Home Blog Page 94

ஒரு குவளை நீரில் சேற்றைக் கழுவு!

0

ஒரு குவளை நீரில் சேற்றைக் கழுவு!

– கண்ணன் ராம்சாமி

“எங்கள் ஊரில் தனது திருவடிகளைப் பதிக்க வரும் அண்ணன் ராஜேந்திரன் அவர்களை இரு கரம் கூப்பி வணங்கும் அன்பு நெஞ்சங்கள்” என்று எழுதியிருந்த வாசகத்தின் கீழ் கை கூப்பியபடியும், கறுப்பு மூக்குக்கண்ணாடியை ஒரு கையால் பிடித்தபடியும், பாக்கெட்டில் மினிஸ்டர் ஒயிர் துணியின் பின்னால் தெரியும் ராஜேந்திரனின் புகைப்படத்தை கேமராவின் முன் காட்டியும் போஸ் கொடுத்து சிரித்துக் கொண்டிருந்த மூன்று அல்லக்கைகளின் முகத்திலும் கழுவி ஊற்றினான் ராஜேஷ்.

கடைக்கு வந்திருந்த இரண்டு வறண்ட நாக்குகளுக்குச் சாத்துக்குடி ஜூசும், எலுமிச்சை சோடாவும் போட்டுக் கொடுத்து விட்டு ஒரு பாத்திரத்தில் நிரப்பி வைத்திருந்த கலங்கிய நீரில் எச்சில் கிளாஸ்களை முக்கி எடுத்தான். மறுபடியும் அதன் மேல் நல்ல நீரை குடத்திலிருந்து எடுத்து ஊற்றி, இரு விரல்களை விட்டு தேய்த்துக் கழுவினான். ஒரு கிளாசில் ஊற்றிய நீரையே அடுத்த க்ளாசிலும் ஊற்றிக் கழுவி கீழே ஊற்றினான். அது ராஜேந்திரனின் வலக்கை என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கைகூப்பி அல்லக்கையிடம் இருந்து பெற்ற பழைய அரசியல் பேனரின் மிருதுவான மேற்பரப்பில் தேங்கி வழிந்தோடியது.

வழிந்தது போகத் தேங்கியிருந்த நீரை கையால் தள்ளு வண்டியின் ஓர் ஓரத்தில் இருந்த துளையின் பக்கமாக ஒதுக்கி விட, அது அடியில் சொருகப்பட்டிருந்த வாஷிங் மெஷின் குழாய் வழியாகப் பாதாள சாக்கடை கால்வாய்க்குள் ஓடிக் கலந்தது. ஜூஸ் வண்டியின் அடியில் வெயிலுக்கு இளைப்பாறிக் கொண்டிருந்த நாய் வாஷிங் குழாயில் இருந்த ஓட்டை வழியாக ரோட்டில் கசியும் நீரை நாக்கை வைத்து நக்கிக் குடித்து, ஈரத்தின் சுகம் காணப்படுத்துக்  கொண்டிருந்தது.

ராஜேஷ், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் தோல்வி கண்டத்தில் இருந்து அவன் அப்பாவுக்குத் தான் செய்து கொண்டிருக்கும் சிறு தொழிலுக்கு கிளை அமைக்க யோசனை பிறந்துவிட்டது.

’இனி இவனை படிக்க வைத்து, இருக்கும் பணத்தையும் வீணடிப்பதை விட, சிறு தள்ளு வண்டிக் கடையை வைத்துக் கொடுத்து விட்டால், ஒரு வருமானமாவது கிடைக்கும்’ என்று சிந்தித்தார். அவர் இப்படி யோசிக்க இதை விட முக்கியமான ஒரு காரணமும் இருந்தது.

முந்தையை நாள் அதிகாலை பழங்கள் வாங்கி வர ரயில் ஏறி வெண்டர்ஸ் பெட்டியில் உட்கார்ந்தவுடன், வேலூரில் இருந்து பால் குடங்களை ஏற்றிச் செல்லும் பல நாள் நண்பர் சேகரை சந்தித்தார். அப்போது இருவரின் ஊரிலும் நடக்கும் சிறு வியாபாரங்களைப் பற்றிய பேச்சு எழுந்தது.

“வேலூரில் வெயில் அதிகம். அங்கே ஜூஸ் கடை திறக்கலாம்” என்றார் சேகர்.

“நீயும் தான் இதை எல்லா நேரமும் சொல்லிக் கிட்டே வர்ற. அங்கே உள்ள நிலைமை எப்படி-ன்னு தெரியலையே!”

“அட என்னப்பா இப்படி பயந்துக்கிட்டு! கரையைத் தாண்டாமலே ஆழம் எவ்வளவு இருக்கும்-னு கணக்குப் போட்டுகிட்டு இருந்தா எப்படி? துணிஞ்சு இறங்கு. கால் வைக்கக் கல் கிடைக்கும்”

“கல்லு கிடச்சா பரவாயில்லையே பா! பொத குழியில மாட்டிக்காம இருக்கணுமே. உங்க ஊர் வியாபாரிங்களோட நமக்கு ஒத்துப் போகணும். மாமூல் அது இது-ன்னு நிறைய தலை வலி இருக்கு. பால் குடம் சுமக்குற கதையில்ல இது”

“என் மகனும் சீசனுக்கு ஏத்தபடி வாழைப்பழம், மாதுளை, கொய்யா, வேர் கடலை, ஆரஞ்சுன்னு கூவி கூவி விக்கிறவன் தான் அப்பு! நீயாவது ஒரு இடத்துல நின்னு விக்கிறே. அவன் தினமும் ரயில் ஏறி வித்துட்டு வர்றான். எவ்வளவு பேரை பாத்திருப்பான்?”

“யோவ்! வண்டியில விக்கிறவனைப் பத்தி எனக்குத் தெரியாது? பெரும்பாலும் ஒருத்தன் வித்தான்-ன்னா இன்னொருத்தனை தொழில் கத்துக் கொடுத்து கை தூக்கி விடுவான். ஓர் ஊர் காரப் பயலுங்களுக்குள்ள என்ன சண்டை சச்சரவு வந்துடப் போகுது? நான் ஏறின பெட்டியில நீ ஏன்டா ஏறின-ன்னு கேக்குறதோட சரி” என்று கிண்டலாகச் சொல்லி விட்டு, சேகரின் காதுக்கருகே சென்று,

“உன் மகனுக்குத் தொழில் கத்துக் கொடுத்ததும் உன் சாதிக் காரப் பயதானே?” என்று சொல்லி சிரித்தார் ராஜேஷப்பா. சாதியைக் குறிப்பிட்டுப் பேசியதால் வெறுப்பாகிப் போன சேகர்,

“அப்படிப் பாத்தீன்னா, பானி பூரி விக்கிற இந்திக் காரன் எல்லாம் யார் தயவால இங்கே வந்து கடை போட்டிருக்கான்?”

இந்தக் கேள்வி ராஜேஷப்பாவை கொஞ்சம் புரட்டித் தான் போட்டு விட்டது. தண்டவாளத்தின் இணைப்பில் ரயில் ஏறி இறங்கும் போது ஏற்படும் அதிர்வை அவர் தன் மனதிலும் உணர்ந்தார்.

“சேகர், எதைப் பத்தி வேணாலும் பேசு. அவிங்கள பத்தி மட்டும் பேசாதே” சிடு சிடுவென்று எறிந்து விழுந்தார் ராஜேஷப்பா.

“ஏன்? ஏன்?” அவரை மடக்கி விட்ட மகிழ்ச்சியில் சேகர் பதில் அறிய அவசரப் பட்டார்.

“என் பையன கெடுக்குறதே அவங்க தான். கொஞ்ச நாள்-ல ஊருக்குள்ள வந்து அவங்க பண்ற அட்டூழியம் தாங்கல”

“அப்படி என்ன கெடுத்துப் புட்டாங்க?” பால் டின்னின் வாயில் திணித்திருந்த வைக்கோல் மூடியில் இருந்து ஒன்றை உருவி வாயில் அதக்கிச் சப்பிக் கொண்டே கேட்டார் சேகர்.

“பின்ன என்னப்பா? முதல்ல ஒரு சின்னக் கடையை கொண்டு வந்து விரிச்சான். சாயந்திரம் நாலு மணிக்கு கடைய போட்டான்னா இரவு பத்து, பத்தரை வரைக்கும் கூட்டம் அள்ளுது. ஸ்கூல் பசங்க, காலேஜ் பசங்க பஸ்சை விட்டு இறங்குற இடமா பாத்து விரிச்சான். இன்னைக்குச் சோத்துப் பருக்கைய மோச்ச ஈயாட்டம் வதவதன்னு ஊருக்குள்ள பத்து கடைங்க அவனுக்கு. குடிச்சிட்டு பிரியாணி கடையில கூடுற கூட்டமாட்டும் இல்ல இருக்குது! வெளி ஊர்-ல இருந்து அவன் இங்கே வந்து சம்பாதிக்கிறான். எம்மகன் பழக்கத்துக்காக அவன் கடையில சேர்வா கவர் கட்டுறான். ஷேய்!!”

“அவனுக்கு எதுல நாட்டம் போகுதோ அதையே அவனுக்குக் குடுக்க வேண்டியது தானே? நீ சொல்லுறதையே தான் நானும் சொல்றேன். பானி பூரி கடைக்காரனை பாரு. இங்கே வந்து கடை விரிச்சுக் கல்லா கட்டினதும், அவனைப் போலவே நாலு இந்திக் காரங்களை வரவழைச்சான். ஊர்-ல முக்கியமா மக்கள் கூடுற நாலு இடத்தைப் புடிச்சி தள்ளு வண்டி போட்டு இப்போ கலக்ஷனுக்குப் போய் சம்பாதிக்கிறான்.

இன்னைக்கு மக்களை ஏமாத்திக்கிட்டு திரியிற பாதி கம்பெனிங்க இவன் செய்றதை தானேய்யா செஞ்சுக்கிட்டு இருக்கு? உலகத்துலேயே குறைவான சம்பளத்துக்கு வேலை செய்ற ஆளுங்க நம்ம பசங்க தான்-ன்னு சரியா கண்டு புடிச்சு ஒவ்வொரு நகரத்துக்கும் ஒரு கம்பெனியை தொறந்து விட்டானுல்ல? அவன் உன்னைய மாதிரியா யோசிச்சுக்கிட்டு இருந்தான்?”

சேகர் சொன்ன வார்த்தை ராஜேஷப்பாவுக்குச் சுருக்கென்று உறுத்தியது.

“அப்போ என் மகன் படிப்பு?”

“என்ன படிக்க வெச்சு இஞ்சினியர் ஆக்கப் போறியா? ஹீ..ஹீ…இன்னைக்கி இஞ்சினியரிங் படிச்ச பாதிப் பசங்க நீ சொன்ன அந்தப் பானிப் பூரி கடையில அரட்டை அடிச்சுக்கிட்டு தான் இருக்கான்.

இதோ பாரு! படிப்புங்குறது ஏட்டுக் கல்வி மட்டுமில்ல. எந்தத் தொழிலும் கேவலமில்லை-ன்னு நினைக்காதவன் எத்தனை புஸ்தகத்தை படிச்சாலும் வீணாத் தான் போவான். இந்தியாவுல பாதிக்குப் பாதி சனங்க தொழில் செஞ்சு தான் பிழைப்பை ஓட்டுறாங்க. அவங்களுக்கும் படிப்பு தேவை தான்! ஆனா சம்பாதிக்க மட்டும் இல்லை.

எனக்குத் தெரிஞ்ச ஒரு காய்கறிக் கடைக்காரன் அற்புதமா கணக்குப் போடுவான். இப்போ போடுற மாதிரி மொபைல்-ல இல்ல! மனக் கணக்கு…முக்கியமா, பிழையில்லாம! அவன் படிச்சவன் இல்லையா? நீ ஏன் உன் மகன் மத்தவங்க படிக்கிற அதே படிப்பை படிக்கணும்-ன்னு நினைக்கிறே? ஒவ்வொருத்தனுடைய வாழ்க்கையும் ஒவ்வொரு மாதிரி வித்யாசமானது இல்லையா? உன் மகன் வாழ்க்கையைக் கத்துக்கட்டும்! அது தான் இருக்குறதுலேயே ரொம்பக் கஷ்டமான கல்வி”

சேகர் சொன்னதில் ஏதோ உண்மை இருப்பது போலத் தோன்றியது ராஜேஷப்பாவிற்கு. அவர் பேச்சுக் கொடுத்த தைரியத்தில் வட்டிக்குப் பணம் பெற்று ஒரு தள்ளு வண்டிக் கடையை கட்டித் தர முடிவெடுத்தார். அவருடைய நண்பரான சைக்கிள்கடை பாய் இந்த வேலையில் கை தேர்ந்தவர்.

விஷயம் கேள்விப்பட்ட பாய் ராஜேஷப்பாவுக்கு உதவ முன்வந்து, செலவை குறைக்கத் தானே ஒரு வண்டியை தயார் செய்து கொடுத்தார். அதன்படி முதலில், தன்னிடம் இருந்த பழைய சைக்கிள்களின் வீல்களை எடுத்து, ஓட்டுவதற்கு ஏற்றபடி பென்ட் எடுத்து, ஒன்றாகக்  கம்பிகளோடு சேர்த்து வெல்ட் வைத்தார்.

தனக்குத் தெரிந்த ஆசாரியிடம் சென்று பழைய மரக் கட்டில்களின் நான்கு கால்களைப் பெற்று வந்து, அதை பழைய இத்துப் போன மரத் தகடுகளோடு மேலும் கீழுமாக இணைத்து, அடியில் குப்பை சேகரித்து வைக்க, ஐஸ் பெட்டி எடுத்துச் செல்ல இடமும் ஏற்படுத்திக் கொடுத்து, ஒரு பக்காவானத் தள்ளு வண்டிக் கடையைத் தயார் செய்து விட்டார் பாய்.

தள்ளு வண்டியைப் பார்த்ததும் குதுகலம் அடைந்த ராஜேஷ் தானே அதற்கு வண்ணம் தீட்டி அழகு பார்த்தான். அவன் முதன் முதலாக ஒரு வேலையில் ஈடுபாடு காட்டியதை அன்று தான் ராஜேஷப்பா பார்க்கிறார். அவருடைய முகத்தில் குடி கொண்ட சந்தோஷத்திற்குத் திருஷ்டி கழிக்கும் விதமாக வண்ணம் தீட்டிய ராஜேஷ் முடிவாக தள்ளு வண்டியின் முன்னால், “மகிழ்ச்சி” குளிர்பான நிலையம் என்று எழுதி ரஜினியின் போட்டோவை ஓட்டினான்.

“அப்பன் கஷ்டப்பட்டுக் கடன் வாங்கித் தொழில் செய்ய வழி காட்டிக் கொடுக்குறான். இவன பாரு! சினிமா வசனத்தை வண்டியில எழுதுறான்” முகம் சுளித்தார் ராஜேஷம்மா.

“ஆரம்பிச்சிட்டியா? நம்ம கடையில ஜூஸ் குடிக்க வர்றவங்க எல்லாம் யூத்-மா! அவங்களுக்கு இப்படிப் பேரு வெச்சாத் தான் புடிக்கும். கருப்ப சாமி துணை எல்லாம் பழைய ட்ரெண்டு” என்று சொல்லி விட்டு கிளம்பினான் ராஜேஷ். தொங்கிப் போன முகத்தோடு நிற்கும் மனைவியிடம் சாந்தமாக எடுத்துரைத்தார் ராஜேஷப்பா.

“உனக்கு இதன் பின்னால் இருக்கும் அரசியல் புரியலைடி. சினிமாவும் ஒரு வியாபாரம் தான். அதுவும் சில நுணுக்கங்களை மனசுல வெச்சே எடுக்கப் படுது. யாருக்கு பொழுது போக்கு மிக அவசியம்? கஷ்டப்படும் ஜனங்களுக்குத் தான்! நம்மள மாதிரி ஜனங்களுக்கு இருக்கும் கஷ்டத்தைத் திரையில காட்டி தானே நடிகர்கள் எல்லாரும் அரசியலுக்கு வர்றாங்க? அன்னைக்கி ஆட்டோக்காரனா நடிச்சா சக்கைப் போடு போட்டிச்சு! இன்னைக்கு எல்லா நடிகனும் ஐ.டி கம்பெனியில வேலை செய்ற மாதிரி படம் எடுக்குறான். இது இப்படித் தான் இருக்கும்! ஒரு கட்டத்துல எது வாழ்க்கை-ன்னு அவனே புரிஞ்சுக்குவான்”

அவர் பேசி முடிப்பதற்குள் வாசலைத் தாண்டி விட்ட வண்டியை நிறுத்தி அம்மா ஏதோ மறந்து விட்ட எண்ணத்தில் உள்ளே போய் வெளியே வந்தார். நான்கு எலுமிச்சை பழங்களை வண்டியின் சக்கரங்களுக்கு அடியில் வைத்து மிதிக்கச் சொல்லி, நான்கு தூண்களிலும் மஞ்சள் தேய்த்து மங்களகரம் ஆக்கினார்.

“உஹும்! இது அதை விட டேஞ்சர்” என்று ராஜேஷப்பா சிரிக்க, அவர் குமட்டில் மஞ்சள் கையால் ஒரு குத்து விட்டார் அம்மா. இருவரும் மனதில் நம்பிக்கையோடு வியாபாரத்திற்குப் போகும் தன் மகன் போகும் திசையைப் பார்த்து பெருமூச்சு விட்டனர்.

வண்டி வைத்த முதல் வாரம் வியாபாரம் டல் அடித்தது. ராஜேஷப்பாவிற்குத் தேர்வு செய்த இடம் சரியில்லையோ என்று சந்தேகம் எழத் தொடங்கியது.

“காலை எட்டு மணிக்கி போறே. சாயந்திரம் ஏழு மணிக்கு வர்ற. பத்தில் இருந்து அஞ்சு மணி வரை பத்தே பத்து பேர் தான் லெமன் சோடா வாங்கிக் குடிச்சிருக்கான். இப்படித் தினம் நூறு ரூவா சம்பாரிச்சு நீ என்னைக்கி முன்னேறிப் போறது?” என்று கேட்டார்.

“ஐயோ! அப்பா, இருப்பா…இப்போ தானே கடை போட்டிருக்கோம். இனிமே தான் கொஞ்சம் கொஞ்சமா கூட்டம் வரும். அதுக்குள்ளே முன்னேறிப் போறதைப் பத்தி பேசாதே”

ராஜேஷிற்கு அந்த ஊரின் பானிபூரி விற்பனையாளர்களை விட்டுப் பிரிய மனமில்லை. அவர்கள் இவனைக் கவர்ந்திருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. பானி பூரி விற்பனை என்பது சாதாரண விஷயம் அல்ல என்று அவன் எப்போதும் நினைப்பான். அவர்களோடு எப்போதும் காலம் கழிப்பதால் அவனுக்கு இப்படித் தோன்றி இருக்கலாம். அவர்கள் எல்லோரும் கூடி ஒரு வீட்டை வாடகை எடுத்துத் தங்கி வருகின்றனர். அந்த வீட்டில் எட்டு வண்டிகளை வைக்கப் போதிய இடம் இருப்பதால் அதிக வாடகைக் கொடுத்து குடி பெயர்ந்திருந்தனர்.

தினமும் காலை எழுந்தவுடன் வெங்காயம் வெட்டுவதற்கும், கேரட் துருவதற்கும், சேர்வா செய்வதற்கும், சுண்டல் வேக வைப்பதற்கும் மூன்று பேர் அவர்களுக்கு உதவியாக இருக்கின்றனர். வேலை முடிந்ததும் அவர்கள் சென்ற நாளின் பாத்திரங்களைக் கழுவுதல், சென்னை கொண்டித்தோப்பில் உள்ள இந்தி பேசும் நண்பர்களிடம் இருந்து குறைந்த விலைக்குப் பூரிகளை வாங்கி வருதல் ஆகிய வேலைகளுக்கு நேரத்தை செலவிடுவர்.

மற்ற எட்டு பெரும் ஒவ்வொரு வண்டியிலும் அன்றைக்குத் தேவையான சரக்குகளை ஏற்றிக் கொண்டு, மாலை நான்கு மணி அளவில் வியாபாரத்திற்குச் செல்வர். லாபத்தைப் பதினோரு பங்காகப் பிரித்துக் கொண்டு, தங்களுடைய தினச் சாப்பாடு மற்றும் இதரத் தேவை போக மீதத்தை பீகாரில் உள்ள தங்களுடையக் குடும்பங்களுக்கு அனுப்பி வைப்பார்.

இவர்களுடைய வாழ்க்கையை ஒரு ஓரத்தில் நின்று பார்க்கும் சந்தர்ப்பம் ராஜேஷிற்கு வாய்த்ததனால், தனக்கென்று தனி வியாபாரம் வந்த பிறகும் அவர்களுடைய பணியை ரசிப்பதற்காகவே பானி புரி கடைக்கு அருகிலேயே தன்னுடைய கடையையும் நிறுவி கொண்டான்.

அவனுக்கு அப்பாவின் சந்தேகம் புரியாமல் இல்லை. ஆனால், அதற்கு அவனிடம் தீர்வும் இல்லை. அந்த இடத்தில் பானி பூரி வியாபாரம் பிய்த்துக் கொண்டு போவதற்கும், தன்னுடைய வியாபாரம் டல் அடிப்பதற்கும் என்ன காரணம் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு வாரம் கழித்து அப்பா மெதுவாக அவனுடைய நடவடிக்கைகளை நோட்டம் விடத் தொடங்கினார். அப்போது தான் அவருக்கு விவரம் புரிந்தது.

ராஜேஷ் கடை விரித்திருக்கும் இடம் ஒரு மிகப் பெரிய தனியார் பள்ளியின் அருகில் இருந்தது. அந்தப் பள்ளியை சுற்றி உருவான புதிய குடியிருப்புப் பகுதியாக அது வளர்ந்து நிற்கிறது. அங்கு வசிப்பவர்களில் பலர், வீட்டில் குறைந்தபட்சம் ஒரு குழந்தையை/பதின்பருவப் பிள்ளையை வைத்திருக்கின்றனர். அதனால் தான் அங்கே பானி புரி வியாபாரம் சக்கை போடு போடுகிறது. அங்கு வரும் பிள்ளைகள் எல்லோரும் மாலை நான்கு மணிக்கு மேல் அங்கு கூடுவது வழக்கம். வீடுகளின் ஆண்கள் அதிகாலை வேலைக்குச் சென்று விட்டு இரவு சாய்ந்த பிறகே வீட்டிற்கு வருவார்கள். இல்லத்தரசிகள் கணவனையும் பிள்ளைகளையும் அனுப்பி விட்டு வீட்டிலேயே அடைந்துக் கிடப்பார்கள். அதனால் வெயில் நேரத்தில் அந்த இடத்திற்கு வரும் ஆட்கள் குறைவு. அந்தக் குடியிருப்பைத் தாண்டி வழிப்போக்கர்களாகச் செல்லும் ஆட்களும் இல்லை என்பதாலும், மக்கள் கூடும் அலுவகங்களோ, மருத்துவமனைகளோ கிடையாது என்பதாலும் ஜூஸ் கடைக்கு அங்கு வேலை இல்லை.

இதை அறியாத ராஜேஷ் வாரங்கள் தாண்டி வியாபாரம் சூடுபிடிக்கக் காத்துக் கொண்டிருப்பதால் எந்த பயனும் இல்லை என்று தெரிந்து கொண்டார் ராஜேஷப்பா.

விவரத்தை சொல்லி, “அரசு ஆஸ்பத்திரி பக்கமா ஓர் இடம் பாத்து வெச்சிருக்கேன். பிரசவ வார்டும் அங்கே தான் இருக்கு. எதிரிலேயே தாலுக்கா ஆபீசும் இருக்கு. அதனால நிறைய வியாபாரம் ஆகும்” என்று ராஜேஷிற்கு அறிவுரை சொன்னார்.

அப்பா சொல்வது சரி என்று பட்டாலும் சிடு மூஞ்சியுடனேயே அவன் ஒப்புக் கொண்டான். தன்னுடைய சந்தோசம் பறிபோய் விட்டதே என்று அவன் கவலை கொண்டான். ஆனால், கூடியவிரைவிலேயே எல்லோருடனும் சகஜமாகப் பழகக் கூடிய பேச்சுத் திறமையின் காரணமாக ராஜேஷின் கடையில் டேரா போட்டு அரட்டை அடிக்க வரும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமானது.

ஆஸ்பத்திரியில் அடிபட்டு, நோய்வாய்பட்டு அனுமதிக்கப் பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர், புதிதாகக் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களின் கணவன்கள், தாலுக்கா அலுவலகத்தில் காத்திருக்கும் போது கூடும் கூட்டம் என அவனுடைய கடையில் தினசரி வந்து போகும் ஆட்களின் எண்ணிக்கையும் அதிகமானது. கோடைக் காலத்தில் ஒரு நாளைக்கு ஐம்பதில் இருந்து எழுபது பேர் சாத்துக் குடி சாறும், சுமார் நூறு பேருக்கும் அதிகமானோர் எலுமிச்சை சாறு/சோடாவும் குடித்துச் சென்றதால் நல்ல வருமானம் பார்க்க முடிந்தது. ராஜேஷின் கடினமான உழைப்பை மெச்சி பாராட்டிய அப்பா கூடவே ஒரு வியாபார யுக்தியையும் கற்றுக் கொடுத்தார்.

“நீ எப்போதும் ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சிக்கணும். நம்ம கிட்ட வியாபாரம் செய்ய வர்றவங்க, அவங்க குடுத்த காசுக்குக் கொஞ்சம் கூடுதலா பொருள் எடுத்துட்டுப் போனா சந்தோஷப்படுவாங்க. தன்னுடைய வாடிக்கையான கடையையும், புதுசா போட்டிருக்கு உன்னுடைய கடையையும் ஒப்பிட்டு எது சிறந்தது-ன்னு எடை போடுவாங்க. அதனால, நீ பத்து ரூபாய்க்கு கொடுக்குற ஜூஸாக இருந்தாலும், இருபத்தி அஞ்சு ரூபாய்க்கு விக்கிற ஜூஸாக இருந்தாலும் யோசிக்காம ஒரு கால் கிளாஸ் அதிகம் கொடுக்கப்பழகிக்கோ! உண்மையில் உனக்கு அதிக செலவினம் தண்ணீரிலோ, ஐஸ் கட்டியிலோ தான் ஆகப்போகுது. ஆனாலும் அது அவங்களுக்குக் கொடுத்த காசுக்கு ஏமாறாம வியாபாரம் செஞ்ச திருப்தியை கொடுக்கும்”

அப்பாவின் இந்த அறிவுரையை ராஜேஷ் கடைபிடித்தான். அவன் காதுபடவே சிலர் நண்பர்களுடன் பேசும் போது,

“இங்கே ஒரு கிளாசுக்கு மேல வந்தா எடுத்து தனியா வெச்சுக்காம நமக்கே குடுத்துடுவான். நல்ல பையன்! அதனால தான் இங்கே அடிக்கடி வர்றது” என்று குறிப்பிடுவதைக் கேட்டு அப்பாவின் அனுபவத்தை மெச்சினான்.

மேலும் தன்னுடைய ஈடுபாட்டின் பேரில் மேல் தட்டு வர்க்கத்தினரின் வருகையை அதிகரிக்க சில மாற்றங்களைச் செய்ய முடிவெடுத்தான். தன்னுடைய தலைக்குப் பொருந்தும்படியாக ஒரு சமையல்கார தொப்பியை தைத்து, மேலங்கியும் கையுறையும் வாங்கி அணிந்து கொண்டு ஜூஸ் போடத் தொடங்கினான். மேலும், மேற்கத்திய பாணியில் உடை அணிந்து வந்தால் அவர்களுக்கு பேப்பர் கப்பில் ஜூஸ் கொடுக்கத் தொடங்கினான். தனியாக ஸ்டூல் போட்டு அவர்களை உட்கார வைத்தான். இதனால் காரில் செல்பவர்களும் இறங்கி இவன் கடைக்கு வந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.

தன்னுடைய மகனின் இத்தகைய சமயோசித புத்தியைப் பார்த்து ராஜேஷப்பா நெகிழ்ந்து போனார். அவனுடனான முட்டல் மோதல் போக்கை சற்று தளர்த்திக் கொண்டு வீட்டில் மரியாதையாக அவனை நடத்தத் தொடங்கினார். ஞாயிறுகளில் அவன் வீட்டில் தங்கும்படியாக ருசியாக சமைத்து அவனுக்கு பரிமாற தானே மெனக்கெட்டு கடைக்குச் சென்று கறி வாங்கித் தந்தார். இதனால் ராஜேஷும் அப்பாவுடன் நெருக்கமானதோடு அவர் மீதிருந்த பயத்தை போக்கிக் கொண்டான்.

பயம் குறைந்ததோடு வீட்டிற்கு அவன் தரும் பணமும் குறைந்து கொண்டே போனது. ஒரு நாள் தனக்குப் பிடித்த ஆடைகளை வாங்கிப் போட்டுக் கொண்டான்.

“நான் தான் அவனுக்கு எதுவும் வாங்கித் தரலை. அவனாவது வாங்கிச் சந்தோஷமா இருக்கட்டும்” என்று விட்டு விட்டார் அப்பா.

ஒரு நாள், செல்போன் வாங்கி வந்து ஆசையாக அப்பாவிடம் காட்டினான்.

“கடையில சும்மா இருக்கும் போது போர் அடிக்கிது பா. கடைக்க வர்ற பசங்க நிறைய படம் ஏத்திக்கிட்டு வர்றாங்க. நானும் வாங்கிப் பாத்தேன்-ன்னா கொஞ்சம் பொழுது போகும்” என்றான்.

“அதுக்காக பத்தாயிரத்துக்கு செல்போன் வாங்கனுமா?” என்று கேட்க வாய் எடுத்தவர் அப்படியே வார்த்தைகளை அமுக்கி விட்டார்.

