Home Blog Page 77

தழும்பு

3

ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்

டித்துக் கொண்டிருக்கும் காற்றின் திசைக்கு முடிக்கற்றைகள் விலகுவதையும், ஒரு பெரிய காயத்தின் தழும்பு இருக்கும் தடத்தைக் காட்டிக் கொடுப்பதையும் கவனிக்கத் தொடங்கியிருந்தான்.

“நம்பவே முடியல தெரியுமா இப்டி ஒரு விஷயத்த கேள்விப்படுவேன்னு”, அந்தக் குரலில் ஆச்சரியத்தைவிட அதிர்ச்சி மேலெழும்பி இருப்பதைப்போல் தோன்றியது அவனுக்கு. சொல்லின் மீது ஏறும் சொற்கள் மனதின் அடியாழத்தில் உறைந்து கிடக்கும் தழும்பை நிமிண்டி ரத்தக் கசிவை ஏற்படுத்துவதைப் போலவும், நடுங்கும் தன் விரல்களின் வழியே அந்த ரத்தம் வழிந்தோடுவதைப் போலவும் உணரத் தொடங்கினான்.   

***

த்தனை கழுவியும் அகன்றிருக்காத ரத்தவாடையை மீண்டும் மீண்டும் மோந்து பார்த்தான். கழுத்தறுபட்ட ஜீவன் ஒன்று துடித்து அடங்குவதைப் போல், அறுபடுமுன் ஒலித்த குரல் தெளிவாகக் கேட்பதைப்போல் இருந்தது. கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியில் தன்மார்பைத் துளைக்கக் காத்திருக்கும் குண்டுகளை நினைத்தபோது பயம் மேலும் அதிகமானது. “இதான் ஆரம்பமாம். வரிசையா ஏகப்பட்ட என்கவுண்டர் பாக்கி இருக்காம்”. ஒரு சம்பவத்தின் வழியாக மேலும் பல சம்பவங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது ஊர்வாய்.

காட்டுத்தீயின் வேகத்தில் பரவிக் கொண்டிருக்கும் அந்த  தலைப்புச்செய்தியும், அது ஏற்படுத்திய விபரீதத்தையும் அடிவயிற்றில் உணரத் தொடங்கியிருந்தான் கருப்பசாமி. பயமும், பயத்தில் கலங்கிய வயிறும் இதுவரை நான்கு தடவைக்கும் மேல் ஆத்துக்குள் இறக்கிவிட்டிருக்கிறது. இருளைக் கிழித்துக்கொண்டு வரவிருக்கும் போலீஸ் ஜீப்பை உருவகப்படுத்திப் பார்த்தான். வாந்தி வரும்போல் இருந்தது. விழுந்து கிடக்கும் புளியம்பழங்களில் ஒன்றை எடுத்து அவசரமாகக் கடித்தான்.இடைவெளியற்றுப் படர்ந்து கிடக்கும் புளியமரத்து இருளும், மழிக்கப்பட்ட மொட்டைத் தலையின் வழியே ஊடுருவும் குளிர்ச்சியும், உறைந்து கிடக்கும் அச்சத்தை உலரவிடாமல் பார்த்துக்கொண்டன. எப்போது வேண்டுமானாலும் தன்னை ஒரு துப்பாக்கி நெருங்கக்கூடும். அரவமற்ற இருளில் கரிய உருவமாக அமர்ந்திருக்கும் தன்னைச் சுட்டுக் கொல்லக்கூடும் என்றும் நினைத்தான். அவனையுமறியாமல் உதிரத் தொடங்கிய கண்ணீர்த் துளிகள் காற்றின் திசைக்குத் துடித்து அதிர்ந்தன.

“ஏல கருப்பா வீட்டுக்கு போவலியா? அம்மா தேடுதா பாரு” வாய்க்காபாலம் வரைக்கும் நடந்தே வந்திருக்கிறார் மூக்கையா. அப்பாவுக்குப் பெரியப்பா.

“கருப்பா லேய், இப்டியே இருந்தா என்னடே செய்ய? ஊரு கெடக்க நெலைக்கும், அம்ம கெடக்க நெலைக்கும் நீதானடே கூட இருக்கணும். நீயே இங்கன தனியா இருந்தா பொம்பள என்ன செய்வா?” மூக்கையா விடுவதாயில்லை. காதின் ஓரத்தில் பாதி குடித்து மீதமிருந்த பீடியை எடுத்து பற்ற வைத்தார். பற்ற வைக்கும்போது சுருங்கிய கண்களின் ஓரத்தில் கரிசனம் இருப்பதைப்போல் தெரிந்தது.

“வந்தது வந்துட்டேன், கால நனச்சிட்டு வாறன். ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு இங்கயே இரி. காங்காமா போயிறாத. தேடி அலைய முடியாது.  செரியா?”.

“தாயோளி… ஒரு நெலையா கெடக்கானுவாளா. எல்லாம் அப்பன் ஆத்தாவ சொல்லனும். மீச மொளச்ச பின்னயும் குண்டிய தொடச்சி விட்டுட்டே இருந்தா இப்படிதான் கெடப்பானுவோ”, என்றபடி முனங்கிக்கொண்டே புதரினுள் மறையும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான் கருப்பன். பீடியின் கங்கும், புகையும் மறைந்தபோது, தன்னைத்தேடி ஒரு ஜீவன் வந்ததை நினைத்து ஆறுதல் அடைந்தான். அவர் விட்டுச்சென்ற வாசம் பாதுகாப்பைத் தருவதைப்போல் இருந்தது. எப்படியும் பெரியவர் திரும்பிவர அரை மணி நேரமாவது ஆகக்கூடும்.

“அம்மாஆஆஆ…” பெண் குரலா? சிறுவனின் குரலா? என்று பிரித்துப்பார்க்க முடியாத அலறல் சத்தம் அந்தக் குரலில் இருந்தது. கையில் பிடித்திருந்த பொருள் சதையைக் கிழித்து ஆழமாக இறங்குவதையும், விரல்களின் மடிப்புகளை சூடான ரத்தம் நனைப்பதையும் உணர முடிந்தது. இது நடந்து இரண்டு தினங்கள்தான் ஆகின்றன. நள்ளிரவில் நடந்த இந்தச் சம்பவத்தைச் செய்துவிட்டு, வழக்கமாகப் படுத்துக்கிடக்கும் வாய்க்காபாலத் திண்டில் அடைந்து கிடந்தான் கருப்பன். செய்த செயலின் விபரீதம் அப்போது புரிந்திருக்கவில்லை. அடுத்தநாள் காலை வீட்டினுள் நுழையும்போது தெருவே பரபரப்பாகி இருந்தது.

“ஏல கருப்பா ஊருக்குக் கெழக்கால ஒரு சின்ன பையன வெட்டி கொண்ணுட்டாங்களாம். தொண்டகுழிலயே வெட்டிருக்கான் பாவி. கொன்னது யாருன்னு தெரியலயாம். கண்ட நேரத்துக்கும் வீட்ட விட்டு போவாத என்ன?”அம்மா அவனிடம் தகவலைச் சொன்னபோது பகீரென்று இருந்தது கருப்பனுக்கு. பொருள் தொண்டையில் இறங்கியதைப் போன்ற நினைவு இல்லை. வீசும்போது இருட்டில் தன்னை நெருங்கி வந்தது யார் என்றும் தெரியவில்லை. தன்னை யாரும் பிடித்துவிடக்கூடாது, தனக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்ற பயத்தில் பாதுகாப்புணர்வில்தான் பொருளை வீசினான். பொருள் என்றால் கத்திகூட இல்லை. கையில் வைத்திருந்த துருப்பிடித்த ஆக்சா பிளேடு. வீசிய வேகத்தில் எவ்வளவு ஆழமாக வேண்டுமானாலும் இறங்கியிருக்கக்கூடும் என்பதும் உண்மை. இப்போது பதற வைப்பதும் அதுதான்.

“ஏல வெல்வெட் மூர்த்திய புடுச்சிட்டாங்களாம். அவன் சேக்காளி பூரா பயலுவகிட்டயும் விசாரண நடக்காம். அடங்கி இருல”, மூக்கையா எட்டிப்பார்த்து வாசலில் இருந்தே தகவலைச் சொல்லி விலகியபோது, மறைத்து வைத்திருந்த ஆக்சா பிளேடை ஒரு பேப்பரில் சுற்றி, துருப்பிடித்த அந்த தகரக் கொட்டகையில், ஒட்டுப் போடுவதற்காக அறைந்த எண்ணெய் டின் ஒன்றின் துருத்திய விளிம்பின் வழியாக உள்ளே சொருகினான். அந்த இடத்தில் ஒளிந்திருந்து அது தன்னைப் பாதுகாக்கக்கூடும் என்ற நம்பிக்கை அவனுக்கிருந்தது. என்ன செய்ய வேண்டும்? பதில் தெரியவில்லை.சிதறிக்கிடக்கும் தவசு மிட்டாயின் வாசத்திலும், நியாயம் கேட்கும் அப்பாவின் வியர்வைத் துளிகளிலும் தனக்கான நியாயங்களைத் தேடினான். எதுவும் சமாதானமாக இல்லை. அம்மை என்ன செய்வாள்? அவளைப் பற்றி ஏன் ஒரு நொடியேனும் யோசிக்கவில்லை?

***

வாய்க்காபாலத்துத் திண்டில், அமர்ந்திருக்கும் திசையில் இருந்து தலையைத் திருப்பினால், தூரத்தில் எரிந்து கொண்டிருக்கும் சிதை தெரிந்தது. சவுரிக் கூந்தலும் மட்டையும் எரிந்து மேலெழும் புகை அவனிருக்கும் இடம் வரையும் பரவியிருந்தது. இருளில் தன்னெதிரே தெரியும் ஒரே வெளிச்சம் அது மட்டும்தான் என்பதை நினைக்கும்போது வாழ்வே சூன்யமாகிப் போனதைப்போல் இருந்தது. இரண்டு தினங்களுக்கு முன் நடந்த கொலையும், இன்றைக்கு நடந்த என்கவுண்டரும் சொல்லும் செய்தி ஒன்றேயொன்றுதான். அடுத்த இலக்கு தான்தான்.

“இன்ஸ்பெக்டருக்கு சொந்தக்காரன் புள்ளையாம்டே. அதான் இம்புட்டு வேகமாம். இந்த பேதில போவான் அவன் கழுத்துலையா கத்திய வெப்பான். பொசுக்குன்னு போயிட்டான”, தெருவில் எழத்தொடங்கிய சலசலப்பு மீண்டும் வீட்டைவிட்டு வெளியே துரத்தியது. கொலைகளுக்கும் ரத்தத்திற்கும் பழகிய மண்தான் என்றாலும் பட்டப்பகலில் ஊரின் மத்தியில் நடந்த முதல் என்கவுண்டர் இதுதான். அதுவும் கோர்ட் வளாகத்தில். ஊருக்குள் பல கதைகள் கிளைவிட்டு எழும்பத் தொடங்கியிருந்தன. இதுதான் ஆரம்பம் என்ற பேச்சுக் குரல்கள் கேட்டன.

பொதருக்குள் இறங்கிய மூக்கையா இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை. ‘அவருகிட்ட சொல்லுவோமா? சவம் இது என்ன செய்யும். பெனாத்தும். வேண்டாம்’ உள்ளுக்குள் எழுந்த உணர்வுகளை அடக்கிக்கொண்டான்.  

கடந்துசெல்லும் வாகனங்களையும், புதருக்குள்ளிருந்து வெளிப்படும் ராப்பூச்சிகளின் சத்தத்தையும் தவிர வேறு எதுவும் கேட்காத வண்ணம் ஊர் அடங்கிப் போயிருந்தது. ஊர் அடங்கிய எட்டு மணிக்கெல்லாம் நள்ளிரவின் சாயத்தை எடுத்துப் பூசிக்கொண்டது காலம்.

வழக்கமாக அரட்டையடிக்கும் இந்தத் திண்டிற்கு இனியும் யாரும் வரப்போவதில்லை. கொத்து வேலை முடிந்து வந்திருக்க வேண்டிய மணியும் முப்புடாதியும் வருவார்களா தெரியவில்லை.மணிக்கு மச்சினன் முறைதான் வெல்வெட் மூர்த்தி. மணியின் மீதும் போலீஸ் கண்ணிருப்பதாகவும்,தவசுக்கு முந்தின இரவில் மணியும், வெல்வெட் மூர்த்தியும் இதே இடத்தில் அமர்ந்து கட்டிங் போட்டதாகவும் முப்புடாதி சொன்னது ஞாபகம் வந்தது.

“ஏம்ல அவன பார்த்தா இப்டி பயப்படுத. உன்னைய திங்கவா போறான்” வெல்வெட் மூர்த்தி குறித்த பேச்சு வரும்போதெல்லாம் முகத்தைத் திருப்பிக் கொள்வான் கருப்பசாமி.

வெல்வெட் மூர்த்தியுடன் கருப்பசாமிக்கும் பழக்கம்தான் என்றபோதிலும், அவனோடு எதுவும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று உள்ளுணர்வு சொன்னது. மணியுடனான சேர்க்கையே அப்பாவுக்குப் பிடித்தமானதில்லை.அப்படியிருக்க, வெல்வெட் மூர்த்தியோடு பேசுவது தெரிந்தால்? அவ்வளவுதான்…!அவனோடு இணைந்து ஒன்றாகக் கபடியாடிய நாளில் இருந்து ஆறேழு கொலைகளைச் செய்துவிட்டு ஏழ்ற என்ற பட்டப்பெயரை வெல்வெட் மூர்த்தி என்று மாற்றிக்கொண்டது வரைக்குமான அத்தனை கதைகளையும் கருப்பன் அறிவான். தனக்கொரு அடையாளம் வேண்டுமென்பதற்காக பொருளின் அடியில் வெல்வெட்டைச் சுற்றிக் கொண்டதால் அந்தப் பெயர் அவனுக்கு.

“ஏண்ணே… கத்திக்கு அடில பளபளன்னு துணிய சுத்திருக்கியே வழுவாது? அதும் வெல்வெட்டு வேற?” ரொம்ப நாளாகக் கேட்க நினைத்த கேள்வி. மூன்று மாதங்களுக்கு முன் இதே திண்டில் அவனருகில் அமர்ந்திருந்தபோது கேட்டுவிட்டான் கருப்பசாமி. அப்போதும் நடுங்கிக்கொண்டுதான் அமர்ந்திருந்தான்.

“புடிதாம்டே முக்கியம். பொருள் இல்ல. கண்ணு பாக்கணும். கைய்யி செய்யணும். சொல்லப்போனா இதுலதான் நல்ல புடிமானம் இருக்கு எனக்கு”, என்று சொல்லிவிட்டுப் பொருளை எடுத்து முத்தம் கொடுத்துக்கொண்டான் வெல்வெட் மூர்த்தி. அதுதான் அவனை கடைசியாகப் பார்த்தது. பேசியது. இனி அவன் இல்லை என்பதை நினைத்தபோது அவன் இல்லாமை உறுத்தவில்லை. உறுத்தியது அனைத்தும் அவன் உடலைத் துளைத்து இறங்கிய அந்த மூன்று குண்டுகள். மூன்றும் மார்பில் பாய்ந்ததாகவும், எட்டடி தள்ளிப்போய் விழுந்தான் என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியது மேலும் அச்சத்தைக் கொடுத்தது.

“கருப்பே உம் பிரச்சனைய மச்சாங்கிட்ட சொன்னேன். என்ன செய்யணும்ன்னு கேட்டான். என்ன செய்யணும் சொல்லு. இன்ஸ தூக்கிருவோமா?”, தவசு முடிந்த இரவில், கருப்பசாமியின் நெற்றியில் வழிந்த ரத்தத்தின் தடம் மறைந்திருக்கும் முன் அவனுக்கு ஏற்பட்ட அவமானத்தை வெல்வெட்டிடம் சொல்லியிருந்தான் மணி. தன்னைப்பற்றிய தகவல் இத்தனை சீக்கிரமாய் அவன் காதுக்குப் போகும் என்பதை கருப்பன் அறிந்திருக்கவில்லை.

“ஒன்ன யாரு அவங்கிட்ட சொல்ல சொன்னது. லூசா நீயி?”. அப்போதைக்கு மணியைத் திட்டினாலும் மணி சொன்ன யோசனை நன்றாக இருந்தது. ஆனாலும் இன்ஸ்பெக்டரை பழிவாங்க வேண்டிய செயலை தனியாகத்தான் செய்ய வேண்டும். யாருக்கும் தெரியாமல். மணிக்கும் முப்புடாதிக்கும் ஏன் வெல்வெட் மூர்த்திக்கும் தெரியாமல்.

***

பிரபல ரவுடி வெல்வெட் மூர்த்தி என்கவுண்டரில் சுட்டுக்கொலை. போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றபோது காவல்துறை ஆய்வாளர் தனசேகரன் மற்றும் துணை ஆய்வாளார் முத்துராஜா ஆகியோர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டான்” அத்தனை டீக்கடைகளின் வாசலிலும் மாலைமலரின் இந்த செய்தி மட்டுமே தொங்கிக் கொண்டிருந்தது. வெல்வெட் மூர்த்தி என்ற இடத்தில் அவன் பெயரை எடுத்துவிட்டு கருப்பசாமி என்ற தன் பெயரைப் பொருத்திப் பார்த்தான். பிரபல என்ற வார்த்தை மட்டும் அந்நியமாகப்பட்டது. சம்பவம் ஒன்றுதான்.

புளியமரத்துக் கிளைகளின் அசைவில் தெரியும் நிலாவும், தலைகீழாகத் தொங்கும் வவ்வால்களும் நிலமையை மேலும் தீவிரப்படுத்தின. கொஞ்சம் அவசரப்பட்டுட்டமோ? சும்மா இருந்திருக்கலாமோ? எங்கருந்து வந்தது அவ்ளோ தைரியம்? யாரிடம் சொல்லிப் புலம்புவது? யாரிடம் ஐடியா கேட்பது?, அடுத்த குறி நாம தானா?

“காவல்துறை ஆய்வாளர் தனசேகர்” அந்தப் பெயரை நினைக்க நினைக்க அந்த முகமும், கைகளை ஓங்கியபடி தன்னை நெருங்கிய கொடூரமான கண்களும் ஞாபகத்திற்கு வந்தன. சிவந்த வாளிப்பான தேகம். கர்லாக் கட்டையைப் போன்ற கைகள். அந்த மாலையில், அந்திக்கருக்கலில், தன் முகத்தில் அறைந்த வலியும், தன்னைத் தூக்கி எறியும்போது, மேசையின் விளிம்பில் பட்டு நெற்றியில் உண்டான ரத்தக்காயமும் அத்தனை எளிதில் மறக்கக்கூடிய ஒன்றில்லை. அதைவிடப் பெரியவலி தன் குடும்பத்தை உருக்குலைத்தது. நடுரோட்டில் தன்னைப்போட்டு அடித்தது. ’அவனல்லா கொன்னுருக்கணும், புளுத்தி பெரிய…’. அந்த முகம் நினைவிலெழும் போதெல்லாம் அவன் மீதிருக்கும் வன்மத்தையும் சேர்த்தே கிளறிவிட்டது.

***

ர் மொத்தமும் ஆடித்தவசுக்குத் தயாராகிக் கொண்டிருந்த மாலையில், அம்மா தன்னிடமிருக்கும் அந்த ஒரேயொரு பட்டுப்புடவையைக் கட்டிக்கொண்டு தெருவில் இறங்கியபோது ஊருக்கே கல்யாணகளை வந்ததைப்போல் இருந்தது கருப்பனுக்கு.

சங்கரனுக்கும் கோமதிக்கும் நடக்கவிருக்கும் கல்யாணத்தை, ஊரே திரண்டுவந்து ஆசீர்வதித்துக் கொண்டாடும் பெருவிழாவைக் காண அம்மா தயாராகியிருந்தாள். கோலம் போட்டு முடித்த ஒவ்வொரு கால்களும் தவசைக் காண்பதற்கு ஓட்டம் எடுத்துக் கொண்டிருந்தன. ஊரைச் சுற்றியிருக்கும் அத்தனை கிராமங்களும் தெக்குமாசி வீதியில் திரண்டு நிற்கும். கூடிக் களிக்கும். நிற்க இடமோ காற்று புக இடைவெளியோ இல்லாத அளவுக்குக் கூட்டம் மொய்க்கும். உப்பும் மிளகும் கிலோ கணக்கில் விற்றுத் தீரும். தொலைந்துபோன சிறுவர்களை கோமதி பார்த்துக்கொள்வாள் என்றொரு நம்பிக்கை. அதனால்தானோ என்னவோ தவசுக் கூட்டத்தில் இதுவரை ஒருபிள்ளைகூட காணாமல் போனதில்லை. போனாலும் திரும்பிவராமல் இருந்ததில்லை.

“ஒனக்கு சங்கருன்னுதான் பேர் வெக்க நினைச்சோம். உங்கப்பாதான் கருப்பசாமின்னு விட்டாரு. சங்கரனுக்கே காவல் எம்புள்ளன்னு சொல்லுவாரு” ஒவ்வொரு தவசின் போதும் அம்மா சொல்வாள்.

“எதுக்கும்மா உப்பும் மொளவும்?” என்றோ கேட்ட கேள்விக்கு, “நம்மகிட்ட பொன்னு இருக்கா பொருளு இருக்கா சாமிக்கு மொய் வைக்க. அதான் உப்பு மொளவு. அத வச்சா சந்தோஷமா வாங்கிப்பாரு சங்கரனாரு”

என்று அவள் சொன்ன வார்த்தை நன்றாக நினைவில் இருக்கிறது. கோமதியின் கழுத்தில் சங்கரனின் தாலி ஏறும்போது ஊரே குலவையிட்டு உப்பையும் மிளகையும் தூக்கி எறியும். உற்சவம் உச்சகட்டத்தை எட்டி இருக்கும். வேட்டுச்சத்தம் வானைப் பிளக்கும். சுற்றியிருக்கும் அத்தனை உயரமான கட்டிடங்களில் இருந்தும் உப்பு மிளகை வாரிவாரி இரைப்பார்கள். குலவையிடும் லட்சக்கணக்கான தலைகளும் உப்பு மிளகாலும், சங்கரன் கோமதியின் சந்தோஷத்தாலும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். கல்யாணம் முடிந்து கூட்டம் கலையும் வரைக்கும் ஊருக்குள் ஒரு வண்டி நுழைய முடியாது. ஊரின் அத்தனை எல்லைகளும் அடைக்கப்பட்டு மீண்டும் திறப்பதற்கு இரவு எட்டு மணியாகிவிடும்.

தவசு முடிந்து கலையும் கூட்டம்,ஊரின் அத்தனை திசைகளின் வழியாகவும் வெளியேறும். கூடவே கை நிறைய தவசு மிட்டாயையும் வாங்கிவிட்டே நடையைக் கட்டும். வெல்லப்பாகையும் கருப்பட்டிப் பாகையும் கொண்டு செய்யப்படும் அந்த மிட்டாயின் யாவாரம் தவசு அன்றைக்கு மட்டும் மிகப்பெரிய லாபத்தைத் தரும்.

கருப்பசாமியின் அப்பா தயாரித்து விற்கும் தவசு மிட்டாய்க்கென தனிச்சுவை உண்டு. தவசு அல்லாத காலங்களிலும் அவர் கடையில் தவசு மிட்டாய் கிடைக்கும். அதனைத் தேடிவந்து வாங்கிச்செல்ல ஆட்களும் உண்டு.இருந்தாலும் தவசுக் காலத்திற்கென்றே தயாரிக்கும் மிட்டாயில் தனி சுவை ஏறுவதாக அவருக்கொரு நம்பிக்கை. அவர் கடையின் மிட்டாய் தீர்ந்த பிறகே கூட்டம் மற்ற கடைகளைத் தேடி ஓடும். மிட்டாயை அரைத்தபடி ஊரை நோக்கி நடக்கத் தொடங்கும் ஒவ்வொரு வாயிலும் தவசு மிட்டாயின் தேனும் சேர்ந்தே வடியும்.  

கருப்பசாமி கல்லூரியில் சேர்ந்த முதல் வருடத்தில் வரும் ஆடித்தவசு இது. அவனைப் படிக்க வைப்பதற்கென பெரிய செலவுகள் இல்லையென்றாலும், ‘மீச மொளச்ச பையன் கேட்டத வாங்கித்தர முடியல’, என்ற வருத்தத்தால் இந்த முறை மிட்டாயை கொஞ்சம் கூடுதலாகவே தயாரித்திருந்தார் கருப்பனின் அப்பா. இரண்டு இல்லை மூன்று பங்கு தயாரித்தாலும் முப்பது நிமிடத்தில் விற்றுவிடும் ஐட்டம்தான் என்றாலும் ஆள் வைத்து மிட்டாய் தயாரிக்கும் பழக்கம் அவருக்கு இருந்தில்லை. அதனால் சக்தியை மீறி களத்தில் இறங்கமாட்டார். பாகு காய்ச்ச தனி பலம் வேண்டும். அதை உருட்டித் திரட்டும் பக்குவம் தெரிய வேண்டும். கொஞ்சம் சூடு காட்டினாலும் அடிபிடித்துப் பசையாகிவிடும் அல்லது தண்ணி கட்டிவிடும். அம்மாவைக்கூட கிட்டத்தில் விடமாட்டார். தவசுப்பாகு அவருக்குப் பிள்ளையைப் போல. சங்கரனாருக்குச் செய்து தரும் நேரடிப் பலகாரம். அது கெட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். கொதிக்கும் சட்டியில் கோலமிடுவதைப் போல மாவை சுற்றியெடுக்கும் பக்குவத்தை மட்டும் அம்மாவுக்குக் கற்றுக் கொடுத்திருந்தார். சூட்டோடு பொரிந்து மேலெழும்பும் மிட்டாயை அப்படியே கருப்பட்டி பாகினுள் அமுக்கி, தேன் அதன் கருப்பைக்குள் இறங்கிவிட்டது என்ற நம்பிக்கை வரும்வரையிலும் மிட்டாயை அமிழ்த்திப் பிடித்திருப்பார். கருப்பெட்டி, மண்டவெல்ல மிட்டாய்கள் மட்டுமே அந்த வீட்டில் இருந்து வெளியில் இறங்கும் தவசுப் பலகாரங்கள். வெள்ளைநிறம் கொண்ட சீனிப்பாகு மிட்டாயை அவர் என்றைக்குமே செய்ததில்லை.

பட்டுச்சேலை கட்டி அம்மா தெருவில் இறங்கியபோது, தள்ளுவண்டி நிறைய வெல்ல மிட்டாயையும் கருப்பட்டி மிட்டாயையும் ஏற்றிக்கொண்டிருந்தார்கள் அப்பாவும் பிள்ளையும். இன்னும் பத்து நிமிடத்தில் கடைக்கு முன் இருக்கும் இரும்பு டேபிளில் அடுக்கப்பட்டிருக்கும். சூட்டின் வெதுவெதுப்பு குறைந்திருக்காத அந்த மிட்டாயைக் கிட்டத்தட்ட பத்து உருளைகளாக உருட்டியிருந்தார். ஒவ்வொரு உருளையும் பத்து கிலோ இருக்கும். நூறு கிலோ மிட்டாயை தனியாளாகக் காய்ச்சிய கம்பீரம், மிட்டாய் உருளைகளை வண்டியில் அடுக்கும்போது தெரிந்தது. பார்ப்பதற்கு அவர்தான் நிஜ கருப்பனைப்போல் இருந்தார்.

“எப்பா என்ன பண்ணப் போற இந்த யாவரத்த வச்சி”, என்றான் கருப்பன். இதுதான் வேண்டுமென்று கேட்கும் பக்குவம் அவனுக்கு வந்திருக்கவில்லை. வீட்டுக்கு ஒரு கலர் டிவி வாங்க வேண்டுமென்பது அம்மையின் விருப்பம். கருப்பு வெள்ளையாகத் தெரியும் அந்த டிவியில் சத்தமே கேட்பதில்லை. போதாக்குறைக்குக் கோடு விழுகிறது. எத்தனையோ நாளாகக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறாள். அப்பா தான் மசியவில்லை. “ஏல ஒங்கையாட்ட டிவி வேணும்ன்னு கேளுல. பொழுதன்னிக்கும் கடையில நிக்க ஆளுக்கு நாம படுத கஷ்டம் தெரியுமா என்ன?”, முன்னெப்போதோ சொன்னது கருப்பனின் ஞாபகத்திற்கு வந்தது.

“இன்னொரு லாலா கட போடுவமாடே? நீ நிக்கியா?”, என்று அப்பா கேட்டபோது அம்மாவைப் பார்த்து சிரித்தான். கதவை ஓங்கிச் சாத்திக்கொண்டு தெருவில் இறங்கிய அம்மாவின் கருத்த முகம் மேலும் சிவந்து கருப்பதை அப்பனும் மகனும் கவனிக்காமல் இல்லை. “அம்மைக்கு எதோ கோவம் போல. ஒன்ன இஞ்சிநிரிங் படிக்க வெக்கலன்னு கோவம். என்ன செய்ய, என்னால எட்டாப்பு கூட தான்ட முடியல. நீ காலேஜ் போறியே, அதுவே சாதனதானடே. கடையெல்லாம் வேணாம். நான் பாத்துக்கிறேன். இந்த வெக்க என்னோட போவட்டும். நீ மெட்ராஸுக்கு போ. இல்ல பாய்மாருகூட சேர்ந்து அரபு நாட்டுக்கு போ. தும்பமெல்லாம் என்னோட போவட்டும்…”, சொல்லிவிட்டுப் பெருமூச்சு விட்டார். சாயங்காலத்து ஆடிக்காத்து, மலையில் இருந்து இறங்கி, தகரங்களின் மீது தடதடத்து ஓடும் குரங்குக்கூட்டத்தை போலச் சத்தம் எழுப்பியபடி வீசத்தொடங்கி இருந்தது. கோலங்களின் உட்புற வளைவுகளில் தேங்கிநின்ற கலர்பொடிகள் மேலெழும்பி ஜாலம் காட்டின.

தன் கடையைத் தாண்டி சிந்திக்கும் பக்குவம் என்றைக்குமே அப்பாவுக்கு  வந்ததில்லை. வீட்டில் இருக்கும் கொஞ்சநேரத்திலும் அடுத்த நாளுக்கான பலகாரம் என்ன என்ற யோசனையில்தான், சிட்டையை எடுத்துக் குறிப்பெடுப்பார். அடுத்து என்ன என்பதை யோசித்துக் கொண்டிருப்பார்.  முதலுக்கு மேல் வரும் லாபம் கண்ணுக்குத் தெரியாத காத்தாக கரைந்து கொண்டிருக்கிறதே தவிர, தூர்ந்துவிழும் தகரத்தை மாற்றுவதற்குக்கூட காசாகத் தங்கவில்லை. இந்தக் கேள்விக்கு மட்டும் அவருக்கு பதில் கிடைத்ததேயில்லை. “இந்தக் காசுக்கு ஒரு நல்ல கலரு டிவி வாங்குவோம் செரியா”, உருளையை மேஜையில் அடுக்கி, ஊது பத்தியைக் கொளுத்திக்கொண்டே அப்பா சொன்ன அந்த வார்த்தையைக் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது.

“பழைய டிவிய கடைல வச்சிருவோம். சிவாட்ட சொன்னா ஓசிக்கே கேபிளு தருவான். இல்ல பத்து ரூவா கொறச்சு பேசிப்போம். பூ கட்டும்போது உத்து உத்து பாக்கா, அந்த கருமத்துல ஒண்ணும் தெரியமாட்டக்கி. என்ன செய்ய. ஒங்கம்ம வாங்கி வந்த வரம் அப்டி. கதவ சாத்தும்போது சத்தத கேட்டியா?”, சிரித்துக் கொண்டே அப்பா சொன்ன வார்த்தைகளை அம்மா கேட்டிருந்தால் அதைவிட அதிகம் சிரித்திருப்பாள். அப்பாவும் அம்மாவும் பேசிக்கொள்வார்களா என்ற சந்தேகம் அவனுக்கு நெடுநாளாக உண்டு. சாலையின் விளிம்பில் அண்டை கொடுத்து நிறுத்திய இரும்பு டேபிளின் காலில், சப்படை ஓடு ஒன்றைச் சொருகியபோது அதன் ஆட்டம் நின்றிருந்தது. இரண்டு மூன்றுமுறை ஆட்டிப் பார்த்து நிலையாக நிற்கிறதா என்பதை உறுதிசெய்து கொண்டான் கருப்பன்.

கல்யாணம் முடிந்து தவசுக்கூட்டம் கலையத் தொடங்கிய நேரத்தில்,  எதிர்பார்த்ததை விடவும் அதிகமான கூட்டம் கடையை நெருக்கி அடைத்துக் கொண்டு முண்டத்தொடங்கியது. ஒவ்வொரு தவசுக்கும் நிகழும் காட்சிதான் இது என்பதால் யாருக்கும் எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை. எப்படியும் சில நிமிடங்களில் யாவாரத்தை முடித்துவிடலாம் என்ற மும்மரத்தில் இருந்தார் கருப்பனின் அப்பா. மிட்டாயை எடுத்து அளவு போட்டுப் பொட்டலம் போடும் வேலையை அப்பா பார்த்துக்கொள்ள, காசை வாங்கித் தகர டப்பாவில் போடும் வேலை கருப்பனுக்கு. பெரும்பாலும் கை அளவுதான். மிட்டாயின் நீளத்தை வைத்தே எத்தனை கிராம் என்பதை அளந்துவிடுவார். அளவு கூடுமே தவிர குறையாது. இது கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் தெரிந்த சேதி. ருசி பார்க்கும் சாக்கில் பிய்த்து வாயில் போடும் கணக்கு சங்கரனுக்கு. யாவாரம் சூடுபிடிக்கத் தொடங்கி பத்து நிமிடம்கூட கடந்திருக்கவில்லை. தவசுக்கு எட்டிப் பார்த்த தூறல் கூட  அடங்கியிருக்கவில்லை. அதற்குமுன் ஊரின் அத்தனை எல்லைகளையும் வாகனப் போக்குவரத்திற்காகத் திறந்துவிட்டிருந்தார்கள் வட்டார அதிகாரிகள்.

“அதுக்குள்ள என்னாச்சு இந்த பேதில போவானுங்களுக்கு. எப்பயும் எட்டு மணிக்குதான தொறப்பான். இன்னிக்கு என்ன ஏழு மணிக்கே?”, என்றபடி பெருமூச்சுவிட்டார் கருப்பனின் அப்பா. விடாமல் அடித்துக் கொண்டிருக்கும் காற்று எழுப்பி வரும் புழுதி மிட்டாயில் படிந்துவிடாமல் பார்த்துக்கொள்ளும் கவனமும் அவரிடம் இருந்தது. இதற்கிடையே கூட்டத்தில் புகுந்த கழுதைகளாய் கனைக்கத் தொடங்கியிருந்தன வாகனங்கள். வழிகேட்டு,விடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன .மிட்டாய் வாங்கும் அவசரத்திலும் விற்கும் அவசரத்திலும் கூட்டத்தை ஒழுங்கு செய்யும் எண்ணம் யாருக்கும் வந்திருக்கவில்லை. “புது பவுசால்லா இருக்கு இந்நேரத்துக்கு பஸ்ஸு வாறது”, என்று பேசிக்கொண்ட கூட்டத்தின் சலசலப்பு விடாது எழும்பிய ஹார்ன் சத்ததிற்குள் மறைந்துபோனது. மிட்டாயை வாங்காமல் நகர்ந்து செல்லும் எண்ணம் யாருக்கும் வந்திருக்கவில்லை. சாலை கொஞ்சம் கொஞ்சமாக குழப்பமாகிக்கொண்டிருந்த கணத்தில்தான் அந்த அசம்பாவிதம் நடந்தது. என்னவென்று நிதானிக்கும்முன் வந்துபோன சூறைக்காற்றைப் போல முடிந்தும் போயிருந்தது.

