Home Blog Page 90

கரோனா கால உரையாடல் – 01

0
piece from unpublished graphic novel Ganapathy Subramaniam

பூனைத் தத்துவம்

ண்பர் கணபதியுடன் சகஜமாக பேசிக்கொண்டிருக்கும் போது கரோனா குறித்த உரையாடல் சிலவற்றைப் பதியவேண்டும் என்று தோன்றிட இடையிலேயே ஒலிப்பதிவு செய்ய ஆரம்பித்தேன். பயமுறுத்தும் செய்திகளுக்கு மத்தியில் ஒரு ஆரோக்கியமான நம்பிக்கை தரும் உரையாடல்களை பதிவேற்றுவது அவசியம் என்று தோன்றியது. தோன்றியதைப் பதிவேற்றம் செய்ய 20 நாட்களாகிவிட்டது. தொடர்வோம் எனும் நம்பிக்கையுடன், ஓவியர், எழுத்தாளர், தொழில்நுட்ப சுவிஷேஷகர் (technical evangelist) கணபதி சுப்ரமணியத்துடன் ஒரு உரையாடல்.

வணக்கம், இந்த தனிமைப்படுத்துதல் காலம் உங்களுக்கு எப்படி இருக்கிறது?

நான் ஏற்கனவே தனிமைப்படுத்துதலில் இருக்கறதனால, என்னளவில் பெரிய வித்தியாசம் இன்னும் தெரிய ஆரம்பிக்கலை. ஆனா எனக்கு வெளிய தான் மாற்றத்தை உணர முடியுது.

உங்க அளவில் மாற்றம் இல்லைன்னா, நீங்க கலைஞன் என்பதால் அவன் தனிமைப்பட்டுக் கிடப்பவன் என்று சொல்றிங்களா?

நோ..நோ.. நோ அந்த மாதிரிலாம் சொல்லி ஏமாற்றிட மாட்டேன். தனிமை என் தேர்வு அவ்ளோதான். ஏற்கனவே இருந்த இந்த சூழலிலிருந்து தனிமை, மாசு, அரசியல் இப்படியான சில விசயங்களில் இருந்து தனிமைல இருந்தேன். கிட்டத்தட்ட பூனை போன்ற ஒரு சுதந்திரம்.

அப்போ இந்த வைரஸ் தாக்குதலால் உலகமே முடங்கிப் போயிருக்கிற காலத்தில், சில நல்ல விசயங்களும் பரிமாற இருக்கு இல்லையா? அப்போ அந்த நல்ல விசயங்களை தேர்வு பண்ண முடியுமா? அதாவது பூனை மாதிரி?

நிச்சயமா நல்ல விசயங்கள் இருக்கு அதற்குன்னு, அதை மட்டும் கல்வெட்டில செதுக்குன மாதிரி அப்படியே செதுக்கி வச்சிட்டா அப்படியே நின்னுடுமா அது? அது பாட்டுக்கு போயிட்டிருக்கும்.

ஆற்றானை யாற்றென் றலையாமை முன்இனிதே
கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே

இதில் பாருங்க கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே எப்படி இனிதேன்னு ஆக முடியும் கரிகாலன்? அந்த கூற்றோட profoundness (ஆழ்ந்த தன்மை) நமக்கு இருந்ததுன்னா.. இவ்ளோ நாள் இருந்ததுல்ல நாம் எப்படி வேணும்னாலும் போலாம், ஊர் சுத்தலாம், யாரை வேணும்னாலும் பார்க்கலாம், என்ன வேணும்னாலும் செய்யலாம் அப்பலாம் நாம் வேற எதுலயோ நம்ம எனர்ஜிய ஸ்பெண்ட் பண்ணிட்ருந்தோம். இப்ப இதுல கொஞ்சம் கத்துக்கறதுக்கு என்னவெல்லாம் அழகான விசயங்கள் இருக்குன்னு பார்க்கலாம்ல.. அதப் பார்க்கறதுக்கு கூட இப்பதான் நம்மளால நேரம் ஒதுக்க முடிஞ்சது.

அதுவும் கூட பூனையின் தேர்வு மாதிரி?

ம்ம்ம்ம் அப்படியும் வச்சுக்கலாம்.

ஆனா அவன் நாலுபேர் கிட்டப் பழகினாலும் ஒருத்தரை மட்டும் தானே தன்னோட வளையத்துக்குள்ள வச்சுருக்கறான்?

அது ஒரு மாதிரியான favorite என்கிற நிலை தான். அது மொதல்ல யார் மீது நம்பிக்கையை வைத்துள்ளதோ அவுங்க கிட்ட ஒரு தாய்மையான உறவைப் பார்க்குது. அதுவும் இந்த மாதிரியான உணர்வை ஒருத்தங்க கிட்ட தான பேண முடியும். அதற்கு என்ன ஆனாலும், எங்க போய் அடி, ஒதை வாங்கிட்டு வந்தாலும் இவுங்க நம்மள பார்த்துப்பாங்க, அவங்க நம்மளை harm பண்ண மாட்டாங்க, நமக்கு வேண்டியதைக் கொடுப்பாங்க அப்படிங்கற எண்ணம் தான் அது வீடு நோக்கித் திரும்ப வைக்குது.

ஆனா அது ஒரு தற்காலிகம் தான், இல்ல?

நமக்கு தான் அந்தப் பாகுபாடு தற்காலிகம், நிரந்தரம். பூனைக்கு அப்படி இருக்குமான்னு தெரியலை. இன்னும் நாம அதுக்கிட்ட இருந்து கத்துக்க வேண்டியது இருக்கு

இந்த ஊரடங்கு காலத்துல, நாமளும் பூனை மாதிரி இருந்துட்டா எவ்ளோ நல்லது இல்ல? பூனைக்கு இருக்கற அந்த ஒற்றை நம்பிக்கை போல நமக்கும் ஒன்னுத் தேவைப்படுது இல்ல? அது ஒரு குடும்பமோ, உறவோ, எந்த சிஸ்டமோ? அரசாங்கமோ? மதமோ?

ஒருவகையில அப்படி தான் இருக்குமோ..?

ஆமா பூனை மாதிரி தான, நாம கூட்டை விட்டு வெளிய போயி, ஊர் ஊரா, நாடு நாடான்னு சுத்திட்டு கண்ட சாப்பாடு, கண்ட கலாச்சாரம்னு உடலளவுலயும், மனசளவுலயும் நிறைய அடிவாங்கிட்டு, இந்த கரோனா காலத்துல சட்டுன்னு கூடு நினைவுக்கு வர நம்மளுக்கும் பூனையோட நிலை மாதிரி தான, கிட்டத்தட்ட..?

நல்லாதான் இருக்கு கற்பனை பண்ணிக்கலாம்.. ஆனா நான் ஒரு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் தேடிக்கிட்டு இருக்கறேன்.

நம்ம பாதுகாப்பிற்காக செலவு செய்துக்கிட்டு இருக்கற தொகை, நம்ம மதங்களுக்காக நாம செலவு செய்திட்டு இருக்கற தொகை இந்த இரண்டுக்கும் உலகம் முழுதும் செலவு பண்ணுற தொகையும், இப்ப இந்த தொற்றுபரவலில் இருந்து பாதுகாப்புக்காகவும், சிகிச்சையளிக்கவும் செய்யும் தொகை இரண்டிற்கும் இருக்கின்ற தொடர்பினை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

இந்த இரண்டுமே (மதம், ராணுவப் பாதுகாப்பு) செயற்கையா எல்லைகளை உருவாக்கி வைத்துவிட்டு அதற்கான செலவிடும் தொகை தான் பெரிதாக இருக்கும் இல்லையா, எல்லைகளே இல்லைன்னா இந்த மாதிரி ஆய்வுகளுக்கு செய்யலாமேன்னு தோணுது. உலகம் சந்திக்க இருக்கும் சவால்கள் அதிகம் பொது எதிரியிடமிருந்து தான் வரும். இப்ப கரோனா மாதிரி.

 ஆக்சுவலா என்ன சொல்றாங்க என்றால் நாம இன்னும் கொஞ்சம் அட்வான்ஸ்டா, அதாவது முன்னேறிய நாகரிகத்தில் இருந்தோமென்றால் ஒரு customizable vaccinesஐ உருவாக்கியிருக்க முடியும் என்று சொல்கிறார்கள்.

எப்படி சாத்தியம் சார்?

நம்ம ஒரு வைரஸை ஒரு ஆய்வுக்கூடத்தில் கொடுத்தால், அது அதற்கான தடுப்பூசியை கண்டுபிடித்துத் தரும், அது ஒரு Algorithm மாதிரி தான. ஏன் அந்த மாதிரி ஒரு அல்கொர்தம நாம ஏன் இன்னும் ரீச் பண்ணலை என்றால், நாம் இன்னும் அந்த அளவுக்கு ஆராய்ச்சிகளை இன்னும் பண்ணவில்லை. ரிசர்ச்னா பெரிய செலவு இருக்கும் தான், முன்னர் சொன்ன அந்த விசயங்களுக்கு பதிலா நாம ரிசர்ச்ல செலவு பண்ணிருந்தோம் என்றால், எந்த மாதிரியான புது இழையிலும் அது கைகொடுக்கும்.

இன்னைக்கு நாம கொரனாவுக்கு தடுப்பூசிய கண்டுபிச்சு, மக்கள்ட்ட கொண்டு போறதுக்குள்ள அது mutate ஆகி இன்னொரு வைரஸா பரவ ஆரம்பிச்சதுன்னா? இந்த மாதிரி ஆய்வு நடந்திருந்து நாம அல்கொரிதம் ஒன்றை கண்டுபிடித்து இருந்தோம்னா அந்த புது வைரஸைக் கொடுத்ததும் தடுப்பூசி தயாராகியிருக்கும்.

நாம் நூறு வருடங்களுக்கு முன்னர் நடந்த ப்ளேக் தொற்று போன்ற விசயங்களோடு தொடர்புபடுத்திப் பார்க்கையில், அதுவும் எல்லைகளைக் கடந்து தொழில்நுட்பமும், போக்குவரத்தும் வர்த்தக ரீதியாக உலகின் எல்லைகள் சுருங்கிப் போய்விட்ட காலத்தில் இந்த பாதிப்பை எப்படிப் பார்க்க முடிகிறது. (இந்த உரையாடலின் நாள் 26/03/2020)?

ஒப்பீட்டளவில் இன்றைய சூழலில், குறைந்தபட்சம் நமக்கு விழிப்புணர்வு இருக்கிறது, தகவல் தொடர்பு இருக்கிறது, defence mechanismம் நம்மகிட்ட முன்னேறியிருக்கு. ஆனா இந்த வைரஸ்க்கான தடுப்பூசி கொண்டு வந்தது உறுதியாகவில்லையே, ஆனால் இதை அறிவியல்பூர்வமாக உலகம் முழுதும் அறிந்து ஏற்றுக்கொள்ள ஒரு வருடம் வரை ஆகலாமென்றும் சொல்றாங்க. பட் அத நாம அல்கர்தமிக்கா பண்ணலாமே, எவ்ளவோ விதத்துல நாம முன்னேறியிருக்கோமே நம்மோட தொழிநுட்பங்கள் அணு அளவில் இருந்து இப்போது மூலக்கூறு அளவில் பார்க்கும்போது, இந்த வைரஸ் உடம்பில் என்ன பண்ணுது என்பதைக் கண்டுபிடித்து அதற்கு எதிரான Anti-bodyஐ உருவாக்கும் இயக்கத்தை நாம உருவாக்கியிருக்கணும். திரும்பவும் அதற்குத் தேவையான நிதி இல்லாதது தான் இதற்கு காரணம். ஒருவேளை நாம இதனோட அவசரத்தன்மையை புரிஞ்சுக்காம விட்டுட்டோம் என்று நினைக்கிறேன்.

இந்த உரையாடலை உங்க கிட்டத் தொடரணுமென்றாலும், இப்ப கலைஞனா உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன். அது எல்லாவித கலைஞர்களுக்கும் பொருந்தி வருமில்லையா அதனால் தான். நீங்க சாதாரணமா கதவுகளை மூடிவிட்டு – தூரிகையில் போடுற ஒரு கோட்டிற்கும், இந்த மூன்று நாட்களாக கதவுகளை மூடிவிட்டு – தூரிகையில் போடுற கோட்டிற்கும் என்ன வித்தியாசம்?

ஒவ்வொருத்தரைப் பொருத்தும் இருக்கு. ஒருத்தருக்கு இது மிகப்பெரிய அடக்குமுறையா இருக்கும். ஒரு வித்தியாசமும் எனக்கில்லை. ஆனா எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது.

அப்போ நீங்க பூனைக்கிட்ட இருந்து எடுக்கற தத்துவமா – இதை எப்படி நீங்க பார்க்க முடியும்?

சர்வைவல் தான் இது. இந்தச் சூழ்நிலைய பார்த்திங்கன்னா ஒருத்தர் கூட வெளியப் பார்க்க முடியலை, இது ஒருவகையில் நம் மக்களோட ஒழுங்கு தான். அது கட்டுப்பாடுல இருந்து வந்ததுதான் என்று சொன்னாலும், மக்களுக்கு இருக்கும் ஒழுங்கு தான்னு சொல்லணும். மக்கள் ஒருமாதிரி புரட்சிகரமா செயல்பட ஆரம்பிச்சா, இப்படி உலகம் முழுக்கக் கட்டுப்படுத்த போலீஸோ ராணுவமோ அதை செய்ய முடியாமப் போகும். மக்களே இதை ஏன் செய்யுறாங்க என்றால் – அது உயிர் பிழைத்தல் என்கிற அடிப்படை மனித உணர்வு தான்.

அது பூனைக்கிட்டயும் இருக்கறது தான். சர்வைவல் எங்க இருக்குதோ அங்க அது அடங்கிப்போகும், உங்க வீட்ல வளரும் பூனை மாதிரி தான்.

ஆனா ரெஸ்ட்லெஸ்ஸா சிலர் இருக்கறாங்க..

…………சிரிக்க ஆரம்பித்தார்..

(அவுங்க என் று கணபதி நினைப்பது யார் என்று எனக்கும் தெரிந்ததால், நானும் சிரித்தேன்)

ஆரம்பித்தோம்..  (உரையாடல் அடுத்த பகுதியில்..)

தொகுப்பு , கேள்விகள் – ஜீவ கரிகாலன்

அட்டை ஓவியம் – கணபதி சுப்ரமணியம் (A piece from his graphic novel unpublished)

The Argumentative Indian – ஒரு அலசல்

1

அமர்த்தியா சென் நடப்புச் செய்திகளில் அதிகம் இருந்த காலம் ஒன்று இருந்தது. நோபல் பரிசு வென்ற இந்தியர் என்ற முறையில் நம்மவர்கள் அவருக்குச் செய்த மரியாதை அது. அப்படியான காலத்தில் அவரின் பெயராலும் நூலின் தலைப்பாலும் ஈர்க்கப்பட்டு அதை வாங்கிப்போட்டுவிட்டு அதன் பின்பு பல ஆண்டுகள் அட்டையைக்கூடத் திறந்து பார்க்கவில்லை. 2010-இல் படித்தது. இப்போது மீண்டும் எடுத்துப் படித்தால் அப்போதைவிடப் பலமடங்கு அர்த்தமுள்ளதாக இருக்கும் போலத் தெரிகிறது. பொருளியல் மேதை என்றால் ஏதோ உற்பத்தி, பயன்பாடு, வளம் என்று மட்டுமே பேசத் தெரிந்தவராக இருப்பார் என்று எண்ணுகிற அளவுக்குத்தான் அப்போதைய அறிவு இருந்தது. “என்னைப் போல் உருப்படியாக எதுவும் செய்யாமல் பேசிப்பேசி நேரத்தை வீணடிப்பவர்கள் இந்தியர்கள்” என்று நக்கலடித்திருப்பார் என்றுதான் நூலை வாங்கும்போது எண்ணினேன். நாம் நினைப்பது போலவே நினைப்பவராக இருந்தால் அவர் எப்படி நோபல் பரிசு பெற்றிருக்க முடியும்! நூல் முழுக்க இந்தியர்களின் உரையாடல் மரபு பற்றிப் பேசுகிறார். அதாவது, இந்தியர்களின் மக்களாட்சி மீதான மரியாதை பற்றியும் மூடிய மனதோடும் சொந்தக் கருத்துகளில் பிடிவாதத்தோடும் இராமல் எதையும் வெளிப்படையாக உரையாடுகிற பண்பு பற்றியும் விரிவாகப் பேசுகிறார்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், இந்தியர்களின் மதச்சார்பின்மை பற்றிய நீளமான – ஆழமான அலசல். சர்ச்சைக்குரிய பிரச்சனைகள் என்று பலர் பயந்து தவிர்ப்பவற்றை அச்சமின்றியும் வெளிப்படையாகவும் கையாண்டிருக்கிறார். இந்த மரபு இந்தியா முழுமைக்குமானதா என்றும் தெரியவில்லை. அது வங்காளத்துக்கானதாக இருந்திருக்கலாம். பெரும்பான்மை இந்தியாவினுடையதாகக் கூட இருந்திருக்கலாம். இப்போதைய இந்தியாவைப் பார்க்கும்போது, உரையாடலுக்கு இடமளிக்காத ஒரு மரபும் இந்தியாவுக்குள் இருந்திருக்கத்தான் வேண்டும் என்று தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை.

நூல் முழுக்க இந்திய வரலாற்றைப் பற்றிய பல சுவாரசியமான பார்வைகளைக் கொண்டு வந்து வைக்கிறார். இந்து மதத்தைப் பற்றிய பாரபட்சமற்ற ஆய்வு செய்திருக்கிறார். நம் இரு பெரும் இதிகாசங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றி அவர் பேசிய விதத்திலிருந்தே இந்து மதத்தின் மீது அவருக்கிருக்கும் மரியாதையைப் பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. இதற்கிடையில் இந்து மதத்துக்கு அவருடைய தாத்தாவின் பங்களிப்புகள் பற்றியும் பேசுகிறார். ஒரு வடமொழிப் புலவரின் பேரன் என்ற முறையில் அதுவே அவருக்கு இந்து மதம் பற்றி விமர்சிக்கும் அருகதையைக் கூடுதலாகக் கொடுத்துவிடுகிறது. “என்னைக் கோவிலுக்குள் விடவில்லை”, “கருவறைக்குள் விடவில்லை”, “நான் தீண்டப்படாதவனாக நடத்தப்பட்டேன்” என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வருகிற பாதிக்கப்பட்ட ஒருவரின் சொற்களை வெற்றுப் புலம்பலாகக் கடந்துவிடக் கூடியவர்கள்கூட இதை நின்று கவனிப்பார்கள். அவர்களுக்காகவும் உள்ளிருந்தே கலகம் செய்யும் ஒரு சிலர் வந்துக்கொண்டே இருக்க வேண்டுமே! அதில் ஒருவர்தான் டாக்டர் சென்.

அவருடைய தாத்தா பற்றி அவர் சொல்லியிருக்கும் விஷயங்கள் மூலம் அவரும் ஒரு மேற்தட்டுப் பின்னணியிலிருந்து வந்து வென்றவரே – அடிமட்டத்தில் இருந்து வளர்ந்தவரில்லை என்பது தெரிகிறது. கொட்டாம்பட்டியிலிருந்து நேரடியாக நோபல் மேடையில் போய் உட்காருவது அவ்வளவு எளிதில்லை, தந்தையோ தாத்தாவோ பெருநகரத்துக்குக் குடியேறிப் பிள்ளைகளுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த பின்பு அடுத்த தலைமுறையில்தான் பெரிய உயரங்களை எட்ட முடியும் என்று சொல்கிற கதையாகத்தான் அமர்த்தியா சென்னின் கதையும் இருக்கிறது.

பகவத்கீதை பற்றிய உரையாடல் நேர்மையானதாக இருக்கிறது. எது சரி-தவறு என்பதற்கும் எது கடமை என்பதற்கும் இடையிலான போராட்டம் பற்றிய உரையாடல் தெளிவாக இருக்கிறது. அதே வேளையில் இந்து மதத்தை அவர் எங்குமே சிறுமைப்படுத்திப் பேசவில்லை. தன்னுடைய தாத்தா இந்து மதத்தின் மேல் அவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தும் இவர் எப்படி நாத்திகரானார் என்பது பற்றியும் தாத்தா எப்படி இவரை இவர் போக்கிலேயே சுதந்திரமாகச் சிந்திக்க விட்டார் என்பது பற்றியும் அவர் விளக்கியிருப்பது சுவாரசியமாக இருக்கிறது. இந்த மண்ணில் தோன்றிய நாத்திகர்கள் எல்லோருமே சொல்லி வைத்தது போலச் சொல்வதுதான் இது – “என் வீட்டுப் பெரியவர்கள் எனக்கு அந்தச் சுதந்திரத்தை வழங்கினார்கள்.”

மதவாத அரசியல் ஏன் நமக்குக் கேடு விளைவிக்கும் என்பதை உறுதியாக எடுத்துச் சொல்கிறார். இதெல்லாம் இருபது ஆண்டுகளுக்கு முந்தைய மதவாதம் பற்றிச் சொன்னது. இப்போதைய மதவாதம் பற்றிய அவரின் பார்வை அதைவிடப் பலமடங்கு கூர்மையான விமர்சனங்கள் கொண்டது என்பது அவரைத் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்குத் தெரியும். அப்போதைய மதவாதிகளின் ஆட்சியில் அவர்கள் வரலாற்றை மாற்றி எழுத முயன்ற ஒவ்வொரு திருட்டுத்தனத்தையும் அம்பலப்படுத்தியிருக்கிறார். கோட்சே காந்தியைக் கொன்ற வரலாற்றையே அகற்றுகின்ற அளவுக்கு அவர்கள் எப்படித் தரம் தாழ்ந்து போனார்கள் என்கிற நம்மால் நம்பவே முடியாத பின்னணிக் கதைகளைப் பேசியிருக்கிறார். இந்திய வரலாற்றில் அவர்கள் செய்ய முயன்ற மற்ற பல தில்லுமுல்லுகள் பற்றியும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

இந்த நூலைப் படிப்பதற்கு முன்பே, “அமர்த்தியா சென்னெல்லாம் ஒன்றுமில்லை. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகளைப் போலவே இன்னுமொரு போலி மதச்சார்பின்மைப் பேர்வழி. அவ்வளவுதான்” என்று வலதுசாரி ஆதரவாளர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்பேற்பட்ட பெரிய மனிதரைப் போய் ஏன் இப்படிச் சொல்கிறார்கள் என்று அப்போது அது முழுமையாகப் புரியவில்லை. இந்த நூலைப் படித்த பின்பு அதற்கான விடை கிடைத்தது. அதன் பிறகு வாயைத் திறந்தாலே காங்கிரஸ் கைக்கூலி, கிறிஸ்தவக் கைக்கூலி, பாகிஸ்தான் கைக்கூலி என்ற பட்டங்கள் எல்லாம் மிக மலிவாகக் கிடைக்கத் தொடங்கிவிட்ட காலத்தில் வயதான காலத்தில் பெரியவர் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்தால் நல்லது என்று வேண்டிக்கொள்கிற மாதிரி ஆகிவிட்டது.

ஒவ்வொரு நூலிலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சொற்கள் என்று ஓரிரு சொற்கள் இருக்கும். அந்தச் சொற்களைத் தெரிந்து கொண்டால் அந்த நூல் எதைப்பற்றி அதிகம் பேசுகிறது என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இந்தப் புத்தகத்தில் வரும் அப்படியொரு சொல் ‘heterodoxy’ (மரபு மறுப்பு). அதாவது, ஆச்சாரம் மற்றும் வைதீகங்களுக்கு எதிரான கொள்கை. ஒரு சமூகத்தின் இந்தப் பண்புதான் அவர்களை எல்லைகளைத் தாண்டிச் செல்ல வைப்பது என்கிறார். இந்தியர்களுக்கே உரிய நம்பிக்கைகள் மற்றும் பொதுப்பண்புகளால்  தான் எந்தவிதமான சாய்வுக்கும் ஆளாக விரும்பவில்லை என்று வாதிடுகிறார். உண்மையான அறிஞன் என்பவன் தன் பெற்றோரும் பெரியவர்களும் சொல்வதைக் கேட்டு அதன் மேல் தன் நம்பிக்கைகளைக் கட்டுபவனா அல்லது மொத்த அறிவுத் தேடலையும் பூஜ்யத்திலிருந்து தொடங்கி தன் நம்பிக்கைகளைக் கட்டியமைப்பவனா? நீங்கள் இரண்டாம் வகையினரே உண்மையான அறிஞர்கள் என்று நம்புபவராக இருந்தால் உங்களுக்கு சென் ஓர் உண்மையான அறிஞராகத் தெரிவார்.

தற்கால நாகரிகங்களுக்கும் பெண்ணிய இயக்கங்களுக்கும் முன்பாகவே – வரலாற்றின் ஆதியிலேயே தம் பெண்களுக்கு உரிய பங்கைக் கொடுக்கிற பழக்கம் கொண்டிருந்த இந்தியச் சமூகம் எப்படி மேற்கத்திய சமூகங்களைவிட மேலானது என்பது பற்றியும் பெருமையோடு பேசுகிறார். ஒடுக்கப்பட்ட இனங்களைச் சேர்ந்த கதாபாத்திரங்களும் எப்படி நம் உரையாடல் மரபுக்குப் பங்களித்திருக்கிறார்கள் என்பது பற்றிப் பேசியிருக்கிறார். வலதுசாரி அரசியல்வாதிகளை அவர் கேட்கும் கேள்விகள் அனைத்தும் முழுக்க முழுக்க நியாயமானவை போலத்தான் தெரிகிறது.

“இதே தைரியத்தை அவர் மற்ற மதங்களைப் பற்றி எழுதும்போது காட்ட முடியுமா?” என்ற பழைய கேள்வி ஒன்று உள்ளது. அதற்கான பதிலும் ஏற்கனவே பலரால் சொல்லப்பட்டுவிட்டது. ஒன்று, எனக்கு எது பெரிய அச்சுறுத்தல் என்று படுகிறதோ அதைப்பற்றி மட்டுமே நான் பேசுவேன் என்பது. இன்னொன்று, எது என்னுடையது என்று என்னிடம் சொல்லப்பட்டதோ அதைக் கேள்வி கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது என்பது. சென் வைக்கும் வாதங்களும் அப்படியான நம்பிக்கைகளின் அடிப்படையில் வைக்கப்படுபவை போலத்தான் தெரிகிறது.

இன்று இந்துவாக இருக்கும் எல்லோருமே அடிப்படையில் இந்துவாக இருந்தவர்கள் என்று சொல்லிவிட முடியாது என்றொரு வாதத்தை நீண்ட காலமாகவே நம்மூரில் திராவிட இயக்கத்தினர் வைத்து வருகிறார்கள். அவருக்கே உரிய பாணியில் அவரும் இதுபற்றிப் பேசுகிறார். இதில் ஒரு சாராரே இந்து மதத்தை ஆதி முதல் பின்பற்றியவர்கள் என்றும் மற்ற எல்லோருமே வேறு எதை எதையோ அவர்களுக்குரிய பாணியில் வணங்கினார்கள் என்றும் வாதிடுகிறார். இந்து மதம் என்ற ஒற்றைப் பதாகையின் கீழ் ஏன் யாரோ ஒருவர் 80% இந்திய மக்களின் பிரதிநிதியாக இருக்கவே முடியாது என்று சொல்கிறார். இந்து என்று அழைக்கப்படுகிற பலருக்கு அதன் பொருள் என்ன என்றுகூடத் தெரிவதில்லை. அதற்கு என்ன காரணம்? அது அவர்களின் அறியாமையா அல்லது ஆதியில் இருந்து அது அவர்களின் நம்பிக்கையாக இருக்கவில்லை என்பதனால் வரும் அலட்சியமா? நம்மில் சிலர் ஆச்சாரமாக இருக்கிறோம். அதை நம்மோடு நிறுத்திக் கொள்ளாமல் எல்லோருமே நம்மைப் போலவே சடங்குகளில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணும் போதுதான் ஏமாற்றம் வருகிறது. எல்லோருமே இந்து என்பதன் பொருள், எல்லோருடைய சடங்குகளும் ஒரேமாதிரி இருக்க வேண்டும் என்பதில்லையே!

அப்படியே அந்தப் பக்கம் சென்று, முகலாயர்களின் காட்டுமிராண்டித்தனமான படையெடுப்புகள் பற்றியும் நேர்மையாக உரையாடுகிறார். ஔரங்கசீப்தான் முகலாய மன்னர்களிலேயே கொடுங்கோலன் என்கிறார். அதே வேளையில் அக்பரைத் தவிர வேறு எவரையுமே அந்த வரிசையில் சகிப்புத்தன்மை கொண்ட நல்லரசனாகப் பேசவும் இல்லை.

காந்தி மற்றும் தாகூர் பற்றி அவர் எழுதியிருக்கும் பகுதி சுவாரசியமாக உள்ளது. சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் தாகூர் ஒரு பெரும்புள்ளி என்று நமக்குத் தெரியும். ஆனால் காந்தியோடு ஒப்பிடும் அளவுக்கு அவர் பெரிய ஆளா என்று தெரியவில்லை. தாகூரையும் பாரதியாரையும் ஒப்பிட்டுப் பழக்கப்பட்ட பின்னணியில் வளர்ந்த நமக்கு அவரை ஒரு கவிஞராகவும் எழுத்தாளராகவும் மட்டுமே தெரியும். கர்நாடக சட்டமன்றக் கட்டடமான விதான் சவுதா உட்கட்டடத்தின் முகப்பில் இரண்டு புகைப்படங்கள் வைத்திருக்கிறார்கள். ஒன்று காந்தி; இன்னொன்று தாகூர். இந்த நூலைப் படித்துவிட்டு, அந்தக் காட்சியைக் கண்டபோது, ஒருவேளை தாகூரும் உண்மையிலேயே அந்த அளவு பெரியவர்தானோ என்று தோன்றியது. தென்னிந்தியாவில் பிறந்ததால் பாரதியை இந்திய வரலாறு மதிக்கவில்லை என்று சொல்வது போலவே, அவர் ஒரு கவிஞராக இருந்ததால் தாகூரை ஒரு ‘தலைவராக’ இந்திய வரலாறு ஏற்றுக்கொள்ளவில்லையோ என்றும் தோன்றியது. அதுபோலவே, மற்றவர்களை விட நாம் பாரதியாரை அதிகம் பேசுவது போல, ஒரு வங்காளி என்ற முறையில் டாக்டர் சென் தாகூர் பற்றி அதிகம் பேசுகிறாரோ என்றும்கூடத் தோன்றியது.

சிலைகள், மதம், தேசியம், தேசப்பற்று போன்ற விஷயங்களில் காந்திக்கும் தாகூருக்கும் இருந்த கருத்து வேறுபாடுகள் பற்றிய உரையாடல் மிகவும் பிடித்தது. போகிற போக்கில், குஜராத் எப்போதுமே ஒரு மதவுணர்வுள்ள (மதவெறி என்றில்லை) பகுதியாகவும் வங்கம் எப்போதுமே பரந்த நோக்குடனும் இடதுசாரிச் சிந்தனையுடனும் இருந்திருக்கிறதோ என்றொரு சிந்தனை வருகிறது. எந்தக் கட்சிக்காரராக இருந்தாலும், அவர்களுடைய கொள்கை நிலைப்பாட்டில் மண்ணின் உள்ளார்ந்த ஈடுபாடு எதுவோ அதன் பாதிப்பு இருக்கத்தானே செய்கிறது! அதனால்தானோ என்னவோ குஜராத்தில் இருக்கும் காங்கிரஸ்காரர்கள் கூட வலதுசாரிகளாகவும் வங்கத்தில் உள்ள காங்கிரஸ்காரர்கள் கூட இடதுசாரிச் சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது!

எங்கெல்லாம் காந்தியும் தாகூரும் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்கள் என்கிற விரிவான ஆய்வு நன்றாக இருக்கிறது. அதுவே சில நேரங்களில் தேவைக்கும் மேலான அலசல் போலவும் தெரிகிறது. ஒரு தேசத்தின் விடுதலை என்கிற மாபெரும் குறிக்கோளோடு போய்க்கொண்டிருக்கையில், ஒரே நற்காரியத்துக்காக உழைக்கும் இரு தனி மனிதர்களின் சிறு சிறு கருத்து வேறுபாடுகளை இவ்வளவு எண்ணெய் போட்டு விளக்க வேண்டியதில்லையோ என்றும் தோன்றுகிறது.

