Home Blog Page 93

கலையும் அறிவியலும்

1
                                                                                                               கலையும் அறிவியலும்
 

ரு மாலைப் பொழுதில் ராஜிவ் காந்தி சாலையில் ஒரு அற்புதக் காட்சி, ஒரு ஐரோப்பியக் குடும்பம், ஒரு இளைஞன், அவளின் ஐரோப்பிய மனைவி அவர்களின் மகள்கள் (இரட்டை), ஒருத்தியை தன் தோளில் சுமந்து கொண்டும் மற்றவள் கீழே நடந்தபடியும் வருகிறாள். அந்த தகப்பன் ஏதோ ஒரு கதை சொல்ல அதைக் கேட்டுக் கொண்டே மொத்த குடும்பமுமாக சிரித்துக் கொண்டு வருகிறது. அவனது மனைவி இந்திய பாணியிலான உடையாக அதிகம் ஆடம்பரம் இல்லாத ஒரு சுடிதாரும், அந்தக் குழந்தைகள் தலையில் மல்லிகைப் பூவுமாக பொலிவோடு இருந்தனர். இருவேறு கலாச்சாரங்களை தங்கள் வாழ்வியல் முறைக்கேற்ப அவர்கள் ADOPT பண்ணியிருக்கும் விதமே அந்தக் குடும்பத்தின் சந்தோஷமாக இருப்பதாகத் தோன்றியது.

அந்தப் பகுதியில் மொத்த மக்களும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தோம், குடும்பம் சகிதமாக ஒரு மனிதன் இத்தனை சந்தோஷமாக வாழ முடியுமா? அதுவும் ஒரு மேலை நாட்டுக் குடும்பம் இந்த நாட்டில் நம் மக்களோடி சகஜமாகப் பழகியபடி என்கிற ஆச்சரியம் கலந்த புன்னகை எங்கள் எல்லோர் முகத்திலும் பரவியிருந்தது. அந்தக் குடும்பத்தின் பாந்தத்தில் ஐரோப்பியக் கொண்டாட்டமும், இந்தியக் குடும்பம் போன்ற தோற்றமும் ஒரு சேரத் தென்பட்டது. இரு வேறுபட்ட தத்துவங்களின் கலப்பாக எனக்குத் தோன்றியது. உண்மையான மகிழ்ச்சிக்கு நிலம், கலாச்சாரம் என்பனவெல்லாம் ஒரு தடையே அல்ல என்று அக்காட்சியில் லயித்தேன்.

அக்காட்சியை நிறைய பேர் தங்கள் போனில் அவர்களை படமெடுத்துக் கொண்டிருந்தனர். இதைப்பார்க்கும் பொழுது, அந்த படத்தை அவர்கள் வீட்டில் காண்பித்து எந்த மாற்றத்தை முன்னெடுப்பார்களோ தெரியவில்லை. அடிப்படையில் நான் ஒரு எழுத்துக்காரன் என்னால் எழுதத் தான் தெரியும். குடும்ப உறவு, அதற்கு அடிப்படையில் இயங்கும் எல்லையற்ற அன்பு தான் ஒரு மனிதனின் சந்தோஷத்தின் எல்லையை தீர்மானிக்கும் கோடுகளாக மாறுகிறதா என்று அந்தக் காட்சியை முப்பட்டகத்தில் ஒளி பாய்ச்சிக் கொண்டிருந்தேன். சமீபத்தில் நான் பார்த்த திரைப்படங்கள் ஞாபகத்திற்கு வந்தன.

அண்மையில் வெளியான THE MAN WHO KNEW INFINITI எனும் கணித மேதை ராமானுஜமின் வாழ்க்கையை சித்தரிக்கும் ஆங்கிலத் திரைப்படம் ஒன்று, அந்தப் படத்தை பார்த்ததை ஆசிரியருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் அறிமுகப்படுத்திய இன்னொரு திரைப்படமான THE THEORY OF EVERYTHING(2014) என்கிற திரைப்படம் உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்க்கையை திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

இரண்டு திரைப்படங்களும் ஆங்கிலேய பயோபிக் (BIOPIC)எனப்படும் வகைமையைச் சேர்ந்த நாடகப்பாங்கிலான திரையாக்கம் (drama). ஆனால் மிக முக்கியமான திரைப்படங்களாக இவற்றை ஒருசேர பார்ப்பது, PARELLEL READING(அம்பேத்கர் ஏன் மதம் மாறினார் என்று பிரச்சாரம் செய்யும் தி.கவின் பதிப்பும், விஜயபாரதத்தின் பதிப்பையும் வாசிக்கும் போது இரண்டு அம்பேத்கர்கள் இந்தியாவில் வாழ்ந்த தோற்றத்தை உருவாக்கிய குழப்பம் போன்று இல்லாமல்)   செய்யும் அனுபவமாக இருந்தது.

 
*

பிரபஞ்சம் குறித்து மனிதனின் தொன்மப் பதிவுகளில் இருந்து தேடல் இருந்து வருவதை குகை ஓவியங்கள், பிரமிடுகள் போன்ற சாட்சியங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம், இத்தோற்றம் குறித்து சிந்தித்தவன் தான் அறிவியலாளனாகிறான். அறிவியலாளனாக முதன்முதலில் அறியப்பட்ட மனிதன் தான் மற்ற மக்களால் வணங்கப்படுகிறான். மற்ற மக்களால் வணங்கப்படுபவன் சொல்ல இயலா விளக்கங்களுக்குத் தான் கடவுள் கற்பிக்கப்படுகிறான். கடவுளை கற்பித்த பின் அவனுக்குத் தெரிந்த அறிவியலே மதக்கொள்கை ஆகின்றது. வேறு யாரும் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் அந்தக் கொள்கை அவனைத் தடுக்கிறது. ஒருவேளை மற்றவன் ஜெயித்துவிட்டால், உலகம் ஏற்றுக்கொள்ளும் முன்பாக அவனையும் அந்தக் கூட்டில் ஏற்றிக் கொண்டு அவன் சொல்வதையும் அதுவும் மதச் சிந்தனைகளில் ஏற்றிக் கூறப்படுகிறது, அதற்காகவே கலைஞர்கள் அரூபமானவற்றை படைத்து வருகிறார்கள். கலை வழியாகப் பிரச்சாரம் செய்து அவர்கள் கடவுளை உணர வைக்கிறார்கள் இதை அறிவியல் என்கிறார்கள்.

ஆனால் மனிதன் வானத்தைப் பார்ப்பதை நிறுத்தவில்லை, புதிய தேற்றங்கள் அதுவரை இருந்த அறிவியலையே பொய்யாக்கி வருகின்றன. கடவுளும் அந்தக் கடைசித் தேற்றத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறாரோ என்னவோ?

 
*

5இரண்டுத் திரைப்படங்களும் பெரும்பான்மையாக கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் எடுக்கப்பட்டது தான். நிறைய ஒற்றுமைகள் இத்திரைப்படங்களின் ஆக்கத்தில் இருக்கின்றன. ஒரு தனிமனிதனின் வாழ்க்கையை படமாக்கும் போது சுவாரசியமாக இருக்கமா என்று கேள்வியை முன்வைப்பது அபத்தம் என்று நினைத்தேன். ஆனால் இத்திரைப்படங்கள் அந்த எண்ணத்தை பொய்பித்தது.

 

The man who knew infinity – இராமானுஜம் மெட்ராஸ் பலகலைகழகத்தில் படிப்பைத் தொடர முடியாமல் போனாலும், குமாஸ்தாவாக ஒரு வேலையில் சேர்ந்து தனது கணித ஆய்வுகளைச் செய்து வருகிறான். அதுவரை கோயில் வளாகத்தில் தான் தனது தேற்றங்களை எழுதிப்பார்த்தவன் கைகளில் காகிதம் கிடைக்கின்றது, தனது ஆய்வுகளை பிரசுரிக்க விரும்பி அதை கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்திற்கு அனுப்பி வைக்கிறான்.

 

முதலில் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் அந்த கடிதத்தையே வாங்க மறுக்கும் பிரபலமான கணித ஆய்வாளர் ஹார்டி, ராமானுஜத்தின் ஆய்வு முடிவுகளைக் கண்டு வியந்து போகிறார், அவரை கேம்ப்ரிட்ஜ் வளாகத்திற்கு அழைக்கிறார். தன் காதல் மனைவியைப் பிரிந்து செல்லும் ராமானுஜம், அங்கே தன் ஆய்வுகளை பிரசுரம் செய்ய முனையும் போது.

அவரது ஆய்வுகள், தேற்றங்கள், முடிவுகள் ஆகியவற்றை கணித முறைப்படி நிரூபணம் செய்யச் சொல்லி அழுத்தம் கொடுக்கிறார் ஹார்டியும் மற்ற பேராசிரியர்களால். விடை கண்டுபிடிக்கவியலா பல தேற்றங்களுக்கும், புதிர்களுக்கும் முடிவினைச் சொல்லும் இராமானுஜம் கல்வியலாளர்களுக்கு ஏற்ப அதை நிரூபணம் செய்ய, அந்த அந்நியச் சூழலில் இனவெறிக்கு ஆளாகி, தன் காதல் மனைவியைப் பிரிந்து (ஒருபுறம் மனைவி அனுப்பும் கடிதங்களையும், அவருக்கு வந்த கடிதங்களையும் ராமானுஜத்தின் தாயார் மறைத்து வைக்கிறார்), தன் உடல் வியாதிகளை சமாளித்துக் கொண்டு, ஒரு பிராமிணனாக மரக்கறி உணவு மற்றும் மது அருந்தாமல், தன் வழிபாட்டு முறைகளில் குறை வைக்காமல், அதிலும் முதலாம் உலக யுத்தக் காலத்தில். தனது ஆய்வுகளையும், முடிவுகளையும் நீரூபணம் செய்யும் போராட்டமும், அதற்கு ஆதரவாக ஹார்டி மற்றும் லிட்டில்வுட் ஆகிய பேராசிரியர்கள் பல்கலைகழகத்தில் போராடி ராயல் சொசைட்டியின் ஃபெலோஷிப் பெற்றுத் தருகின்றனர்.

தன் நாட்டிற்குத் திரும்பிய ஒரு வருடத்திற்குள்ளேயே இராமனுஜனின் மறைவு குறித்து செய்தி வருகிறது ஹார்டிக்கு. லியனார்ட்ய் ஆய்லர், கார்ல் ஜாகோபிக்கு இணையாகப் பேசப்படும் ராமானுஜனின் வாழ்க்கை இவ்வாறு பதிவு செய்யப்படுகிறது

*

The Theory of Everything  – மேற்சொன்ன படம் எடுக்கப்பட்ட அதே கேம்ப்ரிட்ஜ் வளாகம், ஆனால் 50 ஆண்டுகளுக்குப் பின்னான காலக்கட்டத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கேம்ப்ரிட்ஜில் ஆஸ்ட்ரோ ஃபிஸிக்ஸ் மாணவனாகக் கல்வி பயிலும் ஹாக்கிங், இலக்கியம் பயிலும் ஜேன் வைல்டுடன் காதல் கொள்கிறார். தனது கல்வியில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு தீவிர ஆய்விலிருக்கும் அவருக்கு மிகவும் கொடியவகை நரம்பு நோய் வந்துவிடுகிறது. அவரது வாழ்நாள் அதிகப்பட்சம் இரண்டு வருடங்களே இருக்குமென மருத்துவர்கள் சொல்லப்படுகிறது. ஜேன் வைல்ட், தன் காதலின் காரணமாக ஹாக்கிங்குடன் பயணித்திட விரும்புகிறாள்.

6

 

இருவருக்கும் திருமணம் நடக்கின்றது, குழந்தைகள் பெறுகின்றனர். ஆய்வு ஏற்கப்பட்டு முனைவர் ஆகிறார். நோயின் தீவிரம் கூடிக்கொண்டே போகின்றது. ஜேன் வைல்ட் எல்லாவற்றையும் சமாளிக்கின்றார். ஆய்வுகளில் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்லும் ஹாக்கிங்கிற்கு தன் உடல் மிகவும் சுகவீனம் அடைகின்றது. தனது மனைவியின் அன்பைப் புரிந்து கொள்ளும் கணவனாக, அவர்களது நண்பராக குடும்பத்திற்குள் உள்ளே வந்திருக்கும் ஜோனாதனை அனுமதிக்கிறார்.

ஒரு கட்டத்தில், தன் மனைவியின் மீது கொண்ட காதலாலே அவளுக்கான தேவையாக ஜோனாதனே இருக்க முடியும் என்று நம்புகிறார். அமெரிக்காவிற்குத் தன் காரியதரிசியுடன் செல்கிறார். தனது கனவுப் புத்தகமான “THE BRIEF HISTORY OF TIME” வெளிவருகிறது. தனது மனைவியுடன் தன் நட்பைத் தொடர்வதாகவே படம் நிறைவுறுகிறது.

*

ஜேன் ஹாக்கிங் எழுதிய – “Travelling to infinity: My life” என்கிற சுயவரலாற்று நூலை ஆதாரமாகக் கொண்டு The Theory of Everything  என்ற பெயரில் திரைப்படமும், 1991ல் ராபர்ட் கனிகல் என்பவரால் எழுதப்பட்ட இராமனுஜனின் சரிதம் “The Man Who Knew Infinity” என்கிற நூலினை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் திரைப்படமும் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆதார நூலிலேயே ஒரு ஒற்றுமை இருக்கின்றது.

INFINITY எனப்படும் முடிவிலி பற்றி இருவேறு திசைகளில் இருந்து வரும் சிந்தனையை ஆவனப்படுத்தியிருக்கும் படமாக இவற்றைப் பார்க்க முடிகிறது.

இராமானுஜனும், ஹாக்கிங்கும் கல்லூரி விடுதியில் தங்கள் ஆய்வுகளை செய்யும் இடம் ஜன்னலின் அருகே எழுதும் காட்சி ஆகட்டும், பிரபஞ்சத் தோற்றம் குறித்தும் அது விரிவடையும் முறை குறித்தும் ப்ளாக்ஹோல் குறித்தும் ஹாக்கிங்கின் ஆசிரியர் வரையும் வடிவமும், ஹார்டி வரையும் கணித ஜாமெட்ரி வடிவமும் ஒன்றாக இருக்கும். முடிவிலியாக ஹாக்கிங் ப்ளாக் ஹோலை சொல்வதும், ராமானுஜன் இறந்த பின்னர் கிடைத்த புத்தகமான ”தொலைந்து போன புத்தகம்” எனும் நூலில் வரும் தேற்றம் ப்ளாக் ஹோல் பற்றியது என்கிற குரலோடு திரைப்படம் முடிகிறது.

