Home Blog Page 78

யாரோ தொலைத்த இசைத்தட்டு

0

தமயந்தி

ப்படியொரு அதிகாலைல போலீஸ் வீட்டுக்கு வரும்னு அப்பா எதிர்ப்பார்க்கல. ஏட்டைப் பாத்து “என்ன என்ன”னு பதறிக் கேட்டாரு. வாசல்ல தினத்தந்தி படிச்சிட்டு இருந்தாரு. ஏட்டு  சித்தப்பா பேரு சொல்லி “சார் இருக்காரா”னு கேட்டாரு. அவர் ரொம்ப சவாதானமா இருந்ததுல வேற அப்பாவோட பதட்டம் கூடிடுச்சு.

“மொதல்ல என்னனு சொல்லுங்க சார்”னு கேட்டார்.

“ஒரு கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு சார்”

“யாரு.. யாரு கொடுத்திருக்கா?”

“யாரோ கமலாவாம்”.. என்றவர் பேப்பர் ஹெட்லைன்ஸைப் பாத்து, நெடுஞ்செழியன முதலமைச்சரா ஆக்கிட்டாக.. எல்லாத்துக்கும் மச்சம் வேணும் சார். அவரே கூட இதெல்லாம் யோசிச்சிருக்க மாட்டார்”னு சொன்னார்.

தூக்கக் கலக்கத்தோட  சித்தி தான் கதவத் தெறந்தா. கொண்டையை ஒரு சுருள் மாரி அள்ளி சொருகிட்டு “பெரியவரே”னு ஆச்சர்யமா சொன்னாக. அப்பா பதட்டாமா இருந்ததப் பாத்து “அவுகள எழுப்பணுமா”னு கேட்டா அப்பா உள்ளயே போய் சித்தப்பாவ எழுப்பினார்.

சித்தப்பா மருண்டு எந்திரிச்சு உட்கார்ந்து “என்ன அண்ணே”னு சொல்லவும் அப்பா அவர்ட்ட “கமலான்னா யாருடா… உம் மேல ஏதோ கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கானு போலீஸ்காரர் வந்திருக்கார்ல”னு சொன்னார். அப்பா ரொம்ப பதட்டத்துல இருந்ததப் பாத்து சித்தப்பா பதில் சொல்லாம துண்ட மார்புக்குக் குறுக்கா போட்டுக்கிட்டு வெளிய வந்தார்

“கேக்கேப்லா யார் அவ?”

சித்திக்கு இப்பதான் ஏதோ பிரச்னைங்கிறது புரிஞ்சி “என்னது பெரியவரே”னுட்டே பின்னால போறா. அதுக்குள்ளயே ஏட்டு சித்தப்பாட்ட என்னமோ பேசிக்கிட்டே இருந்தார். எனக்கு என்னமோ நடக்கப் போகுதுனு தோணுச்சு. இப்படித்தான் போன வாட்டி ஆடிப்பெருக்குக்கு ஆத்துக்குள்ள நின்னு கற்கண்டு சாதம் வாய்லப் போடுறப்ப தோணுச்சு. அம்மா பாறைல கால் வச்சி விழுந்தா. அந்த மாரி எதுவும் ஆயிடக் கூடாதே இயேசப்ப்பானு வேண்டிக்கிட்டேன்.

சித்தப்பாவோட முகம்லாம் வெளிறிப் போயிருந்துச்சு. அப்பா அவர்ட்ட ரொம்ப சீரியசா பேசிக்கிட்டு இருந்தார். நான் பக்கத்துல போனோன். அப்பா “கொஞ்சம் தண்ணி கொண்டு வாப்பா”ன்னார். என்ன போகச் சொல்லுதாரேனுட்டு நான் விசும்பி நகர்றப்ப “மாமாக்கு காப்பித் தண்ணி தர சொல்லுல அம்மாட்ட”னு சொன்னார். சமையலறைல காப்பி பாத்திரத்த அம்மா விளக்கிட்டு இருந்தா. நான் பின்னால போய் “யம்மா”ன்னு சொன்னோன் ”வாரேன் ராசா.. இதோ பூஸ்ட் போடுதேன் செல்லக்கண்ணுக்கு”ன்னார்.

ம்ம்மா சித்தப்பாவ பாக்க போலீஸ் வந்திருக்குனு சொன்னேன்.. அவ சட்டுனு வெளிய வந்து போலீஸ்காரரப் பாத்து மருண்டுப் போய் நின்னா. அப்பா இப்ப தலைல கைய வச்சிட்டு உக்காந்து இருந்தாரு. சித்தி “ஓ”ன்னு அழுதுட்டு இருந்தா. அந்த போலீகாரர் இப்பவும் பேப்பர் வாசிச்சிட்டு இருந்தார்.

அவர்ட்ட அப்பா “இப்ப என்ன செய்யலாம்”ன்னாரு

“அட போங்க சார்.. ட்டென்ஷன் ஆவாதீங்க. சாட்சிக்காரன் கால்ல வுழுறத வுட சண்டைக்காரன் கால்ல வுழலாம். போய் அந்தம்மாட்ட பேசுங்க சார்”..

அப்பா அமைதியா இருக்க, சித்தி உள்ள போய் கதவ சாத்திக்கிட்டா. சித்தப்பா அத அப்படியே பாத்துட்டு இருந்தாரே தவிர அவர் சித்தியத் தடுக்கல. அம்மா கண்ணாலேயே ‘என்ன’னு அப்பாட்ட கேட்டா.

அப்பா ஒன்னுஞ் சொல்லாம ஏட்டுக்கிட்ட “உங்க பேர் என்ன அண்ணாச்சி”ன்னார். அவர் அப்படி கூப்பிட்டோன்ன ஏட்டு ரொம்ப சந்தோஷமாகி ’கிரிதரன்”ன்னு சொல்லிட்டு “கவலப்படாதீங்க சார்.. ஒரு பத்து மணி போல ஸ்டேஷன் வாங்க. முடிச்சிடலாம்”ன்னார். பிறகு “கெளம்புறே”ன்னு ஏதோ உறவுக்காரங்க சொல்ற மாரி சொல்லிட்டுப் போனவர், சைக்கிள் சாவி தேடி திரும்ப வந்து திண்ணைல பேப்பர் பக்கம் இருந்தத எடுத்தார்.

“காப்பி குடிச்சிட்டுப் போங்க அண்ணாச்சி”ன்னார் அப்பா.

“அட.. நம்ம வூடு தான. எப்பனாலும் வாரேன்”னுட்டு, “இந்தப் பேப்பர் எடுத்துக்கிரேன்”ன்னு சொல்லிட்டு அவர் போனார். அவர் போனப்பிறகு அப்பா சித்தப்பாவ ‘டப்ப்’ன்னு அடிச்சார். சித்தப்பா அப்பாவ அப்படியே கண்ணீர் மல்கப் பாத்து தலையக் குனிஞ்சிக்கிட்டார்.

“ஏம்ல ஒன் புத்தி இப்படி போச்சு..போ..அவ கிட்ட பேசு”ன்னார்

சாவி கொடுத்த பொம்மை மாரி சித்தப்பா நடந்து போய் சித்தி இருந்த அறையத் தட்டுனார். அவங்க திறக்கவே இல்ல. அம்மாவும் கூட சேந்து வேகமா தட்டி “தெற”ன்னு சொல்லிக்கிட்டே இருந்தா.

சித்தப்பா பயம் வந்து ஜன்னல் வழியா பாக்க பக்கத்து சந்து வழியா ஓட அப்ப சித்தி கதவைத் தெறந்தா. அவ கண்ணு நிலைக்குத்தி இருந்துச்சு. அப்பாவப் பாத்து “நான் இனிம இந்த வூட்ல இருக்க மாட்டேன் பெரியவரே”ன்னா. அவ அழல. ரொம்பத் தெளிவா பேசினா. சித்தப்பா அவ சத்தம் கேட்டு உள்ள வந்து அமைதியா நின்னாரு.

“என்ன ஆச்சு”ன்னா அம்மா.

“இவனப் பத்தி கமலான்னு ஒருத்தி கம்ள்யிண்ட் பண்னிருக்கா…போதும்மா? அந்தக் கேவலத்த என் வாய்ல வேற சொல்லணுமா”ன்னார் அப்பா.

சித்தி குத்துக்காலிட்டு உக்காந்து கொண்டா. அம்மா யோசிச்ச மாரியே என்னக் கூட்டிட்டு சமையலறைக்குப் போய் காப்பி சட்டில தண்ணிய ஊத்தி அடுப்புல ஏத்தினா.

“என்ன எழவுல நடக்கு.. உஞ்சித்திய நான் கூப்பிட்டே”ன்னு சொன்னா. நான் சைக்கிள் வுட்ட மாரி முன்னால போய் சித்திக்கிட்ட “அம்மா கூப்பிடுறா”ன்னேன். அவ அப்பாவ ஒருவாட்டிப் பாத்துட்டு என் பின்னாலயே வந்தா. சமையலைறைல அம்மா காப்பித் தூளை போட்டுட்டா போல. அவ்ளோ வாசனை வந்திச்சி அங்க. சித்தி உள்ளாற போய் மேடைல சரிஞ்சி நின்னா.  அடிச்ச புயல்ல இப்படி தான் மூனாவது தெரு மரம் சரிஞ்சி நின்னுச்சு.

“ஒனக்கு முன்னமே தெரியுமா”ன்னா அம்மா.

“இல்லக்கா”ன்னா.. சித்தி அம்மாவ அக்கானு கூப்பிட்டது எனக்கு ரொம்பப் புடிச்சிது. எனக்கு கிட்டத்தட்ட எல்லாமே புரியற மாரி தான் இருந்துச்சு. ஆனா கமலா என்ன கம்ளெயிண்ட் கொடுத்திருக்கானு மட்டும் தெரில. ஒரு பூனை மாரி நின்னு பாத்துட்டே இருந்தேன். சித்தி அழாம இருந்தது எனக்கு ஆச்சர்யமாருந்துச்சு.

“தெரியாது”ன்னா சித்தி. இப்ப அவ கண்ணு கலங்குற மாரி இருந்துச்சு. அம்மா காப்பித்தண்ணில சீனியப் போட்டு கலக்கி அம்மா இறுத்தா. பின்னால அதுல பால ஊத்தி ஆத்தினா. உலகத்தையே ஒரு கிண்ணிக்குள்ள போட்டு ஆத்துற மாரி இருந்துச்சு எனக்கு. ஒரு வா நாக்கு நுனில வுட்டுப் பாத்து எங்கிட்ட “தம்ளர எடு”ன்னா.

“இந்தக் கட்சி எழவ ரெண்டுப் பேரும் வுட்டு ஒழிஞ்சா தான் உருப்படும்”ன்னு அம்மா சொல்ல சித்தி ஜன்னல் வழியா கொய்யா மரத்த வெறிச்சா. நான் எட்டிப் பாத்தப்ப அங்க ஒரு சிட்டுக்குருவி உக்காந்திருச்சு. சித்தி கண் கொட்டாம அதையே பாத்தா. அவ மனசுல என்ன யோசிருப்பான்னு தெரில.

“அவ கட்சிக்காரியாமா?”

சித்தி வெறுமனே உதட்டைப் பிதுக்கினா. அம்மா அவளை உத்துப் பாத்தா. அவ கண்களாலேயே சித்திய கட்டிப் புடிச்சி தைரியம் சொல்றாப்ல இருந்துச்சு. அம்மா சித்தி கையவாச்சும் பிடிச்சிக்கலாம்னு தோணுச்சுது. ஆனா ரெண்டு பேரும் தள்ளித்தள்ளி கிட்டக்கிட்ட இருந்தாங்க.

“இப்ப தான் தெரியுமா ஒனக்கு”ன்னு கேட்டாங்க அம்மா மறுபடி. சித்தி இறுக்கமா இருந்தாங்க.

என்ன காப்பி தாரியா? நாங்க போகட்டுமான்னார் அப்பா வாசல்ல நின்னு. அம்மா அவசர அவசரமா காப்பித் தம்ளரைக் கொடுத்தா. அப்பா அத வாங்கிக்கிட்டு மளமளனு குடிச்சி “அவள வேணா அவங்க வூட்டுல இருக்க சொல்லு.. இந்த பிரச்னைய முடிச்சிட்டு பேசுவோம்”ன்னார்.

சித்திக்கு வெப்புராளம் வந்து “நான் ஏன் போனும்? இதென்ன நியாயம் அக்கா? என்ன நடந்துச்சுன்னு எனக்கும் தெரியணும் இல்லே?”ன்னா… அம்மா மெல்லிசா “அவ சொல்றதும் சரி தானன்னு அப்பாட்ட சொன்னா. ஒரு நிமிஷத்துல எல்லோரும் மாறிப் போன மாரி இருந்துச்சு எனக்கு.

ஆனா கூட சித்தப்பா ரொம்ப இறுக்கமா தான் இருந்தாரு. அம்மாக்கு உள்ளூற சந்தோஷம் இருக்குமோனு கூட எனக்குத் தோணுச்சு. அம்மா படில உக்காந்து காப்பி உறிஞ்சிட்டு சித்தியப் பாத்து – “அவுக ஸ்டேஷன் போயிட்டு வரட்டும்”ன்னா. அப்பா டம்ளர வச்சிட்டு கிளம்ப சித்தப்பா காப்பி குடிக்கல. யாரும் இல்லனா அழுவாரோனு கூட தோணுச்சு.

“காப்பி குடிங்க நீங்க”ன்னு அம்மா சொன்னா. அவர் கேட்ட மாரியே இல்லாம அப்பா பின்னாலேயே போனாரு. அம்மா சித்தியப் பாத்து “நீ குடி.. அவுக செய்றதுக்கு நாம ஏன் பட்டினி கிடக்கணும்னா. சித்தி காப்பிய மறுபடி ஆத்தினா.

“அது ஆறித்தான கெடக்கு”ன்னா அம்மா

“நீ வெளையாடப் போகலயா”ன்னு கேட்டா அம்மா.. நான் பதில் சொல்லாம அவ மடில படுத்துக்கிட்டேன். அம்மாக்கு நான் படுத்துக்கிட்டா ரொம்பப் புடிக்கும். அதுக்கு அப்புறமா அவ தலையைக் கோத ஆரம்பிப்பாளே தவிர அடுத்ததா ஏதும் பேச மாட்டா. அம்மாக்குப் பக்கத்துல ஒரு பன்னீர்ப்பூ உதிர்ந்து கிடந்துச்சு. அம்மா அத எடுத்து மோந்துப் பார்த்தா. சித்தி இப்ப மடக் மடக்குன்னு உலகத்தைக் கரைச்சிக் குடிச்ச மாரி மிடறு விழுங்காம காப்பியக் குடிச்சா. பக்கத்து வீட்டு மங்காக்கா எட்டிப் பாத்து,

“ஒன்னுமில்லயே…போலீஸ்லாம் வந்த மாரி இருக்கே”ன்னா

“ஆமாக்கா.. உங்க புருஷன் குடிச்சிட்டு தெனம் கத்துறார் இல்லே.. அதான்..”

மங்காக்கா அப்படியே தலையை இழுத்துக்கிட்டு போயிட்டா. “இவளுகளுக்கு வேற வேல இல்ல”ன்னா அம்மா. சித்தி தம்ளரை வச்சிட்டு “நான் என் தம்பியக் கூப்பிடவாக்கா”ன்னு சொன்னாங்க

“இரு பாப்போம்.. என்னாகுதுன்னு.. தேவைனா கூப்பிடுவோம்”

“இப்படி என் தலைல மண் அள்ளிப் போட்டுட்டாரே”

“வேண்டிக்கோ தாயீ.. வேறென்ன சொல்ல?

சித்தி ஏனோ அம்மா சொல்லி முடிக்கும் முன் அழுதாள். ஒரு ராத்திரி பொழுது ஹீனமா கேக்குற சில்வண்டு மாரி சத்தம் வந்துச்சு. எனக்கு அங்க இருக்க சங்கடமா இருந்துச்சு. அம்மா இன்னும் அந்தப் பன்னீர்ப்பூவை மோந்துப் பார்த்தபடி இருந்தா. அம்மா அப்படியே உட்கார சித்தி அங்கயே சரிஞ்சிப் படுத்தா. அதுக்கப்புறமா அவ கண்ணுலருந்து கண்ணீர் நிக்கவே இல்ல..

அம்மா தான் கால் மணிநேரத்துக்கு ஒரு தடவை வாசலுக்குப் போயிட்டு, போயிட்டு வந்தா. பத்து மணி போல இருக்கும். சித்தி நிமிர்ந்து “வந்துட்டாவளா”ன்னு கேட்டா

“இல்ல.. நீ படு”ன்னா

சித்தி ஒரு நிமிஷம் பார்த்துட்டு “க்கா.. நீங்க என் இடத்துல இருந்தா என்ன செய்விய”?ன்னு கேட்டா. அம்மா கைலருந்த வாளிய அப்படியே வச்சிட்டு உறைஞ்சிப் போன மாரி ஆயிட்டா.

“ஏன் இப்படி சொன்ன? எனக்கு ஏன் வரணம்?”னு சொன்னா. சித்தி இப்ப முன்ன விட தேம்பி அழுதா.. “என்னால தாங்க முடிலக்கா.. அவரு எனக்கு துரோகம் பண்ணார்னு நெனைக்க கூட முடிலக்கா”

சித்தி அழுதப்பவே அவளுக்கு வலிப்பு வந்துச்சு. அம்மா “ஏட்டீ ஏட்டீ.. இயேசுவே.. நான் என்ன செய்வே”ன்னு அலறினா. சத்தம் கேட்டு மங்காக்கா உள்ள ஓடி வந்தா. சித்தி வாய்ல இரும்பத் திணிச்சா. அதோட சேர்ந்து நுரைத் தள்ளுச்சு.

மங்காக்கா தெருக்கு ஓடினா. நான் பயந்து சமையலறைக்குள்ள ஓடிட்டேன். சித்தி செத்துப் போயிடுவார்னு தோணுச்சு. அப்ப சித்தப்பா என்ன செய்வார்? வேற யார கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுல வாழ்வார்னு யோசிச்சேன். எனக்கு சாயர்புரம் எஸ்தர் சித்திய அவருக்குக் கட்டி வைப்பாங்கனு தோணுச்சு.

அம்மா தடால்னு உள்ள வந்து தண்ணி எடுத்துட்டு ஓடினா. கொஞ்ச நேரத்துல டாக்டர் வந்து ஏதோ ஊசிலாம் போட்டாரு. சித்திக்கு மூச்சு ஏறி இறங்குதான்னு பாத்தேன். மெல்லிசா தெரிஞ்சிது. அப்பாவும் சித்தப்பாவும் உள்ள வந்து அப்படியே இறுக்கமா நின்னாங்க. சித்தப்பா சித்தி கட்டில் பக்கத்துல போய் அவ கையை லேசா தொட்டார்.

“வெக்கமா இல்ல.. தொடுதிய..”ன்னு கத்தினா சித்தி. கையும் காலும் மறுபடி இழுக்க ஆரம்பிச்சிது.

வேர்விட்டு கிளைப் பிரியும் கதைகள்

1

ஜெயந்தன் படைப்புலகம்

– கவிதைக்காரன் இளங்கோ

*

னித இயல்பை எட்டிப்பிடித்துவிட எல்லோருக்கும் தான் ஆசை இருக்கிறது. அதன் சூட்சுமம் மட்டும் புரிந்துவிட்டால் குறைந்தபட்ச தனிநபர் உரையாடல் கூட இணக்கம் உள்ளதாக மாறிவிடுமே என்கிற சிறிய ஆர்வத் தூண்டல் எல்லாவற்றையும் தேடச் செய்கிறது. கதைகளையும் புனைவுகளையும் கேட்டும் அறிந்தும் பழகிய காதுகளுக்கு மற்றும் மனத்துக்கு ஒவ்வொரு காலக்கட்டதிலேயும் வெவ்வேறு கதைசொல்லிகள் அவரவர் தாம் கைவரப்பெற்ற ரீதியில் கதைகளை நம்மிடம் எழுத்து வடிவில் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

1937-ல் பிறந்து 2010-ல் மறைந்த திரு.ஜெயந்தனின் படைப்புலகில் சிறுகதைகளுக்கென்று ஒரு தனித்த இடமுண்டு. அவருடைய சிறுகதைகளை மட்டும் முழுமையாகத் தொகுத்து ‘நிராயுதபாணியின் ஆயுதங்கள்’ என்ற கனமான நூலாக அசோகமித்திரன் முன்னுரையுடன் 2008–ல் வம்சி புக்ஸ் வெளியிட்டுள்ளது. அவருடைய ஞானக்கிறுக்கன் கதைகளையும் சேர்த்து மொத்தம் 58 கதைகள் தொகுப்பில் உள்ளன.

இந்த 2018-ல், பத்து ஆண்டுகள் கழிந்த நிலையில் முழுமையாக அத்தனைக் கதைகளையும் வாசித்த பிறகு மனம் கண்டறியும் புதிய தரிசனங்களை பகிரத் தொடங்கினால் அது முற்றுப்புள்ளியற்று நீண்டுவிடும் யோசனைகளை வம்புக்கிழுக்கிறது.

காலத்தைக் கடந்து நிற்கும்படியான கதைகள் என்று யாரும் திட்டமிட்டு எழுதிவிட முடியாது. ஆனால் காலத்தைக் கடந்துவந்து கொண்டிருப்பவனாக எப்போதும் மனிதனும் அவன் அமைத்துக்கொண்ட வாழ்வும் தொடர்கிறது. அதனைப் பதிவு செய்வதன் வழியாக ஒரு கதை, வாசிக்கப்படும்போதேல்லாம் வாசிப்பவனிடம் ரத்தமும் சதையுமாக அகக்கண்ணில் நிகழத் தொடங்குகிறது. அங்கு காலம் இல்லை. எஞ்சுவது ‘மனுஷப் பயலும் அவனோட செய்கையும் மட்டும் தான்’

*****

ம்மதங்கள் – கதையில் வருகிற வீரநாச்சி, அபலைகளாக அவளிடம் வந்து சிக்கிக்கொள்ளும் இளம்பெண்களை வைத்து விபச்சாரத் தொழில்  பண்ணுகிறாள். ஒரு கிராமத்தின் சுற்றில் தனித்த ராஜ்ஜியத்தையே உண்டுபண்ணி வைத்திருக்கும் அவளுடைய செல்வாக்கும் செயலும் இப்படியும் ஒரு பெண் இருப்பாளா என்று பெண்களையே திகைப்படைய வைக்கிறது. தொழிலுக்கு எளிதில் ஒத்துவராமல் தப்பியோடி மாட்டிக்கொள்ளும் பெண்களை அவள் அடித்து துவம்சம் செய்து வழிக்குக் கொண்டுவந்துவிடுவாள்.

//அந்த நேரத்தில் இவள் முகத்தில் தெரியும் வெறியைப் பார்த்தால் இவள், அந்தப் பெண்கள் அடிக்குப் பயந்து அடுத்த படி ஒழுங்காக இருக்கட்டும் என்று நினைப்பது போலிருக்காது. அடிப்பதால் தனக்குள் உண்டாகும் மிருக திருப்தியை அனுபவித்து அனுபவித்துக் கிறங்குவதுபோல் இருக்கும். அடக்கியாள நினைப்பவர்களுக்கு இதைவிடச் சிறந்த பண்பு வேறென்ன வேண்டும்?//

துப்பாக்கி நாயக்கர் – கதையில், ஊரையே தன்னிஷ்டத்துக்கு வளைத்துத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வெங்கு நாயக்கருக்கு இருக்கும் ஆள் படைபலத்தையும் போலீஸ் செல்வாக்கையும், சித்தரித்துக்கொண்டே வரும்போது அவருக்கு கதைக்குள் ஒரு பெரும் பிரச்சனை வந்துவிடுகிறது. ஒரு சமயம் அவர் ஊரில் இல்லாதபோது அவருடைய இரண்டாம் தாரமான பாப்பம்மாள் மீது அவரின் நம்பிக்கைக்குரிய அடியாளான ராமசாமியே கைவைக்க முயன்றுவிடுகிறான். அவள் அலங்கோலமாக அலறியடித்து மாடியிலிருந்து ஓடி வருவதில் தான் காட்சியே தொடங்குகிறது. தப்பியோடிய ராமசாமி பால்டாயில் குடித்து செத்தும் போகிறான். அவனுக்கு அப்பன், பொண்டாட்டி பிள்ளையும் இருக்கிறது. ஊர் திரும்பிய துப்பாக்கி நாயக்கரின் மன நிலையையும் மற்றவர்கள் பார்வையில் அடுத்து என்ன ஆகுமோ என்கிற திகிலையும் சொல்லிக்கொண்டே வளரும் கதையில் அவர் முற்றிலும் விசித்திரமாக நடந்துகொள்கிறார். அடியாட்கள் செய்வதறியாமல் முழிக்கிறார்கள். ஊரே குழம்பிப் போகிறது.

ஒரு மனிதனின் எண்ணவோட்டத்தை விளக்காமலேயே அவனுடைய மாற்றம் நிறைந்த விசித்திர போக்குகளை மட்டும் நுணுக்கமாக சித்தரிப்பதன் வழியே வாசிப்பவனையும் ஊரில் ஒரு நபராக உருமாற்றி அந்தப் புதிரை நம்மிடமே மேற்கொண்டு யோசித்துக்கொள்ளும்படி விட்டுவிடுகிறார் ஜெயந்தன்.

தனிமனித உளவியலின் அபாயங்களையோ அதன் உட்சிக்கல்களையோ அத்தனை எளிதில் அறுதியிட்டுவிட முடியாது என்பது நிதர்சனம். ஆனால் அவற்றை நாம் தொடர்ந்து சகமனிதர்களிடம் அடையாளங்கண்டுகொண்டே இருக்கலாம். அவற்றைத் வெளிப்படுத்தவோ பிரதிபலிக்கவோ விடாமல் நிர்ப்பந்திக்கும் அழுத்தத்தை உற்பத்தி செய்யும் வாழ்வியலையே நாம் கட்டமைத்தும் வைத்திருக்கிறோம்.

இதையெல்லாம் ஒரு சாட்சியைப் போல அவதானித்து, அவற்றை நம்மிடம் தம் கதைகளின் வழியே தான் படைக்கும் அல்லது கண்டெடுக்கும் கதாபாத்திரங்களின் மூலம் ஒவ்வொரு கதையிலும் வழங்கியபடியே இருக்கிறார் ஜெயந்தன். அதன் நுட்பங்களை அணுகி அனுபவமாக்கிக்கொள்ள வேண்டிய தேவை வாசகனுக்கு இருக்கிறது. எளிதாக சொல்லப்பட்டதைப் போலதொரு தோற்றம் தரும் கதைகளாக அவை இருந்தாலும், அதில் நீரோட்டமாக அழுத்தம்திருத்தமான முறையில் பாயக்கூடிய தத்துவத்தை புறந்தள்ளிவிடலாகாது.

அவர் கட்டியெழுப்பும் காட்சிப்புலன்கள் வாசகனை கைப்பிடித்து தரதரவென்று இழுத்துப் போய் கதைக்குள் நிறுத்திவிடுகிறது. கதைமாந்தார்கள் அந்நியர்களாக இருப்பதில்லை. இச்சமூகத்தில் இருந்தபடி நம்மைத் தாண்டி நாம் கவனிக்கத்தொடங்கினால் நம் பார்வைக்கு எளிதில் தட்டுப்படக்கூடியவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். அதே நேரம், கதைகளுக்குள் உருவாகும் சம்பவச் சூழலுக்குள் வெளிப்படும் ஏனைய முன்பின் உணர்வுகள் எல்லாமும் எந்தவொரு சாமான்யனும் தன்னுடைய சொந்த வாழ்வில் எங்கேயாவது தவறாமல் அனுபவிக்க நேர்ந்திருப்பவைகளில் ஏதோ ஒன்று தான். குறைந்தபட்சம் அவற்றைக் கேள்வியாவது பட்டிருப்போம். அல்லது செய்தியாகவாவது கடந்திருப்போம்.

அந்தந்த காலத்தின் மனித மனப்போக்குகளை அன்றைய சமூகப் பார்வையும் கட்டுப்பாடுகளும், சுதந்திரங்களும் எவ்வாறு அனுமதித்திருக்கின்றன அல்லது தண்டித்திருக்கின்றன. அதில், ஜாதிப் பெருமைகளும் ஆண்டான் அடிமை விகிதாசாரங்களும் முற்போக்கு சிந்தனைகளை உயர்த்திப்பிடித்து கட்சி சேர்த்துக்கொள்ளும் இளவட்டங்களும் என்னவாக இருக்கிறார்கள். இருந்தார்கள் – என்ற சாட்சியங்களைப் பல கதைகளில் பதிவு செய்கிறார். அவற்றை ஓர் அளவுகோலாக கணக்கில் எடுத்துகொள்வோமேயானால் இன்றைய சமூகப் போக்கு என்னவாக இருக்கிறது என்பதையும் லேசாக நாடிப்பிடித்துப் பார்த்துவிடலாம் போலத்தான் இருக்கிறது.

ஆண்-பெண் உறவுகளுக்கிடையே நிலவுகிற பரஸ்பரங்கள் எந்தெந்த வாழ்வு பின்னணியில் என்னவாக இருக்கிறது என்பதை அலசும் கதைகள் அநேகம் இருக்கிறது. உறவுகளின் வெவ்வேறு நிலைகளையும் அவற்றின் உள்-வெளி விவகாரங்களையும் ஒரு கலந்தாய்வுக்கு உட்படுத்துகிறார் ஜெயந்தன்.

மாரம்மா – கதையில் வருகிற மாரம்மா என்ற பெண், ஊர்ப் பார்வையில், பேச்சில் அதன் ‘க்கு’ வைக்கும் தொனியில் அவள் என்னவாக இருக்கிறாள் என்பதை இன்னொரு பெண்ணின் கோணத்திலிருந்து சொல்லப்பட்டிருக்கிற விதம் வாசகரின் Genre ஐ அழிக்கிறது. மாரம்மா தான் இன்னொரு கதையான ‘மொட்டை’ யில் வருகிற பெண்ணாகவும் நமக்குப்படலாம். ஒரே கதாபாத்திரத்தின் வேறு வேறு வார்ப்பாகவும் அது இருக்கக்கூடும். வயது முதிரும்போது தனக்குள் உருவாகும் கருத்தாக்கங்களுக்கான விளக்கங்களை பொழுதன்னிக்கும் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லாத சுயத்தேர்வாகவும் அது இருக்கலாம். அதை அந்தக் கதையில் மொட்டை செய்கிறாள். அவள் இயல்பு பிறர் கணக்கில் தப்பிவிட்டதாக ஆவதற்கான காரணம் ஓர் ஒப்பிடல் மட்டுமே. ஆனால் அவளுக்கு அதுவே சரி என்றாகும்போது, அதை மாற்றி எழுதும் முனைப்பை எழுத்தாளராக ஜெயந்தன் கூட முயல மாட்டார். அப்படி ஓர் ஆசைக்குக்கூட அங்கே இடமில்லைத்தான்.

பெரும்பாலும் கதைகள் முடிவை நோக்கி முடிவதில்லை. அதை வாசிப்பவர் வளர்த்துப் போவார். அல்லது நெஞ்சுக்குள் தேங்கிப் போய் காலத்துக்கும் அலுங்காமல் அது அங்கேயே கிடக்கும்.

*****

னித்தனிக் கதைகளாக எழுதப்பட்ட போதிலும் சில கதைகளுக்கு நச்சென்று ஒரு தொடர்பும் இருக்கவே செய்கிறது. ஒரு கதையின் கதாபாத்திரமே இன்னொரு கதையின் கதாபாத்திரமாகவும் இருப்பதை கூர்ந்து கவனித்தால் அடையாளம் பிடித்துவிடலாம். அது கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. ஒரு முழுத் தொகுப்பையும் வாசிக்க நேரும்போது கிடைக்கக்கூடிய தொடர்புக் கண்ணிகள் இவை.

‘இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள்’ கதையில் வருகிற ராகவன் கதாபாத்திரம் ‘எங்கும் மனிதனே’ என்ற கதையிலும் இருக்கிறான். அதே தொழில் மற்றும் உடற்மொழிகளோடும் சிந்தனைகளோடும் இருக்கிறான். ஆனால் இரண்டு கதைகளும் ஒரு மனிதனின் வாழ்வில் இருக்கக்கூடிய இரண்டுவித அம்சங்களை வெளிப்படுத்துகிறது. இரண்டு கதைகளிலும் செயல்படுத்தத் தூண்டுகிற எண்ணவோட்டங்களும் வேறு வேறு காரணங்களோடு கதைக்களனுக்கு தக்கவாறு பொருந்தி நிற்கிறது. ‘இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள்’ நகைச்சுவைத் தொனியில் சொல்லப்பட்ட கதையாக இருக்கிறது. ‘எங்கும் மனிதனே’ கதை சீரியஸான இரண்டு விஷயங்களை கையில் எடுத்துக்கொண்டு பேசுகிறது. அப்போது, ஒரே மனிதனின் இருவேறு கூறுகளுக்கு நாம் சாட்சியாகிறோம்.

இங்கே ஒரு தனிமனிதன் அவ்விதமாகத்தானே இருக்கிறான். இருந்தாக வேண்டும்.

வீடு – என்கிற கதையில் அந்த வீடுதான் கதைசொல்லி. மழைக்கு ஒதுங்க அந்த வீட்டை அண்டும் ஒருவனிடம், தன் கதையை சொல்லத் தொடங்குகிற வீடு நம்மை வெகுவாக யோசிக்க வைக்கிறது. மனிதனின் சந்தர்ப்பவாதங்கள் எதையெல்லாம் செய்யத் துணியும். ஒருவனுடைய இயலாமை என்ன மாதிரியான முடிவுகளை எடுக்க வைக்கும். இதையெல்லாம் மௌன சாட்சியாக சதா உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு கட்டிடம் என்பதுதான் நாம் வாழும் வீடாகிறது என்று நினைக்கத் தொடங்கும்போது.. அந்தக் கதைக்குள் நாம் இயல்பாகவே ஈர்க்கப்பட்டுவிடுகிறோம். அந்த வீட்டில் வாழும் ஒரு ஜோடிகளைப் பற்றிய கதையை விஸ்தரித்துக்கொண்டே போகிற வீடு முடிவில் அந்தக் கதையைக் கேட்டுக்கொண்டிருந்தவனை திட்டுகிறது. அது ஏன் திட்டியது என்பதை உணர்ந்து சிரிக்காமல் இருக்க முடியாது. ஆனால், அதோடு நிறுத்திக்கொள்ளாமல் அந்தத் திட்டைக் குறித்து மேற்கொண்டு சிந்த்திக்காமலும் இருக்க முடியாது.

