Home Blog Page 88

ஜன்னல்

3
  • கார்த்திக் பாலசுப்ரமணியன்

1

றையின் எல்லா பக்கங்களும் அடைக்கப்பட்டிருந்தன. இருள் திரவமாகி வழிந்து கொண்டிருந்தது.  நாசியைத் துளைத்தது பழம்பாசியின் வாடை. சுற்றிலும் தவளைகளின் கூக்குரல். கண்கள் இருளுக்குப் பழக நேரம் பிடித்தது. கைகளை நீட்டித் துழாவினேன். முழுவதுமாக கைகளை நீட்டும் சுதந்திரத்தைப் பறித்து இடித்தது சுவர். சுற்றிலும் சுவர். சுவரைப் பற்றிய உள்ளங்கையில் படிந்தது வழுவழுப் பாசியின் ரேகை. அருவருப்புடன் சட்டையில் துடைத்துக் கொண்டேன். கைகளை நன்கு கழுவ வேண்டும். மெதுவாக, ஒவ்வொரு விரலுக்கு இடையிலும் மேலும் கீழும் நக இடுக்குகளையும் சேர்த்து கவனமாய் கழுவ வேண்டும். ‘ஹாப்பி பர்த் டே’ பாடிக்கொண்டே அது முடியும் வரை கழுவ வேண்டும். கணுக்கால் வரை தண்ணீர் நிரம்பியிருந்தது. அதன் குளுமை பாதங்களில் ஓடிய நரம்பு ஒவ்வொன்றையும் தொட்டுக் கிளர்த்தியது. மெது மெதுவாக, பார்வை துலங்க ஆரம்பித்தபோது அது அடைக்கப்பட்ட அறையல்ல, கிணறு என்பது விளங்கியது. அதைப் பார்க்க விரும்பாமல் கண்களை இறுக மூடிக்கொண்டேன்.

அப்படியே எவ்வளவு நேரம் போயிருக்கும் என்று தெரியவில்லை. உறங்கிக் கொண்டிருந்தவனின் பின்மண்டையில் நன்கு முறுக்கித் திரட்டப்பட்ட கடப்பாரை போலிருந்த கம்பியால் ஓங்கி அடித்ததைப் போலிருந்தது முதன்முறை ஒலித்த அவ்வழைப்பு மணியின் ஓசை. அதன் பின்னான ஒவ்வொரு அழைப்பிற்கும் அடிபட்ட மண்டைப் பிளவிலிருந்து இரத்தம் பீய்ச்சி அடித்தது. தலை பாரமாகி கனத்தது. தலையை இரண்டு உள்ளங்கைகளாலும் இறுகப்பிடித்தபடி எழுந்து உட்கார்ந்தேன். தலையணை நனைந்திருக்கிறதா என்று ஒருமுறை தடவிப் பார்த்தேன். அச்சப்படும்படியான அசம்பாவிதம் ஏதும்  நிகழ்ந்திருக்கவில்லை. வெறும் கனவுதான். அடியொன்றும் இல்லை, ஆனால் வலி மட்டும் இருந்தது. வரவேற்பு அறையிலிருந்த வாஷ்பேஸினில் கைகளை சோப்பு போட்டுக் கழுவிக்கொண்டேன். மறக்காமல் ‘ஹாப்பி பர்த் டே’ பாட்டுப் பாடினேன். பாட்டின் முடிவில் அதுவரை மறந்து விட்டதாக நம்பிக்கொண்டிருந்த அவளின் பெயரை அனிச்சையாக உச்சரித்தேன். ச்சை சைத்தான்!

அந்தி அடைந்த பிறகே மனமும் உடலும் உற்சாகம் கொள்ள ஆரம்பிக்கிறது. ஊர் உறங்கும்போது விழித்திருப்பதும், அது பரபரப்பாய் ஓடிக் கொண்டிருக்கும்போது ஒடுங்கி உறங்குவதும் தான் உவப்பானதாகவும் இயல்பானதாகவும் இருக்கிறது. முந்தைய இரவில் தொடர்ச்சியாக மூன்று படங்களைப் பார்த்துவிட்டுத் தூங்கும்போது மணி நாலரையைத் தொட்டிருந்தது. அப்போதும் தூக்கம் பிடிக்கவில்லை. அதுவரை சந்தித்த தோல்விகள், அடைந்த அவமானங்கள், நேர்கொண்ட புறக்கணிப்புகள், துரோகங்கள் என்று மனதின் இருண்ட மூலைகள் ஒவ்வொன்றாய்த் தேடித்தேடி கரம்பித் தள்ளியது முந்தைய இரவென்னும் எலி. எண்ணவும் தகாத உறவொன்றின் நினைவின் துணைகொண்டு மைதுனம் செய்து முடித்தபோதுதான் தூங்கியிருக்க வேண்டும். இப்போது இது ஒரு வாடிக்கை. அறையில் ஆள் யாரும் இல்லாததால் கிடைத்திருக்கும் புது வசதி.

சரிந்திருந்த லுங்கியை முதலில் சற்று தளர்த்தியும் பின்பு இழுத்து இறுக்கியும் கட்டிக்கொண்டேன். கைகளைக் கழுவி முடித்து முகத்தில் தண்ணீரை அடித்துக் கொண்டிருக்கும்போது மறுபடியும் அழைப்பு மணி ஒலித்தது. முகத்திலறைந்த நீரோடு அப்படியே போய் கதவைத் திறந்தேன். கதவிலிருந்து மூன்றடி தள்ளி முகத்தில் பச்சைநிறக் கவசம் அணிந்த பெண் ஒருத்தி ஒரு கையில் பரீட்சை அட்டையும் மறு கையில் ரெனால்ட்ஸ் பேனாவுமாக நின்று கொண்டிருந்தாள். அனிச்சையாக குனிந்து லுங்கியைச் சரிபார்த்துக் கொண்டேன்.

கவசம் முகத்தை மூடியிருந்ததில் தனித்து ஒளிர்ந்தன கண்கள். கவசத்துக்குப் பின்னிருக்கும் முகத்தைக் கண்களால் வரைந்து பார்த்தேன். இன்று மூன்றாவது நாள் என்று நினைக்கிறேன். தினமும் வருகிறாள். கழுத்தில் நீலநிறத்தில் மாநகராட்சியின் அடையாள அட்டை தொங்கிக் கொண்டிருந்தது.

“பேர் தீபன் இல்லியா?”

“ஆமா.”

“வயசு?”

“இருபத்தி நாலு.” முகத்திலிருந்து வழிந்த தண்ணீர் சொட்டுச் சொட்டாய் லுங்கியை நனைத்தது.

“காய்ச்சல், சளி, இருமல் ஏதாவது இருக்கா?”

“இப்போதைக்கு இல்லை.”

அவளைப் புன்னகைக்கச் செய்ய வேண்டும் என்று எண்ணி எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவள் மெலிதாகச் சிரித்துக் கொண்டது அவள் அணிந்திருந்த பச்சைநிறக் கவசத்தை மீறி கண்களில் தெரிந்தது. அவள் எப்போது அங்கிருந்து கிளம்புவாள் என்றிருந்தது. மூத்திரப்பை கனத்து முடுக்கிக் கொண்டிருந்தது.

“பேயே, பேயே சீக்கிரம் போய்த் தொலையேன்”.

சொன்ன ஒவ்வொன்றையும் குறித்துக் கொண்டாள். தலையை, ‘போய் வருகிறேன்’ என்பதாக அசைத்துவிட்டு கிளம்ப எத்தனித்தவள் மறுபடியும் என் பக்கமாகத் திரும்பி, “வீட்ல உங்களைத் தவிர வேறு யாராவது இருக்காங்களா?” என்றாள்.

“இல்லை” என்று சொன்னதும் திரும்பவும் கவசத்துக்குள்ளாகப் புன்னகைத்துக் கொண்டாள். அந்த நேரத்தில் என் கைக்குக் கனவில் கண்ட இரும்புத்தடி ஏதும் கிட்டாதது எங்கள் இருவரது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அவள் கிளம்பிப் போனதும் மூத்திரப்பையைக் காலி செய்துவிட்டு, அவள் தொட்டிருக்கச் சாத்தியமிருந்த கிரில் கதவுகளின் கம்பிகள், அழைப்பு மணியின் ஸ்விட்ச், அவள் கை வைத்துத் திரும்பிய சுவர்ப்பகுதி என்று ஒவ்வொன்றையும் கிருமி நாசினியில் நனைக்கப்பட்ட துணி கொண்டு துடைத்தேன். கைகளை மறுபடியும் ஒருமுறை சோப்பிட்டுக் கழுவினேன். கதவினை தாழ்ப்பாள் இடாமல் சாத்தினேன். என் அறையில் சன்னல்களுக்குப் போடப்பட்டிருந்த கனத்த திரைச்சீலை சற்று விலகி, ஒளி உள்ளே வந்து கொண்டிருந்தது. அதை சரிசெய்து மீண்டும் அடரிருளைத் தருவித்தேன். அவ்விருள் மட்டுமே மனதுக்கு இதமாக இருந்தது. இமை கனத்து வலித்தது. மறுபடியும் படுக்கையில் சாய்ந்து கொண்டேன்.

*

2

அறையெங்கும் இருளின் ஆக்கிரமிப்பு. தனிமையின் வாசனை. நாவெங்கும் கசப்பின் ருசி. இருந்தும் யாருமறியாமல் எரிந்து கொண்டிருந்தது நினைவுகளின் சுடர். தூக்கம் வரவில்லை. எழுந்து அமர்ந்து கொண்டேன். வலி, தலையிலிருந்து பின்மண்டை வழியே இறங்கி கழுத்து வரை நீண்டது. மீண்டும் விண்விண்ணென்ற வலி. ஓரிடத்தில் உட்கார்ந்திருக்கவும் இயலவில்லை. தலையணையைச் சற்று உயர்த்தினாற்போல் வைத்து மறுபடியும் சாய்ந்து படுத்துக்கொண்டேன். எத்தனை கவனமாய் மறைத்த போதும் மெல்லிய ஒளி எங்கிருந்தோ அறைக்குள் கசிந்து கொண்டிருந்தது. அவ்வொளியின் பிரதிபலிப்பில் அறையின் காற்றாடி புதுப்புது வடிவெடுத்துச் சுழன்று கொண்டிருந்தது. அது காற்றை விலக்கி ஒலித்த ஓசை மட்டும் செவிகளை நிரப்பிக் கொண்டிருந்தது. மொபைலை எடுத்து நேரம் பார்த்தேன். மணி எட்டரை. இன்னும் கொஞ்ச நேரத்தில் சோட்டு, காலை உணவைக் கொண்டு வந்து வைத்து விடுவான். அவன் வந்து போனதும் சாப்பிட்டுவிட்டு ஒரேயடியாகத் தூங்கிக் கொள்ளலாம்.

சோட்டு, இப்போது எனக்கும் அவனுக்கும் மட்டுமாகச் சமைக்கிறான். நான் தங்கியிருந்தது மூன்று அறைகளைக் கொண்ட வீடு. ஒவ்வொரு அறையிலும் இரண்டு அடுக்குகளைக் கொண்ட இரண்டிரண்டு கட்டில்கள். அறைக்கு நான்காக இந்த வீட்டில் மட்டும் மொத்தம் பன்னிரண்டு பேர்கள் வசித்துக் கொண்டிருந்தோம் போன வாரம் வரை. இதே போன்ற மூன்று அறைகள் கொண்ட வீடு மூன்றும், இரண்டு அறைகள் கொண்ட வீடு நான்கும் என மொத்தம் ஏழு வீடுகள் கொண்ட இந்த சிறு அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் ஒரே ஒருவருக்குச் சொந்தமானது. இக்குடியிருப்பின் உரிமையாளர் ஒரு முன்னாள் கவுன்சிலர். இது தவிர்த்து பக்கத்தில் அவருக்குத் தனி வீடு ஒன்றும் இருந்தது. அங்குதான் அவர் வசித்து வந்தார். சாப்பாட்டுடன் சேர்த்து அறைக்கு ஒருவருக்கு ஆறாயிரம் ரூபாய். குளியலறை வசதியுடன் கூடிய எங்கள் அறைக்கு மட்டும் ஆறாயிரத்து ஐந்நூறு. இப்போது அங்கிருந்த அத்தனை வீடுகளுக்கும் சேர்த்து நான் ஒரே ஒருவன் மட்டுமிருந்தேன். மற்றவர்கள் அத்தனை பேரும் அவரவர் ஊர்களுக்குச் சென்று விட்டார்கள்.

சோட்டுவுக்குச் சொந்த ஊர் ஒடிஸாவின் நுப்பாடா மாவட்டத்திலுள்ள ஒரு சிறு கிராமம். அவனும் அவனுடைய நண்பர்கள் சிலரும் இப்பகுதியில் இதுபோன்று இருந்த விடுதிகளில் இரண்டு மூன்று பேர்களாகச் சமையல் வேலையிலிருந்தனர். அவர்கள் அத்தனை பேரும் ஊருக்குக் கிளம்பி விட்டனர். சோட்டு மட்டும் ஊருக்குச் செல்லாமல் இங்கேயே தங்கி விட்டான். ஏன் போகவில்லை என்று கேட்டதற்கு அவன் ஏதேதோ காரணங்களை அடுக்கினாலும் பயணத்தின் பொருட்டு அவன் தன் சேமிப்பைச் செலவு செய்ய விரும்பவில்லை என்பதே உண்மை. விமானம், ரயில், பேருந்து என்று மாநிலங்களுக்கு இடையிலான எல்லாவிதமான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டு விட்டன. அவன் நண்பர்கள் சேர்ந்து யார் யாரையோ பிடித்து பால் கேன்கள் ஏற்றிச் செல்லும் டெம்போவை எப்படியோ பணம் கொடுத்து ஏற்பாடு செய்திருந்தனர். அடுக்கப்பட்ட பால் கேன்களுக்குப் பின்னால் இருக்கும் சிறிய இடத்தில் பன்னிரண்டு பேர்கள் கிட்டத்தட்ட முப்பத்திரண்டு மணிநேரப் பயணம்.  

இதற்கு முன்பு அவனிடம் அதிகம் பேசியதில்லை. ‘சோறிடு’, ‘குழம்பு கொண்டு வா’, ‘காயைத் தனியே வை’ – இவற்றுக்கு மேல் ஒரு வார்த்தை அதிகமாய்ப் பேசியதில்லை. எல்லோரும் அவரவர் ஊருக்குக் கிளம்பியிருந்த நாளன்று அவன் தங்கியிருந்த சமையல் அறையிலிருந்து டிரான்சிஸ்டர் வழியாகப் பழைய இந்திப்பாடல் ஒன்று ஒலித்துக் கொண்டிருந்தது. விடியும் வரை அவ்வறையின் விளக்கு அணையாமல் எரிந்து கொண்டிருந்தது.

வரவேற்பறையில் நடமாடும் சத்தம் கேட்டது. சோட்டுவாகத்தான் இருக்க வேண்டும். இப்போது வெளியே போனால் அவனிடம் ஏதாவது பேச வேண்டியிருக்கும். அதற்கான மனநிலை இல்லை. இப்போதெல்லாம் யாரிடமாவது பேசுவதென்பதே எரிச்சலைக் கொடுக்கிறது. அதுவும் காரண காரியமில்லாமல் சம்பிரதாயத்தின் பொருட்டு பேசுவதைப் போன்ற அபத்தம் வேறெதுவுமில்லை. ‘ஹலோ’, ‘வணக்கம்’, ‘நலமா?’ போன்றவையே ஒரு மொழியின் அருவருப்பூட்டும் வார்த்தைகள் என்பேன்.

அலுவலகம், வீடு, தெருக்கடைகள், இதோ இப்போது தங்கியிருக்கும் விடுதி என எந்தவொரு இடத்திலும் உள்ளத்தில் உள்ளதைப் பேசிவிட முடிவதில்லை. இடத்துக்கும் ஆளுக்கும் தக்கவாறு புதிய புதிய முகங்களை எடுத்துச் சூட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. கேட்ட விடுமுறையைக் கொடுக்காமல், எதிரே பார்க்க நேர்ந்த பாவத்துக்காக வலிந்து வரவழைத்துக் கொண்ட அக்கறையுடன் “இப்போ உடம்புக்குப் பரவாயில்லையா?” என்று கேட்ட மானேஜரிடம் “அதை நான் பாத்துக்கிறேன். உன் வேலையைப் பார்த்துட்டுப் போடா மயிரே.” என்றுதான் நான் சொல்லியிருக்க வேண்டும். தனித்த பயணமொன்றின் போது, “பேமிலியா வந்துருக்கோம். கொஞ்சம் மாறி உட்கார்ந்து கொள்ள முடியுமா?” என்று கேட்டவனிடம்  காதுக்கு அருகில்போய் “ஏன் சார் உங்களுக்கு நம்பிக்கையில்லையா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டிருக்க வேண்டும். ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால், இப்படிப் பேசிவிட முடிவதில்லை. மாறாக நன்றிகளையும், பரவாயில்லைகளையுமே பதிலாகத் தர வேண்டியிருக்கிறது. அதனால்தான் மனதுக்குப் புறம்பாகப் பேச வேண்டியிருக்கும் சந்தர்ப்பங்களையே தவிர்த்துவிடப் பார்க்கிறேன். அது இயலாதபோது இத்தகைய உரையாடல்களை விரும்பும், வரையறுக்கப்பட்ட கோடுகளின் மேல் விலகாமல் நடக்கும் மனிதர்களையே ஒட்டுமொத்தமாக வெறுக்கத் தொடங்கி விடுகிறேன்.

அரவம் ஒழிந்ததும் எழுந்து வரவேற்பு அறைக்கு வந்தேன். சோட்டுதான் வந்து போயிருக்கிறான். சாப்பாட்டு மேசையில் மூடியிருந்த தட்டுக்களை விலக்கினேன். ஒரு தட்டில் நான்கு தோசைகளும் சின்ன கிண்ணத்தில் தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு போட்டுச் செய்த குழம்பும் இருந்தது. வாசனையே பசியைக் கிளறியது. மறுபடியும் கைகளைச் சோப்பு போட்டு ‘ஹாப்பி பர்த் டே’ பாடிக்கொண்டே கழுவினேன்.

பொதுவாக சோட்டுவின் சமையல் பிரமாதமாக இருக்கும். அவன் அளவுக்கு ரொட்டியை மிருதுவாகவும் சுவையாகவும் செய்யும் இன்னொரு ஆளைப் பார்த்ததில்லை. மஞ்சளைத் தூவி, வெந்தயக் கீரையை கிள்ளிப்போட்டு போகிற போக்கில் செய்து கொண்டுவரும் பருப்புக் கடைசலுக்கு பிரமாதமாக சுவை கூடிவிடும். பத்து பன்னிரெண்டு பேருக்குச் சமைக்கும்போது இருந்த பக்குவமும் சுவையும் இரண்டே இரண்டு பேருக்குச் சமைக்கும் போது ஏனோ கூடாமல் போனது.

*

3

இரண்டாவது தோசையைப் பிய்த்து உருளைக்கிழங்கு குழம்பில் தோய்த்து தின்று கொண்டிருக்கும்போது தான் அன்று இன்னும் பல் விளக்கியிருக்கவில்லை என்பது உறைத்தது. வீடடங்கி இருக்கும் இந்நாட்களில் நான் குறைந்தபட்சமாகப் போற்றி வந்த அன்றாட ஒழுங்குகளும் கலைந்து தலைகீழாகிப் போயிருந்தன. வாட்ஸ்-அப்பில் வைக்கப்பட்டிருக்கும் நிலைத்தகவல்கள் ஒவ்வொன்றாய் பார்க்கத் துவங்கினேன். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலிருக்கும் அபத்த களஞ்சியங்கள் அத்தனையையும் ஒருசேர தரிசிக்க இதைவிட வேறொரு சிறப்பான இடமெதுவும் இல்லை. ஒவ்வொன்றாகக் கடந்துபோய்க் கொண்டிருக்கும்போதுதான் இடையில் வரிசையாக அனுமன் படங்கள் வைக்கப்பட்டிருந்த வேங்கடநாதனின் நிலைதகவல் கண்ணில்பட்டது. மூன்று நாட்களாக முப்பது முறைக்கும் மேல் அழைத்திருப்பேன். ஒருமுறை கூட போனை எடுக்கவில்லை. இருக்கும் அவசர நிலையில் எங்காவது சிக்கிக் கொண்டிருப்பானோ என்று நினைத்தால் வாட்ஸ்-அப் நிலைதகவலில் அனுமனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறான் தடியன். அவன் இனி போனை எடுப்பான் என்ற நம்பிக்கையும் போய்விட்டது. வெறும் முன்பணத்தோடு போனது வரையில் சற்று மகிழ்ச்சி. இப்படித்தான் பெரிய இழப்புகளுடன் ஒப்பிட சிறிதாகத் தெரியும் இழப்புகளுக்கும் துயரங்களுக்கும் என்னுடைய அகராதியில் மகிழ்ச்சி என்று பெயர் வைத்திருக்கிறேன்.

வாழ்வின் மீது கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கை கொள்ளும்படி பற்றிக்கொள்ள சிறு கயிறு கிடைக்கும் போதெல்லாம் பெரும் கோடாரி ஒன்றை எடுத்துக்கொண்டு காலம் புன்னகைத்தபடி என் பின்னே நிற்கிறது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிக்குப் பிறகு நல்லதொரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்பிருந்தும் அப்பாவின் மரணம் அதைக் கலைத்துப்போட்டு ஊருக்கு அருகில், தினம் எட்டு கிலோமீட்டர் சைக்கிள் மிதித்துப் போய்வரும்படியான பாலிடெக்னிக்கில் கொண்டு சேர்த்தது. அங்குப் படித்து தேறி வேலைக்கு வந்து பத்தாயிரத்தில் ஆரம்பித்து நான்கு வருடங்களில் இன்று இருபதாயிரம் சம்பளம் வாங்கும்போது சேர்ந்திருக்கும் கடன் கழுத்தை நெரித்து நின்று கொண்டிருக்கிறது. இதிலிருந்து தப்பி வெளியேறக் கிடைத்த சிங்கப்பூர் செல்லும் வாய்ப்பினை இன்றைய உலகளாவிய ஊரடங்கு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் தள்ளிப் போட்டிருக்கிறது என்று தெரியவில்லை. அவ்வாய்ப்பு தள்ளிப் போடப்பட்டிருக்கிறதா அல்லது முற்றிலும் கைதவறி விட்டதா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.

இதற்கிடையில் கிடைத்த ஒரே ஆறுதல் மீரா. ஆனால், எதிர்பாரா தருணமொன்றில் நான் அறிய நேர்ந்த துரோகத்தின் கூர்மை அவளையும் என்னையும் இருவருக்குமிடையிலிருந்த உறவையும் ஆளுக்கொரு திசையில் கிழித்து எறிந்துவிட்டுப் போனது. இத்தகைய தனிமைச்சிறை நாட்களில் அவ்வுறவைப் புதுப்பித்துக் கொள்ள வெட்கமேயில்லாமல் மனம் உந்தித் தள்ளுகிறது. சற்று அடங்கி இரு சனியனே!

மூன்றாவது தோசையைப் பிய்த்துக் கையில் எடுக்கும்போது மறுபடியும் அழைப்பு மணி அடித்தது. ஊரே அடங்கியிருக்கும் போது இந்த வீட்டுக்கு மட்டுமென்ன? இதனால்தான் பகல்களைப் பிடிப்பதில்லை. கைகளைக் கழுவிவிட்டு வெளியே வந்தேன். வீட்டின் உரிமையாளரான முன்னாள் கவுன்சிலரும் அவரின் பின்னால் ஒரு பெண்ணும் நின்று கொண்டிருந்தனர். அவர் மட்டும் முகக்கவசம் அணிந்திருந்தார்.

இது அவர் வீடாகவே இருந்த போதும் இப்போது நான் தகுந்த பாவனையுடன் வரவேற்றாக வேண்டும். முகத்தில் கனிவையும், நன்றியுணர்ச்சியையும் கொண்டுவந்து வணக்கம் சொல்ல வேண்டும். வராவிட்டாலும் சிரிக்க வேண்டும்.

“வாங்க சார். உள்ள வாங்க”

“இருக்கட்டும் தம்பி. இவங்க நமக்கு வேணடப்பட்டவங்களோட ஃப்ரெண்டு. ஒரு வேலையா சென்னைக்கு வந்தவங்க இந்த லாக்டவுன்ல மாட்டிக்கிட்டாங்க. சேலத்துல இருந்து இவங்க அப்பா ஒரு கார் பிடிச்சு வந்து கூட்டிட்டுப் போக முயற்சி பண்ணிட்டுருக்கார். அனுமதி கிடைச்சதும் ஒன்னு இரண்டு நாள்ல வந்து கூட்டிட்டுப் போயிடுவார். அதுவரைக்கும் இங்க ஒரு ரூம்ல தங்கிப்பாங்க.”

முதன்முதலில் இந்த விடுதிக்கு வந்து சேர்ந்த போது மிகுந்த கண்டிப்புடன் அவர் போட்ட கட்டுப்பாடுகளில் ஒன்றை அவரே மீறுகிறார். இத்தனைக்கும் அவர் என்னிடம் ஒரு பேச்சுக்குக்கூட அபிப்பிராயம் கேட்கவில்லை. தகவல் தருகிறார். அவ்வளவுதான். இங்கு நானும் எதுவும் சொல்வதற்கில்லை. அப்படி வேண்டப்பட்டவர்களாக இருந்தால் தன்னுடைய வீட்டிலேயே தங்க வைத்துக் கொள்ளலாமே? தற்போதைய சூழலின் காரணமாய் கவிந்திருக்கும் பயத்தின் பொருட்டே இங்கே அனுப்புவாராயிருக்கும். இல்லையெனில் அவர் சொன்னதைப் போல அதிகப் பழக்கமில்லாதவளாக இருக்க வேண்டும். எது எப்படியோ இது எனக்குக் கிடைத்த சுதந்திரத்தின் மேல் விழுந்த பலத்த அடி.

அந்தப் பெண்ணை கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை. முதல் பார்வையிலேயே அவளை ஆத்மார்த்தமாக வெறுக்கத் தொடங்கியிருந்தேன். பக்கத்தில் குளியலறையுடன் இணைந்திருந்த மற்றொரு அறையை அவளுக்குக் காண்பித்துவிட்டுச் சென்றார்.

*

4

இந்த வீட்டில் இன்னொரு ஆள் இருக்கிறார் அதுவும் ஒரு பெண் என்று நினைக்கும் போதே ஒருவித பதற்றம் வந்து பற்றிக்கொள்கிறது. அந்நினைப்பு காலையிலிருந்து இருந்த தலைவலியை மேலும் அதிகரித்தது. தெருவில் அம்மணமாய் ஓடுவதைப் போலிருந்தது. அறைக்கு உள்ளே போனவன் மதியச் சாப்பாட்டுக்காக சாயங்காலம் ஐந்து மணிக்கும், இரவுச் சாப்பாட்டுக்காக பதினொன்றுக்கும் என வழக்கத்தைவிட தாமதித்து வெளியே வந்தபோது அவள் ஏற்கனவே சாப்பிட்டு முடித்துச் சென்றிருந்தாள். இப்படியாக அவளைச் சந்திப்பதற்கான சந்தர்ப்பங்களை சாமர்த்தியமாகத் தவிர்த்துக் கொண்டேன்.

மறுநாள் காலையில் எங்கிருந்தோ வந்து கொண்டிருந்த அருவருப்பான இசை என்னைத் தூக்கத்திலிருந்து கலைத்தது. தூக்கம் கலைந்து தலையை உதறிக் கொண்டு உட்கார்ந்தபோதுதான் அந்த இசை இன்னும் துல்லியமாகக் காதில் கேட்டது.

என் அறையிலிருந்து வெளியே வரவேற்பறைக்கு வந்தேன். அறையின் ஜன்னல்கள் அனைத்தும் திறந்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து வந்த வெளிச்சத்தில் கண் கூசியது. சாப்பாட்டு மேசை சுத்தமாகத் துடைத்து வைக்கப்பட்டிருந்தது. அதன் மேல் இருந்த குட்டி ஸ்பீக்கரிலிருந்துதான் இசை வந்து கொண்டிருந்தது. மறுபடியும் என் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டேன். மற்றவருடன் பகிர்ந்து கொள்ளுமிடத்தில் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லாதவளெல்லாம் இங்கே வந்து என்னைச் சாகடிக்கிறாள். அடுத்தவர் சுதந்திரத்தைப் பறிப்பது குறித்த குற்றவுணர்வற்ற கட்டைகளில் ஆண், பெண் என்ற பால் வேறுபாட்டுக்கு இடமில்லை போலும்.

நான் என் அறையின் கதவைச் சாத்திக் கொண்டதும் பக்கத்து அறையின் கதவு திறந்து கொண்டது. தாமதித்து சாப்பிட எழுந்து வெளியே வந்தபோது பரத்தி விரித்து விடப்பட்ட கூந்தலைக் கோதிக்கொண்டே யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டு கொள்ளாமல் மேசையிலிருந்த உணவை எடுத்துப்போட்டுச் சாப்பிட ஆரம்பித்தேன்.

என் முதுகுப் பக்கம் அவளுடைய நிழல் ஊர்வதை உணர்ந்து திரும்பிப் பார்த்தேன்.

“உங்களுக்குச் சாப்பாடு கொண்டு வந்து வைக்கிறானே அந்தப் பையனைத் தெரியுமா?”

பின்னாலிருந்து நகர்ந்து எனக்கு எதிரே போடப்பட்டிருந்த நாற்காலியை எடுத்துப்போட்டு அமர்ந்து கொண்டாள். அவளுடைய குரல் எனக்கு மிகவும் பரிச்சயமான குரலொன்றினை நினைவுபடுத்தியது. இப்போது நான் பதில் சொல்ல வேண்டும். ஒருமுறை அவளை நிமிர்ந்து பார்த்தேன். பரிசுத்த அழகி.

“ஆமா.. சோட்டு”

“ஓ.. யெஸ்.. எனக்கு நீங்க ஒரு உதவி பண்ணனும். உங்களுக்குத் தொந்தரவு இல்லன்னா சாப்பாட்டுல கொஞ்சம் காரத்தைக் குறைச்சுப் போட சொல்ல முடியுமா. எனக்கு அல்சர் ப்ராப்ளம் இருக்கு. மாத்திரை போட்டுட்டு இருக்கேன். ஸ்ட்ரெஸ்னால வந்ததுன்னு டாக்டர் சொல்லிருக்கார். அதுனால அது சரியாகுற வரை கொஞ்சம் சாப்பாடுலயும் கவனமாக இருக்கணும். அதான் ப்ளீஸ்” என்றாள்.

“சரி நான் பேசுறேன்”

*

5

அன்று மதியம் சோட்டு சாப்பாட்டினை எடுத்துக்கொண்டு உள்ளே நுழையும்போது வெகு தற்செயலாகச் செல்வதுபோல் வரவேற்பறைக்கு வந்தேன்.

“ஹாய் பையா”

“ஹலோ சோட்டு”

உணவு கொண்டுவந்த பாத்திரங்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்தான். கழுவி அடுக்கப்பட்டிருந்த தட்டுகளையும் எடுத்து வைத்தான். “சாப்பிடுகிறீர்களா? பரிமாறட்டுமா?” என்றான்.