முடிவிலியில் இருவருக்கும் இருக்கின்ற இருவேறு கண்ணோட்டம் திரையாக்கத்திலும் இருவேறு உளக்காட்சிகளில் (PERSPECTIVE) கையாளப்பட்டிருக்கின்றது.

துறை சார்ந்த அவர்களது ஸ்டீஃபன் ஹாக்கிங், ராமானுஜர் இருவருக்கும் இடையே இருக்கும் மிக முக்கியமான வித்தியாசம் அவர்களது கலாச்சாரமும் வாழ்வியல் முறையும்தான் (life style). அதைச் சார்ந்தே அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் வாழ்க்கையை கொண்டுசெல்கின்றன . அதாவது சிறுவயது முதலே இருவரும் அடிக்கடி நோயுறுபவர்களாக இருக்கிறார்கள். ஹாக்கிங்கைப் போலே ராமானுஜத்தால் வேறொரு சூழலில் தன்னை பொருத்திக் கொண்டு வாழ முடியாமல் போனது, சரித்திரத்தில் ஒரு பேரிழப்பாக மாறியது.

மேற்சொன்ன காரணத்தால் இரு திரைப்படங்களிலும் நாயகர்கள் தத்தமது ஆய்வில் தங்களது முடிவுகளுக்கு எப்படி வருகிறார்கள் என்பதைக் காட்டும் விதத்தில் வித்தியாசம் வந்துவிடுகிறது.

ஒரு கல்வியாளரான ஹாக்கிங் மனதில் கருந்துளை பற்றிய எண்ணம் வருவதை எழுதும் பலகையில் வரைந்த கோடுகளில் இருந்து அடுத்த காட்சியில் ப்ளாக் காஃபியில் ஊற்றப்படும் வெள்ளைக் க்ரீம் கருந்துளை போன்ற ஒரு தோற்றத்தையும் பிரபஞ்ச உருவாக்கம் பற்றிய காட்சியை குறியீடாகக் காட்டியிருப்பார். இந்த உணர்ச்சி பார்வையாளர்களுக்கு தான், பின்னர் அதே போல் ப்ளாக் ஹோலைப் பற்றி பேசும் போது, அந்தக் கட்டடத்தின் உட்புற மேற் கூரை ஒரு ஸ்தம்பம் (DOOM)மீது காமிரா கோணம் சுழன்று அதே கருந்துளை பற்றிய உணர்வை நமக்கு உண்டாக்குகிறது. சட்டையை பிறர் உதவியின்றி அணியக் கூட இயலாது போன நிலையில் இருக்கும் ஹாகிங்க்ஸுக்கு தன் கண்களை மறைத்த துனியின் ஓட்டை வழியாக எரிந்து கொண்டிருக்கும் அடுப்பினை பார்க்கும் காட்சியில் அவருக்கு ஒரு கோட்பாடு உருவாகின்றது.

ஆனால் இதே போன்ற காட்சிப்படுத்துதல் ராமானுஜத்திற்கு வைக்கப்படும் போது இந்த பார்வைகளைப் புகுத்த முடியாது, ஏனென்றால் ராமானுஜம் பற்றியக் குறைவான குறிப்புகள் மற்றும் ராமானுஜம் தன் முடிவுகளை அறிவிக்கும் விதமென நாம் அறிந்தது. அவரது இஷ்ட்தெய்வமான தேவி அவரது கனவில் வந்து எழுதிவிட்டுப் போன தேற்றங்களாகத் தான். ஆனால் அதை அறிவியல் பூர்வமாக அணுகிடக் கூடாது என்பதில் ராமானுஜம் தேற்றங்களை உருவாக்கும் காட்சிகளை இயற்கையை நேசிப்பவனாகவும், பக்திமானாகவும் வெளிப்புறத்திலிருந்து காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதால் அவை வெற்றிடமாக்கப்பட்டிருப்பது இயக்குநரின் அறிவுப்பூர்வமான செயல்பாடு.

இந்த முரணை கவனியுங்கள், ஹாக்கிங் குறித்த காட்சி கலாபுர்வமாக பார்வையாளர்களுக்கு உணர்த்தப்படுவதும், ராமானுஜர் குறித்த காட்சி நம் அறிவிற்கு எளிதாக எட்டப்படும் புரிதலோடும் படமாக்கப்பட்டிருக்கும் விதத்தை.

*

இந்த இரண்டுத் திரைப்படங்களிலும், கதாப்பாத்திரங்கள் வழியாக முடிவிலி எப்படி காட்சிப்படுத்தப்படுகிறது என்பதைப் பார்த்தோமேயானால், ஹாகிங் ஒரு முடிவிலியைத் தெரிந்து கொள்ளும் ஒரேயொரு பெரிய கேள்விக்கான் விடையாகத் தெரிந்து கொண்டதை, மறுநாள் மறுத்து வேறு ஒன்றாகத் தெரிந்து கொண்டு தேடிக் கொண்டிருக்கின்றான். கடவுள் அவனுக்கு முடிவிலியில் தொலைந்துவிடுகிறது. அவனும் தேடும் நாட்டம் கொண்டவனில்லை. அவனுக்கு முடிவிலி என்பது அடுத்ததாக தான் ஏற்றுக் கொள்ளப்போகும் அல்லது அவனே உருவாக்கப்போகும் அறிவியல் கோட்பாடு.

ராமானுஜன் எழுதிய முடிவுகளுக்கு பதிலாக “It arrives on me” என்று பதில் சொல்கிறான். அவன் முடிவிலியைப் பற்றி சிந்திக்கும் முன்னரே, அதற்கு துணையாக அவனது நம்பிக்கையும் இருக்கின்றது.

அதனால் தான் அவன் மணல் துகளில் இருந்து, ஆற்று நீரின் ஒவ்வொரு துளியிலும் ஒரு PATTERN இருப்பதாக நம்புகின்றான். அந்தப் பேட்டர்னில் தான் கடவுள் இருப்பதையும் அறிவுப்பூர்வமாக அவன் ஏற்றுக் கொள்ளமுடிகிறது.        ( இவற்றை தன் மனைவிக்கு விளக்குவதாய் அமையும் இந்தக் காட்சி கவித்துவமாகப் படமாக்கப்பட்டிருக்கும்)கடவுள் அவனுக்கு உலகம் காணத் துடிக்கும் முடிவிலியின் கடைசிப் புள்ளியில் இருப்பதாக நம்ப வைக்கின்றது பக்தி, ஆக அங்கிருந்தே கிடைத்ததாக தான் உணர்ந்ததை அவன் கணிதமாக எழுதும் போது அது முடிவிலியின் தேற்றத்தை நெருங்கியிருக்கலாம், ராமானுஜன் இங்கே சொல்வது கணிதம் என்பது கடவுளின் மொழி என்று. ராமானுஜம் ஒரு முடிவிற்கு வந்துவிட முடிகிறது.

ஹாக்கிங்கை தெரிந்து வைத்திருக்கின்ற நமக்கு ராமானுஜனை அவ்வளவாகத் தெரியவில்லை. அதனால் தான் ராமானுஜனைப் பற்றித் தமிழில் உருவாக்கிய திரைப்படம் ஒரு கலைப்படைப்பாக உருவெடுக்கவில்லை. கீழைத்திய சிந்தனையோடு மேஜிகல் ரியலிஸமாக இதே கதையை ஒரு கலைப்படைப்பாக ஏன் சொல்லமுடியாது என்று எண்ணம் எழாமலில்லை. அப்படிப்பட்ட ஒரு கலைப்படைப்பு தானே இராமனுஜனை இந்தியா போன்ற ஒரு நாட்டில் பிரிவினைகளைத் தாண்டிச் சேர்த்திட முடியும்.

*

இப்படங்களில் பிரதான கதாப்பாத்திரங்களுக்கு இணையாக வலிமையான பெண் கதாப்பாத்திரங்களாக ஜேன் ஹாக்கிங் மற்றும் ஜானகி (ராமானுஜத்தின் மனைவி) கதாப்பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

அறிவியல் வெறுமனே அறிவாக இருந்திருந்தால், அழிவுக்கு மட்டுந்தான் பயன்பட்டிருக்கும். அது உணர்வினால் செம்மைப் படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே ஆக்கம் பற்றிய உணர்வோடு அது உருவாக்கப்படும். கலை தான் அப்படி செம்மையான உணர்வுகளை உருவாக்க இயலும் என்பதால் இரண்டும் COMPLIMENTARY WITH EACH OTHER.

ஸ்டீஃபன் ஹாகிங்கும், ஜேன் வைல்டும் முதன்முறை சந்திக்கும் பொழுது இப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள்

ஹாகிங்: சைன்ஸ்

ஜேன் : ஆர்ட்ஸ்

(இனிமேல் இவர்கள் காதலர்கள் ஆகக்கடவார்கள் என்று நாமும் நம்புகிறோம்)

ஒரு காட்சியில் ஜேன் ஹாக்கிங் சக்கர நாற்காலியில் ஹாக்கிங் முன்னிறுத்திவிட்டு, அந்த ஃப்ரேமை விட்டு விலகி ஓடிவிட. அந்த நாற்காலியைப் பார்த்த அதிர்ச்சியோடு மெல்ல நகர்ந்து அதில் அமரும் ஹாக்கிங், அழுது சமாதானமடையும் போது, காமிரா தன் ஃப்ரேமை பின்னே சென்று அகலப்படுத்தும் போது சற்றுத் தள்ளி நின்று அழுது கொண்டிருக்கும் மிக வலியமையான கதாப்பாத்திரத்தைப் பார்க்கும் போது நாமும் நிலை தடுமாறுவோம்.

4

இராமனுஜரிடமிருந்து எந்தக் கடிதமும் வராமலிருக்க ஜானகி கடற்கரையில் புலம்புவதும், கோயிலில் அவன் எழுதிய எழுத்துகள் மீது விழுந்து அழுவதுமாக, அவள் தன் கணவன் தன்னை மறந்து விட்டான் என்று நம்புகிறாள்.

ஒருபக்கம் தாம்பத்யம் முதலான பல அடிப்படை எதிர்ப்பார்ப்புகளை தன் காதலிக்கு கொடுக்க முடியாத ஹாக்கிங், அவள் நண்பனாக வீட்டிற்கு வரும் ஜோனாதனை எந்தத் தடையும் சொல்லாமல் ஏற்றுக் கொள்கிறான், அவனது காதல் unconditionalஆக இருக்கிறது. ஹாக்கிங் பேசமுடியாமல் போகுமளவுக்கு மோசமான நிலைக்குச் செல்ல, முழுமையாக மீண்டும் ஹாக்கிங்கிடமே அவள் தன் நேரத்தை செலவழிக்கிறாள். இந்த எதிர்பார்ப்புகளுக்கும், கட்டுப்பாடுகளுமற்ற காதலைச் சுமந்து வரும் ஜேன் ஹாக்கிங்கின் காதலினால் மட்டுமே ஸ்டீபன் ஹாக்கிங் இரண்டு வருடமே அவன் ஆயுட் காலம் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் 75 வருடமாக வாழ்ந்து கொண்டிருக்க காரணமாகிறது.

ஆனால் ராமானுஜத்தால் தன் மனைவியின் அன்பைப் பெற முடியவில்லை, துயரத்தில் தோய்ந்த அறிஞனைப் பாதுகாக்க அந்தக் காதல் துணையாக இல்லை. இருவரும் ஏமாற்றப் படுகின்றனர். இருவரும் தொடர்பு கொள்ள முடியா நிலையிலும், இருவரும் தம்மை மறந்து விட்டிருப்பர்களோ என்று ஒருவருக்கொருவர் அஞ்சுகின்றனர். இராமனுஜன் இறந்து போகின்றான் 32 வயதிலேயே. ஆனால் அவன் உருவாக்கியதும் ஹாக்கிங் உருவாக்கியதற்கு நிகராக மிகவும் அரிய தேற்றங்கள். அது உலகமே இன்று வரை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாதவை

ஹாக்கிஙை காதல்(unconditional love) INCUBATE செய்திருக்கிறது, அதனால் அவரால் பல ஆண்டுகள் வாழ்ந்து சாதனைகள் செய்துவர முடிகிறது. இராமனுஜன்.- அவன் ஒரு துரதிர்ஷ்டசாலி. அவனால் நீண்ட காலம் வாழ முடியவில்லை. அவனது காதலில் தடை இருந்திருந்த்து. அவன் ஏமாற்றப்பட்டிருந்தான், ஜானகியும். ஆனால் அந்தக் காதலும் வலிமையானதே அவன் வலிமையானவனாக இல்லாமலே அவமானங்களைக் கடந்தும் வெற்றி பெற்றவனாக, தன் வெற்றியைத் தூக்கிக் கொண்டு இந்தியாவுக்குத் திரும்பிட ஒரு காரணம் இருந்தது. அது அவன் காதலாக, ஜானகியாக இருந்தது.

காதலால், அன்பால் வளர்க்கப்படாதவர்கள் தான் இந்த உலகில் அபாக்கியசாலிகள் என்று ஜானகியை நினைக்கும் போதும், ஜேன் ஹாக்கிங்கை நினைக்கும் போதும்,  கண்ணம்மாவை நினைக்கும் போதும் எழும்பிய உணர்வில் உருகிக் கசிந்த கணம்.. நானும் அந்த பூச்சூடிய ஐரோப்பியக் குழந்தைகளையும், அவர்களது பெற்றோர்களையும் செல்போனில் படம் பிடித்திருக்கலாமே என்று தோன்றியது.

