மாமா வண்டியை சடாரென நிறுத்தி தலையைத் திருப்பி என்னை ஒரு பார்வை பார்த்தார். நான் பக்கத்தில் நடந்து போய்க் கொண்டிருந்த அழகான பெண்ணொருத்தியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஏல ! நா என்ன சொல்லுகேன் ! நீ என்னடே கேக்க ? நேதாஜி தனியா ஒரு படையே வச்சி வெள்ளக்காரனுவ கிட்ட பெகளம் வச்ச ஆளாக்கும் ! பூரா பெயலுவளும் பயந்து கெடந்தானுவ !
அந்தப் பெண் என்னைக் கடந்து சென்று கொண்டிருந்தாள்.
மாமாவுக்கு சலிப்பு. “இந்த வயிசுலயே இப்புடி திரியி ? பாக்கப் பார்வையிலயே அந்தப் புள்ள பத்துப்புள்ள பெத்துருவா போலுக்கே? வீட்டுல எனக்கு ஒரு மொவ இருக்கா ?”
கெட்டிட்டுத்தான் மறுவேலை ! வண்டிய எடும் ! லெட்டர் சீன்ல இருந்து பாத்தத்தான் படம் எடுபடும் !
வண்டியைக் கிளப்பினார். தியேட்டரில் கடுமையான கூட்டம். கவுண்டரில் மண்ணள்ளி வீசினால் மண் கீழே விழாது ! அவ்வளவு நெருக்கடி ! இன்னைக்கி படம் பாத்தது மாதிரிதான்.
மாமா என்னிடம் வந்து, தேட்டரு மேனேஜரு நம்ம ஃப்ரெண்டுதான் ! நாம போயி மேனஜரை பாத்து டிக்கட்டு எடுத்துட்டு வந்துருகேன்! என்றவாறே நேராக நடந்து போனார். நானும் அவரது பின்னால் போனதை அவர் கவனித்திருக்கவில்லை.
உள்ளே போய் ஏதோ பேசினார். உள்ளிருந்து சத்தம் கேட்டது,
மாமா பதில் பேசவில்லை. கவுண்டருக்குள் கடுமையான நெருக்கடி. சற்றும் யோசிக்காத மாமா சடாரென ஒரு அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார். சற்றும் யோசிக்காமல் அந்தக் கம்பிகளின் மேல் ஆட்களின் தலைக்கு மேலாக நடக்கத் துவங்கினார்.
‘என்னடே மாமன் திடீரென கொரளி வித்தையெல்லாங் காட்டுகானே!’ என்ற வியப்பில் நான் ஆட்களின் கால்களுக்குள் புகுந்து ஊர்ந்து செல்ல ஆரம்பித்தேன். அப்போதுதான் அது நடந்தது.
கூட்டத்தில் மாமா ஒருவரது கீழ் தாடையில் கால் வைத்து நடந்ததில் அந்த ஆசாமி அரண்டு போய்க் கத்தி தன்னுடைய இடுப்பிலிருந்த பிச்சுவாக் கத்தியை எடுத்து மாமனைக் குறி பார்த்து வீசவே கத்தி குறி தவறி தரையில் தவழ்ந்து வந்து கொண்டிருந்த என் கையில் கிடைத்தது. நானும் மாமனைக் காப்பாற்றும் நோக்கில் அந்தக் கத்தியை எடுத்து வீசியவனின் கையில் சொருகினேன். அந்த அவசரத்தில் அவனது கையில் கொடுக்க முடியாததால் அந்தத் திடீர் ஏற்பாடு.
அவன் வலியில் கதறி சத்தம் போட்டான். நானும் மாமாவும் மின்னல் வேகத்தில் உடனடியாகக் குதித்து வெளியில் வந்து டீக்கடையில் ரெண்டு டீ சொல்லி விட்டு அமர்ந்து கொண்டோம். குத்து வாங்கியவன் ரத்த வெள்ளத்தில் வெளியில் வந்து தன்னைக் குத்தியவர்களைத் தேடினான். நாங்கள் அவனருகில்தான் அமர்ந்திருந்தோம்.
கவுண்டருக்குள் கோலப்பன் ஆகாய மார்க்கமாகச் சென்றதாலும், நான் பூமிக்குள் தரையோடு தரையாக ஊர்ந்து சென்றதாலும் அவனால் எங்களை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. ரத்தத்தைப் பார்த்தால் அலர்ஜியாகி மயங்கும் வியாதி அவனுக்கு இருந்திருக்க வேண்டும். மயங்கி விழுந்தான். நானும் மாமாவும் கொஞ்ச ஆட்களும் தூக்கிச் சென்று ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தோம்.
மீண்டும் டிக்கெட் எடுத்து உள்ளே போனால் படத்தில் வெள்ளைக்காரனும் இல்லை.நேதாஜி சுபாஷ் சந்திரபோசும் இல்லை. சரத்குமார் வில்லன்களை அம்போவென விட்டுவிட்டு லிசா ரேவின் உதடுகளோடு போர் புரிந்தார். இது என்ன வகையான போராயிருக்கும் என்ற குழப்பம் எனக்கு எழுந்தது. மாமா என்னிடம் சொன்னார்,
இது நேதாஜிக்க சின்ன வயிசு கதையா இருக்கும் போலுக்கு?
ஆனாலும் நல்லாத்தா மாமா இருக்கா !
ஆருடே ?
அந்தப் புள்ள !
திரையில நிக்காளே அவளா ?
பின்ன நா என்ன முன் சீட்டுல நீரு கால வச்சிக்கிட்டு தேச்சிக்கிட்டு இருக்கீரே அந்தப் புள்ளயவா சொல்லுகேன் ?
மாமா திடுக்கிட்டார், ஏல இந்த இருட்டுக்குள்ள ஒனக்கு எப்புடிடே கண்ணு தெரியி ?
மாமா என் வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டார். படம் முடிந்து வரும்போது புரோட்டாவும் சால்னாவும் சாப்பிட்டு விட்டு வந்தோம்.
நான் அத்தையிடம் சொன்னேன், “எத்தே! செவம் படம் செரியில்ல! மாமா என்னவோ சரித்திரப் படம்னு சொல்லிக் கூட்டிட்டு போனாவ ! அங்க என்னடான்னா தரித்திரம் புடிச்ச மாதிரி பூரா புள்ளையளும் ஜட்டியும் பாடியும் போட்டுகிட்டு லாத்துகாளுவோ ! ஒன்னும் உருப்புடாது ! போதாக்கொறைக்கி மாமா காலக் கொண்டு முன்னாலருந்த புள்ளைக்க முதுகுல பெயிண்டு அடிச்சிக்கிட்டு கெடந்தாரு !என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் போய்விட்டேன்.
அன்றிலிருந்து கோலப்பன் மாமா ஏன் திண்ணையில் உறங்கினார் என்பது எனக்குப் புரியவேயில்லை. புரியாத வயதல்லவா ?
இப்படித்தான் ஒருமுறை நான் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த வேளையில் கோலப்பன் மாமா ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றார். அவர் ஒரு சிறிய அளவிலான “கோழி”. கொடியில் காயப் போட்டிருக்கும் சேலையைக் கூட அரைமணிநேரம் வைத்த கண் வாங்காமல் பார்க்கும் வழக்கம் அவருக்கு இருந்தது.
‘காஷ்மீர் அருகிலிருக்கும் பாராமுல்லா என்ற இடத்தில் அவர் பணி புரிந்ததாகவும், அந்த இடம் மிகவும் அழகாக இருக்குமென்றும், அதைவிட அங்குள்ள பெண்கள் ஆப்பிள் மாதிரி இருப்பார்கள்’ என்றும் பல கதைகளை எங்களிடம் அவர் அடித்து விடுவதுண்டு. நாங்களும் கூட ‘அங்குள்ள பெண்கள் ஆப்பிள் போலவே உருண்டையாக இருப்பார்களோ’ என்றெண்ணி நகர்ந்து விடுவோம். இந்தக் கதைகளின் நிமித்தம் நாங்கள் அவரை ‘பாரமுல்லா மாமா’ என்று பட்டப்பெயர் வைத்து அழைத்து வந்தோம். அவரும் சற்று பெருமையடைந்தார்.
அவரது மகன் விடுமுறை நாட்களில் எங்களோடுதான் ஊர் சுற்றுவான். தோப்பிலுள்ள கிணற்றிலிருந்து பத்து குடம் தண்ணீர் இறைத்துத் தந்தால் எங்களுக்கு அம்மா பத்து ரூபாய் பரிசாகத் தருவது வழக்கம். நாங்களும் அந்தக் காசைக் கொண்டு போய் முத்து தியேட்டரில் ஆங்கிலப் படங்களைக் காணுவது வழக்கம். மூன்றாம் வகுப்பு டிக்கெட் விலை ரூ 2.15 பைசாக்கள்.
அப்போது ‘கோஸ்ட்- தி எரோடிக் ஸ்டோரி’ என்றொரு படம் திரையிடவிருப்பதாகவும், அது ஒரு பயங்கரமான பேய்ப்படம் என்றும் சொல்லிக் கொண்டார்கள். நான் வீட்டில் போய் அம்மாவிடம் ‘’கெணத்துல இருந்து தண்ணி எடுக்காண்டாமா?’’ என்று கேட்டதும், ‘எனக்கு என்ன சோக்கேடு?’ என்பது அம்மாவுக்கு புரிந்து விட்டது. எல்லா அண்டாவும் நெறஞ்சிட்டு ! ரெண்டு நாளு கழிச்சி கோருனாப் போதும்! என்று சொல்லி விட்டாள்.
பாட்டி ஒருத்தி பரலோகத்துக்கு பாஸ்போர்ட் எடுத்துவிட்டதால் அன்று ஊருக்குள் துஷ்டி வீடு. நிவர்த்தியே இல்லை ! படம் பார்க்கணும்! பைசா வேணும் ! என்ன செய்யலாம்? என்று யோசித்ததில் கோலப்பன் மாமா நியாபகத்திற்கு வந்தார். அவரது மகனிடம் சொல்லி அவரது பாக்கெட்டுக்கு வெடிவைத்து அமவுண்ட் தேற்றியதில் முதல் ஆளாய் தியேட்டரில் போய் நின்றாகி விட்டது.
டிக்கெட் எடுத்து உள்ளே போனால் டிக்கெட் கிழிக்கும் தாத்தா சொன்னார், லேய் சின்னப் பயக்கள்’லாம் இந்தப்படத்த பாக்கப்புடாது ! வீடுகளுக்குப் போய்ச் சேருங்கடே !”
என்று சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தால் அங்கே இருந்தவர்கள் எல்லாரும் முப்பது வயதுக்கு மேலுள்ளவர்கள். படம் போட்டார்கள். பேய்கள் கும்பலாய் வந்தன. மாற்றி மாற்றி அடித்துக் கொண்டன. ஒரு உள்ளாடை வாங்கக் கூட இயலாமல் மிகுந்த வறுமையில் வாடுகின்றன என்று நினைக்குமளவுக்கு இருந்தன அந்தப் பேய்கள். உடைகளை வெறுத்தாலும் கூட அழகான பேய்களாக அவைகள் இருந்த பட்சத்தில் எங்களுக்குப் பய உணர்வு வரவில்லை, மாறாக மட்டற்ற மகிழ்ச்சி மாத்திரமே எழுந்தது.
இடைவேளை விட்டார்கள். அப்போதுதான் நான் அவரைக் கண்டேன். அவர்தான் எங்கள் பாஸ்டர். கையில் பைபிள் வைத்திருக்கும் சூட்கேஸ் மற்றும் அங்கி அணிந்தவாறே எழுந்து வெளியில் சென்றார்.
கிழவியின் அடக்க ஆராதனையை முடித்துவிட்டு, கிழவியை குழிக்குள் கிடத்திவிட்டு, நேராகப் பாய்ந்து வந்து தியேட்டருக்குள் குதித்திருப்பார் என்று எண்ணுமளவுக்கு தன்னுடைய பிரசங்க அங்கியோடும், சாவுக்கு மட்டும் அணியும் கருப்பு கழுத்துப் பட்டையும் அணிந்த வண்ணம் வந்திருந்தார். இது ஒற்றைக்கண் பேய்கள் நடமாடும் படம் எனத்தெரியாமல் உண்மையான பேய்ப்படம் என்று நினைத்து வந்திருப்பாரோ என்று பேசிக்கொண்டோம். ‘அவர் எங்களைப் பார்த்து விடக்கூடாதே’ என்ற எண்ணத்தில் இடைவேளையில் நாங்கள் யாரும் வெளியே போகவில்லை.
‘படம் அற்புதமாக இருக்கிறதே!’ என்று வருந்தி பாஸ்டர் வீட்டுக்குப் போயிருக்கக்கூடும்’ என்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே பாஸ்டர் உள்ளுக்குள் நுழைந்தார். கக்கூசுக்குள் வைத்து அங்கியைக் கழற்றி விட்டு சிவில் டிரெஸ்ஸில், கையில் ஒரு கோல்ட் ஸ்பாட் குப்பியோடு வந்தமர்ந்தார். எங்களுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. விதி யாரை விட்டது?
படம் துவங்கியதுதான் தாமதம், நாங்கள் கீச்சுக்குரலில் விளிக்க ஆரம்பித்தோம்,
ஓய் நாட்டையர் மாமோவ் !
ஓய் பரலோகமணி !
அங்கிய எங்கவோய் ?
கெழவிய பொதச்சேளே ! கெழவி என்ன சொன்னா ?
எங்கள் சத்தத்தைக் கேட்டு பக்கத்திலிருந்த ஆடியன்சுகள் கோபித்துக் கொண்டார்கள்.
எலே… நீங்க இப்புடி கூவுனா ஆளுவ படம் பாக்காண்டாமாடே? புரிய மாட்டேங்குல்லா ?
எண்ணே ! ஒங்களுக்கு சைனீஸ் மொழிலாம் தெரிமா? என்று நான் கேட்டதுதான் தாமதம் ஒருவன் அடிக்க வந்துவிட்டான். நாங்கள் பொத்திக் கொண்டு படம் பார்த்ததில் பாஸ்டர் தப்பினார். படம் முடியுமுன்னரே வெளியில் எழுந்தும் போய்விட்டார். படம் கொடுத்த கிளுகிளுப்பில் நாங்கள்தான் அவர் வெளிநடப்பு செய்ததைக் கவனிக்கவில்லை.
நாங்கள் படம் முடிந்து வந்தவுடன் பாராமுல்லா மாமா அவரது மகனைத் தூக்கிப் போட்டுத் துவைத்துவிட்டு, எங்களோடு சேர அவனுக்குத் தடை விதித்தார்.
ஆமா பெரிய குவைத் அதிபரு? அமெரிக்கா கூட சேரப்புடாதுன்னு சொல்லுகான் ! போலே தாயளி ! பத்து ரூவா எடுத்தது ஒரு குத்தமாடே? நம்மளயும் கேவலப்படுத்திட்டானே இந்த கோலப்பன் கொச்சங்கா மண்டையன்? அடேய் பாரமுல்லா கோலப்பா ! இனி நாந்தாண்டா ஒனக்கு பாரம் ! என்று கங்கணம் கட்டிக் கொண்டேன்.
தினமும் ரெண்டு ஷோ’க்கள் விகிதத்தில் அந்த ‘கோஸ்ட்’ படத்தை பத்துமுறை பாராமுல்லா பார்த்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரித்தால் அது பொய்யான தகவல் என்பதும், சோத்துப் பொட்டலத்தோடு தியேட்டர் வாசலில் படுத்துக் கிடந்து, ஒருநாளில் நான்கு ‘ஷோ’க்கள் வீதம் ஆறு நாட்களில் 24 காட்சிகள் பார்த்திருக்கிறார் என்று தெரிந்தது.
இதை அவரது மனைவியிடம் போய் சொன்னால் கூட ‘அவள் என்ன தியேட்டரில் போய் பார்க்கவா போகிறாள்? என்று விட்டுவிட்டேன். அதுமட்டுமல்ல கோலப்பனின் மனைவி செல்லம்மாள் ஒரு காந்தாரி. வாய் வடசேரி வரைக்கும் நீளம். பாரமுல்லாவின் ஆகப்பெரிய பாரமும் அவள்தான். இந்தப் பாரமுல்லா கோலப்பனை வஞ்சம் தீர்க்க பிரபஞ்சம் வேறு வழியில் எங்களுக்கு அருளியது.
ஒருநாள் பாரமுல்லா குடும்பத்தோடு டவுனுக்கு போயிருந்த நேரத்தில் போஸ்ட்மேன் அவரது வீட்டின்முன் வந்து கோலப்பனைத் தேடவே ரெஜிஸ்டர் போஸ்ட் ஒன்றை எங்களிடம் தந்து அவரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார். நான் வாங்கிப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்.
பாரமுல்லா வீடு திரும்பியதை அறிந்து கொண்ட நான் அவரது வீட்டின் வாசலில் நின்று கொண்டு அவரைக் கூப்பிட்டேன். ஓய் கோலப்பரு ! வெளிய வாரும் ஓய் ! ஒமக்கு ஒரு சாமானம் வந்துருக்கு !
அவரது மனைவி வெளியே வந்து வந்து கேட்டாள்.
என்னலே காரியம்? வெளிய கெடந்து விளிச்சிக் கூவுத !
இந்த ஏல வாலங்குத எடவாடெல்லாம் என்கிட்ட வேண்டாம் ! ஒனக்க வீட்டாளுக்கு ஒரு லெட்டரு வந்துருக்கு !
எங்கிட்ட கொண்டா ! நாங் குடுத்துக்கிடுதேன் !
மாமாகிட்டதான் குடுக்கணுமாம்! ரகசியம் ! மிலிட்டிரிகிட்ட இருந்து ரிஜிஸ்டர் போஸ்டுல வந்துருக்கு!
என்னைப் பார்த்துக் கொண்டே வீட்டுக்குள் பார்த்து குரல் கொடுத்தாள், “எப்பா இந்த பயல் என்னவோ ராணுவ ரகசியமாம் ! ஒம்மகிட்டதான் தருவானாம்! ஒரு எட்டு வந்து கேளும் !”
உள்ளேயிருந்து உருமிக்கொண்டே வெளியில் வந்தார் பாராமுல்லா.
என்னல விசியம் ? மொண்ணப் பயலே !
நான் சொன்னேன், இந்த லெட்டர ஒம்மகிட்ட ரெகசியமா குடுக்கணும்னு போஸ்ட் மேன் சொன்னாரு !
‘கொண்டா பாப்பம்’ என்றவாறே லெட்டரை வாங்கிப் பார்த்தவரின் முகத்தில் குழப்ப ரேகை. என்னிடம் கேட்டார், “எலேய் நீதான் நல்லா இங்கிலீசு வாசிப்பல்லா ! இந்த செவத்த படிச்சி சொல்லு ! எழவுல இந்தின்னாக்கூட நாம் படிச்சிருவேன் !” என்றார்.
என் மண்டைக்குள் காத்திருந்த நரி கடிதத்தைப் படிக்கத் துவங்கியது. அதாவது, “திரு.பாரமுல்லா அவர்களே ! உங்கள் மகன் இங்கு மிகவும் கஷ்டத்தில் உழல்கிறான். அவன் சொல்லச் சொல்ல நான் எழுதும் மடலாவது, அப்பா ! நீங்கள் ரிட்டயர்டு ஆகிப் போன பிற்பாடு காஷ்மீர் எங்களுக்கு கவலையின் நகரமாக மாறிப் போயிருக்கிறது. அம்மாவின் முகம் ஆப்பிள் போலவே வாடிப்போய் விட்டது. எங்கள் மூத்த தாயையும், சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு காஷ்மீருக்கே வந்துவிடுங்கள் அன்புத் தகப்பனே ! இப்படிக்கு, வி.பி.சிங்”
என்று நான் முடிக்கவும் பாரமுல்லா பரண்மீது தொங்கிக் கொண்டிருந்தார். முற்றத்தில் காயப்போட்டிருந்த விறகுக்கட்டை சத்தமாகப் பொளிந்து கொண்டிருந்தது.
“சாவு தாயோளி !” நான் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
மேலெங்கும் வழிந்த ஒத்தட எண்ணையோடு வேறு ஒரு மொழிபெயர்ப்பாளரின் உதவியோடு மொழிபெயர்க்கப்பட்டு உண்மை தெரிந்திருக்கிறது.
அந்தக் கடிதமானது இந்திய ராணுவத்தில் இருந்து பென்சன் விஷயமாக பாரமுல்லாவின் உயிர்த்திருப்பு குறித்த உறுதிக்காக தற்காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு குடும்ப போட்டோ அனுப்புமாறு வந்திருந்தது. வருடாவருடம் அதுமாதிரி வரக்கூடியதுதான் என்றாலும், இந்த ஆண்டு அதிசயமாக ஆங்கிலம் படித்து வைத்திருந்த சப்பாத்தி ஒருவன் கோலப்பனை ஒரு பெரிய மேதாவி என்று நினைத்து அந்தக் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறான்.
பாரமுல்லா நேராக எங்கள் வீட்டின் முன்வரவே அப்பா செடிக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டு நிற்பதைப் பார்த்து , ஓய் மச்சான் ! ஒம்ம மொவன் பாத்த வேலை தெரியுமா உமக்கு ?
பாரமுல்லாவின் கோலத்தைக் கண்ட எங்கள் அப்பா அவரிடம், “என்னவோய் ! வைக்கோலு லாரீல அடிபட்டுட்டீரா ? என்று கேட்கவே பாரமுல்லாவுக்குக் கண்ணீர் கட்டிவிட்டதில் கதை வெளியில் வந்தது. அப்பாவும் சிரித்துக் கொண்டே, “சின்னப் பயல்கிட்ட லட்டர் குடுத்தாம்லா ! அந்த போஸ்ட்மேன் மண்டப்பயல்’கிட்டப் போயி கேளும் !” என்று சொல்லி கோலப்பனை அனுப்பியிருக்கிறார்.
அப்பா நேராக என்னிடம் வந்து, அந்த பாரமுல்லாவ யாம்டே தண்டவாளத்துல படுக்க வச்சிருக்கு ! செவம் ஒனக்கு வேற வேலையே கெடையாதா ? என்று சலித்துக் கொண்டார். நான் லயன் காமிக்ஸில் டெக்ஸ்வில்லரின் “ பாதாளத்தில் ஒரு படுக்கையறை “ படித்துக் கொண்டிருந்தேன்.
அடுத்தநாள் பாரமுல்லாவும், அவரது மனைவியும் போஸ்ட் ஆபீஸில் போய் போஸ்ட்மேனிடம் சண்டை இழுக்கவே, போஸ்ட்மேன் இப்படிச் சொல்லியிருக்கிறார்.
“எண்ணே ! நா ஒங்ககிட்டதான் லெட்டர தரணும்னு நெனச்சிருந்தேன். நா அன்னிக்கி வரும்போது நீங்க அந்த பரிமளாக்கா’கிட்ட ரொம்ப ரகசியமா பேசிக்கிட்டிருந்தீய ! நாந்தான் எதுக்கு ஒங்கள தேவையில்லாம இடைஞ்சல் பண்ணணும்னு திரும்பி வந்துட்டேன். அடுத்த நாள் வரம்போ ஒங்க வீடு பூட்டிக் கெடெந்திச்சி…. முக்கியமான லெட்டர்லா ! அதான் கொடுத்தனுப்புனேன்…. போட்டுமாண்ணே ! என்று கேட்டுவிட்டு நடையைக் கட்டியிருக்கிறார்.
பரிமளாதான் அந்த ஊரின் தாகம் தீர்க்கும் தண்ணீர்க்குடம் ! இனிமேலும் பாரமுல்லாவின் பரிதாபத்தைக் கேளீரோ மாக்காள் !
பழைய சைக்கிளைத்துடைத்து எண்ணெயிட்டு அதன் ரிம்கள்பளபளக்க குரங்குப் பெடலில் ஓட்டுவது பால்யத்தில் குதூகலமானது
அதுவும் என்னைப்போல ஒரு செகண்ட் ஹேண்ட் தான் வளர்ந்த மனிதர்கள் (அப்போது அவர்கள் மேரு மலையைப் போலிருந்தார்கள் )
நான் சைக்கிள் கற்றுக் கொண்டதை பாராட்டினார்கள் எவ்வளவு உற்சாகமான நம்பிக்கை ஒரு சுமாரான மனிதனாவதற்கு அது என்னைத்தயார் செய்திருக்கிறது மேலும் ஒரு சைக்கோ ரிஸ்ட் வாட்ச் அதுவும் புதிதில்லை மெருகு தேய்ந்தது இன்னொரு ரிஸ்ட்க்கு மாற்றப்பட்டிருக்கிறது அவ்வளவுதான் ஓ இப்போது நான் ஒரு மனிதன்
ஒரு செகண்ட்ஹேண்ட் தேசத்தில் வளரும் சிறிய பையன் முழு மனிதனாகும் போது அவனிடம் ஒரு பழைய சைக்கிளும் நிக்கல் கசியும் சைக்கோ ரிஸ்ட் வாட்சும் இருந்தால்
மகிழ்ச்சியுடன் உலகம் தன் ஓடு பாதையில் அவனிடம் கை குலுக்குகிறது
***
ஒலிவ மரங்கள்
பால்யத்தில் உயரமான பாலத்தின் கைப்பிடிச் சுவர்மீதேறி வானம் நோக்கி எனது சிறுநீரைப்பீச்சிய போது பின்னந்தலையில் பலமாக தாக்கப்பட்டேன் உண்மையில் அப்போது மேகத்திற்கிடையே சூரியனும் நிலவும் வந்துபோய்க்கொண்டிருந்ததென நம்பினேன்
ஒலிவ மரத்தை அதன் வேரோடு பிடுங்கும் ஆற்றல் என்னிடம் இருந்தது ஒரு சிறிய வில்லைக் கல்லை பல ஆயிரம்காத மைல்களுக்கு அப்பால் போய் விழும் படி எறிந்தவன் இடியும் மின்னலும் தெறிக்கும் போது சிறு பறவைகளின் இதயம் நடுங்குமா என்ன
வயற்புறங்களில் நட்சத்திரங்கள் சினைப்புறும் சிறு விலங்குகளை நோக்கி கண்சிமிட்டின
தொடுவானம் நோக்கி விடாது ஓடியோடி விண்ணும் மண்ணும் புணர்ந்திருந்தது கண்டு நாணித் திரும்பினேன்
பாய்ந்தேன் நெடுநாள் முணுமுணுப்புகளுக்கிடையே மேலும் வலைகளை கண்ணிகளை உலகின் எழுதப்பட்ட புனிதப்பத்திரங்களை கிழித்தெறிந்தேன்
தாக்கப் பட்டவர்களிடையே கூக்குரலிட்டேன்
சிறுநீர் வானம் பெருக கடல் அலைகள் மலையின் மண்சரிவுகள் மேலும் ஒரு நிசப்தம்
***
நவீனத் தமிழ் கவிதையில் யவனிகா ஸ்ரீராமின் கவி மொழி தனித்தது. அரசியல் கூர்மையுள்ள அவரது கவிதைகள் இதுவரை ஏழு கவிதைத் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன – ஆசிரியர் தொடர்புக்கு – yavanikaramasamy@gmail.com
ஆட்டிறைச்சி கடைகள் திறந்திருக்கின்றன என்று மேல்வீட்டுக்காரர் படியில் இறங்குகையில் தன் கைபேசியில் விலையை அசாத்தியக் குரல் ஏற்றத்துடன் சொல்கிறார்
பாதிமூடிய கதவுகளின் பின்னே நான் நின்றிருப்பதை அவர் ஊகித்திருக்கக்கூடும்
எங்கள் சமையலறையில் குக்கர் கூடுதல்நேரம் சத்தமிட்டு நெடுநாட்களாகிவிட்டன
அதுமட்டுமல்ல ஞாயிற்றுக்கிழமைகளில் இல்லாளிடம் எவ்வளவு துரிதமாய் மதிய உணவு பரிமாறுவாய் என அடிக்கடி கேட்பதையே ஒரு மாதமாக மறந்திருந்தேன்
அது ஒருபுறமிருக்கட்டும் இம்முறை அரசாங்கம் வழங்கும் நிவாரணத் தொகையில் ஆட்டிறைச்சி வாங்கி
நாசிதுளைக்கும் அஞ்சறைப்பெட்டியின் மசாலா லாவகத்துடன் குருமாவும் பொன்நிற வறுவலும் சமைத்து மதிய உணவின் தட்டில் இட்டு பசிதணிய உண்ட பின்னர்
மேல்வீட்டுக்காரர் கேட்க நானும் கைபேசியில் குரலுயர்த்தி நண்பர் யாரிடமாவது மதிய உணவின் இறைச்சி சுவையை பகிர வேண்டும்.
2
ஒரு நாளின் எந்தப் பொழுதைத் தேர்ந்தெடுப்பது குறிப்பாக வேறுபடுத்திக் கொள்ள இப்போதெல்லாம் சமிக்ஞைகள் ஒன்றுமே தென்படுவதில்லை
மானுட பேச்சொலிகளும் காலணிகளின் சரசரப்பும் காரணமின்றி எழும் உற்சாகக் குரலெழுப்புதல்களும் இருசக்கர வாகனங்களினால் நகரும் அமானுட ஊளைகளும் மடிந்த தெருவில் ஒருவனாய் நின்றிருத்தலில் சுவையேதுமில்லை
தொலைக்காட்சியின் சேனல்கள் நொடிமுள்ளாய் இமைக்கும் தோறும் நிமிடங்களுடன் பெயர ஒரு கையில் ரிமோட்டுன் மறுகையில் காபி குவளையின் சுகவெம்மை
பின்னிரவின் படபடப்பில் வாசிக்கப் புரட்டி கைவிட்ட பல்வேறு நூற்களின் பக்கங்களின் எண்களெல்லாம் முன்னிருக்கும் நாட்காட்டியில் விடுமுறை நாட்களாகி நிற்கின்றன
முன்கூட்டியே அறிந்திருந்தால் தவறவிட்டிருக்க மாட்டேன் மிகைவடிவ இறகுகளே என்னைச் சுற்றிலும் இன்று உகுக்கப்பட்டுள்ளன பறவையின் இறகுகள் அல்ல இவை
எனினும் பறத்தலில் தரையிறங்கும் போது இல்லையெனில் மீண்டும் மேலெழுகையில் உகுத்தவையாக இருக்கக்கூடும்
பாதப்பாவல்கள் எதுவும் தட்டுப்படவில்லை குரலும் கேட்டதாய் நினைவில்லை நாசியும் பெண் ஆண் என எச்சுகந்தத்தையும் உணரவில்லை முன்பு உள்ளதைக்காட்டிலும் விழிகளில் ஒளிதேங்கியுள்ளது
தாழிடப்படாத பால்கனிக்கதவைத் தாழிடும் எண்ணமில்லை வந்து சென்றது மறுபடியும் வரலாம் அது ஒரு தேவதையாக இருப்பின் மெய்யாயினும் பொய்யாயினும் இம்முறைக் காணத்தவறக்கூடாது.
நானிருக்கும் இடத்ததைப் பற்றியோ அன்றி மற்றுமுள்ளோரது வசிப்பிடங்களியோ அறிந்திருக்க வாய்ப்பில்லை
நகர்ந்து பார்த்துக் கொள்ள வேண்டும் நாம் நகர்கையில் சுற்றிலுமுள்ளவைகளையும் ஒருமுறை அசைத்துவிட்ட பின்னர் வேறிடத்திற்கு போகலாம்
எதிரில் தொங்கவிடப்பட்டிருக்கும் துகிலோவியத்தில் மஞ்சுஶ்ரீயின் விழிகள் பூமியை நோக்குகின்றன அதில் பொன்வண்ணக் குழைவின் தகதகப்பு பரவிவருவது ஒரு திடீர்நொடியாகிறது
யூகிக்கச் சிரமமான இடத்திலிருந்து மெய்யல்லாத தோற்றத்துடன் அப்பறவை வெண்மஞ்சிற்குள்ளிருந்து வெளிப்பட்டு சிறகசைத்து நெருங்க
கவியும் முழுஇருள் தேங்க ஆரம்பிக்கையில் மஞ்சுஶ்ரீயின் புருவங்களுக்கும் அதரங்களுக்கும் மத்தியில் அனந்தாய் முகிழும் மென்பிரகாசக் கீற்றுடன் கண்ணயர எத்தனிக்கிறேன் சூழ்ந்துள்ளவை எல்லாம் அவ்வண்ணமே இருக்க.
***
5
மூட மறந்த கதவின்வழியே குளிர்மை கசியும் இரவின் தோற்றம் பூரணமாய் தெரியாவிடினும் இனம்கொள்ளும் அளவிற்கு தென்படவே செய்கிறது
உடலின் புறத்தேயும் அகத்தேயும் இன்றெதுவும் முழுமைகொள்ளாதது போலவே துயிலும் தத்தளித்து நள்ளிரவிற்குள்ளே அமிழ்ந்திருக்க
பிறப்பின் கொடியவிழ்ந்த அடிவானுக்குள் புகுகிறோம் உணவும் விதையுமான எம் பூர்வநிலத்தின் மீதான நாட்டத்தின் துணையுடன்.
***
எஸ். சண்முகம் – கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர். சிற்றிதழ் சூழலில் விமர்சனத்துறையில் அவரது பங்களிப்பு தலையாயது. ஆசிரியர் தொடர்புக்கு – s.shanmugam65@gmail.com
‘கண்ணாடியில் நகரும் வெயில், என்னை கடவுளாக்கிய தவிட்டுக்குருவி’ என்கிற கவிதைத் தொகுப்புகளும், ‘சைபர் சாத்தான்கள், ரோபோ ஜாலம்’ என்கிற தொழில்நுட்ப நூல்கள், லிண்ட்சே லோஹன் S/o மாரியப்பன் எனும் சிறுகதைத் தொகுப்பு, மசால் தோசை 38 ரூபாய் என்கிற அனுபவக் கதைகள் தொகுப்பு மற்றும் மூன்றாம் நதி ஆகிய நாவல் வெளிவந்துள்ளன. இவரது வலைப்பூ நிசப்தம்.காம் தமிழில் அதிகம் வாசிக்கப்படும் வலைப்பூக்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அவரது அறக்கட்டளைப் பணிகள் அவரது வெளிப்படைத்தன்மையால் (தணிக்கைசெய்யப்பட்ட அறப்பணிகளை பொதுவில் வைப்பது) அதிகம் கவனிக்கப்பட்டவை. கல்வி மற்றும் மருத்துவத்திற்கான உதவிகளை அவர் தொடர்ந்து செய்து வருவதைப் போலே தன் ஊரைச் சுற்றிலும் சூழலியல் பணிகள், பழங்குடியினர் நல்வாழ்வு, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிக்கூடங்களின் நிலையை மேம்படுத்துதல், நீர் மேலாண்மை, விளையாட்டுப் போட்டிகள் ஊக்குவிப்பு, சிவில் சர்வீஸ், நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்தல் என்று பல பணிகளைச் செய்துள்ளார். அவரது கடைசி நூல் வெளி வந்தது 2017ல் (ரோபோஜாலம்) எதிர்காலத் திட்டங்கள் மற்றும் எழுத்து குறித்து அவரிடம் செய்த ஒரு நேர்காணல்.
நிசப்தம் மணிகண்டன் பலருக்குமான முன்னுதாரணம். மணிகண்டன் அவர்களுக்கு முன்னுதாரணமாக யார் இருந்தார்கள்?
முன்னுதாரணம் என்றால் எந்த அர்த்தத்தில் இருந்து இதைக் கேட்கிறீர்கள் எழுதுவதிலா அல்லது சமூகப்பணிகளில் கேட்கிறீர்களா.?
எழுதுவதில் என்று மட்டும் சொல்ல முடியாது. உங்களுடைய எழுத்திலும் உங்களுடைய சமூகப்பணிகளில் அதோடு ஐடி துறையில் இருந்து கொண்டு உங்கள் விருப்பங்கள் சார்ந்த துறைகளில் இருந்து கொண்டு எப்படி சமூகப்பணிகளிலும் பலருக்குமான முன்னுதாரணமாக இருக்கிறீர்கள்?
எழுத்து, என் துறை சார்ந்த வேலைகள், அதோடு நிசப்தம் டிரஸ்ட் வொர்க் இப்படி எல்லாவற்றிலும் இயங்கும்போது தனியாக ஒருவரை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. இந்த வாழ்க்கை ஒருவகையில் நீரோட்டம். ஆற்றில் வெள்ளம் போய்க்கொண்டே இருக்கையில் அது நீரின் வேகத்திற்கு எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு போகிற மாதிரி அதற்குள் ஒருதளத்தை கண்டுபிடித்து போய்க்கொண்டு இருக்கிறோம்.
அதேபோல் நாம் படிக்கின்ற புத்தகம் அல்லது நமற்கு முன் இருக்கக்கூடிய தனிப்பட்ட ஆளுமைகள் என்று பார்த்துக்கொண்டால், நம் பள்ளியில் படிக்கும்போது நம்மைக் கவர்ந்த ஆசிரியர்களில் தொடங்கி, நம்மிடம் சின்னச் சின்ன விசயங்களை விதைத்துக்கொண்டே வரக்கூடியவர்களும், நண்பர்கள், புத்தகங்கள், எழுத்தாளர்கள் என்று எல்லாம் கலந்துதான் நம்முடைய பாதையை தீர்மானம் செய்கிறது என்று நினைக்கிறேன். இதில் தனிப்பட்ட நபரை அல்லது தனிப்பட்டதொரு ஆளுமையை முன்னுதாரணமாகக் கொண்டிருப்பதாய் ஒரு கிரிடிட் கொடுக்க எனக்குத் தெரியவில்லை. அதோடு இவர்கள்தான் முன்னுதாரணம் என்பது போல் நான் எவற்றையும் வைத்துக் கொள்வது கிடையாது. போகிற போக்கில் போய்க்கொண்டே இருப்போம் என்பதுதான். வேறு ஒன்றும் கிடையாது.
நீங்கள் வசிக்கும் வட்டாரத்திலும் நண்பர்கள் வட்டாரத்திலும் நிசப்தம் மணிகண்டன் என்று உங்களை பலரும் குறிப்பிடும் போது அதற்கான பொறியை யாராவது தட்டிவிட்டிருப்பார்கள், அப்படி யாரையாவது நினைவு கூற விரும்புகிறீர்களா?
நிசப்தம் முதல் முதலில் pesalaam.blospot.com என்ற ஒரு வலைதளமாக 2004 ல் உருவானது. தொடர்ந்து வலைதளத்தில் எழுதிக்கொண்டே இருக்க, வாசகர்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாகிக் கொண்டே வந்தது. அப்படி அதிகமாகும் ஒரு கட்டத்தில் ஒரு பையன் உதவிகேட்டு வரும்போது அந்த பையனைப் பற்றிய தகவல்களை நிசப்தம் தளத்தில் எழுதுகிறபோது அந்தப் பையனுக்கான உதவியை என்னுடைய வாசகர்கள் செய்தார்கள். அதேபோல் அடுத்ததொரு உதவி தேவைப்படும் போது அவற்றையும் நம் தளத்தில் பதிவு செய்தோம். அதற்கான உதவிகளையும் செய்தார்கள்.
இங்கு ஒருவரின் தேவைகளைப் பொறுத்து உதவிகளைச் செய்யும் போது அவர்கள் கேட்கும் உதவித்தொகையை மீறி அதிகத்தொகை ஒருவரிடம் சேர்க்கிறது. இதை உதவி தேவைப்படுகிற மற்றவர்களுக்கு உதவப் பயன்படுத்துவோம் என்ற நோக்கோடுதான் நிசப்தத்தை டிரஸ்ட்டாக பதிவு செய்தோம். நிசப்தத்தை டிரஸ்டாக பதிவுசெய்த பின்னுங்கூட இந்த வேலைகளைத்தான் செய்யப் போகிறோம், இவற்றைத்தான் செய்வோம் என்ற தெளிவான ஒரு குறிக்கோள் கிடையாது. கல்விக்கான உதவிகளைச் செய்வதில் நிசப்தத்தை முதலில் ஆரம்பித்தோம். பிறகு மருத்துவத்திற்கு அதன் பிறகு இயற்கைக்கு அடுத்ததாக கிராம மேம்பாட்டிற்கு என்று இப்படி படிப்படியாக நிசப்தம் போய்க்கொண்டிருக்கிறது. இதனால் தான் சொல்கிறேன் இவைதான் என்னுடைய லட்சியம் என்றோ, இவையெல்லாம்தான் என்னுடைய இலக்கு அல்லது பாதை என்றும் நான் எந்த விதத்திலும் முடிவு செய்வது கிடையாது.
ஒருநாள் பயணத்தில் இருக்கும்போது என்னோடு ஒருவர் அதே பேருந்துப் பயணத்தில் என் இருக்கைக்கு அருகில் அமர்ந்திருக்கிறார். நடுராத்திரி ஒரு மணி இருக்கும். அப்போதும் அவர் அழுதுகொண்டே வந்தார் என்ன காரணமென்று எனக்குத் தெரியாது. அவருக்கு ஐம்பது வயதிருக்கும். அவர் அழுது கொண்டே இருக்கும்பொழுது நம்மையும் மீறி கேட்கத் தோன்றும். நான் ஏன் அழறீங்க என்று கேட்கிறேன். கேட்கும்போது தான் தெரியும் அவர் பெங்களூரில் கட்டட வேலை பார்ப்பவர். அவருடைய மகள் தற்கொலை பண்ணி இறந்து போனதா ஊரில் இருந்து தகவல் வர, அதற்காக தன் ஊருக்கு போய்க்கொண்டிருக்கிறார். அவருக்கு மனைவி கிடையாது. இந்த விஷயங்களை எல்லாம் அவர் சொல்லும் போது அவருக்கு ஏதாவது ஒருவகையில் உதவி செய்யவேண்டும் என்று தோன்றியது. நமக்கு சாதாரண மனிதர்களிடம் இருந்துதான் இந்த வேலைகளைச் செய்வதற்கான பொறி நமக்குக் கிடைக்கும். நாம் தினசரி வாழ்வில் ரத்தமும் சதையுமாக பார்க்கக்கூடிய மிகச்சாமானிய மனிதர்களிடம் இருந்துதான், இந்த உலகம் இப்படித்தான் இருக்கிறதென்று தெரிந்து கொள்ள முடியும்.
