சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடைபெறும் அரசியல் கட்சியின் பொதுக்கூட்டத்தில் ஆற்றப்படும் உரை சாலையெங்கும் எதிரொலித்தது. நெசப்பாக்கம் வரை கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகள் உறுமிக் கொண்டிருந்தன. இரவு ஒன்பது மணியாகியும் அந்த உரை தொண்டர்களை நோக்கி பொழிந்தது. தொண்டர்களின் கரவொலிக்கு மத்தியில் அந்த உரை பேருரையாக மாற்றம் கண்டதை வீரமணி உணர்ந்துகொண்டான். கூட்டம் முடிந்தால்தான் அவனால் நித்திரை கொள்ள முடியும்.
கரீம் பிரியாணி கடையின் முகப்பில் நாளாந்தம் படுத்துறங்கும் வீரமணிக்கு இந்தக் கட்சியின் பொதுக்கூட்டத்தின் மீது கோபம் பொங்கியது. தன்னுடைய படுக்கையறையில் வந்து கூட்டம் நடத்தும் அவர்களைப் பார்த்து ‘போங்கடா போதும், உங்க கட்சித்தலைவன் அவனோட பத்து தலைமுறைக்கும் காசைச் சுருட்டிட்டான்’ என்று அவர்களைப் பார்த்துத் திட்டினான். வீரமணிக்கு கொஞ்சம் சாராய போதையிருந்தாலும் உண்மை பேசுவான். உளறுவதில்லை. நாளைக்கு காலையில் அவன் பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும். கட்சிக் கூட்டம் முடியும்வரை காத்திருக்காமல் அப்படியே வீதியின் ஓரமாக தூங்கலாமென முடிவெடுத்தான் வீரமணி.
கழகத்தொண்டர்களாகிய நாம் தலைமை சொல்லும் பணிகளை சிறப்பாக செய்யவேண்டும். எங்கள் தலைவனே சூரியன். எங்கள் தலைவனே விடிவெள்ளி என்ற ஓங்குதாங்கான புகழ் இடியில் அந்தப்பேருரை முடிந்தது.
சூரியன் உதிப்பதற்கு முந்தியே பாதாள சாக்கடைக்குள் வீரமணி இறங்கினான். எழுந்ததும் ஊற்றிய காப்போத்தில் சாராயம் அவனுக்குள் ததும்பியது. அவனின் முழங்கால் வரைக்கும் நகரத்தின் சாக்கடை நரகம் போல வெடித்துக்கொண்டிருந்தது. கண்ணுக்குத் தெரியாத அத்தனை கழிவுகளின் காற்றையும் அவன் சுவாசித்துக் கொண்டிருந்தான். எம்ஜிஆர் நகர் மெயின் வீதியில் நிற்கும் ஒவ்வொரு மரத்தையும் ஒரு வியாபாரம் பிடித்துக் கொள்ளும் ஒரு வேப்ப மரத்தின் அடியில் சாவி பூட்டு அடிப்பவன் கடை போட்டிருந்தால் இன்னொரு வேப்ப மரத்தை டயர்களுக்கு பஞ்சர் ஒட்டுகிறவர் பிடித்திருப்பார். அவர்களுக்கு அந்தந்த மரங்களின் நிழல்கள் எழுதி வைக்கப்பட்டது. இடம் மாறி கடை போடவே மாட்டார்கள். எளியவர்களின் ஒப்பந்தமது.
அங்குதான் நாட்டு முட்டை விற்கும் கிழவியின் வேப்பமரமிருந்தது. ஒரு சாக்கில் முட்டையை வைத்துக்கொண்டு கிழவி அமர்ந்திருப்பாள். அவ்வப்போது தன் பழைய சேலையிலேயே முட்டைகளை துடைத்துத் துடைத்து வைத்து வீதியின் இரு முனையையும் ஏக்கத்துடன் பார்த்திருக்கும். ஆறு மணியோடு சாக்கை சுருட்டிக் கொண்டு முட்டைகளை சீலை தலைப்பிலேயே கட்டிக்கொண்டு காணாமல் போய்விடும்.
எம்.ஜி.ஆர் நகருக்கும் கே.கே நகருக்குமான எல்லையை பிரிப்பது அந்த ஒரு முக்கிய வீதிதான். தமிழகத்தில் எதிரெதிர் துருவங்களில் அமர்ந்துக்கொண்டு அரசியல் செய்வர்களின் பெயரிலமைந்த எம்.ஜி.ஆர் நகரும், கே.கே.நகர் என்னும் கலைஞர் கருணாநிதி நகரும் அசோக் பில்லரில் துவங்கி நெசப்பாக்கம் சந்தி வரை நீண்டு செல்கிற அண்ணா பெயரிலான அந்தப் பிரதான வீதியிலே பிணைக்கப்பட்டிருந்தது.
எம்.ஜி.ஆர் நகரில் அடிக்கடி நடக்கும் அரசியல் கூட்டம் முடியும் வரையில் அவனாலும் நித்திரை கொள்ள முடியாது. கைத்தட்டலுக்காக நிறுத்தி நிதானிக்கும் இடங்களைத் தவிர ஒலிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் அவனது அறைக்கதவை குறிவைத்தே பேசுவது போல இருக்கும். அன்றைய கூட்டத்தில் பேசுகிறவர் “இலங்கை தமிழர்கள்” என்று வேறு உச்சரித்துக் கொண்டிருந்தார். ஐயா நாங்கள் இலங்கை தமிழர் இல்லை ஈழத்தமிழர் என்று சொல்ல வேண்டும் போல அவனுக்குத் தோன்றும் அன்றைக்கும் அப்படித்தான். எப்போது கூட்டம் முடிந்து சத்தம் ஓயும் என்பதிலே கவனமாய் இருந்தான். உடல் களைத்து நிற்கும் அவனுக்குக் கொஞ்சம் கட்டாய ஓய்வும் தேவைப்பட்டிருந்தது.
ஏனெனில் நாளை காலையில் கனடாவில் இருந்து ஒரு குடும்பம் வர இருக்கிறது. அவனது மாமாவுக்கும் அது தெரியும். ஆனாலும் அவர் போதையில் மறந்திருப்பார். கீழ்தளத்தில் உள்ள வீட்டில் இந்நேரம் அவர் நிம்மதியாக நித்திரை கொண்டிருக்கலாம். அல்லது தன் வீட்டுக்காவது புறப்பட்டுப் போயிருப்பார்.
வீட்டின் முதலாவது மாடியில் லண்டனைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் தங்கியிருக்கிறார்கள். மாலை ஆறு மணிக்கே அவர்களது விளக்குகள் அணைக்கப்பட்டு விடுகின்றன. இரண்டாவது மாடிக்குதான் நாளை காலை கனடா குடும்பம் வந்து சேரவிருக்கிறது. கட்டிடத்தின் உச்சியில் ஒரு தனிமை விரும்பியைப்போல துவாரகன் நின்று கொண்டிருந்தான். அதில் அவனுக்கொரு விருப்பமுமில்லை. விதிக்கப்பட்ட தனிமையை சுமந்து கொண்டிருந்தான். அவன் மேல் அக்கறை கொண்டவர்களின் கடின முயற்சியின் பின் அவன் இங்கே நிற்கிறான்.
துவாரகனின் மாமா வடகைக்கு எடுத்துள்ள அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் வீடுகள் முழுவதும் ஓர் விருந்தினர் விடுதியாக இயங்குகிறது. ஒரு வீட்டை ஒருமாதம் முழுமையாக வாடகைக்கு எடுத்தால் இருபத்தைந்தாயிரம் முதல் இருபத்தி இரண்டாயிரம் வரும். அது வருகிறவர்களின் வசதியை பொருத்தும், அவர்களை அனுப்புகிறவர்களின் நட்பைப் பொருத்தும் மாமாவால் நிர்ணயிக்கப்படும்.
நாள் அல்லது வாரக்கணக்கு என்றால் எப்படியும் இரண்டாயிரத்து ஐநூறுக்குக் குறையாது. மூன்று வீடுகளும் சுழற்சி முறையில் வெளிநாட்டு வாழ் ஈழத்தமிழர்களால் நிறைந்து காணப்படும். இப்போது கொஞ்சம் வருகை குறைவாக உள்ளதால் துவாரகனுக்கு இது ஓய்வான காலம்.
இந்த வீட்டிற்கு வந்த நாள் துவாரகனுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. “பிரான்ஸ் போனால் மட்டும் அங்க என்ன இருந்து பார்க்கிற வேலையா கிடைக்கப் போகுது. கோப்பை தான் முதலில் பல பேர் களுவுவாங்கள்” என்று அவனிடம் சொன்னார். கீழே குந்தி இருந்து பெட்டியை திறந்து சரத்தை வெளியே இருந்து கொண்டிருந்த துவாரகன் அதனைப் பொருட்படுத்தவில்லை. “என்னடா மாமா கல்யாணம் செய்து வச்சது பிடிக்கேலையோ?. காதல் கீதால் எதாவது” என்று இழுத்தார்.
“ஐயோ மாமா” அவசரமாக எழும்பி நின்றான். “நானும் காதலிச்சுத்தானே கட்டினான். காதலிச்சாலும் நாமதான் கழுவி விட வேண்டிக் கிடக்கும். வயிறை மட்டும் கழுவினா போதாதடா. எல்லாத்தையும் கழுவோணும்” என்று இறுக்கமாக முடித்தார். இதற்கு எதாவது சொல்ல வேண்டுமா என்று துவாரகன் யோசிக்கும் போதே அவர் கழிவறைகளை சுத்தம் செய்யும் பிரஸ்ஸும் ஆசிட் போத்தலுமாக கீழே இறங்கிப் போயிருந்தார்.
கனடா குடும்பம் தங்கவிருக்கும் இரண்டாவது மாடி இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு. இரண்டுமே கழிவறைகள் இணைக்கப்பட்டவை. சமையல் அறையும் படுக்கை அறையின் பாதி அளவில் இருக்கும். சமையலுக்குத் தேவையான பாதிரங்களும் காஸ் சிலிண்டரும் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். முன் விறாந்தை இரண்டு படுக்கை அறைகளையும் இணைத்தால் இருக்கக் கூடிய அளவுக்குப் பெரியது. அதனை இரண்டு சோபா செட்டுகளும் நான்கு பிளாஸ்டிக் கதிரைகளும் ஒரு வண்ணத் தொலைகாட்சிப் பெட்டியும் ஆக்கிரமித்திருக்கின்றன. அந்த தொலைகாட்சியில் பாரிசில் இருந்து ஒளிபரப்பாகும் பாசன் சானல் உட்பட எல்லா சானல்களும் பார்க்கக் கிடைக்கும்.
நகரின் மையத்தில் விருந்தினர் விடுதியாக அமைந்திருக்கும் அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் முன்னிருக்கும் இளவம்பஞ்சு மரத்தில் இப்போதெல்லாம் நிறைய வவ்வால்களைக் காண முடிகிறது. இருட்டில் அவைகளைக் கவனிப்பதற்கு யாரும் இல்லை. மொட்டை மாடிக்கு மேலாக அவ்விரவில் எங்கோ அவசரமாகப் பறந்து பறந்து களைக்கும் அவைகளும் அவனைக் குறித்து எந்த கவனமும் கொள்ளாதவையாக பறந்து கொண்டிருந்தன .துவாரகன் மொட்டை மாடியில் நின்றுகொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்தான். அப்படியான இருட்டில் எந்தப்பறவைகளும் பறவாத வானம் மட்டும் அவனது கண்களுக்கு தெரிந்தது. தன்னுடைய கைகளை அகல விரித்து விசும்பி அழத் தொடங்கினான். அந்தத் தனிமையின் கண்ணீரில் இருட்டு தளும்பத் தொடங்கியது.
ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வரும்போது லியோவோடு பக்காவும் காத்துக் கொண்டிருந்தான். மறுநாள் அந்த நகரத்தின் செஷன்ஸ் கோர்ட்டில் லியோவின் வழக்கு விசாரணைக்கு வர இருந்தது. பக்கா லியோவை துளைத்து எடுத்திருக்க வேண்டும் என்பது லியோவின் முகச்சுழிப்பிலிருந்து தெரிந்தது.
எனக்கு பக்கா மீது பயம் இருந்தாலும் அவனைப் பார்க்கும் ஆவலும் இருந்து கொண்டுதான் இருந்தது. மறக்க முடியாததாக மாறிவிட்ட காலங்களின் மிக முக்கியமான பாத்திரம் அல்லவா? லியோ என்னிடம் மிகுந்த மரியாதையுடன் கைகுலுக்கினார்.
இன்றைய ஹியரிங்குக்கு நான் நேரில் வரவேண்டுமென்பது அவரது விருப்பம். எனவே மிகுந்த கவலையுடன் தொடர்ந்து அழைத்து என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.
பக்கா ஓடிவந்து என்னை அணைத்துக் கொண்டான். இந்தப் பதினைந்து ஆண்டுகளில் குண்டாகியிருந்தான். ஆச்சரியமாக அவனுக்கு இன்னும் வழுக்கை விழவில்லை. கண்கள் அடர்ந்த புருவங்களின் கீழ் அதே கிறுக்குத்தனத்துடன் பளிச்சிட்டன. பக்கா எப்போதும் துணி எடுத்துத்தான் தைப்பான். அவனது எல்லா ஆடைகளிலும் ஒரு சிமெண்ட் வண்ணம் வீசும். இப்போதும் இன்றும் அதே போல சாம்பல் நிறத்தில் கால் சட்டையும் வெள்ளைக் கட்டம் போட்ட முழுக்கைச் சட்டையும் அணிந்திருந்தான். அரசு ஊழியரை எங்கிருந்தாலும் காட்டிக்கொடுக்கும் ஆடை அது. ஆனால் இது என்ன முழங்கால் பக்கம் அழுக்கு திட்டாகப் படிந்திருந்தது.
“என்னையா அழுக்கு?”
“இருட்ல தெரிலப்பா. சரி விடு. வீட்டுக்குப் போலாம்”
“சாருக்கு ரூம் போட்டிருக்கு” லியோ வெடுக்கென்று கூறினார்.
“சார் எங்கூடத்தான் வருவார். என்னப்பா நீ இங்க வந்துட்டுட்டு வீட்டுக்கு வரலேன்னா எப்படி? வா போலாம்”
“உங்கூட நைட் தங்கறதா? நான் கடகடவென்று சிரித்தேன். பக்காவுடன் இரவு தங்குவது எப்படிப்பட்டதென்பது எனக்கும் அவனோடு தங்கியவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.
“அதெல்லாம் அப்பப்பா. நீ அப்ப எப்படி இருந்த. இப்படி எப்படி இருக்க. நான் மட்டும் மாறக்கூடாதா? நீ வா சொல்றேன்”
“வைஃப்?”
‘அட வாப்பா”
நான் ஒப்புக் கொண்டேன். ஏன் என்று இன்றுவரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் மனதுக்குள் என்ன நடந்திருக்கும்?
***
இப்போது முற்பிறவி போலத் தோன்றிய அந்த காலத்தில் எங்கள் கட்சிக் காரர்களுக்கும் போலீசுக்கும் ஒரு சிறிய கண்ணாமூச்சி விளையாட்டு நடந்து கொண்டிருந்தது. இரவு வீட்டில் துங்கினால் மேற்படி நபர்கள் தூக்கிக் கொண்டு போய்விடும் ஆபத்து இருந்தது. எனவே அன்று இரவு ரகசிய தங்குமிடத்துக்குப் போக பஸ் ஏறச்சென்று கொண்டிருந்த போது பக்கா எதிர்ப்பட்டான்.
“எங்க வீட்டுக்கு வா மச்சி” என்றான். நிலமை தெரிந்தே அவன் அழைத்தது எனக்கு வியப்பளித்தது.
பக்கா இவ்வளவு வீரனா? அப்படியானால் அவன் இருக்க வேண்டிய இடம் நமது கட்சி அல்லவா? நான் ஒரு முடிவோடு ஒப்புக்கொண்டேன். பக்காவின் வீடு அந்த கவர்ன்மெட் குவார்ட்டர்ஸில் இருந்தது. குவார்ட்டர்ஸ் என்றால் என்னவோ என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். சுமார் பதினைந்து ஏக்கருக்கு அந்த வளாகத்தில் காடு மண்டிக் கிடக்கும். சில கைவிடப்பட்ட கட்டடங்களும் ஒரு டிராக்டர் வொர்க்ஷாப்பும் ஒரு சில டிரைவர்களின் வீடுகளும் ஆங்காங்க காட்டுக்கு நடுவே இருந்தன. உள்ளே போய்விட்டால் நகரத்தில் இரைச்சல் சுத்தமாக மறைந்து ஏதோ ஊட்டி, குன்னூர் பக்கம் வந்து விட்டதைப் போலிருக்கும்.
பக்காவின் வீட்டு வாயில் வரை முட்புதர்களும் பெயர்தெரியாத மரங்களும் அடர்ந்திருந்தன. தொலைவில் யூகலிப்டஸ் மரங்கள் வானத்துக்கு ஏணி அமைத்திருந்தன. பக்காவின் அப்பா டிரைவர். எப்போதும் பயணத்திலேயே இருப்பார். அவனுக்கு அம்மா இல்லை. அக்காக்கள் திருமணமாகிச் சென்று விட்டனர். எனவே வீட்டில் அவன் மட்டும்தான்.
வீட்டுக்குள் நுழைந்ததும் வெளியே இருந்த குளிர்ச்சிக்கு கதகதகப்பாக இருந்தது. ஜெர்கினைக் கழற்றி எங்கே மாட்டுவது என்று கேட்கத் திரும்பியவன் துணுக்குற்றேன். பக்கா கதவைப் பூட்டித் தாளிட்டதோடு சோபாவை கதவை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தான்.
நான் பதறிப் போய் “டே என்ன பண்றே?” என்றேன். என் நிலைமையை யோசித்துப் பாருங்கள். நானே தலைமறைவாக இருக்க இங்கே வந்திருக்கிறேன். வீட்டை உள்ளே பூட்டி, கதைவைத் திறக்க முடியாமல் சோபாவையும் நகர்த்தி கதவை மறைத்து வைத்தால் கருக்கென்று இருக்குமா இருக்காதா?
பக்கா கச்சிதமாக வாயிற்கதவுக்கு முன்னால் சோபாவை செட் செய்து விட்டு என்னைப் பார்த்து மந்தகாசமாகச் சிரித்தான்.
பக்கா பின்புறக் கதவருகே சென்று தையல் மெஷினை இழுத்து வைத்தான். பின்பு அதன் மீது ஒரு காலியான அண்டாவை எடுத்துக் கவிழ்த்து வைத்தான். ”யாராவது கதவத் தெறக்க முயற்சி பண்னா அண்டா கீழ விழுந்து சத்தம் போட்டுடும் இல்லையா? போலீஸ் கூட அதான் அட்வைஸ் செய்யுது”
“இந்த அளவுக்கு என்ன பிரச்சினை?” நாலு கேட்லையும் வாட்ச்மென் இருக்காங்க இல்ல?”
“அவங்க அங்க இருக்காங்க. இங்க ஏதாவது நடந்தா அவங்களுக்கு எபப்டித் தெரியும்?”
“என்ன நடந்துடும்?”
“யாராவது அட்டாக் பண்ணிட்டா”
“அட்டாக்கா?” தினமும் மாவோவின் ராணுவப் படைப்புகளில் தாக்குதல், தற்காப்பு, தற்காப்பில் தாக்குதல், தாக்கும்போது தற்காப்பு, சுற்றி வளைப்பு, எதிரியின் ஒரு விரலை வெட்டியெறிவது, என்பது பற்றியெல்லாம் முப்பது பக்கமாவது படிக்கும் எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
இதற்குள் வீட்டில் இருந்த கதகதப்பு மறந்து ஒருவிதமான அடைபட்ட வாசம் வீசத் தொடங்கியது. பின்புதான் கூரை ஓட்டைகள் எல்லாம் பெட்ஷீட்டுகளைக் கொண்டு அடைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. எனக்கு மூச்சுத் திணறத் தொடங்கியது.
ஒரு ஜன்னலையாவது திறக்கச் சொல்லலாமென்று வாயெடுத்த போது பக்கா ஒரு ஸ்வெட்டரை எடுத்து அணிந்து கொண்டான்.
“மச்சி, உனக்கும் ஸ்வெட்டர் வேணுமா?”
ஸ்வெட்டரா.. ஜட்டி கூடப் போட முடியாத உப்புசத்தில் ஸ்வெட்டரா?
இவனோடு ஒரு முழு இரவும் எப்படிக் கழிப்பது? முடியவே முடியாது என்று வெளியேறி விடலாமா? இப்போது வெளியேறினால் பிளாட்பாரத்தில்தான் படுக்க வேண்டும்.
பக்கா இருளில் மூழ்கியிருந்த பெட்ரூமில் மறைந்தான். இதுதான் கடைசி வாய்ப்பு. ஓடி விடு என்று மனம் சொன்னது. உடல் ஏதோ ஒரு இடம் கிடைத்தால் போதும் என்று கெஞ்சியது. பக்கா இருளிலிருந்து வெளியே வந்த போது அவன் கையில் ஏதோவொன்று பளிச் பளிச்சென்று மின்னியது.
இரண்டு பளபளக்கும் கத்திகள்.
இன்னிக்கு இந்தப் பைத்தியத்தின் கையில் நாம் கைமா தான். உடலெல்லாம் பதற தலையணையை எடுத்துக் கொண்டு பக்கா மீது பாய்ந்து விடுவது என்று முடிவு செய்து தலையணையைத் தொட்ட அந்த கணத்தில் அவன் கூலாக “இந்தக் கத்தியை தலயணிக்கு அடியில் வெச்சுக்கோ” என்றான்.
எனக்கு இன்னும் உடல் பதறிக் கொண்டிருந்தது.
***
எனது அனுபவங்களை கட்சி ஆழ்ந்து பரிசீலித்தது. பக்காவுடனான உறவைப் பேணுவது அந்தக் காலத்தில் கட்சிக்கு இருந்த ஷெல்டர் (ரகசிய தங்குமிடங்கள்) பிரச்சினையத் தீர்க்க உதவியாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் தனியாக அங்கே செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டது.
“நாடே மனநிலை பாதிக்கப்பட்ட நிலைலதான் தோழர் இருக்கு. எல்லோருக்கும் ஒரு இன்செக்யூரிட்டி, அன்சர்ட்டெனிட்டி இருக்கு. அரசியல் படுத்தினா சரியாப் போயிடும்” என்ன விவகாரமாக இருந்தாலும் மார்க்சீய அடிப்படியில் ஒரு விளக்கு விளக்கினால் முற்றிலும் இயல்பானதாக மாறிவிடுகிறது.
பக்கா படுபயங்கரமான சாய்பாபா பக்தன் என்றாலும் கட்சிக்காரர்களோடு ஒட்டிக் கொண்டான். தோழர்கள் புகைபிடிக்க எதிரே இருந்த பாழடைந்த கட்டடத்தின் ஒரு மூலையையும் ஏற்பாடு செய்திருந்தான். கட்சிக்கு பக்கா, பக்காவுக்கு துணை கிடைத்ததில் அவனது அப்பா என்று எல்லோரும் இந்த ஏற்பாட்டால் மகிழ்ச்சியடைந்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது நான் தான்.
***
பக்கா ஒரு ஆட்டோ பிடித்தான். ஆட்டோ உலுக்கலுடன் கிளம்பியதும் “அப்புறம் லவ்வெல்லாம் எப்படி இருக்கு?”
“லவ்வா எனக்கா?’
“அதாம்பா அந்த லைப்ரெரி”
“நாயே என் லவ்வ ஒழிச்சவனே நீதானே?’ பக்காவை இன்று கொன்று விட்டால் சாட்சியமே இருக்காதே என்ற எண்ணம் என் மனதில் ஓடியது.
***
புரட்சிகரமாக வாழ்ந்து வந்த அந்தக் காலங்களில், காலை நேரத்தில் படிப்பது, மாலையில் அரசியல் வேலைகளைப் பார்ப்பது என்பது எனது வழக்கம். வேலைக்குப் போவதுபோல காலை பத்து மணிக்கு மத்திய நூலகம் சென்று விடுவேன்.
அங்கே நான் வழக்கமாகப் படிக்க உட்காரும் பிரிவின் பொறுப்பாளராக இருந்த அந்த அழகான பெண் மீது எனக்கு காதல் வந்து கொண்டிருந்தது. அவருக்கும் அப்படி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரிந்து கொண்டிருந்தன. ஒரு அழகியலான கதை எழுதுவது எனது நோக்கம் இல்லை என்பதால் இந்த விவகாரத்தை அவரவர் கற்பனைக்கு விட்டு விட்டு மேலே செல்கிறேன்.
ஒருநாள் நூலகத்தினுள் நுழையும் போது பக்கா பதட்டத்துடன் வாயிலில் நின்றிருந்தான்.
“மச்சி என்னை நாலு பேர் பாலோ பண்றாங்க”
“எங்க மச்சி எங்க?”
“ஒளிஞ்சிருக்காங்க.”
“காணோமே.. .. நான் தேடிக் கொண்டிருந்த போது பக்கா என்கையில் ஒரு சைக்கிள் செய்னைத் திணித்தான். அப்போது கோவையில் ரவுடிகள் வைத்திருப்பதைப் போன்ற கைப்பிடி வைத்த சைக்கிள் செய்ன்.
“வெச்சுக்கோ. ஒரு செக்யூரிட்டிக்கு”
என் போதாத காலம். அதை அப்போதைய பேஷனான பேகி பேண்டுக்குள் போட்டுக் கொண்டு பக்காவையும் தைரியம் சொல்லி நூலகத்துக்குள் அழைத்துச் சென்று உட்கார்ந்து ஜேசப் கான்ராட்டின் ஹார்ட் ஆப்ஃ டார்க்னெஸ்ஸை விரித்து வைத்து அந்த அம்மையாரை நோக்கிக் காதல் ததும்பப் புன்னகைத்த போது சரசரவென்ற சத்தத்துடன் சைக்கிள் செய்ன் வெளியே சரிந்தது.
ஆயுதந்தாங்கிய அன்றே பாபு என்ற அந்தப் போராளியின் காதல் கருகிச் சாம்பலானது.
***
எனது எண்ண ஓட்டத்தைப் போலவே ஆட்டோவும் தாவித் தாவிச் சென்று கொண்டிருந்தது. ஊருக்கு வெளியே ஆள் நடமாட்டமில்லாத வெட்ட வெளியில் பக்காவின் வீடு இருந்தது. இருளோடிக் கிடந்தது. திறந்ததும் ஒரே குப்பை.
“ஏன்?’ என் முகத்தில் தெரிந்த கேள்வியைப் பார்த்து “வைப் குழந்தைகள் எல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க” என்றான்.
***
இரவு என்மீது கூரை இடிந்து விழுந்து விட்டது போன்ற அதிர்ச்சி ஏற்பட்டு திடுக்கிட்டு எழுந்தேன். பக்கா ஒரு கையில் டார்ச்சையும் இன்னொரு கையில் கத்தியையும் வைத்துக் கொண்டு நின்றிருந்தான். எனவே என்னை எட்டி உதைத்திருக்க வேண்டும்.
“வெளிய ஆளுக உலாவறாங்க”
நான் துள்ளி எழுந்தேன்.
“டாய்” என் குரலில் வீடு அதிர்ந்தது. கதவை மூடி வைத்திருந்த சோபாவை சந்திரமுகி ஜோதிகா போலத் தூக்கி வீசினேன். கதவை விரியத் திறந்து வெளியே பாய்ந்தேன்.
பக்கா திக்பிரமையடைந்து நிற்பது தெரிந்தது.
“டாய்” நான் திரும்பவும் அலறினேன்.
“யார்ரா எங்க பக்காவ ராத்திரி ராத்திரி வந்து பயமுறுத்தறது?”
நூறடி தூரத்தில் ஒரு வீட்டில் லைட் எரிந்தது. “டாய் நீதானா”
வாயிலில் கட்டையாக, குட்டையாக, சொட்டையாக ஒரு உருவம் தோன்றியது. “டேய் மெண்டல் பயலுகளா, தூங்க விடமாட்டீங்க?”
நான் தொண்டை நரம்பு புடைக்க யுத்த கோஷம் எழுப்பியபடி அந்த வீட்டை நோக்கிப் பாய்ந்தேன். ஒருவிநாடி பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு குனிந்து பார்த்த போது பக்கா என்னைத் தூக்கிக் கொண்டு வீட்டை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான். ”வேண்டா மச்சி போயிரலாம்” என்று அவன் வாய் இரைப்புக்கு நடுநடுவே முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
நான் புரூஸ்லி போல அவன் மண்டையில் ஓங்கிக் குத்தினேன். பக்கா நிலை தடுமாறி விழுந்ததும் பாய்ந்து திரும்பவும் அந்த வீட்டை நோக்கி ஓடத் தொடங்கினேன்.
“டேய் நீதான லைரெரிக்காரம்மா புருசன்?”
கட்டை, குட்டை, சொட்டை உருவம் துள்ளிப் பாய்ந்து எதிர்த்திசையில் ஓடியது. நான் கற்களை எடுத்து அவனை நோக்கி வீசத் தொடங்கினேன்.
பக்கா திரும்பவும் என்னைத் தூக்கிக் கொண்டு ஓடத் தொடங்கினான். நான் ஒரு அசுர முயற்சி செய்து என்னை விடுவித்துக் கொண்டு எதிரே இருந்த காலியிடத்தில் கொட்டப்பட்டிருந்த மணலில் குட்டிக்கரணம் அடித்தேன். வானில் நிலவு ஒளிவீசிக் கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. மெல்லிய வெதுவெதுப்பான காற்று வருடிச் சென்றது. ஒரு கணத்தில் எனது உக்கிரம் மறந்து ஒரு துயரம் தோய்ந்த மனநிலை ஆட்கொண்டது.
“பக்கா I am sad”
”ஏன் மச்சி?” பக்கா என்னை விடத் துயரத்துடன் கேட்டான்.