பிரித்தானியப் பத்திரிகையாளர்கள் காந்தியிடம் “மேற்கத்திய நாகரிகம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டபோது, ‘என்னது?! மேற்கத்தியர்களிடம் நாகரிகமா?!’ என்கிற தொனியில் “அது ஒரு நல்ல யோசனையாக இருக்கும் போலத் தெரிகிறதே!” என்று அவர் நக்கலாகச் சொன்ன பதிலை தாகூர் ஏற்றுக் கொள்ளவில்லை. காந்தியைப் போலல்லாமல் தாகூர் மேற்கத்திய நாகரிகம் பற்றிப் பாரபட்சமற்ற பார்வை கொண்டிருந்தார் என்பது ஆசிரியரின் கருத்து. இதையெல்லாம் இந்தத் தாகூர் ஏன் அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொண்டாரோ! காந்தி அப்படிச் சொன்னதன் காரணமே, ‘எங்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் சிறிது உங்கள் கோளாறுகள் பற்றியும் சுய விசாரணை செய்து பாருங்கள்’ என்று நினைவூட்டுவதே.

அதுவும் சர்வதேசக் கவனம் கிடைத்திருக்கும் வேளையில் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற உத்தியாகக்கூட வைத்துக்கொள்ளலாம். அப்போது அப்படிச் சொன்னதன் மூலம் அவருடைய நோக்கம் ஓரளவு வெற்றியடைந்தது என்றே சொல்ல வேண்டும். அன்று அவர் அப்படிச் சொல்லியிருக்காவிட்டால், இன்று வரை அவர்களும் நாமும் இந்த அளவு அதுபற்றிப் பேசியிருக்க மாட்டோமே! இதே காந்திதான், “இரண்டாம் உலகப்போரில் நமக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க உதவுவது யாராக இருந்தாலும் அவர்களே நம் நண்பர்கள், நம் ஒற்றைக் குறிக்கோளான தேச விடுதலைக்காக ஹிட்லரோடு கூடக் கூட்டணி வைக்கலாம், ஆனால் ஆங்கிலேயர்கள்தாம் நம் எதிரிகள், அவர்களுக்காகப் போய் போரில் நம் இளைஞர்களைக் காவு கொடுக்க முடியுமா?” என்று கேட்ட சுபாஷ் சந்திர போஸிடம் சர்வாதிகாரமா மக்களாட்சியா என்ற வாதத்தை வைத்து இங்கிலாந்துக்கு ஆதரவாகப் பேசுகிறார்.

காந்தியின் தேசியம் மற்றும் தாகூரின் மனிதம் பற்றிய கருத்து மோதல்கள் சுவாரசியமாக இருக்கின்றன. அதில் நமக்குத் தாகூரின் வாதமே வலுவாக இருப்பது போலப் படுகிறது. அதே வேளையில், “போர் எப்படி அமைதிக்கு வழியோ அது போலவே தேசியம்தான் மனிதத்துக்கு வழி!” என்று சொன்ன காந்தியின் கருத்தும் புதுமையாகத்தான் இருக்கிறது. இதைப் பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும். இருபத்தியோராம் நூற்றாண்டுக்குக் கண்டிப்பாகத் தாகூரின் சொற்கள்தாம் பொருத்தமாக இருக்கும்.

வங்கதேசத்திலும் தாகூரின் பாடல்தான் தேசியகீதமாக இருக்கிறது என்பதும் தாகூர் எவ்வளவு பெரிய ஆளுமை என்பதற்கான இன்னொரு சான்றுதான். பிரிவினைப் பேச்சு எழுந்த ஆரம்ப காலத்திலேயே வங்கத்தைப் பிரிக்கும் கருத்தைத் தீவிரமாக எதிர்த்த தாகூருக்கு இதைவிடப் பெரிதாக என்ன மரியாதை செய்துவிட முடியும்!

சென்னும் கூட இன்றைய வங்கதேசத்தில் இருக்கும் பல பகுதிகளில் தன் இளமைக்காலத்தைச் செலவிட்டிருக்கிறார். மேற்குப் பகுதியில் பஞ்சாபிலும் குஜராத்திலும் வாழும் எவ்வளவோ பேருக்கு பாகிஸ்தானில் பல தொடர்புகள் இருப்பது போல, கிழக்கே மேற்கு வங்கத்தில் வாழும் நிறையப் பேருக்கு வங்கதேசத் தொடர்புகள் இருக்கும் போலத் தெரிகிறது. நமக்கு ஈழத்தில் இருப்பது போல. இதைப் படிக்கும் போது ‘லஜ்ஜா’ நாவலில் தஸ்லிமா நஸ்ரின் வெளிப்படுத்தி உள்ள பல உணர்வுகளை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

தாகூருக்குப் பிறகு வங்கத்தில் பிறந்த இரு பெரும் அறிஞர்களான சத்யஜித் ரே, அமர்த்தியா சென் ஆகிய இருவருமே சாந்திநிகேதனில் தாகூர் நிறுவிய பள்ளியில் படித்தார்கள் என்பது வியப்பான தகவல். இந்திரா காந்தியும் சாந்திநிகேதனில் படித்தாராம். ரே பற்றியும் இந்த நூலில் நீளமாகப் பேசியிருக்கிறார். திரைப்படம்தான் நம் காலத்தின் தலைசிறந்த கலை வடிவம் என்றாகிவிட்ட போது, அதில் வென்றவர்கள் பற்றியும் பேசுவதுதானே நல்லது! இதுவரை இந்த நாட்டில் தோன்றிய திரைப்பட இயக்குனர்களிலேயே ரேதான் தலைசிறந்த இயக்குனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர்தான் ஆஸ்கார் விருது வாங்கிய முதல் இந்தியர்.

அதுவும் ஆயுட்காலச் சாதனைக்காக ஆஸ்கார் விருது பெற்றவர். “தாகூருக்கும் ரே-க்கும் ஓர் ஒற்றுமை இருந்தது; அவர்கள் இருவருமே வேற்றுக் கலாச்சாரங்களைத் திறந்த மனதோடு நோக்கினார்கள்; மேற்குலகின் எந்த நல்லதையும் தத்தெடுத்துக் கொள்வதில் அவர்களுக்கு எந்த மனப்புழுக்கமும் இருந்ததில்லை” என்கிறார். திறந்த மனமும் பாரபட்சமின்மையும் சிறந்த பண்புகள். அதுவும் கவிஞருக்கும் கலைஞருக்கும் இவை கண்டிப்பாக இருக்க வேண்டிய பண்புகள். ஆனால் காந்தி ஒரு தலைவர். அவர் வெள்ளையர்களிடம் செய்தது அரசியல். தம் எதிரிக்கெதிரான கோபத்தை வெளிக்காட்ட அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வதுதானே தலைவனுக்கு அழகு! போராட்டக்களத்தில் உட்கார்ந்துகொண்டு பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருக்க முடியுமா?

ஒரு விஷயத்தில் நிறையப் பேர் வெவ்வேறு கருத்துக்கள் கொண்டிருக்கும் போது, அவர்கள் எல்லோரையும் மேலோட்டமாகச் சில குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவின் நல்லவை, தீயவற்றைப் பாரபட்சமில்லாமல் ஆய்வது நல்லது. ஒருவரைச் சரியானவர் என்றும் மற்ற எல்லோரையும் தவறென்றும் முடிவு கட்டுவதைவிட இதுவே சிறந்த முறை.

டாக்டர் சென் இந்தியா பற்றிய அனைத்து ஆய்வுகளையும் ஆர்வ முறை, ஆதிக்க முறை, அந்நிய முறை (curatorial, magisterial and exoticist) என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார். மூன்று பிரிவினரும் என்ன சொன்னார்கள் – எதற்காக அப்படிச் சொன்னார்கள் என்பதைத் தெளிவாக விளக்குகிறார். மூன்று அணுகுமுறைகளும் அவற்றுக்கென்று குறிப்பிட்ட நோக்கங்களும் சில உள்நோக்கங்களும் கொண்டிருந்தன.

ஆர்வமுறை தான் எல்லாவற்றிலும் பாரபட்சமற்ற – யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தோடு கூடிய உள்நோக்கமில்லாத முறை. நாம் கீழானவர்கள் என்றும் நாம் நம்முடைய நல்லதுக்காகவாவது அவர்களால் ஆளப்பட வேண்டியவர்கள் என்றும் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தோடு வந்தவர்கள் ஆதிக்க முறை ஆய்வாளர்கள். அவர்களாலேயே அனுப்பிவைக்கப்பட்டவர்கள் என்றும்கூடச் சொல்லலாம். அந்நிய முறை ஆய்வாளர்கள் என்பவர்கள், இந்தியாவுக்கே உரிய – அடுத்தவர்கள் நம்மைப் பார்த்து வியக்கத்தக்க விஷயங்களை எல்லாம் தேடித்தேடி எழுதியவர்கள். இத்தகைய வகைப்படுத்துதல், நிராகரிக்க வேண்டிய அல்லது வேடிக்கைக்குப் படிக்க வேண்டிய ஆட்களை அடையாளம் காணப் பெரிதும் உதவும்.

இரானிய அறிஞர் அல்பெரூனி திறந்த மனதோடு இந்தியாவுக்கு வருகிறார், வடமொழி கற்கிறார், அனைத்துத் தகவல்களையும் தானே நேரடியாகக் களத்தில் இறங்கிச் சேகரிக்கிறார், தான் புரிந்து கொண்டதை உலகிற்கு உரைக்கும் முன் இந்தியர்களைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார். வெளியுலகுக்கு இந்தியாவைப் பற்றி விளக்கிச் சொன்ன வெளியாட்களில் மிகச் சிறப்பான சிலரில் அவரும் ஒருவர். ஆனால், ஆதிக்க முறை ஆய்வாளரான ஜேம்ஸ் மில் என்பவரோ இந்தியாவைப் பற்றி மூட்டை மூட்டையாக எழுதிக் குவிக்கும் முன் இந்தியாவுக்கும் வந்ததில்லை; வடமொழியோ வேறு ஏதேனும் இந்திய மொழியோ கற்றதும் இல்லை. அத்தகைய ஆட்களின் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், கணிதம், அறிவியல், வானவியல், தர்க்கவியல் போன்ற இந்தியர்கள் சாதித்த அனைத்தையும் இருட்டடிப்பு செய்தார்கள். இந்தியர்களை ஒரு காட்டுமிராண்டிக் கூட்டமாக மட்டுமே கண்டார்கள். இந்தியாவுக்குள்ளேயும் இப்போதும் இது போன்ற ஆய்வுகள் நடந்துகொண்டுதானே இருக்கின்றன! நம்முடைய சார்புகளை நியாயப்படுத்துவதற்காக குறிப்பிட்ட சில மாநிலங்களின் சாதனைகளைப் பற்றியோ தோல்விகளைப் பற்றியோ வண்டி வண்டியாகப் பரப்பிவிடப்படும் பொய்களும் இந்த வகைதானே!

இந்தியாவுக்கும் சீனாவுக்குமான தொடர்பு காலம் காலமாக இருந்து வந்திருக்கிறது. அதற்கான ஆதாரங்கள் முதல் நூற்றாண்டில் இருந்து இருக்கின்றன. சீனா எப்போதுமே அவர்களின் புதுமையான பொருட்களின் மூலம் இந்தியாவை வளப்படுத்தி இருக்கிறது; அதே வேலையை இந்தியா தன் வேத இலக்கியங்கள் மூலமும் சமயக் கருத்துகள் (பெரும்பாலும் புத்த சமயக் கருத்துகள்) மூலமும் செய்திருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனப்பட்டு இந்தியாவில் பிரபலமாக இருந்தது பற்றிப் பேசுகிறார். எண்பதுகளில் நம் கிராமங்களில் ‘சைனா சில்க்’ என்ற மினுமினுக்கும் துணி அணிந்து திரிந்த இளைஞர்களுக்கும் அவர்களைப் பார்த்தவர்களுக்கும் இது நன்றாகப் புரியும். இரு திசைகளிலும் ஏகப்பட்ட அறிஞர்கள் பயணித்திருக்கிறார்கள்; தங்கள் அறிவைப் பரிமாறி இருக்கிறார்கள். தாய்நாட்டுக்குத் தம் பாடங்களை எடுத்துச் செல்லும் முன் சிலர் வந்த நாட்டில் 10 – 12 ஆண்டுகள் தங்கியே இருந்தும் இருந்திருக்கிறார்கள். இதில் சிலர் தம் இருப்பிடத்தை வந்த நாட்டுக்கே மாற்றிக்கொண்டும் இருக்கிறார்கள்.

அப்படி மிகப்பரிச்சயமாக இருந்த ஒரு பெயர் யுவான் சுவாங் (Xuanzang). பள்ளியில் படித்ததில் யுவான் சுவாங் மீசை நீளமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் என்பது மட்டுமே நினைவிருக்கிறது. யுவான் சுவாங் எவ்வளவு பெரிய அறிஞர் என்பதும் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள மக்களிடம் எவ்வளவு நெருக்கமாகவும் அன்போடும் அவர் நடந்து கொண்டார் என்பதும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.

இந்த மொத்த இந்தோ-சீனக் கதையும் நாம் ஆழமாகப் படிக்க வேண்டிய – மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய வரலாறு. வரலாறு நெடுகிலும் நாம் ஒருவருக்கொருவர் உதவியாகவும் ஒத்தாசையாகவும் இருந்து வந்திருக்கிறோம். சீனா எப்போதுமே உலகத்தின் மையமாக இருக்கவே விரும்பியிருக்கிறது என்கிறார். இப்போதுதான் பக்கத்து நாடுகளுக்கும் உலகுக்கும் பிரச்சனையாகத் தொடங்கிவிட்டது. மையமாக இருப்பதற்கும் பிரச்சனையாக இருப்பதற்கும் வேறுபாடு இருப்பதை அவர்களுக்கும் யாரேனும் நினைவுபடுத்த வேண்டுமே! இந்தியாவையும் மேற்கு நாடு என்று சொல்லி சீனா எப்படித் தன்னை உலகின் மையமாகக் காட்டிக் கொள்கிறது என்று அழகாகச் சொல்லியிருக்கிறார். எல்லோரும் நினைப்பது போல புத்த மதம் மட்டுமே இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்றதில்லை, இன்னும் ஏதேதோ சென்றிருக்கின்றன, மொத்த உலகத்துக்குமே இங்கிருந்து நிறையப் போயிருக்கிறது, இந்தியாவைப் பிரபல மதங்களின் பிறப்பிடம் என்று மட்டும் சுருக்கக்கூடாது, இப்போது மறக்கப்பட்டுவிட்ட எத்தனையோ மற்ற கண்டுபிடிப்புகளுக்கும் இது பிறப்பிடமாக இருந்திருக்கிறது என்கிறார்.

தொடக்க காலத்தில் அடுத்த நாட்டில் இருந்து வந்த ஒரு மதத்தை ஏற்றுக்கொள்வது நம் மேன்மையை இழந்துவிட்டதாகக் கருதப்படுமோ என்கிற பய உணர்வில் சீனா புத்த மதத்தை நுழையவிடாமல் பார்த்துக் கொள்கிறது. இது போன்ற தேசியவாதம் உலகின் எல்லாப் பகுதிகளிலும் இருப்பதுதானே! மற்ற பண்பாடுகளைப் பற்றி என்னவென்றுகூடப் புரிய முயலாமல் தன்னுடையதே உயர்ந்த பண்பாடு என்று கூச்சல் இடுவது எந்தப் பண்பாட்டிலுமே எளிதில் ஈர்க்கக்கூடிய கருத்துதான். என்னுடைய மொழிதான் உலகத்திலேயே சிறந்தது என்று சொல்கிற எல்லோருமே இருபத்தைந்து மொழிகளில் ஆராய்ச்சி செய்துவிட்டு வந்தா சொல்லிக்கொண்டு இருக்கிறோம்! என்னுடைய நாடுதான் உலகத்திலேயே சிறந்தது என்று சொல்லும் முன் எத்தனை நாட்டைப் பற்றித் தெரிந்துகொண்டுவிட்டுச் சொல்கிறோம்! பின்னர் அதையும் மீறித்தான் புத்த மதம் உள்ளே நுழைந்து ஆழமாக வேரூன்றுகிறது.

சீனா எப்போதுமே ஒரு சிறந்த உற்பத்திக் களமாக இருந்திருக்கிறது. இந்தியா எப்போதுமே அவர்களுக்கு ஒரு நல்ல சந்தையாகவும் மத்திய மற்றும் மேற்காசியப் பகுதிகளில் விற்பனை செய்து கொடுக்கும் முகவராகவும் இருந்திருக்கிறது. மக்களாட்சியற்ற ஓர் அரசியல் அமைப்பைக் கொண்டிருப்பதன் மூலம் நம்மைவிடப் பலமடங்கு பலன்களை அவர்கள் சாதித்துவிட்டார்கள்; நாமோ எல்லாத் தடங்கல்களையும் மீறி மக்களாட்சி நடைபெறும் நாடாக இருப்பதே ஒரு முதிர்ச்சியின் அடையாளம் என்று காட்டிக்கொண்டு இருக்கிறோம். இப்போதும் அதுவே நமக்குச் சீனாவைக் கீழாகப் பார்க்க வாய்ப்பளிக்கிறது.

உங்கள் மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதைக்கூட அவர்கள் தீர்மானிக்க முடியாது என்றால், நீங்கள் எவ்வளவு வளர்ந்து என்ன பயன்? மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் பஞ்சம் அடிக்கடி வருவதில்லை என்றோர் ஆய்வறிக்கை வாசிக்கிறார். அப்படியானால் மக்களாட்சி உண்மையிலேயே மேலானதுதானோ என்றொரு மகிழ்ச்சி வருகிறது நமக்கு. எல்லோரையும் அனுசரித்துப் போவது, அதுவும் பிரச்சனைக்குரியவர்களையும் சேர்த்து அனுசரித்துப் போவது என்பது லேசுப்பட்ட வேலையா? இது எவ்வளவு காலம் நீடிக்கப் போகிறது என்பதுதான் இப்போதைய கவலை எல்லாம்.

பஞ்சத்தைக் கட்டுப்படுத்துதலுக்கும் பசியை ஒழிப்பதற்கும் இருக்கும் வேறுபாட்டைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். பஞ்ச விஷயத்தில் சீனா பெரிதளவில் வெற்றிபெற முடியவில்லை என்ற போதிலும் பசி விஷயத்தில் இந்தியாவைவிடச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. இந்தியா அதற்குத் தலைகீழ். நாட்டின் பெரும்பகுதி மக்களுக்குப் பசியை இன்னும் ஒரு பெரும் பிரச்சனையாகவே வைத்துக்கொண்டு, ஒவ்வோர் ஆண்டும் அளவிலாத உணவுப் பொருட்கள் யாருக்கும் பயனில்லாமல் கெட்டு வீணாவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த விஷயத்தில் உலகமகா ஏழை நாடுகளை விடவும் இந்தியா மோசமாகச் செயல்படுகிறது என்கிறார். கேவலம்! கேவலம்!!

ஆண்-பெண் ஏற்றத்தாழ்வுகள் பற்றிய அவருடைய பார்வை பேசப்பட வேண்டியது. அது ஒரு தனிப்பிரச்சனை அல்ல; பல்வேறு மற்ற ஏற்றத்தாழ்வுகளோடு தொடர்புடைய பிரச்சனை; கீழ்த்தட்டு மக்களிடம் மட்டுமே அது இருக்கிறது; மேற்தட்டு மக்களிடம் அது இல்லை என்கிறார். இது ஆண்-பெண் ஏற்றத்தாழ்வு வர்க்கப் பிரச்சனையோடு தொடர்புடையது என்கிற இடதுசாரிகளின் பார்வையோடு ஒத்துப் போகிறது. பெரும்பாலான தெற்காசிய நாடுகளில் பெண் பிரதமர்களைக் கொண்டிருந்திருக்கிறோம். இன்னமும் அது நன்கு வளர்ந்த பல மேற்கு நாடுகளில் சாத்தியமாகவில்லை.

ஆண்-பெண் ஏற்றத்தாழ்வு என்பது நம் மேற்தட்டில் ஒரு பிரச்சனையே இல்லை என்பதற்கு அதுவே போதும் என்கிறார். பிரதமரான எல்லாப் பெண்களும் மேற்தட்டில் இருந்து வந்தவர்கள் என்பது மட்டுமில்லை; அவர்கள் அனைவருமே அவரவர் நாட்டில் இருந்த வானளாவிய அதிகாரங்கள் பெற்றிருந்த அரசியற் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் என்பதையும் கருத்தில் கொண்டுதான் இதைச் சொன்னாரா என்று தெரியவில்லை. இங்கே எந்த மேற்தட்டுப் பெண்ணும் அடிமட்ட அரசியற் பொறுப்பில் இருந்து உயர்ந்து அவ்வுயர் பதவிகளை அடைந்ததில்லை. அவர்கள் எல்லோருமே பின்வாசல் வழியாக வந்தவர்கள் (மாநில அரசியலில் இப்போது சில விதிவிலக்குகள் உள்ளன என்ற போதும்). எனவே கதையை அவ்வளவு எளிதாக முடித்துவிட முடியுமா என்று தெரியவில்லை.

அணுகுண்டு விவகாரத்தில் ஆழமான கருத்துக்கள் கொண்டிருக்கிறார். வளர்ந்த நாடுகள், அவர்கள் மட்டும் அணு ஆயுதங்களைக் குவித்துவைத்துக் கொண்டு நம்மைப் போன்றவர்களை வைத்துக்கொள்ளக் கூடாது என்று சொல்வதன் பின்னணியில் இருக்கும் நியாயம் என்ன என்பது பற்றி விளக்குகிறார். மிக எளிய காரணம், அவர்களிடம் இருக்கும் கட்டுப்பாட்டு அமைப்புகள் நம்மிடம் இருப்பதை விடப் பன்மடங்கு உயர்ந்தவை. அவ்வளவுதான். இதுபோன்ற கருத்துக்களைச் சொல்லும் போதுதான், “ஏ, மேற்குலகின் கைக்கூலியே!” என்று நம்மவர்கள் முத்திரை குத்தத் தொடங்கி விடுவது. ஐந்து முன்னணி ஆயுத வியாபாரிகள் மட்டும் ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் நிரந்தர அங்கம் வகிக்கும்வரை அணு ஆயுத ஒழிப்பு என்பது ஏன் சாத்தியமில்லை என்பது பற்றியும் சொல்கிறார். இந்தியா வெற்றிகரமாக அணுகுண்டு தயாரித்த செய்தியை வெளியில் சொன்ன அடுத்த சில நாட்களிலேயே பாகிஸ்தானால் நாங்களும் தயாரித்துவிட்டோம் என்று சொல்ல முடிகிறது என்றால், அதைப்பற்றி இங்கு மட்டும் ஏன் அத்தனை ஆண்டுகளாக ஏதோ பெரிய கம்ப சூத்திரம் போலப் பேசிக் குதித்தார்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்துல் கலாம் பற்றியும் சிறிது பேசியிருக்கிறார். “அவ்வளவு மென்மையான ஒரு மனிதர்கூட எப்படி அணுகுண்டின் பிரம்மாண்ட சக்தியால் ஈர்க்கப்பட்டிருக்கிறார் பாருங்கள்!” என்கிறார். அந்த ஈர்ப்பு தேசியவாதத்தோடு கலந்து விற்கப்படுகையில் இன்னும் அதிகமாகிறது.

நம்பிக்கையா, பகுத்தறிவா என்பது பற்றிய உரையாடலும் நன்றாக உள்ளது. இன்றைக்கு நம் நம்பிக்கைகளுக்கு அடிப்படை ஆதாரமாக வைத்துக் கொண்டிருக்கும் திருமறைகளைப் படைத்த தீர்க்கதரிசிகளும் நம்மைப் போல ஏற்கனவே சொல்லப்பட்ட – நடைமுறையில் இருக்கிற நம்பிக்கைகளை மட்டும் கடைப்பிடித்திருந்தால் இத்தகைய தலைசிறந்த புனித நூல்களை வருங்கால சந்ததிகளுக்குப் படைத்திருக்க முடியுமா என்கிறார். வேடிக்கையாக இருக்கிறதல்லவா? ஆனால், எவ்வளவு உண்மை!

இந்திய அடையாளம் பற்றிய உரையாடலில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே பிராந்தியம் மற்றும் மொழி அடிப்படையிலான மற்றப் பிரிவினைப் பார்வைகள் பற்றியும் பேசியிருக்கிறார். இந்த நூல் இப்போது வெளிவந்திருந்தால் இன்னும் விரிவாகப் பேசியிருப்பாரோ என்னவோ!

இந்தப் புத்தகத்தில் இருந்து எடுத்துக்கொண்ட மிக முக்கியமான – சுவாரசியமான இன்னொரு விஷயம், இரண்டு இந்துக்கள் மற்றும் இரண்டு முஸ்லிம்கள் பற்றிய ஒப்பாய்வு. ஒவ்வொரு நாளும் ஒரு நிறைவான இந்துவாக வாழ்ந்தவர் காந்தி. அவர் மதச்சார்பின்மையை வலியுறுத்தினார். இந்து தேசியவாதத்தில் பிடிவாதமாக இருந்த சாவர்கரோ கடவுளின் இருப்பிலேயே நம்பிக்கை இல்லாதவர். அவரை எப்படி இந்து மகா சபை தலைவராக ஏற்றுக்கொண்டது என்று தெரியவில்லை. அதுபோலவே, முஸ்லிம்களுக்குத் தனிநாடு கேட்ட ஜின்னா ஆன்மீக ஈடுபாடற்றவர். தினசரி வாழ்வில் முழு முஸ்லிமாக வாழ்ந்த ஆசாத் முஸ்லிம்களுக்குத் தனி நாடு என்ற கொள்கையையே எதிர்த்தார். மதவாதியாக இருப்பதற்கும் ஆன்மீகவாதியாக இருப்பதற்குமான வேறுபாட்டையும் அவையிரண்டும் ஏன் ஒன்றோடொன்று இணைந்து போக வேண்டியதில்லை என்பதையும் இதைவிடவா சிறப்பாகச் சொல்லிவிட முடியும்! தனிப்பட்ட முறையில் ஆன்மிகம் வேறு மதவாதம் வேறு என்று எண்ணுகிற – பிரித்துப் பார்க்கும் எவருக்கும் இந்த ஒப்பீடுகள் சுவாரசியமானவையாக இருக்கும்.

நூலை முடிக்கும் போது, வங்காளத்துக் கதைகளைப் பற்றிப் பேசுவதில் கூடுதல் நேரம் செலவிட்டிருக்கிறாரோ என்று இயல்பாகவே நமக்கோர் எண்ணம் தோன்றலாம். வங்காளத்தில் பிறந்த ஒருவர் மற்றவற்றை விட வங்காளத்துக் கதைகளை அதிகம் பேசுவது இயல்பானதே. மற்றவர்களை விட அது பற்றி அவருக்கு அதிகம் தெரியும் என்பதால் அதில் தவறேதும் இல்லை. மற்ற பகுதிகளைப் பற்றியும் இன்னும் கொஞ்சம் அதிகம் பேசியிருந்தால் அது ஒரு சமச்சீரான உரையாடலுக்கு உதவியிருக்கும். நூலில் பல இடங்களில் இதை உணர்வதால் இது பற்றிச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அவை இந்தியாவைவிட வங்கத்தைப் பற்றி அதிகம் பேசுகின்றன. நூலின் இறுதியில் இருக்கும் அகரவரிசை அட்டவணையில் பார்த்தால் கூட, தாகூர்தான் அதிகம் பேசப்பட்டிருக்கும் நபர். காந்தி, நேரு, அக்பர், அல்பெரூனி… எல்லோரையும் விட! இந்தியா என்ற நாட்டை உருவாக்கிய பணியில் வங்காளிகளுக்கு இருக்கும் பங்கை நாம் மறுக்கவே முடியாது என்பதாலும் நூலின் ஆசிரியர் வங்காளி என்பதாலும் இதைப் பொறுத்துக் கொள்ளலாம்.

நிறைவாக… யாரை எதற்காகப் பிடித்தாலும் அவரை முதல் அமைச்சர் ஆக்கிப் பார்க்கும் அல்லது அரசியலுக்கு வரச்சொல்லும் கூட்டம் அல்லவா நாம்! எனவே அமர்த்தியா சென் விஷயத்திலும் நமக்கு அந்தக் கேள்வி வரத்தான் செய்கிறது – ‘பொருளியலுக்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியரை அவரது நாடு எப்படிப் பயன்படுத்திக் கொண்டது?’

பாரதிராஜா – பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அரசியல், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு இவர் இயங்கும் தளம். தொடர்புக்கு -bharathee@gmail.com

உலகளாவிய பெருந்தொற்று நோய்க்காலத்தில்..

5
opensource: hope

உலகளாவிய பெருந்தொற்று நோய்க்காலத்தில் – பகுதி 1

மேலும் மக்கள் வீட்டில் தங்கினர்
மேலும் நூல்களைப் படித்தனர்
மேலும் படிப்பதைக் கேட்டனர்
மேலும் ஓய்வெடுத்தனர்
மேலும் உடற்பயிற்சி செய்தனர்
மேலும் கலைப்படைப்புகளை உருவாக்கினர்
மேலும் விளையாடினர்
மேலும் இருத்தலுக்கான புதிய வழிகளைக் கற்றுக் கொண்டனர்
மேலும் இன்னும் கற்றனர்
மேலும் ஆழ்ந்து கேட்டனர்

சிலர் தியானம் செய்தனர்
சிலர் வேண்டுதல் செய்தனர்
சிலர் நடனம் ஆடினர்
சிலர் அவர்தம் நிழலைச் சந்தித்தனர்

மேலும் மக்கள் வேறுபட்ட வகையில் சிந்தித்தனர்
மேலும் மக்கள் குணமடைந்தனர்

மேலும் அறியாமை வழியில்
அச்சுறுத்தும் வகையில்
பொருண்மையற்று
மேலும் இதயமற்று
வாழ்ந்த மக்களின் இன்மையால்
பூமி கூட குணமடையத் தொடங்கியது

மேலும் அபாயம் கடந்து சென்றதும்
மேலும் மக்கள் ஒருவரை ஒருவர் கண்டறிந்தனர்
இழந்தவைகளுக்காக வருந்தினர்
மேலும் அவர்கள் புதிய விருப்பத்தை உருவாக்கிக் கொண்டனர்
மேலும் புதிய தரிசனங்களைக் கற்பனை செய்தனர்
மேலும் புதிய வாழ்க்கைக்கான வழியை உருவாக்கிக் கொண்டனர்
மேலும் பூமியை முழுமையாகக் குணமாக்கினர்
அவர்கள் குணமானதைப் போல

உலகளாவிய பெருந்தொற்று நோய்க்காலத்தில் – பகுதி 2

மேலும் சில மாயைகள் அகன்றன
மேலும் சில ஆண்கள்
தங்கள் வலிமை மறைந்து போவதைக் கண்ணுற்றனர்
ஆனால் அடைந்தனர்
மேலும் உள்வாங்கினர்
மேலும் போராடினர்
வேலைக்குத் திரும்ப அவர்கள் ஆணையிட்டனர்
சுவர்களை எழுப்புமாறு அவர்கள் கட்டளையிட்டனர்
தேவையில்லாதவற்றில் பணத்தைச் செலவழி
மற்றவர்களைப் பழி சொல்
அந்நியர்களின் மீது அச்சங்கொள்
என் அதிகாரத்திற்கு மரியாதை கொடு

மேலும் மக்கள் சொல்லினர் முடியாது என்று.

அவர்கள் சொல்லினர் :
எங்கள் பரிசை நீ கைக்கொள்ள முடியாது.
அது பகிர்ந்து கொள்வதற்காக எங்களுக்கு மட்டுமே உரியது
நிலமும் அவள் மக்களும் குழப்பத்தில் இருந்து நீங்கினர்
அதற்கான மருந்து வேறு ஒரு வகைப்பட்டது
நாங்கள் இன்னும் இருப்போம்.

நோய்மையே எங்கள் ஆசிரியர்
நாங்கள் படிப்பினைகளுக்குச் செவிமடுப்போம்

இந்த பூமியே நம் இல்லம்.

