Home Blog Page 80

காகித மிருக சாலை

0

கென் லியூ தமிழில்: நரேன்

ன்னுடைய இளவயது நினைவுகளில் ஒன்று நான் தேம்பியழுவதிலிருந்து தொடங்கும். அம்மாவும் அப்பாவும் எவ்வளவோ முயற்சி செய்தும் நான் ஆறுதலடைய மறுத்தேன்.

அப்பா தன் முயற்சியை கைவிட்டு படுக்கையறைக்குச் செல்ல, அம்மாவோ என்னை சமையலறைக்கு அழைத்துச் சென்று உணவு மேசையின் மேல் அமரச் செய்தார்.

“கேன், கேன்” என்று சொல்லிக்கொண்டே அவர் ப்ரிட்ஜின் மேலிருந்த காகித உறை ஒன்றை இழுத்தார். பல வருடங்களாக, கிறிஸ்துமஸ் பரிசுகளின் காகித உறைகளை அம்மா கவனமாக பிரித்து எடுத்து அவற்றை தடித்த அடுக்குகளாக ப்ரிட்ஜின் மீது சேமித்து வைத்திருந்தார்.

அவர் காகிதத்தை கீழே விரித்து, வெற்றுப் பக்கம் மேலிருக்கும்படி வைத்து அதை மடிக்கத் தொடங்கினார். நான் அழுவதை நிறுத்தி அவரை ஆர்வத்துடன் பார்த்தேன்.

அவர் காகிதத்தை திருப்பி மீண்டும் மடித்தார். கிண்ணமென குவிந்த அவர் உள்ளங்கைகளுக்குள் அந்தக் காகிதம் மறைந்துபோவது வரை அதை அளவாய் சிறு சிறு மடிப்புகளாக்கினார், சுருட்டினார், உள்ளுக்குள் சொருகினார், உருட்டினார், திருகினார். பின்னர் மடிந்து போன காகித பொட்டலத்தை தன் வாயருகே எடுத்து பலூனைப் போல ஊதினார்.

“கேன்”, என்றார். “லாஓஹு”. மூடிக் குவிந்த தன் கைகளை மேசை மீது வைத்து அதை வெளியே விட்டார்.

ஒரு சிறிய காகித புலி மேசை மீது நின்றது, இரு உள்ளங்கை அளவிலானது. காகித உறையின் மீதிருந்த அலங்கார வண்ண கோலங்களே புலியின் மேல் தோல் என ஆனது, வெள்ளைப் பின்ணனியில் சிவப்பு குச்சி மிட்டாய்களும் பச்சை கிறிஸ்துமஸ் மரங்களும்.

அம்மாவின் சிருஷ்டியை நோக்கி கை நீட்டினேன். அது தன் வாலை சட்டென வெட்டியிழுத்தது, என் விரல்களின் மீது விளையாட்டாக பாய்ந்தது. “ர்ர்ர்ர்வ்வ்வ்வ்வ்வ்-சாவ்வ்வ்வ்” அது உறுமியது, அந்தச் சத்தம் பூனைக்கும் செய்தித்தாள்களின் சரசரப்புக்கும் இடைப்பட்ட ஏதோவொரு ஒலியில் இருந்தது.

நான் சிரித்தேன், வியப்புற்றேன், என் சுட்டு விரலால் அதன் பின்னால் தடவிப் பார்த்தேன். என் விரலடியில் அக் காகிதப் புலி சிலிர்த்து மென்மையாய் உறுமியது.

“ஸே…ஜியாஓ ஸேஹேஸி”, அம்மா சொன்னார். “இதுதான் ஓரிகாமி’.

அப்போது அது என்னவென்று எனக்குத் தெரியாது, ஆனால் அம்மா செய்பனவோ தனித்துவமானது, அவர் தன் மூச்சைப் பகிர்ந்து அவற்றுக்குள் செலுத்துவாள், அவை அவரின் உயிர் கொண்டு நகரத் தொடங்கும். இதுதான் அவர் நிகழ்த்தும் மாயம்.

***

பட்டியல் புத்தகமொன்றிலிருந்துதான் அம்மாவை தேர்ந்தெடுத்தார் அப்பா. ஒருமுறை, நான் உயர்நிலைப் பள்ளியில் இருந்தபோது, அப்பாவிடம் அதைப் பற்றிய விவரங்களைக் கேட்டேன். அப்போது என்னை மீண்டும் அம்மாவிடம் பேச வைக்கும் முயற்சிகளில் இருந்தார் அவர்.

1973ம் ஆண்டின் வசந்த காலமொன்றில், மணமகள் அறிமுகச் சேவை ஒன்றில் தன்னை இணைத்திருந்தார். சில நொடிகளுக்கு மேல் எதிலும் நிலைக்காமல் பக்கங்களை சீராய் திருப்பிக் கொண்டிருந்தார், அம்மாவின் புகைப்படத்தை அவர் பார்த்த அந்தப் பக்கம் வரை.
அந்தப் படத்தை நான் பார்த்ததில்லை. அப்பா அதை விவரித்தார். அம்மா நாற்காலியில், தன் ஒரு பக்கம் காமிராவில் தெரியும்படி இறுக்கமாக பச்சைப் பட்டினால் ஆன சீன உடை அணிந்து அமர்ந்திருக்கிறார். அவரது நீண்ட கருங்கூந்தல் கலையெழிலுடன் தன் தோளிலும் மார்பு மீதிலும் படரும்படி தலையை காமிரா பக்கம் திருப்பியிருந்தார். அப்பாவை சாந்தமான குழந்தையின் கண்களைக் கொண்டு பார்த்திருந்தார்.

“அந்தப் பட்டியல் புத்தகத்தில் நான் புரட்டிய கடைசிப் பக்கம் அதுதான்” என்று சொன்னார்.

விவரங்களில் அவருக்கு பதினெட்டு என்றும், நடனமாட விரும்புபவர், ஹாங்காங்கிலிருந்து வருவதால் நல்ல ஆங்கிலம் பேசக் கூடியவர் என்றும் சொன்னது. இதில் எந்தத் தகவலும் உண்மையானதாக இருக்கவில்லை.

அவர் அம்மாவிற்கு எழுதினார், நிர்வாகமும் இருவரின் செய்திகளையும் முன்னும் பின்னும் அனுப்பி பரிமாறியது. இறுதியாக அம்மாவைப் பார்ப்பதற்கு அவர் ஹாங்காங் பறந்தார்.

“அந்த நிர்வாகத்தின் ஆட்களே அவளின் பதில்களை எழுதி அனுப்பியிருந்தார்கள். “ஹலோ”, “குட்பை” தவிர அவளுக்கு ஆங்கிலத்தில் வேறு எதுவும் தெரியாது.”

எந்த மாதிரியான பெண் தான் விலைபோக வேண்டி தன்னை பட்டியலில் இட்டுக் கொள்வாள்? உயர்பள்ளி மாணவனான எனக்கு அனைத்தும் தெரியுமென நினைத்திருந்தேன். ஒருவரை அவமதிப்பது மதுவைப் போல நல்லதொரு உணர்வைத் தந்தது.

அந்த அமைப்பின் அலுவலகத்தை முற்றுகையிட்டு தன்னுடைய காசைத் திருப்பிக் கேட்பதற்கு பதிலாக அவர்கள் முதலில் சந்தித்த ஒரு உணவகத்தின் பனிப்பெண்ணுக்கு தங்களை மொழிபெயர்ப்பதற்காக காசு கொடுத்தார்.

“நான் பேசுகையில் அவள் என்னைப் பார்த்தாள், பாதி கண்ணில் பயத்துடனும் மீதியில் நம்பிக்கையுடனும். நான் பேசியதை அந்தப் பணிப்பெண் மொழிபெயர்க்கத் தொடங்குகையில் அவள் மெதுவாக சிரிக்கத் தொடங்குவாள்.”

அவர் கனெக்டிக்கட்டுக்கு திரும்ப பறந்து வந்து அம்மா தன்னிடம் வருவதற்கு வேண்டிய ஆவணங்களை விண்ணப்பிக்கத் தொடங்கினார். நான் ஒரு வருடம் கழித்து பிறந்தேன், புலி வருடத்தில்.

***

நான் கேட்டுக்கொண்டதன் பேரில் அம்மா ஒரு ஆடும் மானும் நீர் எருதும் கூட காகித உறைகளிலிருந்து செய்து கொடுத்தார். ‘லாஓஹு’ உறுமிக்கொண்டே துரத்தும்போது இவை ஓய்வறையை சுற்றிச் சுற்றி ஓடி வரும். அவன் இவற்றை துரத்திப் பிடித்து அதன் உள்ளிருந்த காற்று முழுதும் வெளியேறி, வெறும் தட்டையான, மடிந்த காகித துண்டுகளாக ஆகும் வரை அவற்றை கீழே அழுத்துவான். பிறகு, அவை இன்னும் கொஞ்சம் சுற்றி ஓடுவதற்கு ஏதுவாக நான் ஊதி மீண்டும் உப்பச் செய்வேன்.

சில சமயங்களில், இவ் விலங்குகள் வம்புகள் செய்து மாட்டிக் கொள்ளும். ஒருமுறை, இரவுணவின் போது மேசை மீதிருந்த ‘சோய் சாஸ்’ கிண்ணத்துக்குள் குதித்து விட்டது. நிஜ நீர் எருதைப் போல அவன் புரண்டெழ விரும்பினான். நான் அவனை வேகமாக வெளியில் எடுத்தேன், ஆனாலும் உடலின் நுண்துளைகள் அக்கருந்திரவத்தை ஈர்த்து அவன் மேல் கால்கள் வரை இழுத்துவிட்டது. சாஸில் தோய்ந்த கால்களால் அவனை நிலையாய் நிறுத்த இயலவில்லை, மேசையின் மீது தளர்ந்து விழுந்தான். அவனை சூரிய ஒளியில் உலர வைத்தேன், ஆனால் அவன் கால்கள் கோணிப் போனது, நொண்டியபடி சுற்றி ஓடி வந்தான். இறுதியில் அம்மா பாலிதீன் உறையைக் கொண்டு அவன் கால்களைச் சுற்றினாள். அதனால் அவன் மனம் விரும்பியபடி சாய் சாஸில் மட்டும் என்றில்லாமல் எதிலும் புரண்டு எழலாம்.

மேலும், நான் லாஓஹுவுடன் கொல்லைப்புறத்தில் விளையாடுகையில் அவன் குருவிகள் மீது பாய விரும்புவான். ஆனால் ஒருமுறை அவனால் சுற்றிவளைக்கப்பட்ட பறவை ஒன்று துணிந்து திருப்பித் தாக்கி அவன் காதை கிழித்தது. நான் அவனை தூக்கிக்கொண்ட போது, சிணுங்கி வேதனையில் உதைத்தான். அம்மா அவன் காதை சேர்த்து டேப் வைத்து ஒட்டினார். அதன் பிறகு அவன் பறவைகளை தவிர்க்கத் தொடங்கினான்.

பின்பொருநாள், நான் டிவியில் சுறாவைப் பற்றி ஆவணப் படமொன்றை பார்த்து எனக்கும் சொந்தமாக ஒன்று வேண்டுமெனக் கேட்டேன். அவர் சுறா ஒன்றை செய்து தந்தார். ஆனால் அவன் மேசையின் மீது மகிழ்ச்சியின்றி துடித்தான். நான் கழிநீர்த் தொட்டியில் நீர் நிரப்பி அவனை அதில் போட்டேன். அவன் வட்டமடித்து மகிழ்ச்சியாக நீந்தினான். எனினும், சிறிது நேரத்திற்கு பிறகு அவன் சொத சொதப்பாகவும் ஒளி ஊடுருவும் உடலென ஆகி மடிப்புகளெல்லாம் விலகி வர மெதுவாக அடியில் மூழ்கிப் போனான். அவனை மீட்கும் பொருட்டு நான் கையை நீட்டி தூக்கினேன், அதில் மிஞ்சி நின்றதெல்லாம் ஈரம் தோய்ந்த ஒரு காகித துண்டுதான்.

லாஓஹு அவன் முன்னங்கால்களை ஒன்றாக தொட்டியின் விளிம்பில் வைத்து அதன் மீது தன் தலையை சாய்த்தான். காதுகள் தொங்க, தன் தொண்டையிலிருந்து மந்தமான உறுமல் ஒலியொன்றை எழுப்பினான். அது என்னை குற்ற உணர்வு கொள்ளச் செய்தது.
அம்மா எனக்கு புதிய சுறா செய்து கொடுத்தார், இந்த முறை அலுமினிய தாள் கொண்டு. இந்த சுறா, தங்கமீன் தொட்டியில் மகிழ்ச்சியாக வாழ்ந்தது. லாஓஹுவும் நானும் தொட்டியின் அருகிலமர்ந்து அலுமினியத் தாள் சுறா தங்கமீன்களை துரத்துவதை வேடிக்கைப் பார்ப்பது பிடிக்கும். லாஓஹு அந்தப் பக்கமாக முகத்தைத் தூக்கி தொட்டியின் மீது அழுத்தியிருக்க நான் என்னை முறைத்துக் கொண்டிருக்கும், காஃபி கோப்பை அளவிற்கு பெரிதாகியிருக்கும், அவனின் கண்களைப் பார்ப்பேன்.

***

எனக்கு பத்து வயதாகியிருந்தபோது நாங்கள் ஊரின் மறுபக்கத்திலிருந்த ஒரு புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தோம். பக்கத்து வீட்டு பெண்கள் இருவர் எங்களை வரவேற்க வந்தனர். அவர்களுக்கு குடிப்பதற்கு பானங்களை வழங்கினார் அப்பா. பழைய வீட்டின் பாக்கி தொகைகளை பராமரிப்பு நிறுவனத்திடம் செலுத்துவதற்காக அவசரமாக வெளியே செல்ல வேண்டியிருப்பதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். “உங்கள் வீட்டைப்போல நினைத்துக் கொள்ளுங்கள். என் மனைவி அவ்வளவாக ஆங்கிலம் பேச மாட்டாள், அதனால் உங்களிடம் பேசாமல் இருப்பதை தயவுசெய்து அவமதிப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்”

நான் உணவறையில் படித்துக் கொண்டிருந்தபோது அம்மா சமையலறையில் பொருட்களை பிரித்தடுக்கிக் கொண்டிருந்தார். வந்தவர்கள் வரவேற்பறையில் உரையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் மெல்லமாக பேச தனிச் சிரத்தை எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை.

“அவர் பார்ப்பதற்கு இயல்பாகத்தான் இருக்கிறார், பின் ஏன் இப்படிச் செய்தார்?”

“இந்தக் கலப்பில் எதுவோவொன்று சரியாக இல்லை. குழந்தை முழுமையற்றதைப் போல தெரிகிறது. சரிந்த கண்கள், வெள்ளை முகம். ஒரு குட்டி பூதம்.”

“அவனுக்கு ஆங்கிலம் பேச வரும் என்று நினைக்கிறாயா?”

அப்பெண்கள் அமைதியானார்கள். சிறிது நேரம் கழித்து உணவறைக்கு வந்தார்கள்.

“ஹலோ தம்பி! உன் பெயர் என்ன?”

“ஜாக்”, நான் சொன்னேன்.

“அது அவ்வளவு சீனத்தனமாக இல்லையே.”

பிறகு அம்மாவும் உணவறைக்கு வந்தார். அப்பெண்களை நோக்கி புன்னகைத்தார். அம்மூவரும் என்னைச் சுற்றி முக்கோணமாய் நின்றுக்கொண்டு மேலும் பேசுவதற்கு ஏதுமன்றி, அப்பா வரும்வரை ஒருவரையொருவர் நோக்கி புன்னகைத்துக் கொண்டும் தலையசைத்துக் கொண்டும் இருந்தனர்.

***

மார்க், பக்கத்து வீட்டு பையன்களில் ஒருவன், தன்னுடைய சண்டையிடும் “ஸ்டார் வார்ஸ்” பொம்மைகளோடு வந்தான். ‘ஓபி-வான்’னின் கதிர்வாளுக்கு ஒளியூட்டினான். ஓபி-வான் கைகளை முன்னும் பின்னும் அசைத்தான். தகரக் குரலில், “ஆற்றலை வெளிப்படுத்து” என்று சொன்னான். அந்த உருவம் கொஞ்சங் கூட ‘ஓபி-வான்’னைப் போல் இருந்ததாக எனக்கு தோன்றவில்லை. நாங்களிருவரும், காஃபி மேசையின் மீது தொடர்ந்து அவன் இச்செய்கையை ஐந்து முறை நிகழ்த்தியதை கண்டோம். “இவனால் வேறு ஏதாவது செய்து காட்ட முடியுமா?”, நான் கேட்டேன்.

மார்க் என்னுடைய கேள்வியால் எரிச்சலடைந்தான். “எல்லா நுணுக்கங்களையும் பார்” என்றான் அவன்.

நான் அத்தனையையும் பார்த்தேன். என்ன சொல்ல வேண்டும் என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை.
மார்க் நான் பதில் சொல்லாததைக் கண்டு ஏமாற்றமடைந்தான். “உன்னுடைய பொம்மைகளை எனக்குக் காட்டு”.

என்னுடைய காகித மிருகங்களைத் தவிர என்னிடம் வேறு பொம்மைகள் இல்லை. என் படுக்கையறையிலிருந்து “லாஓஹு” வை வெளியே கொண்டு வந்தேன். நானும் அம்மாவும் அவன் இத்தனை வருடங்களில் கிழிந்த போதெல்லாம் பழுது பார்த்ததற்கு சாட்சியாக டேப்பும் பசையும் கொண்ட ஒட்டுகள் சாட்சியாக இருந்தன. அவனால் முன்னைப் போல சுறுசுறுப்பாகவும் உறுதியாகவும் அடியெடுத்து வைக்க முடியவில்லை. காஃபி மேசையின் மீது அவனை அமர வைத்தேன். பின்னால் மற்ற மிருகங்கள் தத்தித் தத்தி கூடத்தில் நடந்து வரும் ஓசை எனக்கு கேட்டது. அவை வழியில் நின்று தயக்கத்துடன் ஓய்வறைக்குள் எட்டிப் பார்த்தன.

“ஜியாஓ லாஓஹூ” என்று சொல்லியவுடன் நிறுத்தினேன். ஆங்கிலத்திற்கு மாறினேன். “இது புலி”. லாஓஹூ கவனமாக நீண்ட அடி வைத்து எழுந்து மார்க்கின் கைகளை முகர்ந்தபடி உறுமினான்.

மார்க், லாஓஹுவின் தோலிலிருக்கும் கிறிஸ்துமஸ் உறையின் வண்ணக் கோலங்களை ஆய்வு செய்தான். “இது புலியைப் போலவே இல்லை. உன் அம்மா உனக்கு குப்பையிலிருந்துதான் பொம்மைகள் செய்து தருவார்களா?”

நான் ஒருபோதும் லாஓஹூவை குப்பை என எண்ணியதில்லை. ஆனால் இப்போது பார்க்கையில், உண்மையிலேயே அவன் வெறும் காகித உறையின் ஒரு துண்டுதான். மார்க் மீண்டும் ஓபி-வானின் தலையை தள்ளினான். கதிர்வாள் பளிச்சிட்டது; கைகளை மேலும் கீழும் அசைத்தது.

“ஆற்றலை வெளிப்படுத்து.”

லாஓஹு திரும்பிப் பார்த்து அப்பிளாஸ்டிக் உருவத்தை மேசையிலிருந்து கீழே தட்டியது. அது தரையில் மோதி உடைந்து, ஓபி-வானின் தலை உருண்டு சாய்விருக்கைக்கு அடியில் போனது. “ர்ர்ர்ர்ராவ்வ்வ்”, லாஓஹு சிரித்தது. அதனுடன் நானும் சேர்ந்துக் கொண்டேன்.

மார்க் என்னை பலமாக குத்தினான். “இது மிக விலையுயர்ந்தது. இதை கடைகளில் கூட உன்னால் தேடிப் பிடிக்க முடியாது. அநேகமாக உன் அம்மாவை வாங்குவதற்கு உன் அப்பா கொடுத்த பணத்தை விட இதன் விலை அதிகமாக இருக்கும்!”
நான் தடுமாறி தரையில் விழுந்தேன். லாஓஹு உறுமியபடி மார்க்கின் முகத்தின் மீது பாய்ந்தான்.

மார்க் அலறினான், வலியை விடவும் பயத்தினாலும் ஆச்சரியத்தினாலும். லாஓஹு வெறும் காகிதத்தால் செய்யப்பட்டதுதானே.
மார்க் லாஓஹுவை பறித்து, கைகளால் கசக்கியதில் அவன் உறுமல் அடங்கிப்போனது. பாதியாக கிழித்தான் அவனை. இரண்டு காகித துண்டுகளையும் பந்தாக சுருட்டி என் மீது எறிந்தான். “இந்தா உன்னுடைய மலிவான மூட சீனக் குப்பை.”

மார்க் சென்ற பிறகு, காகிதத்தை சமமாக்கி, அதன் மடிப்புகளை பிந்தொடர்ந்து, லாஓஹுவை மீண்டும் மடித்து துண்டுகளை டேப்பை கொண்டு ஒட்டவைக்கை நீண்ட நேரம் முயற்சித்து தோல்வியுற்றேன். மெதுவாக, மற்ற மிருகங்களும் ஓய்வறைக்குள் நுழைந்து எங்களை, என்னையும் அதுவரை லாஓஹுவாக இருந்த காகித உறையையும், சுற்றி சூழ்ந்து நின்றனர்.

***

மார்க்குடனான சண்டை அத்தோடு முடியவில்லை. மார்க் பள்ளியில் பிரபலமானவன். பின்தொடர்ந்த இரண்டு வாரங்களை நான் எப்போதும் மீண்டும் நினைத்து பார்க்க விரும்பியதில்லை.

இரண்டாவது வாரத்தின் இறுதி வெள்ளிக்கிழமை நான் பள்ளி முடித்து வீடு வந்தபோது, ‘ஸூவேஸியோ ஹாஓ மா’ என்று அம்மா கேட்டார். நான் எதுவும் சொல்லாமல் குளிப்பறைக்குச் சென்றேன். நான் கொஞ்சம் கூட அவரைப் போல இல்லை. சுத்தமாக இல்லை.
இரவுணவின் போது நான் அப்பாவிடம் கேட்டேன், “நான் ‘சிங்க்கிகளின்’ முகம் கொண்டிருக்கிறேனா?”.

அப்பா உணவுன்னும் இணைகுச்சிகளை கீழே வைத்தார். நான் பள்ளியில் நடந்ததெதுவும் சொல்லவில்லையென்றாலும் அவர் புரிந்துக் கொண்டார் என்று தெரிந்தது. அப்பா கண்களை மூடி மூக்குத்தண்டை தேய்த்தார். “இல்லை”.

அம்மா ஒன்றும் புரியாமல் அப்பாவை பார்த்தார். திரும்பவும் என்னை பார்த்தார். “ஷா ஜியாஒ சிங்க்”?

“ஆங்கிலம்” என்றேன். “ஆங்கிலத்தில் பேசுங்கள்.”

அம்மா முயற்சித்தார் “வாட் ஹாப்பன்?”

நான் எனக்கு முன்னால் இருந்த இணைக்குச்சிகளையும் கிண்ணத்தையும் தூரத் தள்ளினேன்: வறுத்த குடை மிளகாயும் ஐந்து மசாலாவில் சமைத்த பீஃப்பும். “நாம் அமெரிக்க உணவைத்தான் உண்ண வேண்டும்.”

அப்பா நியாயப்படுத்த முயன்றார். “நிறைய குடும்பங்கள் சீன உணவுகளை அவ்வப்போது சமைப்பார்கள்.”

“நாம் மற்ற குடும்பங்கள் அல்ல.” மற்ற குடும்பங்களில் அவர்களுடன் தொடர்பற்ற அம்மாக்கள் இல்லை.
அவர் அப்பால் பார்த்தார். பிறகு அம்மாவின் தோள் மீது கை வைத்தார். “நான் உனக்கு சமையல் புத்தகம் வாங்கித் தருகிறேன்.”
அம்மா என் பக்கம் திரும்பினார். “ப்பு ஹாஒச்சி?”

“ஆங்கிலம்,” குரலை உயர்த்திச் சொன்னேன். “ஆங்கிலத்தில் பேசுங்கள்”.

அம்மா கைகளை நீட்டி என் உடற் சூட்டை உணர்வதற்காக என் நெற்றியை தொட்டார். “ஃபாஷாஒ ளா?”

நான் அவர் கைகளை தட்டி விட்டேன். “எனக்கு ஒன்றுமில்லை. ஆங்கிலத்தில் பேசுங்கள்”. நான் கத்திக் கொண்டிருந்தேன்.

“அவனுடன் ஆங்கிலத்தில் பேசு”, அம்மாவிடம் அப்பா சொன்னார். “இப்படி ஒரு நாள் நடக்குமென்று உனக்கு தெரியும். வேறு என்ன எதிர்பார்த்தாய்?”

அம்மா கைகளை பக்கவாட்டில் தொங்க விட்டார். அப்பாவிலிருந்து பார்வையை என் மீது திருப்பியபடியே அமர்ந்தார். பிறகு மீண்டும் அப்பாவின் பக்கம் திரும்பினார். அவர் பேச முயற்சித்தார், நிறுத்தினார், பிறகு மீண்டும் முயற்சித்தார், மீண்டும் நிறுத்தினார்.

“நீ முயற்சி செய்துதான் ஆக வேண்டும்,” அப்பா சொன்னார். “உன்னிடம் நான் இதுவரை கடினமாக நடந்துக் கொண்டதில்லை. ஜாக் உன்னுடன் பொருந்த வேண்டும்.”

அம்மா அவரைப் பார்த்தார். “நான் ‘love’ என்று சொன்னால் இங்கே உணர்கிறேன்.” தன் உதடுகளை சுட்டினார். “நான் ‘அய்’ என்று சொன்னால் அதை இங்கே உணர்கிறேன்.” அவர் தன் கையை இதயத்தின் மீது வைத்தார்.

அப்பா தலையை ஆட்டினார். “நீ அமெரிக்காவில் இருக்கிறாய்.”

அம்மா தன் இருக்கையில் வளைந்து அமர்ந்தார், பார்ப்பதற்கு நீர் எருதின் மீது லாஓஹு பாய்ந்து அவனில் இருந்தை காற்றை பிழிந்து வெளியேற்றிய போது அவன் எப்படி இருந்தானோ அப்படியிருந்தார்.

“அப்புறம், எனக்கு நிஜ பொம்மைகள் வேண்டும்.”

***

அப்பா எனக்கு ‘ஸ்டார் வார்ஸ்’ சண்டையிடும் பொம்மைகளின் முழுத் தொகுப்பையும் வாங்கி கொடுத்தார். ஓபி-வான் ஐ நான் மார்க்கிடம் கொடுத்துவிட்டேன்.

காகித மிருக சாலையை நான் ஒரு பெரிய காலணிப் பெட்டியில் நிரப்பி அதை கட்டிலுக்கு அடியில் போட்டேன்.
அடுத்த நாள் காலை, விலங்குகள் எனது அறையில் அவர்களுக்கு பிடித்தமான இடங்களை மீண்டும் எடுத்துக்கொண்டனர். அவர்களைப் பிடித்து காலணிப் பெட்டியில் மீண்டும் அடைத்து மூடியை டேப்பால் ஒட்டி அழுத்தி மூடினேன். ஆனால் அவ்விலங்குகள் பெட்டிக்குள் பெரும் சத்தம் எழுப்பிக் கொண்டிருந்ததால் அதை என் அறையிலிருந்து முடிந்த மட்டும் தூரத்தில் பரணின் ஒரு மூலையில் தள்ளி விட்டேன்.

அம்மா என்னுடன் சீனத்தில் பேசினால் அவருக்கு பதிலளிக்க மறுத்தேன். சிறிது காலத்திற்கு பிறகு அவர் அதிகமும் ஆங்கிலத்தை பயன்படுத்த முயற்சித்தார். ஆனால் அவரின் உச்சரிப்பும் உடைந்த வாக்கியங்களும் என்னை சங்கடப்படுத்தியது. அவரைத் திருத்த முயற்சித்தேன். முடிவில், நான் அருகிலிருக்கும்போது அவர் பேசுவதையே ஒட்டுமொத்தமாக நிறுத்திக் கொண்டார்.

அம்மா எனக்கு ஏதாவது தெரியப்படுத்த வேண்டியிருந்தால் அதை சைகையாலேயே செய்து காட்டத் தொடங்கினார். டிவி யில் அவர் பார்த்த அமெரிக்க அம்மாக்களை போல் என்னை கட்டியணைக்க முயற்சி செய்தார். அவர் செயல்களெல்லாம் மிகைப்படுத்தப்பட்டதாகவும் நிச்சயமற்றும் கிண்டலுக்குரியதாகவும் நயமற்றிருப்பதாகவும் எனக்கு தோன்றியது. நான் எரிச்சலடைவதைப் பார்த்தார், பின்பு அதையும் நிறுத்திக் கொண்டார்.

“உன் அம்மாவை நீ இப்படி நடத்தக் கூடாது” என்று அப்பா சொன்னார். ஆனால் என் கண்களை நேரில் நோக்கி அவரால் இதைச் சொல்ல முடியவில்லை. தன் மனதின் ஆழத்தில், ஒரு சீன விவசாயப் பெண்ணை கொண்டு வந்து கனெக்டிகட்டின் புறநகர் ஒன்றில் பொருந்தச் செய்துவிட முயற்சித்தது தவறு என்று உணர்ந்திருப்பார்.

அம்மா அமெரிக்கப் பாணியில் உணவு சமைக்கக் கற்றுக்கொண்டார். நான் வீடியோ கேம்கள் விளையாடினேன். பிரெஞ்ச் படித்தேன்.
அவ்வப்போது சமையற்கட்டில் காகித உறையின் வெற்றுப்பக்கத்தை படிப்பதைப் போல அவர் உற்று நோக்குவதை பார்ப்பேன். பின்னர், படுக்கையருகில் ஒரு புதிய காகித மிருகம் தோன்றி என்னை அரவணைத்துக் கொள்ள முயலும். நான் அவற்றைப் பிடித்து அவற்றினுள்ளிருந்து காற்று முழுதும் வெளியேறும் வரை கசக்கி பரணிலிருந்த பெட்டியில் போட்டு அடைத்து விடுவேன்.
இறுதியில், நான் உயர்நிலைப் பள்ளியில் இருந்தபோது அவர் விலங்குகள் செய்வதை நிறுத்திக் கொண்டார். அப்போது அவரது ஆங்கிலம் நன்றாகவே தேர்ந்திருந்தது, ஆனால் அவர் சொல்வதை அது எந்த மொழியிலாக இருந்தாலும் அக்கறை கொள்ளாத வயதை ஏற்கனேவே நான் எட்டியிருந்தேன்.

சில நேரங்களில், நான் வீட்டிற்கு வரும்போது சமையலறைக்குள் சீனப் பாடல் ஒன்றை தனக்குத் தானே பாடியபடி அவரின் சிறிய உடல் அவசர அவசரமாக அங்கும் இங்கும் நகர்வதைப் பார்ப்பேன், இவர்தான் என்னைப் பெற்றெடுத்தார் என்று நம்புவதற்கே கடினமாக இருக்கும். எங்களிருவருக்குள் பொதுவானதென்று எதுவுமேயில்லை. அவர் நிலவிலிருந்து வந்தவராகக் கூட இருக்கலாம். நான் வேகமாக என் அறைக்குள் சென்றுவிடுவேன், அங்கேதான் என் அத்தனை அமெரிக்க இன்பங்களை நாடும் செயல்களைத் தொடர முடியும்.

***

நானும் அப்பாவும் மருத்துவமனை கட்டிலில் கிடந்த அம்மாவின் இரு பக்கத்திலும் நின்றுக் கொண்டிருந்தோம். அவருக்கு நாற்பது வயது கூட ஆகியிருக்கவில்லை ஆனால் அவர் மிகுந்த வயதானவரைப் போல தோற்றமளித்தார்.

பல வருடங்களாக உள்ளுக்குள்ளேயே இருந்த வலிக்காக டாக்டரிடம் செல்ல மறுத்து வந்தார், அது அவ்வளவு பெரிய விஷயமில்லை என்றார். ஆம்புலன்ஸ் வந்து இறுதியாக அவரை தூக்கிச் சென்றபோது அறுவை செய்து எடுக்க முடியாத அளவு கேன்ஸர் பரவியிருந்தது.

என் மனம் அந்த அறையில் இல்லை. வளாக நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த பருவம் அது. என் கவனமெல்லாம் தற்குறிப்புகளிலும் உரை தயாரிப்புகளிலும் திட்டமிட்டு அடுக்கப்பட்ட நேர்முகத் தேர்வு அட்டவணைகளிலுமே இருந்தது. பெருநிறுவன தேர்வாளர்களிடம் என்ன பொய் சொன்னால் என்னை அவர்கள் நல்ல விலைக்கு வாங்கிக் கொள்வார்கள் என்பதிலேயே என் யோசனை இருந்தது. அம்மா படுக்கையில் மரணித்துக் கொண்டிருக்கும்போது இதைப் பற்றியெல்லாம் யோசிப்பது எவ்வளவு கொடூரமானது என்ற அறிவார்ந்த புரிதல் எனக்கிருந்தது. ஆனால் என் அப்போதைய உணர்வை மாற்றக் கூடிய சக்தி அப்புரிதலுக்கு இல்லை.
அம்மா சுயநினைவுடன் இருந்தார். அப்பா தன் இருகைகளாலும் அம்மாவின் இடக்கையை ஏந்தியிருந்தார். அவர் அம்மாவின் நெற்றியில் முத்தமிட கீழே வளைந்தார். நான் திடுக்கிடும் வகையில் அப்பா வலுவற்றும் வயதாகியும் தோன்றினார். நான் அப்பாவையும் அம்மா அளவிற்கே குறைவாக அறிந்து வைத்திருக்கிறேன் என்று உணர்ந்தேன்.

அம்மா அவரைப் பார்த்து புன்னகைத்தார். “நான் நன்றாக இருக்கிறேன்.”

என்னிடம் திரும்பினார், இன்னமும் புன்னகைத்துக் கொண்டிருந்தார். “நீ கல்லூரிக்குத் திரும்பச் செல்ல வேண்டுமென எனக்கு தெரியும்.” அவரின் குரல் மிகவும் மெலிந்திருந்தது, அவர் மீது பொருத்தப்பட்டிருந்த இயந்திரங்களின் இரைச்சலொலியில் அவர் சொல்வதை கேட்பது கடினமாக இருந்தது. “போ. என்னைப் பற்றி கவலைப் படாதே. இது ஒரு பெரிய விஷயமில்லை. நீ கல்லூரியில் தேர்வுகளை நன்றாகச் செய். “

எட்டி அவர் கைகளை தொட்டேன். இச்சந்தர்பத்தில் அப்படித்தான் நான் எதுவோ செய்யவேண்டும் என்று எனக்குத் தோன்றியதால் அதைச் செய்தேன். நான் நிம்மதியடைந்தேன். நான் திரும்ப வேண்டிய விமானம் குறித்தும் பிரகாசமான கலிஃபோர்னிய கதிரொளி குறித்தும் சிந்திக்கத் தொடங்கியிருந்தேன்.

அப்பாவிடம் ஏதோ முணுமுணுத்தார் அம்மா. அவர் தலையசைத்து அறையிலிருந்து வெளியேறினார்.

“ஜாக் ஒருவேளை – ” திடீர் இருமல்களின் தாக்குதலினால் பீடிக்கப்பட்டு அவரால் சிறிது நேரத்திற்குப் பேச முடியவில்லை.

“ஒருவேளை நான் தேறி வரவில்லையென்றால், நீ அதிகம் கவலைப்பட்டு உன் உடல் நலத்தை கெடுத்துக் கொள்ளாதே. உன் வாழ்க்கையின் மீது கவனத்தைச் செலுத்து. நீ பரணில் போட்டு வைத்திருக்கும் அந்த பெட்டியை மட்டும் உன்னோடு வைத்திரு, ஒவ்வொரு வருடமும் ‘குயிங்மிங்’ அன்று அதை வெளியில் எடுத்து என்னை நினைத்துக் கொள். நான் எப்போதும் உன்னோடு இருப்பேன்.”

‘குயிங்மிங்’ மரித்தவர்களுக்கான சீனப் பண்டிகை. நான் மிகவும் இளையவனாக இருந்தபோது அம்மா சீனாவில் இறந்துபோன தன் பெற்றோர்களுக்கு ‘குயிங்மிங்’ அன்று கடிதம் எழுதுவார். தன் அமெரிக்க வாழ்வில் சென்ற ஆண்டின் மகிழ்ச்சியான செய்திகளை அதில் எழுதியிருப்பார். அக்கடிதத்தை சத்தமாக எனக்கு படித்து காட்டுவார், நான் ஏதாவது கருத்து தெரிவித்தால் அதையும் அக்கடிதத்திலேயே குறித்துக் கொள்வார். பிறகு அதை காகித நாரையைப் போல மடித்து வடக்கு நோக்கி விடுவிப்பார். அந்நாரை தன் நீண்ட வடதிசைப் பயணத்திற்காக, பசிஃபிக்கை நோக்கி, சீனாவை நோக்கி, அம்மாவின் குடும்பத்தினரின் கல்லறைகளை நோக்கி தன் மொடமொடப்பான சிறகுகளை அசைப்பதை நாங்களிருவரும் கவனிப்போம்.

நான் அவருடன் சேர்ந்து இப்படிச் செய்து பல வருடங்களாகிவிட்டது.

“எனக்கு சீன காலண்டரைப் பற்றி எதுவும் தெரியாது” என்று சொன்னேன். “அமைதியாக ஓய்வெடுங்கள் அம்மா”
அந்தப் பெட்டியை மட்டும் உன்னுடனே வைத்திரு. அவ்வப்போது ஒருமுறை திறந்து வைத்திரு. சும்மா திறந்து மட்டும் – ” அவர் மீண்டும் இருமத் தொடங்கினார்.

“அது பரவாயில்லை அம்மா” அவர் கரங்களை நான் தட்டுத் தடுமாறி தடவிக் கொடுத்தேன்.

“ஹைஜி, மாம்மா அய் நி – ” அவரை இருமல் மீண்டும் பற்றிக்கொண்டது. பல வருடங்களுக்கு முந்தைய படிமம் ஒன்று என் ஞாபகத்தில் பளிச்சிட்டது: அம்மா ‘அய்’ என்று சொல்லி தன் கையை அவர் இதயத்தின் மீது வைக்கிறார்.

“சரி, அம்மா. பேசுவதை நிறுத்துங்கள்.”

அப்பா திரும்பி வந்தார், நான் என் விமானத்தை தவறவிட விரும்பவில்லையென்றும் நிலையத்திற்கு கொஞ்சம் முன்னதாகவே செல்ல வேண்டும் என்றும் சொன்னேன்.

நெவேடாவின் மீது என் விமானம் எங்கோ பறந்துக் கொண்டிருந்த போது என் அம்மா இறந்து போனார்.

***

அம்மா இறந்த பிறகு அப்பாவிற்கு வேகமாக வயதாகியது. அவருக்கு அந்த வீடு மிகப் பெரியதாக இருந்தது, விற்க வேண்டியதாயிற்று. நானும் என் பெண் தோழி சூசனும் பொருட்களை தொகுத்து கட்டவும் இடத்தை சுத்தம் செய்யவும் சென்றிருந்தோம்.

சூசன் என் காலணிப்பெட்டியை பரணில் கண்டெடுத்தாள். காகித மிருக சாலை, நீண்ட காலமாக பரணில் காப்பற்ற காரிருளில் பொதிந்திருந்தவை, தற்போது உடைந்து போகக் கூடியவையாக, ஒளிர்ந்த காகித உறையின் வண்ணங்கள் வடிந்து போனவையாக மாறியிருந்தது.

“இதைப் போன்ற ஓரிகாமியை நான் பார்த்ததே இல்லை,” சூசன் சொன்னாள். “உன்னுடைய அம்மா ஒரு அற்புதக் கலைஞர்”
காகித மிருகங்கள் நகரவில்லை. ஒருவேளை எந்த மாயம் அவற்றுக்கு உயிரூட்டினவோ அது அம்மாவோடே மரித்துப் போனதோ. அல்ல இக்காகித கட்டுமானங்களுக்கு உயிரிருந்ததாக நான்தான் கற்பனை செய்துக் கொண்டேனோ? சிறுவர்களின் நினைவுகள் நம்பக் கூடியவை அல்ல.

***

அது ஏப்ரல் வாரயிறுதி, அம்மா இறந்து இரண்டு வருடங்கள் ஆகியிருந்தது. சூசன் மேலாண்மை ஆலோசகராக தன்னுடைய இடைவிடாத பயணங்கள் ஒன்றுக்காக வெளியே சென்றிருந்தாள், நான் வீட்டில் சோம்பலாக டி.வி. சேனல்களை மாற்றியபடி இருந்தேன்.

சுறாவைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்ததும் இடைநிறுத்தினேன். சட்டென பார்த்தேன், என் மனதில் அம்மாவின் கைகள் நானும் லாஒஹூவும் பார்த்துக் கொண்டிருக்கையில் அலுமினிய காகிதத்தை மடித்து மடக்கி மீண்டும் மடித்து எனக்காக சுறாவை செய்து கொண்டிருந்தது.

ஒரு சலசலப்பு. எட்டிப் பார்த்தேன். காகித உறை பந்தும் கிழிந்த டேப்பும் புத்தக அலமாரிக்கு அடுத்து தரையில் இருந்தது. அதை குப்பையில் எறிவதற்காக எழுந்து நடந்தேன்.

அக்காகிதப் பந்து நகர்ந்தது, தன்னைத் தானே அவிழ்த்துக் கொண்டதும் கண்டுகொண்டேன் அது லாஓஹுவென. நீண்ட காலமாக அவனை பற்றிய எண்ணமே எனக்கில்லை. “ர்ர்ர்ர்ரவ்வ்-சாவ்”. நான் கைவிட்ட பிறகு அம்மா இவனை மீண்டும் ஒன்றாக இணைத்திருக்க வேண்டும்.

நான் நினைவில் வைத்திருந்ததைவிட இவன் சிறியதாக இருந்தான். அல்லது அந்நாட்களில் என் உள்ளங்கைகள் சிறியனவாக இருந்திருக்கலாம்.

சூசன் காகித மிருகங்களால் எங்கள் அடுக்குமாடி இல்லத்தை அலங்கரித்திருந்தாள். அநேகமாக அவள் லாஓஹுவை ஒரு நல்ல மறைவான மூலையில் வைத்திருக்கவேண்டும், அவன் பார்ப்பதற்கு அவலட்சணமாக இருக்கிறானென்பதால்.

நான் தரையிலமர்ந்து விரலால் அவனைத் தொட்டேன். லாஓஹுவின் வால் சட்டென வெட்டியிழுத்தது, என் விரல்களின் மீது விளையாட்டாக பாய்ந்தான். நான் சிரித்தேன், அவன் முதுகை வருடிக் கொடுத்தேன். என் கைகளடியில் மெல்ல உறுமினான்.

“எப்படி இருக்கிறாய் என் முன்னாள் நண்பனே?”

லாஓஹு விளையாடுவதை நிறுத்தினான். எழுந்து ஒரு பூனையின் கருணையோடு என் மடி மீது தாவி தன் மடிப்புகளை அவிழ்த்து திறந்துக் கொள்ள தொடங்கினான்.

என் மடியில் மடிப்புத் தடங்களுடன் சதுர காகிதமொன்று வெற்றுப் பக்கம் மேலே பார்த்தபடி இருந்தது. அதில் அடர்த்தியான சீன எழுத்துருக்கள் நிறைந்திருந்தது. நான் சீன மொழியை வாசிக்கக் கற்றுக்கொள்ளவேயில்லை ஆனால் “மகன்” என்ற சொல்லுக்குரிய எழுத்துக்கள் எனக்குத் தெரியும். அவை மேலேயே இருந்தது, ஒருவருக்கு எழுதப்படும் கடிதத்தில் அவரை குறிப்பிட்டு விளக்குமிடத்தில், அம்மாவின் அலங்கோலமான, மழலைக் கையெழுத்தில்.

நான் சென்று கணினியில் இணையத்தை திறந்து ஆராய்ந்தேன். இன்றுதான் “குயிங்மிங்”.

***

நான் கடிதத்தை எடுத்துக் கொண்டு நகரத்திற்குள், நான் அறிந்த சீன சுற்றலா பேருந்துகள் நிற்குமிடத்திற்கு சென்றேன். ஒவ்வொரு பயணியையும் நிறுத்தி “நின் ஹுய் து ழோங்கவெண் மா?” உங்களால் சீனம் வாசிக்க முடியுமா? நான் சீன மொழி பேசி வெகுகாலம் ஆகியிருந்தது நான் பேசியதை அவர்கள் புரிந்து கொண்டார்களா என்று தெரியவில்லை.

ஒரு இளம் பெண் உதவ ஒப்புக்கொண்டார். நாங்களிருவரும் ஒரு நீள் இருக்கையில் அமர்ந்துக் கொண்டோம், அவர் கடிதத்தை எனக்காக சத்தமாக வாசித்தார். நான் பல வருடங்களாக மறக்க நினைத்த மொழி மீண்டும் என்னிடம் திரும்பி வந்தது, வார்த்தைகள் என் தோலினுடாக என் எலும்புகளைத் துளைத்து, என் இதயத்தை இறுக்கமாக சுற்றி வளைப்பதை எனக்குள் உணர்ந்தேன்.

***

மகனுக்கு,

நாம் பேசி பல காலமாயிற்று. நான் உன்னைத் தொட முயற்சிக்கும்போதெல்லாம் நான் அச்சமுறும்படி நீ அதிக கோபம் கொள்கிறாய். இவ்வளவு காலமாக நான் அனுபவித்து வந்த வலி தற்போது தீவிரமடைந்துள்ளது என்று நினைக்கிறேன்.

அதனால் உனக்கு எழுதலாம் என்று முடிவெடுத்தேன். நான் உனக்கு செய்து கொடுத்த காகித மிருகங்கள் உனக்கு மிகவும் பிடித்தவையாக இருந்ததுண்டு என்பதால் நான் அதிலேயே எழுதப்போகிறேன்.

நான் மூச்சு விடுவது நின்றதுமே இவ்விலங்குகள் நகர்வதும் நின்றுவிடும். ஆனால் நான் உனக்கு இதயப்பூர்வமாக எழுதினால், நான் என்னையே கொஞ்சமாக இக்காகிதத்தின் பின்னால் இவ்வார்த்தைகளில் விட்டுச் செல்ல முடியும். பிற்பாடு, குயிங்மிங் அன்று நீ என்னை நினைத்துப் பார்க்கையில், பிரிந்து சென்ற ஆத்மாக்கள் தங்கள் குடும்பங்களைக் காண அனுமதிக்கப்படும் அந்நாளில், நான் விட்டுச் செல்லும் என் சில உணர்வுகளை உன்னால் உயிர்பிக்கச் செய்ய முடியும். நான் உனக்காகச் செய்த உயிரினங்கள் மீண்டும் குதித்து தாவி ஓடும், ஒருவேளை நீ இவ்வார்த்தைகளை காணும் வாய்ப்பை கூட பெறலாம். நான் இதயம் முழுதும் நிரப்பி எழுதவேண்டுமென்பதால், சீன மொழியிலேயே உனக்கு எழுத வேண்டியிருக்கிறது.

இத்தனை காலமாக என் வாழ்க்கை கதையை நான் உன்னிடம் சொல்லாமல் இருந்தேன். நீ சிறுவனாக இருந்தபோது, நீ வளர்ந்து பெரியவனானதும் உன்னிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்திருந்தேன், உன்னால் அப்போதுதான் புரிந்துக் கொள்ளமுடியும் என்பதால். ஆனால் எதனாலேயோ அப்படி ஒரு வாய்ப்பு வராமலே போனது.

