து
துவைத்து சலவைசெய்தும்கூட
அவ்வுடையிலெல்லாம்
அவன் வாசமே மீந்தது

இன்று
என்னவளும்
என் உடைகளை
தானமிடுகிறாள்

பிரித்துத் தைத்து
மீண்டும் அவன் வாசனை
தெருவில்
எங்கெங்கோ
திசையற்றுப் பாய்கிறது

***

அனில் குற்றிச்சிறா, கேரளாவில் உள்ள வயநாட்டைச் சேர்ந்தவர். நீர்மாதளம் புக்ஸ் என்ற பதிப்பகம் வைத்திருக்கிறார். கவிதைகள், கதைகள் , கட்டுரைகள் என பல பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.

வழித்தடம்

3

ரமேஷ் ரக்சன்

சுதாவுக்கு கெட்டவார்த்தை போடவராது. வாக்கப்பட்டு வரும் முன்னர், தெருவில் யாராவது சண்டை போட்டாலும் அவர்கள் அவ்வளவு சத்தமாக உச்சரிப்பதை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டு நிற்பாள். அவளுக்கும் அப்படி விளையாட்டுக்காவது பேசிப் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆசை உண்டு. கல்யாணம் ஆன முதல்மாதமே சுதாவிற்கு நாள் தள்ளிப்போயிருந்தது. அப்போதிருந்து குழந்தை பிறக்கும்வரை கெட்டவார்த்தையே நினைவில் வரக்கூடாதென போராடியிருக்கிறாள். இரண்டு வருடம் கழித்து அவள் விருப்பம் இல்லாமலே இரண்டாவது குழந்தை கருத்தரித்த நாளில் மனதிற்குள் மருவிக் கொண்டிருந்தாள். முதல் பிள்ளையே அவனோடு பெற்றிருக்கக்கூடாதென நினைக்கும் அளவிற்கு அவள் காதில் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. காத்திருந்த கனவுகள் எல்லாம் உபரியாகி வற்றிப் போயிருந்தது. எந்நாளும் கெட்டவார்த்தை தான். வாய்விட்டுச் சொல்லமுடியாத அளவிற்கு அவளது சுதந்திரம் இருந்தது.

இருவரும் அந்நியோன்யமாகத் திளைத்த நாட்களில்கூட பால்பெருமாள் ‘செஞ்சிவிடேன்’ என்று கேட்டதற்கு ‘ஒருமாதிரி இருக்கு’ என மறுத்துவிட்டாள். ஒரு ஆண் ஒரு செயலுக்கு இரண்டாவது முறையாக பெண்ணிடம் நிற்பது இழுக்கு என்பது அவனின் கோட்பாடு. கேட்டவுடன் நிகழ வேண்டும். திரும்பக் கேட்பது கெளரவ குறைச்சல். ஆண் என்ற அதிகாரத்தை விட்டுக்கொடுப்பது போலாகிவிடும். திரும்பப் போய் நிற்பது கட்டுக்குள் இருக்கும் பெண்ணை அவிழ்த்து விடுவதாகும். எல்லாம் அவனே வகுத்துக்கொண்ட கேட்டறிந்திடாத கற்பிதம். அதுவே முதலும் கடைசி. அன்றோடு கேட்பதை நிறுத்திக் கொண்டவன் வெட்டுப்பட்டுப் படுத்திருக்கையில் ஈனக்குரலில் கேட்டுப் பார்த்தான். “தான்” என்று மார் தட்டிக்கொள்வதற்கான கண்ணி அவன் கழுத்தையே இறுக்கியிருக்கிறது.

காமம் கருணையின் வடிவத்திற்குள் ஒருபோதும் பொருந்திப்போவதில்லை.

கவிதா பற்றித் தெரிந்ததிலிருந்து, அவளின் இரண்டு வருட ஆற்றாமை! ஒரு நாள்கூட சுதாவின் எந்தவிதமான உணர்வுகளையும் முகத்தில் காட்ட முடிந்ததில்லை. எப்போது வீட்டிற்கு வருவான் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. பால்பெருமாளும் சொல்லிவிட்டு வருவதில்லை. வரும் போதெல்லாம் சிரித்த மேனிக்கு அவனுக்கு காட்சி தர வேண்டும். சுதாவும் அப்படியே தன்னை தகவமைத்து வைத்திருந்தாள். அவனுக்காகப் பயந்தே எந்நேரமும் சேலையில் இருப்பாள். நாள்பட நாள்பட அவர்களுக்குள் கசப்பு ஏறிக் கொண்டே போனாலும் நல்லநாள், துக்கவீடு எனக் காரில் வீதி உலா வருவதும், இவனுக்கு கிடைத்து வந்த மரியாதையையும் பார்த்து தனக்குள் பிறந்த வீட்டிலிருந்து ஏற்றிவிடப்பட்ட மிதப்பில் மீதமெல்லாவற்றையும் அனுசரித்துக் கடந்து வந்தாள். அனுசரித்துச் செல்வதற்கும், சகித்துக் கொள்வதற்குமான வித்தியாசம் அவளுக்கு எட்டாமல் இருந்தது. திருமணம் பற்றிப் பேச்செடுக்கப்பட்ட நாளில் இருந்தே அவள் காதில் விழுந்த வார்த்தை அனுசரனை. அதன் வீரியம் தன்னை நோக்கி நிறுத்தப்பட்டிருக்கும் கத்தி என்பது பிடிபடாமல் இருந்தது.

புருசன் வெட்டுப்பட்ட செய்தி வந்த பக்கத்தை மட்டும் வெட்டி வைத்திருந்தாள். வெட்டுப்பட்டான் என்பதைவிட, இதற்குப்பிறகு முந்தானைக்கு மேலே வலப்பக்கம் மயில் தாங்கிய இருபத்தியோரு பவுன் தாலியோடு வலம் வருவதை நினைத்துப் பார்க்கவே அவளுக்கு வெப்ராளமாக இருந்தது. கணவனின் அந்தஸ்தும் அதிகாரமும் பொதுவெளியில் இவளுக்கும் பங்கு வைத்துக் கொடுக்கப்பட்டதே அவளின் தற்காலிக விடுதலையாக இருந்தது. அவனுக்கான மரியாதை போனது என்பதைவிட தன் பங்கு அந்தஸ்தில் கைவைத்துவிட்டதே என்பதே பேரிடியாக அவளுக்குப் பட்டது. ஒன்றை இழந்து அதை ஈடுகட்ட இன்னொன்றைப் பிடித்து வைத்திருந்தாள். இனி பழி தீர்க்கப்படும்வரை அதற்கு வழியில்லை.

“முன் பகை காரணமாக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவரை அருகில் வந்து நின்று ஓடச் சொல்லி விரட்டி விரட்டி வெட்டு. ஒரே ஜாதி என்பதால் கொல்லாமல் விட்டதாக சரணடைந்தவர்கள் வாக்கு மூலம்”. சுதாவுக்கு மனப்பாடமே ஆகிவிட்டது.

“அந்த வேசய பாடுபாக்கச் சொல்ல வேண்டியதுதான? மருந்து வச்சி நெதம் தொடச்சிவிட்டு நோகாம அவகிட்ட தூக்கிக் குடுக்க மட்டும் நான் வேணுமா? ஈனப்பயலுக்கு செஞ்சி விடனுமாம்”

பால்பெருமாள் 12ஆவது பாஸ் ஆகவில்லை என்பதற்காக கல்யாணப் பத்திரிக்கையில் சுதா பெயருக்குப் பின்னால் BSCபோட வேண்டாம் என்று சொன்ன அன்றே சுதாரித்திருக்க வேண்டுமென அடிக்கடி தன் அப்பாவை மனதிற்குள் கடிந்து கொள்வாள். பத்திரிக்கை அடிக்கக் கொடுப்பதற்காக உறவின்முறையோடு பெயர்களை எழுதும்போது ஒருமுறை அவனோடு கல்யாணத்தில் விருப்பம் இல்லையென முணுமுணுத்திருக்கிறாள். ஆனால் சபையில் எதுவுமே எடுபடவில்லை.

ஆஸ்பத்திரியில் இருக்கும்போது எஸ்.ஐ அவ்வளவு கேட்டும் ராஜனின் பெயரை பால்பெருமாள் சொல்ல மறுத்துவிட்டான். அவன் என்கூட நின்றான். அவனுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்பதில் உறுதியாக இருந்தான். முதல் வெட்டு மட்டும்தான் கொஞ்சம் ஆழமாக விழுந்ததே ஒழிய மிச்சம் மூன்று வெட்டும், கறியைக் கீறி மசாலா தடவும் அளவிற்குத்தான் இறங்கியிருந்தது. ஆனால் மல்லாந்து படுக்க முடியாது. முதுகில் அழுத்தம் கொடுக்கவேண்டாமென டாக்டர் சொல்லி அனுப்பியிருந்தார். எவ்வளவு நேரம்தான் பட்டும் படாமலும் நாற்காலியில் முதுகு இறக்கிப் படுத்திருக்க முடியும். வெட்டு வாங்கியதைவிட அவனுக்கு அவமானமாக இருந்தது என்னவோ விரட்டி விரட்டி வெட்டினார்களாம் என்று ஊர் முழுக்கப் பரவிய செய்திதான். உயிருக்குப் பயந்து ஓடினேன் என சிரித்துக் கொள்ளவா முடியும். அதனாலேயே துக்கவீட்டிற்கு துக்கம் விசாரிக்க வருபவர்கள் போல முகத்தை தொங்கப்போட்டுவிட்டு வருபவர்களை சந்திக்க விரும்பாதிருந்தான். அவன் நடமாட்டம் தெரிந்து, கவிதா டீக்கடைப் பக்கம் ஒருநாள் பார்க்க வந்திருந்தாள். அவனால் அத்தனை பேர் முன்னால் வைத்து அவளோடு உரையாட முடியவில்லை. அவளுக்கான உரிமையை வெளிப்படுத்தவிடாமல் அனுப்பி வைத்தான். அவன் வீட்டிற்கு வருவதற்குள் கவிதா வந்துபோன கதை வீட்டிற்குள் வந்திருந்தது.