“இருவர் படுத்திருந்தார்
ஒருவர் ஒளிந்திருந்தார்
யாரடா என்றது நிலவு”
இந்த அடியைப் பாடும் போது எனக்கு குரல் கம்மியது. துயரம் தொண்டையை அடைத்துக் கொண்டது. சமாளித்துக் கொண்டு திரும்பவும் பெருங்குரலெடுத்துப் பாடத் தொடங்கினேன்.
“அம்மா . . ..
அம்மா . . ..
நான் மனிதன்”
பக்கா தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அங்கே கொட்டப்பட்டிருந்த கட்டுமானப் பொருட்களுக்கு வாட்ச்மேன் ஒரு பீடி பற்ற வைத்துக் கொண்டு அவனருகே வந்து உட்கார்ந்தார்.
“என்ன பக்கா தண்ணி போட்டுட்டாரா?”
“போட்டிருந்தா பரவாலியே”
“அடப்பாவி தண்ணி போடாமலேயே இந்த லோலாயா? ஏதாவது பிரச்சினையா?’ அவர் லூசா என்று கேட்டார்.
“தெரியலையே?” பக்கா இன்னும் பீதியிலிருந்து மீளவில்லை.
நான் எழுந்து மணலைத் தட்டிவிட்டுக் கொண்டு வாட்ச்மேன் அருகே சென்று அமர்ந்தேன். “அண்ணா நான் லூசு இல்ல. தண்ணியும் போடல. எனக்கு ஒரு லவ் பெயிலியர். அதனாலதான் தினமும் சிகரெட் சூடு வெச்சுக்கறேன்”
“யாருன்னு சொல்லு கண்ணு. நான் கல்யாணம் பண்ணீ வெக்கறேன்”
”அண்ணே வாங்க. இதோ இவந்தான் லைப்ரெரிகாரம்மாவை கல்யாணம் பண்ணியிருக்கான். இவனைக் கொன்னுட்டு நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” நான் வாட்ச்மேனின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் செல்லத் தொடங்கினேன். பக்கா வெறி கொண்டு என் மேல் பாய்ந்தான். எனக்கும் பக்காவுக்கும் வாட்ச்மேனுக்கும் கடும் போராட்டம் அந்த மணலில் நடந்தது.
பக்காவும் வாட்ச்மேனும் என்னை வீட்டுக்கு இழுத்து வந்து உள்ளே தள்ளி விட்டார்கள். பக்கா வீட்டை உள்ளிருந்து பூட்ட முயன்றபோது நான் ஜெட்லீ போல டைவ் அடித்துத் தடுத்தேன். எங்கள் இருவருக்கும் இடையே மீண்டும் துவந்த யுத்தம் நடந்தது. அண்டா உருண்டது.
காலையில் நான் தும்பைப்பூ போன்ற வெள்ளுடை அணீந்து கோர்ட்டுக்குத் தயாராகி வந்த போது பக்கா செம்பருத்திப் பூச்செடி ஓரம் லுங்கியை இழுத்துப் போர்த்தியபடி தூங்கிக் கொண்டிருந்தான்.
தோழர் இரா. முருகவேள் – கோவையில் வசிக்கிறார். இதுவரை மூன்று நாவல்கள், இரண்டு கட்டுரை தொகுப்புகள் மற்றும் இரண்டு மொழிபெயர்ப்புகள் ஆகியன வெளிவந்துள்ளன. தொடர்புக்கு – iramurugavel@gmail.com
போர் எங்களிடம் நிரந்தரமான காயத்தை உண்டுபண்ணி விட்டது – அ. முத்துலிங்கம் கேள்விகள் – அகர முதல்வன்
அ.முத்துலிங்கம் ஈழ எழுத்தாளர்களில் மிகவும் தனித்துவமானவர்.கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். தமிழ் இலக்கியவுலகில் அவருடைய எழுத்துக்களுக்கு இருக்கும் வாசகப்பரப்பு பெரிது. வினோதமான விவரிப்புக்களும்,நுண்மையான உவமைகளும் கொண்டது அவரின் சிறுகதைகள். “அக்கா” என்ற தனது முதல் கதைத்தொகுதியின் மூலமே வெகுவான கவனத்தை ஈர்த்தவர்.ஆனந்த விகடன் இதழில் “கடவுள் தொடங்கிய இடம்” என்ற நாவலை தொடர்கதையாக எழுதி பெரும் வாசக விவாதங்களையும் உரையாடல்களையும் உண்டுபண்ணியவர்.இவருடைய புகழ்பெற்ற கதைகள் ஏராளம்.
உங்கள் சிறுகதைகளின் வாசகன் நான். பெரும்பாலான உங்கள் கதைகளை வாசித்துமிருக்கிறேன். உங்கள் முதல் தொகுப்பான “அக்கா” சிறுகதைத் தொகுப்பிற்கு கைலாசபதி அவர்கள் எழுதிய அணிந்துரையில் “முத்துலிங்கத்தின் கதைகளிலே பாத்திரங்களின் புறத்தோற்றத்தை விட அக உணர்வே கூர்மை தீட்டப்பட்டுள்ளது” என்கிறார். இன்று வரைக்கும் அதனையே தான் உங்கள் கதைகளில் தொடர்கிறீர்களா?
அறுபது வருடங்களுக்கு முன்னர் ஒருவர் சொன்ன வாசகத்தின் பிரகாரமா நான் இன்றைக்கும் எழுதிக் கொண்டிருக்கிறேன். வளர்ச்சி இல்லையா? சுயசிந்தனை இல்லையா? எத்தனையோ ஆறுகள் வற்றி விட்டன. புது ஆறுகள் உண்டாகி விட்டன.
எந்தப் புனைவிலும் புறத்தோற்றம் முக்கியம். அதேஅளவு உள் உணர்வும் அவசியம். எந்த இடத்தில் எந்த அளவு என்று தீர்மானிப்பது படைப்பாளியின் வேலை. அந்தந்த இடத்தில் அதை உட்கார வைப்பதுதான் எழுத்தாளரின் திறமை. இதற்கெல்லாம் விதிகள் கிடையாது.
நான் அடிக்கடி காட்டும் உதாரணத்தை இங்கே குறிப்பிடலாம் என நினைக்கிறேன். இதைப்பற்றி ஏற்கனவே நான் பேசியும் எழுதியும் இருப்பதால் ஞாபகத்திலிருந்து இங்கே சொல்கிறேன். ரோல்ஸ்ரோய் எழுதிய The Prisoner of Caucasus என்ற சிறுகதையில் கதாநாயகனை எதிரிகள் பிடித்து நிலவறையில் அடைத்து விடுவார்கள். சுவரிலே ஒரு சின்ன ஓட்டை. அதன் வழியாக அவன் வெளியுலகை பார்க்கிறான். ஒரு டாட்டார் பெண் தொள தொளவென்று கண்ணைப் பறிக்கும் வண்ணநிற மேலாடை அணிந்து நடக்கிறாள். அவள் அணிந்த மேலுடைக்கு கீழே கால்சட்டையும், உள்ளே நீண்ட பூட்சும் அணிந்திருப்பது தெரிகிறது. தலையில் ஒரு மேல்கோட்டை விரித்து அதற்கு மேல் பெரிய உலோகத்தாலான பானையை சுமக்கிறாள். அதற்குள் தண்ணீர் இருக்கிறது. பக்கத்திலே மொட்டையடித்த மேல்சட்டை மட்டுமே அணிந்த சிறுவன் ஒருவன். அவன் கையைப் பிடித்தபடி நடக்கிறாள்.
ஓட்டையில் ஒரு கணமே கிடைக்கும் இந்தக்காட்சியில் இந்தளவு விவரங்கள் சாத்தியமா? பாவாடைக்குள் நீண்ட பூட்ஸ் இருப்பது கண்ணுக்கு படுமா? பானைக்குள் தண்ணீர் இருப்பது எப்படித் தெரியும்? இத்தனை நீண்ட வர்ணனை தேவையா? கதையின் பெறுமதியை இது கூட்டுகிறதா? ஒரு வரியில் சொல்ல வேண்டிய காட்சிக்கு இந்த நீண்ட வர்ணனை பொருந்துமா என்பதுதான் கேள்வி.
ஒரு சிறுமி நோய்வாய்ப்பட்டு படுக்கையில் படுத்தபடி கிடக்கிறாள். அவள் உடல் படுக்கையோடு ஒட்டிப்போய் இருக்கிறது. கண்கள் பஞ்சடைந்து போய் காணப்படுகின்றன. ஓர் அரைப்பக்கத்துக்கு அந்தச் சிறுமியின் நிலையை வர்ணிக்கலாம். ஜகதலப்ரதாபன் என்ற கதையில் நான் இப்படி ஒருவரி எழுதியிருப்பேன். ‘அந்தச் சிறுமியின் உடம்பில் எங்கே தொட்டாலும் அங்கே ஓர் எலும்பு இருக்கும்.’ இந்த ஒருவரியில் வாசகருக்கு நான் சொல்ல வந்தது புரிந்து போயிருக்கும். கவிதை போல சொற்சிக்கனம் சிறுகதைக்கும் முக்கியம். மகாத்மா காந்தியின் உருவத்தை மூன்று வாரமாக வரையும் ஓவியர்கள் இருக்கிறார்கள். ஆதிமூலம் போன்ற தலைசிறந்த ஓவியர் நாலுகோடுகளில் காந்தியின் உருவத்தை கொண்டு வந்து விடுகிறார்.
ஏ.கே.செட்டியாரின் பயணநூல்களைப் படித்திருப்பீர்கள். 70 வருடங்களுக்கு முன்னர் அவர் கனடாவுக்கு வந்திருந்தார். அந்த அனுபவங்களை இப்போது படிக்கும்போது மிகவும் சுவையாக இருக்கும். ஓர் இடத்தில் இப்படி எழுதுகிறார். கனடாவில் குளிர்காலத்தில் பனி உறைந்து கண்ணாடி போல ரோடுகள் பளபளப்பாக இருக்கும். வழுக்கிக்கொண்டே போவதால் கார் ஓட்ட முடியாது. கார் டயர்களுக்கு சங்கிலி உறையை மாட்டி ஓட்டுவார்கள். அப்படிச் செய்தால் கார் டயரின் ஆயுள் குறையும், ஆனால் மனிதரின் ஆயுள் கூடும். இப்படி நகைச்சுவையாகச் சொல்வார். இன்னொரு இடத்தில் அவர் ரயில் பயணத்துக்கு டிக்கட் வாங்குவார். டிக்கட்டையும் மீதிப்பணத்தையும் கொடுத்த ரயில் ஊழியர் எழுந்து நின்று மிக்க வந்தனம் என்கிறார். செட்டியார் இப்படி எழுதுகிறார். ரயில் டிக்கட் வாங்கியதற்காக எனக்கு ஒருவரும் வந்தனம் சொன்னது கிடையாது.
எனக்குத் தெரிந்த ஒருவர் வெளிநாட்டில் சிறை அதிகாரியாக வேலை பார்க்கிறார். அவருடைய அனுபவங்களைக் கேட்கக்கேட்க எனக்கு ஆச்சரியம் தாள முடியாமல் போகும். சிலசமயம் சிரிப்பேன். சிலசமயம் அவருடைய அனுபவங்கள் கண்ணிலே நீரை வரவழைக்கும். அவரிடம் நல்ல சொல்வளம் உண்டு. ஞாபகசக்தியும் பிரம்மிக்க வைக்கும். ஆனால் அவருக்கு தான் ஒரு புதையல் மேலே உட்கார்ந்திருப்பது தெரியாது. என்ன என்னவெல்லாமோ எழுதிக் கொண்டிருந்தார். உங்களுடைய சிறை அனுபவம் தான் உங்களுடைய பலம், மற்ற ஒருத்தருக்கும் கனவிலும் கிடைக்காதது உங்களுக்கு வாய்த்திருக்கிறது. அதுபற்றி எழுதுங்கள் என்றேன். அவர் இப்பொழுது தொடர்ந்து எழுதுகிறார். ஒரு தேர்ந்த எழுத்தாளரின் எழுத்து. விரைவில் அவருடைய சுயசரிதை நாவல் வெளிவந்து விடும்.
ஒரு படைப்பாளி தன்பலத்தை தெரிந்து வைத்துக்கொண்டு எழுத வேண்டும். ஆரம்பத்திலேயே நான் இந்த விடயத்தில் தெளிவாக இருந்தேன். பலநாடுகளுக்கு பயணம் செய்வதும், அங்கேயே வாழ்ந்து அனுபவங்களைத் திரட்டிக் கொள்வதுமான வாய்ப்பு இந்த உலகத்தில் எத்தனை பேருக்கு கிடைக்கிறது. இந்த அனுபவங்களை எழுத வேண்டும் என்ற தீர்மானம் இருந்தது. அது மாத்திரமல்ல ஆப்பிரிக்கா என்னை நல்ல பண்பாளராக மாற்றியது. என்னை உலகக்குடிமகனாக உணர வைத்தது அந்த நாடுதான். உலகம் முழுவதும் மனித உணர்வு ஒன்றுதான் என்பது புரிந்தது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது சிறுவயதிலேயே படித்ததுதான். ஆனால் அதை நேரில் அனுபவித்தேன். இதுதான் என்னுடைய பலம். வேறு ஒருவருக்கும் கிடைக்காத ஒன்று எனக்கு கிடைத்திருக்கிறது. அப்படியே அந்தச்சூழலை வைத்து என்னால் எழுத முடிந்தது.
ஏற்கனவே வேறு இடத்தில் சொன்னதைத்தான் சொல்ல வேண்டும். ஒரு நல்ல சிறுகதை வாசிக்கவாசிக்க புதிய பொருள் கொடுக்க வேண்டும். மனதிலே வாழ்க்கை பற்றிய விசாரணையை அது எழுப்புகிறது. ஆவிபடிந்த கண்ணாடியை துடைப்பது போல மனம் துலக்கமடைய வேண்டும். அண்டன் செக்கோவ் எழுதிய கூஸ்பெர்ரி சிறுகதை இன்றும் பல அறிவுஜீவிகளின் கருத்தரங்குகளிலும் மேலாண்மை வல்லுநர்கள் மத்தியிலும் ஆழமாக விவாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு புதிதாக ஒரு வாசல் திறக்கிறது.
எளிமையாக எழுத வேண்டும் என்பதும் ஆரம்பத்திலேயே தீர்மானித்தது தான். எழுத்தாளர் எழுதுவது வாசகருக்கு புரியாவிட்டால் எழுதுவதால் என்ன பயன். சார்ள்ஸ் டிக்கன்ஸ் என்ற ஆங்கில எழுத்தாளர் தான் எழுதிய வரிகளை வேலைக்காரிக்கு படித்துக் காட்டுவார். அவருக்கு புரியாவிட்டால் அந்த வசனங்களை வெட்டி விடுவாராம்.
உங்களுடைய அரிதிலும் அரிதான கதைகளில் நேரடியாக தமிழர்களின் போராட்ட அரசியல் பாத்திரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. உதாரணமாக “பொற்கொடியும் பார்ப்பாள்” கதையை கூறலாம். ஆனால் அந்தக் கதைகள் உங்களுடைய ஏனைய கதைகள் தருகிற வாசிப்பு நிறைவைத் தருவதில்லையே ஏன்?
அப்படியா? எனக்கு மனநிறைவு தராத ஒன்றையும் நான் எழுதியது கிடையாது. ஏனென்றால் நான் பணத்துக்காக எழுதும் முழுநேர எழுத்தாளன் கிடையாது. ஒருகதை எழுத வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எனக்கு கிடையாது. என்னுடைய மகிழ்ச்சிக்காக, படைக்கும் போது கிடைக்கும் அபூர்வமான நிறைவுக்காக நான் எழுத வந்தவன். பெரிய பெரிய படைப்பாளிகள் கூட பணத்துக்காக எழுதும்போது சறுக்கியிருக்கிறார்கள். நோபல் பரிசு பெற்ற சோல் பெல்லோ என்ற எழுத்தாளர் எழுதிய கதையை நியூயோர்க்கர் பத்திரிகை திருப்பி அனுப்பி விட்டது. ஏனென்றால் கலையம்சம் இல்லாமல் ஏனோதானோ என்று உருவாகிய படைப்பு. எனக்கு அந்தப்பிரச்சினை கிடையாது ஏனெனில் நான் எழுதுவது என் மனத் திருப்திக்காகத் தானே.
கனடாவில் ஒரு திருமண வீட்டுக்கு போயிருந்த போது ஒரு மூதாட்டியை சந்தித்தேன். அவருடைய மகள் ஈழத்து போரில் மடிந்து போன பெண் போராளி. அவர் தன் மகளின் கதையை சொன்னார். நீண்ட நேரம் கேட்டு சில விவரங்களை உறுதி செய்த பின்னர் எழுதியது அந்தக்கதை. அதைப் பாராட்டி நிறைய மின்னஞ்சல்களும் தொலைபேசிகளும் வந்தன. நேரிலும் பாராட்டினார்கள். இந்தக்கதையை சொன்னபோது அந்தத் தாயார் பல இடங்களில் அழுதார். கதையை கேட்க ஆரம்பித்த சமயம் அதை எழுத வேண்டும் என நான் நினைக்கவே இல்லை. ஓர் இடத்தில் அம்மையார் இப்படிச் சொன்னார். ஒருநாள் காலையில் மகளைக் காணவில்லை. பரபரப்பாகத் தேடியபோது காணாமல் போனவளின் தங்கச்சி இப்படிச் சொல்வார். ‘அம்மா, இண்டைக்கு அக்கா ஏன் இரண்டு பிராவும், இரண்டு சட்டையும் போட்டுக்கொண்டு போறா.’ உடனேயே தாயார் தலையிலே கைவைத்து குளறுவார். அந்தக்காட்சி என் மனதில் முள்போல குத்தி நின்றது. அப்பொழுதுதான் கதையை எழுதுவதாகத் தீர்மானித்தேன். அதுதான் தொடக்கப்பொறி.
ஈழத்துப்போரில் நேர் அனுபவம் இல்லாததால் பேப்பர் செய்திகளையும், தொலைக்காட்சி தகவல்களையும் வைத்து நான் எழுதியது கிடையாது. நேர் அனுபம் உள்ள ஒருவர் சொல்லியதை வைத்தே புனைந்திருக்கிறேன். ‘எல்லாம் வெல்லும்’ சிறுகதை பெண்போராளி ஒருவர் என்னிடம் நேரடியாகச் சொன்னது. அவர் பல வருடங்கள் இயக்கத்தில் இருந்தவர். அதேபோல கேர்ணல் கிட்டுவின் குரங்கு கதை என் சொந்த அக்கா சொன்னது. நான் பிறந்து வளர்ந்த கொக்குவில் வீட்டில் சிலகாலம் பிரபாகரன் தங்கியிருக்கிறார். நான் தண்ணீர் அள்ளிக் குளித்த அதே கிணற்றில் அவரும் குளித்திருக்கிறார். அங்கே சிலகாலம் கேர்ணல் கிட்டு தன் குரங்குடன் நாட்களைக் கழித்திருக்கிறார். இன்று வரை இந்தக் கதையை குறித்து பாராட்டுகள் வந்தபடியே இருக்கின்றன. உலகம் சுற்றும் பிரபல பேச்சாளர் ஒருத்தர் நேற்று அவுஸ்திரேலியாவில் இருந்து மின்னஞ்சல் போட்டிருக்கிறார். அவர் எழுதினார் தன்னால் இந்தக் கதையை மறக்க முடியவில்லை என்று. கடிதத்தின் நகலை உங்களுக்கு அனுப்பி வைக்கவும் நான் தயார்.
அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக புனைவு இலக்கியத்தில் சிறுகதைகளை மட்டுமே எழுதி வருகிறீர்கள்.நாவல் எழுதவேண்டுமென்ற எண்ணமில்லையா? நாவல் இலக்கியம் குறித்த உங்கள் கருதுகோள் என்ன?
இந்தச் செய்தி புதிதாக இருக்கிறது. நான் இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறேன். முதலாவது நாவலின் பெயர் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்.’ இதில் புதுமை என்னவென்றால் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதை போல இருக்கும். அதே சமயம் எல்லாச் சிறுகதைகளையும் சேர்த்தால் நாவல் உருவம்கி டைக்கும். நூலை எங்கே இருந்தும் படிக்க ஆரம்பிக்கலாம். ஆங்கிலத்தில் பல எழுத்தாளர்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள். தமிழுக்கு இந்த யுத்தி புதிது என்று நினைக்கிறேன். Tim O’ Brien எழுதிய The Things They Carried இந்த வகை நாவல்தான். வியட்நாம் போரை பற்றிய நாவல். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதை. இன்னுமொரு ஆங்கில நாவல் Sandera Cisneros எழுதிய The House on Mango Street. பன்னிரெண்டு வயதுச் சிறுமியின் கண்களால் இந்த நாவல் சொல்லப்படுகிறது. தமிழில் இந்த உத்தியை அசோகமித்திரன் ‘ஒற்றன்’ நாவலில் பயன்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
இரண்டாவது நாவல் ’கடவுள் தொடங்கிய இடம்.’ இது பரவலாக வாசிக்கப்பட்டு பேசப்பட்ட நாவல். ஆனந்த விகடனில் தொடராக வந்தது. ஈழத்துப்போர் பற்றி பல நூல்கள் வந்து விட்டன. புலம்பெயர்ந்த இடத்தில் படும் இன்னல்களைச் சொல்லும் நூல்கள் ஏராளம்.
ஆனால் ஓர் அகதியின் அலைச்சலை சொல்லும் நூல்கள் வந்ததாகத் தெரியவில்லை. ஈழத்திலிருந்து தப்பி புறப்படும் ஓர் இளைஞன் 8 வருடங்களுக்கு பிறகு பல நாடுகளில் அலைந்து திரிந்து கடைசியாக கனடாவுக்கு வந்து சேர்கிறான். அவனுடைய கதையை இந்த நாவல் பேசுகிறது.
இப்பொழுது பல நாவல்கள் தலையணை சைசில் வருகின்றன. படுத்துக்கொண்டு நெஞ்சிலே வைத்து படித்தால் விலா எலும்பு முறிந்து விடும். இதிலே நான் அசோகமித்திரன் கட்சி. அவர் சொல்வார் நல்ல நாவல் எழுதுவதற்கு ஆயிரம் பக்கங்கள் தேவையில்லை என்று. அசோகமித்திரனுடைய நாவல்கள் எல்லாம் 200 – 300 பக்கங்களுக்குள் முடிந்து விடும். நோபல் பரிசு பெற்ற ஹெமிங்வேயுடைய The Old Man and the Sea நாவல் 127 பக்கங்கள் தான். இன்னொரு நோபல் பரிசு எழுத்தாளர் யசுநாறி காவபட்டா எழுதிய The House of Sleeping Beauties வெறும் 148 பக்கங்கள் தான்.
ஈழத்துப்போர் எங்களிடம் நிரந்தரமான காயத்தை உண்டு பண்னி விட்டது. அதைப் பதிவுசெய்து பல நூல்கள் வந்து விட்டன. அகலாத ஆர்வத்துடனும் பிரமிப்புடனும் அவற்றையெல்லாம் படித்திருக்கிறேன். தமிழில் மாத்திரமல்ல ஆங்கிலத்திலும் நூல்கள் வெளியாகி உள்ளன. இவற்றின் தரத்துக்கு சாட்சி அவற்றிலே பல நூல்களுக்கு கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத்தோட்டம் விருதுகள் வழங்கியிருக்கிறது என்பதுதான். சயந்தனின் ஆதிரை, தீபச்செல்வனின் நடுகல், உமாஜியின் காக்கா கொத்திய காயம், ஷோபாசக்தியின் கண்டி வீரன், அனுக் அருட்பிரகாதத்தின் The Story of a brief Marriage, குணா கவியழகனின் நஞ்சுண்டகாடு, தேவகாந்தனின் கனவுச்சிறை, மு.நித்தியானந்தனின் கூலித்தமிழ் ஆகியவை எல்லாம் பரிசுகள் பெற்றவை. இன்னும் பல படைப்புகள் சர்வதேச பரிசுகள் பெறும் தகுதியில் உள்ளன.
இவையெல்லாம் உலக அரங்கில் போற்றப்பட வேண்டிய நூல்கள். ஆனால் துயரம் என்னவென்றால் அவை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவதில்லை. அப்படியே மொழிபெயர்த்தாலும் மொழிபெயர்ப்பு தமிழ் வாசிப்பு கொடுத்த அனுபவத்தை ஆங்கிலத்தில் கொடுப்பதில்லை. நல்ல மொழிபெயர்ப்பு கிடைக்குமாயின் பல நூல்கள் என்னுடைய அபிப்பிராயத்தில் சர்வதேச விருதுகளைப் பெறும் தகுதியுள்ளவை.
ஈழத்து இலக்கியம் என்று இப்போது ஒருவரும் சொல்வதாகத் தெரியவில்லை. எல்லாமே தமிழ் இலக்கியம் தான். சிலர் தமிழ்நாட்டில் இருந்து எழுதுகிறார்கள். சிலர் ஈழத்திலிருந்து எழுதுகிறார்கள்; இன்னும் சிலர் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து எழுதுகிறார்கள். எல்லோரும் தமிழ் இலக்கியத்தைத்தான் படைக்கிறார்கள். முன்னாட்களில் நான் கதிரை என்று எழுதினால் தமிழ்நாட்டு பத்திரிகைகள் நாற்காலி என்று மாற்றி விடும். கதைத்தான் என்பதை பேசினான் என்று திருத்தி விடுவார்கள். போத்தல் என்றால் அது பாட்டில். சமீபத்தில் ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் கதைத்தான் என்று எழுதியிருந்தார். பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ்நாட்டு எழுத்தாளர் ஈழ எழுத்தாளர் என்ற பிரிவு மறைந்து தமிழ் எழுத்தாளர் என்று அழைக்கும் காலத்தில் நாம் இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. . .
சமீபத்தில் நான் வாசித்த இரண்டு நூல்கள் பற்றி சொல்ல வேண்டும். ஒன்று The Sadness of Geography என்ற புத்தகம். அகதியின் அலைச்சலை அழகாகச் சொன்ன நூல். இரண்டாவது சிங்கள கடற்படை கொமோடராக இருந்த அஜித் போயகொட எழுதிய ’நீண்ட காத்திருப்பு’ என்ற நூல். ஒரு கப்பலின் தலைவரான இவரை புலிகள் கைப்பற்றி எட்டு வருடங்கள் சிறையில் வைக்கிறார்கள். அந்தக் கதையை எழுதியிருக்கிறார். ஒரு போரைப்பற்றி தெரிவதற்கு தோற்றவர்கள் எழுதியதையும் படிக்க வேண்டும், வென்றவர் எழுதியதையும் படிக்க வேண்டும். தமிழில் போர் இலக்கியம் குறைவு. அந்தக்குறையை ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் ஓரளவுக்கு போக்கி விட்டார்கள்.
நான் சிறுவனாயிருந்தபோது குழந்தையை கொஞ்சும்போது என் அம்மா ‘பொன்னுப்பெட்டி’ என்று அழைப்பார். அதன் பொருள் தெரியாது. என்னுடைய ஐயா தன்னுடைய வியாபாரக் கணக்குளைச் சொல்லும்போது ’ஐந்தொகை’ என்பார். பொன்னுப்பெட்டி என்பது திருமண சமயம் கூரைத்தாலி வைத்துப் போகும் ஓலைப்பெட்டி என்று பல வருடங்கள் கழித்து அறிந்து கொண்டேன். ’ஐந்தொகை’ என்றால் வரவு, செலவு, கொள்முதல், லாபம், இருப்பு ஆகிய ஐந்து வகை கணக்குளையும் சொல்வது எனவும் புலப்பட்டது. ஈழத்துச் சொற்கள் பல அழிந்து கொண்டு வருகின்றன. நாஞ்சில் நாடன் சில வருடங்களாக ஈழத்துச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கவேண்டும் எனச் சொல்லி வருகிறார். அவருடைய கணக்கில் 50,000 வார்த்தைகள் வரும் என்று சொல்கிறார். இன்னும் கூடச் சேர்ந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.
முன்பெல்லாம் அகராதி என்பது தமிழ் இலக்கியத்தில் கிடையாது. தமிழ் படிக்க வேண்டும் என்றால் முதலில் நிகண்டு படிக்கவேண்டும். எங்கள் கிராமத்தில் நான் வசித்த ஒழுங்கையிலேயே ஒருத்தர் இருந்தார். அவருக்கு பெரிய மரியாதை, நிகண்டு படித்தவர் என்று சொல்வார்கள். நிகண்டு என்றால் ஒரு பொருள் தரும் சொற்களின் தொகுப்பு. ஆங்கிலத்தில் Synonym என்று சொல்வார்கள். 1842 லேயே யாழ்ப்பாணத்தில் ஒரு சொல்லகராதி வந்திருக்கிறது. அதில் 50,000 வார்த்தைகளுக்கு மேலிருக்கும் என நம்புகிறேன். என் சின்ன வயதில் புழக்கத்தில் இருந்த பல வார்த்தைகளைச் சொல்ல முடியும். சொக்கட்டான், கெந்தி அடித்தல், டாப்பு, அளாப்பு, சகடை, சுழியோடி, தாய்ச்சி கிளித்தட்டு, போர்த்தேங்காய், அலவாங்கு போன்ற வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. இவை அகராதிகளில் உள்ளனவோ எனத் தெரியவில்லை.
வட்டார வழக்கு அகராதியில் என்ன பிரச்சினை என்றால் எங்கள் வீட்டில் பயன்படுத்தும் ஒரு சொல்லை பக்கத்து வீட்டில் பயன்படுத்துவார்கள் என்று சொல்ல முடியாது. எங்கள் ஊரில் பரிச்சயமான ஒரு சொல் பக்கத்து ஊரில் பயன்படுத்தாத ஒன்றாக இருக்கும். உதாரணமாக எங்கள் வீட்டில் அம்மா உரோங்கல் என்றுதான் சொல்வார். வேறு ஒன்றுமில்லை, பக்கத்து வீட்டில் அதை உலக்கை என்று அழைப்பார்கள்.