“செருக்கியுள்ளய ஒங்கப்பன் வீட்டு ரோடால இது? ரோட்டு மேல கடைய போட்டு தும்பத் கொடுக்காணுவ ஒப்பனவோழிய”, என்று கூறிக்கொண்டே ஒவ்வொரு கடையாக நெருங்கி அடித்து நொறுக்கத் தொடங்கினார் ஊருக்குப் புதிதாக மாற்றலாகி வந்திருக்கும் அந்தப் புது ஆய்வாளர் தனசேகரன். நடப்பது என்னவென்று நிதானித்துச் சுதாரிக்கும் முன் கருப்பனின் கடையையும் நெருங்கி இருந்தார். அடிக்கும் காத்தின் வேகத்தில் சூறையாடத் தொடங்கினார்.

“சார் சார் வேணாம் சார். பூராம் மிட்டாய் சார். தரையில பட்டா ஒண்ணத்துக்கும் ஆவாம போயிரும் சார். ரெண்டு நிமிஷம் சார். எடுத்து வச்சிருதேன் சார்”, என்று அப்பன் போட்ட எந்த சாரையும் அந்த புது சார் மதிக்கவில்லை. உச்சத்தில் ஏறிய அதிகாரம் காலில் இறங்க, ஒவ்வொரு பொருளாக மிதித்து தள்ளிவிடத் தொடங்கினார் – காக்கி உடையினுள் புகுந்து களமாடிக் கொண்டிருக்கும் அந்த புது இன்ஸ்பெக்டர். ஒரேயொரு உருளையையேனும் காப்பாற்றிவிட முடியாதா என்ற கெஞ்சல் கருப்பனின் அப்பாவிடம் முந்திக்கொண்டு நின்றது. எவ்வளவு கெஞ்சியும் காதில் வாங்காது அடுக்கி வைக்கப்பட்ட அத்தனை உருளைகளையும் நடுரோட்டில் உருட்டிவிட்டார் இன்ஸ்பெக்டர் தனசேகர்.தேங்கி நிற்கும் வாகனங்களை அதன்மீது ஏறிச்செல்லும்படி கட்டளையிட்டார்.கரும்பைப் பிழிந்து சக்கையாக்குவதைப் போல, தேன் நிறைந்த மிட்டாய்கள் ஒவ்வொன்றும் சக்கரங்களின் வேகத்திற்குப் பலியாவதை தவசுக்கு வந்த மக்களால் வேடிக்கை பார்க்க முடிந்ததே தவிர கேள்வி கேட்க முடியவில்லை. கருப்பட்டியின் வாசமும் இஞ்சியின் வாசமும் அரைபட்டுக் கடந்துபோன வண்டியின் மீதங்களாக காற்றில் பரவத்தொடங்கின. ஒரு வாரத்து உழைப்பை ஒரு குடும்பத்துக் கனவைச் சிதைத்து எறிந்த அந்த மிருகத்தைக் கட்டுபடுத்தும் வழி தெரியாமல் இன்ஸ்பெக்டரின் குறுக்கே பாய்ந்தார் கருப்பனின் அப்பா.

சங்கரனுக்கிட்ட பிரசாதம் சாலையில் உருக்குலைவது தாங்காமல் கோவத்தில் அரற்றினார். அழுதும் கெஞ்சியும் காலில் விழ முயன்று தடுக்கவும் நினைத்த கருப்பனின் அப்பாவை அடிப்பதற்காகப் பாய்ந்தார் இன்ஸ்பெக்டர் தனசேகரன். வெறியேறிய மிருகத்தின் அடி தன் அப்பாவின் மேல் பட்டுவிடக் கூடாதென குறுக்கேப் புகுந்த கருப்பனைத் தூக்கிவீசியதில், ஏற்கனவே இன்ஸ்பெக்டரின் காலில் மிதிபட்டு உருக்குலைந்து கிடந்த இரும்பு டேபிளில், கருப்பனின் தலை மோதி நெற்றி தெறித்து ரத்தம் சிதறியது. வீசிய வேகத்தில் அவன் கையில் வைத்திருந்த டப்பா தெறித்ததில் அதிலிருந்த பணமும் காசும் எங்கெங்கோ  பறந்தன. இனி நடப்பது எதனோடும் தனக்குச் சம்மதம் இல்லை என்பதைப்போல அந்தக் கணத்தில் அப்படியே மயங்கிச் சரிந்தான் கருப்பசாமி.

***

வசு முடிந்த இரண்டாவது நாளில் வீட்டைவிட்டுத் தொலைந்துபோன அப்பா, மூன்று நாட்கள் கழித்துத்தான் வீட்டினுள் நுழைந்தார். அதுவரை அவர் மீது படிந்திருந்த கம்பீரம் காணாமல் போயிருந்தது. முகம் முழுக்க வெறியும், வெறியை வெளிப்படுத்த இயலாத ஆற்றாமையும் மட்டுமே துயரமாக மிஞ்சி நின்றது. கசக்கி வீசப்பட்ட காகிதமாக அம்மையின் முன் வந்து நின்றவர், அவள் முகத்தைப் பார்க்கும் வலுவை மொத்தமாக இழந்திருந்தார். கண்கள் சுழல மிட்டாய் சுடும் தகரக்கொட்டகையை வெறிக்க வெறிக்க பார்த்தபடி அமர்ந்திருந்தார். எத்தனை முயன்றும் அவர் கவனத்தை மடைமாற்றுவது இயலாத காரியமாக இருந்தது. வீட்டைச் சுற்றிலும் எஞ்சி நிற்கும் மிட்டாய் வாசனை அவரை மேலும் வெறியேற்றி இருக்க வேண்டும். எந்த அடுப்பில் மிட்டாய் காய்ச்சினாரோ அதே அடுப்பில் சூடத்தை ஏற்றிச் சத்தியம் செய்தார், “இனி ஜென்மத்துக்கும் மிட்டாய் செய்ய மாட்டேன்”, என. சத்தியம் செய்த கணத்தில் உடைந்து அழுதார். அதுவரை அடக்கிவைத்த அழுகை பெரும் ஓலமென நகரமெங்கும் பரவியது. தெருவே திரண்டு வந்து சாட்சி கொடுத்தது அப்பாவின் சத்தியத்திற்கு. அப்பா வந்தால் போதுமென்ற நிறைவுக்கு மத்தியில் – தவசு மிட்டாயோ, அப்பா செய்த சத்தியமோ அத்தனைப்  பெரிய இழப்பாகத் தெரியவில்லை. ஒரு பெரிய துன்பத்தை அதைவிடப் பெரிய துன்பமே இல்லாமல் ஆக்குகிறது இல்லையா?எது பெரிய இழப்பு?எது பெரிய வலி?

எத்தனைப் பெரிய சத்தியம் அப்பா செய்தது. அப்பன் சத்தியம் செய்த அதே நாளில் கருப்பனும் ஒரு சத்தியத்தைச் செய்தான். “இன்ஸ்பெக்டரைப் பழி வாங்குவது”, என்று.

எண்ணெய் டின் அறுப்பதற்காக அப்பா பயன்படுத்தும் ஆக்சா பிளேடை எடுத்துக்கொண்டு இன்ஸ்பெக்டரின் ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினான் கருப்பசாமி. இன்ஸ்பெக்டரின் வீடு இருக்கும் திசையை தற்செயலான உரையாடலில் முப்புடாதி சொன்னது கைகொடுக்கிறது. ஊரில் இருந்து நாலு கிலோமீட்டர் என்றாலும் நடந்தே செல்வது என்று முடிவு செய்திருந்தான். யாரும் தன்னைப் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக வயக்காட்டின் வழியே செல்லும் பாதையைச் தேர்வு செய்தான். சூரியன் மறையும் இருளிலும் தெக்கே கம்பீரமாக எழுந்து நிற்கும் மலை தைரியத்தைக் கொடுத்தது.

கருக்கலில் ஆரம்பித்த நடை முழுவதுமாக இருட்டிவிட்டபோது முடிவுக்கு வந்தது. புதிதாகக் கட்டப்பட்ட வீட்டின் வெளியே நிற்கும் இன்ஸ்பெக்டரின் பைக்கின் ஒயரை பலவீனப்படுத்துவதுதான் திட்டம். எப்படிச் செய்யவேண்டும் என்பதை மணி சொல்லக் கேட்டிருக்கிறான்.காலையில் பைக்கை எடுத்தால் வலச முக்குக்கு முன் கண்டிப்பாக அறுந்து கீழே விழவேண்டும். சேதாரத்தைப் பற்றிக் கவலையில்லை. பழி தீர்க்கவேண்டும். பைக்கின் பகுமானங்களை மணி சொல்லியிருக்கிறான். எந்த ஒயரை அறுப்பது என்பதில் அவனுக்குக் குழப்பம் இருந்தாலும் இரண்டு மூன்று ஒயரை சேர்த்தே அறுப்பது என்று முடிவு செய்திருந்தான்.

கருப்பசாமியின் வாசத்தை மோப்பம் பிடித்த ஒன்றிரண்டு தெருநாய்களும் அவனைக் கண்டும் காணாமல் போனது நிம்மதியாக இருந்தது. என்னவானாலும் அப்பாவின் முகத்தை மட்டும் நினைவில் நிறுத்திக்கொண்டான்.அப்பன் செய்த சத்தியம் சாதாரணமானது அல்ல. தவசு மிட்டாயில் தன் உயிரைக் கலந்திருக்கிறார். அப்பனின் உயிரில் கைவைத்தவனை சும்மா விடுவது நியாயமா? கருக்கல் நள்ளிரவோடு கூடும் வரை காத்திருந்தவன், சுவர் ஏறிக்குதித்து, வண்டியை நெருங்கிவிட்டிருந்தான். வளர்பிறையின் வெளிச்சம் மேகத்தில் மறைந்தும் மறையாமலும் வெளியேறிக் கொண்டிருந்தது. தென்னை மரங்களின் வழியாக வீசும் காற்று பேய்க்குரல் எழுப்பிக் கொண்டிருந்தது. காவல் என்று எழுதிய அந்த வண்டியின் முன்பக்க சக்கரத்தின் இடதுபக்கம் குந்தவைத்து உக்கார்ந்தவன், பையில் மறைத்து வைத்திருந்த ஆக்சாவை எடுத்து அறுக்கத் தொடங்கினான். அவன் எதிர்பார்த்ததைப்போல அத்தனை எளிதாக இருக்கவில்லை அந்த சம்பவம். ஒரு குறிப்பிட்ட நிமிடத்திற்குப் பின் கைவலி எடுக்க ஆரம்பித்ததே தவிர கம்பி அறுபடுவதைப்போல் தெரியவில்லை. முடிந்த மட்டிலும் கையின் வேகத்தை அதிகப்படுத்தினான். முடியவில்லை. தான் செய்து கொண்டிருக்கும் செயலின் அபத்தம் அப்போதுதான் உறைக்கத் தொடங்கியது. அந்த அபத்தம் கூடுதல் எரிச்சலை உருவாக்கியது. இந்நேரத்தில் கரிய நிழலாக, பெருத்த பூதமாக தனக்கருகில் இருந்த சுவற்றில் அசையும் தன் நிழலைக் கவனிக்கத் தவறி இருந்தான் கருப்பன். அந்த இரவிலும் குளிரிலும் வியர்க்கத் தொடங்கியது. அவசரமாக ஒன்றுக்கு வருவதைப்போல் இருந்தது.

கதவு திறக்கப்படும் சத்தம் கேட்பதும் யாரோ அவனை நெருங்கி வருவதும் தெரிந்தது. சுவரேறிக் குதித்துத்தப்பி ஓட முயன்ற கணத்தில் யாரோ ஒருவரின் கைகள் தன் மீது படுவதும், அதுவரைக்கும் கம்பியில் கொடுத்த அழுத்தத்தைப் பலங்கொண்ட மட்டும் ஒரு உடலில் வீசியதையும் அதன் ரத்தம் தெறித்து “அம்மாஆஆஆ”, என்று அலறியதையும் மின்னல் வேகத்தில் கடந்திருந்தான். மனதில் இருந்த வெறுப்பு மொத்தமாக வடிந்து பயம் அப்பிக்கொண்டது. எந்தவொரு விஷயத்திற்காக வெல்வெட் மூர்த்தியை வெறுத்தானோ, எந்தவொரு செயலை எக்காரணம் கொண்டும் செய்துவிடக்கூடாது என்று பயந்தானோ அதே காரியத்தைத் தானும் செய்ய நேர்ந்ததை நினைத்தபோது விரல்களின் வழியே வடிந்த ரத்தம் தன்னைச் சுற்றிலும் நிறைந்து தன்னை அதில் பிடித்து முக்குவதைப்போல் இருந்தது.

வந்த பாதையின் வழியே மூச்சிரைக்க ஓடத்தொடங்கினான் கருப்பன். தப்பிக்கும் உணர்வில் தடயம் குறித்த எந்த சிந்தனையும் எழுந்திருக்கவில்லை. வரப்புகளின் வழி விழுந்தடித்து, நீர் குறைந்து ஓடிய வலுக்காம்பாறையில் குதித்து வாய்க்காபாலத் திண்டை அடைந்தபோது முழுவதுமாகத் தளர்ந்திருந்தான்.

“ஏல கருப்பா ஊருக்குக் கிழக்கால ஒரு சின்ன பையன வெட்டி கொண்ணுட்டாங்களாம். தொண்ட குழிலையே வெட்டிருக்கான்”, மூக்கையா சொன்னபோதுதான் முந்தைய இரவில் தான் செய்த மடத்தனமான காரியமும், அதன்பின் சிதறிய தடயங்களும் நினைவில் வந்துபோனது. பைக்குள் மறைந்துகிடந்த ஆக்சா பிளேடை எடுத்து அவசரவசரமாக மறைத்ததும் அப்போதுதான். அந்தக் குரல் ஒரு பெண்ணின் குரலாக இருக்கக்கூடும் என்று நினைத்திருந்தான். கூர்முனை உள்ளே இறங்கும்போது பிளேடின் வீச்சு வளைவதைப் போல் தோன்றியது. உடலின் வேறு எதோ ஒரு பாதுகாப்பான பாகமாக இருக்கூடும் என்று நினைத்தான். எந்தவொரு இரவிலும் இப்படியொரு செயலைச் செய்ததில்லை என்பதால் எத்தனை முயன்றும் ஒரு முழுவடிவமாக அந்த சம்பவத்தை அவனால் நினைவுபடுத்திப் பார்க்க முடியவில்லை. ஒரு கொலையைச் செய்துவிட்டு இத்தனை சாவகாசமாக அமர்ந்திருக்கும் தன்னை நினைத்துப் பார்த்தபோது அவனுக்கே பயமாக இருந்தது. அப்பா மீண்டும் வீட்டைவிட்டுக்  காணாமல் போயிருக்கிறார் என்ற தகவல் மேலும் அச்சத்தைக் கொடுத்தது. வெறிபிடித்த ஒற்றை மிருகத்தின் கோரப்பற்கள் தன்னை இன்னும் துரத்துவதைக் கண்டு வெருண்டான்.

’இப்போ என்ன செய்யணும்?’ ’யாருகிட்டயாச்சும் பேசணுமா?’ என்னென்னவோ நினைத்துக் கொண்டிருந்தவன் பயத்திலும், வெருண்டு ஓடிவந்த அலுப்பிலும் அப்படியே தூங்கிப்போனான். மீண்டும் எழுந்தபோது “ஏல வெல்வெட் மூர்த்திய புடுச்சிட்டாங்களாம். அவன் சேக்காளி பூரா பயலுவகிட்டயும் விசாரண நடக்காம்”, மூக்கையாவின் குரல் வாசற்புறத்தில் இருந்து உள்ளே நுழைவது கேட்டது.

***

டந்து செல்லும் ஒவ்வொரு வாகனமும் தன்னைத்தேடி வந்து விலகிச் செல்வதைப்போல் எழும் உணர்வுகளை அடக்க முடியாமல், தன் மீது பட்டுத் திரும்பும் வெளிச்சத்தையும் அதன்பின் ஏற்படும் இருளையும் பதற்றத்தோடு அணுகிக் கொண்டிருந்தான் கருப்பசாமி. இன்ஸ்பெக்டர் தனசேகர் தூக்கி எறிந்ததில் ஆழமாக இறங்கிய வெட்டுக்காயம் ஆறு தையல் வரைக்கும் இழுத்துச் சென்றிருந்தது. ரத்தப்போக்கும் அதிகம். கட்டுப்போடுவதற்காகத் தலைமயிரைக்  கொஞ்சமாகச் சிரைத்தது முகத்தின் கோரத்தை அதிகமாகக் காட்டியதால் முழுவதையும் வழித்துவிடும்படி செய்துவிட்டார் மூக்கையா. மூன்று நாட்களுக்கு முன் தையலைப்பிரித்து மறுதையல் போடும்போது மேலும் ஒருமுறை மழித்தார்கள்.

நெற்றியின் இடதுபுறத்தில் உருவாகியிருக்கும் புதிய தடம் துருத்திக் கொண்டிருந்தது. மெதுவாக அதைத் தடவிப்பார்த்தான். எவ்வித உணர்வும் இல்லாமல் ஒரு மேடுபோல் ஒட்டிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது அவனுக்கு.

“போட்டது போலீஸ்காரன் சொந்தக்காரன, சும்மாவா விடுவாவ. அதான் கோர்ட்லையே போட்டான் பாத்தியா. எழவு தவசு முடிஞ்சா நல்லது நடக்கும்ன்னு சொல்லுவாவ, இதென்ன கருமம் எளவு மேல எளவா விழுதுன்னு தெரியல”, இடுப்பில் மடித்து வைத்த அடுத்த பீடியை உருவிக்கொண்டே மேலேறி வந்தார் மூக்கையா.

“மூக்கையா அந்த போலீஸ் வீட்டு வர போயிட்டு வருவோமா?” அவன் கேட்டது மூக்கையாவின் காதில் விழும்முன், அந்தப் பகுதியைக் கடந்து சென்ற மணல் லாரியின் ஒலி உறங்கிக்கொண்டிருந்த வவ்வால்களை பதறியெழச் செய்தது. “என்னடே?”, என்று கேட்டபோது, மற்றுமொருமுறை அவரிடம் அதைக்கேட்க வேண்டுமென்று தோன்றவில்லை.

கையில் பைசா எதுவும் எடுத்துச் சென்றிருக்கவில்லை. கழுத்தில் கட்டியிருந்த கயிறு அப்படியேதான் இருக்கிறது. அணிந்து சென்ற சட்டையின் பித்தான்களை எண்ணிப் பார்த்தான் எதுவும் சிதறி இருக்கவில்லை. வேறென்ன தடயம் இருக்க முடியும்? கைரேகை. அதுவொன்றுதான் பதற்றத்தை அதிகரித்தபடி இருக்கிறது. ஆடி மாதத்தில் பொதுவாக மழை பெய்வதில்லை. பனியும் கொட்டுவதில்லை. ரேகையை எடுத்திருப்பார்களா? ஏதாவது நாய் ஒண்ணுக்கிருந்து அழித்தால்தான் உண்டு. அந்தத் தெருவின் எதாவது ஒரு நாய் தனக்கு உதவக்கூடாதா? கண்களை இறுக்க மூடி அங்கிருந்த ஒரு நாயை வேண்டினான். இருக்காது. இந்நேரம் தடயத்தை எடுத்திருப்பார்கள். நாளை காலை தன் கையில் மாட்டப்படும் விலங்கை இப்போதே உருவகப்படுத்திப் பார்த்தான்.தன் அப்பனின் முன்னிருக்கும் ஒரே நம்பிக்கையும் சுக்குநூறாக உடைவதைக் காட்சியாகக் காணத் தொடங்கினான்.

***

ண்களைத் திறந்த நிலையில் பேயறைந்தவனைப்போல் இருந்தவனை உலுக்கி, “என்ன கருப்ஸ் ரொம்ப ஆழமான சிந்தனபோல. வாங்க எந்திச்சிப் போவோம். ஊரப் பத்தி யாராவது பேசுனா போதுமே உக்காந்த இடம் தெரியாம யோசிக்க ஆரம்பிச்சிருவீங்க. மீட்டிங் அட்டன் பண்ண போறமா இல்ல போஸ்ட்போனா?”, கேள்விமேல் கேள்வி கேட்ட விஜய்கணேஷ் சிந்தனையைக் கலைத்திருந்தான்.

எதிரில் உயர்ந்து நின்ற கட்டிடத்தின் வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருந்தன. ஐநூறு அடி உயரத்திற்குக் கட்டப்படும் அந்தத் தூணின் உச்சியில் முதலாளியின் ஹெலிஹாப்டரை இறக்க இருக்கிறார்களாம். அதன் அடியில் அமர்ந்திருந்தபோதுதான் அந்த உரையாடல் ஆரம்பித்தது. டீமில் புதிதாக சேர்ந்திருந்த அன்வரும் மகேஷும் அந்த மாலை நேரத்து வாக்கிங்கில் மேலும் இருவராக இணைந்திருந்தார்கள். டீமினுள் யார் புதிதாக சேர்ந்தாலும் அவர்களையும் தங்களோடு இணைத்துக்கொண்டு, அவர்கள் குறித்த மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும், தங்களையும் அந்தக்கூட்டத்தில் ஒருவன் என்ற குழு மனப்பான்மையை புதியவர்கள் மனதில் அதிகப்படுத்தவும் கருப்பசாமி மேற்கொள்ளும் பயிற்சி இது. அந்த நடைப்பயிற்சியின் இடையில்தான் மகேஷ் அந்த கேள்வியைக் கேட்டிருந்தான்.

“கருப்ஸ் நீங்களும் நானும் ஒரே ஊர்ன்னு எதிர்பார்க்கவே இல்ல தெரியுமா. இவ்ளோ பெரிய கம்பெனில, நம்ம ஊர்க்காரர, அதும் அவரே என்னோட டீம் லீடராவும் இருப்பாருன்னு யோசிச்சுக்கூடப் பார்க்கல. செம்ம ஹேப்பி”, என்றான். மகேஷ் குறித்த மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள முயன்ற இடத்தில்தான் அவன் இன்ஸ்பெக்டர் தனசேகரிடம் வந்து நின்றான். தான் அவருடைய ஒரே பிள்ளை என்பதையும் இப்போது அவர் மாவட்ட எஸ்.பி என்பதையும் பெருமையாகக் கூறினான். முகத்தில் இருந்த ராஜகளையில் தனசேகரைக் கண்டுகொண்டதும் அப்போதுதான். அந்த உரையாடல் எப்படி ஆரம்பித்து எப்படி நகர்ந்து எப்படி வெல்வெட் மூர்த்தி வரைக்கும் வந்தது என்று தெரியவில்லை. ஆனால் அவன் சொன்ன தகவல் உள்ளுக்குள் மிகப்பெரிய நடுக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை உணர்ந்தான் கருப்பசாமி.

“எஸ்.பி ஆகணும்ன்றது அப்பாவோட கனவு. என்னையும் போலீஸ்ல சேர சொன்னாரு. நாந்தான்”, என்றபடி தன் முகத்தின் மீதிருந்த தழும்பைத் தடவினான்.

“எனக்கும் ஆசதான். ஆனா அம்மா விடல”, என்றான்.“நம்பவே முடியல தெரியுமா இப்டி ஒரு விஷயத்த கேள்விப்படுவேன்னு”, என்பதை மீண்டுமொருமுறை அழுத்தமாகக் கூறினான் மகேஷ்.

தன்னுடைய அப்பாவுக்கு இருந்ததெல்லாம் ஒரேயொரு ஆசைதான். அம்மைக்குக் கலர் டிவி வாங்கித்தர வேண்டும் என்பது. அந்த ஆசையைக்கூட, எங்கே வாய்விட்டுச் சொன்னால் நிறைவேற்ற முடியாதோ என்று பொத்திப்பொத்திதான் வைத்திருந்தார். எத்தனை கம்பீரமான மனிதன்? எத்தனை கனவுகள் அந்த முகத்தில்? தன் மீது விழுந்த ஒரே அடியில் உருக்குலைந்துபோனதும், செய்த சத்தியத்திற்காகத் தன் லாலா கடையை மூடிவிட்டு, ரயில்வே பிளாட்பார்மில் டீ கேனைத் தூக்கிக்கொண்டு அலைந்ததும்தான் அவருக்குக் கிடைத்த பதவி உயர்வு இல்லையா? முட்டிக்கொண்டு எழும்பிய கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான் கருப்பசாமி.

கருப்பசாமியின் நெற்றியின் ஓரத்தில் இருக்கும் அந்தப் பெரிய தழும்பு குறித்து கேட்டபோது, மகேஷ் தன்னுடைய நெற்றியின் வலது ஓரத்திலும் அதேபோல் ஒரு தழும்பு இருப்பதைக் காட்டினான். அந்த இரவில் அவனுக்கு நிகழ்ந்த விபரீதம் குறித்துக் கதைகதையாகக் கூறினான். நல்ல ஆழமான வெட்டு. அதைத் தொட்டுப்பார்க்க நினைத்தான் கருப்பசாமி. அதன் வழியே பெருக்கெடுத்து ஓடிய ரத்தத்தின் சுவடை தன் விரல்களில் தேடிப்பார்த்தான். எந்தத் தழும்பும் எப்போதும் ஆறுவதில்லை. கொஞ்சம் நோண்டினாலும் ரத்தம் கசியும் ஊற்றுகளாகத் தங்களை உருமாற்றிக்கொண்டே காய்ந்துபோய்க் கிடக்கின்றன என்பதை ஒவ்வொருமுறையும் உணர்ந்து கொண்டுதான் இருக்கிறான் கருப்பசாமி, மிட்டாய் வாசம் வீசும் அப்பனையும், அப்பனைத் தொலைத்த அம்மையையும் காணும்போதெல்லாம்.

***

ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன், தென்காசியைச் சேர்ந்த இவர் தற்சமயம் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அண்மையில் ‘தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள்’ எனும் திரைப்படங்கள் குறித்த கட்டுரை நூல் வெளியானது. தொடர்புக்கு – bsrinivasanmca@gmail.com

பொய்களின் இடிமுழக்கம்

1

அகர முதல்வன்

ஷோபாசக்தி

ஈழத்தமிழ் அறிவுலகத்தினருக்குள் நிகழும் இணைய விவாதமாக அண்மைய நாட்களில் ஒரு விவகாரம் பேசப்பட்டு வருகிறது. அதாவது 2003ம் ஆண்டில் நிகழவிருந்த யாழ்ப்பாண நூலகத் திறப்பு விழா பற்றிய உண்மைகளுக்கும் பொய்களுக்கும் – சர்ச்சைகளுக்கும் இடையே நடக்கும் விவாதமாக அது உருப்பெற்று இருக்கிறது. அதன் மையமாக சாதியம் பேசுபொருளாகியிருக்கிறது. யாழ்ப்பாணத்தின் சமூக அடுக்குகளில் ஒடுக்கும் சாதியாகவிருக்கும் “வெள்ளாள” சமூக ஆதிக்கமும் – இந்நிலை தொடர்பாக புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும் நிறையப் பதிவுகளும் – கட்டுரைகளும் – கட்டுரைகள் என்ற பேரில் எழுதப்படும் சலம்பல்களும் குவிந்த வண்ணமிருக்கின்றன.

ஆவணப்பட இயக்குநர் சோமீதரன்

எழுத்தாளர்களான ஷோபாசக்தி- சயந்தன் மற்றும் ஆவணப்பட இயக்குநரான சோமிதரன் ஆகிய மூவரின் பெயரும் இந்த விவாதங்களில் முக்கிய இடம்பிடித்துள்ளன. ஈழப்பிரச்சனையின் உள்ளக சிடுக்குகளும் – மோதல்களும் – வரலாறுகளும் தெரியாதவொருவரால் இந்த விவாதங்களின் மொத்த பேருருவத்தையும் கண்டுணரமுடியாது என்றே கருதுகிறேன். ஒரு புனைவை படிப்பது போல இந்தப்பிரச்சனை தொடர்பாக எழுதப்படும் பதிவுகளை படித்துவிட்டு “அபாரம் தோழர்”, “அற்புதம்” என்றெல்லாம் கருத்து இடமுடியாது. எழுத்தாளர் ஷோபாசக்தியினதும் சயந்தனினதும் புனைவுலகத்திற்கான வாசகர்களைக் கடந்த – ரசிக சபையினராலும் இதனை விளங்க முடியாது. இப்போது நடந்துவருவது ஒரு இரத்த சாட்சிக்கு முன்னால் கருகிப்போகும் பொய்களின் மூச்சிழுப்பு. அந்தப் பொய்களின் சீவன் சேடம் இழுக்கும் காட்சிகளே இப்போது நடப்பது யாவும்.”இதுதான் நடந்த கதை”.

சயந்தன்

யாழ்ப்பாண பொதுநூலகம் சிங்கள இனவெறிக் காடையர்களால் எரிக்கப்பட்ட வரலாற்றுத் துயரத்தை அறியாதார் எவர்? இருபதாம் நூற்றாண்டில் இவ்வுலகில் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பின் முக்கிய சாட்சியது. இன்றைக்கு முப்பத்தொன்பது ஆண்டுகள் கடந்தாலும் அன்று எரிக்கப்பட்ட பல இலட்சம் நூல்கள் கொண்ட தமிழ் நூலகத்தின் சாம்பலில் தீ கனன்று கொண்டேயிருக்கிறது. யாழ் பொதுநூலகம் எரிக்கப்பட்டதன் விளைவு ஈழத்தவரின் விடுதலைப் போராட்ட அவசியத்தையும் அடிப்படைத் தேவையையும் தமிழ்மக்களுக்கு உணர்த்திற்று.

அந்தக் கொடுந்துயரைத் தமிழ்த்தரப்பிற்கு செய்தமைக்காக இன்றுவரை சிங்கள அதிகாரத் தரப்பு ஒரு மன்னிப்பைக் கூட உதிர்த்ததில்லை என்பதையும் சுட்டுகிறேன். அதேவேளை நூலக எரிப்பு வடுவை கலை இலக்கியப் படைப்புக்களில் பலர் பதிவு செய்துள்ளனர். கவிஞர் நுஹ்மானின் கவிதை, எழுத்தாளர் சுஜாதாவின் “ஒரு லட்சம் புத்தகங்கள்”, அமெரிக்க அறிஞர் நெவே எழுதிய “நம்பிக்கையென்ன நமக்கு” என்ற கவிதையை சோ.பத்மநாதன் மொழிபெயர்த்திருந்தார். “The Jaffna Public Library rises from its ashes” என்ற ஆவணநூலினை வி.எஸ்.துரைரராஜா அவர்களும், “எரியும் நினைவுகள்” என்ற பேரில் மிகமுக்கியதொரு ஆவணப்படத்தினை சோமிதரன் அவர்களும் உருவாக்கி இருக்கின்றனர். இந்த வடு இனிவரும் இலக்கியப் படைப்புக்களிலும் ஒரு முக்கிய பேசுபொருளாக தொடரும் என்பது எனது துணிபு.

எரியும் நினைவுகள் ஆவணப்படம் –https://www.youtube.com/watch?v=8kY0_Q0XYUM&t=242s

1981ம் ஆண்டில் எரியூட்டப்பட்ட நூலகத்தை “புனரமைக்கப்பட்ட யாழ் பொதுசன நூலகம்” என்ற பெயர் சூட்டலோடு திறப்புவிழா செய்வதற்கு எண்ணியது சந்திரிக்காவின் ஆட்சிக்காலம். “சமாதானத்தின் தேவதை” என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு சர்வதேச சமூகத்தையும் தமிழர்களையும் ஒரே நேரத்தில் ஏமாற்றும் வல்லமை பெற்ற ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியில் 14.02.2003ம் ஆண்டில் நடக்கவிருந்த நூலகத் திறப்பு விழா தொடர்பாக ஈழத்தமிழ் அரசியலில் நிகழ்ந்த குழப்பங்கள் ஏராளமானவை. அப்போது நிலவிவந்த அமைதிச்சூழலில் அரசுக்கும் – புலிகளுக்கும் இடையே நிகழ்ந்துவந்த புகைமூட்டமான பகைமூர்க்கத்தில் அப்பாவி பொதுசனங்கள் நெருக்கடியினை எதிர்கொண்டனர்.

சமாதான காலமென அறிவிக்கப்பட்டிருந்த நாட்களில் இந்த திறப்புவிழா அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது யாழ்ப்பாண நகர பிதாவாக இருந்த பெருமதிப்பிற்குரிய செல்லன் கந்தையன் அவர்களின் அழைப்பின் பேரில் அப்போது இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தமிழ் அரசியல்வாதியான திரு. வீ.ஆனந்தசங்கரி அவர்கள் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தை திறந்து வைக்க இருந்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு முறுகல் போக்கையும், எப்போதும் இலங்கை ஆட்சியாளர்களோடு நெருக்கத்தையும் பேணிவரும் குறித்த அரசியல்வாதி எரிக்கப்பட்டவர்களாலேயே புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தை திறந்துவைப்பதை புலிகள் இயக்கம் விரும்பவில்லை. மேலும் சிங்கள இனவெறி அரசின் / சிங்கள மக்களின் இனவெறிக்கும் சாட்சியாக இருந்த எரியூட்டப்பட்ட தமிழர் நூலகத்தை சுண்ணாம்பினால் வெள்ளைபூசி தடயம் அழிக்கும் செயற்பாட்டையும் யாரும் விரும்பவில்லை.

யாழ்ப்பாண நூலக எரிப்பு என்பது தமிழர்களின் அறிவுலக மரபின் மீது நிகழ்த்தப்பட்ட ஒரு பண்பாட்டழிப்பு என்பதில் தமிழர்கள் அனைவரும் தீர்மானமாய் இருந்தனர். அந்தப்புள்ளியில் புலிகளும் நின்றனர். ஆக புலிகள், இந்தத்திறப்பு விழாவில் ஆனந்தசங்கரி பங்கெடுப்பதை விரும்பவில்லை என்பதைப் போலவே ஒரு இனஅழிப்பின் சாட்சியாக இருந்த நூலகத்தை புதுப்பிக்கவும் விரும்பவில்லை. வெகுஜன அமைப்புக்கள் பலவும் – அறிவுப்புலத்தினர் பலரும் இந்த நிகழ்வுக்கு எதிராக ஒன்றுதிரண்டு நின்றனர். இப்பின்னணியில் அந்தநிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டது.

இதுவொரு பாதிக்கப்பட்ட தரப்பின் குரல் பொதிந்த அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வழிமுறையாக கருதலாம். அதாவது ஒருஅறிவுலகச் சொத்தாக இருந்த யாழ்ப்பாண நூலகத்தை சிங்கள இனவாதம் எரியூட்டியதை தமிழர்கள் அழித்தொழிப்பின் நினைவாகவே அடையாளப்படுத்த விரும்பினர். அதுவே இந்நிகழ்வு தடைப்பட்டு போனதற்கு காரணம்.

2
யாழ் நூலகத்திறப்பு விழாவின் (2003) வரவேற்புக்குழுவின் தலைமையாகவும் யாழ்ப்பாண நகரபிதாவாகவும் இருந்த பெருமதிப்பிற்குரிய செல்லன் கந்தையன் அவர்கள் ஒடுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதனாலும், அவர் இந்த நூலகத்தை திறந்து வைத்தால் ஒரு ஒடுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயர் வரலாற்றில் நிலைத்துவிடுமென எண்ணிய யாழ்ப்பாண வெள்ளாளச்சாதி ஆதிக்கவாதிகள் கூட்டுச்சேர்ந்து புலிகள் இயக்கத்தினருக்கு அழுத்தம் தருவித்ததன் விளைவாக புலிகள் இயக்கம் அந்த நிகழ்வை தடுத்து நிறுத்தியது என புலியெதிர்ப்பு நிலைப்பாடுடைய பலர் எழுதினர்.

