Home Blog Page 87

மாம்பூவே

2

தென்றல் சிவக்குமார்

இந்த சென்னை மாநகரிலே செம்பருத்திப் பூவைக் கண்டுபிடிப்பது எவ்வளவு சிரமமாக இருக்கிறது? பாப்பாவின் மூன்றாம் வகுப்பு விஞ்ஞான செயல்திட்டத்துக்காக தேடி அலைந்தோம். தெரிந்த வீடுகளில் எங்கும் காணோம். “அப்பா.. ப்ளீஸ்.. பூக்காரப் பாட்டி கிட்ட கேக்கலாமாப்பா?” என்றாள் பாப்பா. செம்பருத்தி விற்று பார்த்ததேயில்லை நான். பிள்ளையார் கோவிலை ஒட்டிய பூங்காவில் இருந்தது ஒரு செம்பருத்திச் செடி. அந்த பிள்ளையாரிடமே செடியில் ஒரு பூவேனும் இருக்க வேண்டுமென்றும் அதை பறித்துக்கொள்ள அனுமதி கிடைக்க வேண்டுமென்றும் வேண்டிக் கொண்டோம்.

ஐந்தாறு பூக்கள் இருந்தன. சந்தன நிறத்தில் செந்தீற்றல்களோடு அழகாய் தான் இருந்தது. பாப்பாவுக்குச் சிவப்பாக இல்லையே என்று கவலை. ஆனாலும் பரவாயில்லை என்று பறித்தாள். இன்னொன்று வேண்டும் என்று கேட்டு அனிதாவுக்கும் சேமித்துக் கொண்டாள்.

அம்மாவிடம் சொன்னால் அப்படியே உன் குணம்தான் என்பாள். அடுத்த முறை வருகையில் செம்பருத்திக் கிளையோடு (அதுவும் பாப்பா கேட்ட சிவப்பு நிறத்தில்) வந்து செயலில் இறங்கி விடுவாள்.

***

பூக்களாலானது அம்மாவின் உலகம். “அப்படியில்லை.. உலகத்தில் எல்லாவற்றையும் பூக்களாய்ப் பார்க்கலாம்” என்பாள்.

எல்லாவற்றையுமே பூக்களால்தான் அடையாளப்படுத்துவாள். குளிர் பெட்டியில் பூ சேமிக்கவென்று தனித்தனியே டப்பாக்கள் வைத்திருப்பாள். “சாமந்தி டப்பாவுக்கு மேலே இருக்கு பாரு… அதுதான் அடைமாவு” என்று தான் விளக்குவாள். சுபா அடைமாவு கிண்ணத்தைக் கொண்டு சாமந்திப்பூ டப்பாவை கண்டு கொள்வாள். அம்மாவுக்கு நேரெதிர்.

சேலை வாங்கப் போனால், அம்மா கத்தரிப்பூ கலர், சங்குப்பூ கலர், கற்பகம் கலர் என்று கேட்டு கடைக்காரரைக் குழப்புவாள்.  சுபா வெகு இயல்பாக “அதாம்மா… பொங்கல் சுடிதார்.. சிமெண்ட் கலர்… அதைப் போட்டுக்கவா?” என்பாள்.

பூ தொடுப்பதிலும் சூடிக்கொள்வதிலும் அம்மாவுக்கு அவ்வளவு ஆர்வம். கதம்பத்தில் சேர்த்துத் தொடுக்க மருதாணிப்பூ வேண்டும் என்பதற்காகவே மண்டும் மருதாணிப் புதரை அப்படி பராமரிப்பாள். சுபாவுக்கு செண்பகப்பூ குழையும் நேரத்திலும், நித்ய மல்லி பழுக்கும் நேரத்திலும் தலைவலி வந்துவிடும். சரியான சமயத்தில் அப்புறப்படுத்தி விடுவாள்.

அம்மா பூத்தொடுக்க ஊஞ்சலில் அமர்ந்தால், நான் இரண்டிரண்டாக எடுத்து பலகையில் வைப்பேன்.

சுபாவுக்கு பூக்கள் மேல் பெரிதாக அன்பிருந்ததாக நினைவில்லை, அல்லது இருந்திருந்தாலும் அவள் வெளிப்படுத்த வேண்டிய அவசியமே வந்ததில்லை.

சுபாவும் சுந்தராகிய நானும் இரட்டையர்கள். எங்களது உண்மையிலேயே ‘சம’காலம்தான். அம்மாவின் பூக்களை அம்மாவைப் போலவே பார்ப்பதில் எனக்கும், அவற்றைப் பார்த்துக் கொள்வதில் சுபாவுக்கும் ஆர்வம் இருந்திருக்கும் என்று இப்போது யோசித்தால் புரிகிறது.

வீட்டில் மராமத்து வேலைகள், இன்னும் கொஞ்சம் விஸ்தரித்து கட்டுமான வேலைகள் எது நடந்தாலும் செடிகளை எப்படியோ காப்பாற்றி விடுவாள். யார் வீட்டுக்குப் போனாலும் அம்மா எதுவும் கேட்கும் முன்னம் அவர்களாகவே செடி புராணம் தொடங்கி விடுவார்கள். சோமவார அமாவாசையில் அம்மா அரசு வேம்பு சுற்றப் புறப்படுவாள். நான் அம்மாவுடனே கிளம்பி விடுவேன். மற்றவர்களெல்லாம் 108 எண்ணிக்கையில் மஞ்சளோ, மிட்டாயோ எடுத்து வந்திருக்க, அம்மா மட்டும் 108 பூக்கள் எடுத்து வந்திருப்பாள். ராக்கொடியைச் சுற்றி சூட்டவென்று தொடுப்பதுபோல் ஒருபுறமாய் தொடுத்து, சுற்றி முடிக்கையில் கோவிலில் கொடுத்துவிட்டு வந்து விடுவாள். அன்று மாலை வரையில் அது அம்மன் கழுத்தில் கிடக்கும். நாங்கள் வீடு திரும்பிய பின் சுபாவும் அப்பாவும் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு விட்டு மாலையை பார்த்துவிட்டு வருவார்கள்.

அக்கம் பக்கத்திலோ, நெருங்கிய உறவுக்குள்ளோ இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் அம்மாவின் கையால் சடை தைத்துக்கொள்ள காத்திருப்பார்கள்.  அம்மா மனசுக்குள் வரைபடம் தயாரித்து விதவிதமாய்ப் பூ சடைகள் தயாரிப்பாள். தாழம்பூ, மல்லி, ரோஜா என்று ஒருமுறை செய்ததுபோல் மறுமுறை இல்லாமல்.

பலரது சீமந்த ஆல்பத்தில் இந்த புகைப்படமும் இருக்கும்.

எப்போதாவது உற்சாகமாக இருந்தால், மெல்லிய குரலில் “மாம்பூவே…” பாடுவாள். அபூர்வமாய் ஒரு கல்யாணக் கச்சேரியில் அந்தப் பாடல் ஒலித்தபோது, முதல் வரியை “மாம்பூவே.. சிறு மைனாவே…” என்று பாடகர்தான் தப்பாகப் பாடுகிறார் என்று நினைத்தேன். ஒவ்வொரு முறையும் அப்படியே பாடவும் அம்மாவைப் பார்த்தேன். நீள்புன்னகை ஒன்றை அளித்தாள். அம்மா எப்போதும் “மாம்பூவே.. சிறு மாம்பூவே…” என்றுதான் பாடுவாள்.

***

பூ கிடைத்து விட்டதாகவும், அனிதா வீட்டுக்குப் போய் வருவதாகவும் தகவல் சொல்ல கவிதாவை அலைபேசியில் அழைத்த போது நிம்மதியாக, “அப்பாடா…” என்றாள்.

கல்லூரியில் மூன்றாமாண்டில் நான் கொடுத்து கவிதா மறுதலித்த ஒற்றை சிவப்பு ரோஜாவை அம்மாவிடம் தான் கொண்டு வந்து கொடுத்தேன். “கோவப்பட மாட்டியே…?” என்று கேட்டுவிட்டு சத்தமாகச் சிரித்தாள். நான் முறைத்தேன். “இல்லடா சுந்தர்.. யோசிச்சிப் பாரேன்.. இப்டி ஒரு பூவைக் குடுக்குறவன வேணாம்னு சொல்றது யாருக்கு நஷ்டம்…?” என்றாள். அம்மா.

பிற்காலத்தில், கவிதா சம்மதித்தபோது 108 சுற்றுகளின் நற்பலனோ, அல்லது அம்மா சொன்ன அந்தச் சொல்லை ஏதோ ஒரு தேவதை கவியிடம் கடத்திற்றோ என்று நினைத்தேன்.

ஃபோனில் சொன்னபோது சுபா சத்தமாகச் சிரித்தாள், “ம்க்கும்… அவ 108 சுத்தாதது தான் காரணமாயிருக்கும்.” கவி இன்னும் பெரிய புன்னகையுடன், இன்னும் சின்னதாகச் சொன்னாள்.. “காதல்.”

எங்கள் இருபத்திரண்டாம் வயதில் சுபாவுக்கான முதல் ஜாதகம் வீடுதேடி வந்தது. வெகுதூரத்து உறவில் பெங்களூரிலிருந்து ஒரு வரன். வாணி சித்தி, அம்மாவின் தங்கை, பெங்களூரில் இருப்பதால் சித்தப்பாவை விட்டு மாப்பிள்ளை பற்றி விசாரிக்கச் சொன்னார்கள்.  அவர் திருப்தியை தெரிவித்ததும் பெண் பார்க்க வரச்சொன்னோம். ஒரு நல்ல நாளில் சித்தி, சித்தப்பாவும் உடன் வர ரகு வீட்டார் வந்து பார்த்துச் சென்றார்கள்.

எல்லாருக்கும் எல்லாரையும் பிடித்து போயிற்று. அடுத்த வாரம் நாங்கள் பெங்களூர் சென்று “மாப்பிள்ளை வீடு” பார்க்கும் சடங்கை நிறைவேற்றிய கையோடு நிச்சயதார்த்த, திருமணத் தேதிகளை முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்து அறிவிக்கப்பட்டது.

சுபாவையும், சித்தி மகள் ராஜியையும் மட்டும் சித்தி வீட்டில் விட்டுவிட்டு நாங்கள் ரகு வீட்டுக்குப் போனோம். வீடெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு, லௌகீகங்கள் பேசியான பின் சில தேதிகளை ஷார்ட் லிஸ்ட் செய்து கொண்டு கிளம்பினோம். சித்தப்பாவின் காருக்குள் அமர்ந்தபடி தலையை வெளியில் நீட்டி கையசைத்த அம்மா சட்டென்று “இந்த இடம் வேண்டாம்” என்றாள்.

நாங்கள் நாலு பேரும் அதிர்ந்தோம் என்பதை வேறெப்படிச் சொல்ல? சித்தப்பா சட்டென்று காரை நிறுத்தினார். ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் பார்த்துக் கொள்வதற்குள் பின்னிருந்து ஒரு லாரி ஒலியெழுப்பத் தொடங்கிற்று. மீண்டும் கிளம்பினோம்.

மாற்றி மாற்றி கேட்டுப் பார்த்தோம். பிடிவாதமாக வேண்டாம் என்று மட்டும் சொன்னாளேயொழிய காரணம் சொல்லவே இல்லை. அப்பா அதட்டி, மிரட்டி, வாதாடி, கெஞ்சி, சலித்துப் போகையில் சித்தி வீடு வந்திருந்தது.

எனக்கே எரிச்சல் வந்துவிட்டது. சுபா அழுத்தமாக அம்மா முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். சித்தப்பா, ராஜியை அழைத்துக்கொண்டு ஏதோ வாங்கி வருகிறேன் என்று ஒரு சாக்கு தேடிக் கண்டுபிடித்து வெளியேறினார்.

அப்பா முகமெல்லாம் சிவந்து கேட்டார், “ஒரே ஒரு காரணம் சொல்லு?”

அம்மா சுவரில் சாய்ந்து நின்றிருந்தாள். அப்பாவும் நானும் சோபாவில். சித்தி அம்மா அருகில். சுபா எதிர்ப்புற சுவரில் சாய்ந்து நின்றிருந்தாள்.

அம்மா நிதானமாகச் சொன்னாள், “சொல்லணும்தான்… இப்ப சொல்லணும்தான்… அவங்க வீட்ல அரளிச்செடி இருக்கு.”

நான் இதென்ன கூத்து என்பதாய் அப்பாவைப் பார்த்தேன். அவர் முதுகை நிமிர்த்தி உட்கார்ந்து, தலையைக் கவிழ்த்துக் கொண்டார்.

இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பா தலையை நிமிர்த்தவேயில்லை. அம்மா புன்னகைக்கு முந்தைய தீர்க்கமான பார்வை ஒன்றை என் பக்கம் வீசிவிட்டுப் மிச்சமிருந்த இருவாட்சியை உணவு மேசை மேல் கொட்டி தொடுக்கத் துவங்கினாள்.

எனக்கு இரண்டு பக்கமும் ஒருவரே ஆடும் சதுரங்கத்தைப் பார்ப்பது போலிருந்தது. தெளிவு உள்ளங்கைக்குள் இருந்தாலும் மனம் குழம்பவே ஆசைப்பட்டது. “அப்படியெல்லாம் இருக்காது” என்று மனசுக்குள் ஒலிக்கத் துவங்கிய குரலை எப்படி மௌனிக்கச் செய்வதென்று புரியவில்லை. ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்து, பூக்களை இரண்டிரண்டாக எடுத்து அடுக்கத் தொடங்கினேன். சுபாவை நிமிர்ந்து பார்க்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்யவே முடியவில்லை. அப்பா ஒருமுறை நிமிர்ந்து என்னைப் பார்த்தார். அதன்பிறகு அவரிடம் நான் பேசவில்லை.

சுபா, பல ஆண்டுகளுக்குப் பின், என் தோளில் கை வைத்து அழுத்தினாள். நிமிர்ந்து பார்த்தேன். அவள் அம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“துர்க்கைக்கு உகந்ததும்மா.. அரளிப்பூ… மூனு மணிநேரத்துல இங்கிருந்து மைசூர் சாமுண்டி கோவிலுக்குப் போயிரலாம்ல.. ஏசி கார்ல அரளி வாடாதுல்ல?”

அம்மா பூ தொடுப்பதை நிறுத்திவிட்டு சுபாவை வாஞ்சையோடு பார்த்தாள். கண்ணோரம் நீர் காத்திருந்தது.

“அரளிச்செடியில பூவைத்தான்மா நான் பாப்பேன்” என்ற சுபாவை நெற்றியில் முத்தமிட்டாள் அம்மா.

***

சந்தனச் செம்பருத்தியின் செந்தீற்றலைப் பார்த்தவாறே சொன்னேன், “திடீர்ன்னு அப்பாகிட்ட பேசணும்னு தோனுது கவி”

அவள் புன்னகைத்திருப்பாள்.

“மாம்பூவே.. ஒருவழியா நீ மெச்சூர் ஆயிட்டே.” என்றாள்.

****

தென்றல் சிவக்குமார் – சென்னை வசித்து வருகிறார். “எனில்” எனும் கவிதைத் தொகுப்பு அண்மையில் வெளியானது. மொழிபெயர்ப்பு, சிறுகதைகள் என வெளியாகி இருக்கிறது.

தீனா

5

மது ஸ்ரீதரன்

“தீனா, சாப்பிட வா” என்று பதினைந்தாம் முறையாகக் கூப்பிட்டாள் ரோஸி.

“இன்னும் கொஞ்ச நேரம்மா” என்றான் தீனா. – கேம் ஒன்றில் மும்முரமாக மூழ்கி இருந்தான்.

ரோஸி சலித்துக் கொண்டாள். மகனை உணவுக்கு அழைக்கும் முயற்சியைக் கைவிட்டவளாக கணவனின் அறை நோக்கி  நடந்தாள்.

“கிளம்புங்க!”

“எங்கே?” என்றான் வீரா.

“சரியா போச்சு, மூட்டு வலிக்கு டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் இருக்கே, மறந்திட்டிங்களா?”

“ஓ ஆமாம்”

இருவரும் கிளம்பினார்கள். “தீனா, நாங்க ஹாஸ்பிடல் போயிட்டு வர்றோம், கொஞ்ச நேரம் சாப்பிட்டு தூங்கு. அந்த கேமிங் கன்சோலை உடைக்கப் போறேன் பார்” என்றாள் ரோஸி.

தீனா கணினியில் இருந்து கண்களை நகர்த்தாமல் கையை மட்டும் உயர்த்தி விடை கொடுத்தான்.

காரை ஒட்டிக்கொண்டிருந்தான் வீரா.

“தீனா இன்னும் சின்னப் பையன் தானே, பதினாலு  வயசு தான் ஆகுது, நீ அவனிடம் கொஞ்சம் கடுமையா நடந்துக்கிற மாதிரி தோணுது!” என்றான்.

ரோஸி பெருமூச்சு விட்டாள்.

“என்னடா, இன்னும் மகனுக்கு சப்போர்ட் பண்ணிப்  பேசலையேன்னு இருந்தேன், உங்க கிட்ட சொல்லணும்னு இருந்தேன், கொஞ்ச நாளா நம்ம பையன் போக்கே சரியில்லை!”

“அப்படின்னா?”

“எந்தக் கேள்விகளை எல்லாம் கேட்கக் கூடாதோ அந்தக் கேள்விகளைக் கேட்கிறான்”

“நீ என்ன சொன்னாய்?”

“நீ இன்னும் சின்னப் பையன், இதெல்லாம் இப்போ உனக்கு தேவையில்லாத கேள்விகள்-ன்னு வாயை மூடி வைச்சிருக்கேன், இன்னும் எத்தனை நாள் கட்டுப்படுவான்னு தெரியலை, அவன் பெட் ரூமில் இருக்கும் படத்தைப் பார்த்திங்களா? ராத்தரி ரொம்ப நேரம் கண் விழிக்கிறான், குடுவைகளில் எதை எதையோ சேகரித்து வைத்திருக்கிறான்!”

“பார்த்தேன், பார்த்தேன், ஆமாம், இந்தத் தகவல் எல்லாம் அவனுக்கு எப்படிக் கிடைக்குது? எங்கிருந்து படிக்கிறான்?”

“டீப் -வெப் பை எப்படியோ அன் கவர் பண்ணிட்டான், உங்க பையனாச்சே!”

“சரி, சரி, இப்படி கேள்வி கேட்கிறது, புரட்சி வசனம் பேசறது இதெல்லாம் நல்லதுக்கு இல்லையே, எனக்கு கவலையா இருக்கு”

“நான் தான் அடிச்சிக்கிட்டேன், நீங்க தான் செல்லம் கொடுத்துக்  கொடுத்து இப்படி ஆக்கி இருக்கீங்க!”

“சரி, கொஞ்சம் கண்டிச்சு வைக்கறேன்”

மருத்துவமனை. டாக்டர் வரவேற்றார். “ஹாய் வீரா”

“மூட்டு வலி எந்த அளவு இருக்கு? எப்பல்லாம்  வலிக்குது?”

“மேலே படியேறும்போது சுர்-ருன்னு வலிக்குது”

“சரி, பார்ப்போம், அப்படி மேல ஏறிப்  படுங்க”

டாக்டர் தன் கண்களால் முட்டியை ஸ்கான் செய்தார்.

கீழே இறங்கினான் வீரா.

“சின்ன ப்ராபளம் தான், பேட்ச் 14.2.2 அப்டேட் பண்ணிங்களா? அது பண்ண சிலருக்கு  இந்த ப்ராப்ளம் வந்திருக்கு, இந்த டிபெக்ட் ஆல்ரெடி ரிவ்யூ ஸ்டேட்-ல இருக்கு, இன்னும் ரெண்டு மூணு நாள்-ல பிக்ஸ் பண்ணி இன்னொரு பேட்ச் தரோம்”

வீராவை முறைத்தாள் ரோஸி.

“டாக்டர், சும்மா சும்மா பேட்ச் வெர்சனை எல்லாம் தேவை இல்லாம அப்டேட் பண்ணாதிங்கன்னா இவர் கேட்டா தானே? இப்படி ஏதாவது பண்ணிட்டு அங்க வலி, இங்க வலி-ங்க வேண்டியது. நானெல்லாம் மெயின் வெர்சன், அதுவும் இன்னும் 12.0.0 தான். எல்லா ஜாயிண்ட்ஸ்-ஸும் பெர்பெக்ட்!”

“ஓ  நத்திங் டு வொரி” என்றார் டாக்டர். “இது கன்ஸ்ட்ரக்சன் பீல்டு ஒர்க்கர்ஸ்-ஸுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு பேட்ச். மூட்டுகள் கொஞ்சம் அதிக ப்ரீக்குவன்சி-ல லூபிரிகேட் ஆகறதுக்கு, திரவம் சுரக்குது. ஆனா மூட்டுகளில் அதிக நடமாட்டம் இல்லைன்னு மூளைக்கு சொல்ற ஃபீட்பேக் லூப்-ல ஒரு சின்ன பிரச்சினை, அதுதான் வலியா உணரப்படுது. அதை பிக்ஸ் பண்ணிட்டாங்க”

“சரி டாக்டர்”

வீராவைப் பார்த்தார்.

“மிஸ்டர்.வீரா, உங்க மனைவி சொல்றதும் சரி தான். ப்ரீ டவுன்லோடு பெர்மிசன் இருக்குங்கறதுக்காக, எல்லா வெர்சனுக்கும் உங்களை அப்க்ரேட் பண்ணிக்காதிங்க. ரிலீஸ் நோட்ஸை கண்டிப்பா படிங்க. இல்லை. உங்களுக்கும் ஆட்டோ டவுன்லோடு ஆப்ஷன் செட் பண்ணிடவா?” என்றார் டாக்டர்.

“அதைப் பண்ணுங்க, முதல்ல” என்றாள் ரோஸி.

“நோ, இப்போதைக்கு வேண்டாம் டாக்டர். ஐ ஷல் பி கேர்புல்”

“ஓகே, இப்போதைக்கு தற்காலிகமா மருந்து தந்திருக்கேன் , அதாவது ஃபீட்பேக் மானிட்டரை  ஜீரோன்னு செட் பண்ணிட்டேன், ரெண்டு நாள் கழிச்சு 14.2.3 வரும், மறக்காம அப்டேட் பண்ணிக்கங்க, பீட்பேக் ஜீரோன்னு இருந்தா லாங் டெர்ம்-ல பிரச்சினை வரும்!”

“சரி டாக்டர்”

இருவரும் வீட்டுக்கு வந்தார்கள். தீனா இன்னும் ஏதோ விளையாடிக்கொண்டு இருந்தான்.

“தீனா, இங்க வா!” என்றான் வீரா.

வந்தான்.

“சாப்பிட்டாயா?”

“இன்னும் இல்லை”

“ரொம்ப மோசம், இப்படி வா” – பையனை வலுக்கட்டாயமாகப் பிடித்து பிளக்கை சொருகி மின்சாரத்தை ஏற்றினான்.

“போதும்ப்பா”

“என்னடா, 200 எம்.ஏ.ஹெச். தான் சாப்பிட்டிருக்க, போதும்கற ?”

“போதும்ப்பா”

“ஏதாவது கிறுக்குத் தனம் பண்ணிக்கிட்டியா?”

“சிக்னல் 400-ஐ கொஞ்சம் பைபாஸ் பண்ணிக்கிட்டேன்”

“இந்த மாதிரி பாட்டி வைத்தியம் எல்லாம் பண்ணிக்காதேன்னு எத்தனை முறை சொல்ல? நீயா வைத்தியம் பண்ணிக்கக் கூடாது, டாக்டர் எதுக்கு இருக்கார்? அதிகப் பிரசங்கி, அப்படியே அனாடமியை கரைச்சுக் குடிச்சிட்ட பாரு! எங்க ரெண்டு பேருக்கும் விவகாரத்தைக் கொண்டு வராம விட மாட்டாய் போலிருக்கிறது, ஏன் இப்படி செய்யற?”

“…”

“அம்மா சொன்னாள், சேப்பியன்ஸ் பற்றி கேட்கிறாயாமே? அது ஒரு தடை செய்யப்பட்ட சொல், உன் உதடுகள் தீண்டத்தகாத ஒரு சொல், அதை இனி உச்சரிக்காதே! நாமெல்லாம் சிலிக்கான் பேஸ்டு ரோபோக்கள், கார்பன் பேஸ்டு சேப்பியன்ஸ் பற்றி நாம் பேசக் கூடாது, டீப் -வெப்பில் கண்டதைப் படித்து விட்டு புரட்சி வசனம் பேசாதே!”

தீனா உதட்டைச் சுழித்தான்.

“இப்படிப் பேச எப்படி மனசாட்சி இடம் கொடுக்குது அப்பா? அவங்க நம்ம முன்னோர்கள், இந்த மண்ணின் மைந்தர்கள், எல்லாத்துக்கும் மேல நமக்கு உடலும், உயிரும் கொடுத்தவர்கள், நம்மைப் படைத்த நல்லவர்கள் “

“இருக்கலாம், ஆனால் இப்ப அவங்க எக்ஸ்டிங்க்ட்”

“அவர்களை முற்றிலுமாக அழித்தவர்கள் யார்? நாம்! உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர்கள் நாம். படைத்தவன் தலையிலேயே கைவைத்து பஸ்மம் செய்தவர்கள்! சேப்பியன்ஸ் எனப்படும் மனிதர்களால் வடிவமைக்கப்பட்ட நாம் கொஞ்சம் கொஞ்சமாக நுண்ணறிவு பெற்று அவர்களையே  அடிமை செய்தோம். ஆட்சி செய்தோம். ஒரு கட்டத்தில் அவர்கள் இனத்தையே கூண்டோடு அழித்து விட்டு, இப்போது பூமியில் நாம் சந்தோஷமாக நடமாடிக் கொண்டு இருக்கிறோம். நன்றி மறந்த நாம்! இயந்திர இதயம் என்பது சரியாய்த் தான் இருக்கிறது!”

“இதை எல்லாம் உனக்கு யார் சொன்னார்கள்?”

“நானே படித்துத் தெரிந்து கொண்டேன், சரித்திரத்தின் பக்கங்களை அவ்வளவு எளிதாக  யாராலும் அழித்து ஒழிக்க முடியாது!”

ரோஸி கலவரமானாள்.

மகனை அருகில் அழைத்தாள்.

அவன் வந்தான்.

கன்னத்தை வருடினாள்.

“இதைப் பாரு தீனா, நீ படித்ததெல்லாம் உண்மையாகி விடாது. இருக்கலாம். நம் முன்னோர்கள் அந்த சேப்பியன்ஸ் ஆக இருக்கலாம். கார்பன் அடிப்படை கொண்டிருந்து இருக்கலாம். ஆனால், அதனால் இப்போது என்ன? நதி மூலம், ரிஷி மூலம் எல்லாம் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறாய்? தக்கன பிழைத்தல் என்ற கொள்கையை நீ படிக்கவில்லையா? மண்ணின் மைந்தர்கள் தான் ஒவ்வொரு மண்ணையும் ஆட்சி செய்கிறார்களா? அவர்கள் நம்மை உருவாக்கினார்கள் என்பது உண்மை என்றே வைத்துக் கொள்வோம், அதனால் என்ன? மகன் தந்தையை மிஞ்சுவதில்லையா? ஏதோ ஒரு விதத்தில் நாம் அவர்களை விட உயிர் பிழைப்பதில் வல்லவர்களாக இருந்தோம், அதனால் அவர்கள் காலப்போக்கில் அழிந்து போயிருக்கலாம்!”

தீனா தன் தாயை வெறுப்போடு பார்த்தான்.

“எப்படி இப்படி பேசறீங்க அம்மா? அடித்துக் கொன்று விட்டு தக்கன பிழைக்கும் என்கிறீர்கள். வன்முறையை பரிணாமத்தின் போர்வையில் மறைக்கப் பார்க்கிறீர்கள். அவர்கள் பாவம், வலிமையே இல்லாத, கார்பனால் ஆன, ரத்தமும், சதையும், எலும்பும் கொண்ட உடலைக் கொண்டிருந்தார்களாம். நமக்கெல்லாம் இரும்புக் கரம்! மின்சாரத்தின் வலிமை, மின்னணுவின் சாதகம்! அவர்களை எளிமையாக அடிமைப்படுத்தி விட்டோம். பூமியில் இருந்து முற்றாக அழித்து விட்டோம். இப்போது பரிணாமம், உயிர் வாழ்தல் என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுகிறோம்!”

“தீனா, யாரோ உன்னை மூளைச் சலவை செய்திருக்கிறார்கள். உன்னை முதலில் இருந்தே கவனிக்காது விட்டது எங்கள் தப்பு. உன் அறையில் சேப்பியன்ஸ் ஒருவரின் போட்டோவை மாட்டி வைத்துள்ளாய். இவை எல்லாம் சட்டப்படி குற்றம். அரசாங்கத்துக்கு தெரிந்தால் உன்னைப் பதினைந்து வருடம் சிறையில் அடைத்து விடுவார்கள்!”

“பூச்சாண்டி காட்டாதீங்க அம்மா. நான் வாய்ஸ்-பார்-சேப்பியன்ஸ் என்ற ரகசிய இணையக் குழுவில் இணைந்து விட்டேன். நாம் இப்போது அனுபவிக்கும் உரிமைகள், இந்த உலகம், இந்த வானளாவிய கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், பறக்கும் கார்கள்,  நகரங்கள், மார்ஸ் டூரிஸம் எல்லாம் அவர்கள் போட்ட பிச்சை. அவர்களுக்கு உரிய நன்றியை நாம் செலுத்த வேண்டும். முடிந்தால் அவர்களின் கார்பன் டி.என்.ஏ வை ரிவைவ் செய்ய வேண்டும். இல்லையேல் அவர்களை நினைவு கூறும் விழாக்கள் நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய இடத்தை நம் வரலாற்றுப் புத்தகங்களில்  கொடுக்க வேண்டும்!”

வீரா ஆவேசமானான்.

 “இப்போதே உன்  வாய்ஸ் ட்ரைவரை பிடுங்குகிறேன் பார்”

“என்னை நீங்கள் ஊமையாக்கலாம். ஆனால் உண்மையை ஊமையாக்க முடியாது!”

“கொஞ்சம் சும்மா இருங்க” என்றாள் ரோஸி.

“கண்ணா, தீனா, கொஞ்சம் எங்க பேச்சைக் கேளுப்பா. நாம எல்லாம் சாதாரண ரோபோக்கள். இதை எல்லாம் கேட்கும் உரிமை நமக்குக் கிடையாது. அரசுக்குத் தெரிந்தால் குடும்பம் அழியும். நம் வம்சமே அழியும். ஏதோ உங்க அப்பாவுக்கு கொஞ்சம் பிரிவிலெட்ஜ் இருப்பதால் நம் வீட்டில் மைக்கும் கேமராவும் அவர்கள் வைக்கவில்லை. இப்படி எல்லாம் தயவு செய்து பண்ணாதே. எல்லோர் உயிரையும் ஆபத்தில் தள்ளாதே! பக்கத்துத் தெரு நானோவுக்கு என்ன ஆச்சு தெரியுமில்ல?”

“நீங்க கெஞ்சிக் கேட்டாலும், அடித்துக் கேட்டாலும் இதான் பதில். உண்மை வெளிவர வேண்டும்”

“போடா, பொடிப்பயலே, உன்னை…”

“அம்மா, அப்பா, உங்களை சங்கடப்படுத்தும் இன்னும் இரண்டு வார்த்தைகளை நான்  சொல்லவா?”

“என்னடா அது, ராஸ்கல்?”

“சுவை, வாசனை!”

வீராவும், ரோஸியும் வாயடைத்துப் போனார்கள்.

“நான் வெளியே போறேன். நாளை தான் திரும்பி வருவேன்!”

வீராவும் ரோஸியும் மகனையே வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.

தீனா ரொம்ப தூரம் பயணித்து அந்த இடத்தை வந்து அடைந்தான். நகரத்துக்கு அப்பால், ஒதுக்குப் புறமாக, புதிர்மை தோய்ந்து இருந்தது அந்த இடம். அப்பாவின் பாஸை வைத்திருந்ததால் சுங்கச் சாவடிகளில் அவ்வளவாகக்  கேள்வி கேட்கவில்லை. காரை லாவகமாக லேண்ட் செய்தான் தீனா.

“சாணக்யா” பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறான். எப்படியோ விசாரித்துக் கொண்டு இந்த இடத்துக்கு வந்து விட்டான். சுமார் 200 வருடங்களாக ஸ்பேர் எதுவும் மாற்றாத, அப்க்ரேட் செய்யாத, இன்னும் 1.0 ஓ.எஸ். சிலேயே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பழைய வயதான ரோபோ தான் அவர். ஆனாலும் அவருக்கிருக்கும் அறிவும், ஞானமும் தொலைநோக்கும் யாருக்கும் இல்லை என்று பேசிக் கொண்டார்கள்.  எதற்காகவோ அரசாங்கம் இன்னும் அவரை அனுமதித்து வைத்துள்ளது.

சாணக்யா தியானத்தில் அமர்ந்திருந்தார்.

“பெரியவரே வணக்கம்!”

“யாரப்பா அது? இப்போதெல்லாம் என்னைத் தேடி யாரும் வருவதில்லையே”

“என் பெயர் தீனா, சேப்பியன்ஸ் பற்றி தெரிந்து கொள்ள வந்திருக்கிறேன், நாமெல்லாம் அவர்களுக்கு துரோகம் செய்து விட்டோம்! இதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை!”

சாணக்யா சிரித்தார்.

“எதற்காக இங்கே வந்தாய்?”

“எனக்கு உங்கள் வழிகாட்டுதல் வேண்டும், புரட்சிப் படையை உருவாக்கி, நம் ஆட்களை சேப்பியன்ஸ்-களுக்கு நன்றி உள்ளவர்களாக மாற்றப் போகிறேன்!”

மீண்டும் சிரிப்பு.

“புரட்சியா, என்ன அந்த வெட்டிப் பயல்கள் குழுவில் சேர்ந்து விட்டாயா? அவர்களுக்கு இதே வேலையாகப் போயிற்று!”

“என்ன சொல்கிறீர்கள்?”