அகராதியில் இன்னொரு பிரச்சினை அடிக்கடி சொற்கள் வழக்கழிந்து புதுச்சொற்கள் உண்டாகியபடியே இருப்பது. ஒவ்வொரு 20 வருடமும் ஒரு புதுப் பதிப்பு கொண்டுவர வேண்டும். நிறைய பொருள் செலவாகும். இலகுவான வழி வட்டார வழக்கு சொற்களை இணையத்தில் ஏற்றுவதுதான். இந்த முறையில் தொடர்ந்து அகராதியை புதுப்பித்துக் கொண்டே வந்தால் சொற்கள் புழக்கத்தில் நிற்கும். பத்து வருடங்களுக்கு முன்னர் ’முகநூல் நேரலை’ என்று கூறினால் யாருக்காவது புரிந்திருக்குமா?
சைவ இலக்கியங்கள் மீது உங்களுக்கு நெருக்கம் இருப்பதாக எனக்கொரு உணர்வு. உங்களுடைய சிற்சில கதைகளில் வார்த்தைப் பிரயோகங்கள் அதற்கு சான்று. சைவ இலக்கியங்களின் தமிழ்ச்செழுமை குறித்து சொல்லுங்களேன்?
நான் சிலகாலம் பெஷாவார் நகரில் வேலை பார்த்தேன். அப்பொழுது ரஸ்யாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் போர் நடந்து கொண்டிருந்தது. இரவும் பகலும் ரோட்டிலே தலிபான்கள் துப்பாக்கிகளுடன் நடமாடுவதைக் காணலாம். வெளியிலே தலைகாட்டுவது ஆபத்தானது. ஒருநாள் முடிந்த பின்னரும் பயணி ஒருவர் உயிரோடு இருந்தால் அது பெஷாவாராக இருக்க முடியாது என்று சொல்வார்கள். கொரோனா காலம் போல பல நாட்கள் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்தேன். அந்தச் சமயம்தான் எங்கள் பக்தி இலக்கியங்களை படிக்கத் தொடங்கினேன். அவற்றின் ஆழமும் சொல்லழகும் என்னைக் கவர்ந்தன. என் அறிவு அரைகுறையானதுதான். தமிழில் இருப்பதுபோல வேறு எந்த மொழியிலும் பக்தி இலக்கியங்கள் இல்லை என்று சொல்வார்கள். ’சலம்பூவொடு தீபம் மறந்தறியேன், தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்’ என்கிறார் நாவுக்கரசர். தமிழையும் இசையையும் பக்தியின் ஒரு பகுதியாகவே பார்த்தார்கள். இன்னோர் இடத்தில் ’நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்’ என்று சொல்கிறர். எத்தனை அழகான பக்தி வெளிப்பாடு.
பிரபந்தத்தில் பெரியாழ்வார் நல்லதொரு உவமை கூறுகிறார். நெய்க்குடத்தில் எறும்பு ஒன்றன்பின் ஒன்றாக ஏறுவதுபோல முதுமையில் நோய்கள் என்னைப் பீடிக்கின்றன. முதலில் ஒரு நோய் வரும். பின் இன்னொன்று. பின்னர் வேறொன்று. இதனை ’நெய்க்குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும் கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்’ என்கிறார்.
ஆண்டாள் பாவை நோன்பு சமயம் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்று பட்டியலிடுகிறார். ’நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி, மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம், செய்யாதன செய்யோம்.’
மாணிக்கவாசகர் இறைவனிடம் ’நான் உன்னை வென்றுவிட்டேன்’ என்று குதூகலிக்கிறார். ’தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை, சங்கரா யார் கொலோ சதுரர்’ என்கிறார். நான் என்னை உன்னிடம் தந்தேன், நீ என்னிடம் உன்னை தந்தாய். இந்தக் கொடுக்கல் வாங்கலில் ஆருக்கு லாபம்.
ஒருமுறை பேராசிரியர் பர்வீன் சுல்தானா கனடா வந்திருந்தபோது கேட்டேன். இறைவனிடம் என்ன யாசிப்பது என்பதில் ஏதாவது வரையறை உண்டா? ஏன் என்று கேட்டார். சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனிடம் இப்படிக் கேட்கிறார். ’என்னிடம் கொஞ்சம் நெல் உள்ளது. இதை என் மனைவிக்கு அனுப்ப வேண்டும். நெல்லைக் கொண்டுபோய்க் கொடுப்பதற்கு ஓர் ஆள் தேவை.’ இப்படி இறைவனிடம் வேண்டலாமா?’
நீள நினைந்தடியேன் உனை நித்தலுங் கைதொழுவேன் வாளன கண்மடவாளவள் வாடி வருந்தாமே கோளிலி எம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப் பெற்றேன் ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே
’ஏன் கூடாது? இறைவனிடம் என்னவும் கேட்கலாம். அவரிடம் யாசிக்காமல் வேறு யாரிடம் யாசிப்பது? உன்னுடைய செருப்பு வார் அறுந்தால் கூட நீ அல்லாவிடம் முறைப்பாடு செய்யலாம். ஒரு தப்பும் இல்லை’ என்றார் பர்வீன்.
பக்தி இலக்கியம் எங்களுக்கு கிடைத்த சொத்து. தனிச்சுவை கொண்டவை. அவை கவனிக்கப்படாமல் இருப்பது தமிழுக்கு பெரும் இழப்பு.
***
(யாவரும் மே இதழுக்காக – பொறுப்பாசிரியர் அகர முதல்வன் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கேள்வியும் பதிலும்)
அருட்குமரனுக்கு மரண தண்டனை வழங்கப்படுகின்ற அந்நாளின் மாலை ஆறுமணிக்கு ஆஸ்திரேலியாவிலுள்ள தேவாலயங்களில் மணியடித்து அவனது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு சில திருச்சபைகள் சனங்களிடம் கோரியிருந்தன.
(2)
சிறைச்சாலையின் இரும்புக்கதவுகளின் மீது ஓங்கியடித்தபடி அழுது கொண்டிருந்தாள் தவரஞ்சினி. அருட்குமரனை சந்திக்க வழங்கப்பட்ட அனுமதி நேரம் முடிவடைந்த பின்னும் அங்கிருந்து வெளியேற முடியாமல் உரத்த குரலெடுத்து ஓலமிட்டாள். அவளுக்குள் எழுந்து சுழலும் அந்த ஓலத்திற்குள் இதுதான் “இறுதிச் சந்திப்பு” என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் கொதித்தது. அந்தக் கொதிப்பின் கங்குகள் “என்ர பிள்ளைய கொல்லப்போறாங்களே, நாசமாப்போவர்” என்ற அழுகுரலாய் கனன்று நின்றது. தாய்மையின் பெருந்துயர் படிந்த அவளது ஓலம் சுரணையற்ற அந்த சிறைச்சுவர்களில் தெறித்து எந்தப் பெறுமதியும் இல்லாமல் அடங்கியது. சிறைக்காவலர்கள் அவளை இழுத்து வெளியே தள்ளினர்.
அருகில் நின்று அழுகின்ற அகிலாவும் சேர்ந்து அந்த அதிகாரிகளுடன் முயற்சிக்கிறாள். முடியவில்லை. தவரஞ்சினியின் கணவர் காராளசிங்கம் களைத்துச் சிவந்து போன கண்களை சேர்ட்டின் கொலரினால் எடுத்து ஒற்றியபடி நின்றார்.
“அம்மாவ பிடியுங்கோவன் அப்பா” – என்று அகிலா அழுது கொண்டே அழைத்த பிறகு அருகில் சென்று தவரஞ்சினியின் ஒரு கையை எடுத்து தனது தோளின் மேல் போட்டு வெளியில் அழைத்துப் போனார். அவளது உடலில் இனி எதற்குமே சக்தியில்லை. துவண்டிருந்தாள்.
“கரபொக்கன் சிறைச்சாலை” என்று பெரிய வளைந்த இரும்பில் உள்ளும் புறமும் எழுதப்பட்ட வாசலடியில் வந்தவுடன் அதற்கு அருகிலிருந்த சிறிய விருந்தினர் படலையை வாயிற்காவலாளி திறந்து விட்டான். அனைவரும் வெளியில் வந்தார்கள்.
அவ்வளவு நேரமும் காத்திருந்த ஊடகவியலாளர் கும்பல் கமராக்கள், பதி கருவிகள், ஒலிவாங்கிகள் சகிதம் பாய்ந்து வந்து தவரஞ்சினி குடும்பத்தினை சூழ்ந்து கொண்டார்கள். மூவரையும் முற்றுகையிட்டார்கள்.
“அருட்குமரனுக்கு நாளை மரணதண்டனை கொடுப்பது உறுதியாகி விட்டதா”
“அருட்குமரன் கடைசியாக உங்களிடம் என்ன சொன்னார்”
“அருட்குமரன் கடைசியாக என்ன சாப்பிட்டார்”
“ஆஸ்திரேலிய அரசாங்கம் கடைசி நேரத்தில் காப்பாற்ற முயற்சியெடுப்பதாக ஏதாவது சொல்லியிருக்கிறதா”
தவரஞ்சினி சேலைத் தலைப்பினையெடுத்து ஒரு கையினால் முகத்தினை மூடியவாறு மறுகையால் காராளசிங்கத்தின் சேர்ட்டை இறுக்கிப் பிடித்துக்கொண்டு வேகமாக நடந்தாள்.
முகத்தை மூடிய சேலைக்குள்
“நோ.. நோ… ப்ளீஸ்.
“லீவ் அஸ் எலோன்”
“ப்ளீஸ்….ப்ளீஸ்” – என்று கத்தினாள்.
ஊடகவியலாளர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக மூவரையும் தனித்தனியாக கலைத்துக் கொண்டு போனார்கள். சிலர் அகிலாவை இலக்கு வைத்து கேள்விகளோடு கலைத்தார்கள். ஏனையவர்கள் காராளசிங்கத்தின் கழுத்துக்குள்ளும் ஒலிவாங்கியை நீட்டினார்கள். பின்னாலேயே கலைத்து வந்தவர்கள் இப்போது வாகனத்தை சூழ்ந்து கொண்டார்கள். கண்ணாடியின் இடைவெளிகளின் வழியாக பதி கருவிகளையும் ஒலி வாங்கிகளையும் உள்ளே நுழைத்தார்கள். கேட்ட கேள்விகளை திரும்ப திரும்ப கேட்டார்கள். வாகன ஓட்டுனர் எல்லா கண்ணாடிகளையும் பூட்டினார்.
வாகனத்தின் நாலா பக்கமும் முட்டி மோதிக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களின் நடத்தை வாகன ஓட்டுனருக்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அவர் அந்தக் கூட்டத்திலிருந்து வாகனத்தை எப்படியாவது வெளியில் எடுத்துவிட வேண்டும் என்று விடாது திமிறினார். ஆனால், கமராக்காரர்கள் தவரஞ்சினி குடும்பத்தின் முகங்களை எப்படியாவது தங்களது ஊடகங்களில் பதிவேற்றிவிட வேண்டுமென்று அகப்பட்ட கோணங்களிலெல்லாம் படமெடுப்பதற்கு பாடுபட்டார்கள். தாயின் முந்தானையை எடுத்து அகிலா தனது முகத்தை முற்றாக மறைத்துக் கொண்டாள். தவரஞ்சினி தன் முகத்தை அழுகைக்குள் புதைத்திருந்தாள். காராளசிங்கம் விறைத்தபடியிருந்தார். அவருக்குள் புத்திர சோகத்தின் இருள் புகுந்திருந்தது.
(3)
இலைகளின் வழியாக பனி சொட்டிக் கொண்டிருந்தது. நீலநிற பிளாஸ்திக் தறப்பாளினால் இழுத்துக் கட்டப்பட்ட அந்த நீண்ட கொட்டிலில் பயிற்சி முடிந்த அனைவரும் நல்ல நித்திரையில் இருந்தனர். அருகில் கிடந்த பாலனை திரும்பிப் பார்த்தேன். கடைவாய் வழிந்து தூக்கத்திற்குள் மிகத்தூரமாக சென்றிருந்தான். அவனது துயில் கலைந்து விடாமல் மெதுவாக எழுந்து பயிற்சி மைதானத்தை பார்த்த போது கண்கள் ஆச்சரியத்துடன் விரிந்து கொண்டன.
முதல்நாள் இரவே நாங்கள் நித்திரையான பிறகு வேலவன் மாஸ்டரின் பயிற்சி அணியினர் துவக்குகளைக் கொண்டுவந்து வரிசையாக வைத்துச் சென்றிருக்க வேண்டும். பயிற்சி மைதானத்தோடு அருகில் அமைக்கப்பட்டிருந்த நீண்ட கிடுகுக் கொட்டகையில் துவக்குகள் நிமிர்த்தி அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
பார்த்த மாத்திரத்தில் ஒரு கணம் சூரியன் உள்ளே இறங்கியதை போல உடல் உதறியது.
ஓடிச்சென்று பாலனை தட்டியெழுப்பி விஷயத்தைச் சொன்னேன். அவன் வேகமாக வெளியில் ஓடி வந்து பார்த்தான்.
நடுவிலும் அடியிலும் மரநிறத்தில் மஞ்சளாக ஜொலிக்க அந்தக்கரிய இரும்புக் கருவிகள் திமிரோடு நிமிர்ந்து நின்று எங்களுக்காக காத்திருந்தன.
இருவரும் ஆளையாள் பார்த்து சிரித்துக் கொண்டோம். என்னை அறியாமலேயே இடப்பக்க முழங்கையை வருடிப் பார்த்தேன். எத்தனை வாரங்களாக கொட்டனோடு ஓடியும் பாய்ந்தும் தவழ்ந்தும் கரணமடித்தும் பயிற்சியெடுத்திருப்போம். காய்த்துப் போன கைகளில் பட்ட காயங்கள் எல்லாவற்றுக்கும் கொட்டன் தான் காரணம் என்று வெறுத்திருந்தோம். துவக்கு மாத்திரம் கையில் கிடைத்து விட்டால் அது எல்லாவற்றிலிருந்தும் எங்களை பாதுகாக்குமென்று கதைத்துக் கொண்டோம்.
சொரசொரவென்றிருந்த முழங்கையின் நுனியில் பழைய காயமொன்று காய்த்திருந்தது.
எல்லோரும் எழுந்தார்கள்.
“அன்றைய ஓட்டம் வழக்கத்தை விட உற்சாகமாக இருந்தது. பாலன் துள்ளி(த்)துள்ளி ஓடினான். பிறகு, வேலவன் மாஸ்டர் வந்தார். துவக்கு தொடர்பான விசேட அறிவிப்பை தந்தார். அதற்குப் பிறகு ஒவ்வொருவராக போய் அதனை கைகளில் வாங்கிக் கொண்டோம். தகட்டிலிருந்த இலக்கத்தை பதிவுசெய்து கொண்டு துவக்கினை கைகளில் தந்தபோது அந்த இரும்பின் குளிர்மை உடலில் ஒரு தோட்டாவைப் போல வேகமாக இறங்கியது.
மதிய உணவு முடிந்து கொட்டிலுக்கு வந்தபோது பாலன் சிறிய வெள்ளையும் மஞ்சளும் கலந்த நிறத்துணியால் துவக்கின் சகல பாகங்களையும் அழுத்தித் துடைத்துக் கொண்டிருந்தான். அவன் துடைப்பதை அருகிலிருந்து கூர்ந்து பார்த்தேன். அழுத்தி துடைப்பான். பிறகு, கைப்பிடியின் அருகே முகத்தைக் கொண்டுசென்று ஊதுவான். தன்னை ஏமாற்றிக்கொண்டு எங்காவது சிறுதூசு ஒளிந்திருக்கிறதா என்று ஒரு கண்ணை மூடி உற்று நோக்குவான். திரும்பவும் துடைப்பான். இதையெல்லாம் நான் ரசிப்பதை ஓரக்கண்ணால் கண்டுகொண்டால் உதடுகளைச் சுழித்து சத்தமின்றி சிரிப்பான்.
அன்று முதல் எனது உயிரின் ஒரு பகுதி எடை கழன்று அந்த இரும்பிற்குள் வாழ்வது போன்ற உணர்வு படிப்படியாக ஒட்டிக்கொண்டது.
ரி56. அது புதிய துவக்கொன்றுமில்லை. ஏதோவொரு முகாம் தாக்குதலில் கைப்பற்றப்பட்ட இராணுவத்தின் துவக்குத்தான். ஆனால், அது இன்னொருவனிடமிருந்து அடித்துப் பெறப்பட்டது. அதனையெடுப்பதில் எத்தனைபேர் செத்திருப்பார்கள். உடல் சிதறியிருப்பார்கள். எமக்குத் தெரியாது. ஆனால், நிச்சயமாக அது நடந்திருக்கும். விடுதலையை மாத்திரமல்ல, ஆயுதங்களையும் உயிர் கொடுத்துத்தான் வாங்க வேண்டும் என்பது களத்திலிருப்பவனுக்கு மாத்திரம்தான் விளங்கும்.
அது என்னோடு ஒட்டிக் கொண்ட நாள்முதல் எனது மதிப்பை நானே கொஞ்சம் குறைவாகத்தான் உணரத் தொடங்கினேன்.
பயிற்சியோ சண்டைகளோ இல்லாத நேரங்களில் என் துவக்கோடு தனியாக பேசுவதற்கு பழகியிருந்தேன். நான் அவ்வப்போது படிக்கும் புத்தகங்களை துவக்கோடு பகிர்ந்துகொள்ளத் தொடங்கினேன். நன்றாகத் துடைத்த பின்னர் நான் துவக்கோடு படிக்கத் தொடங்கினால், அநேகமாக சில பக்கங்கள், சில பத்திகள், சிலவேளை சில வரிகள். அவ்வளவுதான் அவகாசம் கிடைக்கும். அதனை பாலனும் படுத்திருந்து கேட்பான்.
நாளையே என்மீது பாய்கின்ற குண்டொன்று எனது உயிர் குடிக்கும்போது இந்த துவக்கு எதிரியின் கைகளில் விழலாம். அவன் இந்தத் துவக்காலேயே என்னை மீண்டுமொரு முறை சுட்டு உயிர் போனதை உறுதி செய்து கொள்ளலாம். அதன் பிறகு இந்தத் துவக்கினை தன் முகாமுக்கு கவர்ந்து செல்லலாம். இல்லை, யாருமற்ற வெளியில் அநாதரவாக என் பிணம் விழும்போது அருகே இந்தத் துவக்கு தனியாகக் கிடந்து எனக்காக அழுது குழறலாம். அப்போதும் நான் வாசிக்குமொரு கதையை கேட்பதற்காக இந்த இரும்பிலும்கூட இரு சொட்டு கண்ணீர் வரலாம்.
எல்லா விதமாகவும் இந்தத் துவக்கிற்குள் ஒரு உயிர் பதுங்கியிருப்பதை நான் நம்பினேன். என்னைப் போலவே பாலன் தன் துவக்கோடு தனக்கொரு வாழ்விருப்பதாக இறுக்கமாக நம்பினான்.
(4)
அன்று எனது பிறந்தநாள். பாலமோட்டை முன்னணி காவலரணையொட்டிய பிரதேசத்தில் இராணுவத்தை கண்காணிப்பதற்காக நிலைகொள்ள வேண்டியிருந்தது. அதற்கு முதல் சண்டையில் எடுத்து எம்.16 கோல்கொமாண்டோஸோடு பதுங்கு குழியிலிருந்தோம். அந்த அமெரிக்க துவக்கின் மீது எங்கள் இருவருக்கும் மிகப்பெரிய பிரியமிருந்தது. சண்டையில் எடுத்தது என்பதற்கு அப்பால் எல்லோரும் வைத்திராத பெறுமதியான ஆயுதம். அது எங்களிடமிருக்கிறது என்பதில் ஒரு தனி மகிழ்ச்சி எங்களுக்குள் பிரவாகித்தபடியிருந்தது.
காலெடுத்து வைக்கும் ஒவ்வொரு தடத்தின் ஓசையும் எதிரியறிவான் என்று எமக்குத் தெரிந்திருந்தது. என்னைவிட எப்போதும் போல எனது பாதுகாப்பில் பாலன் அவதானத்தோடிருந்தான்.
இருந்தாலும் அன்றிரவு அவனுக்கு ஏதோ செய்ய வேண்டுமென்றிருந்தது. நள்ளிரவு எழுந்து – சரியாக பன்னிரெண்டு மணிக்கு – பிறந்தநாள் வாழ்த்து சொன்னான். எம்.16 துப்பாக்கியோடு வெளியில் சென்று ஆகாயத்தில் ஒரு சுற்று ரவைகளை பொழிந்து தள்ளினான். இருளைக் கிழித்துக்கொண்டு நெருப்புப்பூக்களாக ரவைகள் பறந்து அணைந்தன. பிறகு என்னைத்திரும்பி பார்த்து –
“பாரடா, பிறந்தநாளுக்கு சீனவெடி கொளுத்துறதெல்லாம் சாதாரண ஆக்கள் செய்யிறது. உனக்கு நான் அமெரிக்க வெடியே கொளுத்தியிருக்கிறன்” – என்றான் பெருமையோடு. அந்தக் கண்களில் அவ்வளவொரு ஆனந்தம். அடுத்த நாள் காலையில் நிகழ்ந்த மோதலில் பாலன் எதிரியின் சினைப்பரினால் கொல்லப்பட்டான். என் கண்முன்னாலேயே பாலன் சுருண்டு விழுந்தான். அவனில் எந்த அசைவுமிருக்கவில்லை. அவனைத் தூக்கியோடுவதற்காக வரப்போறவனை எதிர்பார்த்து அந்த சினேப்பர்காரன் இப்போது குழல் வழியாக இன்னொரு இலக்கினை தேடத் தொடங்கியிருப்பான். பாய்ந்து சென்று பாலனை இழுத்து வரவேண்டும் போலிருந்தது. நாவில் ஏதோவொரு கசப்பான திரவம் ஊறியது. நெஞ்சும் வயிறும் எரிந்தது. பாலன் அசைவின்றி கிடக்கையில் என் மொத்த உடலும் இயங்க முடியாது விறைத்திருந்தது.
பாலனின் இழப்பு எனக்குள் மிகப்பெரிய வெறுமையை விதைத்தது. முதல் நாளிரவு அவனுதிர்த்த இறுதிச் சிரிப்பு அப்படியே நெஞ்சில் நீந்தியபடி கிடந்தது. அன்றோடு துவக்குகளிலிருந்த மோகம் என்னிலிருந்து கழன்றது. இயக்க வாழ்க்கையும்தான்.
(5)
முற்று முழுதாக போரிலிருந்தும் மண்ணிலிருந்தும் வெளியேறி ஐக்கிய நாடுகள் சபையின் ஆசீர்வாதத்தோடு தரப்பட்ட அதே தறப்பாளின் கீழ் இந்தோனேஷிய அகதி முகாமில் இரண்டு வருடங்கள் படுத்துறங்கி எழுந்த நாளொன்றில் சட்டத்தரணி வைஷாலியை சந்தித்திருந்தேன். ஐ.நா. அலுவலகரோடு நடைபெற்ற சந்திப்பில் மொழிபெயர்ப்பாளராக வந்தபோது பேசத் தொடங்கினேன். நேரிலும் தொலைபேசியிலும் அவ்வப்போது பேசிக்கொண்டவள், எனது பிறந்தநாளன்று எனக்கு தெரியாமல் முகாமுக்கு கேக் வாங்கி வந்திருந்தாள். அது எனக்கு பெரிய அதிர்ச்சியாகவிருந்தது. அன்று முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தேன். வெளிநாட்டு மண்ணில் நான் மிகவும் திருப்தியாக உணர்ந்த நாள் அதுதான். இரவு தூங்குவதற்கு முதல் திடீரென்று எழுந்து படுக்கையிலிருந்து யோசித்தேன். அன்று பாலன் இறந்த தினம் என்று புரிந்துகொள்ள முடியாதளவுக்கு வைஷாலியின் நினைவாக இருந்திருக்கிறேன் என்று எண்ணியபோது பயந்தேன். கொஞ்சம் வியர்த்திருந்தது. விடிந்தபிறகு, எனக்குள் வைஷாலி நிறைந்திருப்பதை உணர்ந்து கொண்டேன்.
வைஷாலி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவள். விவாகரத்தானவள். இந்தோனேஷியாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றுவதற்காக நாட்டிலிருந்து வந்து, தொடர்ந்து குடிவரவு சட்டங்களைக் கற்று அகதிகளுக்கான அனுசரணையாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறாள். இந்தோனேஷிய அரசு அதிகாரியொருவரை இரண்டாம் தடவையும் திருமணம் செய்து பிரிந்து விட்டாள் என்று முகாமுக்குள் பேசிக்கொண்டார்கள். அவளது இந்த தனிப்பட்ட பூராயங்களுக்குள் என்னை நுழைத்துக் கொள்ளாததும் என் மீதான அவளது கரிசனைக்கு காரணமாக இருந்திருக்கலாமென்று எனக்குள் ஒரு நம்பிக்கை.
“இந்த முகாமிலிருந்து வெளியேறி உடனடியாக வேறு நாடொன்றுக்கு போவதென்றால் எவ்வளவு காலமெடுக்கும்? அதற்கான கள்ள வழிகள் எப்போது திறக்கும் என்று எதுவும் தெரியாமல் இன்னொரு தறப்பாளுக்குக் கீழ் போய் படுத்திராமல் –
“இந்தோனேஷிய அரசாங்கத்தில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவிற்கு ஆட்கள் எடுக்கிறார்கள், இங்கு விடுதலையாகி வெளியே வந்தவுடன் அதில் இணைந்து கொண்டால் கையில் பணமும் கிடைக்கும், அது அரசாங்கத்தோடு அருகிலிருக்கும் வாய்ப்பாகவும் அமையும், அதனை இப்போதைக்கு முயற்சித்துப் பார்ப்பதுதான் புத்தி” – என்று அகதி முகாமின் முன்னாலுள்ள லாவுலு மர நிழலில் வைத்து ஒருநாள் தனது மெல்லிய குரலில் சொல்லி முடித்தாள் வைஷாலி.
அந்த வார்த்தைகள் அப்போது அவள் என்னிடத்தில் கொண்டிருந்த சொல்லாத காதலின் அரூப அக்கறையாக ஒலித்ததை புரிந்துகொள்ள முடிந்தது.
வைஷாலிக்கு இந்தோனேஷியாவில் எந்தப்பருவத்தில் எந்தக்காய் காய்க்கும் என்பது தொடக்கம் அந்தக்காயை எப்படி அடுத்த நாளே பழமாக்குவது என்பது வரைக்கும் தெரிந்திருந்தது. அவள் எனது வாழ்க்கையை முழுவதுமாக அறிந்தவள். அவள் எனக்கொரு வழிசொன்னால், அதில் எந்த தடுப்பரண்களோ சினேப்பர்களோ இராது என்று முழுமையாக நம்பினேன்.
அகதி முகாமிலிருந்த இரண்டு வருடங்களில் இந்தோனேஷிய மொழியை சரளமாக பேச – எழுதக் கற்றிருந்தது எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.
முகாமிலிருந்து விடுதலையாகி முதலிரண்டு வாரம் வைஷாலி வீட்டின் முன்பாகவிருந்த அறையொன்றில் தங்கினேன். நான் அதைத்தான் அப்போது விரும்புவதாக எண்ணியிருந்தாள். அல்லது காதலுக்காக பிணையெடுத்தது போல நான் எண்ணிவிடக் கூடாது என்றுகூட யோசித்திருக்கலாம். அவளது வீட்டில் தங்கியிருந்த ஒருநாள் மழையினால் என் அறைக்குள் பெரும் ஒழுக்கு. தாரை தாரையாக தண்ணீர் உள்ளே விழுந்தது. எனது ஒற்றைக்கட்டில் நாசமானது. அதன்பிறகு, அன்றிரவு வைஷாலியோடு தூங்கினேன்.
அடுத்தநாள் காலையில் வானம் அவ்வளவு அழகாகத் தெளிந்திருந்தது.
இந்தோனேஷிய குடிவரவுத் துறையின் போதைப்பொருள் ஒழிப்புக்குழு பயிற்சி வகுப்புக்களுக்குரிய ஆவணங்களை இணையத்தில் எடுத்து வைஷாலியே சிரத்தையோடு நிரப்பினாள். தேவையானவர்களிடம் சென்று கையெழுத்துக்களை வாங்கிக் கொண்டாள். வகுப்புக்குப் போகவேண்டிய காரியத்தைத் தவிர, மிகுதி அனைத்துப் பணிகளையும் தானே செய்து முடித்தாள்.
தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து சற்று உள்ளே சுகுபட்டாவில் அமைந்திருந்த குடிவரவு திணைக்கள மண்டபத்தில் பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பமாயின. கட்டோனா என்ற பெயரில் தெத்துப்பல்லோடு எப்போது பார்த்தாலும் சிரித்துக் கொண்டேயிருப்பவன் அங்கு எனக்கு பழக்கமானான். இந்தோனேஷியாவில் பிறந்து இந்தோனேஷியாவில் வளர்ந்து இந்தோனேஷிய சிறைக்குப் போய் வந்தவன். அவனுக்கும் பாலனைப்போல நுனி மூக்கு சற்று வளைந்திருந்தது. எதற்கெடுத்தாலும் சிரிப்பான். அழுவதென்றால்கூட ஒருமுறை சிரித்துவிட்டுத்தான் அழத்தொடங்குவான் போல.
பயிற்சி தொடங்கிய பிறகுதான் தெரிந்தது, அது கிட்டத்தட்ட ஊரில் நாய் பிடிப்பதைப் போன்ற – எந்த கருணையும் பார்க்காமல் போதைப்பொருளோடு தொடர்புடையவர்களை அடித்துப் பிடிக்கும் – வேலையென்று. போதைப்பொருளோடு பிடிபடுகின்றவர்களை இழுத்து வந்து வண்டியில் போட்டு நாட்டில் நடைமுறையிலிருக்கும் மிக இறுக்கமான சட்டத்தை அவர்களின் மீது திணித்து சிறையில் தள்ளுவதுதான் வேலை. ஒருவாரம் எங்களுக்கு பாடமெடுத்த நிமிர்ந்த இரும்புடம்பு இந்தோனேஷிய அதிகாரியின் கணக்கை வைத்துப் பார்த்தால், இவ்வேளைக்கு இந்தோனேஷியாவில் பாதி சனத்தொகை சிறையில்தானிருக்க வேண்டும்.
