Saturday, August 8, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்மதார் கவிதைகள்

மதார் கவிதைகள்

1.

செத்த பறவை
மெத்தப் படித்த
சொச்ச அறிவை
வெச்ச இடமும்
வானம் என விரிஞ்சதே

2.

கேட்டிலையோ

காற்றுக்கு வாய் இருந்தால்
(இருந்தால் என்ன, இருக்கிறது)
வாய் திறந்து பேச முடிந்தால்
(முடிந்தால் என்ன, முடியும்)
கேட்க ஒரு செவி வாய்த்தால்
(வாய்த்தால் என்ன, வாய்த்திருக்கிறது)
அதுவும்
(அதுவும்)
மறுமொழி உரைத்தால்
(உரைத்தால் என்ன,
உரைக்கிறது உரைக்கிறது)

3.

முரட்டுத்தனமாக
மேவு என்மேலே
என்பு நொறுங்க
இயங்கு

என் குறிக்குப் பேய் பிடித்தது போல்
உன் குறிக்கும் பிடித்ததா

ஒருவருக்கொருவர்
பேய் ஓட்டிக்கொள்ளும் ஏற்பாடுதானா இது

தணிந்த பிறகு

யட்சி இல்லையா
தேவி இல்லையா
வெறும் பெண்ணா

சாமியில்லையா
அனங்கனில்லையா
வெறுமனே ஆணா

தலையணையெங்கும்
சிதறியிருக்கிற
மலரிதழ்கள்

ஓங்கி அறைந்த அதிர்ச்சியில்
கிடக்கும்
உள்ளாடைகள்

அதோ
மெளனமாய்
வீசிக்கொண்டிருந்த அலைகளின் சத்தம்
மெல்லக் கூடுவதைக் கேள்

பகல் பன்னிரண்டு மணிக்குச்
சூர்யோதயம்

அதோ
குளித்துக் கூந்தல் உலர்த்தி வருகிறாள் பார்

(உடுக்கை ஒலிக்கிறது)

4.

கோழியின் கால்களில்
நட் சத் ரம்
பதித்துப் பதித்து நடக்குமது
எத்தனை நட்சத்ரங்களைத்தான் நடுகிறது
எண்ண எண்ணத் தீராத
சூட்சுமம் புரிந்தது இப்போது

5.

நான் கால்களை
பிடித்துக்கொண்டேன்

அவர்
கைகளிரண்டையும் சேர்த்து அழுத்திக்கொண்டார்

முகவாய்க்கட்டையையும்

தாதி
முகத்தில் பொருத்தினாள்
ஆவி பிடிக்கும் கருவியை

குழந்தை
வீல் வீல் என அழுதது

அழுகிற அளவு
வலி இல்லை?

குழந்தை
அழுதது
வேறு சில காரணங்களுக்காக

6.

+

பார்க்கும் எண்களையெல்லாம் கூட்டுகிறேன்
டூவீலர்கள் கார்களின் வண்டி எண்களை
கடைகளின் பதிவு எண்களை
வீடுகளின் கதவு எண்களை
கண்ணால் காண்கிற எண்கள் அனைத்தையும் கூட்டுகிறேன்
வெறிபிடித்தது போல
கூட்டுகிறேன்
கூட்டிக்கூட்டி ஒரே எண்ணாக்க முயல்கிறேன்
ஒன்றாய்
ஒத்துமையாய்
ஒண்ணுக்கொண்ணாக

***

மதார் – கவிஞர். வெயில் பறந்தது, மாயப்பாறை ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது, கோவை விஜயா வாசகர் வட்டத்தின் மீரா விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். kavithaigal.in இணைய இதழின் பொறுப்பாசிரியர்களில் ஒருவர். தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார். மின்னஞ்சல் : matharmohideen24@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here