சாருமதி
“ஒன்னு ரெண்டு மூனு ……..பத்து ! வருகிறேன்………..வாழைப்பழம் தருகிறேன்!” “ஏய்……..என்னைய கண்டுபிடிச்சிருவானே……நான் போய் மரத்துக்கு அந்தப் பக்கம் ஒளிஞ்சுக்கிறேன்”, எனக் கத்தியபடியே ஓடினான். பின்னுமாக ஓடினர் நண்பர்கள் கூட்டம். “அட பைத்தியம்! வர்றது கூடத் தெரியாம, இப்படி கண்ணு முன்னுத் தெரியாம ஓடுறியே…..எங்கயாவது விழுந்தா? எருமை மாடு!” “ஏன்டி என்னாச்சு?” “இந்த ஒன்னாங்கிளாஸ் பசங்க கண்ணாமூச்சி விளாடுறாங்கடீ. இந்நேரம் நான் கவனிக்கலைன்னா அந்த குட்டிப் பிசாசு என் மேல மோதி சுவத்துல அடிச்சு விழுந்திருப்பான்டீ” “அய்யய்யோ!” “இரு…… இரு……. உன்ன கட்டி வைக்கிறேனா இல்லையான்னு பாரு.” “சாரிக்கா ப்ளீஸ்…..ப்ளீஸ்….. என்னைய விடுங்கக்கா…. சாரி சாரி.” “போய் தொலை.” “தேங்க்ஸ் கா….. பை” “சரி வாடி. நம்ம போய் வராண்டாவை கூட்டிப் பெருக்கணும். மணி எட்டே முக்காலாச்சு. ஹெச்.எம் டீச்சர் வந்துருவாங்க.”
நான்காம் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அங்குமிங்கும் ஓடியாடி விளையாண்டு கொண்டிருந்தனர். வயதுக்கு வந்த மாணவிகள் புதிதாய் வெளிவந்த பிரமிப்பூட்டும் கொரியன் பி.டி.எஸ் பாடல்களைப் பற்றி கிசுகிசுத்து சிரித்துக் கொண்டிருந்தனர். வகுப்பில் முதல் தரவரிசையில் மதிப்பெண்கள் எடுப்போர் மட்டும் தேசியத் திறனாய்வுத் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தனர். “இதோ பாத்தியா சரவெடி…..” “டேய் செம்ம…. எப்புட்றா? வேற லெவல் போ” “இவ்ளோ தானா? இது பத்தாதே….. நம்ம செலிப்ரேஷன் இன்னும் உச்சமால்ல கொண்டாடனும்.” “அப்போ ஹோட்டல் போகலாமா?” மூன்றாமவன், “இல்ல…. இல்ல…. முதல்ல பாருக்கு போய் சும்மா ஜிவ்வுன்னு கிக்கேத்திட்டு அப்புறமாதான் ஹோட்டல் போகணும்” “ம்ம்…..அப்டி சொல்லு மாம்ஸ்!” “ஏன்டா ஐ.பி.எல் ஃபைனல்ல சி.எஸ்.கே சும்மா எறங்கி அடிச்சிருக்காங்க்ய…. அடிச்ச அடில்ல ஆர்.சி.பி அலறனதப் பாத்தேல…. அப்புறம் தெறிக்க விட வேண்டாமா?” “ஓஹோ!” வெடித்து சிரித்தனர். சில மாணவ மாணவிகள் மட்டும் நேர்மையாக வகுப்பறைகளையும் பள்ளி வளாகத்தையும் சுத்தம் செய்து கொண்டு முதல் பாடவேளைக்கு ஆயத்தமாயினர். காலை சிற்றுண்டி செய்த ஆயா சாப்பிட அடம்பிடித்த சிறு குழந்தைகளைக் கெஞ்சியும் கொஞ்சியும் மிரட்டியும் ஒரு கைப்பிடியாவது வாயினுள் போட வைத்தாள். அன்றைக்கான காலை உணவு மேற்பார்வை செய்ய வேண்டியவர் முதல் வகுப்பு லதா டீச்சர்.
சின்ன முள் ஒன்பதுக்கு பக்கமும் பெரிய முள் பத்தையும் தாண்டுகையில் இதயம் படபடக்க வியர்க்க விறுவிறுக்க தலைமுடி நுனி ஈரம் சொட்டச் சொட்ட தன் கணவர் ஓட்டிய இருசக்கர வாகனத்திலிருந்து கீழிறங்கினாள். நேராக காலை உணவு சாப்பிடும் குழந்தைகள் இருக்கின்ற இடத்திற்கு மூச்சிரைக்க ஓடி வந்தாள். கீழ் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒழுங்கு வரிசையில் அமர்ந்து சாப்பிடுவதைக் கண்டு ஆயாவுக்கு கண்களிலே நன்றி பாராட்டி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். பத்து ஆசிரியர்கள் வேலை பார்க்கும் பள்ளியில் சரியான நேரத்திற்கு வருகை புரியாவிட்டால் அவ்வளவுதான். தன்மானம் பறிபோய்விடும். அனாவசியப் பேச்சுக்கும் உள்நாட்டு அரசியலுக்கும் ஆளாக நேரிடும். வீட்டில் சமையல் செய்து கொண்டே புலம்பித் தீர்த்தாள். அப்படியும் எப்படியேனும் நேரம் தவறிவிட்டது. தன் இரண்டு வயது மகளுக்கு காக்கா காண்பித்தும் நாய் பூனைகளோடு விளையாட வைத்தும் ஒரு கவளம் பருப்பு சோற்றை நெய்யோடு பிசைந்து ஊட்டி விட படும் பாடு இருக்கே….யார் அறிவார்? அறிந்தாலும் புரிவாரா? கைபேசியைக் காண்பித்து ஊட்டுவதை விடுத்து இப்படி அலட்டிக் கொள்கிறாள் என்பார்கள். அதை நினைத்தவாறே சற்று தலையில் அடித்துக் கொண்டாள். பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. சாப்பிட தட்டை எடுக்கச் சென்றாள்.