ஆகஸ்ட் – கதை ஒரு வழக்காடு மன்றத்தில் நீதிபதிகளுக்கு முன்னால் நடத்தப்படும் ஒரு வழக்கு விசாரணையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. சாந்தி டீச்சர் ருத்ரா டீச்சரின் தலைமுடியைப் பிடித்து கீழே தள்ளி மிதித்துத் தாக்கியிருக்கிறாள். ஏன்? என்பதற்கு அவள் சொல்லும் காரணங்கள் வியப்பாகவும் ஏற்புடையதாகவும் இல்லாமல் போகிறது. தொடர்ந்து நடக்கும் தர்க்கங்கள் வாக்குவாத மோதல்கள் எதனை நிறுவிட முயல்கிறது என்பது வாதப் பிரதிவாதங்களில் வெளிப்படுகின்றன.

அதில் சாந்தி டீச்சரின் நிலைப்பாடுதான் கதையின் போக்காகவும் இருக்கிறது. ஆண் பெண் என்கிற மனோபாவங்களில் உருவாகிற மன அழுத்தங்கள் ஒரு தனித்த மனித உளவியலை என்னவெல்லாம் செய்துவிடுகிறது என்பதையும் நீதி பரிபாலனங்கள் இறுதியில் என்ன மாதிரியான முடிவுகளை தீர்ப்பாக்குகின்றன என்பதையும் வெளிப்படுத்துகிறார் ஜெயந்தன்.

சர்வாதிகாரியும் சந்நியாசினியும் – கதையில் நாடு தழுவிய அரசியல் நிலவரத்தை கதைக்கென இரண்டு அடிப்படைக் கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு வளர்த்துப்போகிறார்.

கதையின் தொடக்கம் இதுதான்..

வீட்டு முகப்பில் சர்வாதிகாரக் கொடி பட்டொளி வீசிப்பறந்து கொண்டிருந்தது.எதிர் வரிசை எதிர்வீட்டில் சந்நியாசக் கொடி அதேபோல் உனக்கென்ன நான் இளைப்பு என்று.முதல் வீடான காசிநாதன் இல்லத்தில் எல்லா சர்வாதிகாரிகளும் – ஹிட்லர் முதல் இடிஅமீன் வரை.அதே போல் அங்கே தரணியம்மாள் இல்லத்தில் மகாத்மா விதுரனிலிருந்து, அன்னை தெரசா வரை.

காசிநாதனும் தரணியம்மாளும் ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகள். கதைக்குள் ஊர்ப்பொது பிரச்சனையிலிருந்து பொருளாதார சமத்துவம், சமதர்மம் முதற்கொண்டு ஈழப் பிரச்சனை வரையிலும் வெவ்வேறு கோணத்தில் அலசப்படுகிறது. வரலாற்றுத் தலைவர்கள் அநேகம் பேர் கதைக்குள் தஞ்சம் அடைந்துவிட்டார்கள். இவ்வாறாக கட்சிப் பிரிந்து நடக்கும் வாதப் பிரதிவாதங்கள் சமகால நவீன சிந்தனைக்கான அவசியத்தை வலியுறுத்துகிறது. அந்த வகையில் கதைக்குள்ளே பேசும் கதாபாத்திரங்களாகவே நம் பார்வைக்குத் தட்டுப்படுபவர்களின் ஒரு பட்டியலை இங்கு பார்ப்போம்.

முசோலினி, பி.யூ.சின்னப்பா, மதர் தெரஸா, செயின்ட் ஜோன், கபீர்தாஸ், இலங்கைத் தமிழ் எழுத்தாளர் ஒருவர், குணங்குடி மஸ்தான், ரவீந்திரநாத் தாகூர், வினோபாபாவே, இரட்டைமலை சீனிவாசன், பரசு.நெல்லையப்பர், வ.ரா, பி.இராமமூர்த்தி, என்.எஸ்.கிருஷ்ணன், பா.ஜீவானந்தம், மனு. தவிர, இவர்களைக் கடந்து, கதாபாத்திரங்களின் பேசுபொருளாக காந்தியும், அம்பேத்கரும், வேலுபிள்ளை பிரபாகரனும் கூட இருக்கிறார்கள்.

கதையின் இறுதி வரி அதுவரையிலான நமது எண்ணத்தையும் சிந்திக்கும் திறனையும் பார்த்து சவால் விடுகிறது.

நிராயுதபாணியின் ஆயுதங்கள் – கதை அன்றைய சமூக நடப்பின் சமகாலக் குற்றச் செய்திகள் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்துகிறது. அநீதிகளையும் அக்கிரமங்களையும் வெறுமனே கேள்விப்பட்டும் கடந்தும் போயே பழகிய சாமானியனின் உள்ளக் குமுறலுக்கு ஒரு வடிகால் போல பகல் கனவு போல பெயரற்று வந்து போகிறாள் அவள். தன்னை ஒரு கிருஸ்துவர் என்று சொல்லிக்கொண்டு தேவாலயத்துக்கு தொடர்ந்து வந்து பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கேட்டுப்போகிறாள். அவளும் அவள் தோழிகளும் தொடர்ந்து செய்ய  நேர்ந்த கொலைகளுக்குத்தான் அந்த பாவ மன்னிப்புக் கோருதல் நடக்கிறது. ஏன்? என்ற கேள்விகளுக்கு சிதம்பரம் பத்மினி, ஒரிஸா மாநிலம் கியோஞ்சர் மலை மாவட்டம் மனோகர்பூர் கிராமம் 1999 ஜனவரி 22 நள்ளிரவு, ஒரு பிரார்த்தனைக் கூடத்தின் முன் நின்ற வேனுக்குள் இருந்த போதகர் கிரஹாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸூம் அவரது மகன்கள் பிலிப்பும் டிமித்தியும் உயிரோடு எரிக்கப்பட்டது. பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் போன்ற பற்றியெரிந்த செய்திகளை உள்ளடக்கிய விவாதங்களும் மனப்போக்குகளும் கதையாக கையாளப்பட்டிருக்கின்றன.

தடுப்புக்கு இப்புறம் இருந்து கவலையோடு பாதிரியார் அவளிடம் கேட்கும் ஒரு குறுக்குக் கேள்விக்கு அவள் நிதானமாக ஒரு பதிலைச் சொல்லுகிறாள்.

‘நமது ஆயுதங்களை எதிரிகள்தானே தீர்மானிக்கிறார்கள் ஃபாதர்’

அரும்புகளை – என்ற கதையில் கதைசொல்லி ஓர் ஆராய்ச்சி மாணவி. நாட்டுப்புற பாடல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு லாட்ஜில் வந்து தங்கியிருக்கிறாள். அங்கே பதினோரு வயது மட்டுமே நிரம்பிய சிறுவனைப் பார்க்கிறாள். அவன் அங்கே ரூம் பாயாக வேலை செய்கிறான். அவன் பெயர் பரணி. இருவருக்குமான உரையாடல்களும் அவனது வாழ்வும் நிலையும் அவன் இங்கு வந்து சேர்ந்ததற்கான காரணங்களும் அவளுடைய மனதை அலைக்கழித்து சங்கடப்படுத்துகிறது. அவனை அதிலிருந்து மீட்டுவிட அவள் துடிக்கிறாள். அவனிடம் இருக்கும் குழந்தமை அவளுடைய கண் முன்னேயே கொஞ்சம் கொஞ்சமாக மாறிப்போவதை தடுக்க வழியின்றி திகைத்துப் போகிறாள். அவனைக் கூடுதல் சம்பாத்தியக்காரனாக மாற்றுவதற்கு லாட்ஜ் ஓனர் மெல்ல அவனுடைய வாழ்வை எதை நோக்கித் தள்ளுகிறான் என்பதையும், வேறு வழியற்றோ அல்லது அதன் காரணமாகவோ விரும்பியோ அவன் அடுத்து ஒரு Pimp ஆக எப்படி மாறிவிடுகிறான் என்பதை அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

குழந்தைத் தொழிலாளர்கள் என்கிற கருவை மட்டுமே அக்கதை முன்னெடுக்கவில்லை. அதற்குள் உழன்றாடும் நுணுக்கமான மன அவஸ்தையை எடுத்து நம் முன் வைக்கிறது. அவையெல்லாம் வாழ்க்கை என்ற அபத்தத்தை தோலுரித்துக் காட்டவும் செய்கிறது.

4வது பரிமாணம் கதையில் வருகிற ஜெயா மற்றும் தேனம்மா கதாபாத்திரங்கள் ஓர் ஆண் பெண் உரையாடலை நிகழ்த்தியபடியே தத்தம் எண்ணங்களை, ஆசைகளை, ஏக்கங்களை, குழப்பங்களை மற்றும் முடிவெடுத்தல்களின் மீது நிகழ்த்திப் பார்க்கும் தர்க்கங்களை, அவற்றில் உயர்ந்தெழுந்து தாழ்ந்து வீழ்ந்து அவஸ்தைப்படுகிற நியாயங்களை என்று ஒரு கலைடாஸ்கோப் அனுபவத்தைத் தந்து செல்கிறார்கள். சேர்ந்து ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள படித்து வேலைக்குப் போய்க்கொண்டிருக்கும் ஓர் ஆணும் பெண்ணும் பரஸ்பரம் உட்கார்ந்து பேசத் தொடங்கினால், அந்தப் பேச்சில் எதுவெல்லாம் சாத்தியமாக உள்ளன என்பது அவ்வவர்களின் தனிப்பட்ட பர்சனல் விஷயமாகவே மட்டுமே இருந்துவிட முடியுமா என்கிற கேள்வியை முதன்மைப்படுத்துகிறது இக்கதை.

அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் – கதையில் பெண்ணியம் பற்றிய உரையாடல்கள் நிறைந்திருக்கிறது. அக்காள் தனத்தின் புதிய மணவாழ்வை அருகிலிருந்து தரிசிக்கும் கஸ்தூரி, பெண்ணியப் பார்வையில் பெண்ணின் நிலை மற்றும் ஆண்களின் கோணம் என்னவாகவெல்லாம் இருக்கலாம் என்கிற  தன்னுடைய கருத்துகளை சொல்லிக்கொண்டே இருக்கிறாள். தனம், தன்னுடைய கணவன் முரளி ஒரு முற்போக்குவாதி என்பதை பிரஸ்தாபிக்க முயல்கிறாள். அவர்கள் குடும்பமாக பிக்னிக் வந்திருக்கிறார்கள். முரளியின் அண்ணன், தங்கை குடும்பம், குழந்தை, மாமனார், மாமியார் இப்படி.

அவர்கள் இவர்களுக்காக கீழே தோட்டத்தில் காத்துக்கொண்டிருக்கிறார்கள். தனம் தன்னை அலங்கரித்துக்கொண்டிருக்கிறாள். கிளம்பியது கிளம்பியபடி அக்காளுக்கும் தங்கைக்கும் பேச்சு நடந்துகொண்டிருக்கிறது. கஸ்தூரி சிம்பிளாக இருக்கிறாள். அவள் மாதர் சங்கத்தில் மெம்பராக இருப்பவள். ஒருவழியாக கீழே இறங்கிவந்தபின் முரளியோடு இயல்பாகத் தொடங்கின இன்னோர் உரையாடல் கஸ்தூரி கேட்கும் ஒரு சாதாரணக் கேள்வியால், அதன் முக்கியத்துவத்தால் என்னவான விளைவை உண்டுபண்ணுகிறது. எதிர்பாரா ஒரு சிறிய விஷயம் எப்படி எதை நோக்கி பூதாகாரமாக விஸ்வரூபமெடுக்கிறது. காலங்காலமாக ஊறி புரையோடியிருக்கும் ஆண் என்கிற அதிகார மையம் தம்மை நங்கூரமிறக்கும் சதுப்பாகவே பெண்ணின் நிலை இருக்கிறது என்பதை கண் முன் கண்டும் செய்வதறியாமல் தவித்து போய் அங்கு நிற்கிறாள் கஸ்தூரி.

இன்றைய பெண்ணியம் எத்தனை சதவீதம் எந்தப் பாதையில் முன்னேற்றம் கண்டிருக்கிறது என்பதையோ அல்லது தேக்கமும் முட்டுக்கட்டையுமாக எந்த ரீதியில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது என்பதையோ கொஞ்சமாவது பல்ஸ் பிடித்துப் பார்க்க ஓர் எளிய கருவியாக இக்கதை இருக்கக்கூடும்.

வாழ்க்கை ஓடும் – தொகுப்பின் முதல் கதையாக அமைந்திருக்கிறது. குப்பிக்கிழவிக்கும் மருமகள் வள்ளிக்கும் குடிமிப்பிடி சண்டையாகிப் போகிறது. மகன் சின்னையா இரவு வீடு திரும்பும்போதே கோபத்தோடு வருகிறான். அவனுக்கு வெளியே யாரோடோ தகராறு. இரண்டு குழந்தைகளும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த இரவில் எப்படி மெல்ல ஒரு மனிதனின் நிம்மதி குலைதல் உச்சம் தொடுகிறது என்பதையும், அதுவே எப்படி நள்ளிரவுக்கு பிறகு தணிந்து போகிறது என்பதையும் அந்த மூவரையும் வைத்து உளவியலாக படம்பிடித்துக் காட்டுகிறது கதை. எளிய மனிதர்கள் தங்களுக்குள் தங்களை எப்படியெல்லாம் கடத்திவிடுகிறார்கள் என்கிற மாயம் அசாத்தியமான ஒன்றாகவும் பிரம்மாண்டமாகவும் எழுந்து நிற்கிறது.

எழுதியவனும் படித்தவளும் – கதையில் எழுத்தாளனுக்கும் அவனுடைய வாசகிக்குமான உறவுநிலையை பேசுகிறது. அவளுக்கு அவன் மீது உள்ள காதலைச் சொல்லி தன்னை வாழ்க்கைத் துணையாக்கிக்கொள்ள விண்ணப்பம் வைக்கிறாள். பிராக்டிகலாக எப்படியெல்லாம் அது சாத்தியமில்லை. ஏன் சாத்தியமில்லை என்கிற சுவாரசியமான கலந்துரையாடலாக இக்கதை தன்னை விஸ்தரித்து செல்லுகிறது. கற்பனை உலகும் நிஜ உலகும் மோதி விலகும் கணத்தின் அளவை மெல்ல மெல்ல பிரித்து எடுத்து மேஜை மீது வைத்து அதிலுள்ள புதிய அர்த்தங்களை கண்டடைய ஹார்மோன் ஜாலங்களை துடைத்தெறிந்து பார்க்கிற மீச்சிறு துல்லியம் இதிலுள்ள பாத்திர வார்ப்புகளில் துலங்குகிறது.

*****

ண் பெண் பாலியல் அவஸ்தை என்பது நுணுக்கமான உளவியல் தன்மைகளைக் கொண்டது. அவற்றை கதைக்குரிய தேவைப் பொருட்டு அசூசையாக இல்லாமல், வாழ்வில் இரண்டற ஒன்றென கலந்துவிட்ட ஒரு சங்கதியாக கையாள்கிறார் ஜெயந்தன்.

‘வெள்ளம்’ சிறுகதையில் வருகிற அந்தச் சிறுமிகள், சுப்புலெட்சுமி, மேலத்தெரு காமாட்சி, இரட்டை அர்த்தங்கள் பொதிந்து பேசுகிற வேலு கவுண்டர். ஒவ்வொருவருக்கும் ஒரு விதம் இருக்கிறது. மழைப்பொழுது சேகரனை உள்ளுக்குள் அவனுடைய மனம் எப்படி அனல் மூட்டி வெப்பம் கூட்டுகிறது என்கிற பார்வையில் கதையின் போக்கில் தொடக்கத்திலேயே ஓரிடத்தில் ஜெயந்தன் அழகாகச் சொல்லுகிறார்.

உடல் உடலுக்கு ஆயத்தமாகி எதிராளி இல்லாத நிலையில் அவனைச் சங்கடப் படுத்தியது.

மனம் ஒவ்வொரு பெண் மீதும் தாவித் தாவி கடைசியில் தன்னோடு அடங்கி நிற்கும் இடத்தில் மழை ஓய்ந்த காட்சியைப் பார்த்தபடி இருக்கிறான் சேகரன்.

நானும் என் மனக்குறளியும் – கதையில் ஹோட்டலில் எதிர் டேபிளில் வந்து உட்காரும் ஒரு நடுத்தர வயது ஜோடியின் பேச்சில் தெறிக்கும் காம ஜாடையும், இந்தப்பக்கத்தில் உட்கார்ந்தபடி பக்கத்திலிருக்கும் நண்பர் பேசும் இலக்கிய உரையாடலுக்கும் அவ்வப்போது காரியத்திலேயே கண்ணாயிருந்து மனக்குறளி கெக்கலித்து அடிக்கிற கமெண்ட்டுக்கும் மல்லுக்கட்டி வம்பெடுக்கும் உள் அர்த்தத்துக்கும் என எல்லாமுமாய் கை வீசி திசைகளை சிதறடிக்கிற நுணுக்கமான கதை.

கவிமூலம் – கதையில் வருகிற Inter relationship தான் சிவராமனின் பிரச்சனை. பிரச்சனையின் வடிவம் ‘என்னா கொழுந்தனாரே இப்பதான் எழுந்திருச்சாப்பலியா?’ என்று இவனைப் பார்த்ததும் பாதி சிரிப்பும் பாதி நாணமுமாக இவனை நோக்கி நடந்தபடியே விசாரிக்கிற அண்ணியின் வடிவமாக இருக்கிறது.

தொடர்ந்து உருண்டோடும் பேச்சில் பொதிந்து கிடக்கும் வெவ்வேறு அர்த்தங்களை மனம் அடையாளங் காணுவதோடல்லாமல் அதன் இழுப்புக்கெல்லாம் இஷ்டம் போல வளைந்து போகும் போக்கில் சிக்கித் திணறிவிடும் மூச்சின் இழுவையில் அல்லாடுகிறான் அவன்.

கதையின் தொடக்கத்தில்..

ஒரு ஜடப்பொருள், ஒரு ஜடப்பொருளாய், ‘என்னை எனக்குத் தெரியாதே’ என்று கிடந்தால் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் ஒரு உயிர்ப்பொருளாகிய தனக்கு, தான் யார், தன் யோக்கியதை என்ன என்பது தெரிந்திருக்க வேண்டாமோ? Brain is the finest form of matter  என்று மற்ற விஞ்ஞான மூளைகள் சொல்லிக் கொடுத்த கிரீடத்தை சூட்டிக் கொண்டாகிவிட்டது.

என்கிற அறிவியல் கோட்பாட்டுத் தத்துவ அடிப்படையோடும் அதில் மனம் என்னவாக உருமாறி பாடுபடுகிறது என்கிற ஹார்மோன் விளையாட்டும், ஒரு சுயமதிப்பீடும் எங்கெங்கே இழுத்துப் போய் இறுதியில் என்னவாகக் கொண்டு போய் அவனை நிறுத்துகிறது.

*****

தொகுப்பின் கடைசி பதினோரு கதைகளான பச்சை, பட்டம், வாணிகம், சங்கிலி, பரிணாமம், துக்கம், பவிசு, உனக்கு ஒரு அய்யோ, நாய் வளர்ப்பு, 542, தலைமுறை வரை ‘ஞானக்கிறுக்கன் கதைகள்’ என்று தனித்துப் பிரித்துத் தரப்பட்டிருக்கின்றன. அத்தனைக் கதைகளின் பிரதானக் கதைசொல்லி கதாபாத்திரம்தான் ஞானக்கிறுக்கன். அவனுடைய பார்வையில்தான் ஒவ்வொரு கதைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன.

சாதாரணமாக நாம் எதிர்கொள்ள நேர்ந்த அல்லது இதை இப்படித்தான் யோசித்துப் பழக்கம் என்கிற அன்றாட இயல்பை வேறொரு தத்துவ நோக்கில் அவதானிப்பதும், அவற்றின் தொடர்பாக கேள்விகளை எழுப்புவதும் அல்லது ஓர் ஆழ்ந்த தர்க்க விவாதத்துக்குள் நுழைந்து பார்ப்பதுமே ஞானக்கிறுக்கனின் தனித்துவம். எதுவேண்டுமானாலும் கொட்டிக்கவிழ்க்கப்படும் ஆபத்து அக்கதைகளில் எப்போதும் இருக்கிறது. சாதாரணம் என்பது அசாதாரணத் தொனியைத் தொட்டுக்கொண்டு துருத்திவிடும் தருணத்தை கண்டடைகிற ஆள் ஞானக்கிறுக்கன்.

பதினோரு கதைகளின் வெவ்வேறு போக்கில் ஜெயந்தன் எழுதியிருக்கும் வரிகளில் என்னைப் பாதித்தவற்றில் சிலதை தனித்தனியாகப் பதிவு செய்கிறேன், அவை அக்கதைகளைத் தேடிப்பிடித்து வாசிக்கத் தூண்டும் என்றும் நம்புகிறேன்.

  • பாரபட்சமற்ற மதிப்பீடு.
  • தன்னைவிட தனக்குப் பிரியமான மனிதன் வேறு யார் இருக்க முடியும்?
  • ‘ஒரு நுகர் பொருளை முதலாவதாக ஞாபகத்திற்கு வரும்படி செய்து விடுவதே அந்தப் பொருளின் தரமாகிவிடுமா?’
  • முடிவுதான் எந்தக் காரியத்தையும் நியாயப்படுத்துகிறது. The result justifies the deed.
  • பரிணாமம் கதையில் யானை ஞானக்கிறுக்கனிடம் கனவில் பேசுகிறது. அங்கே அதன் முன்னே மாணவர்கள் போல நாற்பது ஐம்பது மிருகங்கள் நின்றுக்கொண்டிருக்கின்றன.

யானை பேசியது: ‘இந்த இடத்தில் நின்றுதான் அந்த மனிதக் குரங்கு எங்களிடம் விடை கேட்டது. எனக்கு பகுத்தறிவு என்னும் வரம் கிடைத்திருக்கிறது. நான் மனிதனாக, அப்புறம் அதி மனிதனாக, அப்புறம் தேவனாக, கடைசியாக கடவுளாக பரிணாமப்பட வேண்டும். நான் புறப்படுகிறேன். எனை ஆசிர்வதியுங்கள்’ என்று கேட்டது.

‘நாங்கள் சொன்னோம்: இல்லை நண்பா, இயற்கை ரொம்பவும் நியாயமானது. எந்த ஒரு ஜீவராசிக்கும் தனிச் சலுகைகள் கொடுக்க அதற்குத் தெரியாது. நீ எதையோ தவறாகப் புரிந்துகொண்டது போல் தெரிகிறது. நீ வரம் என்று சொல்வது சாபமாகக் கூட இருக்கலாம். நன்றாக யோசி. வேண்டாம் என்றோம். அது கேட்கவில்லை. புறப்பட்டுப் போனது. இப்போது மனிதனாகி அனுபவிக்கிறது.’

  • அழுகை என்பது மிகப்பெரிய விஷயம். அதற்கும் துன்ப துயரத்திற்கும் பாலியல் உறவே இருக்க வேண்டும்.
  • மனிதன் ஒரு பழக்கப் பிராணி. Habitual Animal.

*****

தைக்குரிய களத்தை உறுதிப்படுத்தும் காட்சிகளும் கதாபாத்திரங்களின் நறுவிசும் அவைகளின் பண்புகளுக்குரிய வார்ப்பும், அவற்றின் துணைக்கொண்டு  சொல்ல நினைக்கும் விஷயத்தைவிட்டு விலகாமல் ஜெயந்தன் அவர்கள் உருவகித்து உயர்த்துகிற கட்டுமானமும் அசாதாரணமான ஒன்று.

உரையாடல்களில் அவர் கையாளும் சொற்சிக்கனம் உற்றுக் கவனிக்க வேண்டிய ஓர் அம்சமாகும். மட்டுமல்லாமல் அதில் உள்ள வட்டார வழக்கு கதாபாத்திரத்தின் குணாதிசயத்தையும் எண்ணவோட்டத்தையும் நிஜத்தன்மையோடு நம் முன் நிலைநிறுத்துகிறது. அப்போது கதை கண் முன் நிகழ்கிறது என்பதையும் மீறி கதைக்குள் நாம் நின்றுகொண்டிருக்கிறோம் என்கிற மனோவேகத்தையும் உண்டுபண்ணுகிறது.

உரையாடல்களால் கதையை முன்னோக்கி நகர்த்தும் அவருடைய எழுத்து லாகவம் வியப்பை ஏற்படுத்துகிறது.

புதியத் தலைமுறை வாசகர்களுக்கும் எழுத்தார்வம் உள்ளவர்களுக்கும் ஜெயந்தனின் சிறுகதைகள் பாய்ச்சுகிற வெளிச்சம், அவர்கள் தேர்வு செய்ய விரும்பும் நெடிய பாதைக்கான சாத்தியக்கூறுகளை உறுதிப்படுத்த நிச்சயம் உதவும்.

*****

கவிதைக்காரன் இளங்கோ
சென்னை.
9840404714.

மன்னிக்க வேண்டும் தோழி!

0

ராம் முரளி

மீப நாட்களாக எனது சிவப்பு நிற மடிக் கணினியைத் திறக்கையில், அந்த ரெட்டைவால்குருவி எனது மென்திரையின் மீது எவ்வித அவசரங்களுமின்றி குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தலைகிறது. இணைய சேவையை நான் முடக்கிவிடுகையில்தான் அந்தப் பறவை என் மடிக்கணினியின் மீது உயிர்ப்பிக்கிறது. கூகுள் குரோமில் எந்தவொரு இணைய முகவரியையும் பதிவு செய்வதற்கு முன்னதாக, அந்தப் பறவையை நான் பார்க்க நேரிடுகிறது. காடுகளை இழந்துவிட்டு, பறக்க வெளியற்ற பறவை எனது மென் கணினியின் ஒளித்திரைக்குள் புகுந்துவிட்டிருக்கிறது என்றே அதன் திடீர் வருகைக்கு நானொரு காரணத்தைக் கற்பித்து, அதன் இருப்புக்கு புதிய அர்த்தமொன்றை உருவாக்கியிருந்தேன்.

சிறிய உருவில் மென்திரையில் அது மீனைப்போல மிதந்தபடியே சுற்றியலைந்து கொண்டிருக்கிறது. நான் துவக்கத்தில் அதனை எதுவொன்றும் செய்திருக்கவில்லை. எனது சிறு செய்கை கூட அதனை தொந்தரவு செய்துவிடக்கூடாதென்பதில் கவனத்துடன் இருந்தேன். எனது மடிக்கணினி அதற்கு வனாந்திரமாக தெரிந்திருக்கக்கூடுமென அப்படியே விட்டுவிட்டேன். ஒருமுறை கைதவறி எனது மவுஸ் நகர்த்துகையில், குருவியின் மீது, அதன் குறி தொட்டுவிட்டது. அவ்வளவுதான், படாரென வெடித்து பஞ்சைப்போல புகையுருவில் அந்த குருவியினது உயிர் பிரிந்துவிட்டது. அதன்பிறகு ஒவ்வொருமுறை இணைய முகவரியைத் தொடுக்கும்போது, மிகக் கவனமாக அதனது இயக்கத்தில் என் கண்கள் மேய்ந்து திரும்பும்.

தினசரி காலையில் செய்வதற்கு ஒரு வேலையுமின்றி மனம் வற்றிய நிலையில் பாசாங்கு செய்பவனைப்போல, மடிக் கணினியை திறந்து வைத்துக்கொண்டு பெற்றோரின் பார்வையிலிருந்து தனித்திருக்கும் பிரயத்தனத்தில் நான் ஈடுபட்டிருக்கும்போது அந்தப் பறவையும் என்னுடன் சேர்ந்துகொள்கிறது. என்போன்றே மடிக்கணினியில் மறைந்து பதுங்கும் அதன் பாசாங்குத்தனத்தை வெகு இயல்பாக என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

சாலை சீரமைக்கும் பணியில் என்னை சமீபத்தில்தான் தந்தை சேர்த்துவிட்டிருந்தார். அவருடைய மேல்நிலை அதிகாரிகளிடம், எனது கல்வித்தகுதியை சமர்ப்பித்து எனக்கு அந்த வேலையினைப் பெற்றுக் கொடுத்திருந்தார். மந்தாரக்குப்பம் எனும் ஊரில் இருந்து நெய்வேலி டவுன்ஷிப் பகுதிக்குள் நுழையும் மையச் சாலை அது. இதற்கு முன்பாக பல வருடங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த சாலையை நெய்வேலி நிர்வாகத்தினர் வெகு சொற்ப தினங்களுக்கு முன்பாகத்தான் வெட்டிவிட்டார்கள். நிலக்கரி சுரங்கத்தின் விரிவாக்கப் பணியின் காரணமாக அந்த நிலம் முழுவதுமாக வெட்டி எடுக்கப் பட்டிருக்கிறது.அதனால், புதிதான சாலையை போக்குவரத்துக்கு அவர்கள் நிலத்தில் வேய வேண்டியிருந்தது.

அதில்தான் நான் தற்செயலாக சிக்கிக்கொண்டேன். கல்லூரி முடிந்து முழுதாக இரண்டாண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், இன்னமும் சொல்லிக்கொள்ளும்படியான வேலை எதிலும் சேர்ந்திருக்கவில்லை என்பதால், தந்தை வற்புறுத்தி என்னை அங்கு அழைத்துக்கொண்டு போய் சேர்த்துவிட்டார். காலையிலேயே கையில் நில அளவை செய்வதற்கு தேவையான இன்ச் டேப் ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்துவிடுவார்கள். நிலத்தில் ஆங்காங்கே மனித கூடுபோல நின்றிருக்கும் கருவிகளை மையங்களாக வரித்துக்கொண்டு, நிலத்தை அளக்க வேண்டும்.மதிய நேரத்தில் பார்வையிட வருகின்ற உயர் பொறியாளர்களுக்கு எனது புத்தகத்தில் நான் எடுத்து வைத்திருக்கின்ற குறிப்புகளை காண்பிக்க வேண்டும். உண்மையில் எனக்கு இந்த வேலை மிகவும் சோர்வளிக்கக்கூடியதாக இருந்தது. காலையில் சீக்கிரத்திலேயே வெயிலேறிக்கொள்கிறது. பத்து மணியைக் கடப்பதற்குள் உடலில் வியர்க்காத அங்கமில்லை எனும் நிலை.உருண்டோடும் வியர்வையின் நசநசப்பை பொருட்படுத்தாமல் வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும்.

உள்ளறைகளில் அமர்ந்துக்கொண்டு, சில்லென ஃபேன் காற்றினை வாங்கியபடியே இதுநாள்வரையிலும் வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட எனக்கு, இந்த வேலையில் துளியும் விருப்பமில்லாமல் போய்விட்டது. அதிலும், மைய பொறியியலாளரான சண்முகசுந்தரத்தின் முகத்தைப் பார்க்கவே சகிக்கவில்லை.தொந்தியும் தொப்பையுமாக புல்லட் பைக்கில் கிளம்பி வந்து களத்தில் நின்றுகொள்வார்.எனது உடலில் உண்டாகின்ற நடுக்கங்கள் அவருக்கு மிகுந்த மனக்கிளர்ச்சியை அளிப்பதுபோலத் தெரிகிறது.சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு, நீண்ட நேரமாக என்னையே பார்த்துக்கொண்டிருப்பார்.அவரது கூரிய பார்வை என்னை துளியும் மனிதவுருவாக கருதுவது போலவே இல்லை.ஏதோ மாமிச கழிவைப்போலவும், கோவில் வாயில்களில் சில்லறை எதிர்பார்த்து தட்டுகளை உருட்டுகிறவனைப் போலவும் தெரிந்திருக்கிறது. நான் ஏதோ அவரையே சார்ந்திருப்பதைப்போன்ற எண்ணத்தை என்னில் உண்டாக்குவதில் அவருக்கொரு அலாதியான ஆர்வம்.

அப்பாவிடத்தில் இதெல்லாம் தெரிவித்தால் பதிலுக்கு எனக்கேதான் அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தார். துவக்கத்தில் எரிச்சல் அடையச் செய்யும் போக்குகள் மிகுந்துதானிருக்கும் என்றும், அவைகளை பொருட்பாடு செய்யத் தேவையில்லை என்றும் என்னிடம் மெல்ல நிதானமாக எடுத்துரைத்தார்.அப்பா அரசாங்க உத்யோகத்தில் இப்படியே பிறரிடம் அணுக்கமாக வாழ்ந்தே பழக்கப்பட்டவர். எனது இயல்புக்கு அது பொருந்தவில்லை. அந்தப் புழுதி வெளியில் பிறிதொரு மனிதரின் முன்னால் பாவனை செய்து கொண்டிருப்பதையும், எனது திறமையினை நிரூபித்து அவரை திருப்திபடுத்த வேண்டிய நிலையையும் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருப்பதில் எரிச்சலும், அசூயையான உணர்வும்தான் எனக்குள் எழுந்தருளியது.

மண்ணை வெட்டுகின்ற குழுவினடத்தில் தானே சென்று பேச்சுக் கொடுத்து எனது காலில் மண்வெட்டியைப் போட்டு காயமேற்படுத்திக் கொண்டது ஒரு நாடகத்தைப்போலத்தான் நிகழ்ந்து முடிந்தது. எனது பாதங்களில் பலமாக அடிவிழுந்துவிட்டது. மண்ணில் ஊறிக்கொண்டிருந்த நீரோடு கலந்து எனது இரத்தம் சிகப்பு நிறத்தில் பீய்ச்சியடித்துக்கொண்டு ஒழுகியோடியது. விரைவாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று எனது பாதங்களுக்கு மருந்திட்டு முழுக் கட்டும் போட்டிருக்கிறார்கள்.இரண்டு மாதங்களுக்கு வேலைக்கு செல்லவில்லையெனில் நல்லது என்ற மருத்துவரின் கோரிக்கை எனக்கு ஆறுதலாக இருந்தது.

நான் வீட்டில் எனது உள்ளறையில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கிக் கொண்டிருக்கிறேன். துவக்கத்தில், என் மீதான வீட்டாரின் கரிசனை அதீதமாக இருந்துகொண்டிருந்தது. வேளாவேளைக்கு ஹார்லிக்ஸும், பூஸ்ட்டும் போட்டுக் கொண்டு வந்து கொடுப்பார்கள். நான் சுளுவாக படுக்கையில் கிடந்தபடியே அவைகளை உறிஞ்சிக் கொண்டிருப்பேன்.எந்தவொரு வேலை சிந்தனையும் அவசியமில்லாமல் இருந்தது.எனக்கெனவே விதிக்கப்பட்டுவிட்ட உலகத்தைப் போல இவ்வறையில் நான் தனித்து வாழ்ந்து உலவிக் கொண்டிருக்கிறேன். அம்மாவிடம் இப்போதெல்லாம் கொஞ்சம்போல பணிவிடைகளில் சோர்வு தென்படுகிறது. அடுத்து நான் என்ன செய்யப் போகிறேன் எனும் கேள்வியை எழுப்பி அப்பாவும், அம்மாவும் அவ்வப்போது பேசிக்கொண்டிருப்பதை உள்ளறையில் இருந்தபடியே என் காதுகள் துல்லியமாக வாங்கியிருக்கின்றன. எனினும், எனக்குச் சேர வேண்டியதை தவிர்க்காமல் அம்மா கொடுத்துவிடுகிறாள்.

