நோவாவின் பேழை
அபிராமி அக்காவுக்கும் ஜெயராஜ் சாருக்கும் திருமணமாகி ஒரு மாதம்தான் ஆகியிருந்தது. ஜெயராஜ் சார் எங்கள் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்கிறார். அவர் வீட்டில்தான் மாலை நேரத்தில் டியூஷன் படித்தோம். இந்த ஒரு வாரமாக ஜெயராஜ் சாரோடு அபிராமி அக்காவும் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தாள். அக்காவுக்கு தலைமுடி அடர்த்தியாகவும் மிக நீளமாகவும் இருந்தது. மாலை நேரங்களில் தேங்காயெண்ணெய் போட்டு தலைசீவி குண்டு மல்லி வைத்திருப்பாள். அவள் அருகில் போனாலே நறுமணம் வரும். அந்த மணத்திற்காவே அபிராமி அக்காவை எனக்குப் பிடிக்கும்.
அக்கா, டியூஷன் முடியும் நேரத்தில் பைபிள் கதை சொல்வாள். அவள் கதை சொல்லும் விதம் எல்லோருக்கும் பிடித்திருந்தது. ஒருமுறை நான் ஆர்வமிகுதியில், “அக்கா, உங்களுக்கு இந்தக் கதைகள் எல்லாம் எப்படித் தெரியும்?” என்றேன். “நான் ஊரில் இருக்கும்போது தினமும் பைபிள் படிப்பேன். சர்ச்சுக்குப் போவேன். ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு டிவியில் ஒளிபரப்பாகும் பைபிள் ஸ்டோரி தொடரைப் பார்ப்பேன்,” என்று சொன்னாள்.
“அக்கா, உங்க வீட்டுல டிவி இருக்காக்கா?” ஆச்சரியமாகக் கேட்டேன். “ஆமாம். இந்த வாரம் கூட நோவாவின் கப்பல் பத்தின கதை ஒளிபரப்பாகுதாம். ஆனா என்னாலதான் பார்க்க முடியாது,” என்று கவலையாகச் சொன்னாள்.
எங்கள் ஊரில் மூன்று வீடுகளில்தான் தொலைக்காட்சியிருந்தது. என்னோடு படிக்கும் பிரதீப் வீட்டில் மட்டும்தான் மற்றவர்களை டிவி பார்க்க அனுமதிப்பார்கள். ஆனால் ஜெயராஜ் சாரின் அம்மாவுக்கும் பிரதீப்பின் பாட்டிக்கும் சண்டை. மற்ற இரண்டு வீடுகளில் சண்முகம் வாத்தியார் யாரையும் அனுமதிக்க மாட்டார். என்னோடு படிக்கும் கார்த்திக்கின் அத்தை வீட்டில் சில பேர் டிவி பார்க்கப் போனார்கள். அவங்க மகள் கவிதாவும் என்னைப் போல ஐந்தாம் வகுப்புதான் படிக்கிறாள். ஜெயராஜ் சாருக்கு அந்த குடும்பத்தோடு நல்ல பழக்கம் இருந்ததால், “அங்கப் போய் டிவி பார்க்கலாமாக்கா?” என கேட்டேன்.
அக்காவிற்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. “”உங்க சாரு போன வாரம் சினிமாவிற்கு கூப்பிட்டாருடா. வரலன்னு சொல்லிட்டேன். இப்போ பைபிள் கதை பார்க்க போறோன்னு சொன்னா திட்டுவாரோன்னு பயமா இருக்குடா” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.
“உண்மைய சொல்ல பயமாயிருந்தா ஏதாவது பொய் சொல்லிட்டு வாங்கக்கா. எனக்கும் டிவி பார்க்க ஆசையாக இருக்கு,” என்றேன். கொஞ்ச நேரம் யோசித்தவள், பின் ஒப்புக்கொண்டாள்.
