Home Blog Page 85

சமகால ஈழத் திரையுலகம்

0

– இயக்குநர் மதிசுதா

உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் கலைவடிவங்களில் ஒன்றாக திரைக்கலை அமைந்திருக்கிறது. நவீனயுக சினிமா இன்று மிகப்பெரும் சாதனைகளை செய்துள்ளது கற்பனைகளையும், எளிய வாழ்வியலையும் என சினிமா தன்னை இரு தளங்களிலும் தக்க வைத்திருக்கிறது.

கடந்த இருபது ஆண்டுகளாக தன்னையும் சர்வதேச திரைப்பட மைய நீரோட்டத்தில் இணைக்க போராடிக் கொண்டிருக்கும் திரையுலகமாக ஈழத்தமிழ் திரைத்துறை செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் ஈழ சினிமாவின் தோற்றத்தை இந்த கால வரையறைக்குள் எம்மால் உட்படுத்த முடியாது அதன் கால அளவு நீண்டது. துரதிஷ்டவசமாக தன்னை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொண்டு தன் மொழி மற்றும் நிலப்பரப்பில் மட்டும் தரித்து நின்று ஈழத்திரையுலகம் இன்று சர்வதேச திசைகள் எங்கும் பயணிக்க(த்) தொடங்கியுள்ளது.

ஈழ சினிமாவின் தோற்றமும் வளர்ச்சியும்  ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உட்படுத்த வேண்டியது. இப்படியான செயற்பாட்டின் மூலமே புதிய சிந்தனைகளும், கண்ணோட்டமும் திரையுலகத்திற்குள் ஊற்றெடுக்கும். அதுவே இன்றைய தலைமுறையின் திரைக்கலைக்கு புதிய சாளரங்களைத் திறந்து வைக்கும்.  தற்போதைய ஈழ சினிமாவிற்கு முந்தைய காலங்கள் போல தொழில்நுட்ப சிக்கல்கள் இல்லாத போதிலும் அரசியல்–சமூக ரீதியாக கடுமையான எதிர்வினைகளை சந்தித்து வருகிறது. அதேநேரத்தில் தொழில்நுட்ப இலகுவாக்கலானது பல படைப்பாளிகளின் உள்நுழைவுக்கு காரணமாக அமைகிறது. பல பரீட்சார்த்த முயற்சிகளையும் இன்றைய தலைமுறையினர் செய்து வருகின்றனர்.

ஈழ சினிமாவை அடிப்படையில் இரண்டு முக்கிய பிரிவுகளாக வகைப்படுத்தலாம். தாயகத்திற்குள் இருந்து உருவாக்கப்படும் படங்கள், புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் படங்கள். இவை இரண்டு வெவ்வேறு தளங்களில் உள்ள சினிமாவாக மட்டுமல்லாமல் தமிழுக்கு என்று ஒரு தனித்துவமான சினிமாவை உருவாக்கப் போராடுவதில் மிக முக்கியமான காரணிகளாக  உருவெடுத்து கொண்டிருக்கின்றன.

இதுவரை ஈழ சினிமாவில் நடந்தவைகள் ஒருபுறம் வைத்துக் கொண்டு நடந்து கொண்டிருப்பவைகளையும் நடக்க வேண்டிய விடயங்களையும் பேசுவதுதான் கால ஓட்டத்தில் சாலச்சிறந்தது ஆகும்.

ஆக ஈழ சினிமா எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இரண்டு வகைக்குள்ளால்  நோக்கலாம்

1) அகக்காரணி
2) புறக்காரணி

இதுவரை புறக்காரணிகள் பெரிய அளவில் ஈழ சினிமாவுக்குள் தாக்கத்தைச் செலுத்தி இருக்கவில்லை ஆனாலும் ஈழ சினிமா தன் சமூகத்துடன் தான் பெரிதும் போராடிக் கொண்டிருக்கிறது. அதில் பல காரணிகள் இருந்தாலும் மிக முக்கியமான சிலவற்றை சுருக்கமாக பார்ப்போம்.

அ)  இந்த சினிமாவுக்குள் இருக்கும் இரு குழுமப் பிரிப்புக்கள்

உட் காரணிகளுக்கும் பேசப்பட வேண்டிய முக்கிய விடயங்களில் ஒன்றாக ஈழ சினிமாவில் இருக்கும் குழுமப் பிரிவுகள் உள்ளடக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது

இங்கு உள்ள இது பிரதான குழுக்களாக

1) வாழ்வியல் சார் படங்களை செய்வோர்
2) வாழ்வியல் சாராத இன்னொரு தளத்தின் பிரதிகளை திரைப்படமாக செய்பவர்

இதில் முதலாவதாக குறிப்பிடப்பட்ட குழுவை சேர்ந்தவர்களாக குறிப்பிடப்படுவது, நாம் வாழும் குடித்தொகையின் வாழ்வியலை அவர்கள் பேசும் மொழியிலேயே படைப்புகளாக கொண்டு வருவதே எமக்குரிய படைப்புகளாகும். அதற்குள் எல்லா வகையான Genre திரைப்படங்களும் உள்ளடக்கம் என்பது அவர்களது கருதுகோள் ஆகும்.

இரண்டாவதாக குறிப்பிடப்பட்ட குழுமத்தின் கருதுகோள் ஆக அவர்கள் குறிப்பிடுவது சினிமா என்பது மக்களுக்கானது மற்றும் கேளிக்கைக்குரியது. மக்கள் விரும்புவதை தான் கொடுக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் சினிமாவுக்கு என்றொரு மொழி ஏற்கெனவே தமிழகத்தில் கண்டறியப்பட்டு விட்டது. அதனால் நமது பேச்சு மொழி சினிமாவுக்கு வரும்போது அவை மக்களுக்கு புரியாது என்பதுடன், இவை இருப்பவை தான் வர்த்தக சினிமாக்கள் என்ற பதத்தால் விவரிக்கிறார்கள். சினிமாவைப் பொறுத்தவரை ஒரு கசப்பான உண்மை எதுவென்றால் இதுவரை வர்த்தக சினிமாவுக்கு முதலீட்டை இட்டவர்கள் அதிலிருந்து ஒரு ரூபாய் கூட லாபம் ஈட்டவில்லை. ஆனால் மக்கள் மொழி பேசி மக்கள் வாழ்வியல் பேசி எடுக்கப்பட்ட படங்கள் முதலீட்டாளர்களுக்கு பெரிய லாபத்தை ஈட்டிக் கொடுத்திருக்கிறது.

ஆனால் ஈழ சினிமாவில் வருத்தத்திற்குரிய விடயங்களில் ஒன்றாக இதையும் குறிப்பிடலாம். இங்கே தயாரிப்பாளர்கள் என வந்து முதலிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வர்த்தக சினிமா என்ற பதத்தில் மயங்கி தமிழக படங்களை உருவாக்கவே பண முதலிட்டு கையை கடித்துக் கொண்டு இறுதியில் ஈழ சினிமாவில் முதலீடு செய்வது வீண் என்ற கருத்துடன் தாமும் பின்வாங்கியதுடன் உள்நுழைய இருந்தவர்களையும் நிறுத்திய சம்பவங்களே அதிகமாக நடந்தேறியது.

இங்கு உருவாக்கப்பட்ட பல வாழ்வியல் படைப்புகள் இயக்குனர்களால் தமது முதலீட்டில் சுயாதீனமாக உருவாக்கப்பட்டவை ஆகும். ஆனால் சில விதிவிலக்கான தயாரிப்பாளர்களும் தம் முயற்சியில் தொடர்ச்சியாக முதலீடு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆ) படைப்பாளிகளை நோக்கும் தாழ்வுநிலை பார்வை

ஈழத்தில் சினிமா என்பது வருமானம் ஈட்டக்கூடிய ஒரு தொழில் முறையான கலையாக மாறவில்லை அதன் அடிப்படையில் இதை ஒரு வேலை அற்றவன் பொழுதுபோக்காகவே சிலர் விமர்சிக்கிறார்கள். அதனால் இங்குள்ள படைப்புப் போராளியாக உழைப்பவருக்கான சமூக அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இ) இன்னொரு சினிமாவின் பிரதியாக இயங்கப் பணித்தல்.

ஈழ சினிமா கனவு நோக்கி வந்த ஒவ்வொருவரும் ஆரம்பத்தில் அவர்கள் ரசனையாக தமிழக தமிழ் சினிமாக்களையே ரசித்திருப்பர். அப்படி இருக்கையில் பார்வையாளன் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்.? அதன் அடிப்படையில் இங்கு உருவாகும் திரைப்படங்களையும் அதனைப் போல் செய்யுங்கள் என்றே பெரும்பாலானவர்கள் கூறிக் கொண்டிருந்தாலும் ஈழ சினிமா உருவாக்கத்தில் இருப்பவரிடம் ஒரு கேள்வி இருக்கிறது அதைப் போல ஏன் செய்ய வேண்டும்.? அதுதான் ஏற்கனவே அங்கே செய்யப்பட்டு விட்டது நாம் எங்கள் மொழியில் உங்கள் கதைகளை சொல்வோம்.

ஈ) ஈழ சினிமாவின் தேவை பற்றிய காரணங்கள் மக்களைச் சரியாகச் சென்றடையவில்லை.

நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கும் நம் வாழ்வியல் பண்பாடு மற்றும் இடங்களை சினிமாக்களால் தான் நாம் அடுத்த தலைமுறைக்கு கடத்த முடியும் என்ற தெளிவு மக்களிடம் சரியாக சென்றடையவில்லை.

உ) சினிமாவின் பேச்சு மொழி தொடர்பான சிக்கல்கள்.

இவை பற்றி ஆரம்பத்தில் பேசப்பட்டிருக்கிறது, ஈழத்துப் பேச்சை தவிர்ப்பதற்காக கூறப்படும் காரணம் ஈழத்துப் பேச்சு வழக்கானது திரையில் நாடகப் பேச்சாக அமையும். அதனால் மக்களுக்கு புரியாது. ஏற்கனவே சினிமாவுக்கு புதிய மொழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்பதே ஆகும். ஆனால் வாழ்வியல் சார்ந்த படங்களை செய்வோர் கூறுவது நாம் இயல்பாக எதைப் பேசுகிறோமோ அதை திரையில் பேசுவோம் அதுதானே எமக்குரிய வாழ்வியல் சார்ந்த பேச்சு மொழியாகும் என்பது வாழ்வியல் திரைப்படம் செய்பவர்களது வாதமாக அமைகிறது.

ஊ) ஊடகங்களால் மேற்கொள்ளப்படும் புறக்கணிப்புகள்.

இது முக்கியமாக பேசப்பட வேண்டிய ஒரு விடயமாகும். ஈழத்திரையுலகம் என இவ்வளவு பேசுகிறீர்களே இதுவரை என்ன சாதித்தீர்கள் என்றுதான் இதை(ப்) படிக்கும் ஒவ்வொருவரும் மனதுக்குள் கேட்டுக் கொண்டிருப்பீர்கள். ஆனால் சாதித்த பட்டியல் மிக நீண்டது. உலகின் அங்கீகரிக்கப்பட்ட பல சர்வதேச விருதுகளை பெற்று இருக்கிறார்கள் என்பதுடன் சர்வதேச நாடுகளில் அவர்கள் படைப்புகள் திரையிடப்பட்டும் இருக்கிறது .

ஆனால் இதற்கு முக்கியத்துவம் அளித்து ஈழத்திரை படைப்பாளிகளை ஊடகங்கள் முன் நிறுத்த முன்வருவது கிடையாது. தென் இந்தியச் சினிமா அதாவது தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் திரைப்படங்களுக்கு வழங்கும் முன்னுரிமையை தாயகப் படைப்பாளிகளுக்கு வழங்குவதில் இங்குள்ள ஊடங்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை போலும்.

நான் கூறுவது பொய்யாக இருக்கலாம். ஆனால் இதை உங்கள் மனசாட்சியிடம் ஒரு கேள்வியாக கேட்டு பாருங்கள். வருடத்திற்கு சராசரி 50க்கு மேற்பட்ட சர்வதேச அங்கீகாரங்கள் ஈழ சினிமாவிற்குள் கிடைக்கிறது. அதில் எத்தனை தொடர்பான செய்திகளை நீங்கள் ஊடகங்களில் கண்டு இருக்கிறீர்கள் ????

மேற்கூறிய விடயத்தை வைத்துக்கொண்டு முழு ஊடகங்களும் ஊடகவியலாளர்களையும் அவ்வட்டத்துக்குள் சுருக்குவதும் தவறாகும். முடிந்தவரை ஆதரவு கொடுக்கும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எம்மோடு இல்லாமல் இல்லை.

புறக்காரணிகள்

இப்பகுதிக்குள் வரப்போகிறவை அனைத்துமே இனி வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் தற்போது ஈழ சினிமாவுக்குள் தனது இலக்கு நோக்கி பயணிக்கக் கூடிய சுதந்திரமான காலப்பகுதியாகும் ஏனென்றால் முன்னர் நாம் பார்த்த அகக்காரணிகள் கூட ஒரு சுயாதீன படைப்பாளியின் பயணத்தை தடுத்து நிறுத்தக்கூடிய ஒரு காரணியாகவே கருத முடியாது

ஆனால் புறக்காரணிகளில் நாம் பார்க்க இருப்பது ஈழ சினிமா தனது தனித்துவமான பாதையில் பயணிக்கையில் அது சார் தனித்துவம் யாருக்கு தலையிடியாக அமையும் என்பதே ஆகும்.

குறிப்பாக உலக அரங்கில் சிங்கள சினிமாவானது மொழி அங்கீகாரத்துடனும், தனித்துவத்துடனும்  இலங்கையின் இறையாண்மைக்கு அடையாளமாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நின்றன. அந்த அளவுக்கு தனித்துவமான இயக்குனர்களும், திரைப்படங்களும் சிங்களத்தில் இருந்தாலும் தற்போது தோன்றும் புதிய தலைமுறை இயக்குனர்களால் Bollywood Kollywood  இன் மசாலா சார்ந்த திரைப்படங்களில் ஈர்க்கப்பட்டு அதன் மீள் உருவாக்கத்தில் முனைப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் முதலீட்டாளர்களும் பல கோடிகளை அத்திரைப்படம் நோக்கி இறைக்கிறார்கள்.

நிச்சயமாக இத்திரைப்படங்கள் உலக அரங்கில் இலங்கையைப் பற்றி பேசப் போவதில்லை. ஆனால் ஈழ சினிமாவின் வெற்றியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படு(த்)தப் போகின்றது. ஒரு நாட்டில் ஒடுக்கப்பட்ட இனம் மற்றும் சிதைக்கப்படும் மொழியே அந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தப் போகிறது எனும் போது அது எவ்வகையான தாக்கத்தை ஒரு சினிமா மேல் செலுத்தும் என்பதை கற்பனை செய்து பாருங்கள் .

இதற்கு அவர்களிடம் இரண்டு தீர்வுகள் இருக்கும்….

1) மானியம் வழங்கல் மூலம் சிங்கள இயக்குனர்களை உருவாக்குதல்

2) ஈழ சினிமாவையும் அதன் இயக்குனர்களையும் ஒடுக்குதல்

இரண்டாவதாகக் கூறப்பட்ட இந்த விடயத்தில் இருந்து நாம் தப்பிப்பதற்கு நமக்கிருக்கும் ஒரே ஒரு வழிமுறை “ஒற்றுமை” என்பது மட்டுமே ஆகும்.

சினிமா என்பது ஒரு கூட்டு(க்)கலை வடிவமாகும். அதை ஒருவனால் தனியே ஓடி வெல்ல முடியாது.

இந்த அஞ்சல் ஓட்டத்தில் ஏற்படப்போகும் இளைஞர்களின் கூட்டிணைவு தான் எதிர்காலத்தில் கட்டமைப்புக்குரிய பலத்தை கொடுக்கும் என்பது எனது நம்பிக்கையாகும்.

ஈழ சினிமா பல தசாப்தங்களாக தலையெடுக்க முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறது. நாளைக்கோ அல்லது அடுத்த மாதமோ இது தன் நிலையை அடைந்துவிடும் என்று கூற முடியாது. ஏனென்றால் இது ஒரு நீண்ட நெடிய போராட்டம். ஆகவே அமையப் போகிறது. அதனால் இதில் தாக்குப்பிடிக்கக் கூடியவர்களால் மட்டும் தான் இதில் போராளியாக நிலை எடுக்க முடியும்.

ஒரு உண்மையான படைப்பாளிக்கு யாராலும் எல்லை விதிக்க முடியாது. விதிக்கவும் கூடாது. ஈழ சினிமாவில் இதைத்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தை யாரும் விதிக்க முடியாது.

ஆனால் எம் வாழ்வியல், மொழி, பண்பாட்டை பேசுபவை மட்டும்தான் ஈழ சினிமாவாக இருக்க வேண்டும் என்பதே இங்கு உழைப்பவர்களது பேராசையாகும்.

மதிசுதா ஈழத்திரையுலகின் நம்பிக்கை. இவர் இயக்கிய நிறைய குறும்படங்கள் சர்வதேச திரைவிழாக்களில் திரையிடப்பட்டு விருதுகள் பெற்றுள்ளன. www.mathisutha.com

வெண்ணிலா

1

சர்மிலா வினோதினி

அம்மாவ பாக்கோணும். அவோக்குப் பக்கத்தில இருக்கோணும். அம்மாளாச்சி என்ர அம்மாட்ட கூட்டீற்றுப் போங்கோ.

இவைதான் வெண்ணிலாவின் பிரார்த்தனைகளாய் இருந்தன. இன்றைக்கு மட்டுமல்ல நேற்று, முந்தநாள், அதற்கு முதல்நாள் எல்லாமே இவற்றைத்தான் அவள் திரும்பத் திரும்ப சாமியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். மனிதர்கள் தங்களுக்கு ஆக வேண்டியவைகள் குறித்த விண்ணப்பங்களை மனிதர்களைத் தாண்டி தெய்வம் என்கின்ற நம்பிக்கையிடத்தில் தானே கொட்டித் தீர்க்கிறார்கள்.

வெண்ணிலாவின் பிரார்த்தனைகள் அம்மனின் செவிகளைச் சென்றடைந்ததோ இல்லையோ அந்தக் கோயிலின் பூசாரிக்கு நன்கு பரிச்சயமாகியிருந்தது.

என்ன குழந்தை அம்மனிட்ட சொல்லீற்றீங்களோ, அம்மாட்ட போகோணும் எண்டு?

ஓம் சொல்லீற்றன்.

அப்பச்சரி, இதில வந்து நந்தியின்ர காதிலயும் சொல்லுங்கோ. நந்தியும் அம்மனிட்டச் சொல்லுவார்.

சரி, சொல்லீற்றுப்போறன்.

குழந்தைக்கேயுரிய தொனியில் வெண்ணிலா விழிகளை விரித்துப் பதில் சொல்லியபடி திரும்பவும் பாடசாலையின் முதல் மணியோசை கேட்கவும் சரியாக இருந்தது.

சரி பூசாரி, நேரம் போயிற்றுது நான் நாளைக்கு வந்து சொல்றன்.

அன்றைக்கு அவசர அவசரமாகச் சொல்லியபடி சென்ற வெண்ணிலாவா இது?  

பூசாரி சண்முகத்தார் ஒரு கணம் நின்று நிதானித்தார்.

அவர் வெண்ணிலாவைப் பற்றிச் சொல்வதற்கு முன்னர் சண்முகத்தாரைப்பற்றி நானிங்கு சொல்லியாக வேண்டும்.

சண்முகத்தார்தான் அந்த ஊரின் அம்மன் கோயில் பூசாரி. பரம்பரை பரம்பரையாக அவரது அப்பா, அப்பப்பா என்று இரண்டு மூன்று தலைமுறைகளாக அம்மனுக்கு தீபம் காட்டுவது அவர்களது குடும்பம்தான்.

சண்முகத்தார் அம்மனுக்குத் தீபம் காட்ட ஆயத்தமாகுவதே ஒரு கலை போலத்தான் இருக்கும். அதிகாலையில் எழுந்து வளவடிக் கிணற்றடியில் குளிர்ந்திருக்கும் நீரை அள்ளி தலையில் ஊற்றி நீராடுவார். தலையில் நெட்டென நிமிர்ந்து நிற்கின்ற நான்கைந்து முடிகளிலிருந்து தண்ணீர் சொட்டச் சொட்ட இடுப்பில் கட்டியிருக்கும் வெள்ளை வேட்டியோடு கோயிலுக்குப் புறப்படுவார்.

சிற்றாறு ஒன்று உள்ளிறங்கி விட்டதைப்போல கோயில் கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளி ஊற்றி மண்டபங்களை எல்லாம் கழுவிச் சுத்தம் செய்வார். பின்னர் வேலிக்கரையோரமாகப் பூத்துக்கிடக்கின்ற செம்பருத்தி, நந்தியாவட்டை, மயில்கொன்றையென நான்கைந்து வகையான பூக்களைப் பறித்து சேகரித்து வைப்பார். பலவண்ண நிறங்களில் பூத்திருக்கும் அந்தப் பூக்களோடு செம்பருத்தி இலைகளும் சேர்ந்திருக்கும்.

என்ன சண்முகத்தார் இலைய பறிக்கிறியள், இலை பூவாகுமே?

அதிகாலையில் கோயில் கிணற்றடிக்கு நீரள்ள வருகின்ற யாராவது இந்தக் கேள்வியை  கேட்கத் தவறமாட்டார்கள்.

பூவும், பிஞ்சும், காயும், பழமும் ஒண்டுதான். ஆத்மார்த்தமா மனசில அன்போட எதச் செய்யிறமோ அது அம்மனிட்ட போய்சேரும். அன்புதானே கடவுள், அன்புதானே சாமி.

சித்தாந்தமும் வேதாந்தமும் ஒன்றுசேரப் பேசி முடிப்பார் சண்முகத்தார்.

அதற்கிடையில் மடப்பள்ளி அடுப்பில் வைத்திருந்த வெண்பொங்கல் பதமாக அவிந்திருக்கும். வெண்பொங்கல் என்றால் பால், பயறு, சீனி எல்லாம் போட்டுச் செய்த பொங்கல் அல்ல அது. வயலில் விளைந்த பச்சை அரிசியும் குளிர்ந்திருந்த கிணற்று நீரும் மட்டும் கலந்து பொங்கிய வெண்பொங்கல்தான் அது.

தங்களுடைய வயலில் விளைந்த நெல்லிலிருந்து குற்றிய அரிசியை ஊர்க்காரர்கள் மாதப்பூசை அடிப்டையிலும், வேண்டுதல்களுக்காகவும் அம்மனிற்கென கொண்டுவந்து கொடுப்பார்கள்.

அம்மாளாச்சி, என்ர பிள்ளைக்கு வலிப்பு சுகமாகோணும்.

அம்மாளாச்சி, வாற வருசம் சோதினையில என்ர மகள் நல்லா சித்தியடையோணும்…

இப்படியாக ஊர்க்காரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான வேண்டுதல் இருக்கும். அந்த வேண்டுலுக்கு காணிக்கையாக பச்சை அரிசியும் விளக்கெண்ணையும் கற்பூரமும் கொண்டு வந்து கொடுப்பார்கள்.

அம்மாளாச்சி எங்கள கைவிடமாட்டா.

இது அந்த ஊர் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கை ஆலயத்தில் அரிசிக்கு குறை வைக்கவில்லை. அதனால் ஊரில் எந்தச் சிறுவர்களும் பசித்திருக்கவில்லை.

கோயிலுக்கென ஊரார் கொடுக்கின்ற நேர்த்திக் கற்பூரங்களே அம்மனுக்கு தீபம் எரியப் போதுமானதாக இருந்தது. ஊரின் துன்பங்கள் எல்லாம் எரிந்து உருகுவதைப் போல மிளாசி எரிகின்ற தீபத்தில் அம்மாளாச்சி, அம்மாளாச்சி என்று கசிந்து உருகுவார் சண்முகத்தார்.

அவருக்குத் தெரிந்ததெல்லாம் சிறிய வயதில் அவரது தந்தை சொல்லிக் கொடுத்த தேவார, திருவாசகப் பதிகங்களும், திருக்குறளும்தான். தனக்குத் தெரிந்த மெட்டில் தேவாரப்பதிகங்களை உரக்கப் பாடியபடி கற்பூரதீபம் காட்டும் அவரின் பூசை ஊர்ச்சனங்களுக்குப் போதுமானதாக இருந்தது.

சனங்கள் கேட்கின்ற பிரார்த்தனைகளை அம்மனிடம் சொல்லி,

அம்மா தாயே! இந்தப்பிள்ளையை சுகம் ஆக்கிவிடு, நீதான் கருணை காட்டோணும் என்று பிரார்த்தித்தபடி சேகரித்திருந்த பூக்களை அள்ளி அம்மனின் திருவுருவத்தில் மழையெனச் சொரிந்து வணங்கும் தோரணையில் ஊர் மக்கள் திருப்தி அடைந்தார்கள்.

சங்கும் சல்லாரியும் ஒலிக்க நிறைவுபெறும் அந்தப்பூசையில் ஊரின் ஒவ்வொரு விடியலும் சில்லென விடிந்தது.

பூசை முடிந்ததும் அம்மனுக்குப் படைத்த வெண் பொங்கலை அன்று ஒடித்த தேக்கம்  இலையில் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டு ஒரு இலைப்பொங்கலை மட்டும் வைத்துக்கொண்டு காத்துக் கொண்டிருப்பார்.

விடிந்து சில நாழிகைகள் கடந்த நிலையில் காலை ஏழு மணிக்கு முன்பாக முடிந்து விடும் இந்தப்பூசை வழிபாடுகள் எல்லாவற்றிற்கும் பின்பு அம்மனிடம் தன் பிரார்த்தனைகளைச் சொல்வதற்காகவும் வெண்பொங்கல்  உண்பதற்காகவும் வந்து சேருவாள் வெண்ணிலா.

வெண்ணிலா, படித்துக் கொண்டிருந்த பாடசாலைக்கு அம்மன் கோயிலைக் கடந்துதான் செல்லவேண்டும். வெள்ளைச்சீருடை அணிந்து, தலைவாரி அவளது பெரியம்மா பின்னிவிடும் இரட்டைச்சடையுடன் வந்து நிற்கும் வெண்ணிலாவிற்கு மட்டும் விசேட சலுகை ஒன்றை வழங்கியிருந்தார் சண்முகத்தார்.

‘வா குழந்தை’,

கால கழுவீற்றுப்போய் அதில இருக்கிற பூவ எடுத்து நந்தியின்ர தலையில வைச்சிற்று, அதின்ர காதில உன்ர வேண்டுகோளச் சொல்லு.

உன்ர பிரார்த்தன நிறைவேறும்,  நீயும் நல்லாப் படிப்பாய்.

சண்முகத்தாரின் இந்தச் சலுகைகளால் மகிழ்ச்சியடையும் வெண்ணிலாவிற்கு தேக்கம் இலையில் எடுத்து வைத்திருந்த வெண் பொங்கலையும் உண்ணக் கொடுப்பார்.

நந்தியாவட்டைப் பூக்களின் நறுமணம் வீசும் அந்தப் பொங்கலின் வாசத்தை நுகர்ந்தபடி வெண்ணிலா சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்து அவளை அனுப்பிய பின்பே நடையைச் சாத்திவிட்டுப் புறப்படுவார் சண்முகத்தார்.

நெற்றியில் பட்டையாக பூசியிருக்கும் திருநீறு துவட்டாத தலையிலிருந்து சொட்டுகின்ற நீரை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிவிட ஆரோக்கிய தேகியாகவும், ஊரின் மூத்த குடிமகனாகவும் வாழும் வரம் சண்முகத்தாருக்குக் கிட்டியது.

அவர், அப்படி இருப்பதில் ஒன்றும் ஆட்சரியம் இல்லை தான். ஆனால் வெண்ணிலா..

அன்றைக்குக் குழந்தையாகப் பார்த்த சிறுமியை இருபது வருடங்களின் பின்னர் இதே அம்மன் கோயிலில் எதிர்பாராமல் காண நேர்ந்ததில் சண்முகத்தார் வாயடைத்துப் போயிருந்தார்.

சனங்கள் கும்பிடுவதற்காக நீட்டிய கற்பூர தீபத்தின் ஒளியில் வெண்ணிலாவின் முகம் சூரியனைப்போலத் தெரிந்தது அவருக்கு.

வெண்ணிலா..

குழந்தை..

ஒரு குழந்தையின் தாயாகியிருந்த அவளை குழந்தை என்றே சண்முகத்தாருக்கு அழைக்கத் தோன்றியது.

குழந்தை என்று விழித்தவர், கற்பூர தீபத்தை அவளுக்கும் வணங்கக் கொடுத்துவிட்டு அவசர அவசரமாக உள்ளே சென்று அம்மனின் பாதத்திலிருந்த பூக்களை அள்ளியெடுத்து வந்து கைநிறையக் கொடுத்தார்.

அத்தோடு நிற்காமல் உடனே ஓடிச்சென்று, தேக்கம் இலையில் வெண் பொங்கலையும் எடுத்துவந்தார்.

இம்முறை அவரது கையில் இரண்டு தேக்கம் இலைகளில் பொங்கல் இருந்தது. ஒன்றை வெண்ணிலாவிடம் கொடுத்தவர், மற்றையதை அருகில் நின்ற குழந்தையிடமும் கொடுத்துவிட்டு,

சந்தோசம் அம்மா உன்ன பாத்தது.

எத்தின வருசம் ஆகீற்று..

அவர் பெருமூச்சொன்றை உள்ளிளுத்து வெளியிட்டார்.

அம்மாவ பாத்திற்ரியா?

பாத்திருப்பாய்தானே, நான் மடையன்,  இப்பிடிக் கேக்கிறன்.

கேள்வியைக் கேட்டு,  தனக்குத் தானே பதிலையும் சொல்லிக் கொண்டார்.

ஓம் பாத்திற்றன். வெண்ணிலா பதில் சொல்லியபடி பொங்கலில் வீசிய நந்தியாவட்டைப் பூக்களின் வாசத்தை நுகர்ந்தாள். அந்த வாசமும் சண்முகத்தாரின் கேள்விகளும் காலச்சக்கரத்தில் அவளை பின்நோக்கி அழைத்துச் சென்றது.

பள்ளிச்சீருடையில் பாடசாலைக்குச் செல்வதற்கு முன்பாக அவள் இந்தக் கோயிலிற்கு வந்து சென்ற காலமது. யாழ்ப்பாணமும் வன்னி நிலமும் கடலால் மட்டுமல்ல, ஆட்சியாலும் பிளவுபட்டிருந்த காலம். தரைவழிப் பிரயாணங்கள் முற்றிலுமாகத் தடைப்பட்டு கிளாலிக் கடல் மார்க்கமான பயணங்களே அப்போது சாத்தியமாகியிருந்தன. பலாலியும் ஆனையிறவும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த எறிகணைகளை தம்முடைய மடியில் சுமந்தபடி எந்த நேரத்திலும் உயிர் குடிப்பதற்குத் தயாராகி இருந்தன.

யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் யாழ்ப்பாணத்திலும், வன்னி நிலப்பரப்பில் இருப்பவர்கள் வன்னியிலும்தான் இருக்க வேண்டும் என்ற நிலை உருவாகியிருந்தது. சதாரண பயணங்கள் தவிர்க்கப்பட்டு அத்தியாவசியமான பயணங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. சாவகச்சேரி வழியாக பளைக்குச் சென்று அங்கு தங்கியிருந்து பணய அனுமதியைப் பெற்ற பின்னர் படகுச்சேவை மூலம் கிளாலிக் கடலைக் கடந்து பூநகரியின் நல்லூர்ப் பிரதேசத்தை சென்றடையலாம். அங்கிருந்து வன்னியின் ஏனைய பிரதேசங்களுக்குப் பயணப்படலாம்.

சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் கடலால் பயணப்பட வேண்டிய அந்தப் பயணம் கிளாலிப்பயணம் என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்தது. கிளாலிக் கடற்கரையில் தென்னைமர நிழலில் பயணத்திற்காக காத்திருக்கும் நேரத்தில் கிபிர் விமானங்களின் குண்டு மழையில் உடல் சிதறிப் பலியாகியவர்கள் பலர். வானத்தில் இருந்து கவிழ்த்துக் கொட்டப்படும் கற்களைப் போல வீசப்படும் குண்டுகளின் சன்னங்கள் கிழித்த பயணிகளின் உயிர் அவர்கள் காத்திருந்த தென்னை மரங்களின் மேலிருந்த கிளிகளென வான்வெளியில் பறந்த பின்னர், குய்யோ முறையோ என்று அழுது மாயும் சனங்களை அமைதிப்படுத்தி, உயிரற்ற உடல்களை அப்புறப்படுத்திய பின்னர் எஞ்சியிருக்கின்ற பயணிகளோடு புறப்படும் துயர் சுமந்த கிளாலிப்படகு.

திறந்த படகில் சுமார் இருபது இருபத்தியிரண்டு பயணிகளோடு நல்லூரின் கரையை நோக்கிப்போகும் அந்தப்படகின் இரு மருங்கிலும் காவலுக்கு வருவார்கள் காவலர்கள். நடுக்கடலில் திடீரெனத் தோன்றும் பிணந்தின்னிப் படகுகளிலிருந்தும் வான்கலங்களிலிருந்தும் மக்களைக் காத்தன அவர்களது காவற்படகுகள்.

இத்தனை சவால்களையும் தாண்டி, உயிர் பயத்தைச் சுமந்தபடி சாவகச்சேரியிலிருக்கும் வெண்ணிலாவை பார்ப்பதற்கென வருடத்தில் ஒரிரு முறை வந்துசெல்லும் அம்மாவின் கைகளைப் பற்றிக்கொண்டு போய்விட வேண்டும்போல இருக்கும் அவளுக்கு.

அம்மா வந்து நிற்கின்ற நாட்கள் இவளது குழந்தை உலகில் குயில்கள் கூவும், மரங்கள் குளிர்ந்த காற்றை அள்ளி வீசும். ஏன்?.. பூக்கள் கூட புதிதாகப் புன்னகைப்பதாகத் தோன்றும் இவளுக்கு.

அம்மா வந்து நிற்கும் நாட்களில் இவளுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்கும்.

அம்மா குளிக்கத் தண்ணி அள்ளித் தந்தவா,

அம்மா குளிப்பாட்டி விட்டவா,

அம்மாதான் தலையும் இழுத்து விட்டவா,

நான் வீட்ட போக பின்னேரம் அம்மா நிப்பன் எண்டு சொன்னவா..

வகுப்பில் ஆசிரியர் சொல்லும் பாடங்களை விட வெண்ணிலாவின் குட்டிக் கதைகளே வகுப்பறையை நிறைத்து நிற்கும். 

சுமார் ஒரு வாரம் முடிந்து அம்மா புறப்படும் நாளில் வெண்ணிலாவிற்கு காலையுணவு பிடிக்காமற்போகும், பாடசாலையிருக்கின்ற எல்லோரும் வேண்டப்படாத முகங்களாகத் தெரிவர். கண்களில் கண்ணீர் முட்ட நிற்கும் இவளின் மனமறிந்த வகுப்பாசிரியரும்  சண்முகத்தாரைப் போல சலுகைகளைக் கொடுத்து விடுவார். 

