Tuesday, June 23, 2026

சவக்குழி

சிபி சரவணன்

வெயில் மப்பும் மந்தாரமுமாக தன் உக்கிரத்தை வெளிபடுத்திக் கொண்டிருந்த சமயம் அய்யாவுவின் முந்திரித் தோப்பில் மைனாக்களின் ரீங்கார ஒலிகள் கேட்ட வண்ணம் இருந்தன. தனது இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கிய அய்யாவு மண் பானையில் தண்ணீர் மோந்து கொண்டு வந்து திண்ணையில் உட்கார்ந்து தாகம் தணிய தண்ணீர் பருகிக் கொண்டிருந்தார். அவ்வப்போது முதுகைப் பிடித்து வலியில் உடலை வளைத்த வண்ணம் இருந்தார். 

அய்யாவு 70-வதை தாண்டிய சாயல் அவர் நரையிலும் உடல் தளர்விலும் நன்றாகவே தெரிந்தது. உழைத்து உழைத்து தசைகள் வலு ஏறி இருந்தன. ஆலம்பட்டி டெய்லர் தைத்து தரும் வெள்ளை பாலிஸ்டர் ஜிப்பா தான் அய்யாவுக்கு முதன்மையான அடையாளம். செம்மண் ஊறி, ஊறி நிறம் மாறிப்போன வெள்ளை வேட்டியை தான் அய்யாவு எப்போதும் உடுத்தியிருப்பார். இழுத்து வாரிய தலை முடியில் ஒரு பூ வந்து விழுந்தது கூட தெரியாமல், அய்யாவுவின் முதிர்ந்த கண்கள் செம்மண்ணையே பார்த்து கொண்டு இருந்தது. ஊர் முழுக்க பேர் போன ஜோடி என்றால் அய்யாவு, சின்னதாய் ஜோடி தான். அடிக்கடி அடித்து கொண்டாலும் கூட அவர்களுக்குள் இருக்கும் காதலை பொது வெளியில் கூட காணலாம். சின்னதாய் எப்போதும் அய்யாவுவின் கையைப் பிடித்து கொண்டே தான் நடப்பாள். சாலையில் அவர்களைக் கடந்து செல்லும் பெண்கள்,

“என்னத்தா.. இன்னும் வயசு முறுக்கு அடங்களையோ.. ஒன்னு மண்ணாவே திரியிறீக?”

“உனக்கேண்டி எரியுது.. ஏன் மாமனுக்கு நெஞ்சுல உரம் இருக்கு, அதென் ஏன் கைய பிடிச்சு கூட்டி வாராரு.. எங்க உன் புருசன் கஞ்சா குடிக்கிப் பய?”

என்றவாறு எகத்தாளமாகத் தான் கிழவி பேசுவாள். 

அய்யாவுக்கு, சின்னதாய் தான் தாய்மடி. சின்னப் பிள்ளை போல் எல்லாவற்றிற்கும் அவள் தயவைத் தான் நாடிக் கொண்டு இருப்பார். சாப்பாடு, தண்ணீர், துணி மணி இப்படி எது வேண்டுமென்றாலும் “சின்னாத்தா … சின்னாத்தா..”தான்.

“எப்ப பாரு வெள்ள வேட்டிய உடுத்தாட்டி வேற கைலி எடுக்க மாட்டியா?”

“அடியே.. பெரிய மனுசனுக்கு வெள்ள வேட்டி தான் அழகு”

“ஆமா பெரிய மனுஷன்”, எனப் புலம்பி கொண்டே செம்மண் கரையைத் துவைத்து கொண்டிருப்பாள். 

முதலில் அய்யாவு வீடு ஊருக்குள் தான் இருந்தது. அய்யாவு சின்னதாய்க்கு குழந்தை இல்லாததை ஊர் முழுக்கப் பேசிப் பேசி அவர்கள் ஒரு கட்டத்தில் வெறுத்து போய் தோட்டத்தில் சிறியதொரு வீட்டைக் கட்டி தங்கி விட்டனர். 