பெரிய முள் பன்னிரண்டை நெருங்க கருநிற கால் சட்டையும் நீல வண்ண மேல் சட்டையும் அணிந்தவர் இரு கைகளை வீசிக்கொண்டு படைவீரனென விரைந்து வந்தார். குழந்தைகள் நின்றும் அமர்ந்தும் உணவைத் தரையில் சிந்தியும் வாயினுள் அதக்கியும் விளையாண்டு கொண்டே சாப்பிட்டுருந்தனர். வந்தவர் ஆயாவிடமிருந்து ஒரு தட்டை வாங்கினார். குழந்தைகளோடு குழந்தையாய் தட்டைக் கையில் ஏந்தியபடி நின்றே சாப்பிட ஆரம்பித்தார். உப்புமாவில் உப்பில்லை. முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டார். ஆயாவுக்கு நல்ல திட்டு. “மன்னிச்சுக்கோங்க ஐயா. நாளைல இருந்து சரி பண்ணிக்கிறேன் ங்க. ” “ஆகட்டும் மா. குழந்தைகள் சாப்பிடறது. நல்லபடியா செஞ்சா உங்களுக்குத்தான் புண்ணியம்.” சாப்பிட்டுக் கொண்டே சகலத்தையும் பார்வையிட்டார். கட்டுக்கடங்காமல் தலைகால் தெறிக்க தாண்டவமாடிக் கொண்டிருந்த மாணவர்களைக் கண்ட கணத்தில் கடுமையாக கண்டிக்க முனைந்தார். அவரது குரலைக் கேட்டவுடன் லதா டீச்சர் வேகமாக ஓடி வந்து இரு கை கூப்பி அன்றைய காலை வணக்கத்தை பணிவுடன் சமர்ப்பித்தார். “ம்…ம்… வணக்கம் வணக்கம்” என்றே நாலடி எடுத்து வைத்தவர் தனது செல்பேசியைக் கொடுத்து மாணவர்களுடன் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டார்.
தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றவர் “மணி 9.10” என்று எரிச்சலுற்றார். தலைமை இருக்கையில் அமர்ந்தவர் ஆசிரியர் வருகைப் பதிவேட்டினை கையில் எடுத்தார். அந்நிமிடம் வரை ஒருவர் கூட கையெழுத்திடவில்லை. மைதானத்தில் ஒரே கூச்சல். மாணவர்களின் கடும் ஆரவாரம். கோபம் உச்சிக்கேறியது. சினங்கொண்டு வெளியே வந்தவர் அனைத்து மாணவர்களையும் வகுப்பிற்குள் செல்லும்படியாக உரத்த குரலில் கட்டளையிட்டார். அதிர்ச்சியுற்ற மாணவர்கள் மிரண்டு போய் ஒவ்வொருவராக வகுப்பறைக்குள் ஓடிச் சென்றனர். கலகம் குறைந்து அமைதி நிலவியது. லதா டீச்சர் சற்று முன்னதாகவே வந்ததால் போனால் போகுது என்று அவரை மட்டும் கையெழுத்திட சொன்னார். அடுத்த ஓரிரு நிமிடங்களுக்குள் ஓட்டம் பிடித்து வந்த ஆசிரியர்கள் பதிவேட்டில் கையெழுத்திட கண்டிப்புடன் அனுமதிக்கப்பட்டனர். “சார்….” “ம்ம்…போதும். முதல்ல வகுப்புக்கு போங்க. மாணவர்களை காக்க வைக்காதீங்க .” என்று சீறினார். கை கால் நடுங்க ஆசிரியர்கள் வகுப்பிற்கு விரைந்தனர்.
பல்லை கடித்துக்கொண்டு கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். சற்று திரும்புகையில் நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் வகிப்பவர் உள் நுழைந்தார். தனது இருக்கையில் அவரைக் கண்டவுடன் பேச்சற்று நின்றார். இவர் கடிகாரத்தைப் பார்க்க அவர் இவரைப் பார்த்தார். அவரது சுட்டெரிக்கும் பார்வை இவரை பொசுக்கித் தள்ளியது. “ஏம்மா…. என்ன நெனச்சிட்ருக்கீங்க? மணி ஒன்பதரை. தலைமைப் பொறுப்பில இருக்கிற நீங்களே இப்படி லேட்டா வரலாமா? காலை உணவு என்னன்னா ஒன்பது மணியாகியும் முடியல. அப்புறம் காலை வழிபாட்டுக் கூட்டமே நடக்கல. ஸ்டூடென்ட்ஸ் கிட்ட டிசிப்ளினே இல்ல. இதுதான் நீங்க வேலை செய்ற லட்சணமா? இன்னும் பாருங்க. சில டீச்சர்ஸ் வராமலே இருக்காங்க.” பதில் சொல்வதற்கில்லாமல் தரை நோக்கி கைகளை நெறித்துக்கொண்டார். தலைமையாசிரியரின் தலை உருண்டு போனது. “மன்னிச்சுக்கோங்க சார்…..வர்ற வழியில ஒரே கூட்ட நெரிசல். சிக்னல் விழுந்துருச்சு. அதனாலதான் கொஞ்சம் லேட்டாயிடுச்சுங்க.”