ஒவ்வொரு பணிகளையும் செய்து முடிக்கிற போது, உதாரணமாக கல்வி, மருத்துவம் விளையாட்டு அதைத் தவிர்த்து சூழல் சார்ந்தது என்று நிறைய பணிகள் செய்கிறீர்கள், ஒவ்வொரு பணியையும் செய்து முடிக்கிற போது துல்லியமாக உங்களது மனது எப்படி உணரும்?
ஒவ்வொரு பணிக்கும் ஒரே மாதிரியே உணர்கிறேன். உதாரணமாக கல்விக்கு
உதவ நீங்கள் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுப்பதாக வைத்துக்கொண்டால், அந்த உதவி உங்களுக்கு அப்பொழுது எந்தவிதமான திருப்தியையும் தராது. காரணம் யாரோ ஒருவர் கல்வித்தொகைக்கு உதவி செய்ய, அந்த உதவியை நாங்கள் உரியவரிடம் கொண்டு சேர்க்கிறோம். அந்த தருணத்தில் அந்த மாணவர்களுக்கு நீங்கள் ஒரு அம்மாவாகவோ, அப்பாவாகவோ இருந்து நாம் அவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்துகிறோம் என்ற மனநிலை தான் அந்தத் தருணத்தில் தோன்றும். அதே மாணவர்கள் படித்து முடித்து வெளியில் வரும்போது கிடைக்கிற அந்த உணர்வுதான் தனி.
இராஜேந்திரன் என்ற ஒரு மாணவர். பணம் உதவி வேண்டுமென்று கேட்டு நிசப்தத்தைத் தேடிவரும் போது, நாம் போய் அந்த மாணவனின் வீட்டிற்கு தகவல்களை கேட்கப் போகிறோம். ஏழ்மையான வீடு அது. மேற்கூரை கூட சரியாக இல்லாத, மழை நேரங்களில் தண்ணீர் வழிவதைத் தடுக்க பாலீதின் பேனர்களால் கட்டப்பட்ட அந்த வீட்டிலிருந்து படிக்கிற ஒரு மாணவன். அவன் பிஎஸ்சி படிக்கும்பொழுது என்னிடம் அறிமுகம் ஆகிறான். இந்த மாணவனை பிஎஸ்சி படிக்க வைக்கின்றோம், பி.எஸ்.சி யில் யுனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டராக வருகிறான். அப்படி அவன் பி எஸ் சி முடிக்கிறபோது கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும். ஆனா பி.எஸ்.சியை மட்டும் வைத்துக்கொண்டு அவன் என்ன பண்ண போகிறான், அடுத்து எம் எஸ் சி படிக்கப்போறான். எம் எஸ் சிக்கும் பீஸ் கட்டுகிறோம், அவனுக்கு நல்ல யுனிவர்சிட்டில சீட் கிடைக்கிறது. காந்தி கிராமத்தில் அந்த மாணவனைப் படிக்க வைக்கின்றோம். அதன் பிறகு அவன் கேட் எக்ஸாம் எழுதினான். கேட் தேர்வில் வந்து ஆல் இந்தியா ஸ்கோர் வாங்கி ஐஐ டிக்குள் போகும்போது தான் நமக்கு முழுமையான ஒரு திருப்தி வரும்.
இதே போன்று மருத்துவ உதவி கேட்டு ஒரு பெண்மணி தன் நாற்பது வயதுள்ள கணவருக்கு ஹார்ட் அட்டாக், அவருக்கு காலையில் அறுவைச்சிகிச்சை செய்யப் போவதாகவும் அதற்கு உதவி தேவைப்படுவதாகவும் நம்மை அணுகினார். நான் பெங்களூரில் இருந்து கிளம்பி, மதுரையில் அவர்கள் இருக்கிற மருத்துவமனைக்குச் சென்று அவர்களுக்கான மருத்துவ உதவித்தொகையைக் கொடுத்துவிட்டு அவர்கள் சிகிச்சை முடியும் வரை அவரோடு உடனிருந்துவிட்டு வந்தேன். சிகிச்சை முடிந்ததும் அந்தப் பெண் வெளிப்படுத்திய அந்த அழுகைக்கு பின் அந்த குடும்பத்தை காப்பாற்றிய ஒரு திருப்தி இருந்தது.
இதே போன்று கிராமப்புறங்களில் ஒரு வேலையைச் செய்யும் போது மரத்தை நடுகிறோம், மரத்தை நடுவதற்கு ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் செலவாகிறது, மரம் நடுகிறபோது அந்த மரக்கன்று தாங்குமா, அந்தச் சூழலில் இருந்து அந்த கன்று தப்பித்து வளர்ந்திடுமா என்பது போன்ற பயம் இருக்கும்.
இன்னொன்று ஒரு குளத்தை தூர்வாருகிற போது ஒரு லட்சம் செலவாகிறது. அந்த செலவிற்குபின் பலருடைய பங்களிப்பு இருக்கிறது. அப்படி அந்த குளங்களை தூர்வாரும் போது அந்த குளத்தை தூர்வாரி சேர்த்திடுவோமா, தூர்வாரி முடிந்ததும் மழை வருமா? மழை வந்தாலும் அந்தக் குளத்தில் தண்ணீர் நிரம்புமா என்ற கேள்விகள் தோன்றிக் கொண்டே இருக்கும். இவையெல்லாம் ஒரு துல்லியமான மனநிலையிலேயே இதை எடுத்துக்கொள்ள முடியாது. அடுத்ததாக என்ன செய்யப் போகிறோம் என்கிற யோசனைதான் இருக்கும்.
இதில் உயிர்காக்கின்ற வேளைகளில் மட்டும் ஏதோ ஒன்றை செய்துவிட்டோமென்ற திருப்தி உருவாகும். மற்றபடி இவை தொடர்ச்சியான பயணம் தான் இவை எல்லாம்.
உதாரணமாக இப்படியான உதவிகள் எல்லாம் வெற்றியடையவும் கூடும், தோல்வி அடையவும் கூடும் அந்த இரண்டு வித்தியாசங்களை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
இங்கு வெற்றி தோல்வின்னு விசயங்களை எடுத்துக் கொண்டால் நாம் எதுவும் செய்ய முடியாது, இதுவொரு மாற்றம் அவ்வளவு தான். ஒரு இடத்தில் ஒரு இரண்டாயிரம் செடி நடுகிறோம். அப்படி நடுகிற போது அது வெற்றியா தோல்வியா என்று பார்க்க வேண்டாம். அந்த பொட்டல் காடாக இருந்த இடத்தில் ஒரு இரண்டாயிரம் மரக்கன்றுகளை வைத்து அந்தச் சூழலை ஓரளவு செழிப்பாக்க முயற்சிகள் செய்கிறோம். இந்த மாதிரியான முயற்சிகளைப் பார்த்துவிட்டு , நம்மோடு இருக்கிறவர்களில் ஒரு இரண்டு பேர் இதே போலொரு முயற்சிகளில் இறங்கினால் அதுதான் வெற்றி.
இதையே சமூகம் சார்ந்த வேளைகளில் நாம் வெற்றி தோல்வி என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. எந்த மாதிரியான தருணத்தில் உங்களால் அந்த உதவியைச் செய்ய முடிகிறது என்பதை மட்டும்தான் எடுத்துக்கொள்ளணும். இதை வெற்றி தோல்வி என்று பிரிடிக்ட் பண்ண முடியாது.
உங்கள் குடும்பத்தார்கள் உங்கள் பணியில் எத்தனை தூரம் உதவுகிறார்கள் அல்லது ஊக்கம் அளிக்கிறார்கள்?
இதில உபகாரம் என்பதை விட உபத்திரவம் இல்லாம இருக்கிறது பெரிய விஷயம் தான். ஆரம்பத்தில் அவர்களுக்கு முதலில் ஒரு வருத்தம் இருந்தது. வீட்டில் பெரும்பாலான நேரங்களில் அவர்களோடு இருப்பது இல்லை. அது குறித்து அவர்களுக்கு முதலில் வருத்தமிருந்தது. சம்பாதிக்கின்ற வயதில் சொத்து சேர்ப்பதைப் பற்றி யோசிக்காமல் இப்படி வேறேதோ வேலைகளை செய்கிறானே என்பதைப் போன்ற சின்ன அப்ஜெக்க்ஷன் இருந்தது அவர்களுக்கு. எங்களுடைய குடும்பம் கூட்டுக்குடும்பம். நானும் தம்பியும் இருப்பதால் வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கிச் சேர்ப்பது, தேவையான பொருட்களை வாங்குவது மாதிரியான வேலையை எல்லாம் அம்மா, தம்பி, அப்பா இவர்கள் எல்லாம் பார்த்துக் கொள்வதால் எனக்கு ஒரு சுதந்திரம் கிடைத்திருக்கிறது. அப்பறம் என் மனைவிக்கு யாரோ ஒருவர் எங்கோ இந்த உதவிகளால் சந்தோஷமாக இருக்காங்கங்கிறது என்பது தெரிந்ததனால் எனக்கு எல்லாவிதமான சுதந்திரமும் வீட்டில் கிடைத்தது. அதனால் யாரும் பெரிதாக என்னை எதுவும் கண்டு கொள்வது இல்லை.
ஒன்னே ஒன்னு அவர்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால் எங்கு போனாலும் ஒரு நான்கு நாட்களுக்கு முன்னதாக எனக்குத் தகவல் சொல்லிடு அப்படி என்பது தான், அதையும் நம்மால் சில நேரங்களில் செய்ய முடியாது. திடீர் என்று கிளம்பிப்போகிற சூழல் வரும். இதுமட்டும் தான் சின்ன துருத்தலாக இருக்குமே தவிர மத்தபடி வீட்டுல பெரிய உபகாரம் பண்ணமுடியாது. ஏன்னா இதில் என்ன நடக்கிறது என்று அவர்கள் யாருக்குமே தெரியாது. ஆக அதை தடை போடாமல் இருப்பதே பெரிய உதவி என்று நினைக்கிறேன்.
உங்களுடைய அப்பா நிசப்தம் டிரஸ்ட் விசயங்களில் உங்களுடைய இந்த பணிகளை என்னவாக பார்த்தார்?
எங்க அப்பா ஆரம்பத்தில் கொஞ்சம் வருத்தமாகதான் இருந்தாரு. எங்க அப்பா எதையுமே வெளிப்படையாக காமிக்க மாட்டாங்க. அதனால் ஏதாவது ஒரு மறுப்பு இருந்தா அம்மாவிடம் சொல்லிச் சொல்றது தான். எனக்குத் தெரிஞ்சு எங்க அப்பா வந்து என்னைப்பற்றி பெரிதாக வருத்தபட்டுக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல அவருக்கு ஒரு சந்தோசம் இருந்தது. பசங்களை படிக்க வைப்பது, மருத்துவ உதவி செய்வது இதையெல்லாம் எங்கப்பாவிற்கு ஒரு கட்டத்தில் புண்ணியம் தேடிக்கொள்கிற மாதிரியான வேலையை செய்கிறேன் என்று எங்க அப்பா நினைத்தார்.
உங்களுக்கு இந்த புண்ணியம் என்கிற கருத்துகள் மீது நம்பிக்கை இருக்கிறதா?
புண்ணியம் என்கிற கான்செப்ட்டில் நம்பிக்கை, நம்பிக்கையின்மை இதெல்லாம் எனக்கு தெரியல. ஏதாவது ஒருவிதத்தில் செய்கிற எல்லா காரியத்திற்கும் ஏதாவது ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் நான் நினைக்கிறது. பிறக்கின்றோம், இறப்போம் இதற்கு இடையில் உருப்படியாக ஏதாவது வேலைகளைச் செய்ய வேண்டும்.
பெற்றோர்களுக்கு வழிகாட்டுதல்
புதுக்கோட்டையில் இருந்து ஒரு பையன், அம்மா அப்பா இல்லாமல் பாட்டி கூட வளர்கிற பையன். அவனைக் கூட்டிகொண்டு வந்து ஹாஸ்டல் ல ஒரு பீஸ் கொடுத்து, அவன் பிளஸ் டூ முடிச்சு காலேஜ் போகிறவரைக்கும் அவனை நாம் பார்த்துக்கொள்கிறோம் என்பதன் அர்த்தம் அந்த பையனுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? ஏதாவது ஒரு கனெக்ட்டிவிட்டி இருக்கிறதா, இல்லைல்ல. இந்த மாதிரி எல்லாம் யோசிப்பேன். புண்ணியம் பாவம் என்பதெல்லாம் நாம் சேர்த்து வைக்கிறோமா அப்படி என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா எல்லாக் காரியங்களுக்கும் ஏதாவது ஒருவிதத்தில் எங்கையோ கனெக்ட்டிவிட்டி இருக்கிறது இதுவொரு சார்ந்த சமூகம் தான். எதையும் இங்கு சுயமா நாம் செய்துவிட முடியாது. எல்லாம் ஏதாவது ஒரு விதத்தில கனெக்ட் ஆகியிருக்கிறது. படிக்கின்ற அந்த பையன் என்னை சார்ந்து இருக்கிறான். நான் பணம் கொடுப்பவர்களை சார்ந்து இருக்கிறேன். பணம் கொடுப்பவர்கள் என்னுடைய எழுத்தைச் சார்ந்து இருக்கிறார்கள் இது மாதிரி எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் இன்டர்கனெக்டட் என்பதுதான். இதில் புண்ணியம், பாவம் என்பதைப் பற்றியெல்லாம் எனக்கு பெரிதாக தோன்றவில்லை. ஆனால் செய்கிற விசயங்களில் ஏதோ அர்த்தம் இருக்கின்றது என்று நினைக்கின்றேன்.
உங்களுடைய அறக்கட்டளை பணிக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய நண்பர்கள்?
உறுதுணையாக இருக்கக்கூடிய நண்பர்கள் என்றால் பண உதவி செய்பவர்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். நிசப்தத்தில் படிப்பவர்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். எங்களுக்கு மெயில் அனுப்புபவர்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். எங்காவது நம்மளை பார்த்திட்டு, நீங்க செய்கிற வேலையெல்லாம் நல்ல வேலைங்க என்று யாராவது சொல்பவர்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். இப்படி எல்லாருடைய மாரல் சப்போர்ட்டில் தான் இது நடகிறது. ஒரு நிகழ்ச்சின்னு அரேஜ் பண்ணுவதற்கு கூடவே இருந்து உதவி செய்யக்கூடியவர்கள் ஏகப்பட்ட நபர்கள் இருக்கிறார்கள். இதில் ஒரு முக்கியமான ஆட்கள் என்று எடுத்தாலே ஒரு நூறு பேர் இருப்பார்கள்.
அரசு தாமஸ், கார்த்திகேயன் இப்படி எப்படி எடுத்தாலும் நூறு பேருக்கு குறைவில்லாம முக்கியமான வேலைகளை செய்யக்கூடியவர்கள் இருப்பார்கள். அதோட சம்மந்தமே இல்லாது எங்கிருந்தோ ஒரு ஐநூறு ரூபாய் அனுப்பக்கூடியவர்கள், நூறு ரூபாய் அனுப்பக்கூடியவர்கள் இப்படி எடுத்துக்கொண்டால் ஆயிரக்கணக்கான நபர்கள் வருவார்கள்.
அரசு ரீதியான ஏதாவது ஒரு காரியம் வேண்டும் என்றால், ஏதாவது ஒரு தாசில்தாரிடம் பேச வேண்டும் என்றால், இல்லை ஒரு கலெக்டரிடம் பேச வேண்டும் என்றால் நமக்காக பேசிக்கொடுக்கக் கூடிய அதிகாரிகள் மட்டத்தில், இந்த மாதிரி நீங்கள் கணக்கெடுத்தால் நமக்கு மாரல் சப்போர்ட்டாக இருக்கக்கூடிய நண்பர்கள் இப்படி ஏகப்பட்ட பேர் வந்திடும். எனக்குத் துல்லியமாக இவர்கள் தான் என்று என்னால் சொல்லவும் முடியாது. இதுவொரு பெரிய கூட்டு இயக்கம் தான் எல்லாவற்றுக்கும் ஒருமுகமாக நிசப்தம் மணிகண்டன் என்று இருக்கின்றதே ஒழிய, எனக்கு பின்னால் நிறைய நபர்கள் இருக்கிறார்கள்.
இவ்வளவு பணிகள் செய்கின்றீர்கள், ஊடகத்தால் அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறீர்களா? அல்லது ஊடகத்திடம் இருந்து எப்படியான சப்போர்ட் நிசப்தத்திற்கு கிடைத்திருக்கிறது?
ஊடகத்தில் இருந்து தினகரன், வசந்தம், விகடன், தினமலர், வட அமெரிக்க தமிழர்கள் இதழான தென்றல், தினமணி ஆகிய இதழ்களில் நிசப்தம் குறித்து கட்டுரைகள் வெளியாகியிருக்கிறது. அதோடு விகடன் டாப் டென் நம்பிக்கை மனிதர்களில் என்னையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதன் பிறகு பொதிகை தொலைக்காட்சியில் ஒரு நேர்காணல் இவையெல்லாம் ஒருமாதிரியான கவனம் தான். நானொரு சினிமா நடிகர் இல்லை, அரசியல்வாதியும் கிடையாது. எல்லா வாரத்திலும் எனக்கொரு கால் பக்கம் ஒதுக்கி நிசப்தம் சம்மந்தமான செய்திகளைப் போடவும் முடியாது. அவ்வப்போது சொல்வதே கவனப்படுத்தல் தான். இந்த மாதிரியான கவனப்படுத்தல்களை ஊடகங்கள் செய்திருக்கிறார்கள்.
கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர் இந்த இடத்தையெல்லாம் விட்டு சற்று தூரம் வந்து விட்டதாக தெரிகிறதே?
ஒரு பத்து வருடத்திற்கு முன் கவிதைகள் எழுதுவதைத் தவிர வேறு ஏதாவது எழுதுவாயா என்று கேட்டால் எனக்குத் தெரியாது என்றே சொல்லியிருப்பேன். அதன்பிறகு ஒரு நான்கு வருடங்கள் கழித்து சிறுகதை எழுதுவீர்களா என்று கேட்திருந்தால் இல்லை என்றே சொல்லியிருப்பேன். அதன் பிறகு நாவலும் எழுதி விட்டேன், சினிமாவைப் பற்றியும் எழுதியாச்சு. இப்போது இரண்டு வருடத்திக்கு முன் நிசப்தம் டிரஸ்ட் வைத்து இந்த நலப்பணிகள் போன்ற வேலைகளை செய்திருப்பாயா என்று கேட்டிருந்தால் இல்லை என்றே சொல்லியிருப்பேன். எதுவும் நாம் டிஸைட் பண்ணி இப்படித்தான் போக வேண்டுமென்று நாம் நினைப்பது, நம்மை நாம் வதைத்துகொள்வது அல்லது வருத்திகொள்வது மாதிரிதான். நம் வாழ்வில் அந்த தருணத்தில் எதைச் செய்ய வேண்டுமென்று தோன்றுகிறதோ, எது நமக்கு சந்தோஷத்தை தருகிறதோ, எது ஒரு திருப்தியைக் கொடுக்கிறதோ அந்த வேலையை செய்து போய்க்கொண்டே இருக்கலாம். அதன்படி தொடர்ந்து நிசப்தம் டிரஸ்ட் வொர்க் பிடித்திருக்கிறது, என்னுடைய அலுவலக வேலைகளும் எனக்குப் பிடித்திருக்கிறது. இந்த வேலைகளை இப்படியே பார்ப்போம். மனது மாறிக்கொண்டே இருக்கும். மனிதன் சுவற்றில் அடித்த ஆணி கிடையாது, மாறிக்கொண்டே இருப்போம். எது நமக்கு பிடித்ததாக இருக்கிறதோ அதை செய்துகொள்வோம்.
உதவுவதில் உங்களிடமிருந்து நிறைய கெடுபிடிகள் உள்ளது என்பதைப் போல் சொல்கிறார்களே?
ஆமாம், கெடுபிடி இருக்கிறது. மருத்துவ உதவி என்று பார்த்தால் உயிர் காக்கிற மருத்துவ உதவிகள் செய்ய வேண்டுமென்று நினைக்கிறோம். உயிர் காக்கும் மருத்துவம் என்றால் அந்த உதவி செய்யவில்லையென்றாலும், அந்த சிகிச்சை நடக்காது போனாலோ அவர்கள் உயிர் போய்விடும் என்ற சூழலைத் தான் உயிர்காக்கும் மருத்துவத்திற்கான உதவிகள் என்று சொல்கிறோம்.
மனவளர்ச்சி குன்றியவர்களை ஊக்கப்படுத்தும் முகாம்
ஒருமுறை மருத்துவ உதவி கேட்டு என்னிடம் ஒருவர் வந்தார். தன் மகனுக்கு காலில் அடிபட்டதாகவும் அவருக்கு அறுவைசிகிச்சைக்கான பணம் தேவையென்றும் வந்தார். நானும் சம்மந்தப்பட்ட அந்த மருத்துவமனையின் அருகிலிருக்கிற நம் நிசப்தம் சார்ந்த நபரின் உதவியோடு அந்த தகவல்களை விசாரிக்கச் சொன்னேன். அவர் தகவல் விசாரித்து சொன்னதும் தான் தெரிந்தது அந்த விபத்து அவர் மது அருந்திவிட்டு வண்டியை ஓட்டியதால் நேர்ந்தது என்று. உடனே அவர்களுக்கான மருத்துவ உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணத்தைக் கைவிட்டு விட்டோம். நிசப்தம் இந்த மாதிரியான உதவிகளுக்கு கை கோர்க்காது.
அதோடு நிசப்தத்தில் மருத்துவ உதவி என்று வருகின்ற போது குழந்தைகள், குழந்தையுடைய பெற்றோர்கள் இவர்களுக்கு முதலாவதாக உதவி செய்யவேண்டுமென்ற விதிமுறை இருக்கிறது. காரணம் ஒரு குழந்தை இப்போது தான் இந்த உலகத்தைப் பார்க்கிறது. அது இன்னும் இந்த உலகத்தில் நிறைய பார்க்க வேண்டியது இருக்கிறது அதற்காக அந்த குழந்தையின் மருத்துவத்திற்கான உதவிகளை நிசப்தம் செய்கிறது. குழந்தைகளின் பெற்றோருக்கும் உதவிகள் ஏன் செய்கிறோம் என்றால் அந்த பெற்றோரில் உதவி தேவைப்படுகிற ஒருவருக்கு நாம் மருத்துவ உதவிகள் செய்யாமல் அவர்களைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டால் அந்த குழந்தையின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதற்காகவும் இந்த மருத்துவ உதவிகளைச் செய்கிறோம்.
ஏன் வயதானவர்களுக்கு உதவக் கூடாதா என்ற கேள்விகளும் என்னிடம் வந்திருக்கிறது. மருத்துவத்திற்கு என்று நாம் செய்கிற உதவி நாம் கல்விக்காக செய்கிற உதவிகளை விட மூனு மடங்கு அதிகமானது. ஒரு பத்தாயிரம் ரூபாய் இருந்தால் ஒரு மாணவனின் ஒரு செமஸ்டருக்கான கட்டணத்தைக் கட்டிவிட முடியும். மருத்துவத்திலோ மூன்று லட்சங்கள் செலவாகும் பட்சத்தில் அந்த தொகையை நான் முப்பது மாணவர்களின் ஒரு செமஸ்டருக்கான கட்டணமாக கட்டிவிட முடியும். ஆயிரக்கணக்கானவர்கள் மருத்துவமனைக்கு வந்தும் போய்க் கொண்டும் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான பேர் சிகிச்சை வழங்கிகொண்டு இருக்கிறார்கள் என்றால் அதில் நூற்றுக்கணக்கான பேருக்கு உதவி தேவையிருக்கும் அந்த உதவியினால் என்ன விளைகிறது என்பதை நான் பார்க்கிறேன். அது தான் எனக்கு முக்கியம்.
அடர்வனம் திட்டம்
இரண்டாவது கல்வி உதவித்தொகைப் பெறுவதற்கும் இதே விதிமுறைகள் தான். நீங்கள் நன்றாகப் படிக்கிற மாணவனாக இருந்து உங்களால் நல்ல கல்லூரியில் இடம் வாங்க முடிந்து உங்கள் பெற்றோர்களால் படிக்க வைக்க இயலவில்லை என்றால் அந்த இடத்தில் தகவல்களை கேட்டறிந்து நிசப்தம் கட்டாயமாக உதவிகள் செய்கிறது. இது நிசப்தத்தினுடைய அடிப்படை புரிதல். ஏன் தனியார் கல்லூரியில் படிக்க வைக்கின்றோம் என்றால் உங்களுக்கு முதலிலே தெரிந்திருக்கும் தனியார் கல்லூரி என்றால் யாருக்கு எல்லாம் மார்க் வாங்க முடியவில்லையோ இரண்டாவது கட்டம், மூன்றாவது கட்டத்தில் இருக்கக்கூடிய பசங்கள்தான் தனியார் கல்லூரியில் சேர்கிறார்கள். நன்றாகப் படித்து பன்னிரெண்டாவது முடிக்கின்ற பையனுக்கு தெரிந்திருக்கும் நாம் ஒழுங்கா படித்திருக்கிறோம் என்று.
மற்ற மாணவன் படிக்கவில்லை, படிப்பு வரவில்லையெனில் அப்போது அவன் தனியார் கல்லூரியில் படிக்கிறான். அவன் குடும்பம் சிரமத்துல இருக்கிறதென்று அவனுக்கே தெரிந்திருக்கும். அல்லது அந்த மாணவரின் அம்மா அப்பாவிற்கு தெரிந்திருக்கும் நம் பையனை நம்மால் படிக்க வைக்க முடியும் இல்லை முடியாது என்று, முடியாது என்கிற பட்சத்தில ஏன் கொண்டுபோய் பிரைவட்ல போய் சேர்க்கிறாங்க, அதுவொரு கேள்வி எப்படியாவது சமாளித்து விடலாம், சமாளித்துவிடட்டும் என்ற எண்ணம்தான். இதே ஒரு அரசு கல்லூரியில் படிக்கக்கூடிய பையன், வறுமை. அம்மா, அப்பா இல்லை, இல்லை யாராவது ஒருத்தர் இல்லை அரசு கல்லூரியில் படிக்கிறான் அவனுக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் இருந்தால் அந்த வருடத்திற்கான ஒரு செமஸ்டர் பீஸ் கட்டிரலாம் என்றால் அவனுக்கு கட்டிவிடலாம். இங்கு யாரோ ஒருவர் கொடுக்கின்ற பணத்தை வாங்கி சும்மா இறைச்சு விட முடியாது அதானாலே சில கட்டுபாடுகளை செய்ய வேண்டியதாக இருக்கிறது.
இதில் நிறைய சீட்டிங்க்ஸ் உண்டு. நம்மளை நிறைய நபர்கள் ஏமாற்றுவார்கள். நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு ரெஸ்டிக்டடா இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு தப்பிக்க முடியும். நீங்கள் எவ்வளவு லிபரலாக மாறுகிறேர்களோ உங்களை நெருக்கி தள்ளுற ஆட்களோட எண்ணிக்கை அதிகமாகிடும்.
இப்படியான கட்டுப்பாடுகளால் உங்களுக்கு சில கசப்பான அனுபவங்களும் கிடைச்சிருக்கும். அதைப் பற்றி சொல்லுங்க?
கண்டிப்பா வந்திருக்கு. ஆனால் இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டால் ஒன்றுமே செய்ய முடியாது. நிறைய இடங்களில் இருந்து பண உதவி கேட்பார்கள். கேட்பவர்கள் எல்லோருக்கும் நாம் கொடுத்துவிட முடியாது. என்னைப் பொறுத்தவரை கல்விக்கென்று உதவி செய்கிற போது நிசப்தம் அந்த மாணவர்களோடு எப்போதும் தொடர்பில் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அந்த மாணவன் எவ்வாறு படிக்கிறான், வேறுவேறு என்ன என்ன விதமான ஆக்டிவிட்டி செய்கிறான் என்று கல்வி சார்ந்து நான் எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும் என்று நினைப்பேன். இதை எல்லாவற்றையும் விட முக்கியமாக நான் கருதுவது நாலுமுறை அந்த மாணவனிடம் பேசினால் அதில் இரண்டு முறையாவது நீ நன்றாக படித்து வந்தால், உன்னை போன்று இரண்டு பேரை படிக்க வை என்று சொல்வதுண்டு. இதுவொரு தொடர் சங்கிலி மாதிரிதான் என்று நான் நினைக்கிறேன்.
இங்கு பொதுவாக ஒரு மனநிலை இருக்கிறது. நமக்கு நல்ல பெயர் வரவேண்டும் என்றுதான் இருக்கிறது. நமக்கு நல்ல பெயர் வரவேண்டும் என்றால் இரண்டு நபருக்கு நடுவில் மீடியேட்டரா இருக்கிறவன் யாரிடம் உதவி வாங்கித் தருக்கிறேன் என்று சொல்ல மாட்டார்கள். யாருக்கு அந்த உதவி போகிறது என்றும் சொல்ல மாட்டார்கள். முடிந்தவரை அந்த இருவருக்கும் நடுவில் ஒரு தடுப்புச்சுவராக இருக்கக் கூடியவர்கள்தான் இங்கு அதிகம். அவர்கள் வந்து கேட்பார்கள் இதுவரை விசாரித்துப் பார்த்ததில் அதைவிட தகுதியானவர்கள் இருக்கிற போது அதை ஏன் நான் செய்யவேண்டும் என்று அவற்றை தவிர்க்க முயற்சி செய்வதுண்டு. அப்படி தவிர்க்கும் போது அந்த பக்கம் சென்று ஏதாவது சொல்லிட்டு செல்கிறவர்களும் உண்டு. அதைப் பத்தி பெரிதாக நான் கண்டு கொள்வது இல்லை. நிசப்தத்திற்கு வரக்கூடிய பணம் எப்படி வருகிறது என்று எனக்குத் தெரியும் எவ்வளவு கஷ்டப்படுறவங்க இதில் இருக்கிறார்கள் என்றும் தெரியும், அதில் ஐநூறு ரூபாய் அனுப்புகிறவர்களில் தொடங்கி, நூறு ரூபாய் அனுப்புகிறவர்கள் என்று நூற்றுக்கணக்கான நபர்கள் இருக்கிறார்கள். அப்படியான அந்தப் பணத்தை வாங்கி யாருக்கோ தானம் பண்ணுவதற்கு இது என்னுடைய பணம் கிடையாது, என்னுடைய வருமானம் கிடையாது, அதைத்தவிர்த்து கெட்ட பெயர் வந்தால் வந்துவிட்டுப் போகட்டும். நூறு பேர் நல்லாதாகச் சொல்லும் போது, பத்து பேர் தப்பாக சொல்லத்தான் செய்வான். நீங்கள் வீட்டைவிட்டு வெளியில் வந்து வேலை செய்யும் போது என்ன வேலை செய்தாலும் நாலு நபர் திட்டத்தான் செய்வார்கள்.
இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு இருந்தால் அடுத்த கட்டத்திற்கு நகரவே முடியாது.
உங்களுக்கு கிடைத்ததில் உண்மையான ஊக்கம் எது? எது உங்களைத் தளர்ச்சி அடையச் செய்யும்?
எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. நான் கடவுளிடம் இதைக்கொடு அதைக்கொடு என்று கேட்டது கிடையாது. இதை நான் வெளியில் சொன்னதும் இல்லை. நான் கடவுளிடம் எனக்கு நல்லது, கெட்டது, இன்பம், துன்பம், மகிழ்ச்சி, சந்தோசம் எல்லாத்தையும் உன் காலடியில் போட்டு விடுகிறேன். காற்றில் பறக்கிற இறகு மாதிரி என் மனதை வைத்துக்கொள்ள உதவி செய் என்பது என்னுடைய தினசரி பிரார்த்தனையாக வைத்துக் கொள்வதுண்டு. அதுமாதிரி தான்
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்
என்ற திருக்குறளை எடுத்துக் கொண்டால் இந்த வேலையை இவன் செய்யட்டும் என்று நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இதில் தளர்ச்சி கிடையாது, சந்தோசம் கிடையாது, ஊக்கம் கிடையாது. நாம் செய்துகொண்டு போய்கொண்டே இருப்போம் அதன் விளைவைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வது கிடையாது.
இப்பணிகளை செய்யத்தூண்டும் அகத்தூண்டல்கள் எப்படியான சிந்தாந்தத்திலிருந்து வெளி வந்தது என்று சொல்ல முடியுமா அல்லது உங்களுடைய கலகத்தன்மையைக் கொண்டும் உங்கள் எளிமையைக் கொண்டும் காந்தியவாதி என்று புரிந்து கொள்ளலாமா?
இரண்டு விஷயம் உண்டு. கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் மாணவர்களிடம் பேச அழைக்கும் போது நான் இரண்டு புத்தங்களை உறுதியாக படிக்கச் சொல்லுவதுண்டு. அதையும் அவர்களுடைய பதினெட்டு வயதிற்குள் இந்த இரு புத்தங்களையும் படித்து முடிக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. ஒன்று சத்திய சோதனை. ஒரு மூன்று மாதம் சீரியஸாக படிக்க வேண்டியது இருக்கும். இரண்டாவது புத்தகமாக திருக்குறள். குறைந்தது ஒரு பத்து குறள். வாழ்க்கையில் நமக்கான குறள் என்று ஒரு பத்து குறள். அந்த திருக்குறளை எவ்வளவுக்கு எவ்வளவு தீவிரமாக பின்பற்ற முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு தீவிரமாக பின்பற்றிட வேண்டும். நமக்கென்று ஆத்மார்த்தமாக பிடித்த ஒரு பத்து திருக்குறள். இந்தக் குறளை எந்த காலத்திலும் கைவிட்டு விடக்கூடாது.
வள்ளுவன் காந்தி இந்த இரண்டு பேரும்தான் இன்றைய காலக்கட்டத்திற்கு ரொம்பவும் முக்கியமான சித்தாந்தம் என்று நான் நினைக்கின்றேன். ஏன் என்றால் எல்லாரும் ஏதாவது ஒரு விதத்தில் சார்புத்தன்மை உடையவர்களாக இருக்கக்கூடிய சித்தாந்தங்கள் தான் நம்மைச் சுற்றி இருக்கக்கூடிய பெரும்பாலான சித்தாந்தங்கள்.
ஏதாவது ஒரு விதத்தில் ஒரு சார்புத்தன்மை இருக்கும். காந்தியம் மட்டும்தான் யார் பாதிக்கப்படுகிறார்களோ அவன் பக்கத்தில் நிற்கக்கூடிய சித்தாந்தம். காந்தியம் மட்டும்தான் நீங்கள் இந்துவா, முஸ்லிமா என்று பார்ப்பது கிடையாது. இந்துவில் இருந்து முஸ்லீம் அடிச்சான்னா முஸ்லீம் பக்கம் நில்லு. முஸ்லீம் இந்துவ அடிச்சான்னா இந்து பக்கம் நில்லு. பணக்காரன் ஏழையை அடித்தால் ஏழை பக்கம் நில், ஏழை பணக்காரனை அடித்தால் பணக்காரன் பக்கம் நில். யார் அதிகமாக அந்த இடத்தில் பாதிக்கப்படுகிறானோ அந்த இடத்தில் நிற்கக்கூடிய சிந்தாந்தம் காந்தியம். அதனால்தான் வாழ்க்கை முழுவதும் காந்தி மேல் விமர்சனம் இருந்தது. இன்றைக்கும் காந்தி மேல விமர்சனம் வருவதற்கு காரணமும் அதேதான் என்று நினைக்கிறேன். ஆக இந்த இரண்டு சிந்தாந்தங்கள் வாழ்க்கையில் நமக்கு ரொம்ப முக்கியமான சித்தாந்தங்கள் என்று சொல்லுவேன். இந்த இரண்டு சித்தாந்தங்கள் தான் என்னை உருவாக்கி இருப்பதாக நான் நம்புகிறேன்.
உங்களுடைய குழந்தைகளுக்கு சமூகம் குறித்த புரிதல்களை எப்படி உருவாக்குகிறீர்கள் அல்லது எப்படி உருவாக்க விரும்புகிறீர்கள்?
குழந்தைகளுக்கு எதையும் திணிக்கக்கூடாது என்று நான் நினைப்பேன். என்னுடைய பெற்றோர்கள் என்னை எதையும் செய்யச் சொல்லி வற்புறுத்தியது கிடையாது. யாரெல்லாம் குழந்தைகள் மேல இதைத் திணிக்கிறார்களோ அந்த குழந்தைகள் திசைமாறிப் போவதற்கான எல்லா சாத்தியங்களும் உண்டு. நான் என் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். நான் செய்யக்கூடிய செயல்களில் இருந்து அவர்கள் இதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். இப்படிச்செய் இப்படிச் செய்யாதே இதைப்படி என்பதை எந்த காலத்திலும் நான் சொல்லக்கூடாது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன். நான் படிப்பதைப் பார்த்து அவன் படிக்க வேண்டும், நான் பேசுவதைப் பார்த்து அவன் புரிந்துகொள்ள வேண்டும். பெற்றோரிடமிருந்து அதைக் கற்றுக் கொள்வதற்கான சூழலை வீட்டில் உருவாக்கி வைக்க வேண்டும். மற்றபடி வலியுறுத்தி எதையும் சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்.
கல்விக்கு நிகராக விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். அதைப்பற்றியும் கொஞ்சம் சொல்ல முடியுமா?
நான் எந்த காலத்திலும் விளையாட்டு விளையாண்டதே இல்லை. ஒரு கட்டத்தில் பார்த்தால் இந்தியா இல்லை, தமிழ்நாட்டில் விளையாடுவதற்கான உடல்வாகே இல்லையோ என்கிற மாதிரி எனக்கு தோன்ற ஆரம்பித்தது. வெளிநாடுகளில் இருக்கக்கூடிய உடலமைப்புக்கும் தமிழ்நாட்டில இருக்கிற உடலமைப்புக்கும் குறிப்பா வேற்று மண்டலம் என்று பார்த்தால் நாம் விளையாட்டில் ஏதோவொரு விதத்தில் பலவீனமாக இருபாதைப் போல் எனக்குத் தோன்றியது. அந்த மனநிலையை மாற்ற வேண்டி இருக்கிறது என்று எனக்கொரு சின்ன தூண்டல் உண்டு. அதனால் விளையாட்டிற்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுக்கிறது இல்லை.
எம் ஜி ஆர் காலனி என்று ஒரு காலனி இருக்கிறது. அந்த காலனி நரிக்குறவர்கள் உள்ள காலனி. நாடோடிகள் அவர்கள். அவர்கள் வந்து இப்போது ஒரு ஊரில் இருக்கிறார்கள். அந்த பசங்களிடம் யாரோ ஒரு என் ஜி யோ போய் என்ன சொல்லிவிட்டார்கள் என்றால் படிப்புதான் முக்கியம். படிப்பு மட்டும்தான் உங்களை மாற்றும் என்று சொல்லி விட்டார்கள். அந்த பசங்க ஜிம்னாஸ்டிக்கை விட்டுவிட்டு போய்ட்டாங்க. அவங்களுடைய ரத்தமும் சதையுமே அந்த ஜிம்னாஸ்டிக் தான். அவங்க அப்பா செய்தார்கள், அவர்களுடைய தாத்தா செய்தார்கள். இந்த பசங்களுக்கும் அதற்கான உடலமைப்பு இருக்கும். இவர்கள் சொல்லிச் சொல்லி என்ன பண்ணி விட்டார்கள் என்றால், ஒரு பதினைஞ்சு வருடமாக ஜிம்னாஸ்டிக் என்பதையே விட்டு விட்டார்கள். அப்போ எனக்கு இந்த பசங்களுக்கு மறுபடியும் ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளுக்கு உதவி பண்ண வேண்டும் என்று தோன்றியது. மற்றபடி விளையாட்டிற்கு என்று பெரிதாக நிசப்தத்தில் இருந்து மெனக்கெடுவது இல்லை.
ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளுக்கு உதவி கொடுக்கிறீங்க அதில் எதுவும் குறிப்பிட்ட நோக்கம் என்று எதுவும் இருக்கிறதா?
ஜிம்னாஸ்டிக் கற்றுக்கொண்ட பையன், அவன் ஜிம்னாஸ்டிக் காலேஜ் படிக்கிற போதே அவனுக்கு பிராப்பராக கல்கத்தா தேசிய சாய் விளையாட்டு அத்தாரட்டியில் கல்கத்தாவில் ஒரு இரண்டு மாதம் பயிற்சி கொடுத்தார்கள். அதுவும் கோச்சாக மாறுவதற்க்கான பயிற்சிகொடுத்தார்கள். அந்த பையன் அங்கு பயிற்சிக்காக போனான். இப்போது தமிழ்நாடு யுனிவர்சிட்டி அசோசியேஷனில் வந்து கோச்சாக இருக்கான். நரிக்குறவர் குடும்பத்தில் இருந்து வரக்கூடிய பையன் வந்து தமிழ்நாட்டோட யுனிவர்சிட்டி அசோசியேஷனில் கோச்சாக இருக்கிறது ஒரு பெரிய நகர்வுதானே. ஆனா அதை நாங்கள் கிளைம் பண்ணிக்கொள்ளவில்லை அந்த பையன் எல்லாவிதத்திலும் திறமையான பையன். அவனுக்கான சில உதவிகளைச் செய்தோம்.
உங்கள் அறப்பணிகளின் எல்லைகளை விஸ்தரிக்கும் திட்டம்?