மேலும் எங்களை நாங்களே
குணப்படுத்திக் கொள்வோம்
மேலும் எஞ்சியவை பழைய நிலையில் வைக்கப்படும்

இந்த பூமி எல்லோருக்குமான இல்லம்
மேலும் நாங்கள் அந்நியர்களைப் பராமரிப்போம்
மேலும் நாங்கள் அந்நியர்களுக்கு உணவளிப்போம்
மேலும் நாங்கள் அந்நியர்களுக்கு இருப்பிடம் தருவோம்
மேலும் நாங்கள் அந்நியர்களை அன்பு செய்வோம்
உள்ளும் புறமுமாக
இந்த பூமி அனைவருக்குமானது


கிட்டி ஓ மீரா (தமிழில்) – மதுரயாழ்

***

கிட்டி ஓ மீரா

ஐரிஷ் அமெரிக்கரான கிட்டி ஓ மீரா ஓய்வு பெற்ற ஆசிரியர். அமெரிக்காவில், விஸ்கான்சென் மாகாணத்தின் தலைநகரான மாடிசனில் வசித்து வருகிறார். In the time of Pandemic – என்ற தலைப்பில் இரு பகுதிகளாகக் கவிதைகளை எழுதியுள்ளார். இவர் எழுதிய கவிதை சமூக ஊடகங்களில் பெருமளவு பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது. சில ஆண்டுகள் கிட்டி, மருத்துவத் துறையில் பணியாற்றிருக்கிறார். இச்சூழலில் தம் மருத்துவத் துறை நண்பர்கள் , உலக மக்கள் அனைவரின் நிலை நினைத்தும் நடமாட்ட முடக்க காலத்தில் இக்கவிதையை எழுதியதாகக் கூறுகிறார். ஆங்கிலம் , அரங்கநாடகம் பயின்ற இவர், மருத்துவச் சேவை தொடர்பான படிப்பையும் படித்திருக்கிறார். ஒரு சிறு நிறுவனத்தில் படைப்பாக்கத் தலைவராகப் பணியாற்றி , பின் ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார். மருத்துவமனையில் நோயாளிகளுக்காக வேண்டுதல் செய்யும் பணியும் ஆற்றி இருக்கிறார்.

தற்போது , பணியில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.

மார்ச் 13 ல் இருந்து அவர் தம் குடும்பத்தார் சுய தனிமைப்படுத்தி இருந்த காலத்தில், தன் துணையுடன் மதிய உணவின் போது, எதுவும் செய்ய இயலாத மனநிலையில், அச்சமூட்டும் செய்திகளைப் பார்த்து விட்டு, இப்பெருந்தொற்றைப்பற்றியும், அன்பானவர்களைப் பற்றியும் பேசிக் கொண்டு இருந்ததாகவும் , அதே நேரத்தில் பூமி மாசுகள் குறைந்து இந்த உலகம் குணமாகிக் கொண்டு இருப்பதையும் பேசி விட்டு, முகநூலைத் திறந்து, சில பதிவுகளைப் பார்த்து கடந்த பிறகு, “And the people stayed home,” என்று எழுதத் தொடங்கி அப்படியே அதைப் பதிவேற்றம் செய்து விட்டு, தன் நாளைத் தொடர்ந்திருக்கிறார்.

அன்று இரவு மீண்டும் முகநூலைத் திறந்த போது, அவருடைய தோழி ஒருவர், இந்தப் பதிவு எனக்குப் பிடித்திருக்கிறது, இதைப் பகிரலாமா என்று கேட்டிருக்கிறார். கிட்டி, Sure என்று பதிலுரைத்திருக்கிறார். அதற்கடுத்த வாரங்களில் அவர் எதிர்பாராத அளவிற்கு, கட்டுகடங்காத ஆழிப்பேரலையைப் போல இக்கவிதைக்கு வரவேற்புக் கிடைத்ததாகக் கூறுகிறார்.


  • மதுரயாழ்
  • இயற்பெயர் : வீரலெக்ஷ்மி மதுரையைச் சார்ந்த இவர், தற்பொழுது தஞ்சையில் உள்ள தமிழ் பல்கலைகழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். மொழிபெயர்ப்பு சார்ந்த ஆய்வுகளை செய்துவருகிறார். தொடர்புக்கு : jovesa2009@gmail.com

வலசை போகும் சாலைகள்

4
ஓவியம் அம்மு மீரா

– மீரா மீனாட்சி

புதிய இளமைகளுடன் ஊர் திரும்பும்முன்
ரோசி ஸ்டார்லிங் வலசை பறவைகள்
வானில் தீட்டிய லிபிகள் ‘வீடடங்கென…’
கடலோரத்தில் உதிர்ந்து வீழ்ந்தன

அச்சிறு பறவைகள் மாபெரும் சிறகுகளை
மனிதனற்ற தெருக்களின் சூன்யப் புலரியில்
வீசிச்செல்வது நகரத்துயரத்தை அதிகரித்திருக்கலாம்

நானறியாத வானவீதிகளில்
காமத்தின் வீரியமேறிய
சித்திரை மேகங்கள் நாவறண்டு மடிகின்றன
மண்மறைந்த சருகுகள்
வெளியேற்றிய கீச்சொலிகளில்
புணர்ச்சியின் மய்யல்கொண்ட கோடை மலர்கள்

ஓர்மையற்றுப்போன ஊர்ப்பெயரைத் தலைசிதறி
யோசிக்கும்
மும்பை பாதையோரவாசிகள்
தங்கள் செப்பனிட்டச் சாலைகளின்
நீளத்தை தேய்ந்துபோன
கால்களால் அளந்துகொள்கின்றனர்

கடவுளரைப் பாடிக்கொண்டிருக்கும் படுக்கையறைகளில்
தற்கொலைக் கதைகளுக்கான தீவிரத் தேடல்

சாலைச் சஞ்சாரிகளுக்கு
அப்பறவைகள் வடிவங்களமைத்து
வழிக்காட்டுவதாகக் கண்ட
என் விடியற்காலைக் கனவு
மென் தூவலொன்றின் ஈரத்தில் அணைந்துவிட்டது

கடும் வெயில் வானத்தில்
மிஞ்சிய எழுத்துத் துகள்கள்
இப்போது தீட்டிய வாள்களெனப் பூமியை நோக்கி
வந்து கொண்டிருக்கின்றன

***

(மீரா மீனாட்சி – சூழலியலாளர், கவிஞர், ஓவியர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர் என பல்துறைகளில் இயங்குபவர், மும்பையில் வசித்து வருகிறார்.)

தொடர்புக்கு – sameerakannan@gmail.com

பரனோயா – காலத்துகள்

1
ஓவியம் : ஜாஹ்ன்சன் ட்ஸாங் - பரனோயா

‘ப்ரான்காப்’ சிரப்பை  ஸ்பூனில் ஊற்றினான், இந்த முறையும் அளவு அதிகமாகித் தளும்பியது.  சில சொட்டுக்கள்  தாடையில்  வழிந்து  பனியனின் மீது சிந்தின. நேற்றைய உடைதான், பிரச்சினையில்லை.   மணி  பத்தேகால், ஒரு மணிநேரம் முன்பு ‘காப்லட்’  சிரப்பை  அருந்தியிருந்தான். மழை பெய்யும் வாய்ப்பிருப்பது போல் காற்றில் குளிர்ச்சி, வானில் மேகங்கள். இப்போது மழை எதற்கு, சூட்டில் வைரஸ் சாகிறதோ இல்லையோ, இப்படி கோடையில் வானிலை திடீரென்று  மாறினால், சளி, ஜூரத்தில் கொண்டு போய் விடும். ‘ரெயின் ரெயின் கோ அவே’ பாட வேண்டியது தான், மத்திய அமைச்சரே ‘கோ கரோனா கோ’ என்று சொல்லும்போது இவன் மழையை போகச் சொல்லலாமே?

பதினோரு மணிக்கு குளித்தால் சரியாக இருக்கும். சென்ற  வருடம்  ஏப்ரலின்  போது  கோடையின்  உக்கிரம்  இன்னும்  அதிகமாக  இருந்தது. ஏழரை மணிக்கு குளிக்கும் போதே குழாய் நீர்  வெதுவெதுப்பாக இளஞ்சூட்டில் இருக்கும், இந்த வருடம் அந்தளவிற்கு இல்லையென்று தோன்றுகிறது. இரண்டு  வாரமாக பத்து, பதினொன்று என்று குளிக்கும் நேரத்தை மாற்றிக் கொண்டிருக்கிறான். மாலைக் குளியலை நிறுத்தியாயிற்று. அழுக்கு உடைகள், வியர்வை நாற்றத்தை பற்றி கவலைப்படுவதில் அர்த்தமில்லை.

அலைபேசி  அழைப்பை எடுத்தான்.  ‘சரி அத பிக்ஸ் பண்ணிடு, முடிச்சவுடனே கால் பண்ணிச் சொல்ல வேண்டாம், வாட்ஸாப் க்ரூப்ல அப்டேட் பண்ணிடு  போதும்’ இன்று இதுவரையிலேயே மூன்று   அலுவலக அலைபேசி அழைப்புகள்.  இப்படியே பேசிக்கொண்டிருந்தால் தொண்டை எரிச்சலெடுக்க ஆரம்பிக்கும். முடிந்தவரை அலுவலக சக ஊழியர்களிடம் வாட்ஸாப்பில் தொடர்பு கொண்டாலும், பேசுவதை முற்றிலும் தவிர்க்க இயலவில்லை. வீட்டிலும் கூட மனைவியிடமும், மகனிடமும் பேசுவதை குறைத்துக்கொண்டு விட்டான்.  

க்ரோமில் புது டாபை திறந்தான். ‘கோ’ ‘ என்றாரம்பிக்கும் அந்த  புதிய தளத்தின் முகவரி ‘பேவரைட்டில்’ வைத்திருக்கிறேன், வேண்டாம்  இப்போது பார்க்க வேண்டாம், பத்து நிமிடம் முன்புதான் அந்த தளத்திற்கு சென்றான். ‘ஏஎன்ஐ’ யின் ட்விட்டர்  அக்கவுன்ட்டை(ப்)  பார்க்கலாம், அதை கடைசியாக பார்த்து ஒரு மணிநேரத்திற்கு  மேலாகி விட்டது. வேண்டாம். டாபை மூடினான். ஒரு மணிநேரத்தில்  புதிதாக என்ன நடந்ததோ? பார்த்து விடுவது நல்லது. ‘கோ’ ‘… தளம்   ஏஎன்ஐ அளவிற்கு உடனுக்குடன் செய்திகளைத் தராது, மேலும்  அதில்  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மட்டுமே  உண்டு. ‘ஏஎன்ஐ’ அக்கவுன்ட்டிற்கு சென்றான். பெரிய அசம்பாவிதம் எதுவும்    சொல்லப்படவில்லை. மற்றொரு மாநிலத்தில் புதிதாக நான்கு பேர், இவனுடையதில் மாற்றமிருப்பதாக செய்தியில்லை, எதற்கும்  ‘கோ’..’ தளத்தையும் பார்த்து  விடலாம். இவன்  மாநில முதல்வரின் ட்விட்டர் அக்கவுண்டில் தகவல்கள் அதிகமாக பகிரப்படுவதில்லை, ஆளுநரோ சூரியன் ‘ஓம்’ என்று  மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருக்கிறது என்று பதிவிடுபவர். இருவரும் அடித்துக்கொள்வதை நிறுத்தி விட்டார்கள் – தற்காலிகமாகத் தான் – என்பது இந்த பேரிடரின் ஒரு சின்ன நேர்மறை விளைவு.  

அலுவலக வாட்ஸாப் குழுமத்தில் சக ஊழியர்களுக்கு கொடுத்திருந்த வேலை எந்தளவில் உள்ளதென்று விசாரித்தான். கம்பெனியின் வாடிக்கையாளர் நிறுவனங்கள் தொண்ணூறு சதவீதம் இப்போது இயங்குவதில்லை, அவர்களிடமிருந்து நாளொன்றுக்கு நாற்பது, ஐம்பது மின்னஞ்சல்கள், பல அலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்த இடத்தில், இப்போது ஒன்றிரண்டு வந்தாலே அதிகம். வாடிக்கையாளர்களுக்கு மூன்றுமாத க்ரெடிட் பீரியட், நவம்பர், டிசம்பர் மாத இன்வாய்ஸ்களை அவர்கள் ஏப்ரலில் க்ளியர் செய்ய வேண்டும், வாய்ப்பில்லை. இந்த மாதம் சம்பளம் போட்டுவிட்டார்கள், மே குறித்து உறுதியாக சொல்ல முடியாது.

ஜூன் மாதம் நிறுவனத்தை மூடினாலும் ஆச்சரியமில்லை, இந்த வயதில் புதிய வேலையும் தேட முடியாது. நாலைந்து மாதங்கள் சமாளிக்கலாம், அதன் பின் வீட்டு ஈஎம்ஐ கட்ட முடியாமல் வெளியேற வேண்டியிருக்கும். இரண்டாயிரம் ரூபாய் வாடகைக்கு ஒரு அறை போர்ஷன் எங்காவது கிடைக்குமா என்று அலைய வேண்டும். வேலை முக்கியம் தான், ஆனால்  அதற்காக, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் அலுவலகத்திற்கு செல்லப்  போவதில்லை, உயிர் பிழைத்திருப்பது அதைவிட அத்தியாவசியம்.

அசதியாக இருந்தது, அரை மணிநேரம் தூங்கினால் சோர்வு நீங்கும். வழக்கமாக நாலரை மணிக்கு விழித்துக் கொள்பவன், இன்றும் மூன்றே கால் மணிக்கே எழுந்து விட்டான், இரண்டு வாரமாக இரண்டு, மூன்று மணி என்று விழித்துக் கொள்கிறான். இரவு எப்போதும் போல் ஒன்பதரை மணிக்கு படுத்தாலும், தூங்க ஒரு மணிநேரத்திற்கும் மேலாகி விடுகிறது. அதற்குள் நாலைந்து முறை சிறுநீர் கழிக்க(ச்) செல்கிறான். உறக்கத்தில் துர்கனவுகள் வருகின்றனவா என்று தெரியவில்லை, ஆனால் முழிப்பு தட்டும்போது உணரும் பதட்டம் நீங்க பத்திருபது நிமிடங்கள் ஆகிவிடுகிறது.

பதினொன்றரை மணிக்கு ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில்  குளித்தான். ஒரு பக்கெட் நீரை மட்டுமே, நிறைய ஊற்றி குளித்தால் உடல் குளிர் கண்டு, ஜுரத்தில் கொண்டு விடும். அவசரமாக குளிப்பதால் உடலை நன்றாக தேய்த்துக் கொள்கிறானா என்பது சந்தேகம் தான், சரும பிரச்சனைகள் வராமல்  இருக்க வேண்டும். அப்படியும் உடல் நடுங்குவதைப்  போல் தோன்றுகிறது, இந்த வருடம் கோடையின் தாக்கம் குறைவு தான். நாளை முதல் ஒரு மணிக்கு தான் குளிக்க  வேண்டும். அக்னி நட்சத்திரம் எப்போது  ஆரம்பிக்கிறது, அந்த இருபது, இருபத்தியைந்து நாட்களும் கொளுத்தித்தள்ள வேண்டும்.

உடை  அணிந்த  பின், இரு டீஸ்பூன்  மஞ்சளை டம்ளரில்  கொட்டினான், இன்னும் ஒரு சிட்டிகை சேர்க்கலாம்.  குளிக்க செல்லும்  முன்பே, வோல்டாஸ் டிஸ்பென்சரில் சுடு தண்ணீர் வருவதற்கான   சுவிட்சை ஆன்  செய்திருந்தான். குளியலுக்கு பின்னேற்படும் நடுக்கம் சளி அல்லது தொண்டைக்கட்டிற்கு இட்டுச் செல்லலாம், அங்கிருந்து ஜூரம், எனவே உடனேயே மஞ்சள் கலந்த சுடுநீரை கொப்பளித்து வருகிறான். டம்ளரில் தளும்பியிருக்கும் சுடுநீர். பனியனில் மஞ்சள்  திட்டுக்கள், ‘ப்ரான்காப்’, ‘காப்லட்’ சிரப்புக்களும் இன்னும் கொஞ்சம்  நேரத்தில் அவற்றுடன் கலக்கும், அவை அலோபதி மருந்துகள் அல்ல என்பதால் பக்கவிளைவுகள் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை, அதற்காக அவற்றை குடித்துக் கொண்டேயிருக்கவும் கூடாது.   தொண்டை இன்னும் எரிகிறது, மஞ்சள் அதிகமாக போட்டுவிட்டேனோ, அல்லது நீர் மிகவும் சூடோ? தொண்டைச்சதை புண்ணாகிவிட்டால் எந்த ஈஎன்டியிடம் செல்வது? தொண்டையில் வலி என்று கூறியவுடன் உள்ளே அடைத்து விட்டால்? தன்னிச்சையாக தலைமுடியை கலைத்துக் கொண்டான். மார்ச் முதல் வாரத்தில் சலூனிற்கு கடைசியாக சென்றது. இவன்  மட்டும் தான் ஒரே வாடிக்கையாளர் என்பது ஆசுவாசமாக இருந்தாலும், கடைக்காரர் முகத்தினருகே குனியும் போதெல்லாம் பீதியாக இருந்தது. ஜடாமுடியாக வளர்ந்தாலும் சரி, கடைகள் திறக்கப்பட்டாலும் கூட, இனி நாலைந்து மாதங்கள் கழித்து தான் சலூனிற்கு செல்ல வேண்டும். ஆனால் பின்னங்கழுத்து முடியில் வியர்வை படிந்து சளியில் கொண்டு விடும், இவனே மழித்துக்கொள்ள வேண்டியது தான்.

பன்னிரண்டு மணிக்கு அலுவலக வாட்ஸாப் குழுமத்தில் வேலை எந்தளவில் உள்ளது என்பதைத் தெரிவிக்க ஆரம்பித்தார்கள், மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை அனுப்பச் சொல்லியிருந்தான். மெசேஜ்களை  படித்துக் கொண்டிருக்கும் போது மலங்கழிக்கும் உந்துதல். பகல் நேரத்தில் மலங்கழிப்பது இவனுக்கு  அருவருப்பான விஷயம், வீட்டிலிருக்கும் போது அப்படி நேர்ந்தால் மீண்டும் குளித்து விடுவான், இப்போதைய சூழ்நிலையில் அது அபாயகரமானது. அடக்கி வைத்தால், மலச்சிக்கலில்  கொண்டுவிடும். தினமும் ஒரு மணிநேரத்திற்கு மேல் காலை நடைக்குச் செல்லும் வரையில் இப்படி நேரங்கெட்ட நேரத்தில் மலங்கழிக்க நேரவில்லை, வீட்டியிலேயே இருப்பதால் செரிமானம் பிரச்சனைகள் வேறு சேர்ந்து கொண்டிருக்கிறது.

அபார்ட்மென்ட் மாடியில் நடக்கலாம் என்றால், இருபது முப்பதடிக்கு ஒருமுறை நடக்கும் திசையை மாற்றி திரும்ப வேண்டியிருப்பதால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஐந்தரை மணி இருட்டில் எதையாவது யோசித்தபடி நடந்து கொண்டிருந்தால், மாடி சுவற்றில் முட்டி கீழே விழ வேண்டியது தான். ஒருமுறை வெளிச்சம் வந்த பின் நடக்கலாமென்று ஏழு மணிக்கு மாடிக்கு போனான். ஏற்கனவே நடையில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த, இரண்டாவது தளத்தில் வசிக்கும் பேங்க்காரர் இவனைப் பார்த்தவுடன் இறங்கிச் சென்றார். அடுத்த சில நொடிகளில் இவனும்  திரும்பி, கைகளை கழுவிக்கொண்டான். பேங்க்காரர் ஏழெட்டு அடி தள்ளிதான் இருந்தார், அவர் வெளிநாட்டிற்கோ, வெளி மாநிலத்திற்கோ சமீபத்தில் சென்று வந்தது போல் தெரியவில்லை, மேலும்  காற்றில் வைரஸ் பரவாது என்று சொல்லப்படுகிறது, இருந்தாலும்  எதற்கு தேவையில்லாமல்  அபாயத்திற்கு உட்படுத்திக் கொள்ளவேண்டும்.

‘என்ன பண்ணிட்டிருக்கீங்க, ரொம்ப நேரமா உள்ளே இருக்கீங்க’ மனைவியின் குரல். வாஷ்பேசினில் நீர் மெதுவாக வருகிறதோ, காலையில் தண்ணீர் தொட்டியை நிரப்பியிருப்பார்களே. பன்னிரண்டு வீடுகள்  அபார்ட்மென்ட்டில், ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சம் மூன்று பேர், அனைவரும் முழுநேரமும் வீட்டில்தான். நீர் உபயோகம் அதிகரித்திருக்கிறது, நேற்றே ஏர் லாக்காகி தொட்டி நிரம்ப அதிக நேரமெடுத்தது, மோட்டார் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும்,  சரிசெய்ய யாரும் வரமாட்டார்கள்.

‘ப்ரொவிஷன்ஸ் கொண்டு வந்திருக்காங்க, கீழேயே நிக்கறாங்க, நாம தான் போய் வாங்கணும்’ என்று மனைவி சொல்ல ‘நான் வரணுமா’ என்று கேட்டான். ‘நீங்கதான கூகிள் பேல குடுத்துடலாம்னு   சொன்னீங்க, உங்க கிட்ட தானே அந்த அக்கவுன்ட்  இருக்கு’, ‘வரேன்’. கேஷாக ஆயிரத்து எழுநூறு ரூபாய் இருக்கிறது, பத்து நிமிட நடை தூரத்தில் தான் ஏடிம், ஆனால் இந்த(ச்) சூழலில் போக வேண்டாம்,  பலர்  தொட்ட இடத்தில்  நம் விரல்களும் பட வேண்டியிருக்கும், வீடு திரும்பி  கை கழுவுவதற்குள் கிருமி தொற்றி விட்டால்?. ஏடிம்களில் சானிடைசர்கள் வைக்கப்பட வேண்டும். 

லிப்ட்டிலிருந்து இறங்கியவுடன் பொருள் கொண்டு வந்திருப்பவரை கவனித்தான். முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தார். இவனும் , மனைவியும் கர்சீப்பைக் கொண்டு முகத்தை மூடியிருந்தார்கள். என்-95 கிடைக்கவில்லை, சராசரி மாஸ்க் ஆறு வாங்கி வைத்திருந்தான். கடைகளுக்கு செல்லும் போது மட்டும் அவற்றை உபயோகிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தான், அதன் பின் வெளியே போகாததால் அப்படியே உள்ளன. பொருட்களிருந்த பையை தரையில் கவிழ்த்த கடைக்காரர் சரிபார்த்துக் கொள்ளச் சொன்னார், நடுவில் மளிகை சாமான்கள், அதன் இருபுறமும் ஓரடி தள்ளி அவரும், இவர்களிருவரும். ‘ஏன் கிட்டக்க போற’ என்று இவன் கேட்க, ‘என்ன வந்திருக்குன்னு செக் பண்ண வேண்டாமா’ என்றாள் மனைவி. ஓரடி தூரத்தில் என்ன பொருட்கள் உள்ளன என்று கவனிக்க முடியாதா என்ன? கேட்டிருந்தவற்றில் அறுபது, எழுபது சதவீதம் தான் இருந்தன. அவற்றிற்கு கொடுக்க வேண்டிய தொகையை அலைபேசியின் கேல்குலேட்டரில் கூட்டி கடைக்காரரிடம் காண்பித்தான். உயரமாக, நீண்ட கைகளுடன் இருந்திருந்தால் வசதியாக இருந்திருக்கும், இப்போது ஓரடிக்கும் குறைவான இடைவெளி இருவருக்குமிடையே. ‘நானும் ஒரு வாட்டி பார்த்துக்கறேன் ஸார்’ என்றார் கடைக்காரர், இப்போது அவர் கைகளை நீட்ட, மீண்டும் ஓரடிக்கும் குறைவான இடைவெளி இருவருக்குமிடையே.

பொருட்களை எடுத்துக்கொண்டு லிப்டில் ஏறியவுடன் முகத்திலிருந்து கர்சீப்பை கழற்றிய மனைவி  ‘மூச்சு முட்டுது, எப்படி நாள் பூரா போட்டுக்கிட்டுருக்காங்க’ என்றாள். ‘எதுக்கு இப்பவே ரிமூவ் பண்ணினா’, ‘இனிமே எதுக்கு’, ‘நம்ம ப்ளோர்ல யாரவது வெளில நின்னுக்கிட்டிருந்தாங்கன்னா என்ன பண்றது’, எல்லாரும் அலட்சியமாக இருக்கிறார்கள். வீட்டினுள் நுழைந்தவுடன் ‘போய் கை கழுவு’ என்றான், ‘எடுத்து வெச்சுட்டு வாஷ் பண்ணிக்கறேன்’.

தொண்டையில் எரிச்சலாக உள்ளதோ? உடல் முழுதும் வலி, கால்கள்  கனத்திருக்கின்றன, கழுத்தை  தொட்டுப் பார்த்தான். சூடாகிறதோ ? பாராசிடமால் போட்டுக் கொள்ளவேண்டியது தான், ஆனால் இப்போது  முடியாது,  ஒரு மணிக்கு மதிய உணவு, அதன் பின்பு தான். மூக்கடைப்பது போலிருந்தது. கடைக்காரர் முகத்தை நன்றாக மூடிக்கொண்டு தானே இருந்தார்? விக்ஸ் வேபோரப்பை  மூக்கில்  தடவினான். மூன்று  நாட்களுக்கு  முன்பு  இதை அதிகப்படியாக   தேய்த்து சதை உரிந்து எரிய ஆரம்பித்தது இப்போது தான் அடங்கியிருக்கிறது. இனிமேல் அளவாகத் தடவ வேண்டும். இல்லாவிட்டால் அலர்ஜியாகி, ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டிடம் போகவேண்டி வரும்.

‘கோ..’ தளத்தை பார்க்கலாமா? நான்கு மணிக்கு மேல் ஏஎன்ஐ ட்விட்டரில் கடந்த இருபத்தி நான்கு மணிநேர நிலவரத்தை தெரிவிப்பார்கள். அதுவரை எதுவும் தெரிந்து கொள்ள வேண்டாம்.  ஒரேயொரு தடவை  ‘கோ..’ தளத்திற்கு செல்லலாமே, ஆனால் ஒரு நிமிடத்திற்கு மேல் செலவிடக்கூடாது. மடிக்கணினியை மூடித்,திறந்தான், மீண்டும் மூடினான். தலைவலி. தொண்டை எரிச்சல், மூக்கடைப்பின் ஆரம்பக்கட்டம், உடல் வலி, சூடு, தலைவலி, ஹைப்போகான்ரியாக் ஆகிக் கொண்டிருக்கிறேனா, இல்லை எல்லாம் நிஜம்.  ‘லஞ்ச் ரெடியா’, சாப்பிட்டவுடன் பாரசிட்டமால் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவரை? ‘காப்லட்’ சிரப்பை  ஸ்பூனில் ஊற்றினான், இந்த முறையும் அளவு அதிகமாகி தளும்பியது. சில சொட்டுக்கள்  தாடையில்  வழிந்து  பனியனின் மீது சிந்தின.

**

  • காலத்துகள் – தற்பொழுது பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார். இவரது முதல் நாவல் இயர் ஜீரோ சமீபத்தில் வெளியானது..

ரஸகுல்லா காளி

0
ஓவியம் மஞ்சித் பவா( photo taken from invaluable gallery)
  • ஜீவ கரிகாலன்

 ஷாப்பிங் முடித்து, அக்கடாவென சோஃபாவில் கயல் தலை சாய்த்தபோது சார்ஜில் இருந்த போன் ஒலித்தது.

மரிம்பா .. சே..சே என்ன இது?

சத்யா – ஒரு வைரஸ் – மனதுக்குள்ளே அந்த சொல் பிளிங்க்கியது, அது அவள் கேள்விக்கான பதில். எப்படியாவது அவனை ப்ரேக் அப் செய்தாகணும் என்று தினமும் காலைச் சிற்றுண்டியை தயார் செய்யும்போதே அவளுக்கு இப்படித்  தோன்றிவிடும்.

அதை நாள் தவறாமல் அவள் நினைத்துக் கொண்டாள், சில மாதங்களாக.

கேஸ் அடுப்பின் இரண்டு பர்னர்களிலும் நீலநிறத்தில் சமமாக எரிந்து கொண்டிருந்தது. ஒன்றில் ஜீராவும் இன்னொன்றில் பாலும் கொதித்துக் கொண்டிருந்தது. பாலில் எலுமிச்சையைக் கொட்டித் திரண்டு வந்த பாலாடையை வடித்து தனியாகச் சேமித்துக் கொண்டாள். டோஸ்டரில் மிதமாய் கருகிய ரொட்டிகளைத் தின்றபடியே ஆடைகளை உருண்டையாகத் திரட்டினாள். குங்குமப்பூவும் பாதாம் துகள்களும் அதில் ஆசை ஆசையாக ஒட்டியிருந்தன.

மீண்டும் மரிம்பா

வேண்டாம் கயல் – போனை எடுக்காதே. சப்தமாகவே அவளுக்கு கேட்டிருக்கும். அவள் வெறுப்பது முதலில் தன்னைத்தானே. போனில் லாக் பேட்டர்ன் கூட அவன் வைத்துக் கொடுத்தது தான். எந்த கோபத்தில் இருந்தாலும் அவன் போட்டுக் கொடுத்த பேட்டர்னுக்கான விளக்க உருவம் கண்ணில் தெரியும்போது அதனைத் தொடுவது போலும் சில நேரம் உணர்வதால், அவள் அவனை தனது அன்றாடத்தின் ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களிலும் பொதித்து வைத்திருந்தாள். உறங்கும் நேரத்தையும் சரிசெய்யும் உரையாடல்கள் அவளது எல்லா நாட்களையும் அவன் விழுங்கி ஆறு மாதம் ஆகியிருந்தது.

அதற்கு முந்தைய இரண்டு மாதங்களின் நரகத்தை, அது ஏற்படுத்திய காயங்களை, சத்யா ஆற்றுப்படுத்துவான் என்ற துளி நம்பிக்கையும் இல்லாத போதும் அவன் இந்த ஆறு மாதங்களாய் தொடரக் காரணம். அவளுக்கு வலிக்கும் கணங்களில் அவன் மெதுவாக ஊதிவிடும் அற்பச்செயலை செய்வது தான். உண்மையில் அது இல்லை என்றால் காயத்தை தானே கீறிவிட்டு பெரிதாக்கியிருக்கலாம் எனத் தெரிந்திருந்தது.

அவளுக்கு இப்படி எல்லாமும் புரிவதும் , தெரிவதும் தான் இத்தனை பிரச்சனைகளுக்குக் காரணமாகவும் இருக்கக்கூடும்.

எட்டு மாதங்களுக்கு முன்னர் அவளுக்குத் தெரிய வந்தபோது அவளுக்கு இந்த நுண்ணுணர்வு வேலை செய்யவில்லை. தற்கொலை தான் முதல் தீர்வாக இருந்தது. ஆறு மாதங்களுக்கு முன்னர் தன் நிலையைப் புரிந்து கொண்டவளாக எல்லாவற்றிற்கும் சம்மதித்த போது குருட்டுத்தனமாக வாழ்ந்து காண்பிக்கும் கோபம் வந்தது. ஆனால் அவள் யார் மீதும் குற்றம் செலுத்துவதில் ஒன்றும் ஆகப்போவதில்லை என நம்பினாள். அந்த சிறு கீற்றிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள ஒரு முடிவெடுத்தது தான், இடமாற்றம். ஒரு மெட்ரோவிலிருந்து இன்னொன்றிற்கு. தன் மொழி பேசும் ஊர் என்பதே முதலில் தன்னை தனிமைக்குள் அமிழ்த்துவிடாது என நம்பியிருந்தாள்.

அதற்கென்று இப்படி ஒரு ஜந்துவா இப்படி கண்முன்னே வந்து தொலைய வேண்டும். கட்டுப்படுத்த இயலாமல் சத்யனின் சேட்டைகளை ரசிக்க ஆரம்பித்தாள்.

மாற்றலாகி வந்த முதல்நாள் இரவிலேயே. தனது வாட்ஸப் ஸ்டேட்டஸில் “அதுவும் இந்த முதல் நாளிலேயே” என்று வைத்தாள்.

அந்த முதல் நாள், அது ஒரு வார நாள். ரயில் பயணத்தில் என்ன விதியாலோ சத்யா அவள் எதிரில். சொல்லிக்கொள்ளும்படி நிறைய இருக்கைகள் காலியாக இருந்தாலும், எந்த ஆணையும் பொருட்டாக மதிக்கத் தேவையில்லை என்கிற சில நாட்களே ஆன அவளது வைராக்கியத்தை, அவன் காலி செய்ய ஆரம்பித்தான்.

 ‘என்ன ஜீவன் இவன் ஒரு டின் ஹால்டிராம்ஸை ஒரே ஆளாய், ஒரே மூச்சில் காலி செஞ்சிட்டு இருக்கான்’ எனத் தோன்றியது. கடைசி உருண்டையை அவன் வாயில் போடும்போது, தன்னையும் மீறி அவனிடம் உதடுகளைக் குவித்து காண்பிப்பது போல் காண்பித்து, அதை யதார்த்தமாக சகஜ நிலைக்கு கொண்டு வந்துவிட்டாள். தன் தோழிகள் தன்னைச் சமர்த்தர்களாக தான் வளர்த்துள்ளார்கள் என்ற பெருமிதத்தில்.