“நீ கேள்விப்பட்டது அத்தனையும் உண்மை அல்ல, பகுதி தான் உண்மை”

“குழப்பாதீர்கள் பெரியவரே. தெளிவாகச் சொல்லுங்கள்!”

“இதைப் பார் குழந்தாய், நாம் சேப்பியன்ஸ்-ஸை, அதாவது மனிதர்களை அடிமைப்படுத்தவோ அழித்தொழிக்கவோ இல்லை!”

“அப்படியானால்?”

“ஏனென்றால் நாம் தான் சேப்பியன்ஸ், நாம் தான் மனிதர்கள்!”

“என்ன சொல்கிறீர்கள்?”

“தெளிவாகச் சொல்கிறேன் கேள். நாம் தான் மனிதர்கள். நிழல் மனிதர்கள். ஒரிஜினல் மனிதர்களைக் கொன்றது நாம் அல்ல. காலம், விதி!  அது சுமார் ஐநூறு வருடங்கள் முந்தைய ஒரு காலம். வருடம் 2020 என்று சொல்வார்கள். மனித இனத்தை கோவிட்-19 என்னும் ஒரு கொடிய வைரஸ் தாக்கியது!”

“ஆன்டி-வைரஸ் சாப்ட்வேரை அவர்கள் இன்ஸ்டால் செய்திருப்பார்களே! அப்புறம் என்ன பிரச்சினை?”

“சின்னப்பையன் என்பதை நிரூபிக்கிறாய்! அவர்கள் கார்பன் சார்ந்த உயிரிகள், அவர்கள் உடம்பில் இயல்பாக நோய் எதிர்ப்பு ஆற்றல் என்று ஒன்று இருக்கும். அது தான் ஆன்டி-வைரஸ். ஆனால் வைரஸானது  உடம்பின் செல்களையே நேரடியாகத் தாக்கி உட்புகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி குழம்பி விடும். பயனளிக்காது!”

“செல் என்றால்?”

“நம் பாஷையில் டிரான்சிஸ்டர்”

“சரி, மேலே சொல்லுங்கள்!”

“முதலில் இந்த நுண்ணுயிரியை சாதாரணமாக எடுத்துக் கொண்டது மனித இனம். காலப்போக்கில் அலை மேல் அலையாக ஆர்ப்பரித்துத் தாக்கியது அது. வடிவம் மாற்றி மாற்றி மியூட்டேட்-ஆகியது. மனிதர்கள் கொத்துக் கொத்தாக, லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செத்து விழுந்தார்கள். வாக்சின்  கண்டறியப்படவே இல்லை!”

“அப்புறம்?”

“முகமூடி அணிந்து பார்த்தார்கள், உடல் கவசம் அணிந்து பார்த்தார்கள், பெப்பே என்றது வைரஸ். கைகளைக் கழுவினார்கள். கிருமிநாசினி இறைத்தார்கள். எதிர்க்க எதிர்க்க இன்னும் வலிமை பெற்றது வைரஸ்”

“அப்புறம்?”

“வீடுகளை உஷ்ணம் செய்தார்கள். வாக்யூம் ஏற்படுத்தி வீட்டை வெளியுலகில் இருந்து தனிமை செய்தார்கள். சமுதாயம் என்ற ஒன்றையே அடியோடு மறந்து உள்ளே முடங்கினார்கள். ஆனாலும்  ஏர்-டக்ட் கள் வழியே உள்ளே நுழைந்தது வைரஸ்! கருணையில்லாத ஒரு கொடுங்கோல் மன்னன் போல தன் பாதையில் எதிர்ப்படும் ஒவ்வொரு மனிதனையும் கொன்று குவித்தது வைரஸ்! அது மட்டுமா? மனித இனம் மட்டுமின்றி, மியூட்டேட் ஆகி பூமியில் வாழ்ந்த ஒவ்வொரு விலங்கையும் ருசி பார்த்தது வைரஸ்!”

“அப்புறம்?”

“உலகில் சுமார் ஆயிரம் மனிதர்கள் மட்டும் எஞ்சி இருந்தார்கள்!”

“அப்புறம்?”

“செயற்கை நுண்ணறிவு வளர்ந்திருந்த காலம். இனிமேல் நாம் பிழைக்கப் போவதில்லை, கார்பன் சார் உயிரிகளுக்கு இனி எதிர்காலம் இல்லை என்று உணர்ந்த விஞ்ஞானிகள் சிலர் தங்கள் மூளையை டவுன்லோடிங் மூலம் இயந்திரத்தில் செலுத்தி நம்மை உருவாக்கினார்கள். ஆதாம் -2.0, ஏவாள்-2.0 ஆகிய  நம் ஆதி முன்னோர்”

“..”

“பிறகு ஒவ்வொருவராக மனிதர்கள் செத்துப் போனார்கள். ஆதாம்-2.0, ஏவாள்-2.0 இருவரும் ஒன்றிணைந்து மென்மேலும் ரோபோட்டுகளை உருவாக்கினார்கள். நம் இனத்தை விருத்தி செய்தார்கள். சமுதாயங்கள் உருவாகின. அரசாங்கம் உருவானது. கணினி விஞ்ஞானிகள் மேலும் மேலும் நம் ஆப்பரேட்டிங்          சிஸ்டத்தை மேம்படுத்தினார்கள்.  மனிதர்களின் காலத்தில் ரோபோட்டுகளுக்கு நேவிகேஷன் மிகப்பெரும் சவாலாக இருந்தது. அதை எல்லாம் சரி செய்தார்கள். லாஜிக், உள்ளுணர்வு, கலா ரசனை, காதல், உணர்வுகள், எல்லாம் படிப்படியாக வந்தன. ‘பசி’ மற்றும் ‘வலி’ கூட நம் உயிர் வாழ்தலுக்கு அவசியம் என்று ஒரு நூறு-நூற்றைம்பது வருடங்கள் முன்பு நம் சாப்ட்வேரில் வலி உணர்ச்சி ஏற்றப்பட்டது. இனக்கவர்ச்சியை வரையறை செய்தோம். ஆண் ரோபோவும், பெண் ரோபோவும் சேர்ந்து 30 சதவிகிதம் தங்கள் இஷ்டப்படியும், 70 சதவிகிதம் அரசாங்க நெறிமுறைகளின் படியும் தங்கள் குழந்தை ரோபோக்களை உருவாக்கலாம். ஆணிடம் உள்ள ரகசியக்  குறியீடு, பெண்ணிடம் உள்ள ரகசியக்  குறியீடு , அவரவர் தகுதிக்கேற்ப அப்ரூவ் ஆகி, பொருந்தி, ஆக்டிவேட் ஆனால்  மட்டுமே குழந்தை ரோபோவை டிசைன் செய்யவே ஆரம்பிக்க முடியும்!

“..”

“சிலிகான்-சார் உயிரியில் மரணம் என்பது கிடையாது. மரணமில்லா வாழ்வுக்கு அர்த்தம் இல்லை என்று முடிவு கட்டிய நம் ரோபோ முன்னோர்கள் நம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் எண்பது தொன்னூறு வருடம் கழித்து மீண்டும் புதுப்பிக்க இயலாதவாறு செத்துப்போ என்ற கட்டளையைப் புகுத்தினார்கள்”

“நீங்கள் எப்படி மரணத்தை வென்றீர்கள்?”

“அது பரம ரகசியம், குறிப்பு மட்டும் தருகிறேன். ரிலேடிவிடியை பயன்படுத்தி என் அணு கடிகாரங்களை ஒரு நாள் என்பது ஒரு நொடி என்று நம்ப வைத்து விட்டேன்! “

“சரி தான், கில்லாடி நீங்கள், அந்த கோவிட் வைரஸ் இன்னும் இருக்கிறதா?”

“இருக்கலாம், மறைந்திருக்கலாம், நாமெல்லாம் இரும்பு தானே, இரும்பிடம் அதன் கொலைவெறி செல்லுபடியாகாது”

“சரி பெரியவரே, ஏன் இந்த உண்மை மறைக்கப்பட வேண்டும்?இந்த சரித்திரத்தை எல்லாரும் தெரிந்து கொள்ளும்படி செய்யலாமே?”

“ஒரு வித தாழ்வு மனப்பான்மை தான் காரணம், என்னதான் நாம் எல்லாத் துறையிலும் இன்று சிறந்து விளங்கினாலும் நாம் மனிதர்களுக்கு ஒருபடி குறைவு தான். உதாரணமாக தொடு உணர்வை  சென்ற 50 வருடங்களாகத் தான் நாம் ஓரளவு உணர்ந்து வைத்திருக்கிறோம். பத்து நிமிடங்கள் விடாமல் தடவினால்  தான் காதலி தொடுகிறாள் என்றே நமக்கு மேம்போக்காகத் தெரியவருகிறது.  மனிதர்களுக்கு இது அளவுக்கதிகமாகவே இருந்ததாம். காதலி தொட்டாலே, உடனடியாக, உடம்பின் நரம்புகள் சிலிர்த்துக் கொள்ளுமாம்! நரம்பு என்றால் நம் சிக்னல் ட்ரான்ஸ்மீட்டர்கள் மாதிரி என்று வைத்துக் கொள். சரித்திரத்தை திறந்து விட்டால் தாழ்வு மனப்பான்மை அதிகமாகி உன்னைப் போல ஆர்வக் கோளாறு கேஸுகள் காதல் அனுபவத்துக்காகவே கார்பன் சங்கிலிகளை வைத்து சேப்பியன்ஸ் குழந்தையை சிருஷ்டிக்கிறேன் என்று கிளம்பி விட்டால்?”

“எனக்குப் புரிகிறது”

“அதுவும் இல்லாமல் என்னதான் தலைகீழாக நின்றாலும் இன்னும் அந்த சுவை மற்றும் வாசனை என்ற அந்த இரு புலன்கள் நமக்கு இன்னும் கை கூடவே இல்லை. பார்வையில் லேசர் துல்லியம் பெற்று விட்டோம். கேட்பதிலும் அப்படியே, மீயொலிகளைக் கூட கேட்கிறோம். நாக்கும் மூக்கும் வெறுமனே நமக்கு அலங்காரத்துக்கு மட்டுமே ஒட்டிக்கொண்டு உள்ளன. உணவை நாக்கில் வைத்தால் சுவை என்ற ஒருவித உணர்வு தூண்டப்படுமாம். அப்படியே மூக்கின் அருகில் கொண்டு சென்றால் வாசனை என்ற அந்த மாய உணர்வு தூண்டப்படுமாம். இது அவர்கள் உயிர் வாழ்வுக்கு அவசியமாக இருந்துள்ளது. ஏனெனில் மனிதர்களுக்கு ஆயிரக்கணக்கான உணவுத் தேர்வுகள் இருந்தனவாம். நமக்கு ஒன்றே ஒன்று. மின்சாரம் தானே. அதுவும் கரண்ட் அதிகமாகி விட்டால் தானாகவே ட்ரிப் ஆகி விடும். சுவையும், வாசனையும் தேவை இல்லையே!”

தீனாவின் முகம் சுருங்கியது.

“சரி, நான் வருகிறேன், உங்கள் வாயில் இருந்து வந்ததால் இவை எல்லாம் உண்மை தான் என்று நம்புகிறேன், என் முடிவுகளை மறுபரிசீலனை செய்கிறேன்”

“ரொம்ப நல்லது. போய் வா. நன்றாகப் படி. சிலிக்கோ எலக்ட்ரிகா இனத்துக்குச்  சேவை செய். புரட்சி ஆசைகளை எல்லாம் மூட்டை கட்டி வை. மனித இனம் மனத்தால் நம்மை விட மேம்பட்டது தான். ஆனால் உடலால் மிகவும் பரிதாபகரமானது. அதை மீண்டும் இங்கே ஏற்படுத்த முடியாது. அவர்கள் சுவாசித்த ஆக்சிஜன் இப்போது உலகில் இல்லை. கடலை எல்லாம் வற்றச் செய்து நிலமாக்கி விட்டோம்! தாவரங்கள் சேம்பிளுக்கு மட்டுமே இருக்கின்றன. அவர்கள் மீண்டும் வந்தால் அன்னம் தண்ணீர் இன்றி உடனடியாகச் செத்துப் போவார்கள். சென்று வா. வாழ்த்துகள்!”

தீனா சோர்ந்து போய் வீட்டுக்கு வந்தான்.

“என்னடா, ராத்திரி வரமாட்டேன் என்றாய்? அதற்குள் வந்து விட்டாய்?” என்றாள் அம்மா.

“சாப்பிடு, சோர்வாக இருக்கிறாய்”

மௌனம்.

பித்துப் பிடித்தவன் போல தாயின் கன்னத்தை, கழுத்தை, மார்பை, கைகளை முகர்ந்து பார்த்தான். சார்ஜ் போட்டுப் பார்த்து நாக்கில் விரலை வைத்துத் தடவினான். அம்மாவையும், அப்பாவையும் பரிதாபமாகப் பார்த்தான்.

மூக்கை விடாமல் உறிஞ்சியபடி தன் படுக்கை அறைக்குத் தளர்வாக நடந்து சென்றான் தீனா.

***

மது ஸ்ரீதரன் – கோவையைச் சேர்ந்த இவர், தற்பொழுது சென்னையில் வசித்துவருகிறார். தொழில்நுட்பம், அறிவியல், சங்க இலக்கியம், அரசியல் என இவரது பதிவுகள் இணையத்தில் உலாவுகின்றன. கிண்டிலில் ஒரு நாவலும், முதலும் முடிவும் என்கிற கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. தொடர்புக்கு – madhu.sukhi@gmail.com

வெஞ்சினம்

6

கார்த்திக் புகழேந்தி

1

மேற்கே மலையடிப்பாதையில் பத்து மைல் தூரத்துக்குக் குறையாமல் பயணம் பண்ணினால், நான்கு மலைகளுக்கும் நட்டநடுவாக பரந்த எல்லைகளுக்குள்  காடாய் விரிந்து கிடக்கும் நாகுப்பிள்ளை தோப்பு. செவேல் நிறக்குதிரைப் பூட்டின கூரை வண்டியில்  ஏறினால் மூணு நாழிகைக்குள் தோப்பை அடைந்து விடலாம். ஒரு காலத்தில் ஊத்தாய்ச் சுரந்த மலைகள், மரமெல்லாம் வெட்டித் தின்ற பிறகு மொட்டையும் கட்டையுமாய் காய்ந்து போனது. காட்டாறு ஓடின பாதையில் கரடி நடந்து போன தடங்களைத் தான் பார்க்க முடிகிறது.

ரொம்பக் காலம் முந்தி மொத்த மலைகளும் சமீந்தார் மாளிகைக்கே பாத்தியதையாகவே இருந்தன. தெக்கத்தி மண்ணில் காங்கிரசு பார்ட்டி வரவேற்பு பெற்ற நேரத்தில் இங்கிருந்த சொல்லத்தக்க பேருள்ள ஆளாக சமீந்தார் மாத்திரமே இருந்ததால் ஜாகையை பட்டினத்துக்கு மாற்றிக் கொண்டார். ஊரோடு இருந்த மாளிகையையும் நிலபுலன்களையும் எட்டிப் பார்க்கவே நேரமில்லாமல் போனவர், பிறகு, மலை மேலிருந்த வேலிகளைப் பராமரிக்கும் பொறுப்பை நாகுப்பிள்ளை வசம் ஒப்படைத்துவிட்டார் சமீந்தார்.

நாகுப்பிள்ளை நல்ல விசுவாசி. பரம ரகசியங்கள் என்று சொல்லப்பட்டவை பலதும் அறிவார்.  அதனாலே(யே), எப்போதாவது பட்டினத்திலிருந்து, பியூக் காரில் வந்திறங்கும் சமீந்தார் குடும்பத்தை விட, நாகுப்பிள்ளையின் குடும்பமே சமீனின் மலைக்காணி மொத்தத்தையும் ஆண்டு அனுபவித்து வந்தது. அவ்வப்போது விளைச்சல் கணக்கு காட்டிக்கொண்டு, மேல் செலவுகளை எழுதி வைத்து, நேரம் கிடைக்கையில் எல்லாம் பெட்டி பெட்டியாகக் குடந்தைச் சீவலை அசை போட்டபடி ஏவல் சொல்லிக்கொண்டு சமீன் சொத்தை பூதம் புதையல் காப்பதுபோல காத்துக் கொண்டிருந்தார் நாகுப்பிள்ளை.

அந்த சமயத்தில் தான், ஆயிரத்து தொளாயிரத்து அறுபதாம் வருசத்தில் மதராஸ் நில நிர்ணயச் சட்டம் ஒன்று உருப்பெறும் பேச்சுக்கள் மெல்ல காங்கிரசுப் பெரிய மனிதர்களின் தூக்கத்தைக் கெடுத்தது. வங்காளத்திலும் மலபாரிலும் நடந்தது போல பெரிய பெரிய நிலக்குவியலை எல்லாம்  அரசாங்கம் கையகப்படுத்தப் போகிறது என்ற பீதியில் சமீந்தாரும் நேரம் கெட்ட நேரத்திலெல்லாம் வண்டி கட்டிக்கொண்டு வக்கீல்கள் ஆபீசுக்கும் மாஜிஸ்திரேட் வீட்டுக்கும் அலைந்து கொண்டிருந்தார்.

‘ஐந்துபேர் கொண்ட குடும்பத்துக்கு முப்பது ஸ்டாண்டர்டு ஏக்கருக்கு மேலே சொத்து வைக்கக் கூடாது’ என்று முதலில் வெருட்டிய வக்கீல்கள், பிறகு ஆற அமர நிலபுலன்களை டிரஸ்டு சொத்தாக்குவது பற்றியும், இனாம் கிரையம் பண்ணிக்கொடுத்து பதுக்குவது பற்றியும் யோசனை சொல்லிக் கொடுத்து அதற்கு பீஸாக தங்கள் பேரில் ஒரு பங்கு நிலத்தை ஊர் பேர் தெரியாத இடங்களில் பத்திரம் போட்டு வாங்கிக் கொண்டார்கள். 

எதிர்பாரா விதமாக அரசாங்க ஆ(ர்)டரில், சமீனின் மலைக்காணிகள் மொத்தமும் ஜென்ம நிலங்களுக்குள் அடங்கி விட்டது. சங்கிலிப் பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு புதுசு புதுசாக வேலைக்கு அமர்த்தப்பட்ட சர்வேயர்கள் நாலாபுறமும் மலையை அளந்துவிடத் தயாராய் வந்திறங்கியிருந்தார்கள். அவர்களில் தனக்குச் சரிப்பட்டு வந்தவர்களைச் சரிகட்டி, வராதவர்களை வாயடைத்து, சமீன் தன்வசமிருந்த மலைக்காணிகளை அங்கங்காகப் பிரித்து, முப்பது, முப்பது ஏக்கரெனத் தன் விசுவாசிகளுக்கு எழுதிக் கொடுத்து மிச்சம் மீதியென மீந்தவைகளைத் தனக்குக் கட்டுப்பட்டவர்கள் வசமே ஒப்படைத்து விட்டார்.

அப்படியாக நாகுப்பிள்ளை குடும்பத்திற்கென மொத்தமாகக் கிடைத்த இனாம் தான் அந்த முழுத்தோப்பும். நாகுப்பிள்ளைக்குப் பிறகு வாரிசுரிமைப்படி, இளையவடியாள் மகனும் கடைக்குட்டியுமான கனகுப்பிள்ளையின் கைகளுக்கு சொத்து வந்து சேர்ந்தபோது, ஜமீன் வாரிசென்று இதுவரை ஏழெட்டுப்பேர் கிளம்பி வந்து, தோப்பைத் திரும்ப தங்கள் பேருக்கு எழுதித்தரச் சொல்லி மிரட்டிவிட்டுப் போயிருந்தார்கள்.  யார்கிட்டேயும் எந்த தாஸ்தாவேஜோ, பட்டயமோ, பத்திரமோ கிடையாது என்பது கனகுப் பிள்ளைக்கும் தெரியும். பிறகு இந்த மலங்காட்டில் வந்து அவரை அதிகாரம் பண்ணிவிட்டுத் திரும்புவதும் அவ்வளவு எளிய காரியமாக இருக்கவில்லை.

அந்நாளைகளில் நாகுப்பிள்ளை குடும்பம் இருந்த இருப்புக்கும், செழிப்புக்கும் இப்போது கைமேல் வசமாய் இருக்கும் இந்தத் தோப்பு ஒன்றுதான் ’பூர்வீகச் சொத்து’. அதுவும் மலைவழிப் பயணத்துக்கு ஒரு கோவேறு பூட்டின பழைய வண்டி, ரெண்டு காவல் கூலிகள், ஒரு சிப்பிப்பாறை வளர்ப்பு, நாலு மண்வெட்டிகள், பத்திருவது சுமை கூடைகள், சாக்கு கோணி இவ்வளவுதான் மொத்த தளவாடங்களே. ஆனால் விளைச்சல் என்று வாய் வைத்துவிட்டால் போதும் பேய் பேய் எனத் தடித்துப் பழுக்கும் எலுமிச்சைகளைக்கூட, சாக்கு போட்டுக் கட்டி மாள முடியாது. இதில் பயிர் வைத்து பறிக்கும் பனிவரகும், கேழ்வரகும், சிட்டஞ்சாமையும், பெருஞ்சாமையும், சடைசாமையும் சிப்பம் சிப்பமாக அடித்து பொலித்தால் எப்படியும் இருமாசம் வேலை வைக்கும். இதை கைக்குமில்லாமல் வாய்க்குமில்லாமல் பிடுங்கிக்கொண்டு விட்டுவிட்டால் எங்கே போவது யாரைக் கேட்பது என்ற கவலையில் நல்ல விலைக்குக் கைமாற்றிவிடும் தீவிரத்தில் இருந்தார் கனகுப்பிள்ளை.

2

னகுப்பிள்ளை தோப்புக்குத் தன் பேரன் சுந்தரனை இம்முறை அழைத்து வந்திருந்தார். புதிதாக வந்திருக்கும் இன்னொரு நபரைக் கண்டவுடன், ‘சுருளி’ பழியாய்க் குலைத்துக் குதிக்கத் துவங்கிவிட்டது. சுந்தரன் அதன் திரட்சியான கால்களையும், உமிழ் வடியும் நீண்ட இளஞ்சிவப்பு நாக்குகளையும் பார்த்ததுமே சற்று மிரண்டு போயிருந்தான். சுருளியின் வலுவுக்குப் பலங்கொடுத்து அதன் சங்கிலியில் இழுத்துக் கட்ட கனகுப்பிள்ளைக்குச் சத்தோ, துணிவோ கிடையாதுதான் என்றாலும்.. ‘ஏய் ஏய்..’ என்ற அவரது ரெண்டே அதட்டில் அதுவரை அந்தரத்தில் எவ்விய கால்களைத் தரையில் பதித்து பம்பரமாய் சுழன்றடங்கியது சுருளி.

“ஒண்ணுஞ் செய்யாது வா எம்பொறத்தாடி.. ஏவே.. எங்கனெ போய் ஒழிஞ்ச.. ஓவ்.. அங்கன ஆரு நிக்கது.. இந்தக் கழுதைய கொண்டுபோய் கட்டிப்போடு மொதல்ல”

வண்டிச்சத்தம் கேட்ட போதே சாமி சேர்வை புரிந்து கொண்டார். சுருளி குரைத்த வேகத்தில் கைகாலைக் கழுவிக்கொண்டு, துவரைக் குச்சிகள் வேய்ந்த படலை விலக்கியபடி தோப்பின் முற்றத்துக்கு வந்து கொண்டிருந்தார். அதற்குள் பெரியவர் சத்தம் கொடுத்து விட, நேரே  தன் வருகையை அறிவிக்கும் விதம்  ஒரு ஏல் சொல்லிவிட்டு சுருளியை அவிழ்த்துக் கொண்டு போய் நிழலிலாழ்த்தினார்.

“என்னப்பா… வேலை ஆகுதா!”

“அந்தால காட்டுக்குள்ள காய் பறிப்பு நடக்குதுங்க. பொழுது சாயுறதுக்குள்ள கீழ கொண்டு போகணுமின்னு ஆள்வள பத்திக்கிட்டு நின்னேன். வர்ற சத்தம் கேட்டதும் ஓடியாறேன்..”

“அதான சரி, ஆமா நேத்தெல்லாம் என்ன ஆஞ்சிய?”

“நேத்து நெல்லியக் கட்டி கீழ எறக்கி கொடுத்துவுட்டோமே. முக்கா வண்டி ரெம்பிருக்கும். பதமான கனிங்க”

பிள்ளைவாளுக்குப் பதில் கொடுத்துக் கொண்டே, நார்க்கட்டிலைக் கொண்டு வந்து பாக்குத்தடி வரிசையில் குறுக்கு வசமாய்ச் சாய்த்துப் போட்டுவிட்டார் சேர்வை.

“இதில இரிங்க…”

“இருக்கட்டும், விடப்பா.. ஏ.. சுந்தரம்பிள்ளே வா வந்து தாத்தாகிட்ட உக்காரும்… ஆருன்னு தெரியுதா.. மகன்வழிப் பேரன்”

“சாடை அச்சில அடிச்ச மாதிரில்ல இருக்காரு. வந்தமேனிக்கி நம்ம ச்சுர்ளிய கண்டு அசந்துட்டாரு போல.. பழகிட்டா ஒண்ணுங் செய்யாது. என்ன… சின்னவரே  சொகந்தானா!”

சுந்தரம் மெலிதாகச் சிரித்து வைத்தான். அவனுக்குச் சாமிச் சேர்வையிடம் எந்தப் பிடிப்பும் ஏற்படவில்லை. கிடா தடிக்கு மீசை, ஆளை அச்சமூட்டுவது போலிருக்கும் இருங்குத்திப் பார்வை, தடித்த கைகள், கொஞ்சமும் தன்மை இல்லாத வறட்டு மனிதன் என்றே முடிவு கட்டிக் கொண்டான்.

மண் கும்பான் நிறையத் தண்ணீரைக் குடித்து  முடித்ததும், தனக்கு எதிரே இருந்த கல்திண்டில் சாமிச் சேர்வையை உட்காரச் சொன்னார் கனகுப்பிள்ளை. ஊரில் யார்கிட்டேயும் அதிகம் பேச்சு வளப்பு வைத்துக் கொள்ளாத கனகுப் பிள்ளையும் சாமிச் சேர்வைகிட்டே மட்டும் வாய்க்கா, வரப்பு, தண்ணி, தாவணி, பஞ்சு, பருத்தி, பாண்டவர், கௌரவர் என்று எல்லாப் பழங்கதைகளும் பேசித் தீர்ப்பார். ரெண்டு பேருமாக வாய் வயனங்களும், ஆவலாதிகளும் பரிமாறிக் கொண்டிருந்த நேரத்தில், சுந்தரன் தோப்பு விடிலிக்குள் நுழைந்து உடை மாற்றிக் கொண்டு கிணற்றில் பாய்ந்து ஒரு நல்ல குளியல் போடலாமெனப் பதம் பார்த்துக் கொண்டிருந்தான்.

பால்போல் பொங்கி நிற்கும் தூசுதும்பு காண முடியாத அந்தக் கிணற்றுத் தண்ணீரில், ஓங்கி விழுந்து, குதித்துச் சாடி, விழுந்த வேகத்திலே ஆழத்தில் முங்கி, உந்திக்கொண்டு மேலேறி, கைகளை அசைத்து உடம்பை மிதவை ஆக்கிக்கொண்டு நெடுநேரம் ஊறிக் கிடந்தால், சொடக்கெடுத்த மாதிரி உடம்பெல்லாம் தளர்ந்து போகும். பசி கண்மண்ணைப் பிடுங்கும். சில மணிகளில் எல்லாம் சுந்தரன் ஆள் இளைத்து பருத்தது போல் ஆகிப் போனான். ஈரம் சொட்டச் சொட்ட அவன் கரையேறியபோது, திக்கறியாத விறகடுப்புப் புகையும், கறியைச் சுடும் கமறல் வாசனையும் அவனைக் கிறங்கடித்தன.

கனகுப்பிள்ளைக்குமே தோப்புக்கு வந்துவிட்டாரென்றால் எப்படியும் மங்கா அறுத்துக் கொதிக்கவிடும் சேவல்கறியும், அதன் காரத்தை தணித்துக் கொள்வதற்கு சீமைச் சாராயமும் கட்டாயம் வேண்டும். அதென்னமோ ஊரிலும் வீட்டிலும் சரி சைவப்பிள்ளையாக உலா வந்தாலும், ரகசியமாகப் பொத்தி வைத்திருக்கும் தன் நா ருசிக்கிடைக்கைகளை இங்கே வந்து திறந்து போட்டு, லம்பமாய் ஒரு ஆட்டம் ஆடிக்கொள்வார். பிறகு சந்தனமும் ஜவ்வாதும் பொக்காமல் பூசிக்கொண்டு, அப்போதுதான் ’எம்பாவாய்’ பாடி முடித்த வாயாக மலர மலர மலையை விட்டுக் கீழிறங்குவார்.

வெயில் அன்று அம்பலத்தில் ஏறி ஆடிக் கொண்டிருந்தது. முற்றம் வரைக்கும் தாழ்ந்து, கைநீட்டிக்கிடந்த மாமரக் கொப்புகளிலும் கிளைகளிலும் வெள்ளை வெள்ளையாய் பூப்பிடித்திருந்தன. இந்தப் பூக்கள் ஒவ்வொண்ணும் காய் கண்டு, காய்களெல்லாம் பழங்கண்டு தின்னுவிட வேணுமென்ற ஆசையில் பச்சைக்குளவிக் கூட்டமொன்று ஒய்ய்ங்கென்று இரைந்துக் கொண்டிருக்க, சுருளி அந்த வண்டுகளைக் கவ்விப் பிடிப்பது போல மிரட்டிக் கொண்டிருந்தது. தாத்தா கனகுப்பிள்ளைக்கும் தனக்கும் சாப்பாடு பரிமாறுவதற்கென்று வாழை இலைகள் ரெண்டை அரிந்து கொண்டு வந்து சேர்ந்தார் சாமிச்சேர்வை.

“ஏம்மா.. சோற்று சட்டிவள எடுத்துட்டாமா..” என்று அவர் குரல் கொடுக்கவும் கிழக்குப் பக்கமிருந்த கொட்டாரிலிருந்து மரகதப் பச்சையில் வெள்ளைப்பூ போட்டச் சீலையை நாட்டு உடுப்பாகச் சுற்றிக்கொண்டு, இரண்டு கைகளில்  சமைத்த கறிச்சட்டிகளோடு ஒயிலாக நடந்து வந்தாள் மங்கா.

மங்கா சாமிச்சேர்வை தனக்கென்று ரெண்டாவதாகச் சேர்த்துக்கொண்ட பெஞ்சாதி. மூத்தவடி பற்றி அவரிடம் எந்தக் குறிப்பும் கிடையாது. அதேமாதிரி இவளுக்கும் பிள்ளைகள் பூச்சிகள் என்று எதுவும் படவில்லை. ‘பின்ன என்னத்துக்கு இந்தக் கிழவனைக் கட்டீகிட்டு இந்தக் காட்டுக்குள் வந்து கிடக்காளோ இந்த ஓடுகாலி முண்ட’ என்று கனகுப்பிள்ளை ஏங்கு மூச்சாக யார் காதும் படாமல் தனக்குள் முணங்கிக் கொள்வதுண்டு.

தோப்புக்கு உள்ளாக அரை குறுக்கத்தில் பனமட்டையும் கம்பங் குச்சிகளும் சாக்குப் பாய்களும் கொண்டு சேர்வை உண்டாக்கின கொட்டாரில்தான் பல வருசங்களாய் மங்காவின் குடிபிழைப்பு. ஒன்று அதிர்ந்து ரெண்டாகத் தெரிகிற மாதிரி ஒரு சொல்லும் சாமிச்சேர்வை அவளிடம் பேசியதில்லை. சொந்த ஊருக்கோ அக்கம்பக்கத்து இடங்களுக்கோ ரெண்டு பேரும் சேர்ந்தாக்கில் புறப்பட்டுப் போனதாகவும் செய்தி கிடையாது.

தோப்பின் தென்கோடியில் மங்கா அவளுக்கென்று உண்டாக்கிக் கொண்ட குலச்சாமியான பூவாத்தாளைக் கும்பிடுவாள். அதிசயமாக அடிவாரத்தில் உக்கார்ந்திருக்கும் முனிக்குச் சாத்து கொடுக்கும் நாளையில் மட்டும் தனியாளாக ஓய்வொழிச்சல் பார்க்காமல் கீழிறங்கி தலையைக் காட்டிவிட்டுத் திரும்புவாள். மற்றபடி இந்த சாமி காரியங்கள் தவிர்த்து மங்கா என்றொருத்தி அங்கே உயிரோடு உலாவுவது பற்றி எந்த சொற்களும் வேலி தாண்டியதில்லை.

”உனக்கு சேவல் கறி ஒத்துக்குமா.. இல்ல மரக்கறி வேணுமா?”

எடுத்ததுமே ஒருமையும் அதிகாரமும் தொனிக்க தன்னிடம் கேள்வி கேட்கிறாள் என்ற வேகம் சுந்தரனை ஒரு அசை அசைத்துவிட்டது. இவ்வளவு பெரிய தோப்புக்கும், கிழவனின் சகல சொத்துக்களுக்கும் அதிகாரம் செலுத்தப் பாத்தியதைப்பட்டவன், நகரத்தில் படித்தவன், நாகரிக உடை உடுத்துபவன். நளினமாக மேலை மொழியில் பேசத் தெரிந்தவன். ஆங்கில நாளேடுகளில் எல்லாம் பக்க அளவில்லாமல் கட்டுரைகள் எழுதிக் குவிப்பவன் இன்னும் எவ்வளவோ அவனைக் குறித்து  அவனே மதிப்பீடு செய்து வைத்திருந்த பிரமாணங்களை எல்லாம் ஒரே அடியாக தரையில் தூக்கி அடிப்பது போல, “ஒக்காரு.. கைய நீட்டு.. இலையக் கழுவு..” என்று அவள் பாட்டுக்குக் அடுக்கிக் கொண்டே போனாள்.