எனதிந்த அறைக்குள் நுழைந்துவிட்டால், வெளியுலக ஓட்டங்கள் எதுவும் என்னை தொந்திரவு செய்வதில்லை.இருண்ட அதன் உள்வெளியில் எப்போதாவது மட்டுமே டியூப்லைட் வெளிச்சத்தை பரவ விடுவேன்.சன்னல்களற்ற நான்குபுறமும் சுவரால் அடைத்த, ஒரேயொரு சிறிய கதவு மட்டுமே கொண்ட எனது அறையில் வற்புறுத்தல்கள் ஏதுமில்லாமல்,எனது சிவப்பு நிற கணினியின் முன் அமர்ந்து, இணைய தளத்தில் இப்போதெல்லாம் நேரம் போக்கிக் கொண்டிருக்கிறேன். முகநூல் நல்லதொரு நேர விழுங்கியாக இருக்கிறது.அதில் அண்மையில் ஒரேயொரு பெண்ணுடன் மட்டும் தகவல் பரிமாற்றத்தை துவங்கியிருக்கிறேன்.அண்மையில் என்ன அண்மையில், இரண்டே முறை மட்டும் சேட்டிங்கில் பேசியிருக்கிறேன்.மனம் அதனை விரித்து அகண்ட அனுபவ வெளியாக பெருக்குகிறது. இடையிடையே, எப்போதாவது கல்லூரி நண்பர்கள் இணைப்பில் வருவார்கள்.ஆனால், அது எப்போதும் சோர்வூட்டக்கூடிய நேரக்கடத்தியாகவே இருக்கிறது. பெரும்பாலும், வேலையில் சேர்ந்தாயிற்றா? என்பதை கடந்து உரையாடல் நீள்வதில்லை.இதிலும் ஒன்றைக் கவனித்து வருகிறேன்.நண்பர்கள் பொதுவாக, பிறிதொருவர் வேலையில் இருப்பதை விரும்புவதில்லை.அக்கறையுடன் விசாரிப்பதைப்போலவே, வேலையின் மீதான பதட்டத்தையும், நடுக்கத்தையும் கூட்டுவதிலேயே தீவிரமாக இருக்கிறார்கள்.அதனால், நண்பர்களுக்கு ஒரு சுபம் போட்டுவிடுவது நல்லது என்கிற எண்ணத்தில் இருக்கிறேன்.

அவள் பெயர் சக்கரவள்ளி.புனைப்பெயர் என்று இரண்டாம் நாள் (நேற்றைய) சேட்டிங்கில் பகிர்ந்துகொண்டாள். கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியையாகப் பணி செய்கிறாளாம். அழகென்று சொல்ல முடியாவிட்டாலும், மாநிறத்தில் வட்ட வடிவிலான முக அமைப்பில் சாந்த சொரூபம் என்றே சொல்லத் தோன்றும்.உடைகளை கச்சிதமாக தேர்ந்தெடுத்து அணிகிறாள். ஆசிரியை என்பதால் அவள் பகிர்ந்திருக்கும் பெரும்பாலான புகைப்படங்களில் புடவையில்தான் இருக்கிறாள். தலையை நன்கு வாரி வழித்து சீவி கொண்டையும் போட்டிருப்பாள். மல்லிகை ஒரு சுற்று அவளது கொண்டையில் படர்ந்திருக்கும்.

முதலில் ஆசிரியை எனும் அவளது பணியை பார்த்தபோது அவளுக்கும் எனக்கும் அதிக வயதிருக்கும் என தவறாக கணித்த நொடியில், வலியச் சென்று உரையாடல் நிகழ்த்துவது சரிவராது என்றொரு தவறான எண்ணத்தில் சிக்குண்டிருந்தேன். கிட்டதட்ட என் முகநூல் பக்கத்தில் இருக்கும் பத்து பெண் தோழிகளில் இதுவரை எவரிடமும் நான் பேசியதே இல்லை. சக்கரவள்ளியும் முன்பின் அறிமுகமானவள் அல்ல. எனது நட்பு பட்டியலில் இருக்கும் எவரோ ஒருவரின் நட்பில் அவள் இருந்தாள். எப்போதாவது பொறியியல் துறையில் எனக்கு பணியாற்றக் கிடைத்த அனுபவங்கள் குறித்து பகடியாகப் பதிவு எழுதி வருவதால், தமிழில் அதுபோலவே தொடர்ச்சியாக எழுதுகிறவர்களின் முகங்களை எனக்கு முகநூல் அறிமுகம் செய்துவைத்தது. கிட்டதட்ட ஒரு தரகரைப்போல முகநூல் வேலை செய்கிறதோ என ஒவ்வொரு முறை அதன் உள் நுழைகையிலும் எனக்குத் தோன்றும்.வரிசையாக முகங்களை காண்பித்தபடியே இருக்கும். அதில், எவரையும் வேண்டுமானாலும் நாம் நெருங்கி நட்பு விண்ணப்பம் வழங்கலாம் போலிருக்கிறது.

அப்படித்தான் சக்கரவள்ளிக்கு நட்பு அழைப்பு விடுத்தேன்.இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?வெளியுலகில் பெண்களின் அருகாமை ஒருவித நெளிதலை உடலில் உண்டாக்கிவிடுகிறதைப்போல, அசெளகர்யப்படும் நானேதான் நட்பு அழைப்பு பொத்தனை அழுத்தினேன்.அவள் அதனை ஏற்றுக்கொண்ட நொடியில் உள்ளுக்குள் ஒருவித திளைப்பு உருவானது.பனிக்கட்டிகளை குமைத்து அதற்குள் நுழைந்து உடலை மூடிக்கொண்டபின் உருவாகும் குளிர்ச்சியை எனது உடல் உணர்ந்தது. முகநூலில் அவளது பக்கத்தையே திறந்து வைத்துக்கொண்டு, தலையை மட்டும் பனிவெளிக்கு வெளியில் நீட்டிக்கொண்டு இருப்பதைப்போல, அந்த பக்கத்தை மேய்ந்து கொண்டிருந்தேன்.முதலில் வளர்ந்த மனுஷியாக நினைத்த மனம் பின் அவளும் என்னைப்போலவே சென்ற வருடத்தில்தான் கல்லூரியை நிறைவு செய்திருக்கிறாள் என்பதை அறிந்ததும் கூடுதல் குதூகலத்தில் எக்காளமிடத் துவங்கியது. கிட்டத்தட்ட எனக்கும் அவளுக்கும் வயது வித்தியாசங்கள் கூட பத்து பதினைந்து தினங்கள்தான் இருக்கும்.என்னைவிடப் பத்து தினங்கள் மட்டுமே அவள் வயது குறைந்தவள் என்பதை அறிந்தபோது நாற்காலியில் எழுந்து என் அறையை ஒரு சுற்று சுற்றி நடனமாடினேன். காலில் வலி திருகியெடுத்தது என்றாலும், சக்கரவள்ளியின் புகைப்பட சட்டகத்தில் பதிந்திருந்த கனிவும், பெருந்தன்மையான புன்னகையும் ஒரு கணத்தில் அனைத்து விதமான வலிகளையும் நிவர்த்தி செய்யும் வலி நிவாரணியாக மாறியிருந்தது.

வீட்டில் இனி பிரச்சனை எதுவும் இராது என நினைத்தேன். ஒருவேளை என்னைவிட அவளுக்கு கூடுதல் வயது இருந்திருந்தாலோ, வடகொரிய தென்கொரிய பெண்ணாக அவள் இருந்திருந்தாலோதான் கவலையில் நான் ஆழ்ந்திருக்க வேண்டும். ஏனெனில், கணினியில் ஒருமுறை Memories of Murder எனும் கொரிய மொழித் திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது சட்டென அம்மா என் அறைக் கதவை திறந்துக்கொண்டு கையில் ஆப்பிள் ஜூஸுடன் உள் நுழைந்துவிட்டாள். சிவப்பு நிற உடையணிந்துகொண்டு ஒரு பெண் மழை இரவில் நடந்து வரும் காட்சி அப்போது ஓடியது. தற்செயலாக அதனைப் பார்த்துவிட்ட அம்மாவின் முகம் சுழித்துக்கொண்டது. எதையோ பார்க்கக்கூடாததை பார்த்துவிட்டவளைப்போல, தலையை மறுபக்கமாய் திருப்பிக்கொண்டு, ஆப்பிள் ஜூசை என் மேசை அருகில் வைத்துவிட்டு அவசர அவசரமாகச் சென்றுவிட்டாள். உணவு நேரத்தின்போது அதனை கிண்டலாக, “என்னடா இங்கிலீஷ் படமெல்லாம் பாக்குறே?” என்று அருகில் அமர்ந்திருந்த அப்பாவின் காதில் விழும்படி சத்தமாகவே சொன்னாள். அலட்சியம் படிந்த என் அப்பாவின் முகம் என்னை ஏறிட்டு ஒருமுறை பார்த்தது. எனக்கு உள்ளுக்குள் உதறலாக இருந்தது.

“அது இங்கிலீஷ் படமில்லம்மா..கொரியப் படம்” என்றேன்.

“கொரியோ படமோ, சொறியோ படமோ, அதுல என்ன பொம்பளப்பிள்ளயை அவ்ளோ தப்புத்தப்பாக காமிச்சிட்டு இருக்கான். அதப் போயி பார்க்குற..”

சொல்லவே வேண்டாம் அப்பா கையில் வைத்திருந்த வார இதழொன்றை அருகில் சத்தமான ஒலியெழுப்பியபடியே வைத்தவர், பெருமூச்சு விட்டபடியே, “அவனவன் வேலை இல்லன்னட்டு தவிச்சிக்கிட்டு இருக்கான். அவங்காலிலயும், இவங்காலிலயும் விழுந்து ஒரு வேலைய புடிச்சுக் கொடுத்தா, மம்முட்டிய தூக்கி காலுல போட்டுட்டு வூட்ல உட்காந்து மயிர மட்டையெல்லாம் பாத்துட்டு இருக்குது… புள்ள தெரவுச பேளவுட்டதான் பாக்கனும்னா சொல்வாங்கல அந்த மாதிரி இருக்குது இவங் கதை” என்று ஏளனமாகப் பேசிக் கேவலப்படுத்தினார். அம்மா எனக்காக அப்போது பரிந்து பேசி அப்பாவை சமாதானம் செய்திருக்கவில்லை என்றால், கண்ணீர் முட்ட என் அறைக் கதவை மூடிக்கொண்டு அன்றைய நாள் முழுவதும் அழுது தீர்த்திருப்பேன். இதுபோல சந்தர்ப்பங்களை அம்மா வலிந்து உருவாக்குகிறாளா அல்லது இயல்பில் வெளிப்பட்டுவிட்டதும் வார்த்தைகளைப் பின் ஊதி ஊதி அணைக்கிறாளா என்கிற கேள்வியும் எனக்குண்டு.

சக்கரவள்ளி நல்லவேளையாக கொரியாக்காரி அல்ல. கோயமுத்தூரில்தான் இருக்கிறாள். அதனால், வீட்டில் உள்ளோரை இதுபோன்ற சம்பவங்களை ஒரு முன்னுதாரணமாகக் காண்பித்து, எங்கள் நட்பின் வழி அது வெவ்வேறு உறவு நிலைகளுக்குள் நகர்ந்தால் சம்மதம் எளிதில் வாங்கிவிடலாம். காற்றின் விசையால் சிமிட்டப்படுகின்ற பெண்ணின் கண்ணசைவைக்கூட காதலெனக் கருதி மயக்கத்தில் ஆழ்ந்து போகும் ஆண்கள் சுற்றும் ஊரில், முகமறியாத ஒருவனின் நட்பை முக்கியத்துவப்படுத்தி ஏற்றுக்கொண்டிருக்கும் அந்த பெண்ணினது செய்கையை எனக்குகந்த வகையிலெல்லாம் கற்பனை செய்து பார்ப்பதில் தவறொன்றும் இல்லைதானே. அவள் எனது நட்பு அழைப்பை ஏற்பதற்கு முன்பாக, எனது பக்கத்தை முழுமையாக ஒருமுறை பார்வையிட்டிருப்பாள். இரண்டு பதிவுகளுக்கு அவளது இதயக்குறி விடப்பட்டிருந்தது. அதனை அறிந்த நொடியில் அவளது இதயத்தையே எனக்குப் பரிசு அளித்துவிட்டதைப்போல பாதங்கள் இரண்டு நிலத்தின் மீதேறி கோயமுத்தூர் வரையில் சென்று திரும்பின. எனினும், அவளிடம் பேச்சைத் துவங்க சில தினங்கள் ஆகத்தான் செய்தது.

அதிகளவில் சக்கரவள்ளி தன் பக்கத்தில் கவிதைகளைத்தான் தினமும் நிரப்பி வருகிறாள். ’இன்றைய இப்பொழுதைய கவிதை’எனும் தலைப்பில் நான்கு நான்கு வரிகளில் அவளது கவிதைகள் நண்டு போல, முகநூல்வெளியில் தன் சிறு பாதத்தால் ஊர்ந்து உலவும். ஒரு நாளைக்கு குறைந்தது ஐம்பது கவிதைகளை அவள் எழுதிக்கொண்டிருக்கிறாள். ஒரு மணி நேரத்திற்கு இரு கவிதைகள் என்று கணக்கு போட்டால்கூட இரண்டு கவிதைகள் மீதமாகின்றன.முகநூல் வெளியில் புரட்சிகரமான கவிதை செயல்பாட்டாளர் என அவளுக்குப் புகழாரம் சூட்டும் நபர்கள் பிற தேசத்தில்கூட இருக்கிறார்கள்.

வெள்ளித் தகட்டில் இருந்து வலையென விரியும் ஒளிப்போல

இந்த அதிகாலை என் கண் முன்னால் பரந்திருக்கிறது.

பாதம் சூடேறும் வரையிலும் ஒளியில் மூழ்கியபடி நிற்கிறேன்.

பின் நான் பறந்ததைப் பார்த்ததாக பின்மதியபொழுதில் யாரோ சொன்னார்கள்!

சளுக்!!! புளுக்!!!

”அருமையான கவிதை தோழி. சளுக் புளுக்கில் ஹைக்கூவையே அலறவிட்டிருக்கிறீர்கள்”

“வெள்ளித் தகட்டில் விரியும் ஒளிப்போல… வாவ்..உங்கள் சொற்களில் கிறங்கிப்போய் கிடக்கிறேன். படித்ததிலிருந்து மயக்கம் ஏற்பட்டு தலை சுற்றியது. இப்போது அப்போலோ மெடிக்கலில் வரிசையில் நிற்கிறேன். மாத்திரை போட்ட பின்னர் மீதமுள்ள கவிதைகளை வாசிக்கிறேன்”

“தமிழில் ஒரு விர்ஜினா வுல்ஃப் உங்கள் அவதாரத்தில் பிறந்திருக்கிறாள். இவ்வரிகளை வாசிக்கையில் என்னையே அறியாமல் அழுதழுது கீ போர்ட் முழுக்க ஈரமாகிவிட்டது. டைப் செய்ய முடியவில்லை. சற்றே பொறுங்கள். டவலால் துடைத்துவிட்டு எனது உணர்வு ஓதங்களையும், மனக் கொந்தளிப்புகளையும், அகத் தத்தளிப்புகளையும் பின்னூட்டமிடுகிறேன்”

“கவிதைக்கு இலக்கணம் நீங்கள். உங்கள் விரல்களில் இருந்து கொட்டும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அறிவுக் களஞ்சியம். அழகுசேகரம். அசலான தேனமுதம். போங்கள் தோழி. என்னையே பொறாமைப்பட வைத்துவிட்டீர்கள்”

“நான் ஒரு மூத்த கவிஞர். எனது விலாசத்தை உங்களுக்கு தனிவழி தகவலாக பகிர்ந்துகொள்கிறேன். நேரம் இருக்கும்போது, நேரில் வரவும். நிறைய கற்றுக்கொடுக்க வேண்டியிருக்கிறது”

பின்னூட்டங்கள் அவளது பதிவுகளுக்கு வரிசையாகக் குவிந்தபடியே எப்போதும் இருக்கும். ஒரு தயக்கத்துடன் நானுமே கூட ஒரு பின்னூட்டத்தை அவளிடம் பேசத் துவங்குவதற்கு முன்பாக பதிவிட்டிருக்கிறேன்.

“உங்களிடம் பறத்தலின் மீது விருப்பம் இருப்பதை உணர முடிகிறது. இதற்கு முன்பே ஒரு கவிதையில் நீரின் மீது மிதந்தேன். கீழே திமிங்கலம் சுற்றிக் கொண்டிருந்தது என ஒரு வரி எழுதியிருக்கிறீர்கள். எனக்கும்கூட உங்களைப்போலவே பறக்க வேண்டும் என்கிற விருப்பம் இருக்கிறது. ஆனால், எனது கால்கள்தான் நடக்கக்கூட முடியாதபடி உடைந்துவிட்டது” எனச் சொல்லி உடைந்த என் காலை ஒரு செல்பி எடுத்து பின்னூட்டத்தோடு இணைத்து அனுப்பினேன். அதற்கு அவள் கண்ணீர் விடும் அனுதாப ஸ்மைலி ஒன்று பதிலாக அனுப்பினாள். அந்த நீர் திரவம் என் உடைந்த காலில் பட்டு இதமாக வருடியது. என் கண்களுமே அப்போது கலங்கிவிட்டன. இவளுக்கு நம்மீது கூடுதல் கரிசனமும், கவனமும் இருக்கிறது என உணர்ந்தேன். என் சுய விருப்பம் ஏதுமின்றி என்னை வற்புறுத்தி வேலையில் இழுத்துவிட்டு, கால்கள் உடையவும் காரணமாய் இருக்கும் அப்பாவையும், இந்த வீட்டு சூழலையும் ஒருகணம் வெறுத்தேன். முழு முற்றாக ஆழ்கடலின் வண்ணத்தில் என் முன்னால் கணினியில் அலையடித்துக்கொண்டிருக்கும் முகநூல் கடலில் என்றென்றைக்குமாக சக்கரவள்ளியுடன் நீந்திக்கொண்டிருந்தால் அதுவே வாழ்க்கையை அர்த்தபூர்வமாக்கும் என நம்பிக்கை எழுந்தது.

அவளுக்கு தனிவழி செய்தி அனுப்பினேன்.

“வணக்கம். என் பெயர் கமலகண்ணன். உங்களது கவிதைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன. உண்மையில் இங்கு என்னை சூழ்ந்திருக்கும் துயர இருட்டிலிருந்து, விடுவிக்கும் ஒரு தேவ மலராக, தேவதையாக நீங்கள் இந்த முகநூல் வழியே உங்களது முகத்தால் எட்டி எனக்கு காண்பிக்கிறீர்கள். முழு ஒளியை உங்களது முகத்தில் என்னால் அனுபவம் கொள்ள முடிகிறது. தொடர்ச்சியாக இதேபோல கவிதைகளாக எழுதி என் உலகை உயிர்ப்புடன் இருக்கச் செய்ய வேண்டும். என் மனதிலும் மண்டையிலும் உங்கள் சொற்களே மிதக்கின்றன தோழி. தயவு செய்து பதில் அனுப்புங்கள். அப்படி நான் பேசிய வார்த்தைகள் எதுவும் பிடிக்கவில்லை என்றால், தயவு செய்து என்னை வெறுத்துவிடாதீர்கள். நான் அப்படி ஒன்றும் தவறாக பேசவில்லை என்றாலும், என்னை நீங்கள் வெறுத்துவிடாதீர்கள். நீங்கள் வெறுக்காமல் எனக்கு பதில் அளிப்பீர்கள் என உறுதியோடு நம்புகிறேன். உங்களது பதிலுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். தயவுசெய்து என்னை வெறுத்துவிட வேண்டாம்”

பெரு நிறுவனமொன்றில் உயர்தர ஊழியத்துக்காக விண்ணப்பித்துவிட்ட மன நிறைவை அடைந்தேன். அனைத்து தளைகளிலிருந்தும் விடுபட்ட ஒரு புத்துணர்வு உடலில் ஏறியது. மதியத்திற்கு அம்மா கொடுத்திருந்த பீட் ரூட் சாதத்தை சுவைத்தபடியே, அவளது முகநூல் கவிதைகளை பார்வையிட்டபடியே, பதில் வரும் என்கிற நம்பிக்கையில் காத்திருந்தேன். இதுதான் எனது சுய நினைவின்படி ஒரு பெண்ணுக்கு முதல் முதலாக தனிவழி செய்தி அனுப்புவது. சக்கரவள்ளி எனக்கு விட்ட இரு இதயக்குறிகள் எனது தைரியத்திற்கு காரணமாய் இருக்கலாம்.

கல்லூரி நாட்களில் எனது அறையில் கோபா என்றொருவன் தங்கியிருந்தான். அவனுக்கு மூன்று முகநூல் கணக்குகள் இருந்தன. ஒன்றிற்கு மட்டும் தனது பெயரை வைந்திருந்த அவன், மற்ற இரண்டையும் வெவ்வேறு பெண்களின் பெயரைத் தேர்வு செய்து பிற ஆண்களுடன் சேட்டிங்கில் ஈடுபட்டிருந்தான். கிட்டத்தட்ட மாணவர் விடுதியில் இருந்த எங்கள் எல்லோரை விடவும் துணிவுடன் இவ்விதமான செயலில் இறங்கியது கோபா ஒருவன்தான். பலமுறை அவன் வியர்வை சொட்ட சொட்ட சேட்டிங்கில் மும்முரமாய் ஈடுபட்டிருக்கும்போது, நானும் அருகில் அமர்ந்திருப்பேன். பலவிதமான உணர்வுகள் அவனது முகத்தில் கொப்பளிக்கும். திடீரென வெடித்து சிரிப்பான். தாடையை ஆழமாய் அழுத்தி ஆழ்ந்த சிந்தனை கதியில் தேய்த்துக்கொண்டிருப்பான். சமயத்தில் பெரிய இழப்பை எதிர்கொண்டவனைப்போல, துயரத்தில் இரவு உணவைக்கூட தவிர்த்துவிடுவான். அந்த நாளில் அவனது முழு அசைவும் ஒரு புரட்சிக்கான திட்டமிடலில் தீவிரமாக இயங்குகிறவனின் செய்கைகளோடு ஒத்திருக்கும். அவனது விநோத முகபாவங்கள் எனக்குள் கிளர்ச்சியூட்டியபடியே இருந்தன. பலமுறை அவனது செல்போனுக்கு ரீசார்ஜும், வங்கி கணக்கில் கணிசமான தொகையும் இதன் பயனாக சேர்ந்திருந்தது. அவனருகில் அமர்ந்து அவனையே லயித்தபடியே கவனித்துக்கொண்டிருப்பது எனக்கு சுவாரஸ்யமான பொழுதுபோக்காக இருந்தது. அப்போதெல்லாம் நினைப்பது உண்டு. என்றாவது ஒருநாள், ஒரு சுவாரஸ்யத்திற்காகவாது முகநூலில் ஒரு பெண்ணுடன் பேசிப் பார்க்க வேண்டும் என்று. கோபா அவ்விதத்தில் ஒரு துரோணாச்சாரியார் என்றும்கூட சொல்லலாம். அருகில் அமர்ந்தே சேட்டிங் வித்தைகளை அவனிடத்தில் இருந்துதான் வளர்த்துக்கொண்டேன். எனது ஏகலைவ வித்தைகளை பயிற்சித்துப் பார்ப்பதற்கு ஒரு உகந்த தருணம் இப்போதுதான் வாய்த்திருக்கிறது.

”உங்களது உலகத்தில் அவ்வளவு இருட்டு இருப்பது வருத்தமாக இருக்கிறது. எனது கவிதைகளில் உயிரசையும் ஒளி உங்களது இருப்பின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுவதை உணரும்போது, எனது எழுத்துக்கு ஒரு பிரயோஜனம் ஏற்பட்டிருப்பதை எண்ணி எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். கவலை வேண்டாம். எல்லா இருளும் விடியும். விடியாத இரவென்று வானில் இல்லை. மன்னிக்கவும். இது எனது வரி அல்ல. பழைய பம்பாய் திரைப்படத்தில் வரும் பாடலொன்றின் வரி இது. நான் கவிதாயினியாக இருப்பதால், நீங்கள் குழப்பத்தில் ஆழ்ந்துவிடக்கூடாது என்பதால் தெளிவுப்படுத்துகிறேன்” என்று சக்கரவள்ளியிடம் இருந்து பதில் வந்திருந்தது.

உள்ளமெல்லாம் பூரிப்பு அரும்பியது. மனதிலேயே தத்தளிப்பு. பெரும் பயன் கிடைத்திருக்கிறது என்கிற தன்னம்பிக்கையில் எனது மானசீக குரு கோபாவுக்கு ஒரு வணக்கத்தை போட்டுவிட்டு, சக்கரவள்ளிக்கு பதில் அனுப்பினேன்.

“நீங்கள் என்னை வெறுக்காததுக்கு நன்றி. உங்களது பதில் குதூகலமூட்டுகிறது. நீங்கள் ஆசிரியையாக இருப்பதை முகநூலில் பார்த்தேன். மகிழ்ச்சி”

“ஆமாம். இந்த வருடம்தான் சேர்ந்தேன். வேறு வேலைக்கு செல்ல விரும்பவில்லை. ஆசிரியையாக இருந்தால், நிறைய படிப்பதற்கும் எழுதுவதற்கும் சாத்தியங்கள் இருக்கும் என்று சேர்ந்தேன்”

“உங்களது திட்டமிடல் நல்ல பலனை அளித்துவருவதை, தினமும் நீங்கள் போடும் 50 கவிதைகளே சாட்சியாக நின்று உணர்த்துகின்றன. இதுவொரு அசுரத்தனமான உழைப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சமகாலத்தின் சாட்சியமாக உங்களது வரிகள் இருக்கிறது. வாழ்த்துக்கள்”

“நெகிழ்கிறேன். எப்போதாவதுதான் பார்க்க முடிகிறது மழையை”

“ஆமாம் சக்கரவள்ளி. இது கோடை காலமாக இருப்பதால், மழையைப் பார்க்க முடியவில்லை. இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் மழையைப் பார்க்க. அவசரம் என்றால் யூ டியூபில் பார்க்கலாமே”

“ஹா ஹா..நீங்கள் நல்ல நகைச்சுவை உணர்வாளர் போலிருக்கிறது. எப்போதாவதுதான் பார்க்க முடிகிறது மழையை என்று குறிப்பிட்டது, உங்களது பாராட்டு வார்த்தைகள் மழைபோல மகிழ்வூட்டுகிறது எனும் அர்த்தத்தில் ஒரு கவிதை போல சொன்னேன். பரவாயில்லை. என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்”

அவளது வரிகளை கவிதை என்று உணராத எனது ரசனையற்ற மனதின் மீது எரிச்சல் உண்டானது. இதுவொரு மனக்குறையாக எங்களுக்குள் விரிசலை ஏற்படுத்திவிடக்கூடாது கோபா! என மானசீக குருவிடம் ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு முன்னேறிச் சென்றேன்.

“பொறியியல் பயின்றிருக்கிறேன். வேலைக்குச் செல்ல பிடிக்கவில்லை. ஏனெனில், இன்னமும் ஆறு அரியர்கள் இருக்கின்றன என எனது மார்க் ஷீட் சொல்கிறது. அதனால், தந்தை பார்த்துக்கொடுத்த வேலையில் சேர்ந்தேன். காலில் காயம் ஏற்பட்டுவிட்டது. அதனால், வீட்டிலேயே இருக்கிறேன். இன்னும் ஒரு சில வாரங்களில் தந்தை எங்காவது தூர தேசத்திற்கு துரத்தி அடிப்பார் என்பதற்கான நிச்சயம் வீட்டில் தெரிகிறது. அதற்குள் இங்கிருந்து தப்பித்தாக வேண்டும் என்கிற யோசனையில் இருக்கிறேன். இதுதான் இப்போதைய வேலை”

“அப்படியானால் முகநூலில் நேரத்தை வீணடிப்பதற்கு பதிலாக, உடனடியாக ஏதேனும் ஒரு டியூஷனில் சேருங்கள். அரியர்களை கிளியர் செய்தால், படித்த படிப்புக்கு நியாயம் செய்ததாக இருக்கும். முகநூல் ஒன்றுக்கும் உதவாது. எனது கவிதைகளைப்போல சில நல்ல விஷயங்கள் இருக்கும் என்றாலும், நடைமுறை வாழ்க்கைக்கான வேலைகளில் நீங்கள் இறங்குவது நல்லது எனத் தோன்றுகிறது”

இதற்குபிறகு உரையாடலை எப்படி நீட்டித்துச் செல்வது என்பது எனக்கு விளங்கவில்லை. கோபாவாக இருந்திருந்தால், ஏதேனும் ஒரு துயரக் கதையை கண நேரத்தில் புனைந்து விடிய விடிய வார்த்தைகளை இரைத்துக் கொண்டிருப்பான். முதல்முறையாக பேசும் வேகத்தில் அவள் ஆசிரியையாக இருக்கிறாள் என்கிற நினைப்பே இல்லாமல், அரியர் பற்றியெல்லாம் சொல்லிவிட்டது சங்கடமாகத்தான் இருந்தது. கோபா சொல்வான், “பெண்களுக்கு நிறைய அரியர்ஸ் வைக்கிற, கற்பனைக் கதைகளை உணர்ச்சிப் பெருக்குடன் சொல்கிற, முன்னால் ஒரு தோல்வியுற்ற காதல் இருக்கிறது என்று துயருருகிற, சூரி காமெடியை சிலாகித்துப் பேசுகிற, சூசைட் அட்டென்ட் அவ்வப்போது முயற்சிக்கின்ற ஆண்களைதான் பிடிக்கும்” என்று. இக்கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், சேட்டிங்கின்போது சக்கரவள்ளியின் அனுதாபத்தை எனது ஒடுக்கப்பட்டுள்ள சூழலைச் செல்லி பெற்றுவிட முடியும் என்று என் ஆழ்மனம் செயலாற்றி இருக்கிறது. அதனால், நீண்ட நேரம் என்ன பேசுவது எனத் தெரியாமல் விழிந்திருந்துவிட்டு, லேப் டாப்பை அணைத்து மூடிவிட்டேன்.

சக்கரவள்ளி என்னைப் பற்றி குறைத்து மதிப்பிட்டிருப்பாளோ என்பதுதான் பெரும் கவலையாக இருந்தது. ஒரு பெண் என்கிற நிலையில் எனது வார்த்தைகளில் வெளிப்பட்ட உண்மைகளின் மீது அவளுக்கொரு பிடிப்பு ஏற்பட்டாலும், ஆசிரியையாக இருக்கின்ற அவளது பார்வையில் நானொரு கடைசி இருக்கை மாணவனைப்போல அசடு வழிய நின்றிருப்பேனோ என்பது உறுத்தலாகத்தான் இருந்தது. ச்சை..! என்ன நினைப்பு இது. அவளது சொற்களில் பிதுங்கி எழுந்தது கரிசனமும், அணுக்கமும் தானே அன்றிக் குறைகூறும் பாவனை அல்ல. உடனே எடுத்தேன் ஹெட் செட்டை.”பூ முடித்தால் இந்த பூங்குழலி”பாடலை ஒலிக்கவிட்டு, வெறும் தரையில் உடலைச் சாய்த்தேன். தரையில் இருந்த ஈரம் உடலில் பட்டு குளிர்ச்சியால் என்னை நிறைத்தது. எப்போது உறக்கம் தட்டியது எனத் தெரியவில்லை. காதில் தொங்கும் ஹெட்செட்டில் ஏதேதோ ஒலிகளில், குரல்களில் நீண்டுகொண்டே போகிறது.

ரம்மியமான மனோரஞ்சித நிலையில் நான் ஆழ்ந்திருந்தபோது ஒட்டுமொத்த மயக்க நிலையையும் உரித்து கிழிக்கும் விதமாக எனது அப்பாவின் குரல் அதிர்வாக எனக்கு கேட்டது. ஹெட்செட்டை கழற்றி வீசிவிட்டு, முன்னறைக்கு நொண்டியபடியே ஓடினேன். அப்பா சட்டையில்லாமல் கண்களில் பீதி பொங்கப் பரபரப்பாக கண்ணாடியில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் அவரது முதுகைப் பார்த்தேன். சதை தடித்து வீங்கியிருந்தது. நிமிடத்துக்கு நிமிடம் அந்த வீக்கம் பெருகி உருவெடுக்கிறது என்று அப்பா பதற்ற குரலில் சொன்னார். அம்மாவுக்கு ஒருகணம் அழுகையே வந்துவிட்டது. வண்டியை எடுத்துக்கொண்டு நானும் அப்பாவும் ஜி.ஹெச்சை நோக்கி விரைந்தோம். மனதெல்லாம் எனக்கு பயமாக இருந்தது. வேலை முடிந்து, சாயங்காலத்தில் ஒரு பிணம் எரிப்பு குழுவோடு சுடுகாடு சென்றிருந்த அப்பாவை பூச்சியோ எதுவோ கடித்திருக்கிறதுபோல. மெல்ல மெல்ல அரிப்பாக கிளம்பி, வீக்கம் எடுத்திருக்கிறது. எனக்கு உள்ளுக்குள் பெரும் கலவரமாக இருந்தது.

ஜி.ஹெச்சில் எங்களது பதற்றத்தை துளியும் பொருட்படுத்தவில்லை. டெம்பரேச்சரை பரிசோதனை செய்தவர்கள், சட்டையைக் கழற்றிவிட்டு அப்படியே அமைதியாக உட்கார வைத்துவிட்டார்கள். அரைகுறை ஆடையுடன், விரிந்த தோள் தசைகளுடன் அப்பா எனக்குப் பக்கத்தில் நம்பிக்கை இழந்தவராக தோன்றினார். என்ன பேசுவதென்று எனக்கு தெரியவில்லை. மனதிற்குள் நுரைத்த சொற்களை ஒலிகளாக உருமாற்றம் செய்வதில் பலத்த தடுமாற்றங்கள் உருவாயின. பேசினால் அழுகை வந்துவிடுமோ என்று கூட தோன்றியது. அப்பாவே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஆனால், மெளனமாக அவருக்கருகில் அமர்ந்திருந்த எனது மனதில் என்ன ஓடுகிறது என்பதை அந்த கலவரச் சூழலிலும் தெரிந்துகொள்ள முயலுகிறவரைப்போல, அவ்வப்போது என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். சங்கடமாக இருந்தது. மனதின் கலக்கம் கண்களில் தெரிந்து, அவருக்கு ஆறுதல் அளிக்க வேண்டும் என விரும்பினேன்.