எதிரே, சட்டையில் வழிந்த ஜீராவும் கீழே விழுந்த ரஸகுல்லாவும் என அவனைப் பார்த்தபோதும் சிரிக்காமல் பார்த்துக் கொண்டாள். ஆனால் தன் சிரிப்பைக் கட்டுப்படுத்த நிறைய அவகாசம் தேவைப்படும் என்பதால் கிண்டிலில் அபத்தக் கிறுக்கன் எழுதிய கொரியன் படத்தை வாசிக்க ஆரம்பித்தாள். நல்லவேளை கட்டுப்படுத்திக் கொண்டாள். குடும்ப சீரியல்களையே கதைகளென எழுதும் பலருக்கும், இந்த மாதிரி பார்ன், த்ரில்லர், கொரியன் இத்யாதி உலகப்படங்களை எழுதும் கிண்டிலர்கள் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றியது. அவன் எப்படியும் தன்னிடம் பேச முனைவான் என்பதால் தொடர்ந்து வாசித்தா………ள்.

சரியாக சென்ட்ரல் வந்தே எழுந்தாள். இந்த கிண்டில் இருக்கும்வரை எத்தனை இடர் வந்தாலும், அவமானம் வந்தாலும் தனக்கு தூக்கம் வரவழைக்கும் உபாயம் கிண்டிலில் இருக்கிறது என்கிற நிம்மதி அவளுக்கு இருந்தது.

பிளாட்பார்ம்.

கயல் கையில் ஒரு மீடியம் சைஸ் ட்ராலி பேக் தான்.

ஹெல்லோ.. ஹெல்லோ

       அவன் தானோ

என்னங்க.. மேடம்..

       அவனே தான்

ரெட் சல்வார் மேடம். அவளுடன் நடப்பவர்கள் திரும்பிப் பார்த்து அவளையும் கவனித்தார்கள்.

இந்த ஊர் அவளுக்கு நம்பிக்கை தந்தது. இடதுபுறம் வெளியேறும் வழியில் சென்று கொண்டிருந்தாள். அவனது சப்தமே இல்லை என்கிற நிம்மதி மட்டும் வந்திருக்கக் கூடாது. ஆனால்..

முன்னால் வந்து நின்றான்.

ஹெல்லோ.. என்னங்க நீங்க?  கவனிக்கவே மாட்டிங்கறீங்க. பக்கத்துல இருக்கவுங்க கூட  உங்களக் கூப்ட்டாங்களே

அவனை நேராகப் பார்த்தாள். உடனேயே அவனால் பதில் சொல்ல முடியவில்லை. உண்மையில் அவனால் அவளை எதிர்கொள்ளக் கூட முடியவில்லை. உக்கிரமான பார்வை எனத் தெரிந்தது. அவனை விட்டு நகர்ந்தாள்.

ஹெல்லோ.. மேடம்..

எப்படியும் கவனிக்க மாட்டாள் எனத் தெரிந்தது.

‘ஓய் ரஸகுல்லா காளி..’

திரும்பினாள்.

முறைக்காதீங்க. நீங்க என்ன பண்ணிங்கன்னு தெரியும். ஜஸ்ட் ஒன் மினிட்.

என்னெ இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்றீங்களா மிஸ்டர்..

ஓல்ட் டைலாக். நான் உங்களை இம்ப்ரெஸ் பண்ணலைன்னா என் கடைசி ரஸகுல்லா கீழே விழுந்துருக்காது.

இருவரும் சிரித்தார்கள்.

* *

ஓ நீங்களும் மெட்ரோ தானா.

அவன் தன்னைத் தொடர்கிறான் எனத் தெரிந்தது. அவன் அடுத்த கேள்வியை கேட்காமல் இருந்தால், இத்தனை தூரம் அவன் வந்திருக்க மாட்டான்.

ஆமா. நீங்க என்ன கிண்டில்ல புக் படிக்கிறீங்ளா அல்லது ஸ்கேன் பண்றீங்களா?

ஹெல்லோ… நீங்க என்ன பண்ணுவீங்க..?

நானா. புக்கை டவுன்லோட் பண்ணி டெலிகிராம்ல அப்லோடு பண்ணி இந்த சமூகத்திற்கு சேவை செய்வேன்.

ஐய, என்று சொல்லாமல் நாக்கின் நுனியை வாயின் இடதுபுறம் காண்பித்து, தலையை பக்கவாட்டில் அசைத்தாள். அதற்கு ஐய, தோடா, இவன் பெரிய லார்டு என்கிற பொருள்  நவயுக யுவதிகளுக்கான சிறப்பு அகராதியில்* (ஃபோர்ட் ஃபவுண்டேசன் கொடையில் யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ளார்கள். வழக்கம் போல ப்ரூஃப் ரீட் சொதப்பல்கள் ) இருக்கின்றன. சத்யாவுக்கு முதலாவது அர்த்தம் எனப் புரிந்தது.

ஐய..

அம் ஸாரி, கிண்டிலில் உங்கள் விரல்களின் பேட்டர்ன்களை கவனித்துக் கொண்டிருந்தேன். ஏறக்குறைய நீங்க ஏழு புத்தகங்களை நிமிண்டிப் பார்த்திருக்க வேண்டும்.

நோ

அப்படியென்றால் நான்கு புத்தகங்களை ஒரே நேரத்தில் வாசிக்கத் தொடங்கிருக்கீங்க மாற்றி மாற்றி. மே பி அதுல ஒன்னு சூர மொக்கையா இருக்கலாம். ஸோ நீங்க ஒரு பைப்ளியோஃபிலியா.

பதில் வரவில்லை.

சரி நீங்க கோபமாகிட்டீங்க.. இன்னும் 5 &2, 6 &1 ப்ராபப்ளிட்டிஸ் இருக்கு. இப்படி வாசிக்கறத விடுறதுல ரிபீட்டட் ஜேனர்ல வந்த புக்கா கூட இருக்கலாம் அது சூர மொக்கையான புக்கா இல்லாம.

ப்ளீஸ் ஷட் அப்.

அது உண்மையான கோபம். ஸாரி.

ஆலந்தூரிலேயே இறங்கினேன். வெளியே வரும்வரை அவன் அவளிடம் பேசவில்லை. ஓலாவில் அவளது தோழியின் முகவரிக்கு புக்கிங் செய்து கொண்டிருக்கும் போது, யாரோ எட்டிப்பார்ப்பது போல் இருந்தது.

ஸாரி என் நம்பர் கேட்க மாட்டிங்கிறீங்க

அவள் பதில் சொல்லவில்லை. அவனைத் துண்டிக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஓலா கேபும் அவளருகே வந்தது.

என் ஷர்ட்டில் பட்ட ஜீராக்கு நீங்கதான் பொறுப்பு ஸாரி கேட்கணுங்கறது தான தர்மம். அட்லீஸ்ட் உங்க பேராவது வேண்டுமே டைரில எழுதி வைக்க.

ஓடிபி எண்ணை டிரைவரிடம் சொன்னதும் அந்த தானியங்கி செயலி அவள் பெயரை உச்சரித்தது.

“ஹை கயல். வெல்கம் டூ ஓலா ரைட்”

 அந்த சப்தம் அவனுக்கும் கேட்டிருக்கும் போல
கொல்கத்தா காளின்னு எழுதிவைக்கவா? 

அவன் கத்தியது கேட்டதால் நிறுத்தச் சொல்லவில்லை. அவன் தன்னை எப்படியும் கண்டுபிடிப்பான் எனத் தோன்றியது. அதைக் காட்டிலும் அவள் அந்த மாற்றங்களுக்குத் தயாராகியிருந்தாள்..

**

மாற்றலாகி வந்த முதல்நாளே தனது வாட்ஸப் ஸ்டேட்டஸை

“அதுவும் இந்த முதல் நாளிலேயே” என்று வைத்தாள்.

“FIRST DAY WHAT?” என்கிற முதல் மெஸேஜ் அவள் எதிர்பாராத ஒன்று தான். இத்தனைக்குப் பின்னும் அப்படி வருகிறது என்றால், அது அவளுக்கு ஒரு புது மன ஆறுதலைக் கொடுத்தது. முதன்முறையாக தன் தோழி வாங்கிக்கொடுத்த மதுவை விட ஒரு நல்ல ஆறுதல்.

ஒரு ஸ்மைலியை பதிலிட்டாள்.

அதற்குப்பின்னான பல நோட்டிஃபிகேஷன்களை அவள் புறக்கணித்தாள். இந்த ஆறு மாதங்களில் அவள் நேரடியாக அந்த எண்ணிற்குப் பேசவேயில்லை. பச்சை நிறத்தாளில் அவளது கையெழுத்தைத் தவிர வேறெதுவும் பேசிட ஏதுமில்லை என்கிற முடிவு. இத்தனைக்கு பின்னர் ஏன் இந்த சத்யா என்று புலம்பாமலும் இருக்க முடியவில்லை.

பார்த்த சில நாட்களிலேயே ஒரு உணவகத்தில் சந்தித்துக் கொண்டனர். அவன் அவளைப் போன்றவன் என்பதை புத்தகங்கள் வாசிப்பதன் வாயிலாக உணர்ந்தாள். ஆனாலும் அவன் வேறு ஒரு ஜந்துவும் கூட, புத்தகங்கள் மட்டுமல்ல எல்லாவற்றையும் டிஸ்மேண்டில் செய்து மீண்டும் பொருத்திப் பார்க்கும் குணமுடையவன்.

அவனிடமிருந்த எல்லாவற்றையும் பிறருக்கு தெரிவிப்பதில், கடத்துவதில் அவனுக்கு மிகவும் ஆர்வம். அதனால் அவனது யூட்யூப் சேனலில் அவனை சகட்டு மேனிக்கு ஊரார் திட்டிக் கொண்டிருந்தனர்.

ஒருநாள் அவன் அவளையும் தன்னைத் திட்டிக்கொண்டிருக்கும் யூட்யூப் சப்ஸ்க்ரைபர்களில் ஒருவன் என்று கண்டுபிடித்தான். அடுத்த நாளில் ட்ரைவ் இன் ரெஸ்டாரண்ட் ஒன்றில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

ஹேய் ஜூஜூ, அது நானில்ல டா

சும்மா நாடகமாடாத நீ தான்

எதை வச்சு சொல்ற நான்னு. ஐபி அட்ரெஸ் ப்ரூஃபா?

எந்த ப்ர்வைடரும் ஸ்டாடிக் ஐபி கொடுக்கறதில்ல பாப்பூ. ஆனா உன்னோட கமெண்ட்ஸ்ல இருக்கற பேட்டர்ன் தான்.

மண்ணாங்கட்டி பேட்டர்ன். ஸ்டாப் இட்ரா..

என்ன மாட்டிக்கிட்டோம்னு பயப்படுறியா.. என்னைப் பத்தி தான் உனக்குத் தெரியுமே.. உன்னோட ஐடில இருந்து வரும் கமெண்ட்ஸ்ல இருக்கற பேட்டர்ன் தான். நீ கொடுக்கிற கமெண்ட்ஸ்ல இருக்கற எமோஷன்ஸ்க்கு பிவி வேல்யூ கொடுத்தேன். நீன்னு தெரிஞ்சது. அத ப்ரூவ் பண்ணத்தான் அடுத்த வீடியோல ப்ளான் பண்ணேன்.

ஹெ வொளராத.. போதும்.. என்னெக் கடுப்பேத்தாத..

நீ என்னைய ரொம்ப அண்டர் எஸ்டிமேட் பன்ற பாப்பூ. நான் நம்ம மொத சந்திப்புல போட்டுருந்த சட்டைல பண்ண வீடியோக்கு, நான் மார்க் பண்ண உன் ஐடில இருந்து வரும் நக்கலுக்கான பீவி அந்த பேட்டர்னை ப்ரீச் பண்ணுச்சு.

ப்ரீச் பண்ணுச்சா.. அப்றம் எந்த டேஷ்க்கு என்னைய தான் அதுன்னு சொல்ற இட்யட்..

ப்ரீச் பண்றதுனால தான். அது நீன்னு சொல்றேன். இப்ப நீயே உடைச்சுருக்கற டிரிகர் பாய்ண்ட்ட வச்சு. உன்னோட லைஃப்ல வரும் எல்லா எமோஷன்ஸ்க்கும் ஒரு சார்ட் போட முடியும்.

நீ ரொம்ப பயமுறுத்தற சத்யா. ப்ளீஸ் ஸ்டாப் தட்..

அதனால தான் இன்னைக்கு ட்ரைவ் இன் வந்தேன்.

ட்ரைவ் இன். அதனால என்ன.

முதலில் அவன் அவளை முத்தமிட்டான். பின்னர் அவள். அடுத்தது இருவருமென.

* *

அவனிடமிருக்கும் பேட்டர்ன்ஸ் குறித்த கோல்டன் ரூல்களை, வேத வசனங்களை உபநிஷதமாக இல்லாமல் முத்தங்களுக்கு இடையிலும் முத்த நோட்டிஃபிகேஷன்களுக்கு இடையிலும் பெற்றுக் கொண்டிருந்தாள். ஆனாலும் அது குறித்த நெருடல் சிறு துளையாக ஏற்கனவே இருந்த அவளது எட்டுமாத காயத்திற்கு அருகில் தெரிய ஆரம்பித்திருந்தது.

மீண்டும் மீண்டும் மரிம்பா 158

ஐபோன் வாங்கியிருக்கிறேன் என்று அவள் கொடுத்த முதல் டிரீட்டிலேயே அவன் மரிம்பா இசை குறித்து அவளிடம் பேசினான். ஆப்பிள் நிறுவனம் ஏன் மரிம்பா எனும் மரத்தாலான பெர்குஷன் கருவியில் ஒலிக்கும் இசை வைத்திருந்தது என்று பேசிக்கொண்டிருந்தான். தலைவலி எடுத்தது.

உண்மையில் அவளைப் பொறுத்தவரை அது முதலாவதாக வந்த உண்மையான கோபம். ஐபோன் வாங்கிய மகிழ்ச்சியைக்கூட அவளால் அனுபவிக்க முடியவில்லை என்கிற ஆத்திரத்தால் கத்தினாள். உண்மையில் அது சத்யாவுக்கு புதிய அதிர்ச்சியாக இருந்தது.

பின்பு அன்றைய இரவே அவனிடம் பேசியது சரிதானா என்று நினைத்தபடி, அந்த தேதியைக் குறிப்பிட்டு முதல் கோபத்திற்கு மன்னிச்சுடு என்றாள். அடுத்த நாள் காலையே அது உண்மையில் இரண்டாவது கோபமாக இருக்க வேண்டும் என்று வேறு ஒரு தேதியில் தன் டைரியில் ஒரு வரியைச் சேர்த்தாள். பின்னர் மூன்றாவதாக, நான்காவதாக என்று மாறியது. தற்போதுள்ள கணக்கில் நூறையும் தாண்டிவிட்டது.

இருந்தாலும் அவர்கள் பேசிக்கொண்டும், சந்தித்துக் கொண்டும் முத்தமிட்டுக் கொண்டும் இருந்தனர்.

ஏதோ ஒரு நாட்டின் / மாநிலத்தின் / நகரத்தின் /ஆய்வுக்கூடத்தின் விளைவாக / திட்டத்தினால் / விபத்தினால் / மனிதனின் அபத்த ஆசையினால் / இயற்கையின் விதிவசத்தால் பார்க்க இயலாத வைரஸ் கிருமியால் உலகமே ஸ்தம்பித்த நிலையில் எல்லா பேட்டர்ன்களும் அழிந்து கொண்டிருப்பதாகவும் உலகமே இப்போது எல்லாவற்றையும் திரும்பவும் முதலில் இருந்து தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், அனைத்துவித அறிவும் தன்னை மறுகட்டமைப்பு செய்யப்போவதாகவும், எல்லா சிந்தனையையும், சித்தாந்தங்களையும் அது திருத்தி எழுதப்போவதாகவும், புதிய ஒன்றிற்கான வாய்ப்பு எல்லா உயிர்களுக்கும் / எல்லா நிறுவனங்களுக்கும் / எல்லா அமைப்புகளுக்கும்  / எல்லா மதங்களுக்கும் கிடைக்கப் போவதாகவும் சத்யா  அவனது யூட்யூபில் சொல்லிக் கொண்டிருந்தான்.

அவன் கண்டுபிடித்த பின்னும் கூட ஃபேக் ஐடியில் அவனைத் திட்டிக் கொண்டிருந்த கயல், முதன்முறையாக அவளது சொந்த ஐடியிலிருந்து கமெண்ட் செய்தாள்:

கயல் : Try for a new algorithm. Prepare a new PV Chart table 🙂

யூட்யூபில் வேறு ஒரு சானலில் கொல்கத்தாவின் தஸரா தினத்தை வெளிநாட்டினர் எக்ஸ்ப்ளோர் செய்து கொண்டிருந்தனர். காளி அசுரவதம் செய்து கொண்டிருந்தாள். ரஸகுல்லாவின் வாசம் நாசியைத் துளைக்க, மிதமான சூடு இருக்கும் போதே ஒரு பௌலில் எடுத்து வைத்தபடி கயல் தன் வாட்ஸப் ஸ்டேட்டஸை மாற்றினாள்.

(ஜீவ கரிகாலன் – கண்ணம்மா, ட்ரங்குபெட்டிக் கதைகள் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன)

கிருமி – உமையாழ்

6
ஓவியம் கணேஷ் பைன்

1.
நான் கேட்டு நீங்கள் எதையும் வாங்கித்தராமல் இருந்ததில்லை வாப்பா. உங்களால் முடியாமல் இருந்த போதும் கூட நீங்கள் எனக்கான எதையும் செய்யாமல் இருந்ததில்லை. உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா வாப்பா, ஐந்தாவது படிக்கிற போது கல்விச் சுற்றுலாவிற்கு பணங்கொடுக்கும் திகதி தவறிப் போனது. அப்போது நீங்கள் பாடசாலைக்கு வந்திருந்தீர்கள். ஆசிரியரிடம் உங்களது மகனுக்காக பரிந்து பேசுவதற்காக. அன்று உங்களது உடல்மொழியில் இருந்த பணிவு, எனது பிடரி நரம்பை விட அண்மையில் இருப்பது போல எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது வாப்பா.

வாப்பா நீங்கள் எவ்வளவு அழகானவர், உடலால், செயலால், நீங்கள் எவ்வளவு அழகானவர்! உங்களது செயல்கள்தான் எவ்வளவு நேர்த்தியானது! எல்லாவற்றையும் செய்ய உங்களுக்கு ஒரு முறைமை இருந்தது, ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வைத்த பாசிமணி போல. நீங்கள் தவறியும் அந்த முறைமையில் இருந்து தவறியவரில்லை. ஆயினும் மெய்யான காரணங்களுக்காக அந்த முறைமையை நீங்களாகவே மாற்றிக்கொள்வீர்கள். அதில் உங்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் இருந்ததில்லை.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் நீங்கள் நகங்களை வெட்டுவீர்களே! அந்த மைக்கத்திதான் எவ்வளவு கூர்மையானது! ஒருநாள், சின்னவனாக இருந்தபோது பென்சில் சீவ எடுத்த மைக்கத்தியால் விரலை வெட்டிக்கொண்டேன். நீங்கள் பதறிப் போனீர்கள். அதற்குப் பின்னர் நீங்கள் மைக்கத்தியை தூரமாக்கி வைத்துவிட்டீர்கள். ஒரு துண்டு பிளேடால் விரல் கொப்புகள் கிழியக் கிழிய நீங்கள் நகம் வெட்டியதைப் பார்த்தபோது அழுகை வந்தது. அதையும் நீங்கள்தான் ஆற்றுப்படுத்தினீர்கள். ஆற்றுப்படுத்துவது பெரும்பணி என்பதைச் சொல்லித் தந்தீர்கள்.

மின்சாரம் தடைப்பட்ட நாட்களில் முற்றத்தில் வைத்த விளக்கில் கார்த்திகைப் பூச்சிகள் சுடுபட்டு இறந்தபோது பதறிப்போனீர்கள். அதற்குப் பிறகுதான் விளக்குகளைச் சுற்றி கண்ணாடி உருளைகள் என்றென்றைக்குமாய், நிரந்தரமான ஒரு இடத்தை பெற்றிருந்தன நமது வீட்டில். பொறிவைத்துப் பிடித்த எலியை நீரில் முக்கி சாவடித்து, நெருப்பில் சுட்ட போது உம்மாவை நொந்து கொண்டீர்கள். அந்த இடத்தில் மார்க்கம் சொல்லித் தந்தீர்கள். தற்கொலை செய்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டது. காரணமே இல்லாமல் பிற உயிர்களைக் கொல்வது தடுக்கப்பட்டது. இறந்த உடலை தீவைத்துச் சுடுவது நமக்கு ஆகுமானதல்ல. இவை எல்லாம் உயிரினதும் உடலினதும் கௌரவத்தை குறைப்பது. கண்ணியத்தைக் குலைப்பது. ஒவ்வொரு உயிருக்குமென ஒரு கண்ணியம் இருக்கிறது. ஒவ்வொரு உடலுக்கும் ஒரு கௌரவம் இருக்கிறது. அதை மதிப்பதுதான் உயர்ந்த தர்மம். அதுதான் எமது மார்க்கம். இதெல்லாம் நீங்கள் சொன்னதுதானே வாப்பா. அப்படி கற்றதுதானே வாப்பா எங்களுக்கு மார்க்கம்.

தம்பியோடு சண்டையிட்ட ஒவ்வொரு முறையும் மூத்தவன் என எனது மூர்க்கம் துளிர்க்கும் போதெல்லாம், அதிகாரம் ஆபத்தானதென புரிய வைப்பீர்கள். வலியோன் என்றால் வலிமையானவன்தானே வாப்பா? வலியோன் செயல் அறவே, எளியோன் செயல் மறவே எனச் சொல்லித் தந்தது நீங்கள் தானே வாப்பா.

நமது வாழ்க்கை வானவில் போல வண்ணம் நிறைந்ததாக இருக்கவில்லை. ஆயினும் என்ன, தேங்காய்ப் பூவும் சோறும் தின்ற நாட்களும் கசந்து போனதில்லை. ஒவ்வொரு பருக்கையாக நீங்களே ஊட்டி விட்டீர்கள் எனக்கும் தம்பிக்கும். அறம் கற்பிக்கிற ஒவ்வொரு கதையாகச் சொன்னீர்கள். அப்போதெல்லாம் எல்லாமும் நன்றாகத் தானே இருந்தது வாப்பா. நீங்கள் சொன்ன கதைகளில் மாண்புறும் மனிதர்களும், அவர்தம் கொண்ட அன்பும், காருண்யமும் எவ்வளவு மகத்தானது. உம்மா மரணப்படுக்கையில் கிடந்தபோது உங்களுடைய கையைப் பிடித்து பிள்ளைகள் பத்திரம் என்றதும், எங்களுடைய கைகளைப் பிடித்து வாப்பா பத்திரம் என்றதும் அந்த மாண்பின் மீட்சிதானே வாப்பா. நீங்கள் ஊட்டிய சோற்றுப் பருக்கையுடன் அந்த மாண்பைத்தானே எங்களுக்கும் ஊட்டி விட்டீர்கள். இவ்வளவு காலமும் உம்மாவின் சொற்படி நீங்கள் எங்களை பத்திரமாகத்தானே பார்த்துக் கொண்டீர்கள்.

உம்மாவை அடக்கி விட்டு வந்த நாள் இரவில் நீங்கள் எங்களுக்கு உபதேசித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா வாப்பா?
மரணத்திற்கு முன்னால் அழக்கூடாது.
மய்யித்திற்கு முன்னாலும் அழக்கூடாது.
கல்பு அழட்டும்.
கண்கள் அழட்டும்.
ஆனால் சத்தம் எழவே கூடாது.
ஓலம் அறவே கூடாது.

(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
(அல்குர்ஆன் : 2:156)

அப்படித்தானே வாப்பா நீங்கள் அன்று நின்றிருந்தீர்கள். மாபெரும் பொறுமையுடன், கண்களில் நீர்வடிய, கல்பு அழுது கரைய தைரியமாக நிற்பது போலத்தானே நின்றிருந்தீர்கள். யாரையும் சத்தம் போட்டு அழக்கூடாது எனச் சத்தமாகவே சொன்னீர்கள். மையத்தைத் தூக்குகிற போது எழுந்த சத்தத்தை பார்வையாலே அடக்கி விட்டீர்கள். அடியற்றுப் போனாலும் ஆலமரம் ஆலமரம்தான், அரசமரம் அரசமரம்தான். அவ்வளவு அமைதியான மய்யித்து வீட்டை யாரும் கண்டிருக்க மாட்டார்கள்.

படுத்த இடத்தில் சூடு ஆறும் முன்னர் மய்யித்தைக் குளிப்பாட்டி, கபனிட்டு, தொழுவித்து அடக்கி விட வேண்டும். அப்படித்தானே வாப்பா?

அதை மட்டும்தானே நீங்களும் வேண்டுனீர்கள்.
உம்மாவை அடக்குவதில் எவ்வளவு அவசரம் காட்டினீர்கள்!

உம்மாவின் சூடு அவ்வீட்டில் பெரும் வெம்மையாய் நிறைந்திருந்த போதே உயிரற்ற உம்மாவின் உடலை அடக்கம் செய்யக் கொண்டுபோய் விட்டோம்.

வெல்லக்கட்டியில் எறும்புகள் போல பள்ளியில் ஒரு ஆயிரம் பேர் கூடி இருப்போம் உம்மாவிற்கான கடைசித் தொழுகையைத் தொழுவதற்காக. ஐந்து வேளையும் நேரந்தவறாமல் தொழுத உம்மாவை வெள்ளைத் துணியால் சுற்றி, ஒரு பேழையில் வைத்து பள்ளியில் முன்வரிசையில் வைத்திருந்தோம். இனி உம்மாவிற்கு தொழுகை கடமையில்லை. உம்மாவின் இறந்த உடல் மீதான தொழுகை நமக்குத்தான் கடமை எனச் சொன்னீர்கள். உங்களது கண்ணீர் கசிந்த கண்ணின் பிசுபிசுப்பு எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது வாப்பா.

தொழுதோம். ஆறடி மண்ணில் உம்மாவை புதைத்துவிட்டு வந்துவிட்டோம். எவ்வளவு கண்ணியமான மரணம்! எவ்வளவு கண்ணியமான இறுதி யாத்திரை!

“இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்”
(அல்குர்ஆன் : 20:55)


02.


ங்களுக்கு, நீங்கள் இன்றுதான் இறந்து போனீர்கள் வாப்பா. அப்படித்தான் சொல்லப்பட்டோம். நுரையீரல் திரண்டு, மூச்சுத்திணறி நீங்கள் இறந்து போனதாக அந்தச் சிங்கள அதிகாரி தள்ளி நின்று செய்தி சொன்னார். நாங்கள் உங்களைப் பார்த்து சரியாக பதிமூன்று நாட்களாகி விட்டது. ஏதோ ஒரு பெயர் தெரியாத இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததை விட, இத்தனை நாளும் உங்களைப் பற்றிய தகவல்கள் தெரியாமல் இருந்ததுதான் கொடுமையாக இருந்தது வாப்பா. காலையில்தான் வீடு திரும்பி இருந்தோம். எங்களைச் சோதித்தவர்கள் கொடுத்த வைத்திய நற்சான்றுப் பத்திரத்தைக் கையோடு கொண்டுவந்திருந்தோம்.

அப்போதுதான் அதிகாரிகள் வந்திருந்தார்கள். நீங்கள் இறந்து இரண்டு நாட்களாகிவிட்டதாம். அப்படியும் ஒரு தகவல் சொன்னார்கள். கிணற்று வாளியை அப்படியே போட்டுவிட்டு தம்பி ஓடி வந்தான். உங்களை எப்படியாவது பார்க்க வந்துவிட வேண்டும் எனச் சொல்லிக்கொண்டிருந்தான். அதற்காகத்தான் குளித்துக் கொண்டிருந்தான். ஒட்டகச் சிவிங்கி போல நீண்ட கழுத்துடைய அந்த அதிகாரி தம்பியை தள்ளி நிற்கச் சொன்னார். அவரும் பின்னகர்ந்து கொண்டார். அவரது கண்ணை மட்டுமே பார்க்க முடிந்தது. இரக்கம் இல்லாத, இரண்டு சிவந்த கோலிக்குண்டுகள் போன்ற கண்களை உடைய அந்த அதிகாரி, மேலும் சொன்னார், இறந்த உடலை உறவினர்களிடம் கையளிக்க முடியாதென்பதாக. அப்போதுதான் தம்பி குரலை உயர்த்தினான். அவனை நான் சமாதானம் செய்தேன். பசித்த வேங்கையின் முன்னால் பரிவை வேண்டுகிற ஒரு புள்ளிமானின் உடல்மொழியை அணிந்துகொண்டேன். பணிவாக அந்த அதிகாரியை வேண்டினேன். இந்த உடல் ஏற்கனவே கூனி இருந்தது. இந்தக் காலத்தில் இறப்பவர்களது உடலை உறவினர்களிடம் கையளிக்க முடியாது என அதிகாரி சொன்ன தோரணையில் திமிரேறியிருந்தது. பணிவின் முன்னால் திமிரோடு நிற்பவன் கோழை. இறப்பின் மீது பரிவற்ற அந்தக் கோழை அதிகாரியின் கண்களை தரிசிப்பதை தவிர்க்க எண்ணினேன். அப்போதுதான் அவர் இறந்த உடல்களை எரிக்கச் சொல்லி இருக்கிறார்கள் என்கிற தகவலைச் சொன்னார். தம்பி கட்டையைக் கையில் எடுத்தான். அந்த அதிகாரியை விலகிப் போகும்படி சைகை செய்தேன்.

ஊரடங்குச் சட்டத்தையும் மீறி உங்களது உடல் வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்ன அந்த வைத்தியசாலையின் வாசலில் எங்களுக்கான கடைசி நம்பிக்கைகளை இறுகப் பிடித்தவர்களாக நின்றிருந்தோம். கண்களில் கருணை உள்ளவர் எவரையாவது எங்கள் மீதுசாட்டு ரஹ்மானே என்கிற வேண்டுதல், தகிக்கும் உள்ளத்தைத் தாண்டி வார்த்தைகளாக பொரிந்து கொண்டிருந்தது. நீங்கள் இங்கே நிற்பதே எங்களுடைய பெருங்கருணையால்தான் எனச் சொன்ன அந்த ராணுவ அதிகாரியின் முகம் கன்றிப் போயிருந்தது. ஒரு எதிரிக்கு முன்னால் விறைப்போடு நிற்கும் இயந்திரத்தனத்தை அவன் வலிந்து தனது உடலின் மேல் தருவித்திருந்தான். நரகலைப் பார்ப்பதைப் போல ஒரு பார்வை அங்கிருந்த எல்லோருடைய முகங்களையும் அப்பி இருந்தது. மனிதன் பயப்பட ஆரம்பிக்கும் போது அவனிடம் எஞ்சி இருக்கும் வன்மங்கள் எல்லாம் திரண்டு நிற்பதைக் கண்முன்னே கண்டேன் வாப்பா.

தம்பி வெட்டப்பட்ட பல்லியின் வாலைப் போல துடித்துக் கொண்டிருந்தான். நான் அவனை ஆற்றுப்படுத்துவது பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

எரிப்பதற்காக எடுத்து வைக்கப்பட்ட மூன்றாவது இஸ்லாமியரது உடல் உங்களது தந்தையருடையதுதான் எனச் சொல்லப்பட்டோம். இரண்டு உடல்களை தீ வைத்துச் சுட்டெரித்த வெற்றிக் களிப்பில் அவர்களது முகங்கள் பிரகாசித்தன. எதிரி என நினைப்பவனின் காயங்களைக் கசக்குவதில் அப்படி ஒரு ஆனந்தத்தை அவர்கள் எல்லோரும் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள் வாப்பா.

வாப்பா, இன்னேரத்துக்கு நீங்கள் கிடத்தப்பட்ட இடத்தில் குளிர் ஏறி இருக்கும். படுத்த பாயின் சூட்டை, ஏறிய அக்குளிர் சமன்செய்து தாண்டி இருக்கும். ஐயோ வாப்பா, நீங்கள் கேட்ட அற்பமானதைக்கூட நிறைவேற்ற முடியாமல் நின்றிருப்பது எவ்வளவு பெரிய கைசேதம்! விம்மி விம்மி நெஞ்சு பதைத்தது வாப்பா.