 
நன்றி : கணையாழி

 ஜீவ கரிகாலன்

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள் – 2

1

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள் – 2

விளிம்புகள் உரசும் கணப் புள்ளியில்..
*    
மரபின் ஆழம் துளைத்து நிற்கிற காலத்தை முற்றி
இன்னொரு பாதையின் தவம் கழித்து அசையும் நிர்மூல மௌனம்
உனதல்லாத பிறையின் அறியப்படாத பக்கத்தைப்
பிரதி எடுக்கிறது
காண்
               
அரூபம் இறுகி
கீழிறங்கும்
கனவின் நிழல் பிடித்தாட்டும் பைத்தியச் சொற்கள்
இருப்பை மறுக்கின்றன
 
உள்ளங்கையில் கிளை விரிக்கும் துர்மரணத்தின்
நுனி தொங்கும்
கதவில்
கீறப்பட்டிருக்கும் கடவு எண்
 
ரகசியம் என்றொன்று இல்லை
அது ஒரு தூக்கம்
 
பழைய ஞாபகத்தின் தாழ் துருவேறுதலை
யுக வளைவுகள் மோதும் டேன்ஜன்ட் சந்திப்பில்
உறுதிப்படுத்த
 
ஒளிவேகப் பாய்ச்சலைக் கொண்டிருக்கிற மனம் கற்பிதப்படுத்தும் அர்த்தங்களால்
நிகழ் என்ற சூட்சுமக் கணத்தை கையிலெடுக்கிறது
 
அந்த மௌனம்
அத்தவம்
அப்பிறவி
அக்கடவு எண்
 
எனதல்லாத முழுமையின்
அறியப்படாத இருண்ட பக்கத்தில் கீறப்பட்டிருக்கும்
ஒரு கதவு
 
அடைதலுக்குரிய பாதையொன்றை தேடலின் தொடக்கப் புள்ளியென
கருநீலச் சதுரத்துள்
புதைத்த
தலைகீழ் முக்கோணம்
 
***
 
தனிமைக் கசிவின் மிதவை
 
*
பேச்சு சுவாரஸ்யத்தில் இழந்த ஒன்றை
சுவரொட்டியில் கண்டபோது
அது
காணாமல் போனதின் அறிவிப்பு
என்கிறது மட மனம்
 
அதன் வயது என்னவென தேடியபோது
பெய்த மழையோ கண்ணீர்த்துளியோ கரைத்திருக்கலாம்
வாய்ப்புண்டு
 
மரணத் தூதை
கப்பலாக்கி மிதக்க விடுதலில் தலையெழுத்துக்கள்
பிரிகின்றன
துயரக் கசிவில்
 
இரவல் பெற்ற பசை பிசுபிசுப்பதால்
போஸ்டரை
குறை சொல்வானேன்
 
வாய்த்தது அவ்வளவுதான்
 
***
 
ஆட்சேபத் தர வரிசையில்..
 
*
அவர்கள் வந்துவிட்டதாக தொடர்ந்து சொல்லப்படும் அறிக்கை
நீங்கச் செய்கிறது விருப்பமில்லா மனத்தின் சிறு நிறத்தை
 
அடைவதைப் பற்றி கனா எதற்கு
பரிகசிக்க கையிலிருக்கும் தத்துவத்தின் நிதானம்
வேறெங்கும் பெறப்பட்டதல்ல
 
இந்நிலத்தின் நஞ்சிலிருந்து பிடுங்கி எடுக்கப்பட்டது
 
அதனை
நிகழ்த்திப் பார்த்த
நிகழ்த்த விரும்பிய
 
நிகழ்ந்துவிட்டதால் வருத்தப்பட்ட
முகங்கள்
 
இருளில் காத்திருந்தவை
 
வரலாறு கழுவப்படுகிறது
வரலாறு கழுவில் இருக்கிறது
 
மீண்டும் பரிசீலனை செய்வதற்கரிய முனை
கண்ணுக்கெட்டிய பார்வையைத் தொலைவில் நிறுத்துகிறது
 
அவர்கள்
வந்துவிட்டார்கள்
 
வந்துகொண்டே இருப்பவர்களாகிறார்கள்
 
***
 
புறமல்ல..

ள்
*
தசைநார் சிதைத்து முகத்தைக் கிழி
உட்புறம் வழியும் ரத்தத்தை ருசி அது உன் ஆன்மா
நீ என்கிற பதம் தப்பிப் பிறழ்வாய் அதுவுன் நடனம்

அடையாளம் சுமந்து அடையப் போவது எதை என்பேன்
எனக்கேன் உனது பட்டியல்

உன்மத்தம் உன் பதில் அதை நீ சிதை
பாதையின் போக்கில் காலத்தின்
சுவடு

எதுவோ உன் ஆராய்ச்சி
பெயர்
உடல்
மௌனம்

மூழ்கு மரணத்தில் உன் சுவாசம் தியானம்
தனித்திரு வரம் பெறுவாய்
சமயம் கடந்து தனித்துவிடப்பட்ட அதுவொரு தவம்
அதுவொரு முகமூடி

நதிமூலம் ரிஷிமூலம் ஏன்
துணிந்திடு
பொருந்தும் உன் முகத்திலும்

அதன் செயற்கையிழை பிய்த்து
நசியும் உன்மத்தத்தை ருசி
புறமல்ல உள்

உனக்கேன் எனது பட்டியல்
அனல் பிரிந்து அலையும் நெடுஞ்சாலை தாரில்
அதுவொரு நீண்டக் கனவு அல்லது
நீளும் கனவு
எதுவுன் ஆராய்ச்சி

பயணம் திசை மாயை சுழல்
அனைத்தின் புள்ளி இழுத்துச் செல்லும் வரைபடம்
பட்ட மரச் சட்டம்

நிழல் அழுத்தி துயர் மீளா வேரின் ஈரம்
பாட்டன் சாபம்

கொடிச் சுற்றி நாபி வழியில்
சிரசின் சிக்கல்
நியூரான் வலையில் தப்பும் நினைவில்
மங்கும் நிறமாகி டி.என்.ஏ –வின்
கடைசிப் படி

இடம்
எனக்கோர் இடம் சுயநலம்
ஆறடி
ஈரடி

பிறகு ஓரடி
அடி

***
 
எதிர் இருத்தலின் வாதத்தோடு..
 
*
ஏகமனதாக
ஒத்துக்கொள்வதென்பது

சாதுரியத்தின் கடைசி படிக்கட்டுக்குப் பிறகும்
ஒரு படி இருப்பதென
நம்பும்படி மடங்கி நீள்கிறது

பாதைகளின் கதை தனி
கிளைக் கதையின் பாதை முற்றிலும் தனி

தனிக்கதையின்
கிளைப்பாதையின்படி ஒத்துக்கொள்ளாத
ஏகமனமென்பது

பக்கவாட்டு சாதுரியம்

-இளங்கோ

 

யாளி பேசுகிறது – 15 //அரங்கம் என்பதும் ஊடகமே

1

                                                                                                                                                      (யாளி பேசுகிறது – 15)

              ஜீவகரிகாலன்

டீமானிட்டைசேஷன் என்று சொல்லப்படும் பணத்தை மதிப்பிழக்கச் செய்யும் யுக்தியை மத்திய அரசு கையாண்டது 500 மற்றும் 1000 ரூபாய்களில், அதே போல பொதுமக்களிடம் இருந்து கடைகளும், நிறுவனங்களும் 2000 ரூபாய்த்தாள்களை வாங்கிக்கொள்ள மறுப்பதும் டீமானிட்டைசேஷன் தான் என்று அரசாங்கம் புரிந்துகொள்வதில்லை. ஆக ANTI-INFLATIONARY (பணவீக்கத்தைத் தடுக்கும் முயற்சியாக –இவர்கள் உருவாக்கியப் பணத்தட்டுப்பாடு) நடவடிக்கை, முறைப்படுத்தப்பட்டு அமுல்படுத்தப்படாததால். ஒரு பக்கம் சிறுவியாபாரிகள் , உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டாலும், விலைவாசியைக் கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு எகிற வைத்துவிட்டது என்று யாளி பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் போது எனக்கும் சற்று அதிர்ச்சி தான்.

என்ன செய்ய சென்ற வருடம் எல்லோரும் இணையத்தில் வானிலை அறிக்கைச் செயலிகளை தரவிரக்கம் செய்து மழையின் வருகையை ஊகித்ததுபோல். இந்த வருட இறுதியில் இப்படி மழைக்காளான்களாய் பொருளாதார நிபுணர்கள் கூட்டத்தில். இந்த நிர்வாண நகரத்தில், அண்டர்வேர் அணியாத யாளி பொருளாதார நிபுணராவதில் என்ன தவறு?

தக்ஷிணசித்ராவில் இந்த மாதம் இரு முக்கியக் கண்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஒன்று வஜிரா கேலரியில் அனாமிகாவின் படைப்புகளும். காதம்பரி கேலரியில் ராமு மற்றும் அந்தோனிராஜின் படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கணபதி சுப்ரமணியன், ஓவியம் மீது ஆர்வம் கொண்ட நபர்களை ஒருங்கிணைத்து ஒவ்வொரு வாரயிறுதி நாட்களிலும் வரைய ஆரம்பித்து சென்னை வீகெண்ட் ஆர்டிஸ்ட் என்று இயக்கமாகவே செயல்பட்டுவரும் அமைப்பினைத் தொடங்கிய நபர்களில் ஒருவர். அவருடன் இணைந்து கேலரிகளுக்கு சென்று வர விரும்பி சொல்லிவைத்திருந்தேன். பொதுவாக ஓவியக் கண்காட்சிகளில் தொடக்க நாளைத் தவிர வேறு எந்த நாளிலும் ஆள் அரவமற்று தான் இருக்கும். அப்போது சென்று வந்தால் ஓவியங்களை சற்று சாவகாசமாக பார்த்துவரலாம். என்ன ஒரு சிக்கலென்றால், விளக்குகளை நாம் தான் போட வேண்டும், ஒருவேளை அங்கு காப்பாளர் இருந்தால் இன்னும் சிக்கல் தான் நாம் நகர நகர விளக்குகள் அணைக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். ஆனாலும் இரட்டை நாக்குகள், வெற்றுப் புகழ் பேச்சுகள், போலிப் பாராட்டுகள் இல்லாமல் படைப்புகளைப் பார்க்க தொடக்க நாளை மட்டும் புறக்கணித்தல் உசிதம்.

சென்னையில் லலித்கலா, சோழமண்டலம் தவிர்த்து மற்ற அரங்குகள் பெரும்பாலும் அபார்ட்மெண்டுகளாகக் கட்டப்பட்டவையே, ஆர்ட் ஹவுஸ், வேதா போன்ற கேலரிகளில் முக்கியமான கண்காட்சிகள் பல அமைக்கப்பெற்றாலும் ஒவ்வொரு அறையாகச் சென்று பார்ப்பது ஒரு வகையான அசூயை தான். ஃபோரம் ஆர்ட் கேலரியில் குழந்தைகளுக்கு ஓவியம் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கும். சென்னை அரசு மியூசியத்தின் மாடர்ன் ஆர்ட் கேலரியில் SG வாசுதேவின் சிற்பங்களுக்கு அருகில் லோகோமோடிவ் மினியேச்சர் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து “பஹுத் அச்சி க்ரியேடிவ் டிஸ்ப்ளே” என்று யாராவது சொல்லும்போது கேட்டிருந்தால் உங்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படலாம். எல்லாவற்றுக்கும் உச்சபட்சமாக சென்னை ஓவியக் கல்லூரியில் உள்ள கண்காட்சிக் கூடம் உலகத்தரம் வாய்ந்தது. இதற்காகவே PWD நண்பர்களுக்கு அரசு சார்பாக பாராட்டு விழா நடத்த வேண்டும். ஓவியங்களைக் காட்சிப்படுத்தும் கூடத்தில் மிகப்பெரிய ஜன்னலகள் அவசியம் என்று நினைத்த அவர்களது திறனைப் பற்றி ஓவியக்கல்லூரி மாணவராக அரிதாரம் பூசியிருந்த சீனிவாசன்ஜி பெருமை பேசியதைக் கேட்டால், அக்கெடமிக் முதல்வர் பெருமைப்பட்டிருக்க வேண்டும்.

சென்னையைப் பொருத்த மட்டில் நவீன ஓவியங்களை, சிற்பங்களைக் காட்சிப்படுத்த மக்கள் கூடுமிடங்களாக விமானநிலையமும், ஷாப்பிங் மால்களையுமே, (மியூசியத்தை ஏனோ மறந்துவிட்டேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள்) சொல்லலாம். விமான நிலையத்தில் அடிக்கடி கூரை இடிந்து விழுவதாலும், அங்கே நம்மைப் போன்றவர்களுக்கு அதிகம் (துளிகூட) வேலையில்லை என்பதாலும் அதைப் பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை. ஆனால் உலக அளவில் சமகாலக் கலை என்னவென்பதைத் தெரிந்து கொள்ள எந்த கேலரிகளிலோ அல்லது நட்சத்திர ஹோட்டல்களிலோ தெரிந்து கொள்ள இயலாததை ஃபீனிக்ஸ் ஷாப்பிங் மாலிலும் அதன் ஆர்ட் சீ ப்ரோக்ராம்களிலும் அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. எப்படியாகினும் சமகாலக் கலை எப்போதும் மக்களுடன் தான், அவர்களுக்கு அருகில் தான் எப்போதும் இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்வதற்கு தான் பெரிய பயணம் தேவைப்படுகிறது.

சென்னையின் தக்ஷிணசித்ராவும் அப்படிப்பட்ட ஓர் இடம் தான். வார இறுதி நாட்களில் அங்கே எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். கைவினைகள், கட்டுமானங்களோடு, கிராமியக் கலைகளோடு, நவீன ஓவியங்களையும் பார்ப்பது நேரடியாக கேலரியில் சென்று பார்ப்பதைக் காட்டிலும் நல்ல அனுபவமே.

அந்தோணிராஜின் போர்ட்ரெயிட்கள் ஆச்சரியப்படுத்தின, ராமுவின் போர்ட்ரெயிட்டுகளும். நிழற்படங்களிலிருந்து போர்ட்ரெயிட்களாக உருமாற்றித் தரும் எத்தனையோ செயலிகள் சாமான்யனுக்கும் கிட்டுவதாலோ என்னவோ இந்தவகைப் படைப்புகள் பற்றி அதிகம் வியக்காமல் இருக்க நியாயம் இருக்கிறது. ஆனால் அந்த கற்பிதத்தை உடைத்துப் போட்ட இரு இளைஞர்களாக இவர்களைச் சொல்லலாம். எளிய மனிதர்கள் தான் இவர்களது கருப்பொருள், மிக நுண்ணிய கோடுகள் தரும் பிரமிப்பும், தேர்ந்தெடுத்த மாடல்களான எளிய மனிதர்களிடமிருந்து நமக்குக் கடத்தப்படும் உணர்வுகளும் பிரமிப்பூட்டுபவை தான். ராமு பென்சிகளாலும், அந்தோணிராஜ் பேனா மையினாலும் இவற்றை வரைந்து வைத்திருக்கின்றனர்.

இது போன்ற படைப்புகளை சற்று நேரம் உற்றுப்பார்ப்பதே தியானித்தலை ஒத்தது எனில், அதை வரைதல் என்பது?

 Tradiotins of Tamilnadu - Show - Dakshichithra
Acquaitance – Anthony Raj (Pen & Ink)

ஏ.வி.இளங்கோ ஆர்ட் ஃபவுண்டேசன் இவரது படைப்பிற்கு விருது கொடுத்ததாக அவரிடம் பேசிய போது தெரிந்து கொண்டேன்.

அந்தோனிராஜ் கோபுவின் நண்பர் என்பது, அவரைப் பற்றி எழுதிய ஒரு சில வார்த்தைகளின் பிழைத்திருத்தத்தை கேரி அவுட் செய்யும் போது தான் சொன்னார். இத்தனை நிதானம் கொண்டிருக்கிற கோபுவும் போர்ட்ரெயிட் வரைவதில் தேர்ந்தவர் தானே என்று நினைக்கும் போது பவா செல்லதுரையின் போர்ட்ரெயிட்டும் ஞாபகம் வந்தது. பெரிய வேலை ஒன்று நமக்கென இருக்கிறது என்பதைத் தான் கணபதிஜியை ஒவ்வொரு தடவை சந்திக்கும் போதும் உணர்ந்து வருகிறேன். அந்தோனிராஜ் அல்லது அனாமிகாவின் நேர்காணலில் இருந்து தான் இவற்றைத் தொடங்க வேண்டும் என்று யாளி ஆலோசனை சொல்கிறது. எப்படியோ யாளியை விடுத்து, தனியாக (அதாவது கணபதிஜியுடன் இணைந்து) ஓவியக்கலை குறித்து எழுத வேண்டும்/ஆவணங்கள் திரட்ட என்று முடிவெடுத்தபோது. யாளி தொண்டையைக் கணைத்துக் கொண்டுப் பேச ஆரம்பித்தது என்னிடம்…

 “கணபதிஜி சொன்னது போல நீ தனியாக ஓவியம் பற்றி எழுதப்போகிறாயா?” என்று யாளி கேட்கும் போது.

அதற்கு கொஞ்சமாவது சங்கீதம் தெரிந்து கொள்ளனுமே? அல்லது நடனம் தெரிந்து கொள்ளனுமே? என்கிற சித்திர சாஷ்த்ர கேள்விகள் வருமென்று எதிர்பார்த்தால்.

உனக்கு ஓவிய உலகின் கலைஞர்களின் SENIORITY & HIERARCHY FLOW CHARTS தெரியுமா? என்று நாக்கைத் தொங்க போட்டு கண்ணடித்தது.

எனக்கு அவையெல்லாம் தெரியாதே. கணபதிஜி, உங்களுக்குத் தெரியுமா?

– ஜீவ கரிகாலன்

யுவபாரதி பக்கங்கள் – 14

0

இளையனார் களவியல் உரை

யுவபாரதி மணிகண்டன்

அதிகாலை சிவாஜி குளத்தில் மூழ்கியெழுந்து பெரியகோயிலுக்குள் நுழைவேன். நனைத்துப் பிழிந்து உடுத்திய வேட்டி சட்டை உள்வெம்மையில் விரைவிலேயே உலர்ந்துவிடும். கொடிமரத்திற்குத் தெற்கே பசுவுக்குப் பூஜை நடந்துகொண்டிருக்கும். அண்ணாமலையானுக்கு முக்கால் சுற்று. உண்ணாமுலையம்மைக்கு முழுச்சுற்று. புறம்கெட்டு அகம்புலம்ப மறைந்து திரிய விட்டாயே என்ற கையறுநிலையோ. எதுதான் எனக்குளது என்கிற விஷயவிரக்தியோ.  அவள்முன் அந்தாதி பாடிவிட்டு எப்போதும் மூடியே கிடக்கும் பேய்க்கோபுரத்தின் பெருங்கதவை ஒட்டி உட்பக்கம் சென்று உட்காருவேன். அண்ணாமலையான் பாதம் பார்க்க எப்போதாவது வருகிற ஓரிருவர் தவிர பெரியசந்தடி ஏதும் அங்கு இருக்காது.

மனக்குகை போலப் பாதுகாப்பான பல மூலைகள் கொண்டது பெரியகோயில். அபத்தமான நினைவுகளோடு நம்பிக்கையான கற்பனைகள் போராடிச் சலிக்கும். பெரும்பேயாய்த் தனிமை எழுந்தாட, சற்றே மனிதப்புலம் நோக்கி நகர்வேன். மலையேறினாலும் மண்ணிறங்கத்தானே வேண்டும். நன்கு பார்த்துப் பழகியவர்களின் ஊகித்தேயிராத மறதியையும் அதிகம் பார்த்துப் பழகியிராதவர்களின் ஒட்டுதலான கனிவையும் கண்ட காலமது.

அன்று முற்பகல் கோபுரத்து இளையனாரின் முன்மண்டபத்தின் தென்மேற்குத் தூணில் சாய்ந்து கிடந்தேன். கூரையைத் தாங்க மட்டுமல்ல. கல்லாலான சிலையையும் கல்லாலாகாத சிலையையும் பலர்கண்படாமல் காத்துநிற்கவும்தான் தூண்கள். தெருவின் ஏதோவோரு மூலையில் சோம்பிக்கிடந்து ஆள்அரவம் கேட்டால் தலைதூக்கிப்பார்த்து திரும்பவும் புதைத்துக்கொள்ளும் நாய் போல மனம். கண்திறந்திருந்தாலும் சுற்றுச்சுவரின் ரதபந்தமோ குமாரஸ்தவமோ எப்போதாவதுதான் காட்சிப்படும்.

‘சிவா…’ என்ற குரலைக் காது உணர்ந்த கணத்தில் தலைதூக்கிப் பார்த்தேன். பாண்டுசாமி நின்றிருந்தார். மீண்டும் தலைசாய்த்துக் கொண்டேன். ‘மூஞ்சி கழுவினியா சிவா?’ நான் திரும்பவில்லை. ‘வா சிவா, சாப்பிடலாம்’ என்று அவராகவே என்கையை நீட்டி பொரியை அள்ளிவைத்தார். காசையெல்லாம் பொரியாக்கித் தன்பச்சைப்பையில் வைத்திருக்கும் பாண்டுசாமி. கிரிவலப்பாதையிலோ மலையிலோ எங்கு தென்பட்டாலும் ‘சாப்பிட்டியா?’ என்று கேட்டு பதில்வராவிட்டால் தன்பைக்குள் கைவிடுவார். வறண்ட தொண்டைக்குள் விழுந்த பொரி புரையேறி வெளியே விழுந்தது. தலையைத் தட்டியபடியே தண்ணீர்ப் புட்டியை வாயில் கவிழ்த்தார். அப்புறம் நாலுகைப்பொரி உள்ளே போனது. இன்னும் அள்ளிவைத்தார். போதும் என்றுவிட்டேன்.

திரும்பி உட்கார்ந்ததும் சுற்றுக்கம்பிகளுக்கு அப்பாலான பெரிய நந்தி கண்ணில்பட்டது. அன்றைக்குச் சில வருடங்களுக்கு முன் பிரபஞ்சனோடு கோயிலுக்குள் வந்தபோது அதே நந்தியருகில் நின்றிருந்தோம். பிரபஞ்சனுக்குத் தெரிந்த யாரோ ஒருவர் அருகில் வந்து அவருக்கு முகமன் சொன்னார். உருவ ஒற்றுமையோ அவரைப் போலவே திருத்தமான உடையணிந்த அப்போதைய காலமோ தெரியவில்லை. ‘உங்க பையனா சார்? நல்லா இருக்காரு,’ என்றார். உடனே என் தோளை அணைத்துக்கொண்டு ‘என் நண்பர்’ என்றார் பிரபஞ்சன். அந்தக் காட்சி விரிந்து மீண்டும் கண்ணுக்குள் சுருண்டுகொண்டது.

நான் சாய்ந்திருந்த கோபுரத்து இளையன் கோயிலே அதற்குத் தெற்கேயிருந்த கோபுரத்தின் மேலேயிருந்து அருணகிரி விழுந்தபோது தாங்கிப் பிடித்த முருகனுக்குக் கட்டப்பட்டது என்பார்கள். சம்பந்தாண்டானுடன் வாது செய்த அருணகிரியின் அழைப்புக்கேற்ப முருகன் காட்சி தந்த தூணைக் (கம்பம்) கருவறையாக வைத்து எழுப்பப்பட்டது கம்பத்து இளையன் கோயில். தெற்கே கம்பத்து இளையன் கோயிலுக்கும் வடக்கே ஆயிரம்கால் மண்டபத்துக்கும் மேற்கே கோபுரத்து இளையன் கோயிலுக்கும் இடைப்பட்ட பெருவெளியில்தான் பெரியநந்தியை உள்ளடக்கிப் பெரிய பந்தல் போட்டு அருணகிரிநாதர் விழா நடத்துவார்கள். வருடாவருடம் ஆகஸ்டு மாதம் நடக்கும். இளம்வயதில் பல தமிழறிஞர்களை, சமயப் பெரியார்களை அங்கு பார்த்திருக்கிறேன். பேச்சைக் கேட்டிருக்கிறேன். அப்பாவும் தம்பியும் சொற்பொழிவு கேட்க பெரும்பாலும் வரமாட்டார்கள். அம்மாவும் நானும்தான் வருவோம்.

அங்கு முன்பு பார்த்தவர்களில் சட்டென நினைவுக்கு வந்தார் வாரியார். திருப்புகழை அதற்கேவுரிய அதிர்வோடு அவருக்கேரிய நெகிழ்ந்த குரலில் பாடுவார். அவரது பெரிய உடல் சற்றே முன்பக்கம் தணிந்திருக்கும். அப்போது நான் கருங்காலிகுப்பத்தில் ஐந்தாவதோ ஆறாவதோ படித்துக்கொண்டிருந்தேன். அன்று கந்தபுராணம் சொல்லிக்கொண்டிருந்தார் வாரியார். இடையே ஔவை பற்றிச் சொன்னவர் அப்படியே மூவேந்தர், சில தனிப்பாடல்கள் என்று சென்றுவிட்டார். சிவகங்கை தீர்த்தம் பக்கமாக அமர்ந்திருந்த மூன்று இளைஞர்கள் ஒருசேர எழுந்து எங்கோ நகர்ந்தார்கள் போல. ‘நமது புலவர்கள் பலரும் மூவேந்தர்களும் ஒற்றுமையாக இருக்க எவ்வளவு பாடுபட்டார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தேனல்லவா? அவர்களால் முடியாதது இந்த எளியவனால் முடிந்திருக்கிறது. இதோ சேர சோழ பாண்டியர்கள் ஒற்றுமையாகப் புறப்பட்டுவிட்டார்கள் பாருங்கள்’ என்று அந்தத் திசையில் கைநீட்ட கேட்டுக்கொட்டிருந்தவர்கள் எல்லாரும் ஒன்றாகத் திரும்பிப் பார்த்தார்கள். நகர்ந்த இளைஞர்கள் கூச்சத்தோடு உட்கார்ந்துவிட்டார்கள்.

பேசி முடித்ததும் கேள்வி கேட்டார். ‘கந்தபுராணத்திற்கும் இராமாயணத்திற்கும் பலவிசயங்களில் ஒற்றுமையுண்டு. பானுகோபனுக்கும் சிங்கமுகனுக்கும் ஒப்பான இராமாயணப் பாத்திரங்கள் யார் யார்?’ என்று. எழுந்துநின்று கைகட்டி ‘இந்திரஜித்தும் கும்பகருணனும் சாமி’ என்றேன். ‘வீரபாகு?’ என்றதும், ‘அனுமன்’ என்றேன். கைநீட்டிக் கூப்பிடும் சைகை காட்டியதும் அருகே சென்று வணங்கினேன். நெற்றியில் நீறிட்டு கையில் கற்கண்டு தந்தார். அன்றிலிருந்து ஒரு நாலைந்து நாட்கள் பலரிடமும் சொல்லிச் சொல்லி மாய்ந்துபோனாள் அம்மா. என்னையும்தான் கையிலேயே பிடிக்கமுடியவில்லை.

நினைவைத் திருப்பினார் பாண்டுசாமி. கண்கள் விரிந்திருந்தன. கையில் வெல்லம். ‘வன்னிமரத்துப் பிள்ளையார்கிட்டே ஒரு அம்மா வெல்லம் வெச்சு வேண்டிக்கிட்டிருந்துச்சு சிவா. அது வெளியிலே வந்ததும் எறும்பு வர்றதுக்குள்ளே போய் எடுத்துக்கிட்டு வந்துட்டேன் சிவா’ என்றபடி என்கையிலும் அங்கிருந்த மற்ற மூன்றுசிவாக்கள் கையிலும் பிட்டுவைத்துவிட்டு உட்கார்ந்தவர் பையில் கைவிட்டு பொரியை அள்ளினார்.

 ‘கைத்தல நிறைகனி அப்பமோடு அவல்பொரி
   கப்பிய கரிமுகன் அடிபேணி…’

– யுவபாரதி மணிகண்டன்

era.mainkandan@gmail.com

www.yuvabharathy.blogspot.com

பாலசுப்ரமணியன் பொன்ராஜ் – கவிதை

0

                  விடைபெறும் இளவேனில்

 