ஆடு மாடுகள், கொஞ்சம் சேவல்கள் எனக் காலம் அப்படியே இழுத்து கொண்டு சென்று விட்டது. ஊருக்குள் அவ்வளவாக செல்லாத அய்யாவுக்கு அங்கு நடக்கும் சங்கதிகளை எல்லாம் கொண்டு வந்து சேர்ப்பவர் முத்தையா தான். அய்யாவு மாடுகளிடம் பால் கறந்து கொண்டு போக வரும் அவர் தான் அய்யாவுக்கு மிக நெருக்கமான நண்பர். அய்யாவுவை விட முப்பது வயது இளையவராக இருந்தாலும் கூட, அய்யாவுவின் வாய்க்கு தோதான காது முத்தையாவிடன் இருந்தது. முத்தையா வாங்கி வரும் செய்யது பீடிகள் சின்னதாய் கண்ணில் பட்டு விட்டால் போதும் தாம் தூம் என சின்னதாய் குதிக்க ஆரம்பித்து விடுவாள் . 

“நீயெல்லாம் மனுசனா? உன்னை இதெல்லாம் குடிக்க விட்டு இருக்கவே கூடாது, நீ கிணத்துக்குள்ள உக்காந்து பீடி அடிக்கிறது எனக்கென்ன தெரியாதா?”

என வம்பாக சண்டைக்கு வருவாள். 

அய்யாவு தன் பாக்கெட்டில் இருந்த பீடி கட்டை தூக்கி வெளியே எறிந்தார். தீப்பெட்டியில் குச்சியை உரசி சின்னதாய் படத்துக்கு முன்னே உள்ளே தீபத்தில் பற்ற வைத்தார். சின்னதாய் இறந்து இதோடு மூன்று மாதத்துக்கு மேல் ஆகி விட்டது. அய்யாவுக்கு அந்த தோட்டத்து வீட்டில் வாழும் ஒவ்வொரு நாளும் நரக வேதனையாக இருந்தது. சரியான சாப்பாடு இல்லை, நல்ல தூக்கமில்லை. வீடு வீடாகவே இல்லை. சின்னதாயின் மிரட்டல் குரல்கள் ஒவ்வொரு சுவரில் இருந்தும் ஒலித்து கொண்டிருப்பதாக அய்யாவுவிற்கு தோன்றியது. கொட்டத்தில் உள்ள ஆடு மாடுகள் கூட தவிக்கத் தண்ணி இல்லாது பாடாய் பட்டு விட்டது.

திண்ணையில் சோர்ந்து உட்கார்ந்து இருந்த அய்யாவு முன் சாப்பாட்டு பாத்திரத்தை வைத்த முத்தையா, 

“என்ன மாமா ஒரு மாதிரி இருக்கீக.. உங்க தங்கச்சி கறி கஞ்சி ஆக்கி குடுத்து விட்டிருக்கா சாப்பிடுங்க”

“இருக்கட்டும்யா”

“அட ஆஸ்பத்திரியில எதும் சொன்னாகலா?”

“இன்னும் ஒரு மாசம் என் உசுருக்கு கெடுவுனு டாக்டர் சொல்லிடாக?”

“அப்படி என்ன ஆச்சு”

“பீடி குடிச்சு குடிச்சு நுரையீரல் சுத்தமா போச்சாம்.”

“ஓ.. இதுக்கு தே இப்படி மூஞ்சிய தூக்கி வச்சிருகியா..கவுர்மெண்ட டாக்டர் என்னைக்கு சரியா சொல்லிருக்கான்.. நாளு நாளு சேவல அடிச்சு சூப்பு வச்சு குடிச்சா நெஞ்சு சளியெல்லாம் வந்துற போது.. சரி சாப்பிடுங்க.. இந்தா வாரேன்”என முத்தையா பால் கறக்க சென்று விட்டார். 

தன் சாவு நெருக்கி விட்ட மனிதன் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் என்ற கூற்றுக்கு ஏற்ப அய்யாவுவின் ஒவ்வொரு நொடியும் நரக வேதனையாகக் கழிந்தது. 

முத்தையா வைத்து விட்டு போன பாத்திரத்தில் இருந்த கறி கஞ்சி கூட அப்படியே இருந்தது. 

மறுநாள் முத்தையா சைக்கிளை நிறுத்தி விட்டு பார்க்க அங்கே அய்யாவு வீட்டில் அவர் இல்லையென தெரிந்து குரல் எழுப்பிக் கொண்டே அங்கும், இங்கும் தேடிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு பின்னால் மண்வெட்டி வெட்டும் சத்தம் பயங்கரமாக கேட்டது. முத்தையா போய் பார்க்க அய்யாவு குழி வெட்டி கொண்டு இருந்தார். 