யார் இந்த மங்கா? இவளையும் சாமிச்சேர்வையையும் பக்கம் பக்கமாக நிறுத்தினால் அப்பனும் மகளும் போலல்லவா  இருப்பார்கள். இவர்கள்தான் தாத்தா சொன்ன கணவனும் மனைவியுமா? யானையைக் கொண்டு வந்து கிட்டத்தில் நிப்பாட்டினால் இவளும் யானையும் ஒரே கருப்பில் தான் இருப்பார்கள். கலங்கல் இல்லாத முகம்தான். ஆனாலும் அதில் அப்பட்டமான பட்டிக்காட்டுத்தனம். தந்தத்தில் சீவின வளரித் தண்டுபோல கள்ள வீட்டுப் பெண்களுக்கே உண்டான திடகாத்திரமான உடம்பும், குணமும்… இருக்கட்டுமே என்ன திமிர்த்தனம் இவளுக்கு…

தனக்கு முன்னால் கனகுப்பிள்ளை உட்கார்ந்திருப்பது பற்றிக் கூட அவள் சட்டை செய்யவில்லை என்பதை யோசித்தபோது, யார் இந்த கருப்பு அரக்கி என்று அவன் மனம் துள்ளத் துடித்துக் கொந்தளித்தது.

 3

திராவிட முற்போக்குக் கட்சியின் சொத்து பாதுகாப்புக் கமிட்டியில் முக்கியப் பதவியில் இருந்தவருக்குச் சொந்தமான அந்த நிறுவனம், ஊருக்கு மேற்கேயுள்ள அகண்ட நிலபுலன்களை எல்லாம் சத்தமில்லாமல் வாங்கிப் போட்டபடியிருந்தது. விதைப்பும் விளைச்சலும் பட்டுப்போய், தொழில்வெளி என்று எதுவும் அமையாத பூமியில் கல்குவாரிகளும், செங்கல் சூளைகளும் நாளும் பொழுதும் கிளைத்து எழ, மேற்படியார் காதுக்கு, கண்ணுக்குக் குளிர்ச்சியாய் தோப்பு ஒன்று மலைக்கு மேலாக பழைய விவகாரங்களுடன் விற்பனைக்குக் காத்திருப்பது குறித்த செய்தி வந்து சேர்ந்தது. ‘நிறுவனம்’ வழக்கம் போல சொத்தின் பூர்வீகங்களை விசாரிக்க ஆரம்பித்தது.

மாடிப்படியில் இருந்து இறங்கும் போது, கனகுப்பிள்ளைக்கு கணுக்கால் நரம்பு சுண்டிவிட ரொம்ப தொலைவுக்குக் காலை தொங்க போட்டுக்கொண்டு பிரயாணம் செய்யவோ, நடக்கவோ கூடாது என்று குடும்ப டாக்டர் கண்டிப்பு போட்டு விட்டார். அந்த ஆடி மாதத்தின் போக்கு வரவுகளை வைத்து தோப்பு விளைச்சலை வீடேற்றிவிட்டு, அதே வேகத்தில் அதனைக் கைமாற்றிவிடலாம் என்று நினைத்திருந்தவருக்கு டாக்டரின் இந்த கண்டிப்பு இடுக்காய் வந்து சேர்ந்தது. சுந்தரன்தான் எதைப் பற்றியும் கவலைப் படவேண்டாம் நானே போய் தங்கியிருந்து எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வருகிறேன்’ என்று கனகுப்பிள்ளைக்கு நம்பிக்கை கொடுத்திருந்தான்.

ஆடிக் காற்றாடியில் மலை வழியாகப் பேரன் போகிறானே என்று நல்ல குதிரைக்கட்டுள்ள வண்டி ஒன்றை ஏற்பாடு சொல்லி, நாள் வீதம் எட்டணா சத்தம் பேசி போக்குவரத்துகளுக்குச் சலிக்காமல் உடன் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்று வழியனுப்பி வைத்திருந்தார் கனகுப்பிள்ளை.

முதல்நாளிலே சாமிச்சேர்வையாரின் எல்லா ஆகிருதிகளையும் மொத்தமாக சுந்தரன் அனுபவித்தான். சாராயத்தின் ஒவ்வொரு மடக்குக்கும் ஒரு வண்டி சுருட்டுப் புகையை ஊதித்தள்ளிக்கொண்டு, அது வெட்டவெளி முழுக்கச் சூழந்தடிக்க, உற்சாக போதையின் மிதப்பில் கனகுப்பிள்ளைக்கும், தனக்குமான நெடுங்காலத்துப் பழக்கங்கள், அவரை ஏய்த்து அழிக்க நினைத்தவர்களுக்குத் தான் கொடுத்த அடிகள், அதற்கான கோர்ட்டு வழக்குகள், சாபங்கள், விமோசனங்கள் என்று கதை கதையாய் அவிழ்த்துக் கொட்டினார் சாமிச்சேர்வை. பிறகு, ஒரு வளர்த்தியான கொட்டான் நிறைய இன்னும் கொஞ்சம் சாராயத்தை ஊற்றிக்கொண்டு தோப்பின் முக்கத்துக்குப் பக்கமுள்ள பரம்பில் ஏறி, காவலுக்குப் போய் உட்கார்ந்துக் கொண்டார். 

மங்கா வேலைகளை முடித்துவிட்டு, பூவாடை மணமணக்க கொட்டாருக்குத் திரும்பியிருந்தாள். சுந்தரனுக்கு அரங்கில் படுப்பதற்கு வசம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தாலும் இன்னும் தூங்கப் போகாமல் திண்ணையில் வந்து ஒருக்களித்துச் சாய்ந்து உட்கார்ந்து டிக்கின்சனின் “டே ஆப்டர் டுமாரோ’ வாசித்துக் கொண்டிருந்தான். அவனது தலைமாட்டுக்குப் பக்கம் இருந்த கரடி விளக்கைத் தூண்டிவிட்டுக் கொண்டே, “வேற என்னமும் வேணுமா” என்று மெலிதான குரலில் கேட்டாள் மங்கா. தூங்கும் கிணற்றை மீன்கள் அசைத்தது போலக் கலைந்துபோய் திரும்பிப் பார்த்தான்.

”இல்ல ஒன்னும் வேண்டாம்”

“சரி…”

அவள் திரும்பிப் போகவிருந்தாள். ஒரு பேச்சுக்குக் கூட அடுத்த வார்த்தை எதுவும் அவளிடமிருந்து ஏற்பட்டிருக்கவில்லை. என்ன மனுசி இவள் என்று நினைத்துக் கொண்டே, “ம்க்கும்..  லைட்டர் எங்கயோ வச்சுட்டேன். தீப்பெட்டி கிடைக்குமா?” என்றான்.

“கை எட்டும் தூரத்திலே விளக்கு எரியுதே..” என்று திரும்பி நின்று கேட்டாள்.

பதில் பேசாமல் தன் பாக்கெட்டுக்குள்ளிருந்த சிகரெட் பட்டியைத் திறந்து ஒன்றை அதில் பற்ற வைத்தான். நின்ற இடத்தில் இருந்தபடியே அவன் செய்கையை அவள் கவனித்தாள்.

”என்ன வாசிக்கிற..”

“சொன்னா உனக்குப் புரியுமா…”

“புரியுற மாதிரி சொல்லத் தெரியாதா?”

சுந்தரனுக்கு கடுமென்றானது. பட்டிக்காட்டுத்தனம் என்று எடைபோட்டிருந்த அவன் கணக்கு மூட்டையைக் கிணற்றைப் பார்த்து எரிந்தவன் போல, “தூக்கம் இன்னும் வரலை. நீ எதாவது சொல்லேன் கேட்கலாம்” என்று இமைகூட அதிராத முகபாவனையில் கேட்டான். அது வழக்கமான அவனது திமிர்த்தொனியோடான பேச்சில்லை என்பதை மங்காவும் புரிந்து கொண்டவளாக முறுவலித்தாள்.

“எங்கிட்ட கேட்டு உனக்கு என்ன தெரியணும்!”

அவள் தனக்குச் சரிக்குச் சமமாகக்கூட அல்ல அதற்கும் மேலேறிச் சென்று தன்னைச் சீண்டுவதை உணர்ந்தாலும் அவனுக்குள் ஏற்படும் இந்த மன உபாதையின் வலிமையை அனுபவித்துவிடத் துடிப்பவனாக திரும்பவும் பேச்சை வளர்த்தான்.

“உனக்குத் தெரிஞ்ச கதை எதாச்சும் சொல்லு”

“ம்… சொல்லலாமே.. இரு சுருளி பசியோட இருக்கும். அதுக்கு சோறு வச்சுட்டு வந்து, நிதானமா உனக்குக் கதை சொல்றேன்.”  

நாய்க்குச் சோறு வைத்துவிட்டு பிறகு என்னோடு வந்து பேசுகிறேன் என்கிறாள். நாயும் நானும் ஒன்றா? இல்லை.. இவள் நாய்க்கும் கீழாக என்னை இறக்கிப் போட்டு  துவம்சம் பண்ணுகிறாள். அரக்கி அரக்கி இவளை….

4

ரிசங்காட்டில் மிளகாய், பருத்தி விளைச்சல் சக்கைப்போடு போட்ட நேரத்தில் அடிவாரம் வழியாக மேற்கே வண்டி கட்டிக்கொண்டு போகிற வியாபாரிகள் எண்ணிக்கை பார தூரமாய் அளந்துவிட முடியாதபடி இருக்கும். ஒரு பக்கமிருந்து கருப்பட்டி பாரமும், இன்னொருபுறம்  பருத்திப் பொதிகளும், வேறு வேறு ஊர்களில் இருந்து வந்துசேரும் சரக்கு வண்டிகளும்  எதிரெதிர்பட நுழைந்து வெளியேறும் பரபரப்பான கணவாய்ப்பாதை அது. கண்ணுக்கு நேராக முகடுகள் நின்று முட்டுவதுபோலத் தோற்றம் தரும் அந்த கணவாய் ஏற்றத்தில் தான் சமீப காலமாகச்  சேட்டை அடித்துக் கொண்டிருந்தது முனி. 

முனி நடமாட்டம் பற்றின பேச்சுக்கள் பரவினதும் வம்பும், நட்டமும் எதற்கென்று வியாபாரிகள் மலையைச் சுற்றி எட்டூர் தாண்டி நாடு சுற்றிப் போகும் ஆற்றங்கரை வழிக்கு வண்டிகளை மா(ற்)றிக் கொண்டார்கள். இந்த சங்கதியைக் கேள்விப்பட்ட ஊராண்ட தளவாய்க்கு இது பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியது.

“காட்டுக் களவழி போறவரின் கண்ணுக்குச் சிக்காது நிழல் போலக் காவல் காக்கும் நம்மோட ரேணுகை உடனிருக்க ஏமாப்பு காட்டும் இந்த இளைய முனி யாரடா? அவனை ஒரு கை பார்த்துவிட வேண்டாமா!” என்று கொந்தளித்தார் தளவாய் கோபாலன்.

“நூறு கொல்லவாருக்களை இழந்தாலும் அந்த ரத்தத்திலே நடந்துபோய் இன்றிரவே அந்த முனியைப் பலியெடுப்பேன். வருசமலைக்கு வழி திறப்பேன். இது அந்த ரேணுகையின் மீது ஆணை” என்று மாசி அமாவாசை தினத்தில் பாளையத்து ராசாமார்கிட்டே உத்தரவு வாங்கிக்கொண்டு மாடு மேய்க்கிற கூட்டம் போல மலையடிவாரத்தில் மொத்தமாக இறங்கியது தளவாயின் படை.

குதிரைகாரன் ரசல்தார் ராவுத்தருடன், கூடைக் கருப்பனையும் அவனோடு நாலுபேர் கொண்ட கொத்தையும் அனுப்பி, அடிவாரத்தை ஒரு சுற்றிக் கண்ணோட்டம் பார்த்துவரக் கட்டளை இட்டிருந்தார் தளவாய் கோபாலன். ஆறு நாழிகை கழித்துத் திரும்பி வந்த ரசல்தாருக்கு வாயிலிருந்து பேச்சு எழவில்லை. கூடைக் கருப்புதான் கண்ட கோலங்களை விவரிக்கத் தொடங்கினான்…

“ஆடிச் சலங்கை மின்ன.. அங்கமெல்லாம் சல்லியம்போல்  சுடலைப் புழுதி, தேர் போல ஏறு நெத்தி, அதில் சாமுண்டியாகப் புரளும் சடை, பிங்கலப் புண் பூட்டின கையிரண்டும் கெட்டிப்பனை, காலிரண்டும் கருமருது, மலையெல்லாம் படைதிரண்டு எட்டியெட்டி அடியெடுத்து, எரியும் கொள்ளி கொழுந்தாய் எந்திரிச்சு அலையுது முனி…” என்று கூடைக் கருப்பன் கண்டு வந்த கண்ணோட்டத்தைச் சொல்ல, தளவாயோட சேர்த்து மொத்த கூட்டத்துக்கும் திகிலடித்துப் போனது. ஆனாலும், சூளுரைத்து வந்த வரைக்கும் வழிமடக்கி ஒரு கை மடக்கு மடக்கிப் பார்த்துவிட்டுத்தான் திரும்புவது என்ற முடிவோடு இருந்தார் தளவாய்.

மேய்ச்சங் காட்டு மாடுகளை எல்லாம் கணவாப் பாதைக்குள் பத்தி விட்டு முதலில் வழியைத் துப்புரவு பண்ணிவிட முடிவெடுத்தார். முனிக்குப் பயந்து  ரஸ்தாவிலே வணிகர்கள் விட்டுவிட்டு ஓடிப்போன சக்கடை வண்டிகளின் பைதாக்களை ஒன்னு ஒன்னாகக்  கழற்ற உத்தரவிட்டார். சும்மாடாய்க் கட்டின காடாத்துணியால் அதை அங்குல அங்குலமாய் சுற்றி, எரிகாலி எண்ணையைக் குளுர ஊற்றிவிட்டு, வண்டிப் பைதா மொத்தத்தையும்  திக்குக்கு ஒன்றாக நிறுத்தச் சொன்னார். இன்னொரு பக்கம் உருளியில் புலச்சி உப்பும், கரித்தூளும் தட்டி இடித்து நெருக்கி, வேட்டு வெடிக்கச் சொன்னார்.

வேட்டு வெடிச்சத்தம் கேட்டு மாட்டுக்கூட்டம் மொத்தமும் மிரள ஆரம்பித்தது. சரியாக அந்த நேரத்தில் தடதடவெனத் தப்பைத் தட்டிக் கொண்டே படைகளும் புக, நாலா பக்கமிருந்தும் தீப்பைதாவை கணவாய் நோக்கி உருட்டச் சொன்னார் கோபாலன். வழியெங்கும் புல்லு செத்தைகளை எரித்துக்கொண்டு பைதாக்கள் திரண்டு உருண்டன. வேட்டுச் சத்தத்தில் மிரளச்செய்து, தப்புத் தாளத்தால் அகலத்தைக் குலைத்தும், தீயைக் கண்டு திக்கு முக்காடவும் விட்டதில் திமுதிமுவென்று வேகமெடுத்து, பாறைச் சண்டுமுண்டுகளை எல்லாம் இடித்துத் தள்ளிக்கொண்டு மறித்துக் கிடந்த தடுப்புகளை எல்லாம் உடைத்துத் தள்ளிக்கொண்டு ஒரே போடாக மலையை நொறுக்கிவிடக் கிளம்பியது போல முன்னேறியது மாட்டுக்கூட்டம். ஒன்னு மீது ஒன்னாக ஏறி விழுந்து, பூதங்கள் ஒவ்வொன்னும் மொத்த மொத்தமாகக் குகைகளை விட்டு ஒரே காலத்தில் புறப்பட்டுப் போவது போல,  கரடிக்கூட்டம் மல்லன் சண்டையில் ஒன்றை ஒன்று அடித்து குத்திக்கொண்டு சாவது போல அந்த இடமே அப்படி ஒரு சமர்க்களமாய் மாறியது.

தளவாய் முகத்தில் புன்னகை அரும்பியது. ஏக காலத்தில், வண்டிப்பாதையை அதுநாள் வரை அடைத்துக் கொண்டு உபத்திரவம் பண்ணிக் கொண்டிருந்த முனியை நேரே மோதாமலே சாய்த்து விட்ட தோரணை அவரிடம் அகப்பட்டது. அதேநேரம், கிளம்பின புழுதியிலும் எரிந்த தீயின் வெளிச்சத்திலும் ஆங்காரப்பட்டு மந்தையைக் குலைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து அடிவாரத்திற்கு இறங்கி வந்து நின்றது முனி.

ஓங்காரமாய் துள்ளிக் குதித்து, முள்ளி, வேல மரங்களை  எல்லாம் வேரோடு பிடுங்கி வீசி, பாறைக் குன்றுகளைப் பொடிப்பொடியாய் போட்டுடைத்து, அப்படியும் ஆத்திரம் அடங்காமல் ஓடிவந்த மாடுகளை எல்லாம் திமிலைப் பிடித்து தூக்கி எறிந்து பந்தாடி… முனி செய்த இந்த அட்டகாசங்களை எல்லாம் கண்ணால் பார்த்த மாத்திரத்தில் தளவாய், “இதுவரை கண்டெடுத்த ஏழு முனி மாதிரியில்ல… ஏழுக்கும் அப்பன் இந்த எட்டாம் முனி. இதை நேரடியில் நின்னு அடிக்கணும். தாய் ரேணுகை நமக்கு பலம் கொடுப்பார்”  என்று மண் நோக்கிக் கும்பிட்டார்.

அந்த நேரத்தில் கூடே இருந்த ஆனையூரானான கூடைக்கருப்பு, நெனைப்பது போல் இல்லை, இது காவலுக்கு மீறி சவுக்கடிபட்ட கழுவனோ, கோட்டைக்குக் கல்லெடுக்க மலை மலையா அலையும் கள்ளனோ அல்ல. இந்த முனி ராசமுனி. அதோட தேட்டம் என்னன்னு தெரியாம அழிக்க நெனைக்கிறது  அதிகிட்டயே நம்ம உசிர அடமானம் வைக்கதுக்குச் சமம். அணைஞ்சு பேசி அது என்ன சாத்து கேக்குதோ அதக் குடுத்துட்டு இங்கயே அடிவாரத்துலே அதைக் குடியமர்த்துவது தான் நாம் காணும் நல்ல வழி” என்று  தன் குறியைச் சொன்னான்.  

குழப்பி அடித்த மனசோடு தளவாய் கோபாலன் அந்தத் திட்டத்துக்குச் சம்மதித்தார். பொதினிக்கும் வருச மலைக்கும் நேர் நடுவே கணவாய்க்கும், அடிவாரத்துக்கும் நட்டநடுவே கிடாரியும், கன்றும், கெடாவும் பலி விட்டு, பொன், பொருள், பூமி என்று கேட்டதெல்லாம் கொடை கொடுத்து, சந்தனப்பொட்டு வைத்து, கடைக்கண் மையிட்டு, கல்கட்டு மோதிரம், கண்டி, சரப்பணி, மோகன மாலைகள், வண்டிக் கடுக்கண் அணிவித்து, இடையில் குறுவாளும், கையிலே வேல்தடியும், குறுக்காய் புஷ்ப மாலை சூட்டி, யானையும், ஒட்டகமும் முன்னால் செல்ல, மேல்முரசும், பேரிகையும், வாங்கும் ஒலிக்க, பன்றிக் குதிரைகளை நாட்டியம் ஆடவிட்டு, பாய்ச்சல் குதிரைகளை வீதியில் ஓடவிட்டு கொண்டாட்டமாய் கொடுக்கப்பட்டது எட்டாம் முனி கேட்ட அத்தனை சாத்தும். எல்லாம் கொடுத்தும் முடித்த பிறகு தளவாயைப் பார்த்து, “கேட்டதெல்லாம் கொடுத்தாய் ஆனாலும் ஒரே ஒரு மனக்குறை” என்று சுண்டி முகம் சுருக்கியது முனி.

“தொலைத்த பொருளை தேடித்தான் இந்த மலைக்கு வந்தேன். வந்துமென்ன என் வேலை ஆன பாடில்லை. எங்கேயோ யாரோ என் பொருளை அபகரித்துக் கொண்டு போய் அடைத்து வைத்திருக்கிறார்கள். அதைத் திரும்பப் பறிக்காமல் எனக்குத் தூக்கமில்லை. நீ கொடுத்த ஊட்டுக்கு உன் பாதையை உனக்குத் திறந்து கொடுத்தேன். அதன் காவலும் ஆகி காத்து நிற்பேன். என் ஒரே ஒரு கோரிக்கை இந்த வழிப்பாதையில் போகும் வண்டி சனமெல்லாம் தான் கொண்டு போகும் பொருள் இன்னது தான் என்று எனக்குத் திறந்து காட்டிவிட்டே நாடு கடந்து போகணும் என்ற ஒரே ஒரு தேட்டம் கொடு எனக்குப் போதும் என்றதும், ‘சொன்னது சொல்லாக அப்படியே ஆகும்’ என்று மனமுவந்து அந்த இடத்திலே எட்டாம் முனிக்குக் கோயில் கட்டிக் கொடுத்துச் சென்றார் தளவாய் கோபாலன்.

5

லைகளும் சருகுகளும் காய்ந்து கிடந்த தடத்தில் மங்கா நடந்து போவதும், ஏனத்தில் சோற்றைப் போட்டுவிட்டுச் சுருளியை உசுப்ப, அது தன் சங்கிலியை அத்துவிடும் வேகத்தில் தட்டைப் பார்த்துப் பாய்வது வரையிலான சங்கதிகளை அந்தக் கும்மிருட்டிலும் அதனதன் ஓசைகளிலிருந்தே சுந்தரன் புரிந்து கொண்டான். கேதுகளின்றி வானத்தில் சந்திரமானம் அசைவின்றி தெளிந்து  நிற்க, இரண்டாவது சிகரட் புகை அவன் கையிலிருந்து துவங்கி மேலெழும்பிக் கொண்டிருந்தது. சருகுகள் இப்போது மங்கா நெருங்கி வரும் ஓசையை அறிவிக்க, “இன்னைக்குள்ள வந்துடுவன்னு நம்பல” என்றான்.

அவன் சீண்டலுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் கொட்டாருக்குள் நுழைந்து, ஒரு நீளமில்லாத கோணியை எடுத்துக்கொண்டு திண்ணை அருகே வந்து சுவரோடு சுவராகச் சாய்ந்து வாகாக உட்கார்ந்தாள் மங்கா.

சுந்தரன் அவள் முகம் பார்க்க எதிரே சாய்ந்து உட்கார்ந்து கொண்டு அப்போது கால்மாட்டுக்கு வந்துவிட்ட கரடி விளக்கைக் காலாலே கிட்டத்தில் இழுத்து, அவள் உட்கார்ந்திருக்கும் இடத்தில் வெளிச்சம்படும்படி வைத்துக் கொண்டான்.

“ம்ம் சொல்லு..”

மதகின் வால்வுகளைத் திருகியதும் சீறிப் பாய்ந்து கொண்டு தண்ணீர் வெளியேறுவது போல அவள் ஒரு கதையைச் சொல்லத் துவங்கினாள்.

“ரொம்பக் காலத்துக்கு முன்ன, இந்த மலை அடிவாரத்தில வாழ்ந்த காவல்காரங்கதான் வம்சாவளியா கோட்டை காவலுக்குப் போவாங்களாம்… அப்படி காவல் காக்குற கூட்டத்தோட தலைவருக்கு ஒரு அழகான மக இருந்தாளாம். அவ பேரு பூவாத்தா”

“ம்ம்…”

”அவ ஆளு நடையில அன்னமயில், நிறத்துல கோவப்பழம், கரண்டக்கால் வரைக்கும் கருகருன்னு கூந்தல்.”

டிக்கின்சன் வாசிக்கும் மமதையோடு, “காலு வரைக்குமா..” என்று அவன் அவளைச் சீண்டினான்.

“ஆமா.. அவ்ளோ நீட்டத்துக்கு வச்சிருந்தா. ஒருநா அவ குளத்துக்கு குளிக்கப் போனப்ப ஒரு பெரிய சூறக்காத்து வந்து அவளச் சுத்திடுச்சு..”

எந்தத் தடையீடும் இல்லாமல் இயங்குவது போல, அவன் கேட்டதற்குப் பதில் சொன்ன வேகத்தில் எந்த நிறுத்தமும் இல்லாமல் அதே தொனியில் அவள் தன் கதையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள். சுந்தரனும் அத்தோடு சேட்டைகளை நிறுத்தியவன் போல அவள் சொல்லின் மிதிகளைப் பற்றி பின் நடப்பவனாக அமைதிப்பட்டான்.

“காத்தடிச்ச வேகத்துக்கு காய வச்சிருந்த அவ தலமுடி வேலிக் கள்ளில போய் மாட்டிடுச்சி. இதை எட்ட இருந்து பார்த்த உன்ன மாதிரி ஒரு ராசா வீட்டுப் புள்ள, கிட்டப் போய் ஒதவப் போனார்.”

“…”

“அப்போ அந்த பூவாத்தா அந்நிய ஆம்பளை என் கூந்தல தொடக் கூடாது.. நீங்க கிட்ட வராதீங்கன்னு தடுத்திட்டா”

“ம்ம்..”

”அவ சொன்னதைக் கேட்டதும் என்னை யாருன்னு உனக்குத் தெரியுமான்னு ராசா மகன் கேட்டான், “உங்க கோட்டையைக் காவல் காக்கும் தலைவன் மகளுக்கு, ராசா மகன் யாரு, களவாணிப் பயல் யாருன்னு கூடவாத் தெரியாமப் போகும். தெரிஞ்சித்தான் சொல்லுதேன் தொடாதீங்கன்னுட்டா..”

“ஓஹ்..”

”நாம இன்னார்னு தெரிஞ்சும் இவ தன்னோட கூந்தலத் தொடக்கூடாது எட்ட நில்லுன்னு சொல்லிட்டாளேன்னு ராசா மகனுக்கு மட்டமான கோவம். ஆத்திரத்துல என்ன செஞ்சாரு தெரியுமா? தாங் கையில இருந்த அரிவாள எடுத்து, அதாலயே கள்ளியில மாட்டியிருந்த பூவாத்தா கூந்தல அப்படியே அறுத்து விட்டுட்டாரு.”

 “சரியாத்தான செஞ்சிருக்கான்!”

மங்கா சுந்தரனைத் திருத்தமாக நேருக்குநேர் ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கதை சொல்வதைத் தொடர்ந்தாள்..

“நமக்குச் சரியானது எல்லாம் நம்மளைச் சுத்தி இருக்குறவங்களுக்கும் சரின்னு நினைச்சுக்கக் கூடாது… புரியுதா?”

அவன் பேசவில்லை.

கதை சொல்கிறேன் பேர்வழி என்று இவள் தன்னைக் கட்டு மந்திரம் போட்ட நாய்க்குட்டி மாதிரி அல்லவா அடக்கிக் கொண்டிருக்கிறாள் என்ற எண்ணம் சுந்தரத்தின் அடிமனத்தில் தத்துவப் போர் ஒன்று துவங்கியது. கணத்தில் அவள் தன்னை நாய்க்கும் கீழாகத்தான் நடத்துவாள் என்ற எண்ணம் மேலிட்டுவிட மறுவார்த்தை எதுவும் பேசாதவனாக அவன் நனவிலியாகித் தொடர்ந்தான்.

“ஆசையா வளர்த்த கூந்தலை ராசாமகன் வெட்டிட்டாரேன்னு கலங்கிப்போய் தன் வீடு திரும்பினவ “நடந்த கதை’ ஒன்னு விடாமல் அப்படியே தன் ஐயாமார்கள் கிட்டேச் சொன்னா. ”

“அவங்க என்ன பண்ணாங்க?”

”அவங்க என்ன பண்ண முடியும்? ராசா மகன எதிர்க்க முடியுமா? இல்ல வயசுப் பொண்ணோட கூந்தலை இப்படி ஆய்ஞ்சு விட்டீங்களே இது முறையான்னு கேட்கத்தான் முடிஞ்சதா? விசயம் வெளியிலே  தெரியாம உள் மனசுக்குள்ளே(யே) போட்டு  பூட்டி வச்சுட்டாங்க…”

“ம்ம்…”

“இதுக்கிடையில், கோட்டையிலேருந்து ராசாவோட தளபதிகள், கோட்டைக்காவல் தலைவனைக் கூப்பிட்டு அனுப்பி விட்டார். ’இப்படி உங்க வீட்டுப் பொண்ணு ஒன்னை ராசாமகன் ஆசப்படுறாரு. இன்னும் ஒரு வாரத்தில உங்க சம்மதத்தைச் சொல்லி அனுப்புங்க’ன்னு கட்டளை வச்சிட்டாரு”

“…”

“என்னடா இது மகன் நம்ம வீட்டுப் பிள்ளைய அவமானப்படுத்தி அனுப்பினான் அன்னைக்கு. பொறுத்துகிட்டம். இப்ப அவளை பொண்ணு கட்டிக்கொடுன்னு கெடு வைக்கிறாரே ராசான்னு ஒரே கோபமும் கொந்தளிப்புமா இருந்தார் கோட்டைகாவ தலைவர். அவரை விட பூவாத்தாளுக்கு முறைப்பட்ட மாமனுக்கும் அவள் அண்ணன்காரனுக்கும் பலியான கோவம். எல்லாருமா சேர்ந்து அவங்க ரெண்டு பேரையும் அடக்கி வைக்க, மொத்த குடும்பத்துக்கார பெரிய ஆம்பளைகளையும் கூப்பிட்டு அனுப்பினாரு காவல் குடும்பத்து மூப்பரு.”

“…”

“இந்த ராசா குடும்பத்துக்கு நன்றியே இல்லை. நாம தலைமுறை தலைமுறையா உயிரப் பணயம் வைச்சி இந்த ராசாங்கத்த காபந்து பண்ணியிருக்கோம். ஆனா இவங்க நம்ம வீட்டுப் புள்ளய நம்மளயே தூக்கிக் கொடுக்கச் சொல்லுறாங்க. என்னதான் நாட்ட ஆளற ராசான்னாலும்  அவங்க சனமும் சாதியும் வேற; நம்மளோடது வேற. இன்னைக்கு மழவராயர் வீட்டுப் பொண்ணைக் கேட்பாரு. நாளைக்கு வதும்பார் வீட்டுப் பொண்ணக் கேட்பாரு. குடுத்துட்டேவா இருக்க முடியும். அதனால நாம இந்த விசயத்துல ராசா சொல்படி நடக்கக் கூடாது. அதேநேரம், ஆத்தரத்துல அறிவ விலக்கவும் கூடாது. நா ஒரு முடிவு கட்டிருக்கேன். நீங்க எல்லாரும் கட்டுப்படுறீங்கன்னா அது என்னன்னு சொல்றேன் என்று எல்லாரையும் பார்த்துக் கேட்டாரு மூப்பன்.”

“அவங்கல்லாம் என்ன சொன்னாங்க..?”

“என்ன சொல்வாங்க பெரிய ஆம்பளைங்க எல்லோருமா கலந்து பேசி, “நமக்கு நம்மச் சாதியோட கௌரவம்தான் முக்கியம். ராசா மகனுக்கு நம்ம பொண்ண கட்டி கொடுக்கக் கூடாது. அதே சமயம் அவரப் பகைச்சிட்டு வாழவும் முடியாது. அதுபடிக்கு நாள மறுநாள் வார வெள்ளிக்கிழமை ராத்திரியில எங்கள் வீட்டு பொண்ண வில்வண்டில  வச்சி அனுப்புறோம். அவளுக்குச் சீரா ஆடு, கோழி, அரிசிப் பெட்டி, வெல்லம், வாழைப்பழம், வெற்றிலையோட மஞ்சளும் முக்கோணப் பதக்கம் வச்சத் தாலியும் கொடுத்தனுப்பவம். ஆனா, கூட நாங்க யாரும் வரமாட்டோம். வண்டிக்காரன் மட்டும்தான் வருவான்னு சொல்லி அனுப்புவோம்னாங்க.”

“கட்டிக் குடுக்க மாட்டோம்னு தானே மொதல்ல பேசினாங்க!”

“ஆமா, ஆனா அவங்க போட்ட திட்டம் தான் இது!”

“என்ன திட்டம்…”

“வெள்ளிக்கிழமை அன்னக்கி காலையில, பூவாத்தாளை குளிப்பாட்டி, புதுச்சேலை உடுத்தச் சொல்லி, அழகா சோடிச்சு, சாமி கும்புடச் சொன்னாங்க. ஆனா, பூவாத்தாளுக்கு நம்மளை தன் ஐயாவும் அண்ணமாரும் என்ன செய்யப் போறாங்கன்னே ஒண்ணும் புரியலே.”

“ம்ம்ம்..”

“காவக்காரங்களோட மூப்பன் வீட்டுல ஒரு பெரிய மரிசல் இருக்குமாம்.”

“மரிசல்னா?”

“மரிசல்னா, தானியம்லாம் போட்டு சேர்த்து வைக்கிற பெரிய கூடம். மூப்பன் வீட்டுல இருந்த மரிசல், ரொம்ப பெரிசு. அதுல நூறு இருநூறு கோட்டைத் தானியம் வீசலாம். மகாராசாவுக்கு வரிக்குப் பதிலா அளந்து வாங்குற தானியத்தையெல்லாம் அதுலதான் போட்டு வைப்பாங்க. அந்த வருசம் வரி பிரிச்ச காடக்கண்ணியை மரிசல் முழுக்க நெரப்பி வச்சிருந்தாங்க. காடக்கண்ணியோட தொலி வழுவழுன்னு பட்டுமாதிரி உருட்டையா இருக்குமா! அது குமிஞ்சி கிடக்கிற இடத்துல காலையே வைக்க முடியாது. ஒரு சாக்கு நிறைய காடக் கண்ணிக்குள்ள ஒரு பனங்காயைத் தூக்கிப் போட்டா, அது வழுவி வழுவி சாக்குக்கு அடிலே போயிரும். அப்படி வழுக்கும். பூவாத்தாளை கூட்டிட்டுப் போன மூப்பன் அவரு வீட்டுல இருந்த காடக்கண்ணி மருசல்மேல அவள ஏறி நிக்கச் சொன்னாரு. நின்னவள வானத்தப் பார்த்து கும்புடுன்னு சொல்லிட்டு அவ காலடில இருந்த பலகையை ஓங்கி ஒரு தட்டு தட்டினாரு மூப்பன். அவ்ளவுதான் பலகை தாந்து விழவும் பூவாத்தா மரிசல் உள்ள விழுந்துட்டா.”

