(பிளாட்டோ, அரிஸ்டோட்டில் முதல் பிரெக்ட், Boal வரை)
ரூபன் சிவராஜா
ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு – பாகம் 17
இந்த அத்தியாயம் நாடகத்தின் தத்துவ, அரசியல் மற்றும் சமூகப் பரிமாணங்களை விமர்சன முறையில் ஆராய்கிறது. பிளாட்டோவும் அரிஸ்டோட்டில்லும் நாடகத்தை வெவ்வேறு நிலைப்பாடுகள், புரிதல்களோடு முன்வைக்கின்றனர். அவர்களின் சிந்தனை, முரண்களினூடாக நாடகம் ஒரு கலையாகவும் சமூகத்துடன் தொடர்புடைய ஒன்றாகவும் பரிணமிக்கிறது. நாடகம் வெறும் பிரதிபலிப்பு அல்லது பொழுதுபோக்கு என்ற எல்லைகளுக்குள் மட்டுப்படாமல், அது மனித அனுபவம், அதிகார அமைப்புகள், சமூக ஒழுங்கு மற்றும் மாற்றத்தின் வாய்ப்புகள் குறித்த சிக்கலான கேள்விகளை எழுப்புகிறது. இந்த பின்னணியில், ப்ரெக்ட் மற்றும் Boal ஆகியவரின் நாடகக் கோட்பாடுகள் நாடகத்தை வெறும் அழகியல் அல்லது பொழுதுபோக்கு என்ற எல்லைகளுக்குள் சுருக்கி விடாமல், அதிகார அமைப்புகள் மீது கேள்வியெழுப்புகின்ற – பார்வையாளரைச் சிந்திக்கவும் செயற்படவும் தூண்டுகின்ற- சமூக மாற்றத்திற்கான விமர்சனச் செயல்முறையாக எனப் பல்பரிமாணங்களுடடைய கருவியாக இயங்குகின்றது. இவற்றினூடாக, நாடகம் பார்வையாளரை கலை-காட்சி நுகர்வோர் அல்லது சுவைஞராக மட்டுமல்லாமல், சமூக உண்மைகளை ஆராய்கின்ற-கேள்வியெழுப்புகின்ற-அவற்றை மாற்றுவதற்குப் பங்குகொள்ளும் செயற்பாட்டு நபராக மாற்றும் என்ற மையக் கருத்தை இந்த அத்தியாயம் முன்வைக்கிறது.
ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கின் அழகியல் குறித்துப் பேசும்போது நாடகம் எவ்வாறு ஆற்றுகையாளர், பாத்திரம் என்ற இரண்டு அடிப்படைகளின் வழியாக உருவாகிறது என்பதைக் கவனம்கொள்ளுதல் வேண்டும். ஒருவர் நடிக்கும் போது, அவர் ஒரே நேரத்தில் தானாகவும் மற்றொருவராகவும் (ஏற்றுக்கொண்ட பாத்திமாகவும்) இருக்கிறார். நாடகம் சார்ந்து மனிதனின் இந்த இருமைப்பண்பு (Binary nature/characteristic) அதன் கிரேக்க மூலஅர்த்தத்தில் ‘Hypocrisy’ என வரையறுக்கப்படுகிறது. அதாவது அது முகமூடியை அணிவது (பாத்திரத்தை ஏற்பது) என்பதைக் குறிக்கிறது. இது நாடகத்திற்கே மட்டுமே உரிய விடயம் அல்ல. அன்றாட வாழ்க்கையிலும் மனிதர்கள் தொடர்ச்சியாக பல்வேறு பாத்திரங்களை வகித்து, சூழ்நிலைக்கேற்ப தங்களை வேறுபடுத்தி வெளிப்படுத்துகின்றனர். நாடகம் எல்லாக்காலத்திலும் அதிகார, பொருளாதார உறவுகளின் செல்வாக்கிற்கு உட்பட்டுவந்துள்ளது. கலைத்துவச் சுதந்திரம் என்பது கலைக்கு நிதியளிப்போரால் கட்டுப்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஒரு ஜனநாயகச் சூழலிற்கூட பொருளாதார நலன்கள் ஒருவகையான தணிக்கையாகச் செயற்படுகின்றன. அத்தகு சூழல் நாடகத்தின் முக்கிய அம்சமான மெருகூட்டல், மேம்படுத்தலுக்குத் தடையாக அமைகிறது. மெருகூட்டல் கட்டுப்படுத்தப்படும் போது அல்லது, முன்கூட்டியே தீர்மானிக்கப்படும்போது, உடனடி மற்றும் படைப்பாக்கச் சக்தியை அது இழக்கச் செய்கின்றது. கிரேக்க நாடகத்தின் பாதையில் உரையாடல்கள் நாடக நிகழ்த்துவடிவத்திற்குள் கொண்டுவரப்பட்டமையானது, பல்வேறு கருத்துநிலைகளின் பரிமாற்றத்திற்கு வழிகோலியது. உரையாடல் ஜனநாயத்தின் முதன்மை இணை. பல்வேறு குரல்களுக்கான வெளியை உண்டுபண்ணுவதானது, பல்வேறு சிந்தனைகள், எதிர்வினைகள், கருத்துகள், கருத்துவேற்றுமைகளின் ஊடாக, உலகு பற்றிய புதிய புரிதல்களுக்கான கதவுகளைத் திறக்கின்றது.