“இங்க என்ன மாமா செஞ்சுக்கு இருக்க?”

“நம்ம சாவுக்கு நாமளே குழி வெட்டி அதுல படுத்து பாத்தா எப்படி இருக்கும்னு யோசிச்சு பாத்தேன் அதே தோண்டிக்கு இருக்கேன்.”

பேசிக்கொண்டு இருக்கும் போதே அய்யாவுவிற்கு இருமல் பின் மண்டையை அதிர வைத்தது. குவியல் குவியலாக சளியை கக்கினார். அதில் கொஞ்சம் இரத்த வாடையும் அடிக்கவே செய்தது.

“உனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு, இங்குட்டு வா..”

அய்யாவு தோளைப் பிடித்து வம்பாக இழுத்துக் கொண்டுபோய் அவரை சுவரொட்டி உக்கார வைத்து விட்டு, முத்தையனும் உட்கார்ந்தார். 

“நேத்துல இருந்து கஞ்சி தண்ணி குடிக்காம இப்படி வெட்டிக்கு இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆவுறது…”

“இப்பல்லாம் எதும் சாப்பிட ஒப்பல மாப்புள, நாக்கு ருசி அத்து போய் கிடக்கு”

அவருக்கு பேசப் பேச இருமல் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. 

“உன்னேயெல்லாம் திருத்தவே முடியாது, இந்தா தண்ணிய குடி”, சொம்பைக் கொடுக்க அவர் வாங்கிக் குடித்தார். 

நாளுக்கு நாள் அய்யாவுவின் உடல் நலம் மோசமாகிக் கொண்டே போனது. தான் சாவுக்கு எத்தனை ஆழம் குழி தோண்ட வேண்டுமெனத் தெரியாமல், சாவுக்கு குழி வெட்டும் நபரை கூட்டி வந்து விசாரித்தார். அவருக்கு முன்பாகவே குழியில் படுத்து கொண்டு “சரியா இருக்காப்பா.. மண்டைக்கு ஒரு தலைகாணி வெட்டிருக்கேன் சரிதான?”

அய்யாவுவின் இந்த செயலைப் பார்த்த அந்த ஆள், அவருக்கு புத்தி கெட்டு போனதாக ஊர் முழுக்க பரப்ப ஆரம்பித்தார். 

சரியாக, உணவு இல்லாமல் அய்யாவுவின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே போனது. சமாதிக்கு கல்வெட்டு அடிப்பவரிடம் பெயர், முகவரி எல்லாம் கொடுத்து கல்வெட்டு செய்து வாங்கி வந்து வீட்டில் வைத்தார். அதனை வீட்டுக்குள்ளே தன் படுக்கை அருகே வைத்து கொண்டு பார்த்துக் கொண்டே இருந்தார். தோற்றத்தில் தன் பிறந்த நாளை ஜாகத்தை பார்த்து குறித்து கொண்ட அவர், இறப்பில் டாக்டர் சொன்ன கெடுவு நாளை கொடுத்து அச்சடித்துக் கொண்டார். 

சின்னமனூர் நகருக்கு போய், பிளக்ஸ் அடிக்கும் நபரிடம் உட்கார்ந்து தன் பெயரைக் கொடுத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிக்கப்போக, இவரைப் பைத்தியம் என முதலில் அடித்து துரத்தி விட்டனர். பின்னர் தினமும் அங்கேயே நின்று, அவர்களிடம் கெஞ்சினார். 

“அய்யா.. எனக்கு யாருமில்லையா.. டாக்டர் எனக்கு கெடுவு வச்சுட்டாரு.. எனக்கும் சில ஆசையெல்லாம் இருக்குதுயா.. இதெல்லாம் ஒரு மனத் திருப்திக்கு தானே சாமி பாத்து செய்ங்க”

எனக் கெஞ்சவும், யாருமில்லாத நேரத்தில் அவரை வரச் சொல்லி டிசைன் செய்து பிளக்ஸ் அடித்துக் கொடுக்க, அதனை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார். 

