அப்பு சிவா
“எத்தனை மணிக்கு பாத்தீங்க?” என்றார் இன்ஸ்பெக்டர் ரிஷி.
“காலையில் எப்பவும் வாக்கிங் போறது அவனோட பழக்கம் சார். சரியா ஆறுமணிக்கு கிளம்புவான், ஒரு மணி நேரம் போவான். எப்பவாவது நானும் கூட போவேன். இன்னிக்கு கொஞ்சம் லேட்டாதான் நான் கிளம்பினேன். வந்து பார்த்தா…” அழுதபடி சொன்னார் சுந்தரராஜன்.
இரவு பெய்த மழையில் தரை ஈரமாக இருந்ததால் முழங்காலை ஊன்றாமல், அப்படியே குத்துக்காலிட்டு பார்த்தார் ரிஷி. இறந்தவரின் வயது ஐம்பதைத் தாண்டும் என நினைத்தார். தலை முழுதாக நசுங்கியிருந்தது. அதோடு பாதி பூமிக்குள் புதைந்தும் இருந்தது. தலை புதைந்திருந்த ராஜேஷ்வரின் மீத உடல் வெளியே குப்புறக் கிடந்தது. நல்ல காஸ்ட்லியான வாக்கிங் உடை, ஷூ, வாட்ச். இன்னமும் கும்பல் சேரவில்லை. சேர்வதற்குள் ஃபாரன்ஸிக் வந்துவிட்டால் பரவாயில்லை என நினைத்தார்.
சுற்றுப்புறத்தை கவனித்தார் ரிஷி. அவர்களின் தடங்கள் போக யானையின் காலடித்தடம் தெளிவாக பதிந்திருந்தது. தூரத்தில் புதர் மறைவில் எகிறி விழுந்து லேசாக உடைந்திருந்த செல்போனை எடுத்து ஜீப்பில் போட்டார். கும்பல் சேர ஆரம்பித்திருந்தது. இந்த மலைக்காட்டுப்பகுதியில் ஓய்வுக்காக ஒதுங்கி வாழும் பணக்கார மனிதர்கள் வீட்டுக்குள்ளேயே வாக்கிங் போய்த்தொலையக்கூடாதா என எரிச்சலாக வந்தது.
காலை எழும்முன் எழுப்பிய முதல் ஃபோன்கால் அது. மினிஸ்டர் பேசினார். உடனே கவனிக்கச்சொன்னார். மீடியாவுக்கு செய்தியை பரவவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கச்சொன்னார். ரிஷியின் சரகத்துக்கு உட்பட்ட மலைப்பிரதேசம் அது. இங்கே மினிஸ்டரின் பிரம்மாண்ட கெஸ்ட்ஹவுஸ் இருப்பதை ஏற்கனவே அறிந்திருந்தார் ரிஷி.
“யார் மினிஸ்டருக்கு ஃபோன் செய்தது?” என்றார் ரிஷி சுந்தராஜனிடம்.
“நான்தான் சார், அவரும் எங்களோட நெருங்கிய ஃப்ரெண்டு, நாங்க எல்லாம் ஒன்னா படிச்சவங்க, அதான்… எனக்கு வேற வழி இல்லாம… தப்பா சார்?”
“இல்லல்ல, சும்மா கேட்டேன். வேற யாராவது இவரோட சொந்தக்காரங்க இருக்காங்களா?”
“இல்ல சார், ராஜேஷ் தனியாள். அவன் வைஃப் நாலு வருஷம் முன்ன இறந்துட்டாங்க. குழந்தைங்க கிடையாது. ஊருக்குள் ரெண்டு காம்ப்ளக்ஸ் இருக்கு, அதுபோக ஷேர்மார்க்கெட்டிங்ல நல்ல திறமையா முதலீடு செஞ்சு நெறைய சம்பாதிப்பான். மாசம் சில நாளாவது இங்க வந்து ரெஸ்ட் எடுப்பான். வந்த இடத்தில்…” அழுதபடியே சொன்னார் சுந்தர்ராஜன். கிட்டத்தட்ட ராஜேஷ்வரின் வயதுதான் அவரும். அருகில் பயந்து இருந்த அழகான அவரது மனைவிக்கு அவரைவிட பத்து வயதாவது குறைவாக இருக்கும்.
