Home Blog Page 95

நேர்காணல் – கவிஞர். தி.திருக்குமரன்

2

சந்திப்பு : கவிஞர்.அகரமுதல்வன்

தி. திருக்குமரன் தமிழீழ மண்ணின் எழுத்தாளர், கவிஞர், ஊடகவியலாளர் , சூழலியலாளர் என பல்வேறு களங்களில் 1999 இல் இருந்து செயற்படத் தொடங்கியவர். இவரது அரசியல்/எழுத்துச் செயற்பாடுகள் காரணமாக 2008 இல் இலங்கை இராணுவத்தால் கடத்தப்பட்டு இரகசிய வதை முகாமொன்றில் மிகுந்த சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப் பட்டவர். தமிழீழ மக்களின் விடுதலைக் குரலாக, வலிகளை , துயரங்களை, இலட்சிய நெறியோடு கவிதைகளாக எழுதிவருபவர். இவரின் விழுங்கப்பட்ட விதைகள் எனும் கவித் தொகுப்பு அரசியல் பிரக்ஞை கொண்ட மிக முக்கியமான பதிவு.

– அகரமுதல்வன்

*

அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் அளவுக்கு ஈழத்துப் படைப்புகள் வெளியில் பேசப்படவில்லை 

-கவிஞர் தி.திருக்குமரன்.

*

அகரமுதல்வன் : ஒரு ஊடகவியலாளராக இலங்கையின் ஊடக சுதந்திரம் எவ்வாறு இருக்கிறதென உணர்கிறீர்கள்?

திருக்குமரன் :  சுதந்திரம் என்ற சொல்லுக்கே அர்த்தமற்ற நாடு இலங்கை. இல்லாத ஒன்றில் எப்படி அளவு இருக்க முடியும்அதுவும் மக்கள் பிரச்சனையை வெளிப்படுத்தும் ஊடகத்தில்சாத்தியமே அற்றது தானே?

சாதாரண பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை நினைத்து அழுவதற்குக் கூட சுதந்திரம் மறுக்கப்பட்ட தேசத்தில் ஊடகத்துக்கான சுதந்திரத்தை எதிர்பார்ப்பது மடமைத்தனமானது; மேலும் உலகில் ஊடகர்களுக்கு அச்சுறுத்தல் மிகுந்த தேசமாக இலங்கையை எல்லைகடந்த கடந்த ஊடகவியலாளர்கள்  அமைப்பு  இந்த  வருடமும் பட்டியல் இட்டிருக்கிறது.

சிங்கள அரச இயந்திரம் தனியே தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மட்டும் எதிரானதல்ல,  தமிழீழத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் ,  கொள்கையளவில் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ‘லசந்த விக்கிரமதுங்க’ கூட மகிந்த அரசின் ஊழல்களை, மோசடிகளை வெளிப்படுத்தினார் என்பதற்காகவே கொழும்பின் பிரதான நகரமொன்றில் அனைவரும் பார்த்திருக்க சுட்டுக் கொல்லப்பட்டதோடு நிமலராஜன், சிவராம் என இந்த ஊடகர் படுகொலைப் பட்டியல் இன்னும் நீண்டு தான் செல்கிறது.

இலங்கை அரசால் காணாமற்போகச் செய்யப்பட்ட ‘லங்கா ஈ நியூஸ்’ ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட இதற்கு ஓர் அண்மைய உதாரணம்.  சிங்கள ஊடகர்களுக்கே இந்த நிலமை என்றால் தமிழன் என்பதால் மிக இலகுவாக புலி என்று சொல்லிவிடக்கூடிய ஈழத்தமிழ் ஊடகர்களின் நிலமையைச் சொல்லவேண்டியதில்லை.

அகரமுதல்வன் : 2006இல் இலங்கை இராணுவத்தால் கடத்தப்பட்ட நீங்கள் எந்த மாதிரியான சித்திரவதைகளை எதிர்கொண்டீர்கள்?

திருக்குமரன் : 2006 ல் அல்ல 2008 யூனில் வெள்ளை வானில் வீட்டுக்கு வந்த ஆயுததாரிகளால் பலவந்தமாக துப்பாக்கி முனையில் கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில், இரகசிய வதைக்கூடமொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு குரூர வதைகளின் பின்னரும்  எவருக்கும் பயனற்று உயிருடன் இருக்கும் ஒரே தமிழ் ஊடகர் நானென்று தான் நினைக்கிறேன்.

எப்படி வதைத்தார்கள் என்ன செய்தார்கள் என்று திரும்பவும் வதைகளைப் பட்டியலிட்டு மீண்டும் பயங்கர இரவுக்கனவுகளில் அலற நான் விரும்பவில்லை வதைகளின் பின்னர் ஏறத்தாழ 8 மாதகாலம் தமிழ்நாட்டிலுள்ள ஒரு வைத்திய சாலையில் படுத்த படுக்கையாகி என்னுடைய நாளாந்த  கடமைகளைக்  கூட செய்ய முடியாமல் இன்னொருவரின் துணையில் மட்டுமே இயங்கக் கூடிய நிலையில் இருந்தேன்.

எதிர்வரும் யூனுடன்(June ) கடத்தப்பட்டு 6 வருடங்கள் ஆகிற போதிலும் கூட பழைய மாதிரி என்னால் இயங்கநடக்க முடியாத நிலமையில் தான் இருக்கிறேன் என்பதளவு மட்டுமே என்னால் சொல்ல முடியுமெனில் வதை எப்படியானதென்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

.

அகரமுதல்வன் : புலி எதிர்ப்பு வாதத்தினால் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலையை ஆதரிப்பவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.

திருக்குமரன் : மகாவலியின் பெயரால் சிங்கள அரச இயந்திரத்தால் உத்தியோக பூர்வமாக ஆக்கிரமிக்கப்படத் தொடங்கிய  எமது நிலமும் அடையாளமும் கடந்த 30 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளால் தான் தடுத்து தக்க வைக்கப்பட்டிருந்தது.

புலிகள் இல்லாத இந்தக் காலத்தில் எந்தக் கேள்வியுமே இல்லாமல் சட்டவிரோதத்தைச் சட்டமாக்கி தமிழர் நிலங்களை வேகமாக சிங்கள அரசு பறித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போதாவது புலி எதிர்ப்புவாதிகளுக்கு விளங்கியிருக்க வேண்டும் ஆனால் வயிற்றை நிரப்ப விளங்காதது போலவே இருப்பார்கள்.

கடலில் சென்று கொண்டிருந்த போது படகின் முன் பகுதியில் ஓட்டை விழுந்துவிட நீர் வேகமாக உட்புகத் தொடங்கியதாம், அப்போது முன் பகுதியில் நின்றவர்கள் தம்மால் முடிந்தளவு வேகமாக உள்வரும் நீரை அள்ளி வெளியில் ஊற்றியபடி பின்பகுதியில் உள்ளவர்களை நோக்கி உள்ளே நீர் புகுந்து விட்டது உதவி செய்யுங்கள் என்று கேட்க, பின்பகுதியில் நின்ற குழுவினர் கால்களை படகின் மேல் தூக்கி வைத்தபடி எம் பகுதிக்கு இன்னும் நீர் வரவில்லையே ஏன் நாம் வீணாக உங்களுக்குதவ வேண்டும் என்று கேட்டு முன்னால் நின்று நீர் இறைத்துக் கொண்டிருந்தவர்களை தேவையற்ற வேலையென விமர்சித்துக் கொண்டிருந்தார்களாம்.

இந்தப் பின்னால் நிற்கும் குழு போன்றவர்கள் தான் இவர்களும். மூழ்கிக் கொண்டிருக்கும் இவர்களையும் காப்பாற்றத்தான் அவர்கள் முன்னால் நின்று போராடுகிறார்கள் என்பது இவர்களுக்கு புரியவில்லை , மூக்கை மேவி நீரேறும் போது புரியும்.

.

அகரமுதல்வன் : தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும் அப்படித் தான் இருக்கிறதா?

திருக்குமரன் : காலங்காலமாக இலங்கையில் தமிழரசியல்வாதிகள் எப்படி செயலாற்றினார்கள் என்பது நாமறிந்தது தான், தமிழீழத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூலைப்படித்தால் இலங்கைத் தமிழ் அரசியல் வாதிகளின் தகிடுதித்தங்கள் புரியும்.

இப்போது கூட்டமைப்பில் இருக்கின்ற எல்லோரும் அப்படிப்பட்டவர்களல்ல, ஆனால் அவர்களின் தலைமை தன்னுடைய அரசியல் வாழ்நாட்காலம் முழுவதிலும் ஒன்றிணைந்த இலங்கைக்கு ஆதரவாகவும் ஆயுதப் போராட்டத்துக்கு எதிராகவுமே இருந்திருக்கிறது.

சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் சம்மந்தனுக்கு குண்டு துளைக்காத காரும் கொமாண்டோ பாதுகாப்பும் கொடுக்குமளவில் சிங்கள அரசியல்வாதிகளுடனான உறவு நீடிக்கிறது, மேலும் இவர்கள் ஒரு எழுச்சியை உருவாக்கவோ மக்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்கவோ சக்தி அற்றவர்கள்.

தமிழ்நாட்டில் எப்படி தமிழ் அரசியல்வாதிகள் தமக்கு வழங்கப்பட்ட பதவிக்காலத்தை கொண்டோட மட்டுமே நினைத்து செயலாற்றுகின்றார்களோ அதே தான் அங்கும் ஏனெனில் இவர்கள் அந்த வழி வந்தவர்கள் தான்.

தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த பின்னர் அரசியல்வாதிகள் இளைஞர்களை நோக்கி சரி இனி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் உங்கள் வாழ்வை, கல்வியை தொடருங்கள் என அனுப்பி விட இளைஞர்களும் சம்மதித்து சென்று விட்டார்கள்.

 இந்த முறையைத்தான் தமிழீழப்பிரகடனத்தின் மூலம் இங்கும் அரசியல்வாதிகள் செய்தார்கள், தனிநாடு என்ற கோரிக்கை மூலம் இளைஞர்களின் உணர்ச்சியைத் தூண்டி தேர்தலில் ஜெயித்து விட்டு சரி நாங்கள் இனிப்பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் செல்லுங்களென ஆயுதமேந்திய இளைஞர்களை அனுப்ப நினைத்தார்கள், ஆனால் ஈழத்தில் அதுவாய்க்கவில்லை.

இப்போது ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட நிலையில் இவர்கள் தமக்கு முடிந்த சமாளிப்பு, விட்டுக்கொடுப்பு அரசியலைத்தான் செய்கிறார்களே தவிர உண்மையாக தமிழ் மக்கள் படும் அவலங்களை உரிய இடங்களுக்கு எடுத்துச் செல்கிறார்களில்லையென்ற விமர்சனம் இவர்கள் மீது நிறையவே வைக்கப்படுகிறது.

.

அகரமுதல்வன் : முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் புலம் பெயர்ந்த தமிழர்களின் அரசியல் செயற்பாடுகள் ஆரோக்கியமானதாக இருக்கிறதா ?

திருக்குமரன் : கடந்த 30 ஆண்டுகளாக வன்னியில் இருந்து வந்த உத்தரவுகளுக்கு அமைவாகவே ஓர் குரலின் கீழ் தனித்தனியான நிர்வாக முறைமைகளில் இயங்கிக் கொண்டிருந்த அமைப்புகள், அந்தக் குரல் மெளனித்துப் போனவுடன் அவையவை தமக்கான தனித்த நிர்வாக நிலையின் படி மற்ற அமைப்புகளுக்கு பதில் சொல்லத் தேவையற்று இயங்கத் தொடங்கின.

இதில் ஒருவரின் செயற்பாடுகளில் மற்றவருக்கு கருத்துவேறுபாடு வருவது தவிர்க்க முடியாயது தான், இந்த தனித்துப் பிரிந்திருக்கும் நிலையை எதிரியும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பலரை தமக்குள் உள்வாங்கி குழப்பத்தை ஏற்படுத்தாமல் இல்லை.

 அயர்லாந்தில் வட அயர்லாந்தில் விடுதலைக்காக இன்னும் குரல் கொடுக்கும் IRA அமைப்பில் நான்கு பிரிவுகள் இருக்கின்றன, அவரவர்களுக்கிடையில் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கிறது, மிகச் சிலவேளைகளில் தமக்குள் அவர்கள் மோதிக்கொள்வதும் உண்டு, பாலஸ்தீனத்தை எடுத்துக் கொண்டாலும் இதே தான்.

 ஆனால், அவர்களுக்கும் எமக்கும் ஒரு சின்ன வித்தியாசம் என்னவெனில் அவர்களுக்கு கால்பதித்து நின்று போராட சொந்த நிலம் இருக்கிறது, வெளிநாடுகளில் உள்ள அவர்களின் குழு உறுப்பினர்கள் அங்கிருந்து வரும் உத்தரவுகளைப் பின்பற்றுகிறார்கள்.