“முத்தையா. உன்னதே மல மாதிரி நம்பியிருக்கேன். நான் செத்ததுக்கு அப்பறம் இந்த வீடும், காடும் பொதுவுக்கு எழுதி கொடுக்கிறேன். நான் செத்த பிறகு ஏன் சமாதி மட்டும் கட்டி விட்டு, ஊருக்குள்ள பிளக்ஸ் வச்சிரு.. அவளுக்கு இதென் ஆச.. அவ எப்பவும் இதே சொல்லுவா.. நமக்கு யாரு இருக்கா.. உனக்கு ஒன்னுநா யாரு எடுத்து செய்வா, அவ ஆசையாச்சும் நடக்கட்டும் யா”

முத்தையாவால் எதுவும் பேச முடியவில்லை. 

“செய்றேன்.. ஆனா நீ இருக்க வரைக்கும் ஒழுங்கா சாப்பிடு. பரமசிவன் ஹோட்டல் புரோட்டா உனக்கு பிடிக்கும்னுதே வாங்கிட்டு வந்தேன்.”

என நீட்ட அவர் எதுவும் மறுப்பு சொல்லாமல் வாங்கி கொண்டார். டாக்டர் கொடுத்த கெடுவு நாட்கள் நெருங்கி கொண்டே வந்தது. ஆனால் அவர் சாவதற்கான எந்த வித சமிக்ஞையும் தெரியவில்லை. இதற்கும் டாக்டர் கொடுத்த மாத்திரையைக் கூட அவர் ஒழுங்காக சாப்பிடவில்லை. தினமும் சாவுக்கு தோண்டப்பட்டக் குழியைச் சுற்றி வருவார். தவறாது சின்னதாய் போட்டோவிற்கு மாலை போட்டு தீபம் ஏற்றுவார். ஆனாலும் கூட சாவு அவரை நெருங்குவதைப் போல் தெரியவில்லை. மருத்துவமனைக்கு போய் விசாரித்து விட்டு வரலாம் என்று கூட அவருக்குத் தோன்றியது. மேலும் வீட்டில் இருந்த மாடுகளை எல்லாம் விற்று காசாக்கி, முத்தையனிடம் கொடுத்து மகனின் படிப்பு செலவுக்கு வைத்து கொள்ள சொன்னார். தன் சாவிற்கு யாரும் வரக் கூடாது எனவும், உன் குடும்ப ஆட்கள் மட்டுமே எடுத்து செய்ய வேண்டும் எனவும் கூறி இருந்தார்.

அன்று தான் அவரது கடைசி நாள். அதாவது டாக்டர் கூறிய அந்த நாள். சாவு எப்படியும் இன்று இரவு நம்மை நெருங்கி விடும் என நினைத்த அய்யாவு கிணத்து மேட்டில் போய் குளித்து விட்டு வந்து, நல்ல இஸ்திரி போட்ட வெள்ளை வேட்டியை எடுத்து உடுத்தி கொண்டார். சின்னதாயின் போட்டோவை துடைத்து தீபம் ஏற்றி அவர் “இனிமே உனக்கு யாரு தீபம் ஏத்துவா, ஆமா நாந்தே மேல வரென்ல அங்க வச்சு உன்ன பாத்துக்கிறேன்”, என்றவாறு சின்னதாய் போட்டோவை தொட்டு முத்தமிட்டார். 