“ஆமா சார், வந்தார்னா அப்படி கவனிப்பார். செலவுக்கு கணக்கு பாக்காம காசு தருவார். கஷ்டம்னு ஒருத்தர் எதுவும் சொல்லிடக்கூடாது. உடனே பையில் இருப்பதை குடுத்து உதவுவார்” என்றான் அருகில் இருந்த ராஜேஷ்வரின் பணியாளர். முப்பது முப்பத்தைந்து வயது இருக்கும். அவனிடம் விசாரிக்க ஆரம்பித்தார் ரிஷி.
“உங்க பேரு?”
“இந்திரன் சார்”
“எவ்வளவு நாளா இங்க வேலையில் இருக்கீங்க?”
“இந்த வீடு கட்டியதில் இருந்தே இங்கதான் சார் இருக்கேன். சொந்தக்காரங்க மாதிரி பாத்துப்பார் சார்” என்று சொல்லும்போதே கண்கள் கலங்க ஆரம்பித்தன அவனுக்கு.
“சரிசரி, இயற்கையை என்ன செய்ய முடியும், இது போல இங்க ஏற்கனவே நடந்திருக்கா?”
“இல்ல சார், நான் பிறந்ததே இங்கேதான். அப்போ எல்லாம் சின்னச்சின்ன குடிசைகள் போட்டு இருப்போம். மலையில் கிடைக்கும் தேன், மிளகு எல்லாம் எடுத்துட்டுப்போயி ஊருக்குள் வித்துட்டு வந்து அமைதியா இருப்போம். அப்பப்போ யானைகள் வரும். ஆனா அதோ, மலைக்கரடு தெரியுது பாருங்க… அந்த வழியா போகும். சிலநேரம் மட்டும் குட்டிங்க வழிதவறி இந்தப்பக்கமும் வரும். ஆனா யாரையும் தாக்கினது இல்லை. “
அவரிடம் வேறு எதுவும் பெயராது என்பதால் அடுத்து இருந்தவர்களிடம் மெதுவாக விசாரிக்க ஆரம்பித்தார். எல்லோருமே ராஜேஷ்வரின் இறப்புக்கு அதிர்ந்துபோயிருந்தார்கள். நல்ல மனிதர்களுக்கு நல்லசாவு வந்திருக்கக்கூடாதா என்பதாக இருந்தது அவர்களின் பேச்சு. ஃபாரன்ஸிக் ஆட்கள் வந்து அவர்களின் ஃபார்மலிட்டியை முடிக்க இரண்டுமணி நேரம் ஆகியது. ராஜேஷ்வர், அரசின் பிண அறையை நோக்கி பயணமானார்.
இறக்கத்தின் இரண்டாவது வளைவில் ராஜேஷ்வரின் பங்களா. ஜீப்பை எடுத்துக்கொண்டு கொஞ்சம் கீழிறங்கியவர் முதல் வளைவில் இருந்த ஒரே ஒரு டீக்கடையில் வண்டியை நிறுத்தி டீயும் சிகரெட்டும் வாங்கிக்கொண்டு சற்றே பெருமூச்சு விட்டார். டீ முடித்து சிகரெட்டை பற்றவைக்கும்போது தூரமாக இந்திரன் நிற்பதை பார்த்தார் ரிஷி. அவனை அழைத்தார். வேகமாக அருகில் வந்து தயங்கி நின்றான் இந்திரன்.
“சொல்லுங்க சந்திரன், டீ சாப்டறீங்களா?” என்றார் ரிஷி.
“வேணாம் சார், நான் இந்திரன் சார். அங்கே பேசினீங்களே…”
“ஓ, இந்திரன்… சொல்லுங்க”
தயங்கினான். அவன் தோள் மேல் கைபோட்டு அணைத்தபடி நடந்தார் ரிஷி. மெல்லிய குரலில் பேசினான் அவன்.