பாடசாலைக்கு கூப்பிடு தூரத்தில் இருக்கும் வீட்டிற்கு ஓடிவந்து அம்மா புறப்பட்டுப்போகும் பேருந்து கண்களிலிருந்து மறையும் வரை பார்த்துக்கொண்டு நிற்கும் அவளின் பார்வையை கண்ணீர் மறைத்து விடும். அவளது கண்களின் சிறிய விழித்திரை அம்மா சென்ற பேருந்தை மட்டுமல்ல அம்மா உடுத்தியிருந்த சேலை, அம்மா தண்ணீர் குடித்த செம்பு, அம்மா பயன்படுத்திய சவர்க்காரம், அம்மா நித்திரை கொண்ட இடம் என்று எல்லாவற்றையும் நினைவுக் காட்சிகளாய் பத்திரப்படுத்திக் கொள்ளும். அடுத்த ஆறு மாதமோ, ஏழு மாதமோ கழித்து அம்மா வரும்வரை பற்றிப்பிடித்துக் கொள்ள ஏதோ ஒன்று அவளிடம் மிக நெருக்கமாய் இருந்தது.  அந்த நினைவுத் தடங்கள் அவளோடு காலையில் எழுந்தன, பள்ளிக்கூடம் சென்றன, மாலையில் வீட்டிற்கு  வந்தன, இரவு உணவை உண்டன, உறங்கின   மொத்தத்தில் அவளோடே பயணித்தன.

யார் சிரித்தாலென்ன? யார் அழுதாலென்ன? இரவுகள் முடிந்து பகல்கள் நீண்டன, பின்னர் அந்தப்பகல்கள் கழிந்து இரவுகள் நீண்டன, இப்படியே காலம் தன்னை உருட்டி உருட்டி ஆண்டுகள் பல ஓடி மறைந்தன.

வடக்கின் பெருந்துயரென யாழ்ப்பாண இடப்பெயர்வும் நிகழ்ந்து பலாலியிலிருந்து ஆனையிறவு வரையான பகுதிகள் சமாதானத்திற்கான யுத்தம் என்ற பெயரில் அரச படைகளால் கைப்பற்றப்பட்டிருந்தன. 

இப்போது வெண்ணிலாவின் அம்மா அவளைப் பார்க்க வருவதாக இருந்தால் திருகோணமலைக்குச் சென்று நாட்கணக்கான பயணங்களைக் கண்டு, காத்திருந்து, காங்கேசன்துறைக்கு கப்பல் மூலம் வந்திறங்கித்தான் யாழ்ப்பாணத்திற்கு வந்துசேர வேண்டும்.

அம்மா வராமலேயே போனாள், அம்மாவிடமிருந்து கடிதம் மட்டும் வந்து சேர்ந்தது. 

இப்படி ஒரு படிப்புத்தேவையா?

பேசாம அம்மாவோட போய் இருக்கிறத விட்டிற்று சா…

வெண்ணிலா தன்னைத்தானே நொந்துகொண்டிருக்க, காலம் நத்தையென வருடங்களைக் கடத்திக்கொண்டிருந்த ஒருநாளின் பின்மாலையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த ஆறு மணிக்கு முன்னராகவே ஊர் அடங்கத் தொடங்கியது.

பின்மாலை வானத்தில் வழமைக்கு மாறான பரபரப்பொன்று தொற்றிக் கொண்டது. அதர்வவேதத்தை நன்கு கற்றுத் தெளிந்த சூனியக்காரி ஒருத்தி அள்ளிப்பூசிய கரிய மையென இருண்டிருந்த வானத்தை எட்டிப் பார்த்தன பரா லைற்றின் வெளிச்சங்கள். எந்தத் திசையிலிருந்து வெளிச்சம் வருகின்றதென்று அறிய முடியாத அளவிற்கு வானம் ஒளியைக் குடிப்பதும் பின்னர் சூனியக்காரியின் இருளைக் குடிப்பதுமென இரட்டை வேடமிடத் தொடங்கியது.

என்ர தாயே! அம்மாளாச்சி!

என்ன சோதன வரப்போகுதோ? ஊர் முணுமுணுக்கத் தொடங்கியது. 

அன்றைய இரவு யாருக்கும் நிம்மதியைக் கொடுக்கவில்லை. தென்மராட்சியின் தென்பகுதி வெடியோசைகளால் அதிரத் தொடங்கியது. ஒருசீர் இடைவெளியில் சத்தங்கள் கேட்பதும், ஓய்வதும் பின்னர் உக்கிரவேகம் எடுப்பதுமாக தென்மராட்சிப் பிரதேசமே குண்டுகளால் துளையிடப்பட்டுக் கொண்டிருந்தது. உறக்கமற்ற விழிகள் வானத்தில் கூவிக்கொண்டு செல்லுகின்ற எறிகணைகளின் நெருப்புப் பொறிகளை துயருடன் பார்த்துக்கொண்டிருந்தன.

மறுநாட்காலை உள் ஒழுங்கைகளில் தலையை நீட்டிக் கதைத்த ஊர்ச்சனங்களின் வாய்கள் ஆனையிறவுச் சமர்க்கதைகளை அளவாகப் பேசிக்கொண்டன.

இரவு ஆனையிறவில அடிபாடாம், செய்தியில சொன்னவங்கள்.

நாவற்குளிப்பாலம் உடைச்சாச்சுதாம், சனங்கள் எல்லாம் இடம்பெயரத் தொடங்கீற்றுதுகள்.

கற்பூரத் தட்டுடன் மூச்சிரைக்க ஓடிவந்தார் சண்முகத்தார்.

வெளிக்கிடுங்கோ எல்லாரும், அம்மாளாச்சி எங்களக் கைவிட மாட்டாள்.

நான் பாத்து வாறன். 

சண்முகத்தாரின் வார்த்தைகளைக் கேட்ட ஊர்ச்சனங்களின் விழிகளில் ஏக்கம் படரத் தொடங்கியது.

இடம் பெயர்தல் என்பது சாதாரணமாக வார்த்தைகளில் சொல்லிவிடக் கூடிய சொல்லல்ல, அது ஒருவகையான உளவியல் யுத்தம். தாங்கள் வாழ்ந்து வந்த மண்ணோடும், மரம் செடி கொடிகளோடும் நாளுக்கு நாள் கட்டிக்காத்த பந்தத்தை விட்டுவிட்டு வெளியேறுகின்ற அந்த உளவியல் யுத்தத்தினால் இரத்தம் வடித்தவர்கள் பலர். குண்டுகளின் காயங்கள் அவர்களது மேனியை சிதைப்பதற்கு முன்னமே மனதில் காயங்களைச் சுமந்து கொண்டு புறப்படத் தயாராகின ஊரின் கால்கள்.

எங்க போகப்போறம் பெரியம்மா?

அப்பாவியாய் கேட்டாள் வெண்ணிலா.

பாப்பம்,  எங்கயாவது போவம்.

பெரியம்மாவிடம் தெளிவான பதில் இருக்கவில்லை. அவளுடைய வார்த்தை வங்கியில் சொற்கள் தொலைந்திருந்தன.

ஆனால், எங்கேயோ போகப்போகிறோம் என்பது மட்டும் வெண்ணிலாவிற்குப் புரிந்தது.

தூரத்தில் வெடி ஓசைகள் அதிர்ந்த வண்ணம் இருந்தன, நேரம் செல்லச்செல்ல வேட்டொலிகளின் உக்கிரம் அதிகரிக்கத் தொடங்கியது. தூரத்தில் ஏவப்படுகின்ற எறிகணைகள் புறப்படுகின்ற சத்தமும் அவை வந்து வீழ்கின்ற சத்தமும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் ஒருசீர் இடைவெளியில் விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தன. உயிர் பற்றிய பயம் மட்டுமே நிறைந்திருந்தது மனத்தில். ஊர் அடங்கிப் போயிருந்தது. இடம்பெயர விரும்பாத சில சனங்கள் பதுங்கு குழிகளுக்குள் பதுங்கியிருந்தார்கள். வீதிகள் வெறிச்சோடியிருந்தன. தொடர் எறிகணைகள் நிறுத்தப்படுகின்ற போது பதுங்கு குழிகளுக்குள் இருந்து பயத்தோடு வெளிவந்து பசிக்கு மட்டுமாக ஒரு குழை சாதமோ, கஞ்சியோ அவசர அவசரமாகச் சமைத்து எடுத்துக்கொண்டு மீண்டும் பதுங்கு குழிகளுக்குள் புகுந்து கொண்டார்கள். இடத்திற்கும் நிலத்திற்கும் ஏற்ப எல் பங்கர் பகர வடிவ பங்கர் என்றெல்லாம் பங்கர்கள் வெட்டப்பட்டன. உயிரைத் தக்கவைத்துக் கொள்வதே ஆகப்பெரும் அடிப்படை நோக்கமாக இருந்தது.

கொஞ்சம் அரிசி, பருப்பு, சீனி என்று அவசரச் சமையலுக்குத் தேவையான பொருட்களையும், மாற்றுவதற்கெனச் சில உடைகளையும் பெரியவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.

அப்ப நாங்கள் வீட்ட போவமா?

வெண்ணிலா பெரியம்மாவைக் கேட்டாள்.

மனதில் மகிழ்ச்சியின் இலையொன்று மெல்ல அரும்பத் தொடங்கியது.

நான் அப்ப அம்மாவ பாக்கலாமோ?

யுத்த களத்தில் அரும்பிய கொடியின் மலரென அவளுடைய குழந்தை உள்ளத்தில் மகிழ்ச்சி புகுந்து கொண்டது. 

எல்லோரும் உடைகளையும் உணவுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு இடம்பெயர ஆயத்தமாக, வெண்ணிலா ஓடிச்சென்று ஒரு செம்பினை எடுத்துக்கொண்டாள். அது அவளுடைய அம்மா கடைசியாக அவளைப் பார்க்க வந்திருந்தபோது நீரருந்திய செம்பு.

காலையில் தேநீருக்காக கறந்த பாலை அவளுடைய செம்பில் நிறைத்திருந்தார் பெரியம்மா. கைகொள்ளக் கூடிய உடமைகளைக் காவியபடி வெறித்தோடிப் போயிருந்த ஏ9 பிரதான வீதியைக் கடந்து கிராமத்திற்குள் இறங்கினால் அங்கிருந்த உறவினர்கள் ஏற்கனவே வெளியேறியிருந்தார்கள்.

வழியெங்கும் செல் தின்ற மரங்கள் முறிந்து வீழ்ந்திருந்தன. வீடுகள் சனங்களை இழந்திருந்தன, சில வீட்டின் கதவுகள் மூடப்படாமல் இருந்தன, ஒரு வீட்டின் சமையலறை பகுதியிலிருந்து புகை வெளியேறிக் கொண்டிருந்தது. தொடர் எறிகணைகள் கூவத்தொடங்க நிலத்தில் விழுந்து படுத்து காதுகளைப் பொத்திக் கொண்டார்கள். நெஞ்சுக்கும் நிலத்திற்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டு படுத்திருந்துவிட்டு எழுந்தபோது வெண்ணிலா கொண்டு வந்திருந்த பாற்சொம்பும் அவளுடன் சேர்ந்து படுத்திருந்தது.

தொடர் நடை, தொடர் ஓட்டம் என்று இரண்டு கிழமைகள் தொடர்ந்த அந்தப் பயணத்தின் ஒருநாளில் வெண்ணிலா பதுங்கியபடி படுத்திருந்த கூரை வீட்டின் ஒரு மூலையில் எரிகுண்டுகள் வீழ்ந்திருந்தன. சாம்பல் பூத்த அடுப்பிலிருந்து வெளிவந்த கோழியைப்போல தலையை சிலுப்பியபடி வெளிவந்த அவளுடைய உடல் முழுவதும் சாம்பலாக இருந்தது. அவளுக்குமுன் படுத்திருந்த உறவினர் ஒருவரின் தொடையிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.

இனி ஏலாது. இங்க இருக்க ஏலாது. வெளிக்கிடுவம் பூநகரிப்பக்கம் போவம். அங்கால சனங்கள ஏத்திக்கொண்டு போறாங்களாம்.

கூட்டத்திலிருந்த பெரியவர்கள் அவசரகதியில் முடிவெடுத்தார்கள்.

வெண்ணிலாவிற்கு அந்தக்கணத்தில் அந்த கொடிய சமர் பிடித்திருந்தது, குண்டுகள் பிடித்திருந்தன. அவள் குண்டுகளுக்கு நன்றி சொன்னாள்.

உடைகள் அழுக்காகி,  கால்களில் செருப்புக்களற்று பூநகரியை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்த அவர்களை உழவு இயந்திரத்தில் ஏற்றி சங்குப்பிட்டிக்குக் கொண்டு சென்றார்கள். அங்கு சனங்களை ஏற்றிச் செல்வதற்காக படகுகள் தயார் நிலையில் இருந்தன.

வெண்ணிலாவிற்கு இருப்பு கொள்ளவில்லை. நீலவரிச் சீருடை அணிந்திருந்த அக்கா ஒருத்தி படகைச் செலுத்திய விதத்தை கண்களை அகல விரித்துப் பார்த்தாள்.

நான் அம்மாட்ட போறன்.

அந்தப் படகோட்டிக்கும் சொல்லிவிட்டு சிரித்தாள் வெண்ணிலா. 

தூரத்தில் கடலில் எறிகணைகள் வந்து வீழ்ந்து வெடித்தவண்ணம் இருந்தன. அவற்றைத் தன்னுடைய மடியில் தாங்கி அலைகளை எழுப்பி இவர்களை வழியனுப்பி வைத்தாள் கடலன்னை.

தாங்யூ குண்டு.

உன்னாலதான் நான் வீட்ட போறன்.

வெண்ணிலா எறிகணைக்கு நன்றி சொல்லிவிட்டு செம்பை இறுகப்பிடித்தபடி நடந்தாள்.

சிறியவளுக்கு உயிர் பயம் தெரியவில்லை.

உயிரைப் பிடித்துக் கொண்டு வந்த அவர்களை பச்சையரிசிச் சோற்றோடும் சம்பலோடும் வரவேற்றது வன்னி நிலம். சாப்பாடு, தண்ணியற்று அலைந்து ஓடியவர்களின் வாய்களுக்கு அறுசுவை உணவைப்போல இருந்தது அங்கு வழங்கப்பட்ட உணவு.

வெண்ணிலாவிற்குப் பசிக்கவில்லை. அவள் வீட்டைப்பற்றி கனவு காணத் தொடங்கியிருந்தாள். அவளுடைய பகற்கனவில் அம்மா அவளுக்குப் பிடித்த சர்கரைப் பொங்கல் சமைத்துக் கொண்டிருந்தாள்.

ஓடிய களைப்பு தீர்ந்தபின் அவர்களது பெயர் விபரங்கள் பதியப்பட்டு பயண ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. தட்டிவான் ஒன்று இவர்களை எற்றிச்சென்று வெண்ணிலாவின் வீட்டிற்குச் செல்லும் சந்திக்கருகில் இறக்கி விட்டது. இனி அங்கிருந்து சுமார் ஐநூறு மீற்றர்கள் தூரம் நடந்து செல்ல வேண்டும்.

அவளுடைய பிஞ்சுக் கால்களில் வலி தெரியவில்லை.

அம்மாட்ட வந்திற்றன்.

இண்டைக்கு இரவு அம்மாக்குப் பக்கத்தில படுக்கப்போறன்.

அவள் துள்ளிக்குதித்து ஓடும் சிறு முயலாகி அந்தச் செம்மண்சாலையில் பெரியம்மாவைப் பின்தொடர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தாள்.

ஐயோ, கிபிர் கிபிர்

சுத்துறான். எல்லாரும் கீழ படுங்கோ,  படுங்கோ

இது முதலாம் தரம் சுத்துறான், படுங்கோ

விமானத்தின் இரைச்சலைமீ றி யாரோ கத்துவது காதுகளில் விழவும் பழக்கப்பட்ட எல்லோரும் இயந்திர வேகத்தில் பாதுகாப்புத் தேடிக்கொண்டனர்.

கறிவேப்பிலை மரமொன்றின் அடியைப் பற்றிக்கொண்டு குப்புறப்படுத்திருந்த வெண்ணிலா பயத்தோடு ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணுவதற்குள் செவிப்பறை கிழிந்ததைப்போல பெருஞ்சத்தங்கள் காதை அடைக்க, கரிய புகைமூட்டம் ஒன்று எழுந்தது மட்டும் அவளது நினைவிற்குத் தெரிந்தது.

கண் விழித்தபோது அவள் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தாள், தலை சுற்றியது. தலையைப் பிடிக்க கையைத் தூக்கினாள், கை வலித்தது, கையில் கட்டொன்று போடப்பட்டிருந்தது. அவளது இடது கை செம்பை இறுக்கிப் பிடித்திருந்தது.

வெண்ணிலா எழும்பீற்றாள் ,  வெண்ணிலா கண் முளிச்சிற்றாள்

யாரோ  உரக்கக் கூவிக்கொண்டு ஓடுவது காதுகளில் விழுந்தது.

வாசலில் இருந்து பறை மேளங்களின் சத்தம் கேட்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து அழுகுரல்கள்…

பெரியம்மா இவளைப் பிடித்தபடி முற்றத்திற்கு அழைத்துச் சென்றாள்.

சனங்கள் கூடியிருந்தார்கள்.

இப்பதான் குளிக்கவாக்கக் கொண்டு போனது,  காயம் பட்ட உடம்புதானே நிறைய நேரம் வச்சிருக்கவும் ஏலாது.

பிள்ள கண்முளிக்கட்டும் எண்டுதான் பாத்துக் கொண்டிருந்தது.

பந்தலின் கீழிருந்த யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

வெள்ளை கட்டிய பந்தலின் பின்பக்கத்தில் கிரியைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

பெரியம்மா இவளின் கையைப்பிடித்து அரப்பெண்ணை வைத்தாள்,

செம்பில் நீர் நிறைத்து ஊற்றச் செய்தாள்,

பொட்டு வைப்பித்தாள், 

பூ வைப்பித்தாள் ,

அம்மாவைக் கும்பிட வைத்தாள்.

வெண்ணிலா, அம்மா அம்மா என்று கத்தினாள். அவளுடைய வார்த்தைகள் தொண்டையிலிருந்து வெளிவர மறுத்தன. அவள் மறுமுறை மூர்ச்சையானாள்.

அன்றிரவு கூடத்தில் விளக்கெரிந்து கொண்டிருந்தது. ஊர்க்காரர்களில் யாரோ ஒரு சிலபேர் சாவு வீட்டிற்குத் துணையிருந்தார்கள்.

பெரியம்மா அழுது களைத்திருந்தாள்.

வெண்ணிலாவிற்கு நள்ளிரவில்தான் மீண்டும் விழிப்பு வந்தது, மெல்லக் கண்களைத் திறந்தாள், அழுகை பொத்துக்கொண்டு வந்தது.

அம்மா என்று அழைக்க முயன்றாள். முடியவில்லை,  குரல் வெளிவரவில்லை. வலித்த கையைத் தடவிக்கொண்டு பந்தலின் பின்பக்கத்திற்குச் சென்றாள். அம்மாவிற்கு நீரூற்றிய செம்பு அங்கு உருண்டுபோய்க் கிடந்தது. குனிந்து அதை எடுத்துக்கொண்டு பந்தலுக்கு வந்து, அம்மாவை படுக்க வைத்திருந்த இடத்தில் சுருண்டு படுத்துக்கொண்டாள்.

சூனியக்காரியின் இரவுகள் தொடர்ந்தன.

அவை பகல்களாகின.

பின்னர் இரவுகளாகின.

தீபச்செல்வன் கவிதைகள்

1

வெடிபொருட்களற்ற பூமி

நேற்றும் தோழி ஒருத்தி புற்றுநோயினால் இறந்துபோனாள்
காரணம் அறியா மரணங்களுக்கும்
இறந்து பிறக்கும் குழந்தைகளுக்கும்
சிறுநீரகங்கள் செயலிழப்பதற்கும்
வடக்கே வீசப்பட்ட கந்தக நஞ்சு வாயுவிற்கும்
தொடர்பில்லை என்றே கொள்க!

நண்பா, இன்று உனது ஊரில் குண்டுகள் வெடித்தபோது
எத்தனை விசாரணைகள்?
எத்தனை கண்டனங்கள்?
எத்தனை கேள்விகள்?
காற்றில் கலந்த விசத்தையும் அளந்தனரே!

அதெப்படி நண்பா!
எனதூரில் குண்டுகள் வெடிப்பது மாத்திரம்
கொண்டாடுதற்குரியதாய் இருக்கும்?

உலகின் குண்டுகளனைத்தையும்
முள்ளிவாய்க்காலில் நம் நெஞ்சில் கொட்டினரே?

குடிநீரில் விசம் கலப்பதுபோல
சோற்றில் விசத்துகளை பிசைவதுபோல
எம் காற்றிலும் நஞ்சைக் கலந்தனரே
விசமடர்ந்த காற்றை உள்ளிழுத்து
மூச்சடங்கினர் ஏதுமறியாக் குழந்தைகள்

கந்தகப்புகையில் ஊறிற்று முப்பது வருடங்கள்
வெடித்துச் சிதறும் குண்டுகளின்
வெடி வாசனையுள் வாழ்வு
கந்தகத் துகள் படிந்தது எல்லாவற்றிலும்

ஓ.. நாம் தமிழீழத்தவரா?
ஓ.. அவை வெடிக்கப்படவேண்டிய இடம்
எமது தேசம்தானா?

ஆம், சிங்களத் தோழனே! எனது தேசம் முழுதும் எறியப்பட்ட
ஒவ்வொரு குண்டிலும்
எழுதாக் காரணமொன்றிருந்தது

‘இது தமிழீழத்தை அழிக்கும் குண்டு’

நண்பா! குண்டுகள் அழிப்பதில்லை
கனவுகளையும் மூலங்களையும்
ஆனால் வெடிக்கும் குண்டுகளின் முன்னால்
நீயும் நானும் ஒன்றே!

ஆதலால் நண்பனே எனக்கும் உனக்கும் வேண்டும்
இராணுவ முகாம்களற்ற பிரதேசம்
நஞ்சு கலக்காத காற்று
மற்றும் வெடி பொருட்களற்ற பூமி

சந்தனப் பேழை

ஒரு வண்ணத்திப் பூச்சியின்
சிறகசைப்பைப்போல படபடக்கும் கண்கள்
ஒரு புளுனியின் துள்ளலைப்போல
நடுங்கும் தொண்டைக் குழிகள்
சொல்ல இயலாமற் போயின பிரிவை

துப்பாக்கிகளும் டாங்கிகளும்
உலவும் நாளொன்றில்
பதுங்கிய நகரில்
உயிர்த் தாகத்துடனிட்ட முத்தத்தின்
ஒரு துளியிலிருந்தது
ஒரு யுகத்தின் பெருங்காதல்

எப்படித்தான் விலகிச் சென்றோம்?
தாயைப் பிரியும்
குழந்தையைப் போன்ற விழிகளுடன்

எதிரியை விரட்டி
விழிமடல் மூடி
வீரக்கொடி போர்த்தி
துப்பாக்கியை அணைத்துத்
திரும்பியிருப்பவள் எனது காதலியல்ல
இந்நிலத்தின் மகள்.

தனித்தனியாக உடையாது
தைத்தெடுத்துச் சென்ற இருதயங்களை
திருப்பித் தராமல் சென்றவள்
புன்னகை பிரிந்த இதழ்களின்
வார்த்தைகளை மாத்திரம் விட்டுச் சென்றாள்
ஈரமற்ற விரல்களின்
தனிமையை மாத்திரம் விட்டுச்சென்றாள்

எந்த மதுக்குவளையாலும்
மறக்க முடியாப் பேரன்பை எப்படி வெட்டி எறிவேன்
அவள் உறங்கும் சந்தனப் பேழைபோலக்
கனத்துவிட்ட இருதயத்திலிருந்து?

நாடுதான் பெரிதெனச் சென்றவளின் வீர முகத்தில்
பனைகளைப் போல அசையும் கொடிகளை
இனி, ஏந்திச் செல்கிறேன்
அவள் மாண்டுபோன போர்க்களத்திற்கு.
¤

வரலாற்றின் மகள்

தந்தையே வரலாறு முழுவதும்
இப்படித்தான் இருந்ததா?
நாங்கள் எப்போதும்
அடிமையாகவே இருந்தோமா?

என் சிறு குழந்தையே
நீ ஆக்கிரமிப்பாளர்களையும் அறிவாய்
பாதுகாவலர்களையும் அறிவாய்

நம்முடைய மூதாதையர்
தம்மைத் தாமே ஆண்டனர்
எம் நிலத்தின் அரசுகளை
அந்நியர்கள் விழுங்கிக் கொண்டனர்

தந்தையே! போர்த்துக்சியர்கள் போய்விட்டனர்
ஒல்லாந்தர்கள் வெளியேறிவிட்டனர்
பிரித்தானியர்களும் புறப்பட்டு விட்டனர்
ஆனாலும் இன்னும் ஏன்
ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறோம்?

அவர்கள் வெளியேற
இவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டனர்
அவர்கள் திருப்பித் தந்ததை
பின்னர் இவர்கள் பறித்துக்கொண்டனர்

இவர்களின் விடுதலைக்காகவும்
நாம் போராடினோம்
ஆனால் இவர்களோ
எமது சுதந்திரத்தைப் பறித்துக்கொண்டனர்.

இவர்கள் ஆக்கிரமிப்பை
ஐக்கியம் என்றனர்
விடுதலையை பிரிவினை என்றனர்

மகளே!
நம் தேசங்களை கலைத்து
ஒன்றுபட்ட நாட்டின்
சுதந்திரத்திற்காக உழைத்த உன் மூதாதையரை
இவர்கள் தம் தோளில் ஏந்திக் கொண்டாடுகையில்
அவர் நினைத்திரார்
உன்னைப்போலொரு குழந்தை
மறைக்கப்பட்ட நம் வரலாறு
குறித்து கேட்குமென.


0

தீபச்செல்வன் – ஊடகத்துறையில் பணியாற்றும் இவருக்கு ஐந்து கவிதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரை நூல்கள் மற்றும் ‘நடுகல்’ எனும் நாவல் வந்துள்ளன. விரைவில் அவரது அடுத்த கவிதைத் தொகுப்பு வரயிருக்கிறது

ஒரு கதை சொல்லியின் கதை

0

பா.அ.ஜயகரன்

ந்தி. கிங், குயூன், ரொன்சஸ்வெல்ஸ், குயூன்ஸ்வே போன்ற வீதிகளின் தொடங்குமிடம் அல்லது முடியுமிடம். அதுவொரு மேட்டில் குந்தியிருந்தது. வழமையான பெருநகர சந்திகளுக்குள்ள மக்கள் ஆர்ப்பரிப்பு, பரபரப்பு இங்கு இருக்கவில்லை. மந்தமான சந்தி. வீதியெங்கும் றாம் வண்டிகளுக்கான தண்டவாளம். சந்திக்கு மேலே சிலந்தி வலைப்பின்னல் போல் றாம் வண்டிகளுக்கும், மின்சார பஸ்களுக்குமாக மின்சார கம்பிகள். சந்தியின் அருகே பொதுப் போக்குவரத்து வண்டிகளுக்கான பட்டறையும் தரிப்பிடமும் இருந்ததால் சந்தி மின்சார கம்பிகளின் வலைப்பின்னலுக்குள் கிடந்தது. வடமேற்கு மூலையில் மக்டீ உணவகம். அதன் அருகில் ரொன்சஸ்வெல்ஸ் வீதியில் வீடற்றோர், தின வாடகைக்கு தங்குவோருக்கான லொட்ஜ். அதன் மேற்கே பட்டறை. பட்டறைக்கு மேற்குபுறமாக சென் ஜோசெப் வைத்தியசாலை. வடகிழக்கு மூலையில்; அங்காடி. தென் கிழக்கு மூலையில் மலிவு உணவகம். சந்தியின் தெற்கே ரெயில் தண்டவாளங்கள். அதற்கு சமாந்தரமாக அதிவேக காடினர் பெருந்தெரு. அதற்குத் தெற்கே பூங்காவும் ஒன்டாறியோ ஏரியும். ஒன்டாறியோ ஏரிக்கரையாக நீளும் பூங்காவுக்கு போவதற்காய் நடப்போர், சைக்கிள் ஓட்டிகளுக்குமான மேம்பாலமொன்றும் சந்தியிலிருந்தே தொடங்குகிறது. கிங் வீதியின் தொடக்கத்தில் ஒரு குறும்பூங்கா. அதைத் தொடர்ந்து கிங் வீதியின் தெற்குக் கரையே ஏரியைப் பார்த்தாற்போல் போடப்பட்ட வாங்குகள்.

நான் வந்திறங்கி அனாதரவாக விடப்பட்டிருந்த நீண்ட கோடை நாளில் சந்திக்கு அருகில் கிங் வீதியிலிருந்த எனது அடுக்குமாடிக் கட்டிடத்திலிருந்து இறங்கி கிங் வீதியின் கரையோரம் போடப்பட்டிருந்த வாங்கில் வந்தமர்ந்தேன். மேட்டிலிருந்து பார்த்தபோது ஒன்ராறியோ ஏரி தெளிவாகத் தெரிந்தது.  இடையிடையே போகும் ரெயில் சத்தம், ஓய்வில்லாத பெருந்தெரு வாகனச் சத்தம், அடிக்கடி கடக்கும் றாம் வண்டிகளின் தண்டவாளச் சத்தம், றாம் வண்டி எழுப்பும் மணியொலிச் சத்தமென இரைச்சல் நிறைந்திருந்தது அந்தப் பகுதி. ஏரி கண்களை நிறைத்த போது இரைச்சல் அகன்றிருந்தது. நீலத்தின் சாயல் வண்ணங்களை ஏரி தாங்கியிருந்தது. அந்த வண்ணங்களை விழிகள் ஒற்றியிருந்தன. ஏரியின் நீல சாயல் மறைவதுபோல் இருந்தது. இரைச்சல் மீள நான் நிமிர்ந்தபோது உயர்ந்த பருமனான வெள்ளையின மனிதர் நின்றிருந்தார். தாடி, கோடை வெப்பத்திலும் ஒரு தடித்த கோட், தொப்பி, ரை, சப்பாத்து. நேர்த்தியாக உடையணிந்த மனிதர். அவரிடம் ஒரு தள்ளு வண்டியிருந்தது. அதில் சில பெட்டிகள் இருந்தன. நான் அந்த மனிதரை நிமிர்ந்து பார்த்த தருணத்தில் அவர் நகர்ந்து சென்றார். ஏனைய வாங்குகளில் அமர முயற்சி எடுப்பவராய்த் தெரியவில்லை. மற்றைய வாங்கிற்கு செல்லும் முன்னராக திரும்பி என் முன்னால் மீண்டும் வந்து நின்றார். அவரை நான் அண்ணாந்து பார்த்தபோது மீண்டும் நடக்க ஆரம்பித்தார். ஏரியை விடுத்து அவரைப் பார்க்க ஆரம்பித்தேன். மகிழ்வான முகம். மெல்லிய புன்னகையை அந்த முகம் எப்போதும் அளித்தபடியேயிருந்தது. அவர் மீண்டும் என்னருகே வர ஆரம்பித்தார். அவ்வாங்கிலை விட்டு எழுந்து பூங்கா கரையாகவிருந்த கல்லொன்றில் போய் அமர்ந்து கொண்டேன். அவர் வாங்கிலின் இடது கரையில் போய் அமர்ந்தார். அந்தப் பெரிய மனிதர் இருந்த பின்னரும் வாங்கில் இன்னுமொருவர் இருப்பதற்கான இடமிருந்தது. வண்டிலை தன் முன்னே நிறுத்தி கயிற்றுக் கட்டுக்களை அவிழ்த்தார். மேலிருந்த பெட்டியை திறந்து தட்டெழுத்து இயந்திரத்தை வண்டிலின் மேலிருந்த ஏனைய பெட்டிகளுக்கு மேல் வைத்தார். றிபன் கட்டையை கழற்றி இடது கட்டைப் பக்கமாய் முழுமையாகச் சுற்றி மீளவும் அவற்றுக்கான இடங்களில் பொருத்தினார். பின்னர் காகிதத் தாள் ஒன்றை இயந்திரத்திற்குள் செருகி உருளையைச் சுழற்றி தாளை சரிசெய்தார். பெருவிரல் ஆட்காட்டி விரலுக்கு கீழே முண்டு கொடுத்தாற்போல் நிற்க ஏனைய மூன்று விரல்களும் மடிந்திருக்க குத்துவதற்கு தயாரானது போல் ஆட்காட்டி விரல்கள் நின்றன. நான்கு கட்டைகளை இடது வலது ஆட்காட்டி விரலால் குத்தினார். பின்னர் ஏரியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இரவு கவியத் தொடங்கியது. அங்கிருந்த வாங்கில்கள் யாரையாவது தாங்கியபடியே இருந்தன. மேம்பாலத்தில் ஏறி நடந்தேன். பெருந்தெருக்களில் செல்லும் வாகன வெளிச்சமும், ரொரன்டோ மத்தியிலிருக்கும் சீ.என்.கோபுரமும்,கட்டிடங்களிலிருந்தும் வெளியேறும் ஒளியும் இரசிப்பனவாகவிருந்தன.

••••

இரவு கவிந்திருந்தது. பாலியல் தொழிலாளர்கள், போதைப்பொருள் விற்போர் என்ற இன்னொரு வலைப்பின்னலும் சந்தியை ஒட்டியிருந்தது. மனநிலை தாக்கத்துக்குள்ளானோர், வீடற்றோரை ஆதரிக்கும் இடமாகவும் அந்த வாங்குகள் இருந்தன. வாடிக்கையாளரை கவருவதற்காக உடையணிந்தபடி குயூன், கிங் வீதிகளிலும் அவை இரண்டையும் இணைக்கும் ஒழுங்கைகளுக்குள்ளும் பாலியல் தொழிலாளர்கள் நின்று கொண்டிருந்தார்கள். தெரு விளக்கின் ஒளி தட்டெழுத்து இயந்திரத்தோடு குந்தியிருக்கும் அந்த மனிதரைத் தெளிவாகக் காட்டியது. அந்த வாங்கை அதற்காகவே தேர்ந்தெடுக்கிறார். அவர் பேசிப் பார்த்ததில்லை. அந்த மெல்லிய புன்னகை மறையாமலே இருந்தது. மணிக்கணக்கில் அவரால் தட்டச்சு செய்ய முடிகிறது. அந்த இரு விரல்களின் வேகத்தை ஒத்ததாக யாராலும் வார்த்தைகளைப் பேச முடியாமோ தெரியவில்லை. சுழிக்குள் வந்து வீழுமாப்போல் அவரைச் சுற்றித் திரியும் சொற்கள் அந்த தாள்களில் வந்து வீழ்ந்து கொண்டிருந்தன. அவர் அந்த வாங்கிற்காக சண்டை போட்டது கிடையாது. வழமையாக அங்கு வருவோருக்கு மட்டுமே அந்த வாங்கில் பற்றித் தெரியும். பல சந்தர்;ப்பங்களில் அவர் அந்த வாங்கிலை கடந்து சென்றிருக்கிறார். அது வெறுமையாகவே இருக்கும். அவருக்கு ஏதாவது தோன்றும் போது மட்டுமே அந்த வாங்கிலைச் சுற்றியபடியிருக்கிறார். வார்த்தைகள் அவர் விரல்களுக்குள்ளால் வருவதற்கு அவதிப்பட்டுக்கொண்டு இருக்கும். அதைப் புரிந்து அனேகமானோர் எழுந்து சென்று விடுகிறார்கள். இரவிரவாக தாள்களை வார்த்தையால் நிறைத்தபடியேயிருக்கிறார். இரவின் நிசப்தம் கூடும் தருணத்தில் தட்டெழுத்து இயந்திரத்திலிருந்து எழும் எழுத்தொலி மட்டுமே கேட்டவண்ணம் இருக்கிறது. வார்த்தைகள் வராதபொழுதில் வாங்கில் குறண்டி படுத்துக் கிடக்கிறார். அவருக்காக யாராவது ஒருவர் கோப்பியை வைத்துவிட்டு போகிறார்கள்.

•••••

காற்றால் அடித்து வரப்பட்ட காகிதத்தை கலைத்துக்கொண்டு வந்த ஒருவருக்கு உதவுவதற்காய் அந்த காகிதத்தாளை என் கால்களால் அமுக்கி நிறுத்தினேன்.