“ஓ…. பரவாயில்லையே! காரணம் நல்லாத்தான் சொல்றீங்க. வரட்டும். உங்க அசிஸ்டென்ட்களுக்கும் ஒவ்வொரு சாக்கு போக்கு கட்டாயம் இருக்கும். கதை உருட்டாம போங்க அந்த பக்கம்.” எப்போதும் ஓட்டமெடுத்து ஒன்பது மணிக்குள் வரும் மாலதி ஆசிரியரின் மோட்டார் வாகனம் பொத்தல். எனவே தாமதம். சீவி சிணுக்கெடுத்து மல்லிசரம் தொடுத்து காட்டன் க்வீன்னாக தினமும் எட்டு மணிக்கே வந்து சேருவார் வானதி டீச்சர். அன்று அவர் விடுப்பு. வந்திருந்தால் இந்த பெரிய சிக்கலை சமாளித்திருப்பார். பெற்றோர்களுமே தங்கள் பிள்ளைகளின் பிரச்சனைகளை அவரிடம் மனம் திறந்து பேசுவது வழக்கம்.
வீட்டில் இடுப்பு ஒடிந்து அறுவை சிகிச்சை பெற்று சீரழியும் அன்னையை கவனிப்பதோடு காது கேளாத அப்பாவையும் சமாளித்துக் கொண்டு குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வீட்டுக்காரருக்கும் டிப்பன் பேக் செய்து கொடுத்து அலங்கோலமாக அவசர அவசரமாக பறந்து வரும் எவர்க்ரீன் லேட் கம்மர் லட்சுமி டீச்சர் வழக்கம் போல் அன்றும் தாமதமே. “அனைவரும் பெர்மிஷன் கேட்கிறார்கள். காரணங்கள் ஏராளம். தைரியமோ தாராளம். பழைய ஹெச்.எம் கிட்ட நிக்கவே பயப்படும் எல்லோரும் நெஞ்சம் நிமித்திக்கிட்டு இப்போது ஒன்பதரை மணிக்கு மேல வரும்போது நான் மட்டும் ஏன் சீக்கிரம் வரணும். எனக்கு மட்டும் என்ன வெனையா?”, என்று யோசிப்பதாலே முன்பு விரைவாக வரும் ராதாமணி ஆசிரியை சில நாட்களாகவே சாவகாசமாக வந்து தொலைக்கிறார். ஓட்டமும் நடையுமாக பேருந்து நிறுத்தத்திற்கு சடுதியில் பாயும் கர்ணாம்பிகை அம்மா அன்றைக்கென்று பேருந்தை தவறவிட்டார். முன்பின் தெரியாத ஒருவரிடம் உதவி கோரி பள்ளி வந்தடைவதற்குள் இறுக்கமான பதற்றத்திற்கே ஆளாகிப் போனார். தடுக்கி விழுந்தால் வீடு. காலெட்டும் தூரத்தில் இருந்தும் இப்படியும் தாமதமாகுமா? அரசுப்பணி தேர்வுக்கு தயாராவது என்னவோ மகள்தான். தானே தேர்வுக்கு படிப்பது போல அலட்டிக்கொண்டு எப்போதுமே தாமதம் தான். பாவம் யாஸ்மின் டீச்சர். சத்தியிலிருந்து வர வேண்டாமா? மூட்டு வலி வேறு. பணி நிறைவு பெற்றுவிட்டார். இன்னும் முதிர்வு ஓய்வுக்காலம் நிறைவேறவில்லை. தினமும் பஸ் ஏறி அரும்பாடுபட்டு வந்து சேர்கிறவர் அன்றும் கதிகலங்கி வந்தடைந்தார். இந்த அரசாங்கம் சுடிதார் அணிந்தும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரலாம் என்றதென்னவோ வாஸ்தவம் தான். அதற்கான ஒப்பனை விதிகளை வகுக்காதது யார் தவறு? விளம்பரம் காட்டும் ஸ்டெல்லா மேடம் சிங்காரிக்க காலையில் கண்ணாடி முன் நின்றார். அழகுபடுத்தும் தொனியில் தன்னையே மறந்து போனார். ஆனால் கடிகாரம் காலத்தை மறக்குமா? திடீரென பள்ளி ஞாபகம் வரவே கிளம்பினார். அலங்காரம் சிதையக்கூடாது என்பதன் அதீத கவனத்தால் பொறுமையாக வந்து சேர்ந்தார். போலவே வேறு சில விளக்க முடியாத அர்த்தங்களாலும் தவிர்க்க முடியாத காரணங்களாலும் காலந்தவறாமை என்பது அக்கணத்தில் காலாவதியாகிவிட்டது.