நான் 1957ல் ஹெபேய் மாகாணத்திலுள்ள சிகுலு கிராமத்தில் பிறந்தேன். உன்னுடைய தாத்தா பாட்டி அதிக உறவினர்களற்ற மிகுந்த ஏழைக்கு குடும்பத்திலிருந்து வந்தவர்கள். நான் பிறந்த சில வருடங்களிலேயே முப்பது மில்லியன் மக்களை பலி கொண்ட பெரும் பஞ்சங்கள் சீனாவைத் தாக்கியது. என் முதல் நினைவே என் அம்மா அவர் வயிற்றை நிரப்பிக் கொள்ள அழுக்கை உண்பதை பார்த்துக்கொண்டே விழிப்பதுதான், கடைசித்துளி மாவை எனக்காக விட்டு வைத்திருந்தார்.

அதன் பிறகு நிலைமை சற்று சீரானது. சிகுலு, காகித கைவினைகளுக்கு பெயர் போனது, என் அம்மா எப்படி விலங்குகளை செய்து அவற்றுக்கு உயிர் கொடுப்பது என்று எனக்கு கற்றுக் கொடுத்தார். இது எங்கள் கிராம நடைமுறைப்படி தினசரி வாழிவில் நிகழ்த்தும் ஒரு மாய வித்தை. நாங்கள் காகிதப் பறவைகளை செய்து வெட்டுக்கிளிகளை விரட்டுவோம், காகிதப் புலியால் எலிகளை விரட்டுவோம். சீன புத்தாண்டிற்கு நானும் என் நண்பர்களும் சிவப்பு டிராகன்களை செய்தோம். அக்குட்டி டிராகன்கள் தலைமீது வானத்தில் விரிந்து, சென்ற வருடத்தின் துர்நினைவுகளை விரட்டுவதற்காக வெடித்துச் சிதறும் பட்டாசுச் சரங்களை ஏந்தியபடி பறந்த காட்சியை என்னால் என்றுமே மறக்க முடியாது. நீ அதை கண்டிருந்தால் உனக்கு அவ்வளவு பிடித்திருக்கும்.

பிறகு 1966ல் கலாச்சார புரட்சி வந்தது. அக்கம் பக்கதினரும் அண்ணன் தம்பிகளும் ஒருவருக்கு ஒருவர் எதிராக திரும்பினர். என் அம்மாவின் உடன் பிறந்தவர், என் மாமா, 1946ல் ஹாங்காங்கிறகு சென்றுவிட்டாரென்றும் அங்கே வியாபாரியாக இருக்கிறார் என்பதையும் யாரோ நினைவில் வைத்திருந்தார்கள். ஹாங்காங்கில் உறவினரைக் கொண்டிருப்பது நாங்கள் உளவாளிகளென்றும் மக்களின் எதிரிகளென்றும் அர்த்தம் கொள்ளும், அனைத்து விதத்திலும் அதை நாங்கள் எதிர்த்துப் போராடவேண்டியிருந்தது. பாவம் உன்னுடைய பாட்டி – இந்த வசைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் கிணற்றுக்குள் குதித்துவிட்டார். பிறகு சில பையன்கள் வேட்டை துப்பாக்கிகளுடன் உன் தாத்தாவை ஒருநாள் காட்டுக்குள் இழுத்துச் சென்றனர், அதன் பிறகு அவர் திரும்பி வரவேயில்லை.

அங்கே நான் பத்து வயது அநாதையாக ஆனேன். இவ்வுலகில் எனக்கிருந்த ஒரே உறவு ஹாங்காங்கிலிருக்கும் என் மாமாதான். ஒரு இரவில் யாருமறியாமல் தெற்கே செல்லும் சரக்கு ரயிலில் ஏறிக்கொண்டேன்.

சில நாட்கள் கழித்து, குவாங்டாங் மாகாணத்தில் உண்பதற்காக வயலில் இறங்கி திருடியபோது யாரோ ஆட்கள் சிலர் என்னை பிடித்து விட்டனர். ஹாங்காங்கிற்குள் செல்ல முயற்சிக்கிறேன் என்று நான் சொன்னதை கேட்டு அவர்கள் சிரித்தனர். “இது உன்னுடைய அதிர்ஷ்ட நாள். எங்கள் வணிகமே பெண்களை ஹாங்காங் கொண்டு செல்வதுதான்”.

ஒரு பார வண்டியின் கீழே மற்ற பெண்களோடு சேர்த்து என்னையும் மறைத்து வைத்து எல்லையைத் தாண்டி எங்களை கடத்திச் சென்றனர்.

எங்களை ஒரு கட்டிடத்தின் அடித்தளத்திற்கு கூட்டிச் சென்று எங்களை வாங்குபவர்களின் பார்வைக்கு நாங்கள் ஆரோக்கியமானவர்களாகவும் அறிவாளிகளாகவும் தெரியும்படி எழுந்து நிற்கச் சொன்னார்கள். குடும்பங்கள் வந்து எங்களைப் பார்த்து அதில் ஒருவரை ‘தத்தெடுப்பதற்காக’ தேர்வு செய்ய இக்கிடங்கிற்கு கட்டணம் செலுத்தினர்.

சின் குடும்பம் தங்கள் மகன்களை கவனித்துக் கொள்வதற்காக என்னை தேர்ந்தெடுத்தனர். நான் தினமும் காலை நான்கு மணிக்கு உணவு தயாரிப்பதற்காக எழுந்துக் கொள்வேன். பையன்களைக் குளிப்பாட்டினேன் அவர்களுக்கு உணவளித்தேன். உணவு வாங்க கடைகளுக்குச் சென்றேன். நான் சலவை செய்தேன் தரையைத் துடைத்தேன். அப்பிள்ளைகளின் பின்னால் சுற்றி வந்தேன்.

அவர்களின் கட்டளைகளையெல்லாம் ஏற்றேன். இரவில் நான் தூங்குவதற்காக சமையலறையிலிருந்த ஒரு அலமாரியில் வைத்து பூட்டப்பட்டேன். நான் நிதானமாகவோ அல்ல தவறாகவோ எதையாவது செய்தால் தாக்கப்பட்டேன். பையன்கள் ஏதேனும் தவறு செய்தாலும் நானே அடிவாங்கினேன். நான் ஆங்கிலம் கற்க முயற்சிக்கும்போது பிடிபட்டால் அடிக்கப்பட்டேன்.

“நீ எதற்கு ஆங்கிலம் கற்க விரும்புகிறாய்” மிஸ்டர். சின் கேட்டார். “உனக்கு போலீஸிடம் போக வேண்டுமா? நாங்கள் போலீஸிடம் நீ மைய சீன நிலத்தை சேர்ந்தவள் என்றும் சட்டத்திற்கு புறம்பாக ஹாங்காங்கில் இருக்கிறாய் என்றும் சொல்வோம். அவர்கள் உன்னை சிறையில் அடைக்க பெரிதும் விரும்புவார்கள்.”

இப்படி நான் ஆறு வருடங்கள் வாழ்ந்தேன். ஒருநாள், காலைச் சந்தையில் என்னிடம் மீன்கள் விற்கும் ஒரு வயதான பெண்மணி என்னை தனியே இழுத்தார்.

“உன்னைப் போன்ற பெண்களை எனக்குத் தெரியும். உனக்கு என்ன வயதாகிறது, பதினாறு? உன் உரிமையாளர் ஒருநாள் குடித்துவிட்டு உன்னைப் பார்த்து வாரியிழுத்து தன்மீது போட்டுக் கொள்வார், உன்னால் அதை தடுக்க முடியாது. இதை மனைவி கண்டுபிடித்து விடுவாள். அதன் பிறகு நீ நேராக நரகத்திற்கே வந்து விட்டதுபோல் தோன்றத் துவங்கும். நீ இந்த வாழ்க்கையை விட்டு வெளியேற வேண்டும். எனக்கு தெரிந்த ஒருவரால் உனக்கு உதவ முடியும்.”

அவர்தான் ஆசிய பெண்களை மனைவியாகக் கொள்ள விரும்பும் அமெரிக்க ஆண்களைப் பற்றிச் சொன்னார். என்னால் சமைக்க சுத்தம் செய்ய என் அமெரிக்க கணவனை கவனித்துக் கொள்ள முடியுமென்றால் அவர் எனக்கொரு நல்வாழ்வைத் தருவார். அதுதான் அப்போது எனக்கு இருந்த ஒரே நம்பிக்கை. அப்படித்தான் எல்லா பொய்களோடும் அப்படியலில் சேர்ந்து பின் நான் உன் அப்பாவை சந்திதேன். இது ஒரு காவிய காதல் கதை அல்லதான், ஆனால் இதுதான் என் கதை.

கனெக்டிகட்டின் புறநகர்ப் பகுதிகளில் நான் தனித்திருந்தேன். உன் அப்பா என்னிடம் கனிவாகவும் மென்மையாகவும் நடந்துக் கொண்டார், நான் அவருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ஆனால் என்னை யாருமே புரிந்து கொள்ளவில்லை என்னாலும் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் அதன் பிறகு நீ பிறந்தாய்! நான் உன்னுடைய முகத்தில் என் அம்மாவின் அப்பாவின் என் சாயல்களைக் கண்டதும் நான் பெருமகிழ்ச்சி கொண்டேன். நான் என் மொத்த குடும்பத்தையும், சிகுலு முழுவதையும், நான் அறிந்த நான் விரும்பிய அத்தனையையும் இழந்திருந்தேன். ஆனால் அங்கே நீ இருந்தாய், அவை அத்தனையும் உண்மையென்பதற்கு சாட்சியாக இருந்தது உன் முகம். என் கற்பனையல்ல அது.

நான் பேசுவதற்கென்று ஒருவர் உண்டு இப்போது. நான் பற்றிக்கொண்டிருந்தது துறந்தது என அத்தனையையும் மீண்டும் சிறு துண்டுகளாக உன்னோடு சேர்ந்து செய்வேன். நீ என்னிடம் உன் முதல் சில சொற்களை பேசியபோது, சீன மொழியில் என்னுடையதும் என் அம்மாவுடைய உச்சரிப்பையும் அப்படியே கொண்டிருந்தது, நான் பல மணிநேரங்கள் அழுதேன். நான் உனக்கு முதன்முதலாக ‘ஷேஜை’ விலங்குகளை செய்து தந்தபோது, நீ சிரித்தாய், இவ்வுலகில் கவலைகளே இல்லையென்று உணர்ந்தேன்.

நீ சற்று வளர்ந்தாய், இப்போது உன்னால் உன் அப்பாவிற்கு உதவிகள் கூட செய்ய முடிந்தது, நாம் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம். உண்மையிலேயே எனக்கெனெ ஒரு இல்லம் இப்போது இருகிறதெனெ உணர்ந்தேன். கடைசியில் நான் ஒரு நல்ல வாழ்க்கையைக் கண்டடைந்தேன். ஆனால் அப்போது என் பெற்றோர்கள் என்னைச் சுற்றி இல்லை. சீனர்கள் இவ்வுலகிலேயே துயரமானதாகக் கருதுவது எதுவென உனக்குத் தெரியுமா? ஒரு குழந்தைக்கு தன் பெற்றோர்களை கவனித்துக்கொள்ளும் ஆசை முழுதாக வளரும்போது, அவர்கள் பிரிந்து சென்று நீண்ட காலமாகிவிட்டது என்பதை உணர்வதுதான்.

மகனே, உனக்கு உன்னுடைய சீனக் கண்களைப் பிடிக்காது என்று எனக்குத் தெரியும், அவை என்னுடைய கண்கள். உனக்கு உன்னுடைய சீனத் தலைமுடி பிடிக்காது என்று எனக்குத் தெரியும், அவை என்னுடைய முடி. ஆனால் உன்னுடைய இருப்பே எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்தது என்று உனக்குப் புரியுமா? நீ என்னுடன் பேசுவதை நிறுத்தியதும் என்னை உன்னுடன் சீன மொழியில் பேச விடாமல் தடுத்தபோதும் நான் எவ்வாறு உணர்ந்தேன் என்பது உனக்கு புரியுமா? நான் அத்தனையையும் மீண்டும் இழப்பதாக உணர்ந்தேன்.

நீ ஏன் என்னுடன் பேச மாட்டாய், மகனே? அவ்வலி இதை எழுதுவதை மேலும் கடினமாக்குகிறது.

***

அந்த இளம்பெண் காகிதத்தை என்னிடம் திருப்பிக் கொடுத்தார். என்னால் அவர் முகத்தை நேரிட்டு பார்க்க முடியவில்லை.
தலையைத் தூக்கிப் பார்க்காமலேயே, அம்மாவின் கடிதத்தின் பின்புறத்தில் “அய்” என்ற வார்த்தை நிழலை கண்டுபிடிக்க உதவுமாறு அவரிடம் கோரினேன். என் பேனாவால் அம்மாவின் எழுத்தோடு பிணைத்து அவ்வெழுத்தின் மேல் மீண்டும் மீண்டும் எழுதினேன்.
அப்பெண் என்னை அருகி என் தோள்களின் மீது கைகளை வைத்தார். பின்னர் எழுந்துச் சென்றார், என்னை என் அம்மாவுடன் தனிமையில் விட்டுவிட்டு.மடிப்புத் தடங்களைப் பின்தொடர்ந்து நான் காகிதத்தை மீண்டும் லாஓஹூவாக மடித்தேன். என் கரங்களின் வளைவைத் தொட்டிலாக்கி அதில் அவனை வைத்தேன், அவன் செல்லமாக உரும, நாங்களிருவரும் வீட்டிற்கு நடக்கத் தொடங்கினோம்.

***

ஆசிரியர் குறிப்பு :

சீனாவில் 1976ம் வருடம் பிறந்தவர் கென் லியூ. இவருடைய பதினோராவது வயதில் இவர் குடும்பம் அமெரிக்காவில் குடியேறியது.

ken liu

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியமும் கணினி தொழில்நுட்பமும் பயின்ற இவர் சிறிது காலம் மைக்ரோசாஃப்டில் பணிபுரிந்து பின்னர் ஹார்வர்டிலேயே சட்டப் படிப்பும் முடித்து தற்போது கார்பொரேட் கம்பெனிகளின் வக்கீலாக பணியாற்றி வருகிறார். 2002 லிருந்து அபுனைவு கதைகளை பதிப்பித்து வரும் இவர் அறிவியல் புனைவு மற்றும் கற்பனை வகை கதைளின் மூலம் பிரபலமாக அறியப்படுகிறார். பல சீன இலக்கியங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறார். இவரின் இந்த காகித மிருக சாலை என்ற சிறுகதை 2013ல் அறிவியல் கற்பனை கதைகளுக்கு வழங்கப்படும் அத்தனை விருதுகளையும் வென்றது. இருப்பினும் இக்கதை இவரின் மற்ற சிறந்த சிறுகதைகளைப் போல மாய எதார்த்தத் தன்மை கொண்டு இருக்கிறது. தொன்மங்களிலிருந்து பிறக்கும் மாயங்களாக, அறிவியல் கற்பனைகளாக புறத்தில் வித்தைகள் காட்டி அதன் அகத்தில் ஆழமான உறவுப் பின்னலை விரித்து வைக்கிறார் மை எழுத்து கடிதத்தின் பின்பக்க நிழற்கோடுகளைப் போல. 

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு :

ம. நரேந்திரன், 1982ல் வேலூர் மாவட்டத்தில் பிறந்தவர்.

கல்லூரி காலங்களில் விகடன் மாணவ பத்திரிக்கையாளராக தேர்வாகி விகடன் குழும பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். மென்பொருள் துறையில் பணிபுரியும் இவர் ஆறு ஆண்டுகள் அமெரிக்க வாசத்திற்குப் பிறகு தற்போது கோவையில் வசித்து வருகிறார். இவரது முதல் மொழிபெயர்ப்பு நூல் : இந்தக் கதையை சரியாகச் சொல்வோம் (யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடு, 2020) தொடர்புக்கு – narendiran.m@gmail.com

முன்னர் அவன் நாமம் கேட்டாள்

3

காலம் செல்வம்

பெயர் என்ன..? பெயர் தானே எண்டிட்டு எங்கட பெயரைச் சும்மா சொல்லிப்போட்டு போகேலாது. அகதியாய் வெளிநாட்டிக்கு வந்த பிறகு, வெளிநாட்டு அதிகாரிகள்  எங்கடை பெயரை சொல்லத் தெரியாமல் நக்கலும் கலந்து பிழையாய்ச் சொல்ல, எங்கட தாழ்வுச் சிக்கல் அங்கேயே தொடங்கிடும். இத்தனைக்கும் அவங்கடை பெயரைப் பார்த்தால்  ஸ்ரோன், பிறவுன். பிளாக், வூட் என்ற மாதிரி மனிசருக்கு ஏத்த பெயரா இருக்காது. கல், கறுப்பு, மரம் எண்டு தமிழில கூப்பிட்டா எப்பிடியிருக்கும்?

பெயராலையும் சண்டை வரும் எண்டு நான் அறிஞ்சது லோறன்சின்ர இரண்டு தம்பிமாரும் “பனியன் “கிறிஸ்தோப்பனை அடிச்ச நேரத்திலைதான்.

இந்தப் பிரச்சனை கோவில் சபை வரைக்கும் போச்சுது.

தன்னை கிறிஸ்த்தோப்பன் ‘ஒளஞ்சு, ஒளஞ்சு’ என்று கூப்பிடுகிறான் எண்ட தன்னர வாதத்தை லோறன்ஸ் முன்வைச்சார். 

பனியன் சொன்னான், தனக்குக் கொன்னை இருக்கு. தன்னால அந்தப் பெயரை வடிவாயச் சொல்ல முடியாது எண்டு. 

சுவாமி மரியாம்பிள்ளை “எங்கை ஒருக்கால் திருப்பிச் சொல்லு பார்ப்போம்” எண்டு கேட்டபோது, பனியன் ‘ஒளஞ்சு’ எண்டே சொன்னான்.

சுவாமி பனியனைப் பார்த்து, “இனிமேல் நீ உன்ர வாழ்க்கையில எண்டைக்கும் லோரன்சு என்ற சொல்லே சொல்லப்படாது. அது புனிதற்ரை பெயர்” எண்டார். பிறகு லோறன்சைப் பார்த்து, அவன் பாவம் அவனுக்கு கொன்னை. நீங்கள் அவனுக்கு இனி அடிக்கப்படாது என்று கூறித் தீர்ப்பு வழங்கினார்.

ஆனாலும் கடைசி வரைக்கும் அவரைச் சிலபேர் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஒளஞ்சு என்றே நக்கல் அடித்தார்கள்.

இரண்டாவது பெயர் பிரச்சனை, எனக்கு ரஸ்சிய நாட்டின்ர தலைநகர் மொஸ்கோவில் ஏற்பட்டது. பெல்ஜியத்திற்க்கு போறதுக்கு மொஸ்கோவில் மூன்று நாள்கள் இணைப்பு விமானத்துக்காக காத்திருக்க வேணும்.

எங்கட பாஸ்போட்டுகளை விமான அதிகாரிகள் வேண்டி வைச்சிட்டு ஒரு நம்பர் போட்ட துண்டு தருவாங்கள்.

ஹோட்டலில இரண்டு இரவு தங்கி விட்டு விமான நிலையம் வந்து காத்திருந்தோம்.

அவர்கள் பெயர்களைக் கூப்பிட அந்தத் துண்டைக் கொண்டுபோய்க் கொடுத்து பாஸ்போட்டை வாங்கிக் கொள்ள வேணும்.

நாங்கள் மூன்று தமிழர்கள் ஒன்டாய் நிண்டம். என்ன பெயரைக் கூப்பிடுகிறார்கள் என்று உற்று கவனிச்சுக் களைச்சுப் போற நேரத்திலை, என்ர பெயரை ஒருமாதிரி விளங்கிக் கொண்டு ஓடிப்போய்  பாஸ்போட்டை வாங்கிட்டன்.

மற்ற நண்பர் ஒருவருக்கு இன்னுமொரு அரைமணித் தியாலம் போச்சுது. கதிர்தான் பாவம். அவன்ரை பெயர் கூப்பிடப்படவே இல்லை, அவன்ரை முழுப்பெயர் சிவராஸசிங்கம் பொன்கதிர்காமநாதன். நாங்களும் ஒலி வாங்கியின்ர அறிவிப்பை உற்றுக்கேட்டு கொண்டிருந்தோம். மூன்று மணித்தியாலம் ஆயிற்று. இன்னும் ஒரு மணிநேரத்தில் பெல்ஜியம் போற விமானம் புறப்படத் தயார் எண்டு அறிவிப்பு பலகையில் போட்டு விட்டார்கள்.

கதிருக்கு அழுகை வந்துவிட்டது. இந்த விமானத்திலை ஏற முடியாட்டால் என்ன செய்யிறது? கட்டாயம் பிடிச்சு இலங்கைக்கு திருப்பி அனுப்புவார்கள். எனக்கும் பதைபதைப்பா இருந்தது.

ஒண்டாய் வெளிக்கிட்டு வந்த நண்பனை இடையில விட்டுவிட்டு நாங்கள் எப்படி போறது?. பெரிய சோதனையாக இருந்தது. ஒரு மாதிரி ‘இன்பமேசன்’ சென்ரரைக் கண்டுபிடிச்சுக் கதைக்கப் போக, அவர் தனக்கு நாலு மொழிகள் தெரியும் ஆனால் அதிலை ஆங்கிலம் இல்லை என்றார்.

“ஆங்கிலம் தெரிந்த அதிகாரியை அவர் வரவழைத்த போதுதான்; எங்களுக்கு ஆங்கிலம் சரியாய் தெரியாது” எண்டுறது எங்களுக்குத் தெரிய வந்தது.

“கடவுளே எண்டு கை எடுக்கிறதைத் தவிர வேறு வழியல்லை” எண்டு புலம்புற நேரத்திலைதான் ஒரு இந்தியத் தமிழர் எம்பிட்டார். அவர்தான் அந்த ஆங்கிலம் தெரிந்த அதிகாரியுடன் பேசினார். அவர் கதிரின் முழுப்பெயரையும் எழுதித் தரும்படி கேட்டார். அவர் அதைக் கொண்டுபோய் அந்த ஆங்கிலம் தெரிந்த அதிகாரியிடம் காட்ட, அவர் ஏதோ சொல்ல, அந்த இந்தியத் தமிழரும் எக்காளம் போட்டுச் சிரித்தார்.

எங்களுக்கு விளங்கேல்ல.. ஏன் சிரிகிறியள் எண்டு கேக்க,

இது பெயரா? அல்லது சிறுகதையா? எண்டு அந்த அதிகாரி கேக்கிறார் எண்டார். பிறகு ஒரு உரிய அதிகாரியிட்ட போய், பாஸ்பாட்டை வாங்க, அவர் சற்றுக் கோபமுடன், பத்து தடவைக்கு மேல் ஒலிபெருக்கியில் இப்பெயரை கத்தியாதாகவும், பெயர் பெரிதாக இருந்தபடியால் வாசிக்க முடியாமல் மூன்றாய் பிரித்து வாசித்ததாகவும் கூறினார். அங்கை சேர்ந்து சிரிக்கிறதைத் தவிர வேறு வழியில்லை எங்களுக்கு.

ஒடிப்போய் விமானத்தில் ஏறினோம். கதிருக்குக் கடுப்பும வெட்கமுமாய் இருந்தது. ‘என்னர அப்பன் மொஸ்கோ வாழ்க’ மொஸ்கோ வாழ்க’ என்று எத்தனை தரம் தன் வாழ்க்கையில கத்தியிருப்பார்.

யாழ்ப்பாணத்தில் சித்தாந்தப் பிளவு ஏற்பட்டபோது சோவியத் புத்தகக் கடையை மற்றவங்களுக்கு போகவிடாமல் பண்ணுவதற்காக அடிபட்டு கொஞ்சநாள் மறியலிலும் இருந்தவர்.

‘சீனக்காரன் சொல்லுறது போல, இவங்கள் நவீன திரிபுவாதிகள்… பார்த்தீங்களே என்னர பாஸ்போட்டை சுத்தப் பார்த்தாங்கள்’ எண்டு ஏதோஏதோ சொல்லிப் புறுபுறுத்த வண்ணமே பயணம் செய்தார்.

பாரிசுக்கு வந்து ஒரு வேலை கிடைச்ச அண்டைக்கு அந்தப் போத்துக்கீச பெரியவன் என்ர பெயரைக் கஸ்ரப்பட்டுக் கூப்பிட்டு, என்ன வேலை.. எண்டும்  யாரோடை சேர்ந்து பழக வேண்டும் எண்டும் சொன்னார்.

எனக்கு வேலைப்பயிற்சி தந்த ஆபிரிக்க பெண் மிக நல்லவ.  “இங்கை இப்படி நீளமாக ஒருவரும் பெயரை சொல்ல மாட்டினம். யாரும் உன்ர பெயரைக் கேட்டால் சவரிமுத்து அருளானந்தம் எண்டு முழுப் பெயரையும் சொல்லாமல் சவரி எண்டு சொல்” எண்டா.

அது ஒரு கிழமை கூட நீடிக்கவில்லை. என்னர பெயர் சவரி என்ற கேள்விப்பட்ட இன்னொரு அரபுப்பெண் என்னிட வந்து, சவரி எண்டு உன்னர பெயரைச் சொல்லாதே. இங்கு வேலை செய்யிற பெரும்பான்மை ஆட்கள் அரபுக்காரர். சவரி எண்ட சொல்லுக்கு அரபில் கூடாத  கருத்து இருக்கு. சரி.. வேறு பெயருக்குத் தாவினன். 

ஆறு மாதத்திற்கு மேலை அவ்விடத்திலை வேலை செய்தன், ஒரு நிலையான பெயர் கடைசி வரைக்கும் கிடைக்கவில்லை.

வேலை இல்லாமல் அங்க சும்மா இருக்க இயலாது. பிரெஞ்சு மொழி கொஞ்சமெண்டாலும் படிச்சாத்தான் அரசாங்க உதவி கிடைக்கும். பிரஞ்சு படிக்கிறத்துக்கு அப்பிளிகேசன் அனுப்பிப் போட்டு அங்கு போய் எப்படி என்னர பெயரைச் சொல்வது எண்டுறது பெரிய கவலையாய் இருந்தது.

எனக்கு அம்மாவிலைதான் கோபம் வந்தது. “என்னர நண்பர்களைப் போல சேவியர், பீலிக்ஸ், பீற்றர் என்று பெயர் வைத்திருக்கலாம். ஏனம்மா அருளானந்தம் என்று பெயர் வைச்சனி?” என்று ஒருமுறை கேட்டபோது “அதையேன்ரா கேட்கிறாய் உனக்கு ஸ்-ரீபன் ஞானச்செல்லம் எண்டும் தன் அண்ணனன் மகனுக்கு எட்மன் ஞானச்சிங்கம் எய்று பெயர் வைக்க தீர்மானித்ததாகவும்,  உனக்கு ஞானஸ்தானம் குடுக்கேக்கை குருவானவரிடம் உன்ர பெயரை எழுதிக் கொடுத்தேன் அவர் போத்துக்கல் நாட்டுக்காரர். அவற்ரை பெயர் வாதர் டெய்சி  அவர்தான் பங்குக் குருவாயிருந்தவர். அவர் யாழ்பாணத்திலை இருபது வருசத்துக்கு மேலை வாழ்ந்தவர். அந்தச் சுவாமிக்குத் தமிழ் எண்டா உயிர். ‘மரணித்தாள் மகள்’ என்ற தமிழக் கதைப்புத்தமும் எழுதினரவல்லோ. இந்தமாதிரி வெளிநாட்டுப் பெயர் எல்லாம் வேண்டாம், கிறிஸ்துவுக்காக இந்தியாவில் உயிர்விட்ட அருளானந்தம் என்ற புனிதற்ரை பெயரையே உன் மகனுக்கு வைக்கிறேன் என்று உறுதியாய்ச் சொல்லிப் போட்டார்.”  எண்டா.

பிரெஞ்சு படிக்கிறத்துக்கு இடம் கிடைச்சுது. படிப்பிக்கிற ரீச்சர் நல்ல அழகி. சரியான முற்போக்கானவ. கொமியுனிசக் கட்சியோ தெரியேல்லை. பல நாட்டுக்காரர் அந்த வகுப்பிலை இருந்தாலும் அங்கையிருந்த ஐந்தாறு இலங்கைப் பெடியங்களிலை மிகவும் அக்கறையாய் இருப்பா.

அப்பத்தான் 83 ஆடிக்கலவரம் நடந்து முடிஞ்சிருந்தது. அதைப்பற்றி அக்கறையோட எங்களிட்டைக் கதைப்பா. 

ஒருநாள் தன்னுடைய பிறந்தநாள் எண்டு ஒரு தேனீர் விருந்துக்கு ஒழுங்கு செய்தா. கேக் வெட்டி தேத்தண்ணீர் கோப்பியோடை சில பலகாரங்களும் வேண்டி எங்கள் எல்லோருக்கும் தந்தா.

அது முடிய ஒரு அறிவிப்புச் செய்தா. ஒவ்வொரு நாட்டுக்காரரும் தங்கடை மொழியிலை ஒரு நாடகமோ கவிதையோ பாடிப்பேசி  நடிச்சு மற்றவைக்குக் காட்ட வேண்டும் எண்டு.

சொன்ன உடனேயே ஒரு சிலி நாட்டு பொடியன் எழும்பி, மிக உணரச்சியோடை வசனம் பேசி, நெஞ்சில் துப்பாக்கி குண்டு பட்டது போல நடிச்சு எல்லோர் பாராட்டையும் பெற்றான்.

பிறகு ஒரு பிலிப்பைன் பெண் எழும்பி தன்ரை “மொழியில் ஒரு பாடலை பாடினாள். இரண்டு கொலம்பியப் பெடியன்கள் சேர்ந்து பேசிப்பாடி நாடகம் போல் செய்து மகிழ்வித்தார்கள்.

இனி எங்கட பெடியளுக்கு முறை வரப்போகுது. எல்லோரும் பம்பிக் கொண்டு இருந்தார்கள். விஐயநாதன் என்னைப் பார்த்து “நீதான் ஏதாவது செய்ய வேணும். நாங்கள் தமிழரல்லோ.. எங்கடை திறமையைக் காட்ட வேணும்”  எண்டு எனக்கு என்னை ஏத்திக்கொண்டு நின்றான்.

வகுப்பு வந்த முதல்நாளிலை இருந்தே அவனுக்கும் எனக்கு சரியாப் போறதில்லை. வகுப்பு தொடங்கின முதல்நாள் மார்ட்டினா என்ற அந்த ரீச்சர் எங்களப் பார்த்து “உங்கடை இந்து மதத்தைப் பற்றி அறிந்து கொள்வது என்றால் எந்த புத்தகத்தை படிக்க வேணடும்” எண்டு எங்கள் எல்லோரையும் பார்த்துக் கேட்க, நான் அவசரப்பட்டு எழும்பி ‘பகவத்கீதை’ எண்ட புத்தகம் எண்டன்.

விஜயநாதன் கோபத்தோடு எழுப்பி “தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு என்ற மூன்று மொழிகளையும் கலந்து என்னைப் பாத்துக் கத்தத் தொடங்கினான். “பகவத் கீதை வடக்கன்ரை புத்தகம். உவன் வேதக்காரன் உவனுக்கு ஒண்டும் தெரியாது. எங்கள் சைவ சமயத்தைப் பத்திப் படிக்கக் கனக்கப் புத்தகம் தமிழிலை இருக்கு எண்டு” சத்தம் போட்டான்.

ஏதோ வில்லங்கம் என்று மார்ட்டீனாவுக்கு விளங்கிவிட்டது. அந்தக் கதையைத் தாண்டி வேறு கதைக்குப் போயிற்றா. அதன்பிறகு நானும் விஜயநாதனிட்டை இருந்து கொஞ்சம் விலத்தித்தான் நடந்தன்.

அதையெல்லாம் இப்ப மறந்த விஜயநாதன், “எங்களுக்குள்ளை நீதான் ஏதாவது செய்வாய். எங்களைப் பற்றி மற்றவர்கள் குறைவாய் மதிக்கற மாதிரி விடப்படாது.  மச்சான் எழும்பி ஏதாவது செய்யடா” எண்டான். எனக்குள்ளையும் ஏதாவது செய்ய வேணும் எண்ட யோசனை ஓடிக்கொண்டிருந்தது.

சின்ன வயசிலை பெரியம்மாவின்ர மகன் ரத்தினம் அண்ணவோடைதான் திரியிறனான். அவருக்கு சிவாஜி பைத்தியம். சிவாஜின்டை புகழ்பெற்ற வசனங்கள் எல்லாம் பேசுவார். ஊரிலையும் சில நாடகங்களிலை நடிச்சவர். படிப்பு பெரிசா வராது. எஸ்.எஸ்.சி இரண்டு தரம் பெயிலாகிட்டுப் பெரியப்பாவிட்டை சரியா வாங்கிக்கட்டினவர். 

ஒருநாள் வழமைபோல, ஒரு நாடகத்தை வீட்டில் நடித்து பயிற்சி எடுக்க வெளிக்கிட்டார். தகப்பன் இல்லாத நேரங்களில இது வழமைதான். அவருக்கு உதவியாளர், பார்வையாளர் எல்லாம் நான்தான்.

அவர் சாம்பராட் அசோசன் வசனம் பேசிக்கொண்டு நடுமேடைக்கு வரும்போது, அவர் வந்து கால் வைத்து வசனம் பேசச் சரியான இடத்திலை கதிரையைப் போட வேணும். அத்தோடை கைதட்ட வேணும். அவர் அடிக்கடி வசனங்கள் பேசப்பேச எனக்கும் அது பாடமாய் இருந்தது.

அந்த நேரம், தொழிலாலை களைச்சு போய் வந்த பெரியப்பாவை நான் காணேல்லை.

இரத்தினம் அண்ணை பெரிய உசராய் வந்து, ஒரு காலைக் கதிரையிலை வைச்சு சிவாஜி திரும்பிற மாதிரி ஸ்ரைலாத் திரும்பி “என்ன சொன்னான் கலிங்க நாட்டான்” என்று சொல்லேக்கை தகப்பனைக் கண்டிட்டார். மிச்ச வசனத்தை சொல்லாமல அவர் நிற்க, நான்  “அந்நிய சிரேஸ்ராம் அவனியெங்கும் காணமுடியாத ஞான பண்டிதனாம்” எண்டு சொல்லிச் “சொல்லுங்கண்ணே சொல்லுங்கண்ணே” எண்டன்.

கடுங்கோபத்தோட பாய்ஞ்சு வந்த பெரியப்பா, “என்ன சொன்னான் கலிங்க நாட்டானோ..? உன்ர கோத்……….” எண்டு சொல்லி அண்ணருக்கும் அடிச்சு எனக்கும் அடிச்சது ஞாபகத்துக்கு வந்தது.

“யாரும் சிறிலங்கன் முன்னுக்கு வாங்கோ” எண்டு மார்ட்டினா டிச்சர் கூப்பிட, நான் முன்னுக்குப் போனேன்.

நேற்றே தெரிந்திருந்தால் இந்த வசனங்களை கொஞ்சம் நினைவுபடுத்திப் பார்த்திருக்கலாம், சரி சமாளிப்போம் எண்டு நினைச்சுக் கொண்டு வகுப்புக்கு ஒரு வணக்கத்தை வைச்சன். ஒரு நிமிசம் தடுமாறிக் கொண்டுதான் இருந்தன். பிறகு “என்ன சொன்னான் கலிங்க நாட்டான்..”  எண்ட சாம்ராட்  அசோகன் நாடக வசனத்தைச் சொல்லத் தொடங்கினன். சொல்லேக்கை இடையிலை அது மறக்க, கட்டபொம்மன் வசனங்களை எடுத்து விட்டன். “நீலவானிலே செந்நிற பிழம்பு. அது நீ  எனக்கு வைத்த  இந்த நீலநிறப் பொட்டு. எங்கு நிறைந்த பொருளாய் நம் ஏற்ற நினைத்த..” எண்ட இந்த வசனமும் இடையில மறக்க.. ஏ எட்டப்பாஇ ஈனச்சொல் பேசாதேஇ நாவை எடுத்தெறி. வாழ விரும்பினாய்இ வல்லவனை அழித்தாய்இ இனி நீ வாழ்ந்துகொள். வீரம் விலையற்றதென்றாய்இ வீணரை வணங்கினாய்இ வேண்டுவதை வாங்கிக்கொள். கூலி கேட்டாய்இ கும்பிட்டாய்இ கோழையானாய்இ கூலியை பெற்றுக்கொள். ஆனால் அந்நியன் உன்னை போற்றவேண்டும்இ அது உனக்கு இனிக்க வேண்டும் என்று மட்டும் எண்ணாதே. நீ காட்டிக்கொடுத்தாய்இ நான் காட்டிக்கொடுக்கப்பட்டேன். நாம் இருவரும் இதே மண்ணில் விளைந்தவர்கள் தான். உன்னை கேடு சூழினும்இ ….  இதுவம் இடையிலை நிற்க பாரதி கவிதை நினைவுக்கு வந்தது.  “ஆப்பிரிகத்து காப்பிரி நாட்டிலும் தென்முனை அடுத்த தீவுகள் பலவாய்ப் பரவியுள்ள இத்தமிழ்ச் சாதி காலடியுண்டும் கயிறடியுண்டும்..” இதுவும் மறந்து போக.. கீறல் விழுந்த சீடி மாதிரி இரண்டு தரம் “காலடியுண்டும் கயிறடியுண்டும் வருந்திடும் வருந்திடும்” எண்டு சொல்லி முடிக்க,

எல்லோரும் பெரிதாய்க் கைதட்டினார்கள். மாடீனா ரீச்சர் என்ரை தமிழ் வசனத்திலை மயங்கி  தடுமாறிப்போனா.

அவ என்ரை முகத்தைப் பார்த்து, “அருள் திரும்பவும் டும் டும் என்று வரும் என்ற அந்த கடைசி வரிகளைத்  திருப்பிச் சொல்வீர்களோ எண்டா.

என்னை அவ, ‘அருள்’ எண்டு கூப்பிட்டது திக் எண்டு இருந்தது.  

“காலடியுண்டும் கயிறடியுண்டும் வருந்திடும் வருந்திடும்” திருப்பியும் நாலுதரம் எடுத்து விட்டன்.

மார்ட்டீனாவும் மற்ற மாணவர்களும் பெரிதாய்க் கைதட்டினார்கள். மொழி விளங்காவிட்டாலும் ஒரு மொழியின்ர ஓசையைக் கேட்பதிலை ஒரு சுகம் இருக்கிறது எண்டுறதை நான் தெரிஞ்சு கொண்டன்.

அவவே மற்ற மாணவர்களுக்குச் சொன்னா.. இவற்றை பெயர் கொஞ்சம் பெரிது. நீங்கள் எல்லோரும் இனி இவரை அருள் எண்டு கூப்பிடுங்கள் எண்டா.

ஆகா.. என்ன அருமையான பெயர். அதுக்குப் பிறகு என்ர பெயர்ப் பிரச்சனை தீர்ந்து போச்சுது.

இன்றுவரை கனடாவிலை நண்பர்கள், வீடு, தவிர மற்ற எல்லா இடங்களிலும் அருள் என்ற அருமையான பெயரால் அழைக்கப்படுகின்றேன். மாட்டீனா ரீச்சர் நீங்கள் எங்கிருந்தாலும் வாழ்க!

கனடா மொன்றியல் நகரத்துக்கு வந்த பிறகு, இன்னொரு பிரச்சனை வந்தது.

மொன்றியலிலை என்னை வரவேற்றுப் பராமரித்த நண்பர் யாழ்ப்பாணத்திலை எனக்கு மிக நெருக்கமானவர். அவர் மொன்றியலிலை ஒரு கிறிஸ்தவ சபையிலை சேர்ந்து போதகராய் இருந்தார். பாரிசிலை இருக்கேக்கை கேள்விப்பட்டதுதான். எனக்கு அதுபற்றிப் பிரச்சனையில்லை, தன்னுடைய சபையிலை ஒரு ஆள் கூடிவிட்டது எண்டறதில அவருக்குப் பெரிய மகிழச்சி. 

நான் வந்தவுடனேயே எனக்கு வீடு எடுத்துத் தந்து இமிகிறேசன் வேலையெல்லாம் பார்த்து வெல்பெயர் காசுக்கும் ஒழுங்கு பண்ணித் தந்தார்.

வெல்பெயர் காசை எடுத்துக் கொண்டு சும்மா திரியேக்கைதான் இன்னொரு சொந்தக்காரர் சொன்னார், “இந்த நேரத்திலையெல்லோ உழைச்சுச் சம்பாதிக்க வேணும். வேறை ஆற்றையும் வேர்க் போமிற்றிலை நீ வேலை செய்தால், அந்தக் காசைத் தேவையான செலவுகளுக்குப் பயன்படுத்திப் போட்டு, வெல்பெயர் பணத்தை அப்படியே மிச்சம் பிடிக்கலாம்” எண்டார்.

எனக்கும் ஆசை வந்தது. வேர்க் பொமிற்றை யாரிட்டை கேட்பது என்று யோசிச்சுக் கொண்டிருந்தேன்.

ஒருநாள் என் போதக நண்பரும் அவரின் உதவியாளர் எலியாசும் பேசிக்கொண்டிருந்தம். அந்த நேரத்திலை போதகரிடம் ஆலோசனை கேட்பது போல வேலைக்குப் போகவேணும் எண்ட கதையை சொன்னன்.

போதகர் உடனேயே ‘அது பிழையல்லோ?’ எண்டார். உடன எலியாஸ் “சீ சீ அது ஒன்றும் பிழையில்லை. நான் வந்தபோதும் ஒரு வருடம் அப்படித்தான் செய்தன்.  நீங்கள் வேலை செய்யாமல் உங்கடை பேப்பர் சும்மாதானே கிடக்கு. பாவம் இந்தாள் இப்பதானே கனடாவுக்கு வந்தது. உங்ககடை  வேர்க் போமிற்றைக் குடுங்களேன்” என்றார்.

போதகர் யோசிச்சுக் கொண்டிருக்க, “நீங்கள் இன்கம் ரக்ஸ் செய்யேக்கை உங்களுக்குக் குடும்பம் எண்டபடியால் அவர் வேலை செய்து கட்டின வரி உங்களுக்குப் பணமாய்த் திரும்பக் கிடைக்கும்” எண்டார் எலியாஸ்.

போதகர் வேர்க் போமிற் தாறதுக்குச் சம்மதித்தார். பீற்றர் செபரத்தினம் என்ற அந்த பெயரேடை என் வீட்டுக்குகிட்ட இருந்த ஒரு பாஸ்ட்பூட் உணவகத்திலை வேலைக்குச் சேர்ந்தன்.

இப்போ என்ர பெயர் பீற்றராய்ப் போயிற்று. கிழமைக்கு மூன்று நாள் வேலை எண்டு சேர்ந்து பிறகு ஐந்து நாளாயிற்று. மணித்தியாலத்திற்கு ஐந்து டொலர் சம்பளம். பெயர் மாறினால் என்ன.. காசு வருகுது தானே.

இப்படி ஆறேழு மாசங்கள் கழிய, இன்னொரு பிரச்சனை நடந்தது. போதகருக்கும் அவரின்ர உதவியாள் எலியாசுக்கும் பிரச்சனை வந்து 17 பேர் கொண்ட சபை இரண்டாய் உடைச்சு போச்சுது. இந்த உடைவின்போது என்ர தலைதான் உருண்டது. எலியாஸ், போதகர் எனக்குப் பேப்பர் தந்த கதையை எல்லோருக்கும் சொல்லிப் போட்டார்.

போதகர் பயந்து போனார். என்னை வேலைக்கு போக வேண்டாம் எண்டு சொல்லிப் போட்டார்.

நான் வேலையிலை நல்ல பெயர் வாங்கி, இப்ப டிலிவரிகளைக் கணக்கெடுக்கிறது டைனிக் கோலை மேற்பார்வை செய்யிறது, இடையிலை சமைக்கிறது எண்டு உயர்ந்திருந்தன்.

எனக்குப் பெரிய அந்தரமாய் போச்சு. ஆனால் போதகருக்கு தீங்கு செய்யப்படாது. போதகர் வேலைக்குப் போக வேண்டாம் என்று சொன்ன அடுத்தநாளே வேலைக்குப் போய் முதலாளியிடம், “நாளைக்கு தொடக்கம் வேலைக்கு வரமாட்டன்” எண்டன்.

முதலாளி சிரித்தார். “என்ன லீவு வேணுமோ? நீ வேலைக்கு சேர்ந்து இன்னும் ஒரு வருடம் ஆகவில்லை. ஒரு வருடத்திற்கு பிறகுதான் வக்கேசன்” எண்டார்.

இல்லை.. நான் இனிமேல் வரமாட்டேன். எனக்கு வேறு ஒரு பிரச்சனை எண்டன்.

டேய் மடையா.. உங்கடை ஆட்கள் அங்கே விசர்த்தனமான முடிவு எடுத்து ஆமியோடை அடிபட்டது மாதிரி நீயும் பிழையான முடிவு எடுக்காதை. உன்னைக் குக் ஆக்கிறன் எண்டார்.

நான் இல்லை இல்லை.. எண்டு தடுமாற.. “பீற்றர்.. உனக்குப் பிரெஞ்சும் கொஞ்சம் தெரியும் இன்னனும் இரண்டொரு வருடத்திலை உன்னை மனேஜர் ஆக்காலாம் எண்டு கூட யோசிக்கிறன்” எண்டு சொல்ல, நான் என்ர லொக்கருக்குப் போய் உடுப்புகளையும் சப்பாத்தையும் எடுத்துக் கொண்டு வந்தன். 

முதலாளிக்கு விளங்கிட்டது.. இவன் இனி நிக்கமாட்டான் எண்டு. கோபத்தோடு கேட்டார்.. நீ யாற்ரையோ பேப்பரிலையோ வேலை செய்தனீ.? எனக்குத் தூக்கிவாரிப் போட்டுது.

நான் ஒண்டும் பேசமால் நிண்டன்.

“உன்னைப் போல எத்தனை சிறிலங்கன் தமிழரைப் பார்த்திட்டன் உள்ளதைச் சொல்லு” எண்டார். நான் மௌனமாய் அந்த இடத்தைவிட்டு வெளிக்கிட்டன். 

இந்த வேலை போனபிறகு சும்மாதான் இருந்தன். சொந்தப் பெயரிலை வேலை செய்ய மனம் வரேல்லை. அப்பத்தான் செழியன் எனக்கு நண்பரானார். அரசியல் இலக்கியம் எண்டு நிறையத் தனிப்பட்ட கதையள் கதைப்பம். அப்பத்தான் நான் வேலை இல்லாமல் இருக்கிற விசயத்தைச் சொன்னன்.

“நான் வேலை செய்யுற றெஸ்ரோன்றிலை வேலை இருக்கு வாறியா?” எண்டு கேட்டார். “வேலைக்கு வரலாம். ஆனால் பேப்பர் இல்லை. வெல்பெயர் காசு எடுத்துக் கொண்டிருக்கின்றன்” எண்டன். அவரே தன் நண்பர்கள் யாரோடையோ கதைத்து ஒரு வேர்க் போமிட்டுக்கு ஒழுங்கு செய்து தந்தார்.

செழியனோட சேர்ந்து வேலை செய்யத் தொடங்கினன். எனக்குப் பேப்பர் தந்தவனின்ர குடும்பப் பெயர் ‘யோசப்’ அது எல்லோருக்கும் சுகமாய் போயிற்று. அங்கே யோசப் என்று என் பெயர் மாறியது. ஒருமாதம் வேலை செய்த பிறகு அங்கேயும் டெலிவரி பகுதியைக் கவனிக்கும் பொறுப்பைத் தந்து விட்டார்கள்.

உணவுப்பொருட்களை டெலிவர டிரக் கொண்டு வரேக்கை என்னைப் போய் சமான்களைச் சரிபார்து எடுக்கும்படி தலைமைச் சமையற்காரர் சொன்னார். நான் ஓமெண்டு போக, டிரக் ரைவர் ஓடிவந்து ஏய் பீற்றர் எப்படியிருக்கிறாய்..? உன்னை அந்தக் கடையிலை தேடினன் எண்டபடி பிரஞ்சு ஸ்டையிலை கட்டிப் பிடிச்சார்.

