Homeஇதழ்கள்2026 இதழ்கள்திருட்டுப் பூனைகள்

திருட்டுப் பூனைகள்

கண்ணன் விஸ்வகாந்தி

ல்லூரி முடித்த உடனேயே வேலைக்கு சேர்ந்து விட்டேன். சில காலம் விற்பனைப் பிரதிநிதியாக சொந்த ஊரான சேலத்திலேயே வேலை செய்தேன். பிறகு வேறு ஒரு தொடர்பின் வழியாக, யுபியெஸ் செய்யும் பிரபலமான ஒரு கம்பெனியில் வேலை கிடைத்தது. மின்வெட்டு அதிகமாக இருந்ததாலும், ஜெனரேட்டர்களின் விலையும் பராமரிப்பு செலவும் மிக அதிகமாக இருந்ததாலும், யுபியெஸ் பிரபலமடையத் தொடங்கியது. சென்னை பெருங்குடியில் யுபியெஸ் அசெம்பிள் செய்யும் பேக்டரியில் வேலை. பக்கத்தில் இருந்த வேளச்சேரியில் தங்கியிருந்தோம். அங்கிருந்து கம்பெனி பேருந்துகளும், அரசுப் பேருந்துகளும் இருந்தன. பதினைந்தே நிமிடங்களில் கம்பெனி. பெருங்குடியிலேயே டிபன் மற்றும் மதிய உணவு. அருமையான சுவையுடன் குறைந்த விலையில் கிடைத்தது. தொழில் கற்றுக் கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்தது.

கம்பெனிக்கு இருவர் பார்ட்னர்கள். இருவருமே சேலத்தைச் சேர்ந்தவர்கள். மோகன் அவர்கள் பேக்டரி இன்சார்ஜ் ஆகவும் இருந்தார். டெக்னிக்கலாக மிகவும் தேர்ந்தவர். அவர்தான் இந்த யுபிஎஸ்ஸின் பின்னிருந்த மூளை என்பார்கள். மற்றொருவர் பழனிசாமி அவர்கள். அவர்தான் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனையைக் கவனித்து வந்தார். விற்பனை செய்வதில் மிகுந்த விற்பன்னர். இருவருமே அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் ஜாம்பவான்கள்.

மோகன் மிகவும் சிக்கனமானவர். அப்போது மாருதி 800 மிகவும் பிரபலமான காராக இருந்தது. அவருடைய குடும்பத்தினர் நால்வரையும் வைத்து, அவரே செல்ஃப் டிரைவிங் செய்வார். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி, எதையும் கண்டு கொள்ளாமல் தனது இலக்கை நோக்கி அவருடைய பயணம் தொடர்ந்தது. கம்பெனியில் கடுமையான டெஸ்ட்டிங் இருந்தது. பல சமயங்களில், அவரே யூனிட் அருகில் அமர்ந்து, சரி செய்வதைப் பார்த்திருக்கிறேன். எளிமையும், திறமையும், சிக்கனமும் சரியான கலவையில் அமைந்த பேக்கேஜ் அவர்.

ஓரளவுக்கு கற்றுத் தேர்ந்தவர்களை, சென்னை மயிலாப்பூரில் இருந்த, யுபிஸ் சர்வீஸ் செக்ஷனுக்கு மாற்றுவார்கள். பாரி, சுப்பிரமணி போன்ற நல்ல நண்பர்களைப் பிரிய வேண்டிய நிர்ப்பந்தம். பாரி பின்னாளில் பேக்டரி இன்சார்ஜ் அளவுக்கு உயர் பதவி வகித்தார். சிறிது நாட்களில், சுப்பிரமணியும் சர்வீசில் என்னுடன் இணைந்தான். 

பேக்டரியில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தவனுக்கு, மிகவும் அலைச்சலான வேலை. சர்வீஸ் கிட்டை எடுத்துக் கொண்டு, பேருந்தில் குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைந்து, பிரச்சினை என்னவென்று கண்டறிந்து, உடனே சரி செய்ய வேண்டும். மிகவும் பொறுப்பான, டென்ஷனான வேலை.

எங்கள் மேலாளராக இருந்த திருமூர்த்தி சார் மிகவும் நல்லவர். ஆனால் மிகவும் டென்ஷனாகக் கூடியவர். சரமாரியாக சிகரெட் பிடிக்கும் பழக்கமுடையவர். மீசையின்றி, மழுமழுவென்று இருப்பார். முடியில்லாமல், மீசையில்லாமல், ஹிந்திப் பட வில்லனைப் போன்ற தோற்றம். 

ஆரம்பத்தில் சிறிய யுபியெஸ்களை மட்டுமே சர்வீஸ் செய்து வந்தவனுக்கு, சற்றே பவர் அதிகமான யூனிட்களை பழுதுபார்க்கும் வாய்ப்புகளும் வந்தன. என்னுடன் வேலை செய்தவர்களில், நண்பர் சுப்பிரமணி மிகச் சிறந்த வேலைக்காரர். எவ்வளவு பெரிய யூனிட்டாக இருப்பினும், கடினமான பிரச்சினையாக இருப்பினும், விரைவாக முடிக்கும் ஆற்றலுடையவர். எங்களுடன் வேலை செய்த, சேலத்துக்காரரான மாரியப்பன் மற்றும் வட சென்னையைச் சேர்ந்த சூர்யாவும், கேரளாவைச் சேர்ந்த பிஜுவும் நண்பர்களானார்கள். மாரியப்பன் சரியான வேலைக்காரர். சூர்யா நல்ல துடியான பையன். நிறைய சந்தேகங்களைக் கேட்டு தொழிலை நன்றாகக் கற்றுக் கொண்டான். அப்போது வைகோ திமுகவிலிருந்த நேரம். அவருடைய பேச்சுக்கு, சூர்யா அடிமை. எப்போது அவரின் பேச்சு இருந்தாலும், சூர்யா அங்கிருப்பான். அவருடைய ரசிகனாகவே மாறியிருந்தான். நாங்கள் மாரியின் அறையில் சந்திக்கும் போதெல்லாம், வேலை சார்ந்த சந்தேகங்களைத் தவிர்த்து, வைகோ முழுமையாக ஆக்கிரமித்திருந்தார். சூர்யா இப்போது, ஏதாவது ஒரு கட்சியில் பெரிய பதவியில் இருக்கலாம்.

மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் தான் எங்களுடைய அலுவலகம் இருந்தது. பலமுறை இசையமைப்பாளர் எம்எஸ்வி அவர்கள் ஆட்டோவில் செல்வதைப் பார்த்திருக்கிறேன். 

சில மாதங்களில் திருமூர்த்தி சார் மாற்றப்பட்டு, சுந்தர் சர்வீஸ் மேனேஜராக வந்தார். புல்கேண்டு சர்ட், பேகி பேண்ட், இன்செர்ட் செய்திருப்பார். விலையுயர்ந்த ஷுக்கள் என்று ஒரு திரைப்படக் கதாநாயகனாக தோற்றமளித்தார். அவருடன் சேர்ந்து நாங்கள் மூன்று பேர் என்ஜினியரிங் முடித்திருந்தோம்.

அவர் வந்து, ஒரு மாதம் ஓடி இருக்கும். ஒரு நாள் மாலை, அவருடைய கேபினுக்கு அழைத்தார். அன்றைய வேலையில் எதுவும் தவறு செய்யவில்லையே, எதற்கு அழைப்பு என்று பதட்டத்தோடு உள்ளே நுழைந்தேன்.

“வாங்க கண்ணன். எப்படி இருக்கீங்க. அப்பா, அம்மா எல்லாம் நல்லா இருக்கீங்களா? அப்புறம் வேல எப்படி போவுது?”, என்றார்.

“பரவாயில்லை சார். வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்க சார். வேலைல நெறய கத்துக்கிட்டே இருக்கிறேன் சார்”, என்றேன் நின்றபடியே.

“நல்லது. திருப்பதியில நமக்கு ஒரு பிராஞ்ச் இருக்குது. ஆரம்பிச்சிக் கொஞ்ச நாள் தான் ஆச்சு. பாத்துக்கிறதுக்கு நல்ல எஞ்ஜினியர் வேணும். ஒங்கள அனுப்பலாம்னு இருக்கிறோம். என்ன சொல்றீங்க?”.

எனக்கு சற்றே பதட்டமாக இருந்தது. இருப்பினும் இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால், உடனே ஒப்புக் கொண்டேன். 

“சரிங்க சார். ஊருக்குப் போய் அப்பா, அம்மாகிட்ட சொல்லிட்டு, அடுத்த வாரத்திலிருந்து ஜாயின் செய்கிறேன்”, என்றேன்.

“சரி. நல்லா பண்ணுங்க. ஏதாவது உதவி தேவப்பட்டா, தயங்காமல் கேளுங்கள்” என்றார்.

வெளியே வந்ததும், பாரி, மாரி, சுப்பிரமணி என்று எல்லோரும் கலாய்த்தனர். சுப்பிரமணி ட்ரீட் கட்டாயம் வேண்டுமென்றான். எப்படியோ நழுவி விட்டேன். மனசுக்கு சற்று கஷ்டமாக இருந்தது.

வீட்டில் சொன்னதும், அம்மா தான் தைரியம் சொன்னது: “நீ எங்க வேணா போ. ஆனா ஒழுக்கமா இருக்கனும்”. அப்பா வழக்கம் போல எதுவும் சொல்லவில்லை.

சென்னையில் இருந்த வரை, பெரிதாக எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் இது புது இடம். புது மொழி.

சேலத்திலிருந்து சென்னை. சென்னையில் இருந்து திருப்பதி. மிகவும் நீண்ட பிரயாணமாகத் தோன்றியது.

வெங்கட் என்பவரின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைப் பகிர்ந்து இருந்தனர். திருப்பதியில் இறங்கியதும், ஒரு ஆட்டோவில் ஏறி, ஆங்கிலத்தில் முகவரியைச் சொல்லி, முகவரி எழுதிய பேப்பரையும் காண்பித்த பிறகு, “நீங்க தமிழா சார். தமிழில்லயே சொல்ல வேண்டியது தானே. எங்களுக்கு பல மொழிகள் தெரியும் சார். அதுவுமில்லாமல் சித்தூர் தமிழ்நாடு பார்டர் தான சார்”, என்று தெலுங்கு கலந்த உச்சரிப்பில் பேசினார். அவரிடம் பேசியபடியே சீனிவாசா நகருக்கு வந்து சேர்ந்தோம். பேசிய தொகைக்கு மேல் சற்று அதிகமாகவே கொடுத்து விட்டு, ஆட்டோவில் இருந்து இறங்கினேன். வீட்டு ஓனர் போல் தோற்றமளித்த பெண்மணியிடம், கம்பெனி பற்றி உடைந்த ஆங்கிலம் கலந்த தமிழில் சொன்னவுடன், “மேல தான் ஆபிஸ். வெங்கட் நல்ல தம்பி. ஆறு மாசமா இங்க தான் கம்பெனி நடக்குது”, என்றார் அவருக்குத் தெரிந்த தமிழில்.

படிகளின் வழியாக அழைத்துச் சென்று, கதவை லேசாகத் தட்டி,”வெங்கட் காரு. கம்பெனிக்கு கொத்தவாலு எவரோ வச்சுன்ட்டாரு”, என்றார். நல்ல உயரமாக, மாநிறத்தில், சுருட்டை முடியுடனுடனும், வாக்கெடுத்து சீவிய ஒருவர் தனது கையை நீட்டி,”This is Venky, Venkat. Welcome to Numeron” என்றார் ஆங்கிலத்தில். பதிலுக்கு வணக்கம் சொல்லியவுடன், அவருக்கு முன்பிருந்த சேரில் அமரச் சொன்னார். சற்று நேரம் பேசிய பிறகுதான் தெரிந்தது, அவர்தான் இந்த பிராஞ்ச் மார்க்கெட்டிங் இன்சார்ஜ் மற்றும் மேனேஜர் என்று. பார்ப்பதற்கு ஜென்டில்மேன் தோற்றம் மற்றும் நல்ல ஆங்கிலம், அவர் மீது எனக்கு மரியாதையை ஏற்படுத்தியது.