“நீயும் என்னோடு சாப்பிடுவதாக இருந்தால்”

என் கண்களை உற்றுப் பார்த்துச் சிரித்தான். ‘உனக்கு என்ன வேண்டும் சொல்’ என்பதைப் போலிருந்தது அவனுடைய அந்தப் பார்வை. அன்று, கொஞ்சம் ரொட்டி, சாதம், பருப்பு மற்றும் வெண்டைக்காய்ப் பொரியல் என்று அடுக்கியிருந்தான். கூடவே பூர்ண கொழுக்கட்டை போலிருந்த இனிப்பு வேறு செய்திருந்தான். ருசியும் பழைய சுவையுடன் இருந்தது. இருவருக்கும் சேர்த்து அவனே பரிமாறினான். அவனுடைய வலது கையில் ‘மா’ என்று இந்தியில் பச்சை குத்தியிருந்தான்.  இதற்கு முன்னே கவனித்திருந்தாலும் இன்று ஏனோ துருத்திக்கொண்டு தெரிந்தது.

“சாப்பாடு பிரமாதமாக இருக்கிறது சோட்டு” என்றேன். உண்மையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு எல்லாம் சரியாக அமைந்திருந்தது. சிரித்தபடி பாராட்டை ஏற்றுக் கொண்டான்.

“இன்றைக்கு அப்பா அம்மாவுக்குத் திருமண நாள். இது போன்ற நாட்களில் எல்லோரும் எங்கள் பாட்டி வீட்டுக்குப் போவோம்.” என்றான். இதைச் சொல்லிவிட்டு என் முகத்தைப் பார்த்து மெதுவாகப் புன்னகைத்தான். இதுபோன்ற தருணங்களைக் கையாள்வது எனக்குச் சிக்கலான காரியம். இப்போது அவர்களின் திருமண நாளுக்கு இவனுக்கு நான் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டுமா? இல்லை அவர்களைப் பற்றி எனக்குத் தேவையில்லாத தகவல்களை அவனிடம் கேள்விகளாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமா? திரும்பத் திரும்ப அபத்தச்சுழல். இதற்கு அஞ்சிதான் நான் வெளியே வராமலிருந்தேன். அவளால் வந்த வினை.

என்னிடமிருந்து எதுவும் பதில் வராததால் அவன் தட்டினைப் பார்த்துச் சாப்பிட ஆரம்பித்தான்.  

“சோட்டு.. ரெண்டு நாள் கொஞ்சம் சாப்பாட்டுல காரத்தை குறைச்சுக்கோ சோட்டு. புதுசா வந்திருக்கவங்க அதிக காரம் சேர்க்க மாட்டங்க போல. கஷ்டப்படுறாங்க.” என்றேன்.

சரி என்பதாகத் தலையை ஆட்டினான்.

சிறிது நேரம் கழித்து அவனே “எல்லாம் சரியாக இருந்திருந்தால் இன்று எங்கள் ஊரில் யோகேஷ்வர் திருவிழா ஆரம்பித்திருக்கும். ஊரே கோலாகலமாக இருக்கும் தெரியுமா?” என்றான்.

“ஆமாம்.. ஆமாம் எல்லாம் சரியாக இருந்திருந்தால் நீயும்கூட நண்பர்களுடன் சேர்ந்து ஊருக்குப் போயிருப்பாய் இல்லியா?” என்றேன்.

“ஓ.. உங்களிடம் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். அவர்கள் சென்ற டெம்போவை ஆந்திர சோதனைச்சாவடியில் போலீஸ் பிடித்துவிட்டார்கள். தடையை மீறி பால் கொண்டு வரும் வண்டியில் ஏமாற்றி வந்ததற்காக அத்தனைப்பேரையும் கைது செய்து விட்டார்கள்.”

“அய்யோ.. பிறகு, உன் நண்பர்கள் என்ன செய்தார்கள்?”

“அமைதியாக இருப்பதைத் தவிர எங்களால் வேறு என்ன செய்ய முடியும்?” என்று சொல்லிவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் தலையை குனிந்தபடி சாப்பிட்டு முடித்த தட்டை பாத்திரத்தொட்டிக்கு கழுவ எடுத்துப் போனான்.

*

6

மறுநாள் காலையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது “நன்றி” என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். தண்ணீர் சுத்திகரிப்பானிலிருந்து ஒரு டம்ளரில் தண்ணீரைப் பிடித்து மேசையில் வைத்தாள். மறுபடியும் “நன்றி” என்றாள். வெகு இயல்பாக அவள் அதைச் செய்தபோதும் எனக்கு என்னவோ செய்தது. இவளிடம் யார் இப்போது தண்ணீர் கேட்டார்கள்? ஓர் உதவிக்குப் பதிலுதவி செய்து நன்றிக்கடன் தீர்க்கிறாளோ? நல்லதோ கெட்டதோ இந்தப் பெண்களுக்கு எல்லாவற்றையும் பதிலுக்குப் பதில் செய்துவிட வேண்டும். சில சமயங்களில் ஒன்றுக்கு இரண்டாய்.

எனக்கு அவள் எப்போது இங்கிருந்து கிளம்புவாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் இந்த முறை நானும் கொஞ்சம் பேச்சை வளர்க்க விரும்பினேன். தண்ணீரை எடுத்து ஒரு மடக்கு குடித்துவிட்டு, “தாங்க்ஸ்.. உங்களுக்கு சேலம்தானே. சென்னைல வேலை பாக்குறீங்களா?”

“இல்ல இல்ல.. ஒரு கேஸ் விசயமா லாயர் ஒருத்தரைப் பார்க்க வந்தேன். அப்படியே இந்த லாக் டவுன்ல மாட்டிக்கிட்டேன்.”

“ஓ.. இப்போ எப்படி ஊருக்குப் போவீங்க?”

“அப்பா.. அவருக்குத் தெரிஞ்ச ஒருத்தர் மூலமா சேலம் கலெக்டர் ஆபிஸ்ல பேசிட்டு இருக்கார். பெர்மிஷன் கிடைச்சதும் வந்து கூட்டிட்டுப் போயிடுவார்” இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டு உரிமையாளர் சொன்ன அதே பதிலையே சொல்கிறாள். அவள் இதைச் சொல்லும்போது தன் மீது பச்சாதாபத்தைக் கோரும் பாவனை எதுவும் இல்லை. அவள் இயல்பாக இருந்தது எனக்குப் பிடித்திருந்தது. 

என் அறைக்குள்ளே வந்ததும் இரண்டு விசயங்கள் என்னை உறுத்திக் கொண்டிருந்தன. முதலில் அவளின் வலது கன்னத்தின் கீழ்புறம் இருந்த மச்சம். அம்மாவுக்கும் இதே இடத்தில் இதே போன்றொரு மச்சம் உண்டு. அடுத்தது அவள் ஏதோ வழக்கு சார்ந்து வந்திருப்பதாகக் கூறியிருந்தாளே. என்ன வழக்காக இருக்கும்? தனியாக வந்திருக்கிறாள் என்றால் ஏதேனும் பாலியல் தொந்தரவு பற்றியதாக இருக்குமோ? அழகாக வேறு இருக்கிறாள். திருமணம் ஆகிவிட்டதா என்பது தெரியவில்லை. அப்படி ஆகியிருந்தால் ஏதேனும் குடும்ப வன்முறையாகவோ அல்லது திருமண முறிவாகவோ இருக்கலாம். அப்படியான வழக்குகளைப் பற்றித்தான் இப்போதெல்லாம் அடிக்கடி கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இவளுக்கும் அதைப் போன்ற ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அதைத் தெரிந்து கொள்ள மனம் அரிக்கத் தொடங்கியது. நிதானமாக யோசித்துப் பார்த்தால் இந்த விசயத்தில் எனக்கு ஏற்பட்ட அக்கறைக்கு அவள் அழகாக இருப்பதைத் தவிர வேறு காரணம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

அன்று இரவு அவள் கதவு திறந்து உணவு மேசைக்கு வந்த அதே நேரத்தில் சரியாக நானும் போனேன். இருவரும் பரஸ்பரம் புன்னகைத்துக் கொண்டோம். அவளிடமிருந்து சந்தன வாசம் எழுந்து வந்தது. அவளே ஏதாவது பேசுவாள் என்று எதிர்பார்த்தேன். ஒரு வார்த்தை பேசவில்லை. தலையை குனிந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். மெதுவாக நிமிர்ந்து அவள் கவனத்தைக் கலைக்காமல் கன்னத்திலிருந்த மச்சத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொண்டேன்.

இப்போது ஏனோ அடிக்கடி அவளைப் பார்க்க வேண்டும், ஏதாவது பேச வேண்டும் என்று பரபரக்க ஆரம்பித்தது. துரதிர்ஷ்டவசமாக மறுநாள் முழுவதும் அவளைக் காண வாய்க்கவில்லை. ஒருமுறை பாத்திரங்களை நகர்த்தும் சத்தம் கேட்டு வெளியே வந்தபோது சோட்டு நின்று கொண்டிருந்தான். அவனிடம் கேட்டுப் பார்க்கலாமா என்று யோசித்தேன். அது தேவையற்ற பல்வேறு கற்பனைகளைக் கிளறிவிடும் என்பதால் அமைதியாக இருந்து விட்டேன். ஒருவேளை அவள் கிளம்பிச் சென்று விட்டாளோ என்று நினைத்தேன். இல்லை, அப்படியென்றால் உடனிருக்கும் என்னிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் யாரும் கிளம்பிச் செல்வார்களா? என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.

பக்கத்து அறைதானே, ஏதாவது காரணம் வைத்துக் கொண்டு தட்டி இருக்கிறாளா என்று பார்க்கலாமா? இல்லை அது தவறு. ஒருவேளை கதவைத் தட்டி அவள் அதைத் திறந்து புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்டால் உளறிக்கொண்டு நிற்பேன். கச்சிதமாய் பொய் சொல்வது எனக்கு கைவராத கலை. அற்பமாய் மாட்டிக்கொண்டு விழிப்பேன். அப்போதுதான் எனக்கு அந்த யோசனை தோன்றியது. அன்றிரவு வரவேற்பறையின் ஜன்னல்கள் அத்தனையையும் இழுத்துச் சாத்தினேன்.

மறுநாள் காலையில் சாத்தப்பட்ட ஜன்னல்கள் எதுவும் திறக்கப்படவில்லை.

*

  • கார்த்திக் பாலசுப்ரமணியன் – மென்பொருள் துறையில் வேலை செய்யும் இவர். ஒரு சிறுகதைத் தொகுப்பு ‘டொரினா’ மற்றும் ‘நட்சத்திரவாசிகள்’ நாவல் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. email – karthikgurumuruganb@gmail.com

கவி

7
  • மணி எம்.கே மணி

கவி

ஒரு சிறுகதை 

என்னைப் பார்த்தால் மிகவும் பாவமாக இருப்பேன். முதல் பார்வையில் நல்லவன் என்பதாக முடிவு செய்து பலரும் எனக்கு மரியாதை கொடுப்பார்கள். எனது கண்கள் உள்ளே மிகவும் ஆழத்தில் தேமே என்றிருப்பதை பலரும் அனுதாபம் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். மட்டுமீறி கட்டுமஸ்தாக இருக்கிற சாந்தியை பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு ஒருவரும் அறியாமல் நான் என் பார்வையால் வாரி விழுங்கி சேகரித்துக் கொண்டிருக்கும் போது என் பக்கம் திரும்பின அவள் புன்னகைத்தாள். பதிலுக்கு புன்னகை வராமல் மனம் கிடந்து எட்டு போட்டுக் கொண்டிருந்தது.

“ காலேஜ் படிக்கிறியா ? “

“ ம் “       

அவள் என்னையும், நான் அவளையும் ஒரு மாதமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் என் கையில் வைத்திருப்பது ஒரு ரஷ்ய நாவல். தினமும் இது மாதிரி ஓரிரு புத்தகங்கள் கையில் இருக்கும். அதனால் அவள் நான் கல்லூரி படிப்பதாக நினைக்கிறாள். இரவு சென்று நண்பர்களுடன் கூத்தடித்து விட்டு நாளை காலை திரும்பும்போது நூலகத்தில் புத்தகத்தை மாற்றிக் கொண்டு வருவேன். நான் படிப்பை விட்டு வெட்டியாக சுற்றத் துவங்கி எவ்வளவோ காலமாகிறது. இரவு ஏழு பதினைந்துக்கு வருகிற இந்த வண்டியை நிரந்தரமாக பயன்படுத்துவதற்கு ஒரே காரணம் இவள் தான். என்ன மாதிரி கட்டை என்கிறீர்கள் ? பெரிய கண்களும், தடித்த உதடுகளும் இடுப்பும், பாதங்களும் எனக்குள் பரபரவென்றிருக்கின்றன. தூக்கம் விழிக்கிறேன். ஒன்றும் செய்வதில்லை என்றாலும் திட்டங்கள் போட்டவாறு இருப்பேன்

ஆனால் அவளேதான் ஒருநாள் வா என்றாள். எட்டாகி விட்டிருந்தது. பஸ் வரவில்லை. ஒரு ஆட்டோ பிடித்து அதில் என்னை ஏற்றிக் கொண்டாள். உன் இடத்தில் உன்னை இறக்கி விட்டுப் போகிறேன் என்பதாக சொன்னாள். போகிற வழியெல்லாம் அன்று கரண்ட் கட், சினிமா மாதிரி. நான் அவளது இடுப்பை தடவினேன். அவள் எந்த பாவமும் காட்டவில்லை. சரி போயிட்டு வாப்பா என்று என்னை இறக்கி விட்டது ரொம்ப சாதாரணமாக இருந்தது. எப்படியும் அவள் என்னைக் காட்டிலும் பத்து வயது மூத்தவள் என்பது உண்மையாக இருக்கலாம். அதற்காக அவள் என்னை ஒரு தம்பி போல எல்லாம் நடத்த முடியாது. எனக்கு நிறைய சந்தேகம். நான் இடுப்பில் தடவும்போது அவள் கொஞ்சமாவது நெளிந்திருக்க வேண்டும். ஒரு சின்ன முனகல் வந்திருந்தாலுமே ஒரு தெம்பு கிடைத்திருக்கும். ஒருவேளை என்னை சோதனை செய்கிறாளா?

இரண்டு நாள் கழித்து அவளது உள்ளத்தில் பதிவதற்கு ஒரு திட்டம் வந்து விழுந்தது.

நான் திட்டங்களை நிறைவேற்றுபவன் அல்ல.

ஆனால் அன்று பஸ்சை விட்டு இறங்கிய உடன் சன்னலோரம் அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு ஓடி அவளிடம் ரகசியம் சொல்லுவது போல செய்தேன். அவளும் தலையை குனிந்து காதைக் காட்டினாள்.

“ஐ லவ் யு ! “

இருவரும் விலகினோம். 

அவள் என்னை ஒரு கணம் பார்த்தாள். பாரத்தாளா.? அப்படித்தான் இருந்தது.

” சரி, போ, பத்ரம் ! “

எனக்கு போதவில்லை. ஐ லவ் யு சொன்னதெல்லாம் அதிகம். வெட்கமாகக்கூட இருந்தது. நண்பர்கள் யாராவது இதைக் கேள்விப்பட்டால் சிரித்தே சாவான்கள். இருந்தாலும் ஒரு பெண் மனதை வென்று எடுக்கத்தான் அதை செய்தேன். உள்மனதில் இருப்பதை வெளியே காட்டாதிருந்து ஒருவேளை இனிமேல் கூட நான் சொன்னதெல்லாம் எதிரொலித்து என்னை அவள் உருக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது அல்லவா. நான் அவளோடு இருக்கப் போகிற தினத்தின் வாத்ஸாயன சர்க்கஸ்களை பற்றித் திளைத்தேன்.

அவளே சொன்னாள்.

” நீ காலேஜ் படிக்கற. உனக்கென்ன, லைஃபை என்ஜாய் பண்ணணும். நானும் உன் டைப் தான். ஆல் என்ஜாய். புள் என்ஜாய் ! “

” ம், ம், “

” என்ன அப்பிடி பாக்கறே ? “

” உங்கள நான் அப்பிடியே போட்டு கசக்கிப் பிழியணும் !

” வுடு, புழிஞ்சுக்கலாம்.  பிளாட் ல இருக்கியா? – தனியா இருக்கியா, பசங்க கூட இருக்கியா? “

” இங்க இருக்கறது என் வீடு. அப்பா அம்மா தங்கச்சி ..”

” சரி, சரி- நாம வேற எடத்துக்கு போலாம். எப்பன்னா நானே கூட்டிட்டு போறேன். நீ நாளைக்கு எனக்கு ஒரு ஹெல்ப்பு பண்றியா ? “

நான் அன்றுடன் அவளைப் பார்ப்பதை நிறுத்தினேன். வேறு பக்கமிருக்கிற பஸ் ஸ்டாண்ட்டுக்கு வேறு நேரத்துக்கு போனேன். எங்கேயாவது பார்க்க வேண்டி வந்து விடுமோ என்று பயந்தவாறு இருந்தேன். உங்களுக்கு புரியலாம், இப்படி பஸ்ஸுக்கு போக வர வேண்டிய காசுக்கே நான் நான்கு பேரை பிடித்துத் தொங்க வேண்டும். அவள் கேட்டது ஐநூறு ரூபாய். எப்படி? அது மட்டுமல்ல, நான் ஏதோ ஒரு குடும்ப பெண்ணைக் கவிழ்த்து வேலையை முடித்துவிட்டுப் போகலாம் என்றிருந்தேன். அவள் அதுவல்ல. காசுக்கு அடி போடுகிறாள், தேவையே இல்லை. ஏமாந்தவன் என்று நினைத்துக் கொண்டாளா? சொன்னேன் இல்லயா, நான் பார்ப்பதற்கு மட்டும் தான் பாவமாக இருப்பேன். நல்லவர்களுக்கு நல்லவன். கெட்டவர்களுக்கு கெட்டவன்.  

பின்னால் விஷயம் தெரிய வந்தது

அவள் ஒரு இரவு டிஸ்பென்சரியில் ஆயா வேலை பார்க்கிறாள். பக்கத்தில் மசாஜ் பார்லரில் இருக்கிற ஒரு ஆசாமி ஏதாவது கிராக்கிகள் சிக்கினால் அவளை தொழிலில் ஈடுபடுத்துவது வழக்கம். பகல் நேரத்து பேசஞ்சராக கூட பிரத்யேக நாட்களில் பயணப்படுவதுண்டு. எனக்கு பெரிய பாதிப்பு உண்டாகவில்லை. வேறு இரைகளுக்கு பின்னால் ஓடிப்பார்க்க வேண்டியிருந்தது அல்லவா? படுக்கும்போது காட்டி அவளை குஷிப்படுத்த வேண்டும் என்று சிரமப்பட்டு செதுக்கியிருந்த ஒரு கவிதையைக் கிழித்துப் போட்டேன்.

அவளை எனது மன அறையில் வைத்து நசுக்கும்போது கொஞ்சுவதற்கு சாந்தி என்கிற புனைப்பெயரை எடுத்துக் கொண்டிருந்தேனே தவிர அவளது உண்மையான பெயர் என்ன என்பது கூட எனக்குத் தெரியாது. இப்போது தெரிந்து விட்டது. டிஜிட்டல் போர்டில் தெளிவாக போட்டு இருக்கிறார்கள். மகளை வாழ்த்துகிற கவிதைக்கு கீழே இங்கனம் அப்பா பூமாலை, அம்மா தில்லை நாயகி.

தில்லை என்பதுதான் அவளது பெயர்.

அவளையும் இங்கிருந்து பார்க்க முடிகிறது. தடித்து பெருத்து முடியெல்லாம் நரைத்து கிழவியாகி விட்டிருக்கிறாள். ஆக மாட்டாளா என்ன. நானே பெரும்பாலும் கிழவன் தான். நடுவில் இருபது வருடம் ஓடி விட்டிருக்கிறது.    

என்னவெல்லாம் நடந்தது என்று கதை சொல்லப் போனால் அதில் ஒன்றுமே இல்லை. எனக்கு உருப்படுவதற்கு நேரம் கிடைக்கவில்லை. அவ்வளவு தான். நகரத்தின் மையத்தை விட்டு விலகி உள்ளே செல்லுகிற சேரி ஒன்றை அணைத்துக் கொண்டு பிரம்மாண்டமான சுடுகாடு ஒன்று இருக்கிறது. ஊசி போட்டுக்கொண்ட பிறகு மக்களுடன் சேர்ந்து நானும் பல பாட்டுகள் பாடுவேன், அவை நானே சொந்தமாக எழுதின கவிதைகள். வந்தவன்கள் அனைவரும் அரை வயிறு, கால் வயிறில் போதை வற்றி சோர்வில் தூங்கி விடும்போது நான் பேய்களுக்கு அவற்றை சொல்லிக் காட்டுவது வழக்கம். பகலில், வெளிச்சம் முகத்தில் இருக்கும்போது, மூளையிலோ மனசிலோ கிறக்கம் இல்லாதிருக்கும்போது எனக்கு எழுத தெரியும் என்கிற காரியத்தில் இருந்து நானாக நழுவி விடுவேன். என்ன சொல்லி, சொல்லாமல் இருப்பதில் இல்லாமலிருப்பதில் என்ன இருக்கிறது என்பதே எனக்கு விளங்குவதில்லை. எனக்கு சோறு போடக் காத்திருக்கிற அம்மாவுக்கு மூளை விளங்காமல் கீழ்பாக்கத்துக்கு போனதில் இருந்து நான் வீட்டுபக்கம் போவது கிடையாது. போனாலும் வெளியே நின்று கூப்பிட்டு மகளைப் பார்த்துவிட்டு வந்து விடுவேன். முதலில் அவள் என் மகள்தானா என்பதில் சந்தேகம் இருக்கிறது, அதை நான் பொருட்படுத்துவதில்லை. அப்பா என்று கூப்பிடுவாள், அது அவளது அடிவயிற்றில் இருந்து வரும். அவளுக்கு படிப்பு மீது ஆசை. அவளது அம்மா எவனுக்காவது தள்ளி விடுவதற்குள் நான் கொஞ்சம் பணம் உண்டாக்க வேண்டும். எனக்கு எழுதுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. நான் எழுதுவேன் என்பதே யாருக்கும் தெரியாது

அப்படிச் சொல்ல முடியாது

கோதண்டம் தான் இந்த வாய்ப்புக்கு கூப்பிட்டான். அவனுக்கு எழுத படிக்க வராது. அதனால் என்னை அவன் ஒரு பாரதியாராக கொண்டு விட்டான். நீ ஒரு கவிதை எழுத வேண்டும் என்றான். சேத்துப்பட்டு பெரியசாமி குடும்பத்தில் விசேஷம் என்றான். அந்த ஆளின் மூன்றாவது பெண் வயசுக்கு வந்து விட்டாள் என்றும், மந்திரி முந்திரிங்க எல்லாரையும் வர வைத்து பெரிய விழா என்றும் சொன்னான். அந்தப் பொண்ணு மேல இருக்கற பாசத்தப் பத்தி அவளோட அப்பா அம்மா சொல்றா மாதிரி நீ தான் ஒரு கவிதை எழுதிக் குடுக்கணும் பாரதியாரே ! எனக்கு எரிச்சல் வந்தது. அவனுக்கு ஒரு கவிஞன் என்றால் யாராக இருப்பான் என்பதை விளக்க ஒரு சொல்லும் இல்லாமல் மலைத்துக் கொண்டிருந்த போது அவன் ஆயிரம் ரூபாயைக் காட்டினான். அப்போதே விரைந்து சென்று இருவரும் குடித்தோம். காசு காலியாகும் தருணம் நெருங்குவதற்குள் கோதண்டம் அந்தக் கழிசடைக் கவிதையை எழுதி வாங்கிக் கொண்டான்.

இன்றைய விழாவில் வித விதமான உணவு வகைகள் இருக்கின்றன என்றார்கள்.

அப்புறம் குடி. போதாதா?

எப்படியோ இருந்த ஒரு துவைத்த சட்டையைப் போட்டுக்கொண்டு கோதண்டத்துடன் வந்து சேர்ந்து விட்டேன். வயசுக்கு வந்த பெண்ணின் அம்மா நம்ம தில்லை.

பெரிய மண்டபம். மொத்த மக்களும் செல்வ செழிப்புடன் இருப்பவர்கள் என்பது புத்தியில் உறைத்துக் கொண்டே இருந்தது. பணம் தண்ணீராக ஓடுவது பற்றி சொல்லுவார்களே, அதை இப்போதுதான் பார்க்கிறேன். கூட்டத்தில் முன்னேற முடியாமல் பிதுங்கிக் கொண்டே குடிக்கிற இடத்துக்கு போக போராட்டம் செய்து சோர்ந்து விட்டேன். பாவிப்பயல், கோதண்டம் விட்டுவிட்டு சென்று விட்டான். மூட்டுவலி நான் இருக்கிறேன் என்று நினைவுபடுத்தியது. எங்கேயாவது உட்கார வேண்டுமே?  சுவரில் சாய வேறு பக்கம் நகர்ந்தேன். கொஞ்சம் சென்றதும் நாற்காலிகள் இருந்தன. பெரியசாமி இன்ன தொழில் தான் செய்கிறான் என்றில்லை. பத்து பர்னிச்சர் கடைகளாவது இருக்கும் என்றார்கள். மற்றும் ஹார்ட்வேர்ஸ், பார்கள். போலீஸ் அதிகாரிகளுடன் பார்ட்னர்ஷிப் வைத்துக் கொண்டு போதை மருந்து வியாபாரம் சக்கை போடு போடுகிறது என்று கிசுகிசுக்கிறார்கள். அதிலிருந்து தான் இவ்வளவு மொசைக்கு, வேறு எப்படி? பத்து அய்யருமார்கள் சூழ்ந்து அந்தப் பெண்ணை மந்திரம் சொல்ல வைத்து திணறடித்துக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து ஒரு தாம்பாளத் தட்டை எடுத்துக் கொண்டு ஜனங்களுக்கு புஷ்பம் கொடுத்தவாறு வந்து கொண்டிருந்தாள் தில்லை. என்னிடம் வந்து தான் ஆக வேண்டும். நான் இப்போது எழுந்து நகர்ந்து சென்றாக வேண்டுமே?

அவள் என்னிடம் வந்ததும்  ”  என்னைத் தெரியுமா? ” என்றேன்.

” யாரு? “

என்ன சொல்லுவது என்பது பிடிபடவில்லை. பேச்சு வராது என்பது போல தோன்றியதால் நீங்க போங்க என்பது போல சைகை செய்தேன்.

அவள் கொஞ்சம் நகர்ந்தாள். திரும்பினாள். என் அருகே அமர்ந்து இருந்தவர்களை அதட்டி எழுப்பி வேறு எங்கோ சென்று உட்கார சொன்னாள். பக்கத்தில் உட்கார்ந்தாள். என்னையே பார்த்தாள்.

”  தெரியுதுப்பா எனக்கு. ஐ லவ் யு சொன்னியே, நீ தானே ? “

ஆமென்று தலையசைப்பதை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

”  சௌக்கியமா?  “

”  ஆங் – ஒரு கொறச்சலும் இல்ல. பாத்தியா? “

” ம் “

”  அப்ப எனக்கு பத்து பேராச்சும் ரெகுலர் கஸ்டமர் இருந்தாங்க. அதில ஒருத்தரா இருந்தவரு தான் என் புருஷன். கல்யாணம் பண்ணிக்லாமான்னு கேட்டாரா, அப்ப எதுக்கோ சரி னு  பட்டுது. “

நான் அவளிடம் அந்த அழகு இருக்கிறதா என்று தேடிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். இல்லை. கண்டிப்பாக இல்லை. ஆனால் முன்பு ஒரு கணம் நினைத்து விட்ட மாதிரி கிழவியெல்லாம் கிடையாது.

”  அப்ப சும்மா பிக் பாக்கெட்டு தான் அடிச்சிக்கிட்டு இருந்தாரு. சொல்லிச் சொல்லி பல தொழிலையும் செய்ய வெச்சு நான் தான் மேல கொண்டாந்தேன், ஆமா நீ என்னப்பா பண்றே ?  “

அதற்குள் யாரோ அவளைக் கூப்பிட்டார்கள். அவள் எழுந்து போனாள். நான் சிந்தனையே இல்லாமல் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தேன். பிறகு திடுக்கிடல் ஒன்று வந்து எழுந்து எனது வயதை மீறின ஆவேசத்துடன் பாட்டில்கள் இருக்கும் இடத்திற்கு சென்றேன். முதலில் பிராந்தி இரண்டு பெக் போட்டேன். விதவிதமாக குடிக்க தோன்றியது. அப்புறம் விஸ்கி.  அப்புறம் ஓட்கா. தாகம் போல வரும்போதெல்லாம் கையில் கிடைத்த பியர் பாட்டில்களை கவிழ்த்துக் கொண்டேன். உன் வாழ்க்கை எப்படி இருந்தது, நீ எப்படி குப்பைத் தொட்டிகளில் எச்சில் தின்று பிழைத்துக் கொண்டிருந்தாய். நான் இதை இந்த ஊர் முழுக்க சொல்லுவேன். அப்படி சொல்ல நான் வாய் திறக்கக் கூடாது என்றால் நீ எனக்கு எவ்வளவு பணம் தருவாய்?                       

நான் ஆங்காரத்துடன், ஒரே நேரத்தில் பெருகுகிற லட்சம் கோபங்களுடன் கண்களை அடைத்துக் கொண்டு, மேலே வந்து இடிக்கிறவர்களை எல்லாம் தள்ளி விட்டுக் கொண்டு படிக்கட்டுகளில் கூட வழுக்கிக் கொண்டு இறங்கினேன். எங்கோ தடுக்கினேன். எங்கோ விழுந்தேன். எங்கோ ஆட்டோவில் சென்று கொண்டிருந்தேன். நான் பாரதியார் டா என்று கோதண்டத்திடம் கூச்சலிட்டேன்.

தேவடியாளுங்க எல்லாம் எப்பிடி வாழறாளுங்க பாத்தியா. வழக்கம் போல தூங்கி எழுந்தது அதே கடைத்தெருவில் தான். ஒத்தா, எப்ப ராத்திரியெல்லாம் மகாராஜா மாதிரி குடிக்கிறோமோ மறுநாள் காத்தால குடிக்கறதுக்கு சிங்கிள் டீ கெடைக்காது. எலும்பை முறிக்கிற வலியை மென்று முழுங்கிக் கொண்டு மெதுவாக நடந்தேன். முதலாளி வரவில்லை போல, கோதண்டம் தான் ஷெட்டை திறந்து கொண்டிருந்தான்.

” டீ  வாங்கிக் குடுறா “

” அப்டி உக்காரு, ஒரு விஷயம் சொல்றேன் !  “

” நீ  இப்ப வாங்கித் தருவியா, மாட்டியா ? “

கோதண்டம் என்னை அறைவது போல வந்தான். அறையவில்லை. வண்டியை எடுத்து என்னையும் உட்கார வைத்துக்கொண்டு எனது வீட்டுக்கு தான் போனான். எனது மனைவி அந்தப்பையை கொண்டு வந்தாள். தில்லை கோதண்டத்திடம் கொடுத்த பணம். சொன்னால் யாராலும் நம்ப முடியாது. மகளின் மூன்று வருட கட்டணத்தை மொத்தமாகக் கட்டினோம். அன்று மதியம் வீட்டில் ஆட்டுக்கறி சாப்பாடு சாப்பிட்டேன். இரவு பக்கத்தில் படுக்க சொன்னாள். கட்டியணைத்துக் கொண்டு அவளை அறிந்தவாறு இருந்த பிறகு நான் ஓவென்று அழுதேன்,  சிறிதும் ஆண்மை எழுச்சி கொள்ளவில்லை. அப்போதே இனிமேல் வீட்டில் படுப்பதில்லை என்றும், கடைதெருவில் படுக்கும்போது குடிக்காமல் தூங்குவதில்லை என்றும் சபதம் செய்து கொண்டேன்.

குடிப்பதற்கு கனடாவில் இருக்கிற தங்கை காசு அனுப்புவாள். குடித்துக் குடித்து சீக்கிரமாக உன்னை முடித்துக் கொள் என்று சொல்லியிருக்கிறாள், நானும் சரியென்றிருக்கிறேன். பணம் அப்படி எப்போதேனும் வராதபோது ரொம்ப முட்டினால் தில்லை வீட்டுக்கே நேரடியாக சென்று கூழை கும்பிடு போட்டு விடுவது தான்.