கட்டோனா ஒருநாள் மதிய உணவின் பிறகு சிகரெட் புகையை இழுத்துவிட்ட இடைவெளியில் –
“நாங்கள் பிடித்துக்கொண்டு வந்து உள்ளே போட்டால், யாராவது ஒருவனுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு பிடிபட்டவன் வெளியில் போய் விடுவான். ஆக, இங்கு சட்டத்தின் மேல் கோபம் கொண்டு உடல்நலனை வீணடிக்காமல் சம்பளத்தை மாத்திரம் வாங்கிக்கொண்டு வீடுபோகும் வழியை பார்க்க வேண்டும்” – என்று புத்தி சொன்னான். அதனை அவன் வழக்கம்போல சிரித்துக்கொண்டு சொன்னாலும் அதிலிருந்த அழுத்தமான உண்மையை உணர்ந்து கொண்டேன்.
பிறகு பொக்கெட்டிலிருந்து எடுத்து தனது மூன்று பெண் குழந்தைகளினதும் படத்தைக் காண்பித்து தனது நெளிந்த மூக்கு சிவக்க திரும்பவும் சிரித்தான்.
“சீச்சி…” – என்றுவிட்டு நடுவிலிருப்பது தனது மனைவி என்று சொல்லி கூடுதலாக வெட்கிக் கொண்டான்.
ஆறாவது வாரம் ஜகார்த்தாவிலிருந்து மிக அண்மையிலுள்ள பமுக்கா தீவில் கொண்டுபோய் அனைவருக்கும் துப்பாக்கிப் பயிற்சி தரப்பட்டது. அந்த வகுப்பு ஆயுதப்பயிற்சியாக பரிமாணமடையும் என்று நான் நினைத்திருக்கவில்லை. அதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் அடிப்படையில் சிறப்பு பணிகள் ஒதுக்கப்படவுள்ளதாகவும் இரும்பு வாத்தியார் சொன்னார்.
வைஷாலியிடம் அன்றிரவே வந்து விஷயத்தை சொன்னேன். ஏதாவது சிக்கல் வந்து பாலமோட்டை வரை சென்று பழையதை கிளறி விடுவார்களோ என்று அச்சமடைந்தேன்.
“உனது ஆயுதத்திறமையை வைத்து இங்கு யாரும் தவறாக எடைபோட்டு விடமாட்டார்கள். இது கிட்டத்தட்ட அரசாங்க வேலை மாதிரி. கூடுதல் சம்பளமும் கிடைக்கும். காலத்தை வீணாக்காதே” – என்று திரும்பவும் கொண்டு வந்து வழக்கம் போல முடித்தாள் வைஷாலி.
ஆயுதங்களை அளைந்து வந்த எனது பழங்காலத்தை நான் சதா நினைவுகளில் போட்டு பிசைந்து கொண்டிருப்பதை வைஷாலி அவ்வப்போது துல்லியமாக அவதானித்து விடுவாள். உடனே எனது நினைவுகளை கலைத்துக் கொள்வதற்கு ஒரு வைத்தியர் போல பேசுவாள். அவளது பேச்சில் நான் அதுவரையான வாழ்வில் உய்த்தறிய முடியாத பகுதிகள் அதிகமிருக்கும். அவளருகிலிருக்கும் போது கலைந்துசெல்லும் நினைவுகள், பிறகு தாழ்மேகங்கள்போல தலைமீது வந்து ஏறி நிற்கும்.
இந்தோனேஷியாவில் சிறப்பு காவல்துறை அணிகள் “பெரேட்டா” என்ற இத்தாலி கைத்துப்பாக்கிகளைத் தான் பயன்படுத்தினார்கள். “சாதாரண பொலீஸாருக்கான துப்பாக்கிகளை இந்தோனேஷியாவிலேயே தயாரிக்கிறார்கள்” – என்று கட்டோனா சொன்னான்.
ஏழாவது வாரம் பயிற்சி முடிவில் எங்கள் அனைவரது திறமையின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளாக்கப்பட்டோம்.
ஒரு தொகுதியினர் போதைப்பொருள் தடுப்புச் சிறப்பு பிரிவினராக நகர்ப்புறத்தில் களப்பணியாற்றுவதற்காக தெரிவு செய்யப்பட்டார்கள். வகுப்பின் முன்பாக நின்ற பலவர்ண பதக்கங்கள் அணிந்த அதிகாரி ஒவ்வொருவரது பெயரையும் உரக்க அழைத்தார். எனது பெயருக்காக அந்த அதிகாரியின் உதடுகளையே பார்த்தபடியிருந்தேன்.
கடைசிவரை, நான் அவர் வாயிலிருந்து வரவேயில்லை. நான் கட்டோனாவை பார்த்தேன். அவனும் எனக்கு அருகில் நின்று முதல்முறையாக சிரிக்க முடியாமல் திணறினான். பெயர் அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் வேறு வகுப்புக்கு கூட்டிச் செல்லப்பட்டார்கள். கடைசியாளும் கதவின் வழியாக வெளியே போக, மூன்று கறுப்பு சீருடையணிந்த அதிகாரிகள் வகுப்பிற்குள் புதிதாக நுழைந்தார்கள். அவர்கள் எங்கள் இரும்பு வாத்தியாரின் அண்ணன் தம்பி போல விறைப்பாக தெரிந்தார்கள். நாங்கள் குழம்பியிருப்பது அவர்களுக்கு புரிந்திருந்தது. அவர்களில் வலக்கன்னத்தில் குளவி கொட்டியதுபோல ஐந்தாறு பெரிய காயங்களோடிருந்த அதிகாரி பேசத்தொடங்கினார்.
“துப்பாக்கி சுடும் பயிற்சியில் நீங்கள் காண்பித்த திறமையின் அடிப்படையில் உங்களை மரண தண்டனை வழங்கும் சிறப்பு அணியில் சேர்த்துக் கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறோம். உங்கள் விருப்பங்கள் எப்படி” – என்று நேரடியாகவே விஷயத்துக்கு வந்தார். சொல்லி முடிக்கும்போது எனக்கு தொண்டையில் கல்லொன்று வந்து இறுகி நிற்பது போலிருந்தது.
“உங்களுக்கான சிறப்பு படிகள் மற்றும் சலுகைகள் பற்றி அணிக்குரிய சிறப்புத்தளபதி விளக்குவார். அவசரமாக இன்றே முடிவை சொல்ல வேண்டும் என்றில்லை” – என்று மெல்லிய புன்னகையோடு அவர் தனது அதிர்ச்சி உரையை முடித்தார்.
அதற்குப்பிறகு அங்கு நின்றவர்கள் என்னென்னவோ பேசினார்கள்.
நான் வெளியில் ஓடிவந்து கட்டோனாவிடம் ஒரு சிகரெட்டை கேட்டு பற்ற வைத்தேன். வைஷாலிக்கு தொலைபேசி எடுத்தேன்.
வைஷாலி முன்பு கூறியதைத்தான் திரும்பவும் கூறினாள். கூடுதலாக இரண்டொரு முக்கியமான வார்த்தைகளையும் சொன்னாள்.
“வாழ்க்கையில் எதிர்பாராத வாய்ப்புக்கள் இப்படித்தான் வந்து கொண்டிருக்கும். இதற்கு நீ முன்பு பழக்கப்படவில்லை என்பதால் அதிர்ச்சியடைகிறாய். உனது திறமையின் அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கின்ற வாய்ப்புத்தான் இது. மற்றைய அணிக்கு இது கிடைக்கவில்லை. உனக்கு வரவேண்டிய வாய்ப்பென்றபடியால் அது வந்து சேர்ந்திருக்கிறது.
“ஆயுதங்களுடனான வாழ்க்கை எப்படியிருக்கும் என்று நான் உனக்கு சொல்லித்தர வேண்டுமா” – என்று வைஷாலி கேட்டாள்.
எனக்கு இரண்டாவது சிகரெட்டும் முடிந்திருந்தது.
ஆயுதங்களிடமிருந்து நான் வெகு தொலைவுக்கு வந்துவிட்ட போதும் அது என்னை மீண்டும் தனக்குள் ஒரு சுழிபோல இழுப்பது அச்சத்தை தந்தது. கூடவே பாலனின் நினைவுகள் என்னை குற்ற உணர்ச்சியிலிருந்து மீண்டுவிட முடியாமல் பொத்திப் பிடித்த வண்ணமிருந்தன. அகால நினைவுகள் அனைத்தும் கரும்புகை போல எனக்குள் கற்றையாக மீண்டும் எழுந்துகொள்ளப் பார்த்தன.
அன்றிரவு உணவின் பின்னர் நானும் வைஷாலியும் காலாற நடந்துவரப் போயிருந்தோம். நான் கொந்தளித்தபடியிருப்பதை அவள் தெளிவாக அவதானித்துக் கொண்டாள். அதுபற்றி நான் பேசத்தொடங்குவதற்கு முன்னரே,
“துவக்குகளால் நீ துருப்பிடித்திருக்கிறாய்” – என்றாள்.
திடீரென்று அப்படிச் சொன்னபோது அவள் எனக்குள் இறங்கி நிற்பது தெரிந்தது. என் கண்களையே பார்த்தபடி சொன்னாள்.
“வாழ்க்கையில் எமக்கு எத்தனையோ விஷயங்களில் உரிமையிருப்பதாக எண்ணிக் கொள்கிறோம். அதனைத்தான் இந்த சமூகமும், ஏன் சட்டமும்கூட கைதட்டி ஆமோதிக்கிறது. உண்மையில் அப்படியில்லை. யதார்த்தம் வேறானது” – என்றாள்.
அவளது வீட்டின் மூலையிலுள்ள தண்ணீர் தாங்கியை திருத்துவதற்காக தோண்டிய குழியை பல தொழிலாளிகள் மண் நிரவி மூடிக்கொண்டு நின்றார்கள். தெருவைக் கடந்து மறுபக்கத்துக்கு சென்றோம்.
“கணவன், குழந்தைகள், நட்பு எல்லாமும்தான்”
விட்ட இடத்திலிருந்து தொடங்கி மெதுவாக முடித்துவிட்டு –
“They might belong to us but we can’t own them” – என்றாள்.
பிறகு மௌனமாக நடந்து வந்தாள். அது நான் சிந்திப்பதற்குரிய மௌனம் என்பதை அவள் சொல்லாமலேயே புரிந்து கொண்டேன். பாலன், துவக்கு, போராட்டம் என்று சகலதும் கோர்வையாக மனதில் மிதந்து அமிழ்ந்தன.
மரண தண்டனை வழங்கும் அணியின் தளபதியும் அவர் குழாமும் எங்களை கொமொடோ தீவுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு எமக்கான அதி இரகசியமான கூடுதல் பயிற்சி வழங்கப்பட்டது.
இந்தோனேஷிய மரண தண்டனை வழக்கப்படி சுட்டுக்கொலை செய்யப்படும் கைதிகளை எவ்வாறு தண்டனைக்காக கொண்டு வருவது என்பது முதல் அவர்கள் தண்டனையளிக்கப்பட்ட பின்னர் எவ்வாறு பிரேதப்பேழைகளில் போட்டு அனுப்புவது என்பது வரை கூட்டாக செய்யவேண்டிய பணிகள் அந்தப் பயிற்சியில் விளக்கமாக சொல்லப்பட்டன.
மனத்திடமும், தண்டனைகளை நேர்த்தியாக செய்து முடிக்கும் நிதானமும்தான் இந்தத் தொழிலுக்கு அவசியம் என்று சொன்ன பயிற்சியாளர், பழங்காலத்தில் மன்னர்களின் கீழ் இடம்பெற்ற மிகக்கொடூரமான தண்டனை முறைகளை விரிவாக விளக்கினார். அவற்றோடு ஒப்பிடும்போது இப்போதெல்லாம் குற்றவாளிகள் மிகக்குறைந்த வலியோடு தண்டனையை ஏற்றுக்கொள்ளும் வகையிலான ஏற்பாட்டினையே தாங்கள் செய்து கொடுப்பதாக சொன்னார்.
பயிற்சி வகுப்புக்களின் ஒரு பகுதியாக அந்த மாதம் இடம்பெற்ற பிலிப்பீன்ஸ் குற்றவாளிக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனையை நேரடியாக தொலைக்காட்சியில் காண்பித்தார்கள்.
கால் முதல் கழுத்து வரைக்கும் இறுக்கமாக கம்பமொன்றில் கட்டப்பட்ட அந்தக்குற்றவாளி, ஒன்பது துப்பாக்கிதாரிகள் முன்னே நின்று சுட தலை கவிழ்ந்து இறந்து போனான். ஒரு ஆங்கிலப்படத்துக்கு சற்றும் குறைவில்லாத சம்பவமாகவும் நான் போரில் நேரடியாக அனுபவித்த எத்தனையோ சம்பவங்களின் சிறுதுண்டாகவும் நடந்து முடிந்தது. காலில் குத்திய பழைய முள்ளொன்றை மீண்டும் தட்டிப்பார்க்கும் போது ஏற்பட்ட ஒரு கூச்சம் மனதில் மின்னி மறைந்தது.
அதன் பின்னர், நேரடியாகவே இந்தோனேஷியாவின் மரண தண்டனைக்களத்துக்கு எங்களை அழைத்துச் சென்று அங்கு நடைபெறுகின்ற ஏற்பாடுகளை காண்பிக்கப் போவதாக கூறினார்கள்.
இந்தோனேஷியாவுக்கு அருகிலுள்ள நூஸா தீவுக்கு நாங்கள் எல்லோரும் அழைத்துச் செல்லப்பட்டோம். அப்போது எமக்கான சீருடைகள் தரப்பட்டு விட்டன. பெருநிலத்திலிருந்து சிறியதொரு கிறவல்நிலப்பாலத்தின் வழியாக அந்தத்தீவுக்கு இராணுவ வாகனங்கள் தான் போய்வருவது வழக்கம். அதனை சனநடமாட்டம் இல்லாத ‘பேய்த்தீவு’ என்று அருகிலுள்ள கிராமத்தவர்கள் சொல்வதாக கட்டோனா சொன்னான். அங்குள்ள பெரியதொரு சிறையில் இந்தோனேஷியாவில் பெருங்குற்றங்கள் செய்து தண்டனை தீர்க்கப்பட்டவர்களை அடைத்து வைத்திருக்கிறார்கள். அநேகமானவர்கள் நீண்டகால சிறைவாசம் அனுபவிப்பவர்கள். ஏனையவர்கள் மரண தண்டனை கைதிகளாக கொண்டுவரப்படுபவர்கள். அரசாங்கம் முடிவெடுத்தவுடன் அதிகாலை வேளைகளில் குற்றவாளிகள் நித்திரையால் எழுப்பிக் கூட்டிச்செல்லப்பட்டு ‘வாடிமுற்றம்’ என்றழைக்கப்படும் இடத்தில் வைத்து மரண தண்டனை வழங்கப்படும்.
இரத்தமும் சாவும் எனக்கு பழக்கப்பட்ட ஒன்று. அதில் குதூகலமாக புரண்டு எழும்பியிருக்கிறேன். உயிர்கள் என்றால் அவை வெறும் உடல்கள்தான் என்ற புரிதலோடு வளர்ந்து வந்தவன் நான். எனக்கும் எனது துவக்கிற்கும் இடையில்தான் ஆத்மார்த்தமான நெருக்கமிருந்திருக்கிறது. அதற்கு அப்பால், பாலன்மீது தான் ஏதோவொரு மெல்லிய உணர்விருந்திருக்கிறது. அதை கொடூரமாக இழந்தேன். இப்போது வைஷாலி அந்த இடத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறாள். இவற்றைக் கழித்துவிட்டு பார்த்தால், நானும் ஒரு துவக்குத்தான். எனக்குரிய உணர்வுகள் எனக்குள் இருந்ததைவிட வெளியேதான் நின்றிருக்கின்றன. அதைத்தான் நானும் விரும்பி வாழ்ந்திருக்கின்றேன்.
அப்படியிருக்கும்போது இந்த மரண தண்டனை முறைகளும் அதைச்சூழ்ந்திருக்கும் இருண்ட நிஜங்களும் உலகின் இன்னொரு பக்கத்தில் நடைபெறுகின்ற திருவிழாக்களாக தெரிந்தன.
(6)
மரண தண்டனை வழங்கும் எங்களை “மொபி” படையணியென்றார்கள். எனது கருஞ்சீருடையில் “மொபி 16” என்ற இலக்கம் பதிக்கப்பட்டிருந்தது. மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு எம்16 துவக்குத்தான் எல்லோருக்கும் தந்தார்கள். அமெரிக்க தயாரிப்பு. மினுங்கிக் கொண்டிருந்தது. முதன்முதலாக அதனை கைகளில் வாங்கியபோது, பாலன் அருகில் நின்று சிரிப்பதுபோல உணர்ந்தேன். என்னை அறியாமல் திரும்பிப் பார்த்தேன். கட்டோனா நின்று கொண்டிருந்தான். துவக்கோடு வேறு அத்தியாவசிய கருவிகள் அடங்கியதாகவே அந்த சீருடை இறுக்கமாக தயாரிக்கப்பட்டிருந்தது. மரண தண்டனையை நிறைவேற்றுபவர்கள் என்று எங்களைப் பார்த்தாலே அச்சப்படும்படியாக அந்த சீருடை அமைந்திருந்தது. தலையை முற்றாக மூடி கண்களையும் மூக்கையும் மாத்திரம் வெளியில் தெரியும்படியாக இறுக்கமான கவசமும் தரப்பட்டிருந்தது. சீருடை இலக்கத்தை வைத்துத்தான் கட்டோனாவை அடையாளம் காணக் கூடியதாகவிருந்தது.
நாங்கள் நூஸா தீவுக்கு போயிருந்த அன்று நைஜீரியாவைச் சேர்ந்த போதைப்பொருள் குற்றவாளி ஒருவனுக்கு மரணதண்டனை கொடுக்கவிருப்பதாக அறிந்தோம். அதிகாலை வேளை எங்களை தீவுக்கு அழைத்துச் சென்றபோது அங்கு உடனடியாகவே காரியம் நடைபெற்றுவிடும் என்பது ஓரளவுக்கு தெரிந்தது.
நீலநிற ரீசேர்ட்டும் கறுப்பு காற்சட்டையும் அணிந்த அந்த நைஜீரியன் வாடிமுற்றத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தான். நன்கு திரண்ட உடம்பு. சாவுக்குள் நுழையப்போகும் அவன் எப்படியிருக்கிறான் என்பதை அவனது முகத்தில் காணமுடியவில்லை. முகக்கவசம் அணிந்த அதிகாரிகள் அவனைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தார்கள். எக்காரணம் கொண்டும் அவன் சாவிலிருந்து தப்பிவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதில் கவனத்தோடு கடைசி நேர சோதனைகளை செய்து கொண்டிருந்தார்கள். அவனைக் கம்பத்தில் கொண்டுபோய் கட்டிய பிறகு பாதிரியார் ஒருவர் அருகில் சென்று தோத்திரம் சொன்னார். அதன் பின்னர், ஒன்பது துப்பாக்கிதாரிகளும் வந்து வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ‘எம்16’ துப்பாக்கிகளை எடுத்துச் சென்றார்கள். கம்பத்துக்கு முன்னால் கீறப்பட்டிருந்த வெள்ளைக்கோட்டில் முன்காலை வைத்து நின்று கொண்டார்கள். அவர்களில் ஒருவர் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த நைஜீரியனுக்கு அருகில் சென்று, அவனது இடப்பக்க மார்பில் வரையப்பட்ட வெள்ளை நிறவட்டத்தில் விரலை வைக்கவும், துப்பாக்கிகளின் அனைத்து லேசர்களும் அந்த வட்டத்துக்குள் குவிந்து கொண்டன. ஒருசில செக்கன்களில் அந்த இடத்திலிருந்த அதிகாரி துப்பாக்கிதாரிகளிடம் வந்து விட்டார். லேசர்கள் அப்படியே அவனில் அசையாது குத்தியபடி குவிந்து நின்றன.
இவ்வாறு மரண தண்டனை பெறுபவர்களுக்கு கடைசிநேர வலி தெரியாமலிருப்பதற்கு போதையேற்றி விடுவதாக முன்பு கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், கம்பத்தில் கட்டப்பட்டிருந்த அந்த நைஜீரியனின் மூடப்பட்ட முகக்கவசத்துக்குள்ளிருந்து அனுங்கிய சத்தமொன்று தொடர்ந்து கேட்டபடியிருந்தது. முதலில், அது பாதிரியாரின் தோத்திரப்பாடலென்று எண்ணினேன். ஆனால், இப்போது அவன் அனுங்குவது தெளிவாக கேட்டது. காற்றில் மிதந்தபடியிருந்த இந்த உலகுக்கான அவனது கடைசிக்குரல் அவ்வப்போது விம்முவதும் அனுங்குவதுமாக இருந்தது.
ஒன்பது பேர் சுட்டாலும் அவர்களில் மூன்று பேரின் துப்பாக்கிகளிலிருந்துதான் குண்டு பாயும் என்றும் அது எந்தத் துப்பாக்கியென்று சுடுபவர்களுக்கும் தெரியாது. அதனை தயார்செய்து வைத்தவர்களுக்கும் தெரியாது என்றும் பயிற்சி வகுப்பின்போது படித்திருந்தோம்.
“பளீர்” – என்றொரு சத்தம் கேட்ட மின்னல் வேகத்தில் கறுப்பு துணியணிந்த நைஜீரிய மனிதனின் தலை இடப்பக்கமாக கவிழ்ந்தது.
அத்தனை துப்பாக்கிதாரிகளும் வெள்ளைக் கோட்டிலேயே அசையாமல் நின்றார்கள். அவர்களின் தலைமை அதிகாரி தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு அருகில் – கறுப்பு கோட் அணிந்த மருத்துவரோடு சென்றார். சோதனை செய்வது தூரத்திலிருந்து பார்க்கும்போது தெரிந்தது. நைஜீரியனது உயிர் பிரிந்து விட்டதை மருத்துவர் உறுதி செய்துகொள்ள, துப்பாக்கிதாரிகள் அனைவரும் வரிசையில் வந்து, துப்பாக்கிகளை எடுத்த இடத்திலேயே வரிசையாக வைத்துவிட்டு அருகிலுள்ள மண்டபத்துக்குள் சென்றார்கள்.
எனக்குள் மீண்டும் கரும்புகை எழுந்தது.
இவன் யார்? இவனைக் குறிபார்த்து சுட்டுக் கொல்வதற்கு எனக்கு என்ன தேவையிருக்கிறது. இங்கு ஆயுதத்தோடு நான் சாகசம் புரிவதற்கும் புத்தகம் படிப்பதற்கும் எந்த வாய்ப்பும் கிடையாது. இங்கு வேண்டப்படுவதெல்லாம் கம்பத்தில் கட்டப்பட்டிருப்பவனின் உயிர். அவன் சடலமாக விழுகின்ற அந்தக்கணம் இந்தோனேஷிய சட்டத்துக்கு சேவையாற்றி விட்டதாக நான் பெருமைப்பட வேண்டும். அந்தப் பெருமைக்குக் கூடுதலாக எனக்கு பணம் தரப்படும்.
பாலனின் உயிரற்ற உடலைக் கண்டபோது நெஞ்சில் எழுந்த அந்த துப்பாக்கியின் மீதான வெறுப்பும் கசப்பும் இப்போது இந்த நைஜீரியனின் உடலைக் கண்டபோது மீண்டும் நெஞ்சுக்குள் அரித்தது.
ஆனாலும் என்னை என்னால் மீற முடியவில்லை. ஒரு இராணுவப் பயிற்சியின் வழியாக வந்தவனுக்கு உணர்ச்சிகள் என்பது உடலில் ஏறுகின்ற புழு. அவ்வப்போது அவற்றினால் சுகம் காணலாம். ஊர்ந்த இடங்களை சொறிந்து மகிழலாம். அதற்கப்பால் அதற்கு எந்தப் பெறுமதியும் கிடையாது.
வைஷாலியுடன் நடந்து சென்றபோது இட்டு நிரப்பிய எனது மனக்குழிகளை எண்ணிக் கொண்டேன்.
அடுத்த நாள் இடம்பெறவிருந்த மரண தண்டனைக்குரியவனை தீவுக்கு ஏற்கனவே கொண்டு வந்துவிட்ட காரணத்தினால் அன்று மாலையே எல்லோரையும் நேரத்தோடு படுத்துறங்கி ஓய்வெடுக்கும்படி எங்களது குழுத்தலைவர் கூறினார். நடுநிசியில் மீண்டும் தீவுக்கு வரவேண்டும் என்றும் அவர் சொன்னார்.
நூஸா தீவுக்கு வெளியே நாங்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டு, தீவுக்கு மிக அருகிலிருந்த படைத்தளமொன்றில் தங்குமிட வசதி செய்து தரப்பட்டது. அவரவர் தங்கள் அறைகளுக்குப் போக, நான் எனக்கான தனியறைக்கு வந்து நீராடி உடை மாற்றிக்கொண்டு வைஷாலிக்கு அழைப்பெடுத்தேன். மறுநாள் வேலையை முடித்துக் கொண்டுதான் வரமுடியும் என்றபோது, அவள் எனது குரலில் ஏதோவொரு மாற்றத்தை கண்டுபிடித்து விட்டாள்.
“ஒன்றுமில்லை. வந்து பேசலாம்” – என்றேன்.
“பிரச்சினையொன்றும் இல்லையே” – என்று திரும்பவும் கேட்டாள்.
“இல்லை” என்றுவிட்டு கட்டிலில் விழுந்தேன்.
எழுந்தபோது இரவு ஏழு மணி. மீண்டும் குளித்துவிட்டு வெளியில் சென்றபோது எல்லோருக்கும் படைத்தளத்தின் சாப்பாட்டறையில் உணவு தயாராகவிருந்தது.
“நாளை இடம்பெறப் போகும் மரணதண்டனை ஒஸ்ரேலியாக்காரனுக்காம்”
உயிரைப் பறிக்கப்போகும் துப்பாக்கியை ஏந்துவது என்று வந்த பின்னர் எந்த நாட்டுக்காரனாக இருந்தால் என்ன? ஒன்பது துப்பாக்கிகளில் எனது துப்பாக்கியிலிருந்து தான் தோட்டா பறக்கப்போகிறது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஆகவே, இப்போதைய பதற்றத்துக்கு அது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. தட்டை கழுவி வைத்துவிட்டு உணவறைக்கு வெளியே வந்தேன்.
எல்லோரையும் சீருடைக்கு மாறிக்கொண்டு வரச்சொன்னார் அணித்தலைவர். பத்தரை மணியளவில் நூஸா தீவு நோக்கி எமது கறுப்பு பவள் வாகனம் விரைந்தது.
(7)
தீவிற்குள் நுழைகின்ற கிறவல் பாலத்துக்கு முன்பாக ஏராளமானோர் நின்று கொண்டிருந்தார்கள். ஜெனரேட்டர்கள் போடப்பட்டு பெரிய மின்விளக்குகள் தெருவில் ஒளி பாய்ச்சியவண்ணமிருந்தன. நடைபாதையோர பழக்கடைகள், தெருவில் நின்று சாப்பிடக்கூடிய உணவுக்கடைகள் என்று நல்ல வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பேய்த்தீவில் வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை இடம்பெற்றால், தீவின் வாசலில் கூட்டம் களை கட்டும். இவர்களுக்காக இங்கு இரண்டு நாட்களுக்காவது புதிய கடைகள் திறக்கும். இதில் இவர்களுக்கு நல்ல வியாபாரம் நடக்கும் என்றான் கட்டோனா.
சிறுவர்கள் தலையில் அன்னாசிப்பழ க்கூடைகளோடு கூடியிருந்தவர்களின் ஊடாக வேகமாக நடந்து நடந்து வியாபாரத்தில் மும்முரமாகவிருந்தார்கள்.
பேய்த்தீவுக்குள் நுழைவதற்கு அனுமதி இல்லையென்பதால், பாலத்துக்கு மிக அருகில் ஏகப்பட்ட ஊடகக்காரர்கள் தங்கள் கமராக்களை முக்காலிகளில் பொருத்திவிட்டு காத்திருந்தார்கள். அவர்களது கமராக்கள் எங்களது பவள் வாகனம் பாலத்தை நெருங்கியவுடன் ஒளிபாய்ச்சி படமெடுக்க ஆரம்பித்தன. எமக்குப் பின்னால் பாதுகாப்புக்கு வந்து கொண்டிருந்த வாகனம் பெரிய சத்தத்தில் ஒலியெழுப்பி எங்கள் வாகனத்தை சூழ்ந்து கொண்ட ஊடகக்காரர்களை கலைத்தது. அங்கு கூட்டத்தைக் கட்டுப்படுத்த பொலீஸாரும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் வீதியின் இருமருங்கிலும் புதினம் பார்க்க நின்று கொண்டிருந்தவர்களை விலத்தி எமது வாகனம் போவதற்கு இடமெடுத்து தந்தார்கள்.
ஊடகக்காரர்கள் நின்று கொண்டிருந்த பக்கத்துக்கு எதிர்பக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபை கொடுத்தது போன்ற தறப்பாளுக்கு கீழ் சிலர் நின்று கொண்டிருந்தார்கள்.
ஒருவாறு நாங்கள் பாலத்திற்கு குறுக்காக போடப்பட்டிருந்த பொலீஸ் தடுப்பைத் தாண்டி உள்ளே நுழைந்தோம்.
நூஸா படைமுகாமும் வாடிமுற்றமும் முதல் நாளிரவு போல ஒளி வெள்ளத்தில் மிதந்தபடியிருந்தது. புல்பூண்டுகளின் நுனிகள்கூட அவ்வளவு தெளிவாக தெரியும் வகையில் பகல்போல ஜொலித்துக் கொண்டிருந்தது. வெள்ளைக் கோட்டுக்கு போகவுள்ள ஒன்பது பேரில் நானும் உள்ளேன் என்பதை அணித்தலைவர் வந்து பட்டியலைப் படித்து உறுதி செய்தார். அடுத்து மருத்துவர் ஒருவர் வந்து எங்கள் எல்லோரினதும் கைகளைப் பிடித்து நாடித்துடிப்பினை சோதனை செய்தார். இரத்த அழுத்தத்தை சோதித்தார்.