 ஆனால் எம் நிலைவேறு நாம் முற்று முழுதாகப் புலத்தில் இருக்கிறோம், நிலத்தில் இருந்தும் குரல் கொடுப்பவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்தாலும் நாட்டில் உள்ள எதேச்சதிகார நிலைமையில் அது ஒரு அளவுக்கு மேல் முடியாது.

 பிரிந்து தமக்குள் அடிபட்டு ஆளாளுக்கு கறுப்புவெள்ளை அடித்துக் கொண்டிருந்த அமைப்புகளை இலங்கை அரசு தடை செய்தது, ஒருவகையில் எல்லோரையும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டிய தேவையை உருவாக்கி இருக்கிறது.

 சூரியனின் ஈர்ப்பில் ஒழுங்குமாறாமல் வலம் வந்த கோள்கள், திடீரென ஒருநாள் அந்தச் சூரியனை ஒரு கருந்துளை விழுங்கினால் நெறிப்படுத்த ஓர் ஈர்ப்பின்றி தம்முள் முட்டி மோதும், செல்லும் வழி ஒழுங்கு திடீரென உடைந்ததால் தடுமாறும், அது தான் எமக்கும் இப்போது நிகழ்கிறது என்பது தான் உண்மை.

.

 அகரமுதல்வன் : தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வியை தமிழீழ மக்களின் அரசியல் தோல்வியென நோக்கும் நிலை குறித்து ?

திருக்குமரன் : பொதுவாகவே உலக நாடுகளின்விடுதலைப் போராட்ட அமைப்புகளின் நிர்வாகமுறை அரசியலில் இருந்து இராணுவத்துக்கு வந்தது, அதாவது அரசியல் மட்டத்தில் எடுக்கும் தீர்மானங்களைத்தான் இராணுவம் முன்னெடுத்தது.

ஈழத்தில் அப்படி அல்ல, எல்லா முடிவுகளும்  இராணுவத்திலிருந்தே  எடுக்கப்பட்டது இராணுவத்தின் தீர்மானங்களைத் தான் அரசியல் பிரிவு தம்மூடாக உலகுக்கு முன்வைத்ததுஅதனால் தான் ஆயுதப் போராட்டம்  மெளனிக்கப்பட்டவுடன் அதன் உத்தரவுகளில் தங்கி இருந்த அரசியல் நிலையில் ஒரு பாரிய தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் மாறிக்கொண்டு வருகிறது, அதன் நலன் என்கின்ற வட்டத்தில் எம்முடைய தேவைகளும் சரியான இடத்தில் சரியான நேரத்தில் எப்போதும் மாறாத சரியானவர்களால் வைக்கப்படுமானால் நாம் மீண்டும் மேவி எழலாம்

.

 அகரமுதல்வன் : தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்விக்கு பின்னர் மாறியுள்ள உலக அரசியல் சூழல் தமிழர்களுக்கு  சாதகமானதாக உள்ளதா?

 திருக்குமரன் : இல்லை நிச்சயமாக இல்லை, விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததென்பது தனியே இலங்கை அரசு செய்ததில்லை, 21 நாடுகள் தம்முடைய பிராந்திய நலனுக்காக இலங்கையுடன்   இணைந்து  செய்த கூட்டுப் படுகொலை தான் இந்த தமிழினப் படுகொலை. இலங்கை அரசு செய்தது வெறுமனே துப்பாக்கி விசைய அழுத்தியது  தான்.

துப்பாக்கி செய்தது ஒரு நாடு, குண்டு கொடுத்தது ஒரு நாடு, சுடப் பயிற்சிகொடுத்தது இன்னொன்று , சரியான தகவல் கொடுத்தது இன்னொன்று, கையில் பிடித்து குறிபார்த்துக் கொடுத்தது மற்றொன்று ஆக அழுத்தியது மட்டும் தான் சிங்கள இராணுவம்.

புலிகளை இராணுவ ரீதியாக வெற்றி கொண்டதன் பின்னர் கழுதைப்புலியாக, நரியாக எச்ச சொச்சங்களை துன்புறுத்தி, பலாத்காரம் செய்து இலங்கை அரசு மகிழ்ந்ததை, மகிழ்வதை எல்லோரும் அறிந்தது தான். இப்படி இருக்க எப்படி கொலையாளிகளிடமிருந்தே எமக்கான தீர்வை நாம் எதிர்பார்க்க முடியுமென்று தெரியவில்லை.

‘விடுதலைப் போராட்டம் நெடிது’ உலகெங்கணும் சாத்தியமில்லை என்று நினைத்த விடுதலைப் போராட்டங்கள் உறுதி குலையாத தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமே சாத்தியப்படுத்தப்பட்டிருக்கின்றன.

‘நடந்துவிடாதென்பதையும் நடத்துவித்துக் காட்டுவதே

திடம்மிகுந்த விடுதலைப் போராட்டத் திருக்கீதை’ 

இனி ஈழம், தமிழ் என்ற சொற்பதங்களே வராதபடிக்கு எல்லாவற்றையும் ஊதி அணைக்கும் திட்டத்தை அமெரிக்க இந்திய மேற்குலக நாடுகள் கையிலெடுத்திருந்தாலும் ஓர்மங்குன்றாத தொடர்ச்சியான போராட்டங்கள் மூலம் ஒருநாள் எங்கள் கனவு மெய்ப்படும் என்பதே என் நம்பிக்கை.

.

அகரமுதல்வன் : புலம் பெயர்ந்த ஈழத்து படைப்பாளிகளின் படைப்புக்கள் எவ்வாறு மக்கள் அரசியலில் எதிர்வினை ஆற்றுகிறது ?

திருக்குமரன் : ஈழ அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் அளவுக்கு, எதிர்வினையாற்றும் அளவுக்கு, மக்கள் கருத்துநிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பெரிய அளவில் ஈழத்துப் படைப்புகள் வெளியில் பேசப்படவில்லை என்றே சொல்லுவேன்.

அதற்கான வெளி எமக்கின்னும் உருவாகவில்லை, சரி தமிழ்நாட்டிலாவது உருவாகும் என்று பார்த்தால் அங்கும் வாய்ப்பில்லை, அவர்களுக்கு எம்முடைய பாடுபொருள் புதிது, விளங்கவும் மாட்டார்கள் அதற்கு விரும்பவும் மாட்டார்கள்.

நீங்கள் சிங்களத்  தமிழா அல்லது தமிழ் தமிழா என்று தமிழ்நாட்டில் எழுத்தாளர் பதாதையை காவிக்கொண்டு திரிவோர் சிலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள், அது தவறானதும் இல்லை, ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டின் எந்த வட்டார வழக்கு எழுத்தையும் வாசித்து புரிகிறார்கள், ஆனால் தமிழ்நாட்டவர்கள் எம்முடைய கொலோக்கியலை புரிய முயல்வதில்லைஏனெனின்றால் அது அவர்களுக்கு சோறுபோடாது, தேவையும் இல்லை.

ஈழத்தமிழர்கள் சிங்களம் பேச விளங்க முயல்வார்கள், ஆனால் சிங்களவர்களுக்கு தமிழ் படிக்க வேண்டும் விளங்க வேண்டுமென நினைப்பதே இல்லை, ஏனென்றால் அவர்களுக்கு தேவையில்லை,.

 அதே போலத்தான் தமிழ்நாட்டிலும் எம்முடைய வலிகளைப் பேசும் எழுத்துகள் எல்லாம் அவர்களுக்கு புலம்பலாகவே தெரியும், எழுத்துக்களை தம்முடைய அறிவுத்தராசில் நிறுத்து அளவு கூறும் தமிழ்நாட்டு இலக்கிய விமர்சகர்கள் எழுத்தாளர்கள், முகமனுக்காக எம்முன்னால் தற்செயலாக உதட்டளவில் ஏதும் சொல்லிக் கொண்டாலும் அவர்கள் எப்போதும் ஈழத்து எழுதுக்களைப் புறக்கணிக்கும்,ஒதுக்கும் போக்கையே கொண்டிருக்கிறார்கள்.

 இதனால் தமிழ்நாட்டில் சுற்றித்திரியும் எம்முடைய சில எழுத்தாளர்களும் தம்மை அங்கு தக்கவைக்க வேறு வழியில்லாமல் தமிழ்நாட்டுக்குரிய பாடுபொருட்களையே தம்முடைய எழுத்துகளில் பேசிவருகிறார்கள், சாதி, பெண்ணியம், பெரியார், மோடி, இந்துத்துவா,  இப்படி நிறைய, அதற்காக அதனைப் பேசக்கூடதென நான் சொல்லவில்லைஅங்கு தாம் பேசப்பட வேண்டுமெனில் இதனைப் பேச வேண்டும் என்பதற்காகப் பேசுகிறார்கள் என்று தான் சொல்கிறேன்.

 எமக்கான ஒரு அரசியற் சுதந்திரம் கிடைக்கும் வரை இந்த நிலைமைதான் நீடிக்கும், ஆனால் தற்பொழுது புலம்பெயர் தேசங்களில் அந்தந்த தேசத்துக்கான மொழிகளில் திரைப்பட வடிவிலோ எழுத்து வடிவிலோ எம் பிள்ளைகள் பேசத்தொடங்கி இருக்கிறார்கள்.

 காலப்போக்கில் இது வளர்ர்சியுறும் என்றே நம்புகிறேன், அரசியற்பணி செய்யும் புலம்பெயர் அமைப்புகள் எம்பிள்ளைகளின் கலைப்படைப்புகளை வெளிக்கொணரும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.

.

 அகரமுதல்வன் : புலம்பெயர் தமிழரின் அரசியல் மந்தத்தனத்தை  சூடு போடும் கவிதையாக  உங்கள் எதுவுமற்ற காலையை  எடுத்துக் கொள்ளலாமா?

திருக்குமரன் : அது பார்ப்பவர்களின் புரிதலைப் பொறுத்தது; போரில் தோற்று வாழ்க்கையையே இழந்து நிர்க்கதியாக நிற்கும் போது எங்கள் தமிழ்ச்சமூகம் போராளிகளை எப்படிக் கேவலமாக கையாள்கிறது அவர்கள் மனதை எப்படி நோகடிக்கிறது.

இதற்காகத்தானா, இவர்களுக்காகத்தானா போராடினோம் என்கின்ற மன விரக்தியின் ஆதங்கவெளிப்பாடுதான் அந்தக் கவிதை.

.

அகரமுதல்வன் : தமிழ்நாட்டின்  அரசியல் பண்டமாக ஈழத் தமிழர்களின் துயரம் உபயோகப்படுதப்படுகிறதென்கிற  கருத்தில் உடன்படுகிறீர்களா ?

திருக்குமரன் : எல்லோரையும் அப்படிச் சொல்வதற்கில்லை; அப்துல்ரவூப் முதல் முத்துக்குமாரில் இருந்து 16 பேர் எமக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தானே தம்மையே எரித்துக் கொண்டார்கள், தமிழ்நாட்டில் இப்படி ஒன்று நடந்திருந்தால் ஈழத்தமிழர்கள் யாராவது இப்படி எரிவார்களென்று நினைக்கிறீர்களா? நான் இதனை இப்படித்தான் பார்க்கிறேன்.

எந்த வழியிலேயோ ஈழம் பற்றிய கதை ஈழவிடுதலைப் போராட்டம் பற்றிய செய்திகள் யாராலோ மக்களிடத்தில் கொண்டு செல்லப்படுகிறது; ஈழத்தில் நடப்பவை அதே மொழிபேசும் மக்களின் நினைவில் தக்க வைக்கப்படுகிறது.

பலர் ஈழத்தை தம்முடைய அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்களென்பது உண்மைதான். ஆனால் விடுதலைப் போராட்டத்தின் போது எமக்கான களமருத்துவப்பொருட்களை, குருதியை, இன்னும் களத்துக்கு தேவையானவற்றை தமிழ்நாட்டு அரசியற்கட்சியின், அமைப்புகளின் தோழர்களே மிகுந்த சிரமத்தின் மத்தியில் அனுப்பி வைத்தார்கள் இதனால் அவர்களில் பலர் இன்னும் வழக்குகளைக் கூட எதிர்கொள்கிறார்கள்.

புலிகளின் தலைவர்  சொன்னதைப் போல ஈழம் குறித்த செய்தியை, அந்த நெருப்பை அணையவிடாமல் இன்னமும் அதனைப் பேசுபொருளாக்கி தமிழ்நாட்டில் எம்மீது அபிமானம் கொண்ட அரசியல்வாதிகள் பேணிவருகிறார்கள்’ அதுதான் உண்மையும் அவர்களால் முடிந்ததும் கூட.

.

அகரமுதல்வன் : உங்கள் விழுங்கப்பட்ட விதைகள் எனும் கவிதைத்தொகுப்பு குறித்து ?

திருக்குமரன் : விழுங்கப்பட்ட விதைகள் என்னுடைய இரெண்டாவது கவிதைத் தொகுப்பு, நான் எதிர்கொண்ட வதை முகாம்களை, சிறைகளை, பிரிவை, நீண்ட தனிமையை, தோற்றுப்போன ஆற்றாமையை , வாழ்ந்த, வாழும் வாழ்வை  முடிந்தளவு எந்தப் பாசாங்குமில்லாமல் அப்படியே எனக்கான மொழியில் எழுதி இருக்கிறேன்.