ஹாலில் அலுவலகம். உள்ளறையில் படுக்கை. அட்டாச்டு பாத்ரூம். சர்வீஸ் கால்கள் குறைவாகவே இருக்கும் என்றும், ஏதாவது உதவி தேவையெனில் தயங்காமல் கேட்கவும் என்றும் சொன்னார். எல்லா மேலாளர்களும் சொல்லும் அதே வசனம்.

அவரது மேஜையில் ஒரு லேண்ட்லைன் போன் இருந்தது. பேசிக்கொண்டே இருபது நிமிடங்களில் இரண்டு பில்டர் சிகரெட்டுகளை ஊதித் தள்ளினார். ஆஸ்ட்ரே நிரம்பி வழிந்தது. அவரிடமிருந்து காட்டமான சென்ட் வாசனை வந்தது.

நியூமரான் கம்பெனிக்கு திருப்பதி அடிவாரத்திலேயே நிறைய வாடிக்கையாளர்களிருந்தனர். திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் சார்பில் ஆரம்பப் பள்ளி முதல், எஞ்ஜினியரிங் மற்றும் மெடிக்கல் காலேஜ் வரை நிறைய கல்வி நிறுவனங்கள் இருந்தன. ஏறக்குறைய எல்லாவற்றிலும் எங்கள் கம்பனியின் யுபியெஸ் இருந்தது.

வேலை சரியாக இருந்தது. தினமும் ஏதாவது ஒரு சர்வீஸ் கால் இருந்தது. திருப்பதி மட்டுமின்றி, கடப்பா, சித்தூர், நெல்லூர், மேல் திருப்பதி என அனைத்தையும் பார்க்க வேண்டும் என்று பிறகுதான் தெரிந்தது. சில நாட்களில், ஒரு நாள் சித்தூர் என்றால், மறு நாள் நெல்லூர் செல்ல வேண்டியிருந்தது.

பெரும்பாலான சர்வீஸ் கால்களை நானே முடித்து விடுவேன். சற்று கடினமான மற்றும் அதிக பலருடைய யுபியெஸ் அல்லது என்னால் முடிக்க இயலாத நிலை வந்தால், சென்னை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு உதவி கேட்பேன்.

சர்வீஸ் கால்கள் இல்லாத நாட்களில் மிகவும் போரடித்தது. பல நேரங்களில் திருப்பதி அடிவாரத்தில் இருந்த தியேட்டர்களில் இரவு நேரக் காட்சிக்குச் சென்று விடுவேன். வெளியில் சாப்பிடுவதுதான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஏனெனில் ஆந்திர சமையலில் மிகுந்த காரமிருக்கும். சேராமல் போனால், உடனே அல்சர் தான். 

எப்படியோ உடல் நலம் குன்றாமல் நாட்கள் நகர்ந்தன. 

வெளியூர் செல்லாத நாட்களிலும், லோக்கல் சர்வீஸ் முடித்து விட்டு, அலுவலகம் திரும்பினாலும், வெங்கட் பெரும்பாலும் அலுவலகத்திலேயே இருந்தார். அவருக்கு ஏதாவது டார்கெட் இருக்கிறதா? அவர் ஏதாவது புதிய கஸ்டமரை சேர்த்திருக்கிறாரா என்று எதுவும் தெரியவில்லை. கேட்பதற்கு பயம். 