விழிப்புடனிருக்கும் ஒரு துப்பாக்கியோ அல்லது ஒரு மழைத்துளியோ
அழகே ஒளிர்கிறது மஞ்சள் முகத்தில்
சூரியன் வீடு திரும்பினாலும்
கம்பளம் விரிக்கும் இரவில் நிலவை உலவ அனுமதித்தாலும்
பொய்கையின் முகத்தில் தாமரை மலர்ந்தேயிருக்கிறது
விளிம்பில் நிற்கிறது ஒவ்வொரு இதழின் துடிப்பும்
மீதி முத்தங்களை ஒளித்து வைத்திருக்கும் உதடுகளின் இடைவெளியில்
உயிர் தத்தளிக்கிறது
பிரிவின் நொடிகள் உலர்ந்த சருகுகளாக காற்றில் அலைகின்றன
காற்று சருகுகளை முகர்கிறது
வெய்யில் சுரக்கும் நிலத்தின் இருண்ட ரேகைகளைக் கடக்கிறது
அழகோ அசைவின்றி பாறையாக நிற்கிறது
இடைவெளியில்தொலைவில் கால நகர்வில்
மெளனத்தின் அலையடிப்பில்
பிணைத்துக் கொள்ள முடியாத விரல்கள் காதலை நெய்கின்றன
வெம்மையடைந்த இரவின் அணுக்களில் அழகோ மின்மினி அகல்
அதன் ஒளியில் இரவின் மலர்களில் வெளிச்சத்தின் வண்ணம் படிகிறது
ஒரு பாடல் முடிவை எட்டியதும் மறுபாடல் அனுமதி கேட்கிறது
பரிதவிப்போ இழப்பின் துயரமோ பாடலில் சொற்களாகவும்
இசை ஒலிகளில் நினைவாகவும் ஒலிக்கிறது
விலகியிருத்தலின் புனலைக் கடக்கவொரு படகும்
நம்பிக்கையின் மரத்தாலான துடுப்பும் கரையில் கிடக்கின்றன
கண்ணீர் வடிக்கும் சொற்கள் நிரம்பிய கவிதை படகில் அமர்கிறது
விலங்குகள் வனத்தில் இலைகள் அற்ற மரங்கள்
காலத்தின் ரேகைகளாக கிளைகளைக் கோர்த்திருக்கின்றன
சோர்வடைந்ததாவர உண்ணிகள்இலைகளின் நினைப்பில் கிறங்குகின்றன
சலிமும் காண வராத மஜ்னு வெளிறிய விரல்களால் அவற்றைத் தடவுகிறான்
அவனேதான் முடிவுறாக் காலங்களுக்கும் பிரிவின் ஓவியம்
மஞ்சள் நிற மகரந்தங்கள் நீலத்தில் அலைகின்றன
அழகின் கண்களாக காற்றின் மீது நடனமாடுகின்றன
இரவில் விளக்கேற்றும் ஒவ்வொரு பளிங்குத் துளியிலும் ஒரே முகம்
இளவேனிலின் பசிய மஞ்சள் தளிர்களில் புத்துயிர்ப்பின் நம்பிக்கை
அரச இலைகள் காற்றில் சிலிர்க்கும் போதோ
கடைசி பழுப்பு இலைகளை வேம்பு நீங்கி விட முயலும் போதோ
மழைத்துளிகள் நனைத்த பாதையில்
கோடையின் பொன் சிலை பல்லக்கில் ஊர்வலம் வருகிறது
அருகிப் போன சந்திப்பின் பழைய காலங்கள் சோர்வூட்டுகின்றன
உடைந்த கப்பலின் இரும்பு நங்கூரம் கடலில் மூழ்குகிறது
நினைவைத் தோண்டியெடுத்த ஒரு நிமிடமோ ஒரு மணிநேரமோ
அல்லது ஒரு நாளோ
அழகின் ஒளியை நாணிலேற்றி விண்ணில் எய்கிறது
ஒளிக்கோடு கிழிக்கும் வெளியில் பறவைகள் சிதறுகின்றன
சலனம் அடங்கவே ஒரு நூற்றாண்டாகிறது
ஜன்னல் சுவற்றில் இளைப்பாறும் சாம்பல்நிறப் புறாக்கள்
மிதக்கும் நுண் தானியங்களைக் கொத்துகின்றன
அழகின் முகமோ புறாக்களின் குரலால் பூரிக்கிறது
நிலவின் தடம் மறைந்த நேற்றின் இரவு
அதிகாலையில் ஹார்ன் ஒலிக்கும் பேருந்தின் கலைந்திராத துயில்
மின்விசிறிக் காற்றில் அசையும் திரைகள்
நீள்-விரல்கள் திசைகாட்டிகள் கடற்பயணங்கள் துயர முகங்கள்
விதானமில்லாக் கூடாரத்தில் கூடுகின்றன
பார்க்க முடியாதவொரு முகம் அழகைத் திரையிட்டுக் கொள்ள அனுமதிக்கிறது
காவியப் பத்திகள் நிறைந்த கடிதமோ
காதலின் இசைக்குறிப்புகள் நிறைந்த ஆர்க்கெஸ்ட்ராவோ
உதடுகளின் அச்சுப் பதிந்த வாழ்த்து அட்டைகளோ
வெப்ப இயங்கியலின் இரண்டாவது விதியோடு உலகைக் கோர்க்கின்றன
மெளனத்தின் விதைகளைத் தூவும் மஞ்சள் முகம்
ஒரு வனத்தின் வேர்களில் அமிலமூற்றுகிறது
காதலோ ஓர் இறகொடிந்த விமானம்
பிரிவின் அதரங்களில் காலத்தின் முலைகள் பாலூட்டுகின்றன
ஒவ்வொரு நாளும் இறுதி நாளின் ஆடைகளை அணிகிறது
அரைக் கூண்டுகள் சுழலும் இராட்சத சக்கரத்தின் மேல் முனையில்
பறப்பதற்கோ தடைகளற்ற பாதைகள் திறந்திருக்கின்றன
ஒரு முத்தத்தால் இறகு முளைப்பதும் புறக்கணிப்பால் முதுகெலும்பு முறிவதும்
கூர்நகத்தை விரலில் பூட்டிய இடைவெளி
அழகிற்கும் பறத்தலுக்கும் இடையே கோடு கிழிக்கிறது
எவ்வோசை பறவைகளை இரவில் எழுப்பியதோ
அதன் தொடர்பில் அநித்தியம் ஒட்டி உறங்குகிறது
காலத்தின் மூன்று அறைகளிலும் ஒளிர்கிறது மஞ்சள் முகம்
உலகின் முதல் ஒலிகள் ஒலித்த நாட்களிலிருந்தே
உடைந்த இசைக்கருவிகள் காதலின் சங்கீதத்தை இசைக்க முயல்கின்றன
மின்கிதாரின் பிளிறல் பழைய டிராகன்களின் இறகசைப்பை ஒத்திருக்கிறது
நாம் பிரிந்தோமா!
இறங்கி வருவதற்கு முன்பாக தேவதைகளுக்கோ இறக்கைகள் இருந்தன
பிறகோ உடன் நடக்கும் கால்கள் மட்டுமே
பள்ளத்தாக்கை நிரப்பி விசும்பு வரை உயர்கிறது வெண் பனி
அதன் உடலில் ரேகை விடும் இலையுதிர்த்த மரமோ
இரவிலெல்லாம் கனவில் தலைசுற்றி ஆடுகிறது
முடிவுறாக் காலங்களுக்கு உதிரும் இலைகளோ
பறத்தலின் களிப்பில் சேர்ந்திசைக்கின்றன
காதலின் பாடலில் தற்கொலையின் வசீகரம் சொற்களாகிறது
இந்நோய் அறிந்தவன் மஜ்னு மட்டுமே
ஆயினும் அவன் வைத்தியனல்லன்
காதலின் இரண்டு ரோகிகள் எதிரெதிரே மெளனத்தை விற்கின்றனர்
அநித்திய மலரின் மாறா ஒளியில் முகங்களைக் காண்கின்றனர்
ரோகம் பன்மடங்கு உயர்கிறது
ரப்பர்-பொம்மைகள் சுவடுகள் சிப்பிகள்
நீருற்று, குரல் ஒலிக்காத பாலை
உன்மத்தமேறிய வெய்யில் இடைவெளியற்ற மலர்மாலை
அழகின் பல்லுருவங்களிலும் ஒரே மஞ்சள் முகம்
ஆழத்தின் குரலோ தவளைகளின் வரவேற்பிசையோ
பின்னிரவில் புல்-மேயும் மட்டக் குதிரைகளின் அநாதை நிலைமையோ
நீள் விரல்களால் தீண்டப்படாத
அகப் பாதைகளைத் திறக்கும் உடலின் கருவிகளோ
துர்மரணமடைந்த நதியாக
காதலின் வெம்மையை கானலாக அசைக்கின்றன
எலும்புக்-கூடுகள் நீரற்று மடியும் நன்னீர் மீன்கள்
குழந்தைகள் விளையாடும் சர்ப்பங்களின் தோல்
புகைபோக்கியின் இருட்டு முகம்
நீர் திரளும் பிரிவின் கண்களில் இருள் சூழ்கிறது
நாம் பிரிந்தோமா!
மஞ்சள் முகத்தில் ஓர் உறைந்த முறுவல்
கையசைத்து விடைகொடுக்கிறது
நூறு நூறு விமானங்கள் பறப்பதற்காக ஓடுதளத்தில் நகர்கின்றன
இடைவெளியில் அழகைப் புதைத்தவர்களான நாமோ
முதுகில் படரும் நிலவின் ஒளியில் திசைகளாகப் பிரிகிறோம்

 

-tweet2bala@gmail.com

 

(நன்றி : கணையாழி)

 

 

யாளி பேசுகிறது – 14 //நம்பிக்கைகளை வளர்க்கும் கலை

0

நம்பிக்கைகளை வளர்க்கும் கலை

ஜீவ கரிகாலன்

யாளி இந்த முறை பேசப்போவதில்லை, அது இன்ஸோம்னியா நோயால் அவதிப்பட்டு இப்போது அது சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறது. நான் தான் பேசுகிறேன்.

உண்மையில் உரையாடல் என்பது அதிப்பட்சம் இருவருக்கு மேல் நிகழாது என்பது ஓவியர் கணபதி சுப்ரமணியத்துடன் பெசண்ட் நகரில் கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது தோன்றியது, மூன்றாவதாக ஒருவர் அமர்ந்தாலே அது சச்சரவாகவும், கூடுதலாக சிலர் வந்திருந்தால் அது கலவரமாகவோ மாறிவிடும்.(குறிப்பு – மனம்திறந்த பேச்சுகளில் மட்டும்(

பரஸ்பர அறிமுகத்தோடு பேச ஆரம்பித்த உரையாடல் நுண்கலைகளை ஒரே கூரையில் வளர்த்தெடுக்கும் கேந்திரங்களில் ஆரம்பித்து, விமர்சனப் போக்கு, சுய முன்னிறுத்துதல் என்று நீண்டு நெளிந்துச் சென்றது. அவர் ஓவியத்தின் பால் கொண்ட ஈடுபாட்டுடன், கலை வரலாறு குறித்த நிஜமான அக்கறையும் கொண்டவர்.

கலைஞர்கள் தமக்கான ஊடகத்தைத் தேர்வு செய்யும் முறை பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது தான் ஓவியர் விஜய் பிச்சுமணியின் படைப்புகள் பற்றியும் பேசினோம். தனது படைப்புகளை உருவாக்க ஏன் அவர் மரங்களைத் தேர்ந்தெடுக்கிறார் என்று பேசும் போது. அந்த காத்திரமான இளைஞனின் இருப்பு பெருமிதமாக இருந்தது. அதே பெருமிதம் சற்றைக்கெல்லாம் மாறியது மற்றொரு ஓவியரைப் பற்றிப் பேசுகையில்

அண்மையில் தன் 75வது வயதுப் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடிய நடிகர்,பேச்சாளர், தமிழ் ஆர்வலர், சமூக ஆர்வலரான சிவக்குமாருக்கு தாமதமாகச் சொன்னாலும் ஒரு சாதாரண சினிமா ரசிகனாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏனென்றால் அவர் ஒரு ஓவியரும் கூட.

(நல்லவேளை யாளி குரட்டை விட்டுக்கொண்டிருக்கிறது).

லலித் கலா அகாதெமியில் ஓவியர் சிவக்குமார் வரைந்து வைத்திருந்த ஓவியங்கள் அவர் பிறந்தநாளை ஒட்டிக்காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

அவர் தனது 14வயது முதல் 24,25 வயது வரை வரைந்திருந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவரது ஏற்புரையின் காணொளியைக் கண்டால் வியக்கலாம். ஏற்புரை இணைப்பில்

https://www.youtube.com/watch?v=ygKfxgonfr0&t=3s

ஓவியர் வீரசந்தானத்தின் உரை மிகவும் கவர்ச்சியாகவும் உறுதியாகவும் இருந்தது. அநேகமாக அந்தக் கூட்டத்திற்கு ஒரு ஓவிய ஆர்வலர்களும் வந்துவிடமாட்டார்கள் என்று தீர்கமாய் அவர் நம்பியிருந்தது அந்த பேச்சில் தெரிந்தது.

“நவீன யுகத்தில் சாமியார்கள் கூட ஒளித்துவைக்கப்பட்ட காமிராவுக்கு எப்படி நடந்துக்கனும்னு தெரிஞ்சிக்கிட்டாங்க, ஆனா கலைஞர்கள் தான்… வெளிப்படையா காமிரா படம்பிடிக்கும்போது கூட மேடை இருக்குதேன்னு கட்டுப்படுத்த மாட்டாங்க.” என்றபடி கொட்டாவி விட்டுக்கொண்டே எழுந்தது யாளி.

இனி யாளியை தூங்க வைக்க இயலாது.

இந்த அக்டோபர் நவம்பர் மாதங்களில் எத்தனையோ முக்கியமான ஓவியக் கண்காட்சிகள் நடந்துகொண்டிருக்க மீடியாக்கள் அதிகம் கண்டு கொண்ட நிகழ்வாக இதை மட்டுமே சொல்ல முடியும்.

‘என் படைப்புகளைப் பற்றி எழுதுங்கள் என்று சொன்னால் எனது ஏழ்மையைப் பற்றி எழுதுகிறார்கள்’ என்கிற ஒரு சமகாக கலைஞனின் வலியைத் தான் இந்த ஊடகங்கள் சென்ஷேசனாக மாற்றி கவனிக்க வைக்கிறார்கள்.

நீண்ட நாட்களாக பாப்புலர் கலாச்சாரம் குறித்த விவாதங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால்.  வெகுஜனங்களுக்கான கலை என்கிற முத்திரை வாயிலாக லாபமடையும் பல்வேறு வகையினரைப் பார்க்கலாம். கலையை நன்கு உணர்ந்து தமது அனுபவத்தாலும் செயல்திறனாலும் மட்டுமன்று வெகுஜனங்களின் மனப்போக்கை அவர்களது நாடித்துடிப்பை அறிந்து கொள்ளும் கலைஞர் அவர்களது ரசனையை மேம்படுத்துவதற்கு பதிலாகப் பயன்படுத்திக் கொள்வது தான் வெகுஜனக் கலையாகப் புரிந்து கொள்ளப்படுகிறது, அதே சமயம் தீவிரமாக கலையை முன்னெடுப்பவர்களும் லாபத்தைக் குறிவைப்பதால், மற்ற வகைமைகளை தாழ்த்திட அவற்றை வெகுஜனக்கலை என்று பிரச்சாரம் செய்வார்கள்.

கொள்கைகளை பிரச்சாரம் செய்வது மக்களுக்கான கலை, பிரச்சாரக்கலை என பிரச்சாரம் செய்வது என்ன வகையான கலை?

இப்படியான பல வகையான பிரச்சாரங்களை விமர்சனமாகப் பார்ப்பதால், நமக்கு ஒரு தூய்மைவாதம் வந்து விடுகிறது. சமகாலத்தின் பிரச்சினை என்பதே இந்த தூய்மைவாதம் தான். எல்லா வகையிலும் தூய்மைவாதத்தை முன்னெடுக்கும் இயக்கங்களால் தான் பிரச்சினைகள் இருப்பதாக யாளி அஞ்சுகிறது.

கம்பிகளால் முன்னும் பின்னுமாக நீண்ட வரிசையில் ஊர்ந்து செல்லும் ஆயிரம் மக்களும் தரிசிக்க இருப்பது ராஜ அலங்காரம் பண்ணியிருக்கும் மட்டும் இறைவன் மட்டுமே. வழியில் இருக்கும் சிற்பத்தூண்களில் தனது முன்னோர்கள் என, தனது தெய்வங்கள், தேவதைகள் என செதுக்கப்பட்டிருக்கும் சிலைகளின் முகவெட்டை நாம் தரிசித்திருந்தால், மாங்கலாய்டு கலப்புடைய மனிதர்கள் இங்கே என்ன செய்திருந்தார்கள் என்கிற கேள்வி எழுந்திருந்தால் இனத் தூய்மைவாதம் பேசியிருக்க மாட்டோம்.

நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னர் ஜாக்கெட் அணியாத பிரதேசத்திலிருந்து, உள்ளாடைகளைத் தீட்டாகப் பார்த்த சமூகத்தில் தான் இன்று நிர்வாணம் தடை செய்யப்பட்டு சிற்பங்களுக்கு ஆடைகள் தரித்தும். புடைத்து நிற்கும் குரங்கின் குறிகளில் மின்சார மத்தளங்களையும் அழகாகப் பொருத்தியிருக்கிறோம்.

நிர்வாணம், காதல், முத்தங்கள் கூட தேசத்தின் பெயரால், மொழி, இனம், ஜாதி, மதம் தூய்மை செய்யப்படுகிறது. ஆனால் ஏரிகள், ஆற்றுப்படுகைகள், நீரோடைகள் மட்டும் தான் இன்னமும் தூர்வாரப்படாமல் இருக்கின்றன.

தமிழகத்திற்கு இடப்புறமும் வலப்புறமும் இருக்கும் ஈழமோ, கேரளமோ தனது உணவு, கலாச்சாரம், திருவிழா, கைவினைகள் என்ற தடயங்களற்ற உருமாற்றம் செய்யப்பட்ட இனம் கோரும் தூய்மைவாதத்தில் இருக்கின்ற பிரச்சனைகளின் வீரியத்திற்கு இணையானது ஒரு கலைஞனை SELF TAUGHT என்று சொல்லும் தன்மையும்.

ஓவிய உலகின் க்ளிஷேக்களில் ஒன்றாக இதைப் பார்க்கலாம்.

நான் முறையாக ஓவியம் கற்றிருப்பதாலே என்னை ஓவியன் என்று அழைக்கலாம் என்கிற வாதம்.

தன்னைக் காண வரும் பார்வையாளர்களுக்காக தமது போர்ட்ரெயிட்டுகளையும் மற்ற படைப்புகளை அகலப்படுத்தி, பெரிதாக்கி பதிப்பு செய்திருக்கிறார். தானொரு வெள்ளித்திரை கலைஞனும் கூட என்பதால் தன் படைப்புகளைக் காண வருபவர்களுக்கு பிரம்மாணடமாகக் காட்ட வேண்டும் என்று அவர் நினைத்தது வெற்றிப்பெற்றது என்று தான் சொல்லவேண்டும்.

“நவீனக் கலைகளும் அவசியமானது தான்” என்று சொல்லி ஓவிஅர் சிவக்குமார் அறிமுகப்படுத்திய வீர சந்தானத்தின் பாராட்டுரை லலித்கலா அகாதெமியின் வரலாற்றில் பதியப்பட வேண்டியவை.

மேலே சிவக்குமார் தன்னை இரண்டு மூன்று முறை அகாடமிக் ஓவியங்கள் என்று சொல்வது மட்டும் தான் தனது இருப்பை ஓவியனாகத் தக்க வைத்திருக்கச் செய்யும் ஒரே உபாயம். சாதாரண தூரிகைகளில் அல்லது காகிதங்களில் வரையப்பட்டிருந்த போர்ட்ரெயிட்டுகளும், கோட்டோவியங்களும் தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் பெரிதுபடுத்தப்பட்டு பதிப்புசெய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதையும் அவர்கள் பெருமையுடன் ஒப்புக்கொண்டார்கள். போதாக் குறைக்கு வீர சந்தானம் வேறு – சிவக்குமாருக்கு இணையான இளைய ஓவிராக தான் எந்த கலைஞனையும் இப்போதுவரைப் பார்க்கவில்லை, இப்போது பார்க்கப்போவதுமில்லை வேண்டுமானால் தன் இறப்பிற்குப் பின்னால் பார்க்கலாம் என்று உரையாற்றினார். (யாளியை இடைமறித்து –  சிறந்த மேடைப்பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகத்தின் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்).

அகாதமிக் ஓவியன் என்று கலைஞர்களை தூய்மைவாதம் செய்யும் அளவுகோலைத் தகர்த்தெரிந்த பல ஓவியர்களின் பெயரைச் சொல்லலாம். எம்.எஃப் ஹுசைனில் இருந்து அந்தப் பட்டியலைச் சொல்லலாம். பூபன் காகர், ஏ.வி.இளங்கோ என முக்கிய ஓவியர்கள் பலரைச் சொல்லலாம்.

மீண்டும் நம்பிக்கைகளை வளர்த்தெடுக்கும் கலை என்று புரிதலை நோக்கிய பயணத்தில் கிடைப்பது ஒரு அபூர்வ காட்சியாகத்தான் இருக்கிறது. இருவேறு எந்த கோட்பாடுகளையும் இணைக்கிறது ஒரு மாயக் கோடு, அது தலை எது வால் எது என்று கண்டுபிடிக்க இயலாத எட்டு போன்ற வடிவம்.

எது ’‘நம்பிக்கை கொடுக்கும் கலை’யாக இருக்கும் என்று யோசிக்கும் போது ஓவியர் நரேந்திரபாபுவின் கூற்று/அனுபவம் ஒன்று ஞாபகம் வருகிறது.

தனது படைப்புகளில் வரும் கோடுகள் பற்றி அவர் பேசுகையில் (தினமும் அல்லது அவர் வாழ்க்கையில் பெரும்பகுதியும் வரைவது மட்டுமே) அவர் சொல்கிறார், அவர் பெரும்பாலும் பயணங்களின் போதும் தொடர்ந்து வரையும் பழக்கம் உடையவராம். அப்படியான பயணங்களில் கிடைக்கும் கோடுகளின் தன்மை விஷேசமானது என்கிறார். எப்படியென்றால், உடனிருக்கும் மனிதர்கள் பயணத்தின் போது நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒருவரோடு இடித்துக் கொள்ளும்போது கிடைக்கும் சிறு சிறு பிசுருகளை அவர் நேசித்ததைச் சொன்னதை எண்ணி மீண்டும் வியந்தேன்.

நம்பிக்கைகளை வளர்க்கும் கலை இப்படி சமூகத்திடம் இருந்து எடுத்துக்கொள்ளப்படுவதாகவும், சமூகத்தை நேசிப்பதாகவும் இருக்கிறது. வெறுப்புணர்வில் கோடுகளுக்கும், வண்ணங்களுக்கும் , படைப்புத் திறனுக்கும் கிடைக்கின்ற மதிப்பு நித்தியத்தன்மை பெறாது என்பதை ஏதோ உணர்த்துகிறது.

ART FOR HOPE, ALL YOU NEED IS A GENTLE PUSH

ஜீவ கரிகாலன்

யாளி பேசுகிறது – 13 சமகாலமும் – நம்பிக்கையை உருவாக்கும் கலையும்

0

ஜீவ கரிகாலன்

கேள்வி என்னவோ சமகாலக்கலையைக் குறித்து தான், ஆனால் யாளிக்கு பைபலோபர் டிஸ்ஸார்டர் வந்துவிட்டதாக, பக்கத்து தூணில் நைட்டி அணிந்த ரதி சிற்பம் உயிர்பெற்றதும் யாளியை கேலி பேசியதில் இருந்து, அதை உண்மையென நம்பி, இப்படித்தான் – தான் பேசவந்ததை அடிக்கடி மாற்றிக் கொள்கிறது யாளி. அதுசரி, திடீரென்று சாதிக்காரர்ரகள், தேசியவாதிகள், நாத்திகர்கள் கூட தன்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது, பக்தர்கள் மட்டும் கம்பிகளுக்குள் வரிசைவரிசையாக வளைந்து நெளிந்து மூச்சு வாங்க மூலவரைப் பார்த்து, மீதமிருக்கும் பிரசாதத்தை தன் வாயில் கட்டப்பட்டிருக்கும் திருநீற்றுக் கிண்ணத்தில் கொட்டிச் சென்று கொண்டிருக்கும் மக்கட்கூட்டத்தைப் பார்த்தால் கோபம் வரத்தானே செய்யும்.

“சமகாலக் கலையை பற்றி உபதேசித்த உன் ஆசான்களின் வார்த்தைகளை இன்னும் நினைத்துக் கொண்டிருக்காதே, ஏனென்றால் சமகாலத்தில் அவருடன் அவர் வார்த்தைகளும் காலாவதி ஆகியிருக்கும்” என்கிற தத்துவத்தை கலையுலகில் ஒரு சகபயணியோடு உரையாடும்போது முதன்முறை கேட்டேன். அதன் உண்மைத்தன்மை ஏற்றுக்கொள்வதற்குச் சற்று கடுமையானது தான். ஆனால் ரசனையின் வளர்ச்சிக்கு அது எத்தனை அவசியமாகிறது? உண்மையில் கோட்பாடுகளைத் தேடிக்கொண்டிருப்பவன் ஏதோ ஒரு கோட்பாட்டில் தங்கிவிடுவது அல்லது தனக்கென ஒன்றினைச் சுவீகரித்துக் கொள்வது வளர்ச்சியைப் பாதிக்கும் என்று ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான்.

நேற்றைக்கு வரை ஒரு நண்பரோடு வந்த பயணத்தில் கலை கலைக்கானது என்று நம்பியவன், அதற்கு முன்னர் கலை மக்களுக்கானது என்று நம்பியிருந்தேன். மனம் நெகிழ்வாக இருப்பதால் எல்லாக் கோட்பாடுகளையும் உள்ளே அனுமதித்துப் பயணிக்க முடிகிறது. பயணிக்காமல் வெற்றுக் கூப்பாடு போடுவதால் பிழைப்பு நடக்கலாம். பிழைப்புவாதத்திற்காக கலைகளை அணுகுபவர்களுக்கு அத்துடன் முடித்துக்கொள்ளலாம் பாதகமுமில்லை. சூப்பர் ஈகோ என்று சொல்லப்படும் உணர்வுகளோ அல்லது நித்தியத்தை தேடி அலையும் மனமோ பயணிக்காது ஒன்றையும் கண்டடையமுடியாது.

இப்போது எந்த மனநிலையில் இருக்கிறேன் என்று யோசித்துப் பார்த்தால், மேற்சொன்ன அவ்விரு வாக்கியங்களையும் மறு ஆய்வு செய்ய விரும்பும் நிலையில் இருப்பதாக உணர்கிறேன், கலை – கலைக்கானது, மக்களுக்கானது என்கிற இரண்டு விவாதங்களுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகத் தான் பார்க்க முடிகிறது. ஆனால் கலைஞன் யாருக்கானவன் – கலைஞன் மக்களுக்கானவனா அல்லது கலைக்கானவனா?

கலைஞன் தன் இருப்பு மீது எழும் கேள்விகளுக்காகத் தான் அந்த விவாதத்தை உருவாக்கினானா? அல்லது கோட்பாட்டாளன் கலைஞனை தன் வசத்தில் வைத்திருக்க உருவாக்கினானா? மேற்சொன்ன கோட்பாட்டாளன் என்பது அரசாங்கமாகவும் இருக்கக்கூடும்.

 Dante's InfernoINFERNO எனும் படம் சமீபத்தில் திரைக்கு வந்திருக்கிறது, DANTEYன் கலைப்படைப்புகளை முன்வைத்து ஒரு கோட்பாட்டாளன் சில ரகசியங்களை வைத்துவிட்டுப் போகிறான் (BERTNARD ZOBRIST). அந்த ரகசியங்களை அவிழ்க்க மற்றொரு கோட்பாட்டாளன் (ROBERT LANGDON) முயல்கிறார்.

தாந்தேயைப் போன்று மற்றொரு மறுமலர்ச்சி கால ஓவியரான சேண்ட்ரோ போட்டிட்ஸெல்லி (SANDRO BOTTITSELLI) வரைந்திருக்கும் நரகத்தின் வரைபடத்திலிருந்து கிடைக்கும் துப்புகளைக் கொண்டு தாந்தேயின் படைப்புகளை பின்தொடர்ந்து செல்வதால், உலகின் 90 சதவீத மக்களை அழிக்குமளவுக்கு ஜோப்ரிஸ்ட் பதுக்கிவைத்திருக்கும் வெடிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் மோசமான (ப்ளேக் நோய் போன்ற தொற்று நோய்) வைரஸினை செயலிழக்க வைக்கிறார் ராபர்ட் லேங்டன். இத்தகைய கொடூரமான அழிவை முற்படுத்த விரும்பும் பெர்ட்னார்ட் ஜோப்ரிஸ்ட் உலகப் பணக்காரர்களில் ஒருவன், மதப்பிரச்சாரகன் போல் உலகமெங்கும் பக்தர்களைப் பெற்றிருப்பவன்.

“உலகத்தின் மக்கட்தொகை வருங்காலத்தின் உலகநன்மைக்கு எதிராக இருக்கிறது” என்று பிரச்சாரம் செய்பவன்.

infernoடான் பிரவுன் எழுதிய “INFERNO”நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வேறு சில திறப்புகளையும் எனக்குள் கொண்டு வந்தது. அது தான் மேற்சொன்ன அவ்விவாதங்கள் பற்றிய கேள்வி.

“கலைஞன் யாருக்கானவன்?” என்று அந்த படம் என்னைப் பிரித்துப் பார்க்க உதவியது.

சென்ற வருடம் மும்பை சென்று வந்த நினைவுகளில், கலையை போஷிக்கத் தெரியாத தமிழகம் என்று நம்பியவனாகத் தான் இருந்தேன். எல்லா வகைகளிலும் கலைப்படைப்புகளை, கலைஞர்களை போஷிக்கத் தெரியாத நம் ஊர் மக்கள் எங்கே, எங்கே தம் பிள்ளைகள், பேரன்களென குடும்பத்துடன நவீன கலைக்கூடங்களுக்குக் கூட்டிச் சென்று காண்பிக்கும் மக்கள் எங்கே என்று நினைத்துக் கொண்டு தான் அம்முவுடன் பேசிக்கொண்டிருந்தேன். எல்லா வகையிலும் தமிழகம் பின் தங்கியிருக்கிறதே என்று நொந்து கொண்டிருக்கையில் தான், அவள் எனது மும்பை பயணம் பற்றி விசாரித்தாள்.

அது தான் என் நம்பிக்கைகளை மீண்டும் சிதைத்துப் போட்டது.

அம்மு சிதம்பரத்தைச் சேர்ந்தவள், நடனம், இசை, ஓவியம், கவிதைகள் என பல்வேறு பரிச்சயமும் உண்டு எல்லாவற்றையும் விட அவள் ஒரு சிறந்த பயணி. பலமுறை அவளை அழைக்கும் பொழுதும், அவள் கைப்பேசியை எடுக்கவில்லை என்பதை இதுவரைக்கும் பத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் தெரிந்து கொண்டிருக்கிறேன். மும்பையில், ’இந்தியாவின் நுழைவாயில்’ என்று சொல்லப்படும், பார்ஸி இனத்தவர்கள் அதிகமாக வாழும் செல்வச்செழிப்பு மிக்க நகரத்தின் ஒரு மூலையை மட்டும் மும்பை என்று நினைத்துக் கொண்ட கற்பிதத்தை எண்ணிச் சிரித்தாள்.