நேரம் கடந்து வந்த ஆசிரியைகள் அனைவரும் அணிவகுத்து சிறைக்கைதிகளென அவர் முன் நின்றனர். அவர்கள் மன்னிப்பு கேட்கத் துடித்தாலும் செவிமடுக்க வந்தவரது காதுகள் தயாராக இல்லை. கோபம் தெறிக்க கடிந்து பேசி திட்டித் தீர்த்தார். சற்று நேரத்திற்குப் பிறகு அனைவரையும் வந்த நேரத்தை துல்லியமாக எழுதி அதன்கீழ் கையெழுத்திடுமாறு ஆணையிட்டார். தலைமை ஆசிரியர் உட்பட அனைவரும் அவ்வாறே செய்தனர். “சாயங்காலம் ஆஃபீஸ்க்கு எல்லோரும் வந்துருங்க. வரும்போது விளக்கக் கடுதாசியோடு வரணும். பணிப்பதிவேட்ல உங்க லட்சணத்த கட்டாயம் பதிவு செய்யணும்.”, என்று தீர்க்கமாக சொல்லிவிட்டு வெளியேறினார். மனக்கசப்பினாலும் தர்ம சங்கடத்தினாலும் தண்ணீரின்றி தத்தளிக்கும் மீன்களாகிப் போயினர். மிகுந்த மன வருத்தத்தோடு வகுப்புகளுக்குள் சென்றனர். வகுப்பிற்குள் நுழைந்ததும் மாணவர்கள் வீட்டுப்பாடத்தை காண்பிக்க ஒருவரையொருவர் முந்திக்கொண்டு வந்தனர். “ஓகே… ஓகே…..ஏற்கனவே நேரமாயிடுச்சு. நோட்டுகளை எல்லாம் டேபிள் மேல அடுக்கி வைங்க. அப்றமா திருத்துறேன். இப்ப நம்ம பாடம் படிக்கலாம். முதல்ல அட்டனென்ஸ் சொல்லுங்க பாப்போம்.” ஒரு சிறுவன் மட்டும் மூலையில் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தான். அவனை அழைத்து ஆசிரியர் நெஞ்சைத் தடவி முதலில் தண்ணீர் அருந்தச் சொன்னார். “வேண்டாம் மிஸ் “. “ஏன்பா… என்னாச்சு? காலைல சாப்டியா?” “இல்லிங்க மிஸ்” “காலை உணவு தான் செஞ்சிருந்தாங்களே….பிறகேன் சாப்பிடல?” “டீச்சர் காலைல வந்ததிலிருந்தே அழுதுட்டு தான் இருக்கான். கேட்டா ஒன்னுமே சொல்ல மாட்றாங்க டீச்சர்.” “சொல்லுமா… என்னாச்சு? இந்தா… தண்ணி குடி.” தண்ணீர் உள்சென்று கண்ணீர் வெளிவர பேச முடியாமல் தவித்தான். ஆசிரியர் மீண்டும் மீண்டும் பலமுறை கேட்டார். “எங்க அப்பா குடிச்சுட்டு வந்து எங்க அம்மாவ நேத்து நைட்டு பூரா அடி அடின்னு அடிச்சுப் போடுச்சு. விடிஞ்சதும் எங்கம்மா கோவிச்சிட்டு அம்முச்சி வீட்டுக்கு போயிடுச்சு. எங்கப்பா நாங்க கெளம்பி வர்ற வரைக்கும் வேட்டி கூட இல்லாம ரோட்ல படுத்து கெடந்துச்சு. அக்கா தான் என்னை குளிக்க வைச்சு துணி மாத்தி ஸ்கூலுக்கு கெளப்பி விட்டா. அப்புறம் என்னைய இங்க விட்டுட்டு அவ பெரிய ஸ்கூலுக்கு போயிட்டா மிஸ்” என்று பொறுக்க முடியாத வேதனையை அள்ளிக் கொட்டினான். “கவலைப்படாத தம்பி. நான் அம்மா கிட்ட பேசி சீக்கிரமா வர சொல்றேன். இப்ப முதல்ல சாப்பிடு.” என்று தனது உணவு பெட்டகத்தை அவன் கையில் திறந்து கொடுத்தாள். கண்ணை துடைத்து தேற்றி விட்ட கணம் அம்மாவின் தொடுதலாக உடல் குளிர்ந்து வயிற்றோடு உள்ளத்தையும் நிரப்பிக் கொண்டான்.