பிளாட்டோ மற்றும் அரிஸ்ரோட்டிலுக்கு இடையிலான தத்துவ மோதல் (Philosophical conflict)
நாடகத்தை ஒரு திரிபுவாதமென்று அதனை பிளாட்டோ மறுதலிக்கிறார். ஏனெனில் அது உண்மையைத் திரிக்கிறது என்பது அவரது நிலைப்பாடு. ஆனால் அரிஸ்டோட்டில் நாடகத்தை ஆதரிக்கிறார். உண்மையைப் பகுப்பாய்ந்து புரிந்துகொள்ளும் வாய்ப்புடைய வடிவமாக அவர் அதனைக் கண்டார். இவ்விரு எதிர்நிலைப்பாடுகளின் ஊடாக, நாடகம் வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டும் அல்ல என்றும் – சமூகம், அதிகார அமைப்புகள், மற்றும் மனித அனுபவங்கள் மீது கேள்வியெழுப்புவதற்கான முக்கியமான கருவி என Boal வலியுறுத்துகிறார். உரையாடல் (dialogue) தோன்றிய பிறகு, ஒற்றை ‘அதிகாரத்தின் கருத்து’ மட்டுமே மேடையில் நிலைநிறுத்தப்படாமல், கருத்துகள் ஒன்றோடொன்று மோதும் வாய்ப்பு வருகிறது. உரையாடல் பல வாய்ப்புகளைத் திறக்கிறது. அசல் உலகமே ‘கருத்துலகின் நிழல் நாடகம்’ என்ற கோட்பாட்டினை முன்வைத்த பிளாட்டோ நாடகம் ‘நிழலின் நிழல்’ என்றார். அது மேலும் ‘கெடுதல்’ விளைவிக்கும் என்ற கருத்தினை முன்வைத்து அதனை விரட்டியடிக்கவேண்டும் என்றார்.
அரிஸ்டோட்டில் இதற்கு மாறாக, துன்பியல் நாடக வடிவத்தினை ஆதரிக்கிறார். பார்வையாளர்கள் நாயகனுடன் அநுதாபம் கொள்வதன் மூலம் ஒன்றிப்போகிறார்கள்;. தொடர்ந்து நிகழும் திருப்பம் (Peripeteia: the turning point, the shift in narrative), பேரழிவு (catastrophe) ஆகியவற்றின் வழியே பார்வையாளர் உணர்வுரீதியாக உள்ளீர்க்கப்பட்டு ‘சமூக விதிகளுக்கு’ உட்படும் நபராக ஆகிறார். அதாவது நாடகம் சமூக ஒழுக்கத்திற்கும் அதிகாரத்தின் நிலைப்பாட்டிற்கும் சேவை செய்யும் கருவியாக ஆகலாம் என்பதைக் குறிக்கிறது. ‘Peripeteia’ என்பது கிரேக்க அடியைக் கொண்டுள்ள ஒரு செவ்வியல் இலக்கியக் கலைச்சொல். நாடகப் படைப்பில், சூழ்நிலைகளில் அல்லது கதையாடலின் போக்கில் ஏற்படும் ஒரு திடீர் தலைகீழ் மாற்றத்தைக் குறிக்கிறது. அரிஸ்டோட்டில் தனது ‘கவிதையியல்’ (Poetics) நூலில் முதன்முதலில் பயன்படுத்திய சொல் இது. பொதுவாக இது முதன்மைக் கதாபாத்திரத்தை (protagonist) ஒரு உன்னதமான நிலையிலிருந்தோ அல்லது மகிழ்ச்சியிலிருந்தோ வீழ்ச்சிக்குக் கொண்டு செல்லும், அல்லது சில நேரங்களில் அதற்கு நேர்மாறாகவும் அமையலாம். நாடகத்தின் கோக்கில் நிகழும் சாதாரணமானதொரு மாற்றமாக அல்லாமல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் தீர்க்கமான தருணமாக அது அமைக்கப்படும். இது பெரும்பாலும் முதன்மைக் கதாபாத்திரம் எடுக்கும் ஒரு வினையாலேயே தூண்டப்படுகிறது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட முடிவை நோக்கியே அந்த வினையை ஆற்றுவார்கள், ஆனால் அது எதிர்பாராதவிதமாக அதற்கு முற்றிலும் நேர்மாறான விளைவை ஏற்படுத்திவிடும். தொன்ம துன்பியல் நாடகங்களில் (classical tragedy), Peripeteia என்பது நேரடியாக உண்மையை உணரும் அல்லது கண்டறியும் தீர்க்கமான தருணத்தை நோக்கிச் சென்று, இறுதியில் பேரழிவில் (catastrophe) முடியும்.