  “மும்பையைப் பற்றித் தெரிந்து கொள்ள முதலில் சுகெத் மேஹ்தாவின் MAXIMUM CITY எனும் நூலினைப் படி, இல்லாவிட்டால் ஆனந்த் பட்வர்தனின் ஆவணப்படங்களைப் பார்” என்றாள்.

ஆனந்த பட்டவர்தனின் ஆவணப்படங்கள் யூட்யூபில் கிடைக்கிறது, அதிலிருந்து அப்படியே பாபர் மஸ்ஜித் இடிப்பு பற்றிய ஆவணப்படங்களும் பார்த்தேன். ஹுசைன் சைதி எழுதிய மும்பை டூ டோங்கிரி எனும் மற்றொரு புத்தகம், மும்பை நகரத்தின் கறுப்புப் பக்கங்களைக் காட்டுகிறது. இவற்றோடெல்லாம் ஒப்பிட்டுப்பார்த்தால் தமிழகம் ஒரு WELFARE STATEதான் என்று அவள் சொன்னதிலும் ஒரு நியாயம் இருக்கவே செய்கிறது.

கலைகளை போஷிக்கும் அரசாங்கம் இருந்தும், கலாச்சாரங்களைப் புராணங்களைத் தொழும் மக்கட் கூட்டம் இருந்தும் வடயிந்தியா மிகவும் பின் தங்கியே இருக்கிறது என்றாள். பல கிராமங்கள் தேசத்துடன், அரசாங்கத்துடன் துண்டிக்கப்பட்டு இருப்பதை, அவளுக்கு அஞ்சலிலோ அல்லது கூரியரிலோ ஒரு புத்தகம் அனுப்ப இயலாத அளவுக்கு சிரமப்பட்டபோது தான், இப்படியான கிராமங்கள் இருப்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அப்போது அவள் இருப்பது அரியானா மாநிலத்தில்.

செல்வந்தர்களின் வாழ்வியல் முறையை மட்டும் வைத்துக் கொண்டு வடக்கினைப் பற்றி நாம் கொண்டிருக்கும் கற்பிதங்களை சுட்டிக்காட்டினாள். தமிழகத்தில் உருவாகியிருக்கும் ஒரு மத்தியத்தரவர்கம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பெரியது என்றாள்.

அரசியல்வாதிகளாலும், மத்தியிலிருக்கும் காழ்ப்புணர்வுகளாலும் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டிருந்தாலும் பொதுமக்களின் வாழ்வியல் முறை பிரதமரை உருவாக்கியிருக்கும் குஜராத்தைக் காட்டிலும் சிறப்பாகத் தான் இருக்கிறது.

 ***

கலாச்சாரங்கள், தொன்மங்கள், கலைகள் ஆகியவற்றில் பின் தங்கியிருந்தாலும் பெரியதொரு மதக்கலவரம் இங்கே வரவே இல்லை. வடக்கிற்கு இணையான சாதிக்கொடுமைகள் தொடர்ச்சியாக நடைபெறுவதில்லை, அப்படி நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் அதற்கெதிரான குரல்கள் சத்தமாகவே ஒலிக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் தேசிய நீரோடையில் நாம் சற்று ஓரமாக ஓடிக்கொண்டிருப்பதாலும் எனலாம். ஆனால் இதையெல்லாம் தடுக்கும் குரலாகத்தான் தேசியக்கட்சிகள் தமிழகத்தைக் குறை கூறிக்கொண்டிருக்கின்றன, அவர்கள் சாதிய மோதல்களையும், மதத்துவேஷங்களையும் பெருக்கினால் மட்டுமே தமிழகத்தைத் தேசிய நீரோடையில் இணைப்பார்கள். அவர்களுக்கு மற்றொமொரு காரணமாக அமைவது தான் கலைத்தன்மை. கலைகளை போஷிக்கத் தெரியாத தமிழகம் என்று ஆழ்மனதில் கொண்டு சேர்ப்பதும் ஒரு கலையாகத் தான் கற்பிக்கப்படுகிறது அது அவநம்பிக்கைகளை உருவாக்கும் கலை.

தனது சுவரோவியத்துடன் லியோ டாங்மா (Denver Airport, Colarado)

அதிகாரத்தின் கீழ்படிதலால் உருவான கலை அவநம்பிக்கை எழுப்பவே முயற்சி செய்யும், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் டென்வர் விமானநிலையத்தின் ஓவியங்களைப் பார்த்தவர்களுக்கு இது தெரியும். கலைகளைக் கொண்டாடும் LAND OF OPPORTUNITIES என்று சொல்லப்படும் அமெரிக்காவில் தான் இப்படியான ஒரு ஓவியம் இருக்கிறது, நரகத்தைக் காட்டி பயமுறுத்தும் மத அமைப்புகளை விட பயங்கரமானதாக புது உலக ஏற்பாடு (NEW WORLD ORDER) என்றும் புதிய நாஜிக்களின் உலகம்(NEO NAZI) என்று சொல்லப்படுகிறது டென்வர் விமானதளம் அமைந்திருக்கும் பகுதி. அந்த விமானநிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் கலைப்படைப்புகள் பொதுமக்களை அச்சுருத்துபவை, திகிலடையச் செய்பவை.

1
Murals of Denver airport (ref: USA – Conspiracy theories)

பன்னாட்டு விமான நிலையத்தின் சுவரோவியங்களில் மாண்டு போன சிறுவர்கள், நோய்வாய்ப்பட்ட, பிச்சையெடுக்கும் மனிதர்கள், கொத்து கொத்தாக மாண்டு போனவர்கள், உயிர் பிழைக்கும் அச்சத்தில் எங்கிருந்தோ எங்கோ செல்பவர்கள், அவர்களைக் காப்பாற்றும் ராட்சஷத போர்வீரர்கள், கொள்ளை நோய்கள், தொற்று நோய்கள் என்று வாதையும், வலியுமான ஓவியங்கள் எதற்காக வரையப்பட்டிருக்கின்றன.

இது யாருக்கான கலை?

c_scale,fl_progressive,q_80,w_800மற்றுமொரு சுவர் சித்திரத்தில் மிகப்பெரிய ஒரு அழிவைச் சந்தித்த, அஃதாவது இரண்டாம் உலகப்போரை விட பலமடங்கு மோசமான யுத்தம் ஒன்றைப் பற்றிய மற்றுமொரு சித்திரம் பிரிட்டன் ஐயர்லாந்து, இந்தியா பாக்கிஸ்தான், ஈரான் ஆஃபகன் கொடிகளைத் தாங்கும் சிறுவர்கள் – லியோ டாங்குமா எனும் ஓவியர் எந்த சிந்தனையில் வரைந்தார் என்பதை நாம் அறியோம். ஆனால் அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய NEW WORLD ORDER கனவினை விபரணை செய்யும் படைப்பாகவே சித்தரிக்கப்படுகிறது. அதற்கு காரணம், அந்த படைப்புகள் (COMMISSION WORK of DENVER AIRPORT) அரசாங்கத்தின் ஆணைக்கிணங்க வரையப்பட்டது தான். இப்படி உலகம் போற்றும் பல கலைஞர்கள் அரசுக்குக் கட்டுப்பட்டவர்கள் தான், இது பிரமிடுகளின் காலத்திலிருந்து இருக்கின்றது.

இந்தியாவில் கூட எமெர்ஜென்சி காலக்கட்டத்தில் இந்திராகாந்தியின் காலக்கட்டத்தில் எம்.எஃப்.ஹுசைனும், ஜே.ஸ்வாமிநாதனும் நம் ஊரைச் சேர்ந்த ஜெயகாந்தன் போன்ற ஆளுமைகளும் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் அதே சமயம் இந்த அதிகாரத்தை எதிர்த்து முற்போக்கு கலை அமைப்புகளும் செயல்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன. குஜராத் கலவரத்திலிருந்து இன்று வரை மோடி அரசை விமர்சிப்பதில் எந்த ஒரு தயவும் காட்டாதவராக இருக்கும் விவான் சுந்தரம் போன்ற ஓவியர்களும் ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சொந்த மண்ணை விட்டு அண்டை மாநிலங்களைச் சிறப்பாக இருக்கிறது என்றும், அண்டை மாநிலங்களை விட மேலை நாடுகள் சிறப்பாக இருக்கிறது என்றும் சொல்பவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். நம்பிக்கைகளை உருவாக்கும் கலைகள் தான் இங்கே அவசியம் அது தான் சமகாலக் கலையாக இருக்கும் என்று உணரமுடிகிறது.

உலகில் மிக அதிகமாக நகரமயமாதலாகும் நகரம் சென்னை தான், சென்னையோ, தமிழகமோ எத்தனையோ பேருக்கு இன்னும் நம்பிக்கையைக் கொடுத்தபடி தான் இருந்து வருகிறது. இங்கிருக்கும் கலைகளில் மட்டும் அது இல்லாமலா போய்விடும்?

சமகாலத்தின் தேவைகளை உணராதப் படைப்புகள் எத்தனை உச்சமான செயல்திறன்களால் உருவாக்கப்பட்டாலும் அது சமகாலக்கலையாகப் பார்க்கப்படாது.

***

அண்மையில் நான் சென்று வந்த ஓவியக் கண்காட்சியில் அந்த ஓவியரைச் சந்தித்தேன் பெயர் விஜய் பிச்சுமணி (வயது 29), ஒரு பதிப்போவியராக இயங்கும் அவர் பதிப்போவியத்தில் 56ஆவது ஆண்டு தேசிய விருது பெற்றவர். இவரது படைப்புகள் ART HOUZ கேலரியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது (அக்டோபர் 30ம் தியதி வரை)

9இவரது படைப்புகள் அனைத்திலும் சமகாலத்தின் சூழலின் பதற்றம் நிறைந்திருக்கிறது, மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டிய ஊர் ஒன்றில் பிறந்ததாலோ என்னவோ (திருவட்டாரை ஒட்டி நிறைய கூப்புகள் இருப்பதாக அறிந்திருக்கிறேன் – மரம் அறுக்கும் தொழிற்சாலைகள்) வனம் அவர் படைப்புகளில் மிகுந்திருக்கிறது.

DOT என்னும் தலைப்பில் நடைபெற்ற அவரது கண்காட்சியில் பதிப்போவியங்கள் அனைத்தும் WOODCUT முறையில் உருவாக்கப்பட்டிருந்தன.

அவரது படைப்புகள் அறுபட்ட மரங்கள், இலைகள், வேர்களின் சப்தங்களை பொதிந்து வைத்திருந்தன. அழிந்து கொண்டிருக்கும் வனத்தின் ஓசையைப் பதிவு செய்வதற்கு அவர் பிரதான ஊடகமாக WOODCUT பயன்படுத்தப்பட்டது சிறப்பானது.  நம் வனம் அழிய அதைவிட வேகமாக அழிந்துக் கொண்டிருக்கும் பல்வேறு உயிரினங்களில் பிரதானமான யானைன் WOODCUT பதிப்பு யானையின் அளவிற்கே உருவாக்கியிருந்த விதம் சிறப்பானது. அவர் செயல் திறன், துல்லியத்தன்மையுடன் சமகாலத்தின் உணர்வுகளோடு படைப்புகளை உருவாக்கியிருப்பது குறிப்பிடப்பட வேண்டியது.

VijayPichumani3
You & Me(Wood cut print) – Vijay Pichumani

மேலும் ஒரு படைப்பு – YOU & ME என்கிற ஓவியம் பார்வையாளனுக்கு ஏற்படுத்தும் தாக்கம் அது சமகாலத்தின் குரலாகவே ஒலிக்கின்றது. அது உலகமயமாக்களுக்குப் பின்பான DEFORESTATIONஐயும், அதைப் பொறுக்க இயலாத ஒரு தனிமனிதன் பதிவு செய்யும் வனத்தின் ரணங்களின் ஓசையாக இருக்கிறது. உச்சம். அவருக்கு வாழ்த்துகள்.

ஏ.பாலசுப்ரமணியம் பற்றித் தெரிந்து கொண்ட போதும், மும்பையில் எல்.முனுசாமியின் ஓவியங்களால் ஈர்க்கப்பட்டு அவரது MONOGRAMஐத் தேடித்தேடி மும்பையில் வாங்கியபோதும் ஏற்பட்ட மனநிலையில் தான் இப்போது விஜய் பிச்சுமணியையும் பார்க்கிறேன். நம்பிக்கை இருக்கிறது! சமகாலத்தில் எல்லோருக்குமே வாய்ப்பு இருக்கிறது.

சமகாலத்தை அறிந்து கொண்ட ஒரு கலைஞன், நம்பிக்கையை உருவாக்கும் கலைஞனாகத் தான் இருப்பார். அந்த வகையில் விஜய் பிச்சுமணியைக் கண்ட திருப்தியோடு யாளியை அனுப்பி வைத்தேன்.

ஜீவ கரிகாலன்

 

“வெறும் திறன் என்பது கை சாதுரியமே”

0

“வெறும் திறன் என்பது கை சாதுரியமே”

மார்க் ராத்கோ (Mark Rathko)

தமிழில் : கணபதி சுப்ரமணியம்

ஒரு அச்சீட்டாளரின் மை போல , ஒரு ஓவியரின் நிறமிகளுக்கு படைப்பினை உருவாக்குவதை தாண்டி பல உபயோகங்கள் உள்ளது. விளம்பர ஓவியர், கதைக்கு ஓவியம் தீட்டுபவர், உருவப்பட ஓவியர் , ஒப்பனையாளர் மற்றும் அலங்கரிக்கும் கலைஞர் அனைவரும் படைப்பாளியின் அதே கருவிகளான கலை பொருள் மற்றும் உருவ சாதனங்களையே உபயோகிக்கிறார்கள். ஆனாலும் அவர்களுடய முதன்மை சிந்தனை, நோக்கம் மற்றும் செயல்பாடு ஒரு படைப்பை நோக்கி அல்ல. ஒரு வணிக கலைஞரின் பொறுப்பு வர்த்தக பொருட்களின் விரும்பத்தக்கத்தன்மையினை மேம்படுத்துவதே ஆகும்.

mark rothko

கதைக்கு ஓவியம் தீட்டுபவர் , கதையின் நிகழ்வுகளையும், இடங்களையும் , உண்மைகளையும், காரணிகளையும் விளக்குவதில் ஒரு எழுத்தாளரின் வார்த்தைகளுடன் போட்டியிடுகிறார். உருவப்பட ஓவியர் அவ்வுருவத்திற்கு சொந்தக்காரரை பகட்டுடன் கூடிய பாராட்டுக்கு உட்படுத்தவேண்டும். ஒப்பனையாளர் மற்றும் அலங்கார கலைஞர் அழகினை மேம்படுத்தவேண்டும், சீர்படுத்தவேண்டும். வெளித்தோற்றத்தில் இது ஒரு படைப்புக்கான தோற்றத்தை உருவாக்குகிறது. ஆனால் ஒருமித்த சொற்தொடர்களை உபயோகிக்கும் ஒரு கவிஞனுக்கும் ஒரு விளம்பர நகல் எடுப்பவருக்குமான ஒற்றுமையே இது.