இதில் விஸ்தரிக்கின்ற, இதைச் செய்ய வேண்டும் என்று ஒரு திட்டத்தை போட்டுவிட்டோம் என்றால் அதே எண்ணம் மட்டும் தான் நம் மனது முழுதும் ஆக்கிரமித்து இருக்கும். அடுத்து இதைச் செய்ய வேண்டும், அடுத்து இதைச் செய்ய வேண்டும் என்று இருந்தால் வாழ்வதற்கான சந்தோஷத்தையே தொலைத்து விடுகிறோம் நாம். அதில் ஒரு பகையாளி வருவான். நம்மளைப் பற்றி வயிற்றெரிச்சல் பேசக்கூடியவன் வருவான், புறம் பேசுறவன் வருவான். ஒரு காலெடுத்து வைக்கின்றோம், அந்த இடத்தில் அதன் பக்கத்தில் இருக்கிறவனுக்கு வருத்தமாக இருக்கிறது. அவன் நம்மளைப் பற்றி சங்கடப்படுகிறான் என்றால் நாம் ஒரு காலை எடுத்து பின்னாடி வைத்துக் கொள்வது தப்பகிடையாது. இதை விஸ்தரிக்கணும் என்று திட்டம் போட்டு இதைப்பண்ணுறோம். அடுத்து இது என்று நாம் பண்ணும் போது தேவையில்லாத குடைச்சல்களை உள்வாங்கிக் கொண்டு இருக்க வேண்டும். அந்தக் குடைச்சல்கள் என்னவாகும் என்றால் நம்முடைய சந்தோஷத்தை வாழ்வதற்கான அர்த்தத்தை எல்லாவற்றையும் அது சிதைத்து விடும். இது தேவையில்லை என்று நினைக்கிறேன். போகிற போக்கில் போயிட்டே இருப்போம். நம்மளால் எது செய்ய முடியுமோ அதைச் செய்வோம். செய்ய முடியாத பட்சத்தில் அதற்கான வேற வழியை பார்த்துக் கொள்வோம்.
உங்களால் பயனடைந்தவர் உங்களோடு பணியில் துணை நிற்கிறார்களா?
நிறைய பசங்கள் இருக்கிறார்கள். அதையெல்லாம் மறுக்கவே முடியாது. நீங்க ஒரு சினிமாவில் காட்டுகிற மாதிரி முன் பின் அப்படி என்று ஒரு பிரேமில் கொண்டு வரவே முடியாது. இதுவொரு ஆன்கோயிங் ப்ராசஸ். நீங்க ஓடுகிற ஓட்டத்திற்கே நீங்கள் உருவாக்கிய அத்தனை பேரும் கூடவே ஓடிட்டு இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது அதை எதிர்பார்க்கவும் கூடாது. ஆனால் அவர்கள் எல்லாரும் ஏதாவது ஒருவிதத்தில் நம்மோட தொடர்பில் இருப்பார்களே ஒழிய, நான் செய்கிற எல்லா வேலையிலும் இருபத்தி நான்கு மணிநேரமும் என்னுடனே இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு இதுவொரு இயக்கம் கிடையாது, கட்சி கிடையாது, ஒரு ரசிகர் மன்றமும் கிடையாது. நாலுபேருக்கு கை தூக்கி விடுகிறோம் அவன் யாரையோ எங்கையோ கை தூக்கி விடுறான். எங்கயாவது பார்க்கும் போது சிரித்துக் கொள்கிறோம் அவ்வளவுதான்.
உங்களைப் பொருத்தவரை மாற்றம் என்பது என்ன?
மாற்றம் என்பது தனிமனித மாற்றம் மட்டுமே தான். சுயநலத்தில இருந்து கொஞ்சம் பொதுநலம். எல்லா மனிதர்களுக்கும் சுயநலம் இருக்கும். எனக்கும் சுயநலம் இருக்காது என்றெல்லாம் இல்லை. நான் நல்லாயிருக்கணும் என் குடும்பம் நல்லாயிருக்கணும் என் குழந்தை நல்லாயிருக்கணும் நிறைய சம்பாதிக்கணும், வருமானம் வரணும் இந்த மாதிரி எல்லா சுயநலங்களும் இருக்கும். இதைத்தாண்டி யாராவது ஒருத்தவங்களுக்கு உதவி செய்ய முடியுமா, என்னுடைய ஒரு கால்மணி நேரத்தை ஒதுக்க முடியுமா என்று நான் நினைத்தேன் என்றால் அது எனக்குள் உருவாக்குகிற மாற்றம். இந்த கால்மணி நேரம் என்பது ஒரு ஐந்து மணிநேரமாக மாறியது என்றால் அது மிகப்பெரிய மாற்றம். ஒவ்வொரு மனுசனும் ஒரு இரண்டு மணிநேரத்தை அடுத்தவங்களுக்காக கொடுக்கிறோம் என்றால் அதுதான் மிகப்பெரிய மாற்றமாக இருக்கும். அந்த இரண்டு மணிநேரம் அடுத்தவர்களைப் பற்றி சிந்திக்கலாம், களப்பணிகள் செய்யலாம். இதுதான் மாற்றம். ஒவ்வொரு தனிமனிதனும் ஒருநாளில் நம்முடைய நேரம் போக செலவழிக்க முடிந்த நேரத்தை பிறருக்காக என்று யோசித்தால் அது மிகப்பெரிய மாற்றங்களை பரவலாக உருவாக்கும்.
நிசப்தம் கல்விப்பணிகளில் பயன்படும் மாணவர்களில் எப்படியான மென்டார்ஸ்கள் இருக்கிறார்கள்?
மென்டார்ஸ் இருக்கிறார்கள் எல்லாமே சக்சஸ் என்று சொல்ல முடியாது. ஒரு ஆர்வத்திற்கு நான் வந்து மென்டராக வருகிறேன் என்று சொல்வார்கள். இதை குற்றச்சாட்டாகவும் சொல்ல முடியாது. ஒருத்தர் வருவார். அவர் வந்த பிறகு கல்யாணம் ஆகும், அப்பறம் டிரான்ஸ்பர் மாறும். அப்பறம் ப்ரொமோஷன் கிடைக்கும், வந்த அப்புறம் வேலை போகும், அவங்களோட குடும்ப சூழல், குடும்ப பிரச்சனை எல்லாம் வந்து பெரும்பாலானவர்களை ஒரு வட்டத்தைத் தாண்டி வரவைக்க வேண்டும். ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் அதைச்செய்ய முடியாத அளவு சூழல் இருக்கும். அந்தமாதிரி தான். யாரையும் குறையும் சொல்ல முடியாது. சில நபர்கள் சீரியஸாக வேலை செய்கிறார்கள்.
பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்குதல்
பசங்களுக்கு சிவில் சர்வீஸ்க்கு பயிற்சி வேண்டும் என்றால் அதற்கு என்ன புத்தகம் வேண்டும், என்ன புத்தகம் வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று இயங்கக்கூடிய மென்டார்ஸ் இருக்கிறார்கள். இதை நூறு சதவீதம் சக்சஸாக பண்ண முடியாது. ஏன் என்றால் இருக்கக்கூடிய எல்லா பசங்களும் கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய பசங்கள். வேலையில் இருக்கிறவர்கள் எல்லோருமே பெங்களூர், சென்னை, கொச்சி என்று வெளியூரில் இருக்கிறவர்கள். அவர்களுக்கான தொடர்பு வந்து அவ்வளவாக ஒரு பர்சனல் அட்டாச்மெண்ட் வருவது இல்லை. அது போகப்போக சரியாகலாம் என்று நினைக்கிறேன்
நேரடி அரசியல் பிரவேசம் எப்போது?
நேரடி அரசியல் பிரவேசம் என்று நான் எதையுமே திட்டமிடுவதே கிடையாது. இதைச் செய்ய வேண்டும் அப்படிங்கிறது எல்லாம் கிடையாது. அடுத்து அரசியலுக்கு வருவேனா இல்லையா என்று ஏன் இப்போது யோசித்து மண்டகாய வேண்டும். நீங்கள் அரசியலுக்கு என்று வந்துட்டா உங்களை வெட்டுவதற்கு என்று நாலுபேர் ரெடியாக இருப்பார்கள். வெட்டுவது என்றால் கழுத்தை வெட்டுவதைச் சொல்லவில்லை. உங்களை எங்கு காலி பண்ண வேண்டும் என்று யோசிக்க நாலுபேர் இருப்பார்கள். ஆனால் அரசியல் சம்மந்தப்பட்ட வேலைகள் நான் நிறைய செய்துட்டுதான் இருக்கிறேன்.
அதை மணிகண்டனுக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்கிறது இல்லை என்றாலும், எஸ் வி சரவணனுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று கேட்டிருக்கிறேன். நேரடி அரசியல் என்று தெரியவில்லை. மற்றபடி காலம் வந்தது என்றால் அப்படி ஒரு சூழல் உருவானால் அதைப் பார்ப்போம்
நன்றி..
***
நிசப்தம் அறக்கட்டளை மூலமாக உதவிகள் பெறுவதற்கு இவரது வலைதளத்திற்கு செல்லவும் www.nisaptham.com
நம் தலைவிதியை நாம் தனியார் கொடுங்கோன்மையிடம் ஒப்படைத்துள்ளோம். – நோம் சோம்ஸ்கி
நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி – இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்
Noam Chomsky: Coronavirus – What is at stake? | DiEM25 TV | Srećko Horvat
தமிழில் : பாரதிராஜா
ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன். இந்தச் சிறப்பு அத்தியாயத்திற்காக மிக்க மகிழ்ச்சியாகவும் கௌரவமாகவும் உணர்கிறேன். ஏனென்றால், இன்று ஒரு சிறப்பு விருந்தினர் நம்முடன் இணைகிறார். அந்தச் சிறப்பு விருந்தினர் எனக்கு மட்டுமல்ல, பல தலைமுறைகளுக்கு நாயகன். துரதிர்ஷ்டவசமாக நாங்கள் இருவருமே சுயதனிமையில் இருக்கிறோம். இது ஒரு சிறப்புச் சந்தர்ப்பமும் கூட. அறிமுகத்தை இன்னும் நீட்டிக்காமல்… இதைப் பார்க்கும் உங்களில் பெரும்பாலானவர்களுக்கு நோம் சோம்ஸ்கி யாரென்று தெரியும். நோம் இன்று நம்மோடு இணைகிறார் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
ஹலோ நோம்! எங்கே இருக்கிறீர்கள்? ஏற்கனவே சுயதனிமையில் இருக்கிறீர்களா? எவ்வளவு காலம்? இதையெல்லாம் எங்களுக்குச் சொல்வீர்களா?
நோம் சோம்ஸ்கி: நன்று, நான் அரிசோனா மாநிலம் டுசாயன் நகரத்தில் சுயதனிமையில் இருக்கிறேன்.
ஸ்ரெச்கோ: சரி, நீங்கள் 1928-இல் பிறந்தீர்கள். எனக்குத் தெரிந்தவரை உங்கள் முதல் கட்டுரையை நீங்கள் பத்து வயதாக இருக்கும் போது எழுதினீர்கள். அது ஸ்பானிய உள்நாட்டுப் போர் பற்றிய கட்டுரை. அதாவது, பார்சிலோனா வீழ்ச்சிக்குப் பிறகு. அது 1938-இல். என் தலைமுறைக்கு இது மிகவும் தொலைவில் நடந்தது போல் தெரிகிறது. நீங்கள் இரண்டாம் உலகப்போரிலிருந்து தாக்குப் பிடித்திருக்கிறீர்கள். ஹிரோஷிமாவில் நடந்ததற்கான சாட்சியாக இருந்திருக்கிறீர்கள். நீங்கள் பல மிகப்பெரும் முக்கிய அரசியல் – வரலாற்று நிகழ்வுகளுக்குச் சாட்சியாக இருந்திருக்கிறீர்கள். வியட்நாம் போரில் தொடங்கி, எண்ணெய் நெருக்கடி வரை, பெர்லின் சுவர் வீழ்ச்சி வரை… அதற்கு முன் செர்நோபில் நிகழ்வுக்குச் சாட்சியாக இருந்திருக்கிறீர்கள். அதன் பிறகு, 90-களில் உலகளாவிய நிகழ்வான 9/11-க்கு வழிவகுத்த வரலாற்று நிகழ்வுகளுக்கும், மிகச் சமீபத்தில்… ஒரு நீண்ட வரலாற்றை – உங்களைப் போன்ற ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கிச் சொல்ல முயல்கிறேன்… ஆனால் உங்களைப் போன்ற ஒருவருக்கு மிகச்சமீபத்திய நிகழ்வு என்றால் 2007-2008-இல் நிகழ்ந்த பொருளாதார வீழ்ச்சி. எனவே, அத்தகைய வளமான வாழ்க்கையை வாழ்ந்தவர் – இப்பெரும் வரலாற்று நிகழ்முறைகளில் ஒரு சாட்சியாகவும் பங்காளராகவும் இருந்தவர் என்ற இந்தப் பின்னணியில், தற்போதைய இந்தக் கொரோனாக்கிருமி நெருக்கடியை எப்படிப் பார்க்கிறீர்கள்? இது ஒரு வரலாறு காணாத வரலாற்று நிகழ்வா? உங்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறதா? இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? அதுவே என் கேள்வி.
நோம்: என்னைத் துரத்திக் கொண்டிருக்கும் என் ஆதிகால நினைவுகள் எவை என்றால் அவை 1930-களில் இருந்து எனலாம். நீங்கள் குறிப்பிட்ட பார்சிலோனா வீழ்ச்சி பற்றிய கட்டுரை, முக்கியமாக ஐரோப்பா முழுமைக்கும் இரக்கமில்லாமல் பரவிக்கொண்டிருந்த பாசிசக் கொள்ளைநோயின் பரவல் மற்றும் அது எப்போது முடியும் என்பது பற்றியது. போர் வருகிறது என்பதும் போருக்குப் பின் அமெரிக்க ஆதிக்கத்துக்கு உள்ளான வான்வெளி என்றும் ஜெர்மானிய ஆதிக்கத்துக்கு உள்ளான வான்வெளி என்றும் இரண்டாகப் பிரிந்துதான் போர் முடிவுக்கு வரும் என்றும் அந்நேரத்திலும் அதற்குப் பின் சில ஆண்டுகளும் அமெரிக்க அரசிலிருந்த ஆய்வாளர்கள் எதிர்பார்த்திருந்தார்கள் என்பது பிற்காலத்தில், அதுவும் நீண்ட காலம் கழித்து, உள் ஆவணங்கள் வெளிவந்த போதுதான் புரிந்தது. எனவே என் இளம்பருவ அச்சங்கள் அனைத்தும் முழுமையாகப் பிறழ்ந்து விடவில்லை. அந்த நினைவுகள் இப்போது மீண்டும் வருகின்றன.
நான் சிறு குழந்தையாக இருந்த போது ஹிட்லரின் நியூரம்பெர்க் பேரணி உரைகளை வானொலியில் கேட்ட அனுபவத்தை இப்போது நினைவுகூர முடிகிறது. சொற்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் மனநிலையையும் அச்சுறுத்தலையும் மற்றவற்றையும் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது. இன்று டொனால்ட் ட்ரம்பின் பேரணிகளைக் கேட்கும்போது அது எதிரொலிக்கிறது என்பதை இப்போது சொல்ல வேண்டும். இவர் ஒரு பாசிசவாதி என்றில்லை. அந்த அளவுக்கெல்லாம் இவரிடம் சிந்தாந்தம் எதுவுமில்லை. இவர் ஒரு சமூக விரோத மனநோயாளி (sociopath). அவ்வளவுதான். ஆனால் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் தனி மனிதன். ஆனால் இந்த மனநிலையும் அச்சமும் அப்போது பார்த்தது மாதிரியே இருக்கிறது. ஆனால் இந்த நாட்டின் மற்றும் உலகத்தின் தலைவிதி ஒரு சமூகவிரோத மனநோய்க் கோமாளியின் (sociopathic buffoon) கைகளில் இருக்கிறது என்கிற சிந்தனை அதிர்ச்சியூட்டுகிறது.
கொரோனாக்கிருமியே போதுமான அளவு தீவிரமானதுதான். ஆனால் இதைவிடப் பலமடங்கு பெரிய கோரம் ஒன்று நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் நினைவூட்டுவது பயனுள்ளதாக இருக்கும். மனிதகுல வரலாற்றிலேயே நடந்திருக்கும் எதைவிடவும் பல மடங்கு மோசமான ஒரு பேரழிவின் விளிம்பை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். அந்தப் படுகுழி நோக்கிய ஓட்டத்தில் டொனால்ட் ட்ரம்பும் அவரது அடிப்பொடிகளும் முன்னணியில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சொல்லப்போனால், நாம் சந்தித்துக்கொண்டிருக்கிற பெரும் அச்சுறுத்தல்கள் இரண்டு இருக்கின்றன. ஒன்று, ஆயுதக் கட்டுப்பாட்டு ஆட்சியின் கைகளில் எஞ்சியிருந்தவற்றையும் கிழித்துப் போட்டதன் மூலம் மேலும் மோசமாகியிருக்கும் – வளர்ந்து வரும் அணு ஆயுதப்போர் அச்சுறுத்தல்.
இன்னொன்று, நிச்சயமாக, வளர்ந்து வரும் அச்சுறுத்தலான புவி சூடாதல். இரண்டு அச்சுறுத்தல்களையுமே சமாளிக்க முடியும். ஆனால் நேரம் நிறைய இல்லை. கொரோனாக்கிருமி கொடுமையான கொள்ளைநோய்தான். அதனால் திகிலூட்டும் விளைவுகள் இருக்கலாம். ஆனால் அதற்கு மீட்சி இருக்கும். ஆனால் மற்ற இரண்டுக்கும் மீட்சியே இராது. அத்தோடு முடிந்தது. அவ்வளவுதான். அவற்றை நாம் கையாளாவிட்டால், நம் கதை முடிந்தது. எனவே என் இளம் பருவத்து நினைவுகள் என்னைத் துரத்திக் கொண்டுதான் இருக்கின்றன, ஆனால் இப்போது வேறொரு பரிமாணத்தில் வருகின்றன. அணு ஆயுதப்போர் அச்சுறுத்தல்… ஒவ்வோர் ஆண்டின் முடிவிலும் தீர்ப்பு நாளுக்கான கடிகாரம் மாற்றியமைக்கப்படுகிறது, அதாவது முடிவு என்பது நள்ளிரவு என்று வைத்துக்கொண்டால் நிமிடமுள் எங்கிருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது, அதன்படி ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்திலும், அதாவது ஒவ்வொரு ஜனவரியிலும் அதைப்பார்த்து உலகம் உண்மையிலேயே எங்கே இருக்கிறது என்று ஓரளவு புரிந்து கொள்ள முடியும். ஆனால் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து நிமிடமுள் இன்னும் இன்னும் நள்ளிரவுக்கு மிக அருகில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு நள்ளிரவுக்கு இரண்டு நிமிடங்கள் இருந்தன. இதுவரை நாம் அடைந்ததிலேயே இதுதான் மிகப்பெரும் உச்சம். இந்த ஆண்டு, ஆய்வாளர்கள் நிமிடங்களைத் தூக்கிப் போட்டுவிட்டார்கள். இப்போது நொடிகளில் கணக்கிடத் தொடங்கி விட்டார்கள். நள்ளிரவுக்கு 100 வினாடிகள் இருக்கின்றன. இதுதான் இதுவரை இருந்ததிலேயே நெருக்கமான தொலைவு. அணு ஆயுதப்போர் அச்சுறுத்தல், புவி சூடாதல் அச்சுறுத்தல், மக்களாட்சியின் சீரழிவு (மக்களாட்சி இந்த இடத்துக்குப் பொருத்தமானதில்லை என்றாலும் இந்த நெருக்கடியை முறியடித்து வெளியேற அது ஒன்றுதான் மிச்சமிருக்கும் ஒரே நம்பிக்கை, ஏனென்றால் அது மக்கள் அவர்களின் தலைவிதியைத் தம் கட்டுப்பாட்டுக்குள் எடுக்கவிடும். இது நடக்காவிட்டால் நம் கதை முடிந்தது!) ஆகிய மூன்று விஷயங்களைப் பார்க்கும் போது… சமூகவிரோத மனநோய்க் கோமாளிகளிடம் நம் தலைவிதியை விட்டால் நாம் முடிந்தோம். அவ்வளவுதான். அம்முடிவு மிக நெருக்கமாக வந்துகொண்டிருக்கிறது. டிரம்ப்தான் ஆகப்படுமோசம்.
ஏனென்றால் அமெரிக்காவின் மூச்சுமுட்டும் அதிகாரம் அப்படி. அமெரிக்காவின் சரிவு பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். உலகத்தைப் பாருங்கள். மற்ற நாடுகள் மீது பொருளியல் தடைகளை, கொலைகாரத்தனமான – பேரழிவு விளைவிக்கும் பொருளியல் தடைகளைப் போட முடிகிற ஒரே நாடு அமெரிக்காதான். இவர்கள் சொல்வதை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும். ஐரோப்பாவுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஈரான் மீதான நடவடிக்கைகளை ஐரோப்பா வெறுக்கிறது. ஆனாலும் கடைபிடித்துத்தான் ஆக வேண்டும். எஜமானன் சொல்வதை எல்லோரும் கடைபிடித்துத்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால், சர்வதேச நிதி அமைப்பை விட்டுத் தூக்கி வீசப்படுவார்கள். இது இயற்கையின் சட்டம் அல்ல. வாஷிங்டனில் இருக்கும் எஜமானனுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பது ஐரோப்பாவில் எடுக்கப்பட்ட முடிவு. மற்ற நாடுகளுக்கு அந்த வாய்ப்புக் கூடக் கிடையாது.
கொரோனாகிருமிக்கு வருவோம். இதில் அதிர்ச்சியளிக்கும் கடினமான கூறு என்னவென்றால், வலியைக் கூட்டுவதற்காகவே பொருளியல் தடைகளைப் பயன்படுத்துதல் – அதையும் முழுமனதோடு வேண்டுமென்றே செய்தல். ஈரான் பெரும் உள்நாட்டுப் பிரச்சனைகளில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கும் ஒரு மண்டலத்தில் இருக்கிறது. ஆனால் திட்டமிட்டு வெளிப்படையாகவே வடிவமைக்கப்பட்ட பொருளியல் தடைகள் மூலம் கழுத்தை நெறிக்கும் அளவுக்கு இறுக்கி அவர்களை இப்போது கசக்கக் கசக்கத் துன்பத்துக்குள்ளாக்குகிறது அமெரிக்கா. விடுதலை பெற்ற வேளையிலிருந்து க்யூபா இன்னும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதிலெல்லாம் இருந்து அவர்கள் தாக்குப் பிடித்தார்கள் என்பதும் மீள்திறனோடு நின்றார்கள் என்பதும் திகைக்க வைக்கிறது.
இந்தக் கொரோனாக்கிருமி நெருக்கடியின் பெரும் வேடிக்கைகளில் ஒன்று என்னவென்றால், க்யூபா ஐரோப்பாவுக்கு உதவிக் கொண்டிருக்கிறது. இதைப் பார்க்கும்போது நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இதை எப்படி விளக்குவதென்றே தெரியவில்லை. ஜெர்மனியால் கிரீஸுக்கு உதவ முடியாதாம். ஆனால் க்யூபா ஐரோப்பிய நாடுகளுக்கு உதவுமாம். அதற்கு என்ன அர்த்தம் என்று யோசித்துப் பார்க்க ஒரு கணம் நின்றால், சொற்கள் அனைத்தும் தோற்றுப்போய் விடுகின்றன. இது மத்தியத் தரைக்கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் சாவதையும் நூற்றாண்டுகளாகப் பேரழிவுக்குள்ளாகியிருக்கும் அப்பகுதியிலிருந்து மக்கள் தப்பி ஓடுவதையும், சாவதற்காகவே மத்தியத்தரைக்கடல் பகுதிக்கு ஆட்கள் அனுப்பிவைக்கப்படுவதையும் பார்க்கும்போது ஏற்படுவது போலவே, என்ன சொற்களைப் பயன்படுத்துவது என்றே தெரியவில்லை. இந்த நெருக்கடி, மேற்குலக நாகரிகத்தின் தற்போதைய இந்த நெருக்கடி, பெரும் நாசமாக இருக்கிறது. இவை பற்றி எண்ணும் போது இரையும் கூட்டங்களுக்கு முன் வானொலியில் ஹிட்லர் பிதற்றியவற்றைக் கேட்ட இளம்பருவ நினைவுகள் வரத்தான் செய்கின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது, ‘இந்த உயிரினம் சாத்தியம்தானா’ (‘if this species is viable’) என்கிற வியப்புகூட வருகிறது.
ஸ்ரெச்கோ: மக்களாட்சியின் நெருக்கடி பற்றிக் குறிப்பிட்டீர்கள். இந்த நேரத்தில் வரலாறு காணாத ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம் என நினைக்கிறேன். அதாவது, இன்றுதான் இந்த எண்ணைக் கண்டறிந்தேன், கிட்டத்தட்ட 2 பில்லியன் (200 கோடி) மக்கள், தனிமைப்படுத்தப்பட்டு, சுய தனிமையில் அல்லது ஒதுக்கப்பட்டு என்று ஏதோவொரு வகையில் வீட்டுக்குள் அடைபட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 200 கோடிப்பேர் வீட்டில் இருக்கிறார்கள் – அதற்கு வீடு வைத்திருக்கும் அளவுக்கு நற்பேறு பெற்றவர்களாக இருக்க வேண்டும். அதேநேரம், ஐரோப்பாவும் மற்ற நாடுகளும் தம் எல்லைகளை – உள் எல்லைகளை மட்டுமன்றி வெளி எல்லைகளையும் – மூடியிருக்கிறார்கள் என்பதையும் பார்க்கிறோம். நமக்குத் தெரிந்த எல்லா நாடுகளிலும் விதிவிலக்கு உடைமை (estate of exception) இருக்கிறது. அதாவது, பிரான்ஸ், செர்பியா, ஸ்பெயின், இத்தாலி மற்றும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. தெருக்களில் ராணுவம் இறங்கியிருக்கிறது. ஒரு மொழியியலாளர் என்ற வகையில் உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். இப்போது சுற்றில் இருக்கும் மொழி, டொனால்ட் டிரம்ப் மட்டுமல்ல, மக்ரோன் மற்றும் வேறுசில ஐரோப்பிய அரசியல்வாதிகளும் கூடப் பேசுவதைக் கேட்டீர்கள் என்றால், அவர்கள் தொடர்ந்து போர் பற்றியே பேசுகிறார்கள் என்பதைக் கேட்பீர்கள். ஊடகங்களும் முதல் – ‘முன்வரிசையில்’ நின்று போர் புரியும் மருத்துவர்கள் பற்றிப் பேசுகின்றன. கிருமியை ‘எதிரி’ என்கிறார்கள். இது நிச்சயமாக எனக்கு உங்கள் இளம்பருவ காலத்தில் எழுதப்பட்ட, ‘மூன்றாம் ரெய்ச்’ எனப்படும் ஹிட்லரின் ஆட்சிக்கால மொழி பற்றியும் மொழியின் வழியாக அவர்களின் சித்தாந்தம் எப்படித் திணிக்கப்பட்டது என்பது பற்றியும் பேசும் விக்டர் க்ளெம்பெரரின் ‘லிங்குவா டெர்ட்டி இம்பெரி’ நூலை நினைவூட்டியது. எனவே, உங்கள் பார்வையில், போரைப் பற்றிய இந்த உரையாடல்கள் நமக்கு என்ன சொல்கின்றன? ஒரு கிருமையைப் போய் ஏன் அவர்கள் எதிரி என்று முன்வைக்கிறார்கள்? இந்தப் புதிய விதிவிலக்கான நிலைமையை முறைமையானதாக்குவதற்காகவா (legitimize) அல்லது இந்த உரையாடல்களுக்குள் இதற்கும் மேல் ஆழமான ஏதும் இருக்கிறதா?
நோம்: இது வெறும் வாய்ச்சவடால் என்று சொல்ல முடியாது. அது மிகைப்படுத்தப்பட்டதில்லை என்றே நினைக்கிறேன். அதற்கொரு முக்கியத்துவம் இருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், இந்த நெருக்கடியைக் கையாள வேண்டும் என்றால், போர்க்கால அணிதிரட்டல் போன்ற ஒன்றுக்கு நாம் நகர வேண்டும். அமெரிக்காவைப் போன்ற ஒரு வளமான நாட்டை எடுத்துக் கொண்டீர்கள் என்றால், உடனடிப் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளித்து வெளியேற வேண்டிய வளங்கள் அனைத்தும் உள்ளன. இரண்டாம் உலகப்போருக்கான அணி திரட்டல் இன்று நினைப்பதைவிடப் பலமடங்கு கடனுக்கு இட்டுச்சென்றது. ஆனால் அது ஒரு மிகவும் வெற்றிகரமான அணி திரட்டல்.
அமெரிக்காவின் உற்பத்தியை நான்கு மடங்காக்கி, பொருளாதார மந்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. நாட்டைப் பெரும் கடனில் விட்டுச்சென்றது. ஆனால் வளர்ச்சிக்கான திறனையும் கொடுத்தது. அந்த அளவுக்கு வேண்டியதில்லை. இப்போது நாம் ஒன்றும் உலகப்போரில் இல்லை. ஆனால் அது போன்றதோர் இயக்கத்திற்கான மனநிலை தேவைப்படுகிறது. இந்தக் கடுமையான குறுகியகால நெருக்கடியைச் சமாளித்து வெளியேற அந்த மன வைராக்கியம் தேவைப்படுகிறது. இந்த இடத்தில், 2009-இல் அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட பன்றிக்காய்ச்சல் கொள்ளை நோயை நினைவுகூரலாம். முதல் பார்வையில் சில நூறாயிரம் (சில லட்சம்) மக்கள் மிக மோசமான நிலையிலிருந்து மீண்டு வந்தார்கள். அப்போது அமெரிக்கா போன்ற ஒரு பணக்கார நாடு அதைச் சமாளிக்க வேண்டியிருந்தது. இப்போது 2 பில்லியன் (200 கோடி) மக்கள் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள்.
தனிமைப்படுத்தப்பட்டு பசியில் சாகப்போகும் கைக்கும் வாய்க்குமாக வாழும் ஏழை இந்தியர்களுக்கு என்ன ஆகும்? என்ன நடக்கப் போகிறது? ஒரு நாகரிக உலகில், பணக்கார நாடுகள் தேவையில் இருக்கும் நாடுகளுக்கு உதவி அளிக்கும். கழுத்தைப் பிடித்து நெறிக்கக் கூடாது. குறிப்பாக இந்தியாவிலும் உலகமெங்கிலும் அதைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம். இதுபோன்ற ஒரு நெருக்கடி, இந்தியா போன்ற நாட்டுக்குள்ளேயே அப்படியே இருக்க முடியுமா என்று தெரியவில்லை. மனதில் வைத்துக் கொள்ளுங்கள், இப்போதைய போக்கின்படியே போனால் சில பத்தாண்டுகளில் தெற்காசியா வாழ முடியாததாகி விடும். இந்தக் கோடையில் ராஜஸ்தானில் வெப்பநிலை 50 டிகிரியைத் தொட்டுவிட்டது. அதுவும் கூடிக்கொண்டே இருக்கிறது. நீர்நிலைகள் இன்னும் மோசமாகலாம். குறைந்து போய்விட்ட நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இரண்டு அணு ஆயுத சக்திகள் சண்டையிட்டுக்கொள்ளப் போகிறார்கள்.
கொரோனாக்கிருமி மிகத் தீவிரமானதுதான். அதைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கும் பெரும் நெருக்கடியில் ஒரு துளிதான் இது என்பதை நினைவு கொள்ள வேண்டும். அவை இன்று கொரோனாக்கிருமி செய்திருப்பதைப் போல வாழ்க்கையை அப்படியே நிலைகுலையச் செய்யாமல் இருக்கலாம். ஆனால் அவை இந்த உயிரினத்தை உயிர்வாழ முடியாத அளவுக்குச் சீர்குலைத்துப் போடும் – அதுவும் மிகத்தொலைவில் உள்ள எதிர்காலத்தில் இல்லை. நாம் கையாள வேண்டிய நிறையப் பிரச்சினைகள் உள்ளன – சில உடனடியானவை. கொரோனாக்கிருமி தீவிரமானது – கையாளப்பட வேண்டியது. மிகப்பெரிய – மிகமிகப் பெரிய பிரச்சனைகள் எழும்பி வந்து கொண்டிருக்கின்றன.
மனித நாகரிகத்தையே எதிர் நோக்கியிருக்கும் நெருக்கடி ஒன்று வருகிறது. அதன் காலத்தைக் கணிக்க வேண்டும். இந்தக் கொரோனாக்கிருமி வந்து ஒரு நல்லது செய்துவிட்டுப் போகலாம். நமக்கு என்ன மாதிரியான உலகம் வேண்டும் என்று மனிதர்களைச் சிந்திக்க வைக்கும் போலத் தெரிகிறது. இது போன்ற நிலைக்கு நம்மை இட்டுச்செல்லும் உலகமா நமக்கு வேண்டும்? இந்த நெருக்கடியின் மூலத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இந்தக் கொரோனாக்கிருமி நெருக்கடி ஏன் வந்தது? இது மாபெரும் சந்தைத் தோல்வி (colossal market failure). இது நேராகப் புதிய தாராளவாதிகளால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட சந்தைகளின் சாராம்சத்துக்கு – காட்டுமிராண்டித்தனமான புதிய தாராளவாதிகளால் உக்கிரமாக்கப்பட்ட ஆழ்ந்த சமூகப் பொருளியல் பிரச்சனைகளைப் பற்றிச் சிந்திக்கச் சொல்கிறது.
கொள்ளை நோய்கள் வர மிகவும் வாய்ப்பிருப்பதும், சார்ஸ் (SARS) கொள்ளை நோயிலிருந்து சிறிது மாறுபட்ட கொரோனாக்கிருமிக் கொள்ளை நோய் வர வாய்ப்பிருப்பதும் நன்றாகவே தெரிந்திருந்தது. மிக நன்றாகவே தெரிந்திருந்தது. 15 ஆண்டுகளுக்கு முன்பு அது முறியடிக்கப்பட்டது. கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டன, வரிசைப்படுத்தப்பட்டன, தடுப்பூசிகள் இருந்தன. அப்போதிருந்தே உலகெங்கும் இருக்கும் ஆய்வகங்கள் வரப்போகும் கொரோனாக்கிருமிக் கொள்ளை நோய்க்குப் பாதுகாப்புக் கண்டுபிடிக்கும் வேலையைத் தொடங்கியிருக்கலாம். அவர்கள் ஏன் அதைச் செய்யவில்லை? சந்தையின் சமிக்ஞைகள் தவறாக இருந்தன.
நம் தலைவிதியை நாம் தனியார் கொடுங்கோன்மையிடம் ஒப்படைத்துள்ளோம். இதற்குப் யார் பொறுப்பு?
மருந்து நிறுவனங்கள்… நம் தலைவிதியை நாம் தனியார் கொடுங்கோன்மையிடம் ஒப்படைத்துள்ளோம். இதற்குப் யார் பொறுப்பு? பொதுமக்களுக்குப் பதில் சொல்லவேண்டிய கடமை இல்லாதவர்களாக இருக்கிற பெரு நிறுவனங்களைத்தான் நாம் பிடிக்க வேண்டும். பெரிய மருந்து நிறுவனங்கள்.. அவர்களுக்கு முழு அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றும் தடுப்பூசி கண்டுபிடிப்பதைவிட புதிய உடல் க்ரீம்கள் தயாரிப்பதே கூடுதல் ஆதாயம்.
அரசாங்கத்தால் இதில் தலையிட முடியாது. போர்க்கால அணி திரட்டல் பற்றிப் பேசினோமே, அப்போது அதுதான் நடந்தது. போலியோ, எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, அப்போது ஒரு பீதியூட்டும் அச்சுறுத்தலாக இருந்தது. ரூஸ்வெல்ட் நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட ஓர் அரசாங்க அமைப்பால் கண்டுபிடிக்கப்பட்ட சால்க் தடுப்பூசியின் மூலம் அது முடித்து வைக்கப்பட்டது. காப்புரிமை எல்லாம் இல்லை. எல்லோருக்கும் கிடைக்கும். இப்போது அதைச் செய்திருக்க முடியும். ஆனால் புதிய தாராளவாதக் கொள்ளைநோய் அதைத் தடுத்து விட்டது. பெருநிறுவங்களிடமிருந்து வருகிற ஒரு சிந்தாந்தத்துக்கு அடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பொருளியலாளர்களும் இதற்குப் பெரும் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
“அரசாங்கந்தான் பிரச்சனை, எனவே அரசாங்கத்தைத் தூக்கித் தூரப் போடுவோம்” என்று தன் பெருநிறுவன எஜமானர்கள் எழுதிக்கொடுத்த உரையைத் தன் பளபளக்கும் புன்னகையோடு வந்து வாசித்த ரொனால்ட் ரீகனால் மாதிரியாகக் காட்டப்பட்ட சிந்தாந்தம் இது. அதன் பொருள் என்ன? முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பொதுமக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய கடமையில்லாத தனியார் கொடுங்கோன்மைகளிடம் ஒப்படைத்து விடுவோம் என்பதே அதன் பொருள். அதே நேரம், அட்லாண்டிக்கின் அந்தப் பக்கம், “ஒரு சமுதாயம் இருக்கிறது. அதில் தனிமனிதர்கள் சந்தைக்குள் தூக்கிவீசப்படுவார்கள். அவர்களே தத்தளித்து எப்படியாவது அவர்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இதற்கு வேறு மாற்று இல்லை!” என்று தாட்சர் நமக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
பல ஆண்டுகளாக இந்த உலகம் பணக்காரர்களின் கீழ் சிக்கித் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது, சால்க் தடுப்பூசி போல ஏதோ ஒன்றைக் கண்டுபிடிக்குமாறு தூண்டும் வகையில் அரசாங்கம் தலையிடலாம். அரசு என்பது, புதிய தாராளவாதக் கொள்ளை நோயிலிருந்து வரும் சித்தாந்தக் காரணங்களால், இது போன்ற முடிந்த சிலவற்றைக்கூட இனி செய்ய முடியாது என்கிற புள்ளியில் நிற்கிறோம்.
விஷயம் என்னவென்றால், இந்தக் கொரோனாக்கிருமிக் கொள்ளைநோய் தடுக்கப்பட்டிருக்க முடியும், படிப்பதற்குத் தகவல்கள் இருந்தன, இன்னும் சொல்லப் போனால் தீவிரப் பரவலுக்குச் சற்று முன்பு அக்டோபர் 2019-இல் நன்றாகவே தெரிந்திருந்தது. உலகில் இது போன்றதொரு கொள்ளைநோய் வந்தால் என்ன செய்வது என்று அமெரிக்காவில் ஒரு பெரிய அளவிலான பாவிப்பு (simulation) – பல்லடுக்குப் பாவிப்பு செய்து பார்க்கப்பட்டது. அதன்பின் எதுவுமே செய்யப்படவில்லை. அரசியல் அமைப்புகளின் துரோகத்தால் இப்போது இந்தப் பெரும் நெருக்கடி மேலும் மோசமாக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்குத் தெரிந்திருந்த தகவல்களின்மேல் நாம் கவனம் செலுத்தவில்லை. டிசம்பர் 31 அன்று, தெரியாத மூலத்துடன் நிமோனியா போன்ற அறிகுறிகள் இருப்பது பற்றி உலக சுகாதார அமைப்பிடம் சீனா தெரிவித்தது. ஒரு வாரம் கழித்து, சீன அறிவியலாளர்கள் அது ஒரு கொரோனாக்கிருமி என்று கண்டுபிடித்தார்கள். மேலும் அதை வரிசைப்படுத்தி, உலகத்துக்கு அந்தத் தகவலையும் கொடுத்தார்கள். அந்நேரம், அவை கொரோனாக்கிருமி என்றும், அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்றும் கிருமியாளர்களும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையைப் படிக்கும் அக்கறை கொண்டவர்களும் அறிந்திருந்தார்கள். அவர்கள் ஏதேனும் செய்தார்களா? ம்ம்ம், ஆம், சிலர் செய்தார்கள். சீனா, தென் கொரியா, தைவான், சிங்கப்பூர் போன்ற அந்தப் பகுதியிலிருக்கும் நாடுகள் ஏதோ செய்யத் தொடங்கி, கிட்டத்தட்ட அதை – குறைந்தபட்சம் இந்த நெருக்கடியின் முதல் பரவலை – கட்டுப்படுத்தியும் விட்டார்கள் போலத்தான் தெரிகிறது. ஐரோப்பாவிலும் ஓரளவு அது நடந்துள்ளது.
இவ்விஷயத்தில் சரியான நேரத்தில் நகரத் தொடங்காத ஜெர்மனி – மருத்துவமனை அமைப்புகளைத் தாராளமயத்தின் கீழ் வைத்திருக்கும் ஜெர்மனி, உபரியான அளவில் கண்டறியும் திறன் (diagnostic capacity) வைத்திருந்தது. அதன் துணையுடன் அவர்களால் பிறருக்கு உதவவில்லை என்றாலும் தமக்குத் தாமே உதவிக்கொள்ளும் வகையில் மிகவும் சுயநலமான முறையில் செயல்பட முடிந்தது. அதை வைத்து ஓரளவுக்குக் கட்டுப்படுத்தவும் முடிந்தது. மற்ற நாடுகள் அதைச் சட்டை செய்யவே இல்லை. அவர்களில் ஆகப்படுமோசம் என்றால் அது பிரிட்டன். ஒட்டுமொத்தமாக ஆகப்படுமோசம் என்றால் அது அமெரிக்கா. ஒருநாள் “எந்த நெருக்கடியும் இல்லை, இது வெறும் காய்ச்சல்தான்” என்றும், அடுத்தநாள் “இது கொடுமையான நெருக்கடி, இது பற்றி எனக்கு அப்போதே தெரியும்” என்றும், அதற்கடுத்த நாள் “வணிகங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டும், ஏனென்றால் நான் இந்தத் தேர்தலில் வெல்ல வேண்டும்” என்றும் பேசும் இந்தச் சமூகவிரோத மனநோயாளியால் வழிநடத்தப்படும் அமெரிக்கா. உலகம் இந்தக் கைகளில்தான் இருக்கிறது எனும் சிந்தனையே அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அங்குதான் தொடங்கியது.