அடுத்தபடியாக, “என்னோட ஃப்ரென்ட் ஒருத்தன் புது வண்டி வாங்கப் போறான். அதனால அவன் கிட்ட இருக்குற பழைய பல்சரை விக்கப் போறானாம். நமக்கும் ஐஸ் கட்டி எடுத்து வர, கடைக்குப் போய் வர, தண்ணிக் கொடம் தூக்க எல்லாம் வண்டி தேவைப் படுதுல்ல? இருபதாயிரம் தானாம். வாங்கிக்கவா?” என்று கேட்டான்.

எங்கே வேண்டாம் என்று கூறினால் மறுபடியும் சண்டை ஆரம்பித்து விடுமோ என்று யோசித்தவர்,

“உனக்குத் தெரியாதது ஒன்னும் இல்லை. உங்க அம்மாவுக்கு செக் அப் பண்ணலாம்-னு பாத்தேன். மூணுமாசமா நீ நிறைய செலவு பண்றதால தள்ளிப் போகுது. வெய்யில் போன பிற்பாடு வியாபாரம் டல் அடிக்கும். சரி உன் விருப்பப் படி செய்! நாம வேற ஏதாச்சும் வித்து வைத்தியம் பார்த்துக்கலாம்” என்று சூசகமாகச் சொல்லி விட்டார்.

தான் அப்படிச் சொன்னால் அவன் நிச்சயமாக அம்மாவின் மருத்துவ செலவைத் தான் கவனிப்பான் என்று அவர் நினைத்தது தவறாகப் போய் விட்டது. சந்தோஷமாக வண்டியை வாங்கி வந்து அப்பாவிடம் சாவியைக் கொடுத்து ஓட்டச் சொன்னான்.

“கொஞ்ச நாளைக்கு இருந்த நிம்மதி போயிடும் போல இருக்கே” என்று மனம் கோணத் தொடங்கினார் ராஜேஷப்பா. தன்னுடைய குறையை ரயிலில் போகும் போது மறுபடியும் சேகரிடம் சொல்லி வருத்தப்பட்டார். சேகர் எதுவும் சொல்லவில்லை. தலை ஆட்டிக்கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு ஒரு நாள் அவனை சந்திக்க ராஜேஷப்பாவிற்கு தெரியாமல் கடைக்கே சென்று விட்டார்.

அவர் ராஜேஷின் கடைக்குச் சென்று மூன்றாமவர் போல ஜூஸ் குடிக்க தன்னுடைய நண்பரோடு நின்றிருந்தார்.

“ஒரு சாத்துக் குடி ஜூஸ். ஒரு லெமன் சோடா” என்று அவனிடம் சொல்ல, ராஜேஷ் போட்டுக் கொடுத்து விட்டு எச்சில் கிளாஸ்களை ஒரு பாத்திரத்தில் நிரப்பி வைத்திருந்த கலங்கிய நீரில் முக்கி எடுத்தான்.

“சாவு கிராக்கிங்க…” என்று திட்டி விட்டு மறுபடியும் அதன் மேல் நல்ல நீரை குடத்திலிருந்து எடுத்து ஊற்றி, இரு விரல்களை விட்டு தேய்த்துக் கழுவினான்.

“சோத்துக்கு எவன் கால்ல வேணாலும் உழுவானுங்க..ஒரு சாத்துக்குடி ஜூசுக்கு காசு கொடுக்க வக்கக் காணும்” என்றவன்,

ஒரு கிளாசில் ஊற்றிய நீரையே அடுத்த க்ளாசிலும் ஊற்றிக் கழுவி கீழே ஊற்றினான். அது ராஜேந்திரனின் வலக்கை என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கை கூப்பி அல்லக்கையிடம் இருந்து பெற்ற பழைய அரசியல் பேனரின் மிருதுவான மேற்பரப்பில் தேங்கி வழிந்தோடியது.

வழிந்தது போகத் தேங்கியிருந்த நீரை கையால் தள்ளு வண்டியின் ஒர் ஓரத்தில் இருந்த துளையின் பக்கமாக ஒதுக்கி விட, அது அடியில் சொருகப் பட்டிருந்த வாஷிங் மெஷின் குழாய் வழியாக பாதாள சாக்கடை கால்வாய்க்குள் ஓடிக் கலந்தது. ஜூஸ் வண்டியின் அடியில் வெயிலுக்கு இளைப்பாறிக் கொண்டிருந்த நாய் வாஷிங் குழாயில் இருந்த ஓட்டை வழியாக ரோட்டில் கசியும் நீரை நாக்கை வைத்து நக்கிக் குடித்து, ஈரத்தின் சுகம் காணப் படுத்துக் கொண்டிருந்தது.

அந்த நாயின் முதுகில் பலமாக ஓர் எத்து விட்டான் ராஜேஷ். அது, ‘கை…கை…கை…” என்று கத்திக் கொண்டே பூக்கட்டும் அம்மாவின் பக்கமாக சென்று முனகியது.

“அட ஏம்பா! இந்த வயசுல உனக்கு இவ்வளவு கோபம்?” என்று பேச்சுக் கொடுத்தார் சேகர்.

“பின்ன என்னங்க? இந்த நாய்க்கும் அவங்களுக்கும் என்ன வித்யாசம்?”

“எவங்களுக்கும்?”

“உங்களுக்கு முன்னாடி ஜூஸ் குடிச்சிட்டு கடன் வெச்சிட்டு போனானுங்களே! அவங்க தான். மூஞ்சியும் கண்ணாடியும் அவனும். ஒரு கிழிஞ்ச பேனரை இலவசமா கை நீட்டி அவங்க கிட்ட இருந்து வாங்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கு பாருங்க. ஒவ்வொரு முறையும் வந்து ஜூஸ் குடிச்சிட்டு போறானுங்க. காசு கேட்டா அப்புறம் தர்றேன்”

“அவன் அரசியல்வாதி. அதிகாரத்தை இப்படிப் பட்ட அற்ப காரியங்களுக்குப் பயன்படுத்துறான். நீ நல்லவன் தானே? அம்மாவோட சிகிச்சைக்குப் பணம் கொடுத்தியா?”

ராஜேஷிற்கு தூக்கிவாரிப் போட்டது. இவர் அப்பாவிற்கு தெரிந்தவராகத் தான் இருக்க வேண்டும். தலை குனிந்து நின்றான்.

“நீங்க யாருங்க சார்?”

“நான் யாருங்குறது இருக்கட்டும். கொஞ்ச நேரம் முன்னாடி நீ என்ன செஞ்சுக்கிட்டு இருந்தே? கொஞ்சம் யோசிச்சு சொல்லு?”

“ஜூஸ் போட்டுக் கொடுத்தேன்”

“திட்டிகிட்டு இருக்கும் போது என்ன செஞ்சே?”

“க்ளாஸ் கழுவி வெச்சேன்”

“எப்படிக் கழுவுனே?” ராஜேஷ் யோசித்தான்.

“முதல்-ல ஒரு பாத்திரத்தில் க்ளாசை முக்கிக் கழுவிட்டு, அதன் மேல நல்ல தண்ணீர் ஊத்தி கழுவும் போது, ஒரு குவளை நீரையே அத்தனைக்கும் பயன்படுத்தலாம்-னு உனக்கு சொல்லிக் கொடுத்தது யாரு?

சேமிப்பு நம்ம நாட்டு மக்களுடைய ரத்தத்துல ஊறின விஷயம். அது அவர்களுடைய எல்லாச் செய்கைகளிலும் இருக்குது. ஒரு கதை கேள்விப் பட்டிருப்பியே! மூணு பெண்களைச் சேத்துல நடக்கச் சொன்னாங்க. ஒரு குவளை நீர் கொண்டு யார் அந்தச் சேற்றை முழுமையா கழுவுறா-ன்னு பார்த்தாங்க-ன்னு. அந்தச் சேமிப்புப் பழக்கம் பெண்களுக்கு மட்டும் இல்லை. ஆண்களுக்கும் வேணும்.

“சட்டை வாங்குறது, பைக் வாங்குறதெல்லாம் தப்பா? எல்லாரும் தான் செய்றாங்க”

“தப்பில்லை. உன் அம்மாவோட உடம்பைக் காட்டிலும் அது முக்கியம்-னு நீ நினைக்கிறது தான் தப்பு. நான் அதிகம் பேச விரும்பலை. இந்தா புடி..”, முப்பத்தி ஐந்து ரூபாயை சில்லரையாக நீட்டிய சேகர் வணக்கம் சொல்லி விட்டுச் சென்றார்.

ராஜேஷ் அவர் போகும் திசையையேப் பார்த்துக் கொண்டு நின்றான். மகிழ்ச்சி குளிர்பான நிலையம் என்கிற அவனுடைய தள்ளுவண்டியின் பெயரை உடனடியாக மாற்றவேண்டும் போல இருந்தது அவனுக்கு. ரஜினியின் போட்டோவை கிழித்துவிட்டு அப்பாவின் புகைப்படத்தை மாட்ட வேண்டும் போல் இருந்தது. ஆனால் இப்படியே இன்னும் மூன்று நாட்களுக்குத் தோன்றுகிறதா பார்க்கலாம் என்று எண்ணிக் கொண்டவனாக அந்த நினைப்பை அப்படியே விட்டுவிட்டான்.

கண்ணன் ராமசாமி

writer.kannan@gmail.com

பெரியோரை வியத்தலும் இலமே

1

ஒரு பெரும் காதலனாகவே எனக்கு தாந்தேவை தெரியும்.  காதல் கொண்ட தன் நகரத்தில் வாழ்வதற்கு இயலாதவனாக, தன் பிரியத்துக்குரியவளை வாழ்வில் கொண்டிருக்க முடியாதவனாக வாழ்ந்து மடிந்த இத்தாலிய கவி. ஆனால், அவனின் வார்த்தைகளில் 800 வருடங்களுக்கு பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் பியாட்ரிஸ். அவளே அவனுக்கு சொர்கத்தில் வழிகாட்டியாய் இருக்கிறாள். கிறிஸ்துவ இலக்கியத்தில் தாந்தேவின் படைப்பு உண்டாக்கிய உருவகங்களே இன்றைய சொர்க, நரகத்தித்தைக் கொடுத்தவை. அதே இத்தாலியை சேர்ந்த இன்னொருவர் தமிழின் தாந்தே எனப்படுகிறார். அவர் காதல் கொண்டிருந்தது ஒரு தந்தையிடம். அந்த தந்தையின் மகனாகவே அவர் இந்திய மண்ணிற்கு வந்தார்.

கோவாவிற்கு வந்து சேர்ந்து அங்கிருந்து கேரளத்தில் இருந்த அவர்களின் நிலையான இடத்திற்கு சென்று பின்னர் தமிழகம் வருகிறார். அவருக்கு முன்னர் வந்து சேர்ந்த அருளானந்தர் (ஜான் டி பிரிட்டோ, பின்னர் புனிதர்), ஒரியூரில் கிழவன் சேதுபதியின் உத்தரவால் தலை கொய்யப்பட்டிருந்தார் என்பது வரலாறு. கான்ஸ்டன்ட் பெஸ்கி எனும் அவர் தமிழகம் வரவிருந்தபோது தொடர்பு மொழியாக தமிழன்றி பிற உதவாது என்று அடிப்படைகள் கற்றே வந்தார். ஆனால், மொழியின் அற இலக்கியத்தோடான அவரது பிற்கால பரிச்சயம் இன்னமும் அவரை ஈர்த்திருக்கிறது. முக்கியமாய் திருக்குறள். மொழியை இன்னமும் ஆழமாகக் கற்கிறார்.

இந்த இடத்தில் அவருக்கு எளிய மக்களுடன் இருந்த நெருக்கத்தைக் காரணமாக சொல்கிறார்கள். இந்த மக்களை நெருங்காமலா, மண்ணோடு உறவு கொள்ள முடியும்? இலக்கியம் இரண்டாவது நிலை.

அவரது படைப்புகளைப் பற்றி நிறையவே தகவல்கள் உங்களால் பெற முடியும். தேம்பாவணி என்பதே கிறிஸ்துவ இலக்கியம் என்று தமிழில் சொல்ல வெளியில் தெரியும் ஒன்றே ஒன்று. அதே சமயம் அது பெஸ்கிக்கு தமிழ் பயிற்றுவித்த சுப்ரதீப கவிராயரின் உழைப்பில்லாமல் சாத்தியமாகி இருக்காது என்றும் சொல்கிறார்கள், பெஸ்கி சொல்ல சுப்ரதீபர் எழுதினார் என்றும் சொல்கிறார்கள்.

ஆனால், திருக்குறளின் தாக்கம் அத்தனை நேரடியாய் தெரிகிற வரிகள் தேம்பாவணியில் உண்டு. நமக்கு நிறையவே கதைகள் வேண்டியிருக்கிறது. தமிழ் சங்கத்தில் நட்சத்திரங்களை எண்ணக் கேட்டபோது வீரமாமுனிவராகிவிட்ட பெஸ்கி முப்பத்து முக்கோடி என்றதாக ஒரு கதை படித்தேன். அதை சம்பவம் என்றும் குறிக்க இயலவில்லை. அந்த சமயத்தில் தமிழ் சங்கம் என்ற ஒன்று இருந்ததாக ஆதாரம் எதுவும் இல்லை. வீரமாமுனிவரின் எழுத்திலேயே கற்றோர் முன்னால் என்பதாகவே பெரும்பாலும் எழுதியிருக்கிறார்.

வீரமாமுனிவரைப் பற்றிய தகவல்களே அங்கொன்று இங்கொன்று என்று தப்பும் தவறுமாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. சுப்ரதீப கவிராயர் பற்றி சுத்தமாக எந்த தகலும் விக்கிப்பீடியாவில் இல்லை. வெளியிலும் அதிகம் எழுதப்படவில்லை. இன்னமும் உச்சமாக வீரமாமுனிவரின் கல்லறை பற்றி இன்னமும் நம் ஆய்வாளர்களிடையே தேடலும், சச்சரவும் தொடர்கிறது.

ஒரு விபத்து எப்படியான இடத்துக்கு உங்களை அழைத்து செல்லக்கூடும்? இந்த விபத்து ஒரு கணத்தில் நிகழ்ந்தது அல்ல. வெறுமனே இணையத்தை மேய்ந்து கொண்டிருந்த ஒரு பொழுதில், எதேச்சையாக நாம் அந்த இடத்தைக் கண்டடைந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியதே அதன் தொடக்கம். ஒரு மதத்தின் சேவைக்காக இங்கு வந்தவர், மொழியின் சேவகனாக மாறியதை எல்லோருமே ஆச்சர்யமாகப் பேசுவதுண்டு. முன்னூறு வருடங்களுக்கு மேல் ஆகிறது, இறந்துமே இன்னும் சிலமாதத்தில் இருநூற்றி எழுபது வருடங்களை தொடுகிறார்.

இணையத்தின் தலைமுறையாக என்னை சொல்லிக்கொள்ள ஒரு தயக்கம் உண்டு. இணையத்தின் அருகாமையில் அலுவல் தவிர்த்து நான் இல்லாததால் வரும் தயக்கம். ஆனால், தகவல் தலைமுறை என்று சொல்லிக்கொள்ள விரும்புவேன். இன்றைக்கு எங்கும் நிறைந்திருக்கிற தகவல்களால் கொஞ்சம் குழம்பிப் போகாமல் முடிவெடுக்கிற இயல்பை பெற்றிருக்கிற தலைமுறை. ஒரு சில மணிநேர தேடலும், வாசிப்பும் என்னை அவர் புதைக்கப்பட்டிருக்கிற இடத்தை பற்றிய தகவலின் முன்னால் நிறுத்தியது. கேரளத்தின் சாம்பாலூர்.

புனித அருளானந்தரின் கல்லறை அங்கு இருப்பதோடு, இன்னமும் பழைய தேவாலயத்தின் இடிபாடுகளைப் பாதுகாத்து வருகிறார்கள். அந்த காலகட்டத்தில் தமிழிலும் மலையாளத்திலும் புத்தகங்கள் அச்சேறிய ஒரு பதிப்பகம் அங்கு இருந்திருக்கிறது.

தொடர் வண்டியில் ஏறி உட்கார்ந்த பொழுதே நினைத்துக் கொண்டேன். சரியாக அந்த இடத்தைச் சென்றடைய உள்ளுணர்வை நம்புவோம் என்று. ஏனெனில் கேரளம் நம் மாநிலத்தை போல அல்ல என்பது எனக்கு தெரியும். கேரளம் முழுவதும் சுற்றி அலைந்த அனுபவம் இருந்தது. பொதுவாகவே சுற்றுலாக்கள் எனக்கு ஒவ்வாது அல்லது சாத்தியப்படாது. நான் சென்ற தொலைவுகள் அத்தனையுமே பயணம் என்றே குறிக்கவியலும். முக்கியமாக எந்த பெரிய சுற்றுலாத் தலத்திலும் என் கால் பட்டதேயில்லை. நினைத்தது சரியாகவே இருந்தது. என்னதான் நான் தேடிய இடம் திரிச்சூரில் இருப்பதாக குறிப்பிட்டிருந்தாலும் அது அந்த மாவட்டத்தின் எல்லையில் எர்ணாகுளத்தை ஒட்டி இருந்தது. ஆலுவாவில் இருந்து அரைமணி நேரத்தில் முரிஞ்கூர் டிவைன் இறங்கி (சாலக்குடிக்கும் போக அவசியம் இல்லை) இடது புறத்தில் செல்லும் சாலையில் ஒரு ஏழு கிலோமீட்டர். பேருந்துகள் குறைவு. நான் தொலைவு அறியாமல் நடந்தும், கொஞ்ச தூரம் ஒருவரின் வண்டியிலுமாகச் சென்று சேர்ந்தேன்.

ஒரு புகைப்படத்தில் நான் கண்ட தேவாலயத்தையும் அங்கு காணவில்லை. அதை இடித்து இப்போது புதியதாக ஒன்று கட்டிக்கொண்டிருக்கிறார்கள். சரியாக இப்போது எழுப்பிக் கொண்டிருப்பது நான்காவது தேவாலயம். தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்றபோது தேவாலயத்தில் இருந்தவர்கள் மகிழ்ந்தார்கள். சரியான இடத்தைக் காட்ட என்னோடு வந்து புதியதாக அந்த இடத்தைப் பார்ப்பதான குழந்தையின் பரவசத்தோடு ஒரு சகோதரி என்னிடம் விவரிக்கத் தொடங்கினார். என்னில் ஒரு வெறுமையே இருந்தது என்பதைக் கவனித்து கொண்டிருந்தேன். எந்த எண்ணமும் இல்லாமல் இருந்தேன். இருட்டத் தொடங்கி இருந்தது. அவர்களுக்கு நன்றி சொல்லி சில புகைப்படங்களை அந்த இருட்டிலேயே எடுத்தேன். கொஞ்ச நேரம் செலவு செய்துவிட்டு கடைசி பேருந்தை பிடிக்கிற அவசரத்தோடு வெளியே வந்தேன்.

அப்பட்டமாக எல்லாம் கண் முன்னே இருக்கிற போதும் நாம் ஏன் எல்லாவற்றுக்கும் ஒரு மலையளவுக்கான காரணங்களை கற்பித்துக் கொண்டு வெறுமனே உட்கார்ந்திருக்கிறோம்? தமிழகத்தில் இருந்து எவராவது வருவதுண்டு என்றார்கள். அப்போது நினைத்துக் கொண்டேன். இன்னும் எத்தனை விஷயங்களை நாம் என்னுடைய சொத்து என்கிற பாவனையில் ரகசியமாக வைத்திருக்கிறோம்? அல்லது நம்முடைய மக்களுக்கு தகவல்களே சரியாக போய்ச் சேருவதில்லையா? இருக்கலாம். நாம் கதைகளின் மேற்பரப்பிலேயே நின்று சோர்ந்து போகிறோம் அல்லது அவதூறுகள். ஆனால், நான் எழுத விரும்பும் கதைகள் வேறானவை.

கணியன் பூங்குன்றனின் வரிகள் கண்களில் படும்போதெல்லாம் நான் எவராவது இவ்வரிகளை மேற்கோள்காட்டி பேசுகிறார்களா என்று பார்ப்பேன். ஆனால், கடைசி வரியான சிறியோரை இகழ்வதைப் பற்றி பேசுகிற எவருமே அதற்கு முன் வருகிற வரியை அத்தனை அழுத்தம் கொடுத்து பேசுவதில்லை. அந்த வரியின் மீது நிறையவே காதல். தாந்தேவை போல அந்த வரி தொட்டு மொழியின்மீது காதல். கொஞ்சம் உலகத்தை இப்படியும் தான் பார்ப்போமே, இழப்பதற்கு ஏதேனும் இருக்கிறதா என்ன?
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
– கணியன் பூங்குன்றன்
– நாகபிரகாஷ்.
  nagaprakash@outlook.com

இப்படி நேருமென யாருக்கும் தெரியாது.

0

 

-வ.கீரா

1

பெங்களூரின் நடுமத்தி அந்த இடம். வானம் பற்றி எறிந்து அணைந்த நிலையில் புகைமூட்டமாக இருண்டிருந்தது. அதன் வெண்ணிறங்கள் புகையோடு கலந்து பசையாக நிலமெங்கும் தொங்கிக் கொண்டிருந்தது பனி.சாலையோர தூங்கு மூஞ்சி மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு, பனியில் நனைந்து அந்தரத்தில் தனித்தனியே நின்றிருந்தன வெண்ணிற நிழல் போல. நிலமெங்கும்  பனியின் கவிழ்ப்பு படர்ந்திருந்தது.வாகனங்களில் வருவோர் போவோரும் அதிர்ந்து பார்த்துச் சென்றார்கள். திடுதிப்பென நடந்ததால் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.பல வண்டிகள் என்ன செய்வதென தெரியாமல் குவிந்து பின் கிடைத்த வழியில் ஒதுங்கி திட்டியபடியே சென்றார்கள், சிலர் மஞ்சளில். பல வண்ணக்கோடுகள் வரைந்த அந்த லாரியை சுற்றி வந்தார்கள்.கிளினர் பலகையை விட்டு தொப்பென குதித்தோடிய மூர்த்தி லாரிக்கு அடியில் வேகமாக உடம்பை தளர்த்தி படுத்தான்.அவனுக்கு புரிந்து விட்டது. இது எளிதான பிரச்சனையில்லை. லாரியின் கீயர்பாக்ஸ் துண்டாக தரையில் விழுந்து வண்டியின் நகர்வுக்கு ஏற்ப பத்து அடி துரம் தார்ச்சாலையை கிழித்து உழுதபடி தார்க் கட்டிகளோடு மோதி திகைத்து நின்றிருக்கிறது.அவ்வளவுதான்.

ஓசூரிலிருந்து வட மாநிலங்களுக்குச் செல்ல லாரிகள்,  இளங்கருமை புகுந்த பெங்களுரின் தூங்குமூஞ்சி மரங்கள் இலையுதிர்த்து பரவிக்கிடக்கும் உள்சாலைகளை கடந்துதான் செல்ல வேண்டும். ஞாயிறுகளில் கூட வாகன நெரிசலில் விழிப்பிதுங்கும் பல சாலைகளற்ற இந்த நகரத்தில், ராஜஸ்தானிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டு அறுக்கப்பட்ட நீள நீளமாக மார்பிள்களை ஏற்றியபடி 5 நாட்களை கடந்து வந்த “தென் பாண்டியன்” தனது செயலை இழந்து விட்டது. இந்த லாரிக்கு வைத்த பெயர் “தென் பாண்டியன்”. வண்டிக்கு குலப் பெயர் ஒன்றுண்டு. முப்பத்ததைந்து ஆயிரம் எடை பொருட்களை சுமக்கும் “டாரஸ்” என்கிற பத்துச் சக்கரம் பூட்டிய தேர். இதன் பாகன் ஒட்டுனர் ராமசாமி, வெள்ளை கெளபாய் குள்ளாயை ஒரு பக்கம் மடக்கி தலையில் இருத்தியிருந்த கர்நாடக காவலரிடம் வகையாக சிக்கியிருந்தான். அவர் ஒடி வந்த வேகத்தில் தொப்பையும் தொப்பியும் கழண்டு விழுந்துவிடலாம் எனத் தோன்றியது. இடுப்பு பெல்ட்டை இருமுறை இறுக்கிக் கொண்டபடியே ராமசாமியிடம் ஆவேசமாக கத்திக்கொண்டிருந்தார்.ராமசாமி ஓட்டுனர் இருக்கையை விட்டு இறங்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் “சார்..சார்..சார்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான். மூர்த்தி பதட்டமாக ராமசாமியை தேடி ஓடி வந்தான்.

“ராமா. கீர் பாக்ஸ் எறங்கிடுச்சு”

“அய்யோ”

ராமசாமி தலையில் கை வைத்ததை பார்த்து  காவலரே தனது வேகத்தைச் சுருக்கிக் கொண்டார்.

பொதுவாக இந்தியாவின் எந்த பாகத்திற்கும் லாரிகள் சுமையேற்றி செல்லும் வழியுண்டு. வடமாநிலங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா வண்டிகள் மதராசி காடியாகவும், ஆட்கள் மதராசிகளாகவும் தான் தெரிவார்கள். இந்த மதராசி காடிவாலாக்கள் பஞ்சாபியர்களைத் தவிர்த்து அனைத்து இந்தியபாக மக்களாலும் வெறுக்கப்பட வேண்டியவர்கள். இராவண மிருகங்கள் என்பதான மனநிலையே இருக்கும். இந்த கணக்கு தென் இந்திய பகுதிகளுக்கு. ஆனால் டிஎன் என்கிற எண் கொண்ட வண்டிகள் என்றால் கன்னடர்களால், குறிப்பாக கர்நாடக காவல்துறை, ஆர்.டி.ஓ க்களால் கேவலமாக நடத்தப்படுவது, மிகக் கடுமையாக அடிப்பது, பெரும் பணத்தை கறப்பது என்பதான மனநிலை படிமமாக படர்ந்திருந்தது. ஆனால் இந்தக் கர்நாடக காவலர் அப்படியில்லை. உடனடியாக பணியில் இறங்கினார். பின்னால் அலறும் பலவகை வண்டிகளின் எரிச்சலான ஒலியெழுப்புதலும் கூடுதல் காரணமாக இருக்கலாம். அது கொஞ்சம் பள்ளத்தை நோக்கிய சாலையாக இருந்ததால் வேலை சுலபமானது.

மூர்த்தி வண்டியின் கேபினிலில் ஏறி தார்ப்பாயை கட்டும் கயிற்றையும் வண்டிச்சக்கரம் கழட்டும் இரும்பு கடப்பாரையையும் எடுத்துக் கொண்டு வண்டிக்கு அடியில் மீண்டும் அடியில் பாய்ந்தான். மூர்த்தியின் பதட்டத்தை  கவனித்தபடி நோஞ்சானாக நின்று பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் உடன் வந்து கைக் குடுத்தான்.வண்டியின் அடிப்பகுதி செம்மண் படிந்து இரத்தம் காய்ந்து வெடிப்பு விட்டது போல அங்கங்கே உடைந்துவண்டியின் அடிப்பாகங்கள் தெரிந்தன. ஆல்மட்டி டேம் கட்டுகிற இடத்தினருகில் தான் கிட்டதட்ட நூறு கிலோ மீட்டருக்கு மேல் தார்ச் சாலை செம்மண் கோடாக நீண்டிருந்ததை நினைவுக்கு கொண்டு வந்தான் மூர்த்தி.

வண்டியின் வேக அளவை கூட்ட,குறைக்க பயன்படும் விசையின் தொடக்கம் லாரியின் கேபினில் இருந்தாலும் அது பல்வேறு அடுக்குகளைக் கடந்து லாரியின் அடிப்பகுதியில் முதுகெழும்பைப் போல குழலாக நீண்டு பின் சக்கரத்தை இணைக்கும் தண்டில் மனித குண்டியை போல சட்டியாக குமிழ்ந்து கிடக்கும் கோளத்தில் தான் விசை மாற்றியின் இணைப்பு இருக்கும் அந்த கோளத்தின் உள் பகுதியில் இயந்திரங்கள் ஓட்டுனர் இருக்கையில் இருந்து விசையை மாற்றும் பொழுது கோளத்தின் இயந்திரங்கள் அதன் வேகத்தை ஏற்றி இறக்கி சக்கரத்தை வேகப்படுத்தவும் குறைக்கவும் செய்யும். அந்த இடத்தில் தான் தண்டு வடம் கோளத்தின் உள்ளிருக்கும் பாகங்களை இழுத்து தரையில் போட்டிருந்தது. நோஞ்சான் மனிதன் அடியில் அமர்ந்து பலம் கொண்டு கடப்பாரையால் கீர் ராடை நிமிர்த்தித் தூக்க, அதை வடக்கயிறு கொண்டு காலால் உந்தி வெறி கொண்டு இழுத்துக் கட்டினான் மூர்த்தி.

தரையில் இருந்து தண்டு வடம் சற்றே மேழெழுந்து நிற்க, அவசரமாக ராமசாமி வண்டியை இறுக்கி பிடித்து நகரவிடாமல் வைத்திருக்கும் காற்று  விசையை விலக்கி , தடையில் காலை மேலே தூக்க, வண்டி லேசாக குலுங்கியது. வண்டியை ஒட்டி வேடிக்கை பார்த்த கும்பலை பின்னால் இருந்து தள்ளச் சொன்னார் காவலர். வண்டி பள்ளத்தில் மெதுவாக நகர, ஒடிப்பானை இடது பக்கம் ஒடிக்க, வண்டி மெல்ல யானை தன் முகத்தை திருப்பி கடைக்குள் இருக்கும் வியபாரியிடம் பிச்சையெடுப்பது போல நடைபாதையோரம் நகர்ந்தது.

“வரலாம்..வரலாம்..ரைட்..”