பால்பெருமாளின் மனைவி எதுவுமே கேட்டுக் கொள்ளாமல் ஈரத் துணியை வைத்து முதுகு துடைத்துக் கொண்டிருந்தாள். அது தன் மீதுள்ள அன்பின் காரணமாக இல்லையென கவிதா வந்து போனதும் உரைத்தது. இந்த மனநிலையோடு இங்கிருந்து காயத்தை ஆற்றிக் கொள்ளக் கூடாது என்று வீம்பாக இருந்தான். யாரிடமோ பேசுவது போல போனை எடுத்துக்கொண்டு மாடிப்படியேறவும் கவிதா இவன் அழைப்பை எடுத்தாள். அவனின் பாசாங்கு பேச்சைப் பற்றி சமீபமாக நன்கு தெரிந்து வைத்திருந்தாள். தன் கெட்டிக்காரத்தனத்தை இப்போது காட்டாவிட்டால் இனி எப்போதும் வாய்ப்பில்லை என்பது அவளுக்கு பிடிபட்டது. கோபமாக பேசிப் பார்த்தான். பயம்காட்டிப் பார்த்தான். செல்லம் கொஞ்சிப் பார்த்தான். அவள் எதற்குமே மசியவில்லை. தன்னால் தோப்பிற்கு வந்து “பாடுபாக்க” முடியாது, வீட்டில் வந்து தங்குமாறு கேட்டுக் கொண்டாள். வீட்டிற்கு வருவதின் பின்னாலிருக்கும் பாதகங்களைச் சொல்லி இவனால் மறுத்துப் பேசவும் முடியவில்லை. அவன் தயங்குவதற்கான தொனி அவளுக்குப் பிடிபட்டது. திருவிழா முடிந்து தோப்பில் அவன் கழற்றிப் போட்டிருந்த ஃபிளெக்ஸில் அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பட்டம் நினைவிற்கு வந்தது.

கர்ஜிக்கும் சிங்கமும் பால்பெருமாளும் அருகருகே நடந்து வருவது போல முழு உருவப் புகைப்படம் இருந்தது. தங்கத்தின் கனம் கழுத்திலும் விரல்களிலும், மணிக்கட்டிலும் தெரிந்தது. வீறுகொண்டு நடந்து வருவது போல புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. மூன்று வரிசைகளாக ஊர்ச் சிறுவர்களின் புகைப்படம் இருந்தது. தோப்பில் அவளோடு இருக்கும் பால்பெருமாளுக்கும், ஃபிளெக்ஸில் இருக்கும் பால்பெருமாளுக்கும் நூறு வித்தியாசங்கள் இருந்தன. ஒருவரின் முகத்தைப் பார்த்தால் பேச்சுகூட கொடுக்காமல் இவன் என்ன ஆள் என்று துல்லியமாக சொல்லக்கூடிய பெரியவர்களின் கண்களில் இருந்து அவனைப் பார்த்தாள். புதுப்பணக்காரனின் “பவுசு” முகத்திலிருந்து வடியாமல் இருந்தது. எக்காளமாக வாய்விட்டுச் சிரித்தாள். அவன் உடல்மொழியை தன்னுடலில் இறக்கி இடுப்பில் கைவைத்து அக்கம்பக்கம் யோசிக்காமல் சத்தமாக “நாடார்குல திலகமே” என்றாள்.

கவிதா மண்வெட்டி / களைவாரி பிடித்து தோட்ட வேலை செய்யக் கூடியவள். கையை, தட்டி உதறினால் உள்ளங்கையில் தூசி படியாது. விரல்நக இடுக்குகளில் அழுக்கு தங்காது. உள்ளங்கையில் ரேகை தாண்டி வேறு எந்தக் கீறல்களும் இருக்காது. உடலை சுத்தமாக பேணவேண்டி அவளுக்கு எந்த மெனக்கெடலும் தேவைப்படாது. இத்தனைக்கும் தினமும் வேலைக்குச் செல்லும் பழக்கம் கொண்டவள். அவள் உடம்பு வழுக்குமரம் போல வழுவிச் செல்லும். “பாவிபட்ட படிக்காம போயிட்டா. போகமாட்டேன்னு ஒத்த கால்ல நிக்றவள நம்ம என்ன சொல்ல” கவிதா அப்பாவிற்கு என்றைக்குமான கவலை.

பால்பெருமாள் அந்த இடத்தைப் பத்திரம் முடிக்கும் முன்னர் ஒரு நாள் பார்த்துச் சென்றான். பின்னர் ஒருநாள் அளவையில் இருக்கும் பிரச்சனைக்காக செல்லான் கட்டி ஆள் வைத்து அளந்தபின் வாங்குவதில் உறுதியாக இருந்தான். இரண்டு நாளுமே இருவரும் வெறுமனே பார்த்துக் கொண்டனர். சாணி மெழுகிய திண்ணையில் நைட்டியை ஏத்தி முட்டி தெரியாமல் முன்பக்கம் மடித்துவிட்டு அமர்ந்திருந்தாள். வாடாச்சி மரத்திலிருந்து காய்ந்து காற்றில் உதிர்ந்த சாட்டையை உள்ளங்கையில் கிலுகிலுப்பை போலத் தட்டிக் கொண்டிருப்பாள். அந்த ஓசை கன்றுக்குட்டிக்குப் பிடிப்பதாக நம்பினாள். மாட்டிற்கு தண்ணீர் காட்டிய பழக்கம். மாடு இல்லையென்பதில் அவள் மனம் இன்னும் சமாதானம் அடையவில்லை. கவிதாவின் கண்களையும், கால்களையும் அவன் பார்த்த விதமே அவளைப் பிசக வைத்திருந்தது.

பத்திரப் பதிவுக்கு முந்தைய இரவு பாதித் தொகையை எண்ணிக் கொடுத்துவிட்டு கிளம்புவதற்கு கருக்கல் ஆகியிருந்தது.

கொண்டி கூட வைக்காமல் முன்கதவைச் சாத்திவிட்டு இடுப்புவரை நைட்டியை ஏத்தி இறக்கிய சொச்ச நிமிடத்தில், புளித்தண்ணி வைத்து சுடுவதற்கு வேண்டி கத்தரிக்காய் பறிக்கச் சென்ற அப்பா வராததில் ஆசுவாசம் அடைந்திருந்தாள்.

பால்பெருமாள் வெளியேறும்போது பெயரைக் கேட்கவும் “அத இப்ப தெறிஞ்சி என்ன பண்ண போறீங்க” என்றுதான் கேட்க நினைத்தாள்.

தெற்குப்பார்த்த வாசல். வீட்டிற்கு மேல்பக்கம் வைக்கோல் படப்பும் மாடுகளும் அங்குதான் கட்டப்பட்டிருக்கும். அருகிலேயே தென்னந்தோப்பும் கிணற்றடியோடு பம்பு செட்டும் உண்டு. மலையடிவாரத்திலிருந்து முதல் வீடு. ஊருக்குள் இறங்கிய சிறுத்தை கவிதா வீட்டில் கிடந்த ஆறு மாடுகளையும் கழுத்தில் கடித்துக் கொன்றபிறகு, அவளின் அப்பா எறும்பிலிருந்து நத்தையாகி அலைந்தார்.

ஊருக்குள் பலமான எதிர்ப்பு வந்தும் காத்தாடி போடுவதற்கு சுப்பையா அவர் இடத்தைக் கொடுத்திருந்தார். காத்தாடி இயக்கத்திற்கு வந்த கொஞ்ச நாளிலேயே “வ்ஞ் வ்ஞ் வ்ஞ் வ்ஞ்” என்ற ஒவ்வொரு சுற்றுக்குமான இரைச்சல் பழக மிகவும் கடினமாக இருந்தது. கவிதாவின் அப்பாவிற்கு அப்படித்தான் இரண்டு காதுகளும் அடைத்துக் கொண்டது. வயது முதிர்வு இல்லையென்பதற்கு அவர் கண் பார்வையே சாட்சி. காற்றாடியின் நிழல் வீட்டிற்குள் விழுவதைப் பார்க்கும் போதெல்லாம் அவருக்கு எங்கோ வேற்று நிலத்தில் வசிப்பது போலப்பட்டது

கவிதா, பால்பெருமாள் தோப்பிற்கு வந்து செல்வது அவர் கண்ணில் பட்டும் கேட்டுவிட மனம் விரும்பவில்லை. “அவளுக்குள்ள என்ன பிடிவாதமோ?” மனதிற்குள் கேட்டுக் கொண்டார். “வளந்த புள்ள என்னத்த சொல்ல?” எப்போதாவது அவளுக்குக் கேட்கும்படி அவராகவே பேசிக் கொள்வார். அவருக்குமே அதற்குமேல் தலையிட விருப்பமில்லை. ஊருக்கே தெரிந்துவிட்டபிறகு கூப்பிட்டு வைத்துப் பேசினால் மட்டும் கடந்த காலத்தை எல்லோர் கண்ணிலிருந்தும் மறைக்கவா முடியும்? “நடக்குறது நடக்கும்” என்பது கவிதா அப்பாவின் சமாதானம்.

