Home Blog Page 81

வில்லுவண்டி

2

தனா

ஆவடையம்மாள் வீட்டின் உட்புற திண்ணையில் படுத்தபடி வெட்டவெளி நடுமுற்றத்தின் ஓரத்தில் கிடந்த பெரிய கருங்கல்லில் அமர்ந்து அலுமினிய பாத்திரங்களை உமி வைத்து தேய்த்துக் கழுவிக்கொண்டிருந்த செந்தட்டிக்கிழவனை “இந்தா” என்று அனத்திக் கூப்பிட்டாள். கிழவன் திரும்பி ஆவடையம்மாளைப் பார்த்துவிட்டு அலுமினிய வாளியில் இருக்கும் தண்ணீரை வாரிக் கைகளை அலசிவிட்டு எழுந்து வந்தார். ஆவடையம்மாளின் தோளில் ஒருகையும் வற்றித்தொங்கிய புஜத்தில் ஒரு கையும் கொடுத்துத் தூக்கி நிறுத்தினார். கிழவி, சரிந்து தொங்கிய சேலையை ஒரு கையால் உடலோடு அழுத்திப்பிடித்துக்கொண்டு மெல்ல முற்றத்திற்கு கிழவனுடன் இறங்கி வந்தாள்.

தரை சுட்டதால் கிழவன் அவளை சுவற்றோடு ஒட்டி விழுந்த நிழலின் வழியாக மெல்ல கூட்டிச்சென்றார். ஆவடையம்மாள் இரண்டு அடி எடுத்து வைத்தவள் அங்கேயே குத்தவைத்து அமர்ந்தாள். கிழவன் சுதாரிப்பதற்குள் ஆவடையம்மாளின் சேலையை நனைத்து முற்றத்தின் வாய்க்காலை நோக்கி மூத்திரம் ஓடியது. செந்தட்டி, கிழவியின் தோளைத் தாங்கியபடி அவளை பிடித்துக்கொண்டு நின்றார். அவள் அவர் தொடையில் கையை வைத்து அழுத்த கிழவன் அவளைத் தூக்கி சுவற்றின் ஓரத்தில் நிற்க வைத்துவிட்டு அவள் சேலையை உருவினார். அவள் சுவற்றில் சாய்ந்து கொண்டு அம்மணமாய் நின்றாள்.

செந்தட்டி, சேலையை ஒரு அலுமினிய வாளியில் கொண்டு போய்ப் போட்டுவிட்டு மண் தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து அந்த வாளியில் ஊற்றினார். கலைந்த பரட்டைத்தலையுடன் வெளுத்து வற்றித்தொங்கிய உடலுடன் மெல்ல நடுங்கியபடி கிழவி சுவற்றோடு ஒட்டி நின்றிருந்தாள். கிழவன் ஒரு சொம்பு நீரை கிழவியின் இடுப்புக்குக் கீழே விசிறி அடித்தார். நீர் இடுப்பிலிருந்து கால் வழியே ஓடியது. கொடியில் கிடந்த ஒரு சேலையை எடுத்து வந்து கிழவியின் உடலில் சுற்றி மெல்ல அவளை அழைத்துச்சென்று திண்ணையில் படுக்க வைத்தார் செந்தட்டி.

முற்றத்து வெயிலில் உமி தேய்த்த பாத்திரங்கள் காய்ந்து கொண்டிருந்தன. அவர் மீண்டும் கருங்கல்லில் சென்று அமர்ந்து பாத்திரங்களை தண்ணீர் விட்டுக் கழுவத்தொடங்கினார். கிழவி அவரையே பார்த்துக்கொண்டு படுத்திருந்தாள். செந்தட்டி, வியர்வை வழியும் உடலோடு எழுந்து சென்று உரச்சாக்கை விரித்து அதில் காய வைத்திருந்த சுண்டைக்காய்களை ஒரு கைப்பிடி அள்ளிக்கொண்டு முற்றத்தை தாண்டி வலப்பக்கம் உள்ள சிறு அறைக்குள் சென்றார்.

ஆவடையம்மாளின் கண்களுக்கு அந்த அறையின் இருட்டில் கிழவன் புலப்படவில்லை. கண்களை மூடிக்கொண்டாள். வாசலில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்ற சத்தம் கேட்டது. கிழவி கண்களை மெல்ல திறந்து பார்த்தாள். எரசக்கநாயக்கனூரில் குடியிருக்கும் மூத்த மகன் பெரியசாமி மோட்டார் சைக்கிளிலேயே உட்கார்ந்து ஹார்ன் அடித்தான். பின்னால் அவன் மனைவி செந்தாமரை அமர்ந்திருந்தாள். அவளும் வண்டியை விட்டு இறங்கவில்லை. சமயலைறையில் இருந்து செந்தட்டிக்கிழவன் ஓடி வெளியே வந்தார். பெரியசாமி பாக்கெட்டிலிருந்து அம்பது ரூபாயை எடுத்து நீட்டினான். செந்தட்டி வாங்கி இடுப்பு வேட்டிக்குள் வைத்துக்கொண்டார்.

“எலே பெரியசாமி” என்று ஆவடையம்மாள் அனத்தினாள்.

பெரியசாமி “ஒரு கல்யாணத்துக்கு சின்னமனூரு வரைக்கும் போறோம். வரும் போது வர்றேன்” என்று வெளியே இருந்தவாறு கத்தினான்.

“ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்குறா ஒங்காத்தா” என்றார் கிழவன்.

“போனவாரந்தான போய்ட்டு வந்தீங்க. இப்ப திரும்ப எதுக்கு? வேற வேலக்கழுத இல்லாம. இதே சோலியாவா அலையிறது?”

மோட்டார் சைக்கிள் கிளம்பிச்செல்ல கிழவன் மறுபடியும் இருட்டறைக்குள் சென்றார். ஆவடையம்மாள் பரட்டை தலையை வறட்டு வறட்டென சொறிந்து கொண்டாள். சமயலறையில் சுண்டைக்காய் பொரியும் வாசம் எழுந்தது. கிழவன் ஒரு கிண்ணத்தில் கஞ்சியையும் சுண்டைக்காய்களையும் எடுத்து வந்து திண்ணையில் அமர்ந்தார். கிழவியை மெல்லத் தூக்கி சுவற்றில் சாய்த்து உட்கார வைத்து விட்டு கிண்ணத்தை அவளிடம் நீட்டினார். சின்னத்தட்டில் இருக்கும் சுண்டைக்காய்களை அவள் அருகில் நகர்த்தி விட்டு முற்றத்திற்கு சென்றார். அலுமினிய வாளியில் ஊறிக்கிடந்த சேலையை எடுத்துப் பிழிந்து கொடியில் விரித்துக் காயப்போட்டார்.

கிழவி அவரைப் பார்த்தவாறே கஞ்சியை அள்ளி வாயில் ஒழுக மெதுவாகக் குடித்தாள். செந்தட்டிக்கிழவன் வேட்டியை உருவி அலுமினிய வாளியில் போட்டு விட்டு தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து தலை வழியாக ஊற்றிக்கொண்டார். கைகளாலேயே உடலை அழுத்தித் தேய்த்தார். கிழவி பார்த்துக்கொண்டே இருந்தாள். அவர் துண்டால் உடலைத் துடைத்து விட்டு அதையே இடுப்பில் கட்டிக்கொண்டு கோமணத்தை உருவிப் பிழிந்து கொடியில் போட்டு விட்டு வந்து திண்ணையில் அமர்ந்தார்.

“ஆஸ்பத்திரிக்கு” என்றாள் கிழவி.

“இந்த வெயில்லையா?” என்றவாறு திண்ணை மேலே இருந்த ஜன்னல் திட்டில் இருந்த தேங்காய் எண்ணெய் பாட்டிலை எடுத்துக் கைகளில் கொஞ்சம் ஊற்றிக்கொண்டு திரும்ப திட்டில் வைத்தார். கிழவி கஞ்சியை ஓரமாக வைத்தாள். செந்தட்டி எண்ணெய்யை இரண்டு கைகளிலும் கால்களிலும் தேய்த்துக்கொண்டார். “மிச்சம் வைக்காம கொஞ்சம் கொஞ்சமா குடிச்சிரு” என்றார். கிழவி ஒன்றும் சொல்லாமல் அவரைப் பார்த்தாள். கிழவனுக்கு வாடை அடித்தது.

“வர்றதுக்கு முன்னாடி சொல்ல வேண்டாமா. ஒரு நாளைக்கு எம்புட்டு சேலைய மாத்துறது” என்று கிழவியை அதட்டினார். ஆவடையம்மாள் வயிற்றில் கையை வத்து அழுத்தி உதட்டை வலியில் சுருங்கிய முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டாள்.

கிழவன் நைந்த பாயில் ஒட்டிக்கிடந்த பீத்துணுக்குகளை தட்டிவிட்டு, முற்றத்தில் காயப்போட்டு விட்டு வாசலுக்கு வந்து உட்கார்ந்தார். தெரு வெயிலில் வெறிச்சோடிக்கிடந்தது. நாலு வீடு தள்ளி உள்ள மஞ்சக்காரை வீட்டு வாசலில் சரசுக்கிழவி அமர்ந்து அவள் மருமகளுக்குப் பேன் பார்த்துக்கொண்டிருந்தாள். பின்புறம் இருந்து “ஆஸ்பத்திரிக்கு” என்று ஆவடையம்மாளின் குரல் கேட்டது.. செந்தட்டி திரும்பிப் பார்க்காமல் “வெயிலு எறங்கட்டும்” என்றார்.

மல்வீட்டின் வெளியே சுண்ணாம்புக்கரை உதிர்ந்த சுவற்றில் வில்லு வண்டியின் பெரிய சக்கரம் ஒன்று சாய்ந்து கிடந்தது. இன்னொரு சக்கரம் உடைந்து மரக்கட்டை குவியலாக கீழே கிடந்தது. அதில் குப்பை மேனிச் செடிகள் முளைத்துக் கிடந்தன.

செந்தட்டி எழுந்து வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு சாய்ந்த சக்கரத்தை நிமிர்த்தினார். பல வருடங்களாக சாய்த்துவைக்கப்பட்ட சக்கரம் புழுதி சரிய நிமிர்ந்து நின்றது. அதை உந்தித்தள்ளி உருட்டி ஓட வைத்தார். சக்கரம் பல்லாண்டுகளுக்குப் பிறகு தெருவில் இறங்கி ஓடியது. மேடு பள்ளங்களில் தடுமாறியது. ஒழுங்கில்லாமல் இடவலமாக ஆடியது. வியர்வை வழிய சக்கரத்தைத் தட்டி தட்டி ஓட வைத்து மையச்சாலைக்கு வந்தார். எதிரே அரச மரத்தடியில் சீட்டு விளையாடும் கூட்டம் அவரை நிமிர்ந்து பார்த்தது. கிழவன் சக்கரத்தைப் பிடித்து நின்றபடி மூச்சு வாங்கிக்கொண்டார். பின் ஊரின் தெற்குப் பக்கமாக குயவர்கள் வாழும் பகுதிக்கு சக்கரத்தை ஓட்டிச்சென்றார்.

தேனி நகரத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் கானாவிளக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு எதிரிலேயே பஸ் ஸ்டாண்ட் இருந்தது. செந்தட்டிக்கிழவன் கம்பம் போகும் பஸ்ஸில் ஆவடையம்மாள் கிழவியை அவள் உடல் தாங்கி மெல்ல ஏற்றினார். தன் வலக்கையால் அவளது வலக்கையைப் பற்றியபடி இடக்கையால் கிழவியின் இடுப்பை அணைத்தவாறு படிகளில் ஏற்றினார். பஸ்ஸின் உள்ளிருந்து ஒருவர் படிகளில் இறங்கி வந்து கிழவனுக்கு உதவியாய் அவள் தோளைப்பற்றிக்கொள்ள இருவரும் கிழவியை பஸ்ஸிற்குள் கொண்டு வந்தனர். பஸ்ஸில் கூட்டம் இல்லை. பல இருக்கைகள் காலியாய் இருந்தன. முகூர்த்த நாளென்றால் நாள் முழுவதும் பஸ் கூட்டத்தால் தள்ளாடும்.

ஜன்னலோரத்தில் கிழவியை அமர வைத்துவிட்டு செந்தட்டி உட்கார்ந்துகொண்டார். அவருக்கு மூச்சிரைத்தது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு வெளிறிப்போன ஜிப்பாவில் கைவிட்டு காய்ந்த வாழை மட்டையில் மடித்து வைக்கப்பட்ட மூக்குப்பொடியை எடுத்தார். மட்டியை பக்குவமாய்ப் பிரிக்கும் பொழுது கைவிரல்கள் நடுங்கின. செந்தட்டி ஒரு சிமிட்டு பொடி எடுத்து மூக்கில் வைத்து ஆழ உறிஞ்சிக்கொண்டார். பஸ் கிளம்பும் பொழுது ஜன்னலின் வெளியே கிழவி கோழையாக எச்சிலை பலவீனமாக துப்பினாள். அது பஸ் கிளம்பிய ஆட்டத்தில் ஜன்னல் கம்பிகளிலேயே விழுந்து வழிந்தது.

குயவனிடம் சக்கரத்தை விற்ற பணம் நூற்றி ஐம்பது ரூபாயை ஒரு பழைய பாலீதின் பையில் போட்டு மடக்கி மஞ்சள் பையில் வைத்திருந்தார் கிழவன். அதை எடுத்துப் பிரித்து சின்னமனூருக்கு இரண்டு டிக்கெட் வாங்கிக்கொண்டார். டிக்கெட்டுடன் சில்லறையை மீண்டும் பாலீதின் பையில் போட்டு மஞ்சள் பையில் வைத்துக்கொண்டார்.

“சரியாயிரும்னாரா டாக்டரு?” என்றாள் கிழவி. செந்தட்டி ஆமாமென்று தலையாட்டினார்.

“எம்புட்டு காசு வாங்கினாரு?

“தர்மாஸ்பத்திரில எதுக்கு காசு. அதெல்லாம் ஒண்ணும் கேக்கல”

தோல் சுருங்கிப்போன கைகளால் முன்னிருக்கை கம்பியை பிடித்துக்கொண்டார். அவரது இடது கை மணிக்கட்டில் தொங்கிய மஞ்சள் பை பஸ் குலுங்கும் ஆட்டத்திற்கேற்ப முன்னும் பின்னும் இடது வலதுமாக ஆடிக்கொண்டே உடன் வந்தது. கிழவி தேனிக்குள் பஸ் நுழையும் பொழுது கிழவன் மேல் சரிந்து அவர் மடியில் படுத்து விட்டாள். செந்தட்டி அவளின் முந்தானையை இழுத்து அவள் உடம்பை மூடினார். பஸ் தேனி நகர நெரிசலால் மெதுவாக குலுங்கி குலுங்கி ஊர்ந்தது. ஒரு பெரிய பள்ளத்தில் பஸ் இறங்கி நகர்ந்த ஆட்டத்தில் செந்தட்டிக்கு கிழவியின் விக்கல் சத்தம் கேட்டது. செந்தட்டி குனிந்து பார்த்தார். கிழவி விக்கவில்லை சிரித்திருக்கிறாள். அவள் வாய் புன்னகைத்தபடி இருந்தது.

கிழவி “வில்லு வண்டி” என்றாள்.

கிழவருக்கு அவள் என்ன சொல்கிறாள் என்று புரியவில்லை. ”என்னாது?” என்றார்.

கிழவியிடமிருந்து எந்த பதிலுமில்லை. அவள் முகம் புன்னகைத்தவாறே இருந்தது. என்ன நினைத்து சிரிக்கிறாள் என்று கிழவருக்கு தெரியவில்லை. பஸ் குலுங்க கிழவி மறுபடியும் வில்லுவண்டி என்று அனத்தினாள்.

2

அங்கனத்தேவன் பட்டியில் வில்லு வண்டி வைத்திருந்தது செந்தட்டி மட்டும் தான். கோயம்புத்தூரில் இருந்து ஒரு ஆள் உயரத்திற்கு ஜாதி மாடுகளை வாங்கி வந்து அதில் கட்டியிருப்பார். இரவங்கலார் மலையில் இருந்து பிரம்புகளை வெட்டி வந்து வண்டிக்கு கூடாரம் கட்டினார். உட்காரவும் சாயவும் இலவம் பஞ்சில் மெத்தை விரிப்பு. வெள்ளிப்பூண் போட்ட சாட்டை.

“செந்தட்டி ரொம்ப பவுசான ஆளுயா” என்று சொல்லிக் கேட்பதிலே சந்தோசம் அவருக்கு.

“அவன் பேருல எட்டு ஏக்கருக்கு தென்ன நிக்கிது. வடக்க பன்னென்டு ஏக்கரா தென்ன ஒத்திக்கு எடுத்திருக்கியான். மாசத்துக்கு ரெண்டாயிரம் சொளையா நிக்கிது தேங்கால. இந்தா பாரு வெள்ளச்சட்டய வெளுக்கப்போட்டு வாங்கி உடுத்திருக்கியான். முக்கா முக்கா பவுனுக்கு ரெண்டு மோதிரம். ஒன்னரப்பவுனுக்கு சங்கிலி. பத்தாக்கொறைக்கு கல்லு வச்ச மோதிரம் ரெண்டு. தேனியோ பெரியகொளமோ போகவர வில்லுவண்டி. பொண்டாட்டி செத்து 2 வருசமாச்சு. ஆனா படுத்து எந்திரிக்க பத்து வீடு. வக்காளி மைனருனா அவென் மைனரு” என்பார் கொத்துக்கார நாட்ராயன்.

செந்தட்டியின் பங்காளி தங்கையாவுக்கு வில்லு வண்டியில் சென்று நிச்சயம் முடித்துவர வேண்டும் என்ற ஆசையிருந்தது. செந்தட்டி தங்கையாவை வில்லுவண்டியில் ஏற்றிக்கொண்டு கோவிலாபுரத்திற்கு நடையோட்டதில் முன்னால் செல்ல பொம்பளையாட்களும் ஆம்பளையாட்களும் நிச்சயத்திற்கு தேவையான பொருட்களை சுமந்து கொண்டு பின்னால் நடந்தனர்.

கருங்கட்டங்குளம் கம்மா வழியாக அவர்கள் கோவிலாபுரம் சென்று ஆவடையம்மாள் வீட்டு முன்னால் இறங்கினர். ஏற்கனவே பேசி முடித்த நிச்சயம் தான். சடங்கிற்காக பூவும் பொட்டும் வைத்துத் தாம்பூலம் மாற்றி வர ஆம்பளைகள் வீட்டுத் திண்ணையிலும் பொம்பளையாட்கள் வீட்டிற்கு உள்ளும் உட்கார்ந்து காப்பித்தண்ணி குடித்தனர். செந்தட்டி வாசக் கதவோரமாக திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்தார். உள்ளே ஆவடையம்மாளை உக்கார வைத்து அவளுக்கு சந்தனத்தை பூசி விட்டு கொண்டுவந்திருந்த பூக்களை சவுரி முடி சடையில் சூடினர்.

செந்தட்டி தலையைத் திருப்பி ஆவடையம்மாளைப் பார்த்தார்.

“இம்புட்டு வெள்ளையா எந்தப் பொம்பளையும் நம்மூரு பக்கம் இல்லடா தங்கையா” என்றார்.

தங்கையா பெருமிதம் கொண்டான்.

ஆவடையம்மாள் தலை நிமிர்ந்து செந்தட்டியைப் பார்த்தாள்.

“அவுகாத்தா தேங்கா நாறக்கொண்டி தேச்சு தேச்சு எடுத்த வெள்ளப்பா” என்றார் கொத்துக்கார நாட்ராயன்.

சிவப்பு கண்டாங்கி சேலை கட்டி தலையெல்லாம் பூ வைத்து ஒற்றை சங்கிலி நெஞ்சில் தொங்க கைகளுக்கும் கால்களுக்கும் மருதாணியிட்டு அமர்ந்திருந்த ஆவடையம்மாளுக்கு அப்பொழுது 15 வயது. ஆனால் உடல் இருபது வயதிற்குரிய மிதப்பு. தோளில் ஒரு கிளியைப் பச்சை குத்தியிருந்தாள்.

அவளையே பார்த்துக்கொண்டிருந்த செந்தட்டி வெடுக்கென்று எழுந்து வீட்டிற்குள் சென்றார்.

“ஆவடையம்மாள நான் கட்டிக்கிறேன். தங்கையாவுக்கு வேற நல்ல பொண்ணா பாத்துகிறலாம் என்னாங்கிறிய?” என்றார்.

வெளியில் இருந்த ஆண்கள் ஒரு கணம் திகைத்துப்போய் பின் சுதாரித்துக்கொண்டு உள்ளே வந்தனர். தங்கையாவுக்கு இன்னும் செந்தட்டி சொன்னது உறைக்கவில்லை. மலங்க மலங்க விழித்தபடி நின்றான்.

”இதென்ன பூவும் பொட்டும் வைக்க வந்த எடத்தில சண்டியர்தனம்.? ஒரு மொறையில்ல. ? ஆம்பளையாளுக இப்டி வேடிக்க பாத்துட்டு நிக்கிறீக?”

ஆவடையம்மாளின் ஆத்தாதான் முதலில் பேசினாள்.

எல்லோருக்கும் செந்தட்டியின் குணம் தெரியும். மேலும் காசு பணம் உள்ள பவுசான ஆள்.

கொத்துக்காரர் மட்டும் கொஞ்சம் கோவத்தை குரலில் ஏற்றிப் பேசினார்.

“இந்தாருப்பா. இதெல்லாம் நல்லால்ல. பேசி முடிக்க வந்தது உன் பங்காளிக்கு. பெரிய மனுசன்னு உன்னய கூட கூட்டி வந்தா இதென்ன மப்பெடுத்த வேல.. நீ மொதல்ல வெளிய வா. இங்க நிக்காத” என்றார்.

செந்தட்டி ஆவடையம்மாளைப் பார்த்தார். அவளும் அவரைப் பார்த்தபடிதான் உட்கார்ந்திருந்தாள்.

“என்னய கட்டிக்கிறியா? என்றார்.

“ஏண்டா வெண்ண மயிராண்டி. வெளிய வாடான்னு சொல்றேன். பொம்பளபிள்ளட்ட போயி பேசிக்கிருக்க” என்று சட்டையைப் பிடித்து இழுத்து செந்தட்டியை வெளியே தள்ளினார் கொத்துக்கார நாட்ராயன்.

“நீயெதுக்கு சின்னயா இம்புட்டு கோவப்பட்ற. இந்த பிள்ளைய பாத்ததும் இவள கட்டிக்கிறனும்னு தோணிப்போச்சு. இந்தா எல்லா பெரியவகளும் இருக்கீங்க. உங்களுக்கு சரின்னா குடுங்க. இல்லன்னா விடுங்க.”

ஆவடையம்மாளின் அப்பா வெளியே வந்து செந்தட்டியின் நெஞ்சில் கைவைத்து தள்ளி தோளில் ஓங்கி அறைந்தார்.

“வக்காளோலி உன் ரவுசு புண்டையெல்லாம் ஒங்கூர்ல வச்சிக்க. உன் வண்டிய எடுத்துட்டு கெளம்பிரு. ஊர்காரங்யெல்லாஞ் சேந்து உங்கையக்கால ஒடிச்சு போடுவும் பாத்துக்க” என்றார்.

செந்தட்டி அவரைத் தாண்டி உள்ளே எட்டிப் பார்த்தார். ஆவடையம்மாள் உள்ளிருந்து அவரைப் பார்ப்பது தெரிந்தது. வில்லுவண்டியில் சொருகி வைக்கப்பட்டிருந்த நீள அருவாளை உருவிக்கொண்டு செந்தட்டி கத்தினார்.

“ஆவடையம்மா. இவிங்யளுக்கு சொல்லி புரியவைக்க முடியாது போல்ருக்கு. ஒனக்கு புடிச்சிருந்தா எந்திரிச்சு வா. இந்தா நம்ம வண்டி ஒனக்காகத்தேன் நின்னிகிருக்கு. எவன் தடுக்குறியான்னு நானும் பாக்குறேன்” என்றார்.

எல்லோரும் செந்தட்டியைப் பார்த்துக்கொண்டிருக்க ஆவடையம்மாள் அவர்களை பின்னால் இருந்து விலக்கிக்கொண்டு வந்து செந்தட்டியின் முகத்தை பார்க்காமல் வண்டியில் ஏறிக்கொண்டாள்.

எவருக்கும் எதுவும் மனதில் பதியவில்லை. திகைத்துப்போய் நின்றிருந்தனர்.

ஆவடையம்மாளின் அம்மா மட்டும் வண்டிக்கு அருகில் வந்து அவளிடம் நின்றாள்.

கண்ணீர் பொங்க பல்லைக்கடித்தபடி “எறங்கி வாடி தேவ்டியா முண்ட” என்றாள். குரல் எழவே இல்லை.

“நான் நல்லா சந்தோசமா இருப்பேன்” என்றாள் ஆவடையம்மாள்.

எல்லோரும் பார்க்க வில்லுவண்டி மேடு பள்ளங்களில் குலுங்கி குலுங்கி கோவிலாபுரத்தை விட்டுச் சென்றது.

ஊர் போய்ச் சேரும்வரை செந்தட்டி அவளிடம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆவடையம்மாளும் குனிந்த தலை நிமிரவில்லை. வீட்டில் நுழையும் போது செந்தட்டியின் அப்பா கை ஓங்கி அடிக்க வந்தார். ஆத்தா ஆவடையம்மாளை வீட்டிற்குள் அழைத்து சென்றாள்.

இரவு சாவடியில் வைத்து ஊர்க்காரர்கள் பேசினர். தங்கையா செந்தட்டியை வெட்டிக் கொல்வேன் எனத் திமிறினான்.

செந்தட்டி அமைதியாகக் கால் ஆட்டியபடி “சரி. இப்ப என்ன செய்யனும்ங்றீக? நான் என்ன அந்த புள்ள கையபுடிச்சா இழுத்துட்டு வந்தேன். அத்தன பேரு பாக்க அந்த பிள்ளயாத்தான எங்கூட வாழனும்னு எந்திருச்சு வந்திச்சு. நீங்க இப்ப எதுக்கு சாவடி கூட்டி பொழுத கடத்துறீகன்னு எனக்கு புரியல” என்றார்.

கல்யாணம் முடிந்த இரவு செந்தட்டி ஆவடையம்மாளின் கன்னத்தை நிமிர்த்திக் கேட்டார்.

“விறு விறுன்னு நீ பாட்டுக்கு எங்கூட கெளம்பி வந்தியே. அப்டி அன்னைக்கு என்னத்தடி கண்ட?

ஆவடையம்மாள் தலை நிமிர்ந்தாலும் கீழ் நோக்கி பார்த்தவாறு சொன்னாள்.

“வில்லுவண்டி” என்றாள்.

“எங்க கிழவி கத சொல்லும். விக்கிரமாதித்தியே குருதையில வந்து ராணிய தூக்கிட்டு போனாராம்.”

3

பஸ் முத்துதேவன் பட்டியைக் கடந்து வீரபாண்டி ஆற்றுப்பாலத்தில் ஏறியது. செந்தட்டிக்கிழவன் தன் காலின் அடியில் ஈரம் படர்வதை உணர்ந்தார். மெல்ல குனிந்து பார்த்தார். கிழவியின் சேலை முழுவதும் நனைந்திருந்தது. மூத்திரம் இருக்கைக்கு கீழே முழுதும் படர்ந்திருந்தது. வீரபாண்டி நிறுத்தத்தில் வந்து பேருந்து நின்றது. செந்தட்டி பஸ்ஸின் முன்னும் பின்னும் பார்த்தார்.

“இந்தா எந்திரி. எறங்கணும் எந்திரிங்கிறன்ல” என்றபடி செந்தட்டி ஆவடையம்மாளை அரட்டி தோளைப்பற்றி தூக்கி மெல்ல படிகளில் இறக்கினார். “சின்னமனூருக்குல டிக்கெட் எடுத்திங்க” என்றார் கண்டக்டர். ” கௌமாரி ஆத்தாள கும்புட்டுக்கலாம்னு” என்று சொன்னபடி கிழவியை கீழே இறக்கிக் கொண்டு வந்தார்.

பஸ் அவர்களைக் கடந்து சென்றது. ஆவடையம்மாள் நிற்க முடியாமல் அங்கேயே குத்த வைத்து உட்கார்ந்தாள். வாயிலிருந்து எச்சில் கோழையாக வழிந்தது. எதிரே கௌமாரியம்மன் கோவிலின் சிறிய கோபுரம் தெரிந்தது. வீரபாண்டி கோவிலுக்குள் இருக்கும் மண்டபத்தில் நடந்த கல்யாணத்தின் போது ஊரில் இருந்து யாரும் வரவில்லை. தேனி மற்றும் பெரிய குளத்தில் இருந்து தேங்காய் வியாபாரிகள் மட்டும் வந்திருந்தனர். ஆவடையம்மாளின் வீட்டிலிருந்தும் யாரும் வரவில்லை. ஆனால் ஆவடையம்மாள் சந்தோசமாகவே இருந்தாள். கல்யாணத்திற்கு மதுரைக்கு சென்று மூன்று சேலைகள் எடுத்துக்கொண்டாள். ஆண்பிள்ளை பிறந்தால் கௌமாரிக்கு தீச்சட்டி எடுப்பதாக அப்பொழுதே வேண்டிக்கொண்டாள். 

அதன் பின் ஊரில் ஒவ்வொரு விசேஷத்திற்கும் முன்னால் போய் நின்றாள். எல்லா உறவு முறைகளையும் தெரிந்து வைத்துக்கொண்டு கூப்பிட்டு கூப்பிட்டு பேசினாள். 

“சக்கரையா பேசுறா கோய்லாபொரத்துக்காரி” என்றாள் தெக்கு வீட்டு சுப்புதாயி.

சில மாதங்களுக்கு அங்கனத்தம் பட்டியின் அத்தனை வீடுகளுக்குள்ளும் சென்று உட்கார்ந்து பெண்களுக்குப் பேன் பார்ப்பவளாக மாறினாள் ஆவடையம்மாள். 

பெரியசாமி பிறந்ததும் கௌமாரிக்கு பொங்கல் வைத்து தீச்சட்டி சுமந்தாள். 

செந்தட்டி அவளைப் பற்றி தூக்கி சாலையில் இருந்து இறங்கி வீரபாண்டி ஆற்றுக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் இறக்கினார். கிழவி எதுவும் கேட்டுக்கொள்ளாமல் அவரைப் பற்றியபடி கால்களை இறக்கத்தில் நகர்த்தி நகர்த்தி இறங்கினாள்.

இடுக்கி அணையில் இருந்து குமுளி மலை இறங்கி லோயர் கேம்பில் தடுக்கப்பட்டு முறைவைத்து மடை திறக்க கம்பம் பள்ளத்தாக்கை செழிக்க வைத்து ஓடும் சுரபி வீரபாண்டியில் அகல விரிந்து அரண்மனைப்புதூரில் வைகையுடன் கலக்கும்.

ஆற்றுக்கு அருகில் கிடந்த ஒரு பெரிய கல்லில் கிழவியை உட்கார வைத்தார் செந்தட்டி. பின் மஞ்சள் பையை அவள் அருகில் போட்டு விட்டு ஆற்றை நோக்கிச் சென்றார். லோயர் கேம்ப்பில் தண்ணீர் திறந்துவிட்டபடியால் ஆறு வேகமெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. ஒரு ஓரமாக நின்று தோளில் கிடந்த துண்டை ஆற்றுக்குள் முக்கி எடுத்து வந்து கிழவியின் சேலையை தொடை வரை இழுத்து விட்டு கால்களில் துண்டைப் பிழிந்து அப்படியே துடைத்து விட்டார். சேலையில் மூத்திர வாடை அடித்தது. துண்டால் சேலையை மெதுவாக துடைத்துப்பார்த்துவிட்டு பின் எழுந்து சென்று ஆற்றில் துண்டை நனைத்து பிழிந்தார். ஆவடையம்மாள் அவரையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். செந்தட்டி ஆற்றில் கால்களை கழுவிக்கொண்டு வந்து ஆவடையம்மாள் அருகில் உட்கார்ந்தார்.

கிழவியின் வாயிலிருந்து வழிந்த எச்சிலை துடைத்துவிட்டபடி “டீ குடிக்கிறியா” என்றார்.

கிழவி வேண்டாம் என்று தலையாட்டினாள்.

“பன்னு வாங்கி டீல முக்கித்தர்றேன்? என்றார். கிழவி வேண்டாம் என்று தலையாட்டினாள். செந்தட்டி நனைந்த துண்டை கல்லில் விரித்து காயப் போட்டுவிட்டு தலை குனிந்தபடி அமர்ந்தார். கிழவி அவர் மடி தேடி சாய்ந்து வந்தாள். தொடையில் ஊன்றிய கையை எடுத்துக்கொண்டு கிழவி தலையை மடியில் வைத்துக்கொண்டார்.

“நீங்க போய் டீய குடிக்கங்க” என்று கிழவி குழறினாள். செந்தட்டி எதுவும் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தார். கிழவி இருமுறை இருமினாள். வாயில் வழிந்த கோழை அவர் மடியில் பரவியது.

செந்தட்டி மெல்ல கிழவியை தூக்கி நிமிர்த்தினார். கிழவி தலை குனிந்தபடி நிமிர்ந்து அமர்ந்தாள். உடலில் லேசாக ஆட்டம் இருந்தது. தலை லேசாக நடுங்கிக்கொண்டிருந்தது.

“முடியலமா” என்றார் செந்தட்டி கிழவன்.

கிழவி தலை குனிந்தே இருந்தது. செந்தட்டி விக்கல் எடுப்பது போல மெதுவாக அழுதார். கிழவியின் தலை கொஞ்சம் அதிகமாக நடுங்கியது. குனிந்தபடியே இருந்தாள். எச்சில் வழிந்து கொண்டிருந்தது. செந்தட்டி சட்டென எழுந்து ஒற்றையடிப் பாதையில் நடந்து சாலையை நோக்கி விறுவிறுவென நடந்தார். கிழவி மெதுவாக நடுங்கிய தலையைத் தூக்கி அவரைப் பார்த்தாள். பாலத்தைக் கடந்து பெரிய இரைச்சலுடன் வந்த பேருந்து ஒன்று நிறுத்தத்தில் வந்து நின்றது. செந்தட்டி அதில் ஏறுவதை ஆவடையம்மாள் பார்த்தாள். பஸ் நகர்ந்து சென்று மறைவதைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். ஆறு எதையும் பார்க்காமல் ஓடிக்கொண்டிருந்தது.

ஆவடையம்மாள் தத்தி தத்தி ஆறு நோக்கி நகர்ந்தாள்.

***

தனா – தொடர்புக்கு – vedhaa@gmail.com

ஹார்லிக்ஸ் பேபி

1

-வா.மு.கோமு

ஜோதிடர்கள் பலர் குணசீலனின் ஜாதகத்தைக் கணித்து பெரிய கண்டம் ஒன்று வரவிருப்பதாகவும் அதில் மட்டும் தப்பித்து விட்டானென்றால் அப்புறம் அவனுக்கு ஆயுசு கெட்டி என்றும் சொல்லியிருந்தார்கள். இனி எந்த ஜோதிடரிடமும் சென்று இவனது கட்டங்கள் பற்றி கணிக்கச் சொன்னாலும் எல்லோரும் பேசி வைத்தது மாதிரி இதையேதான் சொல்லப் போகிறார்கள் என்பதையுணர்ந்த குணசீலனின் தாய் வள்ளியம்மாள் குணசீலனின் எழவை தன் உயிர் இருக்கும் காலத்தில் முன்நின்று எடுக்கக் கூடாது என முடிவெடுத்தாள்.

கண்டத்திலிருந்து குணசீலன் தப்பிப்பதற்கான வழிவகைகளை ஜோதிடர்களிடம் இரண்டாம் முறையாகப் படையெடுத்துச் சென்று கேட்டறிந்தாள் வள்ளியம்மாள். அவர்கள் முதலாகச் சொல்வது பூர்வீக வீடு ஆகாது என்பது தான். ஏற்கனவே அந்த வீட்டில் விழுந்த இழவுகளுக்கெல்லாம் காரணம் அந்த வீட்டின் அமைப்பும் அது கட்டி முடிக்கப்பட்ட ஆண்டும் தான் என்றார்கள். போக மூன்று முக்கு பாதை உள்ள இடத்தில் இருக்கும் வீடுகள் கூடிய சீக்கிரமாக குட்டிச்சுவர்களாகி விடும் என்றும், அப்படி ஆவது தான் நல்லதென்றும் ஜோடித்து அதில் மின்விளக்குகள் பொருத்திச் சொன்னார்கள்.

தனக்கு என்னவானாலும் கவலையில்லை என்றே நினைக்கும் வள்ளியம்மாள், தான் பெற்ற மகன் அந்த கண்டத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஆசையுடன் ஒருநாள் ராத்திரியில் படுக்கையில் கிடந்த போது குணசீலன் தன் வயிற்றில் இருந்த போது தான் பட்ட இன்னல்களைச் சொல்ல ஆரம்பித்தாள். அப்படியாக தன் தாய் ராத்திரி நேரத்தில் உயிர் வாழ்வை நீட்டிப்பதற்கான தடத்தை கைநீட்டிக் காட்டியதால் குணசீலன் வயிற்றுப்பாட்டிற்காக சென்றுவரும் குறுநகரிலேயே வாடகைவீடு பார்க்கத் துவங்கினான்.

குணசீலனின் நல்லநேரமோ என்னவோ ஒரு வாரத்தில் பாத்ரூம் வசதி, தண்ணீர் வசதியுடன் கூடிய புதிதாய் கட்டிமுடிக்கப்பட்டிருந்த வீடே குறுநகரின் ஒதுக்குப் புறத்தில் கிட்டியது. புதுவீட்டில் நுழைந்து பால் காய்ச்சும் நிகழ்வுக்கு வந்திருந்த தாயார் வள்ளியம்மாள் டைல்ஸ் ஒட்டப்பட்டிருந்த தரையில் நடக்கத்தெரியாமல் நடந்து நான்கைந்து முறை பொதுக் பொதுக்கென வீழ்ந்தெழுந்தாள். நான்காவது முறையாக வீழ்ந்த போது தான் இடுப்பில் கொஞ்சமாய் வலி இருக்கிறது என்றவளுக்கு ஐயோடெக்ஸ் டப்பியும் மூவ் பேஸ்ட்டும் வாங்கி வந்து கொடுத்தான் குணசீலன். வீட்டினுள் நுழைந்த முதல் நாளிலேயே தன் தாயாருக்கு சம்பவத்தை நிகழ்த்தி விட்ட வீட்டின் மீது குணசீலனுக்கு கொஞ்சம் கோபம் இருந்தாலும் அந்த வீட்டின் அழகு அவனுக்கு பிடித்திருந்தது. கூடவே ஹார்லிக்ஸ்பேபியும் இருந்தால் பாயும், தலயணையுமின்றியே மொசைக் தரையில் உருண்டு மகிழலாம் என்றும் நினைத்து மகிழ்ந்தான்.

கிராமத்தில் ஒருபாடு வேலைகளை விட்டு விட்டு பால்காய்ச்ச வந்திருந்த வள்ளி இடுப்பைப் பிடித்துக் கொண்டே நடந்து சென்று ஊருக்குச் செல்லும் ஒருமணி பேருந்தில் ஏறிப் போய்விட்டாள். தாயார் சென்றதும் ஒரு குளியலைப் போடுவோமென பாத்ரூம் நுழைந்த குணசீலனுக்கு ஜோதிடர்கள் சொன்ன கெடு காலம் வர இன்னமும் இரண்டு மாதங்கள் இருந்தது.

குணசீலன் தன் தாயார் கிராமச் சாலைகளினோரம் வளர்ந்திருந்த புற்களை மேய விட்டு மேய விட்டு வளர்த்திருந்த ஆடுகளில் பலவற்றை விற்றும், மூன்று வருடங்களுக்கும் முன்பாக கொளப்பலூரிலிருந்து காதலித்து கட்டி வந்திருந்த மனைவியின் ஏழுபவுன் நகைகளை விற்றும் இப்போது இவன் தங்கியிருக்கும் குறுநகரில் ஃபேன்ஸி கடை துவங்கி ஒருவருடம் முழுதாய் முடிந்திருந்தது. பேன்ஸி கடை துவங்கிய நாளிலிருந்து வீட்டில் சண்டையும் சச்சரவும் அதிகமாகவே இவனது காதல் மனைவி நகை ஏழுபவுன் போனால் போகிறது உயிர் தப்பித்தால் போதுமென கட்டிய சேலையோடு பேருந்து ஏறிச் சென்று விட்டாள்.

குணசீலன் அவளை ஹார்லிக்ஸ்பேபி என்றே பலவருடங்களாய் அழைத்து வந்ததால் அவளது உண்மையான பெயரை சுத்தமாக மறந்திருந்தான். இதற்காக அவன் கடந்து சென்ற கோடைக்காலத்தில் புழுக்கத்தில் கிடந்த நான்கு நாட்களிலும் விடிய விடிய தூங்காமல் யோசித்தும் அவளது பெயரை ஞாபகத்திற்கு கொண்டுவர முடியவேயில்லை. அதற்குக் காரணம் ஹார்லிக்ஸ் பேபி கடைசியாக இவன் வீட்டிலிருந்து கிளம்பிச் செல்லுகையில் சொல்லிப்போன வசனமாகவும் இருக்கலாமென குணசீலன் நினைத்துக் கொண்டான். “பொண்டாட்டியோட அருமையெல்லாம் உனக்கு சீக்கிரமா வரப்போற கேடு காலத்துல தான்டா தெரியும்! நீ சீப்பார்த்து சின்னப்பட்டுத்தான் சாவெடா”

பத்தினிகள் எதாவது கோபம் மிகுதியில் சாபம் விட்டால் பச்சை வாழை பத்திட்டு எரியும் என்று பலரும் சொல்வதால் வீட்டின் தென்புறத்தில் இவன் வளர்த்தி வரும் வாழைமரத்தை ஓடிச் சென்று பார்த்து திருப்தியானான். நல்லவேளை இருவருக்கும் பெயர் சொல்ல பிள்ளை ஒன்று உதிக்கவில்லை. உதித்திருந்தால் அதைக் காரணம் காட்டி வீட்டோடு அமர்ந்திருப்பாள் ஹார்லிக்ஸ்பேபி.

அவள் கோபித்துக் கொண்டு சென்ற மூன்று மாதங்கள் கழித்து அவளது தாயாரும், தந்தையாரும் இவர்களது வீட்டிற்கு சோக முகத்தை வைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். ‘இப்பிடியே இதுக ரெண்டு கோவிச்சுட்டு திக்காலுக்கு ஒன்னா இருந்தா நல்லாவா இருக்கு? நாம தான் சமாதானம் பண்டி வெக்கோணும். இதென்ன அழிச்சாம் புழிச்சான் விளையாட்டா?’ என்றெல்லாம் சோக வடிவாய் அவர்கள் பேச வள்ளியம்மாளும் சோக வடிவெடுத்தாள். ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒருத்தனை பெத்து மாடாட்டம் வளர்த்தினேன். அந்த மனுஷன் இவன் பொறந்து ஒரு மாசத்துல போயிச் சேர்ந்துட்டாரு. படிக்கப்போறேன்னு பத்தாங்கிளாசு வரைக்கிம் போனான். வேலைக்கிப் போறேன்னு அவனாத்தான் போனான். கலியாணத்தையும் அவனாத்தான் பண்டி உங்க பிள்ளையை கூட்டிட்டு வந்தான். நல்லாத்தான் இருந்தாங்க ரெண்டு பேரும். எந்தக் கண்ணு பட்டுச்சோ இப்பிடி ஆயிப் போச்சு. இவனா உங்க பிள்ளையை அனுப்பியுடலை தாயி, அவளாத்தான் சாபம் விட்டுட்டு போயிட்டா! அவளா வந்தா நாங்கென்ன வெரட்டியா உடப்போறோம்? ஊரு போயி பிள்ளையை தாட்டி அனுப்புங்க!” என்றாள். ஆனால் ஹார்லிக்ஸ் வரவேயில்லை.

வாரத்தில் ஒருநாள் வள்ளியம்மாளுக்கான காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்த குணசீலன் ஒருமணி நேரம் போல தாயாருடன் அமர்ந்து, தான் அறிந்திருந்த உலகச் செய்திகளையும் குறுநகரச் செய்திகளையும் சொல்லிப் போனான். வள்ளியம்மாள் குணசீலனிடம் சொல்வதெல்லாம் ஒன்றே தான். ‘வண்டியில போறப்ப மெதுவா பதனமாப் போ! யாருகிட்டயும் வம்பு தும்புக்குப் போகாதே!’ குணசீலன் ஒவ்வொரு இரவிலும் படுக்கையில் படுத்ததும், ‘நான் வாகனத்தில் செல்கையில் கவனமுடன் இருப்பேன்.” என்று நான்கைந்து முறை சொல்லிவிட்டு தூங்க முயற்சித்தான்.

உணவு விடுதிகளில் சாப்பிடும் பழக்கமில்லாத குணசீலன் சமையல் செய்வதில் நிபுணன். ஹார்லிக்ஸ்பேபி இவன் எதை சமையல்கட்டில் நின்று செய்தாலும் நாக்கைச் சப்புக்கொட்டிச் சாப்பிடுவாள். நல்லமுறையில் உணவை வாயை மூடி மென்று கூழாக்கி விழுங்கும் பழக்கமுடைய ஹார்லிக்ஸ்பேபி எப்போதுமே ஐம்பது கிலோ எடையைத் தாண்டாமலேயே இருந்தாள்.

ராக்காலங்களில் குணசீலன் மீது ஏறிப்படுத்துக் கொண்டே தூங்கும் வழக்கம் அவளுக்கிருந்தது. முதலாக திருமணமான புதிதில் அவளின் இந்தப்பழக்கத்தால் சிரமத்திற்குள்ளான குணசீலன் நாட்கள் போகப் போக அதற்கும் பழகிக் கொண்டான். அவள் அம்மாவும் அப்படித்தான் தூங்குவாள் என்று ஒருநாள் ஹார்லிக்ஸ்பேபி சொல்லப்போக, அதைக் கற்பனையில் நினைத்துப் பார்த்து இரண்டு நாட்களுக்கும் மேலாகக் குறுநகரில் மிரண்டு திரிந்தான் குணசீலன்.

குணசீலனுக்கு ராக்காலங்களில் விழிப்புத்தட்டுகையில் பல்லி ஒன்றின் உச்சுக் கொட்டும் சப்தம் வீட்டினுள் கேட்கத் துவங்கியிருந்ததை அறிந்தான். குணசீலனுக்கு பல்லிகளைப் பிடிக்காது. வீட்டினுள் அவைகளைக் கண்டால் கொன்றுவிடும் பழக்கத்தை வைத்திருந்தான். களைப்பில் படுக்கையில் கிடப்பவனுக்கு அதை எழுந்து போய் விளக்குப் போட்டு தேடிக் கொல்வது சிரமம் என்று அப்படியே தூங்கியும் விடுவான். காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்றால் இவன் எழுந்து சமையல் செய்து, குளித்து, கிளம்புவதற்கே நேரம் சரியாக இருந்தது. பல்லியை காலைநேரத்தில் மறந்திருந்தான். போக அதன் சப்தம் விடிந்ததும் இருப்பதுமில்லை.

குணசீலன் தன் பேன்ஸி கடைக்கு விடுப்பு என்று வாரத்தில் எந்த நாளும் விடுவதில்லை. கடையில் மாதச் சம்பளத்திற்கு இப்போது ஒரு பணிப்பெண்ணை சேர்த்தியிருந்தான். குறுநகரின் மையப்பகுதியிலேயே அந்தப்பெண்ணிற்கு வீடு இருந்தது. வந்த மூன்று மாதத்தில் அந்தப்பெண்ணுக்கு வியாபார நுணுக்கங்கள் அத்துபடியாகிவிட்டது. இவனை அந்தப்பெண் வந்தநாளிலிருந்தே பாஸ் என்றே அழைப்பது இவனுக்கு ஏனோ பிடித்தமில்லாமல் இருந்தது. அப்படி அந்தப்பெண் கூப்பிடுகையிலெல்லாம் தானொரு கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் என்கிற நினைப்பு வருவதை உணர்ந்து அவனாக புலம்பிக் கொண்டிருந்தான்.

வேலைக்கு சேர்ந்த நாளில் அந்தப் பெண் தன் பெயரை சொல்லியிருந்தாள். அது என்னவென்று மூன்று மாதமாக யோசித்துக் கொண்டேயிருக்கிறான். பெண் பிள்ளைகளின் பெயர்களை ஞாபகத்தில் வைத்திருப்பது இவனால் முடியாத காரியமாகவே இருந்தது. அந்தப்பெண்ணுக்கும் இவனொரு புதிய பெயரை சூட்டியிருந்தான். அதுமட்டும் எப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது அவனுக்கு. ஜிமிக்கி!

ஜிமிக்கி என்று இவன் அழைப்பது அந்தப் பெண்ணுக்குப் பிடித்திருந்தது. வீட்டில் அவள் தாயாரும் ஜிமிக்கி என்றே அழைத்துப் பழகி விட்டதாய் மகிழ்வாய் சொன்னாள் அவள். காலம் போன கடைசியில் அந்தப்பெண் காதில் மெலிதான வளையம் போன்ற தொங்கட்டான் அணிந்திருந்ததால் அப்படி அழைத்திருப்பேனோ? என்றும் நினைத்தான் குணசீலன்.

“பாஸ் உங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சுங்ளா பாஸ்?” என்று ஒரு திங்கள் மதிய நேரத்தில் வீடு போய் உணவு சாப்பிட்டு விட்டு வந்த ஜிமிக்கி குணசீலனிடம் கேட்டாள். குணசீலன் ‘இல்லை’ என்றே சொன்னான் அவளிடம். இவன் கேட்காமலேயே ஜிமிக்கி அவளுக்கு திருமணமாகி டைவர்ஸ் ஆன விசயத்தை சொன்னாள். “அவன் ஒரு ஆகாவழி பாஸ். இதே ஊரு தான். இப்பக்கூட டாஸ்மார்க் கடைக்கிட்ட மரத்தடியில குடிச்சுட்டு நாலுபேர்த்தோட நின்னுட்டிருக்கான்.” என்றாள்.

“உங்களுக்கு குடிக்கிற பழக்கம் இருக்குங்ளா பாஸ்?”

“நான் குடிக்கிறதில்ல ஜிமிக்கி. ஆமா ஏன் நீ டைவர்ஸ் வாங்கிட்டே? அப்படி என்ன சண்டை உங்களுக்குள்ள?”

“அவன் வெத்துவேட்டு பாஸ். எனக்கொரு பிள்ளை குடுக்க அவன் கிட்ட விசயமில்ல. சரி தத்து எடுத்துக்கலாம்னு கூட அவன்ட்ட பேசினேன். சரின்னு தான் சொன்னான். அதுக்குள்ள எங்கம்மா குளிக்கிறப்ப அவன் செல்போன்ல வீடியோ எடுத்து வச்சி சாமத்துல பார்த்துட்டே இருந்தான் பாஸ். அவன் ஒரு சில்றை பாஸ்”

“இதெல்லாம் ஒரு பிரச்சனைன்னு டைவர்ஸ் வாங்கிக்கலாமா ஜிமிக்கி?”

“என்ன பாஸ் அவனாட்டமே பேசுறீங்க? எங்கம்மாவும் பார்த்தா பார்த்துட்டு போச்சாறான்னு தான் பேசிச்சு! எனக்குத்தான் பைத்தியம் பிடிக்கிறாப்ல ஆயிடிச்சி! பாஸ் அவன் இந்தூர்ல நிறையப்பேரு குளிக்கிறபோது படம் எடுத்து அவன் போன்ல வெச்சிருக்கான் பாஸ்! நான் குளிக்கிறப்பவும் எடுத்து வச்சிருக்கான். ஆனா இதையெல்லாம் எதுக்கு எடுக்கான்னு தான் எனக்குத் தெரியல! அவனைப் பார்த்தா செல்போனை கையில பிடிச்சுட்டு என்னைப் பார்த்துட்டே வர்றாப்ல இருக்கவும் தான் டைவர்ஸ் கேட்டு வாங்கிட்டேன். இப்பவும் என் வீட்டுப்பக்கமா சுத்துவான் பாஸ். என்னைப் பார்த்தா ‘மாமியா தண்ணி வாக்குறாளா?’ அப்படின்னே கேப்பான். அவன் பாருங்க பாஸ் ஒருநாளைக்கி லாரி மோதிச் சாவான்! சட்னியா கிடப்பான் பாஸ் ரோட்டில!”

“உங்க வீட்டுல உங்கம்மாவும் நீயும் மட்டுமா ஜிமிக்கி?”

“ஆமா பாஸ். எங்கம்மா சந்தை சந்தையா காய்கறி ஏவாரத்துக்கு போகுது. வீட்டுல சும்மா இருக்கமேன்னு நானாத்தான் உங்க கிட்ட வந்து வேலை கேட்டேன். என்னை ஏன் பாஸ் உடனே வேலைக்கு வான்னு சொல்லிட்டீங்க?”

“நீயி அழகா இருந்தே ஜிமிக்கி”

“போங்க பாஸ் தமாஸ் பண்ணாதீங்க! எம்பட அழகெல்லாம் ஒரு அழகா? நம்ம கடைக்கே எத்தனை பொண்ணுக அழகழகா வர்றாங்க! அவங்க கூட வெச்சிப் பார்த்தா நானு ஜுஜுபி பாஸ். சொல்லுங்க பாஸ் உடனே சரின்னு சொன்னீங்களே ஏன்?”

“ஏன்னா யாரும் என்கிட்ட வந்து வேலை வேணும்னு கேக்கவே இல்லையே! ஒருத்தன் தனியா நின்னுட்டு சிரமப்படறானேன்னு நீ தான் வந்து கேட்டே! அதனால தான். அப்புறம் ஃபேன்ஸி கடையில ஒரு பொண்ணு இருந்தா வியாபாரம் நல்லா ஓடும்னு மனசுல நினைச்சிட்டு தான் இருந்தேன்.”

“நான் வந்த பிறகு நல்ல வியாபாரமா பாஸ்?”

“ஆமா! நீ ரொம்ப ராசியானவ ஜிமிக்கி”

“நீங்க தான் சொல்றீங்க பாஸ். எங்கம்மா கூட அத்துட்டு நிக்கா அவுசாரின்னு பேசுறா!” என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டாள். அன்றிரவு குணசீலன் கனவில் ஜிமிக்கி ஸ்லோமோசனில் மரங்களை சுற்றிலும் இவனுக்கு போக்கு காட்டிக் கொண்டு ஓடிக் கொண்டே இருந்தாள். அப்போது பல்லியின் சப்தம் அவனுக்கு கேட்டது. வழக்கத்தை விட சற்றுப் பெரிதாக இருக்கவே போர்வையை உதறி வீசிக் கொண்டு கோபமாய் எழுந்தான் குணசீலன்.

முகப்பு அறையில் கிடந்த ஷோபாவில் கிடந்தவன் எழுந்து போய் அறை விளக்கைப் போட்டான். சுற்றிலும் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்வையை ஓட்டினான். முகப்பு அறையின் மூலை முடுக்கெல்லாம் பார்வையை ஓட்டி ஏமாந்தான். பல்லி எங்குமில்லை. பின் எப்படி, காதுக்கு அருகாமையிலே சொச்சு சொச்செனக் கேட்டதே! மீண்டும் சமையல் அறை, சுவாமி அறை, பாத்ரூம் எனத் தேடிச் செல்ல சலிப்படைந்து விளக்கை அணைத்து விட்டு வந்த ஷோபாவில் சாய்ந்தான் குணசீலன்.

போர்வையை இழுத்து கழுத்து வரை போர்த்திக் கொண்டு ஜிமிக்கியை நினைத்தான். ஜிமிக்கி தன் முன் நின்று சுடிதாரை கழுத்து வழியே உருவி நடு அறையில் வீசுவதாய் நினைத்தான். நினைப்பே அவ்வளவு அழகாய் இருந்தது அவனுக்கு.

விடிந்த சமயம் பாத்ரூம் சென்று முகம் அலம்பி, பல் துலக்கிவிட்டு டீ வைக்க சமையல் அறைக்குள் நுழைந்தவன் கண்களுக்கு தெரிந்த பல்லியைப் பார்த்து ஒரு கணம் பயத்தில் கத்துவதற்கு வாய் வரவில்லை. இதயம் திடும் திடுமென அடிக்கத்துவங்கிவிட்டது. அங்கிருந்து நழுவி விடாலாமென நினைத்தவனுக்கு கால்களும் வேலை செய்ய மறுத்து விட்டது. இது எப்படி சாத்தியம்? ஒரு பல்லி இத்தனை பெரிதாய் இருக்குமா? சமையலறைச் சுவற்றின் மேல்ப்புறத்தில் அப்பியிருந்த பல்லி ஐம்பது கிலோ இருக்கலாம். நேர்நிமிர்த்தி நிறுத்தினால் இவன் உயரத்திற்கு வரும். பல்லியின் இரு கண்களும் இவனைப் பார்த்தபடிதான் இருந்தது. அதன் வாலின் நுனி லேசாக ஆடுவதைக் கண்டவன் மிரண்டான். பின் வாங்க முயற்சித்தவனுக்கு கால்கள் தான் ஒத்துழைக்க மறுத்தது.

பல்லி இரையைக் கண்களால் கண்டு விட்டால் வாலை ஆட்டுமா? ஆட்டாதா? இவனுக்குத் தெரியவில்லை. போக நாய்கள் வேண்டுமானால் இரையைக் கண்டால் வாலை ஆட்டும் என்று தெரியும். முதலில் இது பல்லி தானா? இல்லை டினோசர் குட்டியா? இப்படி ஒரு விலங்கினம் தன் வீட்டிலிருப்பதை யாரிடம் சென்று முதலாகத் தெரிவிக்க வேண்டும்? குறுநகர நிர்வாக அதிகாரியிடமா? வனத்துறையிடமா? இல்லை காவல்துறையிடமா? இவனுக்கு குழப்பமாயிருந்தது.

பல்லி நகர்ந்து வந்து இவனைத் தாக்கியிருந்தால் கூட இவனுக்கு நிம்மதியாய் இருந்திருக்கும். ஆனால் அது இருந்த இடத்தை விட்டு நகராமலேயே இருந்தது. அது சும்மா வெறுமனே இருப்பது தான் இவனுக்குள் பீதியைக் கூட்டிற்று. கால்களை இப்போது பின்னுக்கு நகர்த்தினான்         !

மீண்டும் இவன் சமையலறையின் முகப்பிற்கு வந்து பார்க்கையில் பல்லி நகராமல் இருந்தது அதே இடத்தில். இவன் நான்கைந்து புகைப்படங்கள் எடுக்கையில் அமைதியாக இவனைப் பார்த்தபடியே தான் சுவற்றில் அப்பியிருந்தது. பல்லி இளமஞ்சள் நிறத்தில் இருந்தது. மரப்பல்லிகள் வீட்டினுள் வாழாது. அவைகள் கறுப்பு நிறத்தில் உடலெங்கும் செதில் செதிலாய் இருக்கும். இது மொழு மொழுவென நல்ல உணவு சாப்பிட்டு வளர்ந்தது போன்றிருந்தது.

ஆக இது தனித்திருக்க வாய்ப்பிருக்காது தான். இதன் ஜோடி ஒன்று இந்த சுற்று வட்டாரத்தில் யாரேனும் வீட்டில் இருக்கலாமென நினைத்தான் குணசீலன். குணசீலன் பின்பாக பதட்டத்தை தணித்துக் கொண்டான். இந்தப்பல்லியை பகலில் இப்போது இரும்புக்கம்பி கொண்டு அடித்துக் கொன்றுவிட முடியாது தான். டெட்பாடியை எங்கே இழுத்துப் போய் புதைப்பது? பாத்ரூமில் இவன் குளித்து முடித்து விட்டு வந்த போது முகப்பு அறையில் மேல் சுவற்றில் அது அப்பிக் கொண்டிருந்தது. எப்படியோ சமையல் அறையிலிருந்து வெளிவந்து விட்டதே என நிம்மதியானான்.

அன்று பகலில் ஃபேன்ஸி கடையில் அவனால் இயல்பாக இருக்கவே முடியவில்லை. இந்த விசயத்தை யாரிடமேனும் சொல்லாமல் விட்டால் மண்டை வெடித்து விடும் என்றே தோன்றியது. ஆனால் அது நல்லதற்கல்ல. செய்தி சேனல்காரர்கள் பறந்து கட்டி வந்து விடுவார்கள். குணசீலன் வீட்டினுள் மர்ம விலங்கு என்று பேப்பரில் செய்திகள் வந்துவிடும். “பாஸ் நேத்து தூக்கத்துல என் கனவுல வந்தீங்க பாஸ்! வந்து அழகா இருக்கே ஜிமிக்கீன்னு சொன்னீங்க பாஸ்” என்று மகிழ்ச்சியாய்ச் சொன்ன ஜிமிக்கியோடு மகிழ்வாய் பேச முடியவில்லை இவனால். அவன் மனமெங்கும் பல்லியே நிரம்பியிருந்தது.

மதிய உணவு உண்டு விட்டு ஜிமிக்கி வந்த பிறகு, தன் யமஹாவை எடுத்துக் கொண்டு வீடு வந்தான் குணசீலன். பூட்டப்பட்டிருந்த வீட்டினுள் யாரும் இருக்கப் போவதில்லை என்றாலும் காலிங் பெல்லை அழுத்தி விட்டு பூட்டைத் திறந்து வீட்டினுள் சென்றான். காலிங் பெல் ஓசை கேட்டதும் பல்லி பாதுகாப்பான இடத்திற்கு ஓடிச் சென்று விடுமென நம்பினான். பல்லி இருந்த சுவடே இல்லாமலிருந்தது வீடு. சமையலறையிலும், முன் அறையிலும் பல்லி இல்லை.

அது வீட்டை விட்டுச் சென்றிருக்கலாமென நினைத்து மதிய உணவை வட்டிலில் போட்டுக் குழம்பை ஊற்றிக் கொண்டு வந்து முகப்பறையில் அமர்ந்தான். டீவியை ஆன் செய்து செய்திச் சேனல் பார்த்தபடி சாப்பிட்டான். பூஜை அறையில் எதோ தட்டு விழும் ஓசை கேட்டது. பல்லியின் வேலையாகத்தான் இருக்க வேண்டும்.

மாலையில் வளரும் தென்னை மரத்தில் குருத்தை கடித்துண்டு வாழும் வண்டுகளைக் கொல்வதற்காக விற்கும் மருந்துப்புட்டியை வாங்கி வந்தான். அதைத் தண்ணீர் கலந்து வீட்டினுள் எல்லா அறையிலும் அடித்து விட்டு வந்து கதவை வெளியில் பூட்டி விட்டு திண்ணையில் படுத்து இரவில் தூங்கினான். காலையில் வீட்டினுள் பல்லியின் பிணம் கிடக்க வேண்டுமென நம்பினான். சாக்கினுள் போட்டேனும் வண்டியில் கொண்டு போய் ஏரிக்குழியில் வீசிவிடவேண்டும். அப்புறம் அந்த அதிசயத்தை யார் பார்த்தால் என்ன?

பல்லியைப்பற்றிய யோசனையிலேயே கிடந்தவன் எப்போது தூங்கினானோ தெரியவில்லை. விடிந்து சூரியன் முகத்தில் பட்டபோது தான் விழித்தான். வீட்டைத் திறந்த போது மருந்தின் வாசத்தில் இவனே மயக்கமடைந்து விழுந்து விடுவான் போல இருந்தது. முன்னறையில் மூக்கைப் பொத்திக் கொண்டே பல்லியைத் தேடினான். பாத்ரூமில் பைப்பில் தண்ணீர் கசியும் ஓசை கேட்டது. இதை ஏன் சரியாக குளோஸ் செய்யாமல் வந்தேன்? என பாத்ரூம் கதவைத் திறக்க முயற்சித்தான். அது உள்புறமாகத் தாழிடப்பட்டிருந்தது. கதவைத் தட்டினான் குணசீலன். இதென்ன இந்தப்பல்லிக்கு இவ்ளோ அறிவா? ஒருவேளை பெண் பல்லியோ?

எல்லா அறைகளிலும் ஜன்னல்களைத் திறந்து வைத்தான். முகப்பு அறையில் இருந்த மின்விசிறிகள் இரண்டையும் வேகமாய் சுழல விட்டான். மருந்தின் வாசம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்தது வீட்டினுள். சமையல் செய்து சாப்பிடும் எண்ணமே இல்லாமல் ஒன்பது மணியைப் போல பசியுடன் வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பினான். அவன் கிளம்புகையிலும் பாத்ரூம் கதவு அப்படியே தானிருந்தது.

மதிய உணவை பார்சல் கட்டிக் கொண்டு வீடு வந்த குணசீலன் காலிங் பெல்லை அழுத்தி விட்டுத்தான் வீட்டின் கதவை நீக்கி உள்ளே சென்றான். பாத்ரூம் கதவு இப்போது திறந்திருந்தது. உணவுப் பொட்டணத்தை டேபிள் மீது வைத்து விட்டு படுக்கை அறைக்குள் வந்தான். படுக்கை அறைச்சுவற்றின் மேல் அப்பிக் கொண்டிருந்த பல்லியின் கண்கள் மூடியவாக்கில் இருந்ததைப் பார்த்தான். தூக்கம் ஒரு கேடு இதற்கு! என்று நினைத்தவன் ஏனோ அப்படி நினைத்ததற்கு சங்கடப்பட்டான். என்ன இருந்தாலும் இவன் வீட்டில் வசிக்கும் பல்லி. இதைக் கொல்வதற்காக வீட்டினுள் மருந்து அடித்தவன். சாவதற்கு பயந்த பல்லி பாத்ரூமில் போய் பதுங்கி விடிய விடிய தண்ணீரில் நனைந்தபடி இருந்திருக்கிறது.

குணசீலன் பேண்ட்டை உருவி பெட்டின் மீது போட்டு விட்டு லுங்கியை எடுத்துக் கொண்டு பாத்ரூம் சென்றான். காலைக் குளியலை மதியமாகப் போட்டான். எப்போது குளித்தாலும் ஒரு புத்துணர்ச்சி வருவது நடப்பது தானே! குணசீலன் நல்ல பசியில் இருந்தான். தலையைத் துண்டால் துவட்டிக் கொண்டே முன் அறைக்கு வந்தான். டேபிளில் பொட்டணம் பிரிக்கப்பட்டிருந்தது.

ஒற்றைப்பருக்கை கூட இலையில் இல்லை. யாரேனும் அல்லது நாயேனும் உள்ளே வந்து.. கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருக்கிறதே! இது பல்லியின் வேலையாகத்தானிருக்க வேண்டும். ஒரு ஆள் சாப்பாட்டை முழுசாக சாப்பிட்டு விட்டது. பொரியல், தயிர் என ஒன்றுமில்லை. குணசீலனுக்கு வயிற்றுப் பசியில் காதுகள் அடைக்க கோபமாய் இருந்தது. இப்போது எங்கே அந்தப் பல்லி? படுக்கையறைக்குத் திரும்பினான்.

படுக்கையறைக் கட்டிலில் குப்புறடித்துக் கிடந்தது அந்தப் பல்லி. கட்டிலில் இவன் கழற்றிப் போட்டிருந்த பேண்ட் டேபிளின் மீதிருந்தது. பேண்ட்டை எடுத்து அணிந்து கொண்டவன் பல்லியின் முதுகில் இரும்பு ராடு ஒன்றை எடுத்து வந்து ஒரு போடு போடலாமா? என நினைத்தபடி வீட்டை விட்டு வெளியேறினான்.

இனிமேல் உணவு சமைத்தால் பல்லிக்கும் சேர்த்து சமைக்க வேண்டும் போல! பல்லிக்கு உருளைக்கிழங்கு ஒத்துக் கொள்ளுமா எனத் தெரியவில்லை! இவனுக்கு உருளைக்கிழங்கு ஒத்துக் கொள்வதில்லை. பல்லியோடு வாழப்பழகிக் கொண்டு தான் ஆகவேண்டுமோ என்னவோ!

வீட்டு ஓனரிடம் சென்று விசயத்தை சொல்லி வேறு வீடு பார்த்து குடியேறிப் போய்விடலாம் தான். ஆனால் விசயத்தை அவர் கேட்டாரென்றால் ஆட்களைக் கூட்டி வந்து பல்லியைக் கொன்று விடுவார். பல்லியைக் கொன்ற பாவம் அவரை சும்மா விடாமல் சுகர், பிபி என்று என்று எக்கச்சக்கமாய் ஏற்றி அவர் குடும்பத்திற்கு ஆஸ்பத்திரி செலவீனங்களை அதிகப்படுத்தி விடுவார். அப்படியே பிழைத்து வந்தாலும் பல்லிப் பாவம் சும்மாவா விடப்போகிறது?

அன்றிரவு குணசீலன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கையில் அருகில் இவன் போர்வையை யாரோ இழுப்பது போன்றிருக்கவே சிரமப்பட்டு விழித்து முனகிக் கொண்டே பார்த்தான். படுக்கையறையில் எரிந்து கொண்டிருந்த நீலவர்ண ஜீரோ வாட்ஸ் விளக்கொளியில் இவனருகில் பல்லியானது படுத்திருக்க மிரண்டு போய் எழுந்தான். இதென்ன குடும்பம் நடத்த ஆரம்பித்து விடும் போல இருக்கிறதே! விளக்கைப் போட்டான் குணசீலன். கண்களை இறுக மூடிக் கொண்டு இவனது போர்வையை முன்னங்கால்களால் நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு சுவர்ப்புறம் பார்த்து திரும்பிப் படுத்தது பல்லி. இவன் விளக்கை அணைத்து விட்டு முன் அறை ஷோபாவில் வந்து வீழ்ந்தான்.

குணசீலன் அடுத்த நாள் சமையலில் காளான் பிரியாணி செய்தான். மிளகாய் அதிகம் போட்டு விட்டான் போலிருக்கிறது. செமையான காரமாயிருந்தது. இதற்காக பிரியாணியை அப்படியே எடுத்துப் போய் தூர வீச முடியுமா? சாப்பாடல்லவா! தயிர் பாக்கெட் வாங்கிக் கொண்டு வந்து கலந்து சாப்பிட்டால் போகிறதென வீட்டைப் பூட்டிக் கொண்டு வண்டியில் சென்று வாங்கி வந்தான்.

வழக்கம் போல காலிங்பெல்லை அடித்து விட்டு குணசீலன் கதவை நீக்கி வீட்டினுள் சென்ற போது முன் அறையெங்கும் பிரியாணி சிதறிக் கிடந்தது! சமையலறையிலிருந்து பின்னங்கால் இரண்டிலும் மனிதர்களைப் போன்றே நடந்து வந்த பல்லி முன்னங்காலில் பிடித்திருந்த அன்னக்கரண்டியை இவன் முகத்துக்கு நேராய் வீசிற்று.

இப்படித்தான் ஹார்லிக்ஸ் பேபி முன்பொருமுறை காரமாய் சமைத்திருந்தான் என்று சட்டுவத்தை கோபத்தால் இவன் முகத்தில் வீசியிருந்தாள்.

இப்போது கதையின் ஆரம்ப வரியை ஒருமுறை வாசிக்கவும்.

***

ஆசிரியர் தொடர்புக்கு – vaamukomu@gmail.com

மரியதாஸ் 

0

மௌனன் யாத்ரீகா 

1.

மரியதாசுக்கு தூக்கம் வரவில்லை. மளிகைப் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் சாமி அன் சன்ஸ் கடையருகே சில்லறை வியாபாரி ஒருவன் போட்டிருந்த பலகையில் கால் முதல் தலை வரை இறுகப் போர்த்தியபடி குறுகிப்போய் உட்கார்ந்திருந்தான். எலும்பை அசைக்குமளவுக்கு குளிரடித்துக் கொண்டிருந்தது. பலகையின் சாய்வான விளிம்பில் கிடந்த சுருங்கிய சிறு எலுமிச்சங்காய்களின் வாசம் காற்றில் கலந்திருந்தது. இருள் அந்தத் தெருவை அழுத்தி மூடியிருந்தது. தெருவின் தொடக்கத்தில் மங்கிப்போய் ஒளிர்ந்த விளக்கு வெளிச்சத்தில் நின்றிருந்த மரியதாசின் சைக்கிள் ரிக்‌ஷாவில் குளிரில் நடுங்கும் இன்னொரு உருவம் அசைந்து கொண்டிருந்தது. உடல் நலிவுற்ற அந்த சந்தை நாய்க்கு அதுதான் போக்கிடம்.

பீடி ஒன்றை பற்ற வைத்துக் கொண்டான் மரியதாஸ். ரெண்டு இழுப்பு இழுத்தவுடன் விலா எலும்புகள் உடைந்துபோகுமளவுக்கு ஓர் இருமல் வந்தது. உறைந்த சளியை காறி உமிழும் கடுத்த சத்தம் அந்த இருளை அதிர வைத்தது. அந்தத் தெருவில் தேங்கிக் கிடக்கும் காய்கறி கழிவுகளின் அழுகல் நெடியும், பீடி வாசமும் கலந்து ஒரு புது நெடி அங்குப் பரவியிருந்தது. இரண்டு கடைகள் தாண்டிக் கிடந்த இன்னொரு பலகையில், இருளில் உறைந்துவிட்டதைப்போல் பாண்டி உறங்கிக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து சீரான குறட்டைச் சத்தம் கேட்டபடியிருந்தது.

மரியதாசுடன் கை ரிக்‌ஷா ஓட்டும் பாண்டிக்கு இது இரண்டாம் சாமம். அவன் படுத்திருந்த பலகையில் எஞ்சிக் கிடந்த எலுமிச்சங்காய்களும், அதன் வாசனையும் பாண்டிக்கு ஆழ்ந்த உறக்கத்தைத் தந்திருந்தன. அவன் படுத்திருந்த பலகையின் ஓரங்களிலும் அந்தக் காய்கள் கிடந்தன. அதன் நிறமும் வாசனையும் கிளர்த்திய போதும் மரியதாஸை துர்நெடிகள் மட்டுமே சூழ்ந்து கொண்டிருந்தன. பாண்டியிடமிருந்து தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது குறட்டைச் சத்தம். அவனை இருளில் ஊடுருவிப் பார்த்தான். தூங்கும் பாண்டியைப் பார்த்துக் கொண்டே வாய்விட்டுச் சொன்னான்;

‘‘ங்கோத்தா… கடவுளின் கொழந்தடா நீ’’

நெஞ்சை அடைத்த சளி மறமறவென்று மூளைக்கு ஏறியது. எங்கிருந்தோ வந்து நெஞ்சில் அடித்த கனத்த கல்லைப்போல் கடுத்த இருமல் ஒன்று நெஞ்சை உடைக்க மரியதாசின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. நெஞ்சிலிருந்து உறிஞ்சிய சளியை வெளியே துப்பிவிட்டு, புகையை இழுத்து வெளியே இருளில் பரவ விட்டான். அந்தப் புகையோடு சேர்ந்து அவனது எண்ணமும் இருளில் பரவியது.

பனி காதுக்குள் இறங்கி மண்டையைக் குத்துவது போல் இருந்தது. போர்வையை இழுத்து உடம்போடு அழுத்திக் கொண்டான். கறி உதிர்ந்த வெறும் எலும்பை சாதாரண குளிர் கூட வாட்டி வதைக்கும் என்பது அவனது நடுக்கத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

பேச்சுக்குரல் கேட்கிறது. மரியதாஸ் கூர்ந்து பார்த்தான். நல்லப்பன் மெஸ்ஸில் வேலை செய்யும் தனபாலும் பழமலையும் செகண்ட்ஷோ சினிமா பார்த்துவிட்டு செல்போன் லைட்டை அடித்தபடி பேசிக்கொண்டே வந்தார்கள். இருளில் தன்னைக் கடந்துபோகும் அவர்களை சத்தம் எதுவும் கொடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். ‘என்ன படம்’ என்று அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்போல் இருந்தது. அவர்கள் ‘பிட்டு’ படம்தான் பார்த்துவிட்டு வருகிறார்கள் என்று அவனுக்குத் தெரியும்.

ரவுண்ட்ஸ் கோவில் தாண்டி இருக்கும் நடராஜா தியேட்டரில் இரவு காட்சி மட்டும் பிட்டுப்படம் ஓட்டுவது மரியதாசுக்கு தெரியும். அவர்களைப்போல் இவனும் எத்தனையோ நாள் இரவு செகண்ட்ஷோவுக்கு அந்த தியேட்டருக்கு போயிருக்கிறான். ஏதாவது ஒரு ஆங்கிலப்படமோ இந்திப்படமோ முதலில் ஓடும். படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே இடையில் ஒரு பத்து நிமிசம் பிட்டுப்படம் ஓடும்.

ஆணும் பெண்ணும் அரை நிர்வாணத்தில் – சில நாட்களில் முழு நிர்வாணத்திலும் – மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குவது கேட்கும். கூட இருப்பவர்கள் ஒரு சத்தமும் கொடுக்காமல் ஒரு பத்து நிமிசம் சர்வத்தையும் அடக்கிக்கொண்டு இருப்பதை பார்க்க மரியதாசுக்கு வியப்பாக இருக்கும்.

உடல் இச்சை மனிதனின் அத்தனை ஆக்ரோசங்களையும் தணித்து லேசாக்கி விடுவதை ஆச்சர்யமாகப் பார்ப்பான். பிறகு வரும் படத்தின் காட்சிகளை பார்க்காமல் பலபேர் எழுந்து வெளியே போய்விடுவார்கள். அதற்குமேல் திரைப்படம் மட்டுமே ஓடும் என்று தெரிந்தவர்களும், இன்னும் பிட்டுப்படம் போடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருப்பவர்களும் மட்டும் உட்கார்ந்திருப்பார்கள். மரியதாசுக்கு அங்குதான் லேசாக கண்ணைச் சொக்கும். அந்தத் தூக்கத்துக்காகத்தான் பலநாள் இரவுக் காட்சிக்கு செல்வான்.

தியேட்டரின் இருளை விட்டு வெளியே வரும்போது அவனுக்கு ஒன்று தெளிவாகியிருக்கும். பெண்ணின் இருப்பு ஆணுக்கும், ஆணின் இருப்பு பெண்ணுக்கும் வேறெந்த பிரயாசைகளை விடவும் மனசுக்கு போதுமானதாக இருக்கிறது.

பெண்ணின் இருப்புக்கு மரியதாசின் உடலும் மனமும் எத்தனையோ நாள் ஏங்கியதுண்டு. இப்போதும் அந்த பெருமூச்சு நின்றபாடில்லை. அதையெல்லாம் ஒரு பீடியைப் பற்றவைத்து இழுத்துப் புகையாக்கி வெளியே ஊதிவிடுவான். அந்த புகையில் அவனது காமம் வெளியேறும். பிறகு வெகுநேரம் இருமிக்கொண்டேயிருப்பான்.

படம் பார்க்கப் போயிருக்கலாம் என்று நினைத்தான். உடல் இன்னும் பெண்ணின் தேவையோடு இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும் போல் இருந்து. அந்த எண்ணம் ஒரு வறண்ட சோகத்தை உண்டாக்கியது. நீண்ட பெருமூச்சோடு கடுத்த இருமலும் வந்தது. வாய் முழுக்க நிரம்பும் அளவுக்கு திரண்ட சளியைக் காறி வெளியே கொண்டு வந்து திரும்பவும் அப்படியே விழுங்கி விட்டால் தேவலாம் என்று தோன்றியது.

தன் முட்டிக்கால்களில் சுரக்கும் கொழுப்பும், தன் விதைப்பையில் ஊறும் விந்துவும்தான் இப்படி சளியாகி, இருமல் வழியே வெளியேறி தன்னை பலவீனமாக்கிக் கொண்டிருக்கிறதோ என்று நினைத்தான். திரண்டு வந்த சளியை கையில் உமிழ்ந்து பிசைந்து பார்த்தான். தான் நினைத்தது சரிதானோ என்று தோன்றியது.