இடது பக்கமிருந்து சொல்லிக் கொண்டு வந்த மூர்த்தி “ரைட்ல ஒடி..ரைட்ல ஒடி..” எனக் கத்த, தேரை நிலைக்கு கொண்டுவந்தான் ராமசாமி. கூடியிருந்த கூட்டம் மலையை முடியைக்கொண்டு இழுத்தது போல ஆரவாரித்தது.காவலர் வெற்றிப் பெருமிதத்துடன் ராமசாமியை கீழே இறக்கினார். ராமசாமிக்கு புரிந்தது. காவலர் மக்களைக் கலைந்து போகும்படி சொல்லிவிட்டு, ராமசாமியை ஏற இறங்கப் பார்க்க, ராமசாமி அவரை வண்டியின் முன் பக்கம் சாடை காட்டி அழைத்து, இருநூறு ரூபாயைத் திணித்தான். காவலர் சட்டென வாங்கி பேண்ட்டில் வைத்துக் கொண்டே கிளம்பினார்.

“ஓய்..இரைவரு..பெத்த ஆபிசரு..கம்மிங்..கம்மிங்…நீரு கோயிங்..கோயிங்…ஆவுனா,..”

ராமசாமிக்குத்  தலைவலிக்க ஆரம்பித்தது.ஜெய்ப்பூரிலிருந்து இந்த நடை வந்ததிலிருந்தே பிரச்சனைதான். பின்னத்தி வெளிச்சக்கரம் இரண்டு முறை ஆணியடித்து வழியில் வேலையைக் காட்டி விட்டது. உபரி சக்கரத்தைக் கழட்டி மாட்டி லாரியை கிளப்பி வந்தது பாடென்றால், மகாராட்டிரா சிற்றூரில் நாகாவிற்கு** போக்கு காட்டி ஐந்து ரூபாயை மிச்சம் பிடிக்கப் போய், பின்னால் விரட்டி வந்த ஆள் ஊரின் அடுத்த எல்லையில் மடக்கி தர்மஅடி கொடுத்ததுமில்லாமல் நூறு ரூபாயை பிடுங்கிவிட்டார்கள் வீர சிவாஜியின் மிச்ச சொச்சங்கள். இப்பொழுது லாரியின் கீர்பாக்ஸ் .தொல்லை. தொல்லை மேல் தொல்லை

ராமசாமி குழம்பிக் கிடந்தான். மூர்த்தியை வண்டியில் இருக்க சொல்லி விட்டு ,நாமக்கல்லில் இருக்கும் முதலாளிக்கு வாடகை தொலைபேசி கடையில் இருந்து பேசி,விசயத்தை சொன்னான். முதலாளி ”ஓத்தாம்பாட்டை” அள்ளிவீசினார்.

வழக்கமாக டாரஸ்  லாரி ஏற்றும் எடை என்பது 16 டன் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் சட்டமிருந்தது. வடக்கே வண்டி போய் வர, ஒரு நடைக்கு  பதினைந்திலிருந்து பதினேழு நாட்களாகும். லோடு கிடைக்காவிட்டால் இன்னும் குடுதல் நாட்கள் கூட ஆகலாம்.பதினாறு டன் எடை ஏற்றினால் வழியில், பாலம், நாகா, ஆர்டிஓ, ஒவ்வொரு மாநில எல்லை, இடையில் காவலருக்கு அழுதது போக,ஏற்ற இறக்கமான டீசல் விற்பனை, பஞ்சர்,டிரைவர்,கிளினர் பேட்டா,லாரி புக்கிங் அலுவலக கமிசன்,லோக்கல் டிரைவர் பேட்டா,பாரம் ஏற்றுக் கூலி இறக்குக் கூலி,வண்டிக்கு ஒரு நடைக்கு ஒரு முறை செய்யப்படும் மேலோட்டமான சர்வீஸ், டயர் தேய்மானம் என அனைத்தையும் கணக்கில் கொண்டால் உழுதவன் கணக்கு தான் இந்த மோட்டார் தொழிலிலும்.தெரியாத பிசாசுக்கு பதில் தெரிந்த பேயே மேல் என்று தான் இந்த தொழில் ஓடிக்கொண்டிருகிறது.எப்பொழுதாவது விபத்து ஒன்று நிகழ்ந்தால் இந்தச்சிறு முதலாளிகள் தலையில்தான் துண்டு விழும். அதனாலேயே பல முதலாளிகள் வண்டி நாமக்கல்லினுடையது என்றாலும் ஹரியானா போக்குவரத்தில் முழு இந்தியா பதிவெண்ணை வாங்குவார்கள். ஹரியானா பதிவெண் என்றால் இருபத்தியெட்டு டன் வரை எடை ஏற்றிக் கொள்ள அனுமதி உண்டு. ஆனாலும் வண்டி தமிழ்நாட்டினுடையது என அதன் தோற்றம் அடையாளம் காட்டும்.

லாரிகளில் ஒவ்வொரு மாநிலமும் தன்னுடைய அடையாளத்தைக் கொண்டிருக்கும். லாரிகளின் தனித்துவம், பண்பாடு, கலாச்சாரம், மற்றும் எடை ஏற்றிக்கொள்ளும் அளவு கூட தேசிய இன மனதோடுதான் இருக்கும். ஹரியானா பதிவெண்ணுக்கு இருபத்தியெட்டு டன் ஏற்றும் நிலை இருந்தாலும் முதலாளிகளின் பேராசை ஓய்வதுமில்லை. ஒரே நாளில் உழைப்பால் உயரும் உத்தமர் கதைகள் அவர்கள் நிறையக் கேட்டிருப்பார்கள் போல. முத்பத்தியிரண்டு டன்னிலிருந்து முத்தியாறு டன் வரை ஏற்றி வரும்படி ஓட்டுனர்களிடம் அடம் பிடிப்பார்கள். இந்த அதிக கொள்ளளவு ஏற்றும் பொழுது வண்டி திணறும்,சில மாநில எல்லைகளில் தொந்தரவாகும்,கூடுதல் எடைக்கு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் வரை கறக்கவும் சில ஆர்டிஓ -க்கள் முயல்வார்கள். இதனால் சில மாநில எல்லைகளில் குறுக்கு வழியாக மாநில எல்லையை கடந்து வரும் சாகச நிகழ்வுகளும் இடம் பெறும்.

இத்தனையும் கடந்துதான் இந்த ஓட்டுனர் வாழ்க்கை.முதலாளியின் வழக்கமான இந்த திட்டுகள் பலகிப் போன ஒன்றுதான். ஆனால் கீர்பாக்ஸ் இறங்கியிருப்பது பெரும் செலவு பிடிக்கிற வேலை. மெக்கானிக் வந்து சரி செய்தாலும் நாமக்கல் சென்றதும் மீண்டும் கழட்டி மாட்டும் வேலையில் மூன்று நாட்களை தின்றுவிடும்.பட்டறையில் பேசி விட்டு வருவதாகவும் பத்து நிமிடம் கழித்து பேசும்படி முதலாளி சொல்லி விட்டு தொலைப்பேசியை வைத்து விட்டார். இப்பொழுது போல அந்த நாட்களில் அழைபேசிகள் இல்லை.

ராமசாமிக்கு பசி கண்ணை அடைத்தது.விடியற்காலை தாவணிக்கரை சின்னாற்றில் குளித்துவிட்டு,  தமிழர் கடையில் அடுக்கிய இட்லி, கரைந்து காற்றில் வெளியேறி விட்டது. அவ்வப்பொழுது குடித்த தேநீரும் தீர்ந்து நாவறண்டுக் கிடந்தது.பெங்களூரை தாண்டிப் போய் சாப்பிடலாம் என நினைத்து வண்டியை அடிச்சி விரட்டியும் 28 டன் எடையை “ஹ்ம்ம்..ஹ்ம்ம்..”என அரைத்து தேய்த்தபடி வண்டி உருண்டதும்,பெங்களூரின் உலகலாவிய நெரிசல் மாலை ஐந்து மணியை தின்று,ராமசாமியின் வயிற்றையும் செரிக்கடித்திருந்தது.

தொலைபேசிக்கடைக்கு அருகில் இருந்த தேநீர்க் கடையில் ஒரு பன்னையும் தேநீரையும் வாங்கி ,களைப்பை போக்க முயன்று கொண்டிருந்தவன் தன்னை யாரோ கவனிப்பதை உணர்ந்து நிமிர்ந்து பார்க்க,எதிரே வெண்ணையை உருட்டி தேனில் குழைத்து உருவம் நெய்தது போல ஒரு பெண் முறைத்தபடி நின்றிருந்தாள். அவள் முகத்தில் அந்நேரத்தில் சட்டி வைத்து வடை பொரித்து விடலாம்.அவ்வளவு கொதி நிலை. அழுக்கும்,கரியும் புரண்டு கிடந்த கைலியும்,காலர் கருப்பேறி பலநாள் ஆன சட்டையும் போட்டு, பரட்டைத் தலையுடன் நின்று வேகமாக முழுங்கிக் கொண்டிருந்த ராமசாமியை அவள் பைத்தியக்காரன் என பார்த்திருக்கக் கூடும். நடைபாதையில் நின்றிருந்த அவனை எப்படி நகரச் சொல்வது எனத் தெரியாமல் விழி பிதுங்க பத்திரகாளியாகி  நின்றிருந்தாள் அவள்.

ராமசாமி சட்டென நிமிர்ந்தவன் பதறி “க்கியா” என்றான். அவளுக்கு எதுவும் புரியவில்லை.அவளது கைகள் தானாகவே அவளது மூக்கை பிடித்துக் கொள்ள,ராமசாமி பதறி விட்டான்..

“ம்மோவ்..இது..கரி..காடி..மே..”

அவன் முடிக்கவில்லை.அவள் சட்டென கீழ் பகுதியில் இறங்கி ஓடி விட்டாள்.போகும்போது திரும்பி திரும்பிப் பார்த்தபடி பதட்டமாக ஓடினாள் அவள். ராமசாமிக்குப் புரிந்தது.சுற்றிப் பார்த்தான். எல்லோரும் தன்னையே பார்ப்பது போலிருந்தது. தாங்க முடியவில்லை. வேகமாக அங்கிருந்து நகர்ந்து தொலைப்பேசிக் கடையின் அருகில் சென்று எல்லோரின் பார்வையிலிருந்து முகத்தை மறைத்துக் கொள்ள முயன்றான்.

அழுக்கு லுங்கியும்,கரியுடலும் அவனுக்கு மோட்டார் தொழிலுக்கு வந்த பொழுது புதுசு. மலைக்கடை கிரசர்க்காரன் கிட்ட அடமானத்துக்கு மூன்றாயிரம் வாங்கி,கேணி மோட்டு நெஞ்சுமுட்டி மூத்த மகள் திருமணத்துக்கு சீரு செஞ்சது போக இரண்டு பன்னிக் குட்டி வாங்கி, ஆயித் தோப்புல விட்டுப்புட்டு,அரசு பாக்கெட் சாராயத்தை புருசனும் பொண்டாட்டியுமா இராப்பகலா குடிச்சதுல, குடல் வெந்து செத்துப் போனார் ராமசாமியின் அப்பா கூறார் சின்னான். ஆயித் தோப்புல ஊரார் பேண்டத பன்னித் திங்கும். திங்கற பன்னிக்குட்டிய மேச்சுக்கிட்டு, பன்னி விட்டை பொறுக்கி, எரு சேத்து வித்துக்கிட்டிருந்த ராமசாமியின் அம்மா கொசவட்டை , வேற வழியில்லாம கிரசர்க்காரன் கடனுக்கு, பன்னிக்குட்டியையும், எட்டு வண்டி பன்னி விட்டையையும் வித்துக் கொடுத்தார். வித்தும் தேறாம கடன் கழிக்க,கல்லுடைக்க போனார். குன்னுமேட்டு தெருவுல பாதி பேரு இப்படித்தான். கிரசர்காரன் கிட்ட கல்லுடைக்க போய் கடன் அடைச்ச பாடில்லை. பன்னிக் குடிசையை விட கொஞ்சம் உயமான குடிசைதான் குன்னு மேட்டுத் தெருவுல எல்லா வீடும். அம்மா  கொசவட்டை கல்லுடைக்க காலையில போனா நட்சத்திரம் பன்னிக்குட்டையில விழுகுற நேரத்துலதான் வருவார் .அசதிக்கு தக்க பாக்கெட்  சாராயமும் உண்டு.

பள்ளிக்குடம்னா ராமசாமிக்கு உயிர். எக்கேடு கெட்டாலும் பள்ளிக்கூடம் மட்டும் போகாம இருக்க மாட்டான். அதிலயும் சோத்துக்கு வழியில்லன்னாலும் பக்கோசு கடையில் “ரீகல் சொட்டு நீலம்” வாங்கி,பள்ளிக்கூடம் போட்டுக்கிட்டு போறவெள்ளை சட்டையை நீலம் போட்டு  “சொட்டு நீலம் டோய். ரீகல் சொட்டு நீலம் டோய்..” பாட்டெடுத்து கைரேகையெல்லாம் ஊதாவாக பள்ளிக்கு போவான் ராமசாமி. சட்டையில் பொத்தானுக்கு பதில் ஊக்கு குத்தியிருப்பாங்கறது வேற விசயம். அவ்ளோ சுத்தக்காரன்.

பன்னிக்குடிசையும்,பன்னிக்கூண்டும் நம்மள விட்டு போவனும்னா நல்லா படிக்கணும்னு சொன்ன அம்மா கொசவட்டையும் பத்தாம் வகுப்பை தொடும்பொழுது போய்ச் சேர, தம்பி இரண்டு பேருக்கும் வேற ஆளில்லை.திசை நாப்பதா இருக்கு, கல்லுடைக்கத்தான் போவனும்னு முடிவு செஞ்சப்பதான் மாக்கான் கைக் கொடுத்தார் அவனுக்கு. பேருதான் மாக்கான். ஆனா அந்த ஊருலயே கொஞ்சம் விவரமா பேசுறவரு அவருதான். அவரையும் பள்ளத்தெரு பொண்ண காதலிச்சு கட்டிக்கிட்டதுக்காக ஊரை விட்டு தள்ளி வச்சிருந்தாங்க அவரு உறமுறையை சேர்ந்தவங்க. ஆனாலும் மனுசன் கல்லு மாதிரி .இதே ஊர்லதான் இருப்பேன். இங்கதான் எம்புள்ள வளரும்னு நெஞ்ச நிமித்தி நின்னாரு மாக்கான்.

“என் கூட கிளினரா வாடா..உன் தம்பிங்க படிக்கட்டும்..படிப்பை வீட லாரி உனக்கு நல்லா சோறு போடும்”

மாக்கான் தான் ராமசாமியை நாமக்கல் கூட்டிட்டு வந்தார்.  ராமசாமி கிளினராக ஓடியபொழுதே அவனுக்கு பெரும் சங்கடமா இருந்தது இந்த அழுக்குதான்.அவன் அழுக்கை விட்டு ஓடனும்னு ஓடினாலும் அது விடாம அவன தொரத்துது. ராமசாமியும் குளிச்சி சுத்த பத்தமாதான் இருப்பான். என்ன குளிச்சாலும் வண்டியில ஏறி உட்காந்ததுமே அழுக்கு தானா..ஏறிக்கும்.ஆரம்பத்துல கொஞ்சம் வேதனைப்பட்டாலும் பழகிடுச்சி. இப்ப லாரிக்கு அவந்தான் டிரைவர்.காசுப் புழக்கம் நல்லா கையில புரளுது.ஆனா அழுக்கு அவன் கூடவே இருக்கு.

அந்த பொண்ணு பார்த்த பார்வை அவன் நெஞ்சை தச்சிடுச்சி. முள் தொண்டையில் சிக்கி விட்டது.

முதலாளி நாமக்கல்லில் இருந்து எதிர் வண்டியில் மெக்கானிக்கை அனுப்புவதாக சொல்லி அவர்களை காத்திருக்கும் படி சொல்லி விட்டார். மெக்காணிக் வந்து சேர்கிற வரை இங்குதான் என்பது புரிந்து விட்டது. மூர்த்திக்கு இரண்டு பன்வாங்கிக் கொண்டு போனான். மூர்த்தி அதற்குள் வண்டியின் முன்னும் பின்னும் பத்தடி தள்ளி கல் வைத்து வண்டியின் சூழலை சாலைப் பயணிகளுக்கு புரியும்படி உணர்த்தியிருந்தான். ராமசாமி தனது அழுக்கு சட்டைகளில் நல்லதை தேடித் தேடிப் பார்த்தான்.கிடைத்த இடத்தில் உடனே துவைத்து வைத்திருந்தாலும் மீண்டும் தானே கரியாகிவிடுகின்றன. எல்லாம் ஒன்று போலவே இருந்தது. தேநீர்க் கடை வழிமறிப்பில் நின்ற அவளின் நீள மூக்கு ஏனோ அவனை இம்சை செய்தது.

இரவுச் சாப்பாட்டுக்கு ராமசாமி போக வில்லை.மூர்த்தியை சாப்பிட்டு விட்டு ஏதாவது வாங்கி வரச் சொல்லிவிட்டான். வண்டியின் கேபினில் ஏறி தார்ப்பாய்க்கு மேல் படுத்து கடும்குளிரை போர்த்திக் கொண்டுவிழித்துக்கிடந்தான். அவனுள்ளத்தில் சிவகாமி வந்து போனாள். அவன் தெருவில் வசிக்கும் கருத்த பெருங்கண்ணி அவள். பணிரெண்டாவது படிக்கிறாள்.ராமசாமி ஒரு முறை ஸ்ரீநகரிலிருந்து ஆப்பிள் ஏற்றி திருச்சிக்கு வந்தான். வரும்வழியில் ஆலத்தூர்கேட்டை சொந்த ஊரான செட்டிக்குளத்திற்கு வண்டியை விட்டான். தெரு சில்வண்டுகள் லாரியைக் கண்டு மொய்த்துக் கிடக்க,பெருசுகள் வேடிக்கைப் பார்க்க, கிணற்றிலிருந்து நீர் இறைத்து வந்த சிவகாமியின் கற்றாழைக் கண், ராமசாமி சிறுவர்களுக்கு கொடுத்த ஆப்பிளையும் ராமசாமியையும் பார்த்தது.ராமசாமியின் கண்கள் சிரிக்க,சிவகாமியின் கண்ணிழுத்துக் கொள்ள, ஆப்பிள் கன்னிப் போய் விட்டது. ராமசாமியும் மடங்கி கிடந்தான் அவள் பார்வையில்.அவள் தான் அவனை இந்த பனிக் குளியலில் மிதக்க விட்டிருந்தாள்.

மூர்த்தி வாங்கி வைத்திருந்த சாப்பாடு அப்படியே இருந்தது. குளிர் தெளித்த வாசலில் புள்ளிக்கோலமாக துளிகள் படர்ந்திருந்தன. ராமசாமியின் முகம் விரைத்து கிடந்த தார்ப்பாய்க்குள் அழுந்திக் கிடந்தது.

பன்றிகள் மூஞ்சை நீட்டிக்கொண்டு, அடர்ந்த கூர்முடிகளை சிலிர்த்தபடி வந்து முகத்தை ஆவேசமாக நக்கியபடி இருந்தது. அதன் கோரைப் பற்கள் ராமசாமியின் தாடையை தாங்கிப் பிடித்திருந்தது. நாக்கு சுழன்றபடி இருக்க, அந்த கூர் மூக்குப் பெண் அவன் முகத்தில் காறித் துப்பி,முரட்டுக் கண்களை அவன் உடலெங்கும் வீசினாள். அவை ஒன்று பலவாகி, அவன் உடலெங்கும் ஈக்களைப் போல மொய்த்து அழுக்குச் சட்டையை தின்று, அவன் அழுக்கு உடலைத் தின்று சதை, நரம்பு, குடல், குடலிலிருந்த பன்னையும் ஆவேசத்தோடு தின்று கொண்டிருந்தது.

மூர்த்தி ராமசாமியை எழுப்பினான். மெக்கானிக் ஒரு உதவியாளனோடு வந்திருந்தான். வேர்வையோடு மெக்கானிக் லாரிக்கு அடியில் வேலை செய்து கொண்டிருந்தான். சாலையின் இரைச்சல் கணக்கற்ற ஓநாயாய்களின் பெருங்குரலாக நீண்டு அந்த சாலையில் வழிந்தோடியது.முதல் நாள் அதே நேரத்தில் சரியாக கீர் பாக்சை தூக்கி மாட்டினான் மெக்கானிக் சிவா. வேர்வையும் அழுக்கும் அனைவரையும் நாராக்கி இருந்தது. பெரும் களைப்பு அனைவரின் முகத்திலும் வழிந்தோடியது. ஓசூருக்கு முன்பிருக்கும் கர்நாடக எல்லையில் வண்டி நடை புத்தகத்தை எடுத்துக் கொண்டு மூர்த்தி ஓடினான். வண்டி சில கிலோ மீட்டர்கள் எரும்புச்சாரியாக ஊர்ந்து கொண்டிருந்தன. எல்லைக் கணக்காளரிடம் வண்டி எண் சொல்லி பதிவு போட்டு, அவர்களுக்கான வரும்படியை அளித்து விட்டு மூர்த்தி மெல்ல ஊர்ந்த வண்டியில் தொத்தி ஏறினான். ராமசாமி ஆவேசம் வந்ததைப் போல தமிழ் நாட்டு எல்லைக்கு குறுக்கு வழி சாலையான இராயக்கோட்டை வழியே செலுத்தினான். யாரும் எதுவும் பேசிக்கொள்ளாத அந்த அசந்த பொழுதில் சாலையின் புளிய மர மறைவிலிருந்து மோகினி வெளிப்பட்டாள். மாய மோகினிதான்.ராமசாமி அடித்த பிரேக்கில் அனைவரின் தூக்கமும் வண்டிக்கு வெளியே வீசப்பட்டது.

அகண்ட கண். அவள் சிவந்த வெற்றிலையை துப்பினாள். மெக்கானிக் உறுதியாக சொல்லிவிட்டான்.மெக்கானிக்குகளுக்கு மோகினிகள் அமைவது சிரமம். நேரம் காலமற்று மெக்கானிக்குகள் இரும்போடு பிணைந்திருப்பார்கள். எப்பொழுதாவது வெளியில் வந்தால் தான் உண்டு.சில நேரங்களில் உடல் சூட்டைப் போக்க ஆந்திரா செல்லும் வண்டிகளில் பயணித்து மோகினிகளிடம் வெப்பம்  வெளியேற்றுவார்கள். இந்த சாலையோர ஆந்திர மோகினிகள் பெரும்பாலும் இவர்களின் கரி படிந்த, வெளியேறவே முடியாத இந்தக் கருமையை அவர்கள் உள்ளன்போடு ஏற்றுக் கொள்வார்கள். உழைப்பவர்களின் வியர்வையில் குளித்து குளிப்பாட்டுவார்கள். கருமையை அள்ளி ஊடலோடும் கூடி களித்து இந்த உழைப்பாளிகளின் எண்ணம் ஏற்றுவார்கள். மோகினி வண்டிக்குள் ஏறி அமர்ந்து தேவ உலகம் பயணிக்கத் துவங்கினாள். வண்டியின் கேபினின் மெத்தையில் பின்பக்கமாக இருந்து மெக்கானிக்கின் கை அவளது உடலில் கரப்பானாக ஊர்ந்தது. பழுத்து தடித்து, கருப்பேறிய மெக்கானிக்கின் கை ஊர்வை அவள் செல்லமாக நெளித்து சிரித்தாள்.

ராமசாமி வண்டியோட்டியபடி அவளிடம் கேட்டான்.

“உம் பேரென்ன..”

“சிலுக்கு”

“எந்தூரு..?”

“மேலெருந்து வந்தா ரெண்டு மலை பிரியும்..மலைக்கு இடையில ரோடு போகும்…”

ராமசாமியின் மனக் கிடங்கில் எரிச்சல் சாணியாக அடித்தது. அவனது மனமெங்கும் நீள மூக்கு கீறியபடியே இருந்தது.

“..ஏய்..ஊரைக் கேட்டா கதை அளக்கிற..”

“யோவ்..கேளுய்யா..ரோடு போய் முட்டுற இடம் தொப்புளூர்..”

மெக்கானிக் முனகியபடி..

“அப்புறம்..”

“தொப்புளூருக்கு கீழ எந்தூரு…குழியூருதான்…யோவ்…கதை கேட்டது போதும் அந்த மரத்துக்கிட்ட நிறுத்து…”

மெக்கானிக் அவசரப் பட்டான். ராமசாமி அவள் முகத்தில் தன் முகத்தை தேய்த்தான். அவள் ராமசாமி சட்டையை பிடித்து இழுத்துப் போனாள். எல்லோரும் பதறி நின்றார்கள். மெக்கானிக்கின் கால் வழியே வெப்பம் பரவி ராமசாமியும் மோகினியும் போன திசையை தேடி அலைந்தது.

மரங்கள் மறைத்த வனம் அது. எந்த பறவைகளும்,விலங்குகளும் இடம் பெறாத வறண்ட பாலை மர வனம்.ராமசாமி அவளையே பார்த்தான். அவள் விருவிருவென அவனை இழுத்தாள். அவள் மூக்கு கூர்ந்திருந்தது.வெற்றிலைச் சிவந்து உதடு வெளித் தள்ளிக் கிடந்தது. பன்றிகள் மூஞ்சை நக்கின.அவள் மூக்கு கூர்ந்திருந்தது. பன்றிகள் முடியை சிலிர்த்தன.அவள் முறைத்தபடி நின்றிருந்தாள்.அவள் முகத்தில் ஒரு அசூயை படர்ந்து அவன் உடலை ஊடுருவியது.ராமசாமி அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அவள் இழுத்தாள் வெறியோடு. நாக்கைக் கடித்தபடி அவள் மீது ஏறினான். அவள் ஆவேசமாக அவனை அணைத்தாள். இறுக்கி எழும்புகள் முறிந்துவிழுந்தன. அவனது தசையை, நரம்பை, குடலை, ஈக்களாக அவளது கண்கள் மொய்த்தன.

பன்றி, கிரசர் முதலாளி, அம்மா, சிவகாமி..அவள்..அவள்…பெங்களூரில் முறைத்த நீள் மூக்கு முகம்.அந்த முகம்…

ராமசாமி உடலை வளைத்து முருக்கேற்றினான். காலத்தின் அழுக்குகள் அவன் மீது கவிழ்ந்து அவனை மூழ்கடித்தன. பழமும் பாலும் பிசைந்து கொழகொழவென அவன் பிடறியில் ஊற்றி வழிய வழிய, உடலை தேய்த்து கரியை, நீல வண்ணத்தை, பச்சை திரவத்தை,வழித்து எடுத்துக் கொண்டிருந்தாள். அவன் செல்லாத கோயிலின்  மந்திரங்கள் ஓதிக் கொண்டிருக்கும் குரல்களின் தீர்க்கம் ராமசாமியின் நகங்களினூடாக அவனது ஆன்மாவை கிழித்து வீசிக்கொண்டிருந்தன. ராமசாமியின் மேற்பற்களிலிருந்து இரு பற்கள் நீண்டன, மோகினியினிடையில் ஏறி அமர்ந்து நீண்ட நாக்குகளைக் கொண்டு ராமசாமி அவளது தேகத்தை நக்கத் தொடங்கினான். அவள் திணறி,திமிற வெறியோடு சொரசொரப்பான நாக்கினால் அவளின் தசைகளை ஒரே சுழட்டில் பிய்த்தெடுத்தான். மோகினி  அதிர்ந்து போனாள். அவள் மூர்க்கமான மனிதர்களை சந்தித்தவள் தான். உச்சமான அனுபவங்களை தாங்கிப் பழகியவள்தான். ஆனாலும் இது  குரூரம். அவளதுவாயிலிருந்து வெற்றிலை இரத்தமாக வழிய வழிய அவள் அலறத் துவங்கினாள. பலம் கொண்டு அவனை எட்டித் தள்ளி காடே அதிர இருளில் கதறியபடி உடைகளேதுமற்று அவள் ஓடிக் கொண்டிருந்தாள்.

மெக்கானிக்கும், உதவியாளனும் மூர்த்தியும் வேகமாக அலறல் வந்த திசையில் ஓடி வந்தார்கள் . ராமசாமி நின்று கொண்டிருந்தான். அவனது முகம் சாந்தமாகியிருந்தது. எல்லாக் காலத்தின் அழுக்குகளையும் துடைத்துவிட்டிருந்தான். தனது உடலை பார்த்தான் கருமை ஒரு பூரிப்போடு கிளர்ந்து அவனை பார்த்து சிரித்தது.

“டேய்..ராமா இப்படிப் பண்ணிட்டியேடா…இனிமே. .நான் என்னடா பண்ணுவேன்…எந்த சந்துலடா வச்சுக்கறது…அப்படி அவ ஓடுற அளவுக்கு அவள என்னடா பண்ணுன… பாவம்டா..இது..”

மெக்கானிக் கேட்டுக் கொண்டேயிருந்தான்.நிதானமாக நடந்து சென்று லாரியில் ஏறி அமர்ந்து, ஹாரன் அடிக்க ஆரம்பித்தான் ராமசாமி.