கவிதா முதல்நாள் தன்னைக் கொடுத்ததிலிருந்தே அந்த சம்பவத்தை நினைத்து வருத்தப்பட்டவள் இல்லை. அவளுடைய தேவையின் பொருட்டே எல்லாம் நிகழந்தது. தோப்புக்குள் இருக்கும் வீட்டிற்கு வரச் சொன்னது மட்டுமே பால்பெருமாளின் தேர்வாக இருந்ததே தவிர மீதமெல்லாம் அவளின் ராஜியம்தான். அதிகாரத்திற்கும் அந்தஸ்த்திற்கும் கெளரவத்திற்கும் பழக்கப்பட்ட ஒருவனின் உள்ளம் எங்காவது ரகசிய கேவலோடு பெண்ணிடம் சரணடையத் துடிக்கும். அது ஒருபோதும் மனைவியாக இருப்பவளுக்கு கொடுத்து வைக்காத வாழ்வு என்பதை கவிதா நன்கு அறிந்து வைத்திருந்தாள். தான் வசிக்கும் தெருவிற்குள் வர அவன் கால் கூசுவதற்கான காரணம் அவளுக்கொன்றும் கசக்கவில்லை. அவனுக்கு மன்னிப்பைப் பரிசாக வழங்கினாள். அதன் ஆயுளைத் தீர்மானிக்கும் வல்லமை அவளிடம் இருந்தது.

பால் பெருமாளுக்கு அதிகாரத்திலும் பணத்திலும் எட்டிப் பார்த்த கெளரவம் காணாமல் போயிருந்தது. அவனோடு சேர்த்து அவனது காருக்கும் கெளரவம் குன்றி காரின் நிறமே பொலிவிழந்திருந்தது. இருவருமே இதுநாள்வரை அவர்களுக்குள் எந்தவித வாக்கும் கொடுத்துக் கொள்ளவில்லை. பால்பெருமாள் அவளை வரவைக்கும் யுக்தியில் ஏதும் வாய்விட்டுவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்தோடு இருந்தான். விடியற்காலை மூன்று மணிக்கு வீட்டிற்கு வரச் சொன்னாள். அவனுக்கும் சரியாகத்தான் பட்டது. ஒரு இருமல் சத்தம்கூட வீட்டில் இன்னொரு ஆண் இருப்பதைக் காட்டிக் கொடுத்துவிடும் வெறிச்சோடிய தெரு. அதுவும், அது தான்தான் என்பது தெரிந்துவிடும். ஊருக்குள் இருக்கும் மரியாதையை நினைத்து பதில் சொல்லாமல் பேச்சை மடை மாற்றிப் பார்த்தான். மீண்டும் அங்கேயே போய் நின்றது.

ஓட ஓட வெட்டினார்கள் என்பதில் போன மரியாதையை திருப்பிச் செய்யும் நாளில் பெற்றுவிடலாம்.

“சேரில போய்க்கெடந்தானாம்”– பால்பெருமாளுக்கு இப்படிக் கேட்கும் குரல் எல்லாமே ஊரில் பெண்கள் பேசிக்கொள்வது போலவே இருந்தது.

ஒன்பது மணிக்கெல்லாம் ஊர் அடங்கிவிடும். பதினொரு மணி வாக்கில் தோப்பில் வேலை செய்பவனை கொண்டுவிடச் சொல்லிவிட்டு நான்கு மணிக்கெல்லாம் அவனோடு கிளம்பி, திரும்ப தோப்பிற்கு வந்துவிடலாம் என்கிற யோசனை பால்பெருமாளுக்கு. அவன் கவிதாவிற்கும் விசுவாசி. தன் காயம் ஆற்றுவதைவிட தன்னிடம் மோதி நிற்கும் காமத்திற்கு பதில் சொல்ல வேண்டியது அத்தியாவசியமாக இருந்தது. ஒருநாள் வந்து சென்றுவிட்டால் அதன்பிறகு காயம் ஆற்ற கவிதாவை தோப்பிற்கு வரவைத்துவிடலாம் என்பது கணக்கு.

பழி தீர்க்கப்போகும் வஞ்சத்தைப் பேசித் தீர்க்க, சுதாவின் உதாசீனத்தைவிட கவிதாவின் காமம் கலந்த கருணை அவளைத் தேட வைத்தது. டீக்கடை வாசலில் வந்து நின்ற கண்கள் தேட வைத்திருந்தது. அந்தப் பிடிவாதத்திற்குள் சுருண்டு கொள்ளுதல் அவனுக்கு செளகரியம்.

இயலாமையின்பால் விரோதத்தின் மீதெழும் காமத்திற்கு தீனி போடும் வல்லமை கவிதாவிடம் மட்டுமே இருப்பதாக நம்பினான். அதனாலயே இப்படி ஒரு திட்டம். ஆனால் கவிதாவின் பிடியிலிருந்து தப்பிக்கும் உடல் வலிமையும் மன வலிமையும் இல்லாதிருந்தான். தோப்பில் வேலை செய்யும் பையனிடம் விசயத்தை சொன்னதும், தூங்காமல் இருந்து கொண்டுவிட்டு திரும்ப கூட்டி வருவதாக சொன்னான்.

கவிதாவிற்கு அழைத்து, பதினொரு மணிக்கு வருவதாகவும், சாப்பிட்டுவிட்டு வருவேன் என்றும் தகவல் சொன்னான். “உங்க அப்பா” என்றெழுந்த கேள்வியை விழுங்கிக் கொண்டான்.

பால்பெருமாளோடு “தொடுப்பு” என்று தெரிந்து கொண்ட நாளில் இருந்தே ஏன் என்ற கேள்வி கவிதாவின் அப்பாவிற்கு அறுந்து விழுந்திருந்தது. முதல் சந்திப்பிற்குப் பிறகு இப்போது வீட்டிற்கு வருகிறான். அவனை என்னவென்று சொல்வது? ‘அவங்க’ என்று ஆரம்பிப்பது அவளுக்கே சிரிப்பாக இருந்தது. ஒத்திகைகள் தோற்றுப்போயின. அதிகாரம் இடம் மாறியிருக்கிறது. அந்தச் சூடு அவளை போலித்தன்மையிலிருந்து விலக்கி வைத்தது. அடுத்து இசைக்கப்படும்வரை அவளுடைய இருக்கை. மறுபடி வாய்த்தாலும் அந்த ஒற்றை இருக்கையை அவள் விரும்பாதிருந்தாள். இந்த விளையாட்டில் அவளின் சிரிப்பு மட்டுமே வேடம் தரிக்காதிருந்தது. மீதமெல்லாம் “செஞ்சி பார்ப்போமே” என்கிற அசட்டைத்தனம். அதில் அவளுக்கு லாபமோ ஆறுதலோ கிடையாது. ஒரு கொண்டாட்டம். அவனின் இறைஞ்சுதலை ரசித்தல் அவ்வளவே.

மொத்த வீடும் கவிதா மட்டுமே நிறைந்திருந்தாள். காய்ந்த தென்னை ஓலை கொளுத்தி வெந்நீர் போட்டு நிறைய தண்ணீரில் குளித்திருந்தாள். வாசலில் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. கரிசல் மண்ணும் களிமண்ணுமாக கலந்த நிலம் அது. மிதித்தால் சகதிபோல ஒட்டிக் கொள்ளும். நடுவில் இரண்டு செங்கல் துண்டை போட்டு விட்டிருந்தாள்.

உடலில் சட்டையில்லை. மேலே ஒரு டவல் மட்டும் போட்டிருந்தான். கவிதாவிற்கு சந்தேகம் வராமல் இருக்க, கையில் இருந்த பையில் வெள்ளையில் பச்சை கட்டம் போட்ட இரண்டு சாரம் வைத்திருந்தான். பால்பெருமாளாக, சொத்து முடிப்பவனாக, கார் வைத்திருப்பவனாக, அறியப்பட்டவன் தேவை மாறியிருக்கிறது. வழியில் யாரும் இருக்கப்போவாதில்லை. ‘கவிதாவைப் பார்க்க வந்தேன்’ என அவனாகவே சொல்லிப் பார்த்தான். அவள் தேவையாகவும் தேவையற்றவளாகவும் ஒரே நேரத்தில் தெரிந்தாள். அவனால் முடிவெடுக்க முடியவில்லை.

முதன்முறை சந்தித்துக் கொண்டது போலவே பேச்சற்று இருந்தது இரவு. தோளில் கிடந்த துண்டை அவளே எடுத்துக் கொடியில் போட்டுவிட்டு நீலநிற பிளாஸ்டிக் இருக்கையில் இருக்கச் சொன்னாள். கட்டுப் பணம் வைப்பதென்றால் மட்டும் டிரவுசர் வடிவ உள்ளாடை அணியும் பழக்கம் பால்பெருமாளுக்கு உண்டு. மனைவி முன்னால் “கட் மாடல்” அணிய மனம் ஒப்பாமல் டிரவுசர் மாடல் உள்ளாடை அணிந்திருந்தான்.