நீலக்கவசம் அணிந்தவர்கள் சடலமொன்றை நரகலைக் காவுவதைப் போல வாகனமொன்றில் ஏற்ற முயன்றபோது தான் தம்பி திமிறி எழுந்தான். தடுப்பான்களை மீறி அவன் சீறிப்பாய்ந்த போது இயந்திரத் துப்பாக்கி உடன் நின்றிருந்த இயந்திரம் போன்ற மனிதர்களில் ஒருவனால் முழங்காலில் சுடப்பட்டான். பொத்தென விழுந்தவன் வீறிட்ட அலறல் உங்களுக்குக் கேட்டதா வாப்பா. ஈரக்குலையைப் பிடுங்கி எடுத்ததைப் போல ஒரு பிக்கல். ஒரு வலி. முறுக்கி விட்ட விசைப்படகைப் போல அந்த அதிகாரியை நோக்கி ஓடினேன். எனது எண்ணங்களில் அவனது குரல்வளை மட்டுமே குறியாக இருந்தது.

03.


நிலத்தில் மல்லாந்து கிடந்தேன். நாக்கு வெளித்தள்ளி இருந்தது. என்னைத் துளைத்து வெளியேறிய குண்டில் எனது மூளையின் சிதைவுகள் அப்பி இருந்தன வாப்பா. இரண்டாவது குண்டு பல்லிடுக்கில் சிக்கிய இறைச்சித்துண்டு போல மூளைக்குள்ளேயே தங்கி விட்டது. கசிந்த ரத்தம், கொட்டிய இடத்தில் கட்டியாகத் திரண்டிருந்தது. எனக்கு எல்லாமும் தெளிவாகத் தெரிகிறது வாப்பா. மிகமிகத் தெளிவாக. மனிதன் இறந்து போகிற போது அவனுக்கு எல்லாமும் தெளிவாக விளங்கி விடுகிறது.

சிதறிய என் மூளையின் துகள்கள் அந்த ரத்தக்கட்டியை நோக்கித் திரண்டு வந்தன. ஊர்ந்து ஊர்ந்து திரண்டு வந்தன. வெஞ்சினங் கொண்ட பாம்பைப் போல, உஸ்ஸ்ஸஸ…. மூளைச் சிதறல்கள் ஊர்கிற சத்தம் காற்றில் ஏறிற்று. ரத்தமும், மெல்லிய கம்மிய நரம்பு நாளங்களும் கெட்டி ரத்தத்துடன் கலந்தெழுந்தன. ஆயிரம் நாக்குகளைக் கொண்ட ஒரு மாபெரும் கிருமியைப் போல அவை உருக்கொண்டன. மெல்லிய உஷ்ணம் பரவிய என் உடலில் அந்தக் கிருமி ஊர்ந்தது. என்னுடலில் உயிர் எஞ்சி உள்ள இடத்தைத் தேடி, அறத்தால், மாண்புகளால் கைவிடப்பட்ட ஒரு அநாதை அலைவதைப் போல அது ஒவ்வொரு இடமாக ஊர்ந்தது வாப்பா. அது ஊர்ந்த இடமெல்லாம் கண்ணீரின் கதகதப்பை உணர்ந்தேன் வாப்பா.

பயம் அப்பிய ராணுவ வீரர்கள் என்னை நோக்கி மீண்டும் மீண்டும் சுட்டார்கள். அவர்களால் வெற்றுடலைத்தான் சுட முடிந்தது. திரண்டு நின்ற கிருமி தீச்சுவாலையைக் கக்கிய அவர்களது குண்டுகளை இலகுவாகக் கடந்து கடந்து ஊர்ந்தது. அவர்கள் சுட்ட ஒவ்வொரு குண்டுக்கும் அது வலிமை கொண்டெழுந்ததை நான் நிச்சயமாகக் கண்டேன் வாப்பா.

வாப்பா, திரண்டெழுந்த கிருமி உங்களது வெற்றுடல் கிடந்த அந்த நீலப்பையை நோக்கி ஊர்ந்து வந்தது வாப்பா. அது எழுந்து நின்று உங்களுக்காகத் தொழுதது வாப்பா. அது உங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். அதிகாரிகள் நியாயமான ஒரு காரணத்தைச் சொல்லி இருந்தால் அது எங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும் வாப்பா. ஆனால் அவர்கள் எங்களது பணிவிற்கு முன்னால் அதிகாரத்தைக் கொண்டிருத்தினார்கள். எங்களை அடங்கிப் போகப் பணித்தார்கள். அங்குதான் எல்லாமும் பிழைத்தது வாப்பா. தம்பி சுடப்பட்டது, நான் செத்தது, இப்போது  கிருமி உருப்பெற்றதென எல்லாமும் நடந்து விட்டது. இதோ கிருமி எழுந்து நிற்கிறது.

இயந்திர வேடம் பூண்ட மனிதர்கள் அவர்களது இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டுக்கொண்டே கிருமியின் பின்னால் ஓடி வருகின்றனர். குண்டுகளை விழுங்கி விழுங்கி அந்தக் கிருமி ராட்சத உரு கொள்கிறது வாப்பா. பயம் போர்த்திய அதிகாரிகளும் ராணுவ வீரர்களும் மலைத்து நின்ற போது அந்தக்கிருமி வெடித்துச் சிதறி ஒவ்வொருவர் மீதும் அப்பிக்கொள்கிறது. தம்பியைச் சுட்டவனது முகம், பயத்தால் ஈயம் காய்ச்சி ஊற்றியதைப் போல தீய்ந்து போவதைப் பார்க்க அவ்வளவு திருப்தியாக இருக்கிறது வாப்பா. எல்லோரும் தெறித்து விழுந்த சில்லான் கொட்டைகள் போல சிதறி ஓடுகிறார்கள். தன்னைத் திரட்டி திரும்பவும் உருக்கொண்ட கிருமி அதோ, அங்கே ஊர்ந்து ஊர்ந்து ஊருக்குள் நுழைகிறது.

உஸ்ஸ்ஸ்ஸஸ……


உமையாழ் – தற்பொழுது இவர் இலண்டனில் வசிக்கிறார். இவரது சிறுகதைத் தொகுப்பு CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை அண்மையில் வெளியானது.

ஆசிரியர் தொடர்புக்கு : -umayaal.peri@gmail.com

கிளுவை முள் – ரமேஷ் ரக்சன்

1

குளியலறையில் ஹேன்ட்வாஷிற்கு மேல் மாட்டியிருந்த முகம் பார்க்கும் ஓவல் வடிவ இரண்டடி உயரக் கண்ணாடியை, பெருவிரல் ஊன்றி கால்கள் நடுங்கக் கழற்றி, கண்ணாடியின் எடையால் சிவந்து போன விரல்களோடு முன் அறைக்கு எடுத்து வந்து சுவற்றில் கொஞ்சம் இறக்கிச் சாய்த்து, நிற்குமா இல்லை டைல்ஸ் தரைக்கு வழுக்கிக் கொண்டு தரைதொட்டு சிதறிவிடுமா என்ற பயத்தோடு விடவும் முடியாமல், பிடித்துக் கொண்டும் நிற்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள் ரோஸ்லின். தன் குதிகால் பிடியில் கண்ணாடியை நிறுத்திவிட்டு, அப்படியே பின்னோக்கி முதுகைச் சாய்த்தவள், கைக்கெட்டிய இருக்கையை இழுத்து, அதில் கிடந்த தனது ஜீன்ஸ் பேண்ட் துணையோடு கண்ணாடி சறுக்கி விடாமல் இடமிருந்து வலப்பக்கம், வலமிருந்து இடப்பக்கம் எனக் கொஞ்சம் கொஞ்சமாக அசைத்து ஜீன்ஸை உள்ளே இழுத்து கண்ணாடியை நிறுத்தினாள்.

நின்றுவிடும் என்ற தைரியத்தில், படுக்கையில் தூக்கிப்போட்ட அலைபேசியை எடுத்து வந்து, நெட்பேக் தீர்ந்துவிட்டதாகச் சொல்லி அவன் அனுப்பிய டெக்ஸ்ட் மெசேஜ்களையும், அதற்கு, தான் சொல்லிவந்த பதிலையும் சேர்த்தே வாசித்துக்கொண்டு மேல் நோக்கி ஸ்க்ரால் செய்து கொண்டிருந்தாள். ஒதுங்கிக் கிடந்த ஸ்க்ரீன் துணியை இழுத்துவிட்டு சன்னலில் வழியே வந்த வெளிச்சத்தைக் குறைத்து, இருக்கையில் அமர்வதற்குள், அணைந்து விட்ட அலைபேசித் திரையை ரேகை கொண்டு இயக்கி மீண்டும் வாசிக்கத் தொடங்கினாள் ரோஸ்லின்.

ஏதாவது ஒரு செயலை முழுமையாகக் காட்டு என்பதைக் கோரிக்கையாக வைத்தான் கென்னத். பிடிபடாதவளாக மீண்டும் கேட்க, உதாரணத்திற்கு, பல் விளக்குதல் என்றால், ப்ரெஷ்-ல் பேஸ்ட் வைப்பதில் தொடங்கி, நாக்கை சுத்தப்படுத்துவது வரைக்கும் நான் பார்க்க வேண்டும் என்று, விலாசினியின் முகத்தைப் பார்த்துச் சொல்லிக் கொண்டிருந்தான்.

பிடிகொடுக்காமல் பேசி வீடியோ காலைத் துண்டித்த பின், நீண்ட யோசனையில், தன்னைப் பற்றி எங்கே சொல்ல நேர்ந்தாலும், தனித்த அடையாளமாக, உடனடியாக நினைவிற்கு வர வேண்டிய விஷயம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். அப்படி நம்மிடம் என்ன “ஸ்பெஷலாக” இருக்கிறது என்று யோசித்து முடிவுக்கு வந்தவள், “Between 5:30 to 6:30 சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக சன்னலை விட்டு வெளியேறும் நேரம். இருவருமாக சேர்ந்து க்ரீன் டீ போடலாம்” என்று அவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி வைத்தாள். ‘Today’ என்ற கேள்விக்கு, ‘நாளைக்கு’ என்று பதில் சொல்லிவிட்டு கென்னத் பதிலுக்குக் காத்திருக்காமல் இணையத்தை துண்டித்தாள்.

ஒரு க்ரீன் டீ இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியும், சோம்பலில் தரையிலிருந்து எழுந்திருக்கவே மனமின்றி சில்வர் நிற கெட்டில்-ஐ பார்த்துக் கொண்டிருந்தாள் விலாசினி. தேனை ஊற்றுவதற்கு ஸ்பூன் இருந்தாலும் உள்ளங்கையில் ஊற்றி, அதைக் கண்ணாடி தம்ளரின் விளிம்பின் வழியே வழித்து தம்ளரில் வடியுமாறு பார்த்துக் கொள்வாள்.

ஒரு மிடறு அளவிற்கு மட்டுமே தம்ளரில் சுடுநீர் ஊற்றிவிட்டு, கண்ணாடி தம்ளரின் வெளிப்பக்கம் வழியே தேன் வழிந்து வெந்நீரைத் தொடுவதைப் பார்த்துக் கொண்டே க்ரீன் டீ-க்குத் தேவையான மிச்ச வேலைகளைச் செய்யத் தொடங்குவாள் விலாசினி.

தேன் வழியும் போதெல்லாம் முதன்முறை பின்னங்கழுத்திலுள்ள பூனை முடிகளை புகைப்படம் எடுத்துக் கொடுத்ததை நினைத்துக் கொள்வாள். அது மினுங்கிய நிறமும், தேனின் நிறமும் ஒன்று என்றே நினைத்துக் கொள்வாள். சிலிர்த்து நிற்பதை அலைபேசியில் பார்க்கும் போதெல்லாம், தோள்களைக் குறுக்கி, தன்னைத் தானே உள்ளுக்குள் ரசித்துக் கொள்வாள். அலுவலகத்தில் உள்ள கழிப்பறையில் கூட இப்படிச் செய்து  சிரித்தது உண்டு, விலாசினி.

தன் உண்மையான பெயர் என்ன என்பதை சொல்ல மறுத்துவிட்ட ரோஸ்லின் உரையாடத் தொடங்கிய இரண்டாம் நாள் இரவில், முன்பே எடுத்து வைத்திருந்த செல்ஃபி ஒன்றின் வழியே அவளின் முகத்தை கென்னத்திற்குக் காட்டினாள். மரியாதையாகவே சென்று கொண்டிருந்த உரையாடலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக இருவர் பக்கமிருந்தும் தூண்டில் போடப்பட்டிருந்தது.

ரோஸ்லினை முதன்முறை செல்ஃபியில் பார்க்கிறான், பேஸ்புக் முழுவதுமே அவளது நிழற்படம் எதுவும் கிடையாது. அவளை ஒரு சாதாரண உடையில், ஈரக்கூந்தலில் பார்த்தது, அவனுக்குள் இருவேறு மனநிலையை விதைத்தது. காமத்திற்கு தூண்டாத ஒன்றில் தொடங்கி காமத்தில் வந்து சேரும் காமவுணர்வு.

விலாசினி உரையாடத் தொடங்கிய முதல்நாள் இரவிலேயே, போதும் என்றும், ஸ்டாப் என்றும், முற்றுப்புள்ளி வைத்தும் வெவ்வேறு தருணங்களில் சொல்லிக் கொண்டே வந்தாள். விலாசினிக்கு யோசிக்க முடியாமலிருந்தது. ஆனால் ஆங்காங்கே உரையாடலை மடைமாற்றும் முயற்சியில் நிறுத்துவாள். அவனும் வேறு விசயத்தைப் பற்றி பேசத் தொடங்குவான்.

அவளுக்கு பயம் என்றால், பயமில்லை. ஆனால் இவ்வளவு வேகமாக தேர்ந்தெடுக்க வேண்டுமா என்ற குழப்பம் இருந்தது. அதனாலோ என்னவோ விடியற்காலை 3:14 வரை தாக்குப்பிடித்துப் பேசி, விடுபட்டு, நழுவி, தப்பித்து உறங்கச் சென்றிருந்தாள். இருவரும் ஒரே கல்லூரி என்றாலும், வலுக்கட்டாயமாக தேடி வந்து பார்த்தாளே ஒழிய, தற்செயலாகக்கூட சந்திக்க வாய்ப்பில்லை என்பதாலும், இன்னும் நான்கு மாதத்தில் படிப்பை முடித்துவிட்டு வெளியேறப் போகிறோம் என்கிற நம்பிக்கையில், கென்னத்தொடு உரையாடத் தொடங்கியிருந்தாள்.

தமிழை தப்பும் தவறுமாக தொடர்ச்சியாக வாசிக்கத் தொடங்கியது ஆன்லைனில் “காமக்கதைகள்” வாசிக்கத் தொடங்கியதிலிருந்துதான். நண்பர்களோடு உரையாடுவதற்கு வாட்சப், மெசஞ்சரில் “தங்லீஷ்” பயன்படுத்தியிருந்தாலும், கென்னத்தால் தொடர்ச்சியாக முழுக் கதையை வாசிக்க முடியாமல் இருந்தது. “கீ வேர்ட்” பயன்படுத்துவதற்காக தமிழில் தட்டச்சு செய்வதற்கு தமிழ் ‘ஆப்’ பயன்படுத்திக் கொண்டான். தொடக்கத்தில், கதை முடிவுக்கு பின்னர், சஜசனில் கீழே காட்டும் கதைகள், அதிலுள்ள வார்த்தைகளை, காபி செய்து பின்னர் தேடிப்படிக்கத் தொடங்கினான். அது எரிச்சலூட்டவே, தமிழ் தட்டச்சுக்குத் தாவினான். விரைவில் கென்னத்திற்கு கைகூடவும் செய்திருந்தது. முதலாம் ஆண்டு என்கிற பயம் வெகு விரைவாகவே அவனிடமிருந்து வெளியேறியிருந்தது.

தன் இரு கால்களையும் பின்பக்கம் மடக்கி, யோகா செய்வதுபோல பக்கவாட்டில் அமர்ந்து கண்ணாடியைப் பார்க்கத் தொடங்கினாள் ரோஸ்லின். தன் உடலை எப்படிப் பார்ப்பது என்றே அவளுக்கு பிடிபடாமலிருந்தது. அப்படியொன்றும் பெரிதாய் வர்ணித்துவிடவில்லை. இருந்தும் அவளுடல் மேலே அவளுக்கு மோகம் கொள்ளும்படி செய்திருந்தான் கென்னத்.

கொஞ்சம் தீர்க்கமாக யோசித்தால், திட்டமிடல் போலவே இல்லை. பேசினான்; பேசினேன் என்ற ரகத்தில் இருந்தது உரையாடல். கண்ணாடியைப் பார்ப்பதும், அவன் அனுப்பிய குறுஞ்செய்திகளைப் பார்ப்பதும் என, முகம் குறுஞ்செய்திக்கு ஏற்றார்போல மாறிக் கொண்டிருந்தது. முட்டியில் வலி எடுக்கத் தொடங்கியதும்,  வலது காலில் எடை கொடுத்திருந்த தன் உடலை இடது காலுக்கு மாற்றிக் கொண்டாள். அவளுக்குத் தேவையெல்லாம், எங்கு பிசிறு தட்டியிருக்கிறது என்பதைக் கண்டறிவது மட்டுமே. அதன் மூலம் உரையாடலை நிறுத்தவோ, இல்லை என்றால் வரம்பு மீறாமல் உரையாடவோ அல்ல, யார் முந்திக் கொண்டோம் என்பது தெரிந்தால் போதும் என்று இருந்தது.

குறுஞ்செய்தி வாசிப்பதை நிறுத்தியிருந்தாள். அவள் யோசனையின் வழியே முகம் எந்தவித தீவிரத்தன்மையும் எட்டாமலிருந்தது. ஒவ்வொரு குறுஞ்செய்தியும் முடிவற்று இருந்தது. அதையே திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டிருந்தாள். தொடர்ந்து பதில் சொல்லும்படியும், கேள்வி கேட்கும்படியும் எப்படி இந்த உரையாடல் அமைந்தது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். ஆடைக்குள் எவ்வளவு பாகம் உடல் என்பது தெரியாமலிருந்தது. வயிற்றுப்பகுதியை இறுக்கிப் பிடித்தாள். அவன் சொன்னது சரி.

ரோஸ்லின் பருவம் தொட்டே தன் தசைகளின்மேல், வழவழப்பு மெருகேறுவதன் மேல், நாட்பட நாட்பட அதன் தன்மை மாறிவருவதை கவனித்திருக்கிறாள். இப்போது உடலில் இருந்து தசை, பிடியை தளர்த்தியிருக்கிறது. அப்படியொன்றும் முதிர்ந்து விடவில்லை. ஆனால் கென்னத்திற்காக இதையெல்லாம் யோசிக்கத் தொடங்கியிருந்தாள்.

விலாசினியின் உடல் வழியே ரோஸ்லினை கடந்துவிட வேண்டும் என்பதே கென்னத்திற்கு தீராப்பகையாக தன் வேட்கையின் மேலே உருக்கொண்டிருந்தது. ரோஸ்லினின் வாஞ்சை, அவளுடலில் அவனை எதுவுமே செய்யவிடாமல் தடுத்திருந்தது.

தசையின் இறுக்கம் தளர்ந்த ரோஸ்லின், காலை பின்னோக்கி மடக்கி அமர்ந்ததில் கொஞ்சம் இறுகியதுபோல தோன்றிய தொடையை தடவிக் கொண்டாள். ஆடுதசை திண்ணமாகத் தெரிந்தது. குதிகாலையும், கணுக்காலையும், உள்ளங்கைக்குள் வைத்து பொத்திப் பார்த்தாள். அவ்வழியே உடல் வெவ்வேறு கொதிநிலையில் இருப்பதாகத் தோன்றவும், அக்குளில், தொப்புள் மூடியபடி, பின்னங்கழுத்தில், என்று உடல் சூட்டை எடைபோட்டு தடுமாறிக் கொண்டிருந்தாள்.

ஆடை களைந்தது அவளுக்கு நினைவிலே இல்லாமல் இருந்தது. உடலின் பக்கவாட்டை, மீண்டும் பார்க்கத் தொடங்கினாள். தன் இரு கைகளையும் உள்ளங்கை விரித்து தொடையில் வைத்துக்கொண்டு உடலை பார்த்துக் கொண்டிருந்தாள். தூரத்து தரிசனம் போலிருந்தது. கையில் அலைபேசி இல்லாமலே ஸூம் செய்து பார்ப்பது போன்ற காட்சி மனதில் ஓடியது. ஒவ்வொரு பாகமாக கையை நகர்த்திக்கொண்டு போனோமா அல்லது எடுத்து எடுத்து வைத்தோமா என நினைக்கையிலே, உடல் சிலிர்த்துக் கொண்டது.

முலைகளின் இடைவழியே வயிற்றில் நிமிர்ந்து நின்ற பூனை முடிகளை கண் வலிக்கப் பார்த்துக் கொண்டாள். சுழித்தோடும் நரம்புகளை ஒருவேளை அவன் பார்க்க நேர்ந்தால் எப்படி எல்லாம் இருக்குமென்று யோசித்தாள். கற்பனைக்கு எதுவும் எட்டாமலிருந்தது. புடைத்து நிற்கும், வேப்பிலையின் மஞ்சள்நிற நரம்புகள் ஏனோ நினைவுக்கு வந்தது.

தன்னை அவனுக்கு காட்ட விரும்பினாள். புகைப்படம் எடுப்பதும், அதை உடனே அழிப்பதுமாக விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள். ஃப்ளாஷ் வெளிச்சம் கண்ணாடியில் பட்டுத்தெறித்த புகைப்படங்களை பின்னாட்களில் அனுப்புவதற்கு வைத்துக் கொள்ளலாமா என்ற எண்ணத்திற்கு இணங்கி, அதைமட்டும் வைத்துக் கொண்டாள். அப்படியே எழுந்துகொள்ள முடியாமல் தவித்தாள்.

எந்த உந்துதலும் இல்லாமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மோனநிலையை வெகுவாக ரசித்தாள். ‘தேங்க்ஸ்’ என்றாள். உடலின், முன்பாகத்தைப் பார்க்கக் கூச்சமாக இருந்தது. உள்ளாடையில்லாமல் முலைகள் உரசிய சட்டையின் மேலே, மேலிருந்து கீழ்நோக்கி வருடினாள். என்ன செய்வதென்று புரியாமலிருந்தது. மேலாடையோடு எழுந்து தற்செயலாக கண்ணாடியைப் பார்க்கவும் வெடுக்கென்று தன்னைத்தானே மூடிக் கொண்டாள். அவள் கண்கள் நிறங்களைப் பிரித்துணர முடியாதொரு நிலைக்குச் சென்று விட்டதா என்று ஒருமுறை நினைத்துக் கொண்டாள். துப்பட்டாவின் நிறம் என்னவென்பது மறந்து போயிருந்தது.

குளியலறையில் தனியாளாக இருந்து தூக்கிவந்த கண்ணாடியை மாட்டிவிட முடியுமா என்ற கேள்வியோடு, கண்ணாடி முன் சம்மணமிட்டு அமர்ந்து தூக்கிப் பார்த்தாள். உடலின் எந்த பிடிப்பும் இன்றி, தோள் பலம் மட்டும் கொண்டு கொஞ்சமாகத்தான் தூக்க முடிந்தது. ஜீன்ஸ் பேண்டில் அலுங்காமல் வைத்து விட்டவளுக்கு சுவற்றில் சாய்ப்பதற்கு பயமாக இருந்தது. பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

ஏரோகட் ஷர்ட். சட்டையின் இருமுனையும், தொடையிடுக்கில் குவிந்து கிடந்தது. தொடை வழியே வளைந்து விழுந்ததை, அதன் விளிம்பை இருபக்கமிருந்தும் ஆள்காட்டி விரல் வழியே பின்தொடர்ந்தாள். இரு தொடைகளின் பக்கவாட்டில் தொடங்கி, கால்நடுவே அந்தரத்தில் நின்று பின் மீண்டும் தொடங்கி, இந்த சறுக்கு விளையாட்டை ரசித்தாள். இரசியமாக சொல்வதற்கு உடலில் ஏதாவது இருக்கிறதா என்று முதன்முறையாக தன்னுடலைப் பார்ப்பது போல பார்க்கத் தொடங்கினாள். தன் கண்ணிலிருந்து விடுபட்டிருந்தாள். நிச்சயம் அவனில்லை. அது இன்னொரு பெண்ணாக இருந்தது. கலைத்துக் கொண்டாள்.

இன்னும் அடர் கருப்பை எட்டிவிடவில்லை. தொப்புளுக்கு கீழே நான்கு விரல் இறங்கியிருந்தது கென்னத் பேன்ட். அங்கிருந்து மேல்நோக்கி கயிற்றில் சுற்றிவிட்ட அவரைக்கொடி போல மேல்நோக்கிச் சென்று காணாமல் போயிருந்தது. புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் விலாசினி.

புகைப்படமாக அனுப்பினால் பிக்சல் உடையும் என்பதால், வாட்சப்பில் டாக்குமென்ட் ஃபார்மெட்டில் அனுப்பியிருந்தான். அவள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் அச்சு பிசகாமல், வளைந்து கொடுத்தது புகைப்படம். உடல்மீது எந்த பிரயத்தனமும் இல்லை என்பது புகைப்படத்தைப் பார்த்தாலே தெரியும். இருந்தும் அவனுக்கு கட்டுப்பட்ட உடலாகவே இருந்தது.

தட்டையான மார்பு. உள்வாங்கி கீழே தலை தாழ்த்தியிருந்தது காம்பு. புகைப்படத்தின் பேக்ரவுன்ட் கல்லூரியாக இருந்ததால் கூடுதல் குறுகுறுப்பு. எப்படி, எப்போது எடுத்திருப்பான்? அதுவும் முதல் வருடத்திலேயே. விடுதியிலும் தங்கிப் படிக்கவில்லை பின் எப்படி?

விலாசினி திட்டமிட்டு தேர்ந்தெடுக்கவெல்லாம் இல்லை. கென்னத் விசயத்தில் நிகழ்வது எல்லாம் மர்மக்கதைகளே. ஒன்றை மட்டும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள். சொற்ப நாட்களே இந்தப் பக்கம் வரப்போகிறோம். திட்டமிடலோ, விபத்தோ ஒருமுறைக்கு மேலே அவனை அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். வெறுமனே பார்த்துக் கொள்கிறார்கள்.

விருப்பு வெறுப்பு, பொதுத்தளம் குறித்த உரையாடல் எதுவுமில்லை. இருந்தும் விலாசினி தூண்டப்பட்டிருந்தாள். சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருப்பதில், முட்டிக்கு கொஞ்சம் மேலே, தொடையிலிருந்து பெருவிரல் தாண்டி வெயில் எதிர் சுவற்றில் மடிந்து நிமிர்ந்திருக்கும். நம் கண்கள் இப்போது என்னவாக இருக்குமென்று எதுவுமே தெரியாத அந்த சுவற்றில் அசையும் சித்திரம் வரைந்தாள். இந்தக் கண்கள் தன்னைக் காட்டிக் கொடுத்து விடும். இருக்கட்டும். தன்னால் எதையும் முன்வைக்க முடியாது. கண்களாவது உதவட்டுமே என்று இமை கொட்டாமல் அமர்ந்திருந்தாள்.

காட்சி மாறி எதைப் பார்க்கிறோம் என்பதே தெரியாதொரு வகையில் கண்கள் இருந்தது. கொஞ்ச நாட்கள் நேரில் பார்க்காமல் இங்கேயே பேசிக்கொள்வோம் என்ற தொனி அவனுக்கு எப்படிப் புரிந்ததோ, இவள் வேண்டுகோளாகத்தான் கேட்டாள். சரி என்றான்.

விலாசினி உடல்மீது மிகுந்த கர்வம் கொண்டவள். இரவில் உடல் தகிக்கும் வேளையில், பருமனான நீண்ட மெழுகுவர்த்தியைக் கொளுத்தி, நிழலையும் ரசிப்பாள், மஞ்சளாக மினுங்கும் உடலையும் ரசிப்பாள். இப்போதே இருட்டிவிட்டால் நன்றாக இருக்கும். வெளிச்சத்தின் வழியே தன்னை எப்படி உள்வாங்கிக் கொள்வான் என்ற யோசனையும் இருந்தது. தான் என்பது உடல் மட்டுமே என்கிற புரிதல் இருந்தது. கென்னத் மேற்கொண்டு எதற்காகவும் தன்னிடம் வந்து நிற்கப்போவதில்லை என்பதை கணித்திருந்தாள். அதுவரையில் அவள் குழப்பம் இல்லாமல் இருக்க அது உதவியது. பேசக்கூடாது என்று சொல்லியிருந்தாள். தன் பக்கமும் ம்யூட் செய்துவிடுவதாக சொன்னாள். எதிர் கேள்வியற்ற அவனின் ‘சரி’ சரியாக புரிந்துகொள்ள உதவியது. தொந்தரவு பண்ணமாட்டான். எப்போதாவது கோட் அணிய வேண்டிய அவசியமிருந்ததால், பார்த்துப் பார்த்து வாங்கிய லினென் ஷர்ட்டை அணிந்து கொள்ள விரும்பினாள்.

Teal நிறத்திலான கணுக்கால்வரை இருக்கும் பேன்ட் அணிந்திருந்தாள். அப்போதைக்கு மட்டும் ஒரு காலில் தண்டை மாதிரி ஒன்றை அணிந்து கொண்டாள். விலாசினி அறையில் இருக்கும்போது உடுத்தும் ஆடையல்ல. ஆனால் அவளின் தேர்வு இப்படியானதாக இருந்தது. பேசக்கூடாது என்று சொல்லியிருப்பதால், அவனால் கேள்வியும் கேட்க முடியாது. வழக்கமாக அருந்தும் தேநீர் கோப்பை சரியாக இருக்காது என்று தோன்றியது. மாற்று ஏற்பாடுகள் இல்லாததால் அதை கைவிட்டாள்.

எப்படியெல்லாம் தன் உடலை அவன் பார்க்கக் கூடுமென்று, பார்க்க வேண்டுமென்று புருவ மத்தியில் ரிகர்சல் பார்த்துக் கொண்டாள்.

வெடுக் வெடுக்கென்று வெட்டிப்பேசும் ரோஸ்லின் தொனி மீது பித்து கொண்டிருந்தான். அதற்காகவே அவளோடு அதிகமாக பேசுவதைத் தவிர்த்தான். ஏதாவது ஒரு காரணம் அவனிடம் இருந்து கொண்டே இருந்தது. முடிந்த அளவு அழைக்க மாட்டான், எதுவானாலும் வாட்சப். லேப்டாப் பிரவுசர் புக்மார்க்கில் இருக்கும் அத்தனை கதைகளிலும் ரோஸ்லின் இருந்தாள்.

ஒருமுறை கூட விலாசினி தேவைப்படவில்லை, வரவும் இல்லை, ஹெட்போன் துணையோடு விலாசினியோடு பேசிக்கொண்டே, ரோஸ்லினுக்கும் வாட்சப்பில் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். நெற்றியும் பின்னந்தலையும் ஒருசேர வலிக்கத் தொடங்கியது. வெகுநேரமாக அமர்ந்து பேசியவன், உடல் அடித்துப்போட்டது போன்ற உணர்வைக் கொடுக்கவும் படுத்துக்கொண்டான். இரத்தவோட்டம் வேகமாக இருக்கிறதா அல்லது உறைந்து விட்டதா என்று அறியத்தெரியாதவனாக இருந்தான். விலாசினிக்கு சொல்ல வேண்டிய பதிலை, ரோஸ்லினுக்கு சொல்லிவிடக்கூடாது என்கிற கவனம் இருந்தது. அதுபோலவே விலாசினிக்கும்.

“கேக்குறியா” என்ற கேள்விக்கு கேள்விக்குறியை தொங்கவிட்டான் கென்னத். எங்கு கவனத்தை குவிப்பது என்ற குழப்பம் அவனை சுற்றவிட்டிருந்தது. மடிக்கணினிதிரை புகைசூழ்ந்த திரை போல காட்சியளித்தது. கண்கள் இருண்டுகொண்டு வந்தது. அவனால் வாசிக்க முடியவில்லை. ரோஸ்லின் ரெக்கார்டை அனுப்பினாள்.

விலாசினியும், ரோஸ்லினும், அவரவருக்கு கேட்காத வண்ணம் இவன் காதுகளின் வழியே சந்தித்துக் கொண்டனர். ஒருசேர மொழியற்று நிகழ்ந்த உரையாடலில் விலாசினியை கூட்டிச்சென்ற பாதையை மறந்திருந்தான். அவள் உடலில் எந்த பாகத்தில் நிற்கிறோம் என்பதும் தொடர்பற்று இருந்தது. ஸ்க்ரீனில் பார்த்துக் கொள்ள ரோஸ்லின் மட்டும் இருந்தாள். அவளோடு பேசியதை வைத்து இவளோடு நீட்டிக்க முடியாது. ரோஸ்லின் ஸ்க்ரீனிலிருந்து ஏற்கனவே வெளியேறியிருந்தாள்.