 ***

(நாகா என்பது ஊராரால் தடுப்பு வைத்துவரும் வண்டிகளை நிறுத்தி பணம் வசூலிக்கும் முறை)

– வ.கீரா

தொடர்புக்கு : keeraaiyakkunar@gmail.com

அடையாறு ஆற்றின் எக்காளம்

0

 பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

Artist : Joseph Cross
Artist : Joseph Cross

      ரு வருடங்களுக்கு முன்பு சென்னை கோட்டூர்புரத்தில் வசிக்க நேர்ந்த துரதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன்.  அதன் வடபுறத்தில் அடையாறு ஆறு, கடலைச் சேர்வதற்கு இன்னும் சில நூறு மீட்டர்களே மீதமிருக்கும் தூரத்தில் பயணிக்கும்.  கிழக்கே பக்கிங்ஹாம் கால்வாய், தெற்கே கிண்டி காட்டில் இருக்கும் ஐஐடி, மேற்கே அண்ணா பல்கலைக்கழகமும், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகமும்.  ஆறும், அறிவும், காடும் கால்வாயுமான பகுதியில் வசிப்பதற்கு உண்மையில் ஒருவர் மகிழ்ச்சி அடையத்தான் வேண்டும்.  ஆனால் இரண்டு காட்சிகள் ஒரு சாபக்கேட்டின் பயனை அனுபவிப்பவனாக என்னை எண்ணச் செய்தன.  ஒன்று, கிண்டி காட்டிலிருந்து வெளியேறும் புள்ளிமான்கள் நாய்களோடு சேர்ந்து குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தது.  இரண்டு, பக்கிங்ஹாம் கால்வாயில் கோட்டூர்புரம் பறக்கும் இரயில் நிலையத்தின் கீழே ஒரு சாக்கு மூட்டையின் மேல் முழுக்க திடக்கழிவில் மூழ்கிய நிலையில் கழிவுநீரிலிருந்து வெளியேறத் தடுமாறிக் கொண்டிருந்த ஓர் ஆமை.  ஒரு குழந்தை இயந்திரத்தால் சிதைக்கப்படுவதற்கு ஒப்பான காட்சிகள் இவை.

      மாலை நேரங்களில் திரு.வி.க பாலத்திலிருந்து வானைப் பார்த்தால் கிழக்கு வானில் ஒளிரும் வெளிச்சப் புள்ளிகள் தலைக்கு மேலே பறக்கும் போது விமானங்களாய் மாறும் மாயத்தையும், கடலோடு கலக்க விழையும் அடையாறு ஆற்றின் விரிவும், அனைத்தின் மீதும் அஸ்தமனச் சூரியனின் ஆரஞ்சு வண்ணம் தீட்டும் ஓவியத்தையும் காண்பவர்கள், சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்தின் மேல் நின்று பார்த்தால் அதே ஆற்றில் ஓடும் கரிய நீர், மென் சூரியனின் ஓவியக் கதிர்களையும் கலங்கடிக்கும் அடர்த்தியில் தேங்கி நிற்பதைப் பார்க்க வேதனை கொள்ளத்தான் செய்வார்கள்.

      நிச்சயமாக அடையாறு ஆறு சென்னையின் வரலாற்றுக்கு முன்பிருந்தே இருக்கிறது.  உலகின் பல ஆறுகள் மனிதனின் வரலாற்றுக்கு முன்பிருந்தே இருப்பவையாக இருக்கக் கூடும்.  முன்னூற்றி எழுபத்தைந்து வருட வரலாறுள்ள நகரத்தில் ஏறக்குறைய முன்னூற்றி இருபத்தைந்து ஆண்டுகள் ஓர் ஆற்றின் அத்தனை அடையாளங்களோடும் திகழ்ந்த அடையாறு ஆறு சில பத்தாண்டுகளாக சந்தித்த துயரம் சென்னை நகரம் அடையாற்றின் வரலாற்றுக்கு இழைத்த துரோகமாகும்.

      மழைக்காலத்தில் நீரைச் சுமந்தும், கோடையில் உடலை உலர்த்தியும் கிடக்கும் அடையாறு ஆற்றில் சென்னை நகரம் எக்காலத்திலும் வற்றாத கழிவு நீரை நிறைத்து வைத்தது.  அதே கோட்டூர்புரத்தில் ஆற்றின் கரையில் குதிரைகளை குளிப்பாட்டினர் என்றும், திரைப்படங்களுக்காக பாத்திரங்கள் ஆற்றில் உலவும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன என்றும் ஞாபகத்தில் மறதியின் திரை விழாதவர்கள் சொல்வதுண்டு.  இன்றைக்கு அதே ஆறு மா. அரங்கநாதனின் சிறுகதையொன்றில் சொல்லப்படுவதைப் போல ஒரு “மகத்தான ஜலதாரையாக” மாறியுள்ளது.  சென்னையின் பெரும் பணக்காரர்கள் அடையாற்றின் வடகரையில் படகுக் குழாம் அமைத்திருக்கிறார்கள்.   மாலை நேரங்களில் அந்த மகத்தான ஜலதாரையின் மீது படகோட்டும் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.  சென்னை அதன் பெரும் பணக்காரர்களுக்கும் கழிவுநீரின் மீது படகோட்டும் வாழ்வைத்தான் பரிசளித்திருக்கிறது.

      பக்கிங்ஹாம் கால்வாயின் மீது பறக்கும் இரயில் பாதையை நிர்மாணித்தவர்கள் இன்றைக்கு நீர்வழிப் பாதை அமைக்க அதனை சீரமைக்கும் வாய்ப்பை பரிசீலிக்கிறார்கள்.  உலகின் நீளமான நன்னீர் கால்வாய் கோட்டூர்புரத்தின் கிழக்கே ஓடிய நினைவே இல்லாமல் ஒவ்வொரு நாளும் பறக்கும் இரயிலில் இருந்து அதன் மீது குப்பைகள் விழுகின்றன.  அடையாற்றின் உபரி நீர் வெளியேறவும், மகாபலிபுரத்திற்கு படகுப் பயணம் செய்யவும் ஒரே ஒரு தலைமுறையின் ஆயுட்காலத்திற்கு முன்பு வரை நீர்வழிப் பாதையாக இருந்த கால்வாயின் மீது பறக்கும் இரயில்களுக்கான தூண்கள் அமைத்தும், கழிவுநீர்ப் பாதையாக அதனை மாற்றியும் தூர்ந்து போகச் செய்தவர்களும் இவர்கள்தான்.  ஏற்கனவே இருந்த ஓர் அமைப்பை சிதைத்து மீண்டும் அதனை மறுசீரமைக்கும் அரும்பணியை பல கோடி மூதலீட்டில் செய்யும் இவர்களது அறிவை நிச்சயம் அண்ணா பலகலைகழகமும், நூலகமும் தந்துவிட முடியாது.

      வேளச்சேரியும், பள்ளிக்கரணையும், பழைய மகாபலிபுரம் சாலைப் பகுதிகளும் சதுப்பு நிலமும், நீர்த்தேக்கங்களும் நிறைந்தவை.  பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மிஞ்சியிருக்கும் பகுதியைத் தேடி வரும் வலசைப் பறவைகள் உயர எழும்பிப் பறக்கும் பேரழகைக் காண்பவர்கள் அந்தச் சதுப்புநிலத்தை அழித்து அதனை சென்னையின் குப்பைக் கிடங்காக மாற்றியதின் காரணமாக எழும் துர்நாற்றத்திற்கு மூக்கைப் பொத்தித்தான் ஆக வேண்டும்.  நல்லவேளை கண்களால் முகர முடியாது.  உலகின் எந்த நகரத்திலாவது சதுப்பு நிலத்தை குப்பைக்கிடங்காக மாற்றியிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.  அத்தனை நீர்நிலைகளைச் சுற்றிலும் எலும்புக் கூடுகளாக உயர்ந்திருக்கின்றன தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும்.  இப்படி ஒரு கலவையான காட்சியை, இயற்கையின் பேரழகின் மீது குப்பைகள் கொட்டும் இடத்திற்கு வெகு அருகிலேயே வளமையின் குறியீடுகளான கண்ணாடிக் கட்டிடங்கள் எழுந்து நிற்பதை இங்கே மட்டும்தான் காண முடியும்.  அதனை அவலம் என்று அழைக்கத் தயங்குபவர்கள் நிச்சயம் கண்ணற்றவர்கள் தான்.  குறிப்பாக மனதின் கண்கள்.

       இன்றைக்கு நீரும், ஆறும் அவற்றின் குணத்தை திரும்பப் பெற்றன.  தற்காலிகமாகவேனும் அடையாறு தன்னை ஓர் ஆறென்று நிரூபித்து விட்டது.  அதன் சீற்றத்தை ஒரிரு நாட்கள் கூட தாங்க முடியாத கோட்டூர்புரம், சைதாப்பேட்டை வாசிகளை மீட்க வானிலிருந்து உதவிகள் தேவைப்படுகின்றன.  மழை நின்றதும் கூட வானிலிருந்து வந்த உதவிதான்.

       எவ்வித கூச்சமும் இல்லாமல் சொல்கிறேன், நான் அடையாற்றின் வெள்ளத்தைக் காண முடியாத, அதன் எக்காளத்தைக் கேட்க முடியாத தூரத்தில் வாழும் துர்பாக்கியசாலியாக இருக்கிறேன்.  மனிதர்களின் வேதனை தற்காலிகமானது.  ஆற்றின் வேதனையோ திரும்பக் கொடுக்க முடியாத வாழ்வின் இழப்பு.  நாம் ஆற்றைக் கொன்றோம்.  அதன் வாழ்வின் மீது கருப்புச் சாயத்தை பூசினோம்.  கால்வாய்களை அழித்தோம்.  பறவைகளின் உணவின் மீது குப்பைக் கூளங்களைக் கொட்டினோம்.  புள்ளி மான்களை குப்பைகளை மேய விட்டோம்.  இன்றைக்கு அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் தெருவில் நிற்கிறார்கள்.  உதவிக்காக வானத்தையும், படகுகளையும் எதிர்ப்பார்த்திருக்கிறார்கள்.

அந்த இடங்களில் சில வருடங்களுக்கு முன்பிருந்த நிலைமை தற்காலிகமாக திரும்ப வந்தது.  அங்கே படகுப் பயணம் மட்டுமே சாத்தியமாக இருந்த காலகட்டத்தின், சூழலின் மறுவருகை அது.  சென்னை அதன் ஞாபகத்தில் குறித்து வைக்க வேண்டிய மறுவருகையின் செய்திதான் இந்த பேரழிவு.  ஆறோ, நீரோ காரணமல்ல, நாம் தான் இந்த பேரழிவின் வாக்கியங்களை எழுதியவர்கள்.

      கருணை மிக்க அடையாறு ஆறு இனி மெள்ள அடங்கிவிடும்.  மிகுந்த பொறுமையோடு அதன் உடலில் சென்னை நகரத்தின் கழிவுநீர் தேங்குவதை அனுமதிக்கும்.  எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அடிவானத்திற்கும் அதற்கும் இடையில் நிற்கும் கடலின் உடைக்க முடியாத நீர்ச்சுவரைக் கடக்க முயலும்.  விமானங்கள் அதன் மீது நிழல் விழ பழையபடி பறக்கும்.  ஆனால் இன்றைய சென்னையோ திடக்கழிவில் சிக்கிக் கொண்ட ஆமையைப் போல வெளியேற வழியின்றி சில நாட்கள் தவிக்கத்தான் வேண்டியிருக்கும்.

      துயரமும், அழிவும், வேதனையும் மனிதர்களுக்கு மட்டுமே நேர்பவையல்ல.  அவை பறவைகளுக்கும், ஆற்றிற்கும், சதுப்பு நிலங்களுக்கும் கூட நேரும்.  பெரும்பாலானவர்கள் மனிதர்களின் பிரதிநிதிகளாக இருந்து அவர்களது துயரத்தையும், அழிவையும் போக்கும் நடவடிக்கையில் ஈடுபட நான் மனிதர்கள் அல்லாதவற்றின் அழிவின் மீது வேதனை கொள்கிறேன்.  சில நாட்களாக அடையாறு ஆற்றின் எக்காளம் ஒலித்ததை, பார்க்க (ஊடகங்களில்) மட்டுமே முடிகிற தொலைவிலிருந்து மகிழ்ச்சியோடு கேட்கிறேன்.  ஒரு நகரத்தை விடவும், அதில் வசிக்கும் மனிதர்களை விடவும் பழைமையான வரலாறும், போற்றுதலுக்கான வாழ்வும் உள்ளவற்றின் எக்காளம் அது.

–  பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

யாளி பேசுகிறது – 11 / கலைப்படைப்பும் படைப்புத்திறனும்

0

 BEATING AROUND THE BUSH

-ஜீவ கரிகாலன்

ரமேஷ் ரக்சனோடு இரவில் ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் போது தான் சொல்லிக் கொண்டிருந்தான். இந்த சோடியம் வேப்பர் விளக்குகள் முழுவதும் மாற்றப்பட்டு வெள்ளை பல்புகளாக மாறிவிட்டால் சென்னையின் இரவின் அழகு போய் விடும் என்றான்.

அது உண்மையில் வாஸ்தவம் தானா என்ன? மஞ்சள் நிறம் உருவாக்கும் அழகு தானா அது, பகலில் தெளிவாகத் தெரியும் அதன் நகரத்தின் லேண்ட்ஸ்கேப்பை இரவில் மஞ்சள் நிற விளக்குகள் தான் அழகாக்குகிறது என்கிற அவன் கூற்றோடு எந்த அளவு ஒத்துப்போயிருக்கிறேன் என்பது வேறு விஷயம். ஆனால், உண்மைக்கு மாறாக, மனயெழுச்சியுடன் சம்பந்தப்பட்டு, ரஸனையின் அளவு கோல்களுக்கு ஏற்ப மஞ்சள் விளக்கால் அழகாகத் தோன்றுகிறது மாநகரத்தின் இரவு. கோட்டுச் சித்திரத்திற்கும், வண்ண ஓவியங்களுக்கும் இருக்கின்ற வித்தியாசம் என்ன ? என்கிற ஐயம் எழுந்த போது அதை நிறைய பேரிடம் கேட்கும் போது வித்தியாசமான பதில்கள் எழுந்தன. ஆனால் ரமேஷிடம் இப்படியான கேள்விகள் எதுவும் கேட்காத போதும்,  அந்த இரவுப் பயணத்தில் ரமேஷிடம் பேசி முடிக்கும் பொழுது “அப்போ இரவின் சென்னையின் அழகு கடைசியாக ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” படத்தில் தான் என்று லேசாக ஒரு கிலேசம்.

கோட்டுச் சித்திரங்களுக்கும், வண்ண ஓவியங்களுக்கும் இருக்கின்ற வித்தியாசம் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை என்றாலும் இப்போது உணர முடிகிறது.

***

அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் எழுந்து நான்கு நாட்களாக எழுத விளையும் பதிவை எழுத முடியாமல் தோற்றுப் போக, மழை விட்ட தடயங்கள் இருக்கும் போதே டூவீலரில் சென்னையில் வலம் வரும் போது மனதில் எழுந்த உபப்பிரதிகள் PHOENETICS KEYBOARDஐத் தேட ஆரம்பித்தன.

KALAIYE EN VAAZKAYIN THISAI MATRINAAI

(Alt + f2)

கடந்த மூன்று நான்கு மாதங்களாக அன்றாடம் கேட்டு வரும் பாடல் ஐ படத்தின் ”என்னோடு நீ இருந்தால்” பாடல், இன்றைய இணைய உலகம் சாதித்தது என்ன? என்றால், ORIGINALITY/TRUTH/DIVINE போன்ற பல உணர்வுகளைத் தகர்த்தது தான். MEAT LOAF எனும் ஆல்பத்திலிருந்த “I do anything for you” பாடல் தான். மேம்பட்ட ரஸனை தான் மற்றொரு படைப்பாகிறதா என்கிற கேள்வியை எழுப்பி பதிவிட்டிருந்தேன். கனவில்

இப்படியான கோட்பாடுகளும், கேள்விகளும் மண்ணுளிப்பாம்பாய் தனக்குள்ளாகவே குறுக்கே நெளிந்து கொண்டிருந்தன.

***

நவம்பர் மாத மழைக்கால நாளொன்றிலிருந்து தான், இந்தப் பயணம் தொடங்கியது. இந்தப் பயணம் எந்தப் பயணம் என்றெல்லாம் கேட்காதீர்கள்? அது ஒரு பயணம் அவ்வளவு தான். அந்தப் பயணம் தொடங்கு மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு கல்லூரி வாழ்கைக்கு இணையான காலம் அது. மழை எப்போதும் நான் நினைத்திருப்பதை எழுத விடுவதில்லை, எங்கேயாவது இழுத்துச் சென்றுவிடும்.

இதே நவம்பர், டிசம்பர் என்பது ஓவிய ஆர்வலர்களுக்கு மிகவும் முக்கியமான காலகட்டம் தான், இந்திய அளவில் பல்வேறு நகரங்களில் அக்டோபர் முதல் ஜனவரி வரை முக்கியமான ஓவியக் கண்காட்சிகள், கருத்தரங்கங்கள் என நடைபெறுவது வழக்கம். சென்னையிலும் ஆர்ட் சென்னை என்று நடந்து வருகிறது இந்த வருடம் அதை பற்றிய அறிவிப்பு இன்னும் கிடைக்கவில்லை.

இந்த வாரம் மீண்டும் சோழ மண்டல் ஓவியர்கள் கிராமத்திற்குள் நுழையும் சந்தர்ப்பம் கிட்டியது. மிகவும் அரிதான ஒரு நிகழ்வு தான், அது வெறுமனே ஓவியக் கண்காட்சியாக மட்டும் அமையவில்லை. CONTEMPLATE எனும் தலைப்பில் அரங்கேற்றப்பட்ட அதன் துவக்க விழா நிகழ்விற்கு சில மூத்த ஓவிர்களுடன் இலக்கியப் படைப்பாளிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். கவிஞர் சுகுமாரன் உட்பட கண்காட்சியின் துவக்க விழாவிற்கு ஐந்தாறு கவிஞர்களாவது வரவழைக்கப்பட்டிருந்த விஷயம் ஆரோக்கியமானதே. ஓவியரும் சகமாணவருமான சீனிவாசன் நடராஜன் இந்தக் குழு கண்காட்சியை CURATE செய்ய, கி.பிரபு ஐந்து நாள் நிகழ்வினையும் ஆவணப் படுத்திக் கொண்டிருந்தார். கவிஞர் நரன் தன்னை ILLUSTRATOR என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ஓவியர் சீராளன் கவிஞராய் இருப்பது எனக்கு முன்னரே தெரிந்த விஷயம் தான். நிகழ்வின் மதிய வேளையில் நடைபெற்ற கவிதை வாசிப்பு நிகழ்வைத் தவற விட்டதன் வருத்தத்தின் சுவடு தான் இந்த பத்தியை எழுத வைக்கிறது போலும். நிற்க.

***

அந்தக் கண்காட்சியில் ஓவியர் விநோத் அவர்களின் உரையைக் கேட்டேன், ART & PERSONALITY என்கிற தலைப்பில் பேசப்பட்ட உரை அது. மிகவும் தேர்ந்த வல்லுனர்கள் பேசிக்கொள்ளும் அரங்காக அந்த நிமிடங்களை இன்னும் நினைவில் கொள்கிறேன். ஓவியத்தில் முதுகலை பயிலும் மாணவர் இவர். PARALLEL READING ஆக தேர்ந்தெடுத்த மற்றொரு முதுகலைக் கல்வி உளவியல். மிக அற்புதமாக தயாரித்திருந்த உரையில் தன்னையும், ஒவ்வொருவரையும் UNIQUE ஆக உணர்ந்திருந்த பக்குவம் அவரது கல்வி மட்டும் போதித்ததாய் தோன்றவில்லை. தனது சொந்த ஊரின் பழைய டூரிங் டாக்கிஸ் பற்றிய நினைவில் படம் பார்க்க விடாமல் அருகில் செல்லும் 2ஆம் நம்பர் பஸ் பற்றி ஆரம்பித்த அவர் உரை. அவர் கண்டடைந்த கலை வடிவம் மீதான அவரது உறுதியான நம்பிக்கையை முன்வைத்தது.

”ஏன் கலைக் கல்லூரியில் கல்வி முடித்த நான் ஓவியனாகத் தான் வெளிவர வேண்டுமா? வேறு கலைஞனாக வரக்கூடாதா” என்றெல்லாம் பேசி வியப்புறச் செய்தார். Work of art எனும் பகுதியை கலையிலிருந்து முழுதும் பிரித்தெடுக்கும் முனைப்பும் ஆர்வமும் அவருக்கு இருந்ததை கண்டுணர முடிந்தது
****

What is art ? அவ்வளவு எளிதாக பதில் சொல்ல முடியுமா என்ன? ஒவ்வொருவரும் தன் வாழ்க்கை முழுவதையும் அதற்கு விலை கொடுக்கிறார்கள். நட்பு, சுகம், நம்பிக்கை, ஆரோக்கியம், பக்தி, வெற்றி, ஆறுதல், தொடர்ச்சி, படைப்பு, ஈர்ப்பு, காதல் என எண்ணற்ற விஷயங்களை பரிட்சித்துப் பார்க்கின்றனர்; தகர்த்துப் பார்க்கின்றனர்; ரசித்து, போஷித்து, கொண்டாடி, வெறுத்துப் பார்க்கின்றனர்.

எத்தனையோ பேர்கள் இளங்கோவை பரிகசித்திருப்பார்கள். நாங்களும் கூட நேராகவே பகடி செய்திருப்போம். படிமம் மேல் படிமமாக்கி படிகாரக் கல் போல் ஆகிவிடுகிறது என்று சீண்டுவோம். ”இந்த HAND WRITTEN – LIMITED EDITION என்கிற வடிவம் பிரத்தியேகமாக இளங்கோவுக்கானது. இதை அவரைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது” என்று அவர் சொல்லும்பொழுது நம்பவில்லை, நம்பினேன். அது இளங்கோவாலும் அவ்வளவு எளிதாக செய்ய முடியாது என. சில திடீர் விபத்துகள் அவனது வாழ்வைக் கடுமையாகப் பாதித்ததில் அவன் சற்று விலகி தான் இருந்தான் எல்லாவற்றிலும்.

ஒவ்வொரு புத்தகத்திலும் 16 கவிதைகள் எழுத வேண்டும் என்று மீண்டும் அவன் எழுதத் திரும்பும் பொழுது ஏற்கனவே தீர்மானித்து வைத்து, DTP செய்து ஸ்பைரல் பைண்டிங் செய்யப்பட்ட கோப்பிலிருந்து கவிதைகளை அவன் தேர்ந்தெடுக்கவில்லை மொத்தமாக 240 கவிதைகள் புதிதாக எழுதியிருக்கிறேன் நண்பா என்றான். இந்த தொகுப்பினை எழுதுவதற்காகவே சில பிரத்தியேகமான எழுதுபொருட்களும் அவனது தேர்விலிருக்கின்றன. யூனிபால் பால் பாயிண்ட் பேனாவும், கிளாஸ் மேட் நோட்டுகளும் என அவன் அந்தக் கடையில் வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது உடனிருந்தேன். எழுதப்போகும் நோட்டுகளின் அட்டைப் படத்தை தேர்வு செய்து கொண்டிருந்தான். மொத்தம் மூன்று டிசைன் அட்டை தான் என்று சொன்ன கடைக்காரன் ஆறு விதமான அட்டையுள்ள நோட்டுகளை எடுத்து வைத்தான்.

மொத்தம் 12 நோட்டுகளும் பத்து பேணாக்களும் வாங்கிக் கொண்டு கிளம்பிய இளங்கோவிடம், எழுதிய விவரங்கள் பற்றிக் கேட்டேன்.

“மொத்தம் 30 பிரிவுகள் கொண்ட அந்த தொகுப்பில் ஒவ்வொரு 10 பிரதிக்கும் ஒரு நோட்டு புத்தகமுமென மொத்தம் எட்டு நோட்டுகள் தீர்ந்திருந்தன என்றும் ஐந்து பேணாக்கள் மை தீர்ந்திருந்தன” என்று சொல்லும் இந்தக் கவிஞர் இருக்கும் உயரம் பிரமிப்பானது. பப்ளிஷரோ, சாரு நிவேதிதாவோ இதை அடையாளம் கண்டுபிடித்ததில் வியப்பேதுமில்லை. இந்த தொகுப்பு முடியும் பொழுது மொத்தம் 30 நோட்டுகள் தனியாகத் தொகுத்து வைத்திருப்பார். இதற்கு பேர் தான் WORK OF ART.

ஓவியத்துறையில் CREATIVE PROCESS மட்டுமல்ல, செய்முறையில் தெரியும் SKILL, DRAUGHTMANSHIP, EXPERIENCE போன்றவை படைப்புக்கு இணையாகப் பேசப்பட வேண்டிய அம்சங்களே.

***

இந்த ஐந்து நாட்கள் நடைபெற்ற கண்காட்சி. ஒரு குழு கண்காட்சி என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் பாண்டி செல்வம் எனும் முதுகலை மாணவரின் ஓவியங்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பாண்டி செல்வத்துடன், கார்த்திக் போர்ட்ரெயிட்டிலும், கோபி மினியேச்சரிலும், யத்திராஜ் தந்ரீகக் கலையிலும், விநோத் உரை மூலமாகவும், சிவா ஓவியங்கள் குறித்த இலக்கிய எழுத்தகளைத் தேடிப் பிடித்து வாசித்து வந்தார். சீனிவாசன் அவர்களின் தாதாயிஸம் குறித்த 1 மணி நேர உரை ஒன்றை அண்மையில் கேட்டிருந்த எனக்கு, இந்தக் கண்காட்சியின் நோக்கத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது.  படைப்பு, கலை என்று வரும்பொழுது வெறுமனே திரும்பத் திரும்பச் செய்யும் செயல்பாடுகளின் மீதான ஒரு அடிப்படைக் கேள்வியை எழுப்பும் முயற்சியாக இதைச் சொல்ல முடியும். 1950களுக்கு முந்தைய ஐரோப்பிய காலத்தில் பரிசோதனை செய்து வந்த கலைஞர்களின் செயல்பாடு இன்றைக்கும் தேவையாக இருக்கும் அளவு மிகவும் கவலை கொள்ளும் நிலையில் தான் படைப்புத் திறனும் அதைப் பற்றிய புரிதலும் இருப்பதாக உணர்ந்த CURATORன் முயறிசி தான் இந்தக் கண்காட்சி.

மூத்த ஓவியர்கள் பலர் இந்த முயற்சியைப் பாராட்டியும் இதில் பங்கேற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தியதையும் பார்க்க முடிந்தது.

போர்ட்ரெயிட் கார்த்திக் உருவாக்கிய ஓவியங்கள் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தன. பாண்டி செல்வத்துடன் நேர்காணல் செய்யலாம் என்று கிடைத்த நேரத்தில் பேசியவற்றிலுருந்து சில துளிகள்.

  • சென்ற வாரம் இதே காலரியில் முரளிதரன் அழகரின் ஜல்லிக்கட்டுக் குறித்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பாண்டி செல்வம் வரைந்திருக்கும் மாடுகள் ஜல்லிக்கட்டு மாடுகளில்லை – அவை மஞ்சு விரட்டு மாடுகள்.
  • அரங்கத்தில் விளக்கமைப்பு சரியாக இல்லாத்தால் சில ஓவியங்களை பகலில் பார்ப்பதற்கு எடுபடாமல் இருந்தது. வருந்தத்தக்க விஷயம்.
  • தன் பாலயத்தின் நினைவுகளிலிருந்து கொண்டு வந்திருக்கும் இந்த மஞ்சுவிரட்டு மாடுகளின் தற்காலம் குறித்த பிரக்ஞை பாராட்டுதலுக்குரியது. எல்லா மாடுகளிலும் குறியீடுகள், செல்போன் நம்பர்கள் எழுதப்பட்டிருந்தது. ராமநாதபுர மாவட்டங்களின் வாழ்வியலை நெருக்கமாக ILLUSTRATE செய்திருந்தன.
  • கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த படைப்புகளில்ஒரே மாதிரியான ரிதம் இருந்ததை அவரிடம் கேட்டபோது, எல்லாமும் 20 நாட்களுக்குள் வரைந்தவை என்று பதிலளித்தார். (இந்த WORK OR ARTஐ எப்படி படைப்பிலிருந்து பிரிக்க முடியும் என்கிற கேள்வி எழாமல் இல்லை). இவற்றிற்கு நாங்களெல்லாம் சென்று வந்த மும்பை ஜெஹாங்கீர் கண்காட்சி ஒன்றிலிருந்து பெறப்பட்ட நம்பிக்கையும் முக்கியமானது
  • தனது ஓவிய வாழ்க்கை எப்படித் தொடங்கியது என்று வழக்கமான என் கேள்வி ஒன்றிற்கு பதில் தந்த அவர் தன் 13 வயது என்று சொல்லும் பொழுது INSPIRE ஆனேன். 13 வயது அதாவது பள்ளிப் படிப்பில் எட்டாவதிலிருந்து ஒன்பதாம் வகுப்பிற்கு செல்லும் ஒருவன், தன் வாழ்க்கையின் போக்கினை அமைத்துக் கொள்வதாக ஒரு நீண்ட உளவியல் ரீதியிலான ஆய்வு ஒன்றை நினைவுப் படுத்தியது.
  • சைன் போர்ட் (விளம்பரத் தட்டி) வரையும் கலைஞராக தன் வாழ்க்கை ஆரம்பித்தவரின் தேடல் என்னவாக இருக்கும் என்று கேட்டறிந்து கொள்ள நேரம் வாய்க்கவில்லை.

ஆனால் ஒரு படைப்போ, சம்பவமோ, சூழலியலோ இவற்றிலிருந்து INSPIRE ஆகாமல் மற்றொரு படைப்பு உருவாகுமா என்பது முடிவற்ற விவாதம் தான். எவற்றிலிருந்து INSPIRE ஆகாமல் ஒரு படைப்பை உருவாக்க முடியும் என்கிற கூற்றும் இருக்கிறது அது ஒருவேளை உச்சபட்ச ஆன்மீக நிலையோ அல்லது BIO-MEMORYயிலிருந்து எழும் படைப்புணர்வோ உறுதியாகத் தெரியாது. ஆனால் INSPIRATIONலிருந்து கட்டுடைப்பு செய்வது படைப்பின் சிறப்பான அம்சமாக இருக்க முடியும் என்றும் தோன்றுகிறது.