இப்போதும் ஆயிரம் ரூபாய் கொடுத்தாள்.

வரட்டுமா என்று விடைபெறப் போன போதுதான் இந்தக் கதையை முடிக்கப் போகிற அந்தக் கேள்வியைக் அவள் கேட்டாள். ” அப்போ நான் உன்ன ஐநூறு ரூபா கேட்டேனே, நீ என்ன தப்பா நெனைச்சுக்கல தானே ?

********            

மணி எம்.கே. மணி திரைத்துறையில் பணியாற்றி வரும் இவருக்கு ஒரு சிறுகதைத் தொகுப்பு, இரண்டு கட்டுரைத்தொகுப்புகள் மற்றும் ஒரு நாவல் வெளியாகியுள்ளன. – தொடர்புக்கு – mkmani1964@gmail.com

யாளியின் சுவிஷேச நேரம் – 02 – ரொம்ப ஓவரா போறோமோ

0

ரதி ஈவ் டீஸிங் புகார் கொடுத்ததாக, வசந்த மண்டபத்தின் கல் சுவற்றில் இருக்கின்ற புடைப்புச் சிற்பத் தொகுதியில் இருக்கின்ற ரத கஜ துரக பதாதிகள் முற்றுகைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க. அந்த பக்கமாக வாரும் என யாளியிடம் சொல்லிவிட்டு தீர்த்தக்குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டேன். தீர்த்தம் சோப்பு நுரையால் பாழாகக் கூடாது என்பதற்காக கம்பி வேலிகள் போட்டிருந்தாலும், பின்னாளில் இம்மாதிரியான நீர்நிலையே மூலவர் தரிசனத்திற்கு நிகரான ஒன்றாக மாறிவிட்டதை அறிந்து கவலை கொண்டவனாக காத்திருந்தேன். 12:30 மணி வரை அனுமதி என்றாலும். 11 மணி ஆனாலே புட்டம் சுக்கா சப்பாத்தியாக மாறிவிடும் என்கிற பயம் இருப்பதால் யாளியின் வரவுக்காக எனது நான்காவது விரலின் நகத்தையும் முழுவதுமாக கடித்து துப்பியிருந்தேன். இடதுக்கு போக மனமில்லை என்பதால் இன்னும் ஒருவிரல் மட்டுமே. அப்போது அந்த பெருஞ்சத்தம்.

 “என்னதான் கம்பிவேலிக்கு போட்டிருக்கும் கதவிற்கு தாழ் இல்லை என்றாலும் நான் கதவைத் திறந்தா வருவது? அதான் எகிறிக் குதித்தேன்.”

மேலும் அது

“சிரிக்காதே, என்னதான் கேட் போட்டு பூட்டினாலும். மக்களுக்கு நீரைக் கண்டால் அதை அசுத்தப்படுத்தணும். அதான் எவனோ இப்படி பொட்டலத்தை வீசி எறிஞ்சுருக்கான்”

யாரோ தீர்த்தக்குளத்தில் வீசி எறிந்த பழைய உணவுப் பொட்டலத்தின் மீது, கம்பிகளைத் தாவிக் குதித்த யாழி அந்த பொட்டலத்தில் கால் வைத்ததில் சறுக்கிவிட்டு தீர்த்தவாரி செய்துகொண்டது. நான் சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்.

***

தீர்த்தவாரி சிறப்பா முடிஞ்சிடுச்சு போலயே?, குசும்பாகவே ஆரம்பித்தேன்

“A typical modern day understanding”

யாரைக் காணோம்னு சொன்ன?

“கிண்டல் பண்ணாதே, இந்த காலத்திய நவீனப் புரிதல் இவ்ளோதானா உங்களுக்கு என்றேன்”

அப்படி என்ன தப்பா புரிஞ்சிக்கிட்டோம்

“நான் கீழ விழுந்ததும் சிரிக்கிறல்ல.. இது சாதாரண விசயம், அதை தீர்த்தவாரியாக ஒப்பிட்டு கிண்டல் செய்யுறல்ல. இந்த ஒப்பீட்டை தான் மிகக்குறுகிய உங்கள் ரசனை வெளியாகச் சொல்கிறேன். இது ஒரு உதாரணம் தான்”

சாதாரணமா சொன்னது உனக்கு அவ்ளோ வலிக்குதா?

“வலி/வளி இந்த இரண்டுமே என்னை ஒன்றும் செய்யாது. நான் உன்னை கவனிக்க சொல்கிறேன். இவ்வகையான வெர்பல் மீம்கள் தான் பரிணாமம் அடைந்து எல்லையில்லாமல் போய்விட்டது. அது உங்கள் ஆன்மீகம் முதல் அரசியல் வரை அதன் அடிப்படைகளை, இயல்பை, மாற்றங்களை, முதிர்ச்சியை, அனுபவங்களை என எல்லாவற்றையும் மாற்றி விட்டது“

 நீ சொல்வதைப் பார்த்தால் நாங்கள் துன்பப்பட்டே வாழ்க்கை முழுக்க உழன்று கொண்டிருக்க வேண்டும் போல. அதிகாரத்தின் சுவற்றிற்குள்ளேயே வாழ்ந்து கழிக்கின்ற உனக்கு சுதந்திரம் பற்றி என்ன தெரியும்.?

எந்த சக்தியுமற்ற என் கையில் இருக்கின்ற சில நூறு மெகா பைட்களை மட்டுமே என் ஆயுதமாகவும், வலி நிவாரணியாகவும், பொழுதுபோக்காகவும், விழிப்புணர்வாகவும் கொள்வது எப்படிதான் உனக்கு அபத்தமாகவும் தவறானதாகவும் தெரிகிறதோ யாளீ!!! முதலில் விடுதலையை உணர்!! பிறகு பேசு!!

சிரித்தபடியே மீண்டும் குளத்திற்குள் இறங்கி கால்களையும் வாலினையும் நீருக்குள் வைத்தபடி சற்று ஆசுவாசமாய் வானத்தைப் பார்த்தபடி பேச ஆரம்பித்தது?

“ சுதந்திரம், விடுதலை…  சிவாஜியோ, வாகை சந்திரசேகரோ இதை பத்து முறை உரக்கச் சொல்லி உச்சரித்தால் நான் புரிந்துகொள்வேனோ என்னவோ? “

இப்ப நீ மட்டும் என்ன பண்ணுற, இதுவும் வெர்பல் மீம் தான.?

“ நான் மறுக்கலை, உன் பாஷை தான் அது. நான் எப்படிப் பிறந்தேன் என்று தெரியுமா. அரச அதிகாரம், மதக்கட்டமைப்பு அல்லது வணிகத் தேவையின் பொருட்டு உருவாகிருக்கும் என்றா நினைக்கிறாய் ”

எனக்கு எதுவும் தெரியாது நீயே சொல்..

“அதனைக் கண்டவன் அவற்றைக் கடத்துவதற்காக செய்தவற்றின் கலை வெளிப்பாட்டு வடிவம் தான் நான். அதாவது நீ போற்றுகின்ற கலை என்பது, அடிப்படையில் ஒன்றைக் கடத்துவதற்கான செயல் வடிவத்தின் பல்வேறு தட்டுகளின் focul pointகளை இணைக்கின்ற குறுக்கு வெட்டாய் போகும் ஒரு நீள்கோடு.

 “ ஒவ்வொரு தட்டிலும் ஒன்று இருக்கும் மதம், அரசியல், தத்துவம், வடிவம் ஏன் மொழி கூட ஒரு தட்டுதான். எழுத்து கலையாகும் போது மொழியும் ஒரு தட்டு தான், நுட்பமான புதிய தட்டுகள் வர வர அது ஓவியம், திரைப்படம் என வெவ்வேறு வடிவம் பெறும். தட்டுகளே பல பரிமாணங்களாக மாறும், எல்லா வடிவங்களும், வேலைப்பாடுகளும், முயற்சிகளும் ஒரே நோக்கம் கொண்டவை தான் அது, அவற்றைக் கடத்த வேண்டும், அது கடத்தும்வரை நிறைவு பெறாத ஒன்றாகவும் தொடரும் ஒன்றாகவும் இருக்கும். ஆனால் கலை என்கிற மையப்புள்ளி இருந்தால் தான் இந்த கடத்தல் சாத்தியப்படும். ஒருவகையில் நான் ஒரு மொழி வடிவம் என்று கூட கூறலாம் ”

என்ன மொழி வடிவமா

மொழி என்பது எப்படியானது : ஒரு சமூகத்தின் அல்லது இனத்தின் கலாச்சார / பொருளாதார / நம்பிக்கைகள் அல்லது அச்சங்கள் ஆகியவற்றின் உள் அல்லது வெளி பரிமாற்றங்களுக்குத் தேவைப்படும் உணர்வுகளை வெளிப்படுத்த தகவல்கள் தருகின்ற நரம்புகளின் கூட்டுத்தொகுதி அதாவது மூளை போல. ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு மூளையைப் போல. “

மேலே சொல். அதற்கு முன்னர் இதற்கு விளக்கம் சொல், மூளையைப் போன்ற வடிவத்தில் மொழியை வைத்துக்கொண்டு அதனால் இணைக்கப்பட்ட ஒரு குழுவை இனம் என்று சொன்னால் பரிவர்த்தனைகள் செய்யும் வேறு மூளையைச் சேர்ந்தவர்களை வந்தேறி என்று சொல்லும் அரசியலை செய்யலாமா?

பாவி, நீ தான் இத்தனை சமர்த்தாய் மடைமாற்றி விட்டாய். மொழியின் இயல்பே பரிவர்த்தனைகள் மூலம் தன் நினைவுத்திறனைப் பெருக்கிக்கொள்வது தான். நாற்பது வேர் சொல்லில் இருந்து ஒரு சமூகத்திற்கான மொத்த மூளையை அதாவது மொழியை உருவாக்கி அவர்களை தனி இனக்குழுவாக மாற்றி ஒரு எம்.பி தொகுதி அல்லது மேல்சபை சீட் வாங்கி. மொழியால் இணைக்கப்பட்டவர்களின் குழந்தைக்கு கேந்திரா வித்யாலயா பள்ளியில் சீட் வாங்கிக்கொடுத்து அவர்களின் மூல மூளை மொழியை உன் அரசியல் வெற்றிக்காக அறுத்துவிட முடியும் தெரியுமா ?”

ஐயோ பயங்கரமாக இருக்கிறதே.

படித்துறையும் புட்டத்தில் சூடு ஆரம்பித்தது.

ஹாஹ்ஹா.. இருக்கிறதா ? பயங்கரமாய் இருக்கிறதா? நான் சொல்ல வந்ததை நீ முழுமையாகக் கேள்.. குறுக்கிடாதே… எங்கே விட்டோம்.?? ”

ஒரு வகையில் நீயாகிய யாளியே ஒரு மொழி வடிவம் தான் என்றாய்.

“ஆமால்ல. இதையே கொஞ்சம் ரீஃபைன் செய்வோம், மொழி உருவாக்கிய கலாபூர்வமான வார்த்தை ஓவியம்”

சுத்தம், மொத்தமா குழப்புற

சரி உன் வழிக்கே வருகிறேன்.  ‘பூ’ வார்த்தையா? எழுத்தா?”

இரண்டும் தான்.

“எனக்கு அது மூன்று, பூ என்பது ஓவியமும் கூட. ஓவியம் என்பதற்கு விளக்கம் ஒரு எபிஸோடோ அல்லது ஒரு தொடராக எழுதலாம். ஆனால் நான் இதுதான் யாளியாகிய நான் ஒரு வார்த்தையாக எடுத்துக் கொள்ளப்படும்போது அது அரூபமான கலைஞனின் சிந்தனையின், செயல்திறனையும் சேர்ந்தே உணர்த்துகிறது.”

ஆமா தான் கொஞ்சம் புரிஞ்ச மாதிரிதான் இருக்கு.

“இந்த பூமியை எப்படிப் பார்க்குற அதையும் ஒரு உயிரா பார்க்க முடியுமா உன்னால?”

ஆமா, பார்க்கணும்ல.. அது நியாயம் தானே.?

“முன்ன பார்த்துட்டு இருந்திங்க பூமா தேவினோ, கயான்னு கிரேக்கத்தில் கூட, ஆனா நீங்க எப்பவோ அறிவியலை தவறா பயன்படுத்த ஆரம்பிச்ச கால கட்டத்திலிருந்தே அது மாறுபடத் தொடங்கிருச்சு. இன்னைக்கு கங்கா நதியோ, ஆகாயமோ, சிறுகுளமோ மாசற்று தூய்மைப்படும் போது, அதையே கிண்டல் செய்யுறிங்க. மாசற்ற தெளிந்த வானத்தில் பாரீஸ் தெரியுது என்பது தான் சுதந்திரத்திற்காக ஊழல் இருந்தாலும் பரவாயில்லை, முன்னேற்றத்திற்காக கொடுங்கோன்மை இருந்தாலும் பரவாயில்லை, அமைதி அல்லது உரிமைக்காக இன அழிப்பு நடந்தாலும் பரவாயில்லை, மதச்சார்பின்மைக்காக ஊழல் இருந்தா பரவாயில்லை, மானுடத்திற்காக மாசு இருந்தால் கூட பரவாயில்லை என்று நினைக்கறிங்க. ஒருத்தன் அடி வாங்கும் போது சிரிக்கவும் முடியுது, ஒரு தலை துண்டாகும் வீடியோவையும் காண முடியுது.”

ஹய்பதடிகல் என்றேன்.
புன்னகைத்தது.

இப்ப எப்படி தான் நிறைவு செய்யப்போற என்றேன்.
படிக்கட்டுகளில் நின்றபடியே.

இன்னும் விரி அல்லது இன்னமும் இன்னமும் குறுகு.”

கேட் திறந்து மூடும் சத்தம் கேட்டது. யாளி சப்தமில்லாமல் வசந்த மண்டபத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தது. பக்கவாட்டுச் சுவரில் சிவப்பு துணியால் சுற்றப்பட்டிருந்த ஒரு எட்டுக்கையம்மன் நெட்டி முறித்தாள். ஒரு சிற்பியின் பேச்சிற்கு கேளாமல் கை கால்களை அங்கங்கு இடம் மாற்றி அசைத்துக் கொண்டிருந்த ஒரு வனப்பு மிக்க பெண்ணின் அசைவுகள் கண் முன்னே வந்து போனது.

பூனைகள் இல்லா நகரம்

6

அருண்.மோ

எங்கள் பூனை இறந்துவிட்டது. இறந்துவிட்டது என்று உங்களிடம் சொல்கிறேன், ஆனால் உண்மையில் நான் அதனை கொன்றுவிட்டேன். எங்கள் மகளும் இறந்துவிட்டாள், அவள் இறந்துவிட்டாளா, அல்லது கொல்லப்பட்டாளா என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அவள் உயிரோடும் இருக்கலாம்.

நகரில் இருந்து தனித்து விடப்பட்ட, பாழடைந்த சாலையின் வெகு தொலைவில் அமைந்த ஐம்பது வீடுகளில் எங்கள் வீடும் ஒன்று. சாலையில் இருந்து வெகு தொலைவில் இருந்ததால் இதற்கு தொலைநகரம் என்றே பெயருமிட்டிருந்தார்கள். நான் குடியிருப்பது மூன்றடுக்கு வீடு என்றுதான் நினைக்கிறேன். சரியாக நினைவில் இல்லை, நினைவில் வைத்திருக்கும் அளவிற்கு எனக்கு அது இப்போது முக்கியமுமில்லை. ஆனால் அங்குதான் நாங்கள் வசிக்கிறோம். இங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிறது. மின்சாரம் நின்றுவிட்ட சில நாட்களில் அரசு தரப்பில் இருந்து ஒருவர் வந்து எங்கள் வீட்டை வெளியில் பூட்டி சாவியை எடுத்து சென்றுவிட்டார்.

ஏன், என்ன ஆனது என்று எதுவும் எங்களுக்கு சொல்லப்படவில்லை. அரசு உத்தரவு என்று மட்டுமே சொல்லப்பட்டது. சொல்லப்போனால் பூட்டியவருக்கே ஏன் இதனைச் செய்கிறோம் என்பது தெரியுமா என்று தெரியாது. தெரியா விட்டாலும் அவர் அதை செய்துதான் ஆகவேண்டும். அவர் அரசின் கைக்கூலி. அரசு சொல்வதை செய்வதைத் தவிர அவருக்கு வேறு போக்கிடமில்லை. எங்கள் வீட்டைத் தவிர அந்த நகரில் இருந்த மற்ற வீடுகளுக்கும் பூட்டுப் போட்டார்களா என்று தெரியாது. ஆனால் எங்கள் வீடு பூட்டப்பட்டிருந்தது. வீடு பூட்டப்பட்ட முதல் நாளில் இருந்து ஒரு வாரம் வரை வீட்டில் இருந்த பொருட்களை வைத்து நாங்களே உணவு தயார் செய்து கொண்டோம்.

அடுத்த சில நாட்கள் சமைப்பதற்கு தேவையான பொருட்கள் எங்கள் வீட்டின் வாசலில் வைக்கப்பட்டு விடும். அவை எங்களுக்கு பிடித்தமானவையா, அல்லது எங்களுக்குத் தேவையானவையா என்பதை அவர்களே முடிவு செய்திருந்தார்கள். நாங்கள் தினந்தோறும் கறி சமைத்துப் பழக்கப்பட்டவர்கள், ஆனால் கறி உண்ண தடை செய்யப்பட்டிருந்தது என்றார் உணவளிக்க வந்தவர். நான் பூட்டை உடைத்து வெளியே வருவேன் என்று எச்சரித்தேன், இப்படி பூட்டை உடைத்து வெளியே வந்தவர் இறந்துவிட்டார், அங்கே பாருங்கள் என்று இரண்டு வீடுகள் தள்ளியிருந்த தனித்த ஒரு வீட்டினைக் காட்டினார். ஆம்புலன்ஸ் அங்கிருந்து சப்தம் எழுப்பாமல் சென்று கொண்டிருந்தது. என்ன நடந்தது என்று ஆர்வமாகக்  கேட்டேன், வெளியே வந்தால் இறப்பீர்கள், அவ்வளவுதான் வேறொன்றும் சொல்வதற்கில்லை என்றார். குட்டையானவர், முட்டை வடிவ கண்கள், கையில் எப்போதும் பேனாவும், குறிப்பேடும் வைத்திருப்பார். நாளையில் இருந்து நீங்கள் என்னிடம் எதுவும் பேசக்கூடாது, பேசினால் விளைவு விபரீதமாகும் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.


அடுத்த இரண்டு வாரங்கள் அவர்களே உணவை சமைத்து வைத்திருந்தார்கள். அந்த சமைக்கப்பட்ட உணவு எனக்கும், மனைவிக்கும், என் இரண்டு மகள்களுக்கும் போதுமானதாக இல்லை. என்றாலும் எங்கள் வீட்டில் இருந்த பூனைக்கும் அதில் பங்களித்தோம். எங்கள் பூனை மற்ற சாதாரண பூனைகளைக் காட்டிலும் விசித்திரமானது. அது மெய்னீ கூன் இனத்தைச் சார்ந்தது. நன்றாக கொழுத்த பூனை, பனிரெண்டு கிலோவிற்கும் மேல் அதன் எடை இருக்கலாம். எனது மூத்த மகள் எடுத்துக்கொள்ளும் அதே அளவு உணவை எங்கள் பூனையும் எடுத்துக் கொண்டது என்பது எங்களுக்கு இப்போது பெரும் கவலையளிக்கக்கூடிய விஷயமாக மாறிக் கொண்டிருந்தது.


நான்காவது வாரம், சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவின் அளவுகள் குறைந்தது. வீட்டில் தண்ணீர் இருப்பும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. என் மனைவி தன்னுடைய பங்கை என் இளைய மகளுக்கு விட்டுக் கொடுத்தாள். நான் என்னுடைய பங்கை எங்கள் பூனைக்கு விட்டுக் கொடுத்தேன். பூனை தன்னுடைய உணவை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. அடுத்த சில நாட்கள் அளவுகள் குறைந்து கொண்டே சென்றன. யாரும் யாருடைய பங்கையும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கும் உடல்நிலையில் இல்லை. சில நாட்கள் வெளியே உணவு வைக்கப்பட்டிருக்காது. அடுத்த சில நாட்கள் குறைவான அளவு உணவு வைக்கப்பட்டிருக்கும். எங்கள் ஒவ்வொருவருக்கும் உடலாற்றல் குறைந்து கொண்டே வந்தது. பேசி மகிழ்வது ஒன்று மட்டுமே ஆறுதலாக இருந்த நிலை மாறி, ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல், இருக்கிற ஆற்றலை பாதுகாத்துக் கொள்வோம் என்கிற நிலைக்கு மாறிவிட்டோம். நாற்பத்தைந்து நாட்கள் ஆகியும் பூட்டு கழற்றப்படவில்லை.

சில நாட்கள் தண்ணீர் மட்டுமே குடித்துக் கொண்டிருந்தோம். தண்ணீர் மீதே வெறுப்பு வரும் வரை தண்ணீர் பருகியிருக்கிறோம் என்பதை அறிந்து கொண்ட இரவில் தண்ணீரும் தீர்ந்து போனது. இப்போது நாங்கள் பெரும்பசியில் இருக்கிறோம். பசியில் இருக்கிறோம் என்று சொல்வதன் மூலம் உங்களுக்கு பசியை உணர்த்திவிட முடியாது. பசியை பசி ஏற்பட்டுத்தான் உணர முடியும். முதுகு எது, வயிறு எது என்று தெரியாதவண்ணம் இரண்டும் ஒட்டிப்போய் விட்டது. எங்கள் வீட்டில் பூச்சிகள் இல்லை என்பதை இந்த பெரும்பசிதான் எங்களுக்கு உணர்த்தியிருக்கிறது. பூச்சிகள் இருந்திருந்தால் பசியில் இருந்து கொஞ்சம் ஆறுதல் கிடைத்திருக்கக்கூடும்.

எங்கள் வீட்டின் சமையல் அறையில் எப்போதும் ஒளிந்திருக்கும் கரப்பான் பூச்சியோ, ஊர்ந்து செல்லும் எறும்புகளோ இப்போதெல்லாம் வருவதே இல்லை. அவைகளுக்கு வேறெங்காவது உணவு கிடைத்திருக்கக்கூடுமோ என்று நாங்கள் ஆச்சர்யப்பட்டோம். திடீரென ஒருநாள் என் இளையமகள் உடலில் இருந்து உடைகள் தானே கழன்று விழுந்தது. உடையை பிடித்துக்கொள்ள அவளிடம் சதைப்பற்று இல்லை. கைகளை வைத்து பிடித்துக்கொள்ள அவளிடம் போதுமான ஆற்றலும் இல்லை. அவள் பூனை போல் சுருண்டு படுத்திருந்தாள், எனில் பூனை எப்படி படுத்திருந்தது என்பதை நான் சொல்ல வேண்டிய தேவையில்லை. மெய்னீ கூன் வகை பூனை இப்போது சாதாரண வீட்டுப்பூனையை விட மெலிந்திருந்தது. குருவிகளில் சிட்டுக்குருவி எப்படி இருக்குமோ, அப்படி இந்த பூனை சுருங்கிப்போய் இருந்ததால், என் மகள்கள் இருவரும் இதனை சிட்டுப்பூனை என்று அழைத்தார்கள்.

ஆனால் இதனை ரசிக்கும் நிலையில் பூனையில்லை. அதன் கண்களில் ஒளியில்லை. கன்னங்களில் பெரும் குழியுண்டானது. அதன் வயிறு ஒட்டிப்போனது. அதன் வாயசைந்தது, ஆனால் சப்தம் எழவில்லை.

என் மனைவியால் தரையில் உட்கார முடியவில்லை. தரையில் மட்டுமல்ல, என் வீட்டில் பாழடைந்த சோபா ஒன்றும் இருக்கிறது, அதில் கூட அவளால் உட்கார முடியவில்லை. அந்த சோபாவில் குஷன் பகுதிகள் இற்றுப்போய் கட்டைப்பகுதிகள் மட்டுமே இருந்தது. என் மனைவியும் இப்போது அந்த சோபா போலவே இருந்தாள், அவள் எலும்புகள் அவளைக் குத்திற்று. ஏதோ வெளியில் இருந்து ஆணியோ மரக்கட்டைகளோ குத்தியதுபோல் அதனை தூக்கி தூர வீச நினைத்து கைகளைப் பார்த்துவிட்டு, அய்யய்யோ என்னோட எலும்பு என்று அதிர்ச்சியாவாள்.

அடுத்தடுத்த நாட்களில் இனி உணவு வரும் என்கிற நம்பிக்கையை இழந்திருந்தோம். எங்கள் உணவை நாங்கள் தேடியாக வேண்டும். வீட்டுக்குள் இருந்த நாட்களில் என்ன கிழமை என்ன திகதி என்பதை மறந்திருந்தது போல, சமயத்தில் எங்கள் பெயரையும் மறந்திருந்தோம். உணவு வேண்டும் கடவுளே என்று என் மனைவி இறைவனை கெஞ்சினாள். ஆம் நாம் எந்த கடவுளிடம் உணவு கேட்க வேண்டும், நாம் என்ன மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவளிடம் கேட்டேன். அவளும் அதனை மறந்திருந்தாள். எங்கள் முன்னோர்களுக்கு பரலோகத்தில் இருக்கும் பிதா உணவளித்தாக பைபிளில் சொல்லியிருந்ததால் நாங்கள் இயேசுவை ரட்சிப்பவர்களாக இருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டேன்.


பிதாவே, “வாழ்வு தரும் உணவு நான்தான். என்னிடம் வருகிறவனுக்குப் பசியே எடுக்காது, என்மேல் விசுவாசம் வைக்கிறவனுக்கு தாகமே எடுக்காது. ஆனால், நான் உங்களுக்குச் சொன்னபடி, நீங்கள் என்னைப் பார்த்தும் நம்பாமல் இருக்கிறீர்கள், என்னுடைய விருப்பத்தின்படி செய்வதற்காக அல்ல, என்னை அனுப்பியவருடைய விருப்பத்தின்படி செய்வதற்காகத்தான் பரலோகத்திலிருந்து இறங்கி வந்திருக்கிறேன். என் தந்தை எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் இழந்து போகாமல், கடைசி நாளில் அவர்கள் எல்லாரையும் நான் உயிரோடு எழுப்ப வேண்டும் என்பது என்னை அனுப்பியவருடைய விருப்பம்.

அதோடு, மகனை ஏற்றுக்கொண்டு அவர்மேல் விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவனுக்கும் முடிவில்லாத வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதும் என் தகப்பனின் விருப்பம்”, என்று யோவானில் நீங்கள் சொன்னதை நாங்கள் அப்படியே நம்பினோமே, பசியெடுக்காது என்று சொன்னீர்களே, இப்போது எங்களுக்கு பசிக்கிறது. தாகம் எடுக்காது என்று சொன்னீர்களே, இப்போது எங்களுக்கு தாகமும் எடுக்கிறது. நாங்கள் உங்கள் மேல் விசுவாசமாக இருந்தோமே, ஏன் எங்களை கைவிட்டீர் என்று இயேசுவை நோக்கி என் மூத்த மகள் இறைஞ்சிக் கொண்டிருந்தாள். ஆற்றலற்ற அந்த உடலில் இருந்த கொஞ்சம் ஆற்றலையும் அவள் அந்த ஜெபத்தில் வீணாக்கி விட்டாள். இப்போது மூர்ச்சையாகி கிடக்கிறாள்.

என் மனைவி அவளை ஆற்றுப்படுத்தும் விதமாக அருகில் உட்கார்ந்து கொண்டு, கிருஷ்ணா இதெல்லாம் உன்னுடைய லீலையா என்று மேல்நோக்கி பார்த்து பேசிக்கொண்டிருந்தாள். சாமம் கழிந்த, சுவை அற்ற, ஊசிப்போன, பழைய எச்சில் செய்யப்பட்ட, மற்றும் தூய்மை அற்றது எல்லாம் தாமச உணவு என்று கீதையில் சொன்னீர்களே, இப்போது எங்களுக்கு அந்த தாமச உணவையாவது கொடுங்கள். எங்களுக்கு பசு இறைச்சி வேண்டாம், ஒரு பூச்சியாவது கொடுங்கள் என்று கிருஷ்ணரை வேண்டிக் கொண்டிருந்தாள், என் நினைவுகள் சரியில்லை போலும், நாங்கள் இந்துக்களாகத்தான் இருந்திருக்கிறோம். ஆனால் எனக்கு சட்டென நபிகள் நாயகத்தின் ஸூரத்துல் மாயிதா வசனங்கள் நினைவுக்கு வந்தன. முஃமின்களே! நீங்கள் செய்து கொண்ட உடன்படிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுங்கள்; உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு உணவிற்காக, ஆகுமாக்கப்பட்டுள்ளன.

ஆம் இறைவன் எத்துணை பெரியவன். என் முன்னே இப்போது நாலுகால் பிராணி ஒன்று இருக்கிறது. நான் இந்துவோ, கிறித்தவனோ, முஸ்லிமோ, எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகிறேன். எனக்கு இப்போது பசிக்கிறது. அதற்கு உணவு வேண்டும். அதுவே எனக்கு பிரதானம். என்னைப்போல இந்த பூனைக்கும் நபிகள் நாயகம், உன் முன் இரண்டு கால் மனிதன் ஒருவன் இருப்பான் என்று ஓதியிருந்தால் என்ன செய்வது என்கிற அச்சம் ஒருபக்கம் இருந்தாலும், பலம் உள்ளவன் பலமற்றவனை வெல்லட்டும் என்று நினைத்துக் கொண்டேன். ஆம் எனக்கு இப்போது உணவு தேவை. அதற்கு அந்த பூனைதான் ஒரே  வழி.


மயக்கத்தில் இருந்து எழுந்த என் மூத்த மகள் மொத்த உடலையும் இழுத்துக்கொண்டே மேலேறிச் சென்றாள். பூனையைப்போல என் இளைய மகளும் அவள் பின்னே சென்றாள். என் மூத்த மகள் மேலே இருந்து குதித்து இறந்துவிட்டதாக இளையமகள் சொல்லித்தான் தெரிந்தது. நல்லவேளையாக நான் தப்பித்துக் கொண்டேன் என்று அவள் சொல்லியதை நாங்கள் இருவரும் பெரிதாக ரசிக்கவில்லை. பூனையை கொன்றால் இரண்டு பேருக்கு உணவு கிடைக்கலாம், அவளுக்கும் பங்கு கொடுக்க வேண்டியதாகி விட்டதே என்ன செய்வது என்று கலங்கிப் போயிருந்தோம். மகள் இறந்து விட்டாளா, நாங்கள் கொன்று விட்டோமா, அல்லது அரசு அவளை கொன்றதா என்பதை யோசிக்கும் அளவிற்கு எங்கள் மூளைக்கு ஆற்றல் இல்லை. எங்கள் மூளை இப்போதைக்கு எங்களுக்கிடும் ஒரே கட்டளை, பூனையைக்கொல், பசியைத்தீர்.

