ஆ.ஹரிகிருஷ்ணன்
1879-இல் ஜார்ஜ் டாப்மேன் கோல்டி என்பவரால் ஆப்பிரிக்காவில், நைஜர் நதிக்கரையில் இருந்த பல்வேறு பிரிட்டிஷ் வர்த்தக நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ‘யுனைடெட் ஆப்பிரிக்கன் கம்பெனி’ உருவாக்கப்பட்டது. இது ‘நேஷனல் ஆப்பிரிக்கன் கம்பெனி’ என்று மாறப்பட்டு, இறுதியாக 1886-இல் ‘ராயல் நைஜர் கம்பெனி’ என்று பெயர் மாற்றமடைந்தது. 1900-இல் ராயல் நைஜர் கம்பெனி தனது நிர்வாகத்தைப் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் ஒப்படைத்த பின், நைஜர் நதிக்கரையின் வடக்கிலும் தெற்கிலும் உள்ள சுமார் 250 இனக்குழுக்களை ஒன்றிணைத்து, 1914-இல் ‘நைஜீரியா’ எனும் நாடு உருவாக்கப்பட்டது.
நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த ‘ஹவுசா-புலானி’ இன மக்கள் இஸ்லாமிய மதத்தைத் தழுவிய மிகப்பெரிய இனக்குழுவாகத் திகழ்ந்தனர். தெற்கில் ‘இக்போ’ இனமக்களும், தென்மேற்கில் ‘யோருபா’ இனமக்களும் வாழ்ந்து வந்தனர். 1960-இல் நைஜீரியா பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு கூட்டாட்சி அமைப்பாகச் செயல்படத் தொடங்கியது. சுதந்திரத்திற்குப் பிறகும் நைஜீரியாவில் தங்கள் வியாபாரம் தங்குதடையின்றி நடக்க வேண்டும் என்பதற்காக, பிரிட்டிஷ் அரசு அதிகார முழுமையையும் வடக்கில் இருந்தவர்களுக்கே கொடுத்தது. வடக்கில் இருந்த ஆட்சியாளர்களும் பிரிட்டிஷாருக்குச் சாதகமாகச் செயல்பட, கூட்டாட்சியில் விரிசல் விழத் தொடங்கியது. பல பூசல்களுக்குப் பின், 1967-இல் தெற்கு நைஜீரியா பிரிந்து ‘பியாஃப்ரா’ என்ற பெயரில் தனிநாடாகச் செயல்படத் தொடங்கியது. இதனால் நைஜீரியாவில் கொடூரமான உள்நாட்டுப் போர் வெடித்தது. 1970-இல் பியாஃப்ராவின் அதிபர் ஒஜுக்வு நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல, பியாஃப்ரா மீண்டும் நைஜீரியாவுடன் இணைக்கப்பட்டது. இந்த மூன்று ஆண்டு காலப் போரில் 3 மில்லியனுக்கும் அதிகமான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். சிமாமந்தா எங்கோசி அடிச்சி எழுதி தமிழில் லதா அருணாச்சலம் மொழிபெயர்த்த “அரை மஞ்சல் சூரியன்”நாவலுக்கான வரலாற்று பின்னணி இதுவே.
நிகழ்காலத்தில் வாழ்க்கையின் பல்வேறு ருசிகளை அனுபவித்துக்கொண்டும், எதிர்கால முன்னேற்றத்தைப் பற்றிய கனவுகளைச் சுமந்துகொண்டும் செல்லும் மனிதர்களின் மீது, எதிர்பாராத விதமாக ‘போர்’ எனும் புயல் தாக்கினால் அவர்களின் வாழ்க்கை எப்படி மாறும் என்பதை எழுத்தாளர் சிமாமண்டா எங்கோசி அடிச்சி எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் ‘அரைமஞ்சள் சூரியன்’ புத்தகத்தில் நம் கண்முன்னே கொண்டுவந்திருக்கிறார். இந்நாவலின் தலைப்பான ‘அரைமஞ்சள் சூரியன்’ என்பது, 1967 முதல் 1970 வரை தனிநாடாகச் செயல்பட முயன்ற ‘பியாஃப்ரா குடியரசின்’ (Republic of Biafra) தேசியக் கொடியில் இருந்த முத்திரையைக் குறிப்பதாகும்.