அப்படிப் பார்த்தால் படைப்பு எனப்படும் பிரபஞ்சத்தின் சிருஷ்டி எப்படி சாத்தியமானது. அது எப்படி எந்த தாக்கத்திலிருந்தும் பிறவாத ஒரு சொல்லை எப்படி உருவாக்க முடிந்தது. உண்மையில் அது மட்டும் தான் படைப்பாக இருக்க முடியுமா? இல்லை ஷ்ருஷ்டி உருவாகுவதற்கு INSPIRATION ஆக எது இருந்திருக்க முடியும் என்கிற கேள்விக்கான பதிலாக அறிவியல் சொல்லும் கோட்பாடுகளோ, அரசியல் சொல்லும் INTELLIGENT DESIGN என்பது போன்ற சமாளிப்புகளோ இல்லை கலாபூர்வமாக மதம் போதித்த விஷயங்களிலிருந்து ஈர்க்கப்பட்டு உருவாக்கிய ஸிஸ்டின் சாப்பலில் இருக்கும் மைக்கலாஞ்சலோவின் “CREATION” எனும் ஓவியமோ, அதிலிருந்து INSPIRE ஆகி வரையப்பட்ட அந்தோனி அருள்தாஸின் ஓவியங்கள் படைப்பாக இருக்க முடியாதா என்ன? THEME வேறு ஒன்றின் ஈர்ப்பாக இருந்து வந்தாலும் கலை வேலைப்பாட்டின் முக்கியத்துவத்தை IGNORE செய்து விட முடியுமா?

***

INTRIGUING ARRAY OF ART FORMS என்று சொல்ல முடிந்தது. சனிக்கிழமை நடந்த பட்டறையில் எழுப்பப்பட்ட கேள்விகள், எனது எழுத்துகளோடும் SUB TEXT ஆக வரப்போவதை இனி என்னால் தடுக்க முடியாது.

MK NARAYANAN மீது எறியப்பட்ட செறுப்பின் வழி வான்காவின் ஷூக்களை நினைவு கூற வைத்தது. பயணங்களைக் குறிக்கும் வான்காவின் ஷூக்களைப் போல, செறுப்பைக் கொண்டு ஒரு FAKE ART ஒன்றை உருவாக்கி வைத்திட இரண்டும் புரட்சிகரமாகத் தோற்றமளித்தது. கலையில் பிரச்சாரம் இருப்பது கூட INSPIRATION தான், ஆனால் அது கலையாக ஜீவிக்க வேண்டும் என்று உணர்வது அவசியம்.

அசலாக இருந்தாலும் என்னால் MEAT LOAF பாடலைத் தொடர்ச்சியாகக் கேட்க முடியாது தான். “என்னோடு நீ இருந்தால்” பாடலைக் கேட்பது ரஸனை சார்ந்த அம்சம்.  மேம்பட்ட ரசனை தான் இன்னொரு படைப்பிற்கும் வழிவகுக்கிறது.

– ஜீவ கரிகாலன்

கண்காட்சியின் நிழற்படங்கள் சில இங்கே சுட்டவும்

யாளி பேசுகிறது – 10 // ஹடூப் என்கிற முரட்டுக்காளை

0

 – ஜீவ கரிகாலன்

hadop stodgy

அந்த யானைப் படம் போட்ட புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு 10 மணிக்கு உண்ட உணவு செரிக்கும் வரை வாசித்து வருவான் என் தம்பி ஒருவன். அவனிடமிருந்து மற்ற தம்பிகளும் அதை உருட்ட ஆரம்பித்தனர், என்னடா சும்மா சும்மா ஒரு புக்கை கையிலெடுத்துப் படிக்கிறிங்க என்று கேட்டால் அதற்கு பதிலாக ஒரு நாள் “உங்க நண்பர் வா.மவும் அதைப் பத்தி தான் இன்னிக்கு ப்ளாக் எழுதியிருக்கிறார்” என்று சொன்ன பின்பு தான் அந்த ஆறெழுத்து வார்த்தை மனதில் நின்றது. “Hadoop”, இந்த சொல் தினமும் டி.எல்.அஃப் பார்க்கை கடந்து செல்ல வேண்டியிருப்பதால் நிறைய போஸ்டர்களைப் பார்த்ததுண்டு, இதைப் படித்தால் உடனே வேலை என்று கோச்சிங் சென்டர்கள் பிளிறிக் கொண்டிருக்கின்றன. எனது ஃபேஸ்புக்கிலும், ஈமெயிலிலும் கூட விளம்பரம் வந்து கொண்டிருக்கின்றன மானாவாரியாய்.

ஆனால், எனக்கும் வேறு சில நண்பர்கள் இருக்கின்றார்கள், முழுநேரம் விவசாயமும், சில்லறை வணிகமும் செய்யும் நண்பனின் வீட்டிற்கு சென்ற பொழுது, புது சிஸ்டமென்று ( Assembled PC) ஒன்றைக் காட்டியபோது சற்று மிரண்டு தான் போனேன். அவனிடம் கேட்டதற்கு, “இருந்தாலும் பழசுன்னா அப்படியே விட்டுட்டுப் போக முடியுமா, ஆளாளுக்கு எத்தனை FLOPPY வாங்கி வச்சுருப்போம். நான் இன்னுங்கூட எல்லாத்தையும் பத்திரமா வச்சுருக்கேன்” என்று புதிதாய் வாங்கிய கம்ப்யூட்டரில் நச்சரித்து வாங்கிய FLOPPY DRIVEனையும் காண்பிக்கும் போது அவை ஓட்டைக் காலணவுக்கான முன்னோர்களின் பெருமிதமாய் இருந்தது. இவனைக் குற்றம் சொல்லவில்லை, நான் வேலை செய்யும் நிறுவன்ம் மத்திய அரசாங்கத்தின் கலால் மற்றும் சுங்க அலுவலகங்களோடு தொடர்புடையது 2012 வரை FLOPPY பயன்பாட்டில் இருந்தது என்பது எத்தனை பேருக்கு ஆச்சரியமாக இருக்கும் என்பதை உணர முடிகிறது இப்போது என்னால். ஏதோ முந்தைய தலைமுறை ஆளினைப் போல் என் நண்பன் கண் முன்னே தோன்றினான்.

இத்தனை வேகமாக தன் தோலினை சட்டையாக உரித்துவிடும் சர்பமாக உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. இழப்பதன் மதிப்பீடுகள் குறித்துக் கவலை கொள்வாரில்லை. ஸ்மார்ட் போனுக்கு மாறாதவர்கள் வேற்று கிரக வாசிகளாகத் தான் பார்க்கப்படுகிறார்கள். இன்னுமாடா நீ வாட்ஸப்பிலில்லை என்று சென்ற தீபாவளி வரை என்னை எத்தனை பேர் வெறுப்பேற்றி இருந்தனர் என்பது திரிபுர சுந்தரியின் (மிஸஸ் .காமேஸ்வரன்) மளிகைக் கடை லிஸ்ட் போல் மிகப் பெரியது. “ஃபாக்ஸ்புரோ” கோர்ஸ் முடித்து விட்டதற்காக மிகப்பெரிய ட்ரீட் கொடுத்த என் நண்பன், அதை உபயோகப் படுத்த முடியவில்லையே என்று மிகவும் வேதனையுடன் வருத்தப்பட்டப் பொழுது நான் சிரிப்பது குரூரமாய் எனக்குத் தெரியவில்லை.

மாட்டுக்கறி குறித்த செய்திப் பரபரப்பில், மாடுகளுக்கு பதிலாக ஆஜராகி வாதாடிக் கொண்டிருப்பவர்களில் அநேகம் பேர் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்ட போது அதனை ஆதரித்தவர்கள் தான் என்பதில் சமூகாய்வு/அரசியல்/வியாபாரக் கணக்கு ஒன்று உண்டு. ஜல்லிக்கட்டுத் தடை உறுதி செய்யப்பட்ட நேரத்திலேயே வீரமாக சாதிப்பெயர் சொல்லி அழைக்கப்படும் காளைகளும், அவர்களின் முதலாளிகளும் உடனடியாக தங்களுக்கிடையான சிலவாயிரமாண்டு பந்தத்தை உடனேயே முடித்துக் கொண்டு, கேரளாவுக்கு லாரிகளில் ஏற்றிய சம்பவங்கள் பற்றிக் கேள்வி பட்ட போது இருந்த வலி இன்னும் நினைவில் இருக்கிறது. எத்தனை பிசகான அளவீடுகள் நம்மிடம் இருக்கின்றன. அரசும், சட்டமும் கூட வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்குமளவுப் பழக்கப்பட்டிருந்த யானைகளை காட்டு விலங்கு என்கிற பட்டியலில் இருந்து நீக்கியும், காளைகளை அந்தப் பட்டியலிலிருந்து நீக்காமல் வைத்திருப்பதனாலேயே அதனைத் துன்புறுத்துவது (ஜல்லிக்கட்டு எனும் பெயரில்) சட்டப்படிக் குற்றமாகி விடுகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் ஏதாவது ஒரு இடத்திலாவது ஜல்லிக்கட்டு நிகழ்ந்திருந்தால் இன்றளவும் அந்த வழக்குகள் ஒரு முடிவை நோக்கி சென்றிருக்காது தானே.

சோழ மண்டலத்தில் முரளிதரன் அழகர் வைத்திருந்த அவரது தனிநபர் கண்காட்சி அந்த மதிப்பீடுகளின் பிரதிபலிப்பு தான். சின்னாளப்பட்டியைச் சேர்ந்த இம்மனிதர் மதுரை பாஷையை விழுங்கி மறைத்துக் கொண்டு வரவேற்றுப் பேசினார். வெவ்வேறு வகையான காளைகளில் இருக்கும் வித்தியாசங்களையும் தன் படைப்புகளில் வெளிப்படுத்தியிருந்த முரளியின் draughtmanship, “அவ்ய்ங்க” என்று சொல்வதற்கும் முன்பாகவே அவர் மதுரைக்காரர் தான் என்று முடிவெடுக்க உதவி புரிந்தது.

“THE GAME BEGINS” என்கிற டைட்டில் கொடுக்கின்ற உற்சாகத்திற்கு எதிரான மனநிலையில் தான் அரங்கத்திற்குள்ளேயே செல்ல முடிந்தது. அரங்கின் வெளியேவே இந்த CONCEPTUAL வேலைப்பாடுகள் பற்றிய போஸ்டரில், “ஜல்லிக்கட்டு நின்று போன பின்பு” என்கிற வாசகம், சட்டத்தின் வழிகாட்டுதலால் வரலாற்றில் நிகழ்ந்தஅந்த மிக மோசமான முன்னுதாரங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்குத் தடை என்கிற நினைவின் வலி – தலைப்பிற்கான முரண்பாடு தான்.

ஆனால் முரளி, அங்கு வந்திருந்த பல நண்பர்களுக்கு ஜல்லிக்கட்டு நின்று போனதே தெரியாது என்று சொன்னதன் ஆச்சரியம் எனக்கு TRANSFORM ஆகவில்லை, வானகத்திற்கு அடுத்திருக்கும் கிராமத்தைச் சேர்ந்த என்னுடன் வேலைப் பார்க்கும் நண்பனொருவன் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவனாயிருந்தும், வானகத்தில் அத்தனை சாதனைகள் செய்து வந்த நம்மாழ்வாரை யாரென்று அறிந்திடாத வாழ்க்கையைத் தான் வாழ்ந்திருக்கிறான் என்பதும், அவன் இயல்பாகத் தான் இருக்கிறான் என்பதும் அவனைத் தேடி வரும் செய்திகள் அவனுக்கு CUSTOMIZE செய்யப்பட்டு தான் அவனைச் சென்றடைகின்றன என்று சமூக அமைப்பினை, STRUCTURALஆகவே விளக்கிட நேரம் கூடிவரவில்லை. ஆனால் அந்தக் கண்காட்சிக்கு வந்திருக்கும் பல வெளிநாட்டினரும் “ஜல்லிக்கட்டுத் தடையை” நன்றாக அறிந்திருக்கின்றனர் என்று சொல்லும் போது அவர்கள் இந்திய ஆட்டோக்காரர்களின் மனநிலையைத் தவிர எல்லாவற்றையும் துல்லியமாகத் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று சொல்ல வந்தும் சொல்லாமலிருந்தேன்.

download

வாட்டர் கலர் & சார் கோல், அக்ரலிக், மிக்ஸ்ட் மீடியா என்று ஜல்லிக்கட்டினை ஆவனப்படுத்தியிருக்கும் முரளி – சிலவற்றில் செய்திருக்கும் DRIPPING முயற்சிகளின் OUTCOME நன்றாக இருந்தது. அதில் இரண்டு அக்ரலிக் ஓவியங்கள் மட்டும் ஜல்லிக்கட்டுக் காட்சிகளாக அல்லாமல் மனித உடலும் காளையின் தலையுமாக இருந்ததை அவள் பார்வையாளர் ஒருவரோடு விளக்கிக் கொண்டிருக்கையில், PERSONIFIED என்று சொன்னதும், காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் 2014க்குப் பின்பான அவரது படைப்புகளில் ஏதேனும் ஒன்றின் இருந்து அரசியலை எடுத்துக் கொள்ள முடிகிறதா என்று கவனித்தேன். அந்த வாய்ப்பினை காவியும் வெண்மையும் பின்புலத்தில் ஆக இருக்கும்படி வரைந்த ஓவியத்தைத் தெரிவு செய்தது. இத்தகைய CONCEPTUAL PRESENTATIONகளில் படைப்பாளி அவன் நம்புகின்ற அரசியலைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பு ஒன்று வந்துவிடுகிறது. பசுவும், காளையும் தான் கவலைக்குரிய இனங்கள் என்கிற கற்பிதங்கள் ஒருபுறமிருக்க, எங்கள் ஊரூக்கு அருகிலுள்ள ஏதோ ஒரு கோயிலில் ஆயிரக்கணக்கான எருமைக் கிடாக்களை வெட்டி இறைச்சிக்குக் கூடப் பயன்படுத்தாமல் செய்யும் சடங்குகளுக்குப் பின்புலமாக, அதாவது ECOLOGICAL BALANCE முயற்சியாக அறிவியல் பூர்வமாக வாய்ப்பிருக்கின்ற போதும். இன்றையத் தேவை என்ன என்பதே நமக்கிருக்கும் TOP PRIORITY கேள்வி.

இனி இது போன்ற கண்காட்சிகளில் தான் இவற்றைக் காண முடியும் என்று உணர்த்திய முரளியிடம் விடைபெற்றுச் செல்லும்போது, ஓவியரும் நண்பருமான சீனிவான் ஜி அவர்களின் கருத்துகளை கண்ணதாசனோடு பரிமாறிக் கொண்டே அவனோடு பைக்கில் சென்று கொண்டிருந்தேன்.

TRADITIONAL DATA என்று பலவற்றிட்கும் EXPIRY கொடுத்த BIGDATA போன்ற அதிநவீனத் தொழிற்நுட்பங்கள் வழியாக இந்தியாவில் கட்டடக் கலை, கவின்கலைகள், அழிந்து கொண்டிருக்கும் எல்லா கலாச்சார, பண்பாட்டு அம்சங்களையும் இந்த தொழிற்நுட்பங்கள் வழியே பதிவு செய்யவேண்டுமென்கிற அவரது ஆராய்ச்சிக் கட்டுரையின் கருத்துகள் அவை. கலை கலைக்கானது என்று தன்னுள்ளேயிருந்து சொல்லும் கலைஞன் காலத்தில் எத்தனை முன்னோடியாகவும், மக்களுக்குச் செயல்படுபவனாகவும் இருக்கிறான் என்று என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.ஆனால் HADOOP போன்ற தொழிற்நுட்பங்கள் வெறுமனே தகவல் தொழில்நுட்பப் புரட்சியன்று என்றும் அதற்கான பல்வேறு வகையான பயன்பாடுகளை அவர் பட்டியலிட்டது நம்பிக்கை தரும் நாளாகத் தான் இருந்தது. அவர் சொல்வது போல ஜல்லிக்கட்டினை வேறு மாதிரியான இன்ஸ்டலேஷன்களில் காட்சிப்படுத்த முடியும் என்று மனதில் தோன்றியது (Facebookஆல் மட்டுமே நிறைய VISITORS சோழமண்டலத்திற்கு முதன்முறையாக வந்துசென்றது எல்லாம் டிஜிட்டலால் சாத்தியமானவையே).

அயற்சியின் மிகுதியில் சீக்கிரமாகவே இரவில் படுக்கச் சென்று கண் மூடிய அடுத்த நிமிடமே ஜல்லிக்கட்டுக் காளையின் பெருமூச்சு சப்தமும் அவற்றை லாரிக்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கும் கிழிந்த ட்ரவுசர் க்ளீனரின் முகமும் கண்களில் தோன்றியது. இது நான் பார்ப்பதா அல்லது என் நண்பர் காட்டிக் கொண்டிருக்கும் LASER BEAM DOCUMENTARYஆ என்று உறுதியாகத் தெரியவில்லை, இந்த குழப்பங்களெல்லாம் காளிதாசனின் கனவிற்குள் இன்னொரு கனவு கண்டுகொண்டிருக்கும் ஜீவ கரிகாலனின் கனவு தான். காளிதாசனுக்கு எந்தச் சிக்கலும் இல்லை ஏனென்றால் அவனுக்கு HADOOP பற்றி ஒன்றும் தெரியாது.

நன்றி

ஜீவ கரிகாலன்

 

 

ஜீவ கரிகாலன்

வாக்குமூலம்

0

ரமேஷ் ரக்சன்

முன்பெல்லாம் மூர்த்தி, முதலில் வந்து அறைக் கதவைத் திறந்தான் என்றால் அறையில் மின்விசிறி ஓடவில்லை என்பது மெத்தையில் படுக்கும்போது, முதுகில் உணரும் சூட்டின் மூலம் தான் தெரிந்து கொள்வான். மிச்சமிருக்கும் மூவரும் அறைக்குத் திரும்பும் வரை அல்லது சன்னலொட்டிய கட்டில்காரன் வரும்வரை, சன்னலையொட்டி அமர்ந்து கொண்டு எதிரில் தெரியும் வேப்ப மரத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் பழக்கம் கொண்டவன் மூர்த்தி.

இரவு சாப்பிடும் போதுதான் அந்த இடத்தை விட்டு எழுவான். நடுவில் அறை நண்பர்கள் கதவைத் தட்டி, எழுந்து திறப்பதற்கு அவனுக்குப் பிடிக்காது. தாழிடாமல் சாத்தி வைத்துவிட்டு வந்தமர்ந்து கொள்வான். அறையின் மூலையில் ஒரு பீரோ இருக்கும். மொத்தம் ஐந்து அடுக்கு. தனக்கான அறையில் அலைபேசியை வைத்துவிடுவான். பேட்டரியில் சார்ஜ் இருக்கிறதா என்றெல்லாம் மெனெக்கெட்டு ப்ளக் பாயின்ட் தேடிப் போடுகிறவன் இல்லை. காலையில் அலுவலகம் செல்லும் போது திரையில் தெரியும் தவறிய அழைப்புகளை வரிசையாக அழைத்துப் பேசுவான். எல்லாம் நொடிகளில் முடியும் அழைப்பு தான். நீண்டாலும் முடித்துவிடுவான்.

அறையின் சன்னலையொட்டி வெளிப்பக்கம் சிமென்ட் சீட் இறக்கப்பட்டு அதன் கீழ் ஓர் இரும்புக் கடையுண்டு. வெய்யில் காலங்களில் சிமென்ட் சீட்டில் உதிரும் வேப்பம் பூக்களை, அது மரத்திலிருந்து உதிர்வதை ரொம்ப கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருப்பான். கவிதை கூட இப்படித்தான் நொடிகளுக்குள் உதிர்கிறது என்று மூவரிடமும் அவன் அடிக்கடி சொல்ல நினைத்ததுண்டு. கேலி செய்தாலோ, இல்லை அது எப்படி என்று கேள்வி கேட்டாலோ தன்னால் அந்த உணர்வை விளக்க முடியாது என்பதை அறிந்து ஒருபோதும் சொல்லியதில்லை.

யாருமில்லை என்று ஒருசில நேரங்களில் வருந்திக் கொள்வான் சில சமயம் நல்லவேளை யாருமில்லை என்று சந்தோசப் பட்டுக்கொள்வான். இந்த மனது எதற்குத்தான் இப்படி அடிபோடுகிறது என்ற சந்தேகம் ஒருபோதும் தீர்ந்ததில்லை. அப்படி உணரும் போதெல்லாம் இரவு 12 மணி வாக்கில் அறையிலிருந்து கிளம்பி ரோட்டோரம் நிற்கும் திருநங்கைகள், அவர்களின் ஆடை அலங்காரம், உணர்ச்சியற்று அழைக்கும் கண்கள், புன்னகை, வாடிக்கையாளரிடம் பேசுவது. மேலும் இவனை அடிக்கடி பார்த்திருப்பதால் அவர்கள் கண்டு கொள்வார்கள்..

***

ஒருமுறை எதற்கென்றே தெரியாமல் மூவரும் மூன்று ப்ராண்ட்களில் ஆணுறையைப் பரிசளித்தனர். யாருமில்லாத அந்த அறையில் அவனுக்கு அது திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்து கொண்டிருந்தது. அறையைக் காலி செய்திருந்த இரண்டாவது நாள் அலைபேசி அழைப்பில் எதற்காக வாங்கி வைத்தோம் என்பதை ஒருவன் சொன்னதைத் திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டான். “அந்த அளவுக்கா வாழ்கிறோம்” என்ற சந்தேகம் மூர்த்தியை மிகவும் தொந்தரவு செய்தது. திருநங்கையிடம் பேச்சுக் கொடுக்கச் சொன்னது, பகலில் நட்பாகவாவது பேசிப் பழகச் சொன்னது, என்று எல்லாம் நினைவில் வந்துகொண்டே இருந்தது.

கதவையே பாத்துக்கொண்டிருந்தான்.

சன்னலையொட்டி ஒடுங்கியிருந்தவனை நெருங்கி வந்த பெண்ணொருத்தி அவன் ஆடைகளைக் களைந்து, தானும் நிர்வாணமாகி மல்லாந்து படுத்துக் கொண்டாள், அவனின் தலையைத் தன் மார்பழுந்த எடுத்து வைத்து, அவன் காலைத் தன் அடிவயிற்றிற்குச் சற்று மேலே முட்டி அழுந்துமாறு போட்டுக் கொண்டாள்.

அழுகை பீறிட்டு வந்தது மூர்த்திக்கு.

டீக்கடையில் தேயிலைத் தண்ணீரைப் பாலில் ஊற்றுவதை, நுரை பொங்க மேலும் கீழுமாய் ஆற்றுவதை, பனியனில் இருந்த கரையை, உதட்டுக்குள் அதக்கியிருக்கும் பாக்கினால் பிதுங்கி நிற்கும் உதட்டை, கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்து நின்றவன், தனக்கொரு டீ சொல்லிக்கொண்டான்.

சற்று நேரத்திற்கு முன் ஒரு பெண் தன் அருகில் படுத்துக் கொள்வதுபோல வந்த காட்சி, கண்ணாடிக் கோப்பையின் சூடு உள்ளங்கைக்கு வேண்டுமெனப் படவும், கொஞ்சம் அழுத்திப் பிடித்துக்கொண்டான். கண்கள் இரண்டும் மிகவும் வறண்டு விட்டதாகவும், இனி நமக்குக் கண்ணீரே இல்லை. வற்றி விட்டதாகவும் ஒவ்வொரு மிடறு பருகும் போதும் எண்ணிக் கொண்டிருந்தான். வாழைக்காய் சீவிக் கொண்டிருந்தவர் கூப்பிட்டு டீக்குக் காசு கொடுக்க மறந்து சென்று கொண்டிருப்பதைச் சொன்னார்.

பார்வையின் வழியே எண்ணெய் போல ஏதோ நீந்திக் கொண்டிருந்தது. கண்களை அழுந்த தேய்த்தும் அகலுவதாய் இல்லை. ஒவ்வொரு படிக்கட்டுகளிலும் கால் எடுத்து வைக்கவே சிரமமாய் இருப்பது போல உணர்ந்தான். பூட்டு மங்கலாய்த் தெரிந்தது. அழுகிறோமா என்று கண்களை தொட்டுப்பார்த்துக் கொண்டான். அறையில் இனி எந்தச் சத்தமும் இருக்காது. கெட்ட வார்த்தைகள் எதுவும் கேட்கப் போவதில்லை. பாக்கு வாடை இருக்கப் போவதில்லை. தனிமைப் படுத்தப்பட்டு விட்டோமோ என்று பயமாய் இருந்தது அவனுக்கு. ஆடைகளெல்லாம் பாரமாய் இருப்பதாய் நினைத்து, சன்னலையும் சேர்த்து சாத்திக் கொண்டான்.

மூர்த்தியின் கண்கள் தெருவழியே அலையத் தொடங்கியது. இதுவரை அவன் கண்ட மரணத்தின் சுவரொட்டிகளை எல்லாம் யோசிக்கத் தொடங்கினான். நாம் ஏன் மரணமடைந்தவர்களின் போஸ்டர்களைப் பார்ப்பதற்கு இப்படி அலைகிறோம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே நிற்காமல் அவன் கண்களில் அலுவலகம் செல்லும் வழியெங்கும் தென்படும் போஸ்டர்களை எல்லாம் யோசித்துக் கொண்டிருந்தான்.

***

ரோட்டோர சுவரொட்டியில் இருக்கும் புகைப்படத்தை வைத்து மூர்த்தி ஒரு கணக்குப் போடுவான். பிறந்த வருடத்தையும் இறந்த வருடத்தையும் கடந்து செல்லும் அந்த சில நொடிகளில், இந்தப் புகைப்படம் எந்த வருடம் எடுக்கப்பட்டிருக்கும்? வயது என்னவாக இருக்கும்? ஒருவேளை இவர் தனியாக இருப்பது மாதிரி இந்த ஒரு புகைப்படம் தான் எடுத்திருக்கிறாரா? இப்படி நுணுக்கமாய்க் கவனிப்பான். என்னதான் சுற்றிச் சுற்றி வர்ணங்களில் போஸ்டர்கள் இருந்ததாலும் மூர்த்திக்குப் பளிச்சென்று தெரிவது இந்தக் கருப்பு வெள்ளை போஸ்டர்கள் தான். தன் கண்கள் ஏன் இந்தக் கருப்பு வெள்ளை நிறத்தை இப்படி விரும்புகிறது என்ற சந்தேகமும் ஒவ்வொரு போஸ்டர் பார்க்கும் போதும் வருவதுண்டு. விடை தெரியாதது பற்றிப் பெரிதாய் அலட்டிக் கொண்டது இல்லை.

கிறித்துவ வீட்டில் உள்ள போஸ்டர் என்றால் பிரிந்து வாடுபவர்கள் என்று பெயரிட்டிருக்கும் பட்டியலை ஒன்றிரண்டையாவது மனனம் செய்து கொள்வான். பெண்களின் பெயர்கள் மேல் எப்போதும் தீராக் காதலுண்டு அவனுக்கு.

***

திருப்பத்தில் மெதுவாக வந்து கொண்டிருந்தது அந்த ஸ்கூட்டி. ஒடுங்கிய தெருவில் நடப்பவரின் பக்கத்தில் வந்துதான் திரும்ப முடியும். பிங்க் கலர் நிறத்தில் லெக்கின்ஸ் தான் மூர்த்தியின் கண்ணில் பட்டது. பெண்கள் அதிகம் பேர் ஏன் அந்த நிறத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற யோசனை, ஒரு விபரீத பதிலைக்கொடுத்தது மூளை.

இடுப்பு வரை அகன்றிருந்த மேலாடையின் விலகலால், உள்ளாடை தொடையை இறுகப் பிடித்திருக்கும் அந்த வளைவைப் பார்த்தவன் அலுவலகம் சென்றும் கூட அந்தச் சிந்தனையிலிருந்து விலகாமலிருந்தான். அவர்களுக்கு ஏன் பிங் நிறம் பிடித்திருக்கிறது என்று யாரிடமாவது தனக்குத் தோன்றியத்தைச் சொல்ல வேண்டும் என்று எண்ணினான். ஆனால் இந்த பதிலை “ஏ” ஜோக் போல மாற்றிச் சொல்லலாமா அல்லது சீரியசான பதிலாகவே விவாதிக்கலாமா என்று யோசித்துக்கொண்டே அலுவலக நேரத்தைக் கடத்தி விட்டான்.

மேன்சனில் வலப் பக்கம் பத்து அறைகள் இடப் பக்கம் பத்து அறைகள் கொண்ட நீண்ட வராண்டாவில் நடந்து கொண்டே இருந்தான். இறந்தவர்களுக்கான போஸ்டரோடு இப்போது லெக்கின்சும் ஒட்டிக்கொண்டது மூர்த்திக்கு.

***

“நீங்க எந்த ஊர்? என்ன வேலை பாக்குறிங்க?” இப்படி பொதுவாகப் பேசத் தெரிந்தவனில்லை அவன். இதற்கு முன்பிருந்த மேன்சனில் “இதுக்குப் பேசாம செத்துரலாம்” என்று தனக்குள் கேட்கும் குரலில் இருந்து தப்புவதற்காக ஏதாவது ஒரு அறையை வெளிப்பக்கமாகத் தாளிட்டு விடுவான். பின்னர் உள்ளிருந்து கதவு தட்டும் ஓசை கேட்டு முதல் ஆளாய்த் திறந்து, அவர்கள் திட்டத் தொடங்கவும் கூட சேர்ந்து திட்டி, அப்படியே பேச்சுக் கொடுப்பான். அரை மணி நேரம் அந்த எண்ணத்திலிருந்து தன்னைத் தற்காத்துப் பின்னர் விடுபடுவான்.

அறை நண்பர்கள் வரும் நேரம் தெரியுமென்பதால் யாரிடமாவது இதைச் சொல்லித் தீவிரமான ஓர் உரையாடல் நிகழ்த்த வேண்டுமென்ற எண்ணம் மூர்த்தியை விடுவதாய் இல்லை. ஓர் அறையில் கதவைத் தாளிட்டுப் பின் அவனே சத்தமில்லாமல் விடுத்து, தன அறைக்குச் சென்று படுத்துக் கொண்டான்.