“எதுவுமே ஏறுன மாதிரி தெரியல.. ஆனா தடிப்பு பெருசாயிட்டே இருக்கு..” என்று அவர் தன்னையும் சமன்படுத்திக்கொள்ளும் சமாதானக் குரலில் பேசினாலும், அவரது முகத்தில் படர்ந்திருந்த பதற்றம் எனது நம்பிக்கையை குலைத்தபடியே இருந்தது. அம்மாவிடமிருந்து தொடர்ச்சியாக போன் கால் வந்தபடியே இருந்தது. காத்திருக்க வேண்டியிருக்கும் சூழலை விளக்கி, அம்மாவை அமைதியாக இருக்கும்படி வேண்டினேன். சில நிமிடங்களுக்குப் பிறகு அப்பாவை அழைத்து ஒரு வார்டில் அட்மிட் செய்யச் சொன்னார்கள். தொடர்ச்சியாக மூத்திர பரிசோதனை, ரத்தம் பரிசோதனை எல்லாம் செய்தார்கள். வாழ்க்கையிலேயே முதல் முறையாக அப்போதுதான், அப்பாவின் மூத்திரத்தை சுமந்து நடந்தேன். இனம்புரியாத ஆனந்தமும் வேதனையும் ஒரே கணத்தில் எழுந்து பரவசப்படுத்தியது.

சிறிது நேரத்திற்கு பிறகு பெரிய மருத்துவர் வந்தார். அப்பாவிடம் அன்றைய நாள் முழுக்க என்னென்ன சாப்பிட்டார் என பட்டியலிடச் சொன்னார். அப்பா உறுதியான குரலில் அவர்களுக்கு பதிலளித்துக்கொண்டிருந்தார். எல்லோரும் சென்றதற்கு பிறகு, என்னை வீட்டில் அம்மாவுக்குத் துணையாக இருக்கும்படியும், அப்பாவின் ஆத்ம நண்பரான மற்றொரு அரசு ஊழியரான செல்வத்தை எனக்குப் பதிலாக பக்கத்துணையாக மருத்துவமனைக்கு வரச் சொல்லும்படி அப்பா தெரிவித்தார். செல்வத்துக்கு போன் செய்து வரச் சொல்லிவிட்டு, மருத்துவமனைக்கு எதிரில் இருந்த உணவகத்தில் 4 இட்லி வாங்கி எடுத்துச் சென்று அப்பாவிடத்தில் கொடுத்துவிட்டு வீடு திரும்பினேன்.

மனதில் அலையலையாக எண்ணங்கள் கிளர்ந்தபடியே இருந்தது. கிட்டதட்ட இரண்டு வருடங்களாக அப்பாவுடன் நான் பேசிய வார்த்தைகளைக் கோர்த்து எழுதினால் நான்கு அல்லது ஐந்து பக்கங்களுக்குள்தான் இருக்கும் எனத் தோன்றியது. வார்த்தை பகிர்வுகளே கிட்டதட்ட இருவருக்குமிடையில் இல்லை என்றே சொல்ல வேண்டும். அவரொரு சுழலிலும் நானொரு சுழலிலுமாக மையங்கொண்டிருக்கிறோம். அவர் தனது கற்பிதங்களையும் அனுபவங்களையும், என் மீது செலுத்திக்கொண்டிருக்க, நான் எனது கற்பிதங்கள் மற்றும் அனுபவங்களால் அவைகளை நிராகரித்தபடியே எனக்கேயான பிரத்யேக உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒருபோதும் அப்பா என் முன்னால் நிலைகுலைந்தவராக, தடுமாற்றங்களுடையவராக தெரிந்ததே இல்லை. அவரது ஒரு சொல்லையும் ஏற்றுக்கொள்வதில் எனக்கு விருப்பமோ மனத் தெளிவோ இல்லை என்றாலும், அவர் எனக்கு பலவீனமானவராகத் தெரிந்ததில்லை. அவரது அத்தனை வசவுகளையும் கடந்தும் அவர் மீதிலான எனது மரியாதை ஒருபோதும் குன்றியதில்லை. இப்போது உடலில் வீக்கம் கொண்டு கலங்கிய நிலையில் மருத்துவ வார்ட்டில் சேர்க்கப்பட்டிருப்பது மனதுக்கு எதுவோ சரியில்லை என்றே பட்டது. எனினும், அனைத்து விதமான துயரச் சம்பவங்களும், செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியிலும் மட்டும்தான் நிகழ வேண்டுமா? நமது வாழ்க்கையிலிருந்து அவையெல்லாம் விதிவிலக்கா என்ன? எவ்விதமான மோசமான அனுபவத்திற்கும், இவ்வாழ்வு திறந்தே இருக்கிறது. உண்மையில், மருத்துவமனையில் இருக்க எனக்கு விருப்பமே இல்லை.

அன்றிலிருந்து, மூன்று தினங்களுக்கு பிறகு, அப்பா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். பூச்சியின் ஒற்றாக இருக்கலாம் என்று ஊகத்திற்கு வந்த மருத்துவர்களுக்கும், அவரது வீக்கத்தின் மூலம் புரியாமல்தான் இருந்தது. ஏதேதோ காரணங்களையும் அம்மாவும் தன்போக்கில் சொல்லிக் கொண்டிருந்தாள். முன்பொரு காலத்தில் பெரியம்மா விட்ட சாபத்தின் பலனாகவும் இது இருக்கலாம் என்பது அவளது எண்ணமாக இருந்தது. தெருவாசிகள் ஒவ்வொருவராக அபூர்வ உயிரைப்போல வந்து வந்து அப்பாவை சந்தித்துவிட்டு போகிறார்கள். வீட்டில் எந்த நேரமும் இரைச்சல்.

அப்பா மெல்ல தேறிவருகிறார். அவரது உடல் வீக்கம் சிறிது சிறிதாக வற்றி வடிந்துவிடும் என்றும் சில மாத்திரைகளை தொடர்ச்சியாக உட்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். அப்பா ஒரு நோய்கூறு கொண்ட மனிதராக முன்னறையிலும், நான் காயம் பட்ட கால் பாதத்துடன் உள்ளறையிலும் வீட்டில் தனித்தனி தீவுகளாய் இருந்தோம். கணினியை திறந்து வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தேன் என்றாலும், மனதில் அப்பாவின் முகத்தில் படர்ந்த வேதனையின் அழுத்தம் பாரமாக வலி திருகியது. நீண்ட நேரம் கணினியை பார்த்தபடியே அமைதியில் இருந்தேன். வெளியில் பல ரூபக் குரல்கள். எனினும், நிகழ்ந்துவிட்ட ஒரு வேதனைமிகு தருணத்தில் இருந்து விடுபட வேண்டியது அவசியமாதலால், மூன்று தினங்களுக்கு பிறகு மீண்டும் முகநூலைத் திறந்தேன். அப்பா எனும் பெரும் மையத்தை குடைந்துகொண்டு, எனது சிந்தனை ஒரு தேனீயைப்போல, சக்கரவள்ளியின் தடம் தேடி ரீங்காரமிட்டது.

”உங்களை காயப்படுத்த வேண்டுமென நான் அப்படி சொல்லவில்லை. இக்காலத்தில், கல்வியில் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமானது. அதனால்தான் சொன்னேன். தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் மன்னிக்கவும். அதோடு இரண்டு தினங்களாக எனது கவிதைகளுக்கும் நீங்கள் விருப்பக்குறி இடவில்லையே” சக்கரவள்ளி செய்தி அனுப்பியிருந்தாள்.

அனாதரவாய் நின்றிருந்த என் முன்னால் நீண்டிருந்த நேசக்கரமாய் அவளது செய்தி இருந்தது.

“வீட்டில் சில பிரச்சனைகள் சக்கரவள்ளி. அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லை. மூன்று தினங்களாக மருத்துவமனைக்கும், வீட்டிற்குமாக அலைந்து கொண்டிருந்தேன். அதனால்தான் என்னால் முகநூல் வர முடியவில்லை.”

“அப்படியா அப்பா இப்போது எப்படி இருக்கிறார். அருகில் இருந்து பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற தருணங்களில்தான் நமது நெருக்கம் அவர்களுக்குத் தேவையாய் இருக்கும்”

“அது சாத்தியமில்லை சக்கரவள்ளி. அப்பாவுக்கு இப்படியொரு சிக்கல் உருவானதன் பெருந்துயரம் எனக்குள் இருக்கிறது. ஆனால், அதனை எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. நான் அப்பாவுடன் பேசுவதே இல்லை. மிக அரிதாகத்தான் எங்களுக்குள் உரையாடல் நிகழ்கிறது”

”அது சரி. நீங்கள் என்னைப் போலத்தான் போல இருக்கிறது. நானும் பெற்றோருடன் தொடர்பில் இல்லை. ஆசிரியை பணி சேரும் எனது முடிவுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அப்போதிலிருந்து இங்கு தனியாகவே ஹாஸ்டலில் தங்கி இருக்கிறேன். நாம் கிட்டத்தட்ட ஒருவிதமான மன இயல்பைத்தான் கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன். இப்போது எனது கவிதை பிறக்கும் சூட்சுமத்தை அறிந்திருப்பீர்கள் என கருதுகிறேன். எனது தனிமைதான் கவிதையாகிறது”

சக்கரவள்ளியின் வார்த்தைகள் பெரும் ஆறுதலாக இருந்தன. எனது துயரத்தை பங்கு போட்டுக்கொள்ள இதோ இணைய வெளியில் ஒருத்தி கிடைத்திருக்கிறாள். ஒருவேளை எனது தனிமையுணர்வுதான் சக்கரவள்ளி எனும் கற்பனை உருவை உருவாக்கி நிலைக்கண்ணாடியைப்போல எனதெதிரில் இருக்கும் கணினியின் மறுபக்கத்தில் உயிரியக்கம் கொள்ளச் செய்திருக்கிறதோ! எங்கேயே கேட்ட குரல் ஒன்று அக்கணத்தில் நினைவுக்கு வந்தது. “சமயத்தில் மனிதர்கள் ஒரு கண்ணாடியைப்போல நம்மை நமக்கே அடையாளம் காட்டுவதற்காக தோன்றுகிறார்கள்”.இதுதான் சந்தர்ப்பம் என அவளை ஆதிமுதல் அந்தம் வரை அறிந்துகொள்ள முயற்சிக்கலாம் என்றொரு எண்ணம் உருவானது.

உற்சாக மிகுதியில் “சக்கரவள்ளி உங்களது இயற்பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா?” என்றேன். சட்டென எதிர்புறத்தில் ஒரு அமைதி உருவானது. சில நொடிகள் எந்தவித பதிலும் இல்லை. ஆனால், எனது கேள்வியை அவள் பார்த்துவிட்டாள் என்று முகநூல் சேட்டிங் பாக்ஸ் காண்பித்தது. அவசரப்பட்டுவிட்டோமோ! அவளுக்கு இக்கேள்வி சங்கடத்தை உருவாக்கியிருக்கலாம் என்கிற நினைப்பில், வழக்கம்போல தவறாக நினைக்க வேண்டாம் எனும் சொல்லை பகிர்ந்துகொள்ள எத்தனித்தபோது, அவளிடம் இருந்து பதில் வந்தது.

“அர்ச்சனா..ஆனால், நாளைக்கு இதே கேள்வியை கேட்டால் அப்போது எனது இயற்பெயர் அர்ச்சனா என்று இருக்கும் என நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது” என்றிருந்தாள்.

புரிந்தது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது. கடுமையாகவும் தெரிந்தது. சமரச விழைவாகவும் தெரிந்தது. சொற்களை விழுங்கியபடியே, ”பெயரைப் பற்றி இனியும் கேட்க மாட்டேன். சக்கரவள்ளி என்பதே உரையாடலுக்கு ஏற்ற பெயர்தான்” என்று அனுப்பினேன்.

“சமயத்தில் நீங்கள் உண்மையை பேசுகிறீர்களா அல்லது புகழ்தலை போல இகழ்தல் செய்கிறீர்கள் என்றே தெரியவில்லை. எனினும், அதுபற்றி எனக்கு கவலையில்லை” என்றாள்.

முதல் முறை அவளது பதிலில் தென்பட்ட அணுக்கமும், என் மீதிலான பரிவும் இப்போதைய பதில்களில் என்னால் உணர முடியவில்லை. விலகலையும் குற்றம் சாட்டுவதையுமே அவை நோக்கமாக கொண்டிருந்ததைப்போல இருந்தது.

“மன்னிக்க வேண்டும் தோழி! எனக்கும் சமயத்தில் உங்களது பதில்கள் குழப்பத்தை விளைவிக்கின்றன. நீங்கள் அன்பாகப் பேசுகிறீர்களா அல்லது கடிந்துக் கொள்கிறீர்களா எனப் புரியவில்லை” என்று எனது நிலையை அனுப்பினேன்.

“புரியாதது எனது பிழை அல்ல. உரையாட விருப்பமில்லை என்றால் தொடர்பை துண்டித்து விடவும்”.

மிகக் கடுமையான நேரடி வார்த்தைகள். உடல் முழுக்க முள் தைத்ததைப்போல இருந்தது எனக்கு.

“சக்கரவள்ளி. நான் இதற்கு முன்பு ஒரு பெண்ணிடம் பேசியதில்லை. அதனால், எனது பேச்சு சரியாக இருக்கிறதா இல்லையா என்பது பற்றி எனக்கு நிச்சயமில்லை. வீட்டில் ஏற்கனவே பிரச்சனை. அதனால்தான் மனப் பதற்றத்தில் கொஞ்சம் குழப்பம் நிறைந்ததாக எனது பதில்கள் இருக்கின்றன என நினைக்கிறேன்”

“உங்களது குழம்பிய மனநிலையை தேற்றிக்கொள்ள உபயோகப்படும் மருந்துக்குப்பியைப்போல எனதுடனான உரையாடலை கருதுகிறீர்களா?” என்றாள்.

“அய்யோ..இது முற்றிலும் நேரெதிராகப் போகிறது. அப்படியொரு எண்ணமே எனக்கு இல்லை. மன்னிக்கவும்”

“இதுவரையில் நீங்கள் பேசியதில் பத்தில் ஒன்பது வார்த்தைகள் மன்னிப்பு கோருவதாகத்தான் இருக்கிறது என்பதை உணருகிறீர்களா?. உங்களுக்கு மனம் சார்ந்த பிரச்சனை எதுவோ இருக்கிறது என நினைக்கிறேன்”

‘நீயொரு பைத்தியக்காரன்’ என்பதுதான் அந்த பதிலின் தொனியில் வெளிப்பட்டிருந்தது.முகநூல் கண நேரத்தில் எப்படியொரு உறவை தலைகீழாக்குகிறது என்பதை யோசிக்கையில் தலை சுற்றுவதைப்போல இருந்தது. மானசீக குரு கோபாவின் குரல் அசீரிரியைப்போல எனக்குள் ஒலித்தது. ‘முற்றிலும் நேரெதிராக நமது உரையாடல் செல்வது ஒருவகையில் நல்லதுதான். இணக்கமான வார்த்தை பகிர்வுகளில் கூடாத உறவு நிலை, முரணில் இருந்து சட்டென தீப்போல பற்றிக்கொள்ளவும் சாத்தியமிருக்கிறது. உன்னில் இருந்து விலகுவதைப்போல அவளது வார்த்தை இருக்கிறதென்றால், உனது அடுத்த வார்த்தை அவளுக்கு முற்றிலுமாக அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்க வேண்டும்’

மனதை ஒருமுகப்படுத்திக்கொண்டேன். என்னுள் அலையடித்துக்கொண்டிருந்த வெவ்வேறு திரிபுகளை கோர்த்து ஒற்றை இலக்காக வரித்து, ஒரு சரீரமாக எனக்கெதிரில் இல்லாத ஆபத்தின் தன்மை குறைச்சலில், ஏதோ ஒரு உலகத்தில், ஏதோ ஒரு காலத்தில், அமர்ந்திருக்கும் அந்த பெண்ணிடம், “எனக்கு உங்களது கவிதைகளை மட்டுமல்ல. உங்களையும் மிகவும் பிடித்திருக்கிறது. உங்களது ஒவ்வொரு வரியிலும் ஒரு மணம் இருக்கிறது. அது என்னை இழுத்தபடியே இருக்கிறது. உங்களை நான் விரும்புகிறேன் தோழி” என்றேன். உடல் முழுக்க நடுங்கத் துவங்கியது. பதற்றத்தில் மனதிற்குள் சொற்கள் குழம்பித் திரிந்தன. செய்திருக்கக்கூடாது எதையோ செய்துவிட்ட கொதிப்பு எழுந்தெழுந்து அடங்கியபடியே இருந்தது. ஒரு கணம் பார்வையை கணினியில் இருந்து விடுத்து, எனது அறையில் மேயவிட்டேன். இருளே வடிவமாய் என்னை தனக்குள் அமிழ்த்தியிருந்தது எனது அறை. நாற்புறமும் துளி வெளிச்சமும் இல்லை. பார்வைக்குப் புலனாகாத வெளியில் எனது தனிமையும், நானும், எனது பொய் நிகர் உலகமும்.

அவளிடமிருந்து பதில் வந்தது. “ஹா ஹா..நீங்கள் தமாஷான ஆள்தான். உங்களது கோரிக்கையை பரிசீலனை செய்கிறேன். நாளை காலை எனது பதில் உங்களுக்கு கிடைக்கப்பெறும். இப்போதைக்கு விடை பெறுகிறேன்” என்றாள்.

எரிந்துகொண்டிருந்த எனது கண்களில் குளிர் பாய்ந்தது. நடுக்கம் மெல்ல மெல்ல குறையத் துவங்கியது. கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டோமோ என்கிற நினைவு எழுந்தது என்றாலும் கோபாவின் ஆசிகள் எனக்கிருக்கிறது எனும் நம்பிக்கையில் என்னை தன்மைப்படுத்தினேன். முழுக்க முழுக்க என்னிலிருந்து அனைத்து நினைவுகளும் உதிர்ந்து போயிருந்தது. சக்கரவள்ளி மட்டுமே எங்குமாய் நின்றிருந்தாள். வெளியில் வேறொரு உடல் உபாதையில் சிக்குண்டிருந்த தந்தையின் நினைவு முழுக்க என்னிலிருந்து உதிர்ந்து போயிருந்தது. மயக்கம் உடலைத் தழுவியது. மெல்ல தரையில் உடல் சாய்ந்தேன்.

சக்கரவள்ளி இப்போது கனவாய் மலருகிறாள். அவளைச் சுற்றிலும் சொற்கள் அங்குமிங்குமென ஊர்ந்தலைகிறது. கையில் சிகப்பு, வெள்ளை, மஞ்சள் நிற ரோஸ் மலர்களுடன் என்னை நோக்கி புன்னகைத்தபடியே வருகிறாள். என்னை வெறுத்துவிடாதீர்கள் எனும் எனது குரலை துளியும் பொருட்படுத்தாமல், கையில் இருக்கும் மலர்களை என் மீது வீசியெறிகிறாள். கண்களை மூடிக்கொண்டு ரோஸ் மலர் மழையில் நனைகிறேன். மணம் உருவம் கொள்கிறது. என் உடலைத் தழுவி மேலும் மேலும் என்னை மயக்கத்தில் சாய்க்கின்றன.

மறுநாள் காலையில், வழக்கத்துக்கு முன்பாகவே தூக்கம் கலைந்துவிட்டது. தகுந்த நாளில், தகுந்த நேரத்தில் துளி பிரயத்தனமும் இல்லாமல் உறக்கத்தை நழுவி உருட்டிச் செல்லும் மனம் ஒரு தேர்ந்த கடிகாரம்தான்! வழக்கம்போல வீட்டினுள்ளாகவே நொண்டியபடி நடந்து கொண்டிருந்தேன். வீட்டை முழுதாய் பத்து சுற்றுகள் சுற்றியிருப்பேன். மனம் வலுவாய் இருந்தது. உடலில் முறுக்கு ஏறியது. சிந்தனையில் தெளிவு. விறுவிறுவென நடந்து வீட்டிற்கு வந்து நாற்காலியில் அமர்ந்தேன். வெளியறையில் எனது தந்தை அமர்ந்து நாளிதழ் வாசித்துக்கொண்டிருந்தார். பத்து சுற்றின்போதும் அவரது கண்கள் எனது உடலின் மீது பதிந்து சுழன்றன. எனது பாதத்தின் மீது அவரது கவனம் இருப்பதை உணர முடிந்தது. அதனால், வேண்டுமென்றே வலியெடுப்பதைப்போல முகத்தில் சுணக்கத்தை காண்பித்தேன். அம்மா இருவருக்கும் தேனீர் போட்டுக் கொடுத்தாள். தந்தையின் முதுகு வீக்கம் இப்போது பகுதியளவில் குறைந்துவிட்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. இன்னும் ஓரிரு தினங்களில் எல்லாம் இயல்பின்போக்கில் வழக்கம்போல பயணிக்கத் துவங்கிவிடும். அதன் பிறகு, எனது பணி பற்றிய விசாரணை துவங்கும்.

எனது அறைக்குள் நுழைந்து கணினியைத் திறந்தேன். கூகுள் குரோமை முடுக்கிவிடுகையில் இன்றைக்கு என் கண்களில் அந்தக் குருவி தென்படவில்லை. இணைய சேவையில் ஏதேனும் கோளாறு இருக்கலாம் என்று நினைத்ததாலும், முகநூலில் நுழையும் பேராவல் எழுந்திருந்ததாலும், அவசர அவசரமாக எனது மெயில் ஐடியை பதித்து உள்ளே நுழைந்தேன். எந்தவொரு புதிதான செய்தியும் வந்திருக்கவில்லை. ஒருவேளை சக்கரவள்ளியின் அன்றைய தினங்கள் இன்னும் துவங்காமல் இருந்திருக்கலாம் என்கிற எண்ணம் எழுந்தது. அதனால், அவளது பக்கத்தில் கடைசியாக எப்போது கவிதை எழுதினாள் என்பதை அறிய, அவளது பெயர் தேடுதளத்தில் பதித்தேன். சக்கரவள்ளி என்கிற பெயரில் ஏழுட்டு பக்கங்கள் வந்தன என்றாலும், என்னுடன் உரையாடலில் பங்குகொண்ட கோவை சக்கரவள்ளியை அதில் பார்க்க முடியவில்லை. முன்னிலும் தீவிரமாக முகநூலில் மேய்ந்து பார்த்தேன். அவளது பக்கத்தை என்னால் பிடிக்கவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் தேடியதில் ஒருவித சோர்வு என் முன்னால் எழுந்தது. திடீரென அந்த காலை வேளையில் அவள் முகநூல் கடலில் இருந்து மறைந்து போயிருந்தாள். ஒருகணத்தில் அனைத்தும் பொய்யோ என மனம் கனத்து துடித்தது. வேலை அழுத்தத்தில் இருந்து தப்பித்து கணினியில் புகுந்திருந்த எனக்கு சக்கரவள்ளி ஒரு ஆத்ம துணை போல சமீப நாட்களில் தோன்றியிருந்தாள். இப்போது அனைத்தும் மாயைதானோ என நினைக்கையில் அழுகையே வந்துவிட்டது. அப்பாவின் வேதனை மிகுந்த தருணத்தில்கூட வராமல் இருந்த அழுகை இப்போது வெளிப்பட்டுவிட்டது.

என்ன செய்து இந்த துயர இருளில் இருந்து விடுபடுவது என மனம் பல்வேறு ஊகங்களை தேடிக்கொண்டிருந்தது. கடந்த சில தினங்கள்தான் எனது தனிமையுணர்வை என்னிடமிருந்து கழன்றிருந்த பொழுதுகளாய் ஆகியிருந்தன. இப்போது மீண்டும் அதே துயர சுழலில் சிக்குண்டிருக்க வேண்டும். பேசாமல், காலில் இடப்பட்டிருக்கும் கட்டினை அவிழ்த்துவிட்டு, சாலைப் பணிக்கே சென்றுவிடலாமா என்று கூட ஒருகணம் தோன்றியது.

நினைவடுக்கில் முன்னும்பின்னுமாக சக்கரவள்ளியின் முகநூல் தினங்களை தேடியபடியே இருந்தேன். உடனடியாக எனக்கு எதுவோ சொல்லிற்று. எனது அக்கவுண்ட்டை லாக் அவுட் செய்தேன். சிறிது நேரம் மெளனம் என்னில் நிலைத்திருந்தது. இப்போது மீண்டும் ஒரு மெயில் ஐடியை அதில் பதித்தேன். பாஸ்வேர்ட்டும் என்னுடையதல்லாத வேறொன்றை பதிவிட்டேன். சில நொடிகள் சுற்றிக்கொண்டிருந்த இணைய சேவை, இப்போது எனக்கு திறந்து காட்டிவிட்டது. ஆமாம் சக்கரவள்ளியின் பக்கமேதான். நேற்றிரவு பதிவிட்டிருந்த கவிதைக்கு 270 பேர் விருப்பக்குறி இட்டிருந்தார்கள். மனம் முழுக்க சந்தோஷத்தால் திளைத்தது. புதிதாக மனதில் உருத்திரண்ட ஒரு கவிதையைப் பதிவிட விரல்களை கோர்த்துக்கொண்டிருக்கையில், வலதுபுற மூலையைத் தொட்டேன். கமலக்கண்ணன் எனும் பெயரில் ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.

“எனக்கு உங்களது கவிதைகளை மட்டுமல்ல. உங்களையும் மிகவும் பிடித்திருக்கிறது. உங்களது ஒவ்வொரு வரியிலும் ஒரு மணம் இருக்கிறது. அது என்னை இழுத்தபடியே இருக்கிறது. உங்களை நான் விரும்புகிறேன் தோழி” 

அதற்கு கீழே, “ஹா ஹா..நீங்கள் தமாஷான ஆள்தான். உங்களது கோரிக்கையை பரிசீலனை செய்கிறேன். நாளை காலை எனது பதில் உங்களுக்கு கிடைக்கப்பெறும். இப்போதைக்கு விடைபெறுகிறேன்” என்றிருந்தது. அதற்கு என்ன பதில் எழுதுவென்று தீவிரமான சிந்தனை கதியில் ஆட்பட்டிருந்தேன். வெளியில் இருந்து யாரோ கூப்பிடும் குரல் தொடர்ச்சியாக கேட்டபடியே இருந்தது. எனினும், பதில் எழுதும் அவசரமும் உந்தித் தள்ளியது. வெளியிலிருந்து நீளும் குரலிலிருந்து தப்பிக்க, எனது விரல்களால் ஒவ்வொரு எழுத்தாக லேப்டாப்பில் அழுத்தத் துவங்கினேன். கமலகண்ணனும், சக்கரவள்ளியும் ஒவ்வொரு எழுத்தின் பின்னாலும் துரத்தியபடியே இருந்தார்கள். அருகில் ஒரு தொடுவுணர்வு. தலையை உயர்த்திப் பார்த்தேன். எதிரே ஒரு உருவம் அசைகிறது. அதன் நிழலாட்டம் என் மீதும், இந்த இருளின் மீதும் விழுந்து அசைகிறது. அது பல்லாயிரக்கணக்கான புள்ளிகளால் கோர்க்கப்பட்டு பேருருவம் எடுக்கிறது. எனது பதிலை தட்டச்சு செய்யும் நிதானம் இதனால் குலைகிறது. எதிரில் நிற்கும் உருவத்தை தலை நிமிர்த்திப் பார்க்கிறேன். அந்த உருவம் எனக்கு அறிமுகமானதுதான். நன்றாக நினைவிருக்கிறது. முதுகில் வீக்கம் பெற்றிருந்த எனது முகநூல் தோழன் கமலகண்ணின் தந்தைதானவர். அல்லது முகநூல் தரகு வேலை பார்த்து அறிமுகம் செய்திருந்த சக்கரவள்ளியிடம் புலம்பித் தவித்த, எனது பாதத்தில் ரணம் உண்டாகக் காரணமாய் இருந்த, வேலை வேலை என சதா நொடிகளிலும் பல கூர்முனைகளை என்னில் சொருகுகின்ற எனது தந்தையேதானவர்.

புரியாத விழிகளால் எனது அறையில் அவர் என்ன செய்கிறார் என்பதைப்போல பார்க்கிறேன். அவரது உதடுகள் எதையோ உச்சரிப்பு செய்கின்றன. காதில் ஒலி விழாததால், மீண்டும் எனது பதிலை தட்டச்சு செய்வதில் முனைப்பாய் இருக்கிறேன். சக்கரவள்ளிக்கும் கமலக்கண்ணனுக்கும் இடைப்பட்டதொரு நிலையில் எழுந்து அந்த இருளில் பதுங்கி நழுவுகிறேன். அவர் என் மீது ஏறுகிறார். பிரம்பின் அடியில் இருந்து தப்பித்து விலகுகிறேன். காலில் வலி எடுக்கிறது. மீண்டும் உயரும் பிரம்பிடமிருந்து தப்பிக்க, அவசரமாக நொண்டத் துவங்கினேன். காலில் சுற்றப்பட்டிருக்கும் வெள்ளை நிற துணிக்கட்டில் இருந்து ரத்தம் ஊர்கிறது. ஓட முடியாமல் இருளினுள் சுற்றி சுற்றி வருகிறேன். காலில் பெருக்கெடுக்கும் சிவப்பு நிற ரத்தம் விரிந்து பரந்து எனது கணினியாகிறது. அதற்குள் நீந்தும் குருவியாக நானிருக்கிறேன். மவுஸின் அம்பைப்போல எனக்குப் பின்னால் அப்பா துரத்தியலைகிறார். அல்லது மையப் பொறியாளர் சண்முகசுந்தரமா?

அப்போதுதான் கவனித்தேன். எனக்கெதிரில் ஒரு உருவம் கணினி திரைக்கு வெளியில் அமர்ந்திருக்கிறது. ஒரு குருவியின் தோற்றத்தில் இருக்கும் அந்த உருவம் நாற்காலியில் அமர்ந்து எங்கள் துரத்தலை வேடிக்கை பார்க்கிறது. ஒருகணத்தில் அதன் முகம் சக்கரவள்ளியாகவும், கமலகண்ணனாகவும் மாறி மாறி கண்கட்டி வித்தை காட்டுகிறது. பின் மிக நிதானமாக கணினியின் அருகில் இருக்கும் மவுஸில் விரல் வைத்து, ஆழ்ந்து என் முகத்தைப் பார்த்துவிட்டு என் மீது குறி வைத்து ஒரு அழுத்து அழுத்துகிறது. அவ்வளவுதான் நாடகம் முடிந்தது. என் உடல் வெடித்து பஞ்சு துகள்களாக நான் சிதறுகிறேன். கணினி திரை முழுக்க நான் சிறு சிறு புள்ளிகளாக பறக்கிறேன். பஞ்சு பஞ்சாய் பல கூறுகளாகிறேன்!

***

ராம் முரளி – நெய்வேலியைச் சேர்ந்த இவர், திரை துரையில் பணியாற்றி வருகிறார். காலத்தை செதுக்குபவர்கள் (1,2), சிக்ஸர்களின் காலம் உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். அண்மையில் வனமேவும் ராஜகுமாரி எனும் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. தொடர்புக்கு – raammurali@gmail.com

மறைமுகம்

12

ஜா.தீபா

ள்ளங்கைகளால் தாங்கி விரல்களால் அதனை மூடிவிடலாம்.காமாட்சியின் மடியில் இறந்து போன அவளது குழந்தை அப்படித்தான் கிடந்தது. புடவையால் மூடியிருந்த குழந்தையின் கைகளை பூநரம்பினைத் தூக்குவது போலத் தூக்கினாள். விரல்களின் ஓரத்தில் நகம் முளைக்கும் இடத்தில் தன் விரலை வைத்துத் தேய்த்தாள். குழந்தை அசைவது போலத் தெரிந்தது. அதன் சொப்பு போன்ற சிறிய வாய் சற்று திறந்திருந்தது. அதன் கீழ் சுண்டுவிரலை மட்டுமே வைத்து தொடும் அளவுக்கான இடத்தில் மெதுவாக காமாட்சி அழுத்தினாள். நெற்றியைத் தடவினாள். புருவத்தை நீவினாள். அதுமுடி இல்லாது சங்குபுஷ்பத்தின் நிறத்தில் இருந்தது. மூக்கினை மெதுவாக வருடிக் கொடுத்தாள்.

உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் தொட்டுத்தொட்டுப் பார்த்தாள். குளிர்ந்திருந்தது. காலை வரை குழந்தைக்கு உடல் சூடேறிக் கிடந்திருந்தது. திருகிக் கொண்டே இருந்தாள் குழந்தை. காமாட்சி பார்த்துக் கொண்டிருக்கவே தன்னை அது விடுவித்துக் கொண்டது. அழுகையின் நெடுந்துயரும் வாழ்வின் போதாமையும் அவளை குலையச் செய்துவிட்டன. குழந்தையின் ஆழ்ந்த உறக்கம் என்பதாய் தட்டிக் கொடுத்தபடி இருந்த காமாட்சியினை தைலா பாட்டி தான் ஆற்றினாள். மடியை விட்டு குழந்தையை காமாட்சி இறக்கி வைக்கவில்லை. யாரோ பிடுங்கிவிடக் காத்திருக்கிறார்களோ என அஞ்சினாள். நினைப்பாள். அழுவாள். பொத்தி வைத்துக் கொள்வாள். ஒரு சமயம் தன் மார்புக்கு குழந்தையைக் கொண்டு போனாள். மார்பு கனத்து இருந்தது.“ஐயோ!. போதும்டி… அதைக் கீழ போடு” சொல்லும்போது  தைலா பாட்டிக்கு அழுகை வந்தது.

“அதுக்கு பசிக்குமே பாட்டி”

அறையின் ஓரத்தில் கூட்டத்தில் ஒடுங்கியிருந்த சீதை சொன்னாள். “இனி தெய்வம் பாத்துக்கும் காமாட்சி. அங்க உன் குழந்தைக்கு வயிறு நிறைஞ்சிருக்கும்”

சீதைக்கு இரு குழந்தைகளை கனத்த மார்புகளோடு பறிகொடுத்து சமாதானம் ஆன அனுபவம் உண்டு.

குழந்தை மார்பினருகே சொருகிக்கிடந்தது. காமாட்சிக்குத் தன் கைகள் பட்ட இடங்களில் எல்லாம் அழுந்தியதால் குழந்தைக்கு உஷ்ணம் ஏறியிருந்தாற்போல் பட்டது.

“நாளைக்கு உடம்பு முழுசும் உஷ்ணமா இருக்கும் இல்லையா பாட்டி”

தைலா பாட்டி “இல்லடி..குழந்தையை நெருப்புக்கு கொடுக்கறதில்லேயே… பூமி எடுத்துக்கும்”

“திரும்பத் தருமா பாட்டி?”