மேலும் தமது புலியெதிர்ப்புக் கத்தியை கூர்மைப்படுத்தும் நோக்கில் ஒடுக்கப்படும் சாதியினரின் வாழ்க்கையை சாணைக்கல்லாக பயன்படுத்தினர். அதாவது புலிகள் இயக்கமென்பது ஒடுக்கப்படும் சாதியினருக்கு எதிரானது, ஆகவே தாம் புலிகளை எதிர்க்கிறோமென வாய்நீட்டி முழங்கினர். இங்கே இவர்களின் புலியெதிர்ப்பு அரசியல் என்பது மாபெரும் வலைப்பின்னல் கொண்டது. அது ஈழம் தொடங்கி, தமிழகம் என தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் வரை கண்ணுக்குத் தெரியாத பல கண்ணிகளோடு தொடர்பு கொண்டவை. இவர்களின் புலியெதிர்ப்பு பிரச்சாரம், தமிழக அறிவுப்புலத்தில் குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று அ.மார்க்ஸ் போன்றவர்கள் ஈழமெனும் யானையை இவர்கள் வழியாகவே கண்டனர். புலிகள் ஒரு வெள்ளாள சாதி அமைப்பு என்று தமிழகத்தின் சி.பி.எம் இடதுசாரிகளுக்கு இவர்களே வகுப்புக்கள் வழங்கினர்.

இப்படியான வலைப்பின்னல்களின் பின்னால் ஒளிந்திருக்கும் குற்றங்களின் வரைபடத்தை காலம் என்றோ ஒருநாள் வரலாற்றின் முன்னால் வைத்து தீர விசாரிக்குமென்று நான் சொல்லுவதுண்டு. அந்தக்கூற்றின் அளவு சமுத்திரமெனில் இப்போது நிகழ்ந்திருப்பது அங்கே சிறிய நீர் வளையம் மட்டுமே.

அதாவது திறப்புவிழாவில் நடந்த பல்வேறு குழப்பகரமான சம்பவங்கள் குறித்து இற்றைக்கு பதினேழு வருடங்களாக நிறையக்கட்டுரைகளும், பதிவுகளும் எழுதப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகின்றன. அதில் முக்கியமான/பொருட்படுத்தக்கூடிய கட்டுரை எழுத்தாளர் ஷோபாசக்தியினுடையது. அந்தக் கட்டுரையில் தகவற்பிழைகளும் இட்டுக்கட்டிய கதைகளும் நிறைய இருப்பினும் “வசந்தத்தின் இடிமுழக்கம்” கட்டுரையில் உண்மைகளும் அதிசயமாக உண்டு.

இணைப்பு :http://www.shobasakthi.com/shobasakthi/2007/02/23/81/

இந்தத் திறப்புவிழா விவகாரத்தை முன்வைத்து அப்போதைய யாழ் தினக்குரலில் வெளியான கேலிச்சித்திரம் அவமானத்திற்குரியது. சமூக நீதிக்கு எதிரானது. சாதிவெறியின் கோடுகள். மானுடத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் எக்காலத்திற்கும் வெட்கி தலைகுனியவேண்டிய ஒன்று. அதனை ஷோபாசக்தி திகதியின் சாட்சியோடு குறிப்பிட்டிருப்பார். அந்த வகையில் அவருடைய இந்தத் தகவலில் இப்போதும் மறுப்புச் சொல்வோர் இருப்பின் அவர்களே சாதியவாதிகள் என்பது எனது தரப்பு.

இந்தச் சம்பவத்தை அடியொற்றி “யாழ் நூலகத்திறப்பு விழாவும் சாதி வெறியர்களும்” என எழுதப்பட்ட அதே பகுதியில் எத்தனையோ தகவற்பிழைகளும் பொய்களின் இடிமுழக்கமும். அந்த பிழைகளும் பொய்களுமே இப்போது நிரூபணமாகி இருக்கின்றன. அதாவது ஷோபாசக்தி தனது கட்டுரையில் குறிப்பிடுவதைப் போன்று நகரபிதா செல்லன் கந்தையன் புலிகளால் மிரட்டப்பட்டு பூட்டிய அறையில் கடுமையாக எச்சரிக்கப்பட்டாரா? உண்மையில் வெள்ளாள ஆதிக்கவாதிகள் இந்த நிகழ்வை வேண்டாமென மறுத்தார்களா? அவர்கள் மறுத்ததன் பேரில்தான் இந்த திறப்புவிழா தடைப்பட்டு போனதா? என கேள்விகள் எழும். எழுவதே நன்று. கேட்கப்படாத கேள்விகள் மட்டுமே முட்டாள் தனமானவை என்ற மால்கம் எக்சை இங்கே நினைவு கூர்கிறேன்.

அப்படி கேள்வி எழுந்ததன் விளைவாகவே எழுத்தாளர் சயந்தனும் ஆவணப்பட இயக்குநருமான சோமிதரன் ஆகியோர் இந்த அறிவுப்புல அரசியல் வரலாற்றின் பிரதான பேசுபொருளாக இருந்த நகரபிதா செல்லன் கந்தையன் அவர்களை ஆவணப்படம் செய்வதற்காக பதியப்பட்ட காணொலியின் பகுதியிலிருந்து மூன்று நிமிட காணொலியை ஒரு செய்திக் காணொலியாக இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றனர்.

அந்தக் காணொலியில் “யாழ் நூலகத்திறப்பு விழா” பற்றிய சர்ச்சைகள் தொடர்பாக எழுத்தாளர் ஷோபாசக்தி உள்ளிட்ட புலியெதிர்ப்புவாதிகள் முன்வைத்த சம்பவங்கள் கேள்வியாக தொடுக்கப்படுகின்றன.

பெருமதிப்பிற்குரிய செல்லன் கந்தையன் அதனை அடியோடு மறுத்து அப்படியான எந்தச்சம்பவங்களும் மிரட்டல்களும் புலிகளால் தனக்கு வழங்கப்படவில்லை என கூறுகிறார். மேலும் புலிகளுக்கும் அவர்களுடைய நடவடிக்கைகளுக்கும் எதிராக முறுகல் போக்கோடு இருந்த ஆனந்தசங்கரி நூலகத்தை திறந்து வைப்பதையே புலிகள் விரும்பவில்லை, அதனை தன்னிடமே கூறினார்கள் எனவும் மிக விளக்கமாக கூறுகிறார்.

அப்படியாயின் ஷோபாசக்தி எழுதிய சம்பவங்கள் பொய்யானவை மட்டுமல்ல அதன்பின்னால் ஒரு சதிவலையும் – புலியெதிர்ப்பு அணியின் தந்திரங்களும் நிறைந்திருக்கிறது.

நகரபிதா செல்லன் கந்தையன் அவர்களை சாதிய ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் கையாண்டனர். புலிகள் ஒடுக்கப்படும் சாதியினருக்கு எதிரானவர்கள் என்ற பொய்யான கருத்தியலை உருவாக்கும் ஒரு செயற்திட்டம் மறைந்திருந்திருக்கிறது. சாதிய ரீதியாக ஒடுக்கப்படும் சனங்களின் மீட்சிக்குரல்களுக்கு ஆதரவாளர்களாக தம்மைக்காட்டி நிற்கும் இவர்களின் போலி முற்போக்குத்தனங்கள் புலியெதிர்ப்புவாத சந்தையில் பண்டமாகி நாட்கள் ஆகிவிட்டன. இவர்களின் போலிச் சாதி எதிர்ப்புக் கோஷங்களுக்கு பின்னால் எத்தனை எத்தனை சூதுகள் – எத்தனை எத்தனை லாபங்கள். இன்னும் எத்தனை எத்தனையோ. யான் அறியேன் பராபரமே.

இனிவரும் பகுதிகளை செவியுள்ளோர் கேட்கக்கடவர்.

3
யாழ்ப்பாண நூலகத்தினை 2003 ஆம் ஆண்டில் திறந்து வைக்கவிருந்தவர் அன்றைய நகரபிதாவான பெருமதிப்பிற்குரிய செல்லன் கந்தையன் இல்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்தசங்கரி அவர்களே. அவரொரு ஈழத்தமிழ் மிதவாத அரசியல்வாதி. அவர் சமூக அடுக்கில் ஒடுக்கும் சாதியான வெள்ளாளர். ஆக யாழ்ப்பாண நூலகத்தினை 2003ல் திறந்துவைக்க இருந்தது வெள்ளாள சமூகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதியே தவிர, ஒடுக்குமுறைக்குள்ளான சமூகத்தைச் சேர்ந்த யாழ்ப்பாண நகரபிதாவாக இருந்த திரு.செல்லன் கந்தையன் அவர்கள் இல்லை என்பதே பேருண்மை. அதற்கு சான்றாக அந்த நிகழ்வின் அழைப்பிதழை இணைக்கிறேன். அதே நேரத்தில் நகரபிதா செல்லன் கந்தையன் அவர்கள் இருந்த அரசியல் கட்சியின் தலைவராகவும் இருந்தவர் வீ.ஆனந்தசங்கரி. அவரை அழைத்து வந்து இந்த நூலகத்தை திறந்து வைக்க நகரபிதா செல்லன் கந்தையன் விரும்பியிருக்கலாம். அல்லது அப்போது ஆனந்தசங்கரியின் நெருக்குதலின் பேரில் கூட அவரை அழைத்திருக்கலாமல்லவா?

உண்மையில் இந்த நூலகத்தை இதற்கு முன்னைய காலங்களில் ஒரு அரசியல்வாதி திறந்து வைத்தது கிடையாது. பதவியில் இருந்த நகரபிதாக்களே திறந்தனர். அப்படியெனில் இந்த மரபு மீறப்பட்டதன் பின்னால் எந்த நெருக்கடிகளும் இருந்திருக்காதா? இந்தப் பிரச்சினையில் குரலுயர்த்தும் இந்தப் போலிச்சாதிய ஒழிப்பாளர்கள் ஒரு சொல் வீசி ஆனந்தசங்கரியை கேள்வி எழுப்ப விரும்பார். ஏனெனில் புலியெதிர்ப்பும் – அவர்களின் சுயசாதியக் கூட்டும் அவர்களிடம் இருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக தம்மை அடையாளப்படுத்தும் இந்தப் போலிக் கருத்தியல்வாதிகள் தமக்குள்ளும் தமது குருதிக்குள்ளும் ஒடுக்கும் – ஆதிக்கம் செலுத்தும் மரபையே கொண்டிருக்கின்றனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் இற்றைக்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாக விவாதித்து வருவதோடு இந்தப் பொய்களை இன்று இரத்தச் சாட்சியோடு அடையாளப்படுத்திய எழுத்தாளர் சயந்தனும் – சோமிதரனும் புலியெதிர்ப்புவாத – போலிச் சாதியொழிப்புவாதிகளால் சீண்டப்படுகின்றனர். அத்தோடு அவர்கள் எழுத்தாளர் சயந்தனையும் – ஆவணப்பட இயக்குநர் சோமிதரனையும் நோக்கி எழுப்பும் கேள்விகள் பரிதாபகரமானவை.

ஏன் இந்தத் தள்ளாத வயதில் இருக்கும் முன்னாள் நகரபிதாவை போய் நேர்காணல் கண்டீர்கள்? ஏன் நேர்காணல் செய்பவரின் முகத்தைக் காட்டவில்லை? நேர்காணல் செய்தவருக்கு சம்பளம் கொடுத்தீர்களா? ஆவணப்படம் எப்படி எடுப்பதென சோமிதரனுக்கு தெரியாதா? ஏய் யாழ்ப்பாணத்து சாதி வெறியர்களே,இன்னும் எத்தனை எத்தனை வீடியோக்களை எடுப்பீர்கள் என கேட்கும் பலரும் அந்த மூன்று நிமிட காணொலிச் சாட்சியைப் பற்றியே பேசுகிறார்கள்.

அதில் செல்லன் கந்தையன் இன்று சொல்லுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அன்று சொன்னது தான் உண்மை என மல்லுக்கு நிற்கும் கல்விமான்களும் – எழுத்தாளர்களும் – எதிர்புரட்சியாளர்களும் – ஒத்தோடிகளும் மாறிமாறி எழுதும் பதிவுகளைக் கண்டால் உண்மைக்கு எத்தனை வீரியம், அது அநீதியாளர்களையும் இட்டுக்கட்டுபவர்களையும் குலைநடுக்குவிக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது. அப்படியென்ன? செல்லன் கந்தையன் கடந்த காலத்தில் சொன்னார்.

“யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் செல்லன் கந்தையன் 01.03.2003ல் ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலிருந்து ஒரு பகுதி: “இந்த நூலகம் திறக்கப்படுவதால் புலிகளுக்கு எதுவித பிரச்சினையுமில்லை. அவர்கள் நூலகம் திறப்பதைத் தடுத்ததிற்குப் பின்னால் வேறோரு காரணமுள்ளது என்றே நான் கருதுகிறேன். நான் இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகத்துள் ஒரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவன். யாழ் பொதுநூலகத் திறப்புவிழாக் கல்வெட்டில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவனின் பெயர் பொறிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆம் புலிகள் முற்று முழுதாகச் சாதிய அடிப்படையிலேயே இப் பிரச்சினைகளை அணுகினார்கள் என்றே நான் நினைக்கிறேன்”.

நகரபிதா அவர்களின் இந்தக்கூற்று ஆனந்தசங்கரியின் அழுத்தத்தின் பேரில் புலிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டிருக்கலாம். பழுத்த மிதவாத அரசியலாளரின் திட்டமிட்ட புலியெதிர்ப்பு சூழ்ச்சி அரசியலுக்கு நகரபிதா செல்லன் கந்தையன் அழுத்தங்களை எதிர்கொண்டு இப்படியாக கூறியிருக்கலாம்.

ஒடுக்கப்படும் சமூகத்திற்கு புலிகள் அநீதி இழைத்துவிட்டதாக ஒரு சித்திரத்தை உருவாக்க யாழ்ப்பாண வெள்ளாள மிதவாத அரசியல் வெட்டிய அகழியாகவும் கருதலாம்.இவற்றைக்கடந்து கடந்தகாலங்களைப்போல எந்த அரசியல் நெருக்கடியும் இல்லாதவொரு காலத்தில் அரசியல்களத்தில் சம்பந்தப்பட்ட புலிகளுமில்லை – ஆனந்தசங்கரி இப்போதுவரை அதிகாரத்திலுமில்லாத இன்றைய நாட்களில் முன்னாள் நகரபிதா இதுகுறித்து கூறியிருக்கும் கருத்தினை நாம் பொருட்படுத்த வேண்டும்.

அவர் அப்போது பேசியதை மட்டுமே தமது பொய்பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய சாராருக்கு இந்தக் கூற்றின் மூலம் நகரபிதா செல்லன் கந்தையன் கொஞ்சம் கசப்புமிக்க ஒருவராக ஆகியிருக்கிறார். ஆனால் எழுத்தாளர் சயந்தனும் – ஆவணப்பட இயக்குநர் சோமிதரனும் இந்தக் காணொலியின் மூலம் ஏற்படுத்திய அதிர்வுகள் கொஞ்சமல்ல.

எழுத்தாளர் ஷோபாசக்தி அவர்கள் இந்தச் சர்ச்சைக்குரிய கட்டுரையில் ஏற்பட்டிருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தகவற்பிழைகளை ஒப்புக்கொண்டு அதனை இப்போது தனது இணையத்தளத்தில் மாற்றம் செய்துமிருக்கிறார். ஆனால் ஒருவர் யாரென்று தெரியாமல், அவர் ஒருவரா இருவரா என்று தெரியாமல் கூட ஒரு திரில்லர் வகையான புனைவாக ஷோபா இவ்வாறு எழுதியிருப்பார்.

“12.02.2003 வன்னியில் இருந்து வந்திருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் சொலமன், இன்னொரு புலி உறுப்பினர் சிறில், மற்றும் இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புலிகளின் முன்னணி அமைப்பான சர்வதேச மாணவர் பேரவையின் அன்றைய தலைவருமான கஜேந்திரன் ஆகியோர் மாநகரசபை அலுவலகத்திற்குள் நுழைந்து நூலகத்தை திறக்கக்கூடாது என செல்லன் கந்தையனை எச்சரித்தனர்.அன்றிரவு பதினொரு மணியளவில் புலிகள் யாழ் பொதுநூலக வளாக காவலாளியை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி அவரிடமிருந்து பிரதான வாயிற்சாவி,நூலக மற்றும் அலுவலக சாவிகளை அபகரித்துச் சென்றனர்.”

இப்போது இதில் இருக்கும் பிழைகளும் – கருத்தியல் மோசடிகளும் எவ்வளவு பாரதூரமானவை என்று பார்த்தால் விடயம் விளங்கிவிடும். வன்னியில் இருந்து வந்தவர்களாக சொல்லப்படும் “சொலமன், சிறில்” முதலில் புலிகள் இயக்க உறுப்பினர் அல்லர். அவர்கள் இரண்டுபேர் அல்ல. சொலமன் சிறில் என்ற பேர்கொண்ட ஒருவரை இருவராக்கி அவரை புலியாக்கி எழுதப்பட்டிருக்கும் இந்த விநோதமான தகவற்பிழையை ஷோபா ஒப்புக்கொண்டு இப்போது மாற்றம் செய்திருக்கிறார். அதாவது ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்குவது போல எழுதப்பட்ட இந்தக் கட்டுக்கதையில் இப்படி எத்தனையோ தகவற்பிழைகளும் – கண்மூடித்தனமான புலியெதிர்ப்பு பிரச்சாரங்களும் தான் எஞ்சி நின்றன. நகரபிதா செல்லன் கந்தையன் அவர்களை விடுத்து – இந்த விவாதத்தின் பிரதான இடம்வகிப்பவருமான ஊடகவியலாளர், ஆவணப்பட இயக்குநர் சோமிதரன் யாழ் நூலக திறப்புச் சர்ச்சையில் நேரடிச்சாட்சியாக இருப்பவர். அந்தக் காலகட்டத்தில் அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையொன்று இதற்கு இன்னுமொரு ஆவண சாட்சி.

அதுமட்டுமல்லாது கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக புலிகள் செல்லன் கந்தையன் அவர்களை மிரட்டவில்லை என்பதை தொடர்ச்சியாக முகநூல் – மற்றும் இதர சமூக வலைத்தள விவாதங்களில் ஸ்தல சாட்சியாக நின்ற சோமிதரன் கூறிவந்த போதிலும் புலியெதிர்ப்புவாத – போலிச்சாதி ஒழிப்பாளர்கள் இல்லையில்லை புலிகள் மிரட்டினர் – அடித்தனர் என மல்லுக்கு நின்றதன் நீட்சியாக இப்போது அந்த மூன்று நிமிடச் சாட்சிக் காணொலி வெளியாகி இருக்கிறது.
இப்போது என்ன தான் பிரச்சினை?

பிரச்சனையானது எழுத்தாளர் ஷோபாசக்தியின் கட்டுரையில் நிகழ்ந்திருக்கும் தகவற்பிழையை அடிப்படையாக கொண்டது. புலிகள் இயக்கத்தின் மீது கொண்டிருக்கும் காழ்ப்பையும் அவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் ஒடுக்கப்படுவோரின் அரசியலை ஊறுகாய் போல தொட்டுக்கொள்வது. இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட நகரபிதா செல்லன் கந்தையன் அவர்களே அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சொன்னதற்கு பிறகு – இவர்கள் கொள்ளும் பதைபதைப்பும் இவர்கள் எழுதும் பதிவுகளும் எத்தனை எத்தனை வேஷங்களை தோலுரித்து விட்டது காணீர்!.

4

நீங்கள் என்ன சொல்ல வருகிறியள்?
ஓம் சொல்லுகிறேன்,கேளுங்கோ.


1.
https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fsomeetharan%2Fvideos%2F10157871625743113%2F&show_text=0&width=560

இந்த மூன்றுநிமிட காணொலிச்சாட்சியம் இப்போது புலியெதிர்ப்புவாத அரச ஆதரவு தமிழ் பாசிஸ்டுகளுக்கும் ஒத்தோடிகளுக்கும் கடுமையான கொதிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஷோபாசக்தியின் இப்படியான தகவல் பிழைகளும் திட்டமிடப்பட்ட நோக்கங்களும் – பொய்களும் இப்போது விழிபிதுங்கி நிற்கின்றன. சாதியொழிப்புச் செயற்பாட்டாளர்கள் என்று தம்மை சொல்லிக்கொண்டு அதனை தமது புலியெதிர்ப்பு வாத சந்தர்ப்பவாத அரசியல்களுக்கு மட்டுமே பயன்படுத்தும் அனைத்து யாழ்ப்பாண மேட்டுக்குடி வெள்ளாள சாதிய நோய்மை கொண்ட அறிவு ஜீவிகளும் இப்போது அடைந்திருக்கும் பதற்றத்தை பார்க்கையில் உண்மைக்கு எத்தனை வல்லபம் என்று மகிழ முடிகிறது. இவர்களில் பெரும்பாலானோருக்குள் “நிலவிலே பேசுவோம்”மனநிலை இருப்பதை நம்மால் உணரமுடியும். ஒடுக்கப்படும் சமூகத்திற்கான குரல்களாக தம்மை வெளிப்படுத்தும் இவர்களுக்குள் சுருண்டுகிடக்கும் சாதி வெறி அரவத்தின் கோரப் பற்களை யாம் அறிவோம்.

2

இந்த விவாதமொரு எடுத்துக்காட்டு – தனிமனித தாக்குதல்கள் – வசைகள் ஏதுமற்று நிகழ்த்தப்படும் ஒரு அரசியல் – சமூக – விமர்சன விவாதமாக உருக்கொண்டு நிற்கிறது. ஆகையால் இந்த விவாதம் எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டு. இங்கே யாரும் யாரையும் காழ்ப்போடும் வசவுகளோடும் சீண்டவில்லை. அப்படி அவதூறுகளால் எழுதப்படும் வசைச்சொற்களை இந்த விவாதம் தூக்கி வீசுகிறது. இங்கே இனியொரு அந்தப் வசைப்பண்பாட்டிற்கு இடமில்லை. அவரவர் தரப்பில் நின்றுகொண்டு மிகப்பிடிவாதமாக கதைத்துக் கொண்டிருக்கின்றனர். இங்கே நிகழ்வது விவாதம். காழ்ப்பின் வேட்டை அல்ல. இந்தச் சம்பவத்தை முன்வைத்து எழுத்தாளர் ஷோபாசக்தி மீது தொடுக்கப்படும் காழ்ப்பையும் – வசவுகளையும் அடியோடு மறுக்கிறேன். அப்படியான போக்குகள் நமது உரையாடல் பண்பாட்டின் மீது கறைபடியும் செயல். இப்படியான வசவுகளை எந்தத் தரப்பிலிருந்து யார் நிகழ்த்தினாலும் அதனை கண்டிக்கவேண்டிய பொறுப்பு நாகரீக சக்திகளுக்கு இருக்கிறது. இந்தக் கட்டுரைக்கு எதிர்வினையாக என் மீதும் வசவுகளும் – காழ்ப்புகளும் எழுதிக்குவிக்கப்படும் என்பதை அறிந்தும் நான் இதனைச் சுட்டுகிறேன்.

இந்த விவாதத்தில் எங்கும்போல இங்கும் இரண்டு தரப்புதான். உண்மை – பொய். நான் திரு.செல்லன் கந்தையன் தரப்பு. அதாவது உண்மையின் தரப்பு.. புலிகள் சாதியவாதத்திற்கு ஆதரவாக எப்போதும் நின்றதில்லை. புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால அபிமானிகள் பலர் அமைப்பிலிருந்து பிளவுண்டு போனதற்கான காரணங்களில் புலிகளின் சாதிக்கு எதிரான நிலைப்பாடே காரணம். வெள்ளாளத் தலைமையற்ற ஒரு விடுதலை இயக்கமாக புலிகளே இருந்தனர். அந்தத் தலைமையின் கீழ் ஓரினமாய் அணிதிரண்டனர் ஈழச்சனங்கள் என்பதே விடுதலைப் போராட்ட வரலாறு.

3
மேற்கொண்டு இந்தக்கட்டுரையை நீட்டாமல் இறுவாய் ஒரு கருத்து. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் “இடக்கை” நாவலில் ஒரு காட்சியுண்டு. தனது மரணத்தைப் பற்றி தெரிந்து கொள்ள மன்னர் ஒளரங்கசீப் பாலைவனத்தில் உள்ள ஞானி முகைதீன் அவர்களைச் சந்திப்பார். மன்னரின் பல வேண்டுதல்களுக்கும் இறைஞ்சுதல்களுக்கும் பிறகு அதுவரை அதனைச் சொல்ல மறுத்துவந்த ஞானி முகைதீன் சம்மதம் தெரிவிக்கிறார். ஆனால் அதற்கொரு கைமாற்றாக பாலைவனத்தில் இருக்கும் கிணற்றில் இருந்து உள்ளங்கையில் நீர் எடுத்துவரவேண்டுமென ஞானி முகைதீன் கூறுவார். மாபெரும் பேரரசின் மன்னன் அதனை மிக சாதாரணமாக எடுத்துக்கொண்டு நான் அதனை செய்வதாக உத்தரவாதம் தருகிறார். அதன்பிறகு நாவலில் நிகழும் காட்சி.

“திடீரென கிணற்றில் சரசரவென ஊர்ந்துவரும் சப்தம் கேட்டது. ஆச்சரியமாக இருந்தது. தண்ணீர் கிணற்றின் உச்சிவரை உயர்ந்திருந்தது. அவர் அல்லாவின் கருணைக்கு நன்றி தெரிவித்தபடியே தண்ணீரில் உள்ளங்கை அளவு அள்ளிக்கொண்டு ஞானி முகைதீனை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
நடக்க நடக்க கையிலிருந்த தண்ணீர் வடிய ஆரம்பித்தது. இரண்டு கைகளையும் ஒன்றாக இறுக்கிய போதும் தண்ணீர் கசிவதை நிறுத்த முடியவில்லை. ஞானி முகைதீன் முன்னால் அவர் கைகளை விரித்தபோது அதில் ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை.”

முகைதீன் சிரித்தபடியே சொன்னார்.

“வெறும்கையாக உள்ளது. ஒருதுளித் தண்ணீரைக் கூடவா பாதுகாப்பாக கொண்டு வர முடியவில்லை?”

ஆத்திரமான ஒளரங்கசீப் மறுபடியும் அதே கிணற்றடிக்கு ஓடினார். தண்ணீரை மன்றாடி அழைத்தார். கைகள் நிறைய அள்ளிக்கொண்டார். ஆனால் ஞானி முகைதீன் முன்னால் சென்றபோது கையில் ஒரு சொட்டுத்தங்கவில்லை. விடியும் வரை ஓடியோடி தண்ணீர் அள்ளிவந்து களைத்துப் போய் அவர் முன்னால் விழுந்த ஒளரங்கசீப் சொன்னார்.

“ஒரு துளித் தண்ணீரைக் கூட என்னால் காப்பாற்ற முடியவில்லை.”

ஒரு புரிதலுக்காக, இந்த உரையாடலில் வருகிற கிணற்று நீர் – புலி எதிர்ப்புவாதிகளின் பொய்யூற்றாகவும் – இதில் வருகிற மன்னரை புலியெதிர்ப்புவாதிகளாகவும் பொருள் கொண்டால் ஞானி முகைதீனாக உண்மை உருவகம் கொள்கிறது. உண்மைக்கு முன்னால் இவர்களின் பொய்களைக்கூட இவர்களால் காப்பாற்றமுடியவில்லை. ஏனெனில் இவர்களின் கைகளில் கறைகள் ஏராளம்.

பொய்கள் ஒழிக ! புரட்டுக்கள் ஒழிக ! போலிகள் ஒழிக! சாதிகள் ஒழிக!
என்றபடிக்கு இந்தக் கட்டுரை தன்னை நிறைவு செய்து கொள்கிறது.

-அகரமுதல்வன்
20.06.2020
https://nedunilam.blogspot.com/

பிறப்பொக்கும்

0

சுஷில்குமார்

திகாலை நான்கு மணிக்கு வந்துசேரும் முதல் கே.எஸ்.ஆர்.டி.சி. பேருந்திற்காகக் காத்திருந்தான் பண்டா சுப்பிரமணி. நீலநிறச் சட்டை, வெள்ளை வேட்டிச் சீருடை. நிமிடத்திற்கு ஒருமுறை சீப்பை எடுத்து நீண்ட முடியைச் சீவி விட்டுக் கொண்டான். பக்கத்தில் நின்றவன் அவனது இடுப்பில் ஒரு விரலால் குத்த இவன் துள்ளிக் குதித்து, “சும்மாக் கெடயாம்ல, தொட்டிப்பயல..” என்று சொல்லி இன்னொருவனின் பின்னால் சென்று நின்றான். எதிரே இருந்த காவல் நிலையத்திலிருந்து ஏட்டு சதாசிவம் கொட்டாவி விட்டுக்கொண்டு இறங்கி வந்தார்.

“என்னடே.. ராவு ஒறக்கமில்லையோ? மொகஞ் செரில்லய..” என்று ஏட்டு சதாசிவம் கேட்டார்.

“நமக்கெங்க அண்ணாச்சி ராவு ஒறக்கம்? ஒங்க தங்கச்சிக்க அநியாயத்துல வீட்ல ஒறங்கிட்டாலும்.. ராவு பூரா ஒரே ஒப்பாரி.” என்று சலித்துக்கொண்டான் சுப்பிரமணி.

“யாம்டே? சிக்கப் போட்டுட்டுப் போயி பெகளம் வச்சியோ?  அருமாந்தப் பிள்ளல்லா டே? ஒனக்கு அவ வாச்சதுனால பொழச்சன்னு நெனச்சுக்க.. இல்லன்னா குடிச்சிட்டு ரோட்டுலல்லா டே விழுந்து கெடந்துருப்ப?”

“அது செரிதா அண்ணாச்சி.. ஆனா, ஓவர் கொடச்சலு.. நா என்ன வச்சிட்டா வஞ்சகம் பண்ணுகேன்? என்னமோ அமைய மாட்டுக்கு.. அவளுக்கு ஆஸ்பத்திரிக்கிப் போயி டெஸ்ட்டு பண்ணனுமாம்…”

“என்னத்துக்கு டே டெஸ்ட்டு?”

“அது.. அவளும் மாசந்தோறும் தரிச்சிரும்னுதா பாக்கா.. வீட்டுக்குள்ளயே வேற கெடக்கால்லா, எத்தன நாளக்கிதா சொக்காரனுக குத்துவாக்கு கேட்டுக் கொமையது? இந்த எளவெடுப்புல பக்கத்துல போனா சாமானம் செத்துப் போயில்லாக் கெடக்கு!”

“அடக் கோம்பயா, அப்ப அவ சொல்ல மாதி ஒரு எட்டு ஆஸ்பத்திரிக்கி போயி பாக்க வேண்டியான டே?”

சுப்பிரமணி தலையைச் சொறிந்து கொண்டு தயங்கி நின்றான்.

“என்ன டே தலயச் சொறியா?.. போயிப் பாத்தாத்தான என்ன கொறன்னு தெரியும்? பொம்பள அவளே வரேங்கா, ஒனக்கென்ன டே?”

“இல்ல அண்ணாச்சி.. நமக்கு ஒரு நாணக்கேடு.. ஒருவேள நமக்குத்தா பிரச்சினன்னு சொல்லிட்டான்னு வைங்கோ.. பொறவு ஊருக்குள்ள தலக்காட்ட முடியாதுல்லா? ஏற்கெனெவே நம்மள சுப்பம்ம, சுப்பம்மன்னு கொமைக்கானுகோ..”

“அது உள்ளதாக்கும்.. என்னத்தச் சொல்லடே.. நா எத்தன பேரப் பாக்கேன்.. நல்லா வெள்ளையுஞ் சொள்ளையுமா இடிதடியனுவ மாதி இருக்கானுவ, சின்னப் பயக்களுக்க தொடயத் தடவிட்டு வந்து ஸ்டேஷன்ல அடி வாங்குகானுவ.. ஒனக்கக் கத பரவால்ல பாத்துக்க. பின்ன, இதெல்லாம் கடவுளுக்க படைப்புல்லா டே.. நம்ம என்ன சொல்லதுக்கு?”

சுப்பிரமணியின் நடை, பேச்சு, உடல் மொழி எல்லாம் ஒருவித நளினமாக இருக்கும். கைவிரல்களை ஆட்டி ஆட்டிப் பேசுவதும், ‘சீ, போ’வென்று மற்றவர்களின் தோளில் தட்டுவதும், நேர் வகிடெடுத்து பின்னோக்கிப் படியச் சீவிய முடியும், நெற்றியின் நடுவில் அவன் விரும்பி வைக்கும் குங்குமப் பொட்டும், ஜவ்வாது வாசனையும் மற்றவர்கள் அவனை விசித்திரமாகப் பார்க்கச் செய்த விசயங்கள். கூடவே, எப்போதும் வெற்றிலை போட்டு இரு விரல்களை வாயில் வைத்து துப்பிக்கொண்டிருப்பான். பொதுவாக மிக அமைதியானவன். தன்னைக் கிண்டல் செய்பவர்களிடம் திருப்பி ஏதும் சொல்லாமல் கொஞ்சிக் கொஞ்சி சிரித்துக் கொண்டிருப்பான். அதனாலேயே நண்பர்கள் மத்தியில் ஒரு செல்லப்பிள்ளை மாதிரியும் இருந்தான். தினசரி காலை, முதல் பண்டா போணி அவனுக்குக் கொடுத்துவிட்டுத்தான் மற்றவர்கள் ஆரம்பிப்பார்கள். ஒருவகையில் அதை ஒரு அதிருஷ்டமாகக் கூட நினைத்தார்கள்.

சுப்பிரமணி வீட்டில் இருக்கும் நேரத்தில் அவன் வீட்டு முற்றத்தில் ஐந்தாறு பெண்கள் உட்கார்ந்து பாடு பேசிக்கொண்டிருப்பார்கள். முதலில் அவன் மனைவி சீதாவுக்கு இதெல்லாம் பிடிக்காமல் இருந்தாலும் அவனது அப்பாவித்தனத்தைப் பார்த்து அவளும் கூட உட்கார்ந்து பேச ஆரம்பித்தாள். எல்லாரும் சுற்றிச் சுற்றி அவனையே கிண்டல் செய்து கொண்டிருப்பார்கள். இவனும், எல்லாரையும் மைனி, மைனி என்று அழைத்து சளைக்காமல் அவர்கள் மத்தியில் இருந்து ஊர்க்கதைகள், பல குடும்பங்களின் ரகசியங்கள், தான் பண்டா போடும்போது நடந்த சுவாரஸ்யமான அனுபவங்கள் என சொல்லிச் சிரித்துக் கொண்டிருப்பான்.

ஒருநாள் பேச்சினிடையே சுப்பிரமணி, “இன்னா வாறேன் மைனி…” என்று சொல்லி எழுந்தான்.

“அட இரியும் ஓய்.. அங்க என்னத்தப் பாக்கப் போறீரு…பொண்டாட்டி ஒன்னும் ஓடிப் போயிற மாட்டா..” என்று சொல்லி அவன் கையைப் பிடித்து இழுத்தாள் ஒருத்தி.

“அட, இரிங்க மைனி இன்னா வாறேன்.. முட்டிட்டு வருகு..” என்று சொல்லி நெளிந்தான்.

“புடிட்டி அவன.. புடிச்சிக் கீழப்போடு…” என்று சொல்லி இன்னொருத்தி அவனது காலைப் பிடித்து இழுக்கப் போக தவறுதலாக அவனது வேட்டியைப் பிடித்து இழுத்து விட்டாள். அவிழ்ந்த வேட்டியை சுருட்டி வாரிக்கொண்டு, “சீ..போங்க மைனி” என்று கூச்சத்தோடு சொல்லி அரை அம்மணமாக வீட்டிற்குள் ஓடினான் சுப்பிரமணி.