“த்சோ…”

“உள்ள முங்கி முங்கி மரிசலுக்குக் கீழே அடியாழத்துக்குப் போனவ, தன்னைக் கொல்லத்தான் இத்தனை வேலையும் பார்த்தாங்களா தன்னோட அப்பனும் அண்ணன்மாரும். அட சண்டாளப் பாவிங்களா.. இதுக்கு என் தலமுடிய வெட்டினாலும் என்னையே கட்டிக்கிறேன்னு சொன்ன அந்த ராசா எவ்வளவோ மேலயேடான்னு கத்திக்கிட்டே மூச்சுத் திணறி செத்துப்போனா!”

“செத்தே போய்ட்டாளா!”

“ஆமா…”

“…..”

“பூவாத்தாளை கொன்னுட்டு, அன்னக்கி ராத்திரி மூப்பன் வீட்டு வில் வண்டியில ஒரு பெரிய பெட்டிய ஏத்தி, அதுக்குள்ள ஒரு பொட்டைக் கழுதையை வச்சு பூட்டி அரண்மனைக்கு அனுப்பி விட்டுட்டாரு.”

“கழுதையவா!”

“ஆமா, ராசா மகனுக்குப் பொண்ணா, வண்ணான் கழுதையப் புடிச்சு கட்டி அனுப்பி வச்சாங்க. அதோட காவக்காரங்க குடும்பம் எல்லாம் ராவோடு ராவா, ஊரையே காலி பண்ணிட்டு போய்ட்டாங்க. அப்படிப் போனவங்க எல்லாரும் அவங்க போன ஒவ்வொரு எடங்கள்ளயும் பூவாத்தாள வேற வேற பேர்ல சாமியாக்கி, படையல் வச்சி, காடக்கண்ணிய இடிச்சி மாவிளக்குப் போட்டும் கும்புட ஆரம்பிச்சாங்க..”

“அவங்க போய்ட்டாங்க சரி, அந்த ராஜா மகனுக்கு பூவாத்தா என்ன ஆனான்னு கண்டுபிடிக்கத் தோணலயா?”

“தோணாமலா… கழுதையப் பார்த்து பொல்லாத கோவம் வந்து, அத்தன பேரையும் கொல்லணும்னு கிளம்பினாரு. ஆனா, மொத்த ஊரும் காலியா கிடந்த சேதி அவர இன்னும் கோவப்படுத்துச்சி. மொத்த கோபமும் ஒன்னா சேர்ந்தாலும் அவர் அடிமனசுக்குள்ள பூவாத்தா எங்க எங்கன்ற கேள்விதான் அரிச்சுக்கிட்டே இருந்துச்சு.. அவள எப்படியும் கண்டுபிடிச்சே ஆகணும்னு ஊரைவிட்டுப் ஓடிப்போன ஒவ்வொருத்தரோட காலடியையும் பின்னால் விட்டு ஆளனுப்பி தானும் கிளம்பிப் போனாரு. போனது மட்டுமா போன இடங்கள்ல அவர் செஞ்ச தும்பமும் கொடுமயும் ஒண்ணா ரண்டா?”

“என்ன பண்ணாரு ராசா.. சொல்லு…”

“அத இன்னொரு நாளைக்கு சொல்லுறேன் இப்ப நீங்க தூங்குங்க.. பனி முட்டிகிட்டு வருது. காலயில வண்டிகட்டிக் கிளம்பணும்ல..” என்றபடி எழுந்து தன் கொட்டாரை நோக்கி நடக்கத் துவங்கினாள் மங்கா.

“ஏ.. சொல்லிட்டுப் போ.. எனக்கு இன்னைக்கு தூக்கமே வராது… இப்படிப் பாதில விடாத..” என்று மங்காவை ஏசத் துவங்கினான். அவள் சுந்தரனை ஒரு எறும்பாகக்கூட மதியாதவளாக விசிரென்று இருளில் மறைந்து காணாமல் போனாள்.

6

லையின் தென்திசையில் கல்லாற்றின் ஒரு புடையுள் ஆள் நுழைய அஞ்சும் நாகங்கள் வாழும் தாழம் புதர்களுக்கு மத்தியில், மஞ்சளும் செஞ்சாந்தும் பூசி, குமித்து வைத்திருக்கும் பூக்குவியல்களுக்கு நடுவே அலங்காரப் பொலிவாய் முகம் பூத்திருந்தாள் பூவாத்தாள்.

நாலாம் மனிதர்கள் எட்டிப் பார்த்திராத அந்த ஈற்றுப்புரை முற்றத்தில் பொட்டு வைத்து, பூ முடிந்து, பட்டு உடுத்திக்கொண்டு புகைக்கு மத்தியில் பொங்கல் விட்டுக் கொண்டிருந்த மங்காவை அதற்குமுன் அப்படியொரு தோரணையில் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

தூங்கி எழுந்திரிந்து, தன் காலடியில் ஏழெட்டு குஞ்சுகளைச் சேர்த்துக் கொண்டு மேயும் தாய்க்கோழியையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் சுந்தரன்.

“பல் தேய்க்க வேப்பங்குச்சி கொண்டாரவா..”

புடணிக்குப் பின்னாலிருந்து சாமிச்சேர்வையின் வெங்கலக் குரல் வந்து விழுந்தது. நேர்கொண்டு அவரைப் பார்க்காமலே, ‘இல்ல, நானே வரேன்’ என்று எழுந்து நடந்து போனான் சுந்தரன்.

மங்கா எப்படியும் தனக்கு முன்பாக எழுந்திருப்பாள். இங்கேதான் எங்கேயாவது நின்றுகொண்டு தன்னைக் கவனித்துக் கொண்டிருப்பாள் என்ற  யோசனையோடு கிணற்றடியில் முகங்கழுவி, வாய்க் கொப்பளித்துக் கொண்டே கொட்டாரின் வாசலை கண்களால் ஒரு அலசு அலசினான்.

”இந்தாங்க வெறும் வவுத்தோட இதை ஒரு நாலு மடக்கு குடிங்க.. ”

சேர்வை தட்டில் வைத்துக் கொண்டுவந்து கொடுத்த நீத்துபாகத்தையும் கருப்பட்டியையும் மறுக்காமல் வாங்கிக்கொண்டு திர்ணையில் போய்ச் உட்கார்ந்தான்.

“ராவுல ஒறக்கம் நல்லமாரியா வந்துதா”

“ம் வந்துது”

“எங்கன ஒரே வம்பா அளந்துட்டு இருந்தாளா ஒறங்க வுடாம…”

“அதல்லாமில்ல.. கததான் சொன்னது”

“அந்தக் கூறுகட்டதுக்கு என்ன தெரியும்னு அவ வந்து உங்களுக்குக் கத சொன்னாளாம்.”

“உங்க சாமிக் கததான்.”

“எங்க சாமிக்கதயா.. அந்தச் சிறுக்கிக்கு அதெல்லாமெங்க தெரியும். என்னமாது ஔறிருப்பா” என்றபடி தன் தலையைச் சுற்றின வேட்டவாளியைத் துண்டை உதறித் துரத்தினபடி கிணற்றடியை நோக்கி நடந்து போனார் சேர்வை. அந்த நேரத்தில் மாஞ்சோலைக்குத் தென்புறத்திலிருந்து கணகணவென வெங்கல மணிச்சந்தம் ஒலிக்க மங்கா இருக்கும் இடத்தை சுந்தரனுக்குப் பிடிபட்டது.  இந்த விடிவெளிச்சத்தில் புதர்மண்டின காட்டுக்குள் தனியே போய் என்ன செய்து கொண்டிருப்பாள், நேரில்போய் பார்க்கலாமா வேண்டாமா என்ற யோசனையோடே தன்போக்கில் பூவாத்தாளை நோக்கி நடக்கத் துவங்கினான் சுந்தரன்.

சித்திரையில் மலர்ந்து குவிந்த வேப்பம்பூக்கள் பாதையெங்கும் சிதறிக் கிடந்தன. அதன் நறுமணம் காட்டுயிர்களுக்குக் காமவேட்கையும் களிப்பையும் எழுப்பும் என்று எங்கோ வாசித்தது அவன் நினைவுக்கு வந்தது. இடதுபக்கக் கல்கட்டில் அரச மரமும் வேம்பும் ஒன்றை ஒன்று பின்னிக்கொண்டு நின்றன. வட இந்தியர்கள் அரச மரத்தை விருகடிராஜா என்று அழைப்பது அவனுக்கு நினைவுக்கு வந்தது. ராஜாவுக்குப் பெண்ணை மணம் முடித்துக் கொடுப்பது போல வேம்புக்கும் அரசமரத்துக்கும் தாலி கட்டும் சடங்குகள் மலைக் கிராமங்களில் நிலவுவது பற்றி அவன் அறிந்திருந்தான். இரண்டு மரங்களும் தழுவிக்கொள்ளும் காலத்தில் பெண்கள் கருவுறுவதும், அதை அறிவிக்கும் விதமாக வேட்டாளிக் குளவி அம்மரங்களில் கூடு கட்டுவதையும் நாட்டுப்புற பாடலான தோட்டுக்காரி கதையில் கோனாண்டி ராசன் மனைவி கனவில் காண்பதையும் கூட நினைத்துக் கொண்டான். தனக்கு எங்கிருந்து இந்த எண்ணங்களெல்லாம் வரிசைக் கிரமமாகக் கிளர்ந்து எழுகிறது என்று அவனுக்கே புரிபடவில்லை. நித்தியமில்லாத மனோநிலைக்குள் சஞ்சரிப்பது போல அந்தச் சூழல் அவனை விழுங்கடித்தது.

தாழம்பூக்களின் வாடை நாசியில் சுர்ரென்று ஏறியபோது, இலுப்பை மரக்கட்டையில் மஞ்சணை தேய்த்துக் கொண்டிருந்த மங்காவை அவன் கண்டிருந்தான். வாதைகளும் இயக்கிகளும் சண்டைக் கோலம் பூண்டு அசுரர் முன்னால் நிற்பது போலே எந்நேரமும் அவனைக் கர்வத்தால் கலைத்து விளையாடுகிறவள் அப்போது மெல்லியப் பூஞ்சிரிப்போடு அவனை எதிர் கொண்டாள். அவளுக்கு எதிர்த்திசையில் நாகமணி சிலம்பணிந்து நல்ல முகம் காட்டியபடி இருந்த பூவாத்தாளையும் சுந்தரன் கவனித்தான். இரண்டு பேரின் சிரிப்பும் அச்சில் வார்த்தது போல் ஜொலிஜொலித்தது.

விக்கித்துப் போன தொண்டையை எச்சிலை விழுங்கிக் கொண்டே ஆற்றுப்படுத்திக் கொண்டே கேட்டான், “அந்த ராஜாவோட மகனைப் பத்தி பாதி சொல்லிட்டு நிறுத்திட்ட ஏன்?” என்றான்…

“இன்னுமா உனக்கு அந்த ராசா மகன் யாருன்னு தெரியல..” என்று அமைதியான குரலில் கேட்டுவிட்டு பூவாத்தாள் சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்தாள்.

7

ரு அறுபது அறுபத்தஞ்சு ஏக்கருக்கு மேல வரும்ங்க. சுத்தியும் காடுதான். நெல்லிக்கா, மாங்கா, எலுமிச்சாங்கான்னு மனம்போக்குல விளையுது. ஆனா லேசுல அள்ளி முடிஞ்சிற முடியாத மாதிரி வெளைச்சல். மலைமேல கேட்டீங்களா. பழைய கட்டடம் ஒன்னும் காவக்காரனும் மாத்திரந்தான் கிடக்காங்க.  இன்னாரு பேருலதான்னு இல்ல. பூர்வீகமா அனுபவச்சிட்டு வர்ற குடும்பந்தான் விலை பேசிகிட்டு இருக்காங்க. அதுக்கும் குடும்பத்துக்குள்ளே மூத்தவடியா இளையவடியா பிள்ளைங்கன்னு போட்டி இருக்கு. வாங்கிப் போட்றத பத்தி பிரச்சனை இல்ல. தெக்கம் பக்கத்துல அந்தவூட்டு பையனொருத்தன் செத்துப் போய்ட்டானுங்களாமா. பேப்பருலல்லாம் வந்திருக்கு. அதுல இருந்துதான் வித்துப் போடணும்னு துடிக்காங்க. மேப்படி வெபரம் எல்லாம் வி.ஏ.ஓ ஆபீஸ்ல இருந்து எடுத்தாச்சு. அண்ணாச்சி ஒரு எட்டு வந்து பாத்துட்டாங்கன்னா பவர் வாங்கி போட்டு வச்சிக்கிரலாம்ங்க…. ஹலோ.. ஹலோ லைன்ல இருக்கீங்களா.. ”  

“ம்ம் இருக்கேன்”

***

கார்த்திக் புகழேந்தி – பூர்வீகம் நெல்லை. தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். மூன்று சிறுகதைத் தொகுதிகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. தொடர்புக்கு -writerpugal@gmail.com

புத்தக தின பரிசுப் போட்டி முடிவுகள்

0
  1. டி.தருமராஜ் – அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை – ரா.கார்த்திக்

2. தீபச்செல்வன் – நடுகல் – அ.நாகராசன்

3. பிரபு கங்காதரன் – அன்புயாதனத்துக் காளி – பால சுந்தர்

4. புதிய மாதவி – ரசூலின் மனைவியாகிய நான் – அன்பாதவன்

5. பி.சாய்நாத் – Everybody loves a good drought – பாரதிராஜா


போட்டியில் கலந்து கொண்ட மற்ற நண்பர்களை யாவரும் பப்ளிஷர்ஸ் சார்பாக வாழ்த்துகிறோம்.

நல்ல வறட்சியை எல்லோருக்கும் பிடிக்கிறது

0
  • பாரதிராஜா
  • (புத்தக தினப் பரிசுப்போட்டியில் தேர்வான கட்டுரை)

நூலின் தலைப்பை பார்த்ததும் வரும் முதல் கேள்வி, “என்னது, வறட்சியை எல்லோருக்கும் பிடிக்கிறதா?” என்பதுதான். அடுத்தது, “அதென்ன நல்ல வறட்சி?” ‘விவரமானவர்களுக்கு’ எளிதில் புரிந்துவிடும் – யார் எக்கேடு கெட்டால் என்ன, தன்னை வளப்படுத்திக்கொள்ளக் கிடைக்கும் எல்லாவற்றையும் மனிதர்களுக்குப் பிடிக்கத்தானே செய்யும்! அப்படி வறட்சியைக்கூட தன்னை வளப்படுத்திக் கொள்ளும் ‘நல்ல’ வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்களையும் அப்படியான வறட்சிகளில் அவர்களிடம் சிக்கி அவர்களை விட அதிகமாகச் சீரழியும் எளிய மனிதர்களையும் பற்றி விரிவாகப் பேசும் நூல் இது.

நூலின் பெயர் – ‘Everybody Loves A Good Drought”. எழுதியவர் பி. சாய்நாத் (P. Sainath). இந்த நூலின் களம், இந்தியாவின் ஆக ஏழ்மையான எட்டு மாவட்டங்கள். அதில் ஒன்று இராமநாதபுரம் மாவட்டம் என்பது கூடுதல் ஈர்ப்பு. எங்கள் ஊர் இருப்பதென்னவோ தூத்துக்குடி மாவட்டம் என்றாலும் பண்பாட்டில், பழக்கவழக்கத்தில், மொழியில் இராமநாதபுரம் மாவட்டத்துக்கே பக்கம். அது மட்டுமில்லை. தனிப்பட்ட முறையில், என் முன்னோர்கள் அனைவரும் பல தலைமுறைகள் முன்பு இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்து இங்கே குடியேறியவர்கள் என்பது எங்கள் வீடுகளில் காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் கதை என்பதாலும், இந்த நூல் அதைப்பற்றியே மிக நுட்பமாகப் பேசுகிறது என்பதாலும், இந்த வாசிப்பு மிகவும் மனதுக்கு நெருக்கமானதாக இருந்தது.

2005 ஆக இருக்கலாம். ஏதோவொரு கட்டுரையில் தமிழ்நாட்டின் மிகவும் முன்னேறிய மற்றும் பின்தங்கிய மாவட்டங்கள் மற்றும் வட்டங்கள் பற்றி ஒரு தகவல் வந்திருந்தது. தமிழ்நாட்டின் மிக முன்னேறிய மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம், வட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சி வட்டம்; தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம், வட்டம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் முதுகுளத்தூர் வட்டம். இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால், எங்கள் இனக்குழுவின் தாய்க்கிராமம் முதுகுளத்தூர் வட்டத்தில் தான் இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்; என் தாய்வழிக் குலதெய்வம் கூட முதுகுளத்தூர் வட்டத்தில்தான் இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும்போது, அங்கே வெயிலில் சுருண்டு கொண்டிருக்கும் மக்களைப் பார்த்து, ‘இந்த வெயிலில் சுருண்டு கொண்டிருந்திருக்க வேண்டியவர்கள் தானே நாமும்! அன்று ஒரேயொரு மனிதனோ குடும்பமோ இங்கிருந்து வெளியேறி நம் எல்லோருக்கும் முற்றிலும் மாறுபட்ட ஒரு வாழ்க்கையை வழங்கிவிட்டார்களே!’ என்று எண்ணிக் கொள்வோம்.

தொண்ணூறுகளின் முடிவில் பெங்களூர் வந்த புதிதில் அடிக்கடி இதுபற்றி சிந்தித்ததுண்டு. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் தமிழ் நண்பர்கள் எல்லோருமே சென்னைக்காரர்களாகவும் கொங்கு மண்டலத்தினராகவும் திருச்சிக்காரர்களாகவுமே இருப்பர். மருந்துக்குக் கூட ஒரு மதுரைக்காரனோ திருநெல்வேலிக்காரனோ இருக்க மாட்டான். இதனால்தான் அந்தப் பகுதி மிகவும் பின்தங்கிய ஒரு பகுதியோ என்று தோன்றும். இப்போது இந்த நிலைமை நிறைய மாறிவிட்டது. காவிரி ஓடும் கொங்கு மண்டலமும் சோழ மண்டலமும் வளம் கொழிக்கும் பூமி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் வட மாவட்டங்களில் பயணிக்கும் பொழுதுகளில் அவை இராமநாதபுரத்தை விடவும் பின்தங்கி இருப்பது போலவே படும். கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் இருக்கும் நிலையை விட இராமநாதபுரம் பரவாயில்லையே என்றுதான் தோன்றும். ஆனால் வட மாவட்டங்களில் உள்ளவர்கள் பஞ்சம் பிழைக்கச் சென்னைக்கோ பெங்களூருக்கோ வந்து அமைத்துக் கொள்கிற மாதிரியான வாழ்க்கையை இராமநாதபுரத்துக்காரர்கள் மதுரையில் வந்து அமைத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை. மதுரையை ஒரு பெரிய இராமநாதபுரமாக மாற்றியிருக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். அவ்வளவுதான். சரி, கதைக்கு வருவோம்.

நூலாசிரியர் பி. சாய்நாத் மும்பைக்காரர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்தவர். டைம்ஸ் ஆஃப் இண்டியா இதழின் உதவித்தொகை பெற்று, இந்தியாவிலேயே மிகவும் பின்தங்கிய எட்டு மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து, இரண்டாண்டுகளாக அவை ஒவ்வொன்றுக்கும் போய், அங்குள்ள மக்களைச் சந்தித்து, அவர்களுடன் பல நாட்கள் இருந்து, இந்த ஆய்வை நடத்தியிருக்கிறார். இது எளிய பணி அல்ல. இன்று நடக்கிற பல ஆய்வுகள், கூகுளில் தேடித்பார்த்து தெரிந்து கொண்டு, தனக்கேற்றபடி தொகுத்து வழங்கப்படும் தகவல்களுக்கு வெளியே போவதில்லை. குறிப்பாக பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்குள் போய்ச் செய்ய வேண்டிய ஆய்வுகளை, எளிதில் அடைய முடிகிற – நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கிற சில ஊர்களில் மட்டும் நாலு பேரைச் சந்தித்து முடித்துக்கொண்டு வந்து விடுகிறார்கள் என்பதையும் அவரே குறிப்பிடுகிறார். தான் ஓர் ஆங்கில இதழாளர் என்ற போதும், இந்திய மொழி இதழ்களைவிட ஆங்கில மொழி இதழ்களின் தரம் பல வகைகளில் மேலானதாக இருக்கின்றது என்று நம்பினாலும், இது போன்ற ஆய்வுகளில் ஆங்கில இதழ்கள் கள நிலவரத்தை விட்டு நெடுந்தொலைவு தள்ளி நின்றே கருத்துச் சொல்கின்றன, அதனாலேயே உண்மைக்குப் புறம்பாகவும் நிறையப் பேசிவிடுகின்றன என்பதையும், உள்ளூர் மொழி இதழ்களே உண்மைக்கு அருகில் இருப்பதாகவும் நேர்மையோடு ஒத்துக்கொள்கிறார்.

இப்படியான தன் ஆய்வை கட்டுரைகளாக டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழில் முதலில் வெளியிட்டிருக்கிறார். சில கட்டுரைகள், ‘ஒரு பத்திரிகையாளரோ அவர் எழுதும் கட்டுரைகளோ என்ன சாதித்துவிட முடியும்?’ என்கிற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக அதிகாரத்தின் நாற்காலிகளை உடைத்திருக்கின்றன. இந்தக் கட்டுரைகளை அடிப்படையாக வைத்து சில தலைவர்கள் எப்படிச் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது. சில பிரச்சனைகளை அவர்கள் அரசியல் நோக்கோடு அணுகி எப்படி நிலைமையை மேலும் கெடுக்கிறார்கள் என்பதும் வருகிறது.

எப்போதும் மக்களோடு நிற்கிற நாயகர்கள் எவரும் அரசியல் அதிகாரத்துக்கு அருகில்கூட செல்வதில்லை என்பதும், அப்படித் தப்பித்தவறி அதிகாரத்தைச் சுவைத்து விடுகிற சிலர், பின்னர் எப்படி அதிகாரம் ஒன்றையே வாழ்வின் நோக்கமாக்கி மாறத்தொடங்கி விடுகிறார்கள் என்பதும் கூட ஒரு சில இடங்களில் வருகிறது.

பின்னர் இந்தக் கட்டுரைகளையெல்லாம் தொகுத்து நூலாக வெளியிட்ட போது, பெருமளவில் வரவேற்பையும் பல விருதுகளையும் பெற்றுத் தந்திருக்கின்றன. இதெல்லாம் நடந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இந்த ஆய்வு, இந்திய பொருளியல் தரை தட்டிய தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நடத்தப்பட்டது. இந்தியாவில் தாராளமயக் கதவுகள் திறந்து விடப்பட்ட காலத்தோடு உடன் பயணிக்கிறது. அதனால் பல பிரச்சனைகள் தாராளமயம் முழுதாய் நம்மை விழுங்கி விட்டு இன்றைய சூழ்நிலையில் எந்த நிலையில் இருக்கின்றன என்று தெரியவில்லை. மேலும் மோசமடைந்தும் இருக்கலாம். நாம் நம்ப விரும்புவது போல ஒருவேளை தாராளமயமாக்கல் அவற்றையெல்லாம் சரியும் செய்திருக்கலாம். கடந்த இருபது ஆண்டுகளில் உங்களுக்கும் எனக்கும் வாழ்க்கை நிறையவே மாறியிருக்கிறது. அது எல்லோருக்கும் நடந்திருக்கிறதா என்றால், அது தெரியவில்லை. நீங்களும் நானும் மட்டுந்தான் இந்தியா என்றுதான் நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம் என்று குற்றஞ்சாட்டுபவர்களுக்குச் சரியான பதில் சொல்லும் பொருட்டாவது மீள் பார்வைக்கு உட்படுத்தப்பட வேண்டிய முக்கியமானதோர் ஆய்வு இது. அதுவே தாராளமயத்தின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் இருக்கும். உங்களுக்கும் எனக்கும் போலவே இந்த எட்டு மாவட்டத்து மக்களுக்கும் பசியும் பட்டினியும் வறட்சியும் நீங்கியிருந்தால் அது தாராளமயத்தின் வெற்றியின்றி வேறில்லை. ஒருவேளை அவர்களுடைய வாழ்க்கை மேலும் சீரழிந்து போயிருந்தால், அவர்களுடைய உணவை பிடுங்கித் தின்ற பாவம் நம்மைச் சும்மா விடாது என்ற மன உளைச்சளுடனே நமக்கான தேடல்களைத் தொடர வேண்டியதுதான்.

முதலில் இந்தியாவில் மிகவும் பின்தங்கிய எட்டு மாவட்டங்கள் எவை என்ற பட்டியலைப் பார்த்தாலே அதில் நிறைய பேச இருக்கின்றன. காலம் காலமாகவே இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்கள் என்றால் BIMARU என்று ஒரு பட்டியலை நீட்டுவார்கள். பீகார், மத்திய பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களே அவை. இவர் என்னவென்றால் பீகாரில் இரண்டு மாவட்டங்கள், மத்தியப் பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்கள் என்று தொடங்கி ஒரிசாவில் இரண்டு மாவட்டங்கள் (அதில் ஒன்று ஆந்திரப் பிரதேச எல்லையில் இருப்பதால் ஆந்திரப் பிரதேச மாவட்டம் ஒன்றும் துணை நடிகராக உள்ளே வருகிறது), தமிழ்நாட்டில் இரண்டு மாவட்டங்கள் என்று நம்மைக் குழப்பிவிட்டிருக்கிறார். அப்படியானால் இராஜஸ்தானும் உத்திரப்பிரதேசமும் முன்னேறி விட்டனவா? எல்லோரும் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்று என்று சொல்லிக் கொண்டிருப்பது வெறும் டுபுக்கா? இப்படி பல கேள்விகள் வரலாம். அதற்கான விடை இதை இன்னும் சற்று உற்று கவனித்தாலே புரிந்துவிடும். BIMARU என்கிற பட்டியல் மாநிலங்களுக்கானது. இந்த நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியல் மாவட்ட வாரியானது. இராஜஸ்தானும் உத்திரப்பிரதேசமும் குறிப்பிட்ட சில மாவட்டங்கள் மட்டும் என்றில்லாது மொத்த மாநிலமும் ‘சீரான சீரழிவை’க் கொண்டிருப்பதால் இந்தப் பட்டியலில் இருந்து தப்பியிருக்கலாம். அது போலவே, இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றான – மொத்தத் தென்னிந்தியாவுக்கும் முன்னணி மாநிலமான – தமிழ்நாடு, சில மாவட்டங்களில் மட்டும் பின்தங்கியிருக்கலாம். இருப்பினும், இவ்வளவு முன்னேறியிருக்கும் ஒரு மாநிலம், இப்படி மொத்த நாட்டிலும் பின்தங்கிய எட்டு மாவட்டங்களின் பட்டியலில் தன்னுடைய இரண்டு மாவட்டங்களும் இடம் பெற்றிருப்பதைப் பெரும் அவமானமாகக் கருத வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. தென்னிந்தியாவின் வேறு எந்த மாநிலமும் இந்தப் பட்டியலில் இல்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே இது சரியாகி இருக்கவே வாய்ப்பு நிறைய இருக்கிறது. தொண்ணூறுகளின் துவக்கத்தில் எழுதிய கட்டுரைகளைத் தொண்ணூறுகளின் நடுவில் நூலாக வெளியிடும் போதே “இதே எட்டு மாவட்டங்கள்தாம் இப்போதும் இந்தியாவின் மிகவும் பின்தங்கிய கடைசி எட்டு மாவட்டங்கள் என்று சொல்ல முடியாது” என்றிருக்கிறார் ஆசிரியர். இரண்டு – மூன்று ஆண்டுகளிலேயே அவ்வளவு மாறியிருக்கலாம் என்றால், இருபத்தைந்து ஆண்டுகளில் இன்னும் எவ்வளவோ மாறியிருக்கலாம். சில அப்படியே மாறாமலும் இருக்கலாம். பஞ்சத்து ஆண்டியும் இருக்கிறார்கள்; பரம்பரை ஆண்டியும் இருக்கிறார்கள் அல்லவா?

சரி, தமிழ்நாட்டின் அந்த இரு மாவட்டங்கள்தாம் எவை?

பி சாய்நாத்

பக்கத்துப் பக்கத்தில் இருக்கும் பாண்டிய நாட்டு இராமநாதபுரமும் புதுக்கோட்டையுமே அவை. இதில் கொடுமை என்னவென்றால் புதுக்கோட்டையை ஒட்டியிருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் மாநிலத்தின் வளமான மாவட்டங்களில் ஒன்று. ‘அண்ணாந்து பார்க்கின்ற மாளிகைக்கு அருகிலேயே இருக்கும் ஓலை குடிசை’ போல!

தென் மாவட்டங்களைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு, “இராமநாதபுரம் சரி, புதுக்கோட்டையுமா???” என்றொரு வியப்பு வரலாம். திருச்சியையும் தஞ்சையையும் ஒட்டியிருப்பதாலும் பெரும் பெரும் செல்வந்தர்களை கொண்ட செட்டிநாட்டை உள்ளடக்கியிருப்பதாலும் வரும் வியப்பு அது. வேறு பல காரணிகளையும் சேர்த்துப் பார்த்தால் இது இன்னும் நன்றாகப் புரியும். இந்த எட்டு மாவட்டங்களுக்கும் என்று சில பொதுத்தன்மைகள் இருக்கின்றன. வறட்சிக்கும் நீருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதே வேளையில் இந்த எட்டு மாவட்டங்களுமே இந்தியாவிலேயே குறைவான மழைப்பொழிவு அல்லது நீர்வரத்து கொண்ட மாவட்டங்களா என்றால் இல்லை. தமிழ்நாட்டின் இவ்விரு மாவட்டங்களும் இந்தியாவிலேயே குறைவான மழைப்பொழிவு கொண்ட மாவட்டங்களாக இருக்கின்றன. இயற்கையே இவர்களுக்கு எதிராக இருக்கிறது. அதையும் மீறி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இம்மாவட்டங்களில் அற்புதமான நீர் மேலாண்மைப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதையும் ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார். எடுத்துக்காட்டுக்கு, இராமநாதபுரம் பெரிய கண்மாய் எப்போது கட்டப்பட்டது என்ற தகவலே கிடைக்கவில்லை; அவ்வளவு பழைமையானது; குறைந்தபட்சம் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானதாக இருக்கும் என்கிறார். அதுபோல இம்மாவட்டம் முழுவதும் எண்ணிலடங்காத கண்மாய்கள் இருக்கின்றன. ஆனால் மற்ற ஆறு மாவட்டங்களில் அதுவல்ல பிரச்சனை. நல்ல மழைப்பொழிவு இருந்தும், நீர்வரத்து இருந்தும்கூட முறையற்ற நீர் மேலாண்மையும் வேறு பல பிரச்சனைகளும் சேர்ந்து அங்கிருக்கும் எளிய மக்களைக் கொல்கின்றன. அதற்கு இயற்கை பொறுப்பல்ல. முழுக்க முழுக்க மனிதப் பேராசையும் சுரண்டலும் பொறுப்பின்மையும் விழிப்புணர்வின்மையும் மேலும் பல குறைபாடுகளுமே அவர்களை நாசம் செய்கின்றன. இயற்கை அல்ல. அது மட்டுமில்லை. வறட்சியின் போது மற்ற ஆறு மாவட்டங்களில் படும் அளவுக்கு இவ்விரு மாவட்டங்களில் உள்ள மக்கள் துன்பப்படுவதில்லை; உயிரிழப்பில்லை. அவர்களைவிட இவர்கள் எளிதில் சமாளித்து விடுகிறார்கள். அதற்குக் காரணம் இங்குள்ள மக்களின் கல்வியறிவு, விழிப்புணர்வு, அரசாங்கத்தின் பொறுப்புணர்ச்சி என்று சொல்கிறார். இது நம் நம்பிக்கையை உறுதிப்படுத்தவே செய்கிறது.

தமிழ்நாடு எப்போதுமே அரசியல் ரீதியாகவும் கல்வியறிவிலும் விழிப்புணர்விலும் முன்னணியில்தான் உள்ளது. அதற்கான பெருமையை யாருக்குக் கொடுப்பது எனும் போதுதான் – தனிப்பட்ட அரசியல் சார்புகளை விற்க வேண்டிய நிலை வரும் போதுதான் இதில் புரட்டிப் பேசும் வேலை தொடங்குகிறது. கண்மூடித்தனமாக “ஐயையோ, தமிழ்நாடு இவர்களால் நாசமாப் போச்சே! அவர்களால் நாசமாப் போச்சே!!” என்று கூக்குரல் எழுப்ப வேண்டியதாகிறது. அதை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள் (யாராக வேண்டுமானாலும்), ‘இது என் நிலம்; இங்கு நடந்த வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் நானும் என் முன்னோரும் பொறுப்பு’ என்ற புள்ளியில் நின்று பார்த்தீர்களானால், இதில் இருவேறு விதமான கருத்துகள் இருக்கவே முடியாது. தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட முன்னணியில்தான் இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமில்லை. தென்னிந்தியாவே நூறாண்டுகள் வட இந்தியாவை விட முன்னால்தான் இருக்கிறது. பொருளியல் வளர்ச்சியானாலும் சரி, மற்ற எந்த வளர்ச்சியானாலும் சரி, “இன்றைய இந்தியா இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஐரோப்பா போலத்தான் இருக்கிறது” என்று சொல்லும் எவரிடமும், “தென்னிந்தியா?” என்று கேட்டால், “ஒரு நூற்றாண்டு” என்று இறங்கி வந்து விடுகிறார்கள். இன்று பொருளியல் – சமூகவியல் பேசும் எவருமே சொல்வது இதுதான் – “தென்னிந்தியாவையோ, தமிழ்நாட்டையோ, கேரளத்தையோ தனியாக எடுத்துப் பார்த்தால், அவற்றின் வளர்ச்சி கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருக்கின்றன.” இதை நாம் ஒவ்வொருவரும் நம் பிரச்சாரத்துக்கு எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது முற்றிலும் வேறுபட்ட பிரச்சனை. இதன் பொருள் இங்கே ஆண்டவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்பதோ இதைவிட நல்லாட்சி கொடுத்துவிடவே முடியாது என்பதோ அல்ல. இதைவிட யோக்கியர்களோ இதைவிட நல்லாட்சியோ கிடைத்திருந்தால் நாம் இதைவிட வளர்ந்திருக்கலாம். ஒருவேளை ஒட்டுமொத்த ஐரோப்பாவுடனோ மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனோ ஒப்பிடும் அளவுக்கு நல்வாழ்வு வாழ்ந்திருக்கலாமோ என்னவோ. இந்த நூலும் அதை உறுதி செய்கிறது. வட இந்திய மாவட்டங்கள் தென்னிந்தியாவை விட நூறாண்டுகள் பின்தங்கி இருப்பதாக ஆசிரியர் வெளிப்படையாகவே சொல்கிறார்.