அன்று நாள் முழுக்க முத்தையாவை எதிர்பார்த்து காத்திருக்க அவர் வரவே இல்லை. முத்தையாவிற்கு சமீப காலமாக அய்யாவுவின் முகத்தை பார்க்க சங்கடமாக இருந்தது. அதனால் தான் கூடுமான வரை அவரைப் பார்ப்பதை தவிர்த்து வந்தார். என்னதான் தான் மனிதன் என்றாலும் கூட சாவை எதிர்பார்த்து காத்திருக்கும் முகத்தைப் பார்ப்பது சற்று சங்கடமான காரியம் தான். காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்த அய்யாவுக்கு பசி இருந்தாலும் கூட சாகப் போற உடம்புக்கு எதுக்கு ஆகாரம் என நினைத்தாரோ என்னவோ பேசாமல் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கண் அசந்தார். கனவில் சின்னதாய் நன்கு சிங்காரித்துக் கொண்டு அவரை நோக்கி நடந்து வருவது போல் தெரிந்தது. தூக்கத்தில் அய்யாவு லேசாக சிரித்துக் கொண்டார். பொழுது கசிந்து இருள் பரவ ஆரம்பித்தது. திடீரென தூக்கத்தில் இருந்து அய்யாவு எழுந்து பார்க்க தகரத்தில் ஆலங்கட்டி மழை டம் டம் என விழுந்து கொண்டிருந்தது. அய்யாவு லேசாக தலையை அசைத்து எழுந்து பார்க்க பேய் மழை பெய்து கொண்டிருந்தது. அய்யாவு மண்வெட்டியை எடுத்து கொண்டு ஓடினார். பின்னால் தனக்காக வெட்டப்பட்ட குழியில் தாரை தாரையாக நீர் குழியில் விழுந்து கொண்டு இருந்தது. அவர் தன் மண்வெட்டியால் மண்ணை ஒதுக்கி அடைப்பு போட்டு விட, ஓரளவு குழிக்குள் நீர் போய் நின்றது. ஈர துணியோடு வீட்டுக்குள் வந்த அய்யாவு மீண்டும் சாய்வு நாற்காலியில் படுத்து கொண்டார். உடல் நனைந்தது கூட தெரியாமல் அலுப்பில் படுத்த அய்யாவு நன்றாக தூங்க ஆரம்பித்தார். 

மழை மேய்ந்த இரவால், பொழுது மெதுவாகத் தான் புலர்ந்தது. வெயில் பட்டு திராட்சை பழங்களில் தேங்கி இருந்த நீர் தாரைகள் மின்ன தொடங்கின. முத்தையா சைக்கிளை நிறுத்தி விட்டு தயக்கத்தோடு வீட்டுக்குள் வந்தார். அவர் வீட்டில் இல்லாததை உணர்ந்த முத்தையா மெல்ல வீட்டுக்கு பின்னால் வந்தார். அங்கே அய்யாவு குழிக்கு முன்னால் குத்த வைத்து உட்கார்ந்து பீடி குடித்தார். முத்தையாவின் நடந்து வரும் சத்தம் கேட்டும், கண்டு கொள்ளாமல் அய்யாவு குழியைப் பார்த்த வண்ணம் இருந்தார். 

“என்ன முத்தையா ஆளக் காணோம். பாத்தியா நான் படுக்க வேண்டிய குழிய.. எல்லாம் தண்ணி.. வத்திரும்.. எப்படியும் வந்திரும்…”.

அவர் புலம்பிக் கொண்டே வீட்டுக்குள் போனார். அவரது வேட்டி சட்டை முழுதும் செம்மண் அப்பி இருந்தது. 

“ராத்திரி பூராம் மழையில ஊருணதுல கூத அடிக்குது. கொஞ்சம் கடுங்காப்பி போட்டுத் தாரியா”

எனக் கேட்டுவிட்டு வேட்டி சட்டையைக் கழற்றி வீசிவிட்டு உட்கார்ந்தார். அவர் டவுசரோடு திராட்சை கொத்துகளை பார்த்த வண்ணம் உட்கார்ந்திருக்க, கடுங்காப்பி அவர் கைக்கு வந்தது.

“இந்த கொடிய அரும்பாடு பட்டு வளத்தென்.. என்ன செய்ய.. நேரம்… வெக்காளி சாவு கூட நமக்கு தோதா வர மாட்டிங்கிது இல்ல..”

“சும்மா பொலம்பமா போய் வேலைய பாரு மாமா.. சாவெல்லாம் உன்னைய ஒன்னும் செய்யாது.. கருப்பன் உனக்குள்ள இறங்கிருக்கான் மாமா.. அவந்தே உன் உசுற பிடிச்சு வச்சிருக்கான். “

“என்னமோ.. சரி அந்த சேவலை எடுத்து போய் அடிச்சு கொழம்பு வச்சு கொண்டாரியா.. நாக்கு செத்து போய் கிடக்கு”

முத்தையா புன்னகையுடன் சேவலை பிடித்து கொண்டு வந்து சைக்கிளில் கட்ட, 

“முத்தையா.. வரும் போது ஒரு வைரத்த பிடிச்சுகுக்கு வா”

முத்தையா நக்கலாக அவரைப் பார்த்து சிரித்து கொண்டே அங்கிருந்து கிளம்பினார். 