பூனை கண்களை மூடி வாயைத் திறந்து. அனேகமாக அது மியாவ் என்று சொல்லியிருக்கலாம். நான் என் மனைவியைப் பார்த்தேன், அவள் சேலையை கழற்றி தூர வீசியிருந்தாள், சேலையின் கனத்தை தாங்கும் சக்தியை அவளது எலும்புகள் இழந்திருந்தன. இளைய மகள் எதிரில் ஒடுங்கிப்போய் படுத்திருந்தாள். அவள் இப்போது ஒரு மனித குழந்தை போல் இல்லை. கால்களை மடக்கி அதன் மேல் படுத்திருந்த ஒரு எலும்புக்கூடு போல் இருந்தாள். இந்தப் பூனையை எப்படிக் கொல்வது என்று நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தோம். பூனையின் முன்னங்கால்கள் மிதக்கும் விலா எலும்புகளால் ஆனவை. அவற்றின் தலை நுழையும் அளவிற்கு இடமிருந்தால் போதும், அவற்றால் எத்தனை சிறிய துளையிலும் அதன் மொத்த உடலையும்  நுழைத்துவிட முடியும்.

வீட்டில் துளைகள் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தோம், துளைகள் இருந்தால்தான் அது எப்போதோ உணவைத் தேடிப்   போயிருக்குமே என்று இளையமகள் முனகினாள். அவள் மூளை அப்பேற்பட்ட பசிக்கொடுமையிலும் வேலை செய்வது கண்டு நாங்கள் திடுக்கிட்டோம். இப்போதைக்கு பெருமைப்பட எதுவுமில்லை. நாம் வாழ்வதே முக்கியமானது. அதற்கு அவள் மூளையின் சிந்திக்கும் திறன் தொந்தரவாக இருந்தால் என்ன செய்வது என்றுதான் யோசித்தேன். சரி பூனை தப்பிக்க முடியாது, ஆனால் எதிர் தாக்குதலில் ஈடுபடலாம், பூனை கழுத்து, அல்லது முதுகின் தண்டுவடத்தில் முன்னிரண்டு கோரைப்பற்களால் கடித்து நம்மை கொன்றுவிடும் அளவுக்கு ஆற்றல் பெற்றவை என்று படித்திருக்கிறேன். நம்மை வாசம் பிடிக்கும் சக்தி பூனைக்குண்டு. இப்போது நாங்கள் எங்களுக்கு எதிரில் உள்ள பூனையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


பூனை கண்களை மூடிக்கொண்டு சோபாவில் அமர்ந்திருக்கிறது. இளைய மகள் கீழே சுருண்டு கிடக்கிறாள். பூனையை தாக்கும் ஆயுதம் எதையும் பிடிக்கும் அளவிற்கு கைகளில் தெம்பு இல்லை, பூனையை விட்டு எங்கள் பார்வை அகலவில்லை. நான் மெதுவாக இடப்பக்கம் நகர முயற்சி செய்கிறேன், மனைவி அப்படியே வலப்பக்கமாக படுத்துக்கொண்டே உருண்டு சென்றாள். பூனைக்கும் எங்களுக்கும் வித்தியாசம் நாங்கள் ஐந்தடிக்கு மேல் வளர்ந்து இருக்கிறோம், பூனை இரண்டு கால்களில் நின்றால் கூட மூன்றடி தேறாது.

எங்கள் உயரம் மட்டுமே பூனையிடம் இருந்து எங்களை வித்தியாசப்படுத்திக் காட்டியது. உயரம் இல்லையென்றால் பூனை இந்நேரம் எங்களை அடித்துக்கொன்று தின்று செரித்திருக்கும். நான் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கையில், பூனை கண்களைத் திறந்தது. அது கண்களை பெரிதாக்கி சப்தமிட்டது. இப்போது அந்த மியாவ் ஒலி என் காதுகளுக்கு கேட்டுவிட்டது. அது எங்களை விட கோரப்பசியில் இருக்கிறது. நான் நகராமல் அதே இடத்தில் குத்திட்டு நின்றேன். மனைவியின் கண்கள் சொருகியது. பூனையின் பற்களை போல என் விரல்களின் எலும்புகள் நீண்டிருந்தது. பூனை தாவி வந்தால் அதனை விரல்களால் குத்திக் கொன்றுவிட வேண்டும் என்று நினைத்து விரல்களை ஆயத்தப்படுத்திக் கொண்டேன். பசி தீர எதையும் செய்வேன். பூனையும் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்கிற சிறு ஜாக்கிரதை உணர்வு அப்போதும் மூளைக்குள் குடிகொண்டிருந்தது.

நாக்கை கடித்துத் தின்னலாம் போல் இருந்தது, நாக்கு கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே சென்று கொண்டிருந்தது. ஒரு வேளை, உடல் தன்னை உயிர்த்திருக்கச் செய்ய, தன் உறுப்புகளைத் தின்றுவிடுமோ என்றுகூட அச்சப்பட்டேன். பூனை சோபாவில் இருந்து எகிறி குதித்தது. லேசாக நகரத் தொடங்கியது. நான் பூனை நகரும் திசைக்கு எதிர் திசையில் மெதுவாக நகர்ந்தேன். இப்போது பூனையின் கண்கள் என் மீதிருந்தது. அது கண்களை மூடவில்லை. அதன் மீசைகள் மீது மெல்லிய சூரியஒளி பட்டு, நெருப்பில் தீட்டப்பட்ட இரும்பு போல் காட்சியளித்தது. பழுப்பேறிய கண்கள், வெறியேறிய பார்வை என பூனை என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தது. எனக்குள் எப்போது பயம் வந்தது என்று தெரியவில்லை. ஆனால் பூனை ஒரு மல்யுத்த வீரன் போல என்னைச் சுற்றி வளைத்துக் கொண்டது. இப்போதுதான் என்னுடைய உயரம் எனக்குப் பிரச்சினையாக இருந்தது. பூனை அதன் உயரத்திற்கு தாவி என்னைக் கவ்விவிடும், ஆனால் தாவிப்பிடிக்கும் அளவிற்கு எனக்கு பயிற்சி இல்லை. என் உயரம் அதை அனுமதிக்கவும் செய்யாது.


மெதுவாக நகர்ந்த பூனை அதே இடத்தில் நின்றது. முன்பற்களைக் காட்டி என்னை மேலும் பயமுறுத்தியது. எனக்கும் அதற்கும் ஆறடி தொலைவுதான் இருக்கும். இடையில் என் இளைய மகள் படுத்திருந்தாள். ஒருவேளை இந்தப் பூனையை கொன்று தின்றால் அந்த ஆற்றலை வைத்துக்கொண்டு மேலேறிச் சென்று தற்கொலை செய்து கொள்வதுதான் என் எண்ணம், இந்தப் பூனையை விட்டால், இனி வேறொரு பூனைக்கு நான் எங்கே போவேன், பசியால் அந்த வலியால் சாவதை விட, கறியைத் தின்று, சந்தோசமாக மடிவோம் என்றுதான் மனதுக்குள் நினைத்திருந்தேன். இனி திட்டமிடவோ, பதுங்கவோ நேரமில்லை, உடலில் வலுவுமில்லை. தாமதப்படுத்தும் ஒவ்வொரு நொடியும், பூனை என்னை நோக்கி முன்னேறி வருகிறது. எனக்காவது தற்கொலை செய்துகொள்ளத் தெரியும், பூனையைத் தின்று ஆற்றலை வைத்துக்கொண்டு மேலேறிச் சென்று நான் தற்கொலை செய்துகொள்வேன்.

 ஆனால் பூனைக்கு தற்கொலை செய்துகொள்ளத் தெரியாதே. அது என்னைத் தின்று, இன்னும் எத்துணை நாள் ஜீவித்திருக்கும். உணவில்லாமல் அது வாழ்வதை விட, எனக்கு உணவாவதே மேல் என்று எண்ணிக்கொண்டு, மொத்த பலத்தையும் திரட்டி அதன் மேல் பாய்ந்தேன். குலை நடுங்கும் சப்தம் ஒன்று கேட்டது. அந்தக் குரல் பூனையின் குரல் அல்ல, அது என் இளைய மகளின் குரல். பூனை அவளின் கழுத்தை முன்னிரண்டு பற்களால் கடித்துக் கொண்டிருந்தது.

இதோ இதுதான் என் மொத்த பலம் எனப் பாய்ந்து அதன் வாயை இரண்டு கைகளால் பிடித்து முடிந்தவரை இழுத்தேன். அதன் பற்கள் என் விரல் எலும்புகள் மேல் பட்டு உயிர்போகும் வலியை ஏற்படுத்தியது. பிடியை விடாமல் அதன் குரல்வளையைக் கடித்து தலையைப் பிய்த்து எடுத்தேன்.

ரத்தம் பீறிட்டு வெளி வந்தது. மகள் இறந்து கிடந்தாள். மனைவி பூனை இறந்ததைக்கண்டு அதன் கறியைச் சாப்பிட அசைய முற்பட்டாள், நெஞ்சில் இருந்து வாய்க்கு ஒரு குரல் எழும்பி வருமுன்னே தொப்பென விழுந்தாள். இப்போது பூனைக்கறி எனக்கு மட்டுமே. அதைக் கறி என்று சொல்லமுடியாது. அதன் எலும்புகளில் ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்சமான சதைகளை பிய்த்து எடுத்துத் தின்றேன்.


மேலேறிச் செல்லும் ஆற்றல் கிடைத்தது. தற்கொலை செய்துகொள்ள ஒவ்வொரு படியாகக் கடந்து மேலேறி சென்றேன், அங்கே எனக்கு முன்பாக பத்திருபது பூனைகள் வரிசையில் காத்துக் கொண்டிருந்தன.

***

அருண் மோ

மாற்று திரைப்படங்கள் மற்றும் திரைத்துறை சார்ந்த முன்னெடுப்புகளை தமிழ் ஸ்டுடியோ என்கிற பெயரிலும், பேசாமொழி என்கிற துறை சார்ந்த இதழையும் நடத்துகிறார்.  அநீதிக் கதைகள் என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்திருக்கிறது. தொடர்புக்கு – thamizhstudio@gmail.com

கவிதைக்காரன் டைரியிலிருந்து 02

0
Spitzweig-Scarecrow -Landscape
  • கவிதைக்காரன் இளங்கோ
நவீனத்துக்குள் சுழலும் காட்சிப் பிழை..

*

அனைத்து உயிரினங்களும் இயற்கை நடைமுறையின் ஒரு பகுதியாகப் பரிணாம வளர்ச்சியில் உருவானவை.                                                                    சார்லஸ் டார்வின்

சென்ற கட்டுரையில் மூன்று பிரதானக் கேள்விகளோடு தொடங்கி இரண்டு கேள்விகளுக்கான பதில்களோடு ஒரு தொலைவு வரை பயணித்து பகிர்ந்துக் கொண்டோம்.

இந்தக் கட்டுரை விடுபட்ட மூன்றாம் கேள்விக்கான விடைத் தேடலோடு தொடர்கிறது..

3.நவீனக் கவிதையைப் பொருத்தவரை ஒரு Normalகோணத்திலிருந்து மேலெழும்பி நாம் பார்க்கும் கோணம், சரியான கோணம் தான் என்ற முடிவுக்கு எப்படி வருவது?

பொதுவாக நம் பார்வையில் படுவதெல்லாம் காட்சியே. அந்தந்தக் காட்சி ரூபங்கள் நமக்கு உணர்த்துவது என்ன? அல்லது அவைகளைப் புரிந்துக் கொள்வது எப்படி – இதைத் தான் கற்றல் வழி நமக்கு அறிவாகப் புகுத்தப்பட்டு, அதன் ஆழ அகல நீள உயரங்களைப் பொறுத்து தனித்தத் திறனாக வளரவோ மதிக்கவோ படுகிறது.

இது ஓர் அடிப்படை க்ரியா சக்தி என்று வகுத்துக் கொள்ளலாம். அதன் பயன்பாடு அவ்வளவுதானா என்றால் இல்லை.

வாழ்வெனும் தொடர் நகர்தலுக்கான ஓர் அன்றாடத் தேவை அது.

அவ்வகைத் தேவைகளை நோக்கி மிதமான வேகம், வேகம், அதிவேகம் என்று துரிதப்படுத்திக் கொள்வதற்கான காரணங்களைப் பேசி, புரிந்து, சுவீகரித்து, நுகர்ந்து பழகிவிட்ட – வரையறுக்கப்பட்ட அமைப்பின் பிரதிநிதிகள் நாம். இந்தமனிதப் பிறவி.

நம் மீது கண்காணிப்பு இருக்கிறது. நாம் பழகுகிறோம் அல்லது பழக்கப்படுத்தப்படுகிறோம். அல்லது இரண்டுமே.

ஒவ்வொன்றின் அசைவும் தமக்கே உரிய அர்த்தங்களை தன் இயல்பில் வைத்திருக்கலாம். ஆனால் அதனை நாம் என்னவாகப் புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதை. அவற்றை என்னவாக அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதை யார் முடிவு செய்வது? அல்லது எப்போது முடிவு செய்வது? இதெல்லாம் அதனுள் கிளைவிட்டுப் பரவும் உபகேள்விகள்.

இதை இத்தனை விலாவாரியாகப் பேச வேண்டுமா.  தர்க்கத்துக்கான விஷயமாக எடுத்துச் செல்ல வேண்டுமா என்றால்..

ஆம். பேசித்தான் ஆக வேண்டும்.

அது இக்கட்டுரையின் பின்வரவிருக்கும் ஏதோ ஒரு பகுதியின் ரகசியத்தையோ அல்லது அதற்கு நிகரான ஒரு புதிரையோ திறக்க உதவும்.

சரி..

பொதுவில், ஒரு மனிதனாகவே அப்படிப் பார்வையில் படும் காட்சிகளின் வழியே நம்மை வந்து சேரும் அர்த்தங்களைப் பற்றின முடிவுக்கு வந்தாக வேண்டும்.

நாகரீகம் என்ற சட்டகத்தைப் பொருத்தவரை அதில் ஒழுக்கக் குறியீடுகள் சேர்ந்துக்கொள்ளும்.

கலாச்சாரம் என்ற வட்டத்தைப் பொருத்தவரை அதில் தொன்மம் அல்லது  புராணக்கதை (Myth)சார்ந்த வகைமைகளும் குறியீடுகளும் சேர்ந்துக் கொள்ளும்.

இவை எல்லாம் நம் பொதுப் பார்வையில் படும் காட்சிகளின் வழி நம்மை வந்து சேரும் அர்த்தங்களின் பாதை. அது ஒரு நெடிய பயணத்தின் தொடர்ச்சி. சிலப் பல அடிப்படைகளைக் கொண்டவை. ஆனால் அவை அதன் மீது வளர்ந்தபடியே இருக்கும் மாறுதலுக்குரியவை.

அந்த வளர்தலும், அதன் மாறுதலுமே ஒருவன் கவனித்து அடைய வேண்டிய அடையாளமாகவோ, கவனிக்காமல் போவதால் நேரும் பின்னடைவாகவோ தேங்கும்.

நடைமுறை வாழ்வின் சக மனிதர்களோடான அன்றாட உரையாடல்கள்.

அவர்களின் அன்றாட அசைவுகள். அன்றாட முகபாவானைகள். இவைகளையெல்லாம் பழகிவிட்ட ஒரு சொற்றொடர் போல நாம் கடந்துவிடுகிற நிலைக்கு எளிதாகத் தள்ளப்பட்டுவிட்டோம்.

The regular day to day activities and the formal reactions.

இது நமக்கு நடைமுறை வாழ்வின் சௌகரியங்களாகிப் போய் விட்டதால்..

அதனுள் இயங்கும் நுணுக்கங்களை ஆராயவோ, அவதானிக்கவோ அவசியம் இல்லை என்பதைப் போல அதன் அவசியம் குறித்த தேவையைக் கூட உணராமல் எளிதாகக் கடந்தும் பழகிவிட்டோம்.

ஆனால் –

அதே அன்றாட உரையாடல்களோ, அசைவுகளோ, முகபாவனைகளோ சட்டென்று முக்கியத்துவம் பெறுவதற்கான ஸ்திரமான காரணங்கள் உருவாகும் சூழ்நிலை ஒன்றில், அவை அனைத்து நடைமுறை செயல்களையும் ஸ்தம்பிக்கச் செய்து விடும். கண நேரத்துக்கு மட்டுமாவது நிறுத்தி வைக்கும்.

அப்போது அனைத்துக் கவனமும் ஒற்றைப் புள்ளியில் குவியும் தன்மைக்கு நாம் கட்டாயப்படுத்தப்படுகிறோம். அந்த உந்துதல் திணற வைக்கும்.

அப்படிச் சூழலில் மனிதன் இரண்டு வகையானவனாகப் பிரிகிறான்.

அதுவரை அனைத்தையும் உற்று நோக்கிய பயிற்சியுடையவன்.

அவ்வகை பயிற்சி இல்லாதவன்.

பயிற்சி உள்ளவன் சம்பவத்தை, சூழலைக் கையாள்கிறான்.பயிற்சி இல்லாதவனோ சம்பவத்தையும் சூழலைக் கையாள்பவனையும் வேடிக்கைப் பார்க்கிறான்.

ஒரு படைப்பாளிக்கும் பார்வையாளனுக்கும்.

ஓர் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும்

ஒரு கலைஞனுக்கும் கலை ரசனையாளனுக்கும் உள்ள வித்தியாசமும் அதே தான்.

இந்த இருமுனை சுவாரஸ்யத்தின் வித்தியாசத்தை, நாம்முதல் கட்டுரையிலேயே ஓரளவு பார்த்துவிட்டோம்.

எனவே -இங்கு தம் பார்வையை ஒரு சாதாரணக் கோணத்திலிருந்து (Normal Perspective)மாறுபட்ட கோணத்துக்கு செலுத்த வேண்டிய அவசியத்தை ஒரு நவீனக் கவிதை கோருகிறதா என்றால்..

ஆமாம், அது தேவையாகவே இருக்கிறது.

அதற்கான நுணுக்க அவதானிப்பே அதை அடைவதற்கான கலையின் வாசல்.

இங்கே கட்டுரையின் இந்தப்பகுதியில் ஒரு தவறான புரிதல் நிகழ்ந்துவிடக்கூடும்.

சாதாரணத்துக்கு(Normal) எதிர்ப்பதம் அசாதாரணம்(Abnormal) என்று ஒரு சிந்தனைத் தாவல் முயற்சி வேண்டாம்.

Normal பார்வைக் கோணத்தை இன்னும் கொஞ்சம் கூடுதலாக நுணுக்கமாக செலுத்த முயற்சிப்பது. அதுவே இதுவரை கட்டுரைக்குள் சொல்லிக்கொண்டு வருவதில் அவசியப்படுகிற நம் முதல் தேவை.

[ நவீனக் கவிதைகளுக்கான அசாதராணநோக்குப் பார்வையின்(Abnormal view) தீவிரத்தையும் தேவையையும் நாம் சென்று அடைய கட்டுரையின் வழியே இன்னும் முன்னேறிப் போக வேண்டியிருக்கிறது]

அதனால் – எப்படி ஒரு நுணுக்கப் பார்வைக்கானவாய்ப்பு (Micro View) ,நம்முடைய நடைமுறை வாழ்வில் மேலோட்டமாகவும், தட்டையாகவும்–எடுபடாதஒரு மேல்பூச்சுப் போல படர்ந்துவிடுகிறது என்பதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்லிப் போக முடியும்.

இப்படி நம் அன்றாட வாழ்வின், வாழும் சூழலுக்குள் நாம் கடக்க நேரும் கணங்களை சற்றே கூர்ந்து கவனித்தால் கூட போதுமானது. இதெல்லாம் ஓரளவு பிடிபட்டுவிடும் என்றும் நம்பலாம்.

அப்படிக் கூர்ந்து கவனிப்பதை எதன் அடிப்படையில் தொடங்குவது என்ற சந்தேகத்தை சமாளிக்க

ஒரு வசதிக்காக அவைகளைப் பிரித்துப் பார்த்துவிடலாம்.

அதற்கான மூன்று அடிப்படைகள்.

1.இடம்

2.பொருள்

3.நிலை

1.இடம்- நாம் ஓரிடத்தில் வாழ்கிறோம். அதை ஊர் என்கிறோம். ஊருக்குள் எங்கே என்றால், ஒரு பகுதியை குறிப்பிடுகிறோம். பகுதிக்குள் ஒரு தெருவைக் குறிப்பிடுகிறோம். தெருவில் ஒரு கட்டிடத்தை குறிப்பிடுகிறோம். கட்டிடத்துக்குள் ஒரு வீட்டைக் குறிப்பிடுகிறோம். வீட்டுக்குள்ளும் சிலருக்கு, ஒரு அறையைக் குறிப்பிட வேண்டி இருக்கும்.

இப்படியாக ஒரு மனிதன் தங்குவதற்கான இடமாக – நாம் எடுத்துக் கொள்ளும் இடம்என்ற கோட்பாடு (Theory)ஒவ்வோர் அடுக்காகக் குறுகுகிறது அல்லவா..

இந்த அடுக்குகளைக் கவனத்துக்குக் கொண்டுவர முடிவதே ஒரு கூர்மை தான்.

ஆனால் அது மேலோட்டமான கூர்மை.

இருக்கும் இடத்தை அறிதல். அறிந்ததிலிருந்து புரிதல். அதன் மேலோட்டம் அவ்வளவுதான்.

இன்னும் சற்று அதனுள் கூர்மையாக பயணிக்க வேண்டுமென்ற விருப்பம் இருந்தால்..

ஒவ்வோர் இடத்துக்கும் ஒரு வண்ணம் உண்டு. ஒவ்வொரு வண்ணத்துக்கும் ஒரு சாயல் உண்டு. ஒவ்வொரு சாயலுக்கும் ஒரு தன்மை உண்டு. ஒவ்வொரு தன்மைக்குள்ளும் ஒரு வழக்கம் உண்டு. ஒவ்வொரு வழக்கமும் பழக்கமாய் மாறுவதற்கே மனிதன் பயன்படுகிறான்.

இதனை ஒவ்வொன்றின் முடிவு பகுதியிலிருந்தும் திரும்புமுகமாக (அ) Reverseஆக (அ) உல்ட்டாவாக, சிந்தனையை அதன் தொடக்கம் நோக்கி செலுத்த முடிந்தால்..

அது இயங்கும் விதங்களையும் அதன் ஆற்றல் பங்கையும் உணரவும் முடியும். அவை ஒரு மனிதனுக்குள் எப்படியெல்லாம் தாக்கத்தை உண்டு பண்ணுகிறது என்பதையும் ஓரளவு எட்டிப்பிடித்துவிட முடியும்.

இது வாய்ப்புள்ள ஒரு பயிற்சி தான். இருக்கும் இடத்தை அறிய முயலுதல்.

அதாவது ஓர் இடம் நமக்குள் என்னவாக இருக்கிறது. இருக்கும் இடத்தில் நாம் என்னவாக இருக்கிறோம் என்கிற ஓர் இனிய சுய தர்க்கத்தை (Self- Disputation)தொடங்கி வைக்கும்.

ஏனென்றால் –

இடம் என்பது ஒவ்வொரு தனித்த மனிதனின் கூட்டு வினை. தனித்த மனிதன் கூட்டு மனிதனாகக் குவியும்போது..

என்னவெல்லாம் செய்திருக்கிறான்.

என்னவெல்லாம் செய்கிறான்.

இன்னும் என்னவெல்லாம் செய்துவிடுவான் என்கிற முக்காலத்தையும் கூட ஒரு காகிதம் போல மடித்துவிட முடியும்.

அனுமானித்தல் (Something like a Prediction).

ஓர் இடம் என்பது சகமனிதர்களாலும் நிரம்பி உள்ளது.

கவிஞனுக்கு அல்லது கவிப்பார்வைக் கொண்ட வாசகனுக்கு அது ஒரு சுவாரசிய ஊடுபார்வையைக் கட்டி எழுப்பவும் செய்யும்.

இதை காரல் மார்க்ஸ் வரலாற்று பொருள்முதல்வாதம் (Historical Materialism)என்பார்.. அந்த வகையில் ஓர் இடம் பொருள்முதல்வாதமாக மாறும் விதம் ஒரு ரசவாதம் தான்.சந்தேகமே வேண்டாம்.

அடுத்து இரண்டாம் அடிப்படை

2.பொருள் – பொருட்களால் நிறைந்த உலகு நம்முடையது. நம் சுய பயன்பாட்டுக்கோ அல்லது பொது பயன்பாட்டுக்கோ பொருட்களை உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம். அதற்காக, குறுகிய அல்லது நீண்டகாலப் பயன்பாட்டுக்கான பொருட்களை சேமித்தும் வைக்கிறோம். இப்படியாக பொருட்களால் ஒவ்வோர் இடமும் நிறைகிறது. அதற்குள் நாம் இருக்கிறோம். அல்லது நம்மைச் சுற்றி அவை இருக்கின்றன.

அந்தந்த பொருட்களை, அதன் இருப்பை நாம் எத்துனை மாற்றங்களோடு அவதானிக்கிறோம் என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டால்..

அது மிக மிகக் குறைவு. பொருட்களுக்கும் நமக்கும் இருக்கும் சம்பந்தத்தை / ஒட்டுதலை நம் மேலோட்ட பயன்பாட்டு உணர்வு தாண்டி நாம் யோசிக்க மறுக்கிறோம். ஆனால் அவையோ தொடர்ந்து ஒவ்வொரு விதமாகவும் நம்மோடு தொடர்பில்(Communicated)இருக்கிறது.

நம்மோடு அசையும் பொருட்கள். அசையாப் பொருட்கள் என்று இரண்டு வகை உண்டல்லவா.

அசையாப் பொருட்களின் இருப்பில், நாட்பட உண்டாகும் மாற்றத்தை நாம் கவனிப்பதில்லை.

அசையும் பொருட்களின் பயன்பாட்டில் இருக்கும் நாட்பட்ட / நிமிடத்துக்குட்பட்ட மாற்றங்களையும் நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

ஓர் அனிச்சை செயல் போல அவை நம் கையாளுதலில் சிக்கிக் கிடக்கின்றன. வைத்த இடம் தெரியாமலும் பொருட்கள் சிதறக்கூடும், தொலையக் கூடும்.

முக்கியத்துவம் பொறுத்துத்தான் அவை நினைவுக்கூரப்படுகிறது. அல்லது ஒரு தேடுதலுக்கு உட்படுகிறது.

அல்லாமல் போனால் அவை வெறுமனே நம்மைச் சுற்றி இறைந்து கிடக்கின்றன.அல்லது அலங்காரத்துக்காக அடுக்கி வைக்கப்படுகின்றன.

இரண்டுமே கவன ஈர்ப்பற்ற செயலால், சத்தற்ற ஓர் இருப்பு நிலையை அடைந்துவிடுகிறது.

ஒரு நவீனத்துவம் வேண்டுகிற படைப்பு மனத்திற்கு.. அவ்வகைப் பொருட்களின் தன்மையும் தன்னை சூழ்ந்த அவைகளின் இருப்பும் தன் கூர்மையான சிந்தனைக்குத் தேவையான கச்சாப்பொருளாக மாறும் வாய்ப்பு உண்டு.

பெரும்பாலும் அதை உணரமுடியாமல் போவதால்..

கவிஞன் தன்னுடைய சாதாரண கோணத்துக்கான நியாயத்தை அடைவதில் கூட அதன் அடிப்படைக் கட்டமைப்பிலேயே குழம்புகிறான் அல்லது தவிக்கிறான்.

அதனால் நவீனக் கவிதைக்குள் அல்லது நவீனக் கவிதைக்கான சிந்தனைக்குள் நுழைவதற்கு பொருட்களைக் கூர்ந்துக் கவனித்தலின் அவசியம், ஓர் அடிப்படைத் தொடக்கமாக உருமாறுகிறது.

அதற்கான தேவையையும் படைப்பாளியிடம் அது கோருகிறது.

அடுத்த அடிப்படை..

3.நிலை – நிலை என்பதை நிலைப்பாடு என்ற புரிதலில் பேசத்தொடங்குவோம். மிக எளிமையாக. ஒரு மனிதனின் நிலைப்பாடு என்பது அக நிலைப்பாடு, புற நிலைப்பாடு என்று இரண்டாக உடைகிறது.

இதில் புற நிலைப்பாடு என்பது இருக்கும் இருப்பும், அதில் புரியும் செயலும், செயலால் உண்டாகும் விளைவும் தான் அதன் பிரதான மூன்றுப் புள்ளிகள்.

புற நிலைப்பாட்டின் இருப்பு, செயல், விளைவு – எல்லாமே ரூப வடிவங்கள். காணக் கூடியவை. காட்சி வடிவத்தைக் கொண்டவை. அதனால் அங்கு இடமும், பொருளும் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது.

இது கணித சமன்பாட்டைப் போன்ற ஒரு வடிவத்தைக் கொண்டிருக்கிறது.

இடம் + பொருள் = நிலை (புற நிலைப்பாடு).

அதே நேரத்தில் – அக நிலைப்பாடோ அரூபமானது. அதற்கொரு வடிவம் கொண்டு வர சம்பவம் தேவையாகிறது.

ஆனால் ஏன்? எதற்கு? எப்படி? எங்கு?– என்ற ஆதாரக் கேள்விகள் அல்லாமல் அதை ஆராய்வதோ, அரூபம் சார்ந்த பிற கலைவடிவத்தை முயல்வதோ நவீனத்துவத்துக்கான் படைப்பு தரிசனத்தை துல்லியமாய் தராமல் மனம் தேங்கிவிடும்.

இப்படி அகத்தையும் புறத்தையும் எதிரொலிக்கும் நிலையை ஒரு மனிதன் கூர்ந்து கவனிக்கத் தொடங்கிவிடும்போது சக மனிதர்கள், சக பொருட்கள் – இவர்களின் / இவைகளின் நுணுக்க வேறுபாடுகள் / அசைவுகள் / மாற்றங்கள்  மெல்ல மெல்ல கவனத்துக்கு புலன்பட்டு, அறிவாக அர்த்தமாக மூளைக்குள் சேர்ந்துவிடும்.

ஆகையால் – இடம் பொருள் மற்றும் நிலை – என்ற இம்மூன்றின் அடிப்படைத் தொடர்ச்சியல்..

நாம் நம் நுணுக்கப் பார்வைக்கான ஒரு தொடக்கத்தைப் புரிந்துக்கொள்வதோடு..கவிஞனுக்கான அர்த்த சாத்தியப்பாடுகளும் கணிசமாக உயருவதைக் கண்டுணர முடியும்.

சரி..

நாம் கையில் எடுத்துக்கொண்ட மூன்றாம் கேள்வியை மீண்டுமொருமுறை நினைவுப் படுத்திக்கொண்டு மேற்கொண்டு தொடரலாம்..

3.நவீனக் கவிதையைப் பொருத்தவரை ஒரு Normal கோணத்திலிருந்து மேலெழும்பி நாம் பார்க்கும் கோணம், சரியான கோணம் தான் என்ற முடிவுக்கு எப்படி வருவது?

சரியான கோணம், தவறான கோணம் என்று ஒன்று கிடையாது. அதனால் அப்படி ஒரு குறுகிய முடிவுக்கு வரவேண்டிய அவசியம் ஒரு படைப்பாளிக்கும் அந்தப் படைப்பை வாசிக்க நேரும் வாசகனுக்கும் தேவையில்லை.

ஏனென்றால் இதுவரை கட்டுரை நெடுக நாம் பார்த்துப் புரிந்துக்கொண்ட விஷயங்களின் அடிப்படையில் ஒரு தாற்காலிக தீர்மானத்துக்கு வந்துவிட முடியும்.

அது –

நடைமுறை வாழ்வின் Normal கோணம் எனப்படும் சாதாரணப் பார்வையின் ஆழத்துக்கே நாம் இன்னும் போய்விடவில்லை என்பது.

அப்படியிருக்க –

நவீனக் கவிதைக்குள் ஒரு Normalகோணத்திலிருந்து மேலெழும்பி, நாம் பார்க்கும் கோணம், சரியான கோணம் தான் என்ற முடிவுக்கு எப்படி வர முடியும்?

முடியாது.

சரி.. அப்படியென்றால் அதற்கு என்னத்தான் பண்ணுவது.