தனவள்ளியின் நினைவும், திடீரென ஒருநாள் முற்றும் முழுதாக இவனை விட்டுச் சென்றதும் இதயத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டு நெஞ்சில் வெடி வைத்தது. அந்தத் தெருவே அதிருமளவுக்கு கடுமையான இருமல் ஒன்று வந்து திக்குமுக்காடிய மரியதாஸ் ஓர் ஆழமான பள்ளத்தில் விழுந்து உருண்டு போய்க் கொண்டிருந்தான்.  

2.

தனவள்ளியைப் பழைய துருப்பிடித்த டிவிஎஸ் பிப்டியில் கொண்டு வந்து அவள் வீட்டு வாசலில் இறக்கிவிட்டுப் போனாள் செல்வி. மரப்பலகையில் தகரம் அடித்த வாசல் கதவைத் திறந்தபோது இருமல் சத்தம் கேட்டது. வராண்டாவில் கிடந்த பழைய நார்க்கட்டிலில் உடலை முழுதாகப் போர்த்தியபடி படுத்திருந்தான் மரியதாஸ். திரும்பி வாசலைப் பார்த்தாள். கதவுக்கும் வாசலுக்குமான இடைப்பட்ட தூரத்தை முழுதாக இருள் கவ்வியிருந்தது. விளக்கை அணைத்துவிட்டு இருளில் படுத்திருந்தவனை சோர்வு தட்டிய கண்களால் சோகமாக பார்த்தாள்.

மரியதாஸ் சத்தம் காட்டாமல் படுத்திருந்தான். விளக்கு மாடத்துக்கு மேலே இருந்த ஒத்த லைட்டை போட்டாள். அவன் தலைக்கு நேராக ரீப்பரில் தொங்கிக் கொண்டிருந்த குண்டு பல்ப் ஒளிர்ந்து அந்த இடத்தை மஞ்சளாக்கியது. வெளிச்சத்தில் அவனைப் பார்த்தாள். ஒன்றுமே நடக்காதது போல் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டான். அவன் தலைமாட்டில் வண்டுகள் வந்து விழுந்தன,  

‘‘ச்சும்மா தூங்குற மாரி நடிக்காத… இம்மா நேரம் நீ என்னப்பத்தி இன்னா நெனச்சிக்கினு இருந்திருப்பேன்னு தெரியும்” என்றாள்.

மரியதாஸிடம் சின்ன அசைவு கூட இல்லை. உடல் முழுக்க போர்த்திக் கொண்டிருந்தான்.

வீட்டுக்குள் சென்று விளக்கைப் போட்டவள் கதவை உள்பக்கமாக தாழிட்டு புடைவையைக் களைந்து தரையில் விட்டுவிட்டு அப்படியே கொஞ்சநேரம் ஃபேன் காற்றில் நின்றாள். உடம்பிலிருந்த பிசுபிசுப்பு லேசாய் கரைந்து உதிர்வது போல் இருந்தது. திமிர்த்த மார்புகளின் இடையில் ஒன்றிரண்டு புளிய இலைகள் ஒட்டிக் கொண்டிருந்தன. முடியை அவிழ்த்து உதறி விட்டாள். தலையில் சாரல் நுழைவது போல் ஃபேன் காற்று நுழைந்தது. கைகளால் உலர்த்தியபடியே சமையல் கட்டுக்குப் போனாள்.

மரியதாஸ் சாப்பிட்டுவிட்டு கழுவி வைத்த ப்ளாஸ்டிக் தட்டு, கழுவும் பீங்கானுக்கு அருகில் இருந்தது. காலையில் சாப்பிட்டு விட்டு மதியத்துக்கு தனக்கு எடுத்துக் கொண்டு இரண்டு வேளை அவன் சாப்பிடும் அளவுக்கு வைத்து விட்டுப் போயிருந்தாள். குக்கரைத் திறந்து பார்த்தாள். இன்னும் ஓராள் சாப்பிடலாம் அளவுக்கு சோறு இருந்தது. அவன் மதியம் சாப்பிடவில்லை போலும். குக்கர் ஒரு பிரேதத்தைப் போல் குளிர்ந்திருந்தது. குழம்பு சட்டியைப் பார்த்தாள். பாத்திரத்தின் உள் பகுதியில் ஒட்டிக் காய்ந்திருந்த குழம்பு நுரை கண்டிருந்தது. கை பட்டிருக்க வேண்டும். கெட்டுப்போன குழம்பின் வாசம் மூக்கில் ஏறியது. அது அவளுக்கு புளித்த கள்ளின் வாசனையை நினைவுக்குக் கொண்டு வந்தது.

3.

‘‘அங்க பாரடி… ஒரு பன மரத்துல எவ்ளோ பெரிய உடும்பு ஏறுதுன்னு”

பனையில் ஏறிக்கொண்டிருந்த சமுத்திரத்தைக் காட்டி இப்படித்தான் சொன்னாள் தனவள்ளி. தூரத்திலிருந்து பார்ப்பதற்கு அவனும் ஒரு பெரிய உடும்புபோல் தான் தெரிந்தான். சசி சிரித்தாள்.

‘‘புள்ளே… அது உடும்பு இல்ல, மனுசாளு” என்றாள் அவள்.

அது மனிதன்தான் என்று தெரியும். அவன் சமுத்திரம். வேண்டுமென்று தான் தனவள்ளி அப்படி சொன்னாள்.

‘‘இல்லடி…அது உடும்புதான்… வேணும்னா கிட்டப்போயி பாப்பமா?” என்றாள்.

‘‘சரி… பெட்டு. மனுசன்னா நீ எனக்கு ரூவா தரணும். உடும்புன்னா நான் ஒனக்குத் தருவேன். சரியா…”

‘‘சரி… வா”

இருவரும் பனைகள் இருந்த மேட்டை நோக்கி நடக்கும்போது சமுத்திரம் மரத்தின் உச்சிக்கு ஏறியிருந்தான். பச்சை மட்டைகளுக்கு நடுவே உட்கார்ந்து பாளையைச் சீவி அதன் முதல் சொட்டு கள்ளை பானையில் பிதுக்கிவிடும் போது தனவள்ளியும் சசியும் ஒரு பெரிய வரப்பில் ஏறி நின்றனர். மரத்தில் உட்கார்ந்தவாறே அவர்களை கவனித்த சமுத்திரம் பனையோலைகளைப் பிடித்து ஆட்டினான்.   

‘‘புள்ளே… அது உடும்பு இல்ல… முனின்னு நெனைக்கிறேன்”

பயந்து போய் பேசுவதுபோல் தனவள்ளி சொன்னாள். சசி கொஞ்சம் மிரண்டு விட்டாள். தனவள்ளிக்கு உள்ளூற சிரிப்பு. மறைத்துக் கொண்டாள்.

‘‘புள்ளே… சும்மா வெளையாட்டுக்குச் சொன்னேன். முனில்லாம் இல்ல, மனுசாளு தான். வா… கிட்டப்போயி பாக்கலாம்” என்றாள்.

பனையடிக்கு போனபோது சமுத்திரம் மட்டை ஒன்றை பிடித்துக்கொண்டு தன் கால்களின் பாதங்களால் பனையின் கழுத்தைத் தழுவினான். சரசரவென்று சாரையைப்போல் இறங்கும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் தனவள்ளியும் சசியும்.

ஒரு பத்தடி இருக்கும் போதே அங்கிருந்து தரையில் குதித்தவன், குதித்த வேகத்தில் தன் உருமாவை அவிழ்த்து தொடையிடுக்கில் நுழைத்துக்கொண்டு உட்கார்ந்தான். தனவள்ளி அவனுடைய வியர்த்து ஒழுகிய கறுத்த உடலை வெறிக்கப் பார்த்தாள். பனைமட்டையின் கருஞ்சிவப்பு பற்கள் கவ்விக் கிழித்த இடங்களில் மெல்லிய இரத்தக்கோடுகள். காயத்தைப் பார்ப்பதற்கு சங்கிலிப்பூரான் புரண்டிருப்பதுபோல் இருந்தது.

தனவள்ளியின் கண்கள் அவனையே வெறித்திருப்பதை அறிந்த சசி,

‘‘தனம் குட்டி… நீ கள்ள ஆட்டம் ஆடுற. இதுக்குத்தான் இம்மாந்தூரம் கூட்டியாந்தியா?” என்றாள்.

லேசாய் கண்ணடித்து கெஞ்சினாள் தனவள்ளி. சமுத்திரம் உட்கார்ந்து கொண்டே சிரித்தான். அந்தப் பெண்ணுக்கு வெட்கம் தின்றது.

கள் நிரம்பிய மொந்தை ஒன்றை திறந்து அதில் மிதந்த வண்டுகளை வழித்து தூர விசிறிவிட்டு தனவள்ளியிடம் நீட்டினான் சமுத்திரம். முகத்துக்கு நேரே வந்த மொந்தையிலிருந்து புளிப்பு வாடை மூக்கில் ஏறிக் கிறங்கினாள் அவள். கள்ளில் நுரை கோர்த்து இறந்து கிடந்த வண்டுகள் சசிக்கு குமட்டலைத் தந்தன.

‘‘தனம் குட்டி… நீ கள்ளுகூட குடிப்பியா?” என்றாள்.

தனவள்ளிக்கு சிரிப்பாணி கொள்ளவில்லை.

‘‘புள்ளே… இது ஒடம்புக்கு சத்தாக்கும். நான் சின்ன வயசுலேர்ந்து குடிப்பேன். இங்க பாரு… என் ஒடம்புல எம்மாஞ் சத்துன்னு” என்று தன் வலது கையை மடக்கி புஜத்தைக் காட்டினாள். ரவிக்கை இறுக்கி கையின் சதைப் பிதுங்கியது. மாந்துளிர் லேசாய் முத்தி தளிராகும்போது தோன்றும் தோலின் நிறத்துக்கும் அவள் அணிந்திருந்த ரவிக்கையின் மஞ்சள் நிறத்துக்கும் தனவள்ளி மிகுந்த அழகாய் தெரிந்தாள்.

சமுத்திரம் மொந்தைக்கள் முழுவதையும் தலையை அண்ணாந்து கொஞ்சம் கொஞ்சமாக வாய்க்குள் ஊற்றினான். கள் இறங்கும் தொண்டையில் வரிசையாக மீன் குதித்து ஓடுவதுபோல் இருந்தது. வாயின் குடங்கில் தேங்கிய நுரையை வழித்து விடாமல் தனவள்ளியை கிறங்க ஒரு பார்வை பார்த்தான். குவிந்து மூடிய அவள் உதடுகளில் ஒரு கள்ளச் சிரிப்பு. அதைப் பார்த்து ஒரு திருட்டு முழி முழித்த சசி, பனை மரம் நின்றிருந்த வரப்பில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

தனவள்ளி அவன் வாயில் ஒட்டியிருந்த நுரையைத் துடைத்து விட்டாள். அவள் கழுத்து வியர்வையைப் பார்த்தவன்,

‘‘பூண்டு வச்சி அரைச்ச கார சட்னி இருந்து தொட்டுக்கிட்டா, ச்சும்மா…கும்முனு இருக்கும்” என்றான்.

‘‘போய் அரைச்சி எடுத்துட்டு வரட்டுமா… ஆளையும் மூஞ்சையும் பாரு” என்று பகடி செய்து சிரித்தாள் தனவள்ளி.

‘‘நீயிருக்கும்போது எனக்கெதுக்கு பூண்டு சட்னி” என்று டக்கென்று அவளைத் தாவி அணைத்துக் கொண்டான். சுதாரித்து விலகுவாள் என்று நினைத்தான். தனவள்ளி மலர்ந்து போய் நின்றாள். அவளிடமிருந்து முனகும் ஓசை வந்தபோது சசி பனை மரத்துக்குப் பின் தன்னை மறைத்துக் கொண்டு காதை பொத்திக் கொண்டாள். அவளைப் பாரு சிரிக்கிறாள் என்று கெஞ்சுவதுபோல் விரலை நீட்டிக் காட்டினாள்.

சமுத்திரம் டக்கென்று அவள் விரலை வாயால் கவ்வி சூப்பினான். அப்போது அவள் செத்துப்போனாள் என்றுதான் நம்பத் தோன்றும். அவளால் ஒரு நிமிஷம் மூச்சுவிட முடியவில்லை. மொந்தையில் விழுந்திருந்த வண்டுகள் நினைவுக்கு வந்தவளாய் அவனை உதறிவிட்டு விலகி நின்றாள். கள் தீர்ந்த வெறும் பானை சமன் இல்லாமல் காற்றுக்கு அசைந்து கொண்டிருந்தது.

‘‘சசி புள்ளே, வா… போவலாம்” என்று அவளை துரிதப்படுத்தினாள். சீரற்ற மூச்சில் தப்பித்த பாம்பின் சீற்றம். உட்கார்ந்திருந்தவளின் இடுப்பை உசுப்பியதும் அவள் தடுமாறி வயலுக்குள் விழப்பார்த்தாள். சசியை இழுத்துக்கொண்டு நான்கு பனை தள்ளிப்போய் நின்று சமுத்திரத்தை திரும்பிப் பார்த்தாள். அவன் வாயை சுவைத்துக் கொண்டிருந்தான். வரப்பில் கிடந்த ஒரு மண் கட்டியை எடுத்து அவனை நோக்கி வீசியவள்,

‘‘டாய் பனங்காட்டு நரிப்பயலே… இப்ப வா பாக்கலாம்” என்று கொம்பு சீவினாள்.

ஆட்டம் மறுபடியும் தொடங்கப் போகிறதென்று தெரிந்துவிட்டது. ‘ஏய் போகலாண்டி’ என்று அவள் காலில் விழாத குறையாக கெஞ்சினாள் சசி. சமுத்திரமும் தனவள்ளியும் அந்த பனங்காடே அதிர சிரித்தார்கள்.

காய்ந்த பனங்குருத்து ஒன்று அவர்களுக்கு முன்பு விழுந்தது.     

4.

தனவள்ளி கதவைத் திறந்தாள். உள்பக்கமாய் திறந்த அதன் சத்தம் ஒரு பூனையின் குரல்போல் இருந்தது. போர்த்திய போர்வையை மரியதாஸ் நீக்கவில்லை. இன்னும் இறுக்கமாய் மூடிக் கொண்டிருந்தான். தூங்கியிருப்பானோ என்று நினைத்தவாறு அவன் தலைமாட்டுக்கு அருகில் நின்றிருந்தாள். வெளியில் லேசாய் தெரிந்த தன் கால்களை அவன் உள்ளிழுத்து முடக்கினான். அவன் இன்னும் தூங்கவில்லை. திறந்திருந்த கதவின் வழியே உள்ளே பார்த்தாள். சுண்ணாம்பு பூச்சு உதிர்ந்த சுவற்றில் கடிகார முட்கள் ஓடிக்கொண்டிருக்கும் டிக்டிக் சத்தம் கேட்டது. கலங்கிய மஞ்சள் வெளிச்சத்தில் கூர்ந்து பார்த்தாள். நேரம் பதினொன்று காட்டியது. தாழ்வார விளக்கை அணைத்து விட்டு இருட்டில் நின்று மறுபடி ஒருமுறை அவனைப் பார்த்தாள். கட்டில் நாரின் இறுக்கம் தளர்கிற சத்தம் கேட்டது. அவன் கால்களை குறுக்கி வயிறோடு கொண்டு வந்திருந்தான்.

உள்சென்று தாழிட்டபோது அவன் போர்வையை விலக்கி பார்ப்பதுபோல் ஓர் உணர்வு. கதவை ஒட்டி சிறிது நேரம் நின்றாள். அவன் வாய்க்குள் ஏதோ முனகும் குரல் கேட்டது. அவளைக் குறித்து ஏதோ சொல்கிறான். ‘கல் நெஞ்சக்காரி’ என்பதாகவும் அச்சொல் இருக்கலாம். அவளுக்கு நேராய் அப்படி சொல்லமாட்டான். அவள் அப்படியில்லை என்பது அவனுக்குத் தெரியும்.

சிமெண்ட் தரையில் பாய் விரித்து படுத்து பெருமூச்சு விட்டாள். இருள் சூழ்ந்த அந்த அறையில் சமுத்திரம் நடமாடுவதுபோல் இருந்தது. பனங்காட்டிலிருந்து உயிரற்ற அவன் உடலைத் தூக்கிக்கொண்டு வந்த நாளின் துயரங்கள் மனதைக் கவ்வின. யாரோ அவனை மரத்திலிருந்து கீழே தள்ளி கொன்று விட்டதாக ஊரில் பேச்சு அடிபட்டது. பனை மரத்தை தலைகீழாக கையாளத் தெரிந்தவன் அவன். பனை மரத்தில் வைத்து அவனை எதுவும் செய்ய முடியாது. ஒரு பனையிலிருந்து அருகேயிருக்கும் மறு பனைக்கு பாய்ந்து கவ்விக்கொள்ளும் உடல் அவனுக்கு. தனவள்ளிக்கு ஊர் பேச்சில் உண்மையில்லை என்று தெரியும்.

அவனை யாரோ திட்டமிட்டு சாகடித்திருக்கிறார்கள். யாராக இருக்கும்? தனவள்ளியின் அப்பா ஏற்பாடு செய்த ஆட்களாக இருக்கும். சாதி ஒரு பொல்லாத ஆணவம். அவர் அதற்கு பலியாகிவிட்டார். அவரை வெறியேற்றி வெறியேற்றி கொலைகாரனாக வடிவமைத்த யாரும் அதன் பிறகு அவருடன் இல்லை.

ஒருநாள் தனவள்ளி தொலைந்து போயிருந்தாள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. காட்டு தெய்வத்தின் காலடியில், அதன் ஓரத்தில் இருக்கும் கல் மறைவில் அணைந்த மண் விளக்குக்கு முன் தனவள்ளி செத்துப்போனவள் போல் கிடந்தாள். அவளைத் தூக்கி வந்து தலையில் தண்ணீரை ஊற்றினாள் அம்மா. இடது கையின் மணிக்கட்டுக்கு மேல் சமுத்திரம் என்று முள்ளால் கிழித்து எழுதியிருந்தாள். அந்த இடத்தில் ஓடிய நரம்புகளை எப்போது வேண்டுமானாலும் அவள் அறுத்துக் கொள்வாள் என்ற அச்சம் கூடி கலவரமடைந்தாள் அம்மா. தனவள்ளியின் அவிழ்ந்த முடியை வாரிக் கட்டிவிட்டபடி குலுங்கிக் குலுங்கி அழுதாள். வீட்டில் குற்றவுணர்வு நிரம்பிக் கொண்டது.

சமுத்திரம் இல்லாத ஊரில் தனவள்ளி நடைபிணமாகிப் போனாள். பைத்தியம் என்று சொல்லட்டும் என்று அரை நிர்வாணத்தோடு வீட்டில் திரிந்தாள். பிதுங்கிய மார்புகளையும் வெளித்தெரியும் தொடைகளையும் பார்க்க சகிக்காத அவளுடைய அப்பா தன்னுடைய அறைக்குள் தனிமைப்படுத்திக் கொண்டு குடித்து அழிந்தார். தனவள்ளியின் அம்மா அவளை ஓர் அறையில் தள்ளி பூட்டினாள்.

கண்கள் கறுத்து இடுங்கி அதிலிருந்த ஈரமெல்லாம் காய்ந்து வற்றிப்போய் அவலட்சணம் பீடித்துக் கொண்டது. தனவள்ளியின் கழுத்துப்பட்டை எலும்புகளில் தேய்மானம் தெரிந்தது. கைகள் குச்சிகளைப்போல் சூம்பிப் போயின. இதையெல்லாம் பார்க்க சகிக்காத அம்மா ஒருநாள் இரவு படுக்கையிலேயே உயிரைப் போக்கியிருந்தாள். தனது அறைக்குள் இருந்த சாராய போத்தல்களை ஒரு மத்தியான வேளையில் உடைத்து போட்டுவிட்டு தனவள்ளியின் கால்களைக் கட்டிக்கொண்டு அப்பா கேவினார். அந்தக் கண்ணீரில் எந்தவொரு போலித்தனமும் இல்லை. செய்த பாவத்துக்கான உண்மையான மன்றாடுதல் இருந்தது. அந்தக் கண்ணீரை விரக்தியாய் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

கொடும் பஞ்ச காலத்துக்கு ஆளான அடிமாடுகளை அந்த ஊரின் வழியே யாரோ ஓட்டிச்சென்ற நாளொன்றில் ஊர் எல்லையில், வாயில் ஈக்கள் மொய்க்க அப்பா இறந்து கிடந்தார். பங்காளிகள் அவரை அடக்கம் செய்யும் வரைக்கும் அவள் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. தன்னைவிட்டு எல்லோரும் போய்விட்ட அன்றைய இரவில் தன் துயரங்கள் அத்தனையும் கரைந்து போகுமளவுக்கு ஒப்பாரி வைத்து அழுதாள். ஊரார் ஒருமாதிரி அச்சம் கொண்டு விழித்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

5.     

நாலு மணிக்கெல்லாம் தூக்கம் போய்விட்டது. ஒன்றிரண்டு பறவைகளின் குரல்கள் கேட்கத் தொடங்கியிருந்தன. வெந்நீர் வைத்து குளித்துவிட்டு சமைத்து எடுத்துக்கொண்டு கதவைத் திறந்தபோது மரியதாஸை படுக்கையில் காணவில்லை. அவன் படுக்கும் கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டாள். வாசலில் டீவிஎஸ் பிப்டியை நிறுத்திக்கொண்டு ஹாரனை அடித்தாள் செல்வி. அவளுடன் வண்டியில் போகும்போது தனவள்ளிக்கு மரியதாஸின் நினைவாகவே இருந்தது.

மரியதாஸை நினைக்க கவலையாக இருந்தது.

யாரும் இல்லாமல் அனாதையாக நின்ற ஒருநாள் குடியிருந்த வீட்டை அப்படியே விட்டுவிட்டு கால்போன போக்கில் பைத்தியம்போல் நடக்கத் தொடங்கியவளை ஒரு முட்டுச்சந்தில் வைத்து வல்லுறவு செய்ய முயன்றவனை அடித்துத் துரத்திவிட்டு அவன்தான் ஆதரவு கொடுத்தான்.

தன்னுடைய சிறிய வீட்டில் அவளை உட்கார வைத்துவிட்டு, அந்த நேரத்தில் எங்கோ போய் நாலு இட்லி கட்டிக்கொண்டு வந்து கொடுத்தான். தன்னைப் புணரத் துடித்த ஒருவனோடு கட்டிப்புரண்டு போராடியதில் உடல் வலுவிழந்து பசி உக்கிரமடைந்திருந்தது. அவன் கொடுத்த இட்லியை மறுப்பேதும் காட்டாமல் வாங்கி உண்டாள். அன்று இரவு அவன் அவளிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. உடலைக் குறுக்கி படுத்துக் கொண்டாள். ரொம்ப நேரம் அவள் தூங்கவில்லை. மரியதாஸ் வாசலில் உட்கார்ந்து பீடிகளை ஊதிக்கொண்டிருந்தான்.

மறுநாள், அந்த நகர வீதிகளிலும் குப்பைகளிலும் சேகரித்த பழைய இரும்பு போன்ற பொருட்களை தள்ளுவண்டியில் கொண்டுபோய் அதற்குரிய சந்தையில் விற்பனை செய்துவிட்டு அவளுக்கு ஒரு புதுப்புடவை வாங்கிக்கொண்டு வந்தான் மரியதாஸ். அருகில் இருந்த பொதுக்கழிவறைக்கு அழைத்துப்போய் குளித்துவிட்டு வரச்சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த பெரிய நகராட்சி குப்பைத் தொட்டி ஒன்றை வெறித்துக் கொண்டிருந்தான். அதிலிருந்து அழுகிய ஆப்பிளின் வாசனை வந்து கொண்டிருந்தது.

குளித்துவிட்டு அவன் வாங்கிக் கொடுத்த புடவையக் கட்டிக்கொண்டு வந்தவளை ஆச்சர்யமாக பார்த்தான். அவளுக்குள் அப்படியோர் அழகு குடிகொண்டிருந்தது. எதுவும் பேசாமல் குடிசைக்குள் போய் உட்கார்ந்து கொண்டாள்.

‘‘போய் நாஸ்த்தா வாங்கினு வர்றேன்” என்றான். அவள் அவனைப் பார்க்கவில்லை.

நாலு இட்லி ஒரு வடை கொண்ட ஒரு பார்சலை அவள் முன் வைத்துவிட்டு அவன் போய்விட்டான். மரியதாஸ் திரும்பி வந்தபோது அந்தியாகியிருந்தது. அவள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். ஒரு பாதுகாப்பு உணர்வு அவளுக்கு வந்திருந்தது.

இரண்டுநாள் விட்டுதான் அவள் பெயரைக் கேட்டான்.

‘‘தனவள்ளி” என்றாள்.

ஊரைக் கேட்டான். அவள் சொல்லவில்லை. இவன் தானாகவே தன் பெயரையும் சொன்னான்.

‘‘எம்பேரு மரியதாஸ்” என்றான்.

நாட்கள் ஓடின. அவனுடைய கவனிப்பும் அக்கறையும் தனவள்ளியின் உடலில் பழைய அழகை மீட்டுக் கொண்டு வந்தது.

அவனுக்கும் சேர்த்து தனவள்ளி வீட்டிலேயே சமைக்கத் தொடங்கிய ஒருநாள்,

‘‘வெளில எல்லோரும், ‘வீட்ல யாரு… ஒன் சம்சாரமான்னு’ கேக்கறாங்க… என்ன சொல்றதுன்னு தெரில. நான் என்ன சொல்லட்டும்” என்றான்.

தனவள்ளி ஒன்றும் பேசாமல் நின்றாள்.

‘‘சம்சாரந்தான்னு சொல்லட்டுமா” என்றான்.

அவள் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை. அவள் அமைதியாக இருப்பதை சம்மதமாக நினைத்து, அவள் தன்னுடைய சம்சாரம்தான் என்று வெளியில் சொல்லத் தொடங்கினான் மரியதாஸ்.

தனவள்ளியின் கன்னக்கதுப்பில் மெல்ல சதைப்பிடிப்பு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. கழுத்துப்பட்டை எலும்புகள் கூட மெல்ல மூடிக்கொண்டு வந்தன.

மரியதாஸ் ஒருநாள் மதியத்துக்காய் சிரித்தபடியே வந்தான். தனவள்ளி அவன் முகத்தை பார்த்து பேசத் தொடங்கியிருந்தாள். தயங்கித் தயங்கி அவன் சொன்னான்:

‘‘ஒன்னும் விசேசமில்லையான்னு எல்லோரும் கேக்கறாங்க” என்றான்.

அவன் என்ன கேட்க வருகிறான் என்று தனவள்ளிக்கு தெரிந்தது. அமைதியாக இருந்தாள்.

‘‘நாமதான் இன்னும் கல்யாணமே பண்ணிக்கலையே… அப்பறம் எப்படி விசேசம் வரும். அதான்…”

மடித்து வைத்திருந்த உள்ளங்கையைத் திறந்து அவள் முன்னே காட்டி தயங்கிக் கொண்டிருந்தான். அது என்னவென்று பார்த்தாள். மஞ்சள் தடவிய தாலிக்கயிறு. சிறிய தாலி அதில் தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு கிராம் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்திருப்பான் போல. என்ன சொல்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்தாள். ஒரு கனத்த பெருமூச்சுக்கு பிறகு தாலியை வாங்கி கைகளில் வைத்து பார்த்துக் கொண்டே இருந்தாள். சமுத்திரம் அந்தக் கயிறின் மீது பனையில் ஏறுவதைப்போல் ஏறி அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

வீட்டிலிருந்த சாமி படத்தின் முன் நின்று அதை அவள் கழுத்தில் கட்டினான் மரியதாஸ்.

இதுநாள் வரை வீட்டுக்கு வெளியே கட்டில் போட்டு படுத்துக் கொண்டிருந்த மரியதாஸ் அன்று வீட்டுக்குள் படுத்துக் கொண்டான். தனவள்ளி எப்போதும் முடங்கிக் கொள்ளும் சாமி படத்துக்கு முன்பேயே சுருண்டு படுத்துக்கொண்டாள். வெகுநேரம் கதவருகிலேயே படுத்திருந்தவன், அவளிடமிருந்து குறட்டைச் சத்தம் கேட்டபோது படுக்கையை சுருட்டிக்கொண்டு வெளியே வந்து பழையபடி கட்டிலில் படுத்துக் கொண்டான்.

மரியதாஸ் வெளியே போவதை இருளில் பார்த்தபடியே படுத்திருந்தாள் தனவள்ளி. சமுத்திரத்தின் நினைவு ஆட்கொண்டு அழுத்தியது. இரண்டு பெரிய பனங்காய்களைப் போல் அவன் நெஞ்சின் மீது உருளவிட்ட தன் மார்புகள் தீப்பற்றிக்கொண்டு எரிவதுபோல் இருந்தது.

எப்போதும்போல் எல்லா நாளும் மரியதாஸ் வெளியிலேயே கட்டில் போட்டு படுத்துக் கொண்டான். இந்த மாதிரியான பெண்ணின் இதயத்துக்குள்ள மறந்து தொலைக்க முடியாத ஒரு கதையிருக்கும் என்று பழைய இரும்புக்கடைக்கார அண்ணாச்சி சொன்னது நினைவுக்கு வரவும், மனம் பொறுக்காமல் ஒருநாள் கேட்டான்.

‘‘யாரையாவது மறக்க முடியாம தவிக்கிறியா?”

எப்போது கேட்பான் என்று காத்திருந்தவள் மாதிரி எல்லா கதைகளையும் ஒன்றுவிடாமல் சொன்னாள்.

அதற்குப் பிறகு மரியதாஸ் அவளிடம் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. அவளாக மனம் மாறுவாள் என்று விட்டு விட்டான். எப்போது வீட்டை விட்டுப் போகிறான் என்றோ, எப்போது வந்து படுத்துக் கொள்கிறான் என்றோ தனவள்ளிக்கு தெரியாது.

கொஞ்சமாக இருந்த குடிப்பழக்கம் அவனிடம் அதிகரித்திருந்தது. சிலநாள் எங்காவது ரோட்டோரத்தில் நிறுத்தி தள்ளுவண்டியின் மீதே படுத்துக் கொள்வான். சிலநாள் குப்பைக் கிடங்கில் கிடந்தான் என்று சொல்லி யாராவது இழுத்துக் கொண்டு வந்து வீட்டு வாசலில் போட்டுவிட்டுப் போவார்கள்.

அவன் மீது பரிதாபமாகத்தான் இருக்கும். வீட்டுக்குள் அழைத்து படுக்க வைக்கலாம் என்று எண்ணம் வரும்போதெல்லாம் ரெண்டாகப் பிளந்த சமுத்திரத்தின் தலையும், குற்றவுணர்வுக்கு பலியான தன் வீட்டின் கொடும் பாழும் நினைவுக்கு வரும். அதை அப்படியே கைவிட்டு விடுவாள்.

குடித்துக் குடித்து மரியதாஸை காசநோய் பீடித்தது. இருமலும் சளியும் அவனை உயிரோடு வைத்து கொன்று போட்டது. அவனால் தள்ளு வண்டியை இனிமேல் இழுக்க முடியாது என்று தெரிந்த நாளிலிருந்து தனவள்ளி வேலைக்கு போகத் தொடங்கினாள். மரியதாசுடன் தள்ளு வண்டி இழுத்துக்கொண்டிருந்த பாக்கியராஜின் மனைவி செல்விதான் ஆஸ்பத்திரியில் கழிவுகளை கூட்டி சுத்தப்படுத்தும் வேலைக்கு அவளுடன் அழைத்துப் போனாள்.

‘‘டெம்ப்ரவரி வேலைதான்… இப்டியே இருந்தோம்னா நெரந்தரம் பண்ணிடுவாங்கோ” என்று சொன்னாள்.

‘அதனாலென்ன, ஒன்றும் பரவாயில்லை, நான் வேலைக்கு வரேன்’ என்று சொல்லி அவளுடன் போய்க் கொண்டிருந்தாள் தனவள்ளி.

யாருடனும் எதைப் பற்றியும் பகிர்ந்து கொள்ள விருப்பமற்றவளாய் தன்னை ஆரம்பத்தில் இருந்தே காட்டிக் கொண்டதால் யாரும் எதுவும் அவளைக் கேட்பதில்லை. அதுவொரு பாதுகாப்பான உணர்வைத் தந்தது. ஆனால், ரொம்ப நாளைக்கு அப்படியிருக்க முடியவில்லை. செல்வி தன்னுடைய கதைகளை ஒன்றும் மறைக்காமல் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அந்தக் கதையில் சந்தோசம், துக்கம், ஏமாற்றம், துரோகம் எல்லாமே இருந்தது. நம்மைப் போன்றவர்களுக்கு கதைகள் நிறைய இருக்கும். அதைச் சொல்லிவிடுவதன் மூலம்தான் நம்மை ஆற்றிக்கொள்ள முடியும். மறைத்துக் கொண்டு புழுங்குவதால் துன்பம்தான் அதிகமாகும் என்பாள் அவள்.

செல்வியின் கதை தன்னுடையதை விடவும் கொடுமை என்று யோசிக்கத் தொடங்கிய பிறகு, ஒருநாள் ஒட்டுமொத்த பாரத்தையும் அவளிடம் இறக்கி வைத்தாள். அந்தக் கதையைக் கேட்டு செல்வி தேம்பித்தேம்பி அழுதாள்.

6.

மரியதாஸ் கை ரிக்‌ஷா ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தான். பாக்கியராஜ்தான் ஏற்பாடு செய்து கொடுத்தான். இப்போது அவனும் கை ரிக்‌ஷாதான் இழுத்துக் கொண்டிருந்தான். பாட்டில்கள், பழைய இரும்புகள், வாகனங்களின் துருப்பிடித்த தகரப் பொருட்கள் முதலானவற்றை சேகரித்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, ஆட்களையும் லக்கேஜ்களையும் வைத்து இழுத்துக்கொண்டு செல்லும் வேலை ஈஸியாகவும் டீசண்டாகவும் இருக்கிறதென்று சொன்னான். மரியதாஸ் அவனுடன் சென்றான். ‘இருமலும் சளியும் நெஞ்சில் இருந்த மஞ்சாவை எடுத்துக்கொண்டு விட்டது. இருந்தாலும் யாருடைய உழைப்பிலும் என்னால் சாப்பிட முடியாது’ என்று கூறினான். தனவள்ளியைப் பற்றித்தான் அவன் கூறுகிறான் என்று பாக்கியராஜூக்கு தெரியும்.

செல்வியிடம் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டான்.

‘‘பாவம் அந்தாளு… குப்பை வண்டி தள்ளினாலும் எப்டி கெத்தா இருந்தாப்டி. இப்போ… சீக்கு வந்து இப்டி ஆயிட்டாப்ல. இதுக்கெல்லாம் ஒன் ப்ரண்டுதான் காரணம்” என்றான்.

செல்வி, தனவள்ளியைப் பற்றி பாக்கியராஜிடம் சொன்னாள். அவனுக்கு அந்தக் கதையைக் கேட்க வருத்தமாகத்தான் இருந்தது.

‘‘செத்தவன நெனைச்சே…உசுரோட இருக்கிறவன கொல்றது சரியா?” என்றான்.

 ‘‘அவளால சமுத்திரத்த மறக்க முடியலங்கறா…” என்றாள் செல்வி.

‘‘மறந்துதான் ஆவணும். இங்க யாருக்குத்தான் இப்டியான கதையில்ல?” என்றான்.

‘‘நான் நெறைய சொல்லிருக்கேன். சமுத்திரம் கூட சம்சாரம் கெணக்கா வாழ்ந்து தொலைச்சிட்டா போல… அவன் ரத்தமும் சதையுமா இன்னமும் தன் கூட வாழ்றான்னு நெனைக்கிறா” என்றாள் செல்வி.

‘‘இன்னொரு தபா பேசிப்பாரேன்” என்றான். செல்வி தலையாட்டினாள்.  

அன்று மதியம் சாப்பாட்டுக்கு உட்காரும்போது மரியதாஸ் குறித்து பேச்சை எடுத்தாள் செல்வி. தனவள்ளி தன் கலங்கிய கண்களை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டாள். காலியான குளுக்கோஸ் பாட்டில் ஒன்று அவள் பார்க்கும் திசையில் அசைந்து கொண்டிருந்தது. கழிவுகளை சேகரித்து வைத்திருந்த பெரிய பாலித்தீன் கவரில் இருந்து எப்படியோ அது பிதுங்கி வெளியே விழுந்திருந்தது.

தனவள்ளியும் அந்த குளுக்கோஸ் பாட்டில் போலத்தான். நிரம்பியிருந்த போது சமுத்திரத்துக்குள் சொட்டுச் சொட்டாக இறங்கி விட்டிருந்தாள். காலியான பிறகே மரியதாசுக்கு கிடைத்தாள். இப்போது அதுவொரு கழிவு. கழுவி சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ள பார்ப்பதால் என்ன பிரயோசனம்.

தனவள்ளியின் குரல் உடைந்து கமறியபோது செல்வி அவளின் தொடையில் தட்டி சாந்தப்படுத்தினாள். அவர்கள் மீது புளிய இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன.

7.

மரியதாஸ் ரெண்டுநாள் கழித்துதான் வீட்டுக்கு வந்தான். அந்த ரெண்டு நாட்களும் ஸ்டாண்டில் கை ரிக்‌ஷாவிலேயே படுத்துக் கொண்டான். தொடர்ச்சியாக புகைத்தும் குடித்தும் இருந்ததால் உடல் பலகீனம் அடைந்திருந்தது. மேற்கே இருக்கும் குப்பை மேட்டிலிருந்து இறங்கி அவனை நோக்கி வந்து கொண்டிருந்த நாயின் நசிந்த தோற்றம் அவனுடைய உடம்பிலும் ஏறியிருந்தது. களைப்படைந்து காணப்பட்டான்.

வீடு பூட்டியிருந்தது. தனவள்ளி வேலைக்குப் போகும்போது பூட்டிவிட்டு சாவியை சுவரில் ஓரிடத்தில் வைத்துவிட்டுப் போவாள். சிறிய சில்வர் பூட்டு தொங்கிய தாழ்ப்பாளின் துருவையே கண்ணெடுக்காமல் பார்த்தான். இந்த வீட்டுக்கு முதன்முறையாக பூட்டு என்ற ஒன்று போட்டது தனவள்ளிதான். அவள் வரும் வரைக்கும் அந்த துருப்பிடித்த தாழ்ப்பாள்தான் வீட்டுக்கு எல்லாம். அப்படியே சாத்தி தாழ்ப்பாளை ஒரு துளையில் நுழைத்துவிட்டுப் போய்விடுவான். இப்போது சின்னஞ்சிறிய அந்த சில்வர் பூட்டு தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்த பூட்டு வந்த பிறகு வீடே அழகான மாதிரி இருந்தது.

வாசல் பக்கமாக நின்று இருமிக் கொண்டிருந்தான். தனவள்ளி வர இன்னும் நேரமிருக்கிறது. கதவை ஒட்டி முன்வாசலில் கிடந்த கட்டிலில் உட்கார்ந்திருந்தான். நேரம் இருட்டிக் கொண்டிருந்தது. வாசல் ஓரத்தில் தனவள்ளி வைத்து வளர்க்கும் ரோஜா செடியின் சிறிய இலைகள் தெரியவில்லை என்று வாசல் விளக்கைப் போட்டான். அந்த செடியின் இலைகள் அசைவதை அவனால் பார்க்க முடிந்தது. வீட்டுக்கு முன்பிருந்த சாலையில் வாகனங்கள் குறையாமல் போய்க்கொண்டு இருந்தன. அவை ஒவ்வொன்றாக குறையத் தொடங்கிய போது செல்வியின் டீவிஎஸ் பிப்டியின் சத்தத்தை கூர்ந்து கேட்கத் தொடங்கினான். அதுவொரு வித்தியாசமான சத்தம். குப்பை லாரிகள் கொட்டும் குப்பைக்குள் மாட்டிக்கொண்டு பன்றிகள் கத்துமே அதுமாதிரி ஒரு சத்தம். அது ஹாரன் சத்தம் கிடையாது. வண்டியின் சத்தம். செல்வியும் தனவள்ளியும் வரும் நேரம் அவனுக்குத் தெரியும். காதை ரோடு பக்கமாக திருப்பி அந்த சத்தம் வருகிறதா என்று கூர்ந்து கேட்டான். வருவது போலிருந்தது. வாசல் படலைத் திறந்து ஒரு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு அங்கே போய் நின்று கொண்டான்.