*

திருக்குமரனின் வலைப்பூ : http://www.thirupoems.blogspot.in/

64057_10200254547872610_628003811_n

யாளி பேசுகிறது – 05 – ஓவியக்காட்சி – நடைபயிற்சி 2

0

ண்பர் ஒருவருடன் இரவு நேரங்களில் சென்னையின் தெருக்களில் நடமாடும் பொழுது நமக்கு கிடைக்கும் சில காட்சிகள், வழக்கமாக நாம் பார்க்கும் பகல்காட்சி போல்; மனித நடமாட்டத்தில்; வேலைக்கு செல்லும் அவசரங்களில் இருப்பது போலவே இரவுகளில் இருப்பது இல்லை என்று பேசிக் கொள்வோம். அவ்விரவு நேரங்களில் ஒழுங்கான வரிசையில் எரிந்து கொண்டிருக்கும் சோடியம் விளக்குகளில் இருந்து, மின்சார ரயில், தாழ்வாகப் பறக்கும் விமானம் என நாம் பார்க்கும் வழக்கமான காட்சிகளில் கிடைக்கும் அந்த வழக்கமான கடந்து செல்லும் உணர்வுகள் கிடைப்பதில்லை. அந்த காட்சிகளில் யதார்த்தத்தினை விஞ்சிய ஒரு அதி/உயர் யதார்த்தம் இருந்தது (HYPER REALITY). 

உண்மைகள் மீதான கட்டுமானங்கள் சிதைத்துவிட்ட அதீதப் புனைவின் நிலக்காட்சி

anupam 3சென்னையில் தற்பொழுது நடைபெற்று வரும் (மார்ச் மாதம் முழுதும்) ஒரு ஓவியக் கண்காட்சிக்கு சென்று வந்தேன்.  சென்னையைச் சேர்ந்த கலைஞரான பார்வதி நாயரின் கண்காட்சி பற்றிய கட்டுரை இது.

AMBIGUITY OF LANDSCAPE என்ற தலைப்பில்(theme) கண்காட்சி நடைபெறுகிறது, பார்வதி நாயர் ஒரு ஓவியர் மட்டுமல்ல, அவர் ஒரு நல்ல கவிஞரும், நன்கு அறியப்பட்ட எழுத்தாளரும் கூட. 25வருடங்களுக்கும் மேலாக இயங்கி வரும் படைப்பாளி. அகண்ட நிலக்காட்சி (landscape)ஓவியங்களாக நாம் இது வரை பார்த்து வந்த, நாம் நம்பிக்கொண்டிருக்கும் landscape காட்சிகளில் மீது இவரது படைப்புகள் சின்ன சலனமாவது ஏற்படுத்தும் என்பது என் நம்பிக்கை.

பெரும்பாலும் அவரது படைப்புகள் HAND-DRAWN GRAPHITE ON WOOD மற்றும் Archival/Giclee Printகளாக இருக்கின்றன.  பார்வதி தன் படைப்புகளில் ஏற்படுத்தும் சலனம் என்னவென்றால் மைக்ரோஸ்கோபிக் கூறுகளை landscapeகளில் கொண்டு வந்த படைப்பிகளிலும் அவற்றைத் தொகுத்திருக்கும் விதத்திலும் என்று சொல்லலாம். இது வெறும் யுக்தி தானே என்று சொன்னால், ஆம் அது வெறும் யுக்தி மட்டுமே. மைக்ரோஸ்கோப் வழியே நாம் பார்த்த செல்களின் தோற்றத்தைப் பார்ப்பது போன்ற யுக்தி தான், அந்த யுக்தி பார்வையாளனின் புரிதலுக்கான யுக்தி. ஆனால், இந்த அறிவியல் உண்மைகளை ஒரு கலை படைப்பாக மாற்றுவதற்கு பின்புலமாக இருக்கும் சமூகம் பற்றிய புரிதலாக பார்வதி அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. இவரது படைப்புகள் வழியே தெரியும் முப்பட்டகக் காட்சிகளில் சமூகம், அரசியல், கலாச்சார மற்றும் வரலாற்றின் நிறப்பிரிகைகளைப் பார்க்க முடிகிறது. 

ரு seriesஇல்இவரது மூன்று வேலைப்பாடுகள் தொடர்ச்சியாக வைக்கப்பட்டிருக்கிறது. அதன் தலைப்பு UNDER THE SKIN என்று நினைக்கிறேன். மூன்று செல்களின் வடிவங்கள் வரையப்பட்டிருக்கிறது. வேறு வேறு மூன்று ethnicityகளுடையது, ஒன்று கருப்பின மக்களுடையது, இன்னொன்று ஆசிய மக்களின் நிறம், மூன்றாவது ஐரோப்பிய மக்களின் பொது நிறம். இந்த மூன்று படைப்புகளையும் ஒரே panelஆக நீங்கள் பார்த்தால் மட்டுமே ஓவியரின் எண்ணம் வெளிப்படும். நிறவெறியின் தாக்கங்களே இந்த கலைபடைப்பின் வெளிப்படுத்தும் நோக்கமாக இருக்கிறது, அமெரிக்கக் கலைஞரான Bob Dalynஇன் வரிகளும் அங்கே எழுதப்பட்டிருக்கிறது.

Under the Skin : Parvathy Nair
Under the Skin : Parvathy Nair

 றிவியல் நுண்விஷயங்களை இப்படி அகண்ட landscapeகளில் விரித்து வைத்திருக்கும் பார்வதி, அதே நேரத்தில் மிக அகண்ட பரப்புகளையும் landscapeகளில் சுருட்டியும் வைத்திருக்கிறார். பறவைகளின் கண் பார்வையில் உயரமான இடத்திலிருந்தோ அல்லது விமானம் அல்லது செய்ற்கைக் கோள் படங்களாகவோ நாம் பார்க்கக் கூடிய காட்சிகளையும் வைத்திருக்கிறார். ஒரு தொகுதியில்(series)இல் தில்லி,மும்பை,கொல்கத்தா, சென்னை என்கிற மாநகரங்களின் அமைப்புகளை தந்து Graphite வேலைகளில் வரைந்திருக்கும் விதம் நமக்குள் இருக்கும் இறுக்க நிலையைக் காட்டுகிறது, இம்மாநகரங்களில் தன்னை விஸ்தரிக்கும் திறன் பெற்ற சென்னையில் கொஞ்சம் இறுக்கம் குறைந்து தான் இருக்கிறது. நிச்சயமாக இந்தப் பார்வை என்னுடையதாகத் தான் இருக்கும், இருக்கலாம் தப்பில்லை.

க்கண்காட்சியில், Graphite workகளைத் தவிர்த்து சில அச்சுகளும்(Print) இருக்கின்றன. பார்வதி நாயர் ஒரு முக்கியமான visual artist  என்றாலும் இந்தக் கண்காட்சியின் highlightஆக நான் கருதுவது இவரது graphite வேலைப்பாடுகளைத் தான். தண்டுவடம், கண்கள், எலும்பு என்று எடுத்துக் கொள்ளும் subjectகளின் வழியே, அவர் உடல் மீதான சமூக, அரசியல் பார்வைகளை நேர்கோடுகளில் Graphait கொண்டு interpret செய்கிறார். உடல் பற்றிய நுண்ணறிவின் வழியே ஒரு சமூகத்தின் பிரச்சினைகளில், சமூக அமைப்பில் உள்ள சிக்கல்களைப் பார்க்கும் இவரது படைப்புகளை பின்னமைப்பியலின் (post structuralism) கூறுகளோடு கவனிக்க முடியும், இவரை ஒரு மினிமலிஸ்டாக சிலர் கூறுவது போல என்னால் அவதானிக்க முடியவில்லை. பெரும்பாலும் இது போன்ற இசங்களில் வகுப்பது படைப்பாளி மீது தீர்மாணங்களையும், அபிப்பிராயங்களையும் புகுத்துவதாகத் தோன்றுவதால் அவர்களது தனித்தன்மைகள் பற்றிய அக்கறை குறைந்து விடுகிறது.

றிவியலுக்கும் வரலாற்றிற்கும் மிக நெருக்கமாகவும், Anti-philosophical தன்மையோடு அனுகும் படைப்புகளாக நான் அவதானிக்கும் சில படைப்புகள் நமக்கு முற்றிலும் புதிய உணர்வுகள் தருகின்றன. பெண்ணியம் சார்ந்த உளவியல் பார்வைகளாகவும் இவரது சில படைப்புகளை கவனித்தாலும், ஒரு உலகளாவிய பார்வைக்கான அவசியத்தை உணர்ந்திருப்பதால், அறிவியலோடு மிக நெருங்கி, மனிதனை செல்களாகப் பிரித்துப் பார்க்கிறார்.

வர் ஒரு கவிஞர் என்று சொன்னேன் அல்லவா? அவரது கவிதை ஒன்று ஒரு தொகுப்பாக craft செய்யப்பட்டுள்ளது :  MAPPINGS :IN A FRAGMENTED CITY

outside the electric pin points
that clothe the nightscape
shimmer off and on
whispering their secret images

மிக அற்புதமாக இரவைப் பற்றிய இவரது வரிகளில் இருக்கும் காட்சிப்படிமம் இவரது உளவியல் மற்றும் அழகியல் சார்ந்த வெளிப்பாடுகளை, aesthetic கூறுகளை கவனிக்க வைக்கிறது. ஆனால் பின்னவீனத்துவ வாதியாக இவரது ஓவியங்களில் அவற்றைக்(அழகியல்) காண முடிவதில்லை. அதே நேரம், பார்வையாளனுக்கு அந்த சுதந்திரம் இருப்பதால் அவன்  எதையும் தேடி எடுக்க முடியும்.

வ்வழகியலை ஒரு இருபது நிமிடம் செலவழித்து அவரது AN OCEAN IN EVERY KITCHEN எனும் படைப்பில்(video loops) கவனித்து கொள்ளலாம்.

ன்னை மிகவும் ஈர்த்த ”மார்கபோலொ” எனும் படைப்பு பற்றியும் சொல்லவேண்டும், மார்கபோலோவின் கடல் பயணத்தைப் பற்றியது, படைப்பின் கீழ் பகுதியில் உலக வரைபடம் இருக்கின்றது, சில nautical calculationகள் இருக்கின்றன.  கடல்வழிப்பாதை, வான்வழிப்பாதை என இன்றைய நவீன உலகின் வரையறுத்து வைத்திருக்கும் வரலாற்றில் எத்தனை சுவாரஸ்யம் இருக்கின்றன?? எத்தனை கதைகள் இருக்கின்றன?.

வீனம், பின்னவீனத்துவம், தகர்த்தெறிதல்,இருத்தலியல் என எல்லா இயங்களுக்குமே பெரும்பாலும் ஓவியர்கள் முன்னோடிகளாக இருக்கிறார்கள், பார்வதி நாயரும் தனக்கென ஒரு பாணியைக் கையாள்கிறார் அவரது படைப்புகளோடு விளக்கங்களும் தனித்தன்மையுடன் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எழுத்து சார்ந்தும், தீவர வாசிப்பிலும் இயங்கும் நண்பர்கள் கண்டிப்பாக சென்று பார்த்து வர வேண்டும் என்பது என் விருப்பம். ஓவியங்கள் மட்டுமின்றி அதன் தொழில்நுட்பங்கள், நவீன வளர்ச்சி என content மற்றும் appearance என உங்களுக்கு புதிய உணர்வுகளை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அறிவியல், வரலாறு சார்ந்த உண்மைகள் கொண்டு எழுப்பப்பட்ட இவரது கலை படைப்புகள், அழகியல் மற்றும் புனைவுகளைத் தகர்த்தெரிந்த Landscape காட்சிகளாக புத்துணர்வு அளிக்கின்றன.

 

ஜீவ.கரிகாலன்

தொடர்பு : kaalidossan@gmail.com, www.thoyyil.blogspot.com

 

பார்வதி நாயர் படைப்புகள்
The Ambiguity of Landscapes (MARCH-2014 -SOLO SHOW)
Vedha Gallery:
Thousand Lights, Nungambakkam High Road
Chennai

யாளி பேசுகிறது – 04 கே.மாதவனை நினைவு கூர்தல்

2

நினைவுகூறல் என்பது மனிதனின் மிக முக்கியமான குணாதிசயங்களில் ஒன்று. இன்றைய வரலாறு என்பது மறந்து போனவைகளின் எச்சமாகத் தான் இருக்கிறது. ஆம் நம் நினைவில் விட்டு நீங்காது என்று சொல்லிக் கொண்டிருந்த எத்தனையோ விசயங்களை முழுவதுமாக மறந்து போகும் அளவிற்கு சாத்தியமுள்ள உலகில் தான் நாம் வாழ்கிறோம். இப்போது நம் நினைவுகூறல் ஒரு மாபெரும் கலைஞனைப் பற்றி, அக்கலைஞனை நினைவு கூர்வது வெறும் மரியாதை தரும் செயலாக மட்டும் நின்று விடாமல், மீட்டெடுத்தல் அல்லது ஒப்பிட்டுப் பார்த்தல் என்ற இரண்டு விதங்களில் இன்றைய சமகலை மீதான நிலையை நிறுத்துப் பார்க்க வைக்கும். அப்படி நம் நினைவில் இருந்து அநேகமாக மறந்து போன அந்த முக்கியமான கலைஞன் தான் கே.மாதவன் .

