Tuesday, July 21, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்ஆர்.கே.ஜி கவிதைகள்

ஆர்.கே.ஜி கவிதைகள்


ஆர்.கே.ஜி

அல்பினிஸ்ட் – Alpinist

அமெரிக்காவின் சிகரமான கேப்பிடாலின் பாறைகள்
என் உடலின் அங்கமாக மாறியிருந்தன.

அந்த உயரத்தில்
உருவங்கள் இல்லை.

என் கண் முன்
உருவங்கள் மசிந்து
வண்ணங்களாக மாறத் தொடங்கியிருந்தது.

பச்சைக் குளமாக
கூர்மையானப் பைன் மரங்களின் தொகுப்புகள் மட்டும்.

வானிலிருக்கும் தேவர்களுக்கு
வண்ணங்கள் மட்டுமே கிடைப்பதால்
அவர்களால்
உலகை
ஓரளவிற்குத் தான் புரிந்து கொள்ள முடிகிறது.

அந்த உயரத்தில்
நான் சிறுநீர் கழித்தாலும்
எச்சில் உமிழ்ந்தாலும்
யாரும் கேட்கப் போவதில்லை.

ஏனோ
அந்தப் பாறைகளை முத்தமிடவேத் தோன்றியது.

அத்தனை உயரத்தில் நிற்கும் பொழுது
இனம் புரியாத ஒரு தனிமை மனதைக் கவ்வுகிறது

வாழ்வை
இத்தனை நாள் இல்லாத
உக்கிரத்துடன்
கொண்டாட்டத்துடன்
தரிசித்தபடி நிற்கிறேன்.

நான் பொதுவாக மிகைப்படுத்துவதை விரும்ப மாட்டேன்.
இருந்தும்
என்னால் இதை தீர்க்கமாக உணர முடிகிறது.

இந்த கணத்தில்
என்னைப் போன்ற மலையேறிகள்
மாட்டர்ஹார்ன் – மாண்ட் பிளாங்க் – எல்ப்ரஸ் என
உலகெங்கும் உள்ள மலை சிகரங்களில்
ஊர்ந்து கொண்டிருப்பார்கள்.

இந்த உலகில்
மனிதனின் மகத்தானப் பயணம் எதுவும்
தனியாக நிகழ்வதில்லை.


இணைய மனிதர்கள்

திரையில்
நாங்கள் இருவரும் ஒவ்வொரு பக்கமாக நின்றோம்.

அவன் பெயர்
எனக்கு சரியாகத் தெரியவில்லை
மன்னிக்கவும், அவர் பெயர்.
வயது
ஐம்பதைத் தொட்டிருக்க வேண்டும்.
வயதைக் கடந்த நரை.

என்னைப் பார்த்த மாத்திரத்தில் அவர் சிரித்தார்.
காரணம் நான் அவரது மகளின் வயதை ஒத்திருக்க வேண்டும்.
நானும்
மெலிதாகச் சிரித்தேன்

நாகரிகம் சொல்லித் தந்த வணக்கங்களை
முழு மனதுடன் ஒதுக்கி வைத்தோம்.

எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி
அவர் பாடத் தொடங்கினார்.
நெற்றியில் திருநீறு. பளீர் சட்டை.
இவ்வளவு சீர்மை இருந்தும்
ஏனோ அவருக்கு கரடானக் குரல் தான் வாய்த்திருந்தது.

பதிவுக்கு முன்
கபீரின் பாடல்களில் ஏதாவது ஒன்றைப் பாடுவது என
இருவருமே உற்சாகத்துடன் தீர்மானித்தோம்.

அந்த மனிதர்
கண்களை மூடியபடி
‘பாணி மே மீன் பியாஸி
மோஹி சுன் சுன் ஆவே ஹாசி’
எனக்கு விருப்பமான
அந்தப் பாடலின் முதல் வரிகளுடன் தொடங்கினார்.

கபீர் சொல்கிறார்
‘தண்ணீரில் மீன்கள் தாகமாக இருக்கின்றன
அதைக் கேட்க கேட்க
எனக்கு சிரிப்பு தான் வருகிறது’

அவர் சரணத்தை முடிக்க
நானும் இயன்ற வரை
பாட்டின் பொருளையும் இசையையும் கெடுக்காமல்
தெரிந்த ஹிந்தியில் பாட்டைத் தொடர்ந்தேன்.

பல வருடங்கள் கழித்து பாடுவதால்
என் குரலைக் கேட்க
எனக்கே சிரிப்பாக இருந்தது.

இருவரும் சிறிது காலம் கபீரின் உலகில் சஞ்சரித்து விட்டு
எங்களுக்கு வாய்யக்கப்பட்ட
அற்ப உலகங்களுக்குள் நுழைந்தோம்.

நான்
என் உடலை
இரவுகளில் மிருகமாக புசித்துக்
கொண்டிருந்த அந்த கோரத்திடமிருந்து
முறையாக விடுதலையாகி
ஒரு வாரம் ஆகிறது.