செல்வி மட்டும்தான் வந்தாள். மரியதாஸ் வாசல் படலுக்கு அருகிலேயே நின்றிருப்பதை சற்று தூரத்திலேயே கவனித்தவள், வாசலில் வண்டியை நிறுத்தினாள். மரியதாஸ் தான் கேட்டான்.

‘‘எங்க… தனம் வர்லியா?”

செல்வி குழப்பமடைந்தாள்.

‘‘தனம் வீட்ல இல்லியா! காலைல வந்தப்ப ஒடம்பு சரில்ல, நீ போ… நாளைக்கு வாரேன்னா. நான் போய்ட்டன்” என்றாள்.

மரியதாஸ் பீடியை ஆழ்ந்து இழுத்துவிட்டபடி செல்வியைப் பார்த்தான்.

‘‘சரி… நீ போ… இங்கதான் எங்காவது போயிருப்பா” என்றான்.  

செல்வி வண்டியை உசுப்பியபோது அதே பன்றியின் உறுமல். அவள் அங்கிருந்து போனபிறகு, கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்து காத்திருக்கத் தொடங்கினான். மரியதாஸ் வந்து கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் ஆகியிருந்தது. அவள் போய்விட்டாள். இனி வரமாட்டாள் என உள்மனம் சொன்னது.

அந்த துருப்பிடித்த தாழ்ப்பாளில் தொங்கிய சிறிய சில்வர் பூட்டை கொஞ்ச நேரம் நின்று பார்த்தான். அவநம்பிக்கை தரக்கூடிய சின்னமாக அது அசையாமல் தொங்கிக் கொண்டிருந்தது. அழுகை வருவதுபோல் இருந்தது.

வாசலில் நின்றிருந்த கை ரிக்‌ஷாவை எடுத்துக்கொண்டு காய்கறி கழிவுகள் அழுகி நாறும் மார்க்கெட்டின் கோணல் சந்துக்கு வந்து நிறுத்தியபோது அந்த இருட்டில் தான் மட்டும் நிராதரவாக நின்றிருப்பதுபோல் இருந்தது.

உடலைக் கோடரியால் பிளப்பதுபோல் உள்ளிருந்து ஒரு கடுமையான இருமல் வந்தது. நெஞ்சுக்கூட்டிலிருந்து கிளம்பி தொண்டையை அடையும் அந்தச் சளியை கையில் ஏந்தி அப்படியே முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும்போல் இருந்தது மரியதாசுக்கு.  

மௌனன் யாத்ரீகா – மௌனன் யாத்ரீகா – இதுவரை ஏழு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வெளியான நூல் “பாணர் வகையறா”. தொடர்புக்கு mounanyathriga@gmail.com

சேரன் கவிதைகள்

0

அப்படி ஒரு கனவு இல்லை என்றார்கள்

அப்படி ஒரு கனவு இல்லை என்றார்கள்
மலைகளுக்கு மேல் கழுகுகள் பறக்காது;
பறந்தாலும் அவற்றின் சிறகுகளுக்குப்
பனியின் பாரத்தைத் தாங்க முடியாது என்றார்கள்.

கனவுகளின் பாரம்
காதலரும் தாங்க முடியாத ஒற்றைத் தனிப் பாறை என்றார்கள்.

கனவற்றவர்கள் போய் இறக்குமிடம்
அந்தீசு மலையின் தெற்குப் புறம் என்றார்கள்.

காற்று, தண்ணீராய் மாறும் மலை அது என்றார்கள்
ஒவ்வொரு மலைக்கும் ஒரு கதை
ஒவ்வொரு ஆற்றுக்கும் ஒரு கதை
ஒவ்வொரு கனவுக்கும் ஒரு கதை

கவிஞனுக்கு மட்டும் கவிதை

***

ஒளிக்கும் இருளுக்கும் அப்பால்

பித்தன், பாவலன், காதலன் மூவரும்
காலடி மண்ணையும் காதலி கண்ணையும்
முத்தமிட முடியாமல் தோற்றுப் போனோர்

ஆயிரம் கால்கள் அவர்க்கிருந்தாலும்
நடக்க மறந்து தடுமாறுகிறர்கள்
அறம் முறிந்த கற்பனைகளுடன்
புதிய வடிவங்களைச் செதுக்குகிறார்கள்

அவர்களில் பலர்
ஊனம் ஞானத்தைத் தருகிறது என்கிறார்கள்

உண்மைதான்.
பார்வை இழந்தவர்கள்
ஒளி பற்றித் தருகிற படிமங்களுக்கு
மற்றவர்கள் கவிதை இணையாகாது
காலற்றவள் தனது எந்திரக் குதிரையை
குதிரையாக மாற்றுகிறாள்

அவளுக்கு எஞ்சியிருக்கும்
இரண்டே இரண்டு பொன்னிறச் சிறுவிரல்களால்
தானியங்களைக் கொய்கிறாள்
“என்னே விரைவு!” – எனப்
பின்னே ஒதுங்குகின்றன கிளிகள்

அழகுதான். அழகுதான்.
என்றாலும்
வெற்று வார்த்தையும் வசனமும்
அலங்காரமும் எங்களுடைய போலி
உணர்வுத் தோழமையும்
காலற்றவர்களை நடைபாதைகளிலிருந்தும்
எமது சிந்தனைகளிலிருந்தும்
வெளியேற்றுகின்றன.

அவர்களுக்கு ஒளி
உங்களுக்கு இருள்
கவிஞனோ இரண்டுக்கும் அப்பால்.

***

நீர் விளக்கு

ஒன்பது நிமிடங்கள்
ஆயிரம் ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றுகிறோம்.
அலை எழுப்ப மறுத்தன.

மண்ணிலிருந்தும் மாடங்களிலிருந்தும்
அவை மேலெழுகின்றன.
ஒளியை விட மேலோங்கும் நீலப் புகை

மந்திர வனப்பும் கடவுளர் விருப்பும் கூட வர
அவை
சென்ற இடமும் ஒளிர்ந்த இடங்களும்
இறங்கிய நிலமும்
தொழுநோய் வராத புண்ணிய பூமி
என்பது ஐதீகம்

அதை நம்பியவர்களின்
வீட்டிலும் நாட்டிலும் மாளிகைகளிலும்
அவை இறங்கவில்லை

துயரம் தெருக்களாய் விரிந்த
பாலை வனங்களிலும்
எல்லோருடைய வியர்வையும்
எல்லோருக்கும் மணக்கும் அகதி முகாம்களிலும்
பள்ளிவாசல்களின் மேலும்
கையறு நிலையில் மருத்துவமனையில் இருந்து
வீசப்பட்ட கறுப்பு மக்களின் இறுதி விருப்பின் மீதும்
மீன்களற்ற கடலின் மீதும்
அவை இறங்கின.

நீரில் எரியும் விளக்கு.

***

திரும்பத் திரும்ப நந்திக் கடலை நோக்கியே நடந்து கொண்டிருப்போம் – நிலாந்தன்

3

நேர்கண்டவர் : அகர முதல்வன்

நிலாந்தன் -ஈழத்தின் அரசியல் ஆய்வாளர்களில் மிகக் குறிப்பிடத் தகுந்தவர். அதுமட்டுமில்லாது கவிஞர், ஓவியர், கட்டுரையாளர் பல்கலை ஆற்றல் கொண்டவர். ”மண்பட்டினங்கள்”, “யாழ்ப்பாணமேஓ எனது யாழ்ப்பாணமே”  “வன்னிமாண்மியம்”, ”யுகபுராணம்” ஆகிய இவரின் கவிதைத் தொகுப்புக்கள் ஈழத்தமிழரின் நவீன விடுதலைப்போரை இலங்கைத்தீவின் பண்டைய வரலாற்றோடு விவாதித்தவை. இவருடைய “புலிகளுக்கு புலிகளுக்கு பின்னரான தமிழ் அரசியல்” என்ற கட்டுரைத் தொகுப்பு 2018ம் ஆண்டு காலச்சுவடு பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்திருக்கிறது. ஈழப்போராட்டத்தின் முதல் தெருவெளி நாடகமான “விடுதலைக்காளி ” படைப்பின் எழுத்தாளரும் நெறியாளரும் இவர்.

***

BUNKER FAMILY
Pen and ink on paper,1990 (நிலாந்தன்)

ஈழத்தமிழரின் அறிவுஜீவிப் பரப்பில் நீங்களுமொருவர். தமிழ் இயக்கங்களால் கொல்லப்பட்ட நிறைய அறிவுஜீவிகளையும் ஈழ ஆயுதப்போராட்டத்தின் வரலாறு கொண்டிருக்கிறது. இன்றைய சூழலில் ஈழத்தின் அரசியலை எதிர்வு கூறவல்லவராக உங்களையும் கருத முடியும். முள்ளிவாய்க்கால் பேரூழிக்கு பின்பான இன்றைய திகதிவரை ஈழத்தமிழ் சமூகம் தவறவிட்ட அரசியல் அணுகுமுறையென எதனைச் சுட்டிக்காட்டுவீர்கள்?

நிலாந்தன் அறிவு ஜீவியல்ல. அரசியற் சோதிடனும் அல்ல. ஒரு சாட்சி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். 2009 மே மாதத்திற்குப் பின்னரான அரசியல் என்பது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப்பெறும் போராட்டம்தான். அப்படியொரு போராட்டம் குறிப்பாக தாயகம், டயஸ்போறா, தமிழகம் ஆகிய மூன்று பரப்புகளையும் இணைத்து இன்றுவரை எழுச்சி பெறவில்லை. இப்பொழுது எங்களிடம் மக்கள் இயக்கம் எதுவும் இல்லை. இருப்பதெல்லாம் தேர்தல் மைய அரசியல்தான். அதிலும் கூட மக்களை விமர்சனபூர்வமாக சிந்திக்க வைக்கும் அமைப்புக்கள் அல்லது கட்சிகள் இனிமேற்தான் பலமடைய வேண்டும்.

நீங்கள் கூறும் தாயகம் – புலம் – தமிழகம் என்ற மூன்று பரப்புக்களும் இணைத்து போராட்ட எழுச்சி நிகழவில்லை. ஆனால் தனித்தனியாக நிகழ்கிறது என்ற மயக்கமும் இருக்கச் செய்கிறது. குறிப்பாக புலம்பெயர் அதாவது டயஸ்போறோ சூழலில் சர்வதேச நீதியைப் பெறும் போராட்டம் இன்று அறவே இல்லாமல் இருக்கிறது. ஐ.நாவின் முன்றலில் வருடத்தில் ஒருமுறை ஒன்று கூடுவது சடங்காக ஆக்கப்பட்டிருக்கிறதோ என்ற கவலையும் எனக்கிருக்கிறது. நீங்கள் புலம்பெயர் அரசியல் சக்திகளை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

மிழ் டயஸ்பொறா இல்லையென்றால் 2009இல் பின்முறித்து வீழ்த்தப்பட்ட தமிழ்கூட்டு உளவியலை நிமிர்த்துவது கடினமாக இருந்திருக்கும். நிதி ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தமிழ்க்கூட்டு மனோநிலையை 2009-க்கு பின்வந்த ஆண்டுகளில் நிமிர்த்தி எடுத்தது குறிப்பிடத்தக்க அளவுக்கு தமிழ் டயஸ்பொறா தான்.

2009-க்குபின் உடனடுத்து வந்த ஆண்டுகளில் தாயகத்தில் ஒரு பயக்கெடுதியான சூழல் இருந்தது. இதனால் டயஸ்பொறா எல்லாவற்றையும் துணிந்து முன்னெடுத்தது. அஞ்சல் ஓட்டக்கோல் தமிழ்  டயஸ்பொறாவின் கையில் இருப்பதாக ஒரு தோற்றம் எழுந்தது.

இனப்படுகொலைக்கு எதிரான நீதிக்கான போராட்டத்தின் பெரும்பகுதியை டயஸ்பொறா தான் முன்னெடுத்தது. ஜெனிவா அரசியலில் பெரும்பகுதியை டயஸ்பொறா  தான் முன்னெடுத்தது. தாயகத்தில் நடக்கும் பெரும்பாலான போராட்டங்களுக்கு டயஸ்பொறாதான் நிதிஉதவிகளை வழங்கியது. பெரும்பாலான கட்சிகளுக்கு டயஸ்பொறாதான் நிதிஉதவிகளை வழங்கியது. இப்பொழுதும் வழங்குகிறது.

ஆனால் இங்கே பிரச்சினை என்னவென்றால் டயஸ்பொறாவே பிரதான   மையமாகச் செயற்பட முடியாது. மையம் தாயகத்தில் தான் இருக்கலாம்.  டயஸ்பொறாவும் தமிழகமும் பின்தளங்கள் தான். 2015க்கு பின் தாயகத்தில் ஒரு பொருத்தமான மையத்தை கட்டி எழுப்பக் கூடிய சூழல் ஏற்பட்டது. ஆனால் தமிழ் கட்சிகள் அதை பொருத்தமான விதத்தில் பயன்படுத்தவில்லை. உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புகளும் ஒரு கட்டத்துக்கு மேல் பாய முடியவில்லை. இந்த வெற்றிடம்தான் டயஸ்பொறா ஒரு பதில் மையமா என்ற மயக்கத்தை ஏற்படுத்தியது. எனவே இங்கு தவறு தாயகத்தில்தான் உண்டு.

அதேசமயம் டயஸ்பொறாவிற்கும் தாயகத்துக்கும் இடையே அடிப்படையில் கள   யதார்த்த வேறுபாடு உண்டு.  தாயகத்துடன் ஒப்பிடுகையில் டயஸ்பொறா அதிகம் சுதந்திரமான ஒரு பரப்பாக காணப்படுகிறது என்பதனால் அங்கே இருப்பவர்கள் ஆயுதப்போராட்டத்தின் தொடர்ச்சியாக சிந்திக்கிறார்கள். ஆனால் தாயகத்தில் யதார்த்தம் அவ்வாறு இல்லை. இதனால் டயஸ்பொறாவில் செயற்படும் பல அமைப்புக்கள் தாயகத்தில் செயற்படுவதற்கு சட்டரீதியிலான பிரச்சினைகள் உண்டு.

ஆயுதப் போராட்டத்தின் தொடர்ச்சியாக காட்டிக்கொண்டு தாயகத்தில் சட்டரீதியாக செயல்பட முடியாது. இந்தியாவிலும் செயற்பட முடியாது. பத்து ஆண்டுகளின் பின்னரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் உலகின் பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே இருக்கிறது என்பதனை கவனிக்க வேண்டும். எனவே சட்டரீதியாக தாயகம்; தமிழகம்; டயஸ்போரா ஆகிய மூன்று கட்டமைப்புகளும் இணைவதற்கு ஜனநாயகத்தை விட்டால் வேறு இடையூடாட்டத் தளம் கிடையாது. பொருத்தமான ஜனநாயக தரிசனத்தைக் கொண்ட ஒரு கட்டமைப்பு தாயகத்தை மையமாகக்கொண்டு டயஸ்பொறாவையும், தமிழகத்தையும் ஒன்றிணைக்காத வரை ஈழத்தமிழ் மக்களின்  அரசியலானது வாக்குவேட்டை அரசியலாகவே சுருங்கிக் காணப்படும்.

உங்களுடைய “மண்பட்டினங்கள்” என்ற கவிதைத்தொகுதி ஈழத்தமிழர் போரிலக்கியப் பிரதிகளில் அதி சிறந்தது. அதில் போராளிகளை “தஸ்யுக்களாக” உருவகித்து இருப்பீர்கள் அல்லவா!-அதன் பிறகான காலங்களில் ஏன் கவிதை இலக்கியத்தில் அவ்வளவு தொடர்ச்சியான தீவிரத்தைக் காட்டவில்லை?

ண்பட்டினங்களில் வரும் தஸ்யுக்கள் மக்களே.

அத்தொகுப்புக்குப் பின்னரும் நான்கு தொகுப்புகள் வந்தன.

நான் தொடர்ச்சியாகக்  கவிதை எழுதுவதில்லை. தொடர்ச்சியாக ஓவியங்கள்; கார்ட்டூன்கள் வரைவதுமில்லை. ஆனால் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதுவேன். கடந்த பத்தாண்டுகளாக ஈழத்தமிழர்கள் மத்தியில் பொருத்தமான கருத்து உருவாக்கத்தைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு கவிதை ஒரு கட்டத்துக்கு மேல் போகாது. கூட்டு காயம்; கூட்டு மனவடு; கூட்டுத் துக்கம்; கூட்டு அவமானம்; கூட்டுச் சோர்வு போன்றவற்றுள் அழுந்திக் கிடந்த எனது மக்களுக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டிருந்தது..

இறந்த காலத்தை மம்மியாக்கம் செய்துவைத்துக் கொண்டு நிகழ்காலத்துக்கு வரமுடியாமல் தத்தளிப்போரை கள யதார்த்தத்தை நோக்கி கிரிட்டிக்கலாக – விமர்சன பூர்வமாக சிந்திக்க வைக்க  வேண்டும்.

புலிகள் இயக்கம் மீதான விமர்சனங்கள் பலதுண்டு. அவற்றில் உண்மைகளும் உண்டு. கண்மூடித்தனமான பொய்களும் கற்பனைகளும் உண்டு. ஆனால் இந்தப்புலி எதிர்ப்பின் ஒரு முத்தல் பருவம் தமிழ் தேசியவாத போராட்டத்திற்கு எதிரானதாக. சிலரின் கருத்துக்களில் தோன்றியிருக்கிறது, அதுகுறித்து நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

ல்லா மக்கள் போராட்டங்களிலும் தவறுகள் இருக்கும்.  அதிலும் ஆயுதப்போராட்டத்தில் அதிகமாக இருக்கும். ஓராயுதப் போராடத்துள் இருக்ககூடிய தவறுகளுக்காக அந்த மக்கள் கூட்டத்தின் போராட்டமே பிழை என்று கூற முடியாது. தமிழ் மக்களின் போராட்டம் நியாயமானது; நீதிக்கானது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆயுதப் போராட்டம் இல்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு ஏன் நீதி கிடைக்கவில்லை?..

தமிழ் தேசியவாதம் என்பதே ஈழத்தின் ஆதிக்க சாதியொன்றிற்கான அரசியல் கோஷமென சில ஈழத்தமிழ் படைப்பாளிகளே கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கின்றனர். மேலும் புலிகள் இயக்கம்  சாதி ஒழிப்பிற்கான நிகழ்ச்சி நிரலைக்கொண்டிருக்கவில்லை எனவும் ஒருவகை தட்டையான கருத்துக்களை எழுதுகிறார்களே, அதுபற்றிய உங்கள் பார்வை என்ன?

மிழ் தேசியத்தை சாதிமைய தேசியமாகக் கருதும் பலரும் தேசியம் என்றால் என்ன என்ற விளக்கமின்றி காணப்படுகிறார்கள். சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் தவறாக விளங்கிக்கொள்ளப்பட்ட ஒரு சொல் சமஸ்டி. அப்படித்தான் தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் தவறாக விளங்கிக் கொள்ளப்பட்ட ஒரு சொல் தேசியம். அந்தச் சொல்லை சாதாரண தமிழ்மக்கள் மட்டுமல்ல ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகளும் போராளிகளும் கூட அதற்குரிய முழுமையான அர்த்தத்தில் விளங்கி வைத்திருந்தார்களா? என்ற கேள்வி இங்கே உண்டு.

தேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். தேசியம் எனப்படுவது ஒரு பெரிய மக்கள் திரட்சியின் கூட்டுப் பிரக்ஞை.

பாரம்பரிய தேசியவாதம் தொடர்பான கோட்பாடுகளின்படி தேசத்தை அல்லது தேசிய உணர்வை இனம்; மொழி; நிலம்; பண்பாடு; பொதுப்பொருளாதாரம் போன்றவை பெருமளவுக்குக் கூட்டாக உருவாக்குகின்றன.  இவை தவிர மற்றொரு அம்சமும் உண்டு. அதுதான் அடக்குமுறை. எந்த ஓர் இன அடையாளம் காரணமாக மொழி அடையாளம் காரணமாக ஒரு மக்கள் திரள் ஒடுக்கப்படுகிறதோ  அதே அடையாளங்களின் பெயரால் அவர்கள் திரள் ஆகிறார்கள். எனவே தமிழ்த்தேசியம் எனப்படுவது அடக்குமுறைக்கு அதாவது இனப்படுகொலைக்கு எதிரான திரட்சிதான்.

இனப்படுகொலை எனப்படுவது தனியே ஒரு சாதிக்கு எதிரானது அல்ல. ஒரு சமயத்துக்கு எதிரானது அல்ல. ஒரு பாலுக்கு எதிரானது அல்ல. அது ஓர் இனத்துக்கு எதிரானது. ஒரு மக்கள் கூட்டத்தை   தேசமாக வனையும் அடிப்படை அம்சங்களை அழிப்பதே  இனப்படுகொலை. எனவே தமிழ் மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகத் திரட்சியுற்றார்கள். அது ஒரு சாதித்திரட்சி அல்ல. பிரதேசத் திரட்சியுமல்ல.

ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாகக் கூட்டிக்காட்டும்  எல்லா அம்சங்களும் முற்போக்கானவைகளாக  இருக்க வேண்டும் என்றில்லை.  சாதியை சமயத்தை பிரதேச வாதத்தை முன்னிறுத்தும் போது அது சமூகத்துக்குள் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறது. எனவே பெருந்திரள் சிதைகிறது. அதனால்தான் ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிப்படையில் ஜனநாயக அடிச்சட்டத்தின் மீது மக்களைத்  திரளாக்க வேண்டும். அதைத்தான் மேற்கத்திய அறிஞர்கள் தேசியவாதத்தின் உள்ளடக்கம் ஜனநாயகமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இதன்படி பால், சாதி, சமய, பிரதேச ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தும் ஒருவர் தேசியவாதியாக இருக்க முடியாது.

ஆனால் ஆயுதப்போராட்டம் எனப்படுவது அதிகபட்சம்  படைத்துறைப் பண்புமிக்கது. அங்கே தேசியத்தின் ஜனநாயக உள்ளடக்கத்தைப் பாதுகாப்பது சவால்கள் மிகுந்தது. தமிழ் தேசியத்தின்  ஜனநாயக உள்ளடக்க போதாமைகள் காரணமாகத்தான் இயக்கச் சண்டைகள் வந்தன. மனித உரிமை மீறல்கள் ஏற்பட்டன. இறுதியிலது தோற்கடிக்கப்பட்டது. ஆனாலும் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் என்ற அடிப்படையில் அது முற்போக்கானது. அது தேசியப் பண்புடையது.

விடுதலைப்புலிகள் இயக்கம் வெளிப்படையாக சாதி ஏற்றத்தாழ்வுகளைக் கையாளவில்லை. ஆனால் அது சாதி ஏற்றத் தாழ்வுகளை ஒரு கொள்கையாகப் பேணியது என்று குற்றம் சாட்டுபவர்கள் அதற்குரிய ஆதாரங்களைக் காட்ட வேண்டும்.

பின் முள்ளிவாய்க்கால் காலத்தில் வெளியாகும் ஈழப் படைப்பிலக்கியங்கள் குறித்து விமர்சனங்களோ அல்லது ஒரு ஆரோக்கியமான விவாதமோ நடக்கவில்லை. மாறாக அது இயக்க மனோபாவங்களின் சார்பு நிலைகளோடுதான் அணுகப்பட்டிருக்கிறது. நீங்கள் ஒரு ஆய்வாளராக விமர்சனப் பணியையும் செய்யலாம் அல்லவா?

டந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நான் கருத்துருவாக்கத் தளத்திலேயே கவனத்தைக் குவித்து வருகிறேன். இலக்கிய விமர்சனமும் கருத்துருவாக்கந்தான். ஆனால் அரசியல் விமர்சன கட்டுரைகள் இலக்கிய விமர்சனங்களை விடவும் பரந்த வெகுசனப்பரப்பை நோக்கிச் செல்லும். ஈழத்தமிழர்களின்  உடனடித்  தேவைகளில்  அதுவுமொன்று.

இனப்படுகொலைக் குற்றச்சாட்டு போர்க்குற்றமாகவும் – சர்வதேச விசாரணை கலப்பு மன்ற விசாரணையாகவும் திரைந்து இன்று பேரழிவு நிகழ்த்தியவர்கள் ஆட்சிக்குத்திரும்பியிருக்கும் நிலையில் தமிழ் மக்களின் பிரதான (வேறுகட்சி இல்லாமை – கவனத்தில் கொள்ள வேண்டும்) மிதவாத கட்சியாக இருக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை அவதானித்து வருகிறீர்களா?

கூட்டமைப்பு முதலில் தன்னைப் புலிநீக்கம் செய்தது. பின்னர் தேசியநீக்கம் செய்தது. இனப்படுகொலைக்கு எதிரான நீதியை அது பெறப்போவதில்லை. அது அவர்களுடைய நிகழ்ச்சி நிரலில் இல்லை. பரிகார நீதியல்ல நிலை மாறுகால நீதியே அக்கட்சியின் நிகழ்ச்சி நிரல். கடந்த 2018 ஆம்ஆண்டு  ஒக்டொபர் மாதத்தில் மைத்திரி பாலசிறிசேன  செய்த யாப்புக் குழப்பத்தோடு நிலை மாறுகால நீதி அனாதையாகி விட்டது.

இப்பொழுது ராஜபக்சக்களின் இரண்டாவது வருகையோடு அது காலாவதியாகி விட்டது. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கூட்டமைப்பு நான்கு தடவைகள் உடைந்து விட்டது. ஆனால் அதற்கு எதிராகக் கிளம்பிய மாற்றுஅணியும் இப்பொழுது இரண்டாக உடைந்து விட்டது. அதாவது கூட்டமைப்பும் பலமிழக்கிறது.  மாற்று அணியும் பலமாக இல்லை.

தமிழ்தேசிய மக்கள் முன்னணி அமைப்பியல் ரீதியாக வெறும் அறிக்கையும் –எதிர் அறிக்கையும் வெளியிடுகிற அமைப்பாகவே தொடர்ந்து வருகிறது என்பதே எனது வருத்தம். தமிழ்தேசிய கூட்டமைப்பு பதவிக்கும் அதிகாரத்திற்குமாய் எங்கள் குருதியை பலியிட்டு விட்டனர். அப்படியெனில் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளை எடுத்தியம்பவல்ல களச்சக்திகளாக உருவாகப்போவது யார்?

பாரதூரமான வெற்றிடம் நிலவுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்துக்கு வந்துபோன விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் கலாநிதி திருமாவளவன் சொன்னார்…  “உங்களுடைய தலைவர்களில் அநேகர் தீர்ந்து போன சக்திகள்-spent forces” என்று. ஒரு புதிய கூட்டுக்காக கடந்த ஐந்தாண்டுகளாக உழைத்தோம். முடியவில்லை. ஒரு புதிய ஐக்கிய முன்னணியை உருவாக்கி அதனூடாக புதிய தலைமைகளைஉருவாக்கலாம் என்றும் சிந்தித்தோம். புதிய தலைவர் தலைவிகளை செதுக்கியெடுக்க வேண்டும். அதற்குப் பொருத்தமான ஒரு மக்கள் இயக்கம் அல்லது ஒர் ஐக்கிய முன்னணி தேவை.

“ஈஸ்டர் குண்டுவெடிப்பு” மிகக் கொடூரமான பின்விளைவுகளை இலங்கையின் தேர்தல் அரசியலிலும் ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். கிட்டத்தட்ட அனைத்து சிறுபான்மை இனங்களுக்கு எதிரான ஆட்சியாளர்கள் அதன் மூலம் வெற்றி அடைந்திருக்கிறார்கள். இந்த அரசியல் மாற்றங்கள் எல்லாம் வெறும் தற்செயலானதென்று கருத முடியுமா?

னக்குச் சூழ்ச்சிக் கோட்பாடுகளின் மீது அதிகம் ஈடுபாடில்லை. கடந்த பத்தாண்டுகளில் சூழ்ச்சிக் கோட்பாடுகளால் முன்னேற முடியாமல் தவிக்கும் ஒரு மக்கள் கூட்டம் நாங்கள். எனினும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையின் 80ஆவது பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது……

“நாடு 2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலையும், 2020ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல்களையும் எதிர்கொள்வதற்குக் காத்திருக்கும் ஒரு சூழ்நிலையில், வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதிகரித்தளவிலான இனக்கலவரங்கள் என்பன தூண்டப்பட்டனவா? நாளாந்த வாழ்க்கையைச் சீர்குலைத்து, சமூகங்களுக்கு – குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்களுக்கு – மத்தியில் பயத்தையும், அச்ச உணர்வையும் தோற்றுவிப்பதற்கென இவை முன்னெடுக்கப்பட்டனவா? உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் அதனை அடுத்து இலங்கையில் ஒருசில பாகங்களில் இடம்பெற்ற இனக்கலவரங்கள் என்பன பொதுமக்கள் மத்தியில் முன்னர் எப்பொழுதும் இருந்திராத அளவிலான ஒரு அச்ச உணர்வைத் தோற்றுவித்ததுடன், நாட்டின் அரசியல் தலைமை மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்பு என்பன தொடர்பான விமர்சனங்களையும் எடுத்து வந்தன. இதே காலகட்டத்திலேயே அரசாங்க மாற்றம் இடம்பெற வேண்டும் என்ற குரல்களும் நாட்டில் எழுப்பப்பட்டுக் கொண்டிருந்தன. இவற்றை வெறுமனே தற்செயல் நிகழ்வுகளாகக் கருத முடியாது. இவை தொடர்பாக மேலும் புலன்விசாரணைகள் முன்னெடுக்கப்படுதல் வேண்டும். மேலும், புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஒருசில பிரிவினரின் வகிபங்கு குறித்தும், பாதுகாப்பு, தேர்தல் செயன்முறை, அரசியல் நிலவரம் மற்றும் இலங்கையின் எதிர்காலம் என்பவற்றை  நிர்ணயிப்பதில் அவர்கள் முன்னெடுத்து வரும் முயற்சிகள் தொடர்பாகவும் முக்கியமான கேள்விகள் எழுப்பப்படுதல் வேண்டும்.”

2009 க்குப் பின் ராஜபக்ச சகோதரர்கள் முன்னெடுத்த யுத்த வெற்றிவாதத்தை 2019 க்கும் புதுப்பிப்பதற்கு ஈஸ்டர் குண்டு வெடிப்புகள் உதவியிருக்கின்றன. அதன் விளைவே ராஜபக்சக்களின்  இரண்டாவது வருகை எனலாம்.

சூழ்ச்சிக்கோட்பாட்டில் உங்களுக்கோ எனக்கோ ஈடுபாடு இல்லை என்பது வேறு கதை. இலங்கையின் நவீன வரலாற்றில் நிகழ்ந்த பலதிலும் சூழ்ச்சிக் கோட்பாடு இருக்கிறது தானே?

ம். உண்டு. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

“சூழ்ச்சிகளிருக்கும் ஆனால் சூழ்ச்சிக்கோட்பாபாடுகள் இருப்பதில்லை. சூழ்ச்சிக்கோட்பாடுகள் இருக்கும் ஆனால் சூழ்ச்சிகளிருப்பதில்லை.” இது எங்களுக்கும் பொருந்தும்.

புவிசார் அரசியலில் ஈழப்பிரச்சனையை கூர்ந்த மதிநுட்பத்தோடு கவனிக்க வேண்டிய இந்தியா தொடர்ச்சியாக அந்தப் பாத்திரத்தில் இருந்து தவறி நிற்பதாகவே தோன்றுகிறது. மு.திருநாவுக்கரசு போன்ற அறிஞர்கள் தொடர்ச்சியாக தமது கட்டுரைகளின் வழியாக மீண்டும் மீண்டும் அதனைச்சொல்லி வருகின்றனர். இன்றைக்கேனும் ஈழத்தமிழருக்கு சாதகமாக இந்தியா நடந்து கொள்வதாக ஏதேனும் தடயங்கள் தெரிகின்றனவா?

லங்கையைப் பொறுத்து இந்தியாவின் அணுகுமுறை எனப்படுவது கொழும்பில் இருக்கும் அரசைக் கையாள்வதாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. இது  அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவின்பாற்பட்டது. அவர்களைப் பொறுத்தவரை இலங்கை  அரசுதான்   பிரதான தரப்பு. அரசாங்கத்தைக்கையாள முடியாமல் போகும்போது அல்லது அரசாங்கம் இந்தியாவுக்கு முதன்மை கொடுக்கத் தவறும்போது இந்தியா  தமிழர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தி  இலங்கை அரசாங்கத்தை  வழிக்குக் கொண்டுவரும்.  இந்த அணுகுமுறையின் விளைவுதான் இலங்கை இந்திய ஒப்பந்தமும் 2015இல் நிகழ்ந்த ஆட்சி மாற்றமும்.

இந்த அணுகுமுறைக்காக அவர்கள் தமிழகத்துக்கும்  ஈழத்துக்குமிடையிலான  இன ரீதியிலான மொழி ரீதியிலான உறவுகளைக் கையாண்டு வருகிறார்கள். இந்த அணுகுமுறையை தமிழ் மக்கள் இதயத்தால்விளங்கிக்  கொள்ளத் தேவையில்லை. மாறாக அதை மூளையால்  விளங்கிக்கொள்ள வேண்டும் .

இந்தியாவின் இத்தகைய அணுகுமுறைதான் ஒரு கட்டத்தில் ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினரை இந்தியாவிடம் இருந்து விலகி மேற்குநாடுகளை நோக்கிச் செலுத்தியது. தமிழ் டயஸ்பொறாவின்  எழுச்சி இதற்கு வேண்டிய பின்னணிகளை ஊக்குவித்தது. இந்திய-இலங்கை உடன்படிக்கைக்குப் பின் ஈழத்தமிழர்கள் அதிகம் மேற்கை நோக்கித் திரும்பினார்கள். இதன் விளைவே ரணில்-பிரபாகரன் உடன்படிக்கையாகும். அது தோற்றுவிட்டது. ஆனால் இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ்  உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் இப்பொழுதும் நடைமுறையாக உள்ளன.

2009க்கு பின்னரும் இந்தியா ஈழத் தமிழர்களை ஒரு பிரதான தரப்பாகக் கையாள்வதாக தெரியவில்லை. ராஜபக்சக்களின் முதலாவது ஆட்சியை கவிழ்ப்பதில் மேற்கு நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் தமிழ் மக்களை ஒரு கருவியாகக் கையாண்டது. ஆனால் அந்தஆட்சி மாற்றம் தோற்கடிக்கப்பட்டு விட்டது. ராஜபக்ஷக்கள் மறுபடியும் ஆட்சிக்கு வந்து விட்டார்கள். இந்தியா இனியும் தமிழ் மக்களை ஒரு கருவியாக மட்டும்தான் கையாளப் போகிறதா? என்ற கேள்வி இங்கு முக்கியம்

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரகம் தமிழ் மக்களை மிகவும் நெருங்கி வருகிறது. எல்லா மட்டங்களிலும் அவர்கள் உறவுகளைப் பேணுகிறார்கள் .யாழ்ப்பாணத்தில்  நிறுவப்படும் கலாச்சார  மண்டபம்; பலாலி விமான நிலையத்தில் இந்தியாவுக்கான ஒரு  வான்கதவைத் திறந்தமை   போன்றவற்றின் மூலம் இந்தியா தமிழ்ப்பகுதிகளைத் தன்னோடு கூடுதலாக இணைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. ஆனால் இப்புதிய வளர்ச்சிகளை வைத்து  இந்தியா தனது அணுகுமுறையை மாற்றி  வருவதாக எடுத்துக் கொள்ளலாமா?

இந்தியா தமிழ் மக்களைத் தொடர்ந்து ஒரு கருவியாகத்தான் கையாள்கிறது என்ற சந்தேகமும் பயமும் ஒருபகுதி தமிழ் மக்கள் மத்தியில் இப்பொழுதும் உண்டு. குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சக்திகள் மத்தியில் அந்த அச்சம் மிக உண்டு. இவர்களில் அநேகர் மேற்குநாடுகளில் வசிக்கிறார்கள். அங்கெல்லாம் அரசுகளையும் கொள்கை வகுப்பாளர்களையும் நெருங்கி உறவாடத் தேவையான மொழியறிவும் அந்தஸ்தும் ஏனைய தகுதிகளும் அவர்களுக்குண்டு. இந்தியாவைக் கையாள முடியாது அல்லது கையாளாகக் கூடாது என்று கூறும் அவர்கள் இந்தியா அல்லாத வேறு எந்த சக்திகளைக் கையாண்டு தமிழ் மக்கள் தமக்கு உரிய தீர்வைப் பெறவேண்டும் என்பதனைத் தெளிவாக முன்வைக்க வேண்டும். அந்தத் தரப்புக்களை அதாவது மேற்கு நாடுகளை எப்படிக் கையாண்டு ஒரு தீர்வைப் பெறலாம் என்பதற்கு உரிய வழிவரைபடத்தையும் அவர்கள் முன்வைக்க வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்ட பலர் அங்கஹீனர்களாக ஆகியிருக்கிறார்கள். அவர்களின் வறுமையை எழுதவே நெஞ்செல்லாம் அடைக்கிறது. இதேவேளையில் புலம்பெயர்ந்த நாடுகளில் வசித்து வருகிறவர்கள் பிரம்மாண்டமாக தமது சடங்குகளையும், கேளிக்கைகளையும் நடத்துகின்றனர். இப்படியான பிசகுகள் எங்கிருந்து தோன்றியிருக்க முடியுமென நினைக்கிறீர்கள்?

முன்பு சொன்ன அதே பதில்தான் தாயகத்தில் ஒரு பொருத்தமான கட்டமைப்பு இருந்தால் அது டயஸ்பொறாவை சரியாக வழி நடத்தும்.

இன்றைக்கு வரைக்கும் ஈழத்தமிழ் அறிவுப்புலத்தில்  “சிந்தனைக் குழாம்” தோன்றவேயில்லை. உங்களைப் போலான சிலர் உதிரிகளாக எழுதியும் உரையாடியும் வருகிறீர்கள். இப்படியானதொரு “மக்கு” போக்கு நீண்டால் இதன் விளைவாக நாம் எதனைப் பெறுவோம்?

திரும்பத் திரும்ப நந்திக்கடலை நோக்கி நடந்து கொண்டிருப்போம்.

நீங்கள் எழுதும் கட்டுரைகளில் நிறைய மேற்கோள்கள் பயன்படுத்தப்படுவதுண்டு. ஈழத்தமிழர்களுக்கு எப்போதும் பொருந்திப்போகும் மேற்கோள் ஒன்றைக் கூறுங்களேன்?

தென்னாபிரிக்காவின் சுதந்திரப்பூங்காவின் வரவேற்பு மண்டபத்தில்  தென்னாபிரிக்க khoiகொய்-இனக்குழுவினரின் முதுமொழி ஒன்று எழுதப்பட்டிருக்கும்… A dream is not a dream until it is shared by the entire community – ஒரு கனவு முழுச்சமூகத்தாலும் பகிரப்படாதவரை அது ஒரு கனவேயல்ல.

பின் முள்ளிவாய்க்கால் காலமான இன்றைக்கு தமிழ் மக்களின் உள்ளத்தில் நிகழ்ந்திருக்கும் உளவியல் மாற்றங்களாக நிறையக்காண முடிகிறது. குறிப்பாக போர் குறித்த அவர்களின் இன்றைய உளவியல் எவ்வாறு இருக்கிறது?

ழத் தமிழர்கள் இன்னொரு போருக்குத் தயாரில்லை.

இறுதிக் கேள்வியாக நீங்கள் ஆயுதப் போராட்டத்தினை “வீரயுகம்” என்ற சொல்லாடலின் மூலம் நிறைய இடங்களில் அடையாளபடுத்துகிறீர்கள். இதனை நான் பல அடுக்குகளில் புரிந்து கொள்கிறேன். உங்கள் “வீரயுகம்” என்ற வார்த்தைப் பிரயோகத்தின் வழியாக நீங்கள் வலியுறுத்த விரும்பும் அரசியல் நிலைப்பாடு என்ன?