இது சமூகப் பொருளியல் ஒழுங்கில் உள்ள அடிப்படையான பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டும் ஒரு மாபெரும் சந்தைத் தோல்வி. புதிய தாராளவாதக் கொள்ளை நோயால் – அவற்றின் வேலையை அவை செய்திருந்தால் இந்த நெருக்கடியைக் கையாண்டிருக்க முடியும் என்கிற மாதிரியான நிறுவனக் கட்டமைப்புகளின் சரிவால் மேலும் மிக மோசமாக்கப்பட்டு அப்படியே தொடர்கிறது. இவைதான் நாம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய – மேலும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய விஷயங்கள். நான் ஏற்கனவே சொன்னபடியே, எந்த மாதிரியான உலகத்தில் வாழ விரும்புகிறோம் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.
இதை முறியடித்து வெளியேறியபின் நம்முன் வெவ்வேறு தெரிவுகள் இருக்கும். பெரிதும் சர்வாதிகாரத்தனமான – மிருகத்தனமான அரசுகளை நிறுவும் தெரிவில் தொடங்கி, மேலும் மனிதாபிமான அடிப்படையிலான – தனியார் ஆதாயம் சார்ந்ததாக இல்லாமல் மனிதத் தேவைகளைப் பற்றிக் கவலைப்படுகிற – சமூகத்தை அடியோடு மாற்றிப் புனரமைக்கும் தெரிவு வரை எல்லாவிதமான தெரிவுகளும் நம் முன் இருக்கும். பெரிதும் சர்வாதிகாரமான நச்சு அரசுகள் புதிய தாராளவாதத்தோடு மிகவும் இணக்கமானவை என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். சொல்லப்போனால், மீசஸிலிருந்து (Mises) ஹாயக் (Hayek) வரையிலானவர்களும் புதிய தாராளவாதத்தின் மற்ற ஆதரவாளர்களும் ‘ஆரோக்கியமான பொருளாதாரம்’ என்று அவர்கள் சொன்னதற்கு ஆதரவாக இருக்கும்வரை அரசின் மாபெரும் வன்முறைகளை முழுமையான மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டவர்களே.
1920-களின் வியன்னாவிலிருந்து – அங்கு மீசஸ் நடத்திய பயிலரங்குகளிலிருந்து – புதிய தாராளவாதத்தின் வேர் புறப்படுகிறது. மீசஸால் ஆஸ்திரிய அரசின் ஆதிப்பாசிசத்தைக் கண்டு உண்டான ஆனந்தத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தொழிற்சங்கங்களையும் ஆஸ்திரிய சமூக மக்களாட்சியையும் விளாசித்தள்ளினார், தொடக்ககால ஆதிப்பாசிச ஆஸ்திரிய அரசில் பங்கெடுத்தார், அதைப் புகழ்ந்து தள்ளினார். ஆரோக்கியமான பொருளாதாரத்தைப் பாதுகாக்கிறது என்று சொல்லிப் பாசிசத்தைப் புகழ்ந்தார். பீனஷே (Pinochet) சிலியில் ஒரு கொலைகார – மிருகத்தன சர்வாதிகாரத்தை நிறுவியபோது அவர்கள் எல்லோரும் அதைக் கொண்டாடினார்கள். அதை அற்புத அதிசயங்கள் நிகழ்த்துவதாகவும் ஆரோக்கியமான பொருளாதாரத்தைக் கொண்டுவருவது என்றும், நிறைய இலாபம் கொட்டிக் கொடுக்கிறது என்றும் கொண்டாடினார்கள். எனவே, வலிமைமிக்க அரச வன்முறையின் உதவியோடு இந்தக் காட்டுமிராண்டித்தனமான புதிய தாராளவாத அமைப்பு, விடுதலைவாதி (libertarian) என்று சொல்லிக்கொண்டு வருபவர்களால் மீண்டும் நிறுவப்படலாம் என்று எண்ணுவது ஒன்றும் சம்பந்தமில்லாததில்லை. இது – இக்கொடுங்கனவு நடக்க வாய்ப்பிருக்கும் சாத்தியக்கூறுகளில் ஒன்று. அதுதான் நடக்க வேண்டும் என்றில்லை.
ஏற்கனவே நிறையபேர் செய்து கொண்டிருப்பது போல், மக்களே ஒருங்கிணைத்து, ஈடுபட்டு, இதைவிட மிகச் சிறப்பான ஓர் உலகமும் படைக்கலாம். நாம் இப்போது அடுத்தடுத்துச் சந்தித்துக் கொண்டிருக்கும் – முன்னெப்போதையும் விட மிக அருகில் வந்திருக்கும் அணு ஆயுதப்போர்ப் பிரச்சனை, அந்தக் கட்டத்துக்குப் போனபின் அதிலிருந்து மீளவே முடியாது என்கிற அளவுக்கு மோசமான நிலையில் இருக்கும், தீர்க்கமாகச் செயல்படாவிட்டால் அதுவும் வெகுதொலைவில் இல்லை என்கிற அளவுக்கு நெருங்கிவிட்ட சூழலியல் பிரச்சனைகள் போன்ற மாபெரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வகையில் அது இருக்கலாம்.
எனவே, கொரோனாக்கிருமியால் மட்டுமல்ல, இது மனித வரலாற்றில் மிக முக்கியமான – நெருக்கடியான தருணம். ஆனால் கொரோனாக்கிருமி இந்த மொத்தச் சமூகப்பொருளாதார அமைப்பின் ஆழ்ந்த குறைபாடுகளை – ‘குறைபாடுகள்’ என்ற சொல்லே அவ்வளவு வலுவானதில்லை – ‘செயல்பாடற்ற பண்புகளை’ என்று வைத்துக் கொள்வோம், அவற்றைப் பற்றிய விழிப்புணர்வை நமக்குக் கொண்டுவரும் – கொண்டுவர வேண்டும். பிழைத்திருக்கத்தக்க எதிர்காலம் என்று ஒன்று இருக்குமானால் இது சரிசெய்யப்பட வேண்டும். இது ஓர் எச்சரிக்கை மணியாகவும் வெடித்துச் சிதறும் முன்பே தடுக்கப்பட வேண்டுமானால் இன்றே கையாளப்பட வேண்டிய பாடமாகவும் இருக்கலாம். ஆனால் அதன் வேரைப்பற்றியும் அந்த வேர்கள் எப்படி இதைவிட மோசமான மேலும் பல நெருக்கடிகளில் போய் விடப்போகின்றன என்பதையும் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
ஸ்ரெச்கோ: நமக்கு இன்னும் நேரம் நிறைய இல்லாததால், ஒரேயொரு கடைசிக் கேள்வி கேட்டு விடுகிறேன். மக்கள் நிறையபேரும், பல பத்தாண்டுகளாக மக்களின் நேரடி நெருக்கத்தையும் சமூக நெருக்கத்தையும் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் சமூக இயக்கங்களிலும் அணி திரட்டல்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் எம் போன்றவர்களும், திடீரென்று இப்போது ‘சமூக விலகல்’ (social distancing) எனப்படும் ஒன்றுக்குப் பழக்கப்பட்டுக் கொண்டு வருகிறோம். எனவே, என் கேள்வி என்னவென்றால், இதுபோன்ற ‘சமூக விலகல்’ காலங்களில் ‘சமூக எதிர்ப்பு’ (social resistance) என்பதன் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று எண்ணுகிறீர்கள்? இது இன்னும் சிலமாதங்கள் ஆனால், ஓரிரு ஆண்டுகள்கூட ஆகலாம் என்பதையும் மறப்பதற்கில்லை, நாம் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே சுயதனிமையில் இருக்கிறோம் என்பதால், உலகெங்கும் இருக்கும் முற்போக்காளர்களுக்கும் செயல்பாட்டாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் மாணவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் உங்கள் அறிவுரை என்னவாக இருக்கும்? இந்தப்புதிய சூழலில் எப்படி ஒருங்கிணைப்பது? அப்படியே, இந்தத் திறந்த வரலாற்றுச் சூழல், உலகளாவிய சர்வாதிகாரத்துக்குள் போகாமல், பசுமையும் சமத்துவமும் நீதியும் கூட்டொருமையும் நிறைந்த உலகை அடியோடு புரட்டிப்போடும் மாற்றம் ஒன்றை நோக்கிப் போகலாம் என்று நீங்கள் நம்பிக்கையாக எதையும் பார்க்கிறீர்களா என்பதையும் சொல்ல முடியுமா?
நோம்: முதலில், கடந்த சில ஆண்டுகளில், மிகவும் சேதப்படுத்தக்கூடிய ஒருவிதமான சமூக விலகல் ஏற்கனவே இருக்கிறது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஒரு மெக்டோனல்சுக்குள் போய் அங்கு மேசையைச் சுற்றி அமர்ந்துகொண்டு ஹாம்பர்கர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களைப் பாருங்கள். இரண்டு உரையாடல்கள் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள். அங்கிருக்கும் அவர்களுக்குள் நடைபெறும் மேலோட்டமான உரையாடல் ஒன்று. ஒவ்வொருவரும் தத்தம் அலைபேசியில் வேறு எங்கோ இருக்கும் அவர்களுடைய நண்பரான வேறொரு தனிமனிதரிடம் செய்து கொண்டிருக்கும் உரையாடல் இன்னொன்று. இது மனிதர்களை மிகப் பெரிய அளவில் தனித்தனி அணுக்களாகப் பிரித்துத் தனிமைப்படுத்தியிருக்கிறது. மனிதர்களை – குறிப்பாக இளைஞர்களை மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட உயிரினங்களாக்கியிருக்கும் இந்தச் சமூக ஊடகங்கள் – தவறாகப் பயன்படுத்தப்பட்ட சமூக ஊடகங்கள், ‘சமூகம் என்று ஒன்றில்லை’ என்ற தாட்சரின் கோட்பாட்டைப் பெரிய இடத்துக்கு எடுத்துச் சென்றுள்ளன.
அமெரிக்காவில் இப்போது நடைபாதையில் “மேலே பார்” என்று எழுதிப்போட்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. ஏனென்றால், நடந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு பிள்ளையும் அந்தக் கருவிக்குள்ளேயே பசை போட்டு ஒட்டியதுபோல ஒட்டிக்கொண்டு இருக்கிறது. அப்படியான மிகத்தீய சுய சமூக விலகலில்தான் ஏற்கனவே இருக்கிறோம். அதிலிருந்து இப்போது உண்மையான சமூக விலகல் கடைபிடிக்க வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறோம். எந்தெந்த வழிகளிலெல்லாம் சமூகப் பிணைப்புகளை மீட்டுருவாக்க முடியுமோ அவ்வழிகளிலெல்லாம் மீட்டுருவாக்கி, தேவையில் இருக்கும் மக்களுக்கு எப்படியெல்லாம் உதவ வேண்டுமோ அப்படியெல்லாம் உதவி, இதை முறியடித்து வெளியேற வேண்டும்.
அவர்களை முன்பு போலவே செயல்பட வைக்கவும் இயங்க வைக்கவும், அவர்களைத் தொடர்பு கொள்வது, நிறுவனங்களை மேம்படுத்துவது, ஆய்வுகளை விரிவுபடுத்துவது போன்றவற்றைச் செய்ய வேண்டும். கலந்துரையாடவும் திட்டமிடவும் அவர்கள் சந்திக்கும் கேள்விகளுக்கான பதில்களைத் தேடியடையவும் அவற்றின் மீது பணியாற்றவும் எதிர்காலத்துக்கான திட்டங்களைத் தீட்ட வேண்டும் – இந்த இணையத் தொழில்நுட்பக் காலத்தில் எல்லோரையும் ஒன்றுகூட்ட வேண்டும். இதெல்லாம் செய்ய முடியும். நேருக்குநேர் சந்தித்துப் பேசுவது மனிதர்களுக்கு மிகவும் அடிப்படையான தேவை என்றில்லை. ஆனால் குறிப்பிட்ட காலத்துக்கு அது கிடைக்காது. அதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு செய்து கொண்டிருக்கும் பணிகளைத் தொடரவும் விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் வேறு வழிகள் பார்க்க வேண்டும். செய்ய முடியும். ஆனால் அவ்வளவு எளிதில்லை. மனிதகுலம் இதற்கு முன்பும் பிரச்சனைகளைச் சந்தித்திருக்கிறது.
ஸ்ரெச்கோ: இதற்கு முன்பு வந்ததே, அது என்ன? கிளியா? உங்களிடம் பறவை ஒன்றும் இருக்கிறதா? பறவையா? கிளியா? ஒரு கிளியின் சத்தம் கேட்டதே!
நோம்: அது ஓர் இருமொழிக் கிளி. அதால் போர்ச்சுக்கீசிய மொழியில் “மக்கள் எல்லோருக்கும் இறையாண்மை” என்று சொல்ல முடியும்.
ஸ்ரெச்கோ: மிக்க நன்றி, நோம். இந்த உரையாடலின் அழகான நிறைவு இது. விரைவில் பேசலாம் என்று நம்புகிறேன். நாம் எல்லோரும் வீட்டிலேயே இருப்போம். நாங்கள் எல்லோரும் எப்போது வீட்டை விட்டு வெளியேறலாம் என்று நீங்களும் உங்கள் கிளியும் சொல்லும்வரை காத்திருப்போம்.
***
பாரதிராஜா – ’யாவரும் ’மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இருக்கும் இவர். தூத்துடி மாவட்டம் பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர். இப்போது பணி நிமித்தம் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். அரசியல் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் தொடர்ச்சியாக பங்களித்து வருகிறார்.
“மக்ளே, நீத்தண்ணி எடு மக்ளே,” என்று சொல்லியவாறு புறவாசலுக்குச் சென்றார் அப்பா. பழையசோற்றுப் பானையிலிருந்து ஒரு சொம்பு நிறைய நீர்த்தண்ணீர் எடுத்து கொஞ்சம் மோர் விட்டு உப்புப் போட்டு கலக்கி, அன்றைக்கு என்ன செய்வார் என்கிற எதிர்பார்ப்புடன் அவரது அறைக்குச் செல்லும் வாசலருகே நின்றேன்.
கை, கால் கழுவிக் கொண்டு திரும்பி வந்தவர் நீர்த்தண்ணீரை அண்ணாந்து ஒரே மூச்சில் குடித்தார். “மக்களு சாப்டாச்சா? என்ன கறி வச்சா ஒங்கம்ம?” என்று கேட்டார்.
“சாப்டாச்சுப்பா. கத்ரிக்காத் தீயலும் சேனப்பொரியலும்… ஒங்களுக்கு முட்ட அட தட்டட்டா?” என்று அவர் முகத்தைப் பார்த்தேன்.
“இரி மக்ளே.. இன்னா வாறேன்…” என்றவர் அவரது அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டார். நீண்ட நேரத்திற்கு வெளியே வரவேயில்லை.சில நாட்களாகத்தான் அவர் இப்படிச் செய்ய ஆரம்பித்திருந்தார். கதவைத் தட்டி சாப்பிட அழைத்தாலும், “இரி மக்ளே…இன்னா வாறேன்…” என்று பதில் மட்டுமே வரும்.
அம்மாவும் அக்காவும் மதிய உணவிற்குப் பிறகு தம்புரான் கம்பெனிக்குச் சென்று பின்னி முடித்த கூடைகளையும், மற்ற கைவினைப் பொருட்களையும் கொடுத்துவிட்டு, தேவையான பனை நார், நைலான் ஒயர் மற்றும் இதர பொருட்களை வாங்கி வருவார்கள். வருவதற்கு நான்கு மணி ஆகிவிடும். அந்த இடைவெளியில்தான் அப்பா வழக்கமாக சாப்பிட வருவார். சாப்பிட்டதும் இரண்டு மணி நேரமாவது உறங்குவார். ஆனால்,திடீரென அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டுஅவரது அறைக் கதவைப் பூட்டிக் கொண்டு உள்ளேயே இருக்க ஆரம்பித்தார். அப்படி என்னதான் செய்கிறார் என்று எனக்கு ஒரே குழப்பம்.
சில முறை அவர் உள்ளே இருந்தபோது நான் அவரது அறைக்கதவின் அருகே அமைதியாக நின்று ஏதும் சத்தம் கேட்கிறதா என்று பார்த்தேன். அப்பா ஒன்றிரண்டு முறை தனக்குத்தானே ஏதோ பேசிக்கொண்டார். என்ன சொன்னார் என்பது எனக்குச் சரியாகக் கேட்கவில்லை.
அன்றும் அதைப்போலவே ஒட்டுக் கேட்பதற்காக நின்றேன். கொஞ்ச நேரம் அப்பா அங்குமிங்கும் நடப்பது போலத் தெரிந்தது. பின் தனது பிரஷ்ஷால் அவரது ஓவியப் பலகையில் தட்டிக்கொண்டிருந்தார். அது அவரது பழக்கம். எப்போது படம் வரைய உட்கார்ந்தாலும் கொஞ்ச நேரம் அந்தப் பலகையில் தட்டிக்கொண்டிருப்பார். அதுதான் அவரது ஓவியம் கருக்கொள்ளும் நேரம். சில நாட்கள் மணிக்கணக்கில் கூட அப்படியே உட்கார்ந்திருப்பார். ஒரு கையில் சிகரெட் புகைந்துகொண்டிருக்கும். சட்டென எழுந்து மூங்கிலாலான மேட்டை எடுத்து பலகையில் பொருத்தி வரைய ஆரம்பிப்பார். அதன் பிறகு அவராக அந்த அறையிலிருந்து வெளிவரும் வரை என்னைத் தவிர வேறு யாரும் அந்த அறைக்குள் போக முடியாது.
“மக்ளே..கடுங்காப்பி போடு மக்ளே.” என்று சத்தம் வந்தால் அவரது ஓவியம் தயாராகி விட்டதென்று அர்த்தம்.
…….
எனக்கும் ஓவியம் வரைவதில் ஆர்வமிருந்தது. நான் கூடை பின்ன உட்கார்ந்திருந்தால் அப்பா “மக்ளே, அம்மைட்ட குடு…போயி அப்பாக்கு பெயிண்டெல்லாம் எடுத்து வை மக்ளே” என்பார். நான் அவரது அறைக்குள் சென்று தேவையானவற்றை எடுத்து வைப்பேன்.
“மக்ளே,ஒனக்குன்னு உள்ள சோலி வேற கேட்டியா?..அது கடவுளுக்க தொட்டடுத்து நின்னு செய்யிற வேலைல்லா…ஞானமாக்கும்…எல்லாரும் செய்ய முடியாது மக்ளே..எனக்குப் பொறவு ஒனக்குத்தான்னு எழுதிருக்கான்லா..நீ அதத்தா செய்யணும் என்ன?”
அப்பா வரைவதைப் பார்த்து நானும் வீட்டுச் சுவரெல்லாம் கிறுக்கி வைப்பேனாம். அம்மா எரிச்சலோடு கத்தினால், “ஏட்டி பிச்சக்காரி…அவ ஆர்டிஸ்ட்டாக்கும்..ஒன்ன மாதி பொழக்கடைல கெடக்கவா? அத நீயும் மூத்தவளும் செய்ங்கோ…எம்புள்ள எப்பிடி வாரான்னு பாரு..” என்று சொல்லி என்னைத் தூக்கி முத்தமிடுவாராம் அப்பா.
ஒருநாள் நான் அப்பாவுடன் வரைந்து கொண்டிருந்தபோது “பொம்பளப் புள்ள, நாலு கறி வைக்கப் படிக்காண்டாமா?எப்பப் பாரு, பெயிண்ட அடிச்சிட்டே இருந்தா எங்க போயி மாப்பிள்ள பாக்கது? ஏட்டி, இங்க வாட்டி, வந்து பாத்திரத்தக் கழுவு..” என்றார் அம்மா.
“மக்ளே, போயி தொட்டில கெடக்க மூங்கில எடுத்து வெளிய வையி..காப்பர் சல்பேட் போட்டேல்லா அன்னிக்கி?…இன்னா வாறேன்..” என்றார். வீட்டின் பின்புறமுள்ள தண்ணீர்த்தொட்டியில் ஊற வைத்திருந்த மூங்கில் கட்டைகளை எடுத்து கோரைப் பாயில் போட்டுவிட்டு, மூங்கில் சீவும் சீவுளியை எடுத்து வைத்தேன்.
அப்பா வந்து ஒரு மூங்கிலை எடுத்துப் பார்த்தார். “செரியா இருக்கும் மக்ளே…இதுக்கப் பதமாக்கும் மேட்டு ஒடையாம நிக்கது…மத்தவனுக்க கடைல ஒடஞ்சி ஒடஞ்சி போகுன்னா……அவன் கஞ்சப் பயலாக்கும்….ஒரு கூரயப்போட்டு நெழல்ல காய வையின்னா கேக்கானா…கிறுக்கன்..கட்டயச் சீவி வெயில்ல போட்டா?” என்று சொல்லியவாறே மூங்கில் கட்டையை எடுத்து நுண்ணிய பட்டைகளாகச் சீவ ஆரம்பித்தார்.
அப்பா அளவெடுத்தது போல சீவி வைக்கும் மூங்கில் பட்டைகள் நன்றாக உலர்ந்ததும் அவற்றைக் கொண்டு போய் மேட் நெய்யும் இடத்தில் குடுப்பது என் வேலை. நெய்து முடிக்கும் வரை பக்கத்திலேயே இருந்து கவனமாகப் பார்த்து வாங்கி வருவேன்.மேட்டின் ஒரு ஓரம் சரியில்லாவிட்டால்கூட அப்பா அதில் வரைய மாட்டார்.
…….
அப்பா தனது ஓவியப் பரம்பரையைப் பற்றி அடிக்கடி என்னிடம் சொல்லுவார். அவ்வளவு கம்பீரமாக, பெருமையாக. பத்மநாபபுரம் அரண்மனையில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற ஓவியம் எங்கள் கொள்ளுத் தாத்தா வரைந்தது தான். பெரிய மகாராஜா இளையவருக்கு யானையேறப் பயிற்சி கொடுக்கும் ஒரு ஓவியம். அந்த யானை யார் சொல்லியும் பணியவில்லை. தாத்தா சென்று ஏதோ மந்திரங்களைச் சொல்லி தனது ஓவியத் தூரிகையால் அதன் துதிக்கையில் தட்டிக்கொடுக்க, அது அவர் சொன்னபடியெல்லாம் நின்றிருக்கிறது. அந்த ஓவியத்திற்காக தாத்தாவிற்குப் பத்து மரக்கா விதைப்பாடு நிலம் பரிசாகக் கிடைத்தது.
அவரது மகன், எங்கள் தாத்தாவும் ஒரு மிகப்பெரிய ஓவியர் தான். வெள்ளைக்கார துரைகளுக்கும் மற்ற சமஸ்தான ராஜ வம்சத்தினருக்கும் பரிசு கொடுப்பதற்காகவே பிரத்தியேகமாக அவரை அழைத்து வரையச் சொல்வார்கள். ஓவியம் வரைந்து முடிக்கும் வரை அரண்மனை வீட்டிலேயே ராஜ கவனிப்பு கிடைக்கும். என் அப்பா கூட தாத்தாவுடன் சில முறை சென்றிருக்கிறார். தாத்தா இறந்தபோது ராஜ குடும்பத்திலிருந்து ஆளுயர ரோஜாப்பூ மாலையும் வெண்கலத்தினாலான ஒரு நடராஜர் சிலையும் குடுத்து விட்டார்கள். அப்பா தினமும் நடராஜரைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டுத்தான் வெளியே கிளம்புவார்.
அப்பாவின் தனிச்சிறப்பு மூங்கில் மேட் ஓவியங்கள். கேரளத்தில் மிகப் பிரசித்தி பெற்ற இந்த வகையான ஓவியங்களுக்கு கன்னியாகுமரியிலும் நல்ல மவுசு உண்டு. வருடத்தில் நான்கு மாதங்களுக்கு நல்ல கூட்டம் இருக்கும். அந்த சமயத்தில் விற்பனை செய்து சம்பாதிப்பதை வைத்துத்தான் வருடம் முழுவதும் சமாளிக்க வேண்டும். மற்றபடி அம்மாவும் அக்காவும் கூடை பின்னிக் குடுப்பதில் ஓரளவிற்குப் பணம் கிடைப்பதால் சாப்பாட்டிற்குப் பிரச்சினை இல்லாமல் குடும்பம் ஓடும்.
பெரியப்பா, சித்தப்பா இருவரும் சவுதிக்குச் சென்று ஓரளவிற்கு வசதியாகவே இருந்தார்கள். ஆனால்,என்ன நிலைமை வந்தாலும் அப்பா தேவையென்று யாரிடமும் போய் நிற்க மாட்டார்.
எனது சடங்கு முடிந்து கிளம்பும்போது பெரியப்பா அப்பாவைப் பார்த்து “லேய்…பிள்ள தெறண்டுட்டா…கொஞ்சம் பைசா சேக்கப் பாருடே” என்றார். அப்பா அமைதியாக நின்றார்.
“படம் வரையானாம் பைத்தியாரன்…பொழைக்க வழியப் பாருல…குடும்பத்த இழுத்து நடுத்தெருல வுட்டுராத பாத்துக்கோ…” என்றார் பெரியப்பா. எனக்கு பயத்தில் வியர்க்க ஆரம்பித்து விட்டது. அப்பாவின் வேலையைப் பற்றிப் புலம்பி என் அம்மா வாங்கிய அடிகளும் உடைந்த பொருட்களும் கொஞ்சமல்ல.
பெரியப்பா தொடர்ந்தார். “நம்ம அப்பாவ கடைசில எவம்ல வந்து பாத்தான்? ஒலகத்துல இல்லாத ஆர்டிஸ்ட்டு..பெரிய மால மயிரத்தான குடுத்து வுட்டானுவோ? பேருக்கு ஒருத்தனாவது வந்தானா டே? பெரிய ராஜ பரம்பர மயிரு…பத்து வருசமா அவர தூக்கிக்கிட்டே அலஞ்சேன்லா? படம் மயிரா வந்து சோறு போட்டு?”
“நீ நிறுத்து…சும்மா படம் வரஞ்சிற முடியுமா? அது எங்கப்பனுக்க சொத்தாக்கும்…நமக்கு சோறு பெருசில்ல பாத்துக்கோ…இப்ப என்னா?
ஒன்ட்ட வந்து நிக்கல, போதுமா? பெரிய அக்கற மயிரு…” என்று கத்திவிட்டார் அப்பா.
சென்ற வருடம் பைக்கிலிருந்து கீழே விழுந்து அப்பாவிற்கு முதுகில் பலத்த அடி. அம்மாவுடைய தங்கச் செயினை வைத்துத்தான் மருத்துவச் செலவுகளைக் கவனித்துக்கொண்டோம். சித்தப்பா வீட்டிலிருந்தாவது அடிக்கடி வந்து பார்த்துப் போனார்கள். பெரியப்பா குடும்பம் இன்று வரை எட்டிக் கூட பார்க்கவில்லை.
….
இரண்டு மணி நேரம் கழிந்து விட்டது. மறுபடியும் அப்பாவின் அறைக்கதவைத் தட்டி, “எப்பா, சாப்பிட வாங்கப்பா..” என்றேன். இந்த முறை சற்று சத்தமாகவே பதில் வந்தது. “இன்னா வாறேன் மக்களே..” என்றவர் பத்து நிமிடம் கழித்து கதவைத் திறந்து வெளியே வந்தார். அவர் கை கழுவச் சென்ற போது நான் அவரது அறைக்குள் ஓடி ஓவியப் பலகையைப் பார்த்தேன். ஒரு பெரியமூங்கில் மேட்டில் நீண்ட குறுக்குநெடுக்கான கோடுகளை நேராகவும் வளைத்தும் வரைந்திருந்தார்.ஏதோ வித்தியாசமாகத் தெரிந்தது. என்னவென்று யோசித்தபோது மின்னலென அப்பாவின் இடது கை என் கண்முன் வந்து சென்றது. அறையிலிருந்து அவர் வெளிவந்தபோது அவரது இடது கையில் நிறைய பெயிண்ட் ஒட்டியிருந்தது. குழப்பத்தோடு துண்டு ஒன்றை எடுத்துக் கொண்டு புறவாசலுக்குச் சென்றேன்.
“ரெவி வர்மன்..மயிரு..எனக்க…….ராசா ரெவி வர்மன்…பாப்போம் ல” என்று தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தார் அப்பா. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் நிற்பது அப்பாவின் கவனத்திலேயே இல்லை.
வந்து உட்கார்ந்து சாப்பிட்டவர் எதுவுமே பேசவில்லை. வேறு ஒரு தனி உலகத்தில் எதையோ யோசித்துக் கொண்டிருந்தார். கலைஞர்கள் உலகத்தை விட்டு அவ்வப்போது எங்கோ போய் வந்துகொண்டுதானே இருப்பார்கள்.
…….
அப்பா வியாபாரத்திற்காக வரையும் ஓவியங்களில் பெரும்பாலானவை ராஜா ரவி வர்மனது ஓவியங்கள்தான். அது போக, இயற்கைக் காட்சிகள், விவேகானந்தர் பாறையின் பின்னால் சூரியன் உதிக்கும் காட்சி, சுசீந்திரம் தெப்பக்குளம், திருவட்டார் ஆதிகேசவன் கோவில் போன்றவை நன்றாக விற்பனை ஆகும். ஆனால், சில ஓவியங்களை அவர் விற்கமாட்டார். முகப்படத்துடன் கம்பீரமாக நிற்கும் குருவாயூர் கேசவன் யானையை அடிக்கடி வரைவார். ஒவ்வொரு முறையும் அவர் வரைந்து முடிக்கும்போது என் கண்முன்னால் கேசவன் இறங்கி வந்து நிற்பான். என்னால் அவனது துதிக்கையைத் தொட்டு உணர முடியும். முன்னும் பின்னுமாக அசைந்து மூச்சு விடுவான். அதைப் போலவே குமரி பகவதி அம்மனின் ஓவியமும். எல்லாம் முடித்து கடைசியில் அந்த மூக்குத்தியை ஜொலிக்க விடும்போது ஒவ்வொரு முறையும் அவர் அழுதுவிடுவார். வைர மூக்குத்தி அந்த அறையையே கருவறையாக மாற்றிப் பிரகாசிக்கும்.
“எடுத்து உள்ள மாட்டு மக்களே…” என்று சொல்லிவிட்டுச் செல்வார் அப்பா. அந்த சமயத்தில் மட்டும் அவரது முகம் வேறொன்றாக இருக்கும்.
….
அப்பா தொடர்ந்து தினமும் அப்படி அவரது அறைக்குள் சென்று தன்னை அடைத்துக் கொண்டார். இரண்டு மாதங்கள் இருக்கும். ஒருநாள் இரவு கடைக்குச் சென்று விட்டு வீட்டுக்குள் ஏறியவர் அப்படியே சரிந்து விழுந்து விட்டார். அம்மாவும் அக்காவும் அலறியடித்துக்கொண்டு அவரைத் தூக்கினார்கள். எனக்கு ஏனோ சட்டென மேஜையில் வைக்கப்பட்டிருந்த தாத்தாவின் நடராஜர் சிலை மீது பார்வை போனது. பிரமை பிடித்தவள் போல நின்றேன்.
“ஏட்டி, போயி தண்ணி கொண்டா…”அம்மா அழ ஆரம்பித்து விட்டாள். அக்கா அப்பாவின் கால் பாதங்களைத் தேய்த்து விட்டாள்.
தண்ணீர் தெளித்து, கொஞ்சம் குடிக்கக் குடுத்ததும் அப்பா கண் திறந்து எழுந்து அமர்ந்தார். திக்கிக் கொண்டே, “ஒண்ணுல்ல மக்களே…தலயச் சுத்திட்டு பாத்துக்கோ…மக்களு போயி கட்டஞ்சாயா போட்டுக் கொண்டா…” என்றார் அப்பா. அப்பாவின் குரல் எனக்கு வேறு யாருடையதோ போலக் கேட்டது.
..
அடுத்த நாள் மதியம் சாப்பிட வந்தவர் அறைக்குள் சென்று தாழிட்டார். நானும் வழக்கம்போல அவரைச் சாப்பிட அழைத்தேன். பதிலேதும் இல்லை. ஆனால், முன்பை விட சத்தமாக தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தார். அம்மா வந்ததும் நடந்ததைச் சொன்னேன். அம்மாவும் அக்காவும் அப்பாவை அழைத்துப் பார்த்தார்கள். எந்த பதிலும் இல்லை.
சற்று நேரம் கழித்து கதவைத் திறந்து வந்தவர் கையில் ஒரு பூட்டு வைத்திருந்தார். அறைக் கதவைப் பூட்டிவிட்டு சாவியைத் தன் சட்டைப் பாக்கெட்டில் வைத்தார்.
“மக்களே, போயி சோறு போடு..” என்று எதுவும் நடக்காத மாதிரி சொல்லிக்கொண்டு புறவாசலிற்குச் சென்றார். நாங்கள் மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றோம்.
ஒவ்வொரு முறை அவரது அறையை விட்டு வெளியே வரும்போதும் அப்பா கதவைப் பூட்டி சாவியை எடுத்துச் செல்ல ஆரம்பித்தார். அம்மாவுக்கும் அக்காவுக்கும் அவரிடம் கேட்பதற்குப் பயம்.
ஒருநாள் அப்பா வந்த போது ,“எப்பா, நாங் கொஞ்சம் வரையணும்..வாங்க..” என்று அழைத்தேன்.
சற்று அமைதியாக இருந்தவர், “மக்ளே..இப்ப வேண்டாம் மக்ளே…கொஞ்ச நாள் போட்டும்…” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார்.
…
அடுத்த சில நாட்களில் அப்பாவின் பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. அடிக்கடி திக்கினார். வார்த்தைகள் திணறித் திணறி வந்தன. அவரது முகத் தசைகள் தொங்கிக்கொண்டு போவது போலத் தோன்றியது. பெரும்பாலும் பேசுவதைத் தவிர்த்து மௌனமாகவே இருக்க ஆரம்பித்தார். எங்களுடன் உட்கார்ந்து சாப்பிடுவதையும் தவிர்த்தார். எப்போதும் அந்த அறைக்குள்ளேயே இருந்தார். அவர் தனக்குத்தானே பேசும் சத்தமும், பிரஷ்ஷைத் தட்டும் சத்தமும் மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும்.
கடைக்கு பைக்கில் செல்லாமல் பேருந்தில் செல்ல ஆரம்பித்தார். அவரது, ‘மக்ளே’ சத்தம் கேட்டுப் பல மாதங்கள் ஓடி விட்ட மாதிரி இருந்தது.
ஒருநாள் காலை எழுந்து வந்த அப்பாவின் முகத்தைப் பார்த்த நான், “எப்பா..என்னப்பா? என்னாச்சிப்பா?” என்று கத்தினேன்.
அம்மாவும் அக்காவும் ஓடி வந்து திகைத்து நின்றனர். அப்பாவின் வாய் ஒரு புறமாக இழுத்துப் பிடித்தது போல இருந்தது. அப்பா ஏதோ சொல்ல முயன்றார். அவரால் பேச முடியவில்லை. அவரது வலது கை லேசாக வளைந்திருந்தது போலத் தெரிந்தது. நடக்க முயன்றவர் அப்படியே சுவரோடு சாய்ந்து நின்று விட்டார். என் மனதில் தாத்தாவின் முகமும் நடராஜரின் சிலையும் மாறி மாறி வந்தன. இது நடக்கும் என எனக்கு எப்போதோ தெரிந்துதான் இருந்தது.
….
எல்லா பரிசோதனைகளும் முடிந்தன. டாக்டர் அம்மாவிடம், “பக்க வாதம் வந்திருக்கும்மோ..ரெண்டு நாள் இங்க இருக்கட்டும்…பொறவு வீட்டுல வச்சிப் பாக்க வேண்டியதா…”
அம்மா அப்படியே சாய்ந்து உட்கார்ந்து விட்டாள். அக்கா அம்மாவை சமாதானப்படுத்த முடியாமல் அவளும் அழுதாள். எனக்கு ஏனோ அழுகை வரவில்லை. டாக்டர் என்னிடம், “அப்பா என்ன சோலி பாக்கா?” என்று கேட்டார்.
“சே…இப்டி ஆயிப் போச்சேம்மோ…இனி என்ன செய்வியோ? வேற யாரும் சப்போர்ட்டுக்கு உண்டுமா?”
நான் அமைதியாக நின்றேன். நான் இருக்கிறேன் என்று சொல்லத் தோன்றியது. டாக்டர் தலையை ஆட்டி விட்டு, அப்பாவிற்குக் குடுக்க வேண்டிய மருந்துகள் மற்றும் உணவு பற்றியும், எதிர்காலம் பற்றியும் என்னிடம் விளக்கிக் கூறினார்.
அப்பாவின் அருகே சென்று உட்கார்ந்தேன். நீண்ட உறக்கத்திலிருந்து விழித்தவர் என்னைப் பார்த்ததும் சிரிக்க முயன்றார். அப்பாவின் கோணல் சிரிப்பைப் பார்க்க முடியவில்லை. முகத்தைத் திருப்பிக்கொண்டேன். மெல்ல என் கையை அவரது இடது கையால் பிடித்து இழுத்தார். நான் திரும்பி அவரது முகத்தைப் பார்த்தேன். அவரது முகம் ஏதோ சொல்லத் துடித்தது. அப்பா என் கையை மீண்டும் தட்டி என் சுடிதாரைப் பிடித்து இழுத்து ஏதோ சைகை செய்தார்.
“எம்மா..அப்பாக்குள்ள சட்டய எங்க?”
அம்மா ஒரு கூடையிலிருந்து அப்பாவின் சட்டையை எடுத்து என் கையில் குடுத்தார். நான் அதை அப்பாவின் அருகே கொண்டு சென்றேன்.அந்த சட்டைப்பையில் எதையோ தேடியவர் ஒரு சாவியை எடுத்து என் கையில் வைத்தார். என்னைப் பார்த்து மீண்டும் சிரிக்க முயன்றார். பகவதி அம்மன் ஓவியத்தை வரைந்து முடிக்கும்போது அப்பா இப்படித்தான் சிரிப்பார்.
“எம்மா…பாத்துக்கோ..” என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு ஓடினேன் நான். என்னையே அறியாமல் என் மனதிற்குள் பேரானந்தம் பொங்கிக்கொண்டு வந்தது. வீட்டிற்குப் போய் அப்பாவின் அறையைத் திறந்தேன்.
அந்த நொடி நான் நுழைந்தது திருவிதாங்கூர் அரண்மனைக்குள். ஐந்தடி உயர மூங்கில் மேட்டில் என் கண் முன்னால் தத்ரூபமாக நின்றார் ராஜா ரவி வர்மா. என்னைப் பார்த்து அவர் புன்னகைத்தார். அவர் அருகில் சென்று மெல்லத் தொட்டுப் பார்த்தேன். என் அப்பாவின் உடல் சூடு. ஏதோ தோன்ற, சட்டென்று பின்னால் சென்று அந்த ஓவியத்தைக் கூர்ந்து கவனித்தேன். அது அப்பாவின் முகமே தான்.
அப்பா ராஜ உடையுடன் இடது கையில் ஒரு கைத்தடி வைத்திருந்தார். அவரது கோட்டின் வலது மார்பில் ராஜாங்கப் பதக்கம் மின்னியது. ஓவியத்தின் இடது கீழ்புறத்தில் அப்பாவின் பெயர் எழுதப்பட்டிருந்தது.
…
– சுஷில்குமார் – நாகர்கோயிலைச் சேர்ந்த இவர். கிராமப்புற மாணவர்களின் மாற்றுக் கல்வி சார்ந்த ஆசிரியப் பயிற்சி மற்றும் பள்ளிகள் மேலாண்மைப் பணிகளை கோவையில் இருந்து செய்து வருகிறார். தொடர்புக்கு -sushilkumar.gopal@ishavidhya.org
பிரியா முதன் முதலில் நேரு நகருக்கு வந்தபோது அங்கிருந்த இளைஞர்கள், சினிமாவில் தேவதையின் வருகைக்கு காட்டப்படும் வெளிப்பாடுகளுடன் அவளை எதிர்கொண்டார்கள். அவள் அவ்வளவு பேரழகி என்பதை விட அவள் எப்படி குணாவுக்கு மனைவியானாள் என்பதுதான் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
அவர்களைக் கடந்து சென்ற அல்லது அவர்கள் கடந்து சென்ற ஒவ்வொருவரின் கண்களிலும் அந்த செய்தியைப் படிக்க முடிந்தது. பிரியாவிடம் இருந்து ஒரு துயரம் பரவிக் கொண்டு சென்றது. அது எதிர்ப்பட்டவர்களின் மீதெல்லாம் படிந்து அவர்களின் மனத் துயரத்தை விழிக்கச் செய்தது.
குணா இந்த தெருவுக்கு வலது பக்கத்தில் இருக்கும் திலகர் நகரில் கடை வைத்திருக்கிறான். அது மளிகைக் கடை என்றும் சொல்ல முடியாமல் பெட்டிக் கடை என்றும் சொல்ல முடியாமல் இரண்டுங்கெட்டானாய் இருந்தது. அவன் கடைக்கு அருகில் இருக்கும் செட்டியார் மெஸ்சில் பரோட்டாவும் சால்னாவும் பிரமாதமாய் இருக்கும்.
குணா கணக்கு வழக்குகளால் நிரம்பியவன். முட்டாள்தனமான பார்வையும் வணிகத்தனமான சிரிப்பையும் உடையவன். அப்பாவி என்று சொல்லலாம். ஆனால் அப்பாவி என்றால் நல்லவர்களாக இருப்பார்கள் என்ற பொதுவான பிம்பம் இவனுக்குப் பொருந்தாது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
பிரியாவை மனைவியாக அவன் தெருவுக்குள் கூட்டி வந்தபோது ராஜாவுக்கு அருகில் இருக்கும் மொட்டை மாடியில் ஏறி மலர்களை அள்ளி அவள் மேல் வீச வேண்டும் என்று தோன்றியது. அபத்தம்தான் என்றாலும் அப்படி செய்திருந்தால்தான் சரியாக இருந்திருக்கும் என எப்போதும் நினைத்துக் கொள்வான்.
குணா வீட்டுக்கு அடுத்த வீடுதான் ராஜாவினுடையது. அவனோடு அவன் அம்மா மட்டும் இருக்கிறார். அப்பா விபரம் தெரியாத வயதிலேயே காலமாகிவிட்டார். அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கல்யாணம் ஆகாதது ஒரு பெரும் குறையாக அவன் மனதை அறுத்துக் கொண்டிருந்தது. இப்போது அதற்காக அவன் மகிழ்ச்சியடைந்தான்.