ஒரு படைப்புக்கும் படைப்பல்லாதவற்றிற்கும் உள்ள குழப்பம் ஓவியர்கள் மற்றும் கவிஞர்களை வர்ணிக்க முடியாத பாதிப்புக்குளாக்குகிறது. கவிஞரை காட்டிலும் கலைஞரை அது கொஞ்சம் அதிகமாகவே பாதிப்பதற்கு காரணம், நாம் திறனையும் கலையையும் வேறுபடுத்தாதது தான்.

ஓவியக்கலையின் முமூர்த்திகளான கோடு, உருவம், மற்றும் வண்ணம் (Line, Form, and Color), இங்கே பொதுவானதாக இருப்பதனால் இந்த பொது கூட்டுறவு , “திறனை” போற்றும் அதே சமயம் , “படைப்பு” என்றால் என்ன என்பதிலான குழப்பத்தை பலமடங்கு அதிகரிக்கின்றது.காதல் கலை என்கிறோம், போர் கலை என்கிறோம், மேலும் சமையல் கலை என்று எல்லாமே கலைகளென சொல்கிறோம். உண்மையில் இது ஒரு திறன். மூலப்பொருட்களை கொண்டு உருவ மற்றும் அலங்கார அமைப்புக்களை உருவாகும் ஒரு திறன். ஒரு நிருபரை நாம் கவிஞர் என்று கூறுவதில்லை, அனால் அதிகம் கட்டணம் வசூலிப்பவரானால், சுவற்றிற்கு சுண்ணாம்பு அடிப்பவரை கூட கலைஞர் என்போம்.

வெறும் திறன் என்பது கை சாதுர்யமே.

— மார்க் ராத்கோ, ‘The Artist’s Reality’, 1941

திறனை எந்த விதத்திலும் குறைகூறும் விதமாக பார்க்காமல் , படைப்பென்பதினை பற்றி ஆழமாக சிந்திக்க தூண்டும் ஒரு கூற்றாகவே இதனை அணுகவேண்டும்.

– கணபதி சுப்ரமணியம்

 

யாளி பேசுகிறது – 12 // காலத்தில் உறைந்து கிடக்கும் கலை.

1

காலத்தில் உறைந்து கிடக்கும் கலை

ஜீவ கரிகாலன்

நீண்டப் பெருந்தூக்கத்திலிருந்து எழுந்த யாளி, அநிருத்தனின் பேரிரைச்சலைப் பிண்ணனியிசையாகக் கொண்ட ஒரு திரைப்படத்தினைப் பார்த்து வந்த தலைவலியோடு அக்குப்பஞ்சர் வைத்தியரைச் சந்தித்தது. அதிரடியான உலகமயமாக்கல், உலகை, நகரத்தை, வாழ்விடங்களைச் சுருக்கிவிட்டது, மனிதர்களுக்கிடையேயான தூரங்கள், பிளவுகள், பிரிவினைகள் எல்லாமே விஸ்தரித்துவிட்டன. இவர்களை இணைப்பதற்கான ஒரே உபாயம் கலை தானென்றால் அதன் சப்தம் மிகுந்து தானிருக்கும் என்று அர்விந்தோடு பேசிக் கொண்டிருக்கும் போது புரிந்து கொண்டது. காலம் தான் கலையின் போக்கைத் தீர்மானிக்கிறது இல்லையா சிற்பி, ஓவியர் சி.தக்‌ஷினாமூர்த்தியின் மறைவு இந்தச் சமூகத்தின் எந்த காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். புறவுலகின் மாறுதல்களையும், கீழைத்திய நவீன உலகின் மாற்றங்களையும், உலகின் வெவ்வேறு வகைப் பழங்குடியினர்களிடையே இருக்கும் ஒற்றுமைகளைக் கண்டறிந்தவர்.

Dakshinamurthy 2-EPSமேற்குலகின் வளர்கலைகள் ஏற்படுத்திய தாக்கங்களுக்கு பதிலாக இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் வெவ்வேறு சிந்தனைப்பள்ளிகள் பதிலளித்துக்கொண்டிருந்த காலத்தின் தவிப்பில் ஓவியர் தக்ஷிணாமூர்த்தியின் பங்கும் முக்கியமானது. தம் மண்ணில் நெடுங்காலமாக இருந்துவரும் கைவினைஞர்களின், கிராமிய, பழங்குடியினரின் கலைகளில் இருக்கும் ஆன்மாவைப் புரிந்துகொண்டவராக பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்தி உருவாக்கியவர் இவர். அவரது இழப்பை உணர்ந்தவர்கள், நீண்டநெடும் பாரம்பரியமுள்ள ஒரு கலைமரபு உலகின் ஒரு மூலையிலிருந்து நவீனத்தை உடுத்தி கலைஉலகிற்கு தான் பரிணமித்ததை நிரூபிக்க முயன்ற காலக்கட்டத்தின் அருமையை உணர்ந்தவர்கள்.

சந்தையும், தொழிநுட்பமும் இவற்றை எங்கோ  கலைத்துப் போட்டது என்பது வேறு விசயம். இதைத்தான் அர்விந்தோடு பேசிக் கொண்டிருக்கையில் நன்றாக உணர முடிந்தது. ஏ.ஆர்.ரெஹ்மானின் வரவைக் கிண்டலடித்த அல்லது துச்சமென நினைத்த அந்த மதிப்புமிக்க இசையமைப்பாளரின் ஒரு வெகுசனப்பத்திரிக்கை பேட்டியை நினைவு கூர்ந்தபோது, காலத்தை உணர்வது எத்தனை முக்கியமானது என்று. காலத்தை உணராத கலைஞர்கள் காலாவதியாகிறார்களா? கால மாற்றத்தை தொடர்ந்து ஒரு கலைஞனால் ஏற்றுக்கொண்டு தன்னைப் புதுப்பித்துக் கொள்ள முடியுமா? இதற்கும் அர்விந் – மணிரத்னம் எனும் இயக்குநரைச் சொல்கிறார். தன்னைப் புதுப்பித்துக் கொள்ளாதவன், கால மாற்றத்தை உணராதவன் என்னவாகிறான்.

தன் அன்னையின் வேண்டுகோளுக்கிணங்க கற்சாடி நீரை கனி  ரசமாக மாற்றியது இயேசுவின் அற்புதங்களில் ஒன்று.

ஆனால் அந்த விருந்தில் “தனக்கான நேரம் இன்னும் வரவில்லை” என்கிற இயேசுவின் வசனம் மிக முக்கியமானது என்கிறார் அர்விந்.

ஆம் அர்விந், இயேசு தன் அற்புதத்தை சரியான நேரத்தில் பயன்படுத்தியிருந்தால் கயாஸ் கோட்பாடுபடி நிறைய மாறியிருக்கும்.

காரல் மார்க்ஸின் இருப்பில் கூட வரலாற்றிட்கு தேவை ஏற்பட்டிருக்காது. யாளிக்கு மூளையில் சளிப் பிடித்திருப்பதால் சற்று தேவைக்கதிகமாகவே சிந்திக்கிறது போலும். காலத்தை வெறும் கலைஞன் மட்டுமா உணர்ந்து கொள்ள வேண்டும்? விவசாயி முதற்கொண்டு, தொழிலதிபர்கள், உழைப்பாளிகள், அரசியல்வாதிகள், போராளிகள், மதவாதிகள் என எல்லோருக்கும் வேண்டுவது தான் அது.

ஆனால் கலைஞன் ஒரு காலத்தில் உறைந்து போய்விடுகிறான், அது தான் அவனை விஷேசமான மனிதனாக வைத்திருக்கிறது. “கலைஞன் என்பவன் சிறப்பு வாய்ந்த மனிதனல்ல, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கலைஞன் இருக்கிறான்” என்று ஆனந்த குமாரசாமி சொல்வது வேறு வகை. அவர் ஒரு பெருங்காலத்தை, பயணத்தை ஆழ்ந்து நோக்கியவர். அதை அவ்வளவு எளிதாக புத்தகப்புழுக்களால் சொல்லிவிட முடியாது.அவர் எழுதிய INDIAN CRAFTMANSHIP எனும் நூல் அவரது மேற்சொன்ன கூற்றுக்கு மிக முக்கியமான வலு சேர்க்கும்.

ஆனால் இந்தக் கால மாற்றத்தில், சமூகத்திற்குத் தேவையான மாற்றமாக நாம் நினைத்தவைகள் விளைவித்தவை என இந்த கைவினைஞர்களிடமிருந்து விடுபட்டுப் போனவை இழப்பாகக் கூட கருத முடியாத இடத்தில் நாமிருப்பதை தான் விவரிக்கமுடியவில்லை. தீண்டாமை ஒழிப்பு, தொழில்நுட்பங்களின் வரவு, புதிய நாகரிக வரவு ஆகியன காலமாற்றத்தால் வரவேற்கப்படவேண்டிய விஷயங்கள் தான்.

ஆனால் நாம் தொலைத்துப் போன கைவினைஞர்கள், அவர்தம் செய்நேர்த்தி போன்ற விஷயங்களை நினைத்துப் பார்க்கக் கூட நமக்கு நேரமில்லை. கேரளாவிலும், ஆந்திராவிலும் அதே கைவினைஞர்கள் இருக்கிறார்கள், மரபு ரீதியாக காப்பாற்றிக் கொண்டுவந்த தங்கள் தொல்கலைகளை, கைவினைகளை இன்னும் தக்கவைக்க அரசும் அவர்களை காப்பாற்றி வருகிறது. அவர்களுக்கு தொழில்நுட்பங்கள் வசதியான ஒன்றாகத் தான் இருக்கிறது. காலம்காரி ஓவியர்களை அரசே காபந்து செய்கிறது, கேரள கைவினைஞர்கள் – அரசின் சுற்றுலாத்துறையோடு இணைந்து வேலை செய்கின்றனர்.

இங்கே சுயமரியாதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளப்படவில்லை, இருப்பதையும் தொலைத்துவிட்டோம். எங்கோ ஒரு சுவரில், செங்கல் கொண்டும், கரியைக் கொண்டும் தத்ரூப ஓவியங்கள் வரைபவனைக் கிறுக்கனென்று நம்பி சில்லறைகளை வீசி தக்கவைத்துக் கொள்கிறோம். யாரொ ஒருவனுக்கு தன் டெரோகோட்டா குதிரைகளை அமெரிக்கன் பள்ளிக்கூடத்தில் செய்து காட்ட வாய்ப்பு கிடைக்கிறது, அவரும் தன்னைத் தாண்டி வெளிசெல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

2014-06-23-432   ராஜீவ் காந்தி சாலையில் வைக்கப்பட்டிருக்கும் கலைவடிவங்களில் தஸரத் பட்டேல் செய்த 2/5 வேலைகள் மட்டும் பதியப்பட்டிருக்கிறது, ஏவி இளங்கோவின் ஐந்திணை சிற்பங்கள் பற்றிய விவரங்களோ, ஆர்.எம்.பழனியப்பன் போன்றோரின் சுவரோவியங்கள் பற்றிய தகவலோ கிடைப்பதற்கில்லை.

சுவரோவியங்கள் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களை அவ்வப்போது கிழித்துச் சாப்பிடும் மாடுகளுக்கு கலை ஆர்வலர்கள் நன்றிக்க 32 வருடமாக அம்மா வைத்துக் கொண்டிருக்கும் கொலுப்படிகளில், உடைந்த போன சிலைகளுக்குப் பதிலாக மாற்றப்பட்டிருக்கும் பொம்மைகளில் (பழையவை ஸ்ரீவில்லிபுத்தூர் பொம்மைகள்) கொஞ்சம் கூட பொலிவில்லை. அத்தனை காசு கொடுத்து வாங்கியும் அதில் தரமில்லை. கடவுளர்களின் முகத்தில் கூட இயந்திர வாழ்க்கையில் சலிப்பு அப்பியிருக்கிறது.டன் பட்டவர்கள், யாளியும் தான். மேல்படிகளில் இருக்கும் பழைய பொம்மைகளான மூன்று பெண் தெய்வங்களிடமும் – ”பழசாகயிருந்தாலும் அவர்களிடம் ஒரு பொம்மையை உருவாக்கும் கலைஞனின் அற்பனிப்பும், செய்நேர்த்தியும், வாங்கப்போகும் பக்தனின் வழிபாடு மேலுள்ள அக்கறையும், தன் பரம்பரையின் பெருமையென அவனது கற்பிதங்களும் கொண்ட காலம் உறைந்து கிடந்தது”.

யாளி உறங்கச் செல்லட்டும்…

ஜீவ கரிகாலன்

அடுத்தடுத்து அனுப்பப்பட்ட இரண்டு ஸ்மைலிகளின் நிகழ்வு

0

நிகழும் அன்பிடம் பதில்களேதுமில்லை
வாசித்துகொண்டிருந்த விதையை போட்டுவிட்ட அணில் ஒன்று
அரவத்தில் முளைத்த உனது கேள்விமரத்தின்
புறமுதுகில் சுழன்று உயர்கிறது

நிகழும் முத்தத்தில் வகைமையில்லை
உன் உதடுகள் சுதாரிக்கும் போது
கோரைப்பல் பட்டு கீறிய கோட்டில்
வெல்வெட் பூச்சிகள் ஊர்கிறது

நிகழும் காத்திருப்பில் எதிர்பார்ப்புகளில்லை
கனவிலிருப்பவனை திடுக்கிட செய்யும் உனது அண்மை
கனவின் ஒரு மிடறை பருகும்படி பரிசளிக்கிறது

அழைப்பு கூட வெறுமனே நிகழ்கிறது
ஒரு ஸ்மைலியில் ஆரம்பித்து
அடுத்தடுத்து அனுப்பப்பட்ட
இரண்டு ஸ்மைலிகளில் முடிகிறது.

அன்பில் கேள்விகள் நடுசாலையில் நடப்படுகிறது
சட்டென்று அது இடைநிறுத்தும் போது
நான் கடந்துவிடுகிறேன் உன்னை.

பிறகு சடைத்து பூக்கும் எனக்கான காத்திருப்பை
உருவி கொட்டுகிறது அந்த அணில்.

***
அண்ணல்

annal.kavithai@gmail.com