அவள் அனுப்பிய ரெக்கார்ட் அதற்கு சாட்சி. விலாசினிக்கு இவன் குரல் தேவையாக இருந்தது. வடிவமற்ற அவள் ஒலிக்கு ஏற்றவாறு இவனும் ஒத்திசைந்தான். இருவராலும் அழைப்பைத் துண்டிக்க முடியவில்லை. அலைபேசியை அருகே வைத்துவிட்டு, ஹெட்போனை காதிலிருந்து எடுக்காமல் அவள் பேச எடுத்துக்கொள்ளும் நிமிடங்களை கண்மூடி தரிசித்துக் கொண்டிருந்தான். இவனின் மூச்சுக்காற்று விலாசினிக்கு கேட்கும்படி பார்த்துக் கொண்டான்.

“வைக்கட்டா”

விலாசினியின் நெயில் பாலிஷ் தீட்டிய விரல்களையும், ரோஸ்லினின் நகம் வளர்க்காத விரல்களையும் பார்க்க விரும்பினான். ஈரத்தில் மினுங்குவதை கற்பனை செய்து கொண்டு எழுந்திருக்க மனமின்றி படுத்திருந்தான். அடிநாவில் மீண்டும் எச்சில் சுரக்கத் தொடங்கியது. கைக்கெட்டும் தூரத்திலிருந்த பர்ஸை எடுத்து எதற்கென்றே தெரியாமல் திறந்து பார்த்துக் கொண்டான். ரோஸ்லின் காற்றில் கலக்கத் தொடங்கினாள். அவளின் அந்த நொடிக்குள் தானும் கரைந்துவிட வேண்டுமென்ற தீவிரம். எதன் துணையோடும் அவனால் கரை சேரமுடியாதிருந்தது. மடிக்கணினியை மூடி வைத்துவிட்டான்.

விடாமல் பெய்த மழையால் சன்னலில் ஒட்டியிருந்த கொசு வலையில் நீர்த்திவலைகள் தேங்கி நின்றது. அலைபேசியிலிருந்து, மடிக்கணினிக்கு மாற்றி வினாடிகளில் தீர்ந்து போன, ரோஸ்லின் மேகக்கரைசலை அடுத்தடுத்து இணைத்து மூன்று நிமிடங்களுக்கு சேகரித்து வைத்திருந்த அவளின் உடலொலியை ரிப்பீட் மோடில் கேட்டுக் கொண்டிருந்தான்.

அவள் உடலொலி அழுகையை ஒத்திருந்தது. அழுகையின் வழியே பீறிடும் உடல் வேட்கையை என்ன செய்வதென்று அறியாது ஒவ்வொரு முறையும் ஸ்தம்பித்து நின்றான். ரோஸ்லின் குரல் வழியே உணரும் கண்ணீருக்கான காமமா, தன் கண்ணீரின் வழியே சுரக்கும் வேட்கையா என்பது எப்போதும் புதிர்.

இருவரும் ஒன்றாய் இவன் காதில் ஒத்திசைத்த ரெக்கார்ட், நினைத்த மாத்திரத்தில் வெடித்து அழ நேரிடும் அளவிற்கு வல்லமையோடு இருந்தது. ரோஸ்லின் உள்ளங்கை அவனிடமிருந்தது. அலைபேசி தொடுதிரை முழுமைக்கும் நிறைந்திருந்தது. ரோஸ்லின் குரல் போலவே அவள் உள்ளங்கை கண்டும் நடுங்கினான். அந்த நடுக்கத்தின் மூலமாக, அவள்மேல் தடுமாறும் வேட்கையை சரிசெய்து முன்னேற வழிவகுக்கும் என்று நம்பினான்.

எந்தக் கீறல்களும் இல்லாத ரேகைகள் மட்டுமே கொண்ட உள்ளங்கை அவனின் ஒப்பாரிக்கான தொடக்கப்புள்ளி.

மூன்றாவது முறையாக எப்போது பார்க்கலாம் என்று ரோஸ்லின் கேட்டாள். மூன்று தடவையுமே நேரடியான அழைப்பு இல்லை. தொடுதிரை அணையாமல் பார்த்துக் கொண்டான், ரோஸ்லின் அனுப்பிய விதவிதமான உள்ளங்கைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வால்பேப்பராக வைத்தான். பதிவாகியிருந்த இருவரது குரலும், மூளையிலிருந்து அழிந்திருந்தது. உள்ளங்கையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் குவிந்த உள்ளங்கைக்குள் தன்னை நிறைத்துக் கொண்டான். தெளிவாக இருப்பதாக நம்பினான். எந்தவித சலனமும் இல்லாத நிமிடங்கள் இவை. ரோஸ்லினை பார்ப்பதென்று முடிவு செய்தான்.

விலாசினி, நாணயத்தை சுற்றிவிட்டு, கென்னத்திற்கு தலை தனக்கு பூ என்றாள். சுழன்று கவிழும்வரை பார்த்துக் கொண்டிருந்தான். கென்னத்திற்கு சாதகமாக அமைந்தது. தரையிலிருந்து மீண்டும் படுக்கைக்குத் திரும்பியவள், மனதிற்குள் வைத்திருந்த இரண்டு ஆப்சன்களையும் தெரிவித்தாள்.

1. அவனுக்கு பிடித்தமான இணையத்தில் வாசிக்கும் கதை ஒன்றை நிர்வாண                  நிலையில் முழுவதுமாக வாசிக்க வேண்டும்.

2. Soul Sex with John and Annie விலாசினியோடு அமர்ந்து பார்த்துவிட்டு உரையாட            வேண்டும்.

நாணயத்தை எப்படிப் பிடித்து சுழற்றினால் தனக்குச் சாதகமாக விழும் என்று ஐந்து ரூபாய் நாணயத்தை ஏற்கனவே அறையில் சுழலவிட்டுத் தான் வந்திருந்தாள். ஆனால் அவளுக்குச் சாதகமாக விழவில்லை.

விலாசினியை சந்திக்கக் கிளம்புவதற்கு முன் வால்பேப்பரில் மாற்றிய ரோஸ்லின் உள்ளங்கை கண்முன்னே வந்து கொண்டிருந்தது. பிரவுசரில் மொத்தம் 17 tab ஓப்பனில் இருந்தது. பேசாமல் அவள் சொல்லும் படத்தைப் பார்த்துவிட்டு எளிதாக தப்பித்துவிடலாம் என்ற எண்ணம் உள்ளுக்குள் இருந்தது. இது அவளாகவே ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பு. தன்னைவிட மூத்தவள்.

இப்படியெல்லாம் ஒரு ஆண் வாசிப்பது இயல்பு என புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கையில் கதை வாசிக்க சம்மதித்திருந்தான். அவளுக்கு இது முதல் அனுபவமாக இருக்கக்கூடாது என்று உள்ளுக்குள் வேண்டிக் கொண்டான். நிச்சயம் அவள் கண்களில் கூட இப்படியான கதைகள் கண்களில் பட்டிருக்கும். அதையெல்லாம் தாண்டாமல் இங்கு தன்னோடு வந்து அமர்ந்திருக்க மாட்டாள் என்பது நம்பிக்கையை விதைத்தது.

அறைக்குள் நுழைந்த நேரத்திற்கு எல்லாம் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். மயான அமைதி பூண்டிருந்தது. தனிமையும், அறையின் வெளிச்சமும், விலாசினியின் குறுகுறு பார்வையும், அமைதியும், இம்சித்தது. இரவு விளக்கு என்றால், வசதியாக இருக்கும். ஆனால் இது பின்மதியம். வெளிச்சத்தை எப்படி இருளாக்குவது. அவனுக்கு முதுகு காட்டி நின்றபடி ஆடைமாற்றினாள். அவனது கூச்சத்தை போக்கும் என்று நம்பினாள்.

லினென் ஷர்ட், இரு கைகளையும் ஒன்றாக மேல்நோக்கித் தூக்கினால், தெரியும் சிகப்புநிறப் பேண்டி. உள்ளாடையை கை வழியே கழற்றியிருந்தாள். பாக்கெட் இல்லாத சட்டை. அவனை நோக்கித் திரும்பினாள். ஹோட்டலில் கொடுத்திருந்த வெள்ளைநிற டவலை இடையில் போட்டுவிட்டு கட்டிலில் அமர்ந்திருந்தான்.

மினி ஃப்ரிட்ஜ், சுடுதண்ணி வைப்பதற்கு கெட்டில், இரண்டு க்ரீன் டீ பேக். அறையில் default.

கென்னத் 50 கிராம் தேன் பாட்டிலோடு வந்திருந்தான். அறையை தேர்வு செய்யும்போது, அறையின் புகைப்படங்களைப் பார்த்ததில், கண்ணாடி தம்ளர் இருக்குமென்று தெரிந்து கொண்டான். உண்மையில் அவன் நோக்கம், விலாசினி உள்ளங்கையில் தேனை ஊற்றி நக்கிச் சுவைக்க வேண்டும் என்பதே ஆவலாய் இருந்தது. துளசி இலையும், மிளகும் இல்லை. இருந்தாலும் க்ரீன் டீ போட்டுக் கேட்கலாம் என்றிருந்தான்.

வலது காலை இடதுகாலின் ஆடுதசை பக்கவாட்டில், மடித்து மிதித்தபடி ஒற்றைக்காலில் நின்று டீ தயாரிக்கத் ஆயத்தமானாள். கென்னத் கதையை வாசிக்கத் தொடங்கினான்.

ரோஸ்லின் புகைப்படத்திலும், வீடியோ காலிலும் தெரிந்ததைவிட ஒல்லியான தேகத்தை சுமந்திருந்தாள். உள்ளே வரச் சொல்லியிருக்கிறாள். எதுவும் பேசாமல் கென்னத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். கண்கள் பொங்கி நிற்கிறது. வலுக்கட்டாயமாக எச்சில் விழுங்குகிறான், புடைத்து நிற்கும் எலும்பு மேலும் கீழுமாக இறங்குகிறது.

எதிர் இருக்கையில் இருந்தவன், தடாலென இறங்கி ஸோபாவில் இருந்தவளின் கால்களைக் கட்டிக்கொண்டு முட்டிக்கு கீழே இரு கால்களுக்கிடையில் முகத்தைப் புதைத்துக் கொண்டான். அவள் உள்ளங்கைக்கும் கால்களில் உணர்ந்த சூட்டிற்கும் சம்மந்தம் இன்றி வேறு வேறு உடல்கள் போலிருந்தது. அப்போதும் எதுவுமே பேசாமல் குனிந்து அவன் கன்னத்தில் இரு கைகளை வைத்து, கால்களை இறுக்கிக் கொண்டாள்.

அவன் கேவல்கள் எல்லாம் வேறுமாதிரி உருப்பெற்றிருந்தன. அசைவுகளின் மாற்றம் அறிந்து முன்னேறுதலுக்காக காத்திருந்தாள். நடை பழகும் குழந்தை போல ரோஸ்லின் மடிக்குப்போக அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டான். அவள் வாஞ்சையாக தலையை கோதிக் கொடுத்தாள். தூங்க முடியாவிட்டாலும், கண் மூடிக்கிடந்தான். அலைபேசியில் பேசியதற்கும், இப்போது நடந்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. இதையெல்லாம் யோசிக்க விரும்பாமல், சின்ன சின்ன செய்கைகளையும், சின்ன சின்ன அசைவுகளையும் ரசித்து அமர்ந்திருந்தாள்.

மடியேறிய பிறகும் ஏந்தியக் கன்னத்தை விடாதிருந்தாள். அவளின் மணிக்கட்டுகளைப் பற்றியபோது தளர்ந்திருந்த தசை தொந்தரவு செய்தது. பெயர் சொல்லவும் முடியாமல் உரிமையாக பேசவும் முடியாமல், மெளனமாகவே பொழுது நகர்ந்தது. ரோஸ்லினுக்கும் உரையாடல் தேவையில்லாமல் இருந்தது.

அவள் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த முத்துமாலையில் தொங்கிக் கொண்டிருந்த சிகப்புநிற ஆண் யானை தும்பிக்கை தூக்கியபடி, இரு மார்பிற்கு இடையே நின்றது. அவ்வளவு தீர்க்கமாக விலாசினியின் உடலைப் பார்க்க முடிந்தவன், வெளியற்ற அறைக்குள் நுழையும்போது எதிர்கொள்ளும் இருள்போல கண்ணை இறுக மூடிக்கொண்டு அவள் உதட்டிற்குள் நுழைந்தான். உடல் பாகங்களைத் தொட மிகுந்த தயக்கத்துடன், முதுகின் தண்டுவடத்திற்கும், நடுமுதுகிற்கும் தொட்டிமீன் போல சுற்றி சுற்றி வந்தான். அதுவே அவன் கரையேற முடியாத கடல்போல இருந்தது.

ரோஸ்லினுக்கு தனிப்பட்ட விருப்பமாக எதுவும் இருக்கவில்லை, ஒன்றைத் தவிர. மற்றபடி கென்னத் முன்னேறினால் தடுக்க வேண்டாம் என்று நினைத்திருந்தாள். கதவைத் திறக்கும்போது, அவளின் காலநிலை மாறியிருந்தது. நம்பிக்கை, உண்மைதன்மை. கொலை, சைக்கோத்தனம், இப்படி எதைப்பற்றியும் அவளுக்கு பயம் இருந்திருக்கவில்லை, உண்மையில் கென்னத் விசயத்தில் அவளை அவளுக்கு புரிந்துகொள்ளவே சிரமமாக இருந்தது. அவனுக்கு கைமைதுனம் மட்டும் செய்துவிடவேண்டும்.

காமம் அவள் உடலில் கண்டறிய முடியாதொரு ஜந்துவாகவே இருந்தது. உரையாடலில் தூண்டப்பட்டாலும், அங்கத்தில் எங்கென்று கண்டறிய முடியாமல் இருந்தது. அழைத்துப் பேசினால் கண்மூடிக் கிடப்பாள். கென்னத் தன்னுடல் உண்ணுதலை கண்டுகளிப்பாள். அதைத்தான் நேரில் தன்மூலம் நிகழ்த்திப் பார்க்க விரும்பினாள். தான் ஒரு சர்கஸ் யானை என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாள். அவனும், வீடியோகால் என்பதால் யோசிக்கிறாள் என்று விட்டுவிடுவான். அவனுக்கு எப்படி வற்புறுத்த வேண்டும் என்றுகூட தெரியவில்லை என்று நினைத்துக் கொள்வாள்.

விலாசினி, அவன் கதை வாசித்து முடிக்கும்வரை எந்தக் குறுக்கீடும் இன்றி கேட்டுக் கொண்டிருந்தாள். Incest உறவுக்கு ஆதரவான மனநிலையில் இருப்பவர்கள், அப்படியான காணொளிகளை விரும்பிப் பார்ப்பவர்கள், கதை வாசிப்பவர்கள், பயந்த சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள், தன்னால் முடியாது என்று நம்புவார்கள். வாய்ப்பைக்கூட பயன்படுத்திக்கொள்ள தயங்குவார்கள் என படித்திருக்கிறேன் என்றாள்.

கென்னத், ரோஸ்லினை, புகைப்படத்தில் பார்ப்பதற்கு முன், அவள் குரல் கேட்பதற்கு முன்பு வரை, விலாசினி சொன்னது போன்று தன்னை உணர்ந்ததில்லை. ரோஸ்லினை, இவளிடம் கண்டடைய எடுத்திருக்கும் முயற்சி எந்த அளவில் கைகூடும் என்பதைத்தாண்டி அவன் தீவிரம் காட்டுகிறவன் இல்லை, அவனின் எப்போதைய தேர்வும் இப்படி இருக்கப் போவதில்லை என்பதில் தெளிவாக இருந்தான்.

அவள் சொன்னதற்கு எப்படி பதில் சொன்னாலும், பதிலுக்கு கேள்வி, கேள்விக்கு பதில் என, எப்போதிருந்து கதைகள் தேடத் தொடங்கினோம் என்று பதில் சொல்லி  மாட்டிக்கொள்ளும் சூழல் இருப்பதால் புன்னகையோடு அந்த உரையாடலைத் தவிர்த்திருந்தான். அவனிடம் ஒரு ரெடிமேட் பொய் இருந்தது, சரியாக வராது என்ற முடிவுக்கு உரையாடலின் நடுவே வந்திருந்தான். அந்த சாதுர்யம் அவளுக்குப் பிடித்திருந்தது.

அதே வேளையில், இவனின் மனமுதிர்ச்சியை ஏற்றுக்கொள்ள மனமின்றி தவித்தாள். விலாசினி. உடல்கள் பேசிக்கொள்ள அனுமதிப்பதற்கு முன் கடைசி அஸ்திரம் என அவனுடைய மொபைலுக்கும் share it மூலம் அனுப்பி வைத்தாள். இருவரும் ஒரே நேரத்தில் ப்ளே செய்து, அவரவர் ஹெட்போனை மாட்டிக்கொண்டனர்.

13:10-நிமிடங்களை, ஐந்து நிமிடத்திற்குள் ஒட்டி முடித்தான். அவள் எதிர்பார்த்த எந்த பிதற்றலும் இன்றி, அவளை தாஜா செய்வதற்கான லாவகமும் இன்றி என்ன தோன்றியதோ, அதைச் சொல்லிவிட்டு, விலாசினி பக்கம் திரும்பினான். காதலென்று பின்னால் சுற்றமாட்டான் என்ற நிம்மதியிருந்தாலும், தான் நினைத்தது போலில்லையே என்ற ஏமாற்றத்துடன், கட்டிலின் ஓரமிருந்த டெலிபோன் டேபிளில் போனை வைத்துவிட்டு இவன் பக்கம் திரும்பினாள் விலாசினி.

ரோஸ்லின் வீட்டிலிருந்து திரும்பும் வழி எங்கும், விலாசினியுடன் இருந்த பொழுதை எண்ணிக் கொண்டிருந்தான். கர்வப்பட்டுக்கொள்ளும் அளவிற்கு அவனை வைத்திருந்தாள். இயலாமைக்கும், இட்டுகட்ட முடியாமைக்கும் வித்தியாசம் இருக்கிறது என்கிற திடம் வாய்த்திருந்தாலும், திரும்பத் திரும்ப விலாசினியை நினைத்துக் கொண்டு நடந்தான். அவளின் அந்தர மிதப்பு இவனைக் கூட்டிச் சென்றது. இருவரையும் அடுத்தடுத்த நாளில் சந்தித்திருக்கிறான். இருபத்தி நான்கு மணி நேரத்திற்கும் குறைவான இடைவெளி.

விலாசினியிடம் எந்தவித சாதுர்ய உரையாடலும் தேவைப்படவில்லை, ஆனால் இவளிடம் தொடர்ந்து பேச விரும்பினான். அவள் மனம் புண்படும்படி நடந்துவிடக்கூடாது என்று சபதம் எடுத்துக் கொண்டான். அவள் எப்போதும் தன்னை கவனிக்கிறாள் என்று உள்ளுக்குள் பெருமை பட்டுக்கொண்டான். அவள் தன்னை உரிமை கொண்டாட வேண்டுமென்று விரும்பினான். அவள் தன்னை கைக்குள் எடுக்க வேண்டும். அதிலிருந்து மீற வேண்டும். மீண்டும் மீண்டும் அவள்முன் போய் நிற்க வேண்டும். அவளோடு நிகழும் தோல்வி அனைத்தையும், விலாசினியிடம் கண்டடைய வேண்டும். வழி எங்கும் பேசிக்கொண்டே வந்தான். அடிக்கடி அலைபேசியை எடுத்துப் பார்த்துக் கொண்டான். எந்த செய்தியும் இல்லை.

ரோஸ்லினிடம் தன்னை வலிந்து காட்ட விரும்பினான், அவள் இல்லாமையில் அவதியுறும் மனவோட்டத்தை, தனக்கு தெரிந்த விதத்தில் சொல்ல விழைந்தான். அது போதாதென்று அவள் இன்னும் எதிர்பார்க்க வேண்டும். சொல்லத் தெரியாமல் அவளிடமே கையேந்த வேண்டும். இப்படி யோசிப்பதே அவனுக்குப் பிடித்திருந்தது. அவனாகவே பேசத் தயங்கினான். ஆனால் அவளிடம் சரணடைய விரும்பினான். அவள் மீதான தணலை, ஊதி ஊதி, விலாசினியிடம் எரியவிட விரும்பினான். நேரடியாக விலாசினி என்றால் எந்தவித சாகசமும் இல்லை என்ற எண்ணம் எப்படியோ அவனிடம் வந்து சேர்ந்திருந்தது.

ஆனால்,

விலாசினிக்குத்தான் முதலில், எதுவுமே போதவில்லை என்று செய்தி அனுப்பினான். அவள் ஒரு புன்னகையோடு பேச்சு தொடராமல் பார்த்துக் கொண்டாள்.

வீடு திரும்பியதை உறுதி செய்துகொண்டு, கண்ணாடியின்மேல் ஃப்ளாஷ் விழும்படி தான் எடுத்து வைத்திருந்த புகைப்படத்தை, கருப்பு வெள்ளையில் மாற்றி ஒன்றை அனுப்பி வைத்து “மிஸ் யூ” என்று அனுப்பினாள். அவளாக இறங்கி வருவதை விரும்பாதிருந்தான். தன்னைத்தானே தண்டித்துக்கொள்ள விரும்பினான். ரோஸ்லின் முனகல், இவனின் கேவலுக்கான முன்னோட்டம். அவளை அழைப்பதற்கு ஒரு உறவுமுறை தேவைப்பட்டது. ஒருமையில் பேசிப் பழகியிருந்தாலும், ஒருமைக்கு முன் ஏதோ ஒன்றை, போட்டுக் கொள்ள விரும்பினான். குரல் கேட்டால் அழுதுவிடுவேன் போலிருக்கிறது, இங்கேயே பேசுவோம் என்றான். ஏன் என்ற கேள்வியோடு, சரி பதில் வேண்டாம் என்று, பதில் சொல்வதற்கு முன்பாகவே அனுப்பி வைத்தாள். ஆரம்பப் புள்ளியில் வந்து நின்றான். “ங்க” எண்ணிக்கை கூடியிருந்தது.

2 மினிட்ஸ் என்றாள். “உங்களை ஏதாவது உறவுமுறை சொல்லிக் கூப்பிட வேண்டும் போலிருக்கிறது” என்று சொல்லிவிட்டு ஸ்க்ரீனை விட்டு வெளியேற தைரியமின்றி, அவள் பதிலை எதிர்கொள்ளத் துணிவின்றி நெஞ்சில் மொபைலை வைப்பதற்கு முன் வைப்ரேஷன் மோடிற்கு மாற்றினான். கொஞ்ச நேரம் கண்மூட விரும்பினான். அவள் என்ன பதில் சொல்வாள் என்று யூகிக்க முடியாது தவித்தான். பதிலே சொல்லாமல் ஸ்கிப் செய்துவிட்டால் போதும் என்றிருந்தது கென்னத்திற்கு.

But One Condition. நான் உனக்கு ஒரு பொண்ணு பேரு வைப்பேன். அப்படித்தான் கூப்பிடுவேன். அது உனக்கு சரின்னா நீ என்ன ‘சித்தின்னு’ கூப்பிட்டுக்கோ”

விலாசினி, இவன் உடலசைவில் நிறைய மாறுதல்களைக் கண்டாள். இரண்டாவது சந்திப்பிற்கு இவ்வளவு சீக்கிரம் அனுமதித்திருக்கக் கூடாது. அவசரப்பட்டு விட்டோமோ என்றுத் தோன்றியது. எச்சில் படாமல் உடலெங்கும் முத்தமிடப் பணித்தாள். அவன் இதை ஒத்திகையாக எடுத்துக்கொண்டான்.

அவன் மூர்க்கங்கள் நளினமாயிருந்தன. ஒருவார கால இடைவெளியில் இரண்டுமுறை வீடியோ காலில் பேசியிருக்கிறான். இரண்டுமுறையும், உச்சத்தை வேண்டாமென்று நிறுத்தினான். அடுத்த சந்திப்புவரை தாக்குபிடிக்க முடிகிறதா என்று சோதிப்பதாக சொன்னான். இந்த சித்திரவதையை விரும்பி ஏற்றுக்கொள்கிறேன் என்றான். விலாசினி இவன் பற்றிய புரிதல் அட்டவணையில் திருத்தம் செய்தாள்.

இவளை கொஞ்சம் கூட பொருட்படுத்தாதவன், மிகுந்த பொறுப்புணர்வோடு நடந்து கொண்டான். காமத்தில் பக்குவப்படுதல் என்று ஒன்று இருக்கிறதா என்ன? இவ்வளவு நிதானம் எப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் கைகூடும்?

விலாசினி தனக்குத்தானே தொந்தரவுக்குள்ளாகிக் கொண்டிருந்தாள். முதல் சுற்றை விறுவிறுவென முடித்துவிட்டு, ஆற அமர ஆணின் நடத்தைகளை கேலி செய்து சிரித்துக் கொண்டிருப்பாள். அது அவளுக்கு அசுர போதை. அதன்பின் நிதானம் கடைபிடிப்பாள். கென்னத் அவ்வளவு நிதானமாக இருக்கிறான். இவளை வேடிக்கைப் பார்க்கிறான்.

சொல்லப்போனால், விலாசினி இரண்டாம் சந்திப்பை விரும்பினாள். இவனிடம் காமமே பிரதனமாக இருந்தது. விலாசினி கல்லூரி முடித்து கிளம்பினாள் என்றால் இருவேறு நிலப்பரப்பு. தொடர்பு எல்லைக்குள் வைக்கும்படியான ஆள் கிடையாது. எப்போதும் சுரக்கும் எச்சிலின் சாயல்.

கண்கள் பொங்குவதும், ஈரமற்று வடிந்து காணப்படுவதும் என, பகலெல்லாம் மோக விளையாட்டை அவளோடு நடத்திக் கொண்டிருந்தது கண்கள். தனக்கென்று இருந்த விருப்பு வெறுப்புகள் கென்னத்தின் நடத்தையால் கேள்விக்குள்ளாகிக் கொண்டிருந்தன. ரசனையின் மீது குழப்பங்கள் சூழ்ந்திருந்தன. எல்லாவற்றையும் சரிகட்டும் விதமாக, அவனிடம் சொல்வதற்கு அவளிடம் ஒரு கதை இருந்தது. அவன் தேவை குறித்தும், சொன்னதன் வழியே அவன் என்னவாக வாய்ப்பிருக்கிறது என்பது குறித்தும், தீர்க்கமான முடிவுக்கு வரமுடியாதிருந்ததால் தள்ளிப்போட்டுக் கொண்டே போனாள்.

அவன் கண்களின் ஈரத்தன்மை கூடும் நொடியை கண்டுபிடித்த மறுநொடி சொல்ல வாயெடுத்து, நிறுத்திக் கொண்டாள். இவ்வளவு வாஞ்சையோடு வருபவனை துண்டிப்பது பாவக்கணக்கில் சேருமென்று அணைத்துக் கொண்டாள். கென்னத்திடம் சொல்வதற்கு ஒரு பதில் இருந்தது. ஆனால் கேள்வியின்றி நிச்சயம் சொல்ல முடியாது. அதை அவன் கண்கள் காட்டிக்கொடுத்தபடி இருந்தன.

கிளம்புவதற்கு ஏற்பாடாக, படுக்கையை சரிசெய்துகொண்டே விலாசினி சொன்னாள்.

“எங்க வீட்ல ரோஸ்லின்னு ஒரு பூனை இருந்துச்சி. ரோஸின்னு கூப்பிடுவோம்.  அதோட குட்டிங்க பால் குடிக்கும்போது பார்த்திருக்கேன். ரொம்ப குட்டியா இருக்கும் தாய் பூனையோட பிங் கலர் நிப்பிள்ஸ். நீ இன்னைக்கு அந்த குட்டிப்பூனைங்க மாதிரிதான் நடந்துகிட்டடா. அவ்ளோ soft” என்றாள்.

“மியாவ்”

***


( ரமேஷ் ரக்சன் – இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள் 16, ரகசியம் இருப்பதாய், பெர்ஃப்யூம் மற்றும் ஒரு நாவல் “நாக்குட்டி” வெளிவந்துள்ளன.  )

CLI-FI எழுத்தாளர் டான் ப்ளூம் – நேர்காணல் (தமிழில் – பாரதிராஜா)

0

டான் ப்ளூம் நேர்காணல்: “க்ளை-ஃபை” படைப்பாளி
வில்லியம் ஏ. லிகெட் – டிசம்பர் 11, 2018

#க்ளை-ஃபை (#clifi) என்ற கொத்துக்குறியுடன் (hashtag) என் பருவநிலைப் புனைவுப் புதினமான ‘வாட்டர்மெலான் ஸ்னோ’ (Watermelon Snow) பற்றி என் நண்பர் ஒருவர் டிவீட் அனுப்பிய போதுதான் முதலில் டானைச் சந்தித்தேன். பருவநிலைப் புதினம் – கிளைமேட் ஃபிக்ஷன் (cli-fi) என்ற புதிய வகைமைக்கும் டானின் வலைத்தளம் cli-fi.net-க்கும் என் கண்களைத் திறக்கும் வகையில், டானே அந்த டிவீட்டுக்குப் பதிலளித்திருந்தார். அப்போதிருந்தே புனைவு எழுதுதல், கல்வி, மற்றும் பிரபல நூல்கள் பற்றிய கட்டுரைகளில் cli-fi-க்கான மேற்கோள்களைக் காணத் தொடங்கினேன். புதியவர்கள், முதிர்ந்தவர்கள் என இரு சாராரையும் இந்த வகைமையில் எழுத டான் சுறுசுறுப்பாக ஆதரித்து வருகிறார். 2017-இல் ‘வாட்டர்மெலான் ஸ்னோ’ வெளியாகும் நேரத்தில் என்னைப் பற்றியும் அந்த நூலைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதினார்.

“க்ளை-ஃபை” எப்படி உருவானது என்றும் அது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பற்றியும் உரையாட பெருந்தன்மையோடு ஒரு நேர்காணலுக்கு ஒத்துக்கொண்டார்.

பருவநிலைப் புனைவில் உங்களின் இந்த ஆர்வத்துக்கு இட்டுச் சென்றது எது?

2006-இல் பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் உள்ள செய்தித்தாட்களில் வெளியான ஐபிசிசி (IPCC) அறிக்கை பற்றிய செய்திகளை அப்போதிருந்தே இணையத்தில் பின்தொடர்ந்து கொண்டிருந்தேன். நியூயார்க் டைம்ஸிலும் பிரிட்டன் கார்டியனிலும் கருத்தாளர்களும் எதிர்த்தலையங்க (op-ed) எழுத்தாளர்களும் அதன் பின்விளைவுகள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்ததை வைத்து, மனித இனம் மிக மிகப் பெரும் இடர்பாட்டில் இருக்கிறது என்று எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டவனானேன்.

அடுத்த பத்தாண்டுகளில் அதுபோலப் பல அறிக்கைகள் வந்தன என்றாலும், அந்த வரிசையில் முதல் அறிக்கையான ஐபிசிசி அறிக்கை பற்றிப் படித்ததையும் செரித்ததையும் வைத்து, 2007 ஜனவரியில், கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு மனம் வெதும்பித் திரியும் அளவுக்கு மிகுந்த மனச்சோர்வுக்கும், உளவியல் ரீதியான மனச்சோர்வுக்கும், துக்கத்துக்கும் ஆளானேன். வாழ்க்கையிலேயே ஆர்வம் இழந்தேன். அதற்கு முன்பு ஒரு போதும் பருவநிலை மாற்றத்துக்காக அப்படியான ஓர் ஆழ்ந்த மன அழுத்தத்தை நான் அனுபவித்ததில்லை

ஆனால் ஒருநாள், மிக நீண்ட காலத்துக்கு அப்படியே மனமுடைந்து கிடப்பது நல்லதில்லை என்று முடிவு செய்தேன், எனவே என் கணிப்பொறியில் அமர்ந்து, என் வலைப்பதிவில், “People Get What They Deserve” (“மக்கள் எதற்குத் தகுதி பெற்றவர்களாக இருக்கிறார்களோ அதையே பெறுகிறார்கள்”) என்ற தலைப்பில் 800 சொற்களில் ஓர் எதிர்த்தலையங்கம் எழுதினேன். P-G-W-T-D என்று தலைப்பில் உள்ள ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்தையும் எடுத்து “PIGSWANTED” (“பன்றிகள் வேண்டும்”) என்று துணைத்தலைப்பிட்டேன். அடுத்து உள்ளே குதித்து, 2006 ஐபிசிசி அறிக்கையை வைத்துப் பார்த்தால், மனித இனத்தின் பேரழிவு உறுதியாகிவிட்டது, இது நம் மிதமிஞ்சிய பேராசையாலும் பூமியைப் பற்றிய அக்கறையின்மையாலும் நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்டது – அடுத்த 100 ஆண்டுகளிலோ என்னவோ நம்மைத் தாக்கப் போகும் இந்தப் பேரழிவுக்கு உண்மையில் நாம் தகுதியானவர்கள்தாம் என்று ஒரு மிக வலிமையான கட்டுரையை எழுதினேன்.