“ஆமாடி…திரும்பத் தரும். வயசென்ன ஆச்சு உனக்கு? பாலகனகனுக்கும் என்ன அறுபது வயசா?”

என்றவள், “பால கனகன் வந்தானா?” என்றாள் வாசலைக் குறிப்பாகப் பார்த்து.

வாசலில் ஆட்கள் நிற்பதற்கான அசைவுகள் தெரிந்தன. குரல் எதுவும் பதிலாய் வரவில்லை. வாசலில் கூட்டத்தோடு நிற்கும் மாமனார் வெங்கடாசலம் மனதுக்குள் என்னென்ன நினைத்துக் கொண்டிருப்பார் என்று காமாட்சிக்குத் தெரிந்தது.

“தாக்கல் கொண்டு போன ஆளு எப்படியும் கூட்டிட்டு வந்துடுவான்” என்றாள் தைலா பாட்டி. சொல்லியபடியே அங்கேயே ஒரு கையினை தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டாள். நீளமான கொட்டாவி விட்டாள். ‘முருகா…!அப்பனே…!” என்றாள். இரவின் நடுநேரத்திற்குப் பின் உறங்கிப்போனாள். சீதையும் மூலையில் சுருண்டு கொண்டாள். அவள் வயதுக்கு வீட்டைத் தாண்டிய மற்றொரு இடத்தில் இப்படி சுருண்டு கொள்ளவே பழகியிருந்ததாள். தைலா பாட்டிக்கு அவளது வயது ஒரு அனுசரணை. அது அவளை எந்த இடமானாலும் கால் நீட்ட வைத்திருந்தது. அந்த அறையின் கஜலட்சுமி விளக்கின் ஒற்றை ஒளியில் தைலா பாட்டி பேருருவ நிழலாய் சுவற்றில் தெரிந்தாள்.

பாலகனகன் இப்படித் தான். முப்பது நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்த போதும் பாலகனகனுக்குத் தகவல் அனுப்பினார் வெங்கடாசலம். தகவல் கொண்டு அரிக்கேன் விளக்கோடு இரவோடு இரவாக வேகமாகப் போனவர் மறுநாள் மதியத்தில் அணைந்த விளக்கோடு சோர்ந்து வந்தார், “ரொம்பக் கெடுபிடி… ஒவ்வொரு இடத்துலேயும் நிறுத்தி என்னென்னவோ விசாரிக்கறாங்க. புதுசா வந்த அதிகாரியோட உத்தரவாம். நம்ம பக்கம் இந்த அரசாங்கத்துக்கு எதிரா ஏதோ கூட்டம் சேர்ந்துருக்காங்களாம்.பாரதத் தாய்னு ஒரு ரகசிய சங்கம் கூட ஆரம்பிச்சாச்சாம். சங்கத்தை பத்தி என்ன தெரியும்னு எங்கிட்ட கேக்கறான் போலீஸ்காரன். நான் என்னத்தக் கண்டேன்?” இப்படி சொல்லும்போது அவன் குரல் ரகசியம் போல் ஆனது. மாமனார் வெங்கடாசலத்துக்கு பொறுமை இல்லை.

“கனகனைப் பாத்தியா இல்லையா?”

காமாட்சி அந்த நபர் சொல்லப்போகும் பதிலுக்காய் வாசலையே பார்த்திருந்தாள். அவள் அமர்ந்திருந்த இடம் துணியால் மறைக்கப்பட்டிருந்தது. அவளுடைய இடத்தில் இருந்து எதைத் துணியால் பார்த்தாலும் எல்லாமே பனியால் போர்த்தியது போலவே தெரிந்தது. பக்கத்து வீடுகளில் இருந்து  தைலா பாட்டியும், சீதையும் எப்போதேனும் தள்ளி வந்து நின்று பார்த்துக் கொள்வார்கள். குழந்தைக்கு பெயர் வைக்கும் சடங்கு நடப்பது வரை காமாட்சியையும் குழந்தையையும் அவர்கள் தொட சட்டத் திட்டங்கள் சொல்லவில்லை.

இழந்த அம்மாவை நினைத்து அப்போதெல்லாம் காமாட்சிக்கு அழுகை வரும்.அம்மாவின் முகம் நினைவின் மேல் எழும்பும். அம்மாவின் கண்கள் இடுங்கியவை. காமாட்சியைப் பார்ப்பதும் வெயிலைப் பார்ப்பதும் ஒன்றென நினைக்கும் போன்ற கண்கள் அவை. அந்தக் கண்களை அவள் குழந்தையினிடத்தில் தேடினாள். குழந்தையோ எப்போதும் தூங்கிக் கொண்டே இருந்தது. பால் கொடுத்தால் பாதியைத் திருப்பி வெளியில் அனுப்பியது. மாமனாரிடம் இதைப் பற்றி சொல்ல காமாட்சிக்கு கூச்சம்.

“எதாவது வேணுமாம்மா” என்பார் தன்னை ஒடுக்கித் தள்ளி நின்றபடிக்கு.

பதில் கூட சொல்ல முடியாமல் தவிப்பாள் காமாட்சி.

அவளுக்கு குடிக்க நீர் தேவைப்படும். அது கூட பரவாயில்லை தாங்கிக் கொள்ளலாம். சில நேரங்களில் குழந்தை தூங்கிக் கொண்டே இருந்தால், மார்பு கட்டிக் கொள்ளும். அதன் வலி அவள் முன்பு அறியாதது. அவளுடைய பதினாறு வருட கால வாழ்க்கையில் இதுவரை எந்த வலியையும் தான்  கண்டதில்லை என்று நினைத்துக் கொண்டாள். ஆனால் அவள் அறியாமேலேயே ஒவ்வொரு வலிகளாய் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன.

அவளுடைய அம்மா மரணித்ததும் தன்னுடைய வீட்டில் மொத்த சமையலையும் காமாட்சி தான் செய்தாள். அம்மா சொல்லித் தந்து செய்ததில்லை. ஆகையால் அடுப்பில் சுட்டுக் கொள்வாள். கரிப்பொறி கண்ணில் விழும். விறகு உடைக்கும்போது சிராய்க்கும். இவை எல்லாம் பெண்களுக்கே உண்டான அன்றாட வலிகள் என்று சொல்லக் கேட்டுப் பழகியிருந்தாள். அதனாலேயே அவள் இதனை வலி என்று எடுத்துக் கொள்வதில்லை.

வழக்கம் என்று பழக்கப்படுத்தியிருந்தாள். இது போன்ற பல வலிகளைத் தாங்குகிறபோது மனனம் போல் சொல்லிக் கொள்வாள், “நமக்கு மட்டுமா என்ன?”. அம்மாவுக்கு இந்த வலிகள் இருந்திருக்குமா? என்று கேட்டுக்கொள்ள அவள் இல்லாதது தான் ஒவ்வொரு முறையும் காமாட்சிக்கு பெருந்துக்கமாக எழும்.

இப்போதெல்லாம் இந்த மார்பு கனத்து மூச்சு விடவும்,கைககளைத் தூக்கவும் படும்பாடு தான் அவளுக்குத் தாங்க முடியாததாக இருந்தது.அதுவும் போக ஒரே இடத்தில் படுத்துக் கிடந்தது கால்களின் ஆடுசதைகளில் எதிர்பாராத நேரத்தின்போது வெட்டிப் பிடிக்கிறது. பக்கத்தில் துணைக்கு போடப்பட்டிருந்த பழஞ்சேலையை சுருட்டி வாயில் வைத்து வலி பொறுக்கப் பழகியிருந்தாள்.

குழந்தை பிறந்த செய்தியை சொல்வதற்கு பாலகனகனைத் தேடிப் போன ஆள் வந்திருந்த அந்த மதிய நேரத்தில் கூட அந்த ஆடுகால் சதைவலி வலித்து அடங்கியிருந்தது. தாக்கல் சொன்ன ஆள் சொல்லிக் கொண்டிருந்தார்.

“கனகனை எங்கேயுமே காணோம்!.செங்குளம் சீனிவாசனோட யாரோ ஸ்ரீசைலம் தீர்த்தக்கட்டத்துல பாத்துருக்காங்கன்னு அங்க போனேன்…அங்க மனுஷ சுவடே இல்லையே”

“இவனுக்கு ஏண்டா இப்படி புத்தி போகுது.இப்ப தானே பூங்கோட்டை காட்டு இலாகால வேலை கிடைச்சது. வேலையை விட்டுட்டு ராவும் பகலுமா எங்கடாப் போறான்? எதுக்கு இவன் யார் யாரோடையே சுத்தறான்?”

வெங்கடாசலத்துக்கும், தாக்கல் சொல்லப் போனவருக்கும் ஒரே சந்தேகம் தான். இருவரும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

பாலகனகன் வரவேயில்லை. கனகனைத் தேடுவதற்காக வெங்காடசலம் அனுப்பிய ஒவ்வொருவரும் விதவிதமான தகவல்களை மட்டும் கொண்டு வந்து சேர்த்தனர். கல்கத்தாவில் இருக்கிறான் என்றார்கள், புதுச்சேரிக்கு போனதாகப் பேசிக் கொண்டார்கள்.தென்காசி விசுவநாதர் கோயில் வாசலில் பார்த்ததாக ஒருவர் வீடு தேடி வந்து சொன்னார். வெங்கடாசலம் உள்ளுக்குள் உடைந்திருந்தார். அதிகம் பேசியிராத காமாட்சியிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் அவளின் அமைதியை எதிரொலித்தார்.

ஊரில் நிகழ்வுகளுக்கு பஞ்சமில்லை. சிதம்பரம் பிள்ளையையும், சுப்ரமணிய சிவாவையும்,மக்கள் முன்பாகவே கைது செய்து அழைத்துப் போனார்கள். திருநெல்வேலி ஜில்லா முழுவதும் பற்றி எரிந்தது. அதன் தாக்கம் குக்கிராமங்களைக் கூட சூடாக்கியிருந்தது. இரவுகளில் சுவர்களில் பற்ற வைத்த தீ பகலில் எழுத்துகளாய் ஒளிர்ந்தது. “சி சு வை விடுதலை செய்” “பறங்கியனே சிதறிப் போ” என்றன சுவர்கள்.

காமாட்சிக்கு இவற்றை செய்திகளாக சொல்வார் யாருமில்லை. அவள் உணர்ந்த உலகங்களில் ஒன்று அருகில் கிடந்தது. அவள் அறியக் காத்திருக்கும் உலகம் ஊர்ஊராய் சுற்றிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் அமைதியாய் உறங்கும் குழந்தையிடம் “அப்பா சீக்கிரமா உன்னைப் பாக்க வந்துடுவாரு.உன்னோட நாசியப் பாக்கறதுக்கு உன் அப்பா மாதிரியே இருக்குன்னு உன் தாத்தா சொல்றாரே…எனக்கென்ன தெரியும்?. உங்கப்பா முகத்தை சரியாவே நான் பார்த்தில்லையே!. வந்தாலும் அவர் முகம் பாக்கறதுனா கூச்சம் பிடுங்கித் தின்னும். அவர் கையில நீ இருக்கும்போது தான் உன்னைப்பாக்கற மாதிரி அவரைப் பாக்கணும்”என்று சிரிப்பாள். அது போன்ற சிரிப்புகள் எப்போதும் அவளுக்கு அந்தரத்திலேயே புகைந்து விடக்கூடியவை.

குழந்தையின் மேட்டு நெற்றியைத் தடவியபடிக்கு, ‘உன் அப்பா ரொம்ப புத்திசாலியாக்கும். அவர் உனக்கு இராமாயணமும், பாரதமும் சொல்வாரு. அதுல சொல்ற தர்மம் என்னன்னு உனக்கு சொல்லிக் கொடுப்பார். அப்படி அவர் சொல்லும்போது நானும் கேட்டுப்பேன்…”

இப்படி ஏதேனும் அவள் பேசுகிறபோது குழந்தை உறக்கத்தில் சிரிக்கும். அவள் பாலகனகனைப் போல் சிரிப்பதாக நினைத்துக் கொள்வாள்.“உங்க அப்பாவோட சிரிப்பு கூட இப்படித் தான் இருக்கும் போல.தள்ளி நின்னு தான் பாத்துருக்கேன். இப்பல்லாம் அவர் சிரிக்கறதே இல்ல. ஏதோ யோசனையிலேயே இருக்கார். பாவம் அவருக்குள்ள என்னவோ? என்னை மாதிரி எதுவுமே தெரியாத பொண்ணுகிட்ட என்ன சொல்ல முடியும் அவருக்கு?சொன்னாத் தான் எனக்குப்புரியுமா? வெள்ளைக்காரன் இன்னிக்கு நேத்தா இருக்கான். நான் பிறக்கறதுக்கு முன்னாடியே இருக்கான். இனிமேலும் இருப்பானே…!அவனை நினைச்சு நாம ஏன் தவிக்கணும்? உங்க அப்பாவுக்கு வெள்ளைக்காரங்களப் பத்தி பேச்சை எடுத்தாலே எவ்வளவு கோபம் வருது?”

“…அதுவும் நீ பொறக்கறதுக்கு பத்து நாளைக்கு முன்னாடி, அன்னிக்கு முழு அமாவாசை. இப்படித் தான் நான் அவரை எதிர்பார்த்து உக்காந்துருந்தேன். விளக்கு வச்சு ரொம்ப நேரம் ஆயாச்சு.எனக்கு ஆயாசமா இருந்தது.உன் அப்பா எப்ப வேணாலும் வருவாரே. காத்துட்டு இருந்தேன்.வெளி வாசல்படிக்கு பக்கத்துல உன் தாத்தா வேப்பிலையை தீயில போட்டு வாட்டிட்டு இருந்தாரு. பூச்சி வராது இல்லையா?.எனக்கு அந்த நாத்தம் குடலைப் பிடுங்கும். பாவம் நீ உள்ள இருக்கும்போது உனக்கு அந்த நாத்தம் பிடிக்கலையோ என்னவோ, வாயால வந்துடும். உன் தாத்தாக் கிட்ட சொல்ல முடியுமா என்னால. புடவையை மூக்குல வச்சு அழுத்திட்டு உக்காந்துருந்தேன். உன்னோட அப்பா வந்தார்.

எங்க ஊர் சிவன் கோயில்ல சன்னதியில கால பைரவர் சிலை ஒண்ணு உண்டு.சாயந்திர நேரம் ஒரே ஒரு விளக்குல அவர் முகம் அப்படியே நம்மள குத்தற மாதிரிப் பாக்கும். வாயோரம் ரெண்டு பல் மட்டும் தனியாத் தெரியும். தப்பு பண்றவங்கள அழைச்சிட்டுப் போய் அந்த சன்னதில தான் சத்தியம் வாங்குவாங்க. தப்பு பண்ணுணவன் பொய் சத்தியம் பண்ணினா கால பைரவர் பல் அவனைக் குத்திக் கிழிச்சிடும். திருடினவன்லாம் பொய் சொல்லி அன்னிக்கே இரத்தம் வெளியேறி செத்துப் போயிருக்காங்க. ஐயோ ரொம்ப பயங்கரம்.குழந்தை நீ!.உன்கிட்ட சொல்றேனே இதை. ஆனா பயப்படாத…நீ ஒண்ணும் தப்பு பண்ணலியே. நான் உன்னைக் கூட்டிட்டுப் போறேன். ஆங்! என்ன சொன்னேன்? கால பைரவர் மாதிரி தான் உங்கப்பா வீட்டுக்குள்ள நுழைஞ்சார். புஸ்புஸ்னு ஒரே மூச்சு சத்தம். உன் தாத்தா மெல்ல வந்து உங்கப்பா பேர் சொல்லி… என்ன ஆச்சுன்னு கேட்டார்?”

பால கனகனுக்கு இந்தியா என்பதை விட பாரதம் என்று சொல்ல வேண்டும். பாரதம் இராமனின் தம்பியான பரதனின் தேசம் என்பான். இராமனின் ஆட்சியின் கீழ் பரதனின் மேற்பார்வையில் தான் இயங்குகிறது என திடமென நம்புகிறவன். இந்த பாரதத்தை இராமர் வழி வந்தவர்களே ஆளவேண்டும் என்பான். துன்பத்தில் உழன்று தன்னையே காப்பாற்றிக்கொள்ள வழியில்லாத ஒருவரைத் தெய்வமாகக் கொண்டாடுபவர்கள் எல்லாம் இந்த நாட்டின் நரம்புக்குள் விஷமாய் புகுந்திருக்கிறார்கள் என்று கூச்சலிடுவான்.

தொழுவத்தில் கட்டப்பட்டிருக்கும் பசுமாடுகளின் முன்பு ஒவ்வொரு முறையும் அவன் ஏதோ முணுமுணுப்பதை காமாட்சி பார்ப்பாள். அவனறியாமல் அவன் முகம் பார்க்க அவள் உருவாக்கியிருக்கும் சொற்ப தருணங்கள் அவை. ஆனால் அவன் முகம் அப்போது அவள் விரும்பியபடியாக இல்லாமல் அவளுக்கு அச்சத்தைத் தருவதாகவே இருந்தது.

அது போன்ற முகத்தைத் தான் அவள் அன்று இரவும் கண்டாள். “ஏண்டா கனகா… என்னாச்சு?” என்று பலமுறை வெங்கடாசலம் கேட்க வேண்டியிருந்தது.

பால கனகன் ஒன்றும் பேசவில்லை. “சீக்கிரத்துல எல்லாத்துக்கும் முடிவு வரத் தான் போகுது” என்று மட்டும் சொன்னான். அவன் சொன்ன தொனியில் இருந்த உறுதியில் காமாட்சிக்கு அச்சத்துக்கு பதில் தைரியம் தான் வந்தது. “எல்லாம் சரியாகிவிடும்” என்று கனகனே சொன்னது அவளுக்கு ஆறுதலாய் இருந்தது.எல்லாம் சரியானால் கனகன் மனம் அமைதியாகி அவளை நாடி வருவான் என்று நிம்மதிப்பட்டுக் கொண்டாள்.

கனகன் நன்றாக ஆங்கிலம் பேசுவான். அவனுக்கு பல கடிதங்கள் வந்தன.அவற்றில் ஒரு எழுத்துக் கூட காமாட்சிக்கும் வெங்கடாசலத்துக்கும் புரியாது.புரிகிற தமிழ் எழுத்துகளின் அர்த்தம் விளங்காது. அவை ஒரு ஒலிக்கோர்வை போன்ற பொருள் ஏற்படுத்துபவை.கடிதங்கள் வரும் நாட்களில் இரவு முழுவதும் அதைக் கையில் வைத்தபடிக்கு கனகன் அமர்ந்திருப்பான். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவனாய் சரசரவென தாளில் எழுதுவான்.விளக்கின் வெளிச்சம் அவன் கடிதத்துக்கு மாத்திரமே பொருள் கொடுக்கும். நடுவில் கனகனுக்கு விக்கலோ, இருமலோ வராதா…என்று ஏங்கிக் கிடப்பாள் காமாட்சி. கையருகில் தண்ணீர் சொம்பினை வைத்துக் கொண்டு இருளில் புதையும் அவன் முகம் பார்த்துக் கிடப்பாள். ‘இன்று குழந்தை வயிற்றை உதைத்தது’ என்று சொல்ல வேண்டுமாய் அவளுக்குத் தோன்றும். கனகனின் இருள்முகம் கொடுக்கும் தீவிரத்தில் அவள் மௌனமாவாள்.

காமாட்சிக்கு உலுக்கிப் போட்டது.எங்கோ நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. விருட்டென்று சொடுக்கி அமர்ந்தாள். குழந்தை மடியில் அதே கிடப்பாய்க் கிடந்தது. அதன் மூக்கின் மேல் ஒரு “ஈ” அமர வந்ததை விரட்டினாள். குழந்தை கனத்திருந்தது. விறைத்து மரக்கட்டை போல் இறுகியிருந்தது.

அதன் மென்மையான சிறு முடிகளைத் தடவித் தந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் இழக்கப்போகும் குழந்தையிடம் கடைசியாக என்ன சொல்வதென்று அவளால் நிதானிக்க முடியவில்லை.அதையே பார்த்தபடி இருந்தாள். தனது ஆன்மாவின் மொழியை ஒலியால் உணர்ந்த ஒரே ஜீவனும் தன்னை விட்டு விலகப்போவதை அவள் உள்வாங்கத் துணிந்தாள். கண்ணீர் பெருக்கெடுத்தது. அதன் அழுத்தம் சொல்சொல்லாய் அவளுள் எழுந்து வந்தது.

“உன் அப்பா உன்னை ஒரு தரம் பாக்கணும்… நீ போய் அவரைக் கூட்டிட்டு வர மாட்டியா செல்லமே…! நீ இல்லாம நான் வெத்து ஜடமாப் படற பாட்டை உன்னோட அப்பா பாக்கணும். உன்னோட ஒவ்வொரு அசைவையும் அவருக்கு நான் சொல்லணும். என் பக்கத்துல நீ கிடந்தத விரல்விரலா உன் ஸ்பரிசத்தை நான் உள்வாங்கினத உன் அப்பாக்கிட்ட சொல்லணும். அவருக்குத் தெரியாத உன்னோட சிரிப்பு எப்படியிருக்கும்னு அவர்கிட்ட நான் பேசணும். என் குழந்தையை நான் பாக்கலைன்னு அவர் ஏங்கித் தவிக்கும்போதெல்லாம், அவரோட ஏக்கத்தை நான் கவனிக்கனும்.அவர் தத்தளிச்சு மருகனும்.  ஒருமுறை கூட பாத்திராத உன்னோட கண்களை அவருக்கு நான் நினைவுபடுத்திட்டே இருக்கணும்.நீயும் நானும் மட்டுமே அனுபவிச்ச துன்பத்தையும் சொல்லியழணும்…” காமாட்சியின் மனம் பேசிப்பேசி மோதி நின்றது. அவளது முகம் அறையில் புகுந்த நிலவின் ஒளியில் செம்மை பூத்திருந்தது.

பாலகனகனை வரவழைக்க ஒவ்வொரு இடமாக அனுப்பிய அனைவரும் செய்தியும், கனகனுமற்றும் திரும்பினார்கள். பாலகனகன் வரவேயில்லை. வந்திருந்து தலைகாட்டியவர்கள் கனகன் வராதது குறித்த குற்றச்சாட்டை புலம்பலாகவும் விரக்தியாகவும் பேசித் தீர்த்தனர். வெங்கடாசலம் தன் பேத்தியின் சடங்கினை செய்வதற்கு மகன் இருந்தும் இல்லாத நிலையை மனதினுள் அழுத்திக் கொண்டிருந்தார். வந்திருந்தவர்கள் அவர் முகம் பார்த்துக் காத்திருந்தனர். தைலா பாட்டி வழியாக என்ன செய்யலாம் என்று காமாட்சியிடம் கேட்டார்.

காமாட்சி எப்படியேனும் பாலகனகன் வந்துவிடுவான் என்று வைத்திருந்த உறுதியைத் தளரவிட்டாள். குழந்தையைக் கையில் எடுத்தாள். “உன்னாலும் அவரை அழைத்துக் கொண்டு வர இயலவில்லை என்றால் உன்னைப் பார்க்காமல் அவர் வாழ்ந்து கழிப்பது தான் சரி’ என்றாள் அதன் காதினுள். அதன் நெற்றியில் உதடு பதித்தாள். வெங்கடாசலம் அமைதியை உடைத்து  அரற்றினார்.

குழந்தை மண்ணின் பாகமாய் ஆனது.

வெற்றுத் தரையில் பகலிலும் குழந்தை நினைவாய் ஒளிர்ந்த விளக்கின் நிழலைப் பார்த்தபடி காமாட்சி கிடந்தாள். நிழலின் அசைவு அவளுக்கு குழந்தையின் அசைவாக இருந்தது.

குழந்தை போன இரண்டாம் நாள் வாசலில் அன்னியர்களின் பேச்சரவம் கேட்பதை ஒரு ஜடத்தன்மையோடு கேட்டுக் கொண்டிருந்தாள். எந்த ஒலியும் அவளுள் புகவில்லை.

வாசலில் அவர்கள் நின்றிருந்தார்கள். ஆங்கிலேயர்கள் இருவர், நான்கு போலீஸ்காரர்கள். வெங்கடாசலத்தின் கால்கள் ஆடின. இத்தனை நெருக்கத்தில் அவர் தெய்வத்தைப் பார்த்திருக்கிறார். தினமும் ஆலமரத்து பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை போடும்போது கண்டிருக்கிறார். போலீசைப் பார்த்ததில்லை.

“யார் வேணும்?” என்று கேட்க வேண்டும்.

நாக்குப் புரளவில்லை.

வநதவர்கள் மிகக் கடுமையான முகபாவம் கொண்டிருந்தனர்.

“பாலகனகன் வீடு இது தானே?”

காமாட்சிக்கு இனி தனக்கு வீட்டினுள் காரியம் இல்லை என்று முடிவு கொண்டு கூடத்து இருளில் வந்து நின்றாள். அவள் அசைவை கண்டுகொண்டனர் வந்திருந்தவர்கள்.

“அது பாலகனகனின் மனைவியா?” என்று ஆங்கிலத்தில் அதிகாரி போல் இருந்த ஆங்கிலேயர் ஒருவர் கேட்க, போலிஸ் அதனைத் தமிழில் வெங்கடாசலத்திடம் சொன்னார்.

ஆமாம் என்று தலையாட்டினார் வெங்கடாசலம்.

“என் கனகனுக்கு என்ன ஆச்சு? வயித்துல புளி கரைக்குதே”

“நாங்க வீட்டை சோதனை பண்ணனும்” என்றார்கள் வந்தவர்கள்.

வெங்கடாசலம் சட்டென்று குறுக்கே போய் நின்றுகொண்டார்.

“குழந்தையைப் பறிகொடுத்து இன்னும் பத்தாம் நாள் காரியம் கூட ஆகல.கனகனோட குழந்தை” என்றார். ஆங்கிலேயே அதிகாரியிடம் மொழிபெயர்க்கப்பட்டது. அவர் முகம் இறுகித் தளர்ந்தது.

“உங்கள் மகன் பாலகனகன்  இந்த ஜில்லா கலெக்டரை ஷூட் பண்ணிட்டான்” என்றார் ஆங்கிலேயர். அவர் குரல் பதற்றமற்று கூர்மை கொண்டிருந்தது.

அதுவும் மொழிபெயர்க்கப்பட்டது. வெங்கடாசலம் அப்படியே நின்றார். பதிலாய் அவரின் மேல்துண்டு மட்டும் காற்றில் ஆடி நழுவியது.

காமாட்சி தன்னருகில் இருந்த சுவரைப் பிடித்துக் கொண்டாள்.

“அவன் இப்ப எங்கே?” என்றார் வெங்கடாசலம் கம்மிய குரலில்.

ஆங்கிலேயர் காமாட்சி இருக்கும் திசையைப்பார்த்தார்.

“அவனும் அதே துப்பாக்கியால் இறந்து போனான்”

“தற்கொலை” என்றார் ஆங்கிலேயர்.

வெங்கடாசலம் அப்படியே அமர்ந்தார். தலையில் பட்பட்டென்று அடித்துக் கொண்டார்.

காமாட்சி உள்ளுக்குள் உடைபட்டுத் திணறினாள். கண்கள் அலைந்தன. வியர்த்தது. சமநிலைக்கு முயற்சி செய்து அப்படியே தரையில் கவிழ்ந்தாள். வீட்டுக்குள் ஏறும் பூட்ஸின் கால்கள் மட்டும் அவளுக்கு சன்னமாய்க் கேட்டது.

தங்களுடன் வரவேண்டுமாய் வெங்கடாசலத்தை போலிஸ் அழைத்தது. ‘இது என் மகன் பால கனகன் தான்’ என்பதான ஒப்புதல் கையொப்பம் கேட்டது. வெங்கடாசலம் நடுங்கும் விரல்களால் முடியாது என்று கையசைத்தார். குரலில்மட்டும் உறுதி இருந்தது. “அவன் என் மகனே இல்ல… அவன் குழந்தை பிறந்ததும், இறந்ததும் தெரியாமலேயே போய்ச் சேந்துட்டான்… அவனும் அனாதையா போகட்டும்.நான் அவனைப் பாக்கக்கூட வரமாட்டேன்” என்றார். காமாட்சி தன்னுணர்வு பெறுகையில் தைலா பாட்டி மட்டும் அறையில் இருந்தாள். ஏற்றிய விளக்கு ஒற்றையாய் அறையில் எரிந்து கொண்டிருந்தது.

“தண்ணி குடி காமாட்சி” என்று நீரைக் கொடுத்தாள். முழுவதுமாய் குடித்துத் தீர்த்தாள் காமாட்சி.

“கனகன் தன்னோட வாயில துப்பாக்கியை வச்சு சுட்டுக்கிட்டானாம்” என்றவள் கம்மிய குரலில் தொடர்ந்தாள். “மனசத் தேத்திக்கோ காமாட்சி. கனகனோட முகம் சிதைஞ்சு போச்சாம்.. உன் மாமனார் இவன் தான் என் பிள்ளைனு அடையாளம் காட்ட மாட்டேன்னு சொல்லிட்டார்.அதனால நீ தான் இப்ப அவங்களோடப் போகணும்.”

காமாட்சி தைலா பாட்டி முடித்த பிறகும் அவள் குரலில் திரும்பத் திரும்ப அதனைக் கேட்டுக் கொண்டிருந்தாள். போலீஸ்காரர்கள் வீட்டினுள் இருந்த கடிதங்களையும், காகிதங்களையும் அள்ளிக்  கொண்டார்கள்.

கிராமத்தில் இருந்து இருபது மைல் தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு முதன்முதலாய் இப்போது தான் வருகிறாள் காமாட்சி. உடன் வெங்கடாசலமும், தைலா பாட்டியும் நின்றிருந்தார்கள். கூட்டம் தள்ளி நின்றது. எல்லோர் முகங்களிலும் அச்சம் பரவிக் கிடந்தது. ஒரு கட்டடத்தின் வாசலில் சடலம் கிடத்தப்பட்டிருந்தது. அதன் கிடத்தலில் சர்வ அலட்சியம் தெரிந்தது. சடலத்துக்கு மூன்றடி தள்ளி மாட்டின் காய்ந்த சாணம் கிடந்தது. என்ன நிறமென்று அறிய முடியாத ஒரு துணி கொண்டு சடலத்தை மறைத்திருந்தனர். அதை மீறித் தெரியும் பாதங்களையும், விரல் நுனிகளையுமே கூட்டம் அச்சத்துடன பார்த்துக் கொண்டிருந்தது.

காமாட்சி எதையும் உள்வாங்காத ஒரு வெற்று பொம்மை போல் அருகில் போனாள். ஒரு போலீஸ்காரர் தள்ளி நின்று ஒரு குச்சியால் முகத்தில் இருந்த துணியை விலக்கினார். காமாட்சி மடங்கி அமர்ந்தாள். ஈக்கூட்டம் பறந்து போய் வந்தது. கரிய இரத்தம் கொத்தாய் கிடந்தது முகம் கொண்ட இடத்தில். அதன் நடுவே தெரிந்த அடையாளத்தைக் கொண்டு காமாட்சி கணவனைத் தேடினாள். பாலகனகனின் முகத்தை நினைவுக்கு இழுக்க வேண்டியிருந்தது. அது அவளுக்கு போக்குக் காட்டி எங்கோ போய் ஒளிந்து கொண்டது. மீண்டும் மீண்டும் அந்த முகத்தை இழுத்து வர முனைந்தாள். அது நழுவி இல்லாமல் ஆனது.

அவளுக்கு நினைவு பிறழ்வது போல் இருந்தது. வாய்த்த சந்தர்ப்பங்களை நினைவுக்குக்கொண்டு வந்து பார்த்தாள். அவன் முகம் மட்டும் நினைவில் எழும்பவேயில்லை. தன் முன் கிடந்த ஒருவனை கணவன் என்று எதைக் கொண்டு சொல்வதென்று அவள்  தடுமாறினாள்.

கூட்டம் கட்டுப்பாட்டை மீறி முன்னால் நகரத் தொடங்கியது. போலீஸ்காரன் வேகமாய் வந்து சடலத்தின் முகத்தை மூடினான்.

மூடிய முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் காமாட்சி. அவளுக்கு அடையாளமாய் எதையும் காண இயலவில்லை. மெதுவாக நகர்ந்து அருகில் போனாள். சடலத்தின் துணியை விலக்கினாள். சற்று குனிந்து தன்னுடைய கண்ணை மூடிக்கொண்டாள். தனது உடமையின் வாசம் வருகிறதா என்று சுவாசத்திலே தேடினாள். அம்மாவின் சடலத்தில் மேல் எழுந்த மஞ்சளின் வாசம் வந்தது. பிறகு குழந்தையின் பால் வாசம். அவளது அப்பாவின் மேல் இருந்து வீசிய பச்சிலை வாசமும் கூட வந்தது. அவளை விட்டு மரணித்தவர்களின் முகங்களுமே ஒன்றின் மேல் ஒன்றாய் எழுந்து வந்தன.

நினைவை உலுக்கி முகத்தின் அருகில் போனாள். ஈக்கள் இடம் மாறி காமாட்சியின் மேல் ஊர்ந்தன.

ஊர்ஜிதம் செய்ய இயலவில்லை. தடுமாற்றமாய் எழுந்தாள்.

‘தெரியவில்லை’ என்று நிதானமாய் சொன்னாள். வெங்கடாசலம் முகத்தில் ஒரு நொடி ஆசுவாசம் வந்து போனது. போலிஸ் அவரை இழுத்துக் கொண்டு போய் சடலத்தின் அருகில் நிறுத்தியது. இந்த முறை துணி வேகமாய் முகத்திலிருந்து போலிசாரால் இழுபட்டது. சில வினாடிகள் அந்த இடத்தில் காற்றில் ஒலி கொண்டிருந்தது. முகம் கோணக் கதறினார் வெங்கடாசலம்.

இனி எப்போதும் அவள் கணவனென உணரப்போவது குருதியின் துருப்பிடித்த இரும்பின் வாசமும், கருத்த சதைத் துணுக்கும் மட்டுமே என்பதை அறிந்தாள்.

தைலா பாட்டி காமாட்சியைக் கட்டிக் கொண்டாள். “உன் குழந்தைக்கிட்ட அவனும் போயிட்டாண்டி”

காமாட்சி தைலா பாட்டியிடம் இருந்து தன்னை விலக்கினாள்.

“போகட்டுமே பாட்டி.  தேடித் தேடிப் பாத்தேன் பாட்டி. அவரை எனக்குத் தெரியவேயில்ல…அவர் குழந்தை எதுன்னு அவருக்குத் தெரியாது…..”. அவளின் இலக்கற்ற பார்வை வானம் பெற்றுக் கொண்டிருந்தது. “தன்னோட குழந்தையைத் தேடித்தேடி அலைவார் இல்லையா பாட்டி?”