“வெளிய சொல்லவேணாம் சார், நான் சின்னபிள்ளையில் இருந்து இங்கேதான் இருக்கேன். யானையால் யாரும் அடிபட்டதில்லை. அப்போ அப்போ நரிகள் வரும், பாம்புகள் கடிச்சுகூட சிலர் இறந்திருக்காங்க. காட்டு உள்ள சிறுத்தைகள் இருக்கிறதா சொல்லிக்குவாங்க. ஆனா யாரும் பார்த்ததில்லை”
“சரி, என்ன சொல்ல வறீங்க?”
“அவர் யானையால் சாகலை சார், சில நாளாவே தனக்கு ஏதோ ஆபத்து இருக்கிறதா புலம்பிகிட்டே இருந்தாரு. ராத்திரி எல்லாம் தூங்காம இருந்தாரு. யாராலயோ அவருக்கு இது நடந்திருக்கும்னு தோணுது சார்”
“என்ன…? கொலையா? என்ன சொல்றீங்க”
“ஒரு யூகம்தான் சார், எனக்கு முழுசா சொல்லவரலை. தெரியலை. ஏதோ தோணுச்சு சார்”
பேசிக்கொண்டே குறுக்காக இறங்கி அந்த பங்களாவை நெருங்கினார் ரிஷி. யாருமற்ற தனிமையும் பிரம்மாண்டமும் இணைந்த பங்களா அது. அழகாக இருந்தது. இப்போது கொஞ்சம் அமானுஷ்யமாகவும் இருந்தது. இனி வரவேவராத தனது ஓனரை அதுவும் தேடும் என்று ரிஷிக்கு சம்மந்தமில்லாமல் தோன்றியது. முன்புறம் அவ்வளவு பூச்செடிகள். கேட்டில் இருந்து சில நிமிட நடையில் வாசல். இந்திரன் கதவைத் திறக்க கைவைக்க முயல, அதுவாகவே திறந்தது.
உள்ளிருந்து வெளியே வந்தார் சுந்தர்ராஜன். அவர்களைப்பார்த்து அதிர்ச்சியாக நின்றார்.
“என்ன சார்? என்ன பண்றீங்க இங்க?” என்றார் ரிஷி. அவருக்குள் ஒரு பதட்டமும் கோபமும் வந்தது.
“வந்து… அவனுக்கு தூரத்து சொந்தம் சிலர் இருக்காங்க சார். அவங்களுக்கு சொல்லலாம்னு… அவன் செல்லில் நேம்ஸ் இருக்கும், அதான் அவன் செல்லைத்தேடி, அதுக்குள்ள சத்தம் கேட்டு வெளியே வந்தேன்” என்றார் அவர்.
“சார், உங்களுக்கு புரியலையா, இதுக்குமுன்ன நீங்க எப்படி வேணா இருக்கலாம். இப்போ இதுபோல எல்லாம் நீங்க பண்ணியிருக்கக்கூடாது. முதல்ல இங்க ஒரு பாதுகாப்பு போடச்சொல்லணும். ஆமா… செல்லு கிடைச்சதா?”
“இல்ல சார்…”
அவரை விலக்கி வீட்டுக்குள் நுழைந்தார் ரிஷி. பின்னாலேயே வந்த இந்திரன் ஒவ்வொரு அறையையும் சொல்லிக்கொண்டே வந்தான். எல்லாம் ஆடம்பரம். இந்திரனை சுந்தர்ராஜனுடன் இருக்கச்சொல்லிவிட்டு தனியே ஆராய்ந்தார். படுக்கையறை தலையணையின் கீழ் அந்த ஆபாச புத்தங்கங்கள் இருந்தன. ஞானம், செக்ஸ், தியானம், கவிதை என கலப்பான புத்தங்கங்கள் நிறைய அடுக்கி இருந்தார். இன்னொரு அறையில் ஒரு அலமாரி நிறைய வெளிநாட்டு மதுபானங்களும் உட்கார்ந்து சாப்பிட அழகான டேபிள் சேரும் இருந்தன. பின்புறம் நிழற்குடை போன்ற அமைப்பும் அருகே ஒரு பெரிய நீச்சல்குளமும் இருந்தது. பலகோடிபெறும் பங்களா என்று தோன்றியது. செல்லில் உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டே வெளியே வந்தார் ரிஷி.