அரிஸ்டோட்டலின் நாடகத் தத்துவம்
அரிஸ்டோட்டலின் நாடகத் தத்துவம் பின்வருமாறு அமைகின்றது: பார்வையாளர்கள் கதாநாயகனுடன் (protagonist) உணர்வுப்பூர்வமாக ஒன்றிப்போகின்றனர் (empathy). அவர்கள் கதாநாயகனின் தலை வழியே சிந்திக்கிறார்கள், அவனது இதயத்தின் வழியே உணர்கிறார்கள். கதாநாயகன் தான் செய்த தவறுக்காக மனம் வருந்தினால், மனப்பூர்வமாக மன்னிப்புக் கோரினால் எல்லாம் சரியாகிவிடும். பார்வையாளரையும் கதாநாயகனையும் இணைக்கும் மதிப்பார்ந்த, தவிர்க்க முடியாத உணர்வொத்திசைவு கவித்துவமாகப் பார்வையாளருக்குள் கதாநாயகனின் விருப்பத்தை விதைக்கிறது. கதாநாயகனின்; அந்த ஒப்புதல் வாக்குமூலத்தைக் கேட்கும் பார்வையாளர்கள், தமக்குத் தாமே ஒரு உறுதிமொழியை அளிப்பார்கள். இனிமேல் ஒருபோதும் தவறு செய்ய மாட்டோம் என்று தமக்குள் சத்தியம் செய்வார்கள். கதாநாயகனின் தவறுகள் பார்வையாளரின் நடத்தையைச் சரிசெய்ய உதவும், வளைந்திருப்பதை நிமிர்த்த உதவும். துன்பியல் நாடகம் என்பது ஒரு செயலின் பிரதிபலிப்பு (imitation). ஆனால் பிரதிபலிப்பு என்பது அப்படியே நகல் எடுப்பது (copy) அல்ல. படைக்கப்பட்ட பொருட்களின் தத்துவத்தை மீண்டும் உருவாக்குவதாகும். பிரதிபலிப்பு என்பது ஒரு உயிருள்ள, ஆற்றல் மிக்க சக்தி. அது ஒரு வெறும் நகல் அல்ல. துன்பியல் நாடகம் பார்வையாளர்களின் இதயங்களுக்குள் ஆழமாகச் சென்று, ஆழ்ந்த உணர்ச்சிகளின் மூலம், அவர்களது எண்ணங்களையும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத அவர்களின் நடத்தைகளையும் மாற்றுகிறது. பார்வையாளர்களைச் சமூக உறவுகளுக்குத் தகுதியுடையவர்களாக மாற்றுகிறது. ஆனால் அந்தச் சமூக உறவுகளின் விதிமுறைகளைத் தீர்மானிப்பது பார்வையாளர்கள் அல்ல, மாறாக எழுத்தாளரின் கவித்துவ சக்தியின் வழி, அரசியல் மற்றும் பொருளாதார சக்திகளே அதனைத் தீர்மானிக்கின்றன.
இந்தத் தர்க்க அடிப்படையில் அரிஸ்டாட்டில் எழுதிய ‘The Poetics’ நூல் முக்கியமானது என்று குறிப்பிடும் Boal அதனை வாசகர்களுக்குப் பரிந்துரைக்கின்றார். பல நூற்றாண்டுகளாக இந்நூல் ‘துன்பியல் நாடகத்தின் அதிகாரப்பூர்வ வரலாறு’ என்ற அந்தஸ்தைப் பெற்றுத் திகழ்ந்ததோடு, சுதந்திரமான நாடக வெளிப்பாட்டின் மீது ஒரு இறுக்கமான சட்டையாக (straitjacket) இருந்ததாகவும் குறிப்பிடுகின்றார். கிரேக்கத் துன்பியல் நாடக ஆசிரியர்கள் அனைவரும் எல்லா நேரங்களிலும் அரிஸ்டோட்டலின் ‘Poetics’ விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியவில்லை என்பதை Boal விளக்குகின்றார். ஆயினும் ‘Poetics’ ஒரு முன்மாதிரியாகவும் கோட்பாடாகவும் இருந்தது.