முந்தின கடைக்கும் இவன்தான் டெலிவரி. அதால எனக்கு நல்ல பழக்கம். இவன் சமான்கள இறக்குறத்துக்கும் ஏத்துறத்துக்கும் நான்தான் உதவி செய்வன். பொருட்களக் கணக்கெடுக்கிற வேலையையும் தாண்டி அவனுக்கு உதவுறதாலை என்னர முதலாளிக்கோ மற்றவர்களுக்கோ தெரியாமால் பத்து டொலர் காசை என்ர பொக்கற்றுக்குள்ளே வைப்பார்.

இங்க என்னைக் கண்டவுடன அவருக்கு பெருத்த மகிழ்ச்சி. ஏன் அந்த றொஸ்ரோரன்ட் வேலையை விட்டனீ? எண்டு கேக்க, நான் மௌனமாய் இருக்க… அவனே சொன்னான்..  “அந்த முதலாளி சரியில்லை. இந்த இடம் பரவாயில்லை. இதிலை நிண்டுபிடி” என்றார். நான் ஒண்டுமே பறையேல்ல.

அடுத்த டெலிவரி வந்தபோது நான் நிலக்கீழ் அறையில் ஏதோ அலுவலாய் நிக்க, அவன் போய் சமையற்காரரிட்டை பீற்றர் எங்கே எண்டு கேட்டிருக்கிறான். பீற்றர் எண்டு இங்க ஒருத்தரும் வேலை செய்யிறது இல்லை  எண்டு அவன் சொல்ல, ட்ரைவர் “இல்ல.. போன கிழமை நான் அவனை இங்க கண்டனான். நீ என்ன சொல்லுறாய்” எண்டு வாக்குவாதப்பட, அந்தநேரம் பார்த்து நான் மேலை வர, அவன் “ஏய் பீற்றர்” என்று கூப்பிட, இவர் “பீற்றர் இல்லை யோசவ்” எண்டு சமையற்காரன் சத்தம் வைக்கக் கொஞ்சம் கலவரமாய்ப் போயிற்று.

நான் ட்ரைவரைச் சமாளிச்சு வெளியிலை கூட்டிக் கொண்டு வர முயற்சி செய்ய, அவன் சமையற்காரரைப் பார்த்து, “உன்னட்டை வேலை செய்யிறவன்ர பெயரை ஒழுங்காச் சொல்லத் தெரியாத நீ எல்லாம் ஒரு செப்”  எண்டு கத்திக்கொண்டு போனான்.

செவ் ஒன்றும் சொல்லாமல் அங்கால போயிட்டான். நான் வேலை முடிஞ்சு வீட்டை போக வெளிகிட தன்னர அறைக்கு செவ் கூப்பிட்டார். “உதிலை கதிரியிலை இரு” எண்டு சொல்ல நானும் இருந்தன்.

“உண்மை சொல்லு நீ பீற்றரா? யோசப்பா? உன்னர பேப்பரிலை நீ யோசேப்பு என்றிருக்கு எண்டார். நான் பறையாமல் இருக்க, கள்ளப் பேப்பரிலையோ வேலை செய்யிறாய்? எண்டு கேக்க, நான் நிமிர்ந்து பார்க்காமல் ஓம் எண்டன்.

அவர் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்துபோட்டு,  மற்ற றெஸ்ட்ரோரன்டைப் போல இல்ல எங்கடை றெஸ்ரோன்ட்.  பெரிய தொடர் கொண்ட பிரஞ்சைஸ் ரெஸ்ரோரனட். நாளைக்கு இந்த கள்ளப் பேப்பர் பிரச்சனையிலை அரசாங்கத்திடைப் பிடிபட்டால் உனக்கு மாத்திரமல்ல எங்களுக்கும் பிரச்சனை எண்டார்.

நான் சொன்னன்.. “செவ் இப்படியே இந்த பிரச்சனைய விடுங்கோ.. நாளைக்கு தொடக்கம் நான் வேலைக்கு வரேல்லை மற்றத் நண்பர்களுக்கு இது தெரிய வேண்டாம்” என்று சொல்லிப் போட்டு அவருக்கு கை கொடுத்திட்டு வெளிய வந்தன். அதுதான் நான் கள்ளப்பேப்பிரிலை வேலை செய்த கடைசி நாள்.

ரொன்ரோவிற்க்கு வந்தபிறகு இந்த கதையை நண்பர்  கரனுக்கு சொல்ல, அவர் வேறு ஒரு கதையைச் சொன்னார். 83, 84 இலை நடந்த தனக்கு தெரிந்த ஒரு குடும்ப கதையெண்டார்.

புருசன் எங்கையோ ஒரு பேக்கரியிலை வேலை செய்தவர்.. மனைவி ஒருநாள் புருசனை கேட்டா.. “இஞ்சேரப்பா.. நானும் வேலைக்கு போகட்டே.. ஊரிலை சண்டைக்கை இருந்து கஸ்ரப்படுகின்ற தங்கச்சிமாரைக் கூப்பிட வேணும். அதுக்குப் பணம் வேணும். சந்தியிலை இருக்கிற பேக்கறியிலை வேலைக்கு ஆள் தேவையெண்டு போட் போட்டிருக்கு” என்றா. புருசனும் “நீயும் வீட்டிலை சும்மா தானே இருக்கிறாய் போறதெண்டாப் போ” எண்டிருக்கிறார்.

இவவும் வேலைக்கு போனா. வேலையிடத்திலை இவக்கு என்ன பெயர் என்று கேட்க.. இவ தன்னர பெயர் புவனமலர் என்றிருக்கிறா. பேக்கரி ஓனர் ஒரு இத்தாலிக் கிழவன். அவர் இவவின்ரை பெயரை புவனமலர் எண்டு கூப்பிடற பஞ்சியிலை பு.. பு.. எண்டு அழைக்கத் தொடங்கி விட்டார். இது வேறு யாருக்கும் தெரிய வராது என்ற நினைப்பிலை அவவும் அப்படியே விட்டிட்டார்.

ஒருநாள் இவ வேலைக்கு போகேல்லை. வீட்டில் நிற்க்கேக்கை ஏதோ அலுவல் பற்றி இவவட்டைக் கேட்க முதலாளிக் கிழவன் ரெலிபேன் எடுக்கப் புருசன்தான் அழைப்பை எடுத்திருக்கிறார். கிழவன்  மிஸ்.பூனாவோடை கதைக்கலாமோ? எண்டு கேக்க புருசன் திடுக்கிட்டுப் போனார். என்ன சொல்றியள்? என கிழவனோடை அவர் வாதிடத் தொடங்க, புவனமலர் வந்து ரெலிபோனை வேண்டி கதைச்சா. கதைச்சு முடிய புருசன் அவவோடை சண்டை போட, இது யாருக்கும் தெரியாது. அங்கை எல்லோரும் வெள்ளைக்கரார்கள் எண்டு புருசனைச் சமாதானப்படுத்தினா.

ஆனால் இரண்டு மூன்று வருடத்திலை பேக்கரி பெரிசாகி சிறிலங்கன் பெடியளும் கனடாவுக்கு வந்து குவிந்த நேரத்திலை இரண்டு மூன்று பெடியள் அங்கு வேலைக்கு வந்து சேர்ந்திட்டாங்கள். அவங்களும் இவவை பு அக்கா எண்டு அழைக்கத் தொடங்க, பதறிப்போன புவனமலர் குடும்பம் வேலையை மட்டுமில்ல.. அந்த இடத்தையே விட்டிட்டு வேறை சிற்றிக்கே மாறிப் போயிட்டினம்.

இவ்வளவையும் சொல்லிப் போட்டு கம்பனை இதுக்கை இழுக்காட்டால் எனக்கு நிறைவுறாது

பத்தாம் வகுப்பு படிச்சுக் கொண்டிருக்கேக்கை தமிழ் இலக்கியம் படிப்பிக்கிற வித்துவான் மாஸ்ரர்  ஒரு கிழமை லீவிலை போயிட்டார்.

அவருக்குப் பதிலாக வந்தவர் பொடி மாஸ்ரர் எண்டுற ஆங்கில வாத்தியார். அவருக்கு தமிழ் , ஆங்கிலம் இரண்டிலையும் புலமை. நல்ல நடிகர். பள்ளிகூடமே விரும்புகின்ற  ஒரு இனிமையான  ஆசிரியர்.

வகுப்புக்கு வந்தவர் இப்ப என்ன படிகின்றீயள்? எண்டு கேட்க, கடந்த இரண்டு மூன்று மாதமா யுத்தகாண்டம் போய்க்கொண்டிருக்கின்றது என்றோம்.

அதிலைதான் கம்பன்ரை அருமையான பாட்டெல்லாம் இருக்கு எண்டு யுத்தகாண்டத்தைத் திறந்து

மண்டோதரி உயிர்விட்ட இராவணேஸ்வரனை மடியில் வைச்சுக்கொண்டு அழும் பாடலுக்குப் போனார்

எங்கையோ பார்த்தபடி.. சீதை யென்ன சீதை.. அழகிலையும் குணத்திலையும் மண்டோதரிதாண்டா  உண்மையான பெம்பிளை எண்டு மண்டோதரி நினைப்பிலை மூழ்கிப் போனார்.

பிறகு.. கம்பனுக்கும் இது நல்லாய்த் தெரியும் எண்டவர்.. கொஞ்சம் யோசிச்சுப் போட்டு, பெருங்குரலில்..

என்று அழைத்தனள்

ஏங்கி எழுந்து அவன் பொன் தழைத்த பொரு அரு மார்பினைத்தன்

தழைக்கைகளால் தழுவி  -தனி நின்று அழைத்து

உயிர்த்தாள் உயிர் நீங்கினாள்..

எண்டு பாடிப்போட்டு.. “வித்துவான் மாஸ்ரர், உங்களுக்கு இதை படிபிச்சிருக்கலாம்.. ஆனால் அந்தாள் இந்த நுட்பத்தைப் பிடிக்காதாடா”  பிடிச்சிருந்தாலும் வேதம் பள்ளிக்கூடம் எல்லோ  பெடியள் கெட்டுப்போகும் என்று வித்துவான் சொல்லாது  என்று சொல்லிப்போட்ட எங்களப் பாத்து கேள்வி கேட்டார்.

“தனி நின்று அழைத்து..” என்றால் என்னண்டு சொல்லுங்கோ பார்ப்போம்” எண்டார்.

எங்களுக்கு என்ன தெரியும்? வளர்த்த முகத்தை நாய் பார்த்த மாதிரி.. அவற்ரை முகத்தை பார்த்துக் கொண்டிருந்தோம்.

“காதலிக்காத.., கல்யாணம் முடிக்காத உங்களுக்கு இது விளங்காது.  புருசன் பெண்சாதியையும் பெண்சாதி புருசனையும் அழைக்கிறதுக்கு  தனிப்பெயர் வைத்திருப்பினம்.

என்ன சண்டைகள் வந்தாலும் அன்பான நேரங்களிலை மற்றவைக்குத் தெரியாமல் அந்தப் பெயர்களிலை அவை தங்களைக் கூப்பிட்டுக் கொள்ளுவினம். அதுவும் ‘அந்த நேரத்திலை’… எண்டு சொல்லிப்போட்டு ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிச்சுக்கொண்டு எங்களப் பார்த்து “என்னடா விளங்குதோ” எண்டார். விளங்கின அரைவாசிப் பொடியள் கெக்கட்மிட்டு சிரிச்சபடி  விளங்குது..  விளங்குது.. எண்டாங்கள்.

“தானிருக்க இன்னொரு பெண்ணை விரும்பினவனை அவன் சாகின்ற போது மடியிலை வைத்து எத்தனை பெயர் இருந்ததும் அந்தப் பத்துத் தலையனை.. தன் அன்புக்குரியவனை அந்தரங்கமான நேரத்தில் தான் அழைக்கும் ஒருவருக்கும் தெரியாத அந்தப் பெயரைத் தனி நின்று அழைத்து அவனோடு உயிர் விட்டாள்” என்று சொல்லி கண்ணைத் துடைத்தார்.

பெயரிலை என்ன இருக்கு..? என்று சொல்லுறவை இப்ப சொல்லுங்கோ.. பெயர் எண்டிறது எவ்வளவு பொல்லாத விசயம்.

***

பரவைக் கடல்

0

செ. டானியல் ஜீவா

ம்மா பரலோக மாதாக்கோயிலுக்குப் பின்னேரம் ஆறுமணியளவில் போயிற்று வந்து எங்கள் வீட்டின் படிக்கட்டில் உட்கார்ந்து இருந்தாள். நான் அப்போதுதான் பின்னேரக் கடனை கடற்கரையில் கழித்து விட்டு கடலிலேயே கழுவி விட்டு வீட்டிற்கு வந்து படிப்பதற்கு ஆயத்தப்படுத்தினேன். அம்மாவை உற்றுப் பார்த்தேன். கண்கள் அழுது வீங்கியிருந்தது. நேற்று முன்தினம் தான் நாங்கள் புதிதாக சிறகு வலை பின்னி இன்று மதியம்தான் பரவைக் கடலில் பாய்ந்து போட்டு வந்த அப்பா களைத்துப் போய் விறாந்தையில் தூங்கிக் கொண்டிருந்தார்.அவருடைய மூச்சொலி காற்றில் கலந்து எங்கும் பரவியது. தூங்கிக் கொண்டிருந்தாலும் அவருடைய உடல் போர் வீரர்கள் போல் கம்பீரமாக இருந்தது.

அம்மாவின் முகம் எப்போதும் என் மனதில் ஓரத்தில் தெளிவாகத் தெரியும். கறுத்த தலைமுடியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெள்ளை முடி படர்ந்திருக்கும். இரண்டு காதின் ஓரமாகவும் சில முடிகள் கீழ்நோக்கிச் சுருண்டும் நெளிந்தும் கிடக்கும். மளையாளப் படமான செம்மீனில் வரும் செம்பன்குஞ்சுவின் மனைவி சக்கி போலவே தோற்றமும்,  உடையும் அணிந்து வீட்டில் இருப்பார். எங்க ஊரில் அப்படி யாரையும் நான் கண்டதில்லை. ஆனால் வெளியில் செல்லும்போது வழமையான சாறியும், சட்டையுடனுமே செல்வார்.

அம்மா என்னைப் பார்த்து அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது..

“மோன எறும்பு போல சுறு சறுப்பாக இருக்க வேணும். வாழ்க்கை குறுகிய காலம்தான். பிறருக்கு உதவி செய்ய விட்டாலும் தீங்கு செய்யாமல் கடவுளின் பிள்ளையாக வாழந்தாலே போதும். எனக்கு பசி வந்தால் தலையைச் சுற்றிக் கொண்டிருக்கும், கண் மங்கிக்கொண்டு வரும் அப்படி இருக்கும்பொழுது இந்த உலகமே இருண்டது போல உணர்வு இருக்கும் மோனை”என்று சொல்வார் என்னுடைய அம்மா. இப்போ எனக்கும் அந்த(ப்) பசியில் அதே நிலமை வந்து விட்டது போல் உணர்ந்தேன். நேற்றுக் குடித்த புளி இலைக்கஞ்சி வயிற்றின் மேற்பரப்பில் எழுந்து என்னை படாத பாடுபடுத்திக் கொண்டிருந்தது. இன்று இரவும் வீட்டில் சமைத்த மாதிரி எந்த மணத்தையும் காணவில்லை. பட்டினிதான் எங்க வீட்டில் என்று உறுதியாகி விட்டது.

பழைய சிறகுவலை பழுதாகியதாலே ஒரு கிழமைக்கு முன்னர் புதிய வலையும், நூலும், கயிறும்  யாழ்ப்பாணத்திலுள்ள கடை ஒன்றில் வாங்கினோம். ஒரு கிழமை பிடித்தது அவற்றை ஒழுங்கு படுத்த. பின்னிய வலை நேற்று கடலில் பாயப்பட்டது. இன்னும் வலையினதும் ,நூலினதும், கயிற்றினதும்  வாசனை  வீட்டைச்சுற்றி நிறைந்து கிடந்தது. இந்தப் பொருள்கள் வாங்குவதற்கு அம்மாவும், அப்பாவும் பட்ட கஷ்டம் நிறையவே . முதலில் உறவினர்கள் கடன்  உதவி செய்வார்கள் என்று எதிர் பார(ர்)த்திருந்தோம் கடசி நேரத்தில் அவர்கள் இல்லையென சொல்லி விட்டார்கள். அதன் பின்னர் தான் அக்காவின்ர தோடும் சங்கிலியும், அம்மாவின்ர தோடும் அடைவு வைத்துதான் இவற்றை வாங்கினோம்.

பசி கிடந்ததால் வயிற்றில் புண் வந்தது போன்ற ஒரு உள் உணர்வு என்னுள் எழுந்தது. கடற்பாசி உடலில் படர்ந்தது போல ஒரு வகையான அரிப்பும் பிசுபிசுப்பும் உடல் முழுவதும் விரவி நெளிவது போல் உணர்ந்தேன் .மறுகனமே அது என் மனம் வருந்தியதால் ஏற்பட்ட ஒரு பிரமை என்பதை உணர்ந்தேன்.

என்னுடைய அப்பாவுக்கு நான் பள்ளிக்கூடம் போவதில் பெரிதாக விருப்பம் இருக்கவில்லை  என்று எனக்குத் தெரியும். அதை அப்பாவின் பல்வேறு வகையான நடவடிக்கைகள் மூலம் நான் கண்டு கொண்டேன். சிறுவயதில் இருந்து கடல் தொழிலுக்கு சென்று வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிலேயே பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைந்தவர்களை எங்கள் ஊரில், உறவில் பார்த்து இருக்கிறோம். அதனால் தன்னோடு வந்து தொழிலை பழகிக்கொள்ளவே அவருக்கு விருப்பமாக இருந்தது. ஆனால் அம்மா விடாப்பிடியாக என்னை படிப்பிக்க வேண்டும் என்று நின்றாள். அதனால் அப்பா தன்னுடைய விருப்பத்தில் இருந்து பின்வாங்கினார். பொதுவாக அவர்  அப்படித்தான். அம்மாவை மீறி எதுவும் செய்வதில்லை. அம்மா அப்பா மீது கொண்ட பாசத்தை வார்த்தையால் சொல்ல முடியாது. அவர் மீது காட்டுகின்ற அன்பையும் ஆதரவையும் என் கண்ணால் பார்க்கும்போதே பல தடவைகள் என் கண்கள் கலங்கிப் போனது.

அப்பா எங்களை வளர்ப்பதற்கு பெரும் கஷ்டப்படுகிறார் என்று எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். அவர் எங்களைக் கஷ்டப்பட்டு வளர்க்கின்றவர் என்று ஒருநாளும் தன் வாயால் எங்களுக்கு அப்பா எங்களைப் பார்த்து சொல்லிக்கொள்ள மாட்டார். அதேநேரத்தில் தான் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்து எல்லோரையும் காப்பாற்றி வருகிறார் என்றும் ஒருநாளும் வெளிக்காட்டவும் மாட்டார்

நாளைக்காலை தொழிலுக்குப் போய் வீடு திரும்பும்வரை தேத்தண்ணீரைக் கூட வைத்துக் குடிக்க வழியற்ற நிலைதான் எங்களுடைய குடும்ப நிலை. ஆனால் அம்மாவோ எங்களைப் பிடித்தாட்டுகிற கிரகமெல்லாம் நாளை அப்பா பிடித்து வருகிற மீன் சாதிகளோடு தொலைந்து போய்விடும் என்று அம்மா நினைத்துக் கொண்டே இருந்தாள்.

”பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே” என்ற செபத்தை அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். மாதா மீது அளவற்ற பற்று கொண்டவர்களாக எங்கள் வீட்டில் எல்லோரும் இருப்பார்கள். அம்மா அப்படி அழுது மன்றாடியதால்தான் பலதடவை மாதாவின் அருள் கிடைத்துப் பல ஆயிரம் ரூபாவிற்கு அப்பா இறால் பிடித்து விற்றவர் என்று அம்மா அடிக்கடி சொல்வது வழக்கம். அதேபோல் நாளைக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவள் இருந்து மன்றாடிக் கொண்டிருக்கிறாள்.

அம்மாவின் வேண்டுதல் எல்லாம் பெரிதாகவே இருக்கும். ஆனால் கடவுளுக்கு கொடுப்பது மட்டுமே சிறிதாகவே இருக்கும். செவ்வாய்க்கிழமை கோயிலுக்கு வந்து பத்து மெழுகுவர்த்தி கொளுத்துவேன் அல்லது காசு உண்டியலில் காணிக்கை செலுத்த வருவேன். இதையும் தாண்டி கொஞ்சம் வேண்டுதல் பெரிதாக இருந்தால்  அது இந்த முறை மடு அன்னைக்கு நான் வருவேன் என்பதாகவே இருக்கும். அம்மா இப்படியெல்லாம் சொல்வதும், அவற்றை வறுமையின் நிமித்தம் செய்யாமல் விடுவதும் வழக்கம்தான். ஆனால் எனக்கோ மாதா பழிவாங்கி விடுவாவோ என்று மனதிற்குள் ஒரு அச்சம்  அவ்வப்போது தோன்றி மறையும் போது உடல் நடுங்கி பின் தானாக தணிந்து போகும். நான் சிறுவனாக இருந்தபோது முத்துராசா பெரியப்பாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. 

ஒருநாள் பெரியப்பா பெரியம்மாவோடு வாய்த்தகராறு செய்து விட்டு வீட்டிலிருந்து கள்ளுத் தவறனைக்கு மதியம் போலப் போனவர் இரவு ஒன்பது மணிவரை குடி குடி என்டு குடித்திருக்கிறார். காலையிருந்து ஒன்னும் சாப்பிடாமல் இருந்த பெரியப்பா கள்ளுக்கடைக்குள் வழமையாக விற்கிற மரவள்ளிக் கிழங்கையும், செத்த மிளகாய்ச் சம்பலையும் நன்றாக வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார். கள்ளுத் தவறனை பூட்டிய பிறகு அவர் கடற்கரையில் தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்து கொண்டிருக்கும் போது காற்றும், கடல் அலையும் உரத்திருந்தது. மெல்ல மெல்ல நடந்து வரும்போது பெண்களை இழிவாகவும், கெட்ட வார்த்தைகளாலும் வசை பாடிக்கொண்டு குறுக்கு வழியாக அவருடைய வீட்டிற்கு வருவதற்காகக் கோயில் வளவுக்குள் வந்த போது யாரோ அவரை கடுமையாக முகத்திலும், உடம்பிலும் தாக்கியதால் சத்தி எடுத்தபடியே நிலத்தில் வீழ்ந்து விட்டார். அன்றிரவே “பெண்ணை இழிவாகவும்,கெட்ட வார்த்தையாலும் பேசியதால் வானத்திற்கும் பூமிக்கும் அண்மித்த பகுதியில் அந்தரத்தில் நின்று ஊருக்குக் காவலாக இருக்கும் மாதாதான் அவரை அடித்ததாக ஒரு கதை பரவத் தொடங்கியது. அந்தச் சம்பவத்தின் பின்னர் அவர் மூன்று நாளாக வீட்டை விட்டு வெளியில் வராமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். இந்தச் சம்பவத்திற்கு பிறகு அவர் அவருடைய மனைவியை மட்டுமில்லை எந்தப் பெண்ணையும் இழிவாகக் கதைப்பதை நிறுத்தி விட்டார். அன்றோடு குடிப்பதில்லை என்றும் முடிவெடுத்து விட்டார்.

நாட்(ற்)காலியிருந்து கொண்டே அண்ணாந்து இடது பக்கமாகச் சுவரில் ஆணியிலிருந்து தொங்க விடப்பட்ட சிலுவையில் கண்கள் ஒரு கணம் நிலைத்து நின்றது. சிலுவை சுமந்து, சிலுவையில் அறையுண்டு, சிலுவையிலேயே மரணித்துப் போனாய். எல்லாச் சுமைகளையும் எங்களுக்காக ஏற்றுக் கொண்டாய். சிலுவையின் சுமை தோள்களைத் தாக்கியதில் நீர் மூன்று முறை விழுந்து எழுந்தாய். ஆயினும் கல்வாரி வரை உன் பயணம் தொடர்ந்தது. திடீரென ஒரு நினைவு வந்தது. அம்மாவுக்கு ஏதாவது நடந்து பொட்டெனப் பூமியை விட்டு மறைந்து போனால்..? எங்கள் குடும்பத்தின் நிலை என்னாவது? அப்பாவுக்கு ஒண்டு நடந்து விட்டால்..? நினைக்கவே பயமாக இருந்தது.

ஒரு வகையான மனச்சோர்வு என்னுள்ளே இறங்கித் தாக்கியது. படித்துக் கொண்டிருந்த பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் போய்விட்டது. உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்து படுப்பதற்காக பாயை விரித்தேன். அப்படியே விழுந்து விட்டேன். தூங்கும் போது இரவு பதினோரு மணியைக் காட்டியது சுவரில் மாட்டியிருந்த கடிகாரம்.

விழிக்கும் போது அதிகாலை ஆறு மணியாகி இருந்ததால் கண்ணைக் கசக்கி கொண்டு அப்படியே எழுந்து படிப்பதற்காக உட்கார்ந்தேன். மனம் என்றுமில்லாதவாறு அமைதியாகவும் உற்சாகமாகவும் இருந்தது. ஆனால் நேற்றுக் காலை துவர் வைத்து பாய்ந்த சிறகுவலை மனதில் வந்து அரித்துக் கொண்டே இருந்தது வலைக்குள் மீன்சாதி ஏதாவது கிடைத்தால்தான் இன்றைய தினம் சந்தோஷமாக இருக்கும். இல்லை என்றால் வழமையான சோகமான நாட்களைப் போல் நகரப்போகுதோ என்ற அச்சத்தால் மனதில் ஒரு இனம்புரியாத படபடப்பு தொற்றிக் கொண்டது.

நான் வழமையாகப் படிப்பதற்கு அதிகாலையில் விழித்துக் கொள்வேன். அதிகாலை வேளையில் தான் எனக்குப் படிப்பதற்கு அமைதியாகவும், வசதியாகவும் இருக்கும். எனக்கு விஞ்ஞான பாடம் அவ்வளவாக ஓடாது. அந்தப் பாடத்தை மட்டும் நன்றாக சத்தம் போட்டுப் படிப்பேன். சமய பாடத்தில் அதிக மதிப்பெண்களை எடுப்பேன். வகுப்பில் சராசரிக்கும் கொஞ்சம் மேலாகவே என்னுடைய படிப்பு இருக்கும். என்னுடைய தங்கச்சியை விட நான் நன்றாக படிப்பதால் வீட்டில் எனக்கு கூடுதல் கவனிப்பும் இருக்கும். தங்கச்சி அவற்றை பெரிதுபடுத்துவதும் இல்லை. அவ்வப்போது ஏதேனும் சந்தர்ப்பத்தில் பகிடியாக சொல்வாள் அவ்வளவுதான்.

படிக்கும் அறையிலிருந்து கொண்டு ஜன்னல்கள் வழியாக வெளியே பார்த்தால் எங்கள் வீட்டின் பின்புறம் அப்படியே தெரியும். பின்பக்கமாக கழிப்பறையோ, கிணறோ கிடையாது. பொதுக் கழிப்பிடம், பொதுக் கிணறுகள் என்றே எங்களுடைய வீட்டாரின் வாழ்க்கை இருந்தது.

எங்கள் வீட்டைச் சுற்றி கிடுகு வேலிகளாலேயே அடைத்து இருக்கும். வீட்டின் பின்புறத்தில் நடக்கின்ற அத்தனை விடயங்களையும்  ஜன்னல்கள் வழியாகப் பார்கலாம் .பக்கத்து வீட்டுக்காரரின் எல்லை வேலியிலிருந்து ஜன்னல் கம்பியில் கயிறு எப்பொழுதும் கட்டப்பட்டிருக்கும். இந்த கொடியில் தான் எங்கள் வீட்டாரின் கையால் துவைக்கும் உடைகள் காயப்போடப்படும். நேற்றுப் பிற்பகல் தோய்த்துப் போட்ட அக்காவின் உடைகள் இன்னும் காய்ந்து கொண்டிருந்தது.

அப்பா காலையில் தொழிலுக்குப் போய் வந்த பின் மரக்கோல், பறி, அத்தாங்கு, கடிப்பு எல்லாவற்றையும் இந்தக் கொடிக்கு கீழேயே வைப்பார். கடிப்பை மட்டும் காயப்போடுவார். காயப் போடப்பட்ட கடிப்பு  வலை சில சமயங்களில் ஒழுங்காகத் துப்பரவு செய்யப்படவில்லை என்றால் கடிப்பு வலைக்குள் காணப்படும் சாதளைகள், தேரை, மீன்களை காகங்கள் போட்டி போட்டுக்கொண்டு கொத்தி எடுத்து சாப்பிட்டு விட்டு கா கா என்று கத்திக்கொண்டே இருக்கும். சிலவேளைகளில் இவை எல்லாம் எனக்கு மிகவும் எரிச்சலை ஏற்படுத்தும். ஒரு வகையில் படிப்பதற்கு இவை இடையூறை விளைவிப்பதாக உணரும் போது அவற்றை சூ சூ என்று கலைத்தால் அவை எங்கட தங்கச்சியயைப் போல் அனைத்துமே காது கேட்காதது போல நின்று சாப்பிட்டுக்கொண்டே நிற்கும். ஒருக்க இரண்டு தடவைகள் நான் கத்திப்போட்டு அவற்றை கையை விட்டு விடுவேன்.

அப்பாவின் கால் சத்தம் கேட்டது. அப்பா இவ்வளவு நேரத்தோடு வருவது வழக்கமில்லை. கடிப்பை அப்படியே வேலியோடு சாத்தி வைத்தார். வழமையாகக் காயப் போடுவார். ஆனால் இன்று அப்படிச் செய்யவில்லை. கடிப்பில் ஈரமில்லை.. எல்லாம் வழமைக்கு மாறாகவே இருந்தது.  ஒருவித அச்சம் மனதில் பரவியது.

விறாந்தையிலிருந்து அப்பா பதற்றமாக கதைத்துக் கொண்டிருப்பது என் காதில் அரைகுறையாக  விழுந்தது. என்ன நடந்திருக்கும்? அறிய ஆர்வம் மேல் எழுந்தது. வெளியே விறாந்தைக்கு வந்தேன். அக்கா, தங்கச்சி, அம்மா, அப்பா எல்லோரும் கண் கலங்கியபடி அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்கள்.

“அம்மா எந்நன நடந்தது..?”

“நேற்று பரவைக் கடலில பாஞ்ச புது வலையை யாரோ இரவோடு இரவாக களவெடுத்துக் கொண்டு போயீற்றாங்கலாம்” அம்மா அழுது கொண்டே சொன்னார். எனக்கு கண்ணீரோடு கவலை தொடங்கியது.

***

எதிர்வினை – சேனன்

0

(நிலாந்தன் – ஷோபாசக்தி நேர்காணலை முன்வைத்து சேனனின் எதிர்வினை)
இணைப்பு : ஷோபா சக்தி நேர்காணல், நிலாந்தன் நேர்காணல்

1

இலக்கியப்பிரதி இன்பம் எனப் பேசப்படும் அபத்தம் கொஞ்சம் அசந்தால் அரசியலை மூன்றாம் நான்காம் இடத்துக்கு தள்ளிவிடும் எனக் கமலஹாசனின் முகத்திரையைத் தோலுரிக்கும் பொழுது யமுனா ராஜேந்திரன் சுட்டி இருப்பார். (பார்க்க உன்னைப்போல் ஒருவன் – பயங்கர வாதம் குறித்த பயங்கரவாதம் 2009). 

அரசியல் சரித்தன்மை – அல்லது சமூக விஞ்ஞான ஆழம் பற்றிய அதிகாரத்தொனியை இலக்கியக்காரர் கையில் எடுக்கும் அபத்தம் தமிழ் பேசும் உலகில் மிக அதிகம். சினிமா மற்றும் இலக்கியத் துறையினர் அரசியலில் நிரம்பிக் கிடக்கும் நிலை இந்தளவுக்கு உலகில் வேறு எங்கும் கிடையாது. நாலு கதை எழுதி விட்டு – அல்லது ஒரு படம் எடுத்து – அல்லது நடித்து விட்டு கலைஞர்கள் சமூக விஞ்ஞானிகளாக உருமாற்றம் கொண்டு கலையாடும் கருமத்தை நாம் தமிழ்பேசு உலகில் பார்ப்பது போல் வேறு எங்கும் பார்க்க முடியாது.

தமிழ் மொழியில் மட்டும் இயங்கி நிபுணத்துவத்தின் உச்சத்தை அடைவது எத்துறையிலும் (கலை தவிர்த்து)  சாத்தியமில்லை. வேறு மொழி தேவை அவசியமற்ற கணிதத்துறையில் கூட ஒரு கட்டத்தில் நிபுணத்துவத்தின் முனையை எட்ட அந்நிய மொழியை பற்றிப்பிடிக்க வேண்டிய தேவை இராமனுஜம் போன்றோருக்கு ஏற்பட்டதை அறிவோம். இதைச் சொன்னவுடன் தமிழ்மொழி மட்டும் பேசுவோர் அனைவருக்கும் எதிரான கருத்து இது என சில தலைகள் குழம்பலாம்.

இது மொழி பேசுவார் பற்றிய பிரச்சினை இல்லை. மொழிபெயர்ப்புத் துறை மற்றும் துறைசார் திறன்களை மொழிசார்ந்து வளர்க்காத எல்லா மொழிகளும் எதிர் கொள்ளும் சிக்கல் இது. ஆனால் இந்தப் போதாமையைப் பெருமையாக பேசும் – அதேசமயம் தாம் அறியா விசயங்களில் தாம் நிபுணர் எனக்காட்டிக் கொள்ளும் ராஜா ராணிகள் நம்மவர்கள் மத்தியில் அதிகம். தமது அறிவின் குறைபாடுகளை மறைக்க அவர்கள் துறைசார் அறிவோரையும் அறிவிலிகள் என சொல்லித் திட்டுவர்.

எதைப் பற்றியும் கருத்துச் சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களிள் – குறிப்பாக மாஸ் கலைஞர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு ஒரு சமூகப் பயன்பாடு உண்டு. அவர்கள் அதை அதிகாரமாகப் பாவித்து தமது போதாமையை அல்லது பிற்போக்குத் தனத்தை அறிதலின் உச்சமாக பொதுப்புத்தியில் அடித்து இறக்கும் பொழுது அதை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டிய அவசியம் மற்றவர்களுக்கு இல்லை. ஆனால் நாம் இங்கு சொல்லும் அடிப்படை சனநாயக உரிமை பற்றிய அறிதல்கூட பலருக்கு இருப்பதில்லை. தமது கருத்து அதிகாரத்தை நிலைநாட்ட அவர்கள் வலதுசாரிய ஒடுக்குமுறை நிறுவனங்களையும் பாவிக்கத் தயங்குவதில்லை.

2

அரசியல் சார் இயக்கத்திற்கோ அல்லது அரசியல் சார் அறிதலுக்கோ எந்தப் பங்களிப்பையும் செய்தவரல்ல ஷோபாசக்தி. அறிவுபூர்வமான ஒரு விவாதத்தை அவரோடு செய்வதன் சாத்தியமின்மை பற்றி அனைவரும் அறிவர். முன்பு இது பற்றி வளர்மதி தெளிவாக எழுதி இருந்த ஞாபகம் – தேடி எடுத்துப் படித்துக் கொள்ளவும்.

நான் எப்போதும் வாதத்துக்கு தயார் என தமிழ் சினிமா பாணி சவால்களை அவ்வப்போது விட்டுக்கொண்டு இருக்கும் ஷோபாசக்தி – எந்தத் துறையின் உச்ச அறிவின் அடிப்படையில் அத்தகைய தெனாவட்டை செய்கிறார் என ஒருபோதும் சிந்தித்து பார்த்ததில்லை. கலைஞர் என்ற ஒன்றை தாண்டி வேறு எதற்கும் உபயோகமற்ற ஒன்றுதான் அவர் தோள்களில் இருக்கிறது. அவருக்கு நிபுணத்துவம் இருக்கு என தேடித்திரிந்து அவரோடு யாரும் மோத வருவதில்லை.

அவரது அடாவடித்தன – எடுத்தெறிந்த கருத்துக்களால் தான் இந்த சச்சரவு வருகிறது. சரி என வாதிக்க சென்று கருத்துக்களை வைத்தால் அவை எதற்கும் பதில் வராது. கருத்துகளுக்கு பதில் சொல்லிய வரலாறு அவருக்கு இல்லை. அறிவார்ந்த விசயங்களை அலசும் சக்தி அற்ற அவர் குறுக்கால மறுக்கால ஏதாவது திட்டுவார் – எங்கை பிழை பிடிக்கலாம் என பார்த்து ஏதாவது ஒரு புள்ளியைப் பிடித்து கொக்கரிப்பார். அவர் ஒரு குறுக்கோடி. அவர்மேல் சுட்டிக் காட்டப்பட்ட பிழை பற்றியோ அல்லது கருத்து முரண் பற்றியோ உரையாடல் இருக்காது. அவர் செய்வது படிப்பல்ல – கொறிப்பு. வாசிப்பு அறிதல் அங்கில்லை. கொறித்ததன் தெறிப்புகள் மட்டுமே. அதனால் நீட்டி நிமிர்த்தி அவருக்கு அரசியல் பதில் எழுதுவதில் எந்தப் பிரியோசனமும் இல்லை. அவர் எழுதக்கூடிய பதிலை நானே எழுதித் தந்துவிட முடியும். அது ஓன்றும் பெரிய கடினமில்லை.

ஆனால் ஒருவிதத்தில் ஷோபாசக்தி தனிமையில் இல்லை. அவரது ‘வளர்ச்சி’ அவரை மிதவாத மையத்தில் நிறுத்தி உள்ளது. மிதவாதம் – சந்தர்ப்ப வாதம் –அடையாள அரசியல் – மற்றும் மார்க்சிய வெறுப்பு செய்யும் பெரும் குழுவுக்கு முதுகு கொடுத்து நிற்கிற பலரில் அவரும் ஒருவர்.

இந்தச் சக்திகள் ஏதாவது ஒரு முறையில் ஏதாவது ஒரு அதிகாரம் சார்ந்து இயங்குவன. ஒடுக்கப்படுவோரின் பெயரால் ஒடுக்கப்படுவோரின் நலன்களைத் தங்கள் சுய லாபத்துக்காக விற்பவர்கள். அவர்கள் ஒத்தோடிகள். அதிகாரம் திணிக்கும் அறத்தைப் புனிதமாக்கவும் – அதை எதிர்பாரை புறந்தள்ளி ஒதுக்கி முடக்கவும் அவர்கள் தமது சேவையை இலவசமாக வழங்கி வருகின்றனர். அதற்கு பதிலுபகாரமாக சிறப்பு சலுகைகள் – மாஸ் ஊடகம் மற்றும் அதிகார நிறுவனங்களின்  கவனம் ஆகியன அவர்களுக்கு கிடைக்கிறது.

இது நேரடியாக நிகழும் ஒன்றல்ல. ‘அரசாங்கத்திடம் காசு வாங்கிறார்’ என்பது போல் கொச்சையான நடைமுறை அல்ல இது. அத்தகையோரை எதிர்ப்பதும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதும் சுலபம். ஆனால் இவர்களின் பழக்க வழக்கம் வேறு. நுணுக்கமாக இயங்கி தங்களை சிறப்பு சலுகைகளுக்கான வரிசையில் இருத்தும் நடவடிக்கை இது. இதனால் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக சிலவற்றை எழுதித்தீர வேண்டி உள்ளது.

அகரமுதல்வனுக்கு ஷோபாசக்தி வழங்கிய பேட்டியில் ஏதாவது புதிய உருப்படியான கருத்து இருந்தால் யாராவது சுட்டிக் காட்டுங்கள். ஆங்காங்கு கனக்கும் தெனாவெட்டுக் கதைகள் தவிர வேறில்லை. ஆனால் மிதவாதிகள் தொடர்ந்து முன்வைத்து வரும் முக்கிய மூன்று புள்ளிகளை இங்கு நாம் மீண்டும் கடுமையாக மறுக்க வேண்டி உள்ளது. 

அந்தகம் – இதழுக்காக அகரமுதல்வன் செய்யும் நேர்காணல் வரிசையில் விவாதத்தை உருவாக்குங்கள், எழுதுகிறேன் என முன்கூட்டியே அகர முதல்வனுக்கு வாக்கு கொடுத்தது என் பக்கத்தில் ஒரு மடத்தனமான – அறிவிலித்தனமான செயல்தான் என்பதை பேட்டியைப் படித்ததும் விளங்குகிறது. குறிப்பாக இதுவரை வெளியானதில் ஷோபாவின் பேட்டியில் ஓன்றுமே இல்லை.

3

புலிகள் தான் தமது தவறான அரசியல் வழிமுறையால் மக்களை மனிதக் கேடயங்களாக பாவித்து நந்திக்கடலில் தள்ளிக் கொன்றவர்கள் என்பது இவர்கள் திரும்ப திரும்ப சொல்லும் ஒன்று.

இந்த வாதத்தை முன்வைப்போர் இலங்கை அரசின் மேல் முழுப்பொறுப்பையும் போட மறுத்து வருபவர்கள். நூறுவீதம் புலி எதிர்ப்பு – நூறுவீதம் அரச எதிர்ப்பு என்ற ஒன்றெல்லாம் கிடையாது – அது வெறும் வெற்றுப் பேச்சு என்றெல்லாம் பலமுறை பலரும் சுட்டிக் காட்டினாலும் அதைப் புரிந்துகொள்ளக் கூடிய சக்தி அவர்களுக்கு இல்லை.

மக்கள் படுகொலையில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் பாதிப்பாதி பொறுப்பு இருக்கு என்று கூட இவர்கள் சொல்வதில்லை. ஏனென்றால் அது இவர்களின் நூறுவீத புலி எதிர்ப்பில் பங்கத்தை கொண்டுவந்து விடும். இருனொரு வீதம் அரச எதிர்ப்பு என்று கூட கணக்கு படிப்பிக்க வந்து விடுகிறார்கள். இவை அரசியல் ரீதியாக (கணக்கு ரீதியிலும்) எத்தகைய வெற்று வார்த்தைகள் என்பதை அறிய மாட்டார்.

‘புலிகளை எதிர்க்கிறோம் அதைவிடக் கூட அரசை எதிர்கிறோம்’ என இவர்கள் சொல்லிக் கொள்வதாக எடுத்துக்கொண்டால் கூட அதுவும் தவறே. புலிகள்தான் கொன்றார்கள் என்று மட்டும் ஏன் உங்கள் பிரச்சாரங்கள் புலி எதிர்ப்பில் மையப்பட்டு நிற்கிறது. இது தவிர இந்த உரையாடல் பற்றிய பல்வேறு அரசியற் புள்ளிகள் உள்ளன. போராட்ட அமைப்பு, ஆயுதப் போராட்டம், இராணுவ திட்டமிடல் பற்றிய தகவல்கள் எனப் பல உண்டு. இது பற்றி நான் உட்பட பலர் ஏராளமாக எழுதி உள்ளனர். அவற்றை இங்கு திரும்பிச் சொல்லும் தேவை இல்லை.

இனப்படுகொலை எனச் சொல்லிக் கொண்டு புலிகள்தான் நந்திக்கடலில் மக்களை தள்ளினர் என்றும் சொன்னால் அதற்கு என்ன அர்த்தமப்பா? கேக்கிறவன் கேனயன் என்றால் எலி ஏரோபிளேன் ஓட்டுமாம் என்று இதுபற்றி நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார். விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் யுத்த இறுதிக்காலத்தில் நிகழ்த்திய வன்முறையை நான் ஒருபோதும் ஒளித்து மறைத்து பேசியதில்லை. அதே சமயம் படுகொலையில் சேர்ந்து இறந்து போன அவர்கள் தலையில் மட்டும் பழி சுமத்தி புலி எதிர்ப்பை மட்டும் செய்வார் மத்தியில் குளிர் காய்ந்ததும் இல்லை.

முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்த கையோடு கொலைகளை மறக்கும் அடிப்படையிலான பகை மறப்பு பிரச்சாரத்தை ஷோபாசக்தி செய்யத் தொடங்கினார். அவர் செய்யும் கொலை மறப்பு உண்மையில் கொலை மறைப்பு என நாம் சுட்டிக்காட்ட வேண்டி இருந்தது. இலங்கை அரசு கொத்துக்கொத்தாக கொன்ற மக்களை நாம் மறந்து போகப் போவதில்லை – மறந்து விடுங்கள் என ஷோபாசக்தி சொன்ன கதையையும் மறக்கப்போவதில்லை. இலங்கை அரசாங்கம் செய்த அனைத்துப் படுகொலைகளையும் மறப்போம் என்று ஷோபாசக்தியும் அவரது ஆட்களும் முன்னெடுத்த பிரச்சாரத்தை மானுட மீட்ச்சியின் மீது நம்பிக்கை கொண்ட எவராலும் ஏற்கவும் மறக்கவும் முடியாது. அறம் தொடர்பாக கதைக்க அவருக்கு என்ன அருகதை இருக்கிறது. புலிகளை எதிர்க்கும் அளவிற்கு அரசையும் எதிர்த்தேன் என்ற மாபெரும் கதையை இந்த நேர்காணலிலும் ஷோபா சொல்லாமல் விடவில்லை.

ஷோபாசக்தி வகையறாக்களின் அரச எதிர்ப்பு என்பது ஒத்தோடும் தன்மையானது என்ற அடிப்படையில்தான் அகரமுதல்வன் ஒரு கேள்வியைக் கேட்கிறார். அதற்கு என்ன தெனாவட்டாக பதில் வருகிறது பாருங்கள்.

இனப்படுகொலை பற்றியும் மனித உரிமை பற்றியும் நான்தான் புடுங்கினேன் – என்னளவுக்கு ஒருத்தரும் புடுங்கவில்லை என்பது அதன் சாராம்சம். இந்த பதிலுக்கு பின் இருக்கும் மனக்கோளாறு பற்றி யாராவது வைத்தியர்தான் பதில் சொல்ல வேண்டும். தன்னைப் பற்றி தானே ஓவராக கணக்குப் போட்டு வைத்திருப்பதால் தான் அவர் எழுத்துத்தரம் சரிந்து கொண்டே இருக்கிறது. இது அவருக்கு தெரிவதில்லை.

ஷோபாசக்தியின் இந்த நேர்காணல், வெளிவந்ததும் ஷோபாவின் ரசிகர்கள் சிலர் அகரமுதல்வனை ஷோபா தகர்த்து விட்டார் எனவும், எல்லாப் பந்துகளுக்கும் அவர் சிக்ஸர் அடித்து விட்டார் எனவும் எழுதிய பதிவுகள் கண்டேன். ஆனால் இந்த நேர்காணலில் அகரமுதல்வன் கேட்ட ஒவ்வொரு கேள்விகளிலும் கொலை மறைக்கும் ஜனநாயக வாதியான ஷோபாசக்தி அலம்பி அம்பலமாகி உள்ளார் என்பதை அவர்களால் உணர முடியாதது ஏன்? அரசியல் பலவீனப் பார்வைகள் தான் பலர் தலைகளில் ஏறி நின்று இவர்கள் கிளித்தட்டு விளையாட வழியேற்படுத்திக் கொடுக்கிறது.

4

வரலாறு ஒரு திசையில் நகர சிலர் வேறு திசையில் நின்று அலட்டுவர். அதில் ஷோபாசக்தியும் ஒருவர். எழுத்து அறம் பற்றி நீங்கள் பேசுவது வெட்கக்கேடு. அதற்கு முன் சொந்தமாக சிந்தித்து சொந்தமாக எழுதப் பழகுங்கள். மொண்ணை மார்க்சியர் என வசுமித்ராவை இழுத்து வியாக்கியானம் தரும் ஷோபாசக்தி தனது மார்க்சிய அறிதல் பற்றி எங்காவது எடுத்துக்காட்டிப் பார்த்ததுண்டா?