அய்யாவு தனக்கு புது உயிர் வந்தது போல, துணி மணிகளை துவைத்து போட்டு, வீட்டினைக் கூட்டி பெருக்கி சுத்தம் செய்து விட்டு எப்போதும் போல சின்னதாய்க்கு சூடம் ஏற்றி வைத்துவிட்டு ரெடியாக உட்கார்ந்தார். பல நாள் பசி அவரை ஆட்கொண்டிருந்தது. இனி வாழ வேண்டும் முடிந்த வரை, ஆண்டு அனுபவித்து சாக வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் தோன்றியது. ரேடியோவை தட்டி சரி செய்து பாடலைப் போட்டு கேட்டார்.

மதியத்துக்கு மேல் வந்த முத்தையா பாத்திரத்தை ஓரமாக வைத்து விட்டு சரக்கடிக்க, கொஞ்சம் கறியை அள்ளி போட்டு கொண்டு வந்து உட்கார்ந்தார். இருவரும் எதுவும் பேசாமல் குடிக்க ஆரம்பித்தனர். இரண்டு குவாட்டருக்கு மேல் போனதால் அய்யாவு தன்னைத் தானே சிரிக்க ஆரம்பித்தார். ரேடியோவில் “இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன். நினைத்து வாழ ஒன்று மறந்து வாழ ஒன்று ..”பாடல் ஓட அய்யாவு சிரித்து கொண்டே அந்தப் பாடலைக் கேட்டார். முத்தையா தேவையில்லாமல் பேசி அவரது நினைவுகளை கிளற வேண்டாம் எனத் தோன்றியது. பின்னர் இருவரும் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். அய்யாவு தன் வாழ்நாளில் சோற்றைப் பார்க்காதது போல் சாப்பிட்டார். அவரது முகம் புதிதாக பிறந்த குழந்தையைப் போல் பிரகாசமாக இருந்தது. சாப்பிட்டு முடித்த பின்னர் இருவரும் திண்ணையில் உட்கார்ந்து பீடி பிடித்தனர்.

“இனி ஒண்ணும் செய்யாது மாப்புள.. எமன் வந்து என்ன செய்ய போறான். களவாணி பய டாக்ட்ரு.. ஒழுங்கா பள்ளி கூடம் போகல போல.. நாளைக்கு வரப்ப ரெண்டு பொட்டலம் பிடிச்சுக்கு வாப்பா.. அடிச்சு ரொம்ப நாளாச்சு”

“அதுக்கெண்ண.. உன் தங்கச்சி என்னைக்கும் இல்லாம இன்னைக்கு மோனையா குழம்பு வச்சிபுட்டா..”

அய்யாவு தொண்டை கனக்க சிரித்தார். பின்னர் இன்னொரு பீடியை எடுத்து பற்ற வைத்து கொண்டே பின்னால் சிறுநீர் கழிக்க போனார். இவர் போகும் போதே முத்தையா போதையில் திண்ணையில் சாய்ந்து விட்டான்.. அய்யாவு தனக்கு தோண்டப்பட்ட சவ குழிக்கு அருகே நக்கலாக போய் நின்று வட்டம் போட்டு சிறு நீர் கழித்தார். பின்னர் திடீரென நெஞ்சை பிடித்து கொண்டு வாந்தி எடுத்தார். குழிக்குள் வாந்தி எடுத்து கொண்டே நிதானம் இல்லாமல் அதனுள் விழுந்த அவரின் மூச்சு அப்படியே நின்று போனது. வானில் இடி முழக்கம் இன்னும் கோரமாகக் கேட்டது. சட சடவென மழை துளிகள் விழ கரையோரம் இருந்த மண் திட்டைகள் மெல்ல கரைந்து குழிக்குள் போனது. முத்தையாவின் முகத்தில் ஈ மொய்ப்பது கூட அறியாது அவன் ஆழ்ந்து தூங்கிக் கொண்டு இருந்தான்.

***

சிபி சரவணன் –தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். திரைப்பட துறையில் உதவி இயக்குனராக பணி புரிகிறார். அஞர், எச்சிலை என்ற இரு நூல்களை எழுதி உள்ளார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.மின்னஞ்சல்: sibikannan555@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here