ஜேர்மன் நாட்டு அரங்கவியலாளரும் கவிஞருமான பெர்டோல்ட் ப்ரெக்ட் (Bertolt Brecht – 1898–1956) இந்த “அநுதாப மயக்கம்” ஆதிக்கவர்க்கத்திற்கு உதவுகிறது என்று விமர்சித்து, ‘அந்நியப்படுத்தல்’ மூலம் பார்வையாளன் தன் சொந்த அறிவால் சிந்திக்க வேண்டும் என்கிறார். ஆற்றுகைப் பாத்திரத்தின் முகமூடியின் பின்னால் மறையாமல், அதை வெளிப்படையாகக் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 20ஆம் நூற்றாண்டின் பெரும் புகழ்மிக்க ஜேர்மன் நாடக ஆசிரியர், கவிஞர் மற்றும் நாடகக் கோட்பாட்டாளர் ப்ரெக்ட். அவரே பாரம்பரிய யார்த்தவாத நாடக முறையிலிருந்து (traditional realistic theatre) முற்றிலும் மாறுபட்ட ‘காப்பிய நாடகம்’ (Epic Theatre) எனும் வடிவத்தை உருவாக்கியவர்.
அன்னியமாதல் விளைவு
பார்வையாளர்கள் நாடகத்தின் உணர்ச்சிகளில் மூழ்கிடாது (emotional identification), விமர்சன ரீதியாகவும் (critical), சிந்திக்கும் வகையிலும் (reflective) இயங்கவேண்டுமென்பது ப்ரெக்டின் நிலைப்பாடாகும். எனவே அன்னியமாதல் விளைவு (alienation effect or distancing effect) கருத்தியலை முன்வைத்தார். அதாவது பார்வையாளர்கள் ஒரு நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுவதற்கான ‘நுட்பம்’ இதுவாகும். கதையோட்டத்தை இடையில் துண்டிக்கும் வகையில் பாடல்களின் உள்ளீடு, நடிகர்கள் நேரடியாகப் பார்வையாளர்களை நோக்கி உரையாடுவது மற்றும் மேடையின் தனிவட்டஒளிகளை (spotlights) பார்வையாளர்களுக்குத் தெரியும் வண்ணம் வைப்பது போன்ற உத்திகள் இதில் அடங்குகின்றன. இவரது படைப்புகள் அரசியல் செய்திகளைக் (political messages) கொண்டிருந்தன. பெரும்பாலும் மார்க்சிய சிந்தனையின் தாக்கத்தைக் கொண்டிருந்தன. சமூக அநீதிகளையும், சமுதாயத்தில் நிலவும் முரண்பாடுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதை இவை நோக்கமாகக் கொண்டிருந்தன. பார்வையாளர்கள் நாடகத்தில் உணர்வுப்பூர்வமாக மூழ்கிவிடாமல், தூரத்திலிருந்து சமூகப் பிரச்சினைகளைச் சிந்திக்கும் வகையில் இந்த வடிவத்தை அவர் உருவாக்கினார். மேடையில் நிகழ்த்தப்படுபவை ஒரு புனைவு என்பதைப் பார்வையாளர்களுக்கு நினைவுபடுத்தும் நுட்பங்களைப் பயன்படுத்தினார்.
உணர்வொத்திசைவு மெதுவாக உள்ளுணர்வுக்குள் ஊடுருவுவதன்; மூலம், பார்வையாளர்கள் மீது தாக்கம் செலுத்துகின்றது. இந்தத் தாக்கம் செலுத்தல் தொழிலாளர்களுக்கு உகந்ததல்ல. அது சுரண்டலைத் தொடரச்செய்ய உதவுகிறது. ஆகவே உணர்வொத்திசைவு நீக்கப்பட்டதாக நாடகம் நிகழ்த்தப்படவேண்டும், அதற்குப் பதிலாக அந்நியமாதல் நிகழவேண்டும் என்பது அவரது வலியுறுத்தலாகும். ஆனாலும் பிரெக்ட்டின் நாடகத்திலும் ‘மேடை- அரங்கம்’, ‘ஆற்றுகையாளர்-பார்வையாளர் இடையேயான சுவர் முழுவதும் உடைக்கப்படவில்லை. பேசும் அதிகாரம் ‘நாடகாசிரியர் – நடிகரிடமே’ இருந்தது. பார்வையாளர்கள் அதனைச் ‘செவிமடுப்போர் – பார்ப்போராக’ மட்டுமே இருந்தனர். இதன் அடுத்த கட்டமாக Boal வலியுறுத்தியது, பார்வையாளர் மேடையை ‘ஆக்கிரமித்து’ செயலில் இறங்க வேண்டும் என்பதை முன்னரே பார்த்துள்ளோம்.