இந்தக் கதை ஐந்து முக்கியக் கதாபாத்திரங்களின் கோணங்களில் இருந்து விரிவடைகிறது. கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து, பல்கலைக்கழகப் பேராசிரியரின் வீட்டில் வேலைக்காரனாகச் சேரும் 13 வயதுச் சிறுவன் உக்வு; செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்த அழகான, கல்வி கற்ற பெண்ணான ஒலான்னா, தனது ஆடம்பர வாழ்க்கையைத் துறந்து பேராசிரியர் ஒடேனிக்போவின் காதலியாக அவருடன் வசிப்பவள்; புரட்சிகர அரசியல் சிந்தனைகளும், தன் இக்போ இனத்தைப் பற்றிய பெருமிதமும் கொண்ட, தாயின் சொல்லைத் தட்டாத பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒடேனிக்போ; இக்போ கலையின் மீது பேரார்வம் கொண்டு லண்டனிலிருந்து லாகோஸுக்கு வரும் பிரிட்டிஷ் எழுத்தாளன் ரிச்சர்ட்; தந்தையின் வியாபாரத்தைக் கவனித்துக்கொள்ளும், எதற்கும் உணர்ச்சிவசப்படாமல் மூளையை மட்டும் பிரயோகிக்கும் தைரியமான பெண் கைய்னெனே. உள்நாட்டுப் போரினால் இவர்களின் வாழ்க்கை எவ்வாறு தலைகீழாக மாறுகிறது என்பதே நாவல்.
ஆசிரியர் இந்தப் புத்தகத்தை இரண்டு காலகட்டங்களாகப் பிரித்து எழுதியிருக்கிறார். 1960-களின் முற்காலம் சுதந்திரத்திற்குப் பிந்தைய நைஜீரியாவின் நம்பிக்கை நிறைந்த காலம். மேட்டுக்குடி மக்களின் அரசியல் விவாதங்கள், பெருமுதலாளிகளின் குறுக்குவழி வியாபார ஒப்பந்தங்கள், ஆப்பிரிக்கர்களுக்கு அமெரிக்க வாழ்க்கை முறையின் மீதிருந்த மோகம், மற்றும் தாய்மொழியின் மீது ஆங்கிலம் செலுத்திய ஆதிக்கம் ஆகியவற்றை இது பேசுகிறது.
1960-களின் பிற்காலம் இக்போ மக்களுக்கு எதிராக நடக்கும் இனப்படுகொலைகள், தனி பியாஃப்ரா குடியரசு மற்றும் கொடூரமான உள்நாட்டுப் போர், சொகுசு வீடுகளில் வாழ்ந்தவர்கள் அகதி முகாம்களில் தஞ்சமடையும் அவலம், பட்டினி, ‘க்வாஷியோர்கர்’ நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள், மற்றும் உயிருக்குப் பயந்து ஓடும் அவலநிலையை விவரிக்கிறது.
போரின் நேரடி வன்முறையை விட பசியும் நோயும்தான் மனிதர்களைக் கொல்கிறது. போர் வரும்போது பணக்காரர்கள், ஏழைகள், பேராசிரியர்கள், வேலைக்காரர்கள் என்ற அனைத்து வர்க்க எல்லைகளும் உடைந்து, அனைவரும் உயிர் பிழைக்க ஒரே வரிசையில் நிற்கும் நிலை ஏற்படுகிறது. இந்தப் பேரழிவின் மத்தியிலும் மனிதர்களின் காதல், பொறாமை, துரோகம் ஆகியவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பிரிட்டிஷ்காரர்கள் தங்களின் அரசியல் மற்றும் வியாபார லாபத்திற்காகத் தூண்டிவிட்ட ஆப்பிரிக்கப் போர்களை, வெறும் ‘பழங்குடி மோதல்கள்’ என சுருக்கிப் பார்க்கும் மேற்கத்திய நாடுகளின் அணுகுமுறையையும், அமைதிப் படைகளின் மெத்தனத்தையும் நாவல் கடுமையாக விமரிசிக்கிறது.
