Sunday, May 31, 2026

யாக்கை வெளி 

மஞ்சுநாத்

      தினசரி வாழ்க்கை செயல்பாடுகளிலிருந்து விலகிச் சென்று தனிமையை நாடுவதற்கு வாழ்வின் அதீதத்தைச் சுவைத்திருக்க வேண்டும், இல்லாவிடில் அதிருப்தியின் சுழலுக்குள் சிக்கியிருக்க வேண்டும். குறிப்பாக நம் நாட்டில் குடும்ப வாழ்விலிருந்து வெளியேறுபவர்கள் அதுவும் மத்திம வயதில் வெளியேறுபவர்கள் துறவுப் பாதையைத் தங்களுக்கான நிவாரணமாக நினைத்து அதையே அதிகம் தேர்வு செய்கிறார்கள்.

துறவுப் பாதையின் ஊடாக இமயமலை, பெருங்கோயில்கள், ஆன்மீக மடங்களை இருப்பிடமாகக் கொண்டவர்கள், ஊர் ஊராகச் சுற்றித் திரிபவர்களோடு சிறிதளவு பழக்கம் உண்டு. அதில் பெரும்பான்மையானவர்கள் தங்களது சுய வாழ்வின் அதிருப்தியின் உந்துதலால் வெளியேறியவர்கள். நாவலின் மையக் கதாபாத்திரமான சுப்ரமணியன் தன்னுடைய குடும்ப வாழ்வின் கட்டுகளிலிருந்து விடுவித்துக்கொள்வதற்கு அதிருப்தியின் வண்டல் சுவையே காரணமாக இருக்கிறது.  

வாழ்வின் தாளமுடியாத நெருக்கடிக்கு உள்ளாகும் மனிதர்கள் அதிலிருந்து வெளியேறுவதற்கு பெரும்பாலும் இரண்டு விதமான வழிகளைத் தேர்வு செய்கிறார்கள் ஒன்று தற்கொலை இரண்டாவது சந்நியாசம். இதில் முதல் வகையைத் தேர்ந்தெடுப்பவர்கள் பெண்களாகவும் இரண்டாவது வகையைத் தேர்ந்தெடுப்பவர்கள் ஆண்களாகவும் இருக்கிறார்கள். எதார்த்தத்தில் இவர்களுக்குப் புரியாதது என்னவெனில் சந்நியாசமும் ஒரு மாபெரும் தற்கொலை. 

சுப்ரமணியன் மீதான அழுத்தமும் அதிலிருந்து அவன் விடுபடுவதற்கான வழிகளின் தெரிவும் கச்சிதமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாவல் அவனுடைய உணர்வுகளை முன்வைத்து அவனுடனே நகர்கிறது. குடும்பத்திலிருந்து விடுவித்துக் கொள்வதற்கான எண்ணம் அவனுக்கு திடீரென வந்ததல்ல, அதற்கான விதை முன்பே விதைக்கப்பட்டது. 

சுப்ரமணியின் உலகத்தைத் திறந்து வைத்த அளவிற்கு அவனுடைய  மனைவி பத்மாவின் மீதான வெளிச்சம் போதிய பிரகாசத்தைத் தரவில்லை. இதன் காரணமாக யாக்கை ஆணின் உலகமாகவும் அவனுடைய தனித்த  வெளிப்பாடாகவும் மட்டுமே நிற்கிறது.

சுப்ரமணிக்கும் சாமியப்பாவிற்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் காத்திரமாக இல்லை. ஒருவேளை சாமியப்பா என்கிற கதாபாத்திரத்தின் கட்டமைப்பு நொய்மை அல்லது ‘மனித வாசனையற்ற இடத்திற்குச் செல்ல வேண்டும் தனியாக, தனிமை என்பது உருவமற்ற வெளியில் நடைபயில்வது.’ என்கிற எண்ணத்தோடு பரதேசியான சுப்ரமணியின் நோக்கம் அதற்கான வெளியை உருவாக்காமல் இருந்திருக்கலாம். அவர் மீது சுப்ரமணிக்கு இருக்கும் ஆர்வம் விருப்பமாக மாறவில்லை. எனவே அவர்களுக்கு இடையேயான உரையாடல்கள் எவ்விதமான தரிசனக் கீற்றுகளையும் பாய்ச்சவில்லை. 