“நன்றி” என்றவாறு

அந்தக் காகிதத்தை பொறுக்கி குப்பையில் சேர்த்தார் அந்த நபர். ரொரன்டோ நகரத் தூய்மையை அந்தத் காகிதத்தாள் குலைப்பதாய் உணர்ந்தாரோ தெரியவில்லை. எனது அறையர்களைத் தவிர்த்து கனடாவில் சந்தித்த முதல் தமிழர் அவர் கதிர். இள நரையேறிய சிக்கிய தலைமுடியும், முகம் நிறைந்த மழியாத் தாடியும், பழுப்பேறிய கோட்டும், பிய்ந்த தடித்த சப்பாத்தும் அவரை எப்போதும் அடையாளப்படுத்தின. முப்பது வயதைத் தாண்டியிருக்கக்கூடும். அவர் நடக்கும்போது நடைபாதையிலும், தெருவின் கரைகளிலும் ஒதுங்கும் குப்பைகளை பொறுக்கி தொட்டிகளுக்குள் போட்டபடியே செல்வார். குப்பைகளை வகைப்படுத்தி போடும் தொட்டிகளை மாநகர சபை அறிமுகப்படுத்திய பின்னர் கதிருக்கு மிகுந்த உற்சாகத்தை தந்திருக்கவேண்டும். யாராவது மாறுதலாக பொருட்களை தொட்டிக்குள் கொட்டினால் அவர் தொட்டியைத் திறந்து எடுத்து சரியான தொட்டிக்குள் போட்டு விடுகிறார். அவர்தான் என்னை அடையாளம் கண்டு

“தம்பி நீ தமிழோ” என்று கதைக்கத் தொடங்கி ஊர் விசாரிப்போடு பொதுநலக் கொடுப்பனவு பெறுவது வரையும் சொல்லி

“உமக்கு ஏதாவது தேவையென்றால் நான் கூட்டிக்கொண்டு போறன்” என உதவிக்கு முன்வந்தார்.

நான் இருக்கும் கட்டிடத்தின் பராமரிப்பாளருடன் கதிருக்கு நெருங்கிய தொடர்பிருந்தது.  கதிரும் இந்தக் கட்டிடத்தில் குடியிருந்ததாக அறையர்கள் சொல்கிறார்கள். எமது கட்டிட பராமரிப்பாளருக்கு உதவியாக எடுபிடி வேலைகளை கதிர் செய்வதைப் பார்த்திருக்கிறேன். வாங்கில் வந்து குந்துவோர் பலரும் கதிரை அறிந்திருந்தனர்.

••••

கதிர் என்கிற கதிர்காம நாதனை கணித மேதமைகளோடு ஆசிரியர்கள் ஒப்பிட்டபடியேயிருப்பார்கள். தூய கணிதம், பிரயோக கணிதம், பௌதீகம் என்பன அவரோடு பிறந்தவொன்றாக இருக்கக்கூடும். ஆசிரியர்கள் தங்களது கணித சிக்கல்களைத்  கதிரிடம் கேட்டு தீர்த்துக் கொள்கிறார்கள். கதிர் எண்களால் நிறைந்த மனிதர். கணிதச் சிக்கல்கள் எதுவும் அவருக்கு சிக்கல்களாகத் தெரிவதில்லை. எண்ணின் இடத்தை அவர் புரிந்து கொள்கிறார். அவற்றின் ஒழுங்கை அவர் தெரிந்து கொள்கிறார். அவரைச் சுற்றி இருந்த அனைத்துமே ஒவ்வொரு எண்களைப் பற்றிக்கொண்டிருந்தன. அனைத்தையுமே எண்களால் தரம் பிரிக்கக்கூடிய கணித மனம் அவருடையது. உயர் தரத்திலிருக்கும்போதே பல்கலைக்கழக கணிதங்களை விளங்கிக் கொள்ளவும், பிரயோகிக்கவும், நிறுவவும் அவரால் முடிந்தது. அவரது கணித ஆர்வத்தால் இரசாயானம் விட்டு விலகியே நின்றது. உயர்தரப் பரீட்சையில் அவரால் இரசயானத்தில் சித்தியடைய முடியவில்லை. அவரது நான்கு பாடத்திற்குமான பரீட்சைப் பெறுபேறு முன்னூற்று இருபத்தொன்று. இரசாயானம் இருபத்தியொரு புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்திருந்தது. அனுமதி கிடைக்கவில்லை. மீண்டும் பரீட்சை எழுதினார். இரசாயனத்தில் தேர்வுப் புள்ளியைப் பெற்று பேராதனை கணிதபீடத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரது கணிதத்திறமை அனைவரையுமே ஆச்சரியப்படுத்தியது. கணித மேதைகளின் சிக்கலான கணிதத் சமன்பாடுகளை அவரது கணித மனம் இலகுவாக புரிந்து கொள்கிறது. அவரொரு மேதைமையான மனிதராக மதிக்கப்பட்டார். உலகின் பிரபல பல்கலைக்கழகங்கள் மேல் படிப்புக்கான அனுமதியை அவருக்கு தருவதற்கு தயாராகவிருந்தன.

1983 யூலை 24. தனது விடுதி அறையிலிருந்து கணித பீடத்திற்கு நடந்து கொண்டிருந்த கதிர் சிங்கள மாணவர்களால் தாக்கப்பட்டார். கணித போராசிரியர் ஒருவரின் இடையூட்டால் அவரது வீட்டுக்கு அழைத்து வரப்பட்டு அறையொன்றுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தார். கதிர் பற்றிய விபரங்கள் தெரியாது உறவினர்கள் கலங்கிப்போயிருந்தனர். ஏனையவர்கள் போல் அவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே நினைத்திருந்தனர். கதிரின் கணித மனம் களைத்திருந்தது. அவரைத் தாக்கியவர்கள் தாம் பற்றிய எண்களோடு மீளத் தொடங்கியிருந்தார்கள்.  அவை அச்சமான எண்கள் என அவரது மனம் சொல்லியபடியேயிருந்தது. ஏனைய எண்கள் பீதியில் ஒளியத் தொடங்கின. படுகொலைகள் ஓய்ந்துபோய் அகதியாய் யாழில் வந்திறங்கிய பின்பும் அச்சமான எண்கள் தொடர்ந்தன. சாப்பாடு இன்றி பல நாட்கள் தொடர்ச்சியாக அவர் உறங்கிக் கிடந்தார். நித்திரையின்றி பல நாட்கள் தொடர்ச்சியாக விழித்துக்கிடந்தார். சமன்பாடுகள் குலையத் தொடங்கின. அவை தொடர்ந்தன. முடிவிலி. “மேதையை கணிதம் இழந்தது”அவ்வாறாகத்தான் கதிரை இப்போது குறிப்பிடுகிறார்கள்.

••••

ஏஞ்சல் வாங்கில் அந்த மனிதர் அருகே அமர்ந்து சிக்கரெட் புகைத்த வண்ணம் இருந்தாள். அங்கு கதிரும் நின்று கொண்டிருந்தார். ஏஞ்சலை நான் இருக்கும் கட்டிடத்தில் கண்டிருக்கிறேன். கட்டிட பராமரிப்பாளரின் தொடுப்பென எனது அறையர்கள் அவளை அறிமுகப்படுத்தியிருந்தார்கள்.

“ஜோ புகைக்கப் போகிறீர்களா..?” என்றவாறு சிக்கரெட்டை நீட்டினாள் ஏஞ்சல்.

பெட்டிக்குள்ளால் நீட்டியிருந்த சிக்கரெட்டை எடுத்து வாயில் வைத்தார் அந்த மனிதர். அவள் அதை மூட்டி விட்டாள். அது அவர் வாயிலிருந்து புகைந்து கொண்டிருந்தது. அவரது விரல்கள் இடைவிடாது எழுத்துக்களை குற்றிக் கொண்டிருந்தன.

“ஜோ இளநீலச் சட்டையுடனும் கறுப்பு குறும்பாவாடையோடு நிற்பவளைப் பார்த்தீர்களா?  அவளொரு பச்சை வேசை. பொலிஸ் வேசை”

அவளது வாடிக்கையாளர்களை குறிவைத்து பெண் பொலிசாரும் பாலியல் தொழிலாளர்கள்போல் மாறுவேடத்தில் வந்து நின்று ‘சட்டம் ஒழுங்கை’ காப்பாற்றுவதுண்டு. ஏஞ்சல் குறிப்பிட்ட பெண் அதிகாரி அவள் அருகே வந்தாள்.

“உன்னை இந்த இடத்தில் நிற்கக்கூடாது என்று எத்தனை தடவை சொல்வது”என்றாள்.

“ஓ உன்ட தொழிலுக்கு இடைஞ்சலாய் இருக்கோ..? நான் எங்கேயும் நிற்பேன். அது எனது உரிமை. நண்பரோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன். வேசை… நீ அழகாய்த்தான் இருக்கிறாய்” என்றாள் ஏஞ்சல்.

“உன் வாயை அடக்கு.. உன்னை உள்ளே வைப்பதொன்றும் பெரிய வேலையில்லை.” என்றாள் அதிகாரி.

அவர் குற்றுவதை நிறுத்தி அதிகாரியின் முகத்தை நோக்கி பார்வையை ஏறிந்தார். அவர் ஆத்திரமுற்றிருக்கக்கூடும். ஆனால் அவர் முகத்தில் எதுவும் தெரியவில்லை. எப்போதும் போலவே மெல்லிய புன்னகை புரியும் முகம். அதிகாரி போன பின்னரும் அவளைப் பார்த்தவாறு இருந்தார். ஆத்திரத்திற்கான வார்த்தைகள் அவரைச் சுற்றித் திரிந்திருக்கவேண்டும். அவர் எதையும் பேசவில்லை. திரும்பி தனது தட்டெழுத்து இயந்திரத்தில் இருந்த தாளை நிமிர்த்தி இதுவரை பதித்தவற்றை வாசித்துவிட்டு மிகவேகமாக எழுத்துக்களை குற்ற ஆரம்பித்தார். அவை அவளது முகத்தில் வீசவேண்டிய சொற்களாய் இருக்கக்கூடும்.

“நீ பொலிஸ் வேலையை விட்டுவிட்டு.. உதையே செய். நன்றாக உழைப்பாய்” என்றவாறு சிரித்தாள் ஏஞ்சல்.

“ஜோ இவள்தான் என்னைக் கைது செய்தவள். என்னோடு படுத்தவன் சாட்சியாக வந்துவிட்டான். எனக்கு ஐந்நூறு டொலர் தண்டம். என்ட யோனி அரசாங்கத்துக்குத்தான் சொந்தம் என்று இப்பத்தான் எனக்குத் தெரியும். குயூன் வீதியில் நிற்பதற்கு தடை. ஆனால் நடக்க முடியும்..” என்றுவிட்டு பலமாகச் சிரித்தாள்.

வாங்கில் ஏறி நின்று “எனது யோனியைக் காப்பதற்கு காவலர்களும் தண்டத்திற்கு நீதிபதிகளும் இருக்கும் வரையும் சட்டமும் ஒழுங்கும் எனது யோனிக்குள் நிலைநாட்டப்படுகிறது.”

என்று உரக்கக் கத்திவிட்டு சிரித்தபடியேயிருந்தாள். அந்த மனிதர் வாயிலில் இருந்த சிக்கரெட்டை எடுத்து நிலத்தில் போட்டுவிட்டு எழுத்துக்களை குற்ற ஆரம்பித்தார். கதிர் காலால் அமுக்கி தணலை நூற்றுகுறை சிக்கரெட்டை பொறுக்கி குப்பைத் தொட்டிக்குள் சேர்த்தார்.

“ஜோ, என்னைப் பார்க்க ஒரு வேசி போலவா இருக்கிறேன்.? நான் தொழில் செய்யாத நாளில் வீதியில் போகுமொருவன் என்னைப் படுக்க அழைக்கிறான். பொலிசார் என்னை நிறுத்தி விசாரிக்கிறார்கள்.. நான் இந்த நாட்டின் பூர்வீகக்குடி என்பதை என் முகம் காட்டுகிறதல்லவா..?”

என்று கூறிவிட்டு மௌனித்திருந்தாள்.

அவர் குற்றுவதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தார்.

“ஜோ உங்களுக்கு தொந்தரவு தருகிறேனா..? உங்களது ஆக்கத்தை எனது அலட்டல்கள் உடைத்து விடுமா..?”

அவர் அவளைப் பார்த்து புன்னகைத்துவிட்டு அவளின் வாயிலிருந்து சிக்கரெட்டை பிடுங்கி தனது வாயில் வைத்து இழுத்துக்கொண்டு மேட்டின் கரையோடு இருக்கும் வேலியோடு நின்று ஏரியை பார்த்தவாறு நின்றார். திடீரென வார்த்தைகள் அற்ற வெற்றிடத்தை அவர் உணர்ந்திருக்க வேண்டும். ஏஞ்சலும் அவரைத் தொடர்ந்து சிக்கரெட்டை பற்றியவாறு போய் நின்றாள். அவரின் தட்டெழுத்து இயந்திரத்திலிருந்த தாள் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. ஏஞ்சலின் வார்த்தைகளை காற்று பதிய முற்பட்டிருக்கக் கூடும்.

••••

தன்டபே, ஒன்டாறியோ.

தொடர்ந்து மூன்று நாட்களாகக் கொட்டிய வெண்பனி வீடுகள், பாதைகளை மூடிக்கிடந்தது. அந்த மூன்று நாட்களும் தன்டபே நகர் செயலிழந்து கிடந்தது. பொதுவாகவே வெண்பனி பொழிவு கூடிய இடம்தான் தன்டபே. ஏஞ்சலுடன் அவளது சகோதர, சகோதரிகள் ஒன்பது பேர். அவர்களுடன் யூட் இணைந்திருந்தான். அவன் இரண்டு வருடங்களுக்கு முன்னராக ரொரன்டோவுக்கு இடம்பெயர்ந்திருந்தான். அந்த மூன்று நாட்களும் ரொரன்டோ நகரைப் பற்றிய பிரமையை அவர்களுக்கு அவன் ஏற்படுத்தியிருந்தான். அப்படியொரு இடம் இப்பூமியில் இருப்பதும் பதினைந்து மணிநேர கார் ஓட்டத்தில் போய்விட முடியுமென்பதும் அவளுக்கு ஆர்வத்தை தூண்டிய வண்ணமே இருந்தது. ரொரன்டோவுக்கு செல்ல வேண்டுமென ஏஞ்சலும் முடிவெடுத்திருந்தாள். யூட்டிடம் பந்தயக்காரை ஒத்த போர்ட் மஸ்தாங் காரொன்றிருந்தது. அதன் கூரையிலும் கண்ணாடியிருந்தது. அவனது நடையுடை பாவனைகள் அனைத்தும் எல்விஸ் பிரஸ்லியை ஒத்திருந்தன. யூட்டும் அவளது அண்ணனும் வெள்ளையின இளைஞர்களுடனான மோதல் ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டு சிறிதுகாலம் இளையவருக்கான சிறையில் இருந்தவர்கள். சிறையிலிருந்து வந்த பின்னர் சிறைக்குள் கிடைத்த தொடர்போடு ரொரன்டோ சென்றவன். ஒரு மாதத்திற்கு முன்னராகத்தான் தன்டபே திரும்பியிருந்தான். மஸ்தாங் காரில் முன்னுக்கு இருந்து பயணிக்கும் விருப்பை ஏஞ்சல் யூட்டுடிடம் தெரிவித்திருந்தாள்.

வெண்பனி வெளிச்சம் கண்களுக்கு கூச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. இனிவரும் இரு நாட்களும் முகில் அகன்று சூரிய வெளிச்சமிக்க நாட்களாகவிருக்குமென வானிலை அறிவிப்பு சொன்னபடியிருந்தது. யூட்டின் காரின் முன்னிருக்கையில் ஏஞ்சல் அமர்ந்திருந்தாள். உறைந்திருந்த ஒரு சிறு ஏரிக்குள் வெள்ளை இளைஞர்களின் கார்கள் பல ஓடிச் சறுக்கிக் கொண்டிருந்தன. வெள்ளையர்களின் இனவாதச் சிக்கலுக்குள் அவன் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. அவர்கள் நின்ற இடத்தை தவிர்த்து வேறொரு பகுதிக்குள் நுழைந்து காரின் வேகத்தை முடுக்கினான். ஏரிக்குள் கிடந்த பனியை தூர வீசியபடி பயணித்தது கார். அவன் தடுப்பை அமர்த்தி சில்லுகளை திரும்பினான். கார் வட்ட வட்டமாய்ச் சுற்றிச்சுற்றி சறுக்கியபடியே சென்று கொண்டிருந்தது. ஒவ்வொரு வட்டமும் ஒன்றோடு ஒன்று பிணைந்தபடியிருந்தன. இறுதியில் கார் முடிவுறா வட்டத்தின் ஆரையோடு ஏரிக்கரையே ஓய்ந்திருந்தது. அவர்கள் காருக்குள் ஒய்வின்றி இயங்க ஆரம்பித்தனர். ஏஞ்சல் காரின் வேகத்தையும் காமத்தின் வேகத்தையும் அறிந்து ஓய்ந்திருந்தாள்.

கஞ்சாப்புகை காரை நிறைத்திருந்தது. காரின் இருக்கைகளை சரித்து படுத்து வான்வெளியை பார்த்தவாறு இருவரும் கிடந்தனர். அண்டத்துக்குள் மிதந்து திரிவதாக உணர்ந்தாள். அவள் வான்வெளியை விட்டு நிலத்துக்கு வருவதற்கு விரும்பவில்லை. தொடர்ந்தும் புகைத்தபடியேயிருந்தாள். வெள்ளிகளிடை அவனோடு புணர்ந்தாள். அவள் அவனைத் தொடர்ந்தாள். அண்டவெளிக்கு அவனாலேயே அழைத்துச் செல்ல முடிந்தது. அண்டத்துள் அவனது கையைப்பற்றி மிதந்து திரிவது பேரின்பமாயிருந்தது. அவளது கால்கள் நிலத்திற்கு மீண்டிருந்த ஓர் நாளில் ஏஞ்சல் கருத்தரித்திருந்ததை உணர்ந்தாள். அச்சம் அவளைச் சூழத்தொடங்கியது. அதை யூட் அறிந்தபோது அவனது கார் ரொரன்டோவை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. ஜன்னலருகே வந்து நின்று அவனது கார் சில்லுகளின் வழித்தடத்தைப் பார்த்தவாறு நின்றாள் ஏஞ்சல். அவன் விட்டுச்சென்ற தொலைபேசி இலக்கமும் ஐம்பது டொலர்களும் அவள் வசமிருந்தன.

••••

கருவைக் கலைத்த களைப்பு. அந்த மருத்துவ நிலைய கதிரையில் தூங்கியிருந்தாள் ஏஞ்சல். கருத்தரிப்பை தடுக்க என்னவெல்லாம் செய்யலாம் என்ற மருத்துவக் குறிப்புகள் அடங்கிய பிரசுரங்கள் அவள் கைகளுக்குள் கிடந்தன. அவளுக்கான தற்காலிக தங்குமிட வசதியோடு சமூக சேவை அதிகாரி அவளை எழும்பினார்.

“உனக்கு பதினைந்து வயதுதான் ஆகிறது.. நீ கவனமாகவிருக்கவேண்டும். உன் உடலைக் கவனித்துக்கொள். தற்காலிக இடத்தில் ஒரு வாரம் தங்கலாம். அதன் பின்னர் நீ வீடு திரும்ப வேண்டும்.”

அதிகாரி தற்காலிக தங்குமிடத்தில் சேர்த்து விட்டு அகன்றார்.

பாட்டிக்குத் தெரியும். அவரின் சம்மதம் இன்றி கருக்கலைப்பை செய்ய முடியாது. ஆயினும் ஏஞ்சலை அவர் பார்க்க விரும்பவில்லை. ஏஞ்சலின் நிலை குறித்து அவளது தாய் எதுவும் கூறப்போவதில்லை. தாய் குடிபோதையில் கிடப்பவள். அவள் எதையும் கிரகிக்கும் நிலையில் எப்போதும் இருந்ததில்லை. பாட்டி மட்டுமே அக்கறையுள்ளவர். அவர் ஒன்பது பேரப்பிள்ளைகளை பராமரிக்கிறார். பண்பாட்டு அழிக்கப்பட்டு அல்லலுறும் சமூகத்துள் அந்த முதுதாயின் அரவணைப்பு ஓரளவு அவர்களை காப்பாற்றியிருந்தது. முதுமையும், வறுமையும், தந்தையற்ற பேரப்பிள்ளைகளும், குடிபோதையோடு ஒடுங்கிய மகளும் பாட்டிக்கு பெரும் இடர்தான். பண்பாட்டின் வேர்களை பேரர்களுக்கு கடத்திவிட வேண்டுமென்ற அபிலாசையோடு தனது இறுதி நாட்களை கடந்து கொண்டிருந்தாள் அந்த முதுதாய். தான் கருத்தரித்திருப்பது பாட்டிக்கு பேரிடியைக் கொடுத்திருக்கும் என்பதை ஏஞ்சல் அறிவாள். சிறுவயது முதலே வறுமை, காமம், போதையின் குரூர முகங்களைச் அவளுக்கு சொல்லி வளர்த்தவள். தானும் ஏனைய இளையவர்கள் போல் குரூர வலைக்குள் வீழ்த்தப்பட்டிருப்பதை அறிந்தால் நிச்சயம் அந்த முதுதாயின் திட்டுகளுக்கு ஆளாவேன் என்பதை ஏஞ்சல் அறிவாள். முதுதாயின் வாஞ்சையான தடவல் அவளுக்குத் தேவைப்பட்டது. தலையை வாரி பின்னலிட்டு அவளிடும் முத்தங்களுக்காக கன்னங்கள் ஏங்கி நின்றன. அவளது கைகளுக்குள் பொத்தி வளர்க்கப்பட்டவள். முதுதாயின் கண்களுக்கு பதிலளிக்கும் திடம் அவளிடம் இருக்கவில்லை. ரொரன்டோ செல்லும் ‘கிரே ஹன்ட்’ பஸ்சில் ஏஞ்சல் ஏறி அமர்ந்து கொண்டாள். ரோரன்டோவில் யூட்டின் பாலியல் வலைக்குள் வீழ்ந்தவள் அவனது பிடியிலிருந்து விலகியபோது பாலியல் தொழிலைத்தவிர அவளுக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. முதுதாயின் திட்டல் அவள் காதுகளுக்கு எட்டிய போதெல்லாம் அவள் போதைக்குள் அமிழ்ந்து போனாள்.

••••

“ஜோ நான் போகிறேன். அந்த பொலிஸ் வேசை என்னை இந்த இடத்தில் விடப்போறதில்லை. பின்னர் சந்திக்கிறேன். ஜோ இந்த சிக்ரெட்டை வைத்திருங்கள். இரவு தேவைப்படும்.”

அவரது கோட் பைக்குள் சிக்ரெட்டை வைத்துவிட்டு ஏஞ்சல் நகர்ந்தாள். அவள் வைத்துவிட்டுப் போன சிக்ரெட்டை எடுத்து மூட்டிக்கொண்டு வேலிக்கரையாக நடந்து திரிந்தார் அந்த மனிதர். பின்னர் வாங்கிலைச் சுற்றி நடந்தபடியிருந்தார். வார்த்தைகள் மங்கி மொழி தடுமாறத் தொடங்கியிருக்கக் கூடும். வாங்கில் அமர்ந்து தட்டெழுத்து இயந்திரத்தை பெட்டிக்குள் வைத்து கயிற்றால் இறுக்கிக்கொண்டு மக்டீ பக்கமாய் வண்டிலை இழுத்தபடி நடக்க ஆரம்பித்தார்.

••••

தபீசா வேலைக்கு வந்திருப்பாள். இரவு 11 மணியிலிருந்து காலை 7 மணி வரை அவளது வேலை. மக்டீ உணவகம் இருபத்தினான்கு மணி நேரமும் திறக்கத் தொடங்கியதிலிருந்து அவளுக்கு இரவு வேலை. அந்த உணவகத்தில் நீண்ட நாட்களாக வேலை செய்கிறாள். மொசாம்பிக்கிலிருந்து அகதியாக வந்தவள். சிரித்த முகம். பருத்த உடல். அனைவரையும் கவரும் அழகு. மக்டீயை பார்க்கிலும் தபீசா பிரபலமானவள். அவளின் அழகிய குரலில் பாடல்கள் இனிமையாய் ஒலிக்கும். இரவுகளில் அவளின் பாடல்கள் அவளுக்குத் துணை. பகலில் நிற்பவர்கள் வாடிக்கையாளர் தவிர வேறு ஒருவரையும் அங்கு இருக்க அனுமதிப்பதில்லை. அங்குள்ள கழியலறை கூட வாடிக்கையாளருக்கு மட்டுமே. கழியலறைக் கதவைத் திறப்பதற்கான பொத்தான் தொழிலாளர்களிடம்தான் இருந்தது. வீடற்றோர், மனோநிலை பாதிக்கப்பட்டோர், பாலியல் தொழில் செய்வோர் உணவகத்துக்குள் வந்து குந்திவிடாது இருக்க.

“வாடிக்கையாளர்கள் இரு மணிநேரம் மட்டுமே உணவகத்துக்குள் இருக்கலாம்”

“வாடிக்கையாளர் மட்டுமே கழியலறை பாவிக்கும் அனுமதியுண்டு”

போன்ற வாசகங்கள் அடங்கிய விடய அட்டைகளும் வாசலில் ஒட்டப்பட்டிருந்தன.

இரவுகளில் தபீசா வேலையிலிருக்கும்போது எந்தத் தடைகளும் இருப்பதில்லை. வீதியில் படுப்போருக்கு மலசலகூடம் திறந்தே இருக்கும். கதிர் அங்கு பதியப்படாத தொழிலாளி. தபீசாவின் நட்பினால் இரவுகளில் மக்டீ துப்பரவு வேலைகளில் தபீசாவுக்கு உதவியாய் இருப்பார். ஏஞ்சல் தபீசாவிடம் சிறு தொகை பணத்தை கொடுத்து வைப்பதுண்டு. ஜோ, கதிர் அல்லது வீடற்றோர் யாராவது உள்ளே வருவதற்கு கோப்பிக்கான தொகையது. தபீசாவிற்கு மேலாளருடன் பனிப்போர் இருந்த வண்ணமேயிருந்தது. வீடற்றோர் அங்கு வருவதும் குந்துவதும் அவருக்கு விருப்பமில்லை.

“அவர்கள் கோப்பியை வாங்குகிறார்கள். அவர்களும் வாடிக்கையாளர்கள். சட்டரீதியாக எதுவும் செய்ய முடியாது.” என மேலாளருடன் வாதிட்டபடியே இருக்கிறாள் தபீசா.

அவர்களுக்கான பணத்தை தபீசா கொடுக்கிறாள் என்பதே மேலாளரின் குற்றச்சாட்டு. ஏஞ்சல் மட்டுமல்ல அங்கு வரும் வாடிக்கையாளர் பலர் வீடற்றோர், உதவி தேவைப்படுவோருக்காக பணத்தை விட்டுச் செல்வதுண்டு. குளிர் காலங்களில் நீளும் இரவுகளில் அவர்களின் சந்திப்பு இடமாக அந்த மக்டீ இருந்தது. அந்த மனிதர் மூலையிலிருந்த இருக்கையில் அமர்ந்து தான் எழுதியவற்றை மீளப்பார்த்து திருத்தங்கள் செய்து கொண்டிருப்பார். அங்கு வேலை செய்யும் பலரும் நாட்டுக்கு புதியவர்கள் அல்லது மாணவர்களாய் இருந்தார்கள். வேலைப்பளு அதிகரித்துக்கொண்டே சென்றது. சம்பளத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்த வண்ணமேயிருந்தது. வேலையை விட்டால் இன்னுமொரு வேலையைத் தேடுவது சிரமம். அதை மேலாளர்கள் நன்கு அறிவார்கள். அதை அவர்கள் தங்களுக்கு சாதகமாக எப்போதும் பயன்படுத்திக் கொள்வார்கள். அவர்களோடு முரண்படவும் முடியாது. வேலையற்றுப்போய் பொதுநல கொடுப்பனவுடன் வாழ முடியாது. மேலாளருடனான முரண்பாட்டாலே அவள் இரவு வேலைக்கு மாற்றப்பட்டிருந்தாள். அதனால் அவள் செய்து வந்த பின்னேரப் பகுதிநேர வேலையை கைவிட வேண்டியிருந்தது. அவளது கணவரும் இரண்டு பிள்ளைகளும் தென் ஆபிரிக்காவில் இருந்தார்கள். அகதி கோரிக்கை ஐந்தாண்டுக்கு மேலாக இழுபட்டபடியே இருக்கிறது. கனடா வதிவிட உரிமை கிடைப்பதற்கும், குடும்பத்தை அழைப்பதற்கும் வேலை முக்கியம். அதனால் மேலாளரின் கடும்போக்குகளை அனுசரித்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அவளைச் சூழ்ந்திருந்தது. இரவு வேலை பணியாளராய் அவளுடன் மே என்கிற மாணவி சேர்ந்திருந்தாள். துடியாட்டமானவள். சிரித்தபடியேயிருப்பாள். படபடக்கும் பேச்சு. தபீசாவின் மூத்த மகளை ஒத்த வயது. தபீசாவை அவளுக்கு பிடித்திருந்தது. மற்றோர் மீது பரிவும் கரிசனையும் அவளுக்கு இருக்கும். அதுவே தபீசாவின் நெருக்கத்துக்கு காரணமாயிருந்தது. மேயுடன் வேலை செய்வது தபீசாவுக்கு பிடித்திருந்தது. தபீசா தனது மனதைத் திறந்து பகிர்ந்துகொள்ளக் கூடிய தோழி அவள்தான்.

மேலாளர் தொழிலாளர்களை நடாத்தும் முறை குறித்து அதிருப்தி அடைந்திருந்தாள் மே. குறிப்பாக தபீசா மீதான மேலாளரின் வன்மம் அவளுக்கு எரிச்சலை கொடுத்தபடியிருந்தது. தொழில் சங்கம் ஒன்று அமைத்தால்தான் இவர்களின் கெடுபிடியிலிருந்து விடிவு என்று மே சொல்லியபடியிருந்தாள். மேயின் எண்ணத்துக்கு கருத்தளவில் தபீசா ஒத்துழைத்திருந்தாலும் அவளொரு அகதி, நிரந்தர குடியுரிமைக்காக காத்திருப்பவள். குடும்பம் அவள் அனுப்பும் பணத்தில் தங்கியிருக்க வேண்டிய நிலை. பெரு நிறுவனங்களோடு போராடுவது இலகுவானதில்லை. வேலையிழப்பு, இருப்பிடமிழப்பு. பின்னர் எல்லாவற்றுக்கும் கையேந்தும் நிலை. மே மாணவி. சிறுவயதிலிலே அவளுக்கிருந்த அறிவும், துணிச்சலும் தபீசாவுக்கு பிடித்திருந்தது. தபீசாவுக்காக மே மேலாளர்களுடன் வாதிடுகிறாள். மே தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடான சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தாள். இருவரும் இரவில் வேலை செய்யும் நாளொன்றில் பிரதிநிதி வந்திருந்தார். தொழிலாளர்களின் கையெழுத்து வாங்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டிருந்தார்கள். பல தொழிலாளர்களின் கைகளுக்கு திட்டம் எட்டும் முன்னமே மக்டீ முகாமைத்துவத்திற்கு எட்டியிருந்தது. மேயும் தபீசாவும் வேலையால் நீக்கப்பட்டார்கள். ஏனைய தொழிலாளர்கள் வேறு கிளைகளுக்கு மாற்றப்பட்டார்கள். முகாமைத்துவம் அந்தக் கிளையை பொறுப்பெடுத்தது. எல்லோருமே புது முகங்கள்.

“உங்கள் வேலை நீக்கம் சட்டவிரோதமானது. நாங்கள் மக்டீக்கு எதிராக வழக்கு தொடர இருக்கிறோம்.” என்றார் தொழிற்சங்க பிரதிநிதி.

ஆத்திரமும் இயலாமையும் அவர்களை சூழ்ந்தபடியிருந்தது. மக்டீக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்வதென தொழிற்சங்கமும் அவர்களும் முடிவெடுத்திருந்தார்கள். வாங்கில் அந்த மனிதர் அமர்ந்திருந்தார். அவரோடு ஏஞ்சல், கதிர், தபீசா, மே ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். போராட்ட சுலோகங்கள் அடங்கிய அட்டைகள் தயாராகின. மக்டீயின் நடவடிக்கையை வெளிப்படுத்தும் துண்டுப்பிரசுரத்தை அந்த மனிதர் தயாரித்தார்.“மக்டீயை நிராகரிப்போம்” என தலைப்பிடப்பட்டிருந்தது.

அவர்களின் ஆர்ப்பாட்டம் நீண்டது. எப்போதும் மந்தமாய் இருக்கும் சந்தி ஆர்ப்பாட்டக்காரர்களால் விழித்திருந்தது. வீடற்றோர் பலர் அவர்களது துண்டுப்பிரசுரத்தை கொடுத்தவாறும், அட்டைகளை தாங்கியவாறும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவருமே மக்டீயில் அறிமுகமான வாடிக்கையாளர்கள். தபீசா ஆரம்பத்தில் அவர்களோடு சற்று கடுமையாக நடந்திருந்தாள். முகாமைத்துவத்தின் நிர்ப்பந்தம். இப்போ அவர்களில் பலர் அவளுக்குத் தெரிந்தவர்கள். அவளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் நிற்கிறார்கள். ஆர்ப்பாட்டம் முகாமைத்துவத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. நீதிபதியின் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. மக்டீக்கு அருகே நின்று ஆர்ப்பாட்டம் செய்வது தடுக்கப்பட்டிருந்தது. வீதியின் மறுகரையில் நின்று கோசங்களை எழுப்பினர். ஏஞ்சலின் தொழிலால் அவளைத் தெருக்களில் காணும்போதெல்லாம் அவளைத் தெரியாதவள் போல் தபீசா கடந்திருக்கிறாள். அவள் கண்களுக்கு எட்டாதவாறு தெருக்களை மாற்றி நடந்திருக்கிறாள். கடந்த இரண்டு வாரங்களாக அவர்களுக்கு ஆதரவாக அவள் அங்கு வந்து போகிறாள். தபீசாவுக்கும் மேக்கும் சிற்றுண்டிகளும், பானங்களும் வாங்கி வருகிறாள்.

“ஏஞ்சல் இதெல்லாம் நீ செய்யத் தேவையில்லை” என ஏஞ்சலை கட்டியணைத்து தபீசா அழுதாள். அவளுக்கு உள்ளூர குற்றவுணர்வு அழுத்தியிருக்க வேண்டும்.

“ஏய் தபீஸ் நாங்கள் நண்பர்கள் இல்லையா..? அழாதே”

ஏஞ்சல் அவளை அணைத்தபடியிருந்தாள். இரண்டு வாரங்களைக் கடந்திருந்தன. சோர்வை மறைக்க தபீசா பாடியவாறு இருந்தாள். அனைவரும் பாடினார்கள். ஆடினார்கள். ஆயினும் அவர்களது சுருதி மெல்லத் தளரத் தொடங்கியது. தபீசா வேறு வேலைக்காவும், வீட்டுக்காகவும் அலைய வேண்டியிருந்தது.

••••

ஏஞ்சல் வரும் நேரம்தான். தபீசா எதிர்பார்த்திருந்தாள். அன்றைய நாள் கடந்தது. ஏஞ்சலைக் காணவில்லை. சிலவேளை அவள் ஓரிரு நாட்கள் வாடிக்கையாளர்களுடன் சென்றுவிட்டு மீளவும் வருதுண்டு. இரண்டு நாட்களைக் கடந்தும் அவளைக் காணவில்லை. வழமைக்கு மாறாகவிருந்தது. தபீசாவுக்கு ஏஞ்சல் குறித்த அச்சம் மனதை உறுத்திய வண்ணமிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் நின்ற தபீசாவையும் மேயையும் நோக்கி கதிர் ஓடி வந்தார்.