நான்கு நாட்கள் கடந்திருந்தன. எதுவும் சாட்சி கிடைக்கவில்லை. அதற்குள் முகநூல், இன்ஸ்டாகிராம் இன்னபிற தளங்களில் எல்லாம் விஷயம் கசிந்திருந்தது. ‘யானையின் வழித்தடத்தில் ஆக்ரமிப்பால் நிகழ்ந்த யானைக்கொலை’ ‘யானைகளின் வழித்தடங்களில் கட்டிய கட்டிடங்களை இடிக்கவேண்டும்’ என பரவலாகப் பதிவுகள் கூடவே இணைந்த அந்த இடங்களில் உள்ள தங்கும் விடுதிகளின் விளம்பரங்கள். மினிஸ்டர் தினமும் நேரம் குறித்துவைத்துகொண்டு ரிஷியை அவசரப்படுத்தினார்.
“சார், இன்னும் ரெண்டே நாள் குடுங்க, கேஸ் முடிச்சுடறேன்”
“என்னபா நீ புரிஞ்சுக்காம பேசற. ஏதோ தடுக்கி விழுந்தான். செத்தான் அப்படி போட்டு எதாவது முடிய்யா. இல்லாட்டா அடையாளம் தெரியாத வாகனம் அப்படி போடு. இதெல்லாம் நான் சொல்லிக்கொடுக்கணுமா, இல்ல யானைதான் போட்ருச்சுன்னாவது முடிப்பா. முடியலை என்னால”
“இது வேற எதோ கொலை போல தெரியுது சார். அதான்… அதில்லாம அவர் வீடு ஒன்னும் யானை வழித்தடத்தில் இல்லை”
“யோவ், எனக்கும் புரியுதுயா, ஆனா என் கெஸ்ட் ஹவுஸ் அங்கதானே இருக்கு. வழித்தடம்னு சொல்றாங்க. அது வேற அங்கங்கே போட்டு என்னை தாளிக்கறாங்க. அப்பவே சொன்னேன் ராஜேஷ்கிட்ட, நீ தனி ஆள்தானே, உன் வீட்டை எனக்கு வித்துடு, உனக்கு வேற இடத்தில் இன்னும் பெரிய பங்களா தரேன்னு… சாகும் வரை வீட்டை யாருக்கும் தரமாட்டேன்னுட்டான்”
“அதான் இப்ப செத்துட்டாரே சார்”
“கம்முனு இருய்யா, நீ வேற… அது பழிவாங்கும் பங்களா போல… யாருக்கு வேணும் அது”
திரும்பத்திரும்ப போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை படித்தார் ரிஷி. முக்கிய பாயிண்டுகளைத் தனியே எழுதினார்.
- உடலில் எந்த நோய்க்கூறுகளும் இல்லை. ஆரோக்யம்.
- திடீரென பின் மண்டையில் தாக்குதல். வளைவான இரும்பு போன்ற உலோகத்தால் தாக்கியது போல மண்டை உடைந்து உடனே மரணம்.
- இறந்த உடலை கீழே கிடத்தி அதன்பின் தலையை ஈரமான நிலத்தில் அழுத்தி பின்னர் பெரிய அகலமான யானையின் கால் அளவுள்ள கனமான பொருளால் அழுத்தப்பட்டுள்ளது.
- புதைந்த அளவும், அழுத்தமும் கவனிக்கையில் அது யானையால் ஏற்பட்டதாக்க கருத இடமில்லை.
குழப்பமாகவும் தெளிவற்றும் இருந்த மனதில் சுந்தர்ராஜனின் முகம் வந்துவந்துபோனது. செல்போனை எதற்காக தேடினார் என்று கேள்வி எழுந்தது. சட்டென அன்று ஒரு செல்போனை எடுத்து ஜீப்பில் போட்டதும் அலைச்சலில் அதை மறந்தே போனதும் நினைவுக்கு வந்தது. உடனே எழுந்து அதை எடுத்து வந்தார். சார்ஜ் போட்டார். ஆன் ஆனது.