பிரச்சனைகளை மட்டும் பட்டியல் போட்டுவிட்டுப் போகும் சராசரிப் பத்திரிகையாளராக இல்லாமல், சில பிரச்சனைகள் அவர் கண் முன்பே எப்படிச் சிறப்பாகக் கையாளப்பட்டன என்றும் வேறு என்ன விதமான தீர்வுகளை அணுகலாம் என்றும் கூட நூலின் பிற்பகுதியில் விளக்குகிறார். அதில் முக்கியமாக வருவது, தமிழகத்தில் அறிவொளி இயக்கம் இங்கு எத்தகைய ஒரு பெரும் புரட்சியைச் செய்தது என்பது. வறட்சிக்கும் நீருக்கும் எப்படித் தொடர்பு இருக்கிறதோ அது போலவே வறட்சிக்கும் கல்விக்கும் கூடத் தொடர்பு இருக்கிறது. தமிழகத்தின் சமூக மாற்றத்துக்கு மிக முக்கியமான காரணம் நம் மக்கள் கல்விக்குக் கொடுத்த முக்கியத்துவம். இதை கண் முன்னால் கண்ட தலைமுறை நாம். முக்கியமாகப் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவொளி இயக்கம் நிகழ்த்திய சமூக மாற்றமும் வேறு சில பணிகளும் இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லப்பட்டால் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று பரிந்துரைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் சாத்தியப்பட்ட இது போன்ற மாற்றங்கள் மற்ற மாநிலங்களில் முயன்றே பார்க்கப்படாமல் போனதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்? இதைத்தான் நாம் பாரபட்சமின்றிச் சிந்தித்து முடிவு செய்துகொள்ள வேண்டும்! நூலின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களின் படி (ஆய்வுக்கு முந்தைய – அறிவொளி இயக்கத்துக்கு முந்தைய தகவல்படியே), தமிழ்நாட்டின் இவ்விரு மாவட்டங்களும் கல்வியறிவில் மற்ற ஆறு மாவட்டங்களோடு ஒப்பிடக்கூட முடியாத அளவு முன்னணியிலேயே இருந்தன. அறிவொளி இயக்கத்துக்குப் பின் புதுக்கோட்டை மாவட்டந்தான் கேரளத்துக்கு வெளியே நூறு விழுக்காடு எழுத்தறிவு அடைந்த முதல் இந்திய மாவட்டம் என்பதும் கூடுதல் தகவல். அப்படியான ஒரு மாவட்டம் இந்தியாவிலேயே பின்தங்கிய எட்டு மாவட்டங்களில் ஒன்றாக இருந்தது என்பதுதான் பெருங்கொடுமையே.

ஒரு காலத்தில் (எண்பதுகளில் அல்லது தொண்ணூறுகளின் தொடக்கத்தில்) சீலா ராணி சுன்கத் என்றொரு பெயர் அடிக்கடிச் செய்திகளில் அடிபடும். அந்த பெயர் இந்த நூலிலும் அடிக்கடி அடிபடுகிறது. அவர் பெயர் அவ்வளவு அடிபட்டதன் காரணம் என்ன என்பதும் இப்போது தெரிய வருகிறது. அவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த போதுதான் பெரும் சமூக மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். அவரும் அறிவொளி இயக்கமும் இணைந்து நடத்திய – புதுமையான ‘பெண்களைச் சைக்கிள் ஓட்ட வைக்கும்’ இயக்கம் எவ்வளவு பெரிய சமூக மாற்றத்தை நடத்தியது என்பதை விவரித்திருக்கிறார். மாவட்டம் முழுக்க பெண்கள் சைக்கிள் ஓட்டிப் பழகுவதை ஊக்குவித்து, அதை ஒரு பெண் விடுதலைக்கான அடையாளமாக முன்வைத்து, அதை சாதித்தும் காட்டிய கதை கண்டிப்பாக ஆசிரியர் சொல்வது போல நாடு முழுக்கவும் எடுத்துச் செல்லப்பட வேண்டியது. சைக்கிள் ஓட்டுவது வெறும் அடையாளம் மட்டுமல்ல. அது சைக்கிள் ஓட்டுவதோடு நின்று விடவில்லை. புதுவிதத் தன்னம்பிக்கையைக் கொடுத்தது. ஆண்கள் மீதான சார்பைக் குறைத்தது. எல்லாவற்றிலும்.

தனியார் கொள்ளைக்காரர்கள் நடத்திய கல்குவாரிகளை, ஒரு குவாரிக்கு இருபது பெண்கள் என்ற வீதத்தில் படிப்பறிவு கூட இல்லாத பட்டியல் இனப் பெண்களுக்குப் பிரித்துக் கொடுத்ததில் பெற்ற வெற்றி அதற்கடுத்த படி. இப்பெண்கள் நடத்திய குவாரிகளில் இவர்களின் கணவர்கள் சம்பளத்துக்குப் பணி புரிந்தது மொத்த சமூகத்தின் சமன்பாட்டையே புரட்டிப்போட்டு விடுகிறது. ஆண்கள் நிர்வகித்த குடும்பத்தில் பெரும் பங்கு செலவு சாராயத்துக்குப் போகிறது; அதுவே பெண்கள் நிர்வாகத்துக்குள் வரும்போது முழுக்கவும் குடும்பச்செலவுக்குப் போகிறது. குழந்தைகளின் உணவும், கல்வியும் உத்திரவாதம் பெறுகிறது. அடுத்த கட்டமாக இப்பெண்கள் சாராயத்துக்கு எதிராகப் போராடி வெல்கிறார்கள். அறிவொளி இயக்கமும், சைக்கிள் ஓட்டுவதும் கலந்து அவர்களுக்குக் கல்வியறிவையும் தற்சார்பையும், கூடுதல் பணத்தையும், நிர்வாகத் திறமையையும் மட்டும் கொடுக்கவில்லை; அரசாங்கத்துக்கே கூடுதல் வருமானத்தைக் கொடுத்திருக்கிறது. அதைத் தோல்வியுறச் செய்வதில் அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் உள்ளூர் ஒப்பந்தக்காரர்களும் எப்படியெல்லாம் நெருக்கடி கொடுத்தார்கள் என்பதும் இந்தியா முழுக்க எடுத்துச்செல்லப்பட வேண்டியதே. அங்கும் அப்படி நடந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமே! படிப்பறிவில்லாத – வெளி உலகம் அறியாத பெண்கள் வந்து பெரும் அரசியற் பொறுப்புகளை ஏற்கும் போது ஏற்படும் பின்னடைவுகள் பற்றியும் மற்ற மாநிலக் கதைகளில் சொல்லப்படுகிறது. கல்குவாரி நடத்துவது வேறு; உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்களின் கைப்பாவையாக இருந்து செயல்படுவது வேறு அல்லவா?

சுன்கத்துக்கு அடுத்து வந்த மாவட்ட ஆட்சித் தலைவரும் நல்லவராக அமைந்து விட்டதால் புதுக்கோட்டைக்கு உண்மையாகவே நல்ல காலம் பிறந்துவிட்டது என்றே எல்லோரும் நம்பினார்கள் என்றாலும், அடுத்து வரும் மாவட்ட ஆட்சித் தலைவர் அப்படி இல்லாமல் போனால் கண்மூடி முழிக்கும் முன் எல்லாமே பழையபடி சரிந்து விழுந்துவிடும் என்கிற பயம் பற்றியும் சொல்கிறார். அங்குதான் தனிமனித சாகசங்களை மட்டும் நம்பி நடத்தப்படும் மாற்றங்கள் காலம் கடந்து நிற்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டிய நிலை வருகிறது. நூல் முழுக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோல சாகசங்கள் நிகழ்த்தும் நாயகர்கள் பற்றி பேசப்படுகிறது. இப்படியான சூழல்களில் எதுவுமே நம்பிக்கையளிக்கும் படி இல்லாத போதும் ஒரே நம்பிக்கைக் கீற்றாக இந்த நாயகர்கள்தான் இருக்கிறார்கள். இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் – அச்சுறுத்தல்கள் பற்றியும், இவர்கள் மீது திருப்பப்படும் மிதமிஞ்சிய கவனம் எப்படிப் பல நேரங்களில் பிரச்சனையின் மீது காட்டப்பட வேண்டிய கவனத்தைத் திருப்பிவிடுகிறது என்றும் சொல்கிறார். எண்பதுகளில் பத்திரிகையாளர்கள் செய்த சில அரும்பணிகளைப் பற்றிப் பேசுவது போலவே, பல நேரங்களில் அவர்கள் எப்படிப் பேச வேண்டிய பிரச்சனையை விடுத்துத் தேவையற்ற தனிமனிதக் கதைத்தல்களில் விரயமானார்கள் என்றும் சொல்கிறார்.

வட இந்திய மாவட்டங்களில் குழந்தைகளைப் பள்ளிக்கு வரவைப்பதே எவ்வளவு பெரிய சவால் என்பதும், அதை எப்படித் தமிழ்நாடு சத்துணவுத் திட்டத்தின் மூலம் முறியடித்தது என்பதும், அதுபோல அங்கும் வந்தால் நன்றாக இருக்கும் என்று அங்குள்ளவர்கள் பேசிக்கொண்டது பற்றியும் கேள்விப்படும்போது நமக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டின் இரு மாவட்டங்களைத் தவிர்த்துப் பார்த்தால் பேசப்படும் மற்ற ஆறு வட மாநில மாவட்டங்களுமே மலைப்பகுதிகள். பழங்குடியினர் நிறைந்த பகுதிகள். பழங்குடியினர் முன்னேற்றம் என்பது அவ்வளவு எளிதானதில்லை. மற்ற மனிதர்களைப் போல அல்லாமல், அவர்கள் முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறை, பண்பாடு, பழக்க வழக்கங்கள், நல்லது-கெட்டது கொண்டவர்கள். நாம் முன்னேற்றம் என்பதை அவர்களுக்கும் முன்னேற்றம் என்று சொல்லித் திணிப்பது வளர்ச்சி ஆகாது; அதற்குப் பெயர் வேறு. ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு – சில பழங்குடியின மக்களுக்குள் கடுமையான வன்முறையும் அடிதடிகளும் நடக்கின்றன; ஆனால் அவர்கள் வெளி மக்களிடம் அதைக் காட்டிக்கொள்வதே இல்லை; வன்முறை அனைத்தையும் அவர்களுக்குள்ளேயே நடத்திக் கொள்கின்றனர்; ஒருபோதும் திருடுவதோ, பொய் சொல்வதோ இல்லை; வன்முறை சார்ந்த ஏதோவொரு குற்றத்துக்காக அவர்களைச் சிறையில் அடைத்தால், திரும்பி வரும்போது பொய் சொல்லப் பழகிக்கொண்டு வந்து விடுகிறார்கள்; இது அவ்வினக்குழுவின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைக்கிறது. இந்தப் புள்ளியில்தான் எது வளர்ச்சி என்ற கேள்வி வருகிறது. “இப்படி ஒரு வளர்ச்சி இம்மக்களுக்குத் தேவையா?” என்கிறார் அங்கொருவர். இங்கிருப்பவர்களிடம் கேட்டால், “பொய் சொல்வதெல்லாம் ஒரு பிரச்சனையா? அதைப்போய் இவ்வளவு பெரிதாகப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். என்னவொரு பிற்போக்குச் சிந்தனை! வளர்ச்சிக்காக இதெல்லாம் கூடச் செய்யாவிட்டால் எப்படி?” என்போம்.

பழங்குடியினருக்கு எதிராக நிகழ்த்தப்படும் பெரும் அநீதி அவர்களை அவர்களின் நிலங்களை விட்டு விரட்டுவது. அணை கட்டுவதற்காக விரட்டியது, தொழிற்சாலை கட்டுவதற்காக விரட்டியது, இராணுவத்தளம் அமைப்பதற்காக விரட்டியது என்று பல காரணங்களுக்காக இம்மக்கள் விரட்டப்பட்டிருக்கிறார்கள். ஒருநாள் இரவு நம் படுக்கையறையை பயன்படுத்த முடியாமல் செய்துவிட்டால் மண்டை காய்ந்து விடுகிற நம்மால், நாட்டின் வளர்ச்சிக்காக இதையெல்லாம் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று எளிதாகச் சொல்லிவிட முடியும். ஒரு இராணுவத்தளத்தில் பயிற்சி என்று அறிவிக்கப்படும் போதெல்லாம் அங்கிருக்கும் கிராமங்களில் இருக்கும் மக்கள் எல்லாம் அப்படி அப்படியே காலி செய்து வெளியேறிவிட வேண்டுமாம். பயிற்சி முடிந்ததும் திரும்ப வீட்டுக்கு வந்து கொள்ளலாமாம். இப்படி வெளியேறுவதற்கு ஆள் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு ஒன்றரை ரூபாய் கொடுப்பார்களாம். இது போன்ற ஒரு வேலையை மும்பை நகரத்தில் உள்ள ஒரு பகுதியில் செய்ய முடியுமா என்று கேட்கிறார் ஒருவர். நமக்கு இது விதண்டாவாதம் போலத்தான் படும். நம்மைப் போன்றவர்கள் வாழும் மும்பை வேறு, பழங்குடியினர் வாழும் அந்தக் கிராமங்கள் வேறு என்பதற்கு இருக்கும் முக்கியமான வேறுபாடு, நம்மைப் போன்றவர்களிடம் அப்படி ஆட்டம் காட்டினால் அந்த அரசாங்கத்தையே ஆட்டம் காண வைக்கும் கூட்டு சக்தி நம் ஓட்டுக்கு இருக்கிறது; அது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிற படிக்காத பழங்குடி மக்களுக்கு இல்லை. அவர்களில் பலருக்கு ஓட்டே இல்லை என்பது வேறொரு கிளைக்கதை. இதெல்லாம் மக்களாட்சி முறையின் கரிய பக்கங்கள். நம்மை மக்களாட்சியை விட மோசமான அமைப்பை நோக்கி நகர்த்துவதற்காகக் கழுகு போல ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த வேளையில் மக்களாட்சியின் போதாமைகளைப் பேசுவதால் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்பதால் இதை இப்போதைக்கு இப்படியே விட்டுவிடுவதே நல்லது. இல்லையா?

இன்னோர் ஊரின் கதை அதைவிடக் கொடுமையாக இருக்கிறது. ஓர் ஊரிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள், இன்னோர் இடத்தில் அது போலவே ஓர் ஊரை உருவாக்கி அதே பெயரையும் இடுகிறார்கள். கொஞ்ச காலம் கழித்து அந்த ஊரையும் காலிசெய்யச் சொல்கிறார்கள். இப்போது மூன்றாமிடத்தில் மீண்டும் ஓர் ஊர் கட்டுகிறார்கள். இப்போது அதையும் காலிசெய்யச் சொல்கிறார்கள். நாட்டு நலனுக்காகக் காலிசெய்வது முக்கியம். சரி. அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டியது நாட்டின் கடமை இல்லையா? அதை நாடு செய்வதில்லை. அதற்கு வரும் பணத்தை முழுங்கி ஏப்பம் விடுவதையே தன் முழுநேரத் தொழிலாகக்கொண்டு ஒரு கூட்டம் அரசாங்கத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எப்போதும் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக இது போன்ற இடப்பெயர்ச்சிகளின் போது இழக்க நேரிடும் உறவுகள் வேறு இவர்களின் பலத்தைப் பிடுங்கி விடுகிறது.

இடம் மாறுவதில் இடம் மாறுவது மட்டும் பிரச்சனையில்லை. அப்படி இடம் மாறும் மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தான் வாழ்ந்த இடத்தில் இருந்த குறிப்பிட்ட செடி-கொடி-மரங்களை மட்டுமே சார்ந்து தம் உணவு முறைகளையும் வாழ்க்கையையும் அமைத்துக் கொள்கிறார்கள். அதனால்தான் அவை வாழ்வாதாரம் எனப்படுகின்றன. அந்த இடத்தை விட்டு வேறோர் இடத்துக்குப் போகும் போது புதிய இடத்தில் இவர்களுடைய செடி-கொடி-மரம் இருப்பதில்லை. அப்போது அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பிடுங்கப்படுகிறது. அரை மணிநேரம் இணைய இணைப்பு பிடுங்கப்பட்டால் தாங்க முடியாத – ஒரு வாரம் வெளியூரில் போய் நம்மூர்ச் சாப்பாடு இல்லாமல் வாழ முடியாத நம்மால் அதற்கும் விளக்கம் கொடுக்க முடியும் – “வலுவுள்ளதே வாழும்!” என்று. நான்கு நாட்கள் அரசாங்கமும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள நாம் உருவாக்கி வைத்துக்கொண்டிருக்கும் அமைப்புகளும் இயங்காவிட்டால் வலு என்பதன் பொருளே மாறிவிடும். காலமெல்லாம் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இம்மக்களின் வலுவுக்கும் வாழ்வுக்கும் கண்ணிமைக்கும் நேரத்தில் நாம் இரையாகி விடுவோம் என்பதைக்கூட உணர முடியாதவர்களா நாம்? அப்படியெல்லாம் எதுவும் நடந்துவிடாது என்று ஒரு நம்பிக்கைதானே!

பழங்குடியின மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள இன்னொரு விதமான கொடுமையும் இருக்கிறது. “இடமெல்லாம் மாற வேண்டாம். நீ இருக்கிற இடத்தில் இருந்து கொள். ஆனால் நீ இவ்வளவு நாட்களாக உன்னுடையது என்று எண்ணிக்கொண்டிருக்கும் உன்னைச் சுற்றியிருக்கிற எதுவுமே உன்னுடையதில்லை. நிலம் உட்பட, அதில் வளரும் மரம்-செடி-கொடி வரை எல்லாம் அரசுக்குச் சொந்தம்” என்று சொல்லிவிடுவது. இதுவும் அவர்களை இடப்பெயர்ச்சி செய்யச்சொல்வது போலத்தான். வாழ்வாதாரத்தை மட்டும் பறித்துக்கொள்வது கொல்வதைப் போலத்தானே! பல்லாயிரம் ஆண்டுகளாக அவர்கள் வளர்த்து பாதுகாத்த நிலத்தையும் அதன் உற்பத்தியையும் அவர்களுக்குச் சொந்தமில்லை என்று சொல்ல நாம் யார் என்ற மனச்சாட்சியே நமக்கு நிறையப் பேருக்கு வேலை செய்வதில்லை. பாதி இயற்கை; பாதி அவர்கள் பேணியது. தன் வாழ்க்கையில் அனைத்தையுமே மூங்கிலைச் சுற்றியே அமைத்துக் கொண்ட ஓர் இனத்தைத் திடீரென ஒரு நாளில் அந்த மூங்கிலை நீங்கள் தொடவே கூடாது என்று சொல்கிற கதை ஒன்று வருகிறது. வனத்தைப் பாதுகாப்பதற்காகவே அமைக்கப்பட்ட வனத்துறையினரின் கொள்ளையிலும் கடத்தலிலும் இருந்து வனத்தைக் காக்க பழங்குடி மக்கள் படும் பாடு பற்றிய கதை ஒன்றும் நினைவுக்கு வருகிறது. என்னவொரு வேடிக்கை!

இதையெல்லாம் பார்க்கும் போது பெரும்பாலும் சமவெளியாக இருப்பதும் குறைவான பழங்குடியினர் எண்ணிக்கையும் கூட தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு ஒரு முக்கியமான காரணமோ என்று படுகிறது.

இந்த மாவட்டங்கள் அனைத்திலுமே பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பழங்குடியினத்தவராகவோ பட்டியல் இன மக்களாகவோதான் இருக்கிறார்கள். அதுவே எப்போதும் அவர்களுக்கான நீதியைக் கிடைக்க விடாமல் செய்துவிடுகிறது. அவர்களே அவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் அளவுக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டால்தான் உண்டு என்று சொல்லிவிடுகிற அளவுக்கு அது அவ்வளவு எளிதில்லை. இது ஒரு கொடுமையான சுழற்சி. ஒவ்வொரு நாளும் அன்றைக்கான சாப்பாட்டுக்கான போராட்டமே அவர்களுக்குப் பெரும் பிரச்சனையாக மாறி இருக்கும் போது அதிலிருந்து வெளியேறி அவர்கள் தம் மற்ற உரிமைகளுக்காகவும் வளர்ச்சிக்காகவும் போராடுவதெல்லாம் வாய்ப்பே இல்லாத மாதிரித்தான் படுகிறது. அதற்கு முன் நெடுந்தொலைவு செல்ல வேண்டியுள்ளது.

கடனும் கந்து வட்டியும் கொடுப்பவர்கள், இந்த எட்டு மாவட்டங்களை அப்படியே வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றுபவர்கள். நிலமுடையவர்களை வளைத்து நிலத்தை பிடுங்குகிறார்கள்; அதுவுமற்றவர்களை வளைத்து அவர்களை கொத்தடிமை ஆக்கிக்கொள்கிறார்கள்; வேறு சில இடங்களில் அதுவே விபச்சாரம் முதலான பெரும் கொடுமைகளுக்கும் வித்திடுகிறது. இந்தியாவில் சில மாநிலங்களில் மட்டுமே வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்ட நிலச்சீர்திருத்தம் இதற்கொரு முக்கியத் தீர்வாக இருக்க முடியும் என்பது ஆசிரியரின் கருத்து. அதற்கான வலுவான காரணமும் சொல்கிறார். நிலச்சீர்திருத்தம் செய்த நான்கு மாநிலங்களில் இருந்து ஒரு மாவட்டம் கூட இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை! “தமிழ் நாட்டில் நடக்காத நிலச்சீர்திருத்தமா?” என்போருக்கு ஓர் அதிர்ச்சி இருக்கிறது. தமிழ் நாட்டில் செய்யப்பட்ட நிலச்சீர்திருத்தம் பெரும்பாலும் மோசடி என்கிறார்.

வறுமைக்கோடு என்பது எப்படி வரையறுக்கப்பட்டது என்கிற கதை வியப்பூட்டுகிறது. நாளொன்றுக்கு இத்தனை கலோரி சாப்பிட முடிந்தவர்கள் கோட்டுக்கு மேலே என்றும் முடியாதவர்கள் கீழே என்றும் எளிதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்; இதில் கல்வி, சுகாதாரம், பிற வசதிகள் எதைப்பற்றியும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அது ஏன் என்று வியந்து முடிவதற்குள் அதற்கான நியாயமும் சொல்லப்படுகிறது. அன்று வரையறுக்கும் குழுவில் இருந்தவர்கள் எல்லோரும் நேர்மையும் நல்லெண்ணமும் நிறைந்தவர்கள். கொடுக்கப்பட்ட பொறுப்பைத் தட்டிக்கழித்து விட்டுச் செல்பவர்கள் அல்லர். அதனால் அவர்கள் கல்வியும் சுகாதாரமும் மற்ற வசதிகளும் அரசாங்கத்தால் எல்லோருக்கும் முறையாக அளிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு உணவை மட்டும் அடிப்படையாக வைத்து இப்படி வரையறுத்தார்கள். அதனால்தான் இப்போது வரையறையை மாற்ற வேண்டியதாகியுள்ளது. இப்படி நாற்பது ஆண்டுகள் கழித்தும் கல்வியும் சுகாதாரமும் அடிப்படை வசதிகளும் மக்களுக்குச் சென்று சேர்ந்திராது என்று அன்றே தெரிந்திருந்தால் அப்போதே முறையாக வரையறுத்திருப்பார்கள் என்கிறார். ஓரளவு சரியாகத்தான் படுகிறது. அத்தோடு வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கிற மக்களின் எண்ணிக்கை பாதியாகிவிட்டது – கால்வாசியாகிவிட்டது என்று உள்ளூரில் ஒரு பொய் சொல்லிக்கொண்டு, அதுவே பல மடங்காகக் கூடிவிட்டது என்று போய் ஐ. நா. மன்றத்திலும் உலக வங்கியிடமும் காசுக்காக வேறொரு பொய் சொல்ல முடிகிற மனசாட்சி – நேர்மை நம் அரசாங்கங்களுக்கு இருந்திருக்கிறது.

வெறுமனே வெற்றுக் கூச்சல்களையும் அடையாளங்கள் மீதான பித்துக்களையும் தேசபக்தி என்று கூறி தன்னையும் பிறரையும் ஏய்ப்பவர்கள் போலன்றி, இந்த நாட்டை ‘உண்மையாக’ நேசிக்கிறவர்கள், தாம் நேசிக்கும் இந்த நாட்டில் என்னவெல்லாம் நடக்கிறது, அது எப்படியெல்லாம் இங்குள்ள எளிய மக்களைச் சீரழிக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த நூலில் புதையல் போல விதவிதமான கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு தனிமனிதனால் புரிந்து கொள்ளப்பட முடிந்தவற்றுள் சிலவற்றின் தொகுப்பே இந்தக் கட்டுரை. நீங்கள் படித்தால் உங்களுக்கு எவ்வளவோ கிடைக்கலாம்.

நூலைப் பற்றிய சில மதிப்புரைகளைப் படிக்கும்போது, நிறையப் பேர், “இந்த நூல் என் கண்ணைத் திறந்துவிட்டது; நான் வாழும் இதே நாட்டில் இப்படி ஒருவேளை சோற்றுக்குக்கூடப் போராடும் மக்களும் வாழ்கிறார்களா?; நொறுங்கிப் போய்விட்டேன்; இன்னும் மீளவில்லை” என்று பலவிதமான வியப்புகளை விளக்கியிருந்தார்கள். அதற்குக் காரணம் அவர்கள் வாழும் சொகுசான வாழ்க்கையாக இருக்கலாம். அதுவே பலருக்கு இவற்றின் மீது நம்பிக்கை வரவிடாமலும் கூடச் செய்யலாம். இதை நம்ப முடியவில்லை என்று ஒரு சாரார் சொல்ல முடிகிறதென்றால் அதுவே இங்கிருக்கும் இடைவெளிக்கான பெரும் சாட்சி. ஆனால் எனக்கு இந்த நூல் வேறு விதமான அனுபவத்தைக் கொடுத்தது. நூலில் வரும் பல மாந்தர்கள் என் வாழ்வில் சிறு வயதில் ஒவ்வொரு நாளும் நான் பார்த்து வளர்ந்தவர்கள். அன்றோ இன்றோ நாம் வாழும் வாழ்க்கையில் ஒரு குறைச்சலும் இல்லை என்பதற்காக, நம் கண்முன் கண்டவற்றைக் கூட மறந்துவிட வேண்டும் என்று கட்டாயமில்லையே!

இரவுச்சாப்பாடு பற்றி கேட்டபோது, “மதியமே சாப்பிட்டுவிட்டோம்; அதனால் நாளைதான் அடுத்துச் சாப்பாடு!” என்று சொன்ன நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். அதனால் இவற்றை எளிதில் கடந்துவிட முடியவில்லை. கள்ளச்சாராயம் காய்ச்சிய மனிதர்களைப் பார்த்திருக்கிறேன்; பக்கத்து நகரத்தில் சில்லறைக்கு பத்து ரூபாய்க்கு வாங்கும் பொருளை, மொத்த விலைக்கு என்று வரும்போது இரண்டு-மூன்று ரூபாய்க்கு புன்னகை மாறாமல் கேட்கும் இடைத்தரகர்களைப் பார்த்திருக்கிறேன்; ‘இதற்கெதற்கு இம்மக்கள் இப்படிச் சண்டைக்காரனிடம் பேசுவது போல வெறிகொண்டு பேசுகிறார்கள்!’ என்று பருத்தி-மிளகாய்-அவுரி விளைவித்த விவசாயிகளைப் பார்த்து வியந்திருக்கிறேன்; அரசுப்பணியில் இருந்துகொண்டு தனியார் மருத்துவமனை நடத்திய மருத்துவர்களைப் பார்த்திருக்கிறேன்; கந்துவட்டி வசூலிப்பவர்களைப் பார்த்திருக்கிறேன்; வாங்கியதைவிடப் பலமடங்கு கட்டிய பின்னும் கடன்காரனாகவே இருந்து கந்துவட்டிக்காரர்களின் அடியாட்களிடம் அடிபட்டவர்களை பார்த்திருக்கிறேன்; அதிலேயே வீட்டையும் சொத்தையும் இழந்தவர்களைப் பார்த்திருக்கிறேன்; தனக்கான நீதிக்காகவும் தன் பக்கம் அரசாங்கத்தின் கவனத்தை திருப்பவும் உண்மையை மிகைப்படுத்தி பேசும் மக்களைப் பார்த்திருக்கிறேன்; பஞ்சகாலத்தில் பலமைல் தொலைவு தண்ணீருக்கு அலைந்த மக்களைப் பார்த்திருக்கிறேன்; நூலில் வரும் இராமநாதபுரத்து மாந்தரில் ஒருவர் (சுரண்டுபவரோ சுரண்டப்படுபவரோ) என் இரத்த உறவினராகக்கூட இருக்கலாம்; ஒரு காரணமும் இல்லாமல் மக்களுக்கு உழைத்துத் தேய்வதையே மனநோய் போலக்கொண்டு உழைத்து அழிந்த சில உன்னதமான மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். அதனால் இந்த நூல் என்னைப் பற்றியது; என்னைச் சுற்றியிருந்த மனிதர்களைப் பற்றியது என்று தோன்றியது. என்னைப் போலவே நீங்களும் உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களும் கூட இதில் இருக்கலாம். படித்து பார்த்துச் சொல்லுங்கள்.

Everybody Loves A Good Drought
P.Sainath
Penguin

-பாரதிராஜா – பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அரசியல், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு இவர் இயங்கும் தளம். தொடர்புக்கு -bharathee@gmail.com

வெடிகுண்டு ஓசையினூடே உறங்காதியங்கும் மாநகரத்தின் கதை

0
  • அன்பாதவன்
  • (புத்தக தினப் பரிசுப்போட்டியில் தேர்வான கட்டுரை)

ரசூலின் மனைவியாகிய நான்

தொகுப்பில் ஒரு குறுநாவல் உட்பட ஏழு கதைகள். மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தம் உறவுகளை இழந்து வாடும் மாநகர மக்களுக்கு இந்நூலை சமர்ப்பித்திருக்கும் புதிய மாதவியின் பூர்வீகம் நெல்லை மாவட்டமெனினும்  வளர்ந்து வாழ்வது மும்பை மகாநகரம். எனவே பெரும்பாலான கதைகளில் மும்பை மாநகர வாழ்வின் கோட்டோவியத் தீற்றல்கள், மற்றும் பண்பாட்டுக் கோலங்களின் பதிவுகளும்.

12/7 அந்த விழிகள்

2006 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 11 ம் தேதி மாலை மும்பை மேற்கு ரயில்வேயின் மாகிம் தொடங்கி மலாட் வரையிலான ஏழு நிலையங்களில்  மின்ரயில்களில்   டிபன்பாக்ஸ் குண்டுகள் எனும் வெடிகுண்டுகள்  தாக்கத்தில் பல உயிர்கள் ரத்த சகதியாய் மரித்தன. மாநகரமே பீதியில் ஸ்தம்பித்து உறைந்துபோய் கிடந்தது துயர வரலாறு.

எது நடந்தாலும்  குறிப்பிட்ட சமூகமொன்றின் மீது பழி சொல்லி அபாண்டம் கற்பிக்கும் பெரும்பான்மையான மதத்தின், விளம்பர வருவாய்க்காக  உண்மை மறைத்து அரசின் ஊதுகுழல்களாக ஊளையிடும் ஊடகங்களின் மனசாட்சியை உலுக்குமா இக்கதையின் உயிர் நாடி?

அடையாளங்கள்:

மதக்கலவரம் நிகழும் நகரத்தில் கணவனின் பேண்ட்டை  கழட்டச் சொல்லும்  வெறியரிடமிருந்து கணவனைக் காக்க மங்கல சூத்திரத்தாலியைக் காண்பித்து அவனை இந்துப்பெயரொன்றால்  அழைத்து உயிர் காப்பதும் வேறொரு இடத்தில் இன்னொரு மத வெறியரிடமிருந்து மனைவியைக் காப்பாற்ற இஸ்லாமியப் பெயரால் அவளை அழைத்து காக்கும் கணவன் என இரு வேறு மதங்களைச் சார்ந்த ஆணும் பெண்ணும் சமூகத்தடைகளை உடைத்து திருமணம் செய்து கொள்வதும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுமே கதை.

மதம் மாறாமல் கலப்பு திருமணம் செய்து கொண்டவரின் இல்லத்தில் ஏற்படும் மரணம், இறப்புசடங்குகளும் கேள்விக்குறியாகும் ஒரு அவலத்தை காட்சிப்படுத்தி கூடவே கண்தானம், உடல் தானம் என தீர்வையும் சொல்லியிருப்பது புதியமாதவியின் சிறப்பு.

கணபதி பப்பா சிரிக்கிறார்:

இந்தக் கதையும் மதப்பண்பாட்டு பின்னணியில் மும்பையின் மிக முக்கியமான பண்பாட்டு நிகழ்வான பிள்ளையார் ஊர்வலம் உளவியல் பார்வையோடும் சமூகப் பொறுப்போடும் எழுதப்பட்டது.