உடனே ராஜாவை வக்கிரம் பிடித்தவனாகப் பார்க்க வேண்டாம். அவனிடம் மேல் அதிக திட்டம் எதுவும் இல்லை. பிரியா பேரழகியாய் இருந்தாலும் அவளை அவன் மனதுக்குள் ஆபாசமாய் எடுத்துச் செல்ல முடியவில்லை. ஆனால் ஒவ்வொரு முறை அவளைப் பார்க்கும்போதும் ஸ்தம்பித்து நிற்பதும் மனதுக்குள் ஒருமுறை பேரழகி என்று சொல்லிக் கொள்வதும் அவனுக்கு ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது.
பிரியா வந்த ஒரு சில நாட்கள் அந்த தெருவே ஒரு அசாதாரண அல்லது ஒரு அற்புதம் நடந்துவிட்ட இடம் போல இருந்தது. இதோ அந்த வீட்லதான்… புதுசா கல்யாணமான பொண்ணு. அவ எப்படி இருக்கா பாத்தியா. அவ புருசன பாத்தியா? போன்ற பேச்சுகள் தெருவில் சதா கேட்டுக் கொண்டே இருந்தன. ஆனால் ஓரிரு வாரத்திலேயே எல்லாம் சாதாரணமாகிவிட்டது. அங்கே ஒரு பேரழகி இருப்பதை தெருவாசிகள் மிக சகஜமான ஒரு விஷயமாக எடுத்துக் கொண்டனர்.
* * *
திருமணம் முடிந்து வந்தவுடன் ஒருவாரம் கடையை மூடிவிட்டு அவளை எங்கெங்கோ வெளியில் அழைத்துக் கொண்டு போனான் குணா. ஒவ்வொரு நாளும் திரும்பி வரும்போது அவன் மிகச் சோர்வாகவும் வெறுப்படைந்தவனாகவும் இருப்பதை ராஜா கவனித்தான். அது வெறும் ஊர் சுற்றியதால் ஏற்பட்ட களைப்பு மட்டும் அல்ல என அவன் யூகித்தான். அது ஏனோ அவனுக்கு அவ்வளவு பிடித்ததாய் இருந்தது. அதே சமயம் பிரியாவின் அந்த மென்மையான முகம் எந்த செய்தியும் இன்றி வெறிச்சென்றிருப்பதைப் பார்த்து அவனுக்கு வியப்பாக இருந்தது. அதில் எப்படியும் ஒரு சின்ன தடயத்தையாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என எவ்வளவு முயற்சித்தும் ஒன்றும் நடக்கவில்லை.
அவன் மட்டுமல்ல அந்த தெருவாசிகள் எல்லோருமே அந்த ஜோடியின் பொருத்தமற்ற தன்மையைக் கண்டு ஒரு பதட்டத்துக்கு உள்ளாகினர். தங்கள் கண் முன்னாலேயே ஒரு அநீதி நடக்கும் போதும் தங்களால் அதற்கெதிராக ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்பதைப் போல ஜோடியாக வெளியே சென்று வரும் அவர்களைப் பார்த்தனர்.
ராஜா ஆம்னி பஸ்களுக்கு டிக்கெட் பிடித்து தரும் ஏஜெண்டாக வேலை செய்கிறான். அவனுக்கு பகலில் பெரும்பாலும் வேலை இருக்காது. மந்தமான மதிய நேரங்களில் தூங்குவான். மாலையில் எழுந்ததும் வெளியே கிளம்பிப் போவான். தெருமுனையில் இருக்கும் பிரதான சாலையில் கொஞ்சம் கொஞ்ச தூரத்தில் நான்கு டீக்கடைகள் இருக்கின்றன. அந்த எல்லாக் கடைகளுக்குமே அவன் வாடிக்கையாளன். அப்போதைக்கு எங்கே போகவேண்டும் என நினைக்கிறானோ அந்தக் கடைக்குப் போய் கொஞ்சநேரம் உட்கார்ந்திருப்பான். அதே சமயத்தில் அங்கே வாடிக்கையாக வருபவர்களில் சிலருடன் அவனுக்கு பழக்கம் ஏற்பட்டிருந்தது. அவர்களுடன் கொஞ்சநேரம் எதையாவது பேசிக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு வருவதற்குள் மாலையாகியிருக்கும். உடை மாற்றிக் கொண்டு வேலைக்கு கிளம்பிவிடுவான்.
முன்பெல்லாம் இந்த இடம் குடிசைவாசிகளுடையதாய் இருந்தது. பிறகு இப்போதுள்ள முதலாளிக்கு இடம் கைமாறிய பின் அவர்களெல்லாம் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.
இப்போது இந்த தெரு ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் நீண்ட அடர்த்தியான தெருவாக மாறிவிட்டது. தெருவோரத்தில் விதவிதமான மரங்கள். வீடுகளின் அருகே சிறு சிறு அழகுச் செடிகள். கார் வைத்திருப்பவர்கள் ஒன்றிரண்டு பேர்தான். எல்லா வீடுகளிலும் பைக் இருக்கும். இப்போது அது ஸ்கூட்டியாய் மாறிக் கொண்டிருக்கிறது.
பஸ் ஸ்டாண்டில் தினமும் ஆயிரக்கணக்கான பயண முகங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அவனுக்கு யார் யார் எங்கே போகக் கூடும் என தெரியும். சென்னை செல்பவர்கள் தான் அவன் இலக்கு. உள்ளுணர்வை அவன் நீண்ட நாட்களாக பழக்கி வைத்திருந்தான். சென்னை போகிறவர்கள் யார்? அவனிடம் டிக்கெட் வாங்கக் கூடியவர்கள் யார் என்பதெல்லாம் அவனுக்கு ஒருவருடைய முகத்தைப் பார்த்தாலே தெரியும். அவன் குறிப்பிட்ட அந்த பயணியை அணுகி மிகவும் நம்பிக்கைக்குரிய விதத்தில் சார் சென்னைக்கு போறீங்களா? இன்னும் கொஞ்ச நேரத்தில பஸ் கிளம்புது என்பான். பெரும்பாலும் அவனுடைய கணக்கு சரியாய் இருக்கும்.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் டிக்கெட்டுகள் வேகமாக விற்றுவிட்டன. சீக்கிரமாய் வீட்டுக்கு வந்துவிட்டான்.
வண்டியில் வந்து வீட்டுமுன் நின்றபோது, அம்மா பக்கத்து வீட்டில் இருந்தார். இவனைப் பார்த்ததும் இதோ வந்துட்டேன் என பிரியாவிடம் சொல்லிவிட்டு வந்தார்.
ராஜா உடை மாற்றிக் கொண்டே அந்த ஆள் எங்க போயிட்டான் அந்தப் பொண்ணு என்ன சொல்லுது என சம்பிரதாயமாகக் கேட்பது போல் அம்மாவிடம் கேட்டான்.
அவன் யாரையோ பாக்கணும்னு சாயந்திரமே போனான் இன்னும் காணோம். அந்த பொண்ணு என்ன சொல்லுது பாவம். அவங்க அம்மா சின்ன வயசுலயே இறந்துட்டாங்களாம். அப்பாவுக்கு கூலி வேலை. இந்த குணா டவுன்ல பெரிய மளிகைக் கடை வச்சிருக்கேன்னு சொல்லி வேற எந்தக் கடையவோ காட்டியிருக்கான். அவருக்கும் சந்தேகம் எல்லாம் வரல. வேலைக்கு ஆளுங்கள வெச்சிருக்கார்னு நினைச்சிகிட்டார். அவ்வளவு பெரிய கடையில போய் விசாரிச்சிப் பாக்கணும்னெல்லாம் அவருக்கோ அவங்க சித்திக்கோ தோணல.
ராஜாவுக்கு ஆச்சரியமாய் இருந்தது. இப்படியெல்லாம் கூட துணிந்து ஏமாற்றுவார்களா? குணாவின் மேல் இருந்த வெறுப்பு மேலும் கூடி பிரியாவின் மேல் இருந்த அனுதாபம் அல்லது ஏதோ ஒன்று இன்னும் கூடியது.
மறுநாள் இரவு அவன் வரும்போது பிரியா வீட்டில் ஏதோ சச்சரவாய் இருந்தது. குணாவின் குரல் ஓங்கி ஒலித்தது. அவள் அழுதபடியே ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். ராஜா வெறுப்பாய் வீட்டுக்குள் போனான்.
கல்யாணம் ஆகி வந்த புதிதில் பிரியாவையும் கடைக்கு வரச் சொல்லியிருக்கிறான். இவளும் காலையில் வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு கடைக்குப் போயிருக்கிறாள். அந்த வழக்கம் நான்கு நாட்களுக்கு மேல் நீடிக்கவில்லை.
செட்டியார் மெஸ்சுக்கு பரோட்டா சாப்பிட வருபவர்கள் பெரும்பாலும் இவன் கடைக்கு வர மாட்டார்கள். அங்கே வருபவர்கள் எல்லாம் பட்டறைக்காரர்கள், தறிக்காரர்கள் என ஒரே ரகமாய் இருந்தனர். பிரியா கடைக்கு வந்ததும், அவன் கடைக்கு கூட்டம் அதிகமானது. அந்த மிதமிஞ்சிய வாடிக்கையாளர் வருகையைக் கண்டு பயந்து போய் அவளை வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டான்.
வீட்டில் தனியாக இருக்க முடியவில்லை. வேலைக்குப் போகிறேன் என குணாவிடம் கேட்டிருப்பதாக பிரியா ராஜா அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
குணா அப்படியெல்லாம் பிரியாவை வேலைக்கு விட மாட்டான் என்றுதான் ராஜா நம்பிக் கொண்டிருந்தான். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் பிரியா வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டாள்.
பஸ் ஸ்டாண்டில் உள்ள பிரபலமான நகைக்கடையில் வேலை. ராஜா தினமும் வேலைக்குப் போகும்போது அந்த நகைக்கடை வழியாகத்தான் போவான். இப்போது அப்படி போகும்போது கடைக்குள் பிரியா தென்படுகிறாளா என திரும்பிப் பார்த்துக் கொண்டே போகிறான். சாலையில் இருந்து உள்ளே யாரையும் பார்க்க முடியாது என்றாலும் அவனால் அந்தப் பழக்கத்தை விட முடியவில்லை. பின் தங்க நகைக் குவியலுக்கு இடையே பிரியா நிற்கும் தோற்றம் அவன் கண்ணுக்குள் தென்படும். சந்தேகம் இல்லாமல் அந்த இடத்தில் நகைகளை விட அவள் அழகுதான் ஜொலிக்கும் என அவனுக்குத் தெரியும் அல்லது அப்படி கற்பனை செய்து கொள்வது அவனுக்கு எளிதாகவும் விருப்பமாகவும் இருந்தது.
பிரியா ஒரு ஏழைப் பெண், அவளுக்கு அம்மா இல்லை, குணா அவளை ஏமாற்றி கல்யாணம் செய்து கொண்டு வந்துவிட்டான் என்ற செய்தி அந்தத் தெருவெல்லாம் பரவிவிட்டதால், குணா மீதான கசப்பு வெளிப்படையாகப் பல மடங்காக தெருவாசிகளிடம் கூடியிருந்தது.
அன்று பஸ் ஸ்டாண்டுக்கு முன்னால் இருக்கும் சிக்னலில் ராஜா நின்று கொண்டிருந்தான். மாசடைந்த காற்று அவன் முகத்தில் படியவைத்திருந்த கார்பன் துகள்களைக் கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டிருக்கும்போதுதான் அவர்களைப் பார்த்தான். பிரியாவுடன் இன்னொருவனும் என்னவோ பேசியபடி அந்த சாலையோரம் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
அவன் மீண்டும் மீண்டும் பார்த்தான் எப்படிப் பார்த்தாலும் அவள் பிரியாவாகவே இருந்தாள். அவர்கள் நடந்து சென்ற விதம் அவர்கள் வெறும் நண்பர்களாக இருக்க வாய்ப்பில்லை என்று சொன்னது.
ராஜாவை முதலில் ஒரு துயரம் கவ்வ முயன்றாலும் பின் எழுந்த ஒரு மகிழ்ச்சியின் அலையில் அவன் உள்ளுக்குள்ளாக துள்ளிக் குதித்தான். ஏனென்றால் பிரியாவுடன் இருந்தவன் அவளுக்கு ஏற்ற அழகனாய் இருந்தான். ஏதோ ஒரு பிடிபடாத குற்ற உணர்வு அவனை விட்டு விலகியதைப் போல இருந்தது. சிக்னல் விளக்கு ஆரஞ்சு நிறத்துக்கு மாறியது. வாகனங்களின் உறுமல் ஓசை சீராக உயர்ந்து, பச்சை ஒளிர்வைக் கண்டதும் சாலையில் வாகனங்களின் வெள்ளம் பெருக்கெடுத்துச் சென்றது.
அவன் அதை யாரிடமும் சொல்லவில்லை. பிரியாவைப் பார்க்கும்போது இன்னும் சிநேகமாக புன்னகைக்க வேண்டும்போல இருந்தது. அடுத்த சில நாட்களிலேயே அந்த இளைஞனோடு வண்டியில் வந்து வீட்டுக்கு முன் இறங்கினாள் பிரியா.
அப்போது அவர்களைப் பார்த்த அந்த தெருவாசிகள் எல்லோருமே அவனைப் போலவே தான் நினைத்தனர். இதுதான் சரியான ஜோடி. ராஜாவின் அம்மா கூட என்னடா இந்தப் பொண்ணு இப்பிடிப் பண்ணிட்டா என்றாலும், பின், ஆனா இவங்களப் பாத்தாதாண்டா கண் நிறைஞ்ச ஜோடியா தெரியுது. இந்தப் பொண்ணுக்கும் அவனுக்கும் இது இப்ப வந்த பழக்கமா இருந்திருக்காது. அவங்க ஏற்கனவே காதலிச்சிருக்கனும் என்றார்.
அதன்பின் அவர்கள் தெருவில் அடிக்கடி தென்பட்டார்கள். யாரும் அவர்களை கண்ணியக்குறைவாகவோ, இகழ்ச்சியாகவோ பார்க்கவில்லை. சாஸ்திர, சம்பிரதாயங்களின் குரல்கள் அவர்களின் மனதில் அலறினாலும் அவர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் இருக்கவே விரும்பினார்கள். இந்த விசயத்தை யாரும் குணாவின் காதுகளுக்கே கொண்டு போகவில்லை. அவன் இன்னும் சரியாக ஏமாற்றப்பட வேண்டும் என தெருவாசிகள் எதிர்பார்ப்பதைப் போல இருந்தது.
ஒரு மாதத்திற்கும் மேலாக இது தொடர்ந்தது. இரவில் வீடு திரும்பும் குணா அவனுடைய இயற்கையான சந்தேகப்புத்தியால் பிரியாவை அடிப்பதும் துன்புறுத்துவதும் தொடர்ந்து கொண்டே இருந்தது. பிரயாவின் அழகிய பிசிறில்லாத குரலிலிருந்து எழும் அலறல் இரவில் தெருவெல்லாம் எதிரொலித்தது.
ராஜாவின் அம்மா மட்டுமல்ல இன்னும் அக்கம்பக்கத்தில் இருக்கும் பல பெண்களும் பிரியாவிடம் சொல்லிவிட்டார்கள். இன்னும் இவங்கூட ஏம்மா சின்னப்பட்டுகிட்டு இருக்கற. அந்தத் தம்பி கூட எங்கியாவது தூரமா போயிடு. சீக்கிரம் ரெண்டு பேரும் இங்கிருந்து போயிடுங்க. இவன் உன்னைக் கொஞ்சம் கொஞ்சமா கொன்னுருவான்.
பிரியா தலையை குனிந்து கொண்டு அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பாள். அவள் மனதில் என்ன திட்டம் இருந்ததோ கடவுளோ அல்லது சாத்தானுக்கோதான் தெரியும்.
ஆனால் அது தானாகவே நடந்தது. அன்றைய நாள் எந்த வித்தியாசமும் இல்லாமல் வழக்கம்போலவே இருந்தது. காலையில் குணா கடைக்குப் போனான். பின் பிரியா நகைக் கடைக்குப் போனாள்.
மாலையில் ராஜா பஸ் ஸ்டாண்ட் போனான். இரவு வீடு திரும்பிய குணா வழக்கம்போலவே பிரியாவை அடித்து நொறுக்கினான். இரவு அமைதி கடந்து செல்ல, விடியற்காலை நேரத்தில் குணா செத்துப் போயிருந்தான்.
சூரிய உதயத்திற்கு முன்பே பிரியாவின் அலறல் தெருவை உலுக்கி எழுப்பியது. காலையில் அவனிடம் இருந்து விநோதமான சத்தம் வந்ததாகவும், பிரியா பயந்துபோனவளாய் எழுந்துபோய் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததாகவும், அதை குடிக்கும் முன்பே அவன் தலை சாய்ந்துவிட்டதாகவும் சொல்லிக் கொண்டிருந்தாள்.
இளம் வயதுதான் என்ன செய்வது சிலருக்கு இப்படி மாரடைப்பு வந்துவிடுகிறது என பிரியாவின் வீட்டில் குவிந்த ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். தங்களுக்குத் தெரிந்த இளம் வயதில் மாரடைப்பால் இறந்தவர்களின் பட்டியல் ஒன்று அங்கே தயாராகிக் கொண்டிருந்தது. எல்லோர் மனதில் ஒரு சந்தேகமும் அதன் பின்னாலேயே அப்படியெல்லாம் இருக்காது என்ற சமாதானமும் எழுந்தது.
அந்த தெருவில் யாரோ ஒருவருக்கு அந்த சந்தேகம் வலுவாய் ஆட்டிப் படைத்திருக்கிறது. அவர் குணாவின் வீட்டுக்கு வரவில்லை. வந்து பிரியாவின் முகத்தைப் பார்த்திருந்தால் ஒருவேளை அந்த சந்தேகம் அத்தனை வலிமையாய் இருந்திருக்காது. அவரின் அநாமதேய போன் கால் மூலம் போலீசார் குணாவின் வீட்டுக்கு வந்தனர்.
மக்களின் கடுமையான எதிர்ப்பு, பிரியாவின் குற்றம் சொல்ல முடியாத தோற்றம், சந்தேகம் என ஒருவரும் புகார் அளிக்காதது போன்றவற்றால், பிரேதத்தை எரிக்கக் கூடாது என்ற நிபந்தனையோடு போலீசார் திரும்பிச் சென்றுவிட்டனர்.
அதன்பின் பிரியா அங்கேயேதான் இருந்தாள். மீண்டும் நகைக் கடைக்கு வேலைக்குப் போனாள். அவள் காதலன் அவளைக் கொண்டு வந்து விட்டுவிட்டுக் கண்ணியமாக் திரும்பிச் சென்றுகொண்டிருந்தான்.
தெருவாசிகள் அவன் யார் என்று விசாரித்தார்கள். அவன் பெயர் விநோத். அப்பா அம்மா இல்லை. பணிவும் அமைதியும் நிரம்பியவன். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறான்.
ஆறு மாதங்கள் கழித்து பிரியாவை அவன் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ராஜாவிடம் சொன்னான். ராஜா அதை அம்மாவிடம் சொல்ல அவர்களின் திருமணத் தேதி முடிவு செய்யப்பட்டது.
முன்பாக, குணாவின் பெட்டிக் கடையில் இருந்த பொருட்களையெல்லாம் ஏதோ ஒரு விலைபேசி பக்கத்தில் இருந்த பெரிய மளிகைக் கடை ஒன்றுக்கு தந்துவிட்டு கடையை காலி செய்தார்கள்.
ரிஜிஸ்டர் அலுவலகத்தில் எளிமையாக நடந்த அந்த திருமணத்திற்கு ராஜா, அவன் அம்மா பிரியா குடியிருக்கும் வீட்டுக்கு சொந்தக்காரர் மற்றும் விநோத்தின் நண்பர்கள் இருவர் மட்டும் வந்திருந்தனர்.
அன்று மதியம் பிரியாவின் வீட்டிலேயே எளிமையான விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தம்பதி சார்பாக ராஜாவே தெருவாசிகள் அனைவரையும் விருந்துக்கு அழைத்தான்.
பிரபலமான கடையில் இருந்து தருவிக்கப்பட்ட சாப்பாடு சரியான நேரத்திற்கு வந்திறங்கியது. முதலில் யாரும் வராததைப் போல தெரிந்தாலும் பின் ஒவ்வொருவராக தெருவில் இருந்த எல்லோருமே வந்துவிட்டனர். ஒவ்வொருவரும் வீட்டுக்குத் தேவையான எளிய பரிசுப் பொருட்களோடு வந்து இருவரையும் வாழ்த்தினர். மாலையிலேயே அவர்கள் மணமகன் வீட்டுக்கு போக இருப்பதால் அவர்களை வழியனுப்ப எல்லோரும் அங்கேயே கதை பேசிக் கொண்டு உட்கார்ந்திருந்தனர்.
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாடகை கார் மாலையில் வீட்டுக்கு முன்னால் வந்து நின்றது. இருவரும் ஒவ்வொருவரிடமும் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டு நெகிழ்ந்த இதயத்தோடு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
கார் தெருவை விட்டு பிரதான சாலைக்கு சென்று மறைந்த கொஞ்ச நேரத்தில் சூறைக்காற்று வீச ஆரம்பித்தது. எல்லோரும் அவசர அவசரமாக வீடு திரும்பினர் பெண்கள் துவைத்து காயப்போட்ட துணிகளை வீட்டுக்குள் எடுத்துச் சென்றனர்.
இயந்திரம் ஒன்றை முடுக்கியது போல சட்டென மழைத் தூறல் விழ ஆரம்பித்தது. ஒரு சில நிமிடங்களில் எழப்போகும் மண்வாசனையை நுகருவதற்காக எல்லோரும் காத்திருந்தனர். ஆனால் மண்ணில் இருந்து ரத்தவாடை வீசியது. அது வேறெங்காவது வீசுகிறதா என சுற்றிச் சுற்றிப் பார்த்தவர்கள் ஒரு சில நிமிடங்களில் மழைநீருடன் செந்நிறக் கோடுகள் கலந்து விழுவதைக் கண்டனர். கைகளில் ஏந்திப் பார்த்தபோது அது ரத்தமாய் இருந்தது.
பனிக்கட்டி மழை தெரியும். மீன் மழையை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இது என்ன ரத்த மழை என புரியாமல் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டனர். உயரமான மரங்களின் இலைகளில் இருந்தும், வீட்டுக்கு முன் இருந்த செடிகளில் பூத்திருந்த மலர்களில் இருந்தும் ரத்தம் வழிந்தோடியது. ராஜா அதை போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டான். இன்னும் நிறைய பேரும் ரத்த மழையை வீடியோ எடுத்தனர்.
ராஜா தெருவில் ரத்தம் கலந்து ஓடிய மழைத் தண்ணீரை ஒரு பாட்டிலில் கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டான். எப்படி ஆரம்பித்ததோ அப்படியே பத்து நிமிடத்தில் மழை சுவிட்ச் போட்டதைப் போல நின்றுவிட்டது. அப்போது அந்தத் தெருவைத் தவிர வேறு எங்கும் மழை பெய்திருக்கவில்லை.
குமாரநந்தன் – சேலத்தில் வசிக்கின்ற இவருக்கு இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் ‘நகரப் பாடகன், பூமியெங்கும் பூரணியின் நிழல்’ ஆகிய நூல்கள் வெளியாகியுள்ளன. ஆசிரியர் தொடர்புக்கு – kumaarananthan@gmail.com
அனைத்து நம்பிக்கைகளும் கருகிய பிறகுதான் அவரிடம் வந்திருந்தேன். ஒரு மதுபானக்கடையில் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. அவர் தன்னை அசோகன் என்று அறிமுகம் செய்து கொண்டார். நான் மீள மீள எவ்வளவு கேட்டும் அவர் தன்னைப் பற்றி வேறு ஒன்றுமே சொல்லவில்லை. ஆனாலும் சற்று நேரத்திலேயே நான் அவரை அடையாளம் கண்டு கொண்டேன். வாழ்க்கையின் கடினமான காலங்களைப் பல்லைக் கடித்துக் கொண்டு புகாரில்லாமல் கடந்தவர்களின் கனிவின் இறுக்கத்தைப் பிரதிபலிக்கும் முதிர்ந்த முகத்தைக் கொண்டவராக அவர் இருந்தார். இளமையிலும் அவர் ஒன்றும் அழகராக இருந்திருக்க வாய்ப்பில்லை. அவர் முகத்தில், கடற்கரை முழுதும் கிளிஞ்சல்களைப் பொறுக்கிச் சேர்த்து மணல்வீட்டினை அழகுபடுத்தும் சிறுமி போல அவர் வாழ்க்கை கொண்டு வந்து சேர்த்திருந்த விவேகத்தின் அழகு மட்டுமே மிளிர்ந்தது. அவருடைய அழகு எனக்குள் துவேசத்தை கிளப்பியது. மண் நிறத்திலான சட்டை, வெள்ளை வேட்டி, பற்கள் பாதி உதிர்ந்த வாய், நீளமான மூக்கு அதன் மேல் கண்ணாடி. இந்தக் கிழவனிடம் நான் துவேசம் கொள்ள எதுவுமே இல்லை. ஆனாலும் எனக்குள் ஊதப்படும் அனல் போல அவர் முகத்தைக் காணும் போதெல்லாம் ஆத்திரம் கனன்றது.
அவர் சற்றும் பெருமிதம் தொனிக்காத புன்னகையுடன் “அத சந்தோஷம்னா சொல்றேள். ம் உங்களுக்கு அப்படித் தோணினா நானும் அதை ஒத்துண்டு தான் ஆகணும். ஏன்னா எனக்கு முன்னாடி நிக்கிறவாளுக்குத்தானே என்னைப் பத்தி என்னை விட நல்லாத் தெரியும்”
“நீங்க ஏதும் குடிக்கலையா? எனக்கு குடிக்கிற பழக்கம் கெடையாது” என்றேன்.
“அட! பாருங்களேன். நானும் குடிக்கமாட்டேன். என் ஃபிரெண்ட் ஒருத்தன் கூட வந்தேன். அவன் பாட்டிலை வாங்கிண்டு ‘செத்த இருடா வந்திடறேன்’னு சொல்லிட்டுப் போனான். இன்னும் ஆளைக் காணல”
“என்னைக் கேட்டா அனுபவத்தைத் தேடி எழுத்தாளன் அலையக்கூடாதுன்னு சொல்வேன். அதுக்குன்னு சோம்பி ஒரு மூலையில் அவன் உட்காந்திடணும்னு அர்த்தமில்லை. அவன் தேடலில் எழுத்துக்கான விஷயம் சிக்குமான்னு அலையிறதுல ஒரு சின்ன ஆபாசம் இருக்கிறதா எனக்குத் தோண்றது”
நான் அவ்வப்போது அங்கு வருவேன். அசோகன் சொல்வது போல எனக்கு அனுபவம் திரட்டும் நோக்கம் ஏதுமில்லை. ஆனால் அவர் சொன்னதை மறுதலிக்கவும் முடியவில்லை. நானே அறியாமல் அப்படி அனுபவம் திரட்டும் எண்ணம் எனக்குள் இருந்திருக்கலாம். அந்த மதுக்கடையில் அன்று கூட்டம் வழக்கத்தை விடக் குறைவாகத்தான் இருந்தது. அவரை பேச்சை நோக்கி உந்த வேண்டும் என்பதற்காக
“ஹஹா மதுக்கடை யோக்கியர்கள்னு நீங்க இதை வச்சு ஒரு கதை எழுதலாம். மதுக்கடையில் குடிப்பழக்கம் இல்லாத இரண்டு பேர் தற்செயலாக அமர்ந்து உரையாடுவது நீங்க உங்க கதைகள் வழியா காட்டிட்டு இருந்த அபத்தங்களுக்கு பொருத்தமான கண்டெக்ஸ்ட் இல்லையா?” என்று சொன்னேன். என்னையறியாமலேயே அவர் படைப்புகள் பற்றி பேசும்போது ஒரு ஆங்காரம் என் குரலில் ஏறுவதை உணர்ந்து என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன்.
அவர் மெல்லிய புன்னகையுடன் “எனக்கு உங்களைத் தெரியும்” என்றார்.
நான் அதிர்ந்து போனேன். அவரை அனேகமாக இலக்கிய உலகில் அறியாதவர்கள் கிடையாது. காலம் முழுக்க நிதானம் தவறாது சீராக இயங்கியவர். அவருடைய படைப்புலகம் மிக விரிவானது. ஐம்பது வருடங்களுக்கும் அதிகமாக எழுதிக் கொண்டிருக்கிறார். பெரிதாக அங்கீகாரங்களோ வசதியோ அமையவில்லை என்றாலும் கூட அவர் எந்தக் காலத்திலும் சோர்வுறவில்லை. ஆனால் அவர் கதைகளில் சலிப்பும் சோர்வும் துயரங்களும்தான் இருந்தன. என் குழப்பத்தை உணர்ந்து கொண்டவராக அவரே தொடர்ந்தார்.
“வேணுமானா ரஜனிகாந்த் ஸ்டைலில் இப்படிச் சொல்லலாம். நீங்க என்னோட பத்துக்கதை படிச்சேள்னா நான் உங்களோட ஒரு கதையாவது படிக்க மாட்டேனா?”
அவருடைய நிதானம் என்னைச் சீண்டியது. அவரை சீண்ட விரும்பினேன்.
“நீங்க இப்படி சலனமில்லாமல் தினம் இருக்க வீட்டில் எத்தனை மணிநேரம் பிராக்டிஸ் பண்றீங்க இல்ல ஏதும் டேபிளட் எடுக்குறீங்களா?”
“நேக்கு எண்பத்தாறு வயசு ஆறது. இந்த வயசிலே உணர்ச்சிய கன்ட்ரோல் பண்ண நான் டேப்ளட் எடுத்தா நான் உங்க முன்னாடி உட்கார்ந்து பேசிட்டிருக்க முடியும்னு நெனைக்கிறேளா. நீங்க சொல்றபடி நான் பிராக்டிஸ் பண்ணினா காலையில் ஏந்து பிராக்டிஸ் பண்ற வரைக்கும் சலனத்தோட இருந்துண்டு இருக்கணும் இல்லையா. வேணுமானா நீங்க என் வீட்டுக்கு விடிகாலைலேயே வாங்கோ. நான் ஏதும் பண்றேனான்னு செக் பண்ணுங்கோ”
அவர் முகத்தில் புன்னகை மாறவே இல்லை. அவர் என் கதைகளை வாசித்து இருக்கிறார் என்பது என்னைப் படபடக்க வைத்தது.
“என் கதைகள் பத்தி என்ன நினைக்குறீங்க?”
“புண்ணைக் குத்திண்டே இருந்து என்ன ஆகப்போறது. கொஞ்ச நாள் கைவைக்காம தான் இருங்களேன். அப்பவும் காயம் ஆறாம சீழ் வச்சா அப்புறம் பிதுக்கி எடுக்கலாம்”
அவர் என் எதிரே அமர்ந்து பேசினாலும் அவர் சொற்கள் என் தலையைக் கோதுவதைப் போல இருந்தது. ஆனாலும் எனக்குள் ஒரு மெல்லிய அதிர்வையும் அவர் சொற்கள் கொடுத்தன. கண்களை மூடிப் பெருமூச்சு விட்டேன். அது நான் தனியே இருக்கும் போது அடிக்கடி செய்வது என்பதால் சற்று மனம் குன்றி பக்கத்து மேசைகளைப் பார்த்தேன்.
“இங்க நீங்க வித்தியாசமா நடந்துண்டா யாரும் தப்பா நினைக்கமாட்டா. ரொம்ப நாகரிகமா இப்ப நாம செத்த முந்திவரை பேசிட்டு இருந்த மாதிரி பேசினா ஒரு மாதிரி பாப்பாளோ என்னவோ”
“உங்க நேர்காணல் ஒன்னில் , ரொம்ப நாள் முன்ன , ‘ரொம்ப வருத்தம் ஏற்படுவது சில சமயம் எழுதத் தூண்டுது. சில சமயம் எழுத்த முடக்கிடுது’ன்னு சொல்லி இருந்தீங்க. எனக்கு அந்த வார்த்தை தான் எழுதுறதுக்கான உந்ததுதலைக் கொடுத்தது. நான் ரொம்ப சோர்ந்து போகும்போதுதான் எழுதுறேன். என் சோர்வையும் பயத்தையும் வேற என்ன பண்ணி போக்கிக்கிறதுன்னு தெரியல”
“நான் உங்களுக்கு ஏதாவது சொல்லணுமா?”
“நீங்க என்ன சொன்னாலும் நான் அதை கேட்டுப்பேன்” நான் ஒரு குழந்தையைப் போலச் சொன்னேன்.
“ஆனா என்னால எழுதாம இருக்க முடியும்னு தோணலையே. அது ஒன்னுதான் எனக்கு இருக்கிற ஒரே சந்தோஷம்”
நான் இதைச் சொன்னதும் என்னாலேயே நான் சொன்னதை நம்ப முடியாமல் ஆனது. அவர் நிச்சயம் சலிப்படைந்திருப்பார் என்று நினைத்து அவரைப் பார்த்தேன். அவர் தன் கைகளை மேஜை மேல் கோர்த்து வைத்துக்கொண்டு என்னையே ஆர்வமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
“லவ் பண்ற ஒரு சின்ன பொண்ணுகிட்ட கேட்டா அவளும் அவள் காதலன்தான் தனக்கு உலகம், அவன் இல்லாம தன்னால இருக்க முடியாதுன்னு சொல்லுவா. அதெல்லாம் அப்பப்போ தோண்றது நேச்சுரலான விஷயம்தான். நம் மனசு எதுக்கு சந்தோஷப்படும் எதுக்கு துக்கப்படும்னு நம்மால கணிக்கவே முடியாது. நீங்க கடுமையான உழைச்சு ஒரு வெற்றியை அடைஞ்சா அதுக்காக சந்தோஷப்படுவீங்களா? நான் பாத்தவரை இத்தனை நாள் உழைச்சதோட இறுக்கமும் பாரமும் கொறஞ்சதை நினைச்சுத்தான் மனுஷா கொஞ்சமா சந்தோஷப்பட்டுக்கிறா. ஆனாக்க உண்மையான சந்தோஷமும் உண்மையான துக்கமும் நாம் எதிர்பாக்காத நேரத்திலே வர்றதா தான் இருக்க முடியும். நீங்க எழுதுறத நிறுத்தினா துக்கப்படமாட்டேள்னு எனக்கு தோணுது. கொஞ்சம் விடுதலை அடைஞ்சுடுவீங்களோன்னு கூட நினைக்கிறேன்”
அவர் பேச்சின் மீது எனக்கு எரிச்சல் தோன்றியது.
“எனக்கு என்னைச் சுற்றி இருப்பது எல்லாம் துக்கத்தை தருது. என் வேலை, என் குடும்பம், என் நண்பர்கள், உறவுகள் என எல்லாமும் துக்கத்தைத் தருது. என்னால எந்தவொரு வேலையையும் சரியா செய்ய முடியல. எல்லோரும் மேல ஏறிப் போயிட்டு இருக்கும்போது நான் ரொம்ப பின்தங்கிட்டனோன்னும் எனக்கு கிடைச்ச நேரங்கள சராசரி அளவுக்கும் அதிகமாக வீணடிச்சிட்டதாவும் தோணுது. எதைச் செய்யவும் பயமா இருக்கு. எதை செஞ்சாலும் தயக்கம் வருது. என்னோட தோல்வியை நானே என் கண்ணால பாத்துட்டு இருக்கிறமாதிரி இருக்கு. என்னைச் சுத்தி இருக்கிறவங்க என்னை இப்போவெல்லாம் ஈஸியா காயப்படுத்திடுறாங்க. என் மேல் யாருக்கும் மரியாதைன்னு ஏதும் இல்லாம போச்சு. நான் வெத்து வேட்டுன்னு நினைக்கிறாங்க. நான் என்னை நிரூபிக்கணும். எழுத்து வழியா என்னை நிரூபிக்கணும். ஒரு பெரிய நாவல் எழுதணும். வருஷத்துக்கு நூறு கதைகள் எழுதணும். கட்டுரைகள் எழுதணும். என்னுடைய சிந்தனைகளை தனிப்பள்ளியா வளர்த்தெடுக்கணும். இதெல்லாம் என்னால செய்ய முடியும்னு எனக்குத் தெரியும். ஆனா என் முன்னால ஒரு பெரிய பாறை கிடக்கு. அது கல்லால ஆனதா காத்தால ஆனதான்னு கூட எனக்குத் தெரியல. அந்தப் பாறைய நகத்திப் போட்டுட்டுப் போய்தான் நான் எதையும் செய்ய முடியும். என் எழுத்து வழியா எதுவும் சொல்ல முடியும். ஆனால் நான் திரும்பத் திரும்பப் போய் அந்த பாறையிலேயே முட்டிக்கிறேன். நான் அதை எப்படித் தாண்ட்றது? எனக்குத் தெரியல. ஆனா எனக்கு நீங்க வழி சொல்ல முடியும். ஏன்னா நீங்க அந்தப் பாறையை தாண்டிட்டீங்க. உங்களுடைய ஒவ்வொரு வரிலையும் பேச்சின் ஒவ்வொரு சொல்லிலேயும் அந்தப் பாறையைத் தாண்டின ஆசுவாசம் தெரியுது. நீங்க என்ன பண்ணீங்க? எனக்கு அது தெரிஞ்சாகணும்”
அவ்வளவு பேசிவிட்டதால் நான் சற்று பதற்றமடைந்தேன். ஆனாலும் நான் சொல்ல வேண்டியவை இன்னமும் உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டுதான் இருந்தன. அந்தக் கொந்தளிப்பில் எண்ணெய் அள்ளிக் கொட்டுவது போல அவர் சொன்னார்.
“ஏத்துக்கோங்க. அது ஒன்னுதான் வழி”
அந்த சொற்கள் எனக்குத் தாளாத வலியைக் கொடுத்தன.
“சரி ஏத்துக்கிறேன். நீங்க இந்த நிலையை ஏத்துக்க எத்தனை நாள் ஆச்சு? எந்த கணத்தில் உங்களுக்குள் இந்த ஏற்பு நிகழ்ந்துச்சுன்னு சொல்லுங்க”
“அதை என்னால சரியா சொல்ல முடியுமான்னு தெரியல. ஆனால் நான் அப்படி ஏத்துகிட்ட பிறகு தான் எழுதத் தொடங்கினேன்”
நான் துணுக்குற்றேன்.
“அப்ப நான் எழுதத் தொடங்கி இருக்கக்கூடாது”
அவர் இப்போது மெல்லச் சிரித்தார். அந்த சிரிப்பினுள் இதுவரை இல்லாத சினேகபாவம் குடிகொண்டது.
“நல்லா யோசிச்சுப் பாருங்கோ. நீங்க எழுதத் தொடங்கினப்போ எழுதுறதுக்கு ஏத்த மாதிரிதான் உங்க மனம் இருந்திருக்கும். எதையும் யோசிக்காததா, எந்தக் கள்ளமும் இல்லாததா, பயமும் பணிவும் கொண்டதா உங்க மனம் இருந்திருக்கும். சரியா?”
நான் பதில் சொல்வதற்கு முன்னே “என்ன நான் உங்க கதையில வர்ற ஆளாட்டம் பேசிட்டிருக்கேன்” என்று சொல்லி சிரித்தார்.
நானும் சிரித்துவிட்டேன்.
“நீங்க எழுதத் தொடங்கினப்போ உங்களிடம் ஒரு கனவு இருந்தது. அது மட்டுந்தான் இருந்தது. இன்னிக்கு இருக்கிற அளவு அறிவோ பகுத்துப் பாக்கும் திறமையோ இழப்புகளோ இழப்புகள் கொடுக்கிற கவலையோ இருந்திருக்காது. இன்னிக்கு அதெல்லாம் குப்பையாட்டம் சேர்ந்து உங்க ஓட்டத்த தடுக்கிறது. உங்க கண்ணுக்கு பாறையா படறது”
“என் துயரங்களை என்னோட ஆணவம்னு மட்டும் சொல்றீங்களா?”
“உங்க துயரம் என்ன, கொஞ்சம் சொல்லுங்கோ”
“லௌகீகத்தில் எனக்கு எந்தத் துயரமும் இல்லை. ஏன்னா நான் பெருசா எப்பவும் எதையும் ஆசைப்பட்டது கிடையாது. ஆனா என் வீடு எனக்கு எரிச்சலைத் தருது. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல. பண்ணிக்கிற ஐடியாவும் இல்லை. ஆனா வீட்டில் இருக்கிற மற்ற உறவுகளை என்னால் தாங்கிக்க முடியல. அவங்களுக்கும் எனக்கும் இடையில ஒன்னுமில்ல. என் அம்மா அப்பா எனக்கு சோறு போட்டிருக்காங்க. திருப்பி நான் சோறு போடணும்ற நன்றிக்கடன் தாண்டி என் மனசுல ஒன்னுமே இல்லை”
“ம்ம் உங்க கதை ஒன்னுல இதையே சொல்லி இருக்கீங்க”
“அடுத்ததா பொறாமை. நல்லா வாழ்ற யாரைப் பார்த்தாலும் எனக்கு பொறாமை வர்றது இல்லை. ‘நான் நல்ல வாழ்றேன்’ பார் என்று அவங்க குறியையோ முலையையோ தொறந்து காண்பிக்கிறவங்க மேலதான் எனக்கு பொறாமை வருது. அதைப் பொறாமைன்னு கூட சொல்ல முடியுமான்னு தெரியல. அவங்கெல்லாம் அப்படியே அழிஞ்சு போயிடணும்னு நான் நினைக்கிறேன். இந்த நொடியே இல்லாம ஆயிடனும்னு நினைக்கிறேன். அப்படி நினைக்கிறதை பின்னாடி நினைச்சு நான் குற்றவுணர்வெல்லாம் அடையிறது இல்லை.”