நடைமுறை வாழ்வின் இடம் /பொருள் /நிலைகளைப் புரிந்துக் கொள்வதில் தொடங்கி அதை ஒரு நவீனக் கவிதை வெளிக்குள் பொருத்திப் பார்க்கப் பழகினால் அதுவே பெரிய விஷயம்.

நவீனக் கவிதைக்கான தொடர் வாசகன், ஒரு தேர்ந்த வாசகனாக மாற்றமுற..எந்தவொரு கவிதைக்குள் இயங்கும் சிறு சிறு அசைவுகள் / மாற்றங்களை அவன் தன் அவதானிப்பின் வழியே தரிசிக்க முடியும்.

சென்ற கட்டுரையில் நாம் விரிவாகப் பார்த்த ஏன்? எப்படி? எதற்கு? எங்கே?என்ற நான்கு ஆதாரக் கேள்விகள் இந்த இடம் /பொருள்/ நிலை என்ற மூன்று அடிப்படைகளோடு கலந்து நம் ரசனைக்குள் செயல்படுவதையும் உணர முடியும்.

இவை இணைந்து நம்மை உந்தும் கூர்மை உணர்ச்சியின் வெளிப்பாடு அபரிமிதமானது.

இயற்கையின் பிரம்மாண்ட வாசலில் நாம் நின்றுக் கொண்டிருக்கிறோம் என்பதையும் உணர முடியும்.

அது அத்தனை ஆச்சரியங்களை / மர்மங்களை / புதிர்களை தன்னகத்தே வைத்துக்கொண்டு அமைதியாகக் காத்துக்கொண்டிருக்கிறது.

கலைஞன் மட்டுமே அதன் வாசலை அடைவதோடு..உள்ளே நுழைந்து பிரமிப்புக் கடந்து அவற்றைத் தரிசிக்கவும் துணிகிறான்.

அதன் பிறகு அவன் எதிர்கொள்ளும், கடந்து போகும் அல்லது பேச்சற்று நின்று விடும் அனைத்தும் அவனுக்கு ஒரு பெரும்வியப்பு மட்டுமே.

படைப்பின் ஊற்றுக்கண் உணரப்பட்ட தருணத்தில் அது ஒரு நதியென இயற்கைக்குள் பாய்ந்தோடுவதையும் அவன் கண்டுக்கொள்கிறான்.

மகாகவி பாரதிக்கு, தாகூருக்கு, கலீல் ஜிப்ரானுக்கு இன்னும் எண்ணற்ற கவிஞர்களுக்கு அது தான் நடந்திருக்கும்.

நமக்கும் நடக்கும்.

அவரவர் கைமணல் அவரவர்க்கு காத்திருக்கவே செய்கிறது. நம்புங்கள்.

நின்று நிதானித்து புரிந்து உணர்ந்து குனிந்து எடுப்பதில் தான் நம் அனைவருக்கும் சிரமம்.

ஏனென்றால் வேகமான ஒரு நடைமுறை வாழ்வில் ஓடிக்கொண்டிருப்பதை ஓர் எளிய காரணமாக நாமெல்லோரும் சுமந்து அலைகிறோம்.

அவற்றை மீறி – அதற்கு அப்பாற்பட்ட மனங்களுக்கான இடமாக கலை உலகம் இருக்கிறது.

அவை சார்ந்து எழும் அறிதலும் புரிதலும், அவ்வுலகின் உட்கிளைப் பாதைகள்.

இந்தக் கட்டுரையின் நோக்கமும் அந்த உட்கிளைப் பாதைத்தான்.

அதன் தொடர்ச்சியாக நாம் வந்து நிற்கிற முக்கியமான புள்ளி..

தோற்றம் (The Perspective).

இதன் அதிமுக்கிய பங்கு, நவீனக் கவிதைக்குள் அடர்ந்து கெட்டித்து உறைந்து கிடக்கிறது.

நூற்றாண்டுகளாய் நிலத்தில் புதைந்துக் கிடந்து கல்லாகிவிடும் ஒரு பண்டையப் பொருள் (Fossil) போல.

சரி..

நாம் வாழும் இடமான ஒரு குறுகிய இடத்தை கூர்ந்து கவனிப்பது அல்லது உள்வாங்குவது அல்லது கிரகிப்பது என்பது என்றைக்குமே ஒரு புதிய தோற்றத்தை நம் பார்வைக்குக் கொண்டு வரும்.

பொதுவாக..

ஒரு சதுர அறைக்குள் நாம் இருக்கிறோம் அல்லது வசிக்கிறோம்.

யோசித்துப் பார்த்தால் அன்றாட வாழ்வில் நாம் ஏதோ ஒரு அறைக்குள் நுழைவதும் வெளியேறுவதுமாகத் தானே இருக்கிறோம்.

( அது வாழ்விடமா / பணியிடமோ )

எந்த ஒரு அறையும் நான்கு பக்கச் சுவர்கள் கொண்டிருக்கிறது.

அதில் –

எந்த சதுரத்தில் கதவு இருக்கிறது.?

எந்த எந்த சதுரத்தில் ஜன்னல் இருக்கின்றது?

கதவு இருக்கும் திசை எது?

ஜன்னல் இருக்கும் திசை எது?

கிழக்கா மேற்கா வடக்கா தெற்கா ?- இது மேலோட்ட அவதானிப்பு.

( இன்னும் கொஞ்சம் ஆழமாகப் போக விரும்பினால்… அவை இருக்கும் திசை தென்கிழக்கா? வடகிழக்கா? தென்மேற்கா? வடமேற்கா? என்பதுவரை யோசிக்க முடியும் ) – இது நுணுக்க அவதானிப்புக்கான நுட்பக் கேள்விகள்.

ஏனென்றால் –

ஓர்அறைக்குள்ளிருந்து வெளியே போகும்போது, ஒன்று மனிதனின் உடல் உயிரோடு வெளியே போகிறது. அதற்கு பெயர் உண்டு. அடையாளம் உண்டு.

அல்லது

அந்த உடல் உயிரற்று வெளியே போகிறது. அதற்கு பெயர் அடையாளம் எல்லாம் ஒழிக்கப்பட்டு.. பிணமாகிவிடுகிறது.

பிணத்துக்கு அறை திரும்புதல் இல்லை.

பெயர் தாங்கிய உயிருள்ள உடலுக்கு / மனிதனுக்கு, அறை திரும்புதல் உண்டு.

இந்த வித்தியாசத்தை உயிர் இருக்கும்போது என்று எடுத்துக்கொண்டால் அது ரூபம்.

உயிரற்று என்று எடுத்துக்கொண்டால் ரூபம் &அரூபம் – இரண்டுமே.

ரூபம் (Image).அரூபம் (Non-Image state).

ஆக – சிறிய வித்தியாசத்தில் பெரிய அர்த்த மாற்றத்தை அடைந்துவிடுகிறோம்.

ஓர் அறையை தனித்து அவதானிக்கும்போதுமே கூட.. அதன் உட்கட்டமைப்பை நாம் வெறுமனே கடப்பதும் இருப்பதுமாக பயன்படுத்திப் பழகிவிட்டோம்.

அந்த மேலோட்டம் என்பதே நம் அளவில் மிகச் சாதாரணமானதாக மட்டுமே இருக்கிறது.

எந்த மனிதனுக்கும் திசையை அறிந்துக் கொள்வது தொடங்கி அடிப்படை இயற்கையைப் புரிந்து வைத்தல் அவசியம். விலங்குகள், பறவைகள், நம் மூதாதையர்கள் அந்தத் தெளிவைக் கொண்டிருந்தார்கள்.

நம் அறைக்குள்ளிருந்து நாம் வெளியே போகாமலேயே, நம் மனம் மட்டும் வெளியே சஞ்சரிப்பதற்கு கூட, நாம் இருக்கும் இடத்தின் திசை முதலில் புரிந்திருக்க வேண்டும்.

அப்படியோர் அனுபவத் தொடர்ச்சியில் அல்லது கூர்ந்த அவதானிப்பில்..

அத்திசையில் விழும் வெயில் கூடத் தெளிவாகப் புரியும்..

அவ்வெயில் எத்திசையில் நிழலைச் சாய்க்கும் என்ற மனத்தோற்றமும் கிடைக்கும்.

அப்படித் துல்லியங்களை நாம் நம் மனம் கொண்டு நெருங்குவதற்கு முன்பே..நேரிடையாக அவற்றைத் தரிசிக்கத் தொடங்கினால் மட்டுமே அதெல்லாம் சாத்தியமாகும்.

அப்படியான தரிசனத்தால் நாம் இருக்கும் இடச் சூழலின் தட்பவெப்பம் பற்றியும் புரிந்துக்கொள்ள முடியும்.

தட்பவெப்பம் பொறுத்துத் தான் மனித வாழ்வின் நடைமுறை உருவாகிறது. அதையொட்டியே அவனுடைய கோப தாப, இன்ப துன்ப வெளிப்பாடுகள் அமைகிறது.

நம் அறையை விட்டு வாசலுக்கு வரும்போது நமக்கு எதிர்ப்படும் முதல் மனிதன் நமக்கான சமூகத்தைத் தொடங்கிவைக்கிறான். அதுபோல அவனுக்கு நாம் தொடங்கி வைக்கிறோம்.

தெருவில் கால் வைத்த நொடியே நாம் பொதுவெளிக்கான ஆளாக உருமாறிவிடுகிறோம்.

ஒருத்தரோடு மற்றவர் என்ற இணைப்புப் புள்ளிக்கான காரணங்கள் அதிவேகமாக வளர்கின்றன.

இந்தப் புரிதலோடு / சொற்ப அனுபவங்களோடு நாம் அறை திரும்புதல் நம் படைப்பு மனத்துக்கு மேலும் கொஞ்சம் கோட்பாடுகளை உட்புகுத்தியோ.. ஏற்கனவே இருந்ததை கொஞ்சம் சிதைத்தோ வைக்கும்.

தப்பில்லை.

அவற்றிலிருந்து வேண்டியதைக் கண்டெடுத்து, நமக்குரியதை அடுக்கிவைத்துக் கொள்ளவே..

அந்தக் கூர்ந்தப் பார்வையின் நுணுக்கத் தோற்றம் அவசியப்படுகிறது.

நாம் புழங்கும்..நம்மோடு இருந்துவிடும் பொருட்கள் நம்மை அனைத்திலும் சம்பந்தப்படுத்துகிறது.

அது அந்நியமல்ல. நாம் தான் அது. அது தான் நாம்.

உதாரணத்துக்கு –

நாம் அன்றாட உபயோகத்துக்கு என்று பயன்படுத்தும் ஒரு பேனாவோ ஒரு செல்போனோ நம்மோடு சம்பந்தப்பட்டிருக்கிறது.

நாம் ஒரு பேனாவைக் கொண்டு எழுதுவதின் வழியே நமக்குத் தெரிந்த மொழியைக் கையாள்கிறோம்.

ஒரு விஷயத்தை அல்லது ஓர் அர்த்தத்தை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கடத்துகிறோம்.

இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு சாதாரண விஷயம் தானே,இதிலென்ன இருக்கிறது? என்று தோன்றுகிறது அல்லவா.. அதனை இன்னும் கொஞ்சம் நெருங்கி எப்படி என்று பார்ப்போம்.

நாம் நம்மிடமிருக்கும் பேனாவைக் கொண்டு..

* ஒரு படிவத்தை நிரப்புகிறோம்.

* ஒரு காசோலையில் கையெழுத்து போடுகிறோம்.

* யாருக்கோ ஒரு கடிதம் எழுதுகிறோம்.

 

இனி இந்த மூன்று செயல்களையும் அதன் விளைவையும் கவனிப்போம்.

* நிரப்பப்படும் ஒரு படிவம் நாம் இருக்கும் இடத்திலிருந்து இன்னோர் இடத்தில் இருக்கும் வேறு ஒரு மனிதனைப் போய்ச் சேருகிறது.

* கையெழுத்து இடப்பட்டு அனுப்பப்படும் காசோலையும் இன்னோர் இடத்துக்குப் போய் வேறொருவரைச் சேருகிறது.

* எழுதப்பட்ட ஒரு கடிதமும் செய்தியாக ஒருவரைச் சென்று அடைகிறது.

இம்மூன்று செயலிலும் இடத்துக்கான முக்கியத்துவத்தை ஒரு பேனா என்ற பொருள் நிர்ணயிக்கிறது.

அது இன்னொரு மனிதனோடு ஒரு தொடர்பை அல்லது பரிவர்த்தனையை உண்டு பண்ணுகிறது.

ஒரு செயல் இருந்தால், ஒரு விளைவு இருக்கும்.

செயல்விளைவு சம்பவமாக மாறும் வாய்ப்பு இருந்தால் அது ரூபமாக அதாவது காட்சி வடிவத் தோற்றம் (Image) கொண்டதாக இருக்கும்.

செயல்விளைவு சம்பவமாக மாறவில்லை என்றால் அது உணர்வுநிலை என்ற அரூபத்தைக் கொண்டதாக இருக்கும்(Non-Image State).

இரண்டிலும் தாக்கம் உண்டு. இது மேலோட்டப் பார்வை. எளிதில் யாருக்கும் புரிய சிரமமில்லாதது.

ஆனால் நுணுக்கப் பார்வையில்…

இடம் என்று யோசிக்கும்போது –

விளைவை உண்டுபண்ணும் திசையும் மனத்துக்குள் துல்லியமாக விரியத்தொடங்கும்.

(கிழக்கு ,மேற்கு, தெற்கு, வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு – இப்படி)

பொருள் எனும்போது –

பேனா ஒற்றைப் பொருள் போலத் தோன்றினாலும்..

அதற்குள் இருக்கும் ‘மை’ ஒரு தனித்த பொருள்.

பேனாவின் தன்மை பொறுத்து அதன் நிப், நாக்கு.. என்று தனித்தனியாகப் பிரியும்.

அதில் பேனாவின் மூடி இன்னொரு தனிப் பொருள்.

எழுதப் பயன்பட்ட காகிதம் ஒரு தனிப்பொருள்.

இப்படியெல்லாம்..

எத்தனை நுணுக்கமாக அணுக எத்தனிக்கிறோமோ அத்தனை அனுபவங்களை ஒரு நவீனக் கவிதைக்குள் மீட்டிப் பார்க்க முடியும் என்பதே இதன் நோக்கம்.

சரி..

மீண்டும் அறைக்குள் வருவோம்.

உதாரணத்துக்கு என்று எடுத்துக்கொண்ட ஒரு பேனா, எப்படியெல்லாம் நம் நடைமுறை வாழ்வோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்கிற அளவுகோலோடு..

இதைப் போலவே வேறெந்தப் பொருள் மீதும் நம் சிந்தனையைச் செலுத்த நாம் முனைந்தால், அதன் உட்கருவின் இயக்கம் நம்மை நோக்கி எளிதாக வந்து சேர்ந்துவிடும்.

அப்படியொரு பேனாவோ அல்லது செல்போனோ..

நம் அறையில் ஒரு மேஜையில் வைக்கப்பட்டிருக்கும்போது.

அந்த மேஜை ஒரு ஜன்னலோரம் இருக்கும்போது..

அந்த ஜன்னல் எத்திசையில் அமைந்திருக்கிறது என்பதைப் பொறுத்து,

காலையிலிருந்து மாலை வரை, கிழக்கில் தொடங்கி மேற்கு நோக்கி நகரும் சூரிய ஒளி நம் ஜன்னல் இருக்கும் திசையைக் கடக்கும்போது..

அந்த சூரிய ஒளி, வெயிலாக சொற்ப நேரம் அந்த ஜன்னல் வழியே உள் நுழைந்து தங்கியிருக்கும்போது..

நம் மேஜை மீது ஏற்கனவே இருக்கும் பேனாவோ செல்போனோ அந்த வெயிலோடு உறவாடும் அக்கணம் நம் கண்ணில் பட்டால்..

அப்போது நமக்கு ஒரு நுணுக்கப் பார்வை அவதானிப்பும் இருந்தால்..அந்தக் காட்சி நம்மை என்னவெல்லாம் செய்யும்..?யோசிக்கத் தெரிந்தால் யோசிக்கத் தூண்டும்.யோசிப்பின் விளைவால்..

எழுதும் பயிற்சி இருந்தால் எழுதத் தூண்டும்.

ஓவியப் பயிற்சி இருந்தால் வரையத் தூண்டும்.

இசைக் கருவியைக் கையாளத் தெரிந்தால் இசைக்கத் தூண்டும்.

எதுவுமே இல்லையென்றால் எழுந்துப் போய் ஜன்னலை சார்த்திவிடத் தோன்றும்.

நிறைய Choice நிறைந்தது இந்த வாழ்க்கை.

இயற்கை நகர்ந்துக்கொண்டே இருக்கிறது.. தன்னை நோக்கி அவதானிக்கத் தொடங்கும் எந்தவொரு உயிரினத்துக்கும், அது அனைத்தையும் சற்று கூடுதலாகவே தந்து செல்கிறது என்றே எப்போதும் எண்ணத்த தோன்றும்.

இதோ மார்கழி காலம் தொடங்கப்போகிறது.

என் வீட்டுக்கு எதிரே இருக்கும் ஒட்டுக் கூரையில் அவ்வப்போது காண நேரும் ஒரு பூனைக்காக நான் இப்போதே காத்திருக்கத் தொடங்கிவிட்டேன்.

இந்த மார்கழி காலத்து வெயில் எப்போதெல்லாம் தன் இளஞ்சூட்டை அந்தக் கூரையின் சரிவு ஒதுக்கத்தில் பாய்ச்சுகிறதோ, அப்போதெல்லாம் அதை நோக்கி வந்து சேரும் ஒரு பூனை அந்த இளவெயிலை சுகமாகப் புரண்டு புரண்டு அனுபவிப்பதைக் கண்டிருக்கிறேன்.

மல்லாந்த நிலையில் கண்களை மூடி அப்பூனை அவ்வெயிலை அனுபவிக்கும் சுகமும்.. அதன் அடிமடியில் இருக்கும் புஸ்சென்ற மென்மயிர் ஒளிரும் நிறமும்.. என்னை என் பால்கனியில் நின்ற இடத்திலேயே அசையாமல் நிற்க வைத்துவிடும்.

அந்தப் பூனைக்கென்றே மார்கழி மாதத்து குளிர் கலந்த வெயில், வாஞ்சையோடு தன் இளஞ்சூட்டை வாரி வழங்குகிறது. அது பூனைக்கும் வெயிலுக்குமான இணக்கம். இயற்கையோடு இயைந்து போதலை மிருகங்கள் துல்லியமாக செய்யத் தெரிந்து வைத்திருக்கின்றன.

வருடந்தோறும் இரு நண்பர்கள் தேடிவந்து சந்தித்துக் கொள்ளும் ஒரு நினைவு சதுக்கம் போல அந்த இடம் எனக்குள் உருமாற்றம் கொண்டுவிட்டது.

பல வருடங்களாக ஒவ்வொரு மார்கழியிலும் அந்தக் காட்சியைப் பார்க்கிறேன்.

ஆனால் எல்லா வருடமும் ஒரே பூனையைப் பார்க்கவில்லை. பூனைகள் மாறுகின்றன.

வெயிலுக்கும் பூனைகளுக்குமான ஒத்துப்போதல் மட்டும் மாறவேயில்லை.

நாமும் அதுபோலத் தானே என்ற முடிவுக்கு வந்துவிடத் தோன்றுகிறது.ஆனால் நமக்கு இதையெல்லாம் ஒத்துக்கொள்வதில் தான் பிரச்சனை.

இவையெல்லாவற்றையும் கருத்தில் கொண்டு யோசிப்போமேயானால் எத்தனையெத்தனை வகைமைகள் கிடைக்கப் பெறுவோம்..

எண்ணில் அடங்காக் காட்சிகள். எண்ணில் அடங்கா மனித மனங்கள்.ரூபமும் அரூபமுமாக எத்தனையோ உண்டு நம்மைச் சுற்றி..

ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கவிஞன், தன் தனித்த நுண் அணுகுதல், அவதானிப்பு மற்றும் தகவல் துல்லியம் கொண்டு அவற்றை, தான் கற்ற மொழியின் உதவியோடு வெளிப்படுத்துகிறான்.

அது நவீனத்தைக் குறித்த ஒரு பார்வையாக விரியும்பட்சத்தில்..

அது ஒரு கவிதை என்ற வடிவத்தைக் கொண்டிருக்கும் பட்சத்தில்..

அதனை ஒரு வாசக மனம், அதே நிதானத்தோடு அணுகி வாசிக்கும்போதும்..

அதே தரிசனத்தையோ அதனைக் கடந்த வேறொரு பரிணாமக் காட்சித் தோற்றத்தையோ நிச்சயம் அவனுள்ளும் உண்டு பண்ணும்.

Though the Perspective vary person to person.

மகாகவி சுப்ரமணிய பாரதியின் ஒரு கவிதையை இந்தக் கட்டுரைக்கு பொருத்தமாக எடுத்துப் பேசலாம் என்றுத் தோன்றுகிறது.

இரண்டு தலைப்புகளை இதற்கு பாரதி கொடுத்திருக்கிறார்.

அது ஏன் என்று கடைசியில் நமக்கே புரிந்து விடும்.

*

உலகத்தை நோக்கி வினவுதல்

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,நீங்களெல்லாம்
சொற்பனந்தானா? — பலதோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? — உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம்
கானலினீரோ? — வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ? — இந்த ஞாலமும் பொய் தானோ?

காலமென்றே யொருநினைவுங் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ? — அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? — சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லா மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே — நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே யுறுதிகண்டோம், காண்பதல்லா லுறுதியில்லை
காண்பது சக்தியாம் — இந்தக் காட்சி நித்தியமாம்.

*****

மகாகவி சுப்ரமணிய பாரதி

// நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்
சொற்பனந்தானா? — பலதோற்ற மயக்கங்களோ? //

சொப்பனம் என்றால் கனவு – கனவு என்றால் மாயத்தோற்றம் (Illusion).நிற்பதும் நடப்பதும் பறப்பதுமான எல்லா உயிரினங்களையும் மாயத்தோற்றமா என்று கேட்கிறார்.

நாம் காணும் உலகம் நாம் காண்பதைப் போன்று தான் இருக்கிறதா என்பதே பாரதியின் ஆதாரக் கேள்வி. அதை மேலும் வளர்க்கிறார்.

கனவென்ற மாயத்தோற்றம் தானா?- அல்லது பலதோற்ற மயக்கங்களோ?என்கிறார்.

அதாவது அறிவு மயங்கும்படி இருக்கிறதா அந்தத் தோற்றங்கள்?

இந்த உலகில் உண்மை என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? அப்படி ஒன்று இருக்கிறது தானா? – என்ற துணைக் கேள்விகளைத் தூண்டும் சிந்தனையோடு தொடங்கும் பாரதி, அடுத்து உடனடியாக அதனையொட்டி எழுப்பும் தொடர் கேள்வி அதிமுக்கியமாகிறது.

// கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? — உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? //

கற்பது – கேட்பது – கருதுவது இதெல்லாம் செய்கைகள்..இந்தச் செய்கைகளை செய்பவர்கள் மனிதர்கள். அதனால் நேரிடையாகவே கேட்கிறார்..

நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ என்று…

வார்த்தையைக் கவனிப்போம்.வெறும் மாயைஅல்ல.. ‘அற்ப மாயை’ என்கிறார். அற்பம் என்றால் இழிவான, மிகவும் கீழ்மையான என்ற பொருளில் வந்து விழுகிறது அந்தக் கேள்வி..

கற்பது, கேட்பது, கருதுவது – இவையெல்லாம் அரூபங்கள்.. கண்ணால் காண முடியாதவை.

அதைக் கண்ணால் காணக்கூடிய காட்சி ரூபமான மனிதன் மீதேற்றி மாயைகளோ நீங்கள்..? – அதுவும் அற்ப மாயைகளோ – என்று சந்தேகமாய் கேட்கிறார். ஏன் அப்படி கேட்கிறார் என்பதற்கான பதிலாக பின்னாலேயே இன்னொரு கேள்வி உடனடியாக வருகிறது.

உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ..?

நீங்களாகவே கற்பதுவாய் கேட்பதுவாய் கருதுவதாய் நினைத்துக்கொள்கிறீர்களே அப்படி பெற்றுக்கொண்டிருப்பதில் எல்லாம் ஆழ்ந்த பொருளில்லையோ..? அதனால் தான் நீங்கள் எல்லாம் அற்ப மாயைகளோ..?

கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? — உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

சந்தேகமாகவே கொண்டுப் போக முடிகிறது.. அவரால்..

நிற்பது, நடப்பது, பறப்பது – இதெல்லாம் காட்சி ரூபம். – இவைகளை மாயத்தோற்றமா என்றும்..

கற்பது , கேட்பது, கருதுவது – இதெல்லாம் காட்சியற்ற அரூபம். – இவைகளை ஆழ்ந்த பொருளற்றவையோ என்றும் உலகத்தை நோக்கி வினா எழுப்புகிற பாரதி..

அடுத்து அதற்கு மேலும் போகிறார்..

// வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம்
கானலினீரோ? — வெறுங் காட்சிப் பிழைதானோ? //

குறைவான சொற்கள் கொண்டு எத்தனைப் பிரதிமைகளை (Image) கொண்டு வரமுடிகிறது..

வானகம் – இளவெயில் – மரச்செறிவு (நெருக்கி அடுக்கியது போன்ற மரக்கூட்டம்) –

இவைகளையும் கானலினீ ரோ? என்று கேட்கிறார்.. அழகான படிமம். அந்தப் படிமம் தனக்குள் எத்தனை மடிப்புகளைக் கொண்டிருக்கிறது என்று நாமும் வியந்துக் கொண்டே போகலாம் பாரதியைப் போலவே.

வானகம் என்றால் ஆகாயம், அதிலிருந்து பெறுகிற இளவெயில். அவ்வெயில் குடித்து வளரும் செடிகள் கொடிகள் மரக்கூட்டங்கள்.

வெப்பம் தாங்கும் எந்தவொரு தளத்தின் மீதும் வெயில் மோதித் திரும்பும் அலைகள், நீர்நிலைப் போன்ற தோற்றத்தைத் தருவது கானல் நீர். அது நம் மனிதக் கண்ணுக்குக் காணக் கிடைக்கும் காட்சிப் பிழை.

அந்தக் கானல் நீரைப் போலவே அவைகள் வெறுங் காட்சிப் பிழைதானோ? – என்ற இரண்டாம் கேள்வி.. வாசிப்பவனின் சிந்தனையை வேறெங்கோ கடத்துகிறது.

அடுத்து இயற்கையிலிருந்து மெல்ல சந்தேகக் கேள்வியை தன்னை நோக்கித் திருப்புகிறார் மகாகவி.

// போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ? — இந்த ஞாலமும் பொய் தானோ? //

மனித இனம் தோன்றி வளர்ந்து பிழைத்து.. இன்று என்னவாக இருந்தபோதிலும்.. அந்தக் கேள்வி நெஞ்சில் அறைகிறது.. மனித வரலாற்றில் இதுவரை எல்லாமே கனவினைப் போல புதைந்து அழிந்து போனதனால்.. நானும் அப்பேற்பட்ட ஒரு கனவுதானோ? என்றதோடு

அப்படியென்றால் இந்த ஞாலமும் (உலகம்) பொய் தானோ ? என்று முடிக்கிறார்.

அந்தக் கனவென்னும் மாயத்தோற்றம் என்னவெல்லாம் செய்துவிட இயலும் ஒரு கவிஞனை மற்றும் அவன் பிரக்ஞையை(Conscious)-என்பதை நுணுக்கமாய் வெளிப்படுத்திக்கொண்டே போகிறார் பாரதி.

அடுத்து –

// காலமென்றே யொருநினைவுங் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ? — அங்குக் குணங்களும் பொய்களோ? //

மூன்றுக் காலங்கள் என்பதில், நிகற்காலம் பாடுபொருளில் ஒற்றை நினைவாக முன் நிற்கிறது.

ஆனால் அது நினைவு எனும்போதே இறந்தக் காலத்தை உள்ளிழுத்துக் கொள்ளவும் செய்கிறது.

அதனுள் நிலவும் அல்லது நிகழும் காட்சிகளோ பல நினைவுகளாய் பெருகுகிறது.. பெருகும் அனைத்தின் கோலமும் பொய்களோ என்று கேட்கிறார்.

கோலம் என்றால் உருவம் / வடிவம்..

அப்படி உருவமாக ஒரு வடிவமாக காட்சியாகும் பல நினைவின் காலத்துக்குள் அவ்வுருவங்கள் கொண்டுள்ள குணங்களும் பொய்கள் தானோ என்று கேட்டபடி முடிக்கிறார்.

யாரை நம்புவது அல்லது எதைத்தான் நம்புவது?

அப்படியெல்லாம் இருக்குமேயானால் நானும் ஒரு கனவு தானோ?  -என்கிற அந்த ‘நான்’ என்ற தத்துவக் கேள்வியை புதைத்துக் கொண்டே அதிலிருக்கும் புதிர்த்தன்மைகளை உருவியபடி அவைகளைக் கேள்விகளாக உருமாற்றிக் கொண்டே இருக்கிறார்.

இன்னும் முடியவில்லை..

// சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? — சொல்லொடு சேர்ப்பாரோ? //

பாரதி, கொண்டு வந்து நம் முன் கிடத்தும் படிமமும் அதனுள் இயங்கும் இயற்கைத் தத்துவ விசாரத்தையும் கூட விடுவதாயில்லை.

சோலை மரங்கள் எல்லாம் தோன்றியிருப்பது ஒரு விதையிலிருந்து தான் என்றால்.. இப்போதிருக்கும் சோலை எப்படிப் பொய்யாகும்?

ஒரு விதைக்குள் இருக்கும் சோலையை வியக்க முயல்கிறார்.

விதையின் சிறிய வடிவம்.. ஒரு பெரிய மரக்கூட்டத்தை அல்லது ஒரு சோலையை உள்ளே வைத்திருக்கிறது.

ஆதி மனிதன் வரைக்கும் நம் சிந்தனையை விரியச் செய்கிறது உலகை நோக்கிய அவரின் கேள்வி.

ஒரு விந்து அணு தானே இத்தனை மனிதக் கூட்டத்துக்கான தொடக்கம்?

அப்படிப் பார்க்கும்போது..

// காண்பவெல்லா மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே — நித்தம் விதிதொடர்ந் திடுமோ? //

எதையெல்லாம் காண முடிகிறதோ அதெல்லாம் மறைந்துவிடும் தன்மைக் கொண்டிருந்தால்..

ஏற்கனவே மறைந்ததெல்லாம் காண முடியுமல்லவா என்கிற புதிர்த்தன்மையான கேள்விக்கு (Question of Mystery)வருகிறார்.. காட்சி மீதான தனது புனைவை (Fiction), பாரதி தத்துவ நோக்கோடும் அறிவியல் செறிவோடும் கையாண்டிருக்கிறார்.

வீண்படு பொய்யிலே – அப்பேற்பட்ட பயனற்ற பொய்யிலே

நித்தம் – என்றுமுள்ள நிலையோடு விதி தொடர்ந்திடுமோ என்றும் ஐயுறுகிறார்.

உன்மத்த நிலைக்கு இட்டுச் செல்லும் அறிவார்ந்த தத்துவ நோக்கு அது.(Completely Insane)

அதன் எல்லை எதுவரை என்பது, பாரதியின் பிரக்ஞை மனதில் (Conscious Mind) துல்லியமாக இருந்திருக்கிறது. அவர் அதனுள்ளே தன்னை இழந்து விடவில்லை. ஆனால் ஒரு கவியாகக் கரைந்து போயிருக்கிறார். அது அவர் அடைந்த லயிப்பின் உச்சம். அதனை உறுதிப்படுத்துகிறது கவிதையின் இறுதி வரிகள்.

