Home Blog Page 89

“கம்பெனி”

6

ஆத்மார்த்தி

1
அவன் மெல்ல தெருமுனையில் வந்து கொண்டிருக்கும் போதே அந்த இடம் லேசாக பரபரப்பானது. கம்பெனி கம்பெனி என்று தங்களுக்குள் முணு முணுத்துக் கொண்டார்கள். நம்பமுடியாத அதீதமான பதற்றத்தோடு பணப்பையை தன் உடம்புக்கும் கரத்துக்கும் இடையே இறுக்கிக்கொண்டு வந்துசேர வேண்டிய பேருந்துக்காக வெளியூர் பஸ் ஸ்டாண்டில் காத்து கிடக்கிற வெள்ளந்தி மனிதனைப்போல தன்னோடு ஒரு பையை இறுக்கிக்கொண்டு அந்த இடத்தை அடைந்தான் அவன். மழை எப்படி ஒரு இடத்தைத் தனதாக்கிக் கொள்ளுமோ அப்படித்தான் நிழலும் தனக்கான இடங்களை உடமைப்படுத்திக் கொள்ளும்.

தன்னுடைய எதாஸ்தானம் வந்தடைந்த உடனே அவன் நின்றான். மரத்தின் அடியில் வளைத்து வளைத்து பட்டியக்கற்களால் ஒரு மேடை. ஊர் மந்தையில் மரத்தைச் சுற்றி மேடை என்பது யார் தொடங்கிய ஆகமமோ அங்கேயும் தப்பாமல் இருந்தது. எப்போதும் எங்கேயும் செல்லாமல் மந்தையில் வீற்றிருக்க மன்னவர்கள் இருந்தார்கள். அவ்வப்போது கூடிக் குறைந்தார்களே தவிர இல்லாமற் போனதே இல்லை. அரசியல் பேசி அடித்துக் கொண்டவர்கள் குடித்து விட்டுக் கிறங்கியவர்கள். ஆடுபுலி ஆட்டம் விளையாடி வென்று தோற்றவர்கள். பேசாமல் இருந்து கோப ரோஷ விரதங்களை மேற்கொண்டவர்கள். வெற்றிலை பாக்குப் போட்டு எச்சில் துப்ப இடம் தேடி எழுந்து சென்று திரும்பியவர்கள். அந்த இடத்தைப் பொதுவில் வைத்துத் தங்களது காலத்தை மெல்ல செலவழித்து இறந்து போய்க் கொண்டிருந்தார்கள். மரமே நிழலாக மந்தையே நிலமாக மனிதர்களை அரவணைத்துக் கொண்டிருந்தது. மரத்தின் ஆதுரம் ஊரைக் குழந்தையாக்கி முதுகில் தட்டி உறங்கப் பண்ணுகிற அன்னை வேலையாகவே இருந்தது.

அவன் பையைத் தரையில் வைத்தான். தன் கைகளை உயர்த்தி நெடுக விரித்து சோம்பல் முறிக்கிற பாவனையில் சொடக்கு விட்டான். கால்களை உதறினான். அவனுடைய ஆடை அணிதல்களில் காணப்பட்ட ஒழுங்கின்மை அவனுடைய கலைந்த மனதைப் பறைசாற்றியது. இரண்டொரு இடங்களில் பொத்தலான சட்டை நிறம் தப்பிய பேண்ட் நேர்த்தியை வரவழைத்து விடுகிற அவனது பிடிவாதமும் சேர்த்தே தெரிந்தது. பெல்டுக்குப் பதிலாக சணல் கயிற்றைக் கட்டி முடிச்சிட்டிருந்தான். அந்தக் கயிறு மாத்திரம் இல்லை என்றால் அது சர்வ தேச அணிதல் தரம் தான். நின்று கொண்டிருக்கிற இடத்தை வேப்பங்குலையால் பெருக்க ஆரம்பித்தான். வெறி கொண்டு சவுக்கால் விளாசப் பட்டவனின் முதுகைப் போல் மணல் வரிகள் தோன்றலாயின. அவற்றைக் குறுக்குவெட்டில் பெருக்கிக் கலைத்தான். தன் பையின் மேற்புறத்தில் இருந்து பெரிய உரச்சாக்கு ஒன்றை எடுத்து உதறி அதனைத் தரையில் விரித்து அமர்ந்து கொண்டான்.

தன் பையிலிருந்து ஒவ்வொன்றாக வெளியில் எடுத்து வைக்க ஆரம்பித்தான். விதவிதமான அட்டைகள், டப்பாக்கள், ஓடாத ரேடியோ ஒன்று, உடைந்த கடிகாரம் ஒன்று, நாலைந்து ரிஸ்ட் வாட்சுகள், விதவிதமான பூட்டுக்கள், சாவிகள், ஸ்பானர்கள் ,நாலைந்து களிம்பு டப்பாக்கள், பழைய எவரடி பேட்டரிகள், அமிர்தாஞ்சன் குடுவைகள், பல்லாங்குழி ஆடப் பயன்படுமல்லவா அந்த மஞ்சாடி முத்துக்கள், சிகரட் அட்டைகள், கட்டுக்கட்டாய் பழைய லாட்டரி டிக்கட்டுக்கள் என அந்தப் பையிலிருந்து எடுத்து அவன் அடுக்கி முடிக்க இருபது நிமிடங்கள் அடுக்கி முடித்த அடுத்த கணம் ஆர்வ மேலிட அவனது விரிப்புக்கு முன்பாக வந்து நின்று என்ன என்று பார்க்கத் தொடங்கினர். ஒருவர் வெளியூர்வாசி போலும் அவரை நோக்கி நிமிர்ந்தான்.

“என்ன ஸார் வேணும்…நம்ம கிட்டே எல்லாமே நயமான க்வாலிட்டி ஒண்ணாம் கிளாஸ் தரம். எல்லாமே கம்பெனி ஐடம்ஸ் மட்டுந்தான். நான் இந்த ரெண்டாம் நம்பர் அட்டு ஐட்டங்களைக் கையால கூட தொடுறதே இல்லை. நம்பி வாங்கலாம் நீங்க. எனக்கு இந்த ஊரெல்லாம் கஸ்டமர்ஸ் தான். வாங்கிட்டுப் போயிட்டு ஒருவேளை” (இங்கே நிறுத்துகிறான்) “ஒருவேளை க்வாலிட்டில ப்ராப்ளம்னாலோ அல்லது மனசு திருப்தி இல்லைன்னாலோ ஜஸ்ட் நீங்க அப்டியே ரிடர்ன் செய்திரலாம். நீங்க எந்த சங்கோஜமும் படத்தேவையில்லை வந்து பணத்தை வாபஸ் பண்ணிக்கலாம் அல்லது பொருளாக் கூட மாத்திக்கலாம். நீங்க பணம் செலவழிக்கிறவர் உங்களோட மனத்திருப்தி தான் ஸார் எனக்கு முக்கியம்”

லாட்டரி டிக்கட்டுக் கற்றையைக் காட்டி ‘இதெல்லாம் ஒன் இயர் காரண்டி’ சிகரட் அட்டைகளைக் காட்டி ‘இதெல்லாம் ரெண்டு வருஷம் காரண்டி’ களிம்பு டப்பா ஒன்றை பொத்தினாற் போல் எடுத்தவன் ‘இது த்ரீ இயர்ஸ் ரீப்ளேஸ்மெண்ட் வாரண்டி ஐட்டம் சார் நம்பி வாங்கலாம் நீங்க” என்று மூன்றையும் ஒரு கொத்தாக்கி அவர் முன் நீட்டினான்.

அவன் காட்டிய மூன்று பொருட்களின் இடையே நிலவிய சமனின்மை மற்றும் அவற்றின் இடையிலான பொது வினோதம் இரண்டும் ஒருசேரத் தாக்க அதுவரை தான் ஏதோ புதிய வகை கடையின் முன் நின்று கொண்டிருப்பதாகவே எண்ணிக் கொண்டிருந்த அந்த மனிதர் சுற்றிலும் அப்போது தான் பார்க்க ஆரம்பித்தார். அவரையே கண் மாறாமல் பார்த்திருந்த பின்புல மனிதர்கள் சட் சட்டென்று முகம் திருப்பிக் கொண்டதும் கூடுதலாகக் கிலியானார்.” உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா இங்க பலரும் நம்ம கடை கஸ்டமர்ஸ் தான். கேட்டு வேணா பாருங்க” என்று தன் முதுகுக்குப் பின்னால் இருந்தவர்களில் தனக்கு சாதக சாட்சியாக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று கவனித்தபடி வந்தவன் குரியகோஸின் முகத்தில் நிலைத்துப் புன்னகை புரிந்தான். அவருக்குப் புரிந்து விட்டது. தன் முகத்தைப் பொதுவான மலர்தல் ஒன்றில் நிலைக்கச் செய்தவர் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றாற் போல் அதே புன்னகையைத் திருப்பித் தந்தார்.

“குரியகோஸ் மாமா…நீங்க சொல்லுங்க.. போனவாரம் ஒரு மாடல் எடுத்தீங்கல்ல..எப்டி இருக்குதுன்னு சொல்லுங்க” என்று அவரிடம் கேட்க
“அதுக்கென்ன சொல்லிட்டாப் போவுது மாப்ளே…” என்றவர் தொடர்ந்த மலர்தலோடு புதிய மனிதரிடம் “நம்பி வாங்கலாங்க…இந்த ஊரே மாப்ளையோட கஸ்டமர்கள் தான். வெலை முன்னப்பின்ன இருந்தாக் கூட பேசிக்கலாம், பாருங்க” என்றார். அந்தப் புதியவர் லேசாக ஆசுவாசம் ஆனாற் போலத் தெரிந்தது. குரியகோஸ் அவரைக் காப்பாற்றும் பொருட்டோடு “மாப்ளே மூனையும் அவரிட்ட நீட்டாதீய…எது என்னான்னு வெளங்குனாத் தானே அவரால ஒரு முடிவுக்கு வரமுடியும்?” என்றதும் தனக்குத் தேவையான பாதை கிடைத்த மிரண்டலையும் ஆட்டுக்குட்டி போலாகி அந்தக் களிம்பு டப்பாவை சுட்டிக்காட்டி “இதென்ன விலை?” என்றார்

“இதா சோனி எரிக்ஸன். நல்ல மாடல் பேட்டரி நாலு நாளைக்குத் தாங்கும். வெயிட்டும் ரொம்பக் கம்மி தான். பேக்ரவுண்டு லைட்டிங் மூணு நாலு கலர்ல மாத்திக்கலாம். ரெண்டாயிரத்து எண்ணூறு ரூவா..நீங்க ரெண்டு ஏழு தந்தாப் போதும்” என்றான்.

இந்த சீனுக்கு அவர் குரியகோஸின் முகத்தைப் பார்க்க அவர் தன் பர்ஸில் இருந்து ஏடிஎம் கார்டை எடுத்து ஆட்டி விட்டு மறுபடி தன் பைக்குள் போட்டுக் கொண்டார். புதிய மனிதர் உடனே ” சரிங்க ஸார் நா போயி ஏ.டி.எம்ல காசெடுத்துட்டு வந்துர்றேன்” என்றதும் “அட நீங்க என்ன ஸார் நம்ம கடையிலயே ஸ்வைப்பிங் மிஷின் இருக்குல்ல?” என்று ஏடி.எம்கார்டைக் கேட்டு வாங்கி லாட்டரிக் கட்டு மீது வைத்து ஒரு சில மணித்துளிகள் வெயிட் செய்தவன் “எப்பப் பார்த்தாலும் லைன் கிடைக்காது.. என்னத்தை சொல்ல எங்கன பார்த்தாலும் குழப்பம் தான்” என்றவாறே “ஆச்சு ஸார்.. இந்தாங்க” என்று கார்டோடு ஒரு சிகரட் அட்டையை எடுத்துக் கொடுத்தான்.

“இதுல பில்லு இருக்குது. இது காரண்டி கார்டு எல்லா ஊர்லயும் சோனிக்கு சர்வீஸ் செண்டர்ஸ் இருக்கு பயப்படாதீங்க” என்று தன் முன் இருந்த பொருட்களில் நாலைந்தை எடுத்து இடம் மாற்ற ஆரம்பித்தான். அந்த மனிதர் தன் கையில் இருக்கிற களிம்பு டப்பாவை வெறித்தபடியே நகர்ந்து மரத்தைத் தாண்டி நிற்பதைப் பார்த்த குரியகோஸ் தன்னிடம் எதையோ சொல்லிக் கொண்டிருந்த பவுன்ராஸிடம் “இருய்யா வந்துர்றேன்” என்று மரத்தினடியில் இருந்து குதித்திறங்கி அந்தப் புதியவரை நெருங்கினார்.

“பெரிய கோடீஸ்வர வீட்டுப் பிள்ளை. நாலஞ்சு தொழிலு நாப்பது வேலைக்காரங்கன்னு பெரிசா ஓங்கிட்டு வந்தவன் தொழில்ல நட்டமாகி இப்டி ஆயிட்டான். இன்னமும் தான் பெரிசா தொழில் பண்ணிட்டிருக்கிறதாத் தான் நம்புறான். நாங்க எல்லாம் பழகின விளையாட்டா அவனை அனுசரிச்சி நடந்துக்குவம். ஒரு நாளைக்கு ரெண்டு மணிநேரம் இப்பிடி உக்காந்திருந்துட்டு கெளம்பிடுவான். உங்களை மாதிரி வெளியாளுக வர்றப்ப தான் எப்பனாச்சும் முன்னப்பின்ன ஆயிடுது. இவனைப் பார்த்துக்கிடுறதுக்குன்னு ஒருத்தனை வேலைக்குப் போட்டுப் பார்த்தாங்க..அவனையும் அடிச்சு திருப்பிட்டான். அதுனால இவம்பக்கத்துல இருக்கிறதில்லை. எங்கனயாச்சும் இருப்பான்” என்று சுற்றிப் பார்க்க தூரத்து டீக்கடையில் பேப்பர் புரட்டிக் கொண்டிருந்த அவினாசி குரியகோஸைப் பார்த்ததும் டீக்ளாஸோடு கையை உயர்த்தி வணக்கம் வைத்தான்.

புதிய மனிதர் உடம்பு லேசாய் நடுங்கிற்று. தன் கையில் இருந்த களிம்பு டப்பாவைக் காட்டி “இதென்னங்க பண்றது” என்றார் அவர் குரல் கம்மி இருந்தது. “நல்லா நடிச்சீங்க.. எதுனா முன்னப் பின்னப் பேசிருந்தீங்கன்னா இன்னேரத்துக் கெல்லாம் நீங்க ஓடிட்டிருப்பீங்க.. இந்த இடமே ரணகளமாயிட்டிருக்கும்” என்றார். சாதாரணமாகத் தான் சொன்னாரே ஒழிய புதியவரின் முகத்தில் நீர் முத்துக்கள் இன்னும் அதிகரித்ததைப் பார்த்து “இந்தக் களிம்பு டப்பால என்னங்க இருக்குது,.? தூக்கி எறிஞ்சிருங்க. அவன் பார்வைல இது இன்னைக்கு சோனி எரிக்ஸன் செல்ஃபோனு. நாளைக்கி இதையே வேற பண்டமாப் பாப்பான். மனசு ஒரே ஒரு கண்ணாடியா இருந்தா தெரியுறதுல தெளிவிருக்கும். இவனுக்கு சுக்குநூறா நொறுங்கிட்டிருக்கு, அதான் தன்னையும் வருத்திக்கிட்டு மத்தவங்களையும் வருத்துறான்”. மீண்டும் தன் திசை நோக்கித் திரும்பினார்.

அந்த மனிதர் களிம்பு டப்பாவை பூப்போல ஒரு ஓரத்தில் நழுவ விட்டார். அடுத்து வந்த பேருந்து அது எந்த எண் எங்கே செல்கிறது என்பதை(க்)கூட பாராமல் ஏறி அமர்ந்தார். அடுத்த ஸீட்டில் அமர்ந்திருப்பவன் செல்ஃபோனில் தாழ்ந்த ஸ்தாயியில் சொல்லிக் கொண்டிருந்தான் “மறக்க முடியுமா…செமை கம்பெனி ” பேருந்து நகர்ந்தது.


2
நல்ல மழைக்குப் பின் மறுவெயில் அப்போது தான் ஆரம்பித்தது. வழக்கமான முகங்களில் பாதி காணவில்லை. தென்பட்டவர்களும் ஈரப்பதத்தைத் தாள வொண்ணாமல் அவ்வப்போது நடுக்கமுற்றனர்.

முத்துராக்கு கத்திக்கொண்டே கடந்து சென்றாள். “கம்பெனில எனக்குத் தெரியாம லோன் எதும் தரக்கூடாதுன்னு எத்தினியோ சொல்லிருந்தும் இவனாப் போயி காச வாங்கிக் குடிக்கப் போயிட்டான். இவந்தான் கேட்டா அந்தக் குமாஸ்தாவுமா காசைக் கையில தர்றது..? இவனுக்கு குவார்டர் அடிச்சதுமே கர்ண மனசு பூத்துக்குமே சொளையா இருவதாயிரம் ரூவாயைத் தொலைச்சிட்டு வந்திருக்கானே அய்யோ நா எங்க போயி சொல்லுவேன்..? நானெல்லாம் எப்பிடிப் பொழைக்கிறது இவங்கூடக் கூட்டாப் பொழச்சி ரெண்டு பிள்ளைய வேற பெத்திட்டனே இன்னிக்கு வரட்டும் அவனைப் பொளந்துட்டுத் தான் மறுவேலை” அவிழ்ந்த கூந்தலை முடிந்து கொண்டு அதுவரை நகர்ந்த திசைக்கெதிரான வேறொரு திசையில் சென்றாள்.

குரியகோஸூம் மூர்த்தியும் தங்களுக்குள் எதையோ பேசினபடி வந்து சேர்ந்தார்கள். சைக்கிளில் டீ விற்கிற அவயத்தான் ஒரு காலை ஊன்றியபடியே “மாமா டீ” என்றான். முதலில் அவன் விளித்ததைக் கவனிக்காத மூர்த்திக்கு மெல்லத்தான் அவன் குரல் கேட்டது. ஜாபர் கடையில் பட்டறை கழுவிக் கவிழ்த்திருந்ததை கண்ணோட்டம் விட்டவர் தன்னைச் சுற்றி நிறைய ஆட்கள் இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டு “ரெண்டு” என்றார். அவன் சைக்கிளை ஸ்டாண்ட் இட்டு ரெண்டு பேருக்கும் சில்வர் தம்ளரைத் தந்தான்.” எலே ப்ளாஸ்டிக் கப் வர்றதில்லையாக்கும்?” என்றபடியே வந்து சேர்ந்தார் சேகர். “தடை பண்ணிப்பிட்டாகல்ல…அதுக்கப்பறமும் கேக்குறேளே யாரு அபராதம் கட்டுவா.? நான் பொழைக்கிறதே நூறுக்கும் எரனூறுக்கும் இதில பத்தாயிரம் ரூவாயாக்கும் ஃபைனு தெரியுமா?” என்றபடியே கணக்குப் பார்த்து காசு வாங்கிக் கொண்டு கிளம்பினான்.

சென்றவன் அரைவட்டம் அடித்து திரும்பி வந்து வரிசையாக அமர்ந்திருந்தோரிடம் பொதுவாக “ப்ளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி பண்ற பெரிய பெரிய மெஷினெல்லாம் பல லட்சம் கடனாகி தொழில் பண்ணின பலர் வாயில எள்ளுந்தண்ணியும் தான் வடிச்சிக்கிறானுவ தெரியும்லா..? இந்த மாதிரி தடை செய்ற மவராசனெல்லாம் அதுனால உடனே அழியுற பல குடும்பங்களைக் கருத்துல எடுக்கிறதேயில்லை. எதாவும் இருக்கட்டுமே மொதல்ல அனுமதிச்சிட்டு அப்பறம் தடைன்னு பண்றப்போ அதுல முதலீடாகி கெடக்குற பணத்துக்கு எதுனா ஏற்பாடு செய்யணுமில்லா..? இதென்ன அரசாங்கம் தயார் பண்ற ராக்கெட்டு வியாபாரமா நாலஞ்சி கடல்ல வுளுந்தாலும் பரவாயில்லைன்னு அடுத்ததை நோக்க..? நம்ம பரணி மாதிரி இன்னும் எத்தனை பேர் மந்தையில கடை விரிக்கக் காத்திருக்கானோ யாரை நொந்துக்கன்னே தெரியலைல்லா..?”

அடுத்த வார்த்தைக்கு அவன் அங்கு இல்லை. நிற்கவும் மாட்டான். கூடுதலாக ஒரு சொல்கூடச் சொல்லாதவன் அவயத்தான். நல்ல சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்தான். ரப்பர் தொழிலில் ஏற்பட்ட முடக்கம் அவன் வேலை பார்த்த ரப்பர் கம்பெனியை மூடி விட்டார்கள். மெல்ல மெல்ல உழைத்து அப்போது தான் மேடேறிய பலரும் மறுபடி வேறொரு வரிசையில் இன்னும் பல புதியவர்களின் முதுகுகளைத் தாண்டி நிற்க நேர்ந்தபோது நிலைகுலைந்தார்கள். இருபத்தி எட்டு வருஷ சர்வீஸ் ஒரே நாளில் மண்ணாய்ப் போனதும் அவயத்தான் சைக்கிளில் டீ விற்க ஆரம்பித்தான். “நாலு வடைகளையும் சேர்த்து விற்கலாம்ல, உனக்கும் எதுனா கூடக் கிடைக்குமே?” என்று கேட்டால் “வேணாம் மாமா அது இன்னொருத்தனுக்குப் பொழைக்கிற வாய்ப்பைத் தருது நாம கெடுக்கப்படாது. காத்தோ நீரோ உள்ளதைப் பகிர்ந்தா போதும். மண்ணோ நெருப்போ அவனவனுக்கு உண்டானது நிச்சயம் கிடைச்சிருமில்லா?” என்றபடி அசட்டையாய் சிரிப்பான்.

“இவன் பரணின்னு யாரைச் சொல்லுதான்?” என்ற மூர்த்தியிடம் “நீ ஒரு செத்த சவம்வே…அதான் நெதமும் இங்கன வந்து ஆகாவளியெல்லாம் பரப்பிக் கடை வைப்பானல்லோ பெரிய வீட்டு முத்தையாவோட ரெண்டாவது மவன். நேத்துக்கூட வந்தான். இன்னைக்கித் தான் காங்கலை ” என்ற சேகரனிடம் “இல்லையப்பா அவன் சுத்தவாதி கடையை ஒலந்த தரையில தான் விரிப்பான். ஈரம் அவனுக்கு ஆவறதில்ல..மழை சுத்தரவா நின்னு வெயிலடிக்கிற வரைக்கும் வர மாட்டான். அதென்னவோ தன் கால்ல கூட தண்ணி பட்றக் கூடாது அவனுக்கு” என்றவர் விடாமல் பைத்தியத்துக்கு எதுக்குப் பக்கம் பக்கமா சாதகம் என்றார் மூர்த்தி.

குரியகோசின் நெற்றி சுருங்குவதைக் கண்டபடியே “அண்ணாச்சிக்கு பரணி மேல தனி பாசம்” என்ற சேகரின் கருத்தை ஆமோதிக்கிறவராய் செருமிக்கொண்டு தொடங்கினார் குரியகோஸ் “இல்லையா பின்னே ஆறாவதுலேருந்து பத்து வரைக்கும் அஞ்சு வருசம் என் கிளாஸ்ல படிச்சவன். பணக்காரப் பசங்களுக்குன்னு நாம நம்பிட்டிருந்த பல விஷயம் அவங்கிட்ட கண்டதில்லே. அவன்தான் வகுப்புல மொதல் ஸ்டூடண்டு. காலேஜூ மதுரையிலயும் அப்பறம் பெங்களூர்லயும் படிச்சான். படிக்கிறப்பவே “ஆனி லீவர் இண்டர்னேசனல்” கம்பெனில ஏரியா மேனேஜரா கேம்பஸ் இண்டர்வ்யூல வேலை கிடைச்சது. கண் நெறஞ்ச பொண்ணைக் காதலிச்சு கலியாணம் பண்ணிக்கிட்டான். ஊரே திரும்பிப் பார்க்குறாப்ல நாலு ஊர்ல பிஸினஸ் பண்ணான். பல கம்பெனிகள்லயும் இவனுக்கு ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்க. நிறைய்ய பணம் புரண்டது. என்ன எளவெடுத்த கம்பெனி ஸ்கீமோ என்னவோ முதலீடு பண்ணினது முச்சூடும் தோத்துப் போனதில புத்தி பேதலிச்சிட்டுது.

சற்றே நிறுத்தினவர் “கட்டுனவ இனி உன் கூட வாழ்றதில்லென்னு கொழந்தையைக் கையில எடுத்துட்டு அப்பன் வீட்டுக்குப் போயிட்டா. இப்பத் தன் கொழந்தையைக் கூட அவனுக்கு அடையாளம் தெரியாமப் போச்சு. இந்த மரத்தடி அவனோட கம்பெனி. நாம எல்லாரும் அவனோட கஸ்டமர்ஸ். தெனம் ஒரு திரை தெனம் தெனம் புதுக்கதை. அவனா அடங்குற வரைக்கும் ஆர்ப்பரிக்கிறதை நிறுத்த முடியாது. அது அவனோட குறையில்லை-பிரச்சினை. ஊர்ல கம்பீரமா வளைய வந்தவனை கட்டிப் போட்டுக் கொடுமைப்படுத்தவா முடியும்..? அதான் வீட்ல ஆள் போட்டு வெளிய அனுப்புதாங்க.. இவனும் பெருவாரி ட்ரபுள் பண்றதில்லை. எப்பனாச்சும் தான் மீறுவான். அது தாங்கவொண்ணாம இருக்கும்”

தன் காரை ஸ்டைலாக ஓட்டிக்கொண்டு அங்கே வந்தான் ஜெபா, குரியகோஸின் மூன்றாவது மகன். கண்ணாடியை இறக்கிப் புன்னகைத்தவன் இறங்கி வந்து சமீபித்து “டாடி நான் கெளம்பிட்டேன். மே மாசம் வரேன்” என்று தரை எனவும் பாராமல் அவரது பாதம் தொட்டு வணக்கம் வைத்தான். பேசி அனுப்பி விட்டு இன்னமும் முந்தைய கணத்தின் நெகிழ்தல் குறையாமல் விரிந்த இதழ்களோடு இருந்தார்.

“அண்ணாச்சியோட மூணாவது மகன்லா இவன்?” என்றார் அற்புதசாமி. அவர் வந்ததையே அப்போதுதான் கவனித்த மூர்த்தி “ஆமா… மூத்தவன் ப்ரின்ஸூ டெல்லில வேலை ரெண்டாமத்தவன் எபி லண்டன்ல இருக்கான். இவன் ஜெபா மூணாவது மகன் அமெரிக்கா” என்றார். தான் சொன்னது சரி தானே என்றாற் போல் குரியகோஸைப் பார்த்தவரிடம் சரியே என அவரும் ஆமோதித்தது ரசமாக இருந்தது. குரியகோஸ் தன் ஜிப்பாவிலிருந்து புளிப்பு மிட்டாய் ஒன்றைத் தன் வாயில் போட்டுக் கொண்டவர் பொதுவாக மூர்த்தியிடம் நாலைந்தைக் கொடுத்தார்.

ஜெபா எஸ் க்யூ எஸ் கம்பெனில வேலை பார்க்குறான். லச்சக்கணக்கில சம்பளம் என்று கூடுதல் தகவல் ஒன்றை சொன்ன மூர்த்தியைப் பார்த்தபடியே “வர்சத்துக்கு ஒன்னரைக் கோடி சம்பளம்” என்றார் குரியகோஸ் “அது மட்டுமில்லவே எல்லாமே கம்பெனி செலவு தான் வீடு, காரு, சாப்பாடு, போக வர டிக்கட்டுன்னு எல்லாமே தந்துருவாங்க தெரியும்லா” என்றார் சேகர் அற்புதசாமி வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தார். “அடுத்து எப்ப வருவாப்டி எனக் கேட்டதற்கு நெனச்சப்பல்லாம் வந்துட்டுப் போவான். பெரிய பதவி” என்றார் மூர்த்தி.

குரியகோஸ் செல்லில் அழைப்பு வர எடுத்துக்கொண்டு இறங்கிப் போனார்

“ஏய் அற்புதசாமி அந்தப் பய கம்பெனி என்னெல்லாம் தருதுன்னு தெரியுமாவே.? தண்ணி அடிச்சாக் கூட கம்பெனி செலவாம்லா ஆக்ச்சுவல்ஸோ என்னமோ பேராம் அதுனால தலைக்கு முக்கா ரூவாய்க்கி எண்ணை வாங்கினாக் கூட கம்பென்னி செலவு தானாம் தெரிஞ்சுக்க” அவர் வாய் பிளந்தது மூடவே இல்லை.

“என் கதை மணக்கவா செய்யிதி..? என்னோட மவன் கொரியர் கம்பெனில வேலை பார்த்தவன். டெலிவரி தரப்போனப்ப ஆக்சிடெண்ட் ஆகி காலு முறிஞ்சிட்டது. உக்காந்து பாக்குதாப்ல எதுனா வேலை தரச்சொல்லி நடையா நடக்குறான். கெடச்ச பாடில்ல கோர்ட்ல கேஸ் நடத்தினா கெடைக்கும்னு வக்கீலைப் பார்க்கப் போயிட்டு வந்தேன் நேத்து”

அதென்ன கம்பெனி என்ற சேகரிடம் அவர் பேரைச் சொன்னதும் இவர் வேறொரு பேரைச் சொல்லி அந்தக் கம்பெனியா இருந்தா இன்னேரத்துக்கு வேற வேலை தந்திருப்பான். இதுல கொஞ்சம் கஷ்டம் தான். மனசை விடாதேயும் கேஸை நடத்தினா கெடைச்சிடும்” என்றதும் அற்புதசாமிக்கு பாரம் கூடினாற் போலாகி எதுவும் சொல்லாமல் இறங்கி நடக்கலானார்.

குரியகோஸ் திரும்பினவர் “என்ன அற்புதம் கெளம்பிட்டானா ?” என்றதும் “என்னமோ சோலி இருக்குதாம்னு வெரசாக் கெளம்பிட்டார்” என்று மட்டும் சொன்னார் மூர்த்தி.

முற்றிலுமாக மழை நின்று மறுபடி வெப்பம் தெரியத் தொடங்கி இருந்தது. தூரத்தில் மாதா ஏஜன்ஸீஸ் அடைத்திருக்க அதன் வாசலுக்கு சற்றுத்தள்ளி மூன்று பேர் ஒரு மஞ்சளும் ரோஸூம் மாறி மாறி கட்டங்களை நிரப்பின பெரிய குடை ஒன்றை நிறுத்திக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தின் சித்திரத்தில் கூடுதல் தோன்றலாக அந்தக் குடை உண்டாகத் தொடங்கிற்று. குழாய்களை இணைத்து இணைத்து ஒரு டேபிள் இரண்டு நாற்காலிகள் பின்னால் சரமாய்த் தொங்கும் பேனர் என வண்ணமயமாக மாபெரும் நிரந்தரத்தைப் போன்ற தோற்றத்தோடு நிரம்பின பொய்கள். அங்கே நின்று கொண்டிருந்தவர்கள் குட்டியானை வேனுக்குள் சென்று ஆடை மாற்றி கம்பெனி யூனிஃபார்ம்களோடு வந்தார்கள். மூவரைத் தவிர ஒருவன் ட்ரைவர் போலும் அவன் இன்னமும் சாதா உடையிலேயே இருந்தவன் வண்டியை தூரத்து நிழல் ஒன்றைத் தேடிப் போனான்.

பொடிமட்டை என்று அழைக்கப்படுகிற மூசா மெகானிக் கடை சிப்பந்தியை விசிலடித்து அழைத்தார் சேகர். “இன்னம் சின்னப் புள்ளையாட்டம் சீட்டியடிச்சிட்டிருக்கீரு” என்று செல்லமாய்க் கடிந்து கொண்டே மந்தையில் மீண்டும் ஏறி மேடையில் அமர்ந்தார் குரியகோஸ். “என்ன டீ வாங்கியாரவா” என்று தயாராய் கைகளைத் தட்டிக்கொண்டு வந்தான் அழகு “எலே பொடிமட்டை மாதா கடை மின்னாடி எவனோ கொடைய விரிச்சிட்டு நிக்கான் பாரு… அவங்கிட்டே போயி என்ன விவரம்னு ஃபுல் டீடெய்லும் கேட்டுட்டு வரணும் தெரியுமா?” என்றனுப்பினார். மறுபேச்சுப் பேசாமல் திரும்பினான்.

சற்றைக்கெல்லாம் ரெண்டு மூன்று பேம்ப்லட்களோடு திரும்பினான். அதைப் புரட்டுவதற்குள் “கட்டடம் கட்டுற கம்பெனியாம். ராக்கோட்டை விலக்குல மூணு கிலோமீட்டர்ல “இந்திரபுரி”ன்னு 400 வீடுகள் கட்றாகளாம். எல்லா வசதியும் உள்ளக்கவே வருதாம். மத்த வெவரம்லாம் இந்த பேப்பர்ல இருக்குதாம் என்றபடியே மறுபடி தன் கடை நோக்கிச் சென்றான். குரியகோஸூக்கு மீண்டும் மீண்டும் வீட்டில் இருந்து ஃபோன் வந்த வண்ணம் இருந்தது. “எலே மக பிள்ள பேத்தி எதுக்கோ அழுதிட்டே இருக்காளாம் நா கெளம்புறப்பவே அளுதா இன்னம் சரியாவலை. நா போயி ஆரத்திபுரத்துல டாக்டர்ட்ட கூட்டிப் போயிட்டு வரேன்” என்று இறங்கி வேஷ்டியை அவிழ்த்து இறுக்கிக் கொண்டவர் ‘வந்துர்றேன்’ என்றவாறே சக்தி ஸ்டோர்ஸ் வாசலில் நின்ற தன் புல்லட்டைக் கிளப்பிக் கொண்டு போனார்.

3

அடுத்த ரெண்டு நாட்கள் எப்படிப் போனதென்றே தெரியவில்லை. மரத்தடி ஒன்று கூடுதலின் நடுநாயகம் குரியகோஸ் தான். அவர் வராத தினங்களில் மற்ற யார்க்கும் சந்திப்பு எடுபடாது. எல்லா இடங்களிலுமே அப்படி ஒரு மனித மையம் இருக்கத்தான் செய்யும். மூர்த்தியோ சேகரனோ எந்த விதத்திலும் காசு பணத்தில் குரியகோஸை விட கம்மியானவர்கள் இல்லை. மூர்த்திக்கு மாவு அரவை மில் இருக்கிறது. மூத்த மகன் தலையெடுக்கும் வரை அவர் சுமந்தது தான் அந்தத் தொழில்பாரம். இப்போது மகன் பார்த்துக் கொள்கிறான். மூர்த்தி அவ்வப்போது சென்று கணக்குப் பார்ப்பார். மற்ற நேரமெல்லாம் ஒன்று இந்த மரத்தடி அல்லது வாசியார்புரத்தில் எலக்ட்ரிக் சாமான் ஸ்பேர் கடை வைத்திருக்கும் ரத்தினம் அவரது க்ளாஸ்மேட் அங்கே போய் உட்கார்ந்து விட்டு வருவார்.

இந்த இரட்டைச்சாலை அவருக்கு ஒருவிதமான நிம்மதியைத் தந்தது. ரத்தினம் கடையைப் பொறுத்தவரை அங்கே செல்லும் பொழுது மூர்த்தி தான் பெரியாள் என்ற தினுசாக இருக்கும். அவர் பேச்சை யாரும் மிகுந்தொலிப்பதில்லை. அவர் அங்கே உட்காரும் போதே கால் மீது கால் போட்டு அமர்வார். எப்போதாவது கத்திரி சிகரட் பிடிப்பார். இல்லாவிட்டால் வெற்றிலை பாக்கு. மரத்தடியில் ஒருவராகவும் ரத்தினம் கடையில் இன்னொருவராகவும் டபுள் ஆக்ட் இன்பத்தில் திளைப்பார் மூர்த்தி.

சேகரனுக்குத் தொழில் பெரிய பால் பண்ணை. கறந்த பாலைக் கொட்டத்து வாசலிலேயே வந்து சொஸைட்டிக்காரர்கள் வாங்கிச் சென்று விடுவார்கள். வீட்டுப் புழக்கத்துக்கு மட்டும் என இரண்டு மாடுகள் தனியே கறப்பதை வைத்துக் கொள்வார். அவரிடமும் காசு பணத்துக்குக் குறைவே இருப்பதில்லை. ஆனாலும் மேற்சொன்ன மூர்த்தியின் இன்னொரு முகம் தான் சேகரனும். குரியகோஸின் ஆகிருதி அப்படி. எல்லாரையும் தனக்குக் கீழாக்கி வளைத்துக் குறுக்கி விடுவார். என்ன ஒன்று அதை யாருமே அறியாமல் செய்து விடுவது தான். உட்கார்ந்து பல தினுசாய் யோசிப்பவருக்கு மட்டும் தான் அது புரியவே செய்யும்.

தன் புல்லட் சப்தம் மிக வந்து சேர்ந்தார் குரியகோஸ் அவர் வந்தபிறகு தான் களை கட்டியது. இன்றைக்கு ஆறேழு பேர் வரை கூட்டம். என்னென்னவோ கேள்வி கேட்க குரியகோஸூம் மனம் லேசாகி விட்டுக்கு மேல் விட்டு அடித்துக் கொண்டிருந்தார். சட்டென்று ஞாபகம் வந்தவராய் “சேகரா…நம்ம வீட்டுக்கு நாளையிலேருந்து உம்பண்ணையிலேருந்து காலிட்டர் பால் சப்ளை செய்துரணும்டே என்ன செய்வியா?” என்றார். அதற்கு அவர் லேசாக யோசிப்பதைப் பார்த்து “என்னடே யோசிக்கிறே?” என்று நேரம் தராமல் கேட்க “அண்ணாச்சி மொத்தமா சொஸைட்டிக்காரங்க வந்து வாங்கிட்டு போயிடறாங்க கான்றாக்டு அவகளக் கேக்கணும்” என்றதும் “சரி நா வேற ஏற்பாடு செய்துக்கிடுறேன்”

சேகரன் கிளம்பிப் போகும் போது அவர் முதுகையே வெறித்தார். “மக பிள்ள பேத்திக்கு வயிறு ரொம்ப படுத்திட்டு மூர்த்தி. என்னமோ கம்பெனி தயாரிப்பு பால்பவுடர் அவளுக்கு ஒத்துக்கிடவே இல்லை போல.. பொறந்ததிலேருந்து இதைக் குடுக்காத, அதைக் குடுக்காதன்னு டாக்டரோட மல்லுக்கு நிக்கவே செரியாய்ருக்குன்னா பாத்துக்கிடேன். அதான் நேத்து டாக்டர் பசும்பாலே குடுங்கன்னு சொல்லி அனுப்பிட்டான். நம்ம வீடுகள்ல பாக்கெட் பாலு தானே இப்பல்லாம். அதும் நித்தம் ஒரு கம்பெனி பாக்கெட்டு வருது நாம எதையும் கொள்ளலாம் கொழந்தைக்கினு வர்றப்ப அப்டி செய்யக் கூடாதில்லா..? அதான் இந்தப் பய என்னடன்னா சேகரன் சொஸைட்டிக்குத் தான் விப்பானா..? நமக்கு ரெண்டு ஆளாக்கு தந்தாக் கொறையாய்ருமா.. எத்தினி பழக்கம் எங்கிட்டயே மூஞ்சில அடிச்சு சொல்லிப்புட்டான் பாரேன்?” என்றவர் “செரி செரி நீ அவங்கிட்ட எதையும் சொல்ல வேணாம் என்ன வெளங்குதா?” என்றபடியே மீண்டும் சகஜமானார்.

எதிரே ரியல் எஸ்டேட் கம்பெனி நிழற்குடை இன்றும் இருந்தது. அன்றைக்கு வந்த பையன்களில் ஒருவன் மட்டும் மாறி புதியவன் வந்திருந்தான். அவன் ஏற்கனவே இந்த ஊருக்குப் பலமுறை வந்தவனாம். அதனால் அனுபவத்தின் அடிப்படையில் அவனை இன்றைக்கு அனுப்பியிருக்கிறார்களாம். இதையெல்லாம் அவனே சற்று முன்பு மரத்தடிக்கு வந்து நிழலில் நின்று டீ குடித்தபடி யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தான். மறுபடி சென்று உற்சாகமாக வருவோர் போவோரிடம் நோட்டிஸ் வினியோகித்தவன் குரல் சற்றைக்கெல்லாம் தடித்து ஒலிப்பதைக் கண்ட குரியகோஸ் “எலே
அங்க என்ன சத்தம் சண்டையான்னு பாருடே பொடிமட்டை” என்றார். குறிப்பறிந்து சாலையின் அந்தப் பக்கம் சென்று திரும்பிய பொடி மட்டை “அய்யோ அய்யோ” என்றான் வடிவேலு குரலில். “சொல்லிட்டு சிரிடா” என்று அதட்டினார் மூர்த்தி

“இல்லை மாமா அந்த மஞ்ச பனியன் போட்ட ஆளு இப்ப ரியல் எஸ்டேட் கம்பெனி சார்பா நோட்டீஸ் குடுக்கிறாப்ள இல்லையா அவரு போன மாசம் வேற ஒரு சூரிய காந்தி எண்ணெய்க் கம்பெனிக்காக இதே இடத்துல குடையை நட்டு ஒண்ணு வாங்குனா ஒண்ணு ஃப்ரீன்னு வித்தாப்ளயாம். அந்த எண்ணெய் ஒத்துக்கிடாம மந்திரமூர்த்தி அண்ணனுக்கு வயித்து நோவாப் போச்சாம். கம்பெனி அட்ரஸ்ல கேக்கலாம்னு பார்த்தா அது வட இந்தியால தயாராகுது. கடைல வாங்கிருந்தா திருப்பி ரிடர்ன் குடுத்திருக்கலாம் இப்பிடி வீதில வாங்கிட்டு வந்து உசுர வாங்குறீயளேன்னு வீட்ல ஒரே சண்டையாம். அத்தாச்சி அன்னைக்கு டின்னு கட்டுன ஆத்திரத்தை எல்லாம் இன்னைக்கு அதே பய்யன் வேற கம்பெனி விளம்பரத்துக்கு நோட்டீஸ் தர்றதைப் பார்த்ததும் மந்திரத்துக்கு சொல்லொணாக் கடுப்பாய்டிச்சி”.. சிரித்துக் கொண்டு “எண்ணெய வாங்கிட்டு பாதிக்காசு குடுறான்னு கேட்டா அவன் பாவம் நித்தம் ஒரு கம்பெனிக்கு வேலை பார்க்குறவன் எப்பிடி திருப்பித் தருவான். போதும் போதும்னு ஆயிட்டது போங்க..”

“அப்பறம் எப்பிடி சமாதானம் ஆனாப்டி என்று கேட்ட மூர்த்தியிடம் இதென்ன உலக யுத்தமா மந்திரமூர்த்தி ஒரு வெளங்காத பய. ஓனரையில்ல சட்டையப் பிடிக்கணும்..?” என்றார் குரியகோஸ் “அட என்னங்க நீங்க முதலாளி எல்லாம் இப்ப வடக்கஸ்தன். அவனை நாம நெருங்கமுடியாது. அவன் வானத்துல பறப்பான். வீதியில அவன் கால் படாது கேட்டேளா..? அவனையெல்லாம் நாம வாழ்க்கையில ஒருதடவை கூடப் பார்க்கவே முடியாது. நாமல்லாம் அவனை நெனைச்சிட்டே வாழ்ந்துட்டுப் போணும். தட்ஸ் ஆல் வாத்தியாரே நீரும் நம்ம நடேசன் மாதிரி இருக்கப் பழகிக்கும்” என்று சிரித்தபடி கடந்து போனார் சாமிக்கண்ணு.

ஆளாளுக்குப் பேசினார்கள் கட்சி கட்டிப் பிரிந்து நின்றார்கள்

நோட்டீஸ் குடுத்தவனால நிலத்தோட வில்லங்கத்துக்கு ஜவாப் சொல்ல முடியுமா? போன மாசம் எண்ணெய் வித்தவனை இன்னைக்கு திரும்பக் குடுன்னு கேட்டா என்னய்யா நியாயம்? அவன் கையில இருந்த நோட்டீசை எல்லாம் பிடுங்கி எண்ணைய வச்சிட்டு காசு திருப்பிக் குடுன்னு கேட்குறதெல்லாம் அராஜகமில்லே..?

இப்போது அந்த இடம் வேறொரு வெம்மைக்குப் பழக்கமாகிக் கொண்டிருந்தது. யார் யாரோ வேடிக்கை பார்க்க அருகே வந்து நின்றுகொண்டிருந்தார்கள். கொஞ்சம் காற்றுக் குறைவோ என்னவோ லேசாய் வியர்த்தது குரியகோஸூக்கு. நடேசன் எப்போதும் எதிராடிப் பேசுகிறவரில்லை. ஆனால் ரத்தக்கொதி உள்ளவர். எதையாவது தனக்கு நிகழ்கிறது என நம்பினார் என்றால் அதன் பின் பேயாட்டம் ஆடுவார். அவரைப் பார்த்துக்கொண்டே பொடிமட்டை “வக்கு இருந்தா எண்ணெய்க் கம்பெனி முதலாளி சட்டையைப் பிடிச்சி இழுத்துருக்கலாம்ல” என்று பொருத்தமில்லாமல் மீண்டும் எடுத்தான். அது என்னவோ தனக்கு விடுக்கப் பட்ட அம்பு எனப் புரிந்து கொண்டார் நடேசன்.

“நானெல்லாம் QVS கம்பெனியில கிளார்க்கா சேர்ந்தன்னிக்கி எனக்கு பதினெட்டு வயசு. நாப்பது வருஷம் ஒரே சீட்டுல வேலை பார்த்தாக் கூடப் போதும்னு இருந்தேன். படிப்படியா முன்னேறி ஒரு கட்டத்துல சீனியர் அசிஸ்டெண்ட் மேனேஜர் அக்கவுண்ட்ஸ் அப்டின்ற போஸ்ட்ல உக்கார்ந்தேன். எனக்குக் கீழே அன்னிக்கு எண்பத்து மூணு பேர் வேலை பார்த்தாங்க.. என் கம்பெனி தான் எனக்குக் கடவுள். இதோ ரிடையர் ஆனப்புறம் கூட மூனு வருஷம் எக்ஸ்டென்ஷன் தந்தாங்க. போதும் போதும்ன்ற அளவு எனக்கு உயரத்தைக் குடுத்தது என் கம்பெனி தான். நான் அதுமேல வச்சது விஸ்வாசம். அது என்மேல வச்சது கருணை. என்கூட வேலை பார்த்த பட்டாபிராமன்ற அசிஸ்டெண்ட் மேனேஜர் ஹார்ட் அட்டாக்ல பொட்டுன்னு போயிட்டான். உடனே கம்பெனி அவன் குடும்பத்துல ஒருத்தருக்கு நிரந்தரமா வேலை தந்துது. பட்டாபியோட ரெண்டாவது ஸன் இப்போ சீனியர் மெஷின் டூல்ஸ் இஞ்சினியரா அஹமதாபாத்ல வேலை பார்க்கறான். எல்லா முதலாளியுமே கெட்டவங்கன்னு சொல்றது ஒரு ஃபேஷனாப் போய்ட்டது”

நடேசனுக்கு உதடுகள் துடித்தன. அவர் கையில் கட்டி இருப்பது விலை மதிப்புள்ள கடிகாரம் மட்டுமல்ல. 25 ஆம் வருட சர்வீஸைப் பாராட்டி கம்பெனி அணிவித்த பட்டயம். அதெப்படி எல்லா முதலாளியும் கெட்டவர்களாக இருக்க முடியும்..?

4

மழையைப் புரிந்து கொள்வது சிரமம். அடுத்த வினாடி என்னவாக மாறும் என்று தெரியவே தெரியாது. வருட வருடங்களாய் அது தன்னிஷ்டத்துக்கு வந்து போகிறது. பருவம் தப்பாத மழைக்குத் தனி நன்றி சொல்லலாம். தப்பே இல்லை. அந்த வருடம் சொல் பிசகாமல் பெய்து கொண்டிருந்தது மழை. பெரியவீட்டில் இருந்து அவினாசி மட்டும் சைக்கிளில் வந்து ஜாபர் கடையில் டீ வாங்க நின்று கொண்டிருந்தான். “எங்கவே கம்பெனியக் காணம்?” என்று கேட்டதும் “இண்டோர்லயே கடை நடத்றான் கிறுக்குப் பய. மாடியை விட்டு கீழ கூட வர்றதில்ல. மழை முடியுமட்டும் இதான் ஸீன். மழை வாழ்க” சீட்டியடித்தபடி கிளம்பி மறைந்தான். குரியகோஸ் மந்தைக்கு வந்தும் ரெண்டு மூணு நாட்கள் ஆகின. மூர்த்தி இங்கே வரப்பிடிக்காமல் ரத்தினம் கடைக்குப் போகலாம் என்று மழைக்குத் தப்பி ஆட்டோவில் கிளம்பினார். வழியில் சுந்தரமும் சேகரனும் பேசிக் கொண்டிருக்க சேகரனைத் தன்னோடு அழைத்துப் போனார்.

“குரியகோஸ் தனக்குன்னு ஆழாக்குப் பால் கேட்டப்ப நீ மறுத்திருக்கப் படாதில்லடே” என்றதற்கு தயாராக இருந்த பதிலை சொன்னார் சேகரன்.
“இந்தாரு மூர்த்தி நம்ம பழக்க வழக்கம் வேறவே… இது கம்பெனி விஷயமல்லா.. சொசைட்டின்ற பேர்ல பால் கம்பெனி ஒண்ணு தான் கொள்முதல் செய்யிதி. நாங்க ரீடெயில் செய்யப்படாது. என் வீட்டுக்கு எடுத்து வச்சிக்கிடலாம். மத்தபடி வியாபாரமாப் பண்ணக் கூடாது. இத எழுதி கையொப்பமிட்டிருக்கம்லா.. மீறமுடியுமா தாயும் பிள்ளையும் ஒண்ணுன்னாலும் வாயும் வயிறும் வேறலா.. .எல்லா பேரும் பாக்கெட் பாலுக்கு மாறினப்புறம் தானடே என்னைய மாதிரி பண்ணை ஓனருங்க கம்பெனிகளை நாடினோம்.. இப்ப வந்து ஆளாக்கு பால் குடுன்னு கேக்குறதை நிறுவ முடியுமா..? இவாள்ட்ட நல்ல பேர் எடுக்கத்தான் ஆசை. மொத்தப் பாலையும் யார் வேணா மாத்திக்கிடட்டும். ஆளாக்கு தர்றது ஆகாவளி”

சிறிய மௌனத்திற்கப்பால் “செரி உண்ட்ட நான் இதைச் சொன்னேன்னு சொல்லாதிரு போதும்” என்று மட்டும் சொன்னார் மூர்த்தி. அன்றைக்கு ரத்தினம் கடையிலும் இருக்க ஒப்பாமல் சீக்கிரமே திரும்பி விட்டார்கள் .

மழை அடித்து வலுத்தது. அடுத்த இருபது மணிநேரங்கள் மழையின் பிடியில் மண் இருந்தது. மறுநாள் எப்போது புலர்ந்ததெனத் தெரியாமல் வெளியே வந்த சனமெல்லாம் ஊர் மந்தையில் மரம் சாய்ந்து கிடப்பதைப் பார்தது உச்சுக் கொட்டியபடி சுற்றிப் போய்க் கொண்டிருந்தனர். யாருக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை. பிரசிடெண்ட் எம்.எல்.ஏவிடம் கேட்கவேண்டும் என்று ஃபோன் செய்தார். வனத்துறை பொதுப்பணித் துறை என நாலைந்து துறை சார்ந்த ஆபீசர்கள் வர ஆரம்பித்திருந்தார்கள். இனி இதனை எழுப்பி நிற்க வைப்பது அசாத்தியம் என்று தெரிந்த பிறகு முறிந்த மரத்தை முற்றிலுமாக நீக்கி விடுவதே சிறப்பு என்ற முடிவுக்கு வந்தனர். இரண்டு தினங்கள் கடுமையாக முயற்சி செய்ததில் அப்படி ஒரு மரம் இருந்த தடமே தெரியாமல் இடமே புதிய தோற்றத்துக்கு மாறி இருந்தது.

எதிரே மைதானத்தின் வெளிச்சுற்றுச் சுவரை ஒட்டிக் கட்டுவதாக இருந்த யூனியன் ஆஃபீஸூக்கான கட்டிடத்தை இனி இந்தப் பக்கம் மரம் இருந்த இடத்தில் கட்டலாம் என்பதாக ஏகமனதாக அடுத்த வாரமே பூமி பூஜை என்று ஊர்க்கூட்டத்தில் முடிவானது. அந்த வாரம் முழுக்க குரியகோஸ் வரவே இல்லை. தான் வராவிட்டால் தன்னைத்தேடித் தனது வீட்டுக்கு யாரும் வருவதை எப்போதோ தடுத்திருந்தார்.

பொடிமட்டை ஜாபர் கடை மாஸ்டரிடம் “அரைப் பார்சல் என் கணக்கில்லே இது கம்பெனி டீ” என்று சப்தமாகக் கேட்டான். குரியகோஸ் மூசா கடைக்கு பேசினதாகப் பொடிமட்டை சொன்ன போதுதான் அவர் ஊரில் இருக்கிறார் என்று தெரிந்தது.

குரியகோஸ் மீண்டும் மந்தைக்கு வந்த போது வேற்றூருக்கு வந்தாற் போல் இருந்தது. மூசா கடைக்கும் ஜாபர் டீக்கடைக்கும் இடையே நாலு இரும்பு சேர்கள் போடப்பட்டிருந்தன. அதில் இரண்டில் அமர்ந்து எப்போதும் போலப் பேசிக் கொண்டிருந்தார்கள் சேகரனும் மூர்த்தியும் இவர் வந்ததும் வாங்க வாங்க அண்ணாச்சி என்று எழுந்து மரியாதை செய்தனர். அரை மணிநேரம் கூட ஆகவில்லை. குரியகோஸூக்கு உட்கார இருப்புக் கொள்ளவில்லை. முன்பிலாத வெயில் காற்றின் வரத்துக் குன்றியது வேறு சதா வியர்த்து ஊற்றியது.

நடேசனும் சொக்கரும் தூரத்தில் ஏதோ மும்முரமாய் விவாதித்தபடி இருக்க குரியகோஸ் தாழ்ந்த குரலில் “எடே மூர்த்தி. இனி இந்த இடம் சரிப்படாது. நீ ஒரு கடைக்கிப் போவயே வாசியார்புரத்தில அதென்னது ரத்தினம் எலக்ட்ரிகல்ஸா..? பகல்ல அங்கன வேணா போயிக்குவமா இனிமேட்டு?” என்றார். எங்கோ பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தி “இப்பல்லாம் ரத்தினத்தோட பொஞ்சாதியும் மச்சினனும் கடைக்கித் தொணைக்கி வந்துர்றாக அண்ணாச்சி.. அவ்விடம் செரிப்படது” என்றார். சேகரனுக்கு வேறொரு உண்மை தெரியும். ஆனாலும் சொல்ல முடியாதல்லவா?

வெக்கையில் ஊறிய உடையை விரல்களால் நகர்த்தினபடியே குரியகோஸ் “செரித்தாண்டே அப்ப பொழுது சாய்ஞ்சப்புறம் வேணா இங்கன பார்க்கலாம்” என அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மூர்த்தி கிளம்பிப் போனதும் சேகரனுக்குத் தானும் சொல்லிக்கொண்டு கிளம்பலாம் என்றாகி
“என்ன அண்ணாச்சி பெலமாயிட்டு சிந்தனை” என்றார்.

ஒரு கணம் யோசித்த குரியகோஸ் தீர்மானமாகி கடசி மவன் ஜெபா அன்னைக்குப் பார்த்தீயள்ல…அஞ்சாறு வருஷமா இவங்கை ஓங்கி இருந்திச்சி கம்பெனில. என்ன நடந்ததோ போன வருசம் இவன் பெர்ஃபார்மன்ஸ் சரியில்லைன்னு சமீபத்துல கம்பெனில இடம் மாத்திருக்கானுக. எவ்வளவோ உளச்சிக் கொட்டினதெல்லாம் மறந்துட்டானுகளேன்னு மனக்கஷ்டம் இவன் இடத்துக்கு வேற ஒரு ஜெர்மன்காரன் வந்திருக்கான் போல. இந்தப் பய காக்கடுதாசி எழுதி நீட்டிட்டு வந்துட்டான். ஐஞ்சு நா முன்னாடி எதோ மருந்தைக் கலக்கி குடிச்சிட்டான் போல.. ஐசீயூல இருந்தவன் இப்பம் தேறிட்டான். இருந்தாலும் பழையபடி குரல் ஏறிக் கேட்க மாட்டேங்குதாம். மருமக அழுதிட்டே ஃபோன் செய்தா. அதாம்டே வெளிய வரவே பிடிக்கலை.

முகத்தை கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டபடி இது இல்லாட்டி வேற வேலை. .இல்லாட்டிக் கூட சம்பாதிச்சது வரைக்கும் போதும்னு இங்கன வந்து ஒண்ணுமண்ணா இருந்தாப் பத்தாதா? “விட்டதப் பிடிச்சிட்டுத்தான் வீட்டுக்கு வருவேன்னு சொன்னானாம். கிறுக்குப் பய” என்றவர் தழுதழுத்த குரலில் “இது உங்கிட்டே சொல்றேன். நீ வெளிப்படுத்திடாத என்ன?” என்று எழுந்து கொண்டார்

தூரத்தில் மரம் வெட்டப்பட்ட இடத்தில் அதன் எச்சங்கள் கிடந்தன. சைக்கிளை அவினாசி ஓட்ட பின்னால் அமர்ந்து வந்த பரணி குதித்து இறங்கினான். மரம் இருந்த தடத்தில் பையைத் தலைகீழாக்கி அதனுள் இருந்த சகல சாமான்களையும் கொட்டினான். முடிவாக அந்தப் பையையும் வேறு திசையில் எறிந்தவன் உதடுகளை ஈரம் பண்ணிக் கொண்டு சுற்றிலும் பார்த்தான். வாகாக ஒரு வேப்பங்குலையைக் கையில் எடுத்து தரையை ஓங்கி அடிக்க ஆரம்பித்தான். “கம்பெனி…எலேய் கம்பெனி…எச்சிக்… கலை…நாயே…. கம்பெனி…ச்சீய்த் தூ….”

இன்னமும் அடித்துக் கொண்டே இருக்க அதைக் கவனியாத முகபாவத்தோடு எதிர்ப்புறம் இருந்த தன் புல்லட்டை நோக்கி நடந்து சென்றார் குரியகோஸ்.

**

(ஆத்மார்த்தி – 25க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார், தற்பொழுது மதுரையில் வசித்து வருகிறார். தொடர்புக்கு – aathmaarthi@gmail.com)

வரலாறும் இலக்கியமும் – தாண்டவராயன் கதை நாவல் அனுபவம்

0
  • பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

மனிதன் என்கிற சமூக உயிரிக்கு இருவித இருப்பு நிலைகள் உண்டு. ஒன்று, வரலாற்றுக்கு முந்தைய கால இருப்பு, இரண்டு வரலாற்றுக்கால இருப்பு. முந்தையது அறிவியலுக்கு பாத்தியதைப்பட்டது. அங்கே நமக்கு வேலை இல்லை.

ஒரு வசதிக்காக வரலாற்றுக்கு முந்தைய மனிதனை X மனிதன் என்றும் பிந்தைய மனிதனை Y மனிதன் என்றும் வைத்துக் கொள்ளலாம்.
வரலாற்றுக்கால இருப்பிற்குப் பின்பு மனிதகுலம் அதனை உரசிப்பார்த்துக் கொள்ள ஒரு உரைகல்லாகவும், மாற்றங்களை, உள்ளோடும் முரண்களை சேமித்து வைக்கும் காப்பகமாகவும், அதிகாரம் உபயோகப் படுத்திய பழம்பொருட்களை காட்சிக்கு வைத்திருக்கும் அருங்காட்சியகமாகவும் வரலாறு விளங்குகிறது. மனிதகுலத்தின் அனைத்து வளர்ச்சிகளையும் வரலாறாக மாற்றுவது, வரலாற்றோடு ஒப்பிடுவது அதில் இடம்பிடிக்க அதிகாரத்தைப் பயன்படுத்துவது, வரலாற்றை திருத்துவது, அதை மறைப்பது அல்லது அழிப்பது இவையும் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. மனிதனுக்கு அவன் இருப்பு எவ்வளவு சிக்கலுக்கு உரியதோ அவ்வளவு சிக்கலுக்கு உரியதாக வரலாறும் உள்ளது. ஆக மனித உயிரிக்கு இரு வித சிக்கல்கள், ஒன்று இருத்தலியல் சிக்கல் இன்னொன்று வரலாற்றியல் சிக்கல். ஒருவேளை சமூகங்களின் இருத்தலியல் சிக்கல்களின் பூதவடிவத் தோற்றம்தான் வரலாறாக இருக்கக் கூடும்.

வரலாறு என்கிற கருவி உருவாக்கப்பட்ட பின்பு அனைத்தும் வரலாற்றுக்கு உட்பட்டதாக மாறிவிடுகிறது. அறிவியலின் வரலாறு, மதங்களின் வரலாறு, கணிதத்தின் வரலாறு, கடவுள்களின் வரலாறு உட்பட ஏறக்குறைய அனைத்து அறிவுசார் துறைகளின் பிறப்பு-வளர்ப்பு-இறப்பை பதிவு செய்து சான்றிதழ் வழங்கும் அலுவலகமாக வரலாறு நிறுவப்பட்டுள்ளது.

வரலாறு ஒரு தத்துவப் பிரச்சனையும் கூட. காந்தி, வரலாறு இல்லாத தேசம்தான் மகிழ்ச்சியாக இருக்கும் என சொல்லியிருக்கிறார். அப்படி ஒரு ஆத்மீக தேசம் ஏதேன் தோட்டத்தில் அமைந்தால்தான் உண்டு. வரலாறு செத்துவிட்டது என ஃபிரான்ஸிஸ் ஃபுகோயாமா அறிவிக்கிறார். (ஐரோப்பியர்கள் சேகண்டி அடிப்பதில் எல்லோரையும் முந்திக்கொள்வார்கள் – நீட்ஷே, கடவுள் செத்துவிட்டார் எனவும், ரொலாண்ட் பார்த் ஆசிரியர் செத்துவிட்டார் எனவும் கடவுளும், ஆசிரியரும் இறந்து போனதை ”அறிந்து” தெரிவித்தவர்கள்.

இதற்கெல்லாம் மேலாக வரலாறு அதிகாரத்தின் கருவி. அதற்குத் தேவையான சகல கட்டுமானப் பொருட்களையும், தொழில்நுட்பத்தையும் வரலாறே வழங்குகிறது.

அதிகாரப்பூர்வ வரலாறு எழதுதல் தொடர்புடையது. அதன் துவக்கமே எழுத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது. இந்த எழுதுதல் என்பதை வெறுமனே பதித்தல் (registering) என அர்த்தப்படுத்த முடியாது. நிகழ்வொன்றை பதிவு செய்யப் போகும் வரலாற்றாளர் தேர்ந்தெடுப்புடன் அதனை செய்வதற்கான சாத்தியமும் உண்டு. நம்பிக்கையான வரலாறு, நம்பகமற்ற வரலாறு என இரு பரிமாணங்களும் வரலாற்றுக்கு உண்டு. இங்கே அறிவியல் பூர்வமான அல்லது தர்க்க பூர்வமான கருவிகள் மூலம் நம்பகத்தன்மைய சோதிப்பதும் நடக்கிறது. அதிகாரத்தோடு அதிகம் தொடர்புடையது என்பதாலும் அதன் முதன்மையான கருவிகளுல் ஒன்று என்பதாலும் கண்ணாடிப் பொருளின் கவனத்துடன் கையாளப்பட வேண்டியிருக்கிறது. இது y வரலாற்றின் குணாதியதிசயங்கள்.

எழுதப்பட்டவை தாண்டியும் ஒரு வரலாறு உண்டு. அது சொல் மற்றும் நிகழ்த்து (oral and performing). மொழிப் பயன்பாடு, பண்பாட்டுச் செயல்பாடுகள், கதைகள், புராண இதிகாசங்களில் மறைந்தும் தெளிந்தும் வரலாறு கிடைக்கிறது. சாதாரண சொல்வழக்குப் பிரயோகமான “அவன் பெரிய எம்டன்” என்பதில் ஒரு வரலாற்றுச் சம்பவம் மொழியில் பதிகிறது. வரலாற்றை எழுதப்படுவது மற்றும் நிகழ்த்தப்படுவது என பிரித்துக் கொள்ளலாம். இதன் துவக்கம் x காலகட்டத்திலிருந்து துவங்குகிறது.

எழுதப்படும் வரலாற்றுக்கு மூன்று நிபந்தனைகளை நாம் விதிக்கலாம்.

  1. அதிகாரப்பூர்வம் என்று அது அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்
  2. கற்பிக்கப்படுகிற ஒன்றாக இருக்க வேண்டும்
  3. கல்விநிலைய மயப்பட்டதாகவும் (academic) இருப்பது.

சுருங்கச் சொன்னால் நிறுவன மயப்பட்ட வரலாறு எனச் சொல்லலாம்.
நிகழ்த்தப்படும் வரலாற்றுக்கும் மூன்று நிபந்தனைகளை விதிக்கலாம்

  1. அதிகாரத்தினால் இடம் மறுக்கப்படுதல்
  2. கற்பிக்கப்படுவதாக இல்லாமல் நிகழ்த்தப்படுதல் மூலம் கடத்துதல்
  3. தெருக்கள் போன்ற பொது வெளியில் இயங்குதல்
    நிகழ்த்து வரலாறும் நிறுவன மயப்பட்டதாக இருக்கிறது.
    நிகழ்த்து வரலாறு எழுத்து வரலாற்றிற்கு மூத்தது. X காலகட்ட மனித இருப்பின் சில பதிவுகள் அதில் எஞ்சியிருப்பதை காணக் கூடும். இதை வேறுவிதமாகச் சொன்னால் பின் அரங்க வரலாறு எனலாம்.
    சடங்கியல் இந்த பின் அரங்க வரலாற்றின் – அதிகாரப்பூர்வ என்கிற அந்தஸ்து பெறாதவற்றின் அல்லது வரலாறு என்னும் தகுதியைப் பெற முடியால் போனவற்றின் மறுநிகழ்த்துதல் அல்லது நினைவுபடுத்துதல்.
    சடங்கியல் தொன்மத்தோடு உறவாடுவது. தொன்மத்தில் வரலாறு ஒளிந்து கிடக்கிறது. தொன்மங்கள் கதைகளாகவும், சடங்குகளாகவும் படியெடுக்கப்படுகின்றன. சடங்குகள் மூலம் அதன் குறியீடுகள் மூலம் சொல்லப்படும் வரலாறு பெரும்பாலும் உள்ளூர்த்தன்மை வாய்ந்தது. அது ஒரு சமூகக் குழுவிற்கோ, குறிப்பிட்ட பிராந்தியப் பரப்பிற்கோ அதன் வரலாற்று நிகழ்வொன்றை மறுகூறல் அல்லது நினைவுபடுத்துதல் செய்வதற்காக நிகழ்த்தப்படுபவை. சன்னதம், பேய்க்கதைகள் போன்றவற்றின் மூலம் உள்ளூர் வரலாறு கடத்தப்படுகிறது. இது பெரும்பாலும் தனிநபர் வாழ்வில் சிறப்பித்து பதிக்க வேண்டிய நிகழ்வை சொல்வதற்காக அல்லது பிராந்திய வரலாற்று அசைவை பதிவு செய்வதற்காகவும் இருக்கலாம்.
    கற்பிக்கப் படுவதும், நிகழ்த்தப்படுவதும் மறதிக்கு எதிரான ஞாபகப்படுத்துதல். கேள்விக் குறியின் தூண்டில் கொக்கி எப்படி அதிகாரபூர்வ வரலாறு எனச் சொல்லப்படுபவற்றின் மீது தொங்கிக்கொண்டிருக்கிறதோ அப்படித்தான் நிகழ்த்தப்படும் வரலாற்றின் மீதும். (ஆனால் எம்ஜிஆர் காலத்திலிருந்தே நாம் எளிய மக்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என நம்புபவர்கள்). அது ஒரு அளவிற்கு உண்மையும் கூட.

சன்னத நிலை, ஆவியுருத் தோற்றம், சடங்கியல் தருணங்களில் உடல்களின் கூட்டிசைவு போன்றவை கட்டுப்பாடற்ற மனநிலையின் கட்டுப்பாட்டில் நேர்கிறது. சோடியம் பெண்டதால் உபயோகிப்பதின் மூலம் கட்டுப்பாடின்றி பேசுவதின் மூலம் உண்மை, பொய் வேறுபாடின்றி ஒப்புதல் வெளிப்படுவதைப் போலத்தான் இந்த நிகழ்த்து வரலாற்றின் போதிருக்கும் மனநிலை. அது உண்மை, பொய் வேறுபாடின்றியான ஒரு ஒப்பித்தல். இதனால் நிகழ்த்து வரலாற்றின் மீதும் நம்பகத்தன்மையின் தீர்த்தத்தை தெளித்து அதைப் புனிதப்படுத்துவோம்.

பண்பாடு, அரசியல் தளங்களில் இந்த நினைவுகூறல் அவசியமானதாகவும், கற்பிக்கப்படும் வரலாற்றின் நேர்மையை கேள்வி கேட்கவும், ஒளிந்து வெளிப்படும் வரலாற்றை தலைமுறைகளுக்குக் கடத்தவும் பயன்படுகிறது இந்த நிகழ்த்து வரலாறு.

மார்க்ஸ் சொன்னதைப் போல மனித சமூகம் இன்றளவும் இரு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. ஒடுக்கப்படுவோர், ஒடுக்குவோர். ஒடுக் கப்படுவோரை மீண்டும் X என்றும் ஒடுக்குவோரை Y என்றும் வைத்துக் கொள்வோம். Y Xன் மீது கத்திரிக்கோல்களோடும், துப்பாக்கிகளோடும் வினைபுரியும் போது X அதற்குப் பதிலடியாக சொற்களோடும், கற்களோடும் எதிர்வினை புரிகிறது.

மிலன் குந்த்ரா சொன்னது, அதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என்பது மறதிக்கு எதிரான ஞாபகத்தின் போராட்டம்.

வரலாறும் ஞாபகத்தோடு தொடர்புடையது. ஞாபகத்தினால் கட்டுப்படுத்தப் படுவது. கோணங்கி ஒருமுறை சொன்னார், “நனைவிலி மனத்தில் ஒளிந்திருக்கும் வரலாற்றை மொழி அடுக்குகள் வழி கண்டடைவது” என்று. இங்கே ஞாபகம் என்பது சமூகத்தின் கூட்டு ஞாபகம். கோணங்கி சொன்னது கூட்டு நனைவிலி. மொழி இந்த கூட்டு நனைவிலியை நினைவுபடுத்துகிற கருவியாகவும் உள்ளது. பெயர்சொற்களும் வினைச் சொற்களும் மொழியை நனைவிலி மனத்திலிருந்து பிரித்துவிடுகின்றன.

மனித இரத்தத்தின் சுவையை வரலாற்றின் நாவைத் தவிர அதிகம் அறிந்தவர்கள் யாரும் இல்லை. வரலாற்றைப் பயில்பவர்களுக்கு இயல்பாகவே இரு வாய்ப்புகள் கிடைத்துவிடுகிறது. அதன் மாணவர்களுக்கு இடையேயும் இரு பிரிவுகள் உருவாக்கிவிடுகிற தன்மை வரலாற்றுக்கு உள்ளது.

இந்த இரு பிரிவினரின் செயல்களால் வரலாற்றுக்கு மேலும் இரு குணங்கள் தோன்றுகின்றன. ஒன்று இயங்குநிலை வரலாறு மற்றொன்று தகவல்நிலை வய வரலாறு. உதா. தென் அமெரிக்கா ஸ்பானியர்களின் காலனியாக இருந்தது எனச் சொல்வது தகவல்மய வரலாறு. ஸ்பானியர்கள் இன்கா, மாயன், அஸ்டெக் இனத்தவரை கொன்றழித்தனர் என்பது இயங்குநிலை வரலாறு. அதிகாரம் தகவல்மய வரலாற்றை எழுதுவதிலும், கற்பிப்பதிலும் ஆர்வமாக இருந்தால் அதற்கு எதிராகப் போராடுபவர்கள் இயங்குநிலை வரலாற்றை வளர்த்து எடுக்கப்படுவார்கள். இந்த இயங்குநிலை வரலாற்றின் உள்ளூர் வடிவம்தான் சடங்கியல், தொன்மம் மற்றும் கதைகள். ஒரு வகையில் ஞாபகப்படுத்துதல்.

அதிகாரத்தின் கருவியோடு இலக்கியத்தோடு என்ன தொடர்பு? வரலாற்றைப் போலவே இலக்கியமும் அனைத்து அறிவுசார் துறைகளையும் தன்னகத்தே உள்வாங்கி அவற்றை விவாதிக்கிறது, refine செய்கிறது, சாத்தியக் கூறுகளை அதிகரிக்கிறது. இலக்கியம் என்றால் என்ன? என்பதற்கு நிறைய விளக்கங்கள், ஒவ்வொன்றும் பொருத்தமானதாகவே கூட வழங்கப்படுகின்றன.

இலக்கியத்திற்கும் வரலாற்றிற்கும் அடிப்படையானது தரவுகளும் தகவல்களும். இரண்டும் தரவுகளையும் தகவல்களையும் Manipulate செய்வதின் மூலம் அவற்றை உள்வாங்கிக் கொண்டு அவற்றின் தேவையைப் பொறுத்து வெளிப்படுத்துகின்றன.

எட்கர் ஆலன் போவின் “Golden Bug” என்கிற கதையின் ஆதார பலமே ஒரே ஒரு தகவல்தான். ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் எழுத்து ‘e’. இதைச் சுற்றி ஒரு தீவு, மூன்று பாத்திரங்கள், கடற்கொள்ளையர்களின். சங்கேத மொழி போன்றவை அமைக்கப்படுகின்றன. இது தரவொன்று இலக்கியமாவதற்கு உதாரணம். நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டங்களில் மதக் கலவரங்களுக்கு ஒரு வரலாறு உண்டு. அதைச் சொல்வதற்கு ஒரு புளிய மரத்தின் கதை தேவைப்படுகிறது.

வரலாறு தரவுகளையும், தகவல்களையும் திருத்தம் செய்கிறதென்றால் இலக்கியம் இவற்றின் துணையோடு வரலாற்றை விசாரணை செய்கிறது.இதுவரையிலும் இலக்கியம் அதிகாரத்திற்கு எதிரானதென்று நம்பப்படுகிறது. இதை உண்மை என நம்பித்தான் வரலாற்றை விசாரணை செய்வதற்கு இலக்கியவாதி முனைகிறான். அப்படி வரலாற்றை இலக்கியமாவதற்கு அவசியப்படுகிற ஒரு வாதத்தையும் பார்க்கலாம்.

இடலோ கால்வினோ தன்னுடைய இலக்கியமும் தத்துவமும் என்கிற கட்டுரையில் தத்துவம் சார்ந்த எழுத்துக்களை எழுதுபவர்கள் இலக்கியப் பிரதியில் அதனை கேள்விக்குட்படுத்தவும் அதன்மூலம் அதனை வளர்த்தெடுக்கவும் முனைய வேண்டும். அப்படிச் செய்கிற போதும் இலக்கியம்தான் பிரதியில் முன்நிற்க வேண்டுமேயன்றி தத்துவம் அல்ல. இக்கருத்தை அவர் சார்த்தரின் ஒவ்வாமை நாவலுக்கான விமர்சனமாகவும் சொல்கிறார். இந்த இடத்தில் தத்துவம் என்பதை வரலாறாக பதிலீடு செய்து பார்த்தால், வரலாற்றை எழுதும் இலக்கியவாதிக்கும் பொருந்துவதாக இருக்கும்.

இதுவரையிலும் சொன்னவற்றின் துணையோடு தாண்டவராயன் கதையை அணுகலாம். HG Wells இன் கால இயந்திரத்தில் ஏறி சமகாலத்திற்கு முன்வழியில் சென்றால் அது அறிவியல் புனைவு, பின்வழியில் சென்றால் அது வரலாறு. தாண்டவராயன் கதை நம்மை ஏற்றிச் செல்வது 18ம் நூற்றாண்டின் கடைசிப் பெட்டிகளுக்கு.
நாம் இருநூற்றாண்டுகளைத் தாண்டிவிட்டோம். அக்காலகட்டத்தை ஏடுகளிலும், இணையத்திலும் ஏற்றியிருக்கிறோம், கற்பிக்கிறோம், கற்கிறோம், பதிகிறோம், உசாவுகிறோம்.

இந்நாவலில் புலப்படும் காலத்திற்கும் நமக்கும் இடையில் சிந்தனைத் துறையில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இலட்சியவாதம், நவீனத்துவம் இப்போது பின் நவீனத்துவமும் கூட தன் மூப்பை எய்திக்கொண்டிருக்கிறது. இந்திய ஆசிய நிலப்பரப்பில் காலனியாதிக்க விரிவாக்க காலத்தில் வைத்து சமகால அரசியல் கருத்தியல்களை தாண்டவராயன் கதை பேசுகிறது.

காலனியாதிக்கத்தை அதன் தத்துவ, இலக்கிய பொருளியல் கூறுகளை விசாரணை செய்வது பின்காலனிய சிந்தனை. இந்நாவல் தமிழின் முதல் பின் காலனிய நாவல். எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதியில் காலனிய ஆட்சியாளர்கள் வந்து போவார்களே ஒழிய காலனியம் விசாரிக்கப்படாது.

ஹைதர், திப்புவின் வீழ்ச்சி, கிழக்கிந்திய கம்பெனி தென்னகத்தில் வலுவாக காலுன்றுவதற்கு அடிகோலிய முக்கிய நிகழ்வு. இது பின்புலம், தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடக எல்லைக்குட்பட்ட பகுதி நாவலின் பிராந்தியம். இந்த நிலம் கிழக்கிந்தியக் கம்பெனி என்கிற அந்நிய மற்றும் உலகு தழுவிய சக்தியால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிராந்தியத்தின் காலனிய வரலாற்றின் தோற்றுவாயைச் சொல்வதற்கு இங்கே இரு வாய்ப்புகள் பா.வெங்கடேசனுக்கு உண்டு. ஒன்று, இந்த நிலத்தின், மாந்தர்களின் பிராந்திய வாழ்க்கையில் வேற்று நிலத்தவர்களின், இனத்தவர்களின் அசைவு அப்படியே சொல்வது.

மரங்களுக்கிடையில் அமர்ந்து கொண்டு வனத்தில் படரும் பனிப்படலத்தை ஊடுருவி அப்பால் பார்க்க முயலுவதைப் போன்றது இது. இரண்டாவது பனிப்படலத்திற்கு உள்ளே இருந்து கொண்டு மரங்களைப் பார்க்க முயல்வது. அதாவது அந்நிய, வேற்று நிலத்தவர்களின் பார்வையில் இந்தப் பிராந்தியத்தைப் பார்ப்பது. இதில் பா.வெங்கடேசன் தேர்ந்தெடுத்தது சிக்கலானதும், சவாலானதுமான இரண்டாம் வகை. தமிழ்நாவல் வரலாற்றை மனத்தில் கொண்டு பார்த்தால் இந்நாவல் பழக்கமற்ற மலைகளில் மலைஏற்றத்திற்கு முயற்சிப்பது போன்ற சாகச முயற்சி. ஆனால் திட்டமிடப்பட்ட சாகச முயற்சி. தொலைந்து போவதின் மூலம் கண்டடைவதற்கும், திட்டமிடப்பட்ட சாகச முயற்சியில் கண்டடைவதற்குமான வேறுபாடுகளை தெரிந்தேதான் இந்த முயற்சியில் அவர் இறங்கியிருக்க வேண்டும்.

இரண்டாம் வகையைத் தேர்ந்தெடுத்ததின் மூலம் பா.வெவுக்கு ஒரு வசதி கிடைக்கிறது. வேறு வேறு நிலங்களை புவியியல் பிரதேசங்களைப் பேச ஒரு வாய்ப்பு. பனிமூட்டத்திற்கு அப்பால் இருந்து கொண்டு வனத்தைப் பார்ப்பதும், வனத்திற்குள்ளிருந்து பனிப்படலத்தைப் பார்ப்பதும் குழப்பமானது. இந்த பனிமூட்டத்தைப் பற்றிப் பேசுகிற நாவல்தான் தாண்டவராயன் கதை. பார்வைக் குழப்பத்திற்குக் காரணமான காரணிகளைப் பற்றிப் பேசுகிறது.

பா.வெங்கடேசன் பயணம் போக இரு நிலங்கள் இருக்கின்றன. நிலன் என்பது புவியியல் அர்த்தத்தில் அல்ல. நாவலின் நிலம் என்பது நிலம் பற்றிய கருத்து. நிலம் என வழங்கப்படுகிற ஒரு கருத்தைக் குறித்து இந்நாவல் பேசுகிறது. நிலம் என்கிற கருத்து எவ்வாறு உருவாகிறது? அதற்கு பங்களிக்கிற காரணிகள் எவை? இந்த நிலமென்கிற கருத்தினை உருவாக்கி அளிக்கிற அரசியல், தத்துவ கலாச்சாரத் தோரணத்தில் எந்தெந்த மரத்தின் இலைகள் தொங்குகின்றன எனக் காட்டுவதே இந்நாவல்.

ட்ரிஸ்ட்ராம் மூன்று நிலங்களில் அசைகிற வாய்ப்பைப் பெற்றவன். முதல் நிலம் இங்கிலாந்து, இரண்டாவது பாரிஸ் மூன்றாவது தென்னகம். 1790களின் இங்கிலாந்து மற்றைய ஐரோப்பிய நாடுகளை விடவும் அரசியல், பொருளியல் தளங்களில் முன்னேறிய நாடு. பாரிஸ் ஐரோப்பாவின் பல புரட்சிகளுக்கு மையம். இங்கிலாந்து ஐரோப்பாவில் இருந்தாலும் கூட அது வேறு நிலமாகத்தான் இருந்தது.

நாவலில் இங்கிலாந்தின் பிரதமர் தோன்றுகிறார். ஏனைய ஐரோப்பிய நாடுகளில் மன்னராட்சிக்கு எதிரான புரட்சிகள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. ஒப்பீட்டளவில் அமைதியான (ஆனால் உள்புகைகிற) நிலத்திலிருந்து கொந்தளிப்பான நிலத்தின் அசைவுகளை காட்சியுற்று, அந்நியமான நிலத்திற்கு வருகிறான் ட்ரிஸ்ட்ராம்.

இங்கிலாந்தின் பிரதமர் ஜனநாயக அமைப்பின் பிரதிநிதி. பாரிஸ் புரட்சியாளர்கள் ஏனைய ஐரோப்பாவின் அராஜகவாத புரட்சிகர பிரதிநிதிகள். வனங்களில் சிறை பிடிக்கப்பட்ட மக்களும், கிழக்கிந்தியப் படையினரால் தோற்கடிக்கப்பட்ட ஹைதர் மற்றும் திப்பு காலனிய நிலங்களின் பிரதிநிதிகள். வரலாற்றை முன்பே சொன்னது போல பிரதிகளின் வழியே அறிய முடியும். அதற்கு மிகுந்த உழைப்பு தேவை. அதைவிடவும் முக்கியமாக வரலாற்றுத் தகவல்களை எப்படி நாவலின் உரையாடலுக்குள் பொருத்துவது என்பது. தாண்டவராயன் கதையில் இலக்கிய மாணவர்களுக்கான முன்மாதிரி கிடைக்கிறது.

திப்பு கம்பெனிக்கு எதிராகப் போரிட ஃப்ரெஞ்சுக் காரர்களிடம் உதவி கேட்டது வரலாறு. அவர் பிரதிநிதகளும் ஃபிரான்ஸ் போனதாகக் கூட தகவல் உண்டு. இந்த வரலாற்றை பா.வெ நாவலை ஒரு நிலத்திலிருந்து இன்னொரு நிலத்திற்கு நகர்த்திச் செல்ல பயன்படுத்திக் கொள்கிறார்.
இந்த நிலம் என்கிற கருத்து உடல் என்கிற கருத்தின் பேருரு. நிலத்தில் நேர்கிற அசைவுகள் உடல் புலத்திலும் நேர்கின்றன. எப்படி நிலம் ஒரு வெளியே அப்படித்தான் உடலும் ஒரு வெளி. நெடுங்காலம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் பெண் உடல். ட்ரிஸ்ட்ராம் எலனாரின் உடலை சாபவனத்தில் வைத்து ஆக்ரமிக்கிறான். புணர்ச்சி என்பதே இரண்டு உடல்களின் ஆக்கிரமிப்பு போட்டிதான் மேலும் அந்தப் போட்டியில் ஆண் ஒரு காலனியாதிக்கக்காரனைப் போலத்தான் செயலாற்றுகிறான். பெண் அவள் உடலை அந்த மண்ணின் குணங்களோடும் தேவைகளோடும் பேணுகிறாள். அதனோடு இயங்குகிறாள், தொடர் உறவைப் பேணுகிறாள். ஆண் அவற்றை தனது ஆக்ரமிப்பின் மூலம் சிதைக்கிறான். ஆண் பெண் உடலை புணர்ச்சியினாலும் ஆண் உடலை போரினாலும் ஆக்ரமிப்பு செய்கிறான்.
எலனாரின் உடல் புறக்கணிக்கப்பட்ட இங்கிலாந்தின் கிராமங்கள் என்றால் கெங்கம்மாவின் உடல் காலனியச் சக்திகளால் ஆக்ரமிக்கப்பட்ட உடல்.

One is serving a national cause and the other is serving the colonial cause.
தாண்டவராயன் கதை இந்த ஆக்ரமிப்பின் உள்ளோட்டங்களை கண் முன் விரிக்கிறது. ஆண்மைமய மேற்கின் அரசியல் பொருளியல் சக்திகள் பெண்மைமய கிழக்கை ஆக்ரமிப்பது, ஆண்மைமய எழுதப்பட்ட, கற்பிக்கப்படுகிற, தகவல்மய வரலாற்றை பிரதி செய்தால், பெண்மைமய வரலாறு சொல்கதை, சடங்கியல், தொன்மங்கள் வழி நிகழ்த்து வரலாற்றை மறுகூறுதல் செய்கிறது. தாண்டவராயன் கதை உடல் போன்ற நுண்ம வெளிகளில் தொழிற்படுகிற அரசியலை நிலம் போன்ற பெரு வெளிகளோடு பொருத்தி அதிலும் மேற்கு கிழக்கு பிளவுகளோடு இரு கண்டங்களின் சுமையை அட்லஸைப் போல தூக்கிச் சுமந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. படைப்பு என்பது ஒரு வலி. பெரும்படைப்பு என்பது கிட்டத்தட்ட அறுவைசிகிச்சை வலியை தரக்கூடியது. உடலைப் பிளந்து, உறுப்புகளை கடந்து நரம்புப் பின்னல்களை தோற்றப்படுத்துகிற தாண்டவராயன் கதை தமிழில் ஒரு இலக்கியப் பிரதிக்கு செய்யப்பட்ட உழைப்பின் புதிய காற்றாலையாகவும், இனிமேல் எழுதவரும் டான் குவிக்ஸாட்டுகள் மோதிப் பார்க்க முனைய வைப்பதாகவும் இருக்கும்.

எலனார் சாபக் காட்டில் புணர்வதால் அந்தகமும், பாரிஸ் புறநகர் பிணவறையில் புணர்வதால் போலிக் கர்ப்பமும் அடைகிறாள். இதில் அந்தகம் இங்கிலாந்தின் புறக்கணிப்பு அரசியலையும், பாரிஸ்புரட்சி கொல்லப்பட்ட பிணங்களின் மீது தனது வெற்றியைக் கொண்டாடுவதை அதன் முடிவுகளற்ற (result less) அராஜகவாதத்தின் சிக்கல்கள் வெளிப்படாமல் பெருத்துக்கொண்டே போகும் போலிக் கர்ப்பமாக காட்சிப்படுகிறது. இந்த இரண்டு நோய்மைகளுக்கும் அதாவது புறக்கணிப்பு அரசியலுக்கும், வன்முறைப் புரட்சியின் அவசரக் கோலத்தின் குறைபாடுகளுக்கும் மாற்றாக அதாவது எலனாரின் நோய்மைகளுக்கு தீர்வு கிழக்கே இன்னொரு நிலத்தின் அரசியலும் கருத்தியலும்.

ஆனால் இந்த நிலம் எப்படி இருக்கிறது? சாதிகளால் பிளவுண்டும், ஏழ்மை (வறுமை அல்ல இதன் பிரச்சனை என்கிறது நாவல்), விளிம்புநிலை மக்கள் அரசாலும் அதன் அசைவுகளாலும் ஒடுக்கப்படுதல், உழைப்புச் சுரண்டலோடு இருக்கிறது. இந்த நிலத்தை பலரும் ஆக்ரமித்துப் புணர்வது கெங்கம்மாவின் உடலாக மாறுகிறது. இந்தப் பிரச்சனைகளுக்கு மேற்கின் தீர்வுகளால் தீர்வு கிடைக்குமா? மேலும் அப்படி முனைந்தால் அதன் பொருத்தப்பாடு? இவற்றை விரிவாக விவாதிக்கிறது தாண்டவராயன் கதை.

இந்த நிலத்தின் ஒடுக்கப்படுவோர் தொன்மங்களில் ஒளிந்திருந்து தங்கள் வரலாற்றைக் கடத்துகின்றனர். உலகத்தின் எப்பகுதி இலக்கியவாதிகளுக்கும் கையாள்வதற்கு ஒரே மாதிரியான பிரச்சனைகள் இருந்தாலும், இந்தியாவின் இலக்கியவாதிகள் பிரதிசெய்ய கூடுதலாகவும் தொடர்ந்து மூலப்பொருட்களை உற்பத்தி செய்வதாகவும் இருக்கும் சிக்கல் சாதி. ட்ரிஸ்ட்ராம் பல சாதியனரோடு பழகினாலும் அவன் நெருக்கமாக உணர்வது கெங்கம்மாவோடு. ஆனால் என்னால் இதனை ஒரு குறியீடாகப் பார்க்க முடியவில்லை.
அவன் தாண்டவராயன் மற்றும் கோணய்யனின் கதையைத் தெரிந்து கொள்கிறான். இதுதான் இந்நிலத்தின் ஒடுக்கப்பட்டோர் வரலாறு எழுதும் முறை. அதனை திருவிழாவாக, சன்னத மனநிலையில், உடல்களின் கூட்டிசைவோடு நிகழ்த்திக் காட்டுதல் மூலம் ஒடுக்கப்பட்டோர் வரலாறு தலைமுறைகளுக்கு நினைவூட்டப்படுகிறது.

போர்களையும், புரட்சிகளையும் உடல்களின் எழுச்சி என்கிறான் ட்ரிஸ்ட்ராம். சடங்கியல் நிகழ்த்துகளும், திருவிழாக்கால உடல்களின் கூட்டிசைவும் கூட உடல்களின் எழுச்சிதான்.

ஐரோப்பவிற்கு வர்க்க அரசியல் சுலபமாகப் பொருந்துகிற அளவிற்கு இந்த நிலத்திற்குப் பொருந்த முடியாமல் நிற்க பெருங்காரணங்களில் ஒன்று சாதியம். நிலத்தின் உள்முரண்களோடுதான் ஒரு கருத்தியலும் கட்டமைக்கப்பட வேண்டும். வேறொரு நிலத்தின் அரசியல் கருத்தியலை அப்படியே இங்கே பொருத்த முனைந்தால் அதன் சிக்கல்கள் என்னவாக இருக்கும் என இந்நாவல் கோடிட்டுக் காண்பிக்கிறது.

இந்த விவாதமும் முழு முடிவாக முன்வைக்கப்படாமல் இந்த இடத்தோடு நின்றுவிடுகிறது. இலக்கியப் பிரதியிலிருந்து ஒரு போதும் தீர்வுகள் கிடைக்காது என்பதற்கு இந்த நாவலும் உதாரணம். மாறாக ஒரு இலக்கியப் பிரதி பல தீர்வுகளைச் சுட்டுவதாகவும், அல்லது அப்படி பல தீர்வுகளுக்கான சாத்தியங்கள் இருப்பதனை அவதானிப்பதாகவும், மேலும் தீர்வுகளை, சந்தேகக் கண்ணின் விஷேசப் பார்வையால் பார்ப்பதாகவும் இருக்கிறதுமஇலக்கியப் பிரதி ஒருபோதும் கருத்தியல்களின் manifesto வாக இருக்க முடியாது.

மிலன் குந்த்ரா “ஒரு இலக்கியப் பிரதி எந்த அரசியலைச் சார்ந்துள்ளது அல்லது யார் பக்கம் சார்ந்துள்ளது எனக் கேட்பது தவறு என்கிறார். மாறாக அந்தப் பிரதியின் வழி எந்த அரசியல் பேசப்படுகிறது என்று கண்டடைய வேண்டும்” என்கிறார்.தாண்டவராயன் கதையின் அரசியல் மூடுண்ட நிலையில் கிடைக்கிறது. அதை வாசிப்பவர்கள்தான் தோண்டிப்பார்க்க வேண்டும். ஆனால் முன்பே சொன்னது போல பிரதியைல் இலக்கியம்தான் முன்னிற்க வேண்டும். தாண்டவராயன் கதையின் மையத்தை மூடியிருக்கும் இலக்கிய அலங்காரங்கள் நீண்டது.

  1. நாகாயக் களிம்பு
  2. கூடுவிட்டு கூடு பாய்தல்
  3. கண்ணீ
  4. போலிக்கர்ப்பம் மற்றும் அந்தகம்
  5. இருட்டுச் சத்திரம்
  6. காற்றுப்புலி
  7. நூலகம்
  8. நீல்வேணியின் பாதை
  9. துயிலார் வரலாறு இப்படி..

நானும் எனது நண்பர் தூரன் குணாவும் சில மணிநேரங்கள் செலவழித்து இந்த நாவலின் திறவுகோல் நீலவேணியின் பாதைதான் என்பதைக் கண்டு பிடித்தோம்.

தாண்டவராயன் கதை தரவுகளையும், தகவல்களையும் எப்படிப் பயன்படுத்துகிறது என்பதைப் பார்க்கலாம்.இங்கிலாந்து பிரதமருக்கு வலிப்பு நோய் இருந்தது தகவல். எலனார் பல்கலைக்கழகத்தில் பயிலும்போது அவருக்கு வலிப்பு நோய்வர தூக்கிக் கொண்டு ஓடுகிறாள். இது தகவலை எப்படி இலக்கியப் பிரதிக்குள் இழைப்பது என்பதற்கு உதாரணம். மேலும் திப்பு சுல்தான் சுய மைதூனம் செய்ய கோழிகளைப் பயன்படுத்துவது வரை விவரிக்கலாம். நாவலில் அங்கங்கே முடிச்சுகள் இடவேண்டியிருக்கிறது. அந்த முடிச்சுகளை அவிழ்க்கத்தான் நாவலில் பயணம் நேர்கிறது. முடிச்சுகளாக தகவல்களை சம்பவங்களில் பயன்படுத்துவது இருக்கிறது.

உலகின் விஷேச பிராந்தியத்தின் கதை என்பதால சாதியம் அதன் அடுக்ககளோடு இடம்பெற வேண்டியிருக்கிறது. அதன் படிநிலைகள் சரியாக ஆவணப்படுத்த வேண்டியிருக்கிறது. தாண்டவராயன் கதையில் நாடோடிகள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள் தொடர்ந்து ஒடுக்கப்படுபவர்களாகவும், சாதி இந்துக்கள் அரசோடும், அதிகாரத்தோடும், ஒடுக்குபபவர்களாகவும், பிராமணர்கள் இவற்றைப் பிரதி செய்பவர்களாகவும் நாவலில் தென்படுகின்றனர். ஆனால் இதே ஒரே பிரச்சனை சாதிகளுக்கான அடிப்படைகளை அமைத்துக் கொடுக்கும் கருத்தியல் பின்னணியை யார் வழங்குவது என்பதை இந்த நாவல் விவாதிக்காமல் விட்டுவிடுகிறது.
மீண்டும் நாம், வரலாற்றை வாசிப்பின் வழி மட்டுமே அறியமுடியும் என்பதை நினைவூட்டிக் கொண்டால் வரலாற்றைப் பிரதி செய்யும் நாவலும் அதன் நிறைகுறைகளோடுதான் இருக்கும். கால எந்திரத்தைக் கூட பிரதியிலிருந்துதான் உற்பத்தி செய்ய முடியும்.

இங்கே அனைத்து சாதிகளின் தோற்றுவாய்க்கும் சொல்வதற்கு தொன்மங்கள் உண்டு. ஒடுக்கப்பட்டோர் சாதிகளுக்கு சொல்ல வன்முறை கலந்த கதைகள் உண்டு. அங்கே தத்துவ விவாதங்கள் இருக்காது. சாதிய முரண்பாடுகளை வெளிக்காட்டுவதாகவும் இருக்கும். உதாரணத்திற்கு காத்தவராயன் சிவன் தம்பதிகளின் பிள்ளையாக இருப்பது. இந்த தொன்மக் கதைகளுக்கு சில இலக்கணங்கள் உண்டு.

  1. சாதிக் குழுக்களின் மூலத்தந்தை ஏதாவதொடு கடவுளாக இருக்க வேண்டும்
  2. ஒரு காலத்தில் அவர்கள் இந்த நிலத்தை ஆள்பவர்களாகவும் அல்லது அவர்களோடு தொடர்பிலும் இருந்திருக்க வேண்டும்
  3. ஒடுக்கப்பட்ட சாதிகளின் கடவுள் மேல்சாதிக்கார்களோடு ஏதாவது ஒருவகையில் உடல் தொடர்பு (Physical Contact) அது காதலாகவும் இருக்கலாம் அல்லது சண்டையாகவும் இருக்கலாம், வைத்திருக்க வேண்டும்
  4. அதனால அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்
  5. துர்மரணம், வன்கொலையால் நேரும் தியாகத்தால் அவர்கள் வழிபடக்கூடிய இடத்தை அடைந்திருக்க வேண்டும்
    நாவலில் சொல்லப்படும் தாண்டவராயனின் கதை இந்த இலக்கணங்களை ஒழுகியே பின்னப்பட்டுள்ளது.
    கருத்தியல், அரசியல் சொல்லாடல்கள் அதிகாரத்தின் தொன்மக் கதைகள் என்றால் ஒடுக்கப்பட்டோரின் கதைகள், கருத்தியல், அரசியல் அதிகாரத்திற்கு எதிரான அல்லது மாற்றான அல்லது இணையான சொல்லாடல். நாவலில் சொல்லப்படும் தாண்டவராயனின் கதை இதைச் சரியாகவே செய்கிறது.
    பல மரங்களின் இலைகளை பார்வைக்கு இலட்சணமாய் தோரணம் கட்டுகிற வாய்ப்பை இந்த நாவலின் வடிவம் அளிக்கிறது. நாவலின் பயணத்தை கருத்தில் கொண்டு தாண்டவராயன் கதை தமிழில் வெளிவந்திருக்கும் ஒரு Global நாவல் எனலாம்.

வரலாற்றை அதன் இயக்கு காரணிகளை விசாரணை செய்வதில் இலக்கியப் பிரதிகளின் வளர்ச்சியில் பல்வேறு சாத்தியக் கூறுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

  1. உம்பர்த்தோ ஈகோவின் The Name of the Rose, Baudalino (பாதலினோ), Mysterious flame of Queen Loana மேலும் அவரது சமீபத்திய நாவலான Prague Cemetry வரையிலும் வரலாற்றை வெவ்வேறு வடிவங்களில் விசாரணை செய்வது. இதில் அவரது முதல் நாவலான The Name of the Rose துப்பறியும் கதைப் பாணியில் எழுதப்பட்டது.
    1. ஓரான் பாமுக்கின் My Name is Redம் அப்படி எழுதப்பட்டது என்றாலும் அது ஓவியக் கலை பற்றின நாவல்.

துப்பறியும் கதைகள் குறித்து உரையாற்றும் போர்ஹேஸ் இந்த வகைமைக்கு அதன் ஒழுங்கிற்காக நாம் நன்றி சொல்ல வேண்டும் என்கிறார். எட்கர் ஆலன் போதான் துப்பறியும் கதைகள் வகைமைக்கு மூலத்தந்தை. அவர்தான் இந்த உலகிற்கு ஒரு புதிய வாசகனையும் அறிமுகப்படுத்தினார்.

தாண்டவராயனின் கதையில் துப்பறிதல் வந்தாலும், ட்ரிஸ்ட்ராம் அதற்காகப் பணிக்கப்பட்டவன் அல்ல. அவன் சந்தர்ப்பங்களால் துப்பறிய நேர்கிறான். எனவே இந்நாவல் அப்படியொரு வடிவ சாத்தியத்தையும் முயன்று பார்த்திருக்கிறது. கெங்கம்மாவின் வயிற்றில் டிராகன் பச்சை குத்தியிருப்பதை வாசிக்கும் போது நாவல் அதன் மர்மத்திற்கான முதல் துப்பை கூர்ந்து படிக்கும் வாசகனுக்கு அளிக்கிறது.

இவ்வகை நாவல்களை எழுதுவதில் இரு வகை உண்டு. ஒன்று, வரலாற்றுக்கான ஆசிரிய ஸ்தானம் கெடாமல் அதனை மொழிவது. இன்னொன்று வரலாற்றை அதன் இடத்திலிருந்து இறக்கி அதனோடு விளையாடுவது. தாண்டவராயன் கதை இரண்டாவது வகை. முதல் வகைக்கு சமீபத்திய உதாரணம் அஞ்ஞாடி.

எனக்குத் தெரிந்த வரையில் உம்பர்த்தோ ஈகோவை இந்த வடிவத்தின் மூலத்தந்தை எனச் சொல்லலாமா எனத் தெரியவில்லை ஆனால் இந்த வடிவத்தை தொடர்ந்து பயன்படுத்துபவர் எனலாம். அவருடைய சமீபத்திய நாவல் கூட 18 மற்றும் 19 நூற்றாண்டு ஐரோப்பிய அரசியல்,கருத்தியல் மோதல்களை விளையாட்டு மனப்பான்மையோடு, ஒரு why not கேள்வியால் அணுகுவது.

தமிழில் இந்த வடிவத்தை முதன் முறையாகப் பயன்படுத்திய நாவல் தாண்டவராயனின் கதை.

இன்னும் தாண்டவராயனின் கதையின் உள்ளறைகளின் பட்டியல், கதைகளைக் குறித்த உரையாடல்கள், நூலகத்தின் ஆவியுருத் தோற்றம், வரிகளுக்கிடையில் அர்த்ததைத் தேடுவது, தரவுகளையும், தகவல்களையும் அரசு எப்படிப் பயன்படுத்தும், ஆண்பெண் உறவுச் சிக்கல்கள் என இன்னும் விடுபட்டுப் போய்விடக்கூடிய சாத்தியங்களுடன் நீள்கிறது.

இதுவரையிலும் வரலாற்றை பிரதான அம்சமாகக் கொண்டு வெளிவந்துள்ள நாவல்களான

  1. நெடுங்குருதி
  2. ஆழி சூழ் உலகு
  3. அஞ்ஞாடி
  4. புயலிலே ஒரு தோணி
  5. காவற் கோட்டம்
    போன்ற அளவாலும் உள்ளடக்கத்தினாலும் பிரமாண்டங்களாக வாசகர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் நாவல்களின் பட்டியலில் தாண்டவராயன் கதை இருந்தாலும் இதன் பரப்பாலும், வடிவத்தாலும் மற்ற நாவல்களைவிட விஞ்சியுள்ளதாகச் சொல்ல முடியாவிட்டாலும் தனித்து நிற்கிறது என்பதை சொல்ல வேண்டியுள்ளது.

பட்டியலிடப்பட்ட நாவல்களின் வடிவங்களில் மேலும் மேலும் நாவல்களை எழுத முடியும். ஏனெனில் அவைகளின் வடிவம் வழமையானது. ஆனால் தாண்டவராயனின் கதை இனி எழுதப் புகுபவர்களுக்கும், பா.வெங்கடேசனுக்குமே அளித்திருக்கும் சவால் என்னவென்றால், இந்த வடிவத்தை மறுமுறை பயன்படுத்தினால் அது போலச் செய்தலாக தோற்றம் பெறும்.

தாண்டவராயன் கதை நாவலோடு சில தனிச்சிறப்பான உறவுகள் எனக்குண்டு. ஒன்று இந்த நாவலை ஏழு நாட்களில் படித்து முடித்தது. எனது இரண்டு நாட்கள் சம்பளத்தை பா.வெங்கடேசன் எனக்குத் தரவேண்டியிருக்கும். ஏழு நாட்களில் இரண்டு நாட்கள் நான் அலுவலகத்திற்கு விடுப்பு வேறு.

இந்த நாவலுக்கு ஏற்கனவே ஒரு மதிப்புரையை எழுதியுள்ளது இரண்டாவது.

இந்த ஏற்பாட்டை ஒட்டி மீண்டும் ஒரு மதிப்புரையை லட்சுமி சரவணக்குமார் வழங்கச் சொன்னபோது நான் நாவலின் பிரதி கைவசம் இல்லை. எனது பிரதி மதுரையில் இருக்கிறது. மதிப்புரையை ஞாபகத்திலிருந்து எழுத முனைந்த போது நாவல் எவ்வளவு நெருக்கமாக என்னோடு உறவாடியுள்ளது என்பதை உணர முடிகிறது.
ஒரு பிரதி ஒன்று இன்னொரு பிரதியை உருவாக்குவதற்கான தூண்டுகோலாக இருக்க வேண்டும் அல்லது புதிய சிந்தனையை வளர்த்தெடுக்க உதவ வேண்டும். தாண்டவராயனின் கதை இந்த இரண்டையும் செய்கிறது. வரலாற்றையும் இலக்கியத்தையும் இணைத்து சிந்திக்க உதவி செய்கிறார் பா.வெ. போர்ஹேஸ் ஒரு புதிய வகைமையை உருவாக்கியதற்காக எட்கர் ஆலன் போவிற்கு நன்றி சொன்னதைப் போல, புதிய வடிவத்தை, புத்திசாலித்தானத்தின் வெள்ளி மின்னல்கள் மின்ன தமிழ் வாசகர்களுக்கு அளித்ததற்காக பா.வெங்கடேசனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

  • பாலசுப்ரமணியன் பொன்ராஜ் – ஓசுரில் பணியாற்றி வரும் இவர். இதுவரை இரு சிறுகதைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். தொடர்புக்கு – tweet2bala@gmail.com

(தேனியில் நடைபெற்ற கூட்டத்தில் வாசிக்கப்பட்ட உரை)

அவதாரம்

6
  • பாலாஜி பிரசன்னா

“ ஏ..கொழ்ந்தே…அப்பா பேசுரேன்டி.. பத்துக்கு டெலிவெரி ஆயிடுத்துடி.. அந்த பெருமாளே நம்மாத்துல வந்து பொறந்துருக்கான்டி… அப்படியே என்ன உறிச்சுவச்ச மாதிரி கரேல்னு இருக்கான்.. தொட்டு மை வச்சிக்கலாம்னா பாரேன். ”

அப்பா நான் பிறந்த தகவலை இப்படிதான் தனது மூத்த மகளிடம் ஃபோனில் சொன்னார். இரண்டு பெண் பிள்ளைகளுக்குப் பிறகு அப்பாவுக்கு நான் ஒரே ஆண் பிள்ளை. அம்மாவுக்கு முதல் பிள்ளை.

சேஷாத்திரி அய்யங்கார் பத்மாவதியை இரண்டாந்தாரமாக மணமுடித்தார். முதல் மனைவி வைதேகி. ஒரு வருடத்திற்கும் மேலாகத் தீராத வயிற்றுவலியில் அவதிப்பட்டு இறந்துபோனாள். கடும் அவதியிலும் நித்தம் தவறாமல் பெருமாளுக்கு நிவேத்தியம் செய்து உயிர்வாழ்ந்தவளின் துன்பம் கண்டு துயருற்ற பெருமாள் அவள் அகத்திலிறங்கி வலி விலக வழி சொன்னார். அவள் கிணற்றடி மாமரத்தில் தொங்கினாள். உடல் விட்ட ஆவிக்கு வயிறுமில்லை. வலியுமில்லை.

“ அவ வயத்து வலில துடிக்கிறதுக்கு இது பரவால்லனு தேத்திக்கோ. அவாவா ப்ரதிபலன அவாவாதானே தாங்கனும். பெருமாளுக்கு தெரியாதாடா சேஷு யார எப்ப அழச்சிண்டு போனுன்னு. நீயும் நானும் அவருக்கு குறுக்க நிக்கமுடியுமோ சொல்லு. கவலபட்றத விட்டுட்டு ஆறதப்பாரு.” செளந்தரம் மாமா தேற்றினார். சேஷா ஓரிரு மாதங்களில் தேறினார்.

பெருமாள் வைதேகியை வைகுண்டம் அழைத்துப் போனார். வைதாரையும் வரவேற்கும் வைகுண்டம் வைதேகியையும் எந்த விஜாரணையுமில்லாமல் ஏற்றுக்கொண்டது. சேஷாத்திரி பத்மாவை மயிலாப்பூர் அழைத்துப் போனார். சேஷாத்திரியின் குடும்பம் வைகுண்டம் அல்லவே; பத்மாவை எந்த விஜாரணையுமில்லாமல் ஏற்றுக்கொள்ள மறுத்தது. சேஷாத்திரி இரண்டாம் கல்யாணம் செய்ததில் எந்த சிக்கலுமில்லை. அவள் ப்ரம்மனின் தலையில் பிறக்காமல் விட்டதே சிக்கல், பிரச்சனை எல்லாம். புதுமணத்தார் நயாபைசா நட்டமில்லாமல் ஒதுங்கி.. இல்லை அவர்களை ஒதுக்கி நித்யமும் சுகமாய் வாழ்ந்ததன் அடையாளமாய் என் அவதாரம்.

கறுத்த மேனியுடன் அமாவாசையன்று அவதரித்த பெருமாள் பிறவி. ஆக ஏகபோகமாக மூன்றாம் நாள் நாமகரணம் சூட்டப்பட்டது. நான் காலமேகப்பெருமாள்.
***
அதே நன்னாளில் பாய்க்காரத்தெரு ஒத்தையடிப் பாலத்தின் கீழ் காட்டாமணிச்செடிகள் ஊறும் வெண்ணாற்றின் கரையோரமாக வாலிபப் பிணம் ஒன்று ஊதி கருத்து ஒதுங்கி மிதந்தது. பரியாரி சம்பந்தம் படியிறங்கி அடையாளம் சொன்னார் – “ அய்யேய்யே.. நம்ம பெருமாளு மாரி இருக்கே… அவந்தான்…” மூக்கையும் வாயையும் துண்டால் மூடிக்கொண்டார்.

“ ரெண்டு நாளக்கி மின்னாடி பாத்த ஞாவகம்.. நூரக்கா டீக்கடைல. நல்லா பேசிட்ருந்தானே.. என்ன கெட்ட நேரமோ கொண்டு போய்டிச்சி..”

“ஆமாங்ய்யா… அங்கனதான் நானும் பாத்தன். பீடி கேட்டத்துக்கு சிலுப்பிட்டு போனானே.. அய்யேய்ய.. இப்புடியா போய் சேருவான் ” – மருதனும் வருத்தப்பட்டான்.

இரண்டு நாள் முன்பு டீக்கடையில் பார்த்த கதையை இன்னும் இரண்டு பேர் சொன்னார்கள். ஆம் கதைதான் சொன்னார்கள். சிறுசிறு கதைகளைத் தொடுத்து ஜோடித்தார்கள்.

அதிகாரிக்குத் தகவல் போதுமானதாயில்லை. யாரும் சொல்வதாகவுமில்லை. சொல்வதென்றால் வேலிமுட்டி கசாயம், அதை விற்கும் பாத்திமா, பட்டாளத்துக்காரனின் மனைவி, அவர்களுடன் இவனுக்கிருந்த தொடர்பு எல்லாவற்றையும் சொல்லவேண்டும். இன்றுதான் இவ்விஷயமே தெரிந்தது போல குதிப்பான் இந்த நேர்மையான அதிகாரி. கடையைப் பூட்டி அவளையும் உள்ளே தள்ளிவிடுவான். நேர்மையென்பது சீனியர்களின் சொல்லைப் பிரதியெடுப்பதுதானே.

எம்ஜிஆர் தாய்மார்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக சாராயக்கடைகளை மூடி வருடம் ஒன்றாகிறது. தேர்தல் வர இன்னும் ஒரு வருடமிருக்கிறது. அதுவரை கடை திறக்க வாய்ப்பில்லை. பாத்திமாவும் பெண்தானே. அவள் பிழைப்பில் இந்த பூட்ஸ் கால்களை நுழையவிடக் கூடாது. அதுமட்டுமில்லாமல் ஊரில் யாருக்கும் வேலிமுட்டியை விட்டால் குடியுமில்லை கூத்துமில்லை. அதுவரை துருவிக்கொண்டிருந்த அதிகாரி அவன் அனாதையென்றதும் பிணத்தோடு சேர்த்து நிஜத்தையும் மூட்டைக் கட்டினார்.

இரண்டுமே குழி தோண்டிப் புதைக்கப்பட்டது. புதைக்கப்பட்டு இன்றோடு நாற்பது வருடமாகிறது.
என்னதான் செய்வது. யார்தான் உண்மையைச் சொல்வது. வேறு வழியேயில்லை. நான்தான் சொல்லவேண்டும். நாற்பது வயதுக்குள்ளாகவே லட்சங்களில் சம்பாதிக்கும் நான் கே.எம்.பி. ஒரு மினி தொழிலதிபர். பழைய இரும்பு வியாபாரி. இப்போது மெட்டிரியல் ரீசைக்கிளர் என்று சொல்லிக் கொள்கிறோம். இருபத்துநான்கு மணியும் பணிதான்.

“அண்ணே, செங்கல்பட்டு செக்போஸ்ட்டாண்ட போலிஸ்க்காரன் புட்ச்சிக்கினான்ணே. ஈ.வே பில்லுல பத்து கிலோமிட்டர் கொறையுதுன்றான்.. ”

“நாளைக்கி பணம் வர்ல… நீ வேற மூஞ்ச பாக்கவேண்டிருக்கும்…”

“தலைவரே, கிலோக்கு ஒர்ரூவா பாக்காதிங்கோ.. அடுத்த லோட்ல சேத்து அடச்சிட்லாம்”

“ஜி, ரெண்டுநாள்ள காசு வந்துடும்.. மாத்திவுட்டுறேன்.. வண்டிய நிறுத்தாதிங்க ஜி.. ப்ளிஸ்..”

“மொதலாளி, அவன் ஆள் சுத்தங்கெடாயது… மார்க்கெட்ல காரித் துப்புரானுங்க”

’வண்டிய மோதிட்டான், எட கொறையுது, மிசின்ல கைவுட்டுட்டான்’ இப்படியான போன் உரையாடல்கள், பிரச்சனை, தீர்வு, வரவு செலவு, லஞ்சம், மிரட்டல், குழைதல்’ இதற்கிடையேதான் குடி, பயணம், நட்பு, காதல், கல்யாணம், குழந்தைகள், இன்னொரு காதல், காமம், இச்சை என வாழ்க்கையையும் வாழ்ந்து கொள்வது. ’கேஎன்பி வேலக்காரன்யா.. எப்பவும் தொழில் நெனப்புதான்’ என்று ஒரு தரப்பும், ‘எங்கேந்துதான் காசு கொட்டுதுனு தெரில.. எப்ப பாரு ராத்திரியான குடி பொம்பளன்னு எறைக்கிறான்யா” என இன்னொரு தரப்பும் பேசிக்கொள்வார்கள்.
***
“லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா..ஆல்வேஸ் பி ஹப்பி..“ லிரிக்கல் வீடியோ பாடிக்கொண்டிருப்பது மதுரையின் பிரதான பகுதியிலிருக்கும் ஒரு மது விடுதியில். இது 2020. இங்கு இப்போது எந்த பிரச்சனையுமில்லை. ஒவ்வொரு சாலைகளிலும் பரபரப்பாகச் செயல்படும் பல அரசாங்க சாராயக்கடைகளும், அதன் வாசலில் செயல்படமுடியாமல் மயங்கிக்கிடக்கும் சில மனிதர்களையும் காணமுடியும். ஐந்து நட்சத்திர ஹோட்டல் பாரில் ஒரு பெருந்தொழிலதிபருக்குக் கிடைக்கும் எல்லா மரியாதைகளும் ரோட்டோர டாஸ்மாக்கில் குடிக்கவரும் சாக்கடைத் தொழிலாளிக்கும் கிடைக்கிறது.

பெருமாள் காலத்தில் வெளிநாடுகளிலும் ராணுவத்திலும் மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்த ரம், விஸ்கி, வோட்கா போன்றவை இப்போது வெறும் நூற்றைந்து ரூபாய்க்கே கிடைக்கிறது. பழங்கள், அவித்த பயிர் வகைகள், முட்டை, மாமிசம் போன்ற புரதம் வாய்ந்த சாக்கனா உப திரவ திட தீனிகள் தருகிறார்கள். யாரோ குடித்த எச்சில் கிளாஸ்கள் இல்லை. ஒரு வாரத்துக்குள் தயாரிக்கப்பட்ட புத்தம்புதிய காகித டம்ளர்கள் தனித்தனியாக வழங்கப்படுகிறது. பெரும்பாலும் டிவி இல்லாத மதுக்கூடமே இல்லை.. இன்னும் சில பார்களில் பெரிய திரைக்கட்டி புரஜக்டர் மூலம் திரையிடுகிறார்கள். காலை மதியம் மாலை பின்மாலை இரவு என நேரத்துக்குப் போல் பாடல்கள், நகைச்சுவைகள் திரையிடப்படுகின்றன.

இந்தியா விளையாடும் கிரிக்கெட் போட்டியன்று டிவி / திரை வைத்த கூடங்கள் நிரம்பி வழியும். மேதைகள் நிறைந்த மேஜைகளில் பெரும் விவாதங்கள் நடக்கும். இந்தியாவிற்கு சாதகமான நிகழ்வுகளில் புல்லரித்து அங்கு ஒரு பெரிய மைதானத்தின் சூழல் உருவாகும். கடைகளில் கட்டிங் விற்பனையில்லாதபோதும் கூடிப் பேசி குவாட்டர் வாங்கி தாங்களே சரிபாதியாகப் பிரித்துக்கொள்ளும் அதிகாரம் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏசி அறையில் குடிக்கும் வசதிகூட அரசாங்க பார்களில் வந்துவிட்டது.

இன்று எனது நாற்பதாவது பிறந்தநாளை பைப்பாஸ் ரோடு டாஸ்மாக்கில் நண்பர்கள் சகிதம் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன். போதையும் ஆசைக்காதலியின் நினைவும் தலைக்கேறி ஜிவ்வென்றிருக்கிறது. மூன்று முறை அழைத்துவிட்டாள். இந்தக் கொண்டாட்டம் இதோ பதினோரு மணியோடு முடிந்துவிடும். அவளுக்கு வைகைக் கரையோரமாக அழகிய வீடு. அவளின் சொந்த சம்பாத்தியத்தில் கட்டிய வீடு. பழைய கணிப்பொறி பாகங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது அவள் தொழில். அவள் தந்தையின் தொழில். அவர் இறப்பிற்குப் பின்னால் இவள் தொழிலானது.

இதோ மீண்டும் அழைக்கிறாள். மகிழ்வான தருணத்தில் அவளுடனான நெருக்கத்தை நினைக்கவே சிலிர்த்தது. அவள் குரலின் குழைவில் இன்னும் மூச்சுமுட்டியது. காரணங்கள் சொல்லி பணம் கொடுத்துவிட்டுக் கிளம்பினேன். காரில் ஏறும்போது தான் ஞாபகம் வந்தது பெருமாளின் கதையைச் சொல்ல மறந்தது. அவள் வீட்டினை சென்றடைய இன்னும் இருபது நிமிடங்கள் பிடிக்கும். அதற்குள்ளாக முடித்துவிடலாம்.

***
கதைச்சுருக்கம்: மேற்படி வழக்கில் பாய்க்காரத்தெரு பாலத்தினடியில் மிதந்த சடலம் மீட்கப்பட்டு உள்ளுர் பரியாரி சம்பந்தம் சொன்ன அடையாளத்தின்படி, அன்னார் திரு. நாராயணப்பெருமாள் என்பதும் அவர் குடும்பமில்லாத அனாதையென்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அன்னாரின் சடலம், அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தலைமை மருத்துவரின் ஆய்வறிக்கையின் படி புறவிசையின் எந்தக் கூறுமில்லாமல் அகவிசையின் தூண்டுதலில் தான் நாராயணப்பெருமாள் தற்கொலை செய்துகொண்டார் என்பதை ஊர்ஜிதம் செய்து, இறந்தவருக்கு குடும்பம் இல்லாத காரணத்தால், அன்னாரது சடலத்தைக் கிராம பஞ்சாயத்துத் தலைவர் ஒப்புதலோடு சமூக சேவகர் உமர் அலி அவரது சொந்த செலவில் பரியாரி சம்பந்தம், வெட்டியான் தேவர்கொண்டானின் உதவியோடு ஊர் ஆற்றங்கரை சுடுகாட்டில் விஏஓ ஒப்பம் பெற்றுப் புதைக்கப்பட்டது.

நாரயணப்பெருமாளின் துஷ்டியை அனுஷ்டிக்கும் பொருட்டு அன்று பாத்திமாவின் கஷாயக்கடை இரவு பத்துமணிக்கு மேலும் தொடர்ந்தது. கடையென்ன கடை. அவள் கூரை வீட்டின் பின்பக்கம் பத்தாள் ஒன்றாய் குந்தி குடிக்குமளவு தென்னவோலை சார்ப்பு எடுத்திருந்தாள். சாணி மெழுகிய சுத்தமான மண் தரை. பெஞ்சு சோபா ஸ்டூல் சேர் ஒன்றும் கிடையாது. கரைவேட்டி கட்டும் சில பெரிய வயிறுகளுக்கு மட்டும் முக்காலி. மூன்று கட்சிகள். மூன்று பெரிய மனிதர்கள். மூன்று முக்காலிகள். கண்ணாடி டம்ளர்கள். எந்த பாகுபாடுமற்ற டம்ளர்கள். எல்லோருக்கும் பொதுவாக ஒரு மண்சட்டியில் மசாலாவிட்டரைத்த கோழி சில்லறைகள். இது இலவசம். இன்னும் பாங்காய் வேண்டுவோர்க்கு அவித்த முட்டை, கடலை, வறுத்த கோழி.

பாத்திமா தன் பங்காக அன்றிரவு சகாய விலைக்கு விற்பனையறிவித்து கல்லு சிலேட்டில் ’இன்ரு மட்டம் ஒரு கிலாசு பாதி வெலை’ என எழுதி போட்டிருந்தாள். சோகம் பல்மடங்கு. வியாபாரம் மும்மடங்கு.

பாத்திமாவும் கொஞ்சம் குடித்திருந்தாள். கட்டுமஸ்தான ஆம்பள. ஒன்னுமண்ணாகப் புழங்கியவன். தினம் இருவேளை உணவு, மும்முறை குடி, ஒருதரமேனும் அவளுடன் பின்னல். பெரும்பாலும் வெறும் பின்னல்தான். சட்டென இல்லாமல் போனது அவளை அரக்கியது. ஆற்றுக்கு அக்கரையில் இவ்வகையிலேயே அவனுக்கு இன்னொருத்தியும் உண்டு. தெரசா. அவள் கணவன் எல்லைபாதுகாப்பு பிரிவில் சிப்பாய். அவள் பெரியாஸ்பத்திரி நர்ஸ். ஒரு வருடத்திற்கு முன்பு மூன்று நாள் மேற்சொன்ன உணவு , குடி, கூடல் என்றெதுவும் இல்லாமல் படுத்தே கிடந்தவனை பாத்திமாதான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாள். குடிக்க வந்த யாரோ இவனை சைக்கிளில் வைத்து ஆஸ்பத்திரியில் தள்ளிவிட்டுப் போக இரண்டு நாள் அங்கிருந்து சரியாகி வந்தான். தெரசாவும் இவனுக்கு சரியாகியிருந்தாள். பெரும்பாலும் கடையில்தான் கிடப்பான். கடையில் குடித்ததும் சலம்பும் அல்லுசில்லறைகளை பந்தாவா பேசியே விரட்டியடிப்பான். முக்காலிகள் உள்ளே புழக்கத்திலிருந்தால் பாங்காக வெளியேறிவிடுவான். அன்றிரவு மட்டும் அக்கறை இல்லாமல் அக்கரைக்குப் போய்விடுவான். எப்போதாவது ஆற்றின் குறுக்கே நூல் கட்டி விலாங்கு பிடித்துத் தருவான். வெள்ளிக்கிழமை தவறாமல் திருடியாவது கடல் மீன் வாங்கி வருவான். எந்த சிக்கலும் இல்லாத பரஸ்பர மனிதத் தேவைக்கான உறவு.

***
இரண்டாண்டுகளுக்கு முன் முதன்முதலாக ரிக்‌ஷாவில் இரு சவாரிகளோடு வந்திருந்தான். கரேலென்று கரும்பு போல நறுக்கென இருந்தான். அடர்ந்த முடியை ஏற்றிச் சீவி அலட்சியமாக பார்வையோடு பீடி இழுத்துக் கொண்டு நின்றான். சட்டை ரிக்‌ஷாவிற்குள் தொங்கிக் கொண்டிருந்தது. கறுத்த மார்பிலிருந்த முடிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். கைலியை டப்பாக்கட்டு கட்டியிருந்தான், தோல் செருப்பு அணிந்த புழுதி படிந்த கால்கள். பாத்திமா கடை ரேடியோவில் “ ஏ.. போக்கிரி.. போக்கிரி.. போக்கிரி ராஜா ” என்ற வரிகள் பாடிக் கொண்டிருந்தது. அதை அவன் ரசிப்பது அவன் நடையில் தெரிந்தது. மன்னார்குடியிலிருந்து வருவதாகச் சொன்னார்கள். அன்று தேர்தல் நாள். மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. எங்கோ கேள்விப்பட்டு வந்திருந்தனர். அவன் குடிக்கவில்லை. அவனுடைய சவாரிகள் இருவரும் என்ன ஏதுவென்று புரிவதற்குள்ளாகவே அளவறியாமல் குடித்துவிட்டு எம்ஜிஆர் கலைஞர் சண்டைபோட்டுப் பின் படுத்த படுக்கையாகிவிட்டனர்.

காத்திருந்து பார்த்தவன் அவர்களை விட்டுவிட்டு ஒருவன் பையிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். மறுநாள் காலையில் வந்தபோது அவர்கள் தூங்கிக்கொண்டுதான் இருந்தனர். பாத்திமா அவனிடம் பேயாட்டம் ஆடினாள். சட்டை பண்ணாமல் பீடியிழுத்துக்கொண்டே நின்றான். அவளுக்கே பரிதாபமாக இருந்தது. ஒரு பெருமூச்சுடன் வியாபாரத்தைத் தொடர்ந்தாள். மதியமானதும் அவளிடமே சோறு கேட்டான். யாருமில்லா மதியப்பொழுதில் சாப்பிட்டபடியே அவளுடன் நிறையப் பேசிக்கொண்டிருந்தான். பொழுது சாயும்போதுதான் இருவரும் எழுந்தனர். அதிகமாகவே காசு வாங்கிக் கொடுத்தான். பின் அடிக்கடி வந்தான். ஒரு நாள் ரிக்‌ஷாவையும் விற்றுவிட்டுக் கட்டிய கைலியோடு வந்தவன் அப்படியே இருந்துவிட்டான். எம்ஜிஆர் தமிழக முதல்வரானார்.
***
பாத்திமாவிற்கு நினைவு கலைந்து வயிறு பசித்தது. குடித்த வயிற்றெரிச்சல் பசியாகக் காட்டியது. ஒரு அவித்த முட்டையை உரித்து வாய்க்குள் போட்டுக்கொண்டாள். அதிகப்படியாக ஏழெட்டுப்பேர் குடிக்குமிடத்தில் இன்று நெருக்கி இருபது பேர். திருவிழா கூட்டம். விசேச வியாவாரம். ‘எல்லோருமே அவன் கதையைத்தான் பேசி மாலாசிட்டுக் கொண்டிருந்தனர். ஒரு ஆளுக்கும் தொல்லை தராத ஜீவிதம். தான் உண்டு தன் வேலையில்லாமலிருப்பது உண்டு கடை, குடி, பாத்திமா, நர்ஸ் எனச் சுத்திச்சுத்தி வந்தவன் இன்று இல்லை. யாருக்கும் நெருக்கமில்லாத விலக்கமில்லாத ஆள். வில்லங்கம் விவகாரமில்லாதவன்.’ பேச்சும் அமைதியுமாய் குடித்து முடித்து எந்த சலம்பலுமில்லாமல் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வீடு சேரக் கிளம்பினர்.

ஆண்கள் குடித்துவிட்டுப் போன இடம் காலிக் குவளைகளும், சிந்திய சரக்கின் ஈரமும் சாக்னா மிச்சமுமாக ஈக்கள் மொய்க்கக் கிடந்தது. அவனிருந்திருந்தால் இந்நேரம் கூட்டித்துடைத்து பளிச் ஆக்கியிருப்பான். அவ்வீட்டின் எல்லாமும் அவனையே நினைவூட்டின. வயிற்றைப் புரட்டியது. இன்னும் ஒரு டம்ளர் குடிக்கவேண்டுமென்றிருந்தது. பாட்டிலில் இருந்ததை அப்படியே அன்னாத்தினாள். துவர்ப்பும் காரமும் இதமாயிருந்தது. கொல்லைக் கடைசியில் அவனுடைய காப்பிநிற டவுசர் கொடியில் கிடந்தும் பறந்தும் அல்லாடியது. ”அய்யோ எம்புள்ளய நானே கொன்னுட்டனே” பாத்திமா சத்தமாகவே கதறினாள். அழுகை ஆற்றுப்பட நள்ளிரவானது. வெறுமை நெஞ்சுக்குள் பல்லிபோல ஒட்டிக்கொண்டு மேலுங்கீழுமாய் ஓடியாடிக்கொண்டிருந்தது. பார்வை குத்திட்டு நடந்தவற்றை மனம் அலசிக்கொண்டிருந்தது.

***
அன்று மதியம் ஆளுங்கட்சிப் பிரமுகர் கடையிலிருந்தார். முக்காலியின் முனையில் அமர்ந்து மூங்கில் தூணில் சாய்ந்து குடித்துக் கொண்டிருந்தார். ஆற்றில் குளித்துவிட்டு சைக்கிளில் உள்ளே வந்த பெருமாள் அவ்வாளைப் பார்த்ததும், கொடியில் ஈர டவுசரைக் காயப்போட்டு, காய்ந்ததை உருவி போட்டுக் கொண்டு வந்த வேகத்திலேயே கிளம்பினான். இரண்டு பாட்டில்களை டவுசருக்குள் சொருகிக்கொண்டான். இது மாமூல் நடவடிக்கைதான். அவள் முகம் கூடப் பார்க்கமாட்டான்.

அய்யனார் கொல்லையில் குடித்துக்கொண்டிருப்பதாக பாத்திமாவுக்கு சாயந்தரம் தகவல் வந்தது. முதல் பாட்டிலில் பங்குபெற்றுக் குடித்த பரியாரி தைக்கால் வாசலில் படுத்து மலையேறினார். அவன் அய்யனார் கொல்லையிலேயே சுருண்டுவிட்டான். புது சரக்கு. முதல்நாள்தான் வில்லியம் மூன்று பெட்டிகள் இறக்கிவிட்டுப் போனார். தண்ணீர் கலக்காமல் இருந்ததை மறந்த வாக்கில் எடுத்துவந்துவிட்டான். அதான் கோளாறு.

பெட்டிக்குப் பன்னிரண்டு பாட்டில்கள். எல்லாம் பழைய கண்ணாடி சலைன் பாட்டில்கள். மருத்துவமனைக்குப் பின்னால் பாசி படர்ந்த குளத்தில் வீசப்படும் பாட்டில்களைப் பொறுக்கி செந்நிற கசாயத்தை நிரப்பி ரப்பர் மூடிபோட்டு அடைத்து வரும். இவள் தண்ணீர் கலந்து இருபது பாட்டில்களாக்கி விற்பனைக்கு விடுவாள். தண்ணீர் கலந்ததும் அடர் சிகப்பு நிறம் மாறி வெளிர் செம்பருத்தி நிறமாகிவிடும். பாட்டிலில் இருக்கும்போது அரக்கின் மணம் வீசும். மனித வயிற்றுக்குள் சென்று வரும்போது ஈர உளுந்தின் வாடையடிக்கும். ஒரு பாட்டிலுக்கு ரெண்டுபேர் குடித்தல் நலம். துவர்ப்போடு எரிந்தபடி உள்ளே சென்று மண்டையைக் கவ்விக்கொள்ளும். அத்தோடு நிறுத்தினால் நிலை தடுமாறாமல் வீடு போய்த் தின்று தூங்கலாம். யாரும் இவ்வளவில் கிளம்புவதில்லை. கொஞ்சம் ஏற்றி போட்டதும் தலையைச் சாய்த்துவிடும். போதையெல்லாம் தெளிந்து மயக்கநிலைக்குள் தள்ளிவிடும்.

கடைக்கு வரும்போது சைக்கிளை மிதித்து வந்தவனெல்லாம் திரும்பும்போது தள்ளிக்கொண்டுதான் போவான். சைக்கிள் தான் வாழ்க்கையின் ஒரே பிடிப்பெனத் தோன்றும். அதுதான் அவனை வீடுவரை சேர்க்கும். புவியீர்ப்பு ஒருபக்கமாக சாய்த்தடிக்கும். இந்திய சாலைவிதியின் படி அவன் விதியும் நடக்கும். இடப்பக்க வேலிக்கே உடலைத் தள்ளும். சைக்கிளும் கூடவே செல்லும். தூரத்திலிருந்து பார்க்கும்போது யாரோ அவர்களைக் கயிறு கட்டி வேலியோரமாக இழுப்பது போலிருக்கும். பாத்திமா கடையிலிருந்து வெண்ணாற்றுப்பாலம்வரை தென்னங்கொல்லையும் மாங்கொல்லையுமாக இருக்கும்.

அக்கொல்லைகளின் வேலிகளை உரசியபடியே வீடு போய்ச் சேர்வார்கள். சிலர் வேலிமீது சாய்ந்து இரவைக் கழிப்பார்கள். விடிந்த அடுத்த நாள் ஆசாரி வீட்டில் நிற்கும் சைக்கிளில் கொத்தனார் சாமான்களும், பெயின்டர் சைக்கிளில் ஆசாரி சாமான்களும், கொத்தனார் சைக்கிளில் பெயின்ட்டு பொருட்களும் இருக்கும். விழித்தெழுந்ததும் மாறிப்போன சைக்கிள்களைத் தேடிப்பிடிப்பதே பெரும்பாடாகிவிடும். இச்செந்நீரைத்தான் பெருமாளும் பரியாரியும் தண்ணீர் கலக்காது அப்பட்டமாகக் குடித்திருந்தார்கள்.

பெருமாள் அக்கரைக்கு இக்கரை நூல் போட்டு விலாங்கு பிடிப்பவன். நீச்சலெல்லாம் அவனுக்கு பாத்திமாவுடன் பவுசு பண்ணுவதுபோல. நித்தம் நீந்துங்கதை. அவளின் அவ்வாற்றின் தேகத்தில் மூழ்கிக்கிடக்கும் மேடுகளும் ஆழங்களும் அத்துப்படி அவனுக்கு. அன்றிரவு அவன் விழித்தபோது இடம் நேரம் எதுவும் விளங்கவில்லை. கோயில் விளக்கின் நிழல் இருப்பிடத்தைச் சொல்லவும் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தது. குடித்திருப்பது புரிந்தாலும், ஞாபகமில்லை.

கடைசியாக அந்த கட்சிக்காரனைக் கடையில் பார்த்தது மாத்திரமே நினைவில் இருந்தது. தலை கனத்தது. உடலும் மனமும் இச்சூழலிலிருந்து வெளிவரத் துடித்தது. சைக்கிள் நின்றிருப்பதைப் பார்த்ததும் மனம் இன்னும் ஆசுவாசமானது. எழுந்து கைலியை ஒழுங்குபடுத்திக்கொண்டு சைக்கிளைத் தள்ளியபோது கால்சட்டை ஜோப்பிலிருந்த இன்னொரு பாட்டில் தட்டுப்பட்டது. சட்டெனக் குடிக்கும் ஆசை உடலுக்குள் அரித்தது. சம்பந்தம் தைக்கால் பள்ளிவாசலின் படியில் படுத்திருந்தான்.

“ சம்மந்தோ…ஹோய்… “ சைக்கிளில் இருந்தபடியே கத்தினான். பக்கத்தில் உட்கார்ந்திருந்த பரதேசி சம்பந்தத்தின் உடலை உலுக்கி உசுப்பினான். “ ஏச்சம்மந்தம்.. பெருமாள் கூப்புட்றான் பாரு.”

எழுந்து வந்தவனிடம் கடைக்குப் போய்வரச் சொல்லி சைக்கிளைக் கொடுத்தான்.

“ இத எடுத்துட்டு போயி எதுனா திங்க வாங்கியா… நாங்கேட்டேன்னு சொல்லு..”

சத்தமில்லாமல் எல்லா பற்களையும் காட்டிச் சிரித்தான் சம்பந்தம் “ எனக்கு இத உடத்தெரியுன்னு யாரு சொன்னா.. நடந்து வேணா போறேன்..”

“ சரி சீக்கிரம் வா ”

“ கொஞ்சம் ஊத்து…”

“ போயிட்டு வாடா…எதுனா தொட்டுக்கிட்டு சாப்டுவோம்.. ”

“ அந்த ஜோலியே ஆவாது.. ஊத்தாம வண்டி ஓடாது”

பள்ளிவாசல் பக்கவாட்டு சுவற்றின் ஜன்னலில் சங்கிலியுடன் தொங்கிக்கொண்டிருந்த அலுமினிய டம்ளரில் பாதி ஊற்றினான்.

“ அரவாசிக்கூடயில்ல.. இன்னும் கொஞ்சம் போடுப்பா..”

“ போயிட்டு வாயா.. வந்தோன்ன தர்றேன் ”

சங்கிலி வாகுக்கு உடலை வளைத்து அண்ணாந்து குடித்தான். உடல் சிலிர்த்தது.

“ பாத்திமா ஒனக்குன்னா எதோ பெசலா குடுத்துருக்கா பா. காரம் தூக்குதே… இன்னும் காவாசி ஊத்து.. நா ஓடிட்டு வந்துர்றேன்.. ”

பாத்திமாவையும் தன்னையும் இணைத்துப் பேசியது ஜிவ்வென்றிருந்தது. கால்வாசிக்கு மேலே ஒரு சணல் ஏற்றியே ஊற்றினான். சம்பந்தம் அதே பாணியில் குடித்து மண்டையைச் சிலுப்பி டம்ளரை விட்டான். சுவரை உரசியபடி சங்கிலியுடன் குவளை அரைவட்டம் போட்டது.

“ இங்கயே இரு.. இதப் பாத்துக்க… ஒரு எட்டுல போய்ட்டு வந்துர்றேன் ” சவரப்பையைக் காட்டி சொல்லிக் கிளம்பினான். பெருமாள் குவளைப் பெண்டுலமாடுவதைப் பார்த்தபடியே பாத்திமாவின் நினைவில் மூழ்கினான்.

பத்தடி நடந்த சம்பந்தம் சத்தமாக கத்தி நினைவைக் கலைத்தான். “நீப்பாட்டுக்கு முறுக்கி தோள்ளப் போட்டுட்டு நரசுக்கு வைத்தியம் பாக்க கெளம்பிடாத. நான் செத்த நேரத்துல ஓடியாந்துருவேன்.”

*
சம்பந்தம் சொன்னபடியே அவன் செத்த நேரத்துக்குதான் வந்தான். அவன் பிணத்தை அடையாளம் காட்ட வந்தவன் அவனுக்கு ரெண்டு சொந்தங்கள் இருந்த போதிலும் அனாதையென்று சொன்னான். அதிகாரி முகமலர்ச்சியோடு குறிப்பெடுத்துக்கொண்டார்.

“ ரெண்டு நாளா யாரும் தேடுலுயா? ” என்ற அதிகாரியின் அடுத்த கேள்விக்கு “ அவனுக்குன்னு ஊருக்குள்ள சொந்தக்காரங்கன்னு யாரும் இல்லய்யா.. அவன் அனாத ”.

சொக்கத்தங்கம். அத்தாட்சியுடன் அனாதையென ஊர்ஜிதமானதும் உமர் அலியைத் தொடர்புகொண்டார் அதிகாரி. அரைமணிக்குக் குறைவான நேரத்தில் உமர் நிகழ்விடத்திற்கு வந்து சேர்ந்தார். சில விசாரிப்புகள். சில ஃபோன் கால்கள்.

“ என்ன ஆளுங்கன்னு எதும் தெரியுமா?? ”. பரியாரியிடம் கேட்டார்.

“ தெர்லீங்க.. பேச்செல்லாம் கருப்பு சட்டக்காரனுவோலாட்டங்க.. ”

“ சரி.. இங்கேர்ந்து எடுக்க ஆளுவோளுக்கு சொல்லி வுடு. பொதப்புக்கு ஏற்பாடு பண்ணனும். வெட்டியானுக்கு சொல்லி குழி வெட்ட சொல்லு. ”

“ தோட்டிங்க காலலேயே வந்தாச்சுங்க… சொன்ன எடுத்துப் போட்றுவாங்க.. போலிசு வியாவாரமாச்சேன்னுதான் காத்துக்கெடக்கானுவோ ” கைநீட்டிக் காட்டினார். ஆற்றுக்குள் சரியும் மண்ணில் குத்திட்டு இருந்தவர்கள் எழுந்து நின்றார்கள்.

“ தோட்டிக்கு மூனுபேருக்கும் ஆளுக்கு முப்பது குடு. கட்டுத்துணிக்கு இருவது, குழிவெட்ட நூறு, ஒனக்கும் வெட்டியானுக்கு மும்பணமா அம்பது வைய்யி.. மிச்ச கணக்க அப்றமா பாப்போம்.”

“ ஏ.. கானா.. இந்தா… தூக்கி வெளில வையி..” ரூபாயைக் கொடுத்து வேலையைத் தொடங்கச் சொன்னான் சம்பந்தம். கானன் பணிவோடு வாங்கிக்கொண்டு தன் சகாக்களை நோக்கிக் கத்தினான்.

“ கதனானி திஸ்கோணி ரண்டி..லோய் சிங்கா.. வேகங்கா..வேகங்கா..ரண்டி. லோய் ”

பனவோலைப் பாயைத் தூக்கிக்கொண்டு ராத்தியும், சிங்கானும் ஆற்றுக்குள் இறங்கினர். கானன் லுங்கியை அவிழ்த்து தலைவழியே உருவி பின் உருமாவாகக் கட்டிக்கொண்டு காக்கி டவுசரோடு மண்சரிவில் ஒருக்களித்து இறங்கிக்கொண்டே அவர்களை வேகப்படுத்தினான்.
***

கடைக்குப் போன சம்பந்தம் இன்னும் திரும்பவில்லை. இந்நேரத்துக்கு இரண்டுமுறை கடைக்குப் போய் வந்திருக்கலாம். பெருமாள் மெல்ல சைக்கிளைத் தள்ளியபடியே நடந்தான். எதிரில் வந்த மருதனிடம் பீடிக்கு நெருப்பு வாங்கும்போது விசாரித்தான்.

“ ஏ.. என்னப்பா அவன் புள்ளயார் கோயில்லல்ல கெடக்குறான்.”

“ ஒலுக்கோடிக்கி.. சொல்ல சொல்ல கேக்காம ஜாஸ்த்தியா குடிச்சான.. திங்க வாங்கியாடானு சொல்லி அனுப்சேன்… செத்துட்டானா கம்னேட்டி” – பெருமாள் யாரையும் இப்படிப் பேசிக் கேட்டதில்லை. மருதன் அவனை சமாதானப்படுத்தவேண்டி அவனிடமிருந்த பொட்டலத்தைப் பிரித்துக் காட்டினான்.

“என்னயா இது..கறியாட்டம் இருக்கு” முகம் மலர்ந்தான்.

“ ஆமப்பா.. மாடு… கூத்தானூருல தான் வேல .. வேல செஞ்ச பாயூட்ல குடுத்தாங்க..“ குசுகுசுத்தான்.

“ நீ மால போட்ருக்க மாரியிருக்கு”

“ஆமாமா.. அய்யப்பனுக்கு… இது புள்ளைங்களுக்கு.. சின்னவ ஆசையா திம்பா”

“ சரி சரி… புள்ளைங்களுக்கு வாங்கிட்டு போறதபோய் எடுத்துக்கிட்டு.. உள்ள வய்யி…” சமாதானமாகியிருந்தான்.

“ இன்னொரு பொட்னம் இருக்கு.. அவ நாலுதுண்டு திம்பா.. நீ தின்னு…”

மருதன் மறுத்து உள்ளங்கையில் திணித்து சைக்கிளில் ஏறிக் கிளம்பினான். மசாலா கலந்து வறுத்த துண்டுகள். பொட்டலம் உள்ளங்கையில் சூடாக இருந்தது. கறியின் மணம் உள்ளே சென்றதும் சம்பந்தத்தை மறந்துபோனான். வாய்க்கால் கட்டையில் உட்கார்ந்து பிரித்தான். வாழையிலையில் மடித்திருந்தார்கள். நாட்டு வெங்காயம் மணந்துகிடந்தது. பாட்டிலை அப்படியே சாய்த்து நிமிர்த்தினான். ஒரு துண்டை மசாலாவோடு புரட்டி வாயில் போட்டு மெல்லும்போது கைக்கு உரைக்காத சூடு வாய்க்கு உரைத்தது. ’அருமயான கறி, பதமான வேக்காடு. கொஞ்சம் உப்புதான் கொறச்சல்” மனம் சுவையோடு பேசிக்கொண்டிருந்தது. மீதமிருந்த சரக்கை ஒரே முட்டில் முடித்தான். மிச்சக்கறியை ஒவ்வொன்றாகத் தின்றான். போதையேறி கறி இன்னும் சுவையாகத் தெரிந்தது. கட்டைவிரலால் மொத்த இலையையும் வழித்து நக்கிமுடித்தான். மனம் நிறைந்து றெக்கை விரிக்க ஆரம்பித்தது. தெரஸா அக்கரையிலிருந்து அழைத்தாள். எப்பவும் அப்படித்தான் இவனுக்குத் தோன்றும்.

“ஏன் வேலிமுட்டிய முட்ட வேறாளு வந்துட்டானா.. இல்லன்னா நெனப்பும் ஆளும் இங்க வராதே..” கோபமாகக் கேட்பாள். அவன் கோபத்தை கிளறிப்பார்ப்பாள்.

“ ச்ச..ச்ச.. நீதான கூப்ட.. கேட்டுச்சே…” அசடு வழியக் கொஞ்சுவான்.

“ஆமாமா.. ஆளில்லாமதான் அலையுது இங்க… ஆணழகன கூப்புட்றாங்க” கொஞ்சம் சினம் தாழ்வாள். பின் தளர்வாள். போதையில் கிடப்பவன் மீது அவளே இயங்குவாள்.

பெருமாள் கனவுகளோடு அக்கரைக்கு சைக்கிளை மிதித்தான். ஒரு மைல் கடந்தால் கடைத்தெரு பாலம். பாலத்தைக் கடந்து சுடுகாட்டுச் சாலைக்கு அடுத்த தெருவுக்குள் நுழைந்தால் அவள் வீடு. எட்டுமணிக்கே ஊரடங்கிவிடும். நாய்கூட குரைக்காத தெரு. மூன்றாவது வீடு. ‘பக்கத்தூட்டு சந்துல சைக்கிள வுட்டுட்டு முன்னாடி வழியாவே உள்ள போய்ரலாம். போனதரம் கொல்லைல ஒன்னுக்கு போக வந்த பக்கத்தூட்டுக்காரி பாத்துட்டா’.

உள்நுழைவதற்கான திட்டம் போட்டபடி உற்சாகமாக மிதித்தான். பாலம் நெருங்கும் போது தலையை அசத்தியது. எங்கோ வானத்தில் மிதப்பது போலிருந்தது. கால் உழண்டது. விழிப்பு தட்டியபோது வேலிக்குள் கிடந்தான். தெரஸா மீண்டும் அழைத்தாள். இன்னும் சிறு தொலைவுதான். அவள் மீது அடிக்கும் ஆஸ்பத்திரி மணம் அவனை எழுப்பி நிறுத்தியது. சில சாகசங்கள் செய்து சைக்கிளையும் நிமிர்த்திவிட்டான். கைலியை மடித்து கட்டி மெல்லத் தள்ளியபடியே நடந்தான். ஆற்றுப்பாலம் கண்களுக்குத் தெரிந்தபோது இவன் சாலையோரத்தில் படுத்திருந்தான். இவன் மேல் சைக்கிள் கிடந்தது.

நிதானம் முற்றிலும் அற்றுப்போனது. மீண்டும் அவளின் அழைப்பு. அதே மருத்துவமனை மணம். மீண்டும் அதே சாகசம். எழுந்து நின்றான். பாலத்தைச் சுற்றிப் போவதென்பது இப்போதுள்ள நிலையில் சாத்தியமேயில்லை. கண்கள் மங்கலாகிக்கொண்டே வந்தது. அப்படியே படுக்கச்சொல்லி உடல் அடம்பிடித்தது. மெல்லச் சரியலானான். மீண்டும் அவளின் குரல். காம வைராக்கியம் உள்ளே புகுந்து சட்ரஸ் வழியே ஆற்றைக் கடக்கச் சொன்னது. பெருமாள் சைக்கிளோடு சட்ரஸ் பாதைக்குள் ’ல’னா போட்டபடி நடந்தான். ஆறு தலைதெறிக்க ஓடிவந்து சட்ரஸில் முட்டி வெண்ணுரையைக் கக்கி ‘ஓ’ வென ஓலமிட்டபடி ஓடிக்கொண்டிருந்தது.
***
கானன் பனவோலையில் கட்டிய சடலத்தை குப்பை வண்டியில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு எடுத்துப்போனான். சிறுவர்கள் வண்டியின் பின்னால் ஓடினார்கள். பெரியவர்கள் சைக்கிளில் இருவர் இருவர்களாகச் சென்றார்கள். மருத்துவர் சடலத்தைப் பார்வையிட்டபின், மன்னார்குடி தலைமை மருத்துவருக்குப் பிரேதப் பரிசோதனைக்குப் பரிந்துரைக் கடிதம் எழுதினார். தெரஸா, கடிதத்தில் அரசு மருத்துவமனையின் முத்திரையிட்டு மடித்து உறையிட்டுக் கொடுத்தாள். கருப்பு வேனில் சடலம் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டதும் ஊர் கலைந்தது.
***
பெருமாள் இறந்துவிட்டார். அவரின் அபுனித ஆவியை வைகுண்டமோ கைலாயமோ ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. ஆக வேறு வழியில்லாமல் நாராயணப்பெருமாள் புவியிலேயே அதுவும் தான் பிறந்து இறந்த வெண்ணாற்றங் கரையிலேயே தனது அடுத்த பிறவியை சேஷாத்ரி-பத்மாவதி தம்பதியருக்கு மகனாக, காலமேகப்பெருமாளாக அவதரித்தார். ஒரு கையில் நெஞ்சோடு மகனை அணைத்தபடி ஃபோனில் சேஷாத்திரி, தன் முதல் தாரத்து மூத்தமகளிடம் உற்சாகமாகச் சொன்னார், “ஏ.. கொழ்ந்தே…அப்பா பேசுறேன்டி.. பத்துக்கு டெலிவெரி ஆயிடுத்து.. பெருமாளே நம்மாத்துல வந்து பொறந்துருக்கான்டி… அப்படியே என்ன உரிச்சுவச்ச மாதிரி கரேல்னு இருக்கான்.. தொட்டு மை வச்சிக்கலாம்னா பாரேன்”.

பெருமாள் ஆனந்தமாகச் சிரித்தேன்.


***

நான் கே.எம்.பி – காலமேகப்பெருமாள். நாற்பது வயதுக்குள்ளாகவே லட்சங்களில் புரளும் ஒரு மினி தொழிலதிபர். தொழில்: பழைய இரும்பு வியாபாரி. இப்போது மெட்டிரியல் ரீசைக்கிளர் என்று சொல்லிக்கொள்கிறோம். இருபத்துநான்கு மணியும் பணிதான். இதற்கிடையே தான், ’ குடி, பயணம், நட்பு, காதல், கல்யாணம், குழந்தைகள், இன்னொரு காதல், காமம், இச்சை என வாழ்க்கையையும் வாழ்ந்து கொள்வது.

கார் வைகை ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அவளிடமிருந்து ஒரு வாட்ஸ்அப் பிக்சர் – * உதட்டைச் சுளித்துப் பொய்க் கோபம் காட்டி *, நிமிர்ந்தபோது வானில் பறப்பதுபோல இருந்தது. கீழே வறண்ட வைகை வாயைப் பிளந்து கிடந்தது. அவளிடமிருந்து வீசிய மருத்துவமனை வாசனை சுகந்தமாயிருந்தது.


  • பாலாஜி பிரசன்னா, மன்னார்குடியைச் சேர்ந்தவர். இது இவரது முதலாவது கதை. இவரது மின்னஞ்சல் ஐடி – balaji.prasanna.wi5@gmail.com

ரியா வரும் நேரம் – ஷான்

7

பன்னிரண்டாயிரத்து எழுநூறாவது முறையாக அதே கூரையைப் பார்த்தபடி விழித்தான் யுவன். ஆனால் அந்த நாட்களைப் போல் அல்லாமல் இன்று முக்கியமான ஒரு நாள். போர்வையை உதறி எழுந்தான். வெப்பநிலைமானியைப் பார்த்தான். சரியான அளவில் இருந்தது. உட்புறக்காற்றில் நச்சு இல்லை என்ற பச்சை நிறத்தைக் கவனித்துப் பெருமூச்சு விட்டான். மெல்ல எழுந்து  சிறு சமையல் அறையை அடைந்து குளிர்பதனப் பெட்டியை திறந்து பால் வந்திருக்கிறதா என்று பார்த்தான்.

சில நாட்கள் வராமல் போவதும் உண்டு. அவனுக்குக் காபி இல்லை என்றால் காலைக்கடன் தகராறு செய்யும். இன்று பால் வந்திருந்தது. அது தவிர கொஞ்சம் காய்கறிகளும் அரை கிலோ கேக் செய்ய தேவையான பொருட்களும் அனுப்பப்பட்டிருந்தன. கூடவே ஒரு ஷாம்பெயின் பாட்டிலும் ரிப்பன் கட்டிப் படுத்திருந்தது. ஷாம்பெயினும் கேக்கும் இன்றைய தினத்துக்கு அரசு அளிக்கும் சிறப்புப் பரிசு. வெங்காயம், பூண்டு, அசைவ உணவுகள் எல்லாம் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள்.

தன் சிறிய கூட்டை நோட்டமிட்டான் யுவன். ஜன்னல்கள் இல்லாத கான்க்ரீட் சமாதி. சிறு அறைகள். எட்டி நடந்தால் எட்டு அடிகளில் மொத்த வீட்டையும் அளந்து விடலாம். சுவர்களின் கனம் சில அடிகளில். எல்லாம் அரசு கட்டிக்கொடுத்த வீடுகள். வீட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் தினமும் குளிர்பதனப் பெட்டியில் வரும். ஆண்டுக்கு ஒருமுறை ஆடைகள். தேவையான பொருட்கள் எதுவும் வந்துசேர இன்னொரு பெட்டி இருந்தது. மனிதர்கள் யாரும் வந்துபோக வாய்ப்பே இல்லை. மருத்துவம் கூட வீடியோ வழியாகத்தான். ஏனெனில் கதவுகளே இல்லாத வீடுகள் அவை.

யுவன் எழுந்து நடமாட ஆரம்பித்தவுடன் விழிப்புக்கு வந்து “குட்மார்னிங்” என்றான் சிப்பி. சிப்பி அவன்  நீண்டகாலத் துணைவன். எங்கும் எதிலும் உடனிருக்க அரசால் அனுமதிக்கப்பட்ட நண்பன்.

“காலை வணக்கம் சிப்பி” என்றான் யுவன் நுரை ததும்பும் காபிக் கோப்பையுடன்.

“உன் திருமணத்துக்கு நிறைய பேர் வாழ்த்து அனுப்பி இருக்கிறார்கள்” என்றான் சிப்பி.

“படி.. கேட்போம்”

“வேண்டாம். நீ மாலையில் ரியாவுடன் சேர்ந்து படித்துக்கொள்”

யுவன் சற்று வெட்கத்துடன் புன்னகைத்தான். சிப்பியின் குரல் சீண்டலாக ஒலித்தது.

“இன்னும் இரண்டு மணிநேரம்தான். நீ மனதளவில் தயாரா?”

“நான் தயார்தான். நீ எப்படி?”

சிப்பி அவன் கேள்வியைப் புறக்கணித்தான்.

“நண்பர்கள் கூட்டம் இன்னும் ஆன்லைன் வரவில்லை. அவர்கள் வீட்டு கேமராக்களில் ஒவ்வொருவராக தேடிக்கொண்டிருக்கிறேன். நம் வீட்டு சமையல் அறை கேமரா மட்டும் கொஞ்சம் மசமச என்று தெரிகிறது”

“அதை ஆன்லைனில் இருந்து எடுத்து விடு. தேவைப்படாது”

“அப்படியெல்லாம் திடீரென்று எடுத்தால் அரசாங்கத்திடம் இருந்து உனக்கு நோட்டீஸ் வரும். ரேஷன் கட் செய்துவிடுவார்கள்.”

“2 மணி நேரம் தாண்டினால்தானே. அதற்குள் மறுபடி ஆன்லைனுக்கு வந்து விடலாம்.”

“திருமண நிகழ்ச்சியை ஹெச்டியில் பதிவு செய்து உன் மேகக்கணக்கில் வைத்து விடுகிறேன். ஆனால் இந்த முறை நீதான் தேடி எடுத்துக் கொள்ள வேண்டும். மெயில் அனுப்பி விடுகிறேன்.” என்றான் சிப்பி.

மெளனமாகத் தலை அசைத்தான் யுவன். இன்று ரியா அவன் வாழ்வில் வரப்போகும் நாள் மட்டுமில்லை. இத்தனை ஆண்டுகள் கூடவே இருந்த சிப்பியைப் பிரியப்போகும் நாளும் கூட. மனம் பாரமானது. கண்கள் கலங்கி காபியை விழுங்க சிரமப்பட்டான் யுவன்.

நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அணு உலைகளின் மையக் கட்டுப்பாட்டுக் கணினி தாறுமாறாக செயல்படத் தொடங்கியது. முன்னேறிய பல நாடுகள் அந்த நிறுவனத்தின் அணு உலைகள் வைத்திருந்தன. ஆனால் இந்தியாதான் உலகிலேயே அதிகமாக அந்த அணு உலைகளை வாங்கி நட்டு வைத்திருந்தது. மனிதர்கள் சொன்னதை அது கேட்கவே இல்லை. தயாரிப்பிலேயே ஏற்பட்டு இருந்த மூளைக்கோளாறின் காரணமாக அப்படி நடப்பதாக வல்லுநர்கள் சொன்னார்கள். அந்த அணு உலைகள் கட்டுப்பாடு இழந்து எதையும் யாராலும் நிறுத்த முடியாத அளவுக்குத் தொடர்ந்து இயங்க ஆரம்பித்தன. அவை உருகி வெடிக்க பத்து ஆண்டுகள் காலம் இருந்தது.

அதன் பிறகுதான் அரசாங்கம் மக்களுக்கு இந்த கான்க்ரீட் சமாதிகளைக் கட்ட ஆரம்பித்தது. அனைவரையும் வீடுகள் ஒதுக்கிப் பாதுகாப்போம் என்று அரசு சொன்னாலும் மக்கள் தொகையில் பத்து சதவீதத்துக்குக் கூட பணிகள் தொடங்கியபாடில்லை. பாதி வேலை நடக்கும்போதே அணுஉலைகள் உருகி வெடித்து விட அதிகாரிகள் அமைச்சர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மட்டும் அதிசயமாக தப்பிப்பிழைத்து வீடுகள் ஒதுக்கப் பெற்றனர். ஆனால் இது தவிர சில நிலத்தடி நகரங்கள் ஆங்காங்கே இருப்பதாக வதந்திகள் இருந்தாலும் அது குறித்து யுவனுக்குத் தகவல் இல்லை.  

யுவன் அப்படிப் பிழைத்த ஒருவரின் மூன்றாவது தலைமுறை. அறுபது வயதைக் கடந்தவர்கள் விஷவாயு செலுத்தி கொல்லப்படுவதாகவும், அந்த வீடுகள் இளைய வயதினருக்கு ஒதுக்கப்படுவதாகவும் ஒரு வதந்தி கூட உண்டு. அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்களில் எதுவும் வெளியாகாது. ஆனால் அந்த வயதில் இருப்போர் யாரையும் யுவன் இதுவரை இணையத்தில் சத்திக்கவும் இல்லை. இது குறித்து நண்பர்களுடன் சிறிய உரையாடல் செய்தால் கூட அரசாங்கத்துக்குத் தெரிந்துவிடும். ஒவ்வொரு வீட்டின் ஒவ்வொரு அறையிலும் கேமராக்கள், மைக்ரோபோன்கள் இருந்தன.

காற்றுவெளி முழுமையாக கதிரியக்கத்தால் மாசுபட்டு விட்டதால் மனிதர்கள் கதவில்லாத  வீடுகளுக்குள் வாழ்ந்தனர். பூமியின் வெப்பநிலை பன்மடங்கு அதிகரித்திருந்தது. அரசு அலுவலகங்கள் நிலத்துக்கு அடியில் இயங்கின. உணவு மொத்தமாக இறக்குமதி ஆகிறது. யுவன் ஒரு ஆப்பிரிக்க கம்பெனிக்கு தொலைவில் இருந்து வேலை செய்கிறான். ஆப்பிரிக்காதான் இன்று வல்லரசு. அணு உலைகள் அதிகம் இல்லை. வனங்களை அழித்து அவர்கள்தான் உலகம் முழுவதும் உணவு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தார்கள். சம்பளத்தில் அறுபது சதவீதம் உணவுக்கான செலவாக அரசாங்கம் எடுத்துக் கொண்டிருந்தது. வெளியே செல்ல வேண்டியதில்லை என்பதால் சம்பளம், சேமிப்பு இவற்றால் என்ன பயனென்று தெரியவில்லை. வெளி உலகம் எப்படி இருக்கிறதென்பதை அரசு செய்தி சேனல்கள் வாரம் ஒருமுறை நேரலையில் காட்டும். எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாகச் சாம்பல் படிந்திருக்கும் அந்தக் காட்சியைப் பார்க்க யாரும் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை.

ஆனால் இவையெல்லாம் மிகப்பெரிய பித்தலாட்டம் என்றும் வெளியில் கதிரியக்கமே இல்லை என்றும் ஒரு அதிரகசிய கிசுகிசு உலவுகிறது. வெகு சில பணக்காரர்கள் உலகின் வசதிகளை அனுபவித்துக் கொண்டு மீதம் இருப்பவர்களை வேலை செய்யும் அடிமைகளாக்கி இப்படிக் கூடுகளில் அடைத்து விட்டதாகவும் பேசிக் கொள்கிறார்கள். வெளியே உலகம் அழகாகவே இருந்தாலும் இந்தக்கூடுகளில் இருப்பவர்களுக்கு இப்படியான பிம்பத்தைக் கட்டி எழுப்பியிருக்கிறார்கள் அந்த இலுமினாட்டிகள். வீட்டை விட்டுத் தப்பி வெளியேறுவது சாத்தியமில்லாத செயல். தற்கொலை செய்து கொள்வது கடும் குற்றம்.

அரசாங்கம் நடத்தும் நிலத்தடிப் பள்ளிகளில் பதினெட்டு வயது வரை வளரலாம். பதினெட்டு வயதைத் தாண்டினால் அவரவர் தகுதிக்கேற்ப இப்படி ஒரு கான்கிரீட் பெட்டகம் கிடைக்கும். அந்தத் தகுதியை அரசுதான் முடிவு செய்யும். அரசாங்கம் கொடுக்கும் வேலையைத்தான் செய்ய வேண்டும். கூடவே சிப்பி போன்ற ஒரு நண்பனும் கிடைப்பான். ஆனால் ரியா வந்த பின்னால் சிப்பி வேறு யாருக்காவது துணையாகச் செல்ல வேண்டியிருக்கும். அதுதான் சட்டமும் கூட.

“ஹீட்டர் போட்டாகி விட்டது. உடைகள் தயார்” என்றான் சிப்பி.

பாத்ரூம் செல்லும் வழியில் யாரையுமே வரவேற்காத வரவேற்பறையில் யுவனின் பெரிய திரையில் சிறு கட்டங்களாக நண்பர்கள் தோன்ற ஆரம்பித்து இருந்தனர். ஒவ்வொருவரும் இருபது நண்பர்கள் வரை வைத்துக்கொள்ளலாம். இவன் அந்தப்பக்கம் கடக்கும்போது கூச்சலிட்டனர்.

“இப்போதான் குளிக்கவே போறியா?” என்றான் ஒருவன்.

“பத்து நிமிஷம்” என்றவாறு விரைந்தான்.

யுவனின் புதிய உடை அதற்கான ஹேங்கரில் தயாராக இருந்தது. சிப்பி அவனுக்கான எல்லா வேலைகளையும் செய்து பழகி இருந்தான். சில நேரங்களில் யுவனின் அலுவலக ஈமெயில்களுக்கு அவனே பதிலும் அனுப்பி விடுவான். அவன் மீது யுவனுக்கு அவ்வளவு  நம்பிக்கை. வீட்டில் இருந்த அத்தனை சாதனங்களையும் சிப்பியே பராமரித்தான். சமையல் மட்டும் யுவன் செய்து விடுவான். சிப்பியின் சமையல் வாயில் வைக்க முடியாது. சிப்பி இல்லாத ஒரு வாழ்க்கை யுவனுக்கு சற்று பயமாகக்கூட இருந்தது.

குளித்துப் புதிய உடை மாற்றி வெளியே வந்தான். கேமரா கோணத்துக்குள் வந்ததும் ஆரவாரமாக கை தட்டினார்கள் திரையில் இருந்த நண்பர்கள்.

“ஹீரோ வந்தாச்சு”

“இன்னும் பதினைந்து நிமிடம் இருக்கிறது” என்று அறிவித்தான் சிப்பி.

“உன்னைப் பிரிவதுதான் சிரமமாக இருக்கிறது” என்றான் யுவன்.

“கவலைப்படாதே. ரியா உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வாள். அவள் என்னைவிடக் கற்றவள். உன்னை நல்ல கரங்களில்தான் விட்டுப் போகிறேன்”.

அரசு அனுமதித்தால் மட்டுமே பெண் துணை கிடைக்கும். யுவனுக்கு அதில் மகிழ்ச்சிதான். இந்த வீட்டில் காதுக்கு அருகாமையில் ஒரு பெண்குரல் ஒலிக்கும் என்பது அவனுக்குக் கிளர்ச்சியாகவும் இருந்தது. ஆனால் ரியா வேண்டுமென்றால் சிப்பி இந்த வீட்டை விட்டுச்செல்ல வேண்டும். சிப்பிக்கு இது நன்றாகத் தெரியும். தேடிப்பிடித்து ரியா பற்றிய விவரங்களைத் திரட்டியது அவன்தான். சற்று யோசித்த யுவனை சம்மதிக்கச் செய்ததும் அவன்தான்.

நண்பர்கள் அனைவரும் திரையில் கூடிவிட்டார்கள். அவர்கள் அவனைப் போலவே வேறு வேறு கூடுகளில் தனித்து இருக்கிறார்கள். உலகமெங்கும் இருக்கிறார்கள். வீட்டின் எந்த மூலையிலிருந்தும் யாரோடும் பேச அதிநவீன கேமராக்கள் இருந்தன. கேலியும் கிண்டலும் தூள் பறந்தது. தங்கள் சொந்த திருமண அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தார்கள் சிலர்.

“நேற்று மாலை தேசியத் திரைப்படம் யார் பார்த்தீர்கள்?”

“என்ன பெரிய திரைப்படம். கடமையைச் செய். அரசாங்கத்தை மதி. இதேதான். ஒரு காலத்தில் தனியார் ஸ்டுடியோக்கள் படங்கள் தயாரித்து வெளியிட்டார்கள் என்றால் நம்ப முடிகிறதா. அப்போதெல்லாம் அரசியல்வாதிகளை வில்லனாகவெல்லாம் சித்தரித்துக் கதை செய்வார்களாம்.”

“கவனம் நண்பர்களே. திருமணத்தில் அரசியல் வேண்டாமே?”

“தயாரா?” என்றான் சிப்பி.

“ஆரம்பிக்கலாம்” என்றான் யுவன். கேக் மேசையில் தயாராக இருந்தது. சிப்பி அதிவிரைவில் அதைத் தயாரித்திருந்தான்.

நண்பர்கள் அனைவரும் சடங்கு விதிமுறையின்படி ஷாம்பெயினை கண்ணாடி கிளாஸ்களில் ஊற்றினார்கள். திருமணத்துக்கு அழைப்பு இருப்பவர்களுக்கு மட்டும் அரசே சிறிய பாட்டில்களை அனுப்பி இருந்தது. ரியாவுடனான புதிய வாழ்க்கைக்கு யுவனை வாழ்த்தினார்கள். பருகினார்கள். இவனும் பருகினான்.

“இந்த நொடிவரை நான் சரியான முடிவுதான் எடுக்கிறேனா என்று புரியவில்லை” என்றான் யுவன்.

அந்தப் பக்கமிருந்து நண்பன் ஒருவன் சமாதானம் சொன்னான்.

“ரியாவை எனக்குத் தெரியும். உன்னை நன்றாக கவனித்துக் கொள்வாள். போய் வா சிப்பி. உன்னை நாங்களும் நிறையவே மிஸ் பண்ணுவோம்.”

யுவன் கேக்கை வெட்டி உண்டான்.

“நான் விடை பெறுகிறேன்” என்றான் சிப்பி கடைசியாக. யுவனின் கண்கள் கலங்கிவிட்டன.

“இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே?”

“நான் இருந்தாலும் அரசு அனுமதிக்காது. நான் வெளியே போனால்தானே ரியா வரமுடியும். வருகிறேன் யுவன்.”

அரசு குறித்த நேரம் வந்ததும் ஒரு பெரிய பீப் ஒலித்தது. நண்பர்கள் ஒவ்வொருவராக திரையில் இருந்து மறைத்தனர். அரசாங்க முத்திரையுடன் கூடிய திரை தோன்றியது. அதில் கேள்விகள் ஒளிர்ந்தன.

“நீங்கள் முழுமனதுடன் இந்த இணைவுக்கு சம்மதிக்கிறீர்களா” என்றது திரை.

“ஆமாம்” என்றான் யுவன்.

“இதற்காக உங்களோடு பதினாறு வருடங்கள் இருந்த சிப்பியை நீங்கள் நிரந்தரமாக இழக்கத் தயாரா?” என்றது அடுத்த கேள்வியாக.

சிலநொடிகள் யோசனைக்குப் பின் “ஆமாம்” என்றான் யுவன்.

“இந்தச் செயலை நீங்கள் திரும்பப் பெற முடியாது என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?”

“ஆமாம்”

“ரியாவை உங்கள் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ள மனப்பூர்வமாக சம்மதிக்கிறீர்களா?” என்றது திரை.

“சம்மதிக்கிறேன்.”

“அப்படியானால் உங்கள் கைரேகைகளையும் கார்னியாவையும் பதிவு செய்யுங்கள்”

யுவன் இரண்டு கைகளை உயர்த்தி கண்களை விரித்துக் காட்டினான். எடுத்துக்கொண்டு விட்டதாக ஒலி கொடுத்தது திரை.

“வாழ்த்துக்கள். உங்கள் புதிய வாழ்க்கைக்குத் தயாராகுங்கள்.” என்ற செய்திக்குப் பிறகு திரை மீண்டும் பல வண்ணங்களில் ஒளிர்ந்தது.

“அன்லோடிங் சிப்பி…”

“ரிமூவிங் சிப்பி…”

என்ற செய்திகளைத் தொடர்ந்து ரியா என்ற புதிய ஆபரேடிங் சிஸ்டத்தை யுவனின் கணினிகளிலும் வீட்டுச்சாதனங்களிலும் ஏற்றத் தொடங்கியது அரசாங்க சர்வர்.

“ரியா நிறுவப்படுகிறாள்… ஒரு மணிநேரம் காத்திருக்கவும்” என்ற திரையை வெறித்தபடி அமர்ந்திருந்தான் யுவன்.

***

(அக்டோபர் 6, 2013)

– ஷான் கருப்பசாமி – இரண்டு கவிதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள் என எழுதியிருக்கும் ஷான். திரைத்துறையிலும் கால் பதித்து வருகிறார். தொடர்புக்கு : shan.mugavari@gmail.com

1. தேடெய்தல்

0
  • முன்பொரு காலத்தில் ஒரு மந்திரவாதி – 01
  • கதை : பாபாகா ; ஓவியம் : கணபதி சுப்ரமணியம்

முன்பொரு காலத்தில், ஒரு மந்திரவாதி களைப்பாக உள்ளது என்று ஓர் இரவு, தூண் கொண்ட  திண்ணையில் தன் மூட்டையை தலைக்கு வைத்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தான்.

அப்பொழுது தூக்கத்தின் கடைசி விழுதலில் அவனுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.

இத்தனை வீடுகள் இருக்கும்போது, ஏன் இந்த வீட்டை தேர்ந்தெடுத்தோம் என்று யோசிக்கையில்,

அந்த கணமே அவன் மூட்டையினுள் அவன் வைத்திருந்த வேறொரு மந்திரவாதியின் மண்டையோடு பேசத் தொடங்கியது.

‘இந்த வீட்டில் தான் நீ தேடும் அனைத்தும் உனக்கு கிட்டப் போகிறது’ என்று அவனை சுவாரஸ்யப்படுத்தியது.

அப்போதும் தூக்கம் கலைவதில் சம்மதம் இல்லாத மந்திரவாதி தலையைக் கூட நகர்த்தாமலேயே, ‘நான் என்ன தேடுகிறேன்? அது ஏன் இங்கு மட்டுமே தான் கிடைக்கும்?’ என்று முனகிக் கொண்டே கேட்டான்.

அப்போது அந்த வீட்டின் ஜன்னல் ஒன்று திறந்து கொண்டது..

Created with GIMP

உள்ளிருந்து ஒரு அம்மி உருளும் சத்தம் கேட்கத் தொடங்கியது.

நறுமணம் மிகுந்த ஒரு மூலிகையின் வாசனை அந்த சாளரத்தின் வழியே வீசியது.

தன் பதினாறு வயதில் அவன் காடொன்றில் அலைந்து கொண்டிருந்த போது, அதே வாசனை அடித்து அதன் மூலத்தை தேடிச் செல்கையில், விதவிதமான ஆயுதங்களின் பல அமைப்புகளாக தன் முட்களைக் கொண்ட செடிகள் நிறைந்த ஒரு சின்ன வனத்தை அடைந்தான்.

அந்தச் செடிகளின் நடுவில் பழிசண்டை.

ஒவ்வொரு காற்றடிப்பிற்கும் தங்களுக்குள்ளேயே போரென ஆடி, ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தன அந்தச் செடிகளும் அவற்றின் இலைகளும்.

தூங்கிக் கொண்டிருந்த மந்திரவாதியை ஒரு நாய் தட்டி எழுப்பியது.

அழகாக இருந்த அந்த நாயை மந்திரவாதி உடனே கொஞ்சத் தொடங்கினான். பின்னர் அந்தத் திண்ணையிலேயே அவர்கள் இருவரும் படுத்துத் தூங்கினர்.

காலையில் எழுந்து செல்வதற்கு முன் அந்த மண்டையோட்டை பார்வையிட தனது மூட்டையிலிருந்து எடுத்தான்.

குடுகுடுவென்று அந்த வீட்டிலிருந்து பல கைகால் எலும்புகள் வந்தன. அவை வெளியே ஓடிவந்து அந்த மண்டையோட்டை அவனிடமிருந்து பிடுங்கிச் சென்றன.

Created with GIMP

வீட்டிற்குள் செல்லும்போது அந்த மண்டையோடு உல்லாசமாக சிரித்தது. இனி தன்னை வெல்ல யாருமில்லை என்று கொக்கரித்துக் கொண்டே வீட்டிற்குள் சென்றது.

அந்த வீட்டின் கதவுகளும் ஜன்னல்களும் தாழ் சத்தத்துடன் சாத்திக் கொண்டன.

தன் நாயை அழைத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு மந்திரவாதி வேகமாக நீங்கினான்.

Description: scratch003_01.jpg
***

கருத்துகளுக்கு :

கதை : பாபாகா – albenizme@gmail.com

ஓவியம் : கணபதி சுப்ரமணியம் – gpathy@yahoo.com

ஆரணங்கு

2

-1-

“மனுஷன் மூணு நாளா ஒன்னுமே சாப்பிடலைங்க. ஹாலுக்கு நடூல உக்காந்துகிட்டு அந்த செவத்தையே பாத்துகிட்டு இருந்தாரு. நானும் அப்பப்ப வந்து சாப்பாடு செஞ்சி தரவானு கேட்டேன். வேண்டான்னு தலையசப்பு தான். வார்த்தையே வரல. செல நேரம் அழவும் செஞ்சாரு. அவர அப்படி பாத்ததே இல்லங்க. எனக்கே அழுக வந்துருச்சு.”

மாலதியின் கண்கள் உறக்கமின்றியும் அழுதும் கறுத்திருந்தன. தாத்தாவைப் பற்றி துக்கம் விசாரிக்க வரும் அனைவரிடமும் சலிப்பின்றி, அதே நேரம் வருத்தம் சிறிதும் குறையாமல் விவரித்தாள். தாத்தாவின் இறுதி தினங்கள் மாலதியின் சொற்களில் வருவோர்க்கு துலங்கின. இறக்கும் முன் கொஞ்சம் அதட்டியாவது தாத்தாவிற்கு ஒருவேளை உணவு அளித்திருக்கலாமோ எனும் குற்றவுணர்ச்சியும் அவ்விவரிப்பில் அடங்கியிருந்தது. அப்பாவிடம் விவரிக்கும் போது அவளது கண்களை கவனித்தேன். தாத்தாவின் மீதான மரியாதையும், தானறிந்த அவருடைய வாழ்க்கையை மேலும் ஆயிரம் பேரிடம் சொல்வதற்கான தெம்பும் புலப்பட்டது.

தாத்தா தொடர்ச்சியாக இரண்டு தினங்கள் சாப்பிடாமல் இருந்தபோதே மாலதியிடமிருந்து எங்கள் வீட்டிற்கு அழைப்பு வந்திருந்தது. அழைப்பு வந்த மறுதினமே நாங்கள் கிளம்பினோம். தாத்தாவின் முகத்தில் சுருக்கங்கள் அதிகரித்திருந்தன. உதடுகளும் கண்களும் காய்ந்து கிடந்தன. தண்ணீர் குடிக்க மறுத்தார். சிறிதளவே உணவு உட்கொண்டார். அவ்வீட்டிலிருந்த பொருட்களைப் போன்று அவரும் அசைவுகளின்றி படுத்திருந்தார்.

மாலதி அதே தெருவில் இஸ்திரி போடுபவள். அதற்கான மூலதனம் முழுவதையும் கொடுத்தவர் தாத்தா வேங்கடகிருஷ்ண சாஸ்திரிகள். இரயில்வே துறையில் ரயிலில் guard ஆக பணிபுரிந்தார். இரயிலில் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கிருக்கும் ஏதேனும் ஒரு கோவிலுக்கு செல்வது அவருக்கான வாடிக்கை. வாய்ப்பு கிடைத்தால் அவரே வேறு வேறு ஊர்களுக்குச் செல்லும் இரயிலில் மாற்றம் கேட்டு வாங்கிக் கொள்வார். நிறைய கோவில்களை பார்த்தவர். அவருக்கிருந்த ஒரே கவலை தான் வசிக்கும் இடத்தின் அருகில் கோவில் இல்லை என்பதே.

அத்தெருவில் வீடு வாங்கி பதினெட்டு வருடங்கள் கழிந்திருந்த சமயம். தெருவாசிகளால் ஆன நிர்வாகக் குழுமம் ஒன்று அங்கு அமைக்கப்பட்டிருந்தது. அக்குழுமம் தெருவாசிகளை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், ஹிந்தி வகுப்புகள் போன்றவற்றை நிகழ்த்தினர். அவர்களின் முன்னெடுப்பில் கோவில் கட்டுவதற்கான முன்னேற்பாடுகளும் தொடங்கின. தாத்தா அதன் பணிகளை ஆரம்பத்திலிருந்து கவனித்தார். அவரிடம் அதற்கான ஆலோசனைகளும் கேட்கப்பட்டன. அவ்விடத்தைச் சுற்றியிருக்கும் கோவில்களின் பட்டியல்களையெல்லாம் எடுத்து ஆராய்ந்தார். இறுதியாக சுற்றிலும் எங்குமே பெண் தெய்வங்கள் இல்லை என்று கூறினார். அதற்கான உரையாடல்கள், தேடல்கள் அனைத்தும் அவர்களுக்குள்ளாக நிகழ்ந்தது. கடைசியில் லலிதாம்பிகையை பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்தனர். சேலத்திலிருந்த பிரதான மடங்களிலிருந்தும் லலிதாம்பிகையை பிரதிஷ்டை செய்வது குறித்து தெளிவு பெற்றுக் கொண்டனர்.

கோவில் கட்டுமானத்தின் இறுதிப் பணிகள் நிகழும் தருணம். பாட்டி பார்வதியம்மாளின் மரணம் சம்பவித்தது.  பாட்டியின் பிரிவு வீட்டிற்குள் அவரை முடக்கியது. தனிமையாக இருக்கவே விரும்பினார். கோவில் பணிகளை தினமும் கவனித்து வந்ததால் பாட்டியின் பிரிவு ஏதேனும் அசம்பாவிதம் நிகழக்கூடுமோ எனும் கற்பனைக்கு அவரைத் தள்ளியது. . சில வாரங்களுக்கு கோவில் கட்டுமானத்தின் பக்கம் செல்லாமல் இருந்தார்.

நாங்களும் ஜனனி அத்தையின் குடும்பமும் அவ்வப்போது தாத்தா வீட்டிற்கு வந்து போவதுண்டு. அப்பாவும் அத்தையும் வீட்டிற்கு தவறாமல் பணம் அனுப்புவர். ஆனால் அதன் மீது தாத்தாவிற்கு பெரிய அபிப்பிராயங்கள் இல்லை என்று அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். பெங்களூருவிற்கு நாங்கள் குடி வந்ததிலிருந்து தாத்தாவையும் பாட்டியையும் உடன் அழைத்து வர கடுமையாக முயற்சித்தோம். ஆனாலும் தாத்தா மறுத்துவிட்டார். ஜனனி அத்தையும் முயற்சித்துப் பார்த்தாள். பாட்டி இறந்த பின்பும் அவர் அவ்வீட்டைவிட்டு வர தாத்தா சம்மதிக்கவில்லை.

கோவிலின் குடமுழுக்கு தெரு முழுக்க அலங்கரிக்கப்பட்ட வண்ண விளக்குகளுடன் கோலாகலமாக நிகழ்ந்தது. தெருவாசிகள் அனைவருடன் நாங்களும் கலந்து கொண்டோம். அன்றிலிருந்து தாத்தா தினமும் இருவேளை கோவிலுக்கு சென்று வந்தார். உட்பிராகாரத்தில் அமர்ந்து லலிதா சகஸ்ரநாமத்தை உரக்கச் சொல்லுவார். சிலர் ஆச்சர்யப்படுவதும், பலர் புரியாமல் கடந்து செல்வதும் அவருக்கு பொருட்டாகத் தெரியவில்லை. அவ்வப்போது பிராசதங்களை சமைத்து கோவிலுக்கு வழங்குவார். பலர் அதன் சுவையை பாராட்டியிருக்கின்றனர். கோவிலில் கிடைத்த பல புதிய நட்புகளைப் பற்றி அப்பாவிடம் பிரஸ்தாபிப்பார்.

அந்த நகரில் மொத்தம் பதினோரு தெருக்கள். தெருக்களுக்கு மையமாய் லலிதாம்பிகையின் கோவில். அங்கு தாத்தா தினமும் மந்திரம் உச்சாடனம் செய்யும் தோரணையை துக்கம் விசாரிக்க வந்திருந்த அவருடைய நண்பர்களுள் பலர் வியந்தோதினர். அவர்களிடமும் தாத்தாவின் கடைசி நாட்களின் இயல்பை மாலதி விவரித்தாள். தெரு நிர்வாகத்தின் மூத்த உறுப்பினரான கோவிந்தனுக்கு மாலதியின் செய்தி பிறரைக் காட்டிலும் பெரும் துக்கத்தை அளித்தது. ஒவ்வொருவரின் முக பாவனையையும் கவனித்து வந்த எனக்கு இவருடைய உணர்வின் வெளிப்பாடு ஆச்சர்யத்தை அளித்தது. எழுபத்தி மூன்று வயதில் இறந்த தாத்தாவை பலர் கல்யாணச் சாவு என வாழ்த்தினர். இவர் மட்டுமே பிரிவின் துயரை முகம் முழுக்க அப்பியிருந்தார்.

கண்ணாடிப் பேழையுள் தாத்தாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. கால் தொட்டு வணங்கி வாசல் வந்தார். அப்பாவின் கைகளை பிடித்துக் கொண்டு அமைதியாக நின்றார்.

“அப்பா மூனு நாளா கோவிலுக்கே வரல. அதுக்கு முன்னாடி ஏதோ நோன்புனு பிரசாதம் செஞ்சு குடுத்தாரு. அப்ப கூட நடூலயே கெளம்பி போயிட்டதா குருக்கள் வழியா கேள்விப்பட்டேன். அப்பாக்கு உடம்பு சரியில்லையோனு சந்தேகம். வீட்டுக்கு வந்து பாத்தா அமைதியா, திடமா உக்காந்துகிட்டு இருந்தாரு. ஆனா எதுவுமே பேசல.”

அவருடைய குரல் திக்கியது. அவ்வப்போது சொற்களை விழுங்கினார். கண்கள் கலங்கின. ஆறுதலாக அவருடைய கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு அப்பா என்னை அறிமுகம் செய்தார். பெயரை விசாரித்து நினைவில் வைத்துக்கொண்டார்.

“என்ன படிக்கறப்பா ?

எனது கைகளை பிடித்துக் கொண்டார். குளிர்ச்சியாக இருந்தது. அவ்வப்போது கோவிந்தனின் கண்கள் தாத்தாவின் உடலைப் பார்த்துக் கொண்டன.

“ஃபைனல் இயர் சிவில் அங்கிள்”

அழுகையை அடக்க விரும்புபவரைப் போன்று எனது கைகளை இன்னமும் சற்று இறுக்கமாகப் பிடித்தார்.

“நல்ல மனுஷர் தம்பி. யாருக்கும் எந்த தொந்தரவும் செஞ்சதில்ல. அவரோட கடைசி கால அமைதியத்தான் யாராலயும் புரிஞ்சிக்க முடியல!”

சிறிது நேரம் என்னருகிலேயே நின்றுவிட்டு கிளம்பினார். தாத்தாவின் அமைதியை அறிய அவர் கொண்டிருக்கும் பிரயாசை என்னையும் தொற்றிக் கொண்டது. அத்தையும் குடும்பத்துடன் தெருமுனை வரை வர சுடுகாட்டிற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. தெருவாசிகள் கூட்டமாக தாத்தாவின் உடலைப் பின்தொடர்ந்தனர். தாத்தா அமைதியில் நிறைய பேரை சம்பாதித்திருக்கிறார் எனும் எண்ணம் அவர் மீதான என் மரியாதையை அதிகப்படுத்தியது.

***

ஒவ்வொரு புதன் கிழமையன்றும் அங்கு காய்கறி சந்தை நிகழும். அதன் உட்புறத்தில் சுடுகாடு அமைந்திருந்தது. தாத்தாவின் உடலை மேடையில் வைத்து ஈமக்கிரியைகள் தொடங்கின. சிலர் கண்ணீர் விட்டனர். சிலர் துக்கமாக முகத்தை வைத்துக் கொண்டனர். பலர் தாத்தாவுடன் அவர்களுக்கு இருந்த பிணைப்பையும் உரையாடலையும் பகிர்ந்து கொண்ட வண்ணமிருந்தனர். தாத்தாவின் மொத்த வாழ்க்கையும் சொற்களால் அங்கு பகிரப்பட்டுக் கொண்டிருந்தது. வறட்டிகளின் மேல் வைக்கப்பட்ட தாத்தாவின் உடலை கூர்ந்து கவனித்தேன். எப்போதும் மந்திர உச்சாடனத்துடன் இருக்கும் அவரது உதடுகள் சேராமலிருந்தன. கைகள் இறுக்கமாக மூடி இருந்தது. தோளிலிருந்து இடவலமாக செல்லும் பூணூல் அழுக்கேறியிருந்தது. இறப்பதற்கு முன் எப்போது தாத்தா குளித்திருப்பார் என்று சிந்தித்தேன். மேலும் அவர் உடலிலிருந்து எழும்பிய நாற்றம் அதுநாள் வரை அறிந்திராத ஒன்றாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்க்கையில் பலர் சகித்துக் கொண்டு நின்றனர். தாத்தாவிற்கு சர்க்கரை நோய் இருந்ததால் தான் அவருடைய உடலில் நாற்றம் அதிகமாக இருக்கிறது என்று பேசிக்கொண்டனர். தாத்தாவை எரித்து சாம்பலை மூடி எடுத்து செல்லும்போதும் இந்த உரையாடல்கள் நீண்டன. அதுநாள் வரை அக்குடும்பத்தில் இறந்தவர்களது பிணங்களை நினைவு கூர்ந்தனர். யார் யாருக்கு நாற்றம் அதிகமாக இருந்தது எனும் வாதங்கள் எனக்கு அருவருப்பாயின. உரையாடல் நீண்டதில் குளிர்சாதனபெட்டியிலிருந்து நீக்கியதிலிருந்தே தாத்தாவின் உடல் கடுமையாக நாறிக் கொண்டிருந்தது எனும் நிலைப்பாட்டிற்கு அங்கிருந்த கும்பல் வந்திருந்தது. கேட்க மனமில்லாமல் வீடு சேர்ந்தவுடன் முதல் ஆளாய் குளித்துவிட்டு தாத்தாவின் வீட்டை நோட்டம் விடத் துவங்கினேன்.

தாத்தா இறப்பதற்கு முன் அமர்ந்திருந்ததாக மாலதி அக்கா சொன்ன இடத்திற்கு சென்றேன். எப்போதும் சஹஸ்ர நாமங்களை வாசிக்க வைத்திருக்கும் சிறிய மர மேஜையும் அதன்மீது புத்தகங்களும் இருந்தன. அருகில் தாத்தா அணிந்துகொள்ளும் கண்ணாடி அதன் டப்பாவில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அமர்ந்து கையெட்டும் தூரத்தில் சந்தனம் அரைக்கும் கல்லும் அதற்கான சிறு கட்டையும் கிடந்தது. அதைப் பார்க்கையில் இதைக் குழைத்து வாரக் கணக்காகியிருக்கும் என்று எண்ணுமளவு காய்ந்திருந்தது. நீர் தெளிக்காததால் தெரிந்த சின்னஞ்சிறிய விரிசல்கள் அந்த எண்ணத்திற்கு வலு சேர்த்தன. மேஜை இருந்ததற்கு எதிரில் தங்க நிறத்தாலான கோவில் போன்ற அமைப்பும், அதனுள் பெருமாளின் விக்ரகமும் இருந்தது. அதை மாமா வாங்கிக் கொடுத்ததாக அப்பா சொன்ன ஞாபகம். அதைச்சுற்றி இருந்த சிறிய சிறிய கடவுளர்களின் சிலைகளின் மீது ஈர்ப்பற்றவனாய் கடந்து சென்றேன். ஒவ்வொரு சிலையின் அருகிலும் காய்ந்து போன மலர்கள் உதிரியாய்க் கிடந்தன. பெருமாளின் மீது சாற்றப்பட்டிருந்த மாலையும் காய்ந்து நூல் பளிச்செனத் தெரிந்தது. அறையைச் சுற்றிலும் பழைய சாமான்கள் நிரம்பியிருந்தன. பயன்படுத்தாமல் இருந்த கட்டில் ஒன்று சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. சமைப்பதற்கு தேவையான சில கிண்ணங்களையும் பாத்திரங்களையும் மட்டுமே அவர் பயன்படுத்தி வந்ததாக சொல்வழி நினைவுகள் என்னுள் எழுந்தன. பாட்டி இறந்தவுடன் அதிகம் பயன்படுத்தாத சமையலுக்கான மின்சாதனப் பொருட்கள் தனித்து அங்கே வைக்கப்பட்டிருந்தன. சுவரிலும் கடவுளர்களின் படங்கள் தொங்கிக் கொண்டிருந்தன.

கடைசியாக தாத்தாவின் வீட்டிற்கு வந்து சென்றதன் நினைவு எழுந்தது. அவையும் தெளிவாக இல்லாமல் அமைந்து போனது. அப்பாவின் தொழிலில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக வீடு பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்திருந்த நேரம். சிறிய வயதில் அடிக்கடி இங்கு அழைத்து வந்ததாக அம்மாவும் அப்பாவும் கூறுவர். எனக்கோ எதுவும் ஞாபகத்தில் இல்லை. பின் அவ்வப்போது அழைத்து செல்லுமாறு கேட்ட போதும் பொருளாதாரக் காரணங்களை காட்டி மழுப்பினர். ஏழாவது எட்டாவது படிக்கும் போதும் அதே காரணம் கூறினர். ஏற்றுக் கொள்ளமுடியாமல் தாத்தா வீட்டிற்கு செல்ல சங்கடம் ஏன் என்று கேட்டுவிட்டேன். தாத்தா கண்டிப்பானவர். அவர்களிடம் இந்நிலையில் செல்வது பணம் வேண்டியோ எனும் எண்ணம் அப்பாவின் மனதில் பதிந்திருந்ததால் வீட்டின் பொருளாதாரம் சமனிலை ஆனவுடன் அழைத்து செல்வதாகக் கூறினார். அந்த காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனினும் அமைதியானேன். பின் பாட்டி உடல்நலம் குன்றிய பொழுதில் வந்திருந்தேன். அப்போதும் அதிகம் அவர்களுடன் நேரம் செலவழிக்கவில்லை, பின் பாட்டியின் மரணத்தில், அதற்கு பின் இப்போது. வீடு அந்நியமானதாக இருப்பதற்கு இந்நினைவுகள் சான்றுகளாக நின்றன.

சுவரில் இருந்த கடவுளர்களின் புகைப்படங்களை பார்த்துக் கொண்டு வந்தேன். இடையில் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் ஆணியிலிருந்து எடுத்து தரையில் வைக்கப்பட்டிருந்தது. குழந்தை முருகனின் புகைப்படம். அது மாட்டப்பட்டிருந்த ஆணியில் ஏதோ ஒரு காகிதம் இருந்ததற்கான சான்றாய் அதன் மீதப்பகுதி ஒட்டிக் கொண்டிருந்தது. அதீத பக்தி கொண்ட தாத்தா எதை முருகனுக்கு பதிலாக இங்கே வைத்திருப்பார் எனும் எண்ணம் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆணியையும் அதன் மீதிருந்த தாளையும் வருடிக் கொண்டிருக்கும் போது அப்பாவின் குரல் வாசல் பக்கத்திலிருந்து கேட்டது.

துக்கம் விசாரிக்க வருபவர்கள் பேரனை பார்க்க விரும்புவதாகச் சொன்னதால் அழைத்திருந்தார். இம்மாதிரி நேரத்தில் தனியாக என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கடிந்து கொண்டார். வருபவர்களின் முகமனுக்கு புன்னகைக்கவா அல்லது சோகமாக வைக்கவா என்றே தெரியமல் குழம்பி நின்றேன். சிலர் என்னிடம் ஆறுதல் கூறினர். அப்பாவிற்குள் இருக்கும் இழப்பை உனது வாழ்வே ஈடு கட்டும் என முதுகைத் தட்டித் தேற்றினர். தெருவாசிகள் பலர் இது போன்ற வசனங்களை என்னிடம் சொல்லி பின்வாசலுக்குச் சென்று பிறருடன் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுள் பலர் தாத்தாவிற்கும் அத்தெருவிற்குமான உறவை பேசிக் கொண்டிருந்தனர்.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் இரு குழந்தைகளுடன் வேங்கட கிருஷ்ண சாஸ்திரிகள் அத்தெருவில் குடி வந்தார். வந்ததிலிருந்து வீட்டிற்குள் அடங்கிய குடும்பமாகவே அவர்கள் இருந்திருக்கின்றனர். பின் தெருவாசிகள் ஒன்றிணையும் பண்டிகை காலங்களில் நிகழும் கோலப்போட்டிகள் போன்றவற்றில் கலந்து உரையாடத் துவங்கியிருக்கின்றனர். இவர்களால் சச்சரவுகள் அதிகம் தெருவில் இல்லை. அவருக்கு ஜோசியம் பார்க்கத் தெரியும் என்பதால் எப்போதாவது தெருவிற்கு அப்பாலிருந்த அரசமரத்தடி பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் சமயத்தில் அங்கே அமர்ந்து ஜோசியம் குறித்தும், பாகவதம் குறித்தும் பேசுவது அவருக்கு வாடிக்கை. சிலர் அவர் நன்கு கதை சொல்கிறார் எனும் காரணத்திலும் வந்திருக்கின்றனர். புதிதாக கோவில் கட்டியவுடன் அவர் அடிக்கடி செல்வதால் பலர் ஜோசியம் கேட்க வந்திருக்கின்றனர். ஆனால் பாட்டி இறந்தவுடன் யாருக்கும் அவர் எதிர்காலத்தைச் சொல்லவில்லை. மேலும் மாலதியைப் போன்று சிறு சிறு தெரு வியாபாரிகளுக்கான மூலதனத்தை கொடுத்து உதவியிருக்கிறார். இவை பெரும்பாலும் பாட்டியின் மரணத்திற்கு பின் நிகழ்ந்ததாக சில அளவளாவினர். ஒவ்வொருவரின் கதைகளுக்கும் வீடு சாட்சியமாக, புன்னகைத்துக் கொண்டிருப்பதாக கற்பனை செய்து கொண்டேன்.

கூட்டம் குறையத் துவங்கியது. பலர் அவர் பணிபுரிந்த இடத்திலிருந்து வந்து அப்பாவிடமும் அத்தையிடமும் துக்கம் விசாரித்து சென்றனர். அவர்களின் வழியே பணியிடத்திலிருந்த தாத்தாவின் சித்திரம் சொற்களால் உருவானது. அதன் மீதான என் கவனம் குவியவில்லை. பலருக்கு என்னிடம் என்ன பேச என்றும் தெரியாமல் இருந்தது. என்னையே அறியாமல் அவர்களிடம் புன்னகை புரிந்தேன். அம்மா சற்று தொலைவிலிருந்து அம்மாதிரியான நேரங்களில் கண்களால் கண்டித்தாள்.

அவர் பணியிடத்திலிருந்து ஓய்வு பெறும் நேரத்தில் புதிதாக சேர்ந்தவர்களின் சிறு கும்பலொன்று அப்பொழுது வீட்டிற்குள் வந்தனர். அவர்களுக்கு என்னிடம் என்ன பேச எனத்தெரியாமல் விழித்தனர். துக்கம் விசாரிப்பது எப்படி என்பதை நிச்சயம் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கற்றுத்தர வேண்டும் என்று எண்ணினேன். அவர்களும் அதையே அவர்களுக்குள் கிசுகிசுப்பதாகவும் சந்தேகித்தேன். அவர்களுக்கு பின்னிருந்து பெண்மணி என்னை நோக்கி நடந்து வந்தார். தலை நரையேறியிருந்தது. அம்மாவின் வயதிருக்கலாம். அவர் அணிந்திருந்த முக்கால் கை பிளவுஸ் அவரை தனித்து நினைவுபடுத்திக் கொள்ள தோதாயிருந்தது. எல்லோரையும் போல என்னிடம் ஆறுதல் கூறி தேற்றினார். ஒவ்வொருவர் ஆறுதல் கூறும் போதும் எப்படி பதிலுரைப்பது எனத்தெரியாமல் விழித்தபடி இருந்தேன். இந்த பெண்மணிக்கும் அதே விழிப்பை பதிலாக கொடுத்தேன். தலையை மென்மையாக கோதினார். காதருகில் தேற்றிய குரலிலிருந்து சற்று மென்மையாக வினவினார்.

“பெரியப்பா வரலையா ?”

திகைப்பும் விழிப்பும் என் கண்களில் கூடின. பதிலுக்கு காத்திராமல் விடைபெற்றார். அம்மா வழியிலான பெரியப்பாக்களை பட்டியலிட்டேன். அதில் உயிருடன் இருந்தவர்கள் இரண்டு பேர். அதிலும் ஒருவர் படுத்த படுக்கையாக இருக்கிறார். மற்றொருவர் வர இயலாததால் விஷயம் தெரிந்து அலைபேசியிலேயே துக்கம் விசாரித்தார். அப்பா வழியில் பெரியப்பாவே கிடையாதே! அப்பாவின் நெடுநாளைய நண்பர்கள் யாரையேனும் இப்படி கேட்கிறாரா எனும் சந்தேகம் முளைத்தது.

வந்திருந்த சிறு கும்பல் நோக்கி ஓடினேன். தன்னிடம் பேசிச்சென்ற பெண்மணி குறித்து விசாரித்தேன்.

அவர்கள் அந்த பெண்மணியை கவனிக்கவில்லை என்றும், அவர்களுடன் வந்தவர்களில் நான் குறிப்பிடும் பெண்மணி இல்லையென்றும் கூறினர். அதிர்ச்சி கூடியது. தெருமுனையை தாண்டியிருக்க வாய்ப்பில்லை என வாசல் நோக்கி ஓடினேன். பல செருப்புகள் ஒன்றின் மீது ஒன்று குவியலாக கிடந்தது. எனது செருப்பை அடையாளம் காண முடியவில்லை. அவசரத்திற்கு பாதகமில்லை, தெருமுனைவரை தானே ஓடப் போகிறோம் என்று தோராயமாக ஒரு செருப்பை அணிந்து கொண்டு ஓடினேன். சிலர் எனது ஓட்டத்தை வேடிக்கை பார்த்தனர். விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் விளையாட்டை நிறுத்திவிட்டு நான் ஓடுவதை கவனித்தனர். தெருமுனை சென்று சாலையை பார்க்கையில் சாலை ஆளரவற்று கருமை போர்த்தியிருந்தது. ஏமாற்றத்துடன் வீடு நோக்கி மெதுவாக நடந்து வந்தேன். அந்த சிறுகும்பல் என்னைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். வீட்டில் புதிதாக யாரும் இல்லாமல் நாங்களும் அத்தையின் குடும்பமும் மட்டுமே மீதமாய் இருந்தோம்.

வாசலைத் தாண்டி நுழைந்தவுடன் அப்பா கோபத்துடன் கேள்வி கேட்கத் துவங்கினார்.

“எங்கருந்து இந்த செருப்ப எடுத்துட்டு போன ? யார் உனக்கு எடுத்து குடுத்தா ?”

அவரது கண்கள் அடிப்பதற்கு தயாராய் இருப்பதைப் போன்று கனன்றன. உடனே செருப்பை கழற்றி அதை கவனித்தேன். தாத்தாவின் செருப்பு.

“நேத்தே பத்திரமா எடுத்து உள்ள வச்சிருந்தோம். இப்ப எப்படி எடுத்துட்டு போன ?”

வாசலில் வைத்து அப்பா என்னைத் திட்டுவது அம்மாவிற்கு சங்கடமானது. செருப்பை வாசலிலிருந்து தான் எடுத்து சென்றேன் என்ற பதிலை யாராலும் நம்ப முடியாமல் போனது. என் ஓட்டத்தை வேடிக்கைப் பார்த்த தெருவாசிகளும் சிறுவர்களும் திட்டு வாங்குவதையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு தாத்தாவின் பக்தி அறைக்குள் என்னை ஒடுக்கி கொண்டேன். அம்மா அவன் தெரியாமல் செய்திருப்பான் என்று அப்பாவை சமாதானப்படுத்துவது கேட்டவண்ணமிருந்தது. இருந்தாலும் சொல்லத் தோன்றியது அந்த செருப்பு என் காலுக்கும் பொருத்தமானதாயிருந்தது என. இறந்தவரின் செருப்பிற்காக இத்தனை களேபரங்கள் அர்த்தமற்றதாய் தோன்றிய தருணத்தில் இயல்பிற்கு திரும்பினேன். அந்த அறை என்னை தன்வசப்படுத்திக் கொண்டது.

***

ஹாலில் அம்மாவும் அப்பாவும் உறங்க, மற்றொரு அறையில் அத்தையும் அவர்களின் குடும்பமும் படுத்துக் கொண்டனர். தாத்தாவின் பக்தி அறையில் தூங்க தீர்மானித்தேன். அர்த்தமற்றது என்பதை உணர்ந்த பின்பும் அப்பாவின் மீதான கோபத்தை மௌனமாக தொடர்ந்தேன். உறக்கம் பிடிக்க நேரமானது. அறிந்திராத பெண்மணி சொன்ன பெரியப்பா எனும் சொல் மட்டும் வண்ணம் மண்டைக்குள் வட்டமடித்துக் கொண்டிருந்தது. சில நேரம் மறுநாள் காலையில் அம்மாவிடம் கேட்கலாமா அல்லது அத்தையிடம் கேட்கலாமா எனும் தர்க்கத்திற்கும் தீர்வு காண முயற்சித்தேன். அந்த இரவில் எப்போதும் இல்லாத வகையில் சுறுசுறுப்பாக உணர்ந்தேன். கிஞ்சித்தும் தூக்கம் வரவில்லை. கண்கள் விட்டத்தைச் சுற்றிக் கொண்டிருந்தன. பழைய டிரங்குப் பெட்டியும் பயன்படுத்தாத பித்தளை குண்டான்களுமாக சேகரமாகியிருந்த பரணைக் கவனித்தேன். அத்தை பள்ளிக்காலத்தில் வாங்கிய சின்ன சின்ன பரிசுப் பொருட்களும் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக சொன்ன ஞாபகமும் எழுந்து மறைந்தது. நிறைய பொருட்களால் அறை அடைத்துக் கிடந்தது. காரணம் புரியாமல் டிரங்குப் பெட்டியின் மீது மட்டும் கவனம் குவிந்தது. பரணிலிருந்து சத்தம் எழுப்பாமல் கீழிறக்க விரும்பினேன். மின்விசிறியின் வேகத்தை முடுக்கினேன். அதன் கீறிச்சிடும் ஒலி அறையை நிறைத்தது. அறையிலேயே வைக்கப்பட்டிருந்த, சிலந்தி வலை படர்ந்த பழைய ஏணியை சுவரில் சாய்த்தேன். கடும் கனம். உள்ளே பாத்திரங்கள் இருப்பின் நம் செயல் அம்பலமாகி விடும் எனும் பயமும் தொற்றியது. மெதுவாக ஏறி டிரங்கு பெட்டியை கீழிறக்கி வைத்தேன். நிற்க வைத்தால் நான்கரை அடி வரும். தடிமனாகவும் இருந்தது. வயதிலும் மூத்தது என்பதை அதன் துருவேறிய மேல் பகுதிகளைப் பார்த்தாலே அறிய முடியும். சிறிது தூசியை மட்டும் தட்டிவிட்டேன். தாழினைத் திறக்கும் போது மீண்டும் கீறிச்சிடும் சப்தம் அதிகமானது. பெருமாளுக்கு அருகிலிருந்த விளக்கிலிருந்து சிறிதளவு எண்ணையை தடவி சப்தம் எழுப்பாமல் திறக்க முயற்சித்தேன். ஆனாலும் சப்தம் எழுந்த வண்ணமிருந்தது. வெளியிலிருந்து யாரும் சப்தத்தால் வரவில்லை எனும் எண்ணம் ஆசுவாசமளித்தது. பெட்டிக்குள்ளும் தாத்தாவின் பால்ய குப்பைகள். பணி செய்த இடங்களில் கிடைத்த வெகுமானங்கள், அடையாள அட்டைகள், அவருடைய பெற்றோர்களின் புகைப்படம், அவருடைய திருமண புகைப்படம், அப்பாவின் சிறுவயது புகைப்படம். அதை மட்டுமே வெகுநேரம் வெறித்து பார்த்தேன். எனது ஜாடையுடன் ஒத்துப் போனது. கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பது போன்று தோன்றியது. அப்பாவின் முகம் நன்கு மாறியிருக்கிறது என்பதை நினைக்கும் போதே ஆச்சர்யம் பன்மடங்காகியது. கிடைத்த கடிதங்கள் அனைத்தும் பாட்டிக்கு எழுதியவை. வாசிக்கையில் சுவாரஸ்யமாக ஒன்றுமே எழுதப்படவில்லை. முழுக்கடிதமும் வீட்டாரின் நலம் விசாரித்தலிலும் தெருவாசிகளின் நலம் விசாரித்தலிலுமே கழிந்திருந்தது. அதில் அவர்களுக்கு என்ன சுகம் கிடைத்திருக்கும் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டதாய் இருந்தது. மேலும் துழாவியதில் சில பழைய வேட்டியும் சில சட்டைகளும் அடுக்கப்பட்டிருந்தன. அவை எனக்கு பொருத்தமாய் இருக்கும் என்பதை விரித்துப் பார்க்கையிலேயே தெரிந்து கொண்டேன். அப்பா கடிந்து கொள்வாரோ என மீண்டும் மடித்து வைத்தேன். அப்பாவின் இளவயது புகைப்படம் மட்டுமே அந்த டிரங்குப் பெட்டி என் எதிர்பார்ப்பிற்கு செய்த பதிலியாக இருந்தது. அதை பெட்டி மேலேயே வைத்துவிட்டேன். களைப்பு உடலை போர்த்தியது. பெட்டியை காலையில் மேலே வைக்கலாம் என ஓரமாக வைத்துவிட்டு உறங்க ஆரம்பித்தேன்.

-2-

“அண்ணி வேதாத்ரி கிட்ட நேத்து ஏதாவது பழய சமாச்சாரங்கள பேசினேளா ?”

“என்னடி உளர்ற… இருக்கர வேலைய செய்யவே நேரம் பத்தலைனு அல்லாடிண்டு இருக்கேன். இதுல அவங்கூட பேச்சா.. அவன் போரடிக்குதுனு சொல்லிடுவானோன்னு பயந்துண்டே இருந்தேன். நல்லவேளை அவன் பாட்டுக்கு எதையோ மொபைல்ல செஞ்சிண்டு இருக்கான்”

ஜனனி அத்தைக்கு அவ்வார்த்தைகள் போதுமானதாய் இல்லை. முகம் சிரிப்பை வரவழைக்க முயன்றாலும் இயலாமல் தவித்தது. செயற்கையாக சிரித்து சிறிது நேரம் மௌனம் காத்தாள். பின் அண்ணியை இழுத்துக் கொண்டு வேதாத்ரி உறங்கிக் கொண்டிருக்கும் அறைக்கு சென்றாள். அத்தையின் கணவர் ஶ்ரீநிவாசனும் அண்ணன் நவநீதனும் உறங்கிக் கொண்டிருந்தது அத்தைக்கு பதற்றமற்ற நிலையை கொடுத்தது. வேதாத்ரி இரண்டு கைகளையும் மார்பின் மீது பிணைத்துக் கொண்டு விட்டத்தைப் பார்த்தவாறு படுத்திருந்தான். புருவங்கள் இயல்பிற்கு சற்று மேலேறியதாகப் பட்டது. அறைக்குள் நுழைந்த மாத்திரத்தில் அத்தை அவன் உறங்கும் விதத்தைக் கண்டு மீண்டும் பிரமித்துப் போனாள். உடன் வந்த அண்ணிக்கு அறையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த டிரங்குப் பெட்டியைக் காண்பித்தாள்.

“நைட்டு சத்தம் வராம எப்படி எடுத்து வச்சானு தெரியல அண்ணி. உங்களுக்கு எதாவது சத்தம் கேட்டுச்சா ?”

இரவின் தூக்கத்தினிடையில் சப்தம் ஏதேனும் வந்ததா என யோசித்தாள். களைப்பு தீர உறங்கியது மட்டுமே நினைவில் இருந்தது. பரணையும் ஏணியையும் கீழிறக்கி வைத்து அதை ஓரத்திற்கு தள்ளும்போது ஏற்பட்டிருந்த துருவின் தடத்தையும் நோட்டம் விட்டாள். சப்தம் வராமல் போனதன் ஆச்சர்யத்தில் இருவரும் மிரண்டிருந்தனர். அதைக் களையும் விதமாய் அத்தை வேறொரு விஷயத்திற்கு அஞ்சினாள்.

“அண்ணா எந்திரிக்கறதுக்குள்ள இத மறைச்சிடலாம். இல்லைன்னா அவர் நன்னா கோப்படுவார்”

அண்ணியும் ஆமோதித்தாள், அருகிலிருந்த ஜமக்காளத்தை எடுத்து டிரங்கு பெட்டியின் மீது போர்த்திவிடலாம் என இருவரும் தீர்மானித்தனர். சாமர்த்தியமாக மீண்டும் மேலே வைக்க இருவருக்கும் தெம்பில்லை என்பதையும் ஒப்புக்கொண்டு இம்முடிவை எடுத்தனர். ஜமக்காளத்தை போர்த்தும்போது டிரங்கு பெட்டியின் மீதிருந்த புகைப்படத்தை இருவரும் பார்த்தனர். அண்ணியைக் காட்டிலும் அத்தையிடம் தெரிந்த பிரமிப்பு பயம் கூடியதாய் இருந்தது.

“அவரோட சின்ன வயசு போட்டோவா… நன்னா இருக்கார். இத எங்கிட்ட ஒருதடவ கூட காட்டவேயில்ல! கோச்சிக்க ஒரு காரணம் கெடச்சிருக்கு. எந்திரிக்கட்டும்!”

அத்தை அமைதியாக இருந்தாள். ஜமக்காளம் விரித்த பின் அண்ணியிடமிருந்து அந்தப் புகைப்படத்தை வாங்கி இமைகொட்டாமல் பார்த்தாள்.

“இது அவர் இல்லை அண்ணி. கிருஷ்ணன். உங்ககிட்ட சொல்லியிருப்பாரே”

அண்ணியின் முகத்திலிருந்து சந்தோஷக்களை நொடிப்பொழுதில் நீங்கியது. ஜமக்காளத்தை வேகமாக விரித்துவிட்டு தன் அசட்டுத்தனத்தை எண்ணி வெட்கம் கொண்டாள். மீண்டும் சமையலில் இருந்த பதார்த்தத்தைக் குறித்த புலம்பலுடன் அறையை நீங்கினாள். சிறிது நேரம் அத்தை புகைப்படத்தையே பார்த்துவிட்டு அதை டிரங்கு பெட்டிக்கும் ஜமக்காளத்திற்கும் இடையில் சொருகி வைத்தாள். ஜமக்காளத்தை முழுபெட்டியையும் மறைக்கும் வகையில் சரி செய்தாள். சமையலறைக்கு சென்று அண்ணிக்கு உதவலாம் என முடிவெடுத்தாள். அறை நீங்குவதற்கு முன் பெட்டிக்கருகில் வைக்கப்பட்டிருந்த சந்தனக்கல் கால் விரலை பதம் பார்த்தது. அதன் திடீர் வலியில் இரண்டடி நொண்டியபின் சமையலறை சேர்ந்தாள்.

“அவன் அப்படியே அப்பா மாதிரி தூங்கிண்டிருக்கான் அண்ணி”

“கோந்தை தூங்கரத பார்க்கப்படாதுடி. அப்பறம் கொரக்களி எங்கயாவது கிழிச்சு உடப்போகுது பாரு”

அண்ணிக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வர சமையல் வேலையை அத்தையிடம் ஒப்படைத்தாள். அலுவல் விஷயமாக ஆங்கிலத்தில் சரளமாக பேசிக்கொண்டிருந்தாள். இதுபோன்ற சமயங்களில் மட்டுமே அவர்களுக்குண்டான மொழியில் பேசமுடிகிறது என்பதை எண்ணியவாறே காய்கறியை அத்தை வதக்கினாள்.

“என்னடி கால்லெல்லாம் மஞ்சளா இருக்கு ? எங்க போய் ஈஷிண்ட ?”

அடிபட்ட விரல் முழுக்க மஞ்சள் நிறம் பாவியிருந்தது. விரல் நுனியில் பட்ட அடியில் விரல் முழுக்க பூசப்பட்ட மஞ்சள் ஆச்சர்யமாயிருந்தது. குனிந்து விரலைத் தடவினாள். கைகளிலும் மஞ்சள் படர்ந்தது. முகர்ந்து பார்த்தாள். புதிதாக இழைக்கப்பட்ட சந்தனத்தின் மணம். அண்ணியிடம் சொல்லலாமா வேண்டாமா எனும் பயமும் சந்தேகமும் உள்ளுக்குள் குமுறியது. அழைப்பு வருகிறது என்று அலைபேசியை எடுத்துக்கொண்டு வேதாத்ரியின் அறைக்கு மீண்டும் சென்றாள். சந்தனக்கல்லை தீண்டிப்பார்க்கையில் ஈரம் மேவியிருந்தது.

***

அண்ணி மௌனமாக சமைத்துக் கொண்டிருந்தாள். சந்தனக்கல்லின் ஈரமும் அதன் மணமும் அத்தையை நீங்காமலிருந்தது. கருவேப்பிலை மற்றும் கடுகின் வெடிப்பும் பின் காய்ந்த மிளகாயின் கமறலும் அத்தைக்கு இருமலைத் தூண்டியது. வெடிக்கும் சப்தத்துடன் ஏற்கனவே செய்து வைத்திருந்த சாம்பாரின் மீது  அவற்றை கவிழ்க்கும்போது சரசரவென அண்ணி பேச ஆரம்பித்தாள்.

“போட்டோ பாத்த ஒடன ஹாத்துக்காரரோனு மனசார கொஞ்சிட்டேன். அவர் இல்லைனு சொன்ன ஒடன ஒரு மாதிரி ஆயிடுச்சு. அவா அண்ணாவ பத்தி நல்லா சொல்லிருக்கார். அண்ணாவோ தம்பியோ! அது எப்பவோ சொன்னது. ஜாடை மாடையா தான் நெனவுல இருக்கு. தற்கொலை பண்ணிக்கற விஷயத்தையெல்லாம் மண்டைக்கு எடுத்துட்டு போகக்கூடாது. உனக்கு கூடவே பொறந்தவா. அப்பா மறைஞ்சதும் எல்லாரோட நெனப்பும் வந்திருக்கும். அதனால அதையே நெனச்சிண்டு இருப்ப. அதனால சொல்றேன். அவாளோட வாழ்க்கையையும் வாழ வேண்டியது நம்ம பொறுப்பு. இந்தா எடுத்துட்டு போய் வை. எல்லாரும் பஃபே மாதிரி சாப்பிட்டுடலாம். அப்படியே வேதாவ எழுப்பிடு. அவனும் பல் தேய்ச்சிட்டு சாப்பிடட்டும். நேத்தே ஒழுங்கா சாப்பிடலை”

அத்தையுடைய முகத்தில் அதிர்ச்சியின் ரேகைகள் நிறம் மங்காமல் இருந்தன. நெற்றிச்சுருக்கம் களையவில்லை. கைவிரல்களில் நுண்ணிய நடுக்கம் தெரிந்தது. அண்ணிக்கு உதவியாய் சில பாத்திரங்களை எடுத்துச் சென்று வைத்தாள். வேதாத்ரியை எழுப்பச் செல்லும் முன்பே எழுந்து அமர்ந்திருந்தான். அத்தையைப் பார்த்து புன்னகைத்தான். அவளுக்கு புன்னகை அச்சமளித்தது. இரு கைகளையும் பிசைந்து கொண்டாள். அவனுடைய தெளிவான கண்களும் கபடமற்ற புன்னகையும் ஒருபுறம் ரசிக்கும் வண்ணமிருப்பினும் அருகாமையில் போர்வைக்கடியில் இருந்த புகைப்படத்தின் நினைவு பயம் கொள்ளவே துரத்தியது. செயற்கையான முகபாவனைகளுடன் பல் விளக்கிவிட்டு சாப்பிட வரச்சொன்னாள். அவனும் படுக்கையை மடித்து தலையணை மீது வைத்துவிட்டு கொல்லை நோக்கி நடந்தான். அறையைக் கடந்தவுடன் அத்தை தன் கணவரையும் அண்ணனையும் உணவருந்த அழைக்கச் சென்றாள்.

சமையலறையைத் தாண்டும்போது அம்மாவிடம் பேச விரும்பினான். அம்மா நேரம் வேகமாக கடக்கிறது எனும் அவசரகதியில் பல் விளக்க துரிதப்படுத்தினாள். அவன் அசைவற்று நின்றான். அம்மாவை வெறித்துப் பார்த்தான். இமைகளின் சலனமற்ற பார்வை. தன்மீது நிலைகுத்தும் பார்வை ஒன்று கவிழ்கிறது என்பதை உணர்ந்து திரும்பும்போது மெல்லிய குரலில் கிசுகிசுத்துவிட்டு நகர்ந்தான்.

“அது தற்கொலை இல்லை”

***

நண்பகல் நேரத்திலும் வெயில் மேகங்களுடன் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது. மாலை வாக்கில் மழை பெய்யக்கூடுமோ எனும் பேச்சு தெருவோரிடத்திலும், வீட்டிலும் பரவியது. கிளம்புவதற்குள் வீட்டை சுத்தப்படுத்தியாக வேண்டும் என்பதில் அண்ணியும் அத்தையும் மும்முரமாய் இருந்தனர். வீடு முழுவதும் கழுவி தேய்த்துவிட மாலதியை வரவழைத்திருந்தனர். வருவதாக சொன்ன பொழுது கடந்து அரைமணி நேரமாகியிருந்தது. அத்தையிடம் மாலதியை அழைத்துப் பார்க்கச் சொல்லி அருகாமையில் இருந்த கடைவரை சென்று வருவதாக அண்ணி கிளம்பினாள். தெரு தாண்டியவுடன் மாலதியின் வருகை நிகழ்ந்தது.

“என்ன இவ்ளோ லேட்டு.. நெறையா வேலை இருக்கு மாலதி. சுத்தமா கழுவி வச்சிட்டா பூட்ன பெறகு தொந்தரவு இருக்காதில்லையா”

மாலதியும் ஆமோதித்தாள். துடைப்பத்தை எடுத்து முதலில் ஹாலை சுத்தம் செய்தாள். வீட்டிலிருந்த ஆண்கள் சுத்தம் செய்து முடிக்கும் வரை வெளியிலிருக்கலாம் என்றவுடன் நவநீதனும் ஶ்ரீநிவாசனும் கொல்லைப் பக்கம் சென்றனர். வேதாத்ரியும் அவர்களுடன் வெளியில் இருக்கச் சொல்வது உதவியாய் இருக்கும் என்று அத்தை எண்ணினாள். அவன் தாத்தாவின் அறையில் அமர்ந்து பென்சிலால் வரைந்து கொண்டிருந்தான்.

“என்னடா சின்ன பையனாட்டம் வரைஞ்சிகிட்டு இருக்க. பின்னால செத்த நேரம் அப்பாவோட இரு. மாலதியக்கா க்ளீன் பண்ண ஒடன வரலாம். எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு போ”

சமையலறையில் கழுவிய பாத்திரங்களைத் துடைத்து அடுக்கி வைப்பதற்கான வேலைகள் காத்திருப்பில் இருந்தன. நவநீதன், ஜனனி இருவருமே ஊர் திரும்புவதற்கான சீட்டை விரைவில் எடுத்திருந்தனர். அலுவலகத்தில் நால்வருக்கும் விடுப்பு கிடைக்காததால் மீதமிருக்கும் பணிகளில் துரிதம் காட்டினர். மாலதி துடைப்பத்தை எடுத்துக்கொண்டு சமையலறை வந்தாள். மெல்லிய குரலில் ஜனனியை அழைத்து தன் இடுப்பிலிருந்து சிறிய காகிதத்தை நீட்டினாள். ஜனனியின் புருவங்கள் சுருங்கின. சந்தேகத்தின் ஜாடை நெற்றியின் மத்தியில் குமிழ் கொண்டது.

“ஐயா எறக்கறதுக்கு முன்னாடி இதையேதான் பாத்துகிட்டு இருந்தாரு. இது யாருன்னு எனக்கு அடையாளம் எதுவும் தெரியலை. அவர்கிட்ட கேட்டப்ப கூட அமைதியா இருந்துட்டாரு. நெறையா பேரு வர்றப்ப இத பாத்து தப்பா எதுவும் நெனச்சிரக்கூடாதுல்ல. அதான் எடுத்து வச்சிட்டேன். தனியா இருக்கறப்ப குடுக்கலாம்னு இருந்தேன்மா”

ஜனனிக்கு அந்த காகிதத்தில் இருந்த கிறுக்கலும், அதன் இடையில் தெரிந்த முகமும் புரியாமல் போனது. கூர்ந்து கவனித்தாலும் யாருடைய முகம் என்பதை அடையாளம் காணமுடியவில்லை. அதில் முகமும் தெளிவாக இல்லை. பென்சிலால் கிறுக்கியிருந்ததன் இடையே ஒரு பெண்ணின் முகம். அல்லது பெண்ணைப் போன்றதொரு முகம். அப்பா வரைந்து என்றேனும் பார்த்திருக்கிறோமா என்று யோசித்து பார்த்தாள். அம்மா இல்லாத நேரங்களில் வாசலில் அப்பா இடும் குட்டி கோலம் மட்டுமே நினைவில் எழுந்தது. காகிதத்தை மடித்து வைத்துக்கொண்டு மாலதி பெருக்குவதிலும் ஜனனி துடைப்பதிலும் கவனம் செலுத்தினர்.

பாத்திரங்கள் முடிந்து அதை குறிப்பிட்ட இடத்தில் வைத்தவுடன் மேடையின் மீது அடுப்பும் காகிதமும் மட்டும் இருந்தது. அந்த காகிதம் வேறு சில நினைவுகளை ஜனனியிடம் மீட்டது. வேகமாக அப்பாவின் அறைக்குள் நுழைந்தாள். வேதாத்ரி வரைந்து கொண்டிந்த நோட்டு புத்தகத்தை எடுத்தாள். ஒவ்வொரு பக்கமாக திருப்பிப் பார்த்தாள். விதவிதமாக வீடு வரைய முயன்று கொண்டிருந்தான். கல்லூரியில் கொடுக்கப்பட்டிருந்த சில வீட்டுப்பாடமாக இருக்கும் என நினைத்துக் கொண்டாள். சில பக்கங்கள் கிழித்து கசக்கப்பட்டு புத்தகத்தின் அருகே வைக்கப்பட்டிருந்தது. அதையும் அவசரமாக எடுத்து விரித்து பார்த்தாள். அவையும் கோணலாக சென்ற கோடுகளின் காரணமாக கிழிக்கப்பட்டிருந்தன. மாலதி கொடுத்த காகிதத்தின் மாதிரி இங்கிருக்குமோ என்று அவள் கொண்ட அச்சம் இல்லாமலானது நொடிப்பொழுதில் தோன்றிய மனக்களைப்பை நீக்கியது. நோட்டையும் பென்சிலையும் அங்கே வைத்துவிட்டு குப்பைகளை எடுத்துக்கொண்டு அறையை நீங்கினாள்.

***

மதியம் மூன்று மணியளவில் லேசான தூறலில் தெரு நனைந்து கொண்டிருந்தது. வேறு ஏதேனும் வேலை இருந்தால் சொல்லுங்கள் செய்துவிட்டு வீட்டிற்கு கிளம்புகிறேன் என்று மாலதி காத்திருந்தாள். அண்ணி மாலதியின் மதிய உணவிற்கு பின் அவ்வீட்டில் இருந்த கடவுள்களின் புகைப்படங்களை கழற்றி துடைத்து, பின் தனியே ஓரிடத்தில் அடுக்கி வைக்கச் சொன்னாள். அனைவருக்கும் தேநீர் கலந்து ஹாலில் அமர்ந்திருந்தனர். ஆடவர்கள் அவர்களுக்குண்டான பேச்சை ஆரம்பித்தனர். வீட்டின் பாகப்பிரிவினை குறித்த பேச்சு தீவிரமானது. அன்று மாலை ஆடிட்டரும் வக்கீலும் வருவதாகவும் பிரிவினையை சமபங்காக பிரித்துக்கொள்ளலாம் என்றும் பேசிக் கொண்டனர். அத்தையின் மனதில் தனக்கான பங்கு கிடைக்காமல் போய்விடுமோ எனும் எண்ணம் வலுத்து இருந்தது. மாலையில் நிச்சயம் கணக்கு சொல்லப்படும் எனும் எதிர்பார்ப்பு மீதமாய் இருந்தது. அதே வேளையில் இவ்வளவு வேகமாக பிரிவினை வேண்டுமா எனும் கேள்வியும் பதிலற்று ஜனனியுள் கிடந்தது.

அனைவரும் சேர்ந்தே இருந்ததால் அதை தன் கணவரிடம் சொல்ல முடியாமல் தவித்தாள். வேதாத்ரியின் மௌனம் அவ்வீட்டிற்கு வந்ததிலிருந்து அதிகரித்து இருந்தது அவளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அண்ணியிடம் விசாரித்த போதிலும் அவனுக்கு வீட்டின் அமைதி காரணமாக அப்படி இருக்கலாம் என சமாளித்தாள். அருந்திய தேநீரின் கோப்பையை திருப்பி வைக்க வரும்போது அவனுடன் பேச விரும்பினாள்.

“ஏன் வேதா அமைதியா இருக்க ? சாப்பிட எதாவது வேணுமா ?”

இறுக்கமான முகமும் ஒற்றை சொற்களாலான பதிலும் ஜனனியை கூடுதலாக சங்கடப்படுத்தியது.

“நீ எப்பவுமே இப்படி அமைதியா இருக்க மாட்டியே டா… கலகலனு கலாய்ச்சிகிட்டு இருக்கற நீ என்ன அமைதியா இருக்க ? ஆதித்யாக்கு லீவு கெடச்சிருந்து வந்திருந்தா இவனுக்கு துணையா இருந்திருக்கும்”

ஜனனியின் மகன் ஆதித்யாவின் நினைவை சிட்டிகை அளவில் அண்ணியுடன் பகிர்ந்துகொண்டாள்.

“நான் அமைதியா இல்ல அத்தை. நெரந்தரமா அமைதியானவங்களுக்கும் சேத்து பங்கு போட சொல்லுங்க. போடலைனா அப்பவும் அமைதியா இருக்க மாட்டேன்”

அத்தையின் உடல் புல்லரித்தது. கண்கள் பயத்தில் விரிந்தன.

“என்னடா லூசு மாதிரி உளறிகிட்டு இருக்க. போ போய் எதாவது சின்ன வேலையா எடுத்து பண்ணு”

அண்ணியின் குரல் அர்த்தமற்றதாய் அத்தைக்கு பட்டது.

***

சொத்து பிரித்தலில் ஆண்களின் குரல் ஓங்கியிருந்தது. அண்ணியும் அத்தையும் வேடிக்கை பார்த்த வண்ணமிருந்தனர். மதியம் வேதாத்ரி சொன்ன விஷயத்தை பேச்சில் எடுக்கலாமா எனும் தர்க்கத்தில் குழம்பியிருந்தாள். மாலதி தனக்கு சொல்லியிருந்த பணியை பாகப்பிரிவினையை ஒட்டுக்கேட்ட வண்ணம் செய்து கொண்டிருந்தாள்.

வந்திருந்த முக்கியஸ்தர்கள் கணக்கு வழக்கு தெளிவாக எழுதி இரு பங்காக பிரிக்கும் பட்சத்தில் யார் யாருக்கு எப்படி பிரிக்கப்படும் எனும் விவரத்தை விளக்கிக் கொண்டிருந்தனர். மொத்தத்தை ரொக்கமாக மாற்றும் பட்சத்தில் எவ்வளவு என்பதையும், பொருளாகவே எடுக்கும் பட்சத்தில் எப்படி பிரிக்கப்படும் என்பதையும் விளக்கினர். கைகளை பிசைந்து கொண்டிருந்த ஜனனி வெடுக்கென குரலை உயர்த்தினாள்.

“ரொக்கமாகவே பிரிச்சுக்கலாம்”

அண்ணனின் குரலில் ஏளனம் கூடியது.

“நல்ல வீட வித்து காசாக்கலாம்னு நெனக்கிறியா? அப்பா பக்தியோட இருந்த எடத்த யாரோ ஒருத்தருக்கு குடுத்து அசிங்கமாக்க முடியுமா?”

“யாரோ ஒரு மனுஷாளுக்கு தான குடுக்கப்போறோம். அதுல என்ன பிரச்சின இருக்கு?

“வீட்ட நான் எடுத்திடுவேனோன்னு உனக்கு சங்கடம் இருக்கு. மூஞ்சிலயே தெரியுது. கவலை வேண்டாம். வீட்ட நீயே வச்சுக்கோ. ஆனா வீட்ட விக்க வேண்டாம். அதுதான் எனக்கு”

தன்னை மூன்றாமவர்களின் முன் கேலியாக பேசியது ஜனனிக்கு வருத்தமளித்தது.

“இதனால நமக்கு சண்டை வர வேண்டாம்னு தான் நான் ரொக்கமா கேக்கறேன். ரெண்டு குடும்பத்துக்கு கடன் நெறையா இருக்கு. கடன்ல நீ ஒசத்தி நான் கம்மினு பாக்க நாம இங்க வரல. கெடச்சத வச்சி அவா அவாளோட சௌரியத்த முடிவு பண்ணிக்கலாம். அதனால தான் ரொக்கமா வேணும்னு கேக்கறேன்”

அண்ணனின் குரல்வளை கடுமையானது. பேச எழுவதற்குள் கண்ணாடி உடையும் சப்தம் அனைவரின் கவனத்தையும் திருப்பியது. தாத்தாவின் அறையிலிருந்து வந்த சப்தத்தில் அத்தையின் பயம் பிறரைக் காட்டிலும் கூடியது. அறைக்குள் விரைந்தாள். கைதவறி கீழே போட்டுவிட்டதாக முகத்தை சோகமாக மாலதி வைத்துக்கொண்டாள். அவளுடைய கைகளும் நடுங்கிக் கொண்டிருந்தன. அவளுக்கு பின்னே கண்ணாடி சில்லுகள் உதிந்திருந்தன. அண்ணி அவள் கைவசமிருந்த முருகனை பொருட்படுத்தாமல் சொத்து பிரச்சினைக்கு நகர்ந்தாள்.

“வேதா இங்கதான் தூங்கறான். அதனால லைட்டு போட்டு சுத்தமா க்ளீன் பண்ணிடு. வேற எதையும் இப்படி உடைச்சிடாத”

சத்தமாக கூறிவிட்டு மீண்டும் பாகப்பிரிவினை குறித்த உரையாடலுக்கு நகர்ந்தாள். அண்ணி பேசும் வரையிலும்கூட அத்தையின் பார்வை மாலதியின் கண்களில் நிலைகுத்தி நின்றது. மாலதியின் கண்கள் யாரையோ பார்த்ததன் அதிர்ச்சியில் உறைந்திருந்தது. கைகளில் நடுக்கத்துடன் இறுக்கமாக முருகனின் புகைப்பட சட்டகத்தை பிடித்துக் கொண்டிருந்தாள்.

“கைல பிடிச்சிருக்க. ஆனா கண்ணாடி சில்லு உனக்கு பின்னாடி எப்படி ஒடைஞ்சிருக்கு ?”

மாலதி அமைதியாகவே நின்று கொண்டிருந்தாள். அருகில் சென்று உலுக்கியும் பதில் ஏதும் கூறாமல் அவ்விடம் விட்டு நகர்ந்தாள். முருகன் மாட்டப்பட்ட ஆணியில் பென்சிலால் கிறுக்கப்பட்ட பெண்ணின் முகம் வைக்கப்பட்டிருந்தது. காரணம் புரியாமல் அத்தைக்கும் அழுகை வந்தது. அதைக் கிழித்து மடித்து வைத்துக் கொண்டாள். வெடித்து அழத்தோன்றியும் வெளியில் சொல்லமுடியாமல் அழுகையை முழுங்கினாள். மாலதி அறையை நீங்கியவுடன் கண்களை துடைத்துக்கொண்டு ஹாலிற்கு சென்றாள்.

***

மாலையில் பாகப்பிரிவினைக்கு நிகழ்ந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. சில மாதங்களுக்கு பிறகு வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தனர். குடும்பத்திற்குள் பிளவு ஏற்பட்டுவிடுமோ எனும் அச்சம் நால்வருள்ளும் மூண்டது. அன்று இரவு உறங்கும் முன் ஜனனியும் அவளுடைய கணவர் புருஷோத்தமனும் மொட்டை மாடிக்கு சென்று உலாத்திக் கொண்டிருந்தனர். குடும்பம் பிளந்துவிடுமோ எனும் அச்சத்தை மொட்டை மாடியில் புருஷோத்தமனும் வெளிப்படுத்தினார்.

“அவனுக்கும் சொத்துல பங்கு வைக்கணும்னு கேட்டது வார்த்தை அளவுல நியாயமா இருக்கு. ஆனா யாருக்கு குடுப்ப ? அவனுக்குனு அவன் பங்க வாங்க யார் இருக்கா ?”

“பித்ருக்களுக்குனு சோறு வக்கறோம். எப்பவோ நாம ஆரம்பிச்சத இப்ப ஊர்ல இருக்குற எல்லாரும் வைக்கறா. அதெல்லாம் சாப்பிடறது காக்கா தான். ஒரே காக்கா பலரோட பித்ருவா மார்றது. அப்ப அந்த பங்க எப்படி அர்த்தப்படுத்துவேள் ?”

“அது ஒரு கரண்டி சாப்பாடு தான ? அதுக்கும் இப்படி வீட்ட பிரிக்கறதும் எப்படி சமமாகும் ஜனனி ?”

“சமைக்கும் போது அந்த சோ கால்ட் காக்கா இருக்கறதில்ல. ஒருவேளை கத்திண்டு இருந்தாகூட வேற ஒரு காக்காகூட வந்து சாப்பிடுது. யாரோ ஒரு காக்காக்கு நம்ம போடுற ஒரு கரண்டி சோறு போதும். “

புருஷோத்தமன் குழம்பினார்.

“மனுஷா இறக்கும் போது சகலத்துலயும் அவருக்குனு இருந்த பங்கு உலகத்துல இருக்குற யாருக்காவது போகணும்னு ஒரு கணக்கு. அப்படி கிருஷ்ணனோடது போகலாம்ல ? இல்லாதவா லோகத்துல இல்லவே இல்லையா என்ன ? அப்படி இல்லைனு நெனச்சா தப்பு உலகத்துலயா பாக்கற பார்வைலயானு அடுத்த கேள்வி கேப்பேன்”

“அதுக்கு வீட்ட பங்காதான் போடணுமா ? வீட்ட ஒடைக்கற மாதிரி இல்ல ஆகுது. அங்கயே நீ கேக்கறது அபத்தம்னு சொல்ல நெனச்சேன். உங்கண்ணா முன்னாடி உன்ன விட்டுக்குடுக்கக் கூடாதுனு அமைதியா இருந்துட்டேன்.”

கணவனின் பெருந்தன்மை ஜனனிக்கு மகிழ்ச்சியளித்தது. அச்சொற்கள் இரவின் குளிரை உணர வைத்தது. தொடர்ந்து நினைவுகளை அடுக்கவும் அந்த வானிலை உதவியாய் அமைந்தது.

“இந்த வீடு யாருக்கும் போகக்கூடாதுனு தான் நான் அப்படி சொன்னேன்.”

“அண்ணன் சொன்னதுலயும் ஒரு நியாயம் இருக்கே. அப்பா வாழ்ந்த இடம் ஒரு காரணம். அவரோட பக்தி நெறைஞ்ச வீடு இன்னொரு காரணம். அத இன்னொருத்தர் கிட்ட குடுக்கறது ரொம்ப கஷ்டம் மா”

“உங்க ரெண்டு பேரோட கணக்கும் இந்த வீட புண்ணிய பூமியா ஆக்குது. எனக்கு இது ஒரு பாவ மூட்டை தான். கிருஷ்ணனுக்கும் இந்த வீட்டுக்கும் சம்மந்தமே இல்லை. அவன் இந்த வீட்டை பாத்தது கூட இல்லை. அவன் போனதுக்கப்பறம் தான் இங்க வந்தோம். இன்னமும் தெளிவா சொல்லணும்னா அவனோட தற்கொலைக்கு அப்பறம் அத வெளிய சொல்ல முடியாம ஓடி வந்தாரு அப்பா. அப்ப எனக்கு வயசு கம்மி. அண்ணனுக்கு கிருஷ்ணன விட ஒரு வயசு கம்மி. என்ன பேச முடியும்! அப்பா பின்னாடியே போகறது தான் எங்களோட வேலைனு வந்துட்டோம். இப்ப யோசிச்சு பாக்கும் போது ஒரு கோழைத்தனத்த மறைக்க இன்னொரு கோழைத்தனம்னு அப்பா செஞ்சிகிட்டே இருந்துருக்காரு”

புருஷோத்தமனுக்கு அவள் கூறும் கதை மேலும் குழப்பமானது. குளிருடன் இணைந்த மெல்லிய காற்று கைகளை கட்டிக்கொள்ள பணித்தது.

“எனக்கு ரொம்ப சின்ன வயசு. கிருஷ்ணன் அண்ணனுக்கும் அப்பாக்கும் வாக்குவாதம் தெனமும் நடக்கும். அப்பாக்கு கணீர்னு கொரல். அதனால ரொம்ப கத்துவாரு. கீழ் சாதிக்காரனோட பொண்ண காதலிச்சது அவருக்கு சுத்தமா பிடிக்கல. அண்ணன் அந்த வீட்ல போய் சம்மதம்லாம் வாங்கிட்டு வந்துருக்காரு. அப்பாக்கு துளியும் சம்மதமில்ல. சாதிய ஒரு அடி எறக்க கூட திராணியில்ல. நாள் கணக்கா வீம்பு. அண்ணனும் ஏதோ ஒரு கணத்துல அப்பாவ விடவும் மனசில்லாம அவளையும் விட மனசில்லாம ரெண்டு பேருக்கும் தான் வேண்டாம்னு முடிவெடுத்துட்டாரு. நான் நவநீதனோட வெளயாண்டத விட கிருஷ்ணனோட தான் க்ளோஸா இருந்துருக்கேன். கிருஷ்ணன் நெறையா பேசுவான்.”

இருவரும் கைகட்டிக் கொண்டனர். நிலவின் வெளிச்சம் மொட்டை மாடி முழுக்க பரவியது.

“கிருஷ்ணனோட இந்த முடிவுக்கு அப்பறம் சில வாரத்துலயே வீட்ட காலி பண்ண முடிவெடுத்துட்டாரு அப்பா. படிப்பு பாதிலயே க்ளோஸ். அப்ப காரணம் கேட்டாலும் அப்பாகிட்டருந்து மொறப்புதான் வரும். இந்த கதை கூட காலேஜ் படிக்கும் போது அம்மா சொன்னது தான். அம்மாக்குதான் வருத்தம் அதிகம்.”

இருவரும் மௌனமாக இருந்தனர். வௌவால்கள் மரக்கிளைகளில் இருந்து பறந்து வட்டமடித்து அதே கிளைக்கு திரும்பிக் கொண்டிருந்தன. சில காக்கைகள் மின்கம்பங்களின் மீது அமர்ந்திருந்ததை வேடிக்கைப் பார்த்தாள்.

“இந்த வீட்ட யார் வச்சிகிட்டாலும் அப்பாவோட கோழத்தனத்த சுமக்கறதுக்கு சமம்தான். ஒண்ணு புள்ளை முக்கியம்னு நெனச்சிருந்தா கிருஷ்ணனுக்கு அவன் விரும்புன பொண்ண கல்யாணம் செஞ்சி வச்சிருக்கணும். இல்ல சாதி முக்கியம்னு பட்ருந்துச்சுனா இறந்த பிறகு சாதிய கெட்டியா பிடிச்சிகிட்டு இருந்திருக்கனும். அதுவும் இல்லைன்னா புள்ளை எறந்த பிறகாவது சாதிய வுட்ருக்கணும். மூணும் இல்லை! அப்ப அவர எந்த நெலைல வக்க? சாதி அவருக்கு ஒரு சைகிக் அப்ஸெஷன். அவ்ளோதான். அதோட விளைவு ஒரு உயிர். அது போகாமயே இருந்திருக்கலாம்.”

பனி அதிகமானது. உறங்கச் செல்லலாம் என முடிவெடுத்து கீழிறங்கினர். சமையலறையில் இருந்த வாழைப்பழத்தை உண்டுவிட்டு தோலை கொல்லையில் வீசினர்.

“நாளைக்கு அண்ணன் மட்டும் தாத்தா சொத்து உயிரோட இருக்குற பேரனுக்கு அது இதுனு வாய் விடட்டும், சொத்தோட சேத்து பாவத்தையும் எடுத்துக்கோனு சொல்லப்போறேன். என் புள்ளைக்கு சொத்தும் வேணாம் பாவமும் வேணாம். ஆனா கிருஷ்ணனுக்கான பங்குக்கு பேசிகிட்டே தான் இருப்பேன்”

புருஷோத்தமன் அவளுக்கு துணை நிற்பதாக கூறினான். இருவரும் உறங்கச் சென்றனர். புருஷோத்தமனுக்கு மட்டும் எளிதில் உறக்கம் கிட்டவில்லை. ஜனனியின் பேச்சை நினைத்த வண்ணம் படுத்திருந்தான். இறுதியாக அவள் கூறியதில் எதை பாவம் எனக் குறிப்பிடுகிறாள் என்பதைச் சுற்றி நினைவுகள் சுழன்று கொண்டிருந்தன.

***

ஜனனியின் செவிகளில் சொற்கள் சூழ்ந்தன. குறைந்த ஒலியில் கணீர் குரல். புலம்பல் த்வனி. இடையிடையில் கண்ணாமூச்சி ஆடும் விசும்பல் சப்தம். மூச்சிரைப்பதன் அறிகுறியும் இணைந்து கொண்டது. ஜனனியின் முகத்தில் வியர்வை அரும்பத் துவங்கியது. கணவருடன் பேசிக் கொண்டிருந்தபோது உணர்ந்த குளிர் உடலை முற்றாக நீங்கியிருந்தது. கோடைகாலத்தின் இரவினையொத்த புழுக்கம் உடலை நெருக்கியது. எழுந்து அருகில் உறங்கிக் கொண்டிருந்த கணவரைப் பார்த்தாள். ஹாலில் உறங்கிக் கொண்டிருந்த அண்ணன் குடும்பத்தையும் சந்தேகித்தாள். அனைவரும் எந்த சலனமும் அண்டாத வண்ணம் உறங்கிக் கொண்டிருந்தனர். அண்ணனிடமிருந்து எழும்பிய குறட்டையும் கூர்ந்து கவனிக்கும்போது பெரிதாகக் கேட்டது. அதன் மீதிருந்த கவனத்தை விடுவித்துக் கொண்டாள். அறையில் பாவியிருந்த இருள் அச்சமூட்டியது. மீண்டும் முதலில் கேட்ட ஒலிகள் துல்லியமாய் கேட்டன. அப்பாவின் அறையிலிருந்து வருவதாக உணர்வது உண்மையா கற்பனையா எனும் பயத்தில் மூழ்கினாள். அறை பாதியளவு மூடியிருந்தது. உடலைச் சுருக்கி வேதாத்ரி உறங்கிக் கொண்டிருந்தான். அறையின் ஸீரோ வாட்ஸ் பல்பை எரியவிட்டாள். அதன் ஸ்விட்சை அழுத்தும்போது அவனுடைய விசும்பலின் ஒலி அதிகமானது. குளிரில் நடுங்கும் சிறுவனைப் போல் உடலும் உதறியதை கவனித்தாள். பயம் உடல் முழுக்க புல்லரிக்க வைத்தது. இருந்தும் அவனது நடுக்கம் அவன் மீதான கரிசனமாக மாறியது. வேகமாக அருகில் சென்று சுருட்டி வைக்கப்பட்டிருந்த போர்வையை எடுத்து போர்த்திவிட்டாள். பயத்தில் கைகள் நடுங்கின. அவனது சொற்களை கவனிக்க முற்பட்டாள்.

“குளுருது ஜன்னு. இன்னமும் கனமா எதாவது இருந்தா போத்துமா”

வேதாத்ரியை பார்க்க பார்க்க ஜனனிக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. அப்பா மட்டுமே அவளை அழைக்கும் ஜன்னு எனும் சொல்லை அவன் வழியே கேட்கையில் உவகையிலும் கண்ணீர் கூடியது. அவை பயத்தின் பாற்பட்டதா அல்லது வேதாவின் இள உடல் குளிரில் நடுங்குவதால் எழும் பரிதாபமா என்பதை உணரவியலாமல் குழம்பினாள். அவனது தலையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டாள். பேச முயன்றாலும் குரல் நினைவுடன் கைகூடவில்லை. நடுங்கிய குரலில் சொற்களை வெளியேற்றினாள்.

“அப்பா”

சொல்லி முடிப்பதற்குள் பயம் கவ்விக்கொண்டது. அவள் பேசிய மாத்திரத்தில் வேதா வெடித்து அழுதான். தாரைதாரையாய் கண்ணீர் பெருகியது.

“அன்னிக்கு மாதிரியே ரொம்ப குளுர்றது ஜன்னு. அன்னிக்கு போத்திண்டிருக்க விரும்பல. இன்னிக்கு ஒடுங்கி உக்காந்துக்க நெனைக்கறேன். எலும்பை எல்லாம் பதம் பார்க்கறது இந்த குளிர். ஒரே கிருஷ்ணன் ஞாபகமா இருக்கு. அன்னிக்கு அன்னிக்குனு சொல்றேன். ஆனா ஒவ்வொரு நாளும் முந்தைய நாள் ராத்திரி மாதிரியே பயத்தோட இருக்கேன். எத்தனை நாள் அழுதான். மனசுல ஒரு பொண்ண வச்சுண்டு, அவளையும் விடாம என்னையும் விடாம எப்படியாவது சம்மதிப்பேனு காத்துண்டு இருந்தான். வேதாந்தம் வாயோட போயிடுச்சு. ஒரு க்ஷணம் அவனுக்காக யோசிச்சிருந்தேன்னா இன்னிக்கு உயிரோட இருந்திருப்பான். நானே என் கையால அவன் போஜனத்துல கலந்தேன். சாப்பிடறதையும் பாத்தேன். தூங்கப்போகும்போது தான் நான் செஞ்சது தப்புனு தெரிஞ்சது.”

வேதாத்ரியின் தலைமுடியை கோதிக்கொண்டிருந்த ஜனனியின் கைகள் நின்றன. அவனுடைய பேச்சு அதிகரிக்க அதிகரிக்க தலையிலிருந்து கை விலகிக்கொண்டே சென்றது.

“தூங்கவேயில்லை. அவனையே பாத்துண்டு இருந்தேன். சத்தமில்லாம அழுதேன். பிரயோஜனமில்லாத அழுகை. கிருஷ்ணன் அசையவேயில்லை ஜன்னு. கல்லு மாதிரி கெடந்தான். நடுராத்திரி எழுப்பி எதாவது பண்ணுதாடானும் கேக்க நெனச்சேன். எழுந்திருச்சுட்டான்னா என் மானம் போகுமேனு ஒரு பயம். அபத்தம். எல்லாமே அபத்தம் ஜன்னு. அவனுக்குள்ள அவன் உயிர் ஒடுங்கறத நான் பாத்துண்டே இருந்தேன். பாபகர விமோசனம்னு சொல்லுவா. அது ஒரே ஒரு பாவம் செஞ்சவாளுக்கு. நான் பாவத்தை செஞ்சிண்டே இருந்திருக்கேன். விமோசனமே எனக்கு இல்லைமா. கொலை செய்ய தைரியமில்லை. என்னோட உயிர மாய்ச்சுக்கவும் தெரியலை. ஆனால் அவன் சாகறத வேடிக்கை பாத்திருக்கேன். பாத்துண்டே இருந்துருக்கேன். போனதுக்கப்பறம் ஒவ்வொரு நாளும் அதையே தான் பாத்திருந்திருக்கேன். மாபாவம். மாபாவம்.”

புலம்பலினூடே வேதாத்ரியின் தலையை மீண்டும் படுக்கையில் கிடத்தினாள். முகம் அதிர்ச்சியில் வெளிறியிருந்தது. கண்கள் முழுவதுமாய் திறந்திருந்தன. பயத்தை விட அருவருப்பு உடலை மேவியது. அறையை நீங்க மெதுவாக நடந்தாள். அவளுக்கு பின்னே வேதாத்ரியின் குரல் ஒலித்துக்கொண்டேயிருந்தது.

“அவளுக்கு இன்னமும் கல்யாணம் நடக்கலை. அவனுக்காகவே அவ இருக்கா. கிருஷ்ணனோட பாக்க வேண்டிய அவளை தனியா, முதிர்கன்னியா பாத்தேன். என் பாவம்தான் அவளோட வாழ்க்கை. அவதான் என் குற்றம். நான் அந்த குற்றத்தோட வெறும் நிழல். எங்கிட்ட எதுவும் கேக்கலை. ஒரே ஒரு புன்னகை செஞ்சா. தெனம் தெனம் நான் தரிசனம் செய்ற லலிதாம்பிகையோட புன்னகை. பேரிடியா கேக்குது. தொண்டையோட இடைல கட்டியா வந்து தடுக்குது. கட்டிய கரைக்க லலிதாம்பிகை கிட்ட தான் பிராயச்சித்தத்த கேக்கணும். இல்ல. இல்ல.

தெய்வம் மானிஷ ரூபேனா…

அவதான் லலிதா…

அவன் தான் அந்த கட்டி..

அவ தான் அதுக்கான தீர்வு…

அதையும் நானே தேடிண்டேன்.. கிருஷ்ணனுக்கு குடுத்த அதே பிரசாதம்…”

வேதாத்ரியின் கைகளிலிருந்து கண்ணாடிக்குடுவை உருண்டு அறை நீங்கிக் கொண்டிருந்த ஜனனியின் பின்பாதத்தைத் தீண்டியது. வெகுநேரத்திற்கு பிறகு மீண்டும் கால்களிலிருந்து புல்லரிப்பு உடலேறியது. குனிந்து எடுத்தாள். கிருஷ்ணன் மறைந்த ஆண்டிலிருந்து ஓராண்டில் காலாவதியாகும் பூச்சி மருந்து. அதைப் பார்த்துகொண்டே அழுதாள். திரும்பி மீண்டும் வேதாவை அப்பா என்றழைக்க விரும்பினாள். திரும்ப மனமில்லை. கிருஷ்ணனின் மீதான ஞாபகங்கள் மூண்டன. மண்டியிட்டு அமர்ந்துகொண்டாள். கைகளுக்குள் குடுவையை வைத்துகொண்டு தேம்பினாள். பின்னிருந்து வேதாத்ரியின் விசும்பல் தணிந்துகொண்டிருந்தது.

“தெய்வம் மானிஷ ரூபேனா…

தெய்வம் மானிஷ ரூபேனா..

தெ…ய்…வ…ம் மா…னி…ஷ… ன் ரூ…பே…னா…”

அறையின் இடுக்கில் ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த மனிதரின் நிழல் அறைவாசலை நீங்கியது. நிழலின் நகர்தலில் எழுந்துகொண்டாள். வேகமாக படுத்துக்கொண்டிருந்த அறைக்கு சென்றாள். அறையை நீங்கும் முன்பே வேதாத்ரியின் குரல் ஒடுங்கியது. அறையில் புருஷோத்தமன் படுத்துக் கொண்டிருந்தான். அருகில் சென்று பார்த்ததில் கண்களில் நீர் கசிந்திருப்பதன் தடம் தெரிந்தது. மருந்துக் குடுவையை இடுப்பில் கட்டிக் கொண்டு கிருஷ்ணனின் நினைவுகளை போர்த்திக் கொண்டாள்.

***

பாகப்பிரிவினை சுமுகமாக நிகழவில்லை என்பதால் இரு குடும்பமும் முடிவெடுக்காமல் கிளம்புவதில் மும்முரமாக இருந்தனர். வீட்டிலிருந்த அனைத்து சாவிகளிலும் குடும்பத்திற்கு ஒன்றாக பிரித்துக்கொண்டனர். அண்ணனும் அண்ணியும் ஆட்டோ புக் செய்து கிளம்பினர். அவர்களுக்கு முன்பாகவே பேருந்தில் செல்லலாம் என ஜனனியும் புருஷோத்தமனும் முடுவெடுத்தனர்.

புதிய பேருந்து நிலையத்திற்கான பேருந்தில் ஏறும்வரை அமைதியாகவே பயணித்தனர். பேருந்தும் கிளம்ப சற்று தாமதமானது.

“என்ன முடிவு எடுத்திருக்க ஜனனி ?”

“தெரியலை. ஆனா பயம்மா இருக்கு.”

ஜன்னலின் வழியே பள்ளிக்கு சென்று கொண்டிருப்பவர்களையும், கல்லூரிப் பிள்ளைகளின் சிரிப்பையும் வேடிக்கைப் பார்த்தாள்.

“அண்ணனோட எவ்ளோ நாள் சண்டை போட முடியும்னு தெரியல. எப்படியும் கடைசில என்னையும் நம்மளையும் ஏமாத்திட்டு வீட்ட எடுத்துக்குவான்.”

“யார் எடுத்துகிட்டா என்ன ? யாரோதான குடிவரப் போறாங்க ? இல்லை உங்கண்ணன் தேடிப்போய் வேற ஒரு பிராமணாள குடி வைக்க போறானா ?”

“யாரும் குடி வரக்கூடாது. யார் வந்தாலும் அதுக்குள்ளருந்து எங்கப்பா மாதிரி ஒரு ஆள் மொளைப்பான். அவன் பிள்ளைக்கு சாதி பாப்பான். வீட்ட சுத்தமா இடிச்சிட்டு பொது எடமாக்கணும். எல்லா விதமான மனுஷங்களும் பொழங்கற எடமாக்கணும்”

“அர்த்தம் இல்லாம, சாத்தியமில்லாதத பேசற. சுத்தி ரெசிடென்ஷியல் ஏரியா. எப்படி பொது எடம் ஆக்க முடியும்?”

“செடி பிசினஸ் பண்ணு. மரக்கன்னு வித்து பொழச்சுக்கோ. வாங்கறவன் விக்கறவன், அத அவனுக்கு தர்றவன்னு வேற வேற ஆளாதான இருப்பான். காய்கறி கடை வைக்க எடம் குடுப்போம். வீட்டுக்குள்ள உக்காந்து சாப்புடற யாரும் அந்த காய்கறி எந்த சாதிக்காரன்கிட்டருந்து வருதுனு பாக்கறதில்ல. வாங்கற நேரத்துலதான் பாக்கறான் யாரோட கடைல வாங்கறதுனு. எனக்கு சொல்ல தெரியல மா. ஐ அம் எமோஷனல். ஜஸ்ட் எமோஷனல். அந்த எடம் பொதுவாகணும் அது மட்டும்தான் எனக்குள்ள இருக்கு”

“இத அண்ணன் கிட்ட சொல்லலாம்ல. அவனே இதையும் செய்வானே. ரெண்டு பேரும் சேந்து செய்யலாம்”

“அவன் இன்னொரு அப்பா. எடத்த மடமாக்குவானே தவிர பொதுவாக்கமாட்டான். கிருஷ்ணன் எறந்தப்ப கூட அவன பெருசா பாதிக்கல. சின்ன வயசுனு விட்டுடலாம். ஆனா அதுக்கு பெறகு கிருஷ்ணன பத்தி இதுநாள் வரைக்கும் பேசிக்கூட கேட்டதில்ல. நான் முடிவாயிட்டேன்.”

அவனது கைகளை இழுத்து இறுக பற்றிக்கொண்டாள்.

“அவன்கூட சண்டை போட்டாவது அந்த எடத்த பொதுவாக்கணும்.”

“உனக்கு எப்பவும் துணை நிப்பேன். ஆனா உன்னோட வீம்பதான் புரிஞ்சிக்க முடியலை”

“அப்பா எறந்ததுக்கு தர்ப்பணம் பண்றது திதி வைக்கறது எல்லாம் சாந்தியடையனு ஒரு நம்பிக்கை. ஆனா அவர் செஞ்ச பாவம் போக? அதுவும் இது மாதிரி பாவம் போக? சமத்துவமா வாழ்றது தான் எனக்கு தெரிஞ்ச ஒரே வழி”

முந்தைய இரவு ஒட்டுக்கேட்டதை அறிந்ததுபோல் அவளும், தான் ஒட்டுக்கேட்டதை அறிந்து விட்டாளோ எனும் பயத்துடன் அவனும் உரையாடிக் கொண்டனர். பேருந்து நிலையம் அடைந்தவுடன் இறங்க எழுந்தனர். அருகில் இருந்த பெண் தன்னைக் கடந்து செல்லும் ஜனனியை அழைத்து அவளிடமிருந்து கீழே விழுந்த ஒன்றை எடுத்துக்கொடுத்தாள். மடிக்கப்பட்ட காகிதம். உள்ளங்கைகளுக்குள் வைத்தவுடன் அதை உணர்ந்துகொண்டாள். பயம், அதிர்ச்சி, சந்தோஷம் ஆகிய அனைத்தும் ஒன்றிணையும் புள்ளியை தரிசித்தாள். காகிதத்துள் இருந்த கோடுகளின் கனத்தை கைகளில் உணர்ந்தாள். பிரித்துப் பார்க்காமல் பைக்குள் வைத்தாள். திரும்பிப் பார்க்கையில் அவளுடைய புன்னகை ஜனனிக்கு வசீகரமாய் இருந்தது. பரிச்சயமான முகம். அடிக்கடி உணர்ந்த கபடமற்ற புன்னகை. சோகம் ததும்பும் கண்கள். திருப்பி இறுக்கமான புன்னகையைப் பதிலளித்தாள்.

இறங்கியவுடன் புருஷோத்தமன் இறங்குவதில் ஏற்பட்ட தாமதத்தை விசாரித்தான்.

“ஹேண்ட் பேக்கலருந்து டிஷ்யூ பேப்பர் விழுந்துருச்சு மா”

நிறுத்ததிலிருந்து கிளம்பிய பேருந்தில் அவளை மீண்டும் பார்த்தாள். புன்னகையும் கண்களின் சோகமும் குறையாதிருந்தது.

-3-

வேதாத்ரி ரயில் ஏறிய தருணத்திலிருந்தே களைப்புடன் காணப்பட்டான். தட்காலில் முன்பதிவு செய்திருந்த சீட்டும் ஆர்.ஏ.சி என்பதை அறிந்தவுடன் தனக்கு படுக்க ஒரு பெர்த் வேண்டும் என்று கோபமானான். யாரிடமாவது சென்று குளிரூட்டப்பட்ட பெட்டியிலாவது வாங்கி வாருங்கள் தனக்கு உறக்கம் வருகிறது என்று அசதியில் படுக்கையின் நுனியில் அமர்ந்து கொண்டான். அவனது கண்கள் முழுதாக திறப்பதற்கே சிரமப்பட்டன. கால்முட்டியின் பின்பக்கம் அதிகமாக நடந்தவனைப் போன்று வலி சூழ்ந்துகொண்டது. கைப்பிடியை பிடித்தவண்ணம் கண்களை மூடிக்கொண்டான். அம்மா நின்று கொண்டிருப்பதை அவன் பொருட்படுத்தவேயில்லை. அப்பா டி.டி.ஆரைப் பார்த்து திரும்பி வரும் வரையிலாவது கண்களை திறந்து வைத்திருக்கலாம் என அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்துக்கொண்டிருந்த அம்மாவிற்கு அவன் கண்களை சுருக்கிப் பார்த்துக் கொண்டிருப்பது சங்கடமானது. அவர் சீக்கிரம் வந்தால் வேதாவாவது உறங்குவான் என நினைத்துக்கொண்டாள். இருபது நிமிடம் கழித்து வந்தவர் ஏசியில் மூன்று பெர்த்தை வாங்கியிருப்பதாக அழைத்து சென்றார்.

அவர்களது பெட்டிக்கு சென்றவுடன் மேலடுக்கில் வாங்கியிருந்த படுக்கைக்கு அலைபேசியுடன் ஏறி படுத்தான். சில நொடிகளிலேயே உறங்கினான். நவநீதனும் மனைவியும் பெட்டிகளை அடுக்கி, பின் உட்கார்ந்து கொண்டனர். ஜனனியின் வீடு விற்கக்கூடாது எனும் நிலைப்பாடை விமர்சித்தனர். வீட்டை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று முடிவு எடுத்ததை மனைவியுடன் கோபமாகக் கூறினார். இடையிடையில் வேதாவின் அலைபேசி குறுந்தகவலுக்கான ஒலியை எழுப்பிக்கொண்டேயிருந்தது. பேச்சின் இடையில் அச்சிறுவொலி தடங்கலாகவும் நவநீதனுக்கு தோன்றியது. மீண்டும் எப்போது ஊருக்கு செல்வது என்பதையும், பாகப்பிரிவினையை அதிகநாள் தள்ளிப்போடக் கூடாது என்பதையும் பேசிக்கொண்டு வந்தனர். வீட்டிலேயே அதிக வேலை செய்ததால் சிறிது நேரமாவது கால் நீட்டி படுத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தனர். கீழ் பெர்த்தில் மனைவியையும், வேதாத்ரி உறங்கிகொண்டிருப்பதற்கு எதிரில் கிடைத்த மேல் பெர்த்தில் தானும் படுத்துக்கொள்வதாக கூறினார். மனைவி படுத்தவுடன் ஒலி வந்து கொண்டிருந்த வேதாவின் அலைபேசி உறுத்தலானது. அவனது தூக்கத்தையே கெடுத்துவிடும் என ஆதங்கப்பட்டார். அதை சைலண்ட்டில் வைத்துவிடலாம் என எடுத்தார். குறுந்தகவல்கள் வந்தவாறிருந்தன. அவனது விரல் ரேகையே அலைபேசியை திறப்பதற்கான திறவுகோல். வெறுமனே அமைதியாக்குவோம் என ஒலியின் அளவை குறைத்தார். அப்போதும் ஒரு குறுந்தகவல் வந்தது. உள்ளே செல்லாமல் திரை காண்பித்த தகவலை வாசித்தார்.

Nandhini
Miss you Vedha… Come soon… Minutes U’r away drives me crazy n make me silent… Don’t make such days m

அதற்கு மேல் அவரால் வாசிக்க முடியவில்லை. அலைபேசிக்குள் உள்நுழைந்தால் மட்டுமே வாசிக்க முடியும். அமைதியாக்கிவிட்டு அவனருகிலேயே வைத்தார். அவருக்கான படுக்கையில் படுத்துக்கொண்டார். பெங்களூரு செல்லும்வரை வேதாத்ரியின் மீதிருந்து பார்வை அகலவேயில்லை.

கிருஷ்ணமூர்த்தி – சென்னையில் வசித்துவரும் இவருக்கு இரண்டு நாவல்களும், இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் ( காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு, சாத்தானின் சதைத் துணுக்கு ) வெளிவந்துள்ளன.
krishik10@gmail.com
9789210826

யாளியின் சுவிஷேச நேரம் (Season – 2) // டல்கோனா காஃபியும் அமைதியின் வடிவமும்

0

!@#$!%!@%^%#&%^#*# !@#$!%!@%^%#&%^#*# !@#$!%!@%^%#&%^#*#

மன்னிக்கணும் யாளி.. நான் உன்னை ம்யூட்ல போட்ருந்தேன். நீ சொன்னது எதுவுமே எனக்குக் கேட்கவில்லை. கொஞ்சம் தனித்து இருக்கிறேன் அல்லவா அதான். எல்லாவற்றையும் இப்படி செட்டிங்ஸில் மாற்றிவிட்டேன். சரி நாம் தொடரை ஆரம்பிக்கலாம். படிக்கட்டுகளில் இருந்து கீழிறங்கினேன்.

என்ன துதியை ஆரம்பிக்கட்டுமா?

தலையை அசைத்து ஆமோதித்தது.

ம்ஹ்க்க்க்ஹ்ஹ்ம் தொண்டையை இருமிக்கொண்டேன்

வசந்த மண்டபத்தின் தூணிலிருந்து யாளி பேசுகிறது..

ம்ஹூம்

வேணாமா? சரி மாத்திப் பாடுறேன்

வார்னீஷ் பூசப்பட்ட தூணிலிருந்து… இல்ல்லை இல்லை… ஸேண்ட் ப்ளாஸ்ட் செய்து வார்னிஷ் பூசப்பட்டிருந்த வசந்த மண்டபத்தின் தூணிலிருந்து… என்ன இது ஓகேயா? இல்லை ஸ்பான்ஸர் செய்த ஆளையும் உபயகுஸலோபர்னு சொல்லணுமா.?

பலமாகப் பக்கவாட்டில் தலை அசைத்தது… ஓ உனக்கு தற்கால த்வனி வேணும் அதானே. அதன் பதிலுக்கு காத்திராமல் புரிந்து கொண்டவனாக..

பல நூறு ஆண்டுகளாய் ஸோஸியல் டிஸ்டன்ஸில் இருக்கின்ற புராதனமிக்க ஸேண்ட் ப்ளாஸ்ட் செய்து வார்னீஷ் பூசப்பட்டிருந்த வசந்த மண்டபத்தின் தூணிலிருந்து யாளி பேசுகிறது…. இப்ப ஓகேயா?

ஃபலூடாவைப் பார்க்கும் குழந்தை போல் மேலிருந்து கீழாக தலையசைத்தது.

**

அதான் சொல்லிட்டனே, விசயத்துக்குப் போவோமா. ரொம்ப நாள் கழிச்சுப் பேசறோம் இல்லையா?

திருத்தம் :  ரொம்ப நாள் கழித்து என்னிடம் பேச வந்துருக்க

சரிப்பா ரொம்ப கோச்சுக்காத, தொழில் கஷ்டம் இடையில கல்யாணம் வேற பண்ணிக்கிட்டேன்.

கஷ்டம்னு சொன்ன அப்றம் கல்யாணம் கட்டிக்கினேன்ற, சரி அதான் கட்டினுருக்கன்னு வச்சுப்போம். விஷயத்துக்கு வா. உன் சோஷியல் டிஸ்டன்சிங் எப்படி இருக்கு.

உங்க காலத்து நிலைமை போல ஆகிவிடும் போல, இந்த அரசியல் சூழ்ச்சி மிக்க இந்த வாழ்த்தை உலகம் முழுதும் இருக்கும் மானிடக் குழுக்களை பல்வேறு விதங்களில் பிரித்து, தனிமைப்படுத்தி, கீழிறக்கி, பாகுபாடுகளை உண்டாக்கி அநீதியான ஒரு அளவுகோலைத் தந்துவிடும் என்கிற அச்சமிருக்கிறது.

சரி கரோனா வருவதற்கு முன் நீ எந்த அளவில் இந்த தனிமைப்படுத்துதலுக்கு எதிராக இருந்தாய் என்றுசொல்லு, மனதளவில் இருந்த/இருக்கின்ற விலக்கங்களைக்கூட கணக்கிலெடுத்துக் கொள்.. ..  என்ன பதில் சஞ்சலப்படுத்துகிறதா.? இந்த accountability,எப்போதும் மனிதர்கள் மட்டும் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படணுமா. அப்படிப்பார்த்தா கூட அழிப்பு, இழப்பு என்று இரண்டு பட்டியல் போடணுமே அது உங்ககிட்ட இருக்கா?

என்ன யாளி!! இப்படிப் பேசுற? இதைப் பேசும் நேரம் இதுதானா? ஆயிரமாயிரம் பேர் உணவில்லாம சாகுறாங்களே அந்த எண்ணிக்கை தானே இப்ப பிரதானமா பேசப்பட வேண்டிய கேள்வி?

நிச்சயமா மறுப்பேதுமில்லை, மனிதர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய பகுதி. உணவில்லாமல் சாகும் ஒரு உயிர்கூட வைரஸின் கணக்கில் வைக்கப்படாது. தவிர பாதிக்கின்ற மற்ற எல்லா உயிர்களுக்கும் கூட மனிதர்கள் தான் பொறுப்பு. உண்மையில் பசியால், சுரண்டலால், நோய்மையால் கொல்லப்படும் மனிதர்களைத் தவிர்த்து, சூழல், யதார்த்தம் போன்ற பல விசயங்கள் மாறியிருக்கிறது. அதில் இருக்கின்ற நல்ல விசயங்களைக் கூட மனிதனின் கணக்கில் வைக்க முடியாது.

அதெப்படி மக்களுக்கு இருக்கின்ற ஒழுங்கு தானே இந்த மாற்றங்களையெல்லாம் விவாதிக்கக் கூட காரணமானது.

 மெய் அது இல்லை, மக்களுக்கு இருக்கின்ற அச்சம், மக்களுக்கு இருக்கின்ற உயிர் பிழைத்தல் என்கிற அடிப்படை எண்ணம். சர்வைவலுக்கானப் போராட்டம் தான் அறம், புத்தாண்டு, தலைப்புச் செய்தி, மாஸ்க்குகள் – மருந்துகள் பற்றாக்குறை இத்யாதிகள். இதில் மருத்துவர்களிடமே தீண்டாமை செய்யும் அற்ப மானிடர்களும் அடக்கம்.

 என்னாச்சு திடீர்னு இப்படி, ரொம்ப ப்ளண்ட்டா நேரடி அரசியல் பேசுற. நீ கலைக்கான ஆளா? அறிவியலுக்கான ஆளா?

இழுத்து மூச்சுவிட்டபடி அடுத்த தலைப்பிற்குத் தயாரானது. மெதுவாக நடந்து சென்று கோயிலின் அர்த்த மண்டபத்தில் உள்ள தூண்களை ஒவ்வொன்றாகத் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தது.

***

நீ அமைதிய உணர்றியா?

ஆமா போக்குவரத்து இல்லை, நானும் பயணிக்கலை, சப்தமிட்டு சிரிக்கவோ, அதிகாரம் பண்ணவோ கூட மனுஷங்க இல்லை, தொழிற்சாலை இல்லை, எந்த அவசரமும் இல்லை. அதைத்தானே நீ கேக்குற?

நீ சொல்றது எதெல்லாம் இல்லைன்னு. நான் கேட்கிறது இருக்கா… அமைதி இருக்கிறதா?

இதெல்லாம் இல்லைன்னாலே அமைதி தான, நீ தான சொல்லிருக்க இருளை அகற்ற ஒளி போதும். அகற்றுவது என்பது ஒன்றில்லை என்று.

சப்தமிட்டே சிரித்தது. கொஞ்சம் எக்காளத் தொனியுடன்

இப்பவும் அதே தான கேட்கிறேன். உண்மைக்கே இல்லாமல் போன இரைச்சல்கள் மட்டுமா உனக்கு.. நல்லா யோசிச்சு  பதில் சொல்

ம்ம்ம்.. அதுக்கு மேல என்ன யோசிக்க. .. ஆனா சப்தங்கள் குறைந்திருப்பது உண்மைதான?

யாளி என்னை ஏதும் மறுத்துப் பேசவில்லை.

ஆனா உண்மையில் அது அமைதியா? நான் உண்டாக்கும் சிறு ஒலியே என் அமைதியைக் கெடுக்க போதுமானதாக இருக்கிறதே. உண்மையில் நீ எதனைச் சொல்கிறாய். என்னை விட்டு வெளிய வந்து பார்க்கணுமா அல்லது எனக்குள்ள இருந்தே பார்க்கணுமா?

சபாஷ்!! இப்பதான் நீ சரியா பயணப்படுற. ரெண்டு உபாயமும் இருக்கு. எப்படி தரிசிக்கப் போற உன் அமைதிய

உன் கேள்வியின் சலனத்தோடு உள்ளே புகுந்தாலே,

நம்பிக்கை அற்றவனாய் பயணிக்கிறேன். எல்லா சப்தங்களும் இருக்கு – கர்ஃப்யூக்கு முன்னாடி கடைசியா சாப்பிட்ட டால் ஃப்ரை இருந்த பீங்கான் சப்தத்திலிருந்து, ம்ம்ய்ஈ என்று என்னை கதவைத் திறந்துவிடச் சொல்லும் பூனையின் சப்தம், நான் பூட்டிவைத்துவிட்ட என் காதலின் சங்கிலி உருட்டல், அம்மா செய்கின்ற அடைதோசை முறுகும் சப்தம், அநிருத்தின் அடித்தொண்டைப் பிளிறல் சப்தம், ”ஜேக்.கே” என்று தரையில் கொட்டிய காபியின் கறைக்கான மீனாட்சியின் அதிகாரச் சப்தம், தவறியும் செய்யக்கூடாத பாவங்களைத் தூண்டும் என் முட்டாள்தனமான கோபங்களின் குரலொலி, பாகுபாடுகளுடைய செக்யூலரிஸ கோஷங்களும், அடிப்படைவாத வெற்றிக்களிப்புகளும், கைதட்டல்களும், ஹமாரா தேஷ்மே என்று அடியோடு நம்பிக்கையைக் குலைக்கின்ற நாசகார சப்தங்களும் என எதுவுமே என்னை விட்டு அகலவில்லையே, யாளி.

வெளி வந்தால் மட்டுமென்ன, பசியை பல்வித உயிர்களும் உணர்த்த ஆரம்பித்துவிட்ட சப்தம் கேட்க ஆரம்பிக்கின்ற போதே  எதிர்காலம் கொண்டிருக்கின்ற சப்தங்களாக : மிக அருகில் வந்துவிட்ட, எழப்போகின்ற வன்முறைகள், அடக்குமுறைகள், புரட்சிகளின் முழக்கங்களும், முனகல்களும், இன்னும் பெயிண்ட்டடிக்கப்படாத மருத்துவமனை கட்டில்கள் சப்தம், தேய்ந்து தேய்ந்து ஓய்ந்து போன கிரடிட் கார்ட் சப்தம், வேலை செய்யாத ஏ.டி.எம் சப்தம், குப்பை ஒரு பெரிய கிடங்கில் லாரியில் வந்து கொட்டப்படும் சப்தம், அது குப்பைக்கு பதிலாக…. என கேட்க ஆரம்பிக்கிறதே

இல்லை ..

எனக்குள் அமைதியில்லை . ஒரு கேள்வியால் துளைத்தெடுக்க முடிகின்ற ஓட்டை வழி என் நம்பிக்கைகளும் அவநம்பிக்கைகளும் காவேரியில் கலக்கும் சாயமாக வந்துக் கொண்டிருக்கிறது. உண்மையில் இவை முன்பிருந்தே கசிந்து கொண்டுதான் இருந்தது. நீயிட்ட துளையினால் இப்போது அதிக சலனத்தோடு வெளியேறுகிறது. இது என் தற்காலிக அமைதியைக்கூட அழித்து விட்டது.

உனக்கு இரண்டு உபாயங்கள் இருக்கின்றன

அவை என்னென்ன?

ஒன்று அந்தத் துளையை அடைத்துவிடு, தேக்கி வைத்துவிட்டாலும் தளும்பாது, முழுவதுமாக வெளியேற்றினாலும் தளும்பாது. நீ எதைத் தேர்ந்தெடுப்பாய்?

தேர்வு செய்வதன் குழப்பத்தை விட, தண்டனை அல்லது விளைவுகளின் வலி சிறிது தானோ.

தத்துவம் ஒரு பெருநோய்

நீயுமே அப்படியான ஒரு வெளிப்பாடு தான்.

சிரித்தது.

நீயென்ன ஷின்ஷானா. அமைதி, அமைதியோ அமைதி என்று கிண்டலடிக்கிறாய்.

என்றுமே கிடைக்காத ஒன்று என்பதை நீங்கள் எள்ளல் தானே செய்வீர்கள்

அமைதியா கடவுளா

இரண்டும் தான். மத நிறுவனங்களை உருவாக்கி அடித்துக் கொள்வதும், கொல்வதும். ஷின் செய்யும் கிண்டல் தானே

சிரித்தது.

ரொம்ப இம்சிக்காதே. சரி நான் என்ன தான் செய்யட்டும்.

நீ யார்?  நான் யார்? எனச் சொல்லு கேட்கிறேன்

சொல்லி முடித்தேன்.

 மொத்தம் இரண்டு பேர் என்று சொல்கிறாய். அப்படியென்றல் இந்த பூமி முழுக்க ஒவ்வொன்றையும் பாகுபாடு இல்லாமல் தனித்தனியாய் கேட்டுப்பார் இல்லை அனைவரையும் ஒன்றாகச் சேர்த்துக் கேட்டுப்பார். அமைதி இருக்கிறதா இல்லையா என

 நான் ஒருவன் எப்படி எல்லா ஜீவராசிகளையும், தத்துவங்களையும், நதிகளையும், மலைகளையும், மரங்களையும் கேட்க முடியும். நான் வேண்டுமானால் மனிதனின் பிரதிநிதியாக மட்டுமே பதில் சொல்லலாம்.

அது உன் தேர்வு. ஆனால் இந்த தேர்வில்  ஏதோ ஒன்றில் தான்  உன் அமைதி தெரிய வரும்

என்ன சொல்ற நீ…  அப்போ.. .. .. ?

ஆமா.. அதேதான். உன்னால் அமைதிய தரிசிக்க முடியுதா..

இல்…… ஆனா…. ஆமா.

என்னாலும் தரிசிக்க முடியும் போலயே. நீ சொல்றது உண்மை தான். ஜஸ்ட் என்னை இடம் தான் மாற்றினேன்.

 கண்மூடிப் பார்க்கலானேன்.

என்ன அது

ஆம் அது புதிதாய் தொடங்கி இருக்கின்ற ஒன்று. அது அதுவாகவே இருக்க ஆரம்பித்துவிட்டது. அது அமைதியும் ஆகின்றது. அமைதியை உணர்கிறேன் யாளி. இது அற்புதம்!!

கண் திறந்து பார்க்கையில் யட்சி இருக்கின்ற தூணிற்கு தாவிக்கொண்ட யாளி, மேலிருந்து கீழே பார்த்தபடி சிலையாகவே சமைந்தது.

***

ஒளபத்யம்

3

மயிலன் ஜி சின்னப்பன்

1

ஆரதியின் முகத்தில் நாளுக்கு நாள் கூடிவரும் சஞ்சலக் கீற்றுகள். அவற்றையவள் மறைக்க முயலாமலில்லை. மீறி வெளிப்பட்டுவிடத்தான் செய்கிறது அகம் – தன்னைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடாத தற்கவசம், தோல்வியுற்று உடையும்போது உண்டாகும் மனவழுத்தம் – அதுதான் வாதை.  கண்கள் எங்கு மேய்ந்தாலும் காதுகளைக் கூர்த்தீட்டி இந்திராம்மாள் இருக்கும் பக்கமாக வைக்கச் சொல்கிறது பாழாய்ப்போன மனம். செவியுறும் ஒவ்வொரு வார்த்தையையும் அதற்கான பூரண அர்த்தத்துடன் உள்ளெடுத்து விதைத்துக்கொண்டாள்.

இந்திராம்மாளின் பெருகிய கண்கள் பேரக்குழந்தையின் விலா எலும்புகளில் பதிந்திருந்தன. ஒவ்வொரு மூச்சுக்கும் அவை துருத்திக்கொண்டு வெளியே தெரிவது அவளுக்கு வயிற்றெரிச்சலாக இருந்தது. தன் குலவாரிசுக்கு ஏன் இந்தச் சாபக்கேடு என்ற பொருமல். பால்பவுடரைக் கலக்கினால் கிடைக்கும் வெண்ணிற திரவத்தை நிந்தித்தாள். இதெல்லாம் தன் பூர்வபிறப்பின் பாவமா என்று வாய்விட்டு சொன்னாள். புட்டியில் கவிழ்த்து மூடும்போது சிந்தியவற்றை, சிறு வெண்துணியால் துடைத்து வீசும்போது அவளது உடல்மொழியில் அத்தனை வெறுப்பு.

குழந்தையின் கண்களுக்கு முன் மட்டும் தன் முகத்தை இந்திரம்மாள் தணிய வைத்துக்கொண்டாள். புட்டி பாலின் மணம் அறியாத குழந்தை மடியில் கிடந்து பேதலித்தது. ஒருவாறு அதனைப் பிடித்து, தலையை நிதானப்படுத்தி, வாயில் திணித்த போது, சப்புக்கொட்டுவதற்கு முன்பே மடமடவென கசிந்த பாலில் அந்த பிஞ்சிற்கு புரைக்கேறியது. ஆரதி அதற்கும் அசையவேயில்லை.

நாடக பாவத்தோடு இந்திராம்மாள் குழந்தையைத் தோளில் சாய்த்தபடி, முதுகில் தட்டிக்கொடுத்து ஆற்றுப்படுத்தினாள் – தொடர் கொஞ்சல்கள் – நடுநடுவே ஆரதியை நோக்கிய நைச்சியமான கணைகள்.

பால் சுரக்காமல் போவது இந்த தலைமுறைப் பெண்களிடம் பரவலான ஒன்றாக ஆகிவிட்டதாக முந்தைய தினம் ஆலோசித்த மருத்துவர் சொன்னபோது இந்திராம்மாள் ஒரு பெருமூச்சுடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். கூடுமானவரை பவுடர் எதையும் பயன்படுத்த வேண்டாமென்றும், பாலூட்டும் தாயைச் சுற்றியிருப்பவர்கள் போதுமான அளவிற்கு மனதளவில் அவளை ஊக்குவிக்க வேண்டுமென்றும் அவர் சொல்லிக் கொண்டிருக்கையில், இந்திராம்மாள் ரோரோரோவென குழந்தையிடம் பேச ஆரம்பித்திருந்தாள்.

ஆரதி முகத்தில் எந்த ரேகைகளும் ஓடவில்லை. தாய்க்கு தன்னம்பிக்கை கூடிவரும் போது குழந்தை தன்னிச்சையாக தசை போட்டுவிடும் என்று அந்த மருத்துவர் சொல்வதை இருவருமே பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. சந்தோஷ் மட்டுமேனும் அக்கறையுடன் கேட்டுக் கொண்டிருந்ததே, அவருக்குப் போதுமாக இருந்தது. வெளியே வந்த வேகத்தில் நேரடியாகப் போய் இரண்டு பால்பவுடர் டின்களை இந்திராம்மாள் வாங்குவதை ஒன்றும் செய்யமுடியாத தோரணையில் சந்தோஷ் உணர்வற்று பார்த்துக் கொண்டிருந்தான். அதற்குள் ஆரதி அவனைக் கடந்துபோய் காரில் ஏறியிருந்தாள்.

குழந்தை மெல்ல மெல்ல புட்டியிலிருந்த பாலைக் குடித்து முடித்தது. ங்க்ர்ர்ர் என்றோர் ஏப்பம் நிசப்தமான அந்த வீட்டில் தனித்து ஒலித்தது. இந்த இரண்டு வாரங்களாக, இந்திராம்மாள் குழந்தையை முழுக்கவே தன்னகத்தில் வைத்துக்கொண்டு உரிமை பாராட்டுவது ஆரதியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதை வலிந்துப்போய் எதிர்க்கவும் முடியவில்லை. குழந்தை கண்ணயர்ந்த பின்னரும் இந்திராம்மாளின் கொஞ்சல் தொடர்ந்து கொண்டிருந்தது; ஆரதி ஒருமாதிரி நிதானமிழக்க ஆரம்பித்தாள். அத்தனை வெக்கை இல்லையெனினும் வியர்த்துக் கொட்டியது.

மெல்ல அங்கிருந்து விலகி பால்கனியில் போய் நின்று கொண்டாள். எத்தனை நேரம் அங்கு நின்றாள் என்ற பிரக்ஞையே இல்லை – குறிப்பற்ற மனவோட்டங்கள் – பேறுகாலத்தின் தொடர்ச்சியான வெறுமை இன்னும் அந்த முகத்திலிருந்து அகலவில்லை. சந்தோஷ் எப்போது வந்து அவளுடன் இணைந்து கொண்டான் என்பதைக்கூட அவள் கவனிக்கவில்லை.

அவளது எண்ணவோட்டங்களை அறிந்து கொண்டு அதே அலைவரிசையிலேயே தானும் யோசிப்பதைப் போன்ற தணிவு அவன் முகத்தில் இருந்தது. அவளை மீட்கத் துடிக்கும் தவிப்பாக இல்லாமல், ஆத்மார்த்தமான அணுகலாகத் தெரிந்தது.

விட்டேத்தியாக இருவரும் அந்த பதினெட்டாவது மாடியின் விளிம்பிலிருந்து பொழுது அஸ்தமிப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மெல்லிய இருள் கூடி வரும்வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

பிடிமான சுவற்றின் மீதிருந்த அவளது கரத்தை ஆதரவாகப் பற்றி, சில நிமிடங்கள் நின்றபோது, அவளுக்கும் அவன் அப்படியே எதுவும் பேசாமல் இருந்தால் தேவலாம் என்றுதான் இருந்தது. அதனாலேயே அவனது பார்வையைத் தவிர்த்து திரும்பி நின்று கொண்டாள். பின்னாலிருந்து மெல்லிய குரலில், தான் ஒரு ரகசியத்தை அவளிடம் சொல்ல வேண்டுமென்று அவன் கிசுகிசுத்தான்.

திரும்பிப் பார்த்த போது அவனது விழிகளிலிருந்த கூர்மை அவளை மறுபேச்சு எதுவுமின்றி இசையச் செய்தது. அதைத் தெரிந்துகொண்ட பின்னர் அவள் உட்படுத்தப்பட்டிருக்கும் பழிச்சொல்லெல்லாம் ஒன்றுமேயில்லை என்றாகி அவளைப் பீடித்திருக்கும் குற்றவுணர்ச்சி வெகுவாகக் குறையுமென்று அவளது கண்களை இன்னும் நெருங்கிப் பார்த்தான். அவள் இமைக்காமல் நின்றாள். அதோடு தனக்கும் ஒரு பாரத்தை இறக்கி வைத்ததன் வலு கிடைக்கும் என்று வேறெங்கேயோ பார்த்து சொன்னான். அதற்குள் அவள் முழுமையாகத் தயாராகியிருந்தாள்.

2

கடற்கரையை ஒட்டிய அந்த சாலையில் நண்பர்கள் ஐவரும் காற்றின் விசைக்கெதிராக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். உடம்பில் ஏறிப்போயிருந்த மதுவிற்கு, கடலே பழுப்புநிற திரவமாகத்தான் தெரிந்தது. சொல்லப்போனால் ஊரே மந்தாரமாகத்தான் இருந்தது. இயல்பிலேயே எல்லோரும் ஒரு ராக் இசைக்கான நடன அசைவுடன் திரிந்து கொண்டிருந்தார்கள்.

சனிக்கிழமை பின்மாலைப் பொழுதிற்கான மின்னும் டிஸ்கோ விளக்குகள், கையில் மதுவுடன் இளைஞர்கள், உயர் ரக சுருட்டுகளை சுவாசிக்கும் வெளிநாட்டவர்கள் என அந்த அடைசலான வீதி திருவிழா கோலத்தில் திணறியது. இரவு கேளிக்கை கொண்டாட்டங்களுக்கான முன்பதிவு சிட்டைகள் சகிதம் சிப்பந்திகள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி இருந்தார்கள். மரியாதைக்குரியர்வளாக தெரிந்தவர்களும்கூட அதுவொரு சம்பிரதாயம் போல மாய்ந்து மாய்ந்து போய் அந்தச் சிட்டைகளைக் கைப்பற்றியபடி இருந்தார்கள்.

இவர்களின் பக்கமாக வந்த சிப்பந்தி ஒருவன், கையிலிருந்த ஜிகினா சிட்டைகளை நீட்டி, தனிநபர் நுழைவுக்கு இரண்டாயிரம் ரூபாய் என்றும் ஒரு ஜோடிக்கு இரண்டாயிரத்து ஐநூறு மட்டுமென்றும், இயன்றவரை மதுவருந்திக்கொள்ளலாம் என்றும் பரபரப்பான உரத்த குரலில் சொன்னான். விற்பனையின் முடிவிலிருப்பதைப் போல இவர்களை நெருக்கி  அவசரப்படுத்தினான். இவர்கள் முகத்தை முகம் பார்த்துக்கொண்டிருக்க, தேவை அறிந்தவனைப் போல, ஜோடிக்கு சுற்றுலா வந்த பெண்கள் அரங்க நுழைவாயிலேயே கிடைப்பார்கள் என்றும் உடனடியாகக் கண்ணடித்தான்.

இலவசமாக உள்ளே நுழைய அந்த பெண்களுக்கு கசக்கப் போகிறதா என்ன? என்று தூண்டிலை நீட்டிப் போட்டான். நண்பர்களில் ஒருவன், அப்படி ஒரு பெண்ணுக்கு தண்டம் அழுவதில் தனக்கென்ன அனுகூலம் என்று அவனிடமே கேட்கப் போக, புரியாத மொழியில் ஒரு வசையை மொழிந்தவன், ‘அதெல்லாம் உன்னுடைய சாமர்த்தியம்’ என்று சொல்லிவிட்டு அடுத்த கூட்டத்தை நோக்கி நகர்ந்து விட்டான்.

விசாரித்த நண்பன் ஆலோசிப்பதைப் போல மற்றவர்களைப் பார்த்ததும், சந்தோஷும் இன்னொருவனும் இரு வேறு காரணங்களுக்காக பின்வாங்கினர் – அறிமுகமற்றவர்களுடன் தன்னால் சகஜமாக முடியாதென சந்தோஷும், தான் ஏற்கனவே மதுவில் அன்றைய நாளுக்கான தெவிட்டு நிலையைத் தாண்டி விட்டதாகவும் அதற்காக இன்னொரு முறை அவ்வளவு செலவு செய்ய தான் தயாரில்லை என்று மற்றவனும்.

எஞ்சிய மூவரும் மூன்று ‘ஜோடி’ சிட்டைகளைப் பற்றிக்கொண்டு பிரிந்துவிட, இவர்கள் மட்டும் கடற்கரையை நோக்கி முன்னேறினார்கள்

‘நீ சொல்லிய காரணம் நிஜமா சந்தோஷ்?’

‘முற்றிலுமாக’

‘நான் அவ்வளவு உண்மையாகச் சொல்லவில்லை. எனக்கு நிச்சயமற்ற ஒன்றிற்காக செலவு செய்ய விருப்பமில்லை. அந்த பெண்களைத்தான் சொல்கிறேன்.’

‘அதில் நிச்சயமற்றதென்று எதைக் குறிப்பிடுகிறாய்?’

‘அவர்கள் என்னுடன்தான் நேரம் செலவிட வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் இல்லை அல்லவா?’

‘ஆம். அவர்கள் பரத்தைகளா என்ன?’

‘மிகச்சரி. அதைத்தான் சொல்கிறேன். உள்ளே சென்றப்பின்னர் அவள் தன்போக்கில் போய்விட்டால், எதிர்ப்பார்ப்பு பூர்த்தியடையாத அழுத்தம் இந்த சிறப்பான நாளினை சோக கதியில் முடித்துவிடும்’

‘ஆம்.. இதுவொரு மிகச்சிறப்பான நாள்தான்’

‘ஆனால் இந்த நாள் இன்னும் முடிந்துவிடவில்லை’

‘மேலும் சிறப்பாக்க திட்டங்கள் வைத்திருக்கிறாயா?’

‘கிட்டத்தட்ட அப்படித்தான் என்று வைத்துக்கொள்’ – அதிராமல் சிரித்தான்

‘என்னவென்று சொல்’

‘உனக்கு விருப்பமிருக்குமா தெரியவில்லை. ஆனால் எனக்கு துணையாகவேனும் வர நீ சம்மதிக்க வேண்டும்’

‘சரி போகலாம்’

‘எங்கேயென்று கேட்கவில்லையே?’

‘விருப்பமின்றியும் வரவேண்டும் என்ற நண்பனின் ஆணைக்குப் பின் அந்த கேள்வியில் எதுவும் நியாயம் இல்லை’

இருவரும் புன்னகைத்துக் கொண்டார்கள்.

அதே விழாக்கோல வீதியைக் கடந்து ஒருமுறை வலதாகவும், இருமுறை இடதாகவும் திரும்பி ஒரு சந்திற்குள் அந்த நண்பனுடன் சந்தோஷும் போனான். போய் நின்று அலைபேசியில் யாரையோ அழைத்து வழியை நண்பன் உறுதிப்படுத்திக்கொண்டதும் இருவரும் மேலும் நடந்தார்கள்.

‘நீ செல்லும் இடத்தைப் பார்த்தால் வேசிகள் இருக்கும் வீதி போலத்தான் இருக்கிறது’

‘உன்னைக் கட்டாயப்படுத்தி அங்கெல்லாம் அழைத்துச் செல்லும் அளவிற்கு நான் மோசமானவன் இல்லை என்பது உனக்கு தெரியும் என்று நினைக்கிறேன். நம்பிக்கையோடு வா..’

‘அது சரி.’

‘நீ கேட்காமலே கூட சொல்லி விடுவதுதான் சரியென்று எனக்கும் படுகிறது. இதுவுமொரு கேளிக்கை விடுதிதான். ஆனால் பெண்கள் அங்கேயே இருப்பார்கள். அங்கிருக்கும் நேரம்வரை எல்லை மீறாமல், நாம் அவர்களோடு மது அருந்தலாம், நடனமாடலாம்.’

‘எனவே இது உனக்கு ஓர் உத்தரவாதமான கேளிக்கையாகப்படுகிறது.’

‘மிகச்சரி. கொடுக்கும் பணத்திற்கு எனக்கு சரியான பதிலீடு இருக்க வேண்டும்’

‘ஆனால் நீதான் போதுமான அளவிற்கு மதுவருந்தி விட்டாயே?’

‘ஆம். எனக்கு இங்கு மது முக்கியமல்ல.’

‘இதற்கு ஏன் நீ நேரடியாக ஒரு விலைமகளிடம் செல்லக்கூடாது?’

‘இல்லை. எனக்கு அது அவசியமில்லை. அறச்சிந்தனை என்றெல்லாம் நினைத்து விடாதே. விருப்பம் சார்ந்த ஒரு பதிலைச் சொல்லியிருக்கிறேன். அவ்வளவுதான்’

‘அறம், அறமற்றது என்றெல்லாம் பேசும் ஸ்தலத்தில் நாம் நின்று கொண்டிருக்கவில்லை. ஒரு விதத்தில் எனக்கு இதுவொரு மட்டமான சிற்றின்பம் என்று தோன்றுகிறது. கோபித்துக்கொள்ளாதே’

‘அப்படியென்றால் உடலுறவை நீ பேரின்பம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?’

‘இல்லையா?’ (இந்த இடத்தை விவரிக்கும்போது சந்தோஷ் ஆரதியின் கண்களை சந்திக்கவே இல்லை)

‘கொஞ்சம் பெரிய சிற்றின்பம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.’

சந்தோஷ் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. மற்றவன் சொன்னதை அவன் அங்கீகரித்தும் விடவில்லை. எந்த குறுகுறுப்பும் இல்லாமல் அவனைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தான்.

நீண்ட அந்த சந்து வளைந்து முடியுமிடத்தில் மற்றொரு பிரதான சாலை. அந்த சாலையிலிருந்த எந்தவித அலங்காரமோ நவீனத்தின் சாயலோ அற்ற முகப்பைக் கொண்டிருந்த ஒரு கட்டடத்திற்குள் சந்தோஷை அவன் அழைத்துச் சென்றான்.

இருண்ட முன்பகுதியைத் தாண்டும் வரை அந்த இடத்தில் ஒரு கேளிக்கை விடுதி இருப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இருப்பதாகத் தெரியவில்லை. கருங்கல் நடைப்பாதையில் யோசனையுடன் அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது, சற்று தூரத்தில் மெல்ல அதிரும் இசை கேட்பதாகப் பட்டது. திடீரென அவர்களுக்கு மிக அருகில் ஒரு கதவைத் திறந்துகொண்டு அலைபேசியில் பேசியபடி ஒருவன் வெளியே வந்தான். அந்த இசையின் முழு விஸ்தீரணமும் அப்போதுதான் இடியைப் போல முழங்கியது. மென்மையான இருளின் ஊடாக லேசர் விளக்குகள் மெல்ல இடுப்பை ஆட்டிக் கொண்டிருந்தன.

நண்பன், பதிவு செய்யும் மேசையின் பக்கம் போகும்போது சந்தோஷும் பின்தொடர்ந்தான். நுழைவுக்கு எழுநூறு ரூபாய் என்றும் அதற்கு ஒரு கோப்பை பியர் இனாம் என்றும் அங்கிருந்தவன் சொன்னான். நண்பன் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

‘பெண்கள்?’

‘மது மேசைக்கு அருகில் இருப்பார்கள். நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்’ என்று சொல்லிக்கொண்டே இருவர் கைகளிலும் நுழைவுக்கான முத்திரையை வைத்தான்.

அந்த நெரிசலான இடத்திற்குள் ஆண்களைப் போலவும் பெண்களைப் போலவும் உத்தேசமாக மனிதர்களைப் போலவும் பல உருவங்கள் ஆடிக் கொண்டிருந்தன. ஸ்பரிசங்கள் துச்சமாகத் தெரிந்தன. நெருங்க நெருங்க ஒலிஒளிகள் அத்துமீறிக் கொண்டிருந்தன. டிஸ்கோ புகையும், சிகரெட் புகையும் பார்வையை நையாண்டி செய்தன.

மது விநியோகிக்கும் மேசை ஓரோரத்தில் தொகுப்பு விளக்குகளுடன் மின்னியது. கோப்பையைப் பற்றிய வேகத்தில் நண்பன் ஒரு பெண்ணைத் தேர்வு செய்தான். மாநிறத்தில், அளவான ஒப்பனையில், ரொம்பவே அளவான ஆடையில் அவள் தேர்விற்கான அத்தனை தகுதிகளையும் கொண்டிருந்தாள். அந்த கணத்தில் அவளை ஒரு வேசியாகவும் யோசித்துப் பார்க்க முடிந்தது.

சந்தோஷ் பாவனையற்று நிற்க, அங்கிருந்தவர்களில் ஒருத்தி அவளாகவே வந்து இவன் கையைப் பிடித்து அந்த கூட்டத்திற்குள் அழைத்து சென்றாள். சந்தோஷுக்கு துளியும் பிடிக்காத வடகிழக்கு மாகாணத்து முகம். திகட்டக்கூடிய அளவிற்கு உதட்டுச்சாயம் அவளது பிடிமானத்திலிருந்து அவனை விலகச் செய்தது. எதிரில் நின்றுகொண்டு அவனது தோள்களைப் பற்றியபடி மிதமான நடன அசைவுகளை அவள் செய்து கொண்டிருந்தது ரொம்பவே ஆபாசமாகப் பட்டது. ஒலிப்பெருக்கிகளின் அதிர்வுகளை அப்படியே தன் அங்கங்களில் கிடத்திக் கொண்டவளாக வெட்டி வெட்டி வளைந்தாள்.

சிறிய மார்பகங்களுக்கான தாழ்வுணர்ச்சியால் அவள் அதிகம் குனிந்து பிளவை முக்கியப்படுத்துவதாக அவனுக்கு தோன்றுவதற்கும், அந்த இசை முடிவுற்று அவள் முன்னேறி வந்து அவன் மீது உரசுவதற்கும் சரியாக இருந்தது. மெல்ல விலகி, கையிலிருந்த பியரை உறிஞ்சிய போது அதுவும் அதீத நீர்மத்தன்மையுடன் எந்தவொரு சொரசொரப்பும் இல்லாமலிருக்க, ஒரே வினாடியில் அந்த ஒட்டுமொத்த இடமும் அவனுக்கு போலியாகத் தெரிய ஆரம்பித்தது.

சட்டென பூரணமாக அங்கிருந்து விடுபட்டதைப் போல அவனுக்கு தோன்றியது. இவனுக்கு துணையாக வந்தவளும் மீண்டும் போய் அந்த மதுமேசைக்கு அருகிலிருக்கும் பெண்களுடன் சேர்ந்து கொண்டாள்.

தனித்துப்போய் சுவற்றில் சாய்ந்தபடி அந்த இடத்தின் நிகழ்வுகளை நோட்டமிடுவதைப் போல் நின்றான். அங்கிருந்த இருளுக்கு அவன் கண்கள் அதற்குள் பழகியிருந்தது. இடமிருந்து வலமாக அந்தக் கூத்தை அளப்பதைப் போல பார்க்க ஆரம்பித்தான்.

கடைக்கோடியில் இசைத்தட்டுகளும், கணிப்பொறியுமாக ஒருவன் | சற்று தொலைவில் சீருடை அணியாத கண்காணிப்பு தடியன் ஒருவன் | பருத்த உடலுடன் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஓர் ஆசாமி பதின்ம வயதினளைப் போல தோன்றக்கூடிய ஒருத்தியை உடலோடு அணைத்தபடி, அவள் விலக விலக மேலும் மேலும் இறுக்கிப் பிடிக்கிறான். என்றோ நேஷனல் ஜியோகிராஃபியில் பார்த்த சிறுத்தையின் பிடியில் சிக்கி தப்பித்து, மீண்டும் சிக்கி, மீண்டும் தப்பித்து குரல்வளையில் கடிபடும் சிறு மான்குட்டியைப் போல அவள் தெரிகிறாள் | அலுவலகப் பணியிலிருந்து நேரடியாக வந்தவனைப் போல மிக நாகரிகமாக உடையணிந்த ஒருவனின் கழுத்துப் பட்டையை பிடித்து இழுத்தவாறு ஒருத்தி நடந்து கொண்டிருக்கிறாள். அவளது சேவகனைப் போல அவன் பின்னாலேயே போய் கொண்டிருப்பது, ஒட்டுமொத்த ஆணினத்தையே சபிக்கும் காட்சியாக தெரிகிறது | இரு கைகளிலும் மதுக் கோப்பைகளுடன் ஒருவன் இரண்டு பெண்களுடன் உரசிக் கொண்டிருக்கிறான். கோப்பைக்கு ஒருத்தி என்ற நிர்வாக ஒழுங்குமுறையாக அது இருக்க வேண்டும். ஆட்டத்தின் போது மது சிந்துவதை அவன் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை | நாற்பது வயது நெருங்கியவளாக தெரிந்த ஒருத்தியைக் கட்டியணைத்தபடி கல்லூரி மாணவன் ஒருவன் ஆடும்போது நடன அசைவின் சாயலையொத்த பாணியில் அவளைச் சுழலச்செய்து பிடிப்பதைப் போல அவளது பிருஷ்டங்களை அழுத்திப் பற்றுகிறான் | முத்தமிட முயற்சிக்கும் ஒருவனிடமிருந்து சாதுர்யமாக விலகி ஆடுகிறாள் ஒருத்தி. ஏமாற்றத்தில் சீண்டப்பட்டவன் தோள்ப்பட்டையில் தெரியும் அவளது உள்ளாடைப் பட்டியை ஒருமுறை இழுத்து விடுகிறான். உடனே இந்த மூலையில் இருக்கும் சீருடை அணிந்த பாதுகாவலன் அவனை எச்சரிக்கிறான். சிறிய சலசலப்பிற்கு பின் மீண்டும் அதே பெண், அவனுடன் அதே நாடக நெருக்கத்துடன் ஆடுகிறாள் | மதுமேசைக்கு அருகில் நண்பன் தான் தேர்ந்தெடுத்த பெண்ணுடன் பேசியபடி அசைகிறான். அந்த அசைவுகள் நண்பனென்ற ஸ்தானத்திலிருந்து ஓர் அவமான எண்ணத்தைக் கொடுக்கிறது.

இவையனைத்திற்கும் நடுவே,

குறுக்கும் நெடுக்குமாக ஒருவன் கூட்டத்திற்குள் புகுந்து வருகிறான். மிகத் தந்திரமாக ஒவ்வொரு முறையும் ஏதோ செய்துவிட்டு வருகிறான். உன்னிப்பாக கவனிக்கும்போது, ஆடிக்கொண்டிருக்கும் பெண்ணின் இடது கரத்தை அவன் பிடித்துவிட்டு வந்துவிடுவது தெரிகிறது.

அந்தப் பெண் சட்டென தன் இணையை மது மேசையை நோக்கி அழைத்து செல்கிறாள். அங்கு அவன் மீண்டும் மது வாங்க நிர்பந்திக்கப்படுகிறான். கோப்பையில் மது இருப்பதாக அவன் காட்டினாலும், தனக்கு வேண்டுமென்று சொல்கிறாள். பியர் ஒரு கோப்பை ஐநூறு ரூபாய் என்கிறது விலைப்பட்டியல். அவன் யோசிக்காமல் வாங்க முனையும்போது, ஒரு சிறிய கண்ணாடிக்கூம்பில் இருக்கும் காக்டெயில் வேண்டுமென்கிறாள் – ஆயிரம் ரூபாய். அவன் சற்று யோசிக்கும்போது தன்னை அணைத்திருக்கும் அவனது கரத்தை அவளே இழுத்து தன் மார்பின் மீது வைத்து சலுகையை நீட்டிக்கிறாள். வணிகம் முடிகிறது. ஒரே மிடறில் அந்தக் கூம்பினைப் பருகிவிட்டு அவனோடு கூட்டத்திற்குள் நுழைகிறாள். குறுக்கே நடக்கும் ஆசாமி அடுத்த பெண்ணை உசுப்பிவிட்டு வருகிறான். அடுத்த வணிகம். அந்த அமைப்பில் ஒருவன் அதிகம் செலவு செய்யச் செய்ய அவனுக்கு கூடுதல் உடல் சுதந்திரம் அனுமதிக்கப்படுகிறது.

இந்த இடத்தைப் பற்றி ஏற்கனவே விஷய ஞானம் உள்ளவர்கள் ‘அவள்’கள் அப்படி இழுக்கும்போது கூடுமானவரை மதுமேசை பக்கம் நகராமல் காலத்தைக் கடத்துகிறார்கள். நகரவே செய்யாதவர்களிடமும் மேற்கொண்டு மது வாங்க மறுப்பவர்களிடமும் செல்லமாக கோபித்துக்கொண்டு அந்த பெண்கள் விலகி வந்து தேர்வுப்பட்டியலில் நின்று கொள்கிறார்கள். அதே ஆண்கள் மீண்டும் அவர்களிடம் வந்து கெஞ்சிக் கொண்டிருப்பதைப் பார்க்க லஜ்ஜையாக இருக்கிறது.  

அந்த மொத்த கூடாரத்தின் இயங்குமுறை புரிந்ததும் சந்தோஷுக்கு அந்த இடத்தில் நிற்கவே அருவருப்பாக இருந்தது. கையிலிருந்த அந்த நீர்த்துப்போன மதுவை சுவரோடு சேர்த்து கவிழ்த்துவிட்டு, பாக்கெட்டுக்குள் இருக்கும் பாங்கு உருண்டையை எடுத்து வாய்க்குள் போட்டான். கன்னம் சில்லிட்டு வாயோரத்தில் வியர்க்க ஆரம்பித்த நேரத்தில் மீண்டும் அந்த கூட்டத்தைப் பார்த்தான். மனித-மிருக புணர்வு காட்சியைப் பார்ப்பது போல உடம்பெல்லாம் கூசியது. சில இணைகளில் பெண்கள் மிருகமாகவும், சிலதில் ஆண்கள் மிருகமாகவும். ஆடிக்கொண்டிருக்கும் நண்பன் ஒரு சிறிய காண்டாமிருகமாகத் தெரிந்தான்.

வெண்குதிரையாக தெரிந்த பெண்ணை ஒருவன் மிக மோசமாக கையாண்டு கொண்டிருந்தான். அருகிலிருந்த நாற்காலியை எடுத்துப்போட்டு அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு சந்தோஷ் தன் நண்பனுக்காக காத்திருக்க ஆரம்பித்தான். அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டால் போதுமென்ற உணர்வு ஒரு வெறியாக மாறிக்கொண்டிருந்தது வரை தெளிவாக நினைவிலிருக்கிறது.

அடுத்த நாள் காலை அறையில் கண்விழித்தபோது, நண்பர்கள் மெத்தையில் அமர்ந்தபடி சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் குழப்பம் ஆரம்பித்தது. கட்டிலில் அமர்ந்தபடி சந்தோஷ் முந்தைய இரவை நினைவுகூர முயன்றான். கேட்டதற்கு, அவனைக் கடற்கரையிலிருந்து கண்டுபிடித்து கொண்டுவந்து அறையில் சேர்த்ததாக நண்பன் சொன்னான். அந்த கூடாரத்திலிருந்து சொல்லிக் கொள்ளாமல் அவன் புறப்பட்டு வந்து விட்டதாகவும் சொல்லப்பட்டது.

நிகழ்ந்தவை ஏதோ புகைத்திரளாக நினைவில் இருக்கிறது. யோசிக்க யோசிக்க ஒவ்வொன்றாக நினைவிற்கு வந்துக்கொண்டிருந்தது. ஓர் அகலமான கண்ணாடி கோப்பையில் ஸ்காட்ச்சை நிரப்பி துளியும் நீர் விடாமல் அப்படியே விழுங்கிவிட்டு ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டான். மேல் உணவு மண்டலம் மொத்தமாக பற்றியெரிந்தது. சட்டென நினைவிற்கு வர தன்னுடைய கால்சராய் பாக்கெட்டிற்குள் இருந்த சிறிய ஸ்விஸ் கத்தியைத் துழாவினான். காணவில்லை. கடலில் அதை வீசியெறிந்ததாக ஏதோ நினைவு வருகிறது. அந்த கடற்கரையிலிருந்துதான் எல்லாமும் ஆரம்பித்திருந்தது. ஆம். அதுவரை அது மிகச்சிறப்பான நாளாகத்தான் இருந்தது.

அதிலிருந்து ஆரம்பித்து அந்த கூடாரத்து காட்சிகள் வரை நிகழ்ந்ததை நிமிடத்தில் மீட்டுவிட்டு, அதற்கு பின்னான சம்பவங்களை மனம் தேட ஆரம்பித்தது.

புறப்பட நினைத்த நொடியில் திடீரென அந்த கூடாரத்தில் தமிழ் பாடலொன்று ஒலிக்கப்பட்டதாக நினைவிற்கு வருகிறது. ஓரிரு தமிழர்கள் அந்த கூட்டத்தில் இருந்திருக்கலாம்; அவர்களின் விண்ணப்பமாக இருக்கவேண்டும். ஆனால் அந்தப் பாடல் அந்த அரங்கத்திற்கு பொருத்தமற்ற காதல் பாடலாக இருந்ததே? அதுவும் தனக்கு மிகவும் பிடித்தமான பாடல். அதுதான் நிஜமாக அங்கு ஒலிக்கப்பட்டதா?

நாற்காலியில் அமர்ந்திருக்கும் இவனருகே வந்து, தலையை யாரோ கோதுவதைப் போல தெரிந்தது. நிமிர்ந்து பார்க்கும் போது, பின்னாலிருக்கும் ஒளியின் விளைவால் கண்ணுக்கு முன்னிருக்கும் பெண்ணின் முகம் சில்ஹவுட்டாக தெரிந்ததாக நினைவிற்கு வருகிறது. மிக பரிட்சையமான வடிவம். எங்கிருந்தோ வந்த லேசர் ஒளிக்கீற்று அவளது முகத்தைக் கடக்கும்போது அவனுக்கு பிடிபட்டது. பழைய காதலியின் முகம்.

அவள், அந்த ஐம்பது வயது குண்டனுடன் ஆடிக்கொண்டிருந்தவள் வெள்ளி வண்ண உடையை அணிந்திருக்கிறாள். ஆட வருகிறாயா என்று அழைக்கிறாள். இவன் மறுத்ததும் இன்னொருவனுடன் போய் ஆடுகிறாள். இவனைப் பார்த்தபடியே அவனுடன் ரொம்பவே நெருங்குகிறாள். அப்போது ஓர் ஏளனப் புன்னகை. முன்னே சென்று அவளது கழுத்தை நெரிக்கவேண்டும் போலிருக்கிறது. அவனது முகமும் நினைவிற்கு வருகிறது. ஃபேஸ்புக்கில் பார்த்த அவளது கணவனின் முகம். பார்த்துக் கொண்டிருக்கும்போதே அம்முகம் ஒரு கோவேறு கழுதையைப் போல மாறுகிறது.

இவள் ஆடிக்கொண்டிருக்கும்போது இன்னொருவன் அவளைத் தன்னுடன் ஆட இழுக்கிறான். அவன் பார்ப்பதற்கு தன்னைப் போலவே இருக்கிறான். ஆம் அதே உடைதான். கோவேறு கழுதையுடன் சண்டை மூள்கிறது. நடுவிலிருந்த பெண் உள்ளே நுழைந்து சந்தோஷைத் தள்ளி விடுகிறாள். பரிதாபமாக கீழே விழுபவனின் ஆண்குறியை நோக்கி மிதித்துவிடுவதைப் போல தன் பாதத்தை உயர்த்துகிறாள். சுற்றியிருப்பவர்கள் கைக்கொட்டிச் சிரிக்கிறார்கள். அதற்குள் பாதுகாவலர்கள் வந்து கீழே கிடந்தவனைத் தூக்கி வெளியே கொண்டுபோய் வீசிவிட்டு வந்துவிட்டார்கள். இவை அத்தனையையும் நாற்காலியிலிருந்து பார்க்கும் சந்தோஷுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.

மீண்டும் அந்த பெண் அந்த கோவேறு கழுதையைப் புணர்வதைப் போல இவனுக்கு தெரிகிறது. அதை வெறித்துப் பார்த்தபடி இவன் அந்த கூடாரத்தை விட்டு வெளியேறுகிறான். அந்த வெள்ளிநிற உடையணிந்தவளை நினைவிலிருந்து கூர்ந்து பார்க்கும்போது, காதலியின் சுவடு வழியாக இன்னொரு முகமும் தெரிகிறது.  

‘நான் வெளியே வந்ததை நீ கவனிக்கவில்லையா?’

‘இல்லை. இறுதிப்பாடல் ஒலிக்கப்பட்டபோது நீ அமர்ந்திருந்த நாற்காலி காலியாக இருப்பதை பார்த்தேன்.’

‘அது தமிழ் பாடலா?’

‘இல்லையே..’

‘வேறெதுவும் தமிழ் பாடல் ஒலிக்கப்பட்டதா?’

‘நடுவில் ஒன்றிரண்டு.. அதுவும் அரைகுறையாக.. ’

மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. அதன் பிறகு என்ன செய்தோம் என்று யோசிக்க யோசிக்க நினைவடுக்குகள் இன்னும் சிடுக்காக இருந்தது.

பிரதான சாலையிலிருந்து அந்த சந்துக்குள் நுழையும் வளைவின் அருகே இருக்கும் ஏதோவொரு மறைவில் நின்றபடி தான் அந்த நுழைவாயிலை நோட்டமிட்டுக் கொண்டிருந்தது ஞாபத்திற்கு வருகிறது. காதில் அலைபேசியுடன் நண்பன் வெளியேறுவது தெரிகிறது. ஆம். தனக்கான அழைப்புதான்.

அலைபேசியை எடுத்து சரி பார்த்தான். மிகச் சரியாக இரவு 11.13க்கு அழைப்பு.

‘நீ என்னை அழைத்த போது நான் என்ன சொன்னேன்’

‘கடற்கரைக்கு போய்க்கொண்டிருப்பதாக.. நீயே அறைக்கு வந்து விடுவதாகவும் சொன்னாய்.’

இப்போது நினைவில் அந்த கட்டடத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள். தான் அவளுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்ததாகப் படுகிறது. அவள் வெளியே வந்தாள். உடன் இரண்டு வேறு பெண்கள். அதே சந்திற்குள்தான் நுழைந்தார்கள். மெல்ல அவர்களைப் பின்தொடர ஆரம்பித்தான். சில திருப்பங்கள் தாண்டி ஒருத்தி கழன்று கொண்டாள். சுற்றிலும் வண்ண வண்ண விளக்குகள். கொஞ்சம் தூரம் சென்றதும், இருள். அடர் இருள்.

இரு பெண்களுக்கு பின்னால் அந்த சாமத்தில் அந்தக் குறுகிய சந்தினில் நடந்து செல்வதற்கான யாதொரு அச்சமும் அவனிடம் இல்லை. அத்தனை தீர்மானம். ஓரிடத்தில் அவர்கள் நின்று இவனைத் திரும்பிப் பார்த்தபோது எந்த அதிர்ச்சியும் காட்டாமல் தொடர்ந்து நடக்கிறான். அவர்களும் சமாதானப்பட்டவர்களாக முன்னேறிச் செல்கிறார்கள். இன்னொருத்தியும் மற்றொரு வளைவில் விலகிக்கொள்ள உற்சாகமாகி கிட்டத்தட்ட நடையை ஓட்டமாக்கி அவளுக்கு மிகஅருகில் போய் பின்தொடர்கிறான்.

குறியை நோக்கி உயர்ந்த வெள்ளிப்பாதணிகள் அந்த இரவொளியில் மினுமினுக்கின்றன. ஒரு பாழடைந்த நினைவுச்சின்னம் போலிருந்த வீட்டின் அருகே வந்தபோது அது மிகவும் தோதான இடமாகப்பட, சட்டென்று அவளது வாயைப் பொத்தி அந்த இடிபாடுகளான வீட்டிற்குள் தள்ளியதாக நினைவுவர திடுக்கிட்டுப் போனான்.

‘நீ எத்தனை மணிக்கு என்னைக் கடற்கரையில் மீண்டும் வந்து அழைத்து வந்தாய்?’

‘அதிகாலை மூன்று மணி பக்கமாக..’

இன்னொரு சிகரெட் பற்ற வைக்கப்பட்டது. மேற்கொண்டு யோசிக்க வேண்டாமென தோன்றும் எண்ணத்தை எதிர் திசையிலிருந்து மோதும் குறுகுறுப்பு சுக்குநூறாக்கியது. மீறிச்செல்லும் அறிவை இழுத்துக் கட்ட முடியவில்லை. நிச்சயமாக தான் ஒரு குற்றச்செயலைப் புரிந்திருப்பதை நோக்கி செல்லும் அந்த நினைவை எவ்வளவு போராடியும் தடுத்துவிட முடியவில்லை.

அந்த சிதிலமடைந்த வீடு. மேற்கூரைகள் இல்லாமல் கொடிகள் வளர்ந்து உள்ளே தொங்கிக் கொண்டிருக்கின்றன. தள்ளிய வேகத்தில் வீட்டிற்குள்ளிருந்த இரும்பு தூணில் போய் அவளது தலை மோதப்படுவதாக நினைவு வந்ததும், சந்தோஷ் வியர்த்தெழுந்து மாற்றி யோசிக்க முயற்சித்தான். எத்தனை முறை யோசித்தும் அதே காட்சிதான். திரும்பத் திரும்ப காட்சியிலிருந்த அந்த வீட்டின் நுணுக்கங்கள் இன்னும் தெளிவாகிக் கொண்டே வந்தது. சிற்ப வேலைகள் தாங்கிய சுவர்கள். கனமான தூண்கள். தூசு நாற்றம். முகத்தின் அருகே வந்து மோதாமல் கடந்த வௌவால். சிறுகற்களும் மரச்செதில்களுமாக மறைந்து கிடக்கும் தரை. அதன் மையத்தில் நினைவிழந்து கிடக்கும் அந்த பெண். இறந்துவிட்டாளா? அவளது பசுமரத்தைப் போன்ற வெண்ணிற கெண்டைக்காலில் தசை துடிக்கிறது. அந்த மின்னும் காலணி. மூர்க்கமாக அந்தக்கணுவில் மிதித்தப்படி, தன் பாக்கெட்டிலிருந்த கத்தியை வைத்து அவளது கழுத்தில் ஆழமான சிவப்பு கோடொன்றை வரைகிறான். ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி ரொம்பவே சொகுசாக செத்துப்போகிறாள்.

வெளிறிப்போய் நண்பனை ஏறிட்டான்.

‘மீண்டும் அந்த விடுதிக்கு இன்றிரவு போகலாமா?’

‘நீ நேற்றே எதிலும் பங்கேற்கவில்லையே? அதோடு அந்த இடம் அத்தனை சிறப்பானதாகவும் இல்லை. எனக்குமே ரொம்பவும் சோர்வளிப்பதாக இருந்தது’

‘இல்லை. நேற்று கொஞ்சம் உடல்நிலை சரியில்லாததைப் போலிருந்தது.’

‘அப்படியானால் இன்று இன்னொரு சிறப்பான இடத்தைத் தேர்வு செய்திருக்கிறேன். அங்கே செல்வோம்’

‘இல்லை. அங்கேயே போகலாம். அங்கேதான் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன்’

‘நீயென்ன கொலையா செய்யப் போகிறாய்?’ நண்பன் வாய்விட்டு சிரித்தான். மேற்கொண்டு சந்தோஷ் எதுவும் பேசவில்லை. குடலுக்குள் போன திரவத்தின் எரிச்சலை நண்பன் சுண்டிவிட்டதைப் போல இருந்தது.

மீண்டும் மீண்டும் அந்த நினைவு வர, அந்த கொலை அத்தனை தத்ரூபமாக அவனுக்கு காட்சியானது. அதே தரையைப் பெயர்த்து அந்த சடலத்தைப் புதைப்பதாக தெரிவது அந்த தத்ரூபத்தின் கற்பனை நீட்சியோ என்று அவனுக்குப் பட்டது. ஆனால் அந்த இடத்திலிருந்து நிலவை அண்ணாந்து பார்த்ததாக தெளிவான நினைவொன்று வருகிறது.

வரப்போகும் அடுத்தடுத்த எதிர்வினைகளைக் குறித்து யோசிக்க ஆரம்பித்தான். செய்தித்தாள்களில் எந்த செய்தியும் வரவில்லை. காட்சி ஊடகத்திலும் அது குறித்து ஒரு வரியும் இல்லை. ஆனால், நிச்சயம் மேற்கொண்டு மறுமுனையில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

புகை வரும் அளவிற்கு வெந்நீரைத் திறந்துவிட்டுக் கொண்டு குளியலறையில் போய் நின்றான். உடலெங்கும் கொதிநிலையிலிருக்கும் சின்ன சின்ன ஊசிகளால் குத்துவதைப் போல இருந்தது இதமாகப்பட்டது. அதையே கையில் குவித்து பருகவும் செய்தான். அதீத க்ளோரின் கலவையிலிருந்த நீர் மிக எளிதாக வாந்தியெடுக்க வைத்தது. அந்த ஒரு வினாடியில் தன்னை முழுமையாக குற்றமற்றவனாக உணர்ந்தான்.

அதை உறுதி செய்துவிடும் தவிப்பு அதிகமானதும், நண்பகலின் உச்சிவெயிலில், சாலையிலிறங்கி நேராக கடற்கரையை நோக்கி நடந்தான். முந்தைய இரவு கேளிக்கையின் எந்தவொரு மிச்சமும் அந்த வீதியில் இல்லை. அந்த மாகாணத்து சுற்றுலா துறையின் துரிதத்தை அந்தக் குறைந்த கணத்தில் அவனால் வியக்கவெல்லாம் முடியவில்லை. கடற்கரைக்கு வந்ததும், முந்தைய தினம் நடந்து சென்ற வழிகளை மனதில் கோடுகளாகக் கிழித்துக்கொண்டு அங்கிருந்த நடக்க ஆரம்பித்தான். சந்துகள் – வளைவுகள் – நின்று அலைபேசிய இடம் – இன்னொரு சந்து – இறுதி வளைவு – பிரதான சாலை – பிசிறில்லாத மன வரைப்படம், துல்லியமாக அந்த இடத்திற்கு அழைத்து வந்தது.

அந்த விடுதியின் முகப்பு பூட்டிக்கிடந்தது. அந்த நுழைவாயிலின் அமைப்பு இந்த பகல் வெளிச்சத்தில் ஒழுக்கமாகவும் பதவிசாகவும் இருப்பது ஏதோவொரு விதத்தில் அவனைப் பகடி செய்வதாகத் தெரிந்தது. விரைவாக நகரும் மக்களுக்கு நடுவில், ஓரிடத்தில் நின்றபடி அந்த கட்டடத்தைப் பார்ப்பது வேண்டாத சந்தேகத்தைத் தோற்றுவிக்கும் என்பதால் நடந்தபடி இருந்தான். தான் வெளியேறி வந்ததும் பதுங்கியிருந்ததாக நினைவிலிருந்த மறைவைத் தேட முனைகையில், குறிப்பிட்டு அவ்விடத்தை இனங்காண முடியவில்லை. குத்துமதிப்பாக நினைவிலிருந்த வளைவை நெருங்கிப்போய் பார்க்கும்போது அது அத்தனை மறைவான இடமாகத் தெரியவில்லை. கடந்து செல்லும் எவரும் ஒளிந்து கொண்டிருந்த தன்னைப் பார்த்திருக்கக்கூடும் என்று தோன்றியது.

இவ்வளவு அசிரத்தையாகத்தான் தன் நகர்வுகள் இருந்திருக்கின்றன என்று தோன்றியபோது, அச்சவுணர்வு இன்னும் அதிகமாக மூண்டது. ஒருவேளை முந்தைய இரவு, விளக்குகளற்ற அந்த இடம் மறைவதற்கு உகந்ததாகவே இருந்திருக்கும் என்று அவனே ஆறுதல் பட்டுக்கொண்டான். அந்த இடத்திலிருந்து அன்று மூன்று பெண்கள் நடந்த திசையை நினைவில் மீட்டு, அதன் போக்கில் நடக்க ஆரம்பித்தான்.

நீண்ட அந்த சிமெண்ட் தெருவில் இடைவெட்டாக பல சந்துகள் பிரிந்தபடி இருந்தன. எந்த இடத்தில் முதலாவது பெண் பிரிந்தாள் என்று புரியவில்லை. போதையின் பிடியில் கடந்திருந்த தூரத்தை இப்போது அறுதியிட முடியவில்லை. சற்று தூரம் நடந்துப்போய்விட்டு, திரும்பி அதே வழியாக வந்து இன்னொரு சந்துக்குள் நுழைந்து, மீண்டு வந்து, மற்றொன்று மற்றொன்றென நுழைந்து பார்த்துவிட்டு வரும்போது இளநீர் விற்பனையாளன் ஒருவன் ‘முகவரி எதுவும் மறந்துவிட்டீர்களா?’ என்று உதவும் குரலில் முன்வந்தான். தான் நோட்டமிடப்படுவதாகவும், தானே தன்னை சரணடைய ஒப்புக்கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் சந்தோஷுக்கு உதறல் எடுத்தது.

அந்த இடத்தைவிட்டு புறப்பட்டால் போதுமென விடைப்பெற்று ஓட்டமாய் நடக்க ஆரம்பித்தான். நடக்க நடக்க அந்த சிதிலமடைந்த பழைய வீடு இன்னும் முழுமையாக அவனது நினைவினில் உருவங்கொண்டது. பின்னாலிருந்து யாரோ விரட்டிக்கொண்டு வருவதைப் போலத் தோன்ற நடை இடறியது.

அறையை அடைந்து நண்பர்களைப் பார்த்ததும், வாழ்வில் கண்டிராத பாதுகாப்புணர்வை அடைந்ததைப் போலிருந்தது. அதே நேரம் அவர்களது நிம்மதியான விடுமுறை மனநிலை வெறுப்பூட்டுவதாக இருந்தது. மீண்டும் செய்தி ஊடகங்களைப் பார்க்க ஆரம்பித்தான். இன்னும் சற்று நேரத்தில், இருசக்கர வாகனங்களை வாடகைக்கு எடுத்து ஊர்சுற்றிப் பார்க்கலாம் என்று அவர்கள் சொன்னபோது, இவன் நிதானமிழந்தான். எப்படி அவர்களால் இத்தனை பொறுப்பற்றவர்களாக நடந்து கொள்ள முடிகிறது என்று பதற்றமடைந்தான்.

அவர்கள் வேடிக்கையாக இவனைத் திரும்பி பார்க்க, வேண்டுமென்றே அவர்கள் தன்னை சீண்டிப் பார்ப்பதாக அவனுக்கு தோன்றியதும், கோபம்கொண்டு கத்த ஆரம்பித்தான். ஒன்றும் புரியாத அவர்கள், அவனை வேண்டுமானால் அறையிலேயே தங்கிக்கொள்ளச் சொன்னார்கள். வெடித்து அழுதுவிடுவான் போலிருந்தது. அவர்களோடு தானும் வருவதாக அவன் சொன்னதும், அவர்கள் இவனைப் புதிராகப் பார்த்தார்கள்.

இருசக்கர வாகனம் சென்ற வீதியிலெல்லாம் அந்த சிதிலமடைந்த வீட்டையே தேடிக்கொண்டு வந்தான். நகரத்தை விட்டு பத்து மைல்கள் தாண்டி வந்துவிட்ட பின்னரும் அவனது தேடல் நிற்கவில்லை. பேசாமலே வந்து கொண்டிருக்கும் இவனது சுபாவத்தை அந்த நேரத்து கொண்டாட்டங்களுக்கு நடுவிலும் அவர்கள் கவனிக்காமல் இல்லை. எதையோ உள்ளுக்குள் போட்டு அளவிற்கு மீறி குழப்பிக்கொண்டிருக்கிறான் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

‘என்னதான் உன் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது?’ – அறைக்கு வந்ததும் விசாரணை துவங்கியது.

‘எதுவும் இல்லை’

‘ஏன் பேயடித்ததைப்போல இருக்கிறாய்?’

‘இல்லை. நான் நலமாக இருப்பதாகவே நம்புகிறேன்’

‘நீ இன்று காலையிலிருந்து ஒரு மனம் பிறழ்ந்தவன் போல நடந்துகொள்கிறாய்’

‘மதுவின் வினையாக இருக்கலாம். என்னை இப்படி கேள்வி கேட்பதை நிறுத்துங்கள்’

‘மதியம் எங்கு சென்று வந்தாய்?’

‘கடற்கரைக்கு’

‘என்ன காரணமாக?’

‘குறிப்பிட்டு எதுவுமில்லை. ரொம்பவே வேண்டி கேட்கிறேன். அருள்கூர்ந்து கேள்வி கேட்பதை நிறுத்துங்கள்’

‘இல்லை. இத்தனை வினோதமாக நீ நடந்து கொள்பவன் இல்லை. இன்று காலையிலிருந்துதான் குறிப்பிட்ட இந்த மாற்றம். இரவும் போய் அந்த வெறிச்சோடிய கடற்கரையில் உறங்கிக் கிடக்கிறாய். உன்னை எழுப்பவே முடியாமல் நாங்கள் போராடியபோது, அங்கு போலீஸ்காரர்களெல்லாம் வந்து விட்டார்கள்’

சட்டென நிமிர்ந்து உட்கார்ந்தான்

‘வந்து என்ன கேட்டார்கள்?’

‘சம்பிரதாய விசாரணைதான். எந்த ஊர், எந்த விடுதியில் தங்கியிருக்கிறோம், எத்தனை நாட்களாக, அடையாள அட்டை.. இதெல்லாம்தான்’

‘அவர்கள் அவற்றைக் குறித்துவைத்துக் கொண்டார்களா?’

‘அப்படி நினைவில்லை’

‘சரியாக யோசித்து சொல்’

‘இல்லை. குறித்துக் கொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறோம்’

‘பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளாதே.. சரியாக நினைவுப்படுத்தி சொல் மடையனே..’ – கத்த ஆரம்பித்தான்

‘எதற்காக அதெல்லாம்? குறித்துக் கொண்டால்தான் என்ன? நாமென்ன கொலையா செய்து விட்டோம்?’

மேற்கொண்டு சந்தோஷ் எதுவுமே பேசவில்லை. எல்லை மீறி தன்னைப் பகிரங்கப்படுத்திக் கொண்டிருப்பதாகவோ அளவிற்கு அதிகமாக தான் கற்பனை செய்துகொள்வதாகவோ அவனுக்கு தோன்றியது. நிகழ்ந்தவை உண்மையே என்றாலும் பதற்றமேதான் தன்னைக் காட்டிக் கொடுக்கப் போகிறது என்று தெளிவாக அவனுக்கு புரிந்தது. அந்த குற்றம் உண்மையாகவே நடந்திருந்தாலும், எந்தவித முன் திட்டமிடலும் இல்லாமல் நிகழ்ந்துவிட்ட அதில், துளியும் பிழை இருந்திருக்காதென்று திடீரென ஓர் அசம்மந்தமான நம்பிக்கை அவனைத் தேற்றியது. அச்சத்தின் உச்சத்தில் அந்த மிகை உணர்வே ஒன்றுமேயில்லாமல் போகும் முரணியக்கத்தின் விந்தையை ரசிக்க ஆரம்பித்தான்.

அதே அகலமான கோப்பையில், எஞ்சியிருந்த ஸ்காட்ச்சை நிரப்பி, இம்முறை இரண்டு ஐஸ் கட்டிகளைப் போட்டு நிதானமாகப் பருகினான். அதுவரையிலிருந்த பதற்றத்தைவிட, அவனது இந்த நிதானம்தான் மற்றவர்களை அப்போது அச்சப்படுத்துவதாக இருந்தது. சற்றே பேதலித்து நிற்கும் அவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே சொன்னான்.

‘cheers’

3

‘அதன் பிறகு என்ன நடந்தது?’ – ஆரதி முடிவைத் தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்துடன் கேட்டாள்.

‘மேற்கொண்டு அதை வலிந்து தேடுவதை அந்த இடத்திலேயே நான் நிறுத்தி விட்டேன். அவ்வாறொன்று நிகழ்ந்திருந்தாலும், யோசித்து ஓடிப்போய் அழிக்க எந்த தடயமும் எனக்கு தோன்றவில்லை. வருவதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று அப்படியே ஒரு முற்றுப்புள்ளியை வைத்துவிட்டேன். மேற்கொண்டு நாங்கள் அங்கிருந்த இரண்டு நாட்களும் நான் செய்தித்தாள்களைக் கூட சீந்தவில்லை. ஊருக்கு திரும்பும்போது எல்லைக் காவலர்கள் மது வாங்கிக்கொண்டு செல்கிறோமா என்று பரிசோதனையிட வாகனத்தை நிறுத்தியபோது, சர்வநிச்சயமாக சொல்கிறேன், நான் துளிகூட பதற்றமடையவில்லை’ – ஆரதி தன்னை வியப்புடன் பார்த்துக் கொண்டிருப்பதாக அவனுக்கு தோன்றியது – ‘இவையெல்லாம் நிகழ்ந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. என் மனசாட்சியைத் தவிர வேறெந்த சாட்சியும் இதற்கு மிச்சமில்லை’ சிறிது இடைவெளி விட்டு, ‘இப்போது நீயும்’ என்றான்

நீண்ட அமைதிக்கு பின்னர், ‘அந்த இரவில் நிஜமாகவே என்னதான் நடந்தது?’ என்றாள்

‘என் நினைவிலிருக்கும்படி அத்தனையையும் உன்னிடம் சொல்லியிருக்கிறேன். இவ்வளவுதான் எனக்கும் தெரியும்’

ஆரதி அவனையே குழப்பமாகப் பார்த்தபடி நின்றாள்

4

‘அன்று மடிக்கணினியில் எதேச்சையாக வெளிப்பட்ட உன்னுடைய பழைய புகைப்படத்தை அவள் நிச்சயம் கவனித்து விட்டாள் என்றுதான் எனக்கு உறுத்திக்கொண்டே இருந்தது. அந்த உறுத்தலின் வெப்பத்தில் தூபம் போடுவது போல, அவள் மேற்கொண்டு அதைப்பற்றி எதுவுமே கேட்காமலிருப்பதைத்தான், என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சமீப நாட்களில் அவள் ரொம்பவே அழுத்தத்திலிருப்பது இதனால்தானோ என்று எனக்கு தோன்றுகிறது. ஏதோவொரு விதத்தில், ஓர் அதிர்ச்சியின் நடுவில் உன்னைப் பற்றி கொஞ்சம் சொல்லிவிடுவது எனக்கு சரியென்று பட்டது. கடந்த காலத்தின் நிஜத்தைவிட அதை நான் மறைத்து வைப்பதுதான் அவளை நோகடிக்கும். சரிதானே?’

‘முன்னாள் காதலி என்று நீ சொன்னதை அவள் அத்தனை பொருட்படுத்தியிருக்கமாட்டாள் என்று நினைக்கிறாயா?’ – மதுமிதா சந்தோஷிடம் கேலியாக கேட்டாள்

‘என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். கண்டிப்பாக இல்லை. அதோடு நான் உன்னை என்னுடைய வெறுப்பிற்குரிய ஒரு பிம்பமாகத்தான் காட்டியிருக்கிறேன்.  

மறுமுனையிலிருந்து சிரிப்பொலி கேட்கும்போது சந்தோஷுக்கு கோபம் ஊறியது.

‘அவளது முகத்தை நான் மிகக்கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன் மதுமிதா. என்னால் சரியாகச் சொல்லிவிட முடியும். அவளது சிந்தனைகளில் இரண்டே கேள்விகள்தான் மிச்சமிருந்தன – கொலை நிஜமாகவே நடந்ததா? அல்லது அது என் போதையின் விளைவான உளச்சிக்கலின் தோற்றப்பிழையா? – இவை மட்டும்தான்’

இன்னும் பலமான சிரிப்பொலி.

‘அவமதிக்கும் இந்த சிரிப்பை தயவு செய்து உடனடியாக நிறுத்து.’

‘சரி அன்பு காதலரே.. நிறுத்திவிட்டேன்’

‘பரிகசிப்பதையும்..’

‘சரி நிறுத்தி விட்டேன். ஆனால் உன் மனைவி இப்போது என்ன யோசித்துக் கொண்டிருப்பாள் என்று நான் சொல்லவா?’

‘சொல்’

‘அன்றைய மடிக்கணினி புகைப்படம் முன்னாள் காதலிதானா? ஏன் அதை ரகசியப்படுத்தி இன்னும் ஒளித்து வைத்திருக்கிறான்? அவளது நினைவுகள் போதையின் கற்பனையிலேனும் ஒரு கொலை செய்யுமளவிற்கு இவனைத் தூண்டுகிறதா? இன்னொருவனுடன் அவள் உரசும்போது, அவன் அவளது கணவனாகவே தெரியும்போதும் இவனுக்கு காமம் கொப்பளிக்கிறதா? அப்படியெனில் அந்த முன்னாள் காதலியை இவன் நிச்சயமாக புணர்ந்திருக்க வேண்டுமல்லவா? அந்த கேளிக்கை விடுதி பெண்ணை இவன் புணர முயற்சித்திருப்பானா? மேலும்…’

‘உன் அபத்தக் கற்பனைகளை நிறுத்து மதுமிதா.’

‘நீ ஒரு போதும் ஒரு பெண்ணைப் புரிந்துகொள்ள துளியளவும் முயற்சிக்கப்போவதில்லை சந்தோஷ்’

‘மிக்க நன்றி என் முன்னாள் காதலியே’

5

அடுத்த நாள் காலையில் ஆரதியின் முகம், குழந்தை பிறந்ததற்கு பின்னர் முதன்முறையாக மிகத்தெளிவாக இருப்பதாகப் பட்டது. உணவு மேசையிலிருந்து தேநீர் அருந்தியபடி அவளை சந்தோஷ் கவனித்துக் கொண்டிருந்தான். மதுமிதா சொன்ன ஏதேனும் ஐயத்திற்கான அட்சரங்கள் ஆரதியின் முகத்தில் தெரிகிறதா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். முன்னெப்போதையும் விட மிகுந்த உற்சாகமானவளாக அவள் தெரிந்தாள். தன் கணக்குகள் நேர்க்கோட்டில் விழுவதை எண்ணி சற்று பெருமிதப்பட்டான்.

மதுமிதாவின் கற்பனைகளை எண்ணி சந்தோஷுக்கு இப்போது சிரிப்பு வந்தது. எல்லா பெண்களும் அவளைப் போலவே சிந்திப்பார்கள் என்ற அவளது எண்ணத்தைத் தனக்குள்ளேயே கேலி செய்தான். முன்னறையில் அமர்ந்து குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் இந்திராம்மாளை நோக்கி தேநீர் குவளையோடு நகர்ந்தான். ஆரதியின் தெளிந்த தோற்றத்தைக் கண்டு தனக்கு பரிசுத்தமான காதலொன்று உள்ளுக்குள் ஊற்றெடுப்பதைப் போல அவனுக்கு தோன்றியது. அவள் மீதான தன் பொறுப்புணர்வு திடீரென அதிகரித்து விட்டதைப் போல இருந்தது. மதுமிதாவுடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. இப்படி ஏதேதோ எண்ணங்கள் வந்து நெகிழச்செய்ய, குழந்தையைக் கையில் ஏந்தினான். இந்திராம்மாள் பரவசமானாள்.

‘அப்படியே என் மகனைப் போன்ற நெற்றி, அதே சிறிய மூக்கு, அதே கூர்மையான கண்கள்… என் குல சாமி…’ என்று வழக்கமான தன் கொஞ்சல்களை முன்னைவிட சத்தமாக கூவினாள். இந்த வார்த்தைகள் இப்போது ஆரதிக்கு எந்த குற்றவுணர்ச்சியையும் கொடுக்கவில்லை. மெல்லிய புன்னகையுடன் பால்கனியில் நின்றபடி தேநீரைப் பருகிக்கொண்டிருந்தாள்.

-முற்றும்-

மயிலன் ஜி சின்னப்பன் – பட்டுக்கோட்டையைச் சேர்ந்த இவர், திருச்சியில் மருத்துவராகப் பணிபுரிந்துவருகிறார். சமீபத்தில் இவரது நாவல் ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ வெளியாகியுள்ளது. இவரது மின்னஞ்சல் முகவரி – premamayilan@gmail.com

கவிதைக்காரன் டைரியிலிருந்து – 01

3

( சேகரிப்பிலிருந்து : வெளியான தேதி – அக்டோபர் – 3, 2013)

 

நவீனக்கவிதையின் கை நிலம்..

*

Most people ignore most poetry because most poetry ignores most people.

– Adrian Mitchell.

(பெரும்பாலும் மக்கள் அதிகக் கவிதைகளை நிராகரித்துவிடுகிறார்கள் ஏனென்றால் அதிகக் கவிதைகள் பெரும்பாலுமான மக்களை நிராகரித்துவிடுகிறது.)

கவிதை மீதான பயணத்தில் ஆட்ரியன் மிச்செல்லின் மேற்சொன்ன கூற்றை எவ்வகையிலாவது கடக்காதவர்கள் இருப்பது அரிதே.

கவிதை என்னும் நுழைவாயிலில் இருந்து இரண்டு பாதைகள் பிரிகின்றன. ஒன்று அதனிலிருந்து கிளம்பி வெளியேறும் கவிஞனுக்கானது. இன்னொன்று அதனை நோக்கிப் பயணப்பட்டு நுழையும் வாசகனுக்கானது. கவிதைகள் மீதான காதல் கொண்ட வாசகனின் விருப்பம் அதை ரசித்தல் மட்டுமே போதுமானது  என்னும்போது அவன் சென்ற பாதை வழியே திரும்பிவிடுகிறான்.

ஆனால் –

அவனே அதீதக் காதல் கொண்டவனாய் இருந்தால் அதனுள்ளே தங்கி நுணுக்கமாய் அணுகி துய்க்கும் ரசனையுணர்ச்சியின் மிகுதியில் தானே ஒரு கவிஞனாகவும் பரிணமித்து, கவிப்பாதையில் வெளியேறுகிறான்.

இந்த ரசவாதம் ஒன்றும் மாய வினோதமல்ல. ஒரு கலை தன்னகத்தே கொண்டிருக்கும் இயல்பு அது. அந்த இயல்பை புரிந்துக்கொள்வதற்கான, புரிந்துக்கொண்டதைப் பகிர்ந்துக்கொள்வதற்கான சிறு முயற்சி தான் இந்தக் கட்டுரை.

முதலில் கவிதை –

இதை எப்படி விளங்கிக் கொள்வது? அதற்கான தேவை எப்படி உருவாகியிருக்கலாம்?

ஒரு மனிதனாக பரிணமிப்பதற்கு உதவிய அறிவை ஆறாம் அறிவு என்று வகுத்து வைத்தாயிற்று.

சிறு சிறு செயல்கள் மனிதனுக்குரிய இயக்கம் எனக் கொண்டால், செயல்களில் எத்தனை எத்தனை வகைகள் அமையப் பெற்றோம். அடிப்படை இயக்கங்கள் உயிர் பிழைப்பு சம்பந்தப்பட்டது.

அடுத்துத் தொழில் சம்பந்தப்பட்டது. அதற்கடுத்து வேட்டை சம்பந்தப்பட்டது. அதன் பிறகு பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. இவை அனைத்திலும் மனிதனுக்கு இயற்கையான உடல் மொழிகள் உண்டு.

மொத்த இயக்கங்களும் அனுபவங்களை ஈட்டித் தருவதாகவோ ஒன்றைச் சார்ந்து மற்றொன்றாக உருமாற்றம் பெறுகிற புது அனுபவங்களாகவோ சேகரமாகத் தொடங்கியது. இவற்றைப் பகிர்ந்துக் கொள்வதற்கும் புதிய உத்திகளைக் கற்று கொடுப்பதற்கும் சக மனிதனுடனான  தொடர்புக்கான ஓசைகள் தேவைப்பட்டது.

ஓசை மொழியாயிற்று.

மொழி சைகையோடு தான் வளர்ந்தது. சைகைகள் உடல் இயக்கங்களை குறிப்பிட்டு உணர்த்த முயன்றன. சைகைக்கு ஒத்திசைவாக ஓசைகள் எழுப்பினான் மனிதன். அனுபவங்களைப் பகிரத்தான் இவை யாவும். கண்ணால் கண்டவற்றையெல்லாம், செவியால் கேட்டவற்றையெல்லாம், தொடு உணர்வில் அறிந்தவற்றையெல்லாம் செய்தியாகக் கடத்துவதே முக்கிய நோக்கமாயிற்று.

வேட்டைக்குப் போய்த் திரும்பும் இரவுகளில் நெருப்பு மூட்டி சுற்றியமர்ந்து எல்லாவற்றையும் தங்களுக்குள் பகிர்ந்துக் கொண்டார்கள். கதைகள் உருவாயின. நிஜ அனுபவங்களை விவரிக்கத் தொடங்கிய மனிதப் பழக்கம். இளந்தலைமுறையைக் கட்டுக்குள் வைக்க நிஜங்களோடு கற்பனைகளையும் சேர்த்துச் சொல்லிப் பழக்கினார்கள்.

கொண்டாட்டத் தருணங்களில் பாடல்கள் பாடி, பாடும் பாடல்களுக்குள் பெற்ற அனுபவங்களைப் பொதிந்து வைத்தார்கள்.

ஆதி மனிதனுக்கு அவன் சந்ததி முக்கியம். அது பெற்றுத் தரப்போகும் உழைப்பு முக்கியம். மிருகங்களுக்கு எதிராக தன் இனவிருத்தியைப் பெருக்கிக் கொள்ளவும் பாதுகாக்கவும் புத்திக்கூர்மையும் கிரகிப்புத்தன்மையும் (Observation) அவசியமாயிற்று.

எண்ணற்ற வேட்டை உத்திகள். புதிய புதிய ஆயுதங்கள். அதன் உபயோகங்கள். அதன் செயல்முறைகள். யாவையும் புதிதாக உருவாக்குவதும். உருவாக்கியவற்றைக் கற்றுத் தருவதும். கற்றுக் கொண்டத்தைப் பழக்கப் படுத்தி, பழகியதை செயல்படுத்தவும். அச்செயல் உருவாக்கும் அனுபவத்தைப் பகிரவும்..

ஒரு சுழற்சி முறையை உண்டுப் பண்ணிக் கொண்ட மனிதன், தன் எண்ணங்களை, தன் அனுபவங்களை, தான் கற்றுக் கொண்டதை குகை ஓவியங்களாக்கினான்.

முதல் கலை, உருவாயிற்று.

இதிலிருந்து நாம் படிநிலைகளாக பிற அனைத்துக் கலைகளையும் அதன் நதிமூலத்தையும் ஊற்றுக்கண்ணையும் யோசித்துக் கொள்ள முடியும். யாவற்றுக்கும் அனைத்துக்கும் – ஒன்றோடு ஒன்று தொடர்பு உண்டு.

அந்த அடிப்படையில் ஒரு மொழி வளர்ந்தோங்கி அதற்கொரு எழுத்து வடிவத்தையும் உண்டுபண்ணிய பிறகு. எழுத்து வடிவிலும் தன் சிந்தனையைப் பதிவு செய்யத் தொடங்கினான்.

அதே சுழற்சி தான் இங்கும். அனுபவத் தொகுப்பு. அதுவே பிரதானம்.

உலகம் முழுவதும். மன்னிக்கவும் பிரபஞ்சம் முழுவதுமே இயக்கங்கள் தான். அவ்வியக்கங்கள் விளைவை உண்டு பண்ணும். இது அறிவியல். மனிதனும் அப்பேரியக்கத்தின் ஒரு சிறு துணுக்குத் தான். அங்கம் தான் என்றதாலும். ஆறறிவு அவனைத் துளைத்து தூண்டிக் கொண்டே இருக்கிறது.

முதன்முதலில் அவன் இயற்கையைக் கண்டு அஞ்சினான். பிறகு வணங்கினான். மெல்ல அதனை அறிந்துக்கொள்ள முயன்றான். அதன் பிறகே அதனை வியந்தான்.

அஞ்சியபோது மிருகம். வணங்கியபோது மனிதன். அறிந்துக்கொள்ள முயன்றபோது அறிஞன். வியக்கத் தொடங்கியபோது கலைஞன்.

வியப்பு இன்னும் ஓயவில்லை. இனி இவ்வினம் அழியும் வரை இயற்கையின் மீதான வியப்பே அதன் விஸ்தீரணம்.

இன்று அறிந்துக்கொள்ளுதலுக்கு அடிப்படையாக, வியப்பு ஒரு சுழற்சி மாற்றம் கொண்டுவிட்டது.

அதாவது அறிவியலுக்கு, ‘வியக்கும்’  கலைஞன் முக்கியமானவன். கலைஞன் கற்பனையை மேம்படுத்துபவன். அவனுடைய Fiction அறிவியலுக்கு அத்தியாவசியம்.

அதனால் தான் Science is an Art.

வியக்கும் இயற்கையோடு அதன் சிறு சிறு அசைவுகளை உள்வாங்கிக் கொண்டு அதனோடு பரிபாலனைச் செய்துப் பழகினான். இயற்கையும் அவனோடு தொடர்பு கொள்கிறது என்கிற அவனது சிந்தனையின் மீதான நம்பிக்கை வலுக்க ஆரம்பித்த கணத்தில் கையிலிருந்த மொழி அவற்றைப் பதிவு செய்யப் பயன்பட்டது.

இப்பூமியின் மீது எண்ணற்ற மனித இனங்கள் உண்டு. நிலம் சார்ந்தும், சூழல் சார்ந்தும் அமைந்துவிட்ட வாழ்வின் ஊடே எல்லாவற்றுக்கும் மொழியுண்டு. அவ்வாறன மொழிகளுள்  இலக்கணம் உள்ளவை, அல்லாதவை என்று இரண்டு வகை. இப்படி மொழியின் துணைக்கொண்டு ஒவ்வொரு சிந்தனையும் உருவாகிப் பதிவாயிற்று.

எழுத்து, புறத்திலிருந்து அகத்துக்குத் திரும்பியத் தருணம், சிந்தனையைச் செம்மைப்படுத்தியதோடு மொழியையும் செம்மைப்படுத்திற்று.

இலக்கணம் உருவாக மனிதனின் வாழ்நிலையே காரணம். அதனுள் இயக்கம் கொள்ளும் அவனுடைய செயல் காரணம். அவன் உண்டு பண்ணிய காரணங்களும் ஒரு காரணம். எல்லாம் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு வளர்ந்தது.

இதன்வழியே உருவான ஒரு வடிவம், கவிதை.

தமிழ் மொழி, இலக்கணத்தோடு வலம் வந்த காலம் ஒன்று உண்டு. அதில் ஓர் அலகு இருந்தது. அவ்வாறாக அதன் அலகு விலகாத கவிதைகள், மரபுக்கவிதை எனவும். அதிலிருந்து அடுத்த நிலைக்கு உருமாறிய வகை, புதுமைக்கவிதை எனவும் (புதுக்கவிதை) ஏற்றுக் கொள்ளப்பட்டவை.

புதுக்கவிதைகளின் முக்கிய அம்சமே, அதுவரை மரபுக்கவிதைகளில் இருந்த சீரிய இலக்கண அலகு தன்னைத் தளர்த்திக்கொண்ட விதம் தான். சொல்லப்போனால் கிட்டத்தட்ட அந்த அலகு புதுக்கவிதைக்குள் மெல்லியச்சரடு போல ஓர் ஊடுருவலை மட்டுமே கொண்டிருந்தது எனலாம்.

தமிழ் மொழியை, அதன் அர்த்த சாத்தியப்பாடுகளும் அதற்கான உழைப்புச் செறிவும் கொண்ட ஒருவரால், மகாகவி பாரதியின் புதுக்கவிதைகளை எட்டிப்பிடித்துவிட முடியும். பாரதியை வாசித்து லயிக்க, ஓர் எளிய தமிழார்வம் கூடிய வாசகனுக்கு, தமிழ் மொழியின் பாரம்பரிய இலக்கண அறிவு அவசியமில்லை. தொல்காப்பியனின் ஏடுகளை அவன் தேடிப்பிடித்து புரட்டிக்கொண்டிருக்க வேண்டாம். அவனுடைய புதுக்கவிதை வாசிப்பனுபவ வழித்துணைக்கு, நேர்மையான ஒரு தமிழ் அகராதி மட்டுமே போதுமானது. இதையெல்லாம் உணர்ந்ததால் தான் பாரதி புதுக்கவிதை வடிவத்தைக் கையிலெடுத்துக் கொண்டார் எனலாம்.

பாரதியைத் தொடர்ந்து பாரதியிலிருந்து இன்னும் எளிய வடிவுக்கு முன்னகர்ந்தார் பாரதிதாசன். அந்தவகையிலும் அது ஒரு புரட்சித்தான். பிற்பாடு பாரதிதாசனிலிருந்து ஒரு சந்ததியாகப் பிறந்த புதுக்கவிதை உலகின், மைல்கற்கள் நிறைந்த நெடுஞ்சாலையை இன்று நாம் அடைய முடியும். சிக்கலின்றி அதில் பயணிக்கவும் முடியும்.

உருமாற்றம்.

அதுவே இங்கே முக்கியம் என்று சொல்ல வருகிறேன். பாரதி அந்த உருமாற்றத்துக்கான கனவைக் காணவில்லை என்று சொல்ல முடியாது. அவன் ஒரு தீர்க்கதரிசி. பன்மொழியின் மீதும் தன்னுடைய கலை ஆளுமையை அடையாளங்காணத் துணிந்தவன். அதன் எண்ணற்ற வடிவ நோக்குகளின் மீது தனக்கிருந்த பிரியத்தை கையிலெடுத்துக் கொஞ்சத் தெரிந்தவன்.

அதன் நீட்சியாக இன்று –

ஒரு மனிதன், தான் காண நேர்ந்ததை. தான் உணர்ந்து தவித்ததை. அனைத்தின் வழியாகவும், தான் கேள்விப்பட்டதை. அப்படி யாவற்றிலும் தான் தரிசிக்கும் ஓர் உணர்ச்சியைப் பிடித்துக் கொண்டு, தன்னால் சட்டென்று எழுதிட முடியாத நெஞ்சுத் தவிப்போடு  ஒரு கவிதை நெடுக பயணிக்க எத்தனிக்கிறான்.

உவமைகளும் உருவகங்களும், கவிஞன் சொல்ல வரும் உணர்ச்சியின் மீது சவாரி செய்த காலக்கட்டத்தின் தொடர்ச்சியில் இன்றும் நாமிருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. கவிதைகளில் உவமைகள் என்பது செய்து முடித்த இனிப்புப்பண்டத்தின் மீது விரிக்கப்படும் மெல்லிய வெள்ளிச்சரிகைப் போல வெறும் அலங்காரமாக மட்டும்தான் தோன்றுகிறதா..?

இல்லை.

கவிதைகள் – காலந்தோறும் மரபுக் கவிதை, புதுக் கவிதை, நவீனக்  கவிதை, பின்நவீனக் கவிதை என பல உருவ மாற்றங்களை அடைந்து வந்திருப்பதை ஓரளவு புரிந்துக்கொண்ட அடிப்படையிலும்..

ஒரு மொழி, தன்னை நிகழ் சமூகப் போக்கோடு பொருத்திக் கொள்வதற்கான எத்தனிப்புத்தான் அந்தந்த வடிவங்கள் என்ற அடிப்படையிலும்..

ஒரு மீள் பார்வையாக –

1. மரபுக் கவிதைகள் தூய இலக்கணங்களை உள்ளடக்கிய வடிவம்.

2. புதுக்கவிதை இலக்கணத்தை பெரும்பாலும் தளர்த்திக்கொண்ட வடிவம்.

3. அதனிலிருந்து பிரிந்த நவீனக் கவிதை அந்தக் குறைந்தபட்ச இலக்கணத்தையும் முற்றிலும் உதிர்த்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

அப்படி புதுக் கவிதைகள் சற்றே திகட்டத் தொடங்கியபோது, கவிதை உலகம் எதிர்க்கொண்ட அடுத்த வடிவம் நவீனம்.’

சரி.

‘நவீனக்கவிதை என்றால் என்ன ?’ – மேலும், அதை எப்படி வாசிப்பது ? எப்படி விளங்கிக் கொள்வது? எப்படி எழுதுவது ?-இவை யாவும் அதனுள் புதைந்துக் கிடக்கும் துணைக் கேள்விகள் அல்லவா?

இத்தனை வருட என் வாசிப்புப் பயணத்தில் நான் அந்த வடிவத்தை அணுகிய வழியையும், அதனுள் நுழைந்து சஞ்சரித்த விதத்தையும் அது இன்று வரை எனக்குள் கிளைப்பரத்தும் அதன் அனுபவ நிலையையும் இந்த கட்டுரையின் வழியே உங்களோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் மேலே குறிப்பிட்ட ஆதாரக் கேள்விக்கு உங்கள் மனமொரு விடையைக் கண்டு கொள்ளக் கூடும்.

மேலும், அடுத்தடுத்து நான் எழுதிப் போகப்போவது ஒரு கோட்பாடோ, இலக்கியச் சிகரத்தின் அடுக்குகளில் ஒன்றான, நவீன உச்சியைத் தொடுவதற்கான வரைபடமோ அல்ல. மற்றபடி அதன் அடிவாரத்திலிருக்கும் பெயரற்ற மரமொன்றின் நிழலில் இளைப்பாற இட்டுச் செல்லும் ஒற்றையடிப் பாதை. அவ்வளவே.

நவீனக்  கவிதை குறித்துப் பேசுவதற்கு முன் ‘நவீனம்’  என்ற சொல்லின் பாரம்பரியத்திலிருந்து வந்தால் என்ன!  வேறு வழியில்லை நண்பர்களே விரிவாகப் பேசித்தான் ஆகவேண்டும்.

MODERN –இது ஆங்கிலச் சொல்.

நவீனம் – என்பது அதன் தமிழ்ப்பதம்.

சரி.

Modern என்கிற ஆங்கிலச்சொல் என்ன அர்த்தத்தை நமக்குக் கொடுக்கிறது ? அதை ஓர் ஆங்கில அகராதி சொல்லிவிடும் தான். ஆனால் நம் புரிந்துணர்வுக்கு அது ஒரு கைவிளக்கு மட்டுமே. அதுவும் போதாது. ஆகவே அதன் பூர்விகத்துக்கும் போனால் என்ன..!

லத்தீன் மொழியில் ‘ Modo ‘ என்கிற மூலச் சொல்லிலிருந்து ஆங்கிலம் வளர்த்தெடுத்துக் கொண்ட சொல் தான் Modern.

Modo  என்பது Just Now – என்கிற அர்த்தத்தில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதனை ஆங்கிலச் சொல்லான Modern – Being at this time, now existing. என்று அகராதியில் ஆவணப்படுத்தி தொடர்ந்து அது உபயோகத்துக்கும் வந்திருக்கும். அகராதியில் ஒரு சொல், கூடுதலாக சேர்ந்துக்கொள்வது என்பது வெறும் சொற்களஞ்சிய வேலை மட்டும்  அல்ல அது.

சமூகத்தில் பயன்பாட்டால் மனிதர்களிடையே அது ஆற்றும் செயல் முக்கியம். விளைவு முக்கியம்.

அப்படி மனிதச் சிந்தனையின் அர்த்தப் பரிமாணங்களுக்கு Modern – ஆல் ஒரு புதிய பதம் கிடைத்தது. அது நேரிடையாக வாழ்வியலைத் தொட்டுப்பார்க்கும் இயல்பை வெகு விரைவாக எட்டியது. அனைத்து அம்சங்களையும் ஊடுருவும் ஒன்றாக அது உருமாற கலைகள்  தான் பயன்பட்டன.

எப்போதும் எந்தவொரு புதிய சிந்தனைகளையும் , அவை கோட்பாடுகளாகப் பரிணமிக்கும் வகையில் சுவீகரித்து பயன்பாட்டில் கொண்டு வருவது முதலில் ஓவியர்கள் தான்.

(இன்றையக் காலக்கட்டத்தைப் பொருத்தவரை நிறைய இயல்கள் இருப்பதால் இந்த Theory -ல் சின்னச் சின்ன Adjustment   நடந்திருக்கிறது. எந்தவொரு புது சிந்தனையையும் கையகப்படுத்தி அதைப் பயன்பாட்டுக்கான நுகர்வாக மாற்றிவிடும் ஊடக வல்லமையைச் சொல்லுகிறேன்.)

என்றாலும் கூட கலைஞன் இன்றியமையானவன்.

Modern art  அப்படித்தான் உருவாயிற்று. ஓவியர்களின் பொற்காலம் அது. தருணங்களை ஓவியமாக்கிட வர்ணங்களும் கோடுகளும் எல்லைக் கட்டுபாடுகளற்று காகிதங்களிலும் கான்வாஸ்களிலும் சுவர்களிலும் தீற்றின. தருணங்களுக்குள் இழைப் பிரியும் கணங்களை, மௌன மனத்துக்குள் பித்தேறி அலைபாயும் சிதறல்களை, அக்கணத்துக்குரிய வர்ணக்கலவையாக ஓவியனை அவனுக்குள்ளிருந்து அவனையே வெளியே இழுத்து வந்தது இந்த Just Now (or) Being at this time (or) now existing என்ற நவீனம்.

பிக்காஸோ என்று ஓவிய உலகால் அன்போடு அழைக்கப்பட்ட Pablo Picasso முக்கியமான மாடர்ன் ஆர்ட் பிதாவாக போற்றப்பட்டது அப்படித்தான். ஓவியங்கள் மட்டுமின்றி..

Material Arrangements -லும் அவர் தன் நவீனச் சிந்தையைப் பிரயோகப்படுத்தினார். அதனால் தான் அக்கலைஞனின் கண்களுக்கு, ஒரு சாதாரண  சைக்கிள் சீட்டையும், அதன் ஹான்ட்பாரையும் மாற்றி வைப்பதின் மூலம் அதை ஓர் எருதின் தலையாக்கி மக்கள் பார்வைக்கு கொண்டு வர முடிந்தது. அவருடைய Bull’s Head – ஐ, ஓவிய உலகமும் சரி, எந்தவொரு கலை உலகமும் சரி  நிராகரித்துவிட முடியாது. தான் உள்ள காலமட்டும் ஏற்று நிலைத்து நின்றுவிட்ட ஒரு Modern Creation  அது.

அப்படி ஓவியர்களிடமிருந்து நவீனம் எழுத்தாளர்கள் கவனத்துக்கு உடனே ஈர்க்கப்பட்டு படைப்புகள் உருவாகத் தொடங்கியது. ஒரு பக்கம் கவிதை. மறுபக்கம் சிறுகதைகள் / நாவல்கள். அதுகுறித்த எண்ணற்ற கட்டுரைகள். கருத்தரங்குகள். இவை மொத்தத்தையும் கருத்தாக்க விவாதங்களாக வளர்த்தெடுப்பவர்கள் தத்துவவாதிகள் மற்றும் கோட்பாட்டாளர்கள்.

ஏன் இதனை இத்தனை நீட்டிச் சொல்ல வேண்டியிருக்கிறது என்றால் அது ஒரு பாரம்பரியம்.

எழுத்துக்கான சிந்தனையின் பிரதான நேர்க்கோட்டு வழி. மட்டுமில்லாமல் இவை யாவும் கலை மீதான புரிதலையும் அது சார்ந்த உழைப்பையும் முன்னெடுத்துச் செல்ல தொடர்ந்து உதவும்.

ஆக..

* Just Now

* Being at this time, now existing.

இதன் அர்த்தங்களை உங்கள் மனம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். இதை ஓர் அடித்தளமாக உள்ளுக்குள் கிடத்தி வையுங்கள். அதன் மீது தான் உங்கள் சிந்தனையை வடித்தெழுப்ப போகிறீர்கள்.

பொதுவாக, ஒரு கவிதையை எழுதும்போது ஒரு கருப்பொருளை மனம் யோசிக்கும்.

யோசித்ததை அதன் சார்ந்த பிற பொருட்களோடு போட்டு உள்ளுக்குள் உருட்டிக் கொண்டே இருக்கும். அவைகளைச்  சீர்ப்படுத்திக் கொள்வதற்கான சொற்களஞ்சியத்தை ஒரு மொழி கையகப்படுத்தி வைத்திருக்கிறது. அது ஒரு பக்கம்.

இப்படி மனம் உருப்போட்டுக் கொண்டிருக்கும் கருப்பொருளின் கனம் குறைந்திடாமல் ஏற்கனவே நம் கையிலிருந்து உதவும் சொற்கள் நமக்கு போதுமானதாக இருக்கிறது. இது ஒரு பக்கம்.

இந்த இருமுனை அடிப்படையில் அவையே ஒரு கவிதையை நிறைவு செய்வதாக நம்பி விடுவது ஒரு விபத்து.

பிறகு என்னத்தான் செய்ய வேண்டும் ?

வாழ்வு ஒவ்வொரு கணமும் நகர்ந்துக் கொண்டே நிகழ்ந்துக் கொண்டே இருக்கிறது. அது எண்ணற்ற செய்திகளை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கடத்துகிறது.

ஓர் உணர்ச்சியின் ஆதார நிலையை நாம் யோசித்துவிடுவோம். அந்த யோசனை மட்டுமே அவ்வுணர்ச்சிக்கு போதுமானதா என்றால், இல்லை. உணர்வைப் பல கூறுகளாக உடையுங்கள். அல்லது பிரியுங்கள்.

உடைப்பதென்றால் சுக்கல் சுக்கலாக. பிரிப்பதென்றால் இழை இழையாக. அல்லது – இரண்டுமே சாத்தியமென்றால் இரண்டுமே.

Segmentation & Fragmentation

இது கிட்டத்தட்ட ஒரு கணிதச் சூத்திரம் போலத்தான். நுட்பங்களையும் மெல்லிய நுணுக்கங்களையும் வாழ்வின் ஆதார இயக்கங்களில் கவிதை மனம் கொண்டு ஆராய்ந்தால் கிடைப்பவை எண்ணிக்கையில் அடங்கா.

ஒரு வட்டம் வரைய வேண்டுமென்றால் அதற்கொரு மையப்புள்ளி வேண்டும் தானே..? அதே போல் தான் நவீனக் கவிதையும். ஒரு மையத்தை வைத்துத் தான் வட்டமென அது சுழலும்.

ஆனால் மையம் அப்பட்டமாக வெளித் தெரியாது. அப்படித் தெரிந்தால் அது தன் நவீனத்தை இழந்துவிடும்.

ஒரு விஷயத்தின் மீதான பார்வையை நீங்கள் ஆழப்படுத்த சாதாரணத்திலிருந்து அசாதாரணத்துக்குள் நுழைய வேண்டும்.

அதற்கு அதீதச் சிந்தனை தேவை. ஒரு Normal  கோணத்திலிருந்து மனம் மேலெழும்பி இன்னொரு கோணத்தைக் கவனித்தல். இதெல்லாம் சாத்தியமா என்கிற பொதுக்கேள்விகள் உள்ளுக்குள் புகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

ஆதியில் மனிதன் தன்னை ஒரு விஷயத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டானல்லவா !

அதை நாம் இனியாவது முழுமையாகச் செய்ய வேண்டும். நம்மைச் சுற்றி நிகழும் ஒவ்வொன்றின் கணமும் நமக்கானவை. அதில் நாம் இருக்கிறோம். அது நம்மில் இருக்கிறது.

இதற்கு மெனெக்கெடல் அவசியம். அதற்கு ஒரு கைவிளக்காக கவிதைக் குறித்த கோட்பாடுகள் பயன்படுகின்றன.

ஒரு நவீனக் கவிதைக்குள் கவிஞன் எண்ணற்ற புள்ளிகளை தாறுமாறாக கிடத்தி வைத்து விடுகிறான். அப்புள்ளிகளை இணைக்கும்  திறன் வாசிப்பவரைப் பொறுத்தது. ஆள் ஆளுக்கு அதன் இறுதி வடிவம் வெவ்வேறானதாக இருக்கலாம். ஆனால் அதற்கான சாத்தியங்களை கவிஞன் கவிதைக்குள் செய்து வைத்தல் அவசியம்.

அப்போது வாசகனுக்கு அது வாசிப்பதற்கான வாசலாக அமைவதோடு, அதனுள் நுழைந்து யோசிப்பதற்கான அமைப்பாகி, ஓர் எழுத்தாளனாய் பரிணமித்து அதிலிருந்து வெளியேறவும் உதவும்.

நாம் எல்லாரும் நவீனக் கவிதைக்கான Attempt -ல் கொஞ்ச தூரம் பயனித்துவிட்டோம் தான். சிலர் தனக்குத் தெரிந்தும். சிலர் தனக்கே தெரியாமலேயும்.

இன்றையச் சூழலில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தக் கவிதை என்ற வடிவம் நீண்ட பயணத்தின் பின் பலரின் கையில் வந்து சேர்ந்திருக்கிறது.

அதை எத்தனைப் பேர் உணர்ந்து அதைக் கையாள்கிறார்கள் என்பது தெரியாது. எல்லோருக்கும் சொல்லுவதற்கு ஏதோ ஒன்று இருக்கிறது. அதை வெளிப்படுத்த எடுத்து பயன்படுத்தும் ஓர் எளிய கருவியாக கவிதை மாறியிருப்பதும் ஒரு விபத்து தான்.

இன்றைய நவீனமயமான வாழ்வுமுறை மற்றும் உபயோகத்துக்கு வந்துவிட்ட தொடர்பு ஊடக நவீனங்கள், எல்லாவற்றையும் சாத்தியப்படுத்தும் வகையில் மொழியையும் அது சார்ந்த சிந்தனைச் சுதந்திரத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் பாதையை எண்ணற்ற திசைகளிலும் திறந்து வைத்திருக்கிறது.

இப்படியொருச் சூழலில் நவீனக்கவிதைகள் குறித்து பேசுவதற்கு விஷயங்கள் இருப்பதாக நம்பத் தோன்றுகிறது. இதில் இரண்டு இயங்குத் தளங்கள் உண்டு.

ஒன்று கவிதைகளைப் படைக்கும் கவிஞன்

இன்னொன்று அதனை அணுகி வாசிக்கும் வாசகன்.

என் வாசிப்பு பயணத்தில், என்னளவில் எனக்கு இந்தக் குழப்பங்களை உண்டு பண்ணும் காலக்கட்டம் எனது வாசிப்பைத்  தடுக்கும் வேலையை மும்முரமாக எனக்குள் நடத்திக் கொண்டே இருந்தது. புதுக்கவிதைக்கும் நவீனக்கவிதைக்கும் வித்தியாசம் உணரத் தெரியாக் காலத்தில் அதை விடாமல் நெருங்கிப் புரிந்துக்கொள்ள முயன்றுத் தோற்ற நிமிடங்கள் கணக்கில் அடங்காதவை.

வெறும் ஆர்வம் மட்டுமே உள்ள எந்தவொரு வாசகனும் ஒரு நவீனக்கவிதையை வெகுச் சுலபமாக புறக்கணித்துவிடுகிற வாய்ப்பு அதிகம்.

கட்டுரையின் தொடக்கத்தில் ஆட்ரியன் மிச்சலின் கூற்று அதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.

அந்தப் புறக்கணிப்பை வாசகன் செய்கிறானா அல்லது அந்தக் கவிதை அவனை நிராகரிக்கிறதா..? இரண்டு கோணத்திலிருந்தும் உருவாகும் இந்தக்கேள்வி இரண்டுவிதமான பதில்களைக் கொண்டுள்ளது.

ஆம் / இல்லை என்ற இரண்டு பதில்களுமே சாத்தியம்.

என்னைப் பொருத்தவரையில் அதுதான் இதிலிருக்கும் புதிர்த்தன்மையும் சவாலும் ஆகும்.

இதெல்லாம் என்ன?

எந்தவொரு நவீனக்கவிதைக்குள்ளும் ஆதாரமாக சஞ்சாரிக்கும் ஓர் உணர்வை ஒத்திசைக்க,  ஒரு வார்த்தையிலிருந்து அடுத்த வார்த்தைக்குப் பரிமாற்றம் பெய்யும்போது இரண்டு வார்த்தைகளுக்கும் இடைப்பட்ட வெளியில் இன்னும்கூட சொல்லுவதற்கு இருக்கக் கூடிய சொற்களை அப்படியே புதைத்துப் பழகுதல் அவசியம்.

எல்லாவற்றையும் எப்போதும் கவிதைக்குள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் நவீனக் கவிதையில் இல்லை.

எதையுமே சுருங்கச் சொல்லுவதும், சொன்னச் சொற்களை மீண்டும் மீண்டும் (Cliche) ஒரு கவிதைக்குள் பயன்படுத்தப்படாமல் தவிர்த்தலும் முக்கியம். பல கவிஞர்கள், எழுதியது எங்கே வாசகனுக்குப் புரியாமல் போய் விடுமோ என்று கவிதைக்குள் தேவையில்லாத ஒரு கவலையை தானே உருவகித்துக்கொண்டு ஓர் உறுத்தல் போல, தானே கவிதையை Justify பண்ணுவதை பரவலாய் காண முடிகிறது. அது நிச்சயமாய் அவசியமில்லாத ஒன்று. கவிதையின் ஆதார வடிவமான நவீனத்தை அது சிதைத்துவிடும்.

அதே போல இன்னொன்று, கவிதைக்குள் கவிதையைத் துருத்திக்கொண்டு கவிஞன் ஒரு Suggestion சொல்லுவது. அல்லது அதுபோன்ற ஒன்றைக் கவனமாக சொல்ல முயல்வது. அதுவும் தேவையற்ற ஓர் Extra செயல்.

நம் வாசகனை நாம் நம்பவேண்டும். அப்போது தான் பரஸ்பரம் அனுபவம் விரியும்.

வெவ்வேறு கோணங்கள் அர்த்தப்படும். அது ஒரு Relay Race போலத்தான். நம் சிந்தனைக்குள் ஓடிக் களைத்து ஓரிடத்தை அடைந்ததும் வெளிப்படும் கவிதை, வாசகனின் கைக்கு பரிமாற்றம் கொண்டு, அங்கிருந்து அவனுடைய  சொந்தக்  கற்பனை வெளிக்குள் அவன் ஓடத் தொடங்குவான்.

அவனுடைய வாசிப்பனுபவத்தை அது பாவும் கவிதையின் எல்லையை அப்படியொரு Justify அல்லது Suggestion மூலம் அதனை எழுதிய கவிஞனே ஏன் குறுக்க வேண்டும்?

வாசகனுக்கோ, அவனுள் விரியக்கூடிய வெவ்வேறு அனுபவ சாத்தியப்பாடுகளுக்கோ நாமே ஒரு வேலியை எதற்கு எழுதியக் கவிதையைச் சுற்றிலும் நட வேண்டும்?

அவசியமில்லை.

குழந்தைகள் இந்த உலகைப் பார்வையால் புரிந்துக்கொள்வதில் தம் வாழ்வைத் தொடங்குகின்றன.

ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு பொருளும் அதன் வடிவங்களும் நிறங்களும் அசைவுகளும் அசைவற்றத் தன்மைகளும் காட்சியாக புலனுக்குப் போய்ச் சேர்வதில் தொடங்குவதாக இருக்கிறது மனிதக் கணக்கு.

அதன்பிறகு தொடர்ச்சியாகக் காணும் ஒவ்வொன்றிற்கும் ஓர் அர்த்தத்தை விளங்கிக்கொள்வதில் ஓர் ஒருமித்த புரிதலுக்கு, கற்றல் தொடங்குகிறது. ஒவ்வொருவரும் தத்தம் அறிவுக்கொண்டு நமக்குத் தெரிந்தவற்றை செய்கைகளாகக் கற்பிக்கிறோம்.

எழுதப்பட்ட ஒரு கவிதை ஏற்கனவே உருவாக்கப்பட்ட வஸ்து போல காத்துக்கிடக்கிறது.  அதை அணுகிப் புரிந்துக் கொள்வதில் நமக்கிருக்கும் இடர்பாடுகள் ஏராளம்.

முதலில் அதன் கருப்பொருள். The Concept

பெரும்பாலும் கவிதைகளின் கருப்பொருளை, அதன் தலைப்பே சொல்லிவிடும். அது ஒரு சிறிய வாசல். ஒரு மொழியைக்கொண்டு எந்தவொரு கவிதையும் வாசிக்கத் தடையில்லை. எந்த மொழியில் கவிதை எழுதப்பட்டிருக்கிறதோ அந்த மொழி ஏற்கனவே தெரிந்திருந்தால் போதும். ஆனால் அதன் கருப்பொருளைப்  புரிந்துக்கொள்ள ஏற்கனவே கொஞ்சம் அறிந்திருத்தல் முக்கியமாகிறது. அறிந்திருத்தல் என்பது ஒவ்வொரு வாழ்வுப்பின்னணி பொறுத்தும் வித்தியாசப்படும். தன்னைச் சுற்றி இருப்பதையெல்லாம் அறிதல்.

நிலவியல், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், சிந்தனைச் சுதந்திரம் (அ) கட்டுப்பாடு இவற்றைப் பொறுத்தும்கூட மாறுபடும்.

அதன்பிறகே கருப்பொருளின் உள்ளடக்கத்துக்குள் மனம் இறங்கவும், லயிக்கவும் – புதிய தரிசனங்களைச் சிந்தனை வழியே கவிதையின் நிலைத்தன்மையையும் மீறிக் கண்டடையவும் முடியும்.

இதற்கெல்லாம், மனித இயல்பின் அடிப்படை உந்துசக்தியான காண் அறிவே (Observation) துணை செய்யும். Observing each and everything is a key point to understand an Art. இது கவிதைக்கு நூறு சதவீதம் பொருந்தும். நம்மைச் சுற்றி இறைந்துக் கிடக்கும் ஒவ்வொரு பொருளும் அதன் தன்மைகளும் அசைவற்றுக் கிடந்தாலும் அவைத் தொடர்ந்து நம் மீது வினையாற்றுகின்றன. இது ஓர் உளவியல் பாங்கான நிதர்சனம்.

அக்றிணைப் பொருட்கள் கூட உயர்திணை மனோபாவத்துக்கு வாசிப்பவனை இட்டுச்செல்லும் மாயத்தன்மை கவிதைகளுக்கு உண்டு.

ஏனெனில் இங்கு நம்மைச் சுற்றி இடம்பெற்றிருக்கும் பெரும்பாலும் பொருட்கள், நாம்  நமக்காக நம் வசதிக்காக வடிவமைத்துக் கொண்டவை. அது நம் வாழ்வு நகரும் ஒவ்வொரு கணத்தின் மீதும் தம்மளவில் ஓர் எளியப் பங்கைச் செலுத்தும் வல்லமைப் படைத்தவை.

பொருட்களுக்கான மேலோட்ட அர்த்தங்களை நாம் அடிப்படைப் புரிதலுக்காக உற்பத்தி செய்து அகராதிகளில் புதைத்து வைத்திருக்கிறோம். அதனையெல்லாம் மீறி அவை வேறு வேறு அர்த்தங்களை உண்டு பண்ணக்கூடியவை.

ஒரு கவனித்தல். அதைத் தொட்டு ஒரு புரிதல். இதற்குத்தான் அந்த Observing  தேவையாகிறது.

அது எல்லாவற்றையும் கடந்து வேறொன்றை நமக்குக் கடத்துவதற்காக முயல்கின்றது. அதைப் பிரதானப்படுத்துவதற்கென்றே சம்பவங்கள் நிகழ்கின்றன.

ஒரு சம்பவம் ஏனைய விஷயங்களை உள்ளடக்கி நம்மை எதிர்கொள்ளவும் அல்லது வெறுமனே கடந்துச் செல்லவும் கூடும். அப்படி எதிர்கொள்வதற்கும் வெறுமனே கடந்துப் போவதற்குமான வித்தியாசம் என்பது நம்முடைய கவனித்தலின் கூடுதல் ஆற்றலைப் பொறுத்த விஷயம்.

அதற்குள்ளே ஒரு செய்தி இருக்கும். அது வேறொன்றை நினைவில் மீட்டும். அந்த நினைவு முற்றிலும் வேறொன்றை சம்பந்தப்படுத்தி ஒரு புது அர்த்தத்தை மனத்தில் உருமாற்றம் செய்யும்.

இன்றுக்கும் அன்றுக்குமான, இப்போதைக்கும் அப்போதைக்குமான, இக்கணத்துக்கும் அக்கணத்துக்குமான ஓர் இணைப்புப் பாலத்தை பாதி நிமிடத்துக்கும் குறைவான நேரத்துக்குள் நம் மூளைக்குள் இருக்கும் நியூரான்கள் (மனம்) கட்டிமுடித்து விடும்.

அது ஓர் ஒப்புமை (Simile) – Simply a Comparison

ஒரு Observation- ம் அதற்கு ஈடான ஒரு Comparison -ம் எந்தவொரு கவிதைக்கும் இன்றியமையாத விஷயம். அவற்றைத் திறம்பட செய்பவை உருவகங்கள் மற்றும் படிமங்கள் ஆகும்.

அவ்வகை உருவகங்கள் மற்றும் படிமங்கள் ஒரு கவிதையின் கருப்பொருளையும் அதன் உள்ளடுக்குகளையும் படிப்படியாக மனத்தில் வளர்த்தெடுக்க உதவுகின்றன. இந்த வழிமுறையில் ஒரு நவீனக்கவிதையை அணுகும் வாசகன், அதனைவிட்டு எளிதில் வெளியே வருவதில்லை.

அது அவனுக்குள் எண்ணிலடங்கா வாசல்களைத் திறந்துவிட்டு கட்டற்று பயணிக்கத் தூண்டும்.

சரி.

காட்சி எனப்படும் Visual -க்கும் படிமம் எனப்படும் Image – க்கும் என்ன வித்தியாசம்?

ஒரு  Visual என்பது வெறுமனே ஒன்றைக் காண்பது மட்டுமே, அதற்கு எந்தவோர் அர்த்தமும் கிடையாது. அங்கே எந்தவோர் அர்த்தமோ, அர்த்தத்தின் தேவையோ இல்லை. குழந்தைகள் காண்பது வெறுமனே ஒரு காட்சி மட்டுமே.

ஆனால் போதிய அறிவை, கற்றல் மூலம் அடைந்துவிட்ட (Adults) நமக்கு  ஒரு Image என்பது  அப்படியல்ல. வெறுமனே காணும் ஒரு காட்சியல்ல. அது சில அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. அந்த Image –க்குள்  அடங்கி இருக்கும் ஒவ்வொரு  விதமான வடிவுக்கும் ஒரு பெயருண்டு. அது உள்ளடக்கிப் பிரதிபலிக்கும் ஒவ்வொரு நிறத்துக்கும் ஒரு பெயருண்டு. இப்படி, புரிதலுக்கான அர்த்தங்களைக் கொண்டு தாங்கி நிற்பது Image.  அதாவது நாமரிந்திருக்கும் படிமம் என்னும் பிரதிமை.

அதனால் தான் Photography -யில் Image  என்கிற ஆங்கிலச்சொல் அர்த்தம் பொதிந்து பயன்படுத்தப்படுகிறது. அதையே நாம் இன்னொரு சொல்வழக்கைக் கொண்டு நவீனமாக Visual Beauty  என்று சொல்கிறோம். கவனியுங்கள் வெறும் Visual  அல்ல கூடவே Beauty என்ற இணைப்புச்சொல் அவசியமாகிறது. அப்படித்தான் அது Image  வகையைச் சார்ந்தது ஆகிறது.

ஆனால் அதையும் இன்று இன்னும் சுருக்கி..

‘ என்ன விஷூவல்டா..! ‘ -என்றொரு வியப்பைப் பகிர்ந்துக் கொள்கிறோம். சொல்லப்போனால் புழக்கத்தில் ஒரு Default Understanding -ல் அதனை அனுசரித்துப் பழகிவிட்டோம்.

ஆனால் மகாகவியான பாரதிக்கு, அதிலிருக்கும் வித்தியாசங்களின் மீதான துல்லியத்தில் ஏதொரு சந்தேகமோ குழப்பமோ கிடையாது. இந்த இயற்கையைக் கண்டு,  தன் கவிதைக்குள் மிக அழகாகக் கேட்டார்.

வானகமே,  இளவெயிலே,  மரச்செறிவே,  நீங்களெல்லாம்  கானலினீரோ?- வெறுங் காட்சிப் பிழை தானோ? ‘-என்று

அதனால் தான் அவன் மகாகவி. நமக்குக் கற்றுத்தந்த ஞானகுரு. அறிவியல் கண்கொண்டு இயற்கையைத் தரிசித்துக்கொண்டே, அதை கவிதைப் படிமமாக உயர்த்தத் தெரிந்த ஓர் இனிய கலாரசிகன் அவன்.

பிரதிமை எனப்படும் படிமம் வெறுமனே காணும் பொருட்களின் அர்த்தங்களை மட்டும் தாங்கி நின்றால் அது,  Photography -க்கு சரி. ஆனால் கவிதைக்கு?

அதற்குத்தான் ஏற்கனவே நம்மிடம் இருக்கும் உருவகம் என்ற பதம் பயன்படுகிறது.

Metaphor,  என்று இதனைத்தான் ஆங்கில நவீனக் கவிதைகளில் கையாள்கிறார்கள். உருவகம்.

(அதைப் பற்றி விரிவாக வேறொரு கட்டுரையில் அலசுவோம். இப்போதைக்கு இந்தக் கட்டுரைக்கு ஏற்றவாறு சுருக்கமாக)

இந்த Metaphor ( உருவகம்) என்பது, ஓர் உருவம் (படிமம் / பிரதிமை) ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறுதல் கொள்ளும் தன்மையையும், அப்படி மாறும் கணத்தில் கருக்கொள்ளும் வித்தியாசத்தையும் கவிதைக்குள் அடையாளப்படுத்த உதவுகிறது.

அவ்வகையான உருவகம் (Metaphor)ஒரு பிரதிமையோடு ரசவாதம் ஆகும்போது அந்தப் பிரதிமை, ஒரே பொருளின் (அல்லது) தன்மையின் சாயல்கொண்ட வெவ்வேறு அர்த்த சாத்தியங்களை ஓரிடத்தில் குவித்து முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை நம் மனத்தில் கடத்த முயல்கின்றன.

இந்தக் கவித்துவக் கலவையை ஒன்றுப்படுத்தி பயன்படுத்தும் விதமாகத்தான் இன்றைய நவீனக்கவிதைப் புழக்கத்தில் படிமம் என்றோ Metaphor  என்றோ அவரவர் புரிதல் வசதிக்கேற்ப நாம் சொல்லியும், பிறரைப் பயமுறுத்தியும் பழகுகிறோம்.

அகராதியைப் புரட்டிப்பார்த்து அதனதன் (Metaphor &படிமம்) சொற்களுக்கான தனித்தனி அர்த்தங்களை மட்டுமே கையில் வைத்துக் கொண்டு, ஒரு நவீனக்கவிதையை வாசகன் ஒருவன் நெருங்குவானென்றால் குழப்பமும், முற்றிலும் வேறொரு அர்த்தப் புரிதலையும்  மட்டும் தான் அவன் அக்கவிதையிலிருந்து பெற இயலும்.

இது, சொற்களுடனான கவிதைப்பயணத்தை திசைத் தொலைந்த ஒரு படகு, பெயரற்ற ஒரு தீவில் ஒதுங்கியோ அல்லது பாறைச்சூழ் கரை ஒன்றில் மோதி உடைந்தோ, மேற்கொண்டு முடியாமல் தன் பயணத்தை முடித்துக்கொள்ளும் விபத்துக்கு ஆட்பட்டது போலாகிவிடும்.

இவ்வகையான சொற்களின் மெல்லிய வித்தியாசத்தில்தான் ஒரு நவீனக்கவிதை தன் அடிப்படை அர்த்தத்திலேயே வாசகனுக்கும் தனக்குமான இடைவெளிகளோடு காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஒருவர் புரிந்தது என்பதும். இன்னொருவர் தனக்குப் புரியவில்லை என்பதும் இந்த வித்தியாசங்களிலிருந்து தொடங்குவதாகவே  நான் நம்புகிறேன்.

அப்பேற்பட்ட இடைவெளிகளை ஒரு வாசகன் எளிதாகக் கடக்கவே கவிதைக்குள் கையாளப்படும் ஒவ்வொரு உத்திகளும் புரிதலோடு பகிர்ந்துக் கொள்ளப்பட வேண்டும். அதற்கான கலந்துரையாடலாக இந்தக் கட்டுரை அமையவேண்டும் என்று விரும்புகிறேன். அப்படிப்பட்ட புரிதலுணர்வை உண்டு பண்ணவே தொடர்ந்து நவீனக் கவிதைத் தளத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எண்ணற்ற கோட்பாடுகள், தொடர்ந்து வெவ்வேறு காலக்கட்ட நிலைகளில் கருத்தாய்வு செய்யப்பட்டு அவைகளின் சிக்கலான வடிவங்கள் எளிமையாக விவாதிக்கப்பட்டு அவைகள் முறையாகத் தொகுக்கப்படுகின்றன.

நவீனக் கவிதைகள் மீதான அதீத ஆர்வமுள்ளவர்கள் அவற்றைத் தேடிப்பிடித்து, அதிலுள்ளவற்றை தம் தொடர்ந்த வாசிப்பனுபவத்தினூடே அடையாளப்படுத்தி,  தன் புரிதலுணர்வின் நிலைத்தத் தன்மையிலிருந்து அடுத்த அடுக்குக்கு நகர்ந்துக் கொள்ள முடிகிறது.

அதுபோன்ற முயற்சிகளிலும் அக்கறையான உழைப்பிலும் தொடக்கத்தில் சொன்ன அந்த அடிப்படை Observing  என்பது ஒரு கவிமனத்துக்குள் கூர்மையாக வேறொரு தளத்துக்கு Update ஆகிறது. அது ஒரு கலாரசிகனுக்கு அத்தியாவசியமான ஒன்று.

Observe செய்தவற்றை என்ன செய்வது?

அவற்றை அப்படியப்படியே எழுதி அதை ஒரு படைப்பாகக் காட்டிக்கொள்ள முடியாது. Observing  ஒரு அடிப்படைக் கருவி மட்டுமே.

To utilize an Observed mind in a Poetic Space  என்பதே கவிஞனுக்கான முக்கியத்துவம். Of course, கூர்மை அவதானிப்பு விரும்பும் வாசகனுக்கும்.

நிகழ் சம்பவங்களும் அவை நம் மூளைக்குள் கடத்த முயலும் செய்தியின் பரிவர்த்தனையும் சீர்ப்படுத்தாத ஆவணக் குறிப்புகள் போல தொடர்ந்து மனத்துக்குள் முண்டும்போது உவமானத்துக்கான (Simile) வெற்றிடம் ஒன்று உருவாகும் நினைவின் தளத்தில் ஒரு Inspiration உண்டாகிறது.

அவை பழைய தகவல்களின் தொகுப்பிலிருந்தோ நினைவுகளின் அடுக்குகளிலிருந்தோ துருத்திக்கொண்டு கவனம் ஈர்ப்பவை. அந்த ஒத்த சாயலின் நிறமே, கவி மனத்தின் மெல்லிய தூண்டலாக ஒரு தொடக்கத்தை உண்டு பண்ணுகிறது.

அப்படி மனத்தின் தூண்டுதல் பெற்ற நிலையை கையகப்படுத்திக் கொள்ள கவிதையின் பழகு வடிவம் தயாராகிவிடும்.

பழகு வடிவம் நவீனக் கவிதையாக இருக்கும்பட்சத்தில். அப்படிப் பழகும் வடிவத்துக்குள் சிறு சிறு உத்திகள் தத்தம் கோட்பாடுகள் சார்ந்து ஒரு ரசவாதத்தை உண்டுபண்ணும் போது கவிஞனின் மொழி, தன் கூர்மையை இழந்துவிடாமல் இருக்கத் தயாராகிவிடுகிறது.

கவிதைக்கான கருப்பொருளின் சூல் (Conceptual genesis) அனைத்தையும் தன் மையத்தை நோக்கி உள்ளிழுக்க ஆரம்பிக்கிறது. மையம் நோக்கிக் குவியும் துணைப் பொருட்கள் உருவகங்களாக, பிரதிமைகளாக ஒன்றைச் சுற்றி மற்றொன்றாக வளர்கிறது.

இந்தக் கட்டுமானத்தின் அடர்த்தியில் கவிதையின் மையம் சட்டென்று கண்ணுக்குப் புலப்படாத அளவுக்கு ஓர் அணுவை விடவும் சிறுத்து கவிதைக்குள் மறைந்துவிடுகிறது.

Just Now (or) Being at this time (or) now existing என்ற நவீனம் கவிதைக்கான Visual Image -ஐ, ஸ்தூலப் பொருளாக மட்டுமே இருக்க வேண்டிய கட்டாயத்திலிருந்து சொற்களின் அர்த்தச் செறிவுக்கான இயங்குதளமாகவும் மாற்றிவிடுகிறது.

[இங்கே, மனம் குழம்பும் விதம் / அல்லது குழம்பியது போன்றத் தோற்ற மயக்கம் ஏற்படுத்தும் நனவிலித்தன்மை (Sub Consciousness) பற்றிச் சொல்லவில்லை. அது சர்ரியலிஸம் (Surrealism) குறித்த விளக்கமாகிவிடும். சர்ரியலிஸம் முற்றிலும் வேறொரு வடிவக் கோட்பாடு.

அதைப் பற்றி விரிவாக வேறொரு கட்டுரையில் பேசலாம். ஆனால் – நவீனக் கவிதைக்குள் சர்ரியலிஸத்தின் குணப் பண்புகள் படிமங்களின் சிக்கலான வடிவ மயக்கத்தோடு கலந்துவிடும் வாய்ப்பு அநேகருக்கு எழுதும்போது அறியாமலே ஏற்படும். அது ஒரு கோட்பாடு அவசியப்படாத சிந்தனையின் விபத்து. ]

சொற்களின் அர்த்தச் செறிவுக்கான இயங்குதளம் என்பது தன்னிலிருந்து மேலெழும்பச் செய்யும் படிமங்களை வகைப் பிரிக்க முயலாமல், அப்படியே கவிதையின் கருப்பொருள் சுமந்து கவிதையின் மீது மிதக்க விடுவது. பின் அதுவே கவிதையாகவும் மிதப்பது.

அடுத்து –

என்னோடு இணையத்திலும், சிறு சிறு ஊடக வாய்ப்புகளிலும் எழுதியபடி தொடர்ந்து பயணிக்கும் ஏனைய சக பயணிகளில் இருவரின் இரண்டு கவிதைகளையும், அதனை உள்வாங்கிக் கொண்ட எனது அனுபவப் பார்வையையும் இங்கு பகிர்ந்துக் கொள்கிறேன்.

கட்டுரையில் இதுவரை சொன்னவற்றின் சாரம் / சாயல்களை அந்தக் கவிதைகளுக்குள் அணுகி உங்களால் கண்டுக்கொள்ள முடிந்தால் உங்களைப் போலவே நானும் மகிழ்வேன்.

முதல் கவிதை அவனி அரவிந்தனுடையது.

இந்தக் கவிதை இயற்கையின் உயிரியக்கத்தை, கவிஞனால் துல்லியமாக அவதானிக்க முடிந்த தருணத்தை எனக்கு உணர்த்தியது. நான் அதை வாசித்தது ஓர் இரவில். என் இரவின் அந்த  அகாலத்தை இதனுள் இருக்கும் இசையின் ஒவ்வொரு அசைவும் நுண்ணிய அதிர்வோடு மீட்டிக் கொண்டே இருந்தது.

1. எனதிசையின் மரணம்

பழுப்பு நிறப் புழுக்கள்
புசித்து மிஞ்சிய சடலத்திலிருந்து
மிக மெல்லிய இசை துளிர்க்கிறது

அவை மழைத்துளிகள் ஓரிலை நுனியினின்று
தெப்பத்திற் தெறிப்பதற்கு முன்பான
மிகச் சன்னமான இசையை ஒத்திருக்கிறது
எடையற்ற அவ்விசைக்குறிப்புகள்
காற்றுக்கும் மணல்வெளிக்குமிடையில் ஓவியமாகி
சிற்றோடைக்கும் சிறுபாறைகளுக்குமிடையில் ரகசியமாகி
அடங்கா ஆறுகளுக்கும் தடுப்பணைகளுக்குமிடையில் ஏக்கம் பெருகி
நீலக்கடலுக்கும் நீளும் கரைகளுக்குமிடையான
மாரடிப்பில் மரித்துப் போகிறது
இவ்வாறாக எனதிசையின் மரணம் இனிதே நிகழ்கிறது

*****

அவனி அரவிந்தன்

இனி, கவிதைக் குறித்து எனது பார்வை.

பழுப்பு நிறப் புழுக்கள்..

சடலத்திலிருந்து உருவாகி அந்தச் சடலத்தையே மீண்டும் புசித்து, பிறகு மிஞ்சும் சடலத்திலிருந்து மிக மெல்லிய இசை ஒன்று துளிர்க்கிறது.. ஒரு சடலம், சடலமாவதற்கு முன்பு உடலாக இருந்திருக்கும்..

உயிர்த்தன்மை உள்ளது உடல். உயிரற்றது சடலம்.

சடலத்திலிருந்து இன்னொரு உயிர் உருப்பெறுகிறது, அவை புழுக்கள்.. அது சடலத்தைப் புசிக்கிறது. புசித்தது போக மிஞ்சும் சடலத்திலிருந்து இன்னொரு உயிர்ப்பு துளிர்க்கிறது.

அது மெல்லிய இசை –

இசையின் அரூபத்துக்கு உயிர்க் கொடுக்க விழைகிறது கவி மனம்.

புழு – சடலம் – மெல்லிய இசை. இம்மூன்றும் வெவ்வேறு அல்ல… ஒற்றை உயிர்த்தன்மையின் மூன்று பரிமாணங்கள். அப்படி மிஞ்சும் அச்சடலத்திலிருந்து துளிர்க்கும் அம்மெல்லிய இசையை, நுட்பமாய் ஒப்புமைப்படுத்த கவிதைக்குள் மேலும் துளிர்க்கிறது இன்னொரு படிமம்…

//அவை மழைத்துளிகள் ஓரிலை நுனியினின்று
தெப்பத்திற் தெறிப்பதற்கு முன்பான
மிகச் சன்னமான இசையை ஒத்திருக்கிறது //

வியந்துபோக வைக்கும் துல்லியத்தை ஒப்புமைப்படுத்தும்போதே அதற்குள்ளும் மிகச் சன்னமான இசையொன்றை முன் வைக்கிறான் கவிஞன்.

( இவ்விடம் சர்ரியலிஸத்தின் விளிம்பை மையத்துக்கு இழுக்கிறது.)

******

மழைத்துளிகள் ஓரிலை நுனியினின்று தெப்பத்திற் தெறிப்பதற்கு முன்பான..

அதிநுட்பமான படிமத்தை மனம் எட்டிப்பிடிக்க வேண்டியுள்ளது.வாசிப்பவனின் ரசனைக்கு வரைப்படமொன்று எழுதும் வாய்ப்பைத் தரும் கவிதைக் கணம் அது.

எடையற்ற அவ்விசைக்குறிப்புகள்.

காற்றுக்கும் மணல்வெளிக்குமிடையில் ஓவியமாகின்றன. சிற்றோடைக்கும் சிறுபாறைகளுக்குமிடையில் ரகசியமாகின்றன.அடங்கா ஆறுகளுக்கும் தடுப்பணைகளுக்குமிடையில் ஏக்கம் பெருகி நீலக்கடலுக்கும், நீளும் கரைகளுக்குமிடையான மாரடிப்பில் மரித்தும் போகின்றன.

ஓர் ஒப்புமை –

இலைநுனி மழைத்துளியாக வீழ்தலில் தொடங்கும் சன்னமான இசைக்குறிப்பு..காற்றுக்கும் மணல்வெளிக்குமிடையில் ஓவியமாகும்போது நெளிநெளியாய் விரிவதும்..சிற்றோடைக்கும் சிறுபாறைகளுக்குமிடையில் கூழாங்கற்களைப் போல ரகசியமாவதும்..அடங்கா ஆறு – தடுப்பணை – இவைகளுக்கிடையில் ஏக்கம் பெருகுவதோடு – நீலக்கடலுக்கும் நீளும் கரைகளுக்குமிடையான மாரடிப்பில்..

அத்தனை வேகமெடுத்து..

அதன் பரிணாமப் பெருகுதலை வளர்த்தெடுத்துச் சென்று மரித்த இடத்தில், அவ்விசையின் மரணம் இனிதே நிகழ்ந்துவிடுகிறது.

புழுத் தின்று மிஞ்சிய சடலத்தில் துளிர்த்த இசையை, ஒப்புமைப் பயணத்தில் வளர்த்தெடுத்து நிகழும் இறுதி மரணம்..

மீண்டுமொரு உயிர்ப்பின் சுழற்சியாக கவிதையின் உருவெடுத்துவிடுகிறது.

( குறிப்பாக சடலம் என்பது, இக்கவிதையில் மனிதச் சடலமாகவும் இருக்கலாம் வேறு விலங்கோ அல்லது பறவையின் சடலமாகவும் இருக்கலாம் என்கிற தேர்ந்தெடுத்தலையும் வாசகனின் வாய்ப்புக்காக விடப்பட்டிருக்கிறது.. ) – அது ஒரு தோற்றத் தேர்வு (Perspective Choice).

இந்த Perspective மாறுதல் மற்றுமொரு கோணத்திலிருந்தும் இக்கவிதையை வேறு விதமாக வாசிக்கும்படி அழைத்துத் தூண்டுகிறது.

கூர்மையான லயிப்பு ரசனையுணர்வு உள்ள வாசகனுக்கு கூடுதல் மகிழ்ச்சிக்கான வாசக அனுபவமாகவும் அது உயரக் கூடும்.

(Because, அது ஒரு Universal Thought -க்கான அனுமதியும் கூட)

*****

இரண்டாவது கவிதை அண்ணல் எழுதியது.

சமூகம் – என்ற எளிய தலைப்பின் மூலமாக கவிஞன், தன் வாசகனை அழைத்துப் போய் நிறுத்தும் சூழல் வேறாக இருக்கிறது. புற இருப்பிலிருந்து அகத் தூண்டலுக்குள் பிடித்துத் தள்ளுகிறது கவிதை.

கவிதைக்குள் அடுக்கப்பட்டிருக்கும் Metaphor -ன் தன்மை இந்தக் கட்டுரைக்குள் பகிரப்பட்டிருக்கும் உருவகம் (Metaphor) / பிரதிமை (படிமம்) குறித்தத் தரவுகளை நினைவில் மீட்டு அசைப்போட பெரிதும் உதவுகிறது.

2. சமூகம்

*

நான் மூழ்கும் போது
என் தலைக்கு மேலே கடந்துப் போகிறது
யாரோ ஒருவனின் எலும்புக்கூடு

நான் மிதக்கும் போது
என் காலுக்குக் கீழே ஆழப் புதைகிறது
யாரோ ஒருவனின் சதைக்குவியல்

கிளையிலிருந்து கூடு நழுவும் அதிர்ச்சியில்
முட்டைகள் பறவையாகிப் பறந்ததை
நான் என் கண்களால் பார்த்ததைப் போன்றே

யாரோ ஒருவன் என் குரலால் அழைப்பதெல்லாம்
கையளவு நீருக்கான கருணையால் நிகழும்

*****
அண்ணல்

 

இனி, கவிதைக் குறித்த என் பார்வை.

// நான் மூழ்கும் போது

என் தலைக்கு மேலே கடந்துப் போகிறது

யாரோ ஒருவனின் எலும்புக்கூடு //

மூழ்க நேரும் கணத்துக்கு முன்பே மிதந்து வந்திருக்கக் கூடிய எலும்புக் கூடுகள், மூழ்கும்போது தான் தலைக்கு மேலே கடந்துப் போவதைக் கவனிக்க முடிகிறது.

அதுவும் –

ஒரு சுயநலச் சூழ் விளைவு தானே.

மூழ்கும்போது நிமிரும் தலை, பிழைத்தலுக்கான வாய்ப்புக்காக அண்ணாந்து ஏங்குதல் அல்லவா அந்த சுயநலச் சூழ்.

// நான் மிதக்கும் போது
என் காலுக்குக் கீழே ஆழப் புதைகிறது
யாரோ ஒருவனின் சதைக்குவியல் //

மூழ்குதலின் பின் மிதத்தல் –

ஆனால் காலுக்குக் கீழே புதைகிறது யாரோ ஒருவனின் சதைக்குவியல். தலைக்கு மேலே கடந்தது எலும்புக்கூடு.

காலுக்குக் கீழே புதைவது – அதுவும் – ஆழப் புதைவது சதைக்குவியல்.

இதில் கவிதை உட்பொருள் வடிவத்துக்கான Formation -ஐ ஏற்றி இறக்கி வைப்பதன் மூலம், Realism -ஐ முறுக்க முடிகிறது. அங்கே அது நவீனமாகிறது. காரணம் மிதத்தலுக்கும் புதைதலுக்குமான படிமத் திருகல் இதில் நிறைவேறுகிறது. புதைத்தல் உறைந்துபோதலின் / கெட்டித்துப் போதலின் (Solidify Base) அடிப்படையைக் கோரும் படிமமாகவும், மிதத்தல் கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு உயரும் நீர்மைத் தன்மையைக் (Liquid Being ) கொண்ட படிமமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இக்கவிதையின் தொடர்ச்சியும், அதனை நூலிழுத்த நேர் அர்த்தமிகு எளிமைத் தலைப்பும், வாசிக்கும்போது மனத்தைத் தத்தளிக்கச் செய்கிறது.

அதன்வழியே வாசிப்பு மனம் வேறொரு படிமத்தைக் கோரும் கவி விளைவைப் பகிராமல் இருக்க முடியவில்லை. இப்படியொரு அகத்தூண்டல் நிகழ்த்த முடிகிற கவிஞனின் வரிகளின் சிறகுகள், இச்சமூக நீர்மைக்குள் மூழ்கிப் பறக்க, முதல் இரண்டுப் பத்திகள் மூலமாக ரசவாதம் ஒன்றை எண்ணச் சிடுக்குக்குள் நிறைவேற்றுகிறது.

பின்வரும் பத்திகளை – என் மன நாவு, துண்டித்து உச்சரிக்கச் சொல்லி என்னை அதட்டுகிறது. எப்போதும் என் மன நாவு என்னும் பைத்தியக்காரனுடன் நான் பகை வளர்ப்பதில்லை.

ஒரு விவாத மேஜையை அர்த்தமற்ற தளமாக்கும் சூட்சும வரைப்படம் ஒன்று எப்போதும் வாசக முரண் எழும்பிய பக்கச் சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும். என்னுடைய வாசிப்புக்கான மௌன நிலவறையின் ரகசிய படிக்கட்டுகளின் வழியே இறங்கிச் செல்லும் இருளைப் போலிருக்கிறது.. பின்வரும் பத்தி..

// கிளையிலிருந்து கூடு நழுவும் அதிர்ச்சியில்
முட்டைகள் பறவையாகிப் பறந்ததை
நான் என் கண்களால் பார்த்ததைப் போன்றே //

நிலத்தின் மீது நிறுவப்பட்டிருக்கும் ஆகாயத்தை நிராகரிக்கிறது, இந்தப் பாதாள அறையின் முட்டைகள். மேலே இருந்தால் அவை கிளைகள்.

இங்கே, அது வேரின் கிளைகளாக ஒரு மனச்சித்திரம் தோன்றி, அதிலிருந்து நழுவும் கூடு, முட்டைகளைப் பறவைகளாக்கி எங்கே துரத்தும்?  அதிர்ச்சி…!

// யாரோ ஒருவன் என் குரலால் அழைப்பதெல்லாம்
கையளவு நீருக்கான கருணையால் நிகழும் //
உருமாற்றம் பெற்றுவிடுகிற அழைப்பு, கையளவு நீருக்கான கருணையாலா நிகழ்கிறது?

முட்டையின் ஓடு – கடக்கும் எலும்புக்கூடு
அதன் கலங்கும் கரு – ஆழப் புதைந்த சதைக்குவியல்.

மிதத்தலுக்கும் மூழ்குதலுக்குமான சிறகுகளின் அதிர்வு, வான் நோக்கி அண்ணாந்து, பிழைப்புக்கென சீறுகிறது. அதனை உந்துகிறது ஒரு குரல். யாரோ ஒருவனின் என் குரல்.

******

அவனி அரவிந்தனின் ‘எனதிசையின் மரணம்’  கவிதையில் இருக்கும் Visual Image -ம், அது வாசிப்பவரை உள்ளிழுத்துக் கொண்டு போய் நிறுத்தும் கவி மனத்துக்குரிய சுய மதிப்பீட்டுக்கான (Self Conscience ) பயணமும், அதன் அர்த்தச் செறிவின் உள்ளடக்கத்திலிருந்து விரியும் அந்த Universal  தன்மையும் மேலும் அலசலுக்குரியது. இங்கிருந்து உங்களின் சொந்த Perspective -ல் அதை அணுகியும் பார்க்கலாம்.

அண்ணலின் ‘சமூகம்’  கவிதை,  இயல் வாழ்வைப் பிரதி செய்யும்போது (Mimes ),  அதன் ஓட்டத்தில் கவிதைக்கான கருப்பொருளின் (Conceptual ) மையம் அதன் உள்ளடுக்கில் புள்ளியாகி மறைவதையும், கவிஞனின் Observed Materials -ன் புறத்தோற்றம், அக வயப்படும் ரசவாதம் ஒரு Inspiration -னாக செயல்பட்டிருப்பதையும், கவிதை தன் தலைப்பிலிருந்து விலகிப் போய்விடாதபடி மனிதக் குரலாக ஒலிப்பதையும் ஏகக் காலத்தில் எதிர்க்கொள்ள முடிகிறது. அதே கணத்தில் அது அனைத்துக்குமான குரலாகவும் உளவியல் உருமாற்றம் (Psychic Transition) கொள்கிறது.

******

இது எல்லாமே வாசிப்பவர் / எழுதுபவர் இருவரின் பிரச்சனைப்பாடுகள் தான். ஊர் கூடித் தேர் இழுக்கும் கதை தான் இது.

தேரின் முகப்போடு பிணைந்திருக்கும் இரண்டுப் பக்க வடங்களையும் இருவரும் (கவிஞன் / வாசகன்) சேர்ந்தே இழுக்க வேண்டிய கட்டாயம், எந்த வடிவத்துக்கான கவிதை முயற்சியாக இருந்தாலும் பொருந்தும்.

ஊர் ஊருக்கு ஒரு தேர் உண்டு.

அது நவீனம் / பின் – நவீனம் / பின் – பின் – நவீனம் / சர்ரியலிஸம், என்று வெவ்வேறு வடிவத் தோற்றங்கள் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு தேரும் அது வலம் வர விரும்பும் தெருக்களை நம்பித்தான் கட்டுமானம் செய்யப்படுகிறது. தேரின் வருகைக்காக அகாலங்களில் எதிர்பார்த்து வீதிகளை சுத்தப்படுத்தி, கோலமிட்டு பரவசத்தோடு காத்திருப்பது, பூஜிப்பது எல்லாம் பிரார்த்தனையின் தேவையைப் பொருத்தும் தேரின் வசீகரம் பொருத்தும் தான்.

இல்லையேல் கவனிப்பாரற்று சிதிலமடைந்து ஏதோ ஒரு முட்டுச் சந்தில், ஒரு பிரம்மாண்ட கட்டுமானக் குவியலாக தன் மீதிருக்கும் கலைத்தன்மைகளின் காலக்கறைகளைக் கனவு கண்டுக்கொண்டே ஒதுங்கி நின்றுவிடும் எந்தத் தேரும்.

இந்தக் கட்டுரையின் இந்த வரி வரையிலும் அசைந்து வந்து நிற்கும் நவீனக் கவிதைத் தேரின் வடம் இப்போது, உங்கள் கையிலும் இருப்பதை உணர்ந்துக் கொள்ள முடியுமென்றால்..

மேலும் ஓர் அடி இந்தக் கை நிலத்தின் மேல் அத்தேர் நகர்ந்ததாகிறது.

(இதெல்லாம் கவிதைக்குரிய காலக்கட்டங்களின் (Poetic Era) பிரதி பிம்பங்கள். இந்தப் பகிர்வின் நிஜ பயன்பாட்டை அறிந்துக்கொள்ள உவகையோடு காத்திருக்கிறேன்)

ப்ரியங்களுடன்

இளங்கோ

***

———————————————————————

இவரது வலைப்பூ: http://kavithaikarandiary.blogspot.in

இவரது மின்னஞ்சல் : elangomib@gmail.com

தூரங்கள் – ஹூலியோ கோர்த்தஸார்

0

லேஹானாஸ்‘ என்ற சிறுகதையின் ஸ்பானிய மூலத்திலிருந்து தமிழில்: சித்துராஜ் பொன்ராஜ்

[மொழிபெயர்ப்பாளன் குறிப்பு: அலீனா ரேயெஸ் என்ற பணக்கார தென்னமெரிக்கப் பெண்ணுக்கு ஹங்கேரியின் புதாபெஸ்ட் நகரத்தில் பல துன்பங்களுக்கிடையில் வாழும் பிச்சைக்காரப் பெண்ணின் தோற்றம் அடிக்கடி மனதில் வந்து போகிறது. அந்தப் பிச்சைக்காரி துன்பப்படும் போதெல்லாம் இவளும் துன்பப்படுகிறாள். உண்மையில் அந்தப் பிச்சைக்காரியாக இருப்பதுதான் தன்னுடைய உண்மையான அடையாளம் என்று நம்ப ஆரம்பிக்கின்றாள். பிச்சைக்காரியைச் சந்திக்க அலீனா புதாபெஸ்ட் நகரத்துக்குப் போகிறாள். அங்கு அந்தப் பிச்சைக்காரியை ஒரு பாலத்தின் மீது சந்திக்கிறாள். இருவரும் தழுவிக் கொள்கிறார்கள். தழுவலுக்குப் பின்னால் பிச்சைக்காரப் பெண் அலீனாவின் உடலோடு அந்தப் பாலத்தைவிட்டுப் போகிறாள். அலீனா குளிரில் நடுங்கியபடி பாலத்தின்மீது தனியாக நிற்கிறாள். ஜூலியோ கோர்த்தஸார் தன் கதைகளில் அடையாளக் குழப்பத்தைப் பற்றியும் இரட்டைகளைப் பற்றியும் சிறுகதைகளில் அதிகம் எழுதியவர். இந்தக் கதை அடையாளம் என்பது நமக்குள் இருந்து தீர்மானிக்கப்படுகிறதா அல்லது வெளிப்புறச் சூழல்களால் கட்டமைக்கப்படுகிறதா என்று அலசுகிறது.]

அலீனா ரெயெஸ்ஸின் நாட்குறிப்பு

ஜனவரி 12

நேற்றிரவு அது மீண்டும் நடந்தது. கைக்காப்புகள், முகஸ்துதிகள், இளம்சிவப்பு ஷாம்பெயின் மது, ரெனாட்டோ வீனியஸ்ஸின் முகம் – குழறலாய் மூச்சிரைக்கும் நீர்யானையைப் போன்ற அந்த முகம், கடைசி கட்டத்தில் டோரியன் கிரேயின் படத்தைத் போல – என்று எல்லாமும் என்னைச் சலிப்படையச் செய்திருந்தன. அம்மா சாம்பலேறிப் போன முகத்தோடு கொட்டாவி விட்டுக் கொண்டிருக்க (அவள் எப்போதும் அப்படித்தான் விருந்து கொண்டாட்டங்களிலிருந்து வீட்டிற்குத் திரும்புவாள், சாம்பலேறிப் போய் அரைத்தூக்கம் நிறைந்த முகத்தோடு, பிரம்மாண்டமான மீன் கணக்காய், அதுகூட இல்லை) ரெட் பேங்க் பூகியைக் கேட்டபடியே, சாக்லேட் மிண்ட் பானத்தைக் குடித்தபடி படுக்கையில் விழுவது பேரானந்தமானதாக இருந்தது.

அவள் சகோதரி உடைகளைக் களைந்தபடியே சொல்லும் கதைகளை நோரா கேட்டுக் கொண்டிருக்கிறாள். நோரா இருட்டுவதற்கு முன்பாகவே தூங்கப் போய்விட வேண்டும் என்று சொல்பவள். கதையின் இடையில் தெருவிலிருந்து சத்தம் எழ ஆரம்பிக்கிறது. எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று நினைத்தபடியே விளக்குகளையும் கைகளையும் அணைத்துவிட்டு, காலைநேரக் கூச்சல்களுக்கும் அசைவுகளுக்கும் பதிலாக எனது உடைகளைக் கழற்றிப் போடுகிறேன். எனக்குத் தூங்க வேண்டும் போல் இருக்கிறது, ஆனால் நான் மிகக்கொடூரமாக ஒலிக்கும் மணியாக இருக்கிறேன், அலையாக, இரவெல்லாம் கம்பிவேலி மீது நாய் சரசரவென்று இழுத்துப் போகும் கழுத்துச் சங்கிலியாக… தூங்க வேண்டுமென்றால் நான் சில கவிதைகளை எனக்கு நானே முணுமுணுத்துக் கொள்ள வேண்டும், அல்லது ‘A’ என்ற எழுத்தை உடைய வார்த்தைகளையோ, ‘E’ என்ற எழுத்தை உடைய வார்த்தைகளையோ பட்டியலிட வேண்டும், ஐந்து உயிரெழுத்துக்கள் உள்ள வார்த்தைகளை, நான்கு உயிரெழுத்துக்கள் உள்ளவற்றை. இரண்டு உயிரெழுத்தும் ஒரு உயிர்மெய் எழுத்தும் உள்ள வார்த்தைகளை (obo, emu), நான்கு உயிர்மெய் எழுத்துக்களும் ஒரே ஒரு உயிரெழுத்தும் உள்ளவற்றை (crass, dross). பின்பு மீண்டும் கவிதைகள். ‘நிலா கிரினோலின் துணியால் நெய்யப்பட்ட சம்பங்கி மலர்களை அணிந்து கொண்டு/பட்டறைக்கு வந்தது/பையன் பார்க்கிறான், பார்க்கிறான்/பையன் அதைப் பார்க்கிறான். பிறகு மூன்று உயிரெழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகளும் மாற்றி மாற்றி, bolero, pavane, Canada, repose, regale.

இப்படியே சில மணிநேரங்கள் கடக்கின்றன: நான்கு உயிரெழுத்துகளோடு, பிறகு மூன்றும் இரண்டும், அதன் பிறகு முன்னிருந்து படித்தாலும் பின்னிருந்து படித்தாலும் ஒரேமாதிரி இருக்கும் பாலிண்டிரோம்களை மனதில் போட்டு உருட்டிக் கொண்டு: முதலில் hah, bob, mom, did, dad, gag, radar என்ற எளிய வார்த்தைகளை யோசித்தபடி. பிறகு இன்னும் கொஞ்சம் சவாலான அல்லது வேடிக்கையான பாலிண்டிரோம் சொற்றொடர்களோடு: oho Eve oho, அல்லது நெப்போலியனைக் குறித்துச் சொல்லப்பட்ட நகைச்சுவையான வாசகம் “able was I ere I saw Elba”. பின்னர் ஒரு சொல்லில் உள்ள எழுத்துகளை மாற்றிப்போட்டு என்கிராம்கள் என்ற புதிய அழகிய வார்த்தைகளாக மாற்றிக்கொண்டு: Salvador Dali, avida dollars, Alina Reyes, es la reina y [ராணியும்…] இந்த கடைசி வார்த்தை புதிய சாத்தியங்களை மூடிவிடாமல் ஒரு பாதையைத் திறந்துவிடுவதால் எனக்குப் பிடிக்கிறது. ராணியும்…அவளும்…la reina y.

இல்லை, இது அருவருப்பான விஷயம்தான். ராணியாக இல்லாத ஒருத்திக்கு, இரவில் நான் மறுபடியும் வெறுக்கப்போகும் ஒருத்திக்குப் பாதையைத் திறந்து விடுவதால் அது அருவருக்கத் தக்கதாக இருக்கிறது. அவள் அலினா ரேயஸ்தான். ஆனால் அவள் அழகிய என்கிராம்களின் ராணி அல்ல. அவள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், புதாபெஸ்ட் நகரத்தில் பிச்சைக்காரியாக, ஜூஜுய்யில் உள்ள விபச்சார விடுதியில் ஆரம்பநிலை ஊழியக்காரியாக, கெட்ஸால்டெனாகோ நகரத்தில் வேலைக்காரியாக, ஏதேனும் தூரமான இடத்தில்., ராணியாக மாத்திரம் இல்லாமல் இருந்தால் போதும். ஆமாம், அலினா ரெயெஸ்தான். இதனால்தான் நேற்றிரவு அது மீண்டும் நடந்தது, அவளை உணர்வதற்கும் வெறுப்பதற்கும்.

ஜனவரி 20

சில நேரங்களில் அவளுக்குக் குளிர்கிறது என்பதும், அவள் துன்பப்படுகிறாள் என்பதும், அவர்கள் அவளை அடிக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரிகிறது. அவளை நான் இந்தளவுக்குத்தான் வெறுக்க முடியும், அவளைத் தரையில் எறியும் கைகள் மீதும் அவள் மீதும் இதுவரைக்கும்தான் எரிச்சல் கொள்ள முடியும். அடிவாங்குவதால் அவளை இன்னும் கொஞ்சம் அதிகமாக வெறுக்கிறேன், நான் இப்படித்தான் என்பதாலும், அவர்கள் அவளை அடிக்கிறார்கள் என்பதாலும். தூங்கும்போதோ, ஆடைகளைத் தைக்கத் துணியைக் கத்தரிக்கும்போதோ, அம்மா விருந்தினர்களை வரவேற்று உபசரிக்கும் நேரங்களின்போது திருமதி ரெகுலெஸ்ஸுக்கோ, ரிவாஸ்ஸிலிருந்து வந்த பையனுக்கோ தேநீர் பரிமாறும்போதோ நான் இப்படியெல்லாம் நம்பிக்கை இழந்து காணப்படுவதில்லை. இவற்றைச் செய்து கொண்டிருக்கும்போது அவள் காரியம் எனக்கு அவ்வளவு முக்கியமாகப் படுவதில்லை, கொஞ்சம் அந்தரங்கமான காரியமாக, நான் எனக்குள் வைத்துக்கொள்ளும் விஷயமாகவே தோன்றும்; அவள் தனது துன்பத்திற்கு எஜமானியாக இருக்கிறாள் என்று எண்ணிக்கொள்வேன். தூரத்தில் தனியாக இருக்கிறாள், ஆனால் அவள்தான் எஜமானி. அவள் துன்பப்படட்டும், குளிரால் உறைந்து போகட்டும். நான் இங்கிருந்தபடியே சகித்துக் கொள்கிறேன். அப்படிச் செய்யும்போது நான் அவளுக்கு ஏதோ கொஞ்சம் உதவுவதாகவே நினைக்கிறேன். போரில் இன்னமும் அடிபடாத போர்வீரனுக்குத் தேவையான கட்டுகளை ஆயத்தப்படுத்தி வைப்பதைப்போல, தெய்வாதீனமாக அவனுக்கு அடிபடுவதற்கு முன்னாலேயே அவனுக்குப் பணிவிடை செய்வதை ஏற்றுக் கொள்வதைப்போல்.

அவள் துன்பப்படட்டும். திருமதி ரெகுலெஸ்ஸுக்கு கன்னத்தில் முத்தம் தருகிறேன், ரிவாஸ்ஸிலிருந்து வந்த பையனுக்குத் தேநீர் தருகிறேன். “இப்போது ஒரு பாலத்தைக் கடக்கிறேன், பாலமே பனியில் உறைந்து போயிருக்கிறது, இப்போது பனி என் காலணிகளுக்குள் வருகிறது, என் காலணிகள் கிழிந்திருக்கின்றன” என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். அவள் எதையும் உணரவில்லை என்று இல்லை. இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது, நான் ஒரு பக்கமாகப் பாலத்தைக் கடக்க ஆரம்பிக்கும் அதே தருணத்தில் ரிவாஸ் பையன் என்னிடமிருந்து தேநீர்க் கோப்பையை வாங்கிக்கொண்டு செல்லம் கொடுத்துக் கெடுத்த குழந்தையைப்போல் முகத்தைக் கோணலாக்கிக் காட்டுகிறான், மனிதாபிமானமில்லாத இந்த மனிதர்களுக்கிடையே நான் தனியாக இருப்பதாலும் நான் அப்படியெல்லாம் நம்பிக்கை இழக்காதவள் என்பதாலும் எதுவும் சொல்லாமல் இதையெல்லாம் சகித்துக் கொள்கிறேன். நோரா நேற்றிரவு அதிர்ந்து போனாள். “உனக்கு என்ன நடக்கிறது?” என்று என்னிடம் கேட்டாள். ஆனால் அந்த மற்றொருத்தித்தான் ஏதோ ஒன்று நிகழ்ந்திருந்ததாய் உணர்ந்தேன். அதாவது அவளாக இருந்த எனக்கு. அவளுக்கு ஏதேனும் மிகக் கொடுமையான விஷயம் நடந்தேறியிருக்க வேண்டும். பியானோவில் நான் அமர்ந்தபடி அதன்மீது தனது முழங்கைகளை வைத்துச் சாய்ந்து கொண்டிருக்கும் ஆணழகனான லூயிஸ் மரியாவை மகிழ்ச்சியாகப் பார்க்க, அவனும் அகலமான அழகிய கண்களால் என்னைப் பாரத்து இருவரும் நெருக்கமாகி ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கவும் நோரா ஃபௌரேயின் பாடலைப் பாடவும் போகும் நேரத்தில் ஒன்று அவர்கள் அவளை அடித்துக் கொண்டிருக்க வேண்டும், அல்லது அவளுக்கு உடம்பு சுகவீனம் ஏற்பட்டிருக்க வேண்டும். இப்படி நடக்கும்போது தான் உண்மையிலேயே கொடுமையானதாக இருக்கிறது. லூயிஸ் மரியாவோடு நான் நடனமாடிக் கொண்டிருக்கும்போதோ, அவனை முத்தமிட்டுக் கொண்டிருக்கும்போதோ, சும்மா அவன் பக்கத்தில் இருக்கும்போதோ அவளைப் பற்றி எதையேனும் நான் தெரிந்து கொள்வது. ஏனெனில் தூரங்களில் உள்ளவர்கள் என்மீது – அவள்மீது பிரியம் கொண்டிருக்கவில்லை. இதுதான் அவர்களுக்குப் பிடிக்காத விஷயம். உள்ளே மிகச்சிறிய துண்டுகளாக நான் கிழிக்கப்படுவது போலவும் அவர்கள் என்னை அடிப்பதைப் போலவும் என் காலணிகளுக்குள் பனி புகுந்தது போலவும் உணர்வது எனக்கு உவப்பில்லாத காரியங்கள் என்பதால் லூயிஸ் மரியா என் இடுப்பில் கை வைத்து நாட்டியமாடும் நேரத்தில், அவன் கைகளிலிருந்து ஆரஞ்சுகள் போலவும் வெட்டிய வைக்கோலைப் போலவும் மணம் எழுந்து எனக்குள் நண்பகல் வெப்பம்போல் ஒன்று ஓங்கி நிற்க, அவர்கள் அவளை அடிக்கிறார்கள் என்பதை உணர்ந்த நான், எதிர்த்துப் போராடுவது வீண் வேலை என்று அறிந்து லூயிஸ் மரியாவிடம் எனக்கு உடம்பு சுகமில்லை என்று சொல்ல வேண்டியவளாகி, அதற்குக் காரணம் இந்த வெக்கைதான், சுற்றியிருக்கும் குளுமையான பனிக்கிடையே எழும் இந்த வெக்கைதான் என்று சொல்கிறேன். ஆனால் அதை என்னால் உணரவே முடியவில்லை, ஆனால் அது என் காலணிகளின் வழியாக உள்ளே வந்து கொண்டிருக்கிறது.

ஜனவரி 25

எதிர்பார்த்தது போலவே நோரா என்னைப் பார்க்க வந்து மிகப்பெரிய அலப்பறை செய்தாள். “பாரு, கண்ணு, இனிமே நான் பாடுறப்ப உன்னை எனக்குத் துணையாகப் பியானோ வாசிக்கக் கூப்பிடவே மாட்டேன். நீயும் நானும் எவ்வளவு அற்புதமான ஜோடியா இருந்தோம்.” ஜோடிகளைப் பற்றி எனக்கென்ன தெரியும். என்னால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு அவள் பாடும்போது பியானோ வாசித்தேன். அவள் குரல் வெகு தூரத்திலிருந்து வருவது போலவே என் காதுகளில் கம்மி ஒலித்தது. ‘உன் ஆன்மா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம்’… பியானோ கட்டைகளின் மீது இருந்த என் கைகளை உற்றுப்பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். சரியாகத்தான் வாசிப்பதாகப் பட்டது எனக்கு. நோராவின் பாட்டுக்குச் சரியாகத்தான் பியோனோ இசை போய்க் கொண்டிருந்ததாக நினைத்தேன். பாவம் லூயிஸ் மரியாவும் என் கைகளையே பார்த்துக் கொண்டிருந்தான். என் முகத்தைப் பார்ப்பது அவனுக்கு எந்த விதத்திலும் மகிழ்ச்சியைத் தராததால்தான் அவன் என் கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் என்று நினைக்கிறேன். என் முகம் அவனுக்கு ஏதோ ஒருவகையில் மிக விசித்திரமாய்த் தோன்றியிருக்க வேண்டும்.

பாவம் நோரா. வேறு யாரேனும் அவளுக்காகப் பியானோ வாசிக்கட்டும். (ஒவ்வொரு முறையும் இது மேலும் கடுமையான தண்டனையாகத் தோன்றுகிறது, நான் மகிழ்ச்சியாக இருக்கப்போகும் நேரத்தில் மட்டும்தான் நான் அங்கு என்னை அறிந்து கொள்கிறேன், நான் மகிழ்ச்சியாக இருக்கும்போது, நோரா ஃபௌரேயைப் பாடும்போது, நான் அங்கு என்னை அறிந்து கொள்கிறேன், அப்போது வெறுப்பு மட்டுமே மிஞ்சி இருக்கிறது.)

இரவு

சில நேரங்களின் மென்மையான பிரியம் தோன்றுகிறது, ராணியாக இல்லாமல் அங்கு உலவிக் கொண்டிருக்கும் அவள்மீது திடீரெனவும் அத்தியாவசியமுமான ஒரு மென்மையான பிரியம். அவளுக்கு ஒரு தந்தியடிக்க வேண்டும்போல் எனக்குத் தோன்றுகிறது. எனது வணக்கங்கள், அவளுடைய மகன்கள் நலமாக இருக்கிறார்களா என்று அறிந்து கொள்ள, அல்லது அவளுக்கு மகன்களே இல்லை என்று அறிந்து கொள்ள – ஏனென்றால் அங்கே எனக்கு மகன்கள் இல்லை என்று நினைக்கிறேன் – அதனால் அவளுக்கு ஆறுதலும், அனுதாபமும், மிட்டாய்களும் தேவைப்படும். நேற்றிரவு நான் அனுப்ப வேண்டிய தந்திகளைப் பற்றியும், நாமிருவரும் சந்திக்கத் தோதான இடங்களைப் பற்றியும் யோசித்தபடியே தூங்கப் போனேன். வியாழன் வருகிறேன். ஸ்டாப். பாலத்தில் சந்திக்கலாம். எந்தப் பாலத்தில்? புதாபெஸ்ட் நகரம் மீண்டும் மீண்டும் வந்து போவதுபோல் ஒரு யோசனை மீண்டும் மீண்டும் வருகிறது, நிறைய பாலங்களும் சுற்றிச்சுழலும் பனிப்பொழிவுகளும் உள்ள புதாபெஸ்ட் நகர பிச்சைக்காரியின் இருப்பை நான் நம்ப வேண்டும் என்பதாக. படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்து, கதறி அழாத குறையாய், ஓட்டமும் நடையுமாகப் போய் அம்மாவைக் கடித்து எழுப்புகிறேன். நான் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதைச் சொல்வது இப்போதுகூடச் சுலபமானதாக இல்லை. நான் உண்மையிலேயே விரும்பினால், எனக்கு அப்படித் தோன்றினால், உடனே புதாபெஸ்ட் நகரத்துக்கு என்னால் போக முடியும் என்று நம்புகிறேன். அல்லது ஜூஜுயிக்கோ கெட்ஸால்டெனாகோவுக்கோ கூட. (அந்தப் பெயர்களைச் சரிபார்த்துக் கொள்ள இந்தக் கதையின் முதல் பக்கத்தைத் திருப்பிப் பார்த்துக் கொண்டேன்). வீண் வேலை. இந்த நகரங்களின் பெயர்களைச் சொல்வதும் ஒன்றுதான், த்ரெஸ் அரோயோஸ் என்றோ, கோபே என்றோ, நானூறாவது பிளாக்கில் இருக்கும் ஃப்ளோரிடா தெரு என்று சொல்வதும் ஒன்றுதான். அங்கே குளிராக இருக்கும் என்பதாலும், அங்கே என்னை அடிப்பார்கள், சித்திரவதை செய்வார்கள் என்பதாலும் புதாபெஸ்ட் நகரம் எனது நினைவில் நிற்கிறது. அங்கே (இதை நான் கனவில் கண்டேன், கனவுதான், ஆனால் அது எனக்குள் நீங்காமல் நின்று என் விழிப்புக்குள் தன்னைப் புகுத்திக்கொள்கிறது) ராட் என்றோ எராட் என்றோ ரோடோ என்றோ பெயருடைய ஒருவன் இருக்கிறான் – அவன் என்னை அடிக்கிறான், நான் அவனைக் காதலிக்கிறேன். அவனை நான் காதலிக்கிறேனே என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் என்னை அடிக்க அவனை அனுமதிக்கிறேன். இது மீண்டும் மீண்டும் நடந்தேறுவதால் நான் அவனைக் காதலிப்பதாகவே நினைக்கிறேன்.

பிறகு

ஒரு பொய். நான் ராட்டைப் பற்றிக் கனா கண்டேன், இல்லையென்றால் தேய்ந்துபோன அல்லது கைக்கு எளிதில் அகப்பட்ட பழைய கனவு உருவம் ஒன்றிலிருந்து அவனை உருவாக்கிக் கொண்டேன். ராட் என்று யாருமில்லை. அங்கே அவர்கள் என்னைத் தண்டிக்கிறார்கள். ஆனால் அது ஓர் ஆணா, கோபமான அம்மாவா அல்லது வெறும் தனிமையா யாருக்குத் தெரியும்.

என்னைத் தேடிக் கண்டுபிடியுங்கள். லூயிஸ் மரியாவிடம் இப்படிச் சொல்லலாம்: “திருமணம் செய்துகொள்ளப் போகிறோம், அதன் பிறகு நீ என்னைப் பனிப்பொழிவும் யாரோ ஒருத்தனும் இருக்கும் புதாபெஸ்ட் நகரத்துக்குக் கூட்டிப் போவாய்.” அதுதான் சொல்கிறேன்: நானே என்றால்? (இதையெல்லாம் உண்மையில் நம்பாத ஓரிடத்தில் இருந்துதான் பேசிக் கொண்டிருப்பதாக நினைக்கிறேன். நானே என்றால்?) சரி, நானேதான். சுத்தப் பைத்தியம், சுத்தம்…? எப்படிப்பட்ட தேனிலவு!

ஜனவரி 28

விநோதமான எண்ணம் ஒன்று எனக்குத் தோன்றியது. மூன்று நாட்களாய்த் தூரங்களிலிருந்து என்னிடம் எதுவும் வரவில்லை. ஒருவேளை அவர்கள் இப்போது அவளை அடிக்காமல் இருக்கலாம். அல்லது அவளுக்கு ஏதேனும் குளிராடை கிடைத்திருக்கலாம். அவளுக்குத் தந்தியடிக்கலாமா, அல்லது காலுறைகளை அனுப்பி வைக்கலாமா என்று யோசித்தேன்… ஒரு விசித்திரமான எண்ணமும் தோன்றி மறைந்தது. அந்தக் கொடுமையான நகரத்தில் ஒருநாள் பிற்பகல் போய்ச் சேர்ந்தேன். பிற்பகல்களைப் பற்றிக் கவனமாக யோசித்து உதவாத பட்சத்தில் பிற்பகல்கள் எப்படி ஈரமானவையாகவும் பச்சை நிறமானவையாகவும் இருக்குமோ அப்படி அந்தப் பிற்பகல் இருந்தது. தோப்ரினா ஸ்தானாவுக்கு அடுத்தாற்போல் ஸ்கோர்தா சாலையில் குதிரைமீது அமர்ந்திருப்பவர்களின் சிலைகளின்மீது ஊசிகளாகப் பனியும் சிலைகளின் பக்கத்தில் விறைப்பான போலீஸ்காரர்களும் உறைந்து போயிருந்த காட்சி கண்ணுக்குத் தெரிந்தது. அரைக்காத தானியங்களால் சமைக்கப்பட்ட சூடான ரொட்டிகளுக்கிடையே சுழன்றடிக்கும் காற்று அவ்வப்போது சன்னல்களின் மீது ஊதிக்கொண்டிருந்தது. தோப்ரினாவைத் தாண்டி சுற்றுலாப் பயணியைப் போன்று மெல்ல நடந்து போனேன். நகரத்தின் வரைபடம் என் நீலநிற ஆடைக்குள் இருந்தது (இந்த உறையவைக்கும் குளிரில் என் மேலங்கியை புர்க்லோஸில் விட்டு வந்திருந்தேன்). ஆற்றுக்கு ஓரமாய் இருந்த சதுக்கம் வரை நடந்தேன். உடைந்த பனிக்கட்டிகளும் படகுகளும் ஒருவகையான மீன்கொத்திப் பறவைகளும் ஏற்படுத்திய இரைச்சலோடு நதி நகர்ந்து கொண்டிருந்தது. அந்த மீன்கொத்தியை அந்த ஊரில் ஸ்புனாய்யா த்ஜேனோ என்றோ அதைவிட மோசமான பெயர் ஒன்றை வைத்தோ அழைத்தார்கள்.

சதுக்கத்துக்குப் பிறகு பாலம் வரும் என்று எண்ணியிருந்தேன். அதைப் பற்றி யோசித்தபிறகு மேலும் நடக்கத் தயங்கினேன். ஓடியனில் எல்ஸா பியாஜ்ஜியோ டி தாரெல்லியின் இசைக்கச்சேரி நடக்கவிருந்த பிற்பகல் நேரம். வேண்டா வெறுப்பாக, பெரும் அலுப்போடு, இதற்குப் பிறகு இரவெல்லாம் கொட்டக் கொட்ட விழித்திருக்கத்தான் போகிறேன் என்று நினைத்தபோது உடைகளை அணிந்து கொண்டேன். இரவைப் பற்றிய இந்த நினைவு, மிக விஸ்தாரமான இரவு…நான் அதில் தொலைந்து போவேனா மாட்டேனா என்று யாரால் சொல்ல முடியும். பயணப்படும் நேரத்தில் பெயர்களை உருவாக்குவதும், சிந்திப்பதும், கணத்தில் அவற்றை நினைவுக்குக் கொண்டு வருவதும், இயல்பான காரியங்கள்: தோப்ரினா ஸ்தானா, ஸ்புனாய்யா த்ஜேனோ, புர்க்லோஸ். ஆனால் எனக்கு அந்தச் சதுக்கத்தின் பெயர் தெரியவில்லை. புதாபெஸ்ட் நகரத்தில் ஒரு சதுக்கத்துக்குள் நுழைந்து சதுக்கத்தின் பெயர் தெரியாததால் தொலைந்து போனது போலவே அந்த விஷயம் இருந்தது. பெயர் இல்லையென்றால் அந்த இடத்தில் எப்படிச் சதுக்கம் ஒன்று இருக்க முடியும்?

நான் வருகிறேன், அம்மா. உனக்குப் பிடித்த பாக் இசையை நிச்சயம் பிடித்துவிடுவோம். உன் பிராம்ஸ்ஸையும்தான். சதுக்கம் இல்லை, ஹோட்டல் புர்க்கோஸ்ஸும் இல்லை. நாம் இங்கு இருக்கிறோம். எல்ஸா பியாஜ்ஜியா அங்கு இருக்கிறாள். இதை இடைமறிப்பதுபோல் பேசுவது வருந்தத்தக்கதுதான் (ஆனால் அது இன்னமும் உறுதியாகவில்லை, நான் சதுக்கம் இல்லை என்று நினைக்கிறேன், அவ்வளவுதான். இது காசு பெறாத விஷயம், அதைவிட மதிப்பில் குறைவானது என்றுகூட சொல்லலாம்). சதுக்கத்தின் இறுதியில் பாலம் ஆரம்பமாகிறது.

இரவு

ஆரம்பமாகிறது, தொடர்ந்து போகிறது. இசைக்கச்சேரியின் முடிவுக்கும் அவர்கள் வாசித்த முதல் இசைக்கூறுக்கும் இடையிலிருந்த நேரத்தில் பெயரையும் செல்லும் வழியையும் கண்டுபிடித்தேன். வ்ளாதாஸ் சதுக்கம், சந்தை பாலம். நான் வ்ளாதாஸ் சதுக்கத்தைத் தாண்டி பாலம் ஆரம்பமான இடத்துக்கு மெதுவாக நடந்தேன். சில சமயங்களில் வீடுகளையும் கடைச் சன்னல்களையும் பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும்போல் தோன்றியது, குளிருக்கெதிராகப் பலவிதமான ஆடைகள் சுற்றப்பட்டிருந்த சின்ன பையன்களை, வெள்ளையாகிப்போன மேலங்கிகளை அணிந்திருந்த தாதேயோ அலாங்கோ, வ்ளாதிஸ்லாஸ் நேரோய் போன்ற வீரர்களின் சிலைகளைச் சுமந்து கொண்டிருந்த நீரூற்றுகளை, மது குடியர்களை, தெருவோரமாய் சிம்பாலோன் இசை வாத்தியங்களை வாசித்துக் கொண்டிருந்தவர்களை. எல்ஸா பியாஜ்ஜியோ ஒரு ஷோப்பான் வாசிப்புக்கும் அடுத்ததற்கும் இடையில் கைதட்டல்களால் கொண்டாடப்படுவதைக் கவனித்தேன், பாவமாக இருந்தது. இசைக்கச்சேரியில் எனக்குத் தரப்பட்ட இருக்கை சதுக்கத்துக்கு நேரெதிராக இருந்தது. பாலத்தின் தொடக்கம் பிரம்மாண்டமான தூண்களுக்கு இடையில் இருந்தது. ஆனால் நான் இப்படி யோசித்துக் கொண்டிருந்தேன், கவனியுங்கள், அலீனா ரெயெஸ் என்ற பெயரில் உள்ள எழுத்துக்களை வைத்து எனது பெயருக்குப் பதிலாக es la reina y என்ற என்கிராம் ஒன்றை உருவாக்குவது போலவும் அம்மாவை என்னருகில் இருப்பதைப் போலில்லாமல் சுவாரெஸ்ஸின் வீட்டில் இருப்பதைப்போல் கற்பனை செய்து பார்ப்பதைப் போலத்தான் இதுவும் இருந்தது. இந்தப் பைத்தியக்காரத்தனத்தில் விழாமல் இருப்பதுதான் நல்லது, அது முற்றிலும் என் சொந்த விஷயம், என் விருப்பத்தை – என் உண்மையான விருப்பத்தை – நானே நிறைவேற்றிக் கொள்வது. ஏன் உண்மையென்றால் அலீனா என்பவள், சரி, போகலாம் – அந்த விஷயம் அல்ல. அவள் குளிரில் நடுங்குவதையும் அடித்துத் துன்புறுத்தப்படுவதையும் உணர்வதைப் பற்றி அல்ல இது. இதற்காக நான் ஏங்கித் தன்னிச்சையாகவே இது எங்கே போய் முடியும் என்று தெரிந்துகொண்டே இதைத் தொடர்கிறேன், லூயிஸ் மரியா என்னைப் புதாபெஸ்ட்டுக்கு அழைத்துக்கொண்டு செல்வானா என்று அறிந்து கொள்ள. நானே வெளியே சென்று அந்தப் பாலத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் சுலபமான காரியம், என் தேடலில் நானே வெளியேறி என்னைக் கண்டுகொள்வது. இப்போது பாலத்தின் நடுப்பகுதியை அடைந்திருந்தேன். இசைக்கச்சேரி ரசிகர்களின் உரத்த குரல்களும், கைதட்டல்களும், ‘அல்பென்ஸ்’ என்றும் ‘போலோனேஸ்’ என்றும் அவர்கள் கேட்க விரும்பும் இசையை அவர்கள் சத்தம்போட்டுச் சொல்வதும் என் காதுகளில் ஒலித்தன. இந்தக் கூக்குரல்கள் அர்த்தமில்லாதவையாகத்தான் எனக்குத் தோன்றின. சாட்டை போல் என்னைச் சுழன்றடித்த பனி காற்றின் வேகத்தால் என் முதுகில் தள்ளியது. கனமான துண்டைப் போன்ற அதன் கைகள் எனது இடுப்பில் கை வைத்து என்னைப் பாலத்தின் நடுப்பகுதிக்குத் தள்ளிச் சென்றன.

(இப்போது நிகழ்காலத்தில் பேசுவதுதான் வசதியாக இருக்கிறது. எட்டு மணி அடித்திருந்தது. எல்ஸா பியாஜ்ஜியோ கச்சேரியின் மூன்றாவது இசைக்கூறாக ஜூலியன் அகுவெய்ரையோ கார்லோஸ் குவாஸ்தாவினோவையோ, விரிந்த பண்ணைத் திடல்களும் சின்ன பறவைகளும் நிறைந்திருந்த ஏதோ ஓர் இசையை வாசித்துக் கொண்டிருந்தாள். நாளாக என் உணர்வுகள் மங்கிப் போயிருந்தன. இப்போது அவள்மீது எனக்கு மதிப்பில்லாமலே போயிருந்தது. ஒருநாள் நான் யோசித்த ஒன்று என் நினைவில் இருக்கிறது: “அங்குதான் என்னை அடித்தார்கள். அங்குதான் பனி என் காலணிகளுக்குள் வருவதை அதே நொடியில் நான் உணர்ந்தேன். அங்கு நடப்பதை என்னால் உடனுக்குடன் உணர முடிகிறது. ஏன் அதே நேரம் என்று நினைக்கிறேன். ஒரு வேளை நான் தாமதமாகக்கூட வரலாம். அல்லது அது இன்னும் நடக்காமல்கூட இருக்கலாம். ஒருவேளை அடுத்த பதினான்கு ஆண்டுகளுக்குள் அவர்கள் அவளை அடிக்கலாம், அல்லது அவள் இந்நேரத்துக்கெல்லாம் செயிண்ட் உர்சுல் இடுகாட்டில் சிலுவையாகவும் கல்லறை வாசகமாகவும் மாறியும் இருக்கலாம்.” இது எனக்கு உவப்புள்ளதாகவும், சாத்தியமானதாகவும், கொஞ்சம் முட்டாள்தனமானதாகவும் தோன்றியது. ஏனென்றால் அடிப்படையில் எல்லோரும் காலங்களை ஒன்றோடொன்று பொருத்திக் கொள்ளவே பார்க்கிறார்கள். ஒருவேளை இந்த நிமிடத்தில் அவள் பாலத்தைக் கடக்க ஆரம்பிக்கிறாள் என்றால் அதை இங்கிருந்தபடியே எனக்குள் என்னால் உணர முடியும் என்று நான் அறிந்திருந்தேன்.  கெட்டுப்போன மெயோனேஸ்ஸைப்போல் பாலத்தின் அடியிலுள்ள கற்களின்மீது மிகப்பெரிய கோபத்தோடும், சத்தத்தோடும், வன்முறையோடும் மோதிக்கொண்டிருந்த நதியை ஒருகணம் நின்றபடியே நான் கவனித்தது என் நினைவுக்கு வருகிறது. (இந்தக் கடைசி விவரிப்பு உண்மையில் நான் யோசித்து வைத்துக்கொண்டது.) பாலக்கம்பிகளின் விளிம்பில் சாய்ந்து கீழே பனிக்கட்டிகள் அரைபடும் ஓசையைக் கேட்க விரும்பினேன். சுற்றியிருந்த காட்சியை உள்வாங்கிக் கொள்ளத்தான் நின்றேன் என்றாலும், உள்ளிருந்து எழுந்த பயத்தாலும் அப்படிச் செய்தேன் என்பதுதான் உண்மை – அல்லது மேலங்கியைத் தங்கும் விடுதியில் விட்டுவிட்டு அணிந்திருந்த சட்டைமீது மெல்லிய பனிப்பொழிவு உருகி ஓடிக்கொண்டிருந்ததால்கூட இருக்கலாம். உண்மையைச் சொல்லப் போனால் நான் எந்த விதமான பெரிய சொகுசையும் எதிர்பார்க்காத பெண்தான், எந்தவிதமான சின்னக் கர்வங்களும் இல்லாதவள்தான். ஆனால் வேறு யாரேனும் ஒரு பெண் ஓடியனின் நடுவில் ஹங்கேரிக்குள் இப்படிப் பிரவேசித்திருப்பாள் என்று அவர்கள் என்னிடம் வந்து சொல்லட்டும். அந்த யோசனையே யாரையும் நடுங்க வைத்திருக்கும்!

ஆனால் அம்மா என் ஆடையின் விளிம்பை இழுத்து என் கவனத்தை ஈர்க்க முனைந்து கொண்டிருந்தாள். இசைக்கச்சேரி இருக்கைகளில் யாரும் இல்லை. அந்த இடம்வரைக்கும் மட்டும் எழுதுகிறேன். மேலும் நான் என்னவெல்லாம் யோசித்தேன் என்பதை நினைவுக்குக் கொண்டுவர எனக்கு விருப்பமில்லை. தொடர்ந்து ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றேன் என்றால் நான் நோய்வாய்ப்படுவேன். ஆனால் அது உண்மைதான், உண்மைதான்: விநோதமான எண்ணம் ஒன்று எனக்குத் தோன்றத்தான் செய்தது.

ஜனவரி 30

பாவம் லூயிஸ் மரியா. என்னைத் திருமணம் செய்து கொள்ள அவன் எவ்வளவு பெரிய முட்டாளாக இருக்க வேண்டும். பரந்த மனப்பான்மை உள்ளவன் போல் காட்டிக் கொள்வதால் இதற்குமேல் அவனுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்பதை அவன் அறியமாட்டான். இதற்குக் கீழும் அவனுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்பதையும் அறிய மாட்டான் என்று நோரா சொல்கிறாள்.

ஜனவரி 31

நாங்கள் அங்கே போகப் போகிறோம். என் கோரிக்கையை அவன் அவ்வளவு முழுமனதாக ஏற்றுக் கொண்டதைப் பார்த்து எனக்கு வாய்விட்டு அலற வேண்டும்போல் தோன்றியது. இந்த விளையாட்டில் அவன் யோசிக்காமல் கவனமின்றிப் பிரவேசித்ததாக எனக்குப்பட்டது. மேலும் அவனுக்கு ஒன்றும் தெரியாது. சதுரங்க விளையாட்டில் வெற்றிக்காகப் பலி கொடுக்கப்படும் ராணியின் பகடைக்காயாகவே அவன் இருந்தான். அவனுடைய ராணியின் பக்கத்தில் பகடைக்காய் லூயிஸ் மரியா. ராணிக்கும் – க்கும் ஓரமாக…

பிப்ரவரி 7

இப்போது குணமடைவதுதான் முக்கியம். இசைக்கச்சேரியின் இறுதியில் நான் என்ன நினைத்தேன் என்பதை எழுதப் போவதில்லை. நேற்றிரவும் அவளுடைய துன்பத்தை நான் உணர்ந்தேன். என்னை அங்கே அவர்கள் அடிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரிகிறது. அதை அறிந்து கொள்ளாமல் என்னால் இருக்க முடியாது, ஆனால் இந்தக்கதை இதோடு போதும். இதையெல்லாம் ஒரு பொழுதுபோக்காக, மன ஆறுதலுக்காக எழுதினேன் என்றாலும் பரவாயில்லை…ஆனால் அதைவிட மோசமாக, இதை மறுபடியும் மறுபடியும் படித்து உண்மையைப் புரிந்து கொள்வதற்காகவும், ஒவ்வொரு வார்த்தையிலும் பூட்டப்பட்டுள்ள புதிரை அந்த இரவுகளுக்குப் பிறகு மீண்டும் வாசித்து விடுவிக்கவும்தான் இதை எழுதி வைத்திருக்கிறேன். அந்தச் சதுக்கத்தைப் பற்றியும், கிழிந்த அந்த நதியைப் பற்றியும், அந்தச் சத்தங்கள், பின் நடந்தவை பற்றியும்…இல்லை அதைப்பற்றி எழுதப் போவதில்லை. அதைப்பற்றி எப்போதுமே எழுத மாட்டேன்.

கன்னி கழியாமல் இருப்பது எனக்கு நல்லதல்ல என்பதை எனக்கு நானே நிரூபிக்க நான் அங்கே போனது அப்படி ஒன்றும் நல்ல காரியமில்லைதான். இருபத்தேழு வயதாகியும் எந்த ஆடவனையும் அனுபவிக்காததைத் தவிர இதில் வேறெந்த விஷயமும் இல்லை. இப்போது அவன் என் நாய்க்குட்டியாக, என் பெங்குவின் பறவையாக, நினைப்பதற்கும் இருப்பதற்கும், கடைசிவரைக்கும் நிரந்தரமாகவும் இருப்பான்.

எது எப்படி இருந்தாலும் நான் இப்போது இந்த நாட்குறிப்பு எழுதுவதை நிறுத்திவிடப் போகிறேன். ஒருத்தி ஒன்று திருமணம் செய்துகொள்ள வேண்டும் அல்லது நாட்குறிப்பு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் ஒன்றோடொன்று ஒத்துப் போவதில்லை. இப்போதுகூட நம்பிக்கையின் மகிழ்வோடு, மகிழ்ச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடுதான் இதை முடித்துவைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நாங்கள் அங்கு போகத்தான் போகிறோம். ஆனால் இசைக்கச்சேரியின் இரவில் நான் நினைத்தது நடந்தே தீர வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. (அதை எழுதுவேன், அதன்பிறகு இந்த நாட்குறிப்பைத் தலைமுழுகிவிட வேண்டியது தான்.) நான் அவளைப் பாலத்தில் சந்திப்பேன். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வோம். இசைக்கச்சேரி நடந்த இரவில் பாலத்தின் கீழே நதியில் பனிக்கட்டிகள் அரைபடுவது என் காதுகளில் எதிரொலித்தது.  அது கேடு செய்யும் ஒரு உறவிற்கு எதிராக, சத்தமேயில்லாமல் சட்ட விரோதமாக நடந்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒரு ராணியின் பூரண வெற்றியாக இருக்கும். நான் உண்மையில் நான்தான் என்றால் அவள் விட்டுக்கொடுப்பாள், அவள் எனது வெளிச்சம் மிகுந்த பகுதியோடு, அழகும் ஸ்திரத்தன்மையும் வாய்ந்த என் வாழ்வோடு வந்து இணைந்து கொள்வாள்; நான் அவளிடத்தில் போய் அவள் தோளில் கை வைத்தால் போதும், இது நடந்து விடும்.

அலீனா ரெயெஸ் அராவோஸ்ஸும் அவள் கணவரும் புதாபெஸ்ட் நகருக்கு ஏப்ரல் ஆறாம் தேதி வந்தார்கள். ரிட்ஸ் ஹோட்டலில் தங்கும் அறைகளை ஏற்பாடு செய்து கொண்டார்கள். இது, அவர்கள் விவாகரத்துக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் நடந்தது. இரண்டாம் நாள் பிற்பகல் அலீனா நகரத்தோடு பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ளவும், கொஞ்சம் கொஞ்சமாய்த் திரும்பிக் கொண்டிருந்த வெயிலை அனுபவிக்கவும் வெளியே போனாள். தனியாக நடப்பது அவளுக்குப் பிடித்திருந்தது. விரைவாகவும் எல்லா திசைகளிலும் அறிந்து கொள்ளும் ஆவலோடு கண்களைச் செலுத்தியபடியும் அவள் நடந்தாள். இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஒன்றைத்தேடி அவள் இருபது திசைகளில் நடந்தாள். ஆனால் அந்த விஷயத்தைப் பற்றி அவள் அதிகமாக யோசித்து அலட்டிக் கொள்ளவில்லை. தனது எண்ணங்களின் ஓட்டத்தின்படி தனது கால்களை நடக்கவும், திடீரென்று போகும் திசையை மாற்றிக் கொள்ளவும் அனுமதித்தாள். இது அவளை ஒரு கடைச்சன்னலிலிருந்து வேறொரு கடைச்சன்னலுக்கும், சாலைகளைத் தாண்டியும், ஒரு விற்பனை அங்காடியிலிருந்து மற்றொரு அங்காடிக்கும் அழைத்துச் சென்றது.

பாலத்துக்கு வந்து அதன் நடுப்பகுதிக்கு நடந்தாள். அவள் நடை இப்போது மெதுவடைந்திருந்தது. பனிப்பொழிவும் தனூப் நதியிலிருந்து தூண்டில்களைப் போலவும் சாட்டை விளாசல்களைப் போலவும் திடீரென்று எழுந்த காற்றும் அவள் நடையைக் கடினமாக்கின. அவள் பாவாடை தொடைகளோடு ஒட்டிக்கொண்டது போல் அவள் உணர்ந்தாள் (குளிர்காலத்திற்குத் தோதான உடைகளை அவள் அணிந்திருக்கவில்லை). திடீரென்று திரும்பி பரிச்சயமான நகரத்துக்குள் போய்விட வேண்டும் என்ற ஆசை அவளுக்கு எழுந்தது. ஆளற்று இருந்த அந்தப் பாலத்தின் நடுவில் கிழிந்த ஆடைகளை அணிந்திருந்த நேரான கறுப்பு மயிரை உடைய அந்தப் பெண் சுருக்கம் விழுந்த முகத்தில் கடுமையும் கவலையும் நிறைந்தவளாக நின்றிருந்தாள். அவள் கரங்களின் மடிப்பிலும் லேசாய் மூடி அதே சமயம் முன்னால் நீட்டப்பட்டிருந்த கைகளிலும் அதே கடுமையும் கவலையும் நிறைந்திருந்தன. அலீனா அவள் பக்கத்தில் வந்திருந்தாள். முன்னெப்போதோ ஒத்திகை பார்த்திருந்த முகபாவனைகளையும் தூரங்களையும் மீண்டும் செய்து காட்டினாள். எந்தவிதமான அச்சமும் இல்லாமல், தன்னைக் கடைசியில் விடுவித்துக் கொள்பவளைப்போல் – ஒரே பயங்கரமான, கொண்டாட்டம் நிறைந்த, குளிர்ந்த தாவலில் – அந்தப் பெண்ணின் பக்கமாகப் போய் யோசிக்க மறுத்தவளாகத் தனது கைகளையும் நீட்டினாள். பாலத்தில் நின்றிருந்த அந்தப் பெண் அலீனா தனது மார்போடு அணைத்துக் கொண்டாள். இருவரும் பாலத்தின் அடியில் சிதறுண்டு போய்க்கொண்டிருக்கும் நதி பாலத்தின் மீது மோதும் சத்தத்தைக் கேட்டபடி விறைப்பாகவும் ஒற்றை வார்த்தையில்லாமலும் ஒருவரை ஒருவர் நெஞ்சாரத் தழுவியபடி நின்றார்கள்.

அலீனாவுக்கு வலித்தது: அவள் பணம் வைக்கும் பர்ஸின் கொக்கி பலமான அந்த அரவணைப்பினால் அவள் மார்புகளின் மத்திக்கு நகர்ந்து குடைய ஆரம்பித்திருந்தது. ஒல்லியான அந்தப் பெண் தனது அரவணைப்பில் முழுமையாவதை உணர்ந்தவளாய் அலீனா அவளை ஆரத் தழுவியபடி நின்றாள். அவளுக்குள் இருந்து ஆனந்தம் தேவாலயப் பாடலாக, சட்டென்று விடுதலையாகி எழும் மேகம் போன்ற புறாக்களின் கூட்டம் போல, நதியின் பாடலைப்போல எழுந்தது. ஈருடல்களும் ஒன்றான அந்த உணர்வை அனுபவித்தவளாய் வெளியிலிருந்து வரும் எந்தப் புலன் உணர்ச்சியையும் மாலை வெளிச்சத்தையும்கூட மறுத்தவளாய் அலீனா கண்களை மூடிக்கொண்டாள். அவளுக்கு மிகவும் களைப்பாக இருந்தது. ஆனால் அவள் வெற்றி உறுதிதான் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் அந்த வெற்றியைப் பற்றிய கொண்டாட்டத்தைவிட அது இறுதியில் தனக்குச் சொந்தமானதே என்ற உணர்வுதான் அவளுக்கு ஏற்பட்டது.

இருவரில் ஒருவர் அழுது கொண்டிருப்பதுபோல் அலீனாவுக்குத் தோன்றியது. அழுதது அவளாகத்தான் இருக்கவேண்டும். அவள் கன்னங்கள் நனைந்திருந்தன. கன்னமேடுகள்கூட யாரோ அங்கு ஓங்கி அறைந்ததுபோல் வலித்தன. தொண்டையும்கூட. திடீரென்று எண்ணிலாத சுமைகளைத் தூக்கி வைத்ததுபோல் அவள் தோள்கள் நோக ஆரம்பித்தன. கண்களைத் திறந்து பார்த்தபோது (இந்த இடத்தில் அவள் அலறியிருக்கவும் கூடும்) அவர்கள் இருவரும் பிரிந்திருந்ததைக் கண்டாள். இப்போது அவள் உண்மையிலேயே இரண்டு காரணங்களுக்காக அலறினாள். குளிரால், கிழிந்திருந்த அவளது காலணிகளின் வழியாக பனி உள்ளே வந்து கொண்டிருந்தது. அடுத்ததாக, சதுக்கத்தை நோக்கி அலீனா ரேயெஸ் நடந்துபோய்க் கொண்டிருந்தாள். அப்படிச் சதுக்கத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த அலீனா சாம்பல் நிற ஆடையில் மிக அழகாக இருந்தாள். காற்றில் அவள் தலைமயிர் லேசாய் கலைந்திருந்தது. அவள் முகத்தைத் திருப்பிப் பார்க்கவில்லை. அப்படியே போய்க் கொண்டிருந்தாள்.

***

  • சித்துராஜ் பொன்ராஜ் – இவர் சிங்கப்பூரில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பு பணிகளுடன், படைப்புகள் (கதை, கவிதை, நாவல்), விமர்சனங்கள், இலக்கிய உரைகள் என பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறார். தமிழ், ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன