1)
பிறழ்வின் கோடுகளைத் தொடும்
உன் காதலின் வண்ணம்
அழுத்தமான இளஞ்சிவப்பு.
அதே நிறத்தில்
உன் வெளியெங்கும்
மலர்ந்து கிறங்குகின்றன
உன்மத்தத்தின் செங்குவளை மலர்கள்.
காமத்தின் கள்ள நீலம் பாய்ந்திருக்கும்
அடர்சிவப்பு அல்லிகள்.
மோகத்தின் கிளர்ச்சியேறி
மென்காற்றில் மெல்ல துவளும்
மேக வண்ண ஆம்பல்கள்.
நீர்ப்பரப்பின் மீது இடைவெளியற்று
நிறைந்து பூத்திருக்கும்
உன் தாபத்தின் பசிய குளத்தின் மீது
இடைவிடாது பெய்து கொண்டேயிருக்கிறது
பெருஞ்சப்தமிட்டபடி அடை மழை.
கண்ணாடி கூரை கொண்ட ஸ்நான அறையில்
உன் உடல் வெப்பத்தில் சூடேறி
குமிழ்கள் உடையும்
குளியல் தொட்டி நீரைக் கிழித்து
முகிழ்த்து மேலெழுகின்றன
உன் நிறைவேறாத வேட்கையின்
நீண்ட தண்டுகள் கொண்ட
கருப்பு நிறத் தாமரைகள்.
*
2)
என் காதலனின்
இறந்து போன முன்னாள் காதலி
தன் இருப்பை
உணர்த்திக் கொண்டே இருக்கிறாள்
உணவில் அதீதமாய் கலந்து விட்ட
பிரித்து விட முடியாத உப்பைப் போல்.
வேலமரப் பூக்களில் – அவள்
ஒரு பட்டாம்பூச்சியென அமர்ந்து
மிதந்து செல்லும் போது
அவளென்று அறியாது
அவளைப் பிடிக்க கை உயர்த்துகிறான்.
ஒரு புலரியின் கூடலில்
மேற்கூரையில் மங்கலாய் தெரியும்
மூன்றாவது நிழல் யாருடையது?
செனெவில்லின் பியானோ இசை
மனதின் உச்சஸ்தாயிற்கு சென்று கீழிறங்குகையில்
அவனை அணைத்துக் கொள்கிறேன்
அப்பொழுது
அவளையும் சேர்த்தே தான் அணைக்கிறேன்.
*
3)
கருங்கல் தூணில் சாய்ந்து
பகவதியின் அம்பலத்து
தாழ்வாரத்தினின்று அமையும்
சரம் சரமான விளக்குகளை நோக்கியபடி
நீ ஏங்கி நிற்பது ஏனோ….?!
கொஞ்சம் கவனித்துப் பாரேன்.
என் மனதின் பிரகாரங்களை..
அதில்..
பொன்சுடர் அசைய எரியும் தீபங்களை..
அத்தனை தீபங்களின்
மொத்தமான
ஒரே
மகா வெளிச்சம்
நீ தானே…!
***
சம்யுக்தா மாயா – தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்தவர். தற்போது தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். சென்னையில் வசிக்கிறார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ‘டல்ஹொஸியின் ஆரஞ்சு இரவு'(உயிர்மை பதிப்பகம் ) 2016ல் வெளி வந்தது. இரண்டாவது ‘கவிதை நூல் ‘தீ நின்ற பாதம் ‘(சால்ட் பதிப்பகம்) 2024ல் வெளி வந்தது. தொடரந்து சிற்றிதழ்களிலும் மின்னிதழ்களிலும் கவிதைகள் எழுதி வருகிறார். மின்னஞ்சல் : samyukthamaya3@gmail.com