// காண்பதுவே யுறுதிகண்டோம், காண்பதல்லா லுறுதியில்லை
காண்பது சக்தியாம் — இந்தக் காட்சி நித்தியமாம். //

காண்பதுவே யுறுதிகண்டோம் – எதைக் காட்சிவழியாகக் காண முடிகிறதோ அதில் உறுதியைக் கண்டதாகவும்..

காண்பதல்லா லுறுதியில்லை – காண முடியாதவையில் (அரூபங்களில்) உறுதியில்லை என்றும்.. ஆனால் உறுதியில்லை தானே ஒழிய அதன் மீது உள்ள மயக்கம் இருக்கவே செய்கிறது அம்மகாகவிக்கு.

அப்படிக் காண்பது சக்தியாம் (பிரபஞ்ச இயக்கங்களுக்கானது) The Energy.அதனால் இந்தக் காட்சி நித்தியமாம்.

நித்தியம் என்றால் – அன்றாடம் நடப்பவை, நாள்தோறும் நடப்பவை.

அதனால் தான் இந்தக் காட்சி நித்தியம், என்றபடி அனைத்து புதிரையும் அதனுள் அடக்கிவிடுகிறார்.

உலகத்தை நோக்கி வினவுதல்

என்று பாரதி தன்னுடைய இந்தக் கவிதைப் பாடலுக்கு தலைப்பிட்டிருக்கிறார்.தான் கேட்கும் அத்தனை கேள்விகளையும் ஏனைய தத்துவக் கோட்பாடுகளின் உள்வாங்கலோடு வெளிப்படுத்துகிறார்.

அதே நேரத்தில் அதற்கு இயற்கை சொல்விடை‘  – என்ற தலைப்பையும் தேர்ந்து பதிப்பித்திருக்கிறார்.

மகாகவியாய் நின்று இயற்கையை நோக்கி கேட்கும் அந்த மனிதனுக்கு இயற்கையே பல விடைகளை உணர்த்திச் சொல்லிவிடுகிறது. அவர் எண்ணத்துக்குள் அலைமோதிய அனைத்து பிம்பங்களையும் சொல்லுக்குள் கொண்டுவர முயன்றிருக்கக் கூடும்.. அது முடியாமலும் போயிருக்கும்.

அதனால் தான் சொல்லொடு சேர்ப்பாரோ? -என்ற சந்தேகம் கவிதையின் நடுவே வெளிப்படுகிறது.

இரண்டு தலைப்புகளும் கவிதைக்கு நியாயம் செய்கின்றது.

இன்னும் பலப்பல மடிப்புகளைக் கொண்டது பாரதியின் இந்தக் கவிதை.

நாம் எடுத்துப் பேசிக்கொண்டிருக்கும் நவீனக் கவிதைக் குறித்த இக்கட்டுரையில் பாரதியின் இந்தக் கவிதையை ஒரு புதுக்கவிதை என்று ஒதுக்கிவிடலாகாது.

அதனுள் பொதிந்து கிடக்கும் நவீனத்துவத்தின் நுட்பத்தை, நுணுக்கத்தை நம்மால் இன்னும் இன்னும் கூட தரிசிக்க முடியும்.

காரணம்.

The Perspective  -என்ற தோற்றம் குறித்து இத்தனைக் கேள்விகளைப் பொருத்தமாக கேட்க முடிந்த கவிஞன் பாரதி.

சரி..

புகைப்பட மெக்கானிச அறிவியல்படி, ஒரு நார்மல் லென்ஸ் வழியே கிடைக்கும் காட்சிச் சட்டகம் (Visual Frame) மனிதப் பார்வைக்கான தரமாக  53 டிகிரி என்று வரையறை செய்து பயன்படுத்தப்படுகிறது.

ஆக, ஒரு கச்சிதமான புகைப்படக்கருவி(Photographical Device) மூலமாக எடுக்கப்படும் புகைப்படம், மனிதனின் பொதுவான காண் தோற்றத்தை சமன் செய்ய முயல்கிறது.

அப்படியென்றால்..

பறவைகளின் கோணம், சில விலங்குகளின் கோணம்மற்றும் மீனின் கோணம் (180 டிகிரி).

மேலும்..

வர்ணங்கள் / நிறங்கள், மனித இனத்துக்கும் இன்னும் சில பறவை இனத்துக்கும் மட்டும் வாய்த்திருப்பதால்.. நாம் நம் உலகை நமக்குத் தகுந்தார்போலக் கட்டமைத்துக்கொண்டு நமக்கான புரிதலில் ஒரு தோற்றத்தை நம்பத் தொடங்குகிறோம்.

நிறங்களின் தன்மையைப் பெறாத கண்களையும் அதன் வழியே பார்க்கும் நிறமற்ற காட்சிகளோடும் வாழும் பிற உயிரினங்களுக்கு இந்த உலகு என்னவாக இருக்கும்?

விடையற்ற இந்தக் கேள்விகளோடும் சுய தத்துவ நோக்கோடும்  பயணிக்க முடிகிற கலைஞர்களை, நாம் நம் கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் கொண்டிருக்கிறோம் என்பதே நமக்கான உண்மை.

அதிலிருந்து வெளிவருவது தான் அழகியல், கலை, தத்துவம், ஞானத் தேடல் எல்லாம்.

இவைகளை பாரதி தோற்ற மயக்கமோ என்றும் காட்சிப் பிழைத்தானோ என்றும் நவீன சிந்தனையோடு ஒரு கவிதைக்குள் அதிநுட்பமாக கேட்கிறார்.

உற்று நோக்குதலும் – ரசித்தலும் நமக்கும் இயலும்.

பாரதியின் இந்தக் கவிதையை எப்போது வாசித்தாலும் அல்லது மனத்தில்  யோசித்தாலும் நினைவுக்குள் வந்து நிற்கும் ஒரு ஜென் கதை உண்டு..

*

ஒரு புத்த மடாலயம்

அங்கு தினமும் காலையில் ஜென் தத்துவ வகுப்பு நடக்கும்.

குரு வந்ததும் பாடத்தைத் தொடங்கிவிடுவார்.

ஆனால் ஒரு நாள் காலையில் மாணவர்கள் வெகு நேரம் காத்துக் கொண்டிருந்தும், குரு அன்றைய பாடத்தைத் தொடங்கவில்லை. ஒரே அமைதி.

வகுப்பிலும் அமைதி. குருவிடமோ ஆழ்ந்த சிந்தனைக் கலந்த பேரமைதி. அது அவருடைய முகத்தில் பிரதிபலிக்கிறது.

தலைமை மாணாக்கன் மெல்ல எழுந்து குருவை நெருங்கி..

‘ குருவே..! நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். நீங்களோ யோசனையில் ஆழ்ந்திருக்கிறீர்கள். இன்று பாடம் உண்டு தானே ? ‘ -என்கிறான்.

ஒரு முறை அவனை நிமிர்ந்து பார்த்தவர்..

‘ நான் விடிந்ததிலிருந்து ஒரு பெருங் குழப்பத்தில் இருக்கிறேன் ‘ – என்கிறார்.

‘ என்ன குழப்பம் குருவே..? ‘

‘ நான் நேற்றிரவு ஒரு கனவு கண்டேன் ‘

‘ கனவு நல்ல விஷயம் என்று சொல்லியிருக்கிறீர்களே.. தங்களுக்கு அதில் என்ன குழப்பம் ? ‘

‘ அந்தக் கனவில் நான் ஒரு பட்டாம்பூச்சியாகப் பறந்துக்கொண்டிருந்தேன் ‘

‘ ஆஹா..! அது இனிமையான கனவல்லவா..! அதில் என்ன குழப்பம் இருக்க முடியும்? ‘

குரு ஒரு முறை தன்னுடைய மூச்சை ஆழமாய் உள்ளிழுத்து மெல்ல விடுவித்துக் கொண்டு தொடர்கிறார்.

‘ இல்லை. நேற்று என் கனவில் பட்டாம்ப்பூச்சியாக பறந்துக் கொண்டிருந்தேனே அது நிஜமா..? அல்லது ஒரு பட்டாம்பூச்சியின் கனவாகத் தான் நான் இங்கே வாழ்ந்துக் கொண்டிருக்கிறேனா? ‘

அன்றைய வகுப்புக்கான பாடம் அதோடு முடிந்தது.

*****

இடம் – பொருள் – நிலையை..

நாம் நமக்குத் தகுந்தது போல எக்கணத்திலும் வகுத்துக் கொள்ள முடியும்.

நமக்குத் தேவையெல்லாம் நம்மைச் சுற்றி இயங்குபவையின் நுட்பங்களை உள்வாங்க முயல்வது. அதை எந்தவொரு நவீனக் கவிதைக்குள்ளும் கண்டுக்கொள்ளவும் முடியும் என்ற நம்பிக்கையோடு ஒரு சுய பயிற்சிக்குத் தயாராகத் தொடங்குவது.

அதே நேரத்தில் வாசிப்பைத் தாண்டி கூடுதலாக, நமக்கு எழுத வரும் என்றால்..நாம் கண்டு அறிந்துக்கொண்டவற்றை அவ்வகை நவீன எழுத்தாக அதனுள் சாத்தியப்படுத்தவும் முடியும்.

அவரவர் கைமணல் அவரவர்க்குக் காத்திருக்கவே செய்கிறது.

தொடர்ந்து பேசுவோம்.

கட்டுரைக் குறித்த சந்தேகங்களை மெயில் வழியாகப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

நன்றி..

ப்ரியங்களுடன்
இளங்கோ (elangomib@gmail.com)

இவரது வலைப்பூ: http://kavithaikarandiary.blogspot.in/

(******)

மன்னிப்பு

2
ஓவியம் அந்தோனி ராஸ். உரிமை -காமன்ஸ்
  • சங்கர்

சிற்றுந்திலிருந்து இறங்கினான். இறங்கும்போது ஒரு படிக்கும் அடுத்ததிற்கும் உள்ள தூரத்தை, கடைசி படிக்கும், ரோட்டிற்கும் உள்ள தூரத்தை சரிபார்த்துக் கொண்டே இறங்கினான். மின்விசிறி ஓடும் சத்தம் மட்டுமே கேட்கும் அறையைப் போல் பேருந்து ஓடும் சத்தம் மட்டுமே கேட்ட ஒரு மணிநேர அமைதியான பயணத்தின் விளைவு. அவனுக்கு சந்தோசம்தான் அதில். எதில் பயணித்தாலும், பேருந்தோ, ரயிலோ பக்கத்து இருக்கையில் யாரும் அமரக்கூடாது என்பது அவன் ஆசையாய் இருக்கும். இன்று ஒருபடி மேலே போய் ஆட்கள் பேச்சு சத்தம்கூட இல்லாமல், முன்னே பின்னே வேறு எந்த வாகனங்களும் இல்லாமல் பயணித்தது புது அனுபவமாய் இருந்தது அவனுக்கு.


இறங்கிய இடத்திலிருந்து அவன் ஊர் மூன்று கிலோமீட்டர் தூரத்திலிருந்தது. நடந்துதான் போக வேண்டும். எப்போதுமே அந்த நிறுத்தத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்காது. இன்று கைவிடப்பட்ட நிழற்குடையும், பெரியார் சிலையும் மட்டும்தான் இருந்தது. பிரதான சாலையிலிருந்து பிரிந்து ஊருக்குள் போகும் சாலையைப் பார்த்தான். நீரோடிய பாறையில் தெரியும் கோடுகள் போல் சில வருடங்கள் முன்புவரை கூட மண் பாதையாகத்தான் இருந்தது. எப்போது அந்த சாலை முன் வந்து நின்றாலும் அவனுக்கு வளைந்து, நெளிந்து கிடக்கும், நூற்கண்டிலிருந்து அறுந்துபோன ஒரு நூலைப்போல் தெரியும். கையில் எடுத்து எத்தனையோ முறை சுருட்டி, ஒரு பொட்டாக்கி ஊதியிருக்கிறான். தீடீரென்று ஒரு காலை கற்களையும், தாரையும் கொட்டி அழுக்காக்கி விட்டார்கள்.

“இந்தப் புதிய தார்ச்சாலை ஊரைவிட்டுப் பிரியும்போது உதவுவதைப்போல் ஊருக்குள் வரும்போது உதவுவதில்லை. ஊருக்குள் காலை எடுத்துவைக்கும் வரை எங்கேயோ போவதைப் போன்ற உணர்வைத்தான் கொடுக்கிறது.” நடக்கத் தொடங்கினான்.

இனம் புரியாத மகிழ்ச்சியால் மனம் நிறைந்து வழிந்தது. பேருந்து சத்தம் போய் அந்த இடத்தைக் காற்று எடுத்துக் கொண்டது. எப்போதும் வானம் நிறைக்கும் காகங்களைக்கூட காணவில்லை. திரைச்சீலை ஓவியம்போல் கண்முன்னே கிடக்கும் பரந்த நிலக்காட்சியை முழுமையாகப் பார்க்க முயன்றான். கருவேல முற்செடிகள் தான் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்தன. ஆடு, மாடு மேய்ப்பவர்கள் யாரும் தெரிகிறார்களா என்று பார்த்தான். சாலையின் இரண்டு பக்கங்களிலும் பனை மரங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. “ஒருவேளை இந்தக் காகங்கள்தான் பனைகளாக உருமாறி நிற்கின்றனவா”. சிரிப்பு வந்தது அவனுக்கு. கூடவே சில எண்ணங்களும்.


***
அவன் வீட்டில் மொத்தம் நான்கு பேர்கள். அப்பா, அம்மா, தம்பி மற்றும் அவன். படித்து முடித்து சில வருடங்களுக்கு மேலே ஆகியும் வேலை கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் “கவலப்படாத கிடச்சுரும்” என்று சொல்லிக் கொண்டிருந்த அப்பா நாளாக நாளாக “பிடிச்ச வேலக் கிடைக்கலன்னா கிடச்ச வேலையப் பாரு..” என்று சொல்ல ஆரம்பித்தார். “அப்பா சொல்றதும் நியாயம்தான தம்பி.. கோவிச்சுக்காம யோச்சிப் பாரு” என்றாள் அம்மா. தம்பி படித்துக் கொண்டிருந்ததால் எதுவும் சொல்லவில்லை.

அப்படி ஒன்றும் ஒரு குறிப்பிட்ட வேலைக்குத்தான் போகவேண்டும் என்று எந்த பிடிவாதமும் பிடிக்கவில்லை அவன். உண்மையில் பி.எஸ்.சி கெமிஸ்ட்ரிக்கு என்ன வேலை கிடைக்கும் என்று தெரியாது அவனுக்கு. சிலசமயம் அவர்கள் சொல்வது நியாயமாகப் படும். பல சமயம் எரிச்சலாக வரும். பழையப் படமொன்றில் கேட்ட பழமொழிகளை நினைத்துக் கொள்வான். சரியாகத்தான் சொல்லியுள்ளார்கள்: கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய். தம்பியைப் பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லையோ.


***
தொடர்ந்து நடந்தான். வெய்யில் கொஞ்சம் கொஞ்சமாக அவன் தலைக்குமேல் ஏறிக்கொண்டிருந்தது. காலை வெய்யில் எப்போதும் ஒரு மெல்லிய சோகத்தை உண்டு பண்ணக் கூடியவை. கண்ட கனவுகள் மறந்து போயிருக்கும். முந்தய நாளின் ஏக்கங்கள் நினைவிற்கு திரும்பியிருக்கும். ஒரு நீண்ட நாள் மீதமிருக்கும் நம்பிக்கையில் “சரிதான் பார்த்துக் கொள்ளலாம்” என்று தோன்றும். “இல்லை.. ஒரு பத்து நிமிட நடையில் மனம் ஏன் கண்டதை நினைக்கிறது. இந்த வெயில்தான் எவ்வளவு அழகாக இருக்கிறது.

யாருமற்ற வேளைகளில் எல்லாமும் எப்படி வேறோர் உருவம் கொண்டு விடுகின்றன.” அவன் தன்னை உற்சாகப்படுத்திக் கொண்டான். சிற்றுந்திலிருந்து இறங்கும்போது இருந்த மனநிலையைத் தக்க வைத்துக் கொள்ள, நீட்டிக்க விரும்பினான்.


எப்போது, எவ்வளவு பிரகாசமான வெளிச்சத்தில் பார்த்தாலும் காலத்தைச் சில வருடங்களுக்கேனும் பின் நகர்த்தும் வல்லமை கொண்ட, காது கொடுத்து கேட்டால் பல கதைகளைச் சொல்லக் கூடும் என்பதுபோல் பழுப்பு நிறத்தில் நிற்கும் அந்தச் சிறியப் பாலத்தை அடைந்தான். அவர்கள் ஊரை காலம் காலமாக வளமான பூமியாய் வைத்திருந்த நந்தியாற்றில் கட்டப்பட்ட பாலம் அது. ஒரு காலத்தில் பாலத்திற்கு மேல் நுரைத்துப் பொங்கி ஓடிய நதி இப்போது இல்லை.

“கீழ பாத்து நடக்காத. தண்ணி ஓடுறதப் பாத்தா அது அப்படியே இழுதுட்டுப் போயிடும். கையப் பிடிச்சுக்கோ” என்று சொன்ன அப்பாவும் இப்போது இல்லை. எரிச்சலாய் வந்தது அவனுக்கு. “இந்த மனிதர்களால் பூமி தொலைத்த எண்ணற்ற நதிகளில் இதுவும் ஒன்று. எதற்காக இவ்வளவு அழிவுகளை நிகழ்த்துகிறார்கள்… எதற்காக இவ்வளவையும் இந்த பூமி பொறுத்துக் கொண்டிருக்கிறது. கனவுகள் தொலைந்து போகலாம்; மறந்து போகலாம்; பறிக்கப்படுவதை ஒருவர் எவ்வாறு பொறுத்துக் கொள்ள முடியும்…” அமைதியாக சில நிமிடங்கள் நின்றான். எதுவோ மீண்டும் ஆரம்பிக்கிறது, மனம் சம்பந்தமில்லாத அல்லது பொய்யான எண்ணங்களை உருவாக்கி அதை மறைக்கப் பார்க்கின்றது என்று புரிந்தது அவனுக்கு. உண்மையில் அந்த நதிக்காகவா வருத்தப்பட்டோம் என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டான்.

அவன் கேள்விகளுக்கு விடையளிக்க விரும்பாதவளைப் போல் மௌனமாக ஓடிக்கொண்டிருந்த நதியின் நிழலைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்பவனைப் போல் தலையைக் கீழே போட்டு இரண்டு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு எழுந்து நடக்கத் தொடங்கினான்.


அவனுக்குப் பெண் குழந்தை ஒன்றைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டுமென்று நீண்ட நாளாக ஆசை. “குழந்தைகள்தான் எவ்வளவு அதி அற்புதமானவர்கள். அவர்களின் பிஞ்சுக்கைகளால் நம்மைக் கட்டிக்கொள்ளும் போது நாம் கடவுளால் ஆசிர்வதிக்கப் பட்டவர்களாகிறோம். நம் தோள்களில் அவர்கள் உறங்கும்போது அந்தக் கடவுளாகவே மாறி விடுகிறோம். அதிலும் பெண் குழந்தைகள்…. எப்போதிருந்து இந்த ஆசை என்பது அவனுக்கே உறுதியாகத் தெரியவில்லை. ஏன் என்ற கேள்விக்கும் அவனிடம் விடையில்லை. நகரத்தில் இருக்கும்போதெல்லாம் கடற்கரையிலும், வணிக வளாகங்களிலும் பெற்றோரோடு வரும் குழந்தைகளைப் பார்ப்பதற்காகவே வாராவாரம் அங்கு செல்வான்.

அங்குமிங்கும் ஓடியாடி விளையாடும் குழந்தைகள் கடைசியாக ஓடி வந்து தங்கள் பெற்றோரின் கால்களைக் கட்டிக்கொள்ளும் காட்சியைப் பார்த்தால்தான் அவன் மனம் திருப்தியுரும். ஒரு சில முறை அவனே குழந்தையைக் தூக்கிக் கொள்ளுங்கள், கூட்டமாக இருக்கிறது என்று பெற்றோர்களிடம் போய்ச் சொல்வான். அவர்கள் தூக்கிக்கொள்ளும் வரை நகர மாட்டான்.


அவன் அம்மாவிடம் முதன்முதலாக தன் ஆசையைச் சொன்னபோது அவள் அதெற்கெல்லாம் ஒரு வயது இருக்கிறதென்றும், ஏன் தத்தெடுக்க வேண்டும் திருமணம் செய்துகொண்டால் அவனுக்கே குழந்தைகள் பிறக்கும் என்றும் சொன்னாள். அவன் மனதின் ஓரத்தில் எப்போதும் அந்த எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். தான் நிச்சயம் நல்ல தந்தையாக இருப்பேன் என்று அடிக்கடி சொல்லுவான். ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது ஓடிவந்து காலைக் கட்டிக்கொள்ளும் குழந்தையை அவனால் கற்பனை செய்யாமல் இருக்க முடியாது. “வார இறுதியில் பைக்கில் உட்கார வைத்துக்கொண்டு ஊரைச்சுற்றி வருவேன். நாங்கள் கடல் பார்க்கப் போவோம். எத்தனை தகப்பன்களுக்கு குழந்தைகளை கடல் பார்க்க கூட்டிக்கொண்டு போக வாய்ப்பிருக்கிறது. கடலையே பார்க்காமல் வாழ்ந்து மடிந்து போகும் எத்தனை எத்தனைப் பேர் இவ்வுலகில் இருக்கிறார்கள். நிச்சயம் கடற்கரை இல்லாத ஊரில் என் குழந்தையை வளர்க்க மாட்டேன்”.

எப்போதெல்லாம் இந்தப் பேச்சை எடுக்கிறானோ அப்போதெல்லாம் அவன் அம்மா அவனைக் கவலையோடு பார்ப்பாள். ஒருமுறை தனக்கு வயசாகிக்கொண்டே போவதாகவும், குழந்தையை வளர்க்கவெல்லாம் தனக்கு சக்தி இல்லை எனவும், சீக்கிரம் வேலைக்குப் போனால் திருமணம் செய்துவைத்து விடுகிறேன், உன் மனைவியோடு நீ சந்தோசமாக குழந்தையை வளர்க்கலாம் என்றும் சொன்னாள். அவனுக்கு ஏனோ தன்னோடும் தன் குழந்தையோடும் பைக்கில் இன்னொரு பெண் வருவது யோசிக்க முடியாததாக இருந்தது.


***
நீண்ட நேரமாக தார்ச்சாலையில் நடப்பதற்கு அலுப்பாக இருக்கவும் ஒரு இடத்தில் பிரிந்த கிளைச்சாலையொன்றில் இறங்கி நடக்கத் தொடங்கினான். அதுவும் அவன் ஊருக்குத்தான் போகும். கொஞ்சம் சுற்றிப்போகும். “வாழ்க்கை என்பது கண்களைத் திறந்து மூடி விளையாடும் விளையாட்டைத் தவிர வேறென்ன. விளையாட்டு நிற்கும்போது கண்கள் திறந்திருக்குமா அல்லது மூடியிருக்குமா என்பதில் மட்டும்தானே சுவாரசியம் உள்ளது. அதற்கு நடுவில் நாம் எதைச் செய்தால்தான் என்ன.. எங்கு எப்படிப்போனால் என்ன”. அடிநாக்கில் ஊறி வரும் கசப்பில் அவன் மனம் நிலைகொள்வதை தவிர்க்க முயன்று கொண்டேயிருந்தான்.


சிறிது தூரத்திலேயே கடைகள் தென்படத் தொடங்கின. ஆனால் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன. சில கடைகளைப் பார்க்கும்போது அவை சோகமாக இருப்பவை போலிருந்தது. சிலது சந்தோசமாகவும், சில எவ்வித உணர்ச்சியையும் காட்டாதவையாகவும் தோன்றின. மனிதர்கள் பலவற்றை மறைத்து வாழ்கின்றனர். அவர்களால் உலகில் பலவும் ஊமையாக இருக்கின்றன. அவர்கள் இல்லாதபோது சுதந்திரமாக அவை வெளியே வருகின்றன. ம்ஹ்ம்… பெயிண்ட் அடிக்கப்பட்ட கடைகள் சந்தோசமாகவும், அழுக்கான கடைகள் சோகமாகவும் தெரிகின்றன என்று நினைத்துக் கொண்டான்.

பள்ளியில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. ஆறாவதோ ஏழாவதோ.. முதல்நாள் முதல் வகுப்பில் எல்லோரையும் அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னார் வகுப்பாசிரியர். பிடித்த உணவு என்ன, பிடித்த விளையாட்டென்ன, பிடித்த நடிகர் யார், பிடித்த விலங்கு, பிடித்த பறவை, பிடித்த வண்ணம்.. தன்முறை வந்தபோது எல்லாவற்றிற்க்கும் பதில் சொன்னவன் பிடித்த நிறம் என்ற கேள்விக்கு மட்டும் என்ன பதில் சொல்ல வேண்டுமென்று தெரியாமல் விழித்தான். அவனுக்கு எல்லா நிறங்களும் பிடிக்கும் போலிருந்தது. அல்லது எதன் மீதும் பெரிய அபிப்ராயம் இல்லை. விதவிதமான வண்ணங்களில் இருந்த கடைகளை மீண்டும் ஒருமுறை பார்த்தான். இப்போதாவது தனக்கு பிடித்தமான வண்ணம் எது என்று சொல்ல முடிகிறதா என்று சிறிது நேரம் நின்று பார்த்தவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.


கடைகளைத் தாண்டியவுடன் இருபுறத்திலும் வீடுகள் வரத் தொடங்கின. சிறிதும், பெரிதுமாய் விதவிதமான வண்ணங்கள் அடிக்கப்பட்ட வீடுகள். “ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர்கள் இருப்பார்கள் என்று யோசித்தான். குறைந்தபட்சம் நான்கு பேர்கள் இருக்கலாம். எத்தனைக் குழந்தைகள் இருக்கும்… அவைகளெல்லாம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கும்.? தந்தையிடம் இருக்குமா? தாயிடம் இருக்குமா? குழந்தைகள் உலகில் சரியென்றும் தவறென்றும் எதுவுமில்லை தானே.. சில நேரங்களில் ஒரு குழந்தையாக மாறிக்கொள்ள முடிந்தால் நம்மை நாமே மன்னித்துக் கொள்ள முடியும் தானே…” எதை மறைக்க அல்லது மறக்க தள்ளித்தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறானோ அது தொண்டை வரை வந்துவிட்டதை உணர்ந்தான். அவன் நடையின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது.


சட்டென்று அவன் போய்க்கொண்டிருந்தப் பாதையில் இருந்த எல்லா வீடுகளின் ஜன்னல்களும் திறந்து கொண்டன. பலஜோடிக் கண்கள் உள்ளிருந்து அவனைப் பார்ப்பதைப் போலிருந்து அவனுக்கு. நடையின் வேகத்தை அதிகரித்தான். நடந்தான் என்று சொல்வதை விட ஓடத்தொடங்கினான் என்றுதான் சொல்லவேண்டும். ஆள் நடமாட்டம் இல்லாத சாலைகள் ஊர் முழுவதும் மனிதர்களால் கைவிடப்பட்டதைப் போன்ற உணர்வை அவனுக்குத் தந்ததிருந்தது. திடீரென்று மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்கிறார்கள் என்ற உணர்வு அவன் அடிவயிற்றில் ஏதோ செய்தது. என்ன நடக்கிறது இங்கு?! யாரேனும் பெரிய தலைவர்கள் இறந்துவிட்டார்களா? சாதி, மதக்கலவரம்? இயற்கைப் பேரிடர்.. அப்படி இருக்க வாய்ப்பில்லை. பலவிதமான எண்ணங்கள் அலைமோத நடக்கத் தொடங்கினான்.


பதட்டத்தில் மூச்சு வாங்கியது. நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டால்தான் மேற்கொண்டு நடக்க முடியுமென்று தோன்றிய போது நிழலாய் இருக்குமிடத்தைத் தேடினான். வேப்ப மரமொன்று தெரிந்தது. அதன் அடியில் போய் நின்றுகொண்டான். நேரம் ஆக ஆக பயம் அதிகரித்ததேயொழிய குறைவதாயில்லை. அதைச் செய்து பார்க்கலாமா என்று யோசித்தான். எப்போது பதட்டமாய் உணர்ந்தாலும் அவன் செய்யும் ஒரு விசயம் குளியலறைக்குச் சென்று பேண்ட் ஜிப்பை அவிழ்ப்பதுதான். சுற்றி ஒருமுறை பார்த்தான். மெல்ல ஜிப்பைக் கீழே இறக்கினான்.


அப்போது எங்கிருந்தோ வந்து மண்ணென்னை வாசம் அடித்தது. அவனுக்கு ஒரு நொடி இதயம் நின்று மீண்டும் அடிக்கத் தொடங்கியது.


அந்த வாசம்… அதே வாசம். அன்றிலிருந்து அவனை விடாது தொடரும் வாசம். ஊரே தொலைந்து போனாலும் மறையாத வாசம். அவனின் கண்கள் கலங்கத் தொடங்கின. ஆறுதல் சொல்ல வந்ததோ அவனை மேலும் துன்புறுத்த வந்ததோ.. கிழக்கிலிருந்து மேற்காக பலமாக அடித்தது காற்று.

அன்று விளையாடிவிட்டு வந்தபோது வீட்டில் யாரும் இல்லை. தாகமாய் இருந்ததால் நேராக அடுப்படிக்கு ஓடினான். அவர்கள் இருந்தது ஐந்து வீடுகள் கொண்டு குடியிருப்பு. ‘ட’ வடிவில் இருக்கும் படிகளில் ஏறி முதல் தளத்திலிருக்கும் வீட்டிற்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் தாகத்திற்குத் தண்ணீர் குடிக்கப் போவார்கள்தான் என்பான். யாரிடமோ… அவ்வப்போது.. கீழே பேச்சு சத்தம் கேட்கவும் அம்மா இருக்கிறாளா என்று ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தான். அவன் வீட்டு அடுப்படியில் இருந்து பார்த்தால் கீழ்க் குடித்தனக்காரர்களின் பின்வாசல் தெரியும். காம்ப்பவுண்ட் சுவர் சுற்றி இருந்ததால் சில சமயம் கதவை மூடிவிட்டு பின் வாசலுக்கும் குளியலறைக்கும் நடுவில் இருந்த இடத்திலேயே அங்கிருந்த பெண்கள் துவைத்துக் குளிப்பர். அதை அன்றுதான் அவன் தெரிந்துகொண்டான்.


எப்போது அவனைப் பார்த்தாலும் முறைப்பதைப் போலவே முகத்தை வைத்திருக்கும் அந்தப் பெண்தான் துவைத்துக் கொண்டிருந்தார். அம்மா இல்லை என்றவுடன் திரும்பப் போனவன் ஏதோ யோசித்தவனாய் அங்கேயே நின்றான். முதல் தவறு எப்போதுமே தெரியாமல்தான் நடக்கும். அந்த தவறைச் செய்வதற்கு முன் ஒருநொடி அவகாசம் இருக்கும். அது நமக்கு கொடுக்கப்படும் வாய்ப்பு. துரதிஷ்டவசமாக அதை நாம் உணரும்போது பல தவறுகளுக்கு பழக்கப்பட்டிருப்போம். நம்முடைய எல்லா தவறுகளுக்கும் தண்டனைகள் உண்டு. அவற்றை அனுபவிப்பதன் மூலம் நம் பாவங்களைக் கழுவிக் கொள்ளலாம். ஆனால் அந்த முதல் நொடி.. எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் செலவழிந்து போகாமல் மிச்சமிருக்கும். அந்த நொடி உள்ள உடல்கள் புகையாமல் நின்று எரியும்.