அதிர்ந்துபோனார் ரிஷி. உள்ளே அவ்வளவும் ஆபாசப் படங்கள். சில அந்த வனப்பகுதியைச்சேர்ந்த முகங்கள். சிறுபெண்கள்கூட. அவர்களின் முகங்களில் பயம் இருந்தது. தவிர வழியில் வேலை செய்யும் பெண்கள், நடந்துபோவோர் வருவோர் என ஆபாச வக்ரமாய் எடுத்துவைத்திருந்தார் ராஜேஷ்வர். அன்று கும்பலில் எல்லோரும் பார்த்த பார்வை ‘இவருக்கா இந்த நிலைமை?’ என்றா அல்லது ‘இவனுக்கு இதான் சரி’ என்றா என சந்தேகம் தோன்றியது. நகர்த்திக்கொண்டே வந்தவர் தொடர்ந்து வந்த படங்களைக்கண்டதும் திடுக்கிட்டார்.
ராஜேஷ்வரின் தனி அறையில் சுந்தரராஜனின் மனைவியுடன் நெருக்கமாக இருந்தார் அவர். இருவரும் சிரித்தபடி இருந்தனர். அந்தப்பெண் சற்றே வலுக்கட்டாய சிரிப்பு. பார்க்கக்கூடாத நிலையில் இருந்தனர்.
ஜீப்பை கிளப்பினார் ரிஷி. சுந்தரராஜனின் வீட்டை அடைந்தார். அவர் இல்லை. அவர் மனைவி இருந்தார்.
“அவருக்கு போன் செய்யவா சார்” என்றார் அந்தப்பெண்.
“மெதுவா வரட்டும்மா, சும்மா ஃபார்மாலிட்டி விசாரணைதான். ராஜேஷ்வர் எப்படி குணம்?”
“ரொம்ப் நல்ல டைப் சார். இவர்கூட படிச்சவர். சின்ன வயசில் இருந்தே ஃப்ரெண்டாம். நல்லவிதமா பழகுவார்.”
“ஓ, உங்களுக்கும் சுந்தரராஜனுக்கும் வயசு வித்தியாசம் நிறைய இருக்கும் போலயே, எப்படி?”
“நாங்க லவ் மேரேஜ் சார், கல்யாணமே வேண்டாம்னு இருந்தார் இவர். நாந்தான் இவரை லவ் பண்ணினேன். பிடிவாதமா வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டேன்”
“நிஜமாவா, சந்தோஷமா… அதாவது வீட்டை எதிர்த்து சந்தோஷமா இருக்கீங்களா?”
“ஆமா சார்”
“ஆனா முகத்தில் அப்படி தெரியலையே… வேற எதாவது பிராப்ளம் இருக்கா?”
“வந்து… அவர் ஃபர்னிச்சர் ஷோரூம் வச்சிருக்கார் சார். ரெண்டு வருஷமா கடன் நிறைய ஆகிப்போச்சு. இந்த வீட்டையே விக்கற நிலமை. சொல்லபோனா ஒருநாள் தற்கொலை வரை போயிட்டார். அப்போ இறந்த ராஜேஷ்வர்கிட்ட சொன்னேன். அவர்தான் கடனை அடைச்சு, மெதுவா குடுத்தா போதும்னு ஆறுதல் சொல்லி இவரை தேத்தினார்.”
“ஓ, உங்ககிட்ட எப்படி பேசுவார் ராஜேஷ்வர்?”
“அதுவந்து, நல்லவிதமாதான் பேசுவார் சார். அதுவும் இவர்கூட இருக்கும்போது பேசக்கூடமாட்டார்”
பரபரப்பாக உள்ளே வந்தார் சுந்தரராஜன். அவர் முகம் வெளுத்திருந்தது.
“செல்ஃபோன் கிடைச்சிட்டது சுந்தரராஜன் சார்” என்றார் ரிஷி. அதிர்ந்துபோய் பார்த்தார் சுந்தரராஜன். புரியாமல் விழித்தாள் அவர் மனைவி.