“ம்”
“அடுத்ததா பெண்கள். சில பெண்கள் கூட செக்ஸ் வச்சிட்டு இருக்கேன். ஆனா அது எனக்கு ஒரு பெரிய விஷயமா தெரியல. பெண்களைப் பார்க்கும் போது ஒரு வகையான எரிச்சல் வருது. அவங்களோட அழகுக்காகத்தான் ஒட்டுமொத்த ஆம்பளைங்களும் நாய் மாதிரி அலையறான்னு நெனச்சு வர்ற எரிச்சல். ஒரு நல்ல விந்தை கருப்பைல வாங்கிறதுக்காக அவங்க காட்ற தளுக்கு மினுக்கு அப்படி ஒரு நல்ல வித்து கிடைக்காதபோது போடுற நாடகம் எல்லாம் எனக்கு எரிச்சலைத் தருது.”
“உங்க கதையில் ஏகப்பட்ட பெண்கள் வர்றாங்க”
“அடுத்ததா நீதி,அறம்,வரலாறு,பண்பாடுன்னு எல்லாம் பேசப்படும் விஷயங்கள். அவை கொடுக்கும் பயம். இது எல்லாம் கடந்தகாலத்தில் இருக்கு. இந்த கடந்தகாலத்தில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்துறதில இருக்கிற பயம். நான் பார்த்தவரை மனுஷங்க அத்தனை பேரும் சினிக் தான். ஒருத்தர் கூட cynicism தாண்டி எதையும் யோசிக்கிறது இல்லை. லட்சியவாதம் சேவை மனப்பான்மை எல்லாம் புத்திசாலிங்களோட cynicism. தங்களுடைய பெயர் வரலாற்றில் நிற்கும் தங்களை ஒரு மாணவர் குழு பின் தொடரும் தனக்கு சிலை வைப்பாங்கன்னு தான் எல்லோரும் உயிரை கொடுத்து உழைக்கிறாங்க. அவங்களோட உழைப்புக்கு இணையா இங்க கொடுக்கிறதுக்கு நம்மிடம் ஒன்னுமே இல்லாததால நாம அவங்களுக்கு ஒரு உன்னதமான இடத்தைக் கொடுக்கிறோம். அந்த உன்னத இடத்துக்கான வெறியில் தான் எல்லாப் பெரிய ஆளுமைகளும் உழைக்கிறாங்க. எனக்கு இங்க பின்பற்றிப் போக ஒருத்தருமே இல்ல.”
நான் சொல்லச் சொல்ல சொல்கிறவற்றில் நம்பிக்கை இழந்தேன். ஆனாலும் சொல்லிவிட்ட நிறைவும் இன்னும் சொல்ல வேண்டும் என்ற வெறியும் எழுந்தது.
நான் சொன்னேன்.
“கடைசியாக அர்த்தம் பற்றிய பயம். ஒவ்வொருத்தரையும் கூர்ந்து பார்க்கப் பார்க்க அவங்களிடம் இருக்கும் உள்ளீடின்மை ரொம்ப பயத்த தர்றது. எதை நம்புறது யாரை பிடிச்சிக்கிறதுன்னு ஒன்னுமே புரியல. இது அத்தனையும் சேர்ந்து வலியைத் தருது. ரொம்ப ரொம்ப மோசமான வலிகளைத் தருது. இவ்வளவு வலிகளையும் ஏத்துக்கத்தான் சொல்லுது உங்க கதைகள். இது அனைத்தையும் ஏத்துக்க சொல்றதுக்கு நீங்க யாரு? உங்களுக்கு இதையெல்லாம் ஏத்துக்க சொல்ல எங்கேர்ந்து தைரியம் வருது. ஐம்பது வருஷமா நீங்க இதை மட்டுந்தான் சொல்லிட்டு இருக்கீங்க. வாழ்ந்துட்டும் இருக்கீங்க. ஒவ்வொரு நொடியும் நரகம் மாதிரி இருக்கு. முதுகுத்தோலை உரிச்சு உச்சிவெயிலில் தார் ரோட்டில் போட்ட மாதிரி இருக்கு இந்த வாழ்க்கை. மனுஷங்க கூடப் பழக தோல் வேணும். அந்த தோல் நடிப்புகளால் செய்யப்பட்டது. நூற்றாண்டுகளா நடிச்சு நடிச்சு தயார் பண்ணினது. எங்கிட்ட அந்த தோல் இல்லை. யார் எங்க தொட்டாலும் கூசி வலிக்குது. உடம்பெல்லாம் மனசெல்லாம் எரியுது. இந்த எரிச்சலும் வலியும் கட்டாயம் உங்களுக்குப் புரியும். ஆனாலும் இதையெல்லாம் அமைதியா ஏத்துக்க சொல்றீங்க. ஏன்? ஏன் ஏத்துக்க சொல்றீங்க?”
“ஏத்துக்காதவங்களுக்கு என்ன வழி இருக்குன்னு நினைக்கிறீங்க? கடவுள்? அப்படி ஒருத்தர் இருக்கிறதா நானும் நம்புறேன். நான் நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபடும் ஆள்தான். நான் வழிபடும் போது நன்றி சொல்றேனா என்னை காப்பாத்த சொல்றேனான்னு எனக்குத் தெரியல. ஆனால் ஆஞ்சநேயரால நான் எதுவும் சொல்லாமலேயே என்னை புரிஞ்சிண்டுட முடியும்னு ஒரு நம்பிக்கை. நூறு நூறு வருஷமா கஷ்டங்களும் அழுகையும் ஒலிச்ச காதாச்சே. இந்த எழுபது எண்பது வருஷம் வாழ்றவனின் கஷ்டம் புரியாதா என்ன ஆஞ்சநேயருக்கு? தன்னோட துக்கத்தை இறக்கி வைக்கத்தான் மனுஷன் கடவுளை கற்பனை பண்ணிகிட்டானோன்னு தோணும். கற்பனையாவே இருக்கட்டுமே. இந்த துக்கமெல்லாம் ஒரு கற்பனை சுழியை நோக்கிப் போறதாவே இருக்கட்டுமே. கஷ்டத்தையெல்லாம் சொன்ன பிறகு ஒரு தெம்பு வருதே. அது கற்பனை கிடையாதே. இப்படி கற்பனையில் இருந்து யதார்த்தத்துக்கு ஒரு கோடு இழுக்க முடியும்னா கற்பனைகள் இங்க இருக்கிறதுல என்ன குத்தம் வந்துடும்? என்னை மாதிரி கிழவனுக்கு நாமக்கல் ஆஞ்சநேயர் மாதிரி எளிமையான கற்பனை. உங்களை மாதிரி அறிவுஜீவிகளுக்கு இன்னும் கொஞ்சம் சிக்கலான கற்பனை. நீட்சே, கான்ட், ஹெகல், புத்தர் மாதிரி. நீங்க இன்னும் உங்க கற்பனையை கண்டுபிடிக்கல. அதனாலதான் இருக்கிற கற்பனையை எல்லாம் பொய்யின்னு சொல்றேள். நிச்சயமா பொய்தான். ஆனா உங்களுக்கு பொய்யின்னு படறது இன்னொருத்தனுக்கு உண்மையா இருக்கட்டுமே.”
“அப்ப இந்த துக்கங்களுக்கு எல்லாம் என்ன அர்த்தம்?”
என் தொனி ஏறக்குறைய இரைஞ்சலாக மாறி இருந்தது.
“துக்கம் துக்கம்னு சொல்றேள். துக்கம் யாருக்கில்ல. இன்னும் சரியா சொன்னா எதுக்குதான் துக்கமில்ல. நிலத்தை சிதைச்சு வெதச்சு அறுத்து சாப்பிடறோம். ஆடு கோழிய வளத்து அடிச்சு திங்கிறோம். அதுகளுக்கு துக்கமில்லையா? உங்க துக்கம் அதுகளையும் சேத்துகிட்டதா இருக்கலாம். ஆனா நாம ஒருத்தன் துக்கத்தை அவனோட இடத்தில் இருந்து பார்க்கிறமா? இல்லை நம்முடைய இரக்கத்தில் இருந்து பார்க்கிறமா? ரெண்டாவததான் உங்களைமாதிரி அறிவுப்பூர்வமா யோசிக்கிறவா தேர்ந்தெடுக்கிறான்னு தோண்றது எனக்கு. உங்களுக்கு ஒரு உடம்பு இருக்கு. அதுக்கு பசி வலி எல்லாம் உண்டு. உங்க பசியையும் வலியையும் வச்சு உலகத்தோட பசியையும் வலியையும் புரிஞ்சிக்க முயற்சி பண்றது சரியா? துக்கம் வாழ்க்கையோட ஒரு பகுதியா இருக்கக்கூடாதுன்னு சொல்றீங்களா?”
“இல்லை. நான் சீர்திருத்த சிந்தனை கொண்டவன் கிடையாது. என் துக்கம் வெறும் ஆணவம் இல்லன்னு நான் நம்புறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?”
“உங்களைப் பத்தி நீங்க நினைக்கிறதைத் தாண்டி நான் என்ன நினைச்சுட முடியும்?”
“என்னோட கடவுள் கிட்ட நான் எப்படி போறது?”
“துக்கப்பட்டு துக்கப்பட்டு போய்ச்சேருங்கோ. உங்க துக்கத்தை உங்களால புரிஞ்சிக்க முடியல. அழுதுண்டே இருந்தேள்னா கொஞ்ச நாளில் உங்க துக்கத்தை சரியா கண்டுபிடிச்சிடுவீங்க. அதை எங்க சொல்லி இறக்க முடியுதோ அதுதான் உங்க கடவுள். உங்க துக்கத்தின் மூர்த்தி. உங்க துக்க சொரூபமே ஆன மூர்த்தி.”
அந்தப் புள்ளியில் எங்கள் உரையாடல் முடிந்தது. நான் எழப்போனேன். ஏதோ சொல்லத் தோன்ற மீண்டும் அமர்ந்தேன்.
“உங்க வயசில் உங்களைப் போலவே புகார்கள் இல்லாதவனா நான் இருப்பேன். ஒருவேளை உங்களைப் போலவே எந்த ஞானத்தையும் அடையாதவனாவும் இருக்கலாம்.”
அவர் முகத்தில் ஒரு மெல்லிய அடியினை ஏற்ற அதிர்ச்சி கடந்துபோனது. ஆனாலும் மீண்டும் முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு எனக்கு விடை கொடுத்தார்.
“உங்களை சந்திச்சது சந்தோஷம். போயிட்டு வாங்கோ. நிறைய எழுதணும்.”
சுரேஷ் பிரதீப் – திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தற்கால எழுத்தாளர்களில் அதிகம் கவனிக்கப்படும் புனைவுகளை எழுதி வருபவர் சுரேஷ் பிரதீப். இவரது நாவல் ஒளிர் நிழல், சிறுகதை – நாயகிகள் நாயகர்கள், எஞ்சும் சொற்கள் ஆகியவ வெளிவந்துள்ளன. sureshpradheep@gmail.com
“நீ வா, ஒரு கிஃப்ட் வச்சிருக்கேன். பார்த்திட்டு அப்புறமா சாப்பிட போலாம்”
“பார்ட்டி நடக்கிற இடத்துக்கு கொண்டு வந்து கொடுக்க வேண்டியது தான”
“அதை எடுத்திட்டு எல்லாம் வர முடியாது, நீ தான் வந்து பார்க்கனும்…வா”
வேறு வழியின்றி காதலன் அபுவின் தொந்தரவு தாளாமல் சௌம்யா தனது பிறந்தநாளைக் கொண்டாட பார்ட்டி ஹால் செல்லும் முன் நேராக அவன் அலுவலகத்திற்குச் சென்றாள். எண் ஏழு போல இருந்தது அந்த அலுவலகக் கட்டிடம்.
“மேடம் கூப்பிட்டா வர மாட்டீங்களோ..” என்றபடி அலுவலக வாசலில் வந்து வரவேற்றான். அபு.
சப்பட்டையாக சதுரவடிவில் மலை ஒரு காலமும் இருக்காது என்பது எத்தனை நிதர்சனமான உண்மையோ அத்தனை உண்மை சௌம்யா பேரழகி என்பதும். வெள்ளை உடையில் இன்னும் அழகாக காட்சியளித்தாள்.
ஞாயிறு விடுமுறை நாளுக்கான சோம்பலுடன் அலுவலகம் தூங்கி வழிந்தது. சொற்பமான ஆட்கள் மட்டுமே கண்ணில் பட, காரிடர் தாண்டி யாருமில்லாத தனது தனி ரிசெர்ச் அறைக்குள் அவளை அழைத்துச் சென்றான் அபு.
அறை அதீதமான குளிரில் சில்லென்றிருந்தது. சுற்றிலும் பெரிய அளவிலான டிவி திரைகள் பின்னப்பட்ட அறையில் சிறு சிறு கறுத்த பாம்புகள் போல கேபிள் வயர்கள் தரை முழுக்க ஊர்ந்து செல்ல டபுள் எக்ஸெல் சைஸ்ஸில் பருமனான கம்யூட்டர்கள் கார்பெட் தரையில் சகல சௌபாக்கியத்துடன் அகலமாய் காலூன்றி நின்றிருந்தன.
லண்டனை தலைமை அலுவலகமாகக் கொண்ட சென்னை மல்டி நேஷனல் நிறுவனத்திற்கான அத்தனை ஜாடைகளையும் அந்த இடம் அணிந்திருந்தது. கூடவே பிளட் சாம்பிள் எடுக்கும் கருவிகளும் தன் பங்கிற்கு மிரட்டியபடி அறையைச் சுற்றி நின்றிருந்தன.
நிறைய சிதம்பர ரகசியங்களை ஊமைமொழியில் பேசியது அந்த அறை.
ஏதேனின் தோட்டத்தில் சிலர் ஆதமைத்தேடி அலைகின்றனர். சிலர் ஏவாள். சிலருக்கு ஆப்பிள். சிலருக்கு காடு. அதே காட்டில் பாம்பைத் தேடி அலையும் சமூகமும் உண்டு. அதே காட்டைப் பற்றிய சாஃப்ட்வேர் எழுதுபவனாக இருந்தான் அபு.
“என்னடா சுத்தி மெசினா இருக்கு….? தனியாத்தான் உக்காந்திருப்பியா, பேச்சு துணைக்கு கூட ஆள் இல்ல”
“D.N.A. டெஸ்ட் பத்தியே அதிகம் படிக்கிற பயோ டெக்னாலஜியும் கூடவே கம்யூட்டர் சாஃப்ட்வேரும் படிச்சவன் வேற எப்படி இருக்க முடியுங்கிற. நீங்க தான காதலி சார் இந்த வேலை வாங்கி கொடுத்தீங்க…”
“வேலை வாங்கி கொடுத்தீங்கன்னு சொன்னா பத்தாது தம்பி, கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கனும்”
“கட்டிப்புடிச்சி ஆசிர்வாதம் வாங்கனும்னா சொல்லு நான் ரெடி”
“நினைச்சேன் , என்னடா தம்பி லீவு நாள் அதுவுமா நம்மளை ஆபிஸ் வரச் சொல்லுறானேன்னு. உங்க திட்டம் கட்டிப்புடிக்கிறது மட்டும் தானா சார் இல்ல இன்னும் வேற ஏதாவது இருக்கா…பார்ட்டிக்கு போகனும் தெரியும்ல”
“ஆளப்பாரு. இன்னைக்கு ஆபிஸ்க்கு நமக்கு மேல இருக்கிற பெரிய தலக்கட்டு நாலு சீனியர் ரிசெர்சரும் வரமாட்டாங்கன்னு கன்பார்ம் ஆனதும் தான் உன்னை வரச் சொன்னேன். மத்த நாள்ல இப்படி செக் பண்ண முடியாது.”
“டேய் தடியா, இதுவரை கட்டிப்பிடிச்சி முத்தம் கொடுத்ததை தவிர வேற ஒன்னுமே செய்யலையேடா.. அதுக்குள்ள என்ன செக் பண்ணப் போற”
“யேய்…..சீரியசா பேசு. நானே எப்போடா இது மாதிரி ஒரு சான்ஸ் கிடைக்கும்னு காத்திருந்து உன்ன வர வச்சிருக்கேன். காமெடி பண்ணிட்டு இருக்காத. மத்த நாள்ல இந்த ரூமுக்குள்ள வேற யாரும் வர முடியாது”
“சரிங்க சார், சொல்லுங்க என்ன செய்யனும்..?”
“இந்த சேர்ல உக்கார், இந்த மெசின் முன்னாடி முகம் தெரியுற மாதிரி”
“என்னது இது..?”
“இப்போதைக்கு பெரிய மொபைல் போன்னு வச்சிக்க.” ஹெவன் “வீடியோ கேம் விளையாடலாம்”
திடுக்கிட்டு சற்று சாய்ந்து அமர்ந்தவள், ஒரு நிமிடம் பெருமூச்சு விட்டு கண் மூடித் திறந்து “லூசாடா நீ, இல்ல உண்மையிலே தெரியாமத்தான் கேக்கிறேன் லூசா நீ…? பார்ட்டி ஹாலுக்கு போக இருந்த என்னையும் போக விடாம நீயும் வராம, இங்க வரச்சொல்லி கேம் விளையாடுவோம்ங்கிறியே லூசா நீ….?”
“என்ன கேம்னு பாரு,அப்புறமா பேசு. இதை விளையாட டாலர்ல செலவு பண்ணனும். கிஃப்டா தரலாம்ன்னு கூப்பிட்டா, சரி இந்த வேலை வாங்கிக் கொடுத்தது நீ தான, லவ்வரு என்ன வேலை பாக்கிறான்னு தெரிஞ்சிக்க ஆசை இல்லையா”
“அபு….விளையாடுற நேரமாடா இது. பிளீஸ் புரிஞ்சிக்கோயேன்”
“எனக்காக ஒரு அரை மணி நேரம் ஸ்பென் பண்ண மாட்டியா” என்றதும்
அமைதியானவள் “ சரி சொல்லு என்ன செய்யனும்”
“இந்த ஸ்கிரீன்ல கை நாட்டு வைக்கிற மாதிரி பெருவிரலைக் காட்டு”
“எதுக்கு….?”
“ஷ்ஷ்…பத்திரிக்கை ரிப்போர்ட்டர லவ் பண்ணுனா கேள்வியா கேக்குறாயா….?”
“சரி ..சரி பிறந்த நாள் அதுவுமா சண்டை போட வேண்டாம். என்ன செய்யனும் சொல்லு..?”
“பெருவிரல் தம்ப் பிரஸ் பண்ணனும்”
“அப்படி செஞ்சா..?”
“கைநாட்டு போட்டா அதுல வளையம் வளையமா நடுவுல இருந்து கிளம்பி அப்படியே பெருசாயிட்டே போகும் தெரியுமா”
“புரியல”
ஒரு வெள்ளைத் தாளில் கைநாட்டு இடுவது போல சௌம்யாவின் பெருவிரலில் மைதடவி அழுத்தி எடுத்துக்காட்டியதும் நடுவில் இருந்து வளையம் வளையமாகப் பெரிதாக விரிவதைக்கண்டு “ஆமா” என்றவளிடம்
“இது மாதிரி பெரிய மரத்தை அறுத்தால் அதுலயும் இப்படி வளையம் வளையமாத்தான் இருக்கும்”
“அதை இப்போ எங்க போய்ப் பாக்க”
“மர அறுவை மில்லுல பார்க்கலாம். சரி, கறிக்கடைக்கு போனதில்லையா. கறி வெட்ட வச்சிருக்கிற பெரியமரத்தடியோட நடுவுல இருந்து வளையம் வளையமாத்தான் இந்த விரல் ரேகை மாதிரி போகும்”
“நான் ஏன் கறிக்கடைக்கு போகப்போறேன்.”
“சுத்தம், ரிப்போர்ட்டருக்கு எல்லாத்துக்கும் ஆதாரம் காட்டனும், பொறு” என்றவன் தனது முன்பிருந்த கம்ப்யூட்டர் இண்டர்னெட்டில் அதைப்போன்ற படத்தை எடுத்துக் காண்பித்ததும்
“ஆங்,, இப்போ புரியுது”
“ஒகே …ஹெவன் வீடியோ கேம் ஆரம்பிக்கும் போது ஒருத்தரோட பேரு, மெயில் ஐடி, அவுங்க பிறந்த ஊரு, பிறந்த நாள், போக விரும்பும் நாடுன்னு ஒவ்வொரு ஸ்டேஜா கேள்வி கேட்டுத்தான் அடுத்த அடுத்த ஸ்டேஜ்க்கு கொண்டு போகும். அஞ்சாவது ஸ்டேஜ்ல தான் கேம் விளையாடுறவங்களோட “ தம்ப் “ கேக்கும். நாம அஞ்சாவது ஸ்டேஜ்ல இருந்தே விளையாடலாம். ஸ்கிரீன் முன்னாடி பெரு விரலைக்காட்டு.”
சௌம்யா பெருவிரலைக் காட்டியதும் ஸ்கிரீன் ஸ்கேன் செய்யத் துவங்கியது.
“இப்போ உன் விரல் வளையத்துக்கு மேட்ச் ஆகுற மரம் எது, நீங்க இறங்க வேண்டிய இடம் எதுன்னு சாஃப்ட்வேர் சொல்லும். வெயிட் …உனக்கான மரம் ’குங்கிலியம்’னு காட்டுது. பொறு இப்போ உனக்கான இடம் எதுன்னு சொல்லட்டும்..”
“ஒவ்வொரு மரத்துலயும் வேற வேற டைப் வளையம் இருக்குமா என்ன. அதுவும் ஒவ்வொரு மனுசனுக்கு மேட்ச் ஆகிற மாதிரி..?”
“உனக்கு ஒரு கிளி கதை சொல்லட்டா..?”
“ஷ்ஷ்…ம்ம் சொல்லு”
“காணிக்காரன் நாட்டுப்புறப்பாட்டு இது”
“மலையகத்து அரசன் ஒருத்தன் சுவையான சமையல் சாப்பிடனும்ன்னு நினச்சி ஏழு பைங்கிளிகளை அனுப்பி பயிர்த்தொழில் பத்தி தெரிஞ்சிட்டு வரச்சொல்லி கிளிகளை அனுப்புனானாம். அது வந்து சொன்னதும் பறையர்களை அழைச்சி பயிரிடச் சொன்னானாம்.
விளைஞ்ச பயிர்களை என்ன செய்யன்னு தெரியாம அதே ஏழு கிளிகளை அனுப்பி சமையலை பத்தி தெரிஞ்சிட்டு வரச்சொல்லி பறையர் மனைவிகளை வச்சி சமைக்க சொன்னானாம். அவர்களும் 18 வகை உணவை சமைச்சி எடுத்திட்டு வந்து கொடுத்தாங்களாம்.
அரசன் சந்தோசமா சாப்பிட்டு கைகழுவும் போது கணையாழி (மோதிரம்) கை நழுவி மண்ணுல புதைஞ்சி போச்சு. கடைசி வரை யார் தேடியும் கிடைக்கலை.
இதை அறிஞ்ச சிவனும் பார்வதியும் அந்தக் கணையாழி விழுந்த இடத்துல விலைமதிக்க முடியாத குங்கிலியம், சந்தனம், மூங்கில் மரங்களை விளையச் செஞ்சாங்களாம். அதனால காணிக்காரங்களுக்கு இந்த மூணு மரமும் புனிதம். அப்படின்னு காணிக்காரன் கதை ஒன்னு இருக்கு. இது மாதிரி ஒவ்வொரு பழங்குடிக்கும் சில மரங்கள் புனிதம். அவுங்களுக்கும் சில வாய் மொழிக் கதைகள் இருக்கு”
“லவ்வர கூட்டி வச்சு பேசுற பேச்சாடா இதெல்லாம், ஹும்…தலையெழுத்து …சரி சாஃப்ட்வேர் என்ன செய்யும் அத சொல்லு. இது போரிங்” என்றவளிடம்
“ உன்னுடைய ஆதி நிலத்துல உன்னை இறக்கி விடுவாங்க. பஃப்ஜி கேம் மாதிரி தான் இதுவும். அதனால உலகத்துல உன்னை மாதிரியே அதே பழங்குடி ஆளுங்க விளையாடிட்டு இருந்தா அவுங்களை உன்னோட லிங்க் பண்ணும், அவுங்க கூட சேர்ந்துக்கலாம். இல்ல தனியாவே விளையாடலாம். அடுத்த ஸ்டேஜ்ல உன்னோட கண்ணை ஸ்கேன் செய்யும். உன் முகச்சாயலுக்கு பொருந்துற மாதிரி இருக்கிற துணை வேட்டை மிருகம், போர்க்கருவி எல்லாம் கொடுக்கும். உன்னோட சொந்த நிலத்துக்கு வந்த எதிரி ஆட்கள் உன்னை கொல்ல பார்ப்பாங்க. அவுங்களை அழிச்சி எல்லாம் தாண்டி அடுத்து அடுத்துன்னு போகனும். எக்ஸாம்பிளுக்கு, உன்னை முதல்ல ஹங்கேரி நாட்டுல இறக்கிவிட்டா அது அங்க இருந்து ரஷ்யாவோட வோல்காரிவர் வந்து அங்க இருந்து மங்கோலியா போய் அது திபேத் நேப்பாள் கடந்து கிழக்கு தொடர்ச்சி மலை வழியா தஞ்சாவூர் வந்து சேரும். தஞ்சாவூருல இருந்து யாழ்ப்பாணம் வழியா திரிகோணமலை அப்புறம் அங்க இருந்து கண்டிக்கு பக்கத்துல இருக்கிற பச்சைதண்ணி மாரியம்மன் கோவில்ன்னு ஒரு இடத்துக்கு கொண்டு போய் ஹட்டன் சமவெளிக்கு கொண்டு வந்து சேர்க்கும். அங்க இருந்து உனக்கான ஹெவன் தேடிப் போகலாம்.”
“அட லூசு… ஹெவன் போறதுக்கு எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த கேம் விளையாடனும் ஒரு ஹாஃப் அடிச்சா போதுமே ..சரி..சரி மொறைக்காத, இதை விளையாடுறதால சாஃப்ட்வேர் தயாரிக்கிற உங்க கம்பெனிக்கு என்ன லாபம். அதுவும் இவ்வளவு பெரிய ரிசெர்ச் செண்டர் எல்லாம் வச்சி செய்றது சுத்த முட்டாள்தனம் மாதிரி தெரியுதே”
“பத்திரிக்கை ரிப்போர்டர்ன்னு தான் பேரு ஒரு விசயத்தை கெஸ் பண்ணத் தெரியலையே..வெரிபேட்”
“ சரி,சொல்லுடா… அனத்தாத”
“உங்களுக்கே தெரியாம உங்க பயோமெட்ரிக் (கைவிரல்,கண்) எல்லாம் அவன் திருடிட்டு இருக்காங்கன்னு தெரியலையா. இன்னும் சுலபமா சிலர் மொபைல் ஓபன் பண்ணவே முகம் (கண்), கை விரல்னு தனக்கான எல்லாத்தையும் கொடுத்திடுறாங்க. இது அதுலே ஒரு அட்வான்ஸ் ஸ்டேஜ். எல்லா டேட்டாவையும் மல்டிபில் யூஸ் செய்யலாம்.”
“அடப்பாவிகளா..ஆமா இது ஏன் கிஃப்ட் வவுச்சர் எல்லாம் கொடுக்குறீங்க..”
“கேம்ல ஸ்டேஜ் கூடகூட விளையாடுறவங்களோட பிளட் குருப், பிளட் சாம்பிள் வரை எல்லாத்தையும் எடுத்திருவாங்க. 8 வது ஸ்டேஜ் தாண்டி 1000 ருவா கிஃப்ட் வவுச்சர் கொடுத்து அடுத்த ஸ்டேஜ் போகனும்ன்னா ஒரே ஒரு பிளட் சாம்பிள் மொபைல் ஸ்கிரீன் முன்னாடி காட்டுன்னு சொல்லும், விளையாடுற கிரேஸ்ல அதையும் மக்கள் செஞ்சிருவாங்க. லண்டன்ல உக்காந்துகிட்டு ஒவ்வொரு நாட்டுலயும், கேம்ங்கிற பேருல D.N.A ancestry survey tracing ன்னு மூதாதையர்கள் சர்வே செஞ்சிட்டு இருக்குது இந்தசாஃப்ட்வேர். ஒவ்வொரு நாட்டுக்கும் ஆட்களை அனுப்பி செய்றது கஷ்டம். இது ரொம்ப ஈசியான மெத்தட். செலவும் கம்மி. யாரும் யாரையும் கம்ப்ளன்ட் பண்ணவும் முடியாது”
“அடப்பாவி, அப்போ நீயும் இதுக்கு உடந்தையா. அடுத்த வாரமே ஒரு ஷாக் ரிப்போர்ட்ன்னு ரெடி பண்ணிற வேண்டியதுதான் உங்களை எல்லாம் போட்டு கொடுக்க”
“நீயும் தான் உடந்தை. நீ தான வேலை வாங்கித் தந்த. இதெல்லாம் ஒன்னுமே பண்ண முடியாது. இந்த கேம் எப்போவோ கண்டுபிடிச்சாச்சு. என்னோட வேலை, சில நாடுகள்ல இந்த சாஃப்ட்வேரை அங்க உள்ள நெட்வொர்க் பிளாக் பண்ணும். அதை உடைக்கிறதுதான் இந்த ஹேக்கரோடவேலை. அப்படியே சாஃப்ட்வேர் கிராக் ஆகாம பார்த்துக்கனும். இதுக்கே குதிக்கிற உலகம் முழுக்க பல சாஃப்ட்வேர் மூலமா, வீடியோகேம் மூலமா மதத்தை சின்னகுழந்தைங்க கிட்டபரப்பிட்டு இருங்காங்க யுரோப்கன்ட்ரீஸ். அதுக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னுமேயில்ல”
“இருக்கிறது பத்தாதுன்னு இன்னும் நாட்டை குட்டிசுவரா ஆக்கிருவீங்க போல இருக்கே”
“சரி விடு, பெர்த்டே கிஃப்ட்ன்னு சொன்னேனே இதுதான் அது, மெயின்ஸ்டேஜ் சிலது இருக்கு அதை விளையாடி பார்க்கலாம். உன் பெருவிரல் ரிப்போர்ட் என்ன சொல்லுது பார்ப்போம்”
“விளையாடனுமா அபு” என்று விருப்பமின்றி சௌம்யா அவனைப்பார்க்க
“இவ்வளவு கம்பல் பண்ணுறேன் ஒரு தடவை விளையாடித்தான் பாரேன். பயப்படாத உன்னோட டேட்டாவ கேம் முடிஞ்சதும் டெலிட் செஞ்சிரலாம். ஒரு தடவை கேமைப்பாரு அசந்திருவ….இந்த பெரிய ஸ்கிரீன்ல பாரு அப்போதான் செமையா இருக்கும். டைம்மெசின் மாதிரி இது”
“என்ன நக்கலா…”
“அட சீரியஸா தான் சொல்றேன். எல்லார்கிட்டயும் ஒரு டைம்மெசின் இருக்கு. யூஸ் பண்ண கொஞ்சம் புத்தி வேணும். பயோடெக்னாலஜி படிச்சிட்டு சாப்ட்வேர் கம்பெனியில வேலை செய்ற எனக்கு பிறந்த நாளைக்கு கவிதை எல்லாம் எழுதித் தர தெரியாது…”
“ம்ம்”
“என்ன ம்ம்… ஒவ்வொருத்தரோட இரத்தம் தான் அவுங்களோட டைம் மிசின். அடப்பாவத்த உன்னோட இடம்னு துருக்கி அனடோலியா பகுதியை காட்டுது. Tengri tribe list வருது. ஆள் செகப்பா இருக்கே அப்போவே நினைச்சேன் நீ கிழக்கு தொடர்ச்சி மலை வகையறான்னு. அனடோலியாவுல ரொம்ப பேரு கூட சண்டை போடனும், பொறு கொஞ்சம் ஸ்கிப் செஞ்சு இந்தியால நீ எங்க வந்து சேருரன்னு பார்ப்போம்.“ என்று கூறி சில கமென்ட்களை அடிக்க சற்று நேரத்தில் பெரிய திரையில் அருணாச்சல பிரதேசத்தின் ஜிரோ பள்ளத்தாக்கு (Ziro Valley) திரையில் தோன்ற ஆரம்பித்தது.”
“பார்க்கவே அழகா இருக்கடா, என்ன இடம் இது”
“மொதல்ல ஸ்க்ரீன பாரு, அப்பறம் சொல்றேன்”
திரையில்
a g
a f`3 s t
a f b`1 b`3
a x g
f f`1 f`3 என மனித இனம் விஞ்ஞானமாய் பரவி நிற்க
சௌம்யாவின் விரல் ரேகை, காலத்தின் பின்னோக்கி நகரத் துவங்கியது
Homo Erectus, Neanderthal, Siberian Denisovans, Homo Sapiens என்று வகை பிரியும்போது ஆளரவமற்ற வழிப்பாதைகளில் காட்டு வெண்பூசணிப்பூவாய் பூத்திருக்க, வளைந்த முதுகுடன் நீண்ட “கூ” போல கால்நீட்டி அமர்ந்திருந்த மலை முகடு ஒன்றின் மீது அந்த வனத்தில் உள்ள மொத்த மிருகங்களின் ஒற்றை அடையாளமாய் இருந்தாள் அவள்
“வாவ் such a beautiful lady…. யாருஇதுஅபு…?”
“உன்னுடைய ஆதி தாய்குடியைச் சேர்ந்த பெண். ஸ்கிரீன்ல கண்ணைக் காட்டு இப்போ”
என்றதும் சற்று ஆர்வம் வந்தவளாய் சௌம்யா கண்ணைக்காட்ட, அவளின் கண்களை ஸ்கேன் செய்த சாஃப்ட்வேர் Y DNA , m+DNA, என்று ஒரு சுற்று சுற்றி விட்டு FIRST ON THE SOIL (PRIBUMI) என்ற அட்டவணையில் சௌம்யாவின் கண்களை விட்டு அலசிக் கொண்டிருக்க ஆச்சர்யத்துடன் அதை பார்க்கத் துவங்கினாள் அவள்.
ஐந்து நிமிடம் கழித்து தாடை, நிறம், மூக்கு, கண்கள் என சட் சட் எனும் கட் சாட்கள் மூலம் சௌம்யாவின் ஆதி குடியின் மொத்த அடையாளம் திரையில் தோன்ற ஆரம்பித்தது.
ABOTHANI
ABU TANI (FATHER OF THE HUMAN)
TANI TRIBES – என்ற செய்தியுடன் காட்டு மலையகப்பெண் டார்ஜிலிங் மலை பிரதேசத்தில் குதிரையில் ராட்சச வேகத்துடன் வர அவள் தலைக்கு மேல் பொன்னாங்கழுகு (Golden Eagle) எனும் கழுகு அதை விட வேகத்தில் பறந்து வந்து அவள் தோளில் அமர்ந்து கொண்டது. அவள் பின்னாடியே வேட்டை நாய் ஒன்று வந்து கொண்டிருந்தது. தசைக்கட்டமைப்பு, மஞ்சள் நிறம், சப்பைமூக்கு, சின்னக்கண்கள், உயர்ந்த கன்ன எலும்புகள் முதலியவை என மங்கோலிய இனக் குழுமத்தின் அடையாளங்களில் சிலவற்றை அவை காட்டியது. குதிரையை செலுத்தியவளாக அவள் மலையேறிக் கொண்டிருந்தாள்.
“முகர்ந்து பார்க்கும் மிருகங்களின் காதுகளின் லேசான அசைவுகளைப் பார்த்ததுண்டா. குதிரையைப் பார்” என்ற அபு, ”tani ங்கிற பழங்குடியில இருந்து வந்தவள் நீ” என்றான் சௌம்யாவை பார்த்தபடி.
சௌம்யா, பனிப்பிரதேச உடை அணிந்திருந்த, சிரித்தபடி மலை முகட்டில் நிற்கும் அந்தப் பெண்ணையும் அவள் தோளில் நின்றிருந்த முரட்டுக்கழுகையும் பார்த்துக் கொண்டே இருந்தவள் “தமிழ் நாட்டுல எங்கன்னு காட்டுமாடா..” என்றாள் ஆர்வத்துடன்.
“ஏன் காட்டாது…வெயிட், கேம் விளையாடாம ஸ்கிப் செய்ய அண்ணனால மட்டும் தான் முடியும்.” என்று சில கமென்ட்களைத் தட்ட “ Lhobhas – Cho-bhas ( south people) “ என்று அது இன்னும் பின்னோக்கிச் செல்லத் துவங்கியது.
“கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம் சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும் எல்லையில் புறத்தீவும் ஈழம் பல்லவம் கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றம் என்பன குட பால் இருபுறச் சையத்து உடனுறைபு பழகும் தமிழ்த் திரிநிலங்களும் முடியுடை மூவரும் இடுநில ஆட்சி அரசு மேம்பட்ட குறுநிலக் குடிகள் பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும்” என்ற தமிழ் வரிகளை கண்ட சௌம்யா.. “என்னடா தமிழ்ல எல்லாம் பிலிம் காட்டுறீங்க” என்றாள் ஆச்சர்யத்துடன்.
“எல்லாம் காசு. சாஃப்ட்வேர் எல்லா மொழியும் பேசும். பொறு ஏதோ ஒரு மலையை காட்டுது தமிழ் நாட்டுல” என்றபடி உற்று நோக்கினான்.
அகன்ற திரையில் திருச்சி –புதுக்கோட்டை ஹைவேயை காட்டியபடி மலை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிக் கொண்டிருந்தது.
“நார்த்தா மலை”
திசை எங்கும் மேகங்களாய்ப் பூத்திருக்க சூரியன் இல்லாத மலட்டு வானத்தையே பார்த்தபடி நின்றிருந்தது நார்த்தாமலை.
“என்னடா இது, இதெல்லாம் உண்மையா, இன்னும் ஸ்கிப் பண்ணு” என்று சௌம்யா கேட்டதும்
“ரகசியத்தின் வாசல் எப்போதும் திறந்தே கிடக்கிறது. வாசல் வரை செல்லும் பாதையைத்தான் தேடி அலைய வேண்டியுள்ளது” என்றவன் சிரித்தபடி சில கமென்ட் அடிக்க, ருஹுனு ரட்ட (RUHUNU RATA ) என்று திரிகோண மலைக்குச் சற்றுத் தள்ளி சென்று இலங்கையை அது காட்ட “தல சுத்துது, இப்போ தமிழ் நாட்டுல நான் எந்த பழங்குடின்னு காட்டுமா..?”
“ம்.. அதுக்கு பிளட் சாம்பிள் கொடுக்கனும். பிறந்த நாள் அதுவுமா அபு ரத்த காவு வாங்கிட்டான்னு சொல்லிட்டு திரிவ, இன்னொரு நாள் செய்யலாம் அதை”
“எங்க உனக்கு செக் பண்ணி விளையாடு” என்று சௌம்யா கூறியதும் அபு இதுவரை விளையாடியதை டெலிட் செய்து விட்டு அவன் பெருவிரலையும் முகத்தையும் காட்ட
சற்று நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பாகத்தை காட்டி அதனுள் வில் அம்புடன் நின்றிருந்த கறுத்த வன சுந்தரி ஒருத்தியைக் காட்டியது திரை.
“யாருடா இது அபு”என்றவளிடம்
“அவளே சொல்லுவா பாரு” என்றான் சிரித்தபடி
அடர் வனத்தையே பார்த்துக்கொண்டு இருந்த அவள் திடீரென “ஒயா ( Oya)” என்று கணீர் குரல் கொடுக்க மொத்தக்காடும் “ஒயா” என்று பதில் அளித்தது.
அடர்காட்டின் எதிர்க்குரல் பரவத் துவங்க மற்றொரு திரையில் உலக வரைபடத்தில் அவளது வலதுபக்கம் இருந்த ஒரிசாவின் அடர்காட்டில் மலை மீது நின்றிருந்த கருமாண்டி ஒருவன் ’ஒயா’ எனும் வானின் அசரீரி கேட்டு தலைகுனிந்து ’ஒயா’ என்று சிரம் தாழ்த்தி வணங்கினான்.
உலக வரைபடத்தில் அவளது இடதுபக்கம் இருந்த நைஜீரிய காட்டின் யோருபு மதத்தின் மலையாண்டி வானின் அசிரிரி கேட்டு ’ஒயா லன்சா லன்சா( oya lansa.. lansa )’ என்று தலை வணங்கினான்.
அவள் பின்னாடி சலசலத்து ஓடிக்கொண்டிருந்த இலங்கையின் ஆறுகள் அனைத்தும் ’ஒயா ஒயா’ என்றபடி கடல் நோக்கி ஓடிக் கொண்டிருந்தன.
“என்னடா இது…?”என்ற சௌம்யாவிடம் “இது சும்மா டிரைலருதான் மொத்தமா ஒரு நாள் பாப்போம்” என்றவன் அவளை நெருங்கி அணைத்து முத்தமிட்டு கையை மேலே நகர்த்த.
“யே..யே …வெள்ளை சட்டை போட்டிருக்கேன், மேல கைய வச்சிராத மாட்டிக்குவோம். பார்ட்டிக்கு போகனும்” என்றவளைப் பேச விடாமல் அவளின் முகத்தை தன் முகத்தால் ஒரு மலை போல போர்த்திக் கொண்டான்.
கேம் விளையாடாமலே ஹெவன் வாசலை அவர்கள் இருவரும் தொடத் துவங்கி இருந்தார்கள்.
****
முஹம்மது யூசுஃப் – தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தற்போது பணியின் நிமித்தம் அபுதாபியில் வசித்து வருகிறார். இவர் கனவுப் ப்ரியன் என்கிற பெயரில் இரு சிறுகதைத் தொகுப்புகள் கொண்டு வந்துள்ளார். (கூழாங்கற்கள், சுமையா). அதனைத் தொடர்ந்து இவரது மூன்று நாவல்கள் வரிசையில் முதலிரண்டு மணல் பூத்த காடு, கடற்காகம் ஆகியன வெளிவந்துள்ளன. மூன்றாவதாக ‘தட்டப்பாறை’ எனும் நாவல் வெளிவரயிருக்கிறது. தொடர்புக்கு – usooff@gmail.com
உலகிற்கு வெளியே ஒரு சாளரம்-தொலைவு குறித்த சில கருத்துக்கள்-கணித வெறுப்பு-ஏற்கனவே அறியப்பட்ட பூமியின் விதி
அழிக்க முடியாத ஒன்றின் துணையோடு நான் உலகிற்கு வெளியே மிதக்கிறேன். என்னோடு சேர்ந்து எனது ஒரே ஒரு மேஜையும், நாற்காலியும், உயரமே காணமுடியாத அளவிற்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களும் மேலும் அந்தச் சிறிய நெல்லி எனும் தவளையும் மிதக்கின்றன. மிதப்பதனால் இவற்றோடு சேர்ந்து நானும் வெளியில் பயணிக்கிறேன் என்று பொருளில்லை. நிலையான ஒரு புள்ளியின் அசைவின்மையில் மாற்றமேயில்லாமல் உறைந்திருக்கிறோம்.