காமாட்சியின் இயல்பிலில்லாத அந்த நேர முகத்தோற்றத்திற்கு தைலா பாட்டி ஈடு கொடுக்காது திரும்பினாள்.

ஜா தீபா – எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், ஆவணப்பட இயக்குனர் என தொடர்ந்து எழுதி வரும் இவர் நெல்லையை சேர்ந்தவர். அயல் சினிமா இதழின் பொறுப்பாசிரியராக இருந்தார். “நீலம் பூக்கும் திருமடம்” எனும் இவரது சிறுகதைத் தொகுப்பு பரவலான கவனத்தைப் பெற்றது. இவரது மின்னஞ்சல் – deepaj82@gmail.com

கொரோனா நெருக்கடி:

0

அமெரிக்க – சீன மேலாதிக்கப் போட்டியும் புதிய உலக ஒழுங்கு பற்றிய விவாதங்களும்

ரூபன் சிவராஜா

கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடியின் விளைவுகள் மிகப் பாரியவை. அவற்றை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் வைத்துப் பேசிவிட முடியாது. தனிமனிதனில் தொடங்கி குடும்பம், சமூகம், தேசம், தேசங்கள் கடந்த உலகம் என அனைத்து மட்டங்களிலும் பெருவாரியான மாற்றங்களைச் சடுதியாக ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் உலகம் முன்பு போன்று இருக்கப் போவதில்லை என்பது ஆய்வாளர்களின் கணிப்பு மட்டுமல்ல. சாதாரண மக்களும் அதனை உணர்கின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இந்நெருக்கடி தேசங்களின் சமூக ஊடாட்டம், பொருளாதாரம் என விரிந்து சர்வதேச உறவுகள் வரை பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி, மாற்றங்களை நிர்ப்பந்தித்து நிற்கின்றது. கண்ணுக்குத் தெரியாத இந்த வைரஸ் பரப்பல் ஏற்படுத்தியுள்ள உளவியல் அச்சம், சமூக இடைவெளி, உள்ளிருப்பு, வைத்தியசாலைகளின் தாங்குவலுப் பற்றாக்குறைகள் ஒருபுறமும் வேலையிழப்பு, பொருளாதார நெருக்கடி, நிச்சயமற்ற எதிர்காலம் என பல முனைகளிலும் நெருக்கடிகள் உருவாகியுள்ளன.

முன்னனுபவமற்ற புதிய முகம்கொடுப்பு

இது மேற்குலகிற்கு முற்றிலும் புதியதொரு சூழல். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கிழக்கு ஐரோப்பாவைத் தவிர்ந்த ஐரோப்பாவின் பெரும்பான்மை நாடுகள் போர்களைச் சந்திக்கவில்லை. இன்று வாழ்ந்துகொண்டிருப்பவர்களில் பெரும்பான்மையினர் 1945-க்கு பின் (2ம் உலகப்போருக்குப் பின்) பிறந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் இன்றைய அவசரகாலச்சட்டம், வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நிலை என்பன முற்றிலும் முன்னனுபவம் இல்லாத முகம்கொடுப்பு.

போர் நடைபெற்ற நாடுகளிலிருந்து மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களுக்கு இவற்றையொத்த நேரடி அனுபவங்கள் உள்ளன. புலம்பெயர் தேசங்களில் பிறந்து வளர்ந்த தலைமுறையினருக்கு அந்த அனுபவம் இல்லை. போர்க்காலச் சூழலுக்கும் இன்று உலகம் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கும்கூட பாரிய வித்தியாசம் உண்டு. போர்ச்சூழலில் எங்கு என்ன நடக்கின்றது என்பதை ஓரளவுக்கு அறிய அல்லது உணரவேனும் முடியும். இந்த வைரஸ் கண்ணுக்குத் தெரியாத எதிரி. கண்ணுக்குத் தெரியாத எதிரியோடு மல்லுக்கட்டுவது மிகப்பெரிய உளவியல் அவஸ்தையும்கூட.

தொற்றுத்தடுப்பிற்கான முன்தயாரிப்பின்மை

இத்தகு பரந்துபட்ட பல்முனைப் பாதிப்புகளை முழு உலகமும் எதிர்கொண்டுள்ள சூழல்களுக்கு மத்தியிலும் அமெரிக்க – சீன வல்லரசுப் போட்டி சர்வதேச அரசியலின் பேசுபொருளாக இருக்கின்றது. புதிய உலக ஒழுங்கு பற்றிப் பிரஸ்தாபிக்கப்படுகின்றது. உலக ஒழுங்கினைத் தீர்மானிக்கும் முதன்மை இடத்தினை அமெரிக்கா தொடர்ச்சியாகத் தக்கவைத்துக் கொள்ளுமா, அல்லது சீனா அதனைத் தன்வசப்படுத்துவதற்கான புறநிலையைக் கொரோனா நெருக்கடி ஏற்படுத்தித் கொடுத்திருக்கின்றதா என்றவாறான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

சீனா உட்பட உலகின் எந்த நாடுமே தொடக்கத்தில் இந்த நெருக்கடியை அதீத சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. முனனேற்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை. தொற்றுக்கட்டுப்பாட்டு உபகரணங்கள், மருந்துகள், மருத்துவமனையின் தாங்குசக்தி விஸ்தரிப்புச் சார்ந்த முன்தயாரிப்புக்களைப் போதியளவு கொண்டிருக்கவில்லை. சீனா தொடக்கத்தில் இல்லாவிட்டாலும் குறுகிய காலத்திற்குள் சுதாகரித்துக்கொண்டு துரித நடவடிக்கைகளின் ஊடாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. அமெரிக்கா மற்றும் இத்தாலி, ஸ்பெயின், பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் பெரும் எண்ணிக்கையிலான மரணங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. சிறந்த மருத்துவத்துறையைக் கொண்டுள்ள ஜேர்மன் மற்றும் ஸ்கன்டிநேவிய நாடுகள், சுவிஸ் ஆகியன கட்டங்கட்டமாக சாத்தியமான திட்டங்களை அமுல்படுத்தி தொற்றுப்பரவலை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றன. சமூக முடக்கம் ஓரளவு தளர்த்தப்பட்டு, படிப்படியாக இயல்புக்கும் திரும்பிக் கொண்டிருக்கின்றன.

பலவீனமான சர்வதேச ஒருங்கிணைப்பு

உலகளாவிய நெருக்கடியாக கொரோனா ஆகிவிட்ட புறநிலையில், சர்வதேச நிறுவனங்களின் கூட்டுச்செயற்பாடு அல்லது ஒருங்கிணைப்பு என்பது இன்றியமையாதது. ஆனாலும் இந்த நெருக்கடியில் சர்வதேச ஒருங்கிணைப்பில் மிகப் பலவீனமான நிலையே வெளிப்பட்டிருக்கின்றது. உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation, WHO) ஒப்பீட்டளவில் உரிய மருத்துவத் தகவல்களைப் பாரபட்சமின்றி வழங்கி வருகின்றது. அதன் செயற்பாடுகளுக்குமே ‘டிரம்ப் நிர்வாகம்’ பெருத்த முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வருகின்றது.

உலக சுகாதார மையத்திற்கு அதிகளவு நிதி வழங்கும் நாடு அமெரிக்கா. சுகாதார மையத்தின் மொத்த நிதிப்பாவனையின் 15 வீதம் அமெரிக்காவினால் வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. நிதி வழங்கலை அமெரிக்கா நிறுத்தும்போது அது உலக சுகாதார மையத்தின் செயற்பாடுகளை வெகுவாகப் பாதிக்கும். அந்த இழப்பினை இட்டுக்கட்டுவதற்கு சீனா போன்ற பெரிய நாடுகளிடமிருந்து  மேலதிக நிதியுதவியைப் பெறவேண்டிய தேவை WHO-க்கு உள்ளது.  

‘டிரம்ப் நிர்வாகம்’- பொறுப்பற்ற கையாள்கை

டிரம்ப் நிர்வாகத்தின் கொரோனா நெருக்கடிக் கையாள்கை, அமெரிக்க மக்கள் மத்தியிலும் சர்வதேச மட்டத்திலும்; அதிருப்திகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அதனைத் திசைதிருப்பும் பொருட்டு உலக பொருளாதார மையம், சீன எதிர்ப்பு, கியூப எதிர்ப்பு அரசியலை டிரம்ப் கையிலெடுத்துள்ளார் என்ற விமர்சனங்களும் புறக்கணிக்க முடியாதவை.

மருத்துவ ரீதியில் நிரூபிக்கப்படாத மருந்து முறைமைகளை கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்துவது தொடர்பாகப் பொறுப்பற்ற முறையில் கருத்துகளை டிரம்ப் வெளியிட்டமையும் உலகளாவிய விசனங்களைத் தோற்றுவித்திருந்தது. ஒளிக்கதிர் மற்றும் கிருமிநாசினியை உடலுக்குள் செலுத்தி – உடலைக் கழுவுவதன் மூலம் வைரசை நீக்கிவிடலாம் எனத் தான் நம்புவதான தொனியில் ஒரு பொறுப்பற்ற கருத்தினைச் சொல்லியிருந்தார்.

மேற்கண்ட ஆலோசனையைச் சொல்வதற்கு முன் வெவ்வேறு தட்பவெட்ப காலநிலைகளில், மேற்பரப்புகளில் வைரஸ் எவ்வாறு இயங்குகிறது என்பதைக் குறிப்பிட்டார். புறஊதாக் கதிர் (ultra violet rays) அல்லது கிருமிநாசினிகளை உடலுக்குள் செலுத்துவதென்பது உயிராபத்து மிகுந்தது என்பது மருத்துவ விஞ்ஞானத் தகவல்.

ஐரோப்பிய ஒன்றியம் கைவிரிப்பு

ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளுக்கே உதவ முடியாத கையறு நிலையை வெளிப்படுத்தியுள்ளது. இடர்கால உதவி ஒருங்கிணைப்பிற்குரிய வளங்களையும் பொறிமுறைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டிருக்கவில்லை. வணிக-பொருளாதார நலன்களை முன்னிறுத்திய கூட்டமைப்பு என்பதற்கு அப்பால் அதன் வகிபாகப்பரப்பு விரிந்த ஒன்றல்ல என்பதை இது நிரூபித்துள்ளது. நாடுகளின் பெரும் கூட்டமைப்பாக அதன் மீது கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பம் கேள்விக்குள்ளாகியிருக்கின்றது.

வருமுன் காப்பதற்குரிய பொறிமுறைகள் இருக்கவில்லை என்பதற்கு அப்பால் வந்த பின்னேனும் கூட்டுணர்வுடன் செயற்படும் விருப்பினையும் ஐரோப்பிய ஒன்றியம் வெளிப்படுத்தவில்லை. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் சேர்பியா போன்ற உறுப்பு நாடுகளின் உதவிக் கோரல்களைக்கூட ஐரோப்பிய ஒன்றியம் செவிமடுக்கவில்லை. அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளினால் தனிமைப்படுத்தப்பட்ட கியூபா, தன் மருத்துவர்களை இத்தாலிக்கு அனுப்பியது. சீனா மருத்துவ ஆளணிகள் மற்றும் உபகரணங்களை ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கு அனுப்பியது.

ஐரோப்பாவிற்கு சீன உதவிகள்

சேர்பியா போன்ற கிழக்கைரோப்பிய நாடுகளுக்கும் சீனா தொற்றுத்தடுப்பு மருத்துவ அங்கிகளை அனுப்பி வைத்திருந்தது. ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ஒன்றியத்திற்குள் இணைத்துக் கொள்வதில் பாரபட்சங்களையும் இறுக்கமான நிபந்தனைகளையும் விதித்து வந்திருக்கிறது. இந்நிலையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சீனாவிடமிருந்து உதவிகளைப் பெறுவது, அந்நாடுகளில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதற்கு கால்கோலியுள்ளதெனக் கருத இடமுண்டு.

பனிப்போர் முடிவிலிருந்து இற்றைவரை உலக மேலாதிக்க சக்தி அமெரிக்கா. அந்த இடத்தைப் பிடிப்பதற்கான பிரயத்தனத்துடன் இரண்டாவது மேலாதிக்க சக்தியாக சீனா இருந்து வருகிறது. தற்போதுள்ள கேள்வி அல்லது விவாதிக்கப்படுகின்ற விடயம் என்னவெனில், கொரோனா நெருக்கடியின் சமகாலமும் அது ஏற்படுத்தவுள்ள எதிர்கால மாற்றங்களும் உலக மேலாதிக்க சக்தியாகச் சீனாவை சர்வதேச அரங்கில் இருத்தப் போகின்றதா என்பதாகும். சீனாவுடனான வல்லரசுப் போட்டிக்கு அமெரிக்கா அதீத முக்கியத்துவம் கொடுக்கும் புறநிலையில் ஐரோப்பிய நாடுகள் மட்டத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு நலிவடைந்து வருகின்றது என்ற பார்வையும் உள்ளது.

தலைமைத்துவக் குறைபாடு

டொனால்ட் டிரம்ப் இன் நடவடிக்கைகளும் சொல்லாடல்களும் உலகளாவிய கூட்டுச்செயற்பாடுகளுக்கு எதிரானதாகவும் தலைமைத்துவ ஆளுமைக் குறைபாடு உடையவராகவுமே அவரை வெளிப்படுத்துகின்றன. உலக சுகாதார அமைப்பிற்கு எதிரான நடவடிக்கை (நிதியுதவியை நிறுத்தப்போவதான அச்சுறுத்தல்), சீனாவினால் பரப்பப்பட்ட வைரஸ் எனும் கருத்துருவாக்க முனைப்பு (சீன வைரஸ்), கியூபாவிடமிருந்து மருத்துவ உதவிகளைப்பெற வேண்டாமென உலகநாடுகளுக்கு வற்புறுத்தல், கியூபாவிற்கு மருந்துப் பொருட்கள் சென்றடைவதைத் தடுத்தல் என்பன சில உதாரணங்கள்.

அண்மையில் மின்னாபோலிஸ் மாநிலத்தில் கறுப்பினத்தவரான George Floyd மீதான காவல்துறையின் ஈவிரக்கமற்ற படுகொலையைத் தொடர்ந்து அமெரிக்க நகரங்களில் எழுந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை டிரம்ப் கையாளும் விதம் அவரின் தலைமைத்துவத் தகமைகள் மீது மேலும் பாரதூரமான கேள்விகளை எழுப்புகின்றது. கொரோனா நெருக்கடி தொடர்பாக அமெரிக்க அறிஞர் நோம் சோம்ஸ்கி வழங்கிய அண்மைய நேர்காணல் ஒன்றில் அமெரிக்க அதிபரை சமூகவிரோத பஃப்பூன் (sociopathic buffoon) எனச் சுட்டியிருந்தமை இங்கு நினைவுகொள்ளத் தக்கது. Democracy in Europe Movement 2025 (DiEM25)  எனும் அமைப்பின் இணை நிறுவனர் Srecko Horvat மார்ச் 30ஆம் திகதி அவருடன் மேற்கொண்ட உரையாடலில் சோம்ஸ்கி அவ்வாறு சுட்டியிருந்தார். இந்த முக்கியமான காலகட்டத்தில் டிரம்ப் தலைமையில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் கூறியிருந்தார்.

அமெரிக்க வகிபாகம்

இரண்டாம் உலகப்போரின் பின்னரான 75 ஆண்டுகளில் சர்வதேச ஒருங்கிணைப்புகளுக்கான நிறுவனங்களை உருவாக்குவது, நிதிவழங்குவது, பராமரிப்பது என அமெரிக்காவின் வகிபாகம் முதன்மையானதாக இருந்து வந்திருக்கிறது. டிரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறைகள் அவற்றைச் வலுவழக்கச் செய்வதாக அமைந்து வருகின்றன. இத்தகைய நெருக்கடிகளைக் கையாள்வதற்கும், அவற்றிலிருந்து மீள்வதற்குரிய கூட்டுச்செயற்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட உலக நிறுவனங்களை நலிவுறச் செய்யும் வகையில் அமெரிக்காவின் அணுகுமுறைகள் உள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவு அடிப்படையில் சீனாவின் உலகளாவிய மேலாதிக்கத்தை விரைவுபடுத்தும் என்பது ஏற்கனவே எதிர் கூறப்பட்ட ஒன்று. கொரோனா நெருக்கடி அதனை மேலும் விரைவுபடுத்துவதற்கு வழிகோலியுள்ளதாகக் கருதப்படுகிறது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றினைச் சீனா கட்டுக்குள் கொண்டுவந்த செயற்திறன் தொடர்பாக உலக சுகாதார மையம் சீனாவை வெகுவாகப் பாராட்டியிருந்தது. டிரம்ப் நிர்வாகத்தின் உலக சுகாதார மையம் மீதான கடும்தொனிக்கு இதுவும் ஒரு காரணம். சீனாவின் நிதியுதவியைப் பெறும் நோக்கில்தான் உலக சுகாதார மையம் சீனாவிற்குப் புகழாராம் சூட்டியுள்ளது என்ற கருத்தும் அமெரிக்க ஆதரவு, சீன எதிர்ப்பு கருத்தாளர்களிடம் உண்டு.

துரிதமாகக் கட்டுப்படுத்திய சீனா

வைரஸ் பரவலின் தொடக்கம் சீனா என்பதும் ஆரம்பத்தில் சீனா அதனை மறைத்தது என்பதும் நிரூபணமான ஒன்று. வைரஸ் பற்றி அறிவித்த சீன வைத்தியர் அச்சுறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டமை, பின்னர் அம்மருத்துவர் கொரோனா தொற்றினால் மரணித்தமை மற்றும் உரிய நேரத்தில் பெருந்தொற்றுத் தொடர்பாக வெளியுலகிற்கு அறிவிக்காமை, சீனப்பயணிகள் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டமை என்பன பெருந்தொற்றின் பரவல் வேகத்திற்கும் சாவுகளுக்குமான காரணிகளில் ஒன்றென்பதும் மறுக்க முடியாதது.

இருப்பினும் சீனா அந்த அடிப்படைத் தவறுகளுக்கு அப்பால் துரிதமாகச் செயற்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் இன்னபிற சர்வதேச நிறுவனங்கள் கைகளை விரித்த போதும், பாரியளவில் பாதிக்கப்பட்ட பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சீனா உதவியுள்ளது.

கொரோனா பரவலைச் சீனா கட்டுக்குள் கொண்டுவரும் திட்டங்களை ஆரம்பித்த பின்னர், செயற்திறன் மிக்கதாகவும் அதேவேளை மிகக் கடுமையான முறையிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. முழுமையான முடக்கம், தனிமைப்படுத்தல், மிகத் துல்லியமான கண்காணிப்பு, பரிசோதனைகள் என்பன மிகக்கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டன. சீனாவை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டுமென்ற குரல்கள் ஐரோப்பிய மட்டங்களில் எழும் வகையில் சீனாவின் செயற்திறன் மெச்சுதலுக்கு உள்ளானது.  அதேவேளை தனிமனித உரிமை சார்ந்த ஐரோப்பிய தரத்திற்கு முரணான கடுமையான நடவடிக்கைகள் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

பெரும் ஏற்றுமதிச் சக்தி

இறுதிக் காலங்களில் சீனா உலகின் மிகப்பெரிய நுகர்வுப்பொருள் ஏற்றுமதி சக்தியாக வளர்ந்துள்ளது. பெருமளவிலான மருத்துவ உபகரணங்கள், மருந்துப்பொருட்கள், தொற்றுத் தடுப்பு உபகரணங்கள் சீனாவினால் உற்பத்தி செய்யப்படுகின்றன. கொரோனா நெருக்கடியில் முகக்கவசங்கள், கைகளைக் கழுவுவதற்கான கிருமிநாசினிகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் பெரும் தட்டுப்பாடு நிலவியது. பல நாடுகள் இவற்றைப் பெறுவதற்குச் சீனாவில் தங்கியிருந்தன. பல்வேறு நாடுகளுக்கு சீனா இலவசமாக மில்லியன் கணக்கான முகக்கவசங்களை வழங்கியும் இருந்தது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் வேகம் கொரோனாவிற்கு முன்னரே குறைவடையத் தொடங்கியிருந்தது. கொரேனா அதில் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவினால் உலகளவில் ஏற்பட்ட முடக்கம் சீன ஏற்றுமதியில் பெரும் சரிவை ஏற்படுத்தியது. எனினும் ஐரோப்பிய சூழல் இயல்புக்குத் திரும்புகின்றமையும் அமெரிக்க உள்நாட்டு நிலைமைகள் மோசமடைவதும் சீனாவிற்கு இலாபகரமானது. நுகர்வுப் பொருட்கள், உற்பத்திச் சந்தை சார்ந்து சீனாவில் தங்கியிருக்கும் நிலையைப் பலநாடுகள் கொண்டுள்ளன. மறுவளத்தில் அந்நாடுகள் மீதான சீனாவின் செல்வாக்கினை இந்தத் தங்கியிருத்தல் உறுதிப்படுத்துகின்றது. சீனா மீது ஒற்றைக்கட்சி கொம்யூனிச ஆட்சி, மனித உரிமை மீறல்கள் சார்ந்த குற்றச்சாட்டுகளை மேற்குலகம் முன்வைத்து வருகின்ற அதேவேளை வணிக உறவுகளையும் கொண்டிருக்கின்றன.

அதிகார அரசிலும் பொருளாதார நலன்களும்

கொரோனா ஏற்படுத்தியுள்ள சர்வதேச நெருக்கடியை உடனடியாகவும் நீண்டகால அடிப்படையிலும் கையாள்வதற்குரிய பலம் மிக்க சர்வதேச நிறுவனங்கள் இல்லை என்பதே தற்போதைய நிலை. இல்லை என்பதன் பொருள் இருக்கின்ற நிறுவனங்கள் செயல் வலுவும் திராணியுமற்ற நிலையிலுள்ளன என்பதே.

உலக வரலாற்றில் இடம்பெற்ற பெரும்போர்கள் கூட்டுணர்வுக்கும் புதிய சிந்தனைகளுக்கும் வழி சமைப்பனவாக இருந்திருக்கின்றன. அவற்றின் சர்வதேச ரீதியில் அரசியல், பொருளாதாரப் பாதுகாப்பிற்கான நிறுவனங்கள் விளைவாக உருவாகியிருக்கின்றன. ஆனாலும் அவை முற்றுமுழுதான நீதி சார் விழுமியங்களோடு இயங்கி வருகின்றன என்று கருத முடியாது. சக்திவாய்ந்த நாடுகளின் செல்வாக்குக்கு உட்பட்டு, அவற்றின் கூட்டு அதிகார, அரசியல், பொருளாதார நலன்கள் சார்ந்தே அவை இயங்கி வருகின்றன என்பதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ளன.

தற்போதைய நெருக்கடியில் ஐரோப்பிய ஒன்றியம் இந்த அந்தந்த நாடுகளின் எல்லைகளை மூடுமாறு அறிவுறுத்தியதைத் தவிர மேலதிகமாக எந்த உதவியையும் உறுப்பு நாடுகளுக்கு வழங்கவில்லை.

தேசியவாதமா? சர்வதேசியவாதமா?

ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் எல்லைகளை மூடி, தேசிய நெருக்கடியைப் பிரகடனப்படுத்தி பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அறிவித்தன. தேசிய வளங்கள், வருமானங்கள், பொருளாதார மூலங்களிலிருந்தே முடக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்குரிய நெருக்கடி இழப்பீட்டு நிதியை ஒதுக்கின. இந்த நெருக்கடி சார்ந்து ஒரு சர்வதேச ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை அல்லது சர்வதேச நிறுவனங்கள் ஒருங்கிணைப்பிற்குரிய பொறிமுறைகளைக் கொண்டிருக்கவில்லை என்பது நிதர்சனமாகியிருக்கின்றது. அதன் விளைவு தேசிய நலனுக்கு முன்னுரிமை என்ற நிலையை இந்தப் பெருந்தொற்றுத் தோற்றுவித்துள்ளது.

இரண்டு அனுபவங்களைக் கொடுத்துள்ளது. ஒன்று இத்தகையை நெருக்கடிகளின் போது சர்வதேச கூட்டுச் செயற்பாடுகளுக்குரிய பொறிமுறைகளையும் செயல்வலுவினையும் கொண்ட முறையில் சர்வதேச நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும்.

மற்றையது சர்வதேச ஒருங்கிணைப்பிற்கான நிறுவனங்கள் மீதிருந்த அதீத நம்பிக்கையை இந்நெருக்கடி தகர்த்துள்ளது. அதுவொரு மாயை என்று எண்ணுமளவிற்கும், அவை சார்ந்த ஒரு யதார்த்தப் புரிதல் அவசியம் என்பதையும் உணர்த்தியுள்ளது. இரண்டாவது அனுபவம் வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் எதிர்காலத்தில் கூர்மைப்படுத்தக் கூடியது. அதனூடாக சர்வ தேசியம் என்ற கருத்தியல் பலவீனமடைந்து தேசியவாதச் சிந்தனை கூர்மைப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பல நாடுகள் ஏனைய நாடுகளிலும் சர்வதேசக் கட்டமைப்புகளிலும் சார்புநிலையக் கொண்டிருப்பதையும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் குறைக்க விரும்புகின்றன.

நவதாரளவாதத்தின் விளைவு

நவதாராளவாத உற்பத்திப் பொருளாதாரம், உலக மயமாதல் எதிர்மறையானதும் பேராபத்துகள் நிறைந்த விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளன. போர்கள், பெருந்தொற்றுகள், இயற்கை அழிப்புகள், புவி வெப்பமயமாதல் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாகியுள்ள பேராபத்துகள்.

உற்பத்தி, வணிகம், நிதிமூலதனச் சங்கிலி போன்ற பொருளாதார ஆதாரங்களைக் கைவசம் வைத்திருக்கும் நாடுகளே சர்வதேச அரங்கில் மேலாதிக்கத்தையும் செல்வாக்கினையும் கொண்டிருக்கின்றன. நிரந்தர பொருளாதார வளர்ச்சி, திறந்த சந்தைப் பொருளாதாரம், இராணுவ ஆக்கிரமிப்பு போன்றவற்றின் மீதான குவிமையப்பட்ட நம்பிக்கைகள் ஆதிக்கம் செலுத்துகின்ற இன்றைய உலக ஒழுங்கில் கொரோனா எத்தகைய மாற்றங்களை உண்டு பண்ணப் போகின்றது என்பது எதிர்பார்ப்பிற்குரியது.

உலகமயமாக்கலின் பலவீனங்கள்

இயற்கைக்கும் சூழலியலுக்கும் எதிரான நவதாராளவாத உலக ஒழுங்கின் விளைவு இன்றைய நெருக்கடிக்கான மூலம் என்ற கருத்து மேலோங்கியுள்ளது. இது தற்போது நிலவுகின்ற உலக ஒழுங்கினை ஒருவித அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என்பதான பார்வைகளும் பரவலாக உள்ளன. சீனா, சிங்கப்பூர் போன்ற இறுக்கமான ஆட்சி பீடங்கள் மேற்கின் தாராளவாத ஜனநாயக நாடுகளைவிட சிறந்த முறையிலும் துரித கதியிலும் வைரஸ் தொற்றினைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. கொரோனா நெருக்கடியின் அரசியல், பொருளாதார விளைவுகள் அமெரிக்க மேலாதிக்க முடிவின் தொடக்கமாகவும், அதேவேளை உலகமயமாக்கலின் பலவீனங்கள் மீது எச்சரிக்கை மணியாகவும் சித்தரிக்கப்படுகின்றது.

***

ரூபன் சிவராஜா – நார்வேயில் வசிக்கிறார். கவிதைகள் மற்றும் அரசியல் கட்டுரைகள் தொடர்ந்து எழுதிவருகிறார். அண்மையில் இவரது முதல் நூல் “அதிகார நலனும் அரசியல் நகர்வும்” நூல் வெளிவந்து கவனம் பெற்றது. ஆசிரியர் தொடர்புக்கு – svrooban@gmail.com

மீரா மீனாட்சி கவிதைகள்

3

திரிபுணர்வு

உயிர்ப்பித்துகொண்டே இருக்கிறது இத்தெரு

கிராம சந்தைகளின் கூச்சல்கள் போலல்லாமல்
இலக்கணத்தில் அடைந்துவிட்டதுபோன்ற  குரல்கள்
சிலநேரங்களில் உணர்ச்சியற்ற உச்சஸ்தாயியாகவோ
ஆண்பெண் புணர்தலின் சிறு முனகலாகவோ
அல்லது ஒன்றிணைந்ததாகவோ இருக்கலாம் 

காகங்கள் பேசிக்கொள்ளும் மதியச்சூட்டில்
தெருவில் அலைந்து அழுது அவள் புலம்புவது
குடியிருப்பின் காவலாளர்களுக்குத் தெரிவதில்லை 

விற்பனைக்காரிக் கதறுகிறாள் 
எதை விற்கிறாள் என்று எவரும் கவனிக்கவில்லை 
அமைதியாக நகரும்  வணிக வாகனங்களின் இடையே
கண் மயங்கிக்கிடக்கிறது தெரு 
எந்த ஒரு விநியோகமும்  
அவளை ஒருபோதும் தொந்தரவு செய்ததில்லை

தெருவின் தொல்லியல் ஞாபகங்களென அலையும் நாய்கள்
பனிசறுக்கலில் காலுடைந்த கூர்க்காவின்
கிழிந்தத் தோள்பையை முகர்கின்றன

நாவல் இலைகளினூடே கசிந்திறங்கும் நட்சத்திரங்கள்
இரவின் மங்கிய சோடியம் விளக்கொளியில்
படிக்கட்டுகளில் சரிய

திரிபுணர்வுகளில் உறங்கதொடங்குபவளின் 
நடுக்கத்தில் உயிர்த்திருந்தது அத்தெரு

***

கடற்பாய்களின் அலுப்பு

அத்திப் பழங்களைக்
கைக்கொள்வதென்பது
திசைகளற்ற சிறுமிக்கானது  

பழுத்தவையின் பொடிவிதைகளைக்
கிரகங்களின் கருக்களெனப் பத்திரப்படுத்துகிறாள்  

முளைக்கத்தெரியாதவற்றின் பிதற்றல்களைத்
தின்னும் சாம்பல் நிற வண்ணத்திப் புள்ளுகள்
இனப்பெருக்கம் மறந்திருந்ததின் இன்மையை  
சூரியன் வீழ்ந்து  இறைத்த குளத்தின் படிகளில்
நேற்று குளித்தவனின் உயிரின் மணமென்கிறாள் 

பொன்னிற பாக்கு வியாபாரி ஏன்  
வெற்றிலைக்கொடிக்காக அலைகிறான்    

காற்று சிக்கிய பாய்கள் அலுப்பை விரித்தன  
வீரியம் கொண்ட எண்ணங்களை 
வாசித்தவர்களின் பேறுகாலம்
ஒரே லக்கினத்தில் ஆனது விசித்திரமென்று
வியக்க யாருமற்றிருந்தது  

பேச்சு உடைந்த அப்பொழுதில்  
பூமி தன்சிறகுகளைக் குடைந்து நீவியது …
கனல் கக்கும் பெருமூச்சுகளில் உலர்ந்த 
வெற்றிலைக்கொடி வேர்கள்  
ஜன்னல் வழியாக வெறுமைக்குள் வெளியேறுகின்றன  

பூமியின் முதல் உயிர் காற்றிலும்
கடலிலும் வானிலும் வனத்திலுமாகப்
பெருகிக்கொண்டிருந்ததை நேரமிருப்பதால்
மட்டுமே வேடிக்கைப்பார்க்கிறோம்     

தோல்வியடைந்து கால் தளர்ந்திருக்கும் சூரியன்  
வாகை  மரக்கிளைகளில் தலைகீழாகத் தொங்குகிறது  

வௌவ்வால்களுக்கு இதைவிட சரியான  பரிசை 
எவராலும்  கொடுக்க இயலாதென்ற  
பெருங்களிப்பில் நகரம் மிதக்கிறது … 

***மீரா மீனாட்சி – சிதம்பரத்தைச் சேர்ந்தவர், சூழலியலாளர் தற்பொழுது மும்பையில் வசித்து வருகிறார். கவிஞர், ஓவியர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர், வடிவமைப்பாளர் என பல்துறைகளில் இயங்குபவர். தொடர்புக்கு – sameerakannan@gmail.com

சந்திரா கவிதைகள்

1

குளிர்மலையை உடுத்தியவள்

மிளகுக்கொடி சரம்விடத் தொடங்கியது
முன்பருவமழைக் காலமது
பழுத்த மிளகின் வாசனை நிறம் நிறமாய்ப் பிரிய
ஊழிச்சித்திரங்கள் நிழல்களாய் மலையிலாடியது
ஆரெஸ்வதி தைலத்தை பூசச்சொன்னாள் பாட்டி
பனிநீர்உதிர நடுங்கும் தண்டங்கீரையாய் நொடிந்துகிடந்த உடல் முன்பு மலைக்குளிரை குடித்துக் கிடந்தது
அடங்காது கொட்டும் மழையை மந்திரித்து ஊதிவிடுவாள் கைக்கடங்காத அணங்கு
நேற்றிரவு கனவில் மறையும் விளக்குகளைக் கண்டவள் மரணத்தின் தனிப்பாடலை அடைக்கலாங்குருவி பாடுகிறது என்றாள்
காடெங்கும் துயரத்தின் பாவுகொடி

அயராத அவளது கைகளின் ரேகைகளை எனது கைகளுக்குள் அவசரமாய் பிரதியெடுத்தேன்
ஆயிரம் ரேகைகள் விரைந்தோடிய உடலை நிதானப்படுத்தினேன்
தைல வாசனையோடு விறகுக்கட்டையாக நிமிர்ந்து மினுங்கி என் கைகளில் மரித்தாள்
ஆரஞ்சுபழத் தோலாய் சுருங்கிய தேகம்
மாந்தீரிகத்தின் புதிரான குறிசொல்லாக உறைந்துபோனது.

பேரமைதியில் குளிர்ந்துபோயிருந்த
அதிராத அவளின் ஆன்மா
மேற்குத் தொடர்ச்சி மலைக்கு உரித்தானது.
அவளுடலை காட்டோடையின் கரையில் புதைத்திருந்தோம்.
அந்நிலமெங்கும் ஆரெஸ்வதி தைலவாசனை வீசுவதாகவும்
மலைக்காற்று அவளுடலை உருட்டியபடியே இருப்பதாகவும் மூப்பன் ஒருவன் சொல்லிச் சென்றான்.