“ஏஞ்சலை யாரோ கத்தியால் குத்தி காயப்படுத்தி தெருவில் வீசிவிட்டு போயிருக்கிறார்கள். அவள் வைத்தியசாலையில் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறாள்”

என்று கதிர் அழுதுகொண்டு பொலிசாரின் தகவலைப் பகிர்ந்தார். மூவரும் வாங்கு நோக்கி ஓடினார்கள். வாங்கில் படுத்துக்கிடந்த அந்த மனிதரை எழுப்பித் தகவலை பறிமாறினார்கள். அவர்  எழுந்து அமைதியாக குந்தியிருந்தார். தனது கோட் பைக்குள் கையை நுழைத்து எதையோ தடவினார். நெருப்புப் பெட்டியுடன் அவர் கை வெளியில் வந்தது. அவருக்கு புகைக்க வேண்டும் போல் இருந்திருக்க வேண்டும். வண்டிலை  இழுத்துக் கொண்டு வைத்தியசாலை நோக்கி நடக்கத் தொடங்கினார். மூவரும் அவரைத் தொடர்ந்தனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இயந்திரங்களும், குழாய்களும் சூழ அவள் கிடத்தப்பட்டிருந்தாள். அவளை அடையாளம் காண முடியவில்லை. முகம் காயங்களால் வீங்கிப் போயிருந்தது.

தபீசாவும் மேயும்

“ஏஞ்சல்.. ஏஞ்சல்..”என்று அழைத்துப் பார்த்தார்கள்.

இருவரின் கண்களும் பனித்திருந்தன. அந்த வார்த்தைகள் அவளை எட்டியதோ தெரியவில்லை. அவர்கள் மௌனித்து நின்றார்கள். செயற்கை சுவாச இயந்திரத்தின் ஒலி அந்த அறையை நிறைத்திருந்தது.

“நீங்கள் உறவினர்களா? நண்பர்களா?” என்று கேட்டவாறு தாதி வந்தாள்

“நாங்கள் நல்ல நண்பர்கள்” என்றாள் தபீசா

“நான் இதை சொல்லக்கூடாது.. இதைச் செய்த கொடியவனைப் பிடித்து தூக்கிலிட வேண்டும்” என்றுவிட்டு தாதி நகர்ந்தாள்.

அந்த மனிதர் ஏஞ்சலைப் பார்த்தவாறு நின்றார். அவர் கண்கள் கலங்கியிருந்தன.

“ஏஞ்சல்” என்று மெதுவாக அழைத்தார். அவளின் பாதங்களை தடவினார். அவளது மார்புப் பகுதி விரிந்து சுருங்குவதை பார்த்தபடியிருந்தார். அது அவளின் இயற்கையான சுவாசமாக இருக்ககூடாதாவென ஏங்கினார்.

“தயவு செய்து மீண்டும் வந்துவிடு” என்று கண்கள் பனித்தபடி அறையை விட்டு வெளியே வந்தார். எந்த வார்த்தைகளுக்கும் அங்கு அர்த்தமில்லை என்பதை அவர் அறிந்திருக்கக்கூடும். செயற்கை சுவாச ஒலி அவரைத் தொடர்ந்தபடியேயிருந்தது. ஏதோவொரு வெறுமை சூழ்ந்திருப்பதாய் அவர் உணர்ந்திருந்தார். அவர் அந்த வாங்கில் குந்துவதை நிறுத்தினார். தெருக்களில் சுற்றி நடந்தபடியே திரிந்தார். ‘ஏஞ்சல் எழுந்திருக்கக்கூடும்’ என்ற நினைவு அருட்டும் போதெல்லாம் ஆவலோடு அவளைப் பார்ப்பதற்கு வைத்தியசாலைக்கு செல்கிறார். ஏஞ்சலின் பாதத்தைத் தடவியபடியே நிற்கின்றார்.

“உங்கள் மகளா?” என்ற கேள்வியோடு தாதியொருத்தி வந்து குறிப்பெழுதியபடியிருந்தாள்.

இறுகிய அவரது முகத்துக்குள்ளால் கவலையை விலத்தி ஒரு சிறு புன்னகை வெளிவந்தது. ஏதாவது உறவு இருந்திருந்தால் தப்பித்திருப்பாளா.. என்ன? அவளொரு மனிசி.

“அவள் ஒரு பெண்” என்றார் அந்த மனிதர்.

தாதி குறிப்பு எழுதுவதை நிறுத்திவிட்டு அந்த மனிதரை நிமிர்ந்து பார்த்தாள். அந்தப் பதில் அவளின் நெஞ்சத்தை ஒரு கணம் பிழிந்திருக்க வேண்டும். அவர் ஏஞ்சலின் பாதங்களைத் தடவியபடியேயிருந்தார்.

••••

இரவு கூடியிருந்தது.

“வாடிக்கையாளர்களின் நன்மை கருதி மக்டீ சீரமைப்புக்காக மூடப்படுகிறது. அசௌகரியத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்”

என்ற வாசகத்தை தாங்கிய  அறிவித்தல் வாசலில் ஒட்டப்பட்டிருந்தது. தொழிலாளர்களின் உரிமைக் கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளும், பல்தேசிய நிறுவனங்களைக் கண்டிக்கும் அட்டைகளும் மக்டீ சுவரில் சாய்ந்தபடி தெருவில் கிடந்தன. வாடிக்கையாளர்கள் அறிவித்தலை பார்த்து விட்டு அகன்று கொண்டிருந்தார்கள். ஆர்ப்பாட்டம் இடை நிறுத்தப்பட்டிருந்தது.

தபீசாவும் மேயும் வாங்கில் அமர்ந்திருந்தார்கள். அந்த மனிதர் தனது வண்டிலை இழுத்துக்கொண்டு வைத்தியசாலைப் பக்கமிருந்து சந்திக்கு வந்து கொண்டிருந்தார். செயற்கை சுவாச ஒலி அவரைத் தொடர்ந்த வண்ணமிருந்தது. தொடர்ந்து நாட்களாக அவர் ஏஞ்சலை பார்த்து வருகிறார். எந்த முன்னேற்றத்தையும் அவளது உடல் காட்டவில்லை. மக்டீ விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. தெருவில் கிடந்த ஆர்ப்பாட்ட அட்டைகளை பார்த்தவாறு வந்தார். அந்த மனிதரைக் கண்டதும் அறிவித்தலைக் காட்டியவாறு

“கப்டன் மக்டீயை பூட்டிவிட்டார்கள்” என்றார் கதிர்.

அந்த மனிதர் வண்டிலை அருகே நிறுத்திவிட்டு அறிவித்தலை வாசித்தார். மக்டீயின் முன்னே குறுக்கு மறுக்குமாக நடக்கத் தொடங்கினார். அவரின் விரல்கள் துருத்தத் தொடங்கின. அவரது நடையின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. அவரைப் பின்தொடர்ந்து கதிரும் நடந்தபடியேயிருந்தார். அவரின் வேகத்தை தொடர முடியாது சந்தியிலிருந்த மின்கம்பத்தோடு சாய்ந்திருந்தார் கதிர். சொற்கள் விரல்களுக்குள்ளால் வெளிவருதற்காய் முண்டிக்கொண்டு இருக்க வேண்டும். அந்த மனிதர் தனது வண்டலின் கயிற்றை அகற்றினார். தனது தட்டெழுத்து இயந்திர பெட்டியைத் தூக்கி ஆத்திரத்துடன் வந்தார். மக்டீ உணவக பிரதான வாயில் கண்ணாடிக் கதவை நோக்கி எறிந்தார். கண்ணாடியை சிறிது உடைத்துவிட்டு அவர் முன்னால் பெட்டி வந்து விழுந்தது. பெட்டியை விட்டு தட்டெழுத்து இயந்திரம் வெளியில் கிடந்தது. அதைத் தூக்கி கடையின் பக்க கண்ணாடி நோக்கி ஓங்கி வீசினார். தட்டெழுத்து இயந்திரம் நொறுங்கி பாகங்கள் சந்தியில் பரவத் தொடங்கின. கையில் கிடைத்த பாகங்களை ஜன்னல் கண்ணாடிகள் மீது விட்டெறிந்தார். தட்டெழுத்து எழுத்துக்கூடு அவர் கையில் கிடைத்தது. அதை தூக்கி எறிந்தார். அது சுவரில் பட்டு மீண்டது. கூடு முற்றாய்க் கலையும் வரை மீளமீள விட்டெறிந்தார். அந்த தட்டெழுத்து கூட்டிலிருந்து பிரிந்த எழுத்துக்கள் சந்தியில் சிதறிக் கிடந்தன. அவர் மீளவும் குறுக்கு மறுக்காக நடக்க ஆரம்பித்தார்.“கப்டன் என்ன செய்கிறீர்கள்” எனக் கேட்டபடி உருண்டு வீதியின் மறுகரைக்கு வந்த றிபன் கட்டையை எடுத்து றிபனை கட்டையில் மறுபடி சுற்றிக்கொண்டிருந்தார் கதிர். ஏதோ நடக்கிறது என்பதை வாங்கிலில் அமர்ந்திருந்த தபீசாவும் மேயும் கண்டுவிட்டு சந்தியை நோக்கி ஓடி வந்தனர்.

அவர் தனது வண்டிலை நோக்கிப் போனார். வண்டிலுக்குள் கிடந்த ஏனைய பெட்டிகளையும்,காகிதத்தாள் கற்றைகளையும் தூக்கி மக்டீ மீது வீசினார். தபீசாவும் மேயும் அவரை ஆற்றுப்படுத்த முயன்று கொண்டிருந்தனர்.

அவரது உடமைகள் சந்தியில் கிடந்தன. காகிதத்தாள்கள் சந்தியெங்கும் பரவத் தொடங்கின. வண்டிலைத்தூக்கி மக்டீ கண்ணாடி ஜன்னல்கள் மீது விட்டெறிந்தார். அவரின் விரல்கள் துருதுருத்துக் கொண்டிருந்தன. வீதியின் மறுகரையே இருந்த குப்பைத் தொட்டிகளை உதைத்து கவிழ்த்துக் கொட்டிட முயன்றார். அவரால் முடியவில்லை. வழியில் இருந்த குப்பைத் தொட்டிகளை உதைத்தபடியே வேகமாய் வாங்கு அருகே வந்தார்.

“புரொபசர் என்ன செய்கிறீர்கள்..?” என்றவாறு தபீசா அவரை அரவணைக்க முயன்றாள்.

அவர் அவளை உதறிவிட்டு வாங்கு முன் குறுக்கு மறுக்காய் நடக்கத் தொடங்கினார். அவரைச் சுற்றிக் கொண்டிருந்த சொற்கள் அர்த்தமிழந்து வெளியில் கரைந்திருக்கக் கூடும்.

தபீசாவும், மேயும் வாங்கில் அமர்ந்து அந்த மனிதரைப்  பார்த்தவாறு இருந்தனர். இருவரின் கண்களும் கலங்கியிருந்தன. எப்போதும் உதிரும் சிறு புன்னகை அவர் முகத்திலிருந்து அகன்றிருந்தது. ஆத்திரத்தில் அவரது முகம் இறுகிச் சிவந்திருந்தது. அந்த மனிதரின் புன்னகையை மீட்கும் சொற்கள் தம்மிடம் இல்லையென்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

காற்று காகிதத்தாள்களை எல்லாத் திக்கிலும் அடித்துச் சென்றது. தாள்களை விட்டு சொற்கள் அகல ஆரம்பித்தன. அவை இந்நிலத்தின் மனிதர்களைப் பற்றிய கதையின் சொற்களாய் இருக்கக்கூடும்.  அவை காற்றின் சொற்கள். காற்று அவற்றை மீளப்பெற்றிருக்கக் கூடும். அந்த மனிதர் நடந்தபடியேயிருந்தார்.

சந்தியிலும், தெருவிலும் சிதறிக் கிடந்த நொறுங்கிய பொருட்களையும், காகிதத் தாள்களையும் பார்த்தவாறு திரிந்தார் கதிர். அவர் அவற்றை பொறுக்கி குப்பைத் தொட்டிக்குள் போட ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் அவர் எவற்றையும் பொறுக்க முற்படவில்லை. அவை எதிர்ப்பின் மொழியைப் பேசுவதாக கதிர் உணர்ந்திருக்கக்கூடும்.

நொண்டி படையல்

2

மாரி.கிருஷ்ணமூர்த்தி

நாளைக்கு போகி பொங்கல். ஊரில் எல்லோரும் தங்கள் நிலத்தில் உள்ள கிணற்றடியில் பொங்கல் வைத்து படைப்பார்கள்.குறிப்பாக தம் குடும்பங்களில் இறந்து போன கட்டு கழித்திகளுக்கு மஞ்சள் ரவிக்கையும்,பச்சை  வளையலும் வைத்து நொண்டி படையல் வைப்பார்கள். சாயந்திரம் வீட்டிலிருந்து வண்டியை எடுத்துக் கிளம்பும்போது அம்மா திண்ணையில் சாணி மொழுகிய கையோடு வந்து படையலுக்குக்கான சாமானை வாங்கிவரச் சொன்னாள். சனிமூலை திண்ணையில் குழி விழுந்த பள்ளத்தை தன்  பிஞ்சுக் கரங்களால் கொட்டாங்குச்சியில் மண்ணெடுத்து வந்து  மூடிக்கொண்டிருந்தாள் மகள் அர்ச்சனா.

இரண்டு நாட்களாய் தூக்கமில்லாமல் வெல்டிங் பட்டறையில் வேலை செய்து விட்டு மதியம் மூணுமணிக்கு தான் வந்து படுத்தேன்.கண்கள் ரெண்டும் பீளை ஒட்டிப்போய் திறக்கமுடியாமல் வலித்தது. அந்தி வெளிச்சத்தைக் கூட பார்க்கமுடியாத அளவிற்கு கண் எரிந்தது. கண்ணை நிமிட்ட நிமிட்ட எரிபூச்சி விழுந்தது போல் காந்தியது.

உள் ரோட்டிலிருந்து பிரிந்து மலைசுற்றும் பாதையில் ஏறியபோது மேலகுப்பம் காத்தாயி பாட்டி ஆட்டோவிலிருந்து வளையல் கூடைகளை இறக்கிக்கொண்டிருந்தாள். பின்னாடியே இன்னொரு கூடையைத் தூக்கியபடி பாந்தமான அழகில் அவள் மருமகளும் அவளோடு இறங்கினாள்.அவள் கால்களில் மஞ்சள் பூசி விரலோரங்களில் மருதாணி வைத்திருந்தாள்.அது சாமந்தி பூந்தோட்டத்தில் செவ்வான  ஒளி வீசியது போல் இருந்தது.அக்காட்சி எரிந்துகொண்டிருந்த கண்களில் குளிர்ச்சியான காற்று  தொட்டுச் சென்றதுபோல் இருந்தது.

சந்திரலிங்கத்துக்கு பக்கத்திலிருக்கும் கும்பகோணம் காபி கடையில் ஆர்டர் சொல்லிவிட்டு உட்கார்ந்திருந்தபோதுதான் குமார் மாமா வந்து எதிர் சேரில் உட்கார்ந்தார். அவர் முகம் பிடிங்கிப்போட்ட மல்லாட்டை செடியாய் வாடிப்போயிருந்தது.என்னைப் பார்த்ததும் சங்கடமாக உணர்ந்தவர் முகத்தில் புன்னகையை வரவழைக்க முயன்று தோற்றுப்போய் திரும்பிக்கொண்டார்.

நடந்து முடிந்த உள்ளாட்சிமன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு சொற்ப ஓட்டில் தோற்றுப்போயிருந்தார். எல்லோரையும் அரவணைத்துப் போகிற மனிதர்தான். ஆனால் ஜெயிப்பதற்கு அது மட்டும் போதவில்லை .அவரது நம்பிக்கை வேர்கள் அத்தனையும் இத்துப்போன பிறகு அவர் வந்து போகிற இடம் இந்த காபிகடை மட்டுமானதாக சுருங்கிப் போய் இருந்தது. மனதிலிருந்த அலைக்கழிப்பின் பிரதியாய் அவரின் கண்கள் அங்குமிங்குமாக பரிதவித்துக்கொண்டேயிருந்தது.சட்டென எதையோ உணர்ந்தவர் போல எங்களுக்கு எதிரே உயர்ந்து நிற்கிற மலையின் பக்கம் பார்வையை திருப்பினார்.அவர் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிதானமடைய ஆரம்பித்தது. நான் திரும்பிப் பார்த்தபோது மலையில் பட்ட அந்தி வெளிச்சத்தில் கிழக்குப் பக்கமாய் எந்த சலனமும் இல்லாமல் மலையின் நிழல் கொஞ்சம்  கொஞ்சமாக   உயர்ந்துகொண்டே வந்தது .

காரில் மலை சுற்றி வந்த குடும்பம் ஒன்று இறங்கி எங்களைக் கடந்து கடைக்குள்ளே போனார்கள். அவர்களின் முகம் ஆந்திர சாயலில் இருந்தது.அவர்கள் போட்டிருந்த வாசனைத் திரவியம் கடைக்குள்ளே இருந்த எல்லோரையும் வெளியே போக வைத்தது.நான் எழுந்து போய் நடைமேடை ஓரம் கொன்றைமரத்துக்குக் கிழே போட்டிருந்த சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டேன் .பக்கத்தில் ஒரு இளைஞன் போனில் சத்தமாக சீமானின்  ரெளத்திரமான பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான்.அது எனக்குக்  கேட்காத அளவிற்கு கொஞ்சம்  தள்ளி உட்கார்ந்துகொண்டேன்.

பகல் முடிந்து இரவு கலக்க ஆரம்பித்திருந்த நேரம். மலைமுழுக்க இருள் சூழ்ந்து நிழலாய்த் தெரிய அதைச் சுற்றி உள்ள வீடுகளின் மின்னொளி  அடிவாரத்தை மட்டும் வெளிச்சப்படுத்தியிருந்தது.

அப்பொழுதுதான் பின்னால் தம்பி என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தபோது திகிர் என்றிருந்தது. ஒரு அம்மா சிலை மாதிரி கொன்றை மர நிழலில் இருந்து எழுந்து நின்றாள். அந்தக் கணம் ஏதோ கண்ணுக்குப் புலனாகாத உள் நரம்புகளில் பதட்டம் பீறிட்டு உச்சி முடியில் சிலிர்ப்பான அதிர்வு எழுந்ததுபோல் இருந்தது.

அவள் உதடு லேசாக நடுங்கிக்கொண்டிருந்தது. குளிர் இறங்கியது போல அவள் கைகால்கள் துடித்துக் கொண்டிருந்தது. பதட்டமும், சோர்வும் கலந்து அவள் கண்கள்   வெளிறிப் போய்க் கிடந்தன. அவள் என்னைப் பார்த்ததும் தயங்கி முன்னகர்ந்து போய் பக்கத்தில் இருந்தவனுக்குப் பின்னால் நின்றுகொண்டாள். மூப்பு தொடுகிற வயதாய் இருந்தாலும்  வெளியுலகம் தெரியாமல் வாழ்நாளெல்லாம் நிலத்தில் மட்டுமே உழைத்து வாழ்கிற அப்பழுக்கற்ற   சம்சாரியாய்த் தெரிந்தாள். அவள் முகம் இருளில் இற்று விழுந்து போயிருக்கிற மஞ்சனத்திப் பூவாய் வாடிப்போயிருந்தது. அவளைப் பார்க்கப் பார்க்க மனதில் தாங்கமுடியாத கனம் ஏறுவதுபோல் இருந்தது.பக்கத்தில் இருந்தவனை யாருக்கும் கேட்காத ஒலியில்  ‘’தம்பி’’ என்று  கூப்பிட்டாள். அவள் கூப்பிட்டது அவனுக்கு கேட்கவில்லை. அவனை நான் தொட்டுக் கூப்பிட்டு சொன்ன பிறகுதான் பார்த்தான். அவன் திரும்பி என்ன என்பது போலப் பார்த்தான். 

“ரெண்டு வட”என்றாள்.

அவன் கடையை நோக்கிக் கை காட்டினான்.

அதற்கு ஏதோ சொல்ல வாயெடுத்தவள் எதுவும் சொல்லாமல் மவுனமாகத் தரையைப் பார்த்தாள்.

அப்பொழுதுதான் சூழலே புரிந்தது எனக்கு. இத்தீப நகரில் எவ்வளவோ பிச்சைக்காரர்களைப் பார்த்திருக்கிறேன். தொடர் பாவனையான ஒரு பரிதாபக் குரல் அவர்களிடம் பாசி படிந்த குளம்போல ஒட்டியிருக்கும். ஆனால் இவளிடம் அதன் சிறு சாயல் கூட இல்லை.

அந்த இளைஞன் பையில் துழாவி சில்லறைகளைப் பொறுக்கி அவளிடம் போடப் போனான்.அவள் கைவிரல்கள்  தீயில் சுட்ட ரணம் போலத் துடித்துக்கொண்டிருந்தது. கையறுந்த நிலையில் கூட  ரோஷத்தின்  ஒரு சொல் அவள் உள்ளிருந்து ஞாபகப்படுத்திருக்கும் போல. சட்டென கையை இழுத்துக்கொண்டாள். எந்த வசையும் இல்லாத கனன்றெரியும்  ஒரு பார்வையைப் பார்த்துவிட்டு மலைப்பாதையில் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.வாழ்நாள் எல்லாம் இறுக்கிச் சுற்றியிருந்த பிடிமானத்தின்   வைராக்கியம் அவள் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியிலும் ஆழப் பதிவதுபோல் இருந்தது.எனக்குள் கைதவறி விழுந்த அந்த  சில்லறையின் சத்தம் குற்ற உணர்ச்சியின் சாவு மணிபோல துளைத்துக்கொண்டேயிருந்தது.

நான் வண்டியைத் திருப்பி வீட்டுக்கு விட்டேன்.எடுத்த எடுப்பிலேயே வண்டியின் வேகத்தை நான்காவது கியருக்கு மாற்றினேன். வேகம் போகப் போக மரங்கள்,மனிதர்கள்,காலங்கள் எனப் பின்னோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.கண்ணில் வாமடையாய் தேங்கிப் போயிருந்த கண்ணீர்  உடைந்து கொட்ட ஆரம்பித்திருந்தது.

அது ஒரு கார்த்திகை தீபத்தின் மூன்றாம் நாள். அப்பொழுது ஏழாவது படித்துக்கொண்டிருப்பேன்.  உற்சவர் மலைசுற்றி வருவார். சாமி வரும்போது மாவளி சுற்றி வரவேற்போம். அதுதான் எங்களுக்கான திருவிழா. அதற்காகப் பசங்களோடு சேர்ந்து பனையேறி முற்றின பனம்பூக்களைப் பறித்து வந்து சுட்டுக் கரியாக்கி துணியில் கட்டி ஓணான்கொடியில்  முக்காலி இணைத்து அதில் வைத்துச்  சுற்றுவோம். அதனை  செய்து எடுத்துக்கொண்டு வீடு திரும்புபோது லேசாக இருட்டியிருந்தது. அம்மா திண்ணைக்கும்,தெருவுக்குமாய் பதட்டத்தோடு நடந்து கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் அவள் முகம் கொஞ்சம் தெளிய ஆரம்பித்தது.

“அப்பாவை வழியில் எங்கனா பார்த்தியா” என்றாள்.

நான் “இல்லை” என்று சொல்வதற்குள்ளே கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு தெருவில் இறங்கினாள்.

 அப்பா மலைக்கு நெய்க்குடம் தூக்கப் போயிருந்தார். தீபம் எரிகிற பதினோரு நாளும் எங்கள் பங்காளிகள்தான் நெய்க்குடம் தூக்குவார்கள். பரம்பரையாக தொடர்ந்து வருகிற முறை. காலையில் போனவர் இன்னும் வீடு திரும்பவில்லை.ஊரே கூடி நின்று எதிர்த்தாலும் தனியாக நின்று சமர் செய்யக் கூடியவள் தான் ஆனால் இருட்டு, சுடுகாடு, துர்கனவுகளுக்குப் பயப்படுவாள். இரவில் கண்ட கனவை நினைத்து விடிகாலையில் நடுக்கூடத்தில் ஒப்பாரி வைத்து அழுவாள். அம்மாதிரியான  நாட்களில் சிந்தி வீசும் சளி உள் முற்றத்துத் தூண்களில் துயரம் வடிந்ததற்கான சாட்சியாய்க் காய்ந்து போய் ஒட்டியிருக்கும். அதற்காக அப்பனிடம் அடியும்,உதையும் வாங்கியிருக்கிறாள்.

என்னை இழுத்துக்கொண்டு எங்கள் கொல்லைக்குப் போகும் மண் பாதையில் போய்க்கொண்டிருந்தாள். நான் எதுவும் புரியாமல் அவள் பின்னாடியே ஓடிக்கொண்டிருந்தேன்.

 எங்கள்  கிணறு ஊரிலேயே பெரிய கிணறு. பதினோரு பங்காளிகளுக்கும் கூட்டுக்கிணறு என்பதால் சேரம் பராமரிக்கப்படாமல் இடிந்து போய் அதில் புதர்ச்செடிகளும் வெப்பை, கொடுக்காபலி, பீவேலிகள் முளைத்து பாழடைந்திருந்தது. மின்சார மையமாகி விட்ட இந்த காலத்தில் கூட கிணற்றைச் சுற்றி ஆறு ஆயில் இன்ஜின் வைத்து இறைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஈசான்ய மூலையில் இருக்கும் வேப்பமரத்தடியில் இடுப்பளவுக்கு புற்று வளர்ந்து புதர்ச்செடியில் மறைந்துபோயிருக்கிறது. போதாக்குறைக்கு கிணற்றை ஒட்டியே சுடுகாடு வேறு. அந்த  கிணற்றையும் சுடுகாட்டையும் பிரிக்கும் கோடு போல ஒத்தையடிப் பாதையிருக்கும். அதன் தொடக்கத்தில் விரிசடையாய்ப் பெருத்த ஒரு புங்கமரம் எல்லோரையும் பயமுறுத்தி  வரவேற்கும் .அது சுடுகாடு என்று யாராவது இறந்தால்தான் ஞாபகமே வரும். மத்த நாட்களில் பயிரிடப்படாமல் முள்ளு முளைத்திருக்கிற காடாகத்தான் தெரியும்.

 மண் ரோடு முடிந்து ஒத்தையடிப் பாதையில் இறங்கியவுடன் அம்மா பயத்தில் அப்படியே  நின்றுவிட்டாள். பக்கத்தில் வந்து ஆள் நின்றால் கூட தெரியாத அளவிற்கு இருட்டு சூழ்ந்திருந்திருந்தது. கீழ்வானில் சோம்பலாக நிலவு எழுந்திருந்தது. தூரத்தில் மாட்டு சலங்கை சத்தம் கேட்டு அம்மா பயத்தில் உறைந்துபோய் நின்றுவிட்டாள் . அதற்குள் நிலா வெளிச்சம் சாண் தூரம் ஏறியிருந்தது. புகையிலிருந்து வெளிவருவதுபோல ஒத்தையடிப் பாதையில் ஏர் மாட்டை ஓட்டிக்கொண்டு பெரியப்பா வந்துகொண்டிருந்தார். அவரை பார்த்ததும் அம்மா நிதானத்துக்கு வந்தாள்.

 பெரியப்பா தன்  கனத்த குரலில் ”என்னாச்சி” என்றார்.

அம்மா யாருக்கோ சொல்வதுபோல ”சாயந்திரம் வேலை முடிச்சிட்டு தொட்டியில் முகம் கழுவும் போது சுருக்குப் பையை தொட்டி மேல வச்சவ மறந்து வந்துட்டேன். இந்த மனுசன வேற இன்னும் காணல” என்றாள்.

 பெரியப்பாவுக்கும் எங்களுக்கும் கோர்ட்டில் கேஸ் போய்க்கொண்டிருக்கிறது. வாய்ப்பேச்சு அத்துப்போய் பல வருஷமாச்சு.

“அவன் மலை இறங்கி வந்து கூட்டுக்காரங்களோடு சேர்ந்து சினிமா கொட்டகைக்கு ஏறிட்டான். வர பாதி ராவு ஆவும்” என்றார்.

 மாட்டின் கயிறை அம்மாவிடம் கொடுத்துவிட்டு என்னைக் கூப்பிட்டார்.  அவர் கூட வந்த தைரியத்தில் முன்னாடி ஓடினேன். மனதில் வேறு மாவளி திருவிழாவின்  ஞாபகமாகவே இருந்தது.

 அந்த ஒத்தையடிப் பாதை மலைப்பாம்பு சேற்றில் போன தடம் போல வளைந்து வளைந்து நீண்டிருந்தது. சுடுகாட்டு வரப்போரம் இருந்த புங்க மரத்தோரம் போனபோது மரத்துக்கு அடியில் உட்கார்ந்திருந்த உருவத்தைப் பார்த்து ஓவென்று  கத்தியே விட்டேன். ஒரு நொடி நெஞ்சே நின்று விட்டதுபோல் இருந்தது. சத்தம் கேட்டுக் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்த உருவம் தலையுய ர்த்திப் பார்த்தது. தழையெல்லாம் உதிர்ந்து ஈர்க்குச்சியாய் விரவியிருக்கும் கிளைகள் வழியாக விழுந்த நிலா வெளிச்சத்தில் அவள் முகம் கோட்டோவியம் போல நிழல் பதிந்திருந்தது .நெற்றியிலும் முன்  வகிடிலும் வைத்திருந்த குங்குமம் மட்டும் அகல் சுடர்ந்தெரிவதாய்ப்பட்டது. சாவதானமாக ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு கையில் வைத்திருந்த சாணி உருண்டையைப் புங்க சருகில் ஒத்தி வரட்டி தட்டினாள்.

அவளைக் கடந்து தொட்டிப் பக்கம் ஓடினேன். அம்மாவின் சுருக்குப்பை கல் தொட்டி மேலே கிடந்தது . எடுத்துக்கொண்டு திரும்பி ஓடியபோது பெரியப்பா ஒத்தையடிப் பாதையில் பாதி வழியில் வந்துகொண்டிருந்தார்.

அம்மா என் கையில் வைத்திருந்த சுருக்குப்பையைப் பார்த்தவுடன் மலையில் எரிந்துகொண்டிருந்த தீபத்தை கைகூப்பினாள். சுருக்குப்பையைத் திறந்து கத்தையாக உருட்டி வைத்திருந்த பணத்திலிருந்து ஒன்றை உருவி இடுப்பில் சொருகியிருந்த மஞ்சத்துணியில் நேர்த்தி காசு முடிந்து வைத்தாள்.

 இரண்டு நாள் கழித்து ஊரே கிணற்றைச் சுற்றிக் கூடியிருந்தது. ஆட்களை விலக்கி  உள்ளே பார்த்தபோது பூப்போட்ட கலர் சேலை உப்பி மிதந்து கொண்டிருந்தது. நான் பயந்துபோய் தூரமாய் நின்று கொண்டேன். யாரோ உள்ளே குதிக்கும் சத்தம் கேட்டது. வெளியே தூக்கிவரும் போது கூட்ட மறைப்பில் பின்னங்கால் மட்டும் வெளிராய்த் தெரிந்தது. நெருங்கிப் பார்த்தபோது பிரட்டிப்போட்ட தவளையாட்டம் ஊதிப்போய் பெருத்திருந்தது. கைகால்கள் எல்லாம் மீன்கள் கொத்தி புண்ணாயிருந்தது. முகம் மட்டும்  சிதையாமல் நெற்றியில் குங்குமம் தீற்றித் தீற்றி கருத்துப்போயிருந்த தடம் அழியாமல் தெரிந்தது. தூரத்தில் அம்மா வருவதைப் பார்த்து ஓடிப்போய் சொன்னேன்.

    முதுகில் சுளீர் என்று விளாசினாள்.

“பாவிப்பயலே ஒத்த வார்த்த கூட சொல்லலையே ஐயோ அவளக் கொன்ன பாவம் நம்மளையும் சுத்துமே” என்று அலறினாள்.

அன்று இரவு உட்கார்ந்திருந்த அந்த புங்க மரத்தடியிலேயே அவள் உடல் வெகு நேரம் தனியாகக் கிடந்தது. போலீஸ் வந்து தூக்கிப் போன போது காத்தாயி கிழவி ”முதமுறையா சுடுகாட்டிலிருந்து பொணம் ஊர் நோக்கிப் போகுது” என்றாள்.  ”அவ உசுர நிறுத்தி வைக்கிற ஒரு சொல்லு கூட இல்லாத  முகமாக கருகிப் போச்சா இந்த பூமி” என்று இரவெல்லாம் ஒப்பாரி பாடிக்கொண்டிருந்தாள் அம்மா.

 ஒரு நாள் சாயங்காலம் பள்ளியிலிருந்து வீட்டுக்குப் போனபோது திண்ணையில் கூட்டம் கூடியிருந்தது.  கொலைகாரப்பாவி என்று அம்மா ஆங்காரமாக கத்திக்கொண்டிருந்தாள். தூரத்தில் பார்த்தபோது  தெருவில் பேண்டு சட்டை போட்டிருந்த ஒருவர் தலைகுனிந்து நின்றிருந்தார். அவர் பக்கத்தில் என் வயதொத்த சிறுமி தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். அவள் கையில் நைந்து போன அவள் அம்மாவின் புகைப்படம் இருந்தது. ஏதோ ஞாபகம் வந்தவள் போல உள்ளே போய் அடுக்களையிலிருந்து ஒரு தாலியை எடுத்து வந்து அவர் மீது வீசினாள். அன்றிரவு இறந்துபோனவள் அதைத்தான் சாணியில் வைத்து வரட்டி தட்டியிருந்திருக்கிறாள்.

  அவர்கள் தெருவைக் கடந்து புள்ளியாய் மறையும் வரை  பார்த்துக்கொண்டிருந்தோம்.  அந்த சிறுமி திரும்பித்  திரும்பி பார்த்தபடியே போய்க்கொண்டிருந்தாள். அவள் கையில் வைத்திருந்த புகைப்படம் மங்கலாக என் நினைவில் அப்படியே தங்கிவிட்டது.

வெளியே வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே போனபோது கிழக்கு வானில் மேகம் இருட்டிக்கொண்டு வந்தது.  அம்மா திண்ணையில் அர்ச்சனாவுக்கு சோறூட்டிக்கொண்டிருந்தாள். நான் எதுவும் பேசாமல் கனத்துப் போய் அறையில் தாளிட்டு படுத்துக்கொண்டேன். நடுச்சாமத்தில் சன்னமாகப்  பாடல் கேட்டு எழுந்துபோய் வெளியே பார்த்தபோது திண்ணையில் விளக்கேற்றி அதன் முன்னால் முழந்தாளிட்டு பாடிக் கொண்டிருந்தாள். வெளியே மழை வலுத்திருந்தது.

     மாரி…..தெறந்துடுச்சி கேணி கயிர் தூங்கிடுச்ச்சி……..
    சோலை திறந்திடுமே சோத்து பானை ரெம்பிடுமே
    உசுரு போகாத ஒத்த சொல்லு முளைத்துடுமே………
சேதாரம் இல்லாம சேத்து புடுச்சி காத்திடும்மா
    சேந்து கிணத்தோரம் சேலை துணி நா படைக்கேன்………..

கிழக்கு வானில் வெட்டிய மின்னல் வெளிச்சத்தில் இருளிட்டிருந்த மலை ஒரு கணம் வெளிச்சமாகியது.