ஐந்தாம் வகுப்பில் ஒரு மாணவன் காலில் சுடுநீரை ஊற்றியது போல் கழிவறையிலிருந்து ஓடி வந்தான். “டீச்சர்….டீச்சர்…. இவன் கையில இருந்து ரத்தம் கொட்டுது.” “என்னடா… என்னாச்சு? எப்படி…என்ன செஞ்சு தொலைச்ச? முதல்ல பஞ்சை எடு தமிழினி.” “இந்தாங்க டீச்சர்.” கசிந்து கொண்டிருந்த இரத்தம் சுத்தமாக அழித்தாகிவிட்டது. மற்ற குழந்தைகள் அனைவரும் ஈக்களைப் போல் ஆசிரியரை சுற்றி மொய்த்தனர். “எதுக்கு இப்படி செஞ்ச? இதுக்குத் தான் ரெண்டு பேரும் ரெஸ்ட் ரூம் கேட்டுப் போனீங்களா?” அறையின் மூலை இடுக்கிலிருந்து சட்டென வேப்பங்குச்சியை உருவ சிறுவர்களின் முழி பிதுங்கிவிட்டது. விரிவான விசாரணைக்கு பிறகு தான் அவர்கள் ஒய்ஜா போர்டு கேம் விளையாடியது தெரியவந்தது. அது ஒரு பொய் பேய் விளையாட்டு. பேராபத்தும் கூட. இரத்த காணிக்கை அளிக்காவிட்டால் பேய் புகுந்துவிடுமாம். என்ன ஒரு பித்தலாட்டம்! இந்த ஆண்ட்ராய்டின் அட்டகாசம் இருக்கே. பெற்றோர்களின் ஆசை வளர்ப்பு. பிதற்றுவதைத் தாண்டி நாம் என்ன செய்ய முடியும்!
மத்திய புலனாய்வுச் செயலகம் ஒன்பதாம் வகுப்பில் தான் அரங்கேறுகிறதோ! அதிலும் பெண் பிள்ளைகள் படு உஷார். கைபேசியின் ரகசிய வரவை கையும் களவுமாகவல்லவா பிடித்து விட்டனர். எடுத்து வந்த இரு மாணவிகளும் கூட்டு களவாணிகள். ஆசிரியர் அதிர்ந்து விட்டார். கைபேசியின் திரை விலக்கப்பட்டதும் அத்தனையும் அம்பலமாகின. ஒன்றன்பின் ஒன்றாக விசாரித்த பின் தெரிய வருகிறது அவர்களது காதல் கருமங்களும் கைக்கு மீறின சேட்டைகளும். அவர்களுள் ஒருத்தியின் அன்னை பிறந்தநாள் பரிசாக செல்பேசி கொடுத்ததன் விளைவு. குழந்தை வளர்ப்பில் சமுதாயத்தின் பங்கு! தலைமையாசிரியருக்கு அடுத்ததோர் தலைவலி. இதற்கிடையில் திறன் மாணவர்களின் அடைவு நிலையை வேறு அட்டவணைப் படுத்த வேண்டுமாம்.எதனடிப்படையில் எதைக் குறித்த திறன் என்பது தான் தெரியவில்லை. பெற்றோர் ஒருவர் தனது ஒரே மகனின் கரத்தை உள்ளங்கையில் இறுகப் பிடித்துக் கொண்டே வகுப்பாசிரியரை சந்தித்துப் பேச வந்தார். ஆசிரியரைக் கண்டதும் அச்சிறுவனின் மொட்டு முகம் மலர்ந்து விரிந்தது.”ஏன்டா தங்கம் லேட்டு?” “அப்பானால தான் டீச்சர். நேத்து நைட் வேலைக்கு போயிட்டு காலையில தான் வந்தாரு டீச்சர். அதான்” “சரிம்மா…. உள்ள போய் உட்காரு.” உடன் வந்த அப்பா ஆசிரியரிடம் பேச ஆரம்பித்தார். வாய் குளறியது. அவர் அறியாமலேயே அவரது கன்னங்கள் சில்லிட்டன. தன் மகனை மனிதனாக்கிய தெய்வமென காட்சியளித்த ஆசிரியரிடம் பக்தனின் மௌனமே பாஷையாகிவிட்டது. கடந்த பள்ளியில் தன்னுழப்பல் என்று அறுதியிட்டுக் கூறி தனிமையிலேயே தவிக்கவிட்டிருந்தனர். அக்குறைபாட்டை அந்த ஆசிரியர் அழித்தொழித்ததன் அதிசயம் தான் விளங்கவில்லை. இறுதியாக அவர் மொழிந்த அத்தனை சொற்களும் “நன்றி, நன்றி, நன்றிகள்” மட்டுமே.