தன்னை ‘அன்னியமாதல் விளைவின் நண்பன்’ எனக் குறிப்பிடும் Boal, அதற்கு அப்பாலும் செல்லமுடியும் என்று கூறுகின்றார். கதாபாத்திரங்களால் ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பது ஒரு பெரிய முன்னேற்றமாகும். பார்வையாளர்கள் ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பது மட்டும் போதுமானதா என்ற கேள்வியை எழுப்பும் அவர், நடிகர்களும் (கதாபாத்திரங்களும்) தொடர்ந்து மேடையை ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்கலாமா என்ற சிந்தனையை முன்வைக்கிறார். பார்வையாளர்களின் ஆக்கிரமிப்பு (invasion) அவசியம், அவர்கள் தனது விமர்சன உணர்வை (critical consciousness) மட்டுமல்ல, தனது உடலையும் விடுவிக்க வேண்டும். மேடையை ஆக்கிரமித்து, அங்கு காட்டப்படும் பிம்பங்களை மாற்ற வேண்டும். மாற்றும் செயல் என்பது உருமாற்றத்திற்குரியது (The act of transforming is transformative).
நாடகத்தின் படிநிலை மாற்றங்கள்
பார்வையாளர் கதாபாத்திரமாக உருமாற வேண்டும். அதற்குரிய வெளியை எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு அடிபணிய அல்ல, மாறாகத் தனக்குச் சரி என்று தோன்றும் பாதையில் பாத்திரத்தினை வழிநடத்த வேண்டும். அனைத்து பார்வையாளர்களும் சொற்களை (வாதத்தை) ஆளுகை செய்யும் உரிமையைப் பெற்று, ஜனநாயக ரீதியாகத் தங்களது கருத்துக்களை ஆற்றுகையின்; மூலம் (பேச்சால் மட்டுமல்ல) வெளிப்படுத்தும் உரிமையைக் கொண்டிருக்க வேண்டும். பார்வையாளர் தமது எண்ணங்கள் மற்றும் இதயத்தில் போராட்ட உத்திகளையும், விடுதலைக்கான வழிகளையும் பயிற்சி செய்யவேண்டும்.
கீழ்ப்படிய மறுக்கும் கதைநாயகன் கிளர்ச்சி செய்து, குழுப் பாடல், கூட்டுக் குரல் வடிவத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். முகமூடி, பாத்திரத்தின் பின்னால் நடிகரை மறைத்தது. யதார்த்த நாடகம் அந்த இரண்டையும் ஒன்றாகக் கலக்கச் செய்து, நடிகரைக் ‘கரைந்து’ போகச் செய்தது. நடிகன், பாத்திரத்தின் உணர்வொத்திசைவுக் கட்டளைக்கு இசைவாகச் செய்யப்பட்டான். பிரெக்ட் அவற்றை மீண்டும் பிரித்தெடுக்க முன்மொழிந்தார். Boal பார்வையாளர் நடிகராகவும் கலைஞராகவும் தனது பங்கை ஏற்க வேண்டும் என்ற இலக்கோடு செயற்பட்டார். கதாபாத்திரத்தையும் மேடையையும் ஆக்கிரமித்து, உரிய இடத்தை-வெளியை எடுத்துக்கொண்டு, மாற்று வழிகளை முன்மொழிய வேண்டும் என்று விரும்பினார். Boal வலியுறுத்தும் இந்த ஆக்கிரமிப்பு ஒரு அடையாளபூர்வமான மீறல் (symbolic transgression). ஒடுக்குமுறைகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள நாம் நிகழ்த்தவேண்டிய அனைத்து மீறல்களுக்கும் இது ஒரு அடையாளமாகும். வன்முறை அற்ற மீறல் இல்லாமல், பழக்கவழக்கங்களின் மீறல் இல்லாமல், ஒடுக்குமுறை சூழ்நிலையிலிருந்து மீறல் இல்லாமல், அல்லது மாற்றப்பட வேண்டிய விதிகள், சட்டங்களிலிருந்து மீறல் இல்லாமல் விடுதலை இல்லை. விடுதலை பெறுவது என்பது மீறுவதாகும், உருமாற்றுவதாகும். எது இல்லையோ அதை உருவாக்குவதே புதியதைப் படைப்பதாகும். மீறுவது என்பது இருத்தலைக் குறிக்கின்றது (To transgress is to be). விடுதலை பெறுவது என்பது இருத்தலுக்கானது என இந்த இயங்குதலை Boal விளக்குகின்றார்.