உள்ளாடையோடு அமர்ந்திருந்தவன் முட்டியில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றினாள். தொட்டுப் பார்க்கையில் உணர்ந்த வெதுவெதுப்பைவிட சூடு கொஞ்சம் அதிகமாக இருந்தது. தண்ணீர் சேர்க்கச் சொன்னான். என்ன நினைத்தாளோ எழுந்து நிற்கச் சொல்லி இடுப்பில் டவலை கட்டிவிட்டு உள்ளாடையை கவிதாவே கழட்டி எடுத்தாள். உடலின் தகிப்பு வலது கை தோள்பட்டை வலியாகத் திமிறி நின்றது. வாய்விட்டுக் கேட்க ஏதோ ஒன்று தடுத்தது. சுடுதண்ணீர் முட்டி தாண்டி தொடையேறிச் சென்றது. காலில் கிடத்தி குழந்தையைக் குளிப்பாட்டுவது போல உள்ளங்கையில் ஏந்திப் பார்த்துப் பார்த்து நகம் பட்டுவிடாமல் சுத்தம் செய்தாள்.

தன்னை அப்படி உக்கார வைத்து தண்ணீர் ஊற்றுவது, அவனுக்குத் தான் ஒரு பிணம் எனவும் தனக்கு சடங்கு செய்கிறார்கள் என்றும் அவனை அறியாது காட்சியாக வந்து விழுந்தது. இருளில் எதிர்கொள்ளும் நிர்வாணம் அவனை குறுகச் செய்தது. கவிதாவின் கைப்பக்குவத்திற்கு ஒன்றமுடியாமல் திணறினான். கவிதாவே ஜெயித்தாள். பிளாஸ்டிக் கப்பில் கையைக் கழுவிவிட்டு, உடலில் சொட்டு ஈரம் விடாமல் துடைத்தெடுத்து கட்டிலில் இரண்டு போர்வையை விரித்துப் படுக்க வைத்தாள். மணி பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. நான்கு மணியை நினைத்துக் கொண்டே கண்மூடிப் படுத்திருந்தான். உடல் தணிந்து மீண்டும் சூடேறியிருந்தது. கண்ணயர்ந்து திடுக்கிட்டவன் ஃபோனில் மணி பார்த்தான். பதினைந்து நிமிடங்கள் ஆகியிருந்தது. கவிதா சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவனுக்கு முதுகு காட்டி திரும்பிப் படுத்தாள். அவன் விடியல் இங்குதான் என்பதை நினைத்து தூங்காமல் கண்மூடி கண்களை உருட்டிக்கொண்டு கிடந்தாள்.

கவிதாவின் வீடு, நான்கு பக்கம் செம்மண்சுவர் எழுப்பி சுண்ணாம்பை தெளித்துவிட்டு ஓடு வேயாமல் வாராண்டாவாக இருக்கும். தரைமட்டும் சிமெண்ட் பூசி கொழுப்பு மெழுகி விடப்பட்டிருக்கும். அதற்க்குப்பின் முன்னறை. நிலா வெளிச்சத்தில் கட்டில் கிடந்தது. மாடு கிடந்ததற்கு அடையாளமாக இரண்டு பக்கமும் கருங்கல் நட்டு வைத்திருந்தது அப்படியே நின்றது. மாட்டுத் தொழுவத்தின் வாசனை விலகியிருந்தது.

புரள முடியாமல் புரண்டு படுப்பதையும் எழுந்து அமர்வதையும நார்க்கட்டிலின் ஓசை காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது. கொடியில் கிடந்த ஈர டவல் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. ஃபோனை கையில் எடுத்துக் கொண்டு கிழக்குப் பார்த்து தெருவில் நின்றான். மூன்றுமணி. நிலவு பின்னந்தலையில் பிரகாசமாக இருந்தது. சட்டை இல்லாத தன்னுடலைப் பார்த்துக் குறுக்கிக் கொண்டான். அவர்களோடு அவர்களாக ஆகிவிட்டது போலிருந்தது. இடம் முடிக்கும்போதும், தோப்பில் வேலை முடிந்த கையோடு சம்பளம் கொடுக்கும் போதும் அவர்கள் எப்படி நிற்பார்களோ அப்படி நிற்பதாகத் தோன்றியது. இப்படியே நடந்து போனால் தோப்பு வீட்டிற்கு ஒரு கிலோ மீட்டர் கொஞ்சம் கூடுதல் வரும். உடல் வேட்கையே வென்றது.

வீட்டிற்குள் திரும்பினான். கவிதா திண்ணையில் அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். மனைவியே ஞாபகத்திற்கு வந்தாள். ரொம்ப கொச்சையாகப் பேசி சல்லாபித்திருக்கிறார்கள். “செஞ்சி விடேன்” என்று அவனால் கேட்கவே முடியவில்லை. ஊர் தொந்தரவாக இருந்தது. காத்தாடியின் மண்டையில் தெரியும் விளக்கு வெளிச்சம் அவனை எக்காளம் செய்தது போலிருந்தது. கட்டில் கம்பில் அமர்ந்து காலை நீட்டி அவளுக்குக் குறிப்புணர்த்தினான். மிகவும் சிரமப்பட்டு “கீழ உக்காரு” என்றான். அந்த ஈனக்குரல் கவிதாவிற்கு எரிச்சலை வரவழைத்தது. வலதுகை தோள்பட்டை அழுந்தாமலிருக்க தலையணையை வைத்துவிட்டு அவன் இரு கால்களையும் மெதுவாகத் தூக்கி அப்படியே அவனைக் கட்டிலில் சாய்த்தாள். உள்பாவாடை கூட இல்லாத நைட்டியை தலைவழியே கழட்டி அவன் இடையமர்ந்தாள்.

கவிதா, தோப்பில் அவன்மேலே அமரும்போது அவனுக்கிருந்த கர்வம், இப்போது பயமாக மாறியிருந்தது. பிடிமானம் அவளுடையது என்றாலும், அவன் அது குறித்து ஒருபோதும் யோசித்தவன் இல்லை. அவனின் கட்டுப்பாடும் அவளை இடம் மாற்றும் சாதுர்யமும் இன்று கைகூடும் என்கிற நம்பிக்கையற்று கிடந்தான். பேச்சற்று இருந்தவனுக்கு, நிறுத்து என்றோ போதும் என்றோ சொல்ல முடியுமென தோன்றவில்லை. தான் ஆண் என்பதற்கென வகுத்து வைத்திருந்த அத்தனை அம்சங்களும் கைவிட்டுப் போவது போலிருந்தது. அவளைத் தள்ளிவிடும் வேகம் கையில் இல்லை. இறங்கச் சொல்லும் வலு மனதில் இல்லை.

கவிதா இயங்கினாள். அவள் உடல்மொழியும், திறந்திருக்கும் கண்களும் அச்சம் கொள்ளச் செய்தன. அவனுக்கு ஏதோ செய்தி சொல்வது போல அவைகள் தன்னைக் காட்டிக் கொண்டன. நிலவொளியில் இன்னும் இன்னும் பிரகாசமாக இருந்தாள். வழுவிச் செல்லும் உடலோடு கண்களும் போட்டி போட்டு மினுங்கியது. தொடையில் கையூன்றி நட்சத்திரங்களைப் பார்க்கத் தொடங்கினாள். காமம் போதையாக இல்லாமல் பண்டிகைக்கான கொண்டாட்டமாக வெளிப்பட்டது. அவளின் மூர்க்கம் அச்சம் கொள்ளச் செய்தது. அவள் இயங்குதலை ரசிக்க முடியாமல் தினறினான். கவிதா தனக்கு யார் என்பது கேள்வியாக நின்றது. ரகசியத்தின் கேவல் ஊமை நாடகம் ஆடிக் கொண்டிருந்தது.

அவனின் உச்சம் நெருங்க நெருங்க உடல் வெளிப்படுத்தும் பயத்தை உணர்ந்து நிறுத்தினாள். திரை விலகுவதற்கான அந்த நேரத்தை வெகுவாக ரசித்தாள். நிதானமானாள். இதற்குப்பிறகு இருவருக்குள் இடைவெளி பெருகினாலும், அற்றுப்போனாலும் அவளுக்கு யாதொரு நட்டமுமில்லை என்பதில் உறுதியாக இருந்தாள். கூந்தலை அள்ளி இறுக்கமாகக் கொண்டை போட்டுக் கொண்டு, அசையில் தூக்கிப்போட்டிருந்த அவன் வேட்டியை எடுத்து தலைப்பாகைக்கட்டி “என்ன நாடார்குலத் திலகமே! உள்ள தங்கிரும்னு” பயமா இருக்கா என்றாள்.

பால்பெருமாள் பிணத்தைக் குளிப்பாட்டிக் கிடத்தியது போலவே படுத்திருந்தான்.