யுகக்கணக்கு என்பது முடிவின்மையைக் குறிக்கும். தொடர்ச்சியைக் குறிக்கும். பிரளயம்  என்பதும் ஊழி என்பதும் அதிகபட்சம் யுக முடிவைக் குறிக்கும். அழிவையும் துயரத்தையும் அதிகம் குறிக்கும். நான் கவிதைகளில் சில சமயம் ஊழி என்பதைப் பயன்படுத்தினாலும் பெருமளவுக்கு யுகம் யுக முடிவு, யுகப்பிறப்பு போன்றவற்றையே விரும்பிப் பயன்படுத்துவதுண்டு. ஏனெனில் யுகமாற்றம் என்பது தொடர்ச்சி. அது முடிவற்றது. அழிவிலிருந்தும்  கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையிலும் ஒரு புதுயுகம் மலர்வதை அது குறிக்கும். வீரயுகம் என்பது அந்த அர்த்தத்தில் தான். வீரயுகங்களில் வீரம் வழிபாடாயிருக்கும்.

தியாகம் வழிபாடாயிருகும். தியாகி துரோகி என்ற கருப்பு வெள்ளை அளவுகோல் இருக்கும். வீரத்தையும் தியாகத்தையும்  வெளிப்படுத்தப் போர்க்களம் வேண்டும். போர் வெற்றிகள் வேண்டும். எனவே போர் ரொமான்டிசைஸ் செய்யப்படும். போர் வெற்றிகள் கொண்டாடப்படும். போரின் வெற்றிக்காக தலைப்பேறானவை கேட்கப்படும். அல்லது கவரப்படும்.

தோற்கடிக்கபட்டவர்களின் கிராமங்களை எரித்த நெருப்பில் வெற்றி மாலைகள் வாடுவது மகிமைப்படுத்தப்படும். போர்க்களத்தில் காளி பிணங்களின் நிணக்கூழ் குடித்து மகிழ்வது போற்றிப் பாடப்படும். வெற்றிப் பிரகடனங்களின் பளபளப்பில்  தேற்றப்படவிலாத் தாய்மாரின் துக்கமும் இளம் விதவையரின் துயிலா இரவுகளும் மங்கிப் போய்விடும்.  ஆம். வீரயுகம் எனப்படுவது அதன் நன்மைகள் தீமைகளோடுதான்.

முக்கியமாக தொடர்ச்சி. ஒரு வீரயுகத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் ஒரு புதிய அறிவின் யுகத்தை வனைவது.

***

நிலாந்தனின் வலைப்பக்கம் – http://www.nillanthan.com

அரண்

5

அரசன்

அரண்

“என்ன பெரியவரே, இப்ப ஒடம்பு எப்படி இருக்கு?” நலம் விசாரித்துக்கொண்டே சைக்கிளை ஓரமாக  நிறுத்திவிட்டு வந்தார் பெருமாள்.

“அட, வாய்யா பெருமாளு வா, ஒடம்பு இப்ப கொஞ்சம் தேவலாம்யா. என்ன, எந்திரிச்சி முந்தி மாதிரி  கொல்லக்காட்டுக்கு போயிட்டு வரமுடியல,,, அதானவொழிஞ்சி இப்ப தேவுதலயாத்தான் இருக்கு” என்று கூறிக்கொண்டே வாயிலிருந்த சுருட்டை எடுத்து நாற்காலியின் கீழே நசுக்கினார் பழனிமாணிக்கம். புகை வாயிலும், மூக்கிலுமாக கசிந்தது.

“படுக்கையில கெடந்து எந்திரிச்சி ஒக்காந்த ஒடனே பொகையான பத்த வச்சிட்டிங்க போலையே, இத கொஞ்ச நாளைக்கி வெலக்கி வச்சாத்தான் என்னவாம்?”

“நீ ஒரு ஆளய்யா, பத்து, பதினஞ்சி நாளா ஒடம்ப போட்டு ஒரு பொரட்டு பொரட்டி எடுத்துடுச்சி இந்த காச்ச. வாயெல்லாம் ஒரே கசப்பா கசந்து போயி கெடக்கு, அதப்போக்க இன்னைக்கித்தான் பத்த வச்சி ரெண்டு இழுப்பு இழுத்தேன், அது ஒனக்கு பொறுக்கலையா?”

“ரெண்டு நாளு காச்சலே மனுசுன ஒரு தொவட்டு தொவட்டி எடுத்துடும், நீங்க என்னடான்னா இத்தன நாளு படுக்கையில கெடந்துருக்கீங்க, கேட்கவா வேணும்?, கறிக்கஞ்சி அடிச்சி குடிச்சீங்கன்னா இந்த வாக்கசப்பு எல்லாம் போயிரும்”

“வூட்லயும் அதத்தான் சொல்லிக்கிட்டு இருக்கா பெருமாளு”

“சின்னவருகிட்ட ஒரு வார்த்த சொன்னீங்கன்னா அவரு திருச்சி, மெட்ராஸ்ன்னு இங்க எங்கையாவது கூட்டிக்கிட்டு போயி, பெரிய ஆஸ்பித்திரியா பாத்து காட்டி கொண்டாந்து வுடுவாரு. நீங்க என்னடான்னா இந்த செந்துற, அரியலூரையே புடிச்சி தொங்கிக்கிட்டு இருக்கீக, என்னக்கு என்னமோ இதுக்கு மேற்பட்டு இங்க காட்டுறது சரியா வருமுன்னு தோணல”

“அவனும் இதத்தாம்யா சொல்றான். நாந்தான் வெறும் காச்சலுக்கு போயி எதுக்கு அம்புட்டு தூரம் அலையணும், ரொம்ப முடியலன்னா காட்டிக்கலாமுன்னு சொல்லி வச்சிருக்கேன். இந்த எழவெடுத்த எலக்சன் ஆரம்பிச்சதுல இருந்து நிம்மதியா குந்தி ஒரு வாய் சோறு திங்கமுடியுதா? ராத்திரி, பகலுன்னு பாக்காம சுத்திக்கிட்டே இருக்கான், இந்த நேரத்துல நாமளும், அவன சின்னப்படுத்தக் கூடாதுன்னு பாக்குறேன்”

“சின்னவரைத்தான் நம்ம வட்டத்துக்கு பறக்கும்படை ஆபிசரா போட்டிருக்காங்கன்னு கேள்விப்பட்டேன், ஒரு எடத்துல ஒக்கார முடியாம, ரோடு ரோடா சுத்துற நச்சல் புடிச்ச வேலல்ல அது”

“எவன் எங்க காச எப்படி மறச்சி வச்சி, எந்த நேரத்துல எப்படி வந்து கொடுக்குறான்னு அவனுங்க கோவணத்த புடிச்சிக்கிட்டேவா சுத்த முடியும், என்னதான் கண்கொத்தி பாம்பா திரிஞ்சாலும் எப்படியும் மறச்சிப்புட்டு போயி கச்சிதமா காச கொடுத்துடுறானுவோ, நம்ம சனங்களும் வாங்கிப் பழகிட்டுதுங்க, எப்படி தடுத்து நிறுத்த முடியும்? இந்த லட்சணத்துல கூட வேலப்பாக்குற சல்லிப்பயளுவோ வேற காச வாங்கிக்கிட்டு கண்ண சாச்சிக்கிட்டு வுட்றானுவோளாம், எல்லாத்தையும் போட்டு இவந்தலையில உருட்டுரானுங்கன்னு ரொம்ப நொந்து போயி காலையில சொல்லிக்கிட்டு இருந்தான், போதாதக்கு மருமவப்புள்ளைக்கி கும்பகோணத்துக்கு வேல மாத்தலாம், பேரன் திருச்சி ஆஸ்டல்ல கெடக்குறான், பேருதான் அரசாங்க உத்தியோகமே தவுர இப்பிடி தெசைக்கி ஒருத்தரா கெடந்து அல்லல் படுதுங்க” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார் பழனிமாணிக்கம். 

“கொடுமைதான் பெரியவரே, தெசைக்கி ஒண்ணா கெடந்தா சங்கட்டந்தான், இந்த எலக்சன் முடிஞ்சிடுச்சின்னா எல்லாம் சரியாவும், எதையும் மனசுல போட்டு கொழப்பிக்காம தெம்பா இருங்க, எல்லாத்துக்கும் ஒரு முடிவு வராமலா போயிரும்” என்று தேறுதல் கூறியவாறு பழனிமாணிக்கத்தின் காலடிக்கு அருகில் கிடந்த பட்ட மரத்தில் அமர்ந்து வெற்றிலை பொட்டலத்தைப் பிரித்தார் பெருமாள்.

நாள்முழுதும் காய்ந்த சித்திரை வெயிலுக்கு, புழுதியைக் கிளப்பிச்சென்ற மேற்கத்தி அந்திக்காற்று சற்று இதமாக இருந்தது, பழனிமாணிக்கத்திற்கும் அந்த நேரத்திற்கு அது ஆசுவாசமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

“சாமான் கொண்டாந்திருக்கியா பெருமாளு”

“சாமான்லாம் கொண்டாந்திருக்கேன், இப்பத்தானே எந்திரிச்சி ஒக்காந்திருக்கீங்க, அதுக்குள்ளே என்ன அவசரம், ஒரு ரெண்டு மூணு நாளு போவட்டுமுன்னு பாக்குறேன்”

“இம்புட்டு நாளு படுக்கையில கெடந்ததுல, சவரம் கூட பண்ணிக்காம மொகத்தகண்ணாடியில பாக்க சகிக்கல பெருமாளு, இந்த தாடி மசுரையாவது மழிச்சிவுடுய்யா” என்று தாவாங்கட்டையைச் சொரிந்தார்.

“சரிங்க பெரியவரே” என்று எழுந்து போய் கிண்ணத்தில் நீரை அள்ளிக்கொண்டு வந்து, தாடியை மழித்து, மீசையை ஒதுக்கி விட்டதும் கம்பீரக்களை திரும்பியிருந்தது.

“எப்படியிருக்கான் ஓம்மவன், ஒழுங்கா கடைக்கி போறானா? இல்ல பழைய குருடி, கதவ தொறடிங்குற கத தானா?” என்று கேட்டபடி வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தாள் பழனிமாணிக்கத்தின் மனைவி.

“என்னத்த ஆயி சொல்றது, அதே பழங்கத தான், ரெண்டு நாளு தொறந்தா, நாளு நாளைக்கி மூடிப்புட்டு குடி, கும்மாளமுன்னு திரியுறான், எம்புட்டு சொன்னாலும் மண்டையில ஏற மாட்டேங்குது, எல்லாம் நான் வாங்கி வந்த பொறப்பு அப்படி” என்கையில் பெருமாளின் முகமும், குரலும் அவரறியாமலே உள்ளொடுங்கியிருந்தது.

“கவலப்படாத பெருமாளு, எல்லாம் சரியாப்போவும், ஒடம்புல சத்து கொறஞ்சா தன்னாலே ஒரு எடத்துல குந்திதானே ஆவணும், எம்புட்டுதான் பம்பரம் சுத்திக்கிட்டே இருக்கமுடியும், தலதட்டி வுழுந்து தானே ஆவணும், ஒருநா எப்பிடியும் வழிக்கு வந்துருவான், அத நீயும் பாக்கத்தான் போற” என்று தன் அனுபவமொழியில் ஆற்றுப்படுத்தினாள் கிழவி.

“கொடுக்கவே முடியாதுன்னு சொன்னவங்கள எல்லாரையும் சரிக்கட்டி பேரூராட்சி கட்டிடத்துல ஒரு கடைய புடிச்சி கொடுத்ததோடு, கடைக்கு தேவையான சாமானையெல்லாம் வாங்கி கொடுத்தாரு நம்ம அய்யா, அவருக்காவது மரியாத கொடுத்து ஒழுங்கா பொழப்ப பாத்துக்கிட்டு இருப்பான்னு நெனச்சேன், எதுக்கும் மசியாம திரிஞ்சா நான் என்னத்த தான் செய்யுறது”

“நீ ஒரு ஆளுய்யா, எப்பவோ செஞ்சது, இன்னும் அதயே சொல்லிக்கிட்டு திரியுற” என்ற பழனிமாணிக்கத்திடம்,

“இல்ல பெரியவரே, நீங்க செஞ்சத மறந்துட்டேன்னா நான் மனுசனே கெடையாது, ஒடம்புல உசுரு உள்ளமட்டும் இத சொல்லிக்கிட்டு தான் இருப்பேன்” என்று தழுதழுத்தார் பெருமாள்.

“இப்பத்தானே சொன்னேன் பெருமாளு, ஒனக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறேன், பழச நெனச்சி இன்னும் பொலம்பிக்கிட்டு இருக்காம, பயல சரிக்கட்டி ஒழுங்கா கடையில குந்தி பொழப்ப பாக்க சொல்லு, வெளியூராளு யாரோ கடை தொறந்துருக்கான் போலையே” என்று பேச்சின் திசையை மடை மாற்ற,

“ஆமாங்க பெரியவரே, எம்மவன் பொழைக்குற இலட்சணத்த பாத்துட்டு, பெண்ணாடத்துல இருந்து ஒருத்தர் வந்து இங்க கடை தொறந்துருக்காராம். ஆளும், தொழிலும் சுத்தமாம், கூட்டம் அல மோதுதுன்னா பாத்துக்குங்க”…

“நாம சரியா இருந்தோம்னா, எத்தினி போட்டி வந்தாலும் நம்மள அசச்சிக்க முடியாது, ஓம்மவனுக்கு போறாத நேரமோ என்னவோ?, இப்படி திரியுறான், சரி இரு பெருமாளு குடிக்க எதுனா கொண்டு வரேன்” என்று கூறிவிட்டு கிழவி வீட்டிற்குள் சென்றாள்.

“ஓம்மவன நாளைக்கி ஒரு எட்டு வந்து என்ன பாக்கச்சொல்லு, நானும் எம்பங்குக்கு புத்திமதி சொல்லிப்பாக்குறேன், கேட்டுப் பொழச்சிக்கிட்டா நல்லது அப்புறம் அவம்பாடு” என்று, கீழே விழுந்திருந்த காய்ந்த பூவரசம் பூவொன்றை கையில் எடுத்து வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த பெருமாளின் சிந்தனையைக் கலைத்தார் பழனிமாணிக்கம்.

“சரிங்க பெரியவரே, வர சொல்றேன்… ஏதோ மருமக கொஞ்சம் கருத்தா இருக்குறதுனால பொழப்பு ஓடிக்கிட்டு இருக்கு. இந்தப்பய குடிச்சிட்டு வந்தா, அந்தப்புள்ளைய போட்டு அடிச்சிப்புடுறான், அதுவும் எத்தன நாளைக்கித்தான் தாங்கும், நான் எங்கப்பன் வூட்டுக்கே போயிடுறேன்னு ஒத்தக்காலுல நிக்குது… இந்தப் பாழுங்குடியால எங்குடும்பம் மாதிரி எத்தன குடும்பம் தெருவுல நிக்குதோ? தெரியலையே”

“நீயா பெருமாளு இப்படி பேசுற, ஓங்காலத்துல எப்படி இருந்த?, அப்புறம் எல்லாஞ்சரியாகி புரிஞ்சிக்கிட்டு பொழப்ப பாக்கலையா, அந்த மாதிரி தான் ஒம்மவனும் வாட்டத்துக்கு வருவான், ரொம்ப போட்டு புழுங்காதய்யா”

“தடுக்கி வுழுந்த என்னைய, நீங்க தூக்கி வுட்டீங்க, கெட்டியா புடிச்சிக்கிட்டேன், ஆனா இவன ஒக்கார வச்சி பாடமா படிச்சாலும் மண்டைக்குள்ள எறங்க மாட்டேங்குதே… எதோ எம்மூச்சு இருக்குறவரைக்கும் நான் பாத்துக்குவேன், அதுக்குப் பொறவு ரெண்டு பொட்டப்புள்ளைகள வச்சிக்கிட்டு மருமவப்புள்ள இவங்கிட்ட என்ன பாடுபடுமோன்னு நெனச்சாலே சோறு தொண்டக்குழிக்குள்ள எறங்க மாட்டேங்குது பெரியவரே”

“ரொம்ப போட்டு யோசிச்சி மனசையும், ஒடம்பையும் கெடுத்துக்காத பெருமாளு, நாங்கல்லாம் இருக்கோம் அப்பிடி சும்மா வுட்ற மாட்டோம், அவன நாளைக்கி வந்து என்னைய பாக்கச் சொல்லு, நான் பேசி பாக்குறேன், சரி… இரு சாப்புட்டு போலாம்”

“இல்லைங்க பெரியவரே, மத்தியான சோத்தையே நாலு மணிக்குத்தான் சாப்புட்டேன், இப்ப ஆயி கொடுத்த மோர் வேற குடிச்சேனா வவுறு மந்துன்னு இருக்கு, சோறு இப்ப எறங்காது, பயல கூட்டிக்கிட்டு நாளைக்கி நானும் கூட வரேன்” என்ற பெருமாளின் குரலிலும் மோரின் குளுமை கொஞ்சம் இறங்கியிருந்தது.

“அப்ப சரி பெருமாளு, நாளைக்கி பாப்போம், ரொம்ப நேரம் குந்தியே இருந்தது அசந்து போயி வருது, செத்த நேரம் படுக்குறேன்” என்று எழுந்து சென்ற பெரியவரின் நடையும், உடலும் ரொம்பவே தளர்ந்து போயிருந்தாலும் கம்பீரத்தில் குறைவில்லை.   

மோர் சொம்பை வாங்க வந்த கிழவியிடம், “படுக்கையில கெடந்தவர் மாதிரி தெரியல, அய்யா மொகம் ஏகத்துக்கும் தெளிச்சி கொடுத்திருக்கு.ஆட்டுக்காலு, கோழி ஏதும் கெடச்சா அடிச்சி சாறு வச்சி கொடுத்து கவுனிச்சி பாத்துகிடுங்க,கொஞ்சம் தெம்ப கூட்டும், அப்போ நான் வாறன் ஆயி” என்றவர் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு கிளம்பினார்.

அக்கினி நட்சத்திரத்தின் வெக்கையை உணர்த்தும் அந்திநேரத்து வாடைக்காற்று முகத்திலறைய, சைக்கிளின் சக்கரம் மண்சாலையில் புதைந்து மெல்லச்சுழன்றது.

****

முன்னூறு தலைக்கட்டுகள் கொண்ட அவ்வூரின் பொது நாவிதர் பெருமாள். பழனிமாணிக்கத்தை விட மூன்று வயது மூத்தவர். நாற்பது முடியுமுன்னரே மொத்த முடியும் கொட்டி தலை வழுவழுவென்றாகிவிட்டது. உயரமும் ஐந்து அடிக்கும் குறைவு. நீலவண்ண கால்சட்டையும், அதன்மேல் சுற்றியிருக்கும் காவி வேட்டியும், கிளிப்பச்சை வண்ணத்தில் இடைவாரும் தான் பெருமாளின் அடையாளங்கள், இவை தவிர மேற்சட்டை அணிந்திருந்தால் அன்று தொலைதூரப்பயணம் போகிறார் என்று அவர் கூறாமலே அறிந்து கொள்ளலாம், மற்றபடி சட்டையணிந்து வழக்கமில்லை. பதினாறு வயதில் கையில் கத்தியைப் பிடித்தவருக்கு இந்த எழுபது வயதிலும் ஓய்வில்லை. சதை வற்றி எலும்பும், தோலுமாய் உடல் நலிந்துவிட்டாலும் கரம் நடுங்காமல் சவரம் செய்வதில் கில்லாடி.

பெருமாளுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தாலும் நிலைத்தது என்னவோ கடைக்குட்டி மணி மட்டுந்தான், மணிக்கு மூன்று வயதிருக்கையில் குடும்பத்தகராறில் முன்கோபியான பெருமாளின் மனைவி ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தன்னை மாய்த்துக்கொள்ள, தனிக்கட்டையாகிப் போனார். ஒரே பையன் என்றும், தாய் இல்லாத காரணத்தாலும், மணிக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்த பலனை இந்த வயதிலும் அறுவடை பண்ணிக்கொண்டு இருக்கிறார்.

ஊரிலுள்ள பெரும்பாலானவர்களின் அந்தரங்க ரகசியங்களை அறிந்து வைத்திருந்தாலும், அதைப்பற்றி இதுநாள் வரை யாரிடமும் எள்ளளவு கூட கசியவிட்டதில்லை. யாராவது கூப்பிட்டு வாயைக் கிளறினாலும், அவர்களைப் பேசவிட்டுக் கேட்பாரே தவிர, இவராக எதையும் தொடங்குவதுமில்லை, தொடுவதுமில்லை. இத்தனை வருட காலவெளியில் இரண்டு தலைமுறைகளைக் கண்ட அனுபவசாலி. நாற்பதைக் கடந்தவர்களை ‘பெரியவரே’ என்றும், நாற்பதுக்குக் கீழுள்ளவர்களை ‘சின்னவரே’ என்றும் விளிப்பது பெருமாளின் வழக்கம். சிறுபிள்ளைகள் பெயரைச்சொல்லி அழைத்தாலும் கூட, நின்று “என்ன சின்னவரே” என்று சிரித்த முகத்தோடு கேட்கையில், அவரின் முகத்தில் ஒரு அழகு மிளிரும்.  

****

மறுநாள் காலையில் கருப்பஞ்சருகுகளை தூக்க முடியாமல் தூக்கிச்சுமந்து சென்று கொண்டிருந்த பெருமாளை நிறுத்தி, “லேய் பெருமாளு ஒன்னைய எங்கையெல்லாம் தேடுறது, பெரியவரு பழனிமாணிக்கம் போயி சேந்துட்டாருடா, விடிகாலையில தூக்கத்துலயே உசுரு பிரிஞ்சிருச்சாம், நான் பூமாலைக் கட்ட மாத்தூருக்கு தான் போறேன், ஒன்னைய வெரசா வரச் சொல்ல சொன்னாங்க.  ஓம்வூட்டுக்கு போனேன், நீ எங்கையோ வெளிய போயிருக்கிறதா ஓம் மருமவ சொல்லுச்சி. நல்லவேள ஒன்ன வழியிலையே பாத்துட்டேன், சீக்கிரம் வந்து சேரு என்ன” என்று மூச்சு விடாமல் சொல்லிக்கொண்டே நிறுத்திய வண்டியைத் திருகிக்கொண்டு போனான் கொளஞ்சி.

உறைந்து நின்ற பெருமாளுக்கு சற்று நேரத்தில் எல்லாம் புரிந்துவிட, ‘எந்த நேரத்துல அப்படியொரு வார்த்தைய சொல்லிட்டு வந்தேனோ?, சொன்ன மாதிரியே நம்ம நாறவாய் முகூர்த்தம் பலிச்சிருச்சே’ என்று ஓட்டமும், நடையுமாக விரைந்த பெருமாள், வீட்டிற்கு போனதும் மணியைத் தேடினார். காணவில்லை. பெரியவர் இறந்த செய்தியை மருமகளிடம் சொல்லி, அவன் வந்தவுடன் அங்கு அனுப்புமாறு கூறிவிட்டு அவசர அவசரமாக வந்து சைக்கிளை எடுத்தார், பின் வீல் மெத்தென்று இருந்தது. நேற்று இரவு கல்லடியோ, கருவேல முள்ளோ இதன் சீவனை பிடுங்கியிருக்க வேண்டும். “இந்த எழவுக்கு நேரங்காலம் தெரியாது” என்ற முனகலுடன் சைக்கிளை சுவற்றோரம் சாய்த்துவிட்டு நேரே குடிக்காட்டிற்கு நடக்கத் துவங்கினார் பெருமாள்.

நினைவுகள் துளித்துளியாய் பெருக்கெடுத்து சமுத்திரமாய் உருமாறி பேரலைகளாய் திமிறிக் கொண்டிருந்தன.வெடித்தெழ வேண்டி சிறு திறப்பிற்கான புள்ளியை அது தேடிக்கொண்டிருந்தது. தங்களுக்குள்ளான  சித்திரத்தின் தொடக்கப்புள்ளியை தேடித்தேடி தோற்று, மீண்டும் மீண்டும் தேடிக்கொண்டே நடந்தார் பெருமாள். நடைதான் பழனிமாணிக்கத்தை நோக்கி இருந்ததே தவிர, சிந்தனை வேறெங்கோ சீறிக்கொண்டிருந்தது. கடைசி வரையிலும் இருவரது இணைப்பிற்கான துவக்கப்புள்ளி மட்டும் அகப்படவே இல்லை. அகப்படாது என்று தெரிந்தும் பெருமாளும் தேடலை நிறுத்தவில்லை.

மொத்த ஊரும் நம்மை அடித்துத் துரத்த முயலுகையில், இவர் மட்டும் ஏன் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும்?, எல்லோரும் தெருநாயை விரட்டுவது போன்று விரட்டுகையில், இவருக்கு மட்டும் எப்படி அதற்கு  உணவளிக்க தோன்றியிருக்க வேண்டும்? ஊரே இறுகிப்போன பாறை போன்று இருக்கையில், இவருக்குள் மட்டும் எப்படி நீர்ச்சொட்டு கசிந்தது?, அந்தச்சொட்டின் ஒரு பகுதியை என்மேலும் ஏன் விழச் செய்திருக்க வேண்டும்? காட்டுமுயலைக் கண்ட வேட்டை நாயைப்போன்று விரட்டுகையில், இந்த மனுசனுக்கு மட்டும் எப்படிக்  கருணை சுரந்தது? என்றெல்லாம் தன்னைக் காத்த அரணுக்கான ஆரம்பப் புள்ளியை தேடித் தேடி ஓய்ந்து போனார் பெருமாள். 

இதோ ஊர் நெருங்கிவிட்டது, இப்பவாது ஒருதடவை வாய்விட்டு அழுதுவிடலாமா? அங்கு சென்று அழக்கூடிய வயதுமில்லை, அழுகைக்கு வயது ஒரு தடையா? வந்தால் அழுதுவிடத்தானே வேண்டும்? ஆணின் அழுகையை கோழைத்தனமாக அணுகும் இச்சமூகம் பெண்களை மட்டும் ஏன் அழவிட்டு வேடிக்கை பார்க்கிறது? தடையின்றி வயது வித்தியாசம் பாராமல் அவர்களால் சுதந்திரமாக எல்லா சூழல்களிலும் அழுதுவிட முடிகிறதே? இது என்ன முரண்? என்கிற தர்க்க சிந்தனையோடு நடந்தவருக்கு காலைக்கஞ்சியை குடிக்காமல் வந்தது வேறு பசி வயிற்றைக் கிள்ள, தூரத்தில் கொட்டுச்சத்தம் காதில் நன்றாக விழுந்தது. எங்கே அந்த இணைப்புப் புள்ளியைக் காணோமே? ஒருவழியாக பழைய சித்திரத்தின் ஒரு பகுதியை மட்டும் மீட்டுக்கொண்டு வர முடிந்தது பெருமாளால்.  

ஐந்து தெருக்களைக்கொண்ட ஊரில், இரண்டு தெரு பங்காளிகளைக் கொண்ட வலுவான குடும்பம். சொத்துக்கும் பஞ்சமில்லை, நஞ்சை, புஞ்சை என்று முப்பது காணிகளுக்கும் மேல் கொண்டிருந்தாலும் யாவரிடமும் எளிமையாக பழகும் குணம் கொண்டவர் பழனிமாணிக்கம்.

ஊர் நிகழ்வு ஒன்றில், பழனிமாணிக்கமும், பெருமாளும் பேசிக்கொண்டு இருப்பதைக்கண்ட அவரின் மச்சான் ஒருத்தன்,

“என்னங்க மாமா முடி வெட்றவனையெல்லாம் சரிக்கு சமானமா ஒக்கார வச்சி பேசிக்கிட்டு இருக்கீங்க” என்கிற அந்தக்கேள்வியின் உள்ளர்த்தத்தை புரிந்து கொண்ட பழனிமாணிக்கம்,

“பெருமாளு கையில இருக்குற கத்தியும், அவன் செய்யுற தொழிலும் தான் ஓங்கண்ணுக்கு தெரியுது, அதான் அவன எளப்பமா பாக்குற. எங்கண்ணுக்கு மொதல்ல பெருமாளுங்குற மனுசனா தெரியுறான், அப்புறந்தான் அவனோட தொழிலு. நமக்கு இருக்குற அதே சூடும், சொரணையும் தான அவனுக்கும் இருக்கும், அவஞ்செய்யுற சோலிய ஒரே ஒருநா ஒன்னால செய்ய முடியுமா சொல்லு?, ஓடமும் ஒருநாள் வண்டியில ஏறும் மாப்ள” என்று அவனுக்குப் பதிலுரைக்கையில், பெருமாளுக்கு கொஞ்சம் பெருமையாகத்தான் இருந்தது.

அதன்பிறகொரு ஊர்ச் சாவில் சிதைக்கு தீமூட்டிவிட்டு, பெய்த மழைக்கு இதமாக சாராயம் குடித்துக் கொண்டிருந்த பெருமாள், பேச்சுவாக்கில் வழக்கத்தை விடவும், கூடுதலாக இரண்டு கிளாஸ் உள்ளே ஏற்றிவிட்டார். சாமம் கடந்திருந்தது. போதை கண்களை மறைக்க வழியை மறந்தவர், சாராயக் கொட்டகைக்கு பின்புறம் மரக்கட்டைகள் அடுக்கியிருந்த இடத்தில் படுத்துவிட்டார். மறுநாள் காலையில் காடணைத்துவிட்டு பெருமாளுக்காக காத்திருந்தனர் சாவு வீட்டாட்கள். தேடி ஆளனுப்பியும் கிடைத்தபாடில்லை. கோபத்தின் உச்சத்தில் தகித்துக் கொண்டிருந்தார்கள்.

போதை தெளிந்து பெருமாள் திரும்பி வருகையில் மதியம் மணி இரண்டு. “ஏண்டா மயிரான், இப்ப மணி என்னடா? இதான் வர நேரமா? ஒனக்காக எம்புட்டு நேரமாடா காத்திருக்கிறது?, எப்படா பாலு தெளிச்சி, எப்ப சாம்பல கரைச்சி, எப்போ வெரதம் பண்றது? இந்த லட்சண மயிருல பால் தெளி சாமான வாங்கிட்டு வந்துடுறேன்னு காச வேற வாங்கிட்டு போயிட்ட… இது நீ பொழைக்கிற பொழப்புக்கு நல்லதில்ல பாத்துக்கோ” என்று ஒவ்வொருவரும் கூப்பாடு போட, அப்போதும் “வுடுங்கப்பா, வுடுங்கப்பா.. மொதல்ல ஆவ வேண்டியத பாருங்க, அப்புறம் பேசிக்கலாம்” என்று ஊராரை ஆசுவாசப்படுத்தினார் பழனிமாணிக்கம்.

“அப்படி என்ன சினேகிதப் பாசமோ, இவனுக்கு ஒண்ணுன்னா கழுகுக்கு மூக்குல வேர்த்தது மாதிரி இந்த மனுசன் முன்ன வந்து தலைய கொடுக்குறதே பொழப்பா போச்சி” என்று உள்ளுக்குள் சிலர் பொறுமினாலும், யாரும் துணிந்து வாய்விட்டுப் பேசியதில்லை.

இன்ன மாதிரி முடி வெட்டிவிட வேண்டும் என்று சொல்லுகையில் கூர்ந்து கேட்டவாறு, “சரிங்கய்யா.. சரிங்கய்யா, அப்படியே செஞ்சிரலாம்” என்று தலையாட்டிக் கொள்வார். உண்மையில் பெருமாளுக்கு தெரிந்தது இரண்டே வகை வெட்டு தான். ஒன்று சட்டியை கவிழ்த்தது போன்று கிராப்பு; மற்றொன்று மொத்தமாக வழித்தெடுப்பது. இந்த விசயம் புரிந்தபின் இளவட்டங்கள் யாரும் பெருமாளிடம் தலையைக் கொடுப்பதில்லை. டவுணுக்குள் சென்று திருத்திக்கொண்டு வந்து ஊரிலுள்ள இளசுகளை வட்டமடிக்கும். ஊர்ப்பெருசுகளும், பொடிசுகளுக்கும் தான் இவரின் கத்தி. அப்படித்தான் ஊரிலுள்ள பொடியன் ஒருவனுக்கு வெட்டிக்கொண்டிருக்கையில், பொடியன் தலையை ஒரு நிலையில் வைக்காமல் ஆட்டிக்கொண்டே இருக்க, ஆடும் தலையை நிறுத்தி வைத்துவிட்டு முடியை வெட்ட ஆரம்பித்தார். மீண்டும் தலை துவண்டது. பெரியவர்களுக்கே கத்திரிச்சத்தத்தை காதுக்கருகில் கேட்டால் கண்ணை இழுத்துக்கொண்டு செல்லுகையில் சிறுசுகளுக்கு கேட்கவா வேண்டும்?, பொடியன் மறுபடியும் தூக்கத்தில் சொக்கி விழ, நிறைபோதை கிறுகிறுப்பிலிருந்து பெருமாள் பொறுமையிழந்து, “சொல்லிக்கிட்டே இருக்கேன், கேக்காம அப்படி என்ன தூக்கம் வேண்டி கெடக்கு” என்று கத்திரியினால் தொடையில் ஒரு குத்து குத்திவிட்டார். நல்லவேளை வலுவான குத்து இல்லையென்றாலும் கூர்முனைப்பட்டு பையனின் தொடையிலிருந்து ரத்தம் கசியத் துவங்கிவிட்டது. பொடியன் கத்திக் கூச்சலிட, சுற்றி இருந்தவர்கள் திரண்டு பெருமாளை அடித்து, நொறுக்கி, “எந்நேரமும் போதையில திரியுறவனுக்கு எதுக்கு இந்த தொழில்… இனி இவன் வேற எங்கையும் தொழில் செய்ய கூடாது”ன்னு சொல்லி கையை உடைக்கப்போனவர்களை அமைதிப்படுத்த வந்த பழனிமானிக்கத்திடம்,

“எல்லாம் நீங்க கொடுக்குற துணிச்சல்ல தான் இவன் இந்தாட்டம் போடுறான், இந்த தடவ நீங்க இதுல தலையிடாதிங்க மாமா, நாங்க என்ன செய்யணுமோ செஞ்சுக்குறோம்… எத்தினியோ விசயத்துல பாத்துட்டோம், எம்புட்டு தடவ சொன்னாலும் குடியே கதின்னு கெடந்தா என்ன அர்த்தம், முன்ன மாதிரி தொழிலுக்கும் சரியா வரதுமில்ல, நாளு கெழமன்னா வரும்படிக்கு மட்டும் கரெக்டா வந்துடுறான், தொடையுல பட்டது, கொஞ்சம் பெசகி படாத எடத்துல பட்டுருந்தா எம்புள்ள உசுருல்ல போயிருக்கும், இவன் சென்மத்துக்கும் கத்திய தொடாதமாதிரி செஞ்சாத்தான் இவனுக்குலாம் புத்தில ஒறைக்கும்” என்று ஆளாளுக்கு எகிறிய சனங்களிடம்,

“இந்த ஒரு தடவ மட்டும் எனக்காக அவன, மன்னிச்சி வுடுங்க, இனிமே இப்பிடி நடக்காம நான் பாத்துக்குறேன், இதுக்கு மேல அவன் குடிச்சிட்டு வர மாட்டான், மீறி வந்தான்னா அவங்கைய நானே முறிச்சி வுடுறேன், அதுக்கு நான் பொறுப்பு” என்று தன்மையாகப் பேசி சமாதானப்படுத்தினார்.

“ஒங்க வார்த்தைய நம்பித்தான் இந்தத் தடவ சும்மா வுடுறோம். இதான் கடசியா இருக்கணும், அவங்கிட்ட சொல்லி வையுங்க” என்று சொல்லிக்கலைந்தது ஊர்சனம்.

ஊரார் அடித்த அடியில் கண், வாயில் இரத்தம் ஒழுக நின்று கொண்டிருந்தவரின் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்காமல், “ஊர்சனம் சொன்னது காதுல வுழுந்துருக்கும்னு நெனைக்கிறேன், இதுல தனியா சொல்றதுக்கு எதுவுமில்ல, புரிஞ்சி நடந்துக்கிட்டா சரி” என்ற பழனிமாணிக்கம் அதற்குமேல் அங்க நிற்க விரும்பாமல் நடையைக் கட்டினார். அன்று கலைந்த போதை தான். அதன்பிறகு குடி பற்றிய நினைவு கூட வரவில்லை பெருமாளுக்கு.

***

கம்பீரமான உடற்கட்டு, சலித்த கோதுமை மாவு நிறம், முறுக்கேறிய மீசை, நரை காணாமல் தளர்ந்த வயதிலும் மிடுக்கென்று தோற்றத்தில் கொஞ்சமும் குறையாமல் வெள்ளைவேட்டி போர்த்தப்பட்டு பந்தலுக்கு மத்தியில் கிடத்தப்பட்டிருந்த பெரியவரின் உடலை நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்த பெருமாளுக்கு, முகம், நேற்றை விட இன்று கூடுதல் பொலிவாக இருப்பதுபோல் தோன்றியது. கூட்டத்தில் கிழவியின் ஒப்பாரிச்சத்தம் மட்டும் தனித்துக் கேட்டது.

“என்னடா பெருமாளு இதான் வர நேரமா? போயி ஆவ வேண்டிய சோலிய பாரு.. சாயந்திரத்துக்குள்ள பொணத்த எடுக்கணும்” என்று கவனத்தைக் கலைத்தது சிவலிங்கத்தின் கரகரக் குரல்.

பதில் எதுவும் பேசாமல், பந்தலை விட்டு வெளியே வந்தார் பெருமாள். வழமையாய் சுட்டெரிக்கும் காலை வெயில் இன்று கூடுதல் அனலைத் தகித்தது..

வெளியூர், உள்ளூர் சனம் என்று பந்தலுக்குக் கீழ் போட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் நிரம்பியிருந்தது. பறையோசையும், பேண்டு வாத்தியமும் மாறி மாறி முழங்கி ஓய, புதுக்குடி கூத்து ஆரம்பமாகியது. ஒப்பாரிக்குரல்களை மிஞ்சி, கூத்தின் பாடல் உரக்கக் கேட்டது. சனிக்கிழமை என்பதினால் அன்றே சடலத்தை எடுத்துவிட வேண்டுமென்கிற முனைப்பில் அந்தக்குடும்பத்தின் பங்காளிகள் ஒவ்வொருவரும் ஓடியாடி வேலை செய்துகொண்டிருந்தார்கள்.

“ஒன்னும் அவசரமில்லப்பா, சனிப்பொணம் தனியா போவாதுன்னு தான் சொல்வாங்க… அதெல்லாம் ஒரு பெரிய விசயமில்ல… பாடையில ஒரு கோழிக்குஞ்ச கட்டி தொங்கவிட்டு எடுத்துட்டுப்போயி சுடுகாட்டுல அறுத்து வீசுனா ஆச்சி… நெதானமாவே செய்ங்க” என்று தேறுதல் சொல்லிக்கொண்டிருந்த பெரியவரின் பேச்சைக் கேட்க அங்கு யாருக்கும் நேரமில்லை.

வெளியூரிலிருந்து வந்திருக்கும் சனங்களுக்கும், வரப்போகும் உறவுகளுக்கும், சேர்த்து உறவுக்காரப் பெண்கள் உதவியுடன் சாப்பாடு தயாராகிக் கொண்டிருந்தது. விரிசலாகிக்கிடக்கும் உறவுகள் இம்மாதிரி சந்தர்ப்பங்களில் பிணக்குகளை மறந்து ராசியாகிக் கொள்வார்கள். நல்ல நிகழ்வுகளில் கூட முறுக்கிக்கொண்டு, வீம்போடு திரிந்தாலும், இம்மாதிரி துக்க நிகழ்வுகளில் பதறியடித்துக்கொண்டு வந்து சேர்ந்துகொள்வது வழக்கம்.

தோட்டத்தின் மாமரநிழலில் குந்தியிருந்த பெருமாளைச்சுற்றி ஆண்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. காடு கழனிகளில் உழலும் சம்சாரிகளுக்கு முடிவெட்டி சவரம் செய்துகொள்ள எங்கே நேரம், இம்மாதிரியான நேரங்களில் தங்களது தலைச்சுமைகளை இறக்கிவைத்தால் தான் உண்டு, அதுவும்போக, இந்த சந்தர்ப்பங்களில் வெட்டிக்கொண்டால் பணம், காசு என்று தனியாகக் கொடுக்க வேண்டிய தேவையும் இருக்காது. இதற்கென்றே சிலர் காத்திருப்பதுமுண்டு.