விரலில் நகங்கள் அதிகம் வளர்ந்திருப்பதாய்த் தோன்றியது மூர்த்திக்கு.

மூர்த்தி கேள்வியைக் கேட்டதும் “நீ பொண்ணுங்கள பத்தி எல்லாம் பேசுவியா” என்று வெறுப்பேற்றினான் ஒருவன். “எதோ முடிவோட வந்திருக்க நீயே சொல்லிரு” என்ற சலிப்பான பதில் காரசாரமாய்ப் பேச்சு வளர வாய்ப்பில்லை என்பதால் அவனே பதிலையும் அதற்கான காரணத்தையும் சொன்னான்.

“நம்ம மொட்டு பிங்க் கலர்…”

“ஆப்போசிட் ரீ ஆக்சன்”

“அது எப்டி கல்யாணம் ஆகாத பொண்ணுங்களுக்கும்? கேணப்…” கெட்ட வார்த்தை கூட முழுதாய்ச் சொல்ல முடியாத அளவுக்கு ஆர்வம் கூட இருந்தவர்களுக்கு. .

“இதுக்கு நீ ஏவாள் காலத்துல இருந்து வரணும்” என்று அந்த விவாதத்தை முடித்தான் மூர்த்தி.

***

வெளிச்சங்களை விரும்பாதவன் மூர்த்தி. எதையாவது எழுத வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு. அவன் கட்டிலின் மெத்தைக்குக் கீழ பேப்பர் பேனா எப்போதும் இருக்கும்.

காகிதத்தில் வைத்த கையை அடுத்தடுத்து தூக்கி வைத்து எழுத முடியாத அளவிற்கு சோம்பேறியாய் உணர்ந்தான். பிறகு கவிதையாக்கிக் கொள்ளலாமென்று பத்தியாய் எழுதிவிட்டு மல்லாந்து படுத்துக்கொண்டான். முட்டு மடங்கும் பின் பகுதியிலிருந்து வியர்த்து வழிந்து கொண்டிருந்தது. கட்டிலில் கிடந்த டவலை எடுத்து துடைத்துக்கொண்டான்.

கோடுகளோ, கட்டங்களோ இல்லாத இந்த சட்டைகளெல்லாம், உலகம் ஒரு நாள் அழிந்து போகும் அன்று நான் ஒரு சட்டை அணிந்திருப்பேன். அப்போது அந்தச் சட்டை முழுக்க, அந்தத் துயரை எழுதி வைத்து இறந்து போவேன் என்று நினைத்துக்கொண்டான்.

***

யாருக்காவது அழைத்து எனக்குத் திருநங்கைகள் மேல் விருப்பம் இல்லையென்றும் மனபாரத்தை இறக்கி வைப்பதற்காக அவர்களின் முகத்தைப் பார்த்துத் திரும்புவதாகவும், அது ஒருவித விடுபடல் போலத் தோன்றுவதாகவும் அழைத்துச் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். அறையின் சூட்டால் முகத்தில் தாடியிருப்பதும், அது எரிச்சலை உண்டு பண்ணுவது போலவும் உணர்ந்தேன்.

சலூன் கடைக்காரரின் முழங்கை என் இடுப்பிலும் வயிற்றுப் பகுதியிலும் அனிச்சையாய்ப் படுவது போல, வேண்டுமென்றே தொட்டுக் கொண்டிருந்தது. பெரும்பாலான கடைகளில் மறுக்கப்பட்ட அக்குள் சேவிங், என்னிடம் “பண்ணவா” என்று கேட்டு எந்தன் அனுமதியையும், நளினத்தையும் கூச்சத்தையும் வெற்றுடம்பில் ஒருமுறை உரசி சோதித்துக் கொண்டார்.

சாலையின் கரையோரம் வழி நெடுக தோண்டிப் போட்டிருப்பது எங்கு முடிகிறதோ அதனையொட்டியிருக்கும், சைக்கிள் அல்லது பைக் மட்டுமே செல்லக்கூடிய பாதையில் இடப்பக்கம் திரும்பி வந்து நின்றால் நான் நிற்பேன் அதனருகில்தான் தங்கியிருக்கும் வீடு என்று சொல்லியிருந்தார். நான் எப்படி “அந்த இடத்தில்” இன்னொருவன் சவரம் செய்ய ஒத்துக் கொண்டேன் என்றே தெரியவில்லை. அது வெறுமனே ஷேவிங்கிற்கான அழைப்பு மட்டுமில்லை என்பதை சலூன் கடை இருக்கையிலிருந்து எழும் போதே தெரிந்து கொண்டேன். இருந்தும் என்னால் செல்வதைத் தவிர்க்க முடியவில்லை.

அவன் வாய் வழியே என் உயிரைப் பிரித்து எடுப்பது போலத்தான் உணர்ந்தேன். அதன் பிறகுதான்…

ரமேஷ் ரக்சன்

 talk2rr@yahoo.com

யாளி பேசுகிறது – 09 // போதாத காலம்

0

யாளிக்கும் இது போதாத காலம் என்று தான் தோன்றுகிறது. அகண்ட வாயிலிருந்து தொங்கும் நாவானது, அரசினை எதிர்த்துப் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தால் வெளியே வந்திருக்குமோ என்னவோ, ஒருவேளை நெல்லையப்பர் கோயில் அம்மன் மண்டபத்தில் உள்ள குரங்கினைப் போல் உடலில் சேதம் விளைவித்து அதை மறைப்பதற்கு ஏதுவாய் வேறெதுவும் கூட கட்டித் தொங்கவிடப் படலாம்.

சமகாலக் கலை எது?

1970களோடு நின்று போய்விட்ட நவீனக் காலத்திற்குப் பின்னே உருவான எல்லாப்படைப்புகளும் சமகாலக்கலை என்கிற பார்வையை ஒரு நண்பரிடமிருந்து கேள்விப்பட்டேன், அவர் படைப்புகள் என்கிற இடத்தில் மிக அழுத்தம் தெரிவித்து இருந்தார் என்பதையும் இங்கே சொல்லிவிடுதல் உத்தமம்.

சென்னை தமிழ்நாடு அரசு இசைப் பல்கலைக்கழகத்தில் CONTEMPORARY ART EXHIBITION என்கிற தலைப்பு உள்ளே சென்று வரப்பணித்தது. நண்பர் ஒருவரிடம் கேட்ட போது, இது முக்கியமான கண்காட்சி தான் ‘போய்ப் பாரு’ என்று புன்னகைத்தார். வழக்கமான புன்னகைதான்.

“உள்ளே சென்ற எனக்குப் பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது” என்பது அநேக துப்பறியும் கதைகளில் நடந்ததைச் சொல்லும் ஒரு அபலையின் குரல் தான். இப்போது நானும் அப்படியே சொல்கிறேன், SG வாசுதேவ், RM பழனியப்பன், அச்சுதன் கடலூர், கே. முரளிதரன் , நரேந்திர பாபு, டக்ளஸ், கே.பாலசுப்ரமணியன் என பலரின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மெட்ராஸ் ஸ்கூலின் படைப்பாளிகளை ஒரு சேர பார்ப்பது என்பது உற்சாகமூட்டும் விஷயம் தான் என்று உங்களிடம் நான் சொல்லியிருக்க வேண்டும்.

ஒரு ஊரின் பெரிய கோயிலுக்கான தேர்த்துனியை, ஒரு கண்மட்டுமே இருக்கின்ற தன் அப்பா ஒருவராகவே அளந்து, வெட்டி, படம்வரைந்து உருவாக்கினார் என்று சொல்லியபடி, அந்த தேர் இழுக்கப்படும் உற்சவத்தில் “இந்தத் தேர் பனிரெண்டாவது முறையாக அணிந்திருக்கிறது” என்று நிழற்படத்தைக் காட்டி மகிழும் முகத்தில் அசலான ஒன்றை கண்டு ரசிக்க முடிந்தது.

ஒரு நள்ளிரவில் – ஓ.எம்.ஆரில், முன்னதே கேள்விப்பட்டிருந்தும் தலைவலி மாத்திரை கூட வாங்காமல் அந்த பிரம்மாண்ட இயக்குநரின் படத்தைப் பார்த்துவிட்டு வந்த தலைவலியைப் போக்கிட ஒரு தேநீர் தேடி அலையும் நேரத்தில் மூன்று முறை காவலர்களின் கெடுபிடி சோதனைகளுக்கு ஆளாக நேர்ந்திருந்தது. ஆனால் ஒரு சைக்கிளில் தேநீர் சிகரெட், பன், பழம் என வைத்துக்கொண்டு நடுநிசியில் பயமில்லாமல் சுறுசுறுப்பாக வியாபாரம் செய்ய ஒருவனால் எப்படி முடிகிறது என்பதற்கு பதில், அவனது வெள்ளைச் சட்டையின் பைகளில் சொருகியிருக்கும் ஆளுங்கட்சியின் உறுப்பினர் என்னும் அட்டை, ஒரு சிறுதொழில் செய்வதற்கே அரசியல் செய்யவேண்டியிருக்கிறது என்பது சமூகத்தின் நிர்பந்தமாகிப் போய்விட்ட காலத்தில்…

இருந்த உறவையெல்லாம் இழந்துவிட்ட ஒருத்தன், கரித்துண்டுகளாலும், செங்கற்பொடியாலும் ஒரு வெள்ளைச்சுவற்றில் மனதில் பதிந்த அந்த இரும்புப் பெட்டியில் வரைந்திருந்த மூன்று ஓவியங்களில் ஒரு ஓவியத்தின் சுவடு இன்னும் அழகாய் மாறியிருக்கிறது. ஒரு கையில் பீடியை வழித்தபடியே வரைந்து கொண்டிருக்க, ஒரு ஸ்தபதிக்கு கோயிலில் எடுபிடியாக வேலைக்குச் சேர்ந்ததில் அவனுக்கு கற்றுக்கொள்வதற்கு என்று வேறேதுமில்லாமல் போனதற்கு காரணமாயிருந்த அந்த சித்திரக்காரனை அவன் சபிக்கவேயில்லை. தனது முதுகிற்குப் பின்னே “உச்” கொட்டும் சமூகம் மீது எந்த மரியாதையும் இல்லை, அக்கறையுமில்லை.

பிரச்சினை எல்லாமே நாம் மதிக்கின்ற, போற்றுகின்ற, நாம் நம்புகின்ற கலை மீது தான். சமகாலக் கலை மற்றும் தஞ்சாவூர் ஓவியங்களின் அணிவகுப்பு என்று தமிழக முதல்வரின் முகப்புப் படம் போட்ட ஃபேஸ்புக் பக்கம் சொல்லும் போது கூட எனக்கு எந்த முன்யோசனையும் இல்லை, துணைவேந்தரின் செய்திக் குறிப்பில் சமகாலக்கலையும், தஞ்சாவூர் ஓவியங்களும் சங்கமம் என்ற அறிவிப்பில் இருக்கும் மடிப்பினைத் தெரிந்து கொள்ளும் அளவு ஞானம் இல்லை என இப்போது அந்த நண்பரின் புன்னகையை நினைவு கூர்கிறேன்.

ஊட்டியில் இயங்கிவரும் மேக்கேன் கட்டடக்கலை பள்ளி (MCGAN’s School of Architecture) ஏற்பாடு செய்திருக்கும் கண்காட்சி அது, மேற்சொன்ன தமிழகத்தின் முன்னோடி ஓவியர்களோடு, அப்பள்ளியின் மாணவர்களும் தங்களது படைப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர் போலும், ரவிவர்மாவின் ஓவியம் ஒன்றில் வேறொரு பெயரைப் பார்த்தபோது தான் அந்த ஆச்சரியம் எழுந்தது, விசாரித்தால் அது மாணவரின் ஓவியமாம், லலித்கலாவில் இந்தோகொரிய கலாச்சார பண்பாட்டு பகிர்வாக காட்சிப்படுத்தப்பட்ட கொரியப் பள்ளி மாணாக்கார்களின் படைப்பும் அப்படியான ஒன்றாகத் தான் இருக்குமோ என்றும் அதைத் தான் அரசும் முன்னிருத்துகிறதோ என்கிற கேள்வியை இரண்டு முறை அழித்துவிட்டு தான் மீண்டும் தட்டச்சு செய்கிறேன். ஓ.எம்.ஆரின் தேநீர் கடைக்காரருக்கும் இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்பவருக்குமான வித்தியாசங்கள் பல இருக்கலாம், ஆனால் இருவரும் அரசியல் முகவரிகளால் தங்கள் நிறுவனத்தைப் பாதுகாக்கத் தெரிந்தவர்கள்.

CREATIVE DISPLAY என்பது எப்படியோ இருக்கட்டும் – மிகமோசமான காட்சிப்படுத்தல் எப்படி இருக்க முடியும் என்று புரிந்து கொள்ள உதவியது இக்கண்காட்சி என்பது மிகையல்ல, மிகவும் பழமையான தஞ்சாவூர் ஓவியம் ஒன்று ஒளித்து வைக்கப்பட்டது போல் கடைசியாக வைக்கப்பட்டிருந்ததிலிருந்து, தொங்கிக் கொண்டிருக்கும் ஓவியங்களை விட லேபிள் விலையுயர்ந்ததா என்ன? என்று கேட்குமளவுக்கு ஒரு ஓவியத்தில் தவறு ஒன்று திருத்தி எழுதப்பட்டிருந்தது, விநாயகரின் சற்றே பிதுங்கிய மார்பினை நினைத்து அந்த அரங்கக்காப்பாளர் அதை தேவி என்று எழுதியிருக்கிறார். அது திருத்தி எழுதப்பட்டிருந்த வரலாறு பற்றி அடியேனுக்கு எதுவும் தெரியாது என்பதில் வருத்தமே.

தஞ்சாவூர் ஓவியங்கள் எந்த இனக் குழுவிற்கு சொந்தமானது? அதற்கென மொழி அடையாளம் என்று ஏதேனும் உண்டா என்கிற கேள்விக்கு அடிப்படைத் தமிழக வரலாறு தெரிந்திருந்தால் போதுமானது. தமிழகத்தின் தொன்மையான கலையாக இருந்த சித்திரக்கலையின் நீட்சியாக இன்று நாம் எதைத் தக்கவைத்திருக்கிறோம்? அல்லது நாம் இன்று தமிழர்களின் கலை என்று எதை மார்தட்டிச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்? இவ்விரண்டும் இரு வேறு கேள்விகளாய் தோன்றவில்லை

மராட்டியர்களின் வரவிற்குப் பிறகு தான் சாம்பார் என்கிற உணவு தமிழனின் தாளியில் சேர்ந்தது என்று சொன்னால் கூட யாரேனும் உணர்வாளர்கள் என்னை பழிக்கலாம். கேழ்வரகுக் கூழ் பற்றி அவர்களிடம் விழிப்புணர்வு செய்வது யாளியின் நோக்கமல்ல.

தமிழக முதல்வரின் இருபது பெரிய ஓவியங்களை, அலங்காரம் செய்து அதை தஞ்சாவூர் ஓவியங்கள் என்று பெயரிட்டிருப்பதால் அவற்றை தஞ்சாவூர் ஓவியங்கள் என்றே நம்ப வேண்டும் என்பது தமிழகத்தின் தலையெழுத்து. தமிழக முதல்வரின் கலையுலக வாழ்க்கையை பொன்னாலும், விலைமதிப்பற்ற கற்களாலும் விலைமதிக்கவியலா வரலாற்றில் பதிவது தான் கண்காட்சியின் நோக்கமெனத் தெரிந்தது. இதனோடு சமகாலக் கலைஞர்களென நம்பியிருந்த கலைஞர்களின் படைப்புகளோடு ஒட்டவைத்து எதையோ கட்டுமானம் செய்ததாகத் தோன்றுவது, கட்டடக்கலைப் பள்ளியின் சேர்மேன் அவர்களின் கனவுத் திட்டமா அல்லது கனவுத் திட்டத்தின் பிரதிபலனா என்கிற ஐயம் நிதர்ஸனம்.

நாம் பார்ப்பனவற்றில் நம் மனதில் பதிய வேண்டியவை இவை தான் என்று முன்னமே தீர்மானித்து CUSTOMIZE செய்து கொள்ளும் திறன் இருந்தால் தேவலை தான். இங்கே, இதற்கு இணையான உதாரணமாக, ஸெம்மொழி மாநாடு நடந்த வரலாறு தெரியுமா என்றும் எதிர் அரசியல் பேசலாம் தான். அரசு போடும் தீவனத்தை எதிர்பார்க்கும் சமூகத்தை தான் முதலில் சுட்ட வேண்டியிருக்கிறது என்பது யாளியின் மன உறுதி

“ஒரு சமூகம் எல்லாவகையிலும் பின் தங்கிப்போய்விடும் என்பதை அதன் முகமான கலை வடிவங்களின் நிலையிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். ஆட்சியிலிருப்பவர்களை அண்டித் தான் கலைஞர்கள் பிழைக்க வேண்டியிருக்கிற நிலை சாபக்கேடு. வெகுஜன ஊடகங்களின் செயல்பாடு இப்படி இருந்தால் பரவாயில்லை, சமகாலக் கலைப் பண்பாடுகளின் அதிதீவிர இயக்கங்களும் இவ்வாறே வாழவேண்டிய நிர்பந்தம் இருப்பதாகத் தம்மைக் காட்டிக்கொண்டு இருப்பது, உறக்கத்திலிருந்து எழவே விரும்பாத சமூகத்தின் நிலையாகத் தான் இருக்கிறது. நாம் வாழும் காலத்திலேயே அச்சமூகத்தோடு சேர்ந்து ஜீவ சமாதியாகிப் போய்விடத் தான் மனம் நாடுகிறது…” என்று கிறுக்குத்தனமாய் ரோட்டில் கத்தியபடி நடந்து சென்ற ஒருவன், இறந்து போன யாரோ ஒருவனின் நினைவாக வைத்திருந்த அந்த ஒட்டுபோட்ட ஜோல்னா பையிலிருந்த சில கரித்துண்டுகளையும், ஓட்டுச் சிதிலங்களையும் கையில் எடுத்தான். ஒரு வெள்ளைச் சுவர் அவனை வா… வா… என்று அழைத்தது..

 

யாளி தன்னைத் தானே கல்லைச் சமைக என்று சாபமிட்டது

பன்னிரண்டு மரணங்களின் துயர் நிரம்பிய தொகுப்பேடு

0

                    பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

ஒரு சிட்டுக்குருவியை கல்லெறிந்து கொன்ற பிறகு கண்ணாடியில் என்ன தெரியும்?

ரு சிட்டுக்குருவி கல்லடிபட்டு விழுகையில் கல்லை எறிந்த கரத்திற்கு சொந்தமான மனிதனின் முகத்தைப் பார்ப்பதை விடவும் நிலத்தில் வீழ்வதற்கு பயணம் செய்ய வேண்டிய தொலைவை அளவிடும்.  பொறுக்க முடியாத வலியோடு சுழன்று விழும்போதும் பறக்கும் ஒன்றால் நிலத்தில் வேகமாக விழுந்துவிட முடியாது.பறக்கும் உயரம் அதிகமாக இருந்தால் நிலத்தில் மோதுவதற்கான காலமும் அதிகரிக்கும்.  விரைவில் மயக்கமடைவதற்காக கணக்கற்ற முறை சுழன்றாலும் நரம்புகளில் வலியின் வெள்ளம் குறையாத சிட்டுக்குருவின் உதிரத்துளி அதற்கும் முன்பாகவே நிலத்தில் விழுந்து அது விழ வேண்டிய இடத்தை அடையாளமிட்டு வைக்கும்.  மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றையும் அறிந்திராத பறவை அதன் மரணம் சின்னமிடப்பட்டு காத்திருப்பதை சத்தமின்றி ஏற்றுக் கொண்டு வலியோடு வீழும்.  பிறகு கல்லெறிந்த அந்த மனிதனின் குழப்பமான கனவுகளில் ஒரு துளி உதிரம் அந்தர வெளியிலிருந்து முகிழ்த்து ஒவ்வொரு முறையும் அவன் முகத்தில் சொட்டும். அவனால் அதைத் துடைக்க முடியாது.  ஒவ்வொரு நாளும் செந்நிறக் கறையோடு கண்ணாடியில் தெரியும் அவன் முகத்தில் ஒரு பறவையின் உருவம் தலைகீழாய் சுழலும்.

அறுந்த வால் பல்லியின் கேட்கப்படாத பிரார்த்தனை

குட்டிப் பல்லியின் எலும்புக் கூடு குளியலறையில் கிடந்தது.  வாலறுந்த குட்டிப் பல்லி நேற்றுத்தான் அதன் உடல் மீது வழியும் நீரில் நனைந்து, தடுமாறி, நீர்வழியும் துளைகள் நிரம்பிய தட்டிலிருந்து வெளியே வந்தது.  தட்டிலிருந்து வெளியேறும் வரை நிறுத்தப்பட்டிருந்த நீர் பெய்தல் பல்லி கொஞ்சம் நகர்ந்ததும் மீண்டும் பொழிந்தது. மீண்டும் நீர்வழியும் துளைகள் நிரம்பிய தட்டு. அறுந்த வால் பல்லி அதன் உடல் மீது சோப்பு மணமிக்க நீர் பொழிவது நிற்க வேண்டுமென்று பிரார்த்தித்தது.  வால் அதுவாகவே முளைத்துவிடும்.  தானாகவே நிகழ்பவைகளுக்காக யாரும் பிரார்த்திக்கத் தேவையில்லை. அதன் பிரார்த்தனை எல்லாம் கடைசித் துளி நீரும் உலகிலிருந்து உடனடியாக மறைவதே.  இன்று, எலும்புக்கூடான பல்லி இருட்டுக் குழி கண்களால் உலகைப் பார்த்தது.  அதன் பயங்கரத்தில் உலகம் அதிர்ந்து குலுங்கியது.  யூனிஃபார்ம் அணிந்த டிரம்பெட்டுகள் இசைக்கும் பேண்ட் வாத்தியக்காரர்களோடு கண்களைக் கொறித்து ஊர்வலம் எடுத்துச் சென்ற எறும்புகள் தின்ன விரும்பாமல் விட்டுப் போன குச்சி எலும்போடு, நீர் வழியும் துளைகள் நிரம்பிய தட்டின் ஒரு துளையில் மறைவதற்கு முன்பாக விடைபெறுபவர்களின் புன்னைகையோடு குளிக்கும் மனிதனைப் பார்க்கும்.  அவன் தண்டுவடத்தில் சொருகும் பனிக்கத்தி அதன் குருத்தெலும்பில் இரண்டு இருட்டுக் குழிகளை செதுக்கும்.

நாயின் மரணத்திற்கு சாட்சியாகும் சோடியம் வேப்பர் விளக்குகள்

டிபட்டு சாகும் நாய்களில் ஒரு நாய் இனி எக்காலத்திற்கும் சாலையின் மீது வெறுப்பைத் தரும்.  அவ்வளவு வேகத்தில் சாலையில் உருளும் யாருக்கும் அந்த நாய்க்காக பிரேக் அடிக்கத் தோன்றாது.  செத்துப் போன நாயின் பிதுங்கிய உறுப்புகள் தெரு நாய்களின் குண்டுப் பற்களை விடவும் அச்சமூட்டுவது என்றாலும் செத்துப் போன நாயின் மதிப்பு தெரு நாயின் மதிப்பை விட செட்டியார்கள் சொல்வதைப் போல கால்வீசம் குறைவானதுதான்.  தெருநாய்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.  செத்துப் போன நாயைப் பற்றி தெருநாய்களும் கவலைப்படுவதில்லை.  ரப்பர் சக்கரங்களின் அழுத்தம் தாளாமல் வலி மிகுந்த ஊளையால் கிழிந்த அதன் தோலைப் பார்த்திருக்கும் விளக்குகளின் காதுகளில் இரவு முழுக்க கதையாகச் சொல்லும். செத்துப் போன நாய்களின் வலி மிகுந்த ஊளையை காதுகளால் கேட்க முடியாது.  மிகுந்த அஜாக்கிரதையோடு அந்த நாயின் கழுத்தில் பிணைத்திருந்த லெதர் பெல்ட்டின் கடவுளின் முனையை கைநழுவ விட்ட அவன் தான் இனி சாலையில் பயணிக்கும் ஒவ்வொரு நாளும் செத்துப் போன நாயின் வாழ்க்கை சரிதத்தை தார்ச்சாலையின் ப்ரெய்லி பள்ளங்களில் வாசிப்பான்.

புகையாகக் கரைந்த சிகரெட்டிற்காக யாரும் துக்கப்படுவதில்லை

ரண்டு ஸ்தூபிகளுக்கு இடையே புகையாகக் கரையும் இலைத்துகள்களின் வாழ்க்கையை கரிசனம் மிகுந்த நுரையீரல்களின் ஆழக் கிளைகள் குறிப்புகளாக எழுதும்.  பூட்ஸ்கால்களால் நசுங்கும் பஞ்சு வடிகட்டிகள் வலியின்றி முணங்கும்.  வடிகட்டிளின் மீது நெருப்பு தீண்ட யாரும் அனுமதிப்பதில்ல பூட்ஸ்கால்களின் மீது அவை எப்போதும் நன்றியோடிருக்கும்.  சாதனைகளின் புத்தகங்களில் அதிக நேரம் எரிந்த சிகரெட்டைக் குறித்த செய்திகள் இல்லாததால் இலைத்துகள்களின் ஆயுட்காலம் அவரவர் கற்பனைக்கே விடப்பட்டிருக்கிறது.  இறந்த சிகரெட்டுகளுக்காக துக்கப்படுகிறவர்கள் அடுத்த சிகரெட்டை புகைக்க மாட்டார்கள்.  துக்கமில்லாதவர்களால் சிகரெட்டுகளை அனுபவிக்கவும் முடியாது. அதனால் சிகரெட் புகைத்தல் விரல்கள் சிக்கிக் கொள்ளும் ஒரு பொறி.  முடிவற்ற வெளியை விரல்களின் இடைவெளி நிதம்பத்தின் வழியே பார்க்கும் சிகரெட்டுகளின் கண்கள் சமிக்ஞை விளக்குகளின் சிவப்புப் புள்ளிகளால் ஆனவை.  நினைவில் இன்னும் மரித்திராத முதல் சிகரெட்டின் சிவப்புப் புள்ளிகளால் கடைசி சிகரெட் சிலையாக நிற்கும்.  காலம், ஆளில்லாத லெவல் கிராஸிங்கில் தண்டவாளத்தைக் கடக்கும் நத்தையாக தூரத்தில் புகை தெரிவதைப் பார்த்து நகரும்.  சிகரெட் பிடிப்பவனின் வாழ்க்கை ஒரு சிகரெட்டின் வாழ்க்கையை விட எந்த விதத்திலும் வேறுபட்டதில்லை.

ஷூ லேஸ்களின் இசை

ழையாலும் காலத்தின் ஈரப்பதத்தாலும் நனைந்து நைந்து போன ஒரு ஜோடி தோல் ஷூக்கள் மாடுகள் மேயும் குப்பையில் கிடக்கும்.  பசியாறாத நாய்கள் கடித்து பல்லுடைந்து விலகிய பிறகு, கீறல்கள் விழுந்த உடல்களை ஒரு ஜோடி ஷூக்கள் மாற்றி மாற்றி நக்கி ஆறுதல் சொல்லிக்கொள்ளும்.  கைவிடப்பட்ட துயரத்தை லேஸ்களின் குறுக்காகப் பிணைந்திருக்கும் தந்திகளில் ஒலியின்றி இசைக்கும்.  ஷூக்களின் அழியாத இசைக் குறிப்புகளை வாசித்தறியும் பறவைகள் கூடடைந்ததும் பேடைகளிடம் கள்ளச் சிரிப்போடு சேதியாகச் சொல்லும். மழைக்காலம் முழுக்க கொசுக்களின் முட்டைகளை அடைகாக்கும் ஷூக்கள் எதற்கும் இருக்கட்டுமென்று சில வளர்ந்த கொசுக்களை வெளிச்சம் படாத அவற்றின் உள்ளறைகளில் நீர்க் கண்ணிகளில் சிக்க வைத்திருக்கும்.  செத்துப் போன கொசுக்கள் செத்துப் போன நாய்களுக்கு நேர் எதிரானவை, தீங்கற்றவை.  கொசுக்களின் குடல், அடிபட்டு செத்து போன நாயின் குடல்களைப் போல அவற்றின் இருப்பை தம்பட்டம் அடிப்பதில்லை. ஆக…ஷூக்களில் நிகழ்ந்த ஒரு கொசுவின் மரணம் கிழவிகளின் மரணத்தைப் போல வெற்றிலை மெள்ளுவதற்கு ஒப்பானது.  குளிரில் நடுங்கும் கருமையான நீர் தேங்கிய ஷுக்களை மாநகராட்சி பணியாளர்கள் மழைக்காலத்திற்குப் பிறகு நெருப்பு மூட்டி ஜூவாலைகளின் கம்பளியால் மூடுவார்கள்.  புகையின் புலப்படாத கரையில் கரையேறும் ஷூக்கள் அவற்றை அணிந்திருந்த கால்களின் பித்தவெடிப்பு துர்நாற்றத்தை மெள்ள மறக்கும்.  கால் விரல்களின் ஞாபகம் சுமாரானது.  அவற்றால் ஷுக்களின் நினைவைத் தேக்கி வைக்க முடிவதில்லை.