தான் அமைப்புகளுக்கு விசுவாசமாக இருந்ததில்லை என அவர் சொல்வது உண்மைதான். அவர் வழிபாட்டுக்காரர். இவர்கள் காந்தியை வழிபடுவர். பிறகு அம்பேத்காரை வழிபடுவர். அதுபோல்தான் ஒரு ஒரு காலத்தில் மார்க்சையும் வழிபட்டீர்கள். தெய்வங்கள் ஆயிரம். பக்திமான்களும் பலவிதம். அறிதல் முறை என்பது இதிலிருந்து மாறுபட்டது. கேள்வி கேட்க முடியாத தெய்வங்கள் அங்கு இல்லை.

வசுமித்ர வின் ‘தத்துவத்தில் சமரசம் தேவை இல்லை’ என்ற நிலைப்பாட்டோடு எனக்கு உடன்பாடே. மார்க்சியர் என சொல்வோர் அல்லது மார்க்சிய கருத்துக்களை எதிர்ப்போர் அதைப் படித்தும் அதன் ஆழம் தெரிந்தும் பேச வேண்டும் என்ற புள்ளியிலும் உடன்படுகிறேன். இது தவிர என்னை வசுமித்ர ஆதரவாளராக எங்காவது யாராவது பார்த்ததுண்டா? இந்தச் செவ்வி ஒட்டி நடந்த விவாதத்தில் அவ்வாறுதான் தனது வழமையான ஒதுக்கும் செயலை செய்கிறார்.

ஷோபாசக்தியின் விவாத முறை பற்றி நான் போட்ட இடுகையில் வந்த கடுப்பின் பின்விளைவு அது. அவ்வளவே. அவருக்கு ஆதாரம் தேவை இல்லை. அம்பேத்கார் பற்றிய எனது பார்வை என்ன என அறியத்தேவை இல்லை. இயந்திரத் துப்பாக்கியுடன் புத்தர் படத்தை எனது புத்தகத்துக்கு அட்டையாக போட வேண்டாம் என மனுஷ்யபுத்திரனோடு பெரும் சண்டை பிடித்துள்ளேன் (புத்த மதவாதக் கொடுமைகள் நிறைந்த இலங்கை பற்றிய கட்டுரை தொகுப்பாய் இருந்தும் கூட). இதே படம் விரைவில் அ.மார்க்ஸ் எழுதிய நூல் ஒன்றுக்கு அட்டைப்படமாக வந்தபோது ரசித்தோர் உண்டு – கேட்பார் இருக்கவில்லை.

இவர்களுக்கு தத்துவம் என்பது தனிப்பட்ட விளையாட்டு. வசுமித்ர வாதிடும் பல விடயங்களில் அதன் பாணியில் எனக்கு முரண்பாடு உண்டு. அதை நான் எழுதாமல் அவருடன் மோதலுக்கு போகத்  தயாரில்லை. அதே சமயம் அவர் மேல் செலுத்தப்படும் பேச்சு மறுப்பு வன்முறையைக் கடுமையாக கண்டிக்கிறேன். அதுவும் அவரை அடக்க அரசின் ஆதரவை நாடுவதும் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியதே.

ஆனால் சுட்டிய புள்ளிக்கு பதில் சொல்ல வழி இன்றி வீணே என்னை வம்புக்கு இழுத்து வசுமித்ர ஆதரவாளர் என முடிசூட்டும் அதே கட்டுரையில் வசுவமித்ர எழுத்தில் மாற்றச் சொல்லி நான் சுட்டிய அதே புள்ளியை வழமை போல காப்பி அடித்து விமர்சித்திருக்கிறார். முன்னுக்குப்பின் முரணான இருத்தல் அண்ணனுக்கு இயல்பு. மார்க்சிய மறுப்பு செய்வதற்காக நமது அறிஞர் பின்வருமாறு ஒரு சம்மரி முன்பு எழுதி இருந்தார்.

மார்க்ஸிய மூலவர்கள் அறியாத சமூகநல அரசுகள், நவீன வங்கி அமைப்பு முறைகள், பன்னாட்டுத் தேசியக் கம்பனிகள், உலகமயமாக்கல், சூழலியல் அரசியல், அணு ஆயுத அரசியல், சாதியத்தின் நவீன வடிவம், LGBT அரசியல் என்ற சகாப்தத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் மனித சமூகம் இது குறித்தெல்லாம் ஓயாமல் உரையாடியபடி தான் வரலாற்றில் முன்னோக்கி நகர்கிறது.

இது மார்க்சியம் தெரியாத – அதே சமயம் வங்கி மற்றும் நடைமுறை பொருளாதார விஷயங்கள் தெரியாத ஒருவரின் கூற்று. மார்க்சுக்கு தெரியாத நவீன வங்கி அமைப்பு முறையும் அதனால் மார்க்சியத்தின் போதாமையும் என அவர் ஒரு கட்டுரை எழுத வேண்டும். குறைந்த பட்சம் யாரும் எழுதியதையாவது சுட்டிக்காட்டி இருக்கலாம். எந்த வலது சாரி குப்பையில் இருந்து கற்றுக் கொண்டார் என எமக்கு அப்ப தெரிந்திருக்கும். சாதிய ஒழிப்பு பேசுபவர்களை சாதியை மையப்படுத்தி திட்டுவது கேவலம். அதுவும் சாதிய ஒழிப்புக்கு ஒரு கல்லை நகர்த்தி இருக்காத இவர்கள் அதற்காக இயங்கும் தோழர்கள் மேல் அத்தகைய அவதூறு செய்வது இன்னும் கேவலம்.

இது அறிதல் முறை விவாதம் இல்லை. மார்க்சியம் புனிதம் என்றும், அறிவின் எல்லை என்றும் நான் எப்போதும் எழுதியதில்லை. அவ்வாறு பேசுபவர் மார்க்சை வாசித்திருக்கும் சாத்தியம் இல்லை. அதேபோல் அம்பேத்காரும் புனிதமில்லை. ஷோபாசக்தி போன்று கடுமையாக மறுப்பு செய்வது வரவேற்கதக்கதே. ஆனால் சாதிய மறுப்பு சாதிய கட்டமைப்பை காத்துதான் நகர்கிறது. சாதிய ஒழிப்பு என பேசுபவர்கள் அம்பேத்காரை உள்வாங்கி அவரையும் தாண்டிச் சென்றுதான் ஆக வேண்டும்.

அதற்கு மார்க்சும் அத்தியாவசிய தேவைதான். இதைச் சொன்னால் அது வசை பாடலா? உண்மையில் கொற்றவையின் மொழிபெயர்ப்போடு அல்ல இவர்கள் வாதம். மொழிபெயர்ப்பு பிழை இல்லாத ஒரு மொழிபெயர்த்த புத்தகம் தமிழில் கிடையாது. அதேபோல் கறாரான மார்க்சிய பார்வை கருத்துக்களுக்கு இந்தியாவில் பஞ்சமில்லை. எதிர்ப்பவர்கள் இதை எழுத வேண்டும். அதை விடுத்து அடிக்கச் செல்வது – அவர்கள் பின் அரசியல் சார் – தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் சார் – தன்னை முன்னிலைப்படுத்தும் அடையாள அரசியல் சார் நடவடிக்கைகள்.

பெண்களைக் கவரவும், தங்களை முற்போக்கு எனக் காட்டவும் பெண்ணியம் பேசுவோருக்கு கொற்றவை முன் வைக்கும் பெண்ணியம் பிரச்சினையாக இருப்பது ஒன்றும் ஆச்சரியமான விசயமில்லை. குப்பைகளுக்கு அடிபணிந்து குப்பைகளை புதிய மார்க்சிய புலம்பலாக முன்வைக்க கொற்றவையும் வசுமித்ரவும் முன்வருவார்கள் என்றால் அவர்களும் சிவப்புக்கம்பளத்தில் வைத்து வரவேற்கப்படுவர். எல்லா கலைகளிலும் எல்லா வகை எடுத்தெறிதல்–வசைகள் தாண்டி செல்வதைத்தான் மார்க்சியர் செய்ய வேண்டி உள்ளது. உங்கள் வசவுகள் ஒன்றும் புதிதில்லை (நடக்கும் இலக்கற்ற வசவின் தொகையைப் பார்க்க விரும்புவார் முகப்புத்தகம் செல்லவும்).

5

மிதவாதம் எல்லாம் பெருமைப்படும் ஒரு அரசியல் நிலைப்பாடா? வலது சாரியத்தின் முதன்மை அடையாளமாக இயங்கும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட்டு வைத்த அரசை முற்போக்கு என வர்ணித்த ஷோபாசக்தி சாதிய ஒடுக்குமுறை பேசுவது அபத்தம்.

குத்து விளக்கேற்றி இந்து முறைப்படிதான் இப்போதும் அவர்கள் இயங்குகிறார்கள். சாதி சொல்லி திட்டியும் இயங்கியும் வருபவர்கள் பலரை தலைமையில் தாங்கி நிற்பது கூட்டமைப்பு. சிறிதரன் சாதி அடிப்படையில் மலையக மக்களைத் திட்டியதும் – அது பெரும் பிரச்சினையாக வெடித்ததும் இவர் அறியவில்லைப் போலும். இந்த கூட்டமைப்புக்குத்தான் ஷோபாசக்தி ஆதரவு வழங்குகிறார்.

என்ன என்ன விமர்சனத்துடன் இதைச் செய்கிறார் என யாருக்கும் தெரியாது. நீங்கள் மார்க்சைத் தாண்டி எல்லாம் சென்று விட்டீர்கள். ஆனால் இன்னும் ஒரு சுமந்திரனைத் தாண்டிச் செல்ல முடியவில்லை உங்களால். பிரான்சில் யாருக்கு ஆதரவு? மக்ரோனுக்கா? பிரான்சில் நடக்கும் பெரும் அடிபாடுகளில் ஒரு சொற்பனை உள்வாங்கும் நோக்கம் உண்டா? மார்க்சை கடந்து மிதவாதத்துக்கு செல்வது உங்கள் உரிமை – அதை முற்போக்கு என்றும் ஒடுக்குமுறைக்கு எதிர் என்றும் முன்னிறுத்த வருவதுதான் எமக்குப் பிரச்சினை.

நீங்கள் சொல்லும் முற்போக்கு தேசியம் என்ன என எமக்குத் தெரியவில்லை. ஷோபாசக்தி தன் கருத்து நிலையில் ஒரு இடத்தில் நிற்பவர் அல்ல. அந்த அர்த்தத்தில் அவர் சிறைப்படுத்த முடியாத சிந்தனாவாதி. தேசியம் பற்றி அவர் எழுதி வருவதை கவனிப்பவர்களுக்கு அது தெரியும். அது அப்ப, இது இப்ப கதைதான் அது. காலங்கள், சூழ்நிலைகள் மாறுவதால் வரும் மாற்றம் அல்ல இது. அத்தகைய புறநிலை ஆய்வாளர்கள் அல்ல இவர்கள். இது அவர்தம் சுயம்சார் மாற்றத்தில் இருந்து எழுவது. நாம் கறுப்பு வெள்ளையாகப் பார்ப்பவர்கள் இல்லை (நிறப்பிரிகை பிரச்சினை கண்களுக்கு இருந்த போதும் கூட). இருப்பினும் உங்கள் லாஜிக்கை புரிந்து கொள்ளும் அளவு மூளை வளரவில்லை.

இவர் முற்போக்கு தேசியம் என எடுத்துக்காட்டும் நிலாந்தன் என்ன சொல்கிறார்?

வீட்டுச்சின்னத்தின் கீழான இணக்க அரசியல் என்ற ஒரு கட்டுரை கூட எழுதி உள்ளார் நிலாந்தன். அதில் எதிர்ப்பு அரசியலில் இருந்து கூட்டமைப்பு விலகி விட்டது என்றும் எதிர்த்து வாக்கு வழங்குவோர் கூட்டமைப்பில் இருந்து விலகிச் செல்வது பற்றியும் குறிப்பிட்டு இருப்பார். இருப்பினும் இணக்க அரசியலுக்கு ஒரு இடம் இருக்கு என்பார். ஓ இதுதானா அந்த ‘முற்போக்குத் தேசியம்’?

அகரமுதல்வனுக்கு வழங்கிய பேட்டியில் கூட ‘பலமிழக்கும் கூட்டமைப்பு’ எனக் குறிப்பிடுகிறார் நிலாந்தன். அது உண்மைதான். முற்போக்கு சக்திகள் கூட்டமைப்பில் இருந்து விலத்தி கன காலமாயிற்று. மிதவாதிகள் கூடும் இடம்தான் இன்றைய கூட்டமைப்பு. அதுக்குத்தான் நம் முற்போக்குச் சிகரமான ஷோபாசக்தியின் ஆதரவு. வரலாறு ஒரு திசையில் செல்ல மறுதிசையில் நின்று புலம்பும் மிதவாதிகள் வரலாற்றில் எல்லாக் காலங்களிலும் இருந்து வந்திருக்கிறார்கள்.

நிலாந்தன் இப்பொழுதும் நாடுகளைக் ‘கையாளுதல்’ இந்தியாவைக் ‘கையாளுதல்’ என எழுதி வருபவர். மேற்கு அரசுகளின் நடவடிக்கைகளுக்குள்ளால் தீர்வு எனப் பேசி வருபவர். ஐக்கிய முன்னணி (வர்க்கம், பால், சாதி தாண்டிய) பற்றி பேசி வருபவர் (பார்க்க அகரமுதல்வன் செவ்வி). இந்திய அரசுடன் இணக்கம் பற்றி –அல்லது அதைக் கையாளுதல் பற்றிப் பேசுபவர் . தமிழ்நாட்டில் போராடிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு – இன்றைய இந்திய அரசுக்கு எதிராக நிற்கும் அனைத்துவகை போராளிகளுக்கும் இது உவப்பா?

தேசியம் பற்றி நிலாந்தன் பின்வருமாறு விளக்கம் தருகிறார்: ‘தேசியம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். தேசியம் என்பது ஒரு பெரிய மக்கள் திரட்சியின் கூட்டுப்பிரக்ஞை.’ இதை எவ்வாறு நாம் விளங்கிக் கொள்வது? பெரிய மக்கள் திரள் என்றால் என்ன? அதன் எல்லைகள் என்ன ? திரட்சி என்றால் என்ன? திரட்சியின் கூட்டு கொண்டு வரும் பிரக்ஞை நிகழ்வு என்ன? தேசிய அரசு என்றால் என்ன? அடுக்கிக்கொண்டே போகலாம். இதன் பொருட்டு தேசியம் பற்றிய விவாதத்துக்கு நிலாந்தன் முன்வர வேண்டும்.

நிலாந்தனின் எழுத்து வர்க்கம், சாதி, பால் நீக்கம் செய்யப்பட்ட எழுத்து என்பதை அவதானிக்க. அவர் முரண்களை அவதானித்து எழுதுபவர் இல்லை. ஒரு பத்தி எழுத்தாளர் போல் – லாஜிக் அடிப்படையில் எழுதி வருபவர். நல்ல மனிதர். அவர் அவதூறு செய்து நான் பார்த்ததில்லை. பல்வேறு சரியான கருத்துக்களையும் முன் வைத்துள்ளார். அவர் முற்போக்கு தேசியம் நோக்கியாவது நகர வேண்டும் என நாம் விரும்புகிறோம்.

முற்போக்கு என்ற சொல்லை பாவிக்க விரும்புவதில்லை. மிகவும் சிதைந்த அர்த்தத்தில் – அவரவர் தம் அழுக்குகளை மறைக்க பாவிக்கப்பட்டு வரும் சொல் அது. அதற்கு பதில் இடது சாரியம் என பாவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இடதுசாரிய தேசியம்? நிலாந்தன் வாருங்கள். உரையாடிப் பார்க்கலாம்.

ஷோபாசக்தி நீங்கள் சென்று வாருங்கள். உங்கள் லெவலுக்கு யாழில் கே.ரி கணேசலிங்கம் என்று ஒரு அரசியல் பேராசிரியர் இருக்கிறார். அவரிடம் சென்று சிஷ்யனாக இருங்கள். ‘மேன்டர்கள்’ இல்லாமல் சுயமாக இயங்க முடியாத சிலரில் நீங்களும் ஒருவர் என்பதால் அந்த ஆலோசனை.

போராடும் – எதிர்ப்பு செய்யும் பக்கத்தில் ஷோபாசக்தி இல்லை. சும்மா சும்மா தொல்லை செய்யாதீர்கள்.

***

இணைப்பு : ஷோபா சக்தி நேர்காணல், நிலாந்தன் நேர்காணல்

இதற்குமிஞ்சி நான் சொல்ல வேறேதுமில்லை – அ.இரவி

0

நேர்கண்டவர் : அகர முதல்வன்

அ.இரவி ஈழத்து எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.இவருடைய “ஆயுதவரி”, “பாலை நூறு” ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளியாகியுள்ளன.யாழ்ப்பாண பாஷையில் அமைந்திருக்கும் இவரின் எழுத்து மொழிக்கு ஒரு தனித்துவ இடமுண்டு. இவரின் புகழ்பெற்ற “காலம் ஆகி வந்த கதை” தொகுப்பும், “வீடு நெடும் தூரம்” தொகுப்பும் ஈழர் இலக்கியத்தின் முக்கிய பிரதிகள்.

“காலம் ஆகி வந்த கதை” – என்ற உங்களின் தன் வரலாற்றுப் புனைவுப் பிரதி சாத்வீக – வன்முறை ஆகிய இரண்டு போராட்ட வரலாற்றுக் காலங்களைப் பேசுகிறது. இந்த நூலிற்கு கிடைத்த வரவேற்பைக் கூற முடியுமா?

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் இதனை வாசித்து விட்டு, க.வே.பாலகுமாரன், கவிஞர் புதுவை இரத்தின துரை, பரப்புரைப் பொறுப்பாளர் ரமேஷ்/இளங்கோ ஆகியோரிடம் விதந்து கூறியதை அவ்வளவு பேரும் எனக்குச் சொன்னார்கள். அந்த நூலிற்கு கிடைத்த பெரிய பெறுமதியான ஒரு அங்கீகாரமாக அதனையே பார்க்கிறேன்.

இலக்கியத்தில் நான் மிகவும் மதிக்கின்ற படைப்பாளி அசோகமித்திரன், இந்நூலை வாசித்துவிட்டு அரைமணித் தியாலமாகத் தொலைபேசியில் என்னுடன் உரையாடினார். அவர் தனது ’18வது அட்சக்கோடு’ நாவலுடன் ஒப்பிட்டார். வார்த்தைகளில் மகிழ்ச்சி மின்னியது. என் சந்தோசத்தினை சொல்ல வார்த்தை இல்லை.

எழுத்தாளர் ஜெயமோகன் இந்நூலை வாசித்த பின்னர் இலங்கையில் தனக்குப் பிடித்த படைப்பாளிகள் வரிசையில் என் பெயரையும் குறிப்பிட்டு இணைத்துக் கொண்டார். அப்போது “சன்” தொலைக்காட்சியின் செய்திப் பொறுப்பாசிரியராக இருந்த மாலன் அவர்கள் இந்நூலை வாசித்துவிட்டு நீண்டதொரு செவ்வி எடுத்திருந்தார். “சன்” தொலைக்காட்சியில் அந்த செவ்வி ஒளிபரப்பாகியிருந்தது.

சக ஈழப்படைப்பாளிகளில் அ.முத்துலிங்கம், ‘ஊருக்குப் போய்வந்த சுகம் இருந்தது’ என்று புளகித்தார். ரஞ்சகுமார், தான் வாசித்த சிறந்த பத்து நூல்களில் இது ஒன்று என்றார். ‘இப்படி எழுத வாய்ப்பே இல்லை’ என்றவர் தமிழ்நதி. 

மேலாக, கிளிநொச்சி வட்டாரக்கல்வித் திணைக்களம் சுமார் ஐம்பது பிரதிகள் வாங்கி தமது வட்டாரக் கல்விக்கூடங்களின் ஆசிரியர்களுக்கு விநியோகித்தது. (காரணம்: ‘ஓர் ஆசிரியர் எப்படி இருக்கக்கூடாது என்று இந்நூல் விபரிக்கின்றது’) பின்னர் வடமாகாணக் கல்வியமைச்சராக இருந்த குருகுலராஜா அவர்களே அப்போது கல்வி பணிப்பாளராக பணியில் இருந்தபோது செய்தார். இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது. என்னைக் கூச்சப்பட வைக்கும் இக்கேள்வியை ஏன்தான் கேட்டீர்கள்?      

உங்களின் சிறுகதைகளில் யாழ்ப்பாணத்து புழங்கு தமிழ் அதிகமாக இருக்கும். உங்களின் கதைகள் மீது எனக்கொரு காதலுண்டு. உங்களின் மொழியை நீங்கள் புனைவில் எவ்வாறு தரிசிக்க விரும்புகிறீர்கள்?

மொழி வசப்பட வேண்டும் என்று விரும்புகிறேன் நான். எழுத்து அப்படியே வழுக்கிக்கொண்டு போகவேண்டும். வாசிக்கும் யாருக்கும் இடர் தரக்கூடாது. எழுத்து, காட்சியை விரித்தால் சந்தோசம். ஆரம்பத்தில் நான் ஜெயகாந்தனின் ரசிகனாக இருந்தேன். பிறகுதான் தெரிந்தது, அவர் எழுத்தில் காட்சியை விரிக்கவில்லை; நிறையச் ‘சொல்கிறார்’ என்பது. ஜெயகாந்தனின் கருத்துக்களை மாத்திரமே கேட்டுக் கொண்டிருக்கிறோம் என உணர்ந்தபோது மிகுந்த சலிப்பு ஏற்பட்டது.

பிறகு நான் கண்டடைந்தவர் லா.ச.ரா. அவரது ‘அபிதா’வை வாசியுங்கள். அங்கு கதையும் தத்துவமும் கிடையாது, காட்சிதான் விரியும். “அந்த மலை தடுத்த மேகங்கள், மழை கொட்டுமோ கொட்டாதோ தெரியாது.. கொட்டலாமோ வேண்டாமோ எனத் தம்முள் குமைகின்றன”-அபிதா’வில் வரும் வரிகள் என்பது ஓர் உதாரணம். உங்களுக்குக் காட்சி தெரியவில்லையா? எனக்கு அது முக்கியம் என பட்டது.

பிறகு நான் கண்டடைந்தவர் வண்ணநிலவன். அவரது ‘கடல்புரத்தில்’ நாவலை கதையாகவே நான் வாசிக்கவில்லை, காட்சியாகப் பார்த்தேன். பாத்திரங்கள் யாவரும் என்னுள் உருக்கொண்டு விட்டனர். வண்ணநிலவன் என்னுள் இறங்கியது அவ்வாறே. 

என்ன கேட்டீர்கள், ‘உங்களின் மொழியை நீங்கள் புனைவில் எவ்வாறு தரிசிக்க விரும்புகிறீர்கள்’ என்றா? என் பதில் இதுதான்: என் புனைவை வாசித்து காட்சியாக விரிந்த ஒரு சினிமாவாகப் பார்த்ததாக நீங்கள் உணர்ந்தீர்கள் ஆயின், வண்ணங்கள் அதில் தெரிந்ததாயின்  அது எனக்குப் போதும். இலக்கியத்தில் தத்துவங்கள் பேசுவதிலும் ‘இசங்கள்’ பேசுவதிலும் எனக்கு அவ்வளவு உவப்பில்லை.

நீங்கள் ஒரு தமிழ் இயக்கமொன்றில் உறுப்பினராக இருந்து, பின்னர் இன்னொரு இயக்கத்தினால் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக புலம்பெயர்ந்தவர். உள்ளொடுங்கிய ஆயுத அமைப்புக்களின் இப்படியான வன்முறைகள் ஏராளம். அன்றைய நாட்களின் நினைவுகள் உங்களுக்குள் எழுந்து தொந்தரவு தருவதில்லையா?

அப்போது நான் NLFT எனும் இயக்கத்தின் உறுப்பினர் அல்ல; ஆதரவாளர் மட்டும்தான். NLFT இயக்கத்தைத் தோற்றுவித்த அல்லது கட்டியமைத்த தோழர் விசுவானந்த தேவன் அவர்கள் இன்றைய என் அரசியலையும் தீர்மானித்தபடியே இருக்கிறார். அவர் காணாமல் போய் முப்பது வருசங்களுக்கு மேலாகி விட்டன. ஆயினும் இப்போதும் என்னை அவர் தீர்மானிக்கிறார் என்றால் அவரது ஆளுமையை யோசித்துப் பாருங்கள். 

உயிர் அச்சுறுத்தல் என்று சொல்ல முடியாவிடினும் அங்கத்தில் ஏதேனும் ஊறுபாடு அல்லது ஆன்மாவைச் சிதைக்கும் செயற்பாடு, விடுதலைப்புலிகளால் எனக்கு நிகழும் என சுமார் ஐந்து வருடங்களாக(1987 – 1992) அச்சம் கொண்டிருந்தேன்.

அதற்கான ஏதுக்களும் இருந்தன. ஆனால் நான் பட்ட பாடுகளை இப்போது சொல்வது தேவையில்லாதது. ஒன்றைத்தான் அப்போது யோசித்தேன், என்னை நான்தான் காப்பாற்றவேண்டும், வேறு யாருமல்ல. அவ்வாறு உணர்ந்த கணத்தில் தமிழீழத்தை விட்டு மே 22, 1992  அன்று  நான் களவாக வெளியேறினேன். அன்றைய நாட்களின் நினைவுகள் எழுந்து தொந்தரவு தராமல் விடுமா?   

இந்த காலகட்டத்தின் விளைவுகளால் நீங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளையும் அதன் தலைமையையும் கடுமையாக எதிர்த்து எழுதினீர்கள். பிறகு அந்த நிலையில் இருந்து தீவிர புலி ஆதரவு நிலைக்கு திரும்புவதற்கு காரணம் என்ன?

தமிழீழ விடுதலைப்புலிகளையும் அதன் தலைமையையும் கடுமையாக எதிர்த்து நான் எழுதுவதற்கு என் ‘அகம்’ மாத்திரம் காரணமல்ல; ‘புறத்தையும்’ உணருங்கள். அப்போது விடுதலைப்புலிகள் கடும் அரராஜக(வாத)த்தைக் கொண்டிருந்ததனை நான் உணர்ந்தேன், அனுபவித்தேன். என் தோழர்கள் காணாமல் போகிறார்கள். (தோழர்கள் என்பது NLFT உறுப்பினர்கள்) என் நண்பர்கள் இல்லாமல் போகிறார்கள். (நண்பர்கள் என்பது செல்வி, தில்லை, தர்மலிங்கம் என இன்னோரன்னோர்) பின்னேரம் ஆறுமணிக்கு எங்களைச் சந்திக்க வருகிறேன் என்று சொன்ன நெருங்கிய நண்பன்(தோழர் விமலேஸ்வரன்) மாலை நான்கு மணிக்கே கொல்லப்படுகிறான். “எங்களை எதிர்த்த இவர் என்னவென்று இங்கிருக்க முடியும்” என்று விடுதலைப்புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையா கேட்டபோது எனக்கு இரட்டைப்பிள்ளைகள் பிறந்து ஒரு மாதமாகி விட்டது. எனது ‘மரண தண்டனை’யை ஒத்திப் போடுவதற்கு நான் பட்டபாடு யாருக்கும் தெரியாது. நேரம் வந்தால் சொல்கிறேன். நீண்ட கதை உண்டு. நிறுத்துகிறேன்.

1992 மே 23-க்கு பிறகு என் வாசம் கொழும்பில். சும்மா இல்லை, நான்கு முழு வருடங்கள். ‘கொழும்பு’ என்னை மிகவும் படிப்பித்து விட்டது. ‘தமிழன் என்றால் நீ புலி’ என்று அது தெளிவாகச் சொல்லிற்று. நிறைய அனுபவப்பட்டேன். சிறைவாசம், காறித்துப்பல், விறகு கட்டையால் அடி, சொல்லக்கூசும் இன்னும் பல. என்னுடன் சேர்ந்தவர்கூட அனுபவித்தார். மனம் அந்தளவு வெதும்பிக் கிடந்தது. அப்போது பூநகரியில் ‘தவளைப் பாய்ச்சல்’ என்று விடுதலைப்புலிகளின் தாக்குதல். இரத்மலானை இந்துக்கல்லூரியில் என் ஆசிரியப்பணி. அருகில் விமான நிலையம். விமானங்கள் வந்திறங்குகின்றன. ‘ஆம்புலன்ஸ்கள்’ காயம்பட்ட சிங்கள ஆர்மியை ஏற்றிக்கொண்டு ஓடுகின்றன. ஒரு சைரன் சத்தம் கேட்குமல்லவா? எனக்கு அது வெற்றிச்சங்கு ஊதியதைப்போல இருந்தது. விடுதலைப்புலிகளின் வெற்றி என்று நான் நினைக்கவில்லை; ஈழத்தமிழரின் வெற்றி. தத்துவமாக இதனை நான் யோசிக்கவில்லை; உணர்விலிருந்து நான் யோசித்தேன்.  

இருவர்தாம் எனக்கு அதனை உணர்த்தினார். ஒருவன், ‘தராகி’ சிவராம். அவன் போகிறபோக்கில்தான் சொன்னான்: “மைச்சான், நீ எவ்வளவுதான் புலியை எதிர்த்தாலும் சிங்களவங்களுக்கு நீ புலிதான்.. தமிழனென்டால் புலி! புலி குடுக்கிற அடிதான் இவையளை யோசிக்க வைக்கும்…’ மற்றவன்: எஸ்.கே.விக்கினேஸ்வரன். ‘சரிநிகர்’-ன் முழுப்பொறுப்பும் அவனிடம் இருந்தது. எனக்குப் பிரேமதாஸாவிடம் ஒரு கவர்ச்சி இருந்தது. பிறகு சந்திரிகாவிடம் ஓர் அபிமானம் இருந்தது. சந்திரிக்கா, நான் கற்பிப்பதை என் வகுப்பிலிருந்து பார்த்தவர்.(அப்போது அவர் மேல்மாகாண முதலமைச்சர்) இணக்கமான உரையாடல் அவரிடம் இருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிட்டபோது எனது வாக்கு மாத்திரமல்ல, எனது குடும்ப வாக்கும்(ஆறு வாக்குகள்) அவருக்கே. சந்திரிகாவுக்காக என் வாதங்கள் இருந்தபோது விக்கி அதனை முற்றாக நிராகரித்தான். கொழும்பும் நண்பர்கள் சிலரும்தாம் என்னை மாற்றியமைத்தது.    

ஈழத்தமிழர் இலக்கியங்கள் இன்னும் உச்சபட்சமான உன்னத இடங்களைத் தொடவில்லை என நீங்கள் முகநூலில் எழுதியிருந்தீர்கள். நீங்கள் வைக்கும் மதிப்பீட்டை கொஞ்சம் விளக்கிக் கூறமுடியுமா?

இலங்கை என்பது மிகச்சிறிய தீவு. அதற்குள்ளும் ஈழத்தமிழர் சொற்ப தொகையினரே. ‘சிறிய தீவு’ என்பதும் ‘சொற்ப தொகையினர்’ என்பதும் ஈழத்தமிழ் படைப்பாளிகளுக்கு அதிக, வித்தியாசமான, நுட்பமான, வரையறைக்கு அப்பாற்பட்ட அனுபவங்களைக் கொடுக்கவில்லை. அதுமாத்திரமன்றி, ஈழத்தமிழருக்கு கிடைத்த கல்வியென்பது விரிந்த அனுபவங்களைத் தாங்குவதற்குத் தயாராக இருக்கவில்லை. கல்வி, அறிவால் மாத்திரமே யாவற்றையும் பார்க்க வைத்தது; உணர்வால் அல்ல. அதனால் பெரும்பாலும் வறட்டுத்தனமான படைப்புகளே வெளியாகின.

சிறுகதைகளில் ஓரளவுக்கு வளம் இருந்தாலும் சினிமா, நாவல் முதலான படைப்பாக்கங்களில் வளம் பெறவில்லை. கவிதை, அரங்கு என்று சிறுசிறு படைப்பாக்கங்களிலேயே ஈழத்தமிழ் தன்னைத் திருப்திப்படுத்திக் கொண்டது. ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த கல்வி என்பது பதிப்பு, ஆய்வு முதலான துறைகளில் அதிகம் உந்தித் தள்ளியது. நிலத்தையும் காலத்தையும் சூழலையும்தாம் இதற்குக் குறை கூறலாம்.

வேறு சிலரிலும் எனக்குக் குறை உண்டு. ‘ஆனா ஆவன்னா’ என்று மாத்திரம் எழுதத் தெரிந்தோரின் படைப்பை ‘ஆகா இதுவல்லவோ படைப்பு’ என்று ஆய்வு செய்து மலடாக்கி விட்டார்கள், நமது சில ஆய்வாளர்களும் சில பேராசிரியப் பெருந்தகைகளும். ஆயினும் இப்போது ஒன்றைச் சொல்ல வேண்டும் ஈழத்தமிழர், தமிழ்நாடு உட்பட வேறுபல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த பின்னர் அவர்களது படைப்பில் வளம் சேர்கிறது.

ஈழநிலத்தைத்தான் அவர்கள் பாடுபொருளாகக் கொண்டாலும் அவை கலாபூர்வமான வெளிப்பாடாக வருவதனை அவதானிக்க முடிகிறது.  

ஈழத்து இலக்கியங்கள் இன்றைக்கு ஒரு புதியதோர் பாய்ச்சலை வெளிப்படுத்தியபடி இருக்கின்றன. ஆனால் அதன் மீது “கழிவிரக்கம் கோருகின்றன” என்ற குற்றச்சாட்டும் எழாமல் இல்லை. நீங்கள் இந்த குற்றச்சாட்டை எவ்வாறு புரிந்து கொள்கிறீர்கள்?

தஞ்சாவூர் மாவட்ட கீழ்வெண்மணிக் கிராமத்தில் சுமார் நாற்பது தலித்(இச்சொல்லில் அவ்வளவு உடன்பாடு கொள்ளாதவன்) மக்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட காலத்தில் அதே தஞ்சாவூர் மாவட்டத்தைக் களமாகக்கொண்டு தி.ஜானகிராமன், ‘மோகமுள்’ நாவலை எழுதினார். அது எதைப்பற்றி பேசியது என்பது உங்களுக்குத் தெரியும். அது அப்போது சிலரால் கடும் கண்டனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட மகத்தான துயர் என்பது அத்தனை ஈழத்தமிழர்களையும் ஏதோ விதத்தில் பாதித்திருக்கிறது. அங்கு தோன்றிய படைப்பாளிகள் தமக்குப் புரிந்த அரசியலினூடாக அதைத் தமது படைப்புகளில் வெளிப்படுத்தத்தான் செய்வார்கள். வெளிப்படுத்தா விட்டால்தான் அவர்கள் ‘வேறேதோ’ அரசியல் செய்கிறார்கள் என்று அர்த்தம். ‘கழிவிரக்கம்’ கோரும் படைப்பு என்று சொல்பவர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும். காலம் எப்போதும் நேரானது; காழ்ப்பு இல்லாதது. அது யாவற்றையும் எவ்வாறு பதிவு செய்கின்றது என்பதனை நாம் இப்போது சொல்ல முடியாது.

 

சமகாலத்தில் வெளியான ஈழப்படைப்புக்களில் உங்கள் இலக்கிய மதிப்பீட்டின்படி கலாபூர்வமான படைப்புக்களைக் கூற முடியுமா?

உண்மையில் இதற்குப் பதில் சொல்ல நான் பஞ்சிப்படுகிறேன். யாவற்றையும் முழுமையாக வாசித்தவனல்லன். வாசித்தவற்றிலிருந்து சில குறிப்புக்களைக் கூறலாம். காலத்தையும் சூழலையும் பதிவையும் கலாபூர்வத்தையும் கவனத்தில் கொண்டு மாத்திரமே என் பதிவு அமைகிறது. புனைவிலக்கியம்(அதுவும் நாவல்) ஒன்றை இங்கு கவனம் கொள்கிறேன். விமர்சனம் எதுவும் இங்கில்லை; வெறும் அவதானம், அவ்வளவே. ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’, ‘கனவுச்சிறை'(தேவகாந்தன்); ‘ஆறாவடு’, ‘ஆதிரை'(சயந்தன்); ‘நஞ்சுண்டகாடு’, ‘அப்பால் ஒரு நிலம்'(குணா கவியழகன்), ‘பார்த்தீனியம்'(தமிழ்நதி), “கலாதீபம் லொட்ஜ்” (வாசு முருகவேல்) ஆகியனவற்றைக் கலாபூர்வமான படைப்புகளாக நான் கருதுகிறேன். அதேசமயம், ‘புள்ளிகள் கரைந்த பொழுது'(ஆதிலட்சுமி சிவகுமார்), ‘நடுகல்'(தீபச்செல்வன்) ஆகிய படைப்புகளையும் இங்கு பதிவதில் எனக்குத் தயக்கமேதும் இல்லை. ஒன்றேயொன்றுதான், அவை இன்னமும் கலாபூர்வமாக வந்திருக்கலாம்.  

யாழ்ப்பாணம் பற்றிய நினைவுகளில் உங்களால் மறக்க முடியாதது என்ன?

எதைச் சொல்ல, எதை விட? யாழ்ப்பாணத்தில் என் குழந்தைமை; யாழ்ப்பாணத்தில் என் சிறுவமை; யாழ்ப்பாணத்தில் என் இளமை! யாழ்ப்பாணச்சாப்பாடு, திருவிழாக்கள், கூத்து, தவில்-நாயனம், நாடக அரங்கு, தியேட்டர்களில் சினிமா, பள்ளிக்கூடம், படிப்பு, மாம்பழம், பிலாப்பழம், வாழைப்பழம் ஆகியவற்றின் இனிமை, பற்றை வழிய திரிந்து அணிஞ்சில் பழம், காரைப்பழம், சூரைப்பழம், வீரைப்பழம், புல்லாந்திப்பழம், இலந்தைப்பழம், பீநாறிப்பழம், தண்ணீர்ப்பழம், பிடுங்கி உண்ணுதல், வேள்வி, பங்கிறைச்சி, யாழ்ப்பாணத்துப் பரவைக்கடல் மீன், பனங்கள்ளு, ஒடியல்கூழ், முட்டைக்கோப்பி, தோட்டம், வயல்வெளி, கடற்கரை, பனங்கூடல், தென்னந்தோப்பு, பற்றைக்காணி, ஆடு மாடுகளுக்கு குழை ஒடித்தல், புல்லுச்செதுக்கல், வெள்ளெலி முயல் உடும்பு என்று வேட்டையாடல், வீட்டுத் தோட்டம் செய்தல்… எதைச்சொல்ல, எதை விட?  

உங்களுடைய நாவல்களில் இருக்கிற “நினைவிடை தோயும்” தன்மை எனக்கு பிடித்தமானது தான். ஆனால் தொடர்ச்சியாக அந்தப் பாணியில் புனைவுகளை கட்டி எழுப்புவது சலிப்பான காரியமாக தோன்றவில்லையா?

கொஞ்சம் பொறுங்கள், கிட்டத்தட்ட ‘தன்மை’யில் நான் எழுதும் புனைவு(நாவல்) உங்களை சலிப்பூட்டியிருக்கலாம். அவற்றிலும் ‘புனைவு’ இருப்பதனைக் கண்டுகொண்டால் சந்தோசம். நான் அரங்கை(theatre) அதிகம் விரும்புபவன். அஃது எப்போதும் பாத்திரங்களைச் சிருஷ்டிப்பவை. நானும் சிருஷ்டிப்பதன் நாயகன். என்னால் நீங்கள் சொல்லும் பாணியிலிருந்து வேகமாக வெளியேற முடியும். வருவேன், அவகாசம் வேண்டும். சாதாரணமாக ‘உப்புக்கு’ உழைக்க வேண்டியிருப்பதால் மினக்கெட வேண்டியிருக்கிறது.    

1958 நாவல் ஒரு முக்கியமான வருகை. ஆனால் அதற்கு வாசகக்கவனம் கிடைக்கவில்லை என்கிற கவலையோடு இந்தக் கேள்வியைத் தொடருகிறேன். அந்த நாவல் தமிழ் – சிங்கள பொதுசனங்களின் மனவோட்டத்தை சரியாக பதிவு பண்ணியது என கருதுகிறேன். இந்த நாவல் குறித்து நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

நீங்கள் சொல்வது சரிதான். ஒரு பதிப்பாளர் என்னிடம் சொன்னார்: “உங்களை யாரென்று யாருக்கும் தெரியவில்லை” என்று. அதில் இருக்கக்கூடிய உண்மை ஒன்றுதான். நான் யாரிடமும் சென்றிருக்க முடியாத படைப்பாளி. அதற்கு என் எழுத்து காரணம். என் இயல்பு காரணம். வேறு எவரும் காரணமல்ல. என் படைப்புகளை வெளிக்கொணர்ந்த கவிஞர் கருணாகரன், ‘விடியல்’ சிவா, ‘காலச்சுவடு’ கண்ணன், ‘தமிழினி’ வசந்தகுமார் யாவரும் கவனமாக உழைத்திருக்கிறார்கள். எனக்கு இடப்பட்ட அரிசி. இவ்வளவுதான் என் பெயர். இதற்கு மிஞ்சி நான் சொல்ல வேறேதுமில்லை.  

புலி எதிர்ப்பு அரசியல் – புலி எதிர்ப்பு இலக்கியம் – புலி எதிர்ப்பு நிறுவனங்கள் என நீளும் இந்த கூட்டுச்சதிகளின் பின்னால் இருக்கிற சூழ்ச்சி அரசியல் பற்றி?

‘அவர்கள்’ என்பதைக்கூட ‘ஒருமைத்தன்மையில்’ அடையாளம் காண விரும்பவில்லை. அதற்கு பன்முகத்தன்மை இருக்கிறது. ஆனால் ‘புலி எதிர்ப்பு’ என்பதனூடாக ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள். “தேசியவிடுதலை என்பதுதான் வர்க்க விடுதலையின் முதற்படி” என்கிறார் தோழர் கார்ல் மார்க்ஸ். ‘தேசிய இனங்களின் விடுதலை’ குறித்து நிறையவே எழுதியிருக்கிறார், தோழர் லெனின். ‘தேசிய இனம்’ என்றால், என வரைவிலக்கணம் தந்தவர் தோழர் ஸ்ராலின். தோழர் மாவோ தந்த புதிய ஜனநாயகப் புரட்சி என்பதே தேசிய இனம்/இனங்கள் பற்றிய கறாரான பார்வை. இத்தோழர்கள் சொல்கிறார்கள் என்பதனால் அல்ல; ‘தேசிய இன விடுதலை’ பற்றிய உணர்வை நமக்கு அனுபவங்கள் தந்திருக்கின்றன. அரசியல் கருத்துக்கள் மாத்திரமல்ல; அனுபவங்களும் எனக்கு ஆசார்.(‘ஆசான்’ என்பதன் பொதுப்பால்) விடுதலைப்புலிகளின் சில/பல தவறுகள் விமர்சனத்திற்குரியவைதாம். ஆனால் அவர்களின் இலட்சிய உறுதியை, நேர்மையை நான் சந்தேகிக்க மாட்டேன். அவர்கள் ஒரு தேசிய அரசை அமைத்தும்தான் இருக்கிறார்கள். நடைமுறையில் அது மிகச்சிறந்த அரசாகவும் இருந்தது.  உண்மையில் ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் சக்திகள் எப்போதும் ஏதோ ஒரு பெயரால் ஒடுக்கும் அதிகாரத்தால் நிராகரிக்கப்படுவதுண்டு. ‘புலி எதிர்ப்பு’ என்பது அதுதான். அதனூடாக ஒடுக்குமுறை அதிகாரத்துக்குத் துணை போகிற ஒன்றை நான் ‘சூழ்ச்சி அரசியல்’ என்று பெயரிட்டு அழைக்கிறேன்.

தமிழீழ விடுதலைப்புலிகளை “பாசிஸ்டுகள்” என்று தொடர்ச்சியாக எழுதிவரும் ஈழ இலக்கியவாதிகள் பற்றி?

‘ஜோர்ஜ் ஓவெல்’ என்ற ஒரு படைப்பாளி இருந்தார். அவர் எழுதிய இரண்டு படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை. ‘விலங்குப்பண்ணை’, ‘1984’ என்ற நாவல்கள் அவை. தமிழில் அதன் மொழிபெயர்ப்பு வந்தது. மொழிபெயர்ப்பாளரைப் பார்த்தாலே அதன் அரசியலைப் புரிந்து கொள்ள முடியும். அவற்றைப் பலர் வாசித்திருக்கிறார்கள். விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் சிலர்கூடச் சிலாகித்திருக்கிறார்கள். ‘விலங்குப்பண்ணை’, மகத்தான ரஷ்யப்புரட்சியை கிண்டலித்து எழுதப்பட்டது. இந்நாவலில் ‘புதிய இங்கிலாந்தின் பாடல்’ என்று ஒன்று வரும். அது குறிப்பது ‘மார்க்சீயம்’ எனும் பெரும் தத்துவத்தையே. அவ்வாறுதான், ‘1984’எனும் நாவல். தோழர் ஸ்ராலின் காலத்து சோவியத் யூனியனை அது காட்சிப்படுத்துகிறது. ஆனால் இப்போது ‘1984’ நாவலை வாசித்துப் பாருங்கள், அது அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற முதலாளித்துவ நாடுகளைத்தான் காட்சிப்படுத்துகிறது. 

ஈழ இலக்கிய உலகிலும் பல ‘ஜோர்ஜ் ஓவெல்’கள் இருக்கின்றனர். மகத்தான ரஷ்யப்புரட்சி, மகத்தான சீனப்புரட்சி, சேகுவேராவின் எழுச்சி.. என்று பலவற்றிலும் ‘ஜோர்ஜ் ஓவெல்’கள் இருந்திருக்கின்றனர். ‘பாசிசம்’ என்று இவற்றையெல்லாம் சொல்லாமல் விட்டிருப்பார்களா? இவர்களெல்லாம் எழுதுவதனால் காகிதச்சருகுகள்! அவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டால் புரட்சியின் மகத்துவம் என்னாவது? நாய்கள் குரைத்துச் சூரியன் அழுவதில்லை; சந்திரனும் வருந்துவதில்லை. 

ஈழத்தமிழர் வாழ்வியலில் கோவில்கள் – திருவிழாக்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் உண்டு. அதன் முக்கிய அம்சமாக தவில் – நாதஸ்வர இசைக்கு தனிச்சிறப்பிருக்கும். நீங்கள் அதுபோன்ற காணொலிகளை தொடர்ச்சியாக பகிர்ந்து எழுதிய வண்ணம் உள்ளீர்கள். யாழ்ப்பாணத்து தவில்-நாதஸ்வர வித்துவான்கள் பற்றி கூறுங்களேன்?

எனது கிராமத்தின் பெயர் அளவெட்டி. அற்புதமான, அழகான கிராமம். கலைகள் செழித்து வளர்ந்த ஊர். கலையும் கல்வியும் அக்கிராமத்தின் இரு கண்கள்! தோட்டமும் வயலும் இருக்கின்ற ஒரே ஊர் அது. இருக்க, தவில் நாதஸ்வரக் கலைஞர்களால் நிறைந்த ஊர் அளவெட்டி. தவில் கலைஞரில் மிகச்சிறந்த தட்சிணாமூர்த்தியும் நாதஸ்வரத்தில் விற்பன்னரான என்.கே.பத்மநாதனும் வாழ்ந்த ஊர் அது. என் வீட்டிலிருந்து அவர்களது வீடு, முன்னூறு யாருக்குமேல் இருக்காது. என் வீட்டிற்கு அவர்கள் அடிக்கடி வந்திருக்கிறார்கள். தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் நிறைந்த கிராமம் அளவெட்டி என்றால் யாழ்ப்பாணத்தில் இன்னொரு கிராமமும் இருக்கிறது, இணுவில்! தவிலும் நாதஸ்வரமும் கர்நாடக சங்கீதத்தை அடிநாதமாகக் கொண்டு எழுந்தாலும் என் இரத்தத்தில் எப்படியோ ஊறிவிட்டது. 