படம் எண்:11

1960-70களில் புத்தகம், இதழ் வாசித்தவர்களுக்கு கே.மாதவன் என்று சொன்னால் கண்கள் பளிச்சென்று மாறும். அநேகமாக அவர்கள் வாசித்த அத்தனை இதழ்களிலும் முகப்பு ஓவியம் கே.மாதவனுடையதாகத் தான் இருக்கும். கே.மாதவன், மணியம், ராஜம், சில்பி, கோபுலு என்று தமிழக மக்கள் தூக்கி வைத்துக் கொண்டாடிய இதழ்களுக்கான விவரனப்பட ஓவியர்கள் (Illustrators) வரிசையில் முதன்மையானவர் கே.மாதவன். விகடன், கல்கி, சாவி, முத்தாரம்(பக்கம் எண்:11), உமா, நளாயினி, காவேரி போன்ற பல்வேறு இதழ்களில் முகப்பு ஓவியங்களாகவும், படைப்புகளுக்கான விவரனப் படங்களாகவும் வந்தன, காலண்டர்கள், பேனர்கள், சினிமா விளம்பரங்கள் என்றும் தொடர்ந்து வந்தன. நிற்க.

ஒரு பக்கம் நவீன ஓவியங்களுக்கான தொடக்கம் கே.சி.எஸ்.பணிக்கரிடமிருந்து ஒரு இயக்கமாக உருவெடுத்த காலக்கட்டம், அதே காலத்தில் வெகுஜனங்களைச் சென்றடைந்த ஒரு கலைஞரும் மிக முக்கியமானவர். ஏனெனில் ஒரு நல்ல கலை மரபினில் இது போன்ற ஒரு சமமான பயணத்தின் மூலம் தான் ஒரு சமூகம் தன்னை உயர்ந்த இடத்தில் நிறுத்திக் கொள்ளும். எப்படியிருந்தாலும் POPULAR ART என்பது ஓவியனை முன்னிறுத்தும் கலையாக இல்லாமல், தன் அழகியலை, செய்நேர்த்தியை, தொழில்நுட்பத்தை படைப்பின் உபப்பொருளாகவோ அல்லது விளம்பரமாகவோ தன்னை காட்டிக் கொண்டிருக்கிறது. இருந்தபோதும் popular artistகளை மக்கள் கொண்டாடிய காலம் தான் கே.மாதவனையும் மற்ற Illustratorகளையும் கொண்டாடி வந்த மரபாகத் தொடர்ந்தது.

விபரணப் படங்கள் (Illustrations):

படம் எண்: 12
படம் எண் : 14

கனடா நாட்டு கலைவரலாற்று அறிஞரான ஸ்டீஃபன் இங்க்லீஸ் தனது கட்டுரைகளில் மாதவனை ‘தென்னிந்தியாவின் நார்மன் ராக்வெல்’ என்று குறிப்பிடுகிறார். கே.மாதவனின் ஓவியங்களை உலக மேடையில் சரியான தளத்தில் கொண்டு போயிருந்தால், நார்மனை “அமெரிக்காவின் மாதவன்” என்றும் குறிப்பிட்டிருப்பார் என்று எழுதுகிறார் (ஆதாரம்:http://www.tasveerghar.net/) , இவரது கட்டுரை  நமக்கு கிட்டிய ஒரு முக்கிய ஆவனமாகும். ஒரு illustratorஐ ஒரு நவீனச் சமூகம் எப்படி மதிக்க வேண்டும் என்று உணர்த்தியது, நார்மென் ராக்வெல்லைப் போல ஏன் நம் கலைஞர்களை மதிக்கும் பண்பு வரவில்லை என்று தோன்றுகிறது.  “யார் வரைந்தது?” என்று கூட நாம் அறிந்திராமல் வருடம் முடிந்த பின்னும் நாட்காட்டி அட்டைக்கும்(காலண்டரில் வரும் பக்தி ஓவியங்கள்) பூஜை செய்யும் பழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. கோயில் சிற்பங்களாகட்டும், இது போன்ற காலண்டர் ஓவியங்கள், பொம்மைச் சிலைகள் ஆகட்டும் யாருக்கும் அதன் படைப்பாளியைத் தேடி அறிய வேண்டிய நிர்பந்தம் இந்த மண்ணில் இல்லை. இந்த சூழ்நிலையிலும் மாதவன் வெகுஜனங்களைக் கவர்ந்தவராகவே இருந்தார், அது மற்ற ஓவியர்களையும் கொண்டாடுவதற்கு வெகுஜனத்தை பழக்கியிருந்தது. (படம் எண்:11,12,13).

படம் எண் : 13

 

வாழ்த்து அட்டைகள்:

கே.மாதவன் யாரென்று தெரியாமலேயே அவரது ஓவியங்களைக் கொண்டாடியிருக்கிறோம். காலண்டர் ஓவியங்களாக, சினிமா போஸ்டர்களாக, பொங்கல் வாழ்த்து அட்டை வடிவிலாக என்று, 70களுக்குப் பின்னும் 90களின் ஆரம்பம் வரை கே.மாதவனின் வாழ்த்துஅட்டை ஓவியங்கள் நமக்கு நினைவில் இருக்கலாம். ஒரு கிராமத்தின் குடும்பம் கொண்டாடும் பொங்கல் பண்டிகையை மையமாக வைத்து இவர் வரைந்த ஓவியங்கள் உள்ள வாழ்த்து அட்டைகள்(படம் எண்:01) மறக்க இயலாதது. இன்னும் சில ஆண்டுகளில், தமிழகத்தில் சூரியனுக்குப் படைக்கும் பொங்கல் சடங்கு மட்டுமல்ல, விளைநிலங்களும் அருகித் தான் போய் விடும், அது போன்ற சூழலில் இந்த ஓவியங்கள் நாம் பொங்கலை இப்படியெல்லாம் கொண்டாடியிருக்கின்றோமா என்று வியக்க வைக்கும்.

படம் எண் :16

படம் எண்:15

அவரது நீர்வண்ணங்களில் வரையப்பட்ட கதாப்பாத்திரங்கள் மிகவும் எளிமையான, அதே சமயம் குறைவில்லா அழகோடு ஜொலித்தன, வரலாற்றுக் கதைகளிலும், சமூகக் கதைகளிலும் உச்சபட்ச அழகியலை சாத்தியப்படுத்தினார் என்று சொல்வது மிகையில்லை. கிராமங்களை இத்தனை அழகாக வேறு எங்கும் பார்க்க இயலாது என்று சொல்லும் அளவிற்கு வாழ்த்து அட்டைகளில் இவரது படைப்புகள் பெரிதும் கொண்டாடப்பட்டன. அவரது ஓவியங்கள் இன்னமும் பலரது வீட்டில் பிரதியெடுக்கப்பட்டு பூஜை அறைகளில் ஒளிர்கின்றது, கடவுளின் தோற்றமாக (படம் எண்:15) பல தலைமுறைகளுக்கு இவர் வரைந்த வடிவங்கள் தான் இருக்கும் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. இது போக அரசியல் படங்கள், நாடகத்திற்கான திரைச்சீலை ஓவியங்கள், திரைப்பட போஸ்டர்கள் மற்றும் விளம்பர பேனர்கள் (படம் எண்: 16) என தன் வாழ்நாள் முழுக்க இயங்கிக் கொண்டிருந்தார்.

கே.மாதவன்

இந்த நேரத்தில் அவரை நினைவு கொள்வதற்கான காரணம் இருக்கிறது, வெறும் பொங்கல் வாழ்த்து சொல்வதற்கான கட்டுரையல்ல இது. தமிழ்ச் சுழலில் இயங்கி வந்த இதழ்களில் விபரணப் படமாக வரையப்பட்டவர்களைக் கொண்டாடிய காலத்தை தான் நாம் நினைவு கொள்கிறோம். சிற்றிதழ்கள் பெருகி, நவீன ஓவியங்களையும் நாம் விபரணப் படமாகப் பார்க்கும் மரபு உருவாகி பல வருடங்களாகி விட்டது. ஆனால் அன்று இருந்த மனநிலையில் கூட இன்றைய வாசகர்கள் இல்லை, வெகு தூரம் விலகி வந்து விட்டோம். இணையத்தின் அண்மையில் நாம் எழுதி வைக்கும் ஐந்து வரி அபத்த கவிகளுக்கெல்லாம் பிகாஸோ, வான் கோவின் ஓவியங்களைப் படுத்துகிறோம். சமூகவலைதளங்களில் நமது நிலைச் செய்திகளை வேறொருவர் தன் பெயரில் பதிந்தால் கூட PLAGIARISM என்று கூச்சல் போடும் சூழலில், எத்தனையோ இதழ்கள், புத்தகங்கள் வண்ணமயமான அச்சில் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து அட்டைகள் போடுகின்றனர். ஆனால் ஓவியக் கலைக்கென தங்களை அற்பணித்துக் கொண்டவர்கள் தங்களுக்கான இடம் வேண்டும் என்று கெஞ்சப் போவதில்லை, ஆனால் உண்மையான கலைகள் நம் நிலத்தை விட்டு அகன்று விடும். நம் சமூகம் வெறுமனே டிஜிட்டல் போஸ்டர் ஒட்டும் சமூகமாகத் தான் எஞ்சியிருக்கும்.

 

சரம வேண்டல்

0

 .

இப்பிறவியின்
எம்இறுதிக்கவிதை இது

பிணத்தின் வாடையை
நுகர்ந்திருக்கிறீர்களா?
மனம் செத்து
உடலை மட்டும் தூக்கிக்கொண்டு திரிவது
பிணத்தின் வாடையை மடியில் கட்டிக்கொண்டு
திரிவது போல
என் தலைக்குள்ளே
கேட்டுக்கொண்டேயிருக்கின்றன
ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள்
இலட்சோப இலட்சம் குரல்களில்
மரண ஓலம் மட்டுமே
நிரம்பியிருக்கின்றது…

கடல் நடுவே இருக்கிற
த்வஜஸ்தம்பப் பாறையின் மீது
உலவிக்கொண்டிருக்கிறேன்
தன்னந்தனியாய்
தவறவிட்ட உன்னதங்களை
ஒரு உடைந்த குழலைக் கொண்டு
வாசித்துக் கொண்டிருக்கிறேன்…

நீங்கள் மனிதர்கள்!

அதைக் களியாட்டத்திற்கு ஒப்பிட்டு
பொருந்தாமலேயே ஆடுகிறீர்கள்
வளைகிறேன்
நெளிகிறேன்
சோகத்தின் விளிம்வில் நின்று
என்னை நானே கொன்றுவிடத் துணிகிறேன்
நானும் நடமாடுவதாய்
நீங்கள் நினைக்கிறீர்கள்.

நிகழ்வுகளின் மாயத்தீயில்
பொசுங்கிப் போன யாழ் மட்டுமே
மீதம் இருக்கிறது
இந்த தேவதச்சனிடம்..

குழலை வீசிவிட்டு யாழை எடுக்கிறேன்
நொறுங்கி விடுகிற யாழைக் கொண்டு
என் துயரம் சொல்கிற எச்சக்கவிகளை
ககனவெளியில் உலவ விடுகிறேன்..

இன்றோ நாளையோ
நான் மரித்துப் போகலாம்
ஆற்றாமையில்
என் மனமும் என் கூடவே
மரிப்பதாயும் ஆகலாம்
என் உயிர்ச்சூட்டை உணர மறுக்கும்
என் ஆப்த மித்திரர்களே!
என் எழுத்துக்களை மட்டும் எரித்து விடாதேயும்
நான் இருந்ததிற்கும்
முன்னர் இறந்துபட்டதிற்கும்
இன்று
மற்றுமொருமுறை
மரித்துப் போனதிற்கும்
அவை மட்டுமே சாட்சிக்கூறுகள்.

– மணிவண்ணன் வெங்கடசுப்பு

 

mexican_free_tailed_bats-flying

சொல்

0

   ரமேஷ் ரக்சன் கதைகள் – 08

பையன பாத்தா கெட்டியா நிக்றவன் மாதிரிதான் இருக்கு… என்ன புடிச்சி போடுவுமா?”

“வேல செய்றவனா தான் தெரிது” சேத்து போடுங்க…

ஓட்டல் முதலாளிக்கு தங்குவேலை, சாப்பாடு கூடப் பிரச்சினையாய் தெரியவில்லை. அவன் முன்னமே சொன்ன காரணங்களும் நிராகரிக்க முடியாத அளவிற்கு இருந்தது. இல்லையெனில் கைச் செலவுக்கு என அப்போ அப்போ பணத்தைக் கொடுத்து “பையனை பிடிச்சி போடலாம்” என்ற எண்ணம் அவருக்கு மேலோங்கி தான் இருந்தது.