பொழுது உச்சியைத் தாண்டியும் சிரைத்துக் கொண்டிருந்தவரிடம், “டேய் பெருமாளு, இங்க வெட்டி முறிச்சது போதும், போயி சோத்த தின்னுட்டு ஆவ வேண்டிய சோலியப் பாரு.. அப்புறம் கடைசில அத வாங்கிட்டு வரல, இத வாங்கிட்டு வரலன்னு, காட்டுல நின்னு சொல்லிக்கிட்டு இருந்தியன்னா வாய பொளந்துருவேன் பாத்துக்கோ” என்று சாராய நெடியில் சலம்பிவிட்டு போனான் பெரியவரின் பங்காளி ஒருத்தன்.

இறுதியாக சவரத்துக்காக காத்திருந்த ஊர்க்காரர் ஒருவரிடம், “பெரியவரே நாளைக்கி பால்தெளி முடிஞ்சதும், நானே ஒங்க வூட்டுக்கு வரேன்” என்று கூறி எழுந்து வேட்டியை அவிழ்த்து மேலில் சிதறிக்கிடந்த முடிகளை துண்டினால் துடைத்துவிட்டு சாப்பிடச் சென்றார் பெருமாள்.

பழனிமாணிக்கத்தின் மகன் மற்றும் மகள் வீட்டுப்பேரப்பிள்ளைகளை கணக்கிட்டு, எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் நெய்ப்பந்தம் உருட்டி வைத்துவிட்டு, சடலத்தைக் குளிப்பாட்ட தண்ணீர் எடுப்பதற்கும், வாய்க்கரிசி நெல் எடுப்பதற்காகவும் பெரியவரின் உறவினர்களை ஆயத்தப்படுத்தினார்  பெருமாள்.

“அந்தி மானம் மழ வர மாதிரி இருக்கு… சீக்கிரம் கொடத்த எடுத்துக்கிட்டு வாங்க..” என்று சொல்லிக்கொண்டே விபூதி பொட்டலத்துடன் முன்னே போனார்.

பெரியவரை குளிப்பாட்டி, புதுவேட்டி மாற்றி, பாடையில் தூக்கி வைக்கும்போது சொந்தங்கள் எல்லாரும் கதறுகையில் பெருமாளுக்கும் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது. நெல்லோடு கலந்திருந்த தானியங்களை வழி நெடுகிலும் விசிறிக்கொண்டே பாடைக்கு முந்தி நடக்கையிலும் கூட யாரிடமும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

ஊரே நாவிதனாக பார்த்தபோது இவர் மட்டுந்தானே மனிதனாக பாவித்தார் என்று பழனியுடனான பழைய நினைவுகளோடும், முந்தினநாள் அந்திப்பொழுதில் பேசிக்கொண்டிருந்த பேச்சும், “நாங்கல்லாம் இருக்கோம், அப்படி ஒன்ன சும்மா விட்ற மாட்டோம்” என்ற பெரியவரின் நினைவு கலக்கத்தோடு, சுடுகாட்டில் சிதைக்கு தீமூட்டும் முன் செய்யும் சாங்கியங்களை செய்து கொண்டிருந்த பெருமாளின் பின்னங்கழுத்தில் பொத்தென்று ஒரு அடி பலமாக விழ, நிலை குலைந்து கீழே விழப்போனவரை அருகிலிருந்தவர் தாங்கிப்பிடித்தார்.

“நானும் வந்ததுல இருந்து பாக்குறன், எல்லா சாங்கியத்தையும் மாத்தி மாத்தி செஞ்சிக்கிட்டு இருக்க… இதவுட முக்கியமா அப்பிடி என்ன புடுங்குற வேல ஒனக்கு இருக்கு” என்று மீண்டும் பெருமாளை நோக்கி அடிக்கப்பாய்ந்த சிவலிங்கத்தை பக்கத்தில் நின்றவர்கள் பிடித்து நிறுத்தினார்கள்.

“சரிதான் வுடு மாமா.. அவந்தான் எதோ நெனப்புல மாத்தி மாத்தி பண்ணிபுட்டான், அதுக்காக அவனப்புடிச்சி அடிச்சா சரியாகிருமா?, மழ வேற வர மாதிரி இருட்டிக்கிட்டு வருது… சீக்கிரம் கொள்ளி வச்சாச்சின்னா, அதது அவுங்க ஊர பாத்து போவும்ல” என்று வெளியூரிலிருந்து வந்திருந்த ஒருவர் சிவலிங்கத்தை அமைதிப்படுத்த,

“நானும் வந்ததுல இருந்து மூணு தடவ சொல்லி பாத்துட்டேன், சொன்னத காதுல வாங்கிக்காம அவம்பாட்டுக்கு முன்னுக்குப் பின்ன மாத்தி செஞ்சிக்கிட்டு இருந்தா மனுசனுக்கு கோவம் வருமா? வராதா?” என்று சொல்லி தளர்ந்து போயிருந்த இடைவேட்டியை அவிழ்த்து இறுகக்கட்டினார் சிவலிங்கம். மண்டைக்கேறிய போதையில் கண்கள் சிவந்திருந்தது.

இறந்த பிணம், காடு போய் சேர்வதற்குள் சிறு சிறு விஷயங்களைக் கூட பூதாகரமாக்கி பெரும் சண்டையில் கொண்டு நிறுத்திவிடுவார்கள். அதற்கென்றே போதையேற்றிக் கொண்டு சிலர் திரிவதுமுண்டு. மாமன், மச்சான் நையாண்டி பேச்சுக்கள், இறுதியாக மண்டை உடைப்பில் தான் நிறைவுறும். நிறைய சண்டைகளை கவனித்துப்பார்த்தால், உப்புக்கும் பெறாத காரணமாக இருக்கும். இன்றைக்கு சிக்கியவர் பெருமாள்.

பூராப்பேரும் நெகா தெரியாம தளும்ப தளும்ப போதையில நிக்குறானுவோ, பேசிப் பேசியே பிரச்சினையைப் பெரிதாக்கி கலவரமாக்கி விடுவார்கள் என்கிற பதட்டத்தில் “டேய், பெருமாளு ஒழுங்கு மயிரா வேலைய பாக்குறதுன்னா பாரு.. இல்லைன்னா பொட்டியத் தூக்கிக்கிட்டு நடையக் கட்டு, நாங்க வேற ஆளவச்சி  பாத்துக்குறோம்…” என்று காட்டமாக எரிந்து விழுந்தார் உள்ளூர்க்காரர்.

“அட வுடுங்கப்பா, இதெல்லாம் ஒரு விசியமா பெருசுபடுத்திக்கிட்டு இருக்கீங்க, சீக்கிரம் ஆவுற வேலைய பாருங்க” என்று ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றாகப் பேச, எந்தக்குரலுக்கும் பதில் பேசாமல் குனிந்த தலையோடு செய்ய வேண்டிய சாங்கியங்களை செய்து முடித்து சிதைக்கு தீ வைக்க, பந்தத்தைக் கொளுத்தி, பழனிமாணிக்கத்தின் மகனிடம் நீட்டினார் பெருமாள்.

பாடை திருப்பத்திற்கு முன்னாடி இருக்கும் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து, சாவு வேலை செய்தவர்களுக்கு கூலி கொடுப்பது வழக்கம். எல்லோருக்கும் கொடுப்பது போல், பெருமாளுக்கும் கொடுத்துவிட்டு, “நாளைக்கி நேரத்துலையே வந்துடுறா பெருமாளு, பால் தெளிச்சிப்புட்டு சாம்பலை கரைக்க திருவாடுதுறை வரை போகணும்” என்று சொல்லுகையில் கூட, ‘அவன் ஏதோ ஆத்ரத்துல கைய நீட்டிபுட்டான், மனசுல ஒன்னும் வச்சிக்காத’ என்று சொல்வார்களென, எதிர்பார்த்த பெருமாளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

‘இந்த ஊர்ல எத்தன சீழ்ப்பிடிச்ச மண்டைகள வழிச்சி பண்டுவம் பாத்துருப்பேன், அதுல ஒன்னு கூட நமக்கு ஆதரவா ஒரு வார்த்த பேசலையே’ என்கிற ஆற்றாமையில் மனம் வெதும்பி நின்றார் பெருமாள்.

வெளியூர், உள்ளூர் என்று முன்னூறு நபர்களுக்கு மத்தியில் நிகழ்ந்த அவமானம், அடியை விடவும் பலமாக வலித்தது பெருமாளுக்கு. அதுவும் தன்னைவிட வயதில் இளையவன் கையால் அடி வாங்கியது கள்ளிப்பழ முள்ளாக உடலெங்கும் அருவியது. ‘சாங்கியத்த முன்ன பின்ன மாத்தி செஞ்சதுனால பொணம் எரியமாட்டேன்னு எந்திரிச்சி ஒக்காந்துக்குமா? வெயிலு மழன்னு கூட பாக்காம எத்தன தடவ இந்த ஊரு சனங்களுக்காக நாயா ஒழச்சிருக்கேன், அந்த நன்றியெல்லாம் இல்லாம பொசுக்குன்னு கைய நீட்டிட்டாங்களே…. எனக்கு கொடுக்காத மரியாதைய, என் வயசுக்காவுது கொடுத்து கைய ஓங்காம இருந்திருக்கலாம்’ என்று அலை அலையாக அந்த அவமானமே அவரை முழுவதும் ஆக்கிரமித்திருந்தது.

ஒரே ஒரு அடி, ஒரு மனிதனுக்கு எவ்வளவு பெரிய காயத்தைத் தந்திருக்கிறது. அடி என்பதைவிடவும் அவமானம் தான் பெரிய உளைச்சலைத் தருகிறது. ஆதரவுக்கரங்களே நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்தால் யாரிடம் சென்று முறையிடுவது?. சாதாரண நாவிதன் தானே என்கிற அவர்களின் அலட்சியப் பார்வைகள் பெருமாளை என்னென்னமோ யோசிக்கத் தூண்டியது. நூறு கழுகுகள் ஒன்று சேர்ந்துகொண்டு தன்னுடலை கொத்தித் தின்பது போன்ற உணர்வில் இப்படியே இந்த மரத்தடியிலேயே தூக்கு மாட்டிக் கொள்ளலாமா? என்கிற ஆவேசம் கூட வந்து போனது. இதுநாள்வரை தனக்கு அரணாக நின்றவருடைய மரணத்திலேயே அடித்து அவமானப்படுத்திவிட்டார்களே என்கிற வெதும்பலுடன் கண்ணீர் வழிய மரத்தடியில் அமர்ந்திருந்தவர் திடீரென ஆவேசம் கொண்டு எழுந்து சுடுகாடு நோக்கி நடந்தார்.

கரும்புகையுடன் மேலெழும்பிக் கொண்டிருந்த தீச்சுவாலைகளை கொஞ்சநேரம்  உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த பெருமாள், இடுப்பில் மடித்து வைத்திருந்த சவரக்கத்தியை எடுத்துப் படமெடுத்து ஆடும் பாம்பைப் போல் வெடித்து எரிந்து கொண்டிருந்த சிதைக்குள் வீச, எரிந்து கொண்டிருந்த உடல் விரைத்து எழும்பி, கடைசியாகத் துடித்து அடங்கியது.

***

அரசன் – பெரம்பலூர் மாவட்டம் , உகந்த நாயகன் குடிக்காடு. சென்னையில் வசித்து வருகிறார். இவரது சிறுகதைத் தொகுப்பு “இண்ட முள்ளு ” சமீபத்தில் மறுபதிப்பு கண்டது

யாரும் நிரந்தரமாகத் தோற்பதுமில்லை, தோற்கடிக்கப்படுவதுமில்லை – கருணாகரன்

5

நேர்கண்டவர்: அகர முதல்வன்

ஈழத்து கவிஞர்களுள் கருணாகரனுக்கு ஒரு தனித்துவ இடமுண்டு. போர்நிலத்துள் தன்னுடைய வாழ்வையும் எழுத்தையும் தகவமைத்துக்கொண்டவர்களுள் ஒருவர்.ஆயுதப் போராட்ட காலத்தில் வெளியான “வெளிச்சம்” கலை இலக்கிய பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர். “ஒரு பொழுதுக்காக காத்திருத்தல்”, “பலி ஆடு”, “ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்” போன்ற கவிதைத் தொகுப்புக்கள் மூலம் அறியப்பட்டவர். இவரின் “வேட்டைத் தோப்பு” சிறுகதை தொகுப்பு வெளியாகியிருக்கிறது.கவிஞர் எஸ்.போஸ் படைப்புக்களை தொகுத்தவர்களுள் இவரும் ஒருவர். சமீபத்தில் புலம் பதிப்பகம்,புது எழுத்து பதிப்பகம் வாயிலாக “உலகின் முதல் ரகசியம்” ,”நினைவின் இறுதி நாள்” ஆகிய கவிதைத்தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.

***

‘பிணவாடை எழுந்து மலவாடையை மூடிற்று
மலவாடை எழுந்து பிணவாடையை மூடிற்று
அந்தக் கடலோரத்தில் கடல் வாசம் வீசவில்லை
மீன் வாசமும் வீசவில்லை
புதைகுழிகள்  எழுந்த சனங்களையும்
இருந்த சனங்களையும் மூடின.
எழுந்து வந்த சூரியனின் உடலெங்கும் இரத்தம்
துக்கந்தாழாச் சூரியன் வீழ்ந்த இடமும் இரத்தம்
கண்ணீர் பெருகி வீழ்ந்த கடலும் இரத்தம் ‘

முள்ளிவாய்க்கால் பேரழிவுகாலத்தின் பின்பான ஈழக்கவிதையில் உங்களுடைய இந்த வரிகள் மிக முக்கியமானவை. சேரனின் ‘இரண்டாவது  சூரிய உதயம்’ என்கிற கவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது. எண்பதுகளில் எழுதப்பட்ட அந்தக் கவிதையில் ‘சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து எழுந்து வருக’ என்றொரு வரியிருக்கும். அந்தச் சூரியனுக்கும் இந்தச் சூரியனுக்குமிடையில் எத்தனை தலை நிமிர்வுகள்? எத்தனை பிரளயங்கள்? ஈழத்தமிழருக்கு இனியெப்போது சூரிய உதயம்?

இலக்கியப்பிரதிகளின்வழியாகச்சொல்வதென்றால், 1980 களின்முற்பகுதிநம்பிக்கையின்காலம். இதுகழிவிரக்கக்காலம்எனலாம். நீத்தார்பாடல், சரமகவி, ஊழிக்காலம், Box, ஆதிரை, போருழல்காதை, காணாமல்போனவனின்மனைவி, நடுகல், காடாற்று, நீந்திக்கடந்தநெருப்பாறு, உயிர்வாசம், புள்ளிகள்கரைந்தபொழுது, சேகுவேராஇருந்தவீடு, தேவதைகளின்தீட்டுத்துணி, கண்டிவீரன், 1958  (இன்னும்பலவுண்டு) என்றுதொடரும்பிரதிகளேயுத்தமுடிவுக்குப்பின்வந்துகொண்டிருப்பவை. இதில்என்னுடையபலபிரதிகளும்சேர்த்தியே.

இதுதுக்கம் தாளாமல் புலம்பும்நாட்கள் அல்லது திகைப்பிலுறைந்த காலம் அல்லது தடுமாற்றங்களின் நாட்கள் என்றே சொல்ல வேண்டும் என்பதால் தான்நம்பிக்கை தரும் சொற்களை எங்கு நான் காண்பேன்?” என்று எழுத வேண்டியுள்ளது. இன்றைய ஈழத்தமிழரின் அரசியல் நிலவரம் இதற்கு மேலும் சான்று.

ஆனால், இதைக் கடந்து சென்றிருக்க வேண்டும் நாம். அத்தகைய முனைப்பெதையும் காணவில்லை என்பது துயரம். போர் எதிர்ப்புப் பிரதிகள் எழுதப்பட வேண்டும். புதிய உணர்தளத்தை நோக்கிய பயணம் நிகழ்வது அவசியம். அப்போதுதான் மனநிலை மாற்றம் நிகழும்.

யாரும் நிரந்தரமாகத் தோற்பதுமில்லை, தோற்கடிக்கப்படுவதுமில்லை. எந்தச் சூழலிலும் ஏதோ சில வழிகள் திறந்தேயிருக்கும் – வாய்ப்புகளிருக்கும். வரலாற்று அசைவியக்க விதியிது.

இந்தப் புரிதலோடும் நம்பிக்கையோடும் அந்த வாய்ப்புகள் என்ன, அந்த வழிகள் என்ன என்று இனங்காண்பதே ஆற்றலுள்ள சமூகத்திற்கு அழகும் பெறுமானமும். அதுவே வல்லமை. பிறகு அவற்றை எப்படிக் கையாள்வது, எப்படி வெற்றியை நோக்கி நகர்த்துவது என்று (நுட்பமாக) சிந்தித்துச் செயற்பட வேணும். இதற்குப் படிப்பினைகளும் புதிய வழிச் சிந்தனைகளும் பெருந்துணை செய்யும்.

இது ஒரு வழி.

இன்னொரு வழி, வாய்ப்புகளை நாமாக உருவாக்கிக் கொள்வதாகும். நிலவுகின்ற அக புறச் சூழ்நிலைகளைக் கூர்மையாக அவதானித்து அரசியற் செயற்பாட்டை, புத்தாக்கச் செயற்பாடுகளை முன்னெடுப்பது. அதன் வழியே சாதகமான வாய்ப்புகளை உருவாக்கி வெற்றியடைவது.

இலக்கியமும் அப்படித்தான். புதிய புனைவுச் சாத்தியங்களின் வாசல்களைத் திறக்க வேணும்.

இந்த இரண்டு வழிகளிலும் முயற்சிக்க வேண்டும். செயற்பட வேண்டும். இதுவே இப்போதுள்ள தமிழ்த் தலைமைகளுக்கான பொறுப்பும் விதியுமாகும். ஆனால், இதைப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலோ, திராணியோ, கரிசனையோ இந்தக் கட்சிகளுக்கில்லை. ஏனென்றால், இவை மக்களுடன் இணைந்து நிற்கவோ, மக்களிடம் இறங்கி வேலை செய்யவோ தயாரற்றவை. பெரும்பாலும் பிரமுகர் மற்றும் முகவர் அரசியலையே இவை கொண்டிருக்கின்றன. இந்தத் தலைமைகளைக் கடந்து சிந்திக்கும் ஆற்றலும் நோக்கமும் சமூகத்துக்குமில்லை என்பதால் இப்போதைக்கு மீட்சியில்லை.

போராட்டம் தோற்றதும், தோற்கடிக்கப்பட்டதும் பெரிதல்ல. அது எங்கும் நிகழக் கூடியது. ஆனால், தமிழ்ச்சமூகம் தொடர்ந்து தோற்றுக் கொண்டேயிருப்பதுதான் அவமானமும் முட்டாள்தனமும்.

தமிழ்ச்சமூகத்திடம் மூன்றாவது கண் இல்லை. அகவிழி திறக்கப்படவில்லை. பதிலாக அது அகச் சிக்கல்களுக்குள்ளாகியிருக்கிறது. அதனால்தான் அது கடந்த காலத்தின் புதைசேற்றுக்குள் கிடந்துழல்கிறது. இந்த நோயிலிருந்து விடுபட முடியாமல் அது தத்தளிக்கிறது என்பதால் யாரை நொந்தும் பயனில்லை. நம்மை நாமே நொந்துக் கொள்வதைத் தவிர. அப்படியே இலக்கியச் செயற்பாட்டினருக்கும் ஏனைய அறிவுத்துறையினருக்கும் இது விதி.

போராட்டக் களத்திற்குள் இருந்து எழுதப்பட்ட நிறைய படைப்புக்களோடு உங்களுக்கு நிறையவே பரிச்சயம் உண்டு. குறிப்பாக விடுதலைப் போராளிகளாக இருந்து எழுதியவர்களின் படைப்புக்கள் மிகமிக முக்கியமானவை. அன்றைய நாட்களில் போர்க்கள இலக்கியத்தின் பண்புகள் எவ்வாறாக இருந்தன?

ஒன்று, மக்களுடைய பாடுகளை, அவலங்களை எழுதுவது. அதற்குக் காரணமான எதிர்த்தரப்புகள் (அரசு மற்றும் அதன் கட்டமைப்புகள், நடைமுறைகள்)  மீதான சீற்றத்தையும் அவற்றின் அறமீறல்களையும் எதிர்ப்பதும் வெளிப்படுத்துவதும்.  இதில் பலருண்டு. உதாரணத்துக்குச் சிலரைச் சொல்லலாம். இயல்வாணன், சித்தாந்தன், தானா விஷ்ணு, பா. அகிலன், நிலாந்தன், முல்லைக்கோணேஸ், தாமரைச்செல்வி, முல்லை யேசுதாசன், ஆதிலட்சுமி சிவகுமார், இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், பிரதீப குமரன், சு. மகேந்திரன், திசேரா, மலர்ச்செல்வன்,  எஸ்போஸ், அமர தாஸ், உமா ஜிப்ரான், சு.வில்வரத்தினம், கருணை ரவி, சு.மகேந்திரன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இதில் இன்னும் பலருண்டு. ஆனால், இவர்களெல்லாம் போராளிகளல்ல.

அடுத்தது போரில், போராட்டத்தில் வெற்றியடைய வேண்டும் என்ற நோக்கிலானது. போராட்டக்கள அனுபவங்கள், அதைப் பிரதிபலிக்கும் உணர்வுகள், சக போராளிகளின் தியாகங்கள், தலைமை மீதான (இயக்க) விசுவாசமும் வியப்பும், சனங்கள் மீது கொண்டுள்ள பற்று, இனப் பிடிப்பு, அதன் சிறப்புக் குறித்த, இருப்புக் குறித்த எண்ணங்களைப் பகிர்வது, எதிரியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஆவேசம், கிடைக்கும் வெற்றித் தருணங்களின் கொண்டாட்டம், அது உண்டாக்கும் எழுச்சி என அமைந்தவை. இதில் கவிஞர்கள் புதுவை இரத்தினதுரை, அம்புலி இருவரும் முக்கியமானவர்கள். கூடவே மலைமகள், தமிழ்க்கவி, குணா கவியழகன், வசந்தன், கஸ்தூரி, மலரவன், தேவரண்ணா, கோளாவிலூர் கிங்ஸ்லி, சேந்தன், தூயவன் எனப் பலரைச் சொல்லலாம். இவர்கள் எல்லோரும் போராளிகள்.

இந்த இரண்டு அம்சங்களினதும் மைய நோக்கம் தமிழ்ச் சமூகத்தின் (அவர்களுடைய நோக்கில் தமிழினத்தின்) விடுதலையும்  மேன்மையுமாகும்.  

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இன்றைக்கு ஈழர் இலக்கியம் தமிழ்மொழியுலகில் ஒரு முக்கிய பேசுபொருள். தன்னை அது பலமுகங்களில் வெளிப்படுத்துகிறது. பல தரப்புக்குரல்களோடு பேச முனைகிறது. போர் இலக்கியம்”  பற்றிய உங்கள் கருதுகோள் என்ன?

கலையினதும் இலக்கியத்தினதும் பண்பே அதுதான், பல கோணங்களில், பலவிதங்களில், பலபரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வது. நீங்கள் சொல்வதைப்போல ஈழர் இலக்கியம் இப்பொழுது ஒரு முக்கியமான பேசுபொருளாகவும் பலருடைய கவனிப்புக்கும் உள்ளாகியிருக்கிறது என்றால், இதற்கு மூன்று காரணங்கள் இருக்க வேணும். ஒன்று, முன்னரையும் விட அது இப்பொழுது செழுமை கூடியிருக்கிறது என்ற அடிப்படையிலாக இருக்க வேணும். இதற்கான ஆதாரங்கள், அடையாளங்கள் என்ன என்பதையும் சேர்த்தே இதை நாம் பார்க்க வேண்டும். மற்றக் காரணம், ஈழத்தமிழர்களும் ஈழப்போராட்டமும் தோற்கடிக்கப்பட்டதனால் உண்டான பரிவு, நேசம், அதன் வழியான இரக்கம், அது உண்டாக்கும் ஆதரவு மனநிலை போன்றவை.

அடுத்தது, போராட்டத்தையும் அது நடந்த, நடத்தப்பட்ட விதத்தையும் விமர்சன பூர்வமாகப் பார்ப்பதனால் உண்டான கவனிப்பு. அதாவது என்ன நடந்திருக்கிறது என்று அறிகின்ற ஆர்வம் போன்றவை. இதைப் போர் இலக்கியம் என்பதற்குப் பதிலாக போர் எதிர்ப்பு இலக்கியம் என்றே கூறவேண்டும்.

ஆக இந்தக் காரணங்களையெல்லாம் நாம் பரிசீலித்துக் கொள்ள வேண்டும். விமர்சன ரீதியாக ஆய்வுக்குள்ளாக்க வேணும். அதன் பிறகே ஈழ இலக்கியத்துக்குக் கிடைத்து வரும் கவனிப்பைப் பற்றி, பெறுமானங்களைப் பற்றி நாம் திருப்திப்படலாம்.

இதற்கப்பால் போர் இலக்கியம் பற்றி என்னுடைய பார்வை.அதை நாம் எந்தக் கோணத்தில் பார்க்கிறோம்? போர் இலக்கியம் என்பது என்ன? போரை ஆதரிக்கும் பிரதிகளா? அதை எதிர்க்கும் இலக்கியமா? இதுவரையான நம் போர் இலக்கியத்தில் பெரும்பாலான பிரதிகள் மறைமுகமாகப் போர் ஆதரவுப் பிரதிகளாகவே உள்ளன. போருக்கான நியாயத்தை வலியுறுத்துவனவாக.போரை எதிர்ப்பதாகப் பிரகடனப்படுத்தப்படும் பிரதிகளிலும் போரையும் போரின் சாகஸங்களையும் அதில் உண்டான இழப்புகளையும் தியாகத்தையும் உட்தொனிப்பில்  ஆதரிக்கின்றதையே உணரக்கூடியதாக உள்ளது. அதாவது எதிர்த்தரப்பான அரசினாலும் அரச படைகளினால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளைச் சித்திரிப்பதாக, அநீதியைப் பேசுவதாக, அதனால் சனங்களுக்குண்டான அவலங்களை மீள் நினைவு படுத்துவனவாக. அப்படியென்றால் இத்தகைய வெளிப்பாட்டிலும் நுகர்விலும் (அதற்கான ஆதரவிலும்) நிகழ்ந்து கொண்டிருக்கும் உளநிலை என்னவாக உள்ளது? ஏதோ வகையில் பகையை வளர்த்தல்தானே. சினமூட்டல்தானே! இப்படிச் செய்யும்போது வன்மம்தானே பிறக்கும்?

உண்மையில் போர் எதிர்ப்பு இலக்கியம் என்பது போரில் ஈடுபட்ட தரப்புகள் உண்டாக்கிய  விளைவுகளைச் சொல்வதாக இருக்க வேண்டும். அவற்றின் உளநிலையை, அதனால்  மகத்தான மானுட வாழ்க்கையையும் இயற்கையையும் சீரழிக்கப்பட்டதைப் பேச வேண்டும். போரின் மூர்க்கத்தில் ஒளிந்திருக்கும் மூடத்தனத்தை எதிர்ப்பதாக, விமர்சிப்பதாக, அந்தச் சிந்தனை உண்டாக்கிய விளைவுகளின் நிமித்தமாக அவற்றை நிராகரிப்பதாக அவற்றின் மீறல்களை எதிர்ப்பதுமாகவே இருக்க வேண்டும்.

ஆனால், நம்மை அறியாமலே நாம் இந்தப் பிரதிகளால் ஈர்க்கப்படுகிறோம். ஏனெனில் இவை பேசவிழையும் முரண்பாடு அல்லது போர் என்பதற்கு எப்போதும் பெருங்கவர்ச்சி உண்டு. ஈழப்போர் சாகஸங்கள் நிறைந்தது. அசாரணங்களையும் கற்பிதங்களையும் நிறையக் கொண்டது. இதெல்லாம் சேர்ந்து ஈழப் போரிலக்கியம் மீதான ஈடுபாட்டை தமிழ்மொழிச் சூழலில் உண்டாக்கியுள்ளது. ஆனால், இதில் கவனிக்க வேண்டிய ஒரு உண்மையைக் குறிப்பிட வேண்டும். மேற்குறித்த இந்தப் போரிலக்கியப் பிரதிகள் குறித்து தமிழகத்திலே உண்டான கவனம் அளவுக்கு முஸ்லிம் சமூகத்திடமிருந்து எந்த விதமான அபிப்பிராயங்களும் பெரிய அளவில்  வந்ததில்லை. இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பது கண்டறியப்பட வேண்டும்.

உங்களுடைய முந்தைய காலக் கவிதைகளில் அதாவது புலிகளின் காலத்தில் நீங்கள் எழுதிய கவிதைகளில் இருந்த தேசியத்துவ குரல் இன்றைய கவிதைகளில் மறுதலிக்கப்பட்டு வருவதன் காரணம் என்ன? போர் தருவித்த படிப்பினை என்று கருதலாமா?

இது தவறு. அப்படி நான் உணரவேயில்லை. அப்படித் திட்டமிடவும் இல்லை. 1980 களின் தொடக்கத்திலிருந்து ஒடுக்குமுறைக்குள்ளாகியிருக்கும் சனங்களுக்கான நீதியைக் குறித்தே (சமூக நீதி உட்பட) சிந்தித்திருக்கிறேன். இப்போதும் அதையே – அந்த நோக்கிலேயே சிந்திக்கிறேன். என்னுடைய தொடக்ககாலக் கவிதைகளிலிருந்தே இந்தத் தொடர்ச்சியை நீங்கள் பார்க்க முடியும். விரைவில் முழுமையான தொகுப்பொன்று வரச் சாத்தியமுள்ளது. அப்போது இதைத் துல்லியமாக உணரலாம். ஆனால், 2009 இல் யுத்தம் முடிவுற்றதற்குப் பின்பு தமிழ்ச் சமூகத்திடம் உருவாகிய   அரசியற்சூழலும், தன்மைகளும் மாறியதால் இதை நோக்கும் (நோக்குவோரின்) முறைமை (கண்ணாடி) மாறியிருக்கலாம்.

பின்வந்த பொதுநிலை அரசியல் போக்கும், அதன் தன்மையும் (புலிப்புராணம் பாடுதல் மட்டும்)  எதையும் எவரையும் மதிப்பிடுவதிலும், அடையாளம் காண்பதிலும் குழப்பங்களை உண்டாக்கியதென்பதை பலரிடத்திலும் பார்க்க முடிகிறது. இதனால்தான் அவர்கள் தவறான முடிவுகளுக்கும் பிழையான கற்பிதங்களுக்கும் உள்ளாகிறார்கள். இன்னும் அழுத்தமாகச் சொல்வதென்றால், இயக்கத்தில் இருந்தவர்களுக்கும் இயக்கத்தோடிருந்தவர்களுக்கும் உள்ள நெருக்கடிகளை இவர்கள் புரிந்து கொள்வதில்லை. பொருளாதார நெருக்கடியிலிருந்து உயிர்ப் பாதுகாப்பு, சமூகம் நடத்த முற்படும் விதம்  போன்றவற்றினால் உண்டாகும் உள நெருக்கடிகளையும் புரிந்து கொண்டால் இப்படியெல்லாம் கணிக்க முற்பட மாட்டார்கள். உங்களுடைய இந்தக் கேள்வியும் அத்தகையை பொது அவதானிப்பின் வழியாகவே உருவாகியிருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது. இல்லையென்றால், என்னுடைய மாறுபடுதலை – முரணை – நீங்கள் அடையாளப்படுத்த வேணும்.

மீண்டும் அழுத்தமாகச் சொல்கிறேன். விடுதலைக்காகப் போராடும் மக்களிடமிருந்து எந்த நிலையிலிருந்தும் என்னுடைய உறவும் சிந்தனையும் மாறியதுமில்லை. விலகியதுமில்லை. தாமே தலைமை என்று சொல்லிக்கொண்டு பல தரப்புகள் வரலாம் போகலாம். அது பற்றிய கரிசனைகள் எனக்கில்லை. சனங்கள் எப்போதும் இருப்பார்கள். அவர்களுடனே நானும் ஒருவனாக இருப்பேன்.

தவிர, படிப்பினைகளை மையப்படுத்திய சிந்தனை, போரின்போதான, போருக்குப் பிந்திய  என்னுடைய கவிதைகளில் ஆழமாக வெளிப்பட்டுள்ளது என்பது உண்மையே. வரலாற்றனுபவங்களையும், சனங்களின் எதிர்காலத்தையும் (மனித நேயத்தையும்) குறித்துச் சிந்திக்கும் எவருக்கும் இது தவிர்க்க முடியாதது. குறிப்பாக உலகளாவிய போரனுபவங்கள் போர் மறுதலிப்புக்கே கொண்டு சென்றிருக்கின்றன.

இங்கே இன்னொன்றையும் இதற்கு ஆதரமாகச் சொல்ல வேண்டும். 1980 களின் நடுப்பகுதியில் “மரணத்துள் வாழ்வோம்” வந்ததைப்போல இப்போது ஒரு பிரதி தமிழ்மொழிச் சமூகங்களிடமிருந்து ஒருமித்து வரக்கூடிய சாத்தியமுண்டா? 1990 களுக்குப் பிறகே இன ஒடுக்குமுறை உச்சமடைந்து பேரவலங்கள் நிகழ்ந்தன. ஆனாலும் அதைப்போல இன்னொரு தொகுதி வரவேயில்லையே. பதிலாக மீசான்கட்டைப் பாடல்கள், யுத்தத்தைத் தின்போம் போன்றனவே வந்திருக்கின்றன. அப்படி வந்தாலும் அதில் மரணத்தில் வாழ்வோமில் பங்கேற்றதைப்போல தமிழ், முஸ்லிம், மலையகப்படைப்பாளிகளும் ஒருமித்திருப்பர் என்பதற்கில்லை. அந்தளவுக்கு நோக்கு நிலைகளும் மையங்களும் மாறி விட்டன. 

போர் அனுபவங்கள் போரை மறுதலிக்கும் பண்புக்கு இட்டுச்சென்று இருக்கிறது. அது உண்மைதான். ஆனால் நான் கேட்பது உங்கள் போர் மறுதலிப்பு பற்றியல்ல, தேசியத்துவ மறுதலிப்பு தொடர்பானது. இன்றைக்கும் நீங்கள்  தமிழ்த்தேசியக் கருத்தியலை ஏற்றுக் கொள்கிறீர்களா?

இதற்குரிய பதிலை முதற்கேள்விக்கான பதிலில் சொல்லி விட்டேன். மீண்டும் சொல்லத்தான் வேணும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ்த்தேசியம் என்பது என்ன? இன்று பொது வழக்கிலும் பொது உணர் தளத்திலும் உள்ள தமிழ்த்தேசியம் என்ற கருதுகோள் மீது எனக்குக் கடுமையான விமர்சனம் உண்டு. “கோட்பாட்டு ரீதியாகப் பார்த்தால் பிரயோக நிலையில் அல்லது கருத்து நிலையில் இப்போதுள்ளது தமிழ்த்தேசியம் அல்ல. இது தமிழ் இனவாதமாகும்”. எனவேதான் அது மற்றமைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் குறுந்தேசியமாகவே உள்ளது. இதற்குள் ஜனநாயகத்திற்கும் பன்மைத்துவத்திற்கும் இடமில்லை. ஜனநாயக நெறிமுறைச் செயற்பாடுகளின் வழியேதான் தனக்குரிய தேசியத் தன்மையைக் கட்டமைக்க முடியும் என்ற புரிதல் இல்லை. இந்தத் தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துவோரும் முன்னெடுப்போரும் பல இடங்களிலும் திறந்த மனதோடில்லை. ஜனநாயகவாதிகளாக இல்லை என்று கூறி வருகிறேன். “இதை மாற்றித் தமிழ்த்தேசியத்தை வளப்படுத்த வேண்டுமானால் அதைப் பன்முகத் தன்மையோடும் ஜனநாயக அடிப்படைகளோடும் நெகிழ வைக்க வேண்டும். அதற்கான உறுதிப்பாட்டோடு முன்னெடுக்க வேண்டும். முஸ்லிம்களையும், மலையக மக்களையும் சமநிலையில் பேணுவதற்குக் கரிசனை கொள்ள வேணும். சிங்கள மக்களைப் பகை நிலையில் பார்க்கும் நிலையிலிருந்து விடுபட வேண்டும். சாதிய, பிரதேச, பால் வேறுபாடுகளை நீக்க வேண்டும்” என்கிறேன்.

ஒரு சமூகம் எந்த அடையாளத்தின் பொருட்டும் (அது இனமாகவோ, சாதியமாகவோ, பால், வயது அல்லது பிராய ரீதியாகவோ) ஒடுக்கப்பட்டால் அவர்களோடு நானிருப்பேன். அவர்களுடைய நியாயமான அரசியல் போராட்டங்களோடு இணைந்திருப்பேன். அதுதான் என் திசையும், வழியுமாகும். இதில் அனைத்து வகையான ஒடுக்குமுறைகளும் உள்ளடங்கும். இனம், மதம், மொழி, பால், சாதி, வயது, பிரதேசம் என அனைத்தும். இதற்குரிய ஜனநாயகத் தன்மையும் பன்மைத்துவமும் இல்லை என்றால் அதை நான் எதிர்ப்பேன். விமர்சிப்பேன். திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பத் தவறுகளைச் செய்து உத்தரிக்க முடியாது.

முஸ்லிம்களையும், மலையக மக்களையும் சமநிலையில் பேணுவதற்குக் கரிசனை கொள்வதில் தமிழ்தேசியக் கருத்தியலுக்கும், செயற்பாட்டிற்கும் தயக்கமிருப்பதாக நான் எண்ணவில்லை. ஆனால் இன்றைக்கும் முஸ்லீம் தரப்பும், தமிழ் தரப்பும் இணைந்து கொள்ள எவ்வளவு விருப்புடன் இருக்கின்றன  எனவும் ஆராய வேண்டும். மேலும் சிங்கள மக்களைப் பகை நிலையில் பார்க்கும் நிலையிலிருந்து தமிழ் மனநிலை விடுபட வேண்டும் என்கிறீர்கள். ஆனால் இது இருதரப்பிடமும் இருக்கக்கூடிய வரலாற்றுச் சிக்கல். சிங்கள மக்கள் அனைவரையும் பகைநிலையில் வைத்து தமிழர்கள் பார்க்கிறார்கள் எனக் கூறிவிட முடியாது. மாறாக தமிழ்ப் பொதுசனங்களை பகைநிலையில் பார்க்கிற சிங்கள மஹாவம்ச மனநிலை குறித்து நாம் இப்போதும் யாரிடமும் நொந்து கொள்ள முடியாதல்லவா?

தனக்குள்ளேயே சமூக நீதியை வழங்க முடியாத யோக்கியத்தில்(யோக்கியதையில்) உள்ளது, நீங்கள் குறிப்பிடுகின்ற தமி்ழ்த்தேசியம். இல்லையென்றால் சாதியம் இன்று மீளெழுச்சி கொள்ளுமா? பெண்களுக்கான நீதியின்மை இன்னும் நீடிக்குமா? பிரதேச ரீதியான பிளவுகள் வலுத்துக் கொண்டிருக்குமா? மலையக மக்களை அங்கீகரிக்காதிருக்குமா?

சட்டம் பிளவுபடுத்தியதை விடவும், சமூக நிலவரங்களே வடக்குக் கிழக்குப் பிளவை அதிகரிக்கச் செய்கின்றன. முஸ்லிம்கள் மட்டுமல்ல, கிழக்கிலுள்ள தமிழர்களிலும் கணிசமான தொகையினர் வடக்குக் கிழக்கு இணைவை இப்பொழுது விரும்பவில்லை. அரசாங்கம் இன்று வடக்குக் கிழக்கை இணைத்தாலும் இவர்கள் எதிர்க்கும் நிலை உண்டு. தமிழ்ச் சமூகத்திற்குள்ளேயே இப்படி நிலவரமிருக்கும்போது நீங்கள் சொல்கிறீர்கள், முஸ்லிம்களையும், மலையக மக்களையும் தமிழ்த்தேசியம் கட்டியணைத்து முத்தம் கொடுப்பதற்குச் சித்தமாக இருக்கிறது என்று.  இதையிட்டுச் சிரிக்கத்தான் முடியும்.