***

  • மாரி.கிருஷ்ணமூர்த்தி – திருவண்ணாமைலையில் வாசித்து வரும் இவர். சிறுகதைகள் எழுதிவருகிறார். தொடர்புக்கு -krishnamoorthi973@gmail.com

விடுமுறை தினத்தில் ஓர் அனார்கிஸ்ட்

1

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

பெண்கள் கல்லூரியொன்றில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றும், கிரிக்கெட்டைக் குறித்து முனைவர் பட்ட ஆய்விலும் ஈடுபட்டுள்ளவரான, மாதத்தில் இரண்டாம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை அவருடைய காதலி வைஷ்ணவியோடு செலவிடும் பரத்குமார், இன்னும் கண் விழித்திருக்கவில்லை. நான் எழுந்து ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இருந்திருக்கும். தேநீர் மட்டுமே அருந்தியிருந்தேன்.  இரவு முழுக்க மழை விடாமல் பெய்ததாலும், நானும் அவரும் குடித்திருந்த விஸ்கி, தாகத்தைத் தூண்டிவிட்டதாலும் நான் சரியாகத் தூங்கியிருக்கவில்லை.

”ஆல்கஹால் நுகர்வு நீரிழப்பையும், வைட்டமின் பி குறைபாட்டையும் உருவாக்கும்”.

பரத்குமார், ஒவ்வொரு ‘செசனு’க்குப் பிறகும் இதைத் தவறாமல் சொல்வார்.  நாங்கள் குடிப்பதை செசன் என்றே அழைப்போம்.  காலையில் எழுந்ததுமே முழு எலுமிச்சையைப் பிழிந்து நீரில் கலந்து அருந்துவதோடு, காலை உணவோடு வைட்டமின் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வார்.  சில மாதங்களாக ஒவ்வொரு செசனுக்குப் பிறகு தூங்கி எழுந்ததும் நானும் வாய் கொப்பளித்துவிட்டு எலுமிச்சை பிழிந்த குளிர்ந்த நீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொண்டேன்.  நாற்றமும், துவர்ப்புமாக இருக்கும் வாய்க்குள் குளிர்ந்த நீரை ஊற்றி மெதுவாக அருந்துவேன்.  குடியின் களைப்போடு, குற்றவுணர்வும் குறைவதாகத் தோன்றும்.  ஒவ்வொரு செசனையும் ஆர்வத்தோடு துவங்கினாலும் முடிவில் அளவற்ற களைப்பும், சோர்வுமே மிஞ்சுகிறது.  ஆனால் பரத்குமார் எதையுமே அளவாகவும் கச்சிதமாகவும் செய்பவர்.  பரத்குமார், உணவிலிருந்து, விஸ்கி, பியர் என எதுவானாலும் ஒருநாளும் அளவு கடந்ததில்லை.  என்னைப் போன்று எல்லைகளைத் தொட விரைபவர்கள் எப்போதுமே முனைகளில் சறுக்கி விழுகிறார்கள். 

துணி துவைக்கும் எந்திரத்தில் அழுக்குத் துணிகளைப் போட்டுவிட்டு அறையின் கதவைத் திறந்து வெளியே வந்தேன்.  முழுக்க கருஞ்சாம்பல் நிறத்திலிருந்த வானத்தில் கருமேகங்கள் தாழக் குவிந்திருந்தன.  சூரிய வெளிச்சம் குறைவாகவே இருந்தது. காற்றே இல்லாததால் வழக்கமாக இருக்கும் குளுமையும் உடலில் பரவவில்லை.  இந்தக் கருஞ்சாம்பல் நிறமே, அறிந்து கொள்ள முடியாத சோர்வும் (ஓயாத மழைக்காலத்தில் பசியோடும், பாறைகளிலிருந்து கசியும் நீரின் ஈரக் கசகசப்போடும் குகையின் கண்ணுக்கு அப்பால் பார்வையை வெறித்திருக்கும் குகைவாசிகளின் சோர்வு), கையறு நிலையையும்  அளிப்பது.   மழை ஓய்ந்து சாம்பல் பூத்திருக்கும் நாட்களில் சிலமுறை எனக்குத் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமும் எழுந்திருப்பதைக் கவனித்திருக்கிறேன். பல கோடிக் கண்கள், பல்லாயிரம் வருடங்களாக இந்த கருஞ்சாம்பல் நிறத்தை ஊன்றி கவனித்திருக்கும்.  வெறுமை நிறைந்த கண்கள் பார்த்துப் பாத்தே சாம்பல் நிறத்திற்கு ஒரு துர்க்குணம் பீடித்திருக்கிறது. நாங்கள் வசிக்கும் அறை நான்கு தளங்கள் கொண்ட கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருப்பது.  மூன்று தளங்கள் உயரம் வரை ஒரு செண்பக மரம் வளர்ந்திருக்கிறது.  அதற்கு மேல் அதனால் வளர முடியாதா எனத் தெரியவில்லை.  மாடியின் கைப்பிடிச் சுவரிலிருந்து கவனமாக இறங்கினால் மரத்தின் தலையில் கால் வைக்கலாம்.  மழை கழுவிய அதன் இலைகள் ஒவ்வொன்றிலும் நீரின் மின்மினுப்பு.  மடிவாளாவாசிகள் வெளியே நடமாடத் துவங்கி விட்டார்கள்.  கலவரத்தின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதும் பழைய தெருக்களை ஒவ்வொரு கால்களும் தேய்க்கத் துவங்கிவிட்டன.

பரத்குமாரின் கல்லூரிக்கு மூன்றாவது நாளாகவும் விடுமுறை அளித்திருந்தார்கள்.  அவர் வேலைக்குச் செல்லாததால் நானும் விடுப்பு எடுத்துக் கொண்டேன்.  இன்றொரு நாள் நான் விடுப்பு எடுத்துக் கொள்வதால் நான் பணியாற்றும் வங்கியில் எதுவுமே நின்று விடாது.  தவிர நான் அந்த வங்கியை மேலாண்மை செய்யும் ஒருவனல்ல, சாதாரண ’டெல்லர்’ மட்டுமே.  நாள் முழுக்க பணத்தை எண்ணுவதும், வாடிக்கையாளர்களிடம் சேமிப்புக் கணக்கோ, நடப்புக் கணக்கோ துவக்குவதற்காகப் பேசுவதைத் தவிர வேறு வேலைகள் இல்லை.  இன்னும் சில நாட்களில் காப்பீட்டுத் திட்டங்களை டெல்லர்களும் விற்க வேண்டியிருக்கும் என்றிருக்கிறார் எனது மேலாளர்.  இந்த உலகில் அத்தனை பேரும் எதையாவது விற்கும் அல்லது விற்பதற்குத் திட்டமிடும் சேல்ஸ்மேன்களாகவே மாறியிருக்கிறார்கள். 

அரைக்கால் சட்டையும், டி-சர்ட்டும் அணிந்த இரண்டு பெண்கள் சில ஆண்களோடு தெருவின் முனையிலிருக்கும் தேநீர் கடையில் நின்றிருக்கிறார்கள். சிலர் கைகளில் தேநீர் டம்ளர்களும், இன்னும் சிலர் கைகளில் சிகரெட்டும்.  பெண்கள் ஜீன்ஸ் அணிவதே பழைய பாணியாகிவிட்டது. அரைக்கால் சட்டையும், தளர்வான டி-சர்ட்டும் அணிந்த பெண்கள் ரொம்பவே சகஜமாக சமிக்ஞைகளைக் கடக்கிறார்கள், சாலையோரங்களில் நின்று பேசுகிறார்கள், வெளியூர்களிலிருந்து வரும் வயதானவர்களை வாய் பிளக்க வைக்கிறார்கள்.

”என்ன வேடிக்கை பாக்க ஆரம்பிச்சீட்டீங்களா?” பரத்குமார் கேட்டார்.

நான் பதில் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தேன். என்னருகே வந்து நின்ற அவர், உள்ளங்கைகளை வேகமாகத் தேய்த்து கண்களின் மேல் வைத்தார்.   நானும் அவரும் தேநீர் கடையில் நின்றிருந்தவர்களைப் பார்த்தோம். பேசுவதும், சிரிப்பதும் செல்பேசியைப் பார்ப்பதுமாக இருந்தவர்களில் ஒன்றிரண்டு பேர் இதே தெருவாசிகள் என்றாலும் எங்களுக்கு அவர்கள் பெயர் எதுவும் தெரியாது. உச்சந்தலையில் கொண்டை வைத்திருக்கும், கருகருவென முகம் முழுக்க அடர்ந்த தாடியோடு அந்தக் கூட்டத்தில் இருக்கும் ஒருவன் முன்பொருநாள் எங்களது கட்டிட வாசலில் அவனுடைய செல்பேசியை தவற விட்டிருந்தான். அறைக்குத் திரும்பும் போது அதைக் கவனமாக நாங்கள் எடுத்து வைத்திருந்து திருப்பிக் கொடுத்தோம். அவன் பெயரும் கூட எங்களுக்குத் தெரியாது.  அறிமுகம் செய்துகொள்ளத் தேவையில்லாதவர்களின் பெயரைக் கேட்பது அவர்களது வசிப்பிடத்திற்குள் அனுமதியில்லாமல் நுழைவதற்கு ஒப்பானது. நாமெல்லோரும் கண்ணுக்குப் புலனாகாத வசிப்பிடமான நமது பெயர்களிலே வாழ்கிறோம்.

”டீ சாப்டீங்களா?

”சாப்டேன்,  உங்களுக்கும் வெச்சிருக்கேன். சூடு பண்ணிக் குடிங்க”

பரத்குமார் அறைக்குள் சென்றார்.  செருப்பணிந்திராத எனது பாதங்களில் ஈரக்குளுமை பரவியது.  மழையில் நனைந்திருந்த மாடியில் அங்குமிங்கும் பழைய பொருட்கள் சிதறியிருந்தன. வீட்டு உரிமையாளரின் உபயோகமற்ற பழைய பொருட்கள்.   ஏற்கனவே சிதறியிருந்தாலும், பார்ப்பதற்கு நேற்று பெய்த மழையில் சிதறியவையாகத் தோன்றின.

தேநீர் கடையிலிருந்தவர்கள் கலைந்து சென்றதும், நானும் அறைக்குள் சென்றேன்.  நாங்கள் அறை என அழைப்பது உண்மையில் இரட்டைப் படுக்கையறைகள் கொண்ட  அறுநூறு சதுர அடிகள் அளவுள்ள ஒரு வீடு. வரவேற்பறை பெரிது, படுக்கையறைகள் சிறியவை.  பரத்குமார் தான் இந்த அறைக்கு முதலில் குடிவந்தவர்.  நான் அவருடைய அறை நண்பராகச் சேர்வதற்கு முன்பு அவருடன் பணியாற்றிய இருவர் அவரோடு தங்கியிருந்தனர். அவர்களில் ஒருவர் எங்கள் ஊர்க்காரர் (கோயமுத்தூர்).  அவர்கள் அங்கிருந்து வேறு ஊர்களுக்குச் சென்றதும் என்னை அவரோடு சேர்த்து விட்டது எங்கள் ஊர்க்காரர்தான்.  இரண்டு ஆண்டுகளாக ஒன்றாக வசிக்கிறோம். அறையிலிருக்கும் நாற்காலிகள், சமையலறைப் பாத்திரங்கள், எரிவாயு இணைப்பு, துணி துவைக்கும் இயந்திரம், சிறு நூலகம் (கிரிக்கெட் வரலாற்றுப் புத்தகங்கள், விளையாட்டு வீரர்களின் சுயசரிதைகள், ஆங்கில, தமிழ் நாவல்கள், அரசியல் புத்தகங்கள், ஊடகத் தொடர்பியல் பாடநூல்கள்), 42 அங்குல தொலைக்காட்சி, மேஜைக்கணினி, அதனோடு பிணைந்திருக்கும் ’போஸ்’ ஸ்பீக்கர்கள், குளிர்சாதனப் பெட்டி அனைத்துமே அவருடையவை. சம்பளம் குறைவுதான் என்றாலும் அவர் வசதியான வீட்டைச் சேர்ந்தவர். அவருடைய ஊர் சேலம்.  வாடகை பதினைந்தாயிரத்தில் நான் பாதியைத் தருகிறேன். மற்ற செலவுகளிலும். 

”இன்னைக்கு எங்கயாவது வெளியே போலாமா? மைசூர் ரோட் கொஞ்ச தூரம். கலவரத்துல எதையெல்லாம் கொளுத்தியிருக்காங்கனு பார்க்கலாம்”

எனக்கு அறையை விட்டு வெளியே செல்லவே ஆர்வம் இல்லாமலிருந்தது.  தவிர கண்ணில் நிறைந்திருந்த சாம்பல் நிறம் அறைக்குள்ளும் நுழைந்து விட்ட உணர்வு. 

”போலாம். ஆனா உங்க கார் எப்போ திரும்பி வரும்னு தெரியலையே”

பரத்குமாரின் காரை அவருடைய வேறு ஒரு நண்பர் சொந்த ஊரான மாண்டியாவில் நடக்கும் கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக எடுத்துச் சென்றிருந்தார்.  அங்கேயும் கலவரம்தான். காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக நடந்த கலவரங்களில் இரண்டாவது பெரிய கலவரமே கடந்த இரண்டு நாட்களாக நடந்தது என்கிறார்கள்.  உயிர்ச்சேதம் இல்லையென்றாலும் அதிகப்படியான பொருளிழப்பு.  ரப்பர் டயர்கள் எரியும் வாசனை நாங்கள் வசிக்கும் தெருவிலும் அடித்தது. 

”ஆமால்ல, நான் அத மறந்துட்டேன்.  வைஷ்ணவியும் ஊர்ல இல்ல”.

 வழக்கமாக ஒவ்வொரு இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நான் கோயமுத்தூர் சென்று விடுவதால், வைஷ்ணவி எங்கள் அறைக்கு வந்து விடுவாள்.  பரத்குமாரின் உயரத்திற்கும், உடல்வாகிற்கும் கொஞ்சமும் குறைவில்லாமல் இருப்பாள்.  சட்ட மேற்படிப்பு படிக்கிறாள். நான் எப்போதும் அவளிடம் குறைவாகவே பேசுவேன்.  ஒருசில நாட்கள் இரவு உணவு அருந்துவதற்காக உணவகங்களில் சந்திப்போம்.  பெரும்பாலும் புடவைகளில் மட்டுமே அவளைப் பார்த்திருக்கிறேன் என்றாலும் எங்களது அறையில் சில நவீன உடைகளையும் அவள் வைத்துச் சென்றிருக்கிறாள். இரண்டு பெண்களுக்கு இடையே வயதைத் தவிர வேறெந்த வேறுபாட்டையும் என்னால் பார்க்க முடிந்ததில்லை. முழுக்க பெண்கள் மட்டுமே சூழ இருக்கும் ஒரு கல்லூரியில் பணியாற்றுபவர் ஒரு குறிப்பிட்ட பெண்ணை மட்டும் காதலிப்பது என்னுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டது. என் சக ஊழியர்களாக இருக்கும் பெண்களைக்கூட நான் சரிவரப் பார்த்ததில்லை. எப்போதோ ஒருமுறை வங்கிப் பயிற்சிக்காக ஹைதராபாத் சென்றிருந்த போது நாங்கள் (சக பயிலுநர்கள்) தங்கியிருந்த அறைக்கு அருகேயிருந்த மற்றொரு அறையில் இரண்டு பெண்கள் தங்கியிருப்பதாகவும், அவர்களைச் சந்திக்க ஓயாது ஆண்கள்  வருகிறார்கள் எனவும் என்னுடன் தங்கியிருந்தவன் சொன்னான். அவன் சொன்ன ‘ஓயாது’ என்பதே பொய்தான்.  பகல் முழுக்க என்னோடுதான் இருக்கிறான்.   பயிற்சி முடிந்து எங்காவது சுற்றிவிட்டு (சார்மினார், ஹுசேன் சாகர் ஏரி, வணிக வளாகங்கள்) அறைக்குத் திரும்பவே பத்து மணிக்கு மேலாகி விடுகிறது.  எப்போதுதான் அவன் அருகே தங்கியிருக்கும் பெண்களைப் பார்த்தானோ? ஆனால் ஒரு வாரமாக நாங்கள் அந்தக் கற்பனையிலேயே கிளர்ந்திருந்தோம். செயற்கை மணமூட்டிகளின் வாசனை மிதக்கும் நன்கு ஒழுங்கு செய்யப்பட்ட இரட்டைப் படுக்கையின் மீது படுத்திருக்கும் பெண்களின் மீது மரத்துண்டாகச் சரியும் ஆண்களில் இருவராக நாங்களும் இருந்தோம்.  அவர்களுடைய உடல்களே ஒவ்வொரு ஆணையும் சில நிமிடங்களே அசைய அனுமதிக்கப்பட்ட இலையாக உதிர்த்தன (ஒவ்வொரு ஆணும் ஒன்றுபோலவே உதிரும் ஓர் இலைதான்). அதுதான் பெண்கள் என்னை நெருங்கி வந்த குறைந்தபட்ச தொலைவு (ஆனால் உண்மையிலேயே பெண்கள் அங்கே தங்கியிருந்தனரா எனத் தெரியவில்லை).

”ஒன்னு செய்யலாம், என்னோட கூட வேல செஞ்ச ஒருத்தன் இருக்கான். ரொம்ப இண்ட்ரஸ்டிங்கான கேரக்டர். அவர் வீடு ஜே பி நகர்ல இருக்கு. ஒருவேளை அவன் போன் எடுத்தா மத்தியானம் சாப்பாட்டுக்குக் கூட வர சொல்லலாம். சமைக்கற வேலை மிச்சம்”. 

பரத்குமார் செல்பேசியை எடுத்து சிலமுறைகள் அழைத்தார். ஏற்கப்படாத அழைப்புகளால் அவர் சலிப்பேதும் அடையவில்லை. செல்பேசியை சுழற்றிக் கொண்டே, நாம் அழைக்கும் விசயம் முக்கியமானது என்று அவர் தெரிந்து கொள்வதற்காகவே அழைப்புகளை எளிதில் ஏற்கமாட்டார் என்றார். தவிர அவரிடம் திறன்பேசி கிடையாதென்றும், பழைய மாதிரி செல்பேசியே வைத்திருக்கிறார் என்றும் சொன்னார்.  எனக்கு வியப்பாக இருந்தது. நான் துணி துவைக்கும் இயந்திரத்திலிருந்த பாதி உலர்ந்த துணிகளைக் காயப் போடுவதற்காக வெளியே எடுத்துச் சென்றேன். மீண்டும் மழை வந்தால் துணிகள் காயாதென்றாலும் துணிந்து கொடியில் காயப் போட்டேன். காற்றும் இல்லையென்பதால் துணிகள் காய்வதற்கு எப்படியும் ஒருநாள் கூட ஆகிவிடும்.

உள்ளே நுழைந்ததும் பரத்குமார், அவருடைய நண்பர் அவரை அழைத்து இரவு உணவிற்குத் தோதாக சாயங்காலம் வரச் சொன்னதாகச் சொன்னார். நாங்கள் இருவரும் ஒரு கேரளா உணவு விடுதியைத் தேர்ந்து, தேங்காய் சேர்த்த மாட்டுக்கறி வறுவலும், மோர்க்குழம்பு ஊற்றிய மட்டை அரிசிச்சோறும் சாப்பிட்டோம். நான் இரண்டு மணிநேரம் உறங்கினேன். பரத்குமார் கணினியில் அவருடைய ஆய்வுக்கான தகவல் திரட்டில் ஈடுப்பட்டிருந்தார். அவர் மதிய உறக்கத்தை விரும்புவதில்லை.   

நாங்கள் வாடகைக் காரில் கிளம்பினோம். சாம்பல் நிறம் மங்கிப் போய் இருந்திருந்தாலும் சூழலே சோர்விலிருந்து இன்னும் மீளவில்லை. வழியெங்கும் எலும்புக் கூடுகளாக இருந்த இரும்புத் தாங்கிகளில் விளம்பரப் பதாகைகள் நீக்கப்பட்டிருந்தன.  நீதிமன்றம் அப்படியொரு ஆணை பிறப்பித்திருந்தது. ஒரு நகரம் தனது குடிமக்களுக்கு நிதி வளர்ச்சியை, வீட்டு வசதியை, உடல்நலத்தை, செல்வத்தை விளம்பரப் பலகைகளின் வழியாகவே அளிக்கிறது. தெருக்களில் பார்க்க முடியாத அழகையும், வாக்குறுதியையும், நம்பிக்கையையும் கொண்டிருக்கும் விளம்பரப் பலகைகள் இல்லாமல் நகரமே மூளியாகக் கிடந்தது.

ஓட்டுநர் திறன்செயலியில் தோன்றும் வழிப்படத்தைப் பார்த்துக் கொண்டே ஓட்டினாலும், அவ்வப்போது பரத்குமாரிடம் வழி கேட்டார். நாங்கள் சிமெண்ட்டும், சுண்ணாம்பும் பூசாமல் செங்கற்கள் வெளியே தெரியும் வண்ணம் கட்டப்பட்டிருந்த ஒரு குடியிருப்பின் வெளிப்புறக் கதவை அடைந்தோம். பரத்குமார் ஓட்டுநரிடம் (அவர்களை சாஃபேர் எனும் பிரெஞ்சு சொல்லால் அழைக்கிறார்கள்) பணம் வழங்கினார். அது உயர்வர்க்கக் குடியிருப்பு என்பது பார்த்தாலே தெரிந்தது.  ஒன்றுக்கொன்று சரியான அளவில் விலகியிருக்கும் ஒவ்வொரு வில்லாவும் நேர்த்தியாகக் கட்டப்பட்டிருந்தன. இந்த நகரத்தில் இவ்வளவு இடைவெளி விட்டுக் கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகளைப் பார்ப்பதே அரிது. ஜே பி நகரின் எட்டாவது முனையிலிருக்கும் இந்தக் குடியிருப்பு ஒருவகையில் நகரத்திலிருந்தே விலகியிருந்தது.  மெட்ரோ இரயிலுக்கான வேலைகள் அந்தக் குடியிருப்பை ஒட்டி நடந்து கொண்டிருந்தன. 

மூன்றாவது வரிசையில் ஏறக்குறைய இருட்டில் மூழ்கியிருந்த வீட்டை அடைந்தோம். வாசலில் ஒரு பழைய ஃபியட் கார் எண் பலகை இல்லாமல் நின்றிருந்தது.  அழைப்பு மணியை அழுத்தியதும் கதவைத் திறந்தது ஒரு பெண். அவள் அருகே ஒரு லாப்ரடார் (அவள்தான் பின்னொரு உரையாடலில் நாயின் இனத்தைச் சொன்னாள்) நாய் நின்றிருந்தது. பரத்குமாரைப் பார்த்துப் புன்னகைத்தாள்.  உள்ளே வரச் சொன்னாள். நாய் குரைத்ததும் நான் கொஞ்சம் தயங்கினேன்.

 எந்த நாயும் உடனே ஒருவரைக் கடித்து விடாது. நாய் குரைப்பதே வந்திருப்பவரோடு அது செய்து கொள்ளும் ஒரு தொடர்பு. நாம்தான் அதற்குச் சொல்ல வேண்டும் வந்திருப்பவர் நண்பரா எதிரியா என்று. தவிர நாய் குரைப்பதே பயமுறுத்துவதற்காக அல்ல. அது அதனுடைய மொழி. அவள் இவ்வளவு சொல்லியும் எனக்குப் பயம் போகவில்லை. பரத்குமார் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார்.   நாய் அமைதியாக வாலாட்டியது. நான் அதைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். கதவைத் திறந்தவள் பரத்குமாரின் நண்பருடைய மனைவி. பரத்குமார் அவளுடைய பெயரைச் சொல்லவில்லை. பன்னர்கட்டா விலங்கியல் பூங்காவில் விலங்குகள் நல மருத்துவராகப் பணிபுரிகிறாள். அங்கே புலிகள், சிங்கம் போன்றவையும் உண்டு. நான் ஆர்வம் மிகுதியில் எந்த விலங்கிற்கு அவள் மருத்துவம் பார்க்கிறாள் என்று கேட்டேன்.

”யானைகள். எப்போதாவது… அரிதாகப் புலிகளுக்கும்”

”மை டியர் ஃபிரண்ட். வெல்கம் டூ மை டென்”, கைகளை அகல விரித்துக் கொண்டு அவருடைய நண்பர் உள்ளறையிலிருந்து வெளியே வந்தார்.  பரத்குமாரைக் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டார். இடுப்பில் வெறும் துண்டை மட்டுமே சுற்றியிருந்த அவர் முகத்தில் நீண்டிருந்த தாடியும், “பொடனி”க்கும் கீழே தொங்கும் தலைமுடியும், அவர்கள் வசிக்கும் வீட்டிற்குத் தொடர்பில்லாமல் இருந்தது. 

 ”ஒய் டோண்ட் யு வியர் சம் சர்ட்ஸ் டியர்?”  அவருடைய மனைவி சொன்னாள்.

 ”டோண்ட் மைண்ட்.  தே டோண்ட் மைண்ட் ஈவன் இஃப் ஐம் நாட் வியரிங் எனிதிங் இன் மை வெய்ஸ்ட், வில் யு?”  என்னைப் பார்த்துக் கேட்டார்.   நான் புன்னகைத்தேன்.

 பரத்குமார் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். 

”என்னோட பேர் பிரசாந்த். ஊரு மங்களூரு” என்றார் தமிழில்.  என்னோடு கை குலுக்கினார்.  கொஞ்சமாகத் தமிழ் தெரியும் என்பது அவர் பேசியதிலிருந்து தெரிந்தது.   அவருடைய மனைவியை அறிமுகம் செய்து வைத்தார்.  அவளும் கைகுலுக்கினாள்.  விரித்திருந்த கூந்தலின் ஒரு பகுதியை இடது தோளின் மீது போட்டிருந்தாள்.  அது அவள் விலாப்பகுதி வரை மறைத்திருந்தது.  பொட்டில்லாத முகம் சற்றே உப்பியிருந்தது. அவளும் மத்தியானம் உறங்கியிருக்கக் கூடும்.  சிவந்த உதடுகள் வீங்கியதைப் போலிருந்தன. பழுப்பு நிறக் காட்டன் முழுக்கால் சட்டையும், ஊதா நிறத்தில் ஒரு சட்டையும் அணிந்திருந்தாள். பணியிலிருந்து திரும்பியிருக்கிறாளா?. “அவளோட பேரு வசுதா”.

நாங்கள் சோபாவில் அமர்ந்தோம். அவர்களுடைய நாயோடு கைகுலுக்கச் சொன்னாள் வசுதா. நான் தயங்கினேன். அவள் விடாமல் நாயைப் பற்றிப் பாடமெடுத்தாள்.

”இவன் பெயர் டைசன்.  இவனும் வீட்டிற்கு வந்திருப்பவர்களோடு அறிமுகம் செய்து கொள்ள விரும்புவான்”. எதிர் வரிசையிலிருந்த சோபாவின் நடுப்பகுதியில் அவள் உட்கார்ந்திருந்த விதமும், நாடகீயமான உடல்மொழியும், ஆங்கிலமும்  நாயை மட்டுமல்ல, புலியைக் கூட வீட்டிலே வளர்க்கக் கூடியவளைப் போன்றிருந்தாள்.  மேலும் சில முறைகள் நாயோடு கைகுலுக்க வலியுறுத்தினாள். 

சோபாவில் இருந்து எழுந்து நாயின் முன்காலைப் பற்றிக் குலுக்கினேன்.  நாக்கை வெளியே நீட்டியிருந்த டைசனின் மூச்சுக் காற்று என்மீது பட்டது. என்னால் நுகர்ந்தறிய முடியாத நாற்றம் என் முகத்தில் பட்டது.

பிரசாந்த் அவளிடம் தேநீர் போடச் சொன்னார்.  அவள் எழ முனைந்ததும், வேண்டாம் நாம் மதுவருந்துவோம் என்றார்.  நானும் பரத்குமாரும் அவருடைய மனைவியைப் பார்த்தோம்.  அவள் ஒன்றும் சொல்லவில்லை.  பிரசாந்த் உள்ளே சென்று அரைக்கால் சட்டையையும், சட்டையையும் அணிந்து கொண்டு ஒரு பை கேட்டார்.  ஓவியங்கள், பொம்மைகள், தரைவிரிப்பு, நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களென வரவேற்பறை நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தது. சாவிமாட்டியில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு துணிப்பையை எடுத்துக் கொடுத்தாள். கைப்பையைத் திறந்து பணத்தையும்.  இரண்டையும் பெற்றுக் கொண்ட பிரசாந்த் சமையலறைக்குள் நுழைந்து பின்கதவைத் திறந்து வெளியே போனார். அவர்களது குடியிருப்பின் சுற்றுச்சுவருக்கு அருகேயே ஒரு மதுக்கடை இருப்பதாகச் சொன்னாள் வசுதா. அவள் இல்லாத நேரத்திலும் அடிக்கடி பிரசாந்த் குடிப்பதற்கு மதுக்கடை அருகேயிருப்பது வசதியாகப் போய்விட்டதென்றாள்.  

”ஹி வில் நாட் கோ எனிவேர் அதர்வைஸ். ஹி ஹாஸ் நாட் சீன் த சன்லைட் ஃபார் மெனி மன்தஸ்”. அவள் முகத்தில் பரவிய சலிப்பைக் கவனித்தேன். சிவந்த உதடுகளைச் சுழித்தாள். பரத்குமாரைப் பார்த்து, அவருடைய முனைவர் பட்ட ஆய்வு எந்த அளவில் உள்ளதென்று கேட்டாள். இன்னும் ஆறு மாதங்களில் முடிந்து விடுவதாகச் சொன்னார். 

மூன்று வருடங்களுக்கு முன்பு அவரும், பிரசாந்தும் ஒன்றாகத்தான் முனைவர் பட்ட ஆய்வைத் துவக்கியிருக்கிறார்கள்.  அவர் கிரிக்கெட்டிலும், பிரசாந்த் இலத்தீன் அமெரிக்க இலக்கியத்திலும்.  ஆனால் இடையில் பிரசாந்த் பணியிலிருந்து நின்று விட, சில மாதங்கள் அவர்கள் தொடர்பிலேயே இல்லை.  அவருடைய எண் எப்போதாவதுதான் உயிர்த்திருக்கும்.  மின்னஞ்சல்களுக்கும் பதில் இல்லாததால் பரத்குமார் அவரோடு பேசுவதையே நிறுத்தியிருந்தார். இடையே ஒருமுறை பிரசாந்த் பரத்குமாரை அழைத்து கல்லூரி நிர்வாகம் இன்னுமே அவருக்கு விடுவிப்புச் சான்றிதழை வழங்காமல் இருப்பதாகவும், அதனைப் பெறுவதற்கு உதவி செய்ய முடியுமா என்றும் கேட்டிருந்தார்.  பரத்குமார் முயற்சி செய்து அதனை வாங்கிக் கொடுத்தார் (இவை அனைத்துமே காரில் வரும்போது பரத்குமார் என்னிடம் சொன்னது).  ஏன் அவர் பணியிலிருந்து விலகினார் என்று கேட்டதற்கு அவருடைய பேச்சும், நடத்தையும், எதையும் மதிக்காத அவருடைய போக்கும் கல்லூரி நிர்வாகத்திற்குப் பிடிக்கவில்லை என்றார். 

”ஆனா ரொம்ப பிரில்லியண்ட். ஒரு அனார்கிஸ்ட்”.  நான் அந்தச் சொல்லையே அப்போதுதான் முதன்முறையாகக் கேட்டேன். ஆனால் அதன் அர்த்தம் என்னவென்று கேட்டுக் கொள்ளவில்லை.    

பிரசாந்த் வந்ததும் அவருடைய அறைக்குள் நுழைந்து துணிப்பையை வைத்துவிட்டு, குளிர்பதனப் பெட்டியிலிருந்த பழங்களை எடுத்து நறுக்கினார். ஏதோ ஒரு பாடலை விசிலடித்தார்.  நாங்கள் வந்தது அவருக்கு உற்சாகமளித்திருக்கக் கூடுமென்று நினைத்தேன். மீண்டும் குளிர்பதனப் பெட்டியைத் திறந்து முட்டைகளை எடுத்தார்.  என்னைக் கடந்து போகும்போது சொன்னார்:

”அஞ்சு நிமிசம்.”

வசுதா எழுந்து மற்றொரு அறைக்குச் சென்றாள். நாங்கள் இருவர் மட்டுமே தனியாக இருந்தோம். ஏதும் பேசாமல் அமைதியாகக் காத்திருந்தோம். நான் வரவேற்பறையை நோட்டமிட்டேன். வேலைக்குச் செல்லும் ஒரு பெண்ணால் இவ்வளவு நேர்த்தியாக வீட்டைப் பராமரிக்க முடியுமா?  வீட்டு வேலைக்கு ஆள் வைத்திருப்பார்கள் என யோசித்தேன். பிரசாந்த் ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் பழத்துண்டுகளையும், ஒரு தட்டில் மூன்று ஆம்லெட்டுகளையும் எடுத்து வந்தார். இடது கையில் அழகான மூன்று கண்ணாடி டம்ளர்களையும்.  

”ஐஸ்கட்டி வேணுமில்ல”

பரத்குமார் எழுந்து போய் குளிர்பதனப் பெட்டியிலிருந்த ஐஸ் கட்டிகளை எடுத்து, சமையலறையிலிருந்த ஒரு கிண்ணத்தில் போட்டு எடுத்து வந்தார். பிரசாந்த் அவருடைய அறைக்குள் அழைத்தார்.

அறையில் எல்லாமே சிதறியிருந்தன.  எனக்குக் காலையில் பார்த்த எங்கள் வீட்டு உரிமையாளரின் பழைய பொருட்கள் நினைவில் எழுந்தன. தரையிலிருந்து அடுக்கடுக்காக உயர்ந்த புத்தகங்கள் சில இடங்களில் சரிந்து தரையில் இறைந்தும், சாம்பல் தட்டு முழுக்க சிகரெட் துண்டுகளுமாய் நிறைந்திருந்தன.  இரண்டு நாற்காலிகளை வரவேற்பறையிலிருந்து எடுத்து வந்தார். ஒன்றில் முதுகுவலி உள்ளவர்கள் பயன்படுத்தும் சாய்மானம் இருந்தது.  ஒருவர் மட்டுமே உறங்கும் அளவிலான கட்டிலில் கிடந்த மடித்து வைக்கப்படாத போர்வையையும், மடிக்கணினியையும் ஒதுக்கி வைத்து விட்டு பிரசாந்த் அதில் அமர்ந்தார். 

ஆரம்பகட்ட உரையாடல் முழுக்க அவர்களுடைய கல்லூரியைப் பற்றியே இருந்தது.  அவர்களுடன் பணியாற்றியவர்கள் இப்போது எப்படியிருக்கிறார்கள், எங்கே இருக்கிறார்கள், கல்லூரி நிர்வாகத்தின் குறைகள், கட்டுப்பாடுகள், வசதிக் குறைவுகள் எல்லாவற்றையும், கல்லூரியில் அவர்கள் ஒன்றாகப் பணியாற்றிய காலத்தில் நட்ட மரக்கன்றுகள் (ஒருநாள், அவருடைய மாணவர்களை வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு கல்லூரியைச் சுற்றியிருக்கும் மரங்கள், தாவரங்களின் இலை மாதிரிகளைச் சேகரிக்கச் சொன்னாராம்.  ஏன் அவ்வாறு செய்தார் எனக் கல்லூரி நிர்வாகத்தினர் அவரைக் கேள்வி கேட்க, இலக்கியம் இலைகளிலிருந்தே துவங்குகிறது. தன்னைச் சுற்றியிருக்கும் தாவரங்கள் இன்னதுதானென்று தெரியாமல் ஒருவர் இலக்கியம் படித்து என்னதான் பலன்? என்று பதிலளித்திருக்கிறார். துரதிர்ஷடவசமாக அன்றைக்குப் பல மாணவர்களும் எதிர்வரும் குடியரசு தின அணிவகுப்பிற்கான ஒத்திகைக்குச் செல்ல வேண்டியிருந்தது) என நான் அங்கிருப்பதையே மறந்து போய் பேசினார்கள்.