அன்றிலிருந்து சரியாக இரண்டு மாதத்தில் அவள் இறந்து போனாள். ஒரு சனிக்கிழமை வழக்கம்போல் தண்ணீர் குடிக்கப் படியேறிக் கொண்டிருந்தவனுக்கு அந்த வாசம் அடித்தது. எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் அதே தளத்தில் இருக்கும் இன்னொரு வீட்டைப் பார்த்தான். பூட்டியிருந்தது. வீட்டிலும் கேஸ் அடுப்புதானே என குழப்பத்தோடு நின்று யோசித்துக் கொண்டிருக்கும் போது கீழ் வீட்டிலிருந்து “ஐயோ.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க” என அலறல் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து ஆட்கள் கத்திக்கொண்டே ஓடும் சத்தம்.


ரேசன் கடைக்குப்போய் இரண்டு லிட்டர் வாங்கி வந்து ஊற்றி கொளுத்திக் கொண்டிருக்கிறாள். கால்கள் நடுங்க நின்று கொண்டிருந்தவனைப் பார்த்து ஆட்டோ கூட்டிவரச் சொன்னார்கள். “சீக்கிரம் போடா நிக்காத” என்று விரட்டினார்கள். எதுவுமே காதில் விழாதவனாய், விழுந்தாலும் புரியாதவனாய் நின்று கொண்டிருந்தான். அவனின் பயத்தைப் புரிந்து கொண்டவர்களாய் வேறு ஒருவரை அனுப்பி அழைத்து வரச் சொன்னார்கள். கணவருடன் பிரச்சனை காரணமாக தீயிட்டுக் கொண்டாள் என்றார்கள். என்ன பிரச்சனை என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.

அவள் சீக்கிரமே செத்துப்போனாள். தெரியாமல் செய்து விட்டதாகவும், காப்பாற்றி வீட்டிற்குப் கூட்டிப் போகுமாறும், சாகும்வரை அவள் கேட்டுக்கொண்டே இருந்ததாக பேசிக் கொண்டார்கள். பஞ்ச பூதங்களில் நெருப்பு கருணைமிக்கது. அபயம் என்று வந்தவர்களை முழுதாக ஏற்றுக் கொண்டு விடும். அதே சமயம் அது கறாரான நீதிபதியும் கூட. அதன் நீதிமன்றத்தில் எப்போதும் ஒரே தீர்ப்புதான். குடியிருப்பில் ஒரே நாளில் இயல்பு நிலை திரும்பிவிட்டது. வழக்கமான அரட்டைகளும், முணுமுணுப்புகளும், சின்னச்சின்னச் சண்டைகளும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தன. அவன் மனம்தான் அமைதியடையவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவனுக்கு மண்ணென்னை வாசமும், மனித உடல் கருகும் வாசமும் வீசிக்கொண்டே இருந்தது.


***
அதற்கு மேல் அங்கு நிற்க முடியாதென்று ஓடத் தொடங்கினான். சீக்கிரமே மனிதர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றுவிட வேண்டும் என்று ஆவேசம் கொண்டான். மனிதக் குரல்களே கேட்க்காத இடங்கள் போடும் பிற சத்தங்கள் அவனால் கேட்க்க முடியாதவையாக இருந்தன.


வழியெங்கும் யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டே ஓடினான். பயணத்தில் தன் பக்கத்து இருக்கைகளில் ஆட்கள் இனி இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே ஓடினான். பாடல்கள் கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டே ஓடினான். மன்னித்தேன் என்று வாய்விட்டு சொல்லும் கடவுள்கள் இருக்கும் கோவிலுக்குத்தான் இனி போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டே ஓடினான். வீட்டில் அம்மா இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே ஓடினான்.


நினைவின் ஆழங்களில் புதையுண்டிருந்த, பேசி வருடங்கள் ஆகியிருந்த நண்பர்கள் அவன் நினைவுக்கு வந்தனர். தான் காதலித்த பெண்ணை அபகரித்துச் சென்ற துரோகி நினைவுக்கு வந்தான். வீடு மாறும்போது விட்டுவிட்டு வந்த ‘மது’ நினைவுக்கு வந்தது. “மது.. மது.. என்னை மன்னித்து விடு மது.. எவ்வளவு சொல்லியும் வீட்டில் யாரும் கேட்கவில்லை மது.. எல்லா வீட்டுச் சொந்தக்காரர்களும் உன்னை வளர்க்க அனுமதிக்க மாட்டார்கள் என்று சொன்னார்கள் மது.. நீ எங்கு இருக்கிறாய்.. இருக்கிறாயா.. நீயாவது என்னை மன்னிப்பாயா…”


அவன் தெருவை நெருங்கினான். அவனை அறியாமலேயே வாய் முணுமுணுக்கத் தொடங்கியது. “இருக்கணும்… இருக்கணும்…இருக்கணும்” அவன் தெருவும் அமைதியாகத்தான் இருந்தது.

நெருக்கி நெருக்கி கட்டப்பட்டிருந்த எல்ல வீடுகளும் பூட்டித்தான் கிடந்தன. ஒற்றை வீடுகளும், அடுக்குமாடி வீடுகளும், எல்லாமும் தலைகீழாய் கவிழ்த்துப் போட்டதுபோல் தோன்றின. சில வீடுகள் முன் வைக்கப்பட்டிருந்த பூச்செடிகள் காய்ந்து போயிருந்தன. எப்போதும் சுற்றித்திரியும் பசுக்களைக் காணவில்லை. பசுக்கள் எல்லாம் சின்ன வயதிலேயே இறந்துபோன கன்னிப்பெண்கள் என்று அவன் பாட்டி சொன்ன கதை நினைவுக்கு வந்தது. உலகமே எதிர்த்தாலும் பெற்ற தாயின் அன்பும், பசுவின் ஆசியும் இருந்தால் உனக்கு ஒன்றும் ஆகாது என்றவள் சொன்னது நினைவுக்கு வந்தது. கூடவே தற்கொலைச் செய்துகொண்டப் பெண்கள் என்ன ஆவார்கள் என்கிற கேள்வியும் வந்தது.


“எல்லாரும் எங்கே போய்த் தொலைந்தீர்கள்..” அவன் கண்களில் ஈரம் காய மறுத்தது. தெருவின் கடைசியில் இருக்கும் அவன் வீட்டை நெருங்கினான். வீட்டிற்கும் அவனுக்கும் ஒரு பத்தடி தூரம் இருக்கையில் கண்களை இறுக்க மூடிக்கொண்டான். அது அவன் பழக்கம். எப்போதெல்லாம் அவனால் தன் பயத்தை அடக்கிக் கொள்ள முடியவில்லையோ, எப்போதெல்லாம் காலம் நகர மறுப்பதாய் நினைக்கிறானோ, எப்போதெல்லாம் நடப்பவை தன் சக்திக்கு மீறி நடக்கிறது என்று நினைக்கிறானோ அப்போதெல்லாம் கண்களை இறுக்க மூடிக்கொள்வான்.

மூடிய கண்களைத் திறந்து பார்க்கும்போது எல்லாம் சரியாகியிருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வான். வீடு வந்திருக்கும் என்று தோன்றிய போது கண்களைத் திறந்தான். அவன் வீடும் பூட்டியிருந்தது. ஆனால் அவனையே பார்த்துக்கொண்டு வீட்டின்முன் ஒரு நாய் நின்று கொண்டிருந்தது. “மது…” என்று கத்திக்கொண்டே ஓடிப்போய் அதைக் கட்டிக்கொண்டு கதறி அழ ஆரம்பித்தான்.

சங்கர் – சொந்த ஊர் திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகிலுள்ள காணக்கிளியநல்லூர். சென்னையில் வசிக்கின்ற இவருக்கு இதுவரை 6 கதைகள் வெளியாகியுள்ளன – தொடர்புக்கு -narayanan.sangara@gmail.com

அத்தியழல் – 01

1

(வலியும் நோய் தடமும்)

  • ஷக்தி

நாளை நுகர இயலாமல் கூட போகலாம்

நான், வெஞ்சுடர்
மரபுக்கு புறம்பாக சிவந்ததை பார்க்கிறேன்
என் தலை, அதனுள் அதீத பாரம்
அபரிமித இனம்புரியா வலி
ஒரு பாரிய உடல் உதறல்
இடையீடு செய்யும்படி
சளியும் ரத்தமும் வெளியேறுகிறது
அப்படி நிகழ்ந்ததிலிருந்து,
என் வயிறும் அதன் இடையறா வலியும்
நிஜம் எப்படியிருக்கிறதென்றால்,
உடலை விட மன உளைவு
இனம் புரியா ஆனால் உறுதியான
என் நோவுக்கெதிராய்
எதிர்ப்பு சக்தி உயிருக்காய் போராடுகிறது

உறுதியாய்
அந்த நிர்மல வான் ஒளியை தன் வழியில்
ஒளிர்விக்கிறது
வலப்புற தொண்டைக்குள் எரிவளி
விடுபடும்படி வலி
நான் பிணியாளி.
சட்டென சுவாச வெப்பத்தில் சாகும்
வைரஸ் கற்பனைக்கப்பாற்பட்டு
சுவாச நாளங்களில் நீந்துகின்றன.
விரைவுபடுத்திக் கொண்டு
உடற்தொகுதியை சிதைக்கிறது
தெள்ளத்தெளிவாக சுவாசிக்க முடியவில்லை.
தனித்திருக்கிறேன்
நோவெடுத்தவள்
தவிக்கும் படியான பேரச்சம்

சர்க்கரைக்கு மீந்து நொதித்த
மென்மையான இந்த உடலை
உடல் வெப்பநிலை சீராக்கும் மாத்திரைகள்
உயிரின் வேர்களை
வியர்த்திருக்க வைக்கின்றன
உடலுறுப்புகள் பாழாகாதிருக்க
அறிவுரைகள் சொல்லியும்
பிரஞ்சு ஏகாதியபத்திய
மரண எண்ணிக்கைகளை சொல்லியும்
உயிரின் அணுத்துகளில்
பதட்டம் கூட்டுகிறார்கள்
மலேரிய மாத்திரைகளை
மிரட்டி பறிக்கும்
உலகின் சுழற்சியில்
காலைக்கிளிகளின் சப்தங்களின் ஊடாக
விழிக்கவே செய்கிறேன்

இடுப்பு எலும்புகள் நோக
உடன் நடக்கும் நாய்களும் ஒய்வில்
எழுதும் அறையின்
வெளிவட்ட சுழல் பாதையில்
பூத்திருந்த செம்பருத்திகளுடன்
குரைத்து கொண்டிருக்கிறது
வாசிப்பின் புனித பயணத்தில்
மார்க்ஸின் ‘தத்துவத்தின் வறுமை’
இன்னும் முடிக்காமலிருக்கிறது
கிழிந்த கருப்பு சட்டையை
தைக்க வேண்டும்
இந்த இரவில்

கவனி
நாளை நுகர இயலாது கூட போகலாம்
ஒரே ஒரு நம்பிக்கை
இந்த வாழ்பனுபவங்களோடு
கசந்த ஒருவனை கட்டியெழுப்பிய
பிரித்தறியும் அறிவுடையவன்
சக மனிதர்களே வாழ்வென
வாழ்ந்ததே தெய்வீகமானதெனில்
அவ்வாறானது ஒரு போதும்
மீளாது போகாதென கருதலாம்.

***

‘பிளாசிபோ விளைவு’ (Placebo effect) என்பது மனித வாழ்வுடன் ஆழமான தொடர்புடையதும், அத்தியாவசியதுமாக பலருக்கு நிகழ்வதும் கூட. நோய் சரீர ரீதியிலான உடல் உறுப்புகளில் நிகழும் மாற்றத்தின் அடிப்படையில் மட்டும் வருவதில்லை. உளவியல் ரீதியான காரணங்கள் ஒரு நோயை அப்படியே நோயாக இருக்க வைத்திருப்பதற்கு பதிலாக மனிதனின் அசாத்திய நம்பிக்கைக்கு ஒரு வலு இருப்பதை அவை மெளனமாக சில சமயங்களில் பயன்படுத்தி கொள்கின்றன.


ஒரு இசைக்கலைஞனின் இசையை ரசிக்கும் மனநிலையில் ஒருவன், ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் ஒருவன், முற்றிலுமாக வெறுக்கக் கூடியதுமான மனநிலையில் மற்றொருவன் என இருப்பதைப் போல இந்த நோய்மைக்கும் காலப்பயிர் போல ஒருவகை விநோதம் நிலவி நிற்பதை இந்த ‘பிளாசிபோ விளைவு’ தெளிவாக்கலில் பார்க்கலாம்.

ஒருவனுக்கு மருத்துவ உதவி தேவைப்படும்படியான காய்ச்சலுக்கான தீர்வாக இரண்டு வாய்ப்புகள் இருக்கிறது
ஒன்று; ஒரு பாராசிட்டாமல் உதவியுடன் இருந்து விடுவதென அவன் விரும்புதல். இரண்டு; ஒரு மருத்துவரின் அறிவுரை அல்லது மருத்துவ உதவியுடன் தான் மீள முடியுமென்ற சூழல்.


இதில்தான் உறுத்தலற்ற மனஈர்ப்பு என்ற ஒன்று இருக்கிறது.
நமக்கான மருத்துவம் ஒன்றுதான். ஆனால் இதில் அவசியமான நமது தேர்வு என்ற ஒன்று இருக்கிறது. நமக்கான ராசியான மருத்துவர், சமயங்களில் மருத்துவமனையும் இருக்கிறது. மருந்து சந்தையில் பதினேழு வகையான ஒரே நிறை கொண்ட காய்ச்சல் மாத்திரைகள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒன்றைத் தவிர்த்த மற்றொன்றின் மீது விமர்சனமும் உண்டு. விரும்பும் பெயர் கொண்ட மாத்திரையை தவிர மற்றொன்றின் மீது கடும் விமர்சனம் வைக்கிறவர்களும் உண்டு. வலி நீக்கிகளில் கூட பிடித்தமானதையே பரிந்துரைக்கும்படி கேட்கும் நோயாளிகளை பார்த்திருக்கிறேன்.

எப்பொழுதும் உடன் மாத்திரைகளை வைத்திருப்பவர்களும் உண்டு,
ஒரு விபத்தால் ஆழமான பயத்திற்க்கு உட்பட்டவருக்கு சீரான இரத்த ஒட்ட, மன இலகுவாதல் இரண்டுக்கும் அத்தியாவசியதுமான மருந்துகளை எடுத்துகொள்வதன் மீது உவப்பற்று ஒரு தாயத்து கட்டிக்கொள்பவரை பார்க்கிறோம். வாரம் முழுவதும் காய்ச்சலில் கிடந்தவன் கோவிலுக்கு வேண்டிக் கொண்டதால் குணமாகுவதும் அப்படி ஒருவகை தான்.


சிலருக்கு ஒரு ஊசி அவசியம். நோய் வாய்ப்பட்டதும் அந்த ஊசி போடும் தருணத்தின் மீது காதல் உருவாகிவிடும். காய்ச்சல் வந்தாலும் வரலாம் என கிராமங்களில் ஊசி போட வருவதுமுண்டு. இதை ஒருவகை சிக்கலான, இல்லை இல்லை அதீதவகைக் காதல் எனலாம். இவ்வகை குணமாதலை தான் மருத்துவம் ‘மருந்துப்போலி விளைவு’ (Placebo effect) என்கிறது.


ஒரு நோயிலிருந்து மீள மருந்துகள் மற்றும் மருத்துவர்களை விட நம் மனம்தான் பெரும்பங்காற்றுகிறதென்பது அடிப்படை உண்மை. மனிதன் தன் நம்பிக்கைக்கு அசாத்திய வலு இருப்பதை உணர்ந்திருப்பதன் மூலம் ‘பிளாசிபோ விளைவு’ சாத்தியமாகிறது.
எந்த இயக்கத் திறனுமற்ற மருந்துகளால் உயிர்த்துடிப்புள்ள இந்த பிரபஞ்சத்தில் கணிசமானோர் குனமாகிறார்கள். இதில் தவறான அல்லது பொய்யாக லாப நோக்கில் தரப்படும் மருந்துகள் என்றெல்லாம் எதுவும் இல்லை அதேசமயம் மருந்துப்போலி விளைவென்பது குருட்டடியாக ஏற்படும் தாக்கமும் கிடையாது. சிக்கலான மோசடியோ அல்லது தந்திரமுமல்ல.
மருத்துவ குணம் இல்லாத மருந்தை போன்ற ஒன்றை எடுத்துக் கொண்டதும் இந்த மருந்தே எல்லாவற்றையும் சரிசெய்து விடும் என்கிற நம்பிக்கையால் ஏற்ப்படும் தாக்கமானது மூளைக்குள் ஒருவித வேதியியல் மாற்றத்தை உண்டாக்கி விடுகின்றது. ‘பிளாசிபோ விளைவு’ உண்டாவதற்கு ஒருவன் நோய் பீடிப்புக்கு உள்ளாக வேண்டிய அவசியமெதுவும் இல்லை.


ஆல்கஹால், தூக்கமூட்ட எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் போன்றவை எடுத்துக் கொள்கிறவருக்கு அவை எதிர்பார்க்கும் தாக்கத்தை ஏற்ப்படுத்தலாம். கலப்பட மதுபானங்களின் மீது அதிகரிக்கும் ஈர்ப்புக்கும், அதைப் பருகியவர் போதை அடைவதும் இந்த ‘மருந்துப்போலி’ விளைவால் தான்.


ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை இருப்பதைப் போல மருந்துப்போலி விளைவுக்கும் ஒரு எதிர் விளைவு உண்டு.
எந்த மருந்தை உட்கொண்டாலும் சிலருக்கு பக்க விளைவாக தலைசுற்று, தலைவலி அல்லது வாந்தி போன்றவை ஏற்ப்படுவதுண்டு இது நொசீபோ விளைவு (Nosebo effect) எனப்படுகிறது.

  • ஷக்தி – மருத்துவத்துறையில் பணியாற்றி வரும் ஷக்தி, துறை சார்ந்த கவிதைகள் வாயிலாக அறியப்பட்டவர். மூன்று கவிதைத்தொகுப்புகள் ஒரு நாவல் என இதுவரை வெளிவந்துள்ளன. தொடர்புக்கு – shakthipoet@gmail.com

2. ச்சை

0
  • முன்பொரு காலத்தில் ஒரு மந்திரவாதி – 02
  • கதை : பாபாகா ; ஓவியம் : கணபதி சுப்ரமணியம்

முன்பொரு காலத்தில் ஒரு மந்திரவாதி ஒரே ஒரு மந்திரத்தை மட்டும் சரியாக கற்று வைத்திருந்தான்.

அந்த மந்திரத்தை எதைப்பார்த்து அவன் சொன்னாலும் அது பச்சையாக மாறிவிடும்.

அந்த சொற்ப மந்திரம் தந்த புளகாங்கிதம் வாழ்க்கை சக்கரத்தில் போகிறதா சறுக்கிக்கொண்டு போகிறதா என்று புரியாமல் அவனை நகர்த்தியது.அவன் சொந்த ஊரின் தலையாரியைப் பச்சையாக மாற்றிய போது அவன் உயிருக்கு பயந்து தப்பித்து தேசாந்திரியானான்.

பொழுது போகாத போதும், அவன் மந்திரவாதியா என்று அவனுக்கே சந்தேகம் எழுந்த போதும் மந்திரத்தை பிரயோகித்து எதையாவது ஒன்றை பச்சையாக்கிவிடுவான்.

சில காடுகளில் சில சிங்கங்களும் கரடிகளும் கூட அவனது கைங்கரியத்தால் பச்சையாகத் திரிந்தன.

இதையே அச்சாணியாகக் கொண்டு சின்னச்(சின்ன) சித்து வேலைகள் செய்து பிழைப்பு நடத்தி வந்தான்.

சில நேரத்தில் கடலையும், ஆறுகளையும், மலைகளையும், நிலவையும் ,சூரியனையும் பார்க்கும் போது அவற்றை பச்சையாக மாற்றலாம் என்று நா துடிக்கும்.

தனக்கென்று அவன் வைத்துக் கொண்ட அறத்தின் கட்டுபாட்டால் அத்தகைய எண்ணங்களைக் கடந்தான்.

பிறகு வாழ்க்கை சலித்து முறையாக ஒரு குருவிடம் கற்று குச்சிகளை குறுக்கேந்தி நீரூற்று கண்டுபிடிக்கும் வித்தையை(க்) கற்றான்.

ஓரளவு பணமீட்டி ஒருத்தியை மணந்தும் கொண்டான்.

ஒரு நாள் அவளுடன் கிராமம் விட்டு கிராமம் பிரயாணிக்கையில்

‘என்ன பொழப்பிது’ என்று அவள் கடிந்து கொண்டே வந்தாள்.

அப்போது அவர்கள் கடந்து சென்ற வில்வ மரத்தின் மேல் ஏதோ அசைந்து கொண்டிருந்தது.

உற்றுப்பார்த்த போது தான் தெரிந்தது அது பச்சை நிறத்தில் தலையாரி என்று.

அவருடன் சிறிது நேரம் அவன் பேசிக்கொண்டு நின்றான்.

பயத்தில் முகம் வெளிறி நின்ற அவன் மனைவி மந்திரவாதியை பிறகு விசாரித்த போது ,

ஒரு பச்சைக் கூழாங்கல்லை அவளிடம் நீட்டினான்.

‘என்றைக்கு இப்படி ஆயிரத்தியோரு கூழாங்கற்கள் உனக்கு கிடைக்கிறதோ அப்போது ஒரு பெரும் புதையலை நீ அடைவாய்’

என்று அந்த பச்சை தெய்வம் கூறியதாக கூசாமல் பொய் சொன்னான்.

***

கருத்துகளுக்கு :

கதை : பாபாகா – albenizme@gmail.com

ஓவியம் : கணபதி சுப்ரமணியம் – gpathy@yahoo.com

வல்லூறின் நிழல்

0

குமார நந்தன்

நீர் நிறைந்த அல்லது காலி பிளாஸ்டிக் குடங்களோடு பிரதான சாலையில் மேகலா நடந்து கொண்டிருப்பதை, இந்த சிறிய நகரத்துக்கு மாலை நேரத்தில்  நீங்கள் வர நேர்ந்தால் பார்க்கலாம். பல ஆண்டுகளாக இங்குள்ள உணவகங்கள், தேநீர் விடுதிகளுக்கு தண்ணீர் எடுத்து ஊற்றும் வேலையை அவள் செய்து வருகிறாள். அவள் நடையில் ஒரு இயந்திரத்தனமான வேகம் இருந்தாலும் ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டிருப்பதைப் போல இடதுகையில் சிவப்பு பச்சை நீலம் என அடர்ந்த நிறமுடைய குடத்தை வளைத்துப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கும் வலது கையை ஒயிலாக அசைத்தபடி செல்வதை புன்னகையின்றி பார்ப்பது கடினம்.

அந்தக் கடைவீதி மற்றும் ஊரின் விளிம்பு பகுதியில் என, ஊரில் அந்த வாரத்தில் மூன்று திருட்டுகள் நடந்திருந்தன. முதலாவதாக ஊரில் உள்ள ஒரே ஒரு சூப்பர் மார்க்கெட்டான கிருஷ்ணா சூப்பர் மார்க்கெட்டில், பின்புறம் உள்ள தென்னந்தோப்பை ஒட்டியுள்ள சுவரில் வைக்கப்பட்டிருந்த வெப்பம் வெளியேற்றும் மின்விசிறியை அகற்றி திருடன் உள்ளே நுழைந்திருந்தான். (ஒருவரா, பலரா (எனத் தெரியவில்லை) கடையில் பணம் எதுவும் வைக்கப்பட்டிருக்கவில்லை. பள்ளிக்கூடத்திற்கு அருகே இருக்கும் பெட்டிக்கடைக்காரரிடம் இருந்து ஐயாயிரம் ரூபாய்க்கு சில்லறை வாங்கி கல்லாப்பெட்டிக்கு கீழே வைக்கப்பட்டிருந்தது. அந்த சில்லறை மூட்டையைக் காணவில்லை. முந்திரிப்பருப்பு பாக்கெட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. இன்னும் வேறு என்னென்ன திருடு போயிருக்கிறது என கணக்கெடுத்தார்கள். கடைசியில் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு மளிகைப் பொருட்கள் திருடு போயிருப்பதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கடையில் வந்து குவிந்து கொண்டே இருந்ததால் அங்கு பல கதைகள் திடீர் திடீர் என உயிர்பெற்று உலவ ஆரம்பித்தன. கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டிருப்பதாகவும் வசூல் பணம் லட்சக்கணக்கில் அதில் இருந்ததாகவும் உண்மையான தொகையைச் சொன்னால் கணக்குக் காட்ட வேண்டி வரும் என்பதால் பணம் எதுவும் திருட்டுப் போகவில்லை என கடைக்காரர் சொல்வதாக பேசிக் கொண்டார்கள்.

சிலர் சில்லறை மூட்டை வைத்திருப்பதாக சொல்வது பொய் என்றார்கள். கடையில் சிசிடிவி கேமரா வசதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடையை மூடிவிட்டு போகும்போது கேமராவை அணைத்து வைத்துவிட்டுப் போவதுதான் வழக்கம் என கடைக்காரர் சொன்னபோது போலீசார் நொந்து போனார்கள்.

இது முடிந்த இரண்டாவது நாள் ஞாயிற்றுக்கிழமை. கூடையில் பழம் விற்கும் கனகா வெயிலில் வீதியெல்லாம் அலைந்து திரிந்து ஆப்பீ..ள் பழ…ம் திரா…ட்சைப் பழ…ம் என கூவிக்கூவிக் களைத்தவளாய் முதலியார் கடையில் டீ குடிக்க சென்று கொண்டிருந்தாள். ஞாயிற்றுக்கிழமையின் வழக்கப்படி அன்று வியாபாரம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஏறு வெயில் காந்தலடித்தது. பசி மயக்கத்தில் தலை சுற்றியது. (அதிகாலையிலேயே மார்க்கெட்டுக்குப் போய்விட்டு வந்து, ஒரு சுற்று வியாபாரத்தை முடித்துக் கொண்டு, மதியம் சாப்பிடுவதுதான் எப்போதுமே அவள் வழக்கம்) கைவிரல்களை விரித்து விரித்து விட்டாலும் கொறக்களி பிடித்துக் கொண்டு மடங்கிக் கொண்டு போனது. தாங்க முடியாத வலியோடு ஒரு கை விரல்களை இன்னொரு கையால் விரித்து விட்டுக் கொண்டு போனவளை பைக்கில் வந்த இளைஞன் ஒருவன் நிறுத்தினான்.

அக்கா என்னா பழம் வச்சிருக்க?

ஆப்பிள், திராட்சை, மாதளம்பழம் இருக்குது. அவள் கண்களில் ஒரு நப்பாசை.

மாதுளம்பழம் ஒரு கிலோ வேணும். ஐநூறு ரூபாய்க்கு சில்லறை இருக்குதா என்றான். அவன் பின்னால் ஒருவன் உட்கார்ந்திருந்தான். இருவரும் நல்ல உடை தரித்திருந்தார்கள். நம்பிக்கையாகவும் நெருக்கமாகவும் உணரும்படி சிரித்துக் கொண்டிருந்தார்கள். கனகா சிரித்துக் கொண்டே சுருக்குப் பையை எடுத்து பணம் எவ்வளவு இருக்கிறது என நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து எண்ணிக் கொண்டிருந்தாள். முன்னால் இருந்தவன் சட்டென அவளிடமிருந்த பணத்தைப் பறித்தான். பைக் சீறிப்பாய்ந்து கொண்டு சென்றது. கனகா வெறிபிடித்தவள் மாதிரி தன்னை மறந்து அலறினாள். என்ன நடந்தது என அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவள் தலையிலிருந்த கூடை சரிந்து விழுந்து பழங்கள் சாலையில் உருண்டன.  அலறலைக் கேட்டவர்கள் யாரோ அவளை கத்தியால் குத்திவிட்டு போகிறார்கள் என்றுதான் நினைத்தார்கள். திருடர்களை விரட்டிப் பிடிக்க சிலர் முயன்றார்கள். ஆனால் அவர்கள் தப்பிவிட்டார்கள். கனகா  அடிபட்ட விலங்கைப் போல சாலையில் இங்கும் அங்குமாய் நடந்தபடி வெகுநேரம் கதறிக் கொண்டிருந்தாள்.

லட்சுமியின் வீடு மாரியம்மன் கோவில் தெரு, கெனால் தெருவைத் தாண்டி தனியாக இருந்தது. அது அவள் கணவன் ரங்கமுத்துவின் பூர்வீக நிலம். அவன் ஒரு லாரி டிரைவர். பஞ்சாப், அசாம் என சரக்குகளை வெகு தொலைவுக்கு எடுத்துச் செல்பவன். ஒருமுறை வண்டி ஏறினால் இறங்க ஒரு மாதம் ஒன்றரை மாதம் கூட ஆகும். லட்சுமி ஒரு வாயில்லாப் பூச்சி. கணவனின் உயிரைப் பற்றியே எப்போதும் அவளுக்கு கவலையாக இருக்கும். எங்காவது விபத்து நடந்துவிட்டால்? அவனுக்கு நல்ல சம்பளம் தான். ஆனால் எல்லாவற்றையும் குடித்தே தீர்த்துவிடுவான். குடியினால் அவன் உருக்குலைந்து கொண்டு வருகிறான். கொஞ்சம் குடித்துவிட்டுதான் லாரி ஓட்டுகிறான். எப்போது வேண்டுமானாலும் அவன் வேலை பறிக்கப்படலாம் என்ற நிலையில் லட்சுமி கடைகளில் பாத்திரம் தேய்க்கப் போகிறாள்.

அவள் சின்னதாக ஒரு ஆட்டுக்குட்டி வாங்கியிருந்தாள்.அடுத்த வருடம் மாசி மாத பண்டிகையில் கெடா வெட்டி பொங்கல் வைப்பதாக காளி கோவிலில் வேண்டிக் கொண்டு நேர்ந்துவிட்டிருந்தாள்.

கடை பாத்திரம் தேய்க்க சாயந்திரம் போவாள். அதுவரை ரயில்ரோட்டைத் தாண்டி உள்ள கொரங்காட்டில் ஆட்டுக்குட்டியை மேய்ச்சலுக்கு விடுவாள்.கடைகளில் இருந்து கொண்டு வரும் மாவுத்தண்ணியை ஊற்றி வளர்ப்பதால் ஆடு கிடுகிடுவென வளர்ந்து வந்தது.

திமிரும், மதர்ப்பும் கொண்ட அந்த ஆட்டிடம் கெனால் தெருக்காரர்கள் வாக்கு கேட்டார்கள். வீட்டுல ஒரே கஷ்டம் சாமி. இங்கியே இருக்கலாமா? வெளியூருக்கு போகலாமா? இல்ல வேற ஊடு மாத்தலாமா? வாக்கு சொல்லு சாமி என்பது போன்ற முடிவுகளுக்கு கடவுளின் மனதை அறிய வேண்டி, ஆட்டின் காலைக் கழுவி பூ வைத்து சூடம் ஏற்றி நின்றார்கள்.

வெள்ளிக்கிழமை இரவு அந்த ஆடு காணாமல் போய்விட்டது. ஆட்டை வீட்டு வாசலில் இருக்கும் புங்க மரத்தில்தான் கட்டி வைத்திருப்பாள். மழை வந்தால் அவிழ்த்து வீட்டுக்குள் விட்டுக் கொள்வாள். (அதற்குள் அது இரண்டு சட்டியையாவது உடைத்துவிடும்)

ஊரில் ஆடு காணாமல் போவது அடிக்கடி நடந்தாலும் ஊருக்கே தெரிந்த சாமி ஆட்டை யார் திருடிக்கொண்டு போகப் போகிறார்கள் என அவள் அசட்டையாய் இருந்தாள். அன்று காலை ஆடு இருந்த இடம் சூனியமாய் இருந்ததைப் பார்த்ததும் லட்சுமிக்கு திக்கென்றது. சாமியாட்ட யாரு திருடிகிட்டுப் போயிருப்பாங்க? இனி வேண்டுதலை எப்படி முடிப்பேன். காளியின் சிவந்து தொங்கும் நாக்கு மனதுக்குள் அசைந்தது. அவள் தலையில் இரண்டு கையையும் வைத்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுதாள்.