எனது மேஜைக்கு அருகே ஒரு சாளரம் மூடியே இருக்கிறது. அதைத் திறக்கவே பிடிக்கவில்லை.
இருளில் கோடு கிழித்து மறைந்த ஒளியை கவனமாகப் பார்த்தேன். அண்டமாநதியின் நீரால் கழுவப்பட்ட கூழாங்கற்களில் ஒன்று எங்கோ தொலைவில் மறைந்தது. விண்ணில் தோன்றும் தடங்களுக்கு ஆயுள் குறைவென்பதால் (தொலைவுதான் காரணம்) நான் பார்த்த ஒளித்தடம் சடுதியில் மறைந்தது. தொலைவிலே தெரியும் ஒளியில் ஓர் அழைப்பு ஒளிந்திருக்கிறது. அதன் அழைப்பைக் கேட்கக்கூடாதென்று பலமுறை நெல்லியிடம் சொல்லியிருக்கிறேன். நட்சத்திரங்கள் விழுந்துகொண்டேயிருக்கும் அதன் கிணற்றுக் கண்களை மூடவே மூடாது. நான் அதன் தலையில் தட்டி பார்வையைத் திசை திருப்புவேன். ஒளித்தடத்தின் மூலத்தைப் பார்க்கப் போனால் அங்கே ஒன்றுமே இருக்காது. அதன் முடிவிலும் ஒன்றும் இருக்காது. தொலைவைக் குறித்து எனக்கு சில சொந்தக் கருத்துக்கள் இருப்பதால் எவற்றின் இடைவெளியையும் அச்சமின்றிப் பார்க்கப் பழகியிருந்தேன்.
பயணிக்கும் ஒன்றே தொலைவைக் கண்டு அஞ்சும்
இரண்டு புள்ளிகளுக்கு இடையே எவ்வளவு தொலைவு இருந்தாலும் அந்தப் புள்ளிகள் இடம்பெயரும் வரை தொலைவின் அளவு நிலையானது
எது நிலையானதாக இருக்கிறதோ அது அச்சப்பட வேண்டியவற்றிலிருந்து விலகியிருக்கிறது
இலக்கேயில்லாமல் பயணிக்கும் ஒன்று தொலைவின் அலகுகளுக்குள்ளாக இயங்குவதில்லை
இவையே நான் இதுவரையிலும் கணிதச் சூத்திரங்களால் எனக்கே நிரூபித்துக் கொண்டிராத கருத்துக்கள். கணிதத்திலும் கற்பனை எண்கள் உருவாகியிருப்பதும், புலனறிவுவாதிகள் கூட கணிதத்தை ஏற்பதும், சூத்திரங்களால் அல்லாமல் காதலையும் சொல்ல முடியாத இடத்தை மனிதர்கள் எட்டியிருப்பதும், பழைய மனிதர்களுக்கு கவிதை என்னவாக இருந்ததோ, அதேதான் எதிர்கால மனிதர்களுக்கு கணிதமாக இருக்குமென்று தேவைக்கதிகமாக கணிதத்தின் மீது அசட்டுத்தனமான பிடிப்பு வைத்திருக்கும் அவர்களோடு நான் முரண்படுகிறேன். 1 என்பதற்கு பதிலாக அவர்கள் “662492 -53 x 91002 = 1” எனச் சொல்வதை நான் எப்படியென்று அறிய முனைந்ததால் ஏற்பட்ட மண்டைச்சூட்டில் எனது மூளையே காது வழியாக வழிந்து போய்விட்டது.
கணிதத்தைத் தொடாமலிருப்பதே நான் அதனோடு செய்து கொண்டிருக்கும் ஒற்றை உடன்படிக்கை.
ஒரு கோடால் இணைக்க முடியாத எண்ணற்றதும், சிறியதுமான புள்ளிகள் தலைக்கு மேலே எங்கோ ஒளிர்கின்றன. இருளை அணைத்திருக்கும் எனக்கு உறக்கமென்பதேயில்லை. தொலைவில் அணைந்து ஒளிரும் புள்ளிகளிடமிருந்து மறைந்து கொள்வதற்கு எனக்கு இடமுமில்லை. அவை என்னைப் பார்க்கின்றனவா? அல்லது நான் அவற்றைப் பார்க்கிறேனா?
தவளை எனது நாற்காலியின் கரத்தில் உறங்கிக் கொண்டிருந்தது.
மேஜை விளக்கை ஒளிர விடுகிறேன். அடுக்கு கலைந்து விடாமல் ஒரு புத்தகத்தை எடுத்துப் பார்க்கிறேன். ஒன்றைத் தொடர்ந்த மற்றொன்றைத் தொடர்ந்து மேலுமொன்றைத் தொடர்ந்திருக்கும் இன்னுமொன்றையும் தொடரும் பல வடிவங்களில் ஒன்று கூட எனக்குப் புரியவில்லை. புதிய மொழியின் வடிவங்களில் ஒளிந்திருக்கும் இரகசியத்தை எப்படி அவிழ்ப்பதென்றே தெரியாமலிருந்தேன். அவை எதைச் சொல்கிறனவென்றும் அறிய முடியவில்லை. அவ்வடிவங்களை எழுத்துக்களென்றும், எழுத்துக்கள் சேர்ந்தது சொற்களென்றும் நெல்லி சொல்லக் கேட்டிருக்கிறேன். சொற்களின் தொடரை வாக்கியமென்று அழைப்பார்களென்றும் பேசுவதற்கு எழுத்துக்கள் தேவையில்லை, சொற்களே போதுமென்றும் சொல்லியிருக்கிறது.
புத்தகத்தை மூடி வைத்தேன். சாளரத்தை திறந்து பார்க்கும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அதன் கதவுகளை வெளிப்புறமாகத் தள்ளினேன். சார்த்தியே இருந்ததால் கதவுகளிரண்டும் தொந்தரவுக்கு உள்ளானவற்றின் எரிச்சலோடு அகலத் திறந்தன.
சாளரத்திற்கு வெளியே, தீப்பற்றிச் சுழலும் ஒரு பந்தாக மஞ்சள் பிழம்புகள் எழ பூமி எரிந்து கொண்டிருந்தது.
நான் சாளரத்தை மூடினேன். பூமியின் விதி எனக்கு என்றோ தெரிந்திருந்ததென்பதால் அது தீப்பற்றி எரிவதொன்றும் ஆச்சரியப்படத்தக்கதாக இல்லை.
மூடி வைத்திருந்த புத்தகத்தைத் திறந்து அதன் இடப்பக்கத்தில் குதித்தேன். வாக்கியங்களின் மீது ஊர்ந்தேன்.
சொற்கள் எதைத்தான் சொல்கின்றன?
பகுதி இரண்டு
தவளையிடம் மன்னிப்புக் கேட்கும் துறவி-நெல்லி மரத்தின் தாவரவியல் பெயர் ஒளிப்புழுக்கள்-பல்யோபம
எனது பெயர் நெல்லி. அது ஒரு தமிழ்ப் பெயர்ச்சொல். Phyllanthus Emblica இனத் தாவரம். ஆனால் நான் அத்தாவர இனத்தோடு தொடர்பேயில்லாத ஒரு தவளை. ஒரு சமணத்துறவி எனக்கு அப்பெயரை வைத்தார். கீழக்குயில்குடியில் (தற்போதைய பெயர்) நான் வசித்த நாட்களில் தீர்த்தங்கரர்களின் உருவங்களை அங்கிருந்த பாறையில் செதுக்கிக் கொண்டிருந்த துறவியின் காலில் நான் தெரியாமல் தாவினேன். நீரின் ஈரத்தோடு பிசுபிசுப்பான எனது உடல் அவருக்கு அருவெருப்புணர்வைத் தூண்டியிருக்கலாம். உளியைக் கொண்டு அடிக்க ஓங்கினார். அவரது செய்கை ஓர் உடலின் தன்னிச்சையாக எழும் உள்ளுணர்வைத் தவிர வேறொன்றுமில்லை. ஆனால் அதற்காக அந்தத் துறவி வெகுநாட்களுக்குப் பிறகும் கூட என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேயிருந்தார். பாறைத்துளையில் தேங்கியிருக்கும் நீரின் மேற்பரப்பில் தலை நீட்டிப் பார்க்கும் ஒரு தவளையிடம் மன்னிப்புக் கேட்கும் துறவியை நினைத்து அடிக்கடி சிரித்துக் கொள்வேன். குறிப்பிட்ட சில நாட்களில் தூரத்தில் தெரியும் மதுரை (பழைய பெயரும் அதேதான்) நகரத்தின் ஓசைகள் (திருவிழாக்களாலும், போர்களாலும், கொள்ளைகளாலும்) நீரில் உண்டாக்கும் எனது தியானத்தைக் குலைக்கும் சலசலப்பால் நான் அந்நகரத்தின் மீதே எரிச்சலுற்று, கட்டுப்படுத்த முடியாத கோபத்தோடு அதன் மீது குதித்து கட்டிடங்களையும், மனிதர்களையும், தாவரங்களையும், விலங்குகளையும் எனது வயிற்றின் கீழே புதைத்து விடுவதற்காக பாறைத்துளையிலிருந்து எம்புவேன். அந்தச் சமயங்களில் தீர்த்தங்கரர்களைச் செதுக்கும் துறவியை நினைத்துக் கொள்வேன். நகரத்தை மன்னிப்பேன்.
மனிதர்களின் நெற்றிப் புடைப்பைப் போலிருக்கும் பாறையின் நீட்சியில் அவர் தீர்த்தங்கரர்களைச் செதுக்கிய நாட்களில் அதன் நிழலின் ஒற்றைக் கண்ணான துளையில் நானிருந்தேன். உருவங்களை செதுக்கி முடித்ததும் என்னுடைய உறக்கத்திற்கு பங்கமேற்படாமல் துளையின் ஓரங்களைச் செதுக்கி ஒரு கல்தொட்டியின் அளவிற்கு பெரிதாக்கினார். எனக்கு அளவுகளைப் பற்றியெல்லாம் அந்நாட்களில் ஒன்றுமே தெரியாது. ஒரு தண்டம் ஆறடி, 2000 தண்டம் ஒரு கோசம், 4 கோசங்கள் ஒரு யோசனை.…என அவர் விளக்கிச் சொன்னாலும் என்னுடைய தவளை மண்டையில் அதெல்லாம் ஏறாது. அது போலத்தான் திருவ்ய, அஷ்டிகாய, உட்பத, வியாய… எனும் சொற்களின் பொருளும்.
சுகம்-சுகம்-கல்:சுகம்-கல்:சுகம்-துக்கம்-கல்
துக்கம்-சுகம்-கல்:துக்கம்-கல்:துக்கம்-துக்கம்-கல்
இப்படி ஒருமுறை சொன்னார். நான் அதை மனப்பாடம் செய்து கரகரப்பான எனது குரலில் அடித்தொண்டையிலிருந்து சொல்லிக் கொண்டிருப்பேன். மழை நாட்களில் அவர் குகைக்குள்ளாக முடங்கியிருந்தாலும் இவ்வாறு நான் சொல்வதை மழைத்துளிகள் சிதறும் ஓசைகளுக்கு மத்தியிலும் கேட்டதாகச் சொல்வார். அதைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லையென்றும், உட்சர்பினி, அவசர்பினி எனும் காலச்சக்கரத்தின் இரண்டு அரைச்சுழற்சிகளில் உயிர்களுக்கு ஏற்படும் இன்ப துன்பங்களின் அளவைச் சொல்வதே அதுவென்று சொன்னார். எனக்கு அதுவும் புரியவில்லை. காலச்சக்கரத்தின் எல்லாச் சுழற்சிகளிலும் நானொரு தவளை மட்டுமே. தண்ணீர் வற்றிப் போவதைத் தவிர எனக்கு வேறெந்த துக்கமுமில்லை.
பள்ளியில் அவருக்குக் கற்பிக்கப்பட்டவை எல்லாவற்றையும் என்னிடம் சொல்வார். நான் கேட்கிறேன் கேட்கவில்லை என்று தெரிந்துகொள்ளக் கூட விரும்பாமல் அவர் சொல்வதை கவனமாகக் கேட்க விரும்பினாலும் பாறையின் கீழே அதன் நிழல் மூடிய நீரில் படரும் குளுமையால் என்னையறியாமல் அக்களித்து உறங்கிக் கிடப்பேன். தண்-நீர் எனும் சொல் எதைக் குறிக்கிறதென்று அப்படித்தான் அறிந்தேன். குகைக்குத் திரும்புவதற்கு முன் என்னிடம் அதுவரை அவர் சொல்லிக் கொண்டிருந்த பாடங்களில் எதையாவது சிலவற்றை சொல்லச் சொல்வார். நான் அப்போதும் சுகம்-சுகம்-கல் என்று ஆரம்பிப்பேன். சமணத் துறவி தப்பித்து ஓடுவார். உறுப்புகளில்லாத முகம் போலத் தெரியும் அவரது இரண்டு குண்டிகளைப் பார்த்ததும் ஆழத்திற்கு விரைவேன். ஆழத்திலிருக்கும் இருளில் என்னைப் புதைப்பேன். எத்தனையோ பல்யோபமங்களுக்கு* அமைதியாக உறங்குவேன்.
பின்பு என்ன நடந்ததோ கீழக்குயில்குடியில் சமணர்கள் இல்லாது போனார்கள். ஓரங்களில் படியும் பாசியின் கூந்தல் பிரிகள் மிதக்கும் நீரில் படும் பகலின் ஒளி தீர்த்தங்கரர்களின் மேலே உடலில்லாத புழுக்களாக நெளிவதைப் பார்த்திருப்பேன். முகங்களில் தெறிக்கும் ஒளித்துணுக்குகளின் பிரதிபலிப்பை, ஓயாத அசைவுகள் உடலில் படர்ந்தாலும் மூடிய கண்ளோடு நின்றிருக்கும் உருவங்களின் கலைக்க முடியாத ஒடுக்கத்தை, அநித்தியங்களின் ஆரவார நடனத்தை உணர்ந்த உதட்டோரப் புன்னகையை துறவியும் நானும் சேர்ந்து பார்த்ததெல்லாம் முன்பொரு காலத்தில் நடந்ததைப் போலாகிவிட்டது. ஒரு மலைப்பாம்பு இரண்டு காலங்களுக்கும் இடையே மாபெரும் பிளவை தடமாக மாற்றி மறைந்து விட்டது. தலைப்பிரட்டைகள் இவற்றையெல்லாம் அறியாமல் பாசியில் வழுக்கி விளையாடிக் கொண்டிருந்தன.
பகுதி மூன்று
வால்டேர் குறிப்பிடாத பயணி-220 ஆண்டுகள் நடந்த வழக்கு-பண்ணை வீட்டில் ஓர் இரவு-தர்க்க விளக்கப்படம்- TRACTATUS LOGICO-PHILOSOPHICUS நூலில் உள்ள ஒரு கூற்று – ரிஷப நாதரின் உயரம்
ஜுலை 5, 1737 மைக்ரோமெகாஸும், அவருடைய சக பயணியான சனிக்கோளைச் சேர்ந்தவரும் பால்டிக் கடலின் வடக்குக் கரையில் இறங்கியதை எழுதிய வால்டேர், இறுதிவரை என்னைக் குறிப்பிடாததற்கு காரணம் உயரமான அவர்கள் இருவர் மட்டுமே அவருடைய கவனத்தில் பதிந்ததாக இருக்கலாம். மைக்ரோமெகாஸை ஒப்பிடுகையில் சனிக்கோளைச் சேர்ந்தவரை அவர் குள்ளர் என்றே எழுதியிருக்கிறார். அவர்களோடு சேர்ந்து நானும் பூமியை 36 மணிநேரத்தில் சுற்றினேன். சிரியஸிலிருந்து நான் அவனோடு ஒட்டிக் கொண்டிருக்கிறேன். அவன் ஒரு புத்தகத்தை எழுதினான். 56,00,00,000 பக்கங்கள் (மைக்ரோமெகாஸின் கல்விக் காலத்தையும், வழக்கின் காலத்தையும் எழுதிய வால்டேர் புத்தகத்தின் பக்க அளவை எழுதாதது ஆச்சரியம்தான்) உடையது. நான் புத்தகங்களையே பார்த்ததில்லை. அந்தப் புத்தகம் எழுதியதற்காக எங்கள் கோளில் அவனுக்கு எதிராக 220 ஆண்டுகள் வழக்கு நடந்தது. வழக்கின் முடிவில் 800 ஆண்டுகள் நீதிமன்றத்தின் பக்கமே வரக்கூடாதென்று சொல்லப்பட்டதும், சலிப்புற்ற அவன் கொஞ்ச நாட்களுக்கு எங்கள் கோளைவிட்டு வெளியே பயணிக்கும் முடிவை எடுக்கும் வரை நான் அவனையும், அவனுடைய புத்தகத்தையும் பின் தொடர்ந்தேன். அதன் பிறகும் கூட. அவனுடைய காற்சட்டைப் பையில் ஒளிந்திருந்த என்னை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. நானாக ஏதோவொரு உருவத்தில் என்னைக் காட்டிக்கொள்ளா விட்டால் என்னை யாராலும் காண முடியாதென்பது சிரியஸில் பிறந்த ஒரு பிரிவினரின் தனி அம்சம்.
அவர்கள் இருவரும் என்ன நினைத்து பூமியிலிருந்து வெளியேறினார்களோ தெரியாது, ஆனால் எனக்கு இந்த இடம் பிடித்துப் போனதால் நான் இங்கேயே தங்கிவிட்டேன். சிலைகளைப் போல அவற்றின் முன்னே மனிதர்களை உறைய வைத்திருக்கும் புத்தகங்களையும், பனிக்கரடிகளையும் அளவுகடந்து நேசித்ததால் என்னால் பூமியை விட்டுப் பிரிய முடியவில்லை. மலர்களை நான் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. சனிக்கோளைச் சேர்ந்தவருக்கு ஆறுகள் நேராக ஓடுவதில்லையென்று குறையிருந்தது. ஆறுகளின் வளைவுகளுக்காகவும், அருவிகளுக்காகவுமே நான் அவற்றை நேசிக்கிறேன்.
வால்டேரின் நண்பர்களோடு சில காலம் இருந்தேன். ஜூன் 18, 1816 பைரனின் ஜெனீவா எஸ்டேட்டில் கூடியிருந்தவர்களில் (பைரன், மருத்துவர் போலிடோரி, பெர்ஷி ஷெல்லி, மேரி காட்வின், மேரியின் ஒன்றுவிட்ட சகோதரியான கிளாய்ர் கிளாய்ர்மான்ட்) ஒருவரான பதினெட்டு வயதே நிரம்பிய மேரியை அவருடைய அழகான கூந்தலுக்காக மட்டுமின்றி, பண்ணை வீட்டின் கூடத்தில், அசையும் நிழல்களை சுவர்களில் எழுப்பிய மெழுகுவர்த்திகளின் இரவில் அவருடைய மனதில் உதித்த ஃபிரன்கன்ஸ்டெய்னுக்காகவும் மதிக்கிறேன். பெர்ஷி ஷெல்லியை மணந்த பிறகு மேரியின் பெயரோடு ஷெல்லி ஒட்டிக் கொண்டது. பெண் எழுத்தாளர்களை அளவுகடந்து மதிக்கிறேன். அவர்களுடைய இயல்புக்கு மீறிய ஒரு செயலை முனைப்போடு செய்கிறவர்களை என்னால் மதிக்காமல் எப்படியிருக்க முடியும்? சிரியஸில் பெண்கள் எழுதுவதில்லை. என்னுடைய மேஜையில் ஒரு பக்கத்தை நான் பெண் எழுத்தாளர்களின் புத்தகங்களை அடுக்குவதற்காக ஒதுக்கியிருக்கிறேன். ஆண்கள் எழுதியுள்ளவற்றை விடவும் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், எழுதாமலே பெண்களால் அனைத்தையும் வெளிப்படுத்திவிட முடியுமென்று நம்புகிறேன். பெண்கள் வரையும் கோலங்களைப் பாருங்கள், அநித்தியத்தின் தற்கால வெடிப்பின் அழகை அதை விடவும் யாரும் எழுதி விட முடியாது.
புத்தகங்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். நீங்கள் நம்பினால் நம்புங்கள் நான் சேகரித்த (சட்ட மொழியில் சொன்னால் திருடிய) புத்தகங்களை பூமிக்கு அடியிலிருந்த என்னுடைய நிலவறையில் ஒளித்து வைத்திருந்தேன். நிலத்தடி உயிரினங்கள் அவற்றைக் காவல் காத்தன. சில சொற்களின் மீது சொல்லொணாத காதல் எப்படித்தான் உருவாகிறதென்று தெரியவில்லை, அவற்றை உச்சரிப்பதிலிருக்கும் நளினத்திற்கு நான் மயங்கியிருக்கிறேன். அதைப் போலவே தர்க்கத்திற்கும். லுத்விக் விட்கன்ஸ்டெயினின் இந்த விளக்கப்படத்தைப் பாருங்கள்.
p
q
r
P
q
p
T
T
T
T
T
T
F
T
T
F
T
F
T
F
T
T
F
T
T
F
F
F
F
F
T
F
T
F
T
F
F
F
F
F
உங்களைப் போலத்தான் எனக்கும் இது சிக்கலானது. உண்மை-உண்மை-உண்மை என்று ஆரம்பித்து இறுதியில் பொய்-பொய்-பொய் என்று முடியும் இந்த அடுக்குகள் எனக்கு மனப்பாடம். நான் இதைச் சொல்ல ஆரம்பித்தால் நெல்லி சுகம்-சுகம்-கல் எனத் துவங்கி துக்கம்-துக்கம்-கல் என முடிக்கும்.
உண்மையென்பது சுகமென்றும், பொய் துக்கமென்றும், சுகமே உண்மை, துக்கம் பொய்யென்றும், துக்கத்தில் உண்மையும், பொய்யும் தனித்தனியாகப் பிரிந்து ஒன்றிலிருந்து மற்றொன்றைத் தேடச் செய்வதையே நோக்கமாக மாற்றி துயரத்திற்கு உள்ளாக்குவதற்கு (கண்ணாடிப் பிம்பம் உருவமாக மாற நினைப்பதைப் போல) மாறாக சுகத்தில் இணைந்தேயிருக்கின்றன எனும் எங்களுடைய தர்க்கத்தின் விளக்கப்படத்தைப் பாருங்கள்;
சுகம்
துக்கம்
கல்
சுகம்
துக்கம்
சு
உ
உ
உ
உ
உ
உ
பொ
உ
உ
பொ
உ
பொ
உ
பொ
உ
உ
பொ
உ
உ
பொ
பொ
பொ
பொ
பொ
உ
பொ
உ
பொ
உ
பொ
பொ
பொ
பொ
பொ
சரியாகப் பொருந்தி வரவில்லை என்று நீங்கள் முடிவெய்தினால், மீண்டுமொருமுறை எங்களது தர்க்கத்தை வாசியுங்கள். தற்செயலாக நிகழ்ந்துவிட்ட இயற்கையின் அழகும், மனிதர்களின் அறிவும் கச்சிதமாக இணைந்திருந்த பூமியை நான் நேசித்ததிற்கு விட்கன்ஸ்டெய்னின் இக்கூற்றும் ஒரு காரணம்.
தர்க்கங்களை அலசியதும் மைக்ரோமெகாஸின் உயரத்தை நெல்லியிடம் வியந்து சொல்வேன் (அப்படியொரு காலமிருந்ததென்று மனிதர்கள் தங்கள் பழைய பெருமைகளை நினைவு கூர்ந்து பெருமூச்சு விடும் தொனியில்).
“அவருடைய உயரம் பூமியிலுள்ள சிகரங்களில் உயரமானதை விடவும் அதிகமானது, எனினும் அவருடைய பணிவும், அறிவும் வியப்பிற்குரியது. சிரியஸிற்கு திரும்பிய பிறகும் அவர் நிச்சயமாக விண்ணிலிருந்து பார்த்தால் நீலப்பந்தாகத் தெரியும் பூமியையும் அதன் உயிரினங்களையும் நேசித்திருப்பார் என்றே நம்புகிறேன், அவரைப் போலத்தான் மஞ்சள் வெள்ளை நிற சூரியஸ்தமனத்தை சனிக்கோளில் கண்டவரும் (அது முழு உண்மையல்ல என வால்டேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை)”.
அவருடைய உயரத்தை மெச்சினால் நெல்லி, ரிஷப நாதரின் உயரம் என்ன தெரியுமா? என்று கேட்கும்.
அவரைப் பற்றி எனக்கென்ன தெரியும்?.
பகுதி நான்கு
பிளாட்டோவின் குடியரசு-ஷாஹி ஹம்மம்-தாமஸ் அக்வினாஸின் கழுதைப் பயணம்- MIHI VIDETUR UT PALEA-தொட்டியிலிருந்து பார்த்த காட்சி
பருவகாலங்களில் மழை பெய்யும் நாட்களில் நான் வெறுமனே ஒரு தவளையில்லையென்றும், சங்கிலியின் ஒரு கண்ணியென்றும் உணர்வேன். சொர்க்கங்களிலிருந்து மழை பெய்யாவிட்டால் என்னால் ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ முடியாது. மற்ற தவளைகள் போலின்றி நான் வித்தியாசமான ஒன்று. நான் ஆணுமில்லை, பெண்ணுமில்லை. நீங்கள் பிளாட்டோவைப் பின்பற்றுபவர்களானால் தவளைகளின் மூல வடிவமென்று என்னை எடுத்துக் கொள்ளலாம். அரிஸ்டாட்டிலைப் பின்பற்றினால் அதற்கு எதிர்மறையாக. ஓர் ஆசிரியரிடமிருந்து மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் உருவாகிறார்கள் என்பதற்கு இருவரும் உதாரணம்.
இந்தப் பெயர்களெல்லாம் எனக்குத் தெரியவந்த நாட்களில் மற்ற தவளைகளிடம் பெருமைப்பட்டுக் கொள்வதற்காக பிளாட்டோ, குடியரசில் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா என்று ஆரம்பிப்பேன். பாவம் அந்தத் தவளைகள் தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு நான் ஏதோ பாம்புகளின் வாயில் (தர்மன், காமன், காலன், வசு, வாசுகி, அநந்தன், கபிலன் என்கிற ஏழு நாகங்களிடமிருந்தும்) அவை அகப்படாமலிருக்கவும் மீன்களென்று தவறாகப் புரிந்து கொண்டு தலைப்பிரட்டைகளைப் பிடித்து விளையாடும் சிறுவர்களிடமிருந்து தப்பிக்கும் தந்திரங்களைச் சொல்லியிருக்கிறார் என்றும், பிசிறடிக்கும் தவளைகளின் ஆர்க்கெஸ்ட்ராவைத் திருத்துவதற்கு வழிகாட்டியிருக்கிறாரென்று சொல்வேன் என்ற எதிர்பார்ப்போடு தலை தூக்கி எனக்குக் கீழே அமர்ந்திருக்கும். கால் மீது கால் போட்டுக் கொண்டு நான் தான் பிளாட்டோ என்கிற தோரணையில் குடியரசை ஒப்பிப்பேன். தவளைகள் தாங்கள் தவளைகள் மட்டுமே என்று அறிந்திருப்பதைத் தாண்டி அவற்றால் நான் சொல்வது ஒன்றையும் சமணத்துறவியிடம் நான் ஒப்பிப்பதைப் போல சொல்லவும் முடியாது. அவற்றை மேலும் தொல்லைக்கு உள்ளாக்காமல் விடைகொடுக்கும் முன் சொல்வேன்:
“அநீதி ஒருக்காலும் நீதியை விட இலாபகரமானதாக இருக்க முடியாது.”
தவளைகள் என்னை விட்டுத் தள்ளிப் போயின. நான் பாலினமற்ற தவளை என்பதால் என்னால் யாதொரு உபயோகமுமில்லை என்று அவை நினைத்திருக்கலாம். உணவிற்கும், இனப்பெருக்கத்திற்கும் பிளாட்டோவால் என்ன பயன்? ஏறக்குறைய எல்லாத் தவளைகளும் இவையிரண்டைத் தவிர வேறெதற்காகவும் வாழ்வதில்லை. வாசிர் கான் மசூதியின் அருகிலிருக்கும் ஷாஹி ஹம்மத்தில் ஒரு காலத்தில் ஆண்களும் பெண்களும் குளிக்க வருவார்கள் (தனித்தனியாகத்தான்). அவர்களால் நான் அங்கிருந்த காலம் வரை என்னை அறியவே முடியவில்லை. ஷாஹி ஹம்மம் மனிதர்கள் குளிப்பதற்காக மட்டுமே கட்டப்பட்டிருக்க முடியாதென்பதை அதன் உட்பக்கக் கூரையில் எண்கோண வடிவ மையக்கல்லைச் சுற்றியிருக்கும் இதழ்களைப் பார்ப்பவர்கள் உணர்வார்கள்.
கந்தர்வர்களும், தேவதைகளும், கொல்லிப்பாவைகளும், ஜின்களும், பழங்குடிகளின் முகமூடிகளுக்குள் ஒளிந்திருக்கும் அவர்களின் வெளிப்பட்டு விடாத நூற்றுக்கணக்கான தெய்வங்களும் இருக்கிறார்களோ இல்லையோ, மனிதர்களால் ஷாஹி ஹம்மத்தைப் போல ஒன்றை உருவாக்கியதும் வெளிப்படும் அழகின் முப்பட்டகத்தைத் தாள முடியாமல் அவையாவும் தங்களுக்குரியவை அல்லவென்று எண்ணி தேவதைகளுக்கும் அதற்கும் மேற்பட்டவர்களுக்கும் அர்ப்பணித்து விடுகிறார்கள். பளீரென்று வெட்டும் மின்னலைத் தாங்க முடியாமல் அதை ஜீயஸின் கைகளில் கொடுத்ததும் அதனால்தான். அவரால் மட்டுமே அதைக் கையாள முடியும்.
ஹம்மத்தில் குளிக்க வரும் விருத்தசேதனம் செய்திருக்கும் ஆண்களையும், கண்களைக் கூசச் செய்யும் பளபளப்புடனிருக்கும் பெண்களையும் என்னால் “பாடல்களின் பாடலில்” பாடப்பட்டிருப்பதைப் போல வர்ணிக்க முடியாது. எனக்கு அவர்கள் வெறும் ஆண்களும் பெண்களும் மட்டுமே. கூடுதலாக, பிளாட்டோ சொன்னதைப் போல எப்போதோ வெட்டுண்டுவிட்ட ஒரு வட்டத்தின், ஒன்றையொன்று ஓயாது தேடும் இரண்டு துண்டுகள் என்று நினைத்துக் கொள்வேன்.
நான் கற்றுக் கொண்டவற்றால் உண்டான அசட்டுப் பெருமிதமெல்லாம் தாமஸ் அக்வினாஸின் கடைசிப் பயணத்தில் அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட அவருடைய சரிதத்தால் (அவருடைய சரிதத்தை சொல்லும்படி நச்சரித்தது நானே), காற்றிலே கரைந்து மறைந்தது. வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கும் மரத்தின் கிளையில் அவர் தலையை முட்டிக் கொண்டதே என்னால்தான். கழுதையின் மீது சேணமிட்டு அமர்ந்திருந்த அக்வினாஸ், மயிர் நிரம்பிய அதன் கழுத்தில் அமர்ந்து அவருடைய சரிதத்தைக் கேட்டுக் கொண்டிருந்த என்னோடு உரையாடிக் கொண்டிருந்ததால் அவர் கிளையைக் கவனிக்கவில்லை.. அவருடைய சரிதத்தைக் கேட்டுக் கொண்டிருந்த கழுதையும் அதைக் கவனிக்கவில்லை.
சிலுவையிலறையப்பட்ட இயேசு தாமஸிடம் கேட்கிறார்,
“என்னைப் பற்றி நல்ல விதமாக எழுதியிருக்கிறாய் தாமஸ் உன்னுடைய உழைப்பிற்கு வெகுமதியாக என்ன பெறுகிறாய்?”
“உங்களைத் தவிர வேறெதுவும் இல்லை பிரபுவே”.
அதன் பிறகு அவருக்கு எழுதுவதிலுள்ள ஆர்வம் குறைந்து போய்விட்டது.
“நாங்கள் இருக்கிறோம் அக்வினாஸ், தவளைகள். எங்களுக்காக நீங்கள் எழுதியிருக்க வேண்டுமே”
“நான் இயேசுவை எழுத்தில் தேடிக் கொண்டிருந்தேன். தர்க்கத்தின் துணையோடும், அறிவின் துணையோடும். வெறுமனே கடவுள் இருக்கிறாரென்று சொல்வதை நானே ஏற்றுக் கொள்ளாமல் “கடவுள் இருப்பதற்கான நிரூபணம்” என்று கூட எழுதினேன். அவற்றையெல்லாம் எழுதுங்காலம் இயேசு என்னிடம் என்ன வேண்டுமென்று கேட்கவில்லை. அவர் அப்படிக் கேட்டதற்குப் பிறகு எதுவும் எழுதத் தோன்றவில்லை. ஒன்றை அனுபவித்தறிந்த பிறகு அவ்வனுபவத்திற்கு முன்பிருந்த நிலையிலிருந்து அந்த அனுபவத்தை எழுத முடியாது. உன்னுடைய முகத்தை நீரிலே பார்த்த பிறகு உனது முகத்தை நீ பார்த்ததேயில்லை என்பதைப் போல நீ எழுத முடியாது. எனது எழுத்துக்களால் எந்த முகத்தைப் படைப்பதற்காக எனது வாழ்நாட்களைச் செலவழித்தேனோ, அந்த முகத்தைக் கண்ட பிறகு எனது எழுத்துக்கள் எல்லாம் அற்பமாகிவிட்டன. ரெஜினால்ட் எனது பதிலைக் கேட்டு மனமயர்ந்திருக்கக் கூடும்”. அக்வினாஸ் எங்கோ பார்த்தார். ரெஜினால்ட்டிற்கு பதில் சொல்லிய தினத்திற்கு அவருடைய கண்கள் பயணித்திருக்கலாம்.
“நீங்கள் சொல்லிய பதில் என்ன?”. இந்தக் கேள்வியை நான் கேட்டதும் அக்வினாஸ் சொன்னார்: (ஆர்வத்தில் கழுதையும் காதுகளைக் கூர்மையாக்கி நின்றது)
MIHI VIDETUR UT PALEA
நான் அதை மனப்பாடம் செய்து கொண்டேன். அவர் வாழ்வின் ஏதோவொரு தினத்திற்கு (முக்கியமாக குழந்தைப் பருவத்திற்கு) அவருடைய கவனம் சென்றிருக்கலாம், எதிர்பாராமல் மரக்கிளையில் தலைமோதி கீழே விழுந்தார். கழுதை பயத்தில் துள்ளி எகிறியது. நான் அப்போது அதன் பிடரி மயிரைக் கெட்டியாகப் பற்றியிருந்தேன். அக்வினாஸை விட்டுவிட்டு கழுதையின் கழுத்தில் என்னைக் காப்பாற்றிக் கொண்டேன். அக்வினாஸ் இறக்கும் நாள் வரை என்னை மடாலாயத் தொட்டியில் வைத்திருந்தார். “பாடல்களின் பாடலை” அவர் வகுப்பெடுக்கையில் தாமஸ் அக்வினாஸும் ஷாஹி ஹம்மத்தின் ஒரு தவளையாகத்தான் இருக்கிறாரென்று எண்ணிச் சிரித்தேன். மேற்பரப்பில் தோன்றிய குமிழிகள் உடைந்து சிதறும் வரை எனது சிரிப்பை நீரினுள்ளே நான் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன்.
அவருடைய சிந்தனையில் முட்டிமோதும் சொற்கள் விரும்பத்தக்க வகையில் ஒரு பக்கத்தில் நிரம்பியதும், காகிதத்தை உயரத் தூக்கி வெளிச்சத்தில் வாசித்து, ஆனந்தத்தில் ஒரு குழந்தையளவு குதூகலித்துச் சிரிக்கும் அக்வினாஸின் சிரிப்பை அவர் இறந்த பிறகும் மடாலயத் தொட்டியின் விளிம்பிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தேன்.
பகுதி ஐந்து
அரைகுறையான முதல் பயணம்-டானுபே நதியைக் கடக்கும் படைகள்-
எதிர்காலமயமான நிழல்கள்-பனாரஸ் வரிக்கலகம்-இலையாக இருத்தல்
மைக்ரோமெகாஸ், சிரியஸிற்கு திரும்பிய பிறகு (அவர் எங்கள் கோளிற்குத் திரும்பியதென்பது உறுதியானதில்லை. வேறெங்காவது கூட சுற்றிக் கொண்டிருக்கலாம்) நான் சில நாட்கள் தனிமை வெறுப்பிலிருந்தேன். பூமியை மீண்டும் தனியாகச் சுற்றி வராலாமென்று வடதிசை நோக்கி நகர்ந்தேன். கடந்த முறை வெறும் முப்பத்தாறு மணி நேரங்களில் சுற்றியதால் அவசரத்தில் எவைற்றையுமே சரியாகப் பார்க்க முடியவில்லை. பனிமலைகளையும், பாலைவனங்களையும் இரு நிறங்களிலுள்ள ஒரே நில அமைப்பென்றே அந்தக் குறுகிய கால பயணத்தில் கருதியிருந்தேன். செடிகள் மரங்களிலிருந்து உதிர்ந்து வளர்ந்திருக்குமென்றும். பாதி இரவும் பாதிப் பகலுமாக இருந்த காரணத்தையும் சரியாகக் கணிக்க முடியவில்லை. அந்நாளில் நிலவு ஒரு துண்டாகத் தெரிந்தது. ஒவ்வொரு பொருளையும் அவற்றின் வெவ்வேறு நிலைகளில், தொடர்ச்சியில் அடையாளம் காண்பதற்கு எனக்கு சில வருடங்களானது.
ஒவ்வொரு வடிவமாக உருவமெடுக்கும் விளையாட்டை முதலில் குதிரையிடமிருந்து துவக்கினேன். அதற்கென்று தனியாக எந்த சிறப்புக் காரணமுமில்லை. லால் ஆசீஷ் அஹ்மத் பாஷாவின் குதிரைப்படை டானுப் நதியைக் கடப்பதைப் பார்த்தேன். நதியின் மேற்கிலும், கிழக்கிலும் அவர்கள் முகாம் அமைத்தார்கள். பீரங்கி வண்டிகளை இழுத்துச் செல்லும் வேகமில்லாத குதிரைகளின் தலைகள், மேஜைகளில் வைக்கப்பட்டிருக்கும் விரலால் சுண்டினால் தானியங்களைக் கொத்தும் உலோகச் சேவல்களைப் போலாடியது. நான் ஒரு குதிரையின் வடிவமெடுத்தேன். சில நாட்களில் மிகைல் குட்டுஜோவின் படைகள் டானுப் ஆற்றைக் கடப்பதையும். துருக்கியக் குதிரைகளும், ரஷ்யக் குதிரைகளும் ஒன்று போலவே இருந்தாலும் அவற்றின் மேலே அமர்ந்திருப்பவர்கள் மாறுபட்ட நிறங்களில், வெவ்வேறு உடைகளில் இருந்தனர். போர் நாட்களில் மண்டியிட்டுத் தொழுபவர்களும், சிலுவையின் முன் பிரார்த்திப்பவர்களாகவும் அவர்கள் இருந்தனர். வால்டேர் எழுதியது சரிதான் தொப்பிகள் அணிந்த ஒரு இலட்சம் விலங்குகளும் டர்பன் அணிந்த இன்னுமொரு இலட்சம் விலங்குகளும் போரிட்டதை மைக்ரோமெகாஸ் பார்த்திராவிட்டாலும் அவருடைய கண்ணாகவேயிருந்து நான் பார்த்தேன். முதலில் ஒரு துருக்கியன் அமர்ந்திருக்கும் குதிரையாகவும், பின்பு ரஷ்யனொருவன் அமர்ந்திருக்கும் குதிரையாகவும் இருந்தேன். போர் முடிந்ததும், சிதறிக் கிடக்கும் உடல்களைப் பார்த்துக் கொண்டே முகாமிலிருந்து தப்பிய குதிரையாக மட்டுமேயிருந்தேன். எனது முதுகின் மீது எந்தச் சுமையுமில்லாத குதிரையாக. மனித உடலெடுத்தால் உழைக்கவும், போர் புரியவும் வேண்டியிருந்திருக்கும் என்பதால் முதன்முறையாக ஒரு விலங்கு உடலை (குதிரைகளும் உழைப்பில் இணைந்திருக்கின்றன என்றாலும்) எனது உருவாகத் தேர்ந்ததே சரியென்று பின்னாட்களில் என்னை நானே பாராட்டியிருக்கிறேன். ஜான் பிராட்லி அண்ட் கம்பெனி, ஜான் அண்ட் தாமஸ் ஜான்சன், ஹாரில்ட் அண்ட் சன்ஸ், லோஷ்,வில்சன் அண்ட் பெல், வெஸ்ட்லே ரிச்சர்ட்ஸ் நிறுவனங்களின் ஆலைகளின் முன் நின்றிருக்கிறேன். இரும்பின், சோப்பின், சோடாவின், துப்பாக்கிக் குழாய்களின் வாசனைகள் நிரம்பிய காற்றைச் சுவாசித்த நிழல்கள் ஒவ்வொன்றும் எதிர்காலத்திற்கு விரைந்து கொண்டிருந்தன. உழைப்பாலும், போராலும் மனித உடல் படும் வேதனையை நேரடியாகக் கண்டேன். இயந்திர ஆலைகளிலிருந்து வெளியே வருவதும், நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் போரினிடையே முகாமிற்குத் திரும்புவதும் ஏறக்குறைய ஒன்றேயென்று யோசிப்பேன். ஆலைகளுக்கு முன்னே நிற்கும் நாட்களில் மனிதர்கள் போரிட்டு இறப்பதே நல்லதென்றும், போரைப் பார்க்கும் நாட்களில் அவர்கள் உழைப்பதே நல்லதென்றும் நினைத்ததுண்டு. மனிதர்கள் பிறப்பதே உழைக்கவும், போரில் ஈடுபடுவதற்கும் மட்டுமே என்றொரு புரிதலிருந்தது. சிரியர்கள் வரி வசூலிப்பவர்களுக்கு எதிராகக் கலகம் செய்து கொண்டிருந்த நாட்களில் மனிதர்கள் வரிகட்டவும் பிறக்கிறார்கள் என்று சேர்த்துக் கொண்டேன் (பின்பொருமுறை, வரிகளைச் செலுத்தாத பாரோ காலத்து எகிப்திய விவசாயிகள் இழுபடும் ஓவியத் தீற்றல் ஒன்றை அருங்காட்சியகத்தில் நெல்லியும், நானும் பார்த்தோம். பனாரஸில் வீட்டு வரிக்கு எதிரான கலகத்தை நேரில் கண்டிருப்பதாக நெல்லி சொன்னது). ஆனால் வேட்டைக்காரர்களால், மீன் பிடிப்பவர்களால் விலங்குகளும், கடலுயிரினங்களும் சந்திக்கும் நெருக்கடிக்குப் பிறகு நீண்ட நாட்கள் ஓரிடத்தில் தங்க நேர்ந்தால் மர உச்சிகளில், எளிதில் பறவைகளும் நெருங்க முடியாத இடத்தில் இலையின் வடிவமெடுப்பேன். இலைகளை யாரும் வேட்டையாடுவதில்லை என்றாலும் அவை மருத்துவத்திற்காகவும், விலங்குகளின் உணவிற்காகவும் பறிக்கப்படுவதுண்டு. இலையாக இருந்த காலத்தில் பருவநிலை மாற்றங்களை அறிந்தேன். மூப்படைந்த பழுப்பு இலைகள் காற்றில் எடையின்றி மிதந்து சருகுகளாக நிலமடைவதையும், இலை துளிர்ப்புப் பருவத்தில் அவை தங்களின் புதிய நிறத்தைக் கண்டு குதூகலிப்பதையும் பார்த்திருக்கிறேன். உதிர்ந்த இலைகளே புதிய இலைகளாகப் பிறக்கின்றனவா? அல்லது ஒவ்வொரு இலையும் தனித்தனி பிறப்புடையவையா என்று குழம்பியிருக்கிறேன். தாவரங்கள் தோன்றிய காலத்திலிருந்து இதுவரையிலான இலைகளின் எண்ணிக்கை எவ்வளவுதானிருக்கும்?