சிமாமண்டா எங்கோசி அடிச்சியின் கதாபாத்திரங்கள் யாருமே முழுமையான நல்லவர்களோ அல்லது கெட்டவர்களோ அல்ல; அவர்கள் சுயநலம், பயம், அன்பு, வீரம் ஆகிய அனைத்தையும் கொண்ட சாதாரண மனிதர்கள். அரசியல் அதிகாரமும் ஆடம்பரமும் கொண்ட குடும்பத்தை நிராகரித்துவிட்டு ஒடேனிக்போவுடன் வாழும் ஒலான்னா, போரில் தன் சொந்த உறவினர்கள் கண்முன்னே கொல்லப்பட்ட பின், அகதி முகாமில் தன் குழந்தையுடன் வாழும் நிலை வருகிறது. இவள் பெண்களின் சகிப்புத்தன்மையையும் பேரழிவைத் தாங்கும் ஆற்றலையும் பிரதிபலிக்கிறாள். பிரிட்டிஷ் எழுத்தாளன் ரிச்சர்ட், தன்னை ஒரு பியாஃப்ரா குடிமகனாகவே உணர முயல்கிறான். ஆனால் போர் உச்சமடையும் போது, அவனது வெள்ளையின அடையாளம் சில சலுகைகளைத் தந்தாலும், உள்ளூர் மக்களால் அவன் எப்போதும் ஒரு ‘வெளியாளாகவே’ பார்க்கப்படுகிறான். மேற்கத்திய உலகம் ஆப்பிரிக்கப் போரை எவ்வாறு பார்க்கிறது என்பதன் அடையாளமாக இக்கதாபாத்திரம் அமைகிறது. முக்கியக் கதாபாத்திரமான உக்வு, ஒரு சிறிய கிராமத்துச் சிறுவனாக நுழைந்து, புத்தகங்களைப் படிக்கத் தொடங்கி, போரின் கொடூரங்களைக் கண்டு, இறுதியாகத் தன் சொந்த அனுபவங்களை எழுதத் தொடங்கும் வளர்ச்சி நாவலின் மிகச்சிறந்த பகுதியாகும்.
ஒரு சிறிய குறையாக, நாவல் 1960-களின் முற்பகுதிக்கும் பிற்பகுதிக்கும் இடையே அடிக்கடி மாறி மாறிச் செல்வதால், போரின் பதற்றம் உச்சத்தில் இருக்கும்போது திடீரென பழைய காதல் கதைகளுக்குத் திரும்புவது கதை நகர்வின் வேகத்தைச் சற்றே குறைக்கிறது.
சிமாமண்டா எங்கோசி அடிச்சியின் எழுத்து நடை மிகவும் சுவாரஸ்யமானது. கதையோட்டத்தில் இயல்பாக இக்போ மொழிச் சொற்களையும் பழமொழிகளையும் கையாண்டுள்ளார். உணவுகளின் மணம், போர்க்களத்தின் துர்நாற்றம், மனிதர்களின் முகபாவனைகள் என அனைத்தையும் மிகத் துல்லியமாக வாசகரின் கண்முன்னே நிறுத்துகிறார். உணர்ச்சிகளை மிகைப்படுத்தாமல் நடந்ததை நடந்தபடியே வைப்பதன் மூலமே அவர் மாபெரும் தாக்கத்தை உண்டாக்குகிறார்.