விஷயம் கேள்விப்பட்டவர்கள் காளியாயிக்கி நேந்துவிட்ட ஆட்டையே திருடிகிட்டு போயிட்டானுங்களா? என்ன அக்குருமம்., அவனுங்க வௌங்க மாட்டானுங்க.. ரத்த ரத்தமா கக்கி சாவானுங்க.. பேதியில போயிடுவானுங்க.. அவன் குடும்பம் அழிஞ்சி கட்ட மண்ணா போயிரும்.. லட்சுமி நீ வேண்ணா பாரு இன்னும் நாளு நாளையில அவனுங்க அழிஞ்சி போயிட்டானுங்கன்னு உனக்கு சேதி வரும்.. கண்டிப்பா நடக்கும் பாரேன்.. நம்ம ஊரு காளியாயிக்கி அவ்வளவு சத்தி தெரியுமா? சும்மா அழுதுகிட்டே ஒக்காந்திருக்காம போயி போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் குடு என துரத்திவிட்டார்கள்.

லட்சுமி போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் போனதே இல்லை என்றாலும் ஒருவேளை ஆடு திருடனவன எங்கியாவது பாத்து கண்டுபிடிச்சி வச்சிருந்தாலும் வச்சிருப்பாங்க என்ற நினைப்பில் போனாள்.

ஸ்டேஷன் சுற்றுச்சுவர் அருகே இருந்த சீமை வாதனா மரத்தடியில் பேந்த பேந்த விழித்தபடி நின்றுகொண்டிருந்தாள். மரத்தில் க்விக் க்விக் என ஏதோ ஒரு குருவி கத்திக் கொண்டிருந்தது.

நல்ல குண்டாக இருந்த போலீஸ்காரர் ஒருவர் இந்தாம்மா உனக்கு என்ன வேணும் என ஸ்டேஷன் நுழைவாயில் அருகே நின்று கொண்டு சத்தம் போட்டார். லட்சுமி உள்ளே போய் விசயத்தை சொன்னாள்.

எத்தனை ஆடு?

ஒரு ஆடுதாங்க, சாமிக்கு வேண்டி விட்டது.

ஆட்ட எங்க கட்டியிருந்த?

வீட்டுக்கு வெளியில தாங்க

தெருவுல

….

ஏம்மா நீயெல்லாம் ஆடு வளக்கலயின்னு யாரு அழுதா? தெருவுல கட்டி வெச்சிகிட்டு ஆடு வளக்கறது மாடு வளக்கறது அப்புறம் காணாம போயிடுச்சின்னு வந்து நிக்கறது. ஏம்மா இதாம்மா எங்க வேல? அந்த ஆடு இன்னமா இருக்கும் அது இந்நேரம் எத்தன வூட்டு மசாலாவுல கொதிக்கிதோ போம்மா போயி உருப்பிடியா எதாவது வேலை இருந்தா பாரு என்றார்.

லட்சுமிக்கு அழுகையாய் வந்தது.

அப்போது இன்னொரு போலீஸ்காரர் வந்து சார் திருட்டு போன மளிகை கடையில பத்து நாளா சந்தேகப்படறாப்ல நடமாடிகிட்டிருந்தவங்களோட வீடியோவ சிசிடிவியில இருந்து எடுத்து வச்சிருக்காங்கலாம் என்றார்.

சரி நான் போய் பாத்துட்டு வர்றேன் என கிளம்பியவர் லட்சுமியை மீண்டும் திரும்பிப் பார்த்து போம்மா போம்மா என சொல்லியபடியே வெளியேறிச் சென்றார்.

பகலில் வெயில் அதிகமாக இருந்ததால் மேகலா சாயந்திரத்திற்கு மேல்தான் எல்லா கடைகளுக்கும் தண்ணீர் எடுத்தாள். இந்த திருட்டுகளுக்குப் பின்னால் போலீசார் ரோந்து அதிகமாய் இருந்தது. கடைகளை நேரமாக மூடச்சொல்லி சத்தம் போட்டார்கள்.

தண்ணீர் எடுக்கும் மேகலாவை பிரம்பைக் காட்டி மிரட்டினார் பைக்கில் வந்த போலீஸ்காரர்.

இரண்டு நாட்கள் கழித்து அவர் ஏம்மா சொன்னா கேக்க மாட்டியா? காலையில தண்ணி எடுக்கலாமில்ல என பரிவோடு கேட்டார். காலையில பிள்ளைய ஸ்கூலுக்கு அனுப்பனுங்க. அப்புறம் வெயிலு வந்துருது அதனாலதாங்க.

உங்க ஊடு எங்க இருக்குது,

எதுக்குங்க

சும்மாதான் கேட்டேன் பத்திரமா போ என்றுவிட்டுப் போனார்.

மேகலாவுக்கு யோசனையாக இருந்தது. இந்த போலீஸ்காரன் எதுக்கு இப்பிடி மோப்பம் பிடிச்சிகிட்டு அலையறான். அவருக்கு தெரிஞ்சா என்னையில்ல போட்டு மிதிப்பாரு என யோசித்தாள். அவள் வீட்டுக்காரன் ராசு சின்ன சரக்கு வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான். அதில் ஒருமுறை பன்றிகளை ஏற்றிக் கொண்டு போக மற்ற வாடகைகள் நின்று போய்விட்டன. சந்தையில் பன்றிக்கறி போடுபவர்கள் ரெகுலராக அவன் வண்டியை வாடகைக்குப் பேசுவதால் அவனும் சரி என்று விட்டுவிட்டான். இதனால் அவன் பெயர் பன்னி வண்டி ராசு என்றாகி கடைசியில் பன்னி வண்டி என்று நிற்கிறது (அக்கம்பக்கத்தில் அவனை பன்னி ராசு அல்லது பன்னி என்றுதான் அழைக்கிறார்கள்)

பன்னி ராசுவும் குடிகாரன்தான். குடித்துவிட்டு வந்து குத்தி கொன்னுடுவேன் கொடலை உருவிப்புடுவேன் என பயங்கரமாய் கத்துவான். உண்மையில் மிகுந்த பயந்த சுபாவம் உடைய அவன் இதுவரை யாரையும் ஒரு அறை கூட விட்டதில்லை. அவன் அடிக்கும் ஒரே ஒரு ஜீவன் மேகலா. அவனுக்கு விசயம் தெரிந்தால் தண்ணி எடுக்க வேண்டாம் என சொல்ல மாட்டான். ஆனால் இன்னும் நாலு மிதிகள் சேர்த்து விழுவது உறுதி.

என்ன செய்யலாம் என யோசித்தபடி டிவியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தாள். நேரம் இரவு பதினொரு மணி. தூக்கம் வரவில்லை. யாரோ கதவைத் தட்டினார்கள். இந்த நேரத்தில் யாராய் இருக்கும் என யோசித்த மேகலாவுக்கு போலீஸ்காரரின் முகம் ஞாபகத்துக்கு வந்தது. கதவைத் திறக்கப் போகும் முன் ராசுவைப் பார்த்தாள். அவனும் அவன் பக்கத்தில் மகள் பவானியும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.

கதவைத் திறந்ததும் ஒரு பையனும் பெண்ணும் நின்றார்கள். அவன் அவள் அண்ணன் மகன் வேலு. என்னடா இது இந்த நேரத்தில உள்ள வா என இருவரையும் உள்ளே அழைத்தாள். அத்தை இந்தப் பொண்ணு பேரு கரிஷ்மா நாங்க ரொம்ப நாளா காதலிக்கிறோம். உங்க அண்ணனப் பத்திதான்  உனக்குத் தெரியுமே. அவரு எங்கே எங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கப் போறாரு. அதான் கூட்டிகிட்டு வந்துட்டேன் என்றான். அவன் கையில் சிறிய மஞ்சள் பை ஒன்று மட்டும் இருந்தது.

மேகலாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அது சரிடா கண்ணு அதுக்குன்னு இந்த நேரத்தில இங்க வந்தா நான் என்ன பண்ணுவேன் என்றாள்.

இன்னைக்கி ராத்திரி மட்டும் இருந்துட்டு காலையில போறோம் என்றான் வேலு. மேகலா அவர்களுக்கு படுக்கையை தயார் செய்தாள். சின்ன வீடு. ஒரே அறை. மேகலா சங்கடமாய் அவனை திரும்பித் திரும்பிப் பார்த்தாள். அவர்கள் இருவரும் அமைதியாய் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

காலையில் இருள் பிரியும் முன்பே இருவரும் எழுந்து அவளை எழுப்பி சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டதால் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.

மேகலா சமையல் வேலையை ஆரம்பித்துவிட்டு பவானியை எழுப்பி குளிக்க வைத்து பள்ளிக்கு தயார் செய்து கொண்டிருந்தாள். நேற்றிரவு அவளிடம் பேசிக் கொண்டிருந்த போலீஸ்காரர் தெருவில் வழி விசாரித்துக் கொண்டே வீட்டைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்தார்.

வந்தவர் மேகலாவிடம் நேத்து ராத்திரி உங்க வீட்டுக்கு யாரு வந்தாங்க என்றார்.

ராசு பதறி அடித்துக் கொண்டு வந்து இங்க யாரும் வரலையே ஏங்க சார் ஏங்க சார் என்றான்.

யாரும் வரலையா என போலீஸ்காரர் அவனை கூர்ந்து பார்த்தார். இல்லீங்க எங்க அண்ணம் பையன் வந்தான் என்றாள் மேகலா திக்கித் திணறிக் கொண்டு.

கூட யாரு வந்தாங்க?

கூட ஒரு பொண்ணு

அவங்க நகை எதுவும் வச்சிருந்தாங்களா?

தெரியலைங்க?

உன் அண்ணன் பையன் பத்து பவுன் நகையோட ஒரு பொண்ண கூட்டிகிட்டு இங்கதான் வந்திருக்கான். வா ஸ்டேஷனுக்கு என ராசுவைப் பார்த்து அதட்டினார்.

சார் சார் அவங்க காலையில எழுந்து போயிட்டாங்க சார். அவங்க வந்ததே இவுருக்கு தெரியாது. எங்கள விட்ருங்க சார் என்று மேகலா அழுதாள்.

ஓ ராத்திரியில யாரும் வந்தா கூட உன் வீட்டுக்காரனுக்கு தெரியாதா என ஒரு மாதிரியாக அவர் அவளைப் பார்த்துவிட்டு ராசுவை கூட்டிக் கொண்டு போய்விட்டார்.

அண்ணன் வீடு டவுனில் இருக்கிறது. அரிசி வியாபாரம் செய்கிறார். நல்ல வசதி. அண்ணி ராங்கிக்காரி. மேகலா குடும்பத்தை வீட்டுப் பக்கமே அண்டவிடமாட்டாள். அவள்தான் இவர்கள் மீது கம்ப்ளைண்ட் கொடுத்திருந்தாள்.

மறுநாள் இரவு தண்ணீர் எடுத்துவிட்டு வந்தவளை போலீஸ்காரர் மறித்து, பயப்படாத உன் வீட்டுக்காரனுக்கு அடி கிடி ஒண்ணும் இல்ல. பையன் கிடச்சதும் வெளிய வந்துருவான். நீதான் ஒன்னும் கண்டுக்க மாட்டீங்கற என்றுவிட்டுப் போனார்.

அன்று வெள்ளிக்கிழமை மதியத்தில் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்தது என்றாலும் மாலையில் திடீரென மழைக்காற்று வீசியது. அன்று அமாவாசையும் கூட என்பதால் சாலையிலும், பேருந்து நிறுத்தத்திலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது- டீக்கடைகளில் சாயந்திர நேர பலகாரங்களை தயாரிப்பதற்கான வேலைகள் துவங்கின. சாப்பாடு முடிந்து இரவு வியாபாரத்திற்கு பரோட்டா தயார் செய்வதற்காக ஓட்டல்களில் மாஸ்டர்கள் மாவு பிசைந்து கொண்டிருந்தனர்.

பிரதான சாலையில் இருந்து சற்று உள்வாங்கியிருந்த காளி கோவிலில் அமாவாசை மெரமனைக்காக??? சப்பரத்தில் பூ அலங்காரம் நடந்து கொண்டிருந்தது-

பூசாரி பச்சரிசி நிவேதனத்தை தயார் செய்துவிட்டு சுவாமிக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தார். தூரத்தில் எங்கோ மழை பெய்து காற்றில் மண் வாசம் வீசியது.

பெண்கள் பூக்கூடைகளுடன் கோவிலுக்கு வரத் துவங்கினர். மழை வரும்போல இருக்குது. ஆத்தா காளியம்மா மழைய குடு தாயி என, வயதான பெண்கள், காளியைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.

இயந்திர கதியில் வேலைகள் நடக்க அரை மணிநேரத்தில் பூஜை முடிந்தது. பூசாரி அனைவருக்கும் தீர்த்தம் தெளித்து திருநீறு கொடுத்தார்.

கவரிங் நகைகளை வாடகைக்கு விடும் சாந்தியம்மா மீது அருள் வந்து இறங்கியது. உடலையும் கைகளையும் விநோதமாக முறுக்கிக் கொண்டார்.

அடேய் இந்த ஊரில என்னோட ஆட்டை ஒருத்தன் திருடிகிட்டுப் போய் வெட்டி வித்துட்டான்டா அடேய் என அலறிக் கொண்டு பற்களை நெரித்தார்.

ஆத்தா அவங்கள நீதான் தண்டிக்கணும் என்றாள் லட்சுமி

அவன நான் பாத்துக்கறேன் இன்னும் எண்ணி பத்தே நாள்ல இந்த ஊர்  ஏரியில அவன் புழு புழுத்துக் கிடப்பான். நீ கவலைப்படாத உன்னை நான் காபந்து பண்றேன். கனி கொண்டு வந்திருக்கியா என்றார்.

லட்சுமி பவ்யமாய் இந்தாங்க சாமி என்று எலுமிச்சம் பழத்தை அவர் கையில் கொடுத்தாள். சாந்தி அதை நெற்றி அருகே ஒரு நிமிடம் வைத்து ஆடிவிட்டு இந்தா வீட்ல கொண்டு போயி வெய்யி என்றார்.

கனகா, சாமீ திருட்டுத் தெள்ளவாரிப் பசங்க… சொல்லும்போதே அவள் நாக்கு குழறியது என் பணத்தையெல்லாம் புடுங்கிகிட்டு போயிட்டாங்க ஆத்தா நான் அதை நம்பித்தானே இருக்கேன். இப்ப வேவாரத்துக்கு காசில்லாம பிச்ச எடுக்கறனே உனக்கு தெரியலையா என் வயத்துல நீ அடிக்கலாமா?

அடியேய் உன்ன எங்கோவில்ல வந்து வௌக்கு போடச் சொன்னனே போட்டியா?

கனகா கண்ணீர் விட்டுக் கொண்டு கை கூப்பி நின்றாள். கவலப்படாத இன்னும் பத்து நாளையில அவனுங்க இங்க வருவானுங்க உன் கண்ணுலயே தெம்படுவாங்க. அவனுங்க கிட்ட இருந்து நீ பணத்த வாங்கிக்க.

அம்மா தாயே போலீஸ்காரங்க எம்புருசன புடுச்சிகிட்டுப் போயிட்டாங்கம்மா. எங்களுக்கு உன்னவிட்டா யாரு கதி அவரைக் காப்பாத்திக் குடும்மா என மேகலா வணங்கி நின்றாள்

இந்தாடீ.. நீ இங்க நிக்காத.. உன் மேல வல்லூறோட நிழல் விழுது. அதில இருந்து நீ தப்ப முடியாது என்றபடியே சாந்தி மூர்ச்சித்து விழுந்தாள்.

அடுத்து வாக்கு கேட்க காத்திருந்த பெண்கள் கனமாய் இடி இடிக்கும் சத்தம் கேட்டு மழை வருவதற்குள் வீட்டுக்குப் போகலாம் என வேக வேகமாய் கோவிலை விட்டு வெளியேறினார்கள்.

  • குமாரநந்தன் – இவரது சொந்த ஊர் சேலம். இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் – நகரப் பாடகன், பூமியெங்கும் பூரணியின் நிழல் ஆகிய நூல்கள் வெளியாகியுள்ளன. ஆசிரியர் தொடர்புக்கு – kumaarananthan@gmail.com

சுமையற்ற தத்துவ தரிசனங்கள்

0
  • வேல்கண்ணன்

(சாகிப்கிரானின் ‘அரோரா’ கவிதை தொகுப்பு குறித்து என் பார்வை))

எந்த அனுபவமும் கவிஞன் உள்ளில் ஒரு தாள லயத்தில்தான் இயங்குகிறது – விர்ஜீனியா உல்ஃப்

—–

ஆயிரம் மலர்களுள்ள தோட்டத்தில் அந்த வண்ணத்துப்பூச்சி எந்தப் பூவில் அமரும் என்று உங்களால் சொல்ல முடியுமா? ஆயிரம் பூக்களிலும் அமரும் என்னும் பிதற்றலுக்கு ஒப்பானது நாம் படிக்கும் எல்லா கவிதைகளும் நம்மை ஏதோ செய்கின்றன என்பது. அவ்வண்ணமே ஆகியிருந்தால் ‘ரெண்டாயிரம் காலத்துக்கு  மேற்பட்டவைகளில்’ஏதேனும் சொச்சத்தை படித்திருந்தாலே நாம் சுக்கு நூறாகி போயிருப்போம். தனது 36வது  கவிதை தொகுப்பின் முன்னுரையில் கவிஞர் தேவதேவன் இப்படியாக சொல்லுகிறார், ‘எழுதத்துவங்கும் போதும், எழுதி முடித்த பிறகும் ஒரு வாசகனாக என் கவிதைகளை நானே எப்படி ஏற்றுக் கொள்கிறேன் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறேன்’ என்கிறார். எனில் ஒரு வாசகன் தன்னை என்றுமே தேடல் உடையாவனாகவும் அதே சமயத்தில் தற்காலத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்தலும் மேம்படுத்தல் வழியாகவும் மட்டுமே படைப்பு மேம்படமுடியும் என்று உணர்கிறோம்.

அப்படியான வாசகர்களுக்கு புது எழுத்து வெளியீடாக கவிஞர் சாகிப்கிரானின் “அரோரா” கவிதை தொகுப்பு இருக்கிறது என்று சொல்லலாம். அனேகமாக  முதல் வாசிப்பில் இந்த தொகுப்பின்  கவிதைகள் நம்மை ஒன்றும் செய்யாதது போல பாவனை கொடுத்துவிடும் அபாயத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.  அடுத்தடுத்த  வாசிப்பில் அல்லது நிதானித்து படிக்கும் வாசிப்பில் மேலே பறந்த வண்ணத்துப்பூச்சி ஆயிரம் பூக்களிலும் ஏன் உட்காரவில்லை என்றும் அப்படி அமர்ந்த பூவுக்கும் வண்ணத்துப் பூச்சிக்குமான இணைக்குமிழை எதுவென்றும் தேடும் மனம் வந்துவிடும் என்று நம்புகிறேன்.

ஒரு படைப்பில் ‘பேசாத தருணம்’ என்ற ‘இடைவெளி’ என்ற ‘மெளனம்’ மிக முக்கியமானது. என்னளவில் இந்த இடமே படைப்பு வேறு ஒரு வடிவம் பெற்று படைப்பு – படைப்பாளி என்ற இருபரிமாணத்தை விட்டு முப்பரிமாணத்தை (வாசக மனநிலையை) அடைகிறது. சாகிப் கிரான் இந்த மெளனத்தை கவிதையில் நிகழ்த்திய இடத்தை கண்டதலில் கிடைப்பதே ‘தரிசனமாகிறது’. இங்கே தரிசனம் என்ற சொல் தத்துவ தேடல் வழியாகவும் அன்றாட நடைமுறை வழமைகளின் வழியாகவும் தெளியும் மனப்போக்கு எனக் கொள்ளலாம்.

*

” மாநகரின் வீதி வழியே/ நாய் ஓடிக்கொண்டிருக்கிறது/ கொட்டி வழியும்/ மழையை மீண்டும் மீண்டும்/ சிலிர்த்தபடி விரைகிறது/ சாலை இருமருங்கிலும் ஆயிரம் கண்கள்./ இப்படித்தான் / மழையைக் கடந்துவிடும் போல.”

*

தொகுப்பில் வரும் இந்த கவிதையில் மழை பெய்யும் மாநகர வீதியின் வழியே ஓடும் நாய் ஒன்றின் காட்சி நம் கண் முன்னே விரிகிறது. இந்தக் காட்சி புகைப்படமாக, சித்திரமாக, ஓவியமாகவும் கொள்ளலாம். இவை எல்லாமும் இருக்கும் சாத்திய கூறுகள் கவிதையின் சிறப்பு. ‘ஓடி’ என்ற சொல்லே கவிதையின் – முன் வாசித்த வரிகள் தரும் காட்சியினை – போக்கினை மாற்றுகிறது. இதற்கு அதனிடையே நிலவும் பத்தி இடைவெளியும் பெரும் காரணமாக இருக்கிறது. இதே போன்று ‘தொட்டி’ என்ற கவிதையில் குப்பைத் தொட்டியிலிருந்து குதித்தோடும் நாயின் ஒடிந்த கால் தரும் காட்சியும் அதற்கு முன் தென்பட்ட அழுக்குப் பெண், மெளனக் காகம், ஜன்னலோர ஒருவன் தந்த காட்சியும் முற்றிலுமாக மாறி விடுகிறது;   ‘கொஞ்ச நேரம்’என்று முன்பத்தியின் தொடக்கமும் ‘அவ்வளவுதான்’ என்று பத்தி இடைவெளியுடன் வரும் கடைசி வரியும்  தான். 

மொழியின் வரலாற்றில் கவிதையின் வளர்ச்சியும் மாற்றமும் பெரும் பங்கு வகிக்கிறது. கவிதை மொழியின்றி அமையாது. அவ்வாறான மொழியை கவிஞன் கையாளும் போக்கினையே கவி மொழியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த தொகுப்பு கவிதையில்  சொற்சேர்க்கையும் வார்த்தைகளும் எந்தவொரு மயக்கத்தையும் மகிழ்வையும் தரக்கூடியது அல்ல. சொல்லப் போனால் ஒரு வித வறட்டு தன்மையுடன், தனது கவிமொழியை மனதுக்கு இணக்கமாக பேசும் பிரத்யோகமான மொழியாக செய்து இருக்கிறார் சாகிப்.

தொகுப்பிலுள்ள கவிதை தரும் தரிசனங்கள் நம்முடன் மெளனமாகவே உரையாடிக் கொண்டிருகின்றன. ‘அழகி’ என்ற கவிதையில் வரும் ‘அந்த மலரை பார்த்ததும் / பியானோ கட்டை ஒன்று இறங்குகிறது’ ஒற்றை கட்டை ஒலிக்கும் போது, அடுத்த வரியில் வருவது போல ஒற்றை ஸ்வரம் நீண்ட கானமாக ஒலிக்கும் இந்த ஸ்வரம் கேட்பது நின்ற பின்னும் மனதுக்குள் சில நொடிகள் உணர்வோம். அதன் பின்பும் அந்த ஒற்றைக் கட்டை, கேட்கும் திறனற்ற ஸ்வர அதிர்வுடன் தான் இருக்கும் என்பதையும் அறிவோம். இந்தப் புரிதலுடன் கவிதையில் வரும் அந்த மலரை நம்மை அணுக வைக்கிறது அவரின் வரிகள். அதற்கு பின்பான நோக்கலில் அம்மலர் அபூர்வ மலராக தரிசனம் தருகிறது.  

இதோ போல் ‘அன்பின் நிழல்’ கவிதையில் வரும் முதலில் குறிப்பிடப்படும் நீதிமன்றமும் மரம் சாய்ந்த பிறகு வரும் நீதிமன்றமும் வேறு வேறு என்பதை மறுவாசிப்பில் மட்டுமே அறிய முடியும். ‘எளிமை’ என்ற கவிதையில் தலைகீழாக நடக்கச் சொல்லி அதனை எளிதாக்க ஆயிரம் கால் ஜடை போட்டுக் கொள்ள சொல்வதில் தென்படும் அங்கதத்தை கண்டுகொண்டால் மட்டுமே  ‘எளிமை’ என்பது நடைமுறை சாத்தியமில்லை என்று அறிவோம்.

நிர்வாணமாக ஓர் உருவம் காற்றில் அலைந்தபடி எழுந்து  நிற்கிறது             

‘நிர்வாணம்’ என்ற கவிதையில் முதல் பாதியில் ‘இனிமே ஒன்றும் வேலைக்கு ஆகாது’என்ற மனநிலையில் தற்கொலை முடிவுடன் மலையுச்சிக்கு செல்லும் ஒருவனைப் பார்த்து  ‘(பூத்)தூவிக்கொண்டே உன்னை நோக்கி ஒரு மேகம் வருகிறது பார்’ என்று சொல்லும் பள்ளத்தாக்கையும்- {இங்கே கவனிக்க: மலையுச்சி, பள்ளத்தாக்கு என்று அடுத்தடுத்து இருப்பதையும் இரண்டுக்குமே மேகமும் நகர்ந்து செல்ல காற்றும் பொதுவாக இருப்பதை, ‘வாழக்கை என்றால் ஆயிரம் இருக்கும்’என்ற தொனியை தற்கொலைக்கு எதிரான கருத்துகளாக வைக்கிறார் கவிஞர்.} புறம் தள்ளுகிறான்.

 நான் மேலே சொன்ன இரண்டு வரிகள் கவிதையின் பின்னும் இறுதியாகவும் வருகிறது. இந்த வரிகளில் நமக்கு கிடைக்கும் புரிதலையும் முன் பாதியில் கிடைக்கும் புரிதலையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்க வேண்டும் என்று எவ்வித கவிதை நியதியோ வாழ்வியில் நெறிமுறையோ இருப்பதில்லை. ஒன்றுக்கொன்று முரணானவைகளாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. இரண்டுமே வெவ்வேறான உணர்வுகள். அந்த உணர்வுகளை நாம் எவ்வாறாக உள்வாங்கி கொள்கிறோம் என்பதே கவிதையின் வெளிப்பாடு. . நிர்வாணம் என்பது ஆடை துறப்பது அல்ல. அறவே உள்ளம் துறப்பது என்கிறது பெளத்தம்.அந்த வகையில் இங்கே ‘நிர்வாணம்’ என்ற தலைப்பை கணக்கில் கொண்டு, இரண்டையும் ஒருசேர வாசிக்கும் போது நமக்குள் கிடைக்கும் தரிசனமே முக்கியமானது.

இறைவனுக்கு இணை எதுவுமில்லை என்றும் ஒப்பிடுதலும் கூடாது என்று கூறுகிறது இஸ்லாம். இதனையே முன்னோர்கள், கடவுளை அறிந்தவர்கள் சொல்லமாட்டார்கள் என்றும் அப்படிச் சொல்பவர்கள் கடவுளை இன்னும் கண்டதில்லை என்பதையே இப்படி சொல்வார்கள்,  ‘கண்டவர் விண்டில்லை விண்டவர் கண்டில்லை. இங்கே கடவுளுக்கு இணையாக மரணத்தையும் சொல்லுகிறார் கவிஞர். கடவுள் என்னும் கருத்தியலை மறுத்தாலும் மரணத்தை மறுக்கவும் தவிர்க்கவும் முடியாமல் போகிறது அந்த (இரகசிய)கவிதையில் :

இறந்து போனவன் / அதி ரகசியமாக / அதை எழுதி / வைத்திருந்தான் / மற்றொரு இறப்பு வாசிக்க / சவத்தின் மெல்லிய / புன்னகை.

இறந்தால் மட்டுமே இந்த ‘இரகசிய கவிதை’புரியும் என்பதை சொல்லுகிறார் கவிஞர். 

‘ஒட்டவைத்தல்’ என்னும் கவிதையில் அதி நவீனம் செய்த வண்ணங்களின் அழகில் மகிழ்ந்து கிடைக்கும் ‘உம்மா’வை விருப்பத்துடன் ஒட்டிக் கொண்டாலும், அசலான வண்ணத்துப் பூச்சியிலிருந்து தாவி விட்டோம் என்பதை கவிஞர் சாகிப் கிரான் சு(ஒ)ட்டி காண்பிக்கிறார்.     

அன்றாட நிகழ் வடிவங்களில் உருக்கொள்ளும் இவரின் கவிதைகள் நிறைவுற்ற பின், அதனுடைய வெளிப்புற தோற்றத்திலிருந்து சற்றே விலகியும் உள்ளொளி காரண – காரியங்களின் தன்மை அகண்டும் அல்லது ஓர்மையற்று இருப்பதை ‘நிகழ்’ கவிதையில் கழைக்கூத்தாடி உருமியுள் மறைக்கும் சாட்டையிலும் ‘நிகர்’ கவிதையில் நேர்த்தியை கண்டபின் மலம் கழிக்க நினைக்கும் உள்மொட்டிலும் ‘திருவிழா’ கவிதையில் ஒரு கணத்தில் இருட்டுக்குள் இருள் மறைவதையும் அதன் சாட்சியாக முடிச்சு மரமொன்றும் ‘உருமாற்றத்தில்’ கண்டுகொள்ள தவறிய காஃப்கா வழியாக அறியலாம். மேலே சொன்ன இந்த கவிதைகள் வேறு பல புரிதலையும் உங்களுக்கு அளிக்கலாம்.

——

சாகிப்பின் ஒவ்வொரு கவிதையிலும் கிடைக்கும் அகபுற தரிசனங்களை அன்றாட நிகழ்விலிருந்து வெளிப்படும் அ-சாதாரணத்  தன்மையும் உள்/வெளி இணைக்கும் அரூப மொழியையும் வலிமையான, சுமையற்ற தத்துவ விசாரணைகளையும் ‘மேலுக்கு’ சொல்லாமல் முடிந்தவரை அவருடன் நம்மையும்  ‘முத்துக் குளிக்க’ வைக்கிறார். தொகுப்பில்  அவ்வப்போது வரும் நேரடியாக அல்லது முதல் வாசிப்பிலேயே புரிந்துகொள்ளக் கூடிய  கவிதைகளான ‘புழுக்கள்’,’தொடுவானம்’,’சுவடற்று மறைதல்’, நிரந்தரமாக்குதல்’ போன்றவை தொடர்ந்து ‘அறிவு’ கொண்டு அணுகும்  அயர்ச்சியை போக்குகிறது.

மொத்தத்தில் ‘ஒரு கவித தொகுப்புல நாலு இல்ல அஞ்சு கவித(யார் சொன்ன கணக்கோ தெரியவில்லை) நல்ல இருந்தா போதும்’ என்று கணக்கியல் நிபுணர்களுக்கும் நம்புவர்களுக்கும் ‘அரோரா’ ஏமாற்றம் கொடுக்கும். படைப்புடன் பயணிக்கும் மனப்பக்குவத்தையும் கண்துடைப்பில்லாத வெளிச்சங்களையும் தேடிக்கண்டடைய விரும்பும் வாசகர்களுக்கு இந்த தொகுப்பு மிக இன்றியமைதாக அமையும்.

வெளியீடு : புது எழுத்து.

விலை : 100/-

—  வேல் கண்ணன் – திருவண்ணாமலையைச் சேர்ந்த இவர் இப்போது சென்னையில் வசித்து வருகிறார். இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.