ஞாயிற்றுக்கிழமை ஒன்பதே முக்காலுக்கு இருவரும் கார்த்திக்கின் அத்தை வீட்டிற்குச் சென்றோம். எங்களை அன்புடன் வரவேற்ற அத்தை, “உங்க அம்மாவும் நானும் டீச்சர் ட்ரைனிங் ஒண்ணா படிச்சோம்” என்று அக்காவின் குடும்பத்தை நலம் விசாரித்தாள். வந்திருக்கும் விஷயத்தைச் சொன்னதும், “நாங்க பைபிள் ஸ்டோரி பாக்கறதில்ல. அது தான் ஆப் பண்ணி வச்சுட்டோம்” என்று சொல்லியபடியே டிவியைப் போட்டாள். நாங்கள் இருவர் மட்டுமே பார்க்க ஆரம்பித்தோம். சிறிது நேரத்தில் கவிதாவும் அவளின் பாட்டியும் பார்க்க வந்தார்கள். அக்கா பாட்டிக்கு நோவாவின் கதையைச் சொல்லிப் புரிய வைத்துக்கொண்டே பார்த்தாள். அக்காவின் கதைசொல்லும் முறையால் ஈர்க்கப்பட்டுச் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த மாமாவும் வந்துவிட, அத்தையும் மதிய சமையலுக்கு வெங்காயத்தை உரித்துக்கொண்டே பார்க்க ஆரம்பித்தாள்.
நோவாவின் பேழைக்குள் சகல உயிரினங்களும் ஜோடியாக ஏறிக்கொண்டிருந்தன. சிங்கம், புலி, பறவைகள் என ஒவ்வொன்றாக உள்ளே சென்றன. அப்போது ஒரு நீண்ட கருநாகம் சுருண்டு சுருண்டு நெளிந்து, பேழையின் ஒரு இருட்டான மூலைக்குள் ஊர்ந்து சென்று மறைந்தது. அக்கா அந்தப் பாம்பையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அக்கா, அந்தப் பாம்புக்குப் பயமா இருக்காதாக்கா? மத்த மிருகத்தையெல்லாம் அது கடிக்காதா?” என்று மெல்லக் கேட்டேன்.
அக்கா டிவியிலிருந்து கண் எடுக்காமலேயே, “சர்ப்பமானது தேவன் உண்டாக்கின சகல காட்டுமிருகங்களைப்பார்க்கிலும் தந்திரமுள்ளதாயிருந்தது” என்ற பைபிள் வசனத்தைச் சொல்லிவிட்டு, “யாரும் பார்க்காத ஒரு இருட்டு மூலை அந்தப் பெரிய பேழைக்குள்ள அதுக்குக் கிடைச்சிருக்கும்டா… அங்க அது அமைதியா சுருண்டுக்கும். அது அங்க இருக்கிறது யாருக்கும் தெரியாது,” என்றாள். அவளது குரலில் ஒரு விசித்திரமான நடுக்கம் இருந்தது.
தொடர் மிகுந்த சுவாரசியத்தோடு இருந்தது. இறுதியில் பெருங்காற்றுடன் மழை வந்து உலகமே அழிந்துபோகும் காட்சிகள் மிரட்டலாக இருந்தன. பெரும் வெள்ளத்தில் நோவாவின் பேழை அடித்துக்கொண்டு சென்றது. நோவாவும் அவன் குடும்பமும் அந்த உயிரினங்களும் காப்பாற்றப்பட்டதா? என்பதை அடுத்த வாரம் பாருங்கள் என்று முடித்தார்கள்.
திரும்பி வரும்போது ஏனோ எனக்குப் பயமாக இருந்தது. அக்காவிடம், “சாரு உங்களைத் திட்டுவாராக்கா?” என்று கேட்டேன். “பயப்படாமல் வாடா. நான் பார்த்துக்கிறேன்,” என்றாள். அக்காவின் வீட்டை நெருங்கியபோது வாசல் திண்ணையில் அமர்ந்திருந்த காமாட்சி பாட்டி கோபமாக முறைத்தாள். எனக்கு ஜெயராஜ் சாரைப் பார்க்கும் தைரியம் இல்லாததால், “நான் வீட்டுக்குப் போறேங்க,” என்று சொல்லி ஓடி வந்துவிட்டேன்.
அடுத்த நாள் பள்ளியில் சாரின் கண்ணில் தென்படாமல் மறைந்து திரிந்தேன். மாலையில் டியூஷனுக்கும் போகவில்லை. செவ்வாய்க்கிழமை டியூஷன் போனபோது ஜெயராஜ் சார் மட்டும்தான் சொல்லிக்கொடுத்தார். என்னிடம் முகம் கொடுத்தே பேசவில்லை. அக்காவுக்குக் காய்ச்சலாம்; நேற்றும் சொல்லித் தர வரவில்லை என்று சொன்னார்கள்.