அவருடன் அலுவகத்தில் இருந்த நேரங்களில் தான், அவருடைய சுயரூபம் சிறிது சிறிதாக தெரிய வந்தது. பல நேரங்களில் அவர் போனில் பேசியபடியே இருந்தார். பெரும்பாலும் எதிர் பக்கத்தில் பெண்களின் குரலாகவே இருந்தது. பல பெண்களிடம் அவருக்கு பழக்கம் இருந்தது. அதை பெருமையுடன் கூறவும் செய்தார். ஒரு முறை பேசிக்கொண்டு இருக்கையில் ஆங்கிலத்தில் சொன்னார்:”எனது நண்பர்கள் தங்களின் பெண் நண்பர்களை எனக்குப் பரிச்சயம் செய்து வைக்கவே பயப்படுகிறார்கள். ஏனெனில் சில முறை பேசினாலே என்னால் பெண்களை எனது வலையில் விழ வைக்க முடியும்”. அவரது முகத்தில் பெருமை மிளிர்ந்தது. எனக்கோ அருவெறுப்பாக இருந்தது.

ஒரு விடுமுறை நாளன்று, மதிய வேளையில், ஒரு அழகான பெண்மணி தனது மகனுடன் அலுவலகத்திற்கு வந்தார். நல்ல உயரம். நாற்பது வயதிருக்கும். பணக்காரக்களை முகத்தில் தெரிந்தது. 

வெங்கட் என்னைப் பார்த்து, “ஓடிப் போய், இரண்டு கூல் டிரிங்க்ஸ் வாங்கி வா. அவசரம்” என்றார். நானும் வாங்கி வந்து டம்ளரில் ஊற்றி கொடுத்தேன். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டுப் பிறகு அப்பெண்மணி விடைபெற்றார். அவர்களது பேச்சில் மிகவும் அன்னியோன்யம் தெரிந்தது. அவர் சென்றதும், வெங்கட் என்னிடம் ஆரம்பித்தார்: “பக்கத்துத் தெரு தான். வக்கீல் மனைவி. பல முறை என்னோடு வந்திருக்கிறார். பெரும்பாலும் ஊருக்கு வெளியே சென்று விடுவோம். எனக்கு எல்லா இடங்களிலும் நண்பர்கள் இருப்பதால், பிரச்சினையே இல்லை”. சிகரெட்டை ஊதியபடியே சிரித்தார். 

எனக்கோ என்ன சொல்வதென்று தெரியவில்லை. தலையை மட்டும் நன்றாக ஆட்டி வைத்தேன். 

மற்றொரு முறை, நான் நெல்லூருக்கு சர்வீஸ் விசயமாகச் சென்ற போது, சேல்ஸ் சம்பந்தமாக அவரும் உடன் வந்திருந்தார். பேருந்தை விட்டு இறங்கியதும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து ஊதியபடியே, யாருடனோ பேச ஆரம்பித்தார். எனக்கு உடனே புரிந்து விட்டது. பத்து நிமிடத்திற்குப் பிறகு, வந்தவர் சிரித்தபடியே, “இங்க ஒண்ணு ரெகுலர். என்னய கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி ஒரே அட்வைஸ். டைம் வேஸ்ட்”.

 நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்: ”அடப்பாவி யாரையுமே நீ விட்டு வைக்க மாட்டியா?”.

அவர் வேலையில் கவனம் செலுத்துவது குறைந்து, இப்படி மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 

அன்று சனிக்கிழமை இரவு. மிகவும் டயர்டாக இருந்ததால், நான் படத்திற்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே தங்கி இருந்தேன். 

வெங்கட் வீட்டுக்குச் செல்லாமல், அலுவலகத்திலேயே இருந்தார். யாருக்கோ காத்திருப்பது போலிருந்தது அவருடைய முகம். சற்றே பரபரப்புடன் சிகரெட் மேல் சிகரெட் புகைத்துக் கொண்டே இருந்தார். 

நள்ளிரவு நெருங்கும் நேரத்தில், முதலில் இருவர் வந்தனர்.

 வெங்கட், “எல்லாம் நம்ம நண்பர்கள் தான். தூக்கம் வந்தா, ஹால்ல அப்படியே படுத்துக்குங்க”, என்றார். 

ஏதோ தவறு நடக்கிறது என்று மட்டும் மனசு சொன்னது. பயத்தில் எனக்கு தூக்கம் வரவில்லை.

சிறிது நேரம் கழித்து, யாரோ ஒருவர் போர்த்திய படியே, படியேறி வர, அவரின் பின்னால், மேலும் இருவர். 