இவை அனைத்தையும் எந்தவிதச் சிதைவும் இன்றித் தமிழில் வாசகர்களுக்கு நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறார் லதா அருணாச்சலம். மூலப் படைப்பின் தீவிரத்தையும், அதன் உணர்ச்சிப்பூர்வமான கனத்தையும் சற்றும் குறையாமல் தமிழில் கொண்டுவந்திருக்கிறார். நாவலில் வரும் ‘இக்போ’ இன மக்களின் பிரத்யேகப் பண்பாட்டுச் சொற்கள் மற்றும் உறவுமுறைகளைத் தமிழில் வாசிக்கும் போது எந்தவொரு அந்நியத் தன்மையும் தோன்றாத வண்ணம் இயல்பான நடை கையாளப்பட்டுள்ளது. பேராசிரியர் ஒடேனிக்போவின் அறிவுச் செறிந்த உரையாடல்கள், சிறுவன் உக்வுவின் எளிமையான மொழி, லண்டனில் படித்த ஒலான்னாவின் நடை என ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பேசும் பாணியையும் தமிழில் தனித்துவமாக வேறுபடுத்திக் காட்டியுள்ளது மொழிபெயர்ப்பின் முக்கியச் சிறப்பாகும்.
இந்தப் புத்தகத்தின் மிகச்சிறந்த தமிழாக்கத்திற்காக மொழிபெயர்ப்பாளர் லதா அருணாச்சலம் அவர்களுக்கு 2026-ஆம் ஆண்டுக்கான ‘நல்லி திசை எட்டும் மொழிபெயர்ப்பு விருது’ கிடைத்திருப்பது, அவரது உழைப்பிற்கு மகுடம் சூட்டுவது போல் அமைந்திருக்கிறது. 700-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இந்த விரிவான நாவலைச் சலிப்பில்லாமல் வாசிக்க வைக்கும் சுவாரஸ்யமான தமிழாக்கத்தைத் தந்த லதா அருணாச்சலம் அவர்களுக்கும், விருது பெற்ற அவரது பணிக்கும், சர்வதேசத் தரம் வாய்ந்த படைப்புகளைத் தமிழில் தொடர்ந்து கொண்டுவரும் ‘எதிர் வெளியீடு’ பதிப்பகத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
இறுதியாக, இந்தப் புத்தகத்தை வாசிக்கும் முன்பு சினுவா அச்செபே (Chinua Achebe) எழுதிய ‘சிதைவுகள்’ (Things Fall Apart) நாவலை வாசித்தால், இக்போ இனத்தவர்களின் பழமையான வாழ்க்கை முறை, நாகரிகம் மற்றும் பண்பாட்டைப் பற்றி ஆழமாகத் தெரிந்துகொள்ளலாம். வெறும் இனப்போராகத் தெரியும் இந்த நாவலை, ‘சிதைவுகள்’ புத்தகத்தை வாசித்துவிட்டுப் படித்தால், இந்தப் போருக்கான வரலாற்று ஆணிவேரைப் பற்றிய ஆழமான கண்ணோட்டம் கிடைக்கும். ‘அரைமஞ்சள் சூரியன்’ என்பது வெறும் வரலாற்றுப் புதினம் மட்டுமல்ல; அது மனித ஆன்மாவின் நெகிழ்ச்சியையும், போரின் அர்த்தமற்ற தன்மையையும் விளக்கும் ஒரு உன்னதமான படைப்பு. ஆப்பிரிக்க வரலாற்றைப் பற்றியும், போர் மனித இதயங்களில் வடுவாக மாற்றும் வன்முறைகளைப் பற்றியும் புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல் இது.
***
ஆ.ஹரிகிருஷ்ணன் – கோவையில் தொழில் நடத்திவருகிறார். சமூக வலைதளங்கள் தன் வாசிப்பனுபவங்களை தொடர்ச்சியாக எழுதிவருகிறார். மின்னஞ்சல் முகவரி : harikrish556@gmail.com