மேடையை ஆக்கிரமிப்பதன் மூலம், பார்வையாளர் உணர்வுப்பூர்வமாக ஒரு பொறுப்பான செயலுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கின்றார். மேடை என்பது யதார்த்தத்தின் பிம்பம் மற்றும் ஒரு புனைவு. ஆனால் பார்வையாளர் புனைவு அல்ல. அவர் மேடையிலும் அதற்கு வெளியேயும் இருக்கின்ற ஒருவர். பார்வையாளர் என்பது ஒரு இரட்டை யதார்த்தம். மேடையை ஆக்கிரமிப்பதன் மூலம், நாடகத்தின் புனைவில் அவர் பயிற்சி பெறுகிறார், புனைவில் மட்டுமல்ல, அவர் சார்ந்திருக்கும் சமூக யதார்த்தத்திலும் செயற்படுபவராக ஆகுகின்றார். புனைவை மாற்றுவதன் மூலம், அவர் தன்னைத் தானே மாற்றியும் கொள்கிறார்.
மனிதகுலத்தின் தோற்றமும் சமூக வளர்ச்சியும்: ஒரு நீதிக்கதை
மனிதகுல வரலாற்றையும் சமூக வளர்ச்சியையும் பிரதிபலிக்கும் வகையில் ஒரு கதையாடலை ஒடுக்கப்பட்டோருக்கான அழகியல் நூலின் (The Aesthetics of the Oppressed) ‘Theatre as a Martial Art’ அத்தியாயத்தில் Boal முன்வைக்கின்றார். இது மனிதகுலத்தின் தோற்றம், சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அரசியல் விழிப்புணர்வு பற்றிய ஒரு உருவகக் கதையாக அமைந்துள்ளது. அது பண்டைய ஆபிரிக்காவின் செழிப்பான காடுகளில் வாழ்ந்த குரங்குகளின் கதையாகச் சொல்லப்படுகிறது. ஒரு ‘பேரரசு மரத்தில்’ (Empire tree), குரங்குகள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்தன. அங்கு தெளிவான வர்க்க வேறுபாடுகள் இருந்தன. ஒரு சில கொழுத்த குரங்குகள் மரத்தின் உச்சியில் சகல வசதிகளுடனும் வாழ்ந்தன. அதே சமயம் பல மெலிந்த குரங்குகள் மரத்தின் அடியில் ஏழ்மையிலும் ஒடுக்குமுறைக்குள்ளும் வாழ்ந்தன. இந்த ஏற்றத்தாழ்வு உருவானதற்குக் காரணம், கொழுத்த குரங்குகள் செழித்த வளங்களைக் கைப்பற்றி, வாரிசுஉரிமை மற்றும் தெய்வீகஉரிமை போன்ற கூற்றுகளின் மூலம் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டன. மெலிந்த குரங்குகள் நீண்ட காலமாக இந்தச் சூழ்நிலையைத் தமது தலைவிதி என ஏற்றுக்கொண்டன. ஆனால், சில குரங்குகள் இந்த அநீதியைப் பற்றிக் கேள்வி கேட்கத் தொடங்கின. இவ்வாறாகவே வர்க்கப் போராட்டமும் அரசியல் விழிப்புணர்வும் ஆரம்பக் கட்டத்தில் உருவாகின. அதிகாரம், ஏற்றத்தாழ்வு மற்றும் நீதி பற்றிய கருத்துக்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை இக்கதை இயம்புகின்றது. சந்தேகம் மற்றும் விமர்சன ரீதியான சிந்தனையே உண்மைக்கும் மாற்றத்திற்கும் ஆரம்பம் என்பதை இது உணர்த்துகிறது. இறுதியில், ஒரு பேரழிவு தரும் வறட்சி உலகத்தைத் தாக்குகிறது. இது இயற்கையிலும் சமூகத்திலும் ஏற்படும் ஒரு வியத்தகு மாற்றத்தைக் குறிக்கிறது.