“ஆனா, முழுசா சேதம். ஆகாதாம், எதுவும் எடுக்கமுடியாதாம். அவங்க சொந்தக்காரங்க காண்டாக்ட் தேடினீங்கல்ல, அதான் உங்ககிட்ட சொல்லிட்டு போக வந்தேன்”
நிம்மதிப்பெருமூச்சு எழுந்தது சுந்தரராஜனிடம். அவர் மனைவியை அவர் பார்த்த விதத்தில் ஒரு அமைதியும் காதலும் இருந்தது. மனைவியின் மேல் அவருக்கு இருந்த பாசமும், அவர்மேல் அந்தபெண்ணுக்கு இருந்த அன்பின் எல்லையும் புரிந்தது.
ஜீப்பைக் கிளப்பி மெதுவாக ஊர்ந்தார் சாலையில். முடித்துவிடலாம் என்று தோன்றியது. வழியில் தோட்டங்களில், எஸ்டேட்களில் வேலை செய்யும் பெண்களைக் கவனித்தார். தேயிலை பறித்தனர், பூச்செடிகளைத் திருத்தினர். உடலை வருத்தி வேலை செய்தனர். கூரை வேய்ந்தனர். டேம்பர் போல வைத்து தரையைச் சமப்படுத்தினர். ஊருக்குள் வேலை எதுவும் செய்யாமல் குவியும் பணத்தை மட்டுமே வைத்து சிலர் செய்யும் காரியங்களை ஒப்பிடும்போது தேவதைகளாக தெரிந்தனர் அவர்கள். ஓரிடத்தில் வண்டியை கைகாட்டி நிறுத்தினான் இந்திரன். இறங்கினார் ரிஷி.
“சொல்லுங்க சந்திரன், என்ன இங்க?”
“எங்க வீடு இங்கதான் சார். வாங்க ஒரு டீ சாப்ட்டு போவீங்களாம்”
கூரை வீடு. ஆனால் உள்ளே அழகாக இருந்தது. தன் மகளின் படத்தை காட்டி அவள் நீச்சல் போட்டியில் மாநில அளவில் சாம்பியன் ஆன சர்டிபிகேட்டை, நாளிதழ் புகைப்படத்தை மகிழ்வாக காட்டினான். மனைவி வெளியூர் சென்றிருப்பதாகவும் தனக்கு சமைக்க வரும் என்றும் சொன்னான். நல்ல டீ போட்டு கொண்டுவந்தான். ‘சமைக்கவா?’ என்றதை மறுத்தார் ரிஷி.
“அப்புறம் சார்… கண்டுபிடிச்சிட்டீங்களா?”
“இல்ல சந்த்… சாரி இந்திரன். இது ஏதோ பெரிய இடத்து விவகாரம் போல இருக்கு. யானைக்கொலைன்னு கேஸை முடிக்கச்சொல்றாங்க”
“யார் சார்?”
“குறிப்பிட்டு சொல்ல முடியாது. இங்கேயும் நீங்க சொன்ன மாதிரி சிலர் மேல டவுட். பட்… அவ்ளோதான். பிரஷர் ஓவரா இருக்கு”
“ஆனா, அது யானை இல்ல சார்”
“உங்களுக்கும் எனக்கும்தான் தெரியும். வெளிய உளறிட்டு இருக்காதீங்க” கிளம்பினார் ரிஷி. அவர் ஜீப்பில் ஏறியதும் வீட்டுக்குள் சென்றான் இந்திரன்.
வண்டியில் ஏறி ஸ்டார்ட் செய்யும்போது மினிஸ்டரின் கால் வந்தது. இறங்கி பேச ஆரம்பித்தார்.
“ஆமா சார், முடிச்சிட்டேன் சார். யானைதான் சார். சரிங்க சார். ஒன்னும் பிரச்சினை வராது சார்” சொல்லிவிட்டு செல்லை வைக்க, அங்கே கவனித்த ஒரு ஆள் அருகில் வந்தார்.
“என்ன சார், இந்திரன் வீட்டுக்கா?”
“ம், ஆமாங்க…”
“சரிங்க சார். நல்லாதான் இருந்தான். பொண்ணு செத்துபோனதும்தான் அப்போ அப்போ தண்ணி சாப்டுவான். மத்தபடி நல்லவன்தான்”
“என்ன? அவர் பொண்ணு இறந்துட்டாங்களா? எப்படி?”