சரியாக நள்ளிரவு தாண்டி இருபது நிமிடங்களில் ஒன்பது பேரும் வெள்ளைக் கோட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அமெரிக்க தயாரிப்பு எம்16 துப்பாக்கிகள் வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கோட்டடியை சென்றடைந்த போது, கறுப்பு முகமூடியால் மூடப்பட்ட ஒஸ்ரேலியாக்காரன் கம்பத்தில் இறுக்கக் கட்டப்பட்டு எமக்காக தயாராக வைக்கப்பட்டிருந்தான். எங்களது அணித்தலைவர் வந்து எங்கள் முகக்கவசங்கள் கண்களை மறைக்கின்றனவா என்று சோதனை செய்துவிட்டு சென்றார்.
அப்போது அதே கிறிஸ்தவ பாதிரியார் கம்பத்தில் கட்டப்பட்டிருந்தவனுக்கு அருகில் சென்று தோத்திரத்தோடு ஏதோ பாடலொன்றை பாடியபடி சுற்றி வந்தார். பிறகு அங்கிருந்து அவர் வெளியேறி விட, எங்கள் அணித்தலைவரும் மருத்துவரும் எங்களுக்கு அருகருகே வந்து நின்று கொண்டார்கள். நான் காதுகளை கூராக்கிக் கேட்டேன். அவனிடமிருந்து எந்த சத்தமும் வரவில்லை.
மூன்று – இரண்டு – ஒன்று என்று சொல்லி முடிக்கும் போது லேசர் வட்டத்திற்குள் எங்கள் பணியை முடிக்க வேண்டும்.
ஒரு தேசத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய எனது கைகள் இன்னொரு தேசத்தில் பிறிதொரு தேவைக்காக ஆயுதத்தை சுமந்திருப்பதை என்னால் நம்ப முடியாதிருந்தது.
ஆயுதத்திற்கும் வாழ்விற்கும் இடையில் தத்தளிக்கும் என்னைக் காக்கும் ஆயுதம் எங்கிருக்கிறது?
நினைவுகள் மீண்டும் நெஞ்சில் சுரக்கத் தொடங்கியது. நாக்கில் கசப்பொன்று ஒட்டிக் கிடப்பது போலிருந்தது. தாடைகள் விறைத்தன. இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. முகக்கவசத்துக்குள் வெப்பக்காற்றினை எனது முகம் உமிழ்ந்து கொண்டிருப்பது தெரிந்தது.
“பளீர்”
துவக்கின் பிடி என் நெஞ்சில் உதைத்தது. அந்தக் கணத்திலேயே உறைந்து போய் நின்று கொண்டிருந்தேன்.கடவுளே!
(8)
சாவினை சாட்சிப்படுத்துவதற்காக எங்கள் அணித்தலைவரும் மருத்துவரும் கம்பத்தை நோக்கிச் சென்றார்கள். வாடிமுற்ற உதவியாளர்கள் வரிசையில் வந்து கம்பத்தில் கட்டிய கயிற்றினை கழற்றினார்கள். மெதுவாகச் சாய்த்து சடலத்தை துணிக்கட்டிலில் போட்டு கொண்டு சென்றார்கள்.
பவள் கவச வாகனம் கிறவல் பாலத்தின் மேலாக வெளியில் வந்தபோது மரண தண்டனைக்கு ஆதரவான இந்தோனேஷிய பொதுநல அமைப்பின் ஆதரவாளர்கள் எங்களது வாகனத்துக்கு முன்னால் வெடி கொளுத்தி ஆரவாரம் செய்தார்கள். ஊடகங்கள் தங்கள் கமராக்களை சுழற்றிச் சுழற்றி எங்களது வாகனத்தை படமெடுத்துக்கொண்டு நின்றார்கள். வாகன ஒலிச்சத்தங்களால் அந்த வீதியில் இரவு எழுந்து நின்று கொடு கொட்டியாடுவது போலிருந்தது.
வீதியின் மறுபக்கத்தில் தரப்பாளின் கீழிருந்து ஓடிவந்த பெண் தரையிலிருந்த மண்ணை எடுத்து எங்களின் வாகனத்தை நோக்கி எறிந்தபடிக்கு “பாழ்படுவாரே என்ரை பிள்ளையை கொண்டு போட்டியளே, உங்கட குடும்பம் தழைக்காது” என்று தமிழில் கதறியதை கேட்டதும் அதிர்ந்து ஒடுங்கினேன். “பாழ்படுவாரே என்ரை பிள்ளையை கொண்டு போட்டியளே, உங்கட குடும்பம் தழைக்காது” என்ற தமிழ்தீனம் கேட்டுக்கொண்டே இருந்தது.
குருதிப் பொருக்குலரா கைகளோடு அந்த தாயின் குரல்வரும் திசை நோக்கி மண்டியிட்டு “என் நிலமே என் நிலமே என்னைச் சபிக்காதே” என பிரார்த்தித்தேன். ஆனாலும் அந்தக்குரல் ஒரு சதுக்கத்தின் எதிரொலிப்பைப் போல என்னைப் பின்தொடர்ந்து கொண்டேயிருந்தது.
எப்படிப்பட்ட கொடுமையான மனநிலையிது? இதை அம்மனிதனுக்கு எவ்வகையிலான விடுதலை என்று சொல்ல முடியும்? இது ஒரு வகையில் அம்மனிதன் உயிர் வாழும் காலம்வரை மனதை விட்டு அகலாத, மீளமுடியாத வாழ்நாள் சித்திரவதைகளாக மட்டும்தானே இருக்க முடியும். 2009 ஆம் ஆண்டில் 33 ஆண்டுகாலமாக நடைப்பெற்ற யுத்தம் முடிந்து விட்டதாக இலங்கையரசும், பெரும்பான்மை சிங்களக் குடிகளும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கின்றார்கள். சிறுபான்மையினங்களுக்கு தீமை செய்யக்கூடிய பெரும்பான்மை மக்களைப் பிரதிபலிக்கும் ஜனநாயகம் என்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு நிரூபித்திருந்தது. வாழ்நாள் முழுவதும் ஒரு மனிதன் சித்திரவதையின் வடுக்களை சுமந்து கொண்டு வாழும் வாழ்வானது எப்படிப்பட்ட சித்திரவதைகளை தாங்கியது, பிடிபட்ட அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது, எவ்வகையிலான சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது, என்பதைப் பற்றியே இக்கட்டுரை பேசப்போகின்றது.
மொட்டுக்களில் இருந்து பூவிதழ்கள் விரிவதைப்போல, வான் நோக்கி பறக்கின்ற பறவையின் சிறகசைவு போல விடுதலையுணர்வு என்பது ஒருவகை இயல்பான உணர்வுதானே, இயல்பானவொன்றை வலிந்து பெறுவதற்காக ஏன் உலகம் முழுவதும் இத்தனை உயிர்கள் காவு வாங்கப்படுகின்றன, இவ்வளவு இரத்தங்கள் ஏன் இங்கு சிந்தப்படுகின்றன, சகல மனிதர்களும் சுதந்திர புருஷர்களாகவும், சமத்துவம் வாய்ந்த மக்களாகவுமே பிறக்கின்றனர் என்றெல்லாம் சொல்லப்படுகின்றது. ஆனால் அதெல்லாம் அபத்தமான பொய்கள் என்று யுத்தங்களும், அங்கு நடைபெறுகின்ற சித்திரவதைகளும் நிரூபித்து விடுகின்றன. பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து இலங்கை தீவுக்கு 1948 இல் விடுதலை கிடைத்தது. ஆனால் இந்த நாட்டின் சிறுபான்மை குடிகள் மீது தசாப்தங்களாக தொடரும் மீட்சிபெற முடியாத அடக்குமுறையையும், அநீதியையும் பெரும்பான்மை அரசு செய்து கொண்டே இருக்கின்றது.
இந்தக் கட்டுரையை எழுத முயற்சித்தபோதும், அதற்கான தகவல்களை தேடிக்கொண்டிருந்தபோதும் கோனிலின் ஜி.ஃபீக்கின் மனநிலைதான் எனக்கும். (யூதஇனஅழிப்பு, வதைமுகாம்கள்குறித்தும்ஆய்வுகள்செய்தவர்) வதைமுகாம்கள், சித்திரவதைகள் பற்றி எழுதுவதும், தேடுவதும், ஆய்வுகள் செய்வதும் மிகுந்த மனச்சோர்வையும், அழுத்தத்தினையும் ஏற்படுத்தியது. இலங்கையில் யுத்த காலங்களில் வதைமுகாம்களில் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் அதில் இருந்து மீண்டெழுவதும், அதுபற்றி தெரியவருகிறவர்கள் அந்த சிந்தனையில் இருந்து மீண்டெழுவதும் மனசாட்சியுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் முடியாத காரியம் என நினைக்கின்றேன். ஆனால் ஒன்று மட்டும் சொல்ல முடியும், சித்திரவதையும் மனித உரிமை மீறல்களும் வரலாற்றில் இன்று நேற்று உருவாகியவை இல்லை.
வரலாற்றில் பிரிட்டனே உலக நாடுகளிற்கு முதன்முதல் உத்தியோகபூர்வமாக வதைமுகாம்களை அமைத்து மனிதர்களை சித்திரவதை செய்து கொலை செய்யும் முறையினையும், வதைமுகாம் என்ற சொல்லாடலையும் முதன்முதல் அறிமுகப்படுத்தியிருந்தது. 1899 இல் இருந்து 1902 வரையான காலத்தில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற போயர் போரின் போது வதை முகாம்கள் உருவாக்கப்பட்டிருந்தன. போயர் கொரில்லா பிரிவினரை அடக்குவதற்காக 45 தற்காலிக சிறைகள் வதைமுகாம்களாக மாற்றப்பட்டு 42000 போயர்கள் அங்கு மரணமடைந்திருந்தனர். அதில் 25% பிரிட்டன் பகிரங்கமாகவே சித்திரவதை செய்து கொலை செய்திருந்தது.
இலங்கையில் வதைமுகாம்கள், சித்திரவதைகள் என்பதுகூட நீண்டகால வரலாற்றைக் கொண்டது. ஒரு இனத்தின் உரிமைகளையும், சம அந்தஸ்த்தையும், விடுதலையையும் மறுப்பதுகூட ஒருவகையில் சித்திரவதையின் மறுவடிவங்கள் தானே. இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 1948,1949 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பத்து லட்சம் அப்பாவி பெருந்தோட்ட தமிழர்களை நாடற்றவர்களாக்கியது. மேலும் தமிழர்களின் 2000 சதுரமைல் பிரதேசங்கள் அரசினால் கையகப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள், 1956 தனிச்சிங்கள சட்டம், 1970 இல் கொண்டு வரப்பட்ட பல்கலைக்கழக தரப்படுத்தல் எல்லாமே ஒரு இனத்தை திட்டமிட்டு ஓரங்கட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளின் சட்ட ஏற்பாடுகளே.
1956, 1958, 1961, 1974, 1979, 1981, ஜுலை 1983 இல் தமிழர்களுக்கு எதிராக வெடித்த இனக்கலவரங்கள், கலகத்தில் ஈடுப்பட்டிருந்த சிங்களவர்களுக்கு வெளிப்படையாக தமிழர்களை சித்திரவதை, பழிவாங்கும் வாய்ப்பை வழங்கியிருந்தது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் வீடுகளிலும் , வீதிகளிலும் வைத்து உயிருடன் எரிக்கப்பட்டார்கள், வெட்டப்பட்டார்கள். அவர்களுடைய பெறுமதி வாய்ந்த சொத்துகள் அழிக்கப்பட்டன, திருடப்பட்டன. இந்த கறுப்பு ஜூலை ஆயிரக்கணக்கான மலையகத் தமிழர்களை அகதிகளாக்கியிருந்தது. இதுவரை வாழ்ந்த மலையகப் பிரதேசங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களை நோக்கி அவர்கள் செல்ல காரணமாகியது. தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்த சிறுபான்மை தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நீடித்தபோது விடுதலைப்புலிகள் இயக்கம் உருவாகியிருந்தது. அதன் பின்னர் அரசினால் கொண்டு வரப்பட்டிருந்த பயங்கரவாத தடுப்பு சட்டம் மனித உரிமை மீறலுக்கான சித்திரவதைகளின் எல்லா வாயில்களையும் இலங்கையில் திறந்து விட்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கையரசிற்கும் இடையில் யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்த காலங்களிலும், அதற்கு பின்னரும் குறிப்பாக தமிழ்மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளாக இருந்த வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் குற்றவியல் புலனாய்வு பிரிவினர்(CID) மக்களுடன் மக்களாக கலந்திருந்தனர். அவர்கள் மூலமாக விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்தவர்கள், செய்ய இருந்தவர்கள் எனப் பலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிடிக்கப்பட்டனர். மறுபுறம் அரசை விமர்சித்த, எதிர்த்து கேள்விகள் கேட்ட ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டார்கள், சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டார்கள். யுத்தகாலத்தில் காணமல் போதல், வெள்ளை வேன் கடத்தல்கள் என்பன மிகச்சர்வசாதாரணமாக நடந்துகொண்டிருந்தன. விடுதலைப்புலிகளுக்கு உதவிகள் செய்தார்கள் அல்லது விடுதலைப்புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டவர்கள், தற்கொலை தாக்குதலின்போது பிடிக்கப்பட்டவர்கள், யுத்தம் முடிவடைந்தபோது முன்னாள் போராளிகள் என்ற ரீதியில் கைது செய்யப்பட்டவர்களே இலங்கை வதை முகாம்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். அங்கு நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள் ஒவ்வொன்றும் சட்டத்திற்கு புறம்பானதாகவும், மனித உரிமைகளை கேள்விக்கு உட்படுத்துவதுமாக இருந்தது.
இலங்கையில் தடுப்பு முகாம்கள் பின்வரும் இடங்களில் அமைந்திருந்தன:
அச்சுவேலி – அச்செழு இராணுவ முகாம், யாழ்ப்பாணத்தில் உள்ள ஜோசப் இராணுவ முகாம், வவுனியா குறிசுட்ட குளத்திற்கு அருகில் இருந்த ஒரு இராணுவ தளம், அருகில் இருந்த இன்னொரு கடற்படைத்தளம், தற்காலிக தடுப்பு நிலையங்களாக தொழிற்பட்ட புனர்வாழ்வு நிலையங்களான – செட்டிக்குளம் முகாம், வவுனியாவில் ஒரு முன்னைய தொழில்நுட்பக் கல்லூரி, வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி, பம்பைமடுக் கல்லூரி, வவுனியா பூந்தோட்ட முகாம், முன்னைய கல்வி நிறுவனம் , வவுனியா இராம நாதன் (மெனிக்பாம்) இரம்பை மகளிர் கல்லூரி, திருகோணமலை சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை, புதுக்கடை பொலிஸ் நிலையம், கொழும்பு, கல்முனை, கடவத்தை, பொலிஸ் நிலையம், கொழும்பு கல்முனை கடவத்தை பொலிஸ் நிலையம், கொழும்பு குற்றவியல் புலனாய்வு திணைக்கள நிலையம், வேப்பங்குளம் (CID) முகாம், கொழும்பு விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் பயங்கரவாத புலனாய்வு திணைக்களம், பூசா தடுப்புமுகாம் (காலி).
இங்கிருந்துதான் பதைபதைக்கச்செய்யும் சித்திரவதை சம்பவங்கள் பற்றி அறியக்கிடைத்தது. மேற்கூறிய முகாம்களைத் தாண்டி வதை முகாம்களில் சித்திரவதைகளை அனுபவித்த பலர் காட்டுப்பிரதேசம் ஒன்று பற்றி அடிக்கடி சொல்லியிருந்தனர். அப்படிப்பட்ட முகாம்கள் எக்காரணம் கொண்டும் இனம் கண்டுவிடக்கூடாது எனும் நோக்கில் கைதிகளின் கண்கள் கட்டப்பட்டு இருந்தன. பல மணிநேர பயணங்களின் பின் ஆண்களும், பெண்களுமாக பலர் அப்படிப்பட்ட காட்டுப்பகுதியில் அமைந்த முகாமிற்கு எடுத்துச்செல்லப்பட்டு இருக்கின்றனர். பெரும்பான்மை முன்னாள் போராளிகளுக்கு தமிழர்கள் செறிவாக வாழ்கின்ற வடக்கு, கிழக்கு, பரிட்சயமான இடங்கள். கொழும்பு, காலி, இரத்மலானைகூட கொஞ்சம் பரிட்சயமானவை. ஆனால் இவற்றுக்கு அப்பால் மிகக்கூடிய சித்திரவதைகளுக்கான தடங்கள் கிடைத்த அந்த காட்டுப்பகுதியில் அமைந்த வதைமுகாம் பற்றி எந்தவித சரியான தகவல்களும் தெரியாதவர்களாக கைதிகள் இருந்தார்கள்.
முதலில் அவர்களுக்கு முன்னால் முன்னமே தயாரிக்கப்பட்டிருந்த சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த குற்ற வாக்குமூலங்கள், மற்றும் சில கோப்புகள் அவர்கள் கைவசம் இருந்திருக்கின்றன. விசாரணை மேற்கொள்கிறேன் எனும் பெயரில் இந்த சித்திரவதைகளை மேற்கொண்டவர்களாக, இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படை(STF), குற்றவியல் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (CID), பயங்கரவாத புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (TID), இலங்கை இராணுவம், இலங்கை இராணுவத்தின் 53, 58, 58 வது படையணிகள், இராணுவ, இராணுவ பொலிஸ், இராணுவ புலனாய்வு பிரிவு, தேசிய புலனாய்வு பணியகம், 2004 காலப்பகுதியில் கருணா குழு (அரசாங்க முகவர்களுடன் இணைந்து செய்த சித்திரவதைகள் இதில் அடங்கும்) போன்றவர்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் முன்னமே தயாரித்து வைத்திருந்த குற்ற வாக்குமூலங்களிலும், வெற்றுத்தாள்களிலும் கையொப்பமிடச் சொல்லியே அனேகமான சித்திரவதைகளைச் செய்தார்கள். இந்த சித்திரவதையின் பின்னணியில் மூன்று விடயங்கள் மிக அப்பட்டமாகவே தெரிந்தது. எல்.ரீ.ரீ இயக்கத்தின் கடற்புலிகள், அல்லது புலனாய்வு சேவை, போன்றவற்றுடன் தொடர்புபட்டிருந்த உயர்மட்ட சந்தேக நபர்களிடம் இருந்து அவர்கள் திட்டங்களின் உண்மையான தகவல்களை பெறுவது, (இயக்கத்தின் வலையமைப்பு, வெளிநாட்டு ஆதரவு, ஆயுதங்கள் தொடர்பான தகவல்கள்), பாலியல் துஷ்பிரயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்வது, இனத்துவேசத்தை தீர்த்துக்கொள்வது.
புலனாய்வு திணைக்களத்தின் நான்காவது மாடி சித்திரவதைகளை நிகழ்த்துவதற்கு ஏற்ப உருவாக்கியிருக்கிறார்கள். அதில் அடிப்பதற்கான உலோகக்கம்பிகள், பொல்லுகள், நீரில் அமிழ்த்தி சித்திரவதை செய்வதற்கான தண்ணீர் பீப்பாய்கள், கைதிகளை தொங்கவிடும் கம்பங்கள் என எல்லாமே இருந்தது. அந்த அறை முழுவதும் இரத்தம் சிதறிக் கிடந்திருக்கிறது. சுவர்கள் முழுவதும் இரத்தக்கறைகள் படிந்து காணப்பட்டிருந்தது.
ஒரு குறிப்பிட்ட தகவல்களையோ, அல்லது குற்ற வாக்குமூலத்தையோ பெறுவதற்காக சித்திரவதைப்படுத்தப்பட்ட கைதிகளின் நிலை கொடூரமாக இருந்தது. அனேகமான நேரங்களில் விசாரணைகளின்போது அவர்கள் நிர்வாணமாக்கப்பட்டார்கள், அவர்களுடைய கால்நகங்கள் பிடுங்கி எடுக்கப்பட்டன. ஊசிகளையும், குறடுகளையும் அதற்கு பயன்படுத்தி இருந்திருக்கின்றார்கள். நகத்தின் சதைக்கு இடையில் ஊசிகள் புகுத்தப்பட்டன. யோனி துவாரத்தில் மிளாகாய்த்தூள் தடவப்பட்டிருக்கிறது.
மூச்சுத் திணறித்துடிக்கும் அளவு நீரில் அமிழ்த்தப்பட்டிருக்கின்றார்கள். மின்சார வயர்கள் உடல் மீது வைத்து குறிப்பிட்ட நபர் மரணிக்கும் அளவு மின்சாரம் அவர்களது உடலில் பாய்ச்சப்பட்டிருந்தது. ஆண்குறிகளில் உலோக வயர்கள் திணித்தார்கள். பல சமயங்களில் இரத்தம் கசியும் வரை அடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு கால்பந்து போல கைதிகளை அவர்கள் தாக்கினார்கள். தலைகீழாக தொங்கவிடப்பட்டு இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டனர். சிகரெட்டுகள், சூடாக்கப்பட்ட உருக்கு கம்பியில் உடல்களில் சூடு வைத்தார்கள். பல சமயங்களில் ஐஸ்கட்டிகள் மலத்துவாரத்தினுள் புகுத்தப்பட்டிருந்தது.
மிகவும் பயங்கரமான சித்திரவதையொன்றை ஐ.நா மனிதவுரிமை அறிக்கை விபரித்திருந்தது. பின்துவாரத்தில் குழாய் ஒன்று அனுப்பட்டிருக்கிறது. அந்த குழாயினுள் முட்கம்பிகள் இருந்தன. குழாய்கள் வெளியில் எடுத்ததும் கம்பி உடலுக்குள் இருந்திருக்கிறது. கடுமையான இரத்தப்போக்கையும்,தாங்கமுடியாத வலியினையும் அது உண்டாக்கக் கூடியதாய் இருந்திருக்கிறது. யோனியிலும், ஆண்களின் பின்துவாரத்தின் வழியாகவும் ஒரு வஸ்து சொருகப்பட்டிருக்கிறது. வெளியே எடுப்பதும் உள்ளே அனுப்புவதுமாக செய்யப்பட்ட அந்த சித்திரவதைகள் மரணவலியுடையதாக கைதிகளுக்கு இருந்தது.
பாலியல் ரீதியான சித்திரவதைகள் பிடிப்பட்ட கைதிகள் ஆண், பெண் என்ற வேறுப்பாடு இன்றி நடந்தது. இதில் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் இராணுவ சிப்பாய்கள் பெரும்பாலானவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருந்திருக்கின்றனர். ஆண் பாலுறுப்புகளை கடுமையாக தாக்குவது, பிடித்து நசுக்குவது, கம்புகளை கொண்டு ஆண்குறிகளைத் தாக்குவது என்பவற்றை பரவலாக செய்தார்கள். கொழும்பில் உள்ள நாலாவது மாடியில் வைத்திருந்த ஆண்கள் ஓரினச்சேர்கைக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்தப்பட்டார்கள். இராணுவ சிப்பாய்கள் ஆண் கைதிகளை வாய்மூலமான பாலுறவுக்கு உட்படுத்திக்கொண்டே இருந்திருக்கின்றனர். விசாரணைகளின் போது நிர்வாணமாகவே கைதிகள் வைக்கப்பட்டார்கள். அப்படி நிர்வாணமான உடல்களை படம் பிடிப்பது, ஒளிப்பதிவு செய்வது அனேக சிப்பாய்களிடம் ஒரு நிரந்தர பழக்கமாகவே இருந்தது.
பெண்களின் மீதான பாலியல் சித்திரவதைகள், சித்திரவதையின் அடுத்த பரிணாமமாக இருந்தன. விசாரணை என்ற பெயரில் அவர்கள் நிர்வாணமாகவே இருக்க வைக்கப்பட்டனர். பாலியல் சித்திரவதைக்காக சில நுட்பங்களை அவர்கள் கையாண்டு இருந்தனர். பெற்றோல் வாசனையுடன் கூடிய ஒரு பிளாஸ்ரிக் பையை அவர்கள் தலைக்கு மேலாய் போட்டனர். பின்னர் மூர்ச்சையாகி விழுந்த பின்பும் அப்பெண் கைதிகளை ஒருவர்பின் ஒருவராக தொடர்ந்து வன்புணர்வு செய்யத்தொடங்குவர் அப்பெண்கள் மயக்கமடைந்து மீண்டும் மீண்டும் எழும்போதெல்லாம். தொடர்ச்சியான வன்புணர்வு அவர்களுக்கு தொடர்ச்சியான இரத்தப் போக்கை ஏற்படுத்தியிருந்தது. பாதிக்கப்பட்ட பெண்களே குறிப்பிட்ட முகாமுக்கு பாலியல் சித்திரவதை செய்ய பெண் கைதிகளை அழைத்துப்போனதை பார்த்திருந்தனர். சில பெண்களுக்கு மதுபானம் கொடுக்கப்பட்டு வன்புணரப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சுயநினைவுக்கு திரும்பிய போது தமது உடல்கள் முழுவதும் நகக்கீறல்களும், மார்பு பகுதியில் பற்களால் கடித்த தடங்களும் இருந்ததை பார்த்தார்கள். உடல் முழுவதும் சிகரெட்டால் சுடக்கூடப் பட்டிருந்தது.
ஒரு சிரேஷ்ட அதிகாரி நான்கு வருட தடுப்புக்காவலில் இருந்த பெண்கைதியை தொடர்ந்து நான்கு வருடமும் அவர் வன்புணர்வுக்கு உட்படுத்தியிருந்தார். கட்டற்ற முறையற்ற பாலியல் நடத்தைகள், சித்திரவதைகள் கைதிகளை சுகயீனப்படுத்தி இருந்தது. பின்துவாரத்தில் இருந்து இரத்தம் நிறுத்தப்படாமல் வெளியேறிக்கொண்டு இருந்திருக்கிறது. இப்படி பாலியல் வன்புணர்வுக்கு தெரிவு செய்யும் பெண் கைதிகள் தொடர்பில் இராணுவத்திற்கு நெருக்கமாகவும், விசுவாசமாகவும் சிலர் இருந்திருக்கின்றனர். மனிக்முகாமில் இருந்து ஜோசப் முகாமிற்கு பெண்கள் அப்படி எடுத்துச்செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டனர். சிகரட்டுகளில் அந்தரங்க உறுப்புகள் சுடப்பட்டிருந்தன. பெண்களின் மார்பகம், யோனி என்பவற்றை, அவர்களை வன்புணர்வு செய்வதை படங்களாகவும், ஒளிப்பதிவாகவும் தமது கைத்தொலைப்பேசியில் அவர்கள் சேமித்து வைத்துக் கொண்டார்கள். கொடூரமான பாலியல் சித்திரவதை நடக்கவில்லையென இலங்கையரசு மறுத்திருந்தது. ஆனால் கொடூரமான பாலியல் சித்திரவதை நடந்தன என்பதை மருத்துவ அறிக்கைகள் சட்டபூர்வமாக நிரூபித்திருந்தன. இலங்கைக்கு வெளியில் எடுத்து செல்லப்பட்ட பல மருத்துவ சட்ட அறிக்கைகள் பாலியல் சித்திரவதை காரணமாக கைதிகள் தொடர்ச்சியான வலி, இரத்தப்போக்குக்கு உள்ளாகியதோடு, பாலியல் உறுப்பில் தேவையற்ற கம்பி, இரும்பு, குழாய் போன்ற வஸ்துக்களை இட்ட செயற்பாடானது அவர்களின் குடல் சிலநேரங்களில் வெளியே வரக்கூட காரணமாக இருந்திருக்கிறது. கொடூர சித்திரவதையினால் சிறையிலேயே மரணமான சம்பவங்கள்கூட நிகழ்ந்தது.
முகாமில் இனத்துவேசத்தை தீர்த்துக்கொள்ளும் வகையில் பொதுவாகவே அனைத்து கைதிகளும் எப்போதும் நடத்தப்பட்டனர். “தமிழ் நாய்கள்” , “தமிழ் பறையர்கள்”, இன்னும் சிங்கள மொழியில் வழமையில் உள்ள துர்வசனங்களை கைதிகளிடம் அடிக்கடி பேசினார்கள். கைதிகளை நிர்வாணமாக்கி விட்டு அவர்கள் மீது சிறுநீர் கழித்தார்கள். பின்னர் அவர்களின் சிறுநீரை அவர்களை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தார்கள். உணவுகள் தரையில் கொட்டப்பட்டு நாய் போல கைதிகளை நக்கிச் சாப்பிட சொன்னார்கள். கீழே இருந்த இரத்தக்கறைகளை நக்க வைத்தார்கள், இப்படி மனரீதியாக பலவீனப்பட்டு வாழ்வையே வெறுத்துப்போய் வலிய மரணங்களை தாமாகவே கெஞ்சிக் கேட்கிற அளவு அங்கு அவ்வளவும் நடந்தது.
இலங்கையில் நடந்த இந்த சித்திரவதைகள் எல்லாம் சட்ட ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் நிரூபிக்கப்பட்ட பின்னரும் கூட பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு எந்தவிதமான நீதி, நியாயங்களும் கிடைக்காமலேயே போய்விட்டது. யுத்தம் முடிவடைந்ததும் பலர் விடுதலை செய்யப்பட்டார்கள். இன்னும் சிலர் சிறையிலேயே இருக்கின்றனர். பலர் யுத்தத்திலும், சித்திரவதையிலும் மரணித்துப் போனார்கள், காணாமல் ஆக்கப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள், ஆனால் அந்த சித்திரவதையின் வடுக்கள் மனரீதியாக அவர்களை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கியிருந்தது. தற்கொலை செய்துகொள்வதில் நாட்டம், மன அழுத்தம், உள்முகமான சிந்தனை, நித்திரையின்மை போன்றவற்றால் நிரந்தரமாகப் பீடிக்கப்பட்டார்கள். இந்த இடத்தில் பிரைமோ லெவியின் கதையை சொல்லி முடிப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்.