பங்குனி, சித்திரையில் ஊர்க்கோயில்களில் திருவிழாத் தொடங்குகிறது. திருவிழா முடியும் மாதம் ஆவணி. அளவெட்டி, அந்த ஆறுமாதங்களில் களைகட்டிக் கிடக்கிறது. தவில் நாதஸ்வரக் கலைஞர்களுக்கு முதற்சேவகம் வரும்நாள் அன்று எனது குலதெய்வமான அம்மாள் கோயிலில்(அவர்களுக்கும் குலதெய்வம்) பத்து நிமிசத்திற்காவது ஒரு கச்சேரி வாசிப்பார்கள். வாசித்துவிட்டுத்தான் முதற்சேவகத்துக்குப் போவார்கள். உருகிப்போய்க் கிடப்போம் நாங்கள். தவில் கடகடத்தோடினதும், நாதஸ்வரத்தில் உருகினோரினதும் கண்களில் கசிவு.  அவர்கள் நெஞ்சால், மனசால் வாசித்ததில் பார்த்த எங்கள் கண்களிலும் கசிவு… சொல்லிக்கொண்டு போனால் அழுது விடுவேன்.

உங்களது கேள்விக்கு என் நேரடிப்பதில்: தவில் என்றால் முதலில் தட்சிணாமூர்த்தி(அளவெட்டி). பிறகு இணுவில் சின்னராசா. இவரது தவில் வாசிப்பைப் பார்த்தால், ‘தில்லானா மோகனாம்பாள்’ பாலையா இவரைப்(இணுவில் சின்னராசா) பார்த்துத்தான் தவில் வாசித்தாரோ என்று தோன்றும். இணுவில் புண்ணியமூர்த்தி எங்களது அம்மாள் கோயிலில் வந்து தவில் முழக்கினால் மயங்கிக் கிடப்போம். கைதடிப் பழநியைச் சொல்லாமல் விடமுடியாது. நாச்சிமார் கோயிலடியிலும் சின்னப்பழனி என்றொருவர் இருக்கிறார்.  நாச்சிமார் கோயிலடி கணேசுவைச் சொல்லாது விட்டால் அநியாயம். தட்சிணாமூர்த்திக்கு ஈடு கொடுக்கிற ஒருசிலரில் இவரும் ஒருவர்! அளவெட்டிக் குமரகுரு, அளவெட்டிப் பெரிய கணேசு(இவர்தாம் தட்சிணாமூர்த்திக்குத் தவில் பழக்கியவர்), அளவெட்டிச் சின்னக்கணேசு, அளவெட்டி ராஜகோபால்(பாவம் இவர், தவில் வாசிப்பதில் விண்ணர்தான். ஆனால் கீர்த்தி பெறவில்லை. அதற்கு அவரது நடத்தையும் காரணம்) என்று தவிலுக்கு நீண்ட வரிசை இருக்கிறது. 

அவ்வாறே நாயனத்திலும் யாழ்ப்பாணம் மிளிர்ந்தது. மாவிட்டபுரம் ராசா பற்றி அப்பா அடிக்கடி சொல்வார். நான் பார்த்ததில்லை. என் ஞாபகத்தில் நாச்சிமார் கோயிலடி ஆறுமுகம் பிள்ளை, சாவகச்சேரி பஞ்சாபிகேசன் ஆகியோர் நாயனத்தில் விண்ணர். பிறகு வந்தவர்தான் அளவெட்டி என்.கே.பத்மநாதன். இறுதிவரை அவர்தான் உச்சத்தில் நின்றார். ஆயினும் நாயனத்தில், அளவெட்டி எம்.பி.பாலகிருஷ்ணனை பலரும் வியப்பர். தோடி ராகம் என்றால் அளவெட்டி எஸ்.சிதம்பரநாதனை கர்நாடக சங்கீதம் தெரிந்தோர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அளவெட்டி ராஜதுரையும் நாயனத்தில் அற்புதமான கலைஞர். ஆனால் ‘காலம்’ என்ற ஒன்று இருக்கிறதுபோல. அவர் இளமையில் காலமாகியும் விட்டார். அளவெட்டி எஸ்.சுதந்திரனையும் கூறுவது முக்கியம்.

இணுவில் கிராமத்தில் நாயனக்கலைஞர் அவ்வளவு எழுந்ததாகத் தெரியவில்லை. இருந்தால், யாரும் சொன்னால் மகிழ்வேன். இணுவிலின் அயல் கிராமமான கோண்டாவிலில் பாலகிருஷ்ணன் என்ற அற்புதமான நாயனக்கலைஞர் இருந்தார். அவர் இளமையில் அகாலமாக மரணமடைந்து விட்டார் எனும் துரதிர்ஷ்டம் இருக்கையில் என்ன செய்வது? கோண்டாவிலில் கானமூர்த்தி-பஞ்சமூர்த்தி என்ற சகோதரர்கள் ‘ஜனரஞ்சக’ நாயனக்கலைஞர்களாக விளங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்களில் ஒருவரது மகன்தான் இப்போது நாயனத்தில் ‘கலக்குகின்ற’ குமரன் என்பவர் ஆவார். 

தவில்-நாயனக் கலையின் மேன்மை குறித்து மஹாகவியின்(அவரும் அளவெட்டிதான்) ‘கோடை’ எனும் பாநாடகம் இருக்கிறது. வாசித்துப் பாருங்கள்; உருகிப் போவீர்கள். மிகச்சிறந்த நாயனக் கச்சேரி கேட்டது போன்ற கிறக்கம் அது! எனது ‘காலம் ஆகிவந்த கதை’யில் ஒரு கதை, வடக்கு வீதியில் வரும் மேளச்சமா பற்றியது.  

உங்கள் கேள்விக்கு இந்தப் பதில் பெருத்துவிட்டது போல. இடையில் வெட்டுவதற்கு உரிமை தருகிறேன். 

மரியாதைக்குரிய கா.சிவத்தம்பி, கைலாசபதி போன்ற விமர்சகர்கள் முன்னுதாரணமற்றவர்கள். இன்றைக்கிருக்கும் சூழலில் அவர்கள் போன்ற தீவிரத்தன்மையோடு கூடிய விமர்சனங்கள் வருவதில்லையே, அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?

‘காலம்’தான் காரணம். இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசுவோமே. நான் யாழ் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ்-சிறப்பு’ பாடம் கற்ற ஒருவன். எனது ஆசிரியர்களாக இருந்தவர்கள், (அப்போது)பேராசிரியர்களான சு.வித்தியானந்தன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, ஆ.வேலுப்பிள்ளை, அ.சண்முகதாஸ் மற்றும் கலாநிதிகளான நா.சுப்பிரமணிய ஐயர், இ.பாலசுந்தரம், சித்திரலேகா மௌனகுரு, சிவலிங்கராஜா ஆகியோர். ‘தமிழ்’-ஐ ஆழமாகத்தான் கற்றோம்.

‘தமிழியலுக்கான’ ஈழத்தமிழர்களின் பங்கு மிகப் பெரிது. பேராசிரியர்களான க.கணபதிப்பிள்ளை, வி.செல்வநாயகம், பொன்.பூலோகசிங்கம்.. என்று அது நிரம்பியது. பல்கலைக்கழகப் பட்டம் இல்லையெனினும் புன்னாலைக்கட்டுவன் சி.கணேசையர், அளவெட்டி த.கைலாசபிள்ளை, மட்டுவில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை போன்றோர் ஒரு பல்கலைக்கழகம் போன்று செயலாற்றியவர்கள். இவற்றுக்கும் மேலாக ஆறுமுக நாவலர், சுவாமி ஞானப்பிரகாசம், சி.வை.தாமோதரம்பிள்ளை, விபுலானந்த அடிகளார், ஆனந்த குமாரசாமி, வண.பிதா.தனிநாயகம் அடிகளார் போன்றோர் தனித்துக் குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.

இவை பற்றி ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், ‘முன்னுதாரணமற்றவர்கள்’ என்கிறீர்களே, அதற்காக. ஈழத்துப் பாரம்பரியம், ‘பேரா.க.கைலாசபதி, பேரா.கா.சிவத்தம்பி போன்றோருக்கு’ முன்னுதாரணமாக இருக்கிறது. அவர்கள் சடாரெனப் பூச்சியத்திலிருந்து தொடங்கவில்லை; பாரம்பரியத்திலிருந்து தொடங்குகிறார்கள். அவர்களை மற்றவர்களிடமிருந்து எது வேறுபடுத்துகிறது என்றால், சமூக விஞ்ஞான அணுகுமுறைதான். அதனை இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் மார்க்சீய அணுகுமுறை என்று சொல்லலாம். ‘மனித சமூக சாரம்’ எனும் மார்க்சீயம் சார்ந்த மானுட ஆய்வுநூலை எழுதிய ஜோர்ஜ் தோம்சன் எனும் மார்க்சீய அறிஞரிடம் பேர்மிங்காம்(இங்கிலாந்து) பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்ட ஆய்வை இவர்கள் இருவரும் மேற்கொண்டிருந்தனர். ‘முன்னுதாரணமற்று’ இவர்கள் ஆய்வெதனையும் மேற்கொள்ளவில்லை என்பதற்காகவே இவை யாவற்றையும் கூறுகிறேன். அதே சமயம் அவர்களது மகத்தான ஆளுமையையும் இங்கு குறிப்பிடாமல் விடமுடியாது. அவர்களிடம் கற்றவன் என்பதனால் அதனை நான் அதிகமாகவே உணர்ந்திருக்கிறேன். 

அதே தீவிரத்தன்மையுடன் தமிழ்நாட்டில் மிகச்சிறந்த ஆய்வாளர்கள் இருந்திருக்கின்றனர். நா.வானமாமலை, கோ.கேசவன், ஐராவதம் மகாதேவன், வீ.அரசு போன்றோரைக் குறிப்பிட வேண்டும். இலங்கையில் பேரா.எம்.ஏ.நுஹ்மான் அவர்களைக் குறிப்பிடலாம். ஆனாலும் போதாமை இருக்கிறது. இலங்கையில் ஆய்வாளர்கள், தீவிர ஆய்வுக்குச் செல்லாமல் தீவிர அரசியலுக்குச் சென்று விட்டார்கள். மேலும் சொல்ல என்ன இருக்கிறது? பேரா.கைலாசபதி, பேரா.சிவத்தம்பி போன்ற அன்றைய ஆய்வாளர்களை அவர்களது அரசியலுக்கு அப்பால் ஆய்வுக்காக மதித்தோம். இன்றையவர்கள் மக்களின் மரணத்தையே கவித்துவமாக வர்ணனை செய்து எள்ளி நகையாடும்போது அவர்களது ஆய்வில் தீவிரத்தன்மையை எங்கனம் எதிர்பார்ப்பது?

ஈழ அறிவுலகப்பரப்புக்கு ஒரு நீண்ட வரிசை இருக்கிறது. ஆறுமுக நாவலர், சுவாமி ஞானப்பிரகாசம், சுவாமி விபுலானந்தர்,சித்திலெப்பை என நீளும் அந்த வரிசையை நீங்கள் அறிவீர்கள். இவர்களின் ஆய்வுகள் பற்றிய உங்களின் மதிப்பீடுகள் என்ன?

“ஆறுமுக நாவலர், சுவாமி ஞானப்பிரகாசர், சுவாமி விபுலானந்தர், அறிஞர் சித்திலெப்பை” என நால்வர் பெயரைக் கூறி, பிறகு ‘நீளும் அந்த வரிசை’ என்கிறீர்கள். இவ்வாறு கேள்வி கேட்டதையிட்டு எனக்கு மகிழ்ச்சிதான். ஏனென்றால் தமிழ் அல்லது தமிழர் என்பது மதத்தால் அடையாளப்படுத்தப்படுபவர்கள் அல்லர். ஆறுமுகநாவலர்-சைவம்;  சுவாமி ஞானப்பிரகாசர்-கிறிஸ்தவம்; அறிஞர் சித்திலெப்பை-இஸ்லாம். 

உண்மையில் இக்கேள்விக்கு என்னால் விரிவாக பதில் சொல்ல இயலாது என்பதை மனவருத்தத்துடன் குறிப்பிட்டு ஏதோ எனக்குத் தெரிந்ததைக் கூறுகிறேன். கொம்மியூனிஸ்ற் கட்சியைச் சேர்ந்தவர்களும் தமிழியல் ஆய்வாளர்களுமான பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரின் முன்னெடுப்பில் ஆறுமுக நாவலரின் நூற்றாண்டு விழா யாழ்ப்பாணத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காரணம், அவர் தமிழுக்கு வழங்கிய சிறப்புப் பங்களிப்பே.(நாவலர் பேணிய சாதியமைப்பு முறைக்காகவல்ல) தமிழில் முதன்முதலாக பதிப்பு முயற்சியை மேற்கொண்டவர் ஆறுமுக நாவலர். பிறகுதான் சி.வை.தாமோதரம்பிள்ளை, உ.வே.சாமிநாதையர், சி.வையாபுரிப்பிள்ளை முதலானோர் வருகின்றனர். இன்னும் சொன்னால் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களுக்கு, பதிப்பு முயற்சியில் வழிகாட்டியவரும் ஊக்கம் ஊட்டியவரும் ஆறுமுக நாவலர் அவர்களே. சி.வை.தாமோதரம்பிள்ளை, விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையில் பதிப்பு முயற்சியை மேற்கொண்ட முதலாமவர். அவர் வழியையொட்டியே உ.வே.சா, வையாபுரிப்பிள்ளை முதலானோர் பதிப்பு முயற்சியை மேற்கொள்கின்றனர். ஈழத்தமிழர் இருவருமே பதிப்பு முயற்சியில் முன்னோடி என்பதுவும் எமக்குப் பெருமையே.

ஆறுமுக நாவலரின் முக்கிய பங்களிப்பு என அச்சியந்திர சாலைகளை நிறுவியமையைக் குறிப்பிடுவேன். அவர் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் அச்சியந்திர சாலையை நிறுவவில்லை. ஒரே சமயத்தில் சிதம்பரத்திலும் நிறுவுகிறார். இரண்டு இடங்களிலும் ஒரே பெயர்தான்: சைவப்பிரகாச அச்சியந்திரசாலை. அச்சேறுவதற்கு அவர் வைத்த பெயர்: ‘அச்சுவாகனமேறல்’ யாழ்ப்பாண வழக்கில் ‘வாகனமேறல்’ என்பது இறைவன் தமது ‘வாகனம்’களில் ஏறுவதனைத்தான் குறிப்பிடும். ஓலைச்சுவடிகளிலிருந்து நீங்கி, அச்சில் ஏறுவதென்பது இறைவன் வாகனத்தில் ஏறுவதற்கு ஒப்பானதென நாவலர் உணர்ந்தாற்போலத்தான் எனக்குப்படுகிறது.

நாவலரின் இன்னொரு பெரும் பங்களிப்பு என நான் கருதுவது, விவிலிய வேதத்தைத்(பைபிள்) தமிழ் மொழியில் பெயர்த்தது. அது தமிழுக்கு புதுமொழியைத் தந்தது என்பதனையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ‘சத்தனே திடங்கொள்’, ‘பாவி, செபதபம் செய்’ என்பனவெல்லாம் தமிழுக்குப் புதுமொழியாக எனக்குப்படுகிறது. ‘வசனநடை கைவந்த வல்லாளர்’ என்று ஆறுமுக நாவலரை அதனால்தான் சொல்கிறார்கள் போலும்.

உண்மையில் இவ்வளவுக்கு நீங்கள் குறிப்பிட்ட ஏனைய அறிஞர்களை நான் படித்ததில்லை. எனவே அதற்குப் பதில் சொல்லப் பஞ்சிப்படுகிறேன். ‘சளாப்ப’க் கூடாதல்லவா? இவ்வாறு நான் பதில் சொல்லாததினால் கேள்வி கேட்ட உங்களையும் பதில் சொல்லப் புறப்படட என்னையும் ‘இந்துத்துவவாதிகள்’ என்று யாரும் குறிப்பிட, நக்கலடிக்க, விமர்சிக்கக் கூடும். அதற்கு நான் அஞ்சவில்லை. மடியில் கனமில்லை; வழியில் பயமுமில்லை. 

புலம்பெயர்வில் அலைந்துழலும் வாழ்க்கையை எப்படி சகித்துக்கொள்கிறீர்கள்?

இது சகித்துக்கொள்வதென்றல்ல; வாழ்ந்தே தீரவேண்டும். எந்த உயிர்களுக்கும் இரண்டு வாழ்க்கை நெறிமுறைகள்தாம் உண்டு. ஒன்று, சந்ததிப்பெருக்கல். இரண்டு, உயிர்வாழ்வைத் தக்க வைத்தல். அதனால்தான் தற்கொலையாளிகளையிட்டு (தற்கொடையாளிகள் அல்லர்) நான் எப்போதும் கோபம் கொள்வது. “வீறிட்டு அழுது விழுந்து புலம்புவதோ/பார் எட்டுத்திக்கும் உலகம் பரந்து கிடக்கிறது” என்பது மஹாகவியின் வரி. அஃது தரும் நம்பிக்கை வரி என்னை வாழவைக்கிறது. அலைந்துழலும் வாழ்க்கை உண்மையில் தாங்க முடியாதது. ஆனால் எனது வாழ்க்கையை நான்தானே வாழ்ந்து தீரவேண்டும். எனக்காக இன்னொருவர் அழலாம்; எனக்காக இன்னொருவர் சோறுண்ண முடியாது. ஒவ்வொரு நாளும் வேலைக்கு வெளிக்கிடும்போது தயக்கம் வந்து கால்களை நகர விடாது. ஒரு வாக்கியம் என் மனசில் தோன்றும்: ‘அழுதாலும் பிள்ளை அவளே பெறவேண்டும்’ மேலாக ஒன்றைத்தான் நான் ஒவ்வொரு நாளும் யோசிப்பேன்: முள்ளிவாய்க்காலில் இரண்டு, மூன்று மாதங்களாவது மனிதர்கள்(தமிழர்கள்) வாழ்ந்தார்கள் தானே. அதைவிட எம் வாழ்வு அலைந்துழலும் வாழ்வென்றா நீங்கள் கருதுகிறீர்கள்?   

***

   

சாவூறும் சுவை

0

வேல்விழி

சாவூறும் சுவை

“அம்மா, இண்டைக்கு பின்னேரம் பனங்காய்க்காய் சுடுவமா..? “

சமையலறையில் உட்கார்ந்து மத்தியான சாப்பாட்டுக்கான அடுக்குகளை பரபரப்பாக தயார் செய்து கொண்டிருந்த அன்னக்கொடிக்கு அவள் மகள் கேட்ட கேள்வி காதில் விழவில்லை. வெங்காயக் கொட்டிலிலிருந்து அவள் அவிழ்த்து வந்த ஒரு முடிச்சு சின்னவெங்காயம் அடுப்படியில் குந்தியிருக்க, தன் முன்னேயிருந்த மற்றைய ஓலைப்பெட்டிகளைத் திறந்து என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்று ஆராய்ந்து கொண்டிருந்தவளின் கவனம் முழுதும் அடுப்படியைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்தது. இப்போதெல்லாம் அவளுக்கு இருக்கின்ற மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் மதியத்திற்கு என்ன சமைப்பது என்பது தான். நினைத்த மாத்திரத்தில் வெளியில் சென்றுவர முடியாத இந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைப்பதைக் கொண்டு சமையல் செய்வதென்பது அவளைப் போன்றவர்களுக்கு மிகப் பெரியதொரு தண்டனை. பொதுவாகவே அவளுக்கு மறதிக்குணம் அதிகம். கறியை அடுப்பில் வைத்துவிட்டுதான் உப்பு முடிந்துவிட்டது, தூள் இல்லை, புளி வாங்க வேண்டும், எண்ணெய் முடிந்துவிட்டது என ஒவ்வொன்றிற்கும் சந்தி முகப்பிலிருந்த பெட்டிக்கடைக்கு  ஒவ்வொருவராக அனுப்புவாள். ஆனால் இப்போது, அடிக்கடி அதுபோல் ஊர்வலம் போக முடியாதென்பதால் அடுப்படி என்பதே அவளுக்கு அந்நியப்படையோடு மோதும் ஒரு போர்க்களம் போல் ஆகிவிட்டிருந்தது.

வீட்டு விறாந்தையில் அமர்ந்திருந்து தன் கைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தாள் தமிழினி. தான் கேட்ட கேள்விக்கு அம்மாவிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லையென்பது அவளுக்கு ஏமாற்றத்தையோ அல்லது கோபத்தையோ ஏற்படுத்தியிருக்க வேண்டும். என்னதான் வளர்ந்து பட்டம் பதவி என்று உத்தியோகத்திலிருந்தாலும் அவளுக்கு பிடிவாதக்குணம் கொஞ்சம் அதிகம், அப்படியே தர்சியைப் போல என்று அடிக்கடி அக்கா சொல்வாள். எது கேட்டாலும் உடனே கொடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் அவள் குரல் ஊரை இரண்டாக்கி உலகை நான்காக்கிவிடும் அளவிற்கு வளர்ந்து விடும். இப்போது அவளின் குரலிற்கு யாரும் காது கொடுக்கவில்லை என்பது அவளுக்கு மிகப்பெரிய பிரச்சினையாய் தோன்ற நேரே சமையலறைக்குள் போய் தாயின் முன் சிலையாய் நின்றாள்.

ஓலைப்பெட்டிகளில் தட்டித்தடவிக் கொண்டிருந்த அன்னக்கொடிக்கு மகள் வந்தது தெரிந்திருந்தும் பெரிதாக அதில் அக்கறை செலுத்தவில்லை. மும்முரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தாள். அவ்வளவு தான். அவள் கோபம் எல்லையில்லாத அமானுஷ்யம் போல வளர ஆரம்பித்துவிட்டது.

“அம்மா எனக்கு பனங்காய்க்காய் வேணும்…” 

“இந்த நட்டநடு மத்தியான நேரத்தில என்ன பனங்காய்க்காய். மத்தியானத்துக்கு என்ன சமைக்கிற எண்டு தெரியேல்ல. நானே விசரில இருக்கிறன். இப்ப வந்து பனங்காய்க்காய் வேணுமெண்டு கேட்டா.. அடிவாங்காம ஓடிரு அங்கால..”

அவள் அம்மா அன்னக்கொடி எண்ணெயில் தெறிக்கும் கடுகாய் சொற்களால் வெடித்துப் பறந்தாள்.

 “இப்ப உடன சுடுவம் எண்டு ஆர் கேட்டது. சமைச்சு சாப்பிட்டுட்டு பின்னேரம் ஆறுதலா சுடுவமோ எண்டு தானே கேட்டனான்.” 

“சரி அத பிறகு யோசிக்கலாம். இப்ப முதல்ல சமைக்கிறதுக்கு கொஞ்சம் கெல்ப் பண்ணு பாப்பம்.”

தமிழினிக்கு ஒரே புளுகம். ஆக, அம்மா ஒத்துக்கொண்டு விட்டாள். இனி பின்னேரம் அவர்கள் பனங்காய்க்காய் சுடப்போகிறார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட விடயமாகி விட்டது. எவ்வளவு காலமாகி விட்டது பனங்காய் சாப்பிட்டு. எத்தனை வகையான புதுப்புது இனிப்புப்பண்டங்கள் விதவிதமாக சந்தைக்கு வந்தாலும் பனங்காய்க்காய்க்கு கிட்ட யாருமே போட்டிக்கு நிற்க முடியாது. இந்த உலகில் எல்லோருக்கும் எல்லா வகையான இனிப்புக்களும் பிடித்து விடுவதில்லை. ஆனால், பனங்காய்க்காயை விரும்பாத தமிழர்கள் யாருமே இவ்வுலகில் இருக்க மாட்டார்கள். எத்தனை விதமான மேலைத்தேய தின்பண்டங்கள் வந்தாலும் அம்மா சுடுகின்ற பனங்காய்க்காய்க்கு நிகராக எதுவுமே இருந்துவிட முடியாது.

பனங்காய்க்காய் அல்லது பனங்காய்ப்பணியாரம் செய்ய வேண்டுமாகவிருந்தால், நன்கு விழுந்த பனம்பழங்களை தேடிப்பொறுக்கி எடுத்து வரவேண்டியது மட்டும்தான் அவளது வேலை. அதன் பின் மிச்சமெல்லாம் அம்மா பார்த்துக் கொள்ளுவார். முதலில், எடுத்து வந்த பழங்களிலிருந்து ஈ மொய்த்திருந்த பழங்களை தவிர்த்துவிட்டு மிகுதிப் பழங்களின் தோலை உரிக்க வேண்டும். அதன்பின், அவற்றிலிருந்து பனங்களியை வழித்தெடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பனம்பழத்திலிருக்கும் அந்தக் களியை வழித்தெடுப்பது என்பது மிகுந்த சிரமமான ஒரு வேலைதான். அதிக அளவான உடல்வலு தேவைப்படும்.

ஆனால், அப்படி எடுக்கும் களி பார்ப்பதற்கு அவ்வளவு அழகாயிருக்கும். கடும்மஞ்சள் நிறத்தில் கட்டியாகவும் இல்லாமல் தண்ணித்தன்மையாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட பதத்தில் இருக்கும் அந்தக் களி. அம்மா பனம்பழத்தை வார்ந்து வார்ந்து கஸ்ரப்பட்டு களி சேர்த்துக் கொண்டிருக்கும்போது அவளும் அக்காவும் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். இடைநடுவில், பனம்பழத்திலிருந்து வழியும் களி சட்டியில் விழமுன்னம் கையை குறுக்காக நீட்டி கொஞ்சத்தை அள்ளிக்கொண்டோடி, வேலிக்கரையோரமாக நின்ற அரசமர இலை இரண்டை பிடுங்கி, அதில் நல்ல தட்டையாக பரப்பி வீட்டுக்கூரையில் காயவைத்து ஆளாளுக்கு பினாட்டு ஆக்கி சாப்பிட்டுவார்கள்.

சின்னவயதில் பினாட்டு என்றால் அவளுக்கு அலாதிப்பிரியம். அவளுக்கு மட்டுமல்ல, அவள் அக்காவிற்கு அண்ணாக்களிற்கு என எல்லோருக்குமே பனம்பழம் என்றால் அவ்வளவு கெடு. ஒரு துண்டு பினாட்டிற்காக அத்தனை பேரும் அடிபிடிப்பட்டு நிலத்தில் விழந்துருண்டு கைகால்களில் சிராய்ப்பு காயங்கள் வேண்டுமளவிற்கு நாக்கில் ஊறியிருந்தது அந்தச் சுவை. இப்போதும் அவளிற்கு பனம்பழம் என்றாலோ, பினாட்டு என்றாலோ, பனங்காய்க்காய் சுடுவதென்றாலோ அவ்வளவு புளுகம் வந்துவிடும். ஆனால், அக்கா அப்படியல்ல. இப்போதெல்லாம் பனம்பழம் என்றாலே கடுப்பில் தெறித்து விழுகிற அளவிற்கு படுமோசமாய் மாறிப்போயிருந்தாள். அதனால், வீட்டில் பினாட்டு செய்வதோ, பனங்காய்க்காய் சுடுவதோ என்பது இப்போது மிகமிக குறைந்து விட்டிருந்தது. யாராவது உறவினர்களோ நண்பர்களோ வந்திருந்தாலோ அல்லது ஆசைப்பட்டுக் கேட்டாலோ தவிர மற்றைய தருணங்களில் பனம்பழங்களை மாடுகள் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தன.

இந்த ஊரடங்கு காலத்தில் வெளியே செல்லவோ அல்லது வேலைக்கு போகவோ வேறு பிராக்குகளோ இல்லாமல் வீட்டை மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கும் தமிழினிக்கு கொஞ்சம் ஆறுதலாக இருப்பது இந்த ‘பேஸ்புக்’, ‘ட்விட்டர்’, மற்றும் இணையத்தள செய்திகளை பார்ப்பதுதான். அப்படி ‘பேஸ்புக்’ பார்த்துக் கொண்டிருக்கும்போது தான் அவளது நண்பி வாணி பதிவிட்டிருந்த படத்தைக் காண நேரிட்டது. பனங்காய்க்காய். சின்ன சின்ன மஞ்சள் நிற உருண்டையாய் பனங்காய்க்காய். அதுதான் இதுவரை சும்மா இருந்த அவளது மூளையை இப்போது உசுப்பி விட்டு சமையலறையில் திண்டாடிக் கொண்டிருக்கும் அம்மா முன்னே அவளைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

“அம்மா, நான் இப்பவே சொல்லிட்டன். பனங்களி எடுக்கவோ இல்லாட்டி பனம்பழம் பொறுக்க இவளோட கூட போகவோ நான் மாட்டன் ஆ.. இவளும் நீங்களும் தனியத்தான் சுடோணும் பிறகு என்னைச் சொல்லக்கூடாது..”

அம்மாவிற்கு சமையலில் உதவி செய்துகொண்டிருந்த அவளது அக்கா நிலா, தமிழினியைப் பார்த்து முறைத்தவாறே அம்மாவிற்கு பதில் சொன்னாள். அவளது பதில் தமிழினிக்கு கோபத்தை உண்டாக்கியது.

“நீ கெல்ப் பண்ணாட்டி என்ன, நானும் அம்மாவும் சுடுவம், எனம்மா. அம்மா நான் இப்ப உங்களுக்கு கெல்ப் பண்ணித்தந்தா பிறகு நீங்க சுட்டுத் தருவீங்களெல்லோ.. “

எதற்கும் ஒருமுறை உறுதி செய்துகொண்டாள் தமிழினி. அம்மா ஓம் என்பது போல இலேசாக தலையசைத்தாள். அவ்வளவு தான், பனம்பழம் அவள் நினைவில் இனிக்கத்தொடங்க கைகள் சின்ன வெங்காயத்தை உரிக்கத் தொடங்கின. நிலாவின் கண்களில் கண்ணீர் கசிய நினைவுகளில் நெருப்புப்பொறி பறந்தது.

அவர்கள் அப்போதுதான் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்திருந்தார்கள்.  வீட்டிற்கும் பள்ளிக்கூடத்திற்கும் கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் இருக்கும். அவர்களது தாயார் கற்பிக்கும் பாடசாலையிலேயே அவளும் அவளது அண்ணன்களும் சேர்த்து விடப்பட்டிருந்தார்கள். அண்ணன்கள் எப்போதும் அவளை தம்முடன் கூட்டிப் போவதேயில்லை. அதனால் பாடசாலைக்கு   போகும்போதும் சரி, பாடசாலையை விட்டு வரும் போதும் சரி அவளும் அவளது தங்கை நிலாவும் எப்போதும் அம்மாவோடு தான் வருவார்கள். அன்று, பாடசாலையில் ஆசிரியர்களுக்கு ஏதோ கூட்டம் நடைபெற இருந்ததால் அவளும் அவளது தங்கையும் தனியாக வீடு வரவேண்டியதாகி விட்டது.

ஏற்கனவே பசி வயிற்றை குடையத் தொடங்கியிருந்ததால் வந்ததும் வராததுமாய் வெள்ளைச் சட்டையை கழட்டி வெளிக்கொடியில் போட்டுவிட்டு நேரே அடுப்படியில் போய் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினாள் நிலா. நான்கு வாய் சாப்பிட்டிருப்பாள், ஐந்தாவது வாய் வைப்பதற்கிடையில் அவள் காது ஏதோவொரு ஒலியைச் சிறைப்பிடித்து மூளைக்கு அனுப்பிவிட, “உடனடியாக பதுங்கு குழிக்குப் போ” என மூளை கால்களிற்கு ஆணை பிறப்பித்தது. அடுத்த கணம் நிலாவை பதுங்கு குழிக்குள் காணக் கிடைத்தது.

பேய் அரசு செய்தால் பிணந்தின்னும் சாத்தான்கள் என்பது போல் தென்னிலங்கை பேரினவாத எண்ணங்கள் எல்லாம் வடஇலங்கையில் உயிர்குடிக்கும் குண்டுகளாய்க் கொட்டப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது. சமாதானப்பொதி என்ற பேச்சுடன் அம்முறை நடந்த அரச தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா, ஆட்சிக் கதிரையிலேறிய அடுத்த நொடியே தன் வார்த்தைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு, முன்னெப்போதும் இல்லாத புது உத்வேகத்துடன் போர்ப்பூதங்களை தீனி போட்டு வளர்க்கத் தொடங்கியிருந்த காலம். எப்பெப்போ எங்கெங்கு எது நடக்குமென யாராலும் ஊகித்தறிய முடியாத சூழல். திருமணச் சடங்குகளில் சாவுகள் விழுந்ததுண்டு. பள்ளிக்கூரைகளில் குண்டுகள் விழுந்ததுண்டு. எல்லோர் வீட்டிலும் பதுங்குகுழிகள் கட்டாயச் சேர்க்கையாய் இருக்க காலம் உணர்த்திய பாடம்.

நிலாவிற்கு ஊர் முழுதும் அத்துபடி. யார்யார் வீட்டில் என்னென்ன விதமான ‘பங்கர்கள்’ இருக்கின்றன என அச்சுஅசலாய் நகலெடுத்தது போல் சொல்ல அவளால் மட்டுமே முடியும். செல்லையா ஐயா வீட்டில ‘மூடு பங்கர்’, தவமணி அக்கா வீட்டில ‘ஐ பங்கர்’, தெத்திப்பல்லு கணேசன் வீட்டில வீட்டு தலைவாசலுக்குள்ளேயே வெட்டி அதைச்சுற்றி சாணமிட்டு மெழுகியிருந்த ‘வீட்டு பங்கர்’, வைரவர் கோயில் செவ்வரத்தைக்கு கீழே ஐம்பது மீற்றர் நீளத்திற்கு பாம்பு போல நெளிந்த ‘மூவிங் பங்கர்’ என அங்கங்கு உள்ள அத்தனை பங்கர்களிற்கும் அவள் பிரவேசம் ஒருமுறையாவது கிடைக்கப் பெற்றிருக்காவிட்டால் தான் அதிசயம். பள்ளிக்கூடம் விட்டு வரும்போது, வைரவர் மடையில நிக்கும்போது, புளியம்பழம் பொறுக்கப் போனபோது என அவள் எந்த இடத்தில் நிக்கும்போதும் செல்லோ கிபிரோ வந்தால் கேட்டுக் கேள்வியில்லாமல் அவள் அக்கம் பக்கத்திலுள்ள பங்கருக்கு ஓடிவிடுவாள்.

எவ்வளவு வீராதி வீரனாக இருந்தாலும் இத்தகைய திடீர் தாக்குதல்களைச் சந்திக்கின்ற போது ஒருமுறை  நிலைகுலைந்துதான் போய்விடுவார்கள். என்ன, நிலாவிற்கு அந்த நிலைகுலைவின் அளவு ஆக உச்சத்தில் இருந்தது. ‘செல்’ குத்துற சத்தம், ‘சுப்பசொனிக்’ வாற சத்தம், சண்டை நடக்கிற சத்தம் இதுகளை கேட்டால் அவளுக்கு பேப்பயம். எல்லோருக்கும் முன்னர் அவள் தான் பதுங்கு குழிக்குள் இருப்பாள் . அது பள்ளிக்கூடத்திலும் சரி, வீட்டிலென்றாலும் சரி. இதோ இப்போதும் ‘சுப்பர்சொனிக்காரன்’ வாற சத்தம் அவளுக்கு கேட்டுவிட்டது. அடுத்த நொடி பதுங்குகுழிக்குள் பாய்ந்து விட்டாள்.

“அண்ணா, அண்ணா.. பங்கருக்கை வாங்கோ. எனக்கு தனியா இருக்க பயமா இருக்கு. அவன் திரும்பத்திரும்ப இதுக்குள்ள தான் சுத்திக் கொண்டிருக்கிறான். உள்ள வாங்கோ.எனக்கு பயமா இருக்கு… “

அவள் குரல் அழைப்பில் தொடங்கி, இரைஞ்சலாக மாறி கடைசியில் விம்மி வெடிக்கும் அழுகையாக மாறியிருந்தது. ஆனால், ஒன்பது, பத்து வயதுகளில் இருக்கும் அவளது அண்ணன்களுக்கு பதுங்குகுழியில் ஒளிவதற்கு பதில் அந்த வயதிற்கேயுரிய விளையாட்டுப்புத்திதான் முன்னணியில் நின்றது.

“ நீ பங்கருக்கு தானே இருக்கிறாய், பிறகென்ன. ஒரு பயமும் இல்ல அப்பிடியே இரு. இந்தா இப்ப நான் தமிழை கூப்பிட்டு விடுறன் “ என்ற அவளது சின்னண்ணா, கொய்யாமரத்திற்கு கீழே நின்று கொய்யாக்காய் ஆய்ந்து கொண்டிருந்த அவளது தங்கையின் தலையில் சின்னதாக ஒரு கொட்டு வைத்து ‘ஓடு பங்கருக்கு’ என அனுப்பிவிட்டான். ஆனாலும், அவளுக்கு இன்னும் பயம் போகவில்லை. தொண்டையில் சிக்கிக்கொண்ட மீன்முள்ளாய் ஏதோ கிடந்து உறுத்திக் கொண்டேயிருந்தது.

“நீங்களும் ரெண்டு பேரும் உள்ள வாங்கோ. பிறகு போய் விளையாடுங்கோ. அண்ணா, எனக்குப் பயமா இருக்கெண்டுறன். சத்தமும் இங்க தான் கிட்டத்தில எங்கயோ கேக்குது. இங்கனைக்க எங்கையோ தான் அடிக்கப் போறானெண்டு நினைக்கிறன். வாங்கோ. உள்ள வாங்கோ..”

இம்முறை அவளது அழுகை பலமாயிருந்தது. இது ஒன்றும் அவளது அண்ணன்களிற்கு புதிய காட்சியில்லை. வாரத்தில் எப்படியாவது நான்கைந்து முறைக்கு மேல் நடந்தேறுகின்ற வழமையான விடயம் தான். சிலவேளைகளில் ஒரேநாளில் நான்கைந்து தடவைக்கு மேல் கூட. அதனால் அவளது அழுகையை கேட்டுக்கேட்டு அவர்களுக்கு புளித்துப் போய்விட்டது. நிலாவைப் பொறுத்தவரை, அவளிற்கு தனியாக இருப்பதற்கு சரியான பயம். யாராவது அவள் கூட இருக்க வேண்டும். அனேக நேரங்களில், சத்தம் அதிகமாகி, இலக்கு எங்கோ அவர்களிற்கு அருகில் தான் இருக்கிறது என்று உறுதியாகின்ற  தருணங்களைத் தவிர மற்றைய நேரங்களில் அவளது அண்ணாக்கள் பதுங்கு குழிக்குள் வருவதில்லை என்பதால் அம்மா தான் அவளோடு போய் இருப்பாள்.

இப்போதும் அவள் கூப்பிட கூப்பிட கேட்காது கிட்டிப்புள் விளையாடிக் கொண்டிருந்தவர்கள், ‘சுப்பசொனிக்’ சத்தம் அதிகமாகி அதிகமாகி காதைக் கிழிக்கத் தொடங்கத்தான் ஓடிவந்து பதுங்கு குழிக்குள் தொப்பென விழுந்தார்கள். அடுத்த கணம் தர்சியையும் அந்த ‘பங்கருக்குள்’ காணக் கிடைத்தது.

தர்சி, நிலாவின் கூட்டு. பலவேளைகளில் எதிரியும் கூட. நிலாவின் வீடு இருந்த வளவிற்குள்ளே தான் தர்சியின் வீடும் இருந்தது. அந்த நாட்களில் இலங்கையில் வாழ்ந்த தமிழர்களின் நிலை படு மோசமாக இருந்தது. சிறீலங்கா இராணுவப் படையெடுப்புகள் அடிக்கடி நடப்பதும் மக்கள் கையில் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக பாதுகாப்பான பிரதேசங்களை சென்றடைவதும் பெரும்பாலும் வழக்கமான விடயமாகி விட்டிருந்தது. அப்படித்தான், தர்சியின் குடும்பமும் யாழ்ப்பாண இடப்பெயர்வு காலத்தில் கையில் அம்பிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு வன்னி பெருநிலப்பரப்புக்கு ஓடிவந்த பலநூறு குடும்பங்களில் ஒன்று. தர்சியின் அப்பா நீர்ப்பாசனத்துறை அதிகாரியாக வேலை செய்து கொண்டிருந்ததால் ஒட்டுசுட்டான் எனும் ஊரிலுள்ள அலுவலகத்தில் தற்காலிக இணைப்பாக வேலைக்கு சேர்க்கப்பட்டார். அதனால் குறிப்பிட்ட அலவலகத்திற்கு அருகாக எங்காவது குடியிருக்க விரும்பியவர்கள் இறுதியில், கற்சிலைமடுவில் நிலாவின் குடும்பம் குடியிருந்த அதே காணிக்குள் தாமும் ஒரு சிறு மண்வீட்டைக் கட்டிக்கொண்டு குடியேறியிருந்தார்கள் (நிலா குடும்பமும் கூட இதற்கு முன் பல இடங்களில் குடியிருப்பதும் இடம்பெயர்வதுமாகத் தான் இருந்திருந்தது. நிலா பிறந்து இந்த ஏழு வருடங்களிற்குள் மட்டும் அவர்கள் ஐந்து முறை இடம்பெயர்ந்திருந்தார்கள். நிலா தனது முன் பள்ளிக்கல்வியை மட்டும் நான்கு வெவ்வேறு இடங்களில் படிக்க வேண்டியிருந்திருக்கிறது.

கற்சிலைமடு ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஊர். இலங்கையில் ஆங்கிலேயரை எதிர்த்து, இறுதிவரை மண்டியிடாது போராடி வீரகாவியமான, வன்னிமாட்சிமையின் இறுதித்தமிழ் மன்னன் குலசேகர வைரமுத்து பண்டாரவன்னியனின் வீரத்தின் சாட்சியாக, ஆங்கிலே படைத்தளபதி கப்டின் வொன் ட்றிபேக் ஆல் நிறுவப்பட்ட கல்வெட்டு அமைந்துள்ள இடம். அந்த கல்வெட்டு அமைந்துள்ளதன் காரணமாகவே அந்த ஊரிற்கு கற்சிலைமடு என்பது ஒரு காரணப்பெயராக அமைந்தது என்பது வரலாறு. நிலாவும் அவளது அண்ணாக்களும் தர்சியும் கூட அவ்வப்போது சிலையடிக்கு சென்று வருவார்கள்.

தர்சியைப் பொறுத்தவரை வீட்டில் அவள் ஒரே பிள்ளை என்பதால் செல்லம் கொஞ்சம் அதிகமாகவிருந்தது. அதன் இலவச இணைப்பாக பிடிவாதம் அவளுடன் குடிவந்து கூடவே உட்கார்ந்துவிட்டது. அவள் எது கேட்டாலும் கொடுத்தாக வேண்டும். இல்லையென்றால் ஊரே இரண்டாகும் அளவிற்கு கச்சேரி வைத்து கெடுத்து விடுவாள். இன்றும் அவள் பாடசாலையால் வீட்டிற்கு வரும்போது,  ‘அன்ரி’ பின்வளவெல்லாம் தேடி நான்கு பனம்பழம் பொறுக்கியெடுத்து வைத்திருந்திருக்கிறார். வந்ததும் வராததுமாக பனம்பழ வாசம் அவள் மூக்கை துளைக்க, தான் கொண்டு வந்திருந்த புத்தகப்பையை வாசல் திண்ணையில் வீசி விட்டு நேரே ஒரு பனம்பழத்தை எடுக்கப் போனவளை ‘அன்ரி’ ஏசிவிட்டார்.

“வந்ததும் வராததுமா என்ன விளையாட்டு. புத்தகப்பையை தூக்கியெறிஞ்சிட்டு நேரே இதில வந்திருந்தா என்ன பிளான்.. எழும்பு, எழும்பி முதலில கை கால் அலம்பிட்டு வா வந்து சாப்பிடு. பிறகு என்னெண்டாலும் செய். “

அவ்வளவுதான். அவளின் உள்ளே எந்த அசுமாத்தமும் இல்லாமல் நல்லபிள்ளையாக அசையாதிருந்த அந்த பிடிவாத மரத்தை ‘அன்ரி’யின் குரல் ஒரு உலுப்பு உலுப்பிவிட்டது. கிளைகளின் இலைகளும் பூக்களும் காய்களுமாய் கனிகளுமாய் அந்த பிடிவாதம் சிதறி தெறிக்க ஆரம்பித்து விட்டது. இனி இந்த வேதாளம் முருங்கை மரம் ஏறினால் இப்போதைக்கு இறக்க முடியாது என்பது நன்கு தெரிந்திருந்தும் ‘அன்ரி’ ஏதோ ஒரு நப்பாசையில் கொஞ்சம் முயற்சி செய்து பார்த்தாள். தனியொருத்தியாக அவளால் தர்சியின் பேயாட்டத்தை சமாளிக்க முடியவில்லை. கடைசியாக வேறு வழியின்றி அவளைத் திட்டிக்கொண்டே ஒரு பனம்பழத்தை எடுத்து அடுப்பில் சுட்டு பிய்த்துக் கொடுத்தார்.

இன்னும் கழட்டிப் போடாத பள்ளிக்கூட வெள்ளைச் சட்டையோடேயே பனம்பழத்தையும் வாங்கிக்கொண்டு வெற்றிக் களிப்போடு வெளியே வந்தாள் அவள். நேற்றுத்தான் சாணமிட்டு மெழுகியிருந்த வாசல் திண்ணியில் ஏறி, கால்களை மடித்து வளமாய் உட்கார்ந்துபடி, கையிலிருந்த பனம்பழத்தை காந்த ஆரம்பித்தாள். பனம்பழத்திலிருந்து மஞ்சள் களி வாய்வழியாக வழிந்து கடைவாயை நனைத்து அவளது வெள்ளைச் சீருடையில் விழுந்து காய்ந்தது. ஆனாலும், அதெல்லாம் அவளுக்கொரு பொருட்டா என்ன..?

கிட்டத்தட்ட ஒரு ஐந்து நிமிடம் கடந்திருக்கும். அவள் காதுகளில் அந்தச் சத்தம் விழுந்து விட்டது. அவள் கையிலிருந்த பனம்பழம் தானாகவே கீழிறிங்க அவள் கால்கள் ‘பங்கர்’ பக்கமாக விரைந்து பறந்தன. இப்போது, காதுகளின் வழி வந்த தகவலை அவளது மூளை உறுதி செய்துவிட்டது. சந்தேகமேயில்லை, அது ‘சுப்பசொனிக்’ சத்தம்தான். அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

தீர்த்தத்திருவிழா நாளொன்றில் மணல்திட்டில் தொலைந்து போன குழந்தை ஒன்று அங்குமிங்கும் அலைவது போல அவள் ‘பங்கர்’ பக்கம் வருவதும், பிறகு வீட்டுப்பக்கம் வருவதும், திரும்பி ‘பங்கர்’ பக்கம் ஓடுவதுமாக மாறி மாறி கிளித்தட்டு மறித்துக் கொண்டிருந்தாள். பின்னர் ஒரேயோட்டமாக கண்ணை இறுக்க மூடிக்கொண்டு வீட்டுப்பக்கமாக திரும்பியோடினாள். தான் பாதி சூப்பியபடி வைத்துவிட்டு வந்த பனம்பழத்தை திண்ணையிலிருந்து வெடுக்கென எடுத்தாள். அடுத்த நொடி அசுர வேகத்தில் ஒரு குருவியாய் பறந்து நிலாவிருந்த ‘பங்கரின்’ மேல் திட்டிலிருந்து பொத்தென உள்ளே குதித்தாள்.