பழைய ஏற்பாடு

நீலவானத்திற்குக்கீழ் கடல் நடுங்கிக்கொண்டிருக்கிறது
கடலாழத்திலிருந்து முத்துக்களை எடுக்க முடியாதவன்
சாட்டையால் கடலை அடித்துக்கொண்டிருக்கிறான்
கடலின் முதுகில் வரிவரியான கோடுகள்
ஒப்பாரி வைக்கும் கடலுக்கு ஆறுதல் வார்த்தைகளைத் தேடி
கிளிஞ்சல்களை பிளந்துகொண்டிருக்கின்றன ஆமைகள்
ஒன்றைக் காப்பாற்ற இன்னொன்றை துன்புறுத்தல் பழைய ஏற்பாடு
அவரவர் சந்தோசம் அவரவர் துயரத்தோடு அமைதியாக இருந்தால் என்ன
பாவமன்னிப்புக் கேட்டு அல்லாடுவதற்குப் பதில்
கல்லறைப் பெட்டியை முதுகில் வைத்துக்கொண்டு நடக்கலாம்
நமது சொந்த பாவங்களை ஒளித்து வைக்க அது நல்ல இடம்..

***

நன்னிலக் கடவுள்

என்தாய் கனவில் முண்டுச்சீலை புடிக்கமாட்டாமல் பருத்தி எடுத்தாள்
அது குருவி கொத்தி தின்னமுடியாத பாடும் வெள்ளைமலையாக இருந்தது
எவ்வளவு முறை சொல்வது
என்னுடைய இதயத்தை யாராவது உடைக்கும்போதோ அல்லது
நான் யாருடைய இதயத்தையோ உடைக்கும்போதோ சத்தமாக பாடாதே மலையே!
என் தந்தை உயிருடன் இல்லை
இப்போது நான் நிலமற்ற மகள்

ஈமச்சடங்கில் விளக்கேற்றி தந்தைக்கு வைத்தழும் செம்புநீரில் இருள் குடிபுகுந்தது
திரி தூண்டும் அம்மாவின் கைகளோ
தூக்கத்தில் வெறுங்கையை உண்ணும்போது
நகராமல் நிற்கவா முடியும்
எல்லாவற்றின்மீதும் தீராப்பசி
பிணிதீர ஓடவேண்டும்
திரும்பிப் பார்க்காத ஒரு ஓட்டம்
கொஞ்சம் உடையை தளர்த்தி
எடை குறைத்து ஓடினால்
அம்மாவின் இரைப்பபை சுருங்குவதற்குள் ஒரு துண்டு உப்புக்கருவாடாவது ருசிக்க கிடைக்கும்
எனக்கும் கூடுதலாக ஒரு பாட்டில் ரெட் வொய்ன் கிடைக்கும்
டார்கெட் முடிந்ததும் இருட்டில் அந்நியனோடு உயர்தர பப்பில் ஒரு ஆட்டம் கூட போடலாம்
ஏன்? எதற்காக இப்படியெல்லாம் என்று கேட்காதீர்கள்?
விசயங்கள் அப்படித்தான் வந்து முடிந்திருக்கின்றன.

இலையுதிர்தலுக்கும் புத்திலை துளிர்ப்பதற்குமான இடைப்பட்ட காலமே! வெறுமையே!
இடையில் வராதே கொஞ்சம் நகரு
துயரத்தைப்பாடு ஆனால் உடனே சிரித்துவிடு
இந்தப் பசி உதிர்ந்து விழும் தடிசம்பழத்திற்கானது அல்ல பெருந்தீனிக்காரர்களுக்கானது
இங்கு எதற்கும் நேரமில்லை எதற்கும் இடமில்லை
அங்கே என் தாய் வெளிர் மேகத்தைப் பார்த்து,
“கருணையற்ற கடவுளே நிலமே
ஒருமுறை செழித்து நிற்கமாட்டாயா
இரண்டு போகம் விளையமாட்டாயா நன்னிலமே” என்று மன்றாடிக்கொண்டிருப்பாள்

மலையே உன்னுடையவை உன்னுடனே இருக்கின்றன
அதனாலே நீ நகராமல் நிற்கிறாய்
மரங்கள் பூக்க
பழங்களைக் கொத்தி தின்கின்றன பறவைகள்
சமர் செய்து பசிதீர்த்து மரத்தினடியில் படுத்துத்துறங்குகின்றன விலங்குகள்
நீ சாவுகளை புன்னகையோடு கடக்கிறாய்
ஏனேனில் நீ பிறப்பை பார்க்கிறாய்.

ஆடுகளை கழுதைகளாக அல்லது கடவுளாக மாற்றுதல்

நான் மரத்தினடியில் அமர்ந்திருந்தபோது
வாழ்வு அத்தனை ஆச்சர்யமானதாக இல்லை
என்னை நோக்கி அவன் வந்தபோதுதான்
விநோதங்கள் தொடங்கின
‘நான் உன்னிடம் பார்த்துக்கொள்ளும்படி
விட்டுப்போன நட்சத்திரங்களைத் திருப்பித்தா’ என்றான்

எப்போதென்று விழித்தேன்

‘இருபது வருடங்களாககளுக்கு முன்
இந்தபூவரசம் மரத்தின் கீழ்தான்’ என்றான்

அப்போது நான் மரத்தைச்சுற்றி விளையாடிக்கொண்டிருந்தேன்
அந்த பள்ளத்திற்குக் கீழே நீரோடை ஓடும்
இங்கே price அட்டைத் தொங்கும்
மஞ்சள்நிற பெட்டிக்கடையிருந்தது
பொறுக்க முடியாத கால்வலியோடு
கிழவியொருத்தி மக்காச்சோளம் விற்பாள்
ஆலமரக்கிளையில் ஊஞ்சலாடியபடி அதைக் கடித்துத் திண்போம்
எல்லாம் நினைவிருந்தது ஆனாலும்
ஏய் பைத்தியக்காரா இதையெல்லாம்
உன் கடவுளிடம் போய்க்கேளென்றேன்

அவன் சொன்னான், ‘கேட்காமலா?
கடவுள் ஒரு நினைவு மறந்த கழுதை
எதுவும் அதன் ஞாபகத்தில் இல்லை
தான் ஒரு கழுதையாக இருந்ததைக்கூட
மறந்துவிட்டது’

இப்பொழுதெல்லாம் யாரும் கழுதைகளை வளர்ப்பதில்லை மூடனே
பொதி சுமப்பதை அவை நிறுத்தியதும்
மனிதர்கள் அதை வளர்ப்பதை நிறுத்திவிட்டார்கள்
கடைசியாக சுற்றித் திரிந்த ஒரு கிழட்டுக் கழுதையும்
நீரில்லாக் கிணற்றில் விழுந்து செத்துப்போனது
தற்சமயம் பொதியேற்ற இங்கே போதியமனிதர்களும் இல்லை
ஆடுகளை வளர்த்துக் கொண்டிருக்கும்
அந்த வயதானவர்களைத் தவிர

‘அவர்கள் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்’

ஆடுகளை கழுதைகளாக மாற்றிவிடும் முயற்சியில் இருக்கிறார்கள்

‘நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்’

கழுதையாவதற்காக காத்திருக்கிறேன்
வா என்னருகில் வந்து உட்கார்
நாம் சேர்ந்து காத்திருப்போம்.

சந்திரா தங்கராஜ் –

பூனைகள் இல்லாத வீடு, அழகம்மா, காட்டின் பெருங்கனவு ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், நீங்கிச்செல்லும் பேரன்பு, வழி தவறியது ஆட்டுக்குட்டியல்ல – கடவுள் எனும் கவிதைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன. தற்பொழுது திரைத்துறையில் இயக்குனராக வலம் வருகிறார். ஆசிரியர் தொடர்புக்கு – abhipowsh@gmail.com

கடற்கன்னியும் சில கடற்பறவைகளும்

3

சித்துராஜ் பொன்ராஜ்

கடற்கன்னி பாடுகிறாள்:

இதோ பிரகாசமான வெயில்: 
கழுத்தின் பின்புறமாய்த் தூக்குக் கயிற்றின் கனத்தோடும்
அசௌகரியத்தோடும் புரள்கிறது.

கடலின் கர்ப்பத்தை என்னுடன் இழுத்து வந்து போட்டதுபோல்
பொன்னிறமான மணலில் சிதறிக் கிடக்கும் நுரைகளின் மத்தியில்
கிடக்கிறேன்.

நுரைகளைப்போலவே கடலின் கர்ப்பமும் அரூபமானது.

கடல் நிழல்களோடு கூடித் திளைக்கும் சூரியக் கிரணங்களால் சூலுற்றுத் தன் கர்ப்பத்தைத் தானே யுக யுகாந்திரமாய்க் கலைத்துக் கொண்டிருக்கிறாள்.

கடற்பறவைகள் பாடுகின்றன:

நெய்வாசக் குழலுடைய ஒரு பெண் ஆயிரமாயிரம் மனிதர்களின்
காலடிகள் தட்டிப்போட்ட மணற்பரப்பில் அமர்ந்தபடியே கருநீல நிறத்தில்
பாடல்களை நெய்து கொண்டிருக்கிறாள்.

மனிதர்கள் வெவ்வேறு சமயங்களில் நெய்த பாடல்களே கடல்.

அதனால் கடலைச் சார்ந்திருக்கும் பகுதியும்
நெய்தல் என்று அழைக்கபடுகிறது.

கடலுக்கு உருவமில்லை.

கடற்கன்னி பாடுகிறாள்:

கடல், மல்லாந்து கிடக்கும் பிரகாசமான கண்ணாடி.

அதற்கு உருவமில்லை. 

அதன் உருவமின்மையின் மீதுதான் மனிதர்கள்
ஆழமான பெருமூச்சுகளின் ஓசையோடு
சலித்துத் திரும்பும் பாய்மரக் கப்பல்களின் வடிவத்தில்
தங்கள் போதை மிகுந்த ஆசைகளை ஏற்றி வைக்கிறார்கள்.

இந்தப் போதாமை எனக்கு வருத்தம் தருகிறது. 

கடல், திணை மருவி வெறும் வெற்றிடமாகிப் போன மாய நிலம்.

கடற்பறவைகள் பாடுகின்றன:

மனிதர்கள் காற்றிலும் ஏறி வருவார்கள்.
கவனம்! கவனம்!
காற்றும் திணை இல்லாத இடம்.

கடற்கன்னி பாடுகிறாள்:

இடுப்புக்கு மேலே மனிதர்களின் உடம்பும்,
கீழே மீனின் வாலும் உடைய சந்ததியை உருவாக்கப் போகிறேன்.
கடலின் மூச்சுத் திணற வைக்கும் கர்ப்பத்தை
எனக்குச் சாதகமாக்கிக் கொண்டு.

ஒரு நாள் மூச்சுத் திணறி மனிதர்கள்
திணைகளைத் துறந்து என்னிடம் வரப் போகிறார்கள்.

இதோ கடலுக்கடியில் மலைகள்,
பவளங்கள் வளர்ந்திருக்கும் காடுகள்,
வயல் வரப்புகளாய் விரிந்திருக்கும் வாசனையுள்ள மண்,
நொடிக்கொரு தரம் இருப்பிடமின்றி 
அலைந்து கொண்டிருக்கும் பாலை.

இது, கடல்.
இதுவே போதாமை.
அதனால் இதனை ஆசைக்கு உவமையாய்ச் சொல்கிறார்கள்.

கடற்பறவைகள் பாடுகின்றன:

கடலை மனிதர்கள் தூக்கிக் கொண்டு போகிறார்கள்
கவனம்! கவனம்!

எதிர்காலத்தில் இதுவே உங்கள் பாடலாய் இருக்கப் போகிறது.


***

சித்துராஜ் பொன்ராஜ் – தமிழ் தவிர ஆங்கிலம், ஸ்பானிய மொழிகளிலும் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என எல்லா துறைகளிலும் இவரது பங்களிப்புகள் இருக்கிறது. பரிசோதனை முயற்சிகளைத் தொடர்ந்து செயல்படுத்தியும் வருகிறார்.

அன்னக்கொடி

5

உதய சங்கர்

ன்னக்கொடி வழக்கமாக வெளியே கிளம்பும் நேரம் தவறி விட்டது. அவசரம் அவசரமாக அங்கணக்குழியில் தண்ணீரைக் கோரி ஊற்றி சோப்பு போட்டு குளித்ததும் கொஞ்சம் புத்துணர்ச்சி ஏற்பட்டது. அப்படியே நிர்வாணமாக கொடியில் கிடந்த துண்டை எடுத்து உடம்பைத் துடைத்தாள். இடதுபக்க முலைக்காம்பில் பல்கடிக்காயம் இன்னும் போக வில்லை. நாறப்பய… என்னா கடி கடிக்கான்… என்று திட்டினாள். இன்னமும் அந்த இடத்தில் சுருக் சுருக்கென்று வலித்தது. அப்படியே பாண்ட்ஸ் பவுடரை உடம்பில் கழுத்தில் முகத்தில் கொட்டினாள். அந்தக் குச்சு வீடு பவுடர் வாசனையில் மணந்தது. படுத்திருந்த பாயைக் காலால் எத்தி ஒதுக்கி மூலையில் தள்ளினாள். கருத்த முகத்தில் விரிந்திருந்த கண்களில் கண்மையை அப்பினாள். ஏறிக்கொண்டிருந்த நெற்றியில் அடர்ந்த புருவங்களுக்கு மத்தியில் செக்கச்செவேலென்று ஜிகினாப்பொட்டை ஒட்டிக்கொண்டே சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கைக்கண்ணாடியில் பார்த்தாள். வெளியே எட்டிப்பார்க்கத் துடித்துக் கொண்டிருந்த முன்பற்களை அதட்டி உள்ளே தள்ளிக்கொண்டே கொடியில் கிடந்த சிவப்புநிறம் மங்கிய உள்ப்பாவாடையை எடுத்து உடுத்தினாள். ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த சிவப்பு நிறப்பிராவை எடுத்து மாட்டிக்கொண்டு மார்பைத் தூக்கிச் சரி செய்தாள். இருந்த இரண்டு சேலைகளில் ஃப்ளோரசண்ட் கலரில் இருந்த சேலையையும் சட்டையையும் எடுத்து உடுத்தினாள். பெரிய சீப்பால் வறட் வறட்டென்று தலையை வாரி குதிரைவால் கொண்டை போட்டு கருப்பு ரப்பர் பேண்ட் ஒன்றை சுற்றி மாட்டினாள். உடம்பில் இன்னும் அசதி போகவில்லை. எல்லா ஒப்பனையும் முடிந்த பிறகு சேலையை இடுப்பு தெரிகிற மாதிரி இறக்கி விட்டு, மார்பில் கிடந்த சேலையை ஓரமாய் ஒதுக்கி விட்டு வாசலை பூட்டும்போது மணி எட்டாகி விட்டது. வழக்கமாக இந்நேரம் பஸ்ஸ்டாண்ட், பூங்கா பகுதியைச் சுற்றி முடித்திருப்பாள்.

அந்த நேரத்தில் கிராக்கிகள் கிடைப்பது கஷ்டம் என்றாலும் ஆம்பிளைகளுக்கு நேரம் காலமில்லாமல் எந்நேரமும் நட்டுக்கிட்டு இருப்பதனால் சில சமயம் அப்போதும் கூப்பிடுவார்கள் பஸ் ஸ்டாண்ட் என்றால் கழிப்பறைக்குப் பின்னால் இருக்கிற இருட்டு சந்து, பூங்கா என்றால் இலுப்பை மரத்துக்குப் பின்னால் இருக்கிற இருள்வெளி. அவள் தெருவை விட்டு வெளியேறி முக்கில் இருந்த டீக்கடைக்கு வந்தாள்.

டீக்கடை மாடசாமி,  “என்ன அன்னம் இன்னிக்கி ஆபீசுக்கு லேட்டு…” என்று சொல்லிப் புன்னகைத்தான். டீ குடித்துக் கொண்டிருந்தவர் களில் சிலர் அவளைத் திரும்பிப் பார்த்தார்கள். அன்னக்கொடி சேலையைச் சரிசெய்கிற மாதிரி நின்று கொண்டிருந்தவர்களை நோட்டம் விட்டாள்.

டீக்கடை மாடசாமியைப் பார்த்து சிரித்துக் கொண்டே, “ஸ்டிராங்கா ஒரு டீ போடுண்ணே!”என்று குரல் கொடுத்தாள்.

வெளியில் கிளம்பும்போது எப்போதும் ஒரு டீயும் பன்னும் சாப்பிடுவது அவளது வாடிக்கை. மாசக்கணக்கு தான். டீக்கடை மாடசாமியும் முகஞ்சுளிக்காமல் கொடுப்பான். எப்படியும் காசு கரெக்டாக வந்து விடும். அன்னக்கொடி அவசர அவசரமாக பன்னை டீயில் முக்கிச் சாப்பிட்டு விட்டு சொர்ணா தியேட்டர் பக்கமாக நடந்து போனாள். முன்பெல்லாம் இப்படி அலைய வேண்டியதில்லை. வீட்டிற்கே அழைப்பு வந்து விடும். மாமா சொன்ன இடத்துக்குப் போக வேண்டும். பார்ட்டி ஃபுல் நைட்டா, மணிக்கணக்கா, இல்லை வெளியூரா, என்று ஏற்கனவே பேசி வைத்திருப்பார் மாமா. ஆனால் அப்போது அவள் கிண்ணென்று இருப்பாள். சுண்டிவிட்டால் சத்தம் கேட்கும். ரோட்டில் போகிறவர்கள் ஒரு தடவையாவது திரும்பிப்பார்க்காமல் போகமாட்டார்கள். அவர்களையெல்லாம் துச்சமாக மதிப்பாள் அன்னக்கொடி. ஆனால் இப்போது உடல்கட்டு தளரத் தொடங்கி விட்டது. குளிக்கும்போது பார்த்தால் மார்பு சரிய ஆரம்பித்திருப்பது தெரிந்தது. அவள் அதற்காகவே ரொம்ப காஸ்ட்லியான ஸ்பெஷல் பிராவை வாங்கி அணிந்து பார்த்தாள். மாமா இருக்கும்வரை அவளுக்கு எந்தக் கவலையுமில்லை. அவர் இருந்தால் எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் முதலில் அவளைத்தான் கூப்பிடுவார். மாமாவுக்கு அவள் மீது தனிப்பிரியம் இருந்தது. இத்தனைக்கும் கமிஷன் தவிர வேறு எந்தத் தொந்திரவும் தரமாட்டார். மாமாவுக்கு பேர் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. யாரும் அவரை பேர் சொல்லி அழைத்ததுமில்லை. எல்லோருக்கும் மாமா தான். நரம்பு மாதிரி ஒல்லியாக இருக்கும் மாமா கிராக்கிகளை எப்படி பிடிப்பார் என்றே தெரியாது. தினமும் அவளுக்கே மூன்று நான்கு கிராக்கிகளைப் பிடித்துத் தருவார். அவர் ஊருக்குள் ஆண்களின் நிழல்போல சுற்றிக் கொண்டிருப்பார். அவரையும் எவனோ ஒரு கிராக்கி போதையில் கல்லைத் தூக்கி தலையில் போட்டு கொன்று விட்டான். அவர் போனபிறகு தான் இந்தத் தொழிலில் உள்ள கஷ்டங்களை அன்னக்கொடி தெரிந்து கொண்டாள்.

எதிரே ஒரு ஐம்பது வயது ஆள் மீசைக்கு டை அடித்திருந்தவன் அவள் மார்பையும் வயிற்றையும் உற்றுப்பார்த்துக் கொண்டே வந்தான். திடீரென உணர்வு வந்தவள் போல அவள் மாராப்பை எடுத்து முழுதாக மார்புக்குவட்டைக் காட்டி விட்டு மேலே போட்டாள். எதிரே வந்தவரின் கண்கள் மின்னின. அவள் அவர் அருகில் வரும்வரை நின்று இடுப்புச்சேலையைச் சரி செய்வதுபோல நின்று கொண்டிருந்தாள். அப்படியே அந்த ஆளை ஒரு கண் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்படியே விழுங்கி விடுவதுபோல பார்த்துக்கொண்டு நெருங்கி வந்தவர் அவளைத் தாண்டிப் போய்விட்டார். அவளுக்கு ஏமாற்றமாகப் போய் விட்டது. நெஞ்சுக்குக் கீழே கைகளை வைத்து மார்பைச் சரிசெய்து தூக்கி விட்டாள். மூச்சை இழுத்து நெஞ்சில் அடைத்தாள். இப்போது நெஞ்சு நிமிர்ந்தமாதிரி இருந்தது. சொர்ணா தியேட்டர் நியான் விளக்குகள் சிவப்பு நிறத்தில் தெரிந்தன. வெளியே பாட்டு போடும் சத்தமே கேட்கவில்லை. இங்கேயும் நேரமாகி விட்டது.

ச்சே!

தினம் கிராக்கிகளைப் பிடிக்கிற வேலைதான் பெரிய அச்சலாத்தியாக இருந்தது. சில நாட்கள் வீட்டைவிட்டு இறங்கிய சில நிமிடங்களிலேயே அமைந்து விடும். அவள் சொல்லும் இடத்துக்கோ, அவர்கள் சொல்லும் இடத்துக்கோ போய் விட்டு வந்து விடுவாள். அப்படி அமைந்தால் அன்றைய நாள் அவள் பக்கமாக இருக்கும். நாயாபேயா அலைஞ்சு கிராக்கியைப் பிடித்தால் அன்றைய நாள் கொடுமையாகி விடும். சிலநாள் மாடசாமிக்கடை டீ, பன்னுடன் இரவு கழிந்து விடும்.

போனவாரம் சனிக்கிழமை பூங்கா பக்கமாகப் போனபோது நான்கு பையன்கள் வெளியிலிருந்த புளியமரத்தடியில் நின்று கொண்டிருந்தார்கள். அவளுக்குத் தெரியும் புதிய பையன்களுக்கு தைரியம் இருக்காது. இதில் ருசி கண்டவர்கள் தான் வேகமாகப் பாய்ந்து வருவார்கள். அதிலும் மத்திய வயதைக் கடந்தவர்கள் பண்ணுகிற அதிகாரமும், அலட்டலும் இருக்கிறதே. அவளுக்குத் தெரியும் சிலநிமிடங்கள் கூட தாக்குப்பிடிக்கமாட்டார்கள். அதுக்குத்தான் இந்த ஆர்ப்பாட்டமெல்லாம். சிலர் அவளை அணைத்தவுடனேயே அமந்து போவார்கள். அவர்களுடன் தான் பேரம்பேசிப் பேசி தொண்டைத்தண்ணீர் வற்றிவிடும். கடைசியில் அவள் தான் விட்டுக்கொடுப்பாள். அந்தக் கிராக்கியை விட்டு விட்டால் சாப்பாட்டுப்பொழுதைக் கழிக்கவேண்டுமே. புளியமரத்தடியில் நின்று கொண்டிருந்த பையன்களில் ஒல்லியான ஒரு பையன் கத்தையாக சுருட்டைமுடி வைத்திருந்தான். அவளை நோக்கி வந்தான். அவளருகில் வரும்போதே அவன் கைகால்களில் ஒரு நடுக்கம் ஓடியதைப் பார்த்தாள் அன்னக்கொடி.

அவளைக் கடக்கிறமாதிரி போகும்போது, “வர்றியா?”என்றான்.

குரல் குழறியது. அவள் நின்றாள். மற்ற பையன்கள் நின்று கொண்டிருந்த புளியமரத்தடிக்குப் போனாள். அவனும் வேகமாகத் திரும்பி வந்தான். எல்லோரும் புதியவர்கள். அவளை ரொம்பநாளாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். யாரோ ஒரு பையனின் வீட்டில் ஊருக்குப் போயிருக்கிறார்கள். தெருவையும் வீட்டையும் அடையாளம் சொன்னார்கள். இரவு ஒன்பது மணிக்கு மேல் வரச் சொன்னார்கள்.

“எத்தனை பேரு?”அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்த ஒல்லிப்பையன் தான், “நாலு பேரு” என்றான்.

“ஆயிரம் ரூபா ஆகும்…”

“ஆயிரம் ரூபாயா?” என்று பின்வாங்கினார்கள். அன்னக் கொடிக்குத் தெரியும் இந்த மாதிரிப்பையன்களை கையாளுவது சுலபம். அதோடு மொத்தமாகக் கிடைக்குபோது வியாபாரத்தை விட்டு விடக்கூடாது.

“நாலுபேருன்னா ஒரு ஃபுல்நைட்டு ஆயிரும்ல… சரி… உங்களுக்காக ஒரு நூறு ரூபா கொறைச்சிக்கிறேன்… துட்டு கரெக்டா முன்னாலேயே கொடுத்திரணும்… தெரிஞ்சிதா…” என்று குரலில் கடுமை ஏற்றினாள். அவர்கள் பயந்துபோய் தலையாட்டினார்கள். இவ்வளவு கடுமை காட்டியிருக்கக்கூடாதோ என்று நினைத்தவள் சிரித்துக் கொண்டே அருகில் சென்றாள். அந்தச் சுருட்டைமுடி ஒல்லிப்பையனின் கையைப் பிடித்து திறந்த தன்னுடைய வயிற்றில் வைத்தாள். அவனுடல் அதிர்வது அவளுக்குத் தெரிந்தது. அப்படியே திரும்பி நடந்தாள்.

நல்ல சொகுசான வீடு. சகலவசதிகளுடன் இருந்தது. பையன்கள் அவளுக்கும் சேர்த்து பிரியாணியும் பீர் பாட்டில்களும் வாங்கி வைத்திருந்தார்கள். இப்படி சாப்பிட்டு எவ்வளவு நாளாகி விட்டது. மூன்று வருடங்களுக்கு முன்னால் தொகுதி எம்.எல்.ஏ. கூப்பிடுறார்னு மாமா ஒரு ஸ்டார் ஹோட்டலுக்குக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவள் என்ன கேட்டாலும் கிடைத்தது. எம்.எல்.ஏ. குடித்துவிட்டு அவளை முத்தமிட்டார். வாய் பொணநாத்தம் நாறியது. பிறகு நிர்வாணமாக நடனம் ஆடச்சொன்னார். பள்ளிக்கூடத்தில் ஆண்டுவிழாவுக்கு அவள் ஆடிய ராத்திரி நேரத்து பூசையில் பாட்டைப் பாடிக்கொண்டே ஆடி முடிப்பதற்குள் எம்.எல்.ஏ. மட்டையாகி விட்டார். அவளும் அவர் மேலேயே படுத்துத் தூங்கி விட்டாள். மற்றவர்களைப் போல இல்லை. பணத்தையும் கொடுத்தனுப்பி விட்டார். அதுக்கப்புறம் இப்போதுதான் இப்படி வாய்த்திருக்கிறது.

பையன்கள் அமைதியாகக் குடித்தார்கள். அவர்கள் பயந்திருந்தது தெரிந்தது. அவள் பிரியாணியைச் சாப்பிட்டாள். திடீரென அவர்களுடைய பேச்சு நின்றது.

“நீங்க போய் அந்த ரூமில இருங்க…” என்றார்கள். அன்னக் கொடி எழுந்து அடுத்து இருந்த படுக்கையறைக்குப் போய் சேலையைக் கழற்றி மடித்து வைத்தாள். ஜாக்கெட், பாவாடையுடன் மெத்தையில் படுத்துக்கிடந்தாள். மெல்லக் கதவைத் திறந்து கொண்டு ஒரு பையன் உள்ளே வந்தான். அவள் அருகில் வந்து மார்பில் கையை வைத்தான். அவள் அவனை இழுத்து அணைத்து முத்தமிட்டாள். அவன் ஒரு கணத்தில் விரைத்து அடங்கி விட்டான். அவனுடைய செயலின்மையைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பு வந்தது. ஒருவன் அவளை உடலெங்கும் தடவி முத்தமிட்டு போய் விட்டான். இன்னொருவன் ஒரு முத்தத்தோடு முடித்துக் கொண்டான். ஒரு பையனைத் தவிர வேறு யாரும் அவளைப் படுத்தவேயில்லை.

பையன்கள் முகத்தில் ஏதோ பெரிய சாதனை செய்த உணர்வு இருந்தது. பேசியபடி ரூபாயையும் மீதமிருந்த பீர்பாட்டில்களையும் பிரியாணியையும் அவளிடம் கொடுத்து அனுப்பி விட்டார்கள். அதை வைத்துதான் அசால்டாக போனவாரத்தைக் கடத்தினாள். இன்று மறுபடியும் சவாலாக அவளுக்கு முன்னால் நின்றது. தியேட்டர் முன்னால் ஈயாடியது. அப்படியே ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருக்கிற காவியா லாட்ஜை நோக்கி நடந்தாள். காவியாவில் இருந்த மோகன் வேலையிலிருந்து போய் விட்டான். அவன் இருந்தால் வாடிக்கையாளர்களின் முகம் பார்த்தே தகவல் சொல்லி விடுவான். அவள் சாடையாக அங்கே போய் சுற்றிக் கொண்டிருப்பாள். கிராக்கிகளைப் பிடித்து விடுவாள்.

ஆனால் இப்போது வந்திருக்கிற புது மானேஜர் ரொம்ப சுத்தம் பார்க்கிறார் என்று மோகன் சொன்னான். அதற்குப்பின் அவள் காவியா லாட்ஜ் பக்கமே போவதில்லை. அவள் யோசித்துக் கொண்டே லாட்ஜ் வாசலில் நின்று உள்ளே எட்டிப் பார்த்தாள். கவுண்டரில் மோகன் இருந்தான். அன்னக்கொடியின் முகத்தில் மலர்ச்சி. அவள் இயல்பாக படியேறி உள்ளே போனாள்.

“என்ன மோகனு சொல்லவே இல்லை…”

“நேத்தி தான் உள்ளாற வந்தேன்க்கா… நல்ல நேரத்துக்கு நீ வந்தே நேத்திக்கு நைட்டு ஒரு பார்ட்டி விசாரிச்சிக்கிட்டிருந்தது முந்நூத்தியெட்டு பக்கமா போய்ப்பாரு” என்று க்ளு கொடுத்தான் மோகன்.

அன்னக்கொடி வரவேற்பறையில் இருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள். பிறகு மாடிப்படி ஏறி அறை எண் 308 -க்கு முன்னால் போய் நின்றாள். அவளுடைய ஒற்றை மணிக்கொலுசொலி அமைதியாக இருந்த லாட்ஜில் அதிர்ந்தது. இரண்டு முறை அந்த வராண்டாவில் மேலும் கீழும் நடந்தாள். அறையில் அனக்கமே இல்லை. விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். கட்டிலில் ஒரு மத்தியவயதுடைய ஒரு ஆள் அலங்கோலமாகக் கிடந்தார். முதலில் பயந்து போனாள். ஆனால் மறுபடியும் உற்றுப் பார்க்கையில் அவர் புரண்டு படுப்பதும் லேசாக முனகுவதும் கேட்டது. வராண்டாவில் யாருமில்லை. மெல்ல கதவைத் தட்டினாள். பதிலில்லை. கொஞ்சம் ஓங்கித் தட்டினாள். கதவு திறந்து கொண்டது. உள்ளே மெல்லக்காலடி எடுத்து வைத்தாள்.

உள்ளே கட்டிலில் கிடந்த ஆள் கடுமையான காய்ச்சலில் முனகிக்கொண்டிருந்தான். அருகில் சென்று பார்த்தாள் அன்னக்கொடி. கைகளிலும் முகத்திலும் வைசூரி போட்டிருந்தது. அவள் உடனே திரும்பி அறைக்கு வெளியே வந்து விட்டாள். ஐயோ பாவம்! என்ற பச்சாதாபம் தான் உடனே தோன்றியது. இந்த இடத்தில் இருந்தால் அவன் செத்துப்போய் விடுவான் என்று நினைத்தாள். உடனே கீழே இறங்கி மோகனிடம் விஷயத்தைச் சொல்லும்போது அந்த ஆளைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டாள். அந்த ஆளின் பெயர் கதிர். ஃபேன்சி ஸ்டோர் சரக்குகளுக்கு ஆர்டர் பிடிக்க மாதாமாதம் வருகிறவன். எப்போதும் ஒரு பெண்ணுடன்தான் வருவான். இந்தமுறைதான் தனியாக வந்திருக்கிறான். வரும்போது நன்றாகத்தான் இருந்திருக்கிறான்.

மோகனிடம் சொல்லி ஒரு ஆட்டோவை வரவழைத்தாள். அறையைக் காலி செய்யச்சொன்னாள். போகும்போது அந்த அறையிலிருந்த அவனுடைய ஒரு கைப்பையையும் எடுத்துக் கொண்டு சென்றாள். கதிரைக் கைத்தாங்கலாகப் பிடித்து ஆட்டோவில் ஏற்றினாள்.

“உனக்கெதுக்குக்கா வேண்டாத வேலை? நான் ஆசுபத்திரிக்குப் போன் பண்ணி அனுப்பிருதேன்…” என்று மோகன் சொன்னான்.

அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே, “மோகனு ஆட்டோவுக்கு மட்டும் சொல்லி விடு… எங்கிட்டே சல்லிக்காசில்லை… நான் உனக்கு ரெண்டு நாளையில தாரேன்…” என்று சொன்னாள்.

ஒரே ஒரு அறையாக இருந்த அவளுடைய வீட்டுக்குள் போனதும் பாயை விரித்து அதற்குமேல் அவளுடைய போர்வையையும், பழைய சேலையையும் விரித்து அதில் கதிரைப் படுக்கவைத்தாள். அவன் சுய நினைவில்லாமல் கிடந்தான். மாடசாமி டீக்கடைக்கு ஓடினாள். இருநூறு ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு வந்தாள். பரமசிவம் செட்டியார் பலசரக்குக்கடைக்குப் போய் நொய்யரிசியும், காசி பழக்கடையில் பழங்களும் இரண்டு இளநீர் காய்களும், வாங்கி வந்தாள். அருகில் இருந்த நாடார் நந்தவனத்தில் வேப்பிலைக்கொத்துகளைப் பறித்துக் கொண்டு வந்து அவன் படுக்கையில் பரப்பி வைத்தாள். சட்டை, வேட்டியை உருவிவிட்டு உடம்பெங்கும் வேப்பிலையால் நீவி விட்டாள். தெள்ளுக்கஞ்சி வைத்தாள். வாயிலும் தொண்டையிலும் கூட அம்மைக்கொப்புளங்கள் இருந்தன. அவனால் பேசவோ, எதையும் விழுங்கவோ முடியவில்லை. தலையைத் தூக்கி மடியில் வைத்து ஸ்பூனால் கொஞ்சம் கொஞ்சமாக புகட்டினாள்.