இப்பொழுது
பெற்றோர்களின் துணையின்றி
தனியாக வாழ்கிறேன்.

இணையத்தில் தோன்றிய அந்த மனிதர்
சென்ற மாதம் தான்
சாலை விபத்தில்
தன் மகளை இழந்திருக்கிறார்.
வாகனம் எரிந்து
நான்காம் நிலைத் தீக்காயங்களுடன்.
இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவனின் மூலம் இதை அறிந்து கொண்டேன்.

என்னை
அவர் மகளாகக் கொண்டாடத் தேவையில்லை
அந்த அசிங்கமெல்லாம் நிகழத் தேவையில்லை.

நான் விரும்புவது
அந்த மனிதனுக்கு
அவர் மகளின் நினைவு போய்,
என் நினைவும் போய்,
அந்தப் பாடலின் உணர்வு மட்டுமே
எஞ்ச வேண்டும்.


ஷெனாய்

அங்கிருந்த அனைவரும்
அவனது ஒவ்வொரு அசைவையும்
உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவனுடைய உடலில்
இத்தனை நாள் மறைந்து கிடந்த காயங்கள் அனைத்தும்
ஒவ்வொன்றாக
தங்களை அறிமுகம் செய்து கொள்ளத் தொடங்கின.

சில வருடங்களுக்கு முன்
சுமார் நாற்பது வயதில்
இசையின் மீது பெரும் பித்து கொண்டு
அவன் தனது நீண்ட பயணத்தைத் தொடங்கினான்.

ரிஷிகேஷ் – கங்கையின் ஆரவாரம்
கார்வார் – அரேபியக் கடலின் கூச்சல்
குமுளி – பூச்சிகளின் இரைச்சல்
சிதம்பரம் – காண்டாமணியின் அதிர்வு
அமிர்தசரஸ் – மந்திர முணுமுணுப்பு
மஸூரி –மலைக் கூம்பை மேகங்கள் தொட்டுச் செல்லும் அரவம்
புஷ்கர் – அசையும் மணலின் ஒலி

‘இந்தியா’ என்னும்
பிரம்மாண்ட ஒலிச் சித்திரத்தை
அவன் தரிசிக்கத் தொடங்கினான்.

இந்த நீண்டப் பயணத்தில்தான்
அவனுக்கு அந்த இசைக் கலைஞன் அறிமுகமானான்.
காசியில்
கங்கையை தரிசித்தபடி
அவ்வப்போது சுருட்டைப் புகைத்துக் கொண்டு
எளிய ஒரு குல்லாயை அணிந்தபடி
செனாய் வாசித்துக் கொண்டிருந்த
அந்த வயோதிகனைத்தான்
தனது ஆதர்சக் கலைஞனாகக் கொண்டாடத் தொடங்கினான்.

ஒருமுறை
மழைக்காலம் முடிந்த பின்
‘பாலாஜி காட்’ என்னும் படித்துறையில்
அமர்ந்து கொண்டு
நள்ளிரவின் அமைதியில்
கங்கையின் மேற்பரப்பில்
தேவர்களின் நட்சத்திரங்களும் மனிதர்களின் தீபங்களும்
ஒன்றாய் மின்னிக் கொண்டிருந்த வேளையில்
அந்த வயோதிகன்
செனாயில் மீட்டிய மால்கவுன்ஸ் ராகத்தை
அவன் அருகிருந்து கேட்க நேர்ந்தது.

அக்கணம் அவன் அடைந்த அனுபவத்தை
இப்போது
அவன் முன்னால் நின்று கொண்டிருக்கும் அனைவரிடமும்
நூறு முறையாவது பகிர்ந்திருப்பான்.

அந்த நம்பிக்கையைக் கொண்டு
அவனுக்கு மிகவும் நெருக்கமான அக்கலைஞனின் இசையை
மருத்துவமனையில்
அவனது காதருகே ஒலிக்கச் செய்தார்கள்.
நிச்சயமாக
பைரவியில் விழித்துக் கொண்டுவிடுவான்
என நம்பினார்கள்.
அவனும் நம்பினான்.

‘உஸ்தாத் பிஸ்மில்லா கான்’ என்னும்
அந்த உன்னதத்தை
தனது உயிர்த்தெழுதலால்
மெய்ப்பிக்க வேண்டும் என விரும்பினான்.

உடலின் ஏதாவது ஒரு பாகத்தை அசைத்து
தனது நம்பிக்கையை
தனது விசுவாசத்தை
அவர்களிடம் கடத்த வேண்டும் என நினைத்தான்.

அவன் விரும்பியது போல
அவனது கைகள் அசையவில்லை.
கால்கள் பனைமரத் துண்டுகளாகின.
கண்களை அவனால் சிறிதும் திறக்க இயலவில்லை.