மூடும் கதவுகள்

தாமரை விதைகளின் மூலத்தோற்றத்தை விளக்குவது தாமரைகளின் மூலத்தோற்றத்தை விளக்குவதை விடவும் கடினம்.  சதுப்பு நிலங்கள் எல்லா நீரையும் நன்னீராக மாற்றும் என்று புவியியலாளர்கள் அறிவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வலசைப் பறவைகள் அறிந்திருக்கின்றன. அவைதான் பரிசுத்த வெளிச்சம் நிரம்பிய காலை வேளையில் எவ்வளவு உற்சாகமாக பறக்கின்றன. சதுப்பு நிலங்களில் வளர்ந்த புற்களுக்கு இடையே மீன்குஞ்சுகள் சூரியனைப் பார்க்க துள்ளி வரும் செய்தியை வலசைப் பறவைகள் இரண்டு வரிசைகளின் கடைசிப் பறவைகளுக்கும் கடத்தும்.  அவைதான் பரிசுத்த வெய்யில் நிரம்பிய மதிய வேளையில் சதுப்பு நிலங்களின் வளர்ந்த தாவரங்களின் அடியில் நீரில் மிதந்தபடி ஓய்வெடுக்கும்.  அவைதான் பரிசுத்த ஆரஞ்சு வண்ணம் நிரம்பிய மாலை வேளையில் எவ்வளவு நிறைவோடு எழும்பிப் பறக்கின்றன. வலசைப் பறவைகள் இரண்டு வரிசைகளின் கடைசிப் பறவைகளிடமும் அவை உண்டு முடித்த மீன்களுக்காக மெளனம் காக்கச் சொல்லும்.  பரிசுத்த இருள் நிரம்பிய இரவில் அவைதான் எவ்வளவு அமைதியாக நாளைதான் பிறப்பவை போல மரங்களின் இலைப்பெட்டிகளில் அடைந்து கொள்கின்றன. மனிதன் அத்தனை குப்பைகளையும் சதுப்பு நிலத்தில் கொட்டுவான்.  மனிதன் மனிதனை வெறுப்பவன். மனிதன் மனிதன் அல்லாதவற்றையும் வெறுப்பவன். ஆக மனிதன் எல்லாவற்றையும் வெறுக்கிறான் என்கிற தர்க்கத்தின் அடிப்படையில் மனிதன் சதுப்பு நிலத்தை குப்பை கொட்டும் இடமாக மாற்றி வைத்திருக்கிறான்.  நல்ல நிலங்களையும் குப்பைக் கிடங்காக மாற்றும்  மனிதனைப் பற்றி அறிந்திராமல், பிறிதொரு நாளின் பரிசுத்தமான வெளிச்சம் நிரம்பிய காலை வேளையில் நினைவுகளில் மீன்கள் துள்ள சதுப்பு நிலம் வரும் வலசைப் பறவைகள் எவ்வளவு பயங்கரமாக கூட்டாகத் தற்கொலை செய்துகொள்கின்றன.  சக உயிரிகளான பறவைகள் தற்கொலை செய்யும் அவலத்தை பார்க்க சகிக்காத நான் அத்தனை கதவுகளையும் மூடினேன், உலகின் மிகப் பெரிய கதவான எனது கண்கள் உட்பட.

மென்மையானவற்றை கிழிப்பதற்கு தேவைப்படும் உலோக நகங்கள்

னிதனைக் கொன்றால் அவனுடைய இதயமும் மரிக்கும் என்பது எளிமையான ஒரு புரிதல்.  ஆனால் ஓர் இதயத்தைக் கொன்றால் மனிதனும் மரிப்பான் என்பது அவ்வளவு எளிமையாகப் புரிந்துகொள்ளக் கூடியதல்ல.  இதயத்தை கொல்வதற்கு உங்களுக்கு ஒரு சமையலறைக் கத்தி போதும்.  ஆனால் அதன் துடிப்பைக் கொல்வதற்கு துரோகம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.  நுழைந்து வெளியேறும் ஒவ்வொரு இரத்த அணுவிலும் குறையாத அன்போடு உங்கள் முகத்தை பச்சை குத்தும் இதயத்தின் தசைகளில் இரத்தக்காட்டேரிகளின் உலோகப் பற்களை சொருகத் தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஜெ.சி.பியின் உலோக நகங்களால் கிழிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அல்லது உலோகக் கலப்பைகளால் உழுது எள் விதைக்கத் தெரிந்திருக்க வேண்டும். அல்லது உலோகக் குண்டுகளால் சிதைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  மென் தசைகளால் இதயத்தைக் கொல்ல முடியாது.  அறுக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே பல் நிரம்பிய இரம்பங்கள் எளிதாகக் கிடைக்கும்.  மேசையில் கிடக்கும் பல் நிரம்பிய இரம்பத்தின் முன்னே, அறுத்த பிறகும் ஓர் இதயம் துடிப்பதின் அறிய முடியாத விதியை வியப்போடு டிராகுலாக்களின் காதல் கடிதங்களில் தேடுகிறான் சிம்னி விளக்கின் ஒளியில் அப்போதுதான் துரோகம் புரிந்த ஒரு காதலன்.

அனைத்தும் நடனமாடும் காலி அரங்கு

ரவின் மரணத்தை வாசிப்பதற்கு முன்பாக நாம் பகலை புரிந்துகொள்ள வேண்டும்.  அற்பவமானவைகளின் மீதும், அபூர்வமானவைகளின் மீதும் ஒன்றுபோலவே வெளிச்சத்தைப் பாய்ச்சும் பகல் நீதியுணர்வு மிக்கது.  பகலின் அத்தனை வெளிச்சமும் ஒரு கண்ணிலிருந்து வருவதை நம்மால் பார்க்க முடியும்.  நகராத அந்த கண்ணின் மைய அச்சிலிருந்து ஒரு குரல் வெளிச்சத்தின் வழியாகக் கேட்கிறது அல்லது அது வெளிச்சத்தின் குரலேதான்.  ஹைட்ரஜன் கிதார்களின் மெல்லிய ஒலி பெருகிப் பெருகி ஹீலிய டிரம்ப்பெட்டாக ஒலிக்கும் அணுக்களின் குரலில் ஒரு ஜீகல்பந்தி.  வெளிச்சத்தைப் பார்ப்பதற்கு பதிலாக அதன் ஒலியைக் கேட்க வேண்டும்.  வெளிச்சம் மழையின் நேரெதிரானது இல்லையென்றாலும் மழையை கேட்பது போல வெளிச்சத்தையும் கேட்க வேண்டும்.  ஒன்று நீராலானது மற்றொன்று துகள்களால் ஆனது.  மழைக்கு நேரெதிர் என்று ஏதாவது இருக்கிறதா?…..

காதுயர்த்தி உறங்கும் எலிகள் பகல் வெளிச்சத்தின் குரலைக் கேட்காமல் வங்குகளில் பதுங்கியிருக்கும்.  அவை எப்போதுமே வெளிச்சத்தின் குரலை விடவும் இருளின் அமைதியில் சுகம் காண்பவை.  மலர்களின் மீதும் படகுகளின் மீதும் படரும் பகல், காம்பின் மீதும், நீரின் மீதும் அசையும் இரண்டின் அசைவுகளும் வேறுவேறுவானவை என்று கண்டுகொள்ளும்.  காம்பு ஒற்றை விரலால் மலரை அசைக்கிறது.  நீரோ எண்ணற்ற அலைகளால் படகை அசைக்கிறது.  ஆனால் வனங்களை அசைப்பதற்கு எரிமலைகள் பெருமூச்சு விட வேண்டும். பகல் அசைவதற்கு?… அவர்கள் எப்போதுமே சொல்வார்கள் எதிரெதிரானவை மட்டுமே ஒன்றை முழுமையாக்கும் என்று.  பகல் அல்லது இரவு இரண்டில் ஒன்று மட்டுமே இருப்பதை யாரும் விரும்புவதில்லை.  யாருமே விரும்பாத ஒன்று என ஒன்றுமே இல்லை. மனிதர்கள் ஒவ்வொருவரும் அவரவர் சொந்த மலத்தைக் கூட விரும்புகிறவர்கள். பகல் என்னவெல்லாம் செய்கிறதோ அதற்கு எதிரானவற்றை இரவு  செய்வதில்லை.  பகல் என்னவெல்லாம் செய்வதில்லையோ அவற்றையே இரவு செய்கிறது.  எதிரானது இல்லை, அது ஒரு நீட்சி.  பொறுப்புணர்வு மிகுந்த இரவுதான் அத்தனையும் செய்து முடிக்க வேண்டும்.

பகல் ஒற்றை விளக்கின் வெளிச்சத்தைத் தவிர வேறெந்த விளக்கும் ஒளிர்வதைப் பார்த்ததில்லை.  இரவோ விளக்குகளின் வரலாற்றையே சொல்லும்.  சுள்ளிகளைத் தின்னும் நெருப்பிலிருந்து இப்போது வந்த எல்.இ.டி விளக்குகள் வரை.  இரவு, விளக்குகளின் வரலாற்றை நிலவின் மறைந்திருக்கும் பின்பக்கத்தில் சுதந்திரமாக பாறைகளில் செதுக்கி வைத்திருக்கிறது.  வேறெவற்றையும் விட விளக்குகள்தான் இப்போது வரை நிகழ்பவைகளின் சாட்சியமாக இருக்க முடியும்.  விளக்குகளின் இருப்பில் அல்லது இன்மையில் மட்டுமே இப்போது வரை அத்தனையுமே நிகழ்ந்திருக்கின்றன.

உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழிக்கும் போதும், இருட்பாதைகளில் நடக்கும் போதும், சுரங்களில் உலோகங்களைத் தோண்டும் போதும் நீரைப் போலவே மனிதனுக்கு விளக்குகளும் முக்கியமானவை.  சில நேரங்களில் இருளை அஞ்சுவதைப் போலவே விளக்குகளையும் மனிதன் அஞ்சுகிறான்.  கள்ள முயக்கத்தின் சமயத்தில், வங்கிகளின் அலார அமைப்பை உடைக்கும் போது, யாருமற்ற கடற்கரையில் நிர்வாணமாகக் குளிக்கையில் முகங்களில் எதிர்பாராமல் படும் விளக்குகளின் ஒளியை நான் உட்பட எல்லோருமே வெறுக்கின்றனர்.  இரவு, மலைகளின் மீதும் அதைவிட மரங்களின் மீதும் விரைவாகப் படரும்.  ஆனால் இரவுகளின் அந்திமக் காலத் துடிப்பை பறவைகள் மட்டுமே சொல்ல முடியும்.  இலைகள்தான் பறவைகளுக்கு அந்த இரகசியங்களை சொல்பவை.  மலைகளுக்கு இலைகள் இல்லை.  பகல் ஒரு மியூசியம்.  இரவு ஒரு காலி அரங்கு.

மாட்சிமை பொருந்திய ராணியின் துக்கப்படும் பதக்கம்

ந்தப் பதக்கம் நீலக் கோட்டின் மார்புப் பகுதியில் ஒரு வாழ்க்கையின் சாகசம் மிகுந்த பகுதியை பார்க்கின்ற கண்களுக்கெல்லாம் சொல்லும்.  ஜெனரல்களின் ஆர்டரின் பேரில் தூர நிலங்களுக்கு கப்பல் ஏறிய இந்திய சிப்பாய்கள் மாட்சிமை பொருந்திய பிரிட்டிஷ் ராணிக்கு வெற்றியையும் அவளது அரண்மனைக் கொடிக்கு பெருமையையும் தேடித் தர மட்டக் குதிரைகளோடும் விக்கர்ஸ் கம்பெனிக்காரர்களின் .303 பிரிட்டிஷ் இயந்திரத் துப்பாக்கிகளோடும் எடை மிகுந்த பூட்ஸ் அணிந்த அச்சு நாடுகளின் மூன்று இராணுவங்களுக்கு எதிராக போரிட்டவர்களுக்காக வழங்கப்பட்ட பதக்கம்.  உச்சபட்ச கெளரவமிக்க ”விக்டோரியா கிராஸ்” பதக்கம் அல்ல.  நீலக் கோட்டின் மார்புக் பகுதியை அலங்கரித்த அந்தப் பதக்கம் சாதாரண சிப்பாய்களுக்கானது.

பதக்கங்கள் கிடைக்கப் பெறாத சிப்பாய்கள் அவர்களது வாட்களோடு வீடு திரும்பினார்கள்.  போரின் நினைவாகவும் அவர்களது வாழ்க்கைக்கு ஒரு கெளரவத்தை அளிக்கும் விதமாகவும் வாளோடு வீடு திரும்பியவர்களை விடவும் பதக்கதோடு வீடு திரும்பியவர்களுக்கு சொல்வதற்கு துப்பாக்கிகளின் ஓசை மிகுந்த சாகசக் கதைகள் அதிகமிருந்தன.

டுனிசியாவில் இத்தாலிய இராணுவத்திற்கு எதிராக போரிட்டதற்காக வழங்கப்பட்ட அந்தப் பதக்கம் தினமும் துடைக்கப்பட்டதால் பளபளப்போடு, நீலக் கோட் அணிந்த கிழவன் பஸ் ஸ்டாண்டில் குவியும் வெளிநாட்டுப் பயணிகளிடம் சுட்டு விரலால் தொட்டுக் காட்டி உடைந்த ஆங்கிலத்தில் பெருமைப்பட்டுக் கொள்வதை வேடிக்கை பார்த்தது.  அத்தனை சாகசக் கதைகளின் முடிவில் சில்லறைக்காக கையேந்தும் நீலக் கோட் அணிந்த கிழவினின் முகத்தில் அவன் உறங்கும் போது ஆணியில் தொங்கும் பதக்கம் காறி உமிழும்.  சாதாரண சிப்பாய்களுக்கு இராணுவப் பென்சனுக்கான அடையாள அட்டைகள் பதக்கங்களை விடவும் பயனுள்ளவை.  நீலக் கோட் அணிந்த கிழவனின் கையில் விழும் சில்லறைகளின் மீது பதக்கம் சிறுநீர் கழிக்கும்.  ஒரு பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியின் ரோஸ்நிறக் கைகளிலிருந்து நழுவி நீலக் கோட் அணிந்த கிழவனின் மார்பில் கிடைப்பதை நினைத்து கேவலுடன் அழும் பதக்கத்திற்கு அறுந்த நூலோடு தொங்கிக் கொண்டிருக்கும் கோட் பட்டன்கள் ஒவ்வொன்றாக ஆறுதல் சொல்லும்.

நள்ளிரவில் தூக்கமின்றி விழித்த பதக்கம் அசைவின்றிக் கிடந்த நீலக் கோட் அணிந்திராத கிழவனைச் சுற்றிலும் ஆட்கள் இருப்பதைப் பார்த்தது.  அந்தக் கோட்டோடு அவனைப் புதைத்தார்கள்.  பழைய பொருட்களை வாங்கும் சைக்கிள்காரனின் பாலிஎத்திலின் சாக்குப் பையில் நெருக்கியடிக்கும் பிளாஸ்டிக் குப்பைகளோடு சண்டையிட மனமில்லாமல் ஆறுதலுக்கு பட்டன்களும் இல்லாத வாழ்வை எண்ணி விதியை நொந்தது இரண்டாம் உலகப் போர் பதக்கம்.

கத்திரிக்கோல்கள் எனும் இரட்டைப் பிறவிகளும் வரலாறு தொங்கும் மீசையும்

கூர் மழுங்கிய கத்தரிக்கோல்கள் வீடுகளுக்குள் காணாமல் போய்விடும்.  அதுவும் மீசை வெட்டும் கத்தரிக்கோல்களை சாணை பிடிப்பதும் இல்லை, தூக்கி எறிவது இல்லை.  துருவின் செம்பழுப்புப் புள்ளிகள் வண்டுகடி போலப் பரவி அதன் இரட்டை உடலை நிறைக்கும்.  தலையில்லாத கத்தரிக்கோல்களை தூக்கி எறிவதற்கு முன்பு காகிதத்தின் முனைகளில் அதன் கூர்மை பரிசோதித்துப் பார்க்கப்படும்.  வீட்டிற்கு வரும் குழந்தைகள் கத்தரிக்கோல்களை விளையாடுவதற்கு எடுக்கும் போது அவை கூர்மை இழந்திருந்தாலும் பழைய நினைவில் விரல்களை வெட்டுவதற்கு முனையும் என்பதால் கவனமாக கையாளச் சொல்வோம்.  பிரிக்கப்படாத கத்தரிக்கோல்களின் முனைகள் சேர்ந்து மீன் வாயாக மாறும்.  ஒரு கத்தரிக்கோலை கிடைமட்டத்தில் வைத்தால் மீன் போலத் தெரியும்.  வெட்டும் போது அந்த மீன் அசைந்து அசைந்து துணிகளிலோ, காகிதங்களிலோ அதற்கான பாதையை உருவாக்கும்.  மீசை வெட்டும் கத்தரிக்கோல்களால் பால் அல்லது தயிர் பாக்கெட்டுகளைக் கூட யாரும் வெட்டுவதில்லை.  பெரும்பாலும் பெண்கள் தான் பால் பாக்கெட் முனைகளின் சுத்தம் குறித்து கவலைப்படுவார்கள். ஆனால் இந்த வாக்கியம் பேச்சலர் அறைகளுக்கு பொருந்தாது.

தையல்காரர்களின் கத்தரிக்கோல் எடை மிகுந்தது.  காகிதங்களை கத்திரிக்கும் கோல்கள் ஆரங்சு வண்ண விரல்பிடி உடையவை.  மீசை வெட்டும் கத்தரிக்கோல்கள் கருப்பு விரல்பிடி உள்ளவை.

பிளாஸ்டிக் உறைகளுக்குள்ளே இருக்கும் போதும் கூர்மையுள்ள கத்திரிக்கோல்களை எல்லோரும் அஞ்சுவார்கள்.  உறை பிரித்ததிலிருந்து ஒவ்வொரு முறை கையாளுகையிலும் கத்திரிக்கோல்களின் மீதான அச்சம் விலகுவதில்லை.  அவைகளுக்கு துணையாகக் கிடைத்த பிளேடுகள், சமயலறைக் கத்திகள், பிளாஸ்டிக் குமிழியை மேல் நோக்கி நகர்த்த எட்டிப்பார்க்கும், பேனா ஸ்டேண்டில் இருக்கும் பார்சல் உறைகளைப் பிரிக்கும் கூரான சிறு கத்திகளை விடவும் சின்னஞ்சிறிய கத்திரிக்கோல்கள் அப்படியொன்றும் ஆபத்தானவை இல்லையென்றாலும் தையல்காரர்களின் எடை அதிகமான கத்திரிக்கோல்கள் எப்போதும் ஒரு பழம்பொருருளுக்கான ஜமீன்தார் காலத்து பெருமிதத்தோடு பழைய வாட்கள், பாடம் செய்த விலங்குகள், ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்காரர்களின் துப்பாக்கிகள், சுவரோவியங்களுக்கு இணையாகவே அவற்றை நடத்தக் கோரும்.

தொழிலுக்கும், கொலை செய்யவும் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பிருப்பதால் மட்டுமே தையல்காரர்களின் கத்திரிக்கோல்கள் பூஜைக்குரிய அங்கீகாரத்தை பெற்றுவிடுகின்றன.  யாராவது மீசை வெட்டும் அல்லது சமையலறைக் கத்திரிக்கோல்களை ஆயுத பூஜை தினத்தன்று வழிபடுவார்களா?….சலூன்காரர்களின் கத்திரிக்கோல்கள் வேறு விதமானவை.

தையல்காரர்களுக்குத்தான் துணியை நேர்கோடாக வெட்டிவிட்டால் எவ்வளவு பெருமிதம்.  கச்சிதமாக வெட்டி முடித்ததும் கத்திரிக்கோல்களை முத்தமிடுகிறார்கள்.  துணிகளை முகர்ந்து பார்க்கிறார்கள்.  கண்பார்வை, ஊசி, கத்தரிக்கோல் மூன்றின் கூர்மையும் அவ்வப்போது பரிசோதிப்பதே தையற்காரர்களின் வேலைக்கு முன்பான தயாரித்தல்.

ஆனால் இந்த துருப்பிடித்த கத்திரிக்கோல்களை எவ்வளவு அச்சமின்றி ஏளனமாக வீசியெறிகிறார்கள். அப்படி ஒரு கத்தரிக்கோல் அதன் உடலின் புள்ளிகளைத் தடவி அழுவதைக் கேட்டேன்.  மறக்கப்பட்ட அதன் இருப்பை ஒப்பாரியாகப் பாடியது.  நான் மட்டுமே அதைக் கேட்டேன். என்னால் மட்டுமே செம்பழுப்பு புள்ளிகள் நிறைந்த கத்திர்க்கோல்களின் புலம்பலைக் கேட்க முடியும் என்று நம்பினேன்.  ஏனெனில் அடிக்கடி என்னையே ஒரு கைவிடப்பட்ட கத்திரிக்கோலாக கற்பனை செய்து கொள்வேன்.  அதுவும் கூர்மை மழுங்கிய, வரலாறு தொங்கும் மீசையால் மறக்கப்பட்ட கத்திரிக்கோலாக.

ஆதியிலே இருந்த வார்த்தையும் இறந்த வார்த்தையும்

மெத்தப்படித்தவர்கள் சொல்கிறார்கள் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு படிமம் என்று.  ஒவ்வொரு வாக்கியமும் ஒரு மேற்கோள் என்று சொல்பவர்களும் உண்டு.  மொழி என்பதே முழுக்க மேற்கோள்களால் ஆன ஓர் அமைப்பு என்று இன்னும் ஆழமாகப் படித்தவர்கள் சொல்கிறார்கள்.  ஒரு பெயர் படிமமா?..மேற்கோளா?…அது ஒரு தலைப்பு.  புத்தகத்தை புரிந்துகொள்ள நமக்கு ஒரு தலைப்பு தேவைப்படுவதைப் போலத்தான் ஒவ்வொன்றிற்கும் அதனதன் பெயர்கள்.  சிலர் தலைப்பிற்கும் உள்ளடக்கத்திற்கும் சம்பந்தமே இல்லாத புத்தகத்தைப் போல அவர்களது வாழ்க்கை இருப்பதாக நம்புகிறார்கள்.  உதாரணத்திற்கு பனி மூடிய சிகரம் என்று தலைப்பிடப்பட்ட பாலைவன மணல் அமைப்புகளைக் குறித்த புத்தகத்தைப் போல.  பாலைவனத்திற்கு மணல் எப்படியோ அப்படித்தான் அந்த சிகரங்களுக்கு பனியும் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போனதற்கு காரணம் அவர்களுக்கு ஒவ்வொரு வார்த்தையும் ஒரு படிமம் என்ற நம்பிக்கை இல்லாததால்தான்.   ஆதியிலே வார்த்தை இருந்தது என்கிற வாக்கியமே கூட ஒரு படிமம்தான்.  ஒரு வார்த்தை இறக்க முடியுமா?….மொழி என்பது இறந்த வார்த்தைகளை உயிர்ப்பிக்கும் ஒரு முயற்சியா?…நாமெல்லோரும் இறந்தவர்கள் ஓய்வெடுக்க வேண்டுமென்று விரும்புகிறோம்.  அதனால்தான் தூங்குகிறவர்களை எழுப்புவதையும், கல்லறைகளை சிதைப்பதையும் அவ்வளவு எளிதாக நம்மால் செய்ய முடிவதில்லை.  வார்த்தைகள் மொழியில் ஓய்வெடுக்கின்றன.  மொழியைப் பயன்படுத்தும் போது ஓய்வெடுக்கும் வார்த்தைகளை உயிர்ப்பிக்க முயற்சிக்கிறீர்கள்.  அரைகுறை தூக்கத்தில் எழுந்தவர்களைப் போல வார்த்தைகள் சலிப்போடு கண் விழிக்கின்றன.  அதனால்தான் எந்த ஒரு மொழியும் முழுமையான மொழியாக இல்லை.

மரணம் என்கிற வார்த்தையால் மட்டுமே மரணமென்பதை புரிந்துகொள்ள முடியும்.  வாழ்க்கை என்னும் வார்த்தையால் மட்டுமே வாழ்க்கையை புரிந்துகொள்ள முடியும்.  இரண்டையும் விளக்குவதற்க்கு தனித்தனி வார்த்தைகள்.  வாழ்க்கை என்னும் வார்த்தையால் மரணத்தை புரிந்துகொள்ள முயற்சிப்பதை கற்பனை செய்து பாருங்கள்.  மரணம் என்று உங்களுடைய காருக்கு பெயர் வைத்தால் அது சாலைகளில் உருள்வதைக் கூட அனுமதிக்க மாட்டார்கள்.  வாழ்க்கை என்று ஃபீரிஸர் பாக்ஸிற்கு பெயர் வைப்பதையும்.  இந்தத் தொகுப்பேட்டின் இறுதிப் பகுதி அப்படி ஒரு படிமமாகத்தான் இருக்கிறது.  ஆகவே அது ஒரு வார்த்தையாகவும் இருக்கிறது.

மண்டை ஓட்டின் நெடுந்தூரத்தைக் கடக்கும் நான்காவது புல்லட்

மொத்த உலகமும் ஒரு துப்பாக்கிச் சூட்டிலிருந்துதான் தோன்றியது.  ஒரு துப்பாக்கிச் சூடுதான் மொத்த உலகத்தையும் தோற்றுவித்தது.  எது எப்படியிருந்தாலும் முதல் துப்பாக்கிச் சூட்டில் அனைத்துமே தோன்றிவிட்டன.  துகள்கள், கோள்கள், நட்சத்திரங்கள், வெற்றிடம், தூரம்… இரண்டாவது துப்பாக்கிச் சூட்டில் மீதி அனைத்தும்…. பூக்களின் மகரந்தங்கள் வெடிப்பதிலிருந்து, துப்பாக்கிச் சூட்டின் சத்தத்தால் பிளவுறும் ஓட்டிலிருந்து கோழிக்குஞ்சுகள் வெளிவருவது வரை…. மூன்றாவது துப்பாக்கிச் சூட்டில் நாமெல்லோரும் பிறந்தோம்.  அத்தனை புல்லட்டுகளும் இன்னும் முடிவில்லாமல் பயணம் செய்கின்றன.  வெற்று வெளியின் அர்த்தம் என்னவோ அதுவேதான் வாழ்க்கையின் அர்த்தமும்.  வெகுகாலம் என்னால் இதை அறிந்துகொள்ள முடியவில்லை.  அந்த வெற்று வெளியை நிரப்புவதற்கு பல்லாயிரம் வருடங்கள் காலாவதி ஆகாத அனுமதிச் சீட்டை நாம் கையில் வைத்திருக்கிறோம்.  நாம் என்றால் அனைவரும் மற்றும் எல்லாம்.  இறுதியாக ஒரு துப்பாக்கிச் சூடு நிகழும் வரை நாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம்.  குறையாத இடைவெளியில் புல்லட்டுகள் ஒவ்வொன்றும் மற்றொன்றை முடிவில்லாமல் துரத்துகின்றன.  நான்காவது புல்லட் என்னுடைய நெற்றியின் வலது ஓரத்திலிருந்து கிளம்பி, வெற்று வெளியில் மற்ற மூன்று புல்லட்டுகளைத் துரத்துகிறது.  அது நெற்றியின் இடது வெளிப்புறத்திலிருந்து ஓட்டைப் பிளக்கும் கோழிக்குஞ்சாய் தலை நீட்டிய வரை ஒரு நெடுங்காலப் பயணத்தை மின்னல் வேகத்தில் முடித்தை மட்டுமே என்னால் நினைவு கூர முடிகிறது.

 வெளி, வெற்றிடம், வெற்று வெளியின் அர்த்ததை என்னால் இப்போது முழுமையாக புரிந்துகொள்ள முடிகிறது.  எல்லாம் அந்த நான்காவது புல்லட்டால்தான்.  ஒருமையை விவரிப்பது எனக்குக் கடினம்.  நான் இப்போது அந்த ஒருமையைப் பார்க்கிறேன் என்பது ஒரு அரைகுறை விவரிப்பு.  எந்த மொழிக்கும் ஒருமையை விவரிக்கும் திறனில்லை என்பதால் நமக்குக் கிடைப்பதெல்லாம் நம்பத்தகுதியற்ற அரைகுறை வியாக்கியானங்கள் மட்டுமே.

ஆனால் மற்ற எல்லா இறந்த மனிதர்களைப் போலவே நானும் மன்னிப்புக் கேட்க வேண்டும்.  வாழ்க்கை என்பது தவறிழைத்தல், மரணமென்பது மன்னிப்புக் கேட்டல்.  நான் என்னுடைய தனிமையின் இருள் மண்டிய வீட்டில், ஆணியில் தொங்கும் நீலக்கோட்டில் சொருகப்பட்டிருக்கும் இரண்டாம் உலகப் போர் பதக்கத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.  விடைபெறும் முன் அதனை சுட்டு விரலால் தொட முடியவில்லை. எத்தனை முறை அதன் கண் முன்னால் சில்லறைகளுக்காக கையேந்தியிருப்பேன்.  பாலிஎத்திலின் சாக்குப் பையில் பிளாஸ்டிக் குப்பைகளோடு ஆறுதலுக்கு பட்டன்களும் இல்லாத அதன் குலுங்கும் சைக்கிள் பயணத்திற்கு நான்தான் காரணம் என்பதால் அதனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.  தசைகளால் ஆன உடலுக்கு மறுசுழற்சி மதிப்பு கிடையாது, ஆனால் உலோக உடல்களுக்கு உண்டு என்பதால் இறுதியாக ஒரு துப்பாக்கிச் சூடு நிகழும் வரை நான் அதற்காக காத்திருக்க வேண்டும்

*

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

tweet2bala@gmail.com

நன்றி கணையாழி மார்ச் 2015

யாளி பேசுகிறது – 07 – Nicholas Roerich – ஒளிர்கின்ற அடரிருள்

0

ஒளிர்கின்ற அடரிருள் – THE VANTAGE POINT

1934 ருஷ்யாவில் அப்போதைய அதிபர் ஸ்டாலின் கலை, கலாச்சாரம் சார்ந்த ஒரு புதிய நிலைபாட்டை எடுத்திருந்தார். நாட்டிலுள்ள அத்தனை ஓவியர்கள், சிற்பக் கலைஞர்கள், இசை, நாடகக் கலைஞர்கள் எழுத்தாளர்கள் மற்றும் இதர படைப்பாளிகள், கலைஞர்கள் என எல்லோரும் அரசு வகுத்துக் கொடுக்கும் தளத்தில் தான் படைப்புகளை உருவாக்க வேண்டும். அதையும் மீறிச் செயல்படுவோர் மற்றும் எதிர்ப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள், அதிலும் மரண தண்டனை வரை தரக் கூடும் என்ற சட்டத்தை பிரகடனப்படுத்தியிருந்தார். அரசால் நடைமுறைப் படுத்தப் பட்ட அந்த கொள்கை SOCIALIST REALISM என்ற கலைமரபாக போதிக்கப்பட்டது.