“போன மாசம் இவனுக்கு உடம்பு சரியில்லாம போச்சு. அப்போ இவங்க முதலாளி வந்திருந்தார். அவரோட வீட்டை துடைச்சு க்ளீன் பண்ண, சமைக்கன்னு அந்த பொண்ணு அங்க போச்சு. விளையாட்டுப்பிள்ளை. தோட்டத்தில் க்ளீன் பண்ணும்போது அங்க இருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்து செத்துப்போச்சு”
“என்ன சொன்னீங்க… குளத்திலயா, வெளியே வரலையா?”
“நீந்த தெரியாதுல்ல, சின்னப்பிள்ளைல்ல” சொல்லிவிட்டு அவர் கிளம்பினர்.
நின்றபடி இந்திரனின் வீட்டை உறுத்துப்பார்த்தார் ரிஷி. வெளியே வந்த இந்திரன் அவர் போகாததைக்கண்டு அசையாமல் நின்றான். அவன் கையில் ஒரு நீண்ட இரும்புக்கம்பி இருந்தது. அதன் முனையில் வளைவாக குமிழ் போல இருந்தது. அடித்தால் கண்டிப்பாக தலை உடையும் போல இருந்தது அது. இந்திரன் அதை கூரையின் ஒரு பக்கம் சொருகினான். அங்கே இருந்து ரிஷியையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனை அருகில் அழைத்தார் ரிஷி. அவன் வரும்போது கவனித்தார். வீட்டின் இடதுபுறம் அந்த டேம்பர் போன்ற கருவி இருந்தது. மூங்கில் வைத்து அடிப்புறம் நல்ல வட்டமான அகலமான இரண்டடி உயரமான மரம் இணைக்கப்பட்டிருந்தது. மண்தரையை தட்டி சமப்படுத்த கிராமத்தில் பயன்படுத்தும் அமைப்பு. அதன் அடிப்புறம் கண்டிப்பாக ஒரு யானையின் காலடி அளவு இருந்தது.
அருகே வந்த இந்திரன் பேசாமல் நின்றான்.
“சந்திரன், ஒரு கதை சொல்லவா…”
“சார்…”
“ஒரு ஊர்ல ஒரு ராத்திரி திருடன் திருடன்னு ஒருத்தன் கத்தினானாம். எல்லோரும் வீட்டைவிட்டு ஓடிவந்து அவனோட சேர்ந்து திருடனை தேடினாங்களாம்… ஆனா திருடன் கிடைக்கவேயில்லையாம். ஏன் சொல்லுங்க?”
“சார்…”
“ஏன்னா அந்த திருடனே முதலில் கத்திய அவன்தானாம்.” சொல்லிவிட்டு கடகடவென சிரித்தார் ரிஷி. பேயறைந்தார்போல இருந்தான் இந்திரன்.
“இந்த கதையை இப்போதான் மினிஸ்டர் சொல்லி, கொலைகாரன்னு யாரும் இல்லை, யானை கொன்னுச்சுன்னு கேஸை முடின்னுட்டார். அதனால் சந்திரன், எல்லோர்கிட்டயும் அப்படியே சொல்லுங்க. உளறாதீங்க”
“சரிங்க சார், அப்புறம் நான் சந்திரன் இல்ல சார். இந்திரன். ,முழுப்பேர் கஜேந்திரன்” என்றான் அவன்.
***
அப்பு சிவா – இயற்பெயர் அ.சிவக்குமார். சேலத்தை சேர்ந்தவர். ஓவியர், எழுத்தாளர். சிறார் இதழ்களுக்கு, கதைகளுக்கு படம், அட்டைப்படம் வரைந்து கொடுப்பது உண்டு. நான்கு நாவல்கள், இரண்டு சிறார் புத்தகங்கள், ஒரு சிறுகதைத்தொகுப்பு அச்சில் வெளிவந்துள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். பூஞ்சிட்டு எனும் சிறார் இணைய இதழில் ஆசிரியர் குழுவில் 6 ஆண்டுகளாக செயல்படுகிறார். மின்னஞ்சல்: appusiva.artist@gmail.com