சீதா கோவத்தில் மூச்சிரைத்து நிற்க, “எட்டி, இந்த மைனி செஞ்ச வேலயப் பாரு.. வேட்டிய அவுத்து வுட்டுட்டா பாத்துக்கோ.. சவத்துவுள்ளயோ.. நம்மளச் சீண்டாம இருக்க முடியாது போல…” என்று சொல்லிச் சிரித்தான்.

“எப்பப்பாரு பொட்டச்சிய சீலைக்கவத்த போய்க் கெடயும்.. எந் தலையெழுத்து..” என்று சொல்லித் தன் தலையில் அடித்தாள் சீதா.

….

“எட்டி சுப்பம்ம, இங்க வாட்டி, ஏட்டுக்க கூட பொறவு போலாம்ட்டி.. இங்க வாங்கம்லா” என்று கத்தினான் பண்டா ராஜன்.

“அண்ணாச்சி.. நீங்க போங்க.. இவனுக சும்மாக் கெடக்க மாட்டானுக.. போயி என்னான்னு கேக்கேன்..” என்று சொல்லி கைகளைப் பக்கவாட்டில் வீசி நடந்தான் சுப்பிரமணி.

அவன் அருகில் வந்ததும், “மக்ளே, ஒனக்கு ஒரு நல்ல சீன் பாத்து வெச்சிட்டு நிக்கேன்.. நீ என்னடே ஏட்டுக்க குண்டியத் தடவிட்டு நிக்க?” என்று சீண்டினான் பண்டா கோமு.

“போங்கல.. வேற வேலயத்துத் திரியியோ.. ” என்று வெட்டிக் கொண்டு திரும்பி நின்றான் சுப்பிரமணி.

“லேய்.. சட்டுனு பொரிச்ச மீனு வண்டிக்கக் கீழப் பாரு.. விட்டா கெடைக்காது.. ஜென்ம மோட்சமாக்கும் பாத்துக்கோ…”

காவல் நிலைய சுற்றுச்சுவரின் பக்கவாட்டில் பொரித்தமீன் தள்ளுவண்டிக் கடையின் துருப்பிடித்த சக்கரங்களுக்கிடையே தெருவிளக்கு வெளிச்சத்தில் தொடை தெரிய, கிழிந்த பாவாடையுடன் படுத்துக் கிடந்தாள் பௌதியம்மைக் கிறுக்கி. அநேகமாக வட இந்தியாவில் ஏதோ ஒரு ஊரைச் சார்ந்தவளாகத்தான் இருக்க வேண்டும். மொழியென்று அவளுக்கு எதுவுமில்லை. ஹோட்டல்கள், டீக்கடைகள் முன் போய் கொஞ்ச நேரம் நிற்பாள். கிடைத்தவற்றை உண்டு பூட்டிய கடைகள் முன்போ, பேருந்து நிலையத்திலோ படுத்துக் கிடப்பாள். சமீப காலங்களில் அவளது இருப்பிடம் காவல் நிலைய சுற்றுச்சுவர்தான்.

பௌதியம்மைக்கு ‘பௌதியம்ம’ எனப் பெயர் வந்தது எப்படியென யாருக்கும் தெரியாது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக இங்கேதான் இருக்கிறாள். அழுக்கடைந்த பூப்போட்ட பாவாடை, அங்கங்கே கிழிந்திருக்கும் முழுக்கைச் சட்டை, சடை பிடித்த முடி. ஆனாலும் எப்போதும் சிரித்த முகம். நன்றாக அழுக்கு தேய்த்துக் குளிப்பாட்டிப் புடவை கட்டிவிட்டால் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும்.

தங்கள் பாவங்களைக் கடலில் கரைத்துவிட கன்னியாகுமரிக்கு வரும் பலரில் ஒரு சிலர் இப்படித் தங்கள் பாரங்களையும் விட்டுச் சென்று விடுவார்கள். அவர்கள் கிறுக்குகளாகச் சுற்றித் திரிந்து சில வருடங்களில் காணாமல் போவார்கள், இல்லையென்றால் கடற்கரையிலோ பேருந்து நிலையத்திலோ பிணமாகக் கிடப்பார்கள். ஒரு சிலர் மனநிலை தெளிவாகி சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதும் உண்டு.

….  

முதல் பேருந்து வந்து நிற்க, சுப்பிரமணி சென்று, “சேட்டா, ரூம் வேணோ? ஃபர்ஸ்ட் கிளாஸ் ரூம் சேட்டா.. சீப் ரேட்டாணு.. சார் வாங்க, பெஸ்ட்டு ஹோட்டல், பெஸ்ட்டு ரேட்டு.. வெல்கம் டு கேப் காமரின்.. வாங்கம்மா.. வாங்கக்கா..” என்று கூவினான். உள்ளூரைச் சார்ந்தவர்கள் இறங்கி அவனைப் பார்த்துப் புன்னகைத்துச் செல்ல, ஒரு இளம் தம்பதியர் இறங்கி அவனை அணுகினர்.

“எக்ஸ்கியூஸ் மீ, ஹோட்டல்லாம் எப்பிடி?” என்று கேட்டார் அந்த நபர். அவரது மனைவி அவரது கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு தூக்கக் கலக்கத்தில் நின்றாள்.

“நம்ம ஹோட்டல் பெஸ்ட்டு சார்.. ஐ.எஸ்.ஒ ஹோட்டலாக்கும்.. ஸீ வியூ ஜம்முன்னு இருக்கும்.. சன்ரைஸ் நேரா மூஞ்சில விழும் பாத்துக்கோங்க.. ரேட்டு பாத்தெடுத்து பேசலாம், வாங்க..” என்று அவர்களது பயணப்பெட்டிகளில் ஒன்றைத் தூக்கினான். பக்கத்து ஆட்டோ ஸ்டாண்டில் நின்ற முதல் ஆட்டோவின் பின்பகுதியில் பெட்டிகளை வைத்து அவர்களை ஏறிக்கொள்ளச் சொன்னான்.

முருகவிலாஸ் டூரிஸ்ட் ஹோமில் இறங்கி உள்ளே நுழையும்போது, ஒரு ரூம் பாய், “மேனேஜர் சார்…மேனேஜர் சார்..” என்று அலறியடித்துக் கொண்டு வந்தான். வரவேற்பு அறையின் நாற்காலிகளில் கால் நீட்டி அரைத்தூக்கத்தில் இருந்த மேனேஜர் திடுக்கிட்டு எழுந்து, “என்னடே, எதுக்குக் கீறுக இப்பிடி? தூக்கத்தக் கெடுத்துட்டான் பாவிப்பய..” என்றார்.

ரூம் பாய் முகம் வியர்த்து வடிய, “சார்…..302-ல உள்ளருந்து யாரோ கதவ டம்மு டம்முன்னு தட்டுகாங்க சார்.. ஒன்னு வாங்க சார்…என்னன்னு பாத்துருவோம்..” என்று பதறினான்.

“302-ல அந்த நாக்பூர் பார்ட்டி தானடே.. மாப்ள, பொண்டாட்டி, புள்ள…என்ன? எதுக்கு டே கதவத் தட்டப் போறா? நைட்டு பேய்ப்படம் எதாம் பாத்தியோ? போயி நல்லாப் பாரு டே..” என்று சொல்லியவர் சுப்பிரமணியைப் பார்த்து தலையை ஆட்டினார்.

“சார்.. அஞ்சு நிமிசமா நின்னு கேட்டேன் சார்.. யாரோ தட்டிட்டே இருக்கா சார்.. எதாம் பிரச்சினயா இருக்கப் போகு சார்..”

எதையோ யோசித்த மேனேஜர், “செரி, நீ இவாள என்ட்ரி போடு.. நா பாக்கேன்.. சுப்பம்ம, நீ வா டே எங்கூட..” என்று நடந்தார். சுப்பிரமணி அவரது பின்னால் தரையில் பாதங்களை உரசி உரசி நடந்தான்.

மேனேஜர் நீண்ட நேரம் அழைப்பு மணியை அடித்தும் கதவைத் தட்டியும் உள்ளிருந்து எந்தப் பதிலும் இல்லாததால் பதற்றமடைந்து, “சுப்பம்ம, இது மத்தக் கேஸு மாதில்லா இருக்கு.. சனியன் நமக்குன்னு வந்து வாய்க்கிப் பாரு.. நேத்தக்கித்தான் டே-டூட்டி முடிஞ்சி நைட்-டூட்டிக்கி வந்தேன்..” என்று தலையில் கையை வைத்து உட்கார்ந்து விட்டார்.

“அண்ணாச்சி, இன்னொரு சாவி உண்டும்லா, தொறந்து பாப்பமா?” என்று  கேட்டான் சுப்பிரமணி.  

“இது உள்ள கொண்டி போட்ட மாதில்லா டே இருக்கு.. கதவ ஒடைக்க வேண்டியதாங் கேட்டியா.. ஒம் பார்ட்டி வேற கீழ நிக்க டே..”

“நம்ம ஒடச்சிருவோம் அண்ணாச்சி.. உள்ள என்ன பிரச்சினயோ, யாரு கண்டா?” என்று சொல்லி கன்னத்தில் கையை வைத்து நின்றான்.

பாறைக்கோல் கம்பியை வைத்து கதவை உடைத்துத் திறந்தான் சுப்பிரமணி. கதவைத் திறந்ததும் காலடியில் ஏதோ தட்டுப் பட கீழே குனிந்து பார்த்தவன் சட்டென பதறி சுவற்றில் சாய்ந்து விட்டான். நீலநிற தேவதை உடையில் ஒரு மூன்று அல்லது நான்கு வயது பெண் குழந்தை வாயிலும் மூக்கிலும் நுரை தள்ளிக் கிடந்தாள். சட்டென அறையின் உள்ளே ஓடியவன், “முத்தாரம்மா!.. பாவியோ. பாவியோ.. இப்பிடிப் பண்ணிட்டாள..” என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கத்தினான். அழகான அந்த இளம் மனைவி நாக்கைக் கடித்துக் கொண்டு மின்விசிறியில் தூக்கில் தொங்க, கணவன் கழுத்து அறுபட்டு இரத்தத்தில் மிதந்தான்.

அந்தக் குழந்தையை அள்ளி எடுத்துத் தன் தோளில் சாய்த்துக்கொண்டு வேகமாக கீழே ஓடினான். “ஒன்னுல்ல மக்களே, ஒன்னுல்ல மக்களே….இன்னா ஆஸ்பத்திரிக்கிப் போயிருவம்.. ஒன்னுல்ல மக்களே” என்று அந்தக் குழந்தையிடம் சொல்லிக்கொண்டே ஓடினான். குழந்தையிடம் எந்த அசைவும் இல்லை. அதன் மெல்லிய உதடுகள் நீலம் பாரித்திருந்தன.

பண்டாவுக்கு வந்த ஆட்டோவில் ஏறி அரசு மருத்துவமனைக்கு விரைந்தான். ICU-வில் வைத்து தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர் வெளியே வந்து, “ஒன்னும் சொல்ல முடியாதுப்போ.. பாப்பம் அந்தப் பிள்ளக்கி என்ன எழுதிருக்குன்னு.. நீ ஸ்டேஷன்ல வெளக்கமாச் சொல்லிறு என்ன, பொறவு நம்மத் தலயக் கொடைவானுகோ” என்று சொல்லிச் சென்றார்.

….

படபடத்து வீட்டில் நுழைந்தவன் ஒரு ஒயர்க்கூடையை எடுத்து அதில் ஒரு வேட்டி, ஒரு போர்வை, ஒரு தூக்குவாளி மற்றும் ஒரு தம்ளரை எடுத்துக் கொண்டு கிளம்பப் போனான்.

“என்னத்தான்? இப்பத்தா வந்தியோ? எங்கக் கெளம்பிட்டயோ? மூஞ்சி ஏன் இப்பிடியிருக்கு?” என்று கேட்டாள் சீதா.

“அது ஒரு சூசைடு கேசு பாத்துக்கோ.. மனசு கேக்கல்ல.. பெத்தப் பிள்ளயக் கொல்ல எப்பிடித்தான் மனசு வருகோ! நா பொறவு வந்து சொல்லுகேன்..” என்று சொல்லி ஆஸ்பத்திரிக்கு ஓடினான்.

பகல் முழுதும் ஆஸ்பத்திரியில் இருந்து தேவையான எல்லாவற்றையும் செய்தான். இடையில் விழித்த குழந்தை, “பப்பா…மம்மா…பப்பா” என்று சிலமுறை புலம்பி மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தது.  

இரவில் சீதாவிடம், நடந்ததையும் குழந்தையின் நிலைமையையும் சொல்லிக் கொண்டிருந்தவன், “எட்டி, நம்ம அந்தப் பிள்ளய வளப்பமாட்டி? எனக்கு அந்தப் பிள்ள மூஞ்சி கண்ணுக்குள்ளயே நிக்கி பாத்துக்கோ.” என்று கேட்டான்.

ஒரு நொடி கூட யோசிக்காமல், “செரி.. நீங்க அந்தப் பிள்ளய எடுத்துட்டு வாங்கத்தான்..” என்றாள் சீதா.

அடுத்த நாள் காலை, அந்தக் குழந்தைக்காக ஒரு நாய்க்குட்டி பொம்மையை வாங்கிச் சென்றான். அவனை எதிர்கொண்ட நர்ஸ், “வம்பாப் போய்ட்டண்ணே.. பச்ச உயிருல்லா? இப்பத்தான் வெட்டி வெட்டி இழுத்துட்டுக் கெடந்து.. எங் கைலத்தாம் போச்சி பாத்துக்கங்க.. ஸ்டேசனுக்கு சொல்லியாச்சு.. போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பனும்லா!” என்றாள்.

சுப்பிரமணி உள்ளே சென்று அந்தக் குழந்தையின் அருகில் உட்கார்ந்தான். அதன் கை, கால், முகத்தைத் தடவிக் கொண்டே வெடித்து அழுதான். சத்தம் கேட்டு நர்ஸ்கள் வந்து சுற்றி நிற்க, குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு பொம்மையை அதன் அருகில் வைத்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.

நல்ல சுற்றுலா சீசன் ஆரம்பித்தது. பண்டாத்தொழில் மும்முரமாக நடக்கும் ஒரு சில மாதங்கள். ஒரு அறை பிடித்துக் கொடுத்தால் மற்ற நாட்களில் இருபதோ முப்பதோ கிடைக்கும். சீசன் நாட்களில் நூறு, இருநூறு கூடக் கிடைக்கும்.

கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களிலான கடல்மண், சிறு சங்குகள், சிப்பிகள் இவற்றைச் சிறு கவர்களில் அடைத்துச் சரமாக்கி விற்றுக் காசு பார்க்கும் சிறுவர்கள் முதல் பிளாட்பாரக் கடைகள் போட்டிருக்கும் உள்ளூர் சிட்டாவட்டிக்காரர்கள், வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வந்து ஸ்வெட்டர் மற்றும் சால்வைகளை விற்றுப் பிழைக்கும் குடும்பங்கள் வரை பலதரப்பட்ட மனிதர்களும் வாழ்வில் ஒருபடி மேலே சென்றுவிடும் நாட்கள்.

சுப்பிரமணி ஒரு குடும்பத்திற்கு அறை பிடித்துக் கொடுத்துவிட்டு திரும்பி வரும் வழியில் சமீபத்தில் சென்றுவந்த கருத்தரித்தல் மைய மருத்துவர்கள் கூறிய பல்வேறு முறைகளைப் பற்றி யோசித்துக்கொண்டு நடந்தான். ‘அடுத்த செகண்ட் இருப்பமான்னு தெரில, இதுல ஒரு பிள்ளய பெறதுக்கு என்னா ட்ராமால்லாம் போட வேண்டியிருக்கு!’

மலையாளப் பள்ளிக்கூடத்தின் வாசலில் பௌதியம்மைக் கிறுக்கி நிற்பதைப் பார்த்து ஒரு கணம் நின்றான். ஏதோ வித்தியாசம் தெரிய அவள் அருகே சென்றான். புத்தம்புதிய பாவாடை சட்டை அணிந்திருந்தாள். தலைமுடி சடை நீக்கப்பட்டு சீராகச் சீவி ரிப்பன் கட்டப்பட்டிருந்தது. பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில் இரண்டு தேங்காய் பன் வாங்கி அவள் கையில் கொடுத்தான். அவள் அவற்றைப் பிய்த்து சிரித்துக்கொண்டே தின்றாள்.

அடுத்த பண்டா பிடிக்க நடந்தவனுக்கு சட்டென ஒரு குழப்பம். ‘பௌதியம்ம ஒரு மாதியா ஜொலிக்காள, என்னன்னு தெரில!’

….

சில மாதங்கள் கடந்தன. ஒருநாள் அதிகாலை, வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தவன் யாரோ அழும் சத்தம் கேட்டு நின்றான். இருட்டில் எதுவும் சரியாகப் புலப்படவில்லை. அழுகைச் சத்தம் வந்த திசையில் நெருங்கிச் சென்று பார்த்தான். மலையாளப் பள்ளிக்கூட வாசலில் கால்களை விரித்து நிமிர்ந்து படுத்துக் கிடந்த பௌதியம்மை கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள். அருகே சென்று பார்த்தவன் ஒருநொடியில் வியர்த்துவிட்டான். பௌதியம்மையின் பாவாடையின் அருகே ஈரம் மெதுவாகப் படர்ந்து விரிந்துகொண்டிருந்தது. அவள் தன் பெரிய பானை வயிற்றைக் கைவைத்துத் தடவியும் அமுக்கியும் கிடந்து துடித்தாள்.

சட்டென ஏதோ தோன்றியவன் பள்ளிக்கூடத்தின் பின்புறமாக ஓடினான். அங்கிருந்த குளுவக்குடிக்குச் சென்றவன் காக்கி அரைக்கால் சட்டையணிந்த ஒருவனை அழைத்துக் கொண்டு ஓடி வந்தான்.

வந்தவன், “கொடம் ஒடஞ்சிட்டு கேட்டியாண்ணே?” என்று சொல்லிச் சட்டென பௌதியம்மையின் கால்களை விரித்து பாவாடைக்குள் கைகளை விட சுப்பிரமணி முகத்தைத் திருப்பிக்கொண்டான். பௌதியம்மை பல்லைக் கடித்துக்கொண்டு ஊளையிட்டாள். ஒருசில நிமிடங்களில் அந்த அதிகாலையைப் புனிதமாக்கிய ஒரு புதிய உயிரின் அழுகைச் சத்தம் கேட்டு சுப்பிரமணியின் கைகளும் கால்களும் நடுங்கின.

“எண்ணே இங்கண வா, எஞ் ஜோப்புக்குள்ள ஒரு வெத்தலக் கவரு இருக்கு.. அதுல பாக்குக்கத்தி இருக்காப் பாரு..”

சுப்பிரமணி நடுக்கத்தோடு சென்று அவனது கால்சட்டைப் பையிலிருந்து ஒரு கவரை எடுத்தான். அதிலிருந்த மடக்குக் கத்தியைப் பிரித்து நீட்டினான்.

“இப்பிடி வாண்ணே.. வசமா அறுக்கணும் பாத்துக்க…”

சுப்பிரமணி தயங்கி நின்றான்.

“என்னண்ணே பாத்துட்டு நிக்க.. பௌதியம்ம நம்ம தங்கச்சில்லா.. நம்ம தான் தாய்மாமன்மாரு பாத்துக்க.. வா, மருமவ பொறந்திருக்கால்லா, வந்து கொடிய அறுண்ணே”

தன்னையறியாமலே ஒரு கேவல் எழுந்து வர, பத்திரமாக அந்தத் தொப்புள் கொடியை அறுத்தவன் அதைத் தூக்கி எறியப் போனான்.

“எண்ணே, அதத் தூரப் போடாத.. இங்கக் கொண்டா…அந்தா ஒரு பேப்பர் கெடக்குப் பாரு..அதுல பொதிஞ்சி வையி.. ஒரு மேட்டரு உண்டும்..”

இதையெல்லாம் கேட்டு அரை மயக்க நிலையிலிருந்த பௌதியம்மை முகத்தில் வழக்கமான சிரிப்பு மீண்டு வந்திருந்தது.

ஒரு மாதம் இருக்கும். அந்தக் கைக்குழந்தையை எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வீட்டிற்குள் நுழைந்தான் சுப்பிரமணி.

“எத்தான், யாருத்தான் இந்தப் பிள்ள? அழகோல இருக்குத்தான்..” என்று கேட்டு குழந்தையை வாங்கினாள் சீதா.   

“சொன்னம்லாட்டி.. நம்ம பௌதியம்மக் கிறுக்கி பெத்தான்னு…”

ஒரு கணம் சுப்பிரமணியை குழப்பமாகப் பார்த்த சீதா, “எதுக்கு இத இங்கத் தூக்கிட்டு வந்தியோ?” என்று சொல்லிக் குழந்தையைத் தரையில் கிடத்தினாள்.

“குளுவக்குடிலருந்து இவள வாங்கிட்டு வர என்னா பாடுபட்டேன் தெரியுமா? தரவே மாட்டன்னு நெலயா நிக்கானுக.. எதோ அவ்வளே பெத்த புள்ள மாதி…” என்று சிரித்தான் சுப்பிரமணி.

“எத்தான்.. எதுக்கு இங்கக் கொண்டு வந்தியோன்னு கேட்டேன்” என்று எரிச்சலில் கத்தினாள் சீதா.

ஒரு நொடி பயந்தவன், “எட்டி, நம்ம வளப்பம்ட்டி இந்தப் பிள்ளய..” என்று சொல்லி சீதாவின் தோளைத் தொட்டு நெளிந்து நின்றான்.

சட்டென அவனது கையைத் தட்டி விட்ட சீதா, “என்ன என்ன நெனச்சீரு வோய்? என்ன நெனச்சீருன்னு கேக்கேன்? அந்தக் கிறுக்குத் தேவடியாக்கப் பிள்ளய நா எடுத்து வளக்கணுமா வோய்.. நல்லா கேட்டுப்புடுவம் பாத்துக்கோரும்..” என்று கத்தினாள்.

“எட்டி, என்னட்டி இப்பிடிச் சொல்லுக?.. பச்சப் பிள்ளக்கி என்னட்டி தெரியும்? சாமி மாதில்லா இருக்கா? மகாலட்சுமிட்டி.. சாமியே நமக்குத் தந்தப் பிள்ளல்லா..”

“சாமி மயிரு.. எதாங் கேட்டுட்டுப் போயிரப்படாது பாத்துக்கிடும்.. அன்னிக்கி எவளோ ஹிந்திக்காரிக்கப் பிள்ளயக் கொண்டு வாறேம்ன்னீரு, இப்ப வந்து கிறிக்கிக்கப் பிள்ளய வளப்பம்ங்கீரு.. ஒங்கம்ம சொல்லமாதி என்ன மலடின்னு முடிவு பண்ணிட்டீரு என்னா?”

“எட்டி, யாம்ட்டி இப்பிடிப் பேசுக.. நமக்க நேரம், ஒன்னும் அமைய மாட்டுக்கு..”

“எப்பிடி வோய் அமையும்? நீரு ஆம்பிளையா இருந்தால்லா அமையும்?”

சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் இருந்தவன், “எட்டி, எனக்கப் பொறப்பு அப்பிடி.. நா என்ன செய்ய? நீ ஒருத்திதான் இதச் சொல்லல்ல.. இப்ப, நீயும் என்ன சங்கடப்படுத்துகியா? செரி விடு.. நானும் எத்தன மருந்துதான் குடிக்கது? டாக்டர் சொன்னாருல்லா, பொறுமையா இரிங்க, எல்லாம் வரும்னு? அது, வரும்போ வரட்டும்.. குளுவக்குடில இந்தப் பிள்ளக்கி என்னத்தக் கெடைக்கப் போகு? இது பொறக்கும்போ எனக்குத் தோணிட்டு பாத்துக்க.. இது எனக்கப் புள்ளன்னு.. நமக்கு மொதப் புள்ளயா இருக்கட்டும்ட்டி..” என்று சொல்லி பெருமூச்சு விட்டு நின்றான்.

“ஓ.. அப்பிடியா.. கத அப்புடிப் போகுதோ?.. அப்ப ஒமக்கப் பிள்ளதானா இது? போயும்போயும் கிறுக்கிக் கூடப் போயி கெடந்துருக்கீரு என்னா? சீ..த்தூ.. கொள்ளாம் ஒம்ம ஆம்பளத்தனம்.. தூ..” என்று சொல்லி வீட்டை விட்டு வெளியே ஓடினாள் சீதா.

சட்டென பிள்ளையைத் தூக்கிக் கொண்டு விறுவிறுவென குளுவக்குடியை நோக்கி நடந்தான் சுப்பிரமணி.

அடுத்த சில வருடங்களில் இரண்டு முறை கர்ப்பமாகி இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் பௌதியம்மை. அந்தக் குழந்தைகளும் குளுவக்குடியில் வளர பௌதியம்மையைக் கூட்டிக் கொண்டு போய் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்து வைத்தது ஒரு சேவை அமைப்பு.

அதன் பிறகு பௌதியம்மையை எங்கும் பார்க்க முடியவில்லை.

..

– சுஷில்குமார் – நாகர்கோயிலைச் சேர்ந்த இவர். கிராமப்புற மாணவர்களின் மாற்றுக் கல்வி சார்ந்த ஆசிரியப் பயிற்சி மற்றும் பள்ளிகள் மேலாண்மைப் பணிகளை கோவையில் இருந்து செய்து வருகிறார். தொடர்புக்கு -sushilkumarbharathi2020@gmail.com

நலமே வாழ்க !

2

மணி எம்.கே மணி

நாளை மறுநாள் இரவு இந்த நேரத்துக்குள் மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். எதுவும் சாப்பிட்டு வரக்கூடாது என்பதையும் தான். முழு உடலுக்கும் பரிசோதனை முடிந்த பிறகே அவர்கள் என்ன சாப்பிடலாம் என்று சொல்லுவார்கள். மீனு ஆபரேஷன் மீது தனக்கு பயம் இருக்கிறதா என்று அடிக்கடி கேட்டுக் கொண்டாள். இல்லை என்றே பட்டது. தூக்கம் வரவில்லை. நாளை மதியம் சென்னைக்கு கிளம்பியாக வேண்டும். பொதுவாக அம்மாவும் தம்பியும் எல்லாம் ஒன்பது மணிக்கே சாப்பிட்டு இருளில் அடைந்து கொள்ளுவது வழக்கம். சென்னையில் அப்படியா? எப்போது பதினொன்று ஆகும் என்று சபித்துக் கொண்டு புரண்டு கொண்டிருந்தாள். தூங்கி விடக் கூடாது. பத்து நாற்பத்தி ஐந்துக்கெல்லாம் சிறுநீர் கழித்து விட்டு சோப்பினால் தன்னை சுத்தம் செய்து கொள்ள வேண்டிய ஒரு கடமை இருப்பதை மறந்து விடக் கூடாது. தூங்கி விடுவோம் என்கிற பயமெல்லாம் துளி கூட இல்லை. தூங்கிக் கொண்டிருக்கிறவர்களைப் பார்த்துக் கொண்டிருந்து ஒரு சிறிய மறைப்பு உண்டுபண்ணி மொபைலைப் பார்த்தாள். வாசு சார் வாட்சப் அனுப்பியிருந்தார்.

வழக்கம் போல கவிதை.

என்னடி ரோஜா கோபம்
என் எண்ணம் முழுதும் தாபம்
பூக்களில் நீ எந்த பாகம்
புரியாமல் இளைத்தது தேகம்

பம் பம் கம் கம். அவளைப் பற்றி அவர் எழுதுகிற அவரது எல்லாக் கவிதைகளும் அவளுக்குப் பிடிக்கும். ஒருமுறை வேறு ஒன்றை எழுதி இருந்தார் இல்லையா, அது அவளுக்கு மனப்பாடமே கூட.

கேணிக்குள் ஏனடி தோணி
இது புரியாதோடி கலைவாணி
நித்தம் கொதிக்குது மேனி
இவன் பித்தம் பிடித்த நல்ஞானி !

அவர் ஞானி மாதிரி தான். வயது ஐம்பது இருக்கும். ரொம்ப கூன் போட்டிருப்பார். அவள் துணி எடுக்க, கொடுக்க அப்படி இப்படி போகும்போது மிகவும் கூர்மையாக தன்னைப் பார்ப்பது பற்றி வியந்திருக்கிறாள். முதலில் கண் பார்வை குறைபாட்டால் அப்படி பார்க்கிறார் என்றுதான் நினைத்திருந்தாள். அவளது கணவன் வண்டியைப் போட்டுக் கொண்டு துணிகளைத் தேய்க்கும் மரநிழலுக்கு வந்து துணிகளை உன்னிடம் கொடுக்கப் போகிறேன் என்றிருக்கிறார். அவன் தான் ரோஸ் பிளாட்ல நம்பர் பதினாலுக்குப் போ என்று அனுப்பி வைத்தான். ஓ, இவரா? ஒரு பயம். ஆனால் வாழ்வில் யாரொருவரும் கொடுக்காத மரியாதையைக் கொடுத்தார். வாங்க போங்க என்றார். அடுத்தமுறை போனபோது ஒரு கவிதை பாருங்க என்றார். போனில் படித்துக் காட்டினார்.

பாவை அவளொரு வேதம்
பாடி நடந்தேன் பல காதம்
செத்துப் போயின பல மாதம்
பித்துக் காதலில் என் பிடிவாதம் !

அவளுக்கு சிரிப்பாக வந்தது. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அவைகள் வாட்சப்பில் வந்தன. நான் உருகும் தேவதை நீதான் என்றும் நேரில் ஒருநாள் சொல்லி முடித்து விட்டார்.பெற்ற பிள்ளைகள் எதுவும் கூட இல்லை. மனைவியையும் இழந்து விட்டவர். அப்படியெல்லாம் தானே இருக்கும். ஒருமுறை பையனோடு அவனது பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பி வரும்போது அவன் என்ன படிக்கிறான் என்று கேட்டார். எட்டாவது என்பதற்கு ஆசீர்வாதம் பண்ணினார். இவனுடைய படிப்பு சம்மந்தமாக ஏதாவது உதவிகள் வேண்டுமெனில் என்னிடம் கேட்கலாம் என்று சொன்னது அவளுக்கு மிகவும் இஷ்டப்பட்டது.

அவளது புருஷன் அவ்வப்போது அவரிடம் பேசுவதை கவனித்து விட்டு ஒருமுறை அவரிடம் ஒரு இரண்டாயிரம் ரூபாய் கேட்டுப் பார்க்க முடியுமா என்று கேட்டான். ஒரு முறைப்புக்கு அதை சட்டை பண்ணாமலும் போனான். அவனுக்கு யாரிடமும் எந்தப் பிடிப்புமில்லை. வேலை முடிந்தால் தனியாகவே எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அந்த மரத்துக்கு கீழேயே உட்கார்ந்து கொண்டிருப்பான். நான்கு பேர் கூடி கட்சி விஷயம், ரியல் எஸ்டேட் எல்லாம் பேசினாலும் இவன் கடமைக்கு உம் கொட்டுவது தெரியும். கோபம் வந்தால் நேராக வந்து இவளை ஒரு அறை விட்டு எந்தக் காசையும் எடுத்துக் கொண்டு சென்று விடுவான். பையனும், மகளும் அவனோடு ஓரிரு வருடங்களாகவே பேசுவதில்லை என்பது அவனுக்கு தெரியுமா என்று கூட தெரியாது. அநேகமாக அவனுக்கு நினைப்பெல்லாம் அவனுடைய அக்காள் மீதுதான். ஒருவிதத்தில் அவளது நிழலில் தான் இவன் வளர்ந்தான்.

வேலை, வேலை என்று அலைந்து திரிந்து குடும்பத்தைக் காப்பாற்ற அலைந்ததில் அவள் ஒரு ஆணைப் போலவே வடிவு பெற்று இங்கிதம் இழந்தாள். தாமதமாகவே அவளுக்கு அமைந்த கல்யாண வாழ்க்கை சப்தமின்றி விட்டுப் போயிற்று. பல வியாதிகளை வரவழைத்து ஏற்றுக் கொண்டாள். தூக்கத்தில் இருந்து விழிக்கும் போதெல்லாம் சாப்பிட்டு அங்கேயே பாத்திரத்தில் கை கழுவிக் கொண்டாள். படுக்கையில் இருந்து எழாமல் இருந்து சலிந்து போனாள். கடைசியாக கிட்னி ஒன்று செயலிழந்து அதன் சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நல்ல வேளையாக அந்த குடும்பத்தில் காசு குறைச்சல் ஒன்றுமில்லை. இல்லையென்றால் இந்நேரத்துக்கு அந்தப் பொம்பளை உயிரோடு இருந்திருக்க முடியாது. இப்போதும் அவளைப் பார்க்க போகும்போதெல்லாம் அவள் தனது புருஷனுக்கு காசு தருவது இவளுக்கு தெரியும்.

இங்கேயும் காசு வருவதில் குறைவுண்டா என்ன. அது எங்கே போகிறது என்பதே கஷ்டம். சுற்றியிருக்கும் மூன்று தெருக்களின் துணிகள் பூராவையும் இங்கே தான் சலவை செய்ய கொடுக்கிறார்கள். பொழுது விடிந்து விடுவதில் மெல்ல மெல்ல வளரும் பணி அப்படியே ஆளை மூடும். அமிழ்த்தும். மூச்சைப் பிடித்துக் கொள்ள செய்யும். என்றாவது ஒருநாள் தனது எலும்புகள் முறிந்து கொள்ளப் போகிற தருணத்துக்கு அஞ்சியவண்ணம் தினங்கள் போகின்றன.  

வேலையில் அகப்பட்டு அதற்குள்ளேயே உழலுகிற மனசை கூட அப்படி இப்படி நகர்த்த முடியாது.எப்போதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் படம் போடுகிறார்கள், பார்க்கலாம் என்று பிள்ளைகளுடன் உட்கார்ந்தால் அப்படியே தூக்கம் தள்ளிக் கொண்டு போகும். சில நாட்களில் பொழுது விடியும்போது வாய் விட்டே அழுது இருக்கிறாள் கூட. ஒருநாள் அதைப் பார்த்து விட்டு அவளது புருஷன் என்ன பழைய நெனப்பா என்றான். அதாவது கல்யாணம் ஆவதற்கு முன்பு புழக்கத்தில் இருந்த உன் ஊர்க்காரன் குருபரனை நினைத்து அழுகிறாயா என்று அர்த்தம். அவன் தான் இப்போது பதினோரு மணிக்கு வரப் போகிறவன்.

மீனு சோப்பின் நறுமணத்துடன் வெளியேறி வந்து கதவை பதமாக மூடி வைத்துவிட்டு பக்கவாட்டில் இருந்த படிகளில் ஏறினாள். மேலே முன்பு எப்போதோ போட்ட கூரை முற்றிலும் சரிந்து அலங்கோலமாக சிதைந்து கிடந்தது. ஆனால் இப்போதும் அது ஒரு மறைப்பும், பாதுகாப்பும்தான் என்பதில் சந்தேகம் கிடையாது. ஒரு ஓரமாக இருந்த பாய் தலையணையைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள். சுற்றிலும் மரங்கள் தான். நல்ல நிலாவிருந்தது. சென்னையில் இருந்து பார்ப்பதில் இருந்து தெரிகிற நட்சத்திரங்கள் பத்து மடங்கு அதிகமாக இருந்தன. மனதின் கிளர்ச்சியைப் பிடித்து நிறுத்த முடியாமல் சுற்றும் முற்றும் பார்த்தவாறு இருந்த போதிலும் ஒன்றில் கூட நிலைக்க முடியவில்லை. குருபரன் வந்து அவளை எடுத்துக் கொள்ளும்போது அவன் மடியில் துவண்ட தனது உடலை பார்த்துக் கொண்டாள். வாசு சார் சொல்லியிராத பட்ஷம் அவள் தனது வனப்புகளை அறிந்திருக்க மாட்டாள். அதன் உள்ளோடியிருந்த தாகங்களை வரிவரியாகப் படித்திருக்க மாட்டாள். குருபரன் நினைவு வந்து அவனைத் தேடியடைந்து இருக்க முடிந்திருக்காது. எத்தனை வருடங்கள் போனபிறகு இந்த உடம்புக்குள் அசலான ஆசையுடன் ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது? அவளது மனம் அவருக்கு நன்றி சொல்லியவாறு இருக்கும்போது நினைவு தப்பிக் கொண்டிருந்தது.