மாற்றமும் விழிப்புணர்வும்: ஒரு உவமைக் கதை
ஒரு அழிவுகரமான வறட்சி, பசுமையான ஆப்பிரிக்காவை இரத்தச் சிவப்பாகவும், எரியுண்ட நிர்வாண நிலப்பரப்பாகவும் மாற்றுகிறது. இந்த வறட்சியால் எறும்புகளும் குரங்குகளும் சமமாகப் பாதிக்கப்படுகின்றன. அந்தப் பேரழிவின் மத்தியில் ஒரு உண்மை உணரப்படுகிறது. கொழுத்த குரங்குகள் உண்மையில் உயர்ந்தவை அல்ல. மரக்கிளைகளே (உயரமும் சடைத்த தன்மையும்) அத்தகைய ஒரு மாயையை (optical illusion) உருவாக்கின என்பதை மெலிந்த குரங்குகள் உணரத்தலைப்பட்டன. உண்மையில் அனைவரும் சமமான உயரத்தைக் கொண்டவர்களே. யார் வேண்டுமானாலும் எழுந்து நின்றால் உச்சியை அடைய முடியும். கொழுத்த குரங்குச் சமூகம், உணவு தேடித் தரைக்கு இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் போது, தாங்கள் இதுவரை நேராக மட்டுமே பார்த்தவற்றை, இப்போது அவர்கள் தலையை உயர்த்தி தொடுவானத்தைப் (horizon) பார்க்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். தொடுவானம் எப்போதும் வெகுதொலைவில் உள்ளது. ஆனால் மனிதரின் நோக்கம் அதை அடைவது அல்ல. அதைப் நோக்கிப் பயணிப்பதேயாகும். அந்தத் தேடலில் ஒருவரது பார்வை விரிவடைவதோடு, புதிய வாய்ப்புகளும் உருவாகுகின்றன. இந்த புதிய பார்வைத்திறன் உடலில் மாற்றத்தை உருவாக்குகிறது. நிமிர்ந்து நிற்பதன் மூலம் முன்னங்கால்கள் கைகளாகவும், பின்னங்கால்கள் பாதங்களாகவும் மாறுகின்றன. தொடுவானத்தை நோக்கும் கால அளவிற்கு ஏற்ப மூளை வளர்கிறது. புதிய எண்ணங்கள் புதிய வெளிகளைக் கண்டடைகின்றன. தொடுவானம் நோக்கிய பார்வையுடன் சந்தேகங்களும் பெரும் கேள்விகளும் எழுகின்றன. நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? நிலவுகின்ற துயரங்களுக்குப் பின் ‘ஒளிந்திருக்கும்’ அதிகாரம் உள்ளதா? உலகத்தை எவ்வாறு புரிந்துகொள்வது? போன்ற கேள்விகள் எழுகின்றன.
சீரிழந்த இந்தச் சூழலில், அதிகாரத்தை இழந்த கொழுத்த குரங்குகள் மீண்டும் கட்டுப்பாட்டைப் பெற முயல்கின்றன. அவை ஒரு ‘கோவிலை’ (Temple) முன்மொழிகிறார்கள். அது வழிபாட்டிற்கான ஒரு குறிப்பிட்ட இடமாக இருக்கும், ஏனைய நேரங்களில் அனைவரும் உழைக்க வேண்டும். இது பழைய வர்க்கப் பிரிவினையை மீண்டும் கொண்டு வரும் என்று சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அனைத்துக் கிளைகளிலும் அனைத்து குரங்குகளும் என்ற ஒரு புதிய உன்னதக் கனவைப் (utopia) புரட்சியாளர்கள் முன்வைக்கின்றனர். இருப்பினும், கொழுத்த குரங்குகள் அச்சத்தையும் அழுத்தத்தையும் முன்னிறுத்தி வெல்கின்றன. ஒரு குகையில் கேட்போர் கூடம் (auditorium) ஒன்றினை உருவாக்குகின்றன. அங்கு பொதுமக்கள் பிரார்த்தனை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். தலைவர்கள் அவர்களுக்கு மேலே அமர்ந்திருப்பார்கள். கோவில் என்பது நம்பிக்கையின் கல்லறையாகிறது. பின்னர், அவர்கள் பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்காக ஒரு ‘குடிமக்கள் குகையை’ (Citizen cave) அறிமுகப்படுத்துகிறார்கள்;. அங்கு ஒரு சிலரே அனைவரின் சார்பாகவும் பேசுவார்கள். அதற்கு வெளியில் உள்ளவர்கள் மௌனம் காக்க வேண்டும். ஒருமுறை வாக்களித்தவுடன் அதிகாரம் மறைந்துவிடுவதால், வாக்களிக்கும் உரிமை