பனி நிரம்பிய ஆர்க்டிக் வளையப்பகுதியிலிருந்து இருள் நிரம்பிய காடுகள், விழிப்புடனேயிருக்கும் நகரங்களில் கேட்கும் இசை (வியன்னாவைக் கடக்கும் டானுப் ஆற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இசை கலந்திருக்கிறதென்று சொன்னால், திருவையாற்றைக் கடக்கும் காவிரியிலும் அந்நூற்றாண்டின் இசை கலந்திருக்கிறதென்று நெல்லி சொல்லும்), தெருக்கள், விடுதிகள், வீடுகள், ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும் குகைகள், ஆறுகள், பாலைவனங்களென தொடர்பேயில்லாத நிலக்காட்சிகளைக் கடந்திருக்கிறேன். மணலுக்குள் தலை புதைத்து இரை வேட்டையாடும் பிடிஸ் பெருங்குவேய் பாம்பாகவும் இருந்திருக்கிறேன் (என்னால் பாலைவனப் பாம்பின் வடிவத்திலிருந்து விடைபெறவே முடியவில்லை). பூமி உண்மையில் அற்புதமானதென்பதை வேறு யாரையும் விட நான் உணர்ந்திருக்கிறேன். எனது புலப்படாத உடலில் பூமியே தோலாகப் படிந்திருக்கிறது.
பகுதி ஆறு
பாதாள உலகத்தின் ஹெய்டிஸ்-நகரும் நிறுத்தற்குறி-இரண்டு நிலங்களின் புகழ்ச்சி-கில்காமெஷ் வெட்டிய தேவதாரு-புழுதிமுகம்-நிஜக் கனவு
நாற்காலியின் கரத்தில் உறங்கிக் கொண்டிருந்த நான் கண் விழித்ததும் மனித உருவிலிருந்த ஹெய்டிஸ் (அவரை அந்தப் பெயரில்தான் அழைப்பேன்) வழக்கம் போல புத்தகத்தின் மீது ஒரு புள்ளியளவு பூச்சியாக ஊர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். எழுத்துக்களுக்கு மிக அருகே போவதற்காக ஹெய்டிஸ் ஏறக்குறைய எழுத்தின் மீதிருக்கும் புள்ளி அளவிற்கு நுணிகி விடுவார். சில சமயம் ஒரு நிறுத்தற்குறியோ அல்லது முற்றுப்புள்ளியோ வாக்கியங்களின் மீது நகர்ந்து கொண்டிருக்கிறதென்று சந்தேகிப்பேன். எல்லாம் இந்தக் காட்சி வாடிக்கையாகும் வரைதான்.
இந்தப் பெயரை நான் அவருக்கு சூட்டிய நாளில் நான் சிவப்புப் பிரமிடை அளந்து கொண்டிருந்தேன். ஒவ்வொரு கல்லாகத் தாவித் தாவி எனக்கு மேலே வானம் மட்டுமேயிருக்கும் உயரத்தைத் தொட்டதும், உச்சிக்கல்லை எடுத்து வைத்த மனிதர்களை நினைப்பேன். வானத்திலிருக்கும் தூரப்பார்வையுள்ள ஒருவருக்கு நாங்களிருக்கிறோம் என்று சொல்வதற்காக அல்லது நிலத்திலிருந்து என்றாவது தப்பிச் செல்வதற்கான படிக்கட்டுகளாக அவர்கள் பிரமிடுகளை எழுப்பியிருக்கலாம்.
பிரமிடின் உச்சியிலமர்ந்து வழக்கம் போல கால் மீது கால் போட்டுக் கொண்டு உலகைக் குறித்து யோசிப்பேன். நீரிலிருந்து வெளியே வாழத்துவங்கி எத்தனையோ வருடங்களாகிவிட்டன (காலக்கணக்கெல்லாம் நான் முன்பே கற்றிருந்தேன்). பாரோ ஸ்னெஃபெருவின் காலத்தில் முகிழ்த்த முக்கோண வடிவக் கட்டுமானம் முதன்முதலாக உதித்த மனதையும், மரங்களேயில்லாத பாழ்வெளியில் உழைப்பின் புழுக்கத்தைத் தாங்கிக் கொண்டு ஒவ்வொரு கல்லாக உருட்டி இந்த வடிவத்தை முழுமையாக்கியவர்களையும் யோசித்தேன். ஒரு செய்தியாக, கனவாக அல்லது யாரையாவது இகழ்வதற்காகவாவது எழுந்திருக்கும் இந்தப் பிரம்மாண்டங்கள் இங்கே ஒருவன் எல்லோருக்கும் மேலாக, பிரபஞ்சத்தையே இயக்கும் சக்திகளுக்கும் மேலாக எழுந்தான் என்பதைக் காட்டுவதற்காக எழுந்திருக்கின்றனவா? “இரண்டு நிலங்களின் புகழ்ச்சி” கப்பலில் ஆட்களையும், பொருட்களையும் கொண்டு வந்து மாமாங்கக் கணக்கில் கற்களை உருட்டி வெறும் சமாதிகளாக எழுந்திருக்கும் பிரமிடுகள் அற்ப வாழ்வை மரணத்திடமிருந்து காத்துவிட முடியுமென்ற அசட்டு நம்பிக்கையால் உருவானவையாகவும் இருக்கலாம். கில்காமெஷ் வெட்டிச் சாய்த்த தேவதாரு மரங்களே ஸ்னெஃபெருவின் கப்பல்களாக நைல் ஆற்றின் மடியில் மிதந்திருக்கின்றன. கில்காமெஷ் காவியமும் மரணத்தை அளப்பதே.
எல்லாப் பிரமிடுகளையும் அளந்து பார்த்தேன். ஒரு விளையாட்டாக அதை மாற்றிக் கொண்டேன். உயரத்திற்குச் செல்வதும், மெதுவாக இறங்கி நிலத்தைத் தொட்டு இறங்கி வந்த உச்சியை, நீலத்தைக் குத்தியிருக்கும் உச்சிப்புள்ளியை கண்களின் மீது கரங்களைப் போல கால்விரல்களைச் சேர்த்து உற்றுப் பார்ப்பேன். ஒரு தவளை அறிந்து கொள்ள முடியாதவையும் உலகில் உண்டென்று துயரடைவேன்.
சிவப்புப் பிரமிடிலிருந்து நான் இறங்கிக் கொண்டிருக்க வீசியடித்த புழுதிக் காற்றில் கண்களை மூடினேன். காற்றின் பிரமிடுகளை நகர்த்தும் வேகத்திற்குப் பயந்து ஒரு கல்லை இறுகப் பற்றியிருந்தேன். புழுதிக்காற்று நின்றதும் அடுத்த அடியை கவனமாக எடுத்து வைத்தேன்.
“என்னை மிதிக்காதே”.
பயந்து இரண்டு அடிகள் வேகமாக இறங்கினேன். என்னுடைய கால் அச்சுப் பதிந்த புழுதிப்படலம் ஒரு முகமாக எழுந்து என்னிடம் பேசியது. மனிதர்களுக்கு முன்பிருந்தே நான் இங்கேயிருக்கிறேன். ஆனாலும் இப்படியொரு விசித்திரத்தை என்னுடைய எந்தத் திசைப் பயணத்திலும் கண்டதில்லை. எனது காலின் அச்சே ஒரு முகமாக மிதக்கிறது. ஹெய்டிஸின் மூன்று தலை நாயான செர்பரஸும், எமன் பாதையைத் தடை செய்யும் நாயான சபளமும் இணைந்து வந்தால் கூட விசித்திரமென்று கருத மாட்டேன். நான் அம்முகத்திற்கு ஹெய்டிஸ் எனப் பெயரிட்டதற்கு இந்த நாய்களை நான் மனதில் நினைத்தது தான் காரணம்.
ஹெய்டிஸ் எனும் ஒரு நிறுத்தற்குறி புத்தங்களின் பாதாளங்களில் புதைந்திருக்கும் எழுத்துக்களின் மீது ஊர்கிறது. நான் மறுபடியும் கண்ணயர்ந்தேன். பசித்த நிழல்கள் எங்கள் மீது ஊர்ந்த நாளை ஒரு கனவாகக் கண்டேன். அது நடந்து எவ்வளவோ வருடங்களாகின்றன. பசித்த நிழல்கள்.
கருப்பு டைக்ரிஸ்-அலாமுத் கோட்டை-ஹசாசின்ஸ்-பாக்தாத் முற்றுகை
காகிதத்தாலான ஒரு பொருளைத் திறந்ததும், அதன் முன் மனிதர்கள் சிலைகளாக உறைவதை நான் முதலில் ஏதோ மந்திர வித்தையென்றே நம்பினேன்.
கூரையிலிருந்து எரியும் விளக்குகள், புழக்கத்திற்கு வந்த பிறகு மனிதர்கள் வெகுநேரம் இரவில் விழித்திருக்க ஆரம்பித்தார்கள். அவற்றை மின்விளக்குகள் என்று அழைத்தனர். மின்விளக்குகள் வந்த பிறகு இருட்டே ஊனமடைந்தது. காற்றில் தள்ளாடும் சுடரொளியில் அசையும் நிழல்களைப் பார்ப்பதே மறைந்தது (அப்படியொரு அசையும் நிழலாகத்தான் மேரி ஷெல்லியை முதன் முதலில் பார்த்தேன்). இரவிலும் உழைக்க ஆரம்பித்தார்கள். மனிதர்களை உறையவைக்கும் காகிதத்தாலான மந்திரப் பொருளின் பக்கமே போகக் கூடாதென்று நினைத்திருந்தேன். தனிமைக்குப் பிறகு என்னுடைய அச்சமே அந்த மந்திரப் பொருள்தான். பிரமிடு ஒன்றில் நெல்லியைக் கண்டதும் அதற்கு முன் பார்த்த எந்தத் தவளையையும் போலல்லாமல் இங்கே ஒரு தவளை தொங்கிக் கொண்டிருக்கும் விசித்திரத்தை அதிசயங்களின் கோளான சிரியஸில் கூடக் கண்டதில்லை. சனிக்கோளிலும் இந்த அளவிற்கு நான் எதையும் பார்க்கவில்லை.
நெல்லிதான் அந்த மந்திரப் பொருளை புத்தகம் என்று அழைப்பார்கள் என்றது. சிந்தனையென்கிற அருவம் மொழியென்கிற கருவியின் துணையோடு எழுத்துக்களாக உருவமடைவதே புத்தகம். அதை அஞ்சுகிறவர்களும், விலகிச் செல்கிறவர்களும், வழிபடுகிறவர்களும், உயிரைக் கொடுத்துக் காக்கிறவர்களும், தங்கள் கண்ணாக நேசிப்பவர்களும் இருக்கிறார்கள். புத்தகம் என்ற பொருள் உருவாகி மனிதர்களையே கற்றவர்களென்றும் (அறிவு நாட்டமுள்ளவர்களென்றும்), கல்லாதவர்களென்றும் (அறிவு நாட்டமற்றவர்களென்றும்) பிளவுபடுத்தியிருந்தாலும் அதற்கு அவை என்றுமே பொறுப்பாகாது. நெல்லி புத்தகங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே அருங்காட்சியகத்திலிருந்து வெளியே வந்தோம். பாரோ காலத்து வரி வசூலிப்பவர்களைப் பற்றிப் பேசினோம். சுமேரியக் களிமண் ஒரு மனிதனின் பெயரைச் சுமந்திருக்கிறது. மனிதகுல வரலாற்றில் பெயருடைய முதல் மனிதன். அவன் பெயர் குஷிம். அவன் ஒரு சாதாரண கணக்காளன். மனிதர்களின் கைக்கு கிடைத்த முதல் எழுத்துப் பிரதியே “29086 அளவுள்ள பார்லி(யை) 37 மாதங்கள்(ளில்) (வரப்பெற்றோம்) குஷிம்” என்பதே. பொருளும், கணக்கும், வியாபாரமுமே மனிதர்களை இயக்கியிருக்கிறது. வரி அதன் ஓர் அங்கம் என்றது நெல்லி. அதற்கு எப்படி எல்லாமே தெரிந்திருக்கிறதென்று கேட்டால் மனிதர்களுக்கு முன்பிருந்தே நான் இங்கேயிருக்கிறேன் என்று பதில் சொல்லும்.
ஒரு புத்தகத்தில் நுழைவதே ஒரு நூலகத்திற்குள் நுழைவதற்கு சமம். ஒற்றைப் புத்தகத்தை வாசிக்கத் துணிகின்றவர் எண்ணிக்கை குறிப்படப்படாமல் அளிக்கப்பட்டிருக்கும் வாழ்நாளின் சில மணிநேரங்களை, சில்லறைகளைச் சூறைவிடுபவர்களைப் போல, கடலில் ஒரு குவளை குறைந்தால் என்ன என்கிற அலட்சியத்தோடு செலவழிக்கிறார். ஒரு நூலகத்தில் நுழைகின்றவர் எவ்வளவு குறைவானது தன் வாழ்நாளென்று மலைத்து, தன்னால் வாசிக்க முடியாத புத்தக அடுக்குகளின் மீது ஏக்கப் பெருமூச்செறிகிறார். அந்தச் சூட்டில் ஈரப்பதமிக்க, வெளிச்சம் குறைவான நூலக ஓரங்களில் திறக்கப்படாத புத்தகங்களில் வசிக்கும் பூச்சிகள், சூட்டைக் கிளப்பியது யாரென்று பார்க்க புத்தகங்களின் மேற்பரப்பில் தலை தூக்குகின்றன. அளிக்கப்பட்டிருக்கும் வாழ்நாளை கடைசிச் சில்லறைகளை எண்ணுவதைப் போல எண்ணி புத்தகங்களுக்குச் செலவிடத் துவங்கி விடுகிறார்.
யாருக்கும் தீங்கில்லாத ஒரு செயல் வாசிப்பது. வாசிப்பவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு செயல் எழுதுவது (டான் குவிக்ஸாட் என்னவானான் என்று யோசியுங்கள்). அனைத்துப் பிரிவினருக்கும் கருவியாகிவிடுகிற புத்தகங்கள் வெறுப்பைத் தூண்டவும், உயிர்களின் மீது பரிதாபமெழச் செய்யவும் துணை போகின்றன. குற்றமிழைக்கக் காரணமாகும் அவை சாட்சி மட்டும் சொல்வதில்லை. பின்விளைவுகள் அனைத்திற்கும் அவை பொறுப்பில்லாதவை என்கிற இடத்தை எட்டியிருக்கின்றன. எழுதியவரை விடவும் அதிகம் நேசிக்கப்படுகிறவையாக, வெறுக்கப்படுகிறவையாக புத்தகங்கள் இருக்க, அவற்றை எழுதியவர்களோ கிராமச் சாலைகளின் மதிய நேர டீக்கடைக்காரர்களைப் போல வாசிப்பவரை எதிர்பார்த்து அமர்ந்திருக்கிறார்கள். தேடி வரும் வாசகரை மனதிற்குள்ளாக தொழுதே விடுகிறார்கள்.
தேவையென்றும், ஆடம்பரமென்றும் கருதப்பட முடியாதவையாக புத்தகங்கள் இருக்கின்றன. புத்தகங்களை மதிக்கிறவர்கள் கூட வாசிப்பவர்களை வெறுக்கிற விநோதம் கிட்டத்தட்ட, கன்னித்தன்மையை காபந்து பண்ணும் கலாச்சாரமுடைய இனக்குழுக்களின் மனநிலைக்கு இணையானது.
உலகினின்று மனிதர்களைத் துண்டித்து, செயல்கள் அனைத்தையும் ஒத்தி வைக்கத் தூண்டும், அவர்கள் அறிவோடு சதுரங்கமாடும், காலிப்பாத்திரத்தை நிரப்புவதைப் போல அவர்களது ஞாபகக் குவளைகளை நிரப்பும் (ஞாபகத்தின் துணையில்லாவிட்டால் ஒரு புத்தகம் பயனற்றுப் போகும்), வெறுப்பிற்கும், நேசிப்பதற்கும், அஞ்சுவதற்கும் காரணமாகும், புதுப்பிக்கும், திசைதிருப்பும், கூட்டமாக்கும், நேரத்தை விரயமாக்கும், உபரி நேரத்தை உபயோகமாக்கும், வழிப்படுத்தும், சிதறச் செய்யும், பணியக்கோரும், விடுதலையுணர்வைக் கிளர்த்தும், மொழிக்குக் கடனளிக்கும், தப்பித்து தலையைப் புதைத்துக் கொள்ள வாய்ப்பளிக்கும், விட்டேத்திகளாக்கும், குழப்பம் அடையச் செய்யும், கடிவாளமிடும், பெருமிதமளிக்கும், மதிப்பிற்குரியவர்களாக்கும், ஏட்டுச்சுரக்காய்களென்ற ஏளனத்திற்குக் காரணமாகும், குற்றவுணர்வுக்குள்ளாக்கும், கருத்துக்களை மாற்றச் செய்யும், இறுகச் செய்யும், இரும்பு மண்டைகளாக்கும், எளிமையாக அணுகத்தக்கவர்களாக்கும், பரிமாறிக் கொள்வதில் இணக்கமும், விட்டுத்தரமுடியாத அளவிற்கு பிடிப்பையும் அளிக்கும், பொருள் இழப்பை உண்டாக்கும், பொருட்படுத்தத் தக்கவர்களாக்கும், பறவைகளுக்கு உபயோகமில்லாத மரங்கள் வளரக் காரணமாகும், திறந்த வரப்புகளுக்கு உள்ளேயும் வழிந்தோடிவிட முடியாமல் தளும்பும் சொற்களுடைய புத்தகங்களுக்காகவே நாங்கள் இருவரும் நூலகங்களில் ஏற ஆரம்பித்தோம்.
அலெக்ஸாண்டிரியா நூலகச் சிதிலங்களைத் தேடிக் கொண்டிருந்த நாளில் எரிக்கப்பட்ட நூலகங்களைக் குறித்து நெல்லி சொன்னது.
“அலாமுத் கோட்டையைக் கைப்பற்றிய மங்கோலியர்கள், பதினோரு நாள் பாக்தாத் நகர முற்றுகையில் டைக்ரிஸ் ஆற்றில் தூக்கியெறிந்த நூல்களின் மை கரைந்து ஆறே கருப்பாக ஓடியது. பானு மூசா சகோதரர்களின் தானாகவே இயங்கும் இயந்திரங்களின் படங்கள் மையாகக் கரைந்த பின்னும் டைக்ரிஸின் மீது இயங்கியதைப் பார்த்தேன். நீரே கருத்து வெளிச்சமே உட்புகாத இருட்டில் அரைக்குருடாக இருந்தேன். அறிவின் வாசனை என்பதை அன்று முகர்ந்தேன்”.
நெல்லி, அலாமுத் கோட்டையில் ஹசன்-ஐ-சப்பாவோடு இருந்ததாகவும், கைதுக்குப் பயந்து மாறுவேடங்களில் சப்பா கோட்டைக்குப் போய்வந்த நாட்களிலிருந்து இரண்டு ஆண்டுகள் திட்டமிட்டு அவருடைய சகாக்களை கோட்டையில் பணிக்கு அமர்த்தி இறுதியாக மாறுவேடத்தைக் கலைத்து கோட்டையைக் கைப்பற்றியதைப் பார்த்திருந்தது.
“இரண்டு முறைகள் கோட்டையின் கூரையில் ஏறியதைத் தவிர முப்பத்தைந்து ஆண்டுகள் கோட்டையின் அறைகளெங்கும் நிரம்பியிருந்த நூல்களை வாசிப்பதில் சப்பா செலவிட்டார். கெய்ரோவில் கல்வி கற்றவரான சப்பா, குரான் முழுவதையும் மனப்பாடமாகச் சொல்லுவார். அவரோடிருந்த ஒவ்வொரு நாளிலும் அவருடைய தோளில் அமர்ந்து அவர் வாசித்த நூல்கள் அனைத்தையும் நானும் வாசித்தேன். கணிதம், வானியல், தத்துவம், கட்டிடவியல், மருத்துவம், மதம், கலைகள், ரசவாதமென்று அவர் வாசிக்காத நூல்களே உலகில் இல்லை. அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் வாசிப்பதையே நிறுத்தி விட்டு குரானை மட்டும் முனகிக் கொண்டிருந்தார். அதன் பிறகு முழுதும் அமைதியில் ஆழ்ந்தார்.”
“சப்பா நீங்கள் ஏன் இப்பொழுது எதையுமே வாசிப்பதில்லை?”. அப்போது மூன்றாவது முறையாகக் கோட்டையின் கூரையில் ஏறிக் கொண்டிருந்த அவரிடம் கேட்டேன்.
“எவையுமே உண்மையில்லை”
“பிறகு ஏன் இவ்வளவு வருடங்களை வாசிப்பதிலும், ஹசாசின்களை உருவாக்கியதிலும் செலவழித்தீர்கள்?”
“எவையுமே உண்மையில்லை, எனவே அனைத்தும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன”.
நெல்லி அனேகமாக சப்பாவோடு இருந்த நாட்களுக்குச் சென்றிருக்க வேண்டும், அது வெகுநேரம் பேசவேயில்லை. நரைத்த அவருடைய தாடி நூலின் மீது உரச விளக்கொளியில் அவர் வாசித்துக் கொண்டிருந்த நாட்களுக்கு.
“அவர் நினைவாக அங்கேயே தங்கியிருந்தேன். மங்கோலியர்கள் அக்கோட்டையைக் கைப்பற்றும் நாள் வரை. அதன் பின் மங்கோலியர்களைப் பின் தொடர்ந்து பாக்தாத் வந்தேன்.”
இரயில் பயணங்களில் எங்கள் ஆர்வம் திரும்புவரை நெல்லி அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தது.
பகுதி எட்டு
dS ≤ 0
கராச்சியின் வீதிகளில் வாயு முகமூடியை விற்றுக் கொண்டிருந்தார்கள். கடைகள் அனைத்துமே சூரியன் மறைவதற்குள் அடைக்கப்பட்டு நகரமே ஒடுங்கிய தெருக்களில் வாயு முகமூடியொன்றை முகத்தில் அணிந்திருந்த பெண்ணொருத்தியை நிறுத்திய ஹெய்டஸ் அவள் ஏன் முகமூடி அணிந்திருக்கிறாள் என்று கேட்டார். அவளுடைய கையைப் பிடித்திருந்த குழந்தையும் இடுப்பு வரை முகமூடி அணிந்திருந்தது.
“போர் வருகிறது.”
“எங்கிருந்து?”
“எல்லாத் திசைகளில் இருந்தும்”
அப்படியொரு போர் முடிந்து பதினெட்டு ஆண்டுகள் கடந்திருந்தன. ஆபத்தில்லாத இடத்திற்கு மனிதர்கள் நகர்ந்து விட்டார்களென்று அவரும், நானும் நினைத்தோம். இரும்புத் தொப்பிகள், டர்பன்கள், தலைப்பாகைகள், கருப்பர்கள், வெள்ளைக்காரர்கள், மஞ்சள் நிறத்தவரென்று பேதமேயில்லாமல் கோடிக்கணக்கான விலங்குகள் ஒன்றை ஒன்று அழித்துக் கொண்டிருந்த ஒன்பது வருடங்களை அதற்குப் பின் பார்த்தோம். நாங்கள் போரின் சப்தத்திலிருந்து வெளியேறவே விரும்பினோம். ஆனால் எத்திசையிலும் விமானங்களின் ஓசையும், குண்டுகள் வெடிக்கும் ஓசையும், அழுகுரல்களும் கேட்டுக் கொண்டேயிருந்தன. மகா சமுத்திரங்களின் நீரடியிலும் போர் நடந்தது. உலகத் தெருக்களே சவ அடக்க ஊர்வலக் காலகளால் தேய்ந்திருந்தது. குழிதோண்டிப் புதைக்கப்பட்ட உடல்களையும் அவற்றினருகே மதச் சடங்குகளைச் செய்யும் புரோகிதர்களையும் பார்த்தோம். சுவஸ்திக்கை சுமக்கும் கழுகை சின்னமாகக் கொண்ட லப்ட்வஃபேயின் ஒரு இலட்சம்விமானங்கள் வானெங்கும் பறந்து ஜீயஸையும்,கிரெய்க்ஸ்மரைனின் நீர் மூழ்கிகள் போசைடானையும் துள்ளி விழச் செய்து கொண்டிருந்தன. உறக்கமற்றுத் தவித்த அவர்கள் நிலத்தைப் பார்க்க, அவர்களுடைய சகோதரனுடைய பெயரைத் தாங்கியிருக்கும் ஹெய்டஸான நான் ஒவ்வொரு குண்டுவெடிப்பிற்குப் பிறகும் உருவாகும் பள்ளத்தில் தடுமாறி விழுந்து கொண்டிருந்தேன். பெண்களும் எறும்புகளைப் போல வீடுகளிலிருந்து வெளியே வந்தார்கள். போர் புரியும் ஆண்களை தாதிகளாக மருத்துவமனைகளிலும், ஆலைகளில் தொழிலாளர்களாகவும், சிபிலிஸைப் பரப்பிக் கொண்டிருந்தவர்களை நெருக்கடியான விடுதிகளின் அறைகளிலும் சுமந்தார்கள். Deutschland Erwache, Vorwarts!Vorwarts, Die Horst Wessel Lied பாடல்களின் உற்சாகம் நரம்புகளில் படர துப்பாக்கிகளைச் சுமந்த துருப்புகள் உலகையே துளைத்துக் கொண்டிருந்தன.
வெர்னர் வான் பிரவுனின் V-2ராக்கெட்டுக்களைக் கண்டு உலகமே அஞ்சியது. போர்க்கயிற்றின் ஒரு முனையை இழந்து கொண்டிருக்கும் ஜெர்மனி தலைகுனிவதைத் தவிர்க்க இரவு பகலாக பேரழிவின் தூதுவனான ராக்கெட்டுகளை வெடித்தார்கள். அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் கவிதையின் பெயரிட்டு (திரித்துவம்) ஒரு சோதனையை நிகழ்த்திக் கொண்டிருந்தார். மன்ஹாட்டன் திட்டமே முன்னெப்போதுமில்லாத அபாய முனைக்கு உலகை நகர்த்திக் கொண்டிருந்தது. பொறியாளர்கள் வதைக்கூடங்களை வடிவமைக்க, அறிவியலாளர்கள் ஆயுதங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். மனிதர்கள் போரிட்டார்கள். போரின் முகம் உரக்கச் சிரித்தது.
எங்கேயும் அலைந்து திரிந்து இறுதியாக ஒலியே நுழையாத இமாலயப் பனிக்குகையொன்றில் ஒளிந்திருந்த நாங்கள் வெய்யில் காய்வதற்காக வெளியே வந்தோம். பசித்த நிழல்கள் எங்கள் உடலைக் கொத்தின.
வெளிச்சத்தையே மறைக்கும் நிழல்கள் வானெங்கும் திரிந்தன. அவை பறவைகளின் நிழல்கள். கூட்டம் கூட்டமாக வெளியேறும் பறவைகளின் நிழல்கள் ஒரு போர்வையாக நிலத்தின் மீது படிந்தன. விசும்பிற்கும் அப்பால் பறந்த பறவைகளின் நிழல்களால் நாங்கள் ஓர் இருட்குகைக்குள் நுழைந்தவர்கள் போலானோம்.
“பறவைகள் வெளியேறுகின்றன”.
சோர்வடைந்த குரலில் ஹெய்டஸ் சொன்னார். நாங்கள் வானையே பார்த்திருந்தோம். முடிவேயில்லாமல் பறவைகள் பறந்து கொண்டிருந்தன. எங்கோ அடைக்கலம் தேடிக் கிளம்பிய பறவைகளால் பகலின் உடலில் கிரகணத் துளை. பூமியின் மரங்களை விட்டே வெளியேறும் பறவைகளின் வாக்களிக்கப்பட்ட நிலம் எங்கிருக்கிறது? அவைகளில் உயரப் பறக்கும் பறவை மனிதர்களேயில்லாத கோளைக் கண்டிருக்கலாம். போர் உச்சத்தை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தோம்.
பல நாட்களாகப் பறவைகள் வானேகிக் கொண்டேயிருந்தன. துயருற்ற முகத்தோடு அவர் அமைதியாகவேயிருந்தார். என் வாழ்நாளில் பார்த்த எந்தவொரு போரைப் போலவும், அழிவைப் போலவும் இது இல்லையென்பதாலும் எனது அறிந்து கொள்ளும் எல்லையை மீறிப்போய்விட்ட போராயுதங்களின் முன் மெளனித்திருப்பதே நல்லதென்று முடிவெடுத்தேன். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் குகையில் முடங்கியிருந்தோம்.
இறுதியாகக் கிழக்கே இரு நெருப்புக் காளான்கள் முளைத்தன. அவை புகையாக மறைவதற்குள் பூமியின் பாதையில் ஓர் அபாயக் குறியீட்டைப் பாதையின் நடுவே நிறுத்தின. மகாமசானமாகப் போர் முடிந்தது. நாங்கள் இருவரும் பறவைகளைத் தொடர்ந்து பூமியிலிருந்து வெளியேறுவதென்று முடிவெடுத்தோம். இங்கிருந்து எதையாவது எடுத்துச் செல்வதென்றும். முதலில் விதைகளை யோசித்தோம். அவை பூமியைத் தவிர வேறெங்கே முளைக்கும்? எங்களது பயணத்தில் நாங்கள் பார்த்த பலவற்றைப் பட்டியலிட்டோம். ஸ்டெடால் குகையில் கிடைத்த “சிங்க-மனிதன்”, இன்காக்களின் குய்பு, லிடிய நாணயங்கள், மொஹஞ்சதாரோவின் வெண்கலப் பெண் எனப் பட்டியலிட்டு இறுதியாகப் புத்தகங்களை எடுத்துச் செல்வதென்று தீர்மானித்தோம்.
எங்களால் முடிந்தவரை (கணக்கிட்டுச் சொல்வதென்றால் 56,00,00,000 கோடிப் பக்கங்கள் அளவுள்ள புத்தகங்கள்) நூலகங்களில், கடைகளில், வீடுகளில் எங்கெங்கும் புத்தகங்களைச் சேகரித்து நிலத்தினடியில் புதைத்தோம். புத்தகங்களுக்காகப் பூமியைச் சுற்றிய பயணத்திற்கு எங்களுக்கு ஆறு ஆண்டுகளானது. நெல்லியின் முதுகில் ஏறிக் கொண்டேன், என் முதுகில் புத்தகங்களைச் சுமந்து. நெல்லி பிரமிடின் உச்சியை அடைவதற்கு சிரமப்பட்டது. இறுதியாக ஒரு முறை நிலத்தைப் பார்த்த நெல்லி அடுத்த கணம் வானில் தாவியது. உலகிற்கு வெளியே திறந்திருந்த இந்த சாளரத்தின் வழியாக இங்கே நுழைந்தோம்.
அதன் பிறகு புத்தகங்களை எடுப்பதற்காக மட்டுமே நான் பூமிக்கு வருவேன். நெல்லியோ அதன் கண்களின் கிணற்றில் விழும் நட்சத்திரங்களை மட்டுமே பார்த்திருந்தது.
பனிக்கரடிகள் விளையாடும் வெள்ளை மைதானம் கரைந்து வெகு காலமாயிற்று. குட்டிகள் பின் தொடர பெரிய உடல் குலுங்க அவை விளையாடுவதைப் பார்ப்பதற்காக எனது சாளரத்தை ஒவ்வொரு நாளும் திறந்து வைப்பேன். மைதானத்தில் விழும் வைகறை ஒளியை அவை நக்கி முடித்ததும் சோம்பல் முறித்து கொட்டாவி விடும். துருவப்பலகையிலிருந்து எம்பி முன்னிரு கால்களால் பிடித்திழுத்து சூரியனை பனிக்கரடி விழுங்குவதே பூமியில் இரவு.
பனிக்கரடிகள் உயிரோடிருக்கும் காலம் வரை பூமியைப் பார்ப்பதற்கு நான் ஒரு நாளும் சலித்ததில்லை. என்னுடைய சாளரத்தைத் திறந்தால் பூமி தெரியும். தொலைநோக்கிகள் தேவையில்லாத கண்கள் என்பதால் என்னால் வெகு சாதாரணமாக ஒரு எறும்பு பிரசவிப்பதைக் கூடப் பார்க்க முடியும். பனிக்கரடிகளே இல்லாமல் போனதும் எனது சாளரத்தை திறக்கவே கூடாதென்று அடைத்து விட்டேன். அவ்வப்போது ஒரு பழைய நினைவை மீட்டெடுப்பதைப் போல சாளரத்தைத் திறந்த நாட்களில் மாபெரும் பனிப்பாளமொன்று பிளந்ததையும், காடுகள் தீப்பற்றி எரிந்ததையும் பார்த்தேன். அன்று தொடங்கி இன்று வரை பூமி எரிந்து கொண்டேயிருக்கிறது.
பகுதி ஒன்பது
புத்தகத்திலிருந்து இறங்கினேன். நாற்காலியில் என்னுடைய பழைய உருவில் இறங்கினேன்.
“என்ன ஹெய்டிஸ் வாசித்து முடித்து விட்டாயா?”
“இது புதிய மொழியாக இருக்கிறது. என்னால் அதன் சொற்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.”
நெல்லி நாற்காலியின் கரத்திலிருந்து புத்தகத்தின் மேல் தாவியதும் சொன்னது “இது தமிழ்”.
“அப்படியா?”
“நான் மதுரையில் இருந்த நாட்களில் பார்த்திருக்கிறேன்.”
மீண்டும் புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன்.
எங்கள் தலைக்கு மேல் சாம்பல் துகளொன்று பறந்தது. பூமியிலிருந்து எழும் சாம்பல் துகள்கள் கருந்தேமல் படலமாக வெளியின் மூலைகளில் மிதக்கின்றன. எரியும் பூமியின் தீயே அண்டத்தின் குகைகளில் மஞ்சளாக மினுங்குகிறது.
“இதுதான் சரியான நேரம்”. நெல்லி புத்தகத்திலிருந்து சாளரத்திற்குத் தாவியது. காலால் சாளரத்தைத் திறந்து பூமியை நோக்கிக் குதித்தது.
“என் வயிற்றின் கீழே பூமியைப் புதைப்பேன்”.
வானிலிருந்து ஒரு தவளை பூமியின் மீது குதிப்பதை மஞ்சள் பிழம்புகளின் மத்தியில் தீயின் கண்கள் பார்த்திருக்கும்.
பகுதி 0
நான் திரும்ப வேண்டும். நெல்லி இல்லாத துயரை என் கோளுக்குத் திரும்பி ஆற்றிக் கொள்ள வேண்டும். மூடிய சாளரத்தின் உள்ளே நாட்களைக் கணக்கிடத் துவங்கினேன். மைக்ரோமெகாஸ் பூமியில் இறங்கிய நாளிலிருந்து கணக்கிட்டு 800 ஆண்டுகள், ஒவ்வொரு நாளாக.
ஜூலை 5, 2537 புத்தகத்தின் மீது தலைசாய்த்திருந்த என் மீது நிழல் படிவதாக உணர்ந்து தலை தூக்கினேன். மைக்ரோமெகாஸ் இறங்கி வந்து கொண்டிருந்தார். என்னை அவர் நெருங்கியதும், “நீங்கள் எனது நண்பரான வால்டேரைப் போலிருக்கிறீர்கள்” என்றார்.
“என் பெயர் ஹெய்டிஸ். உங்களின் மீது ஒட்டிக் கொண்டுதான் சிரியஸிலிருந்து பூமிக்கு வந்தேன்.”
“நமது கோளில் இவ்வளவு குள்ளமானவர்கள் இல்லையே?”
“நாங்கள் சிரியஸைச் சேர்ந்த எவ்வுருவையும் எடுக்கக் கூடியவர்கள்”
எங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த மைக்ரோமெகாஸ் அவரோடு சிரியஸிற்குத் திரும்ப சம்மதமா என்று கேட்டார்.
நான் தலையசைத்தேன். எனது புத்தகங்களைப் பார்த்தார்.
இவற்றையும் எடுத்துச் செல்லவதே எனது நிபந்தனையாக இருந்தது.
அவருடைய மார்புவரை அடுக்கியிருந்த புத்தகங்கள் ஒவ்வொன்றையும் பார்த்தார் (அவர் உயரம் இருபதினாயிரம் அடி).
மைக்ரோமெகாஸ் புன்னகைத்தார். அவற்றை அங்கேயே விட்டுவரும்படி சொன்னார். சிரியஸிற்குத் திரும்பியதும் பறிமுதல் செய்யப்பட்ட அவருடைய புத்தகத்தின் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பிரதியைத் தருவதாகச் சொன்னார். அதைக் கேட்டதும் நான் புத்தகங்களை விட்டு வருவதற்கு சம்மதித்தேன்.
நாங்கள் சிரியஸை அடைந்தோம். இங்கிருந்து கிளம்பிய போது குழந்தைகளாக இருந்தவர்கள் இப்போது வாலிபர்களாகியிருந்தனர். இடையில் எண்ணூறு ஆண்டுகள் ஓடியிருந்தன.
மைக்ரோமெகாஸ் என்னை அவருடைய ஒற்றை அறை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தூரத்திலிருந்து பார்க்க பிரமிடைப் போலிருந்தது. நிலவறையில் ஒளித்து வைத்திருந்த அவருடைய புத்தகத்தைத் தந்தார்.
தாமதிக்காமல் அதன் ஒவ்வொரு பக்கங்களின் மீதும் ஊர்ந்தேன். பூமியின் மொழிகளில் எழுதப்பட்டிருந்த பக்கங்கள் அவை. மைக்ரோமெகாஸ் அது வரையிலும் நான் சேகரித்திருந்திருந்த மொத்தப் புத்தகங்களின் பக்கங்களையும் ஒற்றைப் புத்தகத்தில் எழுதியிருந்தார். நான் நிலத்தினடியில் ஒளித்து வைத்து, பூமியிலிருந்து ஒரு தவளையின் முதுகுச்சுமையாகச் சுமந்து எவற்றைப் பாதுகாத்திருந்தேனோ அவை இங்கேயே இருந்திருக்கின்றன.
தலை தூக்கிப் பார்க்க மைக்ரோமெகாஸ் புன்னகைத்தபடி நின்றிருந்தார்.
அவருடைய புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதும், வீட்டின் உயரத்தை அளந்து பார்க்க வேண்டுமென்று தோன்றியது. ஒரு தவளையாக மாறி என் முதுகில் புத்தகச் சுமையோடு ஒவ்வொரு கல்லாக ஏறினேன்.
உச்சியிலிருந்து பார்க்க சாளரத்திற்கு உள்ளே நான் விட்டு வந்திருந்த எனது மேஜையும், நாற்காலியும், ஒளிர்ந்து கொண்டேயிருக்கும் மேஜை விளக்கும், புத்தக அடுக்குகளும் மிதப்பது தெரிந்தது.
நாற்காலியின் கரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு தவளையும்.
*** நன்றி – கல்குதிரை 2016
(பாலசுப்ரமணியன் பொன்ராஜ் – 2010க்குப் பிறகான தமிழ் புனைவு உலகத்தில் ஒரு புதிய பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இவரது புனைவுகள். இது இவரது இரண்டாம் குறுநாவல் – கல்குதிரை 2017 இதழில் வெளிவந்தது. இரு சிறுகதைத் தொகுப்புகள் கனவு மிருகம் மற்றும் துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை வெளியாகியுள்ளன. தொடர்புக்கு – tweet2bala@gmail.com)