ஒருமுறை கண்திறந்து ஆபரேஷன் தியேட்டர் என்கிற போர்டைப் பார்த்ததாக நினைவு.

எல்லோரும் சென்று ரத்தப் பரிசோதனை செய்தபோது இவளது ரத்தம் அக்காவின் ரத்தத்துடன் பொருந்தி இருக்க யாரேனும் யாரிடமாவது எதையேனும் கேட்டார்களா என்ன. அவளை கண்ணே மணியே என்று கொஞ்ச ஆரம்பித்தார்கள். புருஷன் ஒரு பை நிறைய பழங்களை வாங்கி வந்து தின்னு தின்னு என்றான். உறவு வட்டங்களில் இவளது அனுமதியில்லாமலே இவளுக்கு தியாகி என்கிற பட்டம் சூட்டி அவர்களுக்குள் மகிழ்ந்து கொண்டார்கள். உன்னைப் போல வருமா என்று கேட்டார்கள். அப்புறம் மருத்துவமனை, டாக்டர்களின் பாராட்டு, மருத்துவப் பரிசோதனைகள் எல்லாம் வெகு சாதாரணமாக சென்று முடிந்தன. உனது கிட்னியை நாங்கள் எடுத்துக் கொள்ளுவது பற்றி நீ என்ன நினைக்கிறாய் என்கிற ஒரு பார்வை கூட அமையாத அந்தக் கும்பலின் மீதிருக்கிற கோபத்தை விலக்கி நிறுத்தி தனது புருஷனிடம் அவள் ஒன்று மட்டும் தான் கேட்டாள், “ நான் ஊருக்கு சென்று நான்கு நாள் தங்கி விட்டு வருகிறேன், அப்புறம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.” அவர்களுக்கு அவள் தனது உடம்பை தேற்றிக் கொண்டு வருவதில் என்ன ஆட்சேபனை இருக்க முடியும்.

சரியாக கண் விழித்து ஆகாரம் எடுத்துக் கொள்ள இரண்டு நாட்களாகின.

யார்யாரோ வருவதுதான். போவதுதான்.

பிள்ளைகள் பெரும்பாலும் பக்கத்திலே இருந்து கொண்டன. பையனின் கண்களில் அவ்வப்போது தென்பட்டுவிடுகிற ஆம்பிளைத்தனம் அவளுக்குப் பிடித்தது. அது நான் உன்னைப் பார்த்துக் கொள்வேன் என்பதை சொல்லாமல் சொல்வது. மகள் அப்படியே வேறு ஒன்று. பயந்து கொண்டிருக்கிற ஒரு குட்டிப் பறவை. கண்களில் தான் எவ்வளவு அச்சம்? அவள் வளர வளர சொல்ல வேண்டும். இல்லை. பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. நமக்கு நாம் போக வேண்டிய வழிகளை அறிந்து கொள்வோம். மீனு தான் நினைப்பதை தொகுக்க முயலாமல் களைத்து தூங்கிக் கொண்டாள்.

வாசு சார் வந்து பார்த்து விட்டுப் போனார்.

அவள் எண்ணியதைக் காட்டிலும் அதிகமான பணத்தைக் கொடுத்து விட்டுப் போனார்.

உனது மறுபிறப்பை வரவேற்றுக் காத்திருக்கிறேன் என்று கவிதை சொல்லிவிட்டுப் போக மறக்கவில்லை.

புருஷன் மிகவும் சந்தோஷமாக இருப்பது தெரிந்தது. வந்த கூட்டத்தில் பலரும் பணம் கொடுத்திருப்பார்கள். காரியங்கள் சுகமாக சென்று கொண்டிருக்கும். அக்கா உனக்கு நன்றி சொல்ல சொல்லி வாய் விட்டு கதறி அழுதார்கள் என்பதை மிகுந்த பெருமிதத்துடன் சொன்னான். பாவம், நன்றாக இருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டாள். ஒருவேளை இந்த பிரச்சினை எனக்கு ஏற்பட்டிருந்தால், என்னைக் காப்பாற்ற நீங்கள் யாருமே வந்திருக்க மாட்டீர்கள் என்பதையும் நினைத்துக் கொண்டு. தனக்கு கோபமே வரவில்லை என்பதை வியக்கும்போது அவளது உதடுகளை உண்ட குருபரன் முகம் நினைவில் வந்து போயிற்று.

இன்னும் ஒரு காரியம் செய்ய வேண்டும்.

வாசு சார் கொடுத்த பணத்தை கணவனிடம் கொடுத்தாள். குடித்து குடித்து சவக்களையில் இருந்த அவனது முகம் ஒரு விதமான ஆத்திரத்துடன் மலர்ந்தது பார்த்தாள். அவனால் நம்ப முடியாது. எனக்கே எனக்கு இவ்வளவு பணமா? ஆறுதலாக தட்டிக் கொடுத்தாள். இதை அவன் நிற்க நேரமில்லாமல், உணவு உண்ண இஷ்டமில்லாமல், மற்றொருவருக்கு கூட வாங்கிக் கொடுத்து விடாமல் முழுவதுமாகக் குடித்துத் தீர்ப்பதற்குள் மண்டையைப் போட்டு விட வாய்ப்பிருக்கிறது. நம்பிக்கை தானே வாழ்க்கை?

மீனு தனது மகளிடம் படுக்கையை ஒட்டியிருந்த சன்னலை திறந்து விட சொன்னாள்.

***

மணி எம்.கே. மணி திரைத்துறையில் பணியாற்றி வரும் இவருக்கு மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் எனும் சிறுகதைத் தொகுப்பு, வேறு சில ஆட்கள், எழும் சிறு பொறி – திரைப்படங்கள் குறித்த கட்டுரைத் தொகுப்பு அண்மையில் மதுர விசாரம் எனும் நாவல் வெளியாகி நல்ல கவனம் பெற்றது. – தொடர்புக்கு – mkmani1964@gmail.com

 .    

அரசியல் சமூக மாற்றங்களை மீம் கோட்பாட்டை வைத்துப் புரிந்துகொள்ளுதல்

0

ஹாலாஸ்யன்

ந்தக் கட்டுரையின் துவக்கத்திலேயே ஒரு பொறுப்புத் துறப்பைச் சேர்ப்பது நல்லதென்று கருதுகிறேன். இந்தக் கட்டுரை, வடிவேலு, கவுண்டமணி ஆகியோர் களைகட்டுகிற, நம் பேஸ்புக், வாட்ஸாப் செயலிகளை நிறைக்கின்ற படங்களைப் பற்றியது கிடையாது. ஆனால் மீம்களுக்குப் பின்னால் இருக்கிற அறிவியல் கோட்பாட்டைக் கொண்டு அரசியல் / சமூக மாற்றங்களைப் புரிந்துகொள்கிற ஒரு முயற்சி.

சென்ற பத்தியின் கடைசி வரி உங்களில் சிலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தந்திருக்கலாம். ஆம். மீம்களுக்குப் பின்னால் ஒரு அறிவியல் பின்புலம் இருக்கிறது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அந்த சொல் அறிவியல் ஆய்வேடுகளில் புழங்கியிருக்கிறது. பின்னர்தான் நம் சமூக வலைதளங்கள் அந்தச் சொல்லை தத்து எடுத்துக் கொண்டன. கிட்டத்தட்ட அதே போன்றதொரு நிகழ்வு ‘வைரல் (Viral)’ என்ற சொல்லுக்கும் நிகழ்ந்தது.

நாம் விஷயத்துக்கு வருவோம். அந்தச் சொல், புகழ்பெற்ற பரிணாமவியல் அறிஞர், ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Richard Dawkins) என்பவரால் அவருடைய முதல் புத்தகமான ‘சுயநல மரபணு’ (The Selfish Gene) என்ற புத்தகத்தில் வந்தது. அந்த புத்தகத்தின் தலைப்பு சற்றே விசித்திரமானது. அதை அவரே அடுத்தடுத்த பதிப்புகளில் ஒப்புக் கொண்டுள்ளார். அந்த புத்தகம் சொல்லவரும் செய்தியின் சுருக்கத்தையும், அந்தப் புத்தகத்தின் கண்ணோட்டத்தில் மீம் என்பது என்ன என்றும் ஒரு சுற்று பார்த்துவிடுவோம்.

பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசும்போதெல்லாம் நாம் அது ஒரு குறிப்பிட்ட உயிரினத்தில் நிகழ்வதாகக் கருதுகிறோம். உதாரணமாக பென்குயின்கள் தங்கள் பறக்கும் திறனை இழந்து துடுப்பு போன்ற அமைப்புகளைப் பெற்றது ஒரு உதாரணம். டாக்கின்ஸ் நம்மை இன்னும் ஆழமாகச் சென்று, பரிணாமத்தின் செயல்பாட்டை இன்னமும் தெளிவாக விளங்கிக் கொள்கிற தளத்தில் சென்று பார்க்கச் சொல்கிறார். அவைதான் மரபணுக்கள். பரிணாம வளர்ச்சி மரபணுக்களின் தளத்தில் நிகழ்கிறது. சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல காரணங்களால், பல மரபணுக்களில் சில மரபணுக்களே விரும்பப்படுகின்றன. முன்னொரு காலத்தில் பென்குயின்களின் மூதாதைகளிடம் பறவை போன்ற சிறகுகளுக்கான மரபணுக்களும், துடுப்பு போன்ற சிறகுகளுக்கான மரபணுக்களும் இருந்திருக்கும். இயற்கைத் தெரிவு (Natural Selection) துடுப்பு போன்ற சிறகுகளுக்கான மரபணுவைத் தேர்வு செய்ததால், பறவை போன்ற சிறகுகளுக்கான மரபணு மெல்ல மெல்ல மங்கி மறைந்துபோய் காலப்போக்கில் வழக்கொழிந்து போனது.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த மரபணுக்கள் பரம்பரை பரம்பரையாகக் கடத்தப்படுபவை. மரபு என்று வழிவழியாகச் செய்தவற்றைக் குறிப்பதற்கும், மரபணு என்ற சொல்லையும் ஒப்புமைப்படுத்திப் பார்த்தால் இது விளங்கும். ஆனால் பரம்பரை பரம்பரையாக மட்டுமே தகவல்கள் கடத்தப்படுவதில்லை. பார்க்கப் போனால் மரபணுக்கள் என்பவை, புரதம் தயாரிக்கும் சமையல் குறிப்புகள். அவையும் தகவல்கள் தான். சில சமயங்களில் பரம்பரையாக அல்லாமலும் தகவல்கள் கடத்தப்படும். அவற்றைத்தான் மீம்கள் என்று அழைக்கிறார்கள்.

காட்டில் இருக்கும் ஒரு குரங்குக் கூட்டம், குப்பைத் தொட்டியில் இருந்து உணவை எடுத்துக்கொள்ள முடியும் என்பது ஒரு மீம். இந்தத் தகவலை குரங்குகளுக்கு அவற்றின் பெற்றோர் மரபணுக்களாகத் தரவில்லை. ஒரு தாய்க்குரங்கு தன் குட்டிகளுக்குச் சொல்லித் தரலாம். ஆனால் ஒரு குரங்குக் குட்டியை தாயிடம் இருந்து பிறந்த உடனே பிரித்து விட்டால் அது தானாக குப்பைத் தொட்டியில் போய் உணவைத் தேடாது. சோதனைகள் மூலம் கற்றுக்கொள்ளலாம். குழுவாக வாழும் விலங்குகளில் இம்மாதிரி மீம்கள் சாதாரணம்.

அவ்வாறு பார்த்தோமானால், மனித வரலாறு பலப்பல மீம்களை உள்ளடக்கியது. நெருப்பைக் கட்டுக்குள் கொண்டு வந்தது, குகைகளில் வரைந்தது, மேம்பட்ட கருவிகளைக் கண்டுபிடித்தது, விவசாயம், எழுத்து, விலங்குகளைப் பழக்கியது அனைத்துமே மீம்கள்தான். அவை அனைத்துமே ஒரு குழுவுக்குள் வைரலாகப் பரவிய யோசனைகள். எழுதும் தாள், வெடிமருந்து, அணு ஆயுதத்தயாரிப்பு எல்லாமே ஒருவகையில் மீம்கள்தான். சுருக்கமாகச் சொன்னால், ஒரு குறிப்பிட்ட குழுவின் ஆட்களுக்குள்ளே, பெற்றோரின் மரபணுக்கள் வழியாக வராத எல்லாமே மீம்கள்தான். இதே விளக்கம் நாம் சமூக வலைதளங்களில் பகிர்கிற எல்லா மீம்களுக்கும் பொருந்தும்தானே.

இதற்கும் அரசியல் / சமூக மாற்றங்களைப் புரிந்துகொள்ளுதல் என தலைப்பில் சொல்லப்பட்டதற்கும் என்ன தொடர்பு என்று சிலர் யோசிக்கலாம். அவ்வளவுதான். வந்துவிட்டோம். மீம் கோட்பாட்டைச் சொன்ன டாக்கின்ஸ், மரபணுக்கள் மற்றும் அவற்றின் போட்டி மரபணுக்கள் என்ற ஒரு கோட்பாட்டைச் சொல்கிறார்.  ஒரு மரபணுவும் இன்னொரு மரபணுவும் ஒரு உயிரித் தொகையில் (Population) அதிக எண்ணிக்கையில் பரவ போட்டி போடும். இந்தப் போட்டியும், இயற்கைத் தெரிவும்தான் பரிணாம வளர்ச்சிக்குக் காரணம். அதை அப்படியே மீமுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

மீம்களும், போட்டி மீம்களும் இருக்கட்டும். முதன்முதலில் மனிதன் நெருப்பைக் கட்டுப்படுத்தக் கண்டடைந்தபோது, அந்தக் குழுவில் சிலருக்கு நெருப்பைப் பயன்படுத்துவதில் மதரீதியான பயங்களோ நெருப்பைப் பற்றிய பொது பயமோ இருந்திருக்கும். நெருப்பைப் பயன்படுத்துதல் என்னும் மீமுக்கும், நெருப்பைப் பயன்படுத்த வேண்டாம் என்னும் மீமுக்கும் நடந்த போட்டி. இன்னொரு பொறுப்புத் துறப்பையும் இவ்விடத்தில் நான் வைக்கிறேன். இதுவரை என் சிறிய அளவிலான வாசிப்பில் இந்த மீம் மற்றும் போட்டி மீம்கள் தொடர்பாக எங்கும் வாசித்ததில்லை. எங்கேனும் யாரேனும் எழுதியிருக்க நிறைய வாய்ப்புண்டு. இது என்னுடைய எண்ணம் எல்லது மீம் ஆவதற்குத் தகுதி உடைய ஒரு கருத்து. அவ்வளவுதான்.

ஒரு அரசியல் / சமூக மாற்றம் என்பது ஒரு பரிணாம வளர்ச்சி போலத்தான். மரபணுக்கள் போட்டி போடுவதுபோல மீம்கள் போட்டி போடுகின்றன. சுற்றுச்சூழல் போல சமூக நிலைப்பாடுகளும் நிலையும் செயல்படுகின்றன. ஒரு மீமை முன்னெடுக்கிற நபர்களும், அதை எதிர்க்கிற நபர்களும் இருப்பார்கள். தலைவர்களும் அவர்களுக்கு எதிர் நிலைப்பாடு எடுப்பவர்களும். டாக்கிஸ் பரிணாம வளர்ச்சியை, ஒரு உயிரி என்ற தளத்தில் நோக்காமல் மரபணுக்கள் என்ற தளத்தில் அணுகச் சொன்னதுபோல, அரசியல் / சமூக மாற்றத்தை ஒரு தலைவர், அவரின் கருத்தியல் எதிரிகள் என்ற தளத்தில் அணுகாமல், மீம் என்ற தளத்தில் அணுகலாம்.

  1. நாம் ஒரு தனி ஒற்றை மரபணு அல்ல. நாம் என்பது ஒன்றோடொன்று இணைந்து செயல்படக்கூடிய மரபணுக்கள், அவற்றைச் சுமக்கும் ஊர்தி (உடல்) என்னும் அமைப்புதான். அதேபோல ஒரு தலைவர் என்பவர் ஒரு ஒற்றை கருத்து கிடையாது. பெரும்பாலும் ஒன்றோடொன்று ஒத்துப்போகக் கூடிய கருத்துகள் கொண்டவர்.
  2. சிலநேரம் பிற ஜீன்களோடு ஒத்துழைக்காத ஜீன்களும் உண்டு. அதுபோல ஒரு கருத்தியலை முன்வைக்கும் நபர்களிலும் இருக்கக் கூடும். அவர் முன்வைக்கும் கருத்தியலோடு ஒன்றாத, முரணான கருத்துகளும் இருக்கும். அதனால். ஒற்றைக் கருத்தையோ மேற்கோளையோ எடுத்துக்கொண்டு மதிப்பிடுவதற்கு தலைவர்களும் நபர்களும் உலையில் வைத்த சோறு அல்ல. மொத்தமாகவே மதிப்பிட வேண்டும். உதாரணமாக செல்கள் தம்மைத்தாமே அழித்துக்கொள்ள இருக்கும் மரபணு மட்டும் எடுத்துக்கொண்டு மொத்த ஆசாமியும் தற்கொலை எண்ணம் கொண்டவர் என்று சொல்வதற்குச் சமம்.
  3. ஒரு மரணுவின் வெற்றி என்பது அது வெற்றிகரமாக எவ்வளவு பிரதிகள்.
    உருவாக்குகிறது என்பதைப் போல ஒரு கருத்தியலின் வெற்றி என்பது அது எவ்வளவு பேரிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான்.
  4. சூழல் என்பது இந்தக் மீம்களுக்கிடையேயான போட்டியில் முக்கியமானதாக ஆகிறது. வடதுருவப் பகுதியும் தென்துருவப் பகுதியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பருவநிலையைக் கொண்டிருந்தாலும் வடதுருவத்துப் பறவைகள் எதுவுமே பென்குயின் ஆகவில்லை. அதுபோல ஒரு இடத்தில் வெற்றிகரமாக நிகழ்ந்த ஒரு அரசியல் / சமூக மாற்றத்துக்கான மீம் இன்னொரு இடத்தில் அதே போன்று வெற்றி பெற வேண்டும் என்பதில்லை.
  5. ஒரு வெற்றிகரமான பரிணாம வளர்ச்சிக்குப் பின்னால் நிச்சயம் உயிரியல் ரீதியிலான விலை இருக்கும். உதாரணமாக சிக்கலான செயல்களைச் செய்யவும், தர்க்கத்தைப் பரிசீலிக்கவும் பெரிய மூளை வளர்த்துக்கொண்ட மனிதர்களுக்கு, அந்தப் பெரிய மூளையின் காரணமாக பிரசவம் சிக்கலாகியது. மண்டை ஓட்டின் எலும்புகள் ஒன்று சேராமல் நெகிழ்வாகவே இருக்கும்படியான ஒரு நிலை. அதனால் கைகால் இயக்கங்களுக்கு மாதக்கணக்கில் காத்திருக்கவேண்டிய நிலை வந்தது. பெரிய மூளைக்கு நாம் கொடுத்த விலை இது. ஒரு கன்றுக்குட்டி பிறந்த ஒரு மணிநேரத்தில் துள்ளிக்கொண்டு ஓடுகையில், நாம குப்புற விழுவதற்கு 4 மாதங்கள் ஆகிறது. அதேபோல ஒவ்வொரு சமூக மாற்றத்துக்கும் ஒரு விலை இருக்கும். வரலாறெங்கும் நாம் மாற்றத்துக்குக் கொடுத்த விலைகள் மண்டிக் கிடக்கின்றன. நாம் அவற்றோடு வாழ்ந்தே ஆக வேண்டும்.
  6. ஒவ்வொரு உயிரியின் மரபுத்தொகுதியிலும் சில பிரச்சனையான மரபணுக்களும் உண்டு. உதாரணமாக நம் அனைவருக்குமே புற்றுநோயைத் தூண்டக்கூடிய புற்றுநோய் முன்மரபணுக்கள் (Proto Oncogenes; Onco-புற்றுநோய்) உண்டு. பரிணாம வளர்ச்சி அதை நசுக்கிவிட்டுப் போயிருக்கலாம் என்று நினைக்கலாம். ஆனால் அவற்றை நசுக்கி நகர்வதற்குத் தேவையான அழுத்தம் போதுமான அளவு இல்லாமல் இருக்கலாம். அல்லது அதனால் வேறு உபயோகங்கள் இருக்கலாம். உதாரணமாகச் சில புற்றுநோய் முன்மரபணுக்கள் செல் பிரிகையைத் துவக்கவும், செல்களின் இறுதி நாட்களில் அவற்றை எப்போது அழிக்க வேண்டும் என்று கட்டளையிடவும் உதவுகின்றன. அதேபோல சமூகத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கருத்து இருக்கக்கூடும். ஆனால் அதை முழுமையாக அழித்து நகர்வதற்குத் தேவையான அழுத்தம் இருக்காது அல்லது அதற்கான மறைமுகத் தேவை எங்கேனும் இருக்கக் கூடும்.
*****

ஹாலாஸ்யன் – மரபுக் கவிதை, சிறுகதைகள், அறிவியல் எழுத்து, குழந்தைகளுக்கான எழுத்து என பல துறைகளில் செயல்பட்டு வருகிறார். இவரது நுண்ணுயிர்கள், எஞ்சின்கள் ஓர் எளிய அறிமுகம், சிள்வண்டு முதல் கிகாபைட்ஸ் வரை, எக்காலம், ஆச்சரியமூட்டும் அறிவியல் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து காணொளி வாயிலாகவும் இதழ்கள் வாயிலாகவும் அறிவியல் பதிவுகள் செய்து வருகிறார். தொடர்புக்கு – yes.eye.we.yea@gmail.com

பதிப்புத் தொழில் – அரணும், அறமும்!

0

கார்த்திகேயன் புகழேந்தி

பதிப்புத் துறையைப் பொறுத்த வரையேனும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகாலம் பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். கலைஞர்தான் அதில் ராஜராஜன். குலம், குட்டை, ஏறி, அணை என்று நீர்ப்பாசனத்திற்கு ஏற்ற கட்டமைப்பாக ஊரக, மாவட்ட, ஒன்றிய நூலகங்கள் வடிவில் பலமாக நிறுவப்பட்டன.

அண்ணா நூற்றாண்டு நூலகம்

அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழகத்தின் பெருமிதம். புதிய தொழில்நுட்பத்தை அரவணைத்துக் கொண்ட அச்சகங்களால், ’அச்சுத்தொழில் நச்சுத்தொழில்’ போன்ற சொலவடைகள் வழக்கொழிந்துவிட்டன என்றே தோன்றியது. இதை இரண்டு தலைமுறைகளாக பார்த்து வளர்ந்த நான் படித்து முடித்து வேலை பார்த்து இந்தத் தொழிலுக்குள் வரும்பொழுது அது ரியல் எஸ்டேட்காரர்களிடம் கைமாறிவிட்டது. எந்தெந்த ஏரிகள் பிளாட் போட்டு விற்கப்பட்டன, எந்தெந்த கால்வாய்கள் அடைக்கப்பட்டன என்பது வற்றிப்போன நூலக ஆணைகளின் ஊற்று வற்றுவதைப் பார்க்கும்பொழுது மூடு மந்திரமாகவே இருக்கிறது.

இருந்தாலும் நிலத்தடி நீரையாவது விட்டு வைத்தார்களே என்று பதிப்பாளர் சங்கங்கள், புத்தக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் ஊரல் போட்ட புத்தகக் காட்சிகளையே ஆழ்துளைக் கிணறுகள்போல தோண்டி எடுத்தனர். சமையல், குடிநீருக்கு அடிபம்புகளை எந்த அளவுக்கு நம்ப முடியுமோ அந்த அளவிற்குத்தான் அங்காடி விற்பனையை ஒரு பதிப்பகம் பணத் தேவைக்கு நம்ப முடியும். அடைமழைகாலத்தில் அணைகள் கொள்ளளவை எட்டிவிட்டபோது தினமும் குழாயில் நீர் வரலாம். அக்னி வெயிலில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கூட வராமல் போகலாம். புத்தகக் கடைகளும் திறக்க வழியில்லாமல், புத்தகக் காட்சிகள் நடத்தும் சாத்தியங்களும் அருகிவருவதால் இந்தக் கரோனாக் காலம் பதிப்பகங்களை மழையும் பொய்த்துப் போய், கிணறும் வற்றிப் போகும் அபாயத்தில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

நடிகர் கிஷோர் அவர்களின் தற்சார்பு வாழ்க்கைமுறை பற்றிய ஒரு கட்டுரையை சமீபத்தில் வாசித்தேன். சொந்தப் பண்ணையும், தோட்டமும், இயற்கையான உணவும், தேவைக்கேற்ற உழைப்பும் ஊதியமும். நிச்சயம் எல்லோரும் கனவு கானும் ஒரு வாழ்க்கையை அவர் வாழ்ந்துகாட்டிக்கொண்டிருக்கிறார். அந்த பேட்டியின் நிறைவுப் பகுதியில் அவர் சொன்ன தகவல் மிக முக்கியமானது. பக்கத்து பண்ணைகளில் பலா, வாழை போன்ற பழங்களை பயிரிட்டால் பறவைகள், காட்டு விலங்குகளால் மற்ற பயிர்களும் பாழாகும் என்பதால் அவற்றைப் பயிரிடுவதில்லை. நாங்கள் அப்படி இல்லை பறவைகளும், விலங்குகளும் உண்டது போகத்தான் எங்களுக்கு. இந்த முறை எங்கள் இத்தனையாண்டு முயற்சியின் பலனாக யானைகளை விருந்தாளிகளாக வரவேற்கக் காத்திருக்கிறோம் என்று முத்தாய்ப்பாக அவர் சொல்லியிருக்கிறார். விலங்கியலின்பால் உள்ள ஈர்ப்பால் இணைந்த கிஷோர்- விஷாலா தம்பதி பல்லுயிர் ஓம்பும் ஒரு காட்டை தங்கள் இரு மகன்களுக்காக உருவாக்கியிருக்கிறார்கள் என்பதற்கு யானைகளின் வருகைதான் அத்தாட்சி.

பதிப்பக உலகுமும் ஒரு நூல்வனம்தான். மண் புழுவின் வேலையை மண்வெட்டிவைத்து மனிதன் செய்ய முடியாது. புதிய பாதைகள் உருவாக்குவதில் யானைகளின் பங்கு அளப்பரியது. பதிப்பாளர்,அச்சகர், விற்பனையாளர்கள் தொடங்கி மூட்டைகளை ஏற்றிச் சென்று ஊர் ஊராகச் சேர்க்கும் கூலித் தொழிலாளர்கள் வரை இங்கு பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரம் பின்னிப் பிணைந்துள்ளது. அரசாங்கத்தால் நட்டாற்றில் விடப்பட்ட இந்தச் சூழலில் நல்ல எழுத்தை ஒருவித பெருமிதத்தோடு பதிப்பித்து, அச்சிட்டு, ஊரூராக முதுகில் சுமந்து சென்று கூவிக் கூவி விற்ற ஒரு கூட்டத்தில் அடிமட்ட ஊழியனின் பசி தீர்ந்தால்தான் அச்சகங்களும், விற்பனையாளர்களும், பதிப்பகங்களும் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும் என்ற அடிப்படை அறத்தின் வழி நடந்தால்தான் நாளை சமூகத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் நாம் தலை நிமிர்ந்து கேள்வி கேட்க முடியும்.

அசோகமித்ரனின் புலிக்கலைஞனைப் போன்ற நலிந்துவரும் கலைகள், தொழில்கள் பற்றிய செய்திகள், படைப்புகளையெல்லாம் ஒரு விதப் பச்சாதாபத்தோடு கடந்து வந்திருக்கிறேன். இன்றைய தேதியில் வெள்ளம், புயல், பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி, கொள்ளை நோய் என்று அடுத்தடுத்து பின்னடைவுகளைச் சந்தித்த சோர்வில் இருக்கும் பதிப்பக உரிமையாளர்களுக்கும், கடை நிலைப் பணியாளர்களுக்கும் நிரந்தர விலாசத்தைத் தக்கவைத்துக் கொண்டவர், விலாசமற்றுப் போனவர் என்ற வித்தியாசம்தான். எல்லோருமே மறுபடி முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

பதிப்புத்துறை சார்ந்த எந்தவொரு பாதிப்பையும் முதலில் எதிர்கொள்பவர்கள் எழுத்தாளர்கள் தான். அவர்கள் ஒரு ஊடகம் தொய்வடையும்பொழுதே மாற்றுவழியைத் தேர்ந்தெடுக்கும் மகரந்தத் தூதுவர்கள். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், மின்\இணைய ஊடகங்களுக்கு ஏற்றார்போல் புதுப்பொலிவுடன் தங்கள் படைப்பை மெருகேற்றிக் கொள்ளும் மாற்றத்தின் முகவர்கள் அவர்கள். நல்ல எழுத்தை வாசகர்கள் பின் தொடர்ந்து புதிய ஊடகத்தின் வாடிக்கையாளர்கள் ஆகிறார்கள். சூழல் கனிந்து வரும்பொழுது அதைச் சுற்றி பதிப்பகங்களும், அச்சகங்களும், ஊடகங்களும் தங்களைத் தகவமைத்துக் கொள்ள முற்படுகிறார்கள். அப்படித்தான் இப்போது மின்னூல்களுக்கான முன்னெடுப்புகளையும் நாம் பார்க்க வேண்டும்.

எந்தவொரு புதிய வர்த்தக வாய்ப்பைச் சுற்றியும் கள்ளச் சந்தைகள் உருவாவதைத் தவிர்கவே முடியாது. ஈ களையாமல் தேன் எடுக்க நினைக்கும் கயவர்கள் தான் செய்யும் திருட்டுத்தனத்திற்கு சேவை என்று பெயர் வைத்துக்கொள்வார்கள். நல்ல புத்தகங்களை மலிவுப் பதிப்பாக அச்சிட்டபோதும், நகலெடுத்தபோதும், இப்போது மின்னூல்களுக்கு கண்ணுக்கோள் போடும்பொழுதும் இவர்கள் இப்படித்தான் செயல்படுகிறார்கள். புத்தகங்களின் அச்சு, நேர்த்தி, விலை ஆகியவற்றில் எல்லா பதிப்பகங்களுக்கும் இடையே ஒருவித ஒத்திசைவும், ஒழுங்குமுறையும் வந்தவுடன் மலிவுப் பதிப்புகளையும் திருட்டுப் புத்தகங்களையும் ஒன்றுசேர்ந்து எப்படி நம்மால் அழிக்க முடிந்ததோ அப்படி இந்த மின் புத்தகத் திருட்டையும் பதிப்பகங்களும் எழுத்தாளர்களும் ஒன்றினைந்தால் திறம்படத் தீர்க்க முடியும். ஆனால் அதைவிட முக்கியமான பிரச்னை தொழில் சார்ந்து இயங்குபவர்களுக்கிடையே இருக்கும் பரஸ்பர நட்பையும், அன்பையும், நன்மதிப்பையும் பேணிக் காப்பது. தற்சார்பு என்பது அதுதானே!

~கார்த்திகேயன் புகழேந்தி
நிறுவனர், வானவில் புத்தகாலயம்

சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள்

0

1 ) சிறுமியின் வருகை  

நான் பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன். மரத்திலிருந்து இலை ஒன்று காற்றில் அற்புதமாக மிதந்து தரையில் அமர்ந்தது. அவள் நினைவு வந்தது. ஆண்களுக்குப் பெண் நினைவு மனதில் தோன்றுவது எப்படி இயற்கையோ அது போல் பெண்களுக்கும் ஆண் நினைவு தோன்றுவது இயற்கைதான் என்று நினைத்தேன். ஆனால் ஆண்களைப்போல் பெண்கள்  அந்தரங்கங்களை வெளிப்படுத்துவதில்  தயக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அணில் ஒன்று மரத்தில் ஏறுவதைப் பார்த்தேன். காற்று வீசிக்கொண்டிருந்தது. நான் கண்களை மூடி உட்கார்ந்தேன். சற்று நேரத்தில் கண் திறந்தேன். எதிரே ஒரு பெரியவர் நின்றிருந்தார். ‘தியானமா ‘ என்றார். ‘இல்லை. அசதி’ என்றேன். என் அருகில் அமர்ந்தார். ‘இந்தப் பிரபஞ்சம் அதிசயமானது. வாழ்க்கை புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. உலகம் ஆண்களின் கையில் இருக்கிறது. பெண்களை நினைத்து அல்லல்படுகிறார்கள். அதனால் வாழ்க்கை அவர்களுக்குச்  சிக்கலாகிவிடுகிறது’ என்றார். ‘இதை ஏன்.என்னிடம் சொல்கிறீர்கள்’ என்றேன். ‘விசேஷக் காரணமில்லை. எல்லா ஆண்களுக்கும் பொருத்தமான விஷ யம் உங்களுக்கும் பொருத்தமாகத் தானே இருக்க முடியும்’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே. ஒரு பெண் அவரிடம் வந்தாள். ‘என் தோழி’ என்றார். அந்தப் பெண் ஸ்டைலாக இருந்தாள். பின் இருவரும் சென்று விட்டார்கள்.
 
பூங்காவிற்கு வந்து செல்பவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவள் ஒரு சிறுமியுடன் வந்து ஒரு பெஞ்சில் அமர்ந்தாள். நான் அங்கிருந்து செல்ல நினைத்து எழுந்து பூங்கா வாசலுக்கு வந்தேன். அந்தப் பெரியவர் அவர் கூட  வந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தார். ‘ உலகம் மிக சூழ்ச்சியானது ‘ என்று ஏதோ சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். ‘அப்பா’ என்ற சத்தம் கேட்டுத் திரும்பினேன். அந்தச் சிறுமி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

 2 ) ஆப்பிள் துண்டுகள்

அந்தக் கம்பேனியில் சேர்மனுக்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள் அனைவரும் வயதானவர்களாக இருந்தார்கள், நான் 61 வயதில் ஒரு பொறுப்பில் சேர்ந்தபோது ‘ சின்ன வயதாக இருக்கிறீர்களே ‘என்றார்கள். சுந்தரேசன் என்பவருக்கு  – அவருக்கு வயது  80 க்கு மேல்இருக்கும் -.  மூச்சு இளைப்பு நோய் இருந்தது. அவர் என் மேல் அன்பாக இருந்தார். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கோ பதில் மனு தாக்கல் செய்வதற்கோ சேர்மன் அவருக்கு அதிகாரம் கொடுத்திருந்தார். நிலம் தொடர்பான நீதிமன்ற வழக்குகள் என் பொறுப்பில் இருந்தன. சுந்தரேசன் நோய்வாய்ப்பட்டு வீட்டில் இருந்தார். சம்பளம் அவர் வங்கிக் கணக்குக்குப் போய்விடும். வக்கீல் தயார் செய்திருந்த   பேப்பர்களில் நான் அவரிடம் கையெழுத்து வாங்க வேண்டியிருந்தது. அவர் வீட்டிற்குச் சென்றேன். படுக்கையில் படுத்திருந்தார். வெண்டிலேட்டர் வைத்திருந்தார்கள். சுவரில் பொருத்தியிருந்த டிவியில் எதோ சீரியல் ஓடிக்கொண்டிருந்தது. அதைப்  பார்த்துக் கொண்டிருந்தார். சத்தம் வைக்கவில்லை. மனம் யோசிப்பதைத் தவிர்க்க அவர் கண்டுபிடித்த யுக்தி. இடுப்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்தியிருந்தார்கள் ஒரு பெண் வந்து தன்னை மருமகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மருமகள்கள் அழகாக இருப்பது ஒரு தவிர்க்க முடியாத விதி.. நான் சுந்தரேசனிடம்  கையெழுத்துக்கள் பெற்றுக் கொண்டேன்.. சில தடவைகள் இவ்வாறு சென்றதில் அந்த மருமகள் எனக்குப் பழக்கமாகிவிட்டார்.