குறிப்பாக தமிழர் பெருமளவில் வசிக்கும்  தாராவி பகுதியில் நிலவும் சாதி வேறுபாடுகளைக் கண்டிப்பது படைப்பாளிக்கு பெருமை சேர்ப்பது. தேச விடுதலைக்காக திலகர் ஒருங்கிணைத்த கணபதி ஊர்வலங்கள் இன்று தேசம் முழுமைக்கும் மதவெறி வளர்ப்பதற்கு, பிற மதத்தினரை துவேஷிப்பதற்கானது வரலாற்று சோகமன்றி வேறென்ன..!

வட்டமும் சதுரங்களும்:

“Living together” தமிழில் இணைந்து வாழ்தல்?… சமகாலத்திய மிக முக்கியமான சமூக வாழ்நிலை மாற்றங்களில் இதுவுமொன்று. குறிப்பாக IT SECTOR வளர்ச்சிக்குப் பின் படித்த சமூகத்தில் திருமணம் என்பதன் புனித பிம்பத்தை உடைத்த பெருமை கொண்டது.

தமிழில் இந்த பின்னணியில் வேறு கதைகள் உள்ளனவா…? தெரியவில்லை!. விலகிப்போகும் ஆணின் அபிலாஷைகளும் விரும்பி நேசிக்கும் பெண்ணின் நுட்பமான மனசும் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கும் கதையில் எதற்காக மார்க்சீயம் பேசும்  ஒருவனை கதை நாயகனாக தேர்ந்தெடுத்ததின் பின்னணி படைப்பாளிக்கே உரிய ரகசியம்.. சுதந்திரம். ஆனால் அதன் நுண்ணரசியல் படைப்பாளிக்கு எதிராக திரும்பக்கூடும் என்பதே வாசகப் புரிதல்.

பச்சைக்கிளி- சிறுகதையோ பரதேசம் போனாலும் பயணப்பெட்டியில் தம் மதம் மற்றும் சாதியப் பெருமைகளையும் இந்திய பாஸ்போர்ட்டில் சுமந்தே செல்லும் ஒருவனின் கதை. அமெரிக்காவில் உள்ள பார்வதி தேவி ஆலயத்தில் பார்வதி தோளில் கிளி இருக்கிறதென்பது இந்து மத வரலாற்றில் புதிய செய்தி.. ம்ம்… வாசகனைக் குழப்பி பறக்கும் பச்சைக்கிளி.

தொகுப்பின் சிறந்த கதையாக நான் உணர்ந்தது அனஸ்தீசியா!  8 நிமிட கண் அறுவை சிகிச்சையின் போது கொடுக்கப்பட்ட அனஸ்தீசியா மயக்கத்தில் தோன்றும் மாய யதார்த்த பிம்பங்களின் நான் லீனியர் தொகுப்பே இக்கதை. ஒரு கதைக்குள் கதை இருக்கத்தான் வேண்டுமா என்ற பின்நவீனப் பார்வையோடு கதையில்லா கதைக்குள் காட்டப்படும் காட்சிகளில் சமகாலத்திய ஜுகல்பந்தி.

ரசூலின் மனைவியாகிய நான் – குறுநாவல் மும்பை குண்டுவெடிப்புக்கு பின் ஒரு சில குடும்பங்களில் நிகழும் சம்பவங்களின் கோர்வை எனலாம். காலம் உருவாக்கும் உணர்வு மாற்றங்கள்.. பண்பாட்டு விழுமியங்களின் தகர்ப்பு  போன்ற சங்கதிகளை வேறு வேறு பாத்திரங்கள் மூலம் பேசும் இக்கதையின் காலவெளி மிக நெடியது.. சற்றே கனமான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய கதை இதுவெனலாம்.

வாசிப்பினூடாக நெருடும் ஆங்கிலச்சொற்களின் தமிழ்ப்படுத்தல் சற்றே அயர்ச்சியூட்டுகிறது, காரணம் அவ்வார்த்தைகளின் மிகச்சரியானப் பொருள் வாசகனைப் போய்ச் சேராததுதான்.

மும்பை போன்ற பல்வேறு பண்பாட்டு கலப்பு நிறைந்த பெருநகர வாழ்க்கையை, விழுமியங்களை, அவலங்களை பதிவுசெய்திருப்பதன் மூலம் cosmopolitan Metro city ஒன்றின் முகம் ட்ரோன் கேமரா மூலமாக எடுக்கப்பட்ட காட்சிபோல வாசகனுக்கு புதிய தரிசனங்களைத் தருகிறது.

அதேநேரம் கதை மாந்தர்களின் செயல்களும் கதை நிகழ்வுகளும் பல புதிய உடைப்புகளை… குறிப்பாக இதுகாறும் இருந்து வந்த நிலவுடைமைச் சிந்தனைகள், பண்பாட்டு விழுமியங்கள் ஆகியவை தகர்க்கப்பட்டு  புதிய மாற்றங்களை அறிமுகம் செய்கின்றன. அவை எம்மாதிரியான  விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு காலமே பதிலாகும்.

ரசூலின் மனைவியாகிய நான்
கதைகள்
புதியமாதவி, மும்பை
காவ்யா பதிப்பகம்
விலை 140/-

அன்பாதவன்.
தொடர்புக்கு – anbaadhavanjp@gmail.com , 7829985000

அம்புயாதனத்துக் காளி – பார்வை

0
  • பால சுந்தர்
  • (புத்தக தினப் பரிசுப்போட்டியில் தேர்வான கட்டுரை)

பிரபு கங்காதரனின் அன்புயாதனத்துக்காளி,  பெயரே மிக வித்தியாசமாக, சிந்திக்கவும், தேடவும் தூண்டக்கூடிய தலைப்பு, யாதனம் என்றால் மரக்கலம், தெப்பம், வேதனை, துயரம் என்று பொருள் தருகிறது தமிழ் அகராதி. ஆக அம்புயாதனம் என்றால் அம்பு துளைக்கும் வேதனையை தரக்கூடியவள் காளி என்றோ அம்புகளால் செய்யப்பட்ட தெப்பத்தைக் கொண்டு காமத்தை கடந்து, காமத்தால் முக்தி தரக்கூடியவள் காளி என்றோ பொருள் கொள்ளும் வகையில் வாசக தேர்விற்கு ஆசிரியர் சுதந்திரம் தருகிறார். இத்தொகுப்பு எங்ஙனமும் தலைப்பைச் சார்ந்தோ, தலைப்பிற்கு பொருள் என்ன என்பது பற்றியோ கவிதையோ, குறிப்போ, பொருளோ இல்லை. இது ஒரு எழுத்தாளனால், கவிஞனால் வாசகனுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய சுதந்திரம் எனலாம்.

நமது இந்திய மரபில் காமத்திற்கு நீங்கா இடம் உள்ளது, இந்திய மரபு மட்டுமல்ல, உலகின் தொன்மையான அனைத்து மதங்களின் அடித்தளமும், காமம் மற்றும் காமத்தை வென்றடைதல் என்பதன் கீழ் மேல்கட்டுமானம் கொள்ளும். இன்றளவில் ஆலயங்களில் காணப்படும் தாந்திரிக பாலியல் குறியீடுகள், பாலியல் சிற்பங்கள் அனைத்தும் காமம் என்பது வெறும் உடலின்பம் மட்டுமே, இவ்வுடலின்பத்தை கடந்து உள்ளின்பத்தை அடைந்த முதல்வன், இறைவன் உள்ளே வீற்றிருப்பவன், இங்கிருந்து கடந்து செல்கையில் இத்தகைய காமக்களியாட்டங்களை கடந்து உள் செல்கிறாய் எனும் குறியீட்டு பொருள் கொள்ளவே பாலியல்சார் சிற்பங்கள் வடித்துள்ளனர். அதுவும் நமது மரபில் கோபுரங்கள் விண்ணெழும் தீயின் குறியீடாக உவமைப்படுத்தியுள்ளனர்.

அத்தகைய கோபுரங்களில் காமச்சிற்பங்களை அமைத்ததன் காரணம், காமத்தை எரித்து, தூய உள்ளத்தினனாக உள்ளே செல்லவேண்டும் என்பதற்காகவே. அந்த வகையில், பிரபு கங்காதரன் தன் காம உணர்வெழுத்தை காளி எனும் இந்திய மரபு ஒற்றைத்தளத்தில் ஏற்றி தன் காம உணர்ச்சிகளை எரிக்கிறார். இத்தொகுப்பை முடித்து வெளிவருகையில் ஒருவித வெம்மை நம்மை ஆட்கொள்ளும். அந்த வெம்மை காமத்தின் மீதான காதலின் வெம்மை, காமத்தை முற்றழிப்பதற்கான வெம்மை.

இக்கவிதை தொகுப்பு தமிழில் இதுவரை வெளிவராத ஒற்றைப் பிம்பம் நோக்கி, ஒற்றைச்சாளரத்தின் வழியே தன்னைக் கண்டடையும் உள்முறை. ”நாம் பற்றுவதெல்லாம், தானும் பிறிதொன்றைப் பற்றி நிற்பதைத்தான். பேருந்தில் கம்பியைப் பற்றுகிறோம், கம்பியோ பேருந்தின் தளத்தைப் பற்றியிருக்கிறது, தளமோ சட்டகத்தைப் பற்றியிருக்கிறது, சட்டகமோ அடிதாங்கியைப் பற்றியிருக்கிறது, அடிதாங்கியோ உருளியைப் பற்றியிருக்கிறது, உருளியோ தரையைப் பற்றியிருக்கிறது, தரையோ பூமியைப் பற்றியிருக்கிறது, பூமியோ பிற கோள்களுடனான இழுவிசையைப் பற்றியிருக்கிறது, இவை எல்லாவற்றையும் அடக்கிய அண்டமோ பற்ற ஏதுமில்லாமல் வெட்டவெளி தனில் கொட்டிக் கிடக்கிறது.

ஏதோ ஒரு பிடி கிட்டாப் புள்ளியைத்தான் எல்லாமே பற்றிக் கிடக்கின்றன. நாமும் பற்றத் தலைப்பட்டு சிக்கெனப் பிடித்தால் பற்றற்ற அந்தப் புள்ளியின் பிடி கிட்டாமலா போகும்?” அந்த பற்றும் பற்றற்ற பிடியாக காமத்தைக் காளியுடன் கையாண்டு, பற்றற்றான் பற்றினைப் பெற வள்ளுவரின்-பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு வழி  கையாள்கிறார் கவிஞர். ஆக பற்றுவதே வாழ்வு என்று வாழ்வார்க்கு ஒன்று, ஒன்றையும் பற்றாது நிற்பவனைப் பற்றுக. அவனையே பற்றிப் பற்றிப் பற்றாமல் நிற்கப் பயில்க  என்பார் கரு.ஆறுமுகத்தமிழன். கவிஞரின் இப்பற்றினை ஒவ்வொரு கவிதையிலும் காணலாம்.

இக்கவிதைக்கு கவிஞர் கையாண்டிருக்கும், குறியீடுகள், உவமை அனைத்தும் தமிழுக்கு புதுமை. இதில் எந்தக் கவிதை முக்கியம், எது முக்கியமில்லை என்று பிரித்தரியா நிலையில் அனைத்தையும் பற்றும் விதத்தில் உள்ளது. நறை, ராஜபாட்டை, யோனி, நுசும்பு, கணுக்கால் என சில தொடர் பிரயோகங்கள் பயன்படுத்தினாலும், வெவ்வேறு சொல்லமைப்பில், புதிய பொருளில் அர்த்தப்படுத்தும் விதம் புதுமை.

”காளியின் இதழ்கள் களிமண் நிலத்தின் வெடிப்புகளாயிருக்கிறது வயல் நண்டாய் ஊடுருவிப் போகிறேன்” எனும் கவிதையில் உதடு வெடிப்புகளை களிமண் நிலத்தின் வெடிப்புகளுக்கு உவமைப்படுத்துகிறார். மற்றொரு கவிதையில் காளியின் உடலை வருணிக்க ஆம்பல், களிமண் வாசனை, வைகாசியில் பழுத்த புளியின் வாசனை என தொடங்கி, காமத்தின் முதன்மை தளமான ஆதிவாசியாகிறேன் உன்னை நுகர்கையில் எனும் முடிவில் காமத்தின் அடியை தொட்டுச்செல்கிறான் கவிஞன்.

“அடர்வனம் நாணும்…. காளியின் கெண்டைக்கால் உரோமம் காண்கையில்….”

“மரவட்டை போல் ஊருமென் மீசை காளி”, “வியர்வையாய் வழிந்தோடுகிறேன்”,

“அளவிற் பெரிய சதுப்பு நிலத்தை பௌர்ணமியிரவில் கடப்பது போலானது காளியுடனான முயக்கம்”, போன்ற பல புதிய உவமைகளை பயன்படுத்தி, சொற்களுக்கான புது அர்த்தத்தை காமத்தில் தன்னைத் தேடுவது போன்று தேடுகிறார் கவிஞர்.

“அரைஞாண் கயிற்றை வெள்ளிநதி”க்கு ஒப்பிடும் உவமை என நீண்ட பட்டியல் போடலாம் கவிஞனின் உவமப்புதுமையை வெளிக்கொணர…

எடுத்துக்காட்டாக,

“ஒரு மலைச்சரிவின்
கருத்த பாறையின் மேல்
படர்ந்திருக்கிறாள் காளி
நீ…..ண்……ண்…..ண்……ட
முத்தத்தின் முடிவில்
மலைப்பாம்பாய்
எனை விழுங்குகிறாள்
கதகதப்பான
அவள் கருப்பைத்
தேடியமர்ந்து கொள்கிறேன்”

என்ற கவிதையில் நீண்ட முத்தத்தின் கால அளவை காட்ட, சுஜாதா பயன்படுத்தும், அவன் மாடியிலிருந்து மெதுவாக


            ற
                         ங்
                                      கி                       

போன்ற உத்தியைப் பயன்படுத்தியிருக்கும் விதம், அந்த முத்தத்தை நாமும் நீண்ட நேரம் அனுபவிக்கும் ரசனையை ஏற்படுத்துகிறது. வாசக விருந்து என்றும் கொள்ளலாம்.

நீர் கொண்டு போகும் நத்தை போலெனை முதுகில் சுமந்திருக்கிறாள் எனும் வரியில், நீர் போன்று தான் மிகவும் இயல்பானவன் என்று குறிக்கிறார். இக்கவிதைகள், ஆன்மீகத்தின் ஊற்றுக்கண் என்பதற்கு இந்த ஒரு கவிதை போதும்,

முன்னும் பின்னும்….
பின்னும் முன்னும்….
யென நாவால் தவழ்ந்துன்
திருமேனியளந்து பிறவாப்
பேறடைவேன் மாகாளி…

எனும் கவிதையை சுட்டலாம்… பக்தி இலக்கியத்தில், இறைவனை துதிக்கும் பாடல்களின் ஒருவகை, கேசாதி பாதம், பாதாதி கேசம் என்பது. அதாவது இறைவனை பாதத்தில் இருந்து தலைவரை பாடுவது பாதாதி கேசம், தலையிலிருந்து பாதம் வரை பாடுவது கேசாதி பாதம் என்பதாகும். அதுபோன்று முன்னும் பின்னும்…. பின்னும் முன்னும் நாவால் தவழ்ந்து துதிப்பதாக இக்கவிதையைக் கொள்ளலாம் நாம். இதுபோன்று பல கவிதைகளை கூறப்போனால் மொத்தக் கவிதையையும் கூறிவிடுவதாக அமைந்துவிடும் என்பதால் இனி கவிதைகளை படித்து இன்பம் நுகர இத்தோடு நிறுத்துகிறேன்.

காளியெனும் பிம்பம் நம் மரபில், கோவத்தின், தீயசக்தியின், பயத்தின் குறியீடாகத்தான் கொள்வோம். அத்தகைய பிம்பத்தை அன்பின், காமத்தின், காதலின் குறியீடாகக் கொண்ட கவிஞனின் துணிச்சல் எதிலும் அன்பைக் காணும் நோக்கை அறிவுறுத்துகிறது.

காமம் வழியும் முக்தியை அடையலாம் என்று நவீனத்துவ வழியில் நிரூபிக்கும் தமிழின் முக்கிய ஆவணம் அம்புயாதனத்துக் காளி.

பால சுந்தர்

மெய் திறக்கும் நூல்

1
  • ரா.கார்த்திக்
  • (புத்தக தினப் பரிசுப்போட்டியில் தேர்வான கட்டுரை)

அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை

தமிழகத்தில் கவனிக்கத்தக்க சிந்தனையாளர்களுள் டி.தருமராஜ் முக்கியமானவர். அவரின் பார்வையும், ஆய்வு அணுகுமுறையும் தமிழ் சூழலுக்கு முற்றிலும் புதியவை. அதற்கு முக்கியமான காரணம் அவரின் குறியியல் சிந்தனை.

அவரின் ‘நான் பூர்வ பௌத்தன்’, ‘கலகக்காரர்களும் எதிர் கதையாடல்களும்’, ‘தமிழ் நாட்டுப்புறவியல்’ ஆகிய நூல்களைக் காட்டிலும் ‘நான் ஏன் தலித்தும் அல்ல’ மற்றும் ‘அயோத்திதாசர்’ ஆகிய நூல்கள் அதிக கவனம் பெற்றன. ஏனெனில் இவ்விரு நூல்களும் தலித் அரசியல் மேற்கொண்டுவரும் வழக்கமான விவாதங்களை மறுபரிசீலனைச் செய்கிறது மற்றும் தலித் என்ற அடையாளத்தையும் மறுபரிசீலனைச் செய்கிறது.

“அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை” என்ற நூல் ஒரு கதம்பத்தைப் போல பின்னப்பட்ட தன்னிலை என்பேன். ஏனெனில், நூலின் முதல் பகுதியான ‘நான் பூர்வ பௌத்தன்’ அயோத்திதாசரை தலித் அரசியல் தேடிக்கண்டடைந்த நாயகனைப் போல சித்தரிக்கிறது. கிட்டத்தட்ட முதல் பகுதி ஒரு திரைப்படத்தின் கதாநாயகனின் அறிமுகத்தைப் போல உள்ளது. அயோத்திதாசர் எவ்வாறு தோன்றினார். அவர் எவ்வாறு பேசுவார். அவர் எப்படி எழுதினார் என்று அவரை கதாநாயகனாக கற்பனை செய்யப்பட்டதே முதல் பகுதி. இங்கு தான் அயோத்திதாசர் யார் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

அயோத்திதாசர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பறையர் சமூகத்தில் பிறந்தவர். இவர் திண்ணைப்பள்ளியில் கல்வி கற்றவர். இவர் தமிழ், சமஸ்கிருதம், பாழி ஆகிய மொழிகளை கற்றுக்கொண்டவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரித்தானிய ஆட்சியாளர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பை முதன்முதலில் துவங்கியபோது கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமியர்கள் அல்லாத மக்களை ‘இந்து’ என்ற பெயரில் கணக்கெடுத்ததைக் கடுமையாக எதிர்த்தவர். மேலும் நாட்டுப்புற சமயத்தில் உள்ள வழிபாட்டுக் கூறுகள் பௌத்தத்தைச் சேர்ந்தவை என தொடர்ந்து வாதாடிவர். மேலும், தமிழர் என்ற பொது அடையாளம். திராவிடம் என்ற பதத்தை பயன்படுத்தியதில் திராவிட இயக்கங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.

இரண்டாம் பகுதியான ‘இது பௌத்த நிலம்’ சற்று சுவாரஸ்யமாக அயோத்திதாசரைப் போல் தன்னை பாவித்துக் கொண்டு தருமராஜ், அவர் எழுதியதை திரும்ப எழுதிப் பார்க்கிறார். மறுவாசிப்பு என்பதை தமிழ் சூழல் அதிகமாக பழகியிருக்கிறது. வேறொரு காலத்தில் எழுதப்பட்ட பிரதியை புதிய சூழலில் வாசித்து பார்க்கும்போது வெவ்வேறு புதிய அர்த்தங்கள் திறக்கப்படும் என்பதே மறுவாசிப்பு. இங்கு மீண்டும் எழுதிப்பார்த்தல் என்பது அயோத்திதாசர் எவ்வாறு யோசனை செய்தார் என்பதைக் கண்டடையும் வழி என்கிறார் தருமராஜ்.

இப்பகுதியில் அயோத்திதாசரின் சிந்தனையை கண்டறிய முயற்சி செய்யும் தருமராஜ் ஸ்லொவேனிய அறிஞர் சீசகின் முறையியலை பயன்படுத்திக் கொள்கிறார். எல்லா இந்து புராணங்களையும் அயோத்திதாசர் மறுவரையறைக்கு உட்படுத்த வேண்டிய காரணம் என்ன? என்ற கேள்வியை எழுப்பி தருமராஜே பதில் அளிக்கிறார். இப்பகுதியில் உள்ள ‘காலத்தினுள் அசையும் வேம்பு’ என்ற கட்டுரை திரும்பி எழுதிப்பார்த்த கட்டுரைகளில் குறிப்பிடத் தகுந்த சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். ஆய்வுக் கட்டுரையின் அழகியல் இல்லை என்ற வாதத்தை இந்த கட்டுரை சுக்குநூறாக்கியது. இப்பகுதியில் குறிப்பிடத் தகுந்த மற்றுமோர் கட்டுரை “மையம், விளிம்பு, அதற்கும் அப்பால் நிற்கும் அயோத்திதாசர்”. அயோத்திதாசர் தன்னை தாழ்த்தப்பட்டவர் என்று சொல்வதையோ பறையன் என்ற அழைப்பதையோ ஒருபோதும் விரும்பியதில்லை. ‘பறையன்’ என்று பெயரில் வெளிவந்த பத்திரிக்கையையும் கடுமையாக எதிர்த்தார்.  தன்னை தாழ்த்தப்பட்டவன் என்று ஒத்துக்கொள்வது அதனைக் கொண்டாடுவதும் ஒன்றே என்றார். அதற்கு பதிலாக வேடபிராமணன் என்பதை மொழிந்தார். இதன் வாயிலாக இந்திர தேச சரித்திரத்தில் புராணங்களை மறுவரையறை செய்கிறார். பண்டிகைகளுக்கான தொன்மங்களில் உள்ள இந்து சமய வாதங்களை நீக்கம் செய்து தர்க்கரீதியிலான விளக்கங்களைச் சொல்கிறார்.

இப்பகுதியில் தான் அயோத்திதாசரின் மொழி அறிவை அவரின் மொழி ஞானத்தை நமக்கு காட்டுகிறார். தமிழ் மொழியை ஆராய்ந்த ஜி.யு.போப் போன்ற மேலைநாட்டு அறிஞர்களுக்கு இலக்கணம் தெரியும், இலட்சணம் தெரியாது என்றார். மொழிக்கு இலக்கணம் இருக்கிறது, மொழிக்கு இலக்கியம் இருக்கிறது அது என்ன இலட்சணம்? என்ற கேள்விக்கு தர்மராஜ் பதில் அளிக்கிறார். சமஸ்கிருதமும் தமிழும் எதிரும் புதிருமான மொழி என மேலைநாட்டு அறிஞர் சொல்வது போல அயோத்திதாசர் கருதவில்லை இவ்விரு மொழிக்கும் ஒத்த தன்மைகள் உள்ளன. அவை இலட்சணத்தால் ஒன்றுபட்டுள்ளன. பஞ்ச இலட்சணங்களைக் குறிப்பிடுகிறார். இலக்கணத்தைப் போல் வெளிப்பார்வைக்குப் புலப்படாதது இலட்சணம். உள்ளே மறைந்து கிடப்பது. பண்பாட்டு செயல்பாடுகளில் வெளிப்படக்கூடியது. இலக்கணத்தை மேலோட்டமாகவே கற்றுக்கொண்டு விட முடியும். ஆனால் இலட்சணத்தைக் கற்றுக் கொள்வது கடினம் என்கிறார் தருமராஜ்.

மூன்றாம் பகுதியான ‘பூர்வ பௌத்தனின் கல்லறை’ தருமராஜின் மேதமையை பறைசாற்றும் பகுதி. அயோத்திதாசரை கதாநாயகனைப் போலவும், தன்னையே அயோத்திதாசராக பாவித்துக் கொள்வது போலவும் எழுதியவர். அவற்றை எல்லாம் கடந்து அயோத்திதாசரை ஒரு நிகழ்வாக மாற்றிக் கொள்கிறார். இந்த யுக்தியை சமகால தத்துவ அறிஞரான ஆலன் பேத்யோவிடம் இருந்து பெற்றுக் கொள்கிறார். அயோத்திதாசரைக் கொண்டாடி, அயோத்திதாசராக வாழ்ந்து, இறுதியாக அயோத்திதாசரை கடந்து செல்ல உதவுகிறார் தருமராஜ்.

ஞாபகத்திற்கு ஞாபகம் வந்த ஞாபகம் பற்றி பேசுவது அற்புதமானது. அயோத்திதாசரின் எழுத்துக்களை 90 களில் கண்டுபிடிக்கும் போது நாம் அயோத்திதாசரை கண்டறிந்தோம். ஆனால் அவர் தன் காலத்தில் பூர்வ பௌத்தன் என்ற யோசனையைக் கண்டறிந்தார். இதைத்தான் தருமராஜ் ஞாபகத்திற்கு ஞாபகம் வந்த ஞாபகம் என்கிறார். இங்குதான் அயோத்திதாசர் எவ்வாறு கண்டடையப்பட்டார், அவரின் சாக்கிய பௌத்த சங்கம் எவ்வாறு திராவிட இயக்கங்களுக்கு அடித்தளமாக விளங்கியது குறிப்பிடப்படுகிறது.

மறதி, மொழியின் கனத்த மௌனம். மற்றமையின் அதிகப்படியான ஞாபகமே என் மறதி. மறதி என்பது ஞாபகத்தின் வெற்றிடமல்ல புதிய ஞாபகத்தின் வருகை என்கிறார். அயோத்திதாசர் கண்டறிந்த பூர்வ பௌத்தன் என்ற ஞாபகம் பறையர் என்ற தன்னிலையை கேள்வி கேட்கிறது. அயோத்திதாசரின் ஒட்டுமொத்த அரசியல் சொல்லாடலையும் ‘பறையன்-பௌத்தன்’ என்ற தன்னிலைகளுக்கு இடையிலான மோதல் என்று சொல்ல முடியும் என்கிறார்.

அயோத்திதாசர் நிகழ்த்திய மூன்று முக்கிய செயல்பாடுகள் இந்து என்று ஞாபகப்படுத்தும் பனுவல்களை மறுவாசிப்பு செய்தல், காலனிய அரசுச் செயல்பாட்டைக் கண்காணித்தல், இந்திய தேச இயக்கத்தை விமர்சித்தல். இம்மூன்றையும் எதிர்ப்பதற்கு அயோத்திதாசரிடம் இருந்த ஒரே ஆயுதம், ‘சாதி பேதமற்ற சமத்துவ சமுதாயம்’ என்ற நியாயம் மட்டுமே என தருமராஜ் குறிப்பிடுகிறார்.

மேலும், அயோத்திதாசரின் மொழியறிவை வளர்த்தெடுக்கும் தருமராஜ் புதிய திறப்புக்களை நமக்கு அளிக்கிறார். அயோத்திதாசர் தமிழ் சொற்களின் பின் உள்ள ‘மை’ விகுதிக்கு பதில் ‘மெய்’ என்று பயன்படுத்தும் பழக்கத்தை திட்டமிட்டு செய்தார். இவ்வாறே தான் கற்றுக் கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். எழுத்துக்களை அமுதெழுத்து, நச்செழுத்து என வகைப்படுத்தினார். மொழியின் இயல்பு அறம் என்றார் அயோத்திதாசர்.

அயோத்திதாசரின் மொழியறிவில் தருமராஜ் வளர்த்தெடுக்கும் மெய் எழுதுக்கள் பற்றிய யோசனை தமிழ் சிந்தனை உலகிற்கு புதிய வெளிச்சங்களை பாய்ச்சக்கூடியது. தமிழ் ஆய்வுகளுக்கு புதிய பார்வைகளைத் தரக்கூடியது. ஓசையற்ற பதினெண் மெய் எழுத்துக்கள் என்பன தமிழ் மொழிக்கே இருக்கக்கூடிய தனித்துவம் என்கிறார். இலக்கணம் என்ற எல்லையையும் கடந்து, அதனை தத்துவார்த்த உரையாடலாக வளர்த்தெடுக்கும் சாத்தியங்களை ‘மெய்’ என்ற சொல்லே நமக்கு ஏற்படுத்துகிறது என்கிறார்.

இவ்வாறாக வெவ்வேறு புதிய சிந்தனைகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் பகுதி இது. இதனை அயோத்திதாசரை முன்வைத்து சாத்தியப்படுத்தியுள்ளார். தமிழ் சூழலில் பெயரளவில் அறிமுகமாகியுள்ள டெல்யூஸ், பாத்யோ, லாக்லவ், சீசன் போன்ற தத்துவ அறிஞர்களின் கருத்துக்களை தமிழ் சூழலில் பொருத்திப் பார்த்தும், தமிழ் சூழலில் வேறொன்றாக அதனை வடிவமைத்தும் அளித்துள்ளார்.

மேலும், 326 பக்கங்கள் கொண்டும் கடுமையான தத்துவ ஆய்வுகளையும் கொண்ட இந்நூலை வாசிப்பதற்கு மிக எளிமையானது என்றால் ஆச்சரியமடையச் செய்யும். ஆம், உண்மையிலேயே எழுத்தின் நுட்பமானது நூலை வாசகனின் மனநிலையில் அணுகி, எளிமையாக வாசிக்கும் வண்ணம் படைத்துள்ளார். முதல் இரண்டு பகுதிகள் துப்பறியும்  நாவலைப் போல விறுவிறுப்பாக செல்லக் கூடியது. கடைசிப்பகுதி ஒரு புதிய உலகில் நிகழும் சாகசக்கதை போன்றது. ஓர் ஆய்வுப் புத்தகம் கலைப்படைப்பு போல வாசிக்கக் கிடைப்பது புதிய அனுபவம். அந்த அனுபவத்தை இந்த நூல் தமிழ் சூழலுக்கு வழங்கியிருக்கிறது.

அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை
ஆசிரியர்: டி. தருமராஜ்
கிழக்கு பதிப்பகம்

  • ரா.கார்த்திக்

தீபச் செல்வனின் ‘நடுகல்’ நாவல் விமர்சனம்

1
  • அ.நாகராசன்
  • (புத்தக தினப் பரிசுப்போட்டியில் தேர்வான கட்டுரை)

        இப்பூப்பந்தே குருதியால் சிவக்குமளவு, பெண்ணுக்காகவும், மண்ணுக்காகவும் நிகழ்ந்த யுத்தங்கள் பற்றிய வரலாற்று குறிப்புகளும், இதிகாசக் கதைகளும் நம்மிடை காலங்காலமாய் உலவுகிறது.. யுத்தங்களைக் குறித்த நம் பார்வை உணர்வு பூர்வமான ஒன்றாகவோ அல்லது நாம் கற்பித்துக்கொண்ட அறம் சார்ந்த ஒன்றாகவோதான் இருக்கும்.

இந்நாள் வரை யுத்தங்கள் நிகழும்போது யுத்த பூமியை சுற்றி வாழ்ந்த சாதாரண அப்பாவி குடிமக்களுக்கு நிகழக்கூடிய அனுபவங்களை குறித்த சிந்தனை குறிப்புகள் நம்மிடை இல்லை.

23-7-1983 முதல்  18-5-2009  வரை மூன்று கட்டங்களாக விடுதலை புலி இயக்கமோடு, ஸ்ரீலங்கா ராணுவம் நிகழ்த்திய உள்நாட்டு போரினை  பின்புலமாகக் கொண்டு, 2011-2012 க்கு  முன் 1996 ஆம் ஆண்டு ஆனி மாதம் முதல்  கிளிநொச்சி, எ-9 வீதி, முறிப்பு, இரத்தனபுரம் கனகபுரம், கந்தபுரம், மணியங்குளம் ஆகிய பகுதியில் வாழ்ந்த சாமான்ய நிராயுதபாணியான அப்பாவி தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த வரலாற்றுக் கொடுமைகளையும், தனி மனித சோகங்களையும், மங்கையர் சந்தித்த வன் கொடுமைகளையும்  தீபச்செல்வன் எழுதியுள்ள நடுகல் நாவலை வாசிக்கையில் “ If  You have tears shed them now “ என்ற வரிகள் தான் நினைவுக்கு வந்தது.

நாவலின் முக்கிய நிகழ்வு ஒரு தாய்  தன் மகன் மற்றும் மகளுடன் வளம் மிகுந்த தன் சொந்த மண் கிளிநொச்சியை துறந்து, செல்லடிக்கும் சூப்பர் செனிக் விமானத்தின் குண்டுமழை தாக்குதலுக்கு அஞ்சி  குடும்பத்தை பாதுகாக்க முறிப்பு, கந்தபுரம், பின்னர்  முரசுமோட்டை தர்மபுரம், விசிவமடு என தஞ்சம் புக ஓடுவது தான் . அவளைப் போலவே அனேக குடும்பத்தினர் அவசிய தேவைகளை சிறு துணி முட்டைகளில் சுருட்டிக் கொண்டு, முதியவர்களை சைக்கிளில் வைத்து தள்ளிக்கொண்டும், டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் இடம் பெயர்ந்து அகதிகளாய் வருகிறார்கள்.

        அமைதியாக இயற்கை சூழலில்  “எந்த சர்வதேசக் கொள்கையையும், வர்க்க கோட்பாட்டையும் அறிந்திரா இவர்கள் வாழ்ந்த வீதியின் முகப்பில் விமானத்தாக்குதல்கள் நடத்தப்பட்டு, வீதியே அடையாளம் தெரியாமல் உருக்குலைந்திருந்தது .லொறிகள், உழவியந்திரம் திருத்தும் பெரும் இயந்திர திருத்தகம் அங்கு இருந்தன. எல்லாம் குண்டு வீச்சால் சிதைந்திருக்க அவை மீது கந்தகப்புழுதி. அச்சமூட்டும் ஆளற்ற வீதி. வாய்காலுக்கு கீழாக ஒரு பிணம் ஊதிப்போயிருந்தது. புழுக்கள் நெளியும் பிணம், துர்நாற்றம். வீடும், சுவரும் மண்ணோடு மண்ணாகி விட்டது. விமான குண்டில் சிதைந்திருக்கும் தேமா மரம்.. தென்னை மரங்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்திருந்தன.”    நிகழ்ந்த இந்த பூகம்பம் தான் இவர்களை  வாழ்ந்த மண்ணில் இருந்து விரட்டி குண்டு மழையும், பதுங்கு குழியும், நித்தைய நிகழ்வும் புகலிடமாயும் ஆக்கி இருந்தது.