வியாழக்கிழமை அக்காவைப் பார்த்தபோது அவள் பழைய உற்சாகத்தோடு இல்லை. தலையில் மல்லிகைப்பூ இல்லை. எண்ணெய் வழிய தலை சீவியிருந்தாள். “அக்கா, அன்னைக்கு சார் உங்களைத் திட்டினாராக்கா? ஏன் உடம்பு சரியில்லாமல் போச்சு?” என்று விசாரித்தேன். “மாமா எதுவும் சொல்லலடா,” என்று மட்டும் சொல்லிச் சிரித்தாள். அந்தச் சிரிப்பு அவளது உதடுகளோடு நின்றுவிட்டது.
“அடுத்த ஞாயிற்றுக்கிழமை அந்தப் பேழைக்கு என்ன ஆச்சுன்னு பார்க்கப் போகலாமாக்கா?” என்று ஆர்வமாகக் கேட்டேன்.
அக்கா ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்தாள். அவள் கண்களில் ஒரு மெல்லிய அச்சம் மின்னி மறைந்தது. “வேண்டாம்டா… அந்தப் பேழைக்குள்ள போன பாம்பு அந்த இருட்டுக்குள்ளேயே இருந்திருக்கலாம். அது ஏன் வெளியே வந்துச்சோன்னு தோணுது. நாம இனிமே அங்க போக வேண்டாம்,” என்றாள்.
*
முத்தம்
ஹோட்டலில் நுழைந்தபோதே, வாழ்வில் மீண்டும் சந்திக்கக் கூடாது என்று நினைத்திருந்த அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டேன். பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே வசீகரத்தோடுதான் இருந்தாள் தங்கபாரதி. நுழைவாயிலைத் தாண்டி, இடதுபுறம் போடப்பட்ட இருக்கையில் தனியாக அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தாள். மீண்டும் திரும்பிப் பார்த்தபோது, அவளும் என்னைப் பார்த்துவிட்டாள். மறந்திருப்பாளா? மறந்திருந்தால் மகிழ்ச்சிதான். ஆனால், மறக்கக்கூடிய காரியத்தையாச் செய்திருந்தோம்?
ஒருகணம் திரும்பிப் போய்விடலாமா என யோசித்தேன். ஐந்து கிலோமீட்டர் தாண்டித்தான் வேறு நல்ல ஹோட்டல்கள் இருக்கும். மதியம் இரண்டு மணி. என் பத்து வயது மகளையும் கூட அழைத்து வந்திருந்தேன். அவளுக்கு நல்ல பசி. வேறு வழியில்லாமல், வலதுபுறம் ஐந்தாறு இருக்கைகள் தள்ளி, அந்தப் பெண்ணுக்கு என் முதுகுப் பகுதி மட்டுமே தெரியும் படி அமர்ந்துகொண்டேன்.
உணவுக்காகக் காத்திருந்தபோது, தங்கபாரதி எங்கள் இருக்கைக்கு அருகில் வந்தாள். “டாக்டர் நல்லா இருக்கீங்களா?” என்றாள். நான் திடுக்கிட்டுத் தலையசைத்தேன். அவள் என் மகளின் அருகில் அமர்ந்தாள். “இது உங்கள் மகளா? சோ ஸ்வீட்!” என்றாள். என் மகள் அவளைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
பத்தாண்டுகளுக்கு முன்பு, மாலை நேரம் அல்சர் பிரச்சனையோடு இவளும் இவளின் கணவனும் கிளினிக் வந்தது நினைவில் ஓடியது. ஆங்கில மாத்திரைகளில் நம்பிக்கை இழந்திருந்த இவளின் கணவர், கட்டாயப்படுத்தி என்னுடைய ஆயுர்வேதா மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார். அவருடைய குடும்ப நண்பர் என்னைப் பரிந்துரை செய்ததாகச் சொன்னார். தங்கபாரதியின் மருத்துவ அறிக்கைகளை ஆராய்ந்து பார்த்ததில், நோயின் தீவிரம் கூடியிருந்தது. குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது நான் கொடுக்கும் மருந்துகளையும், நான் பரிந்துரைக்கும் உணவுகளையும் உட்கொள்ள வேண்டுமென்றேன். கணவர் முழு மனதோடு ஒப்புக்கொண்டாலும், தங்கபாரதி அரை மனதாகத்தான் இருந்தாள். அவளை நம்ப வைக்கப் போராட வேண்டியிருந்தது.