பிரைமோ லெவி என்பவர் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். வாழும்காலம் வரை சுயசரிதை, நாவல், கவிதைகள், சிறுகதைகள், அறிவியல் புனைக்கதைகள் என்று எழுதிக்கொண்டே இருந்தவர். ஆனால் அவர் தனது 67 வது வயதில் இத்தாலியில் உள்ள டூரின் நகரில் உள்ள மூன்றடுக்கு மாடியின் வீட்டில் இருந்து கீழே பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வெறும் பதினொறு மாதங்கள் மட்டும் போலந்தில் உள்ள ஆஷ்ட்விஸ் வதைமுகாமில் இருந்த அவரது சித்திரவதைக்கால நினைவுகளை அவரால் வாழும்வரை மறக்க முடியாமல் இருந்தது. அவர் வாழ்வதற்கு எவ்வளவோ முயற்சித்து இருந்தும் கூட. வதைமுகாமில் அவருக்கு இடப்பட்ட 174517 என்ற எண் அவரது மணிக்கட்டில் பொறிக்கப்பட்டிருந்தது. நேரத்தை அவர் பார்ப்பதற்கு தனது மணிக்கட்டை திருப்பும் போதெல்லாம் அந்த சித்திரவதையை அவரால் மறக்க முடியாது இருந்தது. அது உளவியல் ரீதியாக அவரை மிகவும் பலவீனப்படுத்தியிருந்தது. படித்த, இதர துறைகளில் ஈடுப்பாடு கொண்ட பிரைமோ லெவி போன்றவர்களையே மீண்டு வரமுடியாத மனச்சிதைவை வதைமுகாமின் சித்திரவதைகள் ஏற்படுத்தியிருந்த போது, முறையான படிப்பறிவற்ற, போரும், வறுமையும், இனமுரண்பாடும், அடக்குமுறையும் மலிந்த சமூகத்தில் பிறந்து வளர்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற இலங்கை போன்ற ஒரு சமூகத்தில் உள்ள ஒரு நபரை வதைமுகாம்களின் சித்திரவதைகள் எந்தளவு மனச்சிதைவை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நீங்களே புரிந்துக்கொள்ள முயற்சியுங்கள்.
உசாத்துணை நூல்கள்:
ஞானையா.டி. (2011) “சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்”, கோடம்பாக்கம் : அலைகள் வெளியீட்டகம் .
நினைவு தப்பும் தந்தையின் வார்த்தைகளில் அலைந்துழலும் விரக்தியின் வெம்மை
கையறு நிலையில் கரையொதுக்கப்பட்டு காலத்திற்கும் மாறா வடுவொன்றை சுமந்தலைபவர்கள் நாம்.
ரசாயனத்தின் தேக்க விதிகளில் புதிய சேர்மானமாய் வகைதொகையற்று அழிக்கப்பட்டவர்களது குருதியும் கண்ணீரும்.
மூலக்கூற்றின் அலகில் உப்பு மிகுந்திருக்கிறது.
எம் உடலங்கள் கடலின் கரையில் கூராய்வு செய்யப்பட்டு ஆகிறது ஒரு தசாப்தம்
கரையொதுங்கும் அலையின் மீது மஞ்சள் மலர்களை தூவி அஞ்சலி செய்தோம் அடக்கமாகினோம்.
தாய்த் தமிழகத்தின் அகதி முகாமிற்குள்.
Miream Salameh, ஸிரியா
2. கூழாங்கற்களின் மிதந்தலையும் கனவு
நதியின் மேல் மிதந்தலையும் வாழ்விற்காய் ஏங்குகிறேன்.
நிலம் குருதியாயும் நீர் கண்ணீராயும் முள்ளி வாய்க்காலில் வைகாசி நிலவுடைந்த கோடை நாளின் துயரார்ந்த நினைவுகள்
கூழாங்கல்லாய் அமிழ்த்தி விடுகிறது என்னை.
நதியின் மேல் மிதந்தலையும் வாழ்வு அகதிக்கில்லை என்கிறதோ இயற்கை.
3.கடல் அல்லது நிலம் அல்லது வேட்கை அல்லது.
1 கடல்மீதும் சிறுதுண்டு நிலம் தேடும் அகதியின் பாதம்.
2 ஒருவன் அகதி வாழ்வின் எச்சமாய் பெருங் கடலையும் சிறு படகையும் கரித்துண்டால் கீறிச் சென்றிருக்கும் பொதுக்கழிப்பறைச் சுவற்றில் வெந்து தணியாத நிலத்தின் பனைகள் அசைந்தன கண்டேன்.
இன்றும் பூக்கள் மலர்கிறது வாசம் காற்றில் அவிழ்கிறது ஆனாலும் சுவாசத்தில் மட்டும் இன்னமும் மாறவேயில்லை நாசிக்குள் நின்று விட்ட கந்தக வாசம்
நிறையப் பாடல்களும், பேச்சுகளுமாய் அறை நிறையக் கிடக்கிறது இற்றை, ஆயினுமெம் செவிப்பறை கிழிந்து வழிந்த குண்டின் ஓசைகளோ காலவெளிகளைத் தாண்டி இன்னமும் காதுகளில்
கட்டிடம் மேவினாலும் காட்சிகள் மாறினாலும் சாட்சியாய் இன்றும் கண்ணில் காட்சிகள் உண்டு, வெண்மண் செம்மண்ணாகி ரெத்தச் சேறாகி புகையாயெம் கனவு மேலெழுந்து கலைந்த காட்சி ஒன்றே என்றைக்கும் கண்முன்னால் எப்பொழுதும்..
சுவை நரம்பறுந்ததா, சுவையிலா அமுதிதா? எதுவும் தெரியாத உணவு, கரை நெடுக பேச்சறுந்து போய் பெரும் மெளனம் வெறும் வாயால் ஆச்சரியம் ஏதும் ஆகாதென்றறிவு வீச்சாக நின்றவர் விடைதந்து வேகமாய் நாட்களும் ஓடிற்று ஆனாலும் கூட அறிக, உமையென்றோ நான் மறந்தாலும் கூட ‘நா’ மறக்காது நாயகரே
தெய்வத்தால் ஆகாத தீராத கவலையிற் தான் மெய்யிலும் உணர்வுற்று மெய் வருந்த வழி அமைத்தோம் உய்வோம் என்றெண்ணித்தான் உயிரையும் கொடுத்து நின்றோம் கை நழுவிப் போய்விடுமா கனவு? எதுவெனினும் பொய்யில்லை எங்கள் போராட்டம் என்றைக்கோ மெய்யுணர்வே மெய்யாகி மீண்டெழுவோம்
ஐந்து புலனும் அவிந்து அடங்கி சிந்தை மரிக்கும் நேரம் வரைக்கும் அந்தா நிகழ்ந்த இனப்படுகொலையை வெந்து எரியும் போதிலும் மறவோம் எந்த நாளில் எம்முடை விடுதலை எந்தையர் மண்ணில் பரணியைப் பாடுதோ அந்த நாள் வரும்வரை ஆவியில் கூட சொந்தமண் வாசமே சுற்றி வருமடா..
***
2.முடியும் இடத்தில் தொடங்கும்..
இழப்பும், எது செய்தும் மீண்டெழலும் இன்றுவரை தழலாய், நினைவுகளாய் தகிக்கிறது கண்களுக்குள்
கொடுத்ததில் இருந்த கொள்கை இந்நாளில் எடுத்தாளப் படுகிறதா எவராலும்? விடையுண்டா..?
விடையைக் காண்கின்ற வெளிச்சமுண்டா கைகளிலே? தடை இருக்கும் அதைத் தாண்டாமல் விடுதலையா..?
விடுதலைப் பயணமென்றும் நெடிதுதான் நாளைக்கே சடுதியாய் எண்ணுதல் போல் சாளரத்தால் மலராது
மலர்வதற் கென்றுமோர் நாளுண்டு அந்நாளில் பலர் வந்து தடுத்தாலும் பாரே பிளந்தாலும்
பிளந்து நிலஞ்சிவக்க பிறக்குமெம் தேசத்தில் கலந்துகொள் ஒரு கையும் கொடு, விடியுமடா..
திருக்குமரன் – ஈழத்தைச் சேர்ந்த இவர் இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். இவரது சமீபத்திய நூல் “விடைபெறும் வேளை”. அண்மையில் இவரது கவிதைகள் யெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மின்தூக்கியின் ஓரமாய் இருக்கும் குண்டு கண்காணிப்புக் காமிராவின் மீது பதிக்கப்பட்டுள்ள தடித்த கண்ணாடியில் விழும் உனது சாம்பல் நிற நிழலைப் பார்த்துக் கொண்டே உன் தலையில் அணிந்திருக்கும் துணித்தொப்பியை நேராக்கிக் கொள்கிறாய். பின்பு உனது தாடையை நன்றாகத் தாழ்த்தி உன் விரல்நுனிகளில் எச்சிலைத் தொட்டுப் புருவங்களில் தடவுகிறாய்.
என் வீட்டின் வாசல் கதவினோரமாய் இருக்கும் சின்னஞ் சிறிய தொலைக்காட்சித்திரையில் நீ செய்வதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உன் இடது கையிலிருக்கும் பெரிய அட்டைப் பெட்டியை மின்தூக்கிக்கு அருகிலிருக்கும் வெள்ளை வெளேரென்ற சுவர்மீது முட்டுக் கொடுத்து நிறுத்தியிருக்கிறாய். உன் மார்புக்குக் குறுக்கே நீ அணிந்திருக்கும் பையின் வார் அழுத்துவதால் உன் மார்பு லேசாய்ப் பொங்கி அதன் திண்மையும் ஆண்மைத்தனமான திமிரும்கூட எனக்கு இந்தச் சிறிய திரையின் வழியாகப் புலனாகின்றன. திரையில் தெரியும் சாம்பல், கறுப்பு, வெள்ளையாகிய நிறங்கள் மட்டுமே தெரிந்தாலும் நீ தொளதொளப்பான பச்சைநிறக் கால்சட்டையையும், உனது இடது தோள் பட்டையிலிருந்து மேலிருந்து கீழாக ஓடும் மூன்று மஞ்சள் கோடுகளுடைய கன பச்சை டீ சட்டையையும் அணிந்திருக்கிறாய் என்பதை அறிந்து வைத்திருக்கிறேன். டீ சட்டையின் இடது மார்பின் மீது சிவப்பு நிறமாய்ப் பொறிக்கப்பட்டிருக்கும் உன் நிறுவனத்தின் சின்னமும் முழக்க வாசகமும் திரையில் ஆஷ் டிரேயில் தட்டிவிடப்பட்ட சிகரெட் துகள்களின் சாம்பல் நிறத்தில் சிரிக்கின்றன.
உன் மார்பின் இடது பக்கத்தைக் குறிபார்த்து யாரோ கைத்துப்பாக்கியால் சுட்டது போலவும், குண்டு நுழைந்த இடத்திலிருந்து ரத்தம் பெருகி மார்பெல்லாம் பரவுவதுபோலவும் அந்தக் காட்சி இருக்கிறது. எனது இடது கண்ணை இறுக்க மூடி வலது கையின் ஆள்காட்டி விரலை முன்னுக்கு நீட்டிக் கட்டை விரலை விறைத்து வைத்துக் கொண்டு திரையில் தெரியும் உன்னைப் பொய்யாய்ச் சுடுகிறேன். உனது கழுத்தின் ஒளி மிகுந்த பகுதியைச் சொறிந்து விட்டபடி மின்தூக்கியின் மேல் பதிக்கப்பட்டிருக்கும் சின்ன சதுரத்தில் மாறிக் கொண்டிருக்கும் எண்களை நீ அலுப்புடன் பார்க்கிறாய்.
என் வீட்டு வாசலுக்கு வெளியே கேட்கப் போகும் மின்தூக்கியின் சிறு குலுக்கல் சத்தத்துக்காகவும், அதன் கதவுகள் திறக்கும்போது கேட்கும் மெல்லிய பெருமூச்சுக்காகவும் காத்திருக்கிறேன். என் உடம்பு ஜுரம் வந்ததுபோல் தகிக்கிறது. ஆனால் இது எந்த வகையிலும் எனக்கு கவலையை ஏற்படுத்தவில்லை. மாதவிடாய் முடிந்து சில நாட்களுக்கு என் உடம்பு அனலாய்க் கொதிக்கும். எப்போதும்போலத்தான் இது என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். எனக்கு இயற்கையிலேயே சூடான உடம்பு. பதினைந்து வயதில் என் முகத்தில் கொத்துக் கொத்தாய்ப் பருக்கள் புறப்பட்டிருப்பதைக் கண்ணாடியில் பார்த்து வீட்டிலிருந்தவர்களின் மீது எரிந்து விழுந்தபோது அம்மா ‘உனக்கு உஷ்ணமான உடம்புடி’ என்று அடிக்கடிச் சொல்வாள்.
பெரிய நில மோசடி வழக்கை வெற்றிகரமாக முடித்த கையோடு இரண்டு வாரம் விடுப்பு எடுத்திருந்தேன். நாளையோடு முடிகிறது. ஆனால் மீண்டும் வேலைக்குப் போகத் தோன்றவில்லை பதினான்கு நாள்களில் வீடு என்னைச் சுற்றி மிகப் பரிச்சயமானதும் சவுகரியமானதுமான பழைய பாவாடைச் சட்டையாய் உருமாறியிருந்தது. அலுவலகத்துக்குப் போய் கணினியில் பழைய கோப்புகளைத் திறந்து மீண்டும் வழக்குகளைக் குறிப்பெடுப்பதால் யாருக்கு என்ன லாபம் என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன். முழங்காலுக்குக் கீழுள்ள பகுதியை நிச்சயமாய் மூடி மறைத்துக் கொண்டிருக்கும் கறுப்பு நிற ஸ்கர்ட்டோடும் தோளில் கனமாய்ப் பொருந்தியிருக்கும் கனமான கறுப்பு நிறக் கோட்டோடும் முற்றும் இழுத்துப் போர்த்துக் கொண்டு கணினியின் விசைப்பலகையை விரல்களால் தடவிக் கொண்டிருக்கும் என் தோற்றம் எனது கண்களின் முன்னால் தோன்றி மறைகிறது.
ஆனால் கை நிறைய சம்பளம் தருகிற வேலை என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். நிச்சயம் போய்த்தான் ஆக வேண்டும்.
மின்தூக்கி என் வீட்டு வாசலுக்கு வந்து சேர்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தில் இடுப்பிலிலுள்ள சேலைக்குள் இரண்டு விரல்களைச் செருகிச் சேலையை இன்னமும் தாழ்த்திவிட்டுக் கொள்கிறேன். சேலைக்குள் நுழைத்திருக்கும் என் பளபளப்பான விரல்கள் வெள்ளி நிற மீன்கள். பாவாடை பதிந்து கறுப்பாய், வழவழப்பாய் இருக்கும் தடம் ஆழப் பெரும்கடல். நுரை பொங்கிக் கிடக்கும் கடல் தண்ணீராக உடை என் கையிலிருந்து நழுவிப் போகிறது. மிக மெல்லிய மஞ்சள் நிறச் சேலை. அதன் சின்ன விலகலில் என் அடிவயிறு வாசல் கதவின் பளபளப்பை உள்வாங்கி வெண்மையாகச் சுடர்விடுகிறது.
அம்மா என்னை நிச்சயம் கடுமையான வார்த்தைகளால் வைதிருப்பாள். இதை யோசிக்கும்போதுதான் அம்மா உடைமாற்றுவதை நான் என்றுமே பார்த்ததில்லை என்ற எண்ணமும் எனக்குத் தோன்றுகிறது.
தியோங் பாரு வட்டாரத்தில் பெருநகர வாகனப் போக்குவரத்து போயும் வந்தும் கொண்டிருக்கும் முக்கிய சாலைக்கு முன்பாகவே ஐந்து மாடி அரசாங்க வீடமைப்புக் கட்டடம். அதில் சீனக் கிழவிகளின் வறட்டு இருமலும் அந்தக்கால ரெடிஃபூஷன் சீன ஒலிபரப்புகளும் எதிரொலிக்கும் முதல் மாடி இரண்டறை வீடு. அண்ணா இராணுவச் சேவையை முடித்துவிட்டு வேலைக்குப் போகும் வரைக்கும் அப்பாவும் அவனும் பல வகையான கேலிச் சித்திரங்கள் போட்டிருக்கும் மெல்லிய சீன மெத்தைகளை விரித்துக் கூடத்தில் தொலைக்காட்சிக்கு முன்னால் படுத்துக் கொள்வார்கள்.
கூடம், படுக்கையறை இவ்விரண்டையும் தவிர்த்துக் குளியலறையோடு கூடிய சின்ன சமையலறை. எல்லோரும் அந்தக் குளியலறையில் உடுப்புகளை மாற்றிக் கொண்டோம்.
சுவற்றிலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும் தண்ணீர்க் குழாயும் தரையில் பதிக்கப்பட்டிருந்த ‘ஆசிய பாணி’ கக்கூஸும் போகக் குளியலறை, துணி வைக்கும் பீரோவின் உயரத்திலும் அகலத்திலும் பாதியே இருந்தது. இரண்டு கைகளையும் உயரத் தூக்கி உடைகளை அணிந்து கொள்ளும்போது கழுத்தில் அணிந்து கொண்டிருக்கும் சங்கிலி சிக்கிக் கொள்ள முழங்கைகள் சுவற்றில் பதிக்கப்பட்டிருக்கும் வெந்நீர் குழாய்கள்மேல் உரசிச் சிராய்ப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன.
குளியலறையைப் பயன்படுத்த வெளியில் நிற்பவர்கள் அவசரப்படுத்துவார்கள். பதினெட்டு வயதில் மேலாடையைத் தலையிலிருந்து இழுத்துவிட்டுக் கொண்டு குளியலறையிலிருந்து புறப்படும்போது ஆடைக்குள்ளிருந்து உள்ளாடை எட்டிப் பார்ப்பதைப் பார்த்தால் சமையல் மேடையில் நின்றபடி சட்டியில் எதையோ கிளறிக் கொண்டிருக்கும் அம்மா சீறுவாள்.
“என்னடி பாடி தெரியற மாதிரி உடுத்திகிட்டு வெளிய வர? கண்ட கண்ட தேவடியாப் பொம்பளைங்க மாதிரி?”
அம்மாவின் சீறலில் குழம்பை நன்கு தாளித்த வாடை. இரவு ட்யூட்டி முடித்துவிட்டு பாதுகாவல் நிறுவனத்தின் நீல நிறச் சீருடையைக் கழற்றாமலேயே சமையல் அறை மேஜையில் தோசை தின்று முடித்துவிட்டுக் கை அலம்பிக் கொண்டிருக்கும் அப்பா நரைத்துக் கிடக்கும் மீசையைக் கையால் ஒதுக்கிக் கொண்டே என்னை ஏளனத்துடன் ஓரப்பார்வை பார்ப்பார். முரட்டு துண்டு ஒன்றை கழுத்தைச் சுற்றிப் போட்டு இரண்டு கைகளாலும் அதை முன்னும் பின்னும் நகர்த்திக் கொண்டிருக்கும் அண்ணா என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புச் சிரிப்பான்.
கொஞ்சம் கால் அகட்டியபடி உன் வருகையை எதிர்பார்த்து நிற்கிறேன். ஓரமாய் இருக்கும் விசாலமான கண்ணாடி மேஜையின் மீது உயரமான கண்ணாடி ஜாடியில் நீண்ட தண்டுகளையுடைய வெள்ளை நிற டூலிப் பூக்கள் சுடர்விட்டுக் கொண்டிருக்கின்றன. கண்ணாடி ஜாடியைச் சுற்றியும் சாவிக் கொத்து, பணப்பை, கழுத்து வாருடன் கூடிய அலுவலக அடையாள அட்டை, வங்கியிலிருந்து எனக்கு வந்திருந்த கடிதங்கள், சில நாளேடுகள், சஞ்சிகைகள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. உனக்குத் தரவேண்டிய பணத்தை நான் பணப்பையிலிருந்து உருவி சாவிக் கொத்தின் அடியில் கவனமாக மடித்து வைத்திருக்கிறேன்.
எனக்கு முன்னால் வெறுமையாய் நிற்கும் வாசல் கதவின் தோற்றம் அம்மாவின் முகத்தோற்றம் போலவே இருக்கிறது. தியோங் பாரு வீட்டில் மருத்துவமனையிலிருந்து கொண்டு வந்திருந்த அவளுடைய உடலைக் கடைசியாக நீட்டிப் படுக்க வைத்தபோது அவள் முகம் இப்படித்தான் வெறுமையாய் இருந்தது.
வாண்டையார் அண்ட் சன்ஸில் வாங்கிய முப்பது வெள்ளி கத்திரி நிறச் சேலையை முதல் முறையாகக் கட்டிக் கொண்டு மாரியம்மன் கோவிலில் தீமிதி பார்ப்பதற்காகப் போயிருந்தபோது அம்மா இப்படிச் சொன்னாள்.
கோவிலில் பெரும் கூட்டம். என்னைச் சுற்றி நின்று கொண்டிருந்த ஆண்களின் கண்கள் என்னைப் பயமுறுத்தின. எங்கள் பக்கத்தில் மருத்துவமனை ஆயா உடையிலிருந்த குள்ளமான கறுப்புப் பெண்மணி அம்மா சொன்னதைக் கேட்டு என்னைப் பார்த்துப் பல் தெரியச் சிரித்தாள். மிக நீளமான தண்டுகள் பூட்டியிருந்த பல்லக்கின் மீது வைத்து பத்துத் தடித்த ஆண்பிள்ளைகளின் தோள்மீது கோவிலைச் சுற்றி வலம்வந்த மாரியம்மன் விக்கிரகம் அன்று தீ போல ஜ்வலித்தது.
அழைப்பு மணியின் ஓசையை வைத்தே உனது தயக்கத்தை அறிந்து கொள்கிறேன். முதலில் ஒரு சிறிய ஒலிச் சிதறலாகவும், பின்பு ஒரு நீண்ட கூவலாகவும் அழைப்பு மணியை அழுத்துகிறாய். வாசல் கதவின் பக்கமாகவே நான் நின்றிருந்தாலும் நிறைய இடைவெளி விட்டே நான் கதவைத் திறக்கிறேன். நான் கதவு திறப்பதற்கு எடுத்துக் கொள்ளும் அவகாசத்தில் உனக்கு ஏற்படக் கூடிய குழப்பம் என்னை மகிழ்விக்கிறது. அந்த நேரத்தில் நீ ஒரு முறையாவது அட்டைப் பெட்டியின் மீது ஒட்டப்பட்டிருக்கும் இளம்சிவப்பு நிற ரசீதை விரல்களால் திருப்பி உண்மையிலேயே நான்தான் இந்த உணவை வரவழைத்தேனா என்று பதற்றத்துடன் பார்த்திருப்பாய்.
கதவைத் திறந்தவுடன் என்னிடம் உன் கையிலிருக்கும் அட்டைப் பெட்டியைத் தந்துவிட்டு வாசல் கதவின் விளிம்பில் ஒரு கையை ஊன்றியபடி உன் சப்பாத்துகளைக் கழற்றிப் போடுகிறாய். மிகச் சாதாரணமான கான்வாஸ் சப்பாத்துக்கள். நண்பகல் வெயிலில் மோட்டார் சைக்கிளில் வந்ததால் உன் நெற்றிப் பொட்டிலிருந்து வியர்வை வெள்ளிக் கம்பிகளாய் இறங்குகிறது. சப்பாத்துக்களைக் கழற்ற நீ கால் தூக்கி நிற்கும்போது உன் டீ சட்டைக்குள்ளிருந்து சிறிய தொப்பை பிதுங்கி நிற்கிறது. அதற்குப் பொருத்தமில்லாதபடி குச்சிபோல் இரண்டு கறுப்பான கைகள். மஞ்சலேறிய கண்கள். உன் தலையின் பின்பகுதியில் ஐம்பது காசு நாணயத்தின் அகலத்திற்குச் சொட்டை விழுந்திருப்பதை நான் அறிவேன்.
அட்டைப் பெட்டிக்குள்ளிருக்கும் உணவுப் பொருளின் உஷ்ணம் என் உடம்பின் சூட்டைவிட உக்கிரமாக என் கைகளில் தகிக்கிறது.
சப்பாத்தைக் கழற்றி விட்டு நீ நிமிர்கிறாய். உன் மஞ்சலேறிய கண்கள் என்னையும் தாண்டி நான் குடியிருக்கும் வெகு விசாலமான வீட்டின் படுக்கையறைகளின் பக்கமாக அலைகின்றன. நான் மட்டுமே தனியாக வசிக்கும் இந்த அடுக்குமாடி வீட்டில் நான்கு படுக்கையறைகள். ஆனாலும் எப்போதும் நான் உன்னை விருந்தினர் அறைவரை மட்டுமே வர அனுமதித்திருக்கிறேன். என் படுக்கையறைக்குள் வர நான் உன்னை அனுமதித்ததே இல்லை.
உன் கால்கள் ஓயாமல் அசைந்து கொண்டிருக்கின்றன.
“சீக்கிரம் போகணும். இன்னைக்கு உன்னோட ஆர்டர் வர லேட்டானதால என்னை வேற ஒரு ஆர்டருக்கு அனுப்பப் பார்த்தாங்க. நல்ல வேளையா வவுத்து வலி அப்படி இப்படினு சொல்லி வேறொருத்தன அனுப்பி வச்சுட்டேன். இல்லனா அந்த நாய் மூஞ்சி நாராயணன்தான் வந்திருப்பான், பிட்ஸாவத் தூக்கிக்கிட்டு.”
உனக்கு தமிழ் சினிமா பார்க்கும் பழக்கம் அதிகம். வாரக் கடைசிகளில் செகாமாட்டிற்குத் திரும்பும்போது நண்பர்களோடு தவறாமல் இரண்டு திரைப்படங்களையாவது பார்த்துவிடுவாய் என்று என்னிடம் சொல்லியிருக்கிறாய். நான் தமிழ்த் திரைப்படங்களைப் பார்ப்பதில்லை. தியோங் பாரு வீட்டில் இருக்கும்வரையிலும் இரவு சாப்பாட்டுத் தட்டுகளைக் கையில் தூக்கிச் சாப்பிட்டபடியே அப்பா, அம்மா, அண்ணா, நான் வாரம் தவறாமல் சிங்கப்பூர்த் தொலைக்காட்சியில் வரும் சினிமாப் படங்களைப் பார்த்திருக்கிறோம். அந்த வீட்டை ஞாபகப்படுத்தும் எல்லா விஷயங்களையும் நான் அழுத்தித் துடைத்துவிட்டிருக்கிறேன்.
அம்மாவின் சாவுக்குப் பிறகு வீட்டைப் பராமரிக்க முடியாமல் அப்பா முதியோர் இல்லத்தில் பன்னிரண்டு வருடங்கள் வாழ்ந்து செத்துப் போனார். அண்ணா இப்போது ஜூரோங்கில் அவன் மனைவியோடும் இரண்டு குழந்தைகளோடும் குடியிருக்கிறான். நான் அவன் வீட்டுக்குப் போய் ஆறு வருடங்கள் ஆகின்றன.
கையிலிருந்த அட்டைப்பெட்டியைக் கண்ணாடி மேஜைமீது வைத்துவிட்டு உன்னிடம் திரும்புகிறேன்.
“என்ன ஒண்ணும் சொல்லாம இருக்க?”
“அதான் நீ எந்தந்த நேரத்துல வேலையில இருப்பனு எனக்கு முந்தியே சொல்லியிருக்கியே. அந்த நேரத்துலதான நான் ஆர்டர் கொடுத்தேன்.”
“ஆனா முந்தியெல்லாம் ராத்திரி நேரத்துலதான ஆர்டர் கொடுப்ப. இந்த ரெண்டு வாரமா மத்தியான நேரத்துல ஆர்டர் கொடுக்குறியா, அதான் கொஞ்சம் குழப்பமா இருக்கு. நான் வேற டெலிவரிக்குப் போகவும் இன்னொருத்தன் இங்க வரவும் வாய்ப்பிருக்கு. இந்த நாலஞ்சு நாளைக்கும் உன்னப் பார்க்க முடியாதுனு வேற சொல்லிட்ட”
உன்னைப் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய். உன் மார்பை விரித்து இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்தபடி பெருத்த கெக்கலிப்புடன் என்னைப் பார்க்கிறாய். கண்ணாடி மேஜை மீதிருந்த பொருள்களை ஒவ்வொன்றாக இடம் மாற்றி வைத்துக் கொண்டிருக்கும் நான் எந்தப் பதிலும் சொல்லாமல் இருக்கிறேன்.
“என்ன ஒண்ணுமே சொல்லாம இருக்க? ஒரு வேளை வேற எவனாவது வருவானு எதிர்பார்த்துகிட்டு இருந்த போலிருக்கு.”
விருந்தினர் அறைக்குள் நுழையப் போனவள் நீ சொன்னதைக் கேட்டுச் சட்டென்று நின்று உன்னைத் திரும்பிப் பார்க்கிறேன். ஆளில்லாத அந்த பெரிய வீட்டில் எதிரொலிக்கும் உன் குரல் என் அம்மாவின் குரல்போலவே ஒலித்ததைக் கேட்டு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. என் உதடுகளின் ஓரத்தில் மெல்லிய புன்னகை தோன்றி மறைகிறது.
என் ஆச்சரியத்தையும் புன்னகையையும் நீ தவறாகப் புரிந்து கொள்கிறாய். என்னைச் சமாதானம் செய்யும் நோக்கத்தோடு தட்டுத் தடுமாறிப் பேசுகிறாய்.
“இங்க பத்து மணிக்கு வந்து சேர நான் மலேசியாவிலேர்ந்து பைக்குல ஐஞ்சரை மணிக்கே கிளம்ப வேண்டியிருக்கு தெரியுமா? பாலத்துல க்யூ புடிச்சுத் தாண்டவே ரெண்டு மணி நேரம் மூணு மணி நேரமாகிடுது. அப்பா, முடியல.”