1935 அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பெரும்பான்மையான மாகாணங்களில் ஓர் ருஷ்யக் கலைஞரின் எண்ணப்படி உருவான சட்டம் ஒன்று பெரும்பான்மையோடு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் படி ஒவ்வொரு நாட்டின் வரலாற்றுச் சிறப்பு கொண்ட, தொன்மையான, பழைய நாகரிங்களை பாதுகாப்பதற்கான வரை வரைவுகளைத் தீட்டிய தீர்மானம் அது. இதன்படி போர்க்காலங்களில் செஞ்சிலுவை சங்கத்தின் செயல்பாட்டைப் போலே, ஒவ்வொரு நாட்டின் வரலாற்று மற்றும் நாகரிகச் சின்னங்கள் இருக்கும் இடங்களை பாதுகாத்திட”போரில்லா பகுதிகளை உருவாக்குவது” மற்றும் பாதுகாப்பதற்கான உறுதியை சட்டத்தை ஏற்றுக் கையெழுத்திடும் எல்லா அரசுகளும் நடமுறைப் படுத்த வேண்டும் என்கிற வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டம் தான். அதன் பெயர் “ரோரிச் உடன்படிக்கை”(ROERICH PACT). ரோரிச் ருஷ்யாவின் தலைசிறந்த ஓவியர்களுள் முக்கியமானவர், மேலும் இவர் ஒரு அறிவியலாளராகவும், தொல்பொருள் நிபுணராகவும், அரசியல் செயற்பாட்டாளராகவும் பணியாற்றினார். மூன்றுமுறை அமைதிக்கான நோபல் பரிசுக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வெறெந்த நாட்டினரையும் விட இந்தியர்களுக்கு ரோரிச் மிக நெருக்கமானவர். அவரது படைப்புகள் வழி இந்திய மற்றும் திபெத்திய தேசத்தின் மீப்பொருண்மை பொக்கிஷங்கள் உலகுக்கு தெரிவிக்கப் பட்டன.

3

***************
எனது நண்பரும் ஓவியருமான ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த ஓர் இரவில் தான் ரோரிச் எனும் கலைஞனைப் பற்றி அறிந்து கொண்டேன். ஒரு இரவில் அந்த நண்பரின் பயணங்கள் குறித்த எனது கேள்விகளுக்கு அவர் பதிலளித்துக் கொண்டிருந்த நேரம் அது. பல தேசங்கள் பற்றியும், முக்கியமான இடங்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டு வந்த வேளையில், நான் அவரிடம் இமயம் பற்றி கேட்டேன். இமயம் பற்றிப் பேச ஆரம்பிக்கும் போதே விரிந்த அவர் கண்களில், அப்படிப்பட்ட பிரம்மாண்டத்தை ரோரிச் எனும் ஓவியன் தரிசித்திருக்கும் விதம் பற்றியும் கூறினார். ஒரு கடுமையான மலைப் பயணத்தில் வானம் தொடும் சிகரங்களாய் தோற்றமளிக்கும் இமயமலைப் பகுதியில் பார்த்த பல இடங்கள் ரோரிச் சுற்றித் திரிந்து வரைந்த ஓவியங்களின் நினைவோடு பகிர்ந்து கொண்டார்.

ஆல்டை எனும் சைபிரிய, கஜகஸ்தான் மற்றும் சீன எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் மலைத்தொடரை வரைந்திருக்கும் ரோரிச்சின் ஓவியம் மகத்தானது. காலை வேளையில் சூரியவொளி சிகரங்களில் படர்ந்திருக்கும் பொழுது அவை தங்கம் போல மின்னுவதால் இம்மலைத்தொடரை அங்கிருக்கும் பழங்குடியினர் தங்க மலைத்தொடர் என்று கூறி வந்துள்ளனர். ரோரிச்சின் இந்த லேண்ட்ஸ்கேப் மூலம் தான் மற்றவர்களால் இதன் பெயர் காரணத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது. இன்று ரோரிச்சின் நினைவாக இந்த மலைத்தொடரின் வழியே செல்லும் ஓர் பாதைக்கு ரோரிச்சின் பெயரே வைக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடப் பட வேண்டிய விசயம்.

2

அந்த பிரமிப்புடன் நிக்கோலஸ் ரோரிச்சின் ஓவியங்களை அனுகிடும் போது :
“ஒரு கலைஞனின் வாழ்வு தான் அவன் உலகிற்கு விட்டுச் செல்லும் செய்தி”

ரோரிச் 1874ல் ரஷ்யாவில் பீட்டர்ஸ்பர்க் நகரில் பிறந்தார், 1893ல் ஓவியக்கலை பயின்ற பின் அவர் நாடக அரங்கிற்கு வடிவமைப்பாளராக பல வருடங்கள் தொழில் செய்து வந்திருக்கிறார். தனது ஓவியக்கலையில் கட்டிட வரைகலை பாணி மீது மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வந்திருக்கிறார். ரஷ்யாவின் புகழ்பெற்ற கோட்டைகள், மடாலயங்கள், சர்ச்சுகள் ஆகியனவற்றை மிகுந்த ஈடுபாட்டுடன் வரைந்து வந்தார். ஆரம்பத்தில் இவர் வரைந்த ருஷ்யாவின் உயர்ந்த கட்டடங்கள், ஆலயங்கள்(Mega Structures) ஆகியவற்றின் மீதிருந்த ஆர்வம் தான் மலைகள் மீது ஆர்வம் ஏற்பட்டு தொடர்ந்து இயங்கும் ஆர்வத்தை அளித்தது.

ஏற்கனவே தனது தந்தை வழியாக இந்தியப் பாரம்பரியத்தில் இருந்து வரும் ஆன்மீகத்தில் ஈர்ப்பு கொண்டிருந்த அவருக்கு, அவரது மனைவி ஹெலன் வழியாக கிழக்கு தேசங்களான பாரதம், சீனா, திபெத்திய நாடுகளின் மத நம்பிக்கைகள் மீது ஈடுபாடு ஏற்பட்டது. பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள திபெத்திய பௌத்தக் கோயில் காலச்சக்கரம் எனும் தேவதைக்காக அற்பனிக்கப்பட்ட கோயில் ஒன்றிற்கு கண்ணாடி அலங்காரத்திற்கான வடிவமைப்பில்(stained glass work) ஈடுபடுடத் துவங்கும் பொழுது தான் அவரது உலக பயணம் உண்மையில் துவங்க ஆரம்பிக்கிறது. அதற்கு இந்த பௌத்தக் கோயில் மட்டுமல்லாமல் அவரது அரசியல் நிலைப்பாடும் முக்கியக் காரணமாகியது.

பின்லாந்து மற்றும் ருஷ்யக் கலைஞர்கள் ஒன்று கூடி ஆரம்பிக்கப்பட்ட WORLD OF ART இதழை நிறுவிய அமைப்பான “செர்கி டயாஜில்வ்”(sergei Diaghilev)-இல் உறுப்பினராகி, பின்னர் அதன் தலைவராக 1910-1916 வரை அதன் தலைவராக இருக்கிறார். 1917ல் போல்ஸ்விக் கட்சி நாட்டின் அத்தனை ஓவிய அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, அவற்றை தன் விளம்பர, பிரச்சார நோக்கத்திற்க்காம மட்டுமே செயலாற்றப் பணித்தது. ஆரம்பத்தில் மாக்ஸிம் கார்கி போன்றோர்களுடன் இருந்த நட்பில் இருந்து விலக ஆரம்பித்தார். கம்யுனிஸப் புரட்சி கலைகளின் மீது காட்டும் அதிகாரத்தில் கடும் அதிருப்தி கொண்டார். கம்யுனிஸ ஆட்சியில் – தொன்மை, மாற்று அரசியல், பாலியல் கூறுகள்(EROTIC), அரூபம்(abstract)ஆகியவற்றை பிரதிபலிக்கும் படைப்புகள் மறுக்கப்பட்டதால், அவர் அரசியல் சார்ந்த நிலைப்பாடுகளில் மாற்றம் நிகழ வேண்டும் என்று விரும்பினார். அதுவே அவரை பௌத்தம் நோக்கி ஈர்ப்பதற்கு முக்கியக் காரணாமாய் அமைந்தது.

ரோரிச்சின் வாசகங்களின் ஒன்றான
“Where there is Peace, there is Culture;
Where there is Culture, there is Peace.”

இவ்வாசகம் அவர் அமைதியான கலாச்சாரத்தைக் குறித்த தேடல் அவருக்குள் ஆழமாக பொதிந்திருந்ததை நமக்குக் காட்டுகிறது.

ரஷ்யாவிலிருந்து தன் மனைவியுடன் கிளம்பிய அவர் முதலில் பின்லாந்திற்கும் பின்னர் அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணம் செய்தார், இறுதியாக லண்டனில் வந்து தங்கினார். இந்தக் காலத்தில் தான் ரபிந்திரநாத் தகூர் மற்றும் ஹச்.ஜீ.வெல்ஸ் ஆகியோரிடன் நட்பைப் பெற்றார், தன் வாழ்நாளில் அதற்குப் பிந்தைய காலத்தை இந்தியாவிலும், அமெரிக்காவிலும் , ஆல்டாய் மற்றும் இமயமலைப் பகுதியிலும் கழித்தார். குலு பள்ளத்தாக்கிலுள்ள மணலியில் தன் இறுதி நாட்களில் குடும்பத்தோடு வாழ்ந்தார். அவர் பயணங்களும், அவர் செயல்பாடுகளுமே அவர் தந்த மிகப் பெரிய பங்களிப்பு என்றாலும் அதை விட ஓவியனாய் மிக பிரம்மாண்ட படைப்புகளை உருவாக்கிய கலைஞன் தான் நிக்கோலஸ் ரோரிச்.

ரோரிச் தன் படைப்புகளைத் தாண்டியும் இவ்வுலகின் வரலாற்றில் மிக முக்கியமான சில பணிகளைச் செய்தவர்.

1. கலாச்சார மற்றும் வரலாற்றுப் படைப்புகளை பாதுகாக்கும் சின்னமாக ரோரிச்சின் சிந்தனை உலகின் பல தேசங்கள் ஏற்றுக் கொண்டது.

2. அவர் செய்த அகழ்ந்தாய்வுகள் மற்றும் அவ்வாராய்ச்சி தொடர்பாக எழுதிய சில புத்தகங்கள். எகிப்திய நாகரிகத்தினைக் காட்டிலும் மிகத் தொன்மையான ஷாம்பலா நகரத்தைத் தேடி ஆரம்பித்த அவரது ஆராய்ச்சிகள் முடிவுறாது போனாலும், அந்தப் புராணங்களின் தொன்மை உலகின் பழநாகரிகங்களுக்கு இணையானது என்று உலகம் ஏற்றுக் கொண்டது

3. ரஷ்யா , சீனா மற்றும் இதர ஆசிய நாடுகள் முழுமையாக திபெத்திய பௌத்தத்தை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளை விட முன்னேறிய தேசங்களாக மாறும் என்று நம்பினார். அவரது செயல்பாடுகள் குறைந்தாலும், அவரது எழுத்துகள் அந்தப் பணியைச் செய்தன.

ஆனால் இந்தப் பணிகள் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருந்த்து அவரது கலையுணர்வு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரது ஓவியங்கள் வாயிலாக நமக்குக் கிடைக்கும் உணர்வுகள் அவரது செயல்பாடுகள் மற்றும் கனவுகளுக்கு நெருக்கமாக நம்மைக் கூட்டிச் செல்கின்றன.

அவரது படைப்புகளை வைத்துப் பார்க்கும் பொழுது, இவரது ஆரம்ப காலத்தில் ருஷ்யாவின் கத்தீட்ரல்களுடைய கட்டுமானத்தையும் அதல் ஸ்டையின் கிளாஸ் வேலைகளை செய்து வந்த ரோரிச்சின் பங்களிப்பில் இவரது தனிச்சிறப்பு வாய்ந்த மலைகள் குறித்த ஓவியங்கள் வரை இருக்கும் இவரது பயணத்தின் செய்து பிரம்மாண்டமனது. இவர் வரைந்த மலைகளை ஆழ்ந்து ரசிக்கும் போது, மலைகளுக்கு உயிர் இருப்பதாகவே நம்பத் தோன்றும்.

உயிர்த் தன்மை என்பது என்ன? ஒரு உயிர் மற்றும் அதன் தன்மையை எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும்? உயிரானது துடிப்பில் இருக்கும் போது தான் அது சாத்தியமாகிறது. துடிப்பு என்றால் அதன் இயக்கம் என்று இங்கே பொருள். மலைகள் எப்படி இயங்க முடியும் என்ற கேள்வி இங்கே எழுந்தால் என்ன பதில் சொல்வது? இவரது ஓவியங்களை நுகர்வு செய்யச் சொல்வது தான் இதற்குப் பொருத்தமான பதில். இணையத்தில் கிடைக்கும் எண்ணற்ற லேண்ட்ஸ்கேப் ஓவியங்களிலிருந்தும், டிஜிட்டல் நிழற்படங்களிலிருந்தும் கிடைக்காத உணர்வு இவரது படைப்புகளில் கிடைப்பதால் எத்தனை தனித்தன்மை வாய்ந்ததாக இவரது ஓவியங்கள் இருக்கின்றன? இப்படியான சில கேள்விகளை தனக்குத் தானாக எழுப்பிக் கொண்டு தான் இவரது ஓவியத்தில் இருந்து எழுந்துவரும் உணர்வுகளை நம் மொழி வழி சேர்த்து வைக்க முடியும்.

உயிர்த்தன்மை பற்றி நிக்கோலஸ் ரோரிச் எவ்வாறு சொல்கிறார் என்றால்:
//The great traditions of past and future, the high teaching which emanated from the eternal heights make it possible to approach the sacred spaces in cooperative understanding.//
பல படைப்புகளில் மலைகளுடன் இவர் உறையாடுவது போலவே தோன்றும். மேலும் மலைகளை மற்றொரு உலகத்திற்கு தொடர்பு கொள்ளும் சாத்தியமுள்ள பிரதேசமாக உணரத் தோன்றுகிறது. இதைத் தான் ரோரிச் ”eternal heights” என்று கூறுவதற்கான காரணமாக உணர்கிறேன். இவரது படைப்புகளையும் அப்படிப்பட்ட cooperative understandingஉடன் பார்க்க ஆரம்பித்தால் மயக்க நிலையினை விஞ்சிய(transcendence) கதவுகள் திறக்கப்படுகின்றன.

இந்த நேரத்தில் அந்த ஓவிய நண்பருடன் நடந்த ரோரிச் பற்றிய உரையாடலைப் பற்றியும் சொல்ல வேண்டும். சிறுவயது முதலே ஓவியத்தில் பரிச்சயமும், நாட்டமும் கொண்ட நபராக தன்னை வளர்த்துக் கொண்ட அந்நண்பர், ஓவியனாக் தன் ஆரம்ப கால வாழ்க்கையில் அவரது ஓவியங்களைப் பார்க்கும் பொழுது, “இவனென்ன சுத்தப் பைத்தியக்காரனாக இருப்பான் போல இருக்கே” என்று வெறும் மலைகளைப் பற்றிய ஓவியங்களாய் பார்த்து சலித்ததாக அவர் சொல்லியிருந்தார். அப்போது நவீன் ஓவியங்கள் மீதும், நவீன் பாணிகளில் நிறைய முயற்சிகள் செய்து கொண்டிருந்த வேளையில். இவ்வோவியங்களைப் பார்க்கும் பொழுது அவருக்கு அவை சாதாரணமான Landscape வேலையாக மட்டுமே தெரிந்தது, மேலும் fluorescent, aqua blue, பச்சை என பல வண்ணங்களில் ஒரே மலையினை வேறு வேறு கோணத்தில், வேறு வேறு வண்ணத்தில் ஒரு ஓவியன் வரைந்து வைத்திருக்கிறான் என்பதில் அதன் மேல் ஈர்ப்பில்லாமல் அவற்றை வரைந்தவன் “பைத்தியக்காரன்” என்று சொல்கிறார். இவை யாவுமே அவர் இமயத்திற்கு செல்லும் முன்னர் நடந்த கதை என்று நினைவில் கொள்ளுங்கள்.

ஆம், அதற்கு பின்னர் ஒருநாள் தான் நான் இமயமலை அனுபவம் பற்றி அவரிடம் கேட்கும் பொழுது அவர் கண்கள் விரிந்தது என்று சொன்னேனில்லையா? அவரே தான். தனது கைலாஷ் யாத்திரையில் தனது கண்கள் நம்ப முடியாத பல காட்சிகளைத் தந்திருக்கிறது, எந்த ஓவியனை “பைத்தியக்காரன்” என்று சொன்னாரோ, அந்தப் பைத்தியக்காரன் வரைந்த ஓவியத்தின் நிதர்சனத்தைக் கண்ட அவர், அடுத்தக் கட்டமாக ஆல்டய் மலைப்பாதை வரை சென்று வடக்கிலிருந்து தெற்காக ரோரிச் வரைந்த இமயத்தின் பகுதிகளை எல்லாம் பார்த்து வந்துவிட்டார்.

3

CALL OF THE SKY – 1930 போன்ற ஓவியத்தினை பார்க்கும் பொழுது ஏற்படும் பிரமிப்பு அம்மலை போன்ற பிரம்மாண்டமானது. மலையானது இந்த இருளில் எப்படித் தோற்றமளிக்க வேண்டும் என்கிற நேர்த்தி கித்தானின் வலது பக்கம் கீழாக வரையப்பட்டிருக்கும் மலைப்பகுதிகள் கரு நிறத்துடன் இருக்கின்றது, மின்னலின் கீற்றுகள் வந்திறங்கும் சிகரமோ அவ்வொளியில் fluorescent நிறத்தில் மாறுகிறது. இந்த தோற்றம் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டது, மலைச்சிகரத்தின் வடிவத்தினைப் போலவே மின்னல் கீற்றுகளின் தோற்றமும் இருப்பதையும் இங்கு கவனிக்கலாம். இங்கே கித்தானின் வலது ஒரத்தை ஒரு பார்வையாளன் நின்று கொண்டு பார்க்கும் முகட்டுப் புள்ளியாக கொள்ள வேண்டும். அவரது ஓவியத்தில் அவர் எங்கு நின்று வரைந்திருந்தாலும், பார்வையாளனுக்கு அனுமதித்திருக்கும் வாசலை சரியாக கவனித்து வர வேண்டும்.

மற்றொரு ஓவியத்தில் ஒரு நட்சத்திரம் வானில் இருந்து மலைப்பகுதியில் எங்கோ ஓர் பகுதியில் விழுந்து கொண்டிருப்பதைப் போலவும் அதை மற்றொரு முகட்டில் இருந்து அவர் பார்த்து கொண்டிருப்பது போலவும் வரைந்திருப்பார். இவரது நிறைய ஓவியங்களில் வரும் இமயமலைப் பகுதியின் இரவுகள் ஒன்றோடொன்று வேறுபட்டிருப்பதை இவரது ரசிகர்கள் உணர முடியும்.

மற்றொரு ஓவியத்தில் இரவு நேரத்தில் மலையானது கரிய நிறத்துடன் ஒரு பகுதியும், நட்சத்திரங்களின் ஒளிமிகுந்த பகுதியாக பெரும்பகுதி மலைகளும்  பிரகாசத்துடன் அமைந்திருக்கும். அவ்வோவியத்தில் நட்சத்திரம் விழும் காட்சியை ஒரு மலை முகட்டிலிர்ந்து தான் பார்ப்பது போல ரோரிச் வரைந்திருப்பார். அந்த ஓவியத்தில் அவர் அமர்ந்து பார்க்கும் மலைப்பகுதி மட்டும் கரிய நிறத்தில் இருளை உணர்த்தும். அந்த ஓவியத்தைப் பொருத்த மட்டும் அவர் அமர்ந்திருக்கும் பகுதி தான் முகட்டுப் புள்ளியாகிறது(VANTAGE POINT) அவ்வோவியத்தை பார்ப்பவர்களுக்கு அருகில் இருப்பதாய் தோற்றமளிக்கும் மலைப் பகுதியானது, இருளைக் காட்டுகிறது. தொலைவிலுள்ள மலைகள் எல்லாம் நட்சத்திரங்களின் ஒளியை பிரதிபலிக்கின்றன, மிகத் தொலைவில் தெரியும் மலையோ மிகப் பிரகாசமாய்  மிளிர்கிறது. இவ்விரண்டு ஓவியங்களே நான் சொன்ன உயிர்த்தன்மையைப் பற்றி உணர்ந்து கொள்ளப் போதுமானது.

4

//Haze was flaring, and behind it, at a great distance, the most powerful element was raging. Haze, glow, and heat lightning are the messengers of remote events. Northern lights or the Himalayan glow remind one of the accumulations which ears and eyes cannot perceive. It is the heart that can sense them, and it will beat with agitation and solemnity.//

ரோரிச் ஒரு முக்கியமான எழுத்தாளரும் கூட அவரது படைப்பான ALTAI-HIMALAYAS, SHAMBALA ,REALM OF LIGHT, FLAME IN CHALICE, HEART OF ASIA என்கிற கட்டுரைத் தொகுப்புகளும், ஒரு கவிதைத் தொகுப்பும் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலத்தில் வெளியாகின. இன்றைய அறிவியலாளர்கள் அவரை ஏற்றுக் கொள்ளாமல், அவரது நம்பிக்கைகளை மீப்பொருண்மை என்றோ, கற்பனை என்றோ கூறினாலும், அவரும் ஓர் அறிவியலாளர் என்பதை மறந்து விடக் கூடாது. அமெரிக்காவில் பேரழிவு ஏற்படுத்திய மணல் புயலைத் தடுப்பதற்காக ஏற்பட்ட ஆராய்ச்சியைல் மங்கோலியா மற்றும் மஞ்சூரியப் பகுதியில் கிட்டதட்ட 300க்கும் மேற்பட்ட மண்ணரிப்பைத் தடுக்கக் கூடிய மரங்களின் விதைகளை பகுத்துப் பார்த்து சேகரித்துக் கொடுத்தவர் என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம்.

மலைகளை வைத்து அவர் வரைந்திருக்கும் படங்கள் மட்டும் 2000த்திற்கும் மேலே என்று சொல்லப் படுகிறது. பல மலைகளை அவர் ஒரே முகட்டில், ஒரே கோணத்தில் இருந்தாலும் அவை ஒரே தோற்றத்தை உங்களுக்குத் தராது என்று சொல்லலாம். ஏனென்றால் இந்த ஓவியங்களை நுகரும் பொழுது நீங்கள் transcendental stateக்குள் நுழைந்து விடுகிறீர்கள். அப்பொழுது வாழ்வில் ஒரு முறையாவது இமயத்திற்கு சென்று விட வேண்டும் என்று உங்கள் இதயம் துடித்து கொள்ளும்.

5

ரோரிச்சின் ஓவியங்களை பற்றி வெறும் அழகியல் பேச்சாக, அத்தனை எளிதாகப் பேசி முடித்து விட முடியாது. அவர் கலைஞராக இருந்தாலும் உலக அரசியலில் முக்கியமான பணிகள் செய்தவர்களில் ஒருவர். இல்லாவிட்டால் மூன்று முறை அமைதிக்கான நோபல் பரிசிற்காக இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்காது

நிக்கோலஸ் ரோரிச், இன்று உலகிற்கே பொதுவான பணமாக பல நாடுகள் ஏற்றுக் கொண்ட அமெரிக்க டாலரில் இருக்கும் ALL SEEING EYE எனப்படும் ரகசிய உலகின் சின்னமான பிரமிடு மற்றும் ஒற்றைக் கண்ணின் வடிவத்தைக் கொடுத்தவர்.(wiki: Eye of providence). இச்சின்னத்தில் வரும் கண் உலகின் ரகசிய அமைப்புகளின் ஒன்றான Illuminatiகளுடைய சின்னம், அப்போதைய(1935)அமெரிக்க அமைச்சர்களில் ஒருவரான WALLACE(ரோரிச்சின் சீடர்) இந்த சின்னத்தை ரூஸ்வெல்ட்டின் ஒப்புதல் பெற்று தேசத்தின் ஒரு டாலர் நோட்டில் இடம் பெறச் செய்தார். இந்த சர்ச்சைக்குரிய சின்னத்தின் கீழ்ப்பகுதிகளில் இருக்கும் எழுத்துகள் சிந்துச் சமவெளி எழுத்துகளாக இருக்கக் கூடும் என்று மொழியியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

பழங்கதைகளிலும், புராணங்களிலும் வரும் அதிசயப் பொருளான(கல்லான) சிந்தாமணி பற்றிய கதைகள் இந்திய மற்றும் திபெத்திய வரலாற்றில் உண்டு. அது வைரம் போன்ற விலைமதிப்பில்லா கல்லென்றும், எரிநட்சத்திரமாய் வானிலிருந்து பூமியில் விழும் கற்கள் தான் சிந்தாமணிக் கற்கள் என்றும் பல்வேறு கதைகள் இன்றளவும் வழங்கி வருகின்றன.இவருக்கும் அந்த கல்லின் மீது நாட்டம் இருந்திருக்கிறது என்று சொல்ல வேண்டும், அவரது ஓவியம் ஒன்றில் விழும் எரி நட்சத்திரம் கூட அப்படிப்பட்ட ஒரு கல்லாகவே இருக்க வேண்டும். ஏனென்றால் – ரூஸ்வெல்டின் அமைச்சரவையில் துணை அதிபராக இருந்த வேலஸ், ரோரிச்சிற்கு எழுதியிருந்த கடிதத்தில் “GURU AWAIT THE STONE” என்று வருகிறது. அப்படியென்றால் தனது அகழ்வாராய்ச்சியில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

சிந்தாமணியை வைத்து அவர் வரைந்திருக்கும் ஓவியம் ஒன்று :6

20ம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் அவர் அவர் வரைந்த ஓவியங்களில் இருந்து 1935க்குப் பிறகான ஓவியங்களில் இருக்கும் மாற்றத்தை நம்மால் உணர்ந்து விட முடியும். அவர் ஓவியங்களில் வரும் மலைகளை SYMBOLISMஆக எடுத்துக் கொள்ளவும் முடிகிறது, மலைகள் காட்டும் பேரமைதி தான் அவர் உணர்த்தும் மையப்பொருளாக நான் எடுத்துக் கொள்கிறேன். அந்தப் பேரமைதி தான் ரோரிச்சின் அரசியல் பார்வையாக இருந்தது. லாமாக்களோடு வசித்து வந்தாலும் அவர் இயேசுவையும், மோஸசையும் சிகரங்களில் உலவ விட்டார், கிருஷ்ண்னை ஒரு மரத்தடியில் இசைக்க வைத்தார்.

7

 பல ஓவியங்களில் மலைப்பாதைகளில் தன்னையே பல்வேறு கோலங்களில் உலவ விட்டுள்ளார். தன்னுடைய தேடலான ஷம்பல்லா எனும் பழைய நகரத்தை அவர் கண்டு கொண்டாரா என்று உறுதியாகத் தெரியவில்லை. சிக்கிம், திபெத், சீனா, காஷ்மீர், சைபீரியா, மங்கோலியா என்று பரந்து விரிந்த மலைப்பாதையில் சேமித்து வைத்த அல்லது கண்டறிந்தவற்றை தனது படைப்புகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். இத்தகைய பயணம் மூலம் அவர்  கண்டறிந்ததாக அவர் கருதுவது உலகத்திற்கே பொதுவான ஒரு கலாச்சார நூலிழையைத் தான், அவ்விழையில் தான் மனித இனத்தின் அறிவு மற்றும் அழகுக்கான  மிதமிஞ்சிய பசி கட்டப்பட்டிருக்கிறது, அவற்றின் குறியீடாகத் தான் இமயமலையினை அவர் உணர்த்துகிறார்.

ஒரே மலையினை காலை வெயில், பனி சூழந்திருக்கும் பொழுது, அந்தி வேளையில், இரவில், மின்னலொளியில், நிலவொளியில் என பல்வேறு சூழலில் பார்க்கும் பொழுது எழும் உணர்வுகளைச் சொல்லும் பணி எளிதானது இல்லை தான். மலைகளின் விழும் சூரிய ஒளி , நிழல் என்கிற தத்ரூபங்களை ஓவியத்திற்கு வெளியே நிற்கும் பொழுது பார்க்கும் பார்வையாளனாக சொல்ல முடியும், ஆனால் ஒத்துழைக்கும் சூழலில் நாம் இருக்கிறோமா?. நம்மையும் மறந்து அவ்வோவியங்களில் ஆழ்ந்திருக்கும் வேளையில் நாம் கித்தானுக்கு வெளியே இருப்பதில்லை. நமது VANTAGE POINT இம்மமலைச் சிகரங்களுக்குப் பின்னேயும் இருக்கலாம், இரு மலைகளுக்கு மத்தியிலிருக்கும் பள்ளத்தாக்குகளிலும் இருக்கலாம், இல்லை பகலிலும் தெரியும் நட்சத்திரங்களுக்கு அருகிலிருக்கலாம். அப்படிப் பட்ட உணர்வு உங்களுக்கும் வந்திருந்தால் நீங்கள் ஒரு மாபெரும் கலைஞனின் பரிபூரணமான படைப்புகளில் யாத்திரை மேற்கொண்டிருக்கிறீர்கள் என்று பெருமை கொள்ளலாம்.

 (நன்றி – கணையாழி – பிப்ரவரி 2014)

யாளி பேசும்

– ஜீவ.கரிகாலன்