இவ்விடத்தில் மிக முக்கியமான ஒரு விடயத்தை பதிவு செய்தாக வேண்டும்.  இந்த உலகத்திலேயே நிலாவுக்கு தான் ‘சுப்பசொனிக்குக்கு’ அவ்வளவு பயம் என்று சொல்லியிருந்தேன் அல்லவா. இப்போது அந்த கூற்றில் கொஞ்சம் மாற்றம் செய்ய வேண்டும். நிலாவுக்கு ‘சுப்பசொனிக்குக்கு’ எவ்வளவு பயமோ அதுக்கு ஒருதுளி கூட குறைவில்லாத அளவுக்கு தர்சிக்கும் அதே பயம். நிலாவுக்கும் தர்சிக்கும் அதிக வேறுபாடெல்லாம் ஒன்றும் கிடையாது. நிலாவுக்கு கொஞ்சம் கோபம் வரும். தர்சிக்கும்தான். நிலாவின் சாப்பாட்டில் தினமும் மீனிருக்க வேண்டும்: தர்சிக்கும் தான். நிலாவுக்கு ஏழு வயதென்றால், தர்சிக்கும் கிட்டத்தட்ட அப்படித்தான் (ஆறு வயது).அந்த வேகத்தில் ஓடிவந்து ‘பங்கருக்குள்’ குதித்தாலும் அவள் தனது கையிலிருந்த பனங்கொட்டையை இன்னமும் இறுக்கியே பிடித்திருந்தாள். ‘சுப்பசொனிக்’ தலைக்கு மேல் வட்டம் போட்டுக் கொண்டிருந்தாலும், பயத்தில் அவள் பதைபதைத்திருந்தாலும், அந்த பனம்பழத்தை சூப்புவதையும் அவள் கைவிட்டு விடவில்லை. நடுங்கும் கைகளின் வழி அந்தப் பனம்பழமும், வெருளும் கண்களின் வழி அவளது மனமும் அசைவது கண்ணுக்கு தெளிவாக தெரிந்தது. தொடர்ந்து இருபது நிமிடங்களிற்கு மேலோக வட்டமிட்டுக் கொண்டேயிருந்த ‘சுப்பசொனிக்’ கும் போகிற பாடாய்க் காணோம். திடீரென அவள் பனம்பழம் சூப்புவதை நிறுத்திவிட்டு நிலாவின் பக்கமாய் திரும்பி பேச்சுக் கொடுத்தாள்.

“என்னக்கா, இந்த சுப்பசொனிக்காரன் போமாட்டானாம். இவ்வளவு நேரமா இதுக்கையே கிடந்து சுத்திக் கொண்டிருக்கிறான். இங்கதான் எங்கையோ அடிக்கப்போறான் போல..”

என்னவோ தெரியாது அந்த கலவரக்கணத்திலும் நிலாவுக்கு ஒரு குறும்புத்தனம் குடிகொண்டு விட்டது. இப்போது நினைத்தாலும் அதை எப்படி சொன்னாள், ஏன் சொன்னாள் என்பதற்கான காரணத்தை அவளால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை.

“அவன் நீ பனம்பழம் சூப்பிறதை கண்டுட்டான் போல. அதுதான் போறானில்லைப் போலை. திருப்பி திருப்பி இதுக்கையே சுத்திக் கொண்டிருக்கிறான்..”

பேயறைந்தது போல நிறம்மாறிய தர்சியின் முகத்தைப் பார்த்த போது தான் சொன்ன பதிலை அவள் ஓரளவு நம்பிவிட்டாள் போலிருந்தது நிலாவுக்கு. போதாக்குறைக்கு இப்போது அண்ணன்களும் அவளுடன் சேர்ந்துகொண்டு கதைவிடத் தொடங்கியிருந்தார்கள். அவர்கள் மாறிமாறி எல்லோரும் அதையே சொன்னதால் அவள் வேறுவழியின்றி அதை ஏற்றுக்கொண்டு விட்டாள். ஆனாலும், அவர்கள் வீட்டு முற்றத்திலிருந்த மாமர நிழலிலே தான்‘பங்கர்’ வெட்டப்பட்டிருந்தது. நன்கு சடைத்து வளர்ந்திருந்த கறுத்தக்கொழும்பான் மாமரம். வெறும் முதலாம் தரத்தில் படித்துக் கொண்டிருந்தாலும் தர்சியிடம் வயதுக்கு மீறிய கொஞ்ச புத்திசாலித்தனம் ஒட்டிக்கொண்டிருந்தது. அதனால், அவள் அவர்களை நோக்கி ஒரு சந்தேகப்பார்வையை வீசிக்கொண்டே ஒரு கேள்வி கேட்டாள்.

“நாங்க மரத்துக்கு கீழ தான இருக்கிறம். இந்த மரக்கிளையள தாண்டி அவன் எப்பிடி எங்கள பாப்பான்..? மரம் எப்பிடியும் மறைக்கும் தான..” – தர்சி.

“அது, இந்த மரக்கிளையளின்ர இடைவெளிக்கிள்ளால வெளிச்சம் வருதெல்லோ. அதுமாதிரி அந்த இடைவெளியளுக்குளளால அவனும் மேல இருந்து பாக்கலாம். அவனுக்கு எல்லாம் வடிவாத் தெரியும்.” – இது அண்ணாக்கள்.

“அப்ப, இதை இப்ப எங்க ஒளிக்கிறது. இப்ப வெளிலயும் எழும்பிப் போகேலாதே. அவன் வேற சுத்திச்சுத்தி இதுக்குள்ள தான் எய்ம் பண்ணிக் கொண்டிருக்கிறான்” என்றபடி அவள் தனது வெள்ளைச் சட்டையால் பனம்பழத்தை சுருட்டி மூடினாள். ம்கூம், அப்போதும் ‘சுப்பசொனிக்காரன்’ போவதாகயில்லை. இதற்கு மேல் எப்படி அதை மறைப்பது என்கின்ற அச்சத்தில் அவள் குழம்பி வெருண்டு அலமலந்து போயிருந்தாள்.

“அவனுக்கு தெரியாத இடத்தில மறைக்க வேணும், மேலேயிருந்து பாத்தாக்கூட தெரியக்கூடா. என்ன செய்றது.. எங்க ஒளிக்கிறது.. என அவள் தீவிரமாக சிந்தித்து கடைசியில், ‘சுப்பசொனிக்’ கொஞ்சம் தள்ளிப்போனதும் மெல்ல எழும்பி தலையை வெளியே நீட்டி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, நிலாவின் பக்கமாக திரும்பி, அந்த வேலிக்கரையோர பற்றைக்குள் ஒளிப்பமா என்று ‘ஐடியா’ கேட்டாள். அவர்களுக்கும் அந்த விளையாட்டு சுவாரஸ்யமாக இருந்தது. அடுத்த நொடி அவளது கையிலிருந்த பனம்பழம் அடர்ந்து சடைத்து மூடியிருந்த அந்த பற்றைப்புதருக்குள் விழுந்துருண்டு தானாகவே எங்கோ ஓடி ஒளித்தது. அதன்பின், சிறிது நேரத்தில் ‘சுப்பசொனிக்’ போய்விட்டது. அவர்களும் வழமை போலவே எல்லாவற்றையும் மறந்து விளையாட ஆரம்பித்திருந்தார்கள்.

“ நிலா நிலா.. எல்லாரையும் கூட்டிக்கொண்டு இங்க வா. அன்ரி பினாட்டு வைச்சிருக்கிறா. ஆளாளுக்கொரு துண்டு எடுத்துட்டுப் போங்கோ, வாங்கோ..”

நிலா விளையாட்டில் அண்ணாவின் கண்ணில் படாமல் ஒளித்திருப்பது தெரியாமல், பனைமரக் கருக்குகளிற்கு பின்னால் ஒளித்திருந்த அவளைப் பார்த்து ‘அங்கிள்’ பகிரங்கமாகவே கூப்பிட்டதில் நிலாதான் முதல் ‘அவுட்டாக’ வேண்டியிருந்தது. அதன்பின் அவளே ஆட்டத்தையே மொத்தமாக கலைத்து விட்டு “எல்லாரையும் அங்கிள் வரட்டாம்” என்கின்ற ஒரு பொது அறிவிப்பைக் கொடுத்துவிட்டு வீட்டு வாசலில் போய் நின்றாள். ‘அங்கிள்’ வரிசையாக ஒவ்வொருவருக்கும் சின்ன சின்ன பினாட்டுத்துண்டு கொடுத்தார். தர்சிக்கு மட்டும் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.

“நீ தான ஒரு பனங்கொட்டை புல்லா சூப்பினனி. அதால உனக்கு பினாட்டு தேவையில்லை. அவங்கள் பாவம், அவங்களுக்கு மட்டும் தான்.. “ அங்கிள் கடுமையாகச் சொல்லிவிட்டார்

தர்சியின் பிடிவாத அலை கட்டுடைத்து கரைகடந்து ‘கோ’ என்ற சத்தத்துடன் ஊர் முழுதும் பாயத்தொடங்கியது. ‘அங்கிளும்’ விட்டுக் கொடுப்பதாயில்லை.

“நீ என்னதான் அழுது கூப்பாடு போட்டாலும், இண்டைக்கு உனக்கு பினாட்டு கிடையாது.” 

‘அங்கிள்’ முடிந்த முடிவாக சொல்லிவிட்டு தலையை குனிந்து வாசல்படியால் உள்ளே போகத்திரும்பினார்.

“நான் அந்த பனம்பழத்தை அப்பவே எறிஞ்சிட்டன், சூப்பயில்லை. எனக்கும் பனாட்டு வேணும்.”  தர்சி ‘அங்கிளை’ மறித்தபடி குறுக்காக நின்று பேரம் பேசினாள்.

“எறிஞ்சிட்டியா.. எங்களுட்டையும் தராம நீயும் சாப்பிடாம அந்தப் பனம்பழத்தை அப்பிடியே எறிஞ்சிட்டியா. உனக்கு வரவர சரியான பிடிவாதம் கூடிப்போச்சு. “

அவள் சொன்ன வார்த்தைகளை கேட்டதும் ‘அங்கிளுக்கு’ பொல்லாத கோபம் வந்தது. அருகிலிருந்த கிளுவன்தடியில் எட்டி ஒரு பிரம்பை முறித்தவாறே அவளை கேள்விகளால் துளைக்கத் தொடங்கினார்.

“ஏன் அதை எறிஞ்சனி..? வேணாமெண்டால் அதைக் கொண்டு வந்து எங்களிட்டயாவது தந்திருக்கலாம் தானே. அவ்வளவு அடம் என. வேணும் வேணுமெண்டு அடிம்பிடிச்சு வாங்கிறது. வாங்கிப்போட்டு பிறகு அதை உடனேயே தூக்கிப் போட்டுடுறது. சொல்லு, ஏன் அதை எறிஞ்சனி..? “

வழமையாக ‘அங்கிளோ அன்ரியோ’ அவளுக்கு அடிப்பதில்லை என்றாலும் இன்று ‘அங்கிள்’ கோபத்தின் உச்சாணிக் கிளையிலேறி உட்கார்ந்து விட்டார். அவ்வளவுதான் . அவள் மொத்தமாய் எல்லாவற்றையும் போட்டுடைத்துவிட்டாள்.

“உங்களுக்கு தெரியாது. நான் பனம்பழம் சூப்பினதால தான் சுப்பசொனிக்காரன் வந்தவன் தெரியுமே. பிறகு நாங்கள் கஸ்ரப்பட்டு அதை பத்தேக்கை ஒளிச்ச பிறகுதான் அவன் போனவன்.”

“ என்ன, நீ பனம்பழம் சூப்பினதால தான் சுப்பசொனிக் வந்ததோ. ஆருனக்கு இந்த கதை சொன்னது..? “

அவள் கை மெதுவாக நிலாவை நோக்கி நீள, நிலா கையிலிருந்த பினாட்டை தூக்கி காற்றில்  வீசிவிட்டு எடுத்தேன் பாரு ஓட்டம் என பின்வளவை நோக்கி பறந்தாள். நிலா மட்டுமல்ல, அவளது அண்ணாக்களும் தங்கச்சியும் கூட அங்கிளால் விட்டுத் துரத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

குறிப்பிட்ட சம்பவம் நடந்து இரண்டு மாதங்களின் பின் திடீரென ஒருநாள் அதிகாலையில் அவர்கள் கையில் அகப்பட்ட பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு மறுபடி இடம்பெயர வேண்டியிருந்தது. ‘ஜெய சிக்குறு’ என்கின்ற பெயரிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட படையினரின் நகர்வின் ஒரு கட்டமாக, இரவோடிரவாக யாருக்கும் தெரியாமல் ஆமிப்படைகள் ஒட்டுசுட்டான் வரையில் வந்து விட்டிருந்தன. அதிகாலை வேளையில் வயலிற்கு போகும்போது தூரத்தே பனிஇருட்டில் ஆமிப்படைகளை கண்டுவிட்டு, அப்படியே சைக்கிளை திருப்பிக்கொண்டு கற்சிலைமடு நோக்கி வந்த ஒருவரின் செய்தியோடு தான் எங்கள் காலை விடிந்தது. அதற்கிடையில் ஒட்டுசுட்டானில் இராணுவத்தினர் முன்னேறிவிட்டிருந்த பகுதியில் இருந்த மக்களின் வீடுகளை அந்த அதிகாலையில் தட்டிய இராணுவத்தினர் அவர்களை அப்படியே தம்மோடு அழைத்துச் சென்றனர். ஒரு இரவில் உலகமே மாறிச் சுற்றிவிட்டதோ என்கின்ற அளவிற்கு அந்த நாள் மாறிப் போயிருந்தது.

அது 1998 ஆம் ஆண்டின் மார்கழி மாதத்தின் இறுதி நாட்களில் ஒன்று. பனிக்குளிர் உடம்பில் ஊசியேற்ற, பயக்குளிர் மனதை உறைய வைக்க வெறும் இரண்டொரு மணித்தியாலயங்களிற்குள் நாம் வீட்டிலிருந்து புறப்பட்டாக வேண்டிய சூழல். ஏற்கனவே வீதிக்கு ஏறிவிட்ட மக்களில் ஒரு பகுதியினர் முள்ளியவளை நோக்கியும் இன்னொரு பகுதியினர் புதுக்குடியிருப்பு நோக்கியும் நடக்கத் தொடங்கியிருந்தனர். நிலாவின் குடும்பத்தினர்  எல்லாவற்றையும் வாரிச்சுருட்டிக் கொண்டு வெளியில் வரவும், ‘அங்கிள்’ தன்னுடைய ‘லுமாலா’ சைக்கிளில் நான்கைந்து உரப்பைகளை வைத்து தள்ளிக்கொண்டு படலையடிக்கு  வந்து சேரவும் நேரம் சரியாகவிருந்தது. ‘அங்கிளுக்கு’ பின்னால் ‘அன்ரியும்’ தர்சியும் நின்று கொண்டிருந்தார்கள்.

ஆளாளுக்கு என்ன சொல்லிக் கொள்வது என்று தெரியாமல் சற்று கலங்கிய கண்களுடனேயே வீதிக்கு ஏறினார்கள். நிலாவின் அப்பாவும் ~அங்கிளும்~ முன்னே நடக்க மற்றவர்கள் அவர்கள் பின்னே ஊரத் தொடங்கினார்கள். இரண்டு நிமிட இடைவெளியில் நிலா மனதில் ஏதோ ஒரு உள்ளுணர்வு தெரிய திடீரென பின்னால் திரும்பிப் பார்த்தால் அவர்களோடு நின்றிருந்த தர்சியைக் காணோம். அவள் பயம் சுத்தியல் கொண்டு அவளது நெஞ்சிலே அறைவது அவளது காதுகளுக்கே தெளிவாய்க் கேட்டது.

“அப்பா அப்பா, தர்சியைக் காணேல்லை “  நிலா தன் சின்னிவிரலால் மெல்ல அப்பாவைச் சுரண்டினாள். அவர் சற்று நின்று சுற்றும் முற்றும் பார்த்தார். கூட்டத்தோடு கூட்டமாக எங்காவது மாறிப் போய்விட்டாளா என்று தேட ஆரம்பித்தார். தர்சியைக் காணவில்லை என்றதும்  ‘அன்ரி’ பயத்தில் அழ ஆரம்பித்து விட்டார். இரண்டு நிமிட தேடுதலின் பின் திடீரென்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடிவந்த தர்சி அவர்கள் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டாள்.

“தர்சி வந்தாச்சு .. தர்சி வந்தாச்சு”  கூட்டத்தோடு கூட்டமாக அங்குமிங்கும் தேடிக்கொண்டிருந்த நிலாவின் அப்பாவை அவளது சின்னண்ணா போய்க் கூட்டி வந்தான். வந்ததும் வராததுமாக ‘அங்கிள்’ கோபத்தில் வெடித்து சிதறினார்.

“எங்க போன்னீ இப்ப..? அதுவும் இந்த நேரத்தில எங்க எண்டு போய் நாங்கள் உன்ன தேடிப்பிடிக்கிற..? அப்பிடி அவசரமா என்ன வேலை உனக்கு.. ஆ.. “

“எங்கட பனமரத்தில இருந்து பனம்பழம் விழுற சத்தம் கேட்ட.. அதுதான் ஓடிப்போய் எடுத்துக்கொண்டு வந்தனான்.”

“பனம்பழமோ.. உசிருக்கு பயத்தில மனிசர் விழுந்தடிச்சு போற இந்த நேரத்தில உனக்குப் பனம்பழம் கேட்குதோ..” அவர் குரலில் கோபத்தின் வெம்மை இன்னும் தணியாமலேயே இருந்தது. தர்சியின் கையிலிருந்த பனம்பழத்தை பிடுங்கி வீதியோர வேலிக்கரையோடு எறியப்போனார் ‘அங்கிள்’. அவ்வளவுதான். தர்சியின் ஒலிக்கிடங்கு மறுபடி கிண்டப்பட்டு பூகம்ப வெடிப்பில் நிலம் துப்பியெறியும் நெருப்புச் சிதறல்களாய் வெளியே வந்து விழத்தொடங்கியது.

வேறு வழியேயில்லை. ‘அங்கிளிற்கு’ சமாதானம் சொல்லிக்கொண்டே கையிலிருந்த பனம்பழத்தை வாங்கி தர்சியின் கையில் வைத்தார் நிலாவின் அப்பா. அவள் அதை இறுக்கமாக பற்றிக்கொண்டாள். பின்னர் அவர்கள் புதுக்குடியிருப்புப் பக்கமாகவும், நிலா குடும்பம் முள்ளியவளைப் பக்கமாகவும் போவதென்று முடிவெடுத்தார்கள். அவர்கள் சனத்தோடு சனமாக புதுக்குடியிருப்பை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

தர்சியின் கையிலிருந்த கற்சிலைமடுப்பனம்பழம் புதுக்குடியிருப்பு பக்கமாக பயணப்படத் தொடங்கியது. அவர்கள் தங்களோடு வராது புதுக்குடியிருப்புப் பக்கமாக போவது நிலாவுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. காரணம், இனி யாரோடு விளையாடுவது..? அப்படி விளையாட வேண்டுமானாலும் புதிதாக கூட்டம் சேர்க்க வேண்டும். போகிற இடத்தில் அவள் வயதையொத்த சின்ன பிள்ளைகள் இருப்பார்களோ என்னவோ..? கவலை தொண்டையை அடைக்க அவள் திரும்பித் திரும்பி தர்சியைப் பார்த்துக்கொண்டே நடந்தாள். தர்சி ஆலடி வளைவைத் தாண்டி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துக்கொண்டிருக்க நிலாவின் கண்ணில் கடைசியாக பட்டு மறைந்தது தர்சியின் வலக்கையும் அதிலிருந்த பனம்பழமும்.

அதற்குள் ஒரு வருடம் ஓடி விட்டிருந்தது.

வீட்டில் அம்மா மும்முரமாக பனங்காய்க்காய் சுட்டுக் கொண்டிருக்கிறார். இடைநடுவில் எண்ணெய் கொஞ்சம் தீர்ந்து போனதால் கோயில் வளைவில் இருக்கும் பலசரக்கு கடைக்கு போய் வாங்கி வரச்சொல்லி நிலாவை அனுப்பியிருந்தார். கடை வீதி முழுதும் அங்கங்கு நான்கைந்து பேராக கூடிக் கூடிநின்று ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே கடைக்குப்போய் எண்ணெய் வாங்கிவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தாள். ஆலடி ‘பேக்கறி’யைத்  தாண்டும் போது வழமைக்கு மாறாக அந்த நேரம் ‘தமிழீழ வானொலியில்’ விசேட செய்தி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. நடையை கொஞ்சம் தளர்த்தி நின்று காதைக்கொடுத்து செய்தியில் அப்படி என்னதான் விசேடமாக சொல்கிறார்கள் என்று கவனமாகக் கேட்டாள். செய்தியில் சொன்ன விடயத்தை அவளால் நம்பவே முடியவில்லை. காலில் சக்கரம் பூட்டாத குறையாய் பறந்துபோய் வீட்டுப்படலையடியில் இருந்ததே கத்திக்கொண்டு போனாள்.

“அண்ணா.. அண்ணா.. உனக்கு விசயம் தெரியுமே.. ஒட்டுசுட்டான் அடிச்சிட்டாங்களாம். ஆமிக்கு சரியான சேதமாம். தமிழீழ வானொலில சொல்லிக்கொண்டிருக்கு..”

அவள் சந்தோசத்தில் தலைகால் புரியாமல் ஆடித்தொலைக்க, கையில் கொண்டு வந்த எண்ணெய்ப்போத்தில் நிலத்தில் விழுந்துருள, அடுப்படியிலிருந்த அம்மா அகப்பைக்காம்போடு வெளியே வந்து அவளை விட்டுத் துரத்த என ஒரு பெரிய களேபரமே நடந்து முடிந்தது. அதன்பின் மூன்று மாதங்கள் கழித்து ஏழாவது தடவையாக மறுபடி மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு திரும்பவும் கற்சிலைமடுவிற்கு மீளக்குடியேறினார்கள். நிலாவின் அம்மா கற்சிலைமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலேயே தான் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். நிலமை சரியாகி பாடசாலை அங்கு திரும்பிப் போவதால் அவர்களும் கட்டாயமாக அங்கு திரும்பப்போக வேண்டியிருந்தது.

ஒன்றரை வருட இடைவெளியின் பின்னர் மீளவும் கற்சிலைமடு. திரும்பும் பக்கமெல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியாக விரிந்திருந்தது பச்சைத்துணி. பேச்சுத்துணைக்கு ஆட்கள் இல்லாதிருந்த கீச்சுக்குருவிகள் இப்போது சந்தோசத்தில் கிணுகிணுக்கத் தொடங்கியிருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாய் மறுபடி கடைகள், வீடுகள், கோயில்கள், பாடசாலைகள் என ஒவ்வொன்றாய் இயங்கத் தொடங்கியிருந்தன. ஒட்டுசுட்டான் நீர்ப்பாசனத் திணைக்களமும் மறுபடி அதே இடத்தில் திரும்ப இயங்கத் தொடங்க ‘அங்கிள்’ குடும்பமும் மறுபடி முன்பிருந்த அதே காணியில் பழையபடி வந்து குடியேறியது. நிலாவின் கூட்டு சேர்ந்து விட்டது. திரும்ப விளையாட்டு, திரும்ப அடிதடி, திரும்ப கோள்மூட்டு, திரும்ப குழப்படி. முன்னிருந்ததைப் போலவே சூழ்நிலை இப்போதும் இருந்தது, இரண்டே இரண்டு விடயங்களை தவிர. ஒன்று, இப்போது அவளுக்கு ஒன்பது வயதாகியிருக்க தர்சிக்கு எட்டு வயதாகியிருந்தது. மற்றையது, முன்னைப்போல இப்போது காடு கரம்பையெல்லாம் கண்டபடி ஓடித்திரிய முடியாது. காரணம், “மிதிவெடி கவனம்” என்கின்ற அறிவித்தல் பலகைகள் அங்கங்கு நடப்பட்டிருந்தது.

மீளக்குடியேறிய புதிதில் அடிபாடு நடந்த இடங்களை ஒருமுறை சுற்றிப்பார்க்க வேண்டுமென்ற ஆசை பொதுவாக எல்லோரிடத்திலும் இருப்பது தான். அதனால் நிலாவும் தர்சியும் ஒருமுறை அடம்பிடித்து ஒட்டுசுட்டான் போக ஆயத்தமானார்கள். ‘அங்கிள்’ பொதுவாகவே வேலைக்கு ‘சைக்கிளில்’ தான் போவார். அதனால் அவர் காலையில் வேலைக்கு போகும் போது அவருடனேயே அலுவலகம் வரை போய்விட்டு, மாலையில் அவர் திரும்பி வரும்போது அவருடனேயே வீடு வந்து சேர்வது என்று ஒப்புக்கொண்டு ஒரு சனிக்கிழமை காலையில் அவர்கள் இருவரும் புறப்படத் தயாரானார்கள். அண்ணாக்களும் தங்கச்சியும் முகத்தை உம்மெண்டு வைத்திருந்த அந்த இளங்காலைப் பொழுதில், ‘அங்கிளின் சைக்கிளின்’ முன் ‘கரியரில்’  தர்சியும் பின் ‘கரியரில்’ நிலாவுமாக அவர்களது வரலாற்றுப் பெருமை மிக்க ஒட்டுசுட்டான் பயணம் தொடங்கியது. வழி முழுதும், அது செய்யக்கூடாது இது செய்யக்கூடாதென ஆயிரமாயிரம் அறிவுறுத்தல்கள் ‘அங்கிளிடம்’ இருந்து வரிசைக்கு வந்து கொண்டேயிருந்தன. ஆனால் அவர்களுக்கோ, சுற்றும் முற்றும் விடுப்பு பார்ப்பதே குறிக்கோளாக இருந்ததால், அவர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் எந்த பலனும் இல்லாமல் வலது காதால் உள்ளே புகுந்து வந்த வேகத்திலேயே இடது காதால் வெளியேறிச் சென்று கொண்டிருந்தன.

அலுவலகத்தை அடைந்து ‘அங்கிள்’ வேலையில் மூழ்கிவிட்டார். அவருக்கு செய்து முடிப்பதற்கு ஆயிரத்தெட்டு வேலைகள் பாக்கியிருந்தன. சிறுமிகள் இருவரும் அந்த அலுவலக வளாகத்தில் சுற்றித்திரிவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அதற்கு மேல் ஒருஅடி நகர்வதற்கு கூட இறுக்கமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. அவர்கள் சந்தோசம் பூசிய முகத்தோடு வெளியே வந்தார்கள். முன்னிருந்த மணல் முற்றத்தில் ஓடிப்பிடித்து விளையாடினார்கள். வேலிக்கரையோரமாக இருந்த விளாமரத்தில் நன்கு முற்றிக் காய்த்திருந்த விளாங்காய்களை கல்லால் எறிந்து விழுத்த முயற்சித்தார்கள். பல நேர தொடர் தோல்விக்கு பிறகு தர்சி எறிந்த கல்லிற்கு ஒரேயொரு பிஞ்சு விளாங்காய் மட்டும் தரையில் விழுந்தது. ஆளாளுக்கு பாதி பாதி எடுத்துக் கொண்டார்கள்.

“நான்தானே விளாங்காய விழுத்தினான். எனக்குத்தான் இந்த பாதி, உங்களுக்கு இது.”

அந்த விளாங்காயை அடித்து விழுத்தியது அவள் என்பதால், தான் பெரிய துண்டை எடுத்துக்கொண்டு  நிலாவிற்கு மற்றைய பாதியை நீட்டினாள் தர்சி. நிலாவுக்கு அதில் கொஞ்சம் வருத்தம் இருந்தது. தான்தானே பெரியவள். பெரியாளுக்குத் தானே பெரிய துண்டு தரவேண்டும். அதுதானே நியாயம்.

“தர்சி, நீ சின்னபிள்ளை தானே. நான்தானே உன்ன விடப்பெரியாள். எனக்கு பெரிய துண்டை தா. நீ சின்னப்பிள்ளை. கனக்க சாப்பிட்டா பிறகுனக்கு தொண்டை சரியா காந்தும்..”

“இல்லை, இந்த துண்டு வேணுமெண்டால் எடுங்கோ. இல்லாட்டில் நான் ரெண்டையுமே சாப்பிட்டுடுவன். உங்களுக்கு தரமாட்டேன். “

நிலா வைத்த ‘ஐஸ்’ அவளிடம் வேலைக்காகவில்லை. ம்கூம் அவள் விட்டுக் கொடுப்பதாகவேயில்லை. இறுதியில் கனக்க மல்லுக்கட்டி அந்த மற்றப்பாதியும் கைவிட்டுப் போய்விடாமலிருக்க அரைமனத்தோடு அந்த சின்னப்பாதியை வாங்கி காந்த ஆரம்பித்தாள் நிலா. அங்கிருந்து மெல்ல நகர்ந்து அப்படியே சிறுமிகள் இருவரும் வேலிக்கரையோரமாக பூத்து சிலுப்பி விட்டிருந்த நித்திய கல்யாணி மரங்களை பார்த்து இரசித்துக்கொண்டு பின்பக்கமாக வந்து சேர்ந்தார்கள். அங்கே வாழைத்தோட்டம் இருந்தது. அப்போதெல்லாம் பாடசாலைகள், அலுவலகங்கள் எல்லாம் தமது காணிகளில் ஒருபகுதியில் வாழையோ தென்னையோ அல்லது மரக்கறித் தோட்டங்களோ பயிர் செய்வார்கள். இந்த அலுவலகத்தில் இவர்கள் வாழைத்தோட்டம் வைத்திருந்தார்கள். இடைநடுவில் பராமரிப்பற்றிருந்ததாலும் போர் நடந்ததாலும் அவற்றில் பலது முறிந்தும் அழிந்தும் போயிருந்தன.

எஞ்சியிருந்த ஒருசில குட்டிகளை வெட்டியெடுத்து இப்போது நட்டிருக்கிறார்கள். அதனால் அவ்விடம் நல்ல குளிர்ச்சியாவிருந்தது. சிறுமிகள் ஒவ்வொரு வாழைக்கன்றுகளுக்குள் புகுந்து அவற்றில் குருத்து வந்திருக்கிறதா அது எப்போது விரியும் போன்ற பல மிக முக்கியமான விடயங்களை ஆராய்ச்சிகளை செய்து கொண்டு மெல்ல கிணற்றடிப்பக்கமாக நகர்ந்தார்கள். அதுவரை அமைதியும் இரம்மியமுமாக இருந்த சூழலை குலைத்துக்கொண்டு, திடீரென்று சரசரவென்ற ஒரு சலசலப்பிற்கு பின் ஏதோவொன்று பெரிய சத்தத்துடன் பொத்தென்று நிலத்தில் விழும் ஓசை கேட்டது. பயத்தில் நிலா பின்னங்கால்  பிடரியில் அடிபடாத குறையாய் திரும்பி ஓட்டம் பிடித்தாள். தர்சியின் குரல் அவளைக் கலைத்தபடி பின்னால் வந்தது.

“நிலாக்கா ஓடாதேயுங்கோ நில்லுங்கோ.. நில்லுங்கோ. அது பனம்பழம் விழுந்த சத்தம்தான் நில்லுங்கோ. ஓடாதேங்கோ..” 

நிலாவிற்கு அவள் சொல்வதில் முழுதாக நம்பிக்கை இல்லையென்றாலும் சற்று நின்று திரும்பிப் பார்த்தாள். தர்சியோ நிலாவிற்கு பதில் சொல்லிக்கொண்டே, கிணற்றடியைச் சுற்றிக்கட்டியிருந்த கம்பி வேலிக்குள்ளால் புகுந்து பக்கத்து காணியிலிருந்த பனைமரத்தை நோக்கி போய்க்கொண்டிருந்தாள்.

“தர்சி, நில்லு நில்லு..”  என்று சொல்லி அவள் ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் நன்கு கொழுத்துப் பழுத்திருந்த ஒரு பனம்பழம் அவள் கையில் குடிவந்து விட்டிருந்தது.

“அக்கா ரெட்டைக் கொட்டை பனம்பழம். ஒண்டு உங்களுக்கு ஒண்டு எனக்கு“ என்று புளுகமாய் சொல்லிக்கொண்டே பாதைக்கு குறுக்காய் விழுந்திருந்த காவோலையை காலால் விலத்த முயற்சித்தாள். அடுத்த நொடி ‘படீர்’  என்ற சத்தத்தோடு பெரும்பூகம்பம் ஒன்று வெடித்துக்கிளம்ப தர்சியின் கையிலிருந்த பனம்பழம் காற்றில் பறந்து, பலநூறு துண்டாய் சின்னாபின்னமாகி சிதறி விழுந்தது. அங்கிருந்து தெறித்த ஒரு துளித்திரவம் பட்டு நிலாவின் உதட்டு ஓரத்தில் ஒரு சின்ன வெப்பம் ஏறியது. நடுங்கும் விரல்களால் மெல்ல அதைத் தொட்டு பார்த்தாள். சிவப்புப்பசையாய் பிசுபிசுத்தது. நிமிர்ந்து பனையடியைப் பார்த்தாள். தர்சியின் அசுமாத்தத்தை காணவில்லை. ஆனால் அதற்கு பதிலாக, அவளை உலுக்கிப்போடும் விதமாக, கிணற்றடி வேலிக்கு பின்புறமாக “மிதிவெடி அபாயம்” என்ற அறிவிப்பு பலகை கண்ணில் பட்டது. அவள் மொத்தமாய் இறுகி கல்லானாள். அதற்கிடையில் அந்த பெருஞ்சத்தம் கேட்டு அலுவலகத்தில் வேலைசெய்து கொண்டிருந்தவர்கள் எல்லோரும் பதறியடித்து ஓடிவந்தார்கள்.  யார்யாரோ என்னென்னவோ பேசினார்கள், ஏதேதோ செய்தார்கள். ஆனாலும் அதன் பின் தர்சியின் குரல் மட்டும் கேட்கவேயில்லை. நிலாவின் நினைவில் வெறுமை சூழ்ந்து கொண்டது. அவள் சந்தோசம் நாசமாக்கப்பட்டு விட்டது. காலம் ஒரு கருணையற்ற அரக்கன். அது யாருக்காகவும் பரிந்து நிற்பதில்லை, விட்டுக் கொடுப்பதில்லை. ஏதோ பெரிய அவசரத்தில் பறக்கும் ஒரு விரையுந்து வண்டிபோல எல்லோரையும் முந்திக்கொண்டு எப்போதும் போல தன்பாட்டில் போய்க் கொண்டேயிருக்கின்றது.

அதன்பின் அவள் நாட்கள் நரகங்களாகின. சுழற்றியடிக்கும் ஆடிக்காற்றிற்கு கூட முற்றத்து ஊஞ்சல் அசைய மறுத்தது. ‘சுப்பசொனிக்கோ’ ‘கிபிரோ’ ‘ஆட்லறி செல்லோ’, ‘பங்கரிற்கு’ நுழைவதற்கு கால்கள் பின்னடித்தன. வீட்டு பின்வளவிலிருந்த பனங்கூடல் முழுதும் பனம்பழங்கள் விழுந்து தேடுவாரற்று அழுகிக் கிடந்தன. இன்னும் சொல்லப் போனால் அவள் நாசித்துவாரம் மொத்தமாய் பனம்பழ வாசத்தை மறந்து விட்டிருந்தது.

“அக்கா அக்கா… என்ன நீ தேங்காய் திருவுற எண்டு தேங்காய் சிரட்டை வரை துருவித் தள்ளியிருக்கிறாய். நீ இஞ்சை தான் இருக்கிறியோ இல்லாட்டி வேறெங்கயும் போட்டியோ. சரி சரி, நீ சமைச்சுக் கொண்டிரு. நான் எங்கட வேலிக்கிள்ளால புகுந்து பின்வளவில இருக்கிற பனங்கூடலில பனம்பழம் பொறுக்கிக்கொண்டு வாறன். பின்னேரம் பனங்காய்க்காய் செய்யோணுமெல்லே..” என்றபடி தான் உரித்துக்கொண்டிருந்த வெங்காயத்தை கீழே போட்டுவிட்டு காற்றென எழும்பிப் பறந்தாள் தமிழினி.  

“ஏய் நில்லு.. நான் சொல்லுறத கேள். அது பிறகு ஆறுதலா செய்யலாம். இப்ப சமைக்கிறதுக்கு வந்து கெல்ப் பண்ணடி “ என்ற நிலாவின் குரலை அவள் மதிக்கவேயில்லை.

“எனக்குத்  தெரியும். நீ ஏதாவது சாட்டுப்போக்கு சொல்லி அம்மாவ செய்தெராம விட்டுடுவாய் எண்டு எனக்கு தெரியும். உனக்குதான் பனம்பழம் எண்ட சொல்லே பிடிக்காதே..”

அவள் நிலாவுக்கு பதில் சொல்லிக்கொண்டே முள்ளுகம்பி வேலியைக்கடந்து பனங்கூடலை எட்டியிருந்தாள்.

காலம் மாறியிருந்தாலும், நாட்கள் பல கடந்து வாழ்க்கை வளர்ந்திருந்தாலும், நிலாவின் உள்மனதின் வடு இன்னும் காயவேயில்லை. இரட்டைக் குடும்பியோடு வாசலில் வந்து நின்று சண்டையிடும் தர்சி வாழ வேண்டிய நாட்களை அவள் இப்போது நினைத்துப் பார்க்கிறாள். அவளைப் போல் ஒரு கலைஞராக, இல்லையில்லை அது அவளுக்கு பிடிக்காது. அப்படியென்றால் தமிழினியைப் போல ஒரு வக்கீலாக, சிலவேளை இருந்திருக்கக்கூடும், அவள்தான் நன்றாக வாதாடுவாளே.

கண்ணைக்கூசும் சூரிய வெளிச்சத்தை துளைத்து தன் தங்கை போன பக்கமாய் தூர நோக்கினாள் நிலா. மூன்று பெரிய பனம்பழங்களோடு திரும்பி வந்துகொண்டிருந்த தமிழினியோடு கூடவே ஒரு குறும்புக்கார குட்டித்தர்சி வக்கீல் உடையில் வந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

-வேல்விழி, ஈழத்தில் உள்ள மணலாறு ஊரைச் சேர்ந்த இவர், தற்பொழுது Sheffield Hallam பல்கலைகழகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். ‘பட்டது’ எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது

தொடர்புக்கு – mugilnila8@gmail.com

நடு ஆணிகளாய் எஞ்சியவர்கள்

0

ரா.செந்தில்குமார்

”எப்படி, இதை தவறவிட்டோம்?” என்று தனக்குதானே சொல்லிக்கொள்வது போல் ஜப்பானிய மொழியில், முனகினார் கிகுச்சி சான். திரும்பத் திரும்ப அதையே பேசி அலுத்து போயிருந்ததால் தூங்குவதுபோல், கண்களை மூடிக்கொண்டேன். பாங்காக்கில் இருந்த அந்த விடுதியிலிருந்து, கார்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும், எங்கள் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு செல்ல, ஒரு மணிநேரம் பிடிக்கும். காலை வணக்கம் சொல்லிக்கொண்டபின், நாங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.  வேன், பாங்காக்கின் வாகன நெரிசலில் தப்பித்து, ஹைவேயில் ஏறியதும், தூக்கம் வந்தது. வேன் அடுத்தடுத்து எடுத்த திருப்பங்களில், தொழிற்சாலை வந்துவிட்டதை உணர்ந்து கண் விழித்தேன்.

அவசரமாக இறங்கி, இருவரும் உள்ளே சென்றோம். எங்களுக்கென  ஒதுக்கப்பட்டிருந்த பட்டயா என பெயரிடப்பட்ட அறையில், ஏற்கனவே பிஸினஸ் ஆட்கள் சிலர் வந்திருந்தனர். புரொஜ்க்ட் லீடர்களுக்கான தரப்பில் நாங்கள் அமர்ந்தோம். எங்களுக்கு நேர் எதிரே, தாய்லாந்து சைட்டின் விநியோக சங்கிலியை பராமரிக்கும் சசிவீமன் அமர்ந்திருந்தாள். கணிப்பொறியை இயக்கி, நேற்றிரவு தயார் செய்து, தளத்தில் ஏற்றியிருந்த Root Cause Analysis பவர்பாயிண்ட் கோப்பை நோக்கினேன். மேலும், சில மாற்றங்களை கிகுச்சி சான் செய்திருப்பதை பார்க்க முடிந்தது.

ஜீவானந்தம் காத்தய்யா, காக்கி நிற கோட்சூட்டும் சிவப்பு நிற டையும் அணிந்து சிரித்தபடி அறைக்குள் நுழைந்தார். அறை பரபரப்படைந்திருந்தது. ஜீவானந்தம், எல்லா நாடுகளுக்குமான முழு விநியோக சங்கிலியை நிர்வகிக்கும் தலைவர். வயது ஐம்பதை தாண்டியிருந்தாலும், விளையாட்டு வீரனின் உடலமைப்பைக் கொண்டவர். சில வருடங்களுக்கு முன் எங்களது கம்பெனியில் சேர்ந்திருந்தார். மலேசியாவை பணியிடமாக கொண்டிருந்தாலும், மாதத்தின் பெரும்பாலான நாட்கள் தாய்லாந்து மற்றும், சைனா தொழிற்சாலைகளுக்கு பயணம் செய்பவர்.

சசிவீமன், தனக்கு அருகிலிருந்த நாற்காலியை சரிசெய்தாள். டேபிளில் பரப்பியிருந்த தனது நோட்டுபுத்தகங்களை ஒதுக்கி தனது பாஸுக்கு இடம் கொடுத்தாள். ஜீவானந்தம், இருக்கையில் அமர்ந்து, மைக்கை தன்பக்கம் திருப்பி தட்டிப்பார்த்துக் கொண்டார். பிறகு, ”இங்குள்ள அனைவருக்கும் என்ன நிகழ்ந்தது என்று தெரிந்திருக்கும். இந்த நிரல்  பதினெட்டு மாதங்களுக்கு முன் நமது தகவல் தொழில்நுட்பத் துறையினரால் வடிவமைக்கப்பட்டு, தொடர்ந்து பல மாற்றங்கள் அடைந்து, தாய்லாந்து தொழிற்சாலையில் சென்ற மாதம் நிறுவப்பட்டது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை, நிரல் இயங்கி, ஒரு வருடத்துக்கு தேவையான உதிரிபாகங்களை திட்டமிட்டு, நமக்கு பாகங்கள் தயாரித்துக் கொடுக்கும் நிறுவனங்களுக்கு, அந்த திட்டத்தை அனுப்புகிறது. அதைக்கொண்டு அவர்கள் பொருட்களை ஒவ்வொரு நாளும், நமக்கு வினியோகிக்கிறார்கள்.” என்று சொல்லி நிறுத்தினார்.

போதிய அளவிற்கு கவனம் கூடியிருக்கிறது, என்று உறுதி செய்து கொண்ட பின், மீண்டும் தொடங்கினார். ”நேற்றிரவு நிரலை இயக்கியபோது, ஏதோ ஒரு பிரச்சினையால் மோட்டார் உதிரிபாகங்கள் மட்டும், உண்மையான தேவையை விட தவறுதலாக இரண்டு மடங்கு அதிகமாக திட்டமிடப்பட்டிருக்கிறது. நல்லவேளையாக, அந்த திட்டத்தை அனுப்புவதற்க்கு பொருள் தயாரித்து வழங்கும் நிறுவனத்துக்கு அனுப்புவதற்க்கு முன், கடைசி நிமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டு, எண்ணிக்கை சரி செய்யப்பட்டது. இல்லையெனில், குழப்பம் நிகழ்ந்திருக்கும். இதுபற்றி விளக்கவேண்டுமென்று இந்த நிரலின் வடிவமைப்பாளர், ஜப்பான் சைட்டை சேர்ந்த ஐடி மேனேஜர் கிகுச்சி சானை கேட்டுக்கொள்கிறேன் ” என்று சொல்லி முடித்தார்.

கிகுச்சி சான், மெதுவாக எழுந்து திரை அருகே சென்றார். அவருடைய கணிப்பொறியில் இருந்த டாக்குமெண்டை நான் இயக்கினேன். திரையில் பவர்பாயிண்ட் தெரிந்தது. கையிலிருந்த லேசர் நடுங்கியது. மெல்ல விளக்க தொடங்கினார். நிரலில் கண்டுபிடிக்காமல் விடப்பட்டிருந்த பிழையைப் பற்றி சொன்னார். ”நேற்றிரவு எங்களது அணியை சேர்ந்தவர்களே இந்த பிழையை கண்டுபிடித்து, சரிசெய்தோம்.  இந்தப் பிழை சரிசெய்யப்பட்டு முழுவதுமாக சோதனை செய்யப்பட்டுவிட்டது.” என்றார். 

”நிரல் முழுவதுமாக சரிபார்க்கப்பட்டுதானே ஒரு மாதம் முன்பு நிறுவினோம்? பிறகு எப்படி இந்த பிழையை கண்டுபிடிக்கவில்லை? ”, என்று கேட்டார் ஜீவானந்தம்.

கிகுச்சி சான், “ இல்லை இந்த பிழையை சரி பார்ப்பதற்கான சோதனை டேட்டா சரியாக கொடுக்கப்படவில்லை” என்றார்.

”அப்படியென்றால், சசிவீமன் உங்களுக்கு ஒழுங்கான டேட்டா கொடுக்கவில்லை. அப்படிதானே?”, என்று சொல்லி சசிவீமனை பார்த்து சிரித்தார் ஜீவா. உடனே அறையில் அமர்ந்திருந்தவர்களும் இலகுவானார்கள். நேற்றைய தவறினால் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்பது அனைவருக்கும் நிம்மதி தந்திருப்பதை உணரமுடிந்தது.  

”இல்லை. அப்படி சொல்லவில்லை. இது எங்களுடைய பிழையும்தான். ஆனால்.. இதை..இதை.. “ திடீரென்று திக்கத் தொடங்கினார் கிகுச்சி சான்.

கிகுச்சி சான் திக்கிப் பேச தொடங்கியதும், ஜீவானந்தம், பிழையை சரிசெய்வதற்கான வழிகளை பற்றி பேசுவார் என்று நினைத்தேன். ஆனால், மாறாக அவர் முகம் கடுமையடைந்தது, ஆச்சர்யத்தை கொடுத்தது. இதற்கு முன்பும்,  நிறுவப்பட்ட முதல் சில நாட்களில், இப்படி நிரல்களில் பிழைகளை கண்டடைந்துண்டு. இது போன்ற விஷயங்களுக்காவே, போஸ்ட் புரடெக்ஷன் சப்போர்ட் என்ற பெயரில்,  ஒரு மாதமாக இங்கு நானும் கிகுச்சியும் தங்கியுள்ளோம். ஒப்பீட்டளவில் நேற்று எந்த பின்விளைவுமின்றி பிழை சரிசெய்யப்பட்டு விட்டது.

”கிகுச்சி சான், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?  இரண்டு மாதம் சோதனை ஓட்டம் முடிந்தே, நிரலை நிறுவதற்க்கு அனுமதி கொடுத்தோம். இப்போது இப்படி பிழைகள் கண்டுபிடிக்கபடுமென்றால், பதினெட்டு மாதங்கள் என்னதான் செய்தீர்கள் என்று எனக்கு புரியவில்லை”, என்றார் ஜீவானந்தம்.

சசிவீமனின் முகத்தில் சிறிய நகைப்பு எட்டிப் பார்த்தது. அதை கண்டவுடன் வெறியேறியது. ”யாருன்னு நெனைச்சே அவரை? நாலு பேட்டர்ன்ஸ் கிகுச்சி சான் பெயரில் இருக்கிறது. அவரை பார்த்து சிரிக்கிற“ உள்ளுக்குள் உஷ்ணம் ஏறியது. தலையை அசைத்துக்கொண்டு சமன்படுத்திக் கொண்டேன். இது வெறும் அல்லக்கை. ஜீவானந்தத்துக்கு தெரிந்திருக்கும் கிகுச்சி சானின் முக்கியத்துவம். ஆனால் அவரும் திடீரென்று பதட்டபடுவது ஏன் என்று புரியவில்லை.