எரிச்சலுடன்
அந்த இசையின் உன்னதத்தை
அவர்களிடம் மெய்ப்பிக்க முடியாமல்
இறந்து போனான்.

இசையின் சார்பாக
அவன் மீண்டும் எழாதிருக்க
பெரிய கல் ஒன்றை
அவனைப் புதைத்த இடத்தின் மேல் நட்டார்கள்.


கூப்பர்

இன்று
சாதாரணமாகத் தான்
என் மாலை நடையைத் தொடங்கினேன்.

சூரியன் அர்த்தநாரியாய்
மேகம் ஒரு பாகமாக நின்றான்.

என் முன்னால்
மெலிதான இளவேனில் காற்று
பாதி துளிர்த்திருந்தக் கிளைகளை
வருடிச் சென்றது.

அங்குமிங்கும்
ஒன்றிண்டு வாகனங்கள்
சிதறிக் கிடக்கும்
நெகிழிக் குப்பைகள்.

இதற்கெல்லாம் சிறிதும் சம்மந்தம் இல்லாமல்
தெருவின் ஓரத்தில்
ஒரு கூப்பர் பருந்து
தனது கால்களின் அடியில்
எதையோ ஒன்றை மறைத்தபடி நின்றது.

கண்கள் அசையாமல்
தனது உடலின் மொத்த இடையையும்
கால்களின் அடியில் குவித்து
தன்னை விட அளவில் சிறிய
ஒரு பறவையின் மேல்
அழுந்தி நிற்கும்
அந்தப் பருந்தின் தோரணையைப் பார்க்க
ஏனோ
பதுமாசனத்தில் அமர்ந்திருக்கும் ஞானியின் தோற்றம் தான்
மனதில் எழுந்தது.

பருந்து
அந்தச் சிறியப் பறவையின் கழுத்தைக் கொத்தி
அதன் இறகுகளை ஒவ்வொன்றாகப் பிய்க்கத் தொடங்கியது.

உயிர்
அந்த சிறியப் பறவையின் மீது
பசையாக ஒட்டிக் கிடந்தது.

பருந்தின் மீது ஒரு கல்லை எறிய வேண்டும்.
உடன் வந்திருந்த தோழியிடம் என் விருப்பத்தை தெரிவித்தேன்.

“யார் எதை எப்படி சாப்பிட்டாலும்
அதை நாம் தடுக்கக் கூடாது”

உண்மை தான்
இன்னும் சில காலம் கழித்து
ஒரு பறவை
என் மீது ஆசனமிட்டு
என்னை உண்ண வரும்.
அப்பொழுது
அதை நான் தடுக்கப் போவதில்லை.


ஒரு முறையாவது கொண்டாடிவிடுவோம்

வரிக்குதிரை
ஒட்டகம்
நீர்யானை
மான்
வரையாடு
எருமை
காட்டுப்பன்றி

இவர்களையே
சமீபகாலமாக சிந்தித்து கொண்டிருக்கிறேன்

நீங்கள் நினைப்பது போல
நமக்கு சொல்லித் தந்தது போல
இவர்கள் அஃறிணை அல்ல
உயர்திணை

காரணம்
இவர்கள்
எந்த ஆதரவும் இல்லாதபோதும்
போராடுகிறார்கள்

தலைவர்கள் என்று
யாரும் ஏற்றுக்கொள்ளாத போதிலும்
போராடுகிறார்கள்

மறுநாள்
தாங்கள் கொல்லப்படலாம் என்று தெரிந்திருந்தும்
போராடுகிறார்கள்

இந்தப் போராட்டம்
அவ்வளவு மகத்துவம் வாய்ந்ததல்ல
என்று தெரிந்திருந்தும்
போராடுகிறார்கள்

உண்மையில்
இவர்கள் தான் களத்தில் இருப்பவர்கள்.
இவர்கள் தான் போர்வீரர்கள்.

ஏதோ ஒரு மிருகம்
அவர்களை விழுங்குவதற்கு முன்
நாம்
ஒரு முறையாவது
அவர்களை கொண்டாடிவிடுவோம்.

***

ஆர். கே. ஜி – இயற்பெயர் ராம் கார்த்திக் கணேசன். 2013 ஆம் ஆண்டு கனடாவின் கனகார்டியா பல்கலைக்கழகத்தில், இயந்திர பொறியியல் துறையில், முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்பொழுது டொரோண்டோவில் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். தமிழ் நவீன இலக்கியக் குரல்களுள் ஒன்றான இவரின் நாவல்கள், ‘பாடுவான் நகரம்’ மற்றும் ‘அகம்’, யாவரும் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளன. இவர் மொழிபெயர்த்த ‘கிருஷ்ணர்கள்’, கறுப்பினக் கவிஞர்களின் கவிதை தொகுப்பு, 2026ல் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. மின்னஞ்சல்: ramkarthiksgm@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here