***

 ரமேஷ் ரக்சன் – இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள் 16, ரகசியம் இருப்பதாய், பெர்ஃப்யூம் மற்றும் ஒரு நாவல் “நாக்குட்டி” வெளிவந்துள்ளன. ஆசிரியர் தொடர்புக்கு – rameshrackson@gmail.com /

அட்சயப் பாத்திரத்தின் பசி

7

அ.வெண்ணிலா

ணிபல்லவத் தீவில், முற்பிறப்பையும் வருங்காலத்தையும் அறிந்த மணிமேகலை தீராத் துயரில் தத்தளித்தாள். ஊழ்வினையில் இருந்து யாராலும் தப்பிக்க இயலாது. இப்பிறவியே முற்பிறவியின் பலன் தான். புதுப்பாதையில் செல்ல இருக்கும் தன் வாழ்க்கையினை நினைத்துப் பார்த்தாள்.

மணிமேகலைக்குள்ளிருந்து மணிமேகலை கேள்விகளால் வதைத்தாள்.

கேள்விகளைப் புறக்கணிக்கும் மனம் இருந்தால் அவர்கள் வரம் பெற்றவர்கள். கேள்விகளுக்குக் காது கொடுப்பவர்களுக்கு, கேள்விகளே சாபங்கள். மணிமேகலைக்குத் தன் வாழ்க்கையே பெரும் கேள்வியாக, சாபமாகக் கண்முன் நின்றது.

தான் யார்? பரத்தையர் குலத்தில் பிறந்தவள். பரத்தையர் குலத்தில் பிறந்தாலும் தன் தாய் மாதவி கோவலனைத் தவிர வேறொரு ஆடவனைச் சிந்தையாலும் தீண்டாதவள். மூதூர் மதுரையில், கோவலன் பழி சுமத்தப்பட்டு வெட்டுப்பட்டு இறந்தான் என்ற செய்தி கிடைத்ததில் இருந்து, துறவு வாழ்க்கை மேற்கொள்பவள். தன் மகளென்றாலும் பத்தினி தெய்வமான கண்ணகியின் மகளாகவே என்னை வளர்த்தவள்.

தாயின் வாழ்க்கை பாதியில் கலைந்த கனவுபோல் ஆகிவிட்டது. தந்தை இறந்துபட்டான். தாய்க்கு நிகரான கண்ணகி மதுரையை எரித்து விண்ணுலகம் ஏறினாள். காதலனும், அவன் மனைவியும் இறந்தது தன்னால்தான் என்ற குற்றவுணர்வில் தாய் மாதவி பௌத்த துறவியாகிவிட்டாள். கலங்கிய நீர்போலான என் வாழ்க்கையின் துயரங்கள்தான் என்னைத் துறவறம் நோக்கி விரட்டுகிறதோ? பாட்டி சித்ராபதியோ பொருத்தமான நேரத்திற்காகக் காத்திருக்கிறாள், என்னைக் குலத்தொழிலுக்குள் தள்ளிவிட.

பருவத்தின் ஓர் இளவேனில் காலத்தையும் நான் அனுபவித்ததில்லை. வசந்தத்தின் உற்சாகம் என்னைக் கடந்ததில்லை. வீட்டில் சிரிப்பொலி கேட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆடலும் இசையும் வாத்தியங்களும் ஒலிக்க, புகார் நகரத்து இளைஞர்களின் கவனத்தின் மையமாக இருந்த வீடு களை இழந்துவிட்டது. கனியும் முன்னே வெம்பிப் போகும் காய் போலே, பருவமடையும் முன்னே நான் முதிர்ந்து விட்டேன்.

என் முன்னால் மலையுச்சியும், பாதாளமுமான இருவேறு வாழ்க்கை காத்திருக்கிறது. நான் எந்த வாழ்க்கையைத் தேர்வு செய்யப் போகிறேன். மணிமேகலையின் ஆன்மா எதை நோக்கி ஈர்க்கப்படுகிறது? மெய்யின்பங்களைப் பூரணமாகச் சுவைக்கும் குலத்தொழிலா, நத்தை ஓட்டுக்குள் தன்னையொடுக்கிக் கொள்வதுபோல் ஐம்புலன்களையும் ஒடுக்கிக் கொள்ளும் துறவறமா? என் இதயத்தில் கலைகளின் பேரின்ப ஒலி கேட்கப் போகிறதா? ஆன்மாவின் பாடல் அமைதியாக இசைக்கப்பட இருக்கிறதா?

இலையாலும், பூவாலும் தொடுக்கப்பட்ட மாலையுடன், ஆயிரத்தெட்டு பசும்பொன்கள் கொடுக்கத் தயாரான காளையர்கள் என் கடைக்கண் சம்மதத்திற்காகக் காத்திருக்கும் வாழ்க்கையா?

பசியால் வருந்துபவர்களும், பாதுகாப்பு கொடுக்க யாருமில்லாதவர்களும், வயிற்றில் பசி நெருப்பாக கனல, அன்னமிட யாரேனும் வரமாட்டார்களா என்று பசிப்பிணியில் வருந்தி காத்திருப்போருக்காக இந்த வாழ்க்கையா?

உடற்பசியைத் தீர்ப்பதா? வயிற்றுப்பசியைத் தீர்ப்பதா? இரண்டு பசியில் எப்பசியைத் தீர்ப்பது மேன்மையானது? எப்பசியைத் தீர்ப்பது கீழ்மையானது? பசியென்று வந்துவிட்டால் தீர்ப்பதுதானே தீர்வு? எப்பசியாக இருந்தாலென்ன? பசியில் உயர்வென்ன? தாழ்வென்ன?

அரசர்களும், வணிகர்களும், வேளாளர்களும் வசிக்கும் செல்வம் கொழிக்கும் புகார் நகரத்தின் பட்டினப்பாக்கத்தில், உயரிய மாளிகையில் இருக்க வேண்டியவள். யானைகளும் குதிரைகளும் நீண்ட நெடிய வீதிகளில் நடமாடிக் கொண்டிருக்கும். குற்றேவல் புரியும் வீரர்கள் நகரத்துத் தெருக்களை அலங்கரிப்பார்கள். முத்துக் கோர்ப்பவர்களும் சங்கு அறுப்பவர்களும், கணிதத்தில் தேர்ந்தவர்களும், கூத்தர்களும் தெருவில் அவரவர் பணிகளோடு விரைந்து கொண்டிருப்பார்கள். பட்டினப்பாக்கமும், மருவூர்ப்பாக்கமும் சேரும் இடத்தில் இருக்கும் நாளங்காடியில் பொருட்களை வாங்க மக்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டிருப்பார்கள். இந்திரனும் தன் மனைவியுடன் வந்து பார்க்க விரும்பும் செல்வச்செழிப்பான புகார் நகரத்தின் அழகிய வீதியில் உள்ள என்னுடைய எழுநிலை மாடத்தில், நிலவொளி வீசும் முற்றத்தில் அமர்ந்து, யாழை மீட்டியும், நடனம் ஆடியும் மகிழ்ந்திருக்கலாம். பொழுதிற்கு ஓர் அலங்காரம். வேளைக்கு ஓர் ஆடல் என்று களித்திருக்கலாம்.

மாந்தளிர், நெல்லி, அத்தி, கருங்காலி முதலிய பத்துத் துவர்களையும், அகில், சந்தனம் முதலிய ஐவகை நறுமணங்களையும், லவங்கம், ஏலம், பச்சிலை, நன்னாரி, கஸ்தூரி, எலுமிச்சம், கொடுவேரி, நறுந்தாது முதலிய முப்பத்திரண்டு ஓமாலிகைகளையும் நீரில் ஊற வைத்து, எடுத்த தைலத்தைத் தலையில் பூசி தினம் நீராடலாம். நீராடிய தலையின் ஈரம் உலர, குளிர் காலமாக இருந்தால் குங்கிலியமும், அகிற்கட்டையும் சேர்த்து எரித்து உண்டாக்கும் புகையில் ஈரத்தை உலரச் செய்யலாம். கோடை காலமாக இருந்தால், பொதிய மலையில் விளைந்த சந்தனக் கட்டையில் அரைக்கப்பட்ட நற்சந்தனத்தின் நறுமணமே போதும் ஈரம் உலர.

ஈரம் உலர்ந்த கூந்தலை அலங்கரித்துக் கொள்வது நடனப் பெண்களின் பெரு விருப்பம். ஈரம் உலர்ந்த கூந்தலில் கஸ்தூரிக் குழம்பைப் பூசி, ஐந்து பின்னலாகப் பிரித்துப் பின்னிக் கொள்ளலாம். கால் விரல்களுக்குப் பீலியும், கால்களுக்குச் சலங்கையும் அணியலாம். பருத்த தொடைகளுக்குத் துடையணி அணிந்திருப்பேன். பார்க்கும் நம்பியர்களைக் கவர்ந்திழுக்கும் தோள்களுக்குத் தோள் வளையும், வங்கியும் என்னை அலங்கரித்திருக்கும். விரல்களில் பாம்பு நெளியும், கழுத்தில் சரப்பளியும் மணியாரமும், காதில் இந்திர நீலத்தில் வைரங்கள் பதிக்கப்பட்ட நீலக்குதம்பையும், சுருள் கூந்தலில் தென்பல்லி, வடபல்லி, செழுநீர் வலம்பரி முதலிய தலையாபரணங்களையும் அணிந்திருப்பேன்.  