வடக்கு நோக்கி வந்த மலையக மக்களைப் பற்றி, வடக்கி்ல் அவர்களுடைய ஐம்பது ஆண்டுகால அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலமை பற்றி ஒரு கருத்தரங்கோ, ஆய்வரங்கோ தமிழ்த் தரப்பினால் இதுவரையில் செய்ய முடிந்ததில்லை. பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வுகளில்கூட இது உள்ளடக்கப்படவில்லை. ஏனிது நடக்கவில்லை? காரணம், இந்த மக்களைப் பற்றி, இந்தச் சமூகத்தைப்பற்றி அக்கறைப்பட வேண்டியதில்லை என்ற மேலாதிக்க எண்ணம்தானே! இந்த மக்களுடைய மரபுரிமைகளைப் பற்றி யார் பேசியிருக்கிறார்கள்? எப்படிப் பேசியிருக்கிறார்கள்? மட்டுமல்ல, ஆயுதப் போராட்டத்தில் பெரும்பங்களிப்பைச் செய்த இந்த மக்களிடமிருந்து இன்றைய  அரசியலுக்கு எத்தனை பிரதிநிதிகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது? இந்த மக்கள் வாழுமிடங்களின் முன்னேற்றம் எப்படியுள்ளது? அங்கெல்லாம் வேறுபாடு காட்டப்படாமல், புறக்கணிக்கப்படாமல் சமனிலை பேணப்படுகிறதா? அல்லது இந்தக் கட்சிகளின் ஒரு பணிமனையாவது இந்த மக்களுடைய பகுதிகளில் உண்டா?

மலையகத்திலே உள்ள தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு ஆதரவுக்குரல் கொடுக்கத் தயாராக இருக்கும் இந்தத் தலைவர்கள், மலையகத் தலைவர்களோடு கூடிக்குலவும் தமிழ்த் தலைமைகள், தங்கள் காலடியிலிருக்கு்ம் இந்த மக்களுடைய பிரச்சினைகளைப் பற்றிப் பேசவோ, தீர்வு காணவோ ஆர்வம் கொள்வதில்லை. தமிழகத்திலிருந்து திருமாவளவனோ, பாரதிராஜாவோ, சீமானோ வந்தால் அவர்களை வரவேற்றுக் கொண்டாடத் தயாராக இருக்கும் தமிழ்த்தேசியர்கள்(?) தங்களுக்குப் பக்கத்திலிருக்கும் இந்த மக்களைப் பாராட்டவும், பாதுகாக்கவும் தயாரில்லை. இதுதான் இவர்களுடைய லட்சணம்.

இந்த நிலையில் காயங்கள், வடுக்கள் அதனால் உண்டான பகைமை உணர்வு போன்றவற்றோடிருக்கும் முஸ்லிம் தரப்பு எப்படித் தமிழ்த்தரப்போடு இணங்கும் என எதிர்பார்க்க முடியும்? தவிர, தமிழ்த் தரப்போடு முஸ்லிம்கள் இணைய வேண்டும் என்று கேட்பதே ஆதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடே. இதேபோலத் தானே சிங்களத் தரப்பிலிருந்தும் தமிழ்த் தரப்பை நோக்கி அழைப்பு விடுக்கப்படுகிறது.

இது மேலாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடு. மாறாக இங்கே வேண்டுவது நீங்கள் குறிப்பிடுவதைப்போல பரஸ்பரம் இணைந்து கொள்ளும் உறவு நிலை. யாரோடு யார் என்று யோசிப்பதல்ல. இரு தரப்பும் பரஸ்பரமாகுதல் என்று சிந்திக்கும் உறவு நிலை. இதற்கு நிறைய வேலை செய்ய வேண்டும். பல வழிகளிலும் அர்ப்பணித்துச் செயற்பட வேண்டும். குற்றச்சாட்டுகளின் மூலம் வரலாற்றுக் காயங்களையும், கறைகளையும் புதுப்பிக்க முடியுமே தவிர, அழிக்கவோ  கடக்கவோ முடியாது. நான் தமிழ்ச் சமூகத்தில் உள்ளவன் என்பதால் என் பொறுப்பைப் பற்றியே அதிகமாகச் சொல்ல முடியும். அதைச் சரியாக நிறைவேற்ற வேண்டும்.

இது அறிவின் யுகம். முஸ்லிம் சமூகத்திடமும் பல்வேறு விதமான உரையாடல்கள் நிகழ்கின்றன. அதன் வழியே மீள் பரிசீலனைகள், சுய விசாரணைகளை அவர்களும் செய்கிறார்கள். இப்படி இருதரப்பினரும் கூடி எதிர்காலத்தை நெகிழ்த்த வேண்டும். அதைச் செய்தால் நம்புவதற்குக் கடினமான நற்காரியங்கள் பலவும் நடந்தே தீரும். யுத்தம் எல்லோருக்கும் அழிவைத் தந்தது. அது நல்ல படிப்பினையையும் தந்திருக்கிறது. முக்கியமாக 2009 க்கு முன்னிருந்த நிலை இப்போதில்லை. இப்பொழுது தமிழ்ச் சமூகமும், முஸ்லிம் சமூகமும் நெருங்கி வரவேண்டிய சூழலை சிங்கள அதிகாரத் தரப்பு உருவாக்கியிருக்கிறது. இதைப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டியது இரண்டு சமூகங்களுக்கும் உரிய வரலாற்றுத் தருணம். இந்தச் சமூகங்களின் அரசியல்வாதிகள் இதைச் செய்யப் போவதில்லை. இடைவெளியைக் குறைத்து, எரியும் பகையை அணைத்துத் தங்களுடைய பிழைப்பில் தாங்களே மண்ணள்ளிப் போடப் போவதில்லை அவர்கள். ஆகவேதான் நாம் இந்த  அரசியல்வாதிகளின் சிந்தனைக்கு மாறாகச் சிந்திக்க வேண்டும் என்கிறேன். அவர்களுடைய வழியில் நாமும் சிந்தித்தால் அழிவைத் தவிர வேறொன்றில்லை.

இதற்கு மேல் சிங்களத் தரப்புக்கும் தமிழ்த் தரப்புக்குமுள்ள உறவையும் புரிதலையும் பற்றிச் சொல்லத்தான் வேணுமா? வரலாறு முழுவதும் ஏட்டிக்குப் போட்டியாக எதிர்ப்புணர்வும் பகைமையும் ஆளும் சக்திகளால் உருவாக்கிப் பேணப்பட்டு வருகிறது. சிங்களத் தரப்பு துட்ட கெமுனு, சிங்கவாகு என்றால், தமிழ்த்தரப்பு எல்லாளன், பண்டார வன்னியன் என்று தொடங்கும். அவர்கள் மஹாவசம்சத்தை தமது அரசியல் மேலாதிக்க நலன்களுக்குப் பயன்படுத்தினால் தமிழ்த்தரப்பு தனது சமூக மேலாதிக்கத்துக்கு ஆண்ட பரம்பரைக் கதைகளைப் பயன்படுத்துகிறது. சனங்கள் இதையெல்லாம் விழுங்கிவிட்டு ஆளையாள் பகைத்துக் கொண்டிருக்கிறார்கள். சந்தேகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் சொல்வதைப் போல ஏகப்பட்ட சிக்கல்களால் பின்னப்பட்டது இலங்கைச் சமூகங்களின் பிரச்சினை. இவற்றை அறிவின் துணைகொண்டு, சகிப்புணர்வின் வழியில் மட்டுமே கடந்து செல்ல முடியும். வேறு வழியே இல்லை. இதை விடுத்துச் சவால் விட்டால் எதிர்ச்சவாலை எதிர்த்தரப்பும் செய்யும். அப்போது அவர்கள் நமக்கானவற்றையும் தமக்கென்றே ஆக்க முனைவர். இதுதான் உலக வழமை. இன்று அடித்துப் பெறுகின்ற வழிகள் சாத்தியமற்றது என்பது நம் படிப்பினையும் நமக்கு முன்னுள்ள யதார்த்தமுமாகும். அப்படியென்றால் வேறு என்னதான் வழி? சரணடைவதா? கீழ்ப்படிவதா? கெஞ்சிப்பெறுவதா என்றெல்லாம் நீங்கள் கேட்கிறீர்கள். இல்லை. நிச்சயமாக இல்லை. குறைந்தபட்சமும், கூடிய பட்சமுமாக ஆதிக்கத்தைச் செலுத்துவோரிடத்தில் குற்றவுணர்வை ஏற்படுத்துவதும் அவர்களுடைய அகவிழியைத் திறப்பதும்தான் நமது வேலை. அவர்களுடைய ஆன்மாவோடு உரையாட வேண்டும். அதற்கான அத்தனை வேலைகளையும் நாம் மிக நிதானத்தோடும், பொறுமையோடும் செய்ய வேண்டும். அதுவே நாம் செய்யக் கூடியது. செய்ய வேண்டுவதும் இதுவே. இதன் வழியாக அவர்களின் மனச்சாட்சியின் முன்னே அவர்களைத் தலைகுனிய வைப்பது. நாம் தவறானவர்களாகச் செயற்பட்டால் அதற்காக நாமும் தலைகுனிந்தே தீரவேண்டும். இதையெல்லாம் புரிந்து கொண்டாலே பாதித்தூரத்தைக் கடந்தததற்குச் சமம்.

ஒரு விடுதலை இயக்கத்தின் உறுப்பினராக இருந்து, பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் அல்லாமல் அவர்களின் கலை இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்தவர் நீங்கள். புலிகள் இயக்கத்தின் மீது முன்வைக்கப்படும் ஊடக அடக்குமுறைக் குற்றச்சாட்டுக்களுக்கான உங்கள் கருத்து என்ன?

தங்களுக்கு எதிரான அல்லது தமக்கிசைவற்ற கருத்துகளை விரும்பாத, எதிர்க்கின்ற போக்கு தமிழ்ச் சமூகத்தின் பொதுக்குணமாகும். மிக அருந்தலான? விலக்குகளிருக்கலாம். மற்றபடி “நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று சொன்ன பரம்பரை நமதென்று சொல்வதெல்லாம் தமிழ் மனதின் பசப்பு வார்த்தைகளே தவிர, மனமேற்ற சத்தியமல்ல.

எனவேதான் அரசியலில் மட்டுமல்ல, நிர்வாகம், கலை இலக்கியம் என எதிலும் சிறு  விமர்சனத்தை முன்வைத்தால் கூட அதை ஏற்றுக்கொள்ளவோ அதன் அடிப்படையில் தம்மைப் பரிசீலிக்கவோ தயாரற்றவர்களாக இருக்கிறார்கள். அப்படித்தான் குடும்பம், பாடசாலை என தமிழ்ச் சமூகமே விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளாத, அதை விரும்பாத ஜனநாயக மறுப்புச் சமூகமாக உள்ளது. இந்த லட்சணத்தில்தான் நாம் பிறர் மீது விரலை நீட்டுகிறோம்.

எனவே விமர்சனங்களையும் மறு கருத்துகளையும் அவரவர் தாம் கொண்டிருந்த பலத்தின் வழியே எதிர் கொண்டனர், எதிர் கொள்கின்றனர். புலிகளும் அவ்வாறே. அவர்கள் வேறு யாருமல்லரே. தமிழ்ச்சமூகத்தின் அதே குணவியல்பைப் பிரதிபலித்தோரே.

மற்றபடி எதிர்த்தரப்புக்கும் ஒரு நியாயமுண்டு. ஒரு அடிப்படை உண்டு. ஒரு தர்க்கம் உண்டு. அவர்களுடைய கருத்துக்கும் அபிப்பிராயத்துக்கும் செயற்பாட்டுக்கும் இடமளிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் பெரும்பாலான தமிழர்களிடமும் இல்லை. தமக்கு உடன்பாடில்லாதவற்றை உடனடியாகவே மறுதலிப்பது அல்லது நிராகரிப்பது அல்லது சந்தேகிப்பது, துரோகிகள் என அடையாளப்படுத்துவது என்றவாறான மனநிலையே பலரிடத்திலும் உண்டு.  புலம்பெயர்ந்து ஜனநாயகம் மேம்பட்ட நாடுகளில் வாழ்கின்றவர்களிடத்திலும் கூட இந்தப் பிழைச்சிந்தனையே வாழ்கிறது. மாறாக யாரிடத்திலும்  வளர்நிலையைக் காண முடியவில்லை. இதெல்லாம் தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சிக்கும் விடுதலைக்கும் தடையானவை.

சாதிய நோய்மை மீண்டும் ஈழத்தமிழர் வாழ்விற்குள் கூர்மை கொண்டு வருவதனை நினைத்து அருவருக்கும் காலமிது. தீண்டாமையைப் பேணும் அளவிற்கு சாதியின் கோரம் தனது கரங்களை நீட்டியிருக்கிறது. இது தொடர்பாக இன்றைக்கிருக்கும் தமிழ் அரசியல் அமைப்புக்கள் ஏதேனும் நடவடிக்கை எடுக்க முன்வருகின்றனரா? அல்லது அதனையும் தமது அரசியல் லாப நட்டங்களுக்காக வேடிக்கை பார்க்கின்றனரா?

“சாதிய நோய்மை மீண்டும் ஈழத்தமிழர் வாழ்விற்குள் கூர்மை கொண்டு வருவதனை நினைத்து அருவருக்கும் காலமிது”

“தீண்டாமையை பேணும் அளவிற்கு சாதியின் கோரம் தனது கரங்களை நீட்டியிருக்கிறது”

மேலே நீங்கள் குறிப்பிட்ட விடயங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை என்றுபடுகிறது. ஒன்று, சாதிய நோயைக் கண்டு அருவருப்பது என்றால், சாதியத்துக்கு எதிரான உணர்வும் நிலைப்பாடுகளுமே சமூகத்தில் கூர்மையடைந்திருக்க வேணும் அல்லவா! ஆனால், அப்படி நிகழவே இல்லை. பதிலாக சாதிய மனநிலையே துரித வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது.

இந்தப் போக்குக்கு எதிரான சில விலக்குகள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அது மிகச்சிறிய தரப்பு அல்லது சிறு வட்டங்கள்.

எனவேதான் நீங்கள் குறிப்பிட்டுள்ளவாறு இரண்டாவது விசயமான “தீண்டாமையை பேணும் அளவிற்கு சாதியின் கோரம் தனது கரங்களை நீட்டியிருக்கிறது” என்பது நடைமுறையாகியுள்ளது. இந்தப்போக்கு முன்னரை விடவும் உக்கிரமாக, வேகமாக வளர்ச்சியடைந்தும் வருகிறது. கோயில்களில் மட்டுமல்ல, பாடசாலைகளிலேயே தீண்டாமையும், விலக்கும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. அரச நிர்வாகங்களில் தலையெடுக்கிறது. இந்தத் தீய போக்கினை எதிர்ப்பதற்கு எந்த வலுவான தரப்பும், கட்டமைப்பும் இன்றில்லை என்பதால் அது தீண்டாமை என்ற நிலைக்குத் தாவி மேலேறிக் கொண்டிருக்கிறது.

இதையும் சேர்த்துத்தானா தமிழ்த்தேசியம்(?) பயணிக்கிறது என்பதே என்னுடைய விமர்சனமும் கேள்வியுமாகும்.

தமிழ் அடையாள (தமிழ்த்தேசிய) அரசியலை முன்னெடுப்போர் இதைக் குறித்தெல்லாம் பேசுவதோ, கண்டு கொள்வதோ இல்லை. அவர்களே இந்தப்போக்குடன் இணங்கியும் முயங்கியும்தானே செயற்படுகின்றனர். மிகக்கேவலமான விசயம், தேர்தல் அரசியலில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக சூதான முறையில் சாதீய ரீதியாக வேட்பாளர்களை நிறுத்துகின்றன. இதற்குப் பலியாகின்றவர்களும் உண்டு என்பதால்தான் சாதிப் பிரிவினைகளும் சாதிய மனநிலையும் மீண்டும் மோசமாக – துணிச்சலோடு வெளிப்படத் தொடங்கியிருக்கிறது.

இறுதிக்கட்ட யுத்த காலத்தில் புலிகள் இயக்கம் வேறு மாதிரி நடந்து கொண்டிருக்கலாம் என்று நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன. நீங்கள் முப்பதாண்டு கால யுத்த வாழ்விற்குள் இருந்தவர். பேரூழியை எதிர் கொண்டவர். இந்த விமர்சனம் தொடர்பாக நீங்கள் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

இறுதிக்கட்ட யுத்த காலத்தில் அல்லது யுத்த முடிவுக்குப் பிறகு, புலிகளுடைய தோல்விக்குப் பிறகுதான் இத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்றில்லை. புலிகள் போராடிக் கொண்டிருந்த போதே அவர்களுடைய போராட்ட முறைமை, அரசியல் சிந்தனை மீது தமிழ்த் தரப்பிலிருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. எதிர்ப்புகளும் காட்டப்பட்டன. அவர்கள் தோல்வியைக் கண்ட பிறகு இது இன்னும் கூடியிருக்கிறது. ஆகவே இதொன்றும் புதியதல்ல.

இதில் இன்னொரு பார்வையும் உண்டு.

புலிகள் வெற்றியடைந்திருந்தால் இந்த விமர்சனங்கள் எல்லாம் எப்படியிருந்திருக்கும் என்பது அது.

இவையெல்லாவற்றுக்கும் அப்பால், நாம் விஞ்ஞானபூர்வமாகப் பார்க்க வேண்டிய பல விசயங்கள் உண்டு. எல்லாப் போராட்டங்களும் வெற்றியடைவதில்லை. தோற்றுப் போனவைகளே அதிகம். ஆனால், மக்கள் தோற்கடிக்கப்படாமல் தொடர்ந்தும் தமக்குரிய விடுதலை அரசியலை முன்னெடுக்கக்கூடிய திறன்களும், அடிப்படைகளும் பேணப்பட வேண்டும். அவை பாதுகாக்கப்பட வேணும். குறைந்த பட்சம் கடந்த காலத்தைப் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய திராணியும், விளக்கமும் இருந்திருக்க வேண்டும்.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு இங்கே அது நிகழவில்லை. இதுதான் பிரச்சினை. புலிகளால் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அல்லது புலிகளின் தொடர்ச்சியாக அல்லது அவர்களுடைய நிழலாக இன்றுள்ள தமிழ்த் தலைமைகள் மேலும் மேலும் வீழ்ச்சியடையும் அரசியலையே முன்னெடுத்துச் செல்கின்றன என்பதால்தான் புலிகள் மீதான விமர்சனம் இன்னும் கூர்மையாகிறது. வரலாற்றில் இது மேலும் கூராகவே போகிறது.

இதேவேளை புலிகள் கொஞ்சம் வேறுபட்டுச் சிந்தித்திருந்தால் இன்று நிலைமையே வேறு. ஆனால், அவர்களால் அப்படிச் சிந்திக்க முடியாது. அதுதான் புலிகள். அவர்களுடைய வழிமுறை மாறிச் சிந்திக்க முடியாதது.

இன்றைக்கு களத்தில் உள்ள எந்த தமிழ் தலைமையை நீங்கள் புலிகளின் தொடர்ச்சியாக – நிழலாக அடையாளப்படுத்த எண்ணுகிறீர்கள்? வீழ்ச்சிக்கு அழைத்துச் செல்லும் அரசியலை முன்னெடுக்கும் அரசியல் என்பது தற்செயலானதோ, அல்லது அறிவின்மை என்றோ நீங்கள் நம்புகிறீர்களா? மிதவாத அரசியலாளர்களின் தொழில்முறை அரசியல் நடவடிக்கைகளை முன்வைத்து எப்படி ஒரு விடுதலை இயக்கத்தின் மீதான விமர்சனத்தை நீட்டிக்க இயலுமென்று கூறுங்களேன்?

புலிகளின் தொடர்ச்சியாக நான் யாரையும் அடையாளம் காணவுமில்லை. அந்த அடிப்படையில் அடையாளப்படுத்தவும் மாட்டேன். அப்படிச் செய்வதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது. ஏனென்றால் புலிகள் வேறு. இவர்கள் வேறு. சரி, பிழைகளுக்கப்பால் புலிகள் ஒரு நடைமுறை அமைப்பு. வலுவான செயற்பாட்டியக்கம். தங்களை முழுமையாகவே இழக்கத் தயாரான தரப்பு. அதில் இருந்தவர்கள் செயலூக்கமுடையோர். இவையோ வெற்று டப்பாக்கள். உக்கிய தாள்கள்.  செயலின்மையில் சரணாகதியடைந்தவர்கள். வெறும் வாய்ச்சொல்லாளர்கள். போலிகள்.

ஆனால், பிரச்சினை என்னவென்றால், இப்போதுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி போன்றவையெல்லாம் தம்மைத்தாமே புலிகளின் தொடர்ச்சி என்று அடையாளப்படுத்த முயற்சிக்கின்றன. இந்தக் கட்சிகளை ஆதரிப்போரும் இதையே ஏற்றுக் கொண்டுள்ளனர். இதிலே ஆகப்பெரிய வேடிக்கை என்னவென்றால், இந்தக் கட்சிகளின் ஆதரவாளர்கள் புலிகளையும் ஆதரிக்கின்றனர். இந்த டப்பாக்களையும் ஆதரிக்கின்றனர் என்பது. இதைவிடக் கொடுமை வேறென்னவுண்டு? கேட்டால், வேறு யாரை நாம் ஆதரிக்க முடியும்? என்று மறுகேள்வி எழுப்புகிறார்கள். புதிதொன்றைக் காணத் திராணியற்றவர்கள் இப்படித்தான் சிந்திப்பர். எனவேதான் “புலிகளின் தொடர்ச்சியாக அல்லது அவர்களுடைய நிழலாக இன்றுள்ள தமிழ் அடையாளத் தலைமைகள்” என்று குறிப்பிட்டேனே தவிர, புலிகளின் மறு அடையாளமாக அல்ல.

வீழ்ச்சிக்கு அழைத்துச் செல்லும் அரசியலை புலிகளுக்கு முன் அல்லது ஒட்டு மொத்த விடுதலை இயக்கங்களுக்கு முன்பே அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ், இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகியவற்றின் தமிழ் மிதவாதத் தலைமைகள் செய்து வந்தன. இயக்கங்களின் காலத்திலேயே செயற்பாட்டரசியல் உருவாகியது. பலமாகியது. இன்றிருக்கும்  மாகாணசபை கூட அந்தச் செயற்பாட்டரசியலின் விளைவான ஒன்றே.

இயக்கங்கள் வலுவிழந்த பிறகு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மீண்டும் மிதவாதத் தலைமைகள் மேலெழுந்து, இந்த வீழ்ச்சி அரசியலைச் செய்யத் தொடங்கியுள்ளன. இது மேற்தளத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிரமுகர் அரசியல் வழிமுறையின் பாற்பட்டது. சனங்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பே இருப்பதில்லை. ஒருவகையில் இது சனங்களின் மீது  திணிக்கப்படும் அதிகாரத்துவ அரசியல். இதில் தமிழ் ஊடகங்களும் மிக மோசமான குற்றமிழைக்கின்றன. அவையே மக்களை மயக்கி ஏமாற்றுவதற்கான ஒத்துழைப்பைச் செய்கின்றன. பத்தியாளர்களும் இதில் சேர்த்தி.

தவிர, மிதவாத அரசியலாளர்களின் (லாபமீட்டும்) தொழில்முறை அரசியல் நடவடிக்கைகளை முன்வைத்து விடுதலை இயக்கத்தின் மீதான விமர்சனத்தை ஏன் நீட்டிக்க வேண்டியிருக்கிறது என்றால், இதை எதிர்த்த புலிகளும் ஒரு கட்டத்தில் இதே மிதவாதத் தலைமைகளிடம் சரணடைந்தனர் என்பதாகும். அவர்களுடைய தெரிவாக இன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (முதலில் தமிழர் விடுதலைக் கூட்டணி, உதயசூரியன் சின்னம், பிறகு தமிழரசுக் கட்சி, வீட்டுச் சின்னம்) இருந்தது என்பதும் அபத்தமே. அதாவது அவர்கள் நிராகரித்த தரப்பையே இறுதியில் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டமை என்பது ஒரு வகையில் வீழ்ச்சியே. அந்த வீழ்ச்சியே இன்றைய சீரழிவின் அடையாளம்.

புலிகள் இயக்கம் மிதவாத தலைமைகளிடம் சரணடைந்தது என்ற  இந்தக் கூற்றுக்கு என்ன அரசியல் அடிப்படை இருக்கிறது? தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது அபத்தம் என நீங்கள் கூறுகிறீர்களா?

இதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? சனங்கள் கூட்டமைப்பை எத்தனை விதமாகக் கிழித்துத் தோரணம் கட்டுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா? 2010 தொடக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலவீனங்களையும், தவறுகளையும் அதனுடைய பொய்த் தோற்றத்தையும் சொல்லி வருகிறேன். அப்போது என்னுடைய கருத்தை ஏற்க மறுத்த பலர் இப்போது முன்னணியில் நின்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்க்கின்றனர். கடுமையாக விமர்சிக்கின்றனர். இதை விளங்கிக் கொள்வதற்கு அவர்களுக்கு பத்தாண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. சிலருக்கு இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது என்பது தமிழரசுக் கட்சியிடம் சரணடைந்ததேயாகும். இது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் கடந்த காலத்திற்குப் பின்னிழுத்துச் சென்றதேயாகும். இது சரியென்றால் இடையில் நடந்த போராட்டத்திற்கு என்ன அர்த்தம்? எதற்காக இத்தனை கால இழுபறி? ஏனிந்தப் பேரிழப்புகள்? ஏனித்தனை தியாகங்கள்?

எல்லாவற்றுக்கும் அப்பால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி அதை வெற்றியடைய வைத்தது புலிகள் என்பது பகிரங்கமான உண்மை. அப்படியான அடையாளத்தைக் கொண்ட கூட்டமைப்பானது புலிகள் நெருக்கடிக்குள் சிக்கியிருந்தபோது அவர்களைக் காப்பாற்றுவதற்கு என்ன செய்தது? குறைந்தபட்சம் அதிலிருந்த 22 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராவது எதிர்ப்பு நடவடிக்கையாக ஏதாவது செய்தனரா? குறைந்த பட்சம்  உண்ணாவிரதமாவது இருந்து தங்களுடைய அடையாள எதிர்ப்பை வெளிப்படுத்தினார்களா? அல்லது அத்தனை பேரும் கூட்டாகப் பதவிகளைத் துறந்து எதிர்ப்பைக் காட்டி அரசுக்கு நெருக்கடியை உருவாக்கினார்களா? அல்லது பெருந்திரளாக நின்று ஆதரவளி்த்து வெற்றியீட்டிக் கொடுத்த மக்களை மீட்பதிலாவது பங்காற்றினார்களா? வெறுமனே அரசாங்கத்தின் மீது பழியைப் போட்டுவிட்டு வாழாதிருந்தனர் எல்லோரும். நெருக்கடிகளில் ஒரு அரசியல் இயக்கம் இப்படியா செயற்படுவது? இப்படித்தானா நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பது? இப்போது அரசியற்(ல்) கைதிகளாக இருப்பவர்களில் யாராவது ஒருவராவது இந்த மிதவாதத் தரப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்களா? அல்லது இந்தக் கைதிகளின் விடுதலைக்கு ஆக்கபூர்வமாக எதையாவது செய்கிறார்களா? இதையெல்லாம் எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள்?

தமிழர்களுக்கும் – முஸ்லிம்களுக்கும் இடையே ஏராளமான கசப்பான நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. நடந்தபடியுமுள்ளன. “யாழ் வெளியேற்றம்”, காத்தான்குடி படுகொலை” போன்ற வரலாற்றுத் துயர் மிக்க தருணங்களுக்காக தமிழ் தரப்பினர் தமது கண்டனங்களையும் மன்னிப்பையும் இன்றுவரை முன்வைத்தபடியுள்ளனர். ஆனாலும் முஸ்லிம் அறிவுலகத் தரப்பில் இதுபோன்ற ஒரு பண்பு இன்னும் கூட்டாக எழவில்லை, மாறாக தமிழ்த்தரப்பின் மன்னிப்புக் கேட்டலே கண்துடைப்பு என்று முஸ்லிம் அறிவுலகத்திலிருந்து எழும் குரல்களை எவ்வாறு அணுகுகிறீர்கள்?

தமிழ்த் தரப்பின் மன்னிப்பைக் குறித்த கேள்விகள் எனக்குண்டு.

எளிதில் கடந்து செல்வதற்கு நடந்தவை எவையும் எளிய நிகழ்வுகளல்ல. மன்னிப்பை முன்வைப்பது என்றால் வெறும் வார்த்தைகளை முன்வைப்பது, ஊடகங்களில் அறிக்கையிடுவது என்பதோடு முடிவதல்ல. அது அதற்கும் அப்பால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் தேடுவது தொடக்கம், பாதிக்கப்பட்ட சமூத்தின் – தரப்பின் ஆன்மாவைச் சென்று தொடுவது வரையில் இருக்க வேண்டும். அந்த விசுவாசமும் நேர்மையும் அதற்கான அர்ப்பணிப்பான செயற்பாடுகளும் அவசியம்.

உதாரணமாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீளவும் அவர்களின் இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கைகளில் விசுவாசமாகவும், அர்ப்பணிப்போடும் தமிழ்த்தரப்பிலிருந்து யார் வேலை செய்திருக்கிறார்கள்? பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்ட ஈட்டை வழங்குவதைப் பற்றி யார் சிந்தித்தனர்? அல்லது அதற்கான பொறுப்பளித்தலை எவர் செய்துள்ளனர்? குறைந்த பட்சம் அவர்களிருக்கும் இடங்களைத் தேடிச்சென்று யாராவது உரையாடியிருக்கிறார்களா? யுத்த முடிவுக்குப் பிறகு எத்தனை தமிழ் ஊடகவியலாளர்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களைச் சென்று அவர்கள் இருக்குமிடங்களில் சந்தித்து அறிக்கையிட்டிருக்கிறார்கள்? பல்கலைக்கழக மாணவர்களோ, அந்தச் சமூகத்தினரோ அங்கே எப்போதாவது சென்றிருக்கிறார்களா? அந்த மக்களின் நிலையைக் குறித்து ஏதாவது ஆய்வுகள், மதிப்பீடுகள் நடந்துள்ளனவா?

எனவே முதலில் இதைச் சரியாகச் செய்து கொண்டு பிறகு மற்றவர்களைப் பார்க்கலாம். அப்பொழுது முஸ்லிம் தரப்பிலிருந்தும் இதற்கான சம்மதக்குரல்கள் எழும். நடந்த துயரச் சம்பவங்களைக் குறித்து வருத்தப்படுகின்ற பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை நானறிவேன். அவர்கள் துக்கத்தாலும் வெட்கத்தாலும் நாணுகின்றனர். எனவே இது ஒன்றும் ஏட்டிக்குப் போட்டியாக கையாளும் விடயமல்ல. மிகப் பொறுப்போடும் நிதானத்தோடும் முன்னெடுக்க வேண்டிய செயல். ஒரு குடும்பத்தில் உள்ளதைப்போல பேச வேண்டியதைப் பேசுவதும் பேசாமல் விட வேண்டியவற்றைப் புரிந்துணர்வோடு கடந்து செல்வதும் இரு சமூகங்களுக்குமுரியது.

“ஒரு பொழுதுக்காக காத்திருத்தல்”, “எரிகாலம்” போன்ற கவிதைகளின் சில வரிகள் இப்போதும் என்னிடம் இருக்கின்றன. ஞாபகத்தில் இருந்து சொல்லுகிறேன்:

கடல் தீப்பற்றி எரிவதைக் கண்டேன்
என் விழிகள் உருகியொழுக
நான் பார்க்கையில்
அதன் கரை விளிம்புகளில் தீ எரிந்தது
யாரும் நம்பமாட்டீர்கள் ஆனால்
கடல் தீப்பற்றி எரிந்தது நிச்சயமாய் நிகழ்ந்தது
அலைகள் பொசுங்கிப் போயின.

இந்தக் கவிதை வெளியாகி இருபது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. எரிந்த கடலும், பொசுங்கிய அலைகளும் என்கிற இந்த உருவகத்தை நான் முள்ளிவாய்க்கால் பேரூழிக்காலத்தோடு நினைத்துப் பார்க்கையில் துயரம் கெந்துகிறது. இந்தக் கவிதையை எழுதிய காலத்தை நினைவுபடுத்த இயலுமா?

மன்னிக்கவும். நினைவுகளை மறப்பதற்கு முயற்சிக்கும் வாழ்க்கை எனது. துக்கத்திலிருந்து விடுபடுவதற்கு வேறு கதியில்லை. இந்தப் பதில்களே ஒருவகையில் மறதியைக் கிளறும் வேலையே. துயரத்தின் பாதைதான்.

உங்களுடைய எழுத்துக்களுக்கு தொடக்க காலத்தில் இருந்தே தமிழக இலக்கியச் சூழலில் அறிமுகமுண்டு. அன்றைய காலத்தில் உங்கள் படைப்புக்களுக்கு இருந்த வரவேற்பு எப்படி?

நன்றாக இருந்தது. ஈழப்போராட்டத்துக்கு மட்டுமல்ல, அதைப் பிரதிபலிக்கும் எழுத்துகளுக்கும் எப்போதும் தமிழகச் சூழலில் வரவேற்பிருந்தது. மதிப்பளிக்கப்பட்டது. இதற்குப் பல காரணங்களிருக்கலாம். என்னுடைய எழுத்துகள் தனியே போராட்டம் பற்றியவையாக எப்போதுமிருந்ததில்லை. எனவே பல்பரிமாணத்தோடு அவை இருக்கின்றன என்றவர்கள் கருதியிருக்கக் கூடும். அந்த நாட்களில் அவை பற்றி எழுதப்பட்டிருந்த விமர்சனங்களிலும் அப்படித்தான் சொல்லப்பட்டிருந்தது.

கவிதைகளை மட்டுமல்லாது, கட்டுரைகள், கதைகள் என எழுதி வருகிறீர்கள். “வேட்டைத் தோப்பு” சிறுகதை நூல் வெளியாகி இருக்கிறது. நாவல் எழுதும் விருப்பங்கள்/ கொந்தளிப்போ, ஈடுபாடோ எழவில்லையா?

எழுதிப் பாதியில் நின்றவை உண்டு. மீண்டும் அவை தொடரப்படுமா அல்லது புதியவை வரலாமா என்ற கேள்வியின் மையத்தில் இருக்கிறேன். என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

பிரமிள், வில்வரத்தினம், சண்முகம் சிவலிங்கம், புதுவை இரத்தினதுரை, சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், பா.அகிலன் செல்வி, சிவரமணி, எஸ்.போஸ் என தொடரும் இந்த மரபில் நீங்களும் ஒருவர். இன்று ஒரு புதிய தலைமுறை வெளிக்கிளம்பி இருக்கிறது. அதில் தீபச்செல்வன் மிக  முக்கியமானவர். அவருடைய கவிதைகளின் மீதான உங்களுடைய இலக்கிய மதிப்பீடு பற்றி சொல்லுங்கள்?

இதைப்பற்றி தீபச்செல்வனிடமே சொல்லியிருக்கிறேன். இன்னும் சற்று அழுத்தமாகச் சொல்வதென்றால், பிரகடனங்களிலிருந்து அவர் விடுபடுவது அவசியம். அனுபவங்களின் திரட்சியோடு புதிய அறிதல்களை நோக்கித் தன்னை விரிப்பது நல்லது. இது ஒருவகையில் கால நிபந்தனையே. இல்லையில்லை, தன்னுடைய வழி வேறு என்று அவர் பிடிவாதம் பிடித்தால், அல்லது எதிர்வாதம் புரிந்தால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அது அவருடைய வழியும், உரிமையுமாகும்.

போரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட க.வே.பாலகுமாரன், கவிஞர் புதுவை இரத்தினதுரை ஆகியவர்களோடு உங்களுக்கு நெருக்கம் இருந்தது. அவர்கள் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த அந்த இறுதி நாட்களில் என்ன மனநிலையில் இருந்தார்கள்?

சனங்களைக் குறித்துப் பெருந்துக்கத்தோடிருந்தனர். “அறிவு பெருத்தவர் நோவு பெருத்தவர்” என்ற வேதாமக உண்மையின்படி, இறுதி முடிவைப் பற்றிய முன்னுணர்வினால் கொந்தளிப்போடிருந்தனர். ஆனாலும் எதையும் செய்ய முடியாத (யாரோடு நோக, யார்க்கெடுத்துரைக்க என்ற) நிலையில். கையை மீறிச் சென்றன அனைத்தும்.

போர் பற்றி உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்திருக்கும். உங்களுக்கு?

இவ்வளவுபேசியபிறகும்இப்படியொருகேள்விஎன்றால்…!

போர்என்பதென்ன? திரைமறைக்கப்பட்டவெறி. நியாயங்கள் மறுதலிக்கப்பட்ட பலிபீடம். வெற்றி ஒன்றையே குறியாகக் கொண்டு மோதும் களம். அதில் சனங்கள் வெறும் தூசி. அவர்கள் வெறுமனே ஆட்டக்காய்கள் மட்டுமே அதிகம். ஏன், போரிலே முதலில் கொல்லப்படுவது உண்மை என்றால், அதனுடைய பொருள் என்ன? உண்மையை இழப்பதென்பது நீதியை, நியாயத்தை, அறத்தை, வாழ்வின் அடிப்படைகளை இழப்பதாகும். இதையெல்லாம் இழந்த பிறகு பெறும் வெற்றி என்னவாக இருக்கும்?

எந்தப் பெரிய போர் வெற்றியும் சாதாரண ஒரு மனிதரி்ன் வாழ்க்கைக்கு ஈடாகாது. எந்தப் பெரிய வெற்றியும் இழக்கப்பட்ட உயிர்களையும் உடலின் உறுப்புகளையும் மீளத்தந்து விடாது. இதைத் தரமுடியாத போர் எதற்கு?

***

நிலாந்தன் கவிதைகள்

0

கஞ்சிப் பாடல்-01

மாட்டு வண்டியைக் கொத்தி
விறகாக்கிய ஓர் ஊரிலே
அரிசியிருந்தது; நெல்லிருந்தது
அன்னமிருக்கவில்லை

மலத்துக்கும் பிணத்துக்கும்
விலகிநடந்தவொரு நெய்தல் நிலத்திலே
கடலிருந்தது படகிருந்தது
மீனிருக்கவில்லை

ஆலமிலை பாலையிலை பனையோலை தவிர
பச்சையாக இருந்த எல்லாவற்றையும்
சமைத்த ஒரூரிலே
கஞ்சி இருந்தது; வாய்ப்பன் இருந்தது
பசி இருக்கவில்சலை

நீரிலே தொடங்கி
ஒரு நீரேரியில் முடிந்த ஒரு போரிலே
கடைசி மூன்று நாட்களும்
நீர் இருக்கவில்லை
தாகமிருந்தது

***

நோவாவின் பேழை

ஊழிக் கடற்கரையில்
நோவா
தன்பேழையைஇணக்கினான்

ஒரு பிரளயத்தைப் பற்றிய துர்க்குறிகளால்
அவனிதயம் பாரமாக இருந்தது
அவனுக்கு காட்டப்பட்டது
மற்றவர்களுக்கு மறைக்கப்பட்டது

கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான
இறுதி உடன்படிக்கையும்
காலாவதியானது
யுத்தத்தின் நாய்கள்
ஒரு சமூகத்தின் மனச்சாட்சியைக்
கடித்துக் குதறின

யுத்தப் பிரபுக்கு பிள்ளைக்கறி கேட்டது
சிலுவையில் அறையப்பட்ட
மனித குமாரனுக்கு
தாகமாய் இருந்தது

பாலற்ற உப்பற்ற கஞ்சியை
பருகக் கொடுத்தான் ஒருவன்
சரணடைந்த பெண்ணின் சீருடையை
உரிந்தான்இன்னொருவன்

எறிகணைக் கருக்கில்
கிழிந்தது
காலம்
கடலில்மலமாகமிதந்தது
கனவு

நோவா
சப்தரிஷிகளையும் ஏற்றிக்கொண்டு
தன் பேழையை
பாற்கடலில் செலுத்தினான்

—–

1 -நோவா- பைபிளில் வரும் ஒரு பாத்திரம். இறைவனுக்கு விருப்பமானவன். இறைவனால் தேர்ந்தெடுக்கபட்டவன் ஒரு யுக முடிவில்அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் இறைவன் தப்பிச்செல்ல அனுமதிக்கிறார். அதற்காக ஒரு மரப்பேழையை இணக்கச் சொல்கிறார். பிரளய நாளில் நோவா தெரிந்தெடுக்கபட்ட மனிதர்கள் மற்றும் ஜீவராசிகளோடு தன் மரப்பேழையில் தப்புகிறான். பிரளயத்தின் முடிவில் ஒரு புதிய யுகத்தின் முதலாவது வானவில் தோன்றுகிறது. அது கடவுளுக்கும் மனிதருக்கும் இடையிலான முதலாவது உடன்படிக்கையாகவும் இருந்தது.