போர்த்தியபடி வந்தவரை அப்படியே உள்ளறைக்கு அழைத்துச் சென்றனர். வெளியே ஹாலில் தண்ணி மற்றும் சீட்டுக் கச்சேரி ஆரம்பித்தது.

வெங்கட், “கண்ணன், வாங்க. ஒரு பெக் போடுங்க” என்றார். “இல்லை சார், பழக்கமில்லை” என்று மறுத்து விட்டேன். சீட்டாட்டத்தை மட்டும் தூக்கம் கலைந்த கண்களோடு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். காசு கட்டி சீட்டாடுவதை முதல் முறையாகப் பார்த்தேன்.

ஒவ்வொருவராக உள்ளறைக்குச் சென்று திரும்பினார்கள். வெங்கட்டை எல்லோரும் சார் சார் என்றனர். அவருக்கு அருகிலிருந்தவர் அவருக்கு ஊற்றிக் கொடுத்த படி இருந்தார். சற்றே வயதான ஒருவர் உள்ளே சென்று ஐந்தே நிமிடங்களில் திரும்ப வந்து விட்டார். எல்லோரும் அவரை கிண்டல் செய்து சிரிக்க ஆரம்பித்தனர். அவரும், “வயசாயிடிச்சில்ல” என்று ஒப்புக் கொண்டார். எனக்கு இப்போது தான் உள்ளே இருப்பது பெண்ணோ என்று சந்தேகமாக இருந்தது.

கதவு திறக்கும் போதும், மூடும் போதும், வந்த சத்தங்கள் உள்ளறையில் ஒரு பெண் இருப்பதை உறுதி செய்ய, எனக்கு திக்கென்றது. முதல் பயம், அப்பெண்ணின் வீட்டுக்குத் தெரிந்தால் என்னாவது? இரண்டாவது, வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்தால், உடனே காலி செய்யச் சொல்லி விடுவாரே? மூன்றாவது வீட்டு உரிமையாளர் மூலமாக கம்பெனிக்குத் தெரிந்தால் என்னாவது? வேலைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ? பயத்தில் குப்பென்று வேர்த்தது. நாக்கு வறண்டு போக, தண்ணீரை நிறைய குடித்து, சற்றே பயத்தைக் குறைக்க முயற்சி செய்தேன். திருப்பதி என்பது பல வெளி மாநிலத்தவர் வந்து செல்லும் புனிதமான இடம். அதனாலேயே பாலியல் குற்றங்களும் மலிந்திருந்தது என்று கேள்விப்பட்டேன். ஆனால் இப்படி ஒரு சம்பவத்தை வாழ்நாளில் எதிர்பார்க்கவில்லை.

சற்று நேரம் கழித்து, உள்ளறையின் கதவைத் திறந்து, ஒரு பெண் வெளியே வந்தார். சற்றே குண்டான, முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க சுமாரான அழகுடையவர். ரவிக்கை ஏதும் அணியாமல் புடவையைக் கொண்டு, உடலைப் போர்த்தி இருந்தார். வயிற்றுப் பகுதி வெளியே தெரிந்தது. சட்டென்று கண்களை வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன்.

வெங்கட்டின் நண்பர்களில் ஒருவர் என்னைப் பார்த்து, “போறிங்களா சார் “ என்றார். எனக்குப் பயத்தில் கைகால்கள் நடுங்க, பேச நா எழவில்லை. “இல்ல சார், பழக்கமில்லை” என்றேன். 

அந்தப் பெண் வெகு சகஜமாக, எல்லோருடனும் சேர்ந்து அமர்ந்து கொண்டு, சீட்டாட்டத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தார். 

வெங்கட்டின் நண்பர் மீண்டும் என்னைப் பார்த்து, “இவளோட புருஷன் துபாயில் இருக்கிறான். வருஷம் ஒரு தடவ வருவான். இதுக்குப் பழக்கிவுட்டதே நான் தான்”, என்றார் பெருமையாக. எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அமைதியாக இருந்தேன். தூக்கத்தில் கண்கள் சொக்க ஆரம்பித்தன. 