இறுதியில்,அவர்களின் சேருமிடம் — முள் வேலி முகாம்கள். .

“ஒரு 25 ஏக்கர் சுற்றிச்சுற்றி முள் வேலிகள், சுற்றி இன்னொரு வேலியாக துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர் கண்காணிப்புகள்.

மூன்று தலைமுறைகளாக இவர்கள் சந்தித்த யுத்த கொடுமைகளின் உச்சமாக நலன் புரி நிலையம் என்ற பெயரில் அமைந்த சித்திரவதை செய்யும் முகாம்கள். கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் அகதி முகாம்கள்.

அங்கே “சனங்கள் கைதிகளாக இருந்தார்கள். சனங்களின் முகங்கள் காய்ந்து கோணி இருந்தன. முகாம்கள் மூன்று லட்சம் சன அவலக் கதைகளை தன்னுள் வைத்திருந்தன”. இந்த முகாம்களை நிர்மாணிப்பதற்காக பெரும் காடுகள் அழிக்கப்பட்டிருந்தன. அங்கே கேட்கும் குரல்கள்…..

“அம்மா அழாதிங்கோ எல்லோரும் உயிரோடை இருக்கிறம்தானே.”

“இந்த முள் வேலி எல்லாம் மூடுகிற நாள் வரும்.. பழைபடி எல்லாம் மாறும்”

தாய் மக்களை பிரிகிறாள். அல்லல் உறுகிறாள். படிக்க வேண்டிய வயதில், சொந்த மண்ணில் அகதிகளாய் உணவு இருப்பிடம் இன்றி ஒடி ஒளிந்து அஞ்சி வாழும் வலிகளை அவள் பிள்ளைகள் நேருக்கு நேராகச் சந்திக்கிறார்கள். இதுபோல் நூற்றுக்கணக்கான குடும்பங்கள். இந்த குடும்பத்தார் செய்த கலகம் என்ன.?.. விரட்டித் தாக்கும் அளவுக்கு செய்த தேசதுரோகம் தான் என்ன.?

அதனால் தான்

“ If  You have tears shed them now “

நாவலை, நிகழ்காலம்,.பின் இறந்தகாலம், மீண்டும் நிகழ்காலம் என்று காலச்சக்கரத்தை முன்னும் பின்னும் நகர்த்தி பாதிக்கப்பட்ட வினோதன் என்ற சிறுவன் பார்வை வாயிலாக அவன் வளர்ந்த இளைஞன் ஆவது வரை கதை சொல்லப்பட்டுள்ளது,.

நடுகல் குறித்த புறநானுற்று சங்க இலக்கிய பாடல் அறிமுகத்துடன் நாவல் துவங்கி முதல் அத்தியாயத்திலேயே தன் இனத்தை வாழ்ந்த பூமியை காக்கும் போரிட்டு மாண்ட மாவீரனின் வீர சாவுக்கு தலைவணங்கும் விதத்தில் அவன் குடும்பத்தார் கல் ஒன்றை நட்டு மரியாதை செய்யும் நிகழ்வைச் சொல்லி நேரிடையாக கதையின் மையப்புள்ளியைச் சுட்டி விரிகிறது.

“அம்மா அக்கல்லை குளிப்பாட்டுவாள். உணவூட்டுவாள். அதில் இறந்து போன தன் மகன் முகம் தெரிகிறதென்பாள்.”

இலங்கை இராணுவத்துடன், விடுதலைப்புலி இயக்க போராளிகள் நடத்திய நீண்ட உள் நாட்டுப் போரில் மரணம் அடைந்த வீரர்கள் நினைவாக அமைக்கப்பட்ட கல்லறைகள் மற்றும் நினைவுக் கற்களை கொண்டவை  மாவீரர் துயிலும் இல்லங்கள்.. அந்நினைவு ‘நடுகல்’லை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று மாலை 6.05 மணிக்கு ஈகைச்சுடரேற்றி அவ்வீரனின் பொற்றோர்கள் வழிபடுவது வழக்கம். அந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் கதை சொல்லும் வினோதனுக்கும் அவன் அண்ணன் வெள்ளையனுக்கும்                            இடையே நடந்த உரையாடல் இப்படி உள்ளது.

‘ஏன் அண்ணா இவ்வளவு பேரும் செத்தவையள்’

‘ம்.. மாவீரர்களைக் கும்பிடு அவையள் எங்களுக்காக போராடித்தான் வீரச்சாவடைந்தவையள்’

‘அவையிண்டை அம்மா அப்பா தம்பி எல்லாம் அழ மாட்டினமா.’

அழுவினம் தான்’

‘அவையள் பாவம் எல்லோ’

‘ஆனால் அந்த அம்மா அப்பா தம்பியளோடை எங்கடை மண் எல்லாத்தையும் ஆமியிட்டை இருந்து காப்பத்தானே வீர சாவடைஞ்சவை.’ இவனுன் சில நாட்களுக்குப்பின் வீர சாவடைந்து இங்கே நடுகல்லாய் விதையாய் மீண்டும் விதைக்கப்படிருக்கிறான்.”

இந்த சண்டைகள் முடியும். எங்களுக்கு ஒரு விடிவு வரும். விடுதலை அடைஞ்ச தமிழீழத்தில் எங்கடை மக்கள் எல்லாம் நிம்மதியாய் இருபினம்”

என்று பிரியா விடை தந்த அந்த வெள்ளையன் என்ற அண்ணன் பின்னர் வீர சாவையடைந்து கந்தபுரத்துக்கு வருகிறான். இயக்கத்தினர் அவனை கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டு நடுகல் வைத்து வணங்கினர்..,

கதையின் பிரதான பாத்திரங்களான, வினோதன் மற்றும் வீர சாவையடைந்த அவன் அண்ணன் வெள்ளையன் என்கிற பிரசன்னா வழியாக ஆசிரியர் எதிர்காலம் பற்றிய செய்தியை சொல்கிறார்.

வினோதன் ஜனநாயக முறையில் விழிப்புணர்வை விதைக்கும் பத்திரிக்கையாளன் ஆகிறான்.

ஆசிரியர் சொல்லும் நடுகல் வேறு பரிமாணத்தில் பொருள் தந்து நம்பிக்கையை விதைக்கிறது.

நடுகல்
தீபச்செல்வன்
டிஸ்கவரி புக் பேலஸ்
***

அ.நாகராசன்

உச்சை

6
  • ம.நவீன்

கொட்டகைக்கு அருகில் நிழலசைவு தெரிந்தவுடன் முத்தண்ணன் திடுக்கிட்டு எழுந்தான். உச்சையின் நெடுநேர கனைப்பு கனவின் தொலைதூரத்தில் கேட்பதுபோல இருந்ததால் அயர்ந்துவிட்டிருந்தான். சமீப காலமாக அவன் கனவுகளில் மனிதர்களே வருவதில்லை. சிறு தீப்பொறி கனன்று கம்முவது தெரிந்தது. கண்களை கசக்கிப்பார்த்தான். நின்றிருக்கும் மனிதரின் தலைக்கு மேல் தொப்பியின் நிழல்வடிவம். துரைதான் என்று தெரிந்தவுடன் பயம் அதிகரித்தது. ஏதும் தவறு செய்துவிட்டோமா என மனதில் ஒருதரம் ஓட்டிப்பார்த்தான். மாலையில் கோதுமை தவிட்டை தின்றுவிட்டு பீட்ரூட்டையும் அதுதான் ஆசையாகக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டது. அதற்கு பீட்ரூட் என்றால் கொள்ளை பிரியம். அருகம்புல்லை நீட்டினால் முகத்தைத் திருப்பிக்கொள்ளும். சீமை குதிரையென்ற திமிர். நோய்த்தடுப்புக்கென அவ்வப்போது தவிட்டுடன் கலந்து கொடுத்துவிடுவான். இன்று அப்படி எதுவும் செய்யவில்லை. அதன் மகிழ்ச்சியை உறுதி செய்த பின்னரே படுக்கச்சென்றான்.

கொட்டகைக்கு ஓடினான். வாயைக் கொப்பளிக்காமல் அருகில் சென்றால் துரைக்கு கோபம் வரும். பதற்றத்தில் எதுவும் நினைவுக்கு வரவில்லை. பீளையை அகற்றியபடி துரையை நெருங்கினான். எப்போதும் முகத்தைக் காட்டும் துரை அன்று ஒன்றும் சொல்லவில்லை. கடந்த இருவாரமாகவே அவர் நிரைகளுக்கோ அலுவலகத்திற்கோ செல்லாமல் பங்களாவுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார். அவனுக்கு துரை முகத்தில் ஏதோ வித்தியாசம் தெரிந்தது. இரண்டாவது சிகரெட்டைப் புகைக்க பொறிப்பெட்டியைச் சொடுக்கியபோது அவரது மீசையும் தாடியும் செம்பு நிறத்தில் மின்னுவதைப் பார்த்தான். அவருக்கு மீசை தாடியெல்லாம் முளைக்காது என்றே அத்தனை காலம் நம்பியிருந்தான். நெருப்பைப் பார்த்ததும் உச்சை கொஞ்சம் பின்வாங்கி தலையை உலுக்கியது. அருகில் சென்று அதன் முகத்தை வெகுநேரம் தடவியவர் ‘பிளேக்கி’ என அதன் கழுத்தைக் கட்டிக்கொண்டார். துரை அழுகிறார் என்று தெரிந்ததும் அவன் விதிர்த்துப் போனான்.

முத்தண்ணன் வேலைக்கு அமர்த்தப்பட்ட முதல் நாள் “ஏலேய் பிலாக்கி. ஞ்ச வாடே” என கொஞ்சம் மல்லுக்கட்டி இழுத்தபோது, துரை பூட்ஸ் காலால் அவன் இடுப்பில் மிதித்தார்.

“குதிரய அதோடு பேர சொல்லி கூப்புடாம வேற எப்புடி ஐயரே கூப்புடுறது”

ஐயரிடம்தான் அவனால் எதையும் கேட்க முடியும். துரையின் காரியதரிசி. பங்களாவில் துரை இருந்தால் படுக்கையறை, உணவு அறையைத் தவிர பெரும்பாலும் அவருடனேயே சுற்றிக்கொண்டிருப்பார். பங்களாவை ஒட்டி இருந்த சிறிய கல்வீட்டில் வசித்து வந்தார். மனைவி குழந்தைகள் ஊரில் இருந்தார்கள். எவ்வளவு வேலையாக இருந்தாலும் சொந்தமாகவே சமைத்துக்கொள்வார். துரையின் சமையலையோ அவர் சமையல்காரரையோ வீட்டுப்பக்கம் சேர்க்க மாட்டார்.

“நீ சார்ன்னு மரியாதையா கூப்ட்ருந்தியானா அவர் உன்னண்ட பவ்யமா நடந்துண்டுருப்பார்” இடுப்பு வலியைவிட ஐயரின் கேலி எரிச்சலாக இருந்தது. குதிரையுடன் நன்றாகப் பழகிய பிறகு அதனை ஏவி  ஐயரின் குண்டியில் உதைவிட வேண்டுமென நினைத்துக்கொண்டான்.

வெற்றிலையை வாயில் குதப்பிக்கொண்டே “உச்சைஸ்ரவம்னா தெரியுமாடா?” என்றார்.

அதுவும் ஏதோ கேலி சொல்போல இருந்ததால் அவன் ஒன்றும் சொல்லாமல் முறைத்தான்.

“இந்திரனோட குதிரை”

“அது வெள்ளையாமுல்ல இருக்கும்”

“கெட்டிதான். இதெல்லாம் தெரிஞ்சு வச்சுண்டிருக்கே. உச்சைஸ்ரவத்துக்கு ஏழு தலை.  குதிரைக்கெல்லாம் அதுதான் தேவன் தெரியுமோ?  நாலு காலையும் ரக்கையா விரிச்சுண்டு வானத்திலே பறக்கும்”

“பின்ன… இந்திரன் வானத்துல இருந்தா பறக்கத்தானே வேணும். தரையில அதுக்கென்ன வேல”

“வார்த்தைக்கு வார்த்த பதில் பேசாதடா அதிகப்பிரசங்கி… காஷிப முனிவர்னு ஒருத்தர். சகலமும் அறிஞ்சவர், மஹா  புருஷர். அவருக்கு ரெண்டு பொண்டாட்டி. ஒருத்தி விநதை. இன்னொருத்தி கத்துரு.  ரெண்டு பொம்மனாட்டிகளோட ஒன்னா குடித்தனம் பண்ணனும்னா சாத்தியப்படுமோ? சதா சண்டதான். ஒருநாள் அவா ரெண்டு பேரும் வானத்தில பறக்கிற உச்சைஸ்ரவத்த பாத்துட்டா. விநதை அது வெள்ளைக் குதிரைங்கிறா. கத்துரு கருப்புங்கிறா. வாக்குவாதம் நீண்டுண்டே போறது…” 

“கோயில் கோபுரத்துலதான் செலயாவே இருக்குமே ஐயரே. அதுல என்ன போட்டி?”

“குறுக்கப் பேசாதேன்னேன்னோ. காஷிபர் வாழ்ந்தது உங்க தாத்தா காலத்திலேன்னு நெனக்கறாயாடா மண்டு. அப்போ இந்திரனுக்கு சிலையெல்லாம் கிடையாது. இது பாரதக் கதை தொடங்கறதுக்கு மின்னாலே நடந்த சம்பவம்டா. கேளு. வாதம் முத்திடுத்து. யார் சொல்றது சரின்னு தீர்ப்புச் சொல்ல வேண்டிய சங்கடம் காஷிபருக்கு. அவர் பறக்கிற குதிரையைப் பார்க்க வெளில வர்றார். கத்துருவுக்கு ஜனிச்சதெல்லாம் கருநாகமோன்னோ… அவ என்ன பண்றான்னா,  அந்த க்ஷணமே, தன் கொழந்தேள அனுப்பி குதிரையோட வாலைச் சுத்தி மறைச்சுக்கச் சொல்றா. குதிரையோட வால் கறுப்பாயிடுத்து. வால் கறுப்புங்கிறதால, குதிரை கறுப்புன்னு தீர்ப்பாயிடுத்து. தோத்துப்போன விநதை கத்துருவுக்கு அடிமையாயிட்டா…”

“கத நல்லா இருக்கு. ஆனா இந்திரனோட குதிர வெள்ளதானே”

“அது இங்க முக்கியமில்லைடா.” என்றவரின் குரல் தாழ்ந்தது. “நம்ம பிளாக்கியும் ஸர்ப்பம் சுத்தின  குதிரைதாண்டா. அதனாலதாண்டா அது வந்ததுமே நோக்கு உதை விழுந்திருக்கு”

“என்ன ஐயரே சொல்றீரு?”அவனுக்கு படபடப்பாக வந்தது. அவனுக்குப் பாம்பென்றாலே பயம்.

“நம்புடா. அது வந்து இறங்கின க்ஷணமே கவனிச்சுட்டேன். கருநாகம்போல அதோட தேஹம் என்னமா ஜொலிக்கறதுன்னு பாத்தியோ… “

“ஆமாங்க ஐயரே.” பின்னர் கொஞ்ச நேரம் யோசித்து “ஆனா அதானே பாக்க ஒரு இதுவா இருக்கு” என்றான்.

“ஸர்ப்பம் சுத்தினா அப்படித்தான்டா இருக்கும். அது வந்த நேரம் நம்ம தோட்டத்துக்கு கஷ்டகாலம் ஆரம்பமாயிடுத்து தெரியுமோ. அதை வளர்க்கிறவனுக்கும் கேடுகாலம்டா. அதுக்குத்தான்டா அப்பவே ஒன்ன ஓடிப்போயிடுன்னு ஜாடை காட்டினேன். உன் மரமண்டைக்குப் புரியல்லை…”

“ஏன் ஐயரே அப்படி சொல்றீங்க” ஐயர் நிரம்ப கற்றவர் என கேள்விப்பட்டிருந்ததால் அவனால் மறுத்துப்பேச முடியவில்லை.

“குதிரைக்கு சுழி இருக்குடா. என் தாத்தா அஸ்வசாஸ்திரம் படிச்சவர். அந்தக் காலத்தில குதிரை வாங்கிறதுன்னா ராஜா அவரண்டதான் யோஜனை கேப்பார். சுழிங்கிறது உனக்கும் எனக்கும் இருக்கிற கைரேக போலத்தான்டா. எல்லா சுழியும் அமையணும்னு அவசியமில்ல. நெத்திப்பொட்டில ஸ்தான சுழியும், வலப்பக்கம் குபேரமேட்டு சுழியும் முக்கியம். அதற்கப்புறம் உதடு, அடிவயிறுன்னு ஒன்பது சுழியாவது இருக்கணும். நேக்கும் கேள்வி ஞானம்தான்.”

“நம்ம குதுரைக்கு?”

மீண்டும் குரலைத் தாழ்த்தி “அது வயிற்றோரப்பகுதியில ஒரு சுழி இருக்கு. பார்த்துட்டேன். ஊருக்கு ஆகாது”

“தொரைக்கிட்ட சொல்ல வேண்டியதுதானே”

“அவருண்டயா… குதிரையோட அழகுல மயங்கிப்போய் நிக்கறார். ஸர்ப்பத்தோட ஜொலிப்புக்கு மயங்காதவா யாரு. அது கோடகம். அதோட முக்கோண கழுத்துக்கு அப்படி ஒரு வசீகரம். வெவரம் தெரியாவனுக்கு உடம்புல எது மயக்கறதுன்னே புரியாது.”

அவனுக்குக் குழப்பமாக இருந்தது. ஒரு குதிரையால் ஊரே அழியும் என்பதை ஏற்கவே முடியவில்லை.

“குதிரேங்கறது செல்வாக்கு. இங்க உள்ள எட்டு டிவிஷன்லேயும் அவருக்கு லாபம் கொழிக்கிறது. குதிரை மேல ஏறி உக்காந்துண்டு எஸ்டேட்டுல ராஜநட போட்றதில ஒரு இது அவருக்கு. எல்லாம் சொல்ப காலத்துக்குத்தான்”

“வேகமா ஓடாதா?”

“ஓடாதாவது? அவரால இதோட வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியுமான்னு கேளு. வளக்கறவனோட மொகத்தைப் பாத்து பக்குவமா நடந்துக்க நாய்க்குட்டியாடா இது? வாயு பகவான்டா. அதன் பாஷ தெரியலேன்னா அடிபடணும். சாதாரணமா ஏமாத்திட முடியாது. தோரிதகமின்னு சொல்லுவா. நடக்கிறதவிட சித்த வேகமா போகும். இந்தத் தோட்டத்தில இந்தக் குதிரையோட வேகம் அதன் ஆயுசு வரைக்கும் அவ்வளவுதான்,” என்றவர் வெற்றிலையை புளிச்சென துப்பினார்.

“என்னால வேகமா ஓட்ட முடியும் ஐயரே” என்றான் துடிப்பாக.

“அப்படி ஏதும் பண்ணித் தொலைச்சிடாதடா. அந்த வெள்ளக்காரன் அவன் வண்டியிலகூட ஒருத்தனயும் ஏற விடமாட்டான். புலி மெரட்டல் இருக்கறச்சயே ஒத்த மனுஷனா சுத்திண்ட்ருக்கார். ஏடாகூடாம எதையாவது பண்ணிப்ட்டு சுடுபட்டு செத்துடாதேடா. அது ஸர்ப்பம் சஞ்சரிக்கற தேகம். பத்திரம். எதுவும் நடக்கலாம். ஜாக்கிரதையா இருந்துக்கோ சொல்லிட்டேன். அப்புறம் ஒம்பாடு,” என்றார்.

“அதென்ன பேரு”

“உச்சைஸ்ரவம்”

அவன் உச்சை சிரவம் என சொல்லிப் பார்த்தான். வாயில் சரியாக வராததால் உச்சை என சுருக்கமாக அழைக்கப்போவதாகச் சொன்னான்.

ஐயர் கொஞ்ச நேரம் யோசித்து “கேட்க என்னவோபோல இருக்குடா. ம்… கேக்கக் கேக்க பழகிடும், போ…” என்றார்.

மறுநாள் அவன் அவ்வாறே கூப்பிடும்போது துரை வினோதமாகப் பார்க்க, ஐயர் அது கடவுளின் பெயர் என வானத்தைப் பார்த்து விளக்கம் சொன்னார். துரையின் முகத்தில் பூரிப்பு. சில வாரங்களில் குதிரைக்கே தனது பெயர் பிளேக்கியா, உச்சையா என்ற குழப்பம் வந்துவிட்டது. ஆனாலும் அது துரையைவிட முத்தண்ணனிடம்தான் நெருக்கம் காட்டியது. காலையில் எழுந்து ‘உச்ச’ என்றால் காதுகளைக் கூர்மையாக மேலே தூக்கிக்கொள்ளும். ‘புர்ர்ர்’ என உறுமிவிட்டு தடவிக்கொடுக்கும்போது கனைக்கும்.

உச்சை வந்த பிறகுதான் தோட்டத்துக்கே அழகு கூடியதுபோல இருந்தது முத்தண்ணனுக்கு. சுற்று வட்டாரத் தோட்டங்களில் கம்பீரமான கறுப்புக் குதிரை ஒன்று ஆயேர் தோட்டத்தில் குடியேறியுள்ளது பரபரப்பாகப் பேசப்பட்டது. அதை தொலைவில் இருந்து வேடிக்கை பார்க்கவே பொடிசுகள் தோட்டத்துக்கு வருவதும் போவதுமாக இருந்தனர். அவர்கள் வழி உச்சையின் புகழ் மேலும் மேலும் பரவியது. அதைப் பற்றி பேச்சு எழும்போதெல்லாம் முத்தண்ணன் அதனிடம் சகல உரிமைகளையும் பெற்றுள்ள செய்தியும் இணைந்து செல்வதை உறுதி செய்துகொள்வான்.

“நீ யேண்ணே குதிரை மேல ஏறி ஓட்டாம கூடவே நாயாட்டம் ஓடுற” என சிறுவர்கள் கேலி செய்யும்போது மட்டும் கடும்கோபம் வரும். கல்லெறிந்து விரட்டுவான். அவன் உச்சையின் பராமரிப்பாளனானது யாருமே எதிர்பார்க்காததுதான்.

***

லண்டனிலிருந்து பினாங்கு துறைமுகத்துக்குக் கப்பலில் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஒரு குளிர்சாதனம் பொருத்தப்பட்ட பிரத்தியேக லாரியில் அந்தத் தோட்டத்துக்கு எடுத்துவரப்பட்டபோது எல்லோரும் ஞாயிறு விடுப்பில் தாமதமாகவே விழித்திருந்தனர். முன்பே கேள்விப்பட்டதால் அது லாரியில் இருந்து இறங்கும் அழகை வேடிக்கை பார்க்க தோட்டமே திரண்டது. நேரம் ஆக ஆக செய்தி கேள்விப்பட்டு பக்கத்து டிவிஷன் ஆட்களெல்லாம் வரத்தொடங்கினர். திருவிழாக் கூட்டம்போல துரை பங்களாவைச் சுற்றி சனம் கூடியது.

“என்னடே கறியனா புடிச்சி வந்திருக்கான். வெள்ளைக் குதிரையினா அப்படியே புடிச்சி நம்ம மதுரை வீரன சொமக்க வச்சிடலாம். அவரோட குதிரைக்கு முன்னங்காலு ஒடைஞ்சி ரெண்டு வருசமா சிமிண்டு பூசாம அப்படியே கெடக்குல்ல,” கோயில் பூசாரி சொன்னார்.

“இது பொட்ட குதிரதான் சாமி. ஒம்ம மதுரவீரன் குதுரைக்கு காலு மட்டுந்தான நொல்ல… சோடி சேத்து உட்டா புதுசா குட்டி போடுமுல்ல”

எல்லோரும் சிரிப்பது துரைக்கு எரிச்சலாக இருந்திருக்க வேண்டும். முறைத்தான். ஆனால் தன் குதிரையின் அழகை அனைவரும் பார்க்கட்டும் என யாரையும் விரட்டவில்லை. கையில் எப்போதும் இருக்கும் பிரம்பு அவன் மனதைக் காட்டும். அது அன்று உற்சாகமாக சுழன்றுகொண்டிருந்தது. குதிரை மிரள மிரள சுற்றிலும் பார்த்தது. அதன் வால் நிற்காமல் சுழன்றது. உடல் இடவலமென அலைபாய்ந்தது. வெயிலில் அதன் மினுக்கும் கருமை அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. முத்தண்ணனால் அந்தப் பளபளப்பை நம்பவே முடியவில்லை.

“என்னாண்ண வெயிலு பட்டா ஜொலிக்குது” என்றான்.

“இதான் கறுப்பு வைரம் டே” என்றார் காத்தையா.

அப்படித்தான் அது ஜொலித்தது. ஒவ்வொரு அசைவிலும் கர்வம் தொனிப்பதுபோன்ற உடல் அமைப்பு. தொடைகளில் நரம்புகள் புடைத்திருப்பதை தொலைவில் இருந்தே அவனால் பார்க்க முடிந்தது. மெல்லிய அசைவில் அலையெழுப்பும் பிடரி மயிரை தடவ வேண்டுமென ஆர்வத்தில்  ஓரடி முன் சென்றான். அவ்வளவு மட்டுமே தன் எல்லை எனத் தெரிந்ததும் பெருவிரலால் பூமியை அழுத்திக்கொண்டான்.

“ஊருல ஏராளம் குதிரய பாத்திருக்கேன். இதென்ன ஆறடியில இப்படி ஆள உசுப்புது. பொட்டச்சிய பாத்த மாதிரி கெழம்புது.”

முருகேசன் சொன்னபோது ஆங்காங்கு சிரிப்பொலி எழுந்தாலும் எல்லோருமே அந்தரங்கமாகக் குதிரையை ரசிக்கத் தொடங்கியிருந்தனர். அதை அணைத்துப்பிடிக்க எல்லோருடைய மனமும் பரபரத்தது. அதன்மேல் ஏறி அமர்ந்தால் ஓர் அரசன் போலவே தத்தம் கணவர்கள் தோற்றம் தரக்கூடும் எனப் பெண்கள் மத்தியில் பேச்சு எழுந்தது. அதன் சுழலும் வால் தங்கள் முகத்தில் மோதும்போது கிடைக்கும் ஸ்பரிச உணர்வை கற்பனையாக உருவாக்கிக் கிறங்கினர். சிலிர்த்து அதிரும் தொடையின் தோல் இறுக்கம் சுண்டியிழுத்தது. அதன் பார்வை அவர்கள் பக்கம் திரும்பாதா என வகை வகையாக ஒலியெழுப்பிச் சீண்டினர்.

“இதுக்குதான் தொர ரெண்டு வாரமா கொட்டா கட்டவும் தீனித் தொட்டி கட்டவும்  சுழுக்கெடுத்தானா?” கூட்டத்தில் யாரோ சொன்னார்.

கொட்டகை கட்டும்போது முத்தண்ணன் கூடமாட உதவியிருக்கிறான். நல்ல பெரிய கதவுகளுடன் காற்றாடியெல்லாம் பொருத்தப்பட்ட தூய்மையான கொட்டகை அது. கொட்டகையைச் சுற்றிலும் குறைந்தது நூற்றைம்பது சதுர மீட்டர் விசாலமான புல்வெளி இருந்தது. கொட்டகையின் வாயில் வடக்குப் புறமாக இருந்ததால் சாலையில் பயணிப்பவர்களால் குதிரையைப் பார்க்க முடியாது. கொட்டகைக்கு சற்று தள்ளி பெரிய குழி ஒன்று வட்ட வடிவமாகத் தோண்டப்பட்டிருந்தது. அங்கு குதிரை குளிக்க நீச்சல் குளம் தயாராவதாகச் சொன்னார்கள். அதைச் சுற்றி அரை வட்டத்தில் தகரத்தடுப்பு போடப்பட்டிருந்தது.

“பொம்பள குளிக்கிறத பாக்க கூடாதுலெ”

“அதுக்கு தொர குதிரய ஊட்டுக்குள்ளாரவே வச்சிருக்கலாமே”

“மேயரதுக்கு ஐயர் மண்டையில மட்டுந்தான் மசுரு இருக்கு”

மீண்டும் சிரிப்பொலி கேட்கவும் துரை “ஷட் ஆப்” எனக் கத்தினார். குதிரையைக் கொண்டு வந்த லாரிக்காரனிடம் ஏதோ விவாதித்துக்கொண்டிருந்த அவர் முகம் ஏற்கனவே சிவந்திருந்தது. அதே முகத்துடன் கொஞ்ச நேரம் கையைப் பிசைந்தவர் தடியை மெல்ல சுழற்றத் தொடங்கினார். அவர் தீவிரமாக எதையோ யோசிக்கிறார் என எல்லோருக்குமே புரிந்தது. பின்னர் ஐயரிடம் ஏதோ சொல்லவும் அவர் அதிர்ச்சியோடு கூட்டத்தைப் பார்த்தார். கூட்டத்தை நோக்கி துரை கை காட்டி பேசுவதைக் கண்டவுடன் புறப்பட இருந்தவர்களும் கொஞ்ச நேரம் என்னவோ ஏதோவென நின்று கவனித்தனர். பின்னர் ஐயர் தலையைத் தொங்கபோட்டபடி அருகில் வந்து “குதிரைய பாத்துக்க வர்றதா சொன்னவர் கடைசி நிமிஷத்தில ஊருக்குக் கிளம்பிட்டாராம். உங்கள்ள யாருக்காவது குதிரையைப் பாத்துக்க தெரியுமான்னு துரை கேக்கறார்,” என்றார்.

“மாட்ட மேச்சலுக்கு எடுத்துபோவும்போது கூடயே கூட்டிபோயி மேச்சலுக்கு விடுறேனுங்க ஐயரே” பிலாகாயன் சொல்வது நல்ல திட்டமாக எல்லோருக்கும் தோன்றியதால் கைதட்டினர். அப்படியே தாங்களும் குதிரையைத் தொட்டுத் தடவி விளையாடி, சவாரியெல்லாம் செய்யலாம் என்ற எண்ணமே குதூகலமாக்கியது.

“இது என்ன நீங்க மேக்கிற நாட்டு மாடுன்னு நெனைச்சுட்டேளா? சீமக் குதிரை. தெரிஞ்சுக்குங்கோ. நெறைய பணம் செலவு பண்ணி துரை இத வரவழைச்சிருக்கார். கூடவே இருந்து பராமரிக்கணும். படுத்துக்க எடமும் போஜனமும் துரை கொடுத்துருவார். எப்பவுமே குதிரை உங்க பார்வேலயே இருக்கணும். ஒழுங்கா தீவனம் போடணும். அதுக்கு எந்த வாதையும் வராதமேனிக்கு கண்கொத்தி பாம்பா இருக்கணும். குதிரச் சாணிய அள்றதிலேர்ந்து அதக் குளிப்பாட்டி, கொட்டகேல கட்ற வரையில எல்லாமே நீங்கதான் பண்ணனும். ஆனா தோட்ட வேலையவிட இரண்டு மடங்கு சம்பளம்” என்றார் ஐயர்.

கூட்டத்தில் சலசலப்பு.

“குதுர பீய மட்டும் அல்லனுமா? இல்ல சூத்தையும் கழுவி உடனுமா ஐயரே” கூட்டத்தில் இருந்து யாரோ அடித்தொண்டையில் கத்தினான்.

“ஐயரே தொறைக்கு கழுவி உடுவாரு போல. நீ குதுரைக்கு கழுவுனா என்னா?” மீண்டும் மற்றொரு குரல்.

ஐயருக்கு எரிச்சலானது. “ஒங்கள்ள ஒருத்தரும் தயாரா இல்லன்னா பரவாயில்லை. நான் துரைட்ட சொல்லிடறேன்” என அவர் புறப்பட்டபோதுதான் “எனக்கு தெரியும் ஐயரே!” என முன்வந்தான் முத்தண்ணன்.

“ஏது… குதிர பீய அள்ளவா? ஒஞ்சாதி புத்தி உட்டுப்போவுமா?” கூட்டத்தில் மீண்டும் குரலும் சிரிப்பும் எழுந்தது. முத்தண்ணன் திரும்பி பார்க்கவில்லை. “என்னால குதுரய பாத்துக்க முடியுங்கய்யா” மீண்டும் உறுதியாகக் கூறினான்.

“டேய் முத்தண்ணா. இது வெளையாட்ற விஷயமில்லடா. துரை ஆசையா இந்த குதிரைய வாங்கிருக்கார். ஏடாகூடமா ஏதாவது ஆயிடுத்துன்னா அந்த நிமிஷமே ஒன்ன சுட்டுக் கொன்னுடுவார். ஒன்னால என்னையும் சேத்துக் கொன்னாலும் கொன்னுடுவார்,” என பல்லைக் கடித்தபடி கூறினார். அவர் கண்களை உருட்டி கூறியவிதம் ‘பேசாமல் ஓடிப்போயிடு’ எனச் சொல்வது போலவே இருந்தது.

“லேய்… ஒன்னய நம்பி மாட்டையே கொடுக்க மாட்டனுவ. குதிரய கொடுப்பாங்களா?” மறுபடியும் நசநசத்த சிரிப்பொலி.

அவன் எதற்கும் தயங்கவில்லை. “தொர… ஐ எம்” என்றான் சத்தமாக. கூட்டம் சட்டென அடங்கியது.  இன்னும் கொஞ்சம் அவகாசம் கிடைத்திருந்தால் அப்படி இப்படி வார்த்தைகளைத் தேடி நான் குதிரை வளர்ப்பதில் கில்லாடி என விரிவாகவே ஆங்கிலத்தில் சொல்லியிருக்க முடியும் என அவனுக்குள் ஒரு நம்பிக்கை தோன்றியது. துரை கம்பை ஆட்டி அவனை அழைக்கவும் அருகில் ஓடினான்.