நாவலில் என்னைக் கவர்ந்த முக்கியமான அம்சம் திருநங்கையர் உலகம். இது குறித்து கே.ஜே.அசோக்குமார் அளிக்கும் தரவுகள் புதிராகவும் அதிர்ச்சியாகவும் இருக்கின்றன. கருணாகரன் ரேஷ்மியாகும் பரிணாமம் ஒரு சில அத்தியாயங்களில்  நிகழ்ந்துவிடுகிறது, என்றாலும் அதுவே நம்மை  பிரமிப்புக்குள் ஆழ்த்துகிறது. சுப்பிரமணி மீது ரேஷ்மிக்கு இருக்கும் மென்மையான உணர்வு பேருணர்ச்சியாகப் பரிணமிக்கும் போது பால் கடந்த மனித மனங்களின் சுய தாபத்தையும் அதன் அதிகார வெறியையும் உணர முடிகிறது.

பாலியல் விழைவுக்கான அடிப்படை உடலிலிருந்து கிளர்கிறது. உடலே ஆதாரமாக இருக்கிறது. உடலே செயல் புரிகிறது. உடலே அதன் சுவையைக் கிரகித்துக் கொள்கிறது. இவை மனம் பிரதிபலிக்கும் விதத்தில் அதன் வேகமும் விரிவும் தீர்மானிக்கப்படுகிறது. 

சுப்ரமணிக்கும் பத்மாவிற்கும் நிகழும் காதல் திருமணம் ஆரம்பத்தில் விருப்பப்பட்ட வடிவில் அமைந்தாலும் அது தொடர்ந்து அப்படியே இருக்க வேண்டுமென்கிற கட்டாயமில்லை.  தற்போதைய உலகம் வண்ண விளக்குகள் மத்தியில் பெரும் பாய்ச்சல் நிகழ்த்தும் உன்மத்தம் கொண்டது. பிறழ்வுக்கும் பிரிதலுக்குமான காரணம் அனர்த்தமாகி தொக்கி நிற்கும் காலமிது. சுப்ரமணியின் தத்துவ புத்தி தொழில் ரீதியாக அவனுக்கான லாபத்தின் நோக்கில் சிந்திக்கிறது. பத்மாவின் உடல் மீது ஆசையும் மனம் மீது வெறுப்பும் இருக்கிறது. உடல் மீதிருக்கும் ஆசையே அவளிடமிருந்து  விலகி செல்வதற்குத் தடை என்பதால் பத்மாவின் உருவத்தை நரம்பு, ரத்தம், சளி நிரம்பிய உருவகமாக நினைக்க முற்படுகிறான். 

வீட்டை விட்டு வெளியேறிச் சுற்றித் திரிந்து எண்ணம் ஈடுறாமல் பயணம் முடிக்காத யாத்திரிகன் போல் பாதியில் திரும்பி வரும்போது அவனுடைய மகள் அதேவிதமான அசூசையைப் பிரதிபலிக்கிறாள்.

மனதிற்கும் உடலுக்குமான சதிராட்டத்தில்  உடலின் ஆளுமை அதன் தேவை ஆட்டத்தின் முடிவில் அதன் நிலைப்பாடு  குறித்த புரிதல்களை யாக்கை விரிவாக அலசுகிறது. காமம் என்பதின் மீது கவிழும் சலிப்பு குறித்து நுட்பமான அவதானிப்பு நாவலின் பலத்தைக் கூட்டுகிறது. யாக்கையின் புரிதலுக்கும் விரிதலுக்கும் அதுவே திடமான உள்ளீடு. நல்ல முயற்சிக்கும் மாறுபட்ட சிந்தனைக்கும் ஆழமான அனுபவத்திற்கும் எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமாருக்கு பாராட்டுகள்.

***

மஞ்சுநாத் – புதுச்சேரியை சேர்ந்தவர். விமர்சகர், பயணி, வரலாற்று ஆய்வாளர். தற்போது புதுச்சேரி அரசின் ஆயுஷ் துறையில் மூத்த சித்த மருத்துவ மருந்தாளுநராக பணியாற்றுகிறார். குதிரைக்காரனின் புத்தகம், உடனுறை இடாகினி ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், டால்ஸ்டாயின் மூன்று கண்கள் கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. சமீபத்தில் வெளியான ‘அப்பன் திருவடி’ நாவல் தமிழ் இலக்கியத்தில் இமயமலையின் பேரழிவு குறித்து முதல் முதலாக பேசி புதியதொரு களத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. மின்னஞ்சல் : manjunath.author@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here