எந்த சூழ்நிலையில் பிழைப்பு தேடி வந்தான் என்பதும், அவன் அம்மாவை முன்னிறுத்தி வேலை கேட்பதாலும், அவனுக்கு வேலை போட்டுக் கொடுக்க வேண்டுமென்று மாஸ்டரை அழைத்தார் ஓட்டல் முதலாளி.

மணியைக் ‘கல்’லில் நிற்க வைக்கலாமென்றால், அவனுக்குக் கேஸ் அடுப்புகூட பற்ற வைக்கத் தெரியாது. சரி பாத்திரங்களைக் கழுவ விடலாமென்றால், ஏற்கனவே ஆள் இருப்பதால் அதுவும் முடியாது. அவனது முகபாவனைப் பாத்திரம் கழுவ அனுப்பும் அளவிற்கு இல்லை. இருந்தும் வேலை வேண்டுமென்று, காலையிலிருந்து கவனித்து மாலை வந்து கேட்பவனை எப்படித் துரத்திவிட முடியும்…?

ஓட்டலோடு மேன்சன் சேர்ந்தே இருப்பதால், அங்கேயே வேலை செய்யும் பசங்களுக்கென மொத்தமாய் ஒரு ரூம் ஒதுக்கப் பட்டிருந்தது. அங்கேயே தங்குவதற்கு ஏற்பாடு. படிப்பை பாதியில் விட்டுவிட்டு வந்தவன் என்பதால் விதிமுறைகள் எல்லாம் வரிசையாக அடுக்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டுவதும் “ம்” கொட்டுவதையும் தான் பதிலாய்க் கொடுத்துக் கொண்டிருந்தான் மணி..

“கடைக்கு மேல நம்ம பயலுவ கூடத் தங்கிக்கனும், ஊருகார பயலா வேற இருக்க…”

“காத்தோட்டமா தூங்கனும்னா மேன்சன் பயலுவ மேல மாடில தூங்குவானுவ
அங்கன படுத்துக்க”

“போட்டுக்கத் துணிமணிலாம் இருக்காடே?”

“கொண்டு வந்துருக்கேன் அண்ணாச்சி”

“சரி, ஒரு பழைய சட்ட டவுசர மாட்டிக்க.”

“ம்…”

“ஊரு மாதிரி எல (இலை) எல்லாம் இல்ல. எல்லாம் கவர் தான்”

அப்டியே தூக்கி போட்டுடலாம். மூஞ்ச சுழிக்காம வேலய பாக்கனும் புரிதாடே?”

“சரிணே…”

சொல்ல வேண்டியதில் முச்சமிருப்பதாய் தோன்றியதும், மீண்டும் அழைத்து “தண்ணி சிகரெட் பழக்கமிருக்கா?” என்று சம்பிரதாயக் கேள்வியை முன் வைத்தார். மணி தனக்கு அந்தப் பழக்கம் ஏதுமில்லை என்றான். ஒருபடி மேலே போய் “பாக்கு கூடப் போட மாட்டேன்” என்று சொல்லி முடித்தான்.

“வரும்போது எல்லாம் யோக்கியனா தான் வரான்”

தனக்குள் பேசியவர் மீண்டும் தொடர்ந்தார். மாடியில் குடிப்பவர்கள் பாக்கு போடுபவர்களென எல்லோரும் இருக்கிறார்கள் பார்த்து பழகிக்கொள் என்று சின்னப் பையனுக்கென்ற கரிசனத்தோடு அனுப்பி வைத்தார். கடையிலிருந்து ஒருவனின் மூலம் தங்கும் அறைக்கு வந்து சேர்ந்தான்.

ரெயில்வே ஸ்டேசனை விட்டு வெளியே வரும்வழியில் ஒரு ரூபாய் காயின் மூலம் ஊருக்கு வந்ததைச் சொல்லியதோடு சரி, இந்த மூன்று நாட்களில் இன்னும் பேசவேயில்லை. அப்படியே அம்மாவிற்கு பேசவேண்டுமென்றாலும் பக்கத்து வீட்டு அக்காவுக்கு போன் செய்து அம்மாவிடம் கொடுக்கச் சொல்லி தான் பேச வேண்டும்.

இதற்கு முன் முதன்முறையாய் அப்படித்தான் பேசியிருந்தான். தெருவிலேயே எதிர் எதிர் வீடு என்பதால் சன்னல் வழியாகவே போன் கொடுத்து விடுவாள் அந்த அக்கா. ஆகையால் போன் பேசுவதிலும் எந்தப் பிரச்சனையுமில்லை.

ஆனால் போன் வேண்டுமே?

மணி தங்கியிருக்கும் அந்த நீண்டத் தெருவில் ஒரு ரூபாய் காயின் பூத்துமில்லை, எஸ்.டி.டி கடையுமில்லை. ஒரு வழியாய் வேலைக்கு சேர்ந்த மறுநாளே, மாஸ்டர் கல்லில் ஏறும் முன் விசயத்தைச் சொல்லியதும் பேசச்சொல்லி தனது போனை கொடுத்தார். வேலைக்குச் சேர்ந்துவிட்டதையும் இடம் தோதுவாக இருப்பதாகவும் போன் பேசி துண்டித்தான்.

முதலாளிக்கு ஒரு நல்ல பழக்கமிருந்தது. சமையல் வேலை முடிந்ததுமே, பசி இருந்தால் சாப்பிட்டபின் வேலை பார்த்தால் போதும் என சொல்லிவிடுவார். ஏனெனில் பசியோடு யாரும் வேலை செய்யக்கூடாது என்பது அவர் கொள்கை. கடையடைக்கும் வேலையில் பசித்தால் சாப்பிடலாம் என்றதில் மணிக்கு கூடுதல் மகிழ்ச்சி.

நாட்கள் மிக வேகமாய் நகரத்துவங்கியிருந்தன. மேன்சனிலிருந்து சாப்பிட வருபவர்களை நன்கு அறிந்து வைத்திருந்தான். வெள்ளி என்றால் அவனுக்குக் கொண்டாட்டம் தான். அன்று ஓட்டலுக்கு விடுமுறை என்பதோடு மட்டுமல்லாது, வியாழன் இரவில் மொட்டை மாடியில் யார் கதை பேசிக்கொண்டிருந்தாலும் கூட இருந்து கதை கேட்பது வாடிக்கையாய் வைத்திருந்தான் மணி.

ஒருநாள்விட்டு ஒருநாள் தான் அம்மாவிடம் பேசுவதாய் முன்னமே அம்மாவிடம் தெரிவித்திருந்தான். ஆனாலும் அடிக்கடி மொபைல் கேட்பதுபோல் இருப்பதால் மொபைல் வாங்கலாமா என்ற யோசனையைத் தன்னுடன் வேலை செய்பவர்களிடம் தெரிவித்தான்.

“1000 ரூவாய்க்கே சைனா செட் இருக்கு. கேமரா, பாட்டு எல்லாம் ஏத்தி கேக்கலாம்” என்று சொல்லவும் தனக்கென முதல் ஆசை முளைவிட்டிருந்தது. பணம் அனுப்புவதை நிறுத்தவும் முடியாது அதேபோல் குறைக்கவும் முடியாது என்று மணிக்கு நன்று தெரியும்.

எப்போதும் போல் இல்லாமல் வியாழன் இரவு கசந்தது. அவர்களோடு சகஜமாய் சிரித்துப் பேச முடியவில்லை. எண்ணமெல்லாம் மொபைல் போனிலேயே இருந்தது. எப்போது தூங்கினான் என்று கூடத்தெரியாது. வழக்கத்திற்கு மாறாக வெகு சீக்கிரமாகவே விடிந்திருந்தது வெள்ளி.

கொஞ்சம் கூடுதலாய் உரிமையெடுத்துப் பழகியிருந்த 202 ஆம் நம்பெர் ரூம் அண்ணனை சந்திக்கச்சென்றான் மணி.

“என்னடா காலைலயே?”

“நீங்க நேத்து ராத்திரி இந்தத் துணி தோச்சி போட ஆள் கெடச்சா நல்லாருக்கும். ஒரு செட்டுக்கு 10 ருவா தரேனு சொல்லிட்டு இருந்திங்கள்ல?”

ஆமா அதுக்கென்னடா?

தான் மொபைல் வாங்க வேண்டிய சூழ்நிலையையும், ஒரு நாள்விட்டு ஒரு நாள் அம்மாவிடம் எப்படிப் பேசுகிறான் என்பதையும் சொல்லி முடித்தான். சின்னப் பையனென்ற தயக்கமிருந்தாலும் மணி வென்றிருந்தான் ஒரு வேண்டுகோளோடு.

“சட்ட பேண்ட நான் தோச்சிடுறேன். ஜட்டி பனியன மட்டும் நீங்க தோச்சிடுங்க”

சிரித்துக்கொண்டே சோப்பு வாங்க பணமும் துணியை ஊற வைக்க சர்ப் பொடிக்கான காசு, துவைப்பதற்கான காசும் முன்னமே கொடுத்தார். கூடவே அறை நண்பர்களும் சேர்ந்துகொண்டு துணி துவைக்கக் கேட்கவும் மணிக்கு 150 ரூபாய் வருமானம் உறுதியானது.

கடைக்குச் செல்லும் வழியிலேயே தான் வாங்கும் மொபைல் எப்படி இருக்க வேண்டும், என்னென்ன பாட்டெல்லாம் பதிய வேண்டும் 1000 ரூபாய் சேர எவ்வளவு துணி துவைக்க வேண்டும் என்று யோசனையோடு தெருவை மெதுவாய் அளந்து கொண்டிருந்தான். ஒரு மாதத்திற்குள் சேமித்துவிடலாமென்று ஒரு மணக்கணக்கினை போட்டுவிட்டு அறை வந்தான் மணி.

ஒரு மாதத்திற்குள் என்ற நம்பிக்கையெல்லாம், இவர்கள் போல இன்னும் சிலரை சேர்த்துக்கொண்டால் போதும். சாயங்கலாம் ரூமிற்கு வந்ததும் மேலும் சிலரை கேட்டு தனது மொபைல் வாங்கும் கனவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு அன்றைய பொழுதும் வெற்றிகரமாக முடிந்திருந்தது.

முதல் வாரமாய் வெள்ளி அன்று மட்டும் துணி துவைத்துக்கொடுத்து வந்த மணி மறு வாரத்திலிருந்து வியாழன் இரவு வெள்ளி இரவு என நான்காய் பிரித்து, ஒரு பொழுதிற்கு 10 செட் வீதம் 400 ரூபாய் சம்பாதித்திருந்தான் மணி. கனவுகள் தன் தேவை வீட்டுத் தேவையென எதையெல்லாம் வாங்க வேண்டுமென்றே துணி துவைக்க உக்காரும் போதெல்லாம் நுரையெல்லாம் கனவுகளின் பிம்பமாகிக்கொண்டிருந்தது.

“அப்றம் கைல பணம் சேர ஆரம்பிச்சாச்சி… அடுத்து என்ன? தண்ணி அடிச்சி பழக வேண்டிதான?”

முதன்முறையாக அந்த மொட்டை மாடியிலிருந்து மணியை நோக்கி இந்தக்கேள்வி எழுந்தது. பல்வேறு காரணங்கள் சொல்லி மறுத்தும் விடாதுபிடியாக வார்த்தை வலுக்கத்துவங்கியிருந்தது அந்த இரவு. எத்தனை சொல்லியும் நிற்காமல் பேச்சு வளர்ந்துகொண்டிருந்தது.

“ஓட்டல்ல எச்சித்தட்டு கழுவுற… எங்க பனியன் ஜட்டி தொவைக்க மாட்டியாடா”

“வேண்டாம்ணே அப்டிலாம் சொல்லாதிங்க”

“என்னடா பெரிய மயிரு கோவம்வேற வருமா உனக்கு”

“அசிங்கமா பேசாதிங்கணே”

“அடிங்க… ஓத்தா மொறைக்ற நீ”

“தேவ்டியாவுள்ள… எங்க அம்மய பேசினா கேட்டுட்டே இருக்கனுமா…”

சில்லுகளாகியிருந்தன ஒரு பீர் பாட்டில்…

1

–  ரமேஷ் ரக்சன்

 (rameshrackson@yahoo.com)

 

 

சு.அகரமுதல்வன் கவிதைகள் – 3

0

1

.

திட்டமிட்ட சொற்களால் கீறிச்சுவைக்கும்
அநாதரவற்ற கவிதையின் குருதிகள்
உன் கால் தடங்களில் வழிந்தோடக்கூடும்
அநாதரவற்ற ஆன்மாக்கள் அன்பை பகிர்ந்து கொள்ளும்
துளிக் காலம் யுகக்கணக்கானது.
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை
என் விரல்கள் தீண்டிய முதல் ஸ்பரிசம்
உன் நெற்றிப்பிறை
அந்தரங்கத்தின் ஆன்மா முதற் காதலை
உன்னிடம் பாட நினைக்க
செவிப்புலனற்ற
இருட்டுப் பூனையொன்றாய் என்னை உருட்டிச் செல்லுகிறாய்.
காதலுக்கான காமத்தின் அதிகாலையும்
காமத்துக்கான காதலின் அதிகாலையும்
கிழக்கில் விடிய
அநாதரவற்ற அன்பின் பாதைகளில்
விசா் பிடித்த நாயாய் புறக்கணிப்பை கக்கிப் போகிறாய்
எப்போது உணரக்கூடும் காமத்தை தாண்டிய
குப்பி விளக்கில்
ஒளிருமெனது காதல் பெரும் சோதியை

.