என் மருந்தை உட்கொண்டதில் ஒரு மாதத்திலேயே நோயின் தீவிரம் குறைவதை உணர்ந்தவள், என்னை முழுவதுமாக நம்பத் தொடங்கினாள். கணவனோடு வந்துகொண்டிருந்தவள், சில மாதங்களுக்குப் பிறகு தனியாக வரத் தொடங்கினாள். தங்கபாரதியின் தோற்றமும் அழகும் என்னை வசீகரித்த படியே இருந்தது. அவளிடம் பேசும் போதெல்லாம் அவளின் உதடுகளையே கவனித்துக் கொண்டிருப்பேன். மற்ற நோயாளிகள் இல்லாத ஒருநாள் மாலை நேரத்தில், அந்த ஈர உதடுகளின் வசீகரத்தில் தன்னிலை மறந்து, என் கரங்களால் அவளை அணைத்து, உதடுடன் உதடாக முத்தமிட்டேன். எதிர்பாராத இந்த அத்துமீறல் அவளுக்குள் பெரிய அதிர்வை உண்டாக்கியது.
“நீங்க இப்படிப் பண்ணுவீங்கன்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை டாக்டர்,” என்று அழுதபடியே சொன்னவள், மிகுந்த கோவத்தோடு வெளியேறினாள். என்னுடைய தவறின் வீரியத்தை உணர்ந்தவனாய் ஓடிச் சென்று அவளின் கைகளைப் பிடித்து நிறுத்தினேன். அவள் உடல் முழுவதும் நடுங்குவதை என்னால் உணர முடிந்தது.
“மன்னிச்சுடுங்க மேடம். தெரியாமல் உணர்ச்சிவசப்பட்டு தப்பு பண்ணிவிட்டேன். இது வெளியே தெரிந்தால் நான் இங்க தொழில் செய்ய முடியாது,” என்று கெஞ்சினேன். ஆனால், என்னுடைய எந்த வார்த்தையும் அவளின் செவிகளில் சேரவே இல்லை. அடுத்த நாள் அவளின் கணவனும் அவனுடைய நண்பர்களும் சேர்ந்து என்னையும் என்னுடைய சிறிய மருத்துவமனையையும் அடித்து உடைத்தார்கள். தீயைப் போல அந்தப் பகுதி முழுக்கச் செய்தி பரவி விட்டது. காவல் நிலையத்தில் இருவரும் மாறிமாறி புகாரளிக்கச் சென்றோம். அந்த இன்ஸ்பெக்டர் நல்ல மனிதராக இருந்ததால் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். அந்தப் பாதிப்பிலிருந்து வெளியேறுவதற்கு எனக்கு ஓராண்டுக்கு மேலானது.
அந்தக் குற்ற உணர்வு என்னை நிலைகுலையச் செய்ய, தங்கபாரதி இப்போது என் மகளிடம் பேசிக்கொண்டிருந்தாள். “உங்க அப்பா கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்ட அந்த நாட்களை என்னால மறக்கவே முடியாது. அவர் கொடுத்த மருந்து என் உடம்பை மட்டுமில்ல, என் வாழ்க்கையையே மாத்திடுச்சு,” என்றாள் மிக நிதானமாக.
என் மகள், “எங்க அப்பா ரொம்ப நல்ல டாக்டர்” என்று பெருமையாகச் சொன்னாள். அந்தப் பெருமை என் முகத்தில் சுளீரென அறைந்தது.
“அப்படியா” என்று வியந்த படி மெல்ல எழுந்து என் மகளின் தலையை வருடி விட்டு
“நேர்மையான நல்ல டாக்டரான உங்க அப்பாவிற்கு ஒரு நோயாளியின் அன்பு பரிசு இது” என்று என்னருகில் வந்து கன்னத்தில் முத்தமிட்டாள். நானும் என் மகளும் அதிர்ச்சியில் உறைந்து போனோம். எங்களுக்கு பக்கத்து இருக்கையிலிருந்தவர்களெல்லாம் ஆச்சரியமாகப் பார்க்க, “போயிட்டு வறேன் டாக்டர். பாய் செல்லகுட்டி” என்று வெகு இயல்பாகச் சொல்லிவிட்டுச் சென்றாள்.