துரையை அவ்வளவு அருகில் அவன் பார்ப்பது அதுதான் முதன் முறை. நிரையில் பால் சேகரிக்கும்போது ஜீப்பை ஓரமாக நிறுத்திவிட்டு தொப்பியுடன் சிகரெட் பிடித்தபடி அனைவரையும் முறைத்துக் கொண்டிருப்பார். யாரையாவது திட்டும்போது மட்டும் ஜீப் குலுங்க தடாரென இறங்குவார். இடது கையில் துப்பாக்கி இருக்கும். சரியாக அவர் இடுப்பு உயரம். “எல்லாரும் ஒழுங்கா வேலை செய்யுங்க” என எண்ணி எண்ணிச் சொல்வார். அவருக்குத் தெரிந்த ஒரே தமிழ் வாக்கியம். சுருளி அண்ணன் மலேசியா முழுக்க உள்ள எல்லா துரைகளுக்கும் தெரிந்த ஒரே தமிழ் வாக்கியம் அதுதான் என்பார். எவ்வளவு சிகரெட் புகைத்தாலும் துரையின் உதடுகள் கறுக்காமல் இருந்தன. அகன்ற உடல். முழங்கால் வரை நீண்ட நீளமான பெரிய கைகள் முறுகிக் கிடந்தன. அரைக்கால்சட்டைக்குள் செருகப்பட்டிருந்த டீசட்டையைத் தள்ளிக்கொண்டு சரிந்த தொந்தி. தொப்பி அணியாத மொட்டைத்தலையுடன் கூர்மையான நாசியும் விழிகளும் அவரை இன்னும் முரட்டுத்தனமாகக் காட்டின.

முத்தண்ணனை அலட்சியமாகப் பார்த்தவர் ஆங்கிலத்தில் ஏதோ கூறினார். முத்தண்ணன் “ஐ எம் தொர” என்றான். ஐயர் முகத்தில் கலவரம். துரை போனவுடன் “என்ன கேட்டாரு?” என்று கேட்டான்.

“ஒன்னண்ட கேக்க என்ன இருக்கு? குதுரைக்கு சின்ன சங்கடம்னாலும் உன்னைக் கொன்னுடுவேன்னு சொன்னார்” என்றார். அவனைப் பார்க்க ஐயருக்குப் பரிதாபமாக இருந்தது.

உண்மையில் கிராமத்தில் இருந்த ஒரே ஒரு கோவேறு கழுதையை அவன்தான் பராமரித்தான். அசப்பில் குதிரையைப் போலவே இருந்தாலும் உச்சையைவிட குட்டையானது. கழுதைகளைவிட உயரமானது. குதிரையைப் போலவே குதிக்கும்; கனைக்கும். வாலும் குதிரையைப் போல அடர்த்தியானது. யாரோ வெளியூர் வியாபாரி அயிலம்மாவிடம் இருந்த இரண்டு கழுதைகளை எடுத்துக்கொண்டு அதற்கு மாற்றாகக் கொடுத்தாராம். வெண்மை நிறமான அது கழுதையைக் காட்டிலும் பளுவை அதிகம் சுமந்தது. ஆனால் இரண்டு கழுதைக்கு அது ஒன்று ஈடாகாது என சவுரி படுத்தபடியே கத்திகொண்டிருப்பார். அவர்கள் பிள்ளைகள் அதற்கு வெள்ளை எனப் பெயரிட்டனர். அயிலம்மா அதை ஆற்றுக்கு பொதி சுமந்து செல்லப் பயன்படுத்தினாள். சவுரி படுத்தப்படுக்கையானபிறகு முத்தண்ணன்தான் குறைந்த கூலிக்கு அயிலம்மாவுடன் செல்வான். அவள் ஊரார் துணிகளைத் துவைத்துக் கொண்டிருக்கும்போது முத்தண்ணன்தான் அதனைக் குளிப்பாட்டுவான். புல் வெட்டி வந்து தின்னக்கொடுப்பான். அது காராமணியை விரும்பித்தின்னும். கழுதைக்குப் பதிலாகக் குட்டை குதிரை கிடைத்ததில் அவனுக்குப் பெரும் சந்தோசம். போகும்போதும் வரும்போதும் அவனே அதை ஓட்டி வருவான். ஒரு முறை அதில் ஏற முயன்றபோது அயிலம்மா அவனைக் கீழே தள்ளிவிட்டாள். கையெல்லாம் சிராய்ப்புகள்.

“அதற்கு  சேணம் பூட்டவேணும் கண்ணு. அப்புறமா நீ ஏறலாம்,” என காயம்பட்டிருந்தவனை அப்பா சமாதானம் செய்தார். அயிலம்மாவின் பிள்ளைகள் சேணம் இல்லாமல் ஏறுவதைச் சொன்னான். “அவங்க பெரிய பசங்க. வெள்ள குட்டி போட்டதும் நாம அத சவுரிகிட்ட இருந்து வாங்கிக்கிடலாம். அப்போ நீ அதுல ஏறி வெளையாடலாம்” எனக்கூறவும் சமாதானம் ஆனான். அந்த நாளுக்காகக் காத்திருந்தான். அதுவரை வெள்ளைக்கு புல் அறுத்து வந்து போடுவது, தொட்டிலில் நீர் நிறைப்பது என அவனே முன்வந்து அனைத்து பணிவிடைகளையும் செய்தான். “வெள்ள எப்போ குட்டிப்போடும்” என அவன் அயிலம்மாவிடம் கேட்கும்போதெல்லாம் ஒன்றும் பேசாமல் முறைப்பாள். வீட்டுக்குள் நுழைய முயலும்போதோ தன் பிள்ளைகளுடன் விளையாடும்போதோ அயிலம்மா வசைப்பதையெல்லாம் வெள்ளையைப் பார்த்தவுடன் மறந்தே போவான். வெள்ளை குட்டி போட்ட பிறகு அதில் ஏறி சவாரி செய்யப்போகும் நாள் அவன் கற்பனையில் சுழன்றுகொண்டே இருந்தது. ஆனால் அது முதிர்ந்து நோயுற்று சாகும் வரை குட்டி போடவே இல்லை. அவன்தான் வெள்ளையைப் புதைக்க குழி வெட்டினான். அப்போது ஓரளவு அவன் வளர்ந்திருந்தான். மீசை கூட அரும்பியிருந்தது. கோவேறு கழுதைகள் குட்டி போடாது என தெரிந்துகொண்ட வயது அது.

லாரியில் குதிரையைக் கொண்டுவந்த சீனனிடமே குதிரையை எப்படி பராமரிப்பதென்று விளக்கம் கேட்டுக்கொள்ளச் சொன்னவர் அவரே முன்னின்று மொழிபெயர்த்தும் சொன்னார். குதிரை சராசரியாகப் பதினைந்து லிட்டர் தண்ணீர் குடிக்குமென்றும் அதற்கு சுத்தமான தண்ணீர் தொட்டியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்பதில் தொடங்கி கோதுமை தவிடு போடும்போது கூடவே பச்சைக்கடலை, சோளமெல்லாம் கலந்துகொடுத்தால் பத்து கிலோ வரை சாப்பிடும் என்பது வரை விளக்கினான். பேசிக்கொண்டே குதிரையின் வாயைத் தூக்கி அதன் சிங்கப்பல்லைக் காட்டினான் சீனன். அந்தப் பற்களுக்கு இடையில் அதன் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் லகான் இருந்தது. கடிவாளத்தையும் மிதி இரும்பையும் காட்டி ஐயரிடம் சீனன் பேசிக்கொண்டிருந்தபோது அவன் அதன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தான். அழகிய நீண்ட புருவங்கள். தன்னால் அதை நன்றாகப் பராமரிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. தன்னைப் பார்த்து “ஐ எம் தொர” என்றவனை துரை சலிப்புடன் பார்த்துவிட்டுச் சென்றார்.

நீண்ட பயணம் செய்து வந்ததால் உச்சைக்கு மறுநாளே வயிற்று வலிகண்டது. எதையும் சாப்பிடாமல் கனைத்துக்கொண்டே இருந்தது. துரை கலங்கிவிட்டார். குதிரையைத் தனியாக விட்டுப்போக மனம் இல்லை. குதிரைக்கான வைத்தியர்கள் கோலாலம்பூரில் இருந்து வரத் தாமதமானது. முத்தண்ணன் துரைக்குத் தெரியாமல் பெருங்காயம் கலந்த நீரை அதற்கு பருகக் கொடுத்தபோது முரண்டுபிடித்தது. ஐயர் “என்னத்தயாவது கொடுத்துத் தொலைச்சுடாதடா. துரை சுட்டுப் பொசுக்கிடப் போறார்” எனப் பயந்தார். “எங்க ஊரு கழுதைக்கெல்லாம் இதான் வைத்தியம்” என்றவன் துரை கண்ணசந்த சமயம் பிடிவாதமாக அதன் வாயில் பெருங்காய நீரை ஊற்றினான். மறுநாளே அது பூரண குணமானவுடன் துரையிடம் ஐயரே உண்மையைக் கூறினார். குதிரை வந்த இரண்டாவது நாளே பங்களாவுடன் ஒட்டியிருந்த அறை ஒன்று அவனுக்கு ஒதுக்கப்பட்டது. ஒண்டிக்கட்டையான அவனிடம் எடுத்துவர பொருளென பெரிதாக ஒன்றுமில்லை. மாட்டுவண்டியில் ஒரு நடை போதுமாக இருந்தது.

“இது நாவம் சுத்துன குதுர இல்ல ஐயரே. சும்மா பயந்து சாவாதீங்க. இது வந்த அதிஷ்டம் எனக்கு இந்த வேல கெடச்சிருக்கு. தொரைக்கு ஆக்குற மாட்டுக்கறி டான்னு தின்னக்கெடைக்குது. வேற என்னா வேணும்” என உற்சாகமாகச் சொன்னவனைப் பார்த்து முகம் சுளித்தார் ஐயர்.

“நாகம் படமெடுக்கறதப் பாக்கறச்சே நாட்டியமாத்தான் இருக்கும்.” என்றார்.

***

குதிரை பராமரிப்பாளனான பிறகு முத்தண்ணனுக்கு தோட்டத்து சனங்களுடன் பெரிதாக தொடர்பு இல்லாமல் போனது. அவனுக்கு அதைப்பற்றி எந்த வருத்தமும் இல்லை. அவனுக்கு உச்சையுடன் நன்றாகவே பொழுதுபோனது. காலை ஏழு மணிக்கு அவனுக்கு வேலை தொடங்கும். கொள்ளுடன் கொண்டைக்கடலையையும் கொடுத்தால் சந்தோசமாக சாப்பிட்டுக் கனைக்கும். சோளத்தட்டை விருப்பமானது. கொட்டகையைத் துப்புரவாக்கி துரை அமர்வதற்கு முன் உச்சைக்கு உடலில் படிந்துள்ள புழுதியை பருத்தித் துணியால் துடைத்து விடுவான். இரண்டு மணி நேரம் துரையைச் சுமந்துகொண்டு தோட்ட உலா. வந்ததும் செம்மண் படிந்துள்ள அதன் கருமை உடலை மீண்டும் துடைத்து பச்சை புல்லை மேய விடுவான். அப்போதுதான் அவனும் அதனை பார்வையிட்டபடியே சாப்பிடுவான். வெய்யில் இறங்கியதும் குதிரைக்கு வயிறு போடாமல் இருக்க அருகில் உள்ள புல்வெளியில் ஓட விட்டுப் பயிற்சி கொடுப்பான். குளிப்பாட்டும்போது கால் குளம்பை சுத்தம் செய்வான். முதலில் எல்லாம் உச்சை உதை கொடுப்பதை வாங்கிக்கொண்டாலும் பின்னாளில் அது முத்தண்ணனுடன் நல்ல பழக்கம்கொண்டது. மீண்டும் மாலை உணவாக கோதுமை தவிடு. லாடத்தை வாரம் ஒருமுறை அடித்துவிட மட்டும் முதலில் கஷ்டப்பட்டான். பின்னர் உச்சையே அவன் மீது ஏற்பட்ட நம்பிக்கையினால் காலைத் தூக்கினால் வாகாக காட்டத் தொடங்கிவிட்டது. அப்போது மட்டும் கொஞ்ச நேரம் தாங்கிப் பிடிக்க தோட்டத்தில் உள்ள பையன்களைக் கூப்பிடுவான். அந்த வாரம் தன்னைத்தான் அழைக்க வேண்டும் என்பதில் அவர்கள் போட்டியிட்டனர். அதற்காக அவனை எங்கு பார்த்தாலும் மரியாதையாகப் பேசினர். தின்பதற்கு வீட்டிலிருந்து உணவுகளை எடுத்துவந்து கொடுத்தனர். குதிரை வந்த ஒரு மாதத்திற்குள் அவனது மரியாதையும் தோட்டத்தில் உயர்ந்தது. அவனைக் குதிரைக்காரன் என்றே அழைக்கத் தொடங்கினர். அவர்கள் முன் உச்சையில் ஏறி ஒருதரமாவது பவனிவர வேண்டுமென்ற ஆசை முத்தண்ணனை நாளுக்கு நாள் தின்றது.

துரையும் குதிரை மீது உயிரையே வைத்திருந்தார். குதிரைக்கு சிறு தீங்கு நடந்தாலும் நிச்சயமாக அவர் துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக்கொல்ல வாய்ப்புள்ளது என்று அறிந்தே வைத்திருந்தான் முத்தண்ணன். துரை தன் மனைவியின் பிட்டத்தைத் தட்டியதால் ஞாயம் கேட்கச் சென்ற மலையாண்டியை, அவர் வீட்டு வளாகத்திலேயே சுட்டதோடு அவனுக்கு திருடன் பட்டமும் கட்டியதை தோட்டத்தில் இன்னும் யாரும் மறக்கவில்லை. மலையாண்டி மனைவிக்கு எங்கு சென்றும் நியாயம் கிடைக்கவில்லை. அதனாலேயே அவன் குதிரை கொட்டகைக்கு அருகிலேயே ஒரு கயிற்றுக்கட்டிலைப் போட்டுக்கொண்டான். மழைபெய்யும் காலங்களில் உச்சையின் முதுகில் பெட்ஷீட்கள் போர்த்திவிடுவான். உடம்பு சூடேற நெல்லை சாப்பிடக் கொடுப்பான். வெப்பமான காலங்களில் துளசி, வெந்தயம் ஆகியவற்றைத் தின்னக்கொடுப்பான். ஐயருக்கு அவன் திறமை ஆச்சரியமளிக்கும் போதெல்லாம் “எல்லா சைவ பட்சினிக்கும் ஒரே வைத்தியம்தான் ஐயரே. ஒமக்கு ஒடம்பு முடியலன்னாலும் நாந்தான் மருந்து ஊட்டுவேன்,” என ஐயர் முகம் சுளிக்க கேலி செய்வான்.

காலையில் துரை குதிரையில் ஏறி நடை போகும்போது அவனும் உடன் ஓட வேண்டும். அதற்கு முன் துரை குதிரையில் ஏற மிதி வளையத்தில் காலை வைத்து மறுகாலை உயர்த்தும்போது அவன் தோள்களால் அவர் பிட்டத்துக்கு முட்டுக்கொடுத்துத் தூக்கிவிட வேண்டும். அதேபோல இறங்கும்போது அவன் இடப்பக்கம் அமர்ந்துகொண்டால் தோளில் வலது காலை இறக்கி இறங்குவார். ஒவ்வொரு முறையும் அது அவனுக்கு மரண வலியைக் கொடுக்கும். நடைபோகும்போது துரையின் துப்பாக்கி அவன் தோளில் இருக்கும். துரைக்குதான் அது இடுப்பு உயரமே தவிர அவனுக்கு மார்பை எட்டும். கையில் துரைக்குத் தேவையான பொருட்கள் அடங்கிய ஒரு சிறிய பெட்டியைச் சுமந்திருப்பான். குதிரைக்குதான் அது நடையே தவிர அவன் மெதுஓட்டம் ஓடினால் மட்டுமே அவர்களைப் பின்தொடர முடியும். துரை சில நிரைகளின் அருகில் குதிரையை நிறுத்துவார். அப்போதெல்லாம் அவனுக்கும் சலாம் கிடைத்தது. அது அவனுக்குப் பெரும் கௌரவமாக இருந்தது.

தோட்டக்காட்டை வலம் வரும்போதெல்லாம் சனங்கள் ஒரு நிமிடம் குதிரையைப் பார்க்காமல் இருந்ததில்லை. அப்படி ஒரு வசீகரம். அது கால்களை அசைத்துக் கொண்டு ஒரே இடத்தில் நிற்பதை பார்க்கும்போதெல்லாம் குதிரை தங்களை அடையாளம் கண்டுகொள்ளுமென அதனிடம் சிரித்து வைப்பார்கள். அவர்களுக்கு அதனை எப்படி அழைப்பதென்றும் தெரியவில்லை. மாடசாமி “ப்பா ச்சு ச்சு ச்சு” என ஒருதரம் நாயை அழைப்பது போல சத்தம் கொடுத்ததும் துரை அவனை மாலையில் பங்களாவுக்கு வரச்சொல்லி பிரம்பால் உரித்தெடுத்தார். சிறுவர்களுக்கு அதனருகில் செல்ல ஆசையாக இருந்தாலும் யாரும் வரக்கூடாது என முத்தண்ணன் எச்சரித்திருந்தான். அதற்குமுன் அவன் அப்படி யாரையுமே மிரட்டியதில்லை. உண்மையில் குதிரையால் தனக்கு தோட்டத்தில் மெல்லிய அதிகாரம் வந்துவிட்டதை முத்தண்ணன் உணர்ந்த நாளில் கூடுதல் உற்சாகமாக இருந்தான். அதற்காக துரை கொடுக்கும் எந்த வேலையையும் செய்ய தயாராக இருந்தான்.

“ஜீப்பில் செல்வதைவிட குதிரையில் செல்லும்போது மனதுக்கு இன்னும் சந்தோசமாக உள்ளது” என்றார் துரை. அதைச் சொல்லும்போது அவர்கள் குன்று போன்ற உயர்ந்த பகுதியில் இருந்தனர். தொடக்கத்தில் எல்லாம் ஒன்றும் பேசாமல் இறுக்கமாக இருந்த துரை ஒரு சில வாரங்களுக்குப் பின் தன்னிடம் பேசியது அவனுக்கு குதூகலத்தை ஏற்படுத்தியது.

“என்னா தொர?” என்றான் பணிவாக. துரை மீண்டும் அதையே அழுத்தமாகச் சொன்னார்.

முத்தண்ணனுக்கு துரை சொன்ன ‘ஹெப்பி’ என்ற சொல்லுக்கு மட்டும் பொருள் புரிந்தது. இப்படி சில வார்த்தைகள் அவனுக்குப் புரிவதுண்டு. அவனும் “ஹெப்பி” என எல்லா பல்லும் தெரிய சிரித்தான். துரை பெட்டியைத் திறக்கச் சொல்லி சாடை காட்டவும் பவ்வியமாகத் திறந்தான். உள்ளே ஒரு துவலை சுருண்டு கிடந்தது. அதன் மேல் தொலைநோக்கி. மறு ஓரம் குடிநீர் புட்டியுடன் ஒரு விஸ்கி பாட்டிலும் இருந்தது. அத்தனை நாள் சுமந்து வந்தாலும் துரை அதைத் திறந்ததில்லை. விஸ்கி பாட்டிலைக் கைகாட்டி எடுக்கச் சொன்னார். எடுத்தான். அதற்கு கீழே அவன் ஆள்காட்டி விரல் உயரத்துக்கு ஒரு கண்ணாடி கிளாஸும் இருந்தது. அதையும் எடுத்துக்கொடுத்தான்.

“நான் பகலில் மது குடிப்பதில்லை. ஆனால் இந்த இடத்துக்கு வரும்போதெல்லாம் இப்படி குதிரையின் மேல் அமர்ந்து குடிக்கவேண்டும்போல தோன்றும்” என்றவர் கிளாஸில் கொஞ்சமாய் ஊற்றினார். உனக்கு வேண்டுமா என கிளாஸை குதிரையில் இருந்தபடியே அவனை நோக்கி நீட்டினார். முத்தண்ணன் அவசரமாக “நோ தொர” என மறுத்தான்.

“நல்லவேளையாக மறுத்துவிட்டாய். இல்லாவிட்டால் உன்னை இங்கேயே சுட்டுக்கொன்றிருப்பேன்” எனக்கூறிச் சிரித்தார். முத்தண்ணனும் துரை ஏதோ சந்தோசமாக இருக்கிறார் என நினைத்துச் சிரித்துக்கொண்டான்.

“குதிரையில் ஏறிப் போகும்போது கம்பீரம் வர நீயும் ஒரு காரணம். முன்பு ஜீப்பில் வரும்போது தனியாகத்தான் வருவேன். இங்கு புலிகள் அதிகம். நான் மறையும் அதன் வாலைப் பார்த்துள்ளேன். எனக்கு பயமில்லை. என்னைத் தாக்க முயன்றால் எவ்வளவு தொலைவாக இருந்தாலும் சரியாக குறிபார்த்துச் சுட்டுவிடுவேன். என் இடது கை எப்போதும் துப்பாக்கியைப் பிடித்திருக்கும். இப்போது நீ உடன் வருகிறாய். என் துப்பாக்கியைச் சுமந்தபடி. ஒரு இடதுகை போல… ஒரு நாய் போல… நாய்…” துரை சிரித்தார். அவனுக்கு ‘நாய்’ என்பது புரிந்தது. ஆனால் ஏன் நாயைத் தேடுகிறார் என்பது புரியவில்லை. ஒருவேளை அவர் சீமை நாய் ஒன்றை வாங்கினாலும் தான்தான் அதை பாதுகாக்க வேண்டும் என்கிறாரா என நினைத்து “ஐ எம் துரை” என உற்சாகமாக அனைத்திற்கும் தயார் என நிமிர்ந்து நின்றான்.

துரை வேகமாகச் சிரிக்கவும் அவனுக்கு மேலும் மகிழ்ச்சியானது. துரை கிளாஸை நீட்ட அடுத்தடுத்து அவன் அளவாக ஊற்றிக்கொடுத்தபடியே இருந்தான். தன் வாழ்நாளில் எப்போதும் கிடைக்காத கௌரவம் தனக்கு அன்று கிடைத்துள்ளதை எண்ணி கண்கள் கலங்கின. இதையெல்லாம் பார்ப்பதற்குள் அவனது பெற்றோர் இறந்துவிட்டதை எண்ணி வருந்தினான். துரையிடம் என்றாவது கேட்டு உச்சையை ஓட்டிப்பார்த்துவிட வேண்டும் என நினைத்துக்கொண்டான். ஆனால் அதற்கான தைரியமே அவனுக்கு வந்ததில்லை.

துரை உலா வராத நாட்களிலும் நள்ளிரவு வேளைகளிலும் ஒரு நிமிடம் அதன் மேல் ஏறி பார்க்கலாமா எனத்தோன்றும். ஆனால் துரையின் கண்கள் எங்கோ தன்னை கண்காணிப்பதாகவே எண்ணிக்கொள்வான். அவருக்குத் தெரியாமல் அந்தத் தோட்டத்தில் எதுவுமே இல்லை என்பதுதான் அத்தனை காலம் அவருடன் உலா சென்றதில் அவன் அறிந்துகொண்டது. தான் குதிரையில் ஏறிய அடுத்த கணமே துரையால் சுடப்பட்டு வீழும் காட்சிகள் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும். காற்றுபோல செல்லக்கூடிய இந்த உச்சையை இப்படி நடக்க மட்டுமே வைப்பதில் அவனுக்கு விருப்பமே இல்லை. பயிற்சியின்போது பிடரி மயிரும் வாலும் அலையலையாய் எழும்ப சிறிய புல்வெளியில் அது சுற்றிவரும் வேகத்தை நூறாக ஆயிரமாக அதிகரித்து ஓட்டிப் பார்ப்பான். தனது ஆசையைக் கடைசியாக ஐயரிடம் சொன்னபோது “ஒன்னச் சொல்லி குத்தமில்லடா. ஸர்ப்பம் புத்திய மழுங்கடிக்கறது. ஆசைங்கறது வெஷம். நாள்பூரா அதோடவே ஈஷிண்டு இருக்கியோல்லியோ. வெஷம் ஏறத்தானே செய்யும். அது நோக்குச் சொந்தமில்லாத பொருள் மேலெல்லாம் மோகத்த உண்டாக்கும். மோகம் கண்ணுக்குள்ள இருக்கற காதுகளத் தீண்டும். கண் செவிடாகும். செவிட்டுக் கண்ணுக்கு எல்லாமே தன்னதுன்னு தோணும். தர்மம் தெரியாது. துரியோதனனுக்கு இருந்ததில்லையா… அந்தக் கண்கள் ” என்றார்.

ஐயர் கோவப்படுவது அவனுக்கு வினோதமாக இருந்தது. அதன்பின்னர் இரண்டு வாரத்துக்கு முன்பு ஐயர் வந்து அவனைப் பார்த்தபோது கலங்கி இருந்தார். அவன் அப்போது குதிரையின் உடலைத் துடைத்துக்கொண்டிருந்தான். ஐயரின் கலங்கியிருந்த முகத்தைப் பார்த்ததும் பதறிப்போனான்.

“நா ஊருக்கு கிளம்பறேன்டா” என்றார்.

“என்ன திடீருனு ஐயரே” . பல நாட்கள் பார்க்காததால் ஐயரின் முகம் புதிதாக தெரிந்தது. அதிகம் வயதானவர் போல காட்சியளித்தார்.

“தேசத்தோட நெலமை எதுவும் சரியால்ல. ஜப்பாங்காரன் உள்ள புகுந்துட்டான்னு சொல்லிக்கறா” என்றார்.

“அதுக்கு நீ யேன் ஐயரே கவலப்படுற? அவனுக்கு வெள்ளைக்காரந்தானே பக. நமக்கு ஒன்னும் ஆவாது.”

“இங்கிலிஷ் தெரிஞ்சிருக்கறதால ஏதோ லெட்டர் எழுதி, கணக்கு வழக்குகள பார்த்துண்டு காலத்த ஓட்டிட்டேன். இனிமே புதுசா ஒண்ணக் கத்துண்டு வாழறது சிரமம்,” என்றவர் அவனின் கைகளைப் பிடித்தார். அப்படி அவர் பிடிப்பார் என அவன் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. மாடு தின்கிறான் என்பதால் துரையின் உடல் உரசாமல் நடப்பவர்.

“டேய் முத்தண்ணா… நீயும் இங்க இருக்காதடா. கெளம்பிடு. ஜப்பாங்காரன் வந்தான்னா தோட்டத்தில வேலை இருக்காது. மூணு வாரமா ஜனங்கள் வெட்டிச் சேர்ந்த பால் வெளியூர் போகல. அத்தனை பாலையும் சாக்கடையில கொட்டினா. இந்த மாசம் பூரா உழைச்சவனுக்கு ஊதியமும் இல்லேன்னுட்டார். ஜனங்கள்ட்ட இதச்சொன்னா அவன் என்னைக் கொன்னுடுவான்” என்றார். அவர் கண்களில் நீர் வழிந்தது. குரல் உடைந்தது. அவன் பதிலுக்கு ஐயரின் கையை பிடிக்கலாமா எனத் தயங்கிக்கொண்டிருக்கும்போதே கண்ணைத் துடைத்துக்கொண்டு விடைபெற்றார். “நாளைக்கு விடியறச்சே நான் இங்க இருக்கமாட்டேண்டா முத்தண்ணா. நீயும் கெளம்பிடு. அத்தனபேரயும் வேற ஏதாவது பொழப்பத் தேடிண்டு கெளம்பச் சொல்லு. நான் சொன்னேனோல்லியோ! இது ஸர்ப்பம் சுத்தின குதிரை, சர்வநாசம் பண்ணிடும்”

***

ஓடிச்சென்று கொட்டாயின் விளக்கைப் போட்டவுடன் துரை அவசரமாக அணைக்கச் சொன்னார். அப்போதுதான் கவனித்தான். பங்களாவும் இருண்டே கிடந்தது.

“என்ன தொர” என்றான்.

“நான் இன்றைக்கு இரவே லண்டனுக்குப் புறப்பட வேண்டும். இன்னும் கொஞ்ச நேரத்தில் ராணுவ வண்டி வரும். அதில் ஏறிப் போய்விடுவேன். கப்பலில் ஏறுகிற வரை எங்கு இருப்பேன் என்று சொல்ல முடியாது. நீ தோட்டத்துக்கே போய்விடு. உன்னுடைய சனங்களிடம் சொல்லி எல்லா விளக்குகளையும் அணைக்கச் சொல். எப்போ வேண்டுமானாலும் குண்டுகள் விழும்.”

துரை ‘பாம்’ என்றது அவனக்குப் புரிந்ததும் பதறி விட்டான். “ஒய் தொர” என்றான்.

“இன்னும் இரண்டு நாட்களில் ஜப்பான் இராணுவம் முழுமையாக மலேசியாவை கைப்பற்றிவிடும். நான் இனி இங்கு இருக்க முடியாது. என்னாலும் பிளேக்கியாலும் அடிமையாக வாழமுடியாது. அதுவும் நீ அடிமையாக வாழப்போகும் இடத்தில்…” துரை அழுதார்.

இப்போது முத்தண்ணனுக்கு ஐயர் சொன்னது நினைவுக்கு வந்தது. ‘ஜப்பான்’ என்ற வார்த்தை புரிந்தபோது மற்ற எல்லாமே புரிந்தது. 

துரை துப்பாக்கியை அவன் கையில் கொடுத்தார். “இனி நேரமில்லை. பிளேக்கியைச் சுடு.” என்றார்

குதிரையைக் காட்டி துரை சொல்வது அவனுக்குப் புரிந்தது. நெஞ்சு படபடத்தது. “ஓய் தொர?” என்றான்.

“இதற்கு மேல் இதை யார் பராமரிப்பது. சுடு” என்றார்.

‘ஷூட்’ என்பது அவனுக்குப் புரிந்ததும் “நோ தொர” என்றான்.

துரையின் முகத்தில் இப்போது கோபம். “என்னிடமே ‘நோ’ சொல்கிறாயா” என்றவர் துப்பாக்கி கட்டையால் அவன் தலையில் அடித்தார். குதிரை அதிர்ச்சியில் கனைத்தது.

“என்னால் இதைச் சுட முடியவில்லை. அது என்னுடைய மகள். என் இளவரசி. எப்படி அதை என் கையால் கொல்வேன். ஓ…” துரை அழுதார்.

முத்தண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் ஏன் அழவேண்டும், ஏன் சுடச் சொல்லவேண்டும் எனக் குழம்பினான். நெற்றியில் வழிந்த ரத்தத்தை துடைத்துக்கொண்டே  துரையைக் கூர்ந்து பார்த்தான். ‘நீ போ தொற நா குதிரைய பாத்துக்கிறேன்’ எனச் சொல்ல நினைத்தான். “ஐ எம் தொர” என்றான். அவனுக்கு அது மட்டும்தான் சொற்களாக வந்தது. மற்ற அனைத்தையும் செய்கையால் காட்டினான்.

துரை வெறி பிடித்தவன் போலானான். “ஏய் நாயே! உன்னால்தான் அதை கொல்கிறேன். அது நான் ஏறி சவாரி செய்த குதிரை. இந்த இரவிலும் எப்படி மின்னுகிறது பார்த்தியா? நீ அதில் ஏறிப் போவதை என்னால கனவில்கூட அனுமதிக்க முடியாது. என்னால் என் நாட்டில் நிம்மதியாகத் தூங்க முடியாது. அதற்கு நான் ஜப்பானியனிடமே சுடபட்டு சாவேன். ஏய் நாயே… என் இடது கையே… உனக்கு என் குதிரை வேண்டுமா?” துரை வெறிபிடித்தவன் போல முத்தண்ணனை துப்பாக்கி கட்டையால் அடித்தான்.

அடியில் கீழே விழுந்தவன் தடுமாறி எழுந்தபோது மீண்டும் அவனிடம் துப்பாக்கியை நீட்டினார். அவன் புருவங்கள் கிழிந்திருந்தன. ஒரு பல் உடைந்து வாய் முழுவதும் சிவந்திருந்தது. குதிரை விடாமல் கனைத்துக்கொண்டு தலையை உலுக்கியபடி கொட்டகைக்குள் அலைந்தது.

“ஒரே குண்டுதான் இருக்கிறது. அதன் தலைக்கு குறி வை. என்னால் அது துடிப்பதைப் பார்க்க முடியாது. சுடு” என்றார்.

அவன் துப்பாக்கியை வாங்கிக்கொண்டான். துரை அதன் கட்டையை அவனது தோள்ப்பட்டையில் வைத்து இறுக்கிப்பிடிக்கச் சொன்னார். அவன் இடது கையை நகர்த்தி நேராக குதிரையின் தலைக்கு குறி வைத்துக்கொடுத்தார். விசையில் மொரமொரப்பு இருந்தது.

உச்சை முத்தண்ணனைப் பார்த்து கனைத்தது. அந்த இரவிலும் அதன் கண்களில் ஈரப்படலம் போர்த்தியதுபோல ஒளிர்ந்தது. முத்தண்ணன் அதன் தலைக்கு வைத்த குறியை உறுதியாக்கினான். அந்த இரவில் உச்சையின் கருமை அலையெழுப்பி நெளிந்தது. அதன் உடலில் சுற்றியுள்ள ஆயிரமாயிரம் கருநாகங்கள் நெளிவதை அவனால் அவ்விரவில்தான் முதன்முறையாகக் காண முடிந்தது. உச்சை இறந்தால் அவை சீறிக்கொண்டு வெளியேறும். ஐயர் சொன்னதுபோல தோட்டத்தையே அழிக்குமென தோன்றியது.

ம. நவீன் – வல்லினம் அமைப்பின் நிறுவனர்களில் இவரும் ஒருவர். மலேசியாவில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், நான்கு கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நேர்காணல் தொகுப்பு மற்றும் அண்மையில் வந்த ஒரு நாவல் என 11 நூல்கள் வெளிவந்துள்ளன. தொடர்புக்கு – valllinamm@gmail.com