“எத்தனை முறை தான் சொல்லிக் கொடுப்பது? ஒரு வருஷமே பாதி முடிய போகுது. இன்னும் “ஏ “வரிசை தாண்டல .இனி எங்க போய் வாசிக்கிறது. எல்லாம் விதி!”, என்றவாறு நான்காம் வகுப்பு ஆசிரியர் பெருத்த சங்கடங்களோடு தமிழ் புத்தகத்தை வாசிக்கச் சொல்லி ஒவ்வொருவராக சோதித்துக் கொண்டிருந்தார். நம்ம இங்க என்னதான் சொல்லிக் கொடுத்தாலும் வீட்ல கொஞ்சம்னாலும் கேர் எடுத்தா தானே படிக்க வைக்கிறதுக்கு. இங்க என்னா ஒன்னு ரெண்டு குழந்தைங்களா? அம்பது உறுப்படி.பிறகென்ன செய்ய?” வகுப்பிற்கு வெளியே முன் தாழ்வாரத்தில் ஆசிரியர்கள் இருவர் கூடி காலையில் நடந்த கூத்தையே அலசி கொண்டிருந்தனர். “ஹெட்மாஸ்டராவது வெசையா வந்திருக்கலாம். நம்ம தலை தப்பிச்சுண்டிருக்கும். என்ன பண்ணித் தொலைய? அது கிடக்கட்டும். சரி…. சரி…. ஏன்டா குட்டி… இந்தச் சுடிதார் எங்கடீயம்மா வாங்கின? பொம்மனாட்டிக்கு நன்னாத்தான் இருக்கு. என்னாத்துக்காரர் கடங்காரா. பசாளெல்லாம் ஸ்கூலுக்கு போகுதோன்னோ …..நோக்கு ஒன்னுங்கிடையாது என்டுட்டார். அவா அத்திம்பேர் வழி. நோக்கு பரவாயில்லடீ யம்மா. நன்ன புருஷாள். டாப் டக்கர். ஏக போகமடி.” “ஆமா மாமி. என் ஹஸ்பண்ட் நேத்து தான் இந்தச் சுடியை ஆன்லைன்ல பர்ச்சேஸ் பண்ணினார். இன்னைக்கே போட்டுக்க சொல்லிட்டார்.” “பேஷ் …பேஷ்! சூப்பர்டியம்மா… காத்தால அவா வந்ததிலேயிருந்து சிரசுல பாரம் ஏறிடுத்து.” “டோன்ட் வொரி மாமி. இதுக்கெல்லாம் நம்ம ஸ்ட்ரெஸ் ஆகக்கூடாது. தென் வீ வில் பிக்கம் டல். பீ ரிலாக்ஸ்டு.” “ஆமாண்டி குட்டி… நன்னா சொன்ன.” ஒருவரையொருவர் செல்லமாக அடித்து கெக்கலித்துக் கொண்டிருந்தனர். இருந்தாலும் ஒரு விதமான நெருடல் உள்ளுக்குள் குத்திக்கொண்டே இருந்தது. பார்க்கப் போனால் எந்த ஆசிரியரின் முகத்திலும் கவினில்லை. இருள் கவிழ்ந்திருந்தது. தலைமையாசிரியர் அனைத்து ஆசிரியர்களையும் மீண்டுமாக தன்னறைக்கு வர அழைப்பு விடுத்தார். இப்படியாக பாட வேளையும் படிக்கும் வேலையும் கரைந்து கொண்டிருந்தது.
வழக்கத்திற்கு மாறாக ஏதோ ஒரு நாள் காலையில் நேரம் தவறுவதுதான். அதற்காக இத்தனைக் கேள்விகளும் விளக்கங்களுமா? மன்னிப்புக் கடிதம் எழுதச்சொல்வது கூடுதல் கவலை. அனைவரும் இப்படி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோமே என்றதான மனவரிகள் ஒவ்வொருவரின் கண்களிலும் திரையிட்டன. ஒருவரையொருவர் பார்ப்பதும் நடந்ததை மீள விவாதிப்பதுமாக நேரம் கடந்து கொண்டிருந்தது. பெருந்துக்கம் அனைவரையும் ஆட்கொண்டது. காலதாமதம் என்பது ஒரு சாதாரண விடயம் தான். அது இப்படி விபரீதமாகிவிட்டதே. குண்டுகட்டாக அலுவலகம் செல்வதும் பணிப்பதிவேட்டில் பதியப்படுவதுமான விவரம் மற்ற பள்ளி ஆசிரியர்களின் காதுகளுக்கு போய் சேர்ந்தால் பொதுமக்களும் அறியக் கூடும். இனி உற்றார் உறவினர்களுக்கெல்லாம் செய்தி கடத்தப்படும். பிறகு என்ன கட்செவி செயலிக்கு நல்ல உரம் கிடைத்தாற்போல தான். இந்த எண்ணத்தால் பீதி இன்னும் மேலோங்கியது.
வகுப்பறைக்குள் ஆசிரியர்கள் இருப்பது தானா முக்கியம்! அதிலும் அவர்களின் இந்த நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணுவதை விட மாணவர்களோ வகுப்புகளோவா அதிமுக்கியம்? ஆகட்டும். போகிற போக்கில் போகட்டும். மாணவர்கள் காற்றில் உல்லாசமாக பறக்கும் பலூன்களாகிப் போயினர். ஹேண்ட் கிரிக்கெட் படு ஜோர். நிக்கல் குந்தலென்ன… ஸ்டோன் பேப்பர் சிஸரென்ன! ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். வகுப்பறையில் மாணவர்கள் போடும் சத்தம் வரம்பு மீறி ஒலித்துக் கொண்டிருந்தது. அத்தனையும் சகித்துக் கொள்ள முடியாத ஆசிரியர்கள் சிலர் “நாம் செய்த தவறுக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்துத் தான் ஆக வேண்டும். இனிவரும் நாட்களிலாவது இது போல் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.”, என்று கூறி கூட்டத்திலிருந்து விலகினர். திடீரென கட்செவிக் குழுவில் செய்தி ஒலித்தது. “மதியம் இரண்டு மணிக்கு இணைய வழியில் தலைமையாசிரியர் கூட்டம் நடைபெறும். அனைவரும் பத்து நிமிடங்களுக்கு முன்னதாகவே கீழ்க்கண்ட இணைப்பில் இணையவும்.” ஆகட்டும் என்று சொல்லி ஒருவர் பின் ஒருவரென அனைவரும் கலைந்தனர்.