நான் புத்தகங்களைப் பார்த்தேன்.  ஆயிரத்திற்கும் மேலான புத்தகங்கள் இருக்கக் கூடும்.  அனைத்துமே ஆங்கிலத்தில் இருந்தன.  ஓர் அடுக்கிலிருந்த பெயர்களை வாசித்தேன்.  ஆக்டோவியா பாஸ், மச்சடோ டி அஸிஸ், சில்வியானோ ஒக்கம்போ, இஸபெல் ஆலந்தே, ஹேஸே மார்டி, ரூபென் தாரியோ, ஹேஸே லெசாமா லிமா, யுவான் கார்லோஸ் ஒனெட்டி, ஜார்ஜ் அமெடோ, ஹோர்ஹே லூயி போர்ஹே, செசார் அய்ரா என உச்சரிக்கக் கடினமான பெயர்களைக் கொண்ட ஆசிரியர்களின் புத்தகங்கள்.  ஒன்றிரண்டு பெயர்களை நான் எங்கள் அறையிலிருக்கும் புத்தகங்களில் பார்த்திருக்கிறேன்.  பரத்குமார் சேகரித்து வைத்திருக்கும் தமிழ்ப் புத்தகங்களைக் கூட நான் வாசிப்பதில்லை.  நிறைய வாசிப்பவர்களிடம் தலைக்கனம் இருக்கும்.  ஆனால் பரத்குமார் ஒருநாளும் அவருடைய கல்விச் செருக்கில் என்னோடு உரையாடியதில்லை. முனைவர் பட்ட ஆய்வு முடிந்ததும் பிரிட்டிஷ் காலத்து இந்தியக் கிரிக்கெட் கழகங்களின் வரலாற்றை எழுதுவேன் என எங்கள் செசனின் போது சொல்வார். பணத்தை எண்ணுவதற்கும், மாத இறுதிநாளில் கணக்கில் வந்து விழும் பாதுகாப்பான சம்பளத்தைப் பெறுவதற்கும் நான் இலத்தீன் அமெரிக்க இலக்கியத்தையோ, கிரிக்கெட்டின் வரலாற்றையோ கற்கத் தேவையில்லை. அறிவால் வாழ்பவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து கற்பது தேவையானது.

புத்தகங்களைப் பார்த்து முடித்ததும், பிரசாந்த் என்னிடம் கேட்டார் (எங்கள் உரையாடல் முழுக்க ஆங்கிலத்திலேயே தொடர்ந்தது):

”நீங்கள் புத்தகங்கள் வாசிப்பதுண்டா?”     

”இல்லை”

”பரத்குமாரிடமிருந்து உங்களுக்கு அந்தப் பழக்கம் தொற்றவில்லையா? அவர் ஒரு ஆழமான வாசகர்.  எங்கள் கல்லூரியில் பாடத்திட்டங்களை வடிவமைக்கும் குழு வரைக்கும் விரைவில் வளர்ந்து விட்டவர்.”

”நீங்கள் ஏன் வேலையிலிருந்து நின்று விட்டீர்கள்?”. கேட்டு முடித்ததும் யோசித்தேன் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக் கூடாதென்று. பரத்குமாரைப் பார்த்து ஓசையே எழுப்பாமல் மன்னிப்புக் கேட்டேன்.

”நான் இலத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வில் ஈடுபட்டிருக்கிறேன்.  என்னால் கல்லூரி வேலையையும் கவனித்துக் கொண்டு, இதையும் தொடர முடியவில்லை. வேலை நாளில் கூட, என் மனைவி நோய் வாய்ப்பட்டிருக்கும் யானைகளுக்கு எவ்வாறு வைத்தியம் பார்க்கிறாள் எனப் பார்க்கக் கிளம்பி விடுவேன்.  எனது மாணவர்கள் ஒரு சிலரையும் அழைத்துக் கொள்வேன்.   ஆங்கில இலக்கியம் கற்கும் மாணவர்கள் யானைக்கு செய்யும் வைத்தியத்தை ஏன் தெரிந்து கொள்ள வேண்டுமென்று எனது கல்லூரி நிர்வாகம் கேட்கும், ’பிவுல்ஃப்’ படிக்கும் மாணவர்கள் யானைகளையும் தெரிந்து கொள்ளட்டுமே என்பேன். தவிர ஒரு கட்டத்தில் விடைத்தாள்கள் திருத்துவது, நேரத்திற்கு கல்லூரிக்குச் செல்வது, அடையாள அட்டை அணிவது எதுவுமே பிடிக்காமல் போய்விட்டது. தவிர டென்னிஸனைக் கற்பிக்கச் சொல்லும் பாட திட்டத்திற்கு வெளியே நான், எம்மா கோல்ட்மேனைப் பற்றிப் பாடமெடுக்கக் கூடாதில்லையா?.  கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் போதுமான கால அவகாசமும், வசதி வாய்ப்பும், சக்தியும் இருக்கிறது.  வெறுமனே இலக்கியத்தைக் கற்று என்ன செய்யப் போகிறார்கள்?  அவர்கள் கல்லூரிக்கு வெளியே சென்று நிறைய விசயங்களைக் கேட்கவும், பார்க்கவும், ஈடுபடவும் வேண்டும்.  வரிக்குதிரையின் கோடுகளுக்கும், புலிகளின் கோடுகளுக்கும் உள்ள வேறுபாட்டை அவர்கள் பார்த்துத்தானே கற்க முடியும். படித்தா கற்க முடியும்? இங்கே பாருங்கள், இந்தியாவிலிருந்து வந்த எந்த மொழி எழுத்தாளர்களையும் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள், யாரும் கல்லூரியில் இலக்கியம் கற்று எழுத வரவில்லை.  டி. எஸ். எலியட் உங்களைப் போல ஒரு வங்கியில் பணியாற்றிவர். காஃப்கா ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார்.”

 டென்னிஸன், எம்மா கோல்ட்மேன், டி.எஸ். எலியட், காஃப்கா யாரையும் நான் அறிந்திருக்கவில்லை. பிவுல்ஃபைக் கூட ஆரம்பத்தில் ஓர் எழுத்தாளரென்றே நினைத்தேன். பின்பு பரத்குமாரிடம் கேட்டறிந்தேன். 

 உடை மாற்றியிருந்த வசுதா அறைவாசலில் நின்று கொஞ்சம் மெதுவாகப் பேசச் சொன்னாள், இல்லையென்றால் கதவைச் சார்த்திக் கொள்ளுமாறும்.  பிரசாந்த் எழுந்து அறைக்கதவைச் சார்த்தினார். குளிர்சாதன இயந்திரத்தை முடுக்கி விட்டார். 

”ஏ.ஸி. போட்டால் புகை பிடிக்க முடியாது. நீங்கள் புகை பிடிப்பீர்களா?”

நான் இல்லையென்றேன். பரத்குமாருக்கும் புகைப்பழக்கம் இல்லை.

அறையில் குளிர் பரவத் துவங்கியதும் மேற்சட்டையைக் கழற்றினார் பிரசாந்த்.   ஆடைகள் அணியாமல் இருப்பதற்கே எனக்குப் பிடிக்கும் என்றார். 

”மனிதனுக்கு கொஞ்சமே போதுமானது.  எதுவுமே குறைவான அளவில் கிடைத்தாலே போதும்.  நாம் நம்மை ஏதோ தெய்வ நிலைக்கு கற்பனை செய்து வைத்திருக்கிறோம்.  இந்த பூமியைக் காத்து வேறு காலத்தில் பாதுகாப்பாக மற்றொருவரின் கைகளுக்கு மாற்றித் தரும் பொறுப்பு நமக்கு இருப்பதாக நம்புகிறோம்.  அந்த வேறொருவரின் கைகள் கடவுளின் கைகள்தான்.  நம்முடைய எல்லா நடத்தைகளின் மதிப்பையும் அவர் ஒருநாள் அளவிடுவார். ஆகவே நாம் அவரது அளவுகோல்களின்படி தப்பித்துக் கொள்ளும் இடத்திற்கு நகர்ந்து விட வேண்டுமென விரும்புகிறோம்.  நம்முடைய எல்லா நிறுவனங்களும் மனிதனுக்கு அவனது தகுதிக்கு மீறிய இடத்தை அளித்திருக்கின்றன. அதே சமயம் எல்லா நிறுவனங்களும் மனிதர்களுக்கு மேலே வளர்ந்துவிட்டன. அரசே இல்லாத ஒரு காலத்தை நாம் கற்பனை செய்ய முடியுமா?  மிகெல் பக்தினுக்கும், மார்க்ஸிற்கும் ஏன் இயேசுவிற்கும் கூட அப்படியொரு கற்பனை இருந்திருக்கிறது. இயந்திரங்கள் மனிதனை அரசிடமிருந்து விடுவிக்கும் என்று மார்க்ஸ் நம்பினார். அரசிடமிருந்து பெறும் விடுதலையே மனிதனின் உண்மையான ஆத்மீகத்திற்கான துவக்கம். மனிதர்களை ஆக்ரமித்திருக்கும் எல்லாமே அவனுடைய விடுதலைக்கான தடைக்கற்கள். விடுதலை என்பதே உச்சநிலை அல்ல, அது ஒரு துவக்கம்.  இதுவரையிலும் விடுதலையென்பது என்னவென்றே அறிந்திராத மனிதன் விடுதலைக்குப் பின்பு என்னவாக ஆவோம் என அஞ்சத் தேவையில்லை. நாம் எவ்வாறு நமது எதிர்காலத்தைக் கணிக்க முடிவதில்லையோ, அப்படித்தான் ஒட்டுமொத்த மானுடமும்.  அதன் எதிர்காலத்தை ஒரு சிறு சம்பவம், ஒரு கொலை, ஒரு கிருமி என ஏதாவது ஒன்று புரட்டிப் போடும். நமது அடிமைத்தனங்களிலேயே மோசமானது மதுவோ, புகைப்பழக்கமோ, சூதாட்டமோ, விபச்சாரமோ அல்ல அரசிடம் அடிமையாக இருப்பதுதான்.  என்னிடம் பாருங்கள் ஓட்டுநர் உரிமம் கூட இல்லை. எனது பெயரில் குடும்ப அட்டை, வண்டி, வாக்காளர் அடையாள அட்டை என எதுவுமே இல்லை.  எனது காருக்கு எண் பலகையும் இல்லை. போலீஸ்காரர்கள் பிடித்தால் நான் ஏதாவது காரணம் சொல்லித் தப்பிப்பேன். முடியாத பட்சத்தில் எனது மனைவி காசைக் கொடுத்து சமாளிப்பாள். அரசும் மக்களும் பணத்தை நேசிக்கக் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள்.  பணத்தை ஒழித்தவிட்டால் என்னவாகுமென்ற கற்பனை யாருக்கும் எழவில்லை. அதை முயன்று பார்க்கும் ஒரு அமைப்பும் நம்மிடமில்லை. பொருட்களுக்கு பரிவர்த்தனை மதிப்பும், பயன் மதிப்பும் இருக்கிறது. கூடவே அதன்மீது மனிதர்கள் வைத்திருக்கும் உணர்ச்சி மதிப்பும். இந்த மூன்று மதிப்பையும் நீக்கிவிட்டால் நாம் பொருட்களிடமிருந்து விடுதலை பெற்று விடுவோம்.  அப்படித்தான் ஒருகாலத்தில் இருந்தோம். மீண்டும் அந்த நிலைக்குத் திரும்ப அஞ்சுகிறோம்.  வரலாற்றை மூலதனமாகக் கொண்டு எழுந்த நமது நிறுவனங்கள் வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய நிலைமையை இருண்ட காலமாகக் கட்டமைக்கின்றன. ஏதுமறியாத காலத்தை பின்தங்கிபபோனவர்களின் காலமாகவும்.  வரலாற்றில் உண்மையிலேயே முன்னேறிய மனிதன் என்ற ஒருவன் நிரந்தரமாக இருப்பானா? இந்த முன்னேற்றமே இரண்டு பொருட்களை ஒப்பிடுவதின் மூலமாகக் கிடைப்பது. எனது முப்பாட்டனார் ஒரு பத்து கிலோ மீட்டர்களைக் கால்களால் கடப்பதற்கு எடுத்துக் கொண்ட நேரத்தை நான் எனது காரில் கடப்பதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தோடு ஒப்பிட்டு நாம் முன்னேறி விட்டதாகக் கற்பனை செய்து கொள்கிறோம். பாம்புக்கடிக்கு மனிதர்கள் இறந்து போவதைக் குறைத்தோம். ஆனால் இன்று அன்றாடம் சாலை விபத்துக்களில் அதைவிட மோசமாக நாம் மரணிக்கிறோம். எனது முப்பாட்டனார், நான்கு சக்கரங்கள் உள்ள ஒரு வாகனம் மோதி வருடத்திற்கு பல்லாயிரம் பேர் இறப்பார்கள் என்று கற்பனையில் கூட யோசித்திருக்க மாட்டார். நமது முன்னேற்றக் கற்பனை காலத்திற்கே ஒரு நோக்கத்தைக் கற்பித்திருக்கிறது. நமக்கு சேவை செய்யாத எதுவுமே நீடித்திருக்கப் போவதில்லை.  மனிதர்களுக்காகவே அனைத்தும் படைக்கப்பட்டன எனச் சொல்லும் மதங்களும், கடவுள் நிலையை அடையவே மனிதன் படைக்கப்பட்டான் எனச் சொல்லும் மதங்களும் உண்டு.  கடவுளுக்கு ஒரே வழிதான் உண்டு. அது மனிதர்களைக் காப்பாற்றுவது.  மனிதர்களைக் காப்பாற்றுவதின் மூலமாகத்தான் கடவுள் தன்னையே காத்துக்கொள்ள முடியும். கடவுள் மனிதனின் மெய்க்காப்பாளன், அரசு மனிதனின் வாயிற்காப்பாளன். ஆனால் உண்மையில் மனிதன் அரசின், கடவுளின் அடிமை. எல்லா ஜனநாயக அரசுகளும் மனிதனை எஜமான ஸ்தானத்தில் வைத்திருப்பதாக நடிக்கின்றன.  உண்மையில் இதுவரையிலும் ஜனநாயகம் என்பதை நாம் கற்றிருக்கவேயில்லை. இவையெல்லாமே மனிதர்களின் தற்காலிக அரசியல் நிலைமைகளே. வரலாற்றை அழிப்பதற்கு ஒன்றுக்கொன்று போட்டி போடும் நிறுவனங்களின் முனைப்பே மனிதர்களின் அரசியல் நிலை. நாமெல்லோரும் நமது முந்தைய நிலையை அழிப்பதின் மூலமாக எதிர்காலத்தை அடைந்து விடுவதாக நினைக்கிறோம். ஒன்றின் அழிவிலிருந்தே எதிர்காலம் பிறக்கிறது. எனில் எதிர்காலத்தின் கால்களுக்கு கீழே பல மயானங்கள் அரைபடுகின்றன. அனார்கிஸ்ட்டுகள் எதிர்காலத்தைப் போதிப்பவர்கள் அல்ல. அவர்கள் நமது தயக்கங்களை உடைக்கிறார்கள்.  நமது தயக்கங்கள் அனைத்துமே நமது நிறுவனங்களின் சட்ட திட்டங்களால் உருவானவை. அவை எதுவுமே மனித இயல்பினால் உருவானவை அல்ல. உண்மையில் மனித இயல்பென்ற ஒன்றே இல்லை.”

பிரசாந்த் தொடர்ந்து பேசுவதற்கு முனைந்தார். பரத்குமார் போதும் என்று சைகை காட்டினார். என்னைச் சுட்டிக் காட்டி, நமது புது நண்பரை பயமுறுத்தாதே என்றார். அவர் பேசுவதைக் கண்கொட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.  என்னிடம் யாருமே இப்படிப் பேசியதில்லை. பிரசாந்த் மூவருக்கும் விஸ்கியை ஊற்றினார். ஐஸ் கட்டிகளைப் போட்டார்.  இரண்டாவது நாளாக விஸ்கி குடிக்கிறோம் என்று யோசித்தேன். அறையில் மட்டுமல்ல எனது உடலிலிருந்தே விஸ்கியின் வாடை வெளியேறுவதாக நினைத்தேன். அறையும், புத்தகங்களும், நாங்களும் விஸ்கியின் வாசனையில் உறைந்து மூழ்கியிருந்தோம்.

பிரசாந்த் தொடர்ந்து ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் பேசினார். கிரிக்கெட், சூழலியல் மாற்றம், வைஷ்ணவி என்று அவர்களது பேச்சு நீண்டது. 

“தமிழில் யாராவது இலத்தீன் இலக்கியங்களை மொழிபெயர்த்திருக்கிறார்களா?’, பரத்குமாரிடம் கேட்டார். “இங்கே கன்னடத்தில் ஒன்றிரண்டு புத்தகங்கள் வந்திருக்கின்றன”.

“என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்.  போர்ஹேஸையும், மார்க்வேஸையும் தமிழ் எழுத்தாளர்களின் இடத்திலேயே வைத்திருக்கிறார்கள். தமிழ் எழுத்தாளர்களைப் படித்து இலக்கியத்திற்குள் வருகிறார்களோ இல்லையோ, இவர்கள் இருவரையும் வாசித்தே இலக்கியத்திற்குள் நுழைய வேண்டுமென்ற இடத்தில் வைத்திருக்கிறார்கள்.  கடவுச்சீட்டைப் போல.”

“இலத்தீன் அமெரிக்க இலக்கியம் இன்னுமே ஆழமானது. இவர்கள் எல்லோரும் மேல்மட்டத்தில் இருப்பவர்கள். இவர்களைப் போல குறைந்தது நூறு எழுத்தாளர்கள் இருப்பார்கள். நான் அவர்களைப் பற்றியே ஆய்வு செய்கிறேன். உதாரணத்திற்கு ‘ரூபென் தாரியோ’, அவர்தான் மாடர்னிட்டியை இலத்தீன் அமெரிக்க இலக்கியத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். உண்மையில் பிரெஞ்சுப் புரட்சிக்கும் முன்பே ஹைதி புரட்சி நடந்திருக்கிறது. 

“சரிதான். உன்னுடைய பண்ணை வீட்டிற்கு எப்போது போனாய்?.”

அறைக்குத் திரும்பும்போது பரத்குமார் என்னிடம் சொன்னார், ஓசூருக்குப் பக்கத்திலிருக்கும் தளியில் பிரசாந்திற்கும், வசுதாவிற்கும் சொந்தமான ஒரு பண்ணை வீடு இருப்பதாக. அவர்களுடைய கல்யாணத்திற்கு அன்பளிப்பாக அவனுடய மாமனார் ஜே.பி. நகர் வில்லாவையும், அவனுடைய அப்பா தளியில் இருக்கும் பண்ணை வீட்டையும் அளித்திருந்தனர்.

”நானும் வசுதாவும் ஒரு மாதத்திற்கு முன்பு சென்றிருந்தோம். புலிகளுக்கு மாட்டுக்கறியை நிறுத்திவிட்டு பிராய்லர் கோழிகளைப் போட்டார்கள். எடை குறைந்து பலவீனமாக ஒன்றிரண்டு புலிகள் மரணமடைந்திருக்கின்றன. இவள்தான் வைத்தியம் பார்த்தாள். இந்த முட்டாள்தனத்தை சொல்லிச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தாள். புலிகள் இறந்ததை அவளால் தாங்க முடியவில்லை. அதென்ன கொசுவா ஏராளமாகப் பெருகியிருப்பதற்கு எனப் புலம்புவாள். கொஞ்சம் ஓய்வாக உணர்வாள் என்று நானும் அவளும் பண்ணை வீட்டில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு வந்தோம். தளியில் எப்போதுமே குளிர்தான். ஏரியில் நீர் நிறைந்திருந்தால் குளிர் இன்னுமே அதிகமாக இருக்கும். என்ன இப்போதெல்லாம் மலைகளைப் பிளக்கும் வேட்டுகளின் ஒலி அடிக்கடி தொந்தரவு செய்கிறது.”

வரவேற்பறையில் வசுதா செல்பேசியில் யாரிடமோ கத்துவது பிரசாந்த்தின் பேச்சையும் மீறிக் கேட்டது. அவர் அமைதியானார். வாயில் சுட்டு விரலை வைத்து எங்களையும் அமைதியாக இருக்க சைகை காட்டினார். வசுதா பேசி ஓய்ந்ததும் பிரசாந்த் எழுந்து சென்று கதவைத் திறந்தார். கதவைச் சார்த்தி விட்டு வசுதாவிடம் ஏதோ கேட்க, அவள் அவரிடம் கோபமாக துளு மொழியில் ஏதோ சொன்னாள். நாங்கள் ஒருவரையொருவர் பார்த்தோம். பரத்குமார் கை கடிகாரத்தைத் தொட்டுக் காட்டினார். நான் மூடியிருந்த கதவின் முதுகைப் பார்த்தேன். அறைக்கு வெளியே வசுதாவும், பிரசாந்தும் சைகைகளால் சண்டையிட்டுக் கொள்வார்களென்று கற்பனை செய்தேன். விஸ்கியின் நெடியே வசுதாவை கோபமூட்டியிருக்கும். அவளை எளிதில் சமாதானம் அடையக் கூடியவளாக ஊகிக்க முடியவில்லை. கோபம் அதிகமானால் தரையிலிருந்து பிரசாந்தின் மீது தாவி அவருடைய “கொரவளியை”க் கடித்து விடுவாள். கழுத்திலிருந்து வழியும் இரத்தத்தை கைகளில் பிடித்தவாறே பிரசாந்த் கதவைத் திறந்து வருவார்.

பிரசாந்த் கதவைத் திறந்து வந்தார்.  அவளால் இரவு உணவைச் சமைக்க முடியாதென்றார். நாங்கள் உணவகத்தில் உணவருந்தலாம் என்றோம்.  

”நீயும் வருகிறாயா? எல்லோரும் ஒன்றாகச் செல்வோம்?”

வசுதா அமைதியாக பதிலளித்திருக்க வேண்டும். எங்களைப் பார்த்துச் சொன்னார், “அவள் வரவில்லை”.

அதற்கு மேலும் அங்கிருப்பதும், அவரோடு உரையாடுவதும், மீதமிருக்கும் விஸ்கியை குடித்து முடிப்பதும் சரியானதாக இருக்காதென்று எங்கள் இருவருக்குமே தோன்ற, நாங்கள் அவரிடம் விடைபெறுவதாகச் சொன்னோம்.  

 ”இன்னொரு முறை பார்க்கலாம்.  என்னுடைய ஆய்வு முடியட்டும்.  விரைவாக முடிந்து விடும் (அவர் இன்னும் ஆய்வுக்கான வேலையையே துவங்கியிருக்கவில்லை என பரத்குமார் சொன்னார்).  அதன் பிறகு சந்திப்போம். நமது பண்ணை வீட்டில் ஒரு விருந்து ஏற்பாடு செய்யலாம். அங்கே நாங்கள் முயல் கூட வளர்க்கிறோம். நண்பரே (என்னைப் பார்த்து) நான் உங்களைச் சலிப்படையச் செய்திருந்தால் மன்னியுங்கள். நாங்கள் இப்படித்தான் நேரம் போவதே தெரியாமல் பேசுவோம். உலகத்தை அவ்வளவு எளிதாகப் பேசித் தீர்த்துவிட முடியுமா? இன்னும் காலமிருக்கிறது”. நாங்கள் எழுந்து வரவேற்பறைக்கு வந்தோம்,

 வசுதாவின் கால்களை ஒட்டி டைசன் நின்றிருந்தது. பிரசாந்த் குளிர்பதனப் பெட்டியைத் திறந்து குளிர்ந்த நீர் பாட்டிலைத் தேடினார்.

”டிட் யு நாட் ஃபில் த பாட்டில்ஸ்?”, வசுதாவைப் பார்த்துக் கேட்டார்.

அவள் அமைதியாக நின்றாள். டைசன் என்னை மட்டுமே பார்ப்பதைப் போலிருந்தது.  பரத்குமார் பிரசாந்தை ஒருமுறை அணைத்து கை குலுக்கினார். 

 ”நீங்களும் கை குலுக்கலாமே”, வசுதா என்னைப் பார்த்து சொன்னாள்.

 நான் டைசனை நெருங்கினேன். 

”இல்லையில்லை இந்த முறை எனது கணவருக்கு”.

மீண்டும் வாடகைக் காரில் அறைக்குத் திரும்பினோம். பதாகைகள் நீக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை இம்முறையும் வேடிக்கைப் பார்த்தேன் (இடையிடையே பரத்குமார் பேசுவதையும் கேட்டேன்). இரும்புக் கிராதிகளின் இடைவெளிகளில் துண்டு துண்டாகத் தெரிந்த இரவை கவனித்தேன். கருஞ்சாம்பல் நிறம் கலைந்திருந்தது. மழையும் இல்லை. 

***

(பாலசுப்ரமணியன் பொன்ராஜ், தற்பொழுது ஓசுரில் வசித்து வருகிறார். கனவு மிருகம், துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகள் வந்துள்ளன. ஆசிரியரின் தொடர்புக்கு – tweet2bala@gmail.com )

  

நேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்

4

நான் எதையுமே தன்னியல்பாக எழுதுவதில்லை. – ஷோபாசக்தி

எழுத்தாளர் ஷோபாசக்தி – தமிழ் இலக்கியத்தோடு பரிட்சயமானவர்கள் அனைவரும்  அறிந்து வைத்திருக்கும் பெயர். தன்னுடைய படைப்புக்களின் மூலம் ஈழத்தமிழ் வாழ்வியலை எழுதி வருபவர். தனக்கான கதை சொல்லும் முறை, பகிடி, அரசியல் சாடல்கள் என நிறைய அம்சங்களால் தனது படைப்புலகை உண்டு பண்ணியிருக்கிறவர். அவரின் படைப்புக்கள் மீது கடுமையான விமர்சனம் கொண்டவர்களும் ஏராளம். அவருடைய மிகச் சமீபத்தில் வெளியான “இச்சா” நாவலை “கருப்பு பிரதிகள்“ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. மாற்றுக் கருத்து உள்ளவர்களும் ஒரு மேசையில் அமர்ந்து ஒருவரையொருவர் வெறுக்காமலும் தமது கருத்துகளை விட்டுக் கொடுக்காமலும்  பேசலாம்  என்பதற்கு இந்நேர்காணல் ஒரு சமீபத்திய சான்று.

உங்களுடைய நாவல்களில் ’கொரில்லா’, ’ம்’ ஆகிய இரண்டு நாவல்களும் குறிப்பிடத்தகுந்தவை. குறிப்பாக ‘ம்’ நாவல் மிக முக்கியமானது. ஆனால் இதன் பிறகு வெளியான ‘பொக்ஸ்’, ‘இச்சா’ ஆகிய இரண்டு நாவல்களும் வலிந்து உருவாக்கப்பட்ட பிரதியாகவே வாசிப்பில் எனக்குத் தோன்றுகிறதே?

நான் என்ன இறைதூதரா வானிலிருந்து அருள்வாக்கோ அசரீரியோ பெற்றுச் சுளுவாக  எழுதிவிடுவதற்கு. இலக்கிய உள்ளொளி, தரிசனம் போன்றவையும் எனக்கு வசப்படாதவையே. எனவே என் எல்லா நாவல்களையும் வலிந்தே எழுதினேன். இனியும் அப்படித்தான் எழுதுவேன். தஸ்தயேவ்ஸ்கி கூட இப்படி வலிந்தும் அச்சத்தோடும் தன்னம்பிக்கையின்றியும்தான் ‘அசடன்’ நாவலை உருவாக்கினார் எனப் படித்திருக்கிறேன். அவரது அந்தப் புலம்பலைக் குறிப்பிட்டுத்தான் எனது ‘இச்சா’ நாவலைத் தொடங்கியிருந்தேன்.

‘பொக்ஸ்’ இறுதி இன அழிப்பு யுத்தக்கால கட்டத்தை வைத்து புனைந்திருந்தீர்கள். நந்திக்கடலின் இறுதி யுத்த காலத்தை எழுதினால்தான் சமகால இலக்கிய மைய நீரோட்டத்தில் உங்கள் பெயரை தக்க வைக்க முடியுமென உங்களுக்குள்ளேயே ஒரு நிர்பந்தத்தை உருவாக்கிக் கொண்டீர்களா?

இறுதி இன அழிப்பை மட்டுமல்லாமல், தொடக்க இன அழிப்பையும் நான் எழுதியிருக்கிறேன். போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தபோதே, போரை எதிர்த்தும் போர் புரிந்த தரப்புகளைச் சபித்தும் தொடர்ந்து எழுதியிருக்கிறேன். யுத்தத்தின் இறுதிக் காலங்களில் வன்னியில் நடந்தவற்றில் ஓர் துளிதான் ‘பொக்ஸ்’ நாவல். யுத்த வெற்றி எக்காளங்களும் பொய்களும் வரலாறாகப் புனையப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அவற்றை எதிர்கொள்ள அந்த நாவலை எழுதினேன். அதை ‘யுத்தத்தின் உப வரலாறு’ என்று குறிப்பிட்டேன்.

ஒரு நாவலை எழுதியெல்லாம், சமகால இலக்கிய மைய நீரோட்டத்தில் யாருமே தங்களைத் தக்க வைத்துக்கொள்ள முடியாது. மொண்ணைத் தமிழ்த் தேசியம் பேசுபவர்களை ஏமாற்றி விடுவது போலவெல்லாம் தீவிர இலக்கிய வாசகர்களை ஏமாற்றி விட முடியாது அகரன்.

தமிழ் தேசியத்தின் மீது உங்களுக்கிருக்கும் கசப்பையும் ஒவ்வாமையையும் நான் அறிவேன். மொண்ணைத்தனமான கருத்துக்களை பேசுபவர்கள் எல்லா சித்தாந்த – கருத்தியல் தளங்களிலும் இருக்கிறார்கள் ஷோபா. அதனால் மொண்ணை மார்க்சிஸம் பேசுவபவர்கள், மொண்ணை ரொஸ்கிசம் பேசுபவர்கள் என்றெல்லாம் கூறமாட்டேன். நான் கேட்ட கேள்வியை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தமிழ் வாசகப்பரப்பில் இறுதிக்கட்ட யுத்த காலங்களைப் பற்றிய புனைவுகளுக்கு ஒரு பெரிய அவதானம் திரும்பியிருந்த சூழலில், அப்படியொரு களத்தை நீங்களும் தேர்ந்தேடுத்தீர்களா?

பரந்துபட்ட தமிழ் வாசகப் பரப்பில் கவனமும் பாராட்டுகளும் குவிக்க விரும்பி நான் எழுதினால், புலிகளின் அரசியலை நியாயப்படுத்தி எழுதுவதே அதற்கான குறுக்கு வழியாகும். அதை நான் செய்வதில்லை. இஸ்லாமியர்களைப் பழித்து எழுதினால் அதற்கும் ஒரு திடீர் வாசகப் பரப்புள்ளது. அதையும் நான் செய்ய மாட்டேன். எழுத்தில் சமரசம், சந்தர்ப்பவாதம், சந்தை நோக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழின் பெரிய பெரிய பதிப்பகங்களெல்லாம் என் நூல்களை வெளியிடத் தயாராக இருக்கும் போதும் நான் ‘கருப்புப் பிரதிகள்’ என்ற எளிய பதிப்பத்துடன் தான் தொடர்ந்தும் பயணிக்கிறேன். நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் ஒரு துளியை நாவலாக்குவதற்கு நீங்கள் கற்பிக்க முயலும் காரணங்கள் எதுவுமே தேவையில்லை. நெஞ்சில் ஈரமும் அறமும் கொஞ்சம் எழுதத் தெரிந்திருப்பதுமே போதுமானது.

தமிழ் தேசியம் என்ற அரசியல் கருத்தாக்கத்தின் மீது எனக்கு ஒவ்வாமையும் கசப்பும் உள்ளது என நீங்கள் எப்படியொரு முடிவுக்கு வந்தீர்கள் எனத் தெரியவில்லை. தமிழ்த் தேசியம் என்றாலே ‘புலி அரசியல்’தான் என நீங்கள் எண்ணவும் தேவையில்லை. ‘மொண்ணைத் தமிழ்த் தேசியர்கள்’ என்று நான் வகைப்படுத்தும் போதே, கூர்மையான தமிழ் தேசியர்களும் இருக்கிறார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எழுத்தாளர்கள் நிலாந்தன், இராசேந்திர சோழன் போன்றவர்கள் அத்தகையவர்கள்.

புலிகளுக்கு முன்பும் தமிழ் தேசியம் இருந்தது, பின்பும் இருக்கிறது. என் வயதுக்கு எனக்கு ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ மூலம்தான் தமிழ் தேசியவாத எண்ணமுண்டாயிற்று. திராவிட இயக்கம், சோசலிஸம் போன்றவை பற்றியும் கொஞ்சம் கொஞ்சம் கேள்விப்பட்டிருந்தேன். அதன் வழியேதான் நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தேன். புலிகளுக்குப் பின்னும், தேர்தல் காலங்களில் என்னுடைய ஆதரவை ஆயிரத்தெட்டு விமர்சனங்களோடும் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே’ கொடுக்கிறேன்.

தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை மிகப்பலமாக ஆதரித்து எழுதுபவன் நான். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், சிறுபான்மை இனங்களின் சுய நிர்ணய உரிமை குறித்து மழுப்பலாகப் பேசிக்கொண்டிருந்த Frontline Socialist Party-யை நான் கடுமையாக விமர்சித்து எழுதிய கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள். தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை நியாயப்படுத்தி ஒரு தொடர் விவாதமே செய்தேன்.

ஒரு பெருந்தேசிய இனம், சிறுபான்மை தேசிய இனங்களை ஒடுக்கினால், சிறுபான்மையினர் தங்களது தேசிய இன அடையாளத்தை முன்வைத்து அரசியல் மயப்படுவதையும் அணியாவதையும் யார்தான் நிராகரிக்க முடியும்? அதைத் தவிர அவர்களுக்கு வேறு என்னதான் அரசியல் பாதுகாப்பு இருக்கிறது?  இலங்கையில் தமிழ் இனவழித் தேசியவாதமும் முஸ்லீம் இனவழித் தேசியவாதமும் இவ்வாறுதான் நிலைபெற்றன. மார்க்ஸியத்தில் மட்டுமல்லாமல், முதலாளித்துவ சனநாயக நெறிகளிலும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது ஓர் முக்கிய கருத்தாக்கம். பாலஸ்தீனர்களினதும், திபெத்தியர்களினதும், காஷ்மீரிகளினதும் தேசியவாத அரசியலை ஓயாமல் ஆதரிப்பவர்கள், எப்படி ஈழத்தமிழ்த் தேசியவாதத்தை மட்டும் நிராகரித்து விட முடியும்!

என்னுடைய ஒவ்வாமையும் கசப்பும் ஈழத்தமிழ்த் தேசியவாதத்தைத் தவறான பாதையில் முன்னெடுத்தவர்களைப் பற்றியது தான். தேசியத்தின் பெயரால் ‘ஏக பிரதிநிதித்துவம்’ எனப் பிரகடனப்படுத்தி சனநாயக அரசியலை மறுத்தவர்கள் மீது தான். மாற்றுக் கருத்தாளர்களையும் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் கொன்று போட்ட பாஸிஸ்டுகளின் மீது தான். சகோதர இன அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றிக் கொன்றவர்கள் மீது தான். மக்களை மனிதக் கேடயங்களாக உபயோகித்தவர்கள் மீது தான். தங்களது தவறான அரசியல் வழிமுறைகளால் மக்களைக் கொண்டுபோய் நந்திக்கடலில் தள்ளியவர்கள் மீது தான். அப்படியானால் புலிகளின் அரசியலில் நல்ல அம்சங்களே இருக்கவில்லையா? இருந்தால் சொல்லுங்கள், உங்களுடன் சேர்ந்து நானும் அந்த அம்சங்களிலாவது அவர்களை ஆதரித்துவிட்டுப் போகிறேன்.