பிறகு அந்த மருமகள் கனவில் வர ஆரம்பித்தாள். கனவில் படுக்கையைப் பகிர்ந்து கொண்டோம். ஒரு நாள் கனவில் தட்டில் நறுக்கி வைக்கப்பட்டிருந்த ஆப்பிள் துண்டுகளை சாப்பிட்டுக் கொண்டே ’என் கணவரும் மாமனாரும் கொடுமைக்காரர்கள்.. நடந்ததை நினைத்தால் எனக்கு ஆத்திரம் வருகிறது. நான் அந்த வென்டிலேட்டரை எடுத்துவிடப் போகிறேன்’ என்றாள். அடுத்த நாள் சுந்தரேசன் இறந்த செய்தி அலுவலகத்துக்கு வந்தது. 

3 ) கறிக்குழம்பு 

‘என்ன ரொம்ப ஓவரா பேசறே’ என்றாள், ரம்யா. ‘உன் பொண்டாட்டிகிட்டே சொல்லவா ‘ என்றாள். இது ராஜனை  நோக்கி அவள் எய்யும் அம்பு. அவன்  ‘சரி போய்ச் சொல்லு ‘ என்றான். அவள் ஆடை மாற்றிக் கொள்ள அறைக்குள் சென்றாள்.  ‘மனைவியிடம் சென்று இவள் சொன்னால் என்ன ஆகும். இவளிடம்  வருவதை துண்டித்துவிடுவாளே. இந்த அறிவு கூட இல்லாமல் இருக்கிறாளே’ என்று ராஜன்  யோசித்துக்கொண்டிருந்தான். அவள் அறையிலிருந்து வெளியே வந்தாள். அவள் தோற்றத்தைப்  பார்த்ததும் அவளை சமரசப்படுத்த வேண்டும் என்று ராஜனுக்குத் தோன்றியது. சென்று அணைத்துக்கொண்டான். தன்னை அவனால்  விட்டுவிட முடியாது என்று அவள் அறிவாள். இது போன்ற ஊடல் அவர்களுக்கிடையே மேலும் மேலும் மோகத்தையே உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இருவரும் வெளியே செல்லலாம் என்று முடிவெடுத்தார்கள். வீட்டுப்படியில்  இறங்கும்போது வாசலில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். ரம்யாவிடம் ‘என் மனைவி’ என்று அறிமுகப்படுத்தினான்.
 
மூவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள். மனைவி, ரம்யாவை இன்டெர்வியூ பண்ணுவதுபோல் நிறையக்  கேள்விகள் கேட்டாள். ரம்யா அடக்க ஒடுக்கமாக அனைத்திற்கும் சாமர்த்தியமாகப் பதில் கூறினாள். ரம்யாவின் பதிலில்  திருப்தியடைந்தவள் போல் ராஜனின் மனைவி  தோன்றினாள். ‘சீக்கிரமாக வீட்டிற்கு வந்து சேருங்கள். இன்று கறிக்குழம்பு’ என்று கூறிவிட்டு  அவனின் மனைவி சென்றாள். ராஜனும் ரம்யாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘உங்கள் மனைவி  அதிசயமானவர்’ என்றாள் , ரம்யா. ‘நான் கறிக்குழம்பு  சாப்பிடவேண்டும்’ என்று சொல்லிவிட்டு ராஜன் கிளம்பினான். ரம்யா வெறுமை பரவியிருந்த வீட்டில் தனியாக உட்கார்ந்திருந்தாள்.   

நூற்றாண்டின் மணம்

2

பாக்கியராஜ் கோதை

வெய்யிலைக் கிழித்தபடி காவல்துறையின் டாடா சுமோ வேன் சாத்தனூருக்குள் சென்றது. நத்தம உடையாரின் ஏரோப்பிளேன் வீட்டுப் பஞ்சாயத்திற்குத் தொப்பையில்லாத மூன்று போலிஸ்காரர்கள் வந்திருந்தனர்.

ஏரோப்பிளேன் வீட்டு மரப்படிக்கட்டு அருகே நின்று பானுவும் ரம்யாவும் வக்கீல் அண்ணன் சுந்தரழகனிடம் கைகள் நடுங்கப் பேசிக் கொண்டிருந்தனர். ‘கோர்ட்டுக்குப் போயிருந்தா, நம்மால ஒரு மயிரையும் புடுங்கி இருக்க முடியாது, ஊர் பஞ்சாயத்துதான் சரி, வீடு நிச்சயமா நம்ம கைய விட்டுப் போகாது, சாவடிக்குக் கிளம்புங்க, நேரமாச்சு’ என்று, படி எடுத்த உடையாரின் உயில் பத்திரங்களைக் கோப்பு ஒன்றிற்குள் போட்டு, ஊர் பஞ்சாயத்திற்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தார் வக்கீல் சுந்தரழகன்.

பஞ்சாயத்து நடக்கப்போகும் ஆலமரச் சாவடியின் பரந்த முற்றத்தில் ஆள்கள் கூடிக்கூடிப் பேசியபடியிருந்தனர்.  கூடியிருந்த கூட்டத்திற்கு ஏரோப்பிளேன் வீட்டு ஆள்கள் மகிழ்வுக் கொடையாக அளித்த காராச்சேவும், குளிர்பானமும், தினசரி நாளிதழ்களும் சுழற்சி முறையில் திரும்பத்திரும்பக் கொடுக்கப்பட்டுக் கொண்டேயிருந்தன. காற்றுக்காக வைக்கப்பட்டிருந்த மேசைக்காற்றாடி அனல் காற்றைத்தான் வழங்கிக்கொண்டிருந்தது.

‘பெரிய மனுஷங்க கூடி இருக்கிற இடத்துல பொடுசுங்களுக்கு என்னடா வேலை’ என்று தங்கமோதிரம் தன் கை டம்ளிரில்  இருக்கும் குளிர்பானம் சிந்திவிடாதவாறு அங்கு மொய்த்துக் கூடியிருந்த சிறுவர்களைத் துரத்திவிட்டார். கண்மாயில் கல்லைப் போட்டதும் பாசி விலகி மீண்டும் கூடுவது போல, சிறுவர்களும் விலகுவது போல விலகி மீண்டும் கூடியபடி இருந்தனர். ‘விடுப்பா மோதரம், பஞ்சாய்த்துன்னொன்ன, இந்தக்காலப் பொடுசுங்க பார்த்திருக்க மாட்டாங்க, அதான் மழையப் பாத்த தவளை கணக்கா கத்திக் குதிக்கிறானுக’ எனக் காராச்சேவை மென்றபடி சோசியக்காரத் தங்கமணி சொன்னார்.  

‘எத்தாம் பெரிய முத்தம், வாசல், அதுவும் அந்தக்காலக் கருப்பம்பட்டி அகலச் செங்கல்ல கட்டுன மூனுமாடி வீடு, மாட்டுக்கொட்டால இருக்குற கதவுகூட தேக்குமரம் தான், காரைக்குடிச் செட்டிமார் வீடு மாறி, இழச்சு இழச்சுதான் கட்டியிருக்காரு நத்தம உடையாரோட தாத்தா, ரசனக்கார மனுசன்தான்’ என்றார் நொட்டாங்கை கழுகுமலை.

‘செங்கிப்பட்டி பூர்ணம்ஆசாரி தலைமைல 40 ஆசாரிமாருங்க சேர்ந்து இந்தக்கதவு சன்னல் எல்லாம் கோயில்ல இருக்கிற சிற்பம் மாதிரி பதவிசா செதுக்கினதா எங்கதாத்தாரு சொல்லுவாரு’, ‘திருடன் ஓட்டப் போட்டு கூட திருட முடியாதுங்கிற அளவுக்கு அவ்வளவு கனம் இந்த நிலைக்கதவு’  ‘முதல்ல தங்கத்த கடவச்சு தான் பூச அறை தளம் போடுறதா இருந்துச்சாம், திருஷ்டி நிரந்தரமாப் போய்டும்ன்னு பயந்துக்கிட்டு தான் கைவிட்டாங்களாம்’ என்று வீட்டின் வரலாற்றை வியப்போடு விவரித்தார் பட்டறை கோமான்.

‘சின்னவயசுல இந்த வீட்டு மாடி வழியா தான் துரைங்க ஏரோப்பிளேன்ல இருந்து இறங்கிவருவாங்கன்னு நான் நம்பிக்கிட்டு இருந்தேன்பா’ என்றார் அப்பாவியாக மாடத்தி பாட்டைய்யா.

‘யாரு எவரு எப்ப பேர் வச்சாங்கன்னு தெரில, இந்தியாவுக்குத் தாசுமகால் மாரி, நம்ம சாத்தனூருக்கு ஏரோப்பிளேன் வீடு ஒரு தனி அடையாளமாவே போச்சு,  எப்படியும் இன்னிக்குத் தேதிக்குக் குறைஞ்சது ஒரு அம்பது லட்சம் தேறாது’ என்று தூரத்தில் தெரியும் பெருத்த ஏரோப்பிளேன் வீட்டை அளவெடுத்தபடி தனது ஐ விரலையும் அமுக்கி அமுக்கிச் சொன்னார் நீயூஸ் பேப்பர் தவசி.

‘போப்பா சுத்தம் விவரம் புரியாத ஆளா இருக்கியே, அஞ்சு கோடி கொடுக்கிறதுக்கு நம்ம ரங்கசாமிஉடையாரே ரெடியா இருந்தாருப்பா, பரம்பரவீடுன்னு பானு கொடுக்க முடியாதுன்னுச்சு, கட்டக்கடேசில இந்த வீட்டு நிலம இன்னிக்கு இப்படியாகிப் போச்சே, என்று வாயில் புகையிலை குதப்பியபடி பாவப்பட்டு வருந்தினார் மளிகைக்கடை தேசிகன்.

பஞ்சாயத்திற்குத் தலைமையேற்கும் ரங்கசாமி உடையார் கண்மருத்துவமனையில் இருந்து வந்து சேர இன்னும் அரைமணிநேரம் எடுக்கும் என்ற தகவல் உளுந்துவடை, புதினா துவையலுடன் சொல்லப்பட்டது.

சாவடியின் வடக்குமூலையில் உடைந்த மாட்டுவண்டி அருகே கெக்கேபிக்கே என அலம்பல் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டது. நான்கைந்து நடுத்தரவயது ஆண்கள் போதையில் சிரித்துக் கொண்டிருந்தனர். ‘தெனமும் பதவிசா உருவி உருவி ஆட்டிவிட்டுருந்தாக்கூட நான் கொடுத்திருக்கமாட்டேன்பா,’ ‘கிழவன் எப்படி மயங்குனான்னு தெரியலயே’ எனச் சிரித்துக் கொண்டிருந்தனர்.  அவர்கள் தின்பதற்குக் காராச்சேவிற்குப் பதில் சிக்கன் சிக்ஸ்டி-பை கேட்பதாகச் சுந்தரழகனிடம் மாட்டுக்கார இராமர் புகார் வாசித்தார். ஏற்பாடு செய்து கொடுக்கும்படி விரட்டினார் வக்கீல் சுந்தரழகன். பஞ்சாயத்திற்கு இப்படிப்பட்ட ஆள்களும் தேவை என்பதை அவர் நன்கு உணர்ந்து இருந்தார்.  

குழந்தைப் பையன்கள் சிறுநீர் கழிப்பது போல உடலில் வியர்வை அடித்து ஊற்றியது. சட்டை போட்டிருந்த பஞ்சாயத்து உறுப்பினர் சிலர் பொத்தான்களைக் கழட்டிக் காலரைத் தூக்கி விட்டனர். சட்டை அணியாதோர் வாகாகத் தன் துண்டை வைத்து கவட்டையிலும் தலையிலும் அடிக்கடி துடைத்துக்கொண்டனர். ‘அவனுகள என்ன, இன்னும் காணல, பயந்துட்டானுகளா,’ எனச் சொட்டைச் சொக்கலிங்கம் கேட்க, ‘ஏய்..இல்லப்பா, காலனிக்கோயில் வாசல்லதான் 20, 30 பேரும் நிக்காங்க, ரங்கசாமி உடையாரு வந்ததும் வருவாங்களாம், அதுக்கு முன்னாடி தேவையில்லாம கசமுசா ஆயிடக்கூடாதுன்னு அந்த வக்கீல் இருக்கானே, எழிலு அவன்தான் எல்லாத்தையும் அடக்கி வச்சிருக்கான்னு தகவல்’ என்றார் கறிக்கடைச் சின்னமலை.

வெய்யிலால் சோர்ந்திருந்த காலனி தண்டுமாரியம்மன் கோயிலின் வேப்பமர நிழலில் சிதறியபடி பஞ்சாயத்து உறுப்பினர்கள் குறிப்பிட்ட ‘’அவனுகள்’’ அமர்ந்திருந்தனர். கோயில் திண்ணையில் உயில் பத்திரங்களைப் புரட்டிப்பார்த்தபடி அமர்ந்திருந்த வக்கீல் எழிலிடம், ஆலமரச் சாவடியில் இருந்து ஓடிவந்த சிறுவன் சிட்டு, ‘ரங்கசாமி உடையார் வர இன்னும் அரைமன் நேரமாவுமா’ என்றான். அடுத்து எழில் என்ன சொல்வார் என்பதைக் கேட்க கூட்டம் அழுத்தத்துடன் அவரைப் பார்த்தது. அனைவரும் குடிப்பதற்கு ஒருகுடம் தண்ணீர் எடுத்து வரும்படி பஞ்சம்மாவிடம் எழில் கூறினார். பஞ்சம்மா கீழத் தெருவிலிருக்கும் தன் வீடு நோக்கி விரைந்து நடந்தாள்.

தங்கையனும் அவன் நண்பர்களும் சரக்கடித்திருந்தனர் எனினும், பஞ்சாயத்திற்குள் சென்றுவிட வேண்டும் என்றெண்ணத்தில் தங்கள் மூச்சொலி கூட வக்கீல் எழிலுக்குக் கேட்டுவிடக் கூடாதென்று கோயில் வாசலில் அமைதியாக இருந்தனர். வக்கீல் எழில் அவர்களைப் பஞ்சாயத்துச் சாவடிக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்பதில் கடுமை காட்டியிருந்தார்.  கூடுதலான அமைதியும், அடக்கமும் ஒழுக்கமும் இந்தச்சனத்துக்கு ஒருவகை சாபம் போல அமைந்திருந்தாலும், அதைக் கடைபிடித்தொழுகுவது முதன்மையானதெனத் தனக்குள் ஒரு கொள்கை வகுத்து வைத்திருந்தார் எழில்.

கோயிலருகே ஓடும் சாக்கடைக் கால்வாய் குட்டைச்சுவரில் முக்காடு போட்டு, உழைத்து உழைத்துச் சாயம்போன நைட்டியோடு வேப்பமர நிழல் ஒன்றில் வக்கீல் எழில் தன்னை ஒருமுறை பார்த்துவிட மாட்டாரா என்ற நோக்கத்தோடு அமர்ந்திருந்தாள் அஞ்சலா. வக்கீல் எழில் தன்பக்கம் திரும்பினால் ஒரு புன்னகையாவது செய்யலாம். ஆனால் அவர் திரும்பவே இல்லை. அவர் சினத்தோடு இருக்க தான்தான் முக்கியக் காரணம் என்பதை அவள் அறிந்திருந்தாள். கருகரு முகத்தில் தனித்து தெரிந்த தன் முகக் காயங்களை, மாராப்பை மூடுவது போல இழுத்து இழுத்து முக்காட்டினால் மறைத்துக் கொண்டாள் அஞ்சலா.

முன்பெல்லாம் ஏரோப்பிளேன் வீட்டினைப் பார்க்க வெளிநாட்டுக்காரர்கள், சினிமாகாரர்கள், ஓவியக்காரர்கள் எனச் சிலர் எப்பொழுதாவது பரிந்துரையோடு வருவார்கள். வீட்டைச் சுற்றிக் காண்பிக்க அஞ்சலாதான் அழைத்துச் செல்வாள். ஏரோப்பிளேன் வீட்டில் சுழலும் ஒரு குளவி கூட இவளுக்குத் தெரியாமல் அங்கு கூடுகட்ட முடியாது. வீட்டின் இண்டு இடுக்கு அத்தனையும் அறிவாள். தினமும் வீடு முழுக்கத் துடைத்துக் கழுவுவாள். கலைப்பாடுகள் மிக்க அரண்மனை போன்ற அந்த வீட்டினைத் துடைப்பது அவளுக்கு மிகப் பிடிக்கும். ஒவ்வொரு அறையையும் ஒவ்வொரு பொருளையும் எப்படி எதனைக் கொண்டு துடைப்பது என்பதனை நன்கு அறிந்திருந்தாள். நைட்டியை வேட்டிபோல மேலாக்காக மடித்துவிட்டு துடைக்கத் தொடங்கினால் வேலையில் தோய்ந்து ஒன்றிவிடுவாள். தன் சாதிசனம் யாரும் இந்த வீட்டுக்குள் நுழையவே முடியாதபோது, தான் இந்த வீட்டில் வேலைக்காரியாக இருப்பதைப் பெருமையாகச் செருக்காக எண்ணி அலைவாள்.

ஒழிந்திருக்கும் மாலைநேரத்தில் தன்தோழிகள் முன்னிலையில் வீடு பற்றிய கதைகளையே கதைத்துக் கொண்டிருப்பாள். ஏரோப்பிளேன் வீட்டின் முதல் மாடியில் பித்தளைச்சங்கிலியால் சந்தனப்பலகைகொண்டு அரசன்மார்கள் அமரும் சிம்மாசனம் போல நுணுக்கமாகச் செதுக்கி ஆக்கப்பட்டிருக்கும் பெரிய ஊஞ்சல் அவளை ஒவ்வொரு நாளும் வியப்படையச் செய்யும். அதன் சந்தனப் பலகையை அடிக்கடி துடைத்துத் துடைத்து மோந்து பார்த்து அதன் நூற்றாண்டு மணத்தை நுகர்வாள்.

இவள் சொல்வதைக் கேட்டு, அந்த ஊஞ்சல் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கவேண்டும் என அவள் தோழிகள் ஆர்வமாவார்கள். அட போங்கடி உங்க காலுபட்டா அந்த வீட்டுக்கே தீட்டு எனச்சொல்லி செருக்கோடு கடந்து போய்விடுவாள்.

அழுத்தித் துடைக்கும்போது ஒருமுறை ஊஞ்சல் அசைந்து, வீட்டின் மெளனத்தைக் கொன்றுவிட, கெட்ட வார்த்தைகளில் திட்டித் தீர்த்துவிட்டார் நத்தம உடையார். வேட்டியை இழுத்துக்கெட்ட முடியாத பலவீனமான நிலையிலும் கூட கெட்டவார்த்தை பேசும்போது மட்டும் உடையாருக்கு எப்படி இவ்வளவு வன்மை வந்துவிடுகின்றதென்று வியப்பு கொள்வாள் அஞ்சலா. ‘ஊஞ்சல்ல உக்காந்திட்டியா (பறத்)தேவடியா..’எனத் தொடங்கினால் அன்றைய நாள் முடியும் வரை விதம்விதமான கெட்டவார்த்தைப் பொழிவுகளைக் கேட்டுக் கொண்டிருப்பாள்.

இருந்தாலும் ஊஞ்சலைத் துடைக்காமல் இவளால் இருக்கமுடியாது. தான் இதைத் துடைப்பதற்குத்தான் இந்தப் பிறப்பே எடுத்தது போல மீண்டும் மீண்டும் பக்குவமாகக் கடுகு எண்ணெயில் நீர் கலந்து துடைப்பாள். எப்பொழுதும் வார்னிஷ் அடித்தது போல பளபளவென ஊஞ்சலை வைத்திருப்பாள். அதிலிருக்கும் சிற்ப வேலைப்பாடுகளில் மனம் பறிகொடுப்பாள். வெறுமனே சில மணிநேரங்கள் ஊஞ்சலை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பாள். பானு அக்காவும் ரம்யாவும் இந்த ஊஞ்சலில் ஆடுவதைப் பார்த்திருக்கிறாள். ஊஞ்சலுக்கு ஏதாவது ஆகிவிடுமோ எனப் பதற்றம் கொள்வாள். அவர்கள் வீட்டு ஊஞ்சலில் அவர்கள் ஆட, தனக்கு ஏன் பொறாமை வருகிறதென, தன்னைத்தானே அடித்துக் கொள்வாள். அந்த அரசன்மார் ஊஞ்சலில் தான் ஒரு மகாராணி போல அமர்ந்து மெல்ல ஆடுவதாய் அடிக்கடி அவளுக்கு வரும் கனவினை இன்றுவரை யாரிடமும் பகிர்ந்ததில்லை.

‘பெத்தமக ரெண்டுபேரும் ஊர் உலகம் தள்ளி இருக்கோம். அப்பாவ கூட்டிட்டும் போகமுடியாது உடம்பு கண்டிசன் அப்படி, நீதான் பாத்துக்கணும், பிபி வேற, கோவம் பழியா வரும். உன் அப்பா மாரி பாத்துக்க’ என்று பானு அக்கா நத்தம உடையாரைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி, தன் கையைப் பிடித்து கண் கலங்கச் சொன்ன நாள் இன்றும் அஞ்சலாவின் நினைவில் இருக்கிறது.

அஞ்சலாவிற்குச் சொந்தமென்று அவள் அண்ணன் மட்டும்தான் இருக்கிறான். தாய் தந்தை இறந்து விட்டிருந்தனர். சிறுவயது முதலே ஏரோப்பிளேன் வீட்டில்தான் வேலை. நத்தம உடையாரின் இளையமகள் ரம்யாவுடன் பத்தாம் வகுப்புவரை ஒன்றாகப் படித்தவள் அஞ்சலா. அஞ்சலாவின் அம்மாவும் உடையார் வீட்டுப் பின்புற மாட்டுக்கொட்டாயில் சாணியள்ளி வறட்டி ஆக்கும் வேலை செய்தவள். முப்பது வருடங்களாக வேலை செய்திருந்தாலும் அம்மாவால் எரோப்பிளேன் வீட்டிற்குள் செல்ல முடிந்ததில்லை. சமையலுக்கு, துடைப்பதற்கு, கழுவுவதற்கென்று ஐந்தாறு வேலைக்காரர்கள் அன்று இருந்தனர். நத்தம உடையார் மனைவி காமாச்சிஅம்மாவுக்கு நீரழிவு வந்து காலொன்றை எடுத்து விட்டிருந்தார்கள், அந்த சமயத்தில் ஏதேனும் அவசரத்திற்கு வீட்டிற்குள் இருந்து வெளியே வர முடியாதபோது, காமாச்சியம்மா அஞ்சலாவைத் தான் உள்ளே கூப்பிடுவாள். தன் காலனியில் இருக்கும் எல்லா வீடுகளையும் இந்த ஒரு வீட்டிற்குள் அடக்கிவிடும் அளவிற்குப் பெரியவீடா என்று வாய் பிளந்தாள். காலால் எட்டுவைத்தே வீட்டினையும் காலனியையும் அளந்து பார்க்கவேண்டுமென்று அடிக்கடி நினைத்துக் கொள்வாள். அவ்வூர் காலனியில் முதன்முதலாக ஏரோப்பிளேன் வீட்டிற்குள் சென்றவள் தான்தான் என்பது தனக்குக் கிடைத்த பட்டம் போலப் பெருமையாக நினைத்துக்கொள்வாள் அஞ்சலா.

பத்தாவதுக்கு மேல் படிக்க முடியாமல் இவள் வேலைக்காரியாகத் தங்கிவிட, உடையாரின் மகள்கள் மேற்படிப்புக்காக வெளியூர் சென்றுவிட்டார்கள். மாதமொருமுறை பெற்றவர்களைப் பார்த்துவிட்டுச் செல்வார்கள். அவர்கள் வந்து செல்லும் நாள்களெல்லாம் வீடு கூடுதலாக அழுக்கடையும். எல்லாப் பொருள்களையும் பரப்பிவிடுவார்கள். கொஞ்சம்கூட வீட்டின்மேல் அக்கறையில்லாம கிடக்கிறீங்களே என்று நத்தம உடையாரும் திட்டுவார், அதான் அஞ்சலா இருக்காளே, அவ பாத்துக்குவா என்று பானு அக்கா உரிமையுடன் பேசுவாள். அப்படிப் பேசும்போதெல்லாம் இந்த நம்பிக்கைகாகவே இன்னும் இன்னும் நன்றாக வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஊற்றெடுக்கும். விடுதியில் இருந்து எப்பொழுது வீட்டிற்கு வந்தாலும் அஞ்சலாவிற்கு நைட்டியும் வாங்கி வருவாள் பானு. அவள் கொடுத்த நைட்டிகளைத்தான் இப்போதுவரை அஞ்சலா உடுத்திக் கொண்டிருக்கிறாள். இப்பொழுது போட்டிருக்கும் இந்தக் கத்தரிப்பூ நைட்டி கூட அவள் இரண்டு தீபாவளிக்கு முன் வாங்கிக் கொடுத்ததுதான்.

பஞ்சம்மா குடத்து நீரை நடுவாக வைத்து மூடி, அதன்மேல் சொம்பை வைத்தாள். தாகத்தில் கூட்டம் குடத்தை சூழத் தொடங்கியது. வக்கீல் எழிலை நேர்கொண்டு பேச இன்னும் அஞ்சலாவிற்குத் துணிவு வரவில்லை. தன்மேல் படிந்திருக்கும் பழியை எதை வைத்து துடைப்பது என்ற எண்ணத்திலே ஆழ்ந்து கிடந்தாள்.

நத்தம உடையாருக்குப் பலவருடங்களாக உடல்நலமில்லை. அருகிருக்கும் நூலகத்திற்குச் சென்று வந்த நிகழ்வுகள் கூடக் குறைந்துவிட்டிருந்தது. எப்பொழுதும் டிவியில் செய்திகள்தாம் பார்ப்பார். பட்டிமன்றங்கள் மிகப் பிடிக்கும். தன் கையில் இருக்கும் போனில் எல்லாவகையான பட்டிமன்றங்களையும் ரசித்துப் பார்ப்பார். ரங்கசாமி உடையார் மட்டுமே அரிதாக எப்போதேனும் வந்து போவார். போகும் போதெல்லாம் தன் அகன்ற புரைக்கண்களால் ஏரோப்பிளேன் வீட்டினைத் தடவிக் கொடுத்துவிட்டுச் செல்வார். ஏரோப்பிளேன் வீட்டு வேலையாட்களும் படிப்படியாகத் திருமணம், பிள்ளைகள் தலையெடுப்பு எனப் பல காரணங்களால் நின்றுவிட்டனர். இன்னும் சிலர் உள்ளூரில் வேலை செய்வது இழுக்கு என்று கருதி, வெளியூர்களில் கூலிவேலைக்குச் சென்றுவிட்டனர். வேலைக்கு ஆள் கிடைப்பதே குதிரைக் கொம்பாக மாறிவிட்ட காலமிது. நம்பிக்கை வைத்து வடநாட்டு ஆட்களை வீட்டு வேலைக்கு யாரும் எடுப்பதில்லை.  

நத்தம உடையாரை முழுமையாக இவள்தான் கவனித்துக் கொள்கிறாள். பொழுது புலர்கையில் நைட்டியை மேலுயர்த்திக் கட்டி வேலையைத் தொடங்கினால் என்றால் அதனை இறக்க, பொழுது சாய்ந்து விடும்.

மிக வசதியான வீட்டில் திருமணம் முடித்து வெளிமாநிலம் சென்றுவிட்ட மகள்களும் உடையாருக்கு மாதம் ஒருமுறையோ, இருமுறையோ போன் செய்வார்கள், இவளிடமும் பேசுவார்கள். மறக்காமல் அப்பாவை நன்றாகக் கவனித்துக் கொள்ளச் சொல்வார்கள். வீட்டுவேலை செய்வதற்கு இன்றுவரை முறையான சம்பளம் என்று ஏதுமில்லை. ‘உன் கல்யாணத்துக்கு ஒருபவுன் செயின் போடுறேன் அஞ்சலா’ என்று பானுஅக்கா பேசும்போது அன்பு கொப்பளிப்பதாய் உணர்வாள்.  அஞ்சலாவின் திருமணத்திற்குக் கொத்தாக ஏதாவது செய்வார்களெனத் தோழிமார்கள் அவளிடம் ஆசை வளர்ப்பார்கள். உடையார் வீட்டினர் அப்படி ஒன்றும் நம்மைக் கைவிட்டு விடமாட்டார்கள் என்ற எண்ணம் அஞ்சாலாவுக்கும் உறுதியாக இருந்தது.

அஞ்சலாவின் அண்ணனின் கால் ஒன்று ஒடிந்து நடக்க முடியாமல் செயலிழந்த நிலையில் கிடக்கிறான். இவளுக்கு வயது முப்பதை எட்டிக் கொண்டிருந்தது. இவளின் திருமணம் பற்றிப் பேச யாருமில்லை. பானு மட்டும்தான் அடிக்கடி திருமணம் பற்றி விசாரிப்பாள். அப்பொழுது மட்டும் ஏக்கம் கண்களை மறைக்கும். தன்னைக் காதலிப்பதாய்ச் சொல்லி சிலநாள்கள் உறவுகொண்ட குட்டியானை ரவி, அம்மா அப்பா சகிதம் பெண்பார்க்க வந்த மூன்றாம் நாளில் சாலை விபத்தொன்றில் இறந்துவிட இராசி இல்லாதவளானாள். கல்யாணம் நடக்கனும்னு விதி இருந்தா, நடக்காமலா இருக்கப்போவுது என்று தனக்குத்தானே சமாதனம் செய்து கொள்வாள். திருமண ஏக்கங்களையும் வேலை செய்தே அழிப்பாள்.

பூட்டி, பாட்டி, அம்மா, இவள் என நான்கு தலைமுறைகளாக வேலை பார்த்த வீடு, அஞ்சலாவிற்கு நேற்றுவரை அடைக்கலமாக இருந்த வீடு, இந்த ஏரோப்பிளேன்வீடு. ஆனால் இனி என்ன ஆகப்போகிறதோ என்ற கவலையில் அஞ்சலா முக்காடினைச் சரிசெய்தபடி அமர்ந்திருந்தாள்.

ஏரோப்பிளேன் வீடு சென்றதும் முதல் வேலை மலமூத்திர நாற்றமெடுக்கும் உடையாரின் படுக்கை விரிப்புகளையும், அவர் அணிந்திருக்கும் வேட்டி துண்டுகளையும் சர்ப் போட்டு, ஊறவைத்து, லைசால் போட்டு வீட்டை முழுகித் துடைப்பாள். அதற்குள் கோலை ஊன்றியபடி காலைக் கடன்களை முடித்துவிட்டு, சோபாவில் ஆற அமர்ந்து டிவி பார்க்கத் தொடங்கி விடுவார் உடையார். பக்கத்து வீட்டுப் பரிமளம் அக்கா பிளாஸ்கில் தேநீரும், சூட்டு ஏனத்தில் சிற்றுண்டியும் கொடுத்து விட்டுப்போவார்.

காமாட்சியம்மா இருந்தவரை அஞ்சலாவிற்கு உடையாரோடு அதிகம் தொடர்பில்லாமல் இருந்தது. அந்தம்மா இறந்ததும் அவரோடு அடிக்கடி புழங்க வேண்டியிருந்தது. அவர் மகள்மார்கள் வெளியேறிய பிறகு, அவரோடு மட்டுமே மல்லுக்கட்ட வேண்டியிருந்தது. நாள்தோறும் கிட்டத்தட்ட வார்த்தைப்போர்தான். கொஞ்சம்கூடப் புரிந்து கொள்ளாமல் நசநச என்று கத்தியபடியே இருப்பார். பொருளை வைத்த இடம் மறந்துவிட்டு வேறு இடத்தில் தேடிக் கொண்டிருப்பார். அதற்குள் அதனைக் காணோம் நீதான் திருடினயா’ வெனத் தையத்தக்கா குதிப்பார். அதைத்தேடி எடுத்துக் கொடுத்ததும் பதிலேதும் சொல்லாமல் அதைப்பிடிங்கிக் கொண்டு முறைத்தபடி சென்றுவிடுவார். சில நேரங்களில் ஏரோப்பிளேன் வீட்டுப் பக்கமே செல்லக்கூடாது என்று வைராக்கியம் பிடித்து நின்றாலும், ஆள் அனுப்பி வரவழைத்து விடுவார் உடையார்.  அப்போதும் வீட்டுல தூரமா இருக்கியா ஏன் வரல’ என்று ஏசுவார்.

முன்பொருமுறை உடையார் அஞ்சலாவைக் கெட்ட வார்த்தைகளில் ஏசுவதைக் கேட்ட, அவள் அண்ணன் கார்மேகம், குடித்துவிட்டு உடையாரை அடிக்கப் போவதாக அலம்பல் செய்து கொண்டிருந்தான். அப்படி ஏதாவது செய்தால் உணவில் விசம் வைத்துக் கொன்று விடுவேனென அவனை மிரட்டி வைத்திருந்தாள்.

ஆத்திரம் குறையாத நாள்களிலெல்லாம் அவள் அண்ணன், ஊரின் வடக்குப்புறமூலையில் இருக்கும் உடையாரின் தென்னத்தோப்பில் இரவில் இளநீர் திருடி மதுவில் கலந்து குடிப்பான். உடையார் தோப்பில் அமர்ந்து குடிப்பது, ஒருவகையில், உடையாரை இழிவுபடுத்துவது போல இருந்தது அவனுக்கு. வெறியோடு நிலத்தைக் குத்திக்குத்தி குடிப்பான். தன் சொந்தத்தோப்பு போலத் தன்நண்பர்களையும் அழைத்துச்சென்று மதுகுடிக்கும் இடம்போல அந்தத்தோப்பைப் பயன்படுத்தினான். இச்செய்தி நத்தம உடையார் காதுகளுக்குச் செல்ல, அவர் காவல்நிலையத்தில் ரங்கசாமிஉடையார் மூலம் புகார் கொடுத்துவிட்டார். அஞ்சலாவையும் அசிங்கமாகத் திட்டித் தீர்த்தார்.  கார்மேகம் தோப்பில் இளநீர்திருடிய ஒருநாளில் காவல்துறை அவனைப் பிடிக்கப் பாய்ந்தது. மரத்தில் இருந்து விழுந்தவனின் இடக்கால் நடமாடமுடியாமல் முறிந்துவிட்டன.