2- இந்து சமயப்புராண நம்பிக்கைகளின் படி ஒரு யுக முடிவில் மகா விஷ்ணு கூர்ம அவதாரமெடுத்து ஒரு படகில் சப்தரிஷிகளைப் பத்திரமாகத் தப்ப வைக்கிறார். ஒரு புதிய யுகத்துக்காக. நோவாவும் சப்தரிஷிகளும் யுக முடிவின் கரையில் படகேறி மற்றோடு புதிய யுகத்தில் கரையேறுகிறார்கள்.

பெருங்கனவின் அந்திமப் பாடல் (அகரமுதல்வன் கவிதைகள் )

0

ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தின்
கடல்
அலைகளில்
பிரளயத்தின் ரத்தம்

மரித்தவர்களின் புதைகுழியில்
துளிர்த்த சிறுசெடி
பெருங்கனவு

காற்றின் இதயத்துடிப்பில்
ஊழிச்சூறையின்
சாம்பல்

புதைத்தவைகளிலும்
புதைக்கமுடியாதவைகளிலும்
விதைத்தவைகளிலும்
விதைக்கமுடியாதவைகளிலும்
ஊதிப்பெருத்த நிணம்
பெருங்கனவின் நீரேரிக்குள்
உருகி இறங்குகிறது.

வேட்கைச் சந்தம் ஓங்கும்
இந்த யுத்தப் பாடலில்
ஏன் அதிர்கிறது
இரைதீரா படிமச் சுழல்.

ஏன் வழிகிறது
தீப்பிழம்பு

நாம் இனியும் எங்கு இடம்பெயர?

***

இறந்து போன உங்கள் அம்மாவை எங்கே புதைத்தீர்கள்?

அவள் இறக்கவில்லை
குண்டுகளால் கொல்லப்பட்டாள்.
சிதறிய அவளின் மாமிசத்துண்டங்களை
கடல் மணலில் அரித்தெடுத்தேன்.
புதைப்பதற்கு விருப்பமில்லாத அந்தச் சின்னஞ்சிறு மாமிசத்தை
“ஐ”வடிவ பதுங்குகுழியில் வைத்து
அழுது கரையாமல் கடலில் வீசினேன்.
நீச்சல் தெரியாத அம்மாவின் மாமிசம்
அலைகளில் எழுந்து மிதந்தது.
அம்மா போனாள்
ஊழின் முற்றுகைக்குள்ளால்
சாவின் திகைப்போடு.

***

படுகளத்தின் ஓலம் அறையும்
அதிகாலைக் கனவொன்றில்
விழித்தெழும்பும் போர்நிலத்து மகனே
நூறாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும்
குருதி மரபில் இந்தக் கனவு வரும்

அது
விதிக்கப்பட்ட துயர்யுகத்தின் பரிசு
திடுமென எமை விழுங்கிய இருட்டின் மிரட்டல்
குருதிப் புழுதியின் பேய் மழை

பெருங்கனவுக்கும்
வெறுங்கனவுக்கும்
நாமன்றி வேறு யார் சாட்சி சொல்வார்?

அகர முதல்வன் – மூன்று சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கவிதைத் தொகுப்புகள், இரண்டு தொகுப்பு நூல்கள், ஒரு குறுநாவல் தொகுப்பு என வெளிவந்துள்ளன. பாகுபாடற்ற உரையாடல் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் இவரது முன்னெடுப்பில் முள்ளிவாய்க்காலுக்கு பின்பான ஈழ அரசியல் மையமாக இருந்துவருகிறது. அந்தகம் இதழின் பொறுப்பாசிரியர்

கறை படியும் கவசங்கள்…!

4

ஐசக் பேசில் எமரால்ட்

ல்லா முகங்களும் மேலும் கீழுமாக லேசான அசைவுடன் இருந்தது. ஊர்சாலைகளில் போகையில் தலைகள் பேயாட்டம் ஆடும். அதற்கு இந்த நகரம் பரவாயில்லை எனலாம். சகப்பயணிகளின் முகத்தோல்களில் எண்ணை பிசுபிசுப்புடன் கண்களில் வற்றாத சோகமும் சேர்ந்திருந்தது. நெடுந்தூர பிரயாணங்கள் என்பதால் அசதியாக இருக்கும் என ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு அதிகாலை நேர சென்னையை கவனிக்க தொடங்கினேன். ஏன் இந்த பஸ்ஸில் மட்டும் கூட்டம் அதிகமாக உள்ளது  என்ற கேள்வி உள்ளுக்குள் எழுந்தது. டீக்கடைகள், மருத்துவமனைகள், சினிமா கேரவன் வண்டிகள், பேப்பர் எடுத்து செல்லும் சிறுவர்கள் என அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தேன். தூரம் போகப்போக சென்னையை கவனிப்பதை தவிர்த்து மனிதர்கள் மேல் கவனம் குவிந்தது. இந்த மனிதர்களின் அசதியும், களைப்பும், சோகமும் என்மீது சேர்ந்து இறங்குவதாய் நினைத்துக் கொண்டேன். பஸ் சின்னமலையை கடந்தாலும் கூட்டம் குறையவில்லை. ரோட்டோர மஞ்சள் விளக்குகளின் வெளிச்சத்தை மீறி இயற்கையொளி மெல்லப் படர்ந்து விரியத் தொடங்கியிருந்தது.

சி.எல்.ஆர்.ஐ பேருந்து நிறுத்தம் வந்தபோது பஸ்ஸில் இருந்த அனைவரும் இறங்கத் தொடங்கினர். திருவான்மியூர் என்று போர்டு வைத்திருந்தார்களே…! இதற்கு மேல் பஸ் போகாதா என ஐயம் எழுந்தது. இறங்கிய மனிதர்கள் அனைவரும் ரோட்டைக் கடந்து சென்று மறுப்பக்கம் இருக்கும் அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவமனைக்குள் சாரை சாரையாக நுழைந்து கொண்டிருந்தனர். பஸ் கிளம்பியது. பஸ்ஸில் திரும்பிப் பார்த்தேன். நான் உட்பட நான்கைந்து பேர் மட்டுமே இருந்தோம். பஸ் கிளம்பும் வரை சாலையை கடக்கும் மனிதர்களை பார்த்துக் கொண்டே இருந்தேன். காலை நேர வெக்கையுடன் கடந்து சென்ற மனிதர்களின் அகத்துயர்களும் ஒன்றாகி ஒட்டுமொத்த பிரமாண்ட வடிவ துன்பமாய் என் மீது படிந்துருகி விழுந்து கொண்டிருந்தது. அந்த பிரமாண்ட துன்பத்துடன் தனிப்பட்ட துயர்களை ஒப்புமைப்படுத்தியதன் விளைவால் என் துயரங்கள் சிறிதாகி போனதையும்  உணர்ந்தேன். பஸ் வேகமாக சென்றதால் குளிர்க்காற்று வேகமாக தீண்டியது. அந்த ஏகாந்த உணர்தலில் திளைத்துப்போன உணர்வு. மனிதர்கள் அல்லாத மரங்கள் படர்ந்த சாலை என்பது எதேச்சையான ஒன்றாக தோன்றவில்லை. காரணம் மனிதர்கள் அல்லாத அல்லது அவர்கள் அங்கே குடியேறாத இடமாக அந்த இடம் வைக்கப்பட்டிருந்ததால் தானே எனக்கு அந்த குளிர் காற்று வந்து தீண்டியது.

வெளிச்சம் பரவியிருந்தது. பஸ்ஸை விட்டு இறங்கினேன். இருவழிச் சாலையை ஒருவழி சாலையாக மாற்றியிருந்தார்கள். இந்தியாவில் வைரஸ் இறக்குமதி ஆன காரணத்தினால் ஒருவழிச் சாலை முழுவதும் மனித இடைவெளியை வலியுறுத்தும் வண்ணம் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பதாகை ஏந்தி, முகத்தில் மாஸ்க், செந்நிறத் தொப்பிகளுடன் சிறியவர்களும் பெரியவர்களுமாக நடந்து கொண்டிருந்தனர். இன்னும் சில தினங்களில் கொடிய வைரஸ் சமூக பரவலாகி எண்ணற்ற உயிர்களை காவு வாங்க போகிறது என்றார்கள். அதனால் அரசாங்கங்களும் ஓரிரு நாட்களில் ஊரடங்கை அறிவிக்கலாம் என்று தகவல். மிகப்பெரிய ஆபத்தை மனிதர் உலகம் அறிய செய்யும் வண்ணமாக விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட மனிதர்களின் முகத்தில், அவர்கள் செயல்படுவதற்கான காரணத்தில் துக்கம் படிந்திருந்தாலும், அவர்கள் அதற்கு எதிர்க்கும் பொருட்டு புரியும் செயல்பாடுகளினால் பெரிய அக மகிழ்ச்சியோடு இருப்பதாக உணர்ந்தேன். அது என்னை அந்தப் பேரணியில் இடைவெளி இல்லாமல், தொப்பி போடாமல், மாஸ்க் அணியாமல் என்னையும் அழைத்துச் சென்றது. அவர்களில் நான் மட்டும் மனமகிழ்வு அற்றவனாக, நான் மட்டும் தன்னந்தனியனாக நின்று கொண்டிருந்தேன். ஒரேயொரு செவலைநிற நாய் மட்டும் அருகில் நிற்பதைத் தவிர சுற்றியிருக்கும் வேறேதும் என் கண்ணிற்கு தெரியவில்லை. அப்படியே மூச்சை உள்ளிழுத்து தலையை மேல்தூக்கி ஒரு நொடி இமைகளை மூடி அந்த நாயை மீண்டும் பார்த்தபோது அதன் தலைப்பகுதி மரநாயாகவும், வால்பகுதி புனுகாகவும் உருமாற்றம் அடைந்திருந்தது.

2

கொடிய வைரஸுக்கு எதிரான முன்னெடுப்பில் முதல்கட்டமாக அடுத்த நான்கு நாட்கள் முழு  ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தேவையான மளிகை, காய்கறி, சானிடைசர், மாஸ்க், டெட்டால், ஹேன்ட்வாஷ், ஒரு வாரத்திற்கு தேவையான சிகரெட் என அனைத்தையும் வாங்கிக்கொண்டு வீட்டினுள் நுழைந்தேன். கதவை வேகமாக அடைத்த சப்தத்தில் எதிரொலி என் காதில் விழுந்து கொண்டே இருந்தது. அது என் மனதில் தோன்றிய பயம்தான் என அப்போது உணர்ந்தேன். அதற்கான காரணமும் அறிந்ததே. கூட்டத்தோடு இருக்கையில் பாதுகாப்பின்மையாக உணர்வது புதிதல்ல. ஆயினும் பழக்கப்பட்டிருந்தேன். இன்று அனைவரும் அப்படியே உணர்வது என்னை அதற்கு அடுத்த நிலைக்கு இட்டு சென்றது.

அறையினுள் பேரமைதியில் நின்றுகொண்டு நான்கு சுவர்களையும் சுற்றும் முற்றும் பார்த்தேன். இனி வரப்போகும் நாட்கள் அனைத்தும் இந்த நான்கு சுவர்களுக்குள் தனியாக வாழப்போகிறேன். வாங்கிய பொருட்களை அலமாரியில் சரியாக அடுக்கி வைத்தேன். அரிசியை மட்டும் அலமாரியின் கீழ் அடுக்கு மூடையில் நன்றாக முடிச்சுகள் போட்டு கட்டி வைத்தேன். ராத்திரியானால் சின்னச்சின்ன கரப்பான் பூச்சிகள் வருவதால் இத்தனை முடிச்சுக்கள். பருப்பு, உளுந்து ஆகியவற்றை பாட்டிலில் தட்டி வைத்துவிட்டு பாலித்தீன் கவர்களை எதற்காகவது உபயோகப்படும் என ஒதுக்கி வைத்தேன். ரொட்டி பாக்கெட்டுகளையும், ஜாமையும் குளிர்சாதனப்பெட்டியில் அடுக்கி வைத்தேன். பால் பாக்கெட்டுகளை ஃப்ரீசரில் வைத்தபோது, அனைத்திலும் ஒரு அவசரத்தை என்னால் உணர முடிந்தது. காபி பொடி ஒரு மாதத்திற்கு போதும். முட்டைகளை உடையாதவாறு பொறுமையாக எடுத்து வைத்தேன். ஏதோ ஒரு மூச்சு முட்டல். தொண்டையிலிருந்து குமட்டல். ஆம், மாஸ்கை கழற்ற மறந்திருந்தேன். ஆகா…! என ஆசுவாசமைடைந்து ஒரு மிடறு நீரை அருந்திவிட்டு கண் அயர்ந்தேன்.

தூக்கம் முழித்து, கண் விழிக்கையில் மாலை ஏழு மணி ஆயிருந்தது. பால்கனியில் நின்று தெருவை பார்த்தேன். மழை இரவுகளில் கருமேகங்களினால் நட்சத்திரங்கள் இல்லாமல் தெரியும் அத்துவானவெளி போல் தெரு காணப்பட்டது. அந்த தெரு வீடுகளின் கதவு ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. செல்போனில் பாட்டை ஒலிக்கவிட்டு வீட்டைச் சுத்தப்படுத்த முதலில் கழிவறையிலிருந்து துவங்கினேன். ஹார்பிக்கில் நன்றாக ஊற வைத்த க்ளோசெட்டை ப்ரெஷ்ஷினால் நன்றாக தேய்த்து துடைத்துக் கொண்டிருந்தபோது, சட்டை பாக்கெட்டிலிருந்த செல்போன் க்ளோசெட்டில் விழுந்தது. பெனாயிலின் பதத்தன்மை வெண்ணிறமாக கொப்பளித்துக் கொண்டிருந்த துளையில் மூழ்கி மறைந்தது. உறைந்து போய் நிற்க வாய்ப்பிருந்தும், அதற்கு இப்போது நேரமில்லை என உணர்ந்து பருப்பு வாங்கிய பாலித்தீன் கவருக்குள் கையை நுழைத்து துளையினுள் கைவிட்டு செல்போனை எடுத்தேன்.

நீரும், பெனாயில் கெமிக்கலுக்குள் செல்போன் ஊறியிருந்தது. இதை இதற்குமேல் நல்ல நீரில் கழுவ முடியாது. ஒரு பழைய சட்டையை எடுத்தேன். அது இன்னும் ஓரிரு மாதங்கள் அலுவலகத்திற்குபோட்டுச் செல்லலாம் என எண்ணிய சட்டை தான். சட்டை போட ஊரடங்கு முடியும் என நம்பிக்கை வரவில்லை.  அதனை எடுத்து நன்றாகத் துடைத்தேன். துடைத்து விட்டு ஆன் செய்து பார்த்தபோது, நினைத்த மாதிரியே நடந்தது. எப்போதும் இதமான சூட்டோடு இருக்கும் செல்போன் குளிர்ந்து போயிருந்தது.

அழுக்கேறிய கண்ணாடி சீசா ஒன்றில் சிறிதளவு சோப்புநீரை கலக்கி, அதை தொட்டுத்தொட்டு சுத்தம் செய்து, தூய்மைப்படுத்திய பின் மீண்டும் துடைத்தேன். மேஜையில் வைத்து டேபிள் ஃபேன் காற்று நேராக செல்போனில் வீசுமாறு வைத்தேன். காய வைத்துவிட்டு செல்போனையே பார்த்துக் கொண்டிருந்தபோது என் மனதில் ஓடிக்கொண்டிருந்த ஒன்றே ஒன்று இதுதான். “ஊரடங்கு நாட்களில் செல்போன் இல்லாமல் எப்படி வாழப்போகிறேன்…?” ஆழமான மனசோர்வு என்னை ஆக்கிரமித்திருந்தது. பொறியியல் இறுதியாண்டு படிக்கும் தெரிந்த ஒருவரின் மகனுக்காக லேப்டாப்பை அளிக்க வேண்டியதாகப் போயிற்று. மளிகை, காய்கறி கடைகள் தவிர எந்தக்கடையும் திறக்க மாட்டார்கள். ஆன்லைனில் புதிய செல்போன்கள் வாங்க தடை செய்யப்பட்டுள்ளது. டிஸ்ப்ளே இடுக்குகள் நீர் கசிந்திருந்தது. அரிசி மூடையின் முடிச்சுக்களை அவிழ்த்து அரிசிக்குள் செல்போனை புதைத்து வைத்து  மூடையை நன்றாக இறுக்கி கட்டினேன்.

நான் செய்வதற்கு எதுவுமற்றவனாக மாறிப்போயிருந்தேன். தூக்கம் வரவில்லை. நள்ளிரவு தாண்டியது. லேசாக என்னை அறியாமல் கண்ணயர்ந்த போது உள்ளத்தில் சலனத்தை உணர்ந்தேன். சரிந்து படுத்தபோது என் முன்னே ஏதோ ஒன்று ஊர்ந்து செல்வதின் நிழல் முகத்தில் விழுவதை உணர முடிந்தது. அதன்பின் கால் விரலிலிருந்து மயிர்கால்களை லேசாக உரசும் வண்ணம், கிளுகிளுப்படைய வைப்பது போலிருந்தது. போர்வையை நன்றாக இழுத்து மூடிக்கொண்டேன். ஏதோ மிகப்பெரிய கனம் என் மீது ஏறுவதை என்னால் உணர முடிந்தது. இப்படியொரு கனத்தை என் வாழ்நாளில் உணர்ந்ததில்லை. இந்த கனத்தை நான் சுமப்பது நிறைவேறாத கனவாகவே இருந்தது. அதனால் இதுவும் கனவாகவே இருக்கக்கூடும் என மனம் எத்தனித்தது. அப்போது குறியில் ஏதோ திரவத் தன்மையுள்ள உராய்வு ஏற்பட்டு முதுகுத்தண்டு சில்லிட்டது. அப்போதுதான் கண்விழித்துப் பார்த்தேன். போர்வை உப்பிப்போய் நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றை விட பிரமாண்டமாக இருந்தது. பதறிபோய் போர்வையை விலக்கி பார்த்தேன். மின்சாரம் பாய்வது போல் இரு மின்கம்பிகள் முன்னே நீண்டது. வெல்வெட் தோலை போர்த்திக்கொண்டு அது என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. சுருண்டு படுத்திருந்த அந்த மலைப்பாம்பின் சிறிய கண்கள் அந்த கும்மிருட்டிலும் பளிச்சென்று மினுங்கியது.

3

அரிசி மூடை கட்டவிழ்க்கப்பட்டிருந்தது. நானும் மலைப்பாம்பும் தன்னந்தனியாக வீட்டில் இருந்தோம். அதன் வால் முகப்பு அறையிலும், தலை படுக்கும் அறையிலும் இருந்தது. நான் படுக்கையறையில் இருந்தேன். பார்க்க அவ்வளவு பிரமாண்டமாக இருந்தது. அதன் தலையை மெல்ல வருடினேன். அப்போது அதற்கு கிடைத்த உற்சாகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. ஏனெனில் நான் முகப்பு அறையில் இல்லை. கொஞ்சம் நேரத்தில் அதன் கண்கள் பசியால் சொக்கியதோ என உணர்ந்தேன். அதற்கு என்ன சாப்பிட அளிப்பது..?, வாங்கிய சாமான்கள் அது உண்ணும் எனில் கூட ஒருநாள் போதாதே. இந்த வீட்டில் அதற்கான உணவாக இருப்பது நான் மட்டுமே. அதுவும் ஒருநாள் அல்லது சரிவிகித அளவில் எடுத்துக் கொள்ளுமேயானால் மூன்று நாள். ஆடு, மனிதன், கோழி மற்றும் இன்னபிற விலங்குகளை தவிர வேறு என்ன உண்ணும் என இணையதளத்திலும் பார்க்க முடியாது. விடியவிடிய இருவரும் கொட்டக்கொட்ட கண் விழித்திருந்தோம்.

வானம் வெளுக்கத் துவங்கிய போது கண்ணயர்ந்தேன். தூங்கி எழுந்தபோது மணி மூன்று ஆகியது. மலைப்பாம்பு எங்கேயென தேடியபோது காணவில்லை. வீடு முழுவதும் தேடினேன். எங்கேயும் இல்லை. வெளியே பார்த்தேன். சில மனிதர்கள் அரசின் ஊரடங்கை மதிக்காமல் விழிப்புணர்வற்று சுற்றிக் கொண்டிருந்தார்கள். தூங்கும் முன்புவரை என் அருகே இருந்த மலைப்பாம்பு எங்கே போனது என்று குழப்பத்துடன் உட்கார்ந்திருந்தேன். அப்போதுதான் அந்த உணர்வு ஏற்பட்டது கீழ் அலமாரியில் இருந்த அரிசி மூடையை பார்த்தேன். அது நிறைய முடிச்சுகளுடன் இறுக்கி கட்டப்பட்டிருந்தது. நான் போட்ட அதே முடிச்சுகள். அவசர அவசரமாக முடிச்சுக்களை அவிழ்க்கத் தொடங்கினேன். எந்த முடிச்சும் அவிழவில்லை. பின் நிதானமாக ஒவ்வொரு முடிச்சுகளையும் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்தேன். ஒருவழியாக அவிழ்த்து முடித்து கையை உள்ளே விட்டேன். நன்றாக கையைவிட்டுக் குடைந்து பார்த்தேன். செல்போன் அகப்பட்டது. நேற்றைவிட சற்று சூடேறி காணப்பட்டாலும் ‘ஆன்’ ஆகவில்லை. மீண்டும் அரிசியினுள் வைத்து புதைத்து இறுக்கி அதே முடிச்சுக்களோடு கட்டிவிட்டேன்.

ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு காட்சிப்படிமங்கள் கனவுகளாக வருவதுண்டு. அது கொஞ்சம் காலம் தொடர்ந்து வரும். சில இட மாறுதல்களில் நம் பிரக்ஞையின்றி கடந்து போவதுமுண்டு. இன்று அந்தி தொடங்கும் முன் கண்ட பகல்கனவு சோர்வுக்குள் ஆக்கி என்னை ஆக்கிரமித்துக் கொண்டே இருந்தது. அது ஒரு துர்காட்சி கொண்ட கனவு. நிறைமாத கர்ப்பிணி ஒருத்தி நிர்வாணமாக மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருக்கிறாள். அவள் யோனியிலிருந்து குருதித் துளிகள் சொட்டு சொட்டாக என் முகத்தின் மீது விழுந்தது

கையினால் குருதித்துளிகளை தடுத்துப் பார்க்கிறேன். என்னென்னவோ செய்தும் பார்க்கிறேன். முயற்சி படுதோல்வி அடைகிறது. என்மீது ரத்தக்கறை படிவத்தை என்னால் தடுக்க முடியவில்லை. அந்த ரத்தவாடை என் மூக்கில் சென்று கொண்டே இருக்கிறது. பகல் முழுவதும் குருதிவாடை என்னை மயக்கத்தில் இருந்து கொண்டிருந்ததால் அந்த வாடையில் இருந்து தப்பிக்க கொடிய வைரஸுக்காக வாங்கிய மாஸ்க்கை வீட்டினுள் அணிந்து கொண்டேன். அது சற்று சிரமமாகத்தான் இருந்தது. பகல் மங்கி இரவாக, குருதி வீச்சம் என்னை விட்டு மெல்ல அகன்று சென்றது. அவ்வப்போது மாஸ்கை அகற்றி பார்த்து உணர்ந்து கொண்டேன். நேரம் செல்லச்செல்ல வாடை அறையை விட்டு சென்றது.

ஒரு கட்டத்தில் அந்த வாடை முழுவதும் மறைந்து போனது. மாஸ்க்கை கழற்றிக் கொண்டு நன்றாக இழுத்து காற்றை முகர்ந்தேன். குருதி வாடை இல்லை. முகப்பு அறைக்கு வந்தேன். அங்கே மலைப்பாம்பு என்னைப் பார்த்து நின்று கொண்டிருந்தது. தலையை திருப்பி அரிசி மூடையைப் பார்த்தேன் கட்டவிழ்க்கப்பட்டிருந்தது. ஒரு பயங்கர புத்துணர்வுடன் கூடிய பரவசம் என்னில் பரவுவதை தனியாக உணர முடிந்தது. அப்படியே அமர்ந்து அதனைப் பார்த்தேன். அதன் உடலைப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தேன். காரணம் நேற்று இருந்த அளவில் அது இல்லை. அதன் கால்பங்கு எடை அளவிற்கு குறைந்து மெலிந்துக் காணப்பட்டது. அதற்கு உணவு அளிக்காததால் தான் இப்படி ஆயிற்று என குற்ற உணர்வு அடைந்தேன். இதற்கான முழு குற்றத்தை நான் சுமந்து கொண்டு அதன்முன் அமர்ந்து தலையை மெல்ல வருடினேன். அதன் கண்களில் நான் இருப்பதை அப்போது தான் பார்த்தேன். அவ்வளவு கரிய கண்கள்.

உடம்பின் செதில்கள் அனைத்தும் அவ்வளவு கச்சிதமாக நவீன ஓவியம்போல் செதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு செல்களின் அளவும் ஒரே அளவில் இருந்தது. அந்த தோலின் நிறம், மற்றும் அழகை ரசிக்க அளவான வெளிச்சம்தான் வேண்டும். அதற்கான வெளிச்சம் எந்த திசையில் இருந்து வந்தால் அதன் முழு அழகை ரசிக்க முடியும்..? உடனே மெழுவர்த்தியை கொளுத்தி அதற்கு ஏற்றவாறு வெளிச்சத்தை வலதிலிருந்து அதனை நோக்கி பாய்ச்சினேன். ஒரு அழகான சிற்பம், ஓவியம் இரண்டையும் கலந்த நுண்கலையை தரிசிக்க முடிந்தது. அப்போது அந்த மலைப்பாம்பில் தன் நிலத்தை சுமந்துக் கொண்டிருப்பது உணர முடிந்தது. அதனுள் எந்த அந்நியத்தன்மை அல்லை. அது அசலான இந்திய சாயல் கொண்ட மலைப்பாம்பு. அதிலும் தென்னிந்திய சாயல் அதற்கு இருந்தது. மேற்குத்தொடர்ச்சி மலைகளில் வாழ்ந்திருக்கலாம் என சிந்தனையில் அசைபோட்டுக் கொண்டிருந்தேன். அதன் மின்கம்பிகளை என்னை நோக்கி அச்சுறுத்த முனைந்தது. நான் புன்னகைத்துக் கொண்டேன். உடனே ஃப்ரிட்ஜில் வைத்த ரொட்டித் துண்டுகளை ஓரத்தில் இருக்கும் செவலைநிற தோல்களை அகற்றி சிறுசிறு துண்டுகளாக ஒரு பாத்திரத்தில் பிய்த்துப்போட்டேன். மாலையிலே ஐஸ் கட்டி ஆகியிருந்த பால் பாக்கெட்டை சாதாரண தண்ணீரில் ஊற வைத்திருந்தேன். மேலும் கடகடவென முட்டைகளை உடைத்து ஊற்றி, நீரில் போட்டிருந்த பாலை எடுத்து கலக்கலாம் என எடுத்தேன். பச்சைப்பால் குடித்தால் பாம்பிற்கு ஏதாவது தொற்றுப் பிரச்சனை வந்துவிடும் என உள்ளம் கூறியது. அதென்ன ரெண்டு நிமிஷம் ஆகப்போகிறது என்று நன்றாகச் சுண்ட பாலைக் காய்ச்சி எடுத்து, அதை ரொட்டிக் கூழில் கலந்து உருட்டி எடுத்தேன். அதை பெரிதாக உருட்டி அதன் முன்பே எடுத்து வைத்தேன். அது ரொட்டி உருண்டையையே பார்த்துக் கொண்டிருந்தது. நான் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

சாப்பிடச் சொல்லி எவ்வளவு வற்புறுத்திய பின்னும், என்னால் சாப்பிட வைக்க முடியவில்லை. ஒருவேளை நான் சாப்பிடவில்லை என்று உண்ணாமல் இருக்கிறதா என நினைத்து, கொஞ்சமாக பிய்த்து எடுத்து உண்டேன். அப்போதும் அது சாப்பிடாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது. இரவு முழுவதும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு மட்டும் இருந்தோம். ஆனால் மனதில் சமாதானம் இருந்தது. நேர்மறையான அதிர்வலைகள் என்னை சுற்றுவதாக உணர்ந்தேன். ஆம், மெல்ல கால் வழியாக ஏறி இடுப்பு, முதுகு, கழுத்து என சுற்றிக் கொண்டது. அந்த இதமும், மலைப்பாம்பின் கதகதப்பும் என்னை பரிசுத்தமாக உணர செய்தது. அது என்னை சுற்றிக் கொள்ளும் போதெல்லாம் அடர்ந்த மலைக்காட்டினுள் சென்று நுகர்தலின் போது கிடைக்கும் மூலிகை வாசம் எப்போதும் எனக்கு கிடைக்கும். அதுதான் பரிசுத்தமாக உணர செய்ததற்கு முக்கியக்காரணம் என உணர்ந்தேன்.

அந்த கனவின் இறுதியில் ஆவாறி முழித்தேன், குடலை புரட்டிக்கொள்ளும் அளவிற்கு குருதி வாடை. பிணவறையில் இருந்து கழிவறைக்கு தாவுவது போல் நேராக பாத்ரூமில் சென்று வாந்தி எடுத்தேன். குருதி வாடை அறையெங்கும் பரவியிருந்தது. மாஸ்கை அணிந்துக்கொண்டு குப்புற படுத்துக்கொண்டேன். போர்வையை விலக்கிப் பார்த்தபோது ரொட்டி உருண்டை இல்லை. மலைப்பாம்பும் இல்லை, அரிசி மூட்டை கட்டப்பட்டிருந்தது.

மூன்றாவது நாள் இரவில் நான் கொஞ்சம் சமநிலையை உடையவானாகவே எண்ணினேன். உணர்வுகள் என்னை மீறிச் செல்லவில்லை. நான் தனிமைப்படுத்திக் கொண்டதில் என் உணர்வின் சமமின்மை அதிகரிக்கும் என்ற எண்ணம் தவிடுபொடியாகி இருந்தது. அதையுணர்ந்த தருணம் முதலே அந்த மலைப்பாம்பிற்காக காத்திருக்க தொடங்கினேன். என் மூச்சுக்காற்று சீரற்று காணப்பட்டது. நிமிர்ந்து உட்கார்ந்தேன். பத்மாசன நிலையில் கால்களை மடக்கிக்கொண்டு கண்களை மூடி, மூச்சை இழுத்துவிட்ட போது முதுகிலிருந்து ஊர்ந்து மேலே வருவது என்னால் உணர முடிந்தது. என் எதிரே ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தது. அதில் பார்ப்பதற்காக காத்திருந்தேன். என் உடலைச் சுற்றும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஏமாற்றம், காரணம் அது என் கழுத்தை மட்டுமே சுற்றியது. கண்ணாடியில் பார்த்தபோது பரமசிவன் மட்டுமே தெரிந்தார். நான் இப்படி நடக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதன் உடல் நான்கு மடங்கு  சுருங்கிப்போய் மெலிந்து ஒரு சாரைப்பாம்பு அளவை விட சிறியதாகவும், ஓட்டுப் பாம்பைவிட கொஞ்சம் பெரியதாகவும் இருந்தது. நான் கடவுளாக உணர முடியாத கோபத்தில் கண்ணாடியை ஓங்கி உடைத்தேன். சில்லுசில்லாக கண்ணாடி உடைந்து சிதறியது. என் கையில் குருதித்துளிகள் தரையில் சொட்டிக்கொண்டே இருந்தது. காரணம் புரியாமல் யோசித்துக்கொண்டே இருந்தேன். அரிசி மூடை முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட்டாலும் சிறிதளவே திறந்து காணப்பட்டது. அந்த இரவில் குருதி வாடை இல்லை என்றாலும் ஏகாந்தமான மனநிலை இல்லை. அது என் கழுத்திலிருந்து கீழே இறங்கியது. அது இப்போது மலைப்பாம்பு இல்லை. அதற்குள் ராஜநாகத்தின் கொடிய விஷம் கூட இருக்கலாம் என்று எண்ணினேன். ஏனென்றால் முன்பைவிட அதன் வேகம் அதிகரித்து காணப்பட்டது. அது என்னிடமிருந்து வெளியேறி படுக்கையறைக்குள் புகுந்தது.

மகிழ்ச்சியும், கவலையும் மாறி மாறி கட்டுக்குள் வந்த அதிசயம் அப்போது நிகழ்ந்து கொண்டிருந்தது. அதன் நிலையைக் கண்டு கொஞ்சம் வருத்தமடைந்த நான், என்னுள் நடக்கும் மாறுதல்களை உணர்ந்தபடியினால், எனக்குள் இருந்த மற்றொரு நான் விழித்துக் கொண்டது. அது என்னிடம் “அந்தப் பாம்பை விடாதே, அடித்துக் கொன்று விடு, அது ராஜநாகத்தை விட கொடிய விஷத்தை கொண்டது, அது இன்றைக்கு கண்டிப்பாக உன்னைக்கொன்று விடும், இப்போது அது மலைப்பாம்பு அல்ல” என்றான். நான் விறுவிறுவென ரூல்தடியைத் தேடி எடுத்துக்கொண்டு பாம்பை தேடினேன். கையில் கட்டையோடு நிற்கும் என்னை கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தது. என்னைக் கொன்றிருக்க வேண்டும் என்றால் முதல்நாள் கொடூர பசியில் விழுங்கி கொன்றிருக்க வேண்டுமே, அப்போது அதன் வயிறு இதைவிட பலமடங்கு. அப்போது கொல்லாத பாம்பு இப்போது கொல்லப் போகிறதா..? எனக்கு குழப்பமாக இருந்தது. ஆனால் அவன் என்ற நான் சொன்னதுபோல் மலைப்பாம்பு வடிவில் இருக்கும் விஷப்பாம்பு எனில் கொத்திக் கொன்று விடும் இல்லையா…? இல்லை அதன் மரபுவழி குணம் என்று ஒன்று உண்டு. மேலும் அந்த கண்களின் கருணையில் அப்படி எதுவும் இல்லை. ரூல் கட்டையை தூக்கிப்போட்டு, அந்த மலைப்பாம்பின் முன் கண்ணீருடன் மண்டியிட்டேன். கண்திறந்த போது மலைப்பாம்பு மாயமாகி இருந்தது. சுற்றும் முற்றும் தேடினேன். நினைத்தது போலவே நடந்தது. ஆம், அரிசி மூடை முடிச்சுக்களுடன் இறுக்கி கட்டப்பட்டிருந்தது.

காலையில் குருதி வாடை வந்துவிடும் என்பதால் மாஸ்க் அணிந்து கொண்டு அதிகாலை ஐந்து மணிக்கு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றேன். தூங்கப்போகும் முன் கிடைக்கும் மூலிகை வாசத்தை இழந்து விட்டேன், அதற்கு காரணம் நான் தான் என நினைத்துக் கொண்டுதான் தூங்கினேன்.

விடியற்காலை நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. ஆழ்ந்த தூக்கத்தில் அந்த கனவு மீண்டும் வந்தது. அந்த நிர்வாண உடலின் யோனியில் இருந்து விழும் குருதித்துளிகள் மாஸ்கில் விழுந்து கறைபட்டுக் கொண்டிருந்தது. விழுந்து கொண்டிருந்த குருதித்துளிகள் நின்றது. கண் இமைக்கும் நேரத்தில் அவள் யோனியில் இருந்து தொப்புள் கொடி மூலமாக, ரத்தங்களும் கழிவுகளுமான பச்சிளம் சிசு தொப்புள் கொடியில் தொங்கி ஆடிக்கொண்டிருக்கிறது. அவளின் வயிறு பலநாள் பட்டினி கிடந்தவளின் வயிறாக மாறிப்போனது.

ஒரு உடலுக்கு கீழ் இன்னொரு உடலும் சேர்ந்து ஆடும் அந்தக் குழந்தையின் கண்களை பார்த்தேன். அது வேறெதுவுமில்லை. அந்த மலைப்பாம்பின் கண்கள் தான்.  அய்யோ… என்று உரக்க அலறிக்கொண்டே எழுந்தேன். உடலெங்கும் வியர்த்துப் போயிருந்தது. கதவைத் திறந்தேன். வெயில் அறை முழுவதும் படர்ந்தது. மக்கள் வெளியே செல்லத் துவங்கி இருந்தார்கள். திறக்கலாம் என தளர்த்தப்பட்ட கடைகளில் செல்போன் கடைகளும் அடக்கம். வேகவேகமாக அரிசி மூடையை அவிழ்க்க முனைந்தேன். முடியவில்லை. ஓடிச்சென்று பால்கனியில் நின்று சிகரெட்டை பற்ற வைத்தேன். ஒரு காகம் என் அருகே வந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. அதன் கண்களை பார்த்துவிடக் கூடாது என முடிவு செய்து உடனே உள்ளே வந்தேன்.

மழை நன்றாக பெய்ததன் விளைவாக மேல் காங்கிரீட்டில் நீர் குடிகொண்டு, பயங்கர போராட்டத்திற்கு அப்புறமாக ஊடுருவி குமிழ்களாக நீர்த்துளிகள் மேல்கூரையில் இருந்து ஒவ்வொன்றாக விழுந்தது. கண்முன்னால் சென்ற துளி காலருகில் விழுந்தது. மெல்ல குனிந்து அந்த நீர்த்துளியைப் பார்த்தேன். அந்த துளிக்குள் ஒரு கூத்தாடிப்புழு(கொசு உருவாகும் புழு) படுசுறுசுறுப்பாக நெளிந்து கொண்டிருந்தது. உடனே பெருவிரலால் அந்தத் துளியை அழுத்தினேன். விரலை அகற்றிப் பார்த்தபோது கூத்தாடிப்புழு இறந்ததற்கான எந்த தடையமும் இல்லை. இப்போது பதற்றமடைந்தால் முடிச்சுகளை அவிழ்க்க முடியாது என கொஞ்சம் ஆசுவாச படுத்திக்கொண்டு நிதானமாக ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்க்க தொடங்கினேன். முடிச்சுகள் அவிழ்ந்தது. கையை அரிசிக்குள் விட்டு செல்போனை எடுத்தேன். எடுத்துக்கொண்டு வேகமாக அறையை விட்டு செல்போன் ரிப்பயர் செய்யும் கடையை நோக்கி ஓடினேன். சுற்றி இருக்கும் மனிதர்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். வண்டியில் செல்பவர்களும் ஒரு நொடி நிறுத்தி என்னைப் பார்த்து அச்சத்துடன் நகர்ந்தார்கள். ஒரு குழந்தை பயத்தில் அழுது கொண்டே ஓடி ஒளிந்தது. வயதான முதிர்கன்னி அசிங்கமாக என்னை திட்டினாள். அப்போது தான் எனக்கு அந்த விஷயம் பிரக்ஞைக்குள் வந்தது.

நான் மாஸ்க் அணிந்துள்ளேன். அதில் ரத்தக்கறை படிந்துள்ளது. மீண்டும் சுற்றி நின்ற மனிதர்களின் அனைத்து உணர்வுகளும் ஒன்றாகி என்மீது படியத் தொடங்கியது.

  • ஐசக் பேசில் எமரால்ட் திரைத் துறையில் வேலை பார்த்து வருகிறார். அவரது நாவல் அபினி சமீபத்தில் வெளியாகியது. தொடர்புக்கு – issacb06@gmail.com