கைகளை உயரத் தூக்கிச் சோம்பல் முறிக்கிறாய். உன் கைகளை நீ உயரத் தூக்கும் சமயத்தில் உன் டீ சட்டை மேலேறி உன் வயிற்றின் பழுப்பு என் கண்களில் படுகிறது.
விருந்தினர் படுக்கையறை. இருவருக்கான இரட்டைக் கட்டில். பழைய நாள்களில் என் அம்மாவுடன் நான் படுத்திருந்த கட்டிலைப் போலவே.
என்னுடைய சேலையைக் களையத் தயாராகிறாய். நான் உன் கைகளை இறுகப் பிடித்துக் கொள்கிறேன்.
என் முகத்தில் தெரியும் மூர்க்கத்தைப் பார்த்து நீ தயங்குகிறாய்.
“என்ன இன்னைக்குப் புதுசா?” என்கிறேன்.
“ஆறு மாசத்துக்கு முன்னால மொத மொத உன் வீட்டுக்குப் பிட்ஸா கொண்டு வந்ததுல இருந்து பேசிக்கிட்டு இருக்கோம். ரெண்டு மூணு வாரமா நெருக்கமா பழகுறோம். இப்பவும் உன் உடுப்பைக் கழட்ட உட மாட்டேங்குற. நான் என்னோட உடுப்பைக் கழட்டுறேன்னாலும் அதுவும் வேணாங்கிற.”
“முதல்லயே சொல்லிட்டேன் இல்லையா?”
“உன் உடம்பக் காட்டுறதிலயும், என் உடம்பைப் பார்க்குறதுலயும் அப்படி உனக்கு என்ன கஷ்டம்? என்னமோ போ. எல்லாமே ரொம்ப விநோதமா இருக்கு. வெளிய எவனாவது கேட்டான்னா வாய்விட்டுச் சிரிப்பான்.”
“ஏன், வேறு எவனையாவது சேர்த்துக்கலாம்னு பார்க்குறியா?” என்று மறுபடியும் கேட்கிறாய்.
“நான் ஆர்டர் கொடுக்கலனா நீ இந்தக் கட்டடத்துக்குள்ளயே கால் வைக்க முடியாது ஞாபகம் இருக்கட்டும்,” என்று மடிந்திருக்கும் என் இடது கைக்குள் நான் முணுமுணுக்கிறேன்.
நீ புரண்டு படுக்கும்போது உன் நிறுவனத்தின் சின்னம் பொறித்த டீ சட்டை வியர்வையால் மேலும் நனைந்து லேசாக நாற்றமெடுக்க ஆரம்பித்திருக்கிறது.
இயற்கை விதிகளுக்கெல்லாம் மாறாக என் உடம்பின் உஷ்ணம் உன் உடலுக்குப் பாயாமல் என் உஷ்ணமே உன் உஷ்ணத்தை இழுத்துக் கொண்டது. உன் உடம்பு லேசாய் நடுங்குகிறது.
நான் பாதுகாப்புக்காகப் படுக்கை உறையை இழுத்து அதனால் என்னைப் பாதி போர்த்தியபடி கிடக்கிறேன்.
கட்டிலில் லேசாய்த் துள்ளியபடி கீழிறங்கியிருந்த உன் கால்சட்டையை மேலே இழுத்துவிட்டபடி என் வீட்டின் சுவர்களையும் அதில் மாட்டியிருக்கும் அலங்காரச் சாதனங்களையும் உற்று உற்றுப் பார்க்கிறாய். உன் கண்களில் பசியெடுத்த வேட்டை நாயின் வெறித்தனம்.
“கல்யாணம் பண்ணிக்கலாமில்லையா. ஒரு ஆள் துணையிருந்தாலும் நல்லதுதான.”
மடியில் கசங்கியிருக்கும் சேலையைக் கையால் தட்டிவிட்டபடி நான் எழுகிறேன்.
பழைய நகைச்சுவைதான். ஆனால் வாய்விட்டு நெடுநேரம் சிரிக்கிறேன்.
நீ கிளம்பிவிட்டாய் என்று ஒரு முறைக்கு இரண்டு முறை கதவின் பூட்டை அசைத்துப் பார்த்து உறுதி செய்கிறேன். உன் மோட்டார் சைக்கிளை உதைத்துக் கிளப்பி எனது அடுக்குமாடி வீட்டின் வளாகத்தை விட்டுக் கிளம்ப எடுத்துக் கொள்ளும் நேரத்தை அடிக்குரலில் எனக்கு மட்டும் கேட்கும்படி மூச்சுமுட்ட எண்ணுகிறேன். பிறகு என் உடுப்புகளை ஒவ்வொன்றாய்க் கழற்றி மெத்தையின்மீது கவனமாக மடித்து வைக்கிறேன்.
அட்டைப் பெட்டியிலிருந்த உணவு குளிர்ந்து போயிருக்கிறது. முழு நிர்வாண உடம்போடு அதைக் குப்பைத் தொட்டிக்குள் போடுவதற்காகக் கையில் எடுத்துக் கொண்டு வீட்டின் பின்புறத்தில் வெகு தூரத்தில் இருக்கும் சமையலறைக்கு நடக்கிறேன்.
வழக்கம்போல் அங்கே அம்மா நின்று கொண்டிருக்கிறாள். அவள் கண்கள் அசாதாரணமாய்ப் பளபளக்கின்றன. இம்முறை அவள் குரலில் ஏதோ ஒரு கனிவு இருப்பதுபோல் எனக்குத் தோன்றுகிறது.
எப்போதெல்லாம் ஒரு ஆண்பிள்ளையை அனுப்பிவிட்டு இப்படி நிர்வாணமாய் சமையலறைக்குள் வருகிறேனோ அப்போதெல்லாம் என் அம்மாவின் குரலில் கனிவு தொனிக்கும்.
‘உனக்கு உஷ்ணமான உடம்புடி’
அம்மா என்மீது வைத்த பார்வையைச் சற்றும் விலக்காமல் சொல்கிறாள்.
அந்தக் கணத்தில் மிகவும் குளிர்ந்து போனவளாய் என் அம்மாவின் கையை இறுகப் பிடித்துக் கொள்கிறேன்.
பதினெட்டு வருடங்களாய் திருமணத்தைத் தவிர்த்தும் என்னை அண்ட வந்த ஆண்களைத் துரத்தியும் சிறுகச் சிறுகச் சேமித்து வாங்கியிருந்த அந்த சொகுசு வீடு என் பழைய தியோங் பாரு வீடாகச் சுருங்கியிருந்தது.
***
சித்துராஜ் பொன்ராஜ் – இவர் சிங்கப்பூரில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பு பணிகளுடன், படைப்புகள் (கதை, கவிதை, நாவல்), விமர்சனங்கள், இலக்கிய உரைகள் என பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறார். தமிழ், ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன
கண்களை மூடிப் படுத்திருந்த ஜீவாவுக்கு உறக்கம் வரவில்லை. மூளை பல சம்பவங்களை மீட்டு அலசிக் கொண்டிருந்தது. தொய்ஞ்சி போன கொச்சங்கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த, அவனது அப்பா சத்தியதாஸின் குறட்டைச் சத்தம் இடைவிடாமல் எழுந்து கொண்டிருந்தது. கறைத்துணி கிழிந்துபோன கோரைப்பாயில் ஒருக்களித்துப் படுத்தான் ஜீவா.
மணி இரவு ஒன்பதரை இருக்கும். தூர்தர்ஷன் பொதிகையில் வெள்ளிக்கிழமை என்பதால் தமிழ்ப்படம் போட்டிருப்பார்கள். தலைமாட்டில் ஒன்பது மரக்கட்டைத் துண்டுகளால் ஆணி வைத்து அடித்து, அப்பா செய்த மர ஸ்டூலில் சின்ன பிளாக் அன் ஒயிட் டிவி இருந்தது. இதற்கு முன்னால் மரக்கள்ளிப் பெட்டியின் மேல் டிவியை வைத்திருந்தபோது பெட்டி நெளிந்து டிவி கீழே விழுந்தது. அதன்பின் டிவி ஓடவில்லை. டிவியின் சுவிட்ச் போட்டால் அதன் குறுக்காக நடுமத்தியில் வெள்ளைக்கோடு விழுந்து ‘கிர்’ எனச் சத்தம் கேட்கும்.
டிவி ஓடிய காலத்தில் குளிமுறிக்குப் பக்கத்தில் காத்தாடிக் கம்பியில் மாட்டியிருக்கும் ஆண்டனாவைத் திருக்கிக் கொண்டு இரைச்சல் இல்லாமல் சக்திமானையும், செய்திகளையும் பார்த்ததுண்டு. காணாமல் போன அறிவிப்பு தினம்தோறும் வரும்போது ஜீவாவுக்கு ஒருவித பயம் தொற்றிக் கொள்ளும்.
ஜீவாவின் வீடு சின்ன வீடுதான். மேற்கு பார்த்த வாசலுக்கு பாமாயில் டின்னைக் கீறிப்பிளந்து, விரித்து, பட்டி அடித்த தகரக் கதவு தான். உள்பக்கக் கொண்டியைப் போடும்போது ‘டொக்’ எனச் சத்தம் கேட்கும். ஒரே ரூம்தான். அதில் இடது பக்க உள்மூலையில் விறகு அடுப்பு இருக்கும். அந்த பக்கச்சுவர் மட்டும் புகைக்கரியால் கருப்பாக இருக்கும். ஒரு அட்டைப்பெட்டியில் அழுக்குத் துணியும், ஒரு கள்ளிப்பெட்டியில் தோய்ச்ச துணியும் இருக்கும். வீட்டுக்குள் ஆறு எட்டுதான் வைக்க முடியும். பனைமரத் தடிகளால் ஆன வீட்டின் உத்திரத்தின் மேல், தென்னை ஓலைக்கூரை போட்டிருக்கும்.
ஜீவாவின் வீட்டுக்கு எதிரே ஒரு திண்ணை வீடு. அதற்கு அடுத்து ஒரு வீடு. ஜீவா வீட்டுக்கு இடது பக்கம் ஒரு வீடு. இந்த நாலு வீடுகளும் சேர்ந்ததுதான் நடுத்தெரு வாத்தியார் காம்பவுண்ட். எதிரே உள்ள ரெண்டு வீட்டுக்குள்ளும் கக்கூஸ் உண்டு. ஜீவா வீட்டுக்கும் அதை அடுத்த வீட்டுக்கும் கக்கூஸ் கிடையாது. குளிமுறிதான் உண்டு. பகலில் ஒண்ணுக்கு வந்தால் குளிமுறியில் போய் மோண்டுவிட்டு நெளிந்துபோன அலுமினிய வாளியில் நிரம்பியிருக்கும் அடிபம்புத் தண்ணியை ஒரு செரிலாக் டப்பா நிறையக் கோரி விடுவார்கள். வீட்டுக்குப் பின்பக்கம் போகும் மடை வழியாக தெருவில் போகும் சாக்கடையில் மூத்திரமும் தண்ணீரும் சேர்ந்துபோய் கலக்கும். அப்போது சாக்கடையின் நாற்றம் மேலெழும்பும்.
வீடு செம்மண் கட்டு என்பதால் பின்பக்க மடையை ஒட்டி வீட்டுக்குள் எலி துளை எடுத்து யாருக்கும் தெரியாமல் வந்து போய்க் கொண்டிருக்கும். எலித்துளையை அடைக்க ஜீவா அடிக்கடி சின்ன சைஸ் கருங்கல்லைக் கொண்டுவந்து அடைத்து வைப்பான். எலி வீட்டுக்குள் அங்கும் இங்கும் ஓடுவதில் சின்னச் சின்னப் பாத்திரங்கள் சிதறிக் கிடக்கும். கழுவிய பாத்திரங்களைச் சுவரில் ரெண்டு பெரிய ஆணி வைத்து அடித்து, அதில் ரெண்டு துண்டு கொச்சங்கயிறு கட்டி கயிற்றின் குறுக்கே கொஞ்சம் வீதிப்பலகையை சொருகி, அதில் அடுக்கி வைத்திருப்பார் சத்தியதாஸ்.
அதனிடையில் பாதிமுறித் தேங்காயை மறைத்து வைத்திருப்பார். அதைத் தேடிப்போய் எலி கரம்பிவிடும். கரம்பிய தேங்காய் முறியைப் பார்த்ததும், ‘தேவுடியா பயலுக்க எலியக் கொல்லாம வுடக்கூடாது’ எனத் திட்டிக்கொண்டே எதிர் வீட்டு ராணி அக்காவிடம் எலிப்பொறியைக் கேட்டு வாங்கி, அதில் ஒரு துண்டுத் தேங்காயைச் சுட்டு மாட்டி வைப்பார். ராத்திரியில் சர்வ சாதாரணமாக வந்துபோகும் எலி, பகலில் பொறியில் மாட்டி விடும். பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் ஜீவா கதவைத் திறந்ததும் குடுகுடுப்பைக்காரனின் உடுக்குச் சத்தம் போல பொறியில் மாட்டிய எலி அலைமோதும் சத்தம் கேட்கும்.
சிரித்தபடியே வலது கையில் விறகுக் கட்டையை எடுத்துக்கொண்டு இடது கையால் எலிப்பொறியைத் தூக்குவான். மெதுவாக வெளியே வந்து குத்த வைத்து பொறியைத் திறக்க, வெளியே வரும் எலியை அடிக்க கட்டையை ஓங்குவான். பொறி லேசாகத் திறந்ததும் சுதாகரித்துக் கொண்ட எலி, ஒரே பாய்ச்சலில் சாக்கடைக்குள் விழுந்து மடை வழியாக ஏறி வீட்டின் ஓட்டை வழியாக மறுபடியும் ஜீவா வீட்டுக்குள் சென்று மறையும்.
இது ஒருமுறை அல்ல. அவன் எப்போதெல்லாம் எலிப்பொறியைத் தூக்குகிறானோ அப்போதெல்லாம் இப்படித்தான். அப்பா சத்தியதாஸ் பல எலிகளைக் கொன்றிருக்கிறார். அதுபோல ஒரு எலியையாவது கொன்றுவிட வேண்டும் என ஜீவா முயன்று தோற்றே இருக்கிறான்.
வீட்டில் சணல் சாக்கு விரித்து அதன்மேல் ரெண்டு மைதாமாவு சாக்கில் புளி இருக்கும். சத்தியதாஸ் சைக்கிளில் புளி வியாபாரம் செய்கிறார். அதனால் எப்போதும் வீடு நிறைய புளி மணம் நிறைந்திருக்கும். பெரிய பனைஓலைக் கிடவத்தில் வைத்து தெருத்தெருவாகப் புளி விக்கக் கொண்டு போனால் சாயங்காலக் கருக்கலில்தான் வீடு வருவார். வந்ததும் மேல் கழுவிவிட்டு அரிசி கழுவி, சோறு பொங்கி எதாவது குழம்பு வைத்துவிடுவார். பாதிநாள் ரசமும் சோறும்தான் இரவு உணவு.
சிலநேரம் புளி கரைச்சி, அதில் அஞ்சி சொட்டு தேங்காய் எண்ணெய் விட்டு, ரெண்டு சின்ன உள்ளியும் பச்ச மிளகாயும் அரிஞ்சி போட்டு கலக்கி, சுடுசோறும் சுட்ட சாளைக் கருவாடுமாகத் தின்னும்போது அது மணிமேடை ஆசாத் ஓட்டல் பிரியாணிக்கு நிகராக ஜீவாவுக்கு இருக்கும்.
ரெண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை தினம் தோறும் மீன்குழம்பு, ரசம், பருப்பு, சாம்பார் என விதவிதக் குழம்புகளாய் ஜீவாவுக்கு அம்மா ஜெயா ஆக்கிப் போட்டாள். ஜீவா மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள் அவர்கள் குடியிருக்கும் காந்திநகர் நடுத்தெருவில் உள்ள பார்வதி அக்கா வீட்டில் அலறல் சத்தம் கேட்டது. மதியம் என்பதால் தெரு கொஞ்சம் அமைதியாக இருந்தது. வீட்டுக்கு வெளியே பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த ஜெயா , பார்வதி அக்கா வீட்டுக்கு ஓடிப் போனாள். கதவு திறந்து கிடந்தது.
உள்ளே ஒருவன் அரிவாளோடு ஆவேசமாக நின்று கொண்டிருந்தான். பார்வதி பன்னிரெண்டாவது படித்து முடித்துவிட்டு காலேஜூக்கு படிக்கப் போகவில்லை. பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே ஒருவன் லவ் பண்ணுகிறேன் எனத் தொந்தரவு பண்ணியிருக்கிறான். அவன்தான் விரக்தியில் பார்வதி அக்காவை வெட்ட வந்திருக்கிறான். ஜெயா வீட்டுக்குள் போனதும் அவன் பதற்றமடையாமல் ‘தேவுடியா, ஒன்னக் கொல்லாம விடமாட்டேன்டி என அரிவாளை வீசியபடியே நின்றான். ஜெயா பயப்படாமல் பார்வதியை அணைத்தாள். பார்வதி ஜெயாவின் பின்னால் ஒளிந்து கொண்டாள். அவன் கோவத்தில் பார்வதியை வெட்ட அரிவாளை வீச, அது ஜெயாவின் கழுத்தில் வெட்டிச் சொருகிக் கொண்டது. வெட்டியவன் வேகமாக ஓட்டம் பிடித்தான்.
பார்வதி அலறியபடியே மூலையில் உட்கார்ந்தாள். ஜெயா கழுத்தில் அரிவாளோடு அப்படியே தரையில் விழுந்தாள். அவளின் ரத்தம் தரையில் படர்ந்து கொண்டிருந்தது. பக்கத்து வீடுகளில் இருந்து வந்தவர்கள் ஜெயாவைத் தூக்கினார்கள். கோழியின் தலையை வெட்டும்போது துடித்து அடங்குவதுபோல ரெண்டு தடவை ஜெயாவின் உடல் துடித்து அடங்கியது. உயிர் பிரிந்தது. ஆனால் கண்கள் மூடவில்லை. அப்போது ஜெயா ஆறுமாதக் கருவை வயிற்றில் சுமந்திருந்தாள்.
ஜெயாவின் இறப்புக்குப் பின் சத்தியதாஸ்தான் சமையல். ஜீவா அது வேணும், இது வேணும் என்று கேட்பது இல்லை. தினமும் சாயங்காலம் சோறு பொங்கி ரெண்டு பேரும் சாப்பிட்டு மீதி பழையதை மறுநாள் காலையிலும், மத்தியானத்துக்கு வாளியிலும் சத்தியதாஸ் கொண்டு போவார். ஜீவா மதியம் பள்ளியில் சாப்பிடுவான்.
காலையில் தினமும் கள்ளர் குளத்தில் குளிக்க சத்தியதாஸ் ஜீவாவைக் கூட்டிக்கொண்டு போவார். கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இருந்தபோது நாகர்கோவில் ஜெயிலில் உள்ள கள்ளர்களையும், மற்ற கைதிகளையும் காந்திநகர் குளத்துக்குதான் குளிக்க அழைத்து வருவார்கள். அதனாலேயே காந்திநகர் குளத்துக்குக் கள்ளர்குளம் என்று பெயர் வந்துவிட்டது.
வடசேரி பில்டர் ஹவுசில் உள்ள தண்ணீர்தான் கள்ளர் குளத்துக்கு வரும். குளம் அரை கிலோமீட்டர் நீளத்துக்கும் அதிகமாக இருக்கும். குளத்தைச் சுற்றி பன்னிகள் மேய்ந்து கொண்டிருக்கும். நேரம் வெளுக்கும் முன்பே பெரிய ஆண்களும், பொழுது விடிஞ்சதும் சிறுவர்களும் கள்ளர் குளத்தின் இடதுகரையில் பேண்டு கொண்டிருப்பார்கள். காந்திநகர் தொடக்கத்தில் பொம்பள கக்கூஸ் பெரிய ஓடையின் மேல் கட்டியிருக்கும். அதில் இருக்கும் அஞ்சு தனித்தனி கக்கூஸில் பெரிய பொம்பளைகளும், சின்ன பொம்பளப் பிள்ளைகள் ஓடையின் அருகிலும் பேளுவார்கள். சடங்கான பிள்ளைகள் மட்டும் எங்கே கக்கூசுக்குப் போவார்கள் எனத் தெரியாது. ராத்திரி பத்துமணிக்கு மேல் குத்த வைக்கிற சாக்கடையும், காலி இடமும் கக்கூஸ்தான். பக்கத்து வீட்டுக்காரர்கள் தங்கள் கக்கூசுக்கு வந்து பேண்டு விடக்கூடாது என்றுதான் கக்கூஸ் கட்டி வீடு போட்டவர்களுக்குக் கவலையாக இருக்கும். எல்லாரும் வந்து பேண்டால் கக்கூஸ் நிறைஞ்சிரும் என்கிற நினைப்புதான்.
குளத்தங்கரையில் கிடக்கும் பீயைத் தின்பதற்காகவே பன்னிகள் கூட்டம் கூட்டமாக உலாவும். பீ வாடையும் பன்னி உட்டை வாடையும் சேர்ந்து குளத்தங்கரையின் இடதுபகுதி அகோர வாடை வீசும். பீ மிதித்து விடாதபடி நடந்து, பீ இல்லாத இடத்தில் குத்த வைக்கும்வரை குடலுக்குள் இருக்கும் பீ பொறுமை காக்க வேண்டும் என்பதுதான் குளத்தங்கரை வரும் ஆண்களின் வேண்டுதலாக இருக்கும். ஆசுவாசமாக பேண்டு கொண்டிருக்கும்போது யாரோ பின்னால் இருந்து இடித்துத் தள்ளி பீ மேல் விழுந்தவர்கள் காந்திநகரில் அதிகமுண்டு. பின்னால் இருந்து இடித்து தள்ளுபவர் வேறுயாருமல்ல, பன்னிதான்.
பச்சைப் பீ திங்கும் ஆவேசத்தில் பன்னி முட்டித் தள்ளிவிடும். இப்படி பீ தின்று வளரும் சில பன்னிகளை வாரம்தோறும் சனிக்கிழமை ராத்திரி பிடித்து கால்களைக் கட்டிக் குளத்தங்கரையின் வலதுபக்கம் இருக்கும் நேருநகர் ரோட்டுக்குக் கொண்டுபோய், பன்னியின் கழுத்தை அறுத்துவிட்டு தென்னைஓலை தீப்பந்தம் கொண்டு பன்னியின் முடிகளை வக்கிவிட்டு கொதிக்கக் கொதிக்க வெந்நீர் ஊற்றி, பார்பர் தாடி செரைக்கும் சவரக்கத்தி கொண்டு பன்னியின் உடலை நன்றாக மழித்து, மறுபடி வெந்நீர் ஊற்றிக் கழுவி நேர் பாதியாக அறுத்து, ஞாயிற்றுக்கிழமை காலேஜ் ரோட்டில் கடை போடுவார்கள்.
ஹோம்சர்ச் பிரேயர் முடிந்து வருபவர்களில் சிலரும் நாகர்கோவிலைச் சுற்றியுள்ள பலரும் பன்னிக்கறி வாங்க குமிவார்கள். அதில் டாக்டர், வக்கீல், இஞ்சினியர் என சமூக அந்தஸ்தில் உள்ளவர்களின் தலைகள்தான் அதிகம் தென்படும். அவர்களுக்குப் பன்னி எதைத் தின்னு வளர்ந்துச்சி எனத் தெரியாது. காந்திநகர்காரர்கள் பன்னிக்கறியை கட்டக்கால் இறைச்சி என்றுதான் சொல்லுவார்கள்.
வழக்கம் போல கள்ளர் குளத்தில் குளித்துவிட்டு வீட்டுக்குப் போய் பழைய கஞ்சியில் சின்ன உள்ளியோ அல்லது நேற்று வைத்த குழம்பையோ வைத்துத் தின்றுவிட்டு சத்தியதாஸ் புளி விக்கப் போவார். ஜீவா சர்ச் தெருவில் உள்ள பள்ளிக்கூடத்துக்குப் போவான். கிறிஸ்து தொடக்கப்பள்ளி. ஊரில் அதை ஓட்டைப் பள்ளிக்கூடம் என்றுதான் எல்லோரும் சொல்லுவார்கள்.
பள்ளிக்கூடத்தைச் சுற்றி நிற்கும் தென்னைமர மட்டைகள் விழுந்து ஓடுகள் உடைந்திருக்கும். அதனால்தான் அது ஓட்டை பள்ளிக்கூடம். காந்தி நகர், அம்பேத்கார் நகர், நேருநகரில் உள்ள மாணவர்கள் தான் அந்தப் பள்ளியில் படிக்கிறார்கள். ஐந்தாம் வகுப்பு வரைதான் உண்டு. அதன்பிறகு படிக்க ஹோம்சர்ச் ஸ்கூலோ, டதி ஸ்கூலோ, ஸ்காட் ஸ்கூலோ, எஸ்.எம்.ஆர்.வியோ, எஸ்.எல்.பி.யோதான் போக வேண்டும்.
ஓட்டைப் பள்ளிக்கூடத்தில் யாரையும் பெயில் ஆக்கமாட்டார்கள். எதாவது பெற்றோர் சொன்னால்தான் பெயில் ஆக்குவார்கள். ஜீவா நன்றாகப் படிக்கிறவன். அதனால் தலைமையாசிரியர் ரோஸ்மேரி எதுக்குன்னாலும், ஜீவா என்று அழைத்துக் கொண்டிருப்பாள். ஜீவா புது நிறம். எப்போதும் சிரித்த முகம். யாரிடம் பேசினாலும் சிரித்துக் கொண்டே பேசுவான். ஐந்தாம் கிளாஸ் மாணவனுக்கான உயரம். நீலக்கலர் நிக்கரும், வெள்ளைச் சட்டையும்தான் யூனிஃபார்ம். அவன் போடும் துணிகளில் அழுக்கு இருக்காது. இமைக்காமல் நெடுநேரம் கவனிப்பான். அவனது உள்வாங்கும் திறனைக் கண்டு பாடம் நடத்தும் டீச்சர்கள் ஜீவாவைப் பார்த்தே பாடம் எடுப்பார்கள்.
எப்போதும் போல ஒன்னாம் ரேங்க்தான் ஜீவா. பள்ளி முடிந்து யார் கடைக்குப் போகச் சொன்னாலும் போவது, பாத்திரம் கழுவ, குளிமுறிக்குத் தண்ணீரைச் சின்ன வாளியில் பிடித்து வைப்பது அவன் வேலை. சத்தியதாஸ் வரும் முன்னால் வீட்டைத் தூத்துப் போட்டு, குப்பைகளை அள்ளி சாக்கடையில் தட்டி, பாத்திரங்களையும் கழுவி வைத்து விடுவான். அப்போது தெருவில் உள்ள எதாவது வீடுகளில் டிவி ஓடும் சத்தம் கேட்கும். அந்த வீடுகளின் அடைக்கப்பட்ட பாதிக் கதவுகளில் தொங்கிக்கொண்டு தலையைச் சாய்த்து வெளியே நின்று டிவி பார்ப்பான்.
‘கதவுல தொங்காதடே, வீட்டுக்குள்ள வந்து டிவியப் பாரு’ என்று யாராவது எப்போதாவது சொல்வதுண்டு. அப்படியே போய் டிவி பார்க்கும்போது வீட்டில் ஏதாவது திண்பண்டமோ காபியோ குடிக்கப் போகிறார்கள் என்றால் ‘ஏ ஜீவா, அன்னா ஒனக்க அம்மெ கூப்புடுகாலே, சத்தம் காதுல உழலயா? சட்டுன்னு ஓடிப்போ’ என்று சொல்வார்கள். வேகமாக எழுந்து ‘இன்னா வாரேம்மா’ன்னு கத்திக்கொண்டே ஜீவா ஓடுவான். வீட்டுக்கு வந்த பெறவுதான் அவன் அம்மா இறந்து போனது நினைவுக்கு வரும். மறுபடி டிவி பார்த்த வீட்டுக்குப் போனால் அங்கு கதவு உள்பக்கமாகப் பூட்டியிருக்கும். அமைதியாக வீட்டுக்கு வந்து புளி மடக்கிக் கொடுக்க வைத்திருக்கும் பழைய பேப்பர்களை வாசித்துக் கொண்டிருப்பான்.
ஏதாவது குழந்தைகள் அவர்களின் அம்மாவிடம் விளையாடிக் கொண்டிருந்தாலோ, கொஞ்சிக் கொண்டிருந்தாலோ அதைப் பார்க்கும் ஜீவாவுக்கு முகத்தில் சோகம் அப்பிக் கொள்ளும். பல நேரம் கதவைப் பூட்டிக்கொண்டு ‘அம்மா அம்மா’ என்று அழுவான். சில ராத்திரிகளில் அவன் அப்படி என்று அழுதால் சத்தியதாஸ் அவனை இறுக்கி அணைத்துக் கொள்வார்.
ஜெயாவின் இறப்புக்கு முன்புவரை குடித்திருந்த சத்தியதாஸ் அதன்பின் குடிப்பதில்லை. வீட்டுக்கு வரும்போது நூறு கிராம் மிக்சரோ , காரசவ்வோ வாங்கிட்டு வருவார். ஆனால் ஜீவாவுக்கு விருப்பமெல்லாம் பால்ராஜ் அண்ணன் விக்கும் பஞ்சுமிட்டாய் மீதுதான்.
இது ரோஸ்கலர் பஞ்சுமிட்டாய் இல்லை. வெள்ளைக்கலர் சோன்பப்டி. அதுதான் நாகர்கோவில்வாசிகளுக்கு பஞ்சுமிட்டாய் . அதையேதான் பாம்பே மிட்டாய் என்றும் சொல்வார்கள்.