செம்பஞ்சுக் குழம்பினால் தீற்றப்பட்ட சித்திரங்கள் தோள்களையும், கால்களையும் அலங்கரிக்கும். குங்குமத்தைக் குழைத்து எழுதப்பட்ட தொய்யில் என் இள முலைகளுக்கு அழகூட்டும். இந்திரனின் வஜ்ராயுதம்போல் சிறுத்த என் இடையில் முத்துக்கள் பதிக்கப்பட்ட மேகலை அலங்கரிக்கும். அன்னப்பறவையின் மெல்லிய இறகினை திணித்துச் செய்யப்பட்ட படுக்கை, என் உடலை உள்வாங்கிக் கொள்ளும். வேயா மாடத்தின் நிலவும், நட்சத்திரங்களும் மான் கண் சாளரத்தின் வழியே என் அறைக்குள் வரக் காத்திருக்கும். காற்றில் அலையும் திரைச் சீலைகளின் வழியே நிலவொளி, என்னைத் தீண்டிச் செல்லும். அலங்கரித்துக் கொள்வதற்காகவே என் பொழுதுகள் விடியும். அலங்காரம் என்னை மகிழ்விக்க, நான் என்னிடம் வருவோரை மகிழ்விப்பேன்.

வடக்கே வேங்கட மலையையும், தெற்கே குமரியையும் எல்லையாகக் கொண்ட நாட்டில் மூவேந்தர்களும் ஆட்சி செய்து வந்தாலும், அவர்களுக்கும் மேலாக ஓர் அரசன் இருக்கிறான். அவனே மன்மதன். மன்மதனுக்குக் கட்டுப்பட்டவர்களே அரசர்களும் குடிகளும். மன்மதனே உண்மையான அரசன். மயக்கும் இளவேனில் மன்மதனின் தோழன். தென்றல் காற்று மன்மதனின் தூதன். குயில் கொம்பு ஊதுவோன். பெண்கள் மன்மதனின் படைவீரர்கள். நாடகக் கணிகையர் தளபதிகள். கணிகையர் குலத் தோன்றலான நான் மன்மதனின் படைத்தளபதி. எங்களுடன் போர் தொடுப்பதே அரசர்கள் உள்ளிட்ட குடிகளின் முதன்மைக் கடமை. விற்போரிலும், மற்போரிலும் தோல்வியே காணாத வீரர்களும், எங்களின் கடைக்கண் பார்வையை வெற்றி கொள்ள முடியாத தோல்வியாளர்களே.

மன்மதனின் கரும்பை வில்லாக ஒடித்தே எங்களின் இரு புருவமாக வைத்துள்ளோம். காமனின் அம்புகளாக எங்களின் புருவங்கள் பார்ப்பவரை மயக்கிக் கொல்லும். தாமரைத் தளிர்களும், குவளை மலரும், செங்கழுநீர்ப் பூக்களும், பச்சிலைகளும் கொண்டு நெருக்கமாகத் தொடுத்த கோதையெனும் வாசனை மாலைகளை நாங்கள் அணிந்துவிட்டால், தார் அணிந்த ஆண்கள் எல்லாம் வண்டுகளாக ரீங்காரித்துச் சுற்றி வந்துதான் ஆக வேண்டும். மன்மதன் ஒருவனின் ஆணைக்குத்தான் இந்த உலகம் முழுமையாகக் கட்டுப்படும்.  

படமெடுக்கும் அழகிய நாகத்தினைப் போன்ற அல்குலை உடைய மணிமேகலையாகிய நான், மருவூர்ப்பாக்கத்தின் செல்வச்செழிப்பில், மண் பார்க்காத செம்பஞ்சுக் குழம்பு பூசப்பட்ட மென்மையான பாதங்களுடன் இருக்கப் போகிறேனா?

சந்தனம், அகில், வாசனைப் பூக்களின் நறுமணங்களை மட்டுமே சுவாசித்திருந்த என் நாசி சுடுகாட்டுப் பிணங்களின் நிணநாற்றத்தை சுவாசிக்கப் போகிறதா? புகார் நகரின் இருள் முகமாக உள்ள சக்கரவாளக் கோட்டமென்னும் சுடுகாட்டுக் கோட்டம். உயர்ந்த நான்கு வாயில்களும், கடுமையான காவலுடையதுமான சக்கரவாளக் கோட்டத்தில் பேய்கள் நடமாடும். பெரிய பலிபீடத்தினை உடைய காளியின் மிகப் பெரிய கோயிலில், துணிந்து தங்களின் உயிரைப் பலி கொடுத்துக் கொண்டவர்களின் தலைகள் தொங்கிக் கொண்டிருக்கும். கணவன் இறந்தவுடன் உடன் உயிர் நீத்த உயரிய குணம் கொண்ட பெண்களுக்கும் தவ முனிவருக்கும் உயர்ந்த சமாதிகள் கட்டப்பட்டிருக்கும். பிணங்கள் எரிந்து கொண்டிருக்கும். தோண்டிய குழிகளில் பிணங்களை இட்டு மண் மூடிச் செல்வோர், அப்படியே பிணங்களைப் போட்டுவிட்டுச் செல்வோர் என சக்கரவாளக் கோட்டத்தில் பிணங்களின் இடைவிடாத வருகை. மன்மதனின் படையில் இருக்கும் நான் அங்கு எமனின் படைவீரர்களின் ருத்ர தாண்டவத்தைப் பார்க்க வேண்டும். அறநெறியில் சிறந்த துறவிகள், செல்வந்தர்கள், குழந்தைகள், குழந்தைகளை ஈன்ற தாயார், இளையவர், முதியவர், காதலர் என்ற பாகுபாடு அற்று எமனின் படை வீரர்கள் எல்லோரையும் சக்கரவாளக் கோட்டத்திற்குக் கொண்டுவந்து சேர்த்துக் கொண்டிருப்பார்கள்.

செம்பஞ்சுக் குழம்பு வைக்கப்பட்ட மென்மையான கால்களை நரிகள் இழுத்துச் செல்லும். கடகம் அணிந்த கைகளைச் சுடுகாட்டு நாயானது வாயிற் கவ்விக்கொண்டு எலும்பு கிடைத்த ஆனந்தத்தில் ஊளை இடும். ஆண் பிணத்தின் தலையைக் கையில் ஏந்தியபடி பெண் பிணம் மகிழ்ச்சிக் கூத்தாடும். கார் முகில் கூந்தலோ, கயலையொத்த விழியோ, குமிழ் வாயோ, முருங்கைப்பூ உதடுகளோ, முத்துப் பற்களோ எல்லாம் அங்கு ஒன்றுதான். பேய்களின் கைகளில் சிக்கிய இரை. தசைகளும் ரத்தமும் இல்லாத அருவெருப்பான எலும்புகள்.

சாவுப் பறைகளின் ஓசையும், இறந்தவர் பொருட்டு அழுபவர் ஓசையும், நரியின் ஊளையும், இறந்தவர்களை எழுப்பிவிடுவதுபோல் அலறும் பேராந்தைகளின் ஓசையும், கோட்டான் குரலும், ஆண்டலைப் பறவைகளின் குரலும் மயானத்தில் ஒலித்திருக்கும். தான்றி, ஒடுவை, உழிஞ்சில், காரை, சூரை, கள்ளி மரங்கள் அடர்ந்து வளர்ந்து அச்சுறுத்தும். பேய்கள் வாகை மரங்களில் புகலிடம் கொண்டிருக்கும். பிணங்களைத் தின்று கொழுத்த பறவைகள் விளாமரத்தில் தங்கி இருக்கும். பிணங்களைத் தின்போர் தனித்து வாழும் மன்றங்கள், நெருப்பிருந்த பாண்டங்களும், பாடைகளும், அறுத்தெறிந்த மாலைகளும் உடைந்த குடங்களும் நெல்லும் பொரியும் சிறுபலியாக இடப்பட்ட அரிசியும் எங்கும் பரவிக் கிடக்கும் சக்கரவாளக் கோட்டத்தில் நான் அடைக்கலம் கொள்ளப் போகிறேனா? அங்கிருப்பவர்களின் பசிப்பிணியை அகற்றப் போகிறேனா? மன்மதனின் படைத்தளபதி நான். ஆனால், எமனின் கோட்டைக்குள் பிச்சைப் பாத்திரம் ஏந்திச் செல்ல இருக்கிறேனா?

எனக்குள்ளிருந்து எழும் கேள்விகள் இருநிலைகளில் என்னை நிறுத்துகின்றன.

அகிற் புகையும் சந்தனமும் மணக்க வளர்ந்த நீ, நிணநாற்றம் வீசும் கோட்டத்திற்குப் பிச்சையிடச் செல்லப் போகிறாயா?

வேயா மாடத்தின் குயிலிசையும், சக்கரவாளக் கோட்டத்தின் கோட்டான்களின் அலறலும் ஒன்றா? குயிலோசையைக் கேட்டு மகிழ்ந்திருக்கும் உன் செவிகள், கோட்டான்களின் அலறலுக்குப் பயந்து ஒடுங்கிவிடாதா?

தங்க ஆபரணங்கள் சூட்டப்பட்டு, பூமாலைகளால் அலங்கரிக்கப்படும் நீ, ஆபரணங்கள் துறந்து, நீண்ட சுருள் முடியினை முடிச்சிட்டுக்கொண்டு, காதுகளிலும் கழுத்திலும் குவளை மலர்கள் அலங்கரிக்க, துறவி உடை அணிந்து பிக்குணி வேடம் தரித்து நிற்பாயா? இளமையின் அழகு, முற்றாத வெயிலைப்போல் உன்னுள் உறைந்திருக்க, நீ பிக்குணி வேடமணிந்து கையில் பிச்சைப் பாத்திரம் ஏந்தப் போகிறாயா?