*
ரோஜாவை தாலாட்டும் தென்றல்…
நண்பன் வெங்கடேஷின் வீட்டு வரவேற்பறை முழுவதும் சிறிதும் பெரிதுமான புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அதில் இசைஞானி இளையராஜாவோடு வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு பின்னணியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இருந்தன. வெங்கடேஷ் இளையராஜாவின் தீவிர ரசிகன் என்று எனக்குத் தெரியும். ஆனாலும், அவரைச் சந்திப்பதில் இவ்வளவு ஆர்வமும் வெறியுமாய் இருப்பான் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“இதுவரைக்கும் எத்தனை முறை அவரைச் சந்தித்திருக்கிறாய் வெங்கடேஷ்?” என்று ஆச்சரியம் தாளாமல் கேட்டேன்.
“எட்டு முறை பார்த்திருக்கேன் ரகு” என்றான் பெருமையாக.
“ஒரே ஆளைத் தொடர்ந்து பார்க்கிறதுல என்ன சுவாரசியம் இருக்கப் போகுது? எனக்கெல்லாம் சலிப்புத் தட்டிடும்,” என்றேன்.
“கடைசியா பார்க்கப் போனப்ப, ராஜா அப்பாவும் இதையேதான் கேட்டாரு” என்று சொல்லிச் சிரித்தான். “ ‘அப்பா, நீங்க மூகாம்பிகை கோயிலுக்கும், திருவண்ணாமலைக்கும் அடிக்கடி போறீங்களே… அதுமாதிரிதான் இதுவும். சலிக்கவே சலிக்காது’ன்னேன். ‘கடவுளும் நானும் ஒண்ணா? தப்புயா. அப்படியெல்லாம் சொல்லக் கூடாது’ன்னாரு. ‘எனக்கு நீங்கதான்ப்பா கடவுள்’ன்னேன். செல்லமா முதுகில் தட்டி, ‘உன்னையெல்லாம் திருத்த முடியாது. போயா’ன்னாரு.”
“எப்பல்லாம் பார்க்கப் போவ வெங்கடேஷ்?”
“அவர் எப்பல்லாம் ரசிகர்களைச் சந்திக்கிறாரோ, அப்பல்லாம் பார்க்கப் போயிருவேன் ரகு. பெரும்பாலும் அவரோட பிறந்தநாளுக்குச் சென்னையிலயும், தீபாவளிக்கு அடுத்த நாள் தேனியில இருக்குற சொந்த வீட்டுலயும் தான் அவரைச் சந்தித்திருக்கேன்” என்றான் பெருமையாக.
“கூட்டம் எக்கச்சக்கமா இருக்குமே?”
“அதெல்லாம் சொல்லவே வேணாம், பயங்கரமான கூட்டம் வரும்.”
“இந்தக் கூட்டத்துல உனக்கு மட்டும் எப்படிச் சந்திக்க வாய்ப்பு கிடைக்குது வெங்கடேஷ்?” என்று கேட்டேன்.
ஒருவிதப் பெருமையோடும் மெல்லிய புன்னகையோடும் பதில் சொல்லிக்கொண்டிருந்த வெங்கடேஷ் திடீரென மௌனமானான். அவனது முகம் தீவிரமடைந்தது. என்னை உற்றுப் பார்த்தவன், “ரகு, நீ உன் உடலை நேசிக்கிறாயா?” என்று கேட்டான்.
வெங்கடேஷின் முக மாற்றமும், சம்பந்தமே இல்லாத இந்தக் கேள்வியும் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. “இது என்ன கேள்வி வெங்கடேஷ்? எல்லாருமே அவங்க உடலை நேசிக்கத்தானே செய்வோம்,” என்றேன்.
“இல்லை ரகு. நான் என் உடலை நேசிச்சதே இல்லை. பிறக்கும்போதே ரெண்டு கால்களும் ஊனமான, குள்ளமான இந்த உடலை யார்தான் நேசிச்சிருக்க முடியும்? என்னைப் பெத்தவன்ற உரிமையில என் அம்மா இந்த உடலை நேசிச்சிருக்கலாம். ஆனா, என் அப்பாகூட ஒருகட்டத்துல இந்த உடலை நேசிக்க முடியாமல்தானே ஓடிப் போயிட்டாரு. நாற்பது வயசாச்சு எனக்கு. கல்யாணம், குழந்தைன்னு சராசரி வாழ்க்கை கிடைக்காமல் போனதுக்கு இந்த உடல் தானே காரணம்? இதை நான் எப்படி நேசிக்க முடியும் ரகு?” என்றான் விரக்தியுடன்.
நான் என்ன சொல்வது என்று தெரியாமல் மௌனமாக இருந்தேன்.
“ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தைந்துல என் கால்கள்ல அடுத்தடுத்து ஆப்ரேஷன் செஞ்சு வலியால நான் மரண அவஸ்தையில துடிச்சப்ப, என்னோட அப்பா ‘நினைவெல்லாம் நித்யா’ கேசட்டை டேப் ரெக்கார்டர்ல போட்டுவிட்டு, ‘இந்தக் குரலைக் கவனி தம்பி, வலி தெரியாது’ன்னாரு. அந்த அறை முழுவதும் ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ பாடல் ஒலிக்கத் தொடங்கின. அந்த நொடிதான் ரகு, எனக்கும் ராஜா அப்பாவுக்கும் இடையிலான தொப்புள்கொடி உறவு ஆரம்பமானது. ஜானகி அம்மாவோட அந்த ஆலாபனையும் ராஜாவோட இசையும் என் பிஞ்சு கால்களோட வலியை அப்படியே உறிஞ்சி எடுத்துச்சு; மத்த குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டிச் சோறு ஊட்டுறது போல, எனக்கு இந்தப் பாட்டைக் காட்டித்தான் அப்பா என் வலியையும் மருந்தையும் முழுங்க வைச்சாரு.”
”எனக்கும் ஞாபகம் இருக்கு வெங்கடேஷ். ஸ்கூல் முடிஞ்சு உன்னைப் பார்க்க வரும்போது எதாவது ராஜா பாட்டு கேட்டுக்கிட்டே இருப்பாய்” என்று சொன்னதும், தன்னைச் சுதாரித்துக் கொண்டவனாக முகத்தில் சின்னப் புன்னகையைத் தவழவிட்டபடியே வெங்கடேஷ் மீண்டும் பேசத் தொடங்கினான். “இளையராஜா அப்பாவைச் சந்திக்கப் போன நாளில்தான் ரகு, என்னோட உடலை நான் உண்மையாவே நேசிக்கத் தொடங்கினேன்.” என்றான்.
நான் ஒன்றும் விளங்காமல் அவனையே பார்த்தேன்.
“அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, இளையராஜாவை நேர்ல பார்க்கணும்னு ஆசை வந்துச்சு. ஒரு நண்பர் மூலமா, அவர் ஒவ்வொரு வருஷமும் தீபாவளிக்கு அடுத்த நாள் தேனியில இருக்குற அவரோட அம்மாவோட கல்லறைக்குச் சாமி கும்பிட வருவாருன்னும், அப்போ தன்னோட ரசிகர்களைச் சந்திச்சுப் போட்டோ எடுத்துப்பாருன்னும் கேள்விப்பட்டேன். அந்த வருஷம் நானும் போனேன். எக்கச்சக்கக் கூட்டம். எப்படியும் ஐந்நூறு பேருக்கும் மேல இருப்பாங்க. ‘இந்தக் கூட்டத்துல நாம எப்படிப் பார்க்கப் போறோம்?’னு நம்பிக்கையிழந்து, ‘வந்ததற்கு அவர் வீட்டுச் சாப்பாட்டையாவது சாப்பிட்டுப் போவோம்’னு பந்தியில உட்கார்ந்துட்டேன். சாப்பிட்ட பின்னாடி, தூரத்துல இருந்தாவது பார்த்திடலாம்னு அவர் வீட்டு வாசல்ல நின்ன கூட்டத்துல நானும் ஓரமா நின்னேன்.
அப்போ வீட்டுல இருந்து வெளிய வந்த போலீஸ்காரங்க கூட்டத்தைப் பார்த்து வரிசையில நிற்கச் சொன்னாங்க. நான் நிற்கிறதா, வேண்டாமானு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போது, என் தோள்மேல கைபோட்டு, ‘வா தம்பி, உள்ளே போகலாம்’னு ஒருத்தர் கூட்டிட்டுப் போனாரு. உள்ளே இருந்த ரூம்ல ஐந்தாறு பேர் நின்னுக்கிட்டு இருந்தாங்க. என்னைப் பார்த்ததும் அங்கிருந்த ஒருத்தர், ‘இவரை முதல்ல அனுப்பி வைப்போம்’ன்னாரு. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணோம். வெள்ளை வேட்டி சட்டையில சிரிச்ச முகத்தோட இசைஞானி வந்தாரு. அவர்கிட்ட முதல்ல போக நான் அனுப்பப்பட்டேன். நான் ஆச்சரியம் தாங்காம அவரோட கால்ல விழுந்து கும்பிட்டேன். என்னை எழுப்புனவரு என் பேரையும், எங்கிருந்து வர்றேன்னும் கேட்டாரு. அப்புறம் என்னோட போட்டோ எடுத்துக்கிட்டாரு. என்னை அழைச்சுக்கிட்டு வந்தவர், திரும்பவும் என் தோள்ல கைபோட்டு வெளிய கொண்டுவந்து விட்டுட்டு, ‘இப்போ சந்தோஷம்தானே?’னு சிரிச்சவரு திரும்பவும் கூட்டத்தைச் சரி பண்ணப் போயிட்டாரு.”
“இவரு யாரு? எதுக்காக என்னை அழைச்சுட்டுப் போனாரு? நான் ஏன் முதல்ல போட்டோ எடுத்துக்கணும்?”னு யோசிச்சப்ப, என் ஊனமான உடல்தான் அதுக்குக் காரணமா இருக்க முடியும்னு தோணுச்சு. வெளிநாடுகள்ல இருந்தும் தமிழ்நாட்டோட பல பகுதிகள்ல இருந்தும் வந்திருக்குர கூட்டத்துல, என்னைத் தனியா காட்டினது இந்த உடல்தான். இதை உறுதிப்படுத்திக்கொள்ள அடுத்த முறை அவர் பிறந்த நாளின் போது சென்னைக்குப் போனேன். அவர் அப்போ புதுசா கட்டியிருந்த ஸ்டுடியோவுல ரசிகர்களைச் சந்திச்சாரு. தேனியை விட ரெண்டு மடங்கு கூட்டம். உண்மையில அவரைப் பார்க்க முடியாதுன்னுதான் நினைச்சேன். ஆனா அவரோட மியூசிக் குரூப்ல இருந்த ஒருத்தர் என்னை அழைச்சுக்கிட்டுப் போய் ராஜா அப்பாவைப் பார்க்க வைச்சுட்டாரு.
அப்பலேருந்துதான் என் உடலை நான் உண்மையாவே நேசிக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் தொடர்ந்து போக ஆரம்பிச்சேன். இதுவரைக்கும் எட்டுமுறைப் போயிட்டேன் ரகு. ஒருமுறை கூட அவரைச் சந்திக்காம ஏமாற்றத்தோட வந்ததில்லை. ஏதோ ஒரு கருணைக் கரம் என்னைப் பிடிச்சு கூட்டிட்டுப் போய் அவர் முன்னாடி நிறுத்திடுது. என்னை அடையாளம் கண்டுகிட்டு அவரும் பாசத்தோட ஓரிரு வார்த்தை பேசுவாரு. இந்தச் சந்திப்பும், அந்த ஓரிரு வார்த்தைகளும் ஏதோ ஒரு வகையில என் உடலை நேசிக்கக் கத்துக் கொடுத்திருக்கு. இந்த உடலால நான் இழந்துட்டதா நினைக்கிற வாழ்க்கையோட இழப்புகளை இட்டு நிரப்பிக்க அவரும் அவரோட இசையும் துணையா இருக்கு. மத்தவங்களுக்கு இது பைத்தியக்காரத்தனமாகக்கூடத் தெரியலாம் ரகு. ஆனா எனக்கு இது பிடிச்சிருக்கு,” என்றான்.
வெங்கடேஷின் வார்த்தைகளைக் கேட்டபோது என் கண்கள் கலங்கியிருந்தன.
“அடுத்த முறை போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போ வெங்கடேஷ்,” என்றேன்.
***
சிவபிரசாத் – சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவருடைய சிறுகதைகளும் விமர்சனங்களும் தமிழின் முக்கியச் சிறுபத்திரிகைகளிலும் இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளன. மறைந்த எழுத்தாளர் நஞ்சுண்டனின் கட்டுரைத் தொகுப்பான ‘காற்றின் நிழல்’ மற்றும் மொழிபெயர்ப்புத் தொகுப்பான “பால்மீசை” ஆகிய புத்தகங்களின் தொகுப்பாசிரியர். சொற்சுனை இலக்கிய அமைப்பின் முக்கியமானவர்களில் இவரும் ஒருவர். அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் இவர் சேலத்தில் வசிக்கிறார். மின்னஞ்சல்: Sivaprasath29@gmail.com