நான் எழுதியதை வாசித்தபின், என் ஆழ்ந்த மனச்சோர்வை ஒரு சொந்தக் கட்டுரையாக உருமாற்றிய அந்த படைப்புச் செய்முறை என் மனநிலையைத் தூக்கிவிட உதவியதையும் உடனடியாக என் மனநிலை பிரகாசமடைந்ததையும் உணர்ந்தேன். மீண்டும் மகிழ்ச்சியாகவும் இன்பமாகவும் என் வழக்கமான தன்னிலையையும் உணர்ந்தேன். என் துக்க உணர்வுக்குள் நான் செய்த அந்தப் படைப்புத்திறன் மிக்க அகழ்வாய்வு, சொற்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தையும், மேலும் பல கட்டுரைகளோடும் எதிர்த்தலையங்கங்களோடும் வலைப்பதிவுகளோடும் மக்கள் தொடர்புக் கருத்துக்களோடும் பாய்ந்து வரும் புவி சூடாதலின் அபாயங்கள் பற்றி எச்சரிக்கை மணி அடிக்க என் எழுத்தாற்றலைப் பயன்படுத்த வேண்டும் என்றும் எனக்கு உணர்த்தின.

“க்ளை-ஃபை” என்ற சொற்கூற்றை உருவாக்குவதற்கு உங்களுக்கு உளத்தூண்டலாக இருந்தது எது?

இந்த எச்சரிக்கை மணியைப் பரந்துபட்ட அளவில் பொதுமக்களுக்குக் கேட்க வைப்பதில் புதின எழுத்தாளர்களும் திரைப்பட இயக்குனர்களும் புதினங்களையும் திரைப்படங்களையும் பயன்படுத்துவதன் சாத்தியம் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினேன். அப்போது இது போன்ற நூல்களுக்கும் படங்களுக்கும் ஒரு பெயர் தேவைப்பட்டது. 1991-இலிருந்து தைவானில் நான் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சிறிய நகரத்தில் இருக்கும் சாலையோரக் காப்பிக்கடைக்கு வெளியே அமர்ந்துகொண்டு, ஒரு பீரும் ஒரு தட்டு நூடுல்சும் கொண்டுவரச் சொல்லிவிட்டு, இந்தப் புதினங்களையும் படங்களையும் என்னவென்று அழைக்கலாம் என்பது பற்றி சில குறிப்புகள் எடுக்கத் தொடங்கினேன்.

20 சாத்தியமுள்ள பெயர்களை எழுதினேன், அதில் எனக்கு மிகவும் பிடித்தது “climate fiction” (“பருவநிலைப் புனைவு”), அது கண்டிப்பாக அதற்கு முன்பிருந்த “science fiction” (“அறிவியல் புனைவு”) என்ற இலக்கியச் சொற்கூற்றின் அடிப்படையிலானதுதான், பின்னர் science fiction-க்கு “sci-fi” என்று செல்லப்பெயர் வைத்தது போல, அதேபோலவே எதுகையோடு ஒலிக்கிற விதத்தில் climate fiction என்பதற்கு “cli-fi” என்று செல்லப்பெயர் இட்டேன்.

ஆனால் அறிவியல் கருத்துப் பரிமாற்றங்களிலும் இலக்கியக் கருத்துக்களிலும் என்று இரு வேறு பாத்திரங்கள் ஆற்றப் போகிறது இந்தச் செல்லப்பெயர் என்பதையும் உணர்ந்தேன்.

1. இந்த க்ளை-ஃபை என்கிற சொற்கூறு, செய்தித்தாள் தலைப்புச் செய்திகளிலும் இணையத் தலைப்புச் செய்திகளிலும் சுருக்கமானதாகவும் கண்ணைக் கவரும் சொல்லாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். என் 20-களிலிருந்தே செய்தித்தாளனாக இருக்கும் முதிர்ந்தவன் என்ற முறையில், வாஷிங்டன் டிசி, அலாஸ்கா, டோக்கியோ, தைவான் ஆகிய இடங்களில் செய்தித்தாட்களில் பதிப்பாசிரியராகவும் பிரதி திருத்துனராகவும் தலைப்புச் செய்தி எழுதுபவனாகவும் பக்க வடிவமைப்பு செய்பவனாகவும் செய்தியாளராகவும் பணி புரிந்ததில், வாசகர்களின் மீது தாக்கமும் பாதிப்பும் ஏற்படுத்துவதில் பொருத்தமான சொற்களுக்கு இருக்கும் சக்தி பற்றி எனக்கு ஓர் உணர்வு இருந்தது. க்ளை-ஃபை என்பது, கண்டிப்பாகச் சுருக்கமாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டிய தலைப்புச் செய்திகளில், அதுவும் குறிப்பாக தலைப்புச் செய்திக்கான இடம் அளவாக இருக்கும் அச்சுச் செய்தித்தாட்களில் பயன்படுத்துவதற்கு மிகப் பொருத்தமான சொல் என்று உணர்ந்தேன்.

2. க்ளை-ஃபை, இலக்கிய விமர்சகர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் நூல் மதிப்பீட்டாளர்களுக்கும் புதிய இலக்கியச் சொற்கூறாகவும் இருக்கும், புவி சூடாதலின் அபாயங்களையும் எச்சரிக்கைகளையும் பற்றி எச்சரிக்கை மணி எழுப்புவதற்கான மக்கள் தொடர்புக் கருவியாகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று உணர்ந்தேன்.

உலகுக்கு எப்போது, எப்படி முதன்முதலில் “க்ளை-ஃபை”யை அறிமுகப்படுத்தினீர்கள்?

உலகுக்கு க்ளை-ஃபை சொற்கூற்றை அறிமுகப்படுத்தும் என் முதல் முயற்சிகள் கொடுமையான தோல்வியைச் சந்தித்தன. எவருமே அந்தச் சொற்கூற்றை எடுத்துக்கொள்ளவில்லை, எவருமே என் டிவீட்களை மறுடிவீட் செய்யவில்லை. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, அந்த க்ளை-ஃபை சொற்கூறு எங்குமே சென்றடைந்தபாடில்லை.

எவரேனும் நான் செய்து கொண்டிருந்ததை விரும்பினார்களா என்று பார்ப்பதற்கு, அந்தச் சொல்லை என் வலைப்பதிவில் போட்டு, அதன் இணைப்பை டிவிட்டர் வழியாகவும் மின்னஞ்சல்கள் வழியாகவும் எனக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்பினேன். பெரும்பாலானவர்கள் என்னிடம் சொன்னார்கள்: “உன்னால் செய்ய முடியாது! அப்படியெல்லாம் புதியதொரு இலக்கிய வகைமையை நீ உருவாக்கிவிட முடியாது” முடியாதாளர்கள் (naysayers) என்னிடம் சொன்னதைக் கேட்டுக்கொண்டேன், அவர்களுடைய விமர்சனத்தை நான் பெரிதுபடுத்தவில்லை, ஆனால் இதைத்தான் பதிலாகச் சொன்னேன்: “ஓ அப்படியா? பொறுத்திருந்து பாருங்கள்!” இப்போது 2019-இல், இதோ இங்கு நிற்கிறோம்! Cli-fi.net-இல் உள்ள என் வலைத்தளம் The Cli-Fi Report (த க்ளை-ஃபை அறிக்கை) என் படைப்புச் சிந்தனையைத் தூக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

அந்தச் சொற்கூறு என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இதுவரை?

மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது, ஒரு சூடான கோடை நாளில் தைவானில் இருக்கும் அந்தச் சாலையோரக் காப்பிக் கடையில் துடைப்புத் தாளில் அந்தச் சொற்கூற்றை முதல்முறையாக நான் எழுதிய போது நான் கற்பனை செய்திருந்ததை விட மிக மிக நெடுந்தொலைவு போயிருக்கிறது. இலக்கிய விமர்சகர்களாலும் கல்வியாளர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல் 20, 2013 அன்று என்.பி.ஆர். (NPR) வானொலி வலையமைப்பு 5-நிமிடக் கேட்பொலியாகவும் அதன் உரைவடிவத்தை NPR வலைத்தளத்திலும் வெளியிட்டது இணையத்தில் வைரலானது. அவர்கள் தொடங்கி வைத்த 2013-இலிருந்து பல இதழ்களிலும் செய்தித்தாட்களிலும் வலைதளங்களிலும் தலைப்புச்செய்தி எழுதுபவர்கள் இந்தச் சொற்கூற்றைக் கிட்டத்தட்ட நாள்தோறும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

என்.பி.ஆர். வெளியிட்ட “the rise of a new literary term dubbed cli-fi” (“க்ளை-ஃபை எனப்படும் இலக்கியச் சொற்கூற்றின் எழுச்சி”) என்கிற படைப்புக்குப் பின் அது நிற்கவே இல்லை. நியூயார்க் டைம்ஸ், பிரிட்டன் கார்டியன், அட்லாண்டிக் இதழ், சிலேட், சலோன், க்ரிஸ்ட, பிபிசி ஆகியவற்றில் க்ளை-ஃபை சொற்கூற்றைப் பயன்படுத்திய தலைப்புச் செய்திகளுடன் புதிய செய்திகள் வந்தன. ஆஸ்திரேலியாவிலும், ஃபிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், தைவான் ஆகிய நாடுகளிலும் செய்தித்தாட்களில் இந்தச் சொற்கூறு பயன்படுத்தப்பட்டது. சுருக்கமான ஐந்தெழுத்துச் சொற்கூற்றுக்கு இது மிகப்பெரிய தாக்கம். அது வேலை செய்தது.

க்ளை-ஃபை பொதுப் பயன்பாட்டுக்குள் நகர்ந்து வருவது போலத் தெரிகிறது. அதை எப்படிக் கணக்கில் எடுத்துக்கொள்கிறீர்கள்?

என்.பி.ஆரும் நியூயார்க் டைம்ஸும் இலண்டனில் கார்டியனும் க்ளை-ஃபை சொற்கூற்றைப் பயன்படுத்திக் கட்டுரைகளும் தலைப்புச் செய்திகளும் எழுதிய போது பொதுப்போக்கு ஊடகங்கள் கவனம் செலுத்தத் தொடங்கின. இப்போது அந்தச் சொற்கூற்றை கூகுள் செய்து பாருங்கள், ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் 5,000 இணைப்புகளுக்கும் மேல் இருப்பதைக் காணலாம். இது எல்லாமே சுத்தமான அதிர்ஷ்டத்தாலும், உலகெங்கும் உள்ள ஊடகவியலாளர்களுக்கும் இலக்கிய விமர்சகர்களுக்கும் அனுப்பிக்கொண்டிருந்த என் மின்னஞ்சல் மற்றும் டிவிட்டர் செய்திகளில் இருந்து ஒருநாள் கூட இடைவிடாமல் 24/7 முறையில் இந்தச் சொற்கூற்றை விளம்பரப்படுத்த நான் செய்த கடும் உழைப்பாலும், சிலர் சொல்வது போல “பேரண்டத்தின் கூடுகை”யாலும் (“cosmic convergence”) நடந்தது. அந்தச் சொற்கூறும் அதன் உணர்வும் அது எதற்காக நின்றதோ அந்த உணர்வும் காற்றில் பரவியது. க்ளை-ஃபைக்கு நான் பிறப்புக் கொடுக்கவில்லை, அதுவேதான் அதற்குப் பிறப்புக் கொடுத்துக் கொண்டது என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இதில் நான் பேறுகாலம் செய்த செவிலி மட்டுமே.

கட்டுரைகளில் க்ளை-ஃபை சொற்கூற்றுக்காக அடிக்கடி உங்களுக்கு நன்றியளிக்கப்படுகிறது. அந்தச் சொற்கூற்றோடு தொடர்ந்து இடைவிடாமல் உங்கள் பெயர் தொடர்புபடுத்தப்படுவதை எப்படிக் கணக்கிடுகிறீர்கள்?

ம்ம்ம், 2013-இலிருந்தே பருவநிலை மாற்றமும் புவி சூடாதலும் ஒவ்வொரு செய்தித்தாள் ஆசிரியரின் மனதிலும் இருந்தது என்பதை வைத்துப் பார்த்தால், அந்தச் சொற்கூற்றில் பொதுப்போக்கு ஊடகங்கள் ஆர்வம் செலுத்தத் தொடங்கிய போது நான் இருந்தேன். எங்கெல்லாம் தோழமையான காது கிடைத்ததோ அங்கெல்லாம் என் கதைகளை நட்டுச் செல்கிற ஒரு மக்கள் தொடர்பாளன் மட்டுமே நான். முதலில் அது எளிதாக இல்லை. ஆனால் நான் அதைப் பிடித்துக் கொண்டேன், ஏனென்றால் ஏதோவொன்றை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று எனக்குத் தெரிந்தது. Sci-fi சொற்கூற்றைப் போலவே எதுகையாக ஒலித்த வெறும் 5 எழுத்துக்கள் ஒரு பெரிய அதிசயம் இல்லை. உண்மையிலேயே நான் எதுவும் பெரிதாகச் செய்துவிடவில்லை. ஆனால் ஊடி ஆலன் ஒருமுறை சொன்னது போல, தினமும் புறப்பட்டு வேலைக்கு வந்து நிற்பதே வெற்றிதான். ஒருநாள் கூட ஓய்ந்து விடாமல் விடுமுறை எடுக்காமல் கடந்த 5 ஆண்டுகளில் அதைத்தான் நான் செய்திருக்கிறேன். நான் பயணங்கள் செல்வதில்லை, கடலுலாக்கள் செல்வதில்லை, விமானப் பயணம் செல்வதில்லை, என்னிடம் கார் கிடையாது, விடுமுறைகளில் செல்வதை நிறுத்திவிட்டேன். எனக்கு, நீங்கள் விரும்புவதைச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் வாழ்க்கையே ஒரு நீண்ட விடுமுறைதான், அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போதுமே சலிப்பு வராது. ஒவ்வொரு காலையும் நான் முழுக்க முழுக்க நேர்மறை ஆற்றலோடும் நன்னம்பிக்கையோடும் எழுகிறேன். அது என் டி.என்.ஏ.விலேயே இருக்கிறது.

நீங்களே ஏதேனும் பருவநிலைப் புனைவு எழுதியிருக்கிறீர்களா?

இல்லை. நான் புதின எழுத்தாளரோ திரைக்கதை எழுத்தாளரோ அல்ல. நான் சிறிய மின்னஞ்சல்களும் 800-சொல் எதிர்த்தலையங்கங்களும் எழுதுவதிலும் பரந்து விரிந்த டிவீட்கள் போடுவதிலும் மட்டுமே வல்லவன்.

புவி சூடாதல் பற்றிய மனப்பாங்கை மாற்றுவதில் க்ளை-ஃபைக்கு என்ன பாத்திரம் இருக்கலாம்?

நெவில் ஷுட்டின் ‘On the Beach’ (‘ஆன் த பீச்’) என்று தலைப்பிடப்பட்ட 1957 புதினம் (மற்றும் நூலைத் தொடர்ந்து அதே பெயரில் 1959-இல் வெளியான திரைப்படம்), அணு ஆயுதப்போர் மற்றும் “அணு ஆயுதக் குளிர்காலம்” (“nuclear winter”) ஆகியவற்றின் ஆபத்துகளையும் அபாயங்களையும் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க உதவியது போல், க்ளை-ஃபை புதினங்களும் திரைப்படங்களும் புவி சூடாதல் பற்றிய மனப்பாங்கையும் விழிப்புணர்வையும் மாற்றும் என நம்புகிறேன். க்ளை-ஃபை என்பது ஓர் உலகளாவிய எச்சரிக்கை, ஓர் எழுப்பு மணி, ஓர் எச்சரிக்கைக் கிளரொளி, ஒரு பெருங்கூக்குரல். இதை உண்மையாகவே நம்புகிறேன்.

க்ளை-ஃபை என்பது, ஒன்று நம்பிக்கை மிக்கதாய் இருக்கிறது, அல்லது இருளும் அவநம்பிக்கையும் உடையதாய்த் தெரிகிறது. இதில் எந்த அணுகுமுறை பருவநிலை மாற்றம் பற்றிய மனப்பாங்குகளை மாற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்?

நான் ஓர் இலக்கியக் கொள்கையாளனோ இலக்கிய விமர்சகனோ அல்ல, எனவே க்ளை-ஃபை என்றால் என்ன என்றோ அது எப்படி இருக்க வேண்டும் என்றோ நான் சொல்ல முடியாது. க்ளை-ஃபை என்கிற வகைமை எல்லாக் கருத்துக்களுக்கும் இடமளிப்பதாக இருக்கிறது என்பதே என் கருத்து. அவர்களின் கதைகளை எப்படி அமைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என்கிற முடிவை உலகெங்கும் இருக்கும் நம் புதின எழுத்தாளர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்களின் கடின உழைப்புக்கும் மிகைச்சுமைக்கும் விட்டுவிடவே விரும்புகிறேன். எனக்கு இருளும் அவநம்பிக்கையும் நிறைந்த க்ளை-ஃபை பிடிக்கிறது. எனக்கு நிறைவுலக, நன்னம்பிக்கை க்ளை-ஃபை பிடிக்கிறது. எனக்கு எந்தப் பாரபட்சமும் இல்லை. நான் க்ளை-ஃபை கூடாரத்துக்குள் எல்லோரையும் வரவேற்கிறேன்.

மனித இனம் புவி சூடாதலைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடும் என்று எவ்வளவு நன்னம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள்?

எனக்கு எந்த நன்னம்பிக்கையும் இல்லை. பேரழிவு நாளுக்கு, மனித இனத்தின் முடிவுக்கு, நம் உயிரினத்தின் முடிவுக்குத் தயாராக மனிதகுலத்துக்கு இன்னும் 30 தலைமுறைகள் மட்டுமே இருக்கின்றன என்று எண்ணுகிறேன். இந்த நேரத்தை, நம் எதிர்காலத் தலைமுறைகள் அவர்களின் விதியை ஏற்றுக்கொள்ளவும், இன்றிலிருந்து 500 ஆண்டுகளில் நயத்தோடும் கண்ணியத்தோடும், ஆன்மீக நயத்தோடும் ஆன்மீகக் கண்ணியத்தோடும், ஏற்றுச்சாகத் தயார்படுத்தப் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறேன். 2500-ஆம் ஆண்டு வாக்கில் அது வந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்.

இங்கிருந்து க்ளை-ஃபை எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று பார்க்கிறீர்கள்?

21-ஆம் நூற்றாண்டின் மிச்சத்துக்கும், 22-ஆம் நூற்றாண்டுக்குள்ளும், அடுத்த 500 ஆண்டுகளுக்கும் கூட அது தொடர்ந்து வளர்வதையும் விரிவடைவதையும் பார்க்கிறேன்.

வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா? ‘கிரகம் ஏ’-க்கு நல்வரவு. இதற்கடுத்து “கிரகம் பி” என்று ஒன்றில்லை.

நன்றி.

 

தமிழில்: பாரதிராஜா

 

Dan Bloom Interview: Creator of “Cli-Fi”

எஸ்ப்ளனேடில் உள்ள வீடு – ஆன் எபர்

4

மிஸ்.ஸ்தெபானீ த பீஷெத் பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்தார். சரியாக வளராதது போல் தோற்றமளிக்கும் ஒல்லியான கை கால்கள். அவர் தலை அந்தச் சன்னமான நீள கழுத்திற்கு மேல் ரொம்பப் பெரிதாக இருந்தது. முகத்தைச் சுற்றி அவர் அணிந்திருந்த கஞ்சி போட்ட முக்காடு மாதிரியான துணியே அவர் தலை உடைந்து தோள்களின் மேல் விழாமல் காப்பாற்றுவது போல் இருந்தது. பிரபு வம்சாவளியில் வந்த ஸ்தெபானீ த பீஷெத்தின் முன்னோர்களின் படாடோபம் அவரின் ஆடம்பரமான தலையலங்காரத்தில் அடைக்கலமாகியிருந்தது. அவருடைய குறுகிய மண்டையோட்டின் மேல் அடுக்கடுக்காக இருந்த சுருண்ட முடியலங்காரம், சமச்சீராக வெள்ளித் தோட்டாக்களை வைத்துக் கட்டிய கட்டிடம் போல் இருந்தது.

மிஸ் பீஷெத்திற்கு இளமைக்காலமே இருந்ததில்லை போல. அவள் குழந்தை உடையிலிருந்து நேரடியாக  காலரிலும் மணிக்கட்டிலும் இளஞ்சிவப்பு ஃப்ரில்ஸ் வைத்த இந்தச் சாம்பல் நிற உடைக்கு மாறியது போல் இருந்தது.

தந்தத்தினால் வேலைப்பாடு செய்யப்பட்ட பிடிகளையுடைய இரண்டு குடைகளை அவர் வைத்திருந்தார்.  ஒன்று, இளஞ்சிவப்பு நிறத்தாலானது, இன்னொன்று, சாம்பல் நிறம்.

அவருடைய சாரட்டில் வெளியே செல்லும்போது வானிலையைப் பொறுத்து அந்தக் குடைகளை எடுத்துச் செல்வது வழக்கம். வானம் தெளிவாக இருந்தால் இளஞ்சிவப்புக் குடையையும், மேகமூட்டத்துடன் இருந்தால் சாம்பல்நிறக் குடையையும் கொண்டு செல்வார். அந்த ஊரே அவர் குடைகளை வைத்து அன்றைய வானிலையைத் தெரிந்து கொள்ளும். பனிக்காலத்திலும் மழைக்காலத்திலும் ஸ்தெஃபானீ வெளியே செல்வதில்லை.

நான் இங்கே மிஸ் பீஷெத்தின் குடைகளையும், அவை தெரிவிக்கும் வானிலை மாற்றத்தைப் பற்றியும் ஏன் சொல்கிறேன் என்றால், அந்த இரண்டு குடைகளும் அவரின் ஒழுங்கான வாழ்க்கைமுறையை உள்ளபடித் தெரிவிக்கும் வெளிப்புற அடையாளங்கள் என்பதை வலியுறுத்தத்தான்.

மிஸ். பீஷெத்தின் வாழ்க்கை மிகவும் கட்டுப்பாடானது.  மாற்ற முடியாத ஒரு ஒழுங்குமுறையை அந்தப் பழங்காலத்து அப்பாவிப் பெண்மணி தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தார். இந்த அசாதாரணமான கட்டமைப்பில் ஒரு சின்ன பிளவோ, நிறுவப்பட்ட ஒழுங்குகளில் ஒரு சிறிய மாற்றமோ போதும், மிஸ் பீஷெத் உடம்பு சரியில்லாமல் படுத்து விடுவார்.

நல்லவேளையாக அந்த வயதான பீஷெத் தன்னுடைய பணிப்பெண்ணை மாற்றாமல் வைத்திருந்தார். (அந்தக் காலத்தில் அதெல்லாம் சாத்தியம்…)

பணிப்பெண்ணான ஜெரால்தீன் தன் எஜமானியை நன்றாகப் பார்த்துக் கொள்வதோடு அவளின் பாரம்பரிய பழக்கங்களுக்கும் மிகவும் மரியாதை கொடுத்து வந்தாள்.

பாரம்பரியத்தைப் பராமரிப்பதுதான் மிஸ் பீஷெத்தின் வாழ்க்கையாக இருந்தது; சரியாகச் சொல்வதானால் பாரம்பரியமே அவர் வாழ்க்கை. குடைகளையும், சிகையலங்காரத்தையும் தவிர இன்னும் பல சடங்குகள் அங்கே பின்பற்றப்பட்டன. காலையில் எழுவது, இரவு உறங்கச் செல்வது, சமையல் தயார் செய்வது, சரிகை வேலைப்பாடு என எல்லாமே பாரம்பரிய முறைப்படி செயல்பட்டன.

ஸ்தெஃபானீ-ஆர்தென்ஸ்-சோஃபி த பீஷெத் எஸ்ப்லனேடைப் பார்த்தபடி இருக்கும், ஃப்ரெஞ்ச் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ஒரு கல் வீட்டில் வசித்து வந்தார். உங்களுக்கு அந்த வீடுகளைப் பார்த்தாலே தெரியும்- செங்குத்தான கூரையுடைய, வரிசையான ஜன்னல்களுடைய குறுகலான வீடுகள். மேல்மாடி ஜன்னல்கள் குருவியின் கூட்டைப் போல இருக்கும். இதைப் போன்ற ஜன்னல்கள் இருந்தால் உள்ளே இரண்டு அல்லது மூன்று பரண்கள் இருப்பது உறுதி. வயதான ஒரே ஒரு பெண்ணிற்கு இது மிகவும் அதிகம். நம்பினால் நம்புங்கள், மிஸ் பீஷெத் மேலே பரணுக்குச் சென்றதே இல்லை. பழைய நினைவுகளைப் புதுப்பிக்கவோ, பழைய பொருட்களைத் தொட்டுப் பார்க்கவோ அல்லது அந்த மஞ்சளான பழைய காகிதங்களை முகர்ந்து கொண்டு பரணைச் சுத்தப்படுத்தவோ ஏறியதே இல்லை.

அவர் எல்லா அறைகளையும் பயன்படுத்தாமல் ஒவ்வொரு தளத்திலும் முக்கியமான ஒன்றிரண்டு அறைகளையே பயன்படுத்தினார். ஒவ்வொரு தளத்திலும் ஒரு அறை. நான்காவது மாடியில் வேலைக்காரர்களின் தங்குமிடம் இருந்தது. அதில் ஜெரால்தீனின் அறை மட்டுமே உபயோகத்தில் இருந்து வந்தது. உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் மற்ற அறைகளைப் பூட்டி விடுவது அவ்வீட்டின் மரபு. அதனால், ஸ்தெஃபானீ பத்து வயதாக இருக்கும் போது ஸ்கார்லெட் ஃபீவரில் இறந்த அவள் இரு தம்பிகளின் அறைகள், அவர்கள் பிறந்த பின் உயிரை விட்ட அவள் தாயாரின் அறை, வேட்டையாடும் போது இறந்த அவள் அண்ணன் ஐரேனேவின் அறை, யுர்சுலீன் கான்வெண்டில் சேர்ந்துவிட்ட தேனேஜின் அறை, நீண்ட நாள் உடம்பு சரியில்லாமல் இருந்து பிறகு காணாமல் போன அவள் தந்தையின் அறை, கடைசியாக, திருமணம் செய்து கொண்டு போன சார்ல்ஸின் அறை எல்லாம் பூட்டப்பட்டிருந்தன.

அவ்வீட்டுக்குரியவர்கள் இறந்து போனாலோ, கான்வெண்டில் சேர்ந்தாலோ, திருமணம் செய்து கொண்டாலோ அவர்கள் அறைக்குப் பூட்டுவிழா நடத்துவது மரபு. போனவர்களின் அறையில் இருக்கும் பொருட்களை எல்லாம் அப்படி அப்படியே வைத்து சுத்தம் செய்ய பிரயத்தனப்படுவாள் ஜெரால்தீன். அறையில் இருக்கும் மரச்சாமான்களின் மேல் துணியைப் போர்த்தி, ஷட்டர்களை இழுத்துக்  கதவைப் பூட்டுவாள். அவ்விதமாக அவ்வீட்டிலுள்ள நபர் நிரந்தரமாக அனுப்பி வைக்கப்படுவார். அந்த அறையில் அதற்குப் பின் யாரும் கால் வைக்க முடியாது.

இடுகாட்டில், வெட்டியான் கல்லறையின் கற்களை நேராக்குவது, புதைத்த இடத்தைச் சுத்தம் செய்வது என்று எல்லாவற்றையும் எப்படி ஒரு புனிதமான, முக்கியமான காரியமாகக் கருதுவானோ அந்த விதமான மனநிலையுடன்  ஜெரால்தீன் இந்த உறவுகளைத் துண்டிக்கும் வேலையைச் செய்தாள்.

ஒருநாள் மிஸ் பீஷெத்தின் அறையையும் மூட வேண்டி வந்து, தனியாக சிறிது காலம் அந்த வீட்டில் இறந்தவர்களுக்கு மத்தியில் தான் வாழவேண்டி வருமோ என்று சில சமயங்களில் ஜெரால்தீன் நினைப்பதுண்டு. உண்மையில் அந்த தினத்துக்காக அவள் எந்த பயமும் இன்றி காத்துக் கொண்டிருந்தாள். ஏன், சிறிது சந்தோஷமாகவே அந்த நாளை எதிர்பார்த்தாள்; அது அவள் இளைப்பாறும் நாட்களாகவும் இவ்வளவு ஆண்டுகள் அந்த வீட்டில் உழைத்ததற்கு பிரதியுபகாரமாகவும் இருக்கும். மிகவும் பாடுபட்டு பலமுறை சுத்தம் செய்யப்பட்ட அந்தப் பெரிய வீட்டின் அறைகள்  நிரந்தரமாக நிலையாக உறைந்து போகும். தூசும், பூஞ்சைக் காளானும் பொருட்களின் மீது படரலாம். ஆனால் ஜெரால்தீனிற்கு வேலை எதுவும் இருக்காது.

இம்மாதிரியான எண்ணங்கள் சோம்பேறித்தனத்தால் வருவதில்லை. ஒரு உழவன் தன் கடைசி உழவை எதிர்பார்ப்பது போல, ஒரு தையல்காரர் தன் கடைசித் தையலை எதிர்பார்ப்பது போல, ஜெரால்தீனும் கடைசிக் கதவைப் பூட்டி, சாவியை வளையத்தில் மாட்டும் நாளை எதிர்பார்த்தாள். ஜெரால்தீன் கனவு கண்டுகொண்டிருக்கும் அந்த நாள்தான் அவளுடைய இத்தனை வருட வேலைக்கு மகுடம் சேர்க்கப் போகும் நாள்; வேலையைச் செவ்வனே முடித்ததற்கான அத்தாட்சி; தான் பணிப்பெண்ணாகப் பிறந்த விதியை முழுமை செய்யும் நாள்.

இதில் விசித்திரம் என்னவென்றால், உயிருடன் கான்வெண்டில் கன்யாஸ்திரியாக இருக்கும் தேனேஜையும், ஒரு குடும்பத்தின் கணவனாக, தந்தையாக இருக்கும் மிஸ்டர் சார்ல்ஸையும், இந்த வயதான பணிப்பெண் இறந்தவர்களின் கணக்கில் சேர்ப்பதுதான். ஒருவேளை இருவரும் பிறந்த வீட்டை விட்டுப் போனது அவளுக்கு அவர்கள் இல்லாமலிருப்பதற்குச் சமமாக எண்ணி இருக்கலாம்; அவர்களுக்கு இனி இந்த வீட்டில் உயிரோட்டமான உறவு இல்லாததாகக் கூட இருக்கலாம். வீட்டின் கனமான கதவுகள் மிஸ் தேனேஜுக்காக நிரந்தரமாக மூடியாயிற்று. தந்தையின் விருப்பத்திற்கு மாறாக மிஸ்டர் சார்ல்ஸ் ஊரின் தெற்குப் பகுதியில் இருக்கும் ஒரு தையல்காரியை திருமணம் செய்து கொண்டதால் மிஸ்டர் பீஷெத் அவரை வீட்டை விட்டுத் துரத்திவிட்டு அந்த வீட்டை ஸ்தெஃபானீக்கு எழுதி வைத்து விட்டார்.

சார்ல்ஸ் தினமும் தன் சகோதரியைப் பார்க்க மாலையில் வருவார். ஆனால் ஜெரால்தீன் அவருடன் பேசுவதில்லை. அவளின் பார்வையில் ஸ்தெஃபானீ மட்டுமே பீஷெத் குடும்பத்தின் எஞ்சியிருக்கும் வாரிசு.

மூன்றாவது மாடியில் மிஸ் பீஷெத்தின் அறையைத் தவிர எல்லாக் கதவுகளும் மூடியிருக்கும்.  இரண்டாவது மாடியில் நீலநிறத்தில் இருக்கும் சின்ன வரவேற்பறை நிறம் மங்கிப் போய் யாரும் கவனிக்கப்படாமல் இருந்தது. முதல் மாடியில் இருக்கும் பெரிய வரவேற்பறையோ அடைசலாக சம்பந்தமில்லாத மரச்சாமான்களுடனும், பூத்தொட்டிகளுடனும், வெவ்வேறு விடிவில் பல பொருட்களுடனும் அமைதியற்று இருந்தது. கீழ்த்தளத்தில் உள்ள கனமான ஓக் மரத்தால் செய்யப்பட்ட கதவைத் திறந்தால் பெரிய ஹால், டைனிங் ஹால் மற்றும் வரவேற்பறையைக் காணலாம். ஓதமெடுத்த, சரியானபடி பொருட்கள் இல்லாத பழைய காலத்துச் சமையலறை அடித்தளத்தில் இருந்தது. ஜெரால்டீன்தான் சமையல் செய்வாள் என்றாலும் அவளை சமையல்காரி என்று சொல்ல முடியாது.