ஐந்து இயல்கள், நான்கு பண்கள், பண் நின்ற கூத்துப் பதினொன்றும், எண்ணும், எழுத்தும், இசையும் அறிந்து மகிழப் போகிறாயா? கலைகளின் உயர்வை அறிந்து களிக்கப் போகிறாயா? வாழ்வின் நிலையின்மையை தத்துவ விசாரத்தின்மூலம் அறியப் போகிறாயா? பிரமவாதி, வைணவ சமயவாதி, வேத வாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி போன்ற சமயவாதிகளுடன் ஆன்மீக தத்துவ விசாரம் செய்து வாழ்வினைக் கடத்தப் போகிறாயா?

உன் முழங்காலைத் தழுவி நின்று உன் துறவறத்தைக் காட்டும் காவியுடை, உனக்குப் பொருத்தமற்று இருப்பதை நீ உணரவில்லையா மணிமேகலை? வாழ்வின் இன்ப துன்பங்களை அனுபவித்தவர்கள் மேற்கொள்ள வேண்டிய விசாரத்தினை, நீ மேற்கொள்ளலாமா? நீ அனுபவித்த இன்பம் என்ன?

மணிபல்லவத் தீவில், புத்த பெருமான் பிறந்த வைகாசி பௌர்ணமியில், கோமுகி பொய்கையில் ஆபுத்திரன் கை அமுதசுரபி மேலே வரும். அந்த நாளில், அதே பொழுதில் அங்கு செல்ல வேண்டிய ஊழ்வினையை நீ ஏற்றுக் கொண்டாயோ? அமுதசுரபியில் பசித்திருப்போருக்கு நீ உணவிட வேண்டும். அவ்வளவுதானே? அதற்கேன் நீ துறவுக் கோலத்தை நாடுகிறாய்? பெறுதர்கரிய மாணிக்கமான உன் உடலின் புலன்களை வருத்திக்கொண்டு, நீ பசித்திருப்போருக்கு உணவிட வரம் வாங்கிக் கொண்டாயோ?

உன் தந்தை கோவலன் இறந்தான் என்ற செய்தியறிந்ததில் இருந்து உன் தாய் மாதவி, பௌத்த துறவியாகிவிட்டாள். வாழ்வின் கொண்டாட்டங்கள் துறந்து, அறநெறியின் வழியில் நின்று உன்னை வளர்த்தாள். புத்த பெருமானின் போதனைகளே உனக்கான வழிகாட்டிகளாகக் காட்டினாள்.

ஆனால் மணிமேகலை, உன் உள்ளத்திற்குள் உதயகுமரனின் மேலெழுந்த காதலை பிக்குணி ஆடைக்குள் மறைத்துக் கொள்ள முடியுமா? “அன்பில்லாதவள், தவ உணர்ச்சி இல்லாதவள், விலைமாதின் குணம்கூட இல்லாதவள்” என்றெல்லாம் உன்னை, பளிங்கு மாளிகையில் வசைச் சொற்களால் கடிந்து கொண்ட போதும் அவன் பின்னால் உன் மனம் சென்றதே? உதயகுமரன் உன்மீது, நாட்டிய கணிகைக்கான இச்சை மட்டும் கொண்டவனல்ல, உண்மையான காதல் கொண்டவன் என்று உனக்குப் புரிந்தது. ஆனாலும் உன் மனத்தை ஏன் கட்டுப்படுத்தினாய் மணிமேகலை?

பரத்தையர் குலத்தில் தோன்றிய பெண்களுக்குத் துறவறம் ஏற்புடையதா? விரும்பியவனோ, உடன் இருந்தவனோ இறந்து போனால், பத்தினிப் பெண்டிர்போல் கணவனுடன் உடன்கட்டை ஏறுபவர்கள் அல்ல பரத்தையர்கள். பாணன் இறந்து போனால் பாணன் வாசித்துக் கொண்டிருந்த யாழும், உடன் உயிர் துறப்பதில்லை. நாதத்திற்கு மரணம் கிடையாது. மீட்டுபவர்கள் கையில் நாதம் புதிதாகப் பிறந்து கொண்டே இருக்கும். பரத்தையர் பெண்களும் யாழ் போன்றவர்களே.

தேற்றாங் கொட்டையினால் கலங்கிய நீர் தெளிவதுபோல், உன் மனம் பௌத்த அறநெறிகளால், காமத்தின் பிடியில் இருந்து தெளிந்துவிட்டதா? காம இச்சையைத் தணித்துக்கொண்டு மரணத்தின் மடியில் உதிர்ந்து போகிற சருகல்ல என்று நீ நிரூபிக்க விரும்புகிறாயா?

தந்தையை இழந்து, தாயின் துயரம் பார்த்த உனக்குக் காமம் தவிர்க்க வேண்டிய தீநெறியாகிவிட்டதா மணிமேகலை? மனித உடம்புக்குப் பசியும், தூக்கமும்போல், காதலும் காமமும் அவசியமல்லவா? பசித்த உடலுக்குப் பசியே பிரதானம். காமமுற்ற உடலுக்கு காமமே பிரதானம். காமத்தின் வேட்கையைக் கடக்காமல் துறவறம் செல்வது, ஆழ்கடலை அறியாமல், அலைமேல் கலம் செலுத்துவதுபோல்.

காமத்தினால் திசை மாறியவர்கள்தான் உலகத் துன்பத்திற்குக் காரணமானவர்களா? நெடுமுடி கிள்ளி பீலிவளையின் மீதான காமத்தில் மூழ்கி, இந்திரவிழா கொண்டாடாமல் போனதால்தான், புகார் நகரம் ஆழிப் பேரலையில் அழிந்தது. இந்திரனின் மகன் சயந்தன் சான்றோர் நிரம்பிய அவையில் ஊர்வசியின் மீதான காமத்தைக் கட்டுப்படுத்த முடியாததால்தான், நாட்டியக் கணிகையர்களாக ஊர்தோறும் பெண்கள் பிறந்து அல்லலுறுகிறார்கள். இவர்கள் தங்களின் நெறிமீறி நடந்ததற்குக் காமம் மட்டும் காரணமல்ல. நீ நம்புவதுபோல் அவர்களின் முன்வினைகளே காரணம். காமம்தான் மனித குல அழிவுக்கான காரணம் என்றால், காமம் ஏன் மீண்டும் மீண்டும் மனித உடலில் கிளைக்கிறது?  உயிரின் மலர்ச்சியாகக் கிளைக்கும் காமத்தை ஏன் நாம் கட்டுப்படுத்த வேண்டும்?

பசி இயற்கை. பசிப்பிணியைப் போக்குவது அறம். காமம் இயற்கை. காம இச்சையைப் போக்குவது மட்டும் அதர்மமா? புலன்களை ஒடுக்க வேண்டும் என்று அறநெறி போதிக்கிறது. உடலுக்குப் பிறப்பும், முதுமையும், நோய்வாய்ப்படுதலும், இறப்பும்தான் இயற்கை. பிறந்த உடலின் புலனின்பங்களை நிறைவேற்றுவதும் இயற்கை. புலனடக்கம் துறவிகளின் அறநெறியாக இருக்கலாம். புலனையடக்கி ஆள்வோர் கண்டடையும் பேரின்பமும், புலனின்பத்தில் திளைப்போர் கண்டடையும் சிற்றின்பமும் ஒன்றே. புலனை அடக்குதல் உடலை வறுத்துதல். உடலை வருத்தும் உரிமை மானுடனுக்கு உண்டா?  உடல் ஒரு கூடு, உடலின் வழியாகவே ஆன்மா தன்னை அறிகிறது. அறிவை அறிதலும், தத்துவம் உணர்தலும், காமம் சுகித்தலும் ஆன்மாவிற்கு ஒன்றே. உடலை மகிழ்வித்தல் கீழ்மை என்றால், மனித குலமே துறவறம் பூண்டிருக்குமே?

கள்ளை விரும்பி உண்பவர்கள் மதங்கொண்ட யானையின்முன் சென்று தானாகவே மரணத்தை எதிர்கொள்வதுபோல் காமத்தின் பிடியில் சிக்குபவர்கள் என்கிறார்கள். மதங்கொண்ட யானையின்முன் செல்லக்கூடாது என்பதுதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கள்ளருந்துவதே பாவம் என்றால், புரிதலில்தானே தவறு?

மணிமேகலை, தவக்கோலம் பூண்டு நிற்கும் உன் உருவத்தைப் பார். மார்பில் சந்தனம் இல்லை. முத்தாரம் இல்லை. கழுத்தில் செங்கழுநீர்ப் பூக்களும், குவளைப் பூக்களும் இல்லை. அலங்காரங்கள் ஏதுமில்லாத உடல், இளமையின் பொலிவால், செங்காந்தள் மலரைப்போல் ஒளிர்வதைக் காண். கண்கள் காமனின் விற்கணைகளாகத் தயார் நிலையில் இருக்கின்றன. தொய்யில் வரையாத உன் இள முலைகள் நிமிர்ந்து நின்று போர்வீரர்களாக, போருக்கு அழைப்பு விடுகின்றன. படமெடுத்தாடும் நாகத்தைப்போல் அகன்ற உன் அல்குல், பார்ப்பவரின் பார்வையை அகல விடாமல் கவர்ந்திழுக்கிறது. உன்னுடைய பிக்குணி கோலம், சிறு குழந்தை, தாயின் மேலாடையைச் சுற்றிக்கொண்டு, உலா வருவதுபோல் பொருந்தாமல் உள்ளது.

