கிருஷ்ணமூர்த்தி
அரசியல் விஷயங்கள் கட்சி சார்பாக சுருங்கிய காலகட்டத்தில் கல்வி, உரிமை, அதிகாரம் ஆகிய விழுமியங்களை மையப்படுத்திய போராட்டங்கள் நாடு தழுவிய அளவிலும் உலகளாவிய அளவிலும் எழத் தொடங்கியிருக்கின்றன. அதிகாரத்தில் இருப்பவர் போராட்டங்களை முடக்க அவர்களின் வரம்புகளுட்பட்ட அதனை சக்திகளையும் திரட்டுகிறாகள். போராட்டத்தின் வடிவங்கள் மாறியிருக்கின்றன. காந்தியத்தின் வருகை அதற்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆயுதப் போராட்டங்களின் வீரியத்தை, ஆயுதங்களின் வலிமையை அர்த்தமற்றதாக்கியது காந்தியின் கோட்பாடுகள். உரையாடலை ஆயுதமாக்கியது. சமரசத்தை கோட்பாடாக்கியது. போர்முறையும் ஆயுதப் போராட்டங்களும் சமரசமற்ற எனும் முடிவை பிரதானப்படுத்தியபோது சமரசத்தின் வழியே அனைத்து வர்க்கத்து மக்களுக்குமான பொதுவுடைமையான முடிவை எய்த இயலும் எனும் இடத்தை முன்வைத்தார். சட்ட விதிகளுக்கு உட்பட்டு சமூகத்திற்கு குந்தகம் விளைவிக்கும் சட்டங்களுக்கு எதிராக ஒத்துழையாமை எனும் விழுமியத்தை வரையறுத்தார். அதிகாரத்தின் டாம்பீகத்தை உடைத்து சாமான்யனுடனான உரையாடலுக்கு வழிவகுத்தார்.
அக்டோபரின் தொடக்கத்திலிருந்து தில்லியில் நிகழும் போராட்டங்கள் காந்தியையும் காந்தியத்தையும் நினைவூட்டுகின்றன. காந்தி நீக்கம் செய்யப்பட்ட இந்தியாவை முன்வைக்க போராடும் வலதுசாரி இயக்கங்களுக்கு முன்னே இளைஞர்களின் துணையுடன் காந்திய போராட்ட வடிவங்கள் மீண்டெழுகின்றன. இளைஞர்களிடம் ஆயுதங்கள் இல்லை. சொற்கள் உண்டு. கேள்விகளுண்டு. துணை நிற்காவர்களின் வயதொத்த எண்ணற்ற இளைஞர்கள் உண்டு. ஆளும் வர்க்கத்திடம் பதில்கள் இல்லை. பாதுகாப்பு/தடுப்பு அரண்கள் உண்டு. தோட்டாக்கள் உண்டு. லத்திகள் உண்டு. அச்சுறுத்தும் ஆயுதங்கள் உண்டு. மன்னராட்சி காலத்தில் களம் கண்ட மன்னர்கள் சமமான ஆயுதங்கள் கொண்டவர்களுடன் சமர் புரிந்தனர். ஜனநாயக யுகத்தில் களம் உண்டு. ஆனால் சமமான ஆயுதங்களுடன் நிகழ்வதில்லை.
காந்தியின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து போராட்டங்களும் உண்மையின் துணைகொண்டு முன்னெடுக்கப்பட்டன. மக்களிடம் நடையாக நடந்து உண்மைகள் சொல்லப்பட்டன. தரவுகளுடன் உரையாடப்பட்டன. அநீதிகள் குறித்த அறியாமையை உண்மைகளின் துணிகொண்டு களைந்தனர். அது மக்கள் திரளைக் கூட்டியது. பொது விசயங்களுக்காக எளிய மக்கள் ஒன்றிணைந்தனர். ஆயுதங்களின் இடத்தில் காயங்களை ஏற்கும் மனநிலையை ஆயுதமாகத் தரித்தனர். மக்களுக்கு முரணாக நிறுவப்பட்ட சட்டங்களுக்கு எதிராக மௌனித்தனர். அமைதி காத்தனர். உண்ணா நோன்பு இருந்து எதிர்தரப்பின் மனசாட்சியை கேள்விக்குள்ளாக்கினர்.
காலந்தோறும் கிளர்ந்தெழும் மக்கள் போராட்டங்கள் இந்த ஆயுதங்களையும் காந்தியின் போராட்ட முறைகளையும் சமூகத்திற்கு நினைவூட்டுகின்றன. இப்போது நிகழ்வது அதன் பெரிய வடிவம். இலங்கையில் நீக்கப்பட்ட திலீபனின் சிலையும் இந்த நினைவூட்டுதலின் வேறொரு வடிவமாக இருக்கின்றன. நில வரம்புகளுக்கு அப்பாற்பட்டு மக்களின் வாழ்வாதாரத் தேவைகளுக்கு குரல்கள் எழும்போதெல்லாம் காந்தியின் புன்னகை சமூகத்தின் நினைவில் நிழலாடுகிறது.
சமூகத்தின் சிந்தனைத் தளம் தத்துவம் – இலக்கியம் – வரலாறு எனும் முப்பரிமாணத்தில் நிகழ்வது. அதன் நீக்கமாக அமைந்திருக்கும் இந்த கல்விச் சூழலில் மூன்றையும் இணைக்கும் புள்ளியாகவும் காந்தியம் திகழ்கிறது. இளம் தலைமுறை எழுத்தாளர்களின் முகாந்திரமாக இருக்கும் யாவரும் மின்னிதழும் இம்மூன்றையும் இணைக்கும் புள்ளிகளை இலக்காக கொண்டிருக்கிறது. அதன் ஒரு பிரதியாக இந்த இதழ் வெளியகிறது. காந்தியம் குறித்து எழுதியிருக்கும் ஆர்.பட்டாபிராமன் அவர்களுக்கு பிரத்யேக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
சமகால நாவலாசிரியர்கள் இருவரின் நேர்காணல்கள் புனைவுலகின் விஸ்தீரணத்தை மேலும் உணர வழிவகுக்கிறது. கவிஞர் சசி இனியனின் நேர்காணல் கவிதை உலகின் விரிவான போக்கையும், அவருடைய கவிதையில் உள்ளடங்கியிருக்கும் மரபார்ந்த அம்சங்களையும் சிறப்பாக வெளிக்கொண்டு வந்திருக்கிறது. அதற்கு எப்போதும் உடன் நிற்கும் லாவண்யா சுந்தரராஜனுக்கு எங்கள் அன்பும் நன்றியும். உரையாடல்களை உருவாக்கும் வகையில் பங்களித்திருக்கும் அனைத்து படைப்பாளர்களும் தொடர்ச்சியாக இதழை நடத்துவதற்கான ஊக்கத்தை அளிக்கிறார்கள். அவர்களுக்கும் எங்களுடைய நன்றியை உரித்தாக்குகிறேன்.
***