”இப்போதே நிரலை நிறுத்திவிட்டு, பழைய முறைக்கு செல்வோம். மீண்டும், ஒருமுறை முழுவதுமாக சோதனை செய்யப்பட்டு, தாய்லாந்து டீமின் அனுமதி வாங்கிய பின்தான் இந்த நிரலை பயன்படுத்தத் தொடங்க வேண்டும்” என்று சொன்னார் ஜீவானந்தம்.

கூட்டம் முடிந்துவிட்டதற்கான தொனியில், சசிவீமனிடம் திரும்பி  ”உடனடியாக, ஒரு டீமை தயார் செய்து சோதனை ஓட்டம் செய்வதற்க்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்”, என்றார் ஜீவானந்தம்.

இப்படி ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. நிறுவிய பிறகு நிரலை தடை செய்வதில்லை. இது தேவையில்லாத வேலைகளையும், செலவையும் ஏற்படுத்தும். முக்கியமாக எங்கள் டீமுக்கும், அதன் தலைவரான கிகுச்சிசானுக்கும் கெட்ட பெயரை தரும்.  ஜீவானந்தம், ஏன் இப்படி கடுமையான முடிவை எடுத்தார்? என்று புரியாமல், சசிவீமனும் திகைத்தாள்.  கிகுச்சி சான், முழுவதுமாய் வேர்த்திருந்தார். இப்படி அவருடைய அனுபவத்தில் ஏற்பட்டதில்லை. திரும்பவும் ஸ்லைடை காண்பித்து நாங்கள் முன் தினம் செய்த பல வகை சோதனைகளை பற்றியும் விளக்க முயன்றார்.

”எப்படியிருப்பினும், எக்ஸிகியுட்டிவ் கமிட்டி கூடிதான் அடுத்த வாரத்துக்கான முடிவை எடுக்கும். இப்போதைக்கு உங்களது சோதனைகளை செய்யுங்கள்” என்றார், ஜீவானந்தம்.

 2

அன்றிரவு, பாங்காக் விடுதிக்கு திரும்பியபோது, கம்பெனி எக்ஸிகியுட்டிவுக்கான காரில், ஜீவானந்தம் வந்திறங்கினார். புன்னகைத்தேன். பதிலுக்கு சிரித்தபடி உள்ளே சென்றார். வேனிலிருந்து கிகுச்சி இறங்குவதற்கு ஓரமாக நின்றேன். கிகுச்சி சான் தளர்வாய் இறங்கி நடந்தார். இருவரும் லிப்ட் அருகே சென்றவுடன், ”எத்தனை மணிக்கு சந்திப்போம்?” என்றேன். இல்லை எனக்கு பசியில்லை. நீ வெளியே சென்று சாப்பிட்டுவிடு காலை பார்ப்போம்”, என்றார்.  வருத்தமாக இருந்தது.

அறைக்கு சென்று, உடைகளை மாற்றிவிட்டு கீழே இறங்கி நடந்தேன். சுகும்வித் ரோட்டில், இரவு வாழ்க்கை தொடங்கியிருந்தது. ஒவ்வொரு பத்தடிக்கும், ஒரு பெண் கைப்பையுடன் நின்றிருந்தாள். பார்க்கும் ஆண்களில், காமத்தை சரியாக அடையாளம் கண்டு அவர்களை மட்டும் அணுகினார்கள்.  வயது முதிர்ந்த அமெரிக்கன் ஒருவன் அரைபோதையில், சிக்னல் அருகே நின்றிருந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தான்.  இறுக்கமாக டிஷர்ட் அணிந்து, அரைக்கால் டிரவுசரில் அதை டக்இன் செய்திருந்தான். தொப்பை வெளியே நீட்டியிருந்தது. அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கூர்ந்து கவனித்தேன். என்னவிதமான சேவைகளை, அவள் செய்வாள்? என்று கேட்டுக் கொண்டிருந்தான். பெரும்பாலும் இப்படி பேசிக்கொண்டிருப்பவர்கள், அத்துடன் திரும்பி விடுவார்கள். அன்றைய இரவின் கிறக்கத்திற்க்கு அந்த பேச்சே அவர்களுக்கு போதுமானதாக இருக்கும்.

நடக்க ஆரம்பித்ததும் சொவ்காபாய்க்கு, அருகே இருக்கும் டீலக்ஸ் மது விடுதிக்கு போகலாம் என்று தோன்றியது.  முழுதாக, முப்பது நிமிடம் நடந்ததும் நன்கு வேர்த்தது. எப்போது, டீலக்ஸ் பார் வந்தாலும், ஓடி வந்து கும்பிட்டு வரவேற்கும் ஸ்ரீரத்தை, வாசலில் காணவில்லை. வேறு வாடிக்கையாளர்கள் வந்திருக்ககூடும் என்று நினைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தபோது தான் ஜீவானந்தத்தை பார்த்தேன். ஸ்ரீரத், அவர் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். நிச்சயமாய், இதுபோன்று ஒதுக்குபுறமாக அமைந்த ஒரு சிறிய பாரில், அவரை எதிர்பார்த்திருக்கவில்லை.   ஜீவானந்தம், என்னை பார்த்துவிட்டு கைகளை ஆட்டி அழைத்தார். திரும்பவும், அவர் வேலை பற்றி பேசினால், மண்டை வெடித்துவிடும் என்று தோன்றியது. அவரை முன்பே உள்ளே பார்த்திருந்தால், அப்படியே வெளியே நடந்திருக்கலாம். இனி தவிர்க்க முடியாது. அவர், எதிரேயுள்ள நாற்காலியில் அமர்ந்தேன்.

”என்ன குடிக்கிறீர்கள்?”, என்று தமிழில் கேட்டார் ஜீவானந்தம். இத்தனை நாட்களில், ஒருபோதும் தமிழில் அவர்  என்னிடம் பேசியதில்லை. அவருடைய மேஜையில் ரெஜின்ஸி விஸ்கி பாட்டில் இருந்தது. விஸ்கியே அருந்துவேன் என்றேன். ஸ்ரீரத்,  நீங்கள் இருவரும் நண்பர்களா ? என்று வியந்தாள். எழுந்து சென்று கிளாஸ் எடுத்து வந்து அதில் விஸ்கியை ஊற்றினாள். அவள் ஏற்கனவே காக்டெயில் குடித்துக் கொண்டிருந்தாள்.

ரெஜின்ஸி ஒரு மடக்கு குடித்ததும், கொஞ்சம் பரபரப்பு குறைந்ததுபோல் இருந்தது. சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு என்னிடம் நீட்டினார். ”இல்லை ஜீவா சான், நான் புகைப்பதில்லை”, என்றேன். அப்போதுதான் தொலைகாட்சியை கவனித்தேன்.  Let it Be பாடல் ஓடிக்கொண்டிருந்தது. தொலைகாட்சியுடன் இணைப்பு கொடுக்கப்பட்ட கணிப்பொறியில், பீட்டீல்ஸ் ஆல்பம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது . நான் திரையை கவனிப்பதை பார்த்து, ஜீவானந்தம், ”இங்கு தமிழ் பாடல்கள் வேண்டுமானாலும் போடலாம்”, என்றார்.

”இல்லை. இதுவே இருக்கட்டும்” என்றேன்.  

”எவ்வளவு நாட்களாக ஜப்பானில் இருக்கிறாய், ராம்?” திரும்பவும் ஆங்கிலத்துக்கு தாவியிருந்தார். ஜீவானந்தத்தின் ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியானது.  அவரது மொழி மீதான ஆளுமை, தொலைபேசி கூட்டங்களில் நான் வியக்கும் ஒன்று.  

”பத்து வருடங்களாக டோக்கியோவில் வசிக்கிறேன். நமது நிறுவனத்தில், எட்டு வருடங்கள். நான் சேர்ந்த போதிலிருந்து, கிகுச்சி சான் தான் எனக்கு மேனேஜர். ”

”ஓ..”

”நீங்கள் நமது நிறுவனத்தில் சேர்ந்து மூன்று வருடங்கள் இருக்கும் இல்லையா, ஜீவா சான்? “

”ஆம். அதற்கு முன்பும் வேறொரு கார் தயாரிக்கும் நிறுவனம்தான். இதே ஊரில்தான் அந்த தொழிற்சாலையும் இருந்தது. எனவே ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும், ஓரிரு நாட்கள் மலேசியாவிலிருந்து, தாய்லாந்து வந்து செல்வேன்.”, என்றார் ஜீவானந்தம். 

ஒரு ஐந்து வருடங்கள் முன்பு வரை, நமது நிறுவனத்தில், மலையாக தேங்கிகிடந்த உதிரிபாகங்கள் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. அதை சரிசெய்தது கிகுச்சி சானின் வடிவமைப்பில் உருவான நிரல்தான். அந்த நிரல் நிறுவிய பின்பு, ஒரு வருடத்துக்கு ஆறு மில்லியன் டாலர், நமது நிறுவனத்துக்கு சேமிப்பானது.  அந்த நிரலில் நானும் வேலை பார்த்தேன். அவரிடம் நான் கற்றுக்கொண்டது அநேகம்.

ஜீவா, என்னை கூர்ந்து பார்த்தார். ”உன்னுடைய குருவிடம் நான் கோபப்பட்டது உனக்கு வருத்தம் தருகிறது அல்லவா?”

”நீங்கள் அவரை கொஞ்சம் பேச விட்டிருக்கலாம்”.

கொஞ்சம் அதிகமாக அவரிடம் பேசுகிறோமோ என்று குழப்பமாக இருந்தது. தமிழில் பேசத்தொடங்கி, மீண்டும் ஆங்கிலத்துக்கு அவர் போனது, உரையாடல் வசதிக்காகவா அல்லது படிநிலையின் இடைவெளியை தக்கவைப்பதற்கா? என்று மனம் சஞ்சலமடைந்தது.

ஒன்றும் பேசாமல், மீண்டும் ஒரு டபுள் ரவுண்டுக்கான ரெஜின்ஸி விஸ்கியை கவிழ்த்து,  பிளாஸ்கில் இருந்த ஐஸ் துண்டங்களை கிடுக்கியால் எடுத்து அதில் போட்டு கலக்கினார்.  கொஞ்சம் போல் நீர் விட்டு, ஒரு மடக்கு அருந்திவிட்டு வைத்தார்.

கிகுச்சி சான், எப்பவுமே இப்படி திக்கி தான் பேசுவாரா?.

இல்லை. ஜப்பானியமொழியில் அவர் திக்குவதில்லை. ஆங்கிலத்தில் பேசும்போது இப்படி திக்குவதுண்டு.

ஆழ்ந்து, புகையை இழுத்தார்  ஜீவா.

”கிகுச்சி சான் திக்கிபேசும்போது, எனது அப்பாவை ஞாபகப்படுத்துகிறார்.“, என்றார்.

இப்போது பீட்டீல்ஸ் குழுவினர், நோர்வேஜியன் வுட்ஸ் இசைக்க தொடங்கியிருந்தனர்.  ரெஜின்ஸி விஸ்கி பாட்டிலில் பாதிக்கும் மேல் முடிந்திருந்தது. ஜீவா, நிதானமாக குடித்தார். ஜீவாவின் கிளாஸ் காலியானதை பார்த்து மீண்டும் விஸ்கியை ஊற்றி, ஐஸ்துண்டங்களை போட்டாள் ஸ்ரீரத்.  ஜீவா பேச விழைபவர் போல, சிகரெட்டை பாதியில் நசுக்கி அணைத்தார்.

”இங்கிருந்து நூற்றியிருபது கிலோமீட்டர் தொலைவில் காஞ்சனபுரி இருக்கிறது. என் வாழ்க்கையில் எப்போதும் செல்லகூடாது என்று நான் நினைத்திருந்த இடம் அது. ஆனால், அப்படி நினைத்ததாலயே, அந்த இடங்கள் பிடித்திழுப்பதிலிருந்து ஒருபோதும் மானிடர்களால் தப்ப இயலாது. அப்படி ஒருநாள் எனக்கு அது”, என்றார் .

ஒருமுறை வாரவிடுமுறையில் இங்கு தங்கவேண்டி வந்தது. காலை உணவு முடித்தபின் எங்கேயாவது செல்லலாமே, என்று எனக்கு எப்போதும் டாக்ஸி ஓட்டிவரும் சோரோவித்தை அழைத்தேன். சோரோவித் காரை இயக்கி வாகன நெரிசல்களிலிருந்து விலகி, ஹைவே ஏறியதும், எங்கு செல்லலாம் என்று கேட்டபோது, காஞ்சனபுரி என்று சொன்னது நிச்சயம் நானில்லை. அன்று சனிக்கிழமை. காலை முதலே சிறு தூறல் இருந்தது. இரண்டு மணிநேரத்தில் காஞ்சனபுரி சென்று விட்டோம்.

காஞ்சனபுரி ரயில் நிலையத்தின் எதிரே அந்த பிரமாண்ட போர் நினைவிடம் இருந்தது. நேரான வரிசையில் பெயர்கள் பொறித்த கிரானைட் கல்லறைகள். சிலவற்றில் புகைப்படங்களும் இருந்தன. இரண்டாம் உலகப்போரில் உயிர் நீத்த பிரிட்டிஷ், டச்சு மற்றும் ஆஸ்திரேலிய ராணுவவீரர்களுக்கான நினைவிடம். ஒவ்வொரு வரிசையாக பார்த்துக்கொண்டே நடந்தேன். டபிள்யு.ராபர்ட்சன், டன்லப், ஸ்டிவ், மேத்யூ, என்று அனைவரும் இருபதிலிருந்து, இருபத்தி ஐந்து வயதுக்குட்பட்ட இளைஞர்கள். சிலர் அழகாக சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் அந்தக் கல்லறையில் இருந்தது. இறந்தவர்களைப் பற்றி அவரது குடும்பத்தினர் எழுதிய நினைவுக் குறிப்புகள். போர் கைதிகளாக ஜப்பானிய ராணுவத்திடம் மாட்டிக்கொண்டு உயிரை விட்டவர்கள். தாய்லாந்தின் சியாமிலிருந்து, பர்மாவுக்கான ரயில் பாதையை, காடுகளுக்குள்ளும், கடினமான பாறைகள் கொண்ட மலைகள் வழியாகவும் நிர்மாணிக்க  பணிக்கப்பட்டவர்கள். 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய அந்த பணி, 43ம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிவுக்கு வந்தது.

பெரிய கனவுகளுடன் தேசத்திற்காக போரிட வந்தவர்கள், கொசுக்கடியிலும், மலேரியாவிலும் மாட்டிக்கொண்டு உயிரை விட நேர்ந்தது, எவ்வளவு பெரிய அவலம்? மொத்தம் 6900 பேருக்கான கல்லறைகள் அங்கு இருந்தன.  அத்தனை பெரிய மைதானத்தில் நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று காலம் மீறிச்சென்று, அவர்களுடன் பாலம் கட்டுவதற்காக பெரிய மரத்தூணை தூக்கி சென்று கொண்டிருந்தேன். அவர்கள் நான் பார்த்த புகைப்படங்களிலிருந்து அலை அலையாக எழுந்து வந்தனர், அதே சிரிப்புடன். அந்த மைதானத்தின் 22வது வரிசையில், ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஒரு இளம் தம்பதி அவர்களது அழகான பெண் குழந்தையுடன் ஒரு கல்லறை முன் வழிபட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த பெண் குழந்தைக்கு நான்கு வயது இருக்ககூடும். கைகளில் கொண்டு வந்திருந்த டூலிப் மலர்கள். கண்மூடி பிரார்த்தித்து, ”கிராண்பா” என்று உச்சரித்து அந்த கல்லறையில் போட்டாள். அந்த தம்பதியினருக்கு முப்பது வயதுக்குள்தான் இருக்கக்கூடும். என்னை பார்த்து சிரித்தான் அந்த இளைஞன். இறந்துபோன ஹெச். வில்லியம்ஸின் பேரனாக இருக்கக்கூடும். தொடர்ந்து அந்த பெண்குழந்தையின் மகளும் இங்கு வரக்கூடும். இப்படி மலர்களை அள்ளியிட்டு, அவளது மூதாதையான ஹெச்.வில்லியம்ஸை வணங்கக் கூடும்.

உலகின், கடைசி மனிதனின் நினைவில் எஞ்சியிருக்கும் வரைக்கும், அந்த ஹெச். வில்லியம்ஸுக்கு சாவில்லை, ராம். சொல்லபோனால், அங்கு நடுகற்களாக எஞ்சியிருக்கும் அந்த 6900 பேரில் எவருக்கும் அழிவில்லை. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு நாட்டிலிருந்து, என்னைப் போல் ஒருவன் வந்து அவர்களின் பெயர்களை படித்து, நினைவுகளை சுமந்து திரும்பிக் கொண்டிருப்பான்.”

திரும்பவும், கிளாசில் டபுள் ரவுண்ட் ரெஜின்ஸியை ஊற்றினார். இந்த முறை எந்த கலப்புமின்றி அப்படியே ஒரு வாய் உறிஞ்சினார்  ஜீவா.  பிறகு தொடர்ந்தார்.

அந்த நினைவிடத்திலிருந்து, சற்று தள்ளி அமைந்திருந்த, மரண ரயில் பாதையின் நினைவகம் சென்றேன். போர்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் பொருட்கள், கைகடிகாரங்கள், நெளிந்த கோப்பைகள், மருந்து சீசாக்கள், மகளுடைய நினைவுகளை, ஒரு தந்தை எழுதிய கல் என எத்தனையோ பொருட்கள். காடுகளுக்கிடையே கிடைத்த பொருட்களை வைத்தே, ஜப்பானிய ராணுவத்துக்கு தெரியாமல், ரேடியோ அலைகளை உள்வாங்கும் கருவியை அவர்கள் வடிவமைத்திருந்தனர். ஜப்பானிய ராணுவத்தின் தோல்விகளை அவர்கள் அதன்மூலமே இறுதி நாட்களில் தெரிந்து கொண்டனர்.  சிலரின் எலும்புகூடு போன்ற புகைப்படங்கள். குகை போல் உள்ள அவர்தம் கூடாரங்கள். இப்படி மேலும் மேலும் படங்கள்.

இவற்றைத் தாண்டி சென்றேன். மொத்தமாக மரண ரயில் பாதை அமைக்க நிர்பந்திக்கப்பட்டு அந்த நரகத்தில் தினந்தோறும் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒன்றரை லட்சம் பேர். இதில் போர் கைதிகளாக மாட்டி இறந்த ராணுவத்தினர் இருபதாயிரம் பேர். மீதி? அந்த காலத்தில், அந்த இடத்தில் வாழ நேர்ந்ததை தவிர எந்த தவறும் செய்யாத அப்பாவிகள்.

அங்கு மாபெரும் மரப்பலகைகளில், ரயில் செல்லும் தண்டவாளத்தில் அடிக்கப்படும் பெரிய இரும்பு ஆணிகள் நடப்பட்டிருந்தன.  ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பலகை. அந்த பலகையில் அடிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு ஆணியும், ஐநூறு பேரின் இறப்பை குறிக்கும். விசித்திரமல்லவா? அப்படி அங்கு தொங்கிய பலகைகளில், அதிக ஆணிகள் இருந்த பலகை மலேசியா நாட்டுடையது. அந்தப் போரில் எந்த விதத்திலும் சம்பந்தப்படாமல், வயிற்றுப்பிழைப்புக்காக நாகபட்டினத்திலும், சென்னையிலும் கப்பலேறி மலேசியா வந்து தேயிலை தோட்டங்களில் பாடுபட்டு, விதியின் கரங்களில் மாட்டிக்கொண்டு உயிரை விட்ட தமிழர்களின் எண்ணிக்கை தான் அது. அந்த நரகத்தில் இறந்த மலேசிய தமிழர்களின் எண்ணிக்கை,  ஏறக்குறைய அறுபதாயிரம் பேர். அவர்களின் பெயரோ, ஊரோ யாருக்கும் தெரியாது. அவர்களுக்கென்று ஒரு நடுகல் உலகில் எங்கும் கிடையாது.  அவர்கள் நினைவாக இன்று எஞ்சியிருப்பது அந்த ஆணிகள் மட்டுமே.

வரலாற்றில் இரும்பு ஆணிகளாக மட்டும் எஞ்சியவர்களின் அவலம் உனக்கு புரிகிறதா, ராம்? மாட்டுவண்டியின் நுகத்தடி நடுவே ஆணியடித்து இருபக்கத்தையும் நிலைநிறுத்துவார்கள். இரு பக்கமும் இல்லாமல் நடுவே மாட்டிக்கொண்ட அவர்கள், அந்த நுகத்தடி ஆணிகளாக மட்டும் அங்கு எஞ்சியிருக்கின்றனர். அந்த பலகையில் தொங்கிய ஆணிகளில், எந்த ஆணி எனது மூதாதையரை குறிப்பது என்று தேடி நின்றிருந்தேன்.

ஜீவா சான், உங்களது தந்தை?

ஆம். நீ நினைப்பது சரிதான். உண்மையில், ஜப்பானிய ராணுவம் முதலில் வேலைக்கு ஆள் தேவையென்றே விளம்பரபடுத்தியிருந்தது. நல்ல உணவும், இருப்பிடமும், கூலியும் உண்டு என்று சொன்னதை நம்பியே, என் தந்தை தனது தம்பிமார்களுடன் அவர்களுடன் சேர்ந்தார். சரக்கு ரயிலில் மூட்டைகள் போல் அவர்கள் தாய்லாந்து கொண்டு வரப்பட்டனர். சரியானபடி ஆட்கள் கிடைக்கவில்லையென்றதும், கைது செய்து ஆட்களை இழுத்துச் சென்றார்கள். முதலில் உணவுப் பற்றாக்குறை. அரிசி கஞ்சி அரை கோப்பை, காடுகளில் கிடைக்கும் கிழங்கு இவைதான் உணவு. சில நாட்களில் பேதி ஆரம்பிக்கிறது. மக்கள் கொத்துகொத்தாக இறக்கின்றனர். எனது தந்தை தனது இரண்டு தம்பிகளையும் அதில் இழந்தார். 1943ம் வருடம் ஜூலை மாதம், அவர் பேதியில் இறந்துவிட்டார் என்று கருதி காட்டுக்குள் விட்டுச் சென்றனர். முறையான சவ அடக்கமெல்லாம் நின்று பல மாதங்கள் ஆகியிருந்தது. கொத்துகொத்தாக பிணங்களை குழிக்குள் தள்ளி மண்மூடிச் சென்று கொண்டேயிருந்தனர். எனது தந்தை,எப்படியோ தப்பி மலேசியா வந்தடைந்தார். ஜப்பான் ராணுவத்தின் தோல்விக்கு பிறகே பினாங்கு திரும்பி வந்தார். ஆனால், அதற்குள் பிடித்து செல்லப்பட்டவர்களில் ஐம்பது சதவீகிதம் பேர் இறந்திருந்தனர்.

இருபத்தி ஐந்து வயதில் திரும்பி வந்தவர், ஏறக்குறைய பாதி பிணமாக இருந்தார். நாற்பத்தி ஐந்து வயதாகையில் தோட்டத்தில் வேலை பார்த்த எனது அம்மாவை மணந்தார். எப்போதும் குடித்துக் கொண்டிருக்கும் சித்திரமே அவரைப் பற்றி எஞ்சியிருக்கிறது. சிறிய தவறுகளுக்கும் ஓடி வந்து மூர்க்கமாக தாக்குவார். கள்ளின் போதை மிதமிஞ்சுகையில், என்னை அவர் தம்பிமார் பெயர் கொண்டு அழைத்துக் கொஞ்சுவார். தினந்தோறும் மனிதர்களோடு படுத்து, காலையில் பிணங்களோடு எழுந்த ஒருவரின் வாழ்க்கை எப்படி சீராக அமைய இயலும்? அந்த தோட்ட பள்ளியில் ஆசிரியராக இருந்த ஆறுமுகம் ஐயா இல்லையென்றால் என் வாழ்க்கையும் இப்படி அமைந்திருக்காது.

ஜீவா கண்கள் முழுவதும் சிவந்து, நன்கு வேர்த்திருந்தார். கோப்பையில் மீதமிருந்த விஸ்கியை உறிஞ்சினார்.

”ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் நெருங்கிவிட்டால் சாதாரண நாட்களை விட அதிகமாக குடித்துவிட்டு, அழுது அரற்றியபடி இருப்பார் எனது தந்தை”

”அவரை ஜப்பானிய ராணுவம் பிடித்து சென்றது டிசம்பர் மாதத்திலா, ஜீவா சான்?”

மெலிதாய் சிரித்தார் ஜீவா. ”போரில் ஜப்பான் வீழ்வதற்கு முன், ரயில்பாதைக்காக, மே கிளாங் ஆற்றில் கட்டப்பட்டிருந்த ரயில் பாலங்களை, 1944ம் வருடம் ஆங்கிலேய படைகள் வெடிகுண்டு வீசி அழித்தன. அந்த பாலங்கள் அழிக்கப்பட்டது டிசம்பர் மாதத்தில் தான்”, என்றார்.

மணி இரண்டாகியிருந்தது. ”நாம் செல்வோமா ராம்?” என்று கேட்டார். மெல்ல நடந்து சுக்கும்வித் ரோட்டின் ஏழாம் சொய்யில் அமைந்திருந்த விடுதி நோக்கி நடந்தோம்.

3

அடுத்த நாள், விடுதியில் காலை உணவு சாப்பிட வரும்போதே, கிகுச்சி சான் சரியான திட்டமிடலுடன் வந்தார். இது கிகுச்சி சானிடம் எதிர்பார்த்ததுதான். அவரிடம் இத்தனை ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்டது எந்த கட்டத்திலும் சோர்வடையாத மனநிலைதான்.  சோதனைக்காக மொத்தமுள்ள மூன்று சர்வர்களிலும், பன்னிரெண்டு விதமான சோதனை டேட்டாக்களை தயார் செய்ய சொன்னார். இந்தியாவில் உள்ள எங்களது டெவலப்மெண்ட் செண்டர் ஆட்களிடம் பேசி எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தோம். வெள்ளிக்கிழமை எக்ஸிகியூட்டிவ் கூட்டத்துக்கு பன்னிரெண்டு சோதனை ஓட்டங்களுக்கான முடிவுகளுடன் சென்றோம்.  ஜீவானந்தம் உட்பட யாரும் மறுக்க இயலாத சோதனை ஓட்டங்களுக்கான ஆதாரங்கள். எக்ஸிகியூட்டிவ் கமிட்டி, இப்போதைய நிலையே தொடரலாம் என்று முடிவெடுத்தது. ஆனால், நானும், கிகுச்சி சானும் மீண்டும் எங்களது பயணத்திட்டத்தை ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்து, அடுத்த வாரத்துக்கான ஓட்டத்தை கண்காணிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

ஜீவானந்தம் திருப்தியடைந்தார் என்று தோன்றியது. கிகுச்சி சானிடம் வெகு சகஜமாக பேசினார்.  இருவரும் சிறிய நகைச்சுவைகளை கூட பரிமாறிக்கொண்டனர். ஜீவா, என்னிடம் சம்பிரதாயமான சொற்கள் மட்டுமே பேசினார். அன்றைய இரவுக்கு பின் அவர் எப்போதும் என்னிடம் தமிழில் பேசவில்லை. இதை உள்ளூர நான் எதிர்பார்த்திருந்தேன்.

***
ரா.செந்தில்குமார் – ஆசிரியர் தொடர்புக்கு senthil.rethan@gmail.com

யாரோ தொலைத்த இசைத்தட்டு: 02

1

-தமயந்தி

ப்பா அந்த வாரமே ரொம்ப அமைதியாகிப் போனார். வாத்தியார் போனத அவரால தாங்க முடிலனு அம்மா சொல்லிட்டே இருந்தா. ஞாயித்துக்கிழமை அவருக்குனு நெஞ்செலும்பு சூப் போட்டுக் கொடுத்தா. ஆனா அப்பா அத குடிக்காமலேயே வச்சிருந்தார். அம்மாக்கு கோபம் வந்து, சாப்பிடாம இருந்தா ஒங்க வாத்தியார் வந்துடவா போறாரு?ன்னா. அப்பா அப்ப பேப்பர் படிச்சிட்டு இருந்தார். அப்பா பெரும்பாலும் நெடுஞ்செழியன் தான் முதலமைச்சரா வருவார்னு சொன்னார். ஜெயலலிதாவ இறுதி ஊர்வலத்துல தள்ளி விட்டப்ப அப்பா ரொம்ப மனசு கனத்துப் போனாரு. இந்த இடத்துல இதெல்லாம் தேவையா? தலவரு இறந்து கிடக்காரு.. இதெல்லாம் தேவையானு திரும்பத் திரும்ப குடிச்சபடி சொல்லிக்கிட்டே இருந்தாரு. அப்பாவோட கண்ணெல்லாம் கலங்கி இருந்துச்சு.

சித்தப்பா இதக் கேட்டுட்டு ஒன்னுஞ் சொல்லல. முன்னனா ஏதாச்சும் சொல்லிருப்பாரு. ஒரு தடவை எம்ஜிஆர் பெரிசா கருணாநிதி பெரிசானு ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் ஆகி அப்பா கேரம் போர்ட்டை தூக்கி விசிறி எறிஞ்சார். அன்னிக்கு பூரா சித்தி மோரைய தூக்கி வச்சிருந்துச்சு. சித்தப்பா மேல பட்ட அடி தான் காரணம்னு எல்லார மாதிரி நானும் நெனச்சேன். ஆனா அதில்ல. அவ மனசுல பட்ட அடி அது. அம்மா சாப்பிடாம இருந்த சித்திய ஆயிரம் கேள்வி கேட்டப்புறமா அவ – “இந்த வீட்ல எம் ஜிஆர, கருணாநிதிய பேசினா தான கேப்பாக”ன்னு சொன்னா.

அப்டி என்னத்தாம்டி கேக்கல?ன்னு அம்மா கேட்டதுக்கு அமைதியாருந்தா. கன்னத்துலருந்து கண்ணீர் மட்டும் வழிஞ்சிச்சு.

“என்னதாம்டி.. சொல்லு” என்றவள் என்ன பாத்து “ஏம்ல..அங்கிட்டு போ”ன்னு சொன்னா.

“அவரு..எவ போட்டோவயோ வச்சிருக்காரு..”

சித்தி கிசுகிசுப்பாத்தான் சொல்லுச்சு. ஆனா எனக்கு நல்லா கேட்டுச்சு. ஒருவேளைக்கு கடவுளே அவ என்ன சொல்லுதாம்னு எனக்கு கேக்கணும்.. வேற எல்லா சத்தத்ததும் அமுக்கிறுன்னு நான் நினச்சது கூட காரணமா இருக்கலாம்.

அம்மா எந்திரிச்சு சித்தி கூட உள்ள போச்சு. அப்றமா அம்மா மட்டும் அப்பாட்ட வேகமா வந்து தனியா கூப்டுச்சு. அப்பா சித்தப்பாவ கூப்டு படார்னு அடிச்சாரு. சித்தப்பா மறுக்கா வேகமா அறைக்குள்ள போச்சுது. “ம்மா..”ன்னு ஒரு சத்தம்

“அடிக்காரு கொழுந்தன்.. போங்க.. மலயா நின்னா ஆச்சா.. என்ன ஏதுன்னு கேக்காத கை தான் மொதல்ல திருநெவேலிக்காரனுக்கு பேசும்..போய் அந்த பிள்ளய அடிச்சி போட்டுட்டான்னு பாருங்க”

அப்பா உள்ளே போயும் போகாமலும் கூப்டார். அம்மா கெடந்து பொழிச்சு தள்ளினா. ஆனா இப்ப சித்தப்பாவால பதிலேதும் பேச முடியாத சூழல். அன்னிக்குப் பிரச்னைக்கு அப்புறமா சித்திய அப்பாவே ஊருக்கு அனுப்பி வச்சாரு. சித்தப்பா அமைதியா இருக்க “கொஞ்ச நாள் போயிட்டு வரட்டும்”னு சொன்னாரு.

சித்தி ரொம்ப இறுக்கமா இருந்தா. கன்னத்துல மட்டும் அப்புற மாதிரி ரொம்ப பவுடர் பூசியிருந்தா. அம்மாவப் பாத்து

“பாத்துக்கோங்கக்கா”ன்னா

சரில..கவலப்படாதனு அம்மா சொன்னப்ப அம்மாவ எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. பகிரப்படாத வெறுப்பை வெளிப்படுத்தாம எதிராளியோட வலிய புரிஞ்சிக்கிறது தவிர மனுஷ வாழ்க்கைல வேறொன்னுமில்லனு அப்ப அந்த நிமிஷம் தோனுச்சு. சித்தி கிளம்பிப் போன அன்னிக்கு சித்தப்பா அறைய விட்டு வரவே இல்ல.

அம்மா தான் அன்னிக்கு சித்தப்பா அறையத் தட்டி “சாப்பாட வாங்க”ன்னா

“இல்ல வேணாம் மைனி”

“அப்படி சொல்லப்படாது.. கொஞ்சமா சாப்பிடுங்க.. வயித்த காயப் போட்டா வாழ்க்கை சரியாயிடுமா என்ன?”

“பசிக்கல”

“மனசு சொன்னா வயிறு பசிக்கும்.. இதப் பாருங்க கொழுந்தா..நடந்தது நடந்திடுச்சு..”

“அவ திரும்ப வருவாளாமா?”

“இதான் மனகிலேசமா? வுட்டுத் தள்ளுங்க.. குடும்பம்னா எல்லாம் இருக்கும். அவளுக்கும் மனசு கஷ்டமாத்தான இருக்கும்.. நம்மூரு பொம்பளைங்க வாய்தான் வக்கணையா பேசுவாளுங்க.. அன்ப மட்டும் பகிர்ந்துக்க தகரியம் கெடையாது

சித்தப்பா ஒன்னுஞ் சொல்லாம அமைதியா உக்காந்திருந்தார்.. அவரோட தொண்டக்குழில வேகமா எச்சி முழுங்குற தடயம் தெரிஞ்சிது.

“நானுஞ் செஞ்சது தப்புதானனு சித்தப்பா சொன்னார். அப்ப அவரோட முகம் கருத்துக் கிடந்துச்சு. மனசுல எவ்ளோ வலியிருந்தா இவ்ளோ இறுக்கம் இருக்கும்னு எனக்குத் தோனுச்சு. சித்தியோட அப்பா எல்லாத்துக்கும் கோவப்படுற ஆளுனு சொல்லிருக்காங்க. அவங்க அம்மா இன்னிக்கு ரசம்னு சொன்னா கூட அவங்கப்பா “யாரக் கேட்டு ரசம் வச்சனு கத்துவாராம்..அதனாலயே சித்திக்கு கல்யாணம் ஆன புதுசுல சித்தப்பா அமைதியாருக்கறது ரொம்பப் புடிச்சிருந்திருக்கு.

அதை சித்தப்பாட்ட சொல்லலாம் போல இருந்துச்சு எனக்கு. ஆனா அம்மா , “ நீங்க சொந்த காரியத்துக்காக கவலப்படுதீக ..அவுகன்னா அரசியல்ல தலைவரு போயிட்டாரு.. கட்சில என்னலாமோ நடக்குனு கவல.. என்னத்த சொல்றது..“ன்னுட்டு அம்மா செம்பை நங்குனு தரைல வச்சா. அவளோட அத்தனை கோவத்தையும் ஒரு சொம்புக்குள்ள போட்டு அத போட்டு நங்குனு வச்ச மாதிரி இருந்துச்சு. சித்தப்பாக்குள்ள ஒரு சின்ன நகர்தலை நான் பாத்தேன். ஒரு நீண்ட மவுனத்துக்குப் பிறகு அவர் ” நெடுஞ்செழியன் தான் வருவார்னு நெனைச்சேன்.. ஜானகியம்மா ஆகிடுவாங்களாமே?”

“யார் வந்தா என்ன? நான் இங்கிட்டு தான்.. மெஞ்ஞானபுரத்துக்காரி அங்கிட்டு தான்”

சித்தப்பா ஒரு நிமிஷம் தயங்கி “ அவளும் இங்கிட்டு தான் மைனி”னார்

“இப்படி பேச தெரியுதில்ல.. சாப்பிடுறது?”

“கொண்டாங்க ” சித்தப்பாக்கு இப்ப இறுக்கம் குறைஞ்சிருந்துச்சு. அம்மா தட்டு வைத்து சாதம் அள்ளின “அவருட்ட சொல்லுங்க சின்னவரே..அவங்கய்யா போனப்ப கூட அவரு இப்படி பீல் பண்ணல..”

“இனியா அவரு மாறுவாரு? வாத்தியாரு அவருக்கு அய்யாக்கு மேல.. கலைஞர்ட்ட கணக்கு கேட்டவருக்கு என்னடா சப்போர்டுனு ஐயா அண்ணண்ட்ட ஆறு மாசம் பேசவே இல்ல தெரியுமில்ல?”

“என்னத்த அரசியலோ போங்க? நம்ம குடும்பம் உண்டா.. நாம உண்டானு இல்லாம இதென்ன எழவோ?”

“ஒரு காலத்துல புடிச்ச எல்லாமே கொஞ்சங் காலம் கழிச்சி எழவா தான் போயிடுது”

அம்மா இப்ப காய் அள்ளிப் போட்டு விட்டு சிரிச்சா.

“க்கும்…இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல…”

சித்தப்பாக்கு அந்த இன்னொரு பெண்ணோட ஞாபகம் வந்திருக்கும் போல. கீழ் உதட்டை உள்ளிழுத்து கடித்துக் கொண்டார். அவருக்குள்ள மனசுக்குள்ள அலை அடிச்ச மாதிரி நெறைய விஷயங்கள் ஓடிட்டு இருந்த மாதிரியே இருந்துச்சு எனக்கு.

அன்னிக்கு ராத்திரி சித்தப்பா நடுரூம்ல படுத்து பாடிட்டே இருந்தாரு…” நல்லவருக்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு –ஒன்னு மனசாட்சி-ஒன்னு தெய்வத்தின் சாட்சியம்மா.. நம்பிக்கை வைத்து கல்லையும் பாத்தா அதுவும் தெய்வத்தின் சாட்சியம்மா.. அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா…”

அப்பா எழுந்து போய்- “தூங்குடா”னு சொன்னார். சித்தப்பா போர்வையால முகத்தை மூடிக்கிட்டு உடனே திரும்பிப் படுத்தார். அவர் இடுப்பு பக்கம் ஒரு பாட்டில் இருந்தது அப்பா கண்ணுல பட்டுடுச்சு

“எங்க போனான் இவன்? எப்ப இத வாங்கினான்?”னுட்டு அம்மாவ பாத்து அப்பா கேட்டார். ”எனக்குத் தெரிலயே”னு அம்மா சொன்னா. அப்பா கோவமா அந்த பாட்டில போர்வ வழியா இழுத்தெறிஞ்சு கோவப்பட்டு கத்தினாரு.

“என்ன நடக்கு இந்த வீட்டுல… பாத்துக்கனு சொல்லிட்டுதான போனேன்..”

“மைனிட்ட ஏன் கத்துத.. நான் எங்கயும் போகல.. வூட்ல இருந்ததுதான் ”சித்தப்பா எழும்பி உக்காந்து சொல்ல- அப்பா பாட்டிலை சுவரில் எறிஞ்சார். அம்மா மருண்டு தள்ள “ஒன்னுலருந்து மீண்டானு நெனைச்சா அடுத்ததுல குடி போனா என்ன? எங்கிட்டு கெடைக்கு சாராயம் ஒனக்கு?

“இது மார்த்தண்டத்துலருந்து குமரன் கொண்டு வந்தது”

அப்பா சித்தப்பாவையே வெறிச்சிப் பாத்தாரு.. “கஷ்டமாருக்குல.. இப்படி நீ செஞ்சா ஆருக்குதான் நிம்மதி சொல்லு..”

”தெரிது… அவ பழக்கம் இப்ப தான்ண்ணே… நல்லா பாடுவா… எனக்கு ஒரு பைத்தியம் பிடிச்சிட்டு..”

“என்ன மயிரு பைத்தியம்.. ஒம் பொண்டாட்டிக்கு புடிச்சா வுட்டுருவியால?”

“நான் சரினு சொல்லல…”

“அப்படி சொல்லாதிய.. வாசல்ல நின்னு அவ தல சீவினா கூட ஆள முழுங்குற மாரி யார பாக்கனு கேக்கல்லா செய்வீக கொழுந்தனாரே?” னு அம்மா கேட்டோன்ன சித்தப்பாக்கு முகம் வெளிறியது. ஓவென அழுதார்.

“என் மனசுல குத்தம் இருக்கப்போய் தான மைனி அவள குத்தம் சொன்னேன்?”

அப்பா நான் எட்டிப் பாக்குறத பாத்து “நீ போய் தூங்குல”னு சொன்னார். எனக்கு பதைபதைப்பாருந்துச்சு. கண்ணெல்லாம் கலங்கி இருந்த சித்தப்பாவ பாக்கவே எனக்குப் பிடிக்கல… அம்மாட்ட “ம்மா..பசிக்கினு சொன்னேன். அம்மா என்னை எரிச்சலோட பாத்து “இருல..ஒனக்கு இப்பதான் பசிக்கும்.. அங்கனம் பக்கத்துல முறுக்கு வச்சிருக்கேன் பாரு.. அத தின்னு”னு சொன்னா.. எனக்கு அசதியா இருந்துச்சு. அம்மா கிட்ட போக முடில. ஆனா அவ சேலை வாசம் பிடிச்சிக்கிட்டு அதுக்குள்ள சுருண்டு இருக்கணும் போல தோனுச்சு.

சட்டுனு அண்ணனும் தம்பியும் ரொம்ப அன்பா பேச ஆரம்பிக்க அம்மா எனக்கு ஏதோ ஒரு பண்டம் எடுத்துக் கொடுத்திட்டு பாட்டில் நொறுங்கினத வாரியலால பெருக்க ஆரம்பிச்சா. அது அந்த இடத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒரு ஒலிய எழுப்ப அப்பா திரும்பிப் பாத்து “சுவர் முட்டியா?”ன்னு சொன்னார்.

சித்தப்பா பதில் சொல்லாம தலயக்குனிய ”அந்தப் பாட்ட பாடுல.. நல்லாதான் பாடுன…”னார் அப்பா

சித்தப்பா மறுபடி அதப்பாட அப்பா கண்ண இறுக மூடிக்கிட்டார். அம்மா லேசா சிரிக்க பயந்து சிரிச்சபடி குப்பைக்கூடைல அந்த கண்ணாடிச் சில்லைத் தட்ட போயிட்டா. பின்னாலேயே போன என்னப் பாத்து “போன ஜென்மத்துல நீ நான் வளர்த்த நாயா தாம்ல இருந்திருப்ப”ன்னா, எனக்கு அதுல பயங்கர சந்தோஷம் இருந்துச்சு.. நான் சிணுங்கிட்டே அம்மா புறத்தால போனேன்.

அம்மா என்ன மடில போட்டு முந்தானையால என்னோட முகத்த துடைச்சா. எனக்கு அது அவ்ளோ சந்தோஷத்த தந்துச்சு. என்னோட கண்ணுல மெல்ல தூக்கம் வர அம்மா மெல்ல பாடினா. அம்மா பாடி நான் கேக்குறது முத முறை. அம்மா லேசா என்னப் பாத்து வெக்கப்பட்டுக்கிட்டே

”தூங்குடா செல்லம்”னா. அப்படி அம்மா என்னக் கூப்பிட்டா அம்மாக்கு என் மேல அன்பு பெருக்கெடுத்து ஓடுதுன்னு அர்த்தம்னு எனக்கு தெரியும்…

நான் அம்மா முகத்தை அரைக்கண்ணால பாத்துக்கிட்டே “ ம்மா… ”னேன்..

“சொல்லுடா”

“நீயும் ஒரு நா சித்தியாட்டம் வீட்டுக்கு போயிற மாட்டியே”ன்னேன். அவ அப்படியே என்ன உத்து பாத்து உடல் மடங்கி என்னை கட்டிப் பிடிச்சிக்கிட்டா…

“பெரீய்ய்ய மனுஷனாட்டம்தான் பேசுற போ”ன்னவ… காரணமே இல்லாம அழுதா.

“ஒங்கப்பா ஒன்னும் அப்படி இல்ல”ன்னு சொல்லிட்டு என்னயே வெறிச்சா.. பின்ன “அவ பாவம்லா?”னா என்னப் பாத்து..

எனக்குத் தூக்கம் வந்திச்சி. ஆனா நடுல என்னை அம்மா படுக்கைல படுக்க வச்சப்ப முழிப்பு வந்துச்சு. நான் அவ முகத்தை சுத்தி தூக்கக் கலக்கத்துலயே கைய போட்டேன்.. அப்பவும் அவ கன்னம் ஈரமா இருந்துச்சு.

  • தொடரும்

கடைசியில் சொல்கிறேன்

0

கவிதைக்காரன் இளங்கோ

-1-

காத்திருக்கத்தான் வேண்டும் என்பது தெளிவாகப் புரிந்தது. பல வருட அலைச்சலில் இது பழகிவிட்டது. தலைக்குள் மீண்டும் மீண்டும் அந்தக் காட்சி ஒரு தொடர் ஓட்டத்தை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. வெவ்வேறு காத்திருப்புகளின் அர்த்தப் புதிர்கள் எல்லாம் காலுக்குக் கீழே இருந்து பாதாளம் நோக்கி இழுக்க எத்தனிக்கின்றன. என் முறைக்காகக் காத்திருக்கத் தான் வேண்டும். இன்று எடுத்துக்கொள்ள இருப்பது இரண்டாவது அமர்வு. இந்த டாக்டரை பரிந்துரை செய்த என்னுடைய வக்கீலை ஒரு முறை மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன். பல வருடங்களாக என்னைப் பற்றி நன்கு அறிந்தவர். சும்மா யாரிடமோ என்னை அனுப்பி வைத்துவிட மாட்டார். முதல் அமர்வின் அறிமுகம் வழக்கமான ஒன்று தான். அடுத்தடுத்த அமர்வுகளைத் தொடரலாமா வேண்டாமா என்பதை இந்த இரண்டாவது அமர்வு தீர்மானித்துவிடும். லேசில் அடங்கவோ ஒத்துக்கொள்ளவோ முனையாத மனம் என்னுடையது.

****

(ஒரு கோடை விடுமுறை)

1985.

ரண்டாவது மாடி, தெருவிலிருந்து நாற்பதடி உயரத்தில் இருந்தாலும் அங்கிருந்து கீழே பார்க்கும்போது துல்லியமாகவே தெரிந்தது. மன நடுக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பக்கத்திலிருந்த சிவாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டேன். அவனது கையும் நடுங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்து அப்பால் நகர்ந்துவிடவும் முடியவில்லை. மனிதக் கூச்சல் அங்குமிங்கும் காற்றில் அலை மோதியது. மற்ற மாடிகளில் அதுவரை நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் குழந்தைகள் எல்லாம் அலறியபடி வீடுகளுக்குள் ஓடிப் புகுந்து கொண்டார்கள்.

ரத்தத் துளிகள் தெருவில் கோடிழுத்துக் கொண்டு அவனுக்கு வழி காட்டியது போலிருந்தது. நானும் சிவாவும் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவன் தெற்கு நோக்கி ஓடிக் கொண்டிருந்தான். வலது மணிக்கட்டோடு வெட்டப்பட்ட உள்ளங்கையை இடது கையால் எடுத்துக் கொண்டான். அது துடித்துத் துடித்து மிச்ச ரத்தத்தைத் துப்பிக் கொண்டிருந்தது.

“வாடா.. வந்திரு.. வந்திரு..”

சிவா பயந்து போய்விட்டான். என்னைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டிருந்தான்.

“இர்றா.. என்ன வுடு. வேன்னா நீ போ”

முதல் பார்வைக்கே அது வெறும் குடிகாரர்களுக்கு நடுவே நடந்த சண்டைக் காட்சியாக இருக்கவில்லை என்பது எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. போன வாரம் ஒரு குத்துச் சண்டையைப் பார்த்திருந்தோம். அதிலும் இவன்தான்.