தலைமையாசிரியரின் விரல்நுனிகள் செல்பேசியின் எண்பலகையில் கோலமிட்டன. அலுவலரின் பெயர் திரையில் ஒளிர இசைக்கும் ஒலியும் கேட்டது. பக்தை வணக்கம் வாய்வழி பயணித்து இறையை அடைந்ததும் மன்னிப்புக் கடிதம் காற்று வழி வரையப்பட்டது. பொம்மை பிடுங்கப்பட்ட குழந்தையின் முகம் வண்ண பலூன்களை கண்டு பிரகாசிப்பதாக தலைமையாசிரியரின் முகம் மாறியது. உரையாடல் உறைய பெருமூச்செறிந்து கைப்பேசியின் அழைப்பு துண்டிப்பதை மிக்க நன்றியுடன் ஏற்றுக் கொண்டார். மறுமுறையாக ஆசிரியர்களிடம் பேசலானார். ஆய்விற்கு வந்த அலுவலர் வகுப்புகளை நேரடி பார்வையிட மீண்டும் வருவதான திட்டத்தை வழிமொழிந்தார். வெறும் அட்டைப்படத்தை வைத்து புத்தகத்தின் தரத்தை தீர்மானிக்க இயலுமா என்ன? சற்று உள்பக்கங்களையும் தான் புரட்டிப் பார்ப்போமே என யோசித்தார் போலும். சில ஆசிரியர்கள் சமாதானமாயினர். சிலர் வெகுண்டெழுந்தனர். அதிகாரியின் மறுவரவிற்காக தன்னையும் தன் வகுப்பையும் தயார் செய்து கொண்டிருந்த ஆசிரியர்கள் மத்தியில் புலி வருது….புலி மெய்யாகவே வருகிறது என்று பயந்து இயங்கியும் இயங்காமலும் சிலர் இசைந்து கொண்டிருந்தனர்.
மணி மூன்றையும் தாண்டியது. அவரது கால் சுவடுகள் ஏனோ இன்னும் பள்ளி வளாகத்தினுள் பதியப்படவில்லை. புரியாத புதிர் தான். “அப்போ அவர் சொன்னது சும்மாதானோ. மன்னிப்புக் கடிதமும் அலுவலகப் படையெடுப்பும் உறுதிதான் போலிருக்கு. அவமானம் நிச்சயமே.” இறுதி மணியடிக்கப்பட்டது. பள்ளி வேளை முடிந்தது. புற்று கலைந்ததும் திசையெட்டும் நகரும் எறும்புகளாக மாணவர் படை வெளியேறியது. அடை மழை பெய்து ஓய்ந்தது போலிருந்தது. ஆசிரியர்களின் விலகலின்மை தான் விசித்திரம். ஆவியாகப் பறந்து செல்பவர்களெல்லாம் அக்கணம் அபூர்வமாக நகரக் கூட இல்லை. எங்கும் நிசப்தம். கைவிரல் மூட்டுகளின் நெட்டியொலி மட்டும் கேட்டது. எதிர்பாராமல் ஆய்வு அதிகாரி புயலென புரண்டு வந்தார். தலைமையாசிரியர் அறைநோக்கி விறுவிறுவென நடைபோட்டார். இறைவனிடம் பாவங்களை சமர்ப்பிக்க செல்வது போல் ஆசிரியர்கள் வரிசையில் நின்றனர். தானியங்கிக் கைகள் வணக்கமிட்டன. சுளுக்குண்ட கழுத்தால் தாழ்த்திய தலைகளை நிமிர்த்த வழியில்லை. வந்தவர் பேச ஆரம்பித்தார். பேசினார். பேசிக்கொண்டே இருந்தார். நாலரை மணிக்கு துவங்கிய புத்திமதியும் சொற்பொழிவும் கால்மணி நேரம் அரை மணி நேரம் என்றில்லாமல் ஒரு மணி நேரத்தையும் தாண்டிச் சென்றது. ஆசிரியர்களின் கால்கள் ரணத்தில் நடனமாடின. நெடுநேர தவமல்லவா! நீண்டதோர் பெரிய உரைக்குப் பிறகு ஒரு நொடி அமைதியுற்றார். பிறகு ராணுவ அதிகாரியைப் போல் மிரட்டல்கள் விடுத்து விளக்கக் கடிதம் எழுதும்படி அனைவரையும் பணித்தார். உடனே ஆளுக்கொரு மூலையில் அமர்ந்தனர். கைகள் மன்னிப்பைக் கடிதத்தில் வரைய ஒரு சிலரது காகிதங்களோ கொஞ்சமாக ஈரமாகின. எழுதிய கடிதங்களை மனதிற்கு பிடிக்காமலேயே வந்தவரது கரங்களில் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதி நேரத்திலாவது தங்களை மன்னித்து இந்த அவலம் பணிப்பதிவேடு வரை செல்லாமல் பாதுகாக்கப்படாதா என்ற ஏக்கமே மிஞ்சியது. அதற்கு மாறாக அனைவரின் கடுதாசிகளையும் பெற்றுக் கொண்டு கோப்புகள் ஆக்கினார்.