நீங்கள் சொல்வதுபோல மொண்ணைக் கருத்துள்ளவர்கள் எல்லாக் கருத்தியல் தளங்களிலும் இருக்கிறார்கள் என்பது உண்மை. மார்க்ஸியம் பேசுபவர்களிலும் மொண்ணையானவர்கள் இருப்பார்கள். இவர்களைக் குறிக்கத்தான் மார்க்ஸியத்தில் வறட்டுவாதம், காட்சிவாதம், அனுபவவாதம் போன்ற கலைச்சொற்களையெல்லாம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

“மொண்ணை மார்க்ஸியர்கள் என்றெல்லாம் நான் கூறமாட்டேன்” என நீங்கள் உரைப்பது உங்களுக்குப் பெருமையளிக்கும் விசயமல்ல அகரன். விஷயங்களைக் கூர்ந்து கவனித்துப் பகுத்துப் பேச நீங்கள் பயில வேண்டும். ரங்கநாயகம்மாவின் ”சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தரும் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை’ என்ற நூல் தமிழில் மொழிபெயர்ப்பாகி வந்திருக்கிறதல்லவா. அந்த நூலை நீங்கள் படிக்கத் தொடங்கினால், இரண்டாவது பக்கத்திலேயே உங்களுடைய இருதயம் ‘மொண்ணை மார்க்ஸியர்’ என முணுமுணுக்குமென நான் உங்களுடன் பந்தயம் கட்டத் தயாராகயிருக்கிறேன்.

உங்கள் கதைகளில் வரக்கூடிய ‘பகிடி’ மற்றும் சில விவரணைகள் நேரடியாகவே தமிழ் இயக்கங்களை கடுமையாகச் சாடின. இதன் வழியாகவும் உங்கள் மீது வாசக கவனம் திரும்பியது. உங்களுடைய சிறுகதைகளில் இந்தச் ‘சாடல் கலை’ தொடர்ச்சியாக தன்னியல்பில் வருகிறதா? அல்லது தீர்மானமாக திட்டமிட்டு எழுதுகிறீர்களா?

தமிழ் இயக்கங்களையோ போராளிகளையோ கடுமையாகச் சாடி எழுதினால் வாசக கவனம் நம்மீது திரும்பும் என்பது மனப்பிரமை. நன்றாகக் கதை எழுதினால் மட்டுமே வாசகர் கவனம் உங்கள் மீது திரும்பும். சாடுகிறேன், சங்கறுக்கிறேன் என எதையாவது கேவலமாக எழுதி வைத்தால் நேர்மையான இலக்கிய வாசகர்கள் பிளந்துகட்டி விடுவார்கள். அப்படித்தான் சாத்திரியின் ‘திருமதி.செல்வி’ கதையும் உங்களது ‘சாகாள்’ கதையையும் வாசகர்களால் கடுமையாக நிராகரிக்கப்பட்டன.

எந்தப் போராளிகளைக் குறித்தும் இல்லாத பொல்லாத பழிகளை நான் எழுதியதில்லை. என்னைச் சுற்றியுள்ள இவ்வளவு எதிர்ப்புகளுக்கிடையேயும், அந்த எழுத்து அறம் மட்டுமே என்னைத் தலை நிமிர்ந்து நடக்க வைக்கிறது. எந்தக் கூட்டத்திலும், எந்தப் புத்தக சந்தையிலும், எந்த நேர்காணலிலும் எதிராளியின் கண்களைப் பார்த்துப் பேசும் தைரியத்தை அந்த அறமே எனக்குக் கொடுத்திருக்கிறது. 

நிற்க; நான் எதையுமே தன்னியல்பாக எழுதுவதில்லை. எல்லாமே திட்டமிடல்தான். சம்பவங்களின் தேர்வு, அவற்றை வரிசைப்படுத்தல் அல்லது வரிசை குலைத்தல், திரும்பத் திரும்ப ‘எடிட்’ செய்தல் போன்ற எழுத்துத் தொழில்நுட்பங்களின் மூலம்தான் என் பிரதிகளை உருவாக்குகிறேன்.

இந்த எழுத்துத் தொழில்நுட்பத்தை உங்களின் ‘இச்சா’ நாவல் பெருமளவில் கொண்டிருக்கிறது. உங்களைத் தொடர்ச்சியாக வாசித்து வருகிற வாசகனுக்கு இதுபோன்ற ஒரே தன்மையிலான தொழில்நுட்ப எழுத்து சலிப்பை ஏற்படுத்தாது என்று எண்ணுகிறீர்களா? மேலும் கலை தருவிக்கக்கூடிய உள்ளுணர்வின் நுண்மையான தளத்திற்கு உங்கள் எழுத்துக்கள் பயணப்படாமல் போய்விடுமல்லவா?

“கலை தருவிக்கக்கூடிய உள்ளுணர்வின் நுண்மையான தளத்திற்கு” என்ற உங்களது வார்த்தைகள் “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல” என்பது போன்ற ஒரு கவித்துமான வரி எனப் புரிகிறதே தவிர, எனக்கு வேறு எதுவும் புரியவில்லை. தயவுசெய்து அடுத்த கேள்விக்குப் போகலாம்.

இன்றைக்கு தமிழ் இலக்கியம் எனும் பொதுச்சொல்லில் ஈழத்தமிழ் இலக்கியங்களுக்கு ஒரு முக்கிய இடமிருக்கிறது. அதாவது போரிலக்கியப் பிரதிகளுக்கு. அவற்றில் குணா கவியழகன், சயந்தன், தமிழ்க்கவி, ஷோபாசக்தி, தமிழ்நதி, தீபச்செல்வன், வாசுமுருகவேல் போன்றோரின் நாவல்கள் அதிகமாக வாசிக்கப்பட்டு விவாதிக்கப்படுகின்றன. சக போரிலக்கியப் பிரதிகள் குறித்து உங்களுடைய மதிப்பீடுகள் என்ன?

இந்தப்போரிலக்கியம்’ என்ற வகை குறித்து எனக்குத் தெளிவில்லை. அது போரைக் குறித்து எழுதும் இலக்கியமா அல்லது போர் நிலத்திலிருந்து எழுதும் இலக்கியமா?

போரைக் குறித்து எழுதுவதே போரிலக்கியம் என்றால் ஜெயமோகனின் ‘உலோகம், டி.டி. ராமகிருஷ்ணனின் ‘சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி’ போன்றவையும் போரிலக்கிய வகைக்குள் வருமா? போருக்குள் இருந்து போரைப் பற்றி எழுதுவதே போரிலக்கியம் என்றால் முஸ்லீம், சிங்கள எழுத்தாளர்கள் எழுதுபவற்றையும் போரிலக்கியம் என்றுதானே சொல்ல வேண்டும்.  நீங்கள் கொடுத்திருக்கும் ‘போரிலக்கிய’ எழுத்தாளர்கள் பட்டியலிலுள்ளவர்கள் எழுத வருவதற்கு முன்பே, இந்த  முஸ்லீம், சிங்கள எழுத்தாளர்கள் போரைப் பற்றி ஏராளமாக எழுதியிருக்கிறார்கள். ஆர்.எம்.நௌஸாத், சர்மிளா ஸெய்யித் போன்றவர்களின் நாவல்களெல்லாம் பேசப்படாத நாவல்கள் என்றா சொல்லப்போகிறீர்கள்?

போரினால் அனுபவங்களைப் பெற்ற தமிழர்களால் எழுதப்பட்ட நாவல்களே போரிலக்கியம் என நீங்கள் ஒரு குறுகிய வரையறையை வைத்தால் கூட, உங்கள் பட்டியலில் தேவகாந்தன், மெலிஞ்சி முத்தன், விமல் குழந்தைவேல், நொயல் நடேசன், யோ.கர்ணன் போன்றவர்கள் ஏனில்லை?  நீங்கள் கொடுத்த பட்டியலிலுள்ளவர்களுடைய நாவல்களுக்குச் சமமாகவோ அல்லது சற்றே அதிகமாகவோ இவர்களது நாவல்களும் வாசிக்கப்பட்டு பேசப்படுகின்றனவல்லவா. போரிலக்கியம் என நீங்கள் குறிப்பிடுவது ‘போர்ப்பரணி’யை அல்ல என்றே நான் நம்புகிறேன் .

ஈழத்துப்போரைப் பற்றி எழுதியிருக்கும் இலக்கியப் பிரதிகளை எப்படி நான் மதிப்பிடுகிறேன் என்பதை வேண்டுமானால் சுருக்கமாகச் சொல்லலாம். ஓர் இலக்கியப் பிரதியை மதிப்பிடுவதற்கு எழுதும் கலை, இலக்கிய அழகியல் என்பவை முக்கியமானவை எனினும் இந்தத் திறன்கள் வாய்க்கப்பெற்ற ஓர் எழுத்தாளர்; சாதியை, மத அடிப்படைவாதத்தை, இனவாதத்தை, பாஸிசத்தை நியாயப்படுத்தி ஓர் இலக்கியப் பிரதியை எழுதினால், நான் அந்தப் பிரதியை நிராகரிக்கவே செய்வேன். நீங்களும் நிராகரிப்பீர்கள் என்றுதான் நம்புகிறேன். ஏனெனில் அது அடிப்படை மனிதநேயத்துடனும் அறத்துடனும் சம்மந்தப்பட்டது. உச்சமாக இலக்கியத்திறன் வாய்க்கப்பெற்ற எஸ்.பொவின் ‘மாயினி’ நாவலை நான் இதனாலேயே நிராகரித்தேன். மிகச்சிறந்த கவியான கி.பி. அரவிந்தனின் கடைசிக் காலத்து எழுத்துகளையும் இந்தக் காரணங்களுக்காகவே நிராகரித்து எழுதினேன். இனப்படுகொலை செய்தவர்களையோ, சனநாயகப் படுகொலை செய்தவர்களையோ நியாயப்படுத்தி இலக்கியம் எழுதுவதும் போர்க்குற்றத்தின் ஒரு பகுதியே.

போரை எதிர்த்து இலக்கியத் தரத்தோடு பிரதிகளை உருவாக்கிய ஏராளமானவர்கள் நம்மிடையே உள்ளனர்.  சனநாயகத்துக்காகக் குரல் கொடுத்ததற்காகச் சில எழுத்தாளர்கள் தமது உயிரையும் எங்கள் மத்தியில்தான் இழந்தார்கள். யுத்தத்தை மறுத்தும் சனநாயகத்துக்காகக் குரல் கொடுத்தும் எழுதப்பட்ட பிரதிகளே அறம் சார்ந்த பிரதிகள். சனநாயகத்தின் குரல்வளையை அறுத்துப் போட்டவர்களைக் கடவுளாகக் கொண்டாடியும், சிறார்களைப் போரில் கட்டாயமாக இணைத்ததை மழுப்பியும், சகோதர இனத்தவர்கள் மீதான படுகொலைகளை  நியாயப்படுத்தியும் எழுதப்பட்ட பிரதிகள் வெறும் காகிதக்குப்பைகள். நான்கூட என்னுடைய இருபத்தைந்து வயதுக்கு முன்னால், இப்படிச் சில குப்பைகளை எழுதியிருந்தேன் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அதற்காக மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன். ஏனெனில் இதற்கெல்லாம் மன்னிப்பே கிடையாது.

‘போரிலக்கியம்’ என்ற வகைப்பாட்டில் நீங்கள் குறிப்பிடும் ஈழ எழுத்தாளர்களை சேர்த்துக்கொள்ளலாம். நான் என்னுடைய வாசிப்பின் மதிப்பீட்டில் தான் சில பெயர்களைக் குறிப்பிட்டேன். அது அவ்வளவு தான் என்ற தீர்ப்பல்ல. நீங்கள் கூறுவதைப் போல சனநாயகத்திற்கான குரல் (உங்களுடைய சனநாயகம் என்பது புலிகளின் அத்துமீறலை மட்டுமே சுட்டிக்காட்டும் அதே நேரத்தில் ஏனைய இயக்கங்களையும், இலங்கை அரச பயங்கரவாதத்தையும் லேசாக சாடுவது/தொட்டுக்கொள்வது) கொடுத்து எழுதப்பட்ட சமகால பிரதிகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

என்னுடைய சனநாயகம் என்பது புலிகளின் அத்துமீறலை மட்டுமே சுட்டிக்காட்டுவது, மற்றவர்களை லேசாகச் சாடுவது, என நீங்கள் சொல்வதை நான் பணிவுடன் மறுக்கிறேன்.

நான் உங்களை ஒன்று கேட்கிறேன். இலங்கை அரசின் இனப்படுகொலைகளையும் மனிதவுரிமை மீறல்களையும் என்னளவுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும், திரைப்படங்களாகவும், நாடகங்களாகவும், நடிப்பாகவும், பன்னாட்டு இலக்கியக் கருந்தரங்குகளாகவும், தொலைக்காட்சி – பத்திரிகை நேர்காணல்களாகவும் தமிழ் பரப்பில் மட்டுமல்லாமல் சர்வதேசச் சமூகத்திடமும் எடுத்துச்சென்ற இன்னொரு தமிழ் இலக்கிய எழுத்தாளனைக் காட்டிவிடுங்கள் பார்க்கலாம். நான் முகநூலுக்குள்ளும் மொண்ணைத் தமிழ்த் தேசியர்களுக்குள்ளும் என்னைக் குறுக்கிக்கொண்டவன் கிடையாது. என்னுடைய தளம் சற்றே பெரிது.

பொக்ஸ், ம், இச்சா நாவல்கள் நீங்கள் படித்திருப்பதாகச் சொன்னீர்கள்.. இந்த நாவல்கள் இலங்கை அரசையா.. புலிகளையா முதன்மையாக விமர்சிக்கின்றன? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் பார்க்கலாம்!

மற்றைய தமிழ் இயக்கங்களைப் பற்றி என்ன எழுதிக் கிழித்தாய் எனக் கேட்டால் அதையும் போதுமானளவுக்குக் கிழித்திருக்கிறேன். மற்றைய முப்பது இயக்கங்கள் செய்த அராஜகங்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு தட்டிலும், புலிகள் தனியொரு இயக்கமாகச் செய்த அராஜகங்களை மறுதட்டிலும் வைத்து ஒரு தராசில் நிறுத்துப் பார்த்தால், புலிகளின் தட்டே தாழ்வதால் அவர்களைப் பற்றித்தான் அதிக விமர்சனங்கள் எழும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

உங்களிடம் ஒரு விஷயத்தைக் கேட்க ஆசைப்படுகிறேன். மற்றைய தமிழ் இயக்கங்களது அராஜகங்களை மூடி மறைப்பதால் எனக்கு என்ன இலாபம்? நானென்ன அந்த இயக்கங்களது முன்னாள், இந்நாள் உறுப்பினரா? என்னுடைய எந்தப் புத்தகத்துக்காவது அவர்கள் ஏதாவது கூட்டம் கீட்டம் ஏற்பாடு செய்திருக்கிறார்களா? என்னுடைய எழுத்துகளைப் பரப்பினார்களா? மாறாக விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தில் நடத்திய ‘மானுடத்தின் ஒன்றுகூடல்’ நிகழ்வில்தான் என்னுடைய ‘கொரில்லா’ நாவலைப் பற்றிப் பேசப்பட்டது எனக் கேள்விப்பட்டேன். டக்ளஸ் தேவானந்தாவோ, கருணாவோ, சித்தார்த்தரோ எனது ஏதாவதொரு புத்தகத்தைப் படித்தார்கள் என்று எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆனால் பொட்டு அம்மானும் வே.பாலகுமாரனும் என்னுடைய வாசகர்கள் எனப் புலிகள் இயக்கத்திலிருந்த கருணாகரன் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

சனநாயகத்துக்காகக் குரல் கொடுத்து சமகாலத்தில் எழுதப்பட்ட பிரதிகள் பற்றிக் கேட்டிருந்தீர்கள். பாசாங்குக்கும், ஃபாஷனுக்கும் சனநாயகம் பற்றிப் பேசாமல், உண்மையான கரிசனையோடு எழுதப்பட்ட ஊழிக்காலம், உம்மத் நாவல்களும், கருணாகரனின் கவிதைகளும், செல்வம் அருளானந்தத்தின் ‘சொற்களில் சுழலும் உலகம்’ பிரதியும், யதார்த்தனின் கதைகளும், எப்போதுமே நான் விசுவாசிக்கும் வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதைகளும் உடனே என் நினைவுக்கு வருகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு பத்து வருடங்களுக்கு மேலாகியும், சமாதனத்திற்காக யுத்தம் செய்வதாக கூறி இனப்படுகொலை செய்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு நீதியை வழங்காது “கதை” சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தேரவாத பவுத்த சிங்களப் பேரினவாத அரச பயங்கரவாதத்தின் இனப்படுகொலையை உலகம் மறந்து போயிற்று. தமிழ்த்தரப்பின் அரசியல் ராஜதந்திர தோல்வியாக இதனைப் பார்க்கலாமா?

நீங்கள் தமிழ் அரசியல் தலைமைகளின் இராசதந்திரத்தைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்றே நினைக்கிறேன். சர்வதேசம் போர்க்குற்ற விசாரணையை நடத்தாது, இனப்படுகொலை நிகழ்த்தியவர்களை சர்வதேச நீதிமன்றம் தண்டிக்காது என்றெல்லாம் படிப்பறிவற்ற எனக்கே தெரியும்போது, சட்டங்களைக் கரைத்துக் குடித்த சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும் விக்கினேஸ்வரனுக்கும் அது தெரியாதா! அவர்கள் சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை, தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு, என்றெல்லாம் மனமாரப் பொய்சொல்லி, தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கான  இராசதந்திர நகர்வுகளை வெற்றிகரமாகச் செய்தார்கள். இப்போது அதைப் பேசுவதைக் கொஞ்சம் குறைத்து வைத்திருக்கிறார்கள். அடுத்த தேர்தல் வரும்போது மீண்டும் பேசக்கூடும்.

சிவசேனை சச்சிதானந்தன், காசி ஆனந்தன் போன்றவர்களுடையது ஆன்மீக இராசதந்திரம். ‘ஈழத்தமிழர்கள் இந்துக்களே’ எனச் சொல்லி இந்தியச் சங்கிகளின் ஆதரவைப் பெறுவது அவர்களின் திட்டம். ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ என்ன  செய்து கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை. அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஊழலுக்காகத் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட போது ‘தர்மத்திற்கே தண்டனையா’ என ஓர் இராசதந்திர அறிக்கையை அவர்கள் வெளியிட்டிருந்தார்கள் என்பது மட்டுமே என் ஞாபகத்திலுண்டு.

சர்வதேச வல்லரசு நாடுகள், தமது அரசியல் மற்றும் மூலதன நலன்களுக்காக இலங்கை அரசுடன் நல்லுறவையே கொண்டிருக்கிறார்கள். இந்த நாடுகளும், இவற்றால் இயக்கப்படும் பொது நிறுவனங்களும் இலங்கைப் பிரச்சினையில் மனிதவுரிமை மீறலைக் கண்காணிப்பது என்ற எல்லையுடனேயே தங்களை நிறுத்திக் கொண்டிருக்ககிறார்கள். அதையும் அவர்கள் சரிவரச் செய்யவில்லை. இதைத் தாண்டி அவர்கள் இலங்கை இனப் பிரச்சினையில் தலையீடு செய்யப் போவதில்லை. முதலில் இந்த உண்மையை நாம் புரிந்து கொண்டோமா? இந்த எளிய உண்மையைப் புரிந்து கொள்ள பத்து வருட காலங்கள் போதாதா? இனி இலங்கையில் நடக்கும் எந்த அரசுக்கொள்கை மாற்றமும் நாடாளுமன்ற அரசியல் வழியேதான் நடக்கும். அதை எதிர்கொள்ளச் சிறுபான்மை இனங்களுக்குத் தேவையானவை தமக்கிடையேயான அரசியல் ஒற்றுமையும் அணித்திரட்சியுமே. 

நாடாளுமன்ற அரசியல் வழியே இலங்கையில் அரசுக்கொள்கை மாற்றம் நிகழ்ந்துவிடுமென நீங்கள் கூறுவது உண்மையில் அதிர்ச்சியாக இருக்கிறது ஷோபா. எப்படி இத்தனை ஆண்டுகாலமாக தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிகமோசமான படுகொலைகளையும், வகைதொகையற்ற வன்முறைகளையும் எந்தவித ஆட்சேபணையுமில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இலங்கையின் நாடாளுமன்ற அரசியல் மூலம் இலங்கையில் உள்ள சிறுபான்மை இனங்களுக்கு விடிவு கிடைக்குமென எண்ணுகிறீர்களா? அதற்கு உங்கள் அரசியல் அறிவில் என்ன உத்தரவாதம்?

நாடாளுமன்ற அரசியல் வழியாகத்தான் இலங்கையில் அரசினுடைய கொள்கைகள் நிறைவேற்றப்படுகின்றன என்பதில் உங்களுக்கு என்ன சந்தேகம்? வேறெதாவது வழியில் இலங்கையின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்க முடியும் என்பதில் எனக்கு இப்போது நம்பிக்கையில்லை.

ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சியடைந்து அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவது அற்புதமான விஷயம்தான். அது நடந்துவிடும் என்றுகூட நான் நீண்ட நாட்களாக நம்பிக் கொண்டிருந்தேன். அந்த நம்பிக்கையால் உந்தப்பட்டு, ஒரு ட்ராட்ஸ்கியக் கட்சியோடு சில ஆண்டுகள் வேலையும் செய்தேன். ஆனால் அப்படி நடப்பதற்கான எந்த அகப் – புறச் சூழல்களும் இலங்கையில் கிடையாது. இயக்கங்களின் வழியில் ஆயுதப் போராட்டத்தை எங்கள் மக்கள் முன்னெடுப்பார்கள் என்றும் நான் நம்பவில்லை. தவிரவும் ஆயுதப் போராட்டத்தைக் காட்டிலும் நாடாளுமன்ற அரசியல் முறையே சிறந்தது என்றே நான் இப்போது நம்புகிறேன்.

இலங்கையில் புரட்சி வரும், எழுச்சி வரும், அய்ந்தாம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் என்றெல்லாம் யூ-டியூபில் கணக்குள்ள எவர் வேண்டுமானாலும் சுலபமாகச் சொல்லிவிடலாம். இதைச் சொல்வதால் இவர்கள் எதையும் இழக்கப் போவதில்லை. இப்படிச் சொல்பவர்களில் ஏறக்குறைய முழுப்பேருமே இலங்கைக்கு வெளியே வாழ்பவர்கள் என்பதும் உங்களுக்குத் தெரிந்ததே.

இன்று இலங்கையிலுள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் நாடாளுமன்ற அரசியலில்தான் ஈடுபட்டுள்ளன. இலங்கையின் இடதுசாரிக் கட்சிகள் எல்லாமே தேர்தல் அரசியலில் பங்கெடுக்கின்றன. புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் கூட ஒரு தேர்தல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார்கள். நாடாளுமன்ற அரசியலில் சிறுபான்மை இனங்கள் இன்னும் முற்றாக வலுவிழந்து விடவில்லை. அவர்கள் ஓரணியில் நின்றுதான் மகிந்த ராஜபக்சவைத் தோல்வியடையச் செய்தார்கள்.  ‘தமிழர்களின் வாக்குகளாலேயே நான் தோற்கடிக்கப்பட்டேன்’ என மகிந்தவே சொன்னார். இம்முறை சனாதிபதி தேர்தலில் இன்னும் அற்புதமான முறையில் சிறுபான்மை இனங்கள் ஒருங்கே நின்று கோத்தபய ராஜபக்சவிற்கு எதிராக வாக்களித்தார்கள். மாகாண சபைத் தேர்தல்களிலும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தமிழர்களில் அறுதிப் பெரும்பான்மையினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னேயே திரண்டார்கள். இந்த ஒற்றுமை இன்னும் வலுப்பட வேண்டும். தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்க்கட்சிகள் வேற்றுமையிலும் ஒற்றுமையைக் கடைபிடிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் சிறுபான்மை இனங்கள், தீர்மானகரமான சக்திகளில் ஒன்றாக மாறுவதால் மட்டுமே இலங்கை அரசியல் சாசனத்திலோ அரசுக் கொள்கைகளிலோ மாற்றம் கொண்டுவர முடியும். இது நடக்காதென்றால் முழு இலங்கையும் நீண்டகாலப் போக்கில் சிங்கள மயமாக்கப்பட்டு விடும். பெரும்பான்மை இனத்தின் கீழே சிறுபான்மை இனங்கள் அடக்கி வைக்கப்பட்டிருந்த எத்தனையோ நாடுகளில் கடைசியாக இப்படித்தான் நடந்து முடிந்திருக்கிறது. கேட்கக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.

உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் எஸ்.பொ, உங்கள் படைப்புக்களில் பாதிப்பைச் செலுத்துகிறாரா?

என்னுடைய ஆரம்பகாலச் சிறுகதைகளின் எடுத்துரைப்பு முறையில் அவரின் பாதிப்பு நிச்சயமாக இருந்தது. எனினும் விரைவிலேயே அதிலிருந்து மீண்டு எனக்கான பாணியை உருவாக்கி விட்டேன் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அப்பையா எஸ்.பொவும், தந்தை டானியலும், கு. அழகிரிசாமியும், டால்ஸ்டாயும், பாரதியும், மகா ஸ்வேதாதேவியும், ஜெயகாந்தனும் தங்கள் எழுத்துகள் வழியே எனக்கு வாழ்க்கையைக் காட்டிக் கொடுத்தார்கள். அவர்கள் என் ஆன்மாவை நிறைத்திருக்கிறார்கள். என் எழுத்தில் மட்டுமல்ல; என் தனிப்பட்ட வாழ்க்கையில், அன்றாடச் செயற்பாடுகளில், அரசியல் அறத்தில், காதல் வாழ்க்கையில், ஏன் செக்ஸில் கூட அவர்கள் கலந்திருக்கிறார்கள்.

ஒரு படைப்பாளிக்கு தேடல் அவசியமானது என்கிற கருதுகோள் எனக்குண்டு. நீங்கள் புலம்பெயர்ந்து வாழும் பிரான்ஸ் நாட்டின் சித்திரங்களை உங்கள் புனைவுகள் இன்னும் தீவிரமாக வெளிப்படுத்த தொடங்கவில்லை. ‘வெள்ளிக்கிழமை’ சிறுகதையில் அது தொடப்பட்டிருக்கிறது. ஏன் நீங்கள் பிரான்ஸை உங்களின் அனுபவங்களுக்குள்ளால் இன்னும் படைப்புக்களில் முன்வைக்கத் தொடங்கவில்லை ?

ஏனென்றால் எனக்கு பிரான்ஸ் நாட்டோடு உணர்வுபூர்மாக எந்தப் பிணைப்பும் ஏற்படவில்லை. இந்நாட்டின் மொழியை, கலாசாரத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று எனக்கு எந்த உந்துதலும் ஏற்படவில்லை. மனம் முழுவதும் ஈழத்தைச் சுற்றியே அலைகிறது. நினைவுகள், கனவுகள், கற்பனைகள் எல்லாமே தாய்நாட்டைச் சுற்றியதுதான். இது ஏதோ எனக்கு மட்டுமேயுள்ள இயல்பாக நீங்கள் கருதத் தேவையில்லை. என் தலைமுறையில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களில் தொண்ணூறு விழுக்காட்டினருக்கும் பொதுவான பண்பு இது. அதுவும் பழைய இயக்கக்காரர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். எல்லோரும் அறுபது வயதைக் கிட்டத்தட்ட நெருங்குகிறார்கள்… ஆனால் இன்னமும் எண்பதுகளின் ஈழத்திலும் வெலிகடைச் சிறையிலும் இந்தியாவின் சவுக்குமரக் காடுகளிற்குள்ளுமே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

புலம்பெயர் வாழ்வின் மிக முக்கியமான பிரச்சனையை பதிலாக  கூறியிருக்கிறீர்கள். உங்களுடைய இலக்கிய செயற்பாட்டினைக் கடந்து நீங்கள் இன்றைக்கு ஒரு திரைப்பட நடிகரும் கூட. நடிகராக உங்களுக்கு கிடைத்த வரவேற்பு குறித்துச் சொல்லுங்கள்?

சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம், மலையகத் தமிழர்கள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டார்கள். அப்போது மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக அடையாளப்படுத்துவதற்காக, இலங்கையில் தேசிய அடையாள அட்டைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அண்மையில் இந்தியாவில் கடும் எதிர்ப்புக்குள்ளான CAA -NPR போன்ற சட்டமேயது. அந்தச் சட்டத்தை எதிர்த்து எங்களது கிராமத்துப் பண்டிதர் க.வ.ஆறுமுகம் ‘அடையாள அட்டை’ என்றொரு நாடகத்தை எழுதி மேடையேற்றினார். அந்த நாடகம் ஓரளவு பிரபலமானது. யாழ் முற்றவெளி அரங்கில் கூட நிகழ்த்தப்பட்டது. அந்த நாடகம் நடத்துவதற்கு காவற்துறையினரின் இடைஞ்சலுமிருந்தது. அந்த நாடகத்தில் என் ஊரவர்களே நடித்தார்கள். என் அப்பாவும் நடித்திருந்தார்.

எங்களது கிராமத்தில் எல்லோருக்குமே நடிக்கும் ஆசை இருந்தது என்றால் ஒருவேளை உங்களுக்கு ஆச்சரியமாகயிருக்கும். கிராமத் திருவிழாக்களில் நாடகமோ கூத்தோ நடத்தப்படும்போது, அதில் ஒரு பாத்திரத்தை எப்படியாவது பெற்றுவிடுவதற்கு பல இராசதந்திர நகர்வுகளை மேற்கொள்வோம். பத்து வயதிலேயே காலில் சலங்கை கட்டிவிட்டேன். நடிப்பது குறித்த என் கனவுகள் பெரிதாகவேயிருந்தன

‘தீபன்’ படத்துக்குப் பிறகு, சிறிதும் பெரிதுமாக பத்து பிரஞ்சு, ஆங்கிலப் படங்களில் நடித்துள்ளேன். மேடையிலும் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. நடிகராக எனக்குக் கிடைத்த வரவேற்பு பற்றிக் கேட்டிருந்தீர்கள். பிழையில்லாமல் நடிக்கிறேன் என்றுதான் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். Cannes, César, INOCA, Helpmann விருதுகளுக்காக, சிறந்த நடிகர் பிரிவில் பரிந்துரையாகியிருந்தேன். எனினும் மகா நடிகர்கள்  விருதைத் தட்டிச் சென்றுவிட்டார்கள். சிறந்த நடிகருக்கான International Cinephile Society விருது கிடைத்தது. இவையெல்லாம் மற்றவர்கள் எழுதிய கதைகளில் நான் நடித்ததற்காகக் கிடைத்தவை. நான் திரைக்கதையில் பங்களித்து நடித்திருந்த ‘செங்கடல்’ திரைப்படம் இந்தியன் பனோரமா உட்பட பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் காண்பிக்கப்பட்டதும், ‘ROOBHA’ திரைப்படம் பால்புதுமையினர் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு உரையாடல்களை உருவாக்கியதும் எனக்கு எழுத்தாளனாகவும் மகிழ்ச்சியளிப்பவை.

ஜெயமோகன், ஒரு குறிப்பிடத்தகுந்த எழுத்தாளராக நிறைய இடங்களில் உங்களை சுட்டிக்காட்டியுள்ளார். உங்கள் இலக்கியத்தின் முக்கிய அம்சமாக வருகிற பகிடிக்கலையை அவர் பாராட்டியுமிருக்கிறார். அவரின் புனைவுகளில் உங்களுக்கு இணக்கமான பிரதி என்றால் எதனைக் கூறுவீர்கள்?

ஜெயமோகனின் பிரதிகளிலே எது பிடித்தமானது எனக் கேட்டாலே சொல்லமாட்டேனா? எதற்கு இப்படிச் சுற்றிவளைத்துக் கேட்கிறீர்கள் என்பது எனக்குப் பிடிபடவில்லை.

‘ஏழாம் உலகம்’ நாவலைச் சொல்வேன். நுட்பமான அவதானிப்புகளும் சித்திரிப்புகளுமாக மானுடத்தின் இழிவை முன்வைத்து, மாபெரும் குற்றவுணர்வுக்குள் நம்மைத் தள்ளி நிலைகுலையச் செய்துவிடும் நாவலது. மானுட அறங்களுள் தலையாதது ‘குற்றவுணர்வு’ என்ற கருத்து எனக்குண்டு. உலகின் மகத்தான பல நாவல்களில் இந்தத்தன்மை இருப்பதை அவதானித்திருக்கிறேன். புத்துயிர்ப்பு, ஆரண்யக், Uncle Tom’s cabin என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஏழாம் உலகம் நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ‘நான் கடவுள்’ திரைப்படத்தில்; அகோரி, அஹம் பிரம்மாஸ்மி கொலைக் கூத்துக்களை அடித்திருக்காவிட்டால் அந்தத் திரைப்படம் உலகத்தரத்துக்கு உயர்ந்து நின்றிருக்கும். அந்த நாவலுக்கும், படத்தை இயக்கிய பாலாவுக்கும், இசையமைத்த இசைஞானிக்கும் அந்த உயரத்திற்குச் செல்வதற்கான வல்லமையுண்டு.

உங்களுடைய வாசிப்பில் எப்போதும் ஞாபகத்தில் நிற்கும் புத்தகம் எது? ஞாபகத்தில் நிற்பதற்கான காரணம் என்ன?

ஆர்.கே.நாரயணன் எழுதிய ‘Malgudi Days’ நூல் குறித்து, என் சிறுவயதிலேயே கேள்விப்பட்டிருந்தேன். அதைப் படிப்பதற்கு மிகவும் ஆர்வமாகயிருந்தாலும், தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாததால் படிக்க முடியவில்லை. அந்நூல் பல்வேறு உலக மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது, நியூயோர்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளெல்லாம் அந்நூலைப் புகழ்ந்தன எனக் கேள்விப்பட்ட போதெல்லாம், அந்நூலைப் படித்தாக வேண்டுமென வெறியே வந்தது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் காத்திருந்ததன் பின்பாக, சென்ற சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பைக் கண்டுபிடித்தேன்.

ஆனால் அந்நூலில் உள்ள கதைகளில் பெரும்பாலானவை மிகச் சாதாரண கதைகளே. வீரகேசரி வாரமலர்களில் இவற்றைவிடச் சிறந்த கதைகளை நான் படித்திருக்கிறேன். எதைக்கண்டு வெளிநாட்டார் இந்நூலை வணக்கம் செய்தார்கள் என எனக்கு இன்னும் புரியவேயில்லை. இந்தப் புத்தகம் இனி எப்போதும் என் ஞாபகத்தில் நிற்கும். இனி ஒவ்வொரு புத்தகத்தை வாங்கும்போதும் இந்நூலின் வாசிப்பு அனுபவம் என்னை எச்சரித்து சாக்கிரதையாக வழிநடத்தும்.

உங்களுடைய புனைவுகளுக்கும் அபுனைவுகளுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இல்லை. ‘வேலைக்காரிகளின் புத்தகம்’ ஒரு கட்டுரைத் தொகுப்பாக அறிவிக்கப்பட்டாலும் அதே புனைவு மொழியே இருக்கிறதே ஏன்? இதனையுமொரு பின்நவீனத்துவ செயற்பாடென விளங்கிக்கொள்ளலாமா?