சாளரத்தின் திரைச்சீலைகளை
மௌனங்களின் தென்றல் தீண்டிச்செல்ல
உடை பட்டு ஓடும் காதலின் இசையை
அணைகட்டி வைக்கிறது உன் காற்சலங்கை
விண் மீன்கள் குத்திய வானம்
மேகத்தின் மேலே நகர
மூக்குத்தி அணிந்த படி அலைகிறது
உன் நிலா முகம்
ஜீவித பெரு வெளியில் செட்டைகள் கழற்றும் பாம்பென
ஊர்ந்து செல்லும் உன் விழிகளின் நளினங்கள்
இதயத்தின் சிசுவை
பல முறை தீண்டிச்செல்கிறது
காதலின் ரேகைகள் உதடுகளில் புலம் பெயர
முத்த நிவாரணங்கள் கேட்கிறது யாருமற்ற
அகதியின் கவிதை.
காதலின் இசை மீட்டுமென் தனிமைகளின் மர்மம்
பச்சிளம் குழந்தையென
உன் மவுனங்களில் கதறுகிறது
ஏணைகளற்று
சிருஷ்டியின் பூரண அழகால்
புறக்கணித்த ஆயிரம் கவிதைகளின் புதுச் சொற்கள்
வெந்தணளில் துடிதுடித்து மாய்கிறது .

.

துயர இடுக்குகளிடையே ஊறிக்கசியும்
நிராதரவற்ற மழலையின் குறியீடாய்
கதிரைக்குள் புதைந்து மாலையை பார்க்கிறாள் சானு.
விடுதலையின் கிழக்குகளில்
உதயமாகியிருந்த தந்தையின் முகத்தினை
மேற்குகளுக்கு கையசைத்து தந்து விடச் சொல்லும்
அவள் கண்களில் பனிக்கும்
கண்ணீரின் வாதை
துயர வெளியின் ஒழுங்கைகளில்
பூவரசம் மரமென வேரூன்றி நிற்கிறது.
துவக்குகள் வாழ்வெழுதிய தலைவிதிகளோடு
பரிதவிப்பின் சிரிப்பு வரிசையில்
அனுதாபத்தின் லாபங்களை வேர் பிடுங்கி எறிய
முட்கம்பிகள் வரியப்படுகின்றது
இவள் விடியல்களில்
நிகழ்கால வாசல் எங்கும்
தந்தையற்றவள் எனச் சொல்லி
அநாதை எனும் தலைப்போடு
உலவித்திரியும் அவள் மனத்தில்
கோழைகளென தலைப்பு வைத்திருக்கக்கூடுமெனக்கு .
மண்ணுக்காய் மடிந்த புனிதனின் பிள்ளை.

.

துயிலுரியும் கனவுகளின் மேனிகளில்
தாபங்கள் செதில்களென படரும்
ராத்திரி மேல்
நிர்வாணமாக வீழ்கிறது
நிராயுதபாணியான சொற்கள்
தலையணைகளை ஆக்கிரமிக்கும்
முத்த இராணுவங்களின்
கரங்களில் பேரன்பு சுடர
சரணடைதல் தவிர்க்கமுடியாததாய்
கைகளில் விலங்குகள் மாட்டி
பிரபஞ்சம் தாண்டி காதலின் சோதியெரியும்
சிறைகளில்
என்னைச் சேர்க்கிறது
உன் கூந்தலின் ஒற்றை இறகு
இதயக் கங்கைகளில் உன் கால் சலங்கை ஒலிக்க
ஈரத்தோடு வேர்விடுமென்
காதலின் ஓசைகளை
வானத்தின் விண்மீன்கள்
அணிந்து கொண்டு நீந்துகின்றது
விரல்கள் தொட உருகும் வினோத உயிராகி
வெட்கங்களை கொடையளித்து
உதடுகளால் என்னை உலரச் செய்யும்
உன் புன்னகையை போர்த்து
கானலை தேன் என பருகுமெனக்கு.

 

– சு. அகரமுதல்வன்

யுவபாரதி கவிதைகள் -01

0

 

.

புத்தகச் சந்தை
 

சொற்களின் எல்லைக்குள்
தன்னிலை தேடுவோர்
ஒப்பனை பூண்டனர்

துரித உணவோடும் பழரசத்தோடும்
விளம்பரங்கள் வாய்மாற
புகைப்பட வெளிச்சத்தில்
நூல்களுக்கு வணிகப் பித்தேறியது

அழுகை புன்னகையோடு
வெறுமை பகட்டோடு
விடுதலை அதிகாரத்தோடு
விலையாகிறது.

 .

தோரணவாயில்
 

ரைச்சலும் இயல்பான நடிப்பும்
மிக்கதுன் உலகம்
மண்புரண்டு முனகும்
என் சொல்லுக்குக் குரல்வளமில்லை
மழுங்கிய அதன் விரல்களால்
அபிநயம் காட்டவும் முடியாது

அரங்கிற்கு ஏகும் மொழிரதம்
ஏதும் நசுக்கிவிரையும் முன்
மரத்தோரம் எத்திவிட்டுச் செல்
என் சொல்லை
காகம் அதன் கண் கொத்தட்டும்
எறும்பு அதன் உடல் ஊரட்டும்.

.

சாதல் இனிது
 

யிற்றை விடவும் கழுத்தை நெரிக்கிறது
கத்தியை விடவும் ஆழத்தில் அறுக்கிறது
நஞ்சை விடவும் மெல்ல அடைக்கிறது
கடலை விடவும் கணத்தில் இழுக்கிறது
இரயிலை விடவும் எங்கோ எறிகிறது
வாழ்க்கை
.
ஆகவே நான் சாகவில்லை.

 
–  யுவபாரதி மணிகண்டன்
 
 
1
 
 

பாலம்மை

0


ரமேஷ் ரக்‌ஷன் கதைகள் – 07

 “தீப்ட்டி இருக்கா?”

“அந்த ஒட மூட்டு கவுலில தான் நேத்து சொருவி வச்சேன்”

“எதுக்கும் கடலமுட்டாய் வாங்கும்போது ரெண்டு குச்ச எடுத்து போடு”

காலை ஒன்பது மணி அடித்ததுமே பள்ளிக்கூடத்தின் பெரிய கேட் பூட்டப்பட்டுவிடும் உள்ளே வரவேண்டுமெனில் விளையாட்டு ஆசிரியர் மனது வைத்தால் உண்டு. பனைமட்டை அடியோடு, அரை மணிநேரம் சேர்த்து 9:30 வரை கருணை காட்டுவார். அதன் பின் உள்ளே வருவதும் வெளியே செல்வதும் கஷ்டம். அதற்கடுத்து மதியசாப்பாடு, அதோடு பள்ளிவிடும் பொழுதுதான் அந்தக்கதவு திறக்கப்படும்.

வடக்கும் தெற்குமாக பைபிள் வசனங்கள் நிறைந்த அந்த நீளச்சுவற்றில் தெற்கிலிருந்து வருபவர்களுக்கு ஒரு சைக்கிள் செல்லும் அளவில் சின்ன கதவு இருக்கும். அது தள்ளுக்கதவு. இரு பக்கமும் திறக்கலாம். திறந்து வெளியேறியதும் மீண்டும் அதே நிலைக்கு வந்துவிடும். மாலை விளையாட்டு வகுப்பில் பந்து வெளியே சென்றால் எடுக்கச்செல்ல அனுமதியுண்டு.

ஒரே நேரத்தில் இரண்டு வகுப்புகளுக்கு மேல் விளையாட்டு வகுப்பு, வாரம் இருமுறை அமைந்துவிடும். நீட்டமாக கிடக்கும் மூன்று வாலிபால் நெட்டிலும் விளையாடிக்கொண்டிருக்கும் நேரத்தில், கதவுவரை வராமல் கண்தப்பி சுவர் ஏறிக்குதித்தால் பந்தை எடுத்துவிடலாம்.

சாமும், சுந்தரும் விரும்புவது இதைத்தான்.

பந்து மதிலுக்கு அந்தப்பக்கம் எல்லாம் விழ வேண்டுமென்று அவசியமில்லை. எகிறிக்குதிக்கும் அளவிற்கு ஆசிரியர் யாரும் பார்க்காமல் தோதுவாய் இருந்தால் போதுமானது அவர்களுக்கு. இது வியாழனும் வெள்ளியும் கிடைத்துவிடும்.

“எவனோ போட்டு குடுத்துட்டானு நெனைக்கேன். கோயில் பொந்துல சீட்டுகெட்டு இருக்கு எடுத்துட்டு பாலத்துக்கு அடில வந்துடுங்க… பாயிண்ட் போட்ட பேப்பரு பத்ரம்டே”

சாமும் சுந்தரும் பாலத்தை நெருங்கியதும் கேட்ட குரல் அது!

இதுபோக குடிப்பவர்களும் அங்கு ஐக்கியமாவதும் உண்டு. இப்படி நிகழ்வது இருவருக்கும் புதிதில்லை.  அடிக்கடி சீட்டு விளையாடுபவர்களை போலிஸ் தேடும் போதெல்லாம் இந்த இடமாற்றம் நிகழும். நேற்றும்(வியாழக்கிழமை) பாலத்தை சீட்டு விளையாடுபவர்கள் ஆக்கிரமித்திருந்தனர் இப்படி நடக்கும்போதெல்லாம் பீடி குடிக்காமல் சேர்த்து வைத்து மறுநாளோ, மறு வாரமோ மொத்தமாய் புகைப்பது இருவரின் பழக்கம்.

“சரி நேத்து எங்க காய வச்ச?”

“நீ வேற… கைல எடுக்கவும் அந்த அக்கா வந்துட்டாவ”

“பொறவு?”

“பொறவா? அங்க கொஞ்சம் மடக்ன பீடி இருந்துச்சி அதான் அடுக்கிட்டு இருக்கேனு சொன்னேன்”

“நம்புச்சாக்கும்?”

“தாயம் வெளாட எங்க புளியமர “முத்து” பெருசா இருக்கும்லா ஒரசி எடுத்துட்டு வானு சொல்லுச்சி”… “அதான் வந்து உக்காந்துருக்கேனு நெனச்சிருக்கும்.”

சுந்தரின் அம்மா செங்கல்சூளையில் சம்பளம் வரவில்லையென வாங்கச்செல்லும் வேளையில் தான் பீடியை காய வைக்க வாய்ப்பு கிடைத்தது சுந்தருக்கு. வீட்டிலிருந்து கிளம்பி வழியில் யாரிடமும் பேசாமல் சென்று வந்தாலே 15 நிமிடங்கள் குறையாமல் ஆகுமென்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.

“ஒலைல தண்ணி கொறையும்போது கொஞ்சம் ஊத்திட்டு அங்கனயே இரு. வெறவ எதும் வச்சிடாதனு போனாவ”

“ஒங்கையா உன்ன ஒருநாள் சட்டையோட தூக்க போறாரு”

 சுவர் ஏறிக்குதித்து கொஞ்ச தூரம் முன்னோக்கி நடந்தால் வலது பக்கம் ஒரு திருப்பம் வரும். அந்த திருப்பத்தை கடந்துவிட்டால் போதும். இனி பள்ளிக்கூடம் சார்பாக யார் கண்ணிலும் படப்போவதில்லை. இன்னும் சாமும் சுந்தரும் கடக்க வேண்டியது மூன்று இடங்கள் இருக்கிறது அது கடந்துவிட்டால் பெரிய பாலம் தான்.

.ரைஸ் மில்.

.தெப்பக்குளம் பிள்ளையார் கோவில்

.ஆட்டோ ஸ்டாண்டு

ரைஸ் மில்லிற்கு முன் ஒரு பெரிய பூவரசன் மரம் நிற்கும் அந்த நிழலில் தான், நெல் குத்தவந்த பெரியவர்கள் பீடியோ சுருட்டோ புகைத்துக் கொண்டிருப்பார்கள். அதில் யாரேனும் ஊர்க் காரர்கள் என்றால் அவர்கள் கண்ணிலிருந்து தப்ப வேண்டும். அடுத்ததாய், பீடி கடைக்கு சென்று திரும்பும் அவர்களின் ஊர் பெண்கள் பிள்ளையாரை தரிசித்துவிட்டுச் செல்வது வழக்கம். அதுவும் வெள்ளிக்கிழமையென்பதால் பதற்றத்துடனே பிள்ளையாரையும் கடந்திருந்தார்கள்.