இல்லை. என் புலன்களில் காதலும் இல்லை. காமமும் இல்லை. என் முன்பிறவியின் தீவினையால் நான் இப்பிறப்பில் துறவறம் ஏற்கிறேன். என் மனம் காமத்தின் வசம் இல்லை. மன்மதனின் படையிலும் நான் இல்லை. அவனுடைய காமக்கணைகள் என்முன் தோற்று விழுகின்றன. உதயகுமரன்மேல் இருந்த சிறு காதலும் இப்பொழுது இல்லை. வெள்ளம் வடிந்த வண்டல் நிலம்போல் என் மனம் தெளிவாக இருக்கிறது. நான் புத்தனின் அருட்பார்வையில் இருக்கிறேன். புத்தனின் கனிந்த விழிகள் மனிதகுலத்தின் துயர்போக்க எனக்கு அழைப்பு விடுக்கின்றன. காமம் பருவத்தே பூக்கும் மலர். பருவம் கடந்தால் மணமற்று உதிர்ந்து போகும். பசிப்பிணியே உடலில் உயிர் உள்ளவரை உள்ளிருந்து உணற்றும்.

நான் புத்த பெருமானின் பாதையில் நடக்க விரும்புகிறேன். யாருக்கும் கிடைக்காத அரிய வரம் எனக்குக் கிடைத்திருக்கிறது. யானைத் தீ என்னும் பெரும் பசி போக்கும் அற்புதம். புத்த பெருமான் அவதரித்த வைகாசி நன்னாளில் நான் கோமுகி பொய்கைக்குச் செல்வேன். இளவேனில் பருவத்தில், சூரியன் இடபத்தில் இருக்க, கார்த்திகையை முதலாவதாகக் கொண்டு எண்ணப்படும் இருபத்தேழு நட்சத்திரங்களில் நடுநாயகமாக விளங்கும் விசாக நட்சத்திரத்தில், கோமுகி பொய்கையில் அமுதசுரபி வெளிப்படும்.

ஆபுத்திரன் கையில் இருந்த அந்த அட்சயப் பாத்திரத்தைக் கையில் ஏந்துவதே நான் இப்பிறவியை எடுத்ததின் பலன். அமுதசுரபியில் உயிர் காக்கும் அருமருந்தாகிய அமுதம் பெருகிக் கொண்டே இருக்கும். அட்சயப் பாத்திரத்தில் இருந்து உணவை எடுத்துக் கொடுத்தால், வாங்குபவர்களின் கைகள்தான் ஓய்ந்துபோகுமே தவிர, பாத்திரத்தில் இருந்து ஒரு பருக்கைச் சோறும் குறையாது. பசித்திருப்பவர்கள் உள்ளவரை, சோறிடும் அட்சயப் பாத்திரம் என் கையில் இருக்கும்வரை என் மனம் மானுடர்களின் சிற்றின்பத்தில் அலைபாயாது. காயசண்டிகையின் யானைப் பசிக்கு மருந்து என் கை அட்சயப் பாத்திரமே. காயசண்டிகைகள் பிறந்துகொண்டே தான் இருப்பார்கள். காயசண்டிகைகளுக்குத் தான் இந்த மணிமேகலை. உதயகுமரன்கள் தேன் குடிக்கும் வண்டுகள். குவளை மலர் இல்லையென்றால், தாமரை மலருக்குத் தாவிவிடுவார்கள்.

உதயகுமரனின் காதலை ஏற்பது பற்றிக் கேள்வியே இல்லை மணிமேகலை. அட்யசப் பாத்திரத்தில் இருந்து பெறப்போகும் அமுதம் பற்றிப் பேருவகை கொள்கிறாய். உன் உடலும் ஓர் அமுதக் கலசம்தான். உயிர்ப் பிணி போக்கும் அமுத கலசம். உயிர்களை உண்டாக்கும் அமுதம். கன்று பருகாத பால், பசுவின் மடியிலேயே தங்கிவிடலாமா? பசுவின் உயிருக்கு உகந்ததா அது?  நிலவில் இருந்து பெருகும் ஒளி, புவியை வந்தடைந்தால்தானே இன்பம்? சூரியனின் கதிர்களில் பெருகும் வெப்பம்தானே புவியின் உயிர்களைத் தழைக்கச் செய்கிறது? உடலில் பெருகும் காமம்தானே, உடலுக்குப் புத்துணர்ச்சி. உடலின் பேரின்பம். கலவியில் பெருகியவைதானே உலகத்து உயிர்கள்?

என் உடலின் அழைப்பைவிட, பசித்திருப்போரின் அழுகுரல் என்னை வதைக்கிறது. பசிப்பிணியைப் போக்குவது உயர்வா தாழ்வா, உடலின்பம் பெருக வாழ்வதா என்பதெல்லாம் மனத்தின் விருப்பமே. என் மனம் துறவறத்தையே விரும்புகிறது. நாட்டியக் கணிகையாகக் கலைகளின் உயர்வை ஆராய்வதைவிட மனிதத் துன்பங்களுக்குக் காரணம் கண்டறியவே விரும்புகிறேன். வேயா மாடமும், சக்கரவாளக் கோட்டமும் எனக்கு ஒன்றாகவே தெரிகிறது. அலங்காரம் வெறும் சதைகளுக்கே. ஆன்மாவிற்கான அலங்காரம் வாழ்வின் பொருளறிதலே. இருளை அகற்ற ஒவ்வொரு வீட்டுக்கும் நெய் விளக்குகள் வேண்டும். ஊருக்கு வழிகாட்ட கலங்கரை விளக்கமும் தேவை. கடலில் தத்தளிக்கும் தோணிகளுக்கு வழிகாட்ட உயர்ந்த விளக்கங்கள் நிற்பதைப்போல், துன்பங்களில் தத்தளிக்கும் உயிர்களுக்கு வழிகாட்டும் விளக்கமாக நிற்க விழைகிறேன்.

ருதுவாகி, மலரும் போதாகி நிற்கும் எனக்குள்ளும் காமம் தலைதூக்கும். அட்சயப் பாத்திரத்திலிருந்து பெருகும் அமுதத்தை உண்ணும் பசித்தவர்களின் கண்களில் பெருகும் கண்ணீரில் அந்தக் காமம் கருகிவிழும். ஒரு சோற்றுப் பருக்கையில் இருந்து, பெருகி வளரும் உணவில் உலகத்து உயிர்களின் பசிப்பிணி தீரும்போது, என் உடல் குளிர்ப்பொய்கையாக இருக்கும்.

*

தேன் தடவிய தலை, அழகான வளையல்கள், கையில் அட்சயப் பாத்திரத்துடன் சோழ நாட்டிலும், வஞ்சியிலும், காஞ்சியிலும் நடக்கிறாள் மணிமேகலை. பதினெட்டு வகை மொழி பேசுவோரில் குருடரும், செவிடரும், முடவரும், ஊமையும், பாதுகாப்பு அற்றோரும், தவ முனிவர்களும், உடையின்றித் திரிபவர்களும் பசிப்பிணி போக்கிக்கொள்ள மணிமேகலையைப் பின்தொடர்ந்தனர். பல நூறு விலங்கினங்களும், சின்னஞ்சிறு உயிரினங்களும், உண்ண உணவு வேண்டி மணிமேகலையைத் தொடர்ந்தன. அவளின் கைகளே அட்சயப் பாத்திரமாக நீண்டு உணவளித்தன. உயிரினங்களுக்கு உணவளித்தலே பெரும் அறம், தன் வாழ்வின் அறம் என மணிமேகலை தெளிந்தாள்.

ஆதியில் இருந்தே மனிதர்களை உணற்றி வந்த பசி, மணிமேகலையின் அட்சயப் பாத்திரத்திற்குள் அடைக்கலமானது. அணைக்க முடியாத நெருப்பாக மனிதர்களை வாட்டிய யானைத் தீ, மணிமேகலையின் மென்விரல்களில் குளிர்ந்து கிடந்தது. “எல்லா உயிரும் உணவுண்ண வருக” என்ற அவளின் அழைப்பிற்காகப் பசித்த வயிறுகள் காத்திருந்தன. “புத்தம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி” என்று தர்மத்தின் பாதையில் நடக்கத் தொடங்கினாள் புத்த பிக்குணி மணிமேகலை. அவளின் ஒவ்வொரு அடியிலிருந்தும் தூய அன்பெனும் தாமரைகள் மலர்ந்தன.

அணிந்திருந்த குவளை மலர்கள் மட்டும் உடல் வெப்பத்தினால் தீய்ந்திருந்தன.

***

அ.வெண்ணிலா – வந்தவாசியைச் சேர்ந்த இவர், ஆசிரியர் (நல்லாசிரியர் விருது பெர்றவர்), கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர். இதுவரை 10 நூல்கள் எழுதியுள்ளார். அண்மையில் வெளியான கங்காபுரம் பெரும் கவனம் பெற்றது . ஆசிரியர் தொடர்புக்கு –