வெறுமையாக உணரப்படுகிறது. சிலர் தொடுவானத்தைக் கண்டமையினால், அவர்கள் கலையில் ஈடுபட்டுத் தேடல்களை மேலும் வளர்க்கத் தொடங்குகின்றனர். அவர்கள் ஓவியம் வரைகிறார்கள், நடனமாடுகிறார்கள், இறுதியில் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள நாடகத்தை உருவாக்குகிறார்கள். அதற்குப் பதிலடியாக, கொழுத்த குரங்குகள் கலையையும் ஒரு மூன்றாவது குகையில், அதாவது ஒரு கலைக் குகையில் (Art cave) அடைக்கிறார்கள். இதன் மூலம் படைப்பாற்றல் மற்றும் புரட்சிகரமான சிந்தனைகள் ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
விழிப்புணர்வு, விமர்சனச் சிந்தனை, கூட்டுச் செயற்பாடு, சமூக மாற்றம்
கலைக்கான வெளியும்;கூட ‘நாடகத்தின் கல்லறை’ ஆக மாற்றப்பட்டதை அடுத்துச் சில குரங்குகள் எல்லா நம்பிக்கையையும் இழந்துவிடுகின்றன. நம்பிக்கை அற்ற, ஜனநாயக விவாதம் அற்ற, வாழ்வில் இனியவை அற்ற நிலைகள் வாழ்வை வெறும் தப்பிப்பிழைத்தலும் சேட்டைகளுமாகச் சுருக்குகின்றன. ஆனால் சிலர், தொடுவானம் எப்போதும் சில ஆச்சரியங்களைத் தரும் என்ற எண்ணத்தை இறுகப்பற்றிக் கொள்கின்றனர். அடையக்கூடிய இலக்காக அல்லாத போதும், அதை நோக்கிச் செல்லும் பயணத்துக்கான அர்த்தத்தைத் தரும் ஒரு திசைகாட்டியாக வரித்துக்கொள்கின்றனர். தொடுவானத்தைப் பிடித்து இழுக்க முடியாது. கனவு போலவும் கற்பனை போலவும் அது முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஒன்றும் அல்ல. நமக்கு உந்துதல் தந்து முன்நகர்த்தும் ஒரு தூண்டுதலே. இந்த உணர்வைப் புரிந்ததும், குரங்குகள் மீண்டும் நம்பிக்கை, இருத்தலியற் தத்துவம் குறித்துச் சிந்திக்கத் தொடங்குகின்றன. சுதந்திரமான திறந்த விவாதத்தை மீட்டெடுப்பதனூடு, உலகை மேலும் புரிந்துகொள்ள முயல்கின்றன. அதன் பொருட்டு எந்த நேரத்திலும், எந்தக் காரணத்திற்காகவும் நாடகம் உள்ளிட்ட கலைகளைச் செய்யலாம் என்ற முடிவுக்குவருகின்றன. அவை எந்தக் கோவிலையும் இடித்துவிடவில்லை. ஆனால் நம்பிக்கையும், ஜனநாயகமும், கலைகளும் மரக்குகைகளின் கற்சுவர்களுக்குள் இல்லை. அவை குரங்குகளாகிய அவைகளுக்கு உள்ளேயே இருக்கின்றன என்பதை உணருகின்றன. விழிப்புணர்வு, விமர்சனச் சிந்தனை மற்றும் கூட்டுச் செயற்பாடுகள் எவ்வாறு சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை விளக்கவும், அனுமதிக்கப்பட்ட ‘வெளிப்பாட்டு வடிவங்கள்’ மூலம் எவ்வாறு அதிகார அமைப்புகள்; கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்த முயல்கின்றன என்பதைக் காட்டுவதற்கும், சமூக ஒழுங்கு மற்றும் அதிகாரம் குறித்த இந்த உருவகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
***
ரூபன் சிவராஜா – நார்வேயில் வசிக்கும் இவர் கவிதைகள், கலை இலக்கியத் திறனாய்வு மற்றும் அரசியல் கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘அதிகார நலனும் அரசியல் நகரவும்’, ‘எதிர்ப்பரசியல்’ (சர்வதேச அரசியல் ), ‘கலைப்பேச்சு’ தொகுதி 1, தொகுதி 2 (திரை | நூல் | அரங்கு பற்றிய திறனாய்வு ), ‘எழுதிக் கடக்கின்ற தூரம்’, ‘சொற்களைச் செமிக்கும் கடல்’ (கவிதைகள் ) என இதுவரை 6 நூல்கள் வெளிவந்துள்ளன. மின்னஞ்சல் – svrooban@gmail.com