இந்த மார்க்கெட் சந்து என்பது சிறு பையன்களான நாங்கள் ஓடிப்பிடித்து விளையாடும் பகுதி. வசவு சொற்களைத் திட்டுக்களாக வாங்கியபடி யாரிடமும் பிடிபடாமல் நழுவி நழுவி ஓடுவதே அவ்விளையாட்டின் த்ரில். கறி கடைகளும் மீன் கடைகளும் அமைந்த வியாபாரப் பகுதி தனிச் சதுரமாகப் பிரிக்கப்பட்டிருக்கும். அது முழுவதுமாக சீமை ஓட்டுக் கூரைகள் கொண்டு வேயப்பட்ட கட்டிடப் பகுதி. கூரைகளில் கவுச்சி வாடைக்காக பூனைகள் ராஜாக்களின் மிடுக்கோடு அலைந்து கொண்டிருக்கும். தெரு நாய்கள் அவற்றைப் பார்த்து விரோதத்தோடு உறுமிக் கொண்டிருக்கும். பூனைகள் அந்த உறுமல்களை அலட்சியப்படுத்தியபடி நிதானமாக, தம் முன் பாதங்களை நக்கிச் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும். உயரமான இடம் கர்வத்தைத் தர மறுப்பதில்லை.

காய்கறி கடைகள் வீதியின் இருமருங்கிலும் வரிசைக் கட்டியிருக்கும். நடுவில் இருக்கும் சொற்ப பாதையில் பெண்கள் வயர் கூடைகளோடு ஒருவரை மற்றவர் உரசாமல் நகரவே முடியாது. ஒரே சத்தக் காடாக இருக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும் வேளை காலையில் தொடங்கி மதியத்திற்கு முன்பாக அடங்கிவிடும். அத்தோடு, மாலை ஆறு மணிக்குத் தொடங்கி எட்டரைக்கு முடிந்துவிடும். இதெல்லாம் மற்றக் கிழமைகளில் தான்.

ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் மதியத்தோடு ஏறக்கட்டப்பட்டுவிடும்.

அனைத்து தொழில் சார்ந்த தினக் கூலிகளும் வண்டிக்காரர்களும் ஓய்வாக அனுபவிப்பது ஞாயிறு மதியங்களைத் தான். சாராயம் பிரதானமான ஒன்று. தகராறு இல்லாத ஞாயிறு மாலைகளே கிடையாது. சாதாரணமாக இருக்கும் வேளையில் திடீரென மனித அலறல் எல்லோரையும் சுற்றியுள்ள தத்தம் மொட்டை மாடி விளிம்புகளுக்கு இழுத்து வந்துவிடும். அம்மாதிரியான சண்டைக் காட்சிகள் சகஜம் எங்களுக்கு.

ஆனால், இது வேறு என்பது தெரிந்து போயிற்று. ஏதோ கோஷ்டி மோதல். போன வாரத்தின் ஒரு தொடர்ச்சி. வெட்டுப்பட்ட இந்த மனிதன் அந்த சண்டையில் சரமாரியான பாக்ஸிங் குத்துக்களை தன் எதிராளியின் முகத்தில் விட்டுக் கொண்டிருந்தான். மூக்குடைந்து ரத்தம் சொட்டிய அவன் அப்போது திரும்பி ஓடிவிட்டான்.

இப்போது இவனை வெட்டியவர்கள், மேற்கொண்டு அவனைத் துரத்திப் போகவில்லை. வெட்டிவிட்டு எதிர்திசையில் ஓடிவிட்டார்கள். அவர்களின் இலக்கு, அவனுடைய வலது கை முஷ்டி என்பது புரிந்தது. அவன், நேரே ஸ்டான்லி ஹாஸ்பிடல் இருக்கும் தெற்கு திசை நோக்கித் தான் ஓடுகிறான். பார்ப்பவர்களுக்கு மயக்கம் வரும் அச்சம்பவத்தின் ஆள் ஓடிக் கொண்டிருக்கிறான்.

“அவனுக்கு மயக்கம் வந்து ரயில்வே கேட் தாண்டறதுக்குள்ள விழுந்துடுவானாடா சிவா?”

“வாயேன் பின்னாடியே ஓடிப் போய் பார்த்துட்டு வந்திரலாம். ஆளப் பாரு. உன் மூஞ்சி”

பின்னாள், ஹாஸ்டலில் படிக்கும்போதெல்லாம் கூட, அவனையே நினைத்துப் பார்த்ததுண்டு. அவன் இப்போது என்ன செய்வான்? பிழைத்தானா செத்தானா? எவ்ளோ பெரிய ரவுடி. யாருக்கும் பயப்படாதவன். ஒல்லியான அந்த தேகத்துக்குள் தான் எத்தனை நெஞ்சுரம்! தைரியம்.

பிறகே அக்கனவு வரத் தொடங்கியது.

****

-2-

ஒழுக்கமும் தண்டனையும் :

“ஒரு காகிதத்தின் இரண்டு பக்கங்களைப் போல இதனை நிறுவிய உலகம் எங்கிருந்து தொடங்குகிறது என்று யோசிக்கிறேன். பள்ளிக்கூடங்களில் தொடங்கி அனைத்து சமூகச் செயல்கள் வரை இவை ஊடுருவி இருப்பது என்ன மாதிரியான உத்திரவாதத்தை தோற்றம் கொள்கிறது. கட்டுப்படுத்தலின் வரையறையை தொடர்ந்து புத்தாக்கம் செய்வதற்கான அவசியத்தை நாம் பத்திரப்படுத்த பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம் அல்லவா. அடித்துத் திருத்தி மாற்றியமைக்கப்பட வேண்டிய சட்ட நுணுக்கங்கள் மீதான ஓர் இறுதித் தீர்மானம் என்பது இல்லவே இல்லையே. ஒரு நீதிமன்ற வழக்கும் அதன் முடிவு காலமும், வாதத் திறமையின் விளைவைப் பொறுத்து அமைவதாக எடுத்துக் கொண்டால், அதில் ஒரு தனிமனித வாழ்வின் சிதைவை எந்தக் கணக்கில் எடுத்துக்கொள்வது?”

அவர், என்னையே உற்றுப் பார்த்தவண்ணம் எதுவும் பதில் சொல்லாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

“நீங்க சைக்யாட்ரிஸ்ட பார்த்தீங்களா இல்லையா? போன முறை சொல்லியிருந்தேனே?”

நான், பேனாவின் மூடியைத் திருகித் திறந்தேன். நிதானமாக மூடினேன். மீண்டும் திருகித் திறந்தேன். மீண்டும் மூடினேன்.

****

-3-

“எனக்கு ஃபவுண்டன் பேனாக்கள் தான் பிடித்திருக்கின்றன. எழுத நினைக்கும் நினைப்புக்குள் நுழைவதற்கான சந்தர்ப்பத்தை அது, அதன் வடிவமைப்பிலேயே உண்டு பண்ணுகிறது. ஒரு நூலகத்துக்குள் நுழைவதைப் போல அதனுள் யோசனைகளின் வழியே நுழைய என்னை மெல்ல அனுமதிக்கிறது. அதன் உடலும், கழுத்துப் பகுதியும் முள்முனையும், அதன் கீழ் முள்ளைத் தாங்கிப் பிடித்திருக்கும் தடித்த நாக்கும், அந்நாக்கில் வரிவரிகளாக இழுபட்டிருக்கும் சிறு பள்ளக் கோடுகளும் அதனூடே கட்டுப்பாட்டோடு வடிந்து வெளிப்படுகிற மையும், எழுத எழுத ஊற்றெடுக்கும் ஆன்மாவின் ரத்தம் அல்லவா டாக்டர்!?”

ஆம் என்பதாக, அவர் தன் தலையை மையமாக மேலும் கீழும் மென்மையாக அசைத்தார். மனோதத்துவ மருத்துவர் என்றாலே நீளமான தாடி வைத்துக் கொண்டு அதனை வருடியபடியே நோயாளியின் பேச்சுக்குத் தலையசைத்தபடியே இருக்க வேண்டும் என்கிற விதியை இவர் மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறார் எனக்குள்ளே. சுத்தமாக மழிக்கப்பட்ட தாடையும், கச்சிதமாக திருத்தம் செய்யப்பட்ட அடர்ந்த மீசையும் கண்ணாடி அணியாத முகமும் தீர்க்கம் அற்ற சாந்தமான பார்வையும் புதிய அனுபவத்தை எனக்குத் தந்து கொண்டிருக்கிறது. இந்த அறையின் இளநீல நிற வண்ணம், அவற்றுக்கு ஒத்துப் போகும் எதிர் நிறத்திலான மற்ற பொருட்கள் அனைத்திலும் ஓர் ஒழுங்கு இருக்கிறது.

“ஆனால், டாக்டர் சமீபமாக..”

தொடங்கிய வேகத்தில் நிறுத்தினேன்.

“உங்களை டாக்டர் என்று அழைக்கலாம் தானே..?”

“ம். அது சரியே.. மேலே சொல்லுங்கள் சத்யன்”

“சமீபமா.. எழுத எழுத காகிதத்தில் ரத்தம் ஒழுகுகிறது. பேனாவை சந்தேகத்தோடு உதறினால் வழக்கமான கறுப்பு மை தான் தெறிக்கிறது. எழுதத் தொடங்கினாலோ ரத்தம் ஒழுகுகிறது. வேறு படிவங்கள் நிரப்புவதற்கோ காசோலையில் கையெழுத்து இடும்போதோ அந்த ரத்தம் இல்லை. இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் கதையை ரத்தத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன் டாக்டர். அது ஏன்?”

“என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? அதைப் பற்றிச் சொல்லுங்கள். பிறகு இதற்கு வருவோம்”

சொல்லியபடியே அவர், ஏதோ குறித்துக் கொண்டார்.

“ஒரு நாவல். உளவியல் பாதிப்பு உள்ள ஒரு தொடர் கொலையாளிப் பற்றின நாவல்”

“ஓ! அவன் தான் சப்ஜக்டா?”

“ஆம்”

“ஏன்?”

****

-4-

“இத்தனை வருடமாக நீதிமன்றத்துக்குள் போவதும் வருவதுமாக இருக்கிற உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்கிறது ஸார். உண்மைத்தானே?”

“ஆம். ஒத்துக் கொள்கிறேன். ஆனாலும், ஏன்? ஒரு சீரியல் கில்லர் எதற்காக உங்களின் சப்ஜெக்டாக இருக்க வேண்டும்?”

“நிறைய மனிதர்களைக் கவனித்துக் கொண்டே இருப்பது எனக்குப் பிடித்தமான ஒரு செயல். குறிப்பாக கும்பல்கள். ஒவ்வொரு கும்பல் கூடுமிடமும் வேறு என்பது, சூழலின் பின்னணியைப் பொறுத்தது தானே. கோணமும் பார்வையும் வெவ்வேறாக பரிணமிக்கும் சந்தர்ப்பம் எனக்கது. தொடர்ந்து ஓரிடத்துக்கு ஒற்றைக் காரணத்துக்காக நான் சென்றடையும்போது ஒவ்வொரு முறையும் புதிய அனுபவத்தை எனக்கு அப்பயணம் தரத் தொடங்குகிறது. அதற்கான முக்கியஸ்தானாக என்னை நான் முன்னிறுத்திக் கொள்கிறேன். அது அவசியம் என்றும் நினைக்கிறேன். கும்பலில் ஒருவன், அக்கும்பலாக சட்டென மாறுவதற்கான சந்தர்ப்பம் எக்கணமும் நிகழலாம் என நம்புகிறேன். அதை நான் போர்ட்ரெயிட் பண்ணும்போது கேள்விகள் எழ எழ பதில்களைத் தேடி ஓர் ஓட்டம் உருவாகிறது. எனக்கு என் கண்டடைதல் முக்கியம். இதோ உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன்”

“புரிகிறது. வழக்குக்கு இது எந்த வகையிலும் உதவப் போவதில்லை என்பதை முன்பே சொல்லிவிட்டேன். நினைவிருக்கிறது அல்லவா?”

“நான் உங்களின் கிளையன்ட் மட்டுமல்ல. இத்தனை வருடப் பழக்கத்தில் நண்பனும் கூட. எனக்குள் குறுக்கு மறுக்காக ஓடிக்கொண்டிருப்பவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்பியே இதோ இன்று வந்திருக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை சரியான தேர்வுதான் இல்லையா? ஓர் எழுத்தாளனுக்கு, அவனுக்குள் எழும் சிக்கல்களுக்கு உதவ வேண்டியது உங்களின் கடமை. அது நீங்கள் நம்புகிற சமூக நலன் மீதான அக்கறையின் ஒரு நீட்சி என்று வைத்துக் கொள்ளுங்களேன்”

அவர் கையை உயர்த்தி, மென்மையாகச் சிரித்தார். அவருக்குப் பின்னால் இருந்த சுவற்றின் இடதுபுற உயரத்தில் ஒரு டிஜிட்டல் கடிகாரம், நொடியின் சிகப்பு நிற எண்களை மாற்றிக்கொண்டே இருந்தது.

“யூ ஆர் ஆல்வேஸ் அன்பிலீவபல்”

சிரிப்பு மெதுவாக மில்லிமீட்டர் அளவுக்கு தேய்ந்த பின்பு நிதானமாகத் தொடர்ந்தார்.

“கேட்ட கேள்வி இன்னும் அங்கேயே அம்போவென்று நிற்கிறது. ஏன் என்று சொல்லு மேன். ஒரு சீரியல் கில்லர் ஏன் சப்ஜெக்டாக மாற வேண்டும்?”

****

-5-

“நீங்கள் குறிப்பிட்டு எதையும் அடிக்கோடிட்டுக் கொள்ள வேண்டாம் டாக்டர். நாம் தொடர்ந்து உரையாடுவோம். என்னுடைய ஆல்டர்-ஈகோ தான் காரணமாக இருக்க வேண்டும். அதுவேதான் என ஊர்ஜிதப்படுத்தி நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் போதுமானது. கொஞ்சம் தெளிந்துவிடுவேன் என்று நம்புகிறேன். கேன் யூ ஹெல்ப் மீ?”

“That is very purposeful. ஒரு செஷனை நாம் அப்படி முன்னெடுத்துப் போக முடியாதே சத்யன்?”

“உங்கள் ப்ரொஃபஷனையும் தாண்டி நான் கேட்கும் ஒரு நட்பான வேண்டுகோள் என்று இதைப் பரிசீலிக்க முடியாதா டாக்டர்?”

அவர், தன்னுடைய குறிப்பெழுதும் பென்சிலின் பின்பக்கத்தைக் கொண்டு குறிப்பேட்டின் மீது சின்னச் சின்னதாகக் குத்தியபடி சில நொடிகள் யோசித்தார்.

“ம்ம்.. சரி.. ஐ அக்ரீ. நீங்க சொல்லுகிற ஆல்டர்-ஈகோ என்கிற கோணத்திலிருந்து பார்த்தோமே என்றால், டுவாலிட்டியை கையில் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் அதனைக் கதையாக எழுதுவதற்கு ஏற்ற ஒன்றுதான். ஆனால், அனலைஸிஸில் கிளினிகல் பக்கம் என நகர்ந்து வரும் போது அது ஓர் ஆபத்தான ஆராய்ச்சி. எங்களுடைய வாசிப்பும் அணுகும் முறையும் உங்களுதும் கொஞ்சம் ஒத்து வராது என்றுதான் நினைக்கிறேன். சொல்லுங்கள். இதுசார்ந்து எதையாவது வாசித்தீர்களா? வாசித்துக் கொண்டிருக்கிறீர்களா? நான் தெரிந்து கொள்ள வேண்டும்”

சற்று நேரம் தேவைப்பட்டது. மனம் சட்டென வாசித்த விஷயங்களின் உள்ளே நழுவி வீழ்ந்து கொண்டிருந்தது. பேனாவின் கழுத்தைத் திருகி மீண்டும் மூடியைக் கழற்றினேன். எதிர்த் திருகலாக மூடத் தொடங்கினேன். திறந்தேன். மூடினேன்.

****

-6-

“அதை மூடி, பாக்கெட்டில் வையுங்கள். என்னுடைய கவனத்தைக் குழப்புகிறது அது. ரொம்ப ஆழமாக யோசித்து ஒரு பதில் சொல்ல வேண்டாம். அஃப்கோர்ஸ் நான் சைக்யாட்ரீஸ்ட் இல்லை. உங்களின் வக்கீல். எனக்கு சிம்பிளாக சொன்னாலே போதுமானது. என்னுடைய தேவை உங்களின் தேர்வில் உள்ள காரணத்தின் Criminalised aspects மட்டும்தான். Non detail is fair enough”

****

-7-

நான் தொடங்கும்வரை காத்திருந்தார் அவர். சலனமில்லாத காத்திருப்பு.

“சிக்மென்ட் ஃபிராய்ட்ன் Civilization and its Discontents, மிகையில் ஃபூக்கோவின் Discipline and Punish, the birth of the Prison”

சொல்லிவிட்டு காத்திருந்தேன். அவர் குறித்துக் கொண்டார். புன்னகை  தவழத் திருப்பிக் கேட்டார்.

“நான் கூட, Ted Bundy, Jeffrey Dahmer,  Chikatilo இந்த மாதிரி சொல்லப் போகின்றீர்களோ என்று நினைத்தேன்”

“நோ. நோ. பின்னணியில் நுணுக்கமான செயல் விளைவுகளை உண்டு பண்ணுகிற அறிவியலும் தத்துவமும் அவசியம்னு தேர்ந்தெடுத்துக்கிட்டேன். சைக்கோ கொலைக்குற்றவாளிகள் பற்றின தகவல்கள் எல்லாம் ஜஸ்ட் ஒரு கேஸ் ஹிஸ்டரி தானே? That’s useless”

“அப்படி சொல்லிவிடக் கூடாது. அவர்களை ஆய்ந்ததில், உளவியலின் பங்கு கணிசமான ஒன்று. மனோதத்துவ இயலோ, சமூகவியல் தத்துவமோ அப்படியான குற்றங்களை, குற்றவாளிகளை ஒதுக்கிவிட்டு ஒன்றை மறுத்து இன்னொன்று என்று விவாதித்துவிட முடியாது. நாம் அனைவரும் அறிவியலால் பகுக்கப்பட்டிருக்கிறோம். பூமியின் கடைசி மனிதன் தீர்ந்துபோகும் வரை அனைத்து துறை சார்ந்த ஆராய்ச்சிகளும் இருக்கவே செய்யும். அது அவசியமும் கூட”

“ஹ்ம்ம்.. Deprivation of liberty பற்றி ஃபூக்கோ ஓரிடத்தில் பேசுகிறார். ஃப்ராய்ட் நாகரீகமும் அதன் அதிருப்தியையும் பற்றி பேசுகிறார். ஃபூக்கோவின் ஆய்வு சமூகத் தண்டனைகளின் வரிசையைச் சுட்டிக் காட்டுகிற போக்கில் ஓர் முக்கியமான அம்சம். அதன் தொடர்ச்சியாக, சுதந்திரத்தை இழப்பது அல்லது இழக்க வைக்கப்படுவது குறித்து நான் யோசிக்கிறேன். The deprivation of liberty. இது ஏதோ ஐரோப்பிய இறக்குமதி கருத்து சமாச்சாரம் என்று ஒதுக்கித் தள்ளிவிடக் கூடாது என்று நினைக்கிறேன். நிறைய நடத்தைகளை நாம நமக்கு ஒத்து வந்தாலும் வரலை என்றாலும், அவற்றைத் தரவிறக்கம் செய்து பார்த்து, கொஞ்சம் அப்படி இப்படி என்று கலைத்துப் போட்டு பயன்படுத்தத் துணிந்துவிட்ட ஒரு சமூகத்துக்குள்ளே தான் வளைய வருகிறோம். ஸோ, தனிமனிதனோட சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் உளவியல்கள், சும்மா கடந்து போய்விடுகிற செய்திகளுக்குள்ளே மறைந்து கிடக்கிறது. அதை எடுத்துப் பேச இங்கே யாருக்கும் நேரம் இல்லை. அல்லது, அதைப் பேச விருப்பமில்லை”

“இன்ட்ரஸ்டிங்..! ஸோ உங்களின் நாவலுக்கான சப்ஜக்டை நீங்கள் அப்படித் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்களா?”

“ஆல்டர்-ஈகோவும் வேலை செய்கிறதோ என்கிற சந்தேகம் இருக்கு டாக்டர்”

“I need some time மிஸ்டர் சத்யன். மூன்று நாட்கள் கழித்து வாருங்களேன்”

“Am I alright டாக்டர்?”

“சொல்கிறேனே. அடுத்த அமர்வில் சொல்லுகிறேன். உங்கள் மகள் நெல்மலருடன் நீங்கள் தொடர்ந்து உரையாடுகிறீர்கள் தானே?”

“யெஸ்”

“அது நல்லது. அவள் இப்போது இந்த விடுமுறை நாட்களில் என்ன செய்து கொண்டிருக்கிறாளாம்?”

“கதை எழுதுகிறாள் டாக்டர்”

“அவளுமா!?”

சிரித்துக்கொண்டே அதையும் குறித்துக் கொண்டார்.

****

-8-

“க்ரிமினல் ஜூடிசியல் கோட் சம்பந்தமாக புத்தகம் வேண்டும் என்று போன முறையே கேட்டிருந்தீர்களே? எடுத்து வைத்திருக்கிறேன்”

“Oh! that’s lovely”

புத்தகம் கனமாக இருந்தது. எல்லாமே உச்ச நீதிமன்ற வழக்குகளும் விவாதங்களுமாக இருந்தன.

“இவ்வளவு வாசிக்க வேண்டுமா சத்யன்? சில சமயங்களில் உங்களை நினைத்தால் கொஞ்சம் கவலையாகவும் இருக்கு எனக்கு. You are a good man”

“நன்றி. சமூக அந்தஸ்து ரொம்ப முக்கியம் என்று சொல்லிச் சொல்லியே வளர்க்கப்பட்டிருக்கிறோம். ஆதர்ச ரோல் மாடல்கள் பருவத்திற்கேற்ப மாற்றம் ஆகிக்கொண்டே வருகிற விசித்திரத்தை நினைத்தால் ஆச்சரியமாகவும் இருக்கும். தொடக்கத்திலே நீங்களே என்னைப் பல வருடங்களாக நம்பவில்லை இல்லையா? இந்த மாதிரியான Professionalism ன் பிரச்சனையாக அதைப் புரிந்து கொண்டேன். சமூக அந்தஸ்து பற்றிய அக்கறையில் தனிமனிதன் கொஞ்சமாக ஒடுங்குகிறான் பாருங்கள், அதைத்தான் எழுதித் தீர்க்கணும் என்று மனதுக்குள் எரிந்து கொண்டே இருக்கு. அந்தத் துடிப்பை, நீதிமன்றத்துக்கான நுழைவாயில் சீட்டுப் பெற நிற்க நேரும் நீண்ட மனித வரிசை தருகிறது”

“அதை ஒரு சம்பிரதாயம் என்று எடுத்துக்கலாமே?”

“அதுவே, ஒரு தண்டனை என்று ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது? எல்லாவற்றையும் ஸ்மார்ட் கார்ட் என்று ரேஷன் கடை வரைக்கும் கொண்டுவர முடிந்த ஒன்று, இங்கே மட்டும் படிவத்தை நிரப்பிக்கிட்டு நில்லுடான்னு ஒரு பொது மனிதனைப் பார்த்து ஏன் நிர்ப்பந்திக்க வேண்டும்? எழுதப் படிக்கத் தெரியாதவன் அங்கே அம்போவென நிற்கிறானே. வழக்கு வாதாடப்பட்டு, தீர்ப்பு எழுதி முடிப்பதற்கெல்லாம் முன்னாடியே தண்டனைகள் தொடங்குகிற இடம் ஒரு வக்கிரமா இருக்கு. இது என்ன மாதிரியான டிசிப்ளின்? நாகரீகத்தை Claim பண்ணிக் கொள்கிறோம் அல்லவா?”

“ஆமா. have to”

“அப்போ, அதன் அதிருப்தி இப்படிப் பட்டவர்த்தனமாக கண் முன்னாடியே இருக்கிறதே. வழக்கறிஞர்களுக்கான பிரத்யேக பாதையிலே நீங்களெல்லாம் சுலபமாக நுழைந்து விடுகிறீர்கள். உங்களுக்குப் பிழைப்பு கொடுக்கறவன் எல்லாம் மொட்டை வெயிலில் நிற்பதற்கு முந்தின நாளே தயாராக வேண்டும் என்பதெல்லாம் பெரிய போங்காக இருக்கிறதே ஸார்? ஏன் ஒருத்தர் கூட இதற்கான ஒரு பொதுநல வழக்குப் போட முன்வரவில்லை?”

“இந்தாங்க. தண்ணீர் குடிங்க”

“அடப் போங்க ஸார்.. ரூட்டை மாத்தறீங்க”

மீண்டும் பேனாவை எடுத்துத் திருகத் தொடங்கினேன். இம்முறை அவர் அதை ஆட்சேபிக்கவில்லை.

****

-9-

“நீங்கள் சொன்ன புத்தகங்களை நானும் ஒரு ஓட்டம் விட்டுப் பார்த்தேன். ரொம்ப நாள் ஆயிற்று. தீசிஸ் பண்ணும்போது வாசித்தது. நம் முந்தின அமர்வின் உரையாடலுக்குப் பிறகு உங்களை ஒரு தனிமனிதனாக, ஒரு பேஷண்ட்டாக மட்டுமே பார்க்க முடியவில்லையே. ஓர் எழுத்தாளரும் கூட”

அவர் பெருமூச்சு விட்டுக் கொண்டார்.

“நேற்றும் கனவு வந்தது டாக்டர்”

“அதே கனவு?”

“ஆம். நேற்றோடு 29  வது தடவை”

“அவ்வளவு துல்லியமான கணக்கா அது? 28 ம் இல்லை 30 ம் இல்லை. மிகச் சரியாக 29 ஆ?”

“ஆம். குறித்து வைத்திருக்கிறேன். இந்த வருஷம் தொடங்கி ஐந்து மாதங்கள் முடியப் போகின்றது. இந்த ஐந்து மாதத்தில் நேற்று இரவு அந்தக் கனவு 29 வது முறை”

அவர் என்னை உற்றுப் பார்த்தபடி, தன்னுடைய சுழல் நாற்காலியை அரைவட்ட சுழற்சியோடு அசைத்துக் கொண்டிருந்தார். இருவரும் எதையும் பேசிக்கொள்ளவில்லை. முழுமையாக ஆறு நிமிடங்கள் கரைந்த பிறகு அரைவட்டம் நின்றது.

“இம்முறையும் கனவு மிகச்சரியாக அதே இடத்தில் நின்று விடுகிறதா?”

“ஆம்”

****

கனவு

ணிக்கட்டோடு வெட்டப்பட்டு துடித்துக் கொண்டிருக்கும் என்னுடைய வலதுகையின் விரல்கள் ஃபவுண்டன் பேனாவைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. அதை, ரத்தம் சொட்டச் சொட்ட இடது கையில் பொத்திக் கொண்டு வெண்ணிற காகிதத்தின் மீது ஓடிக் கொண்டிருக்கிறேன். சொட்டும் ரத்தம் வழிக்காட்டுகிறது. ஒவ்வொரு சொட்டும் எழுத்துருக்களாக மாறுகின்றன. அதைத் தொடர்கிறேன். மூச்சிரைக்கிறது. எழுதிக் கொண்டிருக்கும் கதையின் கதாபாத்திரங்கள் அங்கங்கே காகிதத்திலிருந்து புடைத்து எழும்பி என்னைத் துரத்துகிறார்கள். சட்சட்டென முளைத்துத் திரும்பும் சந்துகளில் நுழைந்து நுழைந்து ஓடி கவுச்சி மார்க்கெட்டில் வந்து நிற்கிறேன். கூரையிலிருந்து கை நீட்டும் பூனையொன்று என்னைத் தூக்கி விடுகிறது. மேலேறும்போது அதுவரை பத்திரமாகப் பற்றியிருந்த வலது மணிக்கட்டு நழுவி தெருவில் விழுகிறது. நாயொன்று அந்த வலது கையைக் கவ்விக்கொண்டு ஓடத் தொடங்குகிறது. ரத்தத்துளிகளின் அடையாளத்தைத் தொடர்ந்து ஓடிவந்த கதாபாத்திரங்கள் நாயைத் துரத்திக் கொண்டு ஓடுகின்றன. ‘பரவாயில்லை விடு’ என்கிறது பூனை. வெட்டுப்பட்ட என்னுடைய வலது மணிக்கட்டின் மொண்ணைப் பகுதியிலிருந்து வழிந்து கொண்டிருக்கும் தொடர் ரத்தத்தை தன் நாவால் நக்கி நிதானமாக சுத்தப்படுத்தத் தொடங்குகிறது அப்பூனை.

****

-10-

“அந்தச் சீமை ஓடு வேய்ந்த உயரமான கூரையிலிருந்து, ஓடி வந்த பாதையைப் பார்த்தால் ஓர் அதிகார மிடுக்கு மண்டைக்குள் முட்டுகிறது டாக்டர்”

“வேறு எதையாவது நினைவுபடுத்துகிறதா அந்தக் கனவு? அதாவது அதைத் தொடர்புபடுத்தி வேறு ஒன்று என ஒரு சங்கிலித் தொடர் போல. கொஞ்சம் யோசித்து சொல்லுங்களேன்”

“எப்படிக் குறிப்பிட்டு கேட்கிறீர்கள் என்று இன்னும் சற்றுப் புரிய வையுங்களேன் டாக்டர்”

“உதாரணத்துக்கு. ஒரு மிஷ்கின் திரைப்படத்தில். வெட்டுப்பட்ட கைகள் ஆங்காங்கே நகரின் வெவ்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அது மாதிரி. Any related images?”

“இல்லை. இல்லை. அவை முழுமையான முழங்கை அளவில் உள்ள கரங்கள் அல்லவா! நீங்கள் கேட்பது எனக்குப் புரிந்துவிட்டது. எனக்கு, முன்பு முறையாக ஓவியம் கற்றுக்கொள்ளும் ஒரு விருப்பம் ஏற்பட்டபோது, மனித Anatomy ல், கைகளும் விரல்களும் தொந்தரவுகளாக இருந்தன”

“பிறகு என்ன செய்தீர்கள்?”

“பயிற்சியை விட்டு விட்டேன். அதே போல, பிற்பாடு, டாவின்ஸியின் குறிப்புகளை ஒரு கட்டுரைக்காக ஒற்றுப் பார்க்கும்போது, அதிலும் கைவிரல்களின் மாதிரிகள் தொந்தரவு செய்தன. டாவின்ஸியின் விட்டோரிய மனித ஸ்கெட்ச் அத்தனைக் கறாரான கச்சிதத்தை விளக்க முற்படும்போது, மணிக்கட்டோடு வெட்டுப்பட்டு ஓடிய அந்த மனிதனின் தண்டனையை நினைத்துக் கொண்டேன். வியர்த்துவிட்டது. அன்றைய இரவில், இக்கனவு தீவிரமாக இருந்தது”

“நீங்கள் அந்த நாவலைத் தொடங்கிவிட்டீர்களா?”

“இன்னும் இல்லை டாக்டர்”

“சீக்கிரம் தொடங்கி முடித்து விடுங்கள் சத்யன். வேறு ஏதாவது புத்தகம் குறித்து சொல்ல மறந்து விட்டீர்களா?”

“ஆம். மார்க்ஸ் எங்கல்ஸ் திரட்டுகளில் முதல் தொகுதியை வாசித்துக் கொண்டிருக்கிறேன்”

“ஏன்?”

“சமூக உற்பத்தி உறவு, வர்க்க வித்தியாசம், மூலதனம், உழைப்பு-கூலி இதையெல்லாம் என்னவென்றே தெரிந்துகொள்ளாமல், ஆனால் நாம் எல்லோரும் அதுவாக அல்லது அதன் ஓர் அங்கத்தினராக ஏன் இருக்கிறோம் அல்லது எவ்வாறு இருக்கிறோம்? என்பதற்காக ஒரு மறுவாசிப்பு தேவை என நினைத்தேன் டாக்டர்”

“இது எப்படி உங்கள் சப்ஜக்டுக்கு பயன்படப் போகிறது? புரியவில்லையே!”

“உங்களுக்கு ஸ்டாலினைத் தெரியுமல்லவா?”

“எந்த ஸ்டாலின்?”

“ரஷ்யாவின் ஜோசப் ஸ்டாலின்”

“ஆம் தெரியும்”

“இன்னொருத்தர் அடால்ஃப் ஹிட்லர்”

“ஆம்”

“இரண்டாம் உலகப்போரில் ஒருத்தர் வீழ்ந்தார். மற்றவர் வீழ்த்தினார். இது வரலாறு”

“ஆம். என்ன சொல்ல வருகிறீர்கள்?”

“இருவரின் சர்வாதிகாரத்தின் அளவை நாம் எப்படி அறுதியிட்டு வைத்திருக்கிறோம்? ஒன்று உலகத்துக்காக, இன்னொன்று தன் தேசத்துக்காக. பிம்பங்களும், சமூக அந்தஸ்து கோருகிற நடைமுறைகளும் ஒன்றையொன்று முரண்பட்ட தன்மையோடே நமக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என சந்தேகிக்கிறேன். லெனின் இல்லாமல் ஸ்டாலின் இல்லை. இதுவும் வரலாறு தான் இல்லையா?”

“ஆம்”

“ஆம் என்றால், இங்கு ஸ்டாலின் என்ற பெயர்கள் லெனின் என ஏன் சூட்டப்படவில்லை? அல்லது லெனின் என்ற பெயரெல்லாம் ஏன் மார்க்ஸ் என்று சூட்டப்படவில்லை? Order of Role model என்பது அசாதாரணமானது என்று நினைக்கிறேன்”

“ஏன் அப்படி சொல்லுகிறீர்கள்?”

“நமக்கே நாம் நம் பெயரை சூட்டிக் கொள்வதில்லை. சூட்டப்படுகிறோம். அங்கே இன்னொரு மூளை வேலை செய்திருக்கிறது என்கிறேன்”

“ஓஹ்!”

“எழுத்தாளனுக்கு குறைந்தபட்சம் ஒரு வசதி இருக்கிறது”

“என்னது அது?”

“சூட்டப்பட்ட தன் பெயரை மாற்றிக்கொள்ளவோ புனைப்பெயர் வைத்துக் கொள்ளவோ வாய்ப்பு இருக்கிறது”

“ஆல்டர்-ஈகோ?”

“அதே. A Duel என்று மாப்பஸான் ஒரு சிறுகதை எழுதியிருப்பார். அது, ஜெர்மன், ஃபிரான்ஸை வெற்றிக் கொண்டுவிட்ட ஒரு போருக்குப் பிந்தைய சூழலைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும். என்னை நிறைய யோசிக்க வைத்த ஒரு சிறுகதை. ஆனால், இங்கே ஆல்டர்-ஈகோ என்கிற எனக்கான Duality தான் மர்மங்கள் இல்லாத நிழலுக்குள் நின்று கொள்ள என்னை அனுமதிக்கின்றன”

“ஓ! அதன் அனுகூலம் என்னவென்று நினைக்கிறீர்கள்?”

“அந்த நிழலுக்குள் நின்றபடி ஒழுக்கங்களையும் தண்டனைகளையும் அவதானிக்க முடிகிறது”

“முழுமையாகவா?”

“இல்லை. ஓரளவுக்காவது”

“அதாவது, எழுதிப் பார்க்கும் அளவுக்காவது”

“Exactly..”

“சீக்கிரம் எழுதத் தொடங்கி விடுங்களேன் சத்யன்”

“நிச்சயமாக”

“ஒரு கண்டிஷன்”

“சொல்லுங்கள் டாக்டர்”

“எழுத, எழுத அவற்றை என்னிடம் வந்து காட்ட வேண்டும்”

“ஏன்?”

ஒரு நீண்ட அமைதிக்குப் பிறகு அவர் சொன்னார்.

“தொடர்பிலிருப்பதற்கு தான். அதற்கு கட்டணங்கள் தேவை இல்லை”

சிரித்துவிட்டேன். அவரும் சிரித்தார். கை குலுக்கினேன். எழுந்து கொண்டேன்.

“என் கனவை நான் என்ன செய்ய?”

“அது உங்களை ஒன்னும் செய்யப் போவதில்லை. Some childhood blast. ஆனால், நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று உண்டு”

“என்ன அது?”

“நம்முடைய இந்த நான்கு அமர்வுக்கு உரிய கட்டணம். அதைத் தரவேண்டும்”

“ஓஹ்! ஐம் ஸாரி. அமர்வு முடிந்த வேகத்தில் மறந்து விட்டேன் டாக்டர். எவ்வளவு?”

“உங்களின் அந்த ஃபவுண்டன் பேனா”

“என்ன!?”

“அதுதான் கட்டணம். மேற்கொண்டு வளரக்கூடாத கனவுக்கான முற்றுப்புள்ளியும் கூட”

“ஓ! நல்லது. நான் வேறு வாங்கிக் கொள்கிறேன்”

என்றபடி, சட்டைப் பையிலிருந்து பேனாவை உருவினேன்.

“நோ.! ப்ளீஸ். வேறு ஒன்றும் கூடாது வாங்கக்கூடாது நீங்கள். ஃபவுண்டன் பேனாவை இனி பயன்படுத்த வேண்டாம். இதுவே என்னுடைய கவுன்சிலிங் பரிந்துரை”

நின்றபடியே சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். கையில் இருந்த பேனாவைப் பார்த்தேன். சில்வர் நிறத்தில் இருக்கும் இந்தப் பேனாவுக்கு Gama என்பது பெயர். எத்தனையெத்தனை பக்கங்களை எனக்காக என்னோடு சேர்ந்து எழுதித் தள்ளியிருக்கிறது. ஏற்கனவே இருந்த ஒன்றை ஒரு வாக்குவாதத்தின் போது சுவரில் குத்தி அதன் முகத்தை உடைத்து விட்டிருக்கிறேன். அது கொலை.

இது இரண்டாவது. இப்போது தற்கொலை.

“ரொம்ப யோசிக்க வேண்டாம் சத்யன். இந்த நாவலுக்கு மட்டுமாவது முயற்சி செய்யுங்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். It’s going to be an observation. அதுவரை இந்தப் பேனா என்னிடம் இருக்கட்டும். அதுதான் சொன்னேன். தொடர்பிலிருங்கள்”

“ஓ! பிறகு நான் எதைக் கொண்டு எழுத?”

“பென்சில் போதுமே”

“ஆஹ்.. நல்ல ஐடியா டாக்டர்”

Gama வை அவரிடம் கொடுத்தபோது துக்கமாக இருந்தது.

“அடுத்த முறை உங்கள் வக்கீலிடம் என்னை சைக்யாட்ரீஸ்ட் என்று குறிப்பிடாதீர்கள்”

“பின்னே?”

“மருந்துகளைப் பரிந்துரைக்க விரும்பாத சைக்காலிஜிஸ்ட் நான்”

நான் சிரித்துக் கொண்டேன்.

“கடைசி வரை ஒன்றை நீங்கள் சொல்லவே இல்லை மிஸ்டர் சத்யன்”

“எதை?”

“எழுதவிருக்கும் உங்கள் நாவலின் பெயரை”

வாய்விட்டு சிரித்துவிட்டேன் பலமாக.

“இது ஒன்றும் கடைசி இல்லையே டாக்டர். நிஜமாகவே கடைசியில் சொல்கிறேன்”

சிரிப்பு மாறா முகத்தோடு கதவைத் தள்ளி வெளியே வந்தேன். தெருவில் நின்று அந்தப் பெயர் பலகையைத் திரும்பி அண்ணாந்து பார்த்தேன்.

டாக்டர்.இளங்கோ சைக்காலஜிக்கல் கன்சல்டன்ஸி என்று மட்டும்தான் போட்டிருந்தது.

****

-11-

“அப்பா..! எப்படி இருக்கு நான் வரைஞ்ச டிராயிங்ஸ்லாம்? எல்லாமே பிளாக் அன்ட் வொயிட் பார்த்தீங்களா?”

“சூப்பரா இருக்கு நெல்லு”

“நிஜமாவாப்பா?”

“ஆமாம்மா”

“எனக்கே ரொம்ப ஆச்சரியம்பா. எப்படி இப்படி வரையறேன்ல!?”

“எனக்குத்தான் ஆச்சரியம் நெல்லு. நான் உன் வயசுல, எதையுமே பார்த்துத் தான் வரைவேன். பார்க்காம வரையத் தெரியாது. நீ இப்பவே பார்க்காம வரையற. அது ரொம்ப அற்புதமான விஷயம். இன்னும் இன்னும் போகப்போக வேற லெவல் ஆகிடுவன்னு நினைக்கிறேன்”

“அதான்ப்பா.. நீங்க செய்யிறது எல்லாம் நானும் செய்யறேன். எனக்கும் ஒரே ஆச்சரியம்பா. எப்படிப்பா அது?”

“அது ஒரு மேஜிக்மா”

சிரித்துக் கொண்டே சந்தோஷத்திலும் பாராட்டிலும் என்னை இறுகக் கட்டிக் கொண்டாள். கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தாள். அவளுடைய டிராயிங் நோட் புத்தகத்தை, ஒவ்வொரு பக்கமாக நிதானமாகத் திருப்பி ரசித்துக் கொண்டே, ஒவ்வொறு ஓவியங்களைப் பற்றின அபிப்பிராயங்களையும் அவளிடம் சொல்லியபடி இருந்தேன். பரவசத்தோடு என்னருகே நின்றுக் கொண்டிருந்தாள்.

சமீபமாக, மனிதக் கைகளின் வெவ்வேறு கோணங்களை வரைந்து பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய கைகள், பிறரின் கைகள். ஒரு பொருளைப் பற்றியிருக்கும் கைவிரல்கள் ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு விதமாக தோற்றம் கொள்ளும். அதனை வரைய வரையத் தான் பக்குவப்படும். அதனை நான் ஏற்கனவே அவளிடம் சொல்லியிருந்தேன்.

“ஏழு பாதைகள் கதை எழுதிக்கிட்டு இருக்கிறல்ல நெல்லு?”

“ஆமாப்பா”

“எனக்கு எப்பக் காட்டுவ? இப்ப என்ன பாதை எழுதிக்கிட்டு இருக்க?”

“அது சர்ப்ரைஸ். கடசியிலத்தான் சொல்லுவேன்”

டிராயிங் நோட்டின் ஒரு பக்கத்தைத் திருப்பினேன். அப்படியே ஒரு கணம் ஸ்தம்பித்துவிட்டேன். ஒரு ரிக்-ஷாவின் ஹாண்டில் பேரை பிடித்திருக்கும் இரண்டு கைகள் வரையப்பட்டிருந்தன. அதிலுள்ள வலது கை, மணிக்கட்டோடு துண்டிக்கப்பட்டு மொன்னையாக இருந்தது.

குப்பென்று வியர்த்தது எனக்கு.

“இதை எப்படிம்மா வரைஞ்ச? ஏன் வரைஞ்ச?”

“இங்க ஒரு ரிக்-ஷா ஓட்டுற தாத்தாவுக்கு அந்தக் கை அப்படித்தான்பா இருந்துச்சி. அதுல ஒரு துணி சுத்தி வச்சிருக்காரு. இங்க மார்கெட்ல சின்ன வயசுல அவரு கையை யாரோ வெட்டிட்டாங்களாம்பா. மாமா சொன்னாங்க. பாவம்லப்பா?”

நான் அமைதியாக, அந்த ஓவியத்தையே பார்த்திருந்தேன். பென்சிலால் வரையப்பட்ட ஒரு மனிதனின் துண்டிக்கப்பட்ட வாழ்வின் ஒரு பகுதி.

“நீ எங்க வச்சி அவரைப் பார்த்த நெல்லு?”

“மார்க்கெட்லப்பா.. காய்கறி ஏத்திக்கிட்டு வருவாரு ரிக்-ஷால. பாவம்லபா?”

“ஆமாம்மா. ரொம்பப் பாவம்”

நோட்டை வாங்கிக் கொண்டு உள்ளே ஓடினாள். வேறு ஒரு நோட்டை கொண்டு வந்தாள். கதை நோட்டு. அவள் எழுதிக் கொண்டிருக்கும் ஏழு பாதைகள் கதை அடங்கிய நோட்டு.

“ஃபர்ஸ்ட் சாப்டர் மட்டும் தான் பார்க்கணும். முழுசா முடிஞ்சப்புறம் தான் மற்ற எல்லாமும் படிக்கணும். அதுவரை சர்ப்ரைஸ். இப்ப ஓபன் பண்ணி பார்க்கக் கூடாது ஓகேவா?”

“ஓகே”

“ப்ராமிஸ்?”

“சரிம்மா ப்ராமிஸ்”

வாங்கிக் கொண்டே கேட்டேன்.

“சொல்லு ஃபர்ஸ்ட் சாப்டர் பேரு என்ன? அது என்ன பாதை?”

கையைக் குறுக்காக பெருக்கல் குறி போட்டுக் கட்டிக்கொண்டே என்னைப் பார்த்து சிரித்தபடி சொன்னாள்.

“டிராயிங் பாதை”

****

  • கவிதைக்காரன் இளங்கோ – elangomib@gmail.com

       சென்னை.

5. தீர்ப்பு

0

முன்பொரு காலத்தில் ஒரு மந்திரவாதி – 05

கதை : பாபாகா ; ஓவியம் : கணபதி சுப்ரமணியம்

Description: s05_01.jpg

முன்பொரு காலத்தில் ஒரு மந்திரவாதி இரண்டு வேதாளங்களுக்கு நடுவில் பஞ்சாயத்து செய்ய அழைக்கப்பட்டிருந்தான்.

போகும் போது குறுக்கே பூனை ஓடியது.

கருடன் அவரோஹனத்தில் கத்தினான்.

சூரியனும் பிறையும் சேர்ந்து உச்சிக்கு ஏறுவதைப் போன்ற ஒரு நிமித்தம்.

Description: s5_02.jpg

பலா மரம் பாம்படங்கள் பல அணிந்த சூனியக்காரியைப் போல் வெளிப்பட்டது.

கால் கட்டைவிரல் இடிபட்டு நகம் மடையைப் போல் குருதி திறந்தது.

Description: s5_03.jpg

இதையெல்லாம் மீறி புறப்பட்டவனை அவன் மகன் மறித்து ‘அப்பா எந்த வேதாளத்துக்கு சாதகமா தீர்ப்பு சொல்லப் போற’ என்று அதட்டினான்.

‘டேய் வேதாளம்லாம் உண்ம கிடையாதுனு எத்தன தரவ சொல்லிருக்கேன்?’ என்று கண்டித்தான் மந்திரவாதி.

‘தனக்கு சாதகமா தீர்ப்பு வரது தான் சரினு நேத்திக்கு அதுங்க என் கிட்ட தனித்தனியா வந்து பொலம்புதுங்க, அதான் நைநா சொன்னேன்’ என்றான் மகன்.

இரண்டு வகையான வேதாளங்கள் உள்ளன ஒன்று உதை-வேதாளம், இன்னொன்று கதை-வேதாளம்.

Description: s5_04.jpg

தனக்கு முந்தைய வேதாளத்தை உதைத்து துரத்தி மரத்தில் குடியேறுவது உதை-வேதாளம்.

மரத்தின் கதையை ஆதியிலேந்து அறிந்து வைத்துக் கொண்டு இது என் மரம் தான் என்று உரிமை கொண்டாடி முந்தைய வேதாளத்தை துரத்துவது இரண்டாம் வகை கதை-வேதாளம்.

ஒரு முருங்கை மரம், ஒரு உதை-வேதாளம் ஒரு கதை-வேதாளம் இது தான் பஞ்சாயத்து.

*******

கருத்துகளுக்கு :

கதை : பாபாகா – albenizme@gmail.com
ஓவியம் : கணபதி சுப்ரமணியம் – gpathy@yahoo.com