பின்நவீனத்துவம் என்றெல்லாம் ஏன் பெரிய பெரிய வார்த்தைகளைச் சொல்கிறீர்கள். அறிஞர் அண்ணா ‘கம்பரசம்’ நூலில் கையாண்ட விமர்சன மொழி என்னை மிகவும் பாதித்திருந்த காலத்தில்தான் எனது முதல் நீள் கட்டுரையான ‘சோவியத் சினிமாக்களும் சில்க் ஸ்மிதாவின் முகங்களும்’ என்ற கட்டுரையை எழுதினேன். அந்தக் கட்டுரையில் ‘கம்பரசம்’ பாணியையே அடியொற்றினேன். கதைச் சுவாரசியத்தோடேயே கட்டுரைகளையும் எழுதிவிடலாம் எனத் தெரிந்துகொண்டேன்.

புதிய ஜனநாயகம் – கலாசாரம் இதழ்கள் கையாண்ட மொழியின் பாதிப்பும் என்னிடருந்தது. அதனால் என் விமர்சன எழுத்துகளில் அப்போது ஒரு மூர்க்கத்தனமுமிருந்தது. இப்படியாகத்தான் இன்றைய என் அபுனைவு மொழி உருவானது. இதை உங்களால் நம்பமுடியவில்லை என்றால், கூட்டுப்புழுவிலிருந்துதான் பட்டாம்பூச்சி உருவாகிறது என்பதையும் நீங்கள் நம்பமாட்டீர்கள்.

கொரோனா கொள்ளை நோய்க்காலத்திற்கு பின்பான உலக அரசியலில் நிறைய நெருக்கடிகள் நிகழுமென எல்லோரும் கருதுகிறார்கள். இந்த நோயின் தாக்கம் நீங்கள் வாழக்கூடிய பிரான்சிலும் தற்போது அதிகமாகவே இருக்கிறது. இதன் பிறகான உலகம் எந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்ளுமென அச்சப்படுகிறீர்கள்?

எதிர்கொள்ளப் போகும் பாரிய பொருளாதரச் சரிவு, வேலையிழப்பு, மருத்துவக் கட்டமைப்பின் சீர்குலைவு எல்லாம் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் விஷயங்கள்தான். அதிகமும் கவனம் குவிக்கப்படாத விஷயமொன்றைக் குறித்தும் நாம் அச்சப்பட வேண்டியிருக்கிறது.

போர், அரசியல் அச்சுறுத்தல்கள், இயற்கை அழிவுகள், வறுமை போன்ற காரணங்களால் அகதிகளும் குடியேற்றத் தொழிலாளர்களும் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். இந்த அகதிகளதும் குடியேற்றத் தொழிலாளர்களதும் வருகையைத் தடுக்க பலநாட்டு அரசாங்கங்கள் கடுமையாக முயன்று கொண்டேயிருந்தன. இந்தப் பேரழிவைச் சாக்காக வைத்து, அகதிகளுக்கும் குடியேற்றத் தொழிலாளர்களுக்கும் கதவுகள் முற்றாகவே மூடப்பட்டுவிடுமோ என அஞ்சுகிறேன்.

எனக்கொரு ஆசையுமுள்ளது. கடவுள் நம்பிக்கையாளர்களைப் பார்க்கும்போதெல்லாம் என்னால் அவர்களுடைய முட்டாள்தனத்தை நம்பவே முடியாமலிருக்கிறது. அதிலும் கற்றறிந்தவர்கள், இலக்கியம் பயின்றோர்கள், விஞ்ஞானிகள் போன்றோர் எப்படித் தாங்கள் கற்ற அறிவுக்குச் சற்றும் சம்மந்தமில்லாமல் கோயில்களிலும் சேர்ச்சுகளிலும் பள்ளிவாயில்களிலும் சடங்குகளிலும் கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவேயில்லை. சக மனிதர்களும் அறிவாயுதமும் குழந்தைகளும் கொடுக்காத அரவணைப்பையும் மனநிம்மதியையும் நம்பிக்கையையுமா கடவுள் என்கிற கற்பிதம் கொடுத்துவிடப் போகிறது? ஆகக் குறைந்தது கடவுளை வணங்குவதில் எவ்வளவு நேரமும், சடங்குகளில் பொருளும் வீணாகிறது என்று கூடவா யோசிக்க மாட்டார்கள்? இது பெரும் மூடநம்பிக்கை என்றால், சிறுதெய்வ வழிபாடு எனச்சொல்லி சிறு மூடநம்பிக்கையைப் பேசுபவர்கள் தனி. பண்பாடு, மரபு எனச் சொல்லி மதங்களைப் தூக்கிப்பிடிக்கும் அறிவுஜீவிக் கிரிமினல்களுக்கும் குறைவில்லை.

கடவுள் நம்பிக்கையே அற்ற முக்கால்வாசிச் சனத்தொகையைக் கொண்ட சுவீடன், நோர்வே, ஜப்பான் போன்ற நாடுகளில் வாழும் மனிதர்களெல்லாம் என்ன கெட்டுவிட்டார்கள்? அவர்களிடமும் காதலும் உறவும் கலையும் இலக்கியமும் பண்பாடும் கலாசாரமும் மனித மாண்புகளும் இல்லையா என்ன! இலங்கையிலும் இந்தியாவிலும் நடப்பதுபோல, மதத்தின் பெயரால் சக மனிதனையும் பெண்களையும் அவர்கள் விலக்கியா வைக்கிறார்கள்? கொன்றா போடுகிறார்கள்?

புரட்சிகளின் பின்னாக மட்டுமல்லாமல், மனிதப் பேரழிவுகளின் பின்னாலும் கூட மக்கள் கூட்டாகத் தங்களது நம்பிக்கைகளை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின் பின்னாக அய்ரோப்பாவில் சனநாயகம், தனிமனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு வெகுவாக அதிகரித்ததையும், உலகம் முழுவதும் காலனித்துவத்துக்கு எதிரான எழுச்சிகள் உத்வேகம் பெற்றதையும் நாம் கவனிக்கலாம்.

கண்முன்னே நடக்கும் கொரோனா என்னும் பெரும் மானுட அழிவைப் பார்த்தாவது, மூடப்பட்டு இருண்டு கிடக்கும் வழிபாட்டுத்தலங்களைப் பார்த்தாவது, இந்தக் கடவுள் நம்பிக்கையாளர்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து விழித்துக்கொள்ள மாட்டார்களா, மதங்களை விட்டு வெளியேற மாட்டார்களா என்ற பேராசை எனக்குண்டு.

***

சிந்துஜன் நமஷி கவிதைகள்

3

(1)

அளவில் பெரிய பனம்பழங்களை
அகாலத்தில் உதிர்த்துக்கொண்டுதான்
இருக்கின்றன ஈழத்துப்பனைகள்
சுட்டுத்தின்னக் கேட்டாலும் தராமல்
பனங்கிழங்கு மேட்டுக்காய் அதை சேகரிக்கிறாள்
மூதாய்
ஆயிரம் விதைத்தால் காட்டுப்பன்றி தின்றது போக
முன்னூறு கிழங்கு வந்தாலே
போதும் அவளுக்கு
கிழங்கு பிடுங்குவதற்கு முதல் நாள் இரவில்
நாடியில் கைகள் ஊன்றியபடி
காவல் நிற்கிறாள்
காட்டுப் பன்றிகள் போர் முடிந்தும்
தோண்டப்படாத கண்ணிவெடிகளின்
மீது தாடை கிழிந்து கிடக்கின்றன.

(02)

அம்மாவை நாள் கூலிக்கு தோட்ட வேலை செய்ய
அனுப்பிவிட்டு வாகைமரத்தடியில்
சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி அப்பா
தன் இளமைக்கால கதைகளை சொல்லத்தொடங்குவார்
நாடு பிடித்த கதை சொல்லுவார்
சண்டை போட்ட கதை சொல்லுவார்
அம்மாவை காதல் பண்ணின கதை சொல்லுவார்
வாகரை சமரில கால் போன கதை சொல்லுவார்
அவங்க கல்யாணம் கட்டின கதை சொல்லுவார்
அகதி முகாமில நாங்க பிறந்த கதை சொல்லுவார்
வானம் இருட்டி அம்மா வரும் வரைக்கும் கதை கேட்போம்
நாளைக்கும் அம்மா வேலைக்கு போவாள்
நாளைக்கும் அப்பா கதை சொல்வார்
நாளைக்கும் அவர் கதை கடந்த காலம் பற்றியதாகவே இருக்கும்

***

கோ நாதன் கவிதைகள்

0

அகாலமாகிய காலம்.

என் மூச்சுக் காற்றின்
இறுதி அடக்கம் கந்தகத் துகள்களின்
நெடிகளால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு உடல்களும்
கால் நூற்றாண்டு போர்
தந்த வலியை
காலம் உலர்த்திய கோட்டில் படிந்திருக்கிறது.

போர் உக்கிய மண்ணிலிருந்து
மீளெழுப்பம் என்பதறியாது
குருதி அப்பிய பாடல் பாடும் பறவை நான்.

கடந்த இறுக்கமான காலம்
வன்ம வடுவில் விளைந்த வேதனையில்
பிறழ்வு வாழ்வுள் சபித்து போகிறேன்.

அடக்குமுறை இனத்தின்
வன்முறை பாயும் அதிகாரம்
என்னுடைய தூர்ந்த காலத்தின்
இயலாமை
ஒரு நிர்க்கதி முடிவில் நியதியாகி விட்டது.

நான் வளர்த்த நாயும்,
பெயரற்றுப் போன ஊரின்
யாருமற்ற தெருக்களில்,
புதைந்திருக்கும் உடல்களை
சுற்றிச் சுற்றி துயருற்று அலைகிறது

ஏதுமில்லாத நகரில்
இலட்சியமான என்னுடைய காலடிகள்
கேட்பாரற்று
என் வீட்டின்
சூன்ய சூழலில் அடங்கிக் கிடக்கிறது.

புத்தனின் புன்னகை


எவ்வித அதிகாரங்களுமற்று
தனித்தலைந்து கொண்டிருக்கிறது
என் நிலத்தின் சுதந்திர வேட்கை

அந்த வான் வெளியில்
புத்தனின் புன்னகையின் காற்றில்
அசையும் வண்ணத்துப்பூச்சி சிறகினிலே கூட
எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருந்தது

யசோதரை
ஈழ தேசத்தின் எல்லைக்கோட்டில்
மேலுமொரு
தம்பதத்தில் இரத்தக் குறிப்புக்களை
எழுதிக் கொண்டிருக்கிறார்.

.

புத்தனின் புன்னகை.


எவ்வித அதிகாரங்களுமற்று
தனித்தலைந்து கொண்டிருக்கிறது.
என் நிலத்தின் சுதந்திர வேட்கை.

வான் வெளி எங்கும்
புத்தனின் புன்னகை காற்றில்
அசையும் வண்ணத்துப்பூச்சி சிறகினில்
எந்தவொரு மாற்றமும் நிகழ்ந்ததற்கான அறிகுறியும் தெரியவில்லை.?

ராஜ வம்சத்தின் புதல்வர்கள்
காவுகொள்ளப்பட்ட நிலமெங்கும்
புத்தனின் பெயரில்
வெள்ளைஅரச மரங்களோடு கடவுளின் பிணத்தையும் புதைத்து செல்கின்றார்கள்.


புத்தன்,
ஆசை சீடர்களால் பலி பீடமேறி
இரத்தம் மிதித்த காலடிகள்
கொலைகளின் சாத்தியப்பாட்டில்
இன்னுமொரு யுகத்திற்கு நகர்த்துகிறார்கள்.

யசோதரை
ஈழ தேசத்தின் எல்லைக் கோட்டில்
மேலுமொரு
தம்பதத்தில் இரத்த குறிப்புக்களை
எழுதிக் கொண்டிருக்கிறாள்.


சாக்குருவிகளின் பாடல்களில் நிறைந்து போன்
எனது ஊர்
எனது நிலம்,
எனது வாழ்வு,
எனது காலம்.
உனது ஞான போதனைகள் நிறைவேற்றுமா?

எஞ்சிய இரும்பு கறல்களும்,
நச்சு வாயுக்களும்
மிதிக் கனவுகளும்
இருப்பிடத்தை குடியிருப்பில் தொலைந்து மிதியற்று கழிகிறது என் மரண காலம்.


நான்
எல்லாவற்றையும் இழந்த பின்
உடம்பெல்லாம்
யோனிகளால் முளைத்து இருக்கிறேன்.

எனது அழுகை,
அவள் விசும்பல்,
உனது புன்னகை,
யாருடைய ஆயுதம்? எவருடைய வெற்றி?

.

வனஸ்பதி

0

சந்திரா இரவீந்திரன்

அந்தமற்ற பெருவானம்
அள்ளுண்டு நகரும் முகில்கள்
கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்
கதை சொல்லும் பால்நிலவு
கரை புரண்டு தழுவும் கடலலைகள்
நேசமுடன் மேனி தொடும் ஆசைமழை
ஊர் வாசம் வீசும் காற்று!

மனம் கொள்ளாக் கனவுகள்
மாளா நினைவுகள்…
இன்பமும் துன்பமும் கலந்துருகும்
நெஞ்சிற்குள் மாயவலி..!

காலச்சூரியனைத் தேடி
நீளமாய் நடக்கின்றேன்….

எழுதுவதற்கான சொற்கள் அதற்குமப்பால் எங்கோ தொலைந்து போயின போலிருந்தது.  மனசு மட்டும் அலைந்தபடியே கிடக்கிறது. கட்டற்றுப் பாயும் காலத்தை உதைத்து விட்டு, காந்தக்கல் இழுப்பது போல் பின்வளமாய் இழுபட்டுச் செல்கிறது அது. கனவுகள் மிதந்து திரியுமொரு வெளியில் ஏதோவொரு புள்ளியில் அது சிலிர்ப்போடும் தயக்கத்தோடும் நின்று கொள்கிறது!

   ஒரு வெயிற்காலம். பின்னரொரு பனிக்காலம். சுழன்றடித்துப் புழுதி கிளப்பும் சோழகக்காற்றுக் காலம். எல்லாவற்றையும் கழுவி அடித்துச் செல்ல ஒரு மழைக்காலமென எத்தனையோ காலங்கள் அங்கு வந்து போயின. அளக்கக்கூடிய சந்தோசங்களும் அளவிட முடியாத் துயரங்களும் அவற்றோடு சேர்ந்தே வந்து போயிற்று!

   கண்களை ஒரு கணம் மூடுகிறாள். நெஞ்சு முட்டி, நிலம் முட்டி, வானம் முட்டுமளவிற்கு பேசியவையும் பேச மறந்தவையும் மலைகளெனக் குவிந்து கிடக்கிறது!  அந்தக் காலத்தின் இடுக்குகளை ஒவ்வொன்றாக மெல்ல மெல்லத் தொட்டுப் பார்க்கிறாள். காற்றில் மிதந்து திரியும் அந்தக் கனவுகளின் வெப்பத்தை இப்பொழுதும் அவளால் உயிர்ப்போடு உணர முடிகிறது! திகைப்போடும் பரவசத்தோடும் அசையாது நிற்கிறாள்!

    மெல்லிய காற்று மேனி தொட்டுத் தழுவிச் செல்கிறது. சொல்லாமல் பெய்த மழை பின் சிறு தூறலாகி விடைபெறத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

மழைச்சாரல் ஓய்ந்த பின் இலேசான மஞ்சள் வெயிலுடன் கலந்து மினுமினுக்கும் அந்திமாலை, முன்னெப்போதும் இல்லாத அபூர்வ அழகில் குழைந்து கிடந்தது!

   தென்னை மரங்களிலிருந்து கீழே விழுந்து சிதறிக் கிடக்கும் தென்னம்பூக்களும், நெல்லி மரத்திலிருந்து கொத்துக் கொத்தாய் கொட்டுண்டு கிடக்கும் நெல்லிப் பிஞ்சுகளும்; வெண்பட்டு விரித்தது போல் பரவிக்கிடக்கும் பிச்சிப்பூக்களுமாய் மயக்கும் வாசனையை வளவெங்கும் கிளறி விட்டிருந்தன!

  அந்நேரம் கிணற்றில் அள்ளிக் குளிக்கப் பிரியமாக இருக்கும். கையும் உடலும் துறுதுறுக்கும். கிணற்றினுள் மழைநீரும் தென்னம்பூக்களும் கலந்து, குளிர்மை பொங்கிக் கிடக்கும். கிணற்றடியும் தொட்டியும் மழைநீரில் கழுவுண்டு அவற்றின் சலவைக்கற்கள் பளபளக்கும். சுற்றிவர இருக்கும் வேலியும் மரங்களும் புத்தம் புதிதாய் பொலிவு காட்டும்.

  அம்மாவின் பாவாடை ஒன்றைத் தூக்கி, அவள் தன் சிறுமார்புகளை மறைத்து வழுக வழுக முடிந்தபடி, ஓடிச்சென்று கிணற்று நீரை அள்ளியள்ளிக் குளிக்கிறாள்.

   குளிக்கும் போது அங்குமிங்குமவள் கருவண்டுக் கண்கள் சுழலும். திடீரென்று கிணற்றடி வேலிக்கப்பால் நகரும் ஒழுங்கையில் ஒரு தலை மெதுவாக ஊர்ந்து செல்லும். அது விஜயனின் தலையாகத்தான் இருக்கும். வேலைக்கு மனுப்போட்டு விட்டு செய்வதற்கு ஏதுமற்றவன் போல், தன் நீண்ட கழுத்தோடு அந்த ஒழுங்கையால் நடந்து திரிகிறவன் அவன் தான்.

    கிணற்றடிக்கு வடக்குப்புறமுள்ள பெத்தம்மாவின் வீட்டிற்கும் அப்பால் சில பனங்காணிகள். அங்கு தலையைச் சிலுப்பியபடி நெடுநெடுவென வளர்ந்து நிற்கும். ஏராளப் பனைகளில் ஏதோவொரு பனையில், கன்னங்கரேலென்ற வடிவேலுவும், வெள்ளைவெளேரென்ற பாஸ்கரனும் நிச்சயமாய் ஏறியிருப்பார்கள். பனைகளில் தினமும் ஏறியேறியே கவர்ச்சியான உடல்வாளிப்பைப் பெற்றிருக்கும் இவர்கள், மடித்துக் கட்டிய சாரமும், இடுப்பில் வரித்த தோற்பட்டியும், அதில் பொருத்திய மரக்குடுவைக்குள் பாளைக்கத்திகள், தோற்கட்டிகள், பாளைத்தட்டிகள், தொங்கும் முட்டிகள் சகிதம் ஊருக்குள் குறுக்கும் மறுக்குமாய் திரிந்து கொண்டிருப்பவர்கள். வீதியில் எதிர்பாராமல் இருவரையும் காணும் தோறும் கூச்சம் அவளைப் பிடுங்கித் தின்னும். அவள் குளிக்கும் போது கண்டும் காணாதவர்கள் போலிருக்கும் அசகாய சூரர்கள் என்று கள்ளமாய் மனம் எண்ணும்.

   கிணற்றில் அள்ளிய நீரை தலையில் ஊற்றும் முன்னர் அவர்கள் பனைகளில் இருக்கிறார்களா என அவளது கருவண்டுக் கண்கள் சுழன்று சுழன்று பனைகளின் நுனிகளை மேயும். அவர்கள் பனைவட்டுகளிற்குள் அமர்ந்திருந்து பாளை சீவிக்கொண்டிருப்பார்களேயானால், தண்ணீரை அள்ளி சும்மா சும்மா தன் தலையில் ஊற்றியபடியே நேரத்தைக் கடத்திக் கொண்டிருப்பாள். அவர்கள் பனைகளை விட்டு அகன்ற பின்னரே மிகுதி பல்லவியும் சரணமும்!

   அந்நேரம் பார்த்து கிணற்றடிக்குப் பின்னாலிருக்கும் மதிற்சுவரோடு கூடலாக வளர்ந்து நிற்கும் பப்பாசி மரங்களில் செண்பகங்களும் மைனாக்களும்; வந்து குந்தியிருந்து குறுகுறுவென்று கண்களை வெட்டி வேடிக்கை பார்த்தபடியிருக்கும்.

   கிணற்றிற்குள் துலாவை இறக்கும் போது ஒரு துள்ளல். இலங்கை வானொலியில் மாலை ஒலிபரப்புத் தொடங்க, அப்துல் ஹமீதும், மயில்வாகனம் சர்வானந்தாவும் வந்திருந்து அந்திப்பொழுதை மேலும் கிறங்கடிக்க வைத்துக் கொண்டிருப்பார்கள். துலாவை இழுக்கும் ஒவ்வொரு துள்ளலோடும் சேர்ந்து அவள் மனங்கொள்ளாத ஆசைகளும் கற்பனைகளும் காற்றில் பறக்கத் தொடங்கிவிடும்! மனசிற்குள் ஒரு பொன்னூஞ்சல் ஆடத்தொடங்கிவிடும்!

   திடீரென்று கிணற்றுக்குள் தொபீரென்று ஓசை கேட்க, திடுக்குற்று வானத்திலிருந்து பூமியில் விழுந்தது போல் அலமலர்ந்து போய் நிற்பாள்! நெஞ்சிற்குள் படீர் படீரென்று இதயம் எழும்பும் ஒலி பேரிடி போலக் கேட்டுக் கொண்டிருக்கும். நெல்லி மரத்தின் பின்னாலிருந்து தலையை நீட்டி எட்டிப்பார்த்து கேலி செய்யும் சின்னண்ணாவின் முகம் ஒரு பேய் போலத் தோற்றம் காட்டும்;. கோபமும் பயமும் கலந்த வெப்பியாரத்தில் “அம்மா…” என்று அலறுவாள். வீடு வெலவெலத்துப் போகும்!

   ஆசுவாசப்பட்டு சுயத்திற்கு வரும்போது சூரியன் மறைந்து வெகு நேரமாகியிருக்கும். அப்பாச்சி குரல் கொடுப்பா.

   “மோனை… இருண்ட பிறகு பச்சைத் தண்ணியில ஊறாதை. பிறகு வாதம் வந்து விடும்….”

       இவளுக்குச் சிரிப்பு வரும்.

   “இளவரசிகளுக்கு எந்த வருத்தங்களும் வருவதில்லையே…”

      துவாலையால் உடலைத் துவட்டும் போது திரும்ப அவன் வருவான். தன் பேய் முகத்தை நீட்டி, விழிகளை உருட்டி, உதடுகளைப் பிதுக்கி… நையாண்டி பண்ணுகையில் மீண்டும் “அம்மா….” என்று அவள் அலறுவாள்.

   “சனியனே… இங்காலை வாடா. இனி சீமாட்டி… நீ நீராடினது காணும். கெதியா வா…” அதே ஸ்தாயியில் அம்மா கடுப்போடு குரல் கொடுப்பாள்.

   அங்கிருந்து வெளியேறுமுன்  சலவைக்கல் பதித்த கிணற்றடி காய்ந்து விடும். தென்னம்பாத்திகள் நீரால் நிரம்பி வழியும். முற்றத்தில் சிலுசிலுவென்ற குளிர் காற்று வீசத்தொடங்கி விடும். செண்பகங்களும் மைனாக்களும் தொலைதூரம் பறந்து போயிருக்கும். தென்னை மரங்களில் வெளவால்கள் விழுந்தெழும்பிப் போகும். வடிவேலுவும் பாஸ்கரனும் பனைகளை விட்டுப் போய் வெகு நேரமாகியிருக்கும்.

   வானத்தில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டத் தொடங்க, பெத்தம்மா வீட்டில் தேவார ஒசை கேட்கத் தொடங்கியிருக்கும். ஆத்தியடிப் பிள்ளையார் கோவிலில் மாலைப்பூசை மணி ஒலிக்கத் தொடங்கிவிடும்.

வானம் அமைதியாய் கிடக்க, நிலவு தென்னை மரங்களிற்கிடையாய் புதுமொழிகள் பேசத்தொடங்கும்!

  நீராடல் முடிய, மாலைப்படிப்பு தொடங்க முதலில் வேறு கனவு வரும். படிக்கும் போது இன்னுமொரு கனவு வரும்..!

                     -2-

    பின்னர் ஒரு காலம் அது!

   எங்கிருந்தோ வந்து புற்றீசல் போல் அவர்கள் குவிந்திருந்தார்கள். வீதிகள், ஒழுங்கைகள், காணிகள், கட்டாந்தரைகள் என்று எதுவும் மிச்சமில்லை. இண்டு இடுக்கெல்லாம் ஈயாக மொய்த்துக் கிடந்தார்கள்!

   அமைதி தொலைந்திருந்த ஒரு மாலை நேரம் அந்த வீட்டின் பின் வளவுக்குள் கேள்விகளேதுமற்று நுழைந்திருந்தார்கள். அங்கு வரும்போதெல்லாம் ஓசைகளை ஒளித்து வைத்துவிட்டு கள்ளத்தனமாகவே வருகிறார்கள். அலுக்காமல் சலிக்காமல் மீளவும் மீளவும் வருகிறார்கள்!

   சில மாதங்களிற்கு முன்னர் தான் அந்த அதிசயங்கள் நடந்தன. சல்லி பறித்தது போன்ற பேரோசையுடன் தலைக்கு மேலாய்; ஒன்றன்பின் ஒன்றாய் பறந்து சென்ற போர் விமானங்கள் உணவுப் பொட்டலங்களை வீசிய போது, அண்ணாந்து பார்த்தவர்களின் கண்களில் தெரிந்த நம்பிக்கை ஒளிக்கீற்று எப்படிக் காணாமல் போனதென்று தெரியாமலே போய்விட்டிருந்தது. துள்ளிக் குதித்த மனங்கள் இப்போ மொத்தமாய் சுருங்கி நசுங்கிப் போய்விட்ட பின்னரும், அவர்களுக்கான எல்லாவற்றையும் மொத்தமாய் குத்தகைக்கு எடுத்துக் கொண்டவர்கள் போல் யாராலும் விரும்பப்படாதவர்கள் நினைத்த நேரம் வருகிறார்கள்- போகிறார்கள்.

   மல்லிகை மணம் கமழும் வீடெங்கும் இப்போ வனஸ்பதி நெய்யின் அடர்நெடி. வீட்டு வராந்தாக்களெங்கும் சாவுகளைச் சுவைக்கும் வெறியோடு அலையும் தடித்த பூட்ஸ்களின் ஓசை.

   இடிப்பது போல் ஒலிக்கும் இதயத்துடிப்பைத் தவிர வேறெதுவும் அவள் காதுகளுக்குக் கேட்பதில்லை. எந்தக் காரியத்தைச் செய்யும் போதும் யாருடைய கண்களோ அவர்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதான பதற்றம். எங்கிருந்தோ நீளும் துப்பாக்கி முனைகள் எந்நேரமும் அவ்வீட்டைக் குறி பார்த்தபடியே இருப்பது போன்ற அச்சம்!

   அதே கிணறு, அதே கிணற்றடி, அதே வேலி, அதே மரங்கள்… ஆயினும் இப்போ கிணறும், குளியலும் தரும் அச்சம் வார்த்தைகளில் அடங்க முடியாததாகியிருந்தது! கண்கள் அங்குமிங்கும் அலைபாய, மளமளவென்று துலாவை இழுத்து தண்ணீரை அள்ளி உடலில் ஊற்றுகிறாள். சவர்க்காரத்தை நுரைபொங்க உடலெங்கும் தேய்த்து விட்டு நிமிரும் போது வனஸ்பதி நெய்யின் கமறல் காற்றோடு கலந்து வந்து நாசியைத் தீண்டுகிறது. அவள் வெலவெலத்துப் போய் அப்படியே நிற்கிறாள்! குபீரென்று மண்டைக்குள் பாயும் குருதியோட்டத்தின் வேகம் தலையை கிறுகிறுக்க வைக்கிறது!.

   கிணற்றடியைச் சுற்றி நின்றிருந்த அவர்களது முகங்களின் தடித்த மீசைகள் திகிலூட்டின. துப்பாக்கிகளும் இரும்புக் காலணிகளும், வனஸ்பதி நெய்யின் மணமும் வீட்டு வளவை நிறைத்திருந்தது. அவர்களின் வெறித்த பார்வைகள் அவளுடலைத் துளைத்து சல்லடையாக்கிக் கொண்டிருந்தன. மார்பு வரை சுற்றிக்கிடக்கும் ஈரப்பாவாடையும், சவர்க்கார நுரையும் உடலோடு ஒட்டிக் காய்ந்து உறையத் தொடங்கியது.

   அவளால் ஒரு அடிகூட எடுத்து வைத்து நகர முடியவில்லை. செய்வதறியாது சிலைபோல் நிற்கிறாள். பாவாடைக்குள் கால் தொடைகள் வெடவெடென நடுங்கிக் கொண்டிருக்கின்றன.

    “ஜல்தி…ஜல்தி…” ஒரு படைவீரன் அதட்டுகிறான்.

    “நான் எங்கே போவது? இதுதான் என் வீடு” வார்த்தைகளை ஓசையின்றி மனசு இடித்துச் சொல்வது அவளுக்கு மட்டுமே கேட்கிறது.

    ஒருவன் தன் பூட்ஸ் காலைத் தூக்கி கிணற்றடித்தரை மீது வைக்கிறான். தனது ஒரு கையை நீட்டி, சிறு பூச்சியைத் தட்டிவிடுவது போல் அவளை தட்டிவிட்டான். அவள் கிணற்றண்டை இருக்கும் சுவரோடு மோதி மறுபக்கமாய் போய் சரிகிறாள். அவர்கள் மிருக வேட்டைக்காரரைப் போல் சட்டென்று அருகில் பாய்ந்து வந்து நிற்கிறார்கள்.

    “அம்மா…” என்று அலறியவாறே வேகமாக எழுந்து வீட்டிற்குள் ஓடுகிறாள் அவள். உள்ளே நின்றிருந்த அத்தனை பிசாசுகளும் திரும்பிப் பார்க்கின்றன. உள்ளேயும் வெளியேயும் ஆயிரம் பிசாசுகள் ஏற்கனவே நிலைகொண்டிருப்பது அப்போது தான் அவளுக்குத் தெரிகிறது.

   அவர்களுள் உயரமாக இருந்த ஒருவனின் முரட்டுக் கைகள் அவளின் குட்டித்தங்கையை தகாத முறையில் பற்றிப்பிடித்து வைத்திருந்தது. அவள் புலன்களற்றவள் போல் சுருண்டு நின்றிருந்தாள்.

   நாய்க்குட்டி லலித் வெருண்டு பதறிப்போய் நின்றிருந்தது. அதனால் குரைக்கக் கூட முடியவில்லை. அப்போதைய பாதுகாப்பு அமைச்சரின் பெயரை தன் நாய்க்கு வைத்ததில் உள்ளுர ஒளிந்திருக்கும் குரூர மகிழ்ச்சி அப்போதும் எள்ளளவும் குறையாமல் இருப்பது அவளுக்கே வேடிக்கையாக இருக்கிறது.

   வெளியில் மேலும் இரு கனரக வாகனங்கள் வந்து நிற்க, நேசக்கரம் நீட்ட வந்ததாகக் கூறுபவர்கள் திபுதிபுவென்று கீழே குதிக்கிறார்கள். கைகளில் கத்திகளும் துப்பாக்கிகளும். வீட்டு வராந்தாவெங்கும் புழுதி படிந்த பூட்ஸ்களின் அடையாளங்கள் நிறைகின்றன. கதவுகளை உதைகிறார்கள். துப்பாக்கிகளின் அடிப்பாகம் கூரையில் தொங்கிக் கொண்டிருக்கும் மின்குமிழ்களை அடித்துச் சிதற வைக்கிறது. பூமரங்கள் சிதைக்கப்படுகின்றன. அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்கள் முற்றத்தை நோக்கி வீசப்படுகின்றன. விழுந்து கிடக்கும் தென்னம் மட்டைகளை எடுத்து கைகள் போன போக்கில் வீசுகிறார்கள். ஹிந்தி மொழியின் அதட்டல்களால் வீடு நிறைகிறது. வீடெங்கும் அரியண்டம் தரும் பூச்சிகள் ஊர்ந்தபடியிருக்கின்றன!

   குடும்பப் புகைப்பட ஆல்பங்களில் அவர்கள் தேடும் நபர் இல்லையென்றதும் ஆக்ரோஷமாய் கத்திக் கூச்சலிட்டு, அவற்றைக் கிழித்து வீசுகிறார்கள். புகைப்படத் துண்டுகள் பூட்ஸ் கால்களுக்குள் தாறுமாறாய் மிதிபட்டு மேலும் சிதைகிறது.

   வீட்டு வாயிலில் பூத்துக் குலுங்கும் மல்லிகைப் பந்தலை ஒரு கொட்டனால் அடித்து உலுப்புகிறான் ஒருவன். அவர்கள் தேடும் நபர் அந்தப் பூக்களுக்குள் ஒளிந்திருப்பான் போலும்!

  திடீரென்று சிறிய கத்திகளால் வேலிகளைப் பிய்த்துக் கொண்டு அடுத்த வீட்டிற்குள் வெறியோடு நுழைகிறார்கள்.

   அடுத்த வீட்டில் கிணற்றில் நீர் அள்ளிக் கொண்டிருந்த மைத்துனரை துப்பாக்கியின் அடிமுனையால் முரட்டுத்தனமாய் தாக்குகிறான் ஒருவன். அவரது மூக்கிலிருந்து பீறிட்டுப் பாய்கிறது இரத்தம்!  இன்னுமொருவன் அடித்தவனை திரும்பி வரும்படி கத்தி அழைக்கிறான்.

   வராந்தாக்களிலிருந்து பூட்ஸ் காலடிகள் அவசரமாய் நடந்து தேயும் ஓசை அந்த ஊர் முழுவதும் கேட்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு வாகனங்களாக புறப்பட்டுப் போகிறது. புழுதி வாசனை வீட்டு வாயிலில் வந்து படிகிறது. வாகனங்கள், அவர்கள் தேடும் நபரைத் தேடி வேறெங்கோ போகின்றன. புயல் ஒன்று ஓய, வீடு பேரமைதியில் மூழ்கிப் போகிறது!

   இனியென்ன வாளி வாளியாகத் தண்ணீர் அள்ளி வந்து, அடித்து ஊற்றி வராந்தாக்களைத் தேய்த்துக் கழுவ வேண்டியது தான். சிராய்ப்புக் காயங்களும் வீக்கங்களும் ஒருபுறம் இருக்கட்டும். அவை தன்பாட்டில் வலிக்கட்டும். அவையெல்லாம் ஒரு வலியல்லவே! மனசு ஏதேதோ சொல்கிறது.

   வராந்தாவின் ஓரம் தூணுக்கருகில் இப்பவும் அப்படியே இருக்கிறது அந்தத் தேநீர்க்குவளை! எல்லா வலிகளும் துயரங்களும் விலகியோடும் அதிசயத்தோடு அதனை அவள் குனிந்து எடுக்கிறாள். இன்னமும் சூடு ஆறாத சிலசொட்டுத் தேநீருடன் சிரிக்கிறது குவளை! அவள் உதடுகள் புன்னகைக்கின்றன! அம்மாவும் தங்கையும் அவளைப் பார்க்கிறார்கள். எல்லோர் உதடுகளிலும் புன்னகை. அவை உடலெல்லாம் பரவுகின்றன.

   மைத்துனர் வடியும் குருதியை ஒரு துவாலையால் துடைத்தவாறே வேலியருகில் வந்து நின்று பார்க்கிறார். அவளது கையிலிருந்த தேநீர் குவளையில் அவர் பார்வை தரிக்கிறது. அடுத்த கணமே விழுந்து விழுந்து அவர் சிரிக்கத் தொடங்குகிறார்!

வீடு மெல்ல மெல்ல சிரிப்பால் நிறையத் தொடங்குகிறது!

***

–