 வாத்தியாரின் அடிக்கு பயந்து ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது படிக்காமல் சென்றுவிட்ட சாம் தெரு நண்பன் ஒருவன், இந்த இரண்டு வருடத்தில் ஆட்டோ ஓட்டுநராகி இருந்தான். ஊர்க் காரர்களின் பிழைப்பும் ஒருசிலருக்கு ஆட்டோ ஓட்டுவதில் தான் என்பதால் இந்த பயம்.

“கேக்காமவுட்டுட்டேன். நம்ம என்ன பீடி குடிக்கயா போறோம்? எதுக்கு குச்சி?”

 “நேத்தே அந்த டீக்கடைல இருக்றவனுவ ஒருமாதிரி பாத்தானுவ. அவனுவ இல்லனாலும் இந்த டீக்கடக்காரன் பாத்துடுவான். அதுக்கு தான்.”

 “அவன் பாத்தா நமெக்கென்ன”

“கேனக்கூ_யான் மாதிரி பேசாத. புடிச்சி வச்சி கேட்டாம்னா பீடிகுடிக்கதான் போனோம்னு சொன்னா இதோட போகும். அது மேட்டர் பெருசு!”

மழை பெய்யும் காலங்களில் மட்டுமே தண்ணீர் வரக்கூடிய ஆற்றுப்பாலம். எவ்வளவு தான் மழை பெய்தாலும் ஒருவாரம் கூட அதில் நீர் வரத்து தாக்கு பிடிக்காது. பாலத்தினையொட்டி உடை மரங்களும் குப்பைகளும் காட்டுச்செடிகளும் சூழ்ந்திருக்கும் . பாலத்தில் ஆட்டோ வரை செல்லலாம். அதற்கு மேல் பெரிய வாகனங்கள் செல்ல வேண்டுமெனில் ஊரை சுற்றித்தான் வர வேண்டும்.

Black magic art

“பயலுவ என்னப்பா நேத்தும் வந்தானுவ… இன்னைக்கும் போறானுவ! கூப்ட்டு பேச்சு குடுத்து பாருங்க.”

“பாலம்ம சோலி பாக்ற நேரத்ல இங்கன என்ன வேல? எதும் ஏடாகூடமா ஆயிடாம”.

“நீரு டீய போடும்யா எல்லாம் எங்க போவானுவ பீடி சிகெரட்டு குடிக்கி தான்! கைய பாரும் பீடி இருக்கு”

வெயில் உச்சி ஏறியதிலிருந்து அடையும்வவை பாலம்மைக்கு அது தான் வீடு. பாலத்தின் அடியிலிருப்பதால் அந்த பெயர் என்று எல்லோரும் நினைத்ததுண்டு. இரவானால் குடித்துவிட்டு யாரேனும் தகராறு செய்யக்கூடுமென இரவில் அங்கு இருக்க மாட்டாள். மூன்று வேளை சாப்பாடும் ஹோட்டலில் சாப்பிடுவாள்.

தன் உடலைப்பற்றியோ, முக அழகு சிகை அலங்காரம் எதைப்பற்றியும் கவலை கொண்டவள் இல்லை. பூசிய உடல்வாகு கொண்டவள். தன்னிடமிருக்கும் மூன்று சேலைகளை மட்டும் தெப்பக்குளத்தில் தண்ணீர் இருக்கும் காலங்களில் துவைப்பாள். மற்றபடி  ஆற்றையொட்டி இருக்கும் “U” வை தலைகீழ் போட்டது போலிருக்கும், அந்த குழாயில் தண்ணீர் வரும். அங்கு தான் குளிப்பாள். அதும் இரவு நேரத்தில் தான்.

 “நேத்து அந்த கெழவன்…”

“அவ செவத்த புடிச்சிட்டு எப்டி நின்னா பாத்தியா?”

“சரி நீ மெதுவா ஏறங்கு.”

“என்னமோ பீடிகுடிக்க போறானுவனு சொன்ன? பாலம்ம விரட்டி விட்ருக்கா! கம்போட நிக்கா பாரு அங்க…”

“இவனுவலுக்கெல்லாம் ஸ்கூல்ல போய் சொன்னா தான் திருந்துவானுவ”

“ஒமக்கு யாரு மொவன்னு எதும் அடையாளம் தெரிதாவே?”

“இல்லையேப்பா…”

சுந்தருக்கு பயம் தொற்றிக்கொண்டது. ஒருவேளை நாளையே டீக்கடைக்காரர் பள்ளிக்கு வந்து நம்மை அடையாளம் காட்டினால்? நடையில் மூச்சு வேகமும் வியர்வையும் முதுகு மொத்தமாய் நனைந்திருந்தது. “பிள்ளையாரப்பா” என்று கோயிலை கடக்கும் போது ஒருமுறை சொல்லிக்கொண்டான். அமைதியாய் நடக்க முடியவில்லை.

“நாளைக்கு இந்த டீக்கடக்காரரு ஸ்கூலுக்கு வந்து சொன்னா என்ன பண்ண?”

“நம்மதானு எப்டி தெரியும்?”

“பேண்ட் போட்டுட்டு வந்தானுவனு சொன்னா?”

“ஒம்பதாம் க்ளாஸ்ல இருந்து இங்க பேண்ட். அந்த ஆளு எப்டி கண்டு பிடிப்பான்?”

“க்ளாஸ் க்ளாஸா சார் கூட்டிட்டு வந்தார்னா?”

“அதெல்லாம் வரமாட்டாரு பொலம்பாம வா”

“அப்டியே வந்துட்டார்னா…?”

“எங்க வீட்டுக்குலாம் தெரிஞ்சா நான் செத்துருவேன்… நீ?”

“பாலம்மய கொன்றுவேன்……”

1

–  ரமேஷ் ரக்சன்

 (rameshrackson@yahoo.com)

 

 

பேச்சி

0
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி

ரமேஷ் ரக்சன் கதைகள் – 07 – பேச்சி

(ஓவியம் : ஞானப்பிரகாசம் ஸ்தபதி)

*

 

“எழவு சனியன் ஒருநாளு வீட்ல இருக்கலாம்னா கூட மனசு வரமாட்டேங்குது”

“அந்த வெங்கபய வேற சும்மா இருக்க மாட்டேங்கான்…”

தென்னை ஓலையில் தட்டி செய்து கட்டியதில் அமைந்திருக்கும் பேச்சியின் வீடு. மழைக் காலங்களில் ஒழுகாமலிருக்க, சூளையில் செங்கல் நனையாமல் போர்த்தப்பட்டு கந்தலான தார்பாய்கள் கூரையின் மேல் போட்டு கொடுத்திருந்தார்கள். நழுவி விழுந்து விடாமல் இருபக்கங்களிலும் கயிறு போட்டு, அதில் செங்கற்கள் கட்டி தொங்க விடப்பட்டிருக்கும்.

தெற்கு நோக்கியிருக்கும் பேச்சியம்மாளின் வாசலையொட்டி, கிழக்கு பக்கம் ஒரு திண்ணை, மேற்கு பக்கம் ஒரு திண்ணை அமைந்திருக்கும். வானவில் வளைவு போல மாட்டுச்சாணம் கொண்டு திண்ணையில் மொழுகி விட்டிருப்பாள் பேச்சி. தரைநோக்கி திண்ணை மடங்குமிடத்தில் சாரைப்பாம்பு ஓடுவதுபோல, மூன்றுவிரல் கொண்டு நெளிவுகள் இருபக்கமும் நீட்டிவிட்டிருப்பாள்.

இப்படித்தான் வீட்டிற்குள்ளும், ஐந்து அடுக்கு வளைவும் ஒவ்வொரு வளைவுக்கு இடையே இருவிரல் நெளிவு, என ஒரு ஓவியம் போல இருக்கும் பேச்சியின் வீடு.

மேல் பக்கம் இருக்கும் திண்ணையில் அடுப்பும், கீழ் பக்கமிருக்கும் திண்ணையில் விறகும் அடுக்கி வைத்திருப்பாள். விறகின் நடுவில் சரியான ஒரு வெட்டு விழுந்ததும், இடது கையால் அரிவாளை பிடித்துக் கொண்டு வலது கையால் கட்டைகொண்டு அடித்து. அன்றைய சமையலுக்கான விறகினை கீறி முற்றத்தில் போட்டுவிட்டு, வடு மாங்காய் பொறுக்கக் கிளம்பினாள் பேச்சி.

“ஏ புள்ளோ என் மொவா ரெண்டு மாங்கா கேட்டா வரும் போது தந்துட்டு போறியா துட்டு வேணாலும் தாரமக்கா”

“புள்ள உண்டானவள கண்ணுல காட்டி காட்டி தெனமும் வாங்கிடுங்க…துட்டுலாம் ஒன்னும் வேணாம் ஒங்கமொவளுக்கு குடுத்ததா நெனச்சிகிடுதேன்”

ஆற்றின் அந்தப்பக்கம் கேட்பாரற்று நிற்கும் இரண்டு மா மரங்களிலிருந்து காற்றில் விழும் வடுக்களை எடுத்து வந்து, அருகிலிருக்கும் பள்ளிக்கூடத்தில் மிட்டாய் விற்கும் பாட்டியிடம் கொடுத்து விட்டால் சாய்ங்காலம் விற்ற காசு எவ்வளவு என கணக்கு கொடுத்துவிடும்.

“பாட்டிக்கு ஊறுகாய் போட மாங்காய் கமிஷன்”

ஒரு வாரத்திற்குள்ளாகவே பாட்டியின் கணக்கில் சுரண்டல் இருப்பதாய் பொறி தட்டவும், மாங்காயை தானே நீளமாக சின்ன சின்ன துண்டுகளாய் வெட்டி வத்தல்பொடி உப்பும் கலந்து ஒரு பாத்திரத்தில் போட்டு கொடுத்து விடுவாள் பேச்சி. அதற்காகத்தான் பொழுது விடியும் முன்னமே ஆற்றை நோக்கி விரைந்து கொண்டிருந்தாள்.

“ஏட்டே… ஒங்க அம்மகாரி பாக்க வந்தாளா?”

“அவா ஏன் என்ன பாக்கவரா? அந்தால போக்கெடுத்து போனவ தான்…”

“மொவ நெனப்பு இல்லாமலா இருக்கும் வந்துடுவா”

“புது புருசன் கெடச்ச பவுசு இப்போதைக்கு போவாது” வாங்கி வச்ச கடனுக்கு நாந்தாஞ் சாவணும்”

பேச்சியின் அம்மா களத்தில் வேகமாய் கல் அறுப்பாள். ஒரு நாளைக்கு 2000 செங்கல் வீதம் ஒரு சூளையில் அடுக்கும் கல்லில் பாதிக்கு மேல் பேச்சியின் அம்மாவினுடையதாகத் தான் இருக்கும். முத்தம்மாள் வேலையின் வேகத்தை அறிந்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் 30000/- முன் பணமாய் கொடுத்து, இப்போது இருக்குமிடத்திற்கு அழைத்து வந்தார் சூளையின் முதலாளி.

“இங்கன நல்லா தான சம்பளம் தாராறு? பொறவு எதுக்கு போற?” முத்தம்மாளோடு தங்கி வேலை பார்க்கும் பெண்மணி ஒருத்தி கேட்ட கேள்வி இது.

“அந்த மால்ல(செங்கல்சூளை) 30000/- வட்டியில்லாம தாரேங்குறான். இவளுக்கு இப்பவே நக சேத்தா தானா நாலஞ்சி வருசம் கழிச்சினாலும் கெட்டிகுடுக்க முடியும்?”

“நகரேட்டு வேற ஏறிட்டே போவுது… சீட்டுகீட்டு போட்டாலும் அது வுழுறதுக்குள்ள கூட ஆயிரம் ரூவா சொல்லுவான்”

“எதும் காண்ட்ராட் ஆளு மாட்டாமலா போயிடுவான்? ஓம்மொவா இப்பவே எடுப்பா தான இருக்கா? புடிச்சிகுடு…”

“ஒன்னியமாதிரி கூட்டி அடைக்க சொல்லுதியாக்கும்”

வேச

எட்டாம் வகுப்பு பாதியில் பேச்சி பெரியமனுசி ஆனதும் பள்ளியிலிருந்து நிறுத்தியிருந்தாள் முத்தம்மாள். களத்தில் அறுத்த கல்லில் பிசிறு சீவி ஒரு பக்கமாய் நிறுத்தி வைப்பது தான் அப்போதைக்கு பேச்சியின் வேலை. எதிர் வீட்டிலிருப்பவளின் பேச்சு எதுவும் சரியாக இல்லாததால் முன்பணத்தை வாங்கிய கையோடு மகளுக்கு கம்மலும் வளையலும் வாங்கிவிட்டு ஊர் மாறியிருந்தாள்.

பேச்சிக்கு கல் அறுக்கத்தெரியாது என்பதாலும், தினமும் சூளையில் கல் ஏற்றும் வேலை இருக்காது என்பதாலும், போன வாரம் தான் காண்ட்ராக்ட் எடுத்து அதன் மூலமாக ஊர் ஊராக சென்று சூளையில் கல் அடுக்கி கொடுக்கும் மாரியிடம் வேலைக்கு சேர்ந்திருந்தாள்.

முந்தினநாள் மாலை வேலை முடியும் நேரத்தில் எல்லோருக்கும் நாளை எங்கு வேலை என்பதை சொல்லி அனுப்பிவிடுவார் கான்ட்ரக்டர். பஸ் ஏறி போகக்கூடிய தூரம் எனில் அரசமூட்டில் கூடி பின்னர் அனைவரும் ஒன்றாய் செல்வது வழக்கம்.

ஒரே ஊர்காரர்களாக இருந்தாலும் இதுவரையிலும் பேசிப்பழகிடாத மூக்கன், இரண்டு நாளைக்கு முன்னதாக புதிதாய் கல் அடுக்கச்சென்ற சூளையில் பேச்சிக்கு அறிமுகமாகியிருந்தான்.

“பொழுதுக்கும் சாப்பாடு கெழங்கு தானா?”

“ஏதுக்கு இப்டி கேக்கிய”?

“செம்மண்ல பொரட்டி எடுத்த கெழங்கு மாதிரி சிக்குனு இருக்கியே அதான் கேட்டுகிட்டேன்”

“கண்ட்ராக்குகிட்ட சொல்லிகுடுத்தா தெரியும்”

“ஓ! பொரட்டுனது அவுரு தானா?”

“செருப்பு பிஞ்சிடும்”

“கழத்தி போட்டுட்டு வாட்டி”

ஓலைபிறையிலிருந்து ஈரம் காய்வதற்கு என முன்னமே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பச்சை செங்கல்லை சூளைக்கு அனுப்ப, ஒரு தோளுக்கு நான்கு கல் வீதம் தூக்கிவிடும் ஆண்களில் மூக்கனும், சுமப்பதில் பேச்சியும் ஒருத்தியாய் நின்றதில் தான் இந்த விவாதம் நடந்து முடிந்திருந்தது.

இரட்டை அர்த்த வசனங்கள் எல்லாம் பக்கம் பக்கமாய் கேட்டிருந்ததால் பெரிதாய் பொருட்படுத்தாமல் மறு நாளும் வேலை சென்றதில் தான் அந்த விபரீதம் நடந்தேறியது. மூக்கனிடம் தோளில் கல் வாங்கும் போதெல்லாம், பேச்சியின் மார்பை உரசிக்கொண்டே இருந்தான்.

மூக்கனிடம் செல்லாமல் வேறு ஆட்களிடம் கல் வாங்கிச்சென்றாலும், பத்து நடைக்கு ஒரு தடவையாவது அவன் கைக்குச்செல்ல வேண்டிய நிலைவர, சரியாய்ப் பயன்படுத்திக்கொண்டிருந்தான். இப்படி பயமின்றி துணிச்சலுடன் பேச்சியின் மேல் கை வைப்பதற்கும் ஒரு காரணம் இருந்தது.

மலைபோல் குவிந்து கிடக்கும் களிமண்ணையும் செம்மண்ணையும் பதமாய்க் குழைத்து கல் அறுக்கும் களத்தில் இடைவெளி விட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு கைவண்டியில் வைத்து குவித்து வைத்துவிட்டுப்போகும் செம்பட்டையனுடன் தான் மூன்று வாரங்களுக்கு முன்னதாக ஓடிப்போயிருந்தாள் பேச்சியின் அம்மா.

இன்னைக்கு எப்படியாவது வேலைக்கு செல்லாமல் இருந்துவிட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் மனதிற்குள் சொல்லியவாறே காரணம் கிடைக்காமல் மாங்காய் பொறுக்கி விட்டு சீமஉடைகள் நிறைந்த ஆற்றின் ஓரம் ஒதுக்குப் புறமாய் காலைக் கடனை ஆற்றோரமாய் முடித்துவிட்டு கால் நனைக்க அமருகையில் மூக்கனின் குரல் கேட்டது பேச்சிக்கு.

“ஓ பேச்சி…ஆம்பளயாள் சட்டய போடாம இன்னைக்கு தாவணில வா என்ன”

கடவாய் பற்களில் வேப்பங்குச்சியை ஒதுக்கிச் சவித்து பிழிந்த சாற்றினை ஆற்றிற்குள் துப்பியவாறு பேச்சியிடம் சொன்னான் மூக்கன்.

“இருட்டு நேரம் தான” என்று தன்னைத்தானே சமாதானம் சொல்லிப் பார்த்தும் அடங்காத மனதின் சுமை தாங்காமல் கீழ்தாடை வலிக்கும் அளவிற்கு அழுது கொண்டே வீடு வந்து சேர்ந்தவள், சூளையில் முதல் தரமற்ற செங்கல், லோடு ஏற்றும் போது உடைந்த செங்கற்கள் என தன் கைக்குள் அடங்கும் வரை கையிலெடுத்து வெளியே போடத் துவங்கினாள் பேச்சி.

 ஒவ்வொரு முறையும் சூளையிலிருந்து கற்களை வெளியே எடுத்துக் கொண்டு போடும் போதும் அந்தக்குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது.

“ஓ பேச்சி…ஆம்பளயாள் சட்டய போடாம இன்னைக்கு தாவணில வா என்ன”

ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி

ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி

 

 நான்கு கற்கள் மட்டுமே அடங்கும் கைகளில், ஐந்தானது, ஆறானது… மூக்கன் சொன்ன வார்த்தையின் சுமை ரணமாகிக் கொண்டிருந்தது. விறகுகள் எரிந்து தணிந்து பரவிக் கிடக்கும் சாம்பலைப் பார்க்கப்பார்க்க சிதை மூட்டியது போலிருந்தது பேச்சிக்கு.

கைகள் ஏந்தி நின்ற செங்கற்களை நழுவ விட்டாள். இடது கால் பெருவிரல் நகம் பெயர்ந்து இரத்தம் பீறிடத் துவங்கியது…

1

                                                                                       – ரமேஷ் ரக்சன்

rameshrackson@yahoo.com

ஈரம் படரும் இருள் தடம்..

0
Designer: Milan van de Goor
ஈரம் படரும் இருள் தடம்..
*

பிரார்த்தனையின் ஓசை முனகலாக ஒலிப்பதில்
சுற்றுச் சுவருக்கு மறுப்பேதுமில்லை

மேற்கூரையில் திரளும் பிசுபிசுப்பு
கடவுள் செவியில் படரும் ஈரம் என நம்புக

நடுங்கும் கூப்பிய விரல்களின் சத்தியங்கள் குளிர்வதை
அலையோடும் இமைக்குள் தவித்து உருளும் கண்களில்
பிறழும் காட்சியின் வர்ணங்கள் நனைவதை
மூத்தோர் விந்து உமட்டும் நாபி உள்முடிச்சில்
தாயின் மூச்சுக்காற்று திணறுவதையும்
சரணாகதி செய்ய

முனகலாகும் ஓசையில்

பிரார்த்தனையின் சுற்றுச் சுவரெங்கும்
இருண்ட கண்டத்தில் முளைத்த பிஞ்சு விரல்களின் தடங்கள்

*****

நிறமற்று உதிரும் உடல்களின் இறகு
*

நம்
இருவருக்கிடையில் ஒரு குறுகிய மௌனமிருந்தது
அதுவரை பேசிய உரையாடல்கள் அங்கு மிதக்கின்றன

அவற்றிலிருந்து வெளியேறும் பறவைகள் கூடு திரும்புவதில்லை என்றுமே
நிறமற்ற அதன் சிறகிலிருந்து உதிர்ந்த இரண்டொரு இறகுகளோடு
நாம் திரும்ப வேண்டியிருந்தது
தத்தம் உடல்களுக்கு

சாய்ந்த பொழுதின் துயரைப் பூசி
கூடுடைய பறவையின் திசையெங்கும் பரவத் தொடங்குகிறது
பொன்னந்தி நிறத்தில் உரையாடலின் இசை

ஊற்றுக்கண் பிளக்கும் ரகசியத்தின் முதல் துளியில்
உப்பெனப் பூக்கிறது பறத்தலின் மௌனச் சொல்

****

அடுக்குக் குலையும் நொடியிழைப் பிம்பம்..
*

காயங்கள் ஆறுவதற்கான கயிறு
தனிமைப் பிசிர் கொண்டு முறுக்குகின்றது குரல்கட்டை

சொற்கள் நொறுங்கும் உடைவை
கையேந்தித் தவறும்
கேவல் ஒலி

கண் பிதுக்கும் இறுதிக்காட்சி நொடியிழைப் பிடித்து
உறையத் தொடங்குகிறது அடுக்குக் குலையும் பிம்பமாக

வெளிவரும் நாக்கின் நீளத்தை
நுனியில் தொங்கும் கடைசி உச்சரிப்பை
கால் உதறலோடு உருளும் ஸ்டூலின் கால்கள்
மல்லாந்து திகைக்கின்றன

****

கனவின் முதுகில் மகரந்தம் தூவும் பட்டாம்பூச்சி..
*

என் நிலத்தில் நடும் துயரத்தில் பறக்காத
தனிமை நீ

மணிக்கட்டு நரம்பூடே ரத்தத்தில் நகரும் நினைவும்
மௌனத்தைச் சொல்ல விடாமல் தவிக்கச் செய்யும் நாக்குழைவுமாய்
உன் பிரியத்தைக் கோர்த்து வைத்திருக்கும் கோப்புகளைத் திறந்து வை
அதன் அடுக்குகளில்
பறவையின் சிறகாகப் படிந்திருக்கும் நம்
முத்தங்களைப் பிரித்தெடு

கொஞ்சநேரம் நம் வனத்தின் இருளில் பறக்க விரும்புகிறேன்
எனக்கு உதவி செய்

நீயென் இராப் புதிரின் ஊற்றுக்கண்
உன்னைப் பருகத் துடிக்கும் உதடுகள் வேறொரு செடியில் பூத்திருப்பதாக
கனவின் முதுகில் மகரந்தம் தூவுகிறது பட்டாம்பூச்சி

வர்ணங்களோடு நடுங்கும் என் விரல்களைப் பற்றிக்கொண்டு உயர்ந்தெழு
சுகந்தம் வீசும் உதடுகள் தேடு
ததும்பும் முத்தத்தின் மீதிறங்கி என்னை மிதக்க விடு

தக்கையாகிப் பிறழும் அசைவின் கணத்தில் உன் கரை ஒதுங்கும்
நொடிக் கொண்டு
அந் நிலத்தில் புதைத்து வை
வனமெங்கும் பரவும் துயரத்தில் நீ பற

*****

உரசிக்கொண்டு பற்றியெரியும் உரையாடலின் சாம்பல்..
*

அயற்சியோடு நடக்க வைத்துவிட்டாய்
தீர்மானங்கள் பலிப்பதில்லை
தனிமைப் பயணத்தில் அதுவொரு சுமை
திரும்பிப் பார்க்கத் தூண்டுவதாய் இல்லை உன் குரல்

நிறைய வாசித்தாயிற்று
நிறைய களைப்புறச் செய்துவிட்டன உன் வரிகள்
பிதற்றலும் கதறலுமாய் அலறும் பைத்தியக் கணங்களோடு
நிழல் வலை வீசுகிறாய்
சிறு விரலசைவில் அவை அறுகின்றன

என்னை எட்டிப்பிடிக்க துரத்தும் உன் காலடியோசை
வேறொரு கிரகத்திலிருந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது

எதை நம்புகிறாய்
உனது பிரத்யேக ஒற்றை விண் கல்லையா

கோடி நட்சத்திரங்களை வாரி இறைக்காமல்
கனக்கும் என் பையோடு
மேலும் நடந்தபடியே இருக்கிறேன் தீர்வதாயில்லை இந்த அயற்சி

காற்றில் வீசியெறிந்த
உன் சமரச வெண் துணியொன்று பற்றியெரிந்து சாம்பலாகிறது
உரசிக்கொண்ட உரையாடலின் பொறிப் பட்டு

உணர்கொம்பில் சுழல்கிறது ஊழிக்காற்றைப் பொருத்தும் மூச்சு
உறுதியான கால்கள் கொண்டிருக்கிறேன்
இறுகும் தசை சபிக்கிறது

முன்பு குடித்த தேநீரின் கசப்பை இன்றையத் தொண்டைக்குழி
திரளச் செய்கிறது
வெட்டியெடுக்காத பெருமலையை

அடுத்தடுத்து அமையவேண்டாம் மேலும் மேலும் ஓர் அண்மை
நடக்க நடக்க ஓயாத அயற்சி
தன் பகலை
சட்டென்று அணைத்துவிட்டது

பெருகும் திசையற்ற இந்த இருள் பிடித்திருக்கிறது

உன் சொற்கூச்சலை வேடிக்கைப் பார்க்கச் சொல்லி
இரண்டு காதுகளையும் அறுத்து வைக்கிறேன்
வான்கோவின் கத்திக்கொண்டு

நெருங்கும்போது அதை எடுத்துக்கொள்

*****

– இளங்கோ

www.kavithaikarandiary.blogspot.in
elangomib@gmail.com

Designer: Milan van de Goor
Designer: Milan van de Goor