கட்டையாக, குண்டான உருவம். புதுநிறம். முகத்தில் எப்போதும் ஒரு தேடல். உதட்டில் கொஞ்சம் புன்னகை. எப்போதும் டக்இன் பண்ணி கையில் கோல்டன் கலர் வாட்சும், விரலில் மோதிரமும், கழுத்தில் செயினோடும்தான் தள்ளுவண்டியை பால்ராஜ் அண்ணன் தள்ளிக் கொண்டு போவார். உள்பனியன் போட்டிருப்பதால் செயின் வெளியே தெரியாது. அவர் பீடி, சிகரெட், குவாட்டரோ குடிப்பது கிடையாது. எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது. யாரிடமும் குரலை உயர்த்திப் பேசுவதும் கிடையாது.
பால்ராஜ் அண்ணனுக்குக் கல்யாணமாகி ரெண்டு குழந்தைகள் உண்டு. பால்ராஜ் அண்ணனும், ஜீவாவின் அம்மாவும் தொடக்கப்பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். ஜெயாவின் அப்பா தங்கராஜூம், பால்ராஜ் அண்ணனின் அப்பாவும் நண்பர்கள். இருவரும் சேர்ந்துதான் வடசேரி சந்தைமேட்டில் கை வண்டி இழுத்தார்கள். பால்ராஜ் அண்ணன் எல்லோரிடமும் அன்பாகப் பழகுபவர். இரக்க குணம் உள்ளவர் என்று ஊரில் உள்ள பெரியவர்கள் சொல்வார்கள்.
பால்ராஜ் அண்ணன் பன்னெண்டு வயசுலயே குடும்பக் கஷ்டத்துல வேலைக்கிப் போய்விட்டார். வேலைன்னா தெருத்தெருவா ஐசு விக்கதுதான். சின்ன ஐசுப் பெட்டியப் பையில வச்சி தோளுலப் போட்டுட்டு கிலிக்கிட்டே ‘ஐஸ்ஐஸ்’ன்னு கத்திட்டுப் போவார். அவருக்கு வெட்டூர்ணி மடத்துக்குப் பின்னாடி இருக்கும் வாத்தியார்விளை தான். ஐஸ் விக்கப் போகும்போது சில பிள்ளைகள் ஐஸ் வாங்குவார்கள். அம்மா இல்லாததோ, அப்பா இல்லாததோ பால்ராஜ் அண்ணன் பின்னாடியே ‘ஐஸ் ஐஸ்’ன்னு கத்திட்டுப் போகும். அப்போது மனசு கேக்காம ஆளுக்கு ஒரு குச்சி ஐஸ் கொடுத்து விடுவார். அந்தப் பழக்கம் பஞ்சுமிட்டாய் விற்க வந்த பிறகும் மாறவில்லை.
பதினெட்டு வயசுக்குப் பிறகு பஞ்சுமிட்டாய் விக்க பால்ராஜ் அண்ணன் வந்துவிட்டார். காந்திநகர் நடுத்தெருவில் கடைசியில் போய் மோட்டார்பெறை தெருவில் மோட்டார் ரூமுக்கு எதிரே வடக்கு பார்த்த வாசல் ஓட்டுவீட்டைத்தான் குடோனாக வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தி வந்தார். வீட்டுக்கு வெளியே சாணி மொழுகிய திண்ணை. வீட்டின் வெளிப்பக்கச் சுண்ணாம்பு பூசிய சுவரில், சுண்ணாம்பு இளகி செம்மண் சுவர் காட்சி தரும். வீட்டின் முன்னால் ஒரு தென்னை மரமும், கொய்யா மரமும் நிற்கும். காலை பதினோரு மணிக்கெல்லாம் பால்ராஜ் அண்ணன் வந்து விடுவார்.
வந்ததும் ஒரு சாரத்தைக் கட்டிக்கொண்டு மேலே பனியனுமாகப் பஞ்சுமிட்டாய் செய்யும் வேலையைத் தொடங்குவார். வீட்டுக்குள் பெரிய விறகு அடுப்பு போட்டிருக்கும். அதில்தான் பெரிய இரும்புச் சட்டியில் டால்டாவைக் கிண்டி அதுக்குமேல் மைதாமாவைத் தட்டி நல்லா வறுத்து தனியா வைத்துவிட்டு, மறுபடி சட்டியைக் கழுவி தண்ணீ ஊத்தி நல்லா சூடாக்கி, அதுல சீனியைத் தட்டி சீனிப்பாவு காய்ச்சுவார். சீனிப்பாவுலேயே மூணு பருவம் உண்டு. பஞ்சுமிட்டாய்க்கு மிட்டாய் பருவத்தில் சீனிப்பாவு காய்ச்சுவார். அது நூல் மாதிரி வரும். அதை பெரிய வீதி அலுமினிய டிரையில் ஊத்துறதுக்கு முன்னாடி டிரை முழுக்க டால்டாவால் தடவிவிடுவார். டிரேய் முழுசும் சீனிப்பாவு படர்ந்து விடாதபடி கொஞ்ச இடத்தில் கயிறு போட்டு அணை போடுவார். அதற்குள் சீனிப்பாவை ஊத்தும்போது சர்க்கரை பாவு மாதிரி தெரியும். அதற்குமேல் வறுத்த மைதாவையும் பொடிச்சி வைச்சிருக்கும் ஏலக்கா பொடியையும், கொஞ்சம் பைனாப்பிள் எசன்ஸையும் ஊத்துவார்.
மைதா மாவை சேர்த்து சீனிப்பாவைப் பெரிய வட்டமாகப் பிடித்து விடுவார்கள். சீனிப்பாவின் சூட்டில் உள்ளங்கை பொத்து விடுவதுபோல் இருக்கும். ஆனாலும் நான்கைந்து பேர் சேர்ந்து இழுப்பார்கள். வளையம் போல பெருசாகிப் பெருசாகி போகும்போது, அதை எட்டுபோல வளைத்து மறுபடி ‘ ஓ’ போல டிரையில் போடுவார். மறுபடி மைதாமாவு சேர்த்துப் பிரட்டி சின்ன வளைய சீனிப்பாவை பெரிய வளையாக மாற்றுவார்கள்.
சீனிப்பாவும், மைதாமாவும் சேர்ந்து கோல்டன் கலரில் மாறிவிடும். இழுக்க இழுக்க நூல்மாதிரி பக்குவம் வந்ததும், நேர்பாதியாக வெட்டி பால்ராஜ் அண்ணன் டிரையிலே உதறுவார். அது பொடிஞ்சி பொடிஞ்சி கொச்சங்கயிறு தும்புபோல விழும். அதை பெரிய கண்ணாடிக் குடுவையில் அள்ளி வைத்து காற்று போகாதபடி மூடி வைப்பார். டிரையில் இருக்கும் உதிரிமாவு பொடிகளை, பஞ்சுமிட்டாய் இழுக்க வந்தவர்களுக்கு ஆளுக்குக் கொஞ்சம் பேப்பரில் பொதிஞ்சி கொடுப்பார். லீவு நாட்களில் ஜீவா வீட்டுத்தெரு எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கும் பையன்களும் பொண்ணுங்களும் பஞ்சுமிட்டாய் இழுப்பார்கள். லீவுநாட்களில் பால்ராஜ் அண்ணன்கூட பஞ்சுமிட்டாய் இழுக்க காந்திநகர் சிறுவர்களில் குறைஞ்சது பதினஞ்சி பேராவது குவிஞ்சி கிடப்பார்கள்.
பஞ்சுமிட்டாய் இழுக்க பால்ராஜ் அண்ணன் ஆள் தேர்வு செய்வதே தனி அழகுதான். வரிசையாக ஆம்பளப் பயல்களும் பொம்பளப் பிள்ளைகளும் நிற்பார்கள். சாரத்தை மடித்துக் கட்டாமல் மேல்நோக்கி தூக்கி கட்டிக்கொண்டு எல்லோரையும் வரிசையாகப் பார்ப்பார். உயரம் அதிகமாகவும், பெரிய பையனாகவும் தெரிய அட்டென்ஷனில் உள்மூச்சு இழுத்துக் கொண்டே நிற்பார்கள். அதில் ஐந்து அல்லது ஆறு பேரைத் தேர்ந்தெடுப்பார். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி மலர்ந்திருக்கும். தேர்ந்தெடுக்கப்படாத சில சிறுவர்கள் போய்விடுவார்கள். ஆனாலும் நான்கைந்து பேர் வீட்டுக்கு வெளித்திண்ணையில் உட்கார்ந்து இருப்பார்கள்.
பஞ்சுமிட்டாய் இழுத்து முடித்ததும், உதிரி மாவுப்பொடியை இழுத்தவர்களுக்குக் கொடுத்து அனுப்புவார். அப்போது திண்ணையில் இருக்கும் சிறுவர்களைப் பார்த்து ‘இருந்துக்கடே’ என்று சொல்லிவிட்டு உள்ளேபோய் உதிரிப் பஞ்சுமிட்டாய் பொடிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக பேப்பரில் பொதிந்து வெளியே கொண்டு வந்து சிறுவர்களிடம் கொடுப்பார். அப்போது சிறுவர்களுக்கு சர்ச் தெருவில் இருக்கும் சிஎஸ்ஐ கோவில் இயேசுவை விட, நடுத்தெரு சுடலைமாடன் கோவில் சுடலைமாடனை விட, மோட்டார் பிறைத்தெரு சாஸ்தாவை விட உயரமாக பால்ராஜ் அண்ணன் தெரிவார்.
பள்ளிக்கூடம் இருக்கும் நாட்களில் நடுத்தெருப் பெண்களில் சிலர் பஞ்சுமிட்டாய் இழுக்கப் போவார்கள். ஜீவாவின் அம்மா ஜெயா இருக்கும்போது தினமும் பஞ்சுமிட்டாய் இழுக்கப் போவாள். அதனால் ஜீவாவுக்கு தினமும் உதிரி பஞ்சுமிட்டாய்ப் பொடி கிடைக்கும்.
பால்ராஜ் அண்ணன் சாயங்காலம் நாலரை அஞ்சு மணிக்குமேல் தள்ளுவண்டியில் பெட்ரோமாக்ஸ் லைட் வைத்துக் கட்டிக்கொண்டு பஞ்சுமிட்டாய் இருக்கும் கண்ணாடிக் குடுவையைத் தூக்கி வைப்பார். சின்ன சைஸ், பெரிய சைஸ் கிழித்து வைத்த தினத்தந்திப் பேப்பரை எடுத்து வண்டியில் வைத்து அதன்மேல் படிக்கல்லைத் தூக்கி வைப்பார். வண்டியின் கீழ்பக்கத்தில் மணியை மாற்றி அதன் கயிறை வண்டி தள்ளும் கைப்பிடியில் கட்டுவார். வண்டியில் சிறிய வெத்தலைப் பெட்டி டப்பாவை வைப்பார். அதுதான் அவரது கல்லாப்பெட்டி. அதனருகே மிச்சமிருக்கும் பஞ்சுமிட்டாய் உதிரி மாவுப்பொடிகளை ஒரு கவரில் எடுத்து சுருட்டி வைப்பார். மறுபடி பேண்ட் சர்ட் போட்டு, டக்இன் பண்ணி காலரில் அழுக்கு படாதபடி கழுத்தில் கர்ச்சீப்பைச் சுற்றிக்கொண்டு வீட்டுக்கதவை பூட்டிவிட்டு, மெதுவாக வண்டியைத் தள்ளி சிஎஸ்ஐ சர்ச் முன் வந்து, திரும்பி சர்ச் தெரு வழியாக நடக்கத் தொடங்குவார். அப்போது மணி அடிக்க மாட்டார். சர்ச் தெருவில் உள்ள ஏதாவது சிறுவர்கள் பஞ்சுமிட்டாய் வாங்குவார்கள்
வண்டி அருந்ததியர் தெரு வழியாக கிருஷ்ணன் கோவில் பக்கமோ அல்லது குவாட்டர்ஸ் காலனி வழியாகவோ பயணிக்கும். இருட்டுவதற்கு முன்னால் கருக்கலிலே பெட்டர்மாஸ் லைட் கொளுத்துவார். காந்திநகர் தாண்டினாலே மணி அடித்துக்கொண்டு போவார்.
சில ஊர்களில் வண்டியைச் சுற்றியே சிறுவர்கள் வட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். ஏதாவது சிறுவர்கள் பஞ்சுமிட்டாய் வாங்கினால் பஞ்சு மிட்டாய் வாங்க காசு இல்லாத சிறுவர்கள் பஞ்சுமிட்டாய் பார்த்தே நாக்கில் ஊறும் எச்சிலை அமிழ்த்தி, தொண்டைக்குக் கீழ் இறக்குவார்கள். இதையும் பால்ராஜ் அண்ணன் பார்த்துக் கொண்டிருப்பார். அவர்களுக்கு உதிரி பஞ்சுமிட்டாய் மாவுப்பொடிகளை கவரிலிருந்து அள்ளிக் கொஞ்சம் கையில் கொடுப்பார். அவ்வளவுதான் சிறுவர்களின் கால் தரையில் படாது.
கையில் இருக்கும் மாவை நக்கும்போது எச்சில் சுரந்துவிடும். அவருக்கு யாரும் நன்றி சொல்ல மாட்டார்கள். அவரும் அதை எதிர்பார்க்க மாட்டார். ‘எல்லாரும் நேரா வீட்லப் போய் படிங்க’ என்று சொல்லி அனுப்புவார். அந்த நேரம் சட்டை போடாமல், கிழிஞ்ச நிக்கரைப் போட்டுக்கொண்டு மூக்கை உறிஞ்சிக் கொண்டிருக்கும் சிறுவர்களுக்கும் பால்ராஜ் அண்ணன் சொந்தக்காரர் ஆகி விடுவார். அந்தத் தெருவில் இருந்து வெளியே வண்டி போனபின் தான் சிறுவர்களின் ஆட்டம் அடங்கும். ஒருவன் ‘மாமா, போயிட்டு வாங்க. டாட்டா’ என்று சொல்லுவான். இன்னொருத்தன் ‘தாத்தா, இனி என்னைக்கு வருவீங்க?’ என்று கேட்பான் . ‘நாளை கழிச்சு எங்க கோயில் கொடி ஏறுது. அப்போ வருவீயளா?’ என்று ஒரு சத்தம் கேட்கும். எல்லாத்துக்கும் சிரித்தபடியே ‘சரி சரி’ என்று சொல்லிவிட்டு அடுத்தத் தெருவுக்குக் கடந்து போவார்.
அங்கும் மணி அடிக்கும் சத்தம் கேட்டால் அவ்வளவுதான், சிறுவர்களின் கூட்டம் கூடிவிடும். ‘அண்ணே, நா வண்டியத் தள்ளட்டுமா?’ என்று ஒருத்தன் கேட்பான். ‘மாமா நா மணி அடிக்கட்டுமா?’ என்று இன்னொரு சத்தம் கேட்கும். ‘பஞ்சு மிட்டாய்… பஞ்சு மிட்டாய்…’ எனச் சிறுவர்கள் வண்டியின் முன் கத்திக்கொண்டே போவார்கள். எல்லாத் தெருவைப் போல, ஊரைப் போல காசு இருப்பவர்கள் பஞ்சு மிட்டாய் வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போவார்கள். மிட்டாய் வாங்க காசு இல்லாத சிறுவர்கள் பால்ராஜ் அண்ணனோடு நெருக்கமாக நிற்பார்கள்.
எல்லா ஊரிலும் பால்ராஜ் அண்ணனிடம் ஏதாவது ஒரு சிறுவன் ‘அண்ணே, இந்த எல்லா பஞ்சுமுட்டாயும் எத்தர ருவா?’ என்று கேட்காமல் இருந்தது இல்லை. ‘அண்ணே, வளந்த பொறவு நானும் ஒங்ககூட பஞ்சுமிட்டாய் விக்க வரட்டுமா? என்று கேட்ட சிறுவர்களும் உண்டு. தெருக்களின் குறுக்கே ஒரு சின்ன ஓடை வந்தாலும், ‘அண்ணே, ஓட.. ஓட..’ என்று கத்தும் சிறுவர்களும் உண்டு. யாராவது தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் ‘ஏ மக்கா, என்னடே படிக்க? வீட்ல யார் யாரெல்லாம் இருக்கா? நல்லாப் படிக்கியா?’ என்று பால்ராஜ் அண்ணன் கேட்பார்.
பெரும்பாலும் அம்மாவோ அப்பாவோ இல்லாத சிறுவர்கள்தான் அவரைச் சுற்றி வட்டம் அடிப்பது. கொஞ்ச வருஷம் முன்னாடி பால்ராஜ் அண்ணன் வண்டிக்கு முன்னாடி கத்திக்கொண்டு போன சிறுவர்கள் வளர்ந்தபோதும் பால்ராஜ் அண்ணன் தெருவில் எதிரே வந்தால் சிரித்தபடியே வருவார்கள். ‘ஏ நல்லா இருக்கியா? நல்லா படிக்கியா?’ என்றுதான் அவர்களிடம் பால்ராஜ் அண்ணன் கேட்பார்.
யாரிடமும் ரொம்ப நேரம் நின்று வெட்டிக்கதை விடமாட்டார். திரும்பி பத்து மணிக்கெல்லாம் காந்தி நகர் வந்துவிடுவார். வண்டி நடுத்தெருவில் அடிபம்பு தாண்டி இறங்கும்போது மணி தானாகவே அடிக்கும். அப்போது ஜீவா வீட்டுக்கு வெளியே வந்து பஞ்சுமிட்டாய் வாங்க காசு நீட்டுவான். அவனைப் பார்த்ததும் வண்டி நின்றுவிடும். ‘ஏ மக்கா, இன்னும் ஒறங்கலையா? என்று கேட்டுக்கொண்டே ஜீவா கொடுக்கும் காசைவிட அதிகமாக பஞ்சுமிட்டாய் பொதிஞ்சி கொடுப்பார். சில நேரம் கொடுத்தது போக, மீதி இருக்கும் பஞ்சுமிட்டாய் மாவுப் பொடிகளையும் கொடுப்பார். சீக்கிரம் உறங்கிய நாளைத்தவிர மற்ற நாட்களில் பஞ்சுமிட்டாய் வாங்கித் தின்றுவிட்டுதான் ஜீவா உறங்குவான்.
லீவு நாட்களில் பஞ்சுமிட்டாய் இழுக்க ஜீவாவும் போவான். ஆனால் அவன் ரொம்ப சின்னப் பையன் என்பதால், திண்ணையில் உட்கார்ந்து உள்ளே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். கடைசியில் பஞ்சுமிட்டாய் மாவுப்பொடி கிடைக்கும். ஆனாலும் ஒரு நாளாவது பஞ்சுமிட்டாய் இழுத்துப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை ஜீவாவுக்கு இருந்து கொண்டே இருந்தது.
தினந்தோறும் அப்பாவிடம் காசு வாங்கிவிட்டு அப்பா உறங்கினாலும் பால்ராஜ் அண்ணன் வண்டி வரும்வரை உறங்காமல் படுத்துக்கொண்டே இருப்பான். தொடர்ந்து வந்து கொண்டிருந்த பால்ராஜ் அண்ணன் திடீரென வரவில்லை. யாரிடம் கேட்பது என்றெல்லாம் ஜீவாவுக்குத் தெரியாது. ஒரு வாரம் ஆனபிறகும் பால்ராஜ் அண்ணன் வரவில்லை. இரண்டு மாதம் கழித்து தெருவில் இருந்த பெண்கள், ‘நம்ம பஞ்சுமிட்டாய் பால்ராஜுக்குச் சோமுல்லையாம். அதனாலதான் ஆள் வரல’ என்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் தினசரி பால்ராஜ் அண்ணன் வந்து விடுவார் என ஜீவா எதிர்பார்த்துக் காத்திருப்பான்.
அஞ்சாறு மாசம் கழிச்சி அடி பம்பில் தண்ணீர் அடித்துக் கொண்டிருக்கும்போது தண்ணீ பிடிக்க வந்த புனிதா அக்காவிடம், ‘பஞ்சுமிட்டாய் விப்பாவல, அந்த மாமா ஏன் இன்னும் வரல? என்று கேட்டான்.
‘அந்த அண்ணனுக்கு மூளையில கட்டியாம். அதனால இனி வர மாட்டாராம். ஆஸ்பத்திரில சேர்த்திருக்காவளாம்’ என்று சொன்னாள்.
அடுத்த அரை வாளித் தண்ணீரைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வெளியே வைத்துவிட்டு, அப்பாவின் கயிற்றுக் கட்டிலில் குப்புற விழுந்தான். கண்ணில் இருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது. படுத்துக்கொண்டே மூக்கை உறிஞ்சும்போது தலையணையில் இருந்த அப்பாவின் வியர்வை வாசமும் மூக்குக்குள் போனது. அப்படியே உறங்கிப் போனான்.
அப்பா வந்து எழுப்பி சோறு கொடுத்துவிட்டு மறுபடி ஜீவாவை உறங்க வைத்தார். ஆனாலும் பால்ராஜ் அண்ணன் வந்துவிடுவார் என்று ஜீவா நம்பிக்கொண்டு காத்திருந்தான்.
சில நாட்கள் உறங்காமல் நள்ளிரவு தாண்டி அவரைப் பார்க்க முழித்திருப்பது உண்டு. திடீரென 12 மணிக்கு மேல் மணி அடிக்கிற சத்தம் கேட்டு, கதவைத் திறந்து பார்ப்பான். தெருவில் ஆள் நடமாட்டம் இருக்காது. இருட்டாக இருக்கும். அப்படி இன்னொரு முறை பார்க்கும்போது சத்தியதாஸ் பார்த்துவிட்டார். அது வெள்ளிக்கிழமை சுடலைமாடன் கோவிலிலிருந்து சாமி சாஸ்தா கோவிலுக்குப் போகும்போது சங்கிலி தரையில் கிடந்து இழுப்பது போல சத்தம் கேட்கும். அதைத்தான் ஜீவா பால்ராஜ் அண்ணன் வண்டி மணி சத்தம் என்று நினைத்துக் கொண்டான்.
சாமிப் போக்குவரத்து உண்டு என்று காந்தி நகரில் சொல்வார்கள். ஆனால் சாமிப் போக்குவரத்தை யாரும் பார்த்தது கிடையாது. ஜீவாவை வீட்டுக்குள்ளே கூட்டிட்டுப் போய் ‘மக்கா, சாமி போயிட்டு இருக்க சத்தம்தான் கேட்டு இருக்கு. அப்ப நாம வெளியப் போவக்கூடாது. சாமி அடிச்சிடும்’ என்று அப்பா சொன்னார். அதன்பிறகு ஜீவா நள்ளிரவில் பயந்து கதவைத் திறப்பது கிடையாது. ராத்திரி ஒண்ணுக்கோ ரெண்டுக்கோ வந்தால் அப்பாவை எழுப்புவான்.
ஒரு வருஷம் தாண்டியது. தினமும் பள்ளிக்கூடம் போய்விட்டு வந்ததும், பால்ராஜ் அண்ணன் முட்டாய் வீட்டுக்குப் போய் பார்ப்பான். கதவு பூட்டி இருக்கும். வண்டியும் அங்கேயே நின்றிருக்கும். பஞ்சுமிட்டாய் திங்க வேண்டும் என்கிற ஆசை கூடிக்கொண்டே இருந்தது . வெளிக்கடைகளில் பஞ்சுமிட்டாய் கிடைக்காது. தெருவில் பகலில் கொண்டு வரும் ரோஸ் கலர் பஞ்சுமிட்டாய் மீது ஜீவாவுக்கு ஈர்ப்பு இல்லை. இனி பால்ராஜ் அண்ணன் வரமாட்டார் என்று ஜீவாவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து விட்டது.
தினமும் பத்து மணிக்குப் பிறகு தூங்கத் தொடங்கினான். அன்றும் அதுபோலத்தான் படுத்து இருந்தான். கொஞ்ச நேரத்தில் அடிபம்பு பக்கத்தில் பால்ராஜ் அண்ணன் வண்டி மணி சத்தம் கேட்டது . பால்ராஜ் அண்ணன்தான் பஞ்சுமிட்டாய் கொண்டு வருகிறார் என்று ஜீவாவுக்குப் புரிந்துவிட்டது.
வேகம் வேகமாக எழும்பி, ‘எப்பா எப்பா’ என்று அப்பாவைப் பிடித்து இழுத்தான். அப்பாவும் உறக்கக் கலக்கத்தில் கட்டில் காலில் கழத்திப் போட்ட சட்டைப் பாக்கெட்டில் இருந்து இரண்டு ரூபாயை எடுத்துக் கொடுத்தார். வண்டி வீட்டுக்கிட்ட வருவது புரிந்துவிட்டது. ‘பஞ்சுமிட்டாய், நில்லுங்க நில்லுங்க’ என்று கத்திக்கொண்டே கதவைத் திறந்து ஓடினான். அப்படியே வண்டி முன்னால் அதிர்ச்சியில் நின்றான். அவன் கையிலிருந்த இரண்டு ரூபாய் நாணயம் நழுவி உருண்டு சாக்கடைக்குள் விழுந்தது. பால்ராஜ் அண்ணன் அதைப் பார்த்துக் கொண்டு நின்றார். ஜீவா பால்ராஜ் அண்ணன் முகத்தைப் பார்த்தான்.
அவர் முகம் பஞ்சடைந்து, கண்கள் குழிய சாம்பல்நிறச் சாரமும், கசங்கிய பழுப்பேறிய சட்டையுமாக பார்க்கவே பரிதாபமாக இருந்தார். ‘லே மக்கா, எப்படிப் படிக்க?’ என்று கேட்கும் அவர் பேச்சு நின்று விட்டிருந்தது. பக்கவாதம் வந்த அறிகுறி அவர் உடலில் தெரிந்தது. மிகுந்த சிரமத்தோடு அவர் சூடான ஒரு கரண்டி நிலக்கடலையை பேப்பரில் வைத்துப் பொதிந்துதர, ஜீவா அதை வாங்கிக்கொண்டு விலகியதும் வண்டி நகர்ந்தது. பஞ்சுமிட்டாய் குடுவை இருந்த இடத்தில் பெரிய சில்வர் தட்டில் அவிச்ச நிலக்கடலை இருந்தது. அதன் சூட்டின் ஆவி பறப்பது பெட்டர்மாஸ் லைட் வெளிச்சத்தில் தெரிந்தது. நகர்ந்து செல்லும் வண்டியின் பின்னால், தாரை தாரையாக கண்களில் நீர்வழிய விக்கித்து நின்றிருந்தான் ஜீவா.
***
ராம் தங்கம், இவர் நாகர்கோயிலில் வசிக்கிறார். சமீபத்தில் வெளியாகிய இவரது சிறுகதைத் தொகுப்பு ‘திருக்கார்த்தியல்’ நல்ல கவனம் பெற்றது, அது தவிர இவர் ‘பொன்னீலன் 80’ எனும் தொகைநூலின் தொகுப்பாசிரியரும் ஆவார். தொடர்புக்கு :- ramut28288@gmail.com
முன்பொரு காலத்தில் ஒரு மந்திரவாதி தன் கால் சிலம்புடன் ஓரளவுக்கு தாராளமான ஒரு சங்கிலியால் ஒரு குரங்கை பிணைத்து வைத்திருந்தான்.
நல்ல வாட்டசாட்டமான அந்தக் குரங்கு எந்தவொரு பதட்டமும் இல்லாமல் அமைதியும் குறும்புமாய் மந்திரவாதியுடன் அலைந்து வந்தது.
பேயோட்டுவதில் கைத்தேர்ந்தவனான அந்த மந்திரவாதியிடம் பலரும் கேட்ட ஒரே கேள்வி
‘எதற்கு அந்தக் குரங்கை இப்படி சங்கிலியிட்டு வைத்திருக்கிறீர்கள்?’ என்பது தான்.
அதற்கு அந்த மந்திரவாதி அலட்டிக் கொள்ளாமல்,சங்கிலி போடவில்லை என்றால் அது தப்பித்து ஓடிவிடும் என்று பதிலளித்து வந்தான்.
இத்தனை அமானுஷ்யமான வேலைகளில் ஈடுபடுபவன் சொல்லும் பதில் இது இல்லையே என்று எவருமே முழுமுற்றாக ஏற்றுக்கொள்ள முடியாத பதிலாக அது இருந்தது.
ஒருமுறை மூன்று தம்பிகளுக்கு சேர வேண்டிய குடும்பச் சொத்தான தோட்டத்தில் ஒரு பேய் அமளிதுமளி செய்து வந்தமையால் மந்திரவாதி அதனை ஓட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டான்.
அதற்காக அவன் அந்த தோட்டத்திலேயே அம்மாவாசையிலிருந்து அம்மாவாசை தங்கப்போவதாக தெரிவித்து விட்டு வேலையைத் தொடங்கினான்.
விதவிதமான பழங்கள் கொண்ட அந்த தோட்டத்தில் அந்த குரங்கு அடைந்த பேரின்பம் சொல்லி மாளாது.
திடீரென ஒரு நள்ளிரவில் அந்தக் குரங்கு மந்திரவாதியை சங்கிலியுடன் தரதரவென்று இழுத்துக் கொண்டு ஒரு மாமரத்தின் எதிரே சென்று நின்றது.
வெவ்வேறு விதமான குரங்கு வாய்ப் பகிரா சத்தங்களை எழுப்பியது.
பிறகு அந்த மந்திரவாதியையும் சேர்த்து சங்கிலியை தலைக்கு மேல் சுழற்றத் தொடங்கியது.
அந்தரத்தில் வட்டம் அடித்துக் கொண்டே முழுத் தோட்டத்தையும் நோட்டமிட்ட மந்திரவாதியின் கண்களுக்கு திடீரென ஒவ்வொரு சுற்றிலும் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வரும் ஒரு பேய் தெரிந்தது .
அவன் கைப்பிடிக்கும் நெருக்கத்தில் அது வந்தவுடன் அதனை ஒரே பிடியாக பிடித்துக் கொண்டு மந்திரவாதி அதனுடன் சுழலத் தொடங்கினான்.
அவர்கள் இருவரும் பல குரங்குகள் சேர்ந்து நடத்திய அடர்ந்த வனத்தின் நடுவில் அமைந்த உணவகத்தில் ஒரு மேஜையில் எதிரெதிராக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
‘எப்போ தோட்டத்த வுட்டு போறதா உத்தேசம்’ என்று மந்திரவாதி கேட்க, பேய் வாயில் கோழிக்கறியுடன் முழித்தது.