“இந்த தவறை இனி தவறி கூட செய்யக்கூடாது. மீண்டுமேதும் இது தொடர்ந்தால் இதோடு நின்று விடாது. கட்டாயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” மீண்டுமாக அனைவரின் தலைகளும் வெட்கிக் குனிந்து உடல் கூசியது. வந்த வேலை முடிந்தது. வளைவுகளை நேர்நிமிர்த்திய தலைகனத்தோடு விடைபெற்று நடந்து வெளியேறினார். தலைமையாசிரியரோ வருத்தம் ஏதும் இல்லாமல் வழக்கம் போல் செல்பேசியில் சிநேகிதிகளோடு உரக்க சிரித்து பேச ஆரம்பித்தார். அவரது இந்த நடவடிக்கையானது அனைத்து ஆசிரியர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. அழைப்பை துண்டித்துவிட்ட தலைமையாசிரியரின் விழிகள் தெளிந்த நீரோடையாயின. “அலுவலரின் சட்டைப்பை பசியில் தாகிச்சது. தீனி போட்டேன். சுருட்டீட்டு போயிட்டார். இனி கவலை வேண்டாம். நிம்மதியாக வீட்டுக்கு போகலாம்.” ஒரு அங்குலம் விழிகள் விரிய கைகள் கன்னத்திற்கு இருக்கை கொடுத்தன. இதற்குத்தானா இத்தனை ஆர்ப்பாட்டமும் அலட்டல்களும்! “பேஷ்… பேஷ்…. நன்னாயிட்டு காரியம் செஞ்சீங்கோ! நாங்க நோக்கு எவ்ளோ தாரது? நீங்கோளே சொல்லுங்களேன்….” “ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் பத்தாயிரம் ரூபாய் தாங்கிய உறையை அவர் வந்ததுமே கொடுத்து விட்டேன். உங்களால் முடிந்தால் இப்போது கொடுங்கள். இல்லையென்றால் பரவாயில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம்.”
இதற்கு எதற்கு மன்னிப்பு கடிதமும் அத்தனை அறிவுரைகளும்? எல்லாம் வெறும் கண் துடைப்பு தான். ஒரு சிலர் இதில் கசப்படைய மற்ற அனைவருமே களிப்படைந்தனர். ஸ்டெல்லா டீச்சருக்கு டபுள் ட்ரிப்புள் ஓகே. அனைவருமே அவரவர் கைப்பையிலிருந்து பணத்தாளை எடுத்து நீட்டினர். ஒன்பது மணிக்கு முன்னரே வந்த லதா டீச்சரையும் தலைமையாசிரியர் விட்டு வைக்கவில்லை. எவ்வளவுதான் உள்ளம் வலித்தாலும் பணத்தை கொடுத்துத்தான் ஆக வேண்டிய நிலைமை. இதனைக் கொண்டாடிய ஆசிரியர்கள் எப்பொழுதும் போல் அவசரம் இல்லாமல் பள்ளிக்கு வரலாம் என்று உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டனர். பணிப்பதிவேடு பாதுகாப்பாயிற்று என்று குதூகலித்தனர். அப்படியாகினும் அவர் உறையில் இட்டது என்னவோ வெறும் ஐயாயிரம் ரூபாய் தான். வரவென்னவோ பத்தாயிரம். தலைமை ஜெகஜால கில்லாடி.கேலிச் சிரிப்பும் உவகைக் கூச்சலும் கூடி ஆனந்தமாய் ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வெளியேறினர்.
மனக்கலக்கத்துடனும் அதிவெறுப்புடனும் லதா டீச்சர் தன் கணவரின் மோட்டார் சைக்கிளுக்காக காத்திருந்தாள். அவர் வரும் வரை காத்திருக்க இதயம் கனத்தது. கொஞ்சம் வீதி முக்கு வரை காலார நடக்கலாம் என்று எட்டு வைத்தாள். ஈரடி நடந்தவுடன் எங்கோ மூரலொலி கேட்டது. இளசுகளின் சிணுங்கல் உரையாடல். புதருக்கு அப்பால் சற்று தூரமாக பார்வை அம்பை வீசினாள். ஆழமாக கூர்ந்து கவனித்ததில் பள்ளிச் சீருடையோடு இரண்டு மேல் வகுப்பு மாணவிகள் தென்பட்டனர். தன் கண்களை தானே நம்ப முடியாமல் கசக்கி பார்த்தாள். பழைய பாழடைந்த சத்துணவுக் கூட்டத்திலிருந்து துப்பட்டாவை சரி செய்து கொண்டே தலைவிரி கோலத்தில் வந்து கொண்டிருந்தனர். பின்னோக்க சில மாணவர்கள் மேற்சட்டையைத் தோளில் போட்டுக் கொண்டு காற்சட்டையை மேலேற்றிக் கொண்டிருந்தனர். தலை சுற்றிற்று. கூடத்திற்கு வெளியே கூலிப் உறைகளும் சரக்கு பாட்டில்களும் சிதறிக் கிடந்தன. கால் தடுக்க கீழ் நோக்கினாள். வழியில் அனாதை புத்தகத்தின் பக்கங்கள் காற்றில் சலசலத்தன.
***
சே.சாருமதி – அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர். குடும்பத்துடன் புளியம்பட்டியில் வசித்து வருகிறார். தீவிர வாசகர். முதல் முயற்சியாக “கல்விக் கறையில” எனும் இச்சிறுகதையை எழுதியுள்ளார். மின்னஞ்சல்: sarusuresh11@gmail.com