பக்கத்து வீட்டு ஆயாவிடம் என்னென்ன பக்குவங்கள் செய்யவேண்டும் என்று கேட்டுக் கேட்டுச் செய்தாள். சுத்தபத்தமாக இருக்கவேண்டும் என்று ஆயா சொன்னதினால் தொழிலுக்கும் போகவில்லை. டீக்கடை மாடசாமி தான் ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடன் கொடுத்தான். அவளுக்கு இருபத்திநாலு மணிநேரமும் அவனுடைய சிந்தனையாகவே இருந்தாள். அவன் திரும்பிப்படுத்தாலும் சரி, முனகினாலும் சரி, அவள் உடனே சென்று பார்த்தாள். அவனுக்கு அம்மை உச்சத்தில் இருந்தபோது எழுந்திரிக்கக்கூட முடியாமலிருந்தான். அப்போது பீ மூத்திரம் கூட அள்ளிப்போட்டாள். அவளுக்கு இதையெல்லாம் செய்வதில் எந்த அசூயையும் இல்லை. ஏதோ தன்னுடைய புருசனுக்கு நோய் வந்தமாதிரியே கவனித்துக் கொண்டாள். வாழ்க்கை மாறிவிட்டது போல உணர்ந்தாள். முதன்முறையாக வாழ்க்கையில் அவளுக்கு ஏதோ ஒருபிடிப்பு தோன்றியது. இனிமேல் ரோடு ரோடாக அலையக்கூடாது என்று முடிவு செய்தாள். கதிருக்கு அம்மை இறங்கத்தொடங்கியிருந்தது. அவன் பேச ஆரம்பித்திருந்தான்.

“நீ இல்லைன்னா நான் செத்துருப்பேன் அன்னம்… இனி நான் ஒங்கூடவே இருந்துருதேன். எனக்கும் யாரும் கிடையாது… பாட்டி ஒருத்தி கிடக்கா… இப்பவோ அப்பவோன்னு கிடக்கா… நாம கலியாணம் செய்ஞ்சுகிட்டு வேற ஊருக்குப் போயிருவோம்… அன்னம். இனிமேல் நீ இல்லாம என்னால இருக்கமுடியாதும்மா” என்று தழுதழுத்தான்.

அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. அன்னத்துக்கு இப்படி யெல்லாம் கேட்டுப்பழக்கமில்லை. அவளிடம் இதுவரை இப்படி யாரும் சொன்னதுமில்லை. பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது யாரோ ஒரு பையன் அவளிடம் எழுதிக்கொடுத்த கடிதத்தில் இந்தமாதிரி ஏதோ எழுதியிருந்தான். அவன் முகம் கூட ஞாபகத்துக்கு வரவில்லை. ஏராளமான ஆண்களின் உடல்கள்தான் அவள் நினைவிலிருந்தது. அதுவும் கூட இடுப்புக்குக் கீழே தான். ஏன் முகங்கள் மனதில் பதியவில்லை என்று தெரியவில்லை. அந்த உடல்களின் முரட்டுத்தனங்கள் கொடூரங்கள், வக்கிரங்கள், காரியம் முடிந்ததும் எச்சிலைத்துப்புவதைப் போல துப்பிச்சென்ற அந்த உடல்களைத் தவிர வேறு எதுவும் அவள் நினைவிலில்லை. கடிதம் கொடுத்த பையன் ஒரு மாதத்துக்கு மேல் அவள் பின்னால் சுற்றினான். ஒருநாள் மாலை அவள் வீட்டுக்குத் திரும்பும் சந்தில் வைத்து அந்தக் கடிதத்தைக் கொடுத்தான். அவனுடைய முகத்தை ஞாபகப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தாள். கதிரின் முகம் மட்டுமே முன்னால் வந்தது. சரி. கதிரின் முகமாகவே இருக்கட்டும் என்று விட்டு விட்டாள். மென்மையான அந்த முகத்தில் நிறைந்திருந்த கண்கள் அதில் ததும்பிய உணர்ச்சிகளை அவளால் மறக்கவே முடியாது. இற்றுத் தூர்ந்துபோன மனதின் ஊற்றுக்கண்ணில் சிறு உடைப்பு ஏற்பட்டமாதிரி இருந்தது. அவளுடைய கண்களிலும் ஈரப்பசை பளபளத்தது.

வீட்டுக்கு வெளியில் பிளாஸ்டிக் குடத்தில் வெயில்பட தண்ணீர் வைத்து அதில் வேப்பிலைகளைப் போட்டு ஊறவைத்து ஒரு வார இடைவெளியில் மூன்று தண்ணீர் ஊற்றினாள். மூன்றாவது தண்ணீர் ஊற்றிய நாளில் வீட்டில் சமையல் என்ற ஒன்றை பலவருடங்களுக்குப் பின்னால் செய்தாள். சாம்பார் வைத்து அப்பளம் பொரித்து பால்பாயசம் வைத்து அவனுக்குச் சாப்பாடு போட்டாள். அவன் சமையல் நன்றாக இருப்பதாகப் பாரட்டி அவளுடைய உள்ளங்கையில் முத்தமிட்டான். அவளுக்குக் கூச்சமாகவும் வெட்கமாகவும் இருந்தது. அவள் மனம் ஆனந்தத்தில் மிதந்தது. அவள் தயக்கத்துடன் அவனுக்கருகில் சென்று அவனுடைய கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். அவன் எட்டிப்பிடிக்க முயற்சி செய்ய அவள் அந்தக் குச்சு வீட்டுக்குள் எட்டாமல் ஓடினாள்.

அன்று முழுவதும் பேசினார்கள் பேசினார்கள் அவ்வளவு பேசினார்கள். பேசப்பேச தீரவில்லை. அவளுக்கு எல்லாம் திடீரெனக் கிளம்பியது போல அவளுடைய பிறப்பிலிருந்து எல்லாம் ஞபாகத்துக்கு வந்து அருவியெனக் கொட்டியது. அவளுடைய அப்பா, அம்மாவைப் பற்றி, சொந்தக்காரர்களைப் பற்றி, அவர்கள் நன்றாக இருந்த காலத்தின் ஒவ்வொரு துளிக்கணமும் அவளுடைய ஞாபகங்களிலிருந்து பொங்கி வந்தது. இதுவரை இப்படி ஒரு நாளும் தோன்றியதில்லை. அவளுக்குள் புது ரத்தம் ஊறுவதைப் போலிருந்தது. அவள் அவனிடம் அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றிக் கூட பேசினாள். கதிர் இன்னும் ஒருபடி மேலே போய் அவர்களுடைய குழந்தைகளைப் பற்றிச் சொன்னான். அவளுக்கு இதெல்லாம் உண்மைதானா என்ற சந்தேகம் இருந்து கொண்டேயிருந்தது. அவள் கடவுளை நினைத்ததில்லை. அவளுக்கு விரக்தி வரும்போது திட்டித் தீர்ப்பதற்கு அவர் ஒரு ஆள். அவ்வளவு தான். வீட்டில் குத்துவிளக்கோ, சாமி படங்களோ, காலண்டரோ கூடக் கிடையாது. ஆனால் ஏனோ இப்போது எல்லாச்சாமிகளும் ஞாபகத்துக்கு வந்தார்கள். அவள் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடவேண்டும் என்று ஆசைப்பட்டாள்.

அன்று பௌர்ணமி. நிலவின் சாம்பல் நிற வெள்ளையொளி திறந்திருந்த அவளுடைய குச்சு வீட்டுக்கதவைத் தாண்டி உள்ளே எட்டிப்பார்த்தது. விரித்திருந்த பாயில் அவள் அவனுடைய மடியில் கண்களை மூடிப் படுத்திருந்தாள். அவன் குனிந்து அவளுடைய அதரங்களில் முத்தமிட்டான். அதுதான் அவளுடைய வாழ்வில் கிடைத்த முதல்முத்தம் போல அவள் முகத்தில் ரத்தமேறியது. அப்படியே அசையாமல் கிடந்தாள். அந்தக் கணத்தைத் தவறவிடக்கூடாதென்ற கவனம் அவளுடைய முகத்திலிருந்தது. அவன் அவளுடைய மார்பைத் தொடும்போதும் வயிற்றில் கைவைத்தபோதும் புதுப்பெண்ணைப் போல வெட்கத்துடன் சிரித்தாள். அவனுடைய கையை எடுத்து தன்னுடைய கைகளுக்குள் வைத்துக் கொண்டாள். மனம் நிறைந்து ததும்பியது. ஏனோ அவளுக்கு பாடவேண்டும் போல இருந்தது. வாய் முணுமுணுக்க அவன் அந்த முணுமுணுப்பை அவனுடைய வாய்க்குள் வாங்கிக் கொண்டான். அவளுக்கு இந்தக் கணம் இந்த நிறைவுடன் இப்படியே இறந்து போய் விடலாம் என்று கூடத்தோன்றியது. கண்களிலிருந்து கண்ணீர் பொங்கி வழிந்தது. உதடுகள் துடித்தன. இப்படியெல்லாம் வாழ்க்கை இருக்குமா? அவளுக்கு இப்படியெல்லாம் நடக்குமா? அவள் நினைத்தே பார்த்திராத இந்த உறவினை விட்டுவிடக் கூடாது என்று கதிரை அப்படியே இறுகக் கட்டியணைத்தாள். கதிர் குனிந்து முத்தமிட்டபடியே அவளுடைய வாய்க்குள் அன்னம்… அன்னம்… என்று முணுமுணுத்தான். அந்த இரவு அவர்களை அவ்வளவு சீக்கிரம் உறங்கவிடவில்லை. அவர்கள் உறங்கும்போது நிலா மங்கத்தொடங்கியிருந்தது.

காலையில் அன்னத்துக்கு முழிப்பு தட்டியதும் உடம்பு அசதியாக இருந்தது. எழுந்து பார்த்தாள். வாசல் கதவு திறந்தபடியே கிடந்தது. சுற்றுமுற்றும் பார்த்தாள். கதிர் இல்லை. டீ குடிக்கப்போயிருப்பான் என்று நினைத்து எழுந்து உடைகளைத் திருத்தி படுத்திருந்த பாயை எடுத்துச் சுருட்டினாள். தலையணையை எடுத்தபோது நூறு ரூபாய் தாள் கீழே விழுந்தது.

அவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. ஆனால் சில நொடிகளில் எல்லாம் புரிந்தபோது ஆயாசமாக இருந்தது. உடம்பு வலி ரணமாக இருந்தது.

முகம் சிவக்க கோபத்துடன், “தேவடியாப்பய!” என்று முணுமுணுத்தபடி ஊறல் எடுத்த புறங்கையைத் திருப்பிப் பார்த்தாள்.

அம்மை முத்து ஒன்று பளபளத்துக்கொண்டிருந்தது.

***

உதயசங்கர் – கரிசல் மண்ணிலிருந்து தொடர்ச்சியாக தன் கதைகளின் மூலமும், சிறார்களுக்கான படைப்பு மற்றும் மொழிபெயர்ப்பில் பங்களிப்பு செய்து வருகிறார். 11க்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் வந்துள்ளன

கொரோனா – உச்சத்தில் அச்சம்

0

பாரதீ

கொரோனாவின் வருகை, தனிமனிதப் பழக்கவழக்கங்கள், குடும்பம், உறவுகள், பணியிடம், சமூகம், அரசியல் என்று நம் எல்லாவற்றையும் மறுபரிசீலனை செய்ய வைத்திருக்கிறது. எல்லாப் பெரிய நாடுகளுமே நோயை விட்டு வெளியே வரவே இன்னும் முக்கிக் கொண்டிருப்பதால், அதற்குப் பின்பான மாற்றங்கள் பற்றி இன்னும் உரையாடத் தொடங்கவில்லை. நோய் கட்டுக்குள் வந்ததும் அந்த உரையாடல்கள் நிச்சயம் வேகமெடுக்கும். நம் அரசியல் அமைப்புகளில் இருந்த குறைபாடுகளைப் பற்றி உரையாடக்கூட நேரமில்லாமல் பரபரப்பாக இருந்தோம். இப்போது அவை அனைத்தையும் அம்பலப்படுத்தியிருக்கிறது இந்தக் கொள்ளை நோய். அது மட்டுமில்லை, அடுத்த பெரும் நெருக்கடி வருவதற்குள் இக்குறைகளை வேகவேகமாகக் களைய வேண்டும். அதை எந்த நாடு முன்னெடுக்கப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் அது நடக்கும். அதைப் பார்த்து மற்ற நாடுகளும் அழுத்தத்துக்கு உள்ளாவார்கள்.

இது விதிதானோ என்னும் அளவுக்கு கிட்டத்தட்ட எல்லாப் பெரிய நாடுகளிலுமே இது போன்ற ஒரு பெரும் நெருக்கடியைக் கையாளும் அளவுக்கு அறிவும் ஆற்றலும் அற்ற அரசுகளும் தலைவர்களுமே அதிகாரத்தில் இருக்கிறார்கள். போதாக்குறைக்குத் தம் போதாமைகளை மறைப்பதற்கு வெறுப்புப் பிரச்சாரங்களைக் கையில் எடுக்கும் கேடு கெட்டவர்களாகவும் இருக்கிறார்கள் சிலர். அவர்கள் பிழைப்புக்கு எது சரியான வியூகமோ அதை அவர்கள் சரியாகத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களுக்குத்தான் தாம் பிழைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்கிற அறிவு இல்லாமல் போய்விட்டது போல இருக்கிறது.

இந்த அறிவு வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் ஊடகங்களின் தோல்வி. அரசின் மிரட்டலுக்குப் பயந்தும் எலும்புத் துண்டுகளுக்கு ஆசைப்பட்டும் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த ஊடக உலகமும் சரண் அடைந்துவிட்டது போலவே படுகிறது. சமூக ஊடகங்கள் ஏற்கனவே அவர்களுக்கு ஏற்ற மாதிரியான பொய்களை மட்டும் பரப்பவே பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரசியல் எல்லாக் காலத்திலும் இப்படித்தான் இருந்திருக்கிறது. மக்களின் அறிவின்மையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வேண்டியதையெல்லாம் சாதித்துக்கொள்பவர்கள்தாம் அரசியல்வாதிகள். ஆனால், வரலாற்றில் இப்போதுதான் முதன்முறையாக படிக்காத பாமரர்களைவிடப் பெரும் அளவில் படித்த உயர் நடுத்தர வர்க்கம் கேள்வி கேட்காமல் பொய்களை நம்புகிறது, பரப்புகிறது, அல்லது பொய் என்றே தெரிந்தும் ஆதரிக்கிறது. இந்த நிமிடம் வரை இதிலிருந்து வெளியேறுவதற்கான வழி ஒன்று இருப்பது போல எந்த நம்பிக்கையும் இல்லை.

கையில் ஒன்றுமில்லாமல் பசி வாட்டும்போது ஏழை மக்கள் தெருவுக்கு வருவார்கள். அப்போதும் உன் பசிக்கும் உனக்கு நேர்ந்திருக்கும் இத்தனை துன்பங்களுக்கும் காரணம் இவன்தான் என்று யாரோ இன்னோர் எளிய மனிதனைக் காட்டித் தூண்டிவிட்டால் பசியோடு பசியாகப் போய் அவனைத் தாக்குவதில் பரபரப்பாகி விடுவார்கள். அது பசியிலிருந்தும் சிறிது கவனத்தைத் திருப்பும். இப்படியே இது தொடரும்போது எங்கு போய் முடியும் என்றுதான் தெரியவில்லை.

ஒரேயொரு வாட்சாப் செய்தி மூலம் இதைச் சாத்தியப்படுத்த முடியும் என்பதைத்தான் டெல்லி தப்லிகி ஜமாத் அனுபவம் நமக்குக் காட்டியது. அதே போல இன்னொரு கூட்டம் கூடியது. அது பற்றி ஒருவருமே பேசுவதில்லை. ஆயிரம் ஆயிரமாக வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் வந்து இறங்கியவர்களைப் பற்றிக் கவலையே படவில்லை. ஆனால் அந்த மாநாடுதான் இந்தியா முழுமைக்கும் நோயைப் பரப்பியது என்று பரப்பினார்கள். அதுவும் பரவியது. அவர்கள் வேண்டுமென்றே அப்படிச் செய்தார்கள் என்றும் ஒரு முட்டாள் கூட்டம் பரப்பியது. அதுவும் பரவியது.

அடுத்ததாக இதேபோல இன்னொரு கதை மும்பையில் உருவாகிக் கொண்டிருக்கிறது. தாராவி போன்ற சேரிகளில் சமூக விலகலைக் கடைபிடிப்பது கடினம் என்பதால், அங்கு வேகமாகப் பரவும் வாய்ப்பு இருப்பதால், வசதி படைத்தவர்கள் ஏழை மக்களைக் கண்டு பயப்படுகிறார்கள், ஒதுங்கி நிற்கிறார்கள், தள்ளி நிற்கச்சொல்லிக் கத்துகிறார்கள். இது எதில் போய் முடியும் என்று நமக்கு நன்றாகவே தெரியும். “தீண்டாமை நல்லது” என்று பிரச்சாரம் செய்யும் அளவுக்குத்தான் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

சீனாவைவிட நாம் மக்கட்தொகையில் சிறிய நாடுதான் என்றாலும் பரப்பளவில் சீனா மிகப்பெரிய நாடு. அமெரிக்காவும் மிகப்பெரிய நாடு. இந்த நிலைமை தொடர்ந்தால் இந்தியாவின் மிகப்பெரிய சவாலாகப் போவது நம் மக்கள் அடர்த்தி. உலகில் வேறெந்தப் பெரிய நாடும் நம்மைப் போன்ற நெருக்கத்தில் வாழும் நகரங்களைக் கொண்டவை அல்ல. நம் பொருளாதாரமும் முழுக்க முழுக்க நம் நகரங்களை நம்பியே இருப்பவை. நமக்குச் சாதகமாக இருப்பது நம் எதிர்ப்பு சக்தி. எல்லோருக்கும் தொற்றினாலும் இறப்பு விகிதம் குறைவாகவே இருக்கும். அதனால் விரைவில் வெளியேறி விடலாம். ஆனால் அதற்குள் கிருமி ‘வகை மாற்றம்’ (mutation) அடைந்துவிடக் கூடாது. அதுவும் இந்தியாவில் நடந்துவிடக் கூடாது.

‘எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தைக் குறை சொல்லும் போக்கு கூடி வருகிறது’ என்றொரு பொதுவான விமர்சனம் ஆங்காங்கே காதில் படுகிறது. “எல்லாமே அரசாங்கம் செய்ய முடியாது, தனி மனிதர்களும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்” என்கிறார்கள். உண்மைதான். அதே வேளையில், ஓர் அரசாங்கம் என்ன செய்தாலும் அதைப் பற்றிய அடிப்படையான சிந்தனைகளைக் கூட எழும்ப விடாமல் தடுத்து ஆகா ஓகோவென்று புகழ்ந்து திரியும் கூட்டம், அதுவும் படித்த உயர் நடுத்தர வர்க்கக் கூட்டம், ஒரு மக்களாட்சிக்கு மிகப்பெரும் கேடாக முடியும். பொய்களை அவிழ்த்து விடும் போது மட்டும் தம் தலைவன் கடவுளை விடவும் வல்லமை படைத்தவர் போலப் பேசுவதும், தோல்விகளைப் பற்றிப் பேசும்போது படக்கென்று தரையிறங்கி வந்து, “அவரும் மனிதன்தானே! ஒரே ஆள் எவ்வளவுதான் பண்ண முடியும்!” என்பதும் துளியும் நேர்மையில்லாத வாதங்கள். 135 கோடிப் பேர் வாழும் நாட்டில் எல்லாவற்றையுமே ஒரேயொரு தனிமனிதனைச் சுற்றி அமைத்துக் கொள்வது பேரழிவுக்கான வேலை. அதுவும் சேர்ந்துதான் நம்மைப் பலவீனப்படுத்தியிருக்கிறது.

நீதி மன்றங்களையும், ஊடகங்களையும், தேர்தல் ஆணையத்தையும் பயம் கொள்ள வைக்க முடிகிறது, தோற்று மண்ணைக் கவ்விய மாநிலத்தில் கூட ஆட்சி அமைக்க முடிகிறது, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையைக்கூட ஆட்ட முடிகிறது என்றால் உண்மையிலேயே அவர் அவ்வளவு வல்லமை படைத்தவராகத்தான் இருக்குமோ என்றும் நமக்குத் தோன்றத்தான் செய்கிறது. ஆனால் அந்த வல்லமை மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் மட்டும் ஆக்டிவேட் ஆக மறுப்பதுதான் நமக்குப் புரிய மறுக்கிறது. அவர், அவருடைய ஆளுமை பற்றிக் கட்டமைக்கப்பட்டிருக்கும் பொய்களில் கால்வாசி வல்லமை கொண்டவராக இருந்திருந்தால் கூட இந்த நெருக்கடியை இதைவிடப் பல மடங்கு சிறப்பாகக் கையாண்டிருக்க முடியும்.

விளக்கேற்றச் சொன்னால் ஏற்றுகிறார்கள், பாத்திரங்களைத் தட்டச் சொன்னால் தட்டுகிறார்கள், பொய்யாக எதையாவது கிளப்பிவிட்டுப் பரப்பச் சொன்னால் பரப்புகிறார்கள் என்பதற்காக, உருப்படியாக எதையாவது செய்யச் சொன்னால் செய்கிறார்களா என்று பார்த்தால் பக்த கோடிகள் அவர்களின் கடவுளைவிடப் பெரும் கேடிகளாக இருக்கிறார்கள். “உங்கள் ஊழியர்களுக்கு வேலை செய்யாவிட்டாலும் சம்பளம் கொடுங்கள்” என்று சொன்னதை ஒரு பக்தன்கூட மதித்தானா என்று தெரியவில்லை. வங்கிகளை, “மூன்று மாதங்களுக்கு மாதாந்திரத் தவணைகளை வசூலிக்காதீர்கள்” என்று சொன்னதை அவர்கள் மதிக்கவில்லை. “ஒரு தலைவர் சொல்லத்தான் முடியும். ஒவ்வொருவரும் மனச்சாட்சிப்படி நடந்துகொள்கிறார்களா என்று போய்க் கண்காணிக்கவா முடியும்?” என்று கேட்கிறீர்களா? சொல்வதற்கு மட்டும் இருப்பதல்ல அரசாங்கம். அரசாங்கம் என்பது நடைமுறைப்படுத்த வேண்டும். நடைமுறைக்கு ஒத்து வராதது என்றால் அதைப்பற்றி ஏன் பேச வேண்டும்! மனிதர்களுக்கு வெற்றுச் சொற்களின் மீது இருக்கும் நம்பிக்கை நமக்கு வியப்பூட்டுகிறது.

இந்தியா இந்தக் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதல் பத்து நாடுகளில் ஒன்றாக முன்னேறி இருக்கிறது. இது எது பற்றியும் கவலைப்படாமல், “உலகத் தலைமை கொண்டுவிட்டோம்”, “உலகமே நம்மைத் திரும்பிப் பார்த்து வியக்கிறது”, “நமக்கு இப்படியொரு தலைவனோ, அரசோ கிடைக்கவில்லையே என்று பொறாமைப்படுகிறது” என்றெல்லாம் அடித்துவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் இப்படி அடித்துவிடுபவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பாதிக்கப்படுபவர்களைப் பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. அப்படி அவர்களுக்கே பிரச்சனைகள் வந்தாலும்கூட பல்லைக் கடித்துக்கொண்டு உண்மையை மறைக்கும் அளவுக்கு அவர்களுக்கு ஏதோ ஒரு கணக்கு இருக்கிறது.

மக்களாட்சி நடைபெறும் எல்லா நாடுகளிலுமே இப்போது பெருநிறுவனங்களின் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் பெருநிறுவனங்களின் நலனுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் மட்டுமே ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. அதையும் மீறி, “மக்களுக்கு எது நல்லதோ அதைத்தான் செய்வேன். அதற்காக எவரையும் பகைத்துக்கொள்ளத் தயங்க மாட்டேன்” என்று பேசுகிறவர்களை அரசியலை விட்டே அப்புறப்படுத்தும் ஆற்றல் படைத்தவர்களாக அந்நிறுவனங்கள் இருக்கின்றன. அதனால் அந்நிறுவனங்களைப் பகைத்துக்கொண்டு மக்களுக்கு நல்லது செய்யும் யோக்கியர்கள் வேண்டும் என்றெல்லாம் நாம் பேராசைப்பட முடியாது. ஆனால், மக்கள் நலனுக்கும், அவர்கள் நலனுக்கும் இடையில் ஒரு சமநிலை பேணும் அளவுக்காவது மனச்சாட்சி உள்ள தலைவர்கள் வேண்டும், மக்களாட்சி அமைப்புகள் மக்கள் விரோத அமைப்புகளாக மாறி வருவதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து அதற்கான மாற்றங்களைச் செய்பவர்களாக இருக்க வேண்டும். அதற்கு மக்களும் இந்தப் பின்னணி அரசியல் பற்றி விழிப்புணர்வு உடையவர்களாக மாறுவது அவசியம். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் ஒரே மாதிரி அடி விழுந்தால்தான் அது மத்தளமாக இருக்கும். ஒரு பக்கம் மட்டும் விழுந்தால் அது மோசம் போன மத்தளமாகிவிடும், இல்லையா?

அரசுகள் தவறு செய்வது இயல்பானதே. அதுவும் படிப்பறிவற்ற மக்கள் நிறைந்திருக்கும் நாட்டில், அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள், அவர்களின் நம்பிக்கையை வெல்வதற்கு வேண்டிய அளவுதான் அறிவாளிகளாக இருப்பார்கள். அவர்கள் நிறையவே தவறு செய்வார்கள். அப்படியான தவறுகளைக் குறைத்துக் கொள்வதற்கு ஒரேவழி தொடர்ந்த உரையாடல். யாரோடு? நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியே அந்தந்தத் துறையில் யார் விற்பன்னரோ அவர்களோடும். ‘தான்’ என்கிற எண்ணம் தலைக்கு ஏறும் அளவுக்கு மக்களின் ஆதரவைப் பெற்றுவிடுகிற தலைவர்களுக்கு தன்னைத்தவிர எவரையுமே மதிக்க முடியாது. நாடாளுமன்றம் என்பது தன் அதிகாரத்துக்கு அடங்கிப்போக வேண்டிய ஒரு கட்டடம் என்று தோன்றும். தானே எல்லாவற்றிலும் விற்பன்னன்தானே என்கிற மிதப்பு வந்துவிடும். அதனால் அவர்கள் ஆட்சியில் எந்தத் துறை விற்பன்னர்களுக்கும் வேலையில்லாமல் போய்விடும். இந்தக் கொள்ளை நோயைக் கையாளுவது பற்றி எத்தனை நாடாளுமன்ற விவாதங்கள் நடந்திருக்கின்றன என்று தெரியுமா உங்களுக்கு? எந்தக் கொள்ளை நோய் விற்பன்னர் அல்லது மருத்துவர் குழு கலந்தாலோசிக்கப்படுகிறது என்று தெரியுமா உங்களுக்கு?

“நெருக்கடி நேரத்தில் உட்கார்ந்து எல்லாவற்றையும் விலாவாரியாகப் பேசிக்கொண்டிருக்க முடியாது, அது செயல்பாட்டுக்கான நேரம்” என்பது சரிதான். அப்படி ஒன்றும் பேசுகிற நேரத்தைக்கூட மிச்சப்படுத்திச் செயல்பட்டுக் கொண்டிருப்பது போலவும் தெரியவில்லை. உரையாடலையே விரும்பாத அரசாகத்தான் மீண்டும் மீண்டும் தன்னைக் காட்டிக் கொள்கிறது இந்த அரசு. அதன் அடுத்த கட்டத்துக்குப் போய், இப்படியொரு நெருக்கடி வந்திருப்பதால் அடுத்து வரப்போகும் தேர்தலே வேண்டியதில்லை என்றொரு கூட்டம்  தொடங்கி வைத்திருக்கிறது. அதை நோக்கித்தான் போய்க்கொண்டிருந்தீர்கள் என்பது தெரியாததா? அதிகாரத்தைச் சுவைத்து விட்டால் அவ்வளவு எளிதாக அதை விட முடியாதுதான். அதற்காக எந்த எல்லைக்கும் போவார்கள்தான். அதற்காக இப்படியா?

எப்போதும் அரசின் நிலைப்பாடு அல்லது செயல்பாடு தவறென்று உணரும் நேரத்திலெல்லாம் மக்களும் மக்களை நேசிப்பவர்களும் நாடுவது நீதி மன்றங்களைத்தான். ஏனென்றால் அவர்கள்தாம் அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநாட்டும் பொறுப்புக்கு உரியவர்கள். அந்தத் துறையின் வல்லுநர்கள். ஆட்சி அதிகாரத்துக்கு வருபவர்கள் படிப்பறிவற்ற முட்டாள்களாகக் கூட இருக்கலாம். அவர்களுக்கான கடிவாளம்தான் அரசியலமைப்புச் சட்டம். இன்றைய இந்தியாவில் நீதிமன்றங்கள் எவ்வளவு தற்சார்போடு செயல்படுகின்றன என்பது உங்களுக்கே தெரியும். ஓய்வுக்குப் பிறகு அளிக்கப்படும் பதவிகளும் ஓய்வுக்கு முன்பு அளிக்கப்படும் துன்புறுத்தல்களும் இந்திய நீதித்துறையை வேறொரு தளத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றன. இந்த நெருக்கடி காலத்தில் நீதிமன்றம் எப்படியான பங்களிப்புகளைச் செய்திருக்கிறது என்று நீங்களே தேடிப்பாருங்கள். இதை எப்படிச் சரிசெய்வது என்பதையும் சேர்த்தே கொரோனாவுக்குப் பிந்தைய இந்தியா கவலைப்பட வேண்டும் என்பதை உணர்வீர்கள்.

ஒரு காலத்தில் எதெற்கெடுத்தாலும் “சோவியத் ரஷ்யாவைப் பார்”, “சீனாவைப் பார்” என்று பேசும் கம்யூனிஸ்டுகளைப் போல, இப்போது ஒரு கூட்டம், வளர்ந்த நாடுகளைக் காட்டி, “அவர்கள் அதைச் செய்கிறார்கள் பார்”, “இவர்கள் இதைச் செய்கிறார்கள் பார்” என்று ஒப்பிட்டுப் பேசுகிறது. அமெரிக்கா மாதத்துக்கு இவ்வளவு பணம் என்று வீட்டுக்குள் அடைந்து கிடைக்கும் தன் மக்களுக்குக் கொடுக்கிறது என்பதற்காக இந்தியாவும் அப்படிக் கொடுக்க முடியுமா? ஐரோப்பிய நாடுகள் பாய்ந்து பாய்ந்து தம் மக்களுக்கு உதவுகின்றன என்பதால் இந்தியாவும் அப்படி உதவ முடியுமா? முடியவே முடியாது. நாம் வளர்ந்த நாடில்லை. இன்னமும் நாம் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுதான். நம்மிடம் அந்த அளவுக்கெல்லாம் பொருளாதாரம் இல்லை. எதுவுமே இல்லா விட்டாலும் இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ளவாவது இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வல்லரசுக் கதைகள் எல்லாம் பெரும் மோசடி. அதற்குப் பல பத்தாண்டுகள் பின்னால் இருக்கிறோம். இப்போது வேகவேகமாக இன்னும் பின்னால் போய்க்கொண்டிருக்கிறோம். நாட்டின் ஒரு பகுதி – மொத்த நாடும் அல்ல – பாகிஸ்தானைவிட மோசமாகாமல் பார்த்துக் கொண்டாலே பெரும் சாதனையாக இருக்கும்.

கொரோனாவை வைத்துப் பல நாடுகளில் புரட்சி வெடிக்கலாம் என்கிறார்கள். புரட்சி எப்போது வெடிக்கும்? குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும்போது, உணவுக்கு வழியில்லாமல் போகும்போது, பாதுகாப்புக்குப் பங்கம் வரும்போது, அவற்றிலிருந்து காக்கும் ஆற்றல் தம் அரசுக்கு இல்லை என்றோ இதற்கெல்லாம் காரணமே தம் அரசுதான் என்றோ மக்கள் உணரும்போது கிளர்ச்சி வெடிக்கும். அதிகாரத்தின் சுவையை அனுபவித்து விட்ட ஆட்சியாளர்கள் வெறி கொண்டு அதை அடக்க முயல்வார்கள். அது மேலும் உக்கிரமடையும். அதற்கான சூழல் இப்போது இந்தியாவில் உருவாகியிருக்கிறதா? நிச்சயம் இல்லை. ஆனால் அதற்கான திசையில்தான் சில ஆண்டுகளாவே பயணித்துக் கொண்டிருக்கிறோம். கொரோனா அதனை வேகப்படுத்தலாம். வடமாநிலத் தொழிலாளர்களின் கொடும் பயணங்கள் அதற்கான சாட்சி. பிரிவினைக்குப் பிறகு இப்படியொரு பெருந்திரள் இடப்பெயர்வை இப்போதுதான் நாடு பார்க்கிறது.

ஆனால், இப்படியான அரசியல், சமூக, பொருளியல் அடக்குமுறைகள் மட்டுமே கிளர்ச்சியை ஏற்படுத்துவதில்லை. அதில் தம் அரசின் பங்கு என்ன என்பதை மக்கள் உணர வேண்டும். எல்லாம் பகவான் நமக்கு விதித்தது என்று நம்பிவிடும் அல்லது நம்ப வைக்கப்படும் மக்கள் எதைக் கிளறுவார்கள்? இப்போது பெரும் பொருளியல் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பது வட இந்தியத் தொழிலாளர்கள். அவர்கள் எவ்வளவு அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதில் இருக்கிறது இதற்கான விடை. தென்னிந்தியாவில் அரசுக்கு எதிரான மனநிலை இருக்கும் பகுதிகள் இருக்கின்றன. ஆனால் அவர்களது உணவுக்கும், உரிமைகளுக்கும், பாதுகாப்புக்கும் பங்கம் வரும் அளவுக்கு நிலைமை இன்னும் மோசமாகவில்லை. கடந்த சில பத்தாண்டுகளில் தென்னிந்தியா நிறையவே சொகுசு வாழ்க்கைக்குப் பழகிவிட்டது. அதனால் வீதிக்கு வந்து போராடும் வேலையெல்லாம் நடக்கவே போவதில்லை. அரசுக்கு எதிராகப் பேசுவோம். ஆனால் எளிதில் மோசம் போகவும் செய்துவிடுவோம். ஆனால் இப்படியே போனால் வட இந்தியா முழுமையான பாதிப்புக்குள்ளாக நேரம் அதிகம் ஆகாது. இப்போதைய சூழ்நிலையை வைத்துப் பார்க்கையில், கொரோனாவின் இரண்டாவது அலை இதைவிடப் பெரிதாக அடிக்கப் போவது போலத்தான் தெரிகிறது. அப்படி ஏதும் நிகழ்ந்தால் அது வட இந்தியாவில் எளிய மக்களின் வயிற்றில் கை வைக்கலாம். அதன் விளைவாக பெரும் அதிர்வலைகள் உருவாகலாம். அப்படியேதும் நிகழ்ந்து விடாமல் காப்பாற்ற வேண்டும் இராமபிரான்.

***

பாரதீ – இவர் ஒரு ஃபேக் ஐடி