வெங்கட் அவரது நண்பரிடம், “இவள கொண்டு போய் விட்டுட்டு வந்துரு. நாம் இன்னொரு ரவுண்டு கட்டிங் அடிச்சிட்டு, சீட்டு ஒரு ரவுண்டு முடிச்சிட்டு, தூக்கம் வந்தா கலச்சிடலாம்”, என்றார். 

மீண்டும் முக்காடு. வெங்கட்டின் நண்பருடன் அந்தப் பெண் புறப்பட்டுச் சென்று விட்டார்.

அவர் சிறிது நேரம் கழித்து வந்தபிறகு, தண்ணிக் கச்சேரி கலகலப்பாக மீண்டும் ஆரம்பித்தது. 

தூக்கத்தைக் கட்டுப் படுத்த முடியாமல், “வெங்கட் சார். நான் படுக்கறன்” என்று சொல்லி விட்டு, உள்ளறைக்குச் சென்று படுத்து விட்டேன்.

ஞாயிறன்றும் அலுவலகம் வந்து செல்வது வெங்கட்டின் வழக்கம். அடுத்த நாள் மதியம் வந்து, எதுவுமே நடக்காதது போல, சிகரெட் பிடித்தபடியே இருந்தார். எனக்கு தான் சற்று சங்கடமாக இருந்தது. அவர் மீதிருந்த மரியாதை சுத்தமாக இல்லை. ஆனாலும் அவருடன் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். 

சில மாதங்களில் வெங்கட்டுக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. ஒரு சுபயோக சுப நாளில் அவருக்குத் திருமணம் நடந்தது. நானும் சென்று வாழ்த்தி விட்டு வந்தேன். அவர் தனிக்குடித்தனம் சென்ற போது, மெத்தையை வண்டியில் ஏற்றுவது வரை உதவினேன். 

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம். வெங்கட் அலுவலகம் வந்தார். சற்றே மௌனமாக இருந்தார். ஒன்றன் பின் ஒன்றாக சிகரெட்டுகள். ஏதோ பிரச்சினை என்பது புரிந்தது. அவரே ஆரம்பித்தார்.

“கண்ணா, கல்யாணத்துக்குப் பிறகு, இந்த சம்பளம் பத்தல. வேலய விட்டுடலான்னு இருக்கிறேன். ஹைதராபாத்தில் என்னோட நண்பர் மூலமாக, ஹிந்துஸ்தான் லீவரில் வேலை. நல்ல சம்பளம்” என்றார்.

“ஒங்களுக்கு நல்லது தான் சார்”, என்றேன். 

இரண்டு மாதங்களில் அவர் வேலையை விட்டு விட்டார். பிறகு அவரைப் பார்க்கும் வாய்ப்பு இன்று வரை கிடைக்கவில்லை.

***

கண்ணன் விஸ்வகாந்தி – சேலத்தை சேர்ந்தவர். பெங்களூரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். சிறுகதை, கவிதை,நாவல் என்று தொடர்ச்சியாக முன்னணி இதழ்களில் பங்களித்து வருகிறார். அதீத்தின் பசி கவிதை நூலுக்காக சௌமா விருது பெற்றிருக்கிறார். மின்னஞ்சல்: vkannan10@gmail.com

RELATED ARTICLES

1 COMMENT

  1. நல்ல கதை.
    கண்ணன் அவர்களின் கதைகளை நடுகல்லில் வாசித்திருப்பதால் அவரின் கதை பயணிக்கும் பாதையை ஆரம்பத்திலேயே உணர்ந்து கொள்ள முடிந்தது. மனசுக்குப் பிடிக்காததை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் அப்படியான ஒரு சூழ்நிலையில் இப்படித்தான் இருந்தாக வேண்டும்.
    முடிவில் அவனுக்கு தண்டனை கிடைத்திருக்கலாம், நாயகன் தப்பித்துக் கொள்வதாய் முடிவது கதையைச் சாதாரணமாக்கிவிட்டதோ எனத் தோன்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here