எவ்வளவோ கெஞ்சியும், பானுஅக்கா பரிந்துரை செய்தும் புகாரைத் திரும்பப்பெற உடையார் மறுத்துவிட்டார். மாவுக்கட்டுக்காலோடு வீல்சேரில் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டான். திரும்பிவரும்போது அந்தக்கால் இல்லாமலேயே வந்தான். இந்த வக்கீல் எழில் மட்டும் இல்லாவிட்டால் இவனை இன்று உயிரோடு பார்த்திருக்க முடியாது. ஜெயிலில் அழுகிப்போன கால்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அஞ்சலாவின் அண்ணனை, முக்கிய அதிகாரிகளுடன் பேசி, உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கச் செய்து உயிரோடு மீட்டார். அண்ணன் செய்த திருட்டுக்குப் பிறகும் நத்தம உடையார் தன்னை ஏரோப்பிளேன் வீட்டில் தொடர்ந்து வேலைசெய்ய அனுமதித்ததே கோடி புண்ணியம் என்று நினைத்துக்கொண்டாள். அஞ்சலா முன்னிலும் விஸ்வாசத்தோடு வேலை செய்தாள்.

இன்று நடக்கும் பஞ்சாயத்திற்குத் தானும் வருவேன் என்று கட்டை ஊன்றி அடம்பிடித்து வந்த அஞ்சலாவின் அண்ணனை எழில்தான் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். பணமில்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வாதாடி நீதி பெற்றுத்தரும் இந்த நல்ல மனிதர் வக்கீல் எழிலின் பேச்சை மீறி இப்படிச் செயல்பட்டு அவருக்கு மனச்சங்கடத்தை ஏற்படுத்திவிட்டோமேயென அஞ்சலா வருந்தினாள்.

வெய்யில் உச்சம் ஏறி, எறும்புகள் கூட நடமாட்டத்தை நிறுத்தியிருந்தது. பஞ்சாயத்திற்கு ரங்கசாமிஉடையார் வந்து விட்டாரா எனப் பார்த்து வர விளையாடிக் கொண்டிருந்த சிட்டுவை மீண்டும் ஆலமரச்சாவடிக்கு அனுப்பிவைத்தார் எழில்.

தன்னால்தானே இன்று இவ்வளவு பெரிய பஞ்சாயத்து என்பது அஞ்சலாவிற்கு எண்ணிப்பார்க்க எண்ணிப்பார்க்கக் கூசியது. திருமணத்திற்குச் சேர்த்து வைத்திருந்த ஆயிரம்ரூபாய் பட்டுப்புடவையில் தொங்கிவிடலாமா என்றுகூட நேற்று நினைத்திருந்தாள். உடலில் இருக்கும் காயங்களை விட மனக்காயம் அவளுக்கு உறுத்தி வலித்தது. தன்னை நல்லவளாக நிறுவிய பிறகு சாகலாமென்று தற்கொலை எண்ணத்தைத் தள்ளி வைத்தாள்.

நத்தம உடையார் இப்படிச் செய்வாரென்று கனவிலும் யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஏன் இப்படிச் செய்தார் என்று அஞ்சலாவுக்கும் விளங்கவேயில்லை.

பேச்சுமூச்சு நடமாட்டமில்லாமல் இறந்து போவதற்குச் சிலநாள்கள் முன்பு கூட ,உடையார் எங்கே எழுந்து வந்து நம்மைத் திட்டிவிடுவாரோ என்று பயந்துபயந்துதான் அவருக்கு மல மூத்திரம் கழுவித் தூய்மை செய்தாள் அஞ்சலா. சாகும்போதும் உடையார் தன்னை முறைத்துக் கொண்டே சாவது போலத்தான் அவளுக்குத் தோன்றியது. பின்பு உடையார் ஏன் இப்படிச் செய்தார்? என்பதே புரியாத கேள்வியாய் சுழன்றடித்தது.

உடையார் இறந்தபிறகு, இனி இவ்வீட்டில் என்ன வேலை, சோற்றுப்பாட்டுக்கு வழி ஏது, கூலிவேலைக்குத் தான் செல்ல வேண்டுமா, யாரில்லாவிட்டாலும் வீட்டைப் பானுஅக்கா தன்னைத்தான் பார்த்துக்கொள்ளச் சொல்வாளென்று தானே எதிர்பார்த்திருந்தாள். மகள்கள் இருவரும் குத்துக்கல்போல இருக்க, உடையார் இப்படிச் செய்வதற்கான காரியத்தை அவளால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை.

ஏரோப்பிளேன் என்று சிறப்புப்பெயரால் அழைக்கப்படும் இந்தப் பெரியவீட்டை – அஞ்சலாவிற்கும், ஊரின் வடக்குப்புறமூலையில் இருக்கும் நாலுஏக்கர் தென்னந்தோப்பை அஞ்சலாவின் அண்ணன் கார்மேகத்திற்கும் உயில் எழுதிவைத்து செத்திருந்தார் நத்தம உடையார். மற்ற நகை உள்பட அசையும் சொத்துகளை இரண்டு மகள்களுக்கும் சமமாகப் பிரித்து எழுதி வைத்திருந்தார்.

உயில் படித்துக் கொண்டிருக்கும் வேளையில் அஞ்சலா கிணற்றுமேட்டில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள். பானுஅக்கா அவளின் முடியைப்பிடித்து இழுத்து, நைட்டி கிழிய ரத்தம் வர அடித்து, கெட்டவார்த்தையில் ஏசி, வீட்டைவிட்டு, தெருவைவிட்டு வெளியே தள்ளினாள். என்ன நடக்கிறதென்றே தெரியாமல் கண்ணீர்விட்டபடி அஞ்சலா வீட்டிற்கு வந்து கதறி அழுதாள்.

கிழவனை என்னத்த செய்து மயக்கினாள் என்பதுதான் சிலநாள்கள் தலைப்புச்செய்தியாக ஊருக்குள் ஓடிக்கொண்டிருந்தது. ‘ஆயிரம் ரெண்டாயிரம் இரக்கப்பட்டுக் கொடுக்கலாம், காலம் முழுக்க வேலை பார்த்திருக்கா, மல மூத்திரம் கழுவியிருக்கா, ஏன் ஒரு தங்கச்சங்கிலி கூட எடுத்துப் போட்டிருக்கலாம் ,தப்பில்ல, ஏன் வீட்டையே எழுதிக் கொடுத்தாரு? என்று விசாரணைகள் எங்கும் உலவின. ஊம்பிப் புழைக்கிறதுன்னா இதுதான் போல என்று பொருமினர் பலர். ‘மயிரக்குடுப்பாங்க வீட்ட(பறத்)தேவடியாளுக்கு’ ‘எந்தச்சாதி, எந்தச் சாதித் தெருவுல வந்து வாழலான்னு பாக்குறது’ என்று பேச்சுகள் மிகச் சாதாரணமாகக் கேட்டது.   அடிப்பட்ட இடத்திற்கு மருந்துபோடக் கூட வெளியே வர முடியாமல் அஞ்சலா முடங்கிக்கிடந்தாள்.

நத்தம உடையாரின் உயிலைப் பிரித்துப் படித்தநாளில் இருந்து இந்த நொடி வரை ஏரோப்பிளேன் வீட்டிற்குள் அஞ்சலாவால் செல்ல முடியவில்லை. பரபரவென்று வேலைசெய்தவளால் சும்மா இருக்க முடியவில்லை. சுவரைப்பிரிந்த பல்லியைப்போல வீட்டைப் பிரிந்து உழன்றாள்.

செய்தி எப்படியோ வக்கீல் எழிலின் காதுகளுக்குச் சென்றது. உயிலின் நம்பகத்தன்மையைச் சோதித்து வழக்குத்தொடுக்கலாம் என்றார்.  அஞ்சலாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். உரியமுறையில் உடையார்வீட்டில் பேசப்போன வக்கீல் எழிலின் மீதும் சாதிய வசைகள் தெறிக்கப்பட்டன. வழக்குபோட்டால் தலைபோய்விடுமென்ற மறைமுக மிரட்டல் பதிலாய் வந்தது.

என்ன நடந்தாலும் அஞ்சலாவைச் சம்மதிக்கவைத்து வழக்குதொடுப்பதில் உறுதிகாட்டினார் எழில். செய்தி மனிதஉரிமைக்குழு வரை கசிய, அடக்கி வாசிக்கலாயினர் உடையார் வீட்டினர். நத்தம உடையாரின் குற்றஉணர்வே அஞ்சலாவிற்கும் அவள் அண்ணனுக்கும் சொத்து எழுதிவைக்கக் காரணம் என்பதைத் தெள்ளத்தெளிவாக உணர்ந்திருந்தார் எழில். கோர்ட்டில் இதை நிறுவுவது மிக எளிது என்பது எழிலுக்கும், உடையார் வீட்டு வக்கீல் சுந்தரழகனுக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது.

சுந்தரழகனும் பானுவும் நீதிமன்றம் செல்லாமல் ஊர்ப்பஞ்சாயத்து மூலம் தீர்த்துக்கொள்ளலாம் என்று பலவழியாகத் தூது விட்டார்கள். முடியாது என்று ஒற்றைச்சொல்லில் மறுத்துவிட்டார் எழில்.

பக்கத்து வீட்டுப் பரிமளம்அக்கா மூலம் அஞ்சலாவுக்குத் தொடர்ந்து தூது அனுப்பி உள்ளூர் பஞ்சாயத்துக்குச் சம்மதம் வாங்கினாள் ரம்யா. இதனால்தான் இன்று பஞ்சாயத்து கூட்டப்பட்டு, ஒப்புக்குக் காவல் துறையினரையும் வரவழைத்து நிறுத்தியிருக்கின்றனர்.

ஏன் இந்த அஞ்சலா பஞ்சாயத்திற்கு ஒத்துக்கொண்டாளென அவள்மீது கோவமாக இருந்தார் எழில். உச்சநீதிமன்றமே நம்பகத்தன்மை இழந்து வருகிற இந்தக்காலத்தில், ஆண்டைசாதிப் பஞ்சாயத்துகளில் நேர்மையை எதிர்பார்க்க முடியுமா என்ற யதார்த்த விரக்தியில் இருந்தார் எழில்.

எழில், முன்பே அஞ்சலாவிடம் பேசிப் பேசித் தோற்றுப் போயிருந்தார். உழுகிறவர்க்கே நிலம் சொந்தமென்றால், வீட்டைத் தாய்போலப் பார்த்துக் கொண்டவளுக்கு வீடு சொந்தமில்லாமல் ஆகிவிடுமா என்ன, முன்மாதிரிகளாய் சமூகத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மீது கல்லெறிகள் கட்டாயம் விழத்தான் செய்யுமென்று எடுத்துக் கூறியும் அஞ்சலா மறுத்துவிட்டாள். வீடு தனக்குச் சொந்தமென்பதை அஞ்சலாவால் கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சோற்றில் சாணத்தைக் கலந்ததைப்போல ஒவ்வாமையாக உணர்வதாய் எழிலிடம் சொல்லியிருந்தாள்.

எழில் பஞ்சாயத்திற்கே வரக்கூடாதென்று தான் கருதியிருந்தார். கடேசி வாய்ப்பாக ஏதேனும் அற்புதம் நடந்துவிடாதா என்ற ஏக்கத்திலும், எளியமகள் மேலும் ஏமாற்றப்பட்டு விடக்கூடாதென்று அக்கறையிலும் வேறுவழியில்லாமல் பஞ்சாயத்துப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.

சிட்டு ஓடிவந்து ரங்கசாமி உடையார் ஆலமரச்சாவடிக்குப் பெரிய கறுப்புக் கண்ணாடி அணிந்து வந்திருப்பதாகக் கூறினான். வேர்வையைத் துடைத்தபடி எல்லாரும் எழுந்தனர்.

போலிஸார் தூரத்தில் செவன்அப் குளிர்நீர் குடித்துக் கொண்டிருக்க, பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்தது.

‘நத்தம உடையார் வச்சிருந்தார்னே கூட எடுத்துக்கலாம்பா, அதுக்காகக் கோடி ரூவாக்கு மேல மதிப்புள்ள பரம்பரவீட்டக் கொடுத்திர முடியுமா’என்றார் பஞ்சாயத்தில் ஒருவர். சொத்து அவரோடதில்ல, பரம்பரச் சொத்து, எழுதி வைக்கிற அதிகாரம் நத்தம உடையார்க்கே இல்ல, அதனால உயில் செல்லாதென்றார் இன்னொருவர். தனக்கு அதிகாரமில்லன்னு தெரிஞ்சும் எழுதியிருக்கிறதால – அந்தப்பறச்சி தான் உடையார மயக்கி எழுதி வாங்கி–என்று இன்னொருவர் கூறிக் கொண்டிருந்தபோது பாதியில் கத்தியபடியே எழுந்தாள் அஞ்சலா.

‘ஒரு நிமிசங்கய்யா, பெரியவுக பேசும்போது நடுவுல பேசுறதுக்கு என்னப் பொறுக்கனும். மனசுல இருக்குறத சொல்லிப் போறேன் சாமி’.

எல்லோரும் அவள் சொல்லப்போவதை ஆவலாய்க் கண்ணுற்றார்கள்.

‘அந்த வீட்டு அரசன்மார் சந்தன ஊஞ்சல்ல நான் ஆடுறதா இந்தப்பாவி அடிக்கடி கனவு கண்டிருக்கேன்., உண்மைதான் மறைக்கல சாமி, ஆனா அப்படிப்பட்ட கனவு வர்றது கூட எவ்வளவு பெரிய தப்புன்னு, அந்த கனவு வந்த ஒவ்வொரு நாள்லயும் எனக்கு நானே சூடு வச்சுக்குவேன், பாருங்க சாமி, பாருங்க சாமி’ என்று தன் உடைகளைக் கழற்றி சூட்டுத்தழும்புகளைக் காட்டினாள்.முலைக்கும் முதுக்குக்கும் இடையேயான கருத்தக் குறுக்குப்பகுதியில் எண்ணிக்கையில்லாக் காய்ந்து போன தழும்புகள் ஒழுங்கில்லாமல் கிடந்தன. கூட்டத்தினர் அனைவர் முன்பும் வீறாப்புடன் தழும்புகளைக் காட்டினாள். மெல்ல உடைகளை மீண்டும் அணிந்துகொண்டு ஓரமாகச் சென்று நின்றாள். ஒரு பெரிய அழுத்தத்தில் இருந்து விடுபட்டது போல அவள் கண்கள் ஒளியேறி நின்றது.

வேறொரு வழக்கு தொடர்பாகச் சிலமாதங்கள் கழித்து சாத்தனூர் காலனிக்கு வந்த எழில், அஞ்சலா பற்றி விசாரித்தார். ‘திருச்சி பைபாஸ் ரோட்டு பாலம் கட்டுற இடத்துல கூலிவேல செய்றா’ – என்ற பதில் வந்தது. கூடவே – ‘எங்க பாலம் கட்டி முடிச்சோடனே, பாலத்த எழுதி வாங்கிருவாளோன்னு அந்தக் காண்ட்டிராக்டர் பயந்து நடுங்கிக் கிடக்காரு – என்று பகடியாகச் சிரித்தனர். எழிலால் சிரிக்க முடியவில்லை. மனம் கனத்துப் போனார். இந்த அறியாமைப் பகடிச்சிரிப்பொலியில் பல நூற்றாண்டுகளின் ஆண்டைத் திமிர் மணம் ஊடுருவியிருப்பதை எழில் உணர்ந்திருந்தார்.

இன்று வரை அந்த ஏரோப்பிளேன் வீடு எந்தவொரு ஆள்களின் புழக்கமில்லாமல் ஒளியிழந்து கிடக்கிறது.

***

பாக்கியராஜ் கோதை – ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த இவர் தற்பொழுது சென்னையில் திரை துறையில் பணியாற்றி வருகிறார்.

ஜில் ப்ராட்லி

2

பிரமிளா பிரதீபன்

‘என் பெயர் ஜில் ப்ராட்லி என்பதை நீ நம்புவதற்கு என்னுடைய கபிலநிற கண்களும் பளீர் வெள்ளை நிறமுமே காரணமாய் இருப்பதை நீ ஒத்துக்கொள்கிறாயா?’

சிவநேசனை வீடியோ தொடர்பில் அவளாகவே அழைத்த முதலாவது முறை இது. ஏறக்குறைய அவளை படங்களிலேயல்லாமல் நேரில் பார்க்கும் முதற் சந்தர்ப்பமும் இதுதான்.

ஜில் ப்ராட்லி இளஞ்சிவப்பு நிறத்தினாலான சட்டையொன்றை அணிந்திருந்தாள். கழுத்தில் மெல்லிய சங்கிலியொன்று கிடந்தது. தலைமுடி விரித்து விடப்பட்டிருந்தது. மெலிதாய் லிப்ஸ்டிக் போட்டிருந்தாள். முகப்புத்தக படங்களில் பார்ப்பதை விடவும் அழகாய் தெரிந்தாள். தன் வயதை அவள் ஒருபோதும் சொல்லியதில்லையென்றாலும் முப்பத்தைந்தை தாண்டியிருக்க முடியாத தோற்றமாயிருந்தது.

தொடர்ந்தும் அவள் ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருந்தாள்.

‘உன்னை என் நெருங்கிய நண்பனாக்கி கொண்டதற்கான காரணம் எதுவென்று தெரியுமா?’

அவன் இல்லையென்பதாய் தலையாட்டினான். 

‘நீ இப்போது விபாகரன் இருக்கும் அதே கண்டத்தில் வசித்துக்கொண்டிருக்கிறாய். தவிர அவன் பேசும் அதே மொழியை அதே தொனியில் பேசுகிறாய்’

சிறிது மௌனத்திற்குப்பின் அவளே தொடர்ந்தாள்.

‘இப்போது விபாகரன் யார் என்பதை நீ யோசிப்பாய். அல்லது ஊகித்திருப்பாய். அப்படி ஊகித்திருந்தாயானால் அது சரிதான். அவன் என் முன்நாள் காதலன்.’

அவளது நா குலறியது.

‘நீ குடித்திருக்கிறாயா ?’ என்றான்.

அவள் சிரித்தாள்

‘ஆமாம் இது இரண்டாவது முறை’

‘முதலாவதாக எப்போது குடித்தாய்?’

‘என் விபாகரனை பிரிந்தபோது. ஆனால் அப்போது குடிப்பதற்கு விஸ்கியோ பியரோ எதுவும் கிடைக்கவில்லை. பண்டார மாமாவிடம் கசிப்பு வாங்கி குடித்தேன்.’

சிவநேசனுக்கு அந்த விபாகரனை பிடிக்கவில்லை. அவன் ஏன் பிரிந்தான் எனும் கதையை கேட்கும் விருப்பம் துளிதானும் இருக்கவில்லை.

‘நீ ஓய்வெடு. நாளை பேசிக்கொள்ளலாம்’ என்றான்.

‘இல்லை இன்னும் பேசவேண்டி இருக்கிறது. நீயும் அடிக்கடி என்னை பற்றி சொல்ல கேட்டிருக்கிறாய் இப்போதுதான் சொல்ல வேண்டுமென்று தோன்றுகிறது.’

சிவநேசனுக்கு ஜில் ப்ராட்லி மீது அளவுகடந்த விருப்பம் இருந்தது. அவள் மிகச்சிறப்பாக ஓவியம் வரையக்கூடியவளாக இருந்தாள். அவளது எண்ணிக்கையற்ற இரசிகர்களில் சிவநேசனும் ஒருவனாக இருந்தானெனினும் அதைத்தாண்டி அவள் அவனிடம் நட்பை பேணுமளவிற்கு சில அதிகபட்ச தகுதிகளும் அவனுக்கு இருந்தன.

சிவநேசன் ஒரு கவிஞனாயிருந்தானென்பதை விட ஆங்கிலம் தெரிந்த தமிழ் கவிஞனாக இருந்தானென்பதையே அவள் அதிகமாய் விரும்பினாள்.

இருவருமாய் பரஸ்பரம் தங்களது படைப்புகளை விமர்சித்துக் கொள்வார்கள். நீண்ட நேரமாய் கலை, இலக்கியம், ஓவியம் பற்றியெல்லாம் குறுஞ்செய்தியூடாக விவாதிப்பாரர்கள். என்றாலும் இலக்கியம் தாண்டியதொரு வெளியை ஒருபோதும் அவர்கள் தொட முயற்சித்ததில்லை.

‘நீ ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?’ என ஒரே ஒரு தடவை ஜில் ப்ராட்லி அவனிடம் கேட்டிருக்கிறாள்.

திருமண வாழ்வு எனக்கு உடன்பாடான ஒன்றல்ல என்பதுடன் உச்சளவிலான ஒரு சுதந்திர வாழ்வையே நான் விரும்புகிறேன் என்று சிவநேசன் கூறியிருந்தான்.

அவன் யாழ்பாணத்தை சேர்ந்தவன் என்பதை அவ்வப்போது அவன் தமிழில் பேசும் போது அறிந்துக்கொண்டாளேவொழிய அவனது சொந்த விபரங்களை தேடியறிய வேண்டுமென அவள் நினைத்ததேயில்லை.

ஆனால் சிவநேசனுக்கு அவளை ஆழமாக அறிந்து கொள்ள வேண்டுமென்பதில் அதிக ஆர்வமிருந்தது.

‘நீ ஒரு சிங்களத்தியாய் இருந்துகொண்டு இப்படி வடிவாய் தமிழ் கதைக்கிறாயே’ என்று ஆச்சரியப்பட்டான். ‘எனக்கும் சிங்களம் சொல்லித்தருகிறாயா’ எனக் கேட்டான்.

ஓவ்வொரு முறை பேசும் போதும் சிங்களவர்கள் மீதான தனது அதீத வெறுப்பை கொஞ்சம் அதிகமாகவே கக்கிவிட்டு பின் அது பிழையோ என யோசிப்பான்.

சிங்களம் என்ற ஒற்றைச்சொல்லே மிகக்கசப்பானதாய் இருந்த போதிலும் ஜில் ப்ராட்லியை அவனுக்கு அதிகமாய் பிடித்திருந்தது. அவள் தனது பரம்பரைப் பெயரான அனோமா முணவீர என்பதை ஜில் ப்ராட்லி என மாற்றி கொண்டதற்கான காரணம் எதுவென சரியாக தெரிந்திருக்காத போதிலும், அது அவனை மிக மகிழ்ச்சிப் படுத்துவதாயிருந்தது.

ஜில் ப்ராட்லி பேசும் போது கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றும். அவளது தெளிவான ஆங்கில உச்சரிப்பும், அரைக்குறையான தமிழ் உச்சரிப்பும் அவளை அதிகபட்ச அழகியாக காட்டும். 

அவள் ஓவியங்கள் பற்றியும் பல்வேறு ஓவியர்கள் பற்றியும் அதிகம் அறிந்தவளாய் இருந்தாள். சல்வடோர் டாலியின் ஓவியங்களைப் பற்றி அடிக்கடி பேசத் தொடங்கியிருந்தாள்.

அவரது ஓவியங்களை பார்க்கும் ஒவ்வொரு முறையிலுமாயும் தான் அதிசயித்து போவதாய் கூறுவாள். டாலியின் ஓவியங்கள் கனவு நிலைப்பட்ட உலகை உருவாக்குவதாயும் யதார்த்த உலகில் கண்டறியாத மிகைப்படுத்தப்பட்ட உருவங்கள் போன்று தோற்றமளிப்பதாகவும் எண்ணிக் கொண்டிருந்தாள். அவை கனவில் தோன்றுவதையொத்த மாயத்தன்மை உடையதென்றாள்.

மேலும் சர்ரியலிச வகையான ஓவியங்களே அவளை அதிகம் கவர்ந்திருப்பதாகவும் அத்தகையதொரு யுக்தியையே தானும் பின்பற்ற விரும்பவதாகவும் சொல்வாள். கனவு வசப்பட்ட நிலையை வெளிப்படுத்தும்  அத்தகைய கவிதைகளை எழுதும்படி சிவநேசனையும் கேட்பாள்.

அவனும் மறுக்காமல் சரியென்பதாய் அப்போதிலெல்லாம் தலையாட்டி வைப்பான்.

அவளது எல்லா விளக்கங்;களுக்கும் பின்னுமாய் வெளித்தெரியாமல் தொக்கு நிற்குமொரு ஏக்கம் நிரம்பி வழிவதாகவே அவனுக்குத் தோன்றும். ஆனாலும் ‘நீ என்னை விரும்புகிறாயா?’ என்று சிவநேசன் அவளிடம் இதுவரையிலும் கேட்டதில்லை.

வெறுமனே விரும்பி பின் விலகுதலில் அவளுக்கு பிடிப்பில்லாமல் இருக்கலாம். அதையும் மீறி கேட்டுவிடலாமென்று எண்ணிக்கொண்டாலும், திருமணம் செய்து கொள்கிறாயா என அவள் பதிலுக்கு கேட்டுத் தொலைத்தால்…! அந்த பயமும்தான்.

அவள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவளாக இருந்ததுடன் அதனை சிவநேசனிடம் மட்டுமே வெளிப்படுத்த விரும்பினாளென்பதையும் சில பொழுதுகளில் அவன் புரிந்திருந்தான்.

தான் ஒரு ஓவியராக உருமாறாமல் போயிருந்தால் மனநலவிடுதியில் தீவிர நோயாளியாக சேர்க்கப்பபட்டிருப்பேன் என்று பிரைடா காலோ தன்னுடைய நாட்குறிப்பில் கூறியிருக்கிறாளாம். சொல்லப்போனால் நானும் அவளையொத்தவள்தான் என்று ஜில் ப்ராட்லி பெருமை வழிய பலதடவைகள் அந்த ஓவியருடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்வாள்.

வேறொரு சந்தர்ப்பத்தில்,

‘அநேகமான ஓவியர்கள் மனநிலை பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களாகவே இருப்பதை போல நானும் என்றாவது ஒருநாளில் அப்படியொரு முடிவை எடுப்பேனோ தெரியவில்iலை’ என்றாள்.

இதையெல்லாமும் தாண்டி தமிழ்மொழி மீதும் தமிழர்கள் மீதும் மிகுந்த  வாஞ்சையுடன் இருக்கிறாளென்பதையும், அளவு கடந்ததொரு விதத்தில் சிவநேசனை அவள் நேசிப்பதையும் தன் செயல்களினூடாக வெளிப்படுத்த விரும்புபவளாகவே அவள் தெரிந்தாள்.

இப்போதும் ஜில் ப்ராட்லி அதே போன்றதான ஒரு குழப்ப நிலையிலேயே தன்னுடன் பேசிக்கொண்டிருப்பதாய் எண்ணிக்கொள்ள முடியுமாயிருந்தாலும் குடித்துவிட்டு பேசுமளவிற்கான தற்போதைய தேவையென்ன என்பதனை அவனால் யோசிக்க முடியாமலிருந்தது. இச்சந்தர்ப்பத்தில் அவளுக்கு ஆறுதலளிக்க, அவள் பேசிக்கொண்டிருப்பதை கேட்பதொன்றே போதுமானதென நினைத்தான்.

‘சரி நீ விரும்பிய எதுவானாலும் என்னிடம் பேசலாம்’ என்றான்.

எதை குடித்திருக்கிறாள்  என கேட்க வேண்டும் போலவும் கொஞ்சம் தயக்கமாகவும் இருந்தது. நேரம் செல்ல செல்ல ஊர்ந்து பரவும் அந்த போதை அவளது கண்களை தொட்டு சொருக வைக்குமொரு தோற்றத்தை அளித்தது.

அவள் இடைக்கிடை சத்தமாக சிரித்துக்கொண்டாள். அப்படி சிரிக்கும் போது கையில் வைத்திருந்த அவளது ஐபேட் அதிர்ந்து, அறையில் கொழுவப்பட்டிருந்த விசித்திரமான ஓவியங்கள் சிலவும் சுழன்றுக்கொண்டிருந்த மின்விசிறியும் தென்பட்டன. அந்த ஓவியங்களில் சில வரைந்து  முடிக்கப்படாமல் அரைக்குறையாக மாட்டி வைத்திருப்பதாய் இருந்தது.

‘நான் அழகாய் இருப்பதால்தான் என்னை உனக்கு பிடித்திருக்கிறதா சிவநேசன்?’

‘முழுதாய் அப்படியென்று சொல்லிவிட முடியாது. உன் ஓவியங்களையும் நான் இரசிக்கிறேன்’

‘என்னுடைய படங்களை நீ இரசித்ததே இல்லையா?’

அவன் சிறிது தயங்கி பின் மெதுவாக கூறினான். ‘உன் கண்களையும் உதடுகளையும் இரசித்திருக்கிறேன்’

அப்படி அவன் கூறும்போது அவளை பார்க்கத் துணிவற்று தலையை திருப்பிக் கொண்டான்.

அவள் இப்போது, தான் கனவிலும் நினைக்காத ஒரு அடியை எடுத்து வைப்பதில் தனக்கு திறமை உள்ளதென நம்பியவளாய் அதீத பீடிகையற்று சடாரென்று கேட்டாள்.

‘என்னை முழு நிர்வாணமாக பார்க்க விரும்புகிறாயா?’

சிவநேசன் ஒருகணம் அதிர்ந்து மீண்டான். அளந்து… நிதானித்து… ஒவ்வொரு சொல்லாய் உதிர்த்து பேசும் இவளிடமிருந்தா இக்கேள்வி வந்தது..!

‘ஜில் நீ நிதானமாக இல்லை. நாளைக்கு…’

அவன் முடிக்க முன்பேயே ‘சரியாக யோசித்து சொல் வேண்டுமா…? வேண்டாமா…?’ என்றாள்.

சிறுநேர தாமதத்தையும் விரும்பாதவனாய் உடனே ‘வேண்டாம்’ என்றான்.

‘காரணம் கேட்க நான் விரும்பவில்லை ஆனால் நீ என்னை காதலிக்கிறாய் என்பதை நான் அறிவேன்’

‘சரி விபாகரனை ஏன் பிரிந்தாய்?’ சிவநேசன் அந்த கதையை மாற்றிட முயற்சித்தான்.

ஒரு தடவை ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டுக்கொண்டாள்.

‘அவன் தமிழன் என்பதால்… அப்படியில்லையென்றால் அவன் யாழ்பாணத்தான் என்பதால்’

‘என்றாலும் நீ ஓடி போயிருக்கலாமே?’

‘என் தந்தை தேடிப்பிடித்து எங்களை எரித்து சாம்பலாக்கியிருப்பார். இல்லையேல் என் குடும்பத்துடன் சேர்த்து வீட்டையே எரித்திருப்பார்.’

‘தொடர்ந்தும் அவனை காதலித்தபடியே இருந்தாயா?’

‘அவன் அப்போது உயிரோடு இல்லையென்று நினைக்கிறேன்’

‘நினைக்கிறேனென்றால்…!’ சிவநேசனுக்கு புரியவில்லை.

‘என் திருமணத்திற்கு பின் அவன் புலிகளின் இயக்கத்திற்கு போகப் போவதாய் தகவல் அனுப்பியிருந்தான்’

ஓரளவிற்காய் அவள் சொல்லவிழைவதை சிவநேசனால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

‘அப்போது இறுதி யுத்த காலமென நம்பப்பட்டது. அநேகமாக மொத்த ஈழமும் தம்வசப்பட்டுவிட்டதென எங்கள் இனமே கொண்டாடி மகிழ்ந்து ஊர் மக்களுக்கெல்லலாம் பாற்சோறு விநியோகிக்கத் தொடங்கியிருந்தோம்’

சிவநேசனால் அச்சூழ்நிலையை அப்படியே உணர முடிந்தது. அவளது கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

‘என் தந்தை அந்நிகழ்வுகளுக்கெல்லாம் தீவிரமாக தலைமை தாங்கியவர். உங்கள் தலைவனின் உருவத்தை பொம்மையாக செய்து எங்கள் வீட்டு முற்றத்ததில்தான் எல்லோருமாய் ஒருமித்து எரித்து பஸ்மமாக்கினார்கள். அந்த உருபொம்மை எரிந்து முடியும் வரை சுற்றி சுற்றி ஆடி களித்திருந்தார்கள்.’

‘நீயும் சந்தோஷப்பட்டாயா?’

‘அதுபற்றி எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் விபாகரன் அந்த யுத்தகளத்தில் இருந்திருப்பான் என்பதை தெரிந்து வைத்திருந்தேன்… வெளியே காட்டிக்கொள்ள முடியாமல் வெம்பித் தவித்தேன்’.

ஏறக்குறைய அவள் பேசிக்கொண்டே அழத் தொடங்கியிருந்தாள். கண்களை ஒரு துவாயால் மென்மையாய் ஒற்றியெடுத்தபடி மீண்டும் தொடர்ந்தாள். அவளது கண் மை இலேசாக கலைந்திருந்தது. 

‘எங்கள் கிராமமே பட்டாசு சத்தம் அதிர கும்மாளமிட்டது. தெமலு பராதாய்… தெமலு பராதாய்… என்று கோஷமிட்டபடி கொண்டாடிக் கொண்டிருந்தனர். மகிழ்ச்சியை வெளிப்படுத்த தயங்கிய ஒருசில அயலவர்களை நீ புலியா? என்று கேட்டுக் கேட்டு அடித்து நொறுக்கினார்கள்.’

‘உன் சூழ்நிலை தெரிந்திருந்தும் நீ ஏன் விபாகரனை தெரிவு செய்தாய்?’

சிவநேசன் அவளது பதிலை ஆர்வமாய் எதிர்பார்த்தான். அவள் அதற்கான பதிலை தவிர்த்தவளாய் தன்பாட்டில் பேசிக் கொண்டிருந்தாள்.

‘அப்போது முழு நாட்டையும் தாமே உரிமையாக்கி கொண்டுவிட்டதாக அறிவித்திருந்தார்கள். என் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. என் கொந்தளிப்புகள் துளியேனும் வெளியே தெரிந்துவிடக் கூடதென அத்தனை கவனமாய் நடந்துக்கொண்டேன். அன்றைய தின கொண்டாட்டம் எங்கள் வீட்டில் என் கணவனின் ஏற்பாட்டில் நடைபெற்றது. என் கைகளாலேயே இறைச்சி துண்டுகளை மசாலா தடவி பொறித்தெடுத்து மகிழ்ச்சியாய் பறிமாறுவதை போல் பாவனை செய்தேன். வீதியெங்குமாய் தெருவுக்குத் தெரு கொடிகள் பறக்கவிடப்பட்டு உற்சாக உத்வேகம் மக்களது உறக்கத்தை மறக்கச் செய்திருந்தது.’

திடீரென யாரோ சத்தமாய் கூப்பிடுவது போலாய் சத்தம் கேட்டது. சற்று நேரத்தில் எடுப்பதாய் கூறிவிட்டு தொடர்பை துண்டித்தாள்.

சிவநேசன் கட்டிலில் சாய்ந்தபடி கண்களை மூடிக்கொண்டான். விபாகரனின் உருவை நினைவிற்குள் கொண்டுவர முயற்சித்தான். கிட்டத்தட்ட அவன் தன்னை போலவேதான் இருந்திருக்க வேண்டுமென தோன்றியது. ஒரு கட்டத்தில் தனது உருவே நிழலாய் தெரியத் தொடங்கியதாய் உணர்ந்தான். தான் ஒரு தேர்ந்த காதலனாக மாறி அவளை அப்படியே ஏந்திக்கொண்டாலென்ன என்பதாய் நினைத்தான்.

பாரமான உணர்வொன்று அழுந்த உறுத்திக் கொண்டிருப்பதாய் பட்டது. பின் ஏதேதோ யோசித்தவனாய், குவளையிலிருந்த சிறிதளவு தண்ணீரை ஒரே மடக்கில் பருகினான். கழுத்தை சாய்த்து நீவி விட்டுக் கொண்டான். ஒரே குழப்பமாய் இருந்தது. கொஞ்சம் தலை வலிப்பது போலவுமாய். அவள் மறுபடியும் அழைக்கும் வரை தொலைபேசியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சரியாக ஒரு பத்து நிமிட நேரத்தில் அவள் மறுபடியும் தொடர்பிற்கு வந்தாள்.

‘மன்னித்துவிடு’ என்றாள்.

அவள் ஆங்கிலேயர்களுடன் அதிகம் பழகுவதால் அவர்களது பழக்கவழக்கங்கள் அதிகமாய் அவளுக்குள் தொற்றியிருந்தன.

சிவநேசன் மிகுதி கதையை கேட்க அவசரப்படுவதை காட்டிக் கொண்டான்.

‘நீ ஓவியர் வான்கோ பற்றி கேள்வி பட்டிருக்கிறாயா? என்றாள்.

வேண்டுமென்றே அவள் கதையை மாற்றி பேச முனைவதாய் தெரிந்தது.

‘உன் கணவனை ஏன் பிரிந்தாய் என்று சொல்’

‘அவனுக்கு என் காதல் பற்றி ஒரு கட்டத்தில் தெரியவந்தது. ஒரு தமிழனையா காதலித்தாயென மிக அநாகரீகமாக வார்த்தைகளால் தொடர்ந்தும் சீண்டிக்கொண்டே இருந்தான். தமிழர்களுக்கு எதிரான எல்லா சதி வேலைகளையும் ஆர்வமாக செயயத் தொடங்கினான். கிழமை தவறாமல் அது பற்றி கதைப்பதற்கென்றே நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்தான். மேலும் ஒரு தமிழனை காதலித்தலென்பது மகா முட்டாள்தனமென்றும் அடிக்கடி கேலிசெய்து சிரித்தான்’ 

சிவநேசன் அசைவின்றி கேட்டுக்கொண்டிருந்தான். 

‘எல்லா சிங்களவர்களும் கெட்டவர்களென்று நீ நினைக்கிறாயா?’

‘இல்லை… நீ கூட சிங்களத்தி தானே!’

‘நிஜமாகவே அதனை நீ நம்ப வேண்டும். தமிழர்களை புரிந்து கொண்ட ஏராளமான சிங்கள மக்கள் இல்லாமலில்லை. அவர்களை நீங்கள் பார்க்கத் தவறியிருக்கிறீர்கள். கூடவே அவர்களுடன் பழகும் சந்தர்ப்பத்தை வேண்டுமென்றே தவிர்க்கிறீர்கள்.’

‘ம்ம்… சிலவேளைகளில் நீ சொல்வது சரியாகலாம்’ என்றான்.

‘ஆனால் என் தந்தையை போலவே என் கணவனும் மிகக் கெட்டவன். தமிழர்களை மொத்தமாக துவேசித்தான். என்னால் அவனது கருத்துக்களுக்கு உடன்பட முடியா ஒரு தருணத்தில் விலகிவிட்டேன். நான் எற்கனவே சொன்னது போல ஒரு பிரைடா காலோ  வாக மாறி வாழ்தலையே விரும்பத் தொடங்கினேன்.

‘மறுமணம் பற்றி நீ யோசிக்கவில்லையா?’

‘இல்லை நான் விபாகரனுடன் ஒரு கனவு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். அது எனக்கு இயல்பாக சாத்தியப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக… அவனால் என்னுடன் பேச முடிகிறது. எனக்குத் துணையாயிருந்து ஓவியம் வரைய முடிகிறது… சமயங்களில்; என்னை புணர்ந்தும் மகிழ்விக்க முடிகிறது’

சிவநேசன் எதுவுமே பேசாமல் இருந்தான்.

‘நீ பயப்படுகிறாயா?’

‘இல்லை…  ஆனால்  ஏன் உன் பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறாய் என்று சொல்வில்லையே?’

‘விபாகரன் செல்லமாய் என்னை ஜில் என்றுதான் அழைத்து பழகியிருந்தான். அதுவுமில்லாமல் யதார்த்த உலகிற்கு அப்பால் உள்ளவற்றை காண்;பதே சர்ரியலிசம் என்று கூறியிருக்கிறேன் அல்லவா. அந்த கோட்பாட்டின் சான்றாக டாலியின் ஓவியங்கள் மட்டுமே இருப்பதாக நம்பத்தொடங்கியிருந்தேன். தொடர்ந்தும் டாலியின் வழியையே பின்பற்றி எனக்கான ஒரு அக உலகையும் உருவாக்கிக் கொண்டிருந்தேன். இவையிரண்டுமே என் வாழ்வுடன் இரண்டறக்கலந்து போயிருந்தமையால்  அவரது பெயரின் ஒரு பகுதியையும் என் பெயருடன் பொருத்திக் கொள்ள வேண்டுமென்பதை விரும்பினேன். அதனை கொஞ்சம் மாற்றியோசித்து ஜில் ப்ராட்லி என ஆக்கிக் கொண்டேன்.’

மறுபடியும் அவள் ‘பயமாக இருக்கிறதா’ என கேட்டால் ‘ஆம்’ என்று சொல்;ல வேண்டும் போல் இருந்ததவனுக்கு. ஆனால் அவள் அப்படி கேட்காமல் தனது இயல்பு நிலையை தாண்டி பேசிக்கொண்டேயிருந்தாள். இடைக்கிடை அவளது கண்கள் அனிச்சையாய் மூடித்திறப்பதாய் தெரிந்தது. விசித்திரமாய் மூச்சுவிட்டபடியும், கொஞ்சம் வேகமாயும் பேசத் தொடங்கியிருந்தாள். 

திடீரென சற்று குனிந்து கண்களை அகல விரித்தபடி ‘விபாகரன் நேற்று என்னுடன் நிஜமாகவே பேசினான் தெரியுமா…!’ என்றாள்.

அவன் இப்போதும் மௌனித்தான். கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்தது.

‘அவன் உயிரோடு இருக்கிறானென்பது ஏற்கனவே உனக்கு தெரிந்திருந்ததா?’

இல்லையென்பதாய் தலையசைத்தாள்.

‘அவனும் அமெரிக்காவில் தான் இருந்திருக்கிறான். இன்னும் இரு தினங்களில் இலங்கை வருகிறானாம்.’

‘ஹ்ஹ்ஹா… பிறகென்ன…? உன் விருப்பமான வாழ்க்கை ஆரம்பிக்கப் போகிறதென்று சொல்’

‘அதுதானில்லை’

‘ஏனில்லை’ சிவநேசனுக்கு கொஞ்சம் எரிச்சலாகவுமிருந்தது. 

‘அதைவிடு நீ வான்கோ எனும் ஒரு ஓவியன் அற்புதமான இரசணையுடன் தற்கொலை செய்து கொண்ட கதையை அறிவாயா?’

சிவநேசன் ஆத்திரத்தை வெளிக்காட்டிக் கொள்ளாதிருக்க அதிகளவில் முயற்சித்தான். இவள் ஏன் இடையில் தேவையற்று வான்கோவை இழுத்துக் கொள்கிறாள்?’

வான்கோவை பற்றி ஏதேதோவெல்லாம் பேசத் தொடங்கினாள். அவனுக்கு அதில் கொஞ்சமும் பிடிப்பில்லாமல் இருந்தது. கேட்டும் கேளாதவன் போல ‘விபாகரன் வந்தால் ஏன் அவனோடு வாழ முடியாது?’ என்று கேட்டான்.

‘மிக நீண்ட நாட்களாக என் ஓவியங்களுடனும் விபாகரனின் மாய பிம்பத்துடனும் வாழ்ந்து பழகி விட்டேன். அடுத்து வரபோகிறதென தோன்றும் ஒரு திடீர் மாற்றத்தை… அல்லது ஒரு நிஜத்தை என்னால் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை சிவநேசன். அது உனக்கு புரியாது விடு’ என்றாள்.

அவன் மீண்டும் மீண்டுமாய் அதையே விவாதித்தான்.

‘நீ விரும்பிய அவனை மனதார ஏற்பது தானே நியாயம்…!’

‘இல்லை. கற்பனையை எல்லா தடைகளிலிருந்தும் விடுவித்து தன் இஷ்டம் போலான வெளிப்பாட்டினை அனுபவித்து… தமது அடையாளங்களை அழித்து… மனதின் கட்டுபாடற்ற எண்ண வெளிப்பாட்டிற்கு உகந்ததான  ஒரு மாய வாழ்க்கை வாழ்ந்து பழகிய ஒருவனுக்கு அதிலிருந்து மீளுதல் சுலபமில்லை. மேலும் எனக்கு இப்போது மயக்கமாக இருப்பதாய் உணர்கிறேன்.’

‘நீ இப்போது ஓய்வெடுக்க வேண்டும். படுத்துக் கொள்’ என்றான்.

‘இன்னும் கொஞ்சம் பேச இருக்கிறது பொறு.’

அவள் தன் இரு கைகளாலும் முகத்தை வழித்துத் துடைத்துக் கொண்டாள். மிகவும் களைப்படைந்தவளாய் தெரிந்தாள்.

‘எனக்கு மிகப்பிடித்தமான ஓவியம் வரைதலை தாண்டிய அடுத்த விடயம், அதிகம் விரும்பும் ஒருவருடன் பேசிக்கொண்டிருப்பதுதான். எண்ணிய நொடியிலெல்லாம் விபாகரனுடன் என்னால் பேச முடிந்திருந்தாலும் அவனது பொய்விம்பம் எனக்கான பதில்களை ஒருபோதும் தரவில்லை. அத்துடன் அது உன்னால் சாத்தியமாகியிருக்கிறது. அதற்காக உனக்கு நன்றியுடையவளாக என்னை நினைத்துக் கொள்கிறேன்.’

‘சாப்பிட்டாயா’ என்றான்.

‘இல்லை எனக்கு பசிக்கவில்லை. உனக்கு ஒன்று காட்ட விரும்புகிறேன் பார்…’

அருகில் வைத்திருந்த பாதியளவு வரையப்பட்ட ஒரு ஓவியத்தை காட்டினாள். அது வெறுமனே ஒரு கறுப்பு வெள்ளை படமாக இருந்தது. அந்தரத்திலிருந்து நீர் சிதறிக்கொண்டிருந்தது. ஒரு கதிரை ஆகாயத்தில் பறப்பது போலவும்… சந்திரன் துகள்களாகி பறந்து ஒருசிறு தூரத்திற்குப்பின் அவை பறவைகளாய் மாறிவிடுவதாயும் இருந்தது.. மிகுதி பாதி வரையப்படாமல் விடப்பட்டிருந்தது.

‘இப்போது இவ்வோவியத்தை நிறைவு செய்ய விரும்புகிறேன்’

‘வேண்டாம் ஜில் நீ ஒய்வெடுக்க வேண்டும்’ என்றான்.

அவள் சத்தமாக உடல் குலுங்க ஒருமுறை சிரித்தாள். மறுபடியும் ஜில் என அழைக்கும்படி கேட்டாள்.

‘ஜில்….’

‘இன்னுமொருமுறை’

அவன் உணர்ச்சிவசப்பட்டவனாய் ‘ஜில்….’ என்றான்.

அவள் கண்கள் மூடி அதனை அனுபவித்துக் கேட்டாள்.

‘கடைசியாக ஒருமுறை சொல்’

‘ஜில்….’

அவள் அழுதுக்கொண்டிருந்தாள்.  ‘நன்றி’ என மீண்டுமொருமுறை கூறி தொடர்பை துண்டித்துக் கொண்டாள். 

தான் இப்போது  என்னவிதமான மனநிலையில் இருக்கிறோம் என்பதே சிவநேசனுக்கு புரியாமலிருந்தது. தொலைபேசியை ஒருபக்கம் வீசியவனாய் தொப்பென கட்டிலில் விழுந்தான். விரித்து கவிழ்த்து வைக்கப் பட்டிருந்த தஸ்த்தயேவ்ஸ்க்கியின் நாவலை மேசையில் தூக்கிப் போட்டான்.  அறையை மொத்தமாய் நிரப்பிக்  கொண்டிருந்த ஜில் ப்ராட்லியின் உருவை காண முடிகிறதா என சூழவும் ஒருமுறை தேட முயற்சித்து பின் அவளை அணைத்துக்கொண்டு உற்ங்குவதாய் எண்ணியபடியே தூங்கிப் போனான்.

மூன்று மணித்தியாலங்களுக்கு பிறகொரு நொடியில் வியர்வை மற்றும் பசி மயக்கத்துடன் மோசமான ஒரு மனநிலையுடன் விழித்துக் கொண்டிருந்தான். உடலெங்கிலுமாய் வியர்வை அரும்பியிருந்தது. ஜில் ப்ராட்லி பேசிய வார்த்தைகளெல்லாம் மறுபடியும் நினைவிற்கு வரத் தொடங்கின. அவள் வான்கோவின் தற்கொலை பற்றி ஏதோ பேசினாளே…! தலையை பிடித்து கசக்கிக்கொண்டு யோசித்தான். 

‘வான்கோ பேராசையுடன் ஓவியம் வரையத் தொடங்கிய சற்று நேரத்தில் தன்னை அறியாமலேயே சாவின் நிழல்கள் தன்மீது ஊர்ந்து செல்வதை உணர்ந்தாராம். அப்போது அங்கே தன்னைத்தவிர யாருமில்லை என அறிந்த மறுநிமிஷம் ஓவியம் வரைவதை நிறுத்திவிட்டு பெருமூச்சிட்டபடியே சில அடிகள் நடந்து சென்று ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு ஒரு துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டாராம். வான்கோவின் வடியும் இரத்தம் நிற்காத போதும்  அவர் மிகுந்த ஆசையுடன் தள்ளாடியபடியே மீண்டும் ஓவியம் வரையும் அவ்விடத்திற்கே வந்து சேர்ந்தாராம்… இப்படி வான்கோவை போல மரணத்தை இரசணையுடன் அனுபவித்து பெறுவது கடினமில்லையா’  எனக்கேட்டாள்.

அதற்கு அவன் ‘ஏன்’ என கேட்டதாய் ஞாபகம்.

‘யாருமில்லாத ஓரிடத்தில் ஒளிந்து கொள்ளுதல் என்பதும் தன்னை தனக்கே தெரியாமல் ஒருவன் சுட்டுக் கொள்ளுதல் என்பதுவும் ஆச்சரியம் தானே தவிர அவ்வாறானதொரு அனுபவத்தை பெற்றிட என்னிடமும் துப்பாக்கி இல்லையே’ என்றாள். மேலும் ‘துப்பாக்கியால் மட்டும்தான் மரணத்தை தர முடியுமா என்ன’ எனச்சொல்லி சத்தமாய் சிரித்தாள்.

சிவநேசனுக்கு மனது படபடத்தது. இதயம் பலமடங்கு வேகமாய் துடிப்பது போலிருந்தது. பதறியெழும்பி தொலைபேசியை தேடியெடுத்தான். அவளது இலக்கத்தை வேகமாய் அழுத்தி தொடர்பு கொள்ள முயற்சித்தான். அவனது கைகள் நடுக்கம் கொள்ளத் தொடங்கியிருந்தன.

பிரமிளா பிரதீபன் – இலங்கையில் உள்ள வத்தளையைச் சேர்ந்தவர். தற்பொழுது ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஆசிரியர் தொடர்புக்கு – pramilaselvaraja@gmail.com

மயிர்நீப்பின் உயிர்வாழ்

6

வ.கீரா

ம்மணி அத்தையை மருத்துவமனையில் சேர்த்திருக்கும் தகவல் வந்தது. சட்டென மாமாவின் நினைப்பு தான் வந்தது. அவரின் நிலையென்ன என மனம் பதட்டமாக இருந்தது. இதற்காகவே அவசரமாக ஊருக்குக் கிளம்பினேன்.

அப்பா அடிக்கடி சொல்லுவார் ”வாழ்ந்தா எங்கக்கா மாதிரி வாழணும்”என..

அப்பாவுக்கு வேலை இருக்கோ இல்லையோ படர்ந்து கிடக்கும் பனியில் உதயமாகும் சூரியனின் மஞ்சள் கதிர்கள் சோம்பல் முறிக்கும் தருணத்திற்குள் நசநசத்திருக்கும் புற்களில் கால்கள் பட்டுவிட வேண்டும் அவருக்கு. அதற்கு முன்னதாக வயலுக்கு செல்லும் வழியில் இருக்கும் அம்மணி அத்தை வீட்டில்  ஒரு டீ. அந்த அதிகாலையிலும் அம்மணி அத்தை மாமாவை  தேர்முட்டி சேகர் கடைக்கு அனுப்பி லோட்டாவுல டீ வாங்கி வரவைத்திருக்கும். இது தினமும் மாறாத விசயம். ஊருக்கு தவில் கோவிந்தனாக இருந்த மாமா எங்களுக்கெல்லாம் பூச்சாண்டியாகத் தெரிவார். எங்கே கண்டாலும் ஆளை பிடித்து, கால் கவட்டையில் எங்களைப் பிணைத்துக் கொண்டு வேட்டியில் சொருவி வைத்திருக்கும் மூக்கு பொடி டப்பாவை எடுத்து மூக்கில் வைத்து விடுவது அவரது வழக்கம். அதனால் எங்களுக்கு அவர் பூச்சாண்டி. அவர் தெருவில் வந்தால் ஓடி ஒளிந்து கொள்வோம்.

அம்மணி அத்தையை 70 வயது வரைக்கும் நோயின்றி வைத்திருந்தது அவர் வாங்கி வரும் அந்த டீ என்றே சொல்லலாம். ஒரு நாளைக்கு குறைந்தது பத்து டீயாவது வேண்டும்.

அம்மணி அத்தை மோளக்கார மாமாவை மணம் முடித்தது 14 வயதில். அப்பொழுது மாமாவுக்கு 19 வயது. மோளக்கார மாமா பிறந்து வளர்ந்தது எல்லாம் குரும்பலூர். செட்டிக்குளத்திலிருந்து வாக்கப்பட்டு மாமா வீட்டில் கால்வைத்த பொழுது அந்த குடும்பமே ஒரு ஆலமரம் போலிருந்தது. அப்பா அம்மா இல்லாத அந்த குடும்பத்திற்கு மாமாதான் மூத்தவர். அவருக்கு கீழ் மூன்று தம்பிகள் இரண்டு தங்கைகள். அந்தப் பகுதியில் மாமா தவில் வித்துவானாக பேமசாக இருந்தார். அந்த வயதில் தோளில் இடவலமாக தவிலை தூக்கி மாட்டினாரென்றால் ஊரே கதி கலங்கும். நாயனக்காரர்கள் தான் நிகழ்ச்சிகளுக்கு முதன்மையானவர்கள் என்றாலும் நாயனக்காரரால் அவரது அடிக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறும் நிகழ்வுண்டு. கல்யாணமோ, கோயில் திருவிழாவோ எதுவென்றாலும் கோவிந்தன் மேளத்த அழைச்சிட்டு வரணும் என வெத்தலை வைத்து கச்சேரிக்கு அழைப்பவர்கள் கட்டளையிடுமளவுக்கு அவரின் கைகள் மேளத்தில் பேசும். அவர் அடிக்கும் பொழுது பொண்ணு வீட்டு பெரிசுகளோ, மாப்பிள்ளை வீட்டு பெரிசுகளோ காசு கட்டி தனியாக அடிக்கச் சொல்வார்கள். அவர் அடிக்கும் பொழுது மேளமே கிழிந்து விடுமோ என்பதாக இருக்கும். அவர் கையை ஒரே பக்கமாக கொண்டு வந்து சிறு வளையப் பக்கத்தில் குச்சியைவைத்து ”ட்ர்ரா..ட்ர்ரா “ என இழுக்கும் பொழுது காது சவ்வுகள் கிர்ரென இருக்கும். கோவிந்தனுக்கு தவில் விட்டால் வீடுதான்.

வீட்டில் இருந்த சில்வண்டுகளோடு சில்வண்டாக குடியேறி, கோவிந்தனைப் புரிந்து கொண்டு அந்த வயதில் குடும்பத்தை தாங்கியது அம்மணி அத்தைதான்.

பொதுவா மேளக்காரர்களுக்கு கச்சேரி முடிந்ததும் சாராயம் வேண்டும். கோவிந்தனை அந்தப் பக்கம் தலைவைத்து படுக்க விடவில்லை. கொளுந்தன், கொழுந்தி என அனைவரையும் தன் பிள்ளையாக நினைத்து எல்லோருக்கும் திருமணம் முடித்து வைத்தது அம்மணியின் சாமர்த்தியம் தான். தொட்டாலே சிவந்துவிடும் உடல் அம்மணிக்கு. அந்தக்கால பத்மினி. சுருள் கேசம். பெரிய மூக்குத்தியில் முகம் முழுக்க மஞ்சள் பூசி அம்மனாட்டம் இருக்கும் அம்மணி அத்தை.

சிட்டுக்குருவி தலையில் பனங்காயாகத் தாங்கி, கோவிந்தனின் குடும்பத்தை தன் குடும்பமாக பாவித்து பார்த்து பார்த்து செய்து வைத்தும் கொளுந்தன்கள் பாகப்பிரிவினை கேட்பதை காது வழிச்செய்தியாக வந்த கணத்தில் சட்டென முடிவெடுத்தது அம்மணி அத்தைதான்.

தவில் தவிர ஏதுமறியா கோவிந்தனை கல்யாணமாகி ஒன்பது ஆண்டுகளில் ஐந்து பிள்ளைகளோடு பிறந்த ஊருக்கு அழைத்து வந்தது அம்மணி அத்தை. பிறந்த ஊருக்கு கட்டினவனோடு வருவது அவ்வளவு எளிதல்ல. வாழத்தெரியாம வந்ததாகவோ, வீட்டோட மாப்பிள்ளை என்பதாகவோ ஊர் ஏசும் எனத் தெரிந்து தன் பிறந்த வீட்டில் இருக்காமல் உடனடியாக ஒரு வீட்டைப் பார்த்து குடியேறி விட்டாள்.

குரும்பலூர் கோவிந்தனுக்கு தவிலில் இருந்த புகழ், வந்த இடத்திலும் நிலைக்க, ஒரு பிடிப்பான வாழ்க்கை அமைந்தது.

அத்தையின் சாமர்த்தியத்தில் கோவிந்தன் ஒரு குழந்தையாக அவளுக்குள் சுருண்டு கிடந்தார். பதினாறும் பெற்று பெருவாழ்வு என்பது போல பதினாறு பெற்றாள் அத்தை. அதில் ஆறு விட்டுப்போனது போக நோய்க்கு பத்து உருப்படிகள் அத்தையின் மக்கள்.

சளைக்காத உழைப்பு. மாமா தவில்ன்னா, அத்தை காடுகளுக்கு வேலைக்கு போவது. களைவெட்ட, வெங்காயம் வைக்க, தக்காளி பொறுக்க, மிளகாய் பொறுக்க என அனைத்து வேலைகளுக்கும் போவாள் அத்தை. வீட்டில் நீராகாரம் குடித்து விட்டு போனால் திரும்பி வந்து இரவுச் சமையலுக்கு வேலை தொடங்கவே சரியாக இருக்கும். உருப்படிகள் அத்தனை.

அத்தை இடையில் எங்கும் சாப்பிட மாட்டாள். பெரும்பாலான நேரங்களில் வயிற்றைக் கட்டி வைத்திருப்பாள். நாள் முழுதும் உழைத்தாலும் வீட்டில் வந்துதான் சாப்பாடு.

”டீயக் குடிச்சே வயிறு வளர்த்தாயா மகராசி “

ஊர் பேச வாழ்ந்தாள்.

கோயிலில் காலை பதினோரு மணி பூசைக்கு ”த தி தொம் நம் ஜம்”என ஏகாம்பரேசுவருக்கு இசையைத் தெளித்து விட்டு, தூக்குவாளியில் டீயை பிடித்துக் கொண்டு ஊரைத்தாண்டி இரண்டு கல், மூன்று கல் தொலைவுகளுக்கு அப்பால் இருக்கும் காடுகளுக்கு மாமா வேகமாக வெயிலைக் கிழித்துக் கொண்டு நடந்து வருவார். இந்த நடை என்பது அம்மணி சாகும் வரையிலும் தொடர்ந்தது.

”அம்மணி”..

இந்த ஒற்றை குரலுக்காக காத்திருக்கும் அத்தை கோவிந்தன் கொண்டு வரும் பச்சைத் தண்ணியான டீயை  தேனாமிர்தம் போலப் பருகுவாள். அவளும் குடித்து, அவரும் குடிப்பதைப் பார்ப்பதே அவ்வளவு அழகு.

”அப்படி என்னதான் இந்த ஆறுன கழனித்தண்ணியில  இருக்குதோ”

புல் பிடுங்கும் பெண்கள் கேட்கும் பொழுது சிரித்துக் கொண்டே,

”அத்தான்…அவ கேக்குறாளே..சொல்லுங்க..”

எதுவும் சொல்லமாட்டார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொள்வதைத் தவிர. அத்தை எப்பவும் மாமாவ அத்தான்னுதான் கூப்பிடும். இது எங்க பக்கம் இல்லாத வழக்கம்.

இளங்குட்டிகள் பலருக்கும் இந்த கிழவன் கிழவி மாதிரிதான் நமக்கும் வாழ்க்கை அமையணும்னு நினைக்கிற அளவுக்கு அவங்க அப்படி இருந்தாங்க.

மாமா கச்சேரி போகும் நாட்களில் அந்த டீயும் கிடையாது. மாமா எந்த ஊருக்குப் போனாலும் வேலை முடிந்ததும் பஸ் ஏறி விடுவார். எத்தனை மணியானாலும் கிளம்பி வந்து அவர் கொடுக்கும் அந்த ஒரு தம்ளர் டீ தான் அம்மணியத்தையின் பகல் உணவே.. தங்களுக்குள் பேசிக்கொண்டே இருப்பார்கள். குசுகுசுவென அவர்கள் அப்படி என்னதான் பேசிக்கொள்கிறார்கள், அப்படியென்ன பேசுவதற்கு பதினாறு பெற்றும் இருக்கிறது என்றெல்லாம் தெரியாது. அப்படி பேச்சு..பேச்சு.

வேலை தெரியாமல் இருக்க பேச்சுக் கொடுக்க முனையும் இளந்தாரிகளுக்கு ஒரே கெட்ட கதைகளாக சொல்வாள் அத்தை. ஆண்கள் இருக்கிறதை பற்றி கவலையே படமாட்டார். இளவயது பெண்கள் காதில் விழாதது போல அவர்கள் பேசும் ”அந்தக்” கதைகளைக் கேட்டு தலை கவிழ்ந்து சிரிப்பார்கள்.

அத்தை போகாத காடில்லை. தடம் பதிக்காத மண்ணில்லை.

வேலை முடிந்த பிறகு மாமனும் அத்தையும் விவசாயத்திற்கு பயன்படாத கீரைகளைப் பிடுங்குவார்கள். சமைக்க, அடுப்பெரிக்க காய்ந்த விறகுகளைப் பொறுக்கி தலையில் கட்டிக்கொண்டு பொடி நடையாக வெயில் வீசும் குளிரில் வீடு வந்து சேர்வார்கள்.

குழந்தைகள் வளர வளர அவர்களுக்கானதையும் பார்த்துச் செய்ய வேண்டும் என்கிற தேடல் என ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் அத்தைக்கும் மாமாவுக்கும் ஒருமுறை கூட மனத்தாங்கலோ, சண்டையோ கூட வந்ததில்லை என்பது ஊருக்கே அதிசயமான ஒன்று.

ஒருமுறை கோவிந்தன் திருப்பட்டூர் கச்சேரி முடிந்ததும் உடனிருந்தவர்கள் ஊத்தி விட்டு அழைத்துவர, அம்மணி அத்தை எதுவுமே சொல்லவில்லை.

அடுத்தநாள் அப்பாவிடம் சொல்லி சாராயம் வாங்கி வீட்டில் வைத்து விட்டது. ”ருசி பாத்த மூள விடாது. வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கே வந்துரு.” என தானே ஊற்றிக் கொடுத்து பேசிக்கொண்டிருந்த அத்தை நாளடைவில் தானும் குடிக்கத் தொடங்கி விட்டது.

புருசனும் பொண்டாட்டியும் அனைத்து வேலையையும் முடித்து விட்டு எல்லோரையும் தூங்க வைத்த பிறகு ரசித்து குடிப்பார்கள்.

பிள்ளைகளும் தெளிவானவர்களாக இல்லை. கட்டிக் கொடுத்த பெண்களும் பாதிநாள் இந்த வீட்டில் கிடப்பதும், கல்யாணம் பண்ணின தனது மகன்களும் உருப்படியில்லாமல் இருப்பதும் புரிந்தாலும் எங்க காலம் முடியற வரைக்கும் உங்கள பாத்துக்குவோம் என அத்தையும் மாமனும் ஓயாமல் உழைத்தார்கள். கோவிந்தனிலிருந்து அம்மணி புருசனாக அவரது பெயர் தடம் பதிக்கப்பட்டிருந்தது.

யாராலும் பிரிக்க முடியாத அவர்களின் பேரன்பை யாராலும் விளங்கிக்கொள்ள முடியாத அந்தக் காதலை ஊரே கொண்டாடியது. இரண்டு பேரில் யார் முன்ன செத்தாலும் உடனே அடுத்த உசிரும் போயிடும் என ஊரே நம்பிக் கொண்டிருந்தது.

இந்த தள்ளாத வயதிலும் காடுகாடாகத் தேடி டீ கொண்டு கொடுத்தபடி தான் இருந்தார் மாமா. இப்பொழுதும் கச்சேரிக்கு கூடத் தொணைக்கானவராக ஓடிக் கொண்டுதானிருந்தார். கோயிலுக்கு ஒத்தைக் கொட்டுக்கு போய் கொண்டுதானிருந்தார். மருமகள்கள் மகள்களாக வாய்த்திருந்தார்கள்.

மருத்துவமனையில் ஊரே திரண்டிருந்தது. என் கண்கள் மாமாவைத் தேடியது. ஓர் ஓரமாக அமர்ந்து மூக்குப்பொடி போட்டுக்கொண்டிருந்தார். அவரது முகத்தில் எந்த சலனமும் இல்லை. அத்தை இறந்து விட்டதாக மருத்துவர் சொன்னதும் எல்லோருக்கும் பதட்டம் அதிகமிருந்தது. அவரிடம் சொல்வதற்கு தயங்கி அப்பா ஒதுங்கிப் போனார். எல்லோரின் மனதையும் அறிந்திருந்தவரைப் போல எழுந்து வந்தார். கட்டிலில் கிடத்தப்பட்டிருந்த அம்மணி அத்தையைப் பார்த்தார். நரை பூத்த அந்த மஞ்சள் முகம் சுருக்கங்களால் ஓவியமாக உறைந்திருந்தது.

அவரின் கண்கள் நிலைகுத்தியிருந்தது. எல்லோரும் இருப்பதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அந்தக் கட்டிலில் ஏறி அத்தையின் அருகே படுத்தார். அனைவரின் மனமும் ”திக் திக்” கெனக் கிடந்தது. அத்தையின் உடலில் தனது கையை வளைத்துப் பிடித்தார். ஒரு இறுக்கமான பிடி.

”சரிப்பா.. ஆக வேண்டிய வேலைகளப் பாருங்க” என சொல்லிவிட்டு சட்டென மாமா வெளியே வந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ந்து பார்த்தார்கள். சிலருக்கு திருப்தியாகக் கூட இருந்தது.

சிலருக்கு அப்பாடாவெனவிருந்தது.

அவர் யாரிடமும் எதுவும் பேசவில்லை. அத்தையின் உடல் புதைக்கப்படும் பொழுதுகூட எந்த சடங்கிலும் கலந்து கொள்ளவில்லை. தூரத்திலிருந்த புளியமரத்தடியில் அமர்ந்து பல் குத்திக் கொண்டிருந்தார். பொட்டுக் கண்ணீரில்லை.

அம்மணி அத்தையை எல்லோரும் மறந்திருந்த ஒருநாள் ஊருக்கு வந்திருந்தேன். எனக்குப் பெண் பார்க்கப் போவதாக இருந்தது. எனது கற்பனை முழுக்க அம்மணி அத்தையைப் போலவே முகம் முழுக்க மஞ்சள் பூசிய முகமாகவே இருந்தது. அத்தையைப் போலொரு பெண். பதினோரு மணிக்குத்தான் கிளம்பணும் என்றார் அப்பா.

மாமாவைப் பார்த்து வரலாம்னு கிளம்பினேன். அவர் கோயிலில் ஒத்த கொட்டு வாசிக்கப் போயிருப்பதாக சொன்னார்கள். ஊரில் ஆயிரம் ஆண்டு காலமாக முளைத்து வளர்ந்து வானை கிச்சு கிச்சு மூட்டும் கோபுரத்தைக் கடந்து கல் தூண்கள் படர்ந்த ஓரிடத்திலிருந்து வந்த ”டங்..டங்..டங்.டங்..டங்” தொடரடி இடத்தை நோக்கிப் போனேன். பூசை முடிந்திருந்தது. மேளத்தை துணியில் வைத்துக் கட்டிக் கொண்டிருந்தவர் நான் அருகே போனதைக் கண்டு கொள்ளவில்லை. மெலிந்தவர்தான். மேலும் மெலிந்திருந்தார். கண்களின் சிரிப்பில் வறட்சி அழுந்திக் கிடந்தது.

நான் மாமா பக்கத்தில போயி அவரது கையப் புடிச்சேன்.

”வாய்யா..எப்ப வந்த” என்றார்.

”இராத்திரி வந்தேன் மாமா”

அவரிடம் நான் வாங்கி வந்த மூக்கு பொடி டப்பாவை கொடுத்தேன். வாங்கி டப்பாவ திறந்து நக இணுக்கில் சிறிதள்ளி மூக்கில் தள்ளினார்.

”மாமா..உங்கிட்ட ஒன்னு கேக்கணும்”

கேளு என்பது போல தலையாட்டினார்.

”ஏன் மாமா..அத்தைய பார்த்து அழுவக் கூட இல்ல.. அத்தை மேல உனக்கு எப்படி வெறுப்பு வரும்.. ..”

ஒரு கணம் என்னை யாரோ பார்ப்பது போல பார்த்தார். கண்ணை ஒரு கணம் மூடினார். அம்மணியத்தையின் முகம் என் நினைவிலும் படர்ந்தது.

“அந்த நாயி கிடக்கா.. சாவ முத நாளு இராத்திரி என்கிட்ட அவ்ளோ பிரியமா பேசிட்டிருந்தா.. அவள தவிர எனக்கு எதுவுமே தெரியாதுடா.. சிறுக்கி முண்ட.. என் அம்மாடா அவ.. நான் செத்தா அழக்கூடாதுய்யா.. நம்ம புள்ளங்க உலகம் தெரியாம கிடக்குது.. கடைசி பையன் தெள்ளவாரியா கிடக்குறான். அவன் ஆளாகுற வரைக்கும்.. உன் பிடியை இறுக்கிக்க.. தளரக் கூடாதுன்னா.. நீ இருக்கும் போது எனக்கென்னடின்னு சொன்னேன்.. பாத்துக்குவியான்னு திரும்பவும் கேட்டா.. சரி பாத்துக்கிறேன்னு சொன்னேன்.. சத்தியம் பண்ணுன்னா.. சரின்னு பண்ணிட்டேன்.. அவ்ளதான் அடுத்த பத்தாவது நிமிசம் ஆசுபத்திரில கிடக்கா.. நான் என்ன செய்ய..”

மீண்டும் பொடியை எடுத்து மூக்கில் ஒரு உறிஞ்சி உறிஞ்சி விட்டு துண்டால் மூக்கைத் துடைத்துக் கொண்டு மேளத்தை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு  திரும்பிப் பார்க்காமல் நடந்தார்.


வ கீரா – ‘பச்சை என்கிற காத்து’, ‘மெர்லின்’ மற்றும் சமீபத்தில் அதிகம் பேசப்பட்ட படமான ‘எட்டுத்திக்கும் பற’ ஆகிய படங்களின் இயக்குனரும் ‘மோகினி’ எனும் நூலின் ஆசிரியருமான இவர், செயற்பாட்டாளரும் கூட. தொடர்புக்கு – keeraaiyakkunar@gmail.com