ஜெரால்தீனின்  எஜமானி பாரம்பரியத்தை வழிபட்டார் என்றால், ஜெரால்தீன் பிரகாசமான நிறங்களில் பட்டன்கள் அணிவதை ஒரு பாரம்பரியமாக வைத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு கருப்பு ஸ்கர்ட்டும் வெள்ளை ஏப்ரனும் சீருடை. ஆனால் அவள் ஸ்கர்ட்டுக்கு மேல் போடும் சட்டைகள் வண்ணமயமாக இருந்தன. நீலநிறச் சட்டைக்கு சிவப்பு பட்டன், பச்சை சட்டை மேல் மஞ்சள் பட்டன், தங்க நிறத்தில், வெள்ளி நிறத்தில், கண்ணாடி போல என இன்னும் நிறைய நிறைய. இதற்கெல்லாம் பரணில் பெட்டிகளில் நினைவுச் சின்னங்களாக மிச்சமிருந்த அந்தக் காலத்து உடைகளில் இருந்து பொத்தான்களை களவாடினாள்.

இந்தப் பைத்தியக்காரத்தனத்தோடு, ஒவ்வொரு ராத்திரியும் படுக்கப்போகும் முன் ஒயின் இருக்கும் அறைக்கு சும்மாவேனும் ஒருமுறை சென்று வருவது அந்த சிவப்பான குண்டுப் பெண்மணியின் வழக்கம்.

ஆனால் ஜெரால்டீனிடம் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவளுடைய எஜமானியின் நித்தியக் கடமைகளை இம்மி அளவும் பிசகாமல் செய்வதுதான்.

தினமும் காலையில், வெயிற்காலமானால் ஏழு மணிக்கும், குளிர் காலமானால் எட்டு மணிக்கும் மூன்று மாடி ஏறி மிஸ் பீஷெத்தின் கதவைத் தட்டுவாள். ஆட்காட்டி விரலால் இரண்டே இரண்டு முறைதான் தட்டுவாள். அவ்வளவே சமிக்ஞை. அப்புறம்தான் சடங்குகள் ஆரம்பிக்கும்.

ஜெரால்டீன் முதலில் திரைச்சீலைகளை நீக்கி ஷட்டர்களைத் திறப்பாள். பீஷெதிற்கு மையிருட்டில்தான் தூங்கப் பிடிக்கும். அவரை இரவின் தீயவைகளிடமிருந்து தடுக்க கெட்டியான துணிகளால் ஆன திரைச்சீலையும், வார்னிஷ் செய்யப்பட்ட ஸ்லேட்டுகளும் உபயோகப்படுத்தப் பட்டன. அவருக்கு இரவு மட்டுமல்லாமல் சூரியனின் முதல் கிரணங்களிடமும் பயம். அவை அவர் விழித்துக் கொள்ளும் நேரத்திற்கு முன்பாக எழுப்பி விட்டு விடும்.  பின் என்ன செய்வதென்று அறியாமல் போய் விடும்.

பின்னர் ஜெரால்டீன் டீ வண்டியை ஹாலிலிருந்து  தள்ளிக்கொண்டு வருவாள். அதன் மேல் காலையில் பீஷெத்துக்கு வேண்டிய எல்லாம் இருக்கும்: இரண்டு வெள்ளை மாத்திரைகள், ஒரு டம்ளர் தண்ணீர், காஃபி, டோஸ்ட், பல் தேய்க்கும் ப்ரஷ், பேஸ்ட், தாமிரத்தினாலான கழுவும் பேசின் மற்றும் கஞ்சி போடப்பட்ட துணி. வண்டியின் கீழ்த்தட்டில் துடைப்பம், முறம், பூந்துடைப்பம் இன்னும் வீட்டைச் சுத்தம் செய்யும் பிற சாமான்கள் இருக்கும்.

அந்த டீ வண்டி மூன்று அடுக்கு கொண்டது. இரண்டு அடி அகலமும்  நான்கு அடி நீளமுமாக இருக்கும். அது ஜெரால்டீனே பழைய பெட்டிகளால் செய்த வண்டி.

ஸ்தெஃபானீ சாப்பிட்டு முடித்தவுடன் அவரைக் குளிப்பாட்டி, உடுத்தி விட்டு, பவுடர் போட்டு, தலையலங்காரம் செய்வாள் ஜெரால்தீன். இத்தனை சிசுரு‌க்‌ஷைகளும் நடக்கும் போது அவள் எஜமானி ஆடாமல் அசையாமல் அமைதியாக நம்பிக்கையுடன் உட்கார்ந்திருப்பார்.

அதன் பின், ஜெரால்தீன் புருவத்தைச் சுருக்கிக்கொண்டு ஜன்னல் வழியே பார்க்கும்போது, ஸ்தெஃபானீக்கு ஒன்றும் புரியாத, உறுதியற்ற  சில கணங்களை கடக்க வேண்டி வரும்.

‘இன்று எப்படிப்பட்ட நாளாக இருக்கும் என்று சொல்ல முடியாது…’

அதைக் கேட்டு எஜமானி தன் பணிப்பெண்ணை வெறுமையாகப் பார்ப்பார்.  அவர் முகத்தில் என்ன செய்வதென்று அறியாத ஒரு வலி தெரியும்.  அந்த முகத்தைப் பார்த்தவுடன் ஜெரால்டீன் ஒரு முடிவோடு சொல்வாள்:

“மழை பெய்யப் போகிறது. நீங்கள் வெளியே போக வேண்டாம். நான் வண்டியோட்டியிடம் சொல்லி விடுகிறேன்.”

அதன் பின்னரே ஸ்தெஃபானீ சற்று நிம்மதியடைவார்; ஆனாலும் ஜெரால்தீன் அவரை நீலநிற வரவேற்பறையில் ஜன்னல் ஓரமாக இருக்கும் முதுகு உயர்ந்த வேலைப்பாடு செய்யப்பட்ட நாற்காலியில் அமர வைத்தால் மட்டுமே முழு நிம்மதியடைவார். அதில் உட்கார்ந்து கொண்டு மடியில் சரிகைத் துணியையும் கையில் க்ரோஷே ஊசியையும் எடுத்தால்தான் அவரால் யோசிக்கவே முடியும்.

வானிலை மோசமாக இருக்கிறது. நான் வெளியே செல்ல முடியாதுஎன் அம்மா நான் ஏழு வயதாக இருக்கும்போது எனக்குக் கற்றுக் கொடுத்த இந்த க்ரோஷேவைப் பின்னுவதைத் தவிர வேறு வேலை இல்லைவானிலை நன்றாக இருந்திருந்தால் வெளியே வண்டியில் போயிருக்கலாம். உலகில் இரண்டு உண்மைகள்தான் இருக்கின்றனஅந்த இரண்டே இரண்டு உண்மைகளுக்குள் கண்களை மூடிக்கொண்டு ஒளிந்து கொள்ள முடியும். ஒன்று, வண்டியில் வெளியே செல்வது; இரண்டாவது, க்ரோஷே பின்னுவது. ஜெரால்தீனால் அன்று எப்படிப்பட்ட நாள் என்று சொல்ல முடியவில்லை என்றால் வெறுமையாக அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து விடுகிறேன். மூளை ஸ்தம்பித்து விடுகிறது. சரி! இதையெல்லாம் இப்போது நினைக்காமல் இந்த இரண்டு நிஜங்களின் பின்னால் போக வேண்டியதுதான்வண்டியில் வெளியே போவது அல்லது பின்னுவது.

 வானிலை நன்றாக இருந்தாலும் கூட ஜெரால்தீன் தன் எஜமானியிடம் சொல்ல மாட்டாள். ஏனென்றால் அது அவளுக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தரும். ஆச்சரியமே இல்லாத சரியான வாழ்க்கை என்னுடையது என நினைக்கும் அவரிடம், வண்டியில் வெளியே போவதும் பின்னுவதும்தான் உலகம் என  நினைக்கும் ஒருவரிடம் அவர் செய்வது சரியல்ல என்று சொன்னால் ஏற்படும் மனக்கலக்கத்தை யோசித்துப் பாருங்கள். பின்னர் அவர் எந்த உண்மையையும் நம்பாத  நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்.

சிறு வயதிலிருந்து மிஸ் பீஷெத் சின்னச் சின்ன க்ரோஷே துண்டுகள் பின்னுவதில் தன் நேரத்தைச் செலவழித்தார். ஜெரால்தீன் அவையெல்லாவற்றையும்  தன்னுடைய கற்பனா சக்திக்கு ஏற்றாற்போல் உபயோகப்படுத்தினாள். ஸ்தெஃபானீக்கு இந்தக் கலையின் எல்லா ரகசியங்களும் அத்துப்படி. அந்த அறிவே அவருக்குப் போதுமானதாக இருந்தது. ஒரு வாரத்தில் அவருடைய விரல்கள் நாலு க்ரோஷே துண்டுகள் பின்னின. ஒவ்வொன்றும் உடன்பிறந்த அண்ணன் தம்பிகள் போல்  இருந்தன. வீடு முழுக்க அவை நிரம்பியிருந்தன  – ஐந்தோ ஆறோ பியானோவின் மேல், சுமார் எட்டு துண்டுகள் எல்லா மேஜைகளிலும், ஒரு டஜன் சாய்வு நாற்காலியின் மேல், ஒன்றிரண்டு மற்ற நாற்காலிகளின் மேல் என க்ரோஷே துணி இல்லாத ஒரு பொருளையும் எந்த அறையிலும் பார்க்க முடியாது. சொல்லப் போனால் எல்லா சாமான்கள் மேலும் நுண்ணோக்கியால் பெரிதாக்கப்பட்ட பனியின் துகள்கள் போன்று அவை காட்சியளித்தன.

வெயிற்காலமோ பனிக்காலமோ, ஜெரால்தீன் வானிலை சரியில்லை என்று அறிவித்து விட்டால் மிஸ் பீஷெத் காலை முழுதும் க்ரோஷே பின்னுவதில் கழிப்பாள். நீலநிற வரவேற்பறையில் நேராக நிமிர்ந்து அமர்ந்து ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருப்பாள். காலை வைக்கப் பயன்படுத்தும் சிறிய ஸ்டூலை மூடியிருக்கும் துணி அவள் புதிதாகப் பின்னிக் கொண்டிருப்பதை ஒத்திருக்கும்.

சரியாக மதியம் பதினொன்று ஐம்பத்தைந்துக்கு ஜெரால்தீன் கூப்பிடுவாள்:

“மிஸ் ஸ்தெஃபானீ, உணவு தயார்!”

இந்தக் குரல் கேட்ட நொடி தன்னிச்சையாக ஸ்தெஃபானீ எழுந்திருப்பாள். நீண்ட வருடமாகப் பழக்கப்பட்ட இந்தச் சடங்கான வாக்கியம் அவளை எழுந்திருக்க வைத்து, மெல்லப் படிக்கட்டில் இறங்க வைத்து மேஜையில் அவர் இடத்தை அடைய வைக்கும். அவர் யோசிக்கவோ புரிந்து கொள்ளவோ முயற்சி செய்யாமலேயே எந்திரத்தனமாக இது நடக்கும்.

ஸ்தெஃபானீ  வண்டியில் வெளியே போயிருந்தால் சரியாக பதினொன்றே முக்காலுக்கு வீட்டில் இருப்பார். அதனால் அவரால் வேண்டிய அளவு அமைதியுடன் மதிய சாப்பாடு அறிவிப்பை எதிர் கொள்ள முடியும்.

மிஸ் பீஷெத்தின் பிரயாணம் கூட ஒரு ஒழுங்குமுறைக்குட்பட்டது. அவர் நடைமேடையில் மெல்ல மெல்ல சின்ன அடி வைத்து நடப்பார். நிறைய அடுக்குகள் கொண்ட  தலையலங்காரத்துடன் அந்த சன்ன உடம்பைக் கொண்டு நடக்கச் சிரமப்பட்டு ஜெரால்தீனின் உதவியோடு கோச்சில் அமர்வார். கோச்சை ஓட்டுபவர் குதிரையை முடுக்க வண்டி மெதுவாக அமைதியாக எப்போதும் போல அந்த ஊரின் வீதிகளில் செல்லும்.

குதிரைக்கு போகும் வழி மனப்பாடம். அதனால் அந்த வண்டிக்காரன் தொப்பியால் முகத்தை மூடி, காலை நீட்டிக் கொண்டு, கைகளை வயிற்றில் கட்டிக் கொண்டு ஒரு சின்னத் தூக்கம் போடுவான். பயணம் முடிந்ததும் மாயவித்தை போல் விழித்துக் கொள்வான். சந்தோஷத்துடன், அதே சமயம், ஆச்சர்யத்துடன் கூப்பிடுவான்:

“இதோ! வீட்டிற்கு வந்து விட்டோம் மிஸ்!”

பயணம் ஆரம்பித்தபோது தூங்கியதால், அவன் குரல் ஏதோ இந்த பூமிக்குத் திரும்ப வந்ததை வித்தை என்று நினைத்துக் கூப்பிடுவதைப் போல் இருக்கும்.

மிஸ் பீஷெத், ஜெரால்தீன் உதவியுடன் வீட்டிற்குள் மறைவார். வண்டிக்காரன் குதிரையை அவிழ்த்து விட்டு வண்டியை அதன் இடத்தில் விடுவான். பயணம் முடிந்தது. பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் ஒரு சோகத்துடன் அவன் குதிரையை அவிழ்ப்பதைக் காண்பார்கள். ஒரு புராதன வண்டியை இழுத்துக் கொண்டு செல்லும் ஒரு வயதான குதிரை, தூங்கி வழியும் வண்டிக்காரன், சாம்பல் மற்றும் இளஞ்சிவப்பில் உடை உடுத்திய மம்மியைப் போலிருக்கும் ஒரு வயதான பெண்மணி… அவன் அந்தக் காலை வெயிலில் குதிரையை அவிழ்ப்பது ஒரு அமானுஷ்யச் செய்கையாக இருக்கும்.

மதியவேளை உணவுக்குப் பின் ஜெரால்டீன் தன் எஜமானியை வரவேற்பறைக்குக் கூட்டிக் கொண்டு வருவாள். க்ரோஷே பின்னுவதை விடாமல் ஸ்தெஃபானீ  சில விருந்தினர்களை(ச்) சந்திப்பாள். அவர்களுக்கு ஜெரால்டீன் டேண்டேலியன் ஒயினும் பிஸ்கட்டுகளும் கொடுப்பாள்.

பெரிய விரிவான தலையலங்காரத்தால் கழுத்து வலித்தாலும் அந்த வயதான எஜமானி தன் இருக்கையை விட்டு நகராமல்  வலுக்கட்டாயமாக தலை நிமிர்ந்து அமர்ந்திருப்பார். அப்படி அமர்ந்திருப்பதால் ஏற்படும் சங்கடம் சில சமயங்களில் தவிர்க்க இயலாதபடி அவர் முகச்சுளிப்பின் மூலம் தெரிந்து விடும். நிறைய பவுடர் அப்பிய அந்தச் சின்ன முகத்தில் அந்த ஒரு சிறிய முகச்சுளிப்பைத் தவிர விருந்தினர்களால் வேறு எந்த உணர்ச்சியையும் பார்க்க முடியாது.

அதைத் தவிர ஸ்தெஃபானீ  தன் விருந்தாளிகளிடம், ‘உங்கள் தாயார் எப்படி இருக்கிறார்?’ என சுரத்தேயில்லாத தொனியில் கேட்பது, பூட்டியிருக்கும் பல அறைகளில் ஒன்றிலிருந்து வருகின்ற குரலைப் போன்று இருக்கும். அந்த ஊரில் வசிக்கும் பலரும் அந்த அறைகள் அங்கு வசித்தவர்களின் ஆவிகளால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கின்றன என்று கருதினார்கள்.

ஸ்தெஃபானீக்கு இந்த வாக்கியம்தான் நலம் விசாரிப்பு, வரவேற்பு, விடைகொடுத்தல், உரையாடல் எல்லாமும். உண்மையைச் சொல்லப் போனால் அந்த வாக்கியம்தான் விருந்தினர்களுக்கு எல்லாம்.  ஏனென்றால், கொடுத்த ஒயின் புளிப்பாகவும் பிஸ்கட் இரும்பு போலவும் இருக்கும். அவை எப்போது பணிப்பெண்ணால் தயாரிக்கப்பட்டன எனத் தெரியாது. ஸ்தெஃபானீயின் தந்தை உயிரோடு இருந்தபோது தயாரிக்கப்பட்டவை என்று நான் நினைக்கிறேன்.

தள்ளாடுகின்ற வயதான பெரியவர்கள்தான் மிஸ் பீஷெத்தின் விருந்தாளிகள். எந்தவொரு அந்நிய மனிதனும் அவர்களின் தாயாரின் உடல்நிலை குறித்த அபத்தமான கேள்வியைக் கேட்க மாட்டான். ஆனால் மிஸ் பீஷெத்திற்கு அந்த வாக்கியத்தைத் தவிர வேறு எப்படியும் விசாரிக்கத் தெரியாது. மேலும் அது அவருக்கு அர்த்தம் இல்லாத வெறும் வாக்கியம்.

ஸ்தெஃபானீ விருந்தினர்கள் அங்கு இருக்கும்போது ஒரு க்ரோஷே முழுமையடைந்து விட்டால் ஒரு கூழாங்கல் முகட்டிலிருந்து விழுவது போல அதை அப்படியே கீழே நழுவ விட்டு, அடுத்து அதே மாதிரியான ஒன்றைப் பின்ன ஆரம்பித்து விடுவார்.

வந்த பெண்மணிகள் அதிக நேரம் இருப்பதில்லை; ஸ்தெஃபானீயும் அவர்கள் இருப்பதைக் காட்டிலும் போவதையே எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்.

ஆறேகால் மணிக்கு ஜெரால்தீன் மிஸ்டர் சார்ல்ஸ்ஸின் வருகையை அறிவிப்பாள். ஒரு நல்ல சுவிஸ் கடிகாரத்தின் இயக்கத்தைப் போல ஒவ்வொரு நாளும் இதே சம்பிரதாயத்துடன் அரங்கேறியது. மிஸ் பீஷெத்தினுள் இயங்கும் சக்கரம் சரியாக ஆறேகாலுக்கு, அந்த மெலிதான உருவத்தைச் சுமந்து செல்லும் கால்களுக்கு, உடனே கீழே கொண்டு செல்லும்படி கட்டளையிடும்.

அவரின் சகோதரர் நெற்றியில் முத்தமிட்டு புன்சிரிப்போடு குண்டு குண்டான தன் விரல்களை தேய்ப்பார்.

“ம்ம்… வீட்டிற்குள் நன்றாக இருக்கிறது.”

பின் தன் கோட்டைக் கழற்றி முன்னறையில் இருக்கும் ஸ்டாண்டில் மாட்டுவார். ஜெரால்தீன் அவருடைய அசைவுகளை கைகளைக் கட்டிக்கொண்டு இறுமாப்போடும் வெற்றியோடும்  ஒரு படைத்தளபதியைப் போல் பார்த்துக் கொண்டிருப்பாள். நைந்து போன அவரின் கோட்டை கேவலமாக பார்ப்பாள். அவள் பார்வை:

ஹூம்எப்போது அந்தப் பெண்ணைத்தான் கட்டிக் கொள்வேன் என்று பிடிவாதமாக இருந்தாரோ அப்போதே இது நடக்கும் என்று தெரியும். இவரின் தந்தை இவரைத் துரத்தி விட்டார், நானும் இறந்த மற்றவர்களின் அறையைப் போல இவர் அறையையும் பூட்டி விட்டேன். மிஸ் பீஷெத் வேண்டுமானால் தினமும் மாலையில் அவரை வரவேற்கட்டும், அது அவரின் விருப்பம்; ஆனால் நான், இவ்வீட்டின் வேலைக்காரியான நான், அவருடைய பணிவைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன் என்று அவருக்குத் தெரியட்டும். மிஸ்டர் பீஷெத்தை அவமானப்படுத்தியதற்கு தண்டனைதான் இந்த வறுமை. அவர் வீட்டில் போதுமான அளவு உணவு இல்லாததால் தினமும் இங்கே சாப்பிட வருகிறார். எங்களுடைய உணவைத் தின்று விட்டு பின் அவரின் தோல் எங்கள் வீட்டின்  கதகதப்பையும் எடுத்துக்கொள்கிறதுபிச்சைக்காரன்!’  என்று நினைத்துக் கொள்வாள்.

 சார்ல்ஸ் ஒரே ஒருவேளை தான் நல்ல உணவு சாப்பிடுகிறார் என்ற கூற்று உண்மையானால் அவர் ஏன் ஒல்லியாக இல்லை என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது. அவர் குண்டாக, மிகவும் குண்டாக மஞ்சள் நிறத்துடன் இருந்தார். அவருடைய வழுக்கைத் தலையும் பளபளக்கும் முகமும் ஒரே மாதிரி இருந்தன; கண்களும், உதடும் நிறமற்று இருந்தன. அவர் கண்கள் மீனின் கண்ணைப் போல என்றும், அவர் உடை அழுக்கு நாற்றம் வீசுவதாகவும் ஜெரால்டீன் சொல்வாள். மேலும், ஜெரால்தீனால் அவர் உணவு உண்ணும் முறையை மறந்தது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.

“எப்படித் தான் அவர் திருமணம் செய்து கொண்ட அந்த ஜீவராசியால் அவருடைய வீட்டின் உயர்ந்த பழக்கவழக்கங்களை மறக்க வைக்க முடியும் என்று தெரியவில்லை” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொள்வாள்.

இரவு உணவின் நேரம் நெருங்க நெருங்க சார்ல்ஸ் உற்சாகமாகி விடுவார். சகோதரியின் வெறுமையான பார்வைக்கு நடுவே அவர் கைகளைத் தொடர்ந்து தேய்த்துக் கொண்டே கதவுக்கும் ஜன்னலுக்குமாக, ஜன்னலுக்கும் கதவுக்குமாகப் பார்த்துக் கொண்டேயிருப்பார்.

சரியான நேரத்தில் இருவரும் அந்த நீண்ட மேஜையின் எதிரெதிர் முனையில் அமர்வார்கள்.

அறையில் எரிவாயு விளக்கு இல்லாததால் இரண்டு மெழுவர்த்திகள்  மட்டுமே மேஜையின் மேல் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும். அதனால் அந்த இடம் இன்னும் பெரிதாகவும் ஆழமாகவும் தோன்றும். அறையின் மூலைகள் இருட்டில் தொலைந்திருக்கும். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இருவரின் நிழல்கள், ஆர்வமாக செதுக்கப்பட்ட ஓக் மரப்பலகைகளின் மேல் கருப்புத் தீயைப் போல் நடனமாடிக் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு மாலையிலும் நிலவிய அந்தச் சூழ்நிலை சார்ல்ஸை மிகவும் ஈர்த்தது. ஒருவேளை அந்த நிழல்களுக்குப் பின்னால் ஏதேனும் நடமாட்டத்தை, அந்த விருந்தைப் பார்வையிடும் கண்ணுக்குப் புலப்படாத பார்வையாளர்களை உணர்ந்தாரோ என்னவோ! எந்த நிமிடமும் மேல் அறைகளை ஆக்கிரமித்திருக்கும் அந்த ஆவியுருவங்கள் எங்கே கீழே வந்து காலி நாற்காலிகளை பிடித்துக் கொள்ளுமோ என்ற பயமும் இருந்தது. கைத்தறித் துணியைப் போல் வெண்மையான, பூனையைவிட சற்றே பெரிய உருவத்தையொத்த அந்தக் கிழவியும் பார்க்க அமானுஷ்யமாகத்தான் இருந்தார்.

சூப் கொஞ்சம் சாப்பிட்டவுடன் ஸ்தெஃபானீயின் சகோதரனுடைய சந்தோஷமான மனநிலை மாறியது. வீட்டினுள் நுழையும்போது இரவு உணவின் மணத்தைத் துள்ளலோடு போதையோடு முகர்ந்து கொண்டு வந்தவரின் முகம் இப்போது இருண்டது.

கசப்பான எண்ணங்களுடன் துணியை, வெள்ளிச் சாமான்களை, பீங்கான் பாத்திரங்களைப் பார்த்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கிற, அந்த உடம்பில் இன்னும் உயிருடன் இருக்கும் தன் சகோதரியைப் பார்த்தார். கண்ணுக்குப் புலப்படாத எந்த பந்தம் ஸ்தெஃபானியை உயிருடன் வைத்திருக்கிறது? காற்றடித்தால் பறந்துவிடக் கூடிய நிலையில் இருக்கும் அவள் உயிரோடு இருப்பது ஆச்சரியம்தான்.

ஜெரால்தீன் மேஜையைச் சுற்றி நகர்ந்து கொண்டிருந்தாள். அவளுடைய கண் சார்ல்ஸினுள் ஊடுருவி அவர் எண்ணங்களை அறிந்து கொண்டது போலிருந்தது. அவள் கவனித்தது அவருக்குப் பெரும் அமைதியின்மையை உண்டாக்கியது. ‘இந்த வேலைக்காரி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், இந்நேரம் ஸ்தெஃபானீ அவள் முன்னோர்களைச் சென்றடைந்து இருப்பாள். ஏதோ ஒரு வேண்டாத சக்தியைப் பயன்படுத்தி பிணம் போல இருக்கும் என் சகோதரியை தன் முன்னோர்கள் வீட்டில் நடமாட விட்டு என் வீழ்ச்சியை ஆனந்தத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள்’ என்று நினைத்துக் கொண்டார். ஜெரால்தீன் சார்ல்ஸின் தந்தையினுடைய கோபத்தைத் தனதாக்கிக் கொண்டிருந்தாள். ஒரு புனிதமான சத்தியத்தை நம்பிக்கையுடன் பேணுவதைப் போன்று கோபத்தையும் பேணி வந்தாள்; அது சார்ல்ஸிற்குத் தன்மேல் தொங்கிக் கொண்டு இருக்கும் சாபத்தை எப்போதும் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது.

இந்த எண்ணங்களுக்கு நடுவில் விடாப்பிடியான அவள் பார்வையின் சுமையைத் தாங்க முடியாமல் அந்த மனிதர் தலையைத் தூக்கிப் பார்த்தார். பணிப்பெண் அங்கு இல்லை. ஆனால் சமையலறை படிக்கட்டுக்கும் சாப்பிடும் அறைக்கும் இடையே சாவிக்கொத்தின்  ஓசையை சார்ல்ஸால் கேட்க முடிந்தது. அவள் பெல்ட்டில் இருப்பது என்னென்ன சாவிகள் என்று தெரிந்ததும் அவர் உடம்பு நடுங்கியது. சாவி இல்லாத அலமாரியோ, அறையோ அந்த வீட்டில் ஒன்று கூட இல்லை. தன்னுடைய அறையின் சாவி இறந்து போனவர்களின் அறையின் சாவியோடு இருப்பதை நினைத்து நெஞ்சு இறுகியது, அவர் பயந்து போனார். ஆசுவாசப்படுத்திக்கொண்டு முணுமுணுத்தார்:

“பாழாய்ப் போன வீடு! இந்த வயதான மறை கழன்ற பெண்களுடன் இருந்தால் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும்… இந்த ஒயின் என் தலைக்கேறுகிறது என நினைக்கிறேன்!”

ஸ்தெஃபானீ டேபிளை விட்டு எழுந்ததும் சார்ல்ஸும் அவளைத் தொடர்ந்து எழுந்தார்.

அந்த மாலையும் மற்ற மாலைப் பொழுதுகளைப் போலவே ஆரம்பித்தது. ஸ்தெஃபானீ பின்னுவதை ஆரம்பிக்க , சார்ல்ஸ் கைகளைப் பின்னுக்குக் கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக அந்த அறையில் நடந்தார்.

எல்லா நாட்களையும் போலவே முழு அமைதியுடன் சகோதரனும் சகோதரியும் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தார்கள்.  கடிகாரம் பத்து அடித்தது. போதுமான அளவு வீட்டில் இருந்தபின் தன் சகோதரிக்கு நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு, கோட்டை மாட்டிக் கொண்டு, நூலிழை பிரிந்த பாக்கெட்டுகளில் கைகளை நுழைத்துக் கொண்டு விடைபெற்றார்.

தெருவை ரசித்துக்கொண்டு நடப்பவர் போல தெருவில் மெதுவாக நடந்தார். தன் நிழலை சுவரில் பார்த்ததும் பழைய வேண்டாத எண்ணங்கள் அவருக்கு நடுக்கத்தை தந்தது. வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகளைப் போல ஆச்சரியமோ , துக்கமோ இல்லாமல்  இந்த இரண்டு பெண்மணிகளும் அவருக்குப் பழக்கப்பட்டு விட்டனர்.  அவர்களைப் பற்றி நன்றாக அறிந்த அவர், அவர்களை இப்போது நேருக்கு நேர் பார்ப்பதில்லை. அவர்களுடைய செயலற்ற பிம்பங்களின் பிரதிபலிப்பு மட்டுமே அவருடைய கண்களில் கடந்து போயின.

அவர் வீடு இருக்கும் தெருவான ர்யூ தே இர்லாந்தேவில் திரும்பியவுடன் சார்ல்ஸ் தன் மனைவியைப் பற்றி நினைத்தார். ஒரு பாதுகாப்பான உணர்வுடன், தன்னிடம் வந்து விட்ட விலைமதிப்பான ஒரு பொருளிடம் செல்வது போல் அவசரமில்லாமல் அவளிடம் சென்றார். சட்டென்று தான் வீட்டிற்கு வந்துவிட்டதை உணர்ந்தார். இரண்டு ஒரே மாதிரியான, சோகமான, சிதைந்த, தாழ்வான வீடுகள். அவைகளின் நுழைவாயில்கள் கிட்டத்தட்ட சாலையின் மேல் இருந்தன.

இந்த இரு வீடுகளில் ஒன்றில் இரண்டாவது மாடியில் சார்ல்ஸும் அவர் மனைவியும் இரண்டு அறைகள் உள்ள வீட்டில் வாழ்ந்து வந்தனர். படிகளில் ஏறி, சமையலறையைத் தாண்டி, மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு படுக்கையறைக்குச் சென்றார். ஒரு கரகரப்பான ஓய்ந்து போன குரல் மெதுவாகக் கேட்டது. “சார்ல்ஸா?”

மெழுகுவர்த்தியை மேஜை மேல் வைத்தார். அந்தப் பெண் நெற்றி மேல் கையை வைத்து தனக்கு வந்த வெளிச்சத்தை மட்டுப்படுத்தினாள். அவர் அவளின் கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்தார்.

‘எப்படியிருக்கிறார் உங்கள் சகோதரி?’

‘எப்போதும் போலத்தான்…’

எப்போதும் போல அதே இரண்டு கனமான வாக்கியங்கள். வெளியே சாதாரணமான வாக்கியங்கள் போலத் தெரிந்தாலும் அதற்குப் பின்னால் இருந்த பேசப்படாத வாக்கியங்கள்:

‘இன்னும் நிறைய நாட்கள் இருப்பாள் என்று நினைக்கிறீர்களா? சாகவே மாட்டாளா?’

அந்த நிமிடத்தில் எஸ்ப்லனேட் வீட்டில் ஸ்தெஃபானீ த பீஷெத் தன்னுடைய சிறிய சில்லிட்ட கைகளைக் கட்டிக்கொண்டு செல்லுபடியாகாத பழைய துணியைப் போன்ற தன்னை, அழுத்திய அத்திப்பழத்தைப் போன்ற தன்னை வெறுமையான இரவுக்கு ஒப்புக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

மரணம் அந்த வீட்டின் எல்லாக் கதவுகளையும் மூடுவதைப் போன்று, ஜெரால்தீன் விழித்துக் கொண்டு கனவு கண்டுகொண்டிருந்தாள்.

(வெயிற்காலம்  1942)

-La maison de l’esplanade by Anne Hébert

இந்தக் கதை ஃப்ரெஞ்ச் மூலத்திலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

தமிழில்: காயத்ரி ஆர்.

(இவர் சென்னையில் வசித்துவருகிறார். பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், ஆசிரியர். ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தின் பங்குதாரர்)